திங்கள், 7 நவம்பர், 2011

பக்தி கதைகள் - II (இரண்டாம் தொகுப்பு)

ராதே கிருஷ்ணா 07 - 11 - 2011

பக்தி கதைகள் - II (இரண்டாம்  தொகுப்பு)


இந்த பந்தா தானே வேண்டாங்கறது! 
பக்தி கதைகள்
    இந்த பந்தா தானே வேண்டாங்கறது!

    ஒரு கிராமத்திற்கு பக்கத்து நகரத்தில் இருந்து ஒரு இளைஞன் வந்து சேர்ந்தான். டிப்டாப்பாக உடையணிந்துஇருப்பான். தன்னை ஒரு அதிமேதாவி போல் காட்டிக் கொள்வதற்காக எந்த நேரமும் கைகளில் சில ஆங்கிலப் புத்தகங்களை வைத்திருப்பான். பலரது பார்வையிலும் படும்படி பொது இடங்களில் அமர்ந்து அவற்றை விரித்து வைத்துக் கொண்டிருப்பான். ஆனால், நிஜத்தில் அவன் போலி ஆசாமி! ஏ,பி,சி,டி கூட தெரியாத பிறவி!  ஒருமுறை, ஒருவர் அவசர அவசரமாக ஒரு தந்தியுடன் ஓடிவந்தார். தம்பி! இதை படிச்சு சொல்லுங்க, என்றார். ஆசாமி சிக்கிக் கொண்டான். அது வந்து! இந்த தந்தி எந்த ஊரிலே இருந்து வந்திருக்கு? என கொண்டு வந்தவரிடம் கேட்டான்.  கோல்கட்டாவில் இருந்து வந்திருக்கு, என்றார் கொண்டு வந்தவர்.
    சாரி! நான் படிச்சது லட்சுமணபுரியிலே! அங்குள்ள எழுத்துக்களைத் தான் எனக்கு வாசிக்கத் தெரியும், என்றான். தந்தியைக் கொண்டு வந்தவரும் அதை உண்மையென நம்பி வேறு ஆளைத் தேடி ஓடினார். ஆளுக்கு ஆள் போன் வைத்துள்ள காலத்தில் இப்படி ஒரு கதையா என கேட்காதீர்கள்! இதைச் சொன்னவர் சாதாரணமானவரல்ல! மகான் சிவானந்தர்! என்னதான் கல்வியறிவு வளர்ந்திருந்தாலும், இதுமாதிரி பந்தா ஆசாமிகளிடம் ஏமாறுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் சில போலிகள் தோன்றி மக்களை ஏமாற்றுகின்றன. படித்தவர்கள் கூட இவர்களிடம் ஏமாந்து போவது தான் வேடிக்கையும் வேதனையும்! ஆன்மிக, ஜோதிட  உலகில் கூட பல பந்தாக்கள் தோன்றியிருக்கின்றனர்.  இவர்களிடம் அலார்ட் ஆக இருக்கத்தான் இந்தக் கதை!
    நலம் விரும்பிய நல்லவர்

    நலம் விரும்பிய நல்லவர் 
    பக்தி கதைகள்
      நலம் விரும்பிய நல்லவர்

      வைஷ்ணவ ஆச்சார்யார் எம்பாரிடம் ஒரு வழக்கம் உண்டு. தனது குருநாதரான திருமலை நம்பிகளுக்கு அவர் தான் தினமும் படுக்கை விரித்துக் கொடுப்பார். அவ்வாறு விரித்ததும், அதில் தானே படுத்து ஒன்றிரண்டு முறை உருளுவார். இதை ராமானுஜர் பார்த்துவிட்டார். ஒரு சீடன் குருநாதரின் படுக்கையில் படுத்து உருளலாமா? இது நல்ல பழக்கம் இல்லையே! என கலங்கினார். இதுபற்றி திருமலை நம்பிகளிடமே சொல்லிவிட்டார். நம்பிக்கும் அந்த விஷயம் அப்போது தான் தெரிய வந்தது. எம்பார்! நீ என் படுக்கையில் தினமும் புரண்டு எழுகிறாயாமே! இது அபச்சாரம் என்று உனக்கு தெரியாதா! இதற்கு என்ன தண்டனை கிடைக்குமென தெரியுமா? என்று கடிந்து கொண்டார்.
      எம்பார் மிகப்பணிவுடன்,ஐயனே! இந்த அபச்சார செயலுக்கு எனக்கு நரகம் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியும். ஆனாலும், தாங்கள் படுக்கையில் படுக்கும் போது, ஏதாவது குத்தி, தங்கள் திருமேனிக்கு நோவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், படுக்கையை சோதிக்கவே அவ்வாறு செய்தேன், என்றார். எம்பாரின் குருபக்தி ராமானுஜரை மட்டுமல்ல! திருமலைநம்பியையும் நெகிழ வைத்தது. அவரை அவர்கள் வானளாவ புகழ்ந்தார்கள். தனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை, குருவின் சுகமே தன் சுகம் என வாழ்ந்தார்களே! அந்தப் பெரியவர்களின் வாழ்க்கையை நமது வாழ்விலும் முன்னுதாரணமாகக் கொள்வோம்.
      நல்லவன் நலமாய் வாழ்வான்!


      நல்லவன் நலமாய் வாழ்வான்! 
      பக்தி கதைகள்
        நல்லவன் நலமாய் வாழ்வான்!

        பூலோகத்தில் வசித்த கிருஷ்ண தேவன் என்ற அரசனைப் பற்றி தேவலோகத்தில் ஒருநாள் வாதம் வந்தது. அந்த அரசன் மிகவும்  உயர்ந்தவன், குணசீலன், தேவர்களான நமக்குள் கூட பூசல் உருவாகிறது. ஆனால், அவனோ பிறரிடம் உள்ள நல்லவற்றை மட்டுமே பார்க்கிறான், என்று புகழாரம் சூட்டினான் தேவேந்திரன். ஒரு பூலோகவாசியை தேவேந்திரன் புகழ்ந்தது, அங்கிருந்த ஒரு தேவனுக்கு பிடிக்கவில்லை. உண்மையிலேயே, கிருஷ்ணதேவன் நல்லவன் தானா என சோதிக்க பூலோகம் வந்தான். தேரில் அடிபட்டு இறந்து போன நாயின் வடிவெடுத்து அழுகிய உடலுடனும், கோரமான பற்கள் வெளியே தெரியும் படியும் அரசன் வரும் வழியில் படுத்திருந்தான்.
        கிருஷ்ணதேவன் அந்தப் பக்கமாக வந்தான். ஐயோ! இந்த நாயின் பற்கள் எவ்வளவு வெண்மையாக வரிசையாக இருக்கின்றன. இதுவாழ்ந்த காலத்தில் இன்னும் அழகாக இருந்திருக்குமே, என புகழ்ந்தான். நாயின் சிதைந்த தோற்றம், அதிலிருந்து வீசிய துர்நாற்றம் பற்றி அவன் பேசவே இல்லை. படுத்திருந்த நாய் சுயரூபத்தில் எழுந்தது. தன் முன் ஒரு தேவன் நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்ட கிருஷ்ணதேவன், தாங்கள் யார்? இறந்த நாயின் வடிவத்தில் ஏன் கிடந்தீர்கள்? என்றான். கிருஷ்ணா! நிஜத்தில் நீ மிகவும் நல்லவன். மற்றவர்களின் குறைகளை விட, அவர்களிடம் உள்ள நிறைகளை யார் காண்கிறார்களோ அவர்களே இந்த உலகில், பொறாமையற்றும், கவலையற்றும் நிறைவான வாழ்வு நடத்துகிறார்கள். உன்னைப் போன்றவர்கள் பூலோகத்தில் பெருகட்டும், என்று ஆசிர்வதித்து மறைந்தான். பிறரிடம் உள்ள பிளஸ் பாயின்ட்களை மட்டுமே இனி பார்ப்போமா!

        எங்கெங்கு காணினும் அவனே!


        எங்கெங்கு காணினும் அவனே! 
        பக்தி கதைகள்
          எங்கெங்கு காணினும் அவனே!

          சிவபாதர் என்ற தபஸ்வி ஒரு காட்டில் வசித்து வந்தார். அவர் அறிவுசீலர் என்பதால், தனக்கு சீடராக வருவோரும் அறிவார்ந்தவர்களாகவே இருக்க வேண்டுமென விரும்பினார். அதற்காக, இக்கால நுழைவுத் தேர்வு போல, பரீட்சை செய்து, அதில் தேறுபவர்களையே சீடராகக் கொள்வார். ஒருசமயம், பொன்னன், விஜயன் என்ற இரண்டு நண்பர்கள் அவரை நாடிவந்தனர். சிவபாதர் அவர்களை பார்த்தாரே தவிர, ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இருப்பினும் அந்த நண்பர்கள், மகாமுனிவரே! நாங்கள் ஆத்மஞானம் பெறும் பொருட்டு தங்களை நாடி வந்துள்ளோம். நீங்கள் எங்களைச் சீடராக ஏற்க வேண்டும், என்றனர். தபஸ்வியோ அவர்களிடம் பேசவே இல்லை. ஒருமாதம் அப்படியே கழிந்தது. இருவரும், தினமும் அவரைச் சந்தித்து தங்கள் கோரிக்கையை மட்டும் விடாமல் வைத்தனர்.
          இதன்மூலம், அந்த இளைஞர்கள் பொறுமைசாலிகள், சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்பதைப் புரிந்துகொண்டார். ஆன்மிகத்திற்கு தேவையான அடிப்படைத் தன்மை அவர்களிடம் இருந்ததால், ஒரு மாதம் கழித்து வாய் திறந்தார். பிள்ளைகளே! உங்களை சீடராக ஏற்பது இருக்கட்டும். நான் சொல்வதை முதலில் செய்யுங்கள். உங்கள் இருவரிடமும் ஆளுக்கொரு சிவலிங்கம் தருவேன். அதை யாரும் பார்க்காத ஓரிடத்தில் ஒளித்து வைத்து வர வேண்டும். இதை நீங்கள் சரியாகச் செய்துவிட்டால், உங்களை சீடராக ஏற்பதில் ஆட் சேபனை இல்லை, என்றார். இருவரும் அவர் தந்த லிங்கத்துடன் புறப்பட்டனர். பொன்னன் நடுகாட்டிற்குள் சென்று, அங்கிருந்த ஒரு குகையைக் கண்டுபிடித்து, அதற்குள் நீண்டதூரம் நடந்து சென்று, மண்ணைத் தோண்டி லிங்கத்தை ஆழப்புதைத்து வைத்தான். பின்னர், வேகமாக சிவபாதர் இருந்த இடத்திற்கு திரும்பினான். ஒன்றிரண்டு நாட்களிலேயே அவன் வந்துவிட்டான். லிங்கத்தை புதைத்த விஷயத்தை தபஸ்வியிடம் சொன்னான்.  உன் நண்பனும் வரட்டும், அப்புறம் சீடனாவது பற்றி யோசிக்கலாம், என்றார் தபஸ்வி.
          ஆனால், விஜயனைக் காணவில்லை. ஒருமாதம், இருமாதம், ஆறுமாதம் என காலம் ஓடியது. ஒரு வருடம் கழித்து தான் அவன் திரும்பினான். ஆனால், சிவபாதர் கொடுத்தனுப்பிய லிங்கம் அவன் கையிலேயே இருந்தது. என்னப்பா! நான் சொன்னதையும் செய்யவில்லை, காலமும் கடத்தி யிருக்கிறாய், இதுதான் குருவின் கட்டளைக்கு நீ காட்டும் மரியாதையா? என்றார் சிவபாதர்.முனிவரே! தங்கள் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் போனதற்காக என்னை மன்னியுங்கள். இருப்பினும், லிங்கத்தை மறைவிடத்தில் வைக்க முடியாமல் போனதற்கான காரணத்தைக் கேளுங்கள். நான் சென்ற இடமெல்லாம், நான் இங்கிருக்கிறேன், நான் இங்கும் இருக்கிறேன், நீ எங்கு போனாலும் அங்கிருப்பேன், நான் இல்லாத இடம் ஏது! நீ எப்படி இதை மறைத்து வைக்க முடியும் என நாலாபக்கமும் இருந்து சப்தம் வந்தது. அதைக் கேட்டவுடன் மனிதர், மிருகங்களின் பார்வையில் இருந்து வேண்டுமானால் இதை மறைக்கலாம். ஆனால், கடவுளின் பார்வையில் இருந்து எதையுமே மறைக்க முடியாது என்பது புரிந்துவிட்டது. எனவே, தான் காலதாமதமாக திரும்பினேன், என்றான் கண்ணீருடன். சிவபாதர் அவனை அணைத்துக் கொண்டார். நாம் செய்கிற செயல்கள் யாவும் இறைவனுக்குத் தெரியும். சிலர் இறைவனுக்கு ஏதும் தெரியாதென நினைத்துக் கொண்டு, அஞ்ஞானத்தால் சக உயிர்களுக்கு கேடு விளைவிக்கின்றனர். நீயோ, இறைவன் எங்கும் இருப்பதை புரிந்துகொண்டாய். இனி, நீ எந்தத் தவறும் செய்யமாட்டாய். எனவே, என் சீடனாகும் தகுதி உனக்கு உண்டு, என்று ஆசிர்வதித்தார்.

          ஒருநாள் போதுமே!


          ஒருநாள் போதுமே! 
          பக்தி கதைகள்
            ஒருநாள் போதுமே!

            ஒருவர் வீட்டுக்கு விருந்தினராகச் செல்கிறோம் என்றால், காலையில் போய் விட்டு மாலைக்குள் திரும்பி விடுவது தான் மரியாதை. அங்கேயே ஒருவாரம், பத்துநாள் டேரா போடுவது என்பதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்துவராது. மீறி தங்கினால், தேவையற்ற கருத்து வேறுபாடு தான் வரும். பெற்றவர்கள் கூட, பிள்ளைகள் வீட்டில் குறைந்த நாள் தான் தங்க வேண்டும். விலைவாசி மற்றும் குடும்பச்சூழல்கள் அப்படி! ஒரு கதையைக் கேளுங்க! ஒரு வாத்து முட்டைகளை குஞ்சு பொரித்தது. எப்படியோ, அன்னப்பறவையின் முட்டை ஒன்றும் அதனுள் கலந்து விட்டது. குஞ்சு பொரித்ததும், மற்ற குஞ்சுகள் சுமாரான நிறத்தில் இருந்தன. அன்னப்பறவை குஞ்சு மட்டும் வெள்ளை வெளேரென இருந்தது. அது மட்டுமல்ல! வாத்துக்கள் சாய்ந்து சாய்ந்து நடந்தன. அன்னப்பறவையின் நடையழகோ அபாரமாய் இருந்தது.
            இதைக் கண்ட தாய் வாத்தும், மற்ற குஞ்சுகளும் அன்னக்குஞ்சு மீது பொறாமை கொண்டன. தேவையில்லாமல் அதைத் தொந்தரவு செய்தன. கொத்திக் காயப்படுத்தின. அப்போது, அன்னப்பறவை கூட்டம் ஒன்று அங்கு வந்தது. தங்கள் குஞ்சு ஒன்று வாத்துக் கூட்டத்துடன் இருப்பதைப் பார்த்து, அன்னக்குஞ்சே! நீ எங்கள் இனமல்லவா! மந்த புத்தியுள்ள இந்த வாத்துகளுடன் ஏன் இருக்கிறாய். இதோ! இந்த நீர் நிலையில் உன் உருவத்தைப் பார். எங்களை போலவே இருப்பாய், உயரத்தில் பறக்கும் சக்தியும் உனக்கு உண்டு என்றன. அப்போது தான் அன்னக்குஞ்சுக்கு, தான் ஏன் துன்புறுத்தப்பட்டோம் என விளங்கியது. அது தன்இனத்துடன் சேர்ந்து பறந்து விட்டது. அவரவர் இடத்தில் இருந்தால் தான் அவரவருக்கு மதிப்பு! தெரியாமல் வந்த அன்னக்குஞ்சுக்கே அந்தக்கதியென்றால், தெரிந்தே உறவினர் இல்லங்களுக்கு செல்பவர் களுக்கு என்ன கதி வரும் எனசொல்லியா தெரிய வேண்டும்!

            நிம்மதி நம் மனதுக்குள் ...


            நிம்மதி நம் மனதுக்குள் ... 
            பக்தி கதைகள்
              நிம்மதி நம் மனதுக்குள் ...

              முருகனுக்கு பெரும் பணம் இருந் தது. அவனு டைய அப்பா சொத்து, சுகத்தையெல்லாம் விட்டு தான் சென்றிருந்தார். பணத்துக்கு குறைவே இல்லை. ஆனால், என்ன செய்வது? அவனுக்கு வாய்த்தவள் சரியில்லை. இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களும் அம்மாவுடன் சேர்ந்து, அப்பாவின் எல்லா திட்டங்களுக்கும் ஏறுக்கு மாறாக பேசி வந்தார்கள். இதனால், முருகனுக்கு நிம்மதி போய்விட்டது. ஒருநாள், அவனைப் பார்க்க அவனது தந்தையின் நண்பர் வந்தார். முருகன் தனது நிலையை அவரிடம் சொல்லி அழுதான். எனக்கு நிம்மதியே இல்லை, என்று புலம்பினான். அவனது நிலை பரிதாபகரமாக தோன்றினாலும், அவனது நலன் கருதி ஒரு பாடத்தையும் கற்பிக்க நினைத்தார் பெரியவர். முருகா! இதற்காக நீ கவலைப்படாதே.
              உனக்கு நிம்மதி வேண்டும்! அவ்வளவுதானே! அப்படிப்பட்ட ஓர் இடத்தைக் காட்டுகிறேன். அங்கு வந்தால், உனக்கு எந்தத்துன்பமும் இல்லை, என்றார். முருகனுக்கு ஏக மகிழ்ச்சி! உடனடியாக அவருடன் கிளம்பி விட்டான். அவர் அவனை நேராக இடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒன்றும் புரியாமல் விழித்த முருகன், இங்கு ஏன் என்னை அழைத்து வந்தீர்கள்? என்றான். நீ தானே நிம்மதியை விரும்பினாய். உலகத்தில் மனிதனாய் பிறப்பவன் நிம்மதியாய் உறங்குவது இங்கு உள்ள கல்லறைகளுக்குள் தான். அவன் உலகில் வாழும்வரை பிரச்னைகள் தொடரத்தான் செய்யும். அதைக் கண்டு பயந்தால், மேலும் மேலும் நிம்மதி குலையும். அவற்றை எதிர்த்து நிற்பவனை நிம்மதி தேடி வரும்.
              இப்போது சொல்! நீ பிரச்னைகளை சமாளித்து நிம்மதியைத் தேடப் போகிறாயா... இல்லை, இங்கே தோண்டப்பட்டு உள்ள குழிகளுக்குள் புதைந்து கொள்ளப் போகிறாயா? என்றார். முருகனுக்கு புத்தி வந்தது. உண்மை தான்! நான் எனக்கு மட்டுமே பிரச்னைகள் இருக்கிறது என நினைத்தேன். உலகில் ஒவ்வொருவரும் பிரச்னையுடன் தான் இருக்கிறார்கள். பிரச்னைகளை கண்டு ஓடக்கூடாது. நம் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் புத்தி சொல்வோம், கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால் பட்டு திருந்தட்டும், என விட்டுவிட்டான். இப்போது, அவன் நிம்மதியாக இருக்கிறான்.

              


























              கருத்துகள் இல்லை:

              கருத்துரையிடுக