வெள்ளி, 25 நவம்பர், 2011

லவகுசா ( இரண்டாம் பாகம் )


ராதே கிருஷ்ணா 25-11-201


லவகுசா ( இரண்டாம் பாகம் )


லவகுசா பகுதி-15 
ஏவலர்கள் சொன்னதைக் கேட்ட சத்ருக்கனன் ஆச்சரியமடைந்தவனாய், குதிரை நின்ற இடத்திற்கு வந்தான். அங்கு நின்ற குழந்தைகளைப் பார்த்தவுடனேயே மனதில் மரியாதை ஏற்பட்டது. ஓ இவர்கள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் வடிவத்தை ஒத்திருக்கிறார்களே! என்ன தேஜஸ் இவர்களது முகத்தில்! அவன் ஓடோடிச் சென்று அந்தக் குழந்தைகளை அணைத்துக் கொண்டான். அன்புச்செல்வங்களே! என்ன இது விளையாட்டு! அஸ்வமேத யாகக்குதிரையை பிடிக்கலாமா? பாவம்..அறியாப்பிள்ளைகள் நீங்கள்...உங்களிடமா இந்த ஏவலர்கள் சண்டைக்கு வந்தார்கள்? அவர்கள் உங்களுடன் சண்டை போட்டதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு குதிரைகள் என்றால் இஷ்டமா? இதோ! என் படையில் பல ஜாதி குதிரைகள் உள்ளன. எல்லாமே உயர்வகை தான். அவற்றில் எத்தனை குதிரைகளை வேணடுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் குதிரை தன் பவனியைத் தொடரட்டும்! ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை அறியாதவர்கள் யார்? அவரது ஆட்சி இந்த பூமியெங்கும் வியாபிப்பதில் உங்களுக்கும் எந்த மாறுபாட்ட கருத்து இருக்காது இல்லையா? பிறகு ஏன் இந்தக் குதிரையைப் பிடிக்க வேண்டும்? என கனிவுடன் பேசினான். லவகுசர் சிரித்தனர். நீர் யார்? என்றதும், நான் ராமச்சந்திர மூர்த்தியின் கடைசி சகோதரன் சத்ருக்கனன், என்றதும், அவர்களது நகைப்பு இன்னும் அதிகமாயிற்று.
சத்ருக்கனரே! மனைவியை வெறுத்து ஒதுக்கி, காட்டுக்கு அனுப்பியவன், கட்டியவள் மீது சந்தேகம் கொண்டு தீக்குளிக்கச் செய்தவன், எல்லாவற்றுக்கும் மேலாக துணையே இல்லாமல் யாகம் நடத்தி உலகாள நினைப்பவன்...இவனது ஆட்சி இந்த பூமியில் எப்படி வரலாம்? ஒருவேளை, உமது சகோதரன், இந்த பூமியெங்கும் ஆட்சியைப் பிடித்தால், எல்லாருமே மனைவி மீது சந்தேகப்படுங்கள் என்று சட்டம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படிப்பட்ட ஒருவனுக்காக, சகோதரனான நீரும் புறப்பட்டு வந்து விட்டீர். என்ன அநியாயம்? என்றனர் லவகுசர். குழந்தைகளே! நான் முதலில் உங்களை அறியாப்பிள்ளைகள் என்று தான் நினைத்தேன். நீங்களோ, அதிகமாகப் பேசுகிறீர்கள். ராமபிரான் எதைச் செய்தாலும் அதில் காரணமிருக்கும். குதிரையை விடுகிறீர்களா? இல்லையா? என மிரட்டிப் பார்த்தான். குழந்தைகள் ஒரேயடியாக மறுத்து விட்டனர். ஐயோ! சின்னஞ்சிறு பாலகர்களான உங்களுடன் சண்டை போட வேண்டியதாகி விட்டதே! என்ற சத்ருக்கனன், சில அம்புகளை வானில் எய்து அவர்களைப் பயமுறுத்திப் பார்த்தான். அவர்களோ, அவற்றுக்கு பதிலடி கொடுத்து நொறுக்கித் தள்ளவே, கோபமடைந்த சத்ருக்கனன், அவர்களுடன் கடும் போர் செய்தான். ஆனால், லவகுசர்களின் அம்புகளுக்கு அவனால் பதிலளிக்க முடியவில்லை. அவன் கைசோர்ந்தான். இறுதியில் லவகுசர் விட்ட அம்பிற்கு மயங்கி களத்திலேயே சாய்ந்து விட்டான். இந்தத் தகவல் ராமபிரானுக்குச் சென்றது.என்ன, யாகக் குதிரையை கட்டி வைத்தார்களா? அதிலும் சின்னஞ்சிறுவர்களா? லட்சுமணா! உடனே புறப்படு! குதிரையை மீட்டு தொடர்ந்து உலகெங்கும் அழைத்துச் செல், என உத்தரவிட்டார் ராமபிரான்.
இலங்கை போர்க்களத்திலே, மாவீரன் இந்திரஜித்தையே வென்ற அந்த வெற்றித்திருமகன், பெரும் படையுடன் குதிரை நிற்கும் கானகத்திற்கு, தானும் தோற்கப்போகிறோம் என்பது தெரியாமலேயே புறப்பட்டான். இதனிடையே சத்ருக்கனனை வென்ற லவகுசர், தாய் சீதாவுக்கு அதை அறிவிக்காமலேயே அமைதியாக இருந்து விட்டனர். அவள் கவலையுடன் இருப்பதைக் கவனித்தனர். இந்நேரத்தில் வால்மீகி முனிவர் அங்கு வந்தார். ஜனகனின் திருமகளே! ஏனிந்த முக வாட்டம்? நீ மகிழ்ச்சியுடன் இருந்தால் தானே குழந்தைகளும் மகிழ்ந்து விளையாவார்கள்? வாட்டம் கொள்ளாதே. எல்லாம் வல்ல லலிதாம்பிகை உனக்கு நல்லருள் தருவாள், என ஆறுதலாய் வாழ்த்துச் சொன்னார். கண்களில் நீர் வழிய நின்ற சீதாதேவி, சுவாமி! என் கவலையெல்லாம் என் பர்த்தாவைப் பற்றியது தான். அவரை மீண்டும் அடைவேன் என்ற நம்பிக்கையே உள்ளத்தில் இருந்து நீங்கி விட்டது போல் இருக்கிறது. அவரை மீண்டும் அடையாவிட்டாலும், அவர் திருமுகம் காணவாவது தங்கள் ஆலோசனை வேண்டும் ஐயனே! என்று உருக்கமாகக் கேட்டாள். அம்மா! நீ பூமிதேவியின் புத்திரி, பொறுமையின் அணிகலன். அவசரப்படாதே. கணவனைப் பிரிந்த பெண்கள் அவனை மீண்டும் அடைய, இந்த மண்ணின் பெண்மணிகள் லலிதா நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். ஒன்பது இரவுகள் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு, அந்த தேவியின் சகஸ்ர (ஆயிரம்) நாமங்களைச் சொல்லி வழிபட்டால், அவள் உன்னை உன் கணவனிடம் சேர்க்க வரமருள்வாள். ஆனால்...ஒன்று... என்று இழுத்து நிறுத்தியவரின் முகத்தை ஆவலுடன் நோக்கிய சீதா, என்ன சுவாமி? விரத முறை கடுமையானதாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? எவ்வளவு கடுமையான விரதமாயினும், என் பர்த்தாவை அடைவதற்காக அனுஷ்டிக்க காத்திருக்கிறேன், என்றாள். தாயே! அப்படி ஒன்றும் கடுமையான நிபந்தனை ஏதுமில்லை. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள், எப்படிப்பட்ட துன்பமான வேளையிலும், விரதத்தை கைவிட்டு விடக்கூடாது. எவ்வளவு இடைஞ்சல் வந்தாலும், அவற்றைத் தகர்த்து, நிறைவேற்றியாக வேண்டும். விரதமிருப்பவரின் மனநிலையை உறுதிசெய்து பார்ப்பதே விரதத்தின் நோக்கம். ஒருவேளை, இடையிலேயே விரதத்தைக் கைவிட நேர்ந்தால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். நீ ஆஸ்ரமவாசியாக இருப்பதால், அத்தகைய இடைஞ்சல்கள் ஏதும் வர வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். இப்போது சொல்...லலிதா நோன்பைத் துவங்குகிறாயா? என்றார் வால்மீகி. சுவாமி! என் கணவரை மீண்டும் சந்திப்பதற்காக எவ்வளவு கடுமையான விரதத்தையும் ஏற்கத்தயார், என்ற  சீதா, தினமும் ஆயிரம் தாமரைப் பூக்களை இந்தக் காட்டில் போய் எங்கே தேடுவது என யோசிக்க ஆரம்பித்து விட்டாள். அப்போது லவகுசர் அங்கே வந்தனர்.

லவகுசா பகுதி-16
அம்மாவின் முகத்தில் ஏதோ ஒரு கேள்விக்குறி தொக்கி நிற்பதைக் கண்ட லவகுசர், அம்மா! தாங்கள் எதையோ எதிர்பார்ப்பது போல் உங்கள் முகக்குறிப்பு தெரிவிக்கிறது. உங்களுக்கு என்ன வேண்டுமம்மா? உங்களுக்கு பணிவிடை செய்ய வேண்டியது எங்கள் கடமையல்லவா? தாய் ஆசைப்படும் பொருள் எதுவாகவும் இருக்கட்டுமே! அதை தமையன்மார் கொண்டு வந்து கொடுக்க வேண்டியது புத்திர தர்மம். கேளுங்கள் அம்மா, என்றனர். ராமாயணம் போன்ற இதிகாசங்களை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதின் அவசியத்தை இவ்விடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். ராமன் இருந்தாரா இல்லையா? அவர் பாலம் கட்டினாரா கட்டவில்லையா? என்பது போன்ற விமர்சனங்களை செய்வதை விட, ராமகதையில் வரும் நல்ல கருத்துக்களை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் பணி மிக மிக முக்கியம். தாய்க்குரிய கடமைகளை பிள்ளைகள் செய்ய வேண்டும், தந்தையின் சொல்லை மதித்து நடக்க வேண்டும், ஒருத்திக்கு ஒருவனாக வாழ வேண்டும் என்பது போன்ற உயர்ந்த தத்துவங்களை ராமசீதா, லவகுசா பாத்திரங்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. பெற்றவர்களை முதியோர் இல்லங்களுக்கு தள்ளத்துடிக்கும் இளைஞர்கள் லவகுசர் என்ற சிறுவர்களின் செயல்பாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், நன்மையைக் கற்றுத்தருவதே இதிகாசங்களின் வேலையாகும். லவகுசர் தன் முகக்குறிப்பைக் கொண்டே, தன் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொண்ட சீதாதேவி மிகவும் மகிழ்ந்து, என் செல்வங்களே! அம்மா, லலிதா தேவி விரதம் அனுஷ்டிக்கப் போகிறேன்.
ஒன்பது இரவுகள் அம்பிகையை வழிபட வேண்டும். அதற்கான சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ஆயிரம் தாமரைப்பூக்கள் தினமும் தேவைப்படுகிறது. அதனை பறிப்பது குறித்து தான் யோசிக்கிறேன், என்றாள். அப்போது குசன் தாயிடம், அம்மா! இது சாதாரண செயல். நொடிப்பொழுதில் மலர்களை தங்களிடம்  கொண்டு வந்து சேர்க்கிறேன். லவன் உங்களுக்கு பாதுகாப்பாக இங்கே இருக்கட்டும். நான் போய் பறித்து வருகிறேன், சொல்லி விட்டு காட்டுக்குள் உள்ள தடாகங்களை நோக்கிச் சென்றான். தாயின் அருகில் இருந்த லவனை சீதாதேவி, நீ போய் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடு என அனுப்பி விட்டாள். லவன் குதிரை கட்டப்பட்டிருந்த இடத்திற்கு நண்பர்களுடன் வந்து சேர்ந்தான். எல்லோருமே வால்மீகியின் குருகுலத்து குழந்தைகள். எல்லாருமாக ஒருமித்த கருத்துடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்நேரத்தில் அயோத்தியில் இருந்து புறப்பட்டு வந்த லட்சுமணன், குதிரை இருக்குமிடம் வந்து சேர்ந்தான். குதிரை கட்டப்பட்டிருப்பதையும் குழந்தைகள் சிலர் அதனைச் சுற்றி ஓடிவந்து விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்ட லட்சுமணன், இங்கே வீரர்கள் யாரையும் காணவில்லையே! இந்த பிஞ்சுகளிடமா சத்ருக்கனன் தோற்றிருப்பான்! நம்ப முடியவில்லையே! எதற்கும் விசாரித்துப் பார்ப்போம் என நினைத்த லட்சுமணன், செல்வங்களே! இந்தக் குதிரையை இங்கே கட்டி வைத்தது யார்? என்றான். ஏன்...நான் தான் கட்டி வைத்தேன். நீங்கள் யார்? என்று கேட்டு முன்வந்தான் லவன். அந்தக் குழந்தையைக் கண்டதும் ஏனோ ஒரு மரியாதை பொங்கியது லட்சுமணனின் உள்ளத்தில்! தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா!
குழந்தாய்! இதென்ன விளையாட்டு! இது ஸ்ரீராமனின் அஸ்வமேத யாகக்குதிரை! இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்? உனக்கு விளையாட வேறு குதிரைகள் கிடைக்கவில்லையா? இதோ! நான் ஏறி வந்திருக்கும் இந்தக் குதிரை உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தது. இதைக் கூட வைத்துக் கொள். அதை அவிழ்த்துக் கொண்டு போகிறேன், என்று குதிரையை லட்சுமணன் நெருங்கவும், பாய்ந்து வந்த அம்பு ஒன்று, லட்சுமணனின் காலடியில் குத்திட்டு நின்றது. மகனே! ஏன் என்னை அம்பால் அடிக்க முயன்றாய்? விபரீதத்தை சந்திக்காதே. குதிரையை அவிழ்த்து விடு. இல்லாவிட்டால்... என்று மிரட்டும் தொனியில் எச்சரித்தான். வீரனே! முதலில் நீர் யார் என்பதைச் சொல்லும்? என்றதும், நான் ஸ்ரீராமமூர்த்தியின் இளவல்...என் பெயர் லட்சுமணன், என்றதும் கலகலவென சிரித்தான் லவன். அடடா...மாவீரன் லட்சுமணனா! இதென்ன இலங்கை என்று நினைத்தாயா! அல்லது இந்திரஜித்தைப் போல உன்னிடம் சிக்கி மாளும் வீரர்கள் இங்கிருக்கிறார்கள் என்று நினைத்து வந்தாயா? குதிரையை அவிழ்க்க அனுமதிக்க மாட்டேன். அந்த ராமன், தன் மனைவியை காட்டுக்கு அனுப்பிவிட்டு நடத்தும் யாகம், சாஸ்திரத்துக்கு புறம்பானது. அதை ஒருக்காலும் அனுமதிக்கமாட்டான் இந்த லவன். என் சகோதரன் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவான். நீயாக ஓடி விடுகிறாயா? இல்லை..அவனும், நானும் இணைந்து விடும் பாணங்களுக்கு பலியாகப் போகிறாயா? என வீராவேசமாகப் பேசினான். லட்சுமணன் இயற்கையாகவே கோபக்காரன். அவன் நாராயணனைத் தாங்கும் அனந்தன் என்ற பாம்பின் அம்சமல்லவா! பாம்பைத் தொட்டால் என்னாகும்? இவன் லட்சுமணனை சீண்டிப் பார்க்கவே, கோபம் கொப்பளித்து விட்டது. மேலும், தன் அண்ணன் ராமனைப் பழித்துப் பேசியதால், அந்தச் சிறுவனை தட்டி வைக்க வேண்டும் என்று நினைத்து, அருகில் வந்தான். மீண்டும் பறந்து வந்த அம்பு அவனை நகர விடாமல் தடுத்தது. லட்சுமணனும் பதிலுக்கு அம்பு விட ஆக்ரோஷமான சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் லட்சுமணன் தோற்றுப் போகும் நிலைக்கு வந்து விட்டான். அவனது படை வீரர்கள் லவனின் அம்புகளில் கட்டுண்டு கிடந்தனர். வேறு வழியின்றி அவன் நாகாஸ்திரம் ஒன்றை லவன் மீது எய்ய, அது அவனைக் கட்டிப் போட்டது. லவன் மயக்கமடைந்தான். உடன் வந்த சிறுவர்கள், இது கண்டு அலறி ஓடிய போது, தாமரை மலர்களை பறித்து அன்னையிடம் ஒப்படைத்து விட்டு, குசன் வந்து கொண்டிருந்தான்.

லவகுசா பகுதி-17
சகோதரனின் நிலை கண்ட அவன் கொதித்துப் போனான். நண்பர்கள் மூலம் நடந்ததை அறிந்த அவன், ஒரு சிறுவனை இவ்வாறு கட்டிப்போட வெட்கமாக இல்லையா? என லட்சுமணனிடம் கேட்டான். லட்சுமணன் அப்போதும் கூட பொறுமையாக, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் குதிரையை கட்டிப்போட்டு தர மறுத்ததால் ஏற்பட்ட விளைவே இது என்பதை என எடுத்துச் சொன்னான். தன் பங்கிற்கு குசனும், ராமபிரானின் யாகம் நியாயமற்றது என்பதையும், மனைவியின்றி அஸ்வமேத யாகம் நடத்துவதை ஒருக்காலும் ஒப்புக்கொள்ள முடியாது என்றும், முடிந்தால் தங்களை வென்று குதிரையை அவிழ்த்துச் செல்லும்படியும் பிடிவாதமாகச் சொன்னான். பின்னர் நாகாஸ்திரத்தின் பிடியில் இருந்து கருடாஸ்திரத்தை ஏவி சகோதரனை விடுவித்தான். இருவரும் இப்போது லட்சுமணனுடன் போருக்கு தயாராயினர். இரண்டு சிறுவர்களுடன் போரிட வேண்டி வந்ததே என மனம் வருந்திய லட்சுமணன், அண்ணனின் உத்தரவை நிறைவேற்ற பல அஸ்திரங்களை அந்த சிறுவர்கள் மீது எய்தான். எல்லாவற்றுக்கும் பதிலடி கொடுத்த லவகுசர், இறுதியாக லட்சுமணனையே ஆயுதம் ஏதும் இல்லாமல் செய்தனர். இந்திரஜித்தை வென்ற அந்த மாவீரன், இளம் சிறுவர்கள் முன் அவமானப்பட்டு நின்றான். இதென்ன அதிசயம் என ஆச்சரியப்பட்டு நின்ற வீரர்களையும் ஆயுதமின்றி நிர்மூலமாக்கினர் லவகுசர். குனிந்த தலையுடன் லட்சுமணன் நிற்க, போர்க்களத்தில் இருந்து ஒருவன் மட்டும் தப்பித்து ராமபிரானிடம் ஓடினான்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி! ஒரு அதிசயத்தைக் கேட்டீர்களா! பத்து தலை ராவணனின் மகனும், யாராலும் வெல்ல முடியாத சக்தியுடையவனுமான இந்திரஜித்தின் மகனையே ஒரு அம்பால் தலையறுத்த நம் மாவீரர் லட்சுமணனை, சத்ருக்கனரை வென்ற அதே வீரச்சிறுவர்கள் வென்றார்கள் ஐயனே என்றான். எல்லாம் அறிந்த அந்த நாராயண மூர்த்தியின் அவதாரமான ராமபிரான், அப்படியா! நடக்க முடியாதது நடந்து விட்டதா? ஆஹா...அப்படியானால், அவர்களை வெற்றி கொள்ள யாருமே இல்லையா? சரி... ராமாஸ்திரம் ஒன்றே அவர்களை அடக்கும் சக்தியுடையது என்றால், அதை விடுப்பதைத் தவிர வேறென்ன வழி! நானே அவர்களை அடக்கி, குதிரையைக் கொண்டு வருகிறேன், என அவனிடம் சொல்லியனுப்பினார். லவகுசர் மிகுந்த ஆனந்தத்துடன் இருந்தனர். வால்மீகி முனிவர் தங்களுக்குப் போதித்த ராமாயண சரித்திரத்தில், லட்சுமணனின் திவ்ய பங்கு குறித்து குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். வெல்ல முடியாத இந்திரஜித்தை வென்ற லட்சுமணனே தங்களிடம் வீழ்ந்ததை எண்ணி மகிழ்ச்சியில் மூழ்கிப் போயினர். நண்பர்களின் நிலையை சொல்லவும் வேண்டாம். இங்கே இப்படியிருக்க, சீதாபிராட்டி லலிதா பூஜையைத் துவங்கினாள். ஒவ்வொரு நாளும் தாமரை மலர்களை மகன் கொண்டு வந்து கொடுக்க பூஜை அமர்க்களமாக நிறைவேறிக் கொண்டிருந்தது. ஒன்பது நாள் பூஜையில் எட்டுநாட்கள் கடந்து விட்டன.
தன் கணவனை அடைவது உறுதி என்ற நம்பிக்கையும் அவள் மனதில் தளிர்விட்டது. ஆனால், சோதனைகளையே சந்திக்கப் பிறந்தவள் அல்லவா அவள்! இந்த உலகத்தில் எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாத சந்தேகம் என்ற சோதனையையே அனுபவித்துக் கொண்டிருப்பவள் அல்லவா அந்த நல்லவள்! கணவன் என்ன தான் நல்லவன் என்றாலும், ஊரார் சொல்லுக்கு அஞ்சி, காட்டுக்கு அனுப்பி விட்டானே! இது ஒன்று போதாதா! ஊரார் தன்னை பழித்துத் தூற்ற! கட்டியவனே ஒதுக்கி விட்டான் என்றால், அவளிடம் ஏதோ தவறு இருக்கத்தான் வேண்டும் என்று நல்லவர்கள் கூட தன்னைப் பற்றி எள்ளி நகையாடுவார்களே! இப்படி இக்கட்டான சூழ்நிலையில் கண்ணீரே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருந்த ஜனககுமாரி...ராஜா வீட்டு குழந்தையான சீதா சற்றே மகிழ்ச்சியில் மூழ்கினாள் என்று தான் சொல்ல வேண்டும். ராமபிரான் அப்போது உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்தார். தான் நாராயண மூர்த்தி என்பதும், உலகில் தர்மத்தை நிலைநிறுத்த வந்ததையும், மீண்டும் வைகுண்டம் செல்லும் நாள் நெருங்குவதையும் உணர்ந்தார். ஆம்...லவகுசர் யாரென்பதை ஊராருக்கு அறிவித்தாக வேண்டும். அவர்களிடம் நாட்டின் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும், உலகையே காக்கும் தீரர்கள் அவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, என் தேவியின் கற்பின் மகிமையை அயோத்தி மக்கள் அறியச் செய்ய வேண்டும். சீதாதேவியை மீண்டும் அயோத்திக்கு வரவழைக்க வேண்டும். அவளது கற்பின் திறன் முன்னால் அருந்தததியின் கற்பும் வெட்கப்படும் என்பது எல்லாருக்கும் புலப்பட வேண்டும். இலங்கையில் எப்படி தீமூட்டி அங்கிருந்தவர்கள் சீதாவின் கற்புநெறியை உணர்ந்தார்களோ, அதே போல், அயோத்தி மக்களும் அவள் கற்புக்கரசி என்பதை மீண்டும் அவள் அனலுக்குள் மூழ்கி வெளிவருவதைக் காண வேண்டும், என முடிவெடுத்தார். பின்னர் ஒரு தூதனை அழைத்தார். தூதனே! நீ உடனடியாக வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்திற்குச் செல். அங்கே, சீதாபிராட்டி தங்கியிருக்கிறாள். அவளை அழைத்துக் கொண்டு, அயோத்திக்கு வரும்படி நான் சொன்னதாக முனிவரிடம் சொல், என்றார். தூதன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். ஆம்...லட்சுமி மீண்டும் அயோத்தியில் கால் பதிக்கப் போகிறாள். ராமராஜ்யம் இன்னும் மேலோங்கி விளங்கப்போகிறது. உலகம் செழிக்கப் போகிறது என எண்ணியபடியே குதிரை ஒன்றில் ஏறி வால்மீகி ஆஸ்ரமம் நோக்கி விரைந்தான். அப்போது அஸ்தமன நேரம். ஆஹா...மீண்டும் சீதாபிராட்டி தீயில் குதிக்கப் போகிறாள். அவள் உடலை அக்னி சுடுவான்! இந்தக் கொடுமையைக் காணும் சக்தி எனக்கில்லை என்றபடியே சூரியபகவான் செவ்வானில் மறைந்து போனார்.

லவகுசா பகுதி-18
ராமபிரானால் அனுப்பப்பட்ட தூதன், வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்து, சீதாதேவியும், தாங்களும் அயோத்திக்கு எழுந்தருள வேண்டும் என ஸ்ரீராமன் என்னிடம் தகவல் சொல்லி அனுப்பியுள்ளார், என்றான். ஒரு மகாசரிதம் முடியப்போகிறது என்ற உணர்வு வால்மீகியை ஒருபுறம் வருந்தச் செய்தாலும், ஸ்ரீமன் நாராயணனும், அவரது தேவியான லட்சுமியும் பூலோகத்தில் படும் கஷ்டம் போதும் என்ற உணர்வு மேலோங்கி, அவர்களை வைகுண்டம் அனுப்பி வைக்க தானும் ஒரு காரணியாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியும் அடைந்தார். தூதனிடம், தூதனே! ஸ்ரீசீதாபிராட்டியார், தன் மணாளனை மீண்டும் அடைய வேண்டி, லலிதா விரதத்தை துவங்கியிருக்கிறாள். ஒன்பது நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். விரதம் முடிந்ததும், அவர்கள் நிச்சயம் ஒன்று சேர்வார்கள். ஸ்ரீராமச்சந்திரனிடம் இன்னும் சில நாட்கள் பொறுத்து நாங்கள் வருவதாகச் சொல்லி விடு, என்றார். தூதனும் சிரம்தாழ்த்தி விடை பெற்றான். லலிதா விரதம் எனப்படும் நவநாள் விரதம் வெற்றிகரமாக நிறைவேறியது. அந்த அம்பிகை சீதாபிராட்டிக்கு அருள்பாலித்தாள். சீதா! உன் கணவனை நீ காண்பாய். ஆனால், நீ யார் என்பதை உணர்ந்து கொள். பூமியில் பிறப்பது தெய்வாம்சமாயினும், அதற்கும் முடிவு உண்டு என்பதை நீ அறியாமல் இல்லை. நீ பூமாதேவி பெற்றெடுத்த மகள். உன் கணவனைக் கண்டு ஆசிபெறு. அயோத்தி மக்களின் முன்னால் உன் கற்புத்திறனை நிரூபி. பின்னர், உன்னைப் பெற்ற பூமாதேவியை அடைந்து விடுவாய். இந்த உலகம் உள்ளளவும் உன்னை வணங்கும், என ஆசியருளினாள். சீதாதேவி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
அவள், வால்மீகி முனிவருடன் அயோத்திக்கு புறப்பட்டாள். சீதாதேவி வரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த அயோத்திமக்கள் அவள் வரப்போகிறாள் எனத் தெரிந்ததும், ஆனந்தமாக வரவேற்பளிக்க காத்திருந்தனர். ஸ்ரீராமபிரான் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அந்த இனிய வேளையில், சீதாதேவியும், வால்மீகி முனிவரும் அரண்மனைக்கு வந்து கொண்டிருந்தனர். மெலிந்த தேகத்துடன் தலை குனிந்து வந்த சீதாவைப் பார்த்த அயோத்தி நகரப் பெண்கள் கண்ணீர் வடித்தனர். ஐயையோ! அரசனுக்கு மகளாகப் பிறந்து இவள் என்ன சுகத்தைக் கண்டாள்! ஜனகமகாராஜா கூட இவளது துன்பம் கண்டு, ராமபிரானின் குடும்பத்தினரிடம் எதுவுமே பேசவில்லையே! பெண் பிள்ளையைத் திருமணம் செய்து கொடுத்து விட்டால், அவளுக்கு வரும் இன்ப துன்பங்களை அவளே சமாளித்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்கணத்தை மிகச்சரியாக கடைபிடிக்கிறார் என்றாலும், ஊர் மக்களில் ஒரு சிலர் சந்தேகப்பட்டார்களே என்பதற்காக, அவளைக் காட்டிற்கு அனுப்பிய தங்கள் மன்னனை தட்டிக் கேட்கவோ, அறிவுரை சொல்லவோ செய்திருக்கலாமே! அம்மா சீதா! நீ எப்படி மெலிந்து விட்டாய்! எங்கள் ஊருக்கு வரும் போது எவ்வளவு அழகாக இருந்தாய். உன்னைக் காணவே மனம் பதைக்கிறதே! என  வாய் விட்டுச் சொல்லியபடியே, அவளது துயர முகம் காண சகியாமல் கண்களை மூடிக் கொண்டனர். பெண்ணுக்கு தானே தெரியும் இன்னொரு பெண் படும் துயரம்! வயதில் மூத்த சில பெண்கள், நாங்களும் கஷ்டம் அனுபவிக்காமல் இல்லை! பெண்ணாகப் பிறந்தாலே கஷ்டம் தான். ஆனால், இவளைப் போல், திருமணம் முடிந்த நாளில் இருந்து கஷ்டப்படும் ஒரு பெண்ணைப் பார்த்ததில்லை! இவளளவுக்கு எங்களில் யாரும் துன்பம் அனுபவிக்கவும் இல்லை, என வருந்தி கண்ணீர் விட்டனர்.
அரண்மனைக்குள் நுழைந்த சீதாபிராட்டி ராமபிரான் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை ஏறிட்டும் பார்க்கவில்லை. இத்தனை நாள் கழித்து மணாளனைப் பார்க்கிறோம், ஆசையுடன் அந்த கார்மேக வண்ணனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தித்தள்ளினாலும், அவரது உத்தரவு கிடைக்கவில்லையே! அது மட்டுமா! தெய்வமாய் இருந்தாலும், மானிடப்பிறவி எடுத்து விட்டாளே! ஊராரின் சந்தேகத்துக்காக தன் வாழ்வை பலி கொடுத்தானே என்ற உணர்வும் உந்தி நின்றது. உணர்ச்சிப்பிழம்பாய் நின்ற அவள், அத்தனையையும் உள்ளுக்குள் அடக்கியதன் விளைவு, கண்ணீராகக் கொட்டியது. பெண்கள் எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்கள். எதையும் சகிக்கும் வல்லமை கொண்டவர்கள். இருந்தாலும், உணர்ச்சி மேலிட்டு விட்டால், கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. எவ்வளவு தைரியசாலி பெண்ணாயினும், கண்ணீர் மட்டும் என்னவோ அவளது உடைமையாகத்தான் இருக்கிறது! சீதாதேவியும் கண்ணீரைக் கொட்டிக் கொண்டிருந்தாள். மகளின் கண்ணீர் துளிகளை பூமிமாதா காணச்சகியாமல், தனக்குள் உறிஞ்சிக் கொண்டிருந்தாள். அப்போது, சீதாபிராட்டி வெள்ளை ஆடை அணிந்திருந்தாள். கணவனைப் பிரிந்தவர்களுக்கு வெள்ளை ஆடை தகுந்த பாதுகாப்பளிக்கும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தும். வளைந்த மேனி நிமிரவில்லை. ராமனைக் காணும் ஆவல் உந்த கண்கள் மேலெழும்பத் துடித்தது. இருப்பினும் அடக்கமாக நின்றாள். ராமபிரான் விரிகின்ற ஒளிக்கதிர்களையுடைய சூரியனின் ஒளிக்கற்றைகளைப் போல் ஒளிவீசும் நவரத்தின மாலைகளையணிந்து சிம்மாசனத்தில் இருந்தார். வால்மீகியைக் கண்டதும் எழுந்து வந்து நமஸ்காரம் செய்தார். அவரது பாதங்களில் மலர் தூவி அர்ச்சித்தார். அவரைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று ஒரு ஆசனத்தில் அமர வைத்தார். வீட்டிற்கு பெரியவர்கள் வந்தால், இளையவர்கள் அவர்களை இப்படித்தான் உபசரிக்க வேண்டும். பெருசு வந்துட்டியா போன்ற மரியாதைக் குறைவான வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தக் கூடாது. சீதாதேவியிடம் ராமபிரான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளும் அமைதியாக நிற்க, இந்த இக்கட்டான மவுனச் சூழ்நிலையை வால்மீகி முனிவர் தான் கலைத்தார்.

லவகுசா பகுதி-19
ஸ்ரீராமா! அமைதி வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று தான். ஆனால், சில சமயங்களில் அந்த அமைதியே பலரது வாழ்வை முடித்து விடுகிறது. பேச வேண்டிய நேரத்தில், தேவையானதை, அளவோடு பேச வேண்டும். அந்த பேச்சு உயிரைக் காப்பாற்றும் சக்தியுடையது. நீ பேசாமல் இருந்தால், சீதாதேவி மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் ருசுவானது போல் ஆகிவிடும். அதன் பிறகு அவள் உயிர் வாழ்வாளா? அன்புள்ளவனே! உனக்குத் தெரியாதா? உன் மனைவியைப் பற்றி! அவளது கற்பின் தீவிரத்தை இலங்கைத் தீயிலேயே உணர்ந்தவன் நீ! அந்த அக்னி பகவானே அந்த தேவியின் கற்புத்தீயின் உக்கிரம் தாளாமல், ஓங்கி எரிந்தவன் தாழப் பணிந்தான். ஸ்ரீசீதாவின் திருவடியைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி எண்ணி மனம் மகிழ்ந்தான். அயோத்தியின் ராஜாதி ராஜனே! சீதையின் கற்புநெறியை நீ மட்டுமல்ல! நானும் அறிவேன், நல்லவர் அனைவரும் அறிவர், என்றவர், மேலும் தொடர்ந்தார். பாவமே இல்லாத ராமனே! உன் காதலியின் கற்புத்திறனை பூமியிலுள்ளோர் மட்டுமல்ல! கற்புக்கே இலக்கணமாகத் திகழும் விண்ணவப் பெண்மணியான அருந்ததியும் கூட ஏற்றுக் கொள்வாள். அவள் எனது ஆஸ்ரமத்திலேயே இத்தனை நாளும் தங்கியிருந்தாள். அப்போது அவளைப் பற்றி நான் மிகத்தெளிவாக அறிந்து கொண்டேன். உன்னைத் தவிர அவளுக்கு வேறு எண்ணமே இருந்ததில்லை. உன்னை அடைவதற்காக லலிதா விரதமும் அனுஷ்டித்து, இப்போது அந்த அம்பிகையின் அருளால் உன் முன் வந்திருக்கிறாள். அவளை நீ ஏற்பதே முறை, என்றார்.
சீதாதேவியோ எவ்வித தன்னிலை விளக்கமும் அளிக்கவில்லை. ராமபிரான் இப்போது தான் தன் மவுனத்தைக் கலைத்தார். முனிவர் பெருமானே! தாங்கள் சொன்னது என் மனைவி கற்புநெறி தவறாதவள் என்பதை வானவர்களும், நானும் முன்பேயே அறிவோம். ஆனால், கடல்சூழ்ந்த இந்த உலகிலுள்ள மக்களில் ஒரு பகுதியினருக்கு அவளது கற்பு நெறி மீது ஏற்பட்ட சந்தேகம் நீங்கினால் தான், நான் அறிந்ததை இந்த உலகமும் அறியும். எனவே, சீதாதேவி மீண்டும் தன் கற்புத்திறனை இந்த பூவுலகிலுள்ளோர் அறியும்படியாக நிரூபிக்க வேண்டும். சீதா மீண்டும் நெருப்பில் இறங்கியாக வேண்டும். அப்படி நிரூபித்தால் தான், நான் அவளை ஏற்க முடியும், என்றார். தன் வாழ்வில் பலமுறை நொறுங்கிப்போயிருக்கும் சீதாதேவி, இப்போது தவிடு பொடியாகி விட்டாள். கட்டிய கணவர் என்னை நம்புகிறாராம்! விண்ணுலக தேவர்கள் என்னை நம்புகிறார்களாம்! இதோ, இங்கிருக்கும் வால்மீகி முனிவர் என் கற்புத்திறன் அருந்ததியை விட உயர்ந்தது என்று சான்று வழங்கியிருக்கிறாராம்! ஆனாலும், ஊரார் சொல்வது தான் பெரிதாகப் போய் விட்டதாம்! இலங்கையில் அத்தனை பேர் முன்னிலையில், வானரங்கள் முன்னிலையில் என்னை சந்தேகம் கொண்டு, தீயில் இறங்கச்சொன்னார். நான் என் கற்புத்திறனை நிரூபித்து விட்டாலும், என் உடலை நெருப்பு சுடாவிட்டாலும், என் மனம் சுட்டதே! அந்த மனச்சூடு தணியும் முன்பு, மீண்டும் ஒருமுறை யாரோ சொன்னார்கள் என்பதற்காக, ஒன்றுமே சொல்லாமல், காட்டுக்கு விரட்டி விட்டார். இப்போது, மீண்டும் தீயில் குதி, என்கிறார். நாளை வேறு யாராவது சந்தேகப்பட்டால், மீண்டும் தீக்குள் குதிக்க வேண்டும்! இதை விட நான் இறந்தே போகலாம். நான் இந்த பூமியில் வாழ விரும்ப வில்லை, அவளது மனக்குமுறல், அவளைப் பெற்ற தாயான பூமாதேவியை உருக்கி விட்டது.
(சீதாதேவியை ஜனகமகாராஜா, தான் செய்ய இருந்த யாகநிலத்தை பொன் ஏர் கொண்டு உழுதபோது, கிடைத்தவள் என்பதால், அவள் பூமாதேவியின் மகளாகிறாள். ஜனகரும், அவர் மனைவி சுநைனாவுமே சீதாவை வளர்த்த பெற்றோர் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்) இருப்பினும், பொறுமையின் சின்னமான அவள், என்ன தான் நடக்கிறது என கண்ணீருடன் கவனித்துக் கொண்டிருந்தாள். சீதாதேவியின் எண்ண அலைகள் விரிந்தன. என் அன்பரே! கொஞ்சம் சிந்தித்துப் பாரும். தாம்பத்ய வாழ்வு என்பது இன்பம் என்ற மலர்களையும், துன்பம் என்ற முள்மரங்களையும் சுமந்து வரும் ஆறு போன்றது. நீர் என்னை மகிழ்ந்து பாராட்டியிருக்கிறீர்! நான் இன்பமடைந்திருக்கிறேன். உமக்கு பட்டாபிஷேகம் நிறுத்தப்பட்டு, காட்டுக்கு புறப்பட்ட போது, உம்மோடு வந்து சிரமப்பட்டாலும், அதிலும் இன்பமே அடைந்தேன். கடும் கோபத்துடன் நீர் என்னுடன் இலங்கையில் என் கற்பு பற்றி சந்தேகித்துப் பேசிய போது கூட, நான் கோபித்தாலும், அதிலுள்ள நியாயத்தை ஏற்று தீக்குளித்தேன். ஆனால், திரும்பத்திரும்ப அதையே செய்யச் சொன்னால்...நான் என்ன பொம்மலாட்ட பொம்மையா! ஆட்டியபடியெல்லாம் ஆடுவதற்கு! ஊர் சொல்லட்டுமே! உம் மனைவியின் கற்பில் சந்தேகமிருக்கிறது என்று! நீர் என்ன செய்திருக்க வேண்டும்! என் மனைவியின் கற்பில் குறை கண்டவர்களை வெட்டிச்சாய்ப்பேன் எனச் சொல்லி அதைச் செய்திருக்க வேண்டாமா! அப்படி செய்திருந்தால், யாராவது வாயைத் திறந்திருப்பார்களா! இந்தக்கதி எனக்கு வந்திருக்குமா? என்னை காட்டுக்கு அனுப்பினால், ஊரார் என்ன நினைப்பார்கள்? சீதா தவறு செய்திருக்கிறாள் போலிருக்கிறது, அதனால் தான் நம் மன்னன் அவளைக் காட்டுக்கு அனுப்பியிருக்கிறார் என்று தானே நினைப்பார்கள்! என் மீது அபிமானம் கொண்டவர்கள் கூட சந்தேகிக்கத்தானே செய்வார்கள்! ராமா, நீர் செய்வது எந்த வகையில் முறை? என குமுறியவள், சிவபெருமான் நெற்றிக்கண்ணை மன்மதன் மீது எப்படி பிரயோகித்தாரோ, அதே வேகத்தில், அதே கோபத்தில், படபடவென வார்த்தைகளை உதிர்த்தாள். நெஞ்சு கொதிக்கும் போது வார்த்தைகளின் வேகம், வில்லில் இருந்து விடுபட்ட அம்பைப் போல் இருக்கும். வால்மீகி முனிவரே! என் கணவரே சொல்லி விட்டார், இன்னொரு முறை தீயில் இறங்கு என்று. அவர் சொன்ன பிறகும் மறுத்துப் பேச எனக்கென்ன அதிகாரமிருக்கிறது? கிண்ணத்திலுள்ள நஞ்சை வாயருகே கொண்டு சென்றால், அது உயிரைக் கொல்லாது. அதையே உள்ளிறக்கி விட்டால், உயிர் பறந்து விடும். அதுபோல், மக்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசினார்கள் என்றால், அதுபற்றி நான் கவலை கொண்டதில்லை, கொள்ளப்போவதுமில்லை. ஆனால், உள்ளிறங்கும் விஷம் போல, என் காதலரே என்னைத் தீயில் தள்ளத்துடிக்கிறாரே! அதுதான் என்னைக் கொல்கிறது, என ஆவேசத்துடன் கண்ணீருடனும் கதறினாள். தன் மகளின் நிலை பொறுக்காத பூமாதேவி, கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள். பூமியில் சிறு அதிர்வு ஏற்பட்டதை அந்த சபையிலுள்ளோர் உணர்ந்தனர்.

லவகுசா பகுதி-20
ராமபிரானோ தன் முடிவில் உறுதியாக இருந்து விட்டார். அப்போது சீதாதேவி, என் கணவர் என்னை தீயில் இறங்கு என சொல்வது மட்டுமல்ல, இதுவரை அவர் எனக்குச் செய்த எல்லாமே எனக்கு செய்யப்பட்ட நன்மை என்றே கருதுகிறேன். ஆனாலும், அவர் என் கற்பின் மீது ஊரார் சொல்லுக்காக நிரூபிக்கத் துடிப்பதை என்னால் பொறுக்க முடியவில்லை. இனியும், நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. எனவே, எங்கிருந்து பிறந்தேனோ, எந்தத்தாய் என்னைப் பெற்றாளோ, எல்லோருக்கும் பெற்ற தாய் யாராக இருந்தாலும், முடிவில் எந்தத்தாயிடம் அடைக்கலமாவார்களோ அந்தத்தாயிடமே செல்கிறேன், என்றவள், அம்மா! பூமி மாதா! நல்வினை தீவினை ஆகியவற்றை அறுத்தெறிந்தவரும், தவங்கள் பல இயற்றியவருமான விஸ்வாமித்திர முனிவர், இதோ இங்கே வீற்றிருக்கிறாரே தசரத புத்திரர் ஸ்ரீராமர்...இவரை எங்கள் இல்லத்துக்கு அழைத்து வந்தார். அந்த முனிவர் செய்த யாகத்திற்கு இடையூறு செய்த அரக்கர்களை ஒழித்து விட்டு வந்த மாவீரனான இவர், என் தந்தை கொடுத்த சிவதனுசு என்னும் வில்லை ஒடித்தார். யாராலும் தூக்கக்கூட முடியாத அந்த வில்லை ஒடித்ததால், பலசாலியான இவருக்கு என்னை என் தந்தை ஜனகர் மணம் செய்து வைத்தார். இந்த கரிய நிறத்தானை, கார்மேக வண்ணனைத் தவிர வேறு எந்த மன்னனையும் என் திருமணத்துக்கு முன்போ, பின்போ நான் மனத்தாலும் வாக்காலும் நினைக்கவில்லை என்பதும், அவர்களைப் பற்றி பேசியது கூட இல்லை என்பதும் உண்மையானால், நிலமகளே! என் தாயே! நீ வருக! என்னை உன்னிடமே மீண்டும் எடுத்துச் செல், என்றாள் ஆவேசத்துடன்.
கற்பு நிறைந்த மங்கை, பழி போடப்பட்ட மங்கை, உலகிலேயே துன்பங்களை அதிகம் அனுபவித்த மங்கை...கட்டளை இட்டிருக்கிறாள். எந்த ஒரு தேசத்தில் பெண்கள் துன்பப்படுத்தப்படுகிறார்களோ, அந்த நாட்டின் நிம்மதி முற்றிலும் குலைந்து போய் விடும் என்பதே சரித்திரம் கூறும் உண்மை. சீதாதேவி தொடர்ந்தாள். அம்மா! என்னைப் பெற்ற பூமாதேவியே! உலகிலுள்ளோரின் வணக்கத்துக்கு உரியவளே! என்னை வருந்திப் பெற்றவளே! என்னுடைய கற்பின் மீது என் கணவர் ஊராருக்காக சந்தேகப்படுகிறார். ஆனால், என் கற்பும், கற்புக்கரசியான அருந்ததியின் கற்பும் ஒரே தன்மையுடையது என்பது உண்மையானால், நிலத்தை பிளந்து கொண்டு எழுந்து வா, என்று ஆணை பிறப்பிக்கும் குரலில், அயோத்தியே அதிரும் வகையில் அரற்றினாள். பூமியிலுள்ள மற்ற தாய்மார் பெற்ற பிள்ளைகளுக்கு துன்பம் ஏற்பட்டாலே, பூகம்பத்தை உண்டாக்கி அநியாயக்காரர்களையும், அக்கிரமக்காரர்களையும், முன்ஜென்மத்தில் பாவங்கள் பல புரிந்து, தனக்கு பாரமாக இருப்பவர்களையும் அழித்து விடும் பூமிமாதா, தான் பெற்ற பிள்ளைக்காக இத்தனை நாளும் பொறுமை காத்தாள். ஆனால், தன் மகளின் பெண்மைக்கே களங்கம் வந்தால் விட்டு வைப்பாளா என்ன! ஆதிசேஷனின் ஆயிரம் தலைகளால் தாங்கப்படுபவளும், நிலை பெற்ற கற்பினையுடையவளும், உலகத்து செல்வத்தையெல்லாம் தன் மேனியில் கொண்டவளும், மலைகள் எனப்படும் மார்புகளைத் தாங்கியவளும், மேகம் என்ற கூந்தலை உடையவளும், அலைகடல்களை ஆடையாக உடுத்தியவளுமான பூமாதேவி அதிர்ந்தாள். உலகமே நடுங்கியது.
பூமி விரிந்தது. அம்மா! சீதா! அழாதே மகளே! உன் கற்பே உலகில் சிறந்தது. அருந்ததியின் கற்பை விட உன் கற்பே உயர்ந்தது. உலகம் உள்ளவரை சீதையின் கற்புத்திறன் பேசப்படும். ஒருத்தி மகனாய் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தானே அந்த நாராயணன்...அவனே ராமனாய் இங்கே அமர்ந்திருக்கிறான். அவனுக்கு மட்டுமே நீ சொந்தமாக இருந்தாய் மகளே! இனியும் நீ இந்த பூமியின் மேல் வாழத் தேவையில்லை. நீ நாராயணனின் துணைவி என்பதை நினைவுபடுத்துகிறேன். பூமியின் உன் காலம் முடிந்து விட்டது. நீ என்னோடு வா மகளே! என கை நீட்டி அழைத்தாள். பெற்றவளின் மார்பில் முகம் புதைத்து அழுதாள் சீதா. அவளை அள்ளி அணைத்தபடியே, மீண்டும் நிலம் பிளக்க, ராமனிடம் உத்தரவு கூட பெறாமல், தன் மகளை உள்ளே அழைத்துச் சென்று விட்டாள் அந்தத்தாய். நல்லவர்கள் பூமியில் நீண்ட காலம் வாழ்வதில்லை என அரற்றுகிறோம். நல்லவனுக்கு பூமியில் என்ன வேலை? அவன் வைகுண்டத்திலோ, பாதாள லோகத்திலோ வாழ வேண்டியவன் அல்லவா! பூமாதேவி என்ற தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டியவன் இங்கேயிருந்து ஏன் அவஸ்தைப்பட வேண்டும் என்று தான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது போலும்! ராமபிரான் ஆத்திரமடைந்தார். இந்தச் சபையில் கூடியிருக்கும் அயோத்தி மாநகர மக்களே! சீதையின் கற்புத்திறனை புரிந்து கொண்டீர்களா? அவள் களங்கமற்றவள் என்பதை நான் அறிவேன். நான் இதுவரை யாருக்கும் எந்தத்தீமையும் செய்தது இல்லை. பிறருக்கு நன்மை செய்வதே என் வாழ்வின் குறிக்கோளாக இருந்திருக்கிறது. ஆனால், நான் அனுபவித்ததோ கடும் சோதனைகளைத் தான். இப்போது என்ன நடந்து விட்டது? ஊரார் சொல்லை மறுக்க, அவளைத் தீக்குளிக்கச் சொன்னேன், அவளோ, தன் தாயை அழைத்தாள். அந்தத்தாயும் வந்தாள், மகளை அழைத்துக் கொண்டு போய் விட்டாள். இது என்ன நீதி? இந்த பூமாதேவி எப்படிப்பட்டவள் என்பது எனக்குத் தெரியாதா? என்றவர் பூமாதேவியை சிறுமைப்படுத்தும் வார்த்தைகளை பேசினார். அகத்திய முனிவரால் ஒரு உள்ளங்கையால் அள்ளிக் குடிக்கப்பெற்ற மிகச் சாதாரணமான கடல் அலைகளை சுமப்பவள், குளிர்ந்த பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமான் பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் ஏற்பட்ட பாவத்திற்கு விமோசனம் தந்த திருமால், வாமன அவதாரமெடுத்து வந்த போது, அவனது இரண்டே அடிகளுக்குள் அடைக்கலமானது, பொன்னாலும், மணியாலும் தன் முடிகளை அலங்கரித்துக் கொண்ட ஆதிசேஷன் என்ற பாம்பால் தாங்கப்படுவது, ஒரு காலத்தில் ஏற்பட்ட பிரளய வெள்ளத்தில் இந்த பூமாதேவி மூழ்கிக் கிடந்த போது, திருமால் வராக அவதாரமெடுத்து தன் கொம்பின் மீது தாங்கி வந்தது...இப்படிப்பட்ட பூமாதேவிக்கு என் மனைவியை, என் கண் முன்னாலேயே தூக்கிச் செல்லும் தைரியம் எங்கிருந்து வந்தது? ராமபிரான் தன் ஆசனத்தில் இருந்து கொதித்தெழுந்தார்.

லவகுசா பகுதி-21
ஏ பூமாதேவியே! உன் மேலுள்ள கடல் எனது ஒரு அதட்டலுக்கு கட்டுப்படும் தன்மையுடையது. சீதையை மீட்க நான் இலங்கை சென்ற போது, அந்தக் கடல் வழிமறித்தது. நான் வில்லையும், அம்பையும் எடுத்தவுடனேயே பணிந்து வழிவிட்டது. அந்தச் சிறுமைக்குரிய கடலுக்குள் என் மனைவியை ஒளித்து வைத்திருக்கிறாயா? உன்னை ஒரே மிதியில், பாதாள லோகத்துக்குள் அழுத்தி விடுவேன், என்று காலை தூக்கினார். ஏதோ நினைவு வந்தவராக, ஏ பூமாதேவி, தப்பி விட்டாய். உன்னுள்ளே என் சீதாவை ஒளித்து வைத்திருக்கிறாய். நான் உன்னை அழுத்தினால், அந்த அழுத்தலில் அவளுக்கும் வலியெடுக்கும். அதனால், உன்னை மிதிக்க முடியாதவனாக இருக்கிறேன், எனச் சொல்லி காலை கீழிறக்கி, ஏ பூமாதேவியே! உன்னை நூறு துண்டுகளாகப் பிளக்கப் போகிறேன். என் மனைவியை மீட்கப் போகிறேன், என்று வில்லை எடுத்த வேளையில், நான்முகக் கடவுளான பிரம்மா, தன் தாமரை மலர் இருக்கையில் அங்கே எழுந்தருளினார். ஸ்ரீராமபிரானை வணங்கினார். ஐயனே! வணக்கம். ஆகாயம், நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய பஞ்சபூதங்களாலான இந்த உலகம் என்கிற பானகத்தை விரும்பி அருந்திவிட்டு, ஆலிலைத் தளிரில் துயில் கொண்டவனே! மூவுலகையும் உன் திருவடியில் இருந்து படைத்தவனே! உயர்ந்தவனே! ஒப்பற்றவனே! ஐயனே! சாந்தம் கொள். உன்னிடம் சில விபரங்களைச் சொல்லவே நான் இங்கு வந்தேன். மானிடப்பிறவிகளில் நீ உயர்ந்தவன். உன் உருவம் இங்கு மட்டுமல்ல, வானத்தைப் பிளந்து கொண்டு அவ்வுலகத்திலும் ஆக்கிரமித்துள்ளது. (வானவரும் வணங்கும் மனிதன் ராமன் என குறிப்பிடுகிறார்).
இந்த உலகமே உன்னுடையது. இந்த உலகம் உன் வயிற்றுக்குள் அடங்கியுள்ளது. நீ ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம் என்பதை மறந்து விட்டாயா? நிலையில்லாத உடலுடன் கூடிய பல உயிர்கள் உன் வயிற்றில் பிறந்து அங்கேயே இறக்கின்றன. உயிர்களைப் படைப்பது உன் வயிற்றிலுள்ள தாமரையில் அமர்ந்திருக்கும் என் பணி என்பதை நான் ஏற்க மாட்டேன். அது உன் சக்தியைக் கொண்டு என்னால் நிகழ்த்தப்படுகிறது. எனவே படைப்பின் காரணகர்த்தா நீ தானே ஒழிய நானில்லை, என்றவர் மேலும் தொடர்ந்தார். ஸ்ரீராமா! நினைவுக்கு வருகிறதா! புலத்தியன் என்ற முனிவனின் மகனான விச்சிரவசு என்பவன் பத்து தலைகளையுடைய ராவணன் என்ற அரக்க பிள்ளையைப் பெற்றான். அவன் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் நாராயணனாகிய உன்னை வேண்ட, அவனை அழிப்பதற்காக நீ பூலோகத்தில் மானிடனாய் பிறந்தாய். அவனை அழித்தும் விட்டாய். பூலோகத்திற்கு நீ வந்த பணி முடிந்து விட்டது. நாராயணா! நீ காலை உயர்த்தி மிதிக்க முயன்றாயே பூமி மாதா. இவள் யாரென்பது உனக்கு நினைவில்லையா? இவளும் உன்னால் படைக்கப்பட்டவள் தான். உன்னால், உருவாக்கப்பட்டவளை நீயே அழிக்க முயல்கிறாயே! நீ காக்கும் கடவுள் என்பதை நினைவில் கொள். உன்னால், உருவாக்கப்பட்ட இந்த பூமிக்குள், உனக்கு கட்டுப்பட்ட இந்த பூமிக்குள் தான் உன் காதலி சீதா தோன்றினாள். வந்த இடத்திற்கே சென்று விட்டாள். மானிடராக பூமியில் பிறப்பவர்கள் மண்ணிற்குள் செல்ல வேண்டும் என்பதும் நீ வகுத்த நியதி தானே! அதுவே அவளுக்கும் நிகழ்ந்தது. மண்ணில் ஒருமுறை மறைந்தவர்களை மீண்டும் மீட்க முடியாது என்பது உன்னால் இடப்பட்ட சட்டம். இனி அவளை நீ வைகுண்டத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
வில்லேந்திய ராமா! பூமியில் மானிடராய் பிறந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் பாசமும் பற்றும் வைப்பது இயற்கையே. தாய் மகன் மீதும், கணவன் மனைவி மீதும் வைக்கும் பற்றே இவ்வாறு கோபத்தை உண்டாக்குகிறது. பூமியில் பிறப்பவர்களை யார் மீதும் பற்று வைக்காதே, பாசம் வைக்காதே என்று தானே அறநூல்களும், மகான்களும் சொல்கிறார்கள். பற்றும் பாசமுமே கோபத்தை உண்டாக்குகின்றன. தன்னோடு நெருங்கி இருந்தவன் மறைந்து போனால், கடவுளே! இது உனக்கு அடுக்குமா என கேட்பது, உலக வாழ்க்கை நிலையானது என்று நினைக்கும் அஞ்ஞானவாதிகளுக்கு சரியானதாகத் தோன்றலாம். ஆனால், நீயே இறைவன், நீ மானிடனாய் பிறப்பெடுத்திருக்கிறாய். அவ்வளவே. உனக்கேது பற்றும், பாசமும். லட்சுமிபிராட்டியே சீதையாக இவ்வுலகில் பிறந்தாள். உனக்கு முன்னதாக வைகுண்டத்தை அடைந்து விட்டாள். அங்கு போய் அவளைச் சேர்ந்து கொள், என நினைவூட்டினார். ஐயனே! பூலோக வாழ்வு நிலையற்றது. வைகுண்டமே நிலையானது. அங்கு நன்மை மட்டுமே நிகழும். பூமியில் உன் பணி முடிந்தது. நீயும், மீண்டும் அங்கே எழுந்தருள வேண்டும், என்றார். பிரம்மனின் இந்த வார்த்தைகள் ராமனுக்கு முந்தைய நிலையை உணர்த்தின. அவர் கோபம் தணிந்தார். இந்நேரத்தில் லவகுசர் அங்கே வந்தனர். அவர்களுக்கு எல்லா உண்மையையும் வால்மீகி முனிவர் உணர்த்தியிருந்தார். தாங்கள் ஸ்ரீமன் ராமனின் பிள்ளைகள் என்பதை அறிந்த அவர்கள் பெருமை கொண்டனர். அதே நேரம், தாயின் இழப்பை அவர்களால் தாங்க முடியவில்லை. அழுதபடியே, தந்தையின் மார்பில் அடைக்கலமாயினர். ராமபிரான் அவர்களுக்கு புத்திமதி சொன்னார். என் அன்புச் செல்வங்களே! நாம் இந்த பூமியில் பிறந்தது ஏன் என்பதைச் சொல்கிறேன், கேளுங்கள். நான் தசரத சக்கரவர்த்தியின் மகனாகப் பிறந்தேன். சக்கரவர்த்தி திருமகன் என்ற பணக்கார அந்தஸ்து எனக்கு திருமணம் வரையே நிலைத்தது. திருமணத்திற்கு பிறகு, நான் காட்டிற்குச் சென்று விட்டேன். ஆடம்பர உடைகளும், அறுசுவை உணவும் உண்ட எனக்கு அங்கே கிடைத்தது மரப்பட்டைகளால் ஆன உடையும், கனி கிழங்கு வகைகளுமே! செலவம் மிக்க குடும்பத்தில் பிறந்தாலும், மனிதனுக்கு அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது முன்வினைப்பயனால் மட்டுமே நிகழும். ஒரு காலத்தில், என் தந்தை வேட்டைக்குச் சென்றார். அப்போது...

லவகுசா பகுதி-22
தன்னிலும் வேட்டையில் உயர்ந்தவர் யாருமில்லை என்ற கர்வம் என் தந்தையின் கண்ணை மறைத்தது. ஏனெனில், அவர் சப்தவேதனம் எனப்படும் வித்தையில் திறமை பெற்றிருந்தார். சப்தவேதனம் என்றால் மிருகங்கள் எழுப்பும் ஒலியைக் கொண்டு, அவை எங்கிருக்கின்றன என்பதை அறிந்து, அதைப் பார்க்காமலேயே பாணம் எய்து கொல்லும் வித்தையாகும். இந்த வித்தையைப் பயன்படுத்தி பல மிருகங்களை என் தந்தை ஒரே இடத்தில் நின்றபடி கொன்றார். இதை அவருடன் சென்ற வீரர்கள் போற்றினார்கள், புகழ்ந்தார்கள். புகழ்ச்சி மனிதனை அடிமைப்படுத்தும் கொடிய ஆயுதம். எவன் ஒருவன் புகழின் உச்சிக்கு செல்கிறானோ, அவனைத் தேடி அழிவு வந்து கொண்டிருக்கிறது எனப்பொருள். என் தந்தைக்கும் அந்தச் சூழ்நிலையே ஏற்பட்டது.சரயு நதிக்கரையிலுள்ள அடர்ந்த காட்டில் அவர் வேட்டையாடிக் கொண்டிருந்த அந்த சமயத்தில், ஓரிடத்தில் யானை தண்ணீர் குடிப்பது போன்ற சப்தம் கேட்டது. அப்போது இரவு நேரம். உங்கள் பாட்டனார், அந்த இடத்தை நோக்கி அம்பு வீசினார். ஐயோ செத்தேன் என்ற குரல், அம்பு பாய்ந்த இடத்தில் இருந்து கூக்குரலாக வெளிப்பட்டது. அவர் பதறிப்போனார். யாரோ ஒரு மானிடனை மிருகமென நினைத்து அம்பெய்தி விட்டோமோ என அலறியடித்து ஓடினார். நதிக்கரையில், தவக்கோலத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு கிடந்தான். அவன் புலம்பிக் கொண்டிருந்தான்.
ஐயோ! இந்த இரவு நேரத்தில் ஜனசஞ்சாரமே இருக்காது என எண்ணித்தானே இங்கு வந்தேன். எனக்கு இவ்வுலகத்தில் எதிரியே கிடையாதே. அப்படியிருந்தும், என் மீது அம்பு வீசியவன் யார்? அவனுக்கு நான் எந்த கேடும் விளைவித்தில்லையே! பழங்களையும், கிழங்குகளையும் மட்டுமே தின்று தவம் செய்யும் ரிஷியான எனக்கு இக்கதியா? என்னைக் கொல்வதால் அவனுக்கு ஏதும் பயன் ஏதும் உண்டா? இப்படிப்பட்ட செயலைச் செய்தவன் குரு பத்தினியை கெடுத்ததற்கு ஒப்பான பாவத்தையல்லவா அடைவான்? நான் இறப்பது பற்றி கவலைப்படவில்லை. உயிர்கள் என்றாவது ஒருநாள் இறப்பது உறுதியே. ஆனால், என் தாய் தந்தையர் என்ன செய்வர்? அவர்கள் மிகுந்த வயதானவர்கள் ஆயிற்றே. அவர்களுக்கு நான் ஒரே மகனாயிற்றே. அவர்களும் இனி உயிர் வாழமாட்டார்களே! ஒருவன் சற்றும் சிந்திக்காமல், ஒருவனைக் கொலை செய்தால், அவனது குடும்பமே அழிந்துவிடும் என்பதை சற்றாவது யோசித்தானா? என்னைக் கொன்றதன் மூலம், ஒரே பாணத்தில் எங்கள் மூவரையும் கொன்ற பாவத்தை அவன் பெற்றானே? என்னைக் கொன்றவன் நிச்சயமாக அவசரப்புத்தி படைத்தவனாகவும், மூடனாகவும் தான் இருப்பான் என்று புலம்பினான். இந்த புலம்பலைக் கேட்டு என் தந்தை உள்ளம் நொந்து போனார். தர்மப்பிரபுவான அவருக்கு இத்தகைய சோதனை, ஒரு விநாடி புகழ்ச்சிக்கு அடிமைப்பட்டதற்காக ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி, அவர் என் தாயைத் திருமணம் செய்வதற்கு முன்பே நிகழ்ந்து விட்டது.
என் தந்தையார் தன்னை யார் என்பதை அவரிடம் அறிமுகப்படுத்தி அந்த தபஸ்வியிடம் மன்னிப்பு கேட்டார். அந்த தபஸ்வியின் மர்ம ஸ்தானத்தில் அம்பு பாய்ந்திருந்தது. இதனால், அவர் பட்ட துன்பத்துக்கு அளவே இல்லை. அந்த இக்கட்டான நிலையிலும், அவர், தசரதா! உடனே என் தாய், தந்தையரிடம் செல். அவர்களிடம் என் மரணத்தகவலைச் சொல். அவர்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் முகரவே இங்கு வந்தேன். அவர்கள் தாகம் தாங்காமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். உன் மன்னிப்பை அவர்களிடம் கேள். இந்த ஒற்றையடிப்பாதையின் முடிவில் அவர் தங்கியிருக்கிறார். போகும் முன், நீ எய்த பாணத்தை பிடுங்கி எறிந்து விடு. அது எனக்கு தீராத வலியை தருகிறது என்றார். என் தந்தை அந்த பாணத்தை எடுக்கத் தயங்கினார். பிடுங்கினால் உயிர் போய் விடும் என்ற பயம். உருவாவிட்டாலோ வலி தாங்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார். ஒருவேளை உயிர் போனால், ஒரு பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி (கொலை பாவம்) ஏற்படுமோ என்ற தயக்கம். அப்போது அந்த தபஸ்வி, தசரதா! கவலைப்படாதே. உனக்கு பிரம்மஹத்தி ஏற்படாது. என் தாய் நான்காம் வர்ணத்தைச் சேர்ந்தவள். தந்தை வைசியர். என்னை பிராமணன் என நினைத்துக் கொள்ளாதே என சாகும் சமயத்திலும் நன்மையான வார்த்தைகளைச் சொன்னார். துன்பம் செய்தும் தனக்கு நன்மையையே நினைத்த அந்த இளைய தபஸ்வியைப் பற்றி அந்த இக்கட்டான நிலையிலும் பெருமைப்பட்ட என் தந்தை, பாணத்தை பிடுங்கினார். அந்த சமயமே அவரது உயிர் பிரிந்தது. பிறகு என் தந்தை, அவனது பெற்றோரை தேடிச்சென்றார். அவர்கள் அருகில் சென்றதும், பார்வையில்லாத அவர்கள், தங்கள் மகன் தான் வந்து விட்டான் என நினைத்து, குழந்தாய்! ஏன் இவ்வளவு நேரம்? நீ இவ்வளவு நேரம் வரவில்லையே என நினைத்து உன் தாய் எவ்வளவு கவலைப்பட்டாள் தெரியுமா? கண்ணில்லாத எங்களுக்கு நீ தானே ஒளியாக இருக்கிறாய்? சீக்கிரம் தண்ணீர் கொடு என்றனர். பயத்தில் இருந்த உங்கள் பாட்டனார் அவர்களின் பாதம் பணிந்து நடந்ததைச் சொன்னார். அறியாமல் செய்த தன் தவறை மன்னித்து கிருபை செய்ய வேண்டினார். அந்த தாயும் தந்தையும் நொறுங்கிப் போனார்கள். அடேய் தசரதா! இப்படி ஒரு கொடிய பாவத்தைச் செய்து விட்டு எங்களிடம் சொல்லாமல் நீ தப்பிப் போயிருந்தால், உன் தலை பத்தாயிரம் துண்டுகளாக வெடித்து சிதறியிருக்கும். ஆனால், அறியாமல் செய்த தவறு என என்னிடம் ஒப்புக்கொண்டதால் நீ இதுவரை பிழைத்திருக்கிறாய். நாங்கள் அவனது உடலைத் தொட்டுப் பார்க்க வேண்டும். எங்களை அங்கே அழைத்துப்போ என்றார். தசரத சக்கரவர்த்தியும் அவ்வாறே செய்ய அவர் தன் மகனைக் கட்டிக்கொண்டு சொன்ன வார்த்தைகள் இந்த லோகத்திற்கு மிகவும் தேவையானவை. இளைஞர்களான நீங்களும் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும், என்றார். லவகுசர் அதைக் கேட்க ஆர்வமாயினர்.

லவகுசா பகுதி-23
மகனே! எங்களுடன் பேசமாட்டாயா? உன் தாய் படும் வேதனை உனக்கு புரியவில்லையா? பின்னிரவு வேளையில் நீ வேதம் ஓதுவது என் காதுகளில் இப்போதும் இனிமையாக ஒலிக்கிறது. மகனே! இனி எங்களை அழைத்துப் போக யார் இருக்கிறார்கள்? உன்னைத் தவிர யாருடைய உதவி எங்களுக்கு கிடைக்கும்? அன்புச்செல்வமே! சற்றே பொறு. எமனுடைய ராஜ்யத்திற்கு உடனே போய் விடாதே. நாங்களும் உன்னோடு வருகிறோம். யமலோகத்தில், தர்மராஜாவைக் கண்டு, ஐயனே! எங்கள் மகனை எங்களுக்கு திருப்பிக்கொடு என கேட்பேன். அவன் தர்மத்தின் வடிவம். அனாதைகளான எங்களுக்கு நிச்சயம் உன்னை மீண்டும் தருவான். இதோ நிற்கும் தசரதனின் கையால் நீ இறந்தது இப்பிறவியிலோ, முற்பிறவியிலோ நீ செய்த பாவத்தால் அல்ல. எந்தப் பாவமும் செய்யாத அப்பாவிகளும், உலகிலுள்ள பாவிகளால் கொல்லப்படத்தான் செய்கிறார்கள். அதில் நீயும் ஒருவன். ஆக, பாவம் என்பது பூண்டோடு வேரறுக்கப்பட வேண்டும். பாவமில்லாத உலகில் தான் நல்லவர்களால் வாழ முடியும். நீ இந்த பாவபூமி பிடிக்காமல் போய் விட்டாயோ? மகனே! உனக்கு வீரர்கள் அடையும் உலகம் கிடைக்கும். இந்த உலகத்தில் மாவீரர்களான ஸகரன், தீலிபன் போன்றோர் வாழ்ந்தனர். அவர்கள் எந்த உத்தம லோகத்தை அடைந்தார்களோ அந்த லோகத்தை நீயும் அடைவாய். இவ்வுலகில் பிறந்து வேதம் படித்து, மந்திரங்களை உச்சரித்து, தெய்வமே துணையென வாழ்பவன் மரணமடைந்ததும் எந்த புண்ணிய லோகத்தை அடைவானோ, அந்த லோகத்திற்கு செல்வாய். தனது மனைவியிடம் மட்டும் அன்பு கொண்டு, ஏக பத்தினி விரதனாக வாழ்ந்து, மரணமடைபவன் எந்த லோகம் செல்வானோ அங்கே நீ செல்வாய்.
பசுக்களை தானம் செய்தவர்கள், யாகம் செய்பவர்கள், பெரியவர்களுக்கு பணிவிடை செய்கிறவர்கள், விரதங்களை சரியாகக் கடைபிடிப்பவர்கள், நல்லதொரு காரணத்துக்காக அக்னியில் விழுந்து உயிர் துறப்பவர்கள்,  கங்கையும், யமுனையும் சேருமிடத்தில் உயிர் விடுகிறவர்கள் ஆகியோர் எந்த லோகத்தை அடைவார்களோ அவ்விடத்தை அடைவாய். அதே நேரம், எங்களை புத்திர சோகத்துக்குள்ளாக்கி உன்னைக் கொன்றவன், வாழும் காலத்திலேயே கோர கதிக்கு ஆளாவான் எனச்சொல்லி புலம்பி, அவனுக்குரிய கிரியைகளைச் செய்தனர். அப்போது அந்த இளைஞன் பிரகாசமான ஒளியுடன் எழுந்தான். இந்திரன் புஷ்பக விமானத்துடன் அங்கு வந்து அவனை ஏற்றிக் கொண்டான். அந்த இளைஞன் தனது பெற்றோரிடம், உங்களுக்கு சேவை செய்ய கிடைத்த பாக்கியத்தால், இந்திரனே நேரில் வந்து என்னை தேவலோகத்துக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளான். அப்படிப்பட்ட வாய்ப்பைக் கொடுத்த உங்களுக்கு நன்றி எனக்கூறி புறப்பட்டான். பின்னர் அந்த முதியவர் என் தந்தையிடம், அரசனே! புத்திர சோகத்தால் நீ தவித்து மரணத்தை தழுவுவாய். அதேநேரம் நீ அறியாமல் பாவம் செய்தவன் என்பதால், உன்னை கொலைப்பாவம் அணுகாது எனச்சொல்லி, கட்டைகளை அடுக்கி அக்னி மூட்டி தன் மனைவியுடன் இறங்கினார். அவர்கள் சொர்க்கம் சென்றனர். அதன் காரணமாக அவர் என்னைப் பிரிய வேண்டியதாயிற்று. பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளையும் தொடரும். நான் காட்டிலே உங்கள் அன்னை சீதையைப் பிரிந்தேன். துயரத்தில் தவித்தேன். ராவணனிடம் இருந்து மீட்டபிறகு, அவள் இலங்கையிலே தீக்குளித்து தன் கற்புத்திறனை நிரூபித்தும் கூட, அயோத்தியில் சிலர் நம்பாததால், மீண்டும் பிரிந்தேன். என்னால் உங்கள் சிறிய தந்தை லட்சுமணனும் இல்லற சுகத்தை இழந்து என்னுடன் காட்டில் திரிந்தான். வாசலில் விடப்படும் பாதுகையை அரியாசனத்தில் ஏற்றினான் பரதன். சத்ருக்கனனும் அவனுக்கு துணையாகவே இருந்தான், என்றார்.
லவகுசர் தங்கள் தந்தைக்கு ஏற்பட்ட கதியைப் புரிந்து கொண்டனர். பின்னர் லவகுசரை அழைத்துக் கொண்டு ராமபிரான் யாகசாலைக்கு சென்றார். யாகம் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. பின்னர், தன் மகன்களுக்கும், தம்பிமார்களின் குழந்தைகளுக்கும் தனி நாடுகள் அமைத்துக் கொடுப்பது பற்றிய யோசனையில் ராமன் ஆழ்ந்தார். அப்போது, வாயிற்காவலன் வந்து நின்றான். மகாபிரபு! தங்களைக் காண ஒரு முனிவர் வந்திருக்கிறார். தாங்கள் அனுமதி அளித்தால்... என்றதும், அவரை உடனே உள்ளே வரச்சொல், என்றார் ராமன். அந்த முனிவரின் தேஜஸை சொல்லால் விளக்க முடியாது. உதட்டிலே ஏதோ ஒரு விஷமப்புன்னகை. ராமபிரான், அவரை வரவேற்று ஆசனத்தில் அமரச் சொன்னார். ராமா! ஆசனத்தில் அமர்வது இருக்கட்டும். நான் யார் என்பதை முதலில் தெரிந்து கொள், என்றதும், சுவாமி! வீடு தேடி வந்தவர்கள் பகைவரே ஆயினும் அவர்களை உபசரிப்பது தர்மங்களில் ஒன்று. தாங்கள் தர்மமே வடிவான முனிவர், என்று சொல்லும் போது, தர்மமே என்பதை சற்று அழுத்தி உச்சரித்தார். வந்த முனிவருக்கு சந்தேகம். தன்னை யாரென பரம்பொருளின் அவதாரமான ராமன் கண்டுபிடித்து விட்டாரோ என்று. இருப்பினும், அந்த உணர்வை முகத்தில் காட்டாமல், ராமா! நான் பிரம்மனால் உன்னிடம் அனுப்பப்பட்ட தூதன். நீயும் நானும் தனிமையில் பேச வேண்டியுள்ளது. இவ்விடத்தில் நமக்கு பணிசெய்ய ஒரு சேவகன் கூட இருக்கக்கூடாது. அறைக்கதவை மூடி விட வேண்டும். யாரேனும் உள்ளே வராமல் இருக்க வாசலில் தகுந்த காவலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படியானால் தான் நான் வந்த விஷயத்தைச் சொல்ல முடியும், என்றார். ராமபிரான் முனிவரின் கட்டளையை உடனே ஏற்றார். லட்சுமணனை அழைத்தார். லட்சுமணா! இந்த முனிவருடன் நான் முக்கிய ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. இந்த அறைக்குள் யாரையும் விடாதே. காவலைப் பலப்படுத்து. நீயே தலைமைக் காவலனாக இருந்து உள்ளே யாரும் வராமல் பார்த்துக் கொள், என்றார். அண்ணன் சொல் தட்டாத அந்த தம்பி என்ன ஏதென்று கேட்காமல், உடனே வாசலில் காவலுக்கு நின்றான். அப்போது அவனைத் தேடி வந்தது தீவினை.

லவகுசா பகுதி-24
அத்திரி முனிவர் என்ற புகழ் பெற்ற முனிவர் இருந்தார். இவரது மனைவி அனுசூயா. ரிஷிபத்தினியான இவளது கற்புத்திறனை சொல்லி மாளாது. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை குடித்த பிறகே தன் பணிகளைத் துவக்குபவள். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர், இவளது கற்புக்கு சோதனை வைத்த போது, அவர்களையே குழந்தைகளாக்கி, முப்பெரும் தேவியரையும் தாலிப்பிச்சை கேட்க வைத்த சக்தி வாய்ந்தவள். இத்தனைக்கும் அத்திரியின் திருவடிகளே காரணம். பெரும் தவவலிமை மிக்கவர். இவரது செல்வபுத்திரரே துர்வாசர். ரொம்பவும் கோபக்காரர். அவர் அரண்மனைக்குள் வந்தார். லட்சுமணன் வில்லுடன் வாசலில் காவலுக்கு நிற்பதைப் பார்த்தார். லட்சுமணா! நான் அத்திரி புத்திரன் துர்வாசன். நான் உன் சகோதரனிடம், முக்கியமான ஒரு விஷயம் பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. என்னை உள்ளே அனுமதி, என்றார். அண்ணனோ யாரையும் உள்ளே விடக்கூடாது எனச்சொல்லியிருக்கிறார். முனிவரோ கோபக்காரர். சபிக்கக்கூடியவர். என்ன செய்வதென லட்சுமணனுக்குப் புரியவில்லை. இருப்பினும் அவன் மிகுந்த பணிவுடன் அவரை வணங்கி, தவசிரேஷ்டரே! பொறுத்தருள வேண்டும். தாங்கள், என் சகோதரரிடம் சொல்ல வேண்டியதை என்னிடம் சொல்லுக. தாங்கள் சொல்வதை உடனே நிறைவேற்றி வைக்கிறேன். தற்போது அண்ணா, யாரையும் அனுமதிக்க வேண்டாம் என எனக்கு உத்தரவிட்டிருக்கிறார், என்றான்.
துர்வாசரோ ஆவேசப்பட்டார். ஏ லட்சுமணா! ராமனை இங்கே வரச்சொல். அப்படி சொல்ல மறுத்தால், உன் ரகுவம்சமே அழிந்து போகும்படி சாபம் கொடுத்து விடுவேன். இங்கே, ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள், என எச்சரித்தார். லட்சுமணனுக்கு தெரியும். துர்வாசர் சொன்னதைச் செய்பவர் என்று. மேலும், தவசீலர்களைக் காக்க வைப்பது சிரமம் என்பதையும் அவன் அறிவான். இதற்கிடையே உள்ள சென்ற முனிவர் ராமபிரானிடம் பேச ஆரம்பித்தார். ராமா! என்னை யாரென நீ உணர்ந்துவிட்டாய் என்றே நம்புகிறேன், என்றதும், ராமபிரான் ஏதுமறியாதவர் போல், இல்லை சுவாமி! தாங்கள் யார்? சொல்லுங்கள், என்றதும், வந்தவர் தன் நிஜ உருவத்திற்கு மாறினார். கதாயுதம் தாங்கி, பெரிய மீசையுடன், ஆஜானுபாகுவான தோற்றத்தில் திகழ்ந்த அவரை ராமபிரான் வணங்கினார். எமதர்மராஜாவா! தாங்கள் என் இருப்பிடம் தேடி வர நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தாங்களால் தான் உலகில் தர்மம் நிலைத்திருக்கிறது. தாங்கள் ஒருவர் இல்லாவிட்டால், இவ்வுலகில் எல்லாமே நிரந்தரம் என ஜீவன்கள் நினைக்கத் துவங்கி விடும். மனிதன் ஒரே ஒரு விஷயத்திற்கு தான் அஞ்சுகிறான். அது நிச்சயம் என்பதும் அவனுக்கு தெரியும். இருப்பினும், அஞ்ஞானத்தால் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறான். தங்கள் பூமி தர்மபூமி. தர்மத்தின் நாயகரே! என்ன விஷயமாக என்னைத் தேடி வந்தீர்கள்? என்றார். ராமா! பிரம்மன் என்னை அனுப்பி வைத்தார். நீ ஏதுமறியாதவன் போல் என்னிடம் பேசுகிறாய். நாராயணான நீ பாற்கடலில் இருந்து தாயார் லட்சுமியுடனும், ஆதிசேஷனுடனும், சங்கு, சக்கரத்துடனும் பூமிக்கு வந்தாய். அவற்றை உன் உறவுகளாக்கி, லட்சுமண, பரத, சத்ருக்கனர்களை உருவாக்கிக் கொண்டாய்.
தாயார் லட்சுமியே பூமாதேவியின் வயிற்றில் பிறந்து, ஜனக மகாராஜாவின் புத்திரியாக வளர்ந்து உன்னை அடைந்தாள். அநியாயத்தை அழிக்க பிறந்த நீ, ராவணனை வதம் செய்தாய். உன் பிறப்பின் நோக்கம் முடிந்து விட்டது. இந்த அவதாரத்தை முடித்து, வைகுண்டம் எழுந்தருள வேண்டும் என்பதை நினைவூட்டவே இங்கு வந்தேன். பிரம்மனே பூமியில் மானிடராய் பிறப்பவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கிறார். அவர்களில் சிலர் தெய்வப்பிறவிகளாகிறார்கள். அவர்களுக்கு மட்டுமே, மரணத்தை முன் கூட்டியே அறிவிக்கும் பொறுப்பு எனக்கு தரப்படுகிறது. ஸ்ரீராமசந்திரா! நீ லோகநாயகன். உன் காலம் முடிந்து விட்டதால், உன்னை அழைத்துச் செல்ல வந்துள்ளேன், என்றார் எமதர்மன். அந்நேரத்தில், லட்சுமணன் கதவைத் தட்டினான். இதனால் கோபமடைந்து தன்னை தன் சகோதரனோ, வந்திருக்கும் முனிவரோ அழித்தாலும் பரவாயில்லை என நினைத்துக் கொண்டான். என்றைக்கானாலும், இந்த உடல் அழியப்போவது தானே! நம் குலம் காக்க, இந்த உடல் போனால் போகட்டும் என்று நினைத்தே துணிந்து இதைச் செய்தான். கதவைத்தட்டுவது இன்னாரென புரிந்து விட்டதாலும், எமதர்மராஜனிடம் உரையாடல் நிறைவு பெறும் நிலைக்கு வந்துவிட்டதாலும், ராமபிரான் கதவைத் திறந்தார். அப்போது, எமதர்மன் தன்னை மீண்டும் முனிவர் வடிவத்திற்கு மாற்றிக் கொண்டார். அண்ணா! தங்களைக் காண துர்வாச முனிவர் எழுந்தருளியுள்ளார். தாங்கள் முக்கிய ஆலோசனையில் எடுப்பதை எடுத்துச் சொல்லியும், தங்களைக் காண அனுமதிக்கா விட்டால், நம் குலம் அழியும்படியான சாபத்தைக் கொடுத்து விடுவேன் என்கிறார். இந்நிலையிலேயே தங்களை அழைக்கும்படி ஆயிற்று, என்றான். லட்சுமணா! உள்ளே இருப்பது எமதர்மராஜா. கருமையான கொம்புகளையும், அனல் கக்கும் விழிகளையும் கொண்ட எருமைக்கடா வாகனன். அவரை அனுப்பி விட்டு வருகிறேன், என சொல்லி விட்டு, உள்ளே சென்றார். எமதர்மராஜனே! பிரமன் சொன்னபடியே வருகின்றேன். இப்போது, நீர் செல்லலாம், என்றான். எமதர்மராஜனும் மறைந்து விட்டார். பின்னர் துர்வாசரிடம் வந்த ராமபிரான், அவரை வணங்கி ஆசனத்தில் அமர்த்தி, தவமுனிவரே! தங்களைக் காக்க வைத்ததற்காக என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் வந்த காரணத்தை தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன், என்றார்.


லவகுசா பகுதி-25
பாதகமில்லை ராமா! நான் லட்சுமணனுடன் சொல்லி அனுப்பியவுடனேயே வந்து விட்டாய். உனக்கு நினைவில்லையா? நீ மூடிசூட்டிய நாளில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு வந்து ஒருநாள் உணவருந்தும் விரதத்தை மேற்கொண்டிருக்கிறேன். அந்தநாள் இந்நாள். அதற்காகவே வந்தேன், என்றதும், ராமன் சமையல்காரர்களை வரவழைத்து சுவையான உணவு சமைக்கச் சொன்னார். அந்தக்கணமே, பத்துலட்சம் தங்கப்பானைகள் அடுப்பில் இருந்தன. சுவையான உணவு சிறிது நேரத்தில் தயாரானது. துர்வாசர், உணவருந்தி, ராமனின் கையில் இருந்த கங்கை நீரை வாங்கி கைகழுவினார். பின்னர் சமையல்காரர்களின் தலைவனை அழைத்துப் பாராட்டினார். பின்னர் விடை பெற்றார். எமதர்மராஜாவுக்கு வாக்களித்து விட்டதால், வைகுண்டம் எழுந்தருள வேண்டிய அவசரத்தில் இருந்தார் ராமபிரான். இந்நிலையில், ராமனின் தாய் கவுசல்யா காலமானாள். ராமபிரான் வருந்தித்துடித்தார். என்னை விட்டுச் சென்றாயே தாயே என அழுதார். இதையடுத்து சுமித்திரையும், கைகேயியும் சில நாட்களில் காலமாயினர். தெய்வப்பிறவிகளைப் பெற்றெடுத்த இந்த தாய்மார்கள் தங்கள் ஆயுளை முடித்த பிறகு, தன்னுடன் வந்த லட்சுமணனை வைகுண்டம் அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் ராமன்.
அவன் போய் தானே, அங்கே அவரது படுக்கையாக வேண்டும். எவ்வுலகில் இருந்தாலும், அவரை விட்டு அசையாத கொடுப்பினை உள்ளவன் அல்லவா அவன். இருந்தாலும், பாசம் ராமனின் கண்களைக் குளமாக்கியது. மனிதனாகப் பிறந்து விட்டால், தெய்வம் கூட உணர்வுகளுக்கு ஆளாகி விடுகிறது! ராமபிரானும் இப்போது மனிதர் தானே! தம்பியை வைகுண்டம் அனுப்பப்போவதை எண்ணி அழுதார். அவனை வைகுண்டம் அனுப்பி விட்டு, லவகுசர் உள்ளிட்டோரை ராஜ்ய பரிபாலனத்தில் அமர்த்த ஏற்பாடு செய்தாக வேண்டுமே! லட்சுமணன்- ஊர்மிளா தம்பதிக்கு அங்கதன், சந்திரகேது என்ற மகன்கள் இருந்தனர். இவர்களுக்கு, ராமனின் உத்தரவுப்படி, சந்திரகாந்தம் என்ற நாட்டை உருவாக்கினான் பரதன். அதை இரண்டாகப் பிரித்து, சந்திரகாந்தத்தை சந்திரகேதுவிடமும், காரகாபதி என்னும் நகரை தலைநகராகக் கொண்ட பகுதிக்கு அங்கதனையும் அரசனாக்கினான் லட்சுமணன். பரதன்- ....தம்பதிக்கு புஷ்கரன், தக்கன் என்ற இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுக்கு காந்தாரம் என்ற தேசத்தை பகிர்ந்தளித்து மன்னர்களாக்க ராமன் ஏற்பாடு செய்தார். பரதனிடமே இப்பணி ஒப்படைக்கப்பட்டது. இதை பரதன் செய்து முடித்தான். சத்ருக்கன் ஏற்கனவே, லவணன் என்ற அரக்கனைக் கொன்று அவனது மதுபுரி நாட்டைக் கைப்பற்றி அங்கே ஆட்சியில் இருந்தான்.
இவ்வாறாக சின்னத்தம்பி சத்ருக்கனன், மற்ற தம்பிமார்களின் குழந்தைகளுக்குரிய கடமைகளை முடித்த பிறகு, லவகுசர்களைப் பற்றிச் சிந்தித்தார் ராமபிரான்.குடும்பத்தில் மூத்த சகோதரர்கள் இளைய சகோதரர்களின் உரிமைகளைப் பறிக்காமல், அவர்களுக்குரியதை சரிவர செய்து கொடுத்து விட்டால், அங்கே பிரச்னைகளுக்கே இடமிருக்காது என்பதை அந்த ராம சரிதத்தை வேறு எதனால் இவ்வளவு விளக்கமாக சொல்ல இயலும்! ராமச்சந்திர மூர்த்தியை இந்த நாடு அதனால் தானே அவ்வளவு எளிதில் மறக்க முடியாமல் இருக்கிறது! ஒரு இந்துவானாலும், முஸ்லிமானாலும், பார்சியானாலும் ராமபிரான் எல்லாருக்குமே வழிகாட்டியாகத் திகழ்கிறார், என்று காந்திஜி தெரியாமலா சொன்னார். மரணத்தருவாயில், அவரது வாயில் இருந்து ராம் ராம் என்ற வார்த்தைகள் தானே உதிர்ந்தன! எவ்வளவு உயர்ந்த பண்பு பாருங்கள். இக்காலத்தில், எந்தக் குடும்பத்திலாவது இப்படி ஒரு அனுசரணையான நிலையைப் பார்க்க முடிகிறதா! அரை அங்குல நிலத்திற்காக, நீதிமன்றங்களில் சகோதரரர்கள் கால் கடுக்க நிற்பதும், ராமன் பிறந்த இந்த தேசத்தில் என்று நினைக்கும்போது, தலை குனியத்தானே வேண்டியிருக்கிறது! ராமபிரான், லவகுசர்களை அயோத்தியின் மன்னர்களாக்க ஏற்பாடு செய்தார். முடிசூட்டு விழாவுக்கு முன்னதாக லட்சுமணனை அழைத்தார்.
தம்பி! எனச் சொல்லி அவனை அப்படியே அணைத்துக் கொண்டனர். எப்படி என் வாயாலேயே சொல்வேனடா? என்றதும், லட்சுமணன் கலகலவென சிரித்தான். அண்ணா! என்ன இது புதுப்பேச்சு! தங்களுக்காக நான், எங்களுக்காகவும், இந்த உலகத்திற்காகவும் நீங்கள். நீங்கள் இருந்தால் நாங்கள் உண்டு. நாங்கள் இல்லாமலும், நீங்கள் கணநேரம் கூட உயிர் தரிக்க மாட்டீர்கள். நாம் ஒருவரோடு ஒருவர் இணைந்தவர்களல்லவா! உடல்களைத் தவிர நம்மிடம் பகுத்துப் பார்ப்பதற்கென வேறு ஏதுமில்லையே! ஏதோ சொல்ல வருகிறீர்கள்? ஆனால், தயங்குகிறீர்கள்! மனம் திறந்து சொல்லுங்கள், என்றான். தம்பி! நீ வெளியே காவல் நின்ற போது ஒரு முனிவர் வந்தார். அவருடன் நான் தனிமையில் பேசியது உனக்குத் தெரிந்தது தானே என்றார். அதற்கென்ன அண்ணா? என கேள்விக்குறியுடன் அண்ணனின் முகத்தை ஆவலுடன் ஏறிட்ட தம்பியிடம், லட்சுமணா! என் அன்புச்செல்வமே! அவர் வேறு யாருமல்ல. எமதர்மராஜா. நம் பூலோக வாழ்வை முடித்து மேலுலுகம் வரச்சொன்னான். நம் அவதார காலம் முடிந்து விட்டது. ராவணனை வதைக்கவே இங்கு வந்தோம். வந்த வேலை சீதையால் முடிந்தது. அவள் தன் பணி முடித்து ஏற்கனவே சென்று விட்டாள்.
இந்த காரியத்துக்காகவே நம்மைப் பெற்றவர்களும் வைகுண்டத்தில் நமக்காக காத்திருக்கின்றனர். இப்போது, உன் சமயம் வந்துவிட்டது, என்றதும், லட்சுமணன் மேலும் நகைத்தான். அண்ணா! இதைச்சொல்லவா இவ்வளவு தயக்கம்! மரணத்தில் யார் முந்துகிறோம், யார் பிந்துகிறோம் என்பதெல்லாம் வெறும் மாயத்தோற்றமே! உயிர்கள் பிறக்கின்றன, இறக்கின்றன. இது உறுதியானது. இவ்வுலகில் இதைத்தவிர மற்றவை தான் உறுதியற்ற நிலையில் உள்ளன. செல்வம் வரும் போகும், ஆட்சி உங்களைத் தேடி வந்தது, திடீரென பறிக்கப்பட்டது, மீண்டும் வந்தது. இவையெல்லாம் உறுதியற்றவை. உலகில் பிறந்த எல்லா ஜீவன்களுக்கும் ஒரே உறுதி மரணம் மட்டுமே. அதை எனக்கு தாங்களே முன்வந்து தருவது இன்னும் நான் செய்த பாக்கியம். சத்தியத்திற்காகவே நம் தந்தை உயிர்விட்டார். அதைக்காக்கவே நம் தாய்மாரும் உயிர் விட்டார்கள், என்ற லட்சுமணன், நம் தாய் கைகேயி கூட சத்தியம் காக்கவே இவ்வாறு செய்தாள் தெரியுமா? என்றார். எல்லாம் அறிந்த ராமன், ஏதும் தெரியாதவர் போல், முருகனிடம் பிரணவ மந்திரத்தின் பொருள் அறியாதது போல் நடித்த சிவனைப் போல் நின்றார்.

லவகுசா பகுதி-26
அண்ணா! கைகேயி தாயை எல்லோரும் தவறாகப் பேசுகிறார்கள். நம் தந்தையார், அவளது தந்தை கேகயனுக்கு ஒரு சத்தியவாக்கு கொடுத்திருந்தார். கைகேயிக்கும், அவளது குழந்தைகளுக்கும் முக்கியத்துவம தருவதென! ஆனால், தங்களுக்கு முடிசூட்டுவதை அறிந்த அவள், உங்கள் மீது கொண்ட வெறுப்பாலோ, மந்தரையின் தூண்டுதலாலோ தன்னிலையை மாற்றிக் கொள்ளவில்லை. கேகயராஜன், சத்தியவேந்தனான தன் மருமகன் சொன்னது போல் செய்யவில்லையே என நினைத்துக் கொள்வானே என பயந்தே, தன் பர்த்தா சத்தியம் தவறாதவர் என்பதை வெளியுலகுக்கு காட்டவே அப்படி செய்தாள். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த முயற்சியில் நம் தந்தை மறைந்தார். விதி அங்கே விளையாடி விட்டது. அதுபோல், இப்போது என் விதியும் முடிகிறது. தங்களைக் காண நான் வைகுண்டத்தில் காத்திருப்பேன், என்றான். எனினும், ராமபிரான் மிகவும் துன்பப்பட்டார். இந்நேரத்தில் அவருக்கு வசிஷ்டரின் நினைவு வந்தது. அவரிடம், லட்சுமணனை மரணத்தில் இருந்து தடுக்க முடியாதா? எனக் கேட்டார். வசிஷ்டர் ராமனிடம், ராமா! விதி வலியது. ஒரு யாகம் செய்தால் உனக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவன் இறக்க நேர்ந்தால், மற்ற மூவரும் அவனோடு சேர்ந்து மடிவார்கள் என நான் உன் தந்தையிடம் முன்பே சொன்னதை உனக்கு நினைவுபடுத்துகிறேன். எனவே, லட்சுமணனுக்கு மட்டுமே மரணம் சம்பவிக்கிறது என நினைக்காதே. ராமா! நீயின்றி அயோத்தி இல்லை. அயோத்தியே இப்போது மரணத்தின் பிடியில் இருக்கிறது, என்றார்.
வசிஷ்டர் கூறியது கேட்ட லட்சுமணன், அண்ணா! நம் குரு வசிஷ்டரே சொன்னபிறகும் என்ன யோசனை? எனக்கு விடை கொடுங்கள், எனக்கூறி சிரித்த முகத்துடன் ராமனை வணங்கினான். அண்ணன் மரணமடையச் சொன்னாலும், அதை இன்முகத்துடன் ஏற்ற தம்பி நம் லட்சுமணன். இவனைப் போன்ற உயர்ந்த மனிதர்களையெல்லாம் இந்த பாரதம் பெற்றிருந்ததால் தான், இந்த கலியுகத்திலும், இந்த தேசத்தில் மட்டும் கலாச்சாரமும், பண்பாடும் இன்றும் நிலைத்து நிற்கிறது. அங்கிருந்து விடைபெற்று அயோத்தியின் எல்லைக்குச் சென்றான். சரயுநதி சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. அண்ணன் தன்னை மரணமடையச் சொல்லி கடைசிவரை உத்தரவிடவில்லை என்பதால், அந்த நதியில் மூழ்கி எழுந்து கரையோரத்தில் யோகத்தில் அமர்ந்தான். அப்போது, இந்திரன் தன் விமானத்தில் வந்தான். லட்சுமணனை ஏற்றிக்கொண்டு வைகுண்டம் ஏற்றிப் பறந்தான். இதையறிந்த ராமபிரான், மனம் கலங்கினார். என்னை விட்டு கணநேரமும் பிரியாதவனே! எப்படி உனக்கு என்னைப்பிரியும் மனம் வந்தது? என சொல்லி கண்ணீர் சிந்தினார். அவன் செய்த செயல்களைப் பற்றி அரற்றினார். அவனது பிரிவைத் தாளாமல் பரதனை அழைத்தார். பரதா! இந்த அரசாங்கம் எனக்கு வேண்டாம். லவகுசரிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்கும் மனநிலையில் நான் இல்லை. நம் தந்தையின் விருப்பப்படி நீயே மன்னனாக இரு. லட்சுமணனைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. அவன் போன இடத்துக்கே நான் போகின்றேன், என்றார்.
அண்ணா! என்ன சொன்னீர்கள்? எனக்கதறிய பரதன், இறந்தவன் கீழே விழுவது போல தடாலென விழுந்தான். அண்ணா! என்ன சொன்னீர்கள். கேவலம் இந்த ஆட்சியையா நான் விரும்பினேன்? தாங்கள் காட்டில் வசித்த காலத்திலேயே தங்கள் பாதுகைகளே இந்நாட்டின் ராஜாவாயின. அப்போதும் நான் பதவியை விரும்பவில்லை. இப்போது நீங்கள் கேட்பது, கைகேயி தங்களை காட்டிற்கு அனுப்பக் கேட்ட வரத்தை விட கொடுமையானது. நான் அம்மிக்கல். நீங்கள் மாமலை. நான் மின்மினிப்பூச்சி, நீங்கள் சூரியன். உங்கள் ஆண்மையும் தயாளமும் லவகுசரைத் தவிர வேறு யாருக்குமில்லை. அவர்களுக்கே தாங்கள் முடிசூட்டுங்கள். நானும் உங்களோடு வைகுண்டம் வருவேன், என்றான் கோவென கதறியபடி.பரதனை அப்படியே வாரியணைத்த ராமபிரான், அவனை உச்சி மோந்தார். தம்பி! நம்மில் ஒருவரை ஒருவர் யாராலும் பிரிக்க முடியாது. இருப்பினும், நம் சின்னத்தம்பி சத்ருக்கனன் இங்கே வாழட்டும். அவன் சிறுவன். என்ன பாவம் செய்தான்? வாழ வேண்டிய பருவம் அவனுக்கு, என்ற ராமன், சத்ருக்கனனுக்கு தானும், பரதனும் வைகுண்டம் செல்லப்போகும் செய்தியை ஒரு தூதனிடம் சொல்லியனுப்பினார். லவகுசர்களை வரவழைத்தார். அவர்களுக்கு காப்புநாண் அணிவித்தார். குசாபதி என்னும் நகரைத் தலைமையாகக் கொண்ட பகுதிக்கு குசனையும், சிராபதி என்ற நகரைத் தலைமையாகக் கொண்ட உத்தரகோசல நாட்டிற்கு லவனையும் அரசனாக்குவதாக அறிவித்தார். இருவருக்கும் பட்டம் சூட்டப்பட்டது. இதற்குள் சத்ருக்கனனினஜ் மதுகை நகருக்குச் சென்ற தூதுவன், ராமபிரானின் அறிவிப்பைச் சொல்லவே, அந்தக்கணமே தன் தேரில் ஏறி அயோத்தி வந்து சேர்ந்தான் சத்ருக்கனன்.
அண்ணா! நானின்றி தாங்கள் மட்டும் வைகுண்டம் செல்வதா? அண்ணா லட்சுமணர் ஏற்கனவே வைகுண்ட பிராப்தி அடைந்து விட்டாரா? நானின்றி நீங்கள் நிச்சயமாக வைகுண்டம் அடைய முடியாது, என கதறினான். தம்பி! நீ வந்துவிட்டால் மதுகை மக்கள் என்னாவார்கள்? நாடாளும் நீ யோசிக்க வேண்டாமா? என்றதும், அண்ணா! நான் என் மனைவி சுருதகீர்த்தியின் பொறுப்பில் என் மக்களான சுபாகுவையும், சத்துருக்காதியையும் விட்டு வந்தேன். சுபாகுவை மதுகையின் மன்னனாகவும், சத்துருக்காதியை விதிகையை தலைநகராகக் கொண்ட பகுதிக்கும் அரசனாக்கி விட்டேன். மொத்தத்தில், நம் பிள்ளைகளின் பொறுப்பில் இந்த தேசம் வந்துவிட்டது. நாம் மகிழ்வுடன் புறப்படுவோம், என்றான். ராம சகோதரர்கள் வைகுண்டம் செல்லப்போவதை எப்படித்தான் அறிந்தார்களோ தெரியவில்லை! இலங்கையில் இருந்து விபீஷணன் வந்து விட்டான். வாயு புத்திரன் அனுமானின் உள்ளம் ஏதோ காரணத்தால் கலங்கவே அவனும் அடுத்த கணமே அயோத்திக்கு வந்து சேர்ந்தான். கரடிகளின் அரசன் சாம்புவன், ராமேஸ்வரம் கடலில் சேதுபந்தனம் கட்டிய நளன், துமிந்தன், நீலன், மயிந்தன், தேவர்களின் அம்சமான வானர வீரர்கள், சுக்ரீவன்...எல்லாரும் வந்து சேர்ந்து விட்டனர். இவர்களில் சுக்ரீவன், ராமா! தாங்கள் இன்றி ஒரு கணமும் உயிர் தரியேன். என் மகன் அங்கதனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு வந்துவிட்டேன். புறப்படுவோமா வைகுண்டத்துக்கு, என்றான். அப்போது அயோத்தி மக்கள் கூட்டமாக வந்தனர்.
எங்கள் ஸ்ரீராமா! நாங்களும் தங்களோடு வைகுண்டம் வருவோம், என்று கோஷமிட்டனர். மரணத்தைச் சந்திக்க எப்படி ஒரு ஆர்வம் பாருங்கள். ஒரு நல்லவன் மரணமடைந்தால், அந்த நாடே மரணமடைகிறது. ராமனுக்காக உயிரையே கொடுத்தவர்கள் நம்மவர்கள். ராமபிரான் அந்த சோகமான நேரத்திலும் தன்னைச் சார்ந்தவர்கள் தன் மீது காட்டிய விசுவாசம் கண்டு பெருமிதமடைந்தார். அனுமானை அழைத்தார். நீ என்னோடு வர வேண்டாம். என்னிடம் ஏற்கனவே, வைகுண்டத்தை விட பூலோகத்தில் ராமநாமம் சொல்வதையே விரும்புவதாகச் சொல்லியிருக்கிறாய். சிரஞ்சிவீயே! நீ இங்கேயே தங்கியிரு. இது என் கட்டளை, என்றார். கண்ணீருடன் ஒப்புக்கொண்டார் அனுமான். பின்னர் மக்கள் புடைசூழ அனைவரும் சரயுநதியில் இறங்கினர். லவகுசர் கண்ணீர் வடித்தனர். பிரம்மா வானில் தோன்றி நாராயணனாய் உருமாறிய ராமனை வரவேற்றார். தன்னுடன் வந்தவர்களுக்கு தேவலோகத்தில் ஒரு நகரை நிர்மாணிக்க உத்தரவிட்டார் பகவான். சந்தானம் என்ற அந்த நகரில் அவர்கள் தங்கினர். ஸ்ரீமன் நாராயணன், புன்சிரிப்புடன் சீதையாய் வடிவெடுத்து தனக்காக காத்திருந்த லட்சுமி தாயாரை ஆலிங்கனம் செய்து அனைவருக்கும் அருள் செய்தார்.
—முற்றும்.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக