வெள்ளி, 25 நவம்பர், 2011

லவகுசா ( முதல் பாகம் )

ராதே கிருஷ்ணா 25-11-201


லவகுசா ( முதல் பாகம் )


லவகுசா
 
temple

லவகுசா பகுதி-1பிப்ரவரி 01,2011

மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது அயோத்தி.மக்களெல்லாம் வண்ண வண்ண உடைகளில் தெருக்களில் பவனி வந்து கொண்டிருந்த காட்சி, விண்மீன்கள் கண்சிமிட்டும் வானத்தை ஒத்திருந்தது.எங்கள் ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-2பிப்ரவரி 01,2011

அன்று சீதாதேவி, ஸ்ரீராமனின் பேரழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கணவனின் அழகை ரசிப்பதில் பெண்களுக்கு பேரானந்தம் உண்டு. இத்தனைக்கும் ராமன் சியாமளவண்ணன். கரிய நிறமென்று ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-3பிப்ரவரி 01,2011

சீடர்கள் குழப்பமடைந்தனர். குருவே! ராமாயணம் தொடர்கிறது என்றால், திவ்யமான ராமநாமத்தை நாங்கள் இன்னும் உங்கள் வாயால் தொடர்ந்து கேட்கப்போகிறோம் என்றுதானே பொருள். இதில் தாங்கள் ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-4பிப்ரவரி 01,2011

உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் கற்பின் வலிமையை நிரூபித்தாள். ஆனால், உலகத்தார் அதை ஏற்க மறுக்கின்றனர். அவள் ...மேலும்
 
temple

லவகுசா பகுதி-5பிப்ரவரி 01,2011

அந்த தேரில் அமைச்சர் சுமந்திரரும் சென்றார். தேர், கங்கைக்கரையை அடைந்தது. தேர் அங்கு சென்றதோ இல்லையோ, குனிந்த தலை நிமிராத லட்சுமணனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. சீதை ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-6பிப்ரவரி 01,2011

சீதைக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியவில்லை. திடீரென எழுவாள். தன் இரு கைகளாலும் வயிற்றில் ஓங்கி ஓங்கி அடிப்பாள். ஐயோ! இதென்ன கொடுமை என்றபடியே மயங்கிச் சாய்வாள். ஒரு கட்டத்தில், ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-7மார்ச் 15,2011

எதற்கும் கலங்காத அந்த மாவீரன் லட்சுமணன், அப்போதும் குனிந்த தலை நிமிரவில்லை. அண்ணியாரே! தாங்கள் களங்கமில்லா மதிமுகம் கொண்ட என் சகோதரனின் மனைவி. உங்கள் முகம் பார்த்து பேசும் ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-8மார்ச் 15,2011

குழந்தைகள் பிறந்தால் அவற்றை பூதங்களும், பிசாசுகளும் அணுகும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இப்போதும் கூட இருக்கிறது. இதற்காகத்தான், குழந்தையின் இடுப்பில் மந்திரித்த ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-9மார்ச் 15,2011

ராமன் தலையசைத்தார். அண்ணா! விருத்திராசுரன் என்பவனை இந்திரன் கொன்றான். இதனால், அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் (கொலைப்பாவம்) ஏற்பட்டது. இதனைப்  போக்க அவன் அஸ்வமேத யாகம் செய்தான். ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-10மார்ச் 15,2011

ரோமபாதன் சாந்தாவை தன்னுடைய அங்கதேசத்துக்கு அழைத்து வந்து வளர்த்து வந்தார். அவள் பருவமடைந்த சமயத்தில், மழை குன்றி, நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களைக் காப்பாற்ற வேண்டிய ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-11மார்ச் 15,2011

அக்கா சாந்தாவின் பாதங்களில் விழுந்து ஆசிபெற்றார் ராமபிரான். தம்பி! இந்த உலகம் உள்ளளவும் உன் பெயர் நிலைத்திருக்கும். உன் பெயர் ஒலிக்காத நாவும், நாளும் இருக்காது, என்று ஆசி ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-12மார்ச் 15,2011

அயோத்தியில் இவ்வாறு மிகச்சிறப்பாக வேள்வி நடந்து கொண்டிருக்க, காட்டில் இருந்த வால்மீகி முனிவர், ராமனின் மைந்தர்களான லவகுசர்களை அழைத்தார். இப்போது வலகுசர்கள் ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-13மார்ச் 15,2011

காவலர்கள் போய் ராமனிடம் தகவல் சொல்லவே, லவகுசர்கள் அரண்மனைக்குள் வந்தனர். தன்னைப் போலவே, அஞ்சன வண்ணத்தில் மிளிர்ந்த அந்த சிறுவர்களைக் கண்டு ராமபிரான் ஆனந்தம் கொண்டார். ...மேலும்
 
temple

லவகுசா பகுதி-14மார்ச் 15,2011

ராமனின் கட்டளைக்கிணங்க மறுநாள் குசலவர் அரண்மனைக்கு வந்தனர். ராமனுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே! நாங்கள் இங்கே வந்ததில் இருந்து, தங்கள் ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-15மார்ச் 15,2011

ஏவலர்கள் சொன்னதைக் கேட்ட சத்ருக்கனன் ஆச்சரியமடைந்தவனாய், குதிரை நின்ற இடத்திற்கு வந்தான். அங்கு நின்ற குழந்தைகளைப் பார்த்தவுடனேயே மனதில் மரியாதை ஏற்பட்டது. ஓ இவர்கள் ... மேலும்
 













































































லவகுசா
 
temple

லவகுசா பகுதி-16மார்ச் 16,2011

அம்மாவின் முகத்தில் ஏதோ ஒரு கேள்விக்குறி தொக்கி நிற்பதைக் கண்ட லவகுசர், அம்மா! தாங்கள் எதையோ எதிர்பார்ப்பது போல் உங்கள் முகக்குறிப்பு தெரிவிக்கிறது. உங்களுக்கு என்ன ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-17மார்ச் 16,2011

சகோதரனின் நிலை கண்ட அவன் கொதித்துப் போனான். நண்பர்கள் மூலம் நடந்ததை அறிந்த அவன், ஒரு சிறுவனை இவ்வாறு கட்டிப்போட வெட்கமாக இல்லையா? என லட்சுமணனிடம் கேட்டான். லட்சுமணன் அப்போதும் ...மேலும்
 
temple

லவகுசா பகுதி-18மார்ச் 16,2011

ராமபிரானால் அனுப்பப்பட்ட தூதன், வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்து, சீதாதேவியும், தாங்களும் அயோத்திக்கு எழுந்தருள வேண்டும் என ஸ்ரீராமன் என்னிடம் தகவல் சொல்லி ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-19மார்ச் 16,2011

ஸ்ரீராமா! அமைதி வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று தான். ஆனால், சில சமயங்களில் அந்த அமைதியே பலரது வாழ்வை முடித்து விடுகிறது. பேச வேண்டிய நேரத்தில், தேவையானதை, அளவோடு பேச வேண்டும். அந்த ...மேலும்
 
temple

லவகுசா பகுதி-20மார்ச் 16,2011

ராமபிரானோ தன் முடிவில் உறுதியாக இருந்து விட்டார். அப்போது சீதாதேவி, என் கணவர் என்னை தீயில் இறங்கு என சொல்வது மட்டுமல்ல, இதுவரை அவர் எனக்குச் செய்த எல்லாமே எனக்கு செய்யப்பட்ட ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-21மார்ச் 16,2011

ஏ பூமாதேவியே! உன் மேலுள்ள கடல் எனது ஒரு அதட்டலுக்கு கட்டுப்படும் தன்மையுடையது. சீதையை மீட்க நான் இலங்கை சென்ற போது, அந்தக் கடல் வழிமறித்தது. நான் வில்லையும், அம்பையும் ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-22மார்ச் 16,2011

தன்னிலும் வேட்டையில் உயர்ந்தவர் யாருமில்லை என்ற கர்வம் என் தந்தையின் கண்ணை மறைத்தது. ஏனெனில், அவர் சப்தவேதனம் எனப்படும் வித்தையில் திறமை பெற்றிருந்தார். சப்தவேதனம் என்றால் ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-23மார்ச் 16,2011

மகனே! எங்களுடன் பேசமாட்டாயா? உன் தாய் படும் வேதனை உனக்கு புரியவில்லையா? பின்னிரவு வேளையில் நீ வேதம் ஓதுவது என் காதுகளில் இப்போதும் இனிமையாக ஒலிக்கிறது. மகனே! இனி எங்களை ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-24மார்ச் 16,2011

அத்திரி முனிவர் என்ற புகழ் பெற்ற முனிவர் இருந்தார். இவரது மனைவி அனுசூயா. ரிஷிபத்தினியான இவளது கற்புத்திறனை சொல்லி மாளாது. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-25மார்ச் 16,2011

பாதகமில்லை ராமா! நான் லட்சுமணனுடன் சொல்லி அனுப்பியவுடனேயே வந்து விட்டாய். உனக்கு நினைவில்லையா? நீ மூடிசூட்டிய நாளில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு வந்து ஒருநாள் ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-26மார்ச் 16,2011

அண்ணா! கைகேயி தாயை எல்லோரும் தவறாகப் பேசுகிறார்கள். நம் தந்தையார், அவளது தந்தை கேகயனுக்கு ஒரு சத்தியவாக்கு கொடுத்திருந்தார். கைகேயிக்கும், அவளது குழந்தைகளுக்கும் ... மேலும்
 




லவகுசா பகுதி-1


மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது அயோத்தி.மக்களெல்லாம் வண்ண வண்ண உடைகளில் தெருக்களில் பவனி வந்து கொண்டிருந்த காட்சி, விண்மீன்கள் கண்சிமிட்டும் வானத்தை ஒத்திருந்தது.எங்கள் ராமபிரான் பதவியேற்று விட்டார். இனி என்றும் எங்களுக்கு இன்பமே, என்று மக்கள் ஆரவாரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். ராமபிரானை தரிசிக்க காத்திருந்த மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு காவலர்களுக்கு அவசியமில்லாமல் போயிற்று. ஏனெனில், ராமராஜ்யம் தொடங்கி விட்டதல்லவா! ராமன் என்றாலே ஒழுக்கம் என்பது தானே பொருள். மக்கள் தாங்களே வரிசையை வகுத்துக்கொண்டு ஒழுங்குபட நின்றனர். வெளியே இப்படி என்றால், அரண்மனைக்குள் இன்னும் கோலாகலம். பட்டாபிஷேகம் காண வந்திருந்த பெண்கள் பயமின்றி நடமாடினர். சகோதரி! ராமராஜ்யம் துவங்கி விட்டது. இனி இரவு, பகல் என்ற வித்தியாசம் இங்கில்லை. நாம் எப்போது வேண்டுமானாலும், சிங்கங்கள் நிறைந்த காட்டிற்குள் கூட போகலாம். நம்மை ஏறிட்டு பார்க்கக்கூட ஆண்கள் தயங்குவார்கள். ஏனெனில், ராமராஜ்யத்தில் பண்பாடு என்பது ஊறிப்போனதாக ஆகிவிடும், என மகிழ்ச்சி பொங்க, ஒரு பெண், இன்னொருத்தியிடம் சொன்னாள். ஆம்...இயற்கை தானே! ராமபிரானின் தம்பி லட்சுமணன், தன் அண்ணனுக்கு திருமணமாகி இந்த நிமிடம் வரை, அண்ணியாரின் முகத்தை ஏறிட்டு பார்த்ததில்லை. இப்போதும், அவன் பட்டாபிராமன் முன்னால், கைகட்டி பவ்வியமாகத் தான் நின்று கொண்டிருந்தான். கோபக்காரன் தான்...மற்றவர்கள் முன்பு. அண்ணனையோ, அண்ணியாரின் திருப்பாதத்தையோ பார்த்துவிட்டால் பசுவைப் போல் ஒடுங்கி விடுவான். கோபமுள்ள இடத்தில் தானே குணம் இருக்கும்! அப்படிப்பட்ட தம்பியைப் போலவே தான் அயோத்தி வாழ் மக்களும், பெண்கள் விஷயத்தில் மிகுந்த அடக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மாமுனிவர், தமிழ்க்கடல் அகத்தியர் அங்கே வந்தார். ஸ்ரீராமனின் வெற்றிக்கு போர்க்களத்துக்கே வந்து அருளாசி செய்த மகான் அவர். ராமா! ராவணனை வெல்வோமா மாட்டோமா என சந்தேகம் கொள்ளாதே. இந்த உலகில் வெற்றி தரும் சூரிய மந்திரம் ஒன்று உள்ளது. அதை நான் உனக்குச் சொல்லித் தருகிறேன். அதைச் சொல், வெற்றி உன்பக்கம் தான், என்றவர் ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும் அந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். ராமன் சொன்னார், வென்றார்.
அந்த மரியாதைக்குரியவர் வந்ததும், அவையே அவையடக்கத்துடன் எழுந்து நின்று அவரை தலைபணிந்து தாழ் பணிந்து வரவேற்றது. ராமபிரானும், சீதாதேவியாரும் அந்த மாமுனிக்கு பாதஸ்நானம் செய்து, அந்த தீர்த்தத்தை தங்கள் தலையில் தெளித்து வரவேற்றனர். தங்க சிம்மாசனத்தில் அகத்தியர் அமர்ந்தார். ராமபிரான் அவரிடம், மாமுனியே! நான் பல அரக்கர்களை வனவாசத்தின் போது வென்றேன். அவர்களெல்லாம் யார்? அவர்களின் பிறப்பு என்ன? என்று கேட்டார். அகத்தியர் விலாவாரியாக அவற்றிற்கு விளக்கமளித்தார். ராமன் தன் அருகில் நின்ற அனுமானை அழைத்தார். முனிவரே! என் சீதாவை காட்டில் துறந்த வேளையில், எனக்காக வானரவீரர்கள் நாற்திசைகளிலும் சென்று தேடினர். தெற்கே சென்ற இந்த அனுமான் என்னைக் காப்பாற்றும் வகையிலான நற்செய்தி கொண்டு வந்தான். இறந்து போன வீரர்களை எழுப்ப மருந்துமாமலையைக் கொண்டு வா என்றால், வடக்கேயிருந்து அதை எடுத்து வர இவன் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நாழிகை (24 நிமிடம்) தான். இது இவனால் எப்படி சாத்தியமாயிற்று? என்று கேட்டார். ராமா! மிகச்சரியானதொரு கேள்வி கேட்டாய். இந்த அனுமனின் சரித்திரம் அற்புதமானது. இவனது வரலாறு கேட்டாலே பாவங்கள் நசிந்து போகும். தன் சக்தியின் பெருமை இன்னதென அறியாதவன் இந்த ஆஞ்சநேயன். செருக்கற்றவன்; பிறர் நலம் விரும்புபவன்; கருணையும், சாந்தமும் இவனிடம் ஊறிப்போனவை. கருணை எங்கிருக்கிறதோ, அங்கே தான் வீரலட்சுமி குடியிருப்பாள். இவனது வீரம் அளவிட முடியாதது. சொல்கிறேன் கேள், என்றவர் அனுமானின் கதையை ஆரம்பித்தார். ராமா! காற்றுக்கு அதிபதியான வருணபகவான், அஞ்சனை என்ற இவனது அன்னை மீது ஆசை கொண்டான். அந்த அஞ்சனையின் வயிற்றில் இந்த அனுமன் பிறந்தான். இவன் பிறந்ததுமே, இவனுக்குரிய ஆற்றல் அதீதமாக இருந்தது கண்டு பெற்றவர்கள் ஆச்சரியமடைந்தனர், இந்த வீரனால் அரக்கர் குலம் அழியும் என தேவர்கள் ஆனந்தம் கொண்டனர்.
அவன் தன் இளம்பிராயத்தில், தன் தாயிடம், அம்மா! எனக்குரிய இனிய உணவு எது? என்று கேட்டான். மகனே! இந்த குளிர்ந்த சோலையில் எந்தக் கனியெல்லாம் சிவந்து போயிருக்கிறதோ, அதுவெல்லாம் உனக்குரியது தான் என்று சொல்லிவிட்டு இவனுக்காக பழம் பறிக்க வெளியே சென்று விட்டாள். அப்போது, வான்வெளியில் சூரியன் உதயமாக, அதை பழமெனக் கருதி இவன் மேலே பாய்ந்தான். வாயுவின் மகன் என்பதால், இவனுக்கு காற்றில் பறக்கும் சக்தி இயற்கையிலேயே வாய்த்தது. இப்படி சூரியனையே பழமாக நினைத்தவனுக்கு, இலங்கை ஒன்றும் பெரியகாரியமாக படவில்லை, என்றார் அகத்தியர். பின்னர் விபீஷணன், சுக்ரீவன், அனுமான், அங்கதன், சேது அணை கட்டிய நளன் உள்ளிட்ட பலருக்கும் பரிசுகளை வழங்கினார் ராமன். அனைவரும் ராமனைப் பிரிய மனமின்றி கண்ணீருடன் அவரவர் ஊர் திரும்பினர். அனுமான் ரொம்பவே கண்ணீர் வடித்து விட்டான். சுக்ரீவனின் நிலைமை கருதி, அவனுடேயே தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்ட ராமன், அனுமானை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் சீதாதேவியுடன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தார். அவருக்கு திருமணம் நடந்த போது வயது 12. சீதாவுக்கு 6 வயது. 18 வயதில், 12 வயது சீதாவுடன் காட்டுக்குப் போய் விட்டார். 32 வயதில் திரும்பியிருக்கிறார். சீதாவுக்கு இப்போது 26 வயது. இவர்கள் தங்கள் இளமையை காட்டில் கழித்து விட்டனர். அரண்மனை சுகத்தை அனுபவிக்க இப்போது தான் நேரம் வாய்த்திருக்கிறது. இன்ப வானில் அந்த தம்பதிகள் சிறகடித்துப் பறந்தனர். ஆனால், விதி என்னும் விரோதி அந்த இன்பத்தை நீண்டநாள் நீடிக்க விடவில்லை.


லவகுசா பகுதி-2


அன்று சீதாதேவி, ஸ்ரீராமனின் பேரழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கணவனின் அழகை ரசிப்பதில் பெண்களுக்கு பேரானந்தம் உண்டு. இத்தனைக்கும் ராமன் சியாமளவண்ணன். கரிய நிறமென்று சொல்வதற்கில்லை. கருமையிலும் ஒரு நீலம். இந்தக்காலத்தில் என்றால், பெண்கள் மாப்பிள்ளை கருப்பா என்று புள்ளி வைப்பார்கள். சீதாதேவி, ராமனுக்காகவே பிறந்தவள். அவளது தந்தை அவளுக்கு மாப்பிள்ளையாக ராமபிரானைக் கொண்டு வந்து நிறுத்திய போது, அவள் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நமது கம்பர் தான், நம் தமிழ்க்காதலின் சுவை கருதி, அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்று இருவருமே திருமணத்துக்கு முன் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டதாக அனுபவித்து எழுதியிருக்கிறார். ஆனால், வால்மீகி அப்படி சொல்லவில்லை. அவன் கால் பாதம் தான் அவளுக்குத் தெரியும். அந்த நீலவண்ணப் பாதங்களில் செந்தூரத்தால் போட்ட கோலம் தெரியும். திருமணமாகி அயோத்திக்கு வந்த பின்னர் தான் அவனது முகம் பார்த்து வெட்கத்தால் சிவந்தாளாம் அந்த சிவப்பழகி. இன்றைக்கும் கூட நமது கிராமங்களில் சிகப்பி என்று பெண்களுக்கு பெயர் வைப்பார்கள். அது வேறு யாருமல்ல. நம் சீதாதேவி தான். பூமாதேவியின் அம்சமான அவள், அத்தனை சிவப்பழகு, பேரழகு படைத்தவள். கொடிகள் அவளது இடையைக் கண்டு வெட்கப்பட்டு, முகம் நாணி, தலை குனிந்து, கொம்புகளுக்குள் வளைந்து வெட்கப்பட்டு கிடக்கும். சிவப்பழகு கொண்ட பெண்கள், கருத்த மாப்பிள்ளைகளை ஒதுக்கக்கூடாது. மனம் வெள்ளையாக இருக்கிறதா என்பதை விசாரித்து தெரிந்து கொண்டால் போதும் என்பது சீதாதேவி பெண்களுக்கு கற்றுத்தரும் பாடம். அவரருகே வந்தவள், ஸ்ரீராமா...  என்று ஆரம்பித்து விட்டு நிறுத்தினாள். அவர் அவளது கைகளைப் பற்றி நெஞ்சத்தில் புதைத்து, அவளை தழுவியபடி, என்ன தேவி! சொல், என்றார்.
அன்பரே! என் மனதிலுள்ள ஆசையை நிறைவேற்றுவீர்களா?ராமன் சிரித்தார்.நாடாளும் ராணி நீ. இந்த பட்டத்தரசி சொல்வதைக் கேட்கத்தானே இந்த பட்டத்தரசனும், இந்த தேசமும், உன் மாமியார்களும், மைத்துனர்களும் இருக்கிறோம். மனதிலுள்ளதை தயங்காமல் சொல். அதிலும் நீ கர்ப்ப ஸ்திரீயாக இருக்கிறாய். கர்ப்பவதிகள் மனதில் எதையும் வைத்துக் கொள்ளக்கூடாது. தங்கள் விருப்பத்தை கணவனிடம் சொல்ல வேண்டும். கணவன் அதை நிறைவேற்றி வைக்க வேண்டும். சொல் சீதா, என்றார். ஸ்ரீராமா! எனக்கு மீண்டும் மகரிஷிகளை தரிசிக்க வேண்டுமென என் மனம் ஆசைப்படுகிறது. தாங்கள் ராஜ்ய பரிபாலனத்தில் இப்போது தான் கவனம் செலுத்த துவங்கியிருக்கிறீர்கள். எனவே, நான் மட்டும் சென்று வருகிறேன். ஒரே ஒரு நாள் தரிசனம் தான். நான் சென்று வருவதற்குரிய அனுமதியையும், அதற்குரிய ஏற்பாட்டையும் செய்து தாருங்கள், என்றாள். ராமர் கலகலவென சிரித்தார். இவ்வளவுதானா! இதற்கா மனம் சஞ்சலப்படுகிறது என்றாய். மகரிஷிகளை தரிசிப்பது என்பது நல்ல விஷயம் தானே! அதிலும், நீ கர்ப்பவதியாய் இருக்கிறாய். இந்நேரத்தில், உன் வயிற்றில் இருக்கும் நம் செல்வம், மகரிஷிகள் கூறும் மந்திரங்கள், நல்வார்த்தைகளைக் கேட்டால், மிகச்சிறந்தவனாக, தர்மத்தைக் கடைபிடிப்பவனாக பிறப்பானே! இதைச் சொல்லவா இவ்வளவு தயக்கம்! காட்டிற்கு போகிறோமோ என கவலை கொள்ளாதே. உன் மைத்துனன் லட்சுமணன், எதற்கு இருக்கிறான்? கோபக்கார பயல். அவனை உன்னோடு அனுப்பி வைக்கிறேன். அவன் தன்னைப் பெற்ற சுமித்திரையை தாயாக நினைக்கிறானோ இல்லையோ! உன்னை தாயாக நினைக்கிறான், என்றதும் சீதாவின் கண்களில் கண்ணீர் அரும்பியது. ஆம்...சுவாமி! தாங்கள் மாரீச மானைப் பிடிக்கச் சென்றதும், அவனைக் கடும் மொழிகளால் பேசினேன். அவன் கோபிக்கவில்லை. மாறாக, கண்ணீர் வடித்தான். அந்நிலையிலும் அவன் கோடு போட்டு நிற்கச் சொன்னான். அதையும் நான் மதிக்கவில்லை. அயோத்தியில் காட்டிற்கு நாம் கிளம்பிய போது, அவன் நம்மோடு கிளம்பினான். அப்போது, தன் மனைவி ஊர்மிளாவிடம், விடை பெறச்சென்றான்.
அந்த மாதரசி எந்த தடையும் சொல்லவில்லை. ஊர் உலகில் நடக்கிற காரியமா இது? எந்த மனைவியாவது தன் கணவனை, அவனது அண்ணனுக்கும், அண்ணன் மனைவிக்கும் துணையாக காட்டுக்கு 14 வருஷம் அனுப்புவாளா? அவள் அனுப்பி வைத்தாள். அந்த உத்தம பத்தினியை மனைவியாகப் பெற்ற அவன், என்னோடு வருவது சாலவும் தகும். ஆனால்... என்று இழுத்தவளிடம், ராமபிரான், என்ன ஆனால்... என்றார். சுவாமி! ஊர்மிளாவும் இப்போது கர்ப்பவதியாக இருக்கிறாள். அவள் அருகே அவன் இருக்க வேண்டாமா? அவனை ஏற்கனவே 14 ஆண்டுகள் மனைவியை விட்டு பிரித்து விட்டோம். இப்போது, அந்த கர்ப்பஸ்திரீயிடமிருந்தும் பிரிக்க வேண்டுமா? என்ற சீதாவைப் பார்த்து சிரித்தார் ராமன். சீதா! ஊர்மிளா யார்? உன் தங்கை. உன்னைப் போலவே உத்தமி. நீ காட்டிற்கு போகிறாய் எனத்தெரிந்தால், அவள் உடனே தன் கணவனை அனுப்பி வைப்பாள். இதற்கெல்லாம் கலங்காதே. மேலும், நீ என்ன அங்கே நீண்டகாலம் தங்கவா போகிறாய்? ரிஷி தரிசனத்தை முடித்து விட்டு கிளம்பப் போகிறாய். அவனும் உன்னோடு வந்துவிடுவான், என்றார். அயோத்தியில் பட்டாபிஷேகம் முடிந்ததோடு ராமாயணமும் முடிந்தது, ஸ்ரீராமனின் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ந்து வாழப் போகின்றனர். ராமசகோதரர்கள் தங்கள் மனைவியருடன் இல்லறத்தில் திளைத்து, நன்மக்களை உலகுக்கு தரப்போகின்றனர். இனி இவ்வுலகில் எல்லாம் ÷க்ஷமமே என நினைத்திருந்த வால்மீகி மகரிஷி திடீரென நிஷ்டை கலைந்து எழுந்தார். சீடர்கள், அவர் திடுக்கிட்டு எழுந்ததைக் கண்டு ஓடோடி வந்தனர். குருவே! என்னாயிற்று! தாங்கள் இப்படி பதைபதைப்பு காட்டி நாங்கள் பார்த்ததே இல்லையே! தங்கள் கண்களிலிருந்து சரம் சரமாய் கண்ணீர் கொட்டுகிறதே! ராமன் ஆளும் பூமியில் அபவாதம் ஏதும் நிகழ வாய்ப்பில்லையே சுவாமி! பின் ஏன் இந்த கலக்கம்? என்றனர் படபடப்புடன். அவர் அமைதியாகச் சொன்னார்.ராமாயணம் முடியவில்லை...அது தொடரப்போகிறது.


லவகுசா பகுதி-3


சீடர்கள் குழப்பமடைந்தனர். குருவே! ராமாயணம் தொடர்கிறது என்றால், திவ்யமான ராமநாமத்தை நாங்கள் இன்னும் உங்கள் வாயால் தொடர்ந்து கேட்கப்போகிறோம் என்றுதானே பொருள். இதில் தாங்கள் வருத்தப்படுவது பற்றி தான் எங்களுக்கு புரியவில்லை, என்றனர். சீடர்களிடம் வால்மீகி பதிலேதும் சொல்லவில்லை. அவரது ஞானதிருஷ்டியில், காட்டிற்கு வரப்போகும் சீதைக்கு ஆகப்போகும் நிலை தெரிந்தது. உம்...விதி வழி வாழ்வு. அவள் பூமாதேவியின் புத்திரி ஆயினும், அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துதானே ஆக வேண்டும். பொதுவாகவே, பொறுமைசாலிகளுக்கு தான் பூமியில் அதிக துன்பமே விளைகிறது என தனக்குள் சொல்லிக்கொண்டார். இந்த பூலோகத்தில் பிறந்தவர்களில் பொறுமைசாலிகளுக்கு துன்பம் அதிகமாக வருகிறது என்று வால்மீகி நினைத்தது இன்றுவரை கண்கூடாகத்தான் தெரிகிறது. இவ்வளவு பொறுமையாய் இருந்தும், நமக்கு இவ்வளவு சோதனையா என சில பொறுமைசாலிகள் சலித்துக் கொள்ளவும் கூடும். ஆனால், காரணமில்லாமல் காரியமில்லை. இந்த லோகத்தில் நம் முன்வினைப் பயனையெல்லாம் அனுபவித்து, மேலும் மேலும் பொறுமை காத்தால், அவ்வுலகில் சுகமான வாழ்வு வாழலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீதையிடம் ராமன், சீதா! நீ நாளையே புறப்படலாம். உரிய ஏற்பாடுகளைச் செய்து விடுகிறேன், எனச்சொல்லி விட்டு, அரசவைக்குச் சென்றார். அவருக்கு வீட்டை விட நாட்டைப் பற்றிய கவலை அதிகம். மக்களுக்கு ஒரு சிறு கஷ்டம் கூட வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதற்காக, பல ஒற்றர்களை நியமித்திருந்தார். மக்கள் என்ன பேசுகிறார்கள். அவர்களது தேவையென்ன, யாராவது வெறுப்பு கலந்த குரலில் பேசுகிறார்களா...இவை ஒற்றர்களிடம் அவரது அன்றாடக்கேள்விகள். ஒற்றர்கள் இதற்குரிய பதிலைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். விஜயன், பத்திரன், தந்தவக்கிரன், சுமகாதன், சுராஞ்சி, காளியன் ஆகியோர் ராமபிரானின் ஒற்றர்கள். நகைச்சுவை ததும்ப பேசுவதிலும் இவர்கள் கில்லாடிகள். இவர்கள் சொன்ன நகைச்சுவை கதைகளைக் கேட்டு ராமன் கலகலவென சிரித்துக் கொண்டிருந்தார்.
நகைச்சுவை வாழ்க்கைக்கு ஒரு நல்ல மருந்து. சிரிக்க சிரிக்க பேசத்தெரியவில்லையே என வருத்தப்படுபவர்கள் அதிகம். ஆனால், சிரிப்பதற்கு பழக்கம் தேவையில்லை. சிரிக்க சிரிக்க பேசுபவர்கள் அதிகம் இருந்தாலே போதும்! சிரிப்பு மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குகிறது. மகிழ்ச்சியான மனநிலை சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. நகைச்சுவை புத்தகங்களைப் படிப்பது, சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகியவை நல்ல மருந்து. அதே நேரம் கேலியும், கேளிக்கையுமே வாழ்க்கையாகி விடக்கூடாது என்பதிலும் ராமன் கவனமாக இருந்தார். ஒற்றர்களே! இந்த பரிகாசக்கதைகள் ஒருபுறம் கிடக்கட்டும். நாட்டு மக்கள் என்ன சொல்கின்றனர்? அதை முதலில் சொல்லுங்கள். நாடாள்பவனுக்கு முதலில் மக்கள். அதன்பிறகு தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டும். சொல்லுங்கள், என்று துரிதப்படுத்தினார். அவர்கள் ராமனிடம், அண்ணலே! தங்கள் ஆட்சியில் என்ன குறை இருக்கிறது? கடலின் நடுவில் இருக்கும் இலங்கை மாநகரை தாங்கள் வெற்றி கொண்டதைப் பற்றி மக்கள் வியப்புடன் பேசுகிறார்கள். அசுரர்களை அழித்ததைப் பற்றி வீரம்பொங்க உரையாடுகிறார்கள். தேவர்களின் தலைவனான இந்திரனின் கொடும் பகைவனான இந்திரஜித்தைக் கொன்றது பற்றியும், அதிசயத்தின் வடிவமான பத்து தலைகளைக் கொண்ட ராவணனை அழித்தது பற்றி பேசுகிறார்கள். எங்கள் ராமனை வெல்வார் யார் என்று மார்தட்டி பேசுகிறார்கள், என்றனர். ராமன் அவர்கள் பேசுவதை கையசைத்து நிறுத்தினார். ஒற்றர்களே! நீங்கள் நிறைகளை மட்டுமே சொல்கிறீர்கள். தனது ஆட்சியின் நிறைகளைக் கேட்டு சந்தோஷம் கொள்வது மட்டும் அரசனின் பணியல்ல. அதன் குறைகளைக் கேட்டு, அதனை நீக்கி, நன்மை செய்பவனே அரசன். எனவே, நீங்கள் கேட்ட குறைகளையும், மனம் கூசாமல், அதைரியம் கொள்ளாமல் சொல்லுங்கள், என்று வற்புறுத்தினார். அந்நிலையில் அவர்கள் தாங்கள் கேட்ட ஒரு இழிசொல்லை ராமனிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.ஸ்ரீராமா! ஆருயிர் மன்னவரே! நாங்கள் கேட்ட ஒரு விஷயத்தைச் சொல்கிறோம். அதுகேட்டு தாங்கள் வருத்தம் கொள்ள வேண்டாம். புத்தியற்றவர்கள் பேசும் பேச்சு அது, என்றதும், ராமன் உஷாராகி விட்டார்.
உம்...அதை விரைந்து சொல்லுங்கள், என்றார். ராமா! எங்கள் அன்னை சீதாதேவியார், இலங்கையில் ராவணனின் இடத்தில் ஒரு வருடகாலம் இருந்தார். இப்படி தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவளை, அவன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாமே! இது தெரிந்தும், நாடாளும் மன்னன் ஒருவன் அவளுடன் வாழலாமா? குடிமக்களுக்கு ஒழுக்கத்தை கற்பித்து முன்மாதிரியாக இருக்க வேண்டிய மன்னன் ஒருவனே இப்படி இருந்தால், அது எவ்வகையில் நியாயம்? என கேட்கிறார்கள், என்றனர். இத்தனை நேரமும் பரிகாசக்கதைகளைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த ராமனின் கரிய முகம் சிவந்து விட்டது. அது கோபத்தின் வெளிப்பாடா, வெட்கத்தின் பிரதிபலிப்பா...ஒற்றர்கள் குழம்பினர். மனதில் வேல்போன்று தைத்த இந்த கடும் சொற்களைத் தாங்க முடியாத ராமபிரான், சைகையாலேயே ஒற்றர்களை அனுப்பிவிட்டு, தம்பியர்கள் இருக்குமிடம் சென்றார். தம்பியரே! என் உயிர் நீங்கள். என் பலமும் நீங்கள் தான். நண்பர்களும் நீங்களே! நீதி, தவம், சகோதரர்கள், அரசாங்கம், இன்பம் எல்லாமே நீங்கள்! இப்படி எல்லாமே எனக்கு நீங்கள் தான் என்றாகி விட்ட பிறகு உங்களிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? ஏனெனில், எனக்கு புகழ் கிடைத்தால் அதுவே உங்கள் புகழ். என் மீது பழிவந்தால் அது உங்களுக்கும் பழிதானே. எனவே, நான் கேள்விப்பட்ட ஒன்றை வெளிப்படையாகச் சொல்கிறேன், கேளுங்கள், என்றார். அண்ணனின் முகபாவம், பீடிகை ஆகியவை அவர் ஏதோ சொல்லக்கூடாததைச் சொல்லப் போகிறார் என்பதை தம்பிகளுக்கு உணர்த்தி விட்டது. என்ன அண்ணா? என்றனர் அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன். உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் கற்பின் வலிமையை நிரூபித்தாள். ஆனால், உலகத்தார் அதை ஏற்க மறுக்கின்றனர். அவள் மீதும், என்மீதும் சொல்லப்படும் பழிச்சொல் என் இதயத்தை வாட்டுகிறது, என்றவர் நடந்ததைச் சொன்னார். சகோதரர்கள் இதுகேட்டு மிக துன்பமடைந்தனர். கைகேயி, ராமபிரானை நாட்டை விட்டு அனுப்பியதை விட, அவர்களுக்கு இந்த தகவல் மிகக்கொடுமையாக இருந்தது.


லவகுசா பகுதி-4


உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் கற்பின் வலிமையை நிரூபித்தாள். ஆனால், உலகத்தார் அதை ஏற்க மறுக்கின்றனர். அவள் மீதும், என்மீதும் சொல்லப்படும் பழிச்சொல் என் இதயத்தை வாட்டுகிறது, என்ற ராமன் அரசவையில் ஒற்றர்கள் தன்னிடம் சொன்ன தகவலைக் கூறினார். சகோதரர்கள் இதுகேட்டு மிக துன்பமடைந்தனர். கைகேயி, ராமபிரானை நாட்டை விட்டு அனுப்பியதை விட, அவர்களுக்கு இந்த செய்தி மிகக்கொடுமையாக இருந்தது. அவர்களால், ராமனிடம் ஏதும் பேச முடியவில்லை. அண்ணன் சொல் கேட்டு நடக்கும் அவர்கள், இதனால் தங்கள் அண்ணியாருக்கு என்னாகப் போகிறதோ என்றே மனதுக்குள் கலங்கி நின்றனர். ராமன் தொடர்ந்தார். லட்சுமணா! உலகம் மூன்றையும் கலக்கு என்று சொன்னாலும் கூட கணப்பொழுதில் அதை செய்து முடித்திடும் மனோபலம் பெற்றவன் நீ. உன் அண்ணியை தவமுனிவர்கள் வாசம் செய்யும் காட்டில் சென்று விட்டு வா, என்றார். லட்சுமணன் வாய் பொத்தி நின்றான். ஏதும் பேசினால் பயனேதும் இருக்காது என்பதை அவன் அறிவான். விஷயம் அமைச்சர் சுமந்திரருக்கு தெரிய வந்தது. அவர் தசரதரின் அரசாங்கத்தில் இருந்தே முதல் அமைச்சராக இருப்பவர். கைகேயி உள்ளிட்ட பட்டத்து ராணிகளையே எதிர்த்து வாதிடுபவர். திறமைசாலி. அவருக்கும் தெரியும். ராமன் ஒரு வார்த்தையை சொன்னால் சொன்னது தான் என்பது. மனஉறுதியில் ராமன் கைகேயிக்கு சமமானவர். ஆம்....ராமனைப் பிரிந்தால் தசரதரின் உயிர்போகும் என்று தெரிந்திருந்தும் பிடிவாதம் பிடித்தவள் அல்லவா! எல்லோரும் யோசித்துக் கொண்டு நிற்பதை உணர்ந்த ராமன், இதில் யோசிக்க ஏதுமில்லை. நான், சீதைக்கு ஒன்றும் கேடு செய்யவில்லை. அவள் ஏற்கனவே என்னிடம் காட்டுக்குச் சென்று ரிஷிகளைத் தரிசிக்க வேண்டும் என்றாள்.
நானும் சரியென ஒப்புக்கொண்டேன். இப்போது, அவள் சொன்னதைத்தான் செய்கிறேன். எனவே லட்சுமணா! உம்...புறப்படு, உன் அண்ணியுடன். வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் அவளை விட்டுவிட்டு நீ வந்துவிட வேண்டும், என்றார் அதட்டலுடன். பரந்து விரிந்த முடியையுடைய வெள்ளைப்புரவிகள் பூட்டிய தேர் அரண்மனை வாசலில் வந்து நின்றது. மாமியார் கவுசல்யா, மருமகளை வழியனுப்ப வந்தாள். மகளே! பத்திரமாக சென்று வா. நாளை நீ திரும்பி விட வேண்டும். வயிற்றில் அயோத்தியின் வாரிசை சுமக்கும் நீ மிகுந்த கவனத்துடன் காட்டிற்குள் செல். அது சரி...உன் மைத்துனன் அருகில் இருக்கும்போது, உனக்கேதும் ஆபத்து ஏற்படாது என்பதை அறிவேன், என்று புன்னகையுடன் சொன்னாள், நடந்து கொண்டிருக்கும் விபரீதத்தை அறியாமலே! சீதையை அழைக்க அவள் தங்கியிருந்த மாளிகைக்குச் சென்றான் லட்சுமணன். ஒளிவீசும் ரத்தினமாலை பளபளக்க காத்திருந்த அவள், வா லட்சுமணா! பயணத்துக்கு தயார் ஆகிவிட்டேன். புறப்படலாமா? என்றாள். அவளது கமலத் திருப்பாதங்களில் விழுந்து வணங்கிய லட்சுமணன், புறப்படலாம் அன்னையே என்றார். அவள் தேரில் ஏறி அமர்ந்தாள். அப்போது, சீதையின் வலக்கண் துடித்தது. பெண்களுக்கு, வலதுகண் துடிப்பது கெட்ட சகுனத்திற்கு அறிகுறி. அதேநேரம் வயிற்றில் ஏதோ எரிச்சல் ஏற்பட்டது. உடலில் ஏதோ ஒரு நடுக்கம் தெரிந்தது. ஊருக்குப் புறப்படும் வேளையில், பூஜை குறுக்கே போய்விட்டாலே, நம் உள்ளம் நடுங்கி விடும். சீதாதேவிக்கு இத்தனை கெட்ட அறிகுறிகளும் தெரிந்ததால், அவள் ரொம்பவே கலங்கி, லட்சுமணா!கிளம்பும் போதே, கெட்ட சகுனங்கள் தோன்றுகின்றன. எனக்கு ஏற்பட்ட இந்த தீய சகுனங்கள், என்னென்ன விளைவைத் தரப்போகிறதோ தெரியவில்லை. அதற்காக என்ன செய்ய முடியும்? விதி மிகவும் வலிமையான ஒரு வஸ்து.
அது என்ன நாடகம் நடத்தப்போகிறது என்பதை யாரும் அறியமாட்டார்கள். அதை அனுபவித்து தானே ஆக வேண்டும். இந்த விதி தன் கொடுமையான கரங்களை நீட்டி, என்னை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், என் கணவருக்கோ, என் கொழுந்தர்களான உங்களுக்கோ, உங்கள் மனைவியருக்கோ, எனது மாமியார்களுக்கோ, என் தாய் சுனைநாவுக்கோ, தந்தை ஜனகருக்கோ, பிற உறவினர்களுக்கோ, இதற்கெல்லாம் மேலாக, என் மேல் அன்பைப்பொழியும் அயோத்தி வாழ் மக்களுக்கோ துன்பம் வந்து விடக்கூடாது, என்றவள், தெய்வமே! இந்த சகுனங்களால் அவர்களுக்கு எந்த தீங்கும் வந்து விடக்கூடாது, என்று கடவுளையும் வணங்கிக் கொண்டாள். எவ்வளவு உயர்ந்த பண்பு பாருங்கள்! ராமாயணத்தை படி படி என்கிறார்களே! அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்பவர்கள் சீதாதேவியின் இந்த உயரிய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாமியார், கொழுந்தனார்களுக்கு ஆதரவாக இன்றைக்கு உலகில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்? எங்கும் சண்டையும் சச்சரவும் தானே நடக்கிறது. சீதாதேவி பட்டபாடுகளைப் படித்தால், பெண்களுக்கு பொறுமை குணம் வளரும். சிறந்த பண்புகளெல்லாம் வந்து ஒட்டிக்கொள்ளும். லட்சுமணன் அவளது வார்த்தை கேட்டு திகைப்பும், மகிழ்ச்சியும் ஒருசேர தாக்க, இப்படி ஒரு உத்தமியை தன் அண்ணியாகப் பெற்றதற்காக பெருமை பொங்க அவளது திருவடி நோக்கி மீண்டும் ஒருமுறை வணங்கி, அன்னையே! நீங்கள் சொன்னது போல, நம் சுற்றத்தாருக்கும், நாட்டு மக்களுக்கும் எந்த ஆபத்தும் வராது. அவர்கள் சுகமாக வாழ்வார்கள், என்று சொல்லி விட்டு, குதிரைகளை விரட்டினான். அந்த பெரிய தேர் காட்டை நோக்கிச் சென்றது.


லவகுசா பகுதி-5


அந்த தேரில் அமைச்சர் சுமந்திரரும் சென்றார். தேர், கங்கைக்கரையை அடைந்தது. தேர் அங்கு சென்றதோ இல்லையோ, குனிந்த தலை நிமிராத லட்சுமணனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. சீதை பதைபதைத்து போனாள். லட்சுமணா! எதற்காக வருத்தப்படுகிறாய்? உன் கண்கள் கண்ணீர் சிந்துகிறது என்றால், ஏதோ கெடுதலின் அறிகுறியாகத்தான் இருக்கும். மறைக்காமல் சொல், என்றாள். என்ன சொல்வான் லட்சுமணன். அண்ணி, உங்களை அண்ணன் காட்டில் தனியாக விட்டு வரச்சொன்னான் என்பதை எப்படி அவளிடம் சொல்வான்! அழுகை முட்டியதில், வார்த்தைகள் வர மறுத்தன.லட்சுமணா! தூய்மையின் வடிவமானவனே! அழகான இந்தக் கங்கை நதியைக் கண்டவர்கள் கையெடுத்து வணங்குவார்கள். தங்கள் பாவம் தீர மனம் மகிழ்ந்து நீராடுவார்கள். அப்படியிருக்க, நீயோ, இந்த நதியைப் பார்த்து அழுகிறாயே! மேலும், நீ கவலைப்படும் அளவுக்கு, உனக்கு துன்பம் செய்யக்கூடியவர்களும் இந்த உலகத்தில் பிறக்கவில்லையே, என்றாள்.அண்ணியாரே! வேறொன்றுமில்லை. நான் பிறந்த நாளில் இருந்து நேற்று வரை என் அண்ணனைப் பிரிந்ததே இல்லை. இப்போது தான் முதன்முறையாகப் பிரிந்து தங்களுடன் வருகிறேன். அண்ணனை நினைத்துக் கொண்டேன். அதனால் அழுகை வந்து விட்டது, என்றான். லட்சுமணா! இதற்கா சிறுபிள்ளை போல் அழுவது! இவ்வுலகில் அறம் தழைக்க பாடுபடுபவர்கள் முனிவர்கள். அவர்களின் திருவடிகளைப் பணிந்தால் புண்ணியம் கிடைக்கும். அந்தப் புண்ணியம் தீவினைகளை அறுத்துவிடும். மேலும், நாம் முன்பு இங்கு இந்த கானகத்தில் தங்கியிருந்த போது, எனக்கு உதவிசெய்த முனிபத்தினியர், அவர்களின் மகள்களுக்கு புடவை, ஆபரணம் முதலானவற்றைக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. அவற்றையெல்லாம் இந்த தேரில் கொண்டு வருவதை நீயும் அறிவாய். அவற்றைக் கொடுத்துவிட்டு, முனிவர்ளை வணங்கிவிட்டு, ஒரே நாளில் திரும்பி விடப் போகிறோம். இதற்காக கலங்காதே, என்றாள். உடனே தேரில் இருந்து இறங்கிய லட்சுமணன், அண்ணியை வலம் வந்து வணங்கி, தேவி! ஏழுலகையும் ஆட்சி செய்ய உரிமையுடையவளே! நான் சொல்வதைக் கேட்பீர்களா? என்றதும், அவனது வித்தியாசமான நடவடிக்கையைக் கண்ட சீதை, எதுவானாலும் தயங்காமல் சொல் லட்சுமணா, என்றாள்.
லட்சுமணனின் நாக்கு வறண்டது. உடல் சோர்ந்தது. முகம் களையிழந்தது. மனம் நடுங்கியது. தட்டுத்தடுமாறி வார்த்தைகளை உதிர்த்தான். உத்தமியே! உலகத்தின் தாயே! தூயவராகிய ஜனகரின் வேள்வித்தீயில் பிறந்தவளே! என் அண்ணன் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை உங்களுக்கு சொல்கிறேன். இந்த உலகம் இல்லாத ஒன்றை இருக்கிறது என்று சொன்னால், எல்லோருமே அதை நம்பி, ஆமாம்...இருக்கிறது என்றே சொல்வார்கள். இருக்கும் ஒன்றை இல்லை என்று உலகம் சொன்னால், நிச்சயம் அது இல்லை என்றாகி விடுகிறது. உலகம் இருக்கிறது என்று சொல்லும் விஷயத்தை, யாரோ ஒருவன் இல்லை என்று சொன்னால், அவனை பேயைப் பார்ப்பது போல பார்ப்பார்கள். அண்ணியாரே! தங்கள் விஷயத்திலும் அப்படியே நடந்து விட்டது. தங்களை ராவணன் கவர்ந்து சென்றான். அண்ணன் உங்களை மீட்டார். நீங்கள் நெருப்பில் குதித்து உங்களைத் தூயவர் என்று நிரூபித்தும் விட்டீர்கள். ஆனால், இதையெல்லாம் அயோத்தியில் உள்ளவர்கள் பார்க்கவில்லையே! அப்படி பார்க்காத யாரோ சிலர், தங்களைப் பற்றி குற்றம் சொல்லி பேசியிருக்கிறார்கள். மோகத்தின் காரணமாக, மாற்றானுடன் தங்கியிருந்தவளுடன்,  இந்த ராமன் வாழ்வதை விட செத்து விடலாமே என்பதே பேச்சின் சாரம். இதை ஒற்றர்கள் மூலம் அறிந்த அண்ணன் கொதித்து விட்டார். மக்களுக்கு விருப்பமில்லாத ஒருத்தியுடன் இணைந்து அரசாள முடியாது. எனவே, வால்மீகி முனிவரின் ஆசிரமம் அருகில் உங்களை நிரந்தரமாக விட்டு வரச்சொன்னார், என்றான். இதைக் கேட்டாளே இல்லையோ, சீதாதேவியின் காதுகளில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கோலை நுழைத்தது போல் இருந்தது. தேரில் இருந்து சரிந்து கீழே விழுந்து விட்டாள். வாய்களில் இருந்து வார்த்தைகள் வர மறுத்தது. அவள் தரையில் இருந்து எழ முயற்சித்தாள். நிற்க முடியவில்லை. சரிந்து சாய்ந்தாள்.
இந்த உலகத்திலேயே சீதாதேவிக்கு ஏற்பட்டது போன்ற துன்பம் யாருக்கும் ஏற்பட்டது இல்லை. யாராவது ஒரு பெண், என்னைப் போல் பாவம் செய்த ஒரு ஜீவனுண்டா? என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. ஏனெனில், சீதா திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்தாள். சில காலம் தான் மாமியார் வீட்டில் தங்கியிருந்தாள். உடனே காட்டுக்கு புறப்பட்டாயிற்று. அங்கும் சோதனை. கொடியவன் ராவணனிடம் சிக்கிக் கொண்டாள். ராவணனோ, அவளை இச்சைக்கு அழைத்தான். ஒருவனுக்கு துணைவியாக இருக்கும் நிலையில்,  இன்னொருவன் கூப்பிடுகிறான் என்றால், ஒரு பெண்ணின் மனநிலையைச் சொல்லவும் வேண்டுமோ? சதாசர்வகாலமும், ராமனின் திருநாமம் விழ வேண்டிய செவிகளில், அரக்கியரோ, ராவணனுடன் போய் வாழ் என்று வற்புறுத்தும் இழிவான சொற்களைப் பேசினர். அதைத் தாங்கிக்கொண்டாள். காட்டில் இருந்து மீண்டாள். கட்டிய புருஷனே அவளைத் தீக்குளிக்கச் சொன்னான். சொன்னது அவனளவில் நியாயம் என்றாலும், எந்தக் குற்றமும் செய்யாத சீதா, கணவன் தன் மீது சந்தேகப்பட்டானே என்று துடித்துப் போனாள். தீ கூட அவளைச் சுடவில்லை. ஆனால், வார்த்தைகள் சுட்டன. வீட்டுக்கு வந்தாள். பட்டாபிஷேகம் முடிந்து சில காலம் கணவனுடன் சுகவாழ்வு. இப்போது அவள் கர்ப்பிணி. அயோத்தியின் வாரிசுகளை சுமந்து கொண்டிருக்கும் அவளை, உலகம் சந்தேகிக்கிறதே என்பதற்காக நிரந்தரமாக ஒதுக்கி வைக்கிறான் ராமன். என்ன கொடுமையப்பா இது! அடியே சீதா! உன்னை நினைத்தால், எங்கள் கண்கள் அருவியைத் தானேடி கொட்டுகிறது! என்று நாமும் அவளோடு சேர்ந்து புலம்புவதைத் தவிர வேறென்ன சொல்வது!


லவகுசா பகுதி-6


சீதைக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியவில்லை. திடீரென எழுவாள். தன் இரு கைகளாலும் வயிற்றில் ஓங்கி ஓங்கி அடிப்பாள். ஐயோ! இதென்ன கொடுமை என்றபடியே மயங்கிச் சாய்வாள். ஒரு கட்டத்தில், அவள் அசைவற்றுக் கிடந்தாள். இந்த துயரத்தை விண்ணுலகில் இருந்து கண்ட தேவர்கள், அவள் இறந்து விட்டாள் என்றே முடிவு கட்டி கண் கலங்கினார்கள். அண்ணியார் இப்படி துவண்டு விழுந்தது கண்டு, லட்சுமணன் அலறினான். அவனும் கீழே புரண்டு புலம்பினான். சிறிதுநேரத்தில் சீதாதேவி கண் விழித்தாள். அம்மா, அப்பா, என் உயிர் போன்ற சிநேகிதிகளே! கேட்டீர்களா கதையை! தனக்கு தானே நிகர் என்ற பெருமையுடைய தசரத சக்கரவர்த்தியின் குமாரர் ராமபிரான், எனக்கு செய்த இந்தக் கொடுமையை நீங்கள் கேள்விப்பட்டால் துவண்டு போவீர்களே! என்ன செய்வேன்! ராமனின் ஆட்சி என்றாலே நல்லாட்சி என்று தான் பொருள். அந்த நல்லாட்சி நடத்துபவரின் மனைவியான எனக்கு மட்டும் ஏன் இந்த வனவாசத் தண்டனை? எதற்காக எனக்கு இந்தத் துன்பங்கள் வந்தன? என் மாமியார்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால், அவர்கள் கணமும் உயிர் வாழ மாட்டார்களே! என வருந்தி அழுதாள். மாமியார்- மருமகள் உறவுக்கு உதாரணம் நம் சீதாதேவி தான். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இல்லை. நம்மூர் பெண்கள் ஒரு மாமியாரை வைத்துக் கொண்டே, சமாளிக்க கஷ்டப்படுவார்கள். ஆனால், நம் சீதாதேவி மூன்று மாமியார்களை சமாளித்தவள். மூவரையும், அனுசரித்து நற்பெயர் பெற்றவள். மாமியார் இல்லாவிட்டால் மருமகள் சந்தோஷப்படுவாள். ஆனால், மருமகள் இல்லாவிட்டால் மாமியார்கள் உயிர் துறந்து விடுவார் என்றால், அது நம் சீதாதேவி இல்லத்தில் மட்டுமே நடக்கிற ஒரு விஷயம். இந்த நிகழ்வின் மூலம், மாமியார்- மருமகள்கள் வீட்டில் சண்டை போடாமல் ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ வேண்டுமென்பதை பெண்களுக்கு சீதாதேவி உணர்த்துகிறாள். இப்படி தவித்த அண்ணியாருக்கு லட்சுமணன் ஆறுதல் சொன்னான்.
தாயே! நீங்கள் முற்பிறவியில் செய்த நல்வினையால் என் சகோதரனை கணவனாக அடைந்தீர்கள். இப்பிறப்பில் என்ன தீவினை செய்தீர்களோ அவரைப் பிரிந்து விட்டீர்கள். நல்வினை, தீவினை இரண்டுமே ஏதோ ஒரு பலனைத் தருகிறது. நல்வினையால் நல்லதும், தீவினையால் தீயதும் என்று நடக்காமல் இருக்கிறதோ, அந்நாளே மனித வாழ்வில் பொன்னாள். அப்படி ஏதும் நடக்காத ஒரு நிலையை மனிதகுலம் அடைய வேண்டுமானால், அதற்கு தவமே கண்கண்ட மருந்து. ஆம்...நீங்கள் இறை வழிபாட்டில் ஆழ்ந்து விடுங்கள். தவக்கோலம் பூணுங்கள். பெருந்தவ முனிவர்கள் பலர் இந்தக் காட்டில் வாழ்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் சேவை செய்ய வேண்டும். உன் கணவனை மனதில் நினைத்து உயர்ந்த தவமிருக்க வேண்டும், என்றான். சீதை அவனிடம், லட்சுமணா! ஒரு பெண்ணின் நிலையைப் புரிந்து கொள்ளாமல் பேசாதே. இதற்கு முன் உன் அண்ணனுடன் நான் காட்டில் இருந்த போது, எத்தனையோ முனிவர்களைத் தரிசித்து ஆசி பெற்றோம். இப்போது, அவர்களை நான் தனித்துப் பார்த்தால், ஏனடி உன் கணவன் உன்னைப் பிரிந்தான்? என்று கேட்டால், நான் அவர்களிடம் என்ன பதில் சொல்வேனேடா? சரி போகட்டும். நீ நாடு திரும்பு. உன் அண்ணனிடம், என்னைச் (சீதா) சொல்லிக் குற்றமில்லை, உங்களைச் சொல்லியும் குற்றமில்லை, எல்லாம் என் விதி. அது மட்டுமல்ல! உலகம் ஒரு பழியைச் சொன்னது என்பதற்காக, அதையும் ஏற்று என்னைப் பிரிந்தாரே உன் அண்ணன்! இப்படி பழிக்கு அஞ்சுகிற உன் அண்ணனுடன் வாழ்வதை விட அவரை பிரிந்திருப்பதே மேல் என நான் சொன்னதாகச் சொல் என்று கோபத்தோடு சொன்னாள். ஒரு பெண் பொறுமையாக இருக்கலாம். பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அவளது கற்பின் மீது களங்கம் சுமத்தப்படுகிறது என்றால் அவள் கொதித்து எழுந்து விட வேண்டும் என்பதற்கு சான்றாக, பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் புத்திரி சீதாதேவி இவ்விடத்தில் பெண்ணினத்துக்கு தகுந்த புத்திமதி சொல்கிறாள்.
அத்துடன் அவள் நிறுத்தவில்லை. லட்சுமணன் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு வார்த்தையை உதிர்த்தாள். ராமாயணத்தின் உத்தர காண்டத்திலேயே உணர்ச்சி மிக்க கட்டம் இதுதான். ஏ லட்சுமணா! நான் எப்படிப்பட்டவள் என உனக்குத் தெரியும். நான் கர்ப்பமாகி நான்கு மாதங்கள் தான் ஆகின்றன. எங்கே என்னைப் பார். கர்ப்பவதியான என் மேனி வருந்தாத வகையில் அந்தப் பார்வை இருக்கட்டும், என்றாள் ஆவேசமாக. அண்ணியாரின் திருவடியை மட்டுமே லட்சுமணன் அறிவான். அவள் முகத்தை அவன் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு மரியாதை. உலகில் எந்த ஒரு அண்ணிக்கும், எந்த ஒரு கொழுந்தனும் கொடுக்காத ஒரு பாக்கியம். அப்படிப்பட்ட சௌபாக்கியவதியான சீதாதேவி, தன் கொழுந்தனிடம் இப்படி கேட்கிறாள். ஏன் கேட்டாள் தெரியுமா? இந்த களங்கற்ற முகமா இப்படி ஒரு தவறைச் செய்திருக்கும் என்று அவனாவது தெரிந்து கொள்ளட்டும். அதற்காக வருந்தட்டும் என்று தான். இதைக் கேட்டானோ இல்லையோ, லட்சுமணன் கண்ணீர் வடித்தான். தரையில் விழுந்து தலையில் அடித்துக் கொண்டு புலம்பினான். தாயே! இப்படி ஒரு கொடிய சொல்லை உங்கள் வாயால் கேட்க, நான் என்ன பாவம் செய்தேனோ? இதுவரை இப்படிப்பட்ட வார்த்தைகள் உங்கள் வாயில் இருந்து வந்ததும் இல்லையே! இன்று ஏன் வந்தன?  என் சகோதரன் உங்கள் கைத்தலம் பற்றிய நாளில் இருந்து இன்று வரை உன் முகம் பார்த்தறியாதவன் நான். உங்கள் திருவடிகள் மட்டுமே எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட எனக்கு உங்கள் திருமேனியைப் பார்க்கும் துணிச்சல் எப்படி வரும்? யோசித்து தான் பேசினீர்களா? என்றான் கண்ணீர் ஆறாய்ப் பெருக. பின்பு சிரமப்பட்டு எழுந்தான். தலை குனிந்தபடியே அண்ணியார் அருகில் சென்றான். அண்ணியை அவன் பார்த்தானா?


லவகுசா பகுதி-7



எதற்கும் கலங்காத அந்த மாவீரன் லட்சுமணன், அப்போதும் குனிந்த தலை நிமிரவில்லை. அண்ணியாரே! தாங்கள் களங்கமில்லா மதிமுகம் கொண்ட என் சகோதரனின் மனைவி. உங்கள் முகம் பார்த்து பேசும் தகுதி எனக்கில்லை. எனக்கு வார்த்தைகளும் வரவில்லை. நான் செய்த பாவத்தின் பலனாக, தங்கள் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்கும் துர்பாக்கியவான் ஆனேன், என்றவன், அவளது திருவடியை வணங்கிவிட்டு, கங்கையைக் கடந்து அயோத்திக்கு விரைந்தான். அவனது தேர் மறைந்தது கண்டு, சீதை கதறினாள். ஐயோ! எனக்கு இதற்கு முன் காட்டில் பாதுகாப்பாக இருந்த இந்த இளையவனும் போய்விட்டானே! நான் பாதுகாப்பற்ற பதுமை ஆகிவிட்டேனே, என அரற்றினாள். ஏ விதியே! இலங்கையில் கொடிய ராவணனின் சிறையில் அடைபட்டுக் கிடந்தது போதாதென்று, இப்போது பெரும்பழியை என் மீது சுமத்தி, இங்கே கொண்டு வந்து சேர்த்தாயோ? இந்த துயரத்திற்கு என்று தான் விடிவு? இந்தப் பிறவியில் உன்னைத் தவிர வேறு யாரையும் தொடமாட்டேன் என எனக்கு சத்தியம் செய்த ராமனே, என் மீது களங்கம் சுமத்தி கானகத்தில் விடச் செய்தாயே! இன்னும் ஏதாவது செய்ய பாக்கி வைத்திருக்கிறாயா? தேவர்களாலும் உன்னை வெல்ல இயலாது என்பதை நானறிவேன். ஆனாலும், மனைவி என்ற உரிமையில்லாவிட்டாலும், ஒரு பெண் என்ற இரக்கசிந்தனையைக் கூட அந்த ராமனின் மனதில் இருந்து எடுத்து விட்டாய்! இப்படி கொடுமை புரிந்த ராமனைப் பற்றி வாய் திறவாத இந்த உலகத்தை என் மீது மட்டும் களங்கம் சுமத்த வைத்தாயே! அது ஏன்? என்றெல்லாம் ஆவேசப்பட்டாள்.
சீதாவின் மனதில் பல எண்ணங்கள் ஓடின. பெண்ணாகப் பிறந்தவளை கணவன் கைவிட்டு, பிறந்த வீட்டுப்பக்கம் போனால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உறவினர் வீடுகளுக்குச் சென்றால் என்ன தப்பு செய்தாய்? எனக் கேட்டு பழி போடுவார்கள். ஒரு கட்டத்தில் அவள், இப்படி பழியுடன் வாழ்வதை விட, என் உயிர் போகட்டும்,  எனக் கதறினாள். அந்த சமயத்தில் வால்மீகி முனிவரின் சீடர்கள் சிலர் அங்கே வந்தனர். ஒரு பெண் தனிமையில் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து இரக்கம் கொண்டனர். அவர்கள் உடனடியாக குருவிடம் சென்று, குருவே! தேவலோகப் பெண்ணா, பூலோகப்பெண்ணா என்று கணிக்க முடியாத அளவிற்கு பேரழகு கொண்ட ஒரு பெண்மணி, நம் கானகத்திற்கு வந்திருக்கிறாள். அவள் அழுது கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம். தாங்கள் தான் அவளுக்கு உதவி செய்ய வேண்டும், என்றனர். வால்மீகி அவர்களுடன் அவசரமாக அவள் நின்ற இடத்திற்குச் சென்றார். பெண்ணே! அழுவதால் பயன் ஏதும் ஏற்படப்போவதில்லை. மனத்துயரை விடு. அம்மா! நீ யார் என்பதை நான் அறிவேன். நீ சீதாதேவி. ராம பத்தினி, தூய்மையான கற்புநெறியுடையவள், ஜனகபுத்திரி. இதையெல்லாம், யோக சமாதியில் இருந்து உணர்ந்து கொண்டேன். உன் கணவன் உன்னைக் காட்டில் விடவில்லை. நீ என்னுடன் தங்கியிருக்க வேண்டுமென நினைத்து இங்கே விட்டிருக்கிறான் என நினைத்துக் கொள். நான் தங்கியுள்ள ஆஸ்ரமத்திற்கு வா, என்றார். அவர் மேலும், அழகு மங்கையே! எங்கள் ஆஸ்ரமத்தில் பல பெண்கள் தவ வேடம் பூண்டு அரிய தவம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் உன்னைப் பார்த்தால் அளவற்ற ஆனந்தமடைவார்கள். உனக்கு பாதுகாப்பும் கிடைக்கும். கவலையை விடுத்து வா, என்றார்.
வால்மீகி முனிவர் சொன்னதைக் கேட்ட சீதை, அவரது இணையடியில் வீழ்ந்த வணங்கி, அவருடன் கிளம்பி விட்டாள். ஆஸ்ரமத்திற்கு சென்றதுமே, அங்கிருந்த பெண்கள் அவளைப் பார்த்து, இப்படியும் ஒரு பேரழகியா? என வியந்தனர். ஏழையாக இருந்தவன் ஒரே நாளில் பணக்காரன் ஆனது போல், திருமகளே நம் ஆஸ்ரமத்திற்கு வந்திருக்கிறாளோ, ஒருவேளை தேவர்களால் சபிக்கப்பட்ட தேவலோக பெண்ணான இவள், ஏதோ ஒரு சாபத்தால் பூமியில் விழுந்து விட்டாளோ என பெருமை பொங்க பேசினார்கள். அத்துடன், அவளது முகத்தில் ஏதோ ஒரு வேதனை ரேகை ஓடுகிறது என்பதையும் அவளது முகக்குறிப்பால் உணர்ந்து கொண்டனர். அப்போது வால்மீகி அவர்களிடம், குழந்தைகளே! இவளது சரிதத்தைக் கேளுங்கள். இவள் கடல்சூழ்ந்த இலங்கையை அழித்த ராமனின் மனைவி. எந்த நிலையிலும் யார் மீதும் கோபப்படாத மிதிலை மன்னன் ஜனகனின் புத்திரி. இவளது பெயர் சீதா. இவளது கணவன் இவளை ஒதுக்கி வைத்து விட்டான். அதன் காரணமாக இங்கு வந்திருக்கிறாள். இவளுக்கு இவள் அனுசரணையாக இருங்கள், என்றாள். அந்த மங்கையர் அவளைத் தேற்றி, பரிவுடன் ஒரு குடிலுக்குள் அழைத்துச் சென்றனர். இந்நேரத்தில் லட்சுமணனும், அமைச்சர் சுமந்திரரும் அயோத்தியை அடைந்திருந்தனர். ராமனைச் சந்தித்த லட்சுமணன், அண்ணா! தாங்கள் சொன்னபடியே அண்ணியாரை கானகத்தில் விட்டேன். விதி யாரை விட்டது? இந்த உலகத்தார் பழிசொன்னார்களே என்பதற்காக, தாங்கள் அண்ணியாரைப் பிரிந்தீர்கள். இதற்காக, அந்த உலகத்தை நொந்து பயனில்லை. அண்ணியாரைப் போன்ற குணவதி பூமியில் யாருமில்லை. இருப்பினும், அவருடன் வாழக் கொடுத்து வைக்காத தாங்கள் விதியைத் தவிர வேறெதையும் நொந்து கொள்ள வேண்டாம், என்றான். காட்டில் இருந்த சீதை கர்ப்பஸ்திரீ என்பதால், அவளை தவமங்கையர் பொறுப்புடன் கவனித்துக் கொண்டனர். ஒருநாள் இரவில், சீதாதேவிக்கு பிரசவ அறிகுறி ஏற்பட்டது. தவமங்கையர் மிக்க கவனத்துடன் பேறுகாலம் பார்த்தனர். அவளுக்கு செந்தாமரைக் கண்களுடனும், செவ்வாயும் கொண்ட இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இரட்டைக்குழந்தைகள் பிறந்தது கேட்டு, வால்மீகி மகிழ்ந்தார். சீதாவை சென்று பார்த்து ஆசிர்வாதம் செய்தார். குழந்தைகளின் அழகை ரசித்தார். மைவண்ணனாகிய ராமன், எத்தகைய சர்வ லட்சணங்களும் பொருந்தியவனோ அதுபோன்றே குழந்தைகளும் மிகுந்த அழகுடன் திகழ்ந்தனர்.


லவகுசா பகுதி-8


குழந்தைகள் பிறந்தால் அவற்றை பூதங்களும், பிசாசுகளும் அணுகும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இப்போதும் கூட இருக்கிறது. இதற்காகத்தான், குழந்தையின் இடுப்பில் மந்திரித்த கயிறு கட்டுவது வழக்கமாக இருக்கிறது. வால்மீகி இருக்கும் ஆஸ்ரமத்தில் பூத பிசாசுகளுக்கு வேலையே கிடையாது. ஆனாலும், குழந்தைகள் மீது கொண்ட அன்பின் காரணத்தால், வால்மீகி முனிவர் மந்திரங்களை ஓதினார். ஒரு குழந்தையின் உடலை குசத்தால் துடைத்து சுத்தம் செய்தார். குசம் என்றால் தர்ப்பைப் புல். மற்றொரு குழந்தையை லவத்தால் துடைத்தார். லவம் என்றால் பசுவின் வால் முடி. இப்படி லவம், குசத்தால் துடைக்கப்பட்டதால் இந்தக் குழந்தைகள் லவன், குசன் என்று பெயர் பெற்றனர். இவர்களை லவகுசர் என்று அழைப்பது வழக்கமாயிற்று.இவ்வாறு துடைத்ததன் மூலம், கண்ணுக்கு தெரியாத தீயசக்திகள் குழந்தையை அணுகாது என நம்பினார் வால்மீகி. அது மட்டுமல்ல, ராமன் மீது கொண்டிருந்த பாசமும் ஒரு பக்கம் அவரை இவ்வாறு செய்யச்செய்தது. அரண்மனையிலே இந்தக் குழந்தைகள் பிறந்திருந்தால், என்னென்னவோ திருஷ்டி கழிப்புகள் எல்லாம் நடந்திருக்கும். அதையெல்லாம் இங்கேயே செய்ய வால்மீகியாலும் முடியும். இருப்பினும், முனிவராகிய அவர் சாஸ்திரத்துக்கு உட்பட்ட மந்திரங்களைச் சொல்லியே குழந்தைகளைப் பாதுகாத்தார்.
லவகுசர் பிறப்பதற்கு சிலநாட்கள் முன்னதாக, அயோத்தியில் ராமபிரானை சில முனிவர்கள் சந்தித்தனர். அவர்கள், ஸ்ரீராமா! லவணன் என்ற அரக்கனின் தந்தை மது, தான் செய்த தவத்தால், சிவபெருமானின் சூலத்தைப் பெற்றான். அதை தன் மகனின் பாதுகாப்புக்காக கொடுத்தான். தனக்கு ஆபத்து வந்தால் மட்டுமே, அதைப் பயன்படுத்த வேண்டிய அவன், தேவையில்லாமல் சூலமெய்து எங்களை வதைக்கிறான். எங்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க உன்னை விட்டால் யாருமில்லை. அயோத்தியை விட்டால் வேறு புகலிடம் ஏது? என்றனர். ராமபிரான் கொதித்தெழுந்தார். முனிவர்களே! கவலை கொள்ளாதீர்கள். உங்களுக்கு இனி அச்சம் தேவையில்லை. நீங்கள் தொடர்ந்து யாகத்தையும், தவத்தையும் நடத்துங்கள். லவணனை நான் விரைவில் எமலோகம் அனுப்புவேன், என்ற ராமன், தம்பிகளுடன் இதுபற்றி ஆலோசனை செய்தார். லட்சுமணன் நான் போகிறேன், காட்டுக்கு என்றான். உடனே பரதன், வேண்டாம் அண்ணா! இவன் உன்னோடு பதினான்கு ஆண்டுகள், கண் இமைக்காமல் பட்ட துன்பம் போதாதா? அதிகாயனையும், இந்திரஜித்தையும் கொல்வதற்காக எடுத்த சிரத்தை போதாதா? நான் போகிறேன், என்றான். அப்போது சத்துருக்கனன், இருவரும் வேண்டாம். நீங்கள் காட்டில் இருந்து திரும்பும் வரை நாட்டைக் காக்கும் அறப்பணியில், உங்களை நினைத்து கண்ணீர் வடித்தபடியே இருந்த பரதன் அண்ணா ஏற்கனவே களைத்துப் போயிருக்கிறார். அவர் வேண்டாம், நான் போகிறேன், என்றான்.
தம்பியரின் ஒற்றுமை கண்டு ராமன் மகிழ்ந்தார். சத்ருக்கனா! நீ சொல்வதே சரி. மேலும், போர்க்களத்தில் உன்னை வெல்ல வல்லவன் யாருமில்லை. நீ லவணனைக் கொன்று முனிவர்களைக் காப்பாயாக, என்றார். சத்ருக்கனன் காட்டிற்கு படைகளுடன் புறப்பட்டான். அவன் சென்ற தேர், வால்மீகி முனிவர் தங்கியிருந்த ஆஸ்ரமத்தின் அருகில் நின்றது. வால்மீகி முனிவரை பார்த்து, அவரிடம் ஆசி பெற்றான். அவர் மூலமாக சீதாப்பிராட்டி, அவரது ஆஸ்ரமத்தில் தங்கியிருக்கும் விபரத்தையும், அண்ணியாருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதையும் அறிந்து மகிழ்ச்சியடைந்தான். அதேநேரம் இந்த குழந்தைகள் அயோத்தியில் பிறந்திருந்தால் எந்தளவுக்கு நாட்டு மக்கள் மகிழ்ந்திருப்பார்கள் என்பதையும் எண்ணி வேதனைப்பட்டான். பின்னர் அவன் தன் கடமையை நிறைவேற்றுவதற்காக மதுபுரி என்ற நகரை அடைந்தான். அந்த நகரைத்தான் லவணன் ஆண்டுகொண்டிருந்தான். அவனுடன் பயங்கரமாக போர் செய்து கொன்றான். மதுபுரியை 12 ஆண்டுகள் ஆட்சி செய்தான். பிறகு தனது படையை அங்கு நிறுத்திவிட்டு, அயோத்திக்கு புறப்பட்டான். ஒரு ஊரில் 12 வருடங்கள் தங்கிவிட்டால் அது அவரது சொந்த ஊராக மாறிவிடும் என்ற ஐதீகத்தை அக்காலத்தில் அரசர்களும், மக்களும் பின்பற்றினர். அந்த அடிப்படையில் மதுபுரியில் 12 ஆண்டுகள் தங்கியிருந்து, ஆட்சி செய்ததன்மூலம் மதுபுரி சத்ருக்கனனுக்கு சொந்தமாயிற்று. அயோத்தி சென்ற அவன் அண்ணனிடம் ஆசி பெற்றான். இதன்பிறகு ராமபிரான், ராஜசூயம் என்ற பெரிய யாகத்தை நடத்த முடிவு செய்தார். தன் தம்பிகளை அழைத்து வரும்படி தாமரைக்கண்ணனான அவன், வாயில் காவலனை அனுப்பி வைத்தான். அண்ணனின் உத்தரவு கேட்ட அரைக்கணத்தில் தம்பிகள் மூவரும் ராமனின் முன்னால் நின்றனர். அந்த தம்பிகளை அன்புடன் பார்த்த ராமபிரான், என் உயிர் போன்ற செல்வங்களே! உங்களைக்கொண்டு ராஜசூய யாகம் நடத்த முடிவெடுத்துள்ளேன், என்றார். ராஜசூயம் என்றால் பலநாட்டு அரசர்களையும் வென்று அவர்களுடைய தேசத்தை தன் வசத்தில் கொண்டுவர நடத்தப்படும் யாகமாகும். அடங்காத அரசர்களை அடக்குவதற்கு போர் தொடுக்க வேண்டியிருக்கும். அண்ணன் இப்படி யாகம் நடத்துவதில், சிறு மாற்றம் செய்ய தம்பி லட்சுமணன் விரும்பினான். அவன் ராமபிரானிடம், அண்ணா! நான் சொல்வதை தயவு செய்து செவி மடுத்துக் கேளுங்கள். எனது பேச்சு குழந்தையின் பேச்சைப்போல இருக்கலாம். ஆனாலும், ஒரு குழந்தையின் மழலைப்பேச்சு தாய்க்கு எப்படி பிடிக்குமோ, அதுபோல என் சொற்களையும் கேளுங்கள். பல நூல்களைப் படித்திருந்தாலும் அறிவேதும் இல்லாத இந்த சிறியவனின் சாதாரண சொற்களை தயவுடன் கேளுங்கள். இந்த உலகம் உங்களை மட்டுமே நம்பியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தாங்களே அரசர்க்கெல்லாம் அரசர். அப்படிப்பட்ட தாங்கள் அரசர்களுடன் சென்று போர் புரிந்து செல்வத்தை வாரிக்கொணர்வதைவிட, அஸ்வமேத யாகம் செய்தால் எளிமையும், உயிர்ச்சேதமும் குறையும். அதுபற்றி நான் தங்களுக்கு விளக்கமாக சொல்கிறேன், என்றான்.


லவகுசா பகுதி-9


ராமன் தலையசைத்தார். அண்ணா! விருத்திராசுரன் என்பவனை இந்திரன் கொன்றான். இதனால், அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் (கொலைப்பாவம்) ஏற்பட்டது. இதனைப்  போக்க அவன் அஸ்வமேத யாகம் செய்தான். இளன் என்ற அரசன், சிவபெருமானின் சாபத்தால் பெண்ணாக மாறினான். உமையம்மையிடம் அவன் சரணடைந்து பாவ விமோசனம் கேட்டான். அவள் அவனை ஆணாக ஒரு மாதமாகவும், பெண்ணாக ஒரு மாதமாகவும் இருக்க வரமளித்தாள். அப்படி பெண்ணாக இருந்த காலத்தில், அவள் புதனை மணந்து புரூரவா என்பவனைப் பெற்றான். தன் சாபம் நிரந்தரமாக நீங்க அவன் அஸ்வமேத யாகம் செய்தான். இப்படிப்பட்ட கொடிய பாவங்களையெல்லாம் போக்கும் இந்த யாகத்தையே தாங்கள் செய்யுங்கள், என்றான். உலகத்தையே காட்டிக்காக்கும் நாராயணனின் அவதாரமாகிய ராமபிரான், இதுபற்றி எல்லாம் அறிந்திருந்தாலும், லட்சுமணனின் வாயால் கேட்பதில் மகிழ்ந்தார். இதில் இருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாம் தெரிந்தவர் இவ்வுலகில் இல்லை. சிலர் சொல்வார்கள். இந்தப் பொருளைப் பற்றிய தகவல்கள் என் விரல் நுனியில் அடக்கம் என்று. ஆனால், படிக்காத பாமரன் ஒருவன், அதே பொருளைப் பற்றி ஏதோ ஒரு புதுத்தகவலைச் சொல்வான். அடக்கத்தின் சின்னமான ராமபிரானும் இதுபோன்ற புதுத்தகவல் எதையும் லட்சுமணன் சொல்லக்கூடுமே என்ற கருத்துடனேயே கேட்டார்.
அஸ்வமேத யாகம் என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். சர்வலட்சணங்களும் பொருந்திய குதிரையின் நெற்றியில், இந்தக் குதிரை இன்ன அரசனால் அஸ்வமேத யாகம் செய்வதற்காக அனுப்பப்பட்டது. இதைப் பார்க்கும் அரசர்கள், உடனடியாக தங்கள் நாட்டுக்கு கட்டுப்பட வேண்டும். மீறினால் போர் தொடுக்கப்படும் என எழுதப்பட்ட பட்டயத்தைக் கட்டி விடுவார்கள். குதிரை எந்த நாட்டுக்குள் நுழைகிறதோ, அந்நாட்டு மன்னன், பேரரசுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க சம்மதிக்க வேண்டும். இதன்படி சர்வலட்சணங்களும் கொண்ட குதிரை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. அம்மா கவுசல்யாவிடம் ராமபிரான்,யாகத்தைத் தொடங்குவதற்கான அனுமதியும், ஆசியும் பெற்றார். யாரைக் கொண்டு இந்த யாகத்தை நடத்துவது என்ற விவாதத்தை குலகுரு வசிஷ்டர், ஆன்றோர்களிடம் விவாதித்தார் அவர். ஒரு முக்கிய செயலை நிகழ்த்தும் போது, பெரியவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். அவர்களின் உயரிய அனுபவம் நமக்கு வழிகாட்டுவதாக இருக்கும். நாடாளும் ராமபிரான் அதைக் கடைபிடித்தார். வசிஷ்டர் சொன்னார். தீமை என்ற சொல்லையே அறியாத எங்கள் மன்னவனே! என் அன்பு ராமா! எனக்குத் தெரிந்தவரை உன் பிறப்புக்கு இந்த உலகத்தில் காரணம் யாரோ, அவர் தான் இந்த யாகத்தைச் செய்ய தகுதியுள்ளவர், என்றார். ராமபிரான் அகம் மலர்ந்தார். அப்படியானால், யாகத்துக்கு அக்காவும் வருவாள் இல்லையா? அவள் தான் எவ்வளவு பெரிய தியாகி! உலக மக்களில் ஒரு பகுதியினர், என்னை நியாயத்துக்காக மனைவியைத் துறந்தவன் என போற்றுகின்றனர்.
ஒரு பகுதியினர், இந்த ராமன் கல்நெஞ்சன், கட்டிய மனைவி மீது பிறன் சொன்னானே என்பதற்காக சந்தேகப்பட்டவன் என்று. ஆனால், அக்கா அப்பழுக்கற்றவள். பெற்ற தந்தையான தசரத மகராஜா, அவளைத் துறந்தார். தாத்தா வீட்டிலே அவள் வளர்ந்தாள். ஒரு ராஜகுமாரனுக்கு வாழ்க்கைப்பட்டு, உலக இன்பங்களையெல்லாம் அனுபவித்திருக்க வேண்டிய அவள், காட்டிலே பிறந்து, தவத்தை தவிர வேறெதுவும் தெரியாத ஒரு முனிவருக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்த வாழ்க்கையையும் அவள் ரசித்து வாழ்கிறாள். தங்களுக்கு கிடைத்த வாழ்க்கைத்துணையை எத்தனை பேர் இவ்வுலகில் ரசிக்கிறார்கள். குறைந்தபட்சம் கேலிக்காகவாவது, ஒரு கணவன் தன் மனைவியிடம் இருந்திருந்தும் உன்னைப் போய் கல்யாணம் செய்தேனே! என் அத்தைப் பொண்ணு எவ்வளவு சிவப்பா இருப்பாள் தெரியுமா? என் மாமா பொண்ணு எவ்ளோ பெரிய பணக்காரி தெரியுமா? என்று மனைவியைச் சீண்டாத கணவன்மாரே இல்லை. அதுபோல், உங்களைக் கட்டியதற்கு, இந்த ஆட்டு உரலைக் கட்டியிருக்கலாம். மாவாவது அரைத்து தந்திருக்கும் என சொல்லாத மனைவியரும் விரல் விட்டு எண்ணும் அளவிலே தான் இருப்பார்கள். ஆனால், அக்கா சாந்தத்தின் வடிவம். சாந்தியின் உறைவிடம். ஆமாம்...அப்பா அவள் பிறந்தவுடனேயே அவளின் முகக்குறிப்பறிந்து தான் சாந்தா என்றே பெயர் வைத்தாரோ! இப்படியாக அவரது சிந்தனை நீண்டது. ஆம்...ராமபிரானுக்கு ஒரு அக்கா இருந்தாள் என்பது பலரும் அறியாத சேதி. பெரும்பாலானவர்கள், ராமபிரானுடைய தம்பிகளைப் பற்றித்தான் அறிவர். தசரதருக்கு கவுசல்யா, கைகேயி, சுமித்திரை என்ற பட்டத்தரசியர் நீங்கலாக, 350 மனைவிகள் இருந்ததாக தெரிவிக்கிறது வால்மீகி ராமாயணம். அவர்களில் ஒருத்திக்கு பிறந்தவள் தான் சாந்தா. இவளது தாயின் பெயர் என்ன என்பதை அறிவதில் குழப்பம் இருக்கிறது. ஒரு சிலர் கற்பனை பெயர்களைச் சூட்டி கதை சொல்கின்றனர். அது அவ்வளவு உசிதமல்ல. சாந்தா பிறந்து ஐந்தாண்டுகள் வரை அயோத்தியில் தான் இருந்தாள். மூன்று மகாராணியர்களுக்கும் அவள் செல்லப்பிள்ளை. எல்லாருடைய அரண்மனைக்குள்ளும் எந்நேரமும் நுழைவாள். கொஞ்சி மகிழ்வார்கள் ராணியர்கள். விதர்ப்ப நாட்டு இளவரசி இந்துமதி என்பவள், அஜன் என்பவனைத் திருமணம் செய்தாள். இவர்களுக்கே தசரதர் பிறந்தார். இந்துமதியின் உடன்பிறந்த ரோமபாதன், விதர்ப்ப தேசத்தை ஆண்டுவந்தான். அவனுக்கு, ஒரு கட்டத்தில், சாந்தாவைத் தத்துக் கொடுத்துவிட்டார் தசரதர்.


லவகுசா பகுதி-10


ரோமபாதன் சாந்தாவை தன்னுடைய அங்கதேசத்துக்கு அழைத்து வந்து வளர்த்து வந்தார். அவள் பருவமடைந்த சமயத்தில், மழை குன்றி, நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரோமபாதன் மகரிஷிகளை அழைத்து, மழை பெய்வதற்கான ஆலோசனை சொல்லும்படி கேட்டான். ரோமபாதா! விபண்டகர் என்ற முனிவரின் புத்திரர் ரிஷ்யசிருங்கர் காட்டில் வசிக்கிறார். அவர், தன் தந்தைக்கு மட்டுமே சேவை செய்வதைக் கடமையாகக் கொண்டுள்ளார். பிறந்தது முதல் அவர் பிற மனித ஜீவன்களையே பார்த்தது கிடையாது. அவரிடம் ஒரு விசேஷ சக்தி உண்டு. அவர் எந்த இடத்தில் கால் வைக்கிறாரோ, அங்கே மழை கொட்டும். ஆனால், அவரை அழைத்து வருவது என்பது சிரமமான விஷயம். அது உன் பொறுப்பு. அவர் மழை பெய்ய வைத்ததற்கு பிரதியுபகாரமாக நீ உன் மகள் சாந்தாவை அவருக்கு கன்னிகாதானம் செய்து வைக்க வேண்டும், என சொல்லிச் சென்றனர். ரோமபாதன், ஒரு முனிவருக்கு தன் மகளை எப்படி திருமணம் செய்வது என்று யோசித்து வருந்தினாலும், பொதுநலன் கருதி சம்மதித்தான். சாந்தாவும் இதை மகிழ்ச்சியுடன் ஏற்றது தான் மிகப்பெரிய விஷயம். இந்தக்காலத்துப் பெண்கள் போல, மாப்பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையெல்லாம் விதிக்கவில்லை. ரிஷ்யசிருங்கரை வரவழைக்க பல யோசனைகளைச் செய்தான் மன்னன். முடிவில், ஒன்றே ஒன்று மட்டும் தான் அவனுக்கு சரியெனப்பட்டது. மனிதன் சாதாரணமானவனோ, முனிவனோ...யாராயிருந்தால் என்ன...அவனை ஆட்டி வைக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அது தான் பெண். பெண்களைக் கொண்டு ரிஷ்யசிருங்கரை மயக்கி அழைத்து வர ஏற்பாடாயிற்று.
சில தாசிப் பெண்களை, ஆஸ்ரமத்துப் பெண்கள் போல அலங்கரித்து, அவரை மயக்கி அழைத்து வரும்படி ரோமபாதன் உத்தரவிட்டான். அந்தப் பெண்கள் அலங்கார சகிதமாய் சென்று ரிஷ்யசிருங்கரை சந்தித்தனர். முதன் முதலாக பிற ஜீவன்களைப் பார்த்த அவர் ஆச்சரியப்பட்டார். அந்தப் பெண்கள் அவரிடம், முனிவரே! நாங்கள் அருகிலுள்ள ஆஸ்ரமம் ஒன்றில் தங்கியிருக்கிறோம். தங்களை தரிசிக்க வந்தோம். இதோ, உங்களுக்கு பிடித்த கனிவகை, மோதகம் அனைத்தும் கொண்டு வந்துள்ளோம், எனக் கூறி தாங்கள் கொண்டு வந்த பலகார வகைகளை அவரிடம் பணிவுடன் சமர்ப்பித்தனர். அதைச் சாப்பிட்ட ரிஷ்யசிருங்கர் மனதில் ஏதோ ஒரு பரவசம் ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திய அந்தப் பெண்கள் அவரைத் தழுவிக்கொண்டனர். பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர். ஒரு புதுவித சுகத்தைப் பெற்ற அவர், அந்தப் பெண்களை மறக்க முடியாமல் தவித்தார். இதைத் தெரிந்து கொண்ட அந்தப் பெண்கள் மீண்டும் சென்று, அவரை மயக்கி, தாங்கள் எங்களுடன் வந்தால், இந்த பண்டங்களும், இன்பமும் நிரந்தரமாக கிடைக்கும் என்று கூறி, அங்க தேசத்துக்கு அழைத்து வந்து விட்டனர். அவர் ஊருக்குள் நுழைந்தாரோ இல்லையோ, மழை கொட்டித்தள்ளி விட்டது. ரோமபாதன் அவரை வரவேற்று, பொதுநலன் கருதி, இவ்வாறு செய்ய நேர்ந்ததைச் சுட்டிக்காட்டியதால், ரிஷ்யசிருங்கர் சினம் தணிந்தார். முனிவர்கள் சொன்னபடியே தன் மகள் சாந்தாவைக் கன்னிகாதானமும் செய்து கொடுத்தார். அவளும், இல்லறத்தில் இருந்தாலும், கணவனுக்கேற்ற மனைவியாக, ஒரு தபஸ்வினியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாள்.
வீட்டுநலன், நாட்டுநலனில் பெண்களின் பங்களிப்பு எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண மங்கை நம் சாந்தா. இப்பேர்ப்பட்ட தன் சகோதரி, யாகத்துக்கு நிச்சயம் வருவாள் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தாள். நினைத்தது போலவே, சாந்தாவும், ரிஷ்யசிருங்கரும் அயோத்தி வந்து சேர்ந்தனர். ராமபிரான் அவர்களை வரவேற்று உபசரித்தார். நீண்டநாளுக்கு பிறகு தங்கள் ஒரே மகளைக் கண்ட தசரத பத்தினியருக்கு தாளாத ஆனந்தம். யாக ஏற்பாடுகள் ஆரம்பமாயின. பவுர்ணமி சந்திரன் போன்ற பிரகாசமுடைய வெண்கொற்றக்குடையின் கீழிருந்து அரசாண்ட ராமபிரான், சர்வ லட்சணங்களும் பொருந்திய குதிரை ஒன்றை வரவழைத்து, அதன் நெற்றியில் பட்டயம் ஒன்றைக் கட்டினார். அயோத்தி மன்னன் ஸ்ரீராமன் அனுப்பும் யாகக்குதிரை இது. இது உங்கள் இடத்துக்கு வந்ததுமே எனக்கு பணிந்து விடுங்கள். இல்லாவிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது. யாகம் நடத்துவது என்றால் பல தேசத்து மன்னர்கள், முனிவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுக்க வேண்டுமல்லவா! ராமபிரான் அகத்தியர் உள்ளிட்ட பல முனிவர் பெருமக்களையும் யாகத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். சீதாதேவியை மீட்கும் போரில் உதவி செய்த இலங்கை மன்னன் விபீஷணன், தன் உயிருக்கும் நிகரான சுக்ரீவன், தனது சேவையையே வாழ்வின் லட்சியமாகக் கொண்ட ஆஞ்சநேயன், வாலி மைந்தன் அங்கதன், 56 தேசத்து அரசர்கள், கங்கையைக் கடக்க உதவிய குகன் ஆகியோருக்கு ஏவலர்கள் அழைப்புக் கடிதங்களை எடுத்துச் சென்றனர். பின்னர், மதுகை நகரை ஆண்டு கொண்டிருந்த தனது தம்பி சத்ருக்கனனுக்கும் அழைப்பு அனுப்பி வைத்த ராமன், அவனை உடனடியாக யாகத்திற்கு வரும்படி எழுதியிருந்தார். தூதுவர்கள் அவற்றை விரைந்து சென்று கொடுக்க அவர்கள் எல்லாருமே விரைவில் வந்து சேர்ந்தனர். அனைவரையும் வரவேற்ற ராமபிரான், விருந்தினர்களே! நீங்கள் அனைவரும் கடல்நீர், புண்ணியநதிகளின் நீரை கொண்டு வாருங்கள், என அன்புடன் சொல்லியனுப்பினார். பறையறைவோரை அழைத்து, இன்னும் ஏழு நாட்களில் யாகம் தொடங்கப் போவது உறுதி, என்பதை நாட்டு மக்களுக்கு அறிவியுங்கள், என்று உத்தரவிட்டார். இந்நேரத்தில் தம்பியைத் தேடி சாந்தா வந்தாள்.


லவகுசா பகுதி-11


அக்கா சாந்தாவின் பாதங்களில் விழுந்து ஆசிபெற்றார் ராமபிரான். தம்பி! இந்த உலகம் உள்ளளவும் உன் பெயர் நிலைத்திருக்கும். உன் பெயர் ஒலிக்காத நாவும், நாளும் இருக்காது, என்று ஆசி வழங்கினாள். சகோதரியின் பாசமிக்க வார்த்தைகளைக் கேட்ட ராமன் சிரித்தார். ராமா! உன் சிரிப்பில் வறட்சிதெரிகிறது. வறட்சிக்கான காரணமும் அதில் புரிகிறது. விதி என்பது ஒற்றைக் கல் தாங்கலில் நிற்கும் பெரிய பாறை போன்றது. அந்தக்கல் நகர்ந்து விட்டால், பாறை கீழே நிற்பவனின் தலையிலும் விழலாம். கீழிருக்கும் பெரும் பள்ளத்தை மூடி பாதையையும் ஏற்படுத்தி தரலாம். நீ சீதாவை நினைத்து மனம் புழுங்கிக் கொண்டிருப்பது எனக்கு புரிகிறது. எத்தகைய செல்வம் வாய்ந்த குடும்பத்தில் பிறந்தவள் அவள். அவளது தந்தை ஜனக மகாராஜா சாதாரணப்பட்டவரா! அல்லது அவளது தாய் சுநைனாவின் செல்வச் செழிப்பை வர்ணிக்கத்தான் வார்த்தைகள் தான் உண்டா! அவள் திருமகளின் வடிவம். பூமாதேவியின் பொறுமை அவளுக்குள் ஊறிக் கிடந்தது. ராவணனின் பிடியில் அவள் ஒருமுறை தான் சிக்கினாள். நீ அவளைக் காப்பாற்றி விட்டாய். ஆனால், இன்றோ அயோத்தியிலுள்ள ராவணர்களின் வாய்ப்பேச்சால், வாழ்விழந்து காட்டில் இருக்கிறாள். அந்தப் பூமகள் பெற்ற பிஞ்சுகளைப் பற்றி நமக்கு தகவல் கிடைத்தும் நம்மால் காண இயலாமல் இருக்கிறோம். அதிருக்கட்டும். ஸ்வமேதம் நடத்துகிறாயே! மனைவி இல்லாமல் அதைச் செய்ய இயலாதே.
நீ அதற்கு என்ன மாற்று ஏற்பாடு செய்திருக்கிறாய் தம்பி! அக்காவின் வார்த்தைகளில் உள்ள உண்மையை உணர்ந்த ராமன், சகோதரி! அதுபற்றி நான் சிந்திக்காமல் இல்லை. குலகுரு வசிஷ்டரிமும், இதர குருமார்களிடமும் இது பற்றிய கருத்து கேட்டுள்ளேன். அவர்கள் சொல்வதை இவ்விஷயத்தில் செயல்படுத்துவேன், என்றார். ராமன் ஏகபத்தினி விரதன் என்பதும், அவர் இன்னொரு திருமணத்துக்கு சம்மதிக்கமாட்டார் என்பதையும், சீதாவை மனமின்றி பிரிந்திருக்கும் அவரது மனநிலையையும் சாந்தா நன்றாகவே அறிவாள். மேலும், ராமபிரானின் மகிமைக்கு மறுமணம் என்பது எதிர்காலத்தில் அவர் மீது மக்கள் கொள்ளும் மதிப்பைக் குலைத்து விடும் என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள். தம்பியை ஆறுதல் வார்த்தைகளால் தேற்றியதும் அவள் அங்கிருந்து விடைபெற்றாள். அப்போது வசிஷ்டரும் மற்ற முனிவர்களும் வந்தனர். ஸ்ரீராமச்சந்திரா! மனைவி இல்லாத நிலையில், மறுமணம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. நம் தேவி சீதாவைப் போலவே நாம் தங்கத்தால் ஒரு சிலை வடிப்போம். அந்தச் சிலையை உன்னருகில் வைத்துக் கொண்டால், அவள் இருப்பதாகவே அர்த்தமாகும். இதை சாஸ்திரம் அனுமதிக்கிறது. உடனே சிலை வடிக்க உத்தரவிடு, என்றார். அரண்மனை சிற்பி வரவழைக்கப்பட்டார். உடனடியாக பொற்பாவை தயாரிக்கும் வேலை துவங்கியது. மிக விரைவில் சிலைப்பணிகள் முடிந்ததும், ராமன் சிலையைப் பார்க்க வந்தார். என்ன அதிசயம்! சீதாதேவியே அங்கு அமர்ந்திருந்தது போன்ற அமைப்பு! அந்தக் கொடியிடையாளின் சிலையைக் கண்டதும், அவர் கண்ணீர் வடித்தார். சீதா! சீதா! நீ நேரிலேயே இங்கு வந்தாயோ! என அரற்றினார்.
இந்த இடத்தை சற்றே உற்று நோக்குங்கள். மனைவி நாலு நாள் பிறந்த வீட்டுக்குப் போய் விட்டால், தங்கள் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, செய்யக்கூடாத அத்தனையையையும் செய்கிறார்கள் சிலர். ஆனால், காட்டில் இருக்கிறாள் சீதை! அவள் இனி வருவாளா வரமாட்டாளா எனத் தெரியாது! அருமையான இரண்டு குழந்தைகளுடன் கானகத்தில் என்ன பாடு பாடுகிறாளோ! இவ்வளவு சூழலிலும், மனைவியை சிலையாக வடித்து, அந்தச்சிலைக்குள் அவளைக் காணும் நம் ராமச்சந்திர மூர்த்திக்கு ஈடு இணையேது! அந்த மகானுபாவனை நாமெல்லாம் பின்பற்ற வேண்டாமா! இப்படியாக, யாக ஏற்பாடுகள் திவ்யமாக முடிந்தன. யாகம் துவங்கியது. யாகத்தைக் காண அயோத்தி மக்கள் விதவிதமான ஆடை அலங்காரங்களுடன் வந்து சேர்ந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தை காவலர்கள் ஒழுங்குபடுத்தினர். தசரத தேவியர்களுக்கு தனி மேடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 21 வேள்வித்தூண்கள் நடப்பட்டன. அப்போது, யாகத்தை நடத்த வந்திருந்த ரிஷ்யசிருங்கர் உள்ளிட்ட ரிஷிகள் மிகச்சிறப்பாக மூட்டிய யாக குண்டங்களில் இருந்து எழும்பிய நறுமணப்புகை வானை எட்டி மறைத்தது. யாகம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, 16 அஸ்வமேத யாகக்குதிரைகள் யாக குண்டங்களின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அவை அனைத்தும் சூரியனை ஏற்றி வரும் குதிரைகளுக்கு ஒப்பானவையாக சர்வ லட்சணங்களுடன் இருந்தன. அவற்றின் கால்களில் தங்கத்தால் குளம்பு கட்டினர். இந்தக் காட்சியை வானத்தில் இருந்து கண்டு ரசித்தனர். அவர்கள் யாகக்குதிரைகளை கையெடுத்து வணங்கினர். காலையில் எழுந்ததும் குதிரை முகத்தில் விழிப்பது செல்வச்செழிப்பைத் தரும் என்பது ஐதீகம். மேலும், திருமால் குதிரையின் முகத்துடன் லட்சுமி சமேதராக ஹயக்ரீவர் என்ற பெயருடன் விளங்குவதும் இதனால் தான். ஹயம் என்றால் குதிரை என்று பொருள். அஸ்வமேத யாகம் செய்பவர்கள் 16 குதிரைகளை உலகின் பல்வேறு திசைகளிலும் அனுப்புவார்கள். அவை உலகை வேகமாகச் சுற்றி வரும். எந்தெந்த இடங்களுக்கு சென்று மீண்டதோ அந்தப்பகுதிகள் யாகத்தை நடத்துபவரைச் சேரும். இப்படி 16 குதிரைகளை ராமனும் அனுப்பி வைத்தார். அவை உலகெங்கும் விரைந்தன. அந்தக் குதிரைகள் காற்றை விட வேகமாகச் செல்லக்கூடியவை. அவை அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஒரு சில நாட்களிலேயே கடந்து விடும். அவ்வாறு திரும்பும் குதிரைகள் யாக குண்டத்தில் பலியிடப்படும். ராமனால் அனுப்பப்பட்ட குதிரைகளில் ஒன்றைத் தவிர எல்லாம் திரும்பி விட்டன. அந்தக் குதிரையை எங்கே?


லவகுசா பகுதி-12


அயோத்தியில் இவ்வாறு மிகச்சிறப்பாக வேள்வி நடந்து கொண்டிருக்க, காட்டில் இருந்த வால்மீகி முனிவர், ராமனின் மைந்தர்களான லவகுசர்களை அழைத்தார். இப்போது வலகுசர்கள் வளர்ந்திருந்தார்கள். தந்தையைப் போலவே இருவரும் கரிய நிறம். வெண்பற்கள் ஒளி வீசின. வாய் பவளம் போல் சிவந்திருந்தது. கண்களும் சிவந்திருந்தன. அவற்றில் தீர்க்கமான பார்வை இருந்தது. சுருள் சுருளான சிகை அவர்களின் அழகுக்கு அழகு சேர்த்தது. அந்த அன்பு மைந்தர்கள் தான் இப்போது சீதாவுக்கு ஆறுதல். அவர்களின் முகத்திலே, தன் பர்த்தா ஸ்ரீராமனின் முகத்தை தரிசித்துக் கொண்டிருந்தாள். அந்த இளம் சிறுவர்கள் வால்மீகியின் முன்னால் வந்து நின்று அவரது கட்டளையை எதிர்நோக்கி பணிவுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம், குழந்தைகளே! நீங்கள் அயோத்திக்கு கிளம்புங்கள். அங்கே ராமபிரான், அஸ்வமேத யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார். எல்லா தேசத்து அரசர்களும் அங்கே கூடியிருக்கிறார்கள். நீங்கள் அங்கு சென்று, ஸ்ரீராமச்சந்திர பிரபுவின் கதையைப் பாடுங்கள். ராமனின் கதையை வடமொழியில் மிக அருமையாக எழுதியிருக்கிறேன். அதை அரசர்கள் கூடியிருக்கும் அந்த அவையில் சென்று பாடுங்கள். மேலும், அங்கேயுள்ள அந்தணர்கள் மத்தியிலும் நீங்கள் பாட வேண்டும். ஆனால், அயோத்தி செல்ல ஒரு நிபந்தனை... என புள்ளி வைத்தார் வால்மீகி. குழந்தைகள் ஆவலுடன் அவர் முகத்தை எதிர்நோக்கினர். அந்தப் பார்வையே நிபந்தனை என்ன? என்பதைத் தெளிவாகக் கேட்டது.
முக்காலத்தையும், நான்கு வேதத்தையும் குறைவற்று தெளிந்த வால்மீகி அவர்களது பார்வையின் பொருளைப் புரிந்தவராய், குழந்தைகாள்! நீங்கள் சீதாவின் புத்திரர்கள் என்பது அயோத்தியில் யாருக்கும் தெரியக்கூடாது. யாகத்தைக் காண வந்தவர்கள் போல் காட்டிக் கொள்ள வேண்டும், என்றார். முனிவரின் கட்டளையை ஏற்ற லவகுசர் அயோத்தி புறப்பட்டனர். அவர்கள் முனிவரைப் போல தங்களை உருமாற்றிக் கொண்டனர். தங்கள் ஜடாமுடியில் குளிர்ந்த மலர்களை சூடிக்கொண்டனர். பெரிய மலையில் இருந்து விழும் அருவி, எத்தகையை வெண்மை நிறமுடையதாக இருக்குமோ அதுபோல அவர்கள் அணிந்திருந்த பூணூல் விளங்கிற்று. காமனாகிய மன்மதன் போல் குசனும், அவனது தம்பியான சாமன் போல லவனும் அழகுற விளங்கினர். இளமை பொங்கும் காளைகள் போன்ற தோற்றத்துடன். குசனும் லவனும் தங்கள் மார்பில் அழகிய வீணை ஒன்றையும் குறுக்காக கட்டியபடி, தாய் சீதாவிடம் சென்றனர். குழந்தைகளின் பேரழகு கண்டு அவள் கண்ணீர் வடித்தாள். இந்த இனிய காட்சியைக் காண உங்கள் தந்தைக்கும், பாட்டிமார்களுக்கும், என் தந்தை ஜனகருக்கும், தாய் சுனைநாவுக்கும் கொடுத்து வைக்கவில்லையே என வருந்தினாள். வருத்தம் பெருமூச்சாக வெளிப்பட்டது. என் அன்புச் செல்வங்களே! இன்றென்ன புதிய கோலம்? என்றாள் சீதா. அம்மா! குருஜி வால்மீகி முனிவர் எங்களை அயோத்திக்கு புறப்படச் சொல்லியுள்ளார். அங்கே ஸ்ரீராமபிரான் அஸ்வமேத யாகம் நடத்துகிறாராம். அந்த யாகத்திற்கு வந்திருக்கும் அரசர்கள், அந்தணர்கள் முன்னால் ராமகதை பாடும்படி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அங்கே கிளம்புகிறோம், அன்னையே, என்றனர் குழந்தைகள். சீதாவுக்கு பயம் கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
அயோத்திக்கு தனிமையில் குழந்தைகளை அனுப்புவதில் தயக்கம் ஒரு பக்கம்...மறுபுறம் குழந்தைகள், தங்கள் தந்தையைக் காணும் பாக்கியமும், ஸ்ரீராமன் தன் பிள்ளைகளைக் காணும் பாக்கியமும் கிட்டுமே எனக் கருதினாள். அதே நேரம், மனைவியின்றி யாகம் நடத்தும் ஸ்ரீராமன் மீது வருத்தமும் கொண்டாள். குழந்தைகள் புறப்பட்டனர். அவர்கள் சென்ற வழியில் ஒரு பாலைவனம் குறுக்கிட்டது. அங்கே மலை ஆடுகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. பல வரிகளையுடைய புலிகளின் உறுமல் சத்தம் ஆங்காங்கே கேட்டது. அவற்றுக்கு பயந்த மான்கள், கண்களை மூடாமல், ஒரு வகை அச்சத்துடன் மிரட்சி பார்வையுடன் நின்றன. எங்கும் கற்கள் குவிந்து கிடந்தது. சில இடங்களில் வேடர்கள், மிருகங்களைக் கொல்வதற்காக தங்கள் அம்புகளை கூராக்கும் பொருட்டு, கற்களில் தேய்த்துக் கொண்டிருந்தனர். இப்படியே நடந்த போது ஓரிடத்தில் வாழை மரங்கள் அடர்ந்த காடு தென்பட்டது. அந்தக் காட்டின் நடுவே மிகப்பெரிய நதி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதுதான் கங்கை. கங்கைக்கரையில் குசலவர்கள் வந்து நின்று, அதன் அழகை தங்கள் கண்களால் பருகினர். பின்னர் அங்கிருந்த படகொன்றில் ஏறினர். குழந்தைகள் இல்லையா? கங்கையின் பிரளய நீரைக் கடக்கும் போது, ஆரவாரம் செய்தனர். இந்த புதுமையான அனுபவத்துடன் மகிழ்ச்சி பொங்க கங்கையின் மறுகரையை அடைந்தனர். அங்கிருந்து, வேள்விச்சாலை இருக்குமிடத்தை அவர்கள் அடைந்த போது, அந்தணர்களின் யாகப்பணிகளில் தீவிரமாக இருந்தனர்.  பலநாட்டு அரசர்களும் தங்கள் பிரதாபத்தை காட்டும் வகையில் செல்வமிடுக்குடன் அலங்காரம் செய்து வந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் மத்தியில் சென்ற லவகுசர்கள், அழகுமிக ராமனின் கதையை ஆரம்பித்து பாடினர். இப்படியொரு தேவகானத்தை தாங்கள் இதுவரை கேட்டதில்லை என அரசர்கள் கூறினர். பொதுமக்களோ தங்கள் மன்னாதி மன்னரின் வரலாறு கேட்டு உளம் உருகி நின்றனர். இசையில் வல்லவர்களான தும்புருவும், நாரதரும் கூட இப்படி வீணை இசைக்க முடியாது என்று இசையறிந்த பலரும் ஆச்சரியம் கொண்டனர். இந்தக் குழந்தைகளின் செயல்பாட்டைக் கவனித்த சிலர் சந்தேகம் கொண்ட சிலர், ராமபிரானிடம் சென்று, எங்கள் தெய்வமே! நம் வேள்விச்சாலைக்கு இரண்டு சிறுவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் வீணை மீட்டி தங்கள் கதையைப் பாடுகிறார்கள். அது சாமகானத்தினும் இனிமையாக உள்ளது, என்றனர். அப்படியா? என்ற ராமன், காவலர்களை அழைத்து, அந்தக் குழந்தைகளை இங்கே அழைத்து வாருங்கள், என உத்தரவிட்டார்.


லவகுசா பகுதி-13


காவலர்கள் போய் ராமனிடம் தகவல் சொல்லவே, லவகுசர்கள் அரண்மனைக்குள் வந்தனர். தன்னைப் போலவே, அஞ்சன வண்ணத்தில் மிளிர்ந்த அந்த சிறுவர்களைக் கண்டு ராமபிரான் ஆனந்தம் கொண்டார். அவரையும் அறியாமல் பாச உணர்ச்சி மேலிட்டது. அந்தச்சிறுவர்கள் ராமபிரானை வணங்கி, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே! தங்கள் வரலாறு மிகவும் திவ்வியமானது. உன் திருநாமமாகிய ராம என உச்சரித்தாலே பாவங்கள் நீங்கி விடுமென எங்கள் குருநாதர் சொல்லியிருக்கிறார். தங்கள் கதையைத் தாங்களே கேட்பதென்பது கூட பாவங்களை நீக்கும் மருந்தாகும். தங்கள் திவ்ய சரித்திரத்தை நாங்கள் பாட தாங்களும், அரண்மனையில் உள்ள பிறரும் கேட்டு மகிழ வேண்டும், என்றனர். ராமபிரான், அவ்வாறே ஆகட்டும் என சொன்னபோது, மூன்று பாட்டிகளும் அங்கே வந்தனர். அவர்களும் ராம சரிதம் கேட்க அவரவர் ஆசனங்களில் அமர்ந்தனர். ராமபிரானின் பிறப்பு முதல் சீதாதேவியை மீட்டு மீண்டும் அயோத்தி திரும்பியது வரையான சரித்திரத்தை மிக அருமையாகப் பாடினர். பொன்போன்ற நிறத்தையுடைய சீதாதேவியின் மைந்தர்கள் பாடிய அந்த சரித்திரம் அனைவர் கண்ணிலும் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்தது. ராமபிரான் மிகவும் மகிழ்ந்தார். உலகத்தில் தன் கதையை தானே கேட்ட ஒரே பாத்திரம் ராமபிரான் தான். அந்தளவுக்கு அது திவ்யமானது. இதனால் தான் ராமாயணத்தில் இருந்து தினமும் ஒரு ஸ்லோகம் அல்லது பாடல் அல்லது பொருள் ஏதாவது ஒன்றைப் படித்தாலே மிகுந்த புண்ணியம் கிடைத்து விடும் என்று சொல்கிறார்கள்.
கதை முடிந்ததும், ராமபிரான் லவகுசர்களை ஆரத்தழுவி மகிழ்ந்தார். அவருக்குப் புரிந்து விட்டது. அவர்கள் தனது குழந்தைகள் தான் என்று. அவர்களிடம், பச்சிளம் பாலகர்களே! தாமரை மலர் போன்ற கண்களையுடைய நீங்கள் யார்? எனக் கேட்டார். ஐயனே! லவகுசர் என்று எங்களை அழைக்கிறார்கள். நாங்கள் வால்மீகி முனிவரின் சீடர்கள். அவரே எங்களுக்கு தங்கள் சரித்திரத்தைக் கற்றுத் தந்தவர். இந்த திவ்ய சரித்திரத்தை தங்கள் தேசத்தில் சென்று பாடும்படி எங்களைப் பணித்தவரும் எங்கள் குருநாதரே, என்றனர். தாங்கள் சீதாதேவியின் குழந்தைகள் என்பதை வால்மீகியின் அறிவுரைப்படி, ராமபிரானிடம் சொல்லவில்லை. ராமன் அதிகாரிகளை அழைத்தார். இந்தக் குழந்தைகள் பாடிய பாடல்கள் நம் அனைவர் நெஞ்சையும் நெகிழ வைத்தன. இவர்களுக்கு தக்க சன்மானம் கொடுத்து அனுப்புவதே முறையானது. பதினெட்டு கோடி பொற்காசுகளை இவர்களுக்கு வாரி வழங்குங்கள், என்றார். இந்த தேசம் எவ்வளவு உயர்வான நிலையில் இருந்தது என்பதற்கு இந்த சன்மானத்தொகை எடுத்துக்காட்டு. பரிசுக்கே இவ்வளவு செலவழித்தால், கோசலநாட்டின் ஒட்டுமொத்த செல்வமும் எவ்வளவு இருந்திருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். குசலவர்கள் ராமபிரானை நோக்கிச் சிரித்தனர். ஸ்ரீராமா, நாங்கள் பொருள் பெற்றுச் செல்வதற்காக தங்கள் சரிதையைப் பாடவில்லை. மேலும், இந்தப் பொருள் எத்தகைய துன்பங்களைத் தரும் என்பதையும் நாங்கள் அறிவோம்.
மன்னவா! பொருள் இருந்தால் அரசாங்கம் வலுவில் அதைக் கவரப்பார்க்கும். திருடர்கள் அதை கொள்ளையடிக்க முயற்சிப்பார்கள். நாம் தடுத்தால், அவர்கள் நம்மைக் கொல்லவும் தயங்கமாட்டார்கள். ஒருவேளை இந்தப் பொருள் ஏதோ காரணத்தால் செலவாகி விட்டால், இழந்ததை நினைத்து படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. பணமிருந்தால் தூக்கம் வராது. மேலும், அதைக் காவல் காப்பதிலேயே பொழுது போய்விடும். ராமா! இவையெல்லாவற்றையும் விட மிகக்கொடியதான பெண்ணாசையில் இது நம்மைத் தள்ளிவிடும். இப்படி, துன்பங்களை மட்டுமே தரும் பொருள் எங்களுக்கு எதற்கு? என்றனர். ராமபிரான், அந்தக் குழந்தைகளின் செல்வம் பற்றிய வித்தியாசமான கோணத்தை ரசித்தாலும், அவர்களின் எதிர்காலத்துக்கு பொருள் தேவை என்பதால், அவர்களுக்கு புத்திமதி சொன்னார். குழந்தைகளே! பொருள் தரும் துன்பங்களை மட்டுமே பட்டியலிட்ட நீங்கள், அதன் மேன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள். உலகில் வாழும் ஒரு அற்பன் கூட, பொருள் கிடைத்து விட்டால் அரசனாகி விடுகிறான். என்னென்ன வகை உணவுகள் வேண்டுமோ அவை அத்தனையையும் தயார் செய்து உண்டு மகிழலாம். நினைத்த காரியங்கள் அனைத்தையும் சாதித்துக் கொள்ள பொருள் அவசியம் தேவை. பொருள் இருந்தால் இந்திரலோகத்தில் கூட சகல வசதியும் கிடைக்கும். செல்வம் என்ற ஆயுதத்தைக் கண்டு, பகைவர்கள் கூட ஒருவனிடம் சரணாகதி அடைந்து விடுவார்கள். எனவே, நீங்கள் இந்தப் பொருளை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள், என்றார். ஸ்ரீராமச்சந்திர பிரபு! ஸ்ரீமன் நாராயணனின் தோற்றம் கொண்டவரே! நாங்கள் காட்டில் கிழங்குகளையும், சருகையும் உண்டு வாழும் முனிவர்களிடையே வசிப்பவர்கள். எங்களுக்கு எதற்கு பொருள்?  நீங்கள் தரும் பொருளை நாங்கள் எட்டிக்காயாகத்தான் நினைக்கிறோம், என்றனர். அந்தக் குழந்தைகளின் மனஉறுதி, ஆசையின்மை கண்டு ராமபிரான் மகிழ்ந்தார். அந்தக் குழந்தைகளை மீண்டும் ஒருமுறை தழுவிக் கொண்டார். தன் மனதிற்குள், ஜானகி மைந்தர்களே! உங்கள் தாய் திருமகளின் வடிவமல்லவா? என்ன பாவம் செய்தேனோ? உங்களுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை எனக்கு! என்ற ராமன், ஒருமுறையேனும், அவர்களை மைந்தர்களே என அழைத்து விட வேண்டும் எனக் கருதி, என் அன்பு மக்களே! நீங்கள் நாளையும் அரண்மனைக்கு வர வேண்டும். அனைவர் மனம் மகிழும் வகையில் பாட வேண்டும், வருவீர்களா? என்றார். குழந்தைகளும் ஒப்புக்கொண்டனர். அயோத்தி மன்னா! நாளை நாங்கள் அரசவைக்கு வந்து பாடுகிறோம், என்று சொல்லி விடை பெற்றனர். மறுநாள் அப்படி ஒரு விபரீதம் நடக்குமெனத் தெரிந்திருந்தால், ராமபிரான் அவர்களை வரச்சொல்லியிருக்கவே மாட்டார்!


லவகுசா பகுதி-14


ராமனின் கட்டளைக்கிணங்க மறுநாள் குசலவர் அரண்மனைக்கு வந்தனர். ராமனுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே! நாங்கள் இங்கே வந்ததில் இருந்து, தங்கள் திருமுகத்தைத் தான் தரிசித்துக் கொண்டிருக்கிறோம். சீதாதேவியாரின் இன்முகத்தையும் நாங்கள் தரிசிக்க வேண்டாமா! அவர்களது அன்பான அரவணைப்பும், ஆசியும் எங்களுக்கு வேண்டாமா! ஐயனே! அழையுங்கள் அந்த அன்புத்தாயை! உலகத்தில் எந்தத்தாயும் அனுபவிக்காத கஷ்டங்களை அனுபவித்த அவர்கள், தீயில் மூழ்கியெழுந்து தங்கள் கற்பை நிரூபித்தவர் என்பதை அறியும் போது, எங்கள் உடல் புல்லரிக்கிறது. அவரை வரச்சொல்வீர்களா? என்றனர். ராமபிரான் விக்கித்துப் போனார். அவருக்கு தெரியும்...அவர்கள் தன் குழந்தைகள் என்று! ஒரு காலத்தில், இந்த உண்மை தெரிந்து, தங்கள் தாயை தான் ஒதுக்கி வைத்தது தெரிந்தால் எந்தளவுக்கு விபரீதம் ஏற்படும்! ஐயோ! இந்த பிஞ்சுக்குழந்தைகளின் கேள்விக்கு, உலகாளும் ராமன் பதில் சொல்ல முடியாமல் நிற்கிறானே! சீதா...உன்னை அனுப்பிவிட்டு, நான் படும் வேதனையைப் பார்...இல்லை தாயே! உன்னை இனியும் காட்டில் விட்டு வைக்க மாட்டேன். இங்கு வரவழைப்பேன். இலங்கையிலே, நீ தீயால் சுடப்பட்ட ரத்தினமாக வெளிப்பட்டதை நம்பாத அயோத்தி ஜனங்கள், இன்னும் ஒருமுறை நீ தீயில் எரிவதைக் காணட்டும். உன் கற்புத்திறன் இந்த ஜனங்களுக்கும் தெரியட்டும் என மனதில் எண்ணியவராய், லவகுசர்களிடம் நடந்ததைச் சொன்னார். லவகுசர்கள் கொதித்து விட்டனர்.
ஏ ராமா! என்ன காரியம் செய்தாய்? அயோத்தி மக்கள் சந்தேகப்பட்டார்கள் என்றால் அதைப்பற்றி உனக்கென்ன கவலை! அவர்களோடு சேர்ந்து நீயும் தானே சந்தேகப்பட்டு அனுப்பியிருப்பதாக உலகம் சொல்லும்! உன் நெஞ்சம் என்ன கல்லா! மனைவியே இல்லாமல் அஸ்வமேதம் நடத்த உனக்கென்ன தகுதி இருக்கிறது? என கண்கள் சிவக்க கேட்டனர். ராமபிரான் அவர்களைச் சமாதானம் செய்தார். அன்புக்குழந்தைகளே! என் நிலைமையைப் புரிந்து கொள்ளுங்கள். நான் நாடாள்பவன். நாடாளும் ஒருவன் எவ்வித பழிச்சொல்லுக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் குருகுலத்தில் பயின்றிருப்பீர்கள். அந்த அடிப்படையிலேயே அவ்வாறு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டேன், இதைத் தவிர என்னால் வேறென்ன செய்ய முடியும்? என்றார். செய்வதையும் செய்து விட்டு, சமாதானமா செய்கிறீர்! உம் விளக்கத்தை எந்நாளும் ஒப்புக் கொள்ள முடியாது. பொறுமை மிக்க பூமித்தாய் பெற்றெடுத்த அந்தப் புண்ணியவதியை ஒதுக்கி வைத்த உம் முகத்தில் விழித்ததே பாவம். நாங்கள் வருகிறோம், என்றவர்களாய் வேகமாக வெளியேறினர். அங்கு வந்த கவுசல்யா தேவியும் குழந்தைகளை அழைத்து சமாதானம் சொன்னாள். சீதாதேவிக்கு சிறந்த மாமியாக நடந்து கொள்ள தங்களால் முடியவில்லை போலும் என அவளிடமும் கோபித்துக் கொண்டு அவர்கள் காடு நோக்கிப் புறப்பட்டனர். வால்மீகியின் ஆஸ்ரமத்தை அடைந்து தாயிடம் நடந்ததைக் கூறினர். குழந்தைகள் பெற்ற தந்தையை எதிர்த்துப் பேசியதை அறிந்த சீதாதேவி அவர்களைக் கடிந்து கொண்டாள்.
இந்த உலகிலேயே சிறந்தவர் அல்லவா ஸ்ரீராமர்! அவரைப் போயா எதிர்த்துப் பேசினீர்கள்! அவரது திருநாமம் சொன்னாலே பாவங்கள் நீங்கி விடுமே! அவரை நிந்தித்திருக்கிறீர்கள்! ஐயோ! இனியும் நான் வாழ வேண்டுமா! என அவள் கதறினாள். வால்மீகி முனிவர் அவளைச் சமாதானம் செய்து குழந்தைகளை விளையாடச் செல்லும்படி அனுப்பி விட்டார். நாட்கள் கடந்தன. ஒருநாள் லவகுசர், தங்கள் நண்பர்களுடன் குருகுலத்தில் அமர்ந்து இனிமையான பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு குதிரை அங்கு வந்தது. அதன் நெற்றியில் ஒரு பட்டை இருந்தது. அந்த பட்டையில், அயோத்தி மன்னர் தசரத புத்திரர் ராமன் அனுப்பிய அஸ்வமேத யாகக் குதிரை இது. இது எந்த இடத்திற்கு வருகிறதோ, அந்நாட்டு மன்னர் தமது விசுவாசத்தை ராமபிரானுக்கு காட்ட வேண்டும். ராமபிரானுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. குழந்தைகள் குதிரையைப் பார்த்தார்களோ இல்லையோ...அம்மா திட்டியதை எல்லாம் மறந்து விட்டார்கள். சீதாதேவியை அவமதித்த ராமனுக்கு, அஸ்வமேத யாகம் செய்ய தகுதியில்லை என்ற எண்ணமே மேலோங்கியது. அவர்கள் குதிரையைப் பிடித்து கட்டி வைத்து விட்டனர். குதிரையின் பின்னால் வந்த வீரர்கள் இதைப் பார்த்து, குருகுலத்தில் இருந்த சிறுவர்களைக் கண்டித்தனர். குழந்தைகளே! என்ன விளையாட்டு இது! இது தசரத சக்கரவர்த்தியின் திருக்குமாரர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அஸ்வமேத யாகக்குதிரை. இதையா கட்டி வைத்தீர்கள்! நீங்களெல்லாம் படித்தவர்கள் தானே! குதிரையின் நெற்றியில் எழுதி கட்டப்பட்டுள்ள பட்டயத்தை யாருமே பார்க்கவில்லையா! அறியாக் குழந்தைகள் என்பதால் உங்களை மன்னிக்கிறோம். உம்...குதிரையை அவிழ்த்து விடுங்கள் என்று விரட்டினர். லவகுசர்களோ, இதர சிறுவர்களோ இவர்களின் மிரட்டலைக் கண்டு கொள்ளவே இல்லை. கட்டிய மனைவியைச் சந்தேகப்பட்டு தீக்குளிக்கச் செய்தவன், அவள் தீக்குளித்த பின்பும், ஊரார் சந்தேகப்படுகிறார்களே என்பதற்காக மீண்டும் அவளைக் கானகம் அனுப்பியவன்...அவன் தானே உங்கள் ஸ்ரீராமன்! அவனுக்கு என்ன தகுதியிருக்கிறது அஸ்வமேதம் நடத்த! குதிரையை நாங்கள் விடமாட்டோம். மீறி அவிழ்க்க முயன்றால் நடப்பதே வேறு, என எச்சரித்தனர் லவகுசர்கள். ஏவலர்கள் அந்தக் குழந்தைகளைப் பார்த்து ஏளனமாக சிரித்தபடியே, குதிரையை அவிழ்க்க முயல, சில அம்புகளை அவர்கள் மீது எய்தனர் லவகுசர். ஏவலர்களால் அவர்களின் தாக்குதலுக்கு பதில் கொடுக்க முடியவில்லை. இதென்ன அதிசயம் என்றவர்களாய், தங்கள் படைக்கு தலைமையேற்று வந்து சற்று தூரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சத்ருக்கனனை நோக்கி ஓடினர்.


































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக