வெள்ளி, 25 நவம்பர், 2011

ஏழுமலையான் ( இரண்டாம் பாகம் )


ராதே கிருஷ்ணா 25 -11 -2011

ஏழுமலையான் ( இரண்டாம்  பாகம் )

ஏழுமலையான் பகுதி-15 



சீனிவாசன் அவளது பேச்சைக் கண்டுகொள்ளவே இல்லை. சற்றும் தயங்காமல் அவளை நெருங்கி காதல் மொழி பேசினார். சுந்தரியே! இனி என் சொப்பனத்தில் உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் இடம்பெற துணியமாட்டாள். மனதின் நினைவுகளே சொப்பனமாக வெளிப்படும். என் மனதின் ஆழத்திற்குள் சென்று விட்ட நீயே என் கண்களில் நிழலாடுவாய். உன்னிலும் உயர்ந்த அழகி இனி உலகில் பிறக்க முடியாது. நீயே எனக்கு மணவாட்டி. நான் அதை உறுதி செய்துவிட்டேன், என்றார். அவள் விலக விலக அவர் நெருங்கி நின்றே பதில் சொன்னார். அவரை விலக்குவதற்கு தோழிகள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவரிடமிருந்து தப்பிக்க நினைத்த பத்மாவதி தன் தோழிகளிடம் ஜாடை காட்ட, அதைப் புரிந்து கொண்ட அவர்கள் கற்களை எடுத்து சீனிவாசன் மீதும் அவர் வந்த குதிரையின் மீதும் வீசினர். அந்தக் குதிரை வலி தாங்காமல் தன் ஜீவனை விட்டது. சீனிவாசனின் நெற்றியிலிருந்தும், உடலில் இருந்தும் ரத்தம் கொட்டியது. அதனால் ஏற்பட்ட வலி அதிகமாக இருந்தாலும், காதலின் முன்னால் அதன் துன்பம் தெரியவில்லை. அதற்கு மேலும் அங்கு நிற்காமல் அவர் அங்கிருந்து வீட்டுக்குச் சென்று விட்டார். காயமடைந்து வீடு திரும்பிய மகனைக் கண்டு வகுளாதேவி கலங்கினாள். சீனிவாசா! இதென்ன கோலம்! ஏன் நடந்தே வருகிறாய்! குதிரையை எங்கே? வேட்டைக்கு  போன இடத்தில் விலங்குகள் அதனைக் கொன்று விட்டனவா! உனக்கும் விலங்குகளால் தீங்கு ஏற்பட்டதா? விலங்குகள் உன்னைத் தாக்கியிருந்தால் உடலில் சிராய்ப்புக் காயங்கள் இருக்க வேண்டுமே! இவை ஆழமாக ஏதோ குத்தியதால் ஏற்பட்ட காயங்களாக உள்ளதே! என்னாயிற்று, என்றாள்.
சீனிவாசன் நடந்ததைச் சொன்னார். அம்மா! மன்னர் ஆகாசராஜரின் மகள் பத்மாவதியைக் காட்டில் சந்தித்தேன். அவளை பார்த்தவுடனேயே பூர்வஜென்ம நினைவு எனக்குள் வந்தது. ராமாவதாரம் எடுத்த போது, நான் சீதையுடன் காட்டுக்குச் சென்றேன். ராவண வதத்துக்காக, சீதையைப் போலவே மற்றொரு மாயசீதையைஉருவாக்கினார் அக்கினி பகவான். நிஜ சீதையை தன் மனைவி ஸ்வாகாதேவியின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு, மாய சீதையான வேதவதியை ராவணன் கடத்திப் போகுமாறு செய்தார். ராவண வதம் முடிந்ததும் அவர் அவளை என்னிடம் அழைத்து வந்து, அவளைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். நான் அந்த அவதாரத்தில் ஏகபத்தினி விரதம் ஏற்றிருந்ததால் அவளை சீனிவாசனாக அவதாரம் செய்யும் காலத்தில் மணப்பதாக உறுதி கொடுத்தேன். அந்த மாய சீதையே இப்போது பத்மாவதியாக வந்திருக்கிறாள். அவளை மணப்பதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றியாக வேண்டும், என்றார். வகுளாதேவி அவரிடம், மகனே! அவ்வாறே இருந்தாலும் கூட, மன்னன் மகளாகப் பிறந்து விட்ட அவளை நீ எப்படி சொந்தமாக்கிக் கொள்ள முடியும். ஏணியில் ஏறி வானத்தின் உச்சியைத் தொட நினைப்பது போல் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறாயே! ஏழையான உன்னை ஆகாசராஜன் மனைவியாக ஏற்கவும் மாட்டான், பத்மாவதி ஒதுக்கத்தான் செய்வாள், என்று சொல்லி, அந்தக் காதலை மறந்து விடும்படி புத்திமதியும் சொன்னாள். இதனிடையே அரண்மனை திரும்பிய பத்மாவதியின் மனம் ஏனோ நிலையில்லாமல் தவித்தது. பாவம், அந்த இளைஞன்! அவன் அப்படியென்ன தவறு செய்துவிட்டான்! தன் காதலை என்னிடம் வெளிப்படுத்தினான், வேடனாயினும் அவன் அழகன். என் மனம் அவனிடம் சென்றுவிட்டது போல் தோன்றுகிறது. விலங்குகளை வேட்டையாட வந்தானா! அல்லது என் உள்ளத்தை வேட்டையாடிச் சென்றானா! அவனைச் சுற்றியே மனம் ஓடுகிறதே! அவனது குதிரையைக் கொன்று, அவனையும் கல்லால் அடித்தேன்! ரத்தம் சொட்டச் சொட்ட அவன் இல்லத்துக்குச் சென்றான். ஐயோ! வலிதாங்காமல் அழுவானோ! அவனது குடும்பத்தினர் என்னை நிந்திப்பார்களே! ஏன் என் மனம் அவனைச் சுற்றுகிறது! நிச்சயமாக, நான் அவனது காதல் வலையில் சிக்கிவிட்டேன் என்றே கருதுகிறேன், என்றவள் மனதுக்குள் அவனை நினைத்தபடியே குமைந்தாள்.
அவளுக்கு தூக்கம் போனது. உணவுண்ண மனமில்லை. கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அப்பாவிடமும், அம்மாவிடமும் காதலைச் சொல்ல பயம்! போயும் போயும் ஒரு வேடனைக் காதலிக்கிறேன் என்றா சொல்கிறாய், என்று பெற்றவர்கள் திட்டுவார்களே! இளைஞனே! நீ என் மனதைக் கொள்ளையடித்துப் போய் விட்டாயே! நீ எங்கிருக்கிறாயோ! உன் நினைவு என்னை வாட்டுகிறதே, என ஏக்கத்துடன் புலம்பினாள். அவளது உடல் மெலிந்தது. உணவு, உறக்கமின்றி தவித்த மகளைக் கண்டு பெற்றோர் கலங்கினர். அரண்மனை வைத்தி யர்கள் பத்மாவதியை சோதித்தனர். பல மருந்துகளும் கொடுத்தாயிற்று. ஆனால், பத்மாவதி எழவில்லை. காட்டில் காத்து கருப்பைக் கண்டு பயந்திருப்பாளோ! உடனடியாக மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் செய்த முயற்சிகளும் வீணாயின. தாய் தரணீதேவி மகளின் நிலை கண்டு கண்ணீர் வடித்தாள்.  எல்லா கோயில்களிலும் மகள் குணமாக வேண்டி சிறப்பு பூஜை செய்தாள். ஊஹூம்...பத்மாவதி எழவே இல்லை.உலகிலேயே தீர்க்க முடியாத வியாதி ஒன்று இருக்கிறதென்றால் அது காதல் வியாதி தான். பொல்லாத அந்த வியாதியின் பிடியில் சிக்கிய யார் தான் மீள முடியும்?இதே நிலை தான் வராக வனத்தில் தங்கியிருந்த சீனிவாசனுக்கும் ஏற்பட்டது.அவரும் படுக்கையில் புரண்டார்.தவறு செய்து விட்டோமே! வேடனின் வேடத்தில் சென்றால் எந்தப் பெண் தான் விரும்புவாள்! நாம் நம் சுயரூபத்தில் சென்றிருந்தால், அவள் நம்மை விரும்பியிருக்கக் கூடும். உம்... தப்பு செய்து விட்டோமே,  என புலம்பினார். மகனின் நிலை கண்ட தாய், சீனிவாசா! கவலைப்படாதே, நான் ஆகாசராஜனிடம் செல்கிறேன். பத்மாவதியை பெண் கேட்கிறேன். இருவருக்கும் நிச்சயம் திருமணமாகும். அமைதியாக இரு, என்று சொல்லி அரண்மனை நோக்கி புறப்பட்டாள்.



ஏழுமலையான் பகுதி-16



தாய் பெண் கேட்டுச் சென்றாலும் மனம் பொறுக்காத சீனிவாசன், பத்மாவதியை அப்போதே பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும், அவளிடம் திருமண உந்துதலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் குறி சொல்லும் குறத்தியின் வேடமிட்டார். சிவப்பு நிற புடவையைக் கட்டிக் கொண்டார். கைகளில் பச்சை குத்திக் கொண்டார். கண்களில் மை தீட்டியாயிற்று. நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. இடுப்பில் ஒரு கூடை, கையில் மந்திரக்கோல் ஏந்தி புறப்பட்டார். பெருமாள் கோயில்களில் மோகினி அலங்காரத்தை நாம் விழாக்காலங்களில் பார்ப்போம். அவர் அலங்கார பிரியர். கண்ணபுரத்திலே அவர் சவுரி முடியணிந்து சவுரிராஜராக காட்சியளிக்கிறார். இப்போது, குறத்தி வேஷம் போட ஆசை வந்து விட்டது. அந்த மாயவன்(ள்) கிளம்பி விட்டான்(ள்). அந்தக் குறத்தி குறி பார்க்கலையோ குறி என்று கூவிக்கொண்டே நாராயணபுரத்தின் வீதிகளில் திரிந்தாள். அரண்மனை உப்பரிகையில் மகளின் நிலை குறித்து கவலையோடு நின்று கொண்டிருந்த ஆகாசராஜனின் மனைவி தரணீதேவியின் கண்களில் அவள் பட்டாள். மகளின் இந்த நிலைக்கு என்ன காரணம் என குறி சொல்பவள் மூலம் தெரிந்து கொள்வோமே என்று அவளை அழைத்து வரச்சொல்லி ஏவலர்களிடம் சொன்னாள். எவ்வளவு செல்வம் இருந்தென்ன பயன்! அரண்மனையில் வாசம் செய்வதால் என்ன பயன்! மனதுக்கு நிம்மதி வேண்டும், குறிப்பாக, குழந்தைகள் குறித்த விஷயத்தில் பல பெற்றவர்கள் தங்கள் நிம்மதியை இழந்து விடுகிறார்கள். தரணீ தேவிக்கும் இப்போதைய நிலை இதுதான்! நாம் நம் பிள்ளைகள் சரியாகப் படிக்கா விட்டாலோ, படித்த பின் நல்ல வேலை கிடைக்காவிட்டாலோ ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு ஜோசியரிடம் ஓடுவதில்லையா! அதே போல, தரணீதேவி மகளின் நிலையறிய குறி சொல்பவளைக் கூப்பிட்டாள்.
குறி சொல்லும் வேடத்தில் வந்த சீனிவாசன். ராணிக்கு வணக்கம் செலுத்தினார். பெண்ணே! என் மகள் படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். என்ன நோய் என்றே புரியவில்லை. இதற்கு காரணம் என்ன? இவளது எதிர்காலம் பற்றி சொல்லு, என்றாள். மகாராணியிடம் குறி சொல்பவள், அம்மா! உள்ளதை உள்ளபடி சொல்கிறேன், கேளுங்கள், என்று கணபதி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, குமாரசுவாமியாகிய முருகக்கடவுள், சரஸ்வதி, லட்சுமி, கனகதுர்க்கா, வீரபத்திரர், அஷ்டதிக் பாலகர்கள், வனதேவதைகளைக் குறித்து வணங்கிப் பாடி, இவர்கள் மீது ஆணையாக நான் சொல்வதெல்லாம் உண்மை எனச்சொல்லி விஷயத்துக்கு வந்தாள். பத்மாவதியை அழைத்த அவள், இளவரசி! நீங்கள் உங்கள் மனதில் கொண்டுள்ள எண்ணம் எனக்கு விளங்கி விட்டது. சில நாட்களுக்கு முன்பு, காட்டில் நீங்கள் நீலமேகவண்ணன் ஒருவனைப் பார்த்திருக்கிறீர்கள். அவன் தன் மனதை உங்களிடம் கொடுத்து விட்டு, உங்கள் மனதைப் பறித்துக் கொண்டு போய்விட்டான். அவன் நினைவு இப்போது வாட்டுகிறது. அவனே உங்கள் மணாளனாக வேண்டும் என்பதே உங்கள் எண்ணம். உங்கள் கையில் தான் கல்யாண ரேகை ஓடுகிறதே! பிறகு, யார் அதை தடுக்க முடியும்! எத்தனை கோடி தேவர்கள் தடுத்தாலும், உங்களுக்கும், வேடனாக வந்தானே! அந்த வாலிபனுக்கும் திருமணம் நடந்தே தீரும். இதற்காக மனம் வருந்த வேண்டாம். நான் சொன்ன வாலிபன் இவன்தானா என பாருங்கள்,என்றவள், தன் மந்திரக்கோலை கூடைக்குள் ஒரு சுழற்று சுழற்றினாள்.கூடைக்குள் பத்மாவதியும், தரணீதேவியும் பார்த்தனர்.காட்டுக்குள் வேடனாக வந்த சீனிவாசனின் அழகு முகம் தெரிந்தது. அவன் இவர்களைப் பார்த்து சிரித்தான். அந்த மந்திரச்சிரிப்பில் சொக்கிப் போனாள் பத்மாவதி. விஷயம் அம்மாவுக்கு தெரிந்து விட்டதே என்று பயம் ஒரு புறம்! வெட்கம் ஒருபுறம் பிடுங்கித்தின்ன தனது அறைக்குள் ஓடிவிட்டாள்.
பின்னர் குறத்தி ராணியிடம், அம்மா! இந்த வாலிபனே உங்கள் மகளுக்கு மணாளாவான். இதைத் தடுக்க தங்களாலும், ஆகாசராஜ மகாராஜாவாலும் எக்காரணம் கொண்டும் முடியாது. தாங்கள் பரிசு கொடுங்கள். நான் புறப்படுகிறேன், என்றாள். அவளுக்கு பொன்னாபரணங்கள் பல கொடுத்து அனுப்பிய தரணீ தேவியைக் கவலை குடைய ஆரம்பித்து விட்டது. மகளிடம் இதுபற்றி கேட்டு கண்டித்தாள். தாயே! குறத்தி சொன்னது முற்றிலும் உண்மை. வாழ்ந்தால் அந்த அழகிய இளைஞனுடன் தான் வாழ்வேன். சூரியனும் சந்திரரின் பாதையில் கூட மாற்றம் ஏற்படலாம். ஆனால், அவரை மணப்பதென்ற என் நிலைப்பாட்டில் எந்த மாறுதலுமில்லை. அவர் யாரென விசாரித்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள், என்றாள். ஒரு வேடனுக்கு தன் மகளைக் கொடுப்பதாவது! பரம ஏழையான அவன் தன் மகளைத் திருமணம் செய்தால் நம்மை யாராவது மதிப்பார்களா! பத்மாவதிக்கு திருமணம் என அறிவித்து விட்டால், எல்லா தேசத்து இளவரசர்களும் ஓடி வந்து விடுவார்களே! அவர்களில் உயர்ந்த ஒருவனைத் தேர்ந்தெடுக் காமல் இவனுக்குப் பெண்ணைக் கொடுப்பதாவது! அவள் குழப்பத் துடன் கணவரின் அறைக்குச் சென்றாள். தங்கள் மகள் ஒரு வேடனைக் காதலிக்கிறாள் என்ற விஷயத்தை அவனது காதிலும் போட்டாள். ஆகாசராஜன் சிரித்தான். தரணீ! உனக்கென்ன பைத்தியமா! நம் செல்வமகளை சாதாரணமான ஒருவனால் எப்படி திருமணம் செய்ய இயலும்? அன்றொரு நாள், நாரதமகரிஷி நம் அரண்மனைக்கு வந்தார். அந்த ஸ்ரீமன் நாராயணனே அவளை  திருமணம் செய்வார் என்றல்லவா வாழ்த்திச் சென்றார். நாரதமகரிஷியின் வாக்கு எப்படி பொய்யாகும். நீ மனதை அலட்டாதே. நம் மகளுக்கு வந்திருப்பது பருவகால நோய் என்பது அறிந்த ஒன்று தானே! நாமும் அந்த வயதைக் கடந்து தானே வந்துள்ளோம், என்றான்.


ஏழுமலையான் பகுதி-17


இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது காவலன் வந்து நின்றான். அரசே! தங்களைக் காண ஒரு அம்மையார் வந்திருக்கிறார். அவரது முகத்தில் நிறைந்த தேஜஸ் காணப்படுகிறது. கானகத்தில் வசிப்பவர் என்று அனுமானிக்கிறேன். துறவியும் இல்லத்தரசியும் கலந்த நிலையிலுள்ளவர். அவரை அனுப்பி வைக்கட்டுமா? என்றான். வரச்சொல், என்று ஆகாசராஜன் உத்தரவிட்டதும், தரணீதேவியும் அவனுடன் சென்று யார் வந்திருக்கிறார்கள் என பார்க்கச் சென்றாள்.சேஷாசல மலையில் இருந்து கிளம்பிய சீனிவாசனின் தாய் வகுளாதேவி தான் அவள். அந்த மாதரசியை மன்னரும் ராணியும் வரவேற்றனர். அவரை ஆசனத்தில் அமர்த்தி உபசரித்து, தாயே, தாங்கள் யார்! இந்தச் சிறியேனைக் காண வந்த நோக்கம் என்ன? தங்களைப் பார்த்தால் பெரிய தபஸ்வி போல் தெரிகிறது. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்றான். மலர்ந்த முகத்துடனும், புன்சிரிப்புடனும் ஆகாசராஜனையும், தரணீதேவியையும் வாழ்த்திய அந்த நடுத்தர வயது பெண்மணி, ஆகாசராஜா! நான் பெண் கேட்டு வந்துள்ளேன்! என்றாள். பெண்ணா! யாருக்கு யார் பெண்ணைக் கேட்டு வந்துள்ளீர்கள்? என்ற ஆகாசராஜனிடம், மகனே! என் மகன் சீனிவாசன். அவன் உன் மகளைக் காதலிக்கிறான். உன் மகள் நினைவாகவே இருக்கிறான். சகல வசதிகளும் பொருந்திய அவனை விட்டு செல்வம் தற்காலிகமாக விலகியிருக்கிறது. தரித்திரனாயினும் மிகுந்த தேஜஸ் உடையவன். இன்னொரு முக்கிய விஷயம்! அவன் ஸ்ரீமன் நாராயணனின் அம்சம், என்றாள். தங்களுக்கு வரப்போகும் மருமகன் அந்த ஸ்ரீமன் நாராயணனே என நாரதர் மூலமாக வாக்கு கேட்டிருந்ததும், குறத்தி சொன்ன குறியும். இப்போது இந்த அம்மையார் கேட்டதும் சரியாக இருக்கவே, ஆகாசராஜன் தம்பதியர் மகிழ்ந்தனர். தன் மகன் தரித்திரன் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது அவர்களுக்கு இன்னும் பிடித்திருந் தது. இருப்பினும், பெண்ணைக் கட்டிக் கொடுப்பவர்கள் யாரோ ஒருத்தி வந்து கேட்க மாப்பிள்ளையை பற்றி விசாரிக்காமல் கொடுத்து விடுவார்களா என்ன!
ஆகாசராஜன் அந்த அம்மையாரிடம், அம்மையே! நாங்கள் பெண்ணைப் பெற்றவர்கள். எங்கள் குல குருவிடம் ஆலோசனை கேட்டு அதன் பிறகு தங்களுக்கு முடிவைச் சொல்கிறோம், என்றான். அவ்வாறே ஆகட்டும். அவசரமில்லை, நீங்கள் பெண்ணைப் பெற்றவர்கள். கலந்தாலோசித்து செய்யுங்கள். ஆனால், உங்கள் பெண் ஸ்ரீமன் நாராயணனுடன் வாழப்போகிறாள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், என்ற வகுளாதேவி அவர்களிடம் விடைபெற்றாள்.வாசல் வரை வந்து அவளை வழியனுப்பிய ஆகாசராஜன்  தம்பதியர், தங்கள் குலகுருவாகிய சுகயோகியை ஆலோசனை செய்ய முடிவெடுத்தனர். ஆகாசராஜன் தன் தம்பியான தொண்டைமானிடம், சுகயோகியை அழைத்து வரும்படி சொன்னான். அவனும் ஆஸ்ரமம் சென்று தக்க மரியாதைகளுடன் அவரை அழைத்து வந்தான். அவருக்கு பாதபூஜை செய்த ஆகாசராஜன், தவசீலரே! எங்கள் குலத்தின் விடிவிளக்கே! ஆதிவராக ÷க்ஷத்திரத்தில் சீனிவாசன் என்ற இளைஞன் வசிக்கிறான். அவன் வகுளாதேவி என்ற தாயின் பராமரிப்பில் இருக்கிறான். அவனுக்கு தன் மகளை மணமுடித்துக் கொடுக்கும்படி அந்தத் தாய்என்னிடம் வந்து கேட்டாள். பத்மாவதியும் அந்த இளைஞனையே மணம் முடிப்பேன் என அடம் பிடிக்கிறாள். அவனோ வேடன், பரம தரித்திரன், என்பதால் அவனுக்கு ராஜகுமாரியை கட்டி வைக்க என் மனம் அஞ்சுகிறது. அரண்மனையில் திளைத்த  அரசிளங்குமரி, எப்படி அவனுடன் எளிய வாழ்வு வாழ முடியும்? அவனிடமிருந்த செல்வமெல்லாம் தற்காலிகமாக மட்டுமே விலகியிருப்பதாக அவனது தாய் சொல்கிறாள். தாங்கள் ஞான திருஷ்டியால் ஆராய்ந்து, என் மகளை அவனுக்கு மணம் முடித்து வைக்கலாமா என்பது பற்றி சொல்லுங்கள், என்றான். சுகயோகி ஆழ்ந்த ஆலோசனையில் ஆழ்ந்தார். சற்றுநேரத்தில் அவரது முகம் மலர்ந்தது.
ஆகாசராஜா! நீ கொடுத்து வைத்தவன், ஸ்ரீமன் நாராயணனுக்கு நீ மாமனாராகப் போகிறாய்! சீனிவாசன் அவரது அம்சம் என்பது நிஜமே. உன் மகள் பத்மாவதி நிறைந்த புண்ணியம் செய்தவள் என்பதாலேயே இது நிகழ்கிறது. அவளை சீனீவாசனுக்கு மணம் முடித்து வை. இதனால், உனக்கு ஜென்மசாபல்யமாகிய பிறப்பற்ற நிலையும் ஏற்பட்டு, அந்த நாராயணனுடன் கலந்து விடுவாய். நிச்சயதார்த்தத்துக்கு உடனடியாக நாள் குறித்து விடு, என்றார். குருவின் அனுமதியே கிடைத்து விட்டதால் மகிழ்ச்சியடைந்த ஆகாச ராஜன் தம்பதியர் சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடத்த முடிவெடுத்தனர். சுவாமி! அப்படியானால், தாங்களே நிச்சயதார்த்தம் மற்றும் முகூர்த்த நாட்களைக் குறிக்கும் ஏற்பாடுகளைச் செய்து விடுங்கள், என்றான் ஆகாசராஜன்.நாராயணனின் திருமணத்துக்கு தேவர்களின் குருவான பிரகஸ்பதியை வரவழைத்து நாள் குறித்தால் நல்லதென சுகயோகி கருதினார். பிரகஸ்பதியுடன் தேவாதி தேவர் களையும் வரவழைக்க முடிவெடுக்கப்பட்டது. பிரகஸ்பதியும் பூமிக்கு வந்தார். ஸ்ரீமன் நாராயணனின் திருமண நாளைக் குறிப்பதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ என்ற பிரகஸ்பதி பஞ்சாங்கத்தை தீவிரமாக ஆராய்ந்தார். வைகாசிமாதம், வெள்ளிக்கிழமை, வளர்பிறை தசமி திதியில் முகூர்த்த தேதி நிர்ணயிக்கப் பட்டது. அந்த முகூர்த்த பத்திரிகை சீனிவாசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் எழுதபட்டிருந்த வாசகம் இதுதான். ஸ்ரீஸ்ரீ சேஷாஸலவாசியான ஸ்ரீ ஸ்ரீனீவாஸனுக்கு ஆகாசராஜன் எழுதிய சுபமுகூர்த்த பத்திரிகை என்னவென்றால், பரமபுருஷனே! தங்கள் விஷயமெல்லாம் (பத்மாவதியுடனான காதல்) பெரியோர் சொல்ல சந்தோஷமடைந்தேன். ஆகையால், தங்களுக்கு என் மகள் சௌபாக்கியவதி பத்மாவதியை திருமணம் செய்து கொடுக்க ஸங்கல்பித்துள்ளேன் (உறுதியெடுத்தல்) தாங்கள் தங்கள் பந்து மித்திர ஸபரிவார ஸமேதமாக விஜயம் செய்து நான் அளிக்கும் கன்யா தானத்தை ஏற்றுக்கொள்ளும்படியாக வேண்டிக்கொள்கிறேன், இந்த முகூர்த்த பட்டோலையை சுகயோகியே, சீனிவாசனிடம் நேரில் சென்று கொடுக்கச் சென்றார்.


ஏழுமலையான் பகுதி-18



சுகமகரிஷி சேஷாசலத்தை அடைந்து சீனிவாசனைச் சந்தித்தார். சீனிவாசன் அவரைத் தக்கமரியாதையுடன் வரவேற்று அமரச் சொன்னார். சீனிவாசனிடம் அவர் முகூர்த்த பட்டோலையை வழங்கினார். அதைப் படித்ததும் சீனிவாசனுக்கு ஏற்பட்ட ஆனந்தத்தின் எல்லைக்கு அளவே இல்லாமல் போனது. நல்லசேதி கொண்டு வந்த சுகமகரிஷியை அவர் வாழ்த்தினார். பின்னர் ஒரு ஓலையில் ஆகாசராஜனுக்கு பதில் எழுதினார். ஸ்ரீ ஸ்ரீமன் மண்டலேச்வர ராஜாதிராஜன ராஜசேகரனான ஆகாசராஜன் அவர்களே! உங்கள் பத்மபாதங்களின் சன்னதிக்கு சேஷாசலத்தில் வசிக்கும் ஸ்ரீமன் நாராயணனாகிய சீனிவாசன் மிக்க நன்றி தெரிவித்து எழுதும் கடிதம் இது. மகாராஜாவே! தாங்கள் தயைகூர்ந்து அனுப்பிய முகூர்த்த பத்திரிகை கிடைத்தது. அதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தாங்கள் குறித்துள்ள லக்கின நாளுக்கேற்றவாறு, என் குடும்பபரிவார சமேதனாக வந்து தாங்கள் அளிக்கும் கன்யா தானத்தை சாஸ்திரப் பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்... இவ்வாறு எழுதிய கடிதத்துடன், சுகமகரிஷி மீண்டும் நாராயணபுரத்தை அடைந்து ஆகாசராஜனிடம் ஒப்படைத்தார். ஆகாசராஜனுக்கு இந்த பணிவான பதில் பார்த்து மிக்க மகிழ்ச்சி. ஸ்ரீமன் நாராயணன், தனக்கு தகுந்த மரியாதை அடைமொழிகள் கொடுத்து அனுப்பிய கடிதமல்லவா! அந்தப் பணிவான வார்த்தைகளை அவன் மிகவும் ரசித்துப் படித்தான். இவ்வாறாக, இருதரப்பும் திருமண நிச்சயம் செய்ததும் நினைத்தவனே கணவனாகப் போகிறான் என பத்மாவதி மகிழ்ந்தாள். இந்நிலையில், சீனிவாசனுக்கு மனக்குழப்பம். திருமணம் நிச்சயித்தாயிற்று. மணமகளோ ராஜா வீட்டுப் பெண், இளவரசி. அவளை அவளது இல்லத்தில் செல்வச் செழிப்புடன் வளர்த்திருப் பார்கள்.
நம்மிடமோ காசு பணம் இல்லை. திருமணத்தை நல்லமுறையில் நடத்த வேண்டுமென்றால் பணம் வேண்டுமே! இங்கிருந்து கிளம்பும்போது, மணமகளுக்குரிய பட்டுப்புடவை, ஆபரணங்கள் உள்ளிட்ட சீதனங் களை எடுத்துச் செல்லாவிட்டால், தன்னைப் பிச்சைக்காரன் என உலகம் எண்ணாதா! பத்மாவதி தான் என்ன நினைப்பாள்! அவளது குடும்பத்தார் தன்னை இழிவாக எண்ண நேரிடுமே... இந்த சிந்தனையுடன் இருந்தபோது, நாராயண, நாராயண, நாராயண,என்ற குரல் ஒலித்தது. நாரதமகரிஷி அங்கு வந்தார். சீனிவாசா, உன் திருமண விஷயம் அறிந்தேன். உன்னைப் பார்த்து விட்டு செல்லவே வந்தேன், என்றார். சீனிவாசனின் முகம் வாடியது. நாரதர் அவரிடம், சீனிவாசா! புதுமாப்பிள்ளை சந்தோஷமாக இருக்க வேண்டும், உன் முகமோ வாடியிருக்கிறதே! என்ன பிரச்னை? என்றார். நாரதரே! திருமணத்தை நிச்சயித் தாயிற்று. ஆனால், லட்சுமியையே மார்பில் சுமந்த என் நேரம் சரியில்லை. திருமணச்செலவுக்கு பணம் வேண்டும், அது எப்படி கிடைக்குமென்று தான் தெரியவில்லை. இதனால், மனம் எதிலும் நாட்டம் கொள்ள மறுக்கிறது, என்று சீனிவாசன் சொல்லவும் நாரதர் சிரித்தார். சீனிவாசா! இதற்காக ஏன் கவலைப்படுகிறாய்? குபேரனிடம் ஏராளமாக பணம் இருக்கிறது. அவனிடம் கடன் வாங்கி கல்யாணத்தை முடி. பின்னர், கடனைத் திருப்பிக் கொடுத்து விடலாம்,என்றார். சீனிவாசனுக்கு இந்த யோசனை பிடித்துவிட்டது.உடனே கருடனை வரவழைத்தார். கருடா! நீ சென்று குபேரனை அழைத்து வா, என்றார். கருடனும் சென்று குபேரனை அழைத்து வந்தான். நாரதரே குபேரனிடம் பேசினார். குபேரா! ஸ்ரீமன் நாராயணன் மானிட அவதாரமாக சீனிவாசன் என்னும் பெயரில் பூலோகத்தில் இருப்பதை அறிவாய். இப்போது, லட்சுமிதேவி சீனிவாசனை விட்டுப் பிரிந்திருப்பதால், அவன் சகல ஐஸ்வர்யங்களையும் இழந்து நிற்கிறான். ராமாவதார காலத்தில் வேதவதி என்ற பெயரில் இருந்த நிழல் சீதை, இப்போது பத்மாவதியாகப் பூமியில் அவதரித்து, ஆகாசராஜனின் அரண் மனையில் வளர்கிறாள்.
அவளுக்கும், சீனிவாசனுக்கும் காதல் ஏற்பட்டது. இப்போது, திருமணமும் நிச்சயிக்கப் பட்டு விட்டது. ஆனால், ராஜா வீட்டுப் பெண்ணான அவளைத் திருமணம் செய்து கொள்ளுமளவுக்கு சீனிவாசனிடம் பணமில்லை. நீ அவனுக்கு கடன் கொடுத்து உதவினால், அவன் அசலும் வட்டியுமாக திருப்பியளிப்பான்.  அவனுக்கு எவ்வளவு வேண்டும், வட்டி விபரம், திருப்பித்தரும் கால அளவையெல்லாம் நீங்கள் கலந்தாலோசித்து கொள்ளுங்கள். சீனிவாசனுக்கு பணம் கொடுப்பதன் மூலம், நீ பிறந்த பலனை அடைவாய், என்று சிபாரிசு செய்தார். ஸ்ரீமன் நாராயணனின் திருமணத்துக்கு என்னிடமுள்ள செல்வம் உதவுமானால், அதை விட வேறு பாக்கியம் ஏது? தருகிறேன், என்ற குபேரன், 3ஆயிரத்து 364 ராம நாணயங்களைத் தந்தான். இந்தத்தொகை இன்றைய மதிப்புக்கு பல ஆயிரம் கோடிகளைத் தொடும். தொகைக்கான வட்டியை நிர்ணயித்து பத்திரம் எழுதினான். அதில், சீனிவாசன் கையெழுத்திட்டார். அன்புசார்ந்த குபேரனுக்கு, நீ கொடுத்த பணத்திற்கு கலியுகம் முழுமையும் வட்டி செலுத்துவேன், கலியுகம் முடியும் வேளையில் அசலையும், மீதி வட்டியையும் செலுத்திவிடுவேன், என உறுதியளித்தார். இப்போது, திருப்பதியில் ஆண்டு வருமானம் ஆயிரம் கோடியை எட்டிவிட்டது. இதை குபேரன் வட்டியாக  பெற்றுக் கொண்டிருப்பதாக ஐதீகம். வட்டியே இவ்வளவு என்றால், சீனிவாசன் பெற்ற கடன்தொகையின் அளவை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். கலியுகம் முழுவதும் கோடிக்கணக்கில் வட்டி கிடைக்கப்போகிறது என்றால் குபேரனுக்கு சந்தோஷம் ஏற்படாதா என்ன! அவன் மிகுந்த ஆனந்தத்தில் இருந்தான்.ஆனால், மனதுக்குள் ஒரு சந்தேகம்! ஏதுமே இல்லாத சீனிவாசன், இவ்வளவு பெரிய அசலுக்கு எப்படி வட்டி செலுத்துவார் என்று! குபேரனின் மனஓட்டத்தை அறிந்த சீனிவாசன் அதற்கு அளித்த பதில் குபேரனை வியப்பில் ஆழ்த்தியது.


ஏழுமலையான் பகுதி-19



குபேரா! இப்போது நடப்பது கலியுகம். இந்த யுகம் பணத்தின் மீதுதான் சுழலும். எல்லாரும் பணம் பணம் என்றே அலைவார்கள். செல்வத்தைத் தேடியலையும் அவர்கள் பல பாவங்களைச் செய்வார்கள். பின்னர் மனதுக்குள் பயந்து பிராயச்சித்தத்திற்காக என்னை நாடி வருவார்கள். அவர்களிடம் இருக்கும் செல்வத்தை எனக்கு காணிக்கையாகக் கொட்டுவார்கள். அவ்வாறு சேரும் பணத்தை உனக்கு வட்டியாகக் கொடுத்து விடுவேன், என்றார். ஒருவழியாக, திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் கிடைத்துவிட்டதால், சீனிவாசன் மகிழ்ச்சியடைந்தார். தன் சகோதரர் கோவிந்தராஜரிடம் அந்த தொகையை ஒப்படைத்து, அண்ணா! தாங்கள் தான் திருமணத்தை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், என்றார்.திருப்பதிக்கு சென்று வந்தால் பணம் கொட்டுமாமே, வாழ்வில் திருப்பம் உண்டாகுமாமே என்ற பொதுப்படையான கருத்து இருக்கிறது. அதற்கு காரணமே, இந்தக் கோவிந்தராஜப் பெருமாள் தான். திருப்பதிக்குப் போனோமா! சீனிவாசனைத் தரிசனம் செய்தோமா! லட்டை வாங்கினாமோ!  ஊர் திரும்பினோமா என்று தான் பலரும் சென்று வந்து கொண்டிருக் கிறார்கள். சீனிவாசனின் அண்ணனான கோவிந்தராஜப் பெருமாளுக்கு கீழ் திருப்பதியில் பிரம்மாண்டமான கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலைப் பற்றி பலருக்கும் தெரியாது. தற்போது தான் இந்தக் கோயிலைப் பற்றிய விழிப்புணர்வு எழுந்து பக்தர்கள் சென்று வரத் தொடங்கியிருக்கின்றனர். திருப்பதியில் தினமும் 50 ஆயிரம் சுவாமி தரிசனம் செய்கிறார்கள் என்றால், இங்கு வருவோர் எண்ணிக்கை ஐயாயிரத்துக்குள் தான் இருக்கிறது. விபரமறிந்தவர்களே வந்து செல்கிறார்கள். ஏழுமலையான் தொடரைப் படிக்கும் வாசகர்கள், திருப்பதியில் தரிசனம் செய்வது எப்படி என்ற விபரத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். திருப்பதிக்கு செல்லும் முன்பாக உங்கள் குலதெய்வத்தின் கோயிலுக்கு சென்று வர வேண்டும்.
முடியாதவர்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து வீட்டில் சிறிய பூஜை நடத்த வேண்டும். திருப்பதிக்குச் சென்றதும், முதலில் திருச்சானூர் (அலமேலுமங்காபுரம்) சென்று அங்கு பத்மாவதி தாயாரை வணங்க வேண்டும். அதன்பிறகு திருமலை சென்று சுவாமி புஷ்கரணி எனப்படும் தெப்பக்குளத்தின் கரையிலுள்ள ஸ்ரீவராகசுவாமியை வணங்க வேண்டும். பிறகு தான் ஏழுமலையான் சன்னதிக்கு செல்ல வேண்டும். ஏழுமலையானை வணங்கிய பிறகு, கோயில் எதிரேயுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று அவரை வணங்கியபின், மலை உச்சியில் உள்ள ஆகாசகங்கை தீர்த்தம், சக்ர தீர்த்தம், வேணுகோபால சுவாமி கோயில், பாபவிநாச தீர்த்தம் ஆகிய இடங்களுக்குச் சென்று தலையில் தீர்த்தம் தெளிக்க வேண்டும். பிறகு, கீழ் திருப்பதிக்கு வந்து கோவிந்தராஜர் கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசித்து விட்டு ஊர் திரும்ப வேண்டும். மீண்டும் குல தெய்வத்தை வணங்கி திருப்பதி பயணத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். மீண்டும் கதைக்கு திரும்புவோம். கோவிந்தராஜரின் கையில் தனரேகை ஓடுகிறது. நாம் எவ்வளவுக் கெவ்வளவு பாலாஜிக்கு உண்டியல் காணிக்கை இடுகிறோமோ, அதைப் போல் நான்கு மடங்கு பணம் கோவிந்தராஜரை வணங்கினால் கிடைக்கும் என்பது ஐதீகம். ஏழுமலையான் திருமணச்செலவுக் குரிய பணத்தை கஜானாவில் வைத்துக்கொண்ட கோவிந்தராஜர், தன் கையால் எடுத்துச் செலவழிக்க செலவழிக்க, அதைப் போல் நான்கு மடங்கு தொகை உயர்ந்து கொண்டே வந்தது. இதனால், தடபுடலாக திருமண ஏற்பாட்டைச் செய்தார் கோவிந்தராஜர். தேவலோக சிற்பியான மயனை வரவழைத்து பந்தல் போட்டார். மாவிலை முதல் நவரத்தினங்கள் வரையான தோரணங்கள் தொங்க விடப்பட்டன.
பெண் வீட்டாரும், திருமண வீட்டிற்கு வரும் தேவர்களும், விருந்தினர்களும் தங்குவதற்கு விடுதிகள் அமைத்தார். (திருப்பதியில் இப்போதும் விடுதிகள் அதிகமாக இருப்பது இதனால் தான் என்பர். அங்கே தினமும் உற்சவர் கல்யாண வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமண உற்சவம் நடக்கிறது. பத்மாவதி தாயார் கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் திருமண உற்சவம் விசேஷம்) அடுத்து திருமணப்பத்திரிகை தயாரிக்கும் பணி நடந்தது. இந்த பத்திரிகை தயாரிப்பு பணியை தாயார் வகுளாதேவியிடம் சீனிவாசன் ஒப்படைத்து விட்டார். வகுளாதேவி தகுந்த முறையில் அதை வடிவமைத்தார். ஈரேழு பதினான்கு லோகங்களிலும் உள்ள தேவர்கள், ரிஷிகள், முக்கியஸ்தர்களுக்கெல்லாம் பத்திரிகை அனுப்ப முடிவாயிற்று. இத்தனை பேருக்கும் மின்னல் வேகத்தில் சென்று பத்திரிகை கொடுப்பதென்றால் நடக்கிற ஒன்றா? இதுபற்றி ஆலோசித்த வகுளாதேவியின் மனதில் சிக்கியவர் கருட பகவான். கருடனை அழைத்த அவள், கருடா! நீ வேகமாகச் சென்று இவ்வுலகிலுள்ள முக்கியஸ்தர் களுக்கு பத்திரிகை கொடுத்து வா, என்று அனுப்பி வைத்தாள். கருடனுக்கு பெருமாளின் சேவையில் முக்கியப் பங்கு உண்டு. ஆதிமூலமே என அலறினான் யானையாக இருந்த கஜேந்திரன் என்னும் கந்தர்வன். அவன் பெருமாள் பக்தன். இவனுக்கு எதிரி கூகு என்பவன். இவன் முதலையாக மாறி ஒரு ஆற்றில் கிடந்தான். ஒருமுறை, யானையின் காலை முதலை கவ்வ, பக்தனான கஜேந்திரன் தன்னைக் காக்கும்படி வேண்டி ஆதிமூலமாகிய பெருமாளை அழைத்து பிளிறினான். பெருமாளின் காதில் இது விழுந்ததோ இல்லையோ, கருடனை திரும்பிப் பார்த்தார். அவனுக்கு தெரியும். தன் மீது அவரை ஏற்றிக்கொண்டு கணநேரத்தில் அந்த நதிக்கரையை அடைந்து விட்டான். யானையைக் காப்பாற்றினார் பெருமாள். இதனால் தான் கோயில்களில் கருடசேவை நடத்துகிறோம். கருடசேவையைத் தரிசிப்பவர் களுக்கு உடனடி பலன் கிடைத்து விடும். திருப்பதியில் நடக்கும் புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில், ஏழுமலையான்  கருடவாகனத்தில் பவனி வருவது கண்கொள்ளாக்காட்சி. ஏராளமான பக்தர்கள் இதைப் பார்க்க கூடுகிறார்கள். மூலவரே அன்று பவனி வருவதாக ஐதீகம். கருடன் திருமண பத்திரிகைகளுடன் பல உலகங்களுக்கும் பறந்தான்.


ஏழுமலையான் பகுதி-20



திருமணப் பத்திரிகையை முதலில் பிரம்மா-சரஸ்வதிக்கு வழங்கிய கருடாழ்வார், பின்னர் சிவ பார்வதி, இந்திரன்- சசிகலா, நாரத முனிவர், தேவகுரு பிரகஸ்பதி, அஷ்டதிக் பாலகர்கள் (திசைக்காவலர்கள்) அத்திரி- அனுசூயா, பரத்வாஜ முனிவர், கவுதமர்- அகலிகை, ஜமதக்னி முனிவர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், புராணக்கதைகளை தேவர்களுக்கு எடுத்துச் சொல்லும் சூதர், சவுனகர், கருட லோகத்தினர், கந்தவர்கள், கின்னரர்கள், நாட்டியத் தாரகைகளான ரம்பா, ஊர்வசி, மேனகை, திலோத்துமா மற்றும் கற்புக்கரசி சாவித்திரி, அருந்ததி ஆகியோருக்கும் வழங்கினார். இதையடுத்து அவர், கந்த லோகம் சென்று வள்ளி தெய்வானை சமேதராக செந்திலாண்டவனும் எழுந்தருள வேண்டும் என பத்திரிகை கொடுத்து  கேட்டுக்கொண்டார். மாமன் கல்யாணத்துக்கு மருமகனும் எழுந்தருளத் தயாரானார். பின்னர் ஆனந்தலோகம் சென்று விநாயகருக்கும் பத்திரிகை வைக்கப்பட்டது. பத்திரிகை பெற்றுக்கொண்ட அனைவருமே திருமணத்துக்கு கிளம்பினர். அவர்கள்  அனைவரும் ஒருவர் பின் ஒருவராக சேஷாசலம் வந்து சேர்ந்தனர். அக்னி பகவான் தான் திருமணத்திற்கு தலைமை வரவேற்பாளராக நியமிக்கப் பட்டிருந்தார். அவர் விருந்தினர் களை வரவேற்று லட்டு, வடை மற்றும் பால் அன்னம், நெய் அன்னம், தயிர் சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் ஆகிய பஞ்ச அன்னங்களைப் பரிமாறினார். அனைவரும் அந்த சாப்பாட்டை ருசித்து மகிழ்ந்தனர். வாயுபகவான் வந்தவர்களுக் கெல்லாம் சுகந்த மணம் பரப்பும் காற்றை வீசினார். கந்தர்வர்கள் தேவர்களுக்கு சாமரம் வீசி பணிவிடை செய்தனர். பார்வதிதேவி, அனுசூயா, சுமதி ஆகியோர் தங்கள் பங்கிற்கு  அழகழகான கோலமிட்டனர். இதையடுத்து, மணமகன் சீனிவாசன் பட்டு பீதாம்பரம் தரித்து, நவரத்தின கிரீடம், தங்க, வைர மாலைகள் அணிந்து, ஒரு சுபவேளையில் அவர்கள் முன் அழகே வடிவாய் தோன்றினர். எல்லார் கண்ணும் பட்டுவிடுமோ என்று வகுளாதேவிக்கு பயம்.
ஆம்...ஒருமுறை, கருடன்மீது லட்சுமிபிராட்டியுடன் அமர்ந்து பறந்து வந்த பெருமாளைப் பார்த்தார். ஆஹா.. இவன் இவ்வளவு பேரழகனா? என் கண்ணே பட்டு விடும் போல் இருக்கிறதே! ஊரார் பார்வை இவன் மீது பட்டால்  என்னாகுமோ என்று பயந்தார். அந்த பயத்தில் இறைவனுக்கே திருஷ்டி கழித்து, நீ பல்லாண்டு வாழ வேண்டும், என்று வாழ்த்துப்பா பாடினார். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வித்திருக்காப்பு, என்றார். பெருமாள் மீது அந்த அளவுக்கு ஆழ்வார் அளப்பரிய அன்பு கொண்டிருந்தார். அந்த  பெருமாள் தானே இப்போது சீனிவாசனாக அவதாரம் எடுத்து வந்திருக்கிறார். அவருக்கும் திருஷ்டி பட்டு விடாதா என்ன! தேவ பெண்கள் அவருக்கு திருஷ்டி பொட்டு வைத்த பிறகு தான், முந்தைய யுகத்தில் யசோதையாக இருந்து கண்ணனை வளர்த்த வகுளாதேவியின் மனதில் நிம்மதி பிறந்தது. மணமகள் வீடு நாராயணவனத்தில் இருக்கிறது. சேஷாசலத்தில் இருந்து அங்கு மணமகன் ஊர்வலம். எல்லா தெய்வங்களும், தேவர்களும் புடைசூழ, ஒளிவீசும் ரத்தினக்கற்களுக்கு மத்தியில் பதிக்கப்பட்ட பச்சைக்கல் போல சீனிவாசன் தேரில் ஏற பவனி புறப்பட்டது. மற்ற தேவர்கள் அவரவர் தேர்களில் பயணித்தனர். நாராயணவனத்தின் அருகில் தான் சுகயோகியின் ஆஸ்ரமம் இருந்தது. அவர் தானே இந்த திருமணம் நிகழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். அவரை சீனிவாசனும், மற்ற தெய்வங்களும், தேவர்களும் நேரில் சென்று பார்த்து, அவரையும் அழைத்துச் செல்வதென ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். மணவிழா ஊர்வலம் சுக யோகியின் ஆஸ்ரமத்திற்குள் நுழைந்தது. சுகயோகி, வாசலுக்கே வந்து அனைவரையும் வரவேற்றார்.சீனிவாசா! என்ன பாக்கியம் செய்தேனோ? உன் திருமணத்தின் பொருட்டு வந்து உள்ள எல்லா தெய்வங்களின் தரிசனமும் கிடைக்கப் பெற்றேன். இனி எனக்கு பிறவி இல்லை, என்று அகம் மகிழ்ந்து பேசினார்.
சீனிவாசன் அவரிடம், சுவாமி! நாங்கள் தங்கள் ஆஸ்ரமத்தில் சற்றுநேரம் இளைப்பாறி விட்டு பின்னர் நாராயண வனத்துக்குப் புறப்படலாம் என உள்ளோம். தாங்கள் இவர்களுக்கு அன்னம் பரிமாறினால் நல்லது, என்றார். சுகயோகி சீனிவாசனிடம், நல்லது சீனிவாசா! இங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் உணவளிக்க உன்னருளை வேண்டுகிறேன், என்றார். சீனிவாசன் சிரித்தபடியே அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார். அனைவரும் விருந்துண்டு மகிழ்ந்து அங்கிருந்து சுகயோகியுடன் புறப்பட்டனர். ஊர்வலம் மீண்டும் கிளம்பியது. இங்கே  இவ்வாறு நடந்து கொண்டிருக்க, நாராயணவனத்தில் ஆகாசராஜன் தன் ஒரே புத்திரியின் திருமணப்பணிகளை மிகுந்த ஆடம்பரத்துடன் செய்து கொண்டிருந்தான். மணமகன் சீக்கிரம் வந்து விடுவார், ஊர்வலம் சுகயோகியின் ஆஸ்ரமத்தை விட்டுக் கிளம்பிவிட்டது என்ற தகவல், ஒற்றர்கள் மூலம் அறிவிக்கப் பட்டது. ஆகாசராஜன் பரபரப்பானான். ஏற்கனவே, வரும் விருந்தினர்களைத் தங்க வைக்க விடுதிகள் கட்டி தயாராக வைத்திருந்தான். நகர எல்லைக்குள் நுழைந்ததும், அவன் மேளவாத்தியங்களுடன் சீனிவாசனை எதிர்கொண்டழைக்க புறப்பட்டான். இருதரப்பாரும் ஓரிடத்தில் சந்தித்தனர். ஆகாசராஜன் அனைத்து தெய்வங்களின் திருப்பாதங்களிலும் பணிந்து, தன் மகளின் திருமணம் இனிதே நடக்க அவர்களின் ஆசிர்வாதத்தை வேண்டினான். எல்லோரும் அவனும் அவன் புத்திரியும் பல்லாண்டு வாழ வாழ்த்தினர். பின்னர், சீனிவாசனை யானை மீதுள்ள அம்பாரியில் ஏறச்செய்து, அங்கிருந்து  மணமகன் ஊர்வலம் கிளம்பியது. அனைவரும் சம்பந்தி விடுதிகளில் தங்கினர்.


ஏழுமலையான் பகுதி-21



மறுநாள் முகூர்த்தம்... பத்மாவதியை தங்க மாலைகளால் அலங்கரித்து, நவரத்தினக் கற்கள் இழைந்த ஒட்டியாணம் பூட்டி, தோள்வளை, கை வளைகள் பூட்டி மணமேடைக்கு அழைத்து வந்தனர். ஆகாசராஜன் தம்பதியர் கண்ணீர் மல்க, தங்கள் செல்வப்புதல்வி அன்றுமுதல் இன்னொருவனுக்கு சொந்தமாவதை எண்ணி ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். பெற்றவர்களுக்கு பிள்ளைகளின் மணநேரம் தானே ஆனந்தத்தைக் கொடுக்கிறது. அந்த ஆனந்தம் ஊற்றெடுக்கும் போது, கண்கள் வழியாக ஆனந்தக்கண்ணீராக வெளிப்படுகிறது. அப்போது சீனிவாசன் கிரீடம் அணிந்து, பட்டு பீதாம்பரம், நகைகள் பூட்டி, மலர் மாலைகளுடன் கம்பீரமாக வந்தார். காதலிக்கும் நேரத்தில் ஏற்படும் சந்தோஷத்தை விட, காதலித்தவளை மணமுடிக்கும் போது ஏற்படும் சந்தோஷம் அளப்பரியது. ஒரு போரில் வெல்வது எளிது, தேர்வில் நூறு மதிப்பெண் பெறுவது எளிது, ஆனால், காதலில் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல! காதல் என்ற வலைக்குள் ஒருத்தி அல்லது ஒருவனை வீழ்த்துவதென்பதே பகீரத பிரயத்தனம்! அந்தக் காதலர்களின் மனம் ஒன்றுபட்ட பிறகு, பெற்றவர் என்ன, உற்றவர் என்ன, உடன் பிறந்தவர் என்ன, நண்பர்கள் என்ன... யார் வந்து பிரிக்க நினைத்தாலும் அதில் அவர்கள் தோல்வியையே தழுவுவார்கள். இந்நேரத்தில், எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல், அதே நேரம் மிரட்டும் நம்மவர்களின் உயிருக்கும் ஏதும் நிகழ்ந்து விடாமல்... இந்தக் காதலில் வெற்றி பெறுவதென்றால் சும்மாவா! அதிலும், பத்மாவதி தன்னைக் காதலிக்க வந்த சீனிவாசனை கல்லால் அடித்து விரட்டினாள். இருந்தாலும் விட்டாரா மனிதர்...விடாப்பிடியாக இருந்து அம்மாவிடம் சொல்லி, அரசன் வீட்டு பெண்ணையே வளைத்து வெற்றி பெற்ற கம்பீரம் அவர் முகத்தில் தெரிந்தது. பிரகஸ்பதி, பிரம்மா, வசிஷ்டர் ஆகியோர் ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்து மந்திரங்களை ஓதினர். நாதஸ்வரம், தவில், பேரிகை போன்ற மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. இறைவனின் திருமணத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி வந்திருந்த விருந்தினர்களுக்கெல்லாம் மனதில் பரவசம்.
வசிஷ்டர் சீனிவாசனை ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட மணையில் (பலகை)  அமரச் சொன்னார். அவருக்கு கங்கணதாரணம் (கையில் காப்பு கட்டுதல்) செய்து வைத்தார். அந்நேரத்தில் மங்கள வாத்தியங்களின் ஒலி அதிகரித்தது. பத்மாவதியை சீனிவாசனின் அருகில் அமர்த்தி, திருமாங்கல்யத்தை எடுத்து சீனீவாசனின் கையில் கொடுத்தார். அவர் பத்மாவதியின் திருக்கழுத்தில் திருமாங்கல்யத்தைச் சூட, கோட்டு வாத்தியங்கள் ஆர்ப்பாட்டமாக ஒலித்தன. கெட்டிமேளம் கொட்டியது. கோடி மலர்கள் கொண்டு வந்தவர்களெல்லாம் வாழ்த்தினர். பலர் அட்சதை தூவினர். இறைவன் தான் மனிதனை ஆசிர்வதிப்பான். இறைவனுக்கு அடிமையாகி விட்டால், அந்த பக்தனின் ஆசியை இறைவன் ஏற்றுக்கொள்கிறான். இதைத் தவிர இந்த இடத்தில் வேறென்ன சொல்ல முடியும்? எல்லாரும் உணர்ச்சிப்பூர்வமாக கண்கொட்டாமல் இந்த காட்சியை ரசித்தனர். ஆகாசராஜனின் குடிமக்கள் அனைவருக்கும் கடவுளின் கல்யாணக் காட்சியைக் காணும் பாக்கியம் கிடைத்தது.பூலோகத்தில் எத்தனையோ புனிதத்தலங்கள் இருக்க, தங்கள் தலத்தைத் தேர்ந்தெடுத்து ஸ்ரீமன் நாராயணனும், லட்சுமிதேவியாரும் வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பெருமை தானே! அந்த பெருமை அனைவர் முகத்திலும் பூரிய நெஞ்சு பூரித்துப் பொங்கியது. திருமணம் முடிந்ததும், சீனிவாசன் பத்மாவதியின் கையைப் பிடித்தபடி அக்னியை வலம் வந்தார். அருந்ததி அங்கேயே நின்றதால், அவளை அவர்கள் பார்த்தனர். அவள் மகிழ்வுடன் ஆசிர்வதித்தாள். அக்னி வலம் முடிந்ததும், மணமக்களுக்கு திருஷ்டி கழிக்க சரஸ்வதி, பார்வதிதேவி ஆகியோர் தங்கத் தட்டில் ஆரத்தி கரைசலை எடுத்து வந்தனர். அவர்களுக்கு மங்கள ஆரத்தி செய்தனர். அப்போது, கந்தர்வர்கள் ஆகாயத்தில் இருந்து புஷ்பமழை பொழிவித்தனர். வகுளமாலிகையும், வசிஷ்டரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
இருக்கத் தானே செய்யும்! வசிஷ்டருக்கு ஸ்ரீமன் நாராயணன், ராமபிரானாக அவதரித்த போதும் அவருடைய திருமணத்தை நடத்தி வைக்கும் பாக்கியம் கிடைத்தது! சீனீவாசனாக அவதாரம் எடுத்த கலியுகத்திலும் அந்த பாக்கியம் கிடைத்தது. வகுளாதேவி, யசோதையாக கோகுலத்தில் வாழ்ந்தபோது, கண்ணபிரானின் குழந்தைப்பருவ லீலைகளை பார்க்கும் யோகம் பெற்றாளே அன்றி, திருமணத்தைப்  பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அது இப்போது கிடைத்ததை எண்ணி அவள் சந்தோஷப்பட்டாள். அடுத்து மணமக்கள் தங்கள் பெற்றோரிடம் ஆசிபெறும் படலம் ஆரம்பமானது, அவர்கள் முதலில் வகுளாதேவியிடம் ஆசிபெற்றனர். பின்னர், மாமனார் ஆகாசராஜன், மாமியார் தரணீதேவியிடம் அவர்கள் ஆசிர்வாதம் பெற்றனர். பின்னர் வந்திருந்த அனைவருக்கும் மரியாதை செலுத்தினர். ஆகாசராஜன் தன் மருமகனுக்கு சீதனமாக வஜ்ரகிரீடம், மகரகுண்டலங்கள், ரத்தின மோதிரங்கள், பொன் அரைஞாண், பத்தாயிரம் குதிரைகள், பணியாட்கள் என கொடுத்தான். மருமகனுக்கே இவ்வளவென்றால் மகளுக்கு கொஞ்சமா! போட்ட நகைகள் போதாதென்று இரண்டாயிரம் கிராமங்களை சீதனமாக வழங்கினான். சீதனம் என்ற சொல்லை ஸ்ரீதனம் என்று தான் சொல்ல வேண்டும். ஸ்ரீ என்றால் லட்சுமி. தனம் என்றால் கடாட்சம். திருமணத்தின் போது இன்று வரை எல்லா மணமகன்களும், மணமகள்களும் லட்சுமி கடாட்சத்தை அடைகிறார்கள் என்பது நிஜம் தானே! திருமணத்துக்கு வந்தவர்களுக் கெல்லாம் இப்போது கூட வகைவகையாக தாம்பூலம்  கொடுக்கிறார்கள். ஆகாசராஜனை கேட்க வேண்டுமா! வந்திருந்தஅனைவருக்கும் தங்கத் தட்டில் தாம்பூலம் வைத்துக் கொடுத்தான். விருந்தோ தடபுடலாக இருந்தது. எதைச் சாப்பிடுவது, எதை விடுவது என்று சொல்ல முடியாத நிலை! அனைவரும் ஆகாசராஜனின் அன்புமழையில் நனைந்து திணறிப் போனார்கள் என்றால் மிகையில்லை.


ஏழுமலையான் பகுதி-22



திருமணம் நல்லவிதமாக நடந்தேறியதும், ஆகாசராஜன் சீனிவாசனிடம், அன்பிற்குரிய மருமகனே! நீர் காட்டுக்குள் வந்த போது, உமது காதலை அறியாத பத்மாவதி உம் மீது கல்லால் அடித்தாள். அதை மனதில் வைத்துக் கொண்டு அவளை ஏதும் செய்யாமல் பாதுகாக்க வேண்டும், என வேண்டிக்கொண்டான். பெண் பிள்ளைகள் மீது தாயை விட தந்தைக்கு பாசம் இருப்பது உலக இயற்கையாக இருக்கிறது! ஆகாசராஜனும், தன் மகள் பத்மாவதியை, சீனிவாசன் வஞ்சகம் வைத்து, ஏதேனும் செய்து விடுவாரோ என்று பயத்தில் இவ்வாறு வேண்டிக் கொண்டார். சீனீவாசன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார். பின்னர் மணமக்கள்  சேஷாசலத்திற்கு புறப்பட்டார்கள். தாய், தந்தையைப் பிரியும் பத்மாவதி கண் கலங்கினாள். ஆகாசராஜன் மகளிடம், பத்மாவதி! கலங்காதே! பெண்கள் பிறந்த வீட்டில் தொடர்ந்து வாழ முடியாதே! நீ அதிர்ஷ்டக்காரி. அதனால் தான் அந்த பரந்தா மனையே மணம் செய்யும் பாக்கியம் பெற்றுள்ளாய். கணவரின் மனம் கோணாமல் வாழ்வதே பெண்மைக்கு அழகு. அதுவே பிறந்த வீட்டிற்கு நீ பெற்றுத்தரும் புகழ். எங்களை மறந்து விடாதே, என்று அவளது கையைப் பிடித்து சொல்லும் போது, தன்னையறியாமல் அழுதுவிட்டான். தாய் தரணீதேவி, மகளைப் பிரியும் அந்த தருணத்தில் இன்ப வேதனையை அனுபவித்தாள். இவ்வளவுநாளும் மான் போல் வீட்டிற்குள் துள்ளி விளையாடிய பெண், இன்று தகுந்த ஒருவனுக்கு சொந்தமானது குறித்து மகிழ்ச்சி என்றாலும், இனி அவளை அடிக்கடி காண முடியாதே என்ற ஏக்கமே இந்த வேதனைக்கு காரணம். பெண்ணைப் பெற்ற எல்லோரும் அனுபவிப்பது இதைத்தானே! பரிவாரங்கள் புடைசூழ சீனிவாசன், தன் மனைவியுடன் கருடவாகனத்தில் ஏறி, சேஷாசலம் நோக்கி பயணமானார். வழியில், அகத்தியரின் ஆஸ்ரமம் இருந்தது. அங்கே சென்று, அவரிடம் ஆசிபெற்றுச் செல்ல சீனீவாசன் விரும்பினார்.
ஆஸ்ரமத்திற்குள் அவர்கள் சென்றார்கள். திருமாலின் அவதாரமான சீனிவாசனை அகத்தியர் வரவேற்றார். சீனிவாசா! கல்யாணவாசனாக என் இல்லத்திற்கு எழுந்தருளியிருக்கிறாய். உன்னை பத்மாவதியுடன் பார்க்கும் புண்ணியம் பெற்றேன், என்றவர், நீ சேஷா சலத்துக்கு இப்போதே புறப்படப் போகிறாயா? அது கூடாது. புதுமணத் தம்பதிகள் திருமணமானதில் இருந்து ஆறுமாதங்கள் மலையேறக்கூடாது என்பது நியதி. உன் சொந்த ஊரே மலையில் இருந்தாலும் சரிதான்! இதைக் கடைபிடித்தே தீர வேண்டும். ஆறுமாதங்கள் கழியும் வரை நீ என் ஆஸ்ரமத்திலேயே தங்கு. நீ என்னோடு தங்குவதில் நானும் மகிழ்வேன், என்றார். முனிவரின் கட்டளையை சீனிவாசனும் சிரமேல் ஏற்று, ஆஸ்ரமத்தில் தங்க சம்மதித்தார். புதுமணத்தம்பதிகள் இன்பமுடன் இருக்க தனியிடம் ஒதுக்கித்தந்தார் அகத்தியர். சீனிவாசன் தன் அன்பு மனைவியுடன் அங்கே ஆறுமாதங்கள் தங்கினார். திருப்பதியில் இருந்து 20 கி.மீ., சென்றால் சீனிவாசமங்காபுரம் என்ற கிராமம் வரும். அங்கே, திருப்பதி பெருமாளையும் மிஞ்சும் பேரழகுடன் வெங்கடாசலபதியைத் தரிசிக்கலாம். அகத்தியரின் ஆஸ்ரமம் அமைந்த இடம் இதுதான். சீனிவாசனும், பத்மாவதியும் தங்கியதால், அவ்விடத்தில் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது. இப்போது, நாம் அங்கு சென்று பெருமாளை மிக சவுகரியமாக தரிசித்து வரலாம். விழாக்காலங்கள் தவிர மற்ற நேரங்களில் சுமாரான கூட்டமே இருக்கும். இப்படியாக, சீனிவாசன் அங்கு தங்கியிருந்த வேளையில், ஒருநாள் நாராயணபுரத்தில் இருந்து ஒரு சேவகன் வந்தான். அவன் மிகவும் பதைபதைப்புடன் காணப்பட்டான். சீனிவாசனை அணுகி, நாராயணா! தங்கள் மாமனார் ஆகாசராஜன் மிகவும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். அரசியார் அருகில் இருந்து மிகுந்த கவலையுடன் பணிவிடை செய்து வருகிறார். தங்களையும், அவரது திருமகளையும் பார்க்க விரும்புகிறார். தாங்கள் உடனே புறப்பட்டு வர வேண்டும், என பிரார்த்தித்தான்.
அகத்தியருக்கும் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மூவரும் நாராயணபுரம் புறப் பட்டனர். ஆகாசராஜன் கிட்டத்தட்ட மயக்கநிலையில் இருந்தார். அந்த நிலையிலும் மகளையும், மருமகனையும் வரவேற்று, சீனிவாசா, கோவிந்தா, மதுசூதனா, பத்மநாபா, நாராயணா என்று மருமகனைப் பிரார்த்தித்தார். ஐயனே! நீரே எனது மருமகனாக வாய்த்ததால் நான் சகல பாக்கியங்களையும் அடைந்தேன். தங்களை கடைசியாக ஒருமுறை பார்த் தாலே வைகுண்ட பிராப்தி கிடைத்து விடுமென நம்பினேன். அதனாலேயே, தங்களை வரச் செய்தேன், என்றார். பத்மாவதி, தந்தையையும், தாயையும் கட்டிக்கொண்டு அழுதாள். ஆகாசராஜன் அவளிடம்,  மகளே! உன் தம்பி வசுதானனையும்,  சித்தப்பா தொண்டைமானையும் கவனித்துக் கொள். அது மட்டுமல்ல, நீ பரந்தாமனுக்கு வாழ்க்கைப் பட்டதால் லோகமாதாவாக இருக்கிறாய். உன்னை நாடி வரும் மக்களின் குறை போக்குவது உனது கடமை. உன்னை மணம் முடித்து கொடுத்ததுடன், உலகத்திற்கு நான் வந்த கடனையும் முடித்துக் கொண்டேன். இனி எனக்கு ஜென்மம் வேண்டாம், என்று வேண்டியபடியே கண் மூடினார். தரணீதேவி அலறித் துடித்தாள்.ஆகாசராஜனுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. தரணீதேவி அவரோடு உடன்கட்டை ஏறினாள். தாயையும், தந்தையையும் இழந்த பத்மாவதி அடைந்த மனவேதனைக்கு அளவில்லை. கிரியைகள் யாவும் முடிந்த பிறகு, மீண்டும் அவர்கள் அகத்தியரின் ஆஸ்ரமத்திற்கு வந்து சேர்ந்தனர். இந்த சமயத்தில், நாராயணபுரத்தில் ஆகாசராஜனுக்கு பிறகு பொறுப்பேற்பது வசுதானனா, தொண்டைமானா என்பது குறித்து சண்டை ஏற்பட்டது. தந்தை ஆண்ட பூமி தனக்கே சொந்தம் என்று வசுதானன் கூற, பித்ரு ராஜ்யம் தம்பிக்கே உரியது என தொண்டைமான் சொன்னான். இருவரும் தங்களுக்கே ராஜ்யம் வேண்டுமெனக் கோரி சீனிவாசனின் மத்தியஸ்தத்தைக் (தீர்ப்பு) கேட்பதற்காக அகத்தியரின் ஆஸ்ரமத்திற்கு சென்றனர்.


ஏழுமலையான் பகுதி-23



தொண்டைமான் சீனிவாசனிடம், மருமகனே! நாராயணபுரம் எனக்கே சொந்தம் என நான் வாதிடுகிறேன். என் அண்ணன் மகனோ அவனுக்கே வேண்டும் என்கிறான். தந்தைக்குப் பிறகு மகனா? அண்ணனுக்குப் பிறகு தம்பியா? நீர் தான் முடிவு சொல்ல வேண்டும், என்றான். சீனிவாசன் அவனிடம், இரண்டுமே சரிதான்! எனவே, இதற்கு தீர்வு வீரம் தான். யாரொருவன் தைரியசாலியோ அவன் எந்த நாட்டையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர தகுதிபெற்றவன் ஆகிறான் என்பது உலகத்தின் பொது நியதி. சிறிய மாமனாரே! நீங்கள் இருவரும் போரிடுங்கள். வெற்றி பெறுபவர் ராஜ்யமாளட்டும்,என்றார். இந்த யோசனையை வசுதானனும் ஏற்றான். சிறிய தந்தைக்கும், மகனுக்கும் நடக்கும் போரில் சீனிவாசன் யார் பக்கம் என்ற கேள்வி எழுந்தது. தொண்டைமானே இந்தப் பிரச்னையைக் கிளப்பினான். போர் நடக்கும் போது, பலரது ஆதரவைக் கேட்பது வாடிக்கையானது. சீனிவாசா! நான் உமது பரமபக்தன். உம் ஆதரவை எனக்குத் தர வேண்டும், என்றான். வசுதானனும், தன் மைத்துனரிடம் ஆதரவு வேண்டுமென விண்ணப்பித்தான். இருவருமே எனக்கு வேண்டியவர்கள். எனவே, இருவருக்குமே என் ஆதரவைத் தருகிறேன், என்று குழப்பினார் சீனிவாசன். மாயக்கண்ணன் அல்லவா அவன். சீனிவாசா! அதெப்படி இயலும்? யாராவது ஒருவருக்குத் தானே ஆதரவைத் தர முடியும்? நீர் இரண்டு பக்கமும் எப்படி நின்று போராடுவீர், என்று தொண்டைமான் கேட்கவும்,  நானும், என் சக்கராயுதமும் ஒன்றே என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? எனக்கேட்டார் சீனிவாசன். ஆம் என்ற தொண்டை மானிடம், அப்படியானால், என்னை யாராவது ஒருவர் தன் பக்கம் சேர்த்துக் கொள்ளுங்கள். வெற்றியைத் தவிர வேறெதையும் அறியாத என் சக்ராயுதத்தை ஒருவர் பெற்றுக் கொள்ளுங்கள், என்றார் சீனிவாசன். அதையும் நீரே முடிவு செய்து விடும், என்று இருவரும் வேண்ட, நான் வசுதானன் பக்கம் இருக்கிறேன். சக்ராயுதம் தொண்டைமானுக்கு தரப்படும், என்றார் சீனிவாசன்.
இருவரும் அதை ஏற்றனர். சீனிவாசனின் பரமபக்தனான தொண்டைமானுக்கு, சீனிவாசனின் சக்கரத்தைச் சுமப்பதில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அது மட்டுமல்ல, சக்கரம் இருக்குமிடத்தில் வெற்றி உறுதி என்றும் அவன் நம்பினான். மாணவர்கள் கல்வியில் முதலிடம் பெற்றுத் தேற வேண்டுமானால் சக்கரத்தாழ்வாரை வழிபட வேண்டும். அவரை தினமும் ஆறுமுறை சுற்றி வந்து, சுதர்சனாய வித்மஹே ஜ்வாலா சக்ராய தீமஹி தந்நோ சக்ர ப்ரசோதயாத்!  என்ற ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுபவர்கள் கல்வி வளம், வியாபாரத்தில் லாபம், தொழில் அபிவிருத்தி, பணியில் உயர்வு, கை விட்டுப்போன சொத்து கிடைத்தல், தைரியம், நம்பிக்கை ஆகியவற்றைப் பெறுவார்கள். சீனிவாசனின் சக்கரம் கையில் இருப்பதால் நாடு தனக்கே சொந்தம் என்ற நம்பிக்கை தொண்டைமானுக்கும் ஏற்பட்டது. இருவரும் நாராயணபுரம் திரும்பினர். போர் துவங்கியது. சீனிவாசனும், பத்மாவதியும் அகத்தியரின் அனுமதியுடன் நாராயணபுரம் சென்றனர். கடும் போரில், மைத்துனன் வசுதானனுக்கு ஆதரவாக சீனிவாசன் களத்தில் நின்றார். ஆனால், தொண்டைமானின் தீவிர பக்தியும், போரில் கொண்ட ஈடுபாடும் அவனது கையையே ஓங்க வைத்தது. தொண்டைமானின் மகனும் இந்தப் போரில் கலந்து கொண்டான். போரில் வெற்றிபெறும் வேகத்தில், சக்ராயுதத்தை வசுதானன் மீது ஏவினான். அதை சீனிவாசன் தடுத்து தன் மார்பில் தாங்கினார். அவர் மயங்கி விழுந்துவிட்டார். வசுதானன் பதை பதைத்தான். தகவலறிந்து பத்மாவதி ஓடி வந்தாள். கணவரின் மார்பில் தைத்திருந்த சக்கரத்தை எடுத்தாள். சீனிவாசனின் காயத்துக்கு மருந்து தடவினாள். சீனிவாசன் எழுந்தார். நாராயணனையே அடித்து விட்டோமே என தொண்டைமான் பதறினான். பத்மாவதி தன் கணவரிடம், ஸ்ரீமன் நாராயணா! இதென்ன விளையாட்டு! கையில் தவள வேண்டிய சக்கரத்தை மார்பில் தாங்கினீர்களே! இருவருக்கும் உங்களையே பிரித்து தந்த நீங்கள், இந்த சாதாரண மண்ணையும் இருவருக்கும் பிரித்து கொடுத்து விட வேண்டியது தானே! என்றாள்.
சீனிவாசன் எழுந்தார். தொண்டைமான் அவர் முன்னால் கண்ணீர் மல்க நின்றான். தொண்டைமானே கலங்க வேண்டாம். முற்பிறவியிலும் நீ எனது பக்தனாக இருந்தாய். அதனால், இப்பிறவியில் அரச குலத்தில் பிறக்க வைத்தேன். முற்பிறவியில் உன் பெயர் ரங்கதாசன். ஒரு பெண்ணை நீ விரும்பினாய். அது நிறைவேறவில்லை. இந்த ஜென்மத்தில் அவளே உனக்கு மனைவியாக வாய்த்தாள். சக்ராயுதம் உம்மிடம் சிறிது காலம் இருந்ததால் பெண்கள் மீதான மயக்கம் தீர்ந்து விடும். இனி, எனக்கு மட்டுமே தொண்டு செய்து என் பதம் அடைவாய். அதுவரை நாராயணபுரத்தை நீயும், வசுதானனும் இணைந்து ஆள்வீர்களாக! என வாழ்த்தினார். பின்னர், தொண்டைமானே! நீர் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும், என்றார் சீனிவாசன். ஐயனே! உங்களுக்கு உதவ யார் பூமியில் உண்டு? கட்டளையிடுங்கள். என் சிரமே பறிபோனாலும் தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றுவேன், என்றார். தொண்டைமானே! நானும், பத்மாவதியும் அகத்தியர் ஆஸ்ரமத்தில் எங்கள் வாசத்தை முடிக்கும் காலம் நெருங்கி விட்டது. நாங்கள் சேஷாசலம் திரும்புவதற்குள் நீர் எனக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும். வராகசுவாமி எனக்கு கொடுத்த நிலம் அங்கிருக்கிறது. அங்கே கோயில் எழுப்பலாம். கலியுகம் முடியும் வரை நான் அங்கே தங்குவேன், என்றார். தொண்டைமான் அதை ஏற்றான். சீனிவாசனுக்கு கோயில் கட்டும் பணியை பறையறிந்து அறிவித்தான். தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவை வரவழைத்தான். சேஷாசலத்தில் அழகிய கோயில் எழுப்பப் பட்டது. அதுவே, நாம் இன்று காணும் திருப்பதி மலைக் கோயில்.


ஏழுமலையான் பகுதி-24



இதற்குள் சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விடவே அவர்கள் அகஸ்தியரின் ஆஸ்ரமத்தில் இருந்து (சீனிவாசமங்காபுரம்) கிளம்பினர். தொண்டைமானால் எழுப்பப் பட்ட இருப்பிடத்தில் அவர்கள் தங்கினர். அப்போது கலக முனிவரான நாரதர் வைகுண்டத்தில் லட்சுமியை சந்தித்தார். தன் தாயிடம் ஆசி பெற்றார். பின்னர், ஒரு கலகத்தை ஆரம்பித்து வைத்தார். லட்சுமி! நீ நன்றாக ஏமாந்துவிட்டாய். உன் கணவர் சீனிவாசன் பூலோகத்தில் பத்மாவதி என்ற பெண்ணை மணந்துகொண்டார். நீ உடனே பூலோகம் சென்று சேஷாசலத்தில் தங்கியுள்ள அவரை தட்டிக்கேள், என்று சொல்லிவிட்டு அகன்றுவிட்டார். லட்சுமிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. சீனிவாசனை சந்தித்து பிரச்னையை துவங்கிவிட்டாள். என்னை மணந்துவிட்டு, பத்மாவதியை இரண்டாம் தாரமாக ஏமாற்றி மணந்திருக்கிறீர்களே! இது எந்த வகையில் நியாயம்? என படபடவென பொரிந்தாள். சீனிவாசன் அவளைத் தேற்றினார். லட்சுமி! நீயே பத்மாவதியாக மானிடப் பிறவி எடுத்துள்ளாய். பழைய நினைவுகளை நீ மறந்துவிட்டாயா? அந்த கதையை சொல்கிறேன் கேள். ராமாவதார காலத்தில் நீ சீதையாக பிறந்தாய். நாம் கானகத்திற்கு செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது ராவணன் என்ற அசுரன் உன் மீது ஆசைகொண்டு உன்னைத் தூக்கிச்செல்ல முயன்றான். அப்போது அக்னிபகவான் உன்னைப்போலவே உருவம் கொண்ட மற்றொரு பெண்ணை படைத்தான். அவளை நீ தங்கியிருந்த குடிசையில் வைத்துவிட்டு, உன்னை காப்பாற்றி சென்றான். நீ வேதவதி என்ற பெயரில் அங்கு தங்கியிருந்தாய். உங்கள் உருவ ஒற்றுமையை பார்த்த ராவணன் உன்னை கடத்தி சென்றுவிட்டான். அவனிடமிருந்து நான் உன்னை மீட்டேன். அப்போது நீ என்னிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டாய். ராமாவதார காலத்தில் நான் ஏகபத்தினி விரதம் அனுஷ்டித்தேன்.
எனவே அப்போது உன்னை மணக்க முடியவில்லை. ஆனால் நான் உனக்கு ஒரு வாக்கு கொடுத்தேன். கலியுகத்தில் நான் சீனிவாசனாக சேஷாசலத்தில் அவதரிக்கும் போது, நீ பத்மாவதியாக பிறந்து என்னை அடைவாய் என்பதே அந்த உறுதிமொழி. அதன்படியே இப்போது நீ என்னை அடைந்தாய், என்று விளக்கமளித்தார். இதைக்கேட்ட லட்சுமி சாந்தமடைந்தாள். பத்மாவதியை மார்போடு அணைத்துக்கொண்டு நாம் இருவரும் இனி சீனிவாசனின் மார்பில் இடம்பிடிப்போம் எனக்கூறி அவரது மார்பில் ஐக்கியமாயினர். பத்மாவதி இடது மார்பிலும் லட்சுமி வலது மார்பிலும் அமர்ந்துகொண்டனர். சீனிவாசன் லட்சுமியிடம், நான் எனது திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கியுள்ளேன். இதற்குரிய வட்டியை மட்டும் கலியுகம் வரையில் செலுத்துவதாக உறுதிமொழி பத்திரம் கொடுத்திருக்கிறேன். அந்த வட்டியை எப்படி செலுத்துவது என்கிற வழிமுறையையும் நான் உனக்கு சொல்கிறேன். என்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உன் அருள் கடாட்சம் படவேண்டும். பொதுவாகவே இங்கு வரும் அனைவருமே செல்வம் வேண்டியே வருவார்கள். அவர்களின் தகுதிக்கு ஏற்ப நீ செல்வத்தை கொடு. அந்த செல்வத்தை பெறும் பக்தர்கள் ஆணவம் காரணமாக தறிகெட்டு அலைவார்கள். ஏராளமான பாவ கர்மாக்களை செய்வார்கள். பெரும் ஆபத்துகளை சந்திப்பார்கள். அப்போது என்னை நினைப்பார்கள். நான் அவர்களது கனவில் தோன்றி, வட்டிக்காசு, தேவையில்லாமல் கையிலிருக்கும் பணம் ஆகியவற்றை எடைக்கு எடை சமர்ப்பித்தல், உண்டியலில் இடுதல் ஆகியவற்றின் மூலம் சேர்த்துவிடுமாறு கூறுவேன். நீ ஒரு ஏழைக்கு பணம் கொடுத்தால்கூட அதை அவன் தவறான வழியில் செலவிடுவான் என்றால் அவர்களிடம் முடி காணிக்கையாக பெற்றுவிடுவேன். அதில் சேரும் பணத்தை குபேரனுக்கு செலுத்திவிடுவேன்.
கலியுகம் முடியும் வரையே நமக்கு இங்கு வேலை. அதன்பிறகு அசலை அடைத்துவிட்டு நாம் வைகுண்டம் சென்றுவிடலாம். நீ இனிமேல் என் மார்பில் தங்குவதில் உனக்கு எந்த தடையும் இருக்காது. பிருகு முனிவரால் மிதிக்கப்பட்ட என் மார்பு இப்போது பவித்திரமாகிவிட்டது. ஆகையால் உன் இடத்தில் நீ தாராளமாக வசிக்கலாம், என கூறி ஆசீர்வதித்தார். பின்னர் பத்மாவதியிடம், நீயும் லட்சுமிதான். இங்கிருந்து சற்று தூரத்தில் பத்மசரோவர் என்ற ஏரி இருக்கிறது. அந்த ஏரிக்கரையில் நீ வசிப்பாயாக. அங்கு வரும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குவாயாக! உன்னை அலமேலு என்று மக்கள் அழைப்பார்கள். அலமேலு என்றால் வாரி வழங்குபவள் என பொருள். உன் இருப்பிடம் அலமேலுமங்காபுரம் என அழைக்கப்படும். இங்கே வரும் பக்தர்கள் முதலில் உன்னை தரிசித்த பிறகே என்னை தரிசிக்க வரவேண்டும் என ஆணையிடுகிறேன். உனக்காக விஸ்வகர்மா பத்மசரோவர் ஏரிக்கரையில் ஒரு கோயில் நிர்ணயித்து உள்ளார். அங்கு சென்று நீ தங்குவாயாக! என்றார். பத்மாவதியும் அவரிடம் விடைபெற்று அலமேலுமங்காபுரம் சென்றாள். கோயிலுக்குள் சென்று சிலை ரூபமானாள். சீனிவாசனும் லட்சுமியும் சேஷாசலத்தில் தொண்டைமானால் எழுப்பப்பட்ட கோயிலுக்குள் சென்று சிலை வடிவமாயினர். இத்தனை விஷயமும் வகுளாதேவிக்கு தெரியாமல் போய்விட்டது. தன் மகன் சீனிவாசனும் மருமகள் பத்மாவதியும் இன்னும் வீடு வந்து சேரவில்லையே என அவள் கவலைப்பட்டாள். தனது மூத்த மகன் கோவிந்தராஜனிடம் சென்று, மகனே! சீனிவாசனையும் பத்மாவதியையும் அகத்தியரின் ஆஸ்ரமத்தில் விட்டு வந்தோமே! அவர்களை இதுவரை காணவில்லையே. ஆறு மாதங்கள் கடந்தும் ஏன் வராமல் இருக்கிறார்கள்? அவன் எங்கிருக்கிறான் என தேடிப் பிடித்து வா, என்றாள். கோவிந்தராஜன் அவளிடம் நடந்த விஷயங்களை எல்லாம் விளக்கினார். உன் மகன் சிலை வடிவமாகி விட்டான். பத்மாவதி பத்மசரோவர் கரைக்கு சென்றுவிட்டாள். லட்சுமிதேவி உன் மகனின் மார்பில் அடைக்கலம் புகுந்துவிட்டாள். நீ நம் வீட்டின் அருகில் உள்ள ஆனந்த நிலையத்திற்கு செல். அதன்கீழே உன் மகன் சிலையாக இருக்கிறான், என்றார். பதறிப்போன வகுளாதேவி ஆனந்த நிலையத் திற்குள் சென்று சிலையாக நின்ற தன் மகனைக்கண்டு கதறிக் கண்ணீர் வடித்தாள்.


ஏழுமலையான் பகுதி-25



அப்போது சிலையினுள் இருந்து சத்தம் எழுந்தது. அம்மா ! தாங்கள் என் நிலைக்காக கவலை கொள்ளக் கூடாது. லட்சுமியைத் தேடி பூலோகம் வந்த என் செயல்பாடுகள் முடிந்து விட்டன. இனி என் அண்ணா கோவிந்தராஜன் இங்குள்ள நிதிநிலவரங்களைக் கவனித்துக் கொள்வார். நீ துளசிமாலையாக மாறி, என் கழுத்தை அலங்கரிப்பாய். எனக்கு இங்கே தினமும் துளசி அர்ச்சனை நடக்கும், என்றார். தன் மகனுடன் துளசிமாலையின் வடிவில் வசிக்கப்போவது கண்டு வகுளாதேவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. சற்றுநேரத்தில் அவள் துளசிமாலையாகி சீனிவாசனின் கழுத்தை அலங்கரித்தாள். கோவிந்தராஜன் சீனிவாசனிடம், தம்பி ! உனக்கு குவியும் காணிக்கையை அளந்து அளந்து என் கை சலித்து விட்டது. எவ்வளவு அளந்தாலும் குறைந்த பாடில்லை எனக்கு ஓய்வுதேவை. நான் என்ன செய்யட்டும் ? என்றார். அண்ணா ! நீங்கள் அளந்தாலும் அளக்காவிட்டாலும் தங்கள் கைகளில் தனரேகை ஓடுவதால் இங்கே செல்வம் குறையப் போவதில்லை. தாங்கள் இனி அளக்கும் பணியைச் செய்ய வேண்டாம். இந்த மலையடிவாரத்துக்குச் சென்று ஓய்வெடுங்கள். தங்களை வணங்குவோர் எல்லாரும் எல்லா செல்வங்களையும் அடைய தாங்கள் கருணை செய்ய வேண்டும், என்றார் சீனிவாசன். கோவிந்தராஜனும் மலையடிவாரத்துக்கு வந்து ஓரிடத்தில் மரக்காலை தலைக்கு வைத்து சயனித்து விட்டார். அந்தக் கோயில் தான் திருப்பதியில் தற்போதுள்ள கோவிந்தராஜப் பெருமாள் கோயிலாகும். ஆரம்பத்தில் இவ்வூர் கோவிந்தராஜ பட்டணம் என்று தான் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் தான் திருப்பதி என மாறியது. இவ்வாறாக சீனிவாசனின் குடும்பத்தினர் ஒவ்வொரு இடத்தில் தங்க, பக்தர்கள் பலர் அவரைத் தரிசிக்க குவிந்த வண்ணம் இருந்தனர். ஒருமுறை, வடநாட்டைச் சேர்ந்த பாவாஜி என்ற பக்தர் திருமலைக்கு வந்தார். சீனிவாசனை உளம் குளிர சேவித்த அவருக்கு அவ்வூரை விட்டு செல்ல மனமில்லை. அங்கேயே ஓரிடத்தில் ஆஸ்ரமம் அமைத்து தங்கிவிட்டார். தினமும் புஷ்கரணியில் மூன்று முறை குளியல், ஏழுமலையானின் தரிசனம் என ஏக அமர்க்களமாக பக்தி செலுத்தினார்.
பக்தன் பாவாஜியை பாலாஜிக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஒரு நாள், பாவாஜி ஆஸ்ரமத்தில் அமர்ந்திருந்த போது, கட்டம் வரைந்து அதன் முன் அமர்ந்து, மறுபக்கம் ஏழுமலையான் அமர்ந்திருப்பது போல பாவனை செய்துகொண்டு, சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பாவாஜி முன்னால் பேரொளி தோன்றியது. அது கண்ணைப் பறித்ததால் பாவாஜியால் அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவ்விடத்தை விட்டு எழுந்தார். படிப்படியாக ஒளி குறைந்ததும், அங்கே சீனிவாசனின் திவ்யமான சிலை ஒன்று இருப்பதைப் பார்த்தார். அவருக்கு பெரும் ஆனந்தம். சீனிவாசா ! இது என்ன அதிசயம் ! என்னைத் தேடி நீ வந்தாயா ! அதிருக்கட்டும் ! சிலை வடிவில் நீ இங்கு வந்துள்ளதன் மூலம் நான் உனக்கு தினமும் பூஜை செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால், ஏன் நேரில் காட்சி தரவில்லை. உனக்காக இவ்வளவு நேரமும் சொக்கட்டான் ஆடினேனே ! ஒருநாளாவது என்னோடு நீ விளையாட வரக்கூடாதா ? என்று உளமுருகி கண்ணீர் வடித்தார். அப்போது, அந்தச் சிலையில் இருந்து சீனிவாசன் வெளிப்பட்டார். பாவாஜி ! என்று அழைத்தார். பாவாஜிக்கு தன் கண்களை நம்பவே முடியவில்லை. ஆக, சாட்சாத் பரப்பிரம்மமான நாராயணன், சீனிவாசனின் வடிவில் அங்கே இருந்தார். வா, பாவாஜி ! சொக்கட்டான் ஆடலாம், என்றார். பாவாஜி அவரது பாதங்களில் விழுந்து ஆசிபெற்று, உன்னைப் பார்த்ததன் மூலம் பிறந்த பயனை அடைந்தேன். வா விளையாடலாம், என்று அவரது கையைப் பிடித்து அமர வைத்தார். இருவரும் விளையாடினர். பக்தன் தோல்வியடைவதை ஆண்டவன் என்றுமே விரும்பமாட்டான். சீனிவாசன், தன் நண்பனுக்காக ஆடத்தெரியாதவர் போல நடித்து, ஆட்டத்தில் கோட்டை விட்டார். பாவாஜி ! நீ இந்த விளையாட்டில் மகா சமர்த்தன். உன் அளவுக்கு என்னால் விளையாட முடியாதப்பா, என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்ட சீனிவாசனிடம் பாவாஜி, பகவானே ! தாங்கள் தினமும் இந்த ஆஸ்ரமத்துக்கு வர வேண்டும். உங்களோடு நான் சொக்கட்டான் ஆடி மகிழ வேண்டும் என்றார்.
சீனிவாசனும் ஒப்புக்கொண்டு, தினமும் பாவாஜியின் இல்லம் வர ஆரம்பித்தார். இவ்வாறாக நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர் அவர்கள். பக்தர்களைச் சோதித்துப் பார்ப்பதில் சீனிவாசனுக்கு அலாதிப்ரியம். ஒருநாள், சீனிவாசன் விளையாட வந்தார். தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றி அங்கேயே வைத்துவிட்டு சென்று விட்டார். பகவான் மாலையைக் கழற்றி வைத்து விட்டு சென்றுவிட்டாரே, இதைக் கொண்டு போய் கொடுத்து விடலாம் என எண்ணிய பாவாஜி மாலையுடன் திருமலையிலுள்ள சீனிவாசனின் கோயிலுக்குள் சென்றார். அங்கே ஒரே களேபரமாக இருந்தது. ஐயையோ ! சீனிவானின் கழுத்தில் இருந்த மாலையைக் காணவில்லையே ! யார் திருடினார்களோ என்று அர்ச்சகர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். அதிகாரி ஒருவர் கையைப் பிசைந்தபடி நின்றார். அப்போது, பாவாஜி காணாமல் போன மாலையுடன் கோயில் பக்கமாக வர, பிடியுங்கள் அவனை ! அந்த திருடனின் கையில் சுவாமியின் மாலை இருக்கிறது, என்று கத்தினர் அர்ச்சகர்கள். அங்கே நின்றவர்கள் ஓடிச் சென்று பாவாஜியைப் பிடித்து மாலையைக் கைப்பற்றினர். அத்துடன் அவரை நையப் புடைத்தார்கள். பாவாஜி கதறினார். பாலாஜி! சீனிவாசா ! நான் திருடனா ! என் இடத்துக்கு வந்து என்னோடு சொக்கட்டான் ஆடியது இப்படி என்னை சோதிக்கத்தானா ? என் உயிரை எடுத்துக்கொள். ஆனால், பிறர் பொருளைக் கவர்ந்தவன் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக்கி விடாதே, என்று ஓங்கி குரல் கொடுத்தார். பகவான் இந்த பாமரனோடு சொக்கட்டான் ஆட வந்தாராம்... ஆஹ்ஹ்ஹா... என்று ஏளனச் சிரிப்பு சிரித்தனர் அங்கிருந்தோர். இந்தப் பொய்யனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் இழுத்துச் செல்லுங்கள், என்று சிலர் குரல் கொடுக்க அவர்கள் பாவாஜியை இழுத்துச் சென்றனர்.


ஏழுமலையான் பகுதி-26



மன்னர் கிருஷ்ணதேவராயர் மகாநீதிமான். எதையும் எளிதில் விசாரிக்காமல் செய்யமாட்டார். அது மட்டுமல்ல, அவரும் பெருமாள் பக்தர். பெருமாளின் திவ்யலீலைகளை அவர் அறிவார். தன் முன்னால் நிறுத்தப்பட்ட பாவாஜியின் முகத்தைப் பார்த்த அவருக்கு, இந்த மனிதன் தவறு செய்திருக்க மாட்டார் என்றே தோன்றியது. இருப்பினும், ஏழுமலையானின் ஆரத்துடன் பிடிபட்டதால் விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார். பாவாஜி! உம் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதுபற்றி என்ன சொல்கிறீர்! என்று அதட்டலுடன் கேட்டார். அரசே! இது சுத்தப்பொய். பெருமாள் என்னுடன் தினமும் சொக்கட்டான் ஆட வருவார் என்பது நிஜம். அவரே இந்த மாலையை என் ஆஸ்ரமத்தில் கழற்றி வைத்து விட்டு வந்துவிட்டார். அதை அவரிடம் சேர்க்கவே வந்தேன். இதற்கு அவரும் நானும் மட்டுமே சாட்சி. அந்த பரமாத்மாவே வந்து சாட்சி சொன்னால் தான் உண்டு. தாங்கள் எனக்கு மரணதண்டனை விதித்தாலும் அதற்காக நான் கலங்கமாட்டேன். ஏனெனில், மரணம் என்றும் நிச்சயமானது. இறைவன் குறிப்பிட்ட நாளில் அது வந்தே தீரும். ஆனால், கெட்ட பெயருடன் நான் மரணமடைந்து விட்டால், என் மீதான களங்கம் உலகம் உள்ளளவும் பேசப்படும். அதை நினைத்தே கலங்குகிறேன், என்றார். பாவாஜியின் பேச்சு தேவராயருக்கு நம்பிக்கையைத் தந்தது. சரி, பாவாஜி! நீர் பாலாஜியின் நண்பர் என்பது உண்மையானால் உமக்கு ஒரு பரீட்சை வைக்கிறேன். ஒரு வண்டி கரும்பை நிலவறையில் வைத்திருக்கிறேன். நீர் சொல்வது உண்மையானால், அவற்றை நீ முழுமையாகத் தின்று விட வேண்டும். புரிகிறதா? என்று சொல்லி விட்டார். ஏவலர்கள் பாவாஜியை நிலவறைக்கு இழுத்துச் சென்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரும்புகளை உடைய வண்டியின் முன்னால் அமர வைத்து விட்டனர்.
ஆயிரம் கரும்புகளை வரிசையாக ஒருவனால் எப்படி உண்ண முடியும்? ஒரு துண்டு கரும்பைத் தின்பதற்குள்ளேயே சலிப்பு தட்டிவிடும். இது நடக்கிற காரியமா? பாவாஜி கண்ணீர் வடித்தபடியே, பரந்தாமா! உன் நண்பனை, உன் பக்தனை நீ நடத்தும் விதம் இதுதானா? எந்தப் பாவமும் செய்யாத என்னை சிக்கலில் மாட்டிவிட்டாயே! இது நாடகமா? நிஜமா? விரைவில் வா! உன் மீது பாரத்தைப் போட்டு விட்டேன். என் மீதான களங்கத்தைப் போக்கு, என்றார். அழுதபடியே அவர் தூங்கியே விட்டார். அப்போது ஏழுமலையான் ஒரு யானையின் வடிவில் லவறைக்குள் வந்தார். விடிவதற்குள் ஆயிரம் கரும்புகளையும் தின்று தீர்த்தார். அத்துடன் தும்பிக்கையை நீட்டி பாவாஜியை எழுப்பி ஆசிர்வாதம் செய்தார். பின்னர் பிளிறினார். நிலவறையில் யானையின் பிளிறல் சப்தம் கேட்டதும், காவலர்கள் ஓடி வந்து பார்த்தனர். கரும்பு முழுமையாக காலியாகி விட்டிருந்தது. குறுகிய வாசல் கொண்ட அந்த நிலவறைக்குள் யானை எப்படி புகுந்தது? இதென்ன ஆச்சரியம், என அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். உடனடியாக கிருஷ்ண தேவராயரிடம் சென்று, அரசே! கேளுங்கள். பாவாஜியை அடைத் திருந்த நிலவறைக்குள் ஒரு யானை எப்படியோ புகுந்திருக்கிறது. அது எப்படி உள்ளே வந்தது என்பதை நாங்கள் அறியமாட்டோம். ஆனால், நிகழ்ந்திருப்பது நிச்சயமாக அதிசயம். அங்கிருந்த ஒரு வண்டி கரும்பும் காலியாகி விட்டது, என்றனர். தேவராயர் அவசர அவசரமாக நிலவறைக்குள் வந்தார். பாவாஜியை அணைத்துக் கொண்டார். பாவாஜி! தாங்கள் சொன்னது நிஜமே! உங்களை விட உத்தமர் உலகில் இல்லை. அந்த சீனிவாசனே யானையாக வந்து கரும்புகளை உங்களுக்காக தின்றிருக்கிறார் என்றால், உங்கள் இருவரிடையே உள்ள நட்பை என்னவென்று புகழ்வேன்! எங்களை மன்னிக்க வேண்டும். இனி, நீங்களே இந்தக் கோயிலின் அதிகாரி. கை சுத்தமானவர்களே கோயிலில் அதிகாரியாக இருக்க தகுதியுடையவர்கள், என்றார். பாவாஜியும் அரசரின் வேண்டுகோளை ஏற்று, ஏழுமலையான் கோயிலின் நிர்வாக அதிகாரியானார். ஏழுமலையானுக்கு தினமும் பணிவிடை செய்தார். அவரது நினைவாக திருமலையில் கோயிலுக்கு தென்புறம் ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் அந்த மண்டபத்தை தரிசித்து செல்கிறார்கள். மலை உச்சியில் பாலாஜியும், பாவாஜியும் விளையாடிய மண்டபம் இருக்கிறது.
ஏழுமலையானை எல்லாருமே பணக்கார சுவாமி என்பர். ஆனால், அவர் கடன்காரர் மட்டுமல்ல! எளிமையையே அவர் விரும்புவார். திருப்பதி அருகிலுள்ள சுத்தவாகம் என்ற கிராமம் உள்ளது. அங்கு தன் மனைவி மாலினியுடன் வசித்த பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி, பானைகள் செய்து விற்று வந்தார். அவர் ஏழுமலையானின் தீவிர பக்தர். மண்ணால் செய்யப்பட்ட புஷ்பங்களைத் தயாரித்து, தன் வீட்டில் இருந்த வெங்கடாசலபதி சிலைக்கு அணிவித்து வழிபட்டு வந்தார். அவரது நிஜ பக்தியைப் பாராட்டும் விதத்தில் ஏழுமலையான் அந்த மண்சிலையில் பிரசன்னமானார். பீமனே! உன் பக்தி அபரிமிதமானது. என் கோயிலில் இனி எனக்கு மண்பாண்டத்திலேயே நைவேத்யம் செய்ய வேண்டும், என்று அருளியதுடன் தேவலோகத்தில் இருந்து விமானம் வரவழைத்து அந்த தம்பதியரை வைகுண்டத்தில் தங்க அனுப்பி வைத்தார். ஏழுமலையான் குடியிருக்கும் மலையும் சிறப்பு மிக்கது. ஆதிசேஷன் வடிவத்தில் இம்மலை இருப்பதால் சேஷாசலம் என்றும், அந்த மலையில் வேதங்கள் இருப்பதால் வேதாசலம் என்றும், பூலோகத்திற்கு இந்த மலையைக் கருடன் கொண்டு வந்ததால் கருடாசலம் என்றும், விருக்ஷன் என்ற அசுரன் இங்கு மோட்சம் பெற்றதால் விருக்ஷõத்ரி என்றும், அஞ்சனாதேவி தவம் செய்து அனுமனைப் பெற்றெடுத்த தலம் என்பதால் அஞ்சனாத்ரி என்றும், ஆதிசேஷனும். வாயுபகவானும் தங்கள் பலத்தை பரிசோதிக்க தேர்ந்தெடுத்த மலை என்பதால் ஆனந்தகிரி என்றும், பாவங்களைப் போக்கும் மலை என்பதால் வேங்கடாசலம் என்றும் அழைக்கப்படுகிறது. திருப்பதி பெருமாளை வணங்குபவர்களின் பாவம் நீங்கும். இந்த சரிதத்தைப் படித்தவர்களின் இல்லங்களில் செல்வம் பெருகும். ஓம் நமோ நாராயணாய! கோவிந்தனே சரணம்!
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக