வெள்ளி, 25 அக்டோபர், 2013

ராமாயணம் - இரண்டாம் பகுதி ( 16 - 32 )

ராதே கிருஷ்ணா 25-10-2013

ராமாயணம் - இரண்டாம் பகுதி ( 16 - 32 )

ராமாயணம்
 
temple
சீதையை அழைத்துச்செல்ல ராமன் ஒப்புக்கொண்டதை வெளியிலிருந்தபடியே கேட்டுக்கொண்டிருந்த லட்சுமணனின் கண்களில் கண்ணீர் பெருகியது. சீதாபிராட்டி அங்கிருந்து சென்றபிறகு, அண்ணன் ...மேலும்
 
temple
அயோத்தி வாசிகள் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர். ஒரு தகப்பன் தனது மகன் துஷ்டனாக இருந்தால்கூட வீட்டைவிட்டு வெளியே அனுப்பமாட்டான். அப்படியிருக்கும்போது இந்த உலகத்தையே ... மேலும்
 
temple
தசரதருக்கு மயக்கம் தெளிவிக்கப்பட்டது. ராமா! இன்று இரவு மட்டுமாவது நீ என்னுடன் தங்கிவிட்டுப்போ என்று வற்புறுத்திச் சொன்னார் அந்த õமன்னர். ராமன் அவரிடம், இன்று இங்கே நான் ...மேலும்
 
temple
உமது குடும்பம் மட்டும் யோக்கியமான குடும்பமா? என் தாயை அவமானப்படுத்தி பேசுகிறாரே உமது அமைச்சர் என தசரதரைப் பார்த்து கொதித்தாள் கைகேயி. சகரன் என்ற அரசன் உமது வம்சத்தில் ... மேலும்
 
temple
சீதையும் ராமனும் மரவுரி தரித்து நிற்பதைப் பார்த்து மனம் பதைத்து போனார் வசிஷ்டர். அவருக்கு ஆவேசம் அதிகமாகிவிட்டது. அவர் ராஜகுரு அல்லவா? அக்காலத்தில் குருவுக்கு மன்னர் ... மேலும்
 
temple
சீதாதேவி வருத்தத்துடன் தன் மாமியாருடன் பேச ஆரம்பித்தாள். அம்மா! தங்கள் உத்தரவுப்படியே நான் நடந்துகொள்கிறேன். இருப்பினும் நீங்கள் எனக்கு இந்த அளவுக்கு அறிவுரை சொல்லியிருக்க ... மேலும்
 
temple
ராமராஜ்யம் வேண்டுமென இந்த உலகமே எதிர்பார்க்கிறது. ஸ்ரீராமஜெயம் என்ற மந்திரம் ஆயிரக்கணக்கில் பக்தர்களால் எழுதப்படுகிறது. ஆனால், அதை எழுதுவதன் நோக்கம் என்னவாக இருக்க ... மேலும்
 
temple
தசரதரை அழைத்துக்கொண்டு கவுசல்யா ஊருக்குள் திரும்பினாள். அயோத்தி நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தெய்வம் இல்லாத இடத்தில் கோயிலுக்கு வேலை இல்லை என்பது போல எல்லா ... மேலும்
 
temple
ஓடிவந்தவர்களில் பிராமணர்கள் அதிகம் இருந்தார்கள். அவர்களின் மனம் புண்படும்படி செய்வது தனது விரதத்திற்கு விரோதமாக முடியும் என ராமபிரான் கருதினார். தேரை நிறுத்திவிட்டார். ... மேலும்
 
temple
லட்சுமணன் இதை எதிர்பார்க்கவே இல்லை. ராமரா இப்படி சொல்கிறார் என மனதுக்குள் நினைத்தார். லட்சுமணா! காட்டில் இன்று தான் இரவு நேரத்தில் முதன் முதலாக தங்குகிறோம். இந் நேரத்தில் நான் ... மேலும்
 
temple
பரத்வாஜரின் வழிகாட்டுதலின் படி சித்ரக்கூடத்தில் வீடு அமைக்கப்பட்டது. அந்த வீட்டில் குடியேறுவதற்கு முன் கிருஹப்பிரவேச சாந்திகள் நடந்தன. சீதாதேவி சுபமுகூர்த்த நேரத்தில் ... மேலும்
 
temple
ராமாயணம் 29
அது ஏதோ ஒரு மனிதக்குரலாக இருந்தது. ஓடிச் சென்று பார்த்தேன். ஒரு சிறுவன் அம்பு பாய்ந்த நிலையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தான். நடந்த தவறுக்காக அவனிடம் ... மேலும்
 
temple
பதைபதைப்புடன் தசரதரை அவரது 350 தேவியரும் அணுகினார்கள். சிலர் அவரைத் தொட்டு எழுப்பினர். சப்தமே வரவில்லை. அதன் பின் அவரை லேசாக அசைத்துப் பார்த்தனர். அப்போதும் எந்த உணர்வும் ...மேலும்
 
temple
தூதர்கள் பரதனின் பாதம் தொட்டு வணங்கினர். துக்கச் செய்தியை மறைக்கச் சொல்லியிருந்ததால், முகத்தை தொய்வின்றி வைத்துக் கொண்டனர். அயோத்தியில் இருந்து கைகேயியின் தந்தை கேகய ...மேலும்
 
temple
பரதன் இப்படி சொல்வான் என சற்றும் எதிர்பாராத கைகேயி மிகவும் சாமர்த்தியமாக, பரதா, நீ உன் தந்தை இறந்த வருத்தத்தில் உன்னை மறந்து பேசுகிறாயா? நான் உனக்கு நல்லது செய்வதற்காகவே இந்த ...மேலும்
 

ராமாயணம்
 
temple
சற்றுநேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த பரதனின் முன்னால் சுமந்திரரும் மற்ற அமைச்சர்களும் நின்றார்கள். அன்புக்குரியவர்களே! நான் சொல்லும் உண்மையைக் கேளுங்கள். ... மேலும்
 
temple
மந்தரையைப் பார்த்தார்களோ இல்லையோ...இத்தனை நிகழ்வுளுக்கும் காரணமாக இருந்து விட்டு, அரண்மனைக்குள்ளும் நுழைந்த அவளை காவலர்கள் குண்டு கட்டாகத் தூக்கினர். கிழக்குரங்கே! உன்னால் ...மேலும்
 

ராமாயணம் பகுதி - 16
மே 03,2012
அ-
+
Temple images
சீதையை அழைத்துச்செல்ல ராமன் ஒப்புக்கொண்டதை வெளியிலிருந்தபடியே கேட்டுக்கொண்டிருந்த லட்சுமணனின் கண்களில் கண்ணீர் பெருகியது. சீதாபிராட்டி அங்கிருந்து சென்றபிறகு, அண்ணன் இருந்த அறைக்குள் சென்றான். அவன் மனதிற்குள் பெரும் போராட்டம். தன்னில் பாதியாக கருதும் சீதாதேவியையே தன்னுடன் காட்டிற்கு அழைத்துச் செல்ல அண்ணன் இவ்வளவு யோசிக்கிறார் என்றால், தனக்கு அனுமதி கிட்ட என்ன பாடு பட வேண்டியிருக்குமோ என எண்ணினான். இருப்பினும் நம்பிக்கையுடனும், பரபரப்புடனும் அண்ணன் அருகில் சென்று பணிவாக வணங்கினான். அண்ணா! தாங்கள் காட்டிற்கு செல்வதில் எனக்கு துளிகூட விருப்பமில்லை. செல்வதுதான் என முடிவெடுத்தபிறகு அதைத் தடுக்கும் தைரியமும் இல்லை. இதற்கு ஒரே வழி நானும் உங்களோடு வருவதுதான். சீதா பிராட்டியார் எனக்கு தாயாகவும், சகோதரி போலவும் இருக்கிறார். அவரோடு நீங்கள் காட்டில் தனித்து சிரமப்படுவதை இந்த உள்ளம் சகிக்காது. நீங்கள் இல்லாத அயோத்தி வைகுண்டத்தை ஒத்ததாக இருந்தாலும் அது எனக்கு வேண்டாம். என்னிடம் யாரேனும், நீ உன் அண்ணனுடன் போகவேண்டாம்.
உனக்கு மரணமில்லாத பெரும் பதவியை தருகிறேன், என்றும் இளமையாக இருக்க வரம் தருகிறேன், 14 லோகங்களின் ஆட்சியையும் உன் கையில் தருகிறேன் என்றெல்லாம் சொன்னாலும் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிடுவேன். உங்களுக்கு செய்யும் கைங்கர்யத்தின் முன்னால், இந்த இன்பங்களெல்லாம் வெறும் தூசு. எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். என்னை தங்களோடு வர அனுமதியுங்கள், என்று உருக்கமாக கேட்டான். ராமபிரான் தம்பியை மார்போடு அணைத்துக்கொண்டார். லட்சுமணா! நான் சொல்வதை கவனமாக கேள். நீ என்னோடு காட்டிற்கு வருவதாக வைத்துக் கொள்வோம். அப்படி வந்துவிட்டால் இங்கே நம் அன்னையர் கவுசல்யாவையும், சுமித்ராவையும் கவனிப்பது யார்? அவர்களது மனம் வருந்தும் வகையில் நாம் நடந்து கொள்ளலாமா? பரதன் கவனிக்க நினைத்தாலும் கைகேயி அதற்கு அனுமதிப்பாள் என சொல்ல முடியாது. கைகேயியோ தன் சக்களத்திகளை கண்டுகொள்ளவே மாட்டாள். இதனால் அவர்களின் மனநிலை வெகுவாக பாதிக்கப்படும்.
நீ இங்கிருந்து அப்படியெல்லாம் நடக்காமல் பார்த்துக்கொள். அது மட்டுமல்ல. என்னுடைய பட்டாபிஷேகத்திற்காக நடத்தப்படும் ஏற்பாடுகளை நிறுத்திவிடு. நீ எனக்கு மிகவும் பிரியமானவன். தர்மத்தைத்தவிர உன் மனம் வேறு எதையும் சிந்திக்காது. என் உயிரும், நண்பனுமாய் இருப்பவனே! உன்னிடம் கல்யாண குணங்கள் நிறைந்திருக்கிறது. நம்மைப் பெற்ற அன்னையர் மனம் மகிழும் வகையில் சேவை செய்வதே நமக்கு நல்லதாக அமையும். நீயும், நானும், சீதையும் இணைந்து இங்கிருந்து போய்விட்டால் நம் தாய்மார்கள் எப்படி வாழ்வார்கள்? என்றெல்லாம் விபரமாக எடுத்துச் சொன்னார். லட்சுமணன் விடுவதாக இல்லை. அண்ணா! பரதனை நீங்கள் சந்தேகம் கொள்ளாதீர்கள். உங்கள் மீது அவன் அதிக அன்பு வைத்திருக்கிறான். கவுசல்யா தேவியை கவனித்துக் கொள்ளாவிட்டால் உங்களுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டி வரும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அது மட்டுமல்ல. பெரும் பாவமும் அவனை பிடிக்கும். எனவே அவன் நமது தாய்மார்களை நல்ல முறையில் கவனிப்பான் என்பது உறுதியே. நான் உங்களுடைய சேஷனாக (தாங்குபவன்) இருப்பதற்காகவே பிறந்தவன்.
இந்த உலகம் உள்ள வரையிலும் உங்களுக்கு சேவை செய்ய மறுக்காமல் அனுமதி கொடுங்கள். காட்டிற்கு தாங்கள் செல்லும்போது உங்கள் முன்பாக நான் நடந்து செல்வேன். மண்வெட்டி, கூடை ஆகியவற்றை எடுத்து வருகிறேன். ஆங்காங்கே கிடைக்கும் உணவுப் பொருட்களை சேகரித்து தருகிறேன். மலைச்சாரலில் நீங்கள் அன்னை சீதாவோடு ஆனந்தமாக காலம் கழியுங்கள். ஒரு கணம் கூட இமை மூடாமல் உங்களைநான் பாதுகாப்பேன், என்று பிரார்த்தித்தான். ராமனுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. இவனைப்போல ஒரு தம்பி கிடைக்க நாம் என்ன தவம் செய்தோமோ என நெக்குருகிப்போனார். தன்னுடன் வர லட்சுமணனுக்கு அனுமதி அளித்தார். அடுத்தடுத்து லட்சுமணனுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார். லட்சுமணா! நீ உடனடியாக ஜனக மகாராஜா நடத்திய பூஜையின்போது வருணன் நமக்கு தந்த அதிபயங்கரமான இரண்டு வில்களையும், எதிரிகள் நம் மீது அம்புமழை பொழிந்தால் அவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் உறுதியான இரண்டு கவசங்களையு, இரண்டு அம்பறைகளையும், சூரியனைப்போல பிரகாசிக்கும் இரண்டு கத்திகளையும் எடுத்து வா. இவை அனைத்தும் நமது குரு வசிஷ்டரின் ஆசிரமத்தில் பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ளன. உன் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சொல்லவிட்டு புறப்படு, என்றார். லட்சுமணன் வசிஷ்டரின் ஆசிரமம் சென்று அவரை வணங்கி அவரது அனுமதியுடன் ஆயுதங்களைப் பெற்றுவந்தான். இதன்பிறகு தன்னிடமிருந்த அனைத்து செல்வங்களையும் பிராமணர்களுக்கு தர்மம் கொடுக்க ஏற்பாடு செய்யும்படி கூறினார்.
ஸுயக்ஞர் என்ற மிகப்பெரிய தபஸ்வி தர்மம் பற்றி அறிந்தவர். மகாஞானி. அவரை அழைத்து வர ஏற்பாடு செய்தார் ராமன். தர்மம்கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. தகுந்தவர்களுக்கு தர்மம் கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் எல்லா வகையிலும் தகுதியான ஸுயக்ஞருக்கு அபூர்வமான நவரத்தினங்கள், குண்டலங்கள், கை வளைகள் ஆகியவற்றை அளித்தனர். இதுதவிர, ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகளும் கொடுக்கப்பட்டன. இதன்பிறகு அகஸ்தியர், விஸ்வாமித்திரர் ஆகியோரின் மகன்களுக்கும் ஆயிரக்கணக்கான பசுக்கள், தங்கம், வெள்ளி ஆகியவை தானமாக கொடுக்கப்பட்டன. கவுசல்யாவுக்கு யஜுர் வேதத்தை கற்றுத்தரும் பிராமணர் ஒருவருக்கு வேலைக்காரர்கள் பட்டு, போர்வைகள், வாகனங்கள் ஆகியவற்றை கொடுத்தார். நீண்டகாலமாக அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த சாரதி, சித்ராரதர் என்பவருக்கு ஏராளமான ஆடுகள், மாடுகள், வஸ்திரங்கள், தானியங்கள் கொடுக்கப்பட்டன. இப்படி முக்கியமானவர்களுக்கெல்லாம் வாரி வழங்கினார் ராமன். காரணம் என்ன தெரியுமா? தர்மம் பெற்றவர்கள் அதை தங்களுக்கென வைத்துக் கொள்ளாமல் பிறருக்காக செலவழிக்க வேண்டும். அப்படிப்பட்ட குணமுடையவர்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்தார் ராமன். ராமன் காட்டிற்கு புறப்படுகிறார் என்ற தகவல் அங்கிருந்த படை பட்டாளங்களுக்கு தெரிந்துவிட்டது. அவர்கள் கண்ணீர்விட்டு கதறிக்கொண்டிருந்தனர். அவர்களை சமாதானம் செய்த ராமன், நாங்கள் ஊருக்கு திரும்பி வரும்வரை நீங்கள் இந்த வீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றார். பொக்கிஷத்திலிருந்த அனைத்து செல்வத்தையும் கொண்டு வரச்செய்து பிராமண சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் கொடுத்தார். அனைவருமே திருப்தியடைந்தனர். ராமரும் சீதாவும் மகாராஜா தசரதர் இருந்த இடத்திற்கு சென்றார்கள். செல்லும் வழியில் மக்கள் அவர்களை பார்த்து துக்கம் தாளாமல் அழுதனர். சோகத்தில் பிதற்ற ஆரம்பித்தனர்.

ராமாயணம் பகுதி - 17
மே 03,2012
அ-
+
Temple images
அயோத்தி வாசிகள் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர். ஒரு தகப்பன் தனது மகன் துஷ்டனாக இருந்தால்கூட வீட்டைவிட்டு வெளியே அனுப்பமாட்டான். அப்படியிருக்கும்போது இந்த உலகத்தையே கவரும் சக்தியை உடைய நல்ல குணம் கொண்ட ஒரு மகனை காட்டிற்கு போகச்சொல்கிறான் என்றால் அவன் மன்னன்தானா? எங்கள் ராமன் வேத சாஸ்திரங்களை அருமையாக படித்திருக்கிறார். யாரையும் எடுத்தெறிந்து பேசமாட்டார். அஹிம்சையே அவரது கொள்கை. மனதை அடக்கியவர். இந்திரியங்களை வசப்படுத்தியவர். அப்படிப்பட்ட மகானை இந்த சக்கரவர்த்தி வெளியே அனுப்புகிறார் என்றால் அவருக்கு நாங்கள் என்ன பெயரிட்டு அழைப்பது? இவர் இவ்வூரை விட்டு போய்விட்டால், கோடை காலத்து மரம், செடி, கொடிகளைப்போல இந்த நாட்டு மக்கள் அனைவருமே வாடிப்போய் விடுவோமே! பூக்களும், பழங்களும் நிறைந்த ஒரு மரத்தின் வேரை அறுத்துவிட்டால் அது எப்படி சருகாகிப் போகுமோ, அதுபோல் எங்கள் முகமும் காய்ந்துபோகுமே! இவ்வுலகில் தர்ம சொரூபத்தைக் கொண்டவன் ராமன். அவன் மரத்திற்கு சமமானவன்.
நாங்கள் அவனோடு ஒட்டியுள்ள கிளைகளாகவும், பழங்களாகவும், பூக்களாகவும் இருக்கிறோம். எனவே, நாம் அனைவருமே நம் ராமனோடு போய் விடுவோம். அவன் தன் மனைவியோடும், தம்பியோடும் எங்கு வசிக்கப் போகிறானோ அங்கேயே வாழ்வோம். ராமனை பின்தொடர்ந்து செல்வோம். நம் வீட்டில் நாம் சேர்த்து வைத்துள்ள பொருட்களையும், தானியங்களையும் எடுத்துச் செல்வோம். நாம் போனபிறகு நம் வீடுகள் கவனிப்பார் இல்லாமல் ஆகிவிடும். அவை இடிந்து மண்ணோடு மண்ணாகிவிடும். அந்த இடிபாட்டுக்குள் பாம்புகளும், எலிகளும் துளையிட்டு வாழட்டும். அவற்றை இந்த கைகேயி ஆளட்டும். நாம் சென்றுவிட்டால் இங்கே எந்த யாகமும் நடக்காது. பலி கொடுக்க ஆள் இல்லை. மந்திரங்கள் சொல்லி தேவர்களை அழைக்கவும் ஒருவரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கே வசிக்கின்ற எல்லா தேவதைகளும் அகன்றுவிடும். தேவதைகள் இல்லாத நாட்டை பஞ்சமும், நோயும் பீடிக்கும், என்றனர். இவையெல்லாம் ராமனின் காதில் விழத்தான் செய்தது. அவர் தனது முகத்தில் எவ்வித சலனத்தையும் காட்டிக்கொள்ளவில்லை. யானை கம்பீரமாக நடந்துசெல்வதுபோல தன் தந்தையை சந்திக்க சென்றார்.
தந்தையார் இருந்த அறை வாசலில் அமைச்சர் சுமந்திரர் மற்றும் காவலர்கள் துக்கத்துடன் இருந்தனர். சுமந்திரரிடம் ராமர், அமைச்சரே! நான் என் தந்தையை பார்க்க வேண்டும். அவரது திவ்விய தரிசனத்திற்காக காத்திருக்கிறேன், என்றார். தந்தையிடம் சொல்லிக்கொண்டு சீதையுடன் காட்டிற்கு செல்ல அவர் உத்தேசித்திருந்தார். லட்சுமணனும் சீதையும் அவருடன் நின்றனர். சுமந்திரர் தசரதர் இருந்த அந்தப்புரத்திற்குள் சென்றார். அங்கே மகாராஜா மேகம் மறைத்த சூரியனைப்போல முகம் வாடிக் காணப்பட்டார்.  ராஜா முன்பு தலைதாழ்த்தி நின்று, அரசரே! தங்களுக்கு எதிலும் வெற்றி உண்டாகட்டும், என்று வாழ்த்தினார். சற்று நிறுத்தி விட்டு தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். ஐயனே! தங்களைக்காண தங்கள் புத்திரர் ராமன் தன் மனைவி சீதாபிராட்டியோடும், தம்பி லட்சுமணனோடும் நிற்கிறார். அவர் இப்போது காட்டிற்கு புறப்படப் போகிறார். தங்களைப்பார்க்க அனுமதி கேட்கிறார், என்றார். கலங்கிய கண்களுடன் தசரத சக்ரவர்த்தி, சுமந்தரரிடம், சுமந்திரா என்னுடைய மனைவிமார்களை இங்கே வரச்சொல். என் குழந்தை ராமனை அவர்கள் சூழ்ந்து நிற்கட்டும், என்றார். தசரதருக்கு அவரது பட்டத்தரசிகள் நீங்கலாக 350 மனைவிகள் உண்டு. அத்தனை பேரும் கலங்கிய கண்களுடன் அங்கு வந்து நின்றனர். ராமபிரானையும் உள்ளே சென்றார். மகனைக்கண்டதும் அவரை அணைத்துக்கொள்ள ஸ்ரீராமா என சொல்லியபடியே வேகமாக ஓடினார் தசரதர். அவரது கால்கள் இடறியது. மயக்கமாகி விழப்போனார். ராமனும், லட்சுமணனும் அவரை தாங்கிப் பிடித்தனர்.
ராஜபத்தினிகள் இதைக்கண்டு கதறினார்கள். அவர்களது அழுகை குரலும், அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களின் சத்தமும் அந்த இடத்தையே ஏதோ சூன்ய நிலையில் ஆழ்த்தியது. மருமகள் சீதா, மாமனாரை ராம லட்சுமணர் உதவியோடு படுக்கைக்கு கைத்தாங்கலாக தூக்கிச்சென்றாள். அவருக்கு மயக்கம் தெளிய ஒன்றரை மணி நேரம் ஆனது. ராமன் அவரை கைகூப்பி வணங்கினார். தந்தையே! தாங்கள் எனக்கு கடவுள் போன்றவர். நான் தண்டகாருண்யத்திற்கு புறப்படுகிறேன். என்னை ஆசீர்வதித்து அனுப்பி வையுங்கள். லட்சுமணனும் என்னோடு வருவதாக அடம்பிடிக்கிறான். நான் கட்டிய மனைவியும் கண்டிப்பாக வருவேன் என்கிறாள். எவ்வளவோ தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. எனவே அவர்களையும் அழைத்துசெல்கிறேன். எங்களை விட்டு பிரிவதற்காக தாங்கள் எவ்வித வருத்தமும் கொள்ள வேண்டாம், என்றார். தசரதர் ராமனிடம், நான் இந்த கைகேயியிடம் ஏமாந்தேன். அதற்காக உன்னைப் பலிகொடுப்பது நியாயமில்லாத ஒன்று. என்னை நீ ஒதுக்கி வைத்துவிட்டு இந்த நாட்டின் அரசனாகிவிடு, என்றார். ராமபிரானோ கொடுத்த வாக்கு தவறாதவர்.
சத்தியவேந்தர். தர்மம் தெரிந்தவர். தந்தை இப்படி சொல்கிறாரே என்று அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவரது கால்களை பிடித்துக்கொண்டு, அப்பா! நீங்கள் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் இந்த பூமியை ஆளவேண்டும். நான் காட்டில் வசிக்கப்போகும் காலம் வெறும் 14 ஆண்டுகள்தான். பெற்றவனை சத்தியம் தவற வைத்த மைந்தன் என்ற அவப்பெயருக்கு என்னை ஆளாக்கி விடாதீர்கள். தாங்கள் சொன்ன காலம் முடிந்தவுடன் மீண்டும் தங்கள் பாதகமலங்களை சரணடைவேன், என்றார் பணிவாக. தசரதர் கண்ணீர் வடித்தார். உலகத்தையே ஆளும் மகாராஜாவால் அந்த சூழ்நிலையில் ஒன்றுமே செய்ய இயலவில்லை. வார்த்தைகள் குளறின.போய் வா என் செல்வ மகனே! தர்மத்தை கடைபிடித்த உனக்கு  இந்த உலகத்தில் மட்டுமல்ல; எந்த உலகத்திற்கு சென்றாலும் நன்மையே கிடைக்கும். நீ போகும் பாதையில் குறுக்கிடும் விலங்குகளால் உனக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் இருக்கட்டும். சத்தியம் தவறாத நீ ஒன்றே ஒன்றை மட்டும் கேள். இப்போது இரவுப்பொழுதாகிவிட்டது. இந்நேரத்தில் கிளம்பிச் செல்லாதே. அதில் எனக்கு கொஞ்சம்கூட இஷ்டம் இல்லை. விடிய விடிய என் அருகிலேயே அமர்ந்திரு. உன் தாய் கவுசல்யாவை நம் அருகில் வைத்துக் கொள்வோம். நாம் இன்று முழுக்க பேசுவோம். அதன்பிறகு அதிகாலையில் புறப்பட்டு சென்றுவிடு. இந்த ஒரு இரவாவது உன்னோடு தங்கியிருக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கட்டும். மகனே! உன்னை பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன். இதுபோன்ற பிள்ளையை பெற்றவன் நிச்சயமாக சொர்க்கத்தை அடைவான். இங்கே நிற்கின்ற கைகேயியை பார். நான் அவளிடம் பிரியமாக இருந்த காரணத்தால் என்னை ஏமாற்றிவிட்டாள். மோசம் செய்துவிட்டாள். நம் குலப்பெருமையை கெடுத்துவிட்டாள். தர்மத்திற்கு பொருள் தெரியாத இந்த கேடு கெட்டவள் சொன்ன வார்த்தைக்கு நீ கட்டுப்பட்டு நிற்கிறாய் என்றால், உன்னைவிட இந்த உலகத்தில் உத்தமர் வேறு யார்? என்றவாறே மீண்டும் மூர்ச்சையானார்.

ராமாயணம் பகுதி - 18
மே 03,2012
அ-
+
Temple images
தசரதருக்கு மயக்கம் தெளிவிக்கப்பட்டது. ராமா! இன்று இரவு மட்டுமாவது நீ என்னுடன் தங்கிவிட்டுப்போ என்று வற்புறுத்திச் சொன்னார் அந்த õமன்னர். ராமன் அவரிடம், இன்று இங்கே நான் தங்கினால் சுகபோகங்கள் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால், நாளை முதல் காட்டில் அந்த போகங்களை யார் தருவார்கள்? எனவே நான் இன்று புறப்படுவதுதான் நல்லதாகப் படுகிறது. இந்த உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளையும், மக்களையும், சொத்துகளையும் பரதனுக்கு கொடுத்துவிடுங்கள். உங்களுடைய உத்தரவை நிறைவேற்றுவதால் எனக்கு கிடைக்கப்போகும் புண்ணியத்தையும், சுகத்தையும் தடுத்துவிடாதீர்கள். தந்தை சொல்லைக் கேட்பதுதான் மகனின் கடமை. நீங்கள் எக்காரணம் கொண்டும் அழக்கூடாது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் கலக்கம் என்ற வார்த்தையே இருக்கக்கூடாது. கடல் என்றாவது கலங்கியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அதுபோல உறுதியான மனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் எனக்கு கண்கண்ட தெய்வம். நான் இதுவரை சம்பாதித்தது புண்ணியங்கள் மட்டுமே. அந்தப்புண்ணியங்கள் மீது சத்தியமாக ஒரு நொடி கூட இங்கு இருக்கமாட்டேன்.
உங்களிடம் மட்டுமல்ல; என் அன்புத்தாய் கைகேயிடமும் காட்டிற்குச் செல்வதாக வாக்களித்துவிட்டேன். அதை நிறைவேற்றியே தீரவேண்டும். காட்டில் உள்ள விலங்குகளைப்பற்றி எனக்கு கவலையில்லை. அவை என்னுடன் நட்புடன்தான் இருக்கும். கவலைப்படாமல் போய் வா என்று எனக்கு தைரியம் கொடுத்து வாழ்த்தி வழி அனுப்ப வேண்டிய நீங்களே, இவ்வாறு கலங்கினால் நான் யாரிடம் முறையிடுவேன்? நீங்கள் கொடுத்த கெடு முடியும் வரை அயோத்திக்கு திரும்பவே மாட்டேன். நாடு, நகரம், செல்வம், தான்யம், மக்கள் இவற்றின் மீதெல்லாம் எனக்கு கொஞ்சம்கூட விருப்பமே கிடையாது. இப்போதைய எனது விருப்பம் உங்களுயை கட்டளையை நிறைவேற்றுவது மட்டுமே. தர்மத்தை கடைபிடிக்க வேண்டுமென என் மனம் விரும்புகிறது. என் சீதைகூட எனக்கு வேண்டாம். சொர்க்கத்தை என்னிடம் கொண்டுவந்து கொடுத்தால் அதுவும் வேண்டாம். எனது உயிர்கூட எனக்கு வேண்டாம். ஆனால், உங்களிடம் செய்துகொடுத்த சத்தியம் மட்டும் வேண்டும், என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்தார்.
அன்பு மகனின் உருக்க மொழி கேட்டு, ராமனை மார்போடு அணைத்துக்கொண்ட சக்ரவர்த்தி தசரதர், அந்த நிலையிலேயே மயக்கமடைந்து அசைவற்று போய்விட்டார். அமைச்சர் சுமந்திரர் துக்கம் தாங்க முடியாமல் அழுதார். கைகேயியைப் பார்த்து பற்களைக் கடித்து கோபத்தால் முகம் சிவந்தார்.  ஒரு நாட்டில் தவறு நடக்கும் போது அதைச் சுட்டிக்காட்டுவது அமைச்சரின் கடமை. அதிலும் நாட்டிற்கே அவமானம் வரும்போது மிகக் கடுமையாக அரசுக் கட்டிலில் இருப்பவர்களை கண்டித்தாக வேண்டும். சுமந்திரரும் தன் கடமையை செவ்வனே செய்தார். கடுமையான வார்த்தைகளால் கைகேயியை ஒருமையில் கண்டித்தார். எங்கள் மகாராஜா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நீ கேட்பதாக இல்லை. உனது கொடுமையான வார்த்தைகளால் அவரை அழும்படி செய்துவிட்டாய். ஒரு ஆண்மகனை அழச்செய்த நீ பெண்தானா? இரக்க சுபாவமே உன்னிடம் இல்லையா? இஷ்வாகு குலம் என்றால் சாதாரணமானதென்று நினைத்தாயா? அவர் எவ்வளவு பெரிய மனிதர்? அண்ட சராசரத்திற்கும் அவரே அதிபதியாக இருக்கிறார். அக்னி சாட்சியாக உன்னை திருமணம் செய்திருக்கிறார். இமயமலைகூட அசையும். எங்கள் ராஜாவை யாராலும் தொடமுடியாது. அப்படிப்பட்ட மனிதரை கலங்கச் செய்துவிட்டாயே. நீ செய்யும் பாவம் அவரையும் சேரும் என்பதை புரிந்துகொள்.
ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டால் அவள் செய்யும் பாவத்திலும் அவனுக்கு பங்கு கிடைக்கும் என்பதை நீ உணராதவளா? உன் புத்திரன்தான் இந்த நாட்டை ஆளட்டும் என்று நாங்கள் விட்டுவிட்டோமே. அப்படியிருந்தும் ராமச்சந்திர மூர்த்தியை காட்டுக்கு அனுப்ப ஏன் துடிக்கிறாய்? பரதன் இந்நாட்டை அரசாண்டால் நாங்கள் இந்த ராஜ்யத்தைவிட்டு போய்விடுகிறோம். உனது அரசாட்சியின்கீழ் ஒரு பிராமணன் கூட இருக்கமாட்டான். உன் நாட்டிற்குள் முனிவர்களும் சாதுக்களும் வரவே அஞ்சுவார்கள். கைகேயியே! உன்னைச்சொல்லி குற்றமில்லை. இந்நாட்டிலே ஒரு பழமொழி உண்டு. தாயைப்போல பெண் இருப்பாள். தந்தையைப்போல மகன் இருப்பான் என்று. நீயும் உன் தாயைப்போல கொடுமைக்காரியாகத்தான் இருக்கிறாய். உனக்கு நினைவிருக்கும். ஒரு சமயத்தில் உன் தந்தையான கேகயராஜன் உன் தாயோடு உரையாடிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு கந்தர்வன் விசேஷமான வரம் ஒன்றை தந்தான். உலகத்தில் உள்ள மிருகங்கள், பறவைகள், பூச்சிகள், பிற ஜந்துக்கள் என்ன பேசிக் கொள்கின்றன என்பதை உணரும் சக்தி அது. அன்று சில எறும்புகள் பேசிக்கொண்டிருந்தை கேகயராஜன் கவனித்தார். அவை நகைச்சுவையோடு பேசியதால் சிரித்து மகிழ்ந்தார். அருகில் இருந்த உன் தாய் சந்தேகப்பட்டு, எதற்காக சிரிக்கிறீர்கள்? என்னை கேலி செய்ய வேண்டுமென்பது உங்களுக்கு நோக்கமா? என்று கோபத்தோடு கேட்டாள்.
உன் தந்தை நடந்த விஷயத்தை சொன்னான். அவள் அதை நம்பவில்லை. அப்படியானால் அந்த எறும்புகள் என்ன பேசிக் கொண்டன என்பதை எனக்கும் சொல்லுங்கள் என்றாள். கேகயராஜன் அவளிடம், உன்னிடம் நான் அந்த தகவலை சொன்னால் என் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும். எனக்கு வரம் கொடுத்த கந்தர்வன் இந்த நிபந்தனையையும் விதித்துள்ளான், என்றான். ஆனாலும் உன் தாய் கேட்கவில்லை. என்ன நடந்தது என்பதை பிடிவாதமாக கேட்டாள். மாட்டிக் கொண்ட உன் தந்தை தனக்கு வரம்கொடுத்த கந்தர்வனிடமே ஓடினான். என் மனைவி இவ்வாறு கேட்கிறாளே! நான் என்ன செய்வது? என்றான். அதற்கு அந்த கந்தர்வன், உன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அந்த உயிருடன் விளையாடும் பெண் உனக்கு தேவைதானா? அவள் பெண்ணல்ல, பேய். அவளை விரட்டி அடித்துவிடு என்று யோசனை சொன்னான். கேகயராஜனும் உன் தாயை விரட்டியடித்த கதை உனக்கும் தெரியும். மகாராணியே! உனக்கும் உன் தாய்க்கும் என்ன வித்தியாசம்? என்று கடுமையாகப் பேசினார். அரக்க குணம் கொண்ட கைகேயி இதற்கெல்லாம் மசியவில்லை. மாறாக தன் குலப்பெருமையை இழிவாக பேசியதற்காக அவளுக்கு கோபம்தான் வந்தது.

ராமாயணம் பகுதி - 19
மே 03,2012
அ-
+
Temple images
உமது குடும்பம் மட்டும் யோக்கியமான குடும்பமா? என் தாயை அவமானப்படுத்தி பேசுகிறாரே உமது அமைச்சர் என தசரதரைப் பார்த்து கொதித்தாள் கைகேயி. சகரன் என்ற அரசன் உமது வம்சத்தில் இருந்தான். அவனது மகன் அசமஞ்சன். அவனை சகரன் நாட்டைவிட்டே விரட்டியடித்தான். உமது முன்னோர் செய்த காரியத்தைதானே இப்போது நீர் செய்யப்போகிறீர். இது ஒன்றும் உமது குலத்திற்கு புதிய விஷயமல்லவே. உமது குல யோக்கியம் இப்படி இருக்க என் தாயை எப்படி அவமானப்படுத்தலாம்? என்று எரிந்து விழுந்தாள். தம்பதிகளுக்குள் சண்டை வந்தால் பிறந்தவீடு, புகுந்தவீடு என்ற பாகுபாடு வந்துவிடும். அவரவர் குடும்பத்தில் உள்ள குறைகளை பலரும் கேட்கும்படியாக கத்தி தீர்த்துவிடுவார்கள். இதனால் தங்கள் குலத்திற்கு இழுக்கு வருமே என அவர்கள் கவலைப்படுவதில்லை. சாதாரண சுப்பன் குடும்பம் முதல் மகாராஜா தசரத சக்ரவர்த்தி குடும்பம் வரை இந்த பூவுலகில் இந்த புக்ககம், பிறந்தகப் பெருமைச் சண்டை மட்டும் விதிவிலக்கே இல்லாமல் நடந்திருக்கிறது. வாயை மூடு கைகேயி என்ற குரல் அப்போது ஆவேசமாக எழுந்தது. குரல் வந்த திசை நோக்கி அனைவரும் பார்த்தனர். அங்கே சித்தார்த்தர் என்ற ஞானி வந்துகொண்டிருந்தார். அவர் தசரதருக்கு மிகவும் வேண்டியவர். முதியவர். கள்ளங்கபடு இல்லாதவர். நீதிமான். அந்த மகா பெரியவர்தான் கைகேயியைப் பார்த்து இவ்வாறு சொல்லிக்கொண்டே வந்தார்.
கைகேயி! நீ செய்வது கொஞ்சம்கூட நியாயமல்ல. ராமன் இல்லாமல் அரசாங்கத்தை எப்படி நடத்த முடியும்? அவன் மீது ஏதாவது குற்றம் குறை இருந்தால் சொல். அவனை நானே வெளியே அனுப்பிவிடுகிறேன். அப்படி எந்த குற்றம் குறையும் உன்னால் சொல்லமுடியாது. ஒரு தவறும் செய்யாத பிள்ளையை வெளியே அனுப்பு என நீ சொல்வதை எல்லாம் நாட்டுமக்களான நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்நாட்டின் பிரஜை என்ற முறையில் இதை நான் எதிர்க்கிறேன். சற்று முன்பு நீ சகரனைப்பற்றியும், அசமஞ்சனைப்பற்றியும் பேசினாய். அன்று என்ன நடந்தது என்பதைப் பொறுமையாகக் கேள். அசமஞ்சன் ஒரு கொடூரன். அவன் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை திடீர் திடீரென பிடிப்பான். அவர்களை சரயு நதியில் வீசுவான். அந்தக்குழந்தைகள் நீந்தத்தெரியாமல் தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி எழுவதைப்பார்த்து கைகொட்டி சிரிப்பான். மூச்சுவிட முடியாமல் திண்டாடுவதை ரசிப்பான். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் நீரில் மூழ்கி இறப்பதை வேடிக்கை பார்ப்பான். இந்த கொடுமை பற்றி மக்கள் சகரனிடம் தெரிவித்தனர். நாங்கள் எல்லாம் இந்த நாட்டை விட்டே வெளியேறப் போகிறோம். ஒன்று உமது மகன் அசமஞ்சன் இங்கு இருக்கட்டும். அல்லது நாங்கள் இருக்கிறோம். என்ன முடிவு சொல்கிறீர்? என கேட்டார்கள்.
நீதிமானான சகரன் தன் மகன் அசமஞ்சனையும், அவனது மனைவிகளையும் நாட்டைவிட்டே வெளியேற்றிவிட்டான். அவர்கள் காடுகளில் திரிந்தார்கள். அசமஞ்சன் கொடுமைக்காரன். அதனால் நீதி தவறாத அவனது தந்தை அவனை வெளியேற்றினான். அதுபோல் ராமன் ஏதாவது குற்றம் செய்தானா? உன்னை எதிர்த்து பேசினானா? உண்மைநிலை இப்படி இருக்க, நீ ராமனையும், அசமஞ்சனையும் எப்படி ஒப்பிட்டு பேசலாம். நீ செய்வது, சொல்வது எதுவுமே நியாயமல்ல என்று சொல்லி பார்த்தார். கைகேயி எதையுமே கண்டுகொள்ளவில்லை. ஒருகாலத்தில் மிகவும் நல்லவள் என பெயர் பெற்றிருந்த அந்த பெண்மணி, இன்று அனைவரிடமும் கெட்ட பெயர் எடுத்துக்கொண்டிருந்தாள். தசரதர் கைகேயியிடம், சித்தார்த்தர் சொன்னதை கேட்டாயா? கேட்டாலும் நீ மாறமாட்டாய் என்பது எனக்குத்தெரியும். ஏனெனில் நீ நீசக்காரி. இனியும் இந்த அரண்மனையில் நான் தங்கமாட்டேன். என் மகனோடு போகிறேன். நீ பரதனோடு உன் இஷ்டப்படி செல்வத்தை எல்லாம் செலவிட்டு நாட்டை ஆண்டுகொண்டிரு, என்று பயமுறுத்தி பார்த்தார். அப்போது ராமபிரான் குறுக்கிட்டார். தந்தையையும், சித்தார்த்தரையும் நோக்கி, இந்நாட்டின் செல்வம் எனக்கு பெரிதல்ல. நான் செல்வத்தையும், அரண்மனை போகங்களையும் ஆட்சி அதிகாரத்தையும் வெறுக்கிறேன். அவற்றின்மீது எனக்கு ஆசை இல்லை, என்றார். தசரத மகாராஜாவுக்கு மனம் கேட்கவில்லை. ராமனுடன் தனது படைகளும் கருவூலத்தில் உள்ள செல்வமும் கொண்டு செல்லப்படட்டும் என உத்தரவிட்டார். கைகேயி இதை தடுத்தாள்.
காட்டுக்குப் போகிறவனுக்கு செல்வமும் படைகளும் எதற்கு? அவை ராமனுடன் போய்விட்டால் இங்கு நான் எதை வைத்து ஆள்வேன்? வேண்டுமென்றே இப்படி செய்கிறீர்களா? வரம் கொடுத்ததுபோல் நாடகமாடுகிறீர்களா? என்றாள்.தசரதர் மேலும் துக்கித்தார். நாசகாரியே! அவனது  செலவுக்குரிய செல்வத்தைக் கூட கொடுக்க மறுக்கிறாயே, சதிகாரி, என திட்டினார். அதற்கு மேல் அவரால் எதுவும் பேசமுடியவில்லை. ராமனை காட்டிற்கு உடனடியாக கிளம்பும்படி உத்தரவிட்டாள் கைகேயி. ராமபிரான் மிகுந்த அமைதியுடன், தாயே! தாங்கள் சொன்னபடி மரவுரி தரித்து உடனே கிளம்பிவிடுகிறேன். எனக்கும் லட்சுமணனுக்கும், சீதாவுக்கும் மரவுரி வரட்டும் என்றார்.இரக்கமற்ற கைகேயி மரவுரியை தன் கை யாலேயே எடுத்துவந்தாள். உடனடியாக அணிந்துகொண்டு அவ்விடத்தைவிட்டு அகலும்படி சொன்னாள். ராமபிரான் விலை உயர்ந்த வஸ்திரங்களை எல்லாம் களைந்துவிட்டு, மரவுரியை உடுத்திக் கொண்டார். இளவல் லட்சுமணனும் மரவுரி தரித்தான். ஆனால், சீதாதேவிக்கு மரவுரி தரிக்கத் தெரியவில்லை. உடுத்தத் தெரியாமல் திண்டாடினாள். காலமெல்லாம் செல்வச்செழிப்பில் வளர்ந்த அந்த திருமகள், இன்று ஒரு சந்நியாசினியின் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறாள். அவள் மரவுரியை கட்டத்தெரியாமல் திணறுவதைப் பார்த்த அந்தப்புர பெண்களெல்லாம் கண்ணீர் விட்டு அழுதனர்.
எவ்வளவு பெரிய ராஜகுமாரி? ஜனக மகாராஜாவின் புத்திரி. தங்கத்தட்டில் சாப்பிட்டவள். இன்று கணவனுக்காக காட்டிற்கு போகிறாள். இவளது பாதங்களில் தூசி பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னால் செல்லும் பணியாட்கள் தரையை தூர்த்துக்கொண்டே செல்வார்களாம். அப்படிப்பட்டவள் இன்று கல்லிலும், முள்ளிலும் நடக்கப்போகிறாள். எவ்வளவு பெரிய தியாகவதி. மனைவி என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வருத்தம் ததும்ப புகழ்ந்தனர். பணமில்லை, பணமில்லை என பிதற்றுபவர்கள் இந்தக்கட்டத்தில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். லட்சுமியின் அம்சமான சீதா கூட, காட்டில் போய் காயையும், இலையையும் சாப்பிட வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டிருக்கிறது. விதியின் போக்கு தெய்வத்திற்காக கூட மாறாது. ராமாயணம் படிப்பவர்கள் மேலோட்டமாக படிக்காமல், உள்ளார்ந்து படித்தால் தான், வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை துணிச்சலுடன் சந்திக்க இயலும். சீதாபிராட்டி மரவுரி கட்டத்தெரியாமல் திணறியதால் ராமபிரானே அதை உடுத்திவிட்டார். அந்தப்புரத்து பெண்கள் இதைத் தடுத்தனர். ராமா! நீ செய்வது கொஞ்சம்கூடநியாயமல்ல. உன் தந்தை உன்னைத்தானே காட்டுக்கு போகச் சொன்னார். நீ உன் மனைவியையும் அழைத்துச் செல்கிறாயே! உன்னைத்தான் பார்க்கமுடியாமல் நாங்கள் 14 ஆண்டுகள் அழப்போகிறோம் என்றால், எங்கள் தலைவியான சீதாபிராட்டியையும் அழைத்து போகிறாயே! அவளை இங்கு விட்டுச்செல். நீ வரும்வரை கவனமாக பார்த்துக் கொள்கிறோம் என்றனர். சீதாப்பிராட்டி அதற்கு மறுப்பு தெரிவித்தாள். அந்நேரத்தில் இக்ஷ்வாகு குல குரு வசிஷ்டர் அரண்மனைக்குள் வந்தார்.

ராமாயணம் பகுதி - 20
ஏப்ரல் 05,2013
அ-
+
Temple images
சீதையும் ராமனும் மரவுரி தரித்து நிற்பதைப் பார்த்து மனம் பதைத்து போனார் வசிஷ்டர். அவருக்கு ஆவேசம் அதிகமாகிவிட்டது. அவர் ராஜகுரு அல்லவா? அக்காலத்தில் குருவுக்கு மன்னர் குலத்தினரை மிகக் கடுமையாகக் கண்டிக்கும் உரிமை இருந்தது. அந்த வகையில் கைகேயியை அவர் திட்டித் தீர்த்தார். ஏ நாசகாரி கைகேயியே! உன்னுடைய கேவலமான புத்தியால் இந்த நாடே கண்ணீர்விட்டு தவித்துக் கொண்டிருக்கிறது. உன்னுடைய புகுந்த வீட்டிற்கு மட்டுமின்றி பிறந்த வீட்டிற்கும் நீ கெட்டபெயரை ஏற்படுத்தி விட்டாய். நல்ல நடத்தை என்ற வார்த்தையாவது உனக்கு தெரியுமா? நீ கேட்ட வரத்தின்படியே அனைத்தும் நடக்கட்டும். அதன்படி ராமன் மட்டும் காட்டுக்கு போகட்டும். கணவனில் பாதி மனைவி என்பது கிருகஸ்தர்களுக்கு பொருந்தும் வார்த்தை. அந்த வகையில், ராமனுக்கு சொந்தமான இந்த பூமியை ஆளும் உரிமை அவனில் பாதியான சீதைக்குத்தான் உண்டு. ஒருவேளை சீதாதேவி இதற்கு விரும்பாவிட்டால் நாங்களும் அவளுடன் காட்டிற்கு போகிறோம். இந்த நாட்டில் ஒரு ஈ, எறும்புகூட மிஞ்சாது என்பதை புரிந்துகொள்.
ராமன் காட்டிற்கு புறப்பட்டால் இங்கிருக்கும் பசுக்கள்கூட அவனை ஏக்கப்பார்வை பார்க்கும். அவனோடு அவை போய்விடும். உன் மகன் பரதன், சத்ருக்கனன் ஆகியோரும் இங்கே தங்கமாட்டார்கள் என்பதை புரிந்துகொள். ஏனெனில், அவர்கள் எங்கள் மகாத்மா தசரதரின் புத்திரர்கள். அந்த நல்ல மனிதருக்கு பிறந்த பிள்ளைகள் நல்லவர்களாகவே இருப்பார்கள். அவர்களும் ராமனோடு போய்விடுவார்கள். இங்கே மரங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கும். அந்த மரங்களை கட்டிக்கொண்டு நீயே அழு. உன் மகன் இந்த நாட்டை ஆள்வான் என எண்ணாதே. அதில் அவனுக்கு துளியளவும் விருப்பம் இருக்காது. நீயே உன் கையால் சீதை உடுத்தியிருக்கும் மரவுரியை அவிழ்த்து எறிந்துவிடு. அவளுக்கு விலை உயர்ந்த அணிகலன்களை சூட்டு. நல்ல ஆடைகளை கொடு. அவள் சர்வ அலங்காரத்துடன் இந்த நாட்டை விட்டு செல்லட்டும், என்றார். சீதாதேவி வசிஷ்டரைப் பணிந்தாள். மாமுனிவரே! நான் என் கணவரைப் போலவே மரவுரி தரித்தே காட்டிற்கு செல்கிறேன். என் கணவர் தபஸ்வியைப்போல வேடமிட்டிருக்கும்போது நான் மட்டும் அலங்காரம் செய்தால் நன்றாக இருக்காது, என்றாள்.
இதைக்கேட்டு தசரதர் மிகுந்த துக்கமடைந்தார். ஒன்றும் அறியாத ராமனையும், சீதையையும் காட்டிற்கு அனுப்புவதுகுறித்து வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றார். ஊர்மக்களெல்லாம் தசரதரை கடுமையாக நிந்தித்தனர். ஒரு பிரஜை, தசரத ராஜா! தாங்கள் நீதி தவறிவிட்டீர்கள், என வெளிப்படையாகவே சொன்னான். இதைக்கேட்டு மன்னர் அதிர்ந்துபோனார். என் நாட்டின் சாதாரண பிரஜை என்னை நிந்தித்துவிட்டான். இனியும் நான் வாழ்வதில் அர்த்தமில்லை. அதேநேரம் அவன் நியாயத்தையே பேசியிருக்கிறான். நாளை இந்த உலகம் முழுமையும் என்னை நிந்திக்கப்போகிறது. அதற்குள் என் உயிர் போய்விட வேண்டும். மாபாவி கைகேயியே! இனியாவது நான் சொல்வதை கேள். ராமனை காட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற வரத்தை தவிர, வேறு எந்த உறுதியையும் நான் உனக்கு கொடுக்கவில்லை. எனவே சீதையின் மரவுரிகளை திரும்ப வாங்கிவிடு. அவள் தன் கணவனைத்தவிர வேறு எந்த தெய்வத்தையும் வணங்காதவள். உனக்கு எக்காலத்திலும் மரியாதையே தந்தவள். அந்த நன்றிக்காகவாவது அவளை விட்டுவிடு. இல்லாவிட்டால் உனக்கு நற்கதி கிடைக்காது. உலகில் உள்ள அத்தனை நரகங்களும் உன்னை சூழ்ந்து நிற்கும், என்று சாபமிட்டார். கைகேயி அசையவில்லை.
எதற்கும் கலங்காமல் நின்ற மனைவியைப் பார்த்து மயக்கமும் வந்தது. தரையில் சாய்ந்துவிட்டார். அவருக்கு ராமபிரான் மூர்ச்சை தெளிவித்தார்.
தந்தையிடம், அன்புக்குரிய மகாராஜா! தங்களைப்போன்ற தர்மவான் இந்த பூமியில் இல்லை. நான் காட்டிற்கு புறப்படும் முன் ஒரு வரம் கேட்கிறேன். தருவீர்களா? என்றார். மகனை அள்ளி அணைத்துக்கொண்டார் தசரதர். ஹே, ராமா! உனக்கில்லாத வரமா? நீ என்ன கேட்டாலும் தருவேன்,என்றார். தந்தையே! என் தாய் மிகவும் வயதானவள். அவள் மீது நீங்கள் அதிக அன்பு வைத்திருக்கிறீர்கள். சத்தியத்தை பாதுகாப்பதில் அவளுக்கு நிகரானவர் யாருமில்லை. நீங்கள் என்னை காட்டிற்கு அனுப்புவதாக சொல்லியும்கூட உங்களிடம் இதுவரை அவள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. உங்கள்மீது கோபப்படவும் இல்லை. மனைவி என்ற உரிமையோடு சண்டை போடவும் இல்லை. அதேநேரம் நான் இங்கிருந்து சென்றுவிட்டால் அந்த துக்கத்தை அவள் தாங்கமாட்டாள். எனவே நீங்கள் அவளுடன் அணுசரணையாக நடக்க வேண்டும். அவளுக்கு அதிக மரியாதை தர வேண்டும். என்னைப் பிரிந்த துக்கத்தால் அவள் இறந்துபோகாதபடி பாதுகாக்க வேண்டும். நான் காட்டிலிருந்து வரும்போது என் தாய் இந்த அரண்மனையில்தான் இருக்க வேண்டும். அவளை எமலோகத்திற்கு சென்று தேடும்படி வைத்துவிடாதீர்கள், என்றார்.
தசரதர் இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. கண்ணீர் விட்டார். புலம்ப ஆரம்பித்தார். ராமா! கடந்த ஜென்மங்களில் நான் மிகப்பெரிய பாவங்கள் செய்துள்ளேன் போலும். பல கன்றுகளை பசுக்களிடமிருந்து பிரித்திருப்பேனோ? எந்த தவறும் செய்யாத பூச்சி, புழுக்களை வதைத்திருப்பேனோ? இதனால்தான் இப்பிறவியில் என் பிள்ளையைப் பிரிந்து துக்கப்படுகிறேன். இந்த கைகேயியிடம் வாழ்வதைவிட என் உயிர் போய்விடுவது மேல். ஆனாலும் இது போக மறுக்கிறது. இன்னும் நான் என்னவெல்லாம் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறதோ? அத்தனையும் அனுபவித்தால் அல்லவா இந்த உயிர் போகும்? என புலம்பி தீர்த்தார். தனது அமைச்சர் சுமந்திரரை அழைத்து ராமன் நாட்டின் எல்லை வரை குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் அழைத்துச்செல்லப்பட வேண்டும் என உத்தரவிட்டார். தனது கருவூல தலைவனை அழைத்தார். சீதாதேவிக்குரிய ஆபரணங்களை கொண்டுவர உத்தரவிட்டார். இருவரும் வேகமாக செயல்பட்டனர். அனைவரின் வற்புறுத்தலாலும், சீதாதேவி அந்த நகைகளை அணிந்துகொண்டாள். வழக்கத்தைவிட அழகாகத்தோன்றினாள். மாமியார் கவுசல்யா மருமகளை மார்போடு அணைத்துக்கொண்டாள்.
அவளுக்கு புத்திமதி சொன்னாள். அன்புக்குழந்தையே! இந்த உலகத்தில் உள்ள பெண்களைப்பற்றி நான் அறிவேன். ஒரு கணவன் பணக்காரனாக இருக்கும்போது அவனுக்கு மனைவி தகுந்த மரியாதை கொடுப்பாள். அதே கணவனுக்கு கஷ்டம் வந்து செல்வம் குறைந்துபோனால் இதற்கு முன் செய்த நன்றியை மறந்துவிடுவாள். அதுமட்டுமல்ல. கட்டிய கணவனையே அலட்சியம் செய்வாள். அவனால் எவ்வளவு சுகத்தை அனுபவித்திருந்தாலும், பணம் என்ற அற்ப சந்தோஷத்திற்காக அவனையே தூஷிப்பாள். சிலபெண்கள் அந்த கணவனைவிட்டு விலகியே போய்விடுவார்கள். அவர்களெல்லாம் பதிவிரதைகள் அல்ல. இப்படிப்பட்ட பெண்கள் தங்களை அக்னிசாட்சியாக விவாகம் செய்த கணவனை தூக்கி எறிந்து விடுவார்கள். கணவனின் பணத்தை தவிர அவர்களுக்கு எதுவுமே தேவையிருக்காது. என் புத்திரன் ராமனும் அரண்மனையில் வசித்தவன். நீயும் அவனோடு சுகவாழ்வு வாழ்ந்துள்ளாய். இதையெல்லாம் மனதில் கொண்டு, அவனது இன்றைய நிலையக் கருத்தில் கொள்ளாமல், அவன் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும், என்றாள். சீதாதேவிக்கு கண்ணீர் வந்து விட்டது. தாங்கள் என்னையும் மற்ற பெண்களோடு ஒப்பிட்டு பேசிவிட்டீர்களே! என மாமியாரைப் பார்த்து வருத்தத்துடன் கேட்டாள்.

ராமாயணம் பகுதி - 21
ஏப்ரல் 05,2013
அ-
+
Temple images
சீதாதேவி வருத்தத்துடன் தன் மாமியாருடன் பேச ஆரம்பித்தாள். அம்மா! தங்கள் உத்தரவுப்படியே நான் நடந்துகொள்கிறேன். இருப்பினும் நீங்கள் எனக்கு இந்த அளவுக்கு அறிவுரை சொல்லியிருக்க வேண்டாம். ஏனென்றால் என்னை பெற்றவர்கள் சிறு வயதிலிருந்தே கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதை நான் தவறாமல் கடைபிடிக்கிறேன். என்னை மற்ற பெண்களோடு ஒப்பிட்டு பேசுவது மனவருத்தத்தை தருகிறது. நான் பதிவிரதைகளின் பாதையை விட்டு விலகாதவள். ராமன் இல்லாத வாழ்க்கை தந்தி இல்லாத வீணையைப் போன்றது. சக்கரங்களே இல்லாத தேரைப்போன்றது. ஒரு பெண்ணுக்கு ஆயிரம் புத்திரர்கள் இருந்தாலும் கணவனுக்கு நிகரானவர் யாரும் இல்லை. எனது தாய் தந்தையாக இருந்தாலும், நான் பெற்ற குழந்தைகளாக இருந்தாலும் எனக்கு பல வகையிலும் சுகத்தை தேடித்தரலாம். அது பெரிய விஷயமல்ல. அது அவர்களின் கடமையாகும். ஆனால் ஒரு பெண்ணுக்கு ÷க்ஷமத்தை தரக்கூடியவன் கணவன் மட்டுமே. என் தாய் எனக்கு பல பதிவிரதைகளின் கதைகளை சொல்லியிருக்கிறாள். அவர்களைப் போலவே வாழ நான் ஆசைப்படுகிறேன். கனவில் கூட என் கணவரை நான் அவமதித்தது கிடையாது. எனக்கு அவரே தெய்வம், என்றாள்.
கவுசல்யா சீதையை அப்படியே அணைத்துக்கொண்டாள். தன் மருமகளைப் பற்றி பெருமை கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. ராமபிரான் அன்னையின் அருகில் சென்றார். அவளை பிரதட்சணம் செய்தார். காலில் விழுந்து வணங்கி, தாங்கள் எக்காரணம் கொண்டும் வருத்தப்படக்கூடாது. தந்தையைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை. அவர் என் உயிரினும் மேலானவர். இந்த 14 ஆண்டுகளும் 14 நொடிகள் போல் கரைந்துபோகும். நீங்கள் கைகேயியிடம் கருத்துவேறுபாடு கொள்ளக்கூடாது. அவள் என்ன சொல்கிறாளோ அதை அப்படியே நிறைவேற்றி வையுங்கள், என்றார். கொடுமைக்கார கைகேயிக்கும் பரிந்துரைத்து பேசும் ராமனைப் பார்த்து, தசரதரின் 350 பத்தினிகளும் கலங்கி அழுதனர். அவர்களின் அருகில் சென்ற ராமன், தக்க மரியாதையுடன் வணக்கம் தெரிவித்தார். கைகூப்பிய நிலையில், அன்னையரே! கலக்கம் எதற்கு? நான் இங்கிருந்த காலத்தில் உங்களிடம் ஏதேனும் காரணத்தால் தவறுதலாக நடந்திருக்கலாம். உங்களுக்கு பிடிக்காத காரியத்தை செய்திருக்கலாம். அதையெல்லாம் மனதில் கொள்ளாதீர்கள். அப்படி ஏதேனும் நான் செய்திருந்தால் என்னை மன்னித்து வழி அனுப்புங்கள். அவ்வாறு செய்யாத பட்சத்தில் என் மனம் சமாதானமடையாது. அனைத்து தாய்மார்களும் என்னை மன்னித்தருள வேண்டும், என்றார்.
இதைக்கேட்டு 350 தாய்மார்களும் அழுதார்கள். ராமா! எங்களால்தான் உனக்கு ஏதேனும் இடர் வந்திருக்கலாம். நீ எவ்வளவு நல்லவன் என்பது எங்களுக்கு தெரியும். உன்னால் நாங்கள் எந்த இடையூறையும் இதுவரை சந்தித்ததில்லை. அப்படியிருக்க மன்னிப்பு என்ற சொல்லுக்கே இடமில்லை, என்றாள் ஒரு தாய்.  இதைக்கேட்டு எல்லா தேவியரும் வாய்விட்டு கதறினார்கள். இதுவரையில் அந்த அந்தப்புரத்தில் தேவியரின் சிரிப்பொலியும், வீணை ஒலியும், அரம்பை போன்ற பெண்களின் நடனமும், இனிய கானமும், மிருதங்க ஒலியும்தான் கேட்டிருக்கிறது. அயோத்தியின் வரலாற்றிலேயே இன்றுதான் முதன் முதலாக அழுகை சத்தம் கேட்கிறது. இதன்பிறகு ராம, லட்சுமணரும், சீதாதேவியும் தசரதர் அருகே சென்று, அவரை சுற்றி வந்து வணங்கினர். அவரிடம் உத்தரவு பெற்றனர். தசரதர் உணர்வற்று தலையாட்டினார். அவரது ஜீவன் பாதி கரைந்து போயிருந்தது. லட்சுமணன் கவுசல்யாதேவியின் காலில் விழுந்து ஆசி பெற்றான். அவள் அருகில் நின்ற தன் பெற்ற அன்னையான சுமித்ராவின் காலில் தலையை வைத்து பணிவோடு வணங்கி விடைகேட்டான். சுமித்ராதேவி கண்ணீர் வடித்தபடியே தன் மகனை மார்போடு அணைத்து, இந்த உலகத்தை காப்பதற்கு கவுசல்யாதேவி ராமனை பெற்றெடுத்தாள். அந்த ராமனுக்கு சேவை செய்ய நான் உன்னை பெற்றெடுத்தேன்.
நீ காட்டுக்குள் செல்லும்போது பலவித வித்தியாசமான ஒலிகளைக் கேட்பாய். உன் சகோதரனின் அழகை ரசிப்பாய். அவனுடைய நடையைக் கண்டு வியந்துபோவாய். அவர் உன்னோடு பேசிக்கொண்டிருக்கும்போது வார்த்தைகளின் லயத்தில் மயங்கி, சில நேரங்களில் கண்மூடிவிடுவாய். அப்படியெல்லாம் இருக்கக்கூடாது. ஏனெனில் நீ உன்னை மறந்திருக்கும் வேளையில் மிருகங்களோ, காட்டு மனிதர்களோ உன் அண்ணனை தாக்கக்கூடும். அது மட்டுமின்றி, உனக்கு தாய் போன்றவளான அண்ணி சீதாதேவியையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கிறாய். இன்றுமுதல் உனக்கு ஊண் இல்லை, உறக்கம் இல்லை. அவர்கள் இருவரையும் பாதுகாத்து அழைத்துச்சென்று, மீண்டும் என்னிடம் ஒப்படைக்க வேண்டியது உன்னுடைய பணி, என்றாள். அந்நேரத்தில் லட்சுமணன் தன் தாயிடம் அண்ணி சீதாதேவி மீது தான் வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் எடுத்துக்கூறினான். அன்புத்தாயே! என் அண்ணியாரை உங்களைவிட உயர்வான இடத்தில் வைத்திருக்கிறேன். அவரது முகத்தை இன்றுவரை நான் பார்த்தது இல்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் அவரது திருவடிகள்தான். திருமணத்தன்று ராமபிரானுக்கு மாலையிட சீதாதேவி வெட்கத்துடன் நின்றார்கள்.
நம் அண்ணன் உயரமானவர். தலை நிமிர்ந்து மாலை போட அண்ணிக்கு தயக்கமாக இருந்தது. அவர்கள் அப்படி கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, அந்நேரத்தில் நான் அண்ணனின் காலில் போய் விழுந்தேன். அண்ணன் குனிந்து என்னை ஆசீர்வதித்தார். அந்நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சீதாதேவி அண்ணனின் கழுத்தில் மாலையிட்டுவிட்டார்கள். அந்த அளவுக்கு நான் அவர்மீது மரியாதை வைத்திருக்கிறேன். அவரையும், என் உடன்பிறந்த சகோதரனையும் காப்பதைத்தவிர எனக்கு எந்தப்பணியும் இல்லை. தாங்கள் கவலைப்படாமல் இருங்கள். அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் என் உயிரைக் கொடுத்தாவது காப்பேன், என்றான். சுமித்ராதேவி பெருமை பொங்க நின்றாள். இதற்குள் அமைச்சர் சுமந்திரர் தேருடன் வந்து நின்றார். ராமபிரானே! ரதம் தயாராகிவிட்டது. தாங்கள் எங்கு போகச் சொல்கிறீர்களோ அங்கே விரைவில் கொண்டு சேர்ப்பேன். உங்கள் வனவாசத்தின் முதல்நாள் இன்றுதான் துவங்குகிறது, என்றார். இதற்குள் சீதாபிராட்டி தன்னை ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டாள். சூரியனைப்போல மின்னல் அடித்த தேரில் அவளது மெல்லடிகள் தான் முதன்முதலாக ஏறின. தசரதரால் அவளுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து நகைகளும் உடைகளும் தேரில் ஏற்றப்பட்டன. மண்வெட்டிகளும், கூடைகளும் ரதத்தில் வைக்கப்பட்டன. ராம, லட்சுமணரும் தேரில் ஏறினர். அயோத்தி நகரமே அழுதது. யானைகள் மதம் பிடித்து பிளிறின. தங்கள் சங்கிலிக்கட்டை உருவ முயன்றன. குதிரைகள் லாயத்திற்குள் அங்குமிங்குமாக பாய்ந்தன. தேர் புறப்பட்டது. அயோத்தி மக்கள் அனைவரும் சின்னஞ்சிறுவர்களும் கூட தேரின் பின்னால் ஓடினர்.

ராமாயணம் பகுதி - 22
ஏப்ரல் 05,2013
அ-
+
Temple images
ராமராஜ்யம் வேண்டுமென இந்த உலகமே எதிர்பார்க்கிறது. ஸ்ரீராமஜெயம் என்ற மந்திரம் ஆயிரக்கணக்கில் பக்தர்களால் எழுதப்படுகிறது. ஆனால், அதை எழுதுவதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டுமெனத் தெரியுமா? ராமபிரானை ஏற்றிக்கொண்டு ரதம் வேகமாக செல்கிறது. மக்களெல்லாம் பின்னால் ஓடுகிறார்கள். ரதம் எழுப்பும் புழுதி வேகமாய் பரவுகிறது. காற்று சுடுகிறது. தாய்ப்பசுக்கள் கன்றுகளுக்கு பால் கொடுக்க மறுக்கின்றன. ராமபிரான் சகல உயிர்களுக்கும் அதிபர். எனவே உலகமே துக்கத்தால் தவித்தது. அயோத்தி நகர மக்கள் வழக்கமாக செய்யும் வேலை எதையும் செய்யவில்லை. சூரியன் இந்த துக்கத்தை காண இயலாமல் மேகத்திற்குள் மறைந்துபோனான். யானைகள் சாப்பிட மறுத்தன. நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் அன்றைய தினத்தில் பிரசவித்த பெண்களின் முகத்தில்கூட மகிழ்ச்சி என்பது கடுகளவுக்கும் இல்லை. அன்றைய தினம் சந்திரனை செவ்வாயும், குருவும், புதனும் குரூரமான திருஷ்டியுடன் பார்த்தார்கள். ஜாதக ரீதியாக இது மிகவும் மோசமான நேரம். இந்த நேரத்தில்தான் ராமன் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்.
நல்லதையும் கெட்டதையும் செய்யும் நவக்கிரகங்கள் கூட இந்த துக்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் கண்மூடிக் கொண்டன. எனவே இந்த உலகமே கலங்கிப்போயிற்று. கடலில் புயல் வீசியது. பூகம்பம் ஏற்பட்டதுபோல அந்த நகரமே நடுங்குவது போல ஒரு பிரமை. பளபளப்பாக தெரியும் அஸ்வினி நட்சத்திரம் அன்று காணாமல் போய்விட்டது. துருவ நட்சத்திரம், சப்த ரிஷி மண்டலம் ஆகியவையும் ஒளி இழந்தன. அயோத்தி நகரில் உள்ள ஒருவன் கூட அன்று சாப்பிடவில்லை. அவர்கள் எண்ணமெல்லாம் ராமன் மீதே பதிந்திருந்தது. சிலர் தசரதரை நினைத்து வருத்தப்பட்டார்கள். ராமபிரான் பதவி ஏற்பதற்கு முன்பே அயோத்தியில் ராமராஜ்யம்தான் நடந்துகொண்டிருந்தது. ராமன் இருக்கும் இடத்தில் துன்பத்திற்கு இடமில்லை. மக்கள் தீர்க்காயுளுடன் வாழ்ந்தார்கள். 150 ஆண்டுகளுக்கு மேல் சாதாரண மனிதன்கூட வாழ்ந்ததால், அவன் இறந்தால்கூட துக்கப்பட யாருமில்லை. சந்தோஷமாக வழியனுப்பி வைப்பார்கள். ஏனெனில் ராமன் வாழ்ந்த இடத்தில் வசிப்பதால் அவன் வைகுண்டம் செல்வதாகக் கருதி யாரும் அழுவதில்லை. அப்படிப்பட்ட அயோத்தி மாநகரில் ராமன் அகன்றவுடன் அஞ்ஞானம் குடிபுகுந்தது. உலகத்தில் முதன் முதலாக மனிதனுக்கு அழிவு ஆரம்பித்தது ராமன் வெளியேறிய இந்த நாளில்தான். அன்றுவரை குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்தன. ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. இப்போதோ குடும்பங்களில் சந்தேகப்புயல் வீசியது.
பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்கள், இந்த ராமனிடம் கவுசல்யா எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவள் பேச்சைக் கேட்காமல் அவன் போய்விட்டானே. ராமனே இப்படி செய்தால் நம் பிள்ளைகள் எதிர்காலத்தில் நம் பேச்சை கேட்கவா போகிறார்கள்? என சொல்லி அழுதார்கள். பிள்ளைகளோ வேறு கோணத்தில் சிந்தித்தார்கள். இந்த கவுசல்யா பெற்றவள்தானா? எவ்வளவு கஷ்டப்பட்டாவது ராமனை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டாமா? ராமனைப் பெற்றவளே இப்படி நடந்து கொள்கிறாள் என்றால், நம்மைப் பெற்ற தாய்மார்கள் எதிர்காலத்தில் நம்மீது எப்படி அன்பு வைப்பார்கள்? அவர்களை இனி நம்பக்கூடாது, என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆண்களும் இதே கோணத்தில் சிந்தித்தனர். நல்லவளாய் இருந்த கைகேயி ஒரே நொடியில் மனம் மாறி தன் மகனுக்கு பட்டம் சூட்டவேண்டும் என்பதற்காக கட்டிய கணவனையே அவமானகரமாகப் பேசினாள். அவரோ உயிர் போகும் நிலையில் இருக்கிறார். பெண்கள் எல்லாம் கணவனுக்கு எதிராக இப்படி திரும்பிவிட்டால் நமது நிலை என்னாவது? என பேசிக்கொண்டனர். பெண்கள் எல்லாம், இந்த தசரத மகாராஜா காமத்தின் வசப்பட்டு, கைகேயியின் சொல்லுக்கு பயந்து பெற்ற மகனையே வீட்டைவிட்டு விரட்டி விட்டார். நமது கணவன்மாரும் இதேபோல பிற பெண்களின் மீது ஆசைப்பட்டு அவர்கள் சொல்லும் சொல்லுக்காக நம் பிள்ளைகளையும் விரட்டமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தசரதரிடம் இரக்ககுணம் இல்லாததுபோல, நம் கணவன்மாரும் கொடுமைக்காரர்களாக மாறிவிடுவார்களோ, என அச்சம் கொண்டனர்.
ராமராஜ்யம் என்றால் கணவன் மனைவி ஒற்றுமை, தாய் மகன் ஒற்றுமை, மக்கள் அரசாங்க ஒற்றுமை அனைத்தும் நிறைந்ததாக இருக்கும். ராமன் இல்லாமல் போய்விட்டதால் இவை அனைத்தும் அழிந்துபோய்விட்டன. ஸ்ரீராம ஜெயம் எழுதும்போது உங்கள் சுயநலத்தை மட்டும் மனதில்கொள்ளாதீர்கள். எனக்கு திருமணம் நடக்க வேண்டும். எனக்கு பெரும் செல்வம் வேண்டும். என்னை கொடுமைப்படுத்தும் மாமியாருக்கு நோய் நொடி வந்து படுக்கையில் விழ வேண்டும். மகனுக்கு தலையணை ஓதும் மருமகள் அவனைப் பிரிந்து ஒழிய வேண்டும், என்றெல்லாம் கோரிக்கை வைக்கக்கூடாது. உலக ÷க்ஷமத்திற்காக ஸ்ரீராம ஜெயம் எழுதவேண்டும். நமது குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என மனதில் நினைக்க வேண்டும். அண்ணியிடம் சண்டை போட்டு விட்டு, எனக்கு திருமணத்தடை நீங்க வேண்டும் என ராமஜெயம் எழுதும் நாத்தனாரை ராமன் கண்டுகொள்ளவே மாட்டார். மொத்தத்தில் ராமராஜ்யத்தில் நல்ல இதயங்களுக்கு மட்டுமே இடம் உண்டு. ராமபிரானே! நீ எங்களை மீண்டும் ஆள வரவேண்டும். நீ வந்துவிட்டால் எல்லாரும் திருப்தியான மனதுடன் இருப்பர். இவ்வுலகில் சண்டை என்பதற்கே இடமில்லை, என திரும்பத்திரும்ப சொல்லியபடியே ஸ்ரீராமஜெயம் எழுதவேண்டும். அப்படி செய்தால்தான் ராமராஜ்யம் வரும். உலகத்தில் ஒற்றுமை ஓங்கும். ரதம் மின்னலென பாய்ந்தது. அயோத்தி மக்களின் கோரிக்கை எடுபடவில்லை. ராமன் சுமந்திரரை அவசரப்படுத்தினார். ரதம் வேகமாக செல்லட்டும் என உத்தரவிட்டார். இருப்பினும் பின்னால் திரும்பி புழுதியின் மத்தியில் லேசாய் தெரிந்த மக்களை நோக்கி கைகூப்பினார். தூரத்தில் தசரதர் ஓடி வந்து கொண்டிருந்தார். நேற்றுவரை அவர் தெருக்களில் வரவேண்டுமானால் விதவிதமான தேர்களில் வருவார். இன்றோ மகனுக்காக வெறும் காலுடன் புழுதிபறக்கும் தெருவில் ஓடோடி வந்து கொண்டிருந்தார்.
சுமந்திரா! தேரை நிறுத்து என ஓலமிட்டார். சுமந்திரருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனின் உத்தரவுக்கு கட்டுப்படுவதா? இளவரசனின் உத்தரவை மதிப்பதா? என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். சுமந்திரரே! உங்கள் உணர்வுகள் எனக்கு புரிகிறது. தேரை நிறுத்தவேண்டாம். அரசன் சொல்லியும் ஏன் தேரை நிறுத்தவில்லை என கேட்டால் காதில் விழவில்லை என சொல்லிவிடுங்கள். ஒரு அமைச்சன் பொய் சொல்லலாமா என நீங்கள் கேட்கலாம். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் தசரதர் என்னை விடமாட்டார். நான் செய்துகொடுத்த சத்தியம் தவறிப்போகும். ஒருவருக்கு நன்மை விளைகிறது என்பதற்காக பொய் சொல்வதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை, என்றார் ராமபிரான். மின்னலென பறந்துவிட்டது தேர். தசரதர் அப்படியே சாய்ந்துவிட்டார். முழுநிலவை வானத்தில் உலாவரும் ராகு பீடித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அதே போல அவரது தோற்றம் அமைந்திருந்தது. தேர் சென்ற தடத்தைப்பார்த்து அழுதார். இந்த தடத்தின்வழியே நடந்து என் மகன் இருக்கும் இடத்திற்கு போகிறேன் என புலம்பியபடியே எழுந்தார். தள்ளாடி விழுந்தார். கவுசல்யாதேவி அவரை தாங்கி பிடித்துக்கொண்டாள். கல்மனசுக்காரியான கைகேயியோ அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ராமாயணம் பகுதி - 23
ஏப்ரல் 05,2013
அ-
+
Temple images
தசரதரை அழைத்துக்கொண்டு கவுசல்யா ஊருக்குள் திரும்பினாள். அயோத்தி நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தெய்வம் இல்லாத இடத்தில் கோயிலுக்கு வேலை இல்லை என்பது போல எல்லா கோயில்களுமே மூடப்பட்டிருந்தன. தசரதர் புலம்பியபடியே கவுசல்யாவுடன் சென்றார். நான் இனிமேல் கவுசல்யாவுடன்தான் இருப்பேன். என் கண்கள் இருண்டுபோய்விட்டன. அறுபதாயிரம் ஆண்டுகள் தவமிருந்து ஒரு புதல்வனைப் பெற்றேன். அவன் இங்கிருந்து போய்விட்டான். அவனோடு என் கண்களும் போய்விட்டன. அவனது அழகு அத்தகையது. போன கண்கள் திரும்பிவராது. அவனைப் பார்க்கும் பாக்கியம்தான் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், அவனைப் பெற்ற தாயான உன் மடியில் தலை சாயும் பாக்கியமாவது கிடைக்கட்டும். நீண்ட நாட்கள் நான் உயிர்வாழமாட்டேன். இப்போது உன்னையும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் என் கண்கள் என்னிடம் இல்லை. என் உணர்ச்சிகள் அனைத்துமே அவனோடு போய்விட்டன. இனியும் நீ என் மீது சந்தேகப்படாதே. கைகேயியின் மீது பாசம் கொண்டு அவனை நான் காட்டிற்கு அனுப்பிவிட்டதாக கருதாதே. தெரியாமல் செய்த பிழைக்காக என்னை மன்னித்துவிடு. என் கைகளைப் பற்றிக்கொள், என்று புலம்பி தீர்த்தார்.
அருகிலேயே கைகேயியும் வந்துகொண்டிருந்தாள். அடப்பாவி! என் ராமன் இல்லாமல் ஒரு கணம் கூட வாழமாட்டேன். நீ என்னை கொன்றுவிடு. கைம்பெண்ணாக இருந்து இந்த நாட்டை ஆண்டுகொண்டிரு. உன் இஷ்டப்படியெல்லாம் நடந்துகொள், என்றெல்லாம் திட்டித் தீர்த்தார். அயோத்தி நகரில் இருந்த பெரும்பகுதி மக்கள் ராமனின் தேரைத்தேடி ஊரைவிட்டே போய்விட்டார்கள். வயதானவர்களும், ஊனமுற்றவர்களும் தேரைத் தொடர வழியில்லையே என கவலையோடு அவரவர் வீட்டு வாசலில் சாய்ந்து கிடந்தனர். ராமனை பின்தொடர்ந்து லட்சுமணனையும், சீதையையும் தவிர யாராலும் செல்ல முடியவில்லை. சகோதர பாசத்திற்கு லட்சுமணன் ஒரு உதாரணம். அவனுக்கு மட்டுமே காட்டுக்குப் போகும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. லட்சுமணன் பிறந்தவுடன் நடந்த ஒரு சம்பவத்தை கவனிக்க வேண்டும். ராம சகோதரர்கள் பிறந்தவுடன் வரிசையாக தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். முதல் தொட்டிலில் ராமன், அடுத்து பரதன், அடுத்து லட்சுமணன், அதையடுத்து சத்ருக்கனன் படுத்திருந்தனர். பெயர்சூட்டு விழா நடந்தது. ராமனுக்கு இணையானவர் என்ற காரணத்தால் லட்சுமணனுக்கு இளைய பெருமாள் என பெயர் சூட்டப்பட்டது. பரத கண்டத்தை ஆளப்போகும் குழந்தைக்கு பரதன் என பெயர் சூட்டப்பட்டது. சத்ருக்களை நாசம் செய்யும் குழந்தைக்கு சத்ருக்கனன் என்ற பெயர் சூட்டப்பட்டது. திவ்வியமான பெயரான ராமச்சந்திரன் என்ற பெயர் முதல் குழந்தைக்கு சூட்டப்பட்டது.
பெயர் சூட்டு விழா முடிந்ததும் மூன்றாவது தொட்டிலில் இருந்த லட்சுமணன் அழ ஆரம்பித்தான். அழுகைக்கான காரணம் யாருக்கும் புரியவில்லை. குழந்தைக்கு பசிக்கிறதோ என சுமித்ரா பாலூட்டிப்பார்த்தாள். குழந்தை அடங்கவில்லை. பூச்சி கடித்திருக்கலாமோ என வஸ்திரங்களை எல்லாம் உதறிப்பார்த்தார்கள். எதுவுமே இல்லை. அப்போது வசிஷ்டர் வந்தார். அவரிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவர் குழந்தையை ஆழ்ந்து கவனித்தார். குழந்தையின் பார்வை முதல் தொட்டிலை நோக்கி இருந்தது. அவருக்கு புரிந்துவிட்டது. இந்த பொடிப்பயல் அண்ணன் அருகே இருக்க வேண்டும் என நினைக்கிறான். அவனை இரண்டாவது தொட்டிலில் போடுங்கள். பரதனை மூன்றாவது தொட்டிலில் போட்டுவிடுங்கள். அழுகை அடங்கிவிடும், என்றார். அவ்வாறே செய்யப்பட்டது. ஆனாலும் லட்சுமணன் அழுகையை விடவில்லை. வசிஷ்டருக்கு மற்றொரு பொறி தட்டியது. இவனை ராமன் படுத்திருக்கும் அதே தொட்டிலில் போட்டுவிடுங்கள், என்றார். அப்படியே சுமித்ரா ராமனின் அருகில் லட்சுமணனை போட்டாள். அப்போது ராம குழந்தை லட்சுமணனின் மீது ஏறி படுத்தது. குழந்தை நசுங்கிவிடுமே என எல்லாரும் பயந்தார்கள். அதன் பிறகுதான் லட்சுமணன் அழுகையை விட்டார். பாற்கடலில் பரந்தாமனை தாங்கியிருக்கும் ஆதிசேஷன்தான் லட்சுமணனாக அவதாரம் எடுத்துள்ளார். எனவே யாரும் கவலைப்பட வேண்டாம். லட்சுமணனுக்கு ஏதும் ஆகாது என்றார் வசிஷ்டர்.
அந்த அளவுக்கு சகோதர பாசம் பொங்கி வழிந்த குடும்பம் ராமனின் குடும்பம். அந்த சகோதரனைப் பிரிந்து ஒரு கணம் கூட இருக்க முடியாது என்பதால் லட்சுமணன் ராமனோடு போய்விட்டார். அந்த பாசமலர்கள் காட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தன. இதற்கிடையே அயோத்தியில் இரவு நேரம் ஆரம்பித்தது. தசரதரும் மற்ற தேவியரும் எதுவுமே சாப்பிடாததால் கிறங்கிப் போயிருந்தனர். கவுசல்யா இதுதான் சமயம் என தசரதரை பிடித்துக்கொண்டாள். அன்பரே! இந்த கைகேயி பாம்பைப் போன்றவள். என் ராமனை தீண்டிவிட்டாள். ஒரு வீட்டிற்குள் பாம்பு இருந்தால் அதற்குள் மனிதர்கள் வசிக்க முடியாது. இப்போது ராமனை தீண்டியதுபோல் அடுத்து என்னை தீண்ட ஆரம்பிப்பாள். உங்களுக்கு கொஞ்சம்கூட முன்யோசனை இல்லை. பரதனுக்கு தாராளமாக நாட்டை கொடுத்திருக்கலாம். ஆனால் என் மகனை காட்டிற்கு அனுப்பவேண்டிய அவசியம் என்ன? ஒரு வேளை பரதனாலோ, கைகேயியாலோ அவனுக்கு கேடு நேரும் என்றாலும்கூட அவனை அடக்கி வைத்திருக்க மாட்டேனா? நான் சொன்னதை அவன் தட்டாமல் கேட்பானே. இந்நேரம் என் மகன் காட்டிற்குள் புகுந்திருப்பான். அவன் ஒரு இளைஞன். திருமணமாகி சில காலம்தான் ஆகிறது. அந்த பெண் சீதை என்ன பாவம் செய்தாள்? அவர்கள் சந்தோஷமாக வாழ வேண்டிய காலத்தில் காட்டில் கிடைக்கும் கிழங்குகளை புசித்துக்கொண்டு அங்கேயே தங்க வேண்டுமென்ற அவசியம் என்ன? காட்டுக்குள் மிருகங்கள் நடமாடுமே. அரக்கர்களின் தொல்லை அதிகமாயிருக்குமே. இந்த ஊர் இனிமேல் எக்காரணம் கொண்டும் முன்னேறாது. ஒவ்வொரு மாதமும் பெய்யும் மழை நிச்சயமாய் பெய்யாது. கன்றை இழந்த பசு எப்படியெல்லாம் தவிக்குமோ அதே போல என் ஒரே மகனை பிரிந்து தவிக்கிறேன். இவ்வுடலில் இனி உயிர் தங்காது, என்று அழுதாள். அவளை சுமித்ராதேவி சமாதானப்படுத்தினாள்.
சகோதரி! கலங்காதே. வெகு விரைவில் ராமன் வந்துவிடுவான். நிச்சயமாய் அரச பதவியை ஏற்பான். நீதான் குடும்பத்தில் மூத்தவள். நீயே இப்படி புலம்பிக் கொண்டிருந்தால் மற்றவர்களின் கதி என்னாவது? நம் கணவனை சபித்து ஆகப்போகும் பலன் என்ன? மேகக்கூட்டம் மழை பொழிவதுபோல் நீயும் ஆனந்தக்கண்ணீர் விடும் காலம் விரைந்து வந்துகொண்டிருக்கிறது. ராமன் புரு÷ஷாத்தமன். அவன் சீதாதேவி, பூதேவி, விஜயலட்சுமி என்ற தனது பட்டமகிஷிகளோடு விரைவில் பட்டாபிஷேகம் காண்பான், என்று தேற்றினாள். இதைக்கேட்டபிறகு கவுசல்யாவுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. இதற்குள் ராமனின் ரதத்தை பின்தொடர்ந்து சென்ற மக்கள் ஒரு இடத்தில் ரதம் நிற்பதை கண்டார்கள். ராமபிரான் ரதத்திலேயே அமர்ந்திருந்தார். தன் பின்னால் ஓடிவந்த மக்கள் கூட்டத்தை கவனித்துவிட்டார்.—தொடரும்.

ராமாயணம் பகுதி - 24
ஜூன் 21,2013
அ-
+
Temple images
ஓடிவந்தவர்களில் பிராமணர்கள் அதிகம் இருந்தார்கள். அவர்களின் மனம் புண்படும்படி செய்வது தனது விரதத்திற்கு விரோதமாக முடியும் என ராமபிரான் கருதினார். தேரை நிறுத்திவிட்டார். ஆனாலும் அவர்களை கவனிக்காததுபோல் இறங்கி நடந்தார். ஓரிடத்தில் அவர்கள் அமர்ந்தனர். ராமனுக்கு ஆங்காங்கே கிடந்த புற்களால் படுக்கையை சுமந்திரரும், லட்சுமணனும் அமைத்தனர். சீதா ராமர் அதிலேயே நித்திரை செய்தனர். ஓடிவந்த மக்கள் அவ்விடத்தை அடைந்தனர். ராமன் உறங்கிக் கொண்டிருப்பதால் அவரை தொந்தரவு செய்ய விரும்பாமல் அங்கேயே படுத்தனர். அதிகாலையில் எழுந்த ராமன் சுமந்திரரையும் லட்சுமணனையும் அழைத்து, இவர்கள் எழுவதற்குள் நாம் இங்கிருந்து போய்விட வேண்டும். இல்லாவிட்டால் இவர்களின் கோரிக்கையை ஏற்று நான் அயோத்தி திரும்ப வேண்டி வரும். அதனால் என் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதிக்கு பங்கம் உண்டாகும். உடன் புறப்படுங்கள், என்றார்.
அவர்கள் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு போய்விட்டனர். காலையில் எழுந்த மக்கள் ராம லட்சுமணரைக் காணாமல் அழுது தீர்த்தனர். அயோத்திக்கு வெறும் கையுடன் திரும்பினர். திரும்பியவர்களின் பத்தினியர் அவர்களை திட்டித்தீர்த்தனர். ராமன் இல்லாமல் இங்கு ஏன் திரும்பினீர்கள்? பரமாத்மா முக்கிய அவதாரம் எடுத்து நம் தேசத்தில் தங்கினார். அவரை அனுப்பிவிட்டு நமக்கென்ன வேலை? என்று புலம்பினர்.
இங்கே இப்படியிருக்க, ராமன் கோசல நாட்டு எல்லையைக் கடந்தார். எல்லையில் அயோத்திதேவி என்னும் காவல் கடவுளை வணங்கினார். அங்கிருந்து கங்கையை நோக்கி அவர்கள் சென்றனர்.இவ்விடத்தில் கங்காதேவியின் பெருமைகளை தெரிந்து கொண்டாக வேண்டும். கங்கையின் பெருமையை பேசுவதே நம் பாவத்தை போக்கிவிடும். இந்த தொடரை வாசித்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் கங்கையின் பெருமையை தெரிந்துகொள்வதன் மூலம் தங்கள் முன்னோர்கள் செய்த பாவங்களையும் சேர்த்து தீர்க்கிறார்கள் என கருதலாம். கோசல ராஜ்ஜியத்திற்கு தெற்கே கங்கைநதி ஓடுகிறது. சொர்க்கம், பூமி, பாதாள உலகம் ஆகிய மூன்றிலும் பாய்கின்ற நதி அது. அதாவது ருத்ரனின் தலையில் தோன்றி, பூமிக்கு வந்து, சமுத்திரராஜனோடு கலக்கிறது. இவள் சமுத்திரராஜனின் மனைவி.
மகரிஷிகள் இந்த நதியைத்தேடி வந்துகொண்டே இருப்பார்கள். தேவ மாதர்களும், கந்தர்வர்களும், தேவர்களும் கின்னரர்களும், கந்தர்வ பத்தினிகளும் ஜலக்கிரீடை செய்வதற்காக இங்கே வருவார்கள். பல தேவதைகளின் விளையாட்டு மைதானமாக கங்கைநதி விளங்குகிறது. அது கற்பாறைகளின் மீது மோதும்போது மிருதங்க ஒலி கேட்கும். சில இடங்களில் இடி ஒலி எழுப்பும். அன்னப்பறவைகளும், நீர்காக்கைகளும் விளையாடி மகிழும். தாமரை, ஆம்பல், செங்கழுநீர், நீலோத்பவம் ஆகிய மலர்கள் தண்ணீரில் மிதந்து செல்லும். ஏராளமான முதலைகளும், பாம்புகளும் கங்கையில் வசித்தன. இந்த கங்கையை ரசித்தபடியே சீதா ராமர் நீண்டநேரமாய் நின்றனர். அந்த புண்ணியநதியை தரிசனம் செய்தனர். சுமந்திரர் ரதத்திலிருந்து குதிரைகளை அவிழ்த்து ஓரமாக கட்டிவிட்டு, அடுத்த உத்தரவுக்காக ராமனின் அருகில் கைகட்டி நின்றார். அப்போது கங்கைக்கரையில் வசித்தவனும், அந்தப்பகுதியின் அரசனுமான குகன் என்பவன் வந்தான். அவன் ராமபக்தன். வேடர் குலத்தில் பிறந்தவன். ராமபிரானே தன் நாட்டிற்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து அவன் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. ஓடிவந்து பார்த்தவன் அப்படியே அதிர்ந்துவிட்டான். வழக்கத்திற்கு மாறாக ராமபிரான் அணிந்திருந்த மரவுரி உடைகளைக் கண்டு கண்ணீர் வடித்தான். அப்படியே அவரை கட்டி அணைத்துக் கொண்டான். என் தெய்வமே! தாங்கள் இந்த நாட்டிற்கு வந்ததில் மிகுந்த பெருமை கொள்கிறேன். நீங்கள் வந்தபிறகு இது என் நாடு அல்ல. உங்கள் நாடு. நீங்களும் சீதா தேவியும் இங்கிருந்தே ஆட்சி செலுத்துங்கள், என உணர்ச்சிவசப்பட்டு கூறி, வேடர்களுக்கே உரித்தான வகையில் மாமிச வகைகளை கொண்டுவந்து, ராமபிரானே! தாங்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றான்.
ராமபிரான் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன், அன்பனே! நீ சொன்ன வார்த்தைகளே எனக்குப் போதுமானது. இது அத்தனையையும் நான் ஏற்றுக்கொண்டேன். நீ வைத்ததை நான் மாமிசமாக கருதவில்லை. என்மீது கொண்ட அன்பின் காரணமாய் இவற்றையெல்லாம் படைத்தாய். அந்த அன்பை நான் உணர்கிறேன். நீ என்னுடையவன் ஆனாய். இவ்வுலகில் ஒரு சிலர் எவ்வளவுதான் உபசரித்தாலும் அதில் குறை கண்டுகொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட உறவுக்காரர்கள்தான் இப்போது பெருகிவிட்டார்கள். நீ இப்படியெல்லாம் செய்தால்தான் உன் உபசாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. உன் உண்மையான வார்த்தைகளே என்னை கிறங்கடித்துவிட்டன. நான் பழங்களையும் கிழங்குகளையும், மரத்தின் வேர்களையும் மட்டுமே பதினான்கு ஆண்டுகள் சாப்பிட்டு வாழ்வதென விரதம் எடுத்துள்ளேன். அது என் தந்தையின் கட்டளையாகும். எனவே நீ படைத்த இந்த உணவு வகைகளை என்னால் சாப்பிட இயலாது. அது தர்மத்திற்கு விரேதமானதாகும். என்னை சுமந்து வந்திருக்கும் குதிரைகளுக்கு நீ விரும்பும் உணவையெல்லாம் கொடு. அவற்றிற்கு கொடுத்தாலே நாங்கள் அனைவருமே சாப்பிட்டது போல் ஆகும், என்றார். குகன் குதிரைகளுக்கு வேண்டுமளவு உணவு கொடுத்தான்.
சற்று நேரத்திற்குள் லட்சுமணன் கங்கைநீரை ராமனுக்கு கொண்டுவந்து கொடுத்தார். அதை சீதையும் ராமனும் பருகினர். கண்ணயர்ந்துவிட்டனர். அப்போது குகன் ராமனின் பெருமையை லட்சுமணனிடமும் சுமந்திரரிடமும் கூறி மகிழ்ந்தான். விடிய, விடிய அவர்கள் மூவரும் உறங்கவில்லை. மறுநாள் கங்கையைக் கடந்து தண்டகாருண்யத்திற்குள் செல்ல ஏற்பாடு செய்துதர குகனிடம் வேண்டினார் ராமன். குகன் அவ்வாறே செய்தான். குகனை தன் அருகில் அழைத்த ராமன், எனக்கு இதுவரை மூன்று தம்பிகள்தான் இருந்தனர். இன்று முதல் உன்னையும் சேர்த்து நான்கு தம்பிகள் இருக்கிறார்கள். உன் உண்மையான பக்தியும், உபசரிப்பும் அத்தகையது, எனக்கூறி அவனை மார்போடு அணைத்துக்கொண்டார். குகன் அவரை கண்ணீருடன் வழியனுப்பினான். குகனின் வேலைக்காரர்கள் படகை கங்கையை விட்டுக் கிளப்பினர். அப்போது சுமந்திரர் ராமனுடன் வந்தே தீருவேன் என அடம்பிடித்தார். அவரை சமாதானம் செய்த ராமன், சுமந்திரரே! தாங்கள் அவசியம் அயோத்திக்கு செல்ல வேண்டும். கைகேயி உங்களைப் பார்த்தால்தான் நான் காட்டிற்குள் நுழைந்துவிட்டதை நம்புவாள். என் தந்தைக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றிவிட்டேன் என்ற திருப்தி ஏற்படும். இப்படிப்பட்ட அரிய காரியங்களை செய்வதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும், என்றார். சுமந்திரர் வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்டு அயோத்தி திரும்பினார். படகு கங்கைக்கரையை அடைந்தது. கரையிலிருந்த ஒரு மரத்தடியில் அவர்கள் அமர்ந்தனர். அப்போது ராமபிரான் லட்சுமணனிடம் அதிர்ச்சி தரும் சில தகவல்களை தெரிவித்தார்.

ராமாயணம் பகுதி - 25
ஜூன் 21,2013
அ-
+
Temple images
லட்சுமணன் இதை எதிர்பார்க்கவே இல்லை. ராமரா இப்படி சொல்கிறார் என மனதுக்குள் நினைத்தார். லட்சுமணா! காட்டில் இன்று தான் இரவு நேரத்தில் முதன் முதலாக தங்குகிறோம். இந் நேரத்தில் நான் ஒரு விஷயத்தை உன்னிடம் சொல்கிறேன்.  நம் தந்தை அயோத்தியில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார். கைகேயி மிகுந்த ஆனந்தமாக இருப்பாள். பரதனுக்கு நிரந்தரமாக ஆட்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக நம் தந்தையை அவள் கொல்ல முயன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்  காம இச்சையில் நாட்டமிக்கவர். அப்படி இருப்பதைப்பார்த்தால் இந்த உலகத்திலேயே உயர்ந்தது காமம் தான் என எண்ணுகிறேன். நம்முடைய தந்தை காமத்தின் வசப்பட்டு, கைகேயியின் அழகில் மயங்கி நம்மை காட்டுக்கு துரத்தி இருக்கிறார் என்றால், இதிலிருந்தே காமத்தின் மகிமையைப்புரிந்து கொள். கைகேயிக்கு கர்வம் அதிகம். இப்போது நாடும் அவள் வசம். எனவே அவள் எனது அன்னை கவுசல்யாவை மிகவும் கொடுமைப்படுத்துவாள். அதே நேரம் உனது அன்னை சுமித்ராவை கஷ்டப்படுத்த மாட்டாள். அவளால் கைகேயிக்கு எந்தப்பிரச்னையும் கிடையாது. எனவே நீ உடனே புறப்பட்டு அயோத்திக்கு போ. கவுசல்யாவுக்கு ஆறுதலாக இரு, என்றார். லட்சுமணனுக்கு கண்ணீரே வந்து விட்டது.
அண்ணா! நீங்கள் இப்படி சொல் வது துயரத்தை தருகிறது. மேலும் நான் இங்கிருந்து போய் விட்டால், சீதா தேவிக்கு பாதுகாப்பு இல் லாமல் போய்விடும். நீங் கள் என்னோடு இல் லாவிட்டால், எந்த பயனுமே என் வாழ்க் கையில் இல்லை. சொர்க் கத்திற்கு வா என என்னை அழைத்தாலும் கூட, ராமன் இல்லாத அந்த சொர்க்கம் எனக்கு தேவையில்லை என்றே சொல்வேன், என்றான். ராமனுக்கு மகிழ்ச்சி அதிகமானது. எல்லாத்துன்பமும் பறந்தோடி விட் டது போன்ற உணர்வு ஏற்பட்டது. தம்பியை அப்படியே அணைத்து கொண்டார். காட்டில் இருக்கும் பதினான்கு ஆண்டுகளும் தன்னுடனேயே இருப்பதற்கு உறுதியளித்தார். இந்நேரத்தில் இருள் சூழ்ந்தது. ஒரு ஆலமரத்தடியில் தர்ப்பை புற்களை பரப்பி, அதில் ராமனும் சீதையும் படுத்தனர். கண்ணுறங்காமல் வில்லேந்தி லட்சுமணன் பாதுகாத்தான். மறுநாள் காலையில் கங்கையும் யமுனையும் சேரும் இடமான பிரயாகைக்கு அவர்கள் புறப்பட்டனர். அவ்விடத்தில் பரத்வாஜரின் ஆசிரமம் இருந்தது. அவர் மகா ரிஷி. ராமன் காட்டிற்கு வந்ததில் மிகப்பெரிய உள்ளர்த்தம் இருக்கிறது. அவர் கிருஷ்ணனின் அவதாரம்.
மனம் வைத்தால் தன் நகத்தாலேயே ராவணனின் தலையை கீறியிருக்க முடியும். ஆனாலும் அதை செய்யவில்லை. மகரிஷிகளை தரிசிக்க வேண்டுமென் பதே ராமனின் லட் சியமாக இருந்தது. வசிஷ்டர் அவரது குல குருவாக இருந்தார். விசுவாமித்திரர் அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இப்போது பரத்வாஜரை சந்திக்கிறார். ஒரு கால கட்டத் தில் சபரி அன்னையை தரிசிக்கிறார். தன் மீது பக்தி வைத்தவர்களை பார்ப்பதற்காக பகவான் மானிட வடிவெடுத்து ராமன் என்ற பெயரில் வந்துள்ளார். அவர் மீது யார் உண்மையான பக்தி வைத்தாலும் ஏதோ ஒரு உருவத்தில் பார்க்க வரத்தான் செய்வார். உதாரணமாக, ஒருவர் பணக்கஷ்டத்தில் இருந்தால், யார் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவுகிறாரோ அவர் ராமனுக்கு சமமானவர். மனித வடிவில் தெய்வங்கள் வருகின்றன என்பதை உணர்த்திக்காட்ட ராமாவதாரம் உருவானது.பரத்வாஜர் ராமனை ஆசீர்வதித்தார். அங்கிருந்த கிழங்கு மற்றும் பழவகைகளை அவர்களுக்கு கொடுத்தார்.
மிகவும் சந்தோஷத்துடன்,ராமா! உன்னை தரிசிப்பதற்காக நான் பல ஆண்டுகளாக காத்திருந்தேன். உன் நினைவு எப்போதும் என் மனதில் இருந்தது. ஆனால் எதற்கும் காலம் கனிய வேண்டும். அருகிலேயே புண்ணியதலம் இருந்தாலும், அதை பார்ப்பதற்கு சிலருக்கு கொடுத்து வைப்பதில்லை. அதே நிலையில் தான் நான் உள்ளேன். ஆனால் நீயே என்னை தேடி வந்து விட்டாய். நீ இங்கேயே தங்கி இருக்கலாம். எந்த கஷ்டமும் உனக்கு நேராது, என்று உள்ளம் உருகி சொன்னார். அதற்கு ராமன்,மகரிஷியே, இந்த இடம் அயோத்திக்கு மிக சமீபமாக இருக்கிறது. நான் இங்கிருந்தால் அயோத்தி மக்கள் என்னை பார்க்க வந்து கொண்டிருப்பார்கள். எனவே வெகு தொலைவுக்கு நான் சென்று விடுவது தான் நல்லது, என்றார். ராமனின் உள்ளத்தூய்மையை கண்டு வியந்த பரத்வாஜர்,அப்படியானால் ராமா! நீ இங்கிருந்து பத்து குரோசம் (32 கி.மீ.) தொலைவில் உள்ள சித்திரக்கூடம் என்ற மலைக்கு செல். அங்கே பல ரிஷிகள் வசிக்கிறார்கள். கரடிகள் அதிகம். அந்த மலைச்சிகரத்தை பார்த்தாலே பாவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றாது. அங்கு ஒரு விசேஷம் உண்டு.
அவ்விடத்தில் தவம் செய்தால், நமது உடலுடனேயே சொர்க்கத்திற்கு சென்று விடலாம், என்றார்.அவர் சொன்னது போலவே காளிந்தீ நதியைக்கடந்து சித்ரக்கூடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். லட்சுமணன் அங்கு கிடைத்த மரங்களை கொண்டு வள்ளம் தயாரித்திருந்தான். அதில் ஏறி நதியைக்கடக்கும் போது சீதா தேவி,காளிந்தீ தாயே! எங்களை நீ தான் பாதுகாக்க வேண்டும். என் கணவரின் வன வாழ்க்கை முடியும் வரை அவரை நல்லபடியாக வைத்து கொள். நாங்கள் அயோத்திக்கு நல்ல முறையில் திரும்பி போனால், பல்லாயிரம் பசுக்களை உனக்கு தானமாய் தருகிறேன். கள் குடங்களால் உனக்கு பூஜை செய்கிறேன், என்றாள்.நதியைக்கடந்ததும் கரையில் இறங்கி சற்று தூரம் அவர்கள் நடந்தனர். இந்தக்காலத்தில் அரசமரத்தை சுற்றுவது போல, அந்தக்காலத்தில் ஆலமரத்தை சுற்றும் வழக்கம் இருந்தது. ஆலமரத்திற்குசியாமம் என்ற பெயர் உண்டு. சீதாதேவி அங்கிருந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்தாள். மகா விருட்சமே! உன்னை வணங்குகிறேன். என் கணவரின் வன யாத்திரை விரைவாகவும், நல்ல முறையிலும் நிறைவேற வேண்டும்.
நான் மறுபடியும் கவுசல்யா தேவியையும், சுமித்ராவையும் பார்க்க வேண்டும். அதற்கு நீ அருள் செய்ய வேண்டும், என்றபடியே எழுந்து அந்த மரத்தை சுற்றி வந்தாள். தனக்காக பிரார்த்தனை செய்யும் மனைவியைப் பார்த்து ராமன் மிகவும் பெருமை கொண்டான். சீதா தேவி நுண்ணறிவு படைத்தவள். எதைப்பார்த்தாலும் அதைப்பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுவாள். காட்டில் நடந்து செல்லும் போது ஒவ்வொரு பூவாக பார்த்து, இது என்ன பூ, இதன் குணம் என்ன? இந்த மரத்தின் குணம் என்ன? இது என்ன மரம்? இது என்ன செடி என்றெல்லாம் கேட்டுக்கொண்டே சென்றாள். ராமன் அவளுக்கு அவற்றின் தன்மையைப்பற்றி எடுத்துரைத்தார்.நாம் சுற்றுலா சென்றால் ஏதோ வேடிக்கை பார்ப்பதோடு வந்து விடாமல் சீதா தேவியைப்போல அவ்விடத்தின் தன்மை முழுவதையும் அறிந்து வர வேண்டும். ராமாயணம் ஏதோ ஒரு வேடிக்கை கதை அல்ல. அதன் ஒவ்வொரு வரியும் வாழ்க்கை தத்துவத்தை, வாழும் முறையை நமக்கு கற்று தந்து கொண்டேஇருக்கிறது.சித்ரக்கூடத்தில் பர்ண சாலை ஒன்றை அமைத்து, அங்கேயே தங்க வேண்டுமென ராமன் விரும்பினார்.


ராமாயணம் பகுதி - 26
ஜூன் 21,2013
அ-
+
Temple images
பரத்வாஜரின் வழிகாட்டுதலின் படி சித்ரக்கூடத்தில் வீடு அமைக்கப்பட்டது. அந்த வீட்டில் குடியேறுவதற்கு முன் கிருஹப்பிரவேச சாந்திகள் நடந்தன. சீதாதேவி சுபமுகூர்த்த நேரத்தில் பர்ணசாலை என அழைக்கப்பட்ட அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள். யானைகள், பாம்புகள், கரடிகள், மான்கள், ஆகியவற்றின் சப்தம் அமைதி நிறைந்த அந்த இடத்தை அவ்வப்போது ஆக்கிரமித்தது. அவர்கள் வீடு அமைத்திருந்த இடத்தின் அருகே மால்யவதி என்ற ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அது ஒரு புண்ணிய நதி. தினமும் மூவரும் அந்த நதியில் நீராடி அயோத்தியை விட்டு வந்த துக்கத்தையே மறந்து போயிருந்தார்கள். இந்நிலையில் வால்மீகி முனிவரையும் அவர்கள் கண்டார்கள். அவரது ஆசியைப் பெற்றார்கள். காட்டில் இப்படி காட்சி நடந்து கொண்டிருக்க, அயோத்தியில் சூழ்ந்த இருள் இன்னும் விலகாமல் இருந்தது. அமைச்சர் சுமந்திரர் நாடு வந்து சேர்ந்தார். அவரைப்பார்த்த மக்கள், எங்கள் ராமனை எங்கே? அவரை எங்கே விட்டு வந்தீர்கள். உங்களால் ராமனை விட்டு விட்டு உயிரோடு திரும்பவும் முடிந்ததா? என்று ஆவேசத்தோடும் துக்கத்தோடும் கேட்டனர். சுமந்திரர் ஹீனமான குரலில்,அன்புக்குரிய மக்களே, ராமபிரான் கங்கைக்கரையில் என்னை நிறுத்தி விட்டார். நான் அவரோடு வருவதாக வாதம் புரிந்தேன். தந்தையை பார்த்துக்கொள்வது உங்கள் கடமை என உத்தரவிட்டு விட்டு அவர் காட்டுக்குள் சென்று விட்டார். நம் இளையராஜாவின் கட்டளையை நிறைவேற்றவே உயிரோடு திரும்பினேன், என்றார்.
அவரது கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் கொட்டியது.  அங்கிருந்து அரண்மனையை நோக்கி சென்றார் சுமந்தரர். தசரதர் தங்கியிருந்த அறைக்கு சென்றார். ராஜபத்தினிகள் சுமந்திரரை சூழ்ந்து கொண்டனர். அவர்களது கண்களில் ராமன் எங்கே என்ற கேள்வி தொக்கி நின்றது. சுமந்திரர் தடுமாறிய கால்களுடன் தசரதர் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். உயிர் இருக்கிறதா இல்லையா என்ற நிலையில் அசைவற்று போயிருந்த தசரத மகாராஜாவின் கால்களில் விழுந்தார். ஹோவென கதறினார். அதைப்பார்த்து ராஜபத்தினிகள் என்ன நடந்தது என்பதை யூகித்து கொண்டனர். கவுசல்யாவும் சுமித்ராவும் பிணம் போல் கிடந்த தசரதருக்கு தங்களால் ஆன சேவையை செய்து கொண்டிருந்தனர். கவுசல்யாவுக்கு துக்கம் தாளவில்லை. என் அன்புக்குரியவரே! என் மகனோடு தாங்கள் அனுப்பிய தூதர் திரும்பி விட்டார். நீங்கள் கைகேயிக்கு மிகச்சுலபமாக வரத்தை கொடுத்து விட்டீர்கள். அதன் விளைவுகளைத்தான் அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள். அப்போது யோசிக்காமல் இப்போது வருத்தப்பட்டு எந்த பயனும் இல்லை.
உங்கள் மகனை காட்டுக்கு அனுப்பியதற்காக யார் முகத்திலும் விழிக்காமல் இப்போது வெட்கப்பட்டு என்ன பலன்? நடந்து முடிந்ததை நினைப்பவர்கள் எதிலும் வெற்றியடையாமல் போகிறார்கள். நீங்கள் துக்கப்படுவது போல வேஷம் போட்டால் எனது துக்கம் குறைந்து விடும் என்று கருதுகிறீர்களா. ஒரு வேளை உலகத்திற்கு பயந்து துக்கப்படுவது போல நடிக்கிறீர்களா? அல்லது கைகேயி இருக்கிறாள் என பயந்து தூதுரிடம் எதுவும் கேட்காமல் இருக்கிறீர்களா? அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அவள் இப்போது இங்கு இல்லை. எனவே அவளைப்பற்றிய பயத்தை விடுங்கள். என் மகன் என்ன ஆனான்? என கேட்டு சொல்லுங்கள், எனக்கதறினாள்.தசரதருக்கு மனம் பொறுக்கவில்லை. கவுசல்யாவின் நிலைமையை அவர் புரிந்து கொண்டார். இதற்குள் அரண்மனைக்குள் நாட்டு மக்களும் புகுந்து விட்டார்கள். ராமனுக்கு என்ன ஆயிற்று என உடனடியாக கேட்டு சொல்லுங்கள் என மகாராஜாவை வற்புறுத்தினர். கண்களில் நீர் ததும்ப,சுமந்திரா! என் மகன் தர்மத்தின் தலைவன். காட்டில் இப்போது எந்த மரத்தின் கீழ் படுத்து உறங்குகிறான். இத்தனை நாளும் பஞ்சு மெத்தையில் புரண்ட அவன் எந்த சருகின் மீது படுத்திருக்கிறான்.
சொந்தத்தை விட்டு விலகாத அவன் அனாதை போல எப்படித்தான் உறங்குகிறானோ? அவன் வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் ஒரு படையே பின்னால் செல்லும். ஆனால் தன்னந்தனியாக காட்டில் என்ன செய்கிறான். ஒரு பெண்ணின் பாவத்தையும் சுமந்து கொண்டேனே. சீதாப்பிராட்டி எப்படி இருக்கிறாள்? புலியும் பாம்பும் சூழ்ந்த அந்த காட்டில் என்னதான் செய்கிறாளோ! என் லட்சுமணன் ஏதாவது சொல்லி அனுப்பினானா? நீ இங்கிருந்து சென்றது முதல் ராமன் வனத்திற்குள் புகுந்தது வரை உள்ள செய்திகளை அனைவரும் அறியும்படியாக சொல்,என்றார். சுமந்திரர் ராமன் சொன்னதை எல்லாம் சொல்ல ஆரம்பித்தார். அரசே! ராமபிரான், தங்களை குறித்து ஒரு வார்த்தை கூட வருத்தப்பட்டு சொல்லவில்லை. என் தந்தைக்கும் அந்தப்புறத்தில் இருக்கும் ராஜபத்தினிகளுக்கும் என் தாய்க்கும் எனது வணக்கத்தை சொல்லுங்கள் என ராமபிரான் சொல்லி அனுப்பினார். உங்கள் திருவடிகளின் ஆசி என்றும் வேண்டும் என கூறினார். பரதனை சக்கரவர்த்தியாக ஏற்று அவனது கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என உத்தரவிட்டார், என்றார்.  லட்சுமணனைப்பற்றியும் சுமந்திரர் குறிப்பிட்டார்.
ராமனைப்போல் லட்சுமணன் அமைதியாகப் பேசவில்லை. மிக கடுமையாக தங்களை கண்டித்தார். என்ன காரணத்திற்காக என் அண்ணனை காட்டிற்கு அனுப்பினார் என கடிந்து கொண்டார். இனி உங்களை தந்தையாக கொள்ள முடியாது. ராமபிரானே இனி எனக்கு தந்தை என சொல்லிவிட்டார். சீதாப்பிராட்டி தன் கணவனைப்பற்றி அதிகமாக கவலை கொண்டுள்ளார். நேற்று வரை பூக்களின் மீது நடந்து சென்ற தன் கணவன் கொடிய காட்டில் எப்படித்தான் நடந்து செல்வாரோ என மனம் வருந்துகிறார், என்றார்.  சுமந்திரர் சொன்னதை கேட்ட தசரதர் அசையாமல் அமர்ந்திருந்தார். ஊரே அவரை தூற்றியது. ஆனால், நடந்ததெற்கெல்லாம் தன் முன்வினைப்பாவமே காரணம் என்பதை தசரதர் அறிந்திருந்தார். கவுசல்யாவிடம் ராமனை தான் பிரிந்ததற்கான காரணத்தை சொல்ல துவங்கினார். கவுசல்யா! என்னை எல்லாரும் தூற்றுகிறீர்கள். ஆனால், இப்போது நடக்கும் சம்பவங்களின் பின்னணியைக் கேள். நமக்கு அப்போது திருமணம் ஆகவில்லை. மக்களைக்காக்க ஒரு முறை வேட்டைக்கு புறப்பட்டேன். எனக்கு சப்தவேதனம் என்ற வித்தை தெரியும். மிருகங்களின் சப்தத்தை வைத்தே, அவை எங்கு நிற்கின்றன என்பதை நுணுக்கமாக அறிந்து எங்கு நிற்கிறேனோ, அங்கிருந்த படியே அந்த மிருகத்தை அம்பால் வீழ்த்தும் கலையே சப்தவேதனம் ஆகும். இதற்கென்றே விசேஷமாக ஒரு பாணத்தையும் வைத்திருந்தேன். சரயு நதிக்கரையில் மிருகங்களுக்காக காத்திருந்தேன். அங்கு தான் பல மிருகங்கள் தண்ணீர் குடிக்க வரும். அப்போது யானை தண்ணீர் குடிப்பது போல ஓரிடத்தில் சப்தம் எழுந்தது. நானும் அந்த இடத்தை நோக்கி அம்பை எய்தேன். அந்த இடத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டது.

ராமாயணம் பகுதி - 27
ஜூன் 21,2013
அ-
+
Temple images
ராமாயணம் 29
அது ஏதோ ஒரு மனிதக்குரலாக இருந்தது. ஓடிச் சென்று பார்த்தேன். ஒரு சிறுவன் அம்பு பாய்ந்த நிலையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தான். நடந்த தவறுக்காக அவனிடம் மன்னிப்பு கேட்டேன். அறியாமல் நடந்த பிழை என்பதை அவன் தெரிந்து கொண்டான். தெரியாமல் செய்த பிழைக்கு மன்னிப்பு தேவையில்லை என பெருந்தன்மையோடு சொன்னான். கண்ணில்லாத தன் பெற்றோரை நடுக்காட்டில் விட்டு விட்டு வந்திருப்பதாகவும், அவர்களின் தாகம் தீர்க்க தண்ணீர் கொண்டு வர வந்ததாகவும் சொன்னான். உடனே ஒரு குடுவையில் தண்ணீர் கொண்டு சென்று அவர்களுக்கு தாகசாந்தி செய்யும்படியும் சொன்னான். நான் புறப்பட்டேன். அடேய் பாவி! உன் அம்பு என் மர்ம ஸ்தானத்தில் பாய்ந்திருக்கிறது. வலி பொறுக்க முடியவில்லை. இதை பிடுங்கி எறிந்து விட்டு போ, என்றான். எனக்கு தர்ம சங்கடமாகி விட்டது. அதை பிடுங்கினால் அவன் உயிர்போகும். உயிர் போனால், பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் என்ற பயம் எனக்குள் ஏற்படுவதை அவன் உணர்ந்து கொண்டான்.
தசரதா! நான் பிராமணன் இல்லை. எனவே என்னைக் கொன்றதால், உனக்கு பிரம்மஹத்தி ஏற்படாது. என் தந்தை வைசியர் குலத்தை சேர்ந்தவர். என் தாய் சூத்திர குலத்தை சேர்ந்தவள். எனவே இதுபற்றி கவலைப்படாதே, என்றதும் தசரதர் அந்த அம்பை உருவினார். அவன் வலிதாங்காமல் அலறியபடியே உயிரை விட்டான். நான் வருத்தத்துடன் அவன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றேன். சிரவணா, வந்து விட்டாயா? என்றனர் அந்தப் பெற்றோர். அவர்களின் தாகசாந்தி முதலில் தீரட்டும் என்ற நோக்கில், நான் பூனை போல பதுங்கிச் சென்று குடுவையை நீட்டினேன். என் கையை தொட்டு, அடையாளம் கண்டு கொண்ட அந்த முதியவர்கள், யார் நீ? என்றனர். நான் உண்மையைச் சொல்லிவிட்டேன். அவர்கள் அழுது புலம்பினர். கொடியவனே! நீ அறியாமல் செய்ததால் தான் இதுவரை உன் உயிர் உன் உடலில் இருக்கிறது. நீ மட்டுமல்ல. உன் இக்ஷ்வாகு குலமே பிழைத்திருக்கிறது. எங்களை அவன் இறந்து கிடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல், என்றனர். தசரதரும் அவ்வாறே செய்தார். அவனை கட்டியணைத்து அழுத பெற்றோர், ஏ தசரதா! நாங்கள் எப்படி இந்த வயதான காலத்தில் புத்திர சோகத்தால் சாகிறோமோ, அப்படியே நீயும் சாவாய், என்றனர்.
அவனுக்கு ஈமக்கிரியை செய்தனர். அந்தச் சிறுவன் கண்ணற்ற தன் பெற்றோருக்கு செய்த புண்ணியச் செயல்களின் காரணமாக, திவ்விய ரூபம் பெற்று எழுந்தான். வானத்து தேவர்களுக்குரிய அத்தனை அம்சங்களையும் பெற்றிருந்தான். தன் பெற்றோருடன் பூவுலகில் வாழாமுடியாமல் போனது பற்றி வருந்தினான். அவர்களைச் சமாதானம் செய்தான். பின்னர் தேவேந்திரன் அனுப்பிய இந்திர விமானத்தில் ஏறி இந்திரலோகம் சென்றான். (இப்போது புரிகிறதா? தாயையும், தந்தையையும் ஒருவன் ஏன் மதிக்க வேண்டும் என்பதற்கான காரணம். பெற்றோரை மதித்து நடப்பவர்களே சொர்க்கம் அடைவார்கள்) பிறகு அந்தப் பெற்றோர் கட்டைகளை அடுக்கி தீமூட்டி அதில் புகுந்து சொர்க்கத்தை அடைந்தனர்.
எனக்கு ஒரு பக்கம் வருத்தம் என்றாலும், மறுபக்கம் சந்தோஷம் ஏற்பட்டது. ஏனெனில் அப்போது எனக்கு புத்திர பிராப்தியே இல்லை. அவர்களின் சாபத்தால், எனக்கு குழந்தை பிறந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விட்டது. அதன்படி நால்வர் பிறந்தார்கள். இன்று, அந்த சாபம் பலித்து விட்டது. புத்திர சோகத்தால் சாவு என்பதை இனியும் தவிர்க்க இயலாது. நான் இறக்கப் போகிறேன் கவுசல்யா. ராமன் இல்லாத இந்த பூமியில் என் உயிர் தங்காது, என சொல்லி விட்டு கதறி அழுதார் தசரத மகாராஜா. கவுசல்யா, என் கையைப் பிடி, என்றார். சுமித்திரையின் மடியில் தலை வைத்தார்.  நான் இறந்த பின் கைகேயி என் கிட்டே வரக்கூடாது. பரதன் என் ஈமச்சடங்கில் கலந்து கொள்ளக்கூடாது, என்றார். நள்ளிரவை நெருங்கியது நேரம். ராமா..ராமா..என முனகியவாறே உயிரை விட்டார்.
ஒரு குடும்பப் பெண் தான் கேட்பது நியாயமே என்ற போதும், தேவையற்ற பிடிவாதத்தை மேற்கொண்டால் என்ன கதியாகும் என்பதை மட்டும் ராமாயணம் கற்றுத்தரவில்லை. கைகேயி ஒரு காலத்தில் நல்லவளாகத்தானே இருந்தாள். இப்போது கணவன் இறந்து விடுவான், நாம் பொட்டின்றி, பூவின்றி நிற்கப்போகிறோம். இனி உலகம் தன்னை மதிக்காது என்று தெரிந்திருந்தும் அவள் ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ராமாயணம் சத்திய காமத்தை வலியுறுத்துகிறது. சத்தியம் எந்த நிலையிலும் காப்பாற்றப்பட்டாக வேண்டும். உயிரைக் கொடுத்தேனும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியாக வேண்டும் என்பதை நமக்கெல்லாம் சொல்லித் தருகிறது. ஒரே வரியில் நான் அப்படி வரம் கொடுத்தாலும் கூட அதை நிறைவேற்ற வேண்டுமா? என தசரதன் கேட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அவர் மட்டுமல்ல..எந்த மனிதனும் செய்யக்கூடாது என்பது ராமாயணம் நம் இளைய தலைமுறைக்கு கற்றுத்தரும் பாடம். இதனால் தான் ராமாயணத்தை திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். படித்தவற்றை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
தசரதரின் உயிர் போன பிறகும், அவர் மயங்கித்தான் கிடக்கிறாரோ என பட்டத்தரசியரும், அந்தப்புரத்து பெண்களும் நினைத்துக் கொண்டிருந்தனர். விடிந்தும் விட்டது. காலையில் அரசரை வழக்கம் போல் எழுப்பி ஸ்தோத்திரம் செய்வதற்கு சாஸ்திர நிபுணர்கள் வந்துவிட்டனர். சில பாடகர்கள் ஹரி நாராயணா, ஹரி நாராயணா என பாடினார்கள். சிலரது கையில் தங்கக்குடத்தில் தண்ணீர் போல் தோற்றமளிக்கும் ஹரிசந்தனம் இருந்தது. இந்த சந்தன தீர்த்தத்தில் தேங்காய், எள், சீரகம் சேர்க்கப்பட்டிருந்தது. பல் தேய்த்த பிறகு இந்த சந்தன தீர்த்தத்தில் தான் தசரதர் வாய் கொப்பளிப்பார். குளிப்பதற்கு முன் தேய்க்க பல வாசனைத் தைலங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. சில அந்தணர்கள் சிறந்த மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர்.இக்ஷ்வாகு குல தெய்வமான ஸ்ரீரங்கநாதப் பெருமானின் பாத தீர்த்தத்துடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். குளித்து முடித்ததும், முதலில் பருகுவது இந்த தீர்த்தத்தை தான். துளசி, விலையுயர்ந்த ஆபரணங்கள், வஸ்திரங்களுடன் சில பெண்கள் காத்திருந்தனர். இன்னும் சிலர் வெண்பட்டு சாமரங்களுடன் நின்றனர். சூரிய உதயத்திற்கு முன் மகாராஜாவை எழுப்ப தினமும் காணப்படும் காட்சி இது. ஆனால், ராஜா எழுந்து வெளியே வரவில்லை. எல்லார் மனதிலும் கவலையின் ரேகை படர்ந்தது.

ராமாயணம் பகுதி - 28
ஜூன் 21,2013
அ-
+
Temple images
பதைபதைப்புடன் தசரதரை அவரது 350 தேவியரும் அணுகினார்கள். சிலர் அவரைத் தொட்டு எழுப்பினர். சப்தமே வரவில்லை. அதன் பின் அவரை லேசாக அசைத்துப் பார்த்தனர். அப்போதும் எந்த உணர்வும் ஏற்படவில்லை. சந்தேகத்துடன் ஒரு ராணி அவரது இதயத்தில் காதை வைத்து கேட்டாள். இதயம் நின்று போயிருந்தது. உடல் குளிர்ந்து போய் விட்டது. தங்கள் அன்பிற்குரிய நாதன் காலமாகி விட்டார் என்று அவளுக்கு புரிந்து விட்டது. ஓவென கதறினாள். அவளது கதறலின் அர்த்தத்தை புரிந்து கொண்ட மற்ற தேவியரும் அலறினார்கள். இவ்வளவு நடந்தும் மயக்க நிலையில் கிடந்த பட்டத்தரசி கவுசல்யாவுக்கு எதுவுமே தெரியவில்லை. சுமித்ரா தான் சற்று சுதாரித்து என்ன நடந்தது என்பதை புரிந்து கொண்டாள். வேரற்ற மரம் போல விழுந்து விட்டாள். கவுசல்யாவை மயக்கம் தீரும் வகையில் தண்ணீர் தெளித்து எழுப்பினாள். இருவரும் தசரதரின் அருகில் ஓடினார்கள். பிராண நாதனே, எங்களை விட்டு பிரிந்து விட்டீர்களா? மகனையும் இழந்தோம். இப்போது உங்களையும் இழந்து விட்டோம்,என்று புலம்பினார்கள். மகாராஜா இறந்து விட்டார் என்ற தகவல் கைகேயிக்கும் சென்றது. அலறியடித்து ஓடி வந்து தனது நாதனின் பக்கத்தில் விழுந்து அவள் அரற்றியது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது. தசரதரின் உறவினர்களும் கதறினார்கள். அனைவருக்கும் அனாதை ஆகி விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.
புத்திர சோகத்தாலும் கணவனை இழந்ததாலும் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவள் கவுசல்யாதேவி தான். சக்கரவர்த்தியின் தலையை தூக்கி தன் மடியில் அவள் போட்டு கொண்டாள். அருகிலிருந்து கைகேயியை பார்த்து இப்போது நீ அழுது புலம்பி என்னபயன். உன்னால் தானே இத்தனையும் நடந்தது. அவரைப்பார்த்து அழுவதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது. இப்போதாவது உன் விருப்பம் நிறைவேறி விட்டதா? உன்னைப்போல துஷ்டப் பெண் இந்த உலகில் யாரும் இல்லை. அடிப்பாவி! இனிமேல் உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது. எனது மகன் காட்டில் இருக்கிறான். என் பர்த்தா சொர்க்கத்திற்கு போய் விட்டார். இனி நீ இந்த அயோத்தியை சுகமாக ஆண்டு கொண்டிரு. இனி நான் நீண்ட காலம் உயிரோடு இருக்க மாட்டேன். பணப்பிசாசே! கூனிக்கிழவியின் வார்த்தையை கேட்டு நம் குலத்தையே வேரோடு சாய்த்து விட்டாயே. என் மருமகளின் தந்தை ஜனக மகாராஜாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன். என் மகள் எங்கே என கேட்பாரே? ராத்திரி நேரத்தில் நம் வீட்டில் சிறு பூச்சியை கண்டால் கூட ராமனின் மார்பில் போய் ஒண்டிக்கொள்வாள் என் சீதை. அந்த உத்தமி இப்போது காட்டில் விலங்குகளின் மத்தியில் சிக்கி என்ன பாடு படுகிறாளோ? ஜனக மகாராஜாவுக்கு மகனும் மகளுமாக இருந்தவள் சீதை. அவள் காட்டிற்கு போனது தெரிந்தால், வயது முதிர்ந்த அவர் உயிரை விட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
நம் சாஸ்திரங்கள் சொல்வதைக்கேள். ஒரு கணவன் தன்னை விட்டு பிரிந்து வேறு நாட்டிற்கு தொழில் நிமித்தமாக சென்றால் கூட, நமது பெண்கள் உடல் இளைத்து போவார்கள். அப்படிப்பட்ட பதிவிரதைகள், கணவன் இறந்து போனால் அவரோடு தானும் இறந்து போவாள். அப்படிப்பட்டவள் தான் உத்தமி என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதுபோல் நானும் என் பர்த்தா அக்னியில் வேகும் போது அவரை ஆலிங்கனம் செய்து அவரோடு சொர்க்கத்திற்கு செல்வேன். நீ நன்றாக இரு, என்று கதறி தீர்த்தாள். கவுசல்யாவை பல வேலைக்காரிகள் ஒன்று சேர்ந்து தசரதரை விட்டு பிரித்து ஒரு அறைக்கு கூட்டி சென்று சமாதானம் செய்தார்கள். இதற்குள் வசிஷ்ட மாமுனிவர் வந்து விட்டார். அமைச்சர்கள் ராஜ சேவகர்கள் வேகமாக வந்தனர். தங்கள் ராஜாவின் உடலை ஒரு எண்ணை கொப்றைக்குள் வைத்து இறுதிக் காரியங்கள் செய்தனர். அரண்மனையில் ராமனும் லட்சுமணனும் இல்லை. பரதனும் சத்ருக்கனும் தங்கள் மனைவிமார் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். பிள்ளைகள் இல்லாத நிலையில் இறுதிக்காரியங்கள் எப்படி செய்வது என்ற பிரச்னை ஏற்பட்டது. இதற்குள் அயோத்தி மாநகர மக்களுக்கு மகாராஜாவின் இறப்பு செய்தி தெரிந்து விட்டது. அனைவரும் ஓடோடி வந்து அரண்மனை முன்பு நின்று அழுது தீர்த்தார்கள்.
கைகேயியை அனைவரும் நிந்தித்தனர். மகாராஜா இல்லாத நிலையில் ராஜ்ஜிய பரிபாலனத்தை உடனடியாக யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்ற பேச்சும் முனிவர்கள் மத்தியில் உருவானது. மார்க்கண்டேயர், மவுத் கல்யர், வாமதேவர், காசியபர், கார்த்தியாயனர், கவுதமர், ஜாபாலி ஆகியோரும் அமைச்சர்களும் வசிஷ்டரிடம், மகாராஜா மரணமடைந்து விட்ட நிலையில்,ராம லட்சுமணர் காட்டில் இருக்கும் நிலையில், பரதனும் சத்ருக்கனும் கேகய நாட்டில் உள்ள ராஜகிருஹம் என்ற ஊரில் இருக்கும் நிலையில் யாராவது ஒருவர் இப்போதே அரசனாக வேண்டும். அரசன் இல்லாத நாட்டில் வருணன் மழை பெய்ய விடமாட்டான். அங்கே கல்மழை தான் பெய்யும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் பற்றி விவாதித்தார்கள். மகாராஜா தசரதரின் கடைசி உத்தரவை நிறைவேற்றும் வகையில் பரதனுக்கு ஆள் அனுப்ப முடிவு செய்தார்கள். சித்தார்த்தன், விஜயன், ஜெயந்தன், அசோகவர்த்தனன் ஆகிய சிறப்பிற்குரிய தூதர்களை வசிஷ்டர் வரவழைத்தார். தூதர்களே! அதிவேகமாக குதிரையில் சென்று ராஜகிருஹ நகரத்திலிருக்கும் பரத சத்ருக்கன்னரை அழைத்து வாருங்கள். மகாராஜா மரணமடைந்த தகவலை அவர்களிடம் சொல்ல வேண்டாம். உடனடியாக நானும் மற்ற மந்திரிகளும் அழைத்து வர சொன்னதாக மட்டும் சொல்லுங்கள். ராம லட்சுமணர், சீதா தேவியும் காட்டிலிருக்கும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி அனுப்பினார். தூதர்கள் அதிவேகமாக குதிரைகளில் புறப்பட்டனர்.
இதற்குள் பரதனும் அன்று இரவுகெட்ட கனவு ஒன்றை கண்டான். அந்த கனவால் ஏதேனும் கேடு உண்டாகுமோ என மனதில் நினைத்தான். அவன் கண்ட கனவு இது தான். தசரத மகாராஜா தலைமுடி விரிந்த கோலத்தில் அழுக்கான உடலுடன் ஒரு மலையின் உச்சியிலிருந்து பசுவின் சாணம் நிறைந்த ஒரு குளத்தில் குதித்து நீந்தினார். அடிக்கடி சிரித்தார். எண்ணையை அள்ளி அள்ளி குடித்தார். எள் கலந்த உணவை சாப்பிட்டார். சந்திரனும் ஆகாயத்தில் இருந்து பூமியில் விழுந்தது. கடல் திடீரென வற்றி போனது. பட்டத்து யானையின் கொம்பு ஒடிந்தது. பூமியில் வெடிப்பு ஏற்பட்டது. மலைகள் பிளந்து தீயை கக்கின. மரங்கள் பட்டு போயின. சாணம் நிறைந்த குளத்தில் இருந்து எழுந்த மகாராஜா, கருப்பு நிற உடையை அணிந்து கொண்டார். சில பெண்கள் அவரை சுற்றி நின்று கை கொட்டி சிரித்தார்கள். பிறகு மகாராஜா கழுதைகள் பூட்டப்பட்ட ஒரு தேரில் ஏறி தெற்கு நோக்கி பயணம் செய்தார். செவ்வாடை அணிந்த ஒரு ராட்சஷி பயங்கர முகத்துடன் மகாராஜாவை கட்டிப்போட்டாள். இந்த கனவை கண்ட பரதன் என்ன கேடு நடக்க போகிறதோ என பயந்து கொண்டிருந்தான். இந்த நேரத்தில்தான் அயோத்தியில் இருந்து தூதர்களும் வந்து சேர்ந்தனர். பரதனுக்கு அவர்களை பார்த்ததும் ஒருவகையில் நிம்மதியும், மற்றொரு வகையில் கனவு பலித்துவிட்டதோ என்ற அச்சமும் ஏற்பட்டது.

ராமாயணம் பகுதி - 29
ஜூன் 21,2013
அ-
+
Temple images
தூதர்கள் பரதனின் பாதம் தொட்டு வணங்கினர். துக்கச் செய்தியை மறைக்கச் சொல்லியிருந்ததால், முகத்தை தொய்வின்றி வைத்துக் கொண்டனர். அயோத்தியில் இருந்து கைகேயியின் தந்தை கேகய ராஜனுக்கு அனுப்பப்பட்டிருந்த காணிக்கை பொருட்களை கைகேயியின் சகோதரன் யுதாஜித் (பரதனின் தாய்மாமன்) முன் வைத்தனர். பரதனிடம், எங்கள் தலைவரே! வசிஷ்ட மாமுனிவரும், மற்ற மந்திரிகளும் தங்களை மிகவும் கேட்டதாகச் சொல்லச் சொன்னார்கள். அவசரமாக தங்களைப் பார்க்க வேண்டியிருப்பதால், உங்களை உடனே புறப்பட்டு வரச் சொன்னார்கள். இங்கே 30 கோடி பணம் பெறுமான பொருட்களைக் கொடுத்து அனுப்பியுள்ளார்கள். இதில் 20 கோடியை உங்கள் தாத்தாவுக்கும் (கேகய ராஜன்), பத்து கோடியை தங்கள் தாய்மாமனாருக்கும் கொடுக்கச் சொல்லியுள்ளார்கள், என்றனர். பரதனும் அப்படியே செய்தான். பின் ஊர் நடப்பைப் பற்றி தூதர்களிடம் கேட்டான். முதல் கேள்வியே இடியான கேள்வி. என் தந்தை எப்படி இருக்கிறார் தூதர்களே?தூதர்களால் என்ன பதில் சொல்ல முடியும்! அவர்கள் சிரித்து வைத்தனர். அடுத்த கேள்வி இன்னும் பலமாய் தாக்கியது. என் சகோதரர்கள் ராம லட்சுமணர் எப்படி இருக்கின்றனர்? இது தூதர்களை இன்னும் நெளிய வைத்தது.
அடுத்து கவுசல்யாதேவி, சுமித்திரா...இப்படி வரிசையாக கேட்டு விட்டு, பரதன் கேட்டானே ஒரு கேள்வி. ஆமாம்...எதற்கெடுத்தாலும் கோபப்படுபவளும், சுயநலத்தையே கருதுபவளும், பார்வையிலேயே எரித்து விடுபவளுமான என் தாய் கைகேயி எப்படி இருக்கிறாள்? என்றான். பரதன் அனைத்து ஞானமும் அறிந்தவன். ஏதோ ஒரு கெடுதி நடந்திருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்ட அவன் இவ்வாறு கேள்வி ஒன்றைக் கேட்டு வைத்தான். தூதர்கள் இதற்கு மேலும் அவனைப் பேச விடவில்லை. தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின் படி சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அன்புத்தலைவரே! தாங்கள் கேட்ட அனைவருமே நலமாக இருக்கிறார்கள்,. நீங்கள் புறப்படுங்கள். உங்களை ராஜலட்சுமி அழைக்கிறாள், என்றனர். பரதனுக்கு அது மனதில் ஆகவில்லை. அனைவரும் நலம் என அறிந்ததும் நிம்மதி பெருமூச்சோடு பேச்சை நிறுத்தி விட்டான். ஆனால், தூதர்களின் முகத்தில் இருந்த பரபரப்புக்கு காரணம் என்ன என்பதை மட்டும் அறிந்து கொள்ள முடியவில்லை. கேகய ராஜன் தன் பேரன் பரதனுக்கு, இரண்டாயிரம் காசுமாலை, ஆயிரத்து ஐநூறு குதிரைகள், நூற்றுக்கணக்கில் யானைகள், கோவேறு கழுதைகள், அந்தப்புரத்தில் வளர்க்கப்பட்ட நல்ல ஜாதி வேட்டை நாய்கள், ரத்தினக்கம்பளங்கள் என பல்வேறு பொருட்களை பரிசாக அளித்து, என் மகள் கைகேயி, உன் தந்தை, ராம லட்சுமணர்களை நான் ÷க்ஷமம் விசாரித்ததாக சொல், என்றார்.
யுதாஜித் தன் படைகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தான். பரதன் தன் தம்பி சத்ருக்கனனையும் அழைத்துக் கொண்டு, ஊருக்கு புறப்பட்டான். ஏழுநாட்கள் பயணம் முடிந்து எட்டாவது நாள் சூர்யோதய வேளையில் அயோத்திக்குள் வந்தான். அயோத்தி நகரம் களை இழந்திருந்தது. வீடுகளில் சாணம் பூசப்படவில்லை. மாலை வேளையில் தோட்டங்களுக்கு சென்று இரவெல்லாம் விளையாடி மகிழ்ந்து, காலையில் வீடு திரும்பும் காதலர் கூட்டத்தைக் காணவில்லை. யானைகளிலும், குதிரைகளிலும் செல்லும் மக்கள் யாரையும் காணவில்லை. மரங்களில் இருந்து உதிரும் இலைகள் கூட ஏதோ கண்களிலிருந்து சிந்தும் கண்ணீர் போல காணப்பட்டது. பறவைகளின் ரீங்காரம் கேட்கவில்லை. அந்தணர்கள் வேதம் ஓதவில்லை. கோயில்களில் அர்ச்சனை எதுவும் நடக்கவில்லை. யாக சாலைகள் பூட்டிக் கிடந்தன. மக்கள் கண்ணீர் பெருக நின்றனர். பரதனுக்கு மனம் படபடத்தது. தூதர்களே! இந்நகரத்தின் நிலையைப் பார்த்தால், அரசர்கள் இறந்து போனால், எப்படியெல்லாம் ஒரு ஊர் இருக்குமோ, அதே போன்ற நிலைமை காணப்படுகிறது, என்றவன், அவர்களது பதிலுக்கு காத்திராமல், வைஜயந்தம் என அழைக்கப்படும் கோட்டை வாசலில் நுழைந்தான். வேகமாக அரண்மனைக்குள் சென்று, தந்தையின் அந்தப்புரத்தில் நுழைந்தான். அங்கே யாரும் இல்லை. உடனடியாக தன் தாய் கைகேயியின் அந்தப்புரத்திற்கு சென்றான்.
தங்க சிம்மாசனத்தில் வீற்றிருந்தாள் கைகேயி. மகனைக் கண்டதும் வேகமாக குதித்து வந்தாள். பரதா! வந்து விட்டாயா? பிராயாணம் எப்படி இருந்தது? உன் தாத்தாவும், மாமாவும் நலம் தானா? என்றாள். அதற்கு பதிலளித்த பரதன், அம்மா! தந்தையை எங்கே? அவரை அந்தப்புரத்தில் காணவில்லையே, என்றான். கைகேயி அவனிடம், மகனே! இந்த பூமிக்கு வந்த எல்லா உயிர்களும் கடைசியில் எந்த இடத்திற்கு செல்லுமோ, அவ்விடத்திற்கு மகாராஜா சென்றார். ஸாதுக்களுக்கெல்லாம் சாதுவான அவர் நற்கதியடைந்தார், என்றாள் சற்றே துக்கத்துடன். ஐயோ செத்தேன், எனக் கதறி விட்டான் பரதன். பூமியில் விழுந்து புரண்டான். கைகளை அடித்தான். தலையில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டான். தந்தையே! நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? எப்போதும் பளபளக்கும் தங்களது தங்கக்கட்டில் கூட, நீங்கள் இல்லாமல் இன்று ஒளி இழந்ததே, என கதறிக் கொண்டே அங்குமிங்கும் ஓடினான். நெஞ்சே அடைத்தது. மூச்சு நின்று விடுவது போல ஒரு உணர்வு. அப்படியே மயங்கி சாய்ந்து விட்டான். கைகேயியும், பணிப்பெண்களும் அவனுக்கு மயக்கம் தெளிவித்தனர். ராஜாதி ராஜனே! நீ கலங்கலாமா? எழுந்திரு. நீ அனைவராலும் கொண்டாடப்படும் கோமான். சூரியனின் ஒளிக்கற்றைகள் எந்த நிலையிலும் அவனை விட்டு பிரியாமல், அவனோடு நிலையாக ஒட்டிக் கொண்டிருப்பது போல், நீயும் உறுதியான மனம் படைத்தவன். கலங்காதே, என்றாள்.
பரதனோ தன் அழுகையை நிறுத்தவே இல்லை. அம்மா! என் தந்தை, என் சகோதரன் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்விக்க என்னை அழைத்தார் என்றல்லவா எண்ணி வந்தேன். அவரை நோய் என்பதே அணுகாதே. அப்படி என்ன கேடு கெட்ட நோய் வந்தது? அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் ராம லட்சுமணர்களுக்கு அருகிலிருந்து அவருக்கு சேவை செய்யும் பாக்கியம் கிட்டியதே! எனக்கு அதுவும் கிடைக்கவில்லையே! அவரை நான் பார்க்க வேண்டும். சாகும் முன் அவர் எனக்கு என்ன சேதி சொன்னார்? உடனே சொல்லுங்கள், என்றான். கைகேயி அவனிடம், பரதா! அவர் மரணமடையும் போது உன்னைப் பற்றி எதுவுமே பேசவில்லை. ராமா, லட்சுமணா, சீதா...என்றபடியே தான் உயிர் விட்டார். அவர்கள் ஊருக்கு திரும்பியதும், யார் அவர்களைப் பார்க்கிறார்களோ, அவர்களே பாக்கியசாலிகள் என்று சொன்னார், என்றாள். என்ன...ராம லட்சுமணர் சீதாபிராட்டி இங்கு இல்லையா? அவர்களை எங்கே? என்று அதிர்ச்சியுடன் கேட்ட பரதனை ராஜ்யம் கிடைத்த நற்செய்தியைச் சொல்லி மகிழ வைக்கலாம் என எண்ணி, சதிகாரி கைகேயி நடந்த விபரங்களை ஒவ்வொன்றாய் சொன்னாள். அதைக் கேட்டு பரதன் பற்களை நறநறவென கடித்தான். சே! நீயும் ஒரு தாயா? என்றதும், வெடவெடத்து போனாள் கைகேயி.

ராமாயணம் பகுதி - 30
ஜூன் 21,2013
அ-
+
Temple images
பரதன் இப்படி சொல்வான் என சற்றும் எதிர்பாராத கைகேயி மிகவும் சாமர்த்தியமாக, பரதா, நீ உன் தந்தை இறந்த வருத்தத்தில் உன்னை மறந்து பேசுகிறாயா? நான் உனக்கு நல்லது செய்வதற்காகவே இந்த நாட்டை கேட்டு வாங்கினேன். உன் அண்ணன் ராமனைப் பற்றி நான் தசரதரிடம் எதுவுமே சொல்லவில்லை. அவன் நல்லவன் தான். எந்த பிராமணனின் சொத்தையும் அவன் அபகரிக்கவில்லை. யாரையும் அவன் இம்சை செய்ததில்லை. அவனுக்கு உன் தந்தை பட்டம் சூட்டம் இருந்தார். அதை உனக்காக கேட்டுப் பெற்றேன். அவர்கள் காட்டிற்கு சென்றதும் தசரதர் துக்கம் தாங்காமல் இறந்துபோனார். உனக்காகத்தான் நான் இத்தனை இழப்புகளையும் சந்தித்தேன். இதில் வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை. உன் தந்தையின் ஈமக்கடன்களை விரைவாக செய்து முடித்துவிட்டு, உடனடியாக இந்த ராஜ்யத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள், என்றாள்.
பரதனுக்கு நெஞ்சு கொதித்தது. ஒரு தாய்க்குரிய எந்த பண்பாடும் உன்னிடம் இல்லை. என் அண்ணன் ராமன் அவரது தாயிடம் எப்படியெல்லாம் பணிவாக நடந்து கொண்டாரோ, அதேப்போல்தான் உன்னிடமும் நடந்து கொண்டார். கவுசல்யாதேவியும் உன்னை தனது உடன்பிறந்தவளாகவே கருதினார். யார் மூத்த பிள்ளையோ அவருக்குத்தான் அரசாட்சி கிடைக்கும் என்ற சாதாரண இலக்கணம் கூட உனக்கு தெரியவில்லையா? அதுமட்டுமல்ல அவர் பாவமே செய்யாதவர். மிகப்பெரிய வீரர். அடக்கமுள்ளவர். அப்படிப்பட்ட ஒரு உத்தமரை இங்கிருந்து காட்டிற்கு துரத்தியதால் உனக்கு என்ன நன்மை கிடைத்துவிட்டது. உன் பேராசையால் ஒரு நல்லவரை இங்கிருந்து விரட்டி விட்டாயே. கேடுகெட்ட இந்த ராஜ்யத்தை எனக்கு கொடுப்பதற்காக மிகப்பெரிய பாவத்தை செய்து விட்டாயே. என் தந்தை தர்மத்தின் தலைவனாக இருந்தார். அவருடைய பலமும் என் அண்ணன் ராமனின் பலமும் இணைந்தல்லவா இவ்வளவு பெரிய ராஜ்யத்தை காத்துவந்தது. நானோ எளிய கன்றுக்குட்டிக்கு சமமானவன். இவ்வளவு பெரிய ராஜ்யபாரத்தை என்னால் எப்படி ஏற்கமுடியும். ஒருவேளை எனக்கு இந்த ராஜ்யத்தை ஆளும் சக்தியிருந்தாலும் கூட, உனது கெட்ட செயலால் கிடைத்த இந்த அரசாட்சியை வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிடுவேன்.
நீ பிறந்த வீட்டையே எடுத்துக்கொள். உன் வீட்டில் என்ன நடக்கிறது. குடும்பத்தின் மூத்தவர்கள் தானே அரசாட்சியை ஏற்கிறார்கள்? ஆனால் அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த உனக்கு இந்த கேடுகெட்ட புத்தி எப்படி வந்தது. என்னை சிம்மாசனத்தில் அமர்த்திவிட்டு, நீ இந்த நாட்டை ஆளவேண்டும் என கணக்குப்போட்டிருக்கிறாய். நான் இப்போதே காட்டிற்கு புறப்படுகிறேன். என் அண்ணன் காலில் விழுந்தாவது அவரை அழைத்து வருவேன். அவருக்கு முடிசூட்டுவேன். உன் கண் முன்னால் இதெல்லாம் நடக்கப்போகிறது. அதைப்பார்த்து உன் வயிறு எரியப்போகிறது, என்றான். ஸ்தம்பித்து நின்ற கைகேயியை பரதன் இன்னும் கடுமையாக நிந்திக்க ஆரம்பித்தான். உன்னைப் போல கொடியவள் இந்த உலகில் யாரும் இல்லை. நீ மட்டும் அல்ல, உனது தாயும் கொடுமைக்காரிதான். அவள் செய்த கொடுமையின் காரணமாக எனது தாத்தா அவளை நாட்டைவிட்டே துரத்திவிட்டார். உன் தாயைப் போல தானே நீயும் இருப்பாய். நீயும் இவ்வூரிலிருந்து ஓடிவிடு.
என் தந்தையைக் கொன்ற கொலைகாரி நீ. அதுமட்டுமல்ல! என் சகோதரர்களையும் இந்த ஊரைவிட்டே துரத்திவிட்டாய். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு என் உயிர் இப்போதும் இந்த உடலில் இருப்பதுதான் வேதனையிலும் வேதனை. உன்னைப் பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன். என் தந்தை, என் தமையன்மார், என் அண்ணி அனைவரையும் நீ கொன்றுவிட்டாய். அதுமட்டுமல்ல, அயோத்தி நகரிலுள்ள அத்தனை பேரையும் கொன்ற கொலைகாரியாக, குற்றவாளியாக நிற்கிறாய். இந்த பாவத்திற்காக நீ கண்ணீர் விட்டு கதறு. இந்த நாட்டு மக்களும், ராமனும், சீதையும் உனக்கு என்ன கேடு செய்தார்கள்? இந்த குலத்தை அழித்த உனக்கு ப்ரூணஹத்யா என்ற தோஷம் (வேதம் கற்ற பிராமணனை கொலை செய்த குற்றம்) அணுகட்டும். உனக்கு சொர்க்கம் என்பது இனி இல்லை. நீ நரகத்திற்கு செல்வது உறுதியாகி விட்டது. அதுமட்டுமல்ல, நீ செய்த பாவத்தின் பலன் என்னையும் சேர்ந்து விட்டது.  இந்த உலகம் உள்ளளவும் என்னை கடுமையாக திட்டித்தீர்க்கும். உன் பாவச்செயலுக்கு துணை நின்றதாக என்னையும் சந்தேகிக்கும். தாய் என்ற உருவத்தில் என் எதிரே நிற்கும் எதிரி நீ. உன்னால் எத்தனை பேர் மாங்கல்யத்தை இழந்து தவிக்கிறார்கள். உன் தந்தை அசுவபதியின் பெயரை நீ கெடுத்துவிட்டாய். உன்னைப்போல ராட்சஷி இந்த உகில் யாரும் இல்லை. கவுசல்யாதேவிக்கு ராமபிரான் ஒரே ஒரு மகன். அவரை பிரித்த நீ நாசமாய் போவாய்.
உனக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும். தாய் தந்தையின் முகம், கழுத்து, மார்பு, வயிறு, கைகள், கால்கள், மூக்கு, விரல்கள், இருதயம் ஆகியவற்றின் சாரத்தில் இருந்து ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. எனவே ஒரு தாய்க்கு தன் உடன் பிறந்தவனைவிட குழந்தையின்மீது இயற்கையாகவே பாசம் உண்டாகிறது. இதையெல்லாம் தெரிந்த நீ கவுசல்யாதேவியைவிட்டு எப்படி ராமனை பிரிப்பாய்? ஒரு கதைசொல்கிறேன் கேள்.ஒரு விவசாயி தனது இரண்டு காளைகளை ஏரில் பூட்டி நிலத்தை உழுதுகொண்டிருந்தான். தொடர்ந்து உழுததால் அந்த காளைகள் மயங்கி விழுந்தன. தன் வம்சத்தில் பிறந்த அந்த காளைகளை பார்த்து காமதேனு அழுதது. அதன் கண்ணீர்த்துளிகள் கீழே விழும்போது அவ்வழியாக வந்த தேவேந்திரனின் உடலில் பட்டன. தேவேந்திரன் காமதேனுவிடம் அதற்கான காரணத்தை கேட்டான். அதற்கு காமதேனு, என் வம்சத்தில் பிறந்த இரண்டு காளைகள் மயங்கிக்கிடக்கின்றன. அவற்றிற்கு எழவே சக்தி இல்லாத நிலையில் அந்த விவசாயி அவற்றை அடித்து துன்புறுத்திக் கொண்டிருக்கிறான். இதைக் கண்டு என் இதயம் கலங்குகிறது. அந்த காளைகளுக்கும் எனக்கும் ரத்த சம்பந்தம் இருக்கிறது என பதிலளித்தது. இப்படி மிருகங்களே ஒன்றிற்கொன்று பாசமாக இருக்கும்போது நீ எப்படி கவுசல்யாவின் மகனை அவளை விட்டுப் பிரிக்கலாம். நீ இப்போதே இங்கிருந்து ஓடிவிடு. நீ செய்த பாவத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. நீ இங்குதான் இருப்பாய் என்றால், நான் இங்கு வாழமாட்டேன். நீ செய்த தவறுக்கு நெருப்பில் போய்விழு. இனி நீ உயிரோடு இருக்கக்கூடாது. நெருப்பில் குதிக்க பயமாக இருந்தால், கயிறைக்கட்டி அதில் தொங்கிவிடு. அப்படிச்செய்தால் தான் என் துக்கம் தீரும், என ஆவேசமாக சொன்ன பரதன் அப்படியே மயங்கி சாய்ந்துவிட்டான்.

ராமாயணம் பகுதி - 31
ஜூன் 21,2013
அ-
+
Temple images
சற்றுநேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த பரதனின் முன்னால் சுமந்திரரும் மற்ற அமைச்சர்களும் நின்றார்கள். அன்புக்குரியவர்களே! நான் சொல்லும் உண்மையைக் கேளுங்கள். எக்காலத்திலும் நான் ராஜ்யத்திற்கு ஆசைப்பட்டவன் அல்ல. நான் வெளியூரில் இருந்ததை நீங்கள் அறிவீர்கள். இதோ நிற்கிறாளே! இவளோடு சேர்ந்து சதி செய்யவுமில்லை. அண்ணன்மாரை தந்தையார் காட்டிற்கு அனுப்பிய விஷயமும் இங்கு வந்த பின் தான் தெரியும், என்று புலம்பினான். இரவு நேரத்தில் அவனது அலறல் அருகிலுள்ள அறையில் இருந்த கவுசல்யாதேவியின் காதில் விழுந்தது. அவள் சுமித்திரையிடம்,  பரத, சத்ருக்கனர் வந்து விட்டார்கள் போலும்! வா, அவர்களைப் பார்த்து வருவோம். குழந்தைகள் மிகவும் வருத்தத்தில் இருப்பார்கள், என்றார் தனக்கே உரிய நல்ல சுபாவத்துடன். அதற்குள் பரத சத்ருக்கனரே அங்கு வந்து விட்டனர். 
அம்மா, எனக்கதறி காலில் விழுந்தான் பரதன். இந்நேரத்தில் சற்றே உணர்ச்சிவசப்பட்ட கவுசல்யா, பரதா! உன் எண்ணம் நிறைவேறி விட்டதல்லவா? உன் தாய் அளப்பரிய சொத்துக்களை உனக்கு உரிமையாக்கி விட்டாள் அல்லவா? வைத்துக் கொள், இப்போது என்னிடம் எதுவுமே இல்லை.
ஒன்றுமில்லாத என்னை, இந்நாட்டின் பிரஜை என்ற முறையில், என் ராமனிடம் கொண்டு சேர்த்து விடு. இதை மட்டுமாவது செய்வாயா? என்றாள் கண்ணீர் பெருக்கி. பரதன் அதிர்ந்தான். தாயே! தாங்களுமா என்னைச் சந்தேகப்படுகிறீர்கள். இந்த நாடு வேண்டுமென்று கருதி என் தாயோடு சேர்ந்து நான் சதி செய்திருந்தால், என் அண்ணனுக்கு துரோகம் செய்திருந்தால் நான் இதுநாள் வரை படித்த அனைத்து வித்தைகளும் எனக்கு பயன்படாமல் போகட்டும். தற்கொலை செய்பவன், வேலைக்காரனுக்கு கூலி கொடுக்காத அயோக்கியன், எதிரிகளுக்கு பயந்து ஓடுபவன், புரோகிதர்களுக்கு தட்சணை கொடுக்காமல் ஏமாற்றுபவன் ஆகியோருக்கு கிடைக்கும் கதி எனக்கு கிடைக்கட்டும். என் மனைவி கூட என் சொல் கேளாமல் போகட்டும். கோள் சொல்லி பிழைப்பவன் என்ன கதி அடைவானோ, அவனைப் போல் நான் நாசமாய் போகக் கடவேன், என தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டான். கவுசல்யா இப்போது தான் சுதாரித்தாள். மகனே! கணவரையும், மகனையும் ஒரு சேர இழந்த துக்கத்தில் இப்படி பேசி விட்டேனடா! வருத்தம் கொள்ளாதே. லட்சுமணனைப் போலவே உனக்கும் ராமனிடம் மிகுந்த மரியாதை உண்டு என்பதை நான் அறிவேன், என்று ஆறுதல் சொல்லி, அவனை மடியில் படுக்க வைத்துக் கொண்டாள். இரவு முழுக்க இருவரும் பழைய கதைகளைப் பேசி அழுது கொண்டிருந்தனர். பொழுது விடிந்ததும் வசிஷ்டர் வந்தார்.
பரதா! இப்படியே அழுது கொண்டிருந்தால் எந்தக் காரியம் தான் நடக்கும்? நடப்பதைப் பார். மகாராஜாவின் உத்தரகிரியைக்கு ஏற்பாடு செய்தாயிற்று. நீ வந்து ஆக வேண்டியதைப் பார், என மெதுவாய் சொன்னார். பரதனும் தன்னைத் தேற்றிக் கொண்டு எழுந்தான். எண்ணெய் கொப்பரையில் வைக்கப்பட்டிருந்த மகாராஜாவின் உடல் வெளியே எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அறுபதாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அந்த மாமன்னரின் உடல் பல்லக்கில் ஏற்றப்பட்டது.  பரதன் தந்தையின் உடலைப் பார்த்துக் கதறினான். இந்த உலகத்திற்கே வழிகாட்டியாய் இருக்கும் ராமன் காட்டிற்கு போய் விட்டார். இந்நிலையில் நீங்களும் போய் விட்டீர்கள். இனி இந்த நாட்டை யார் காப்பாற்றுவார்கள்? சந்திரன் இல்லாத வானம் போல் இந்த அயோத்தியை இருளில் மூழ்கடித்து விட்டீர்களே? என புலம்பினான். தசரதரின் இறுதியாத்திரை துவங்கியது. பல்லக்கிற்கு முன்னால் தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட பூக்களை வாரி இறைத்துக் கொண்டு சிலர் சென்றனர். சிலர் பல அங்க வஸ்திரங்களை வீசிக் கொண்டே சென்றனர்.
தங்க பாத்திரத்தில், சந்தனம், அகில், குங்குலியம் முதலிய திரவியங்களின் புகை கமழும்படி சிலர் எடுத்துச் சென்றனர். தசரதரின் மனைவியர் 350 பேரும் பல்லக்கில் ஏறி, கணவனை இழந்த பெண்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தனர். முடி சார்ந்த மன்னரும் பிடி சாம்பலாகும் மேடையில் தசரதரின் உடல் வைக்கப்பட்டது. சாமவேத மந்திரத்தை வேதியர்கள் ஒலித்தனர். பரதனும், மற்ற பத்தினிகளும் சிதையை சுற்றி வந்தனர். பரதன் சிதையில் அக்னியை மூட்ட, மகாராஜா தசரதரின் உடல் பஸ்பமாகத் துவங்கியது. 350 ராஜபத்தினிகளும் வாய்விட்டுக் கதறிய ஒலி நெடுந்தூரம் கேட்டது. இந்த தேசத்திற்கு ராமன் என்ற பெரும் சொத்தைத் தந்த மகாராஜா தசரதரின் சரித்திரம் இத்துடன் நிறைவடைந்தது. பின்னர் அனைவரும் அயோத்தி மாநகரில் ஓடும் சரயூ நதியில் நீராடி, அரண்மனை திரும்பினர். பத்து நாட்கள் தரையில் ஒரு துணி கூட விரிக்காமல் படுத்து விரதம் இருந்தனர். அக்காலத்தில் யாராவது இறந்தால், இப்படி விரதம் அனுஷ்டிப்பது வழக்கம். பதினோராம் நாள் புண்ணியாஹவாசனம் என்ற சடங்கும், 12ம் நாள் சில சடங்குகளும் நடத்தப்பட்டன. 13ம் நாள் தான் அக்காலத்தில் அஸ்தி கரைக்கப்பட்டிருக்கிறது. அன்று புரோகிதர்களுக்கு பரதன் ஆடு மாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள், வீடு, வஸ்திரம் என பல்வகை தானங்களைச் செய்தான்.
பின்னர் மயான மேடைக்கு சென்றான். சாம்பலும், எலும்புகளும் மட்டுமே மிஞ்சிக்கிடந்தது. அதைப் பார்த்து கதறினான். சத்ருக்கனன் மயங்கியே விட்டான். மயக்கம் தெளிந்து எழுந்து, தந்தையார் தனக்கு இளமையில் வாங்கித்தந்த பரிசுகள், அவனோடு விளையாடியதை எல்லாம் சொல்லிச் சொல்லி அழுதான். வசிஷ்டர் அவர்கள் அருகே வந்தார். குழந்தைகளே! என்ன இதெல்லாம்? உலகில் பிறக்கும் எல்லா ஜீவன்களும், பசி, தாகம், சோகம், மோகம், முதுமை, மரணம் ஆகியவற்றை அனுபவித்தே ஆக வேண்டும். எல்லாருக்கும் உரிய நிகழ்வுதானே உங்கள் தந்தையாருக்கும் நிகழ்ந்தது, என சமாதானப்படுத்தினார். பரத, சத்ருக்கனர் அஸ்தியைக் கரைத்து விட்டு, இல்லம் திரும்பினர். எல்லாம் முடிந்தது என தெரிந்ததும், பரதனுக்கு பட்டாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்படும் என நினைத்துக் கொண்ட மந்தரை எனப்படும் கூனி அரண்மனைக்கு புறப்பட்டாள். சாதராணமாகவா? ராஜமாதாக்கள் அணியும் விலை உயர்ந்த வஸ்திரங்களை அணிந்து கொண்டாள். எல்லாம் கைகேயியிடம் வாங்கிய பிச்சை தான். உடலெங்கும் முத்து மாலைகள் ஜொலித்தன. சந்தனம் கமகமத்தது. ஒரு கிழவி தன்னை இப்படி அலங்கரித்தது எப்படி இருந்தது தெரியுமா? குரங்கைப் போல இருந்தது என்கிறார் வால்மீகி. அந்த கிழக்குரங்கு தன் அதிகாரத்தை இனி அயோத்திவாசிகளிடம் காட்டலாம் என்ற மமதையுடன் கைகேயியின் அறைக்கதவை தட்டியது.


ராமாயணம் பகுதி - 32
ஜூன் 21,2013
அ-
+
Temple images
மந்தரையைப் பார்த்தார்களோ இல்லையோ...இத்தனை நிகழ்வுளுக்கும் காரணமாக இருந்து விட்டு, அரண்மனைக்குள்ளும் நுழைந்த அவளை காவலர்கள் குண்டு கட்டாகத் தூக்கினர். கிழக்குரங்கே! உன்னால் தானேடி இவ்வளவு வினையும். மகாராஜாவையே கொன்று, ராமபிரானை காட்டுக்கு அனுப்பிய துரோகியாகி விட்டாயே! நல்லவளான கைகேயியை ஒரே நாளில் உன்னைப் போலவே மாற்றிய சதிகாரியே! வா, எங்களோடு, பரதன் வந்து விட்டார். அவரிடம் கொண்டு போய் உன்னை விடுகிறோம். உன்னைப் பார்த்த மாத்திரத்திலேயே வெட்டி வீழ்த்தி விடுவார், என்றவர்களாய், அவளை தரதரவென இழுத்துக் கொண்டு சென்றனர். பலரது பிடியில் அகப்பட்ட அவள் ஓலமிட்டாள். எதிரே, சத்ருக்கனன் வந்து கொண்டிருந்தான். ராமாயண காவியத்தில் ராமனுக்கு கூட கோபம் பலமுறை வெளிப்பட்டிருக்கிறது. மற்ற எல்லா பாத்திரங்களுமே கோபத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். சத்ருக்கனன் மட்டும் கோபப்பட்டதாக வரலாறு இல்லை. அப்படிப்பட்ட சத்ருக்கனன் இந்த ஒரே ஒரு இடத்தில் மட்டும் கடுமையாய் கோபப்படுகிறான். மந்தரையை, அவன் முன்னால் காவலர்கள் நிறுத்தினர். அவளைப் பார்த்ததும் அந்த சாந்தசீலன் ஆத்திரமடைந்தான். முகம் சிவந்து விட்டது. எங்கள் குடும்ப விளக்கை அணைத்த கொலைகாரியே! உன்னை என்ன செய்தாலும் தகுமடி.
நீ உயிரோடு இருக்கவே கூடாது, என்றவனாய் தரையில் அங்குமிங்குமாக இழுத்தான். வலி தாங்காத அந்தக் கிழவி அலறினாள். அவளது ஆடைகள் கலைந்தன. நகைகள் அந்த அறை முழுக்க சிதறின. அவை வானத்தில் உதித்த நட்சத்திரங்கள் போல் ஜொலித்தன. ஒருவரை அடிக்கும் போது அவரது ஆடைகள் கலைவதும், கல் நகைகள் அணிந்திருந்தால் அவை உடைந்து போவதும் வாடிக்கையானது தான். ஆனாலும், எதற்காக வால்மீகி நகைகள் சிதறியதை இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்கிறார் தெரியுமா? பளபளக்கும் நகைகளுக்காகவும், இதர செல்வங்களுக்காகவும் ஆசைப்பட்டு தான் நல்லவர்களைக் கூட சிலர் கெடுக்கிறார்கள். அப்படி கெடுப்பவர்கள், என்றாவது ஒருநாள் தண்டனை அடைந்தே தீருவார்கள். அப்போது அந்த நகையும், பணமும் அவர்களைக் காப்பாற்றா துணை வராது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பிறர் வாழ்வை கெடுக்கக்கூடாது என்பதைக் காட்டத்தான். மந்தரை அலறினாள். ஐயோ! கைகேயி, சத்ருக்கனன் என்னை அடிக்கிறான். சுற்றி நிற்கும் பாவிகளெல்லாம் என்னைக் கொன்று விடுவார்கள் போல் இருக்கிறது. என்னைக் காப்பாற்று...காப்பாற்று, என அரண்மனையே அதிரும் வண்ணம் அலறித் துடித்தாள். கோபத்தை வென்ற சத்ருக்கனரையே கோபப்பட வைத்து விட்டாள் என்றால், இவள் கதை இன்றோடு முடிந்தது, என பயந்து போன அரண்மனைப் பணிப்பெண்கள், பயத்தில் ஒடுங்கி நின்றனர்.
அவளது அபயக்குரல் கேட்டு ஓடிவந்த கைகேயி அங்கே வந்தாள். அவளைப் பார்த்ததும் சத்ருக்கனனின் கோபம் இன்னும் அதிகமாயிற்று. மந்தரைக்கு அடி பலமாக விழுந்தது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி இங்கே நிறைவேறிக் கொண்டிருந்தது. சத்ருக்கனனின் கோபத்தைப் பார்த்து அதிர்ந்து போன கைகேயி, அவன் அருகிலேயே வரவில்லை. நேராக மகன் பரதனிடம் ஓடினாள். பரதா! மந்தரையை சத்ருக்கனன் இம்சை செய்கிறான். அவளைக் காப்பாற்று, என்றாள். பரதன் வேகமாக வந்தான். மந்தரையை அடிப்பதை நிறுத்தச் சொன்னான். சத்ருக்கனா! குழந்தையுள்ளம் கொண்ட உன்னிடமா இவ்வளவு கோபம் புதைந்து கிடந்தது. நீ கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அதிலும் ஒரு பெண் மீதா உன் கோபம் திரும்பியது. இந்த உலகத்தில் பிறந்த சகல ஜீவராசிகளிலும் மென்மையான ஜீவர்கள் பெண்கள் தான். குணத்தில் கெட்டவர்களாகவும், பாதகிகளாகவும் சில பெண்கள் இருப்பினும், அவர்கள் மீது கைவைத்து விட்டால், எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லாமல் போய் விடுவார்கள். எனவே, எதிர்க்கத் தைரியமில்லாத அந்தப் பெண்ணை விட்டுவிடு. இவளை மட்டுமல்ல, இவள் சொல் கேட்ட என் தாய் கைகேயியையும் சேர்த்துக் கொன்றாலும் பாவமில்லை தான். ஆனாலும் ஏ பரதா! என் தாய் கைகேயியைக் கொல்ல நீ யாரடா? என நம் அண்ணன் ராமச்சந்திர மூர்த்தி என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்.
அது மட்டுமா? அக்கணமே, என் முகத்தில் விழிக்காதே, போ என அந்த மகானுபாவன் விரட்டி விடுவாரே. அந்த ஒரே காரணத்திற்காகத் தான் இவர்கள் இருவரையும் கொல்லாமல் விட்டு வைத்திருக்கிறேன். இந்த துஷ்டையை நீ கொன்றால், ராமன் நம்மிடம் பேசக்கூட மாட்டார், என்றான். ராம நாமத்தின் பெருமை இவ்விடத்தில் வெளிப்பட்டது. கெட்டவன் ஒருவன் அவஸ்தைப்படும் போது கூட ராமா என அவ்விடத்தில் யாரோ ஒருவர் நின்று சொன்னால் போதும். அந்த மகா கெட்டவனுக்கும் விடுதலை கிடைத்து விடும். மந்தரை ஒரு நாட்டின் அழிவுக்கே காரணமாக இருந்தவள் என்றாலும் கூட, ராமா என்ற சொல் கேட்டதும் அவள் விடுவிக்கப்பட்டு விட்டாள். பரதன் ராமனின் பெயரால் மந்தரையை விடச் சொன்ன பிறகு தான், கோபத்தைக் குறைத்துக் கொண்டு, அவளை ஒரே தள்ளாக தள்ளிவிட்டான். அந்த வேகத்தில் அவள் கைகேயியின் காலில் போய் விழுந்தாள். அழுது தீர்த்தாள். கைகேயி அவளை தன்னால் ஆன மட்டும் சமாதானம் செய்தாள். ஒருவாறாக தசரதர் இறந்து 14 நாட்கள் கடந்து விட்டன. அயோத்தி அரசன் இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருப்பதை அமைச்சர்களும், சேனாதிபதிகளும் கவனித்தனர். பரதனிடம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தினர்.
தர்மம் தவறாத பரதன் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டான். தனது நிலையில் அவன் உறுதியாக இருந்தான். எங்கள் குல வழக்கப்படி குடும்பத்தில் மூத்தவனே ராஜ்யம் ஆள வேண்டும். அதன்படி என் அண்ணன் ராமனே பதவி பொறுப்பேற்க வேண்டும். நான் அவரை அழைப்பதற்காக காட்டிற்கு போகிறேன். அவரை வலுக்கட்டாயமாகவேனும் அழைத்து வருவேன். நான் காட்டிற்கு புறப்படுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுங்கள், என்றான். இதைக்கேட்ட அயோத்தி நகர மக்கள் மனம் குதூகலித்தனர். ராம ராஜ்யம் ஏற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பரதனை பாராட்டினர். உனக்கு லட்சுமி கடாட்சம் என்றும் குறையாமல் இருக்கட்டும் என வாழ்த்தினர். ஒருவன் நாடு வேண்டாமென சொல்கிறான். நாடாளுவதால் கிடைக்கும் சுகம் வேண்டாம் என்கிறான். நாடாண்டால் கிடைக்கும் செல்வத்தை வேண்டாம் என்கிறான். உலகத்தையே தன்னுள் அடக்கும் சக்தி மிக்கவனாகலாம். ஆனாலும், பரதன் இத்தனையும் வேண்டாம் என்கிறான். அதாவது, தன்னைத் தேடி வருகின்ற லட்சுமியை உதறித்தள்ளுகிறான் என்றுதான் சாதாரணமானவர்களின் மனம் எண்ணும். ஆனால், மக்களோ அவனுக்கு, லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கட்டும் என்று வாழ்த்துகிறார்கள்.
இது முரண்பாடாக தெரிகிறதே என யோசிக்கலாம். இதன் பொருள் என்னவென்றால், அடுத்தவனுக்கு கிடைக்க வேண்டிய பொருளை எவன் ஒருவன் அபகரிக்காமல் அவனிடமே கொடுக்கவேண்டுமென கருதுகிறானோ, அவனை லட்சுமி தேவி என்றும் பிரியமாட்டாள் என்பதாகும். பரதன் இவ்வாறு சொன்னதும் வசிஷ்டரும் மற்ற சேனாதிபதிகளும், ஒருவேளை ராமபிரான் வரமறுத்துவிட்டால் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்களா? எனக்கேட்டனர். என் அண்ணன் இங்கு வரமறுத்துவிட்டால், அவரது ராஜ்யத்தை பாதுகாப்பேனே தவிர, ஒருக்காலும் பதவியில் அமரவேமாட்டேன், என உறுதியாக சொல்லிவிட்டான். வசிஷ்டர் அவனைப் பதவியேற்கச் சொல்லி மிகவும் வற்புறுத்தினார். குரு என்றும் பாராமல், இன்னொருவருக்கு கிடைக்க வேண்டியதைப் பறித்துக் கொள் என்று உபதேசிக்கும் குரு எங்கள் நாட்டிற்கு கிடைத்திருக்கிறார் என்றால், இந்த நாடு இன்னும் மிகுந்த ÷க்ஷமத்துடன் இருக்கும் இல்லையா? என வஞ்சப்புகழ்ச்சி அணியில் பேசினான். எல்லாரும் அந்த நல்லவனை தெய்வமாய் எண்ணி மனதார பூஜித்தனர். —தொடரும்

































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக