புதன், 2 அக்டோபர், 2013

இன்று காந்தி ஜெயந்தி. ஸ்பெஷல் போஸ்ட்.

Radhe krishna 03-10-2013

இன்று காந்தி ஜெயந்தி. ஸ்பெஷல் போஸ்ட்.


Narasimman Nagarajan shared Varagooran Narayanan's status update.
இன்று காந்தி ஜெயந்தி. ஸ்பெஷல் போஸ்ட்.

நன்றி;பால ஹனுமான்.

காந்தி-மகானும்-காஞ்சி-மகானும்-இரு-கண்கள்!—கவிஞர்-சுப்பு-ஆறுமுகம்

தமிழ்கூறும் நல்லுலகில் கவிஞரும் வில்லுப்பாட்டு கலைஞருமான சுப்பு ஆறுமுகத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. நெல்லை மண்ணில் உதித்த வில்லுப்பாட்டு இசைக் கலையை உலகெங்கும் பரப்பியதில் அவருக்கென்று தனி இடம் உண்டு.

84 வயதிலும் ஒரு இளைஞனைப் போல பல ஊர்களுக்குச் சென்று வில்லிசையை ஒலிக்கச் செய்கிறார் சுப்பு ஆறுமுகம். காந்தி மகானும் காஞ்சி மகானும் என் இரு கண்கள்” என்றவரிடம் தொடர்ந்து பேசினோம்.

அப்போது நான் நெல்லையில் தமிழ்ப் புலவர் படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் தலைமை ஆசிரியர், ‘கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (என்.எஸ்.கே) வருகிறார். அவரை வரவேற்று வில்லிசை நிகழ்ச்சி நடத்த வேண்டும். அப்படியே காந்தியைப் பற்றியும் பாடணும்’ என்றார். சுதந்திரம் பெற்று மூன்றே மாதங்கள் தான் ஆகியிருந்தது. காந்தியை பற்றி இருவித அபிப்ராயங்கள் இருந்தன. காந்தியை ஓஹோவென்று தூக்கி வைத்து கொண்டாடுபவர்கள் பெரும்பான்மை. அதே சமயம் ஒரு சிறு கும்பல், கையில் கம்பை வைத்துக் கொண்டு காந்தி அன்பர்களை வம்புக்கிழுத்தது. சுதந்திரம் பெற்றபின், கம்பெடுத்தவர்கள் நிலையில் தலைகீழ் மாற்றம். எந்த கம்பால் காந்தி அன்பர்களை துரத்தினார்களோ, அதே கம்பின் முனையில் காந்தி படம் உள்ள கொடியை கட்டிக்கொண்டு, காங்கிரஸ் ஆட்சி தொண்டர்களாகிவிட்டனர்.

என்.எஸ்.கே. வரவேற்பு நிகழ்ச்சிக்கு பாட்டுகளை தயார் செய்தேன். என் அப்பா சுப்பையா பிள்ளை வில்லிசைக் கலைஞர். எனவே, வில்லை கையாள்வதில் பயிற்சி உண்டு. கம்பெடுத்தவர்கள் காந்தி அன்பர்களாக மாறிய விநோதத்தைக் குறிப்பிடும் வகையில், ‘காந்தி பெயரைச் சொல்லி கம்பெடுத்து வந்தவன், கண் முன்னால் அதே கம்பில் காந்தி கொடி கட்டறான்’ என்று பாடல் கட்டினேன். நிகழ்ச்சியன்று வில்லிசையோடு பாடலைப் பாடும்போது, என்.எஸ்.கே. இந்த வரிகளை கை தட்டி ரசித்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் என்னை அழைத்து, ‘வில்லிசை மூலம் காந்தி மகான் கதையை தமிழ்நாடு முழுவதும் சொல்லப் போகிறேன். எனவே, சென்னை வந்து நீதான் பாட்டுக்கள் எழுதணும்’ என்றார். சென்னைக்கு வந்தேன். எனக்கு தனியாக வீடு கொடுத்து சமைப்பதற்கு ஆளையும் போட்டார் என்.எஸ்.கே. ‘காந்தி மகான் கதை’ இரண்டே மாதத்தில் தயாரானது. காந்தி தனது சுய சரிதையில் 1930ஆம் வருடம் வரைதான் எழுதியிருந்தார். அதன்பின் ஒத்துழையாமை இயக்கம், சுதந்திரம், காந்தி மரணம் போன்ற முக்கிய நிகழ்வுகள் சேர்த்து பாட்டுக்கள் அமைத்தேன். என்.எஸ்.கே. வில்லிசை நன்றாகத் தெரிந்தவர். ஒத்திகை பார்க்கும்போதெல்லாம் என் பாடல்கள் குறித்து மிகவும் பாராட்டுவார். முதல் நிகழ்ச்சி கல்கி தோட்டத்தில்தான் நடந்தது. ராஜாஜி, டி.கே.சிதம்பரநாத முதலியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, சின்ன அண்ணாமலை, சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி என்று பல துறை ஜாம்பவான்கள் அமர்ந்திருந்தார்கள். என்.எஸ்.கே. ‘தந்தணத்தோம்’ என்று தொடங்கி, காந்தி மரணம் வரை நிகழ்ச்சி விறுவிறுவென்று துள்ளிக்குதித்துச் சென்றது. இறுதியில் காந்தி மரணம் குறித்து பாடும்போது, மிக உருக்கமாக இருந்தது. அப்புறம் என்.எஸ்.கே. அந்த நிகழ்ச்சிகளை தமிழ்நாடெங்கும் நடத்தினார்.

அந்த சமயம் அகில இந்திய வானொலி ‘காந்தி மகான் கதை’யை வானொலிக்கு ஏற்றபடி தயார் செய்து நடத்த முடியுமா என்று கேட்டது. உடனே ரேடியோவுக்கென்று சில மாறுதல்கள் செய்தேன். இந்த நிகழ்ச்சி வானொலியில் ஒவ்வொரு ஞாயிரன்றும் ஒலிபரப்பானது. கிட்டத்தட்ட மூன்று வருட காலம் நிகழ்ச்சி நடந்தது. 1964ஆம் ஆண்டு ரேடியோவில் ஒலிபரப்பான ‘காந்தி மகான் கதை’யை, ‘காந்தி வந்தார்’ என்ற பெயரில் புத்தகமாகப் போட்டேன். விடுதலைப் போராட்ட வேள்வியை நாடெங்கும் உருவாக்கி சுதந்திரம் பெற்றுத் தந்த காந்திக்கு, மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை. ஆதிதிராவிடர்களும் ஆலயப் பிரவேசம் செய்தபின், 1946ல் மதுரைக்கு வந்து மீனாட்சியை வழிபட்டார் காந்தி. தேச பக்தி, தெய்வ பக்தி என்று இரண்டையும் தன் உயிர் மூச்சாகக் கொண்டவர்தான் காந்தி. சிறு வயதிலிருந்தே காந்தியடிகளை விரும்பி வந்தேன் என்பதைவிட, வணங்கி வந்தேன் என்பதே பொருத்தமாக இருக்கும். அவரது கதையை நான் சொல்ல, அந்தத் தொடர்பு என்னை ஒரு நடமாடும் தெய்வத்துக்கு முன்னால் அழைத்துச் சென்றது எனது பூர்வ ஜென்ம புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘காந்தி வந்தார்’ புத்தகத்தை காஞ்சி மகா பெரியவரிடம் கொடுத்து ஆசி பெற வேண்டும் என்பது ஆசை. ஒரு நாள் கிளம்பிச் சென்று விட்டேன். அப்போது மகா பெரியவர் தேனம்பாக்கத்தில் இருந்தார். புத்தகத்தை அவர் முன்னால் வைத்து ஆசீர்வாதத்தை வேண்டினேன். முதல் பக்கத்தை திருப்பியவர் மேலே போகவில்லை.

‘இந்த பரந்த உலகில் கால் காந்தியாக, அரை காந்தியாக, முக்கால் காந்தியாக இல்லாமல் முழுக்காந்தியாக வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு சமர்ப்பணம்’ என்று குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்துவிட்டு என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தவர், அடுத்த ஒரு மணி நேரம் எதுவும் பேசவில்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர் எதுவும் சொல்லாதபோது எப்படி எழுந்து செல்வது என்று தயக்கம் எனக்கு. சரி… நாளைக்கு அடுத்த நாள் காஞ்சிபுரத்தில் ‘ஆகம சில்ப சதஸ்’ மாநாடு நடக்கறதே தெரியுமா?” என்றார் பெரியவர். தலையாட்டினேன் நான். அந்த மாநாட்டில் நீ திருநாவுக்கரசர் சரித்திரத்தை சொல்லுவியா?” என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ‘முதல் தடவையாகப் பார்க்கிறோம். நம்மை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கிறார்களே’ என்ற மகிழ்ச்சியுடன் கூடிய அதிர்ச்சி. ‘பெரியவா உத்தரவு’ என்று விடைபெற்று, சென்னை வந்தேன்.

நிகழ்ச்சிக்கு இடையில் ஒரே நாள்தான். ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் நிகழ்ச்சிக்கு பாட்டுக்களை தயார் செய்தேன். மொத்தம் 48 பாட்டு. மூன்றரை மணி நேர நிகழ்ச்சி அது. நிகழ்ச்சியன்று மதியம் தேனம்பாக்கம் சென்றேன். கொசு வலைக்குள் படுத்திருந்தார் பெரியவர். ‘கச்சேரிக்கு வரணும்’ என்று சொல்லி வணங்கினேன். ‘கண்டிப்பா வர்ரேண்டா’ என்றார் மகா பெரியவர். எனக்கு மாலை ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆறு மணி ஆயிற்று. பெரியவா வரவில்லை. அப்படியே நேரம் ஆகிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ‘உங்களுக்கு எட்டு மணிவரைதான் டைம்; மேலே கொடுக்க முடியாது. பெரியவர் வரமாட்டார். அவர் தேனம்பாக்கம் போய் பல வருஷம் ஆகிவிட்டது. நீங்க தாமதிக்காமல் கச்சேரியை ஆரம்பிங்கோ’ என்றார்கள். ‘என்கிட்டே சொல்லியிருக்கிறார் வந்துவிடுவார்’ என்று நான் சொல்வதை அவர்கள் நம்பவே இல்லை. இப்படி எங்களுக்குள் வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும்போது, ‘ஜய ஜய சங்கர.. ஹர ஹர சங்கர’ என்ற சரணகோஷம் கேட்டது. சொன்னபடியே பெரியவர் வந்துவிட்டார். எனக்கு அழுகை வந்துவிட்டது. கோபுரத்தை தூர இருந்து கும்பிடுவதுபோல, கையை உயரத் தூக்கி வணங்கிவிட்டு, மேடையை நோக்கி ஓடினேன். அதற்குள் பெரியவர் மேடைக்கு அருகில் உட்கார்ந்துவிட்டார். கையை தூக்கி ஆசீர்வாதம் செய ‘தந்தனத்தோம்’ என்று வில்லைத் தட்டிவிட்டு, நாவுக்கரசரின் சரித்திரத்தைத் தொடங்கினேன். கடைசிவரை உட்கார்ந்து ரசித்துக்கேட்டார். சில இடங்களில் கையை தூக்கி நிறுத்தச் சொல்லி விளக்கங்கள் கேட்டார். முடிந்தவுடன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தேன். ‘நல்லா பண்ணின’ என்று வாழ்த்தியருளியது அந்த மானுட தெய்வம்.

அதன்பின் மடத்துக்குச் செல்லும்போதெல்லாம், ‘வந்துட்டான் சுப்பு ஆறுமுகம். கவிதை பாடுவான்’ என்று சொல்லி சிரிப்பார். ஒருமுறை, ‘ஏண்டா உன் நிகழ்ச்சியில் ஏன் புல்லாங்குழல் கிடையாது’ என்றார். நான் முந்திரிக்கொட்டைத் தனமாக, ‘அது வடக்கத்தி வாத்தியம் அல்லவா’ என்றேன். ‘ஆமாம் ஆமாம் அது கிருஷ்ணனோட வாத்தியம் இல்லையா’ என்றார் மகா பெரியவர். எனக்கு பொட்டில் அடித்தது போன்றிருந்தது. ‘பெரியவா மன்னிக்கணும். நான் திசையை கவனித்தேனே தவிர தெய்வத்தை நினைக்கலியே’ என்று நமஸ்கரித்து, எழுந்தேன். அது முதல் சில குறுகிய எண்ணங்கள் என்னிடமிருந்து விடைபெற்றுக் கொண்டன.

மகாபெரியவரின் ஆசி மற்றும் அனுக்கிரகத்துடன் மீனாட்சி கல்யாணம், சீனிவாச கல்யாணம், வள்ளித்திருமணம், பார்வதி கல்யாணம், ராமாயணம், மகாபாரதம் என்று பல நிகழ்ச்சிகளை நடத்தினேன். ஒரு முறை மகாபெரியவரைப் பார்க்க போயிருந்தேன். ‘என்ன பண்ணிண்டிருக்கே’ என்றார் அவர். ‘கிருஷ்ணாவதாரம் நிகழ்ச்சி நடக்கப்போகிறது’ என்றேன். திடீரென்று ‘என் கதையெல்லாம் சொல்ல மாட்டியா?’ என்றார். அவர் கேட்டது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ‘பெரியவா உத்தரவு’ என்றேன். ‘எப்படி பண்ணுவே?’ என்றார். ‘காலடி முதல் காஞ்சிவரை’ என்றேன். ‘பலே. இப்பவே ஆரம்பிச்சுட்டான்’ என்று சிரித்தவாறே ஆசீர்வாதம் பண்ணினார். ‘சுப்பு.. கேரளா பத்தி சொல்லும்போது, பரசுராம க்ஷேத்திரம்’ என்று சொல்லணும். தெரியுமா?’ என்றார். கிட்டத்தட்ட இரண்டரை வருட கால ஆராய்ச்சிக்குப் பின் உருவானதுதான் ‘காலடி முதல் காஞ்சி வரை.’

மகாபெரியவரின் மடத்து சிஷ்யரான பிரதோஷம் வெங்கட்ராமன், ‘நிகழ்ச்சியை முதன்முதலில் என் வீட்டில்தான் நடத்தணும்’ என்றார். ‘சரி’ என்று சொல்லிவிட்டு, பெரியவரிடம் ஒன்றிரண்டு பாடல்கள் பாடி ஆசீர்வாதம் வாங்கச் சென்றேன். நான் பாட, பாட பெரியவர் ‘தொடர்ந்து பாடு’ என்று உத்தரவு போட்டுவிட்டார். கடைசியில் முழு நிகழ்ச்சியும் அவர் முன்னாலேயே அரங்கேறிவிட்டது. இடையில் தொலைபேசியில் வெங்கட்ராமன் வினவ, ‘மகாபெரியவர் முன்னிலையில் நடக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லிவிட்டாராம். நிகழ்ச்சி முடிந்தவுடன் தம் தலையில் இருந்த வில்வமாலையை எனக்கு போட்டுவிட்டார் மகா பெரியவர். என்னைக் கண்டாலே சிரிப்பார் பெரியவர். காந்தி மகான் கதை மூலமாக காஞ்சி மகான் அறிமுகம் கிடைத்து அவரது அன்பிலும், அனுக்கிரகத்திலும் கரைந்தவன் நான். எனக்கு அவர்கள் இருவருமே இரு கண்கள். அவர் முன்பு, ஆசுகவியாகப் பாடிய பாடல் இது :

அம்மையிடம் வரம் கேட்கும் குழந்தை ஒன்று
அன்பருக்கு அருள் காட்டும் குருவின் முகம் ஒன்று
செம்மை மிகு இந்து மதத்தலைவர் முகம் ஒன்று
சித்தாந்த ஒளிகாட்டும் ஞான முகம் ஒன்று
தம்மையே தாமிழந்த தியாக முகம் ஒன்று
தாய்போல கருணை காட்டும் அன்பு முகம், ஒன்று
நம்மிடையில் காட்சி தரும் ஆறுமுகம் என்று
நமஸ்காரம் புரிகிறோம் பெரியவரை இன்று.

நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக