வெள்ளி, 25 அக்டோபர், 2013

ராமாயணம் - முதல் பகுதி ( 1 - 15 )

ராதே கிருஷ்ணா 25-10-2013

ராமாயணம் - முதல் பகுதி  ( 1 - 15 )

ராமாயணம்
 
temple

ராமாயணம் பகுதி-1நவம்பர் 08,2010

தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத்திற்கு காரணம். திருடனாக இருந்த ...மேலும்
 
temple

ராமாயணம் பகுதி-2நவம்பர் 08,2010

குழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் அமைந்தாள். குழந்தை இல்லாததால் கேகய நாட்டுமன்னன் தன் மகள் கைகேயியை இரண்டாம் ... மேலும்
 
temple

ராமாயணம் பகுதி-3நவம்பர் 08,2010

தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து பார்த்து புளகாகிதமடைந்தார்கள். சகோதரர்கள் நால்வரும் கணமும் பிரிவதில்லை. ... மேலும்
 
temple

ராமாயணம் பகுதி-4நவம்பர் 13,2010

தசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன் வேறு யாருமல்ல... லட்சுமணன் தான்... தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்குச் சொந்தக்காரன்.தந்தையே! என் சகோதரன் எங்கிருக்கிறாரோ ... மேலும்
 
temple

ராமாயணம் பகுதி-5நவம்பர் 13,2010

அந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை நோக்கவும், அந்த கருவிழிகள் வெட்கத்தால் தரை நோக்கித் தாழ்ந்தது. மீண்டும் ஆவலுடன் ... மேலும்
 
temple

ராமாயணம் பகுதி-6நவம்பர் 13,2010

மகிழ்ச்சிக்கடலில் அவள் மூழ்கிப்போனாள். பிறகென்ன! உலகைக் காக்கும் பரம்பொருள் மானிட அவதாரம் எடுத்துள்ளார். அன்னை மகாலட்சுமி சீதையாக பூமிக்கு வந்திருக்கிறாள். மகாலட்சுமி ... மேலும்
 
temple

ராமாயணம் பகுதி-7டிசம்பர் 17,2010

மிகச்சிறந்த முகூர்த்த நாள் ஒன்றை விசுவாமித்திரர் குறித்தார். திருமணவிழாவிற்கான ஏற்பாடுகள் மிதிலையில் மிகச்சிறப்பாக நடந்தன. தங்கள் நான்கு இளவரசிகளுக்கும் திருமணம் என்பதால் ...மேலும்
 
temple

ராமாயணம் பகுதி-8டிசம்பர் 17,2010

பரசுராமர் கோபத்துடன் கர்ஜித்தார்.தசரத மன்னனின் புதல்வனே, ராமா! நீ சிவனின் வில்லை ஒடித்ததற்காக பெருமைப்படாதே. அது ஏற்கனவே பழுதுபட்டிருந்தது. பழுதுபட்ட வில்லை ஒடிப்பது என்பது ... மேலும்
 
temple
ராமனுக்கு பட்டாபிஷேகம் என்ற செய்தி நாடெங்கும் பரவிவிட்டது. மக்கள் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர். ராமராஜ்யம் கிடைப்பதென்றால் சும்மாவா? அவன் ஆட்சியில் இருக்கும் வரை இல்லை என்ற ... மேலும்
 
temple
கெட்டவர்கள் பிறருக்கு நல்லுரை சொல்வது போல நடிப்பது ஒரு தனிக்கலை. அந்தக்கலைக்கு அடிபணியாத ரசிகர்களே இல்லை. இப்போது ஒரு ரசிகையில் நிலையில் இருந்த கைகேயி, மந்தரையின் சொற்களைக் ... மேலும்
 
temple
அவள் சாட்சாத் கைகேயியே தான். வீரப்பெண்மணியான அவளைத் திருமணம் செய்ததற்காக அப்போது தசரதர் பெருமைப்பட்டார். வீட்டில் சமையலும் செய்யாமல், வேலைக்கும் போகாமல் வெட்டியாய் ...மேலும்
 
temple
பின்னர் கைகேயி தேவாசுர யுத்தத்தில் மன்னனைத் தான் காப்பாற்றிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுவிட்டு, அப்போது மன்னன் தருவதாய்ச் சொன்ன இரு வரங்களையும் இப்போது தரவேண்டும் எனக் ... மேலும்
 
temple
அவள் ராமனின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள். ராமனுக்கோ மன தைரியம் பறந்துவிட்டது. நம்மைப் பிரிந்து இவள் எத்தனை நாள் கஷ்டப்படுவாளோ? இங்கு இருப்பவர்களை எல்லாம் அனுசரித்து ... மேலும்
 
temple
சீதை தன்னோடு வர விருப்பப்பட்டாலும், வனத்தில் வாழ்வதால் ஏற்படப்போகும் சிரமங்களை அவள் தாங்கிக் கொள்ள மாட்டாள் என்பதால் ராமன் அவளுக்கு பல புத்திமதிகளை சொன்னார். என் கண்மணியே! நீ ... மேலும்
 
temple
எப்படியாவது ராமனுடன் வனத்திற்கு சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சீதை, சற்று கடுமையாகவே வார்த்தைகளை பிரயோகம் செய்தாள். அவரை கடுமையாக நிந்தித்தாள். பெண்களுக்குரிய பொதுவான ... மேலும்
 
2 3 Next >

ராமாயணம் பகுதி-1
நவம்பர் 08,2010
அ-
+
Temple images
தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத்திற்கு காரணம். திருடனாக இருந்த வால்மீகியை முனிவர் அந்தஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர் தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந்து கொள்வோமே எனக் கருதி அவரை மனதால் துதித்தார்.நாரதர் அவர் முன்பு தோன்றினார். வியாசமுனிவரே! என்னை அழைக்க காரணம் என்னவோ?. முனிவர்பிரானே! என் மனதில் ஒரு கேள்வி பிறந்துள்ளது. கேட்கட்டுமா?.கேள்விகளில் இருந்து பதில்கள் பிறக்கின்றன. பிறப்பு தான் உலகின் ஜீவநாடி. கேளுங்கள், இப்போது இந்த உலகிலேயே நல்ல குணமுள்ளவர் யார்? யார் மிகுந்த தைரியசாலி? தர்மம் செய்வதில் யார் உயர்ந்தவர்? நன்றி மறக்காதவர் யார்? சத்தியம் தவறாத உத்தமர் யார்? மன உறுதியோடு திகழ்பவர் யார்? ஒழுக்கத்தை எக்காலமும் நழுவவிடாத உயர்ந்தவர் யார்? எதிரிகளுக்கும் நன்மை செய்பவர் யார்? எல்லா கலைகளையும் கற்றவர் யார்? அதீத சக்தி பெற்றவர் யார்? பார்த்த உடனேயே மனதிற்கு இனிமை தரும் இனியவர் யார்? உள்ளத்தில் பொறாமையே இல்லாதவர் யார்? யாருடைய கோபத்தைக் கண்டு தேவர்கள்கூட அஞ்சுகிறார்கள்? இப்படி பல கல்யாண குணங்களைக்கொண்ட உத்தமர் யாராவது இவ்வுலகத்தில் வாழ்கிறார்களா? என கேட்டார்.
அவரது கேள்வியை நன்றாக அசை போட்ட நாரதர், நீங்கள் கூறும் கல்யாண குணங்களைக்கொண்ட ஒரே மாமனிதர் ராமபிரான் மட்டுமே. அவர் அயோத்தி மன்னர். இக்ஷ்வாகு வம்சத்தில் அவதரித்தவர். புலனடக்கம் மிக்கவர். அவரைவிட அறிவில் சிறந்தவர்கள் இவ்வுலகில் வேறு யாருமில்லை. எப்பேர்ப்பட்ட எதிரியையும் அவர் அழித்துவிடுவார். பலம் பொருந்திய கைகள் அவரிடம் உண்டு. அகன்ற மார்பைக் கொண்டவர். எப்போதும் வில்லுடன் திரிவார். அவர் நடந்தால் உலகிலுள்ள அத்தனைபேரும் ரசிப்பார்கள். நடுத்தர உயரமுள்ளவர். அவரது மேனி கார்வண்ணம் உடையது. ஆனாலும், அம்மேனி ஒளிவீசும் தன்மை கொண்டது. அமைதியே வடிவாக இருப்பார். இந்த உலகத்தையே தாங்கும் சக்தி அவரிடம் உள்ளது. தர்மத்தை எக்காலத்திலும் கைவிடாதவர். புத்தி சாதுர்யம் அவரைப்போல வேறு யாருக்கும் இல்லை. துன்பக்கடல் சூழ்ந்து வந்தாலும் இமயமலையைப் போல அசையமாட்டார். அதேநேரம், கோபம் வந்துவிட்டால் அவர் அருகே யாரும் நிற்கமுடியாது.
அவரைப் பணிந்துவிட்டால் பூமாதேவியைப்போல பொறுமையின் சின்னமாகி விடுவார். செல்வத்தில் குபேரனையும் மிஞ்சுபவர். சத்தியவான். தர்மம் அவரிடம் மட்டுமே இருக்கிறது என்றார். அது மட்டுமின்றி ராமபிரானின் கதை முழுவதையும் சொன்னார். ராமனின் கதை கேட்ட வால்மீகி முனிவரின் கண்களில் நீர் கோர்த்தது. இப்பேர்ப்பட்ட மகான் ஒருவர் பூமியில் வாழ்கிறாரா? என் கைகள் அவரை எழுத வேண்டும். அந்த உத்தமனின் வரலாறு இப்பூமி உள்ளளவும் நிலைக்க வேண்டும், என உணர்ச்சி பொங்கக் கூறினார்.  அன்று முதல் ராமனின் நினைவைத் தவிர அவர் மனதில் வேறு எதுவுமே இல்லை. அவரை மனதில் எண்ணிக்கொண்டே தன் சீடருடன் தமசா என்ற நதிக்கரைக்கு சென்றார். நதிக்கரையில் இருந்த ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு வந்த வேடன் ஒருவன் அம்பெய்தான். ஆண்பறவை அடிபட்டு இறந்தது. பெண் பறவை கதறியது. இதைக்கண்ட வால்மீகி முனிவர் வேடன்மீது கடும் கோபமடைந்தார்.
வேடனே! இந்த ஜோடிப் பறவைகளைப் பிரித்த நீ மனதில் நிம்மதி இல்லாமல் பல ஆண்டுகள் அலைவாய், என சாபமிட்டார். உலகத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தைப் பார்த்து, ராம நாமத்தை ஒரு நிமிடம் மறந்த அவர் கோபத்திற்கு ஆட்பட்டார். முனிவராக இருந்தும் அவசரத்தில் கோபப்பட்டுவிட்டோமே என வருந்தினார். அவர் சாபமிடும்போது பிரம்மதேவன் அங்கு வந்து சேர்ந்தார். வால்மீகியின் சாப சொற்கள் கூட இலக்கியத்தரத்துடன் அமைந்திருந்ததை கேட்டு ஆனந்தம் கொண்டார். இப்படிப்பட்ட இலக்கியவாதியால்தான் ராமனின் சரிதத்தை நன்றாக எழுதமுடியும் என கருதினார். வால்மீகியின் முன்பு பிரதட்சண்யமான அவர், முனிவரே! தாங்கள் இப்போது வேடனுக்கு சாபம் கொடுத்தபோதுகூட எதுகை மோனையுடன் நாதமும் சந்தமும் கலந்து சாபம் கொடுத்தீர்கள். இப்படிப்பட்ட திறமைவாய்ந்த நீங்கள்தான் புண்ணியமூர்த்தியான ராமனின் திரு வரலாற்றை மகாகாவியமாக வடிக்க வேண்டும்,என்றார்.
ராமபிரானின் கதையை பாடத்துவங்கினார் வியாசர். கோசலநாடு மிகப்பெரிய நாடு. செல்வச்செழிப்பு மிகுந்த நாடு. இந்நாட்டை சரயு என்ற நதி பாய்ந்து வளப்படுத்திக்கொண்டிருந்தது. இதன் தலைநகரம் அயோத்தி. அயோத்தி என்ற சொல்லுக்கு வெல்ல முடியாத நகரம் என பொருள். இந்நகரை யாராலும் கைப்பற்ற இயலாது. சூரியகுல மன்னர்கள் இந்நாட்டை சிறப்புடன் ஆண்டு வந்தனர். ஆரம்பத்தில் மனு என்பவரும், அடுத்து இக்ஷ்வாகுவும், இதையடுத்து ரகு என்பவரும் ஆண்டனர். இதன்பிறகு பொறுப்பேற்றவரே தசரத சக்கரவர்த்தி. தச ரதம் என்ற சொல்லுக்கு பத்து தேர் என பொருள். ஒரே நேரத்தில் பத்து தேர்களை இயக்கும் வல்லமை உடையவர் தசரத மகாராஜா. இதிலிருந்தே அவரது வீரத்தின் அளவை தெரிந்துகொள்ளலாம். எந்த அளவுக்கு வீரம் இருந்ததோ அதே அளவுக்கு அவர் மனதில் அன்பும் உண்டு. தன் நாட்டு மக்களிடம் கருணையைப் பொழிந்தார் தசரதர். தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காமல் முனிவர்களிடமும், அறிவு சார்ந்த அமைச்சர்களிடமும், மகா பண்டிதர்களிடமும் ஆலோசனை கேட்டு அதன்படியே நடப்பார்.  அன்று, அரண்மனையில் தசரத மகாராஜா கவலையுடன் உலவிக் கொண்டிருந்தார். எதிர்காலத்தில் இந்நாட்டை காப்பாற்றப்போவது யார் என்ற கலக்கம் அவர் முகத்தில் தெரிந்தது.

ராமாயணம் பகுதி-2
நவம்பர் 08,2010
அ-
+
Temple images
குழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் அமைந்தாள். குழந்தை இல்லாததால் கேகய நாட்டுமன்னன் தன் மகள் கைகேயியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொடுத்தார். ஆனால், அந்த பெருமாட்டிக்கும் குழந்தை பிறக்கவில்லை. அவள் அழகில் மிகவும் சிறந்தவள். ராமாயண கதாபாத்திரங்களிலேயே அழகில் சிறந்தவளாக காட்டப்படுபவள் கைகேயிதான். இதன்பின்னும் சுமித்ரா என்ற பெண்மணியை தசரதர் திருமணம் செய்தார். அவள் அறிவில் சிறந்தவள். மூன்று மனைவியர் இருந்தும் நாடாள ஒரு குழந்தைகூட பிறக்காதது அனைவர் மத்தியிலும் கவலையை எழுப்பியது. இந்நேரத்தில்  ராஜகுரு வசிஷ்டர் அரண்மனைக்குள் வந்தார். வாடிப்போயிருந்த தசரதரின் முகத்தைப் பார்த்தார். தசரதரின் கவலையை குறிப்பால் உணர்ந்த அவர், தசரதா! நீ கவலை  ஏதும் படவேண்டாம். ரிஷ்யசிருங்கர் என்ற முனிவர் இருக்கிறார். அவர் வேள்விகளை எவ்வித பங்கமும் இல்லாமல் சிறப்பாக செய்யக்கூடியவர். அவரைக்கொண்டு அஸ்வமேத யாகமும், புத்திரகாமேஷ்டி யாகமும் செய்தால் குழந்தையும் கிடைக்கும். அத்துடன் இந்த உலகமே உன் வசமாகும் என யோசனை சொன்னார்.
தசரதர் மகிழ்ந்தார். வேள்விகளின்போது மந்திர உச்சரிப்புகள் மிகச்சரியாக இருக்க வேண்டும். சிறிது பிசகினால்கூட விளைவுகள் எதிர்மறையாக இருக்கும். ஆனால் ரிஷ்யசிருங்கரின் நாக்கிலிருந்து வரும் ஒவ்வொரு மந்திர வார்த்தையும் எந்த பிசகும் இல்லாமல் மிகத்தெளிவாக இருக்கும். வசிஷ்டர் கூறியபடியே சிருங்கர் மிகச்சிறப்பாக இரண்டு வேள்விகளையும் செய்துமுடித்தார். அவரது ஆலோசனையின்படி, தசரதரும், அவரது மூன்று தேவியரும் மிகக்கடுமையான விரதங்களை மேற்கொண்டனர்.  இந்நேரத்தில் பூவுலகை ராவணன் என்ற அரக்கன் ஆண்டுகொண்டிருந்தான். அவனால் நல்லவர்கள்கூட தீய வழிக்கு சென்றுகொண்டிருந்தார்கள். நல்லதைக்கற்றுக் கொள்வதைவிட, தீயதை கற்றுக்கொள்வது மிகவும் எளிது. சாதாரண சுகங்களுக்காக தீமையான மது, மாது, சூது ஆகிய விஷயங்களில் மக்களில் ஒருசாரார்  கெட்டுக்கிடந்தார்கள். விண்ணுலகிற்கு இந்த தகவல் எட்டியது. ராவணனின் புகழ் பெருகுவதைப் பார்த்தால் தங்களது பதவிக்கும் ஆபத்து வரும் என தேவர்கள் கருதினர். அவர்கள் பிரம்மனை அணுகி, விஷயத்தை எடுத்துரைத்தனர். அவர்களிடம் பிரம்மா, தேவர்களே! அந்த ராவணனை யாராலும் கொல்ல முடியாது. அதற்குரிய வரத்தை நானே அவருக்கு கொடுத்திருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவன் தவறிவிட்டான்.
பூவுலகில் எந்தப் பொருளாலும் தனக்கு அழிவு வரக்கூடாது எனக் கேட்ட அவன், மனிதர்களால் மட்டும் அழிவு வரக்கூடாது என கேட்கவில்லை. எனவே, யாராவது ஒருமனிதனால் மட்டுமே அவனை கொல்ல இயலும். அப்படிப்பட்ட தைரியசாலிகள் யாருமே இல்லை. அவனது மூச்சுக்காற்று பட்டால்கூட சாதாரண மனிதர்கள் அழிந்து போவார்கள். எனவே நாம் மகாவிஷ்ணுவை அணுகுவோம். அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்போம், என்றார். பிரம்மனும் தேவர்களும் பாற்கடலில் துயில் கொண்டிருந்த பரந்தாமனை அணுகினர். அவர்களிடம் மகாவிஷ்ணு, உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன். மண்ணுலகில் மானிடனாக பிறக்கிறேன். ராமன் என்ற பெயரில் விளங்குவேன். ராமாவதார காலம் முடிந்தபின்பு மீண்டும் வைகுண்டம் திரும்புவேன், என உறுதியளித்தார். தேவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேநேரம், ரிஷ்யசிருங்கர் நடத்திய வேள்வியும் நிறைவுபெற்றது. வேள்விக்குண்டத்திலிருந்து கண்களால் உற்று நோக்கமுடியாத அளவுக்கு படுபிரகாசமான ஒளிப்பிழம்பு எழும்பியது.  அதிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. அந்த உருவத்தின் கையில் பொன்னால் செய்யப்பட்ட ஒரு பாத்திரம் இருந்தது. பாத்திரம் நிறைய தேவலோக பாயாசம் இருந்தது.
அவ்வுருவம் தசரதன் அருகில் வந்து, மகாராஜா தசரதனே! மக்கள் மீது நீ மிகவும் அன்பு வைத்திருக்கிறாய். மக்களைக் காப்பவரை ஆண்டவன் எப்போதும் விரும்புவான். நான் கிருஷ்ணபரமாத்மாவின் தூதனாக இங்கே வந்திருக்கிறேன். இந்த தங்கப் பாத்திரத்தில் உள்ள தேவலோக பாயாசத்தை ஏற்றுக்கொள். உன் மனைவியருக்கு இதை பங்கிட்டுக்கொடு. இந்தப் பாயாசம் நோயற்ற வாழ்வைத்தரும். செல்வ வளம் செழிக்கும். முக்கியமாக, நீ கேட்கும் புத்திரபாக்கியம் கிடைக்கும். உனக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள், என்றது. தசரதர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாயாச பாத்திரத்தைப் பெற்று அரண்மனைக்குத் திரும்பினார். அந்தப் பாயாசத்தில் பாதியை முதல் மனைவி கவுசல்யாவுக்கு கொடுத்தார். மீதியிருந்ததில் பாதி பகுதியை சுமித்ராவுக்கு வழங்கினார். இதிலும் எஞ்சியதை இரண்டு பங்காக்கி அதில் ஒரு பகுதியை கைகேயிக்கு கொடுத்தார். சற்று யோசனை செய்துவிட்டு, மீதியிருந்ததை இரண்டாவது தடவையாக சுமித்ராவுக்கு கொடுத்துவிட்டார். இவ்வாறு பாயாசத்தை பிரித்துக் கொடுத்ததன் விளைவாகத்தான் பிற்காலத்தில் கைகேயியின் புத்தி தடுமாறி இருக்கவேண்டும். ஏனெனில் கைகேயிக்கு மட்டுமே குறைந்த அளவு பாயாசம் கிடைத்தது.  அவளால்தான் ராமாயணம் என்ற காப்பியமே உருவாயிற்று. பாயாசத்தை அருந்திய தேவியர் மூவரும் கர்ப்பமடைந்தனர். சித்திரை மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தில்  ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்த நிலையில் கவுசல்யா தேவிக்கு ஸ்ரீ ராமபிரான் அவதரித்தார். அடுத்தநாள் கைகேயி பூச நட்சத்திரத்தில் பரதனை பெற்றாள். ஆயில்ய நட்சத்திரத்தில் சுமித்ராவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் லட்சுமணன் மற்றும் சத்ருக்கனன் ஆகியோர்.

ராமாயணம் பகுதி-3
நவம்பர் 08,2010
அ-
+
Temple images
தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து பார்த்து புளகாகிதமடைந்தார்கள். சகோதரர்கள் நால்வரும் கணமும் பிரிவதில்லை. ராமனும் சுமித்திரை மகன் லட்சுமணனும் இணை பிரிவதே கிடையாது. பரதனும் சத்ருக்கனனும் ஒன்றாகத் திரிவார்கள். இந்த சகோதர ஒற்றுமை உலக சகோதரர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். ஒருவருக்கு தலைவலித்தால், நான்கு பேருக்கும் வந்தது போல துடித்துப் போவார்கள். அப்படி ஒரு ஒற்றுமை.மனைவியை விட நல்ல குழந்தைகள் அமைவது ஒருவனுக்கு கிடைத்தற்கரிய ஒன்று. தசரத சக்கரவர்த்தி குழந்தைகள் விஷயத்தில் ரொம்ப கொடுத்து வைத்தவர். இன்றும் ராம லட்சுமணர்கள், பரத சத்ருக்கனர்கள் என்று தானே நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மனிதன் இன்பத்தை மட்டுமே அனுபவிக்க பிறந்தவன் அல்லவே. அவன் துன்பக்கடலையும் கடந்தாக வேண்டுமே. ராமனின் பதினாறாவது வயதிலேயே சோதனையும் வந்தது விஸ்வாமித்திர முனிவரின் ரூபத்திலே. அவர் அன்று அரசவைக்கு வருகை தந்தார். இக்ஷ்வாகு குல மன்னர்கள் முனிவர்களின் பேச்சுக்கு மிகுந்த மதிப்பளிப்பவர்கள். அவர்களைத் தெய்வமாய் போற்றுபவர்கள். விசுவாமித்திரரைப் பற்றி அனைவரும் அறிவர். கோபக்காரர். கோபமுள்ள இடத்தில் குணமும் இருக்கும், திறமையும் இருக்கும் போலும்! தசரதர் விஸ்வாமித்திர மகரிஷியை வரவேற்றார்.
வர வேண்டும் மாமுனியே! தாங்கள் ராஜகுமாரராக அவதரித்தீர்கள். நாடாண்ட நீங்கள் இப்போது ராஜரிஷியாகி விட்டீர்கள். ராஜவம்சத்தவர், ஆன்மிகத்தில் முழுமையாக ஈடுபடுவதென்பது அசாத்தியமான ஒன்று. ஆனால், தாங்கள் அதை சாத்தியப்படுத்தி விட்டீர்கள். தாங்கள் அரண்மøனியில் தங்கிச் செல்வதன் மூலம், பெரும் பேறு அடைந்தவன் ஆவேன், என்று உபசரித்தார். இந்த உபசாரம் என்பது வெறும் புகழ்ச்சிக்காக அல்ல. உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்ததுடன், உண்மையான உபசாரமாக இது அமைந்தது. விருந்தினர்களை உள்ளன்போடு உபசரிக்க வேண்டும் என்பதைக் கூட ராமாயணம் நமக்கு கற்றுத் தருகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் இனிய இதிகாசமல்லவா இது! விஸ்வாமித்திரர் மகிழ்ந்தார். தசரதரை ஆசிர்வதித்தார். சக்கரவர்த்தி! நான் தங்கிச் செல்லும் நிலையில் இல்லை. உன்னிடம் ஒரு உதவி நாடி வந்திருக்கிறேன், செய்வாயா?. தசரதர் பதறியும், நெகிழ்ந்தும் போனார். தங்களுக்கு உதவி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைப்பதற்கே நான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! என்னிடம் அனுமதி கேட்கவே தேவையில்லை. செய் என்றால் தலை வணங்கி செய்து விட்டு போகிறேன், என்று வாக்கு கொடுத்து விட்டார் நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமலே. ராஜாவின் சொற்கள் விஸ்வாமித்திரரின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகளை படரவிட்டன.
தசரதா! நான் உலக நன்மைக்காக கானகத்தில் ஒரு யாகம் நடத்திக் கொண்டிருக்கிறேன். அந்த யாகத்தை தாடகை என்ற அரக்கியின் புதல்வர்களான மாரீசன், சுபாகு என்பவர்கள் அழிக்க நினைக்கிறார்கள். வேள்வி குண்டத்தில் மாமிச துண்டங்களை வீசியெறிந்து வேள்வியின் நோக்கத்தையே சிதைக்க திட்டமிட்டுள்ளார்கள். என்னாலும் அவர்களை அழிக்க இயலும். ஆனால், யாகம் நடத்துவதில் நான் மிக கவனமாக இருக்க வேண்டியுள்ளது. மந்திரங்கள் சொல்வது இடையில் நின்று போகக்கூடாது. எனவே வலுவான காவலன் ஒருவன் எனக்கு வேண்டும். அவன் உன்னிடம் தான் இருக்கிறான், விஸ்வாமித்திரர் சற்றே நிறுத்தினார். யாரது! சொல்லுங்கள் மகரிஷஇ. நான் உடனே அவனை அனுப்புகிறேன். இது சத்தியம்,. தசரதர் விஸ்வாமித்திரருக்கு உதவுவதில் இன்னும் ஆர்வம் காட்டினார். ராஜா! அவன் வேறு யாருமல்ல. இந்த ராஜா பெற்ற மற்றொரு ராஜா, உன் பெரிய மகன் ராமன்,. ஆ.... தசரதர் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார். முனிநாதா! யாரைக் கேட்டீர்கள். என் சின்னஞ்சிறு பாலகன் ராமனையா. பதினாறே வயது நிரம்பிய அந்த சிசுவையா? அவனால், எப்படி அப்பேர்ப்பட்ட அசுரர்களை எதிர்க்க முடியும்? எனக்கு இது அதிர்ச்சியாக உள்ளது,. விஸ்வாமித்திரர் கொதித்து போய் விட்டார். தசரதா! என்னிடமே வார்த்தை மாய்மாலம் செய்கிறாயா? நான் சொல்வதை செய்வதாக வாக்களித்து விட்டு உடனே தடம் புரண்டு விட்டாயே,. அவரது கனல் வார்த்தைகள் கேட்டு அனலில் விழுந்த புழுவாய் துடித்தார் தசரதர்.
 முனிவரே! வார்த்தைகளால் என்னைக் கொல்லாதீர்கள். ராமனுக்கு பதிலாக நானே படைகளுடன் வருகிறேன். வேள்விக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் பாதுகாக்கிறேன். சிறுவனை அனுப்புவதில் உள்ள சிரமத்தைத் தான் சொன்னேன். நான் வாக்கு தவறுபவன் அல்ல,. தசரதர் கதறாத குறையாகச் சொன்னார்.விஸ்வாமித்திரருக்கு இன்னும் கோபம்.நான் உன் மகன் ராமனைத்தான் என்னோடு அனுப்பச் சொன்னேன். உன்னை வரச் சொல்வதாக இருந்தால் முதலிலேயே உன்னிடம் சொல்லியிருப்பேனே. ராமனை அனுப்புகிறாயா, இல்லையா? விசுவாமித்திரர் மிரட்டினார். தசரதர் செய்வதறியாது திகைத்து நிற்கையில், அரசகுரு வசிஷ்டர் இடையில் புகுந்து நிலைமையை சாந்தமாக்கினார். விசுவாமித்திரரைப் பற்றி அவர் அறியாத விஷயங்களா என்ன? தசரதரை அழைத்தார். தசரதா! ஏனிந்த தயக்கம். நம் கண்மணி ராமன், அரக்கர்களை அழிக்க தகுதி வாய்ந்தவனே! பதினாறு வயதிலேயே அவன் பெரும் சாதனை நிகழ்த்தப் போகிறான். அதற்குரிய சந்தர்ப்பம் அவனைத் தேடி வந்துள்ளது. இந்த சாதனையைச் செய்து, இக்ஷ்வாகு வம்சத்தின் பெருமையை மேலும் உயர்த்துவான். அவனை முனிவருடன் அனுப்பி வை,.அரசகுருவே சொன்ன பிறகு தசரதரால் என்ன செய்ய முடியும்? ஒருவாறாக மனதைத் தேற்றிக் கொண்டு, ராமபிரானை அனுப்ப சம்மதித்தார். அப்போது இளைஞன் ஒருவன் மன்னர் முன் துள்ளிக் குதித்து வந்து நின்றான். அவன் சொன்ன வார்த்தைகள் தசரதரின் தலையை இன்னும் சுழல வைத்தது.

ராமாயணம் பகுதி-4
நவம்பர் 13,2010
அ-
+
Temple images
தசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன் வேறு யாருமல்ல... லட்சுமணன் தான்... தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்குச் சொந்தக்காரன்.தந்தையே! என் சகோதரன் எங்கிருக்கிறாரோ அங்கிருப்பதே எனக்கு பெருமை, வேலை, கடமை எனக்கருதுபவன் நான். அவர் கானகம் சென்றால் நானும் அவருடன் செல்வேன். அவரின்றி நான் இல்லை; அண்ணனுடன் செல்வதென முடிவெடுத்து விட்டேன், என்ற லட்சுமணனின் சொல் கேட்டு தசரதருக்கு இன்னும் இக்கட்டான நிலைமை ஆயிற்று. ஒரே நேரத்தில் இரண்டு மைந்தர்களை இழந்து விடுவோமோ என பயந்தார்.ஆனாலும், லட்சுமணனை தடுக்கும் சக்தி அவருக்கில்லை. இருவரும் கானகம் செல்ல தசரதர் அனுமதி அளித்தார். விஸ்வாமித்திரர் அந்த வீர சகோதரர்களுடன் காட்டுக்கு புறப்பட்டார். காட்டிற்குள் மனித ஜீவன்கள் யாருமே வருவதில்லை. தடாகை விழுங்கி விடுவாள் என்ற பயம். அங்கு வந்த பின், தாடகையை கொல்வதற்கு ராமன் யோசித்தார். ஏனெனில், அவள் ஒரு பெண். அரக்கியாக இருந்தாலும் பெண் என்பதால் அவளை கொல்வதற்கு ராமனிடம் தயக்கம் இருந்தது. விஸ்வாமித்திரர் ராமனின் எண்ணத்தை புரிந்து கொண்டார். ராமா, அவளுக்கு பெண்மைக்குரிய எந்த இலக்கணமும் கிடையாது. மனித மாமிசம் உண்ணும் பெண்மணியை கொல்வதில் எந்த தவறும் இல்லை. அவளை உடனே அழித்துவிடு, என்றார். ராமனும் விஸ்வாமித்திரரின் சொல்லில் இருந்த நியாயத்தை உணர்ந்து வில்லை எடுத்து ஒலி எழுப்பினார். அவரது நாண் அசைவில் அந்த கானகமே நடுங்கியது. விலங்குகள் ஓடி மறைந்தன. நாண் ஒலி கேட்டு கலங்கிப் போன தாடகை வெளியே வந்தாள்.  யாரடா அவன்! எனது கானகத்திற்குள் புகுந்து தைரியமாக வில்லை எடுத்தவன்! உன்னை ஒழிக்காமல் விடமாட்டேன், என கர்ஜித்தவளாக வெளியே வந்தாள்.
ராமன் வில்லெடுத்து தாடகையின் மீது அம்புமழை பொழிந்தார். தாடகை அலறிக் கொண்டே சாய்ந்தாள். உயிர் பிரிந்தது. அவளது மறைவு செய்தி அறிந்த மகன்கள் மாரீசனும், சுபாகுவும் ராமனை தாக்க பாய்ந்தோடி வந்தனர். சுபாகுவை அக்னி அஸ்திரத்தால் ராமன் சுட்டெரித்தார். மாரீசன் மீது மானவம் என்ற அஸ்திரத்தை எய்தார் ராமன். அது மயக்கும் சக்தி வாய்ந்தது. மயங்கி போன மாரீசன், எங்கோ ஓடிப் போய்விட்டான். ராமாயணத்தில் ராமனின் முதல் போர் இதுதான். போரில் வெற்றி பெற்ற ராமனை விஸ்வாமித்திரர் பாராட்டினார். ராமனுக்கும், லட்சுமணனுக்கும் பலம், அதிபலம் என்ற இரண்டு மந்திரங்களை கற்றுக் கொடுத்தார். மிக மிக களைப்பாக இருக்கும்போதோ, உடல் நலமற்ற வேளையிலோ, கவனக்குறைவாக இருக்கும்போதோ உயிருக்கு ஆபத்து உருவாகலாம். அந்த சமயத்தில் இந்த மந்திரத்தை பக்தியுடன் சொன்னால் எந்த அதர்மமும் அவர்களை அணுகாது. எனவே இந்த மந்திரங்களை ராம லட்சுமணர் மிகவும் கவனத்துடன் படித்தனர். படித்ததற்குரிய சக்தியும் அவர்களுக்கு கிடைத்தது. அரக்கர்களின் அழிவுக்கு பிறகு விஸ்வாமித்திரரின் யாகம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. யாகம் முடிந்த பின், விஸ்வாமித்திரர் ராம, லட்சுமணர்களை மிதிலாபுரி நகருக்கு அழைத்தார். அந்நகரில், மிகச் சிறப்பு வாய்ந்த சிறப்பான வேள்வி நடத்தப்பட இருந்தது. அதைப் பார்த்த பிறகு ஊர் திரும்பலாம் என்பது விஸ்வாமித்திரரின் திட்டம். செல்லும் வழியில் கவுதம முனிவரின் ஆஸ்ரமத்தில் அவர்கள் தங்கினர்.  அங்கே சில சீடர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. கவுதமர் எங்கே என ராமன் விசாரித்தார். அவர் இமயமலைக்கு தவம் செய்ய சென்றுவிட்ட விபரம் தெரிந்தது. முனிவரின் மனைவி அகலிகை. அழகில் சிறந்தவள். அவளது அழகைக் கண்டு தேவேந்திரனே சபலப்பட்டான். ஒருமுறை கவுதமரைப் போலவே மாற்று உருவம் எடுத்துவந்து அவளை அடைந்தான். கோபம் அடைந்த கவுதமர் இந்திரனின் உடலழகு அழியும்படி சாபமிட்டார்.
அகலிகையை யார் கண்ணுக்கும் தெரியாமல் அதே ஆஸ்ரமத்தில் வசிக்கும்படி சொல்லிவிட்டு, களங்கமடைந்த அவள் புனிதமாவது எப்போது என்பது பற்றியும் சொல்லியிருந்தார். விஷ்ணு மானிடப் பிறப்பெடுத்து எப்போது பூமிக்கு வருகிறாரோ அவரது பாதம் படும் இடத்தில் நீ இருந்தால் மீண்டும் கற்புத்தன்மை பெறுவாய், என சொல்லியிருந்தார். இப்போது ராமபிரான் முனிவர் தங்கியிருந்த ஆஸ்ரமத்திற்கு வந்துவிட்டதால் அகலிகை சாபம் நீங்கி அனைவர் முன்னிலையிலும் தென்பட்டாள். அவள் கல்லாகக் கிடந்ததாகவும் கூறப்படுவதுண்டு. அந்தக் கல்லின்மீது ராமனின் பாதம் பட்டதும் அவள் மீண்டும் உருபெற்றாள் என்பார்கள். இந்த நேரத்தில் கவுதமரும் வந்து சேர்ந்தார். தம்பதியர் இணைந்தனர். அவர்கள் விஸ்வாமித்திரரையும், ராம லட்சுமணர்களையும் கனிவுடன் உபசரித்தனர். அகலிகை சாப விமோசனத்திற்கு பிறகு, அவர்கள் மிதிலாபுரி நகர் சென்றடைந்தனர். செல்வச்செழிப்பும், அறிவுடைய மக்களும் இணைந்த பூமி அது. காரணம் அந்நகரில் லட்சுமி நிஜமாகவே வாசம் செய்தாள். அந்நாட்டை ஜனக மகாராஜா ஆண்டு வந்தார். அவரிடம் விசித்திரமான ஒரு வில் இருந்தது. அதன் எடை மிக மிக அதிகமானது. அதை அசைக்கக்கூட யாராலும் இயலவில்லை. மன்னர் ஜனகரின் அவையில் குரு சதானந்தர் இருந்தார். அவர் கவுதம முனிவருக்கும், அகலியைக்கும் அவதரித்த திருமகன். மிதிலைக்கு வந்த ராம லட்சுமணர்களை அவர் அன்புடன் வரவேற்றார். தன் தாய்க்கு சாபவிமோசனம் அளித்த அந்த மகானை அவர் மிகவும் நேசித்தார். விஸ்வாமித்திரரிடம், முனிவரே! ஜனக மகாராஜா மிகப் பெரிய வேள்வியை நடத்த இருக்கிறார். வேள்வி முடிந்தபிறகு அவரது திருமகள் சீதைக்கு சுயம்வரம் நடத்தப்போகிறார்.  சுயம்வரத்திற்கு வரும் மன்னர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அரண்மனையில் இருக்கும் வில்லை நாணேற்றி யார் அம்பு எய்கிறார்களோ, அவருக்கே தன் மகள் சீதையை திருமணம் செய்து கொடுப்பதாக சக்கரவர்த்தி முடிவு செய்துள்ளார். ராமன் இந்த போட்டியில் நிச்சயமாக வெல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே அவரை போட்டியில் கலந்து கொள்ள செய்யுங்கள், என்றார். விஸ்வாமித்திரரும் சம்மதித்தார். இதன் பிறகு தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு மூவரும் புறப்பட்டனர். நீலவண்ணமேனியன் ஒருவன் கருணை பொங்கும் கண்களுடனும், அழகு பொங்கும் வதனத்துடனும் வருவதைக் கவனித்தன இரு அழகு விழிகள்.


ராமாயணம் பகுதி-5
நவம்பர் 13,2010
அ-
+
Temple images
அந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை நோக்கவும், அந்த கருவிழிகள் வெட்கத்தால் தரை நோக்கித் தாழ்ந்தது. மீண்டும் ஆவலுடன் மேலெழுந்து தணிந்தது. அவள் செக்கச் சிவந்த அழகு. அவன் கார்மேனியன். கருப்பும் நீலமும் கலந்தவன். அந்த செம்பொன் மேனியளை நம் அண்ணல் நோக்க அவளும் நோக்கினாள். கண்கள் கலந்து விட்டால் மனங்களும் ஒன்றிணைந்து விட்டதாகத்தானே அர்த்தம். யார் அவள் என்று உங்களுக்கு சொல்லாமலே தெரிந்திருக்குமே! அவள் தான் மிதிலைநகர் இளவரசி ஜனகபுத்ரி சீதாதேவி. ராமன் அவ்விடத்தை கடந்து ஜனகரின் அரண்மனைக்கு விஸ்வாமித்திரருடன் சென்றடைந்தான். ஜனகர் விஸ்வாமித்திரரையும், அவருடன் வந்த தசரத குமாரர்களையும் அன்புடன் வரவேற்றார். தன் புத்ரிகள் சீதைக்கும், ஊர்மிளாவுக்கும் திருமணம் செய்ய வேண்டிய மாபெரும் கடமை தம்முன் இருப்பதை விஸ்வாமித்திரரிடம் தெரிவித்தார். பெண்ணைப் பெற்றவன் ஏழையாய் இருந்தால் என்ன... பணக்காரனாக இருந்தால் என்ன? தன் மகளுக்கு ஒரு குணவான் அமைய வேண்டும். எந்த கெட்ட வழக்கமும் இருக்கக்கூடாது. மகளை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பலசாலியாக இருக்க வேண்டும், தெய்வப்பற்றுள்ளவனாக இருக்க வேண்டும், என்றெல்லாம் எண்ணுவது சகஜம்தானே! ஜனக மகாராஜாவும் இதே கவலையில் தான் இருந்தார். போதாக்குறைக்கு சிவபெருமானால் அருளப்பட்ட சிவதனுசு என்னும் வில்லும் அவரிடம் இருந்தது. அதை ஜனகரைத் தவிர வேறு யாராலும் அசைக்கக்கூட முடியாது. அதை யார் ஒருவன் தூக்கி நாணேற்றி அம்பெய்கிறானோ, அனனுக்கே தன் மகளை மணம் முடித்துக் கொடுப்பேன் என்பது ஜனகரின் நிபந்தனை. ஏன் இந்த நிபந்தனை? ஜனகர் ஒருமுறை யாகம் ஒன்றைச் செய்தார்.
ஒரு கலப்பையால் யாககுண்டம் அமைப்பதற்கான நிலத்தை உழுதபோது, கலப்பை ஏதோ ஒரு இடத்தில் தட்ட, அவ்விடத்தை அகழ்ந்து பார்த்த போது, அங்கே அழகிய பெண் குழந்தையைக் கண்டார். அவளே சீதா. அவள் லட்சுமியின் அவதாரமல்லவா? அவளை கிருஷ்ண பரமாத்மாவைத் தவிர வேறு யாரால் திருமணம் செய்ய இயலும்? எனவே தான் சிவபெருமான் சிவதனுசுவை ஜனகரிடம் கொடுத்து, இதை யாரால் தூக்க இயலுகிறதோ அவளுக்கே இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லி மறைகிறார். இங்கே கிருஷ்ண பரமாத்மா மானிட வடிவெடுத்து, ராமனாய் பூமிக்கு வந்துள்ளார். தன் தேவியை அடைய இங்கு வந்திருக்கிறார். அவர் பூமியில் பிறக்கிறார் என்றால் வைகுண்டத்தில் அவரைத் தன் மடியில் சுமந்திருக்கும் ஆதிசேஷனுக்கு என்ன வேலை? கிருஷ்ணா! நானும் உன்னோடு பூமிக்கு வருகிறேன், என்கிறான் ஆதிசேஷன். அவனைத் தம்பி என அழைக்கும் கிருஷ்ணர், சேஷாத்திரி! நீ பூமியில் என் தம்பி லட்சுமணனாய் பிறப்பாய் என்கிறார். அடுத்து சங்கு, சக்கரங்கள் ஓடி வந்து கேவிக்கேவி அழுகின்றன. ஆதிசேஷனும், நீங்களும் பூமிக்கு போன பிறகு எங்களுக்கென்ன வேலை? நாங்களும் உங்களோடு வருகிறோம், என கண்ணீர் சிந்தினர். அவர்கள் தன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த பகவான் விஷ்ணு, சங்குநாதா! நீ பரதன் என்ற பெயரில் என் தம்பியாய் வருக, சக்கரத்தாழ்வாரே! நீ சத்ருக்கனன் என்ற பெயரில் கடைக்குட்டி தம்பியாய் வருக, என அருள்பாலித்தார். இவர்கள் அனைவரும் தசரத குமாரர்களாக அவதரித்தனர். நான்கு சகோதரர்களுக்கு வெவ்வேறு குடும்பங்களில் பெண் எடுத்தால் பிரச்னை தானே மிஞ்சும்! எனவே ஒரே குடும்பத்தில் பெண் எடுத்தால் நல்லது தானே என்று விஸ்வாமித்திரர் நினைத்திருக்கக்கூடும். அவர் முற்றும் உணர்ந்த ஞானியல்லவா? ஆம்! ஜனகரின் தம்பி குசத்வஜன். அவர் சாங்காஸ்யா தேசத்து அரசர். அவரையும் விஸ்வாமித்திரர் நினைவில் வைத்திருந்தார். அவருக்கும் இரண்டு புத்திரிகள். மாண்டவி, சுருதகீர்த்தி என்னும் திருநாமம் கொண்டவர்கள். இவர்கள் பரதனுக்கும், சத்ருக்கனனுக்கும் நிச்சயிக்கப்பட்டால், ஒற்றுமையான சகோதர, சகோதரிகள் பிரியவே மாட்டார்கள் என்பது அவரது கணிப்பு. இதெல்லாம் இருக்கட்டும்! முதலில் போட்டியில் வென்றாக வேண்டுமே! ராமனால் மட்டும தான் அந்த வில்லில் நாணேற்ற முடியும் என்பதை விஸ்வாமித்திரர் அறிந்து தானே வைத்திருந்தார். ஜனகரிடம் அவர் தன் விருப்பத்தைச் சொன்னார்.
ஜனகா! வில்லில் நாணேற்றும் போட்டிக்கு ஏற்பாடு செய். யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளட்டும். நான் வந்திருக்கும் இந்த சமயத்தில் போட்டி நடந்தால் மிகவும் மகிழ்வேன், என்றார். ஜனகர் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். பல நாட்டு வில்லாதி வில்லர்களெல்லாம் வந்தனர். சிவதனுசுவை அசைக்கக்கூட முடியாமல், அவமானத்தால் தலையை தொங்க விட்டுக் கொண்டு சென்றனர். இச்சமயத்தில், ராமனை தன் கண்ணசைவால் ஏவினார் விஸ்வாமித்திரர். அவரது குறிப்பை உணர்ந்த ராமன், பீடு நடை போட்டு சிவதனுசின் அருகில் சென்றார். வில்லுக்கு மரியாதை செலுத்தினார். ஒற்றைக் கையால் தூக்கினார். நாணை இழுத்தார். அவரது பலத்தில் பாதிக்கும் குறைவாகவே அந்த வில் அமைந்திருந்தது. நாணை இழுக்கவும் மிகப்பெரிய ஓசையுடன் இரண்டாக ஒடிந்தது. அந்த ஓசை இடி ஓசைக்கும் மேலானது. உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ஓசை கேட்டு ஒரு கணம் நடுங்கி விட்டன. ஜனகர், விஸ்வாமித்திரர், லட்சுமணன் நீங்கலாக அங்கு கூடியிருந்த அரசர்கள் கூட நடுங்கி விட்டார்கள்.ஜனகராஜனுக்கு மிகவும் மகிழ்ச்சி. வில்லொடித்த வாலிபனை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மகளுக்கேற்ற மணாளன் கிடைத்த மகிழ்ச்சி அடங்க வெகுநேரம் ஆயிற்று. சீதைக்கும் இத்தகவல் எட்டியது.என் மனதுக்கு பிடித்த அந்த அழகரா சிவதனுசை ஒடித்தார்? அவள் கண்களில் காதல் பார்வை பொங்கியது.


ராமாயணம் பகுதி-6
நவம்பர் 13,2010
அ-
+
Temple images
மகிழ்ச்சிக்கடலில் அவள் மூழ்கிப்போனாள். பிறகென்ன! உலகைக் காக்கும் பரம்பொருள் மானிட அவதாரம் எடுத்துள்ளார். அன்னை மகாலட்சுமி சீதையாக பூமிக்கு வந்திருக்கிறாள். மகாலட்சுமி இருக்கும் இடத்தில் செல்வவளத்துக்கு குறைவில்லை. அந்த செல்வநாயகியை அடையப் போகிறவர் மகாவிஷ்ணு. இருவரும் இணைந்து விட்டால், இந்த உலகமும் சுபிட்சம் பெறத்தானே போகிறது!விஸ்வாமித்திரர் திருமணப் பேச்சை துவக்கினார். ஜனகராஜா! பிறகென்ன! உனக்கு மருமகன் கிட்டிவிட்டான். எவராலும் அசைக்கக்கூட முடியாத சிவதனுசை என் சீடன் உடைத்தே போட்டு விட்டான் என்றால், நீ அவனது பராக்கிரமத்தை உணர்ந்திருப்பாய் என்றே கருதுகிறேன்,.அதிலென்ன சந்தேகம் முனிவரே! எனது தூதர்களை இப்போதே அயோத்திக்கு அனுப்பி தசரத மாமன்னரை அழைத்து வரச் சொல்கிறேன். மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்ற சம்பிரதாயம் இருக்கிறதே! மாப்பிள்ளையின் பெற்றோர் சம்மதமும் முறைப்படி பெற வேண்டுமல்லவா? என்றார் ஜனகர். அதன்படியே தூதர்கள் அயோத்தி சென்றனர். மதிலையில் நடந்த விபரங்களை வரிவிடாமல் விபரமாக தசரதரிடம் கூறினர். தன் மகன்கள் விஸ்வாமித்திரரின் யாகத்தை வெற்றிகரமாக நடத்தியது கேட்டும், அரக்கியும், அரக்கர்களும் அழிந்து பட்டதைக் கேட்டும், இவற்றையெல்லாம் விட சிவதனுசுவை ஒடித்து, மகாலட்சுமிக்கு நிகரான சீதையை மணம் முடிக்க இருப்பது கேட்டும் தசரதரும், ராணிகளும் அடைந்த இன்பத்திற்கு அளவே இல்லை. அயோத்தி மக்களிடமும் இந்த செய்தி வேகமாக பரவ, நாடே கோலாகலத்தில் ஆழ்ந்தது. விஸ்வாமித்திரர் காரணமாகத்தான் தன் மக்களை காட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்பதையும் தசரதர் புரிந்து கொண்டார். உடனடியாக படை பரிவாரங்கள் மணமகளுக்குரிய நகை, சீர்வரிசையுடன் மிதிலை நோக்கி புறப்பட்டது. இதற்கிடையே மிதிலையில் மற்றொரு திருமணப் பேச்சும் எழுந்தது.
மகரிஷியே! என் மகள் சீதைக்கு தங்கமகன் ராமன் கிடைத்து விட்டார். அதே போல், என் அன்புப்புதல்வி ஊர்மிளாவுக்கும் மாப்பிள்ளை வேண்டும். ராமனுடன் வந்துள்ளாரே இளவல் லட்சுமணன். அவர் மட்டும் சாதாரணமானவரா? அண்ணனுக்கேற்ற தம்பி. அண்ணனின் நல்வாழ்வுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர். இப்படிப்பட்ட பாசப்பிணைப்புள்ள குடும்பத்தில், இந்த அன்புச்சகோதரிகளும் இருந்தால், இறுதிவரை குடும்ப ஒற்றுமை நிலைத்திருக்குமே! லட்சுமணனுக்கு ஊர்மிளாவைத் திருமணம் செய்து வைத்து விடுவோமே,. ஜனகர் இவ்வாறு சொல்லவும், விஸ்வாமித்திரர் மகிழ்வுடன் சம்மதித்தார். ராமனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சம்சாரம் கூட ஒரே வீட்டிலிருந்து கிடைக்கிறது என்றால், எங்கள் ஒற்றுமையை பிரிக்க எவரால் இயலும், என இரும்பூது எய்தினார். நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் ஜரூராக நடந்து முடியவும், தசரதர் மிதிலைக்கு வரவும் சரியாக இருந்தது. தங்கள் நாட்டு இளவரசியை மணம்பேசி முடிக்க பக்கத்து நாட்டு ராஜா வருகிறார் என்றால் மிதிலைமக்கள் சும்மாவா இருப்பார்கள். எங்கும் இதே பேச்சு. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். சம்பந்தி தசரதரை வரவேற்றார் ஜனகர். பரதன், சத்ருக்கனன், தசரதரின் தேவியர் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இவர்களோடு வந்திருந்த வசிஷ்டமாமுனிவர், திருமணப்பேச்சை ஆரம்பித்தார். ஜனகா! உன் புத்திரியை மணக்கப்போகும் எங்கள் ராமனின் குலப்பெருமையைக் கேள். பிரம்மாவின் மகன் மரீசி. அவருக்கு ஒரு மகன்; அவர் தான் காஷ்யப முனிவர். இவர் பெற்ற மகன் சூரியபகவான். சூரியனின் மகன் மனு.மனுவின் உத்தமபுத்திரன் இக்ஷ்வாகு.  இவரைத் தொடர்ந்து, திரிசங்கு, மாந்தாதா, திலீபன், பகீரதன், ரகு, அம்பரீஷன், யயாதி, அஜன் ஆகியோர் பிறந்தனர். இந்த வரிசையில் வந்தவர் தான் எங்கள் தசரத மகாராஜா. உலகைப் படைக்கும் பிரம்மனின் மரபில் வந்த தசரதர் நான்கு திருக்குமாரர்களைப் பெற்றெடுத்தார். அவர்களில் மூத்தகுமாரருக்கு தங்கள் மகள் சீதையையும், இரண்டாமவருக்கு இரண்டாம் மகள் ஊர்மிளாவையும் பெண் கேட்கிறோம். உன் சம்மதம் முறைப்படி தேவை,.
ஜனகர் மகிழ்ச்சியுடன் சம்மதித்து, தசரதரே! தாங்கள் உங்கள் குலப்பெருமையை வசிஷ்டர் வாயிலாகச் சொன்னீர்கள். எங்கள் குலப் பெருமையையும் தாங்கள் அறிய வேண்டும். நிகேது, சுமி, மகாவீரன் ஆகிய பெரியவர்களின் வரிசையில் அவதரித்தவர் தான் ஹரஸ்வரோமன். அவர் இரு குமாரர்களை ஈன்றெடுத்தார். மூத்தவன் இந்த ஜனகன். இரண்டாமவன் என் தம்பி குசத்வஜன். அவனுக்கும் என்னைப் போலவே இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாண்டவி, சுருதகீர்த்தி. இவர்களுக்கும் மணமகன்களை தேடிக் கொண்டிருக்கிறோம், என்றே நிறுத்தினார். விஸ்வாமித்திரர் இப்போது தொடர்ந்தார். ஜனகா! இதில் உனக்கோ, உன் தம்பி குசத்வஜனுக்கோ எந்தக் கவலையும் வேண்டாம். தாய்மார்கள் வேறென்றாலும் கூட தசரதரின் மகன்கள் தான் பரதனும், சத்ருக்கனனும். அண்ணன் புதல்விகள் வாழும் வீட்டிற்கே தம்பி புதல்விகளும் செல்வது தான் முறை. இந்த அன்புச்சகோதரர்களை இங்கிருக்கும் அன்புச்சகோதரிகள் ஆளட்டுமே, என்று கூறி சிரித்தார். ஜனகருக்கு புரிந்து விட்டது. ஆஹா! பாக்கியம் செய்தோம் நானும் என் தம்பியும். மாண்டவியும், சுருதகீர்த்தியும் என்னைப் பொறுத்தவரை  தம்பி மக்களல்ல. என் மக்கள் தான். சீதைக்கும், ஊர்மிளாவுக்கும் இங்கு என்ன உரிமைகள் உண்டோ அதே உரிமை அவர்களுக்கும் உண்டு. என் தம்பி புதல்விகளை பரதனுக்கும், சத்ருக்கனனுக்கும் மணம் முடிக்க சம்மதிக்கிறேன்,. ஜனகர் இவ்வாறு சொல்லவும், தசதரரும் அவரது மனைவியரும் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. ஒரு திருமணப் பேச்சுக்காக வந்தவர்கள், நான்கு திருமணப் பேச்சை முடித்து விட்டனர்.

ராமாயணம் பகுதி-7
டிசம்பர் 17,2010
அ-
+
Temple images
மிகச்சிறந்த முகூர்த்த நாள் ஒன்றை விசுவாமித்திரர் குறித்தார். திருமணவிழாவிற்கான ஏற்பாடுகள் மிதிலையில் மிகச்சிறப்பாக நடந்தன. தங்கள் நான்கு இளவரசிகளுக்கும் திருமணம் என்பதால் ஊரே கோலாகலமாக இருந்தது. எங்கும் மகிழ்ச்சி புயல்தான். மணநாளும் வந்தது. மணக்கோலம் பூண்ட நான்கு ராஜகுமாரர்களும் மணமேடைக்கு வந்தனர். மங்கள ஓசை முழங்கியது. எங்கு பார்த்தாலும் மங்கலச் சின்னங்கள். மணவிழாவுக்கு வந்த மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. அனைவரும் அதை அணிந்து கொண்டனர். அனைவரது கையிலும் மஞ்சள் அரிசி கொடுக்கப்பட்டது. ஒருபக்கம் விருந்து விசேஷம் நடந்து கொண்டிருந்தது. ராம சகோதரர்களுக்கு திருமணம் முடிக்க விஜயா என்ற முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இந்த நேரம் உலகம் பிறந்ததிலிருந்து அந்த ஒரே ஒருமுறைதான் வந்ததாம். இப்படி ஒரு நேரம் இனியார் வாழ்விலும் வரப்போவதும் இல்லை. அப்படிப்பட்ட சிறப்பான முகூர்த்தத்தில் சீதாபிராட்டியின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினார் ராமபிரான். அண்ணியின் கழுத்தில் அண்ணன் தாலி அணிவித்த அந்த இனிய காட்சியை மற்ற தம்பிகளும் அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகள்களும் கண்டு மகிழ்ந்தனர். ஜனக மகாராஜா ராமச்சந்திரமூர்த்தியின் கைகளைப் பிடித்து, ஸ்ரீராமா! என் மகள் சீதை இன்று முதல் உன்வாழ்வில் அறம் வளர்க்கும் துணைவியாக இருப்பாள். அவளது கரத்தை உனது கையினால் பற்றிக் கொள் என்றும், இவளோடு சிறந்து வாழ். உனக்கு மங்களம் உண்டாகட்டும். உன்னை கணவனாக பெற்றதால் அவள் பாக்கியவதியாகிறாள். உனது நிழல் போல எக்காலமும் உன்னை தொடர்ந்து வருவாள். ஒரு கணம் கூட உன்னை பிரிந்திருக்கமாட்டாள். நீயே கதி என பேரன்புடன் இருப்பாள், என்று உறுதிமொழி அளித்தார்.
பின்பு அவரே மந்திரங்களை ஓதினார். தன் கையில் இருந்த புனித தீர்த்தத்தை ராமனின் கரத்தில் தெளித்தார். அப்போது தேவலோகத்திலிருந்து முரசு சத்தம் கேட்டது. தேவர்களும், முனிவர்களும் வானுலகிலிருந்து பூமழை பொழிந்தனர். இறைவனுக்கே திருமணம் நடக்கும்போது தேவர்கள் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவா வேண்டும்! அதேநேரம் இந்த உலகில் உள்ள கெட்டவர்களின் உள்ளங்களில் இனம்புரியாத நடுக்கம் ஏற்பட்டது. அது ஏன் என அவர்களால் உணரமுடியவில்லை. உலகில் உள்ள நல்லவர்களுக்கு மட்டுமே ராமனின் திருமணக் காட்சி தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது. பிறகு ஜனகர் லட்சுமணனின் அருகில் வந்தார். தன் மகள் ஊர்மிளாவை அவனுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். இதையடுத்து தன் தம்பி பெண்களையும் தன் பெண்களாக பாவித்து, மாண்டவியை பரதனுக்கும், சுருதகீர்த்தியை சத்ருக்கனனுக்கும் திருமணம் செய்து கொடுத்தார். நான்கு தம்பதிகளும் அக்னியை வலம் வந்தனர். ஜனகரையும், தசரதரையும் விழாவிற்கு வந்திருந்த மற்ற முனிவர்களையும் வணங்கினர். அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர். சாஸ்திரவிதி சற்றும் தவறாமல் இந்த திருமணம் நடந்தேறியது. இவ்விடத்தில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சாஸ்திரவிதிகள் தவறாமல் நடந்தாலும், மனிதனாகப் பிறந்துவிட்டால் அவன் துன்பத்திற்கு ஆட்பட்டே ஆக வேண்டும் என்பதை இந்த திருமணக்காட்சி விளக்குகிறது. தெய்வத்தின் திருமணமாக இருந்தாலும், தெய்வம் மனிதனாக அவதரித்திருப்பதால் பின்னால் படப்போகும் கஷ்டங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. இந்த திருமணத்திற்காக பொருத்தம் பார்க்கப்பட்டது. அனைத்தும் நல்லவிதமாகவே நிறைவேறியது. இருப்பினும் கூட ராமனும், லட்சுமணனும் அவர்களது மனைவியரை பிரிய நேர்ந்தது. ஜோதிடம் பார்த்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்பவர்கள்கூட பிரிந்து போய்விடுவதன் தத்துவம் இதுதான். மனிதத் திருமணங்கள் கருத்து வேறுபாடின்றியோ, பிரிவினை இன்றியோ அமையாது.
இதன்பிறகு விசுவாமித்திரர் தசரதரிடமும், ஜனகரிடமும் விடைப்பெற்றார். தன் பணி முடிந்த மகிழ்ச்சியுடன் இமயமலைக்கு தவம் இருக்கச் சென்றார். ஜனகர் தம் புதல்விகளுக்கு தகுந்த சீர்வரிசை அளித்து அயோத்திக்கு மணமக்களை அனுப்பி வைத்தார். செல்லும் வழியிலேயே ராமபிரானுக்கு கடும் சோதனை ஏற்பட்டது. திடீரென பேய்க்காற்று வீசியது. பறவைகள் அங்குமிங்கும் பறந்து திரிந்தன. அவை பயந்துபோய் கீச்சிட்டன. பலமான்கள் அங்குமிங்கும் பாய்ந்து ஓடின. இயற்கையின் சீற்றமோ என அனைவரும் கருதினர். ஆனால் அவர்கள் நடந்து கொண்டிருந்த அந்த இரவு வேளையிலும் அதி பயங்கர இருட்டில் ஒரு முனிவர் தோன்றினார். இருளிலும் அவர் ஒளிர்ந்தார். அவர்தான் ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராமர். அவர் ஜடாமுடி தரித்தவர். அவரது கண்கள் கோவைப்பழம் போல சிவந்திருந்தன. அவரது நோக்கமே அரச குலத்தினரை அழிப்பதுதான். ராமனுடன் வந்த முனிவர்கள் எல்லாம் பரசுராமரை வணங்கினார்கள். ஆனால் அந்த வணக்கத்தை பரசுராமர் ஏற்றுக் கொள்ளவில்லை. பரசுராமர், ராமசகோதரர்களை வழிமறிக்க காரணமும் இருந்தது. இவரது தந்தை ஜமதக்னியை அரசன் ஒருவன் கொன்றுவிட்டான். எனவே, இந்த உலகில் அரசகுலமே இருக்கக்கூடாது என பரசுராமர் சபதமிட்டிருந்தார். ஏராளமான அரசர்களை கொன்றும் குவித்தார். இப்போது தசரதர், மற்றும் அவரது நான்கு இளவரசர்கள் கண்ணில்பட்டு விட்டதால் அவர்களையும் அழிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. அவர் ராமரைப் பார்த்து கோபத்துடன் பேச ஆரம்பித்தார்.

ராமாயணம் பகுதி-8
டிசம்பர் 17,2010
அ-
+
Temple images
பரசுராமர் கோபத்துடன் கர்ஜித்தார்.தசரத மன்னனின் புதல்வனே, ராமா! நீ சிவனின் வில்லை ஒடித்ததற்காக பெருமைப்படாதே. அது ஏற்கனவே பழுதுபட்டிருந்தது. பழுதுபட்ட வில்லை ஒடிப்பது என்பது பெரிய காரியம் அல்ல. என் கையில் கிருஷ்ண பராமாத்மா கொடுத்த வில் இருக்கிறது. இதை உன்னிடம் கொடுக்கிறேன். இதில் நாண் ஏற்றி என்னுடன் சண்டைக்கு வரவேண்டும், என்றார். ராமபிரான் அவரது பேச்சைக் கண்டு நடுங்கவில்லை. இதற்குள் தசரதர் பரசுராமனை கைகூப்பி வணங்கி,  பரசுராமரே! இப்போதுதான் என் மகனுக்கு மணம் முடித்து ஊருக்கு சென்று கொண்டிருக்கிறோம் இவ்வேளையில் போர் எதுவும் வேண்டாம், வழிவிடுங்கள், என்றார். ராமபிரான் அவரிடம்,மகாப்பெரியவரே! உங்களைப் போன்ற ஞானிகள் என்னைப் போன்ற சிறியவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அரசகுலத்தில் பிறந்தவர்களை அழிப்பது உமது கொள்கை. ஆனால், அரசகுலத்தில் பிறந்தது எனது தவறல்ல. இருப்பினும், உங்கள் உத்தரவை நான் ஏற்றுக் கொள்கிறேன். விஷ்ணுவின் வில்லை என்னிடம் கொடுங்கள். நான் நாண் ஏற்றுகிறேன் என்றார் பணிவோடு. பரசுராமர் வில்லை ராமனிடம் கொடுத்தார். ராமர் அந்த வில்லை வளைத்து நாணில் அம்பை வைத்தார். வில் வளைந்ததை கண்டு பரசுராமரின் முகம் சுருங்கிப்போய்விட்டது. யாராலும் வளைக்கமுடியாது என்று கருதிய வில் வளைந்துவிட்டதே என நாணம் கொண்டார். மிகுந்த பணிவான குரலுடன், இந்த வில்லை விஷ்ணுவைத் தவிர வேறு யாராலும் வளைக்க முடியாது. ஆனால், ராமா! நீ வளைத்துவிட்டாய். நீ யார் என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன். எனது அகங்காரத்தை உனது செயல் அழித்துவிட்டது. உன் மண ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியதற்கு பிராயச்சித்தமாக இதுவரை நான் செய்த தவத்தின் வலிமையை உனக்கு தருகிறேன், என்று சொல்லிவிட்டு ராமனை வலம் வந்தார். பின்பு அங்கிருந்து போய்விட்டார்.
தசரதர் உள்ளம் பூரித்தார். மகனின் பெருமையை உணர்ந்தார். விஷ்ணுவே தனக்கு மகனாக வந்தது கண்டு அவரது மனம் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது. அனைவரும் அயோத்தியை அடைந்தனர். அயோத்தி நகரம் விழாக்கோலம் கொண்டிருந்தது. ஊரெங்கும் அலங்கார தோரணங்கள். தங்கள் இளவரசர்களையும், இளவரசிகளையும் திருமணக் கோலத்தில் காணும் பாக்கியத்தைப் பெற்ற அயோத்தி மக்கள் சீதாதேவியின் அழகு பற்றியும், குணம் பற்றியும் மற்ற தேவிகளின் இயல்பு பற்றியும் பேசி உள்ளம் மகிழ்ந்தனர். தசரத மன்னனுக்கு இணையாக இவ்வுலகில் இனி வேறு யாருமில்லை என புகழ்ந்தனர். திருமணம் முடிந்து பல நாட்கள் வரை அரண்மனை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தது. தசரதனின் மூன்று தேவியர்களும் எவ்வித வித்தியாசமும் பாராமல் எல்லா மருமகள்களையும் சம உரிமை கொடுத்து கவனித்துக் கொண்டனர். பொதுவாக பெண்கள் புகுந்த வீட்டிற்கு வந்தபிறகு பிறந்த வீட்டை நினைத்துக் கொண்டிருப்பது இயல்புதான். ஆனால் மாமியார்களின் அன்பில் மூழ்கி போன மருமகள்கள் தங்கள் பிறந்த வீட்டைக் கூட மறந்துவிட்டனர். பிறந்த வீட்டின் சூழ்நிலையே புகுந்தவீட்டிலும் நிலவியது. கைகேயியின் சகோதரன் யுதாஜித். பரதனின் தாய்மாமன். அவன் பரதனையும், சத்ருக்கனனையும் அழைத்துக் கொண்டு தனது நாட்டிற்கு சென்றான். பரத, சத்துருக்கனரின் மனைவியரும் உடன் சென்றனர். ராமன் சீதையுடன் அயோத்திலேயே தங்கியிருந்தார். திருமணம் முடிந்தபிறகும், ராமனின் குணஇயல்புகளில் எந்த மாறுதல்களும் இல்லை. பொதுவாக திருமணத்திற்குப் பிறகு ஆண், பெண் இருபாலரின் குணங்களும் மாறிப்போவதாக குடும்பத்தாரால் குற்றம் சாட்டப்படுவதுண்டு. ஆனால், ராமனின் வாழ்வில் அப்படி ஒரு நிலை இல்லை.
ராஜகுமாரனாக இருந்தாலும் கூட அவரது மனதில் ஆணவம் என்பது அறவேயில்லை. பெற்றவர்களுக்கு நல்ல மகனாக திகழ்ந்தார். நோயற்ற வாழ்வு வாழ்ந்தார். சத்தியம் அவரது உயிர்மூச்சாக இருந்தது. கருணை மிக்கவராக திகழ்ந்தார். வந்தோருக்கு எல்லாம் வாரி வழங்கினார். தனக்குள் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டார். ராமனைச் சுற்றிலும் நல்லவர்கள் மட்டுமே இருந்தனர். லட்சுமணன், அவரை விட்டு ஒருகணம் கூட பிரியவில்லை. அந்த குடும்பத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வரை எந்தவித பிரச்னையும் இல்லை. அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.பண்புமிக்க ராமன் தங்கள் அரசனாக பதவி ஏற்கப்போகும் நாள் எது என்பதைப் பற்றி அயோத்திமக்கள் அடிக்கடி விவாதிப்பார்கள். அந்த நல்ல நாளுக்காக அவர்கள் காத்துக் கிடந்தார்கள். தசரதரும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டார். மூத்தவன் ராமனுக்கு பட்டாபிஷேகம் நடத்த வேண்டிய நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்தார். பட்டாபிஷேகம் தொடர்பாக ஆலோசனை செய்ய அறிஞர்களையும், பக்கத்து நாட்டு மன்னரற்களையும் வியாபாரிகளையும், முனிவர்களையும் அவர் அழைத்தார். இந்த நாட்டை எனது முன்னோர்கள் தங்கள் குடும்பமாகவே கருது ஆண்டுவந்தனர். நானும் இத்தனை காலமும், அவர்கள் வழியே நடந்துவிட்டேன். எனக்கு வயதாகிவிட்டது. என் செல்வகுமாரன் ராமனிடம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறேன். அவனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு நான் காட்டிற்கு சென்று என் வாழ்வின் இறுதி காலத்தை தவம் இருந்து கழிக்க முடிவு செய்துள்ளேன், என்றார்.

ராமாயணம் பகுதி - 09
மார்ச் 03,2011
அ-
+
Temple images
ராமனுக்கு பட்டாபிஷேகம் என்ற செய்தி நாடெங்கும் பரவிவிட்டது. மக்கள் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர். ராமராஜ்யம் கிடைப்பதென்றால் சும்மாவா? அவன் ஆட்சியில் இருக்கும் வரை இல்லை என்ற சொல் இருக்காது. திருடர்களுக்கு திருடி பிழைக்க வேண்டிய அவசியம் வராது. எல்லாமே கிடைக்கும் போது திருட்டுக்கென்ன வேலை? நவரத்தினமா.. நினைத்தவுடன் கிடைக்கும். அன்னமில்லையே  அடுத்த வேளைக்கு என்றால், அறுசுவை உணவு வாசல் கதவைத் தட்டும். நியாயதர்மம் நிலைத்திருக்கும். அவர் தெய்வமகன். அவர் நினைத்தாலன்றி எமன் கூட யார் மீதும் கை வைக்க முடியாது. அவனே அனைத்துமாய் இருப்பான். குழந்தைகளுக்கு தேவைக்கதிகமாகவே பால் கிடைக்கும். மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் அமைதியாய் வாழும். காட்டு மிருகங்கள் கூட ராமனுக்கு கட்டுப்பட்டே நடக்கும். ஒட்டு மொத்தத்தில் மனித சமுதாயத்துக்கு துன்பமே இருக்காது. மக்கள் கோயில்களுக்கு சென்றனர். பூஜைகள் செய்தனர். எங்கும் ராமராஜ்யம் பற்றிய பேச்சு தான். பல இடங்களில் ஹோ வென ஒலி எழுப்பி ஆரவாரம் புரிந்தனர் மக்கள். மகிழ்ச்சி அதிகமாகும் இடத்திற்கு வெகுவிரைவில் துன்பமும் வந்து சேரும் என்பது இயற்கையின் நியதிபோலும். இதோ துன்பம் ஒரு பெண் வடிவில் அரண்மனைக்குள் நுழைந்தது. அவள் அழகானவளா? இல்லை... கூனிக்குறுகி இருப்பாள். அவளது உருவத்தைப் பார்ப்பவர்கள், ஏ கூனி என்று அழைப்பர். அவள் முறைத்துப் பார்ப்பாள். ஒரு முறை ராம சகோதரர்கள் பூவால் செய்த பந்தை எறிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பந்து இந்த கூனியின் மீது விழுந்தது. கூனி இளவரசர்களை சத்தம் போட்டாள். தன் சகோதரர்களை திட்டுவதை பொறாத ராமன், கூனியை அந்த சிறுவயதிலும் எச்சரித்தார். அதுமுதலே ராமனைக் கண்டால் கூனிக்கு பிடிக்காது. அவளது உண்மைப் பெயர் மந்தரை.
பிடிக்காத ஒருவனுக்கு நல்ல காரியம் நடக்கப் போகிறதென்றால் யாருக்குத்தான் கோபம் வராது? ராமனை பழி வாங்க சமயம் பார்த்துக்கொண்டிருந்த அவள், மகாராணி கைகேயிக்கு வேலைக்காரி, ஊர் நடப்புகளைப் பற்றி பேசிக் கொண்டே கைகேயிக்குரிய பணிகளைக் கவனிப்பாள். கைகேயியை ஒருமையில் பேசும் அளவுக்கு சுதந்திரம் பெற்றவள். அடியே கைகேயி! உனக்கு விஷயம் தெரியுமா? நாளை ராமனுக்கு பட்டாபிஷேகம், என்றாள். கைகேயிக்கு அப்போது தான் விஷயமே தெரியும். அவள் ராமனை தன் மூத்தாள் மகன் என நினைத்ததே இல்லை. பரதனைப் போல தன் மகனாகவே கருதினாள். அவளுக்கு ஆனந்தம் பொங்கியது. ஆனந்தமாக இருக்கும் நேரத்தில் என்ன கேட்டாலும் கிடைக்கும். அல்லது ஆனந்தப்படுபவர் எதிரே இருப்பவருக்கு கையில் கிடைப்பதை கொடுத்து விடுவார். கைகேயியும் அப்படித்தான். தன் கழுத்தில் கிடந்த முத்துமாலையைக் கழற்றி அப்படியே கூனியின் கழுத்தில் போட்டாள். நல்ல சேதி கொண்டு வந்தாய் மந்தரை! இனி இந்நாட்டிற்கு துன்பம் ஏதும் வராது, என்றாள். அடியே பைத்தியக்காரி! நாட்டிற்கு துன்பம் வராதடி! ஆனால், உனக்கு வந்து விட்டதே துன்பம். அதற்கு என்ன செய்யப் போகிறாய்? கைகேயியின் முகம் சுருங்கியது. என்ன சொல்கிறாய் மந்தரை. என் மகன் ராமன் பட்டம் சூடுவதற்கும், அதனால் துன்பம் ஏற்படும் என்றும் கூறுவதற்கும் என்னடி சம்பந்தம்? நீ குழப்பமாக பேசுகிறாயே? கைகேயி, குழப்பம் எனக்கு இல்லையடி. சற்று யோசித்துப் பார். நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக் கொண்டு வா, சரி கேள்! நீ யாருடைய மனைவி? இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி தசரத மகாராஜாவின் மகாராணி, நீ மட்டும் தான் மகாராணியோ? கவுசல்யா யார்? அவள் என் மூத்தாள். தசரத மகாராஜாவின் முதல் மனைவி, சரி, மூத்தவளின் மகனுக்கு பட்டம் சூட்ட வந்த ராஜா, உன் மகனை நினைத்துப் பார்த்தாரா? இல்லை, கவுசல்யா மட்டும் தான் அவரது மனைவி.
நீ பூஜ்யம் எனக் கருதி விட்டாரா? உன் மகன் பரதனைப் பற்றி அவருக்கு ஏன் நினைவு வ்ரவில்லை? இதற்காகத்தான் என்னைப் பயப்படுத்தினாயா மந்தரை! நீ கேட்பது முறையற்ற கேள்வி. மூத்தவள் ராஜாவாவது உலக நடைமுறை தான், அது ஒருவனுக்கு ஒருத்தி எனப்படும் நாட்டிற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். இங்கே அப்படியல்ல. நீ இன்றுவரை தசரத சக்கரவர்த்தியின் ராணியாக செல்வச் செழிப்போடு திகழ்கிறாய். ஆனால், அதிகாரம் ராமனின் கைக்கு போனதும் நிலைமை என்னாகும் என யோசித்துப்பார். எங்கே தன் இளவல் தலையெடுத்து விடுவானோ என்ற பயத்தில் பரதனை ராமன் விட்டு வைப்பானோ மாட்டானோ? உளறாதே மந்தரை. ராம சகோதரர்கள் ஒற்றுமையுடன் திகழ்கின்றனர். தான் சொன்னது எடுபடவில்லை எனத் தெரிந்ததும் மந்தரை அடுத்த அஸ்திரத்தை வீசினாள். மனித மனங்களை நல்வழிப்படுத்துவது தான் கடினம். கெடுப்பது நொடி நேர வேலை தான். கலங்காத மனங்களையும் கலங்க வைக்கும் சக்தி கொண்ட நாக்குடையவர்கள் உலகில் அதிகம். மந்தரை தொடர்ந்தாள். கைகேயி! நான் சொல்வதை இன்னும் சிந்தித்துப் பார். ராமன் பொறுப்பேற்று விட்டால், அந்த கவுசல்யா ஆடாத ஆட்டம் ஆடுவாள். என் மகன் அரசன். என்னை என்ன செய்யமுடியும் என்பாள். அவளுக்கு தான் அரண்மனையில் அதிக அதிகாரம் இருக்கும். எதற்கெடுத்தாலும் நீ அவளது கையை எதிர்பார்க்க வேண்டியிருக்கும். இறுதியில், நீ என்னைப் போன்ற வேலைக்காரி போல கையேந்த வேண்டி வரும், கைகேயி இதற்கெல்லாம் கலங்கவில்லை. மந்தரை! ராமன் என்னை சிற்றன்னையே என அழைக்க மாட்டான். அம்மா என்று தான் அழைப்பான். அந்த உத்தமனைப் பற்றி தவறாக நினைக்கவே என் மனம் கூசுகிறது, என்ற கைகேயியை மந்தரை மேலும் கரைத்தாள். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமே. பால் போல் வெள்ளை மனம் கொண்ட அந்த நல்லவளின் மனதில் விஷத்தின் துளிகள் தெறித்தன.

ராமாயணம் பகுதி - 10
மார்ச் 03,2011
அ-
+
Temple images
கெட்டவர்கள் பிறருக்கு நல்லுரை சொல்வது போல நடிப்பது ஒரு தனிக்கலை. அந்தக்கலைக்கு அடிபணியாத ரசிகர்களே இல்லை. இப்போது ஒரு ரசிகையில் நிலையில் இருந்த கைகேயி, மந்தரையின் சொற்களைக் காது கொடுத்து கேட்க ஆரம்பித்தாளோ இல்லையோ? இதுதான் சமயமென மந்தரை தன் பேச்சில் கவர்ச்சியைக் கூட்டினாள். பேச்சு... எல்லாருக்கும் கிடைக்காத ஒரு பொக்கிஷம். அதை நல்ல வழியில் பயன்படுத்தினால் உலகம் வாழும். கெட்ட வழியில் பயன்படுத்தி மூளைச்சலவை செய்தால் ஒரு சாம்ராஜ்யத்தையே சரித்து விடும். இதனால் தான் பேச்சைக் குறை என்கிறார்கள். பேச்சால் நல்லதை விட கெட்டதே அதிகமாக நடக்கும். இந்த பேச்சு தான் கிடைத்தற்கரிய ராம ராஜ்யத்தை சரித்தும் விட்டது. இரு மனசாக ஊசலில் இருந்த கைகேயி, இப்போது மந்தரையின் மந்திரப் பேச்சுக்கு எப்படியோ கட்டுப்பட்டு பேச்சுக்கு எப்படியோ கட்டுப்பட்டு விட்டாள். மந்தரை தொடர்ந்தாள். கைகேயி, என் வாதத்திற்கு ஆதாரமாக இன்னும் சில சொல்கிறேன், கேள். நீ இங்கு திருமணமாகி வந்த புத்தில், உன் மூத்தாள் கவுசல்யாவை பலமுறை அவமானப்படுத்தியது நினைவில் இருக்கிறதா? இதை மனதில் கறுவிக் கொண்டு தானே இருப்பாள் அவள். சமயம் வரட்டுமென காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் சந்தர்ப்பமே கொடுக்கக்கூடாது தோழி! அந்த அவமானங்களுக்கு ராமனின் ஆட்சி வந்ததும், உன்னைப் பதிலுக்கு அவமானப்படுத்துவாள் அவள்.  ராமன் நல்லவன் என்ற கோணத்திலேயே இதுவரை சிந்தித்துக் கொண்டிருந்த கைகேயியை கவுசல்யாவால் ஆபத்து என்ற ரீதிக்கு மாற்றி விட்டாள் மந்தரை.
அடுத்து ஆசை விதைகளை விதைத்தாள். கைகேயி! உன் மகன் பரதன் தான் பட்டத்துக்கு உரியவனாக இருக்க வேண்டும். அவன் ராஜாவாகி விட்டால், உன் சொல் மட்டும் தான் இந்த நாட்டில் எடுபடும். உன்னை யாராலும் அசைக்க இயலாது. உன் விரல் அசைவுக்கு இந்த நாடே தலை வணங்கும், என்றதும் கைகேயியின் மனது சற்று சபலப்படவும் செய்தது. அவள் அநேகமாக மந்தரை சொன்னதை சரி என்றே ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்து விட்டாள். இருப்பினும் அமைதியாக இருந்தாள். பேச்சாளர்களுக்கு தெரியாதா? கேட்பவர்களின் மனம் எதை யோசித்துக் கொண்டிருக்குமென்று? கைகேயி! நான் சொல்வதை சரியென்று உன் மனம் ஒப்புக்கொண்டு விட்டது போல் தோன்றுகிறது. ஆனால், இதை எப்படி உன் கணவரிடம் கேட்பது என்று தானே தயங்குகிறாய்? என்றாள் மந்தரை. கைகேயியும் குழப்பமான நிலையில் தலையை ஆட்டினாள். அடி அப்பாவிப் பெண்ணே! உன் வலிமை உனக்கே புரியாமல் நீ இப்படி குழப்பத்தில் ஆழ்ந்துள்ளாய்? என்ன சொல்கிறாய் மந்த்ரா? அடியே! நீ இந்த வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த காலத்தை மறந்து விட்டாயா? உன் மூத்தாளுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லாததால், தசரதர் உன் ஊருக்கு வந்தார். கேகய நாட்டின் கோமானான உன் தந்தையிடம், தசரதர் உன்னை இரண்டாம் தாரமாகக் கேட்டார். அப்போது உன் தந்தை என்ன கேட்டார் என்று உனக்கு நினை விருக்கத்தானே செய்கிறது?என்று கேட்டதும் கைகேயி பழைய நினைவுகளை அசை போட்டாள். அப்போதிருந்த நிலையில், ராஜ்யத்தின் எதிர்கால நன்மைக்காக கேகய மன்னனிடம் கைகேயியை பெண் கேட்டார் தசரதர்.
மன்னன் தன் மகளின் வாழ்க்கை நலன் கருதி,சக்ரவர்த்தி, தாங்கள் கேட்பது சரிதான். ஏற்கனவே முதல் மனைவி இருக்கிறாள். அவளும் அழகிதான். இளமையுடன் இருப்பவள் தான். இந்த திருமணத்துக்கு பிறகு அவளுக்கும் குழந்தை பிறக்காது என்பது என்ன நிச்சயம்? அதனால் நான் ஒரு நிபந்தனை விதிப்பேன், என்றார் கேகய மன்னர். அது என்ன? என்ற தசரதரிடம், அரசே! தங்களுக்கும் கைகேயிக்கும் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு தான் நீங்கள் பட்டம் சூட்டவேண்டும். முதல் ராணிக்கு குழந்தை பிறந்தாலும் பட்டம் சூட்டக்கூடாது. இதற்கு சம்மதமென்றால் பெண் தருகிறேன் என்றார். சற்று கூட சிந்திக்காமல், தசரதர் சரியென வாக்கு கொடுத்து விட்டார். கைகேயி! உன் பக்கத்தில் நியாயம் வலுவாக இருக்கிறது. அதனால் உன் மகன் தான் அரசன். அவனை ராஜகோலத்தில் பார்க்க எனக்கு ஆசையடி! ஆனால், பெற்றவளான நீ அவனை ஏன் ராமனின் அடிமை போல் வாழ வைக்க எண்ணுகிறாய்? என்றாள். ஒரு வழியாக கைகேயி சம்மதித்தே விட்டாள். கொடும் திட்டம் அயோத்தி மண்ணில் வேரூன்றப்பட்டு விட்டது. ராமாயணம் படிப்பவர்கள் மேலோட்டமாக கதை படிப்பது போல படிக்கக்கூடாது. வாக்களித்தல் என்பது மிகமிக யோசனை செய்து செய்யப்பட வேண்டிய விஷயம். இதை எந்தச் சூழ்நிலையிலும் மனிதன் செய்யவே கூடாது. செய்தால் காப்பாற்ற வேண்டியது வரும். வாக்கு காப்பாற்றப்பட்டால், வாழ்க்கை முடிந்து விடும். தசரத சக்கரவர்த்தி ராமாயணத்தின் ஆரம்பத்திலேயே இறந்து போகிறார் என்றால், அவர் கொடுத்த வாக்கு தான் காரணம். இதை உணர்ந்து, வாக்கு கொடுப்பதையே தவிர்க்க முயல வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்குமென அறியாத மனிதன், வாக்கு கொடுப்பதில் அர்த்தமே இல்லை.
இத்தனைக்கும் தசரதர் சாமான்யப்பட்ட மனிதரல்ல! பத்து தேர்களை ஒரே நேரத்தில் இயக்கும் வல்லமை படைத்தவர் அவர். அதனால் தான் தச(ம்)ரதர் ஆனார். தசம் என்றால் பத்து என பொருள். தன் நாட்டில் ஒருமுறை சனியின் சஞ்சாரத்தால் பஞ்சம் வந்த போது மக்களைக் காக்க சனீஸ்வரன் இருக்குமிடத்திற்கே போர் புரியச் சென்றதாக புராணக்கதை ஒன்று சொல்வார்கள். அப்பேர்ப்பட்ட வீரன், எதையும் ஆராய்ந்து செய்யும் அறிஞன் மூன்று இடங்களில் மட்டும் தவறு செய்தார். வாழ்க்கையே அழிந்து போனது. ஒன்று கைகேயின் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி, மற்றொன்றுகைகேயிக்கே செய்து கொடுத்த சத்தியம், இன்னொன்று வேட்டைக்கு சென்ற இடத்தில் அவசரப்பட்டு மிருகத்திற்கு பதிலாக ஒரு பார்வையற்ற சிறுவனின் உயிரைப் பறித்து ஏழை பெற்றோரை பரிதவிக்கச் செய்து அவர்களின் சாபத்தை பெற்றுக்கொண்டது. மனிதன் எத்தனை பெரிய திறமைசாலி யாயினும், ஒரே ஒரு தவறு செய்தால் போதும். முடிந்து போகும் அவனது சரித்திரம். ஆனால், மானிட வாழ்வில் இதை தவிர்க்க இயலாது. சக்கரவர்த்தி தசரதர் ஒருமுறை தேவலோகத்திற்கே போருக்கு போனார். தேவர்களை அசுரர்கள் துன்பப்படுத்தினர். சம்பாசுரன் என்பவன் செய்த கொடுமைகளுக்கு அளவே இல்லை. அவனைக் கொல்வதற்காக தசரதரின் உதவியையும் தேவர்கள் கேட்டனர். தசரதரும் விண்ணுலகம் சென்றார். மிகக்கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது. தசதரரை நோக்கி அசுரர்கள் எய்த ஒரு அம்பின் விஷத்தன்மையால் அவர் நினைவிழந்தார். அப்போது அங்கே ஒரு பெண் வந்தாள். தேர்க்கயிறைப் பிடித்தாள். வேகமாக அங்கிருந்து ஓட்டிச் சென்று எதிரிகளிடமிருந்து அவரது உயிரைக் காப்பாற்றினாள். யார் அவள்?.

ராமாயணம் பகுதி - 11
மார்ச் 03,2011
அ-
+
Temple images
அவள் சாட்சாத் கைகேயியே தான். வீரப்பெண்மணியான அவளைத் திருமணம் செய்ததற்காக அப்போது தசரதர் பெருமைப்பட்டார். வீட்டில் சமையலும் செய்யாமல், வேலைக்கும் போகாமல் வெட்டியாய் உட்கார்ந்திருக்கும் மனைவிக்கே நம்மவர்கள் என்ன வேணுமடி கேளடி என்று கேட்பார்கள். இங்கே உயிரையே காப்பாற்றி இருக்கிறாள் இந்த உத்தமி. விடுவாரா தசரதர். கண்ணே! என்ன வேணும் கேளடி? என்றார். கைகேயிக்கு அப்போது ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை. ஆனாலும், ஒன்றைச் சொல்லி வைத்தாள். அன்பரே! இப்போதைக்கு நான் வேண்டுவது ஒன்றுமில்லை. ஆனால், என் வாழ்நாள் முடிவதற்குள் நான் என்றாவது ஒருநாள் உங்களிடம் நான் விரும்புவதைக் கேட்பேன். நீங்கள் மறுக்காமல் தர வேண்டும், தசரதர் சம்மதித்தார். ஒருவர் நமக்கு எவ்வளவு தான் நன்மை செய்தவர் ஆயினும் கூட, நம்மிடம் ஏதோ கோரிக்கை வைக்கிறார் என்றால் கேட்ட அன்றே செய்துவிட வேண்டும், அல்லது மறுத்துவிட வேண்டும். தாமதம் செய்வது நல்லதல்ல. ராமாயணம் எவ்வளவு பெரிய நீதிகளை எல்லாம் எடுத்துச் சொல்கிறது என்பதை கவனித்துக் கொண்டே படித்து வாருங்கள். ஆக, இரண்டு இடங்களில் தசரதர் சிக்கிக் கொண்டு விட்டார். ஒன்று கைகேயியிடம். மற்றொன்று கைகேயியின் தந்தையிடம். கூனி தொடர்ந்தாள். அடியே கைகேயி! நான் சொன்னது இப்போதாவது உனக்கு புரிகிறதா? உன் திருமணத்தின் போது உன் தந்தைக்கு தசரதர் கொடுத்த உறுதிமொழியைப் பயன்படுத்தி பரதன் நாடாள வேண்டும் என்று கேள். அவன் நிம்மதியாக அரசாள வேண்டுமென்றாள் ராமன் இங்கிருக்கக் கூடாது. அவனை 14 வருடங்கள் காட்டிற்கு போகச் சொல். இந்த இரண்டும் நடந்து விட்டால் அயோத்தியின் எஜமானி நீ தான்,.
கள்ளமில்லா வெள்ளை உள்ளம் படைத்த கைகேயியின் உள்ளத்தில் இப்போது விஷம் பரவி விட்டது. ஆம் ! இந்த மந்தரை சொல்வது சரிதான். நம் தந்தைக்கு தசரதர் செய்து கொடுத்த சத்தியத்தை நினைவூட்டப் போகிறோம். நமக்கு தசரதர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லப் போகிறோம். எப்படிப் பார்த்தாலும் என் பக்கத்தில் தான் தர்மம் இருக்கிறது. அது மட்டுமல்ல, என் மகன் பரதனும் நாடாண்டால் தான் என்ன? ராமனுக்கு அவன் எவ்வகையில் குறைவு? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டாள். இறுதியில் திட்டத்தை நிறைவேற்றுவது எப்படி என்று சிந்தித்தாள். மந்தரை அவளது மன ஓட்டத்தை புரிந்து கொண்டிருக்க வேண்டும். அடியே! உன் மணாளன் இன்னும் சற்று நேரத்தில் வருவார். நீ என்ன சாதாரணமான அழகுள்ளவளா? உன்னிடம் உலகத்து அழகெல்லாம் கொட்டிக் கிடக்கிறது. அதை முழுதாகப் பயன்படுத்தினால் அவர் பெட்டிப்பாம்பாய் அடங்கி விட மாட்டாரா என்ன? உன் அழகில் லயித்துக் கிடக்கும் அந்த வேளையில் கோரிக்கையை எழுப்பு. இந்த நேரத்தில் உனக்கு மரகத மாலைகளையும், பொன்னையும், உனக்கு விருப்பமான பொருட்களையும் தந்து உன்னை வசப்படுத்தப் பார்ப்பார் தசரதர். இந்த தற்காலிக இன்பங்களுக்கு ஏமாந்து விடாதே. மந்த புத்தியுடன் இருக்காதே. நீ என்ன செய்வாயோ? ஏது செய்வாயோ? அழுவாயோ,  புரள்வாயோ, எப்படியோ பரதனிடம் நாட்டை ஒப்படைக்கச் சொல்லி விடு, ராமன் காட்டிலிருந்து வருவதற்குள் பரதன் அயோத்தியை மிகக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வான், என்றாள்.கைகேயி இப்போது முழுமையாக மாறி விட்டாள். அவள் கண்களில் இருந்து தசரதர் மறைந்தார். அயோத்தி மறைந்தது. மற்ற ராஜகுமாரர்கள் மறந்தனர். கவுசல்யா,சுமித்திரை ஆகிய தன் சகோதரிகள் மறந்தனர். நாட்டு மக்களை மறந்தாள். விவஸ்வான் முதல் தசரதர் வரை அயோத்தி மண்ணை ஆண்ட சரித்திரத்தை மறந்தாள். எல்லாமே அவளுக்கு மறந்து விட்டது.
மந்தரை எல்லாம் புரிந்தவளாய் வெளியேறிவிட்டாள். கைகேயி வேஷத்திற்கு தயாரானாள். கோபத்தை வலுவில் வரவழைத்துக் கொண்டாள். அலங்காரத்தைக் கலைத்தாள். அழுக்கு புடவையை உடுத்தினாள். ஆபரணங்கள் ஆங்காங்கே பறந்தன. கூந்தலை கலைத்து தலைவிரிகோலமானாள். (பெண்கள் கூந்தலை விரித்துப் போடக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வது இதற்காகத் தான். குடும்பம் பிரிந்து போய்விடும் என்பது நம்பிக்கை). மகாராஜா தசரதர் கைகேயியின் அறைக்கு வந்தார். அவளது கோலம் அவரது புருவத்தை உயர்த்தியது. அந்தக் கோலத்திலும் கூட அவள் பேரழகியாகவே அவரது கண்ணுக்குத் தெரிந்தாள். காம உணர்வு கிளர்ந்தெழுந்தது அவருக்கு.  மகாராணி! கைகேயி! இன்று உனக்கு என்னாயிற்று? நீ இந்த வீட்டுக்கு வந்த நாளில் இருந்து இப்படி இருந்ததே இல்லையே! உன் உடலுக்கு என்னம்மா? மருத்துவரை வரச் சொல்லட்டுமா? உனக்கு ஏதேனும் தேவையிருக்கிறதா? என்ன நடந்தது? அரண்மனையில் யாரேனும் உன்னை ஏதேனும் சொன்னார்களா? அவர்கள் யாரென்று சொல். அவர்களை கடுமையாகத் தண்டிக்கிறேன், என்று படபடவென பேசினார். காம உணர்வுடன் பேசும் ஒருவன் உளறத் தொடங்கி விடுவான். அவன் பேரரசனாக இருந்தாலும் சரி..., சமூகத்தின் கடைக்கோடியிலுள்ள சுப்பனாக இருந்தாலும் சரி.. இதற்கு யாருமே விதி விலக்கல்ல. கணவன் தன்னிடம் சரணடைந்து விட்டான் என்பதை கைகேயி நன்றாகவே புரிந்து கொண்டாள். அழுக்குப் பொதி போன்ற ஆடைகளுக்குள் ஒளிந்து கிடக்கும் இந்த உடலையே இவன் இப்படி ரசிக்கிறான் என்றால், இவனிடம் என்ன கேட்டாலும் கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டாள். என் உடம்பெல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. நான் சொல்லி நீங்கள் கேட்கவா போகிறீர்கள்? எனக்கு வேண்டும் சிலவற்றை உங்களிடம் கேட்கப் போகிறேன். நீங்கள் எனக்கு அதை தர வேண்டும். கைகேயி கொஞ்சலாக இதைச் சொல்ல, அந்தப்புரத்தில் அந்த அழகி வீசிய காமவலையில் சிக்கிக் கொண்ட தசரதர், கண்ணே! இதைக் கேட்கவா இவ்வளவு தயக்கம். நீ கேட்டு நான் என்றாவது இல்லை எனச் சொன்ன துண்டா? நீ கேட்பது உடனே கிடைக்கும், என்றார் தாபத்துடன். சிலந்தி பின்னிய வலையில் சிக்கிய ஈ தான் எங்கிருக்கிறோம் என்பதை அறிய முடியாத நிலையில் இருப்பது போல, நடக்கப்போவது தெரியாமல் பிதற்றிக் கொண்டிருந்தார் தசரதர்.

ராமாயணம் பகுதி - 12
மே 03,2012
அ-
+
Temple images
பின்னர் கைகேயி தேவாசுர யுத்தத்தில் மன்னனைத் தான் காப்பாற்றிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுவிட்டு, அப்போது மன்னன் தருவதாய்ச் சொன்ன இரு வரங்களையும் இப்போது தரவேண்டும் எனக் கேட்கின்றாள். அவள் சூழ்ச்சி அறியாத மன்னனோ உடனே ஒத்துக் கொள்கின்றான். உடனேயே கைகேயி, இப்போது ராமன் பட்டாபிஷேகத்துக்குச் செய்யப் பட்டிருக்கும் பொருட்களைக் கொண்டே என் மகன் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யவேண்டும். இது முதல் வரம். இரண்டாம் வரம் என்னவெனில் ராமன் மரவுரி தரித்துப் பதினான்கு வருஷம் காட்டில் வாசம் செய்யவேண்டும். எனக் கூறுகின்றாள். மன்னன் மனம் கலங்கியது. மூர்ச்சித்துக் கீழே விழுந்தான். நாகப் பாம்பின் நஞ்சைத் தன் நாவிலே வைத்திருக்கும் கைகேயியின் சொற்களைக் கேட்ட மன்னன், அந்த விஷம் உடம்பில் பரவியதால் விஷம் உண்ட யானையைப் போலத் தரையில் வீழ்ந்தான். கைகேயி, தசரதனிடம் பிடிவாதம் செய்து தம்மகன் பரதன் நாடாளும்படியாகவும், இராமர் பதினான்கு ஆண்டு காடாளும்படியாகவும் உறுதிமொழி வாங்கி விட்டாள். அப்போது கைகேயி சுமந்திரரைப் பார்த்து ராமனை உடனேயே மன்னன் பார்க்கவேண்டும் எனச் சொல்லி அழைத்து வரும்படி பணிக்கின்றாள்.
அமைச்சர் சுமந்திரர் மின்னலென வந்து நின்றார். மகாராணியின் திருப்பாதங்களுக்கு நமஸ்காரம். கட்டளையிடுங்கள் தாயே,. சுமந்திரரே! மன்னர் ஸ்ரீராமனைப் பார்க்க விரும்புகிறார். அவனை உடனே வரச்சொல்லுங்கள்,. உத்தரவு தாயே! என்ற சுமந்திரர் தசரதர் இருந்த அறைக்குச் சென்றார். மன்னரின் நிலை மோசமாக இருந்ததைப் புரிந்து கொண்டார். ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டார். மன்னரை புகழ் மொழி பேசி எழுப்பினார். அவரோ அசைவற்றுக் கிடந்தார். அவசர அவசரமாக ராமபிரானை அழைத்து வந்தார். அரசர் படுத்திருந்த அறையில் ராமர் நுழையவும் கைகேயி எதிர்ப்பட்டாள். அன்னையே! வணக்கம், என்றவர் அவளது காலடியில் விழுந்து ஆசிபெற்றார். தந்தையின் பொற்பாதம் தொட்டு வணங்கினார். தசரதருக்கு நெஞ்சில் ஏதோ குடைச்சல். அவர் ராமனின் முகத்தைப் பார்க்கவே கூசிக் கிடந்தார். ஸ்ரீராம என முனகியதோடு சரி. எதுவும் பேசாமல் மீண்டும் மஞ்சத்தில் முகம் புதைத்து விட்டார். அம்மா! தந்தை அழைத்ததாக அமைச்சர் சொன்னாரே, என்ன விஷயம்? தந்தையார் ஏன் இப்படி அலங்கோலமாக கிடக்கிறார்? அவரது உடலுக்கு ஏதாவது? என்று நிறுத்திய ராமனிடம், கைகேயி விஷத்தைக் கொட்டினாள்.
ராமா! மன்னர் உன்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்லத் தயங்குகிறார். அவரது விருப்பத்தை நீ நிறைவேற்றியாக வேண்டும். ஒரு மகன் தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து நீ வழுவக்கூடாது. அவ்வாறு செய்தால் உன்னை விட புகழ்மிக்கவன் யாரும் இருக்க முடியாது, என புதிர் போட்டாள். கைகேயியை பொறுத்த வரை இவ்வார்த்தைகள் புதிர். ஆனால், ஸ்ரீராமன் என்றும் சஞ்சலமில்லாதவர். எதற்கும் அஞ்சாதவர். எப்பேர்ப்பட்ட சூழலையும் ஏற்கும் மனப்பக்குவம் உடையவர். அவருக்கு இவ்வார்த்தைகள் மிக சாதாரணமாகவே பட்டன. சொல்லுங்கள் தாயே! அரசரின் விருப்பம் என்ன? என்னால் ஆகக்கூடியதாயின் அதை உடனே நிறைவேற்றுவேன். இது சத்தியம், என்றார். சத்தியம் என்று ராமன் சொன்னது கைகேயிக்கு இரட்டிப்பு பலத்தைத் தந்தது. ராமா! நான் அரசரிடம் ஏற்கனவே இரண்டு வரங்கள் கேட்பேன் உறுதி பெற்றிருந்தேன். அதை இன்று கேட்டேன். அதன்படி பரதனுக்கு பட்டாபிஷேகம் நடத்த வேண்டும். நீ தண்டகாரண்யத்துக்கு புறப்பட வேண்டும்,. இங்கு தான் மனிதன் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தர்மம் சொல்லித் தரப்படுகிறது. ஒருவனுக்கு கல்யாணம் என வைத்துக் கொள்வோம். மணமேடையில் வந்து அமர்ந்து விட்டான். மணமகளின் தந்தை திடீரென கல்யாணத்துக்கு மறுக்கிறார். மேடையில் இருப்பவன் எத்தனை பேர் முன்பு அவமானப்படுவான்! உடனே, ஆத்திரத்தில் கத்தித் தீர்ப்பான். உணர்ச்சிவசப்பட்டு, கத்தியும் கூட எடுத்து விடுவான். இதுதான் மானிட இயல்பு.
ஆனால், இன்னும் சிறிது நேரத்தில் பட்டாபிஷேகம் என நிச்சயிக்கப்பட்டிருந்த ராமன், கைகேயியின் இவ்வார்த்தைகள் கேட்டு சலனமின்றி இருக்கிறான். அழுகை இல்லை, ஆவேசம் இல்லை. சற்று கூட இயல்பு மாறாத நிலையில், தாயே! இதைச் சொல்லவா தந்தையாருக்கு இவ்வளவு தயக்கம். நான் அவரது உத்தம குமாரானாயிற்றே. இதை அவரே என்னிடம் நேரடியாகச் சொல்லியிருக்கலாமே! என் தம்பி பரதனுக்கு இந்த நாட்டை நானாகவே கொடுத்திருப்பேனே! இதோ! இப்போதே வனம் புகுகிறேன் தாயே, என்றவர் அவ்விடம் விட்டு வேகமாகச் சென்றார். வெளியே நின்ற லட்சுமணனின் காதுகளில் இது கேட்டது. அவனுக்கு கடுமையான ஆத்திரம். அவன் ராமனைப் பின்தொடர்ந்தான். இதற்குள் மாமுனிவர் வசிஷ்டர் பட்டாபிஷேக ஏற்பாடுகளை முடித்து விட்டார். புனித நீர்க்குடங்களை ஏந்திய அந்தணர்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர். இதை எதையும் ராமன் கண்டு கொள்ளவில்லை. தாய் கவுசல்யாவின் இருப்பிடம் சென்றார்.  தாயின் பாதம் பணிந்து, நடந்ததைச் சொன்னார்.
கொதித்து விட்டாள் கவுசல்யா. என்ன சொன்னார் உன் தந்தை? நீ கானகம் செல்ல வேண்டுமென்றும், பரதன் நாடாள வேண்டும் என்றா? இது என்ன கொடுமை? இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே. அப்படியே நிலைமையை மாற்றிக் கொண்டாலும், நீ காட்டுக்கு போக வேண்டும் என்ற அவசியம் என்ன வந்தது? இது நீதியற்ற செயல், அவள் கதறினாள். பெற்ற வயிறு பற்றி எரிந்தது. மயங்கி விழுந்தாள். ராமனும் லட்சுமணனும் அவளைத் தாங்கிக் கொண்டனர். பின்னர் ராமன் மனைவியைக் காணச் சென்றார்.சீதா என்ற அவர் அன்புமொழி கேட்டு மயிலென பறந்து வந்தாள் அந்த தர்மபத்தினி. கணவரின் பட்டாபிஷேகத்திற்காக தன்னை அதிகாலையிலேயே தயார்படுத்திக் கொண்டிருந்தாள். வழக்கத்தை விட அதிக அலங்காரம் செய்திருந்தாள். சீதா! உன் மைத்துனன் பரதன் இந்நாட்டின் மாமன்னன் ஆகப் போகிறான். நான் தண்டகாரண்யம் புறப்படுகிறேன். நீ இங்கேயே தங்கியிருந்து, உன் மூன்று மாமியார்களையும் தாயாகக் கருதி, கண்போல் பாதுகாத்து வா. பதினான்கே வருடத்தில் நான் திரும்பி விடுவேன், என்றார். சீதாவுக்கு ராமன் சொல்வது எதுவுமே புரியவில்லை. சுவாமி! தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? இவ்வளவு கொடூரமான வார்த்தைகளை மிக இலகுவாக சலனமின்றி சொல்கிறீர்களே? என்ன நடந்தது? என்று பதைபதைக்க கேட்டாள்.

ராமாயணம் பகுதி - 13
மே 03,2012
அ-
+
Temple images
அவள் ராமனின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள். ராமனுக்கோ மன தைரியம் பறந்துவிட்டது. நம்மைப் பிரிந்து இவள் எத்தனை நாள் கஷ்டப்படுவாளோ? இங்கு இருப்பவர்களை எல்லாம் அனுசரித்து எப்படித்தான் காலம் கழிப்பாளோ? என்று வேதனைப்பட்டார். சீதையே ஆரம்பித்தாள். அன்புக்குரியவரே! உங்கள் முகத்தில் ஏதோ வேதனை தெரிகிறது. நீங்கள் இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லை. மேலும் இன்று தங்கள் பட்டாபிஷேக நாள். இந்த நிலையில் நீங்கள் சோகமாக இருப்பது எனக்குள் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. ஆனந்தமாக இருக்க வேண்டிய தாங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? பிராமண அறிஞர்கள் எல்லாம் இன்றைய நாளை நல்லநாள் என சொல்லியிருக்கிறார்கள். இன்றைய தினம் குருபகவானை அதிபதியாக கொண்ட பூச நட்சத்திரம் சந்திரனுடன் கூடியிருக்கும் நன்னாள். இந்த நன்னாளைத் தான் தாங்கள் அரசுப்பொறுப்பேற்கும் நாளாக குறித்துள்ளனர். இந்த முகூர்த்தநேரத்தில் நீங்கள் துக்கப்பட வேண்டிய காரணம் என்ன? தங்கள் முகம் எப்போதும் கடல் நுரையைப் போல வெண்மையாக காட்சி தரும்.
தங்கக் கம்பிகளால் அலங்கரிக்கப்பட்ட குடை போல பிரகாசிக்கும். அது இன்று வாடியிருப்பது ஏன்? உங்கள் கண்கள் தாமரை போல மலர்ந்திருக்கும். இன்று அதில் ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறதே. நிலாவையும் அன்னப் பறவையையும் போல காட்சியளிக்கும் தங்கள் முகம் பட்டுப்போய் இருக்கிறது. தாங்கள் பட்டாபிஷேகத்திற்கு தயாராக இருந்தால் உங்கள் முன்னால் மங்கள வாத்தியங்கள் முழங்கிச் செல்லுமே. அந்த வாத்தியக்காரர்கள் எங்கே? பிராமணர்கள் மந்திரங்கள் ஓதி புண்ணிய ஜலம் கொண்டு வருவார்களே! அவர்களை ஏன் காணவில்லை? உங்கள் பின்னால் மக்களும், மக்கள் தலைவர்களும், அதிகாரிகளும், அமைச்சர்களும் வரவேண்டுமே. அவர்களும் வரவில்லையே! பட்டாபிஷேகத்திற்கு நான்கு குதிரைகள் பூட்டிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதம் முன் செல்லுமே. அதையும் காணவில்லையே! நமது பட்டத்து யானையை எங்கே? அதை அலங்கரித்து உங்கள் முன்னால் அனுப்புவார்களே. நீங்கள் அமர்வதற்கு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட பத்ராசனம் என்ற அரியணை செல்லுமே. அதையும் காணவில்லையே, என்று வேதனை ததும்ப கேட்டாள். ராமன் எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.
சீதா! என் தந்தை என்னை காட்டிற்கு போகச் சொல்லியிருக்கிறார் என சொல்லிவிட்டு அமைதியானார். இந்த சொற்கள் காதில் விழுந்ததும், சீதையின் உள்ளம் நொறுங்கிப் போயிருக்குமென அவருக்கு தெரியும். அவள் விக்கித்து நின்றாள். அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ராமனே தொடர்ந்தார். சீதா! உனக்கு எல்லா தர்மங்களும் தெரியும். ஏனெனில் நீ மகாஞானியான ஜனகரின் மகள். ராஜதர்மங்களை நன்கு அறிந்தவள். தர்மத்தை கடைபிடிப்பதில் உனக்கு நிகர் யாருமில்லை. எனவே நான் சொல்வதை அமைதியாகக் கேள். எனது தந்தை என் தாய் கைகேயிக்கு முற்காலத்தில் இரண்டு வரங்கள் தருவதாக சத்தியம் செய்து கொடுத்திருந்தார். அதை என் தாய் இப்போது கேட்டிருக்கிறாள். அதன்படி பரதன் இந்த நாட்டின் யுவராஜன் ஆவான். நான் 14 ஆண்டுகள் தண்டகாரண்யத்தில் வசிக்க வேண்டும் என்பது நிபந்தனை. எனவே நான் காட்டிற்கு புறப்படப் போகிறேன். அதை உன்னிடம் சொல்லிவிட்டு போகலாம் என வந்தேன், என்றார். அத்துடன் அவர் நிறுத்தவில்லை. வேகமாக தன் மனதில் இருந்த கருத்துக்களை எல்லாம் கொட்டினார். ராமன் காட்டிற்கு செல்வது பற்றியோ, பதவியேற்பு நின்று போனது பற்றியோ சீதை அதிக விசனப்பட வில்லை. ஆனால், அவன் சொன்ன புத்திமதிகள் அவளது நெஞ்சை உருக்கின. கோபக்கனலை கிளப்பின.
சீதா! நான் இல்லாத நேரத்தில், உன்னை வணங்குவதற்காக பரதன் வருவான். அப்போது அவனிடம் நீ என்னைப்பற்றி அதிகம் புகழ்ந்து பேசக்கூடாது. லட்சுமணனின் மனைவிக்கும், சத்ருக்கனனின் மனைவிக்கும் உன்னைவிட அதிகமான கவனிப்பு மற்றவர்களால் தரப்படலாம். உனக்கும் அதுபோன்ற மரியாதை வேண்டுமென எதிர்பார்க்கக்கூடாது. பரதன் நமது நாட்டின் அரசனாகிறான். எனவே அவனுக்கு நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள் ஆகிறோம். நீ உறுதியான மனம் படைத்தவள் என்பதை நான் அறிவேன். இதுவரையில் நீ என் குடும்பத்தினர் மீது எப்படி பாசம் செலுத்தினாயோ அதே பாசத்தை தொடர்ந்து செலுத்த வேண்டும். நான் காட்டிற்கு சென்றபிறகு வழக்கம்போல நீ விரதங்களையும், உபவாசங்களையும் கடைபிடிக்க வேண்டும். நான் இல்லாத காலத்தில் புண்ணியத்தை சேர்க்க வேண்டும். அதிகாலையில் எழுந்து தேவதைகளுக்கு பூஜை செய்தபிறகு என் தந்தைக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். என் தாய் மிகவும் வயதானவள். என்னை பிரிந்த காரணத்தால் அவள் அழுதுகொண்டே இருப்பாள். அவளை நீ சமாதானம் செய்ய வேண்டும். நீ அவளுக்கு கொடுக்கும் மரியாதையிலிருந்தே அவள் ஆறுதல் பெறவேண்டும். என் தாய்க்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறாயோ அதே அளவுக்கு என் மற்ற இரண்டு அன்னைகளுக்கும் மரியாதை செய்ய வேண்டும். அவர்களுக்கும் எந்த குறையும் வைக்கக்கூடாது. நான் என்னுடைய தாயையும் மற்ற அன்னைகளையும் பிரித்தே பார்ப்பதில்லை. பரதன் உனக்கு சகோதரன் போன்றவன். சத்ருக்கனன் மகன் போன்றவன். இந்த ஸ்நேக பாவத்துடன் அவர்களுடன் பழக வேண்டும். என் உயிரை நான் மதிப்பதைவிட அவர்களை பெரிதாக மதிக்கிறேன்.
பரதன் அரசனாகிவிட்டான் என்பதற்காக அவனுக்கு பிரியமில்லாத காரியங்களை நீ செய்யக்கூடாது. அவன் இந்த நாட்டிற்கு ராஜா. ராஜாக்களிடம் தர்மம் தவறாமல் நடக்க வேண்டியது நமது கடமை. அதை மறந்துவிடாதே. நான் இப்போதே காட்டிற்கு புறப்படுகிறேன், என்று சொல்லி முடித்தார். சீதைக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. ஒரு நல்ல மனைவியிடம் கணவன் என்னவெல்லாம் சொல்லக்கூடாதோ அது அத்தனையும் ராமன் சொல்லி முடித்துவிட்டார். தான் சொல்லாமலே, சீதை இதையெல்லாம் செய்வாள் என்று அவருக்கும் தெரியும். இருந்தாலும், இதை சொன்னதற்கு காரணம் அவளை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். இப்படியெல்லாம் சொன்னால் சீதை கோபப்பட்டு தான் வரும்வரை தான் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே குடும்பத்தை கவனித்துக் கொள்வாள் என்று எண்ணிதான் அவர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் ராமன் அதிர்ச்சியடையும் வகையில் சீதையின் பதில் அமைந்தது. இப்படியெல்லாம் புத்திமதி சொன்னீர்களே! ஒரு மருமகள் ஒரு குடும்பத்தை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற தர்மத்தை எடுத்துச் சொன்னீர்கள். ஆனால், ஒன்றை மட்டும் ஏன் சொல்லவே இல்லை? மனைவி என்பவள் கணவனில் பாதி. பாதியைப் பிரிந்து மீதி எப்படி இங்கே இருக்கும்? தாங்கள் இருக்குமிடம் தானே எனக்கு அயோத்தி! என்னை மட்டும் இங்கே இருக்க வைத்துவிட்டு, தாங்கள் தனித்து காட்டுக்கு செல்வதில் என்ன நியாயம்? என்றாள்.


ராமாயணம் பகுதி - 14
மே 03,2012
அ-
+
Temple images
சீதை தன்னோடு வர விருப்பப்பட்டாலும், வனத்தில் வாழ்வதால் ஏற்படப்போகும் சிரமங்களை அவள் தாங்கிக் கொள்ள மாட்டாள் என்பதால் ராமன் அவளுக்கு பல புத்திமதிகளை சொன்னார். என் கண்மணியே! நீ வனத்துக்கு வர வேண்டாம். என் சொல்லைக் கேள். நினைப்பதை சாதிக்க முயலக்கூடாது. நான் சொன்னதைக் கேட்டால் நீ சுகமாக வாழ்வாய். காடு என்றால் சாதாரண விஷயமல்ல. அங்கே ஏராளமான விஷ பூச்சிகள் இருக்கும். கல்லும் முள்ளும் குவிந்து கிடக்கும். மனிதர்களால் அங்கே வசிக்கவே முடியாது. உன்னை என்னுடன் கூட்டிச்செல்வதால் எனக்கு அதிக இடைஞ்சலாக இருக்கும் என கருதி இப்படி சொல்கிறேனோ என நினைக்காதே. உனது சுகமே எனது சுகம். காட்டிற்கு நீ வந்துவிட்டால் சுகம் என்ற வார்த்தையே காற்றோடு பறந்துவிடும். அங்கே ஏராளமான குகைகள் இருக்கின்றன. அவற்றில் வன விலங்குகள் தங்கியிருக்கும். நம்மைப்போன்ற வித்தியாசமான பிராணிகளை அவை பார்த்ததில்லை. அதன் காரணமாக அவை நம்மை கொல்ல நினைக்கும். மதம் பிடித்த யானைகள் கூட தாண்டமுடியாத சகதி நிறைந்த ஆழமான புதைகுழிகள் இருக்கும். அவற்றைத் தாண்டி உன்னால் நடக்க முடியாது.
உன் அழகிய உடலை முட்கள் பதம்பார்க்கும். காட்டுக்கோழிகளின் சத்தத்தைக் கேட்டால் கூட அதன் வித்தியாசமான ஒலியால் நீ பயந்துபோவாய். வன வாழ்க்கை இலகுவான தல்ல. இங்கே நீ பஞ்சு மெத்தையில் புரள்கிறாய். அங்கோ மரங்கள் சொரியும் இலைகளின்மீதும், காய்ந்த சருகுகளின் மீதும் தான் படுக்கவேண்டும். இங்கு கிடைப்பது போல ஆகார வகைகள் அங்கு கிடைக்காது. என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிட்டு திருப்தியடைய வேண்டும். அழகிய பட்டாடைகள் அணியமுடியாது. மரங்களின் பட்டைகளாலான ஆடைகளையே அணியவேண்டும். அடிக்கடி விரதம் இருக்க வேண்டும். காட்டு வாழ்க்கையில் தவமே முக்கியமானது. எனவே தவம் செய்வோருக்கு என விதிக்கப்பட்டுள்ள கடுமையான நியமங்களை கடைபிடிக்க வேண்டும். தினமும் பூக்களை பறித்துவந்து தெய்வ பூஜை செய்ய வேண்டும். நாம் செல்லும் வழியில் ஏராளமான மலைப்பாம்புகள் படுத்திருக்கும். அவற்றிடம் சிக்கிவிடக்கூடாது. விட்டில் பூச்சிகள், புழுக்கள், கொசுக்கள், தேள்கள் என நம்மை இரவும் பகலும்பாடாய் படுத்தும் ஜந்துக்களிடமிருந்து தப்பவேண்டும். அவை தரும் கொடுமையை இன்முகத்துடன் சகித்துக்கொள்ள வேண்டும். தர்ப்பைகள் நம் உடலைக்கிழிக்கும். என்ன நடந்தாலும் கோபப்படக்கூடாது.
மனிதனின் இயற்கை உபாதையான காமத்தை மறந்து விட வேண்டும். எதற்கும் பயப்படாமல் இருக்க வேண்டும். இதெல்லாம் உன்னால் முடியாது. எனவேதான் உன் மீது கொண்ட பிரியம் காரணமாக உன்னை இங்கேயே விட்டுச்செல்ல விரும்புகிறேன், என்றார். சீதையின் கண்களிலிருந்து மலையருவியென கண்ணீர் வழிந்தது. அவள் தொண்டை அடைக்க, ஸ்ரீராமா! நீங்கள் இதுவரை காட்டு வாழ்க்கையின் கஷ்டங்களைப்பற்றி மட்டுமே சொன்னீர்கள். ஆனால், நீங்கள் இல்லாத இந்த அரண்மனை அந்தக் காட்டைவிடக் கொடியதாக என் கண்ணுக்கு புலப்படும். உங்களோடு நான் இருந்தால், மிருகங்களின் கர்ஜனை குயிலின் பாட்டைப்போல என் காதுகளில் ஒலிக்கும். சந்தன மணமும், தென்றல் காற்றும் தரும் சுகத்தை நான் அனுபவிப்பேன். உங்களைக் கண்டாலே மிருகங்கள் எல்லாம் ஒதுங்கிப் போய்விடும். மேலும் உங்களிடம் என் தந்தை செய்துகொடுத்த உறுதியை அதற்குள் மறந்து விட்டீர்களா? நான் உங்களோடு இருந்து தர்மத்தை அனுஷ்டிப்பேன் என்றும், உங்களை நிழல்போல தொடர்வேன் என்றும் அவர் சொன்னாரல்லவா? அந்த உத்தரவாதத்தை நான் கடைபிடித்தாக வேண்டும். உங்களோடு இருந்தால்தான் எனக்கு பாதுகாப்பு. தேவர்களின் அரசனான இந்திரன் கூட உங்களோடு நான் இருந்தால் என்னைப்பார்க்க அஞ்சுவான். கணவனைப் பிரிந்த மனைவி உயிரோடு இருக்கக்கூடாது என நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள். அது மற்றவர்களுக்கு பொருந்தும் போது, உங்கள் மனைவியான எனக்கும் தானே பொருந்தும்!
நீங்கள் என்னை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் ஜாதக ரீதியாக நான் காட்டுவாசத்தை அனுபவிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. நமது திருமணத்திற்கு முன்பு எங்கள் அரண்மனைக்கு வந்த ஜோதிடர்கள், நான் காட்டில் வசிக்க வேண்டிய காலகட்டம் இருப்பதாக தெரிவித்தனர். அந்த வாழ்க்கையைச் சந்திக்க நான் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். விதியின் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். சுவாமி! காட்டில் வசித்தால் பல கஷ்டங்கள் நேரும் என்பதை நானும் அறிவேன். சாதாரண மனிதர்கள் அக்கஷ்டங்களைக் கண்டு அஞ்சலாம். நான் இந்திரியங்களை அடக்கியவள். என் மனம் எனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. எனவே காடு தரும் துன்பங்களை நான் இலகுவாக எடுத்துக் கொள்வேன். ஒருமுறை என் வீட்டிற்கு வந்த மகாசாதுவான பெண் ஒருத்தி எனது தாயிடம், இவள் காட்டில் சென்று வசிக்க வேண்டிய காலம் இருக்கிறது என்று சொன்னாள். அது இப்போது நடக்கப்போகிறது. நான் உங்களோடு காட்டில் வசித்தால் என்னைப் பிடித்துள்ள சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவேன். நீங்களே எனக்கு குலதெய்வம். இந்த உலகத்தில் ஒரு பெண் ஒரு ஆணின் கையில் தாரை வார்த்து ஒப்படைக்கப்பட்டுவிட்டால், அவள் உயிரோடு இருக்கும்வரை தன் கணவனை விட்டு பிரியவே கூடாது என்று வேதம் சொல்கிறது. இது உங்களுக்கு தெரியாததல்ல. இருப்பினும் வேதத்தை உதாரணம் காட்டினாலாவது தாங்கள் என்னை அழைத்துச் செல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் சொல்கிறேன். மேலும் என்னை இங்கேதான் விட்டு செல்வேன் என்று உங்களால் சொல்ல முடியாது. நான் உங்கள் மனைவி.
உங்களுடன் வாழும் உரிமை எனக்கிருக்கிறது. எதற்காக என்னை இங்கே விட்டுச் செல்ல எண்ணுகிறீர்கள்? என் பணிவிடையில் நீங்கள் இதுவரை ஏதாவது குற்றம் கண்டீர்களா? நீங்களே கதி என இருக்கிறேன். என்னைவிட உங்கள் மீது பக்தி உள்ளவர்கள் இருக்கவே முடியாது. நீங்கள் பல சுபச்செய்திகளை என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள். அதற்காக மகிழ்ந்து நான் ஆட்டம் போட்டது கிடையாது. சில சமயங்களில் மனதிற்கு வருத்தமான சம்பவங்களையும் சொல்வீர்கள். அப்போது நான் துக்கப்பட்டது கிடையாது; அழுது புரண்டதும் கிடையாது. இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகவே கருதியுள்ளேன். உங்களுக்கு சுகம் வந்தாலும், துக்கம் வந்தாலும் அது எனக்கும் சேர்த்து தான். இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன். பிரபு! நீங்கள் என்னை அழைத்துப் போகாவிட்டால் விஷம் குடிப்பேன். அதில் எனக்கு சாவு வராவிட்டால் தீயில் குதிப்பேன். அதிலும் மரணம் வராவிட்டால் ஆழமான ஆற்றில் குதிப்பேன். ஏதாவது ஒரு வகையில் என் உயிர் போவது உறுதி, என்று உருக்கமாகவும், மனம் பதறியும், சற்று ஆவேசம் கலந்தும் உணர்ச்சிகளின் வடிவமாகிச் சொன்னாள் சீதாபிராட்டி. ராமன் இது எதற்குமே மசியவில்லை. மனிதர்களே வசிக்காத காட்டிற்கு இவளை அழைத்துச் செல்வது உசிதமில்லை என்றே கருதினார். சீதையோ தன் நிலையில் பிடிவாதமாக இருந்தாள்.

ராமாயணம் பகுதி - 15
மே 03,2012
அ-
+
Temple images
எப்படியாவது ராமனுடன் வனத்திற்கு சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சீதை, சற்று கடுமையாகவே வார்த்தைகளை பிரயோகம் செய்தாள். அவரை கடுமையாக நிந்தித்தாள். பெண்களுக்குரிய பொதுவான குணமான பிடிவாதத்துடன், இங்கே சீதையை ஒப்பிடக்கூடாது. இக்காலத்தில் என் அப்பா என் சிற்றன்னையின் பேச்சைக் கேட்டு, வெளியூரில் பத்துமாதம் இருக்கச் சொல்லியிருக்கிறார். நீயும் வருகிறாயா? என்று கேட்டாலும் கூட, உங்களுக்கு வேறு வேலை இல்லையா? வேணுமினா அந்த கிழத்தை போய் அங்கே இருக்கச் சொல்லுங்க, என்று சொல்லி விடுவாள் மனைவி.
சீதை அந்த வார்த்தையில் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. உமது தந்தை சொன்னால் நீர் காட்டுக்கு போய் விட வேண்டுமா? நீர் தானே மூத்தவர். உமக்கு தானே பட்டம் கிடைக்க வேண்டும். வாரும் என்னோடு. என் மாமனாரையும், சின்ன மாமியாரையும் ஒரு பிடி பிடித்து விடுகிறேன், என்ற சராசரி மருமகளாக சீதை மாறவே இல்லை. நீங்கள் இருக்கும் இடம் எனக்கு சொர்க்கம், என்று தான் சீதை வாதாடுகிறாள். கணவனுடன் சென்று விட வேண்டும். அவரையும் அங்கே முட்கள் குத்தும்.
அப்போது நமது தழுவலால், ரணத்தின் கடுமை தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மனுஷன் வீட்டில் தூங்கும் போது என்றாவது தலையணை வைத்து படுத்துக் கொண்டிருக்கிறாரா? என் மடி மீது தானே தலை வைத்து தூங்குவார். நான் அவரது தலையை வருடிக் கொடுப்பேனே. இதை அங்கே அவருக்கு யார் செய்வார்? அவர் கட்டாந்தரையில் அல்லவா படுத்துக் கிடப்பார். நான் உடன் போனால் தர்ப்பை புற்களை சேகரித்து வந்து அதன் மேல் என் முந்தானையை விரித்து படுக்க வைப்பேனே, என்று தான் சிந்திக்கிறாள். இதற்காக வார்த்தைகளை நெருப்பாக்கினாள். நீங்கள் மட்டும் வனத்திற்கு தனித்து போகிறீர்கள் என என் தந்தைக்கு தெரிந்தால் அவர் உங்கள் வீரத்தின் மீது கடுமையாக சந்தேகப்படுவார். அவர் மட்டுமல்ல, பாமர ஜனங்கள்கூட உங்கள்மீது சந்தேகம் கொள்வார்கள். ஒருவன் தன் மனைவியைவிட்டு ஒரு நிமிடம்கூட பிரியக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டவர் என் தந்தை. அவர் பலகோடி மக்களை காப்பாற்றுகிறார். பல தேசங்களை ஆள்கிறார். உங்களைப்போல ராஜாங்க காரியங்களில் அனுபவமற்றவர் அல்ல அவர். அது தெரிந்ததால், மற்றவர்களுடைய கஷ்டத்தை தனது கஷ்டமாக பாவிப்பார்.
இந்த விஷயம் அவருக்கு தெரிந்தால் போயும் போயும் மனைவியைக் காப்பாற்ற தெரியாத ஒருவனுக்கா, என் மகளை திருமணம் செய்துகொடுத்தேன் என வருந்துவார். இவன் உண்மையிலேயே ஆண்மகன்தானா அல்லது பெண்ணா என தூஷிப்பார். நீங்கள் இப்படிப்பட்டவர் என அவருக்கு தெரிந்திருந்தால் என்னை உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதித்திருக்கவே மாட்டார். மனிதனாகப் பிறந்த  ஒருவன் பல பாவங்களை செய்தாவது தன் குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டுமென மனு சாஸ்திரம் சொல்கிறது. ஆனால், நீங்கள் எனக்காக அப்படி என்ன செய்துவிட்டீர்கள்? என்னை நாதியற்றவளாக்க ஏன் துடிக்கிறீர்கள்? என்னை கூட்டிச்செல்வதால் உங்களுக்கு இடைஞ்சல் வருமென பயப்படுகிறீர்களா? உங்கள் கோபம் பிரளய காலத்தில் ஏற்படும் அக்னிக்கு சமமானது என்பதை நான் அறிவேன். உங்களை அச்சப்படுத்த இவ்வுலகில் யாராலும் இயலாது. அப்படி இருந்தும் என்னை அழைத்துச் செல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம்? சத்தியவானின் பின்னால் சாவித்திரி எப்படி தொடர்ந்தாளோ அதுபோல நான் உங்களைத் தொடர்வேன். உங்களைத்தவிர என் மனதில் வேறு எதுவுமே இல்லை. நான் உங்கள் குலத்தை காக்க வந்தவளே தவிர கெடுக்க வந்தவள் அல்ல. அப்படியிருந்தும் உங்கள் தம்பி பரதனிடம் நான் எப்படியெல்லாம் நடக்க வேண்டுமென எனக்கு பாடம் கற்றுத்தருகிறீர்கள். நீங்கள் என்னை பரதனுக்கு தானமாகக் கொடுத்து விட்டு, என்னை ஜீவனம் செய்யச் சொல்வது போல உங்களது வார்த்தைகள் தோன்றுகிறது.
நீங்கள் வேண்டுமானால் உங்கள் தம்பிக்கு வேண்டியவராக நடந்து கொள்ளுங்கள். என்னை கட்டாயப்படுத்த முடியாது. நீங்கள் காட்டிற்கு சென்றாலும், முனிவராக மாறினாலும், சொர்க்கத்திற்கே போனாலும் நான் உங்களோடு தான் நிச்சயமாய் வருவேன். இவ்வளவு சொன்ன பிறகும் என்னைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்தால் ஏற்கனவே சொன்னதுபோல விஷம் குடித்து இறப்பேன். நீங்கள் செல்வதற்கு முன்பே அந்த காரியத்தை செய்துவிடுவேன். 14 வருடம் என்ற காலகட்டத்தை என்னால் தாங்கவே முடியாது, என்று ராமபிரானை இறுகத்தழுவிக்கொண்டு கண்ணீர் வடித்தாள் சீதாதேவி. அந்த கண்ணீர்த்துளிகள் செந்தாமரையிலிருந்து கொட்டும் நீர்த்துளிகளாக ஸ்படிக மணிகள் போல் தெறித்து விழுந்தன. அவளது கண்ணீரின் வெப்பத்தால் முகமாகிய தாமரை கருகிப்போனதுபோல் காட்சி தந்தது. இதன்பிறகு, ராமன் தன் மனைவியை ஆறுதலாகத் தடவிக்கொடுத்து, சீதா! நீ இங்கிருந்து துக்கத்தை மட்டுமே அனுபவிப்பாயானால் உன்னை விட்டுச்செல்ல மாட்டேன். உண்மையிலேயே உன் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவே இவ்வாறெல்லாம் பேசினேன். என் கண்ணே! நீ என்னோடு காட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டவள் என்பதை நான் அறிவேன்.
உன் கணவன் எந்த ஆபத்தைக் கண்டும் அஞ்சமாட்டான் என்பதை நீ அறிவாய். அப்படிப்பட்ட நான் க்ஷண நேரம் கூட உன்னைப் பிரியமாட்டேன். ஏற்கனவே எனது முன்னோர்களான ராஜரிஷிகள் பலர், காடுகளில் தங்கள் மனைவியருடன் வசித்திருக்கிறார்கள். அவர்களை பின்பற்றி நானும் உன்னை அழைத்துச்செல்வேன். இங்கேயே ஒரு இடத்தில் இருந்து தவ வாழ்க்கையை தொடர்ந்தால் என்ன என நீ நினைக்கலாம். ஆனால், என்னைப் பெற்றவர் தர்மம் தவறாத உத்தமர். அவர் என்னை காட்டிற்கு செல்லும்படி பணித்துவிட்டார். பெற்றவர்களை மனம் மகிழச் செய்வதே பிள்ளைகளின் கடமையாகும். அதுவே தர்மமும், நியாயமும் ஆகும். என்னைப் பெற்றவரை மீறி ஒரு நிமிடம் கூட இந்த அரண்மனையில் தங்கமாட்டேன். அப்படி இருந்தால் எனக்கு நல்ல கதி கிடைக்காது. தெய்வத்தின்மீது பாரத்தை போட்டுவிட்டு இங்கேயே தங்கினால் என்ன? என்றும் நீ கருதலாம். ஒன்றை மட்டும் புரிந்துகொள். தெய்வம் நமது வேலைக்காரன் அல்ல. நாம் சொன்னதை எல்லாம் செய்துகொடுக்க வேண்டும் என்ற அவசியம் தெய்வத்திற்கு கிடையாது. தன்னை வணங்குபவர்களுக்கு எல்லாம் தெய்வம் வசப்படாது. அது சுதந்திரமானது. உலகில் பிறந்த ஒவ்வொருவனும் தாயையும், தந்தையையும், குருவையும் வணங்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மூவரும் நம் கண் முன்னால் இருக்கும் தெய்வங்கள். உண்மை பேசுவது, தான தர்மங்களை செய்வது, பிறர் மனம் கோணாமல் உபசரிப்பது ஆகியவற்றைவிடவும், ஏராளமான பொருட்செலவில் யாகங்களை நடத்துவதை விடவும் மேன்மையானது பெற்றோரின் சொல்லைக் கேட்டலே ஆகும். பெற்றோரையும், குருவையும் பூஜிப்பவர்களுக்கு செல்வம், தானியங்கள், கல்வி, மக்கட்பேறு, சுகபோகம், சொர்க்கவாசம் அனைத்துமே கிடைக்கும். அது மட்டுமின்றி நாம் விரும்பக்கூடிய எது வேண்டுமானாலும் கிட்டும். நம்மிடம் இருக்கும் நவரத்தினங்களை பிராமணர்களுக்கு தானமாக கொடுத்து விடு. உணவு பொருட்களை ஏழை மக்களுக்கு கொடு. நமது ஆபரணங்களை வேலைக்காரர்களுக்கு கொடுத்துவிடு, என்றார்.














































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக