வெள்ளி, 25 நவம்பர், 2011

குசேலர்

ராதே கிருஷ்ணா 25 -11 -2011 


குசேலர்



குசேலர்
temple

குசேலர் பகுதி-1மார்ச் 28,2011

குழந்தை தன் முன்னால் நின்ற ஒவ்வொருவரையும் விழித்து விழித்துப் பார்த்தது. அதன் பார்வை தீர்க்கமாக இருந்தது. பிறந்ததில் இருந்து கண்ணே விழிக்காததால், கவலையடைந்த தாய் உத்தரையும், ... மேலும்

temple

குசேலர் பகுதி-2மார்ச் 28,2011

அவந்தி நகரத்தில் இருந்த மலையில் கோயிலில் மட்டுமே நாம் காணும் யாளி என்னும் மிருகம் கூட உண்டு. சிங்கம், புலி, கரடி, மான் ஆகிய எல்லா மிருகங்களும் உண்டு. வேடர்கள் கூட இந்த மலையிலுள்ள ... மேலும்

temple

குசேலர் பகுதி-3மார்ச் 28,2011

குருகுலத்தில் கல்வி கற்கும் நேரம் தவிர, அவர்கள் இருவரும் பல விஷயங்களைப் பேசுவார் கள். அப்படி பேசும் பேச்சில் சிறு மாறுபாடு கூட இருக்காது. இப்போதெல்லாம் மாணவர்கள் ... மேலும்

temple

குசேலர் பகுதி-4மார்ச் 28,2011

சாந்தீப முனிவரின் வாக்கிற்கு ஏற்பவே கண்ணனுக்கு அருமையான வாழ்வு அமைந்தது. அவன் துவாரகாபுரியின் அரசனானான். குசேலருக்கு ஏழ்மை இருந்தாலும் அதுபற்றி அவர் கண்டுகொண்டதே இல்லை. ... மேலும்

temple

குசேலர் பகுதி-5மார்ச் 28,2011

குசேலர் வீட்டுக் குழந்தைகளுக்கு, அவரது பக்கத்து வீட்டு குழந்தைகள் அணிந்திருப்பது போல் அழகிய தங்க அணிகலன்கள் இல்லை. பாலை மணி எனப்படும் சிறிய ஆபரணத்தையே அவர்கள் ... மேலும்

temple

குசேலர் பகுதி-6மார்ச் 28,2011

சுசீலா கேள்! பிரம்மன் ஒருவனுக்கு எந்தளவுக்கு ஆயுளை எழுதி வைக்கிறான் என்பதை அறிவுடைய அனைவரும் அறிவர். அதை எப்படி கணிப்பதென்று மயங்காதே. ஒவ்வொருவரும் புண்ணியம், பாவம் என்ற ...மேலும்

temple

குசேலர் பகுதி-7மார்ச் 28,2011

எல்லோருமே மனம் உவந்து நெல் கொடுத்தனர். அதைக் குத்தி அவல் தயார் செய்தாள். அவல் தயாராயிற்று...கிருஷ்ணனுக்கு எடுத்துப் போக வேண்டும் என்றால் வெள்ளிப்பாத்திரம் இருந்தால் எடுத்துப் ... மேலும்

temple

குசேலர் பகுதி-8மார்ச் 28,2011

எந்த வீட்டில் கணவனும், மனைவியும் ஒற்றுமையாக இருக்கிறார்களோ அதை கோயில் என்று சொல்லலாம். கோயிலுக்குச் சென்றால் மனம் ஒருமைப்படுவது போல, பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்து ...மேலும்

temple

குசேலர் பகுதி-9மார்ச் 28,2011

கண்ணபிரான் கொலுவிருக்கும் அறை வாசல் அருகேயே அவர் வந்துவிட்டார். அங்கே காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நெற்றியில் திருநாமம் இட்டு, கைகளில் சங்கு, சக்கர முத்திரை ... மேலும்

temple

குசேலர் பகுதி-10மார்ச் 28,2011

அந்த பட்டியல் தான் என்ன? பிராமணரே! செல்வந்தர்களே ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிக்க இயலும். அவ்வாறு வருபவர்கள் கைகளில் தங்கக்காப்பு அணிந்திருக்க வேண்டும். காதுகளில் மகர குண்டலங்கள் ஒளி ... மேலும்

temple

குசேலர் பகுதி-11மார்ச் 28,2011

அந்தப்புர வாயிலை பெண்கள் காவல் செய்து கொண்டிருந்தனர். பெண்களுக்கு அந்தக் காலத்திலேயே அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு தரப்பட்டிருக் கிறது. அதுவும் காவல் பணி. இப்போதைய பெண் போலீஸ் ... மேலும்

temple

குசேலர் பகுதி-12மார்ச் 28,2011

தன் முன்னால் கைகூப்பியும், உடலை வளைத்தும் மரியாதை செய்த துவார பாலகர்களிடம், என்ன விஷயம்? என்று அதிகாரமாய்க் கேட்டார் கிருஷ்ணர். அவர்கள் அவரை வாழ்த்தினர். வேதங்களின் தலைவரே ... மேலும்

temple

குசேலர் பகுதி-13மார்ச் 28,2011

நீண்ட தூரம் சென்று விட்ட சைதன்யர் ஏனோ நின்றார். அப்படியே திரும்பினார். அவருடன் சென்றவர்களுக்கு ஏதும் புரியவில்லை. மீண்டும் ஸ்ரீகூர்மம் கிராமத்தை நோக்கி நடந்தார். ஊர் ... மேலும்

temple

குசேலர் பகுதி-14மார்ச் 28,2011

குசேலர் அங்கு நடப்பதையெல்லாம் பார்த்து நெகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். கண்ணபிரான் பேச ஆரம்பித்தார். வாழ்வில் யார் ஒருவனுக்கு நட்பு சரியாக அமைகிறதோ, அவன் வாழ்வில் ... மேலும்

temple

குசேலர் பகுதி-15மார்ச் 28,2011

ஒரு ஊருக்கு என்னென்ன தேவை என்பதைப் பற்றி அன்றைய புராணங்களிலேயே சொல்லி வைத்துள்ளனர். காடுகள் எல்லாம் செழிப்பாக வளர்ந்துள்ளதா என்று குசேலரிடம் கண்ணபிரான் கேட்டதன் மூலம் ...மேலும்
























































































































































குசேலர் பகுதி-1 



குழந்தை தன் முன்னால் நின்ற ஒவ்வொருவரையும் விழித்து விழித்துப் பார்த்தது. அதன் பார்வை தீர்க்கமாக இருந்தது. பிறந்ததில் இருந்து கண்ணே விழிக்காததால், கவலையடைந்த தாய் உத்தரையும், தாத்தாக்களான தர்மர், அர்ஜுனனும், பாட்டிகளான திரவுபதி, சுபத்ராவும் கிருஷ்ணரைச் சரணடைந்தனர்.அண்ணா! என் மகனை என்னிடமிருந்து பறித்துக் கொண்டது விதி. ஆனால், என் பேரனும் இப்படி கண் திறக்காமல் கிடக்கிறானே! என்று அழுதாள் சுபத்ரா.தங்கையின் கண்ணீர் கண்ணனைக் கரைத்தது. அவன் தன் கமலப்பாதங்களை குழந்தையின் மீது வைத்தானோ இல்லையோ, குழந்தை விழித்துக் கொண்டது. அனைவரும் ஆனந்தமடைந்தனர்.கிருஷ்ணரின் பாத ஸ்பரிசத்தால் குழந்தை கண்விழித்ததால் விஷ்ணு பாதன் என்று பெயர் வைத்தனர். அப்போது தான் குழந்தை ஒவ்வொருவரின் முகத்தையும் ஆராய்ந்தது. தர்மர் சிரித்தபடியே, நம் பேரன் ஒவ்வொருவராக பரிட்சிக்கிறானே! என்றார். அதை அடிப்படையாகக் கொண்டு, அவனை பரீட்சித்து என்றே அழைக்கலாயினர். அந்தப்பெயரே அவனுக்கு நிலைத்து விட்டது. பரிட்சித்து வளர்ந்ததும், அவனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு, கிருஷ்ணரிடமே சரணடைந்து அவரது பாதார விந்தங்களை அடைய வேண்டும் என்பதில் தர்மர் நாட்டம் கொண்டிருந்தார். பல சகோதரர்களையும், வீரர்களையும் பறிகொடுத்து பெற்ற வெற்றி அவரது மனதை மிகவும் பாதித்திருந்தது. நாடாள்வதில் அவருக்கு விருப்பமே இல்லை. திரவுபதி மூலம் தாங்கள் பெற்ற ஐந்து பிள்ளைகளையும் அஸ்வத்தாமன் கொன்று விட்டதால், பாண்டவர்களுக்கு வாரிசே இல்லை என்றாயிற்று. தர்மருக்குப் பிறகு அரசாட்சி செய்ய யாருமில்லை என்ற நிலையிலேயே தாத்தா சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அர்ஜுனன்- சுபத்ரையின் மகனும், மாவீரனுமான அபிமன்யுவின் புத்திரனாக உத்தரையின் வயிற்றில் பரிட்சித்து பிறந்தான்.
அவனுடைய ஜாதகத்தை முனிவர்கள் மூலமாகக் கணித்தார் தர்மர்.அவர்கள் அவனைக் குறித்து நல்ல பலன்களையே சொன்னாலும், அவனுடைய ஆயுள், முனிபுத்திரன் ஒருவரின் சாபத்தால் முடியுமென்றும், பாம்பு தீண்டி இறப்பான் என்றும், ஆனால், விஷ்ணுவின் திருப்பாதத்தையே அடைவான் என்றும், அவன் மூலமாக பாகவதம் என்னும் அழியாப்புகழ் கொண்ட காவியம் உருவாகும் என்றும் சொன்னார்கள். தர்மர் இதுபற்றி கவலைப்பட்டாலும், தன் பேரன் விஷ்ணுவின் திருப்பாதங்களை அடைவான் என்று முனிவர்கள் சொன்னதால் ஆறுதலடைந்தார். பாண்டவர்களின் காலத்திற்குப் பிறகு பரீட்சித்துவின் ஆட்சி சிறப்பாக நடந்தது. விதிப்படி, பரிட்சித்து மன்னன் தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரின் கழுத்தில் இறந்த பாம்பு ஒன்றைத் தொங்கவிடவே, அவரது புத்திரன் அதைக்கண்டு ஆவேசமடைந்து, நீயும் பாம்பால் இறப்பாய் என்று சாபமிட்டான்.இந்த நேரத்தில் தான், கிளிமூக்கு கொண்ட சுகப்பிரம்ம முனிவர் அங்கு வந்தார். அவர் வியாசரின் புத்திரர். அவரிடம், இன்னும் ஒரு வாரத்தில் ஒரு பாம்பால் தனக்கு மரணம் நேர இருப்பதாகவும், மரணத்திற்குப் பிறகு தனக்கு நற்கதி கிடைக்குமா என்றும் கேட்டான். ஸ்ரீமன் நாராயணனின் திவ்யலீலைகளை யார் ஒருவர் கேட்கிறாரோ, யார் ஒருவர் அவரது எண்ணத்திலேயே லயித்திருக்கிறாரோ அவர் நிச்சயம் விஷ்ணுவின் திருப்பாதங்களை அடைவார், என்ற சுகப்பிரம்மர், அவரது லீலைகள் பற்றி வர்ணித்தார். அவர் சொன்ன விஷ்ணு லீலைகளின் தொகுப்பே பாகவதம் ஆயிற்று. அதில் ஒன்று தான் கிருஷ்ணாவதாரத்தில் அவர் நிகழ்த்திய லீலைகள். கிருஷ்ணர் தன் நண்பரான சுதாமாவுக்கு முக்தி அளித்த வரலாற்றையும், சுகப்பிரம்மர் பரீட்சித்துவுக்குச் சொன்னார். சுதாமா என்று இளவயதில் அழைக்கப்பட்டவரே குசேலர் ஆனார்.குசேலரின் திவ்ய சரிதத்தை இனி கேட்டு மகிழ்வோம். இந்த சரிதத்தைப் படிப்பவர்கள் பொருளாசை நீங்கி, ஸ்ரீகிருஷ்ணரின் திருப்பாதங்களை அடைவது உறுதி.
வடமதுரை என்னும் மதுராபுரி நம் பாரததேசத்தின் முகம் போல் விளங்குகிறது. அதன் அருகில் அவந்தி என்ற நகரம் இருந்தது. இவ்வூரின் செல்வச்செழிப்பை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. வீடுகளை இங்கு செங்கல்லால் கட்டுவதில்லை. தங்கக் கட்டிகளை அடுக்கிக் கட்டுவார்கள். இங்கே தெரு விளக்குகள் தேவையில்லை. ஏனெனில், கணவருடன் ஊடல் கொண்ட பெண்கள் தங்கள் அணிகலன்களைக் கழற்றி வெளியே வீசி எறிந்து விடுவார்களாம். அவை சிந்தும் ஒளியே அந்த நகரத்தை நிரப்பி விட்டதாம். மிக அகலமான தெருக்களைக் கொண்ட நகரம் அது. இந்த நகரத்தின் சிறப்பைச் சொல்ல ஆயிரம் நாக்கு கொண்ட ஆதிசேஷனாலும் முடியாது என்றால், ஒரு நாக்கு படைத்த சுகப்பிரம்மர் எந்தளவுக்கு சொல்ல முடியும்? அதிலும் அவருக்கு கிளிநாக்கு! ஆனாலும், தன்னால் முடிந்தளவுக்கு பரிட்சித்துவிடம் சொன்னார்.அப்போது அவர் சொன்னாராம். இந்த நகரத்தின் பெருமை பற்றி சொல்ல என்னால் முழுமையாக முடியாது. ஆனாலும், சில விஷயங்களைக் கேட்கும்போதே மனதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் பொங்கும்! அப்படிப்பட்ட விஷயம் தான் இந்த அவந்தி நகரின் வளமை, என்று. இதற்குள் ஒரு சூட்சுமமும் இருக்கிறது. சாவு என்ற பெருந்துன்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான் பரிட்சித்து. துன்பப்படுபவனிடம் போய், ஐயையோ! உன் கதி இப்படியா முடிய வேண்டும்! முனிவர்களிடம் போய் விளையாடலாமா? உனக்கு அறிவு இருக்கிறதா? உன் தாத்தா தர்மர் பெயரைக் கெடுத்து விட்டாயே!  என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினால், அவனுக்கு எப்படியிருக்கும்? துன்பப்படுபவர்களிடம் அவர்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்ல வேண்டுமே தவிர, அவர்கள் செய்த தவறுகளையெல்லாம் இடித்துக் காட்டினால், வேதனையின் அளவு கூடத்தான் செய்யும். இப்படி செழிப்புமிக்க அவந்தி நகரின்  அருகில் ஒரு பெரிய காடு இருந்தது.



குசேலர் பகுதி-2 



அவந்தி நகரத்தில் இருந்த மலையில் கோயிலில் மட்டுமே நாம் காணும் யாளி என்னும் மிருகம் கூட உண்டு. சிங்கம், புலி, கரடி, மான் ஆகிய எல்லா மிருகங்களும் உண்டு. வேடர்கள் கூட இந்த மலையிலுள்ள காட்டிற்குள் செல்ல அஞ்சுவார்கள். அந்த மலையின் உச்சியில் வேதம் படித்த பிராமணர்கள் வாழ்ந்த குடியிருப்பு ஒன்று இருந்தது. அங்கே, எந்நேரமும் வேத முழக்கம் கேட்கும். அந்த முழக்கம், கடலில் இருந்து எழுகின்ற அலைகளின் ஒலியை விட சப்தமாக இருக்கும். அந்த குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டில் வசித்தவர் சுதாமா. அவரை குசேலர் என்றும் அழைப்பார்கள்.சுகப்பிரம்ம  முனிவர், பரீட்சித்து மன்னனுக்கு கிருஷ்ண லீலைகளை வரிசையாகத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் இல்லையா? கிருஷ்ணனின் பல லீலைகளை அவர் சொல்லியபோது மிக அருமையாக, தைரியமாக சொல்லிக் கொண்டிருந்தார். குசேலர் என்ற பெயரைச் சொன்னதுமே அவரது நாதழுதழுத்தது. அவர் கிளி முக கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.பரீட்சித்து, இந்த குசேலனை சாதாரணமானவன் என நினையாதே. அவன் பரம பாகவதன், பகவானின் பக்தன். அவன் வீட்டுத் திண்ணையில் கந்தல் ஆடையுடன் அமர்ந்து, கிருஷ்ணா கிருஷ்ணா, கோவிந்தா கோபாலா, மதுசூதனா, பத்மநாபா என்று அவனது திவ்யநாமங்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பான். அவன் எதைப்பற்றியுமே கவலைப்பட்டதில்லை. நிஷ்கவலை என்பார்களே! அதற்குச் சொந்தக்காரன் அவன். நம் நிலைமை இப்படியிருக்கிறதே! பக்கத்து ஆத்தில் உள்ளவர்கள் எல்லாம் வசதியும் வாய்ப்பும் பெற்று திறம்பட வாழ்கிறார்களே! பிராமணனுக்கு அனுமதிக்கப்பட்ட உஞ்சவிருத்தியையாவது (யாசித்து பொருள் பெறுதல் மேற்கொள்வோமே! எதுவுமே செய்யமாட்டான் குசேலன்.
மனைவி, மக்கள் இருக்கிறார்களே! அவர்களைப் பற்றி ஏதாவது அவன் கவலைப் பட்டிருக்க வேண்டுமே! ஊஹூம்... அவன் எண்ணமெல்லாம் கண்ணன்,  அந்த மன்னாதி மன்னனின் சிந்தனையைத் தவிர வேறெதுவுமே அவனது நினைவில் இல்லை, என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டு அழுதே விட்டார்.  பகவான் கோபியரிடம் இப்படி நடந்து கொண்டான், வெண்ணெய் திருடினான், கம்சனைக் கொன்றான்... என்று எத்தனையோ லீலைகளைச் சொன்னவருக்கு, குசேலரின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் அழுகை வர வேண்டுமானால், அந்த பக்தர் மீது சுகப்பிரம்மரே எவ்வளவு தூரம் மரியாதை வைத்திருந்தார் என்பதை எண்ணும் போது, நம் உடல் சிலிர்க்கிறது. நமது கண்களிலும் கண்ணீர் முட்டுகிறது. அத்தகைய திவ்யமானவரின் வரலாறைப் படிக்க அந்த பகவான் நமக்கு கொடுப்பினையைத் தந்துள்ளானே! இதை விட நமக்கு வேறென்ன பாக்கியம் வேண்டும்! குசேலரின் குணநலன் அளப்பரியது. அடக்கம், இரக்கம், பொறுமை, நட்பு, பொறாமையின்மை ஆகியவை அவருடன் பிறந்தவை. கோபம் அவரை எட்டியே பார்த்ததில்லை. கோபக்காரர்களைக் கண்டால் வெறுத்து ஒதுங்கியும் செல்பவர். விருப்பங்களை அவர் துறந்தவர். கண்ணனைத் தவிர எந்த விருப்பமும் அவருக்கு கிடையாது. தனது வாழ்க்கைப் பயணத்துக்கு கிருஷ்ணனின் திருநாமம் மட்டுமே போதும் என நினைத்தவர். மயக்கம் இல்லாதவர் அவர்...என்ன மயக்கம்? இந்த உலகத்தில் இருக்கும் போலியான இன்பங்களை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத தன்மை. மொத்தத்தில் அவர் தூயவர்க்கெல்லாம் தூயவர். இளம் வயதில், அவர் சாந்தீபனி முனிவரின் குருகுலத்துக்கு வேதம் கற்கச்  சென்றார். அங்கே, கிருஷ்ணரைச் சந்தித்தார். கிருஷ்ணரும், சுதாமா என்ற குசேலரும் ஒரே பெஞ்ச் என்று சொல்லுமளவு அடுத்தடுத்து அமர்ந்திருப்பர். இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். வேதங்கள் ஓதி ஓதி நாம் எம்பெருமானை அழைத்துப் பார்க்கிறோம். முனிவர்களெல்லாம் ஏராளமான யாகங்களை நடத்தி அவிர்பாகத்தை வழங்க அவனை அழைத்துப் பார்க்கிறார்கள். அவன் வர மறுக்கிறான்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் பாற்கடல் வாசலில் நின்று கோவிந்த நாம சங்கீர்த்தனம் பாடுகிறார்கள். அவன் காட்சி தர யோசிக்கிறான்.ஆனால், இதோ, ஒரு ஏழைச் சிறுவனின் அருகில் கோகுலத்துக் குழந்தையாய் அவன் வீற்றிருக்கிறான். இப்படியும் ஒரு கொடுப்பினை! அதே குருகுலத்தில் எத்தனையோ பிள்ளைகள் கிருஷ்ணனின் வகுப்பில் தான் இருக்கிறார்கள் என்றாலும், அடுத்தடுத்து அமர்வது என்பது இன்னும் நெருக்கத்தைக் கொடுப்பது என்பது தானே!நம் கிருஷ்ணனின் முன்னால் சாந்தீபனியே தூசு தான்! ஆனாலும், அவரைக் குருவாக அவன் ஏன் ஏற்றான் என்றால், மானிடப்பிறப்பின் நியாயம் கருதியே! மானிடனாய் பிறந்தவனுக்கு ஒரு குரு வேண்டுமே என்பதற்காக, வேதத்திற்கே தலைவனான அவன், வேதங்களாலேயே அறிய முடியாத அந்த நாயகன் சாந்தீபனி முனிவரிடம் வேதம் கற்க வந்திருந்தான். அவனோடு, அமரும் பாக்கியம் சுதாமாவுக்கு கிடைத்திருக்கிறது! அவர்கள் வகுப்பில் மட்டுமல்ல, சாப்பிடுவதும் சேர்ந்துதான்! விளையாடுவதும் சேர்ந்துதான்! படுப்பதும் சேர்ந்துதான்! காலையில் எழுவதும் சேர்ந்துதான்! பக்தன், பகவான் முகத்தில் விழிக்க ஆசைப்படுகிறான்! பகவான் பக்தன் முகத்தில் விழிக்க ஆசைப்படுகிறான்! அதிலும், அவன் எப்படிப்பட்ட பக்தன்! அவனுடைய பெயர் சுதாமா என்றாலும், பட்டப்பெயர் குசேலன்.குசேலன் என்றால் என்ன பொருள்? கிழிந்த ஆடைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து தைத்த ஆடையை நல்ல உடையாகக் கருதி ஏற்றுக்கொண்ட எளியவன்.நாம் கோயிலுக்குப் போகும் போது, நல்ல பட்டாக உடுத்திக் கொண்டு வாயேன்டி என்று மனையாட்டியை வற்புறுத்துகிறோம். அவள்  கணவனை கல்யாணத்துக்குப் பிறகு இந்த பட்டு வேட்டியைக் கட்டவே இல்லையே, இன்றாவது உடுத்திக் கொண்டு வரக்கூடாதா? என அன்புக் கட்டளையிடு கிறாள்.கோயிலிலும் அவர்களைத் தான் அர்ச்சகர் முன்நின்று வரவேற்கிறார். ஆனால், பொது தரிசனத்தில் வியர்வை வழிய எட்டி எட்டி பார்க்கிறானே! அவனைத் தான் பகவானுக்குப் பிடிக்கும்.குசேலன் கிழிந்த ஆடையுடன் குருகுலம் வந்தான். கண்ணனுடன் படிக்கும் பாக்கியம் பெற்றான். கண்ணனும் அந்த கிழிந்த ஆடை அணிந்தவனை நண்பனாக ஏற்றான்.



































































































குசேலர் பகுதி-3 



குருகுலத்தில் கல்வி கற்கும் நேரம் தவிர, அவர்கள் இருவரும் பல விஷயங்களைப் பேசுவார் கள். அப்படி பேசும் பேச்சில் சிறு மாறுபாடு கூட இருக்காது. இப்போதெல்லாம் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பேசினால், ஏதோ சினிமா, காதல், அரசியல் பற்றியதாகத்தான் இருக்கிறது.ஒருவனுக்கு ஒரு நடிகரையோ, தலைவரையோ பிடிக்கிறது, இன்னொருவனுக்கு வேறு யாரையோ பிடிக்கிறது. இருவரும் அவரவருக்கு பிடித்தவரை உயர்த்திப் பேசுகிறார்கள். உடனே, சண்டை வந்து விடுகிறது. நட்பு பகையாகிறது. சில சமயங்களில் அடிதடி வரை சென்று விடுகிறது. ஒருவன் காதலிக்கும் பெண்ணையே, இன்னொருவனும் காதலிப்பதாகச் சொல்கிறான். இதுபோன்ற பிரச்னைகள் உயிரைப் பறிக்கும் அளவுக்குக் கூட சென்று விடுவதைப் பார்க்கிறோம். இன்று, நிஜமான நட்பு இல்லவே இல்லை.நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்! ஐம்பது வயதை தாண்டிய ஒருவர், உங்களுடன் முதல் வகுப்பு படித்த யாராவது ஒரு நண்பனையாவது நினைவில் வைத்திருக்கிறீர்களா? உங்களிடையே ஒருமித்த நட்பு இன்றும் தொடர்கிறதா? ஆம்... என்றால், நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். ஆனால், ஆம் என்ற அந்தக் குரல், மிக குறைந்த ஓசையுடனேயே கேட்கும். அதாவது, விரல் விட்டு எண்ணும் அளவே இத்தகையவர்கள் இருப்பார்கள். கண்ணனும், குசேலரும் அப்படியல்ல. இருவர் பேச்சிலும் கூட ஒருமித்த கருத்தே வெளிப்படும். இது மட்டுமல்ல! சாந்தீபனி முனிவரின் பத்தினி இடும் வேலையை அவர்கள் செய்வது வழக்கம். குருகுல மாணவர்களுக்கு சமைப்பதற்காக அவர்கள் விறகு பொறுக்கவும் செல்வார்கள். அந்த அம்மையாரை அவர்கள் தாயாகவே  மதித்தார்கள்.
ஒருநாள், நண்பர்கள் இருவரும் விறகொடிக்கச் சென்றார்கள். அப்போது, மேகம் கறுத்தது. நீரின்மை என்ற வறுமையை நீக்க, கடல் நீர் குதித்தெழுந்து ஆவியாகி உயரே சென்றது. வாளின் பிரகாசம் போல, மின்னல் வெட்டியது. கோயில்களில் ஒலிக்கும் பெரும் முரசுகள் போல இடி முழங்கியது. இந்திரன் கோபத்துடன் வளைத்த வில்லைப் போல, வானவில் தோன்றியது. கடவுளைச் சரணடையும் பக்தனைப் போல, பாம்புகள் இடிக்குப் பயந்து தங்கள் புற்றுகளில் அடைக்கலமாயின. இளம் பெண்களைப் போல் மயில்கள் நடனமாடத் துவங்கின. விலங்குகளும், பறவைகளும் நடுங்கியபடி அங்குமிங்குமாக சென்றன. பெரும் மழை வானத்தைப் பிய்த்துக் கொண்டு ஊற்றியது. கண்ணனும், குசேலரும் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல் தவித்தனர். மரத்தடியைத் தவிர வேறு இடமில்லை. மழை பெய்தால் என்ன! வெயில் அடித்தால் என்ன! குரு  பத்தினியின் உத்தரவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற எண்ணமும் அவர்களின் மனதில் ஒருமித்து ஓடியது. அது பேச்சாக ஒரே சமயத்தில் வெளிப்பட்டது. இந்த விறகை நனையாமல் காப்பது எப்படி? குருபத்தினியின் கட்டளையை நிறைவேற்றியாக வேண்டுமே! என்று இருவரும் ஒரே சமயத்தில், வார்த்தைகள் கூட பிசகாமல் கேட்டுக் கொண்டனர். ஒத்த கருத்து இருந்தால் ஒரு செயல் ஜெயமாகும் என்பதை கிருஷ்ண பரமாத்மா, சுதாமாவின் நட்பு மூலம் உலகத்துக்குச் சொல்லும் நல்ல பாடம் இது. மரத்தின் அடியில் நின்றால், மழைக்கு எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடியும்! கொட்டோ கொட்டென்று கொட்டிய மழை, மரங்களையும் நனைத்து, இலைகளில் இருந்து உதிர்ந்த நீர், சின்னஞ்சிறுவர்களை நனைத்தது. விறகுக்கட்டு நனைந்தது. சின்னஞ்சிறு பிள்ளைகள் என்ன செய்வார்கள்? மழை இன்னும் வலுத்தது. பாதங்களை மூழ்கடித்த தண்ணீர், பின்னர் கணுக்கால் அளவு உயர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்து இடுப்பளவுக்கு வந்து விட்டது. அந்த நேரத்தில் வேகமாக காற்றடித்தது.
மேகத்தால் ஏற்கனவே இருள் சூழ்ந்திருக்க மாலை வேளையும் வந்து விட்டது. குள்ளமாக வந்து பேருருவம் கொண்ட திருமாலாகிய திரிவிக்ரமனின் மார்பில் குங்குமம் பூசியது போன்ற சிவந்த நிறத்துடன் சூரியன் அஸ்தமனமாகி விட்டான்.இருள் சூழ ஆரம்பித்ததால், இனியும் மரத்தடியில் நிற்பது பாதுகாப்பில்லை என்பதால், அந்த இனிய நண்பர்கள் இருவரும், இருட்டில் தடுமாறியபடியே கைகோர்த்து ஒரு பாறையின் அடியில் போய் அமர்ந்தனர். சற்று நேரத்தில் மழை நின்று மேகங்கள் விலகின. அந்நேரத்தில், வானில் சந்திரன் உதித்தான்.அந்தக் காட்டில் ஒளிவெள்ளம் பரவியது. அப்போது, அங்கே திரிந்த கரிய யானைகள் கூட, சந்திரனின் வெள்ளைக் கிரணங்களை பிரதிபலித்து, இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம் போல் தோற்றமளித்ததாம் கிருஷ்ண நண்பர் களுக்கு.வெளிச்சம் தெரிந்தாலும், எப்படி குருகுலத்துக்கு செல்ல முடியும்? தனித்து இரவு வேளையில் காட்டுக்குள் சென்றால் புலி, சிங்கம் போன்ற மிருகங்களிடம் சிக்கிக் கொள்ள நேரிடுமே! விடிந்த பிறகு செல்லலாம் என குழந்தைகள் அங்கேயே அமர்ந்திருந்தார்கள். மறுநாள் விடிந்தது.அப்போது, குருகுலத்தில் இருந்த சாந்தீபனி முனிவர், கண்ணனையும், சுதாமாவையும் எங்கே? என்று மாணவர்களிடம் கேட்டார். குருபத்தினி, முதல் நாள் மதியமே அவர்களை விறகு பொறுக்கச் சொல்லி அனுப்பினார்கள், என்றார்கள் மாணவர்கள். காட்டுக்குச் சென்றவர்கள் இரவில் வீடு திரும்பவில்லையா? ஐயையோ! நேற்று இரவில் கடும் மழை கொட்டியதே! இரவில் குழந்தைகள் விலங்குகளிடம் சிக்கியிருந் தால்... அவர் மனைவியைக் கடிந்து கொண்டார். மாணவர்களை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் ஓடினார். அங்கே பாறையின் கீழ் அமர்ந்திருந்த தன் சீடர்களைக் கண்டு ஆனந்தம் கொண்டார்.கண்ணா, சுதாமா! என் அன்புக்குரியவர்களே! பதைபதைத்து போனதடா என் மனம்! விறகை நனையாமல் காப்பாற்ற, இரவு முழுவதும் காட்டில் வதைபட்டீர்களே! எனக்கு தொண்டு செய்த மாணவர்களில் நீங்களே உயர்ந்தவர்கள். என்னிடம் கற்ற கடனைக் கொடுத்து விட்டீர்கள். எல்லாவிதமான பாவங்களில் இருந்தும் நீங்கி விட்டீர்கள். நீங்கள் உத்தமர்கள். உங்களுக்கு பெரும் செல்வமும், சிறந்த மனைவியரும், மழலை பேசும் ஏராளமான குழந்தைகளும், சிறந்த சுற்றத்தாரும் கிடைப்பார்கள். நீங்கள் தீர்க்காயுளுடன் வாழ்வீர்கள், என்று நல்லாசி கூறினார். அவரது ஆசி பலித்தே விட்டது. எப்படி?



குசேலர் பகுதி-4 



சாந்தீப முனிவரின் வாக்கிற்கு ஏற்பவே கண்ணனுக்கு அருமையான வாழ்வு அமைந்தது. அவன் துவாரகாபுரியின் அரசனானான். குசேலருக்கு ஏழ்மை இருந்தாலும் அதுபற்றி அவர் கண்டுகொண்டதே இல்லை. மேலும் சுசீலை என்ற மனைவி வாய்த்தாள். அவள் சிறந்த குணவதி.குசேலர் விதிப்படி வாழ்க்கையை நடத்துபவர். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து நீராடி, சந்தியாவந்தனம் முடித்து, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களையும் அடக்கி தியானம் செய்பவர். குசேலரைப் பற்றி இந்த இடத்தில் சிறப்புச் செய்தி ஒன்றை சொல்லலாம். யார் ஒருவர் குசேலரின் நெறிமிக்க வாழ்க்கையை புகழ்ந்து பேசுகிறாரோ, அதை கடைபிடிக்கிறாரோ அவர் பிறப்பற்ற நிலையை அடைவார் என்பது யாரும் அறியாத ஒரு செய்தி. தெய்வங்களை வணங்குவதால் மட்டுமே பிறப்பற்ற நிலை கிடைக்கும் என்பார்கள். ஆனால் குசேலரின் வாழ்க்கை முறையை பின்பற்றுவோருக்கும் இத்தகைய நிலை கிடைக்கிறது என்றால் இந்த தொடரைப் படிக்கும் அனைத்து வாசகர்களும் கொடுத்து வைத்தவர்கள் ஆகின்றனர்.குசேலருக்கு பொறாமை என்பதே கிடையாது. அருகில் வசிப்பவர்கள் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை. குசேலரைவிட அங்கிருந்த அனைவரும் வசதிமிக்கவர்களாகவே இருந்தனர். ஆனால் குசேலரின் குடும்பம் மட்டும் ஏழ்மையில் தவித்தது. அவரது மனைவி சுசீலைக்கு ஏராளமான குழந்தைச் செல்வங்களைப் பெற வேண்டும் என்பது ஆசை. அந்த ஆசை நிறைவேறும் வகையில் அவளுக்கு ஏராளமான குழந்தைகள் பிறந்தார்கள். (சுசீலைக்கு 27 குழந்தைகள் பிறந்ததாக ஒரு தகவல் உண்டு.)குசேலர் மிகச்சிறந்த கிருஷ்ணபக்தர். எல்லோரும் கடவுளை நண்பனாக ஏற்றுக்கொள்வர். ஆனால் குசேலருக்கு நண்பனே கடவுளாக அமைந்தான். இது மாபெரும் பாக்கியமாகும். திருமாலின் பாதங்களை திருமகள் வருட, ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் கோலத்தை எந்நேரமும் அவர் மனதில் நினைத்திருப்பார்.
காலையில் எழுந்ததும், ஹரிஹரி! ஹரிஹரி! என மந்திரம் சொல்வார். வெளியில் கிளம்பும்போது கேசவா! கேசவா என்பார். மதியம் உணவு கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் கோவிந்தா என முழங்குவார். இரவில் மாதவா! மாதவா என சொல்லாமல் அவர் துயில் கொண்டதில்லை. (இந்த மந்திரங்களை அனைவருமே அந்தந்த நேரத்தில் ஏழுமுறை சொல்லலாம்).ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண்மணி இருக்கிறாள். குசேலருக்கு ஏற்ற மனைவியாக சுசீலை வாய்த்தாள். கணவனது உடலை பாதுகாக்க வல்லவள் மனைவி என்று அறிஞர்கள் சொல்வார்கள். இந்த வாக்கியத்திற்கு சொந்தக்காரியாக சுசீலை திகழ்ந்தாள். அவள் அன்பு மிக்கவள். இனிய குணம் படைத்தவள். நற்குடியில் பிறந்தவள். தங்கள் இல்லத்துக்கு வருகின்ற விருந்தினர்களை வறுமையான சூழலிலும் உபசரிப்பதில் மகிழ்ச்சி அடைபவள். கோபம் என்பதே அவளுக்கு வந்ததில்லை. கற்பு நிலையை உடையவள். இருப்பதைக் கொண்டு வாழ்வதில் திருப்தி அடைபவள். இவர்களுக்கு ஏராளமான குழந்தைகள் பிறந்ததால், ஊரார் தவறாக பேச ஆரம்பித்தனர்.இந்த குசேலனுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கிறதா? இவனது வீட்டில் தரித்திர லட்சுமி தாண்டவமாடுகிறாள். ஆனால் இவனோ ஏராளமான குழந்தைகளை பெற்றுக்கொண்டிருக்கிறான். இவர்களை எப்படி காப்பாற்றப் போகிறான்? இவனது மனைவியின் உடல்நிலைதான் என்ன ஆகும்? அதுபற்றி கொஞ்சமாவது கவலைப்பட்டானா? அவனது இச்சைதானே முக்கியமாக இருக்கிறது? என்றெல்லாம் கூறினார்கள்.ஆனால் குசேலருக்கு இல்லற வாழ்வில் நாட்டம் கிடையாது. கிருஷ்ண பக்தியைத்தவிர அவர் ஏதும் அறியாதவர். அதேநேரம் மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற தர்மத்தை அறிந்தவர். சுசீலைக்கு ஏராளமான குழந்தைச் செல்வத்தை பெறவேண்டும் என்பது ஆசை. அந்த ஆசையையே அவர் கிருஷ்ண உணர்வுடன் பூர்த்தி செய்து வைத்தார்.
அவர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொள்வதுண்டு.சுசீலா! நீ ஏராளமான குழந்தைகள் பெறவேண்டும் என்கிறாய். உன் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டியது என்னுடைய கடமை. இதையெல்லாம் என்ன தைரியத்தில் செய்கிறாய்? என்றார்.அதற்கு அவள் அழகாக பதில் சொன்னாள்.நீங்கள் அடிக்கடி உங்கள் நண்பர் கிருஷ்ணனைப் பற்றி சொல்வீர்கள். அவரையே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த கிருஷ்ண உணர்வு எனக்குள்ளும் இருக்கிறது. நமக்கு பிறந்த குழந்தைகளுக்கும் கிருஷ்ண உணர்வு மட்டுமே இருக்கிறது. ஒருநாள் கூட நமது குழந்தைகள் அம்மா பசிக்கிறது என்று சொன்னதில்லை. எப்படிப்பட்ட பசியையும் அவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள். உங்களுக்குள் ஒரு தனி ஆற்றல் இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? என கேட்டு நிறுத்தினாள்.குசேலர் கேள்விக்குறியுடன் அவள் முகத்தை பார்த்தார்.என்ன சொல்கிறாய் சுசீலா? என்றார்.நீங்கள் பூஜை, புனஸ்காரம் என்று கோயில்கள் பக்கம் செல்வதில்லை. யாராவது சுபநிகழ்ச்சிகளை நடத்திவைக்க அழைத்தால் அதற்கும் செல்வதில்லை. உங்களைத் தேடிவந்து நமது இல்லத்திலேயே அமர்ந்து யார் ஒருவர் சடங்குகளை நடத்தி வைக்கச் சொல்கிறாரோ அவருக்கு மட்டுமே பணி செய்கிறீர்கள். அதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் நமது குடும்பம் நடந்துகொண்டிருக்கிறது. நம் இல்லத்தில் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்ற நிலைமை தினமும் இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகள் பசி பொறுக்காமல் சில நேரம் ஏங்கத்தான் செய்கிறார்கள். அந்த நேரத்தில் நீங்கள் கிருஷ்ணனின் கதைகளை அவர்களிடம் சொல்கிறீர்கள். அதைக்கேட்டவுடன் வயிறும் மனமும் நிறைந்து அவர்கள் உறங்கி விடுகிறார்கள். ஆக, நமது இல்லத்துக்கு தேவை சோறும் கறியும் அல்ல; கிருஷ்ண உணர்வு மட்டுமே; அது இங்கே நிறைந்திருக்கிறது. இது மட்டும் கடைசிவரை நம் வீட்டில் இருந்தால் போதும். மற்றவர்களின் விமர்சனங்களை நாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை. அவர்களும் நன்றாக இருக்க வேண்டுமென அந்த கிருஷ்ணனிடம் வேண்டிக் கொள்வோம், என பணிவுடன் தெரிவித்தாள்.தன் பத்தினியின் அருள்வாக்கு கேட்டு குசேலர் மகிழ்ந்து போனார்.



குசேலர் பகுதி-5 



குசேலர் வீட்டுக் குழந்தைகளுக்கு, அவரது பக்கத்து வீட்டு குழந்தைகள் அணிந்திருப்பது போல் அழகிய தங்க அணிகலன்கள் இல்லை. பாலை மணி எனப்படும் சிறிய ஆபரணத்தையே அவர்கள் அணிந்திருந்தனர். மரவுரியைத் தான் அவர்கள் ஆடையாக அணிந்திருந்தனர். பட்டாடை என்ன... பருத்தி ஆடை கூட அவர்களுக்கு கிடையாது. ஒரு சில வீடுகளில் குழந்தைகள் பாடாய் படுத்துவார்களே...அம்மா...என் நண்பன் வீட்டிற்கு நேற்று சென்றிருந்த போது, அவர்கள் தந்த அதிரசத்தை நீயும் செய்து தாயேன் என்று...அத்தகைய சங்கதிகள் எல்லாம் இங்கு கிடையாது. அவர்கள் வீட்டில் வறுமை கோரத் தாண்டவமாடியது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு மனைவி என்ன சொல்லியிருப்பாள். பெருசா பிரெண்ட்டுன்னு சொல்றீரே உம்ம கிருஷ்ணனை! அவன் துவாராகாபுரிக்கே ராஜா என்கிறீரே! அப்படியானால், அவனிடம் போய் ஏதாச்சும் வாங்கிட்டு வரப்புடாதோ! என்று தானே படுத்தியிருக்க வேண்டும். சுசீலை பதிவிரதா தன்மை  மிக்கவள். கிருஷ்ணரைப் பார்த்து வரச் சொன்னோமே! ஒருவேளை, பொருளுதவிக்காக மறைமுகமாக அனுப்பி வைக்கிறாளோ என்று அவர் தன்னைப்பற்றி தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று சுசீலைக்கு நெஞ்சு அடித்துக் கொண்டது. ஆனால், தனது தர்மபத்தினியைப் பற்றி அறியாதவரா அந்த மாமேதை! அவருக்கு அவளை நன்றாகத் தெரியும், அவ்வளவு அன்யோன்யமான தாம்பத்யம்! வறுமையோ, வளமையோ...கணவன், மனைவிக்குள் மட்டும் புரிதல் தன்மை இருந்து விட்டால் போதும்! சொர்க்கத்தை வேறு எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை, அது நமது வீட்டுக்குள்ளேயே நிரந்தரமாக கூடாரம் போட்டு விடும். மனைவி சொன்னது குறித்து குசேலர் சிந்திக்க ஆரம்பித்தார்.
கிருஷ்ணன் மகாராஜா. அவன் நம்மை  நினைவில் வைத்திருப்பானா? பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள் எல்லாம் காலவெள்ளத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் மறந்து விடுவார்களே! வேண்டாம்! ஒருவேளை, நீ யாரென்று கேட்டு அவன் ஏதாவது சொல்லி விட்டால்...இப்படி சிந்தித்தவர் அப்படியே தடம் மாறினார்.சேச்சே! இது என்ன சிந்தனை! என் கண்ணன் எப்பேர்ப்பட்டவன்! கருணாமூர்த்தியல்லவா அவன்! அவன் என்னை மறப்பதா? சாந்தீபனி முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த போது, ஒருவரை விட்டு ஒருவர் கணநேரம் கூட பிரிந்ததில்லையே! எவ்வளவு இனியமொழி பேசுவான் அவன்! செல்வச்செருக்கு அவனிடம் ஏது! தேவகி பெற்ற பாலகன், யசோதையின் தவப்புதல்வன்... அவன் எவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்தாலும், இந்த ஏழையுடன் உறவு கொண்டானே! அது மட்டுமா! கண்ணன் இருக்குமிடத்தில் கவலைக்கு இடமேது! அவனது நாட்டிலுள்ள மக்களெல்லாம் அவனுக்கு நிகரான செல்வத்துடன் வாழ்கிறார்களாமே! அப்படிப்பட்ட திவ்யமான ஆட்சி நடத்தும் அவனா என்னைப் புறக்கணிப்பான்! சரி...அவன் என்னைப் பார்க்க விரும்பவில்லை என்றே வைத்துக் கொள்வோமே! அவன் தானம் செய்வதற்கென்றே காலையில் வெளியே வருவானாமே! அப்போது, அவன் முகத்தைப் பார்க்கிற பாக்கியம் கிடைக்குமே! நம் நோக்கம் அவனது தரிசனத்தைப் பெற வேண்டும்!  அவனது திருவடியைக் கண்குளிரக் கண்டு சரணாகதி அடைய வேண்டும்! இந்த வாய்ப்புமா கிட்டாது! என்று எண்ண அலைகளை ஓடவிட்டார்.சுசீலை அவரது பதிலுக்காக காத்திருந்தாள்.கணவர் யோசனையில் இருக்கும்போது, மனைவி குறுக்கே பேசக்கூடாது. குசேலர் தொடரைப் படிக்கும் பெண்மணிகள், சுசீலையைப் போல வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இது பெண்ணடிமைத்தனமல்ல! புத்திமதி! வாழ்க்கையின் யதார்த்தம்... விட்டுக் கொடுத்து போகும் தன்மை. வளையாமல் எந்த ஊரிலாவது நதி இருக்கிறதா! வளைந்து சென்றால் தான் அது தன் இலக்கை எட்ட முடியும்! அதுபோல் தான் வாழ்க்கையும்! குசேலர் மனைவியை அமரச் சொன்னார்.
பவளம் போன்ற உதடுகளைக் கொண்டவளே! கேள்! தக்க சமயத்தில், கிருஷ்ண தரிசனம் பெற வேண்டும் என்று நினைவூட்டியதற்காக உன்னைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். உன் குழந்தைகளும், நீயும் வறுமையில் உழன்றாலும் கூட, அவனிடம் போய் செல்வம் பெற்று வாருங்கள் என்று சொல்லாமல், தரிசித்து வாருங்கள் என்று சொன்னாயே! உன்னை எப்படி பாராட்டுவது! வறுமை கொடியது தான்! ஆனால், அது ஏன் ஒருவனை ஆட்டிப்படைக்கிறது தெரியுமா? முற்பிறவியில் வாழ்க்கை தர்மத்தைக் கடைபிடித்து வாழ்பவர்கள் இப்பிறவியில் சகல வளத்துடனும் வாழ்வார்கள். தர்மம் தவறியவர்கள் வறுமை என்னும் துன்பத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இதற்காக வருந்திப் பயனில்லை. அப்படி வருந்துவது அறியாமை. அது மட்டுமல்ல! நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என்பது மனிதர்களின் எதிர்பார்ப்பு. எம்பிரான் கண்ணனைத் தவிர, மற்றவர்களுக்கு அது கைகூடாது. முற்பிறப்பில் செய்த பாவ, புண்ணியத்திற்கேற்ப கரிய நிறமுடைய திருமால் உயிர்களுக்கு வறுமையையும், செல்வத்தையும் தருவான், என்றவரை ஆர்வமாய் நோக்கிய சுசீலை, வாழ்க்கையின் யதார்த்த நிலையை இவரை விட வேறு யாரால் இவ்வளவு அருமையாகச் சொல்ல முடியும்? என்று கருதியவளாய் கணவரை பெருமையுடன் நோக்கி, ஆர்வமாக கேட்க ஆரம்பித்தாள். குழந்தைகளும் ஓடிவந்து வட்டமாக அமர்ந்து கொண்டனர்.சிறிது தீர்த்தத்தை கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்த குசேலர் அதைப் பருகிவிட்டு தொடர்ந்தார்.மணம் வீசும் கூந்தலை உடையவளே! கடவுள் ஏன் பறவைகளையும், விலங்குகளையும் படைத்தான் தெரியுமா? அவை வருமானத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. புதையலைத் தேடி அலைவதில்லை. யாரிடமும் சென்று எதையும் பிச்சை கேட்பதுமில்லை. நாளை உணவுக்கு என்ன செய்வது என்று யோசிப்பதும் இல்லை. ஆனால், அவை தன் இனத்துடன் ஒற்றுமையாக வாழ்கின்றன. அவை உணவில்லாமல் உயிர்விட்டதும் இல்லை. கல்லில் இருக்கும் தேரைக்கும், கருப்பையில் இருக்கும் சிறு கருமுட்டைக்கும் உணவளிக்கும் நம் பரந்தாமன், நம்மைக் காப்பாற்றுவான் என்று உறுதியாக நம்புகிறாயே! எனக்கு பெருமையாக இருக்கிறது, என்றவர் தொடர்ந்தார்.



குசேலர் பகுதி-6



சுசீலா கேள்! பிரம்மன் ஒருவனுக்கு எந்தளவுக்கு ஆயுளை எழுதி வைக்கிறான் என்பதை அறிவுடைய அனைவரும் அறிவர். அதை எப்படி கணிப்பதென்று மயங்காதே. ஒவ்வொருவரும் புண்ணியம், பாவம் என்ற இருவினைகளை எந்தளவுக்கு செய்கிறார்களோ, அந்தளவுக்கு அந்தக் காலம் இருக்கும். அதுபோல, இதே அளவிற்கேற்பவே ஒருவரின் வாழ்க்கை வசதியும் அமையும், என்று நிறுத்தினார். இன்றைக்கு உலகத்தில் பணக்காரர்களாக இருப்பவர்களைப் பார்த்து, இல்லாதவர்கள் பொறாமைப்படுகிறார்கள். இவருக்கு மட்டும் இவ்வளவா? இவர் நல்ல வழியில் தான் சம்பாதித்த பணமாகத் தெரியவில்லையே என்று விமர்சிக்கிறார்கள். இந்த விமர்சனத்துக்கு அவசியமே இல்லை. நியாயம் தவறாமல் நடக்கும் ஒருவன் ஏழையாய் இருக்கிறான் என்றால், அவன் செய்த முன்வினைப் பாவத்தின் பலனே ஆகும் என்பதை குசேலரின் இந்த சொற்கள் நமக்கு உணர்த்துகின்றன.குசேலர் மேலும் தொடர்ந்தார். அன்புக் குழந்தைகளே! இந்த உலகத்தில் படித்தவன் யார் தெரியுமா? தன்னிடம் செல்வமிருக்கிறது, அழகிருக்கிறது, அழகான மனைவி வாய்த்து விட்டாள், அறிவுள்ள புத்திரர்கள் ஏராளமாக இருக்கிறார்கள், கவலையே இல்லாததால் தலை கூட வெளுக்கவில்லை என்று எவன் ஒருவன், இவற்றையெல்லாம் பெற்றிருந்தாலும் நினைப்பதில்லையோ, அவனே நூலறிவு உள்ளவன். அதாவது, இவையெல்லாம் நிலைப்பதில்லை என்பதால் அவன் கர்வம் கொள்ளமாட்டான். நாம் கிருஷ்ணனை மட்டுமே நம்புவோம். அவன் திருநாமத்தையே சுவாசிப்போம். பணம் என்பது அவனது திருநாமத்தை சொல்வதன் முன் ஒரு பொருட்டேயல்ல! கொலை, உண்ணும் உணவில் ஆடம்பரம், சிநேகிதர்களையே வஞ்சிக்கும் குணம், நல்லவர்களைப் பழிக்கும் குணம் ஆகியவற்றையே பணம் தரும். பணத்தின் மீது பற்றுள்ளவன் கோயிலில் கூட கொள்ளையடிப்பான், என்று முடித்தார்.
குசேலர் என்றோ சொன்ன வார்த்தைகள் ஆனாலும், இவை அனைத்தும் இன்றைக்கும், என்றைக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறதல்லவா! அப்போது, சுசீலை அவரிடம்,  சுவாமி! செல்வத்தின் இழிநிலை குறித்து தெளிவாகச் சொன்னீர்கள், இதில் இருந்து விடுபடும் வழி உலகத்தாருக்கு கடினமாய் உள்ளதே! அதற்கு வழியிருக்கிறதா? என்றாள். கையில் பொருள் வந்தால் கோயில்களுக்கு கொடுக்க வேண்டும். அங்கே சொல்லப்படும் உபன்யாசங்களை கேட்க வேண்டும். யாசகம் கேட்டால் கொடுக்க வேண்டும். எம்பெருமான் நாராயணனின் திருவடிகளை நினைத்தபடி இருந்தாலே பொருள் பற்று குறைந்து போகும், என்ற குசேலர், பணம் மட்டுமின்றி, குடல், ரத்தம், எலும்பு,கொழுப்பு, தோல், மாமிசம், மலம் நிரம்பிய உடலைக் கொண்ட பெண்களையும் மனிதன் விரும்புகிறான். இதுவும் கொடிய ஆசையே, என்றார்.சுவாமி! பொன்னாசை, பெண்ணாசை பற்றி சொல்லி விட்டீர்கள். குழந்தைகளைப் பெற்றவனாவது பாக்கியவானா? அவன் செல்வம் பெற்றவன் தானே, என்றதும் குசேலர் புன்னகைத்தார்.சுசீலா! யதார்த்தத்தைப் புரிந்து கொள்! குழந்தையைப் பெறும் போது தாய் துன்பப்படுகிறாள். மனைவியின் துன்பம் கண்டு கணவன் மனம் நோகிறான். வளர்க்கின்ற நாளிலும் துன்பம் தானே! அந்தக் குழந்தைக்கு ஒரு நோய் வந்தால் மனிதனால் தாங்க முடியுமா? பருவத்தை அடைந்து விட்டாலும் துன்பம். எமன் வந்து அந்தக் குழந்தையின் உயிரை இடைநாளில் பறித்தால்... அப்பப்பா! அந்த துன்பம் காலமெல்லாம் மாறுமா? இளமையில் பெற்றவர்கள் கொடுக்கும் தண்டனைக்கு பயந்து நடுங்குவார்கள். பெற்றவர்கள் முதுமையடைந்து விட்டால் இவர்களைக் கண்டு நடுங்க வைத்து விடுவார்கள், என்றார். தன் கணவரின் சொல்லில் உள்ள உண்மையை உணர்ந்த சுசீலை, அவரை துவாரகாபுரிக்கு அனுப்புவதற்கான பணிகளில் ஈடுபடத் தயாரானாள்.சுவாமி! தாங்கள் சொன்னபடி நிஜமான பேரின்பமான ஸ்ரீகிருஷ்ணரின் திருவடி தரிசனம் காண புறப்படுங்கள். அவரது தரிசனத்தை விட மிகப்பெரிய செல்வம் வேறென்ன இருக்கப்போகிறது? தாங்கள் புறப்படுங்கள், என்றாள்.
அப்போது அவர், அன்புடையவளே! உனக்குத் தெரியாத விஷயமல்ல! இருப்பினும் சொல்கிறேன். என் அன்பு நண்பனைக் காணச் செல்வதில் எனக்கு மகிழ்ச்சியே! ஆனால், இப்போது அவன் அரசன். அது மட்டுமா! அவனே தெய்வம். அவனே இந்த உலகத்துக்கு ஆசான். கடவுள், அரசர், குரு ஆகியோரைக் காணச் செல்பவர்கள் வெறும் கையுடன் செல்வது முறையல்ல. அவர்களைக் காணச் சென்றால் கனி வகைகளோ பிறவற்றையோ எடுத்துச் செல்ல வேண்டும். இல்லாதவன், இருப்பவன் முன் செல்வது ஆகாது என்பது உலகவிதி. ஏனெனில், அங்கே அவனுக்கு மதிப்பிருக்காது. உறவினர்கள் ஒரு வீட்டுக்குச் சென்றால், கையில் என்ன கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பார்ப்பது உலகம். என் கண்ணன் இந்தக் குணங்களுக்கு அப்பாற்பட்டவன் என்றாலும், கையில் ஏதாவது கொண்டு செல்வது தானே முறை! அவன் மகாபெரியவன்! அவனிடம் இல்லாத பொருள் ஒன்று உண்டோ? இந்த எளியவனால் அவனுக்கு கொண்டு செல்லத்தக்க பெரிய பொருள் இல்லை. ஆனாலும், இறைவன் சிறு பொருளையும் காணிக்கையாக ஏற்பான். சுசீலா! உனக்கு ஒன்று தெரியுமா? நமது ஊர் கன்னிப்பெண்கள் தனக்கு நல்ல கணவன் வாய்ப்பதற்காக தங்கள் புடவை முந்தானையில் உள்ள நூலிழையைப் பறித்து மூன்றாம் பிறைச்சந்திரனுக்கு அர்ப்பணம் செய்வதைப் பார்த்திருக்கிறாய் அல்லவா! அந்த நூலிழைக்கு என்ன மதிப்புண்டு? ஆனால், அது மிக நல்ல கணவனை அவர்களுக்கு தருகிறதே! நம் வீட்டிலும் என் கிருஷ்ணனுக்கு கொண்டு செல்லத்தக்க பொருள் ஏதுமில்லை. அதனால், இருப்பதைக் கொடு, அதை அவனிடம் கொண்டு சேர்ப்பிக்கிறேன், என்றார்.சுசீலை சற்றும் தாமதிக்கவில்லை. அவளது வாழ்நாளில், பக்கத்து வீடுகளில் தன் குழந்தைகளின் பசிக்காக கூட எள்ளளவு பொருளும் கேட்டதில்லை. முதன் முறையாக பகவானுக்காக யாசகம் கேட்கச் சென்றாள்.மாமி! மாமி! என் கணவர் கண்ணபிரானை தரிசிக்கச் செல்கிறார். கண்ணனும், என் கணவரும் பால்ய சிநேகிதர்கள். அவரைக் காணச் சென்றால் வெறும் கையுடன் செல்ல முடியுமா? தங்கள் இல்லத்தில் இருந்து கொஞ்சம் நெல் தாருங்களேன், என்று கேட்டு அலைந்தாள்.



குசேலர் பகுதி-7



எல்லோருமே மனம் உவந்து நெல் கொடுத்தனர். அதைக் குத்தி அவல் தயார் செய்தாள். அவல் தயாராயிற்று...கிருஷ்ணனுக்கு எடுத்துப் போக வேண்டும் என்றால் வெள்ளிப்பாத்திரம் இருந்தால் எடுத்துப் போக நன்றாகத் தான் இருக்கும். ஆனால், குசேலர் வீட்டில் என்ன இருந்தது? ஒரு கிழிந்த வேட்டி. அதில் ஒரு முனையைக் கிழித்து அதில் அவளைக் கட்டினாள். கணவரின் கையில் கொடுத்து,அன்பரே! கிருஷ்ணரைத் தரிசித்து வாருங்கள். நாங்களெல்லாம் அவரை விசாரித்ததாகச் சொல்லுங்கள், என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள்.குசேலர் புறப்பட்டார். அவரது பசியைத் தீர்த்துக் கொள்ள கட்டுச்சோறு ஏதும் வைத்துக் கொள்ளவில்லை. கைச்செலவுக்கு பணம் எடுத்துச் சென்றார்... என்ன பணம் தெரியுமா? கிருஷ்ணபக்தி என்னும் அன்புப்பணம். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண... இப்படி கிருஷ்ணனின் திவ்யநாமத்தைச் சொல்லிக் கொண்டே நடந்த போது வயிற்றின் மீது அவருக்கு சிந்தனையே வரவில்லை. கால்கள் வலித்தது தெரியவில்லை. 300 கிலோமீட்டர் தூரம் அவர் நடந்து சென்றதாகச் சொல்வார்கள் ஆன்றோர்கள்.வழியில் சில சமயங்களில் பாதை தெரியாமல் தடுமாற்றம் ஏற்படும். அங்கே இருப்பவர்களிடம் விசாரித்து அவ்வழியில் செல்வார். சில இடங்களில் சாலை நான்கு பாதையாகத் தெரியும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் புலப்படமாட்டார்கள். அப்போது, தன் சுயஅறிவைப் பயன்படுத்தி, கிருஷ்ணனின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அவ்வழியில் செல்வார். அந்தப் பாதை சரியாகவே இருக்கும். அவர் செல்லும் வழியில் பல மலைகள் இருந்தன. அங்கே பெண் யானைகளின் ஊடலைத் தீர்க்க ஆண் யானைகள் தளிர் இலைகளைப் பறித்து தருவதை ரசித்தபடியே சென்றார். சில இடங்கள் மிக மேடாகவும், கற்கள் நிறைந்தும் இருந்தன. அவற்றில் தடுமாறி தடுமாறி நடந்தார்.
சில இடங்களில் புலி, சிங்கம், கரடிகள் நிறைந்த காடுகள் வந்தன. கண்ணன் இதயத்துக்குள் இருக்கும்போது கரடிகள் என்ன செய்யும்? அந்தக் காடுகளையெல்லாம் அவர் அச்சமின்றி கடந்தார். ஆங்காங்கே நதிகளும் குறுக்கிட்டன. அவற்றுள் இறங்கி நடந்த அவர், வெப்பம் மிக்க இடங்களையும் கடக்க வேண்டியதாயிற்று.கொஞ்ச தூரமா! குசேலருக்கு வருத்தம் உண்டாயிற்று.கிருஷ்ணா! உன்னைக் காண எவ்வளவு தூரம் நடந்து விட்டேன்! ஊரை விட்டுக் கிளம்பி ஒரு வாரமாயிற்று. துவாரகையின் எல்கையை இன்னும் காண முடியவில்லையே! துவாரகை எங்கிருக்கிறது என யாரைக் கேட்டாலும், இன்னும் பல காத தூரம் செல்ல வேண்டுமே என்று தான் எல்லாரும் சொல்கிறார்கள். சில இடங்களில் குடிக்க நீர் கிடைக்கவில்லை. ஏனெனில் ஓடைகளெல்லாம் வறண்டு கிடந்தன. ஓரிடத்தில் காலில் முள் தைத்தது. அதை எடுப்பதற்கு அவரால் முடியவில்லை. கால் கடுமையாக வலிக்கவே நொண்டியபடியே நடக்க வேண்டியதாயிற்று. குசேலர் ஓரிடத்தில் அமர்ந்தார். வீட்டை விட்டு கிளம்பியது தவறோ என்று கூட அவர் மனதில் பட்டது. அதே நேரம் எம்பிரானின் நினைவு மனதில் வரவே துணிச்சல் ஏற்பட்டது. உயிரே போனாலும் சரி...நண்பனைப் பார்த்தே தீருவதென உறுதியெடுத்தார்.கடவுளைக் காண்பது என்பது அவ்வளவு எளிதல்ல. கடவுளை நேரில் பார்த்தால் தான் நம்புவேன் என்று அடம்பிடிப்பவர்கள் இன்றைக்கும் இருக்கத்தானே செய்கிறார்கள்! கடவுள் என்றால் சாதாரணமானவனா! அவனை அவ்வளவு எளிதில் பார்த்து விட முடியுமா! கடவுளைக் காண நாம் தியானம் மேற்கொண்டால் போதாது! தவம் செய்தால் போதாது. வாசனாதி திரவியங்கள் கொண்டு பூஜித்து புளியோதரையையும், சர்க்கரைப் பொங்கலையும் அவனை முகரச் செய்தால் போதாது! உறுதி...உறுதி...உறுதி...ஆம் உறுதியான பக்தியே அவனை நம் கண்முன் காட்டும்! அந்த உறுதியுடன் துவாரகை நோக்கி பயணமானார் குசேலர்.
சுகப்பிரம்ம முனிவர், பரீட்சித்து மன்னனிடம் இந்தக் கட்டத்தை சொல்லிக் கொண்டிருந்த போது, மன்னன் கிரீடம் அணிந்த தன் தலை பூமியில் படும்படி வணங்கினான். யாருக்கு இந்த வணக்கம் தெரியுமா? காலில் முள் தைத்தாலும், அதை எடுக்க முடியாவிட்டாலும், தத்தி தத்தி குழந்தை போல நடந்தாரே...அந்த குசேலரின் திருவடியை மனதார எண்ணி வணங்கினான். இந்தக் கதையை வாசிக்கும் நமக்கும் அந்தப் பாக்கியம் கிட்டியிருக்கிறது. பகவானை விட பாகவதன் (பக்தன்) உயர்ந்தவன். பகவானே பக்தனுக்குப் பயந்து அவனைத் தேடி வந்து விடுவான். பகவான் நரசிம்மனாக வெளிப்பட்டதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.இரணியன் கதையுடன் நிற்கிறான். ஏ பிரகலாதா! எங்கேயடா உன் ஹரி? என்று கேட்கிறான். பகவான் டென்ஷன் ஆகி விட்டார்.இந்தப் பொடியன் நம்மை எங்கே இருப்பதாகச் சொல்லப் போகிறானே! எதற்கு வம்பு! நாம் தூணிலும் இருப்போம், துரும்பிலும் இருப்போம் என்று  உலகிலுள்ள சகல வஸ்துக்களிலும் தன் உருவத்தை வியாபித்துக் கொண்டானாம். அவன் இதோ இந்த தூணில் இருக்கிறான் என்று சொல்ல, தூணைப் பிளந்து வெளிப்பட்டான். பார்த்தீர்களா! உலகையே நடுங்க வைத்த நரசிம்மம், அந்தச் சிறுவனுக்கு நடுநடுங்கிப் போனதை! அவன் தான் பகவான். நிஜபக்திக்கு அவன் கட்டுப்பட்டு நிற்பான்.தன் நண்பனைப் பார்த்தே தீருவதென்ற உறுதியுடன் நடந்த குசேலர் ஒருவாறாக துவாரகையை எட்டியே விட்டார். மனமெங்கும் பரவசம். இருந்தாலும், அந்த நேரத்திலும் நிதானம். துக்கமோ, மகிழ்ச்சியோ எந்த உணர்வுக்கு நாம் ஆட்பட்டிருந்தாலும் நிதானத்தை மட்டும் விடவே கூடாது. குசேலர் மிகவும் பவ்வியமாக துவாரகைக்குள் சென்றார். குறிப்பாக, பெண்கள் எதிரே வந்தால் ஒதுங்கி நின்று அவர்களுக்கு வழிவிட்டுச் சென்றார். ஒழுக்கம் உயிரை விட உயர்ந்தது என்பது அவர் இவ்விடத்தில் நமக்கு கற்றுத்தரும் பாடம். மாடமாளிகைகள் நிறைந்த அந்த ஊரின் இயல்பு ஆச்சரியப்பட வைக்கும். எல்லாமே மாளிகைகள்... இதில் கண்ணனின் மாளிகை எது? குசேலர், அந்நகரை ஆச்சரியமாகப் பார்த்தபடி  நடந்தார்.



குசேலர் பகுதி-8



எந்த வீட்டில் கணவனும், மனைவியும் ஒற்றுமையாக இருக்கிறார்களோ அதை கோயில் என்று சொல்லலாம். கோயிலுக்குச் சென்றால் மனம் ஒருமைப்படுவது போல, பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்து குழந்தைகளும் ஒற்றுமையைக் கடைபிடிப்பார்கள். கண்ணன் ஆண்ட துவாரகையில் வீட்டுக்கு வீடு தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். அந்த ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக, பல வீடுகளில் அவர்கள் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். சிவிறி, பந்து எனப்படும் நீர் விளையாட்டுக் கருவிகள் அந்தக் காலத்தில் உண்டு. இதற்குள் தண்ணீரை அடைத்து ஒருவர் மீது ஒருவர் பீய்ச்சி அடித்து சிரித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். குசேலர் இந்தக் காட்சியைப் பார்த்து மனம் மகிழ்ந்தபடியே சென்றார். நல்லாட்சி நடக்கும் நாட்டில் தானே மகிழ்ச்சி இருக்கும்! அதிலும், தன் நண்பன் ஆளும் நாட்டில் இப்படி ஒரு நிலை என்றால், அவரோடு படித்த குசேலருக்கு பெருமையாக இருக்காதா என்ன! அவர் தொடர்ந்து சென்றார். ஒரு தெருவில் மக்கள் நடமாட்டம் மிக அதிகமாக இருந்தது. தேர்கள் அங்குமிங்கும் விரைந்து கொண்டிருந்தன. சில இடங்களில் பல தேர்கள் ஒன்றையொன்று ஒட்டிச் சென்றதால் ஏற்பட்ட இடநெருக்கடியால், அவர் எங்கும் புக முடியாமல் ஓரமாக ஒதுங்கிச் செல்ல வேண்டியதாயிற்று. மக்கள் நெருக்கமாக சென்ற போது, குசேலரை அவர்கள் உரசியபடி செல்ல வேண்டியதாயிற்று. அவர்கள் தங்கள் உடலில் சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட நறுமணப் பொருட்களைப் பூசியிருந்தனர். குசேலரின் கிழிந்த ஆடையிலும் அது பட்டதால், பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும் போல் என்பது போல குசேலரின் உடையும் மணத்தது. குசேலர் தன் ஊரில் இருந்து புறப்பட்டு, இங்கு வந்து சேரும் வரை என்ன பாடுபட்டார்... கால் வலி கடுமையாக இருந்தது. ஆனால், துவாரகை வந்து சேர்ந்ததும் பாதிக்களைப்பு மறைந்தது.
ஊரின் நிலையைப் பார்த்ததும் மீதிக்களைப்பும் ஓடி விட்டது. கஷ்டப்பட்டு வேலை பார்த்தால் களைப்பு வரும். இஷ்டப்பட்டு பார்த்தால் களைப்பு வருமா? இதேநிலை தான் குசேலருக்கும்! மனம் மகிழ்ச்சியில் திளைக்கும் போது, எப்பேர்ப்பட்ட புறச்சூழ்நிலையும் மனிதனைப் பாதிப்பதில்லை. சாதாரண மனிதனுக்கே இப்படியென்றால், குசேலர் போன்ற பக்குவப்பட்ட ஆன்மாக்களின் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை.ஒரு வழியாக கண்ணபிரான் குடிகொண்டிருந்த அரண்மனை வாயிலை குசேலர் அடைந்தார். அங்கே பஞ்சவாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. கிருஷ்ணரைக் காண வந்திருந்த மன்னர்கள் தங்கள் கால்களில் அணிந்திருந்த வீரச்சிலம்புகள் எழுப்பிய ஒலி, அந்த இசைக்கு தாளம் எழுப்பியது போல் இருந்தது. எங்கும் ஒரே கூட்டம்.குசேலருக்கு மீண்டும் மனதில் தயக்கம். இங்கே கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்தால், கண்ணனை நாம் தரிசிப்பதற்கு ஆண்டுக்கணக்கில் ஆகிவிடும் போல் தெரிகிறதே! இவர்கள் அணிந்திருக்கும் ஆடை, அணிகலன்களைப் பார்த்தால் சேவகர்கள் அவர்களைத் தானே முதலில் அனுமதிப்பார்கள்! நம் நிலைமை என்னாவது? நம் ஊர் கோயிலிலேயே பட்டுவேட்டி கட்டி. பத்து விரல்களிலும் மோதிரம், கழுத்து நிறைய சங்கிலி அணிந்து வந்தால் முதல் ஆளாக சுவாமி முன்னால் நிறுத்தி விட்டு, நம்மை பொது தரிசனம் பக்கமாக விரட்டி விடுவார்களே! இங்கே மன்னாதி மன்னர்களெல்லாம் வரிசையில் நிற்கிறார்கள்! நமக்காவது கிருஷ்ண தரிசனம் கிடைப்பதாவது. சரி...வருவது வரட்டும். வரிசையில் நின்று விடுவோம், என்று நினைத்தபடியே வரிசைக்கு சென்ற வேளையில், சில  வீரர்கள் வாளை கையில் ஏந்தியபடி, உம்...ஓரம்...ஓரம்...மகாராஜா வருகிறார்... ஓரம்.. ஓரம்.. என்று எச்சரித்தபடியே சரேல் பாய்ச்சலில் ஓடிவந்தனர். பின்னால், ஏதோ ஒரு நாட்டின் மகாராஜா படைவீரர்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தார். அவர்களின் வாள் மின்னியதைக் கண்டு குசேலர் பயந்தே போய்விட்டார்.
ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டார்.இந்தக்காலத்தில் மட்டுமல்ல! எந்தக் காலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் ஊருக்குள் வந்தால் சாதாரண மக்களுக்கு தொல்லையாகத் தான் இருந்துஉள்ளது போலும்!அந்த பரபரப்பு அடங்கியதும், மீண்டும் வரிசையில் இணைந்து கொள்ள முயன்றார் குசேலர். அப்போது, கண்ணனைக் காண வந்த மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர். யாரோ ஒரு ராஜா கண்ணனுக்கு கொண்டு வந்த காணிக்கைப் பொருளை வேடிக்கை பார்ப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு சென்றனர். காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு தடிகளுடன் பாய்ந்தனர். அதைக்கண்ட கூட்டம் சிதறி ஓட அதற்குள் சிக்கிக் கொண்ட குசேலரும் ஓட வேண்டியதாயிற்று. மீண்டும் ஒதுங்கி நின்ற போது அதிர்ஷ்டம் அவரைத் தேடி வந்தது. மகாராஜா ஒருவரை காவலர்கள் சிலர் அழைத்து வந்தனர். அப்போது அவ்விடத்தில் நெரிசல் ஏற்பட்டது. இடிபாட்டில் குசேலரும் சிக்கிக் கொண்டார். அவரை ஒதுங்கி நில்லுமையா என்று அதிகாரத்துடன் சில படைவீரர்கள் பேசினர். ஆனால், குசேலரால் ஒதுங்க முடியாத அளவுக்கு நெரிசல்.நீர் ஒதுங்கி நிற்கிறீரா! இல்லை! உம்மை அப்படியே தள்ளிக்கொண்டு போகட்டுமா! என்று கேட்ட படைவீரன் ஒருவன் சற்றும் காத்திராமல், அவரை அப்படியே தள்ளிக்கொண்டு போய்விட்டான். குசேலர் அந்த நெரிசலில் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. பலமற்ற ஒல்லியான உடலையுடைய அவர் மூச்சுவிட கூட சிரமப்பட்டார். கூட்டத்தில் குசேலர் சிக்கிக் கொண்டார். கைகள் ஒடிந்து விடுமோ என்ற நிலை!  எப்படியோ தன்னை விடுவித்துக் கொண்டார். வியர்வை கொட்டியது. அந்தக் கூட்டம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றது. என்ன ஆச்சரியம்! இப்போது நெரிசல் சற்று குறைந்து விசாலமான ஒரு இடத்தில் அவர் நின்றார்.ஆஹா... இங்கேயே வந்து விட்டோமா! அவரது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.



குசேலர் பகுதி-9



கண்ணபிரான் கொலுவிருக்கும் அறை வாசல் அருகேயே அவர் வந்துவிட்டார். அங்கே காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நெற்றியில் திருநாமம் இட்டு, கைகளில் சங்கு, சக்கர முத்திரை பதித்திருந்தனர். தாமரை மணிமாலை, துளசிமணி மாலை அணிந்திருந்தனர். ஆஜானுபாகுவாக நின்ற அவர்களைக் கண்டதும், இவர்கள் வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு பாதுகாவல் அளிக்கும் ஜெயவிஜயர்கள் என்றே குசேலர் கருதினார். சில மன்னர்கள் அவர்களிடம் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்தி கண்ணனைக் காண வந்திருக்கும் விஷயத்தைக் கூறிக்கொண்டிருந்தனர். குசேலரும் தன் முறைக்காகக் காத்திருந்தார். அவர் க்ஷவரம் செய்து பல நாட்கள் ஆகியிருந்தது. முகத்தில் குறுந்தாடி. நீண்டநாள் நடந்து வந்ததில் ஆடைகள் மேலும் நைந்து போனதால், இதை விட கிழிசலாக உலகில் ஒரு துணி இல்லை என்ற அளவிலேயே அவரது ஆடை அமைந்திருந்தது.அவர் காவலர்களின் அருகே சென்றார்.அன்புள்ளம் கொண்டவர்களே! இவ்வுலகில் பிறந்த மக்களிலேயே புண்ணியம் பெற்றவர்களே! பிரம்மாவும் பெரும் தவம் செய்த முனிவர்களும் கூட அடைய முடியாத பாக்கியத்தைப் பெற்றவர்களே! சகலகலா வல்லவர்களே! உங்களுக்கு  என் ஆசிர்வாதம், என்று ஆரம்பித்தார். ஒரு பெரிய இடத்துக்குச் செல்கிறீர்கள். வாசலில் யாரெல்லாமோ முக்கியஸ்தர்கள் நிற்பார்கள். ஆனால், அலுவலகப் பையன் உள்ளே போவதும் வருவதுமாக இருப்பான். வெளி உலகுக்கு அவன் சாதாரண வேலைக்காரன். ஆனால் முக்கியஸ்தரைப் பார்க்க, அவனை மீறி யாராலும் நுழைய முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் முக்கியத்துவம்.
சாதாரண அலுவலகங்களுக்கே இப்படியென்றால், தெய்வத்தின் வீட்டில் வாயில் காவலனாக இருப்பவர்களுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கும்? பிரம்மாவும், முனிவர்களும் வந்தால் கூட அவர்களிடம் தான் அனுமதி கேட்டாக வேண்டும். அவர்களை அனுமதிக்கும் உத்தரவு பெற இவர்கள் கண்ணனைக் காண ஓட வேண்டும்! முக்கியஸ்தர் ஒருமுறை மட்டும் தான் தெய்வ தரிசனம் பெற முடியும். ஆனால், இறைவனுக்கு தொண்டு செய்பவர்களோ தினமும் அவரைப் பலமுறை பார்க்கலாம். பல்லக்கில் வீதியுலா வரும் சுவாமியை தெருவில் நிற்கும் பக்தன் எம்பிக்குதித்து தான் பார்க்க வேண்டும். பல்லக்கை சுமப்பவன், ஒவ்வொரு முறையும் அதை கீழே இறக்கி வைக்கும்போதும் பார்க்க முடியுமல்லவா!குசேலர் தொடர்ந்தார்.உங்களைப் பார்த்தவுடன் அந்த பரந்தாமனையே பார்த்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. திருமகளின் நாயகனுக்கு சேவை செய்யும் நீங்கள் மிகவும் உயர்ந்தவர்கள், மாசு மருவற்றவர்கள். என் பெயர் குசேலன். இளமையில் கண்ணபிரானுடன் குருகுலத்தில் ஒன்றாகப் படித்தவன். நான் வந்த நோக்கத்தைச் சொல்கிறேன். ஆற்றைக் கடக்க விரும்புபவன் படகில் ஏறி, படகோட்டியின் உதவியால் கரை சேர்கிறான். அதுபோல், பிறவிக்கடலைக் கடந்து முக்தி பெற விரும்புபவன் இறைவனின் திருவடியை நாடுகிறான். நான் எம்பெருமானைத் தரிசித்து முக்திபெறும் நோக்கத்தில் வந்திருக்கிறேன். அவன் கருணைக்கடல். கோகுலத்து ஆயர்களை இந்திரன் கல்மழை பெய்வித்து துன்பம் செய்தான். பகவான் கோவர்த்தனகிரியை உயர்த்திப் பிடித்து அவர்களைக் காப்பாற்றினார். அத்தகைய கருணைக்கடலிடம், தாங்கள் என் வருகையை தெரிவித்து, அவரை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும், என்று கேட்டுக் கொண்டார். சுகப்பிரம்ம முனிவர், பரீட்சித்து மன்னனிடம் இந்தக் கட்டத்தைச் சொல்லும் போது அவரது நா தழுதழுத்தது. பரீட்சித்துவும் உருக்கத்துடன் கேட்டான்.மாமுனிவரே! தாங்கள் நா தழுதழுப்பதைப் பார்த்தால் குசேலருக்கு ஏதோ அவமானம் இழைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறதே! என்னாயிற்று! துவாரபாலகர்கள் அவரை அனுமதித்தார்களா இல்லையா என அவசரப்படுத்தினார்.
சுகப்பிரம்மர் கவலை பொங்கும் முகத்துடன் கதையைத் தொடர்ந்தார்.பரீட்சித்து! நீ நினைப்பது சரியே! குசேலர் சொன்னது கேட்டு, அருகில் நின்ற மன்னர்கள் சிலர் ஏளனம் செய்தனர்.ஏ பிராமணனே! இவ்வுலகம் மட்டுமின்றி, எவ்வுலகுக்கும் தலைவனான கிருஷ்ண பரமாத்மா எங்கே! நீ எங்கே? துவாரங்கள் கொண்ட ஆடையை அணிந்த நீ, துவார பாலகர்களிடம் கண்ணனைச் சந்திக்க அனுமதி கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லை. கண்ணனைச் சந்திக்க ஒரு தகுதி வேண்டாமா! உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? இப்படி வீணான சிந்தனைகளை செய்தே நீ விரைவில் கிழவனாகி விட்டாய் போலும்! என்று ஒருமையில் பேசி இகழ்ந்தனர். அதோடு விட்டார்களா! இன்னும் இழிவான சொற்கள் அவர்களது வாயில் இருந்து வெளிப்பட்டன.ஏய் பிராமணா! நீயும் கண்ணனும் ஒன்றாகப் படித்ததாகச் சொல்கிறாயே! அவர் பலமிக்கவர். அவரது யானைகள் மன்னர்கள் அணிந்துள்ள ஒளிமிக்க கிரீடங்களைப் பந்தாடி மகிழும். அவருடைய யானைகளுக்கே பொன்னாலான கிரீடங்கள் பந்து என்றால், அவரது செல்வத்தின் அளவு எத்தகையதாக இருக்கும். அவருடன் படித்தவர்கள் இப்படி கந்தையுடன் திரிவார்கள் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அப்படியே நீ படித்திருந்தாலும் அவரது இன்றைய நிலைக்கு நீ கொசுவுக்கு சமமானவன். அவர் கடல், நீ குழிக்குள் கிடக்கும் நீர். அவர் சூரியன், நீ மின்மினிப்பூச்சி. அவர் மரம், நீர் பயன்படாத புல். அவர் ஆதிசேஷன். நீ பூச்சி என்று கடுமையான வார்த்தைகளால் நிந்தித்தனர். இன்று நேற்றல்ல! எளியவனை வலியவன் எந்த யுகத்திலும் இப்படித்தான் பார்த்திருக்கிறான்.இத்தோடு விட்டார்களா அந்தக் கயவர்கள்! குசேலரைப் பயமுறுத்தும் வகையில், கண்ணனைப் பார்க்க என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று பட்டியலிட ஆரம்பித்தார்கள். அதைக்கேட்டு, குசேலருக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. இந்த தகுதிக்கு நான் எங்கே போவேன்? கண்ணா! மணிவண்ணா! உன்னைக் காண முடியுமா! அவரது கண்களில் நீர் முட்டியது.





குசேலர் பகுதி-10





அந்த பட்டியல் தான் என்ன? பிராமணரே! செல்வந்தர்களே ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிக்க இயலும். அவ்வாறு வருபவர்கள் கைகளில் தங்கக்காப்பு அணிந்திருக்க வேண்டும். காதுகளில் மகர குண்டலங்கள் ஒளி வீச வேண்டும். பத்து விரல்களிலும் நவரத்தினங்களால் ஆன மோதிரங்கள் அணிந்திருக்க வேண்டும். மார்பில் தங்க மாலைகள் ஒளி வீச வேண்டும். முத்தாரம் அணிந்திருக்க வேண்டும். பட்டாடைகளை உடுத்தியிருக்க வேண்டும். பல்லக்கில் வர வேண்டும். குடைபிடிக்க பணியாட்கள் வேண்டும், என்று அவர்கள் சொன்னதை குசேலர் கேட்டும் அமைதியாக நின்றார்.அவருள் இருந்த கிருஷ்ணபக்தி மட்டும், எப்படியேனும், நம் கண்ணன் நம்மைக் காண சம்மதிப்பான் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.மன்னர்கள் அவரது உணர்வைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்தனர்.பிராமணரே! நாங்கள் சொன்னதை நீர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நினைக்கிறோம். சரி...ஐயா! உம் கூற்றுப்படி, கிருஷ்ணர் உம்முடன் படித்ததாகவே இருக்கட்டும். என்றோ ஒருநாள் படித்தார் என்பதற்காக, உம்மைக் காண எப்படி வருவார்? நீர் அவர் நினைவில் நிற்க வேண்டுமே! நேற்று சாப்பிட்ட உணவே இன்று மறந்து போகிறவர்களே உலகில் அதிகம். நீர் பால்யத்தில் அவருடன் படித்ததை அவர் நினைவு வைத்திருப்பார் என்பதை எப்படி நம்புகிறீர்? அப்படி அவர் உமக்கு நெருக்கமான நண்பராக இருந்திருந்தால் இதுவரை உமக்கு ஏதாவது கடிதங்கள் அனுப்பியிருக்கிறாரா? உம்மைப் பற்றி விசாரிக்க தூதுவர்களை அனுப்பியிருக்கிறாரா? அன்றைக்கு ஏதோ உம்மோடு கிருஷ்ணர் பழகியிருக்கிறார். ஆனால், இப்போது அவரது தகுதியே வேறு. அந்த தேவேந்திரனே வந்தாலும் கூட எங்களைப் போல் காத்து நின்றாகத்தான் வேண்டும்! என்றனர்.
குசேலர் இப்போதும் பதில் சொல்லாமல் நின்றார்.இதைக் கண்ட மன்னர்கள் மீண்டும் தங்கள் பேச்சில் கடுமையைக் கூட்டினர். பெரியவரே! நீர் அந்தணர்! அந்தணர்க்கு கற்றல், கற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட அறுவகை தொழில்கள் உள்ளன. அந்த தொழிலை ஒழுங்காகச் செய்து நீர் பிழைத்திருக்க வேண்டியது தானே! அதை விடுத்து பெரும் பொருளின் மீது மையல் கொண்டு கண்ணனைக் காண, இவ்வளவு தூரம் நீர் உடம்பை வருத்தி வந்திருக்க வேண்டுமா? என்றனர்.குசேலரின் மனம் இதைக் கேட்டு என்ன பாடு பட்டிருக்கும்? அவரா பேராசைக்காரர். ஒரு விஷயத்தில் மட்டும் தானே அவருக்கு பேராசை. அதுதான் கிருஷ்ண தரிசனம். தன் நண்பனை ஒரே ஒருமுறை எட்ட நின்று பார்த்தால் கூட போதும்! அவர் சந்தோஷமாக ஊர் திரும்பி விடுவாரே!மவுனம் மிகப்பெரிய ஆயுதம். பிறர் நமக்கு கோபமூட்டும் போது, யார் ஒருவன் உணர்ச்சிவசப் படாமல் இருக்கிறானோ அவனே பெரிய வீரன் என்பார் சுவாமி விவேகானந்தர். இந்த பொன்மொழிக்கேற்ப, குசேலர் இந்த அவச்சொற்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு எம்பெருமானுக்காக காத்து நின்றார்.அப்போது வாயிற்காவலர்கள் மன்னர்களை அடக்கினர்.நிறுத்துங்கள்! யாரும் எதுவும் பேசக்கூடாது. பரமாத்மாவின் அரண்மனையில் மன்னர்களுக்கு தான் கட்டுப்பாடு! இவரைப் போன்ற வேதம் கற்ற பிராமணர்கள் எந்த நேரமும் இங்கு வரலாம். அவர்களுக்கு பரமாத்மா நிச்சயம் காட்சி தருவார், என்றனர். மன்னர்கள் வாயடைத்து நின்றார்கள்.அந்த துவாரபாலகர்களுக்கு மகான்களின் அருமை பற்றி மிக நன்றாகத் தெரியும். அவர்களின் முன்அனுபவம் அப்படி! ஜெய விஜயர்களாக அவர்கள் வைகுண்டத்தில் காவல் காத்த போது, சனகாதி முனிவர்களைத் தடுக்கப்போக, சாபமடைந்து, ராட்சஷப் பிறப்பெய்தி, பரமாத்மாவையே எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்ததே! அவர்கள் தானே கம்சனாகவும், இரண்யனாகவும், இரண்யாட்சனாகவும்
பிறந்தார்கள்.
குசேலரைத் தடுக்கப் போக, மீண்டும் ஒருமுறை ராட்சஷப் பிறவி எடுக்கும் தைரியம் அவர்களுக்கு இருக்குமா என்ன?அவர்கள் குசேலரின் மனம் சாந்தியடையும் வகையில் பேசினர்.வேதங்களை எல்லாம் கற்றுணர்ந்தவரே! கிருஷ்ண தரிசனத்தின் மூலம் பிறவித்துன்பத்தை கடந்து சென்று விடலாம் என்பதை உணர்ந்தவரே! உமது வருகை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. சிறியவர்கள் அறியாமல் பேசிய வார்த்தையை பெரியவர்கள் நினைவில் கொண்டால் துன்பமே மிஞ்சும். நீர் அதனைப் பொருட்படுத்தமாட்டீர் என்பதை நாங்கள் அறிவோம். உம்மைப் போன்ற ஞானிகளின் தரிசனம், பல தீர்த்தங்களில் நீராடிய பலனைத் தரும். மூன்று காலங்களையும் உணர்ந்தவரே! சிறந்த ஞானத்தை உடையவரே! உண்மை என்னும் பரிசுத்த ஆடை அணிந்தவரே! வரங்களைத் தருபவரே! எங்களுக்கு நீர் ஆசியளிக்க வேண்டும். உமக்கு எங்கள் நமஸ்காரம், என்று கூறி வணங்கிய அவர்கள், ஐயனே! சற்றுக் காத்திரும். கிருஷ்ணரிடம் உமது வருகை பற்றி சொல்லி, தங்களை அழைத்துச் செல்கிறோம், என்றனர்.குசேலர் மகிழ்ந்தார். ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.கிருஷ்ணா! பரந்தாமா! புண்டரீகாக்ஷõ (தாமரை மலர் போன்ற முகத்தை உடையவர்), பத்மநாபா... உன் தரிசனம் எனக்கு கிடைத்து விடுமா! பிறந்த பலனை நான் அடைவேனா!.அவர் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, துவார பாலகர்கள் அரண்மனைக்குள் சென்றனர். கண்ணபிரான் இப்போது இருப்பது அந்தப்புரத்தில். அவருக்கு எட்டு தேவியர். ருக்மணி, பாமா, ஜாம்பவதி உள்ளிட்டோர். அங்கே செல்ல வேண்டுமானால், இவர்கள் 72 வாயில்களைக் கடந்தாக வேண்டும். அந்த வாசல்களின் நிலைகள் தங்கத்தால் ஆனவை. அவர்கள் அழகான வேலைப்பாடுகள் கொண்ட அந்தப்புர அறைவாசலை அடைந்தனர்.



குசேலர் பகுதி-11



அந்தப்புர வாயிலை பெண்கள் காவல் செய்து கொண்டிருந்தனர். பெண்களுக்கு அந்தக் காலத்திலேயே அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு தரப்பட்டிருக் கிறது. அதுவும் காவல் பணி. இப்போதைய பெண் போலீஸ் ஒன்றும் புதிதான விஷயமல்ல. அந்தப்புரத்துக்குள் கண்ணபரமாத்மா களிப்போடு இருந்தார். அவருக்கு சத்தியபாமா, ருக்மணி, ஜாம்பவதி உள்ளிட்ட எட்டு தேவியர். ருக்மணியின் மடியில் தலை வைத்து, பாமாவின் மடி மீது கால் வைத்து, ஜாம்பவதி முதலோனோர் சூழ்ந்து அமர்ந்திருக்க வெண்பட்டு சயனத்தில் ஆழ்ந்திருந்தார். கற்பூரம், லவங்கம், ஏலம் முதலிய பொருட்களை பாக்குடன் கலந்து, இளம் வெற்றிலைக்குள் அதை வைத்து ஒரு தேவியானவள் எம்பெருமானுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள். ஒருதேவி அந்த வெற்றிலையின் சிவப்பு நாக்கில் ஏறியிருக்கிறதா என பார்க்க கண்ணாடியை அவரது கமல முகத்தின் முன்னால் காட்டினாள். ஒரு தேவி அகில் புகையை எழுப்பி அந்த இடத்தில் நறுமணம் வீசச் செய்தாள். சொகுசான வாழ்க்கை கண்ண பிரானுக்கு! மனிதனாகப் பிறந்தாலும், மன்னனாகப் பிறந்திருக்கிறாரே! அன்றொரு நாள், குற்றவாளிகளைச் சுமந்துகொண்டிருக்கும் சிறைச்சாலையில், எவ்வித வசதியும் இல்லாத இடத்தில் தேவகியின் வயிற்றில் பிறந்தான். அங்கிருந்து யமுனை ஆற்றை இரவோடு இரவாகக் கடந்து ஆயர்பாடி போய் சேர்ந்தான். அங்கு பசுக்களை நிர்வகிக்கும் பணியைச் செய்தான். பாண்டவர்களுக்காக போர்க்களத்தில் ரத்தம் சிந்தினான். அவ்வளவு கஷ்டப் பட்டவன், இன்று துவாரகாபுரியின் மன்னனாக இருப்பதால், சொகுசாக வாழ்கிறான். மனிதனின் வாழ்க்கை ஒருநேரம் போல் ஒருநேரம் இருப்பதில்லை.
நேற்று வரை பிச்சையெடுத்தவன் இன்று கோமானாகி விடுகிறான். நேற்று வரை பிரபு போல் வாழ்ந்தவன் இன்று பிச்சையெடுக்கும் நிலைக்குப் போய்விடுகிறான். நிலையாதது இந்த மனிதவாழ்வு என்று பரமாத்மா இதன் மூலம் நமக்கு எடுத்துச் சொல்கிறாரே ஒழிய, சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக அவர் இந்தப் பூமிக்கு வரவில்லை. அவன் படுத்திருந்த மெத்தையில்  இலவம் பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு அடைக்கப் பட்டிருந்தது. அவ்வகையாக செய்யப் பட்ட மெத்தைகள் ஐந்தை ஒன்றாக்கி அதில் சயனித்திருந்தாராம் கண்ணபிரான். ஒரு பக்கத்தில் ஒரு தேவி வீணை இசைத்து அவ்விடத்தை ரம்மியமாக்கினாள். ஒரு தேவி ஆலவட்டம் வீச, ஒருத்தி வெண்சாமரம் பிடித்து காற்றை வரவழைக்க கண்ணபிரான் அவர்களோடு சரசமாக இருந்த வேளை அது. வாயிற் காவலர்கள், அந்தப்புர பெண்காவலர்களிடம், தாங்கள் கண்ணபிரானைக் கண்டு ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றனர். அந்தப் பெண்களும் கண்ணபிரானிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, அவர் எழுந்தார். சரி, காவலர்களை வரச்சொல், என்றார்.காவலர்கள் தங்கள் தலை மீது கைகூப்பி உள்ளே சென்றனர். இந்த இடத்திலே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். பகவானை வணங்குவதிலேயே மிகவும் உயர்ந்த வழிபாடு தலை மீது கைகூப்பி வணங்குவது தான்! இதை பகவானே ஒரு சமயத்தில் மெய்ப்பித் திருக்கிறார். கவுரவர்கள் அவையிலே திரவுபதி தரதரவென இழுத்து வரப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறாள். துரியோதனன் என்ற கொடியவனும், சேராத இடந்தனிலே சேர்ந்ததால் கொடியவனாகி விட்ட கர்ணன், சகுனி முதலானவர்களெல்லாம் அவளை இம்சை செய்ய முடிவெடுத்து விட்டனர். அவளோ கதறுகிறாள்.நான் உங்கள் அண்ணி இல்லையா? தமையன் மனைவி தாய்க்கு சமம் என்பார்களே! நீங்களோ, என் கூந்தலைப் பிடித்து இழுத்து வந்தீர்கள். இப்போது, மாற்றான் மனைவி என்றும் பாராமல், துகிலுரியப் போவதாகச் சொல்கிறீர்களே! இங்கே வீற்றிருக்கும் பெரிய மனிதர்கள் எல்லாரும் அமைதியாய் இருக்கிறீர்களே! இதென்ன கொடுமை! எனக் கதறினாள்.
பீஷ்மர் உள்ளிட்ட மகாத்மாக்கள் கூட தலை குனிந்து அமர்ந்திருந்தார் களே தவிர வாயே திறக்கவில்லை. பாண்டவர்களோ நெஞ்சில் கனல்கக்க நின்றார்களே தவிர அவர்களால் அவளைக் காப்பாற்ற முடியாத நிலை. கடலில் விழுந்தவன், சிறு கட்டை கிடைத்தாலும், அதைப் படகாக்கிக் கொண்டு மிதப்பது போல, அந்நேரத்தில் கண்ணனின் நினைவு அவளுக்கு வருகிறது.கண்ணா! என் அண்ணா! வா, என்னைக் காப்பாற்று, என்று கதறுகிறாள். அவையினர் இதைக்கண்டு கேலி செய்து சிரிக்கின்றனர். கண்ணனும் வரவில்லை.ஐயோ! நான் அழைப்பது உன் காதில் விழவில்லையா? அவள் தன் மானத்தைக் காப்பதற்காக ஒரு கையால் புடவையை பற்றி இழுத்த படியே போராடிக் கொண்டே கதறுகிறாள். ஊஹும்...அந்த பிடிவாதக்காரன்,  மாயவன் எட்டிக்கூட பார்க்க வில்லை.கடைசியாக புடவைத்தலைப்பை கையில் இருந்து விட்டாள். கைகளை தலை மேல் குவித்தாள். புண்டரீகாக்ஷõ பத்மநாபா கோவிந்தா சரணாகதம் என்று அவனையே சரணடைவதாகக் கூப்பாடு போட்டாள்.வந்துவிட்டான் அவன். மானம் காப்பாற்றப்பட்டது. பின்னொரு நாளில் இதுபற்றி திரவுபதி கண்ணனிடம் கேட்கிறாள். அண்ணா! அன்றொரு நாள் கவுரவர்கள் என்னை அவமானப்படுத்திய போது, அப்படி கத்திக் கதறினேனே, நீ வந்தாயா? என செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.நீ உன்னை நம்பினாய்...நான் வரவில்லை, என்னை நம்பினாய், வந்துவிட்டேன், என்றார்.புரியவில்லையே என்றவளிடம், உன் வாய் என் பெயரை உச்சரித்தாலும், கைகள் பலம் கொண்ட மட்டும் உன் புடவைத் தலைப்பை பற்றிக்கொண்டிருந்தன. எப்படியாவது, உன் பலத்தால் துச்சாதனனிடமிருந்து தப்பிவிடலாம் என நம்பினாய். அது முடியாது என்றதும், கைகளை தலை மீது கூப்பி, உன்னால் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும் என்று என்னைச் சரணடைந்தாய். வந்து விட்டேன், என்றார் சிரித்தபடியே.ஆம்...நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று எல்லாவற்றையும் அவனுக்கே யார் அர்ப்பணிக்கிறார்களோ, அவர்களுக்கே அவன் அருள்செய்வான்.இதை உணர்ந்தவர்களல்லவா துவாரபாலகர்கள்! அவர்கள் தலைமீது கைகூப்பி கண்ணன் முன் நின்றார்கள்.





























































































குசேலர் பகுதி-12




தன் முன்னால் கைகூப்பியும், உடலை வளைத்தும் மரியாதை செய்த துவார பாலகர்களிடம், என்ன விஷயம்? என்று அதிகாரமாய்க் கேட்டார் கிருஷ்ணர். அவர்கள் அவரை வாழ்த்தினர். வேதங்களின் தலைவரே வணக்கம். சந்திரகுலத்தின் ஒளிமிக்க தீபச்சுடரே! தாமரை மலர் போன்ற அழகிய கண்களை உடையவரே! இந்திரனாலும் நெருங்க இயலாதவரே! பகைவர்கள் எதிரே சிங்கமாய் நிற்பவனே! நல்ல வழியில் சம்பாதித்த செல்வத் துக்கு அதிபதியே! உம்மை வணங்குகிறோம், என்று முகமன் கூறி விஷயத்தைத் தொடங்கினர்.ஐயனே! தங்களைக் காண அங்கம், வங்கம், கலிங்க தேசாதிபதிகள் எல்லாம் வந்துள்ளனர்,.கண்ணபிரான் அதைக் கண்டு கொள்ளவில்லை. இப்போது அதற்கு என்னவாம்! என்ற பதில் அவரது பார்வையிலேயே துவார பாலகர்களுக்கு புரிந்து விட்டது. ஒரு ஏழையும் தங்களைப் பார்க்க வந்துள்ளார், துவார பாலர்கள் இதைச் சொல்லவே, அவர் நெற்றியைச் சுழித்ததில் இருந்தே, யார் அவர்? என்று கேட்கிறார் என்பதை பாலகர்கள் புரிந்து கொண்டார்கள்.தங்களுடன் சாந்தீபனி முனிவர் குருகுலத்தில் படித்தவராம்? ஓஹோ... என்று சாதாரணமாக பதிலளித்த மாதவனான கண்ணபிரான், அவரது பெயர் சுதாமாவாம் என்று பாலகர்கள் சொன்னது தான் தாமதம். என்ன சுதாமாவா? என்று கேட்ட படியே விளக்கினை தொட்டபிள்ளை வெடுக்கென குதித்தது போல், வேகமாக படுக்கையில் இருந்து கீழிறங்கினார்.என் உயிர்த்தோழன் சுதாமாவா? அவனா வாசலில் நிற்கிறான்? என் தூய நண்பனே! என்று முகமெங்கும் பிரகாசமும் பதட்டமும் பதிய, கதறியபடியே வாசலை நோக்கி ஓடினார்.
துவாரபாலகர்களும் பிற காவலர்களும் விரைந்தனர். அவரது அஷ்ட மகிஷிகளும் ஏதும் புரியாத நிலை... இவர் நம்மிடம் சரச சல்லாபம் செய்கிற வேளை இது. இந்நேரத்தில், எங்கே ஓடுகிறார்? இதுவரை எத்தனையோ தேசத்து ராஜாக்களெல்லாம் வந்திருக்கிறார்கள்! இந்த மனுஷன் இந்த மெத்தையை விட்டு அசைந்ததே இல்லை. மேலும், இது மற்றவர்களுக்கு தரிசனம் காடுக்கிற சமயமும் இல்லை! இந்த நேரத்தில் ஏழை என்று சொன்ன ஒருவனைத் தேடி ஓடுகிறாரே என்று புரியாமல் நின்றார்கள். பெருமாள் கோயில்களில் சுவாமியின் தரிசனத்தை சேவை சாதித்தல் என்பார்கள். திருமால் காக்கும் கடவுள். யாரை அவர் காப்பார்? நல்ல இதயம் படைத்தவர்களை... வறுமை, வருத்தம், பிரிவு போன்ற கொடிய சூழலிலும் கூட தன்னை மறக்காதவர்களை. தன் உண்மை பக்தர்களுக்கு பகவானே ஓடிவந்து சேவை செய்து அனுக்கிரஹம் வழங்குவானாம்! சாதித்தல்என்றால் அருளுதல், அனுக்கிரஹம் செய்தல் என்று பொருள். ஸ்ரீ கிருஷ்ணரும் பெருமாளின் அவதாரம் அல்லவா! அதனால், தன் பக்தனை எதிர் கொண்டு சேவை செய்ய அவரே ஓடி வந்துவிட்டார். கிழிந்த ஆடையையும் திருப்தியுடன் அணிந்து, நீண்ட தூரம் வந்த களைப்பில் மணல் ஒட்டி, களைப்புடன் நின்ற தன் நண்பனை அவர் பார்த்தார். ஓடி வந்து ஆலிங்கனம் (அணைத்தல்) செய்து கொண்டார். சுதாமாவின் நிலையை சொல்லியா தெரிய வேண்டும்! அவர் பரவசத்தின் உச்சிக்கே போய் விட்டார். கண்ணா! என் உயிரே! பக்தவத்சலா என்று சொல்லி ஆரத்தழுவிக் கொண்டார். சுதாமா! என்னை இன்னும் நினைவில் வைத்திருக்கிறாயே! எவ்வளவு தூரம் என் நினைவு உன்னிடம் இருந்திருந்தால் என்னை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பாய். ஐயோ! நான் எவ்வளவு பெரிய அசடன்! வந்தவனை வாசலிலேயே நிற்க வைத்து பேசிக்கொண்டிருக்கிறேனே! வாடா! உள்ளே வா! நாம் மனம் விட்டு பேசி எவ்வளவு நாளாகிறது? வா போகலாம்! என்று அவரை தன் தோள்களின் மீது சாய்த்த படியே அழைத்துச் சென்றார். மன்னாதி மன்னர்களெல்லாம் அசந்து விட்டார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணரே நேரில் வந்து ஒரு எளியவனை அழைத்துச் செல்கிறார் என்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவர்! அவரை புழு, பூச்சி போல நினைத்து அறியாமல் பேசிவிட்டோமே! என்று மனம் வருந்தினார்கள்.பணக்காரர்களுக்கு அர்ச்சகர் தரும் பரிவட்டம் வேண்டுமானால் கிடைக்கும். ஆனால், எளிய பக்தனுக்கு ஆண்டவனின் பார்வை அவன் எவ்வளவு தொலை தூரத்தில் நின்றாலும் கிடைத்து விடும். அதுபோன்றது தான் குசேலருக்கு கிடைத்த தரிசனம்.இதோ ஒரு சம்பவம்!ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே! ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற பதினாறு பதங்களை கொண்ட மந்திரம் நம்மை பகவானிடம் சேர்க்கும் எளிய சாதனம் என்று அறிவித்தவர் கிருஷ்ண சைதன்ய மகாபிரபு. இவர் ஸ்ரீகூர்மம் என்ற ஊருக்கு வந்தார். அவ்வூரில் வாசுதேவ கோஷ் என்ற பக்தர் இருந்தார். அவர் அருகில் யாருமே நெருங்கமாட்டார்கள். காரணம் என்ன தெரியுமா? அவர் ஒரு தொழு நோயாளி. தொழு என்றால் ஏதோ கை, கால்கள் மடங்கிப் போன அளவுடன் நிற்கவில்லை. உடலில் புழுக்கள் மொய்த்தன.  அவரைக் கண்டவர்கள் விலகி ஓடி விடுவார்கள். அதையே தனக்கு சாதகமாக அவர் எடுத்துக் கொண்டார். கஷ்டத்தையும் சாதகமாக எடுத்துக் கொள்வதற்கு நிறைய பக்குவம் வேண்டும். ஹே கிருஷ்ணா! நீ எவ்வளவு உயர்ந்தவன்! எனக்கு இந்த வியாதியைப் பரிசாகத் தந்ததன் மூலம் என்னருகே யாரையும் நெருங்க விடமாட்டேன் என்கிறாய். இதனால் தானே நான் ஏகாந்தமாக (தனிமை) அமர்ந்து உன்னைச் சிந்திப்பதற்கு நிறைய நேரம் கிடைத்துள்ளது. நான் மற்றவர்களைப் போல இருந்திருந்தால் எனக்கு இப்படி ஒரு அரிய சந்தர்ப்பம் கிட்டியிருக்குமா? என்றபடியே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண என்று பெருமாளின் நாமத்தை ஜெபித்தபடியே இருப்பார். கிருஷ்ண சைதன்யர் அங்கே வருகிறார் என்று மக்கள் பேசிக்கொண்டது அவர் காதில் விழுந்து விட்டது.அவர் எவ்வளவு பெரிய மகான்! அவரது தரிசனம் எனக்கு கிடைக்குமா? கூட்டத்துடன் கலந்து நிற்க என்னால் இயலாது. தூரத்தில் நின்று தரிசித்தால் கூட போதும், என்று ஆவல் கொண்டார். அங்கே தளர்ந்த நடையில் சென்றார். ஆனால், அதற்குள் சைதன்யர் அங்கே வந்து மக்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டு சென்று விட்டார். வாசுதேவகோஷின் கண்களில் நீர் முட்டியது. நான் கொடுத்து வைக்காதவன்! நான் எங்கு சென்றாலும் என் பாவம் கூட வருகிறதே! என்று அழுதார்.



குசேலர் பகுதி-13




நீண்ட தூரம் சென்று விட்ட சைதன்யர் ஏனோ நின்றார். அப்படியே திரும்பினார். அவருடன் சென்றவர்களுக்கு ஏதும் புரியவில்லை. மீண்டும் ஸ்ரீகூர்மம் கிராமத்தை நோக்கி நடந்தார். ஊர் மக்களுக்கு ஆச்சரியம். சைதன்யர் ஏன் மீண்டும் திரும்பி வந்தார் என்று! அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை என்றாலும், மீண்டும் ஒருமுறை அவரது தரிசனம் கிடைத்தது குறித்து ஏக சந்தோஷம்! சைதன்யர் அவர்களிடம் கேட்ட முதல் கேள்வி, கோஷ் எங்கே? என்பது தான். இவர் ஏன் அந்த தொழு நோயாளியைத் தேடுகிறார்! அவரிடம் பக்தர்கள் பணிவுடன் பதில் சொன்னார்கள். அதோ! அந்த இடத்திலே தான் இருப்பார். சைதன்யர் அங்கே சென்றார். கோஷூக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. காண்பது கனவா! நனவா! சைதன்யமகாபிரபு நீண்ட நெடுந்தூரம் சென்று விட்டார்கள் என்றார்களே! அவர் இங்கே மீண்டும் எப்படி... அவர் பரவசத்தில் நின்றார். எல்லாரும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று அவரைத் தரிசித்தனர். எனக்கோ அவர் தனித்து காட்சியளிக் கிறார். என்ன இது விந்தை....அந்த விந்தை உணர்ச்சிப்பெருக்காக சற்று நேரத்தில் மாறியது. ஆம்...கோஷ் அருகில் சைதன்யர் சென்றார். அவரை அப்படியே தழுவிக் கொண்டார். ஈயும் புழுக்களும் மொய்த்து  சீழ் வடியும் இந்த பாழ் உடலை  இவர் தழுவினாரே! ஐயோ! மகா பிரபுவுக்கு இந்த கொடிய நோய் தொற்றிக் கொள்ளுமே என்று கோஷ் பரபரத்தார். ஆனால், சைதன்யர் அவரை நீண்ட நேரம் ஆலிங்கனம் செய்து அவருடன் உரையாடினார். இதுதான் நிஜமான பக்திக்கு கிடைத்த மரியாதை! இதே நிலை தான் இப்போது குசேலருக்கு! காசைப் புறக்கணித்த  பகவான் கந்தலை அணைத்துக் கொண்டிருக்கிறார்.
கிருஷ்ணர் அவரை இல்லத்துக்குள் அழைத்துச் சென்றார். குசேலா! நீ வந்ததால் எங்கள் இல்லம் பாக்கியம் செய்ததாக மாறியது. நான் அனுஷ்டித்த தர்மங்களுக்கு பலன் இன்று தான் கிடைத்தது, என்று புகழாரம் சூட்டினார். அவரை ஒரு ஆசனத்தில் இருத்தி அவரது பாதத்தைக் கழுவினார். தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டார். பாமா, ருக்மணி உள்ளிட்ட தேவியர் அவரிடம் ஆசி பெற்றனர். பின்னர் அவரை புனித நீராடச் செய்து, சூரிய ஒளியையும் மிஞ்சும் வகையில் மின்னும் பட்டாடை ஒன்றை  அணிவிக்கக் கொடுத்தனர். பளிச்சென மின்னிய குசேலரின் உடலில் கண்ணபிரான் சந்தனமும் கஸ்தூரியும் கலந்த கலவையை பூசினார். புத்தம் புது மலர்களால் தொடுத்த மாலையை அணிவித்தார். சுகப்பிரம்ம முனிவர் பரீட்சித்து ராஜாவுக்கு இந்த கட்டத்தைச் சொல்லிக் கொண்டிருந்த போது, ராஜா அப்படியே கண் மூடி அமர்ந்திருந்தார்.  அவனது எண்ணம் இப்போது மரணத்தில் இல்லை, இன்னும் இரண்டு மூன்று நாளில் இறந்து போவோமே என்ற பயம் சிறிதும் இல்லை. குசேலருக்கு எப்படி இந்த உபசாரத்தையெல்லாம் கண்ணன் செய்தானோ, அதை நமக்கும் செய்வானா என்று கற்பனை செய்து பார்த்தார். ஆம்...இறை  நினைவில் திளைத்துக் கிடப்பவனுக்கு இறப்பைப் பற்றிய பயம் எப்படி எழும்? சுகப்பிரம்மர் கதையைத் தொடர்ந்தார். கேள் பரீட்சித்து! இன்னும் பல உபசாரங்கள் குசேலருக்கு நடந்தன. குசேலரை இருக்கையில் அமர்த்தி அவருக்கு தூபம் காட்டினார் கிருஷ்ணர். அடுத்து நெய்தீப ஆராதனை செய்தார். பின்னர் ஆரத்தி பாத்திரத்தை  எடுத்துச் சுற்றினார். தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமிர்தத்தின் சுவை எப்படி இருந்ததோ அதையும் மிஞ்சும் சுவையுடைய உணவை அளித்தார்.
சாப்பிட்டு முடியும் வரை அருகில் இருந்து உபசரித்தார். அத்தோடு விட்டாரா! சாப்பிட்டு முடித்ததும், அவரது கைகளைக் கழுவி விட்டதோடு, வாயையும் துடைத்து விட்டாராம் அந்த மகானுபாவருக்கு!நினைத்துப் பார்க்க முடியாத கொடுப்பினை குசேலருக்கு! என்ன நடக்கிறது என்றே  அவருக்குப் புரியவில்லை. இந்த உபசாரங்களை மறுக்கவோ, தடுக்கவோ அவரால் முடியவில்லை. என்றோ ஒருநாள் நம்முடன் படித்த ஒரு சிநேகிதன் இப்படியெல்லாமா சேவகம் செய்வான்! அதனால் தானே பாரதி பாடினார்.நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்... என்று.குசேலர் சித்தப்பிரமை பிடித்தவர் போல அமர்ந்திருந்தார். ஆனால், வாய் மட்டும் கிருஷ்ண நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது. அவரது மூக்கு கிருஷ்ணர் அணிந்திருந்த துளசிமாலையின் மணத்தை முகர்ந்து கொண்டிருந்தது. அவரது உடல் கண்ணனின் உடலுடன் அவ்வப்போது உராய்ந்தது. கண்கள் கண்ணனின் திருமேனி அழகை குளிரக் குளிரப் பார்த்தன. செவிகள் கண்ணன் பேசிய உபசார மொழிகளைக் கேட்டன. இப்படி ஐம்புலன்களையும் கண்ணனுக்குள்ளேயே ஒடுக்கிக் கிடந்தார் குசேலர். இப்படி தன்னிலை மறந்து அமர்ந்திருந்த நண்பனின் மவுனத்தை கண்ணபிரான் கலைத்தார். வேதங்களைத் தெளிவாக கற்ற நண்பனே! உன்னைப் பார்த்ததால் என் உடல் பூரிக்கிறது. உன்னைச் சந்தித்ததால் தேவர்களாலும் முனிவர்களாலும் மன்னாதி மன்னர்களாலும் இதுவரை காண முடியாத அரிய தரிசனத்தைப் பெற்றது போன்ற உணர்வடைகிறேன். பாக்கியம் செய்திருந்தால் தானே இப்படிப்பட்ட ஒரு சந்திப்பு நிகழும்! என்ற கண்ணன் இப்போது தன் பேச்சில் உச்சத்தைத் தொடுகிறான்.எப்படி தெரியுமா!குசேலா! எனக்கு உன் அருள் வேண்டும். அது எப்போதும் நிலைத்திருக்க வேண்டும்! நீ என்னை மறக்காதது போல நானும் உன்னை மறக்காத தன்மையை அருள வேண்டும்! என்றார்.யார் பகவான் என்றே சந்தேகம் வந்து விட்டதா என்ன!



குசேலர் பகுதி-14




குசேலர் அங்கு நடப்பதையெல்லாம் பார்த்து நெகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். கண்ணபிரான் பேச ஆரம்பித்தார். வாழ்வில் யார் ஒருவனுக்கு நட்பு சரியாக அமைகிறதோ, அவன் வாழ்வில் உயர்நிலையை அடைவான். பள்ளிக்குப் போகிற சிறுவனுக்கு நன்றாகப் படிக்கும் மாணவனுடன் தொடர்பு ஏற்பட்டால் இவனும் சிறப்பாகப் படிப்பான். அதுபோல், நல்ல நண்பன் என்றால் யார் என்பதற்குரிய இலக்கணத்தை கண்ணபிரான் சொல்ல ஆரம்பித்தார்.வேதமறிந்த குசேலனே! ஒருவனிடம் செல்வம் நிறைந்திருந்தாலும், கல்வியறிவு மிகுந்திருந்தாலும் உன்னைப் போன்ற தவசீலர்களின் நட்பு இல்லாவிட்டால், அதனால் பயனில்லை. தவசீலர்களின் நட்பைக் கொண்டவனுக்கு பூமியும், பொன்னும், நல்லறிவும் தானாகவே வந்து சேர்ந்து விடும். ஒரு பேயிடம் பழகிய பிறகு, அதன் நட்பை விடுவதென்றால் கூட உண்மை நண்பனுக்கு மனம் கஷ்டப்படும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அப்படியிருக்க, உன்னைப் போன்ற உயர்ந்தவர்களின் நட்பு விட்டுப்போகுமானால் படும் வேதனையின் அளவைச் சொல்லவும் வேண்டுமோ! துன்பம் வரும் சமயத்தில் நண்பனைப் போல உதவ யாருண்டு! அப்படிப்பட்ட சமயங்களில் அவர்கள் நமக்கு நல்ல நூல்களிலுள்ள கருத்துக்களை எல்லாம் போதித்து நல்ல பாதையில் திருப்புவார்கள், என்ற கண்ணபிரான் மேலும் தொடர்ந்தார்.கேள் குசேலா! உலகிலேயே உயர்ந்த சாதனம் பொறுமை. அந்தப் பொறுமை உனக்கு மட்டுமே சொந்தம். பொறுமையுடையவன் ஒருவனுக்கு நண்பனாக அமைவது அவனது பிராப்தத்தை பொறுத்தது. அந்த பிராப்தம் எனக்கு கிடைத்திருக்கிறது. தகாதவர்களுடன் சேர்ந்தால் வாழ்க்கை அழிந்து போகும். நல்லவர்களின் நட்பு தேடினாலும் கிடைக்காத செல்வமாகும்.
அத்தகைய நட்பல்லவா எனக்கு கிடைத்திருக்கிறது! குசேலா! இன்னும் கேள்! அனைத்தையும் அறிந்தவர்களின் நட்பு மனிதனுக்கு பிறப்பற்ற நிலையாகிய முக்தியைத் தரும். தேவர்களால் தரப்படும் வரத்தை விட உயர்ந்த பலனைத் தரும். சரி..சரி...உன் பெருமையை பேச ஆரம்பித்தால், அதை சொல்லி முடிக்க உலகநாட்கள் போதாது. வந்தவனைக் கவனிக்காமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறேன். அதெல்லாம் இருக்கட்டும்! உன் கல்யாணம் சிறப்பாக நடந்ததா? உன் மனைவி குணவதியா? எது நிஜமோ அதன் மீது (பக்தி) மட்டும் நம்பிக்கை கொண்டவளா? நல்லதை மட்டுமே செய்பவளா? உன்னை நேசிப்பவளா? உன் வருமானத்துக்கு ஏற்ப செலவழிப்பவளா? சொன்னதைச் செய்து காட்டுபவளா? எவ்வளவு வறுமைக்கு ஆளானாலும் அதை மற்றவர்களிடம் சொல்லாதவளா? புகுந்த வீட்டாரைப் பற்றி சிறிதும் குறை சொல்லாமல் அவர்களை அனுசரித்து செல்பவளா? என்றார். ஒரு பெண்ணுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைக் கண்ணபிரான், குசேலரிடம் கேட்பதன் மூலம் உலகுக்கு எடுத்துக் கூறியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.அடுத்து குழந்தைச் செல்வங்களைப் பற்றி விசாரித்தார். குசேலா! உனக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்? அவர்களெல்லாம் கற்றவர் சபையில் தனித்துவம் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டாயா? அவர்கள் ஊரே போற்றுமளவு தங்கள் திறனை வளர்த்துக் கொண்டுள்ளனரா? குணவான்களா? என்றார். இதையடுத்து ஒரு மனிதனுக்குரிய முக்கிய கடமைகள் அனைத்தையும் குசேலர் கடைபிடிக்கிறாரா என்று விசாரித்தார். அவர் சொல்லப்போகும் அனைத்தையும் குசேலர் கடைபிடித்து வருகிறார் என்று தெரிந்தாலும் கூட அவை என்னென்ன என்பதை உலகத்தினர் தெரிந்து கொள்வதற்காக கண்ணன் கேட்கிறார்.
குசேலா! குழந்தைகளின் தேவைகளை எல்லாம் குறைவின்றி கொடுத்து வருகிறாயா? மதிய நேரத்தில் பசித்து வந்து உணவு கேட்பவர்களை நாராயணனாகக் கருதி உணவிடுகிறாயா? (இதில் இருந்து மதிய நேரம் அன்னதானம் செய்வது மிகச்சிறப்பானதென்று தெரிய வருகிறது) தினமும் பூஜை, புனஸ்காரங்களை அதிகாலையிலேயே செய்து வருகிறாயா? அதற்கு உனது உடல்நிலை இடம் தருகிறதா? (உடல்நிலை சரியில்லாதவர்கள் நீராடல் முதலியவற்றைச் செய்ய முடியாவிட்டாலும் மனதில் இறைவனை நினைக்க வேண்டும் என்பது புலப்படுகிறது) தினமும் இறைவனை மனதில் இருத்தி தியானம் செய்கின்றாயா? என்றார்.என் நண்பனின் மனம் தான் எவ்வளவு உயர்ந்தது? என்னை விசாரித்தான், குடும்பத்தை விசாரித்தான், இப்போது என் குணநலன்களை விசாரிக்கிறான், ஆஹா...என் மீது எவ்வளவு அன்பிருந்தால், இத்தனையையும் கேட்பான் என்று குசேலர் சிந்தித்துக் கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து கண்ணன் சொன்னார்.குசேலா! உன்னை நான் மறந்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்டாயோ! உன் ஊர்ப்பக்கமிருந்து யாராவது என்னைக் காண வந்தால், அவர்களிடம் உன்னை பற்றி விசாரிப்பேன். உன்னை நான் தினமும் நினைத்துக் கொள்வேன். சிநேகிதத்தின் தன்மையே அதுதான், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் மறக்க மாட்டார்கள். சூரியனின் ஒளி எங்கிருக்கிறதோ அதை நோக்கியே  சூரியகாந்தி திரும்பும். அதுபோல், நானும் உன்னைப் பற்றிய நினைவை மறந்ததே இல்லை, என்றார்.அடுத்து ஊரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.குசேலா! நீ வசிக்கும் நாட்டில் அதிக மழை பெய்கிறதா அல்லது பெய்வதே இல்லையா? வயல்களில் கிளி, விட்டில் பூச்சிகளால் சேதமின்றி உள்ளதா?  காடுகள் செழிப்பாக வளர்ந்துள்ளதா? திருட்டுப்பயம் இல்லாமல் இருக்கிறதா? என்றார்.



குசேலர் பகுதி-15




ஒரு ஊருக்கு என்னென்ன தேவை என்பதைப் பற்றி அன்றைய புராணங்களிலேயே சொல்லி வைத்துள்ளனர். காடுகள் எல்லாம் செழிப்பாக வளர்ந்துள்ளதா என்று குசேலரிடம் கண்ணபிரான் கேட்டதன் மூலம் மழைக்கு முக்கியத்துவம் தந்திருப்பதை அறிய முடிகிறது.இதையடுத்து குருகுலத்தில் குசேலருடன் பழகிய விதம், சென்ற இடங்கள் குறித்ததெல்லாம் கண்ணபிரான் நினைவு கூர்ந்தார். பழைய நண்பர்களிடம் பேசுவது போன்ற சுகம் உலகிலேயே கிடையாது. அந்த இனிமையான நேரத்தை இருவருமே ரசித்தனர்.இப்படியாக, பேசிக்கொண்டிருந்த கண்ணபிரான், குசேலரிடம், குசேலா! இவ்வளவு தூரம் என்னை தேடி வந்திருக்கிறாய்! வெறும் கையோடா வந்திருப்பாய்! அந்தக் காலத்தில் நாம் குருகுலத்தில் படிக்கும் போதே இணைந்து பல பலகாரங்களைச் சாப்பிடுவோம். இப்போது எனக்கு என்ன பட்சணம் கொண்டு வந்திருக்கிறாய்! உடனே அதைக் கொடு! சிறுவயதில் கூட நீ பலகாரங்களை எனக்கு கொண்டு வந்து கொடுப்பாய். அதன் ருசி அலாதியாக இருக்கும். இப்போதும் கொண்டு வந்திருப்பாய், எடு, எடு என உரிமையோடு சொல்வது போல நடித்தார் மாயக்கண்ணன். இந்தக் கண்ணனைப் போல மாய அவதாரம் உலகில் கிடையாது. பொய்க்கென்றே பிறந்த அவதாரம் என்று இதைச் சொல்லி, இவரை நான் வணங்கமாட்டேன். எல்லா வகையிலும் சிறந்த ராமனையும், பக்திக்கே எடுத்துக்காட்டான நரசிம்மரையும் மட்டுமே வணங்குவேன் என அடம் பிடிப்பவர்களும் உண்டு.குசேலர் அவல் தான் கொண்டு வந்திருக்கிறார், அதையும் ஒரு கிழிந்த துணியில் சுற்றி வந்திருக்கிறார் என்பது கண்ணனுக்குத் தெரியாதா என்ன! இருந்தாலும், அவர் ஏதோ லட்டும் அல்வாவும் கொண்டு வந்திருப்பார் என்பது போலவும், அதைச் சாப்பிட ஆவல் கொண்டது போலவும் நடிக்கிறார் என்றால், அந்த மாயவனின் லீலைகளை என்னவென்பது!
மகாபாரதத்தில், தன்னை நாடிய பாண்டவர்களின் வசதிக்காக அமாவாசை நாளையே மாற்றியவர் அல்லவா அவர்! அதோடு விட்டாரா கண்ணபிரான். குசேலா! உன் அருமையான மனம் பற்றி எனக்குத் தெரியாதா? நான் சரியான சாப்பாட்டு பிரியன். இவனுக்கு, ஏதாவது கொண்டு போகாவிட்டால் நம்மை பாடாய் படுத்திவிடுவான் என்பதை அறியாதவனா நீ! அதனால், சுவையான சிற்றுண்டிகள் தயார் செய்து கொண்டு போகலாம் என முடிவெடுத்து அதை தயாரித்து வந்திருப்பாயே! அல்லது உன் மனைவி தான் உன்னை வெறும் கையோடு அனுப்பியிருப்பாளா! கொண்டு வந்ததை எடு எடு, என்று அவசரப்படுத்தினார்.இந்தக் கண்ணன் இருக்கிறானே! இவன் நாம் அவனுடைய சன்னதிக்குச் சென்றால் என்ன கொண்டு வந்திருக்கிறோம் என பார்ப்பான். இவனுக்கு நெய் பலகாரம் என்றால் உயிர். வெண்ணெய் என்றால் பானைக்குள்ளேயே குதித்து விடுவான். சின்ன வயதில் ஆயர்பாடியில் வெண்ணெய்க்காக இவன் ஆடாத ஆட்டமா! எத்தனை கோபியர் வீட்டில் புகுந்து வெண்ணெய் திருடியிருப்பான்! இந்த வெண்ணெய் திருட்டுக்குள் எவ்வளவு பெரிய தத்துவம் புதைந்து கிடக்கிறது தெரியுமா! வெண்ணெய் என்பது பக்தி, உறி என்பது மனம். நம் மனதிற்குள் புகுந்து, அதில் உறைந்து கிடக்கும் வெண்ணெயைக் கிளறி எடுக்கிறானாம்! வெண்ணெயை நவநீதம் என்பர். இதனால் அந்தப் பெயரையே தனக்கு சூடிக்கொண்டான். நவநீதகிருஷ்ணன் என்று அவனை செல்லமாக அழைப்பது இந்தப் பெயரால் தான்! இப்போது குசேலரின் மனதில் புகுந்து அவருடைய மனதில் ஊறிக்கிடக்கும் பக்தியை உலகறியச் செய்வதற்காக இப்படி ஒரு நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கிறான்! இது புரியுமா குசேலருக்கு! அவருக்கு கை, கால்கள் வெடவெடுத்தன.
ஊரில் இருந்து ஒரு கிழிந்த துணியில் கொண்டு வந்த அவலை இவனுக்கு எப்படி கொடுப்பது! இவன் பலகாரம் என்கிறான், பட்சணம் என்கிறான், அது மட்டுமல்ல! இவன் தன் மனைவியர் புடைசூழ அமர்ந்திருக்கிறான்! அவர்களெல்லாம், நாம் கொடுக்கும் அவலைப் பார்த்து, எள்ளி நகையாடுவார்கள்! உம் நண்பன் இவ்வளவுதானா! என்று கேலி செய்வார்கள். அனலுக்குள் அகப்பட்ட புழு போல் நெளிந்தார் குசேலர். மனதுக்குள் அந்தக் கண்ணனையே பிரார்த்திக்க ஆரம்பித்தார்.கண்ணா! இதென்ன சோதனை! பாலும் பழழும் பட்சணங்களும் உன் அரண்மனையில் இல்லாததா! நீ கொடுக்கும் பிரசாதத்துக்காக இங்கே ஒரு கூட்டமே காத்துக்கிடக்கிறதே! செல்வச் சீமானான உனக்கு, ஒரு கந்தலில் கொண்டு வந்த அவலை எப்படி கொடுப்பேன். இனிய பாலை தினமும் குடிப்பவனுக்கு புளித்த கஞ்சியைக் கொடுப்பேன்! என்னைச் சோதிக்காதே, என்றவாறு மனம் பதைத்தார். தன் இடுப்பில் கட்டி வைத்திருந்த அவல் முடிப்பு வெளியே தெரியாமல், கண்ணன் தனக்கு கொடுத்த அங்கவஸ்திரத்தைக் கொண்டு மூடி வைத்துக் கொண்டார்.ஆனால், அந்தக் கண்ணன்  விட்டானா!ஏ குசேலா! அங்கே ஏதோ திருட்டுத்தனம் செய்கிறாயே! அங்கவஸ்திரம் கொண்டு எதையோ மூடுகிறாயே! என்ன ஒளித்து வைத்திருக்கிறாய், கொடு, கொடு, என்றார்.குசேலரோ அப்படியே தன்னைக் குறுக்கிக் கொண்டு கண்ணனின் பார்வையில் அந்த முடிச்சு படாமல் பார்த்துக் காண்டார். கண்ணன் அவரது கைகளைப் பிடித்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு, ஆடையில் மறைத்து வைத்திருந்த முடிச்சை உருவி எடுத்து விட்டார்.பரபரப்புடன் முடிச்சை அவிழ்த்தார்.உள்ளே அவல் இருந்தது. குசேலா! நீ பலே ஆள்! இந்த செல்வந்தனின் அரண்மனையில் எல்லாம் இருக்கும்! அவல் இருக்காது என்று குறிப்பறிந்து கொண்டு வந்திருக்கிறாயே! சரியான ஆளப்பா நீ! என்றார்.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக