வெள்ளி, 25 நவம்பர், 2011

நாரதர் ( இரண்டாம் பாகம் )


ராதே கிருஷ்ணா 25-11-2011

நாரதர் ( இரண்டாம் பாகம் )

நாரதர் பகுதி-15 


நாரத முனிவரே! தாங்கள் சொல்வது எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது. உலகில் பாவம் செய்து இறந்த ஒருவனை நரகத்திற்கு எடுத்து செல்கிறீர். புண்ணியம் செய்தவர்கள் இங்கே வருவதே இல்லை. அவர்களை நான் பார்ப்பதும் இல்லை. அவர்கள் நேராக சிவலோகம் அடைகிறார்கள். தீயவர்களை நரகத்தில் அடைத்துவைத்து அவர்களை வேதனைப்படுத்தும் செயலை செய்யும்படி இறைவனே என்னிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். அவர்களை விடுதலை செய்யுங்கள் என சொன்னால் அது எப்படி நியாயமாகும்? அகத்தியர், கவுதமர், வசிஷ்டர் போன்ற உயர்ந்த ரிஷிகள்கூட இதுபோன்று ஒரு கோரிக்கை வைத்ததில்லை. ஆனால் சாநந்த முனிவர் இப்படி ஒரு முயற்சி எடுக்கிறார் என்றால் ஆச்சரியப்படாமல் என்ன செய்ய முடியும்? என்றான் எமதர்மன். நாரதரும் அவன் சொல்வதை ஆமோதித்தார். எமன் தொடர்ந்தான். சாநந்த முனிவர் தாராளமாக இங்கு வரட்டும். என்னிடம் பேசட்டும். நான் நடுநிலை தவறாதவன். எந்த முனிவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. இறைவனின் கட்டளைப்படியே இங்கு அனைத்தும் நடந்துகொண்டிருக்கிறது. தீயவர்கள் விடுவிக்கப்பட்டால் பூலோகத்தின் நிலை என்னாகும்? இதை நான் அவருக்கு உணர்த்துவேன், என அகந்தையுடன் சொன்னான். நாரத மகரிஷிக்கு எமனின் தற்பெருமை நன்றாகவே புரிந்தது. சாநந்தர் போன்ற ரிஷிகளிடம் இவனை மாட்டி வைத்தால்தான் தன் ஆணவத்தை விடுவான் என்பதை புரிந்துகொண்ட அவர், எமதர்மனே! உன்னிடம் சொல்வதை சொல்லிவிட்டேன். சாநந்தர் வந்தால் அவரை விடாதே. கேள்வி மேல் கேள்வி கேள். உன்னை வெல்ல இந்த உலகில் யாருமே இல்லை. யாரைப்பற்றியும் கவலைப்படாதே. இறைவனின் பணியாளனான நீ யாருக்கு அஞ்ச வேண்டும்? என்று நன்றாக தூண்டிவிட்டு சென்றுவிட்டார். நாரதர் தன்னைக் கேலி செய்கிறார் என்பது புரியாமல், புகழ்வதாக நினைத்துக்கொண்ட எமதர்மன் சாநந்தரின் வருகைக்காக காத்திருந்தான்.
சாநந்தரும் வந்துசேர்ந்தார். அவரை எமன் வரவேற்றான். சாநந்தர் எமனுடன் நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தார். அவனை வாழ்த்தினார். பணிகளை பாராட்டினார். அன்பு மிக்கவனே! நான் வந்த விஷயம் பற்றி நீ கேட்கவே இல்லையே! என்றார். எமனும் மிகப் பணிவுள்ளவன் போல் நடித்து, மகரிஷியே! தாங்கள் என்ன காரணமாக இங்கு வந்தீர்கள் என்பதை என்னிடம் விபரமாகச் சொல்லுங்கள், என்றார். சாநந்தர் அவனிடம், எமதர்மா! நான் உன் ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன் என்றார். எமதர்மனே அவரை அழைத்துச் சென்றான். சாநந்தர் எமலோகத்தை முற்றிலுமாக சுற்றிப்பார்த்தார். எல்லா இடங்களையும் காட்டிய எமதர்மன் நரகத்தை மட்டும் காட்டவில்லை. அங்கே போகவேண்டும் என சாநந்தர் சொன்னார். எமன் அவரிடம், முனிவரே! தாங்கள் அங்கு செல்ல வேண்டாம். தவத்தில் உயர்ந்த உங்களின் பாதம் அந்த கொடியவர்கள் இருக்கும் இடத்தில் படக்கூடாது. இத்துடன் திரும்பிவிடுவோம். அங்கே இருப்பவர்கள் அறச்சிந்தனையே இல்லாதவர்கள். கொலைகாரர்கள், மிருகத்தனமான செயல்களில் ஈடுபட்டவர்கள். அவர்கள் அருகேயே நீங்கள் செல்லவேண்டாம். அவர்கள் கடவுளை மனதால்கூட நினைக்காதவர்கள். பூலோகத்தில் தாங்கள் செய்த கொடுமைக்கேற்ற தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க வேண்டுமென நீங்கள் மனதில்கூட நினைக்காதீர்கள் என பணிவோடு சொன்னான். எமதர்மனே! நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் இறைவன் என்பவன் நல்லவனுக்கும் தீயவனுக்கும் பொதுவானவன்தான். ஒரு தரப்பினர் இன்பத்தையும், மற்றொரு தரப்பினர் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டுமென அவன் நினைக்கவே மாட்டான். இந்த உலகில் கெட்டவர்களுக்காகவும் பிரார்த்திக்க ஒருவன் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு சிவபக்தன். நான் அந்த கெட்டவர்களுக்காக நரகத்தில் இருந்தபடியே சிவபெருமானை பிரார்த்திக்கப் போகிறேன். என்னை நீ அனுமதித்துதான் ஆகவேண்டும் என அடம்பிடித்தார். எமதர்மனோ, அவரை அங்கு அனுப்ப மறுத்துவிட்டான்.
சாநந்தர் நரகத்தின் வாசலில் அப்படியே அமர்ந்துவிட்டார். தியானத்தில் மூழ்கினார். சிவாயநம என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை கோடி முறை தியானம் செய்தார். இப்படியும் இந்த உலகில் ஒரு நல்லவரா என அகம் மகிழ்ந்த சிவபெருமான், எமலோகத்திற்கே வந்துவிட்டார். சாநந்தரை எழுப்பி ஆசீர்வதித்தார். எமதர்மன் அவரது காலில் விழுந்து வணங்கினான். சாநந்தரின் கோரிக்கையை நிறைவேற்றும்படியும், கெட்டவர்களும் திருந்தி நடக்க தன் லோகத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறி, நரகவாசிகள் அனைவரையும் அழைத்துக்கொண்டு சிவலோகம் போய்ச் சேர்ந்தார். இப்படியாக நாரதரின் கலகத்தால் பாவம் செய்து நரகம் அடைந்தவர்கள் கூட சிவபெருமானுடன் ஐக்கியமாயினர். எமலோகத்தில் இருந்து புறப்பட்ட நாரதர், சித்ரகேது என அழைக்கப்படும் மன்னனின் அரண்மனை நோக்கி வந்துகொண்டிருந்தார். மன்னன் சித்ரகேதுவுக்கு நீண்ட நாளாக குழந்தை இல்லாமல் இருந்தது. அப்போது ஆங்கிரஸ் என்ற முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவரது ஆசியுடன் புத்திரகாமேஷ்டி யாகத்தை சித்ரகேது செய்தான். இதன் விளைவாக அவனது மூத்த மனைவி ஹிருதத்துதி என்பவளுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை இல்லாமல் இருந்த காரணத்தால், பல பெண்களை  சித்ரகேது திருமணம் செய்திருந்தான். அவர்களுக்கு ஹிருதத்துதி மீது பொறாமை ஏற்பட்டது. தங்களுக்கு குழந்தை இல்லாமல் ஹிருதத்துதிக்கு மட்டும் குழந்தை இருக்கிறதே என்பதே பொறாமைக்கு காரணம். ஒரு நாள் ஹிருதத்துதியின் சக்களத்திகளில் ஒருத்தி யாரும் அறியாமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் சென்றாள்.


நாரதர் பகுதி-16 


அவள் அந்தக் குழந்தையை காட்டில் வீசியெறியும் முன், ஒருவேளை குழந்தை பிழைத்து விட்டால் என்னாவது என்ற எண்ணத்தில், கையோடு கொண்டு சென்றிருந்த விஷப்பாலைக் கொடுத்து மிருகங்கள் நிறைந்த இடத்தில் போட்டு விட்டாள். சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது. சித்ரகேதுவும், கிருததுத்தியும் மறுநாள் எழுந்தனர். தொட்டிலில் படுத்திருந்த குழந்தையைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர். அரண்மனையெங்கும் தேடினர். குழந்தையைக் கொன்றவள் உட்பட எல்லோருமே அதனைத் தேடுவது போல நடித்தனர். காவலர்கள் பல இடங்களில் தேடினர். காட்டுக்குள் சென்ற ஒரு பிரிவினர் குழந்தை அங்கே இறந்து கிடந்ததைக் கண்டு அரண்மனைக்கு எடுத்து வந்தனர். அலறித்துடித்தான் சித்ரகேது. தனக்கு பிறந்த ஒரே வாரிசும் அழிந்து விட்டதால் நாட்டையும், வீட்டையும் இழந்து விட்டதாகவே கருதினான். பெற்றவள் மனம் என்ன பாடுபடும் என்ன சொல்லவே வேண்டாம். இந்த நேரத்தில் தான் நாரதர் அங்கு வந்து சேர்ந்தார். நாரதர் தன்னுடன் அங்கிரா என்ற முனிவரையும் அழைத்து வந்திருந்தார். சுவாமி! என கதறியபடியே அவரது பாதங்களில் விழுந்து அழுதான் சித்ரகேது. நிலைமையைப் புரிந்து கொண்ட அவர்கள் சித்ரகேதுவுக்கு ஆறுதல் கூறினர். அங்கிரா முனிவர் சித்ரகேதுவிடம், மன்னா! இறந்தவர்கள் வீட்டில் அழுகை சத்தத்துக்கு இடமே இருக்கக்கூடாது. காரணம், நீயும் ஒருநாள் இறக்கத்தான் போகிறாய். இதை உன் பிள்ளை என்கிறாயே! அப்படி உனக்கு பிள்ளையாக பிறக்கும் முன் இது எங்கிருந்ததுசொல்? என்றார். மன்னன் ஏதும் சொல்லத் தோன்றாமல் நின்றான். பார்த்தாயா, சித்ரகேது! இந்த கேள்விக்கு இங்கிருக்கும் எவராலும் பதில் சொல்ல முடியாது.
நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள். எங்கிருந்து வந்தோமோ, அங்கேயே செல்கிறோம். மகன், மகள், மனைவி, கணவன் என்ற உறவெல்லாம் வெறும் மாயை தான். இவர்கள் யாருடனாவது நீ சேர்ந்து வந்தாயா? அல்லது இவர்களையும் அழைத்துக் கொண்டு போகப் போகிறாயா? தனியாகவே வந்தோம்; தனியாகவே செல்வோம். மரணம் எந்த வயதில் நிகழ்ந்தாலும், அது கண்டு கலங்கக்கூடாது. மனதைத் தேற்றிக் கொண்டு, உன் பணிகளில் ஈடுபடு, என்றார். மன்னனின் மனம் சமாதானம் ஆகவேயில்லை. புலம்பித்தவித்தான். நாரதர் மன்னனை அழைத்தார். மன்னா! அங்கிரா முனிவர் உலக நடப்பை எடுத்துச் சொன்னார். அது கேட்பதற்கு கசப்பாயிருந்தாலும், நிஜம் அது தான். இருந்தாலும், இவ்வளவு தூரம் சொல்லியும் நீ கேளாததால், உன் குழந்தைக்கு நானே உயிர் கொடுக்கிறேன். மீண்டும் நீ வளர்த்து வா, என்றார். மன்னனும், கிருதத்துதியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கிருதத்துதியின் மற்ற சகோதரிகளுக்கு வியர்த்து விட்டது. எல்லாரும் வியப்புடன் நின்றனர். அங்கு குவிந்திருந்த நாட்டு மக்கள் தங்கள் இளவரசன் மரணத்தை வென்றவனாகப் போகிறான் என்ற மகிழ்ச்சியில் ஆனந்தக்கண்ணீர் பெருக நின்றனர். அந்த பதைபதைப்பான நேரத்தில், நாரதர் குழந்தையின் அருகில் சென்றார். கண்மூடி சில மந்திரங்களைச் சொன்னார். என்ன அதிசயம்! குழந்தை கலகலனெ சிரித்தபடி  விழித்தது. மன்னன் குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டான். அப்போது மன்னா... மன்னா... மன்னா... என்றும், தாயே! தாயே! தாயே... என்றும், நாட்டு மக்களே... நாட்டு மக்களே...நாட்டு மக்களே! என்றும் இனிய குரல் மும்முறை வெளிப்பட்டது. எல்லோரும் சுற்றுமுற்றும் பார்த்தனர்.
கேட்ட குரல் குழந்தையின் குரலாக இருக்கவே, மன்னன் குழந்தையைப் பார்த்தான். குழந்தை தான் பேசியது. நாரதர் அந்தக் குழந்தையிடம், அன்புக் குழந்தையே! நீ ஏன் இவ்வளவு சீக்கிரத்தில் உயிர்விட்டாய் என உன்னைப் பெற்றவர்கள் வருந்துகின்றனர். நாட்டு மக்கள் வருந்துகின்றனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்த நீ இன்னும் கொஞ்சகாலம் இங்கே வாழ்ந்தால் என்ன? என்றார். குழந்தை கலகலவென சிரித்தது. மகரிஷி! இந்தப் பிறவியால் எனக்கு என்ன லாபம்? இதோ! இந்த தாய் என்னைப் பெற்றாள். மற்ற தாய்மார்களெல்லாம் என்னைக் கொன்றனர். ஏன் இது ஏற்பட்டது? பொறாமையால் தானே! இன்னும் நான் அரசனாக வேண்டும்.  அப்போது, பகைவர்கள் என்னைப் பொறாமையுடன் பார்ப்பார்கள். இதோ நிற்கும் என் தந்தை பல போர்க்களங்களுக்குச் சென்றார்.  பலரின் தலையைக் கொய்து சிரித்தார். அப்போது அந்த எதிரிகளின் மனைவிமார் அழுதனர். பலர் தீக்குளித்தனர்.  அந்த மரணங்களைக் கண்டு சந்தோஷப்பட்ட இவர், இப்போது என் மரணத்துக்காக ஏன் அழுகிறார்? மற்றவர் துன்பத்தில் இன்பம் காண்போர், குறைந்த நாட்களில் தாங்களும் துக்கத்தை அடைவர். இந்த நியதி இவருக்கு ஏன் புரியவில்லை? அவரவர் வினைப்பயன்படியே அனைத்தும் நடக்கிறது. மேலும் பிறந்து பிறந்து மறையும் வாழ்க்கை எத்தனை நாளுக்கு தான்? நான் இன்னும் சிலகாலம் இவர்களோடு இன்புற்று இருந்தாலும், என்றாவது ஒருநாள் மறையத்தானே போகிறேன்? அது இன்றே நிகழ்ந்ததில் என்ன வித்தியாசம் இருந்து விடப் போகிறது? கடற்கரை மணலை விட அதிக எண்ணிக்கையில் பிறவிகள் வருகின்றன. அவற்றையெல்லாம் வேகமாக முடித்து விட்டு திருமாலின் பாதங்களில் நிரந்தரமாக தங்கிவிடுவதே மேலானது, என்றது.



நாரதர் பகுதி-17



குழந்தையின் சொல்கேட்டு சித்ர கேது மனம் திருந்தினான். வாழ்க்கை என்றால் இன்னதென்று இப்போது அவனுக்கு வெகுவாகவே விளங்கி விட்டது. அவன் நாட்டை விட்டு தவமிருக்க போய்விட்டான். வெகுகாலம் தவமிருந்து அவனும் பிறவாநிலை பெற்றான். அவனுக்கு மோட்சம் பெற்றுக் கொடுத்த திருப்தியுடன், தன் தந்தை நான்முகனின் இல்லத்திற்குச் சென்றார் நாரதர். பிரம்மா அங்கே கவலையுடன் இருந்தார். அருகே, மனைவி கலைவாணி கோபத்தில் இருந்தாள். அம்மா! தந்தை கவலையுடன் இருக்கிறார். அவரது கவலைக்கு காரணம் உங்கள் கோபம் என்பதும் புரிகிறது. தாய் கோபமாக இருக்கும் போது, தந்தை கவலைப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பது உலக நியதியாயினும், இது நம் வீட்டு பிரச்னை. என்னிடம் சொன்னால், தீர்த்து வைப்பேன் இல்லையா? என்றார் அப்பாவி பிள்ளை போல! சரஸ்வதிக்கு கோபம் இன்னும் அதிகமானது. அடேய்! நீ என் பிள்ளையாயிருந்தாலும், ஊரில் உள்ளவர்கள் யார் வீட்டிலாவது நல்ல பிள்ளை என பெயர் வாங்கியிருக்கிறாயா? எங்கு போனாலும் கலகம், சிண்டுமுடிப்பது... அது சரி...தகப்பன் ஒழுங்காக இருந்தால் தானே பிள்ளையான நீ ஒழுங்காக இருப்பாய். எனக்கு கட்டியவரும் சரியில்லை, பிள்ளையும் சரியில்லை. அந்த சிவனிடம் சொல்லித்தான் எனக்கு நல்ல விமோசனம் வாங்க வேண்டும், என்றாள் சரஸ்வதி.நல்ல பிள்ளை போல் தலை குனிந்து, அம்மா திட்டுவதைக் கேட்டு கொண்டிருந்த நாரதர், அம்மா! நானே எப்போதாவது ஒருநாள் தான் இந்தப்பக்கமே தலைகாட்டுகிறேன். அப்படி வரும் நாளிலும், உங்களிடம் திட்டு தான் வாங்க வேண்டுமா? தந்தையின் மீது தவறு என்றால், அவரைத்தானே நீங்கள் திட்ட வேண்டும். நான் ஒன்றுமறியா சிறுவன்.  உங்கள் கையால் ஒருவேளை உணவு சாப்பிட வந்தேன். நீங்களோ என்னையும் திட்டுகிறீர்கள்? என்று கோபிப்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். மகனைத் தேற்றினாள் சரஸ்வதி.
நாரதா! உன் தந்தை தகாத காரியம் ஒன்றை இரண்டாவது முறையாகச் செய்துள்ளார். ஒருசமயம் என்னைப் படைத்த அவர், என்னையே விரும்பி கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். அதற்காக சிவபெருமானிடம் தண்டனையும் பெற்றார். இன்னும் அவர் திருந்தவில்லை.... என்ற சரஸ்வதியை இடைமறித்த நாரதர், இப்போதும் இன்னொருத்தி மீது கைவைத்து விட்டாரோ? என்றார். சரியாகச் சொன்னாய் நாரதா, சே...சொல்லவே நா கூசுகிறது. ஒரு பெண்ணான நான், அதிலும் கலைவாணியாக இருந்து உலகத்தோர் வாயில் நல்லதையே பேச வைக்க வேண்டும் என்பதைத் தொழிலாகக் கொண்ட நான், இவர் செய்த அநியாயத்தை எப்படி சொல்ல முடியும். அவரிடமே நீ கேட்டுக் கொள், என்று சொல்லி விட்டு கண்ணீர் பொங்க தன் இடத்திற்குப் போய் விட்டாள். நாரதர் தந்தையிடம் சென்றார். மகனைப் பார்த்ததும் தலை குனிந்த தந்தை, மகனே! உலகத்துக்கு உதாரணமாக இருக்க வேண்டிய நான், அவ்வப்போது மதிமயங்கி விடுகிறேன். நான் சொல்வதைக் கேள். என் பக்கம் நியாயமிருந்தால், எனக்காக உன் தாயிடம் பேசி அவளது கோபத்தைப் போக்கு, என்றார். நாரதரும் தந்தை சொல்வதைக் கேட்பதற்காக ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்தார். நாரதா! தேவலோகத்தில் ரம்பை என்ற ஒருத்தி இருக்கிறாளே தெரியுமா? ஓ... அவள் தான் இதற்கு காரணமா? அவள் இந்திரனுக்காக படைக்கப்பட்டவள். இந்திரசபையின் நாட்டிய ராணி. நான் கூட இந்திரலோகம் செல்லும் சமயங்களில் அவளது நாட்டியத்தைப் பார்த்திருக்கிறேன்.  முற்றும் துறந்தவன் என்பதால் அவளது ஆடலை ரசித்திருக்கிறேன், அவளை ரசித்து சிவ துவேஷத்துக்கும், இந்திரனின் கோபத்துக்கும் ஆளானதில்லை, என்று குத்தலாகப் பதிலளித்தார் நாரதர். பிரம்மா இதைப் புரிந்து கொண்டாலும், தவறு செய்த தனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று நினைத்தபடியே நடந்ததைத் தொடர்ந்தார்.
அந்த ரம்பை தன்னை விட  அழகில் சிறந்தவள் யாருமில்லை என நினைத்துக் கொண்டிருந்தாள். இதுகண்ட இந்திரன், அவளது கர்வத்தை அடக்க எண்ணினான். ஒரு முனிவரிடம் சென்றான். அவரது பெயர் நரநாராயணர். அவரிடம், சுவாமி! என் அவையிலுள்ள பெண்களில் அழகியான ரம்பை தன் அழகின் காரணமாக அகங்காரம் கொண்டிருக்கிறாள். அவளைத் திருத்த வழி சொல்லுங்கள் என்றான்.அந்த முனிவர் தன் தொடை எலும்பில் இருந்து ஒரு அழகியை உருவாக்கினார். அவளுக்கு ஊர்வசி எனப் பெயரிட்டு, இசையும், நடனமும் இயற்கையிலேயே அமையும் வகையிலான திறமையையும் கொடுத்து அவளை இந்திரனிடம் ஒப்படைத்தார். அதன்பிறகு ஊர்வசியுடனேயே அதிக நேரத்தைக் கழித்தான் இந்திரன். தன்னை விட அழகுள்ள ஒருத்தி வந்து விட்டதால், ரம்பைக்கு ஊர்வசி மீது கடும் பொறாமை! மேலும் இந்திரன் தன்னைத் தேடி வருவதே இல்லை என்றதும், அதன் அளவு மேலும் அதிகரித்தது. இதற்கு தீர்வு கேட்க அவள் என்னை நாடி  வந்தாள். பிரம்ம பகவானே! நானும் என் தோழியருமே அழகிலும் நாட்டியத்திலும் உயர்ந்தவர்களாய் இருந்தோம். இப்போது தங்கள் தொழிலை கையில் எடுத்து கொண்ட ஒரு முனிவன், ஒரு பெண்ணைப் படைத்து இந்திரனிடம் ஒப்படைத்து விட்டான். அப்படியானால், உங்கள் படைப்பிற்கு மதிப்பில்லாமல் போய் விடும். எனவே ஊர்வசியை விட சிறந்த மற்றொரு அழகியை படையுங்கள். இந்த ஊர்வசியின் ஆட்டம் ஓய்ந்து விடும் என்றாள்.நானும் அந்த ரம்பை சொன்னதைக் கேட்டு இரக்கப்பட்டேன். மேலும், என் தொழிலைக் கையில் எடுத்துக் கொண்ட முனிவனுக்கு பாடம் புகட்ட நினைத்தேன். ஒரு பெண்ணை உருவாக்கினேன்! அவளுக்கு திலோத்துமா என பெயர் வைத்தேன். இங்கு தான் ஆரம்பித்தது வினையே! என்றவர் கதையைத் தொடர்ந்தார்.


நாரதர் பகுதி-18


திலோத்துமை மிக அழகாக இருந்தாள். இப்படியொரு ஈடிணையற்ற அழகியைப் பார்த்ததும் எனக்கே அவள் மீது ஆசை வந்து விட்டது, என்ற பிரம்மா, மகனிடம் மேலும் பேசாமல் கூசி நின்றார். சொல்லுங்கள் தந்தையே!  முழுதும் நனைந்தவனுக்கு வெண் கொற்றக்குடை எதற்கு? அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. அவளை என்ன செய்தீர்கள்? என்றார் நாரதர். மகனின் கேள்விகள் ஒவ்வொன்றும் இடியாய் விழுந்தது பிரம்மனின் நெஞ்சில்.நம் புராணக்கதைகள் பல நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றன. கட்டியவளைத் தவிர மற்ற பெண்களை தாயாகவோ, சகோதரியாகவோ பார்க்க வேண்டுமென. ஆண்வர்க்கம் அதை செய்வதில்லை. அதிலும் இப்போது பெண்கள்  ஆண்களிடம் சிக்கி படும் பாடு பற்றிய செய்திகள் நெஞ்சைப் பதற வைப்பதாக இருக்கின்றன. பெண்களில் சிலரும் உறவுமுறை பாராமல் ஆண்களுடன் தொடர்பு கொண்டுள்ளதைச் சித்தரிக்கும் செய்திகளும் வருகின்றன. இப்படியெல்லாம் வரும் என்று தெரிந்து தானோ என்னவோ, புராணங்களில் அன்றே இதுபோன்ற கதைகளை எழுதி வைத்துள்ளனர். பெற்ற மகளுக்கு சமமான திலோத்துமை மீது மையல் கொண்ட நான், அவளை ஆசையோடு அணைத்தேன். இதை சற்றும் எதிர்பாராத திலோத்துமா,  இப்போது தான் என்னைப் படைத்தீர். படைத்தவன் தந்தைக்குச் சமம். நீர் என்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சிக்கிறீர். என்னை விட்டு விடும் என்று கதறியழுதாள். எனக்கோ வெப்பம் தலைக்கேற, அவளை மீண்டும் அணைத்தேன். இனியும் என்னுடன் பேசி பயனில்லை என்பதை உணர்ந்த திலோத்துமா, என் பிடியில் இருந்து தப்பி ஓடினாள். எங்கு போனாலும் நான் விடவில்லை. பெண் ரூபத்தில் இருந்தால் தானே இவரால் நம் மானத்தைப் பறிக்க முடியும்? உருவத்தை மாற்றிக் கொண்டால் என்ன? என நினைத்தாளோ என்னவோ? சற்று நேரத்தில் அவள் பெண் மானாக மாறி விட்டாள். அவள் மீது தாபம் கொண்ட நான், ஆண்மானாக மாறி அவளை விரட்டிப் பிடித்தேன். முடிவில் என் பசிக்கு இரையானாள் அவள்.
இந்த விஷயம் உன் அன்னைக்குத் தெரிந்து விட்டது. திலோத்துமா அழுது புலம்பி ஊரைக் கூட்டி விட்டாள். இந்திரன் முதலான தேவர்கள் என்னைப் பழித்தனர். தேவலோகத்தினர் முன்னால் தலையை நீட்ட முடியவில்லை, என்றார். நாரதர் அவரை தேற்றி, தந்தையே! தவறு செய்வது இயல்பு தான். எனினும் இதனால் ஏற்படும் விளைவுகளை நீர் ஏற்கத்தான் வேண்டும். படைக்கும் தொழில் உம்மிடமிருந்து பறிக்கப்படும். அதற்கு முன்னதாக சிவபெருமானைச் சரணடைந்தால் நீர் தப்பலாம், என்றார். மகனின் வார்த்தையை ஏற்று, சிவனைக் காணச் சென்றார் பிரம்மா. பெண் பித்து பிடித்தவன் தேவனே ஆனாலும் இறைவன் அவன் முகம் பார்ப்பதில்லை. பல்லாயிரம் ஆண்டு கடுமையான விரதமும் தவமும் இருந்து சிவனைச் சந்தித்தார் பிரம்மா. அவருக்கு மன்னிப்பளித்து விடுவித்த கருணைக்கடலான சிவன், இனியும் இப்படி செய்யாதே. உன் மனைவி கலைவாணி என் மீது கொண்ட பக்தியால் உன்னை விடுவிக்கிறேன். தவறு செய்யும் கணவன்மாருக்காக பெண்கள் விரதமிருந்து என்னிடம் பிரார்த்திப்பதால், நான் கயவர்களையும் விட வேண்டி வருகிறது. ஏற்கனவே ஒருமுறை இப்படி செய்ததால், ஐந்து தலையுள்ள உன்னை நான் முகன் ஆக்கினேன். இனியும் தவறு செய்தால்... என ஒரு பார்வை பார்த்தார் சிவன்.பிரம்மா தலைகுனிந்து விடைபெற்றார். அதன்பின் பிரம்ம சரித்திரத்தில் தவறே நடக்கவில்லை. தந்தை சிரமத்தில் சிக்கியுள்ள நேரத்தில் அவரைக் காப்பது மகனின் கடமை. மகனின் ஆலோசனையின் பேரிலேயே சிவனிடம் மன்னிப்பு பெற்றார் பிரம்மா. தந்தைக்கு மீண்டும் படைக்கும் தொழில் கிடைத்ததை அறிந்து மகிழ்ந்த நாரதர், வானில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். பூலோகத்தில் இருந்த ஒரு காடு அவரது கண்ணில் தென்பட்டது. அங்கே ஐந்து வாலிபர்கள், ஒரு வயதான பெண்மணி, ஒரு இளவயதுப் பெண் ஆகியோர் கால்போன போக்கில் போய்க் கொண்டிருந்தனர்.
நாரதர் அவர்களை உற்றுப் பார்த்த போது, ஆஹா...இவர்கள்  நாராயணனின் மைத்துனர்களான பாண்டவர்களும், அவரது அத்தை குந்ததேவியும், பாண்டவர்களின் மனைவி திரவுபதியும் அல்லவா? சூதாட்டத்தால் நாடிழந்த இவர்கள், கானக வாழ்க்கை வாழ்வதற்காக இங்கு வந்துள்ளார்கள் போலும்! எதற்கும் தர்மனை பார்த்து வருவோம். பாவம்...நல்லவன் ஒருவன் கஷ்டப்படக்கூடாது.  உலகில் மனிதனாய் பிறந்தவனை விதி விடுவதில்லை. அப்படி விதிப்பயனை அடைந்து கஷ்டப்படுபவர்களுக்கு, யாரொருவன் ஆறுதல் சொல்கிறானோ, அவனுக்கு வைகுண்ட பதவி காத்திருக்கிறது, என்றவராய் கீழே இறங்கினார். நாரதரின் மனநிலை நம்மில் பலரிடம் இல்லை. இப்போது அண்டை அயலான் கஷ்டப்படுகிறான் என்றால், சிலருக்கு ஒரே குஷி. இவனுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். நம்மை விட உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த இவன், இப்போது தாழ்ந்து விட்டான். சந்தோஷமாக இருக்கிறது, என்று மனதுக்குள்ளேயே துள்ளிக்குதிப்பவர்களும், கஷ்டப்படுபவர்களை எக்காளம் செய்பவர்களும் தான் அதிகமாகி விட்டார்கள். தர்மமகராஜா முன்பு வந்திறங்கினார் நாரதர். பாலைவனத்தில் தாகத்தால் தவித்த பயணிகள் போல், சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர்களது மனதுக்கு நாரதரின் வருகை ஆறுதலாக இருந்தது. மகரிஷி! தாங்களா! இந்த நட்ட நடுக்காட்டில் தங்கள் தரிசனம் கிடைக்கப் பெற்றதன் மூலம், நாங்கள் பாக்கியம் பெற்றோம்.  எங்கள் துன்பங்கள் நீங்கி விட்டதாகவே கருதுகிறோம், என்றார் தர்மராஜன். நாரதர் தர்மரிடம், தர்மா! துன்பப்படாதவர்கள் உலகில் யார்? தேவர்களும், தெய்வங்களும் கூடத்தான் துன்பப்படுகின்றனர். ஆனால், துன்பத்தை கடவுள் தருவதில்லை. நாமாகவே இழுத்துக் கொள்கிறோம். உதாரணத்துக்கு பகடை விளையாடியது உன் குற்றம் தானே தவிர, தெய்வத்தின் குற்றமல்லவே, என்றார் நாரதர். தர்மர் தலைகுனிந்து நின்றார்.


நாரதர் பகுதி-19



தர்மா! உன்னைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இப்படி சொல்லவில்லை. கஷ்டங்கள் இயல்பானவை. அவற்றை விரட்டும் வழியைத் தான் பார்க்க வேண்டும். தெய்வங்களே கூட கஷ்டப்பட்ட ஒரு கதையைக் கேள், சொல்கிறேன், என்றார். பீமன் ஓடிப்போய் தர்ப்பை புல்லை பறித்து வந்தான். அதை ஆசனம் போல் ஆக்கி நாரதரை அதில் அமர வைத்தனர். குந்தி மற்றும் ஐந்து புதல்வர்களும் நாரதர் எதிரில் பயபக்தியுடன் அமர கதையை ஆரம்பித்தார் நாரதர். மக்களே! தேவர் குலத்தலைவன் இந்திரன் இருக்கிறானே அவனுக்கு அவ்வப்போது புத்தி மழுங்கி விடும். காரணம் என்ன தெரியுமா? ஆணவம். கடவுளுக்கு ஒன்றை அர்ப்பணித்தால், பதிலுக்கு ஏதாவது எதிர்பார்க்கும் குணம் அவனுடையது. சாந்த மூர்த்தியான நாராயணன் அவனைக் கண்டு கொள்வதில்லை. ஆனால், ஒரு சமயம் சிவபெருமானிடம் போய் சிக்கிக் கொண்டான் இந்திரன். தனக்குத் தெரிந்த நடனக்கலையை அவன் ஒருமுறை சிவபெருமானிடம் அர்ப்பணித்தான். அவர் அதைப் பெற்றுக்கொண்டு நடராஜராக மாறி நாட்டியமாடினார். அந்த தரிசனம் கிடைத்தற்கரியது. நாட்டியம் பார்த்தோமா! அத்தோடு அமராவதிபட்டணத்தைப் பார்த்து போனோமா என்றில்லாமல், அங்கேயே கையைப் பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தான் இந்திரன். சிவபெருமான் சாந்தத்துடன், ஏன் இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்? சொல் என்றார். அவன் சும்மா இருக்க மாட்டானா? வாயைக் கொடுத்தான். பரமசிவனாரே! எனக்கு ஒரு ஆசை. என்னை விட வீரத்தில் உயர்ந்தவர் யாருமில்லை என்பதைத் தாங்களே அறிவீர்கள். என் வஜ்ராயுதத்தை வீசி எறிந்தால் பிழைப்பவர் யாரும் இருக்க முடியாது. இப்படி வலிமை குறைந்தவர்களுடன் சண்டை போட்டு போட்டு எனக்கு சலித்து விட்டது. என்னிலும் வல்லமையுள்ள ஒருவனுடன் சண்டை போட வேண்டும். அதில் நான் ஜெயிப்பதைப் பார்த்து ஊரே மெச்ச வேண்டும். நீங்கள் தான் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றான்.
சிவபெருமானுக்கு கோபம் வந்துவிட்டது. மனதுக்குள் அவர் என்ன நினைத்தார் தெரியுமா? அடேய் அறிவிலி! உனக்கு தெரிந்த நாட்டியத்தை என்னிடம் அர்ப்பணிப்பது போல் அர்ப்பணித்து விட்டு, என்னிடமே ஆணவமாகப் பேசுகிறாயா? உன் அகம் பாவத்தை ஒடுக்குகிறேன் பார் என்றவராய், நெற்றிக்கண்ணைத் திறந்து விட்டார். வெப்பம் தாளாமல் இந்திரன் எங்கோ போய் பதுங்கி கொண்டான்.  ஏ இந்திரா! உன்னை எதிர்க்க ஒருவன் வருவான் போ என்றார். இந்திரன் பதட்டமும் மகிழ்ச்சியும் மிக்கவனாய் இடத்தைக் காலி செய்தான். சிவபெருமானின் கண்களில் இருந்து புறப்பட்ட நெருப்பு பொறிகள் கடலுக்குச் சென்றன. சிந்துநதி கடலில் கலக்கும் இடம் அது. அந்த தீப்பொறிகள் கடலில் பட்டு ஒரு குழந்தையாக உருமாறியது. தன்னில் பிறந்த குழந்தையை அரவணைத்து எடுத்தான் சமுத்திரராஜன். நேராக என் தந்தை பிரம்மாவிடம் கொண்டு வந்தான். குழந்தையை அவர் மடியில் போட்டான். குழந்தை அவரது தாடியைப் பற்றி இழுக்க ஆரம்பித்தது. என் தந்தை பிரம்மன் சந்தோஷத்தில் தாடியைக் கொடுத்தபடி இருந்தார். நேரம் ஆக ஆக தாடியை வேகமாக இழுத்தது குழந்தை. அவருக்கு வலிக்க ஆரம்பித்தது. குழந்தையின் கையிலிருந்து தாடியை விடுவிக்க முயன்றார். முடியவே இல்லை. குழந்தையோ பிடியை மேலும் இறுக்கியது. அவர் வலி தாளாமல் அலற ஆரம்பித்து விட்டார். அந்த அலறல் சப்தம் வைகுண்டத்திற்கு கேட்கவே பரந்தாமன் ஓடோடி வந்தார். பிரம்மனைப் பார்த்து, ஓய், பிரம்மா! ஒரு குழந்தையின் கையில் சிக்கியுள்ள தாடியை விடுவிக்க முடியாமல் தான் இப்படி கத்தினீரா! சரியான ஆளைய்யா நீர், என்றதும், நாராயணரே! கேலி வேண்டாம். முடிந்தால் நீர் வந்து விடுவியும், என அலறினார் பிரம்மன். நாராயணன் மிக எளிதில் குழந்தையின் கையை எடுத்து விடலாம் என முயற்சித்து பார்க்க, அவரது கையையும் சேர்த்து பிடித்துக் கொண்டது குழந்தை. அதன்பிறகு அந்தக்குழந்தை சமுத்திரராஜனின் மகன் என்றறிந்து, அவனை வரவழைத்தார் நாராயணன்.
தந்தை வந்த பிறகு தான் குழந்தை அடங்கியது. ஒரு வழியாக குழந்தைக்கு நல்லபுத்தி சொல்லி இருவரையும் விடுவித்தார்கள்.பாண்டவர்களே! கதையை நன்றாகக் கேட்டுக் கொண்டு வருகிறீர்கள் இல்லையா? ஆணவத்தால் இந்திரன் தேவையில்லாமல் ஒரு வரம் கேட்டான். சிவனின் கோபத்திற்கு ஆளாகி ஒரு அசுரக்குழந்தை உருவாகக் காரணமானான். பிரம்மாவும், நாராயணனும் தேவையில்லாமல் அதனிடம் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்பட்டனர். இனிமேல் தான் உச்சகட்டமே இருக்கிறது. ஆக எல்லாருக்குமே ஆணவம்... ஆணவம்....உனக்கும் ஆணவம். அதனால் தான் உன்னிலும் தாழ்ந்த சகுனியிடம் தோற்றாய். ஆணவத்தையும், கோபத்தையும் எவனொருவன் விடவில்லையோ அவனுக்கு துன்பம் உறுதி, என்று நிறுத்தினார். உண்மை தான் நாரதரே! எங்கள் ஆணவம் இப்போது அழிந்து விட்டது. பட்டால் தானே எதுவும் தெரிகிறது, என்ற தர்மரிடம், கவலைப்படாதே தர்மா! எதற்கும் ஒரு நேரம் உண்டு. உனக்கு நன்மை கிடைக்கும். மீதி கதையையும் கேள், என்ற நாரதர் கதையைத் தொடர்ந்தார். அந்தக்குழந்தைக்கு என் தந்தை பிரம்மன் ஒரு வரம் கொடுத்தார். நீ என்னையே ஆட்டி வைத்தவன். எனவே, மூன்று உலகத்தையும் ஆளும் வல்லமையைக் கொடுக்கிறேன் என்று இவராகவே ஒரு வரத்தைக் கொடுத்தார். தண்ணீரில் இருந்து பிறந்த அவனுக்கு ஜலந்தராசுரன் என்று பெயரும் வைத்தார். இதைக் கேட்டு இந்திரன் அதிர்ந்து போனான் என்று கதையை நிறுத்தி விட்டு, பீமா! இவ்வளவு நேரம் கதை சொல்கிறேனே, கொஞ்சம் தண்ணீர் கொடு, என்றார் நாரதர். குந்திதேவி ஆவல் தாளாமல், நாரதரே! அப்புறம் அந்த குழந்தை என்னவெல்லாம் செய்தது. சொல்லுங்கள், என்றாள்.


நாரதர் பகுதி-20



இது என்ன புதுப்பூதம்? என்ற திருமால், மனைவியிடம், லட்சுமி! உன் சகோதரன் தேவர்களைப் படுத்தும் பாட்டை நீ அறிவாயா? இப்படிப்பட்ட சகோதரனுக்காக எப்படி பரிந்து பேச முடிகிறது? என்றார் திருமால். அன்பரே! நல்லவனோ கெட்டவனோ! ரத்த சொந்தம் என வந்து விட்டால், அவர்கள் தவறு செய்தாலும் கண்ணுக்குத் தெரிவதில்லை. சரி...உங்கள் மைத்துனனுக்கு அறிவுச்சூடு கொடுத்து அவனை திருத்த வேண்டுமானால் அனுமதிக்கிறேன். எக்காரணம் கொண்டும் அவனை நீங்கள் கொல்லக்கூடாது. சத்தியம் செய்யுங்கள் என்றாள். வேறு வழியின்றி சத்தியம் செய்து விட்டு விஷ்ணு புறப்பட்டார். இந்திரனுக்கு இந்த சத்தியம் பற்றிய விபரம் தெரியவந்தது. அவன் இன்னும் கலங்கினான். ஒருவன் தவறே செய்யக்கூடாது. செய்தால், அதன் பலனில் இருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபமல்ல. இந்த வாக்கியத்துக்கு முழுப்பொருத்தமாக இப்போது இந்திரன் இருந்தான். இதனிடையே ஜலந்தராசுரன் தன்னை உருவாக்கிய சிவபெருமானை சந்திக்கச் சென்றான். அவனைப் படைத்தவர் என்ற முறையில் சிவன் அவனுக்கு தந்தை முறை வேண்டும். பார்வதிதேவியார் தாய் முறை வேண்டும். இவன் கைலாயம் செல்லும் வழியில், அழகே உருவாக ஒரு பெண் அமர்ந்திருந்தாள். தோழிப்பெண்கள் அவளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். கழுத்தில் ஏராளமான ஆபரணங்களுடன் திருமாங்கல்யமும் பளிச்சென காட்சியளித்தது. திருமணமானவள் என்று தெரிந்தும், அவளது அழகை அவன் ரசித்தான். அவள் யாரென்று அங்கு நின்ற பூதகணங்களிடம் விசாரித்தான். பரமசிவன் மனைவி பார்வதி என்று அவர்கள் சொன்னார்கள். ஆனாலும், தாய் ஸ்தானத்து பெண்மணியை அவன் காமப்பார்வை பார்த்தான். அவளைத் தன் இடத்திற்கு கடத்திச் செல்ல திட்டமிட்டான். ஒரு மறைவிடத்திற்கு சென்று சிவனைப் போல் தன் உருவை மாற்றிக் கொண்டான். இதையறியாத நந்திதேவரும், பார்வதியும் அவனை சிவன் என நினைத்து வழிபட்டனர்.
இங்கே இப்படியிருக்க, விஷ்ணு ஜலந்தராசுரனின் அரண்மனைக்குச் சென்றார். அவர் மாயன் அல்லவா? தன் உருவத்தை ஜலந்தராசுரன் போலவே மாற்றிக் கொண்டார். ஜலந்தரனின் மனைவியின் கற்புக்கு களங்கம் எப்போது உண்டாகிறதோ, அப்போதே அவனுக்கு அழிவு ஆரம்பமாகி விட்டது என்பதை அவர் அறிவார். இதோ! கணவன் செய்த பாவம் மனைவியின் தலையில் விழப்போகிறது. நீங்கள் செய்த பாவம், திரவுபதியின் மீது விழுந்தது போல! என்ற நாரதர், அவர்களை உற்று நோக்கினார். பாண்டவர்களும் குந்திதேவியும் கண்ணீர் வழிய ஜலந்தராசுரனின் மனைவி பிருந்தாவுக்கு மாயக்கண்ணனால் ஏற்படப் போகும் அபத்தம் பற்றி கேட்க ஆவலாயினர். பாண்டவச் செல்வங்களே! தன் கணவனின் ரூபத்தில் வந்த பகவானை பிருந்தை தன் கணவன் என நினைத்து வரவேற்றாள். அவரை ஆசனத்தில் அமர வைத்து பாதத்தை கழுவினாள். கணவனுக்குரிய பாதபூஜையை பகவானுக்குச் செய்தாள். யார் ஒருத்தி, கணவனைத் தவிர பிறன் ஒருவனை கணவனாக மனதில் கடுகளவு எண்ணி விடுகிறாளோ, அப்போதே அவள் கற்பிழந்து போகிறாள். பிருந்தையும் இம்மட்டில் தன்னை அறியாமலே கற்பிழந்தாள். திருமால் அவள் முன் பாம்பணையில் சயனித்த நிலையில் காட்சி தந்தார். பிருந்தா! நீ என் பக்தை. உன் பக்திக்கு வசப்பட்டு இங்கு வந்தேன். ஆனால், உன் கணவனின் வடிவத்தில் வந்த எனக்கு நீ பாதபூஜை செய்ததால் கற்புக்கு பங்கம் ஏற்பட்டது. இதனால், உன் கணவன் அழிவான். காரணம், அவன் எந்த ஈசனால் படைக்கப்பட்டானோ, அவரது மனைவியையே கடத்த நினைத்து அங்கே சிவவேடத்தில் காத்திருக்கிறான். சிவபெருமானுக்கு இது தெரிந்து விட்டது. இப்போது அங்கே சிவனுக்கும், அவனுக்கும் போர் நடந்து கொண்டிருக்கிறது என்றார். பிருந்தா இதை ஏற்க மறுத்தாள். நாராயணமூர்த்தியே! இது கொஞ்சம் கூட முறையல்ல. என் கணவர் செய்த தவறுக்காக என் கற்புக்கு சோதனை வைத்தது எவ்வகையிலும் முறையாகாது.
தெய்வமான நீயே இப்படி நடக்கலாமா? கற்பிழந்த நான் இனி உயிர் வாழ மாட்டேன். அவர் வருவதற்குள் என்னை அழித்துக் கொண்டு விடுவேன். அவர் இங்கு வந்து என்னைக் காணாமல் திண்டாடுவார். என் பதி என்னைப் பிரிந்து தவிப்பது போல, நீரும் உம் மனைவி லட்சுமியைப் பிரிந்து தவிப்பீர். இது என் சாபம் என்றாள் கோபமும் கண்ணீரும் பொங்க. சொன்னது போலவே அக்னி வளர்த்து அதில் குதித்து இறந்தாள். பரந்தாமனே அந்த கற்புக்கரசியின் நிலைக்காக கண்ணீர் வடித்தார். அப்போது ஜலாந்தராசுரனிடம் இருந்து தப்பித்து வந்த பார்வதி புனிதநீரை பிருந்தாவின் சாம்பலில் தெளித்தாள். அது ஒரு செடியாக மாறியது. அதற்கு துளசி என பெயர் சூட்டினாள். துளசி என்றால் ஈடு இணையற்றது என்று பொருள். திருமால் அவளிடம், பார்வதி, களங்கமற்ற இந்த செடியின் இலைகளைக் கொண்டு யார் என்னை பூஜிக்கிறார்களோ, அவர்களுக்கு கேட்டதைக் கொடுப்பேன் என்றார். இதற்குள் ஜலந்தராசுரனுடன் போரிட்டு நெற்றிக்கண் திறந்து அவனைக் கொன்றார் சிவபெருமான். எங்கிருந்து வந்தானோ அங்கேயே அடைக்கலமானான் ஜலாந்தரன். தர்மா! கேட்டாயா! முப்பெரும் தெய்வங்களும் பட்டபாட்டை. பிருந்தாவின் சாபம் பிற்காலத்தில் நாராயணனை லட்சுமியிடம் இருந்தும் பிரித்தது. அதனால் அவர் சிரமப்பட்டது தனிக்கதை. எனவே துன்பம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதைத்தான் விதிப்படி நீங்களும் அனுபவிக்கிறீர்கள். விரைவில் இந்த துன்பம் தீர்க்க அந்த பரந்தாமன் உங்களுக்கு உதவுவான். உங்களுக்கு என் ஆசிர்வாதம், என்று முடித்தார் நாரதர். இக்கதை கேட்டு ஆறுதலடைந்த பாண்டவர்களிடம் விடை பெற்று, வான்வெளியில் சஞ்சரித்த போது, அஷ்டவசுக்கள் எனப்படும் திசைக்காவலர்கள் எட்டு பேர் கையைப் பிசைந்து கொண்டு நின்றதைக் கவனித்தார்.


நாரதர் பகுதி-21



நாரதர் வானில் இருந்து கீழே இறங்கவும், அவர்கள் ஓடிவந்து காலில் விழுந்தனர். மகாமுனிவரே! உங்கள் கையில் தான் எங்கள் வாழ்வே இருக்கிறது. எங்களைக் காப்பாற்றுங்கள், என்றனர். அவர்களின் உடலில் இருந்து நாற்றம் வீசியது. ஒருவன் கையில் ஒரு எலும்புத்துண்டை வைத்திருந்தான். அதில் இருந்த சதைப்பற்றை தனியாகப் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தான். நாரதர் அவர்களை இன்னார் என உணர்ந்து கொண்டாலும் கூட, அடையாளம் தெரியாதவர் போல நடித்தார். யாரப்பா நீங்கள்? ஏன் என்னை வழிமறிக்கிறீர்கள்? நான் தேசாந்திரம் போய்க் கொண்டிருக்கிறேன். பாதையை விடுங்கள், என்றார். மகரிஷி! எங்களை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? அந்தளவுக்கா நாங்கள் உருமாறி விட்டோம். நூறு வருடங்களாக நாங்கள் இந்த பேய்க்காட்டில் கிடந்து அவஸ்தைப்படுகிறோம். எங்களைக் கரைசேருங்கள், என்றனர் கண்களில் நீர் வழிய. நாரதர் அவர்களிடம், நீங்கள் இந்த சுடுகாட்டின் பணியாளர்களா? என்ன தான் சுடுகாட்டில் பணியாற்றினாலும், இறந்தவர்களின் உடலையா உண்பது? சே....என்ன அபத்தம்! இதோ! உங்களில் ஒருவன் ஏன் எலும்பில் இருந்து சதையைப் பிய்க்கிறான். உண்பதற்கு தானே? என்றார் கோபப்படுபவர் போல நடித்து. ஆமாம் சுவாமி! பசி...பசிக்கொடுமை எங்களை வாட்டுகிறது. அதனால், இந்த பிணங்களின் சதையை பிய்த்து தின்கிறோம். ஆனால், நாங்கள் விரும்பி இதைச் செய்யவில்லை. ஒரு பசு எங்களுக்கு அளித்த சாபத்தால் இவ்வாறு செய்கிறோம், என்றனர். அப்படியா? ஒரு பசுவுக்கு அவ்வளவு சக்தியிருக்கிறதா? நம்பவே முடியவில்லையே, அப்படியானால் நீங்கள் யார்? என்றார். ஐயனே! நாங்கள் அஷ்டவசுக்கள். திசைகளின் பாதுகாவலர்கள். எங்களை அனலன், அணிலன், ஆபச்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்யூசன், பிரபாவன் என்று அழைப்பர், என்றனர்.
நாரதர் அப்போது தான் அவர்களை அடையாளம் தெரிந்தவர்கள் போல் காட்டிக் கொண்டு, ஐயையோ, நீங்களா? உங்களுக்கா பிணம் தின்னும் இக்கதி கிடைத்தது. ஏன்? உங்கள் செல்வமெல்லாம் என்னானது? உங்கள் மனைவிமார் எங்கே? திசைக்கொரு ராஜ்யத்தை ஆண்டீர்களே! அவை எங்கே போனது? என்றார். அஷ்டவசுக்களில் முதலாமவனான அணிலன் தங்களுக்கு நேர்ந்த கதி பற்றி விபரமாக எடுத்துரைத்தான். மகா முனிவரே! எங்களில் முதல் ஏழுபேரும் எந்தத்தவறும் செய்யவில்லை. ஆனால், தவறுக்கு உடன் போனோம். எங்களில் கடைக்குட்டியான இந்த பிரபாவன், தன் மனைவி மாலினி மீது உயிரையே வைத்திருந்தான். அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது தான் அவனுக்கு வேலையே. அந்தளவுக்கு அவளது அழகில் மயங்கிக் கிடந்தான். ஒருநாள் நாங்கள் மேரு மலைச் சாரலுக்குச் சென்றோம். அங்கே, ஒரு அழகிய பசு மேய்ந்து கொண்டிருந்தது. அதன் கொம்புகள் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அதன் மேனி அதிவெண்மையாக இருந்தது. ஒரு மாசு மரு கூட இல்லை. கால் குளம்புகள் வெள்ளியால் உருவாக்கப்பட்டிருந்தன. மடுவைப் பார்த்தால் மிகப்பெரிதாக இருந்தது. அதில் இருந்து தானாகவே பால் சொரிந்து கொண்டிருந்தது. அது நின்ற இடமெல்லாம் பால்பெருகி, சிறுசிறு குளங்களை உண்டாக்கியது. பால் வழிந்ததைப் பார்த்தால், நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் பாற் கடல் இந்த பூலோகத்திலும் உருவாகி விடுமோ என்ற அளவுக்கு இருந்தது. இப்படிப்பட்ட அந்த பசுவின் அருகில் சென்று பார்த்தோம். அது எங்களைக் கண்டு மிரண்டது. அப்போது, மாலினி அந்தப் பசுவைப் பிடித்து வாருங்கள் என்று பிரபாசனிடம் கேட்டாள். பிரபாசனும் புறப்பட்டான். நாங்கள் அவனைத் தடுக்கவில்லை. விளையாட்டாக இருந்து விட்டோம். அவன் பசுவைப் பிடிக்கச் சென்ற போது, அந்தப்பசு பேச ஆரம்பித்தது. பிரபாசா! உன்னை யார் என நான் அறிவேன். நான் தான் தேவலோகப் பசுவான காமதேனு. இப்போது நான் முனிவர்களுக்கெல்லாம் தலைவரான வசிஷ்டரின் பாதுகாப்பில் இருக்கிறேன்.
நான் இங்கு சிந்தும் பால் அவருக்குரியது. சிவபூஜைக்கு அவர் அதைப் பயன்படுத்துவார். நீ என்னைப் பிடிக்க முயற்சிக்காதே. ஓடி விடு என்று எச்சரித்தது.மனைவி மீது கொண்ட காதலால், பிரபாசன் அது சொன்னதைக் கேட்கவில்லை. அதைப் பிடிக்க எத்தனித்தான். அதன் வாலைப் பிடித்து இழுத்தான். தலையை இறுக்கமாகப் பிடித்து, கயிறை கட்டி இழுக்க ஆரம்பித்தான். வலி தாளாமல் அலறிய காமதேனு, மூடனே! நான் சொல்லியும் நீ கேட்கவில்லை. பசுவுக்கு துன்பம் செய்பவர்கள் அது அனுபவிப்பது போல, பல மடங்கு துன்பத்தை அனுபவிப்பர். நீயும், இங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் உன்னைச் சேர்ந்தவர்களும் இப்போதே காசி செல்வீர்கள். அங்குள்ள சுடுகாட்டில் எரியும் பிணங்களே உங்களுக்கு ஆகாரம் என்று சாபம் விட்டது. நாங்கள் அதிர்ந்து விட்டோம். காமதேனுவிடம் மன்னிப்பு கேட்டோம். ஆனால், அது மன்னிக்க மறுத்து விட்டது. பிரபாசன் செய்த தவறுக்கு எல்லோரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறாய்? வேண்டுமானால் அவனையும், அவன் மனைவியையும் தண்டித்துக் கொள். மற்றவர்களை விட்டு விடு. தவறு செய்யாத எங்களைத் தண்டிக்க காரணம் என்ன? என்றோம். அந்தப் பசுவோ, பிரபாசன் என்னைத் துன்புறுத்தும் போது, நீங்கள் அவனைத் தட்டிக் கேட்கவில்லை. தவறைத் தட்டிக் கேட்காமல், நீங்களும் வேடிக்கை பார்த்ததால், உங்களையும் சாபம் சேரும், என்றது. மீண்டும் அதனிடம் மன்னிப்பு கேட்கவே, உங்களுக்கு நான் இட்ட சாபத்தை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். தவறு செய்பவர்கள் மன்னிக்கப்பட்டு விட்டால், பின்னர் உலகில் ஒழுங்கில்லாமல் போய்விடும். மேலும், பசுக்களுக்கு துன்பமிழைப்பவனுக்கு விடிவே கிடையாது. இருப்பினும், நீங்கள் கெஞ்சிக் கேட்பதால் ஒரு விமோசனம் தருகிறேன் என்றது. அதுதான் இப்போது நடந்திருக்கிறது, என்றான். நாரதர் அவ்விமோசனம் பற்றி கேட்க ஆவலுடன் நின்றார்.


நாரதர் பகுதி-22


அணிலா! அவ்விமோசனம் பற்றி முதலில் சொல். என்னால் முடியுமானால் தீர்த்து வைக்கிறேன், என்றார் நாரதர். முற்றும் அறிந்த முனிவரே! தாங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் அறியாதவர் போல் பேசுகிறீர்கள். ஐயனே! நூறாண்டுகள் நாங்கள் அனுபவித்த துன்பம் போதும். இனியும் கலகம் செய்து, எங்களை நிரந்தரமாக பிணம் தின்ன வைத்து விடாதீர்கள், என அவரது பாதத்தில் விழுந்தான் அணிலன். அவனைத் தொடர்ந்து மற்ற வசுக்களும், மாலினியும் காலில் விழுந்தனர். அவர்களை எழுப்பிய நாரதர் சிரித்தபடியே, அன்புக்குரிய குழந்தைகளே! என்னால் தான் உங்களுக்கு சாப விமோசனம் என்பதை நான் அறிவேன். இன்றோடு நூறு ஆண்டுகள் நீங்கள் கொடிய தண்டனையை அனுபவித்து விட்டீர்கள். பசுவதை எவ்வளவு கொடியது என்பதை உணர்த்தவே இந்த நாடகம் இறைவனின் சங்கல்பத்தால் இப்படி நடந்தது. அதில், நீங்கள் பாத்திரமாக நடித்தீர்கள். இனி உங்கள் சாபம் தீர்ந்தது. காமதேனு ஏற்கனவே இதுபற்றி என்னிடம் தெரிவித்து விட்டது, என்று சொல்லி, தன் கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை அவர்கள் மீது தெளித்தார். அவர்கள் தங்கள் பழைய உருவை அடைந்ததுடன், நடந்ததை எல்லாம் மறந்தே விட்டனர். புதுமனிதர்களாக உருவெடுத்த அவர்கள் நாரதரை புதிதாகப் பார்ப்பவர்கள் போல் வணங்கி, தங்கள் உலகங்களுக்கு திரும்பினர். நாரதர் மிக்க மகிழ்ச்சியுடன் தன் சஞ்சாரத்தை துவக்கினார். இந்திரலோகத்திற்கு சென்று பல நாட்கள் ஆகிவிட்டதால், அடுத்த கணமே அவர் இந்திரலோகத்தில் இருந்தார். நாரதர் வந்துள்ள தகவல் அறிந்து, இந்திரன் ஓடோடி வந்தான். வரவேண்டும் மகரிஷி, என வரவேற்றான். ஆனால், அவனது முகத்தில் ஏதோ வாட்டம் இருந்தது. இந்திரா! உன் வரவேற்பு என்னவோ பலமாகத்தான் இருக்கிறது. ஆனால், உன் முகத்தில் ஏதோ ஒரு களைப்பும், இழப்பும் தெரிகிறதே! ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டாயா? என்று வருத்தமாக கேட்பது போல் நடித்தார் நாரதர்.
அப்படியொன்றுமில்லை மகரிஷி! நான் தேசத்தை ஆள அசுரர்கள் போட்டி போடுகிறார்கள். நல்லவர்கள் கூட யாகம் செய்து, சிவனருளால் என் இடத்திற்கு வர வேண்டும் என துடிக்கிறார்கள். நான் எப்படி என் இடத்தை விட்டுக் கொடுக்க முடியும். இந்திரலோகத்தின் நிரந்தரத் தலைவன் நான் தானே! பார்த்தீர்களா நியாயத்தை! என்ற இந்திரனிடம், இந்திரா! உன்னிடம் இருக்கும் செல்வம் நிலையற்றது. இதை விட்டு விட்டு போக வேண்டியது தானே. எனக்கு சமீபத்தில் நடந்த ஒரு சூரியலோக கிசுகிசு தெரியும். காதைக் கொடு. அதைக் கேட்டால் நீயும் திருந்தி விடுவாய், என்றார். சூரியலோகத்தில் நடந்த அந்தக் கதையைக் கேட்க இந்திரன் ஆவலானான். இந்திரா! பிருகுமுனிவரைப் பற்றி நீ அறிவாய். பகவான் நாராயணனே மிகவும் பொறுமையான கடவுள் என நிரூபித்தவர் அவர். ஒருமுறை அவருக்கு ஒரு தீர்க்க முடியாத சந்தேகம் ஏற்பட்டது. அவர் பத்மம் என்ற ஊரில் மனைவி, குழந்தைகளுடன் சவுக்கியமாக வசிக்கிறார். அவர் வீட்டுக்கு விருந்தினர்கள் யாராவது போனால் போதும். விருந்தும் மருந்தும் மூன்றுநாள் என்ற பழமொழி அவருக்கு மட்டும் சொந்தம் கிடையாது. மூன்று நாளென்ன...மூன்று யுகங்கள் அவர் வீட்டில் ஒரு விருந்தினர் தங்கினால் கூட முகம் சுளியாமல் உபசரிப்பார். அந்த விருந்தினர் ஊர் திரும்பும்போது, தேவையான பொருளும் கொடுத்தனுப்புவார். இப்படியெல்லாம் நன்மை செய்தாலும் கூட அவர் மனதில் ஏனோ திருப்தியில்லை. நம் பணிகளில் ஏதேனும் குறை வைக்கிறோமோ? மனைவி, மக்கள் நம்மிடம் குறை ஏதேனும் காண்கிறார்களோ? நம்மால் உபசரிக்கப்படுபவர்கள் மனத்திருப்தியுடன் செல்கிறார்களா? இல்லையா? எல்லாரும் நம்மால் பயனடைகிறார்களா இல்லையா? அதற்கேற்ற பொருட்செல்வம் போதுமா போதாதா? இப்படி பல சந்தேகங்கள்.
இதற்கு விடையை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சமயத்தில் நான் அவரை சந்தித்தேன்.
 அவர் என்னிடம் மேற்படி கேள்விகளையெல்லாம் கேட்டார். நான் அவரிடம், இந்த கேள்விகளுக்குரிய விடையை என்னை விட நாகலோக தலைவனான பதுமன் அழகாகச் சொல்வான். அவனைப் போய் பாருங்கள் என சொல்லி அனுப்பினேன். பிருகு முனிவர் நாகலோகத்திற்கு உடனே கிளம்பி விட்டார். அங்கே பதுமனின் மனைவி மட்டுமே இருந்தாள். முனிவருக்கு பலமான உபசாரம் செய்தாள். தான் வந்த விஷயத்தைச் சொன்னார் பிருகு. அவர் சூரியலோகம் போயிருக்கிறார். வருவதற்கு எட்டு நாள் ஆகும். நீங்கள் அதுவரை இந்த ஏழையின் குடிசையில் தங்க வேண்டும் என கேட்டுக் கொண்டாள் பத்மனின் மனைவி. இல்லை தாயே! நான் வெளியே தங்கிக் கொள்கிறேன், என சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார். வெளியே சென்ற பிருகு, பதுமன் வந்து விடை சொல்லும் வரை நோன்பிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்படி அவர் பட்டினியாகவே இருந்தார். இதைக் கேள்விப்பட்ட பதுமனின் பத்தினி, முனிவரைச் சந்தித்து, சுவாமி! எங்கள் வீட்டுக்கு வந்த நீங்கள் பட்டினியா இருப்பதை நான் தாங்கமாட்டேன். என் கணவர் வந்தால், என்னைக் கடுமையாகக் கடிந்து கொள்வார். நீங்கள் தயவு செய்து உணவுண்ண வேண்டும். இல்லாவிட்டால், நானே இங்கு உணவைக் கொண்டு வருகிறேன் என்றாள். முனிவர் ஒப்புக்கொள்ளவில்லை. அம்மா! இந்த உலகத்திலேயே விருந்தினர்களை உபசரிப்பதில் நான் தான் பெரியவன் என நினைத்துக் கொண்டிருந்தேன்ண. ஆனால், உன் அன்பான உபசரிப்பின் முன்னால் அவை அனைத்தும் தவிடு பொடியாகி விட்டன. இருந்தாலும், உன் கணவன் வரும்வரை உண்ணாநோன்பு இருப்பதென சங்கல்பம் செய்து விட்டேன். முனிவர்கள் ஒரு உறுதி எடுத்தபிறகு அதில் இருந்து பிறழக்கூடாது என்பது விதி. எனவே, என்னை வற்புறுத்தாதே தாயே என்றார். அந்த நாககன்னிகை என்ன செய்வதென தெரியாமல் திகைத்தாள்.


நாரதர் பகுதி-23




ஒருவழியாக எட்டு நாட்களும் கடந்தன. நாகராஜனான பத்மன் ஊர்வந்து சேர்ந்தான். அவனிடம், நடந்ததைச் சொன்னாள் அவனது மனைவி. சற்று கூட ஓய்வெடுக்காமல், உடனே புறப்பட்டான் பிருகுவைச் சந்திக்க. அவரை வணங்கினான். பிருகு முனிவரே! தாங்கள் ஸ்ரீமன் நாராயணனையே தரிசித்த சீலர். சிவலோகத்திற்கும், பிரம்மனின் சத்தியலோகத்திற்கும் நினைத்தவுடனேயே சென்று திரும்பும் சீலர். இப்படிப்பட்ட தாங்கள், என் நாட்டுக்குள் வந்தும், வீட்டில் தங்காமல் வெளியே தங்கிவிட்டீர்கள். தாங்கள் வந்த நேரத்தில், நான் ஊரில் இல்லாமல் போனது என் துரதிர்ஷ்டமே. தாங்கள் இப்போதாவது என் குடிசைக்கு வாருங்கள். எங்களுடன் உணவருந்தி விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து எட்டு நாட்கள் அன்னபானமின்றி தாங்கள் உபவாசம் இருக்க வேண்டியதன் அவசியம் என்னவென நான் தெரிந்து கொள்ளலாமா? என்று வணக்கத்துடன் கேட்டான். பத்மா! சூரியலோகம் வரை சென்று வருவதென்பது சாதாரண காரியமா? சுட்டெரிக்கும் அந்த சூரியனின் வெப்பத்தை பூமியிலுள்ளவர்கள் தாங்கிக் கொள்வதே அரிதாக இருக்கும்போது, நீ அங்கு சென்று வந்துள்ளாய். அங்குள்ள விபரங்களை முதலில் சொல். பிறகு என் கதையைப் பார்க்கலாம் என்றார் பிருகு. மாமுனிவரே! சூரியலோகம் என்பது இந்திரலோகத்தை விட உயர்ந்ததாக இருக்கிறது. எந்நேரமும் வாத்திய முழக்கம் கேட்டவண்ணம் இருக்கிறது. அழகிய பெண்களின் நடனம் நிற்காமல் நடக்கிறது. சூரியலோகத்தில் பல அறிஞர் பெருமக்கள் உள்ளனர். அவர்கள் பலவித பொருட்களில் சுவையான, பயனுள்ள விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கே செல்வத்திற்கு பஞ்சமில்லை. அங்கிருந்து வரும் ஒளி என்னதென நினைக்கிறீர்கள்? சூரியபகவான் தன் மனைவி உஷை யுடன் ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறான். அந்த சிம்மாசனத்தில் நவரத்தின மணிகள் தொங்குகின்றன. அதிலிருந்து புறப்படும் ஒளியே நம் கண்ணைப் பறிக்கிறது. அவையே கதிர்களைப் பரப்புகிறது.
சூரியபகவானிடம் ஒரு தேர் இருக்கிறது. அதில் ஏழுவகையான நிறங்களில் குதிரைகள் உள்ளன. அவற்றில் இருந்து புறப்படும் ஒளி வானில் ஒரு வில்போன்ற வளையத்தை உருவாக்குகிறது. அந்தக் குதிரைகள் நடக்கிறதா... ஓடுகிறதா என்றால்... உஹும்... பறக்கின்றன. ஆம்...காற்றை விட வேகமாய் பறக்கின்றன. அவன் ஓரிடத்தில் நிலைத்து நிற்கிறான். அவனை உலகிலுள்ள அத்தனை கிரகங்களும் வலம் வருகின்றன. நாம் வசிக்கும் இந்த பூமி உட்பட. அப்படியானால், அவன் எப்பேர்ப்பட்ட புகழுடையவன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கிரகங்கள் அவனை வலம் வருவதால், அவன் உலகத்தை வலம் வருவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அவனைப் பார்க்க வரும் அனைவரும் அறிவுஜீவிகள். என் கண்முன்னால் நடந்த சம்பவம் ஒன்றைக் கூறுகிறேன், கேளுங்கள். ஒருநாள், ஒரு பெரியவர் சூரியலோகத்திற்கு வந்தார். சூரியனின் பாதம் பணிந்த அந்த நிமிடமே சூரியனுடன் கலந்து விட்டார். நான் பகவானிடம், சூரியநாராயணா! உன்னில் கலக்க அந்தப்பெரியவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உன்னோடு ஐக்கியமாக என்ன தகுதி வேண்டும்? என்றேன். அவன் என்னிடம், நாகலோகத்தின் நாயகனே! இப்போது என்னை வந்து அடைந்த பெரியவர், பூலோகத்தில் இருந்து வந்தார். அவர் கல்வி, கேள்விகளில் சிறந்தவர். ஒழுக்கசீலர். இந்திராதி தேவர்கள் கூட ஒழுக்கம் தவறிய வரலாறை கேட்டிருப்பாய். இவனோ விருப்பங்களை களைந்தவன், வெறுப்பு களைத் துறந்தவன். எந்த நிலையிலும் மனம் தளராதவன். ஆசைகளைத் துறந்தவன். இப்படிப்பட்ட குணநலமுடையவன் யார் ஒருவன் எந்த உலகில் இருந்தாலும், என்னோடு கலந்து விடுவான். அவனுக்கு மீண்டும் பிறவி இல்லை, என்றான். இப்படி பத்மன் சொன்ன கதையை கேட்டுக் கொண்டிருந்த பிருகு, பத்மா! நிறுத்து! நிறுத்து! நான் வந்த வேலை முடிந்து விட்டது. இந்த உலகத்தில் நான் தான் தர்மப்பிரபு, விருந்தினர்களை வரவேற்பதில் உயர்ந்தவன் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். என் உறவினர்களும், நண்பர்களும் என் விருந்தோம்பலைப் பாராட்ட வேண்டும் என்ற சுயநலம் அதில் கலந்திருந்தது.
சூரியலோகத்தில் நடந்த அந்த சம்பவத்தைக் கேட்டபிறகு, விருப்பு வெறுப்பற்ற முறையில் சேவை செய்வது ஒரு மனிதனின் கடமை என்பதைப் புரிந்து கொண்டேன். நாரதமகரிஷி தான் உன்னிடம் என்னை அனுப்பி வைத்தார். உன்னிடம் சென்றால் என் சந்தேகங்களுக்கு தக்க பதில் கிடைக்கும் என்றார். நீ எனக்காகவே சூரியலோகம் சென்று வந்தது போலுள்ளது என்றவர், பத்மனிடம் விடைபெற்று திரும்பினார். பார்த்தாயா இந்திரா! உன் ஆட்சியைப் பிடிக்க பலரும் போட்டியிடுவதாக நீ சொல்கிறாய். இந்த ஆட்சி, அதிகாரம் என்பவையெல்லாம் தற்காலிக சுகங்களே! இதில் சுகத்தை விட துக்கமும், ஆட்சி போய்விடுமோ என்ற பயமும் தான் அதிகமாக இருக்கிறது. எனவே, நீ உனக்கு வரும் துன்பங்களை ஒரு பொருட்டாகக் கருதாதே. ஆசைகளைத் துறந்துவிட்டால், ஆட்சியைப் பற்றிய கவலை வராது. இந்த ஆட்சி போனால் போகட்டும் என விட்டு விடு. பகவானை மனதில் நினை. உன் சுகத்தில் எந்தக் குறைவும் வராது என ஆசியளித்தார் நாரதர். இந்திரனும் மனம் தெளிந்தான். நாரதர் அவனிடம் விடைபெற்று, மந்தேகம் என்ற தீவின் வழியாக தன் இருப்பிடம் திரும்பிக் கொண்டிருந்தார். வானத்தில் சூரியன் உக்கிரமாக எரிந்து கொண்டிருந்தான். வழக்கத்தை விட இது என்ன கொடிய வெயில். சூரிய பகவானுக்கு கோபம் வந்து விடுமானால், அவன் இப்படித்தான் பூமியில் ஒரு பயிர்பச்சை கூட இல்லாத அளவுக்கு தன் கற்றைகளால் எரித்து விடுவான். நாரதர் அங்கிருந்தபடியே காற்றிலும் கூடிய வேகத்தில் சூரியலோகத்தை அடைந்தார். சூரியன் தன் கோபத்தை மறைத்துக் கொண்டு, வருக வருக! நாரத மகரிஷியின் வரவால் எரிந்து கொண்டிருந்த என் மனம் குளிர்ந்தது, என்றான்.


நாரதர் பகுதி-24


வாழ்க! வாழ்க சூரியதேவா! என சூரிய பகவானை வாழ்த்திய நாரத மாமுனிவர், சூரியனே! உன் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் இங்கு வந்திருக்கிறேன் என்பதால் சற்று குளிர்ந்திருக்கிறாய். ஆனால், நான் மந்தேகத்தீவைக் கடந்த போது, உலக உயிர்களெல்லாம் வருந்தும் வகையில் அக்னியைப் பொழிந்து கொண்டிருந்தாயே! ஏன்? இப்போது ஒன்றும் அக்னி நட்சத்திர காலமும் இல்லையே! ஏதோ கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. என்னிடம் சொல். பிரச்னை தீர வழியிருக்கிறதா? என பார்க்கிறேன், என்றார். இந்த கலகப்பேர்வழியிடம் ஏதாவது ஒன்றைச்சொல்ல, இவர் நிலைமையை இன்னும் சிக்கலாக்கி விட்டால் என்ன செய்வது? என எண்ணிய சூரியன் சற்று தயக்கம் காட்டியதைக் குறிப்பால் உணர்ந்த நாரதர், சூரியா! இந்த கலகக்காரனிடம் நம் பிரச்னையை சொல்லவேண்டுமா என யோசிப்பதை உன் முகக்குறிப்பாலேயே புரிந்து கொண்டேன். சரி! எனக்கெதற்கு வம்பு! நீ எப்படி குமுறினால் என்ன என்று, நான் வந்த வழியே ஒழுங்காகப் போயிருக்க வேண்டும். ஐயோ பாவம்! இந்த சூரியனுக்கு ஏதாவது நன்மை செய்வோம் என வந்தேன் பார்! எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! என சலித்துக் கொண்டு, சரி! சூரியா! நீயே மனநிலை சரியில்லாமல் இருக்கிறாய். நான் கிளம்புகிறேன், நாராயணா! என்றவராய், கிளம்புவது போல் பாவனை காட்டினார். சூரியன் தடாலென அவர் காலில் விழுந்துவிட்டான். மகரிஷி! என்னை மன்னிக்க வேண்டும். தங்களிடம் சொல்லக்கூடாது என்பதல்ல! மன உளைச்சலில் இருந்ததால், ஏதோ நினைவில் இருந்தேன், என சமாளித்து விட்டு தன் நிலையைச் சொன்னான். மகரிஷி! அப்சரஸ் போன்ற மனைவி, வாழ்க்கையை நிர்ணயிக்கும் சக்திகளான எமதர்மன், சனீஸ்வரன் ஆகிய மகன்கள், ஏழு குதிரை பூட்டிய தேரில் ஏறி உலகையே சுற்றி வருகிறேன்.
இத்தனை இருந்தும் என்ன பயன்? என்னை, மந்தேகத்தீவில் வாழும் அசுரர்கள் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். பலமுறை அவர்களை அடக்க போரிட்டேன். தோல்வியையே தழுவுகிறேன். அவர்களுக்கு அடிமை ஆகி விடுவேனோ என அஞ்சுகிறேன், என்றான். நாரதர் சிரித்தார். ஆதித்யா! உலகில் நிம்மதியாய் இருப்பவர்கள் ஆசையற்றவர்கள் தான் என்ற உண்மையை உன் மூலமாக பிருகு முனிவர் கற்றிருக்கிறார். இங்கு வந்த நாகராஜன் பத்மனும் அதையே இங்கிருந்து கற்று வந்தான். அப்படிப்பட்ட உனக்கேன் பதவிப்பற்று? இந்த அசுரர்களை அழிக்க ஒரு வழி சொல்கிறேன். இவர்களின் உயிர் போக ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. லகில் உன்னால் தான் மழை பொழிகிறது. அந்த மழையில் எழும் ஓசை தான் இவர்களை அழிக்க முடியும்,என்றார். சூரியன் விழித்தான். மகரிஷி! மழையோடு எழும் ஒலி என்றால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே! அதை உருவாக்கும் ஆற்றல் யாரிடம் உள்ளது? என்றான். அது கடினமான விஷயம். உருவமில்லாத சிவலிங்கத்தால் தான் அதை உருவாக்க முடியும். அந்த லிங்கம் எங்கிருக்கிறது என எனக்குத் தெரியும். ஆனால், நான் சொல்லி நீ அவ்விடத்தை அடைந்து பூஜை செய்வதால் பயன் ஏற்படாது. நீயே அவ்விடத்தை தேடிப் பிடிக்க வேண்டும். நீ தான் ஒளிக்கற்றைகளுடன் உலா வருபவன் ஆயிற்றே! சர்வ ஞானம் பெற்ற உனக்கு அவர் விரைவில் காட்சியளிப்பார். மற்றவர் கண்களுக்கு தெரியாமல், உன் கண்களுக்கு மட்டும் எங்கு லிங்கம் தெரிகிறதோ, அவ்விடத்தில் சிவபூஜை செய். அவர் உனக்கு அருள்பாலிப்பார், என்று சொல்லிவிட்டு விடை பெற்றார். சூரியன் இன்னும் உக்கிரமானான். ஒளிக்கற்றைகளை எங்கெல்லாமோ பாய்ச்சி சிவலிங்கத்தை தேடியலைந்தான். அசுரர்கள் வசித்த மந்தேகத்தீவில் கடலே வற்றிப்போய் விடும் அளவுக்கு சூரியனின் கதிர்கள் விழுந்தன. அசுரர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் சூரியனை எச்சரிக்க புறப்பட்டனர். சூரியலோகத்தில் அவன் இல்லை. அவனைத் தேடி அவர்களும் புறப்பட்டனர். அப்போதெல்லாம் சூரியன் தன்னை மறைத்துக் கொண்டான்.
அவன் காவிரிக்கரை பக்கமாக தன் பார்வையைச் செலுத்தினான். ஓரிடத்தில் தெய்வீக ஒளி வீசியது. சிவபெருமான் லிங்க வடிவில் மணல் பரப்பில் தெரிந்தார். சூரியன் சந்தோஷப்பட்டான். உடனடியாக தன் ஒளிக்கற்றைகளால் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தான். இப்போது சிவபெருமான் அவன் முன்னால் வந்தார். சூரியனே! உன் அபிஷேகத்தால் நான் மகிழ்ந்தேன். உன்னைப் பிடித்த துன்பம் இன்றுடன் விலகும். உலகத்திலுள்ள தண்ணீரை ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, பல மடங்காக நீ திருப்பித் தருகிறாய். அவ்வாறு மழை பெய்யும் போது, இனி ஒளியும், அதைத் தொடர்ந்து ஒலியும் எழும். வருணபகவான் இவ்விஷயத்தில் உனக்கு உதவுவான். அந்த ஒலியை உலகத்தார் இடி என்பர். அந்த இடி உலகிலுள்ள கொடியவர்களை அழிக்கும். யார் ஒருவர் இப்பிறவியிலும், முற்பிறவியிலும் கொடிய பாவம் செய்தனரோ, அவர்கள் இடி தாக்கி அழிவார்கள், என்றார்.இதன்பிறகு சூரியன் பெருமழையைப் பெய்வித்தான். அப்போது பயங்கர ஒலி ஏற்பட்டது. மந்தேகத்தீவில் தொடர்ந்து இடி இறங்கியது. மரங்கள் கருகின. அசுரர்களின் மாளிகை கொழுந்து விட்டு எரிந்தது. வெளியே வந்த அசுரர்களின் தலையில் விழுந்த இடி அவர்களை மண்ணோடு மண்ணாக்கியது. சூரியபகவான் அகம் மகிழ்ந்தான். மந்தேகத்தீவில் ஒரு அசுரன் கூட உயிர் பிழைக்கவில்லை. நாரதர் காட்டிய நல்வழிக்காக அவரை நன்றியுடன் நினைவு கூர்ந்தான் சூரியன். அந்த நன்றிக்குரிய நாரதர் இப்போது மன்னனாய் இருந்து திருமாலிடம் செல்வங்களை இழந்து பிச்சைக்காரன் போல் வாழ்ந்து கொண்டிருந்த மகாபலியின் முன்னால் நின்றார்.



நாரதர் பகுதி-25


மகாபலி மன்னன் இப்போது செல்வந்தன் அல்ல. அவன் இருப்பதையெல்லாம் இழந்து விட்டவன். திருமாலிடம் அனைத்தையும் தானம் செய்து பெரும்பேறு பெற்று, அவரது திருவடியால் அழுத்தப்பட்டு, பாதாள லோகத்துக்கு போய்விட்டவன். நாரதரைக் கண்டதும் சுயரூபமடைந்து அவரை வரவேற்றான். மகாபலி! உன் வரவேற்பு பலமாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த வரவேற்பு ஏதோ செயற்கையாகத் தோன்றுகிறது. உன் முகத்தில் கவலை ரேகை தெரிகிறது. உன் குல குரு சுக்ராச்சாரியாரின் சொல்லைக் கேட்காமல் திருமாலிடம் எல்லாவற்றையும் இழந்ததை எண்ணி கவலையில் இருக்கிறாயோ? என்றார் நாரதர். சிவசிவ என்ற மகாபலி, மாமுனிவரே! இந்தச் சொல் உமது வாயில் இருந்து வந்ததால், பிழைத்தீர். வேறு யாரேனும் சொல்லியிருந்தால் அவர் தலையை வாங்கியிருப்பேன். மகாபலி என்றும் தர்மத்தின் தலைவன் தான். கொடுத்ததை நினைத்து வருந்துவது, நாடு போனதற்காக வருத்தப்படுபவன் அல்ல. ஆனால், என் வருத்தமெல்லாம், நான் இறைவனிடம் அத்தனையையும் தாரைவார்த்தேன் என்பதை எண்ணிப்பாராமல், என் இன்றயை ஏழ்மையை சிலர் ஏளனம் செய்கிறார்கள். குறிப்பாக தேவர் தலைவர் இந்திரன் சில நாள் முன்பு இங்கு வந்தான். அவன் என் நிலையைப் பார்த்து வருந்துபவன் போல் கேலி செய்தான். அதை நினைத்து தான் வருந்துகிறேன், என்றான். நாரதர் அவனிடம், மகாபலி! இந்திரனைப் போல் உன்னைக் கேலி செய்வது என் நோக்கமல்ல. பரந்தாமனிடம் பொன்னையும் கொடுத்து, உன்னையும் கொடுத்த உத்தமன் நீ. என்னை இந்திரனோடு ஒப்பிடாதே. உன் கோபத்தை கிளறும் வகையில் பேசவேண்டிய அவசியமும் எனக்கில்லை. ஏனெனில், நான் ஒரு முனிவன். ஆசைகளைத் துறந்தவன். சரி...போகட்டும். இந்திரன் அப்படி என்ன தான் சொன்னான்? என்றார். மாமுனிவரே! அந்த இந்திரன் சிலநாள் முன்பு பாதாளலோகத்திற்கு வந்தான்.
நான் அப்போது எலி வடிவில் சுற்றிக்கொண்டிருந்தேன். என்னை அடையாளம் கண்டு கொண்ட அவன் மகாபலி! நீ என்னையே வென்றவன். இந்திரலோகத்தையும் ஆண்டவன். உன்னைக் கண்டு பயந்து, நான் வேணுவனத்தில் (மூங்கில்காடு) ஒளிந்திருந்தேன். சிவனின் அருளால் தப்பினேன். அந்தளவுக்கு பராக்கிரமசாலியான நீ, இப்போது இப்படி கூனிக்குறுகி எலியாக மாறியிருப்பதைப் பார்த்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. உனக்கா இந்த நிலை வர வேண்டும் என இரக்கப்படுவது போல் ஏளனம் செய்தான். அப்போது என் உடலில் இருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். அவள் தேவதை போல் ஜொலித்தாள். அவள் என்னிடம், மகாபலி! நான் தான் திருமகள். நீ தானத்தில் சிறந்தவன் என்றாலும், மமதை காரணமாக உன் பொருளை இழந்தாய். இருப்பினும், நீ பரந்தாமனுக்கே தானம் செய்தவன் என்பதால், நீ பாதாளலோகத்துக்கு வந்தபிறகும் கூட உன்னிடம் இதுநாள் வரை இருந்தேன். இப்போது, இந்திரன் இப்படி உன்னை ஏளனமாகப் பேசிவிட்டான் என்பதை எண்ணி மனம் கலங்கிவிட்டாய். மமதையை விட கோழைத்தனம் கேடானது. மமதை கொண்டவனாய் இருந்தாலும், தர்மம் தவறாதவனாயும், வாக்கு தவறாதவனாயும், மக்களுக்கு அரிய சேவை செய்ததாலும் உன்னிடம் நான் இருந்தேன். அரிய செயல்கள் செய்பவன் தன்னைத் தூற்றுபவர்களைப் பற்றி கவலைப்படக்கூடாது. உயிர் போனாலும், தன் செயல்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நீயோ சிறு ஏளனச்சொல்லுக்காக மனம் கலங்கி விட்டாய். கோழையாய் மாறி விட்டாய். கோழைகளிடம் நான் தங்குவதில்லை. இதோ...இந்த இந்திரனுக்கு இப்போது நல்ல நேரம். நான் அவனுடன் இனி இருப்பேன் எனச்சொல்லி அவனுள் புகுந்தாள். இந்திரன் சந்தோஷமாகத் திரும்பினான். எனக்கு செல்வம் போனது பற்றி வருத்தமில்லை. இன்று ஒருவரிடம் இருக்கும் செல்வம் நாளை இன்னொருவருடையதாகிறது. ஆனால், என்னைக் கோழை என்று வர்ணித்தாளே திருமகள்...அந்தச் சொற்களைத் தான் தாங்கமுடியவில்லை, எனச் சொல்லி கண்ணீர் வடித்தான்.
நாரதர் அவனைத் தேற்றினார். மகாபலி! யாருமே தூஷணைக்குரியவர்கள் அல்ல. உன் கீழ் வாழ்ந்தோமே என்ற தாழ்வு மனப்பான்மையால் இந்திரன் வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறான். கொட்டியவர்கள் அதை அள்ளியே தீர வேண்டும். கவலைப்படாதே. லட்சுமி உன்னை மீண்டும் வந்தடைவாள், என்று வாழ்த்தினார். நாரதரை தலை தாழ்த்தி வணங்கினான் மகாபலி.நாரதர் சென்ற பிறகு மீண்டும் இந்திரன் மகாபலியிடம் வந்தான். மகாபலி! அடடா! திருமகள் என்னை வந்தடைந்த பிறகு உன் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது போல் தெரிகிறதே! மூவுலகத்தையும் இழந்தாய். இப்போது அருமை பெருமையெல்லாம் இழந்து எலியாய் அலைகிறாய். பாவம், பரிதாபம், என் உதவி ஏதாவது உனக்கு வேண்டுமா? என்றான். மகாபலிக்கு ஆத்திரம் அதிகமாகி விட்டது. நிஜமாகவே உபசரிப்பவர்களுக்கும், நிழல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அறியாதவன் நான் அல்ல இந்திரா! அடேய்! செருக்குற்றவனே! தானம் செய்வதில் உயர்ந்தவன் என்று சாதாரணமாக செருக்கடைந்ததற்காகவே நான் பாதாள லோகத்தில் தள்ளப்பட்டேன். நீயோ, லட்சுமி தாயாரின் தற்காலிக பிரவேசத்திற்காக செருக்கடைந்து குதிக்கிறாய்.யாருக்கும் எப்போதும் நல்ல நேரமாக இருக்கும் என நினைக்காதே. கெட்ட நேரம் திடீரென தாக்கும்.அப்போது, என்னையும் விட கேவலமான நிலையை அடைவாய், என எச்சரித்தான். மகாபலியை மனம் நோக வைக்கலாம் என எண்ணி வந்த இந்திரன், நினைத்தது நடக்காமல் போனதுடன், வறுமையான நிலையிலும் மகாபலியின் ஸ்திர புத்தியை எண்ணி வியந்தான். அதே நேரம் வெட்கி தலைகுனிந்து சென்றான்.நாரதர் அவன் முன்னால் தோன்றினார்.என்ன இந்திரா! எங்கிருந்து வருகிறாய்? உன் முகத்தைப் பார்த்தால் மாபெரும் அசுர மன்னனான மகாபலியைத் தோற்கடித்தவன் போல் தெரியவில்லையே! என்ன விசேஷம்? என்றார். தான் எங்கிருந்து வருகிறோம் என்பதை அறிந்து தான் நாரதர் கேலி செய்கிறார் என்பதை இந்திரன் புரிந்து கொண்டான்.


நாரதர் பகுதி-26





நாரதமுனிவரே! அசுரமன்னனான மகாபலி, எனக்கும் மேலாக புகழ்பெற்று விளங்கினான். நாராயணனின் திருக்காட்சியைப் பெற்றான். அவரால் ஆட்கொள்ளப்பட்டான். ஒரு அசுரனுக்கு கிடைத்த இந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அவனை கேலி செய்யச் சென்றேன். அவனது நல்ல மனதை நான் புரிந்து கொள்ளாமல், அவமானப்பட்டு திரும்புகிறேன். நான் ஏற்கனவே விமர்சனங்களுக்கு ஆளானவன். இன்னும், எனக்கு என்ன கதி வரப்போகிறதோ?என்றான் இந்திரன்.அவனை நாரதர் தேற்றினார். இந்திரா! பிறக்கும் குலம் முக்கியமல்ல. எக்குலத்தில் பிறந்தாலும், ஒருவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதே முக்கியம். அசுரனான மகாபலி, நன்மையை மட்டும் நினைத்தான். நாராயணனுக்காக தன்னையே கொடுத்தான். குலத்தால் தாழ்ந்திருந்தாலும், நல்லவர்களை அணைப்பதே தேவர்களின் கடமை. இதற்காக வருந்தாதே. ஆனாலும், அவனது வயிற்றெரிச்சல் உன்னை சும்மாவிடாது. என்ன செய்யப் போகிறாயோ? என்று இந்திரனின் வயிற்றைக் கலக்கினார் நாரதர். இந்திரன் நிஜமாகவே கலங்கிப் போனான். நாரதரே! நீங்கள்தான் இந்த சிக்கலில் இருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். ஏதாவது ஒரு வழி சொல்லுங்களேன், என்றான். நாரதர் அவனிடம், இந்திரனே! இப்போது உன்னிடம் திருமகள் குடிகொண்டிருக்கிறாள். மகாபலியை இகழ்ந்து பேசியதன் மூலம் அவள் உன்னை விட்டு அகன்றுவிடுவாள். பிறரை குறைசொல்பவர்களிடம் திருமகள் தங்குவதில்லை. குறிப்பாக ஏழைகளை யார் ஒருவர் பழிக்கிறாரோ அவரிடம் திருமகள் அறவே தங்கமாட்டாள். இதிலிருந்து நீ விடுதலை பெற வேண்டுமானால் சில காலம் மண்ணுலகில் வாழ்ந்துதான் ஆகவேண்டும். அங்கிருந்தபடியே நீ சிவபூஜை செய். கங்கையில் சென்று நீராடு. உன் பாவம் தீரும் என்றார். இந்திரனும் அவ்வாறே செய்து திருமகளை தன்னிடம் தக்கவைத்துக் கொண்டான். ஒரு வழியாக மகாபலியின் சாபத்திலிருந்து நாரதரின் உதவியால் தப்பிப் பிழைத்தான்.
இந்திரனைக் காப்பாற்றிய மகிழ்ச்சியுடன் நாரதர் பிரம்மலோகம் சென்றார். அவர் மனதில் நீண்ட நாளாக ஒரு சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகத்தை தன் தந்தையிடம் கேட்டு தெரிந்துகொள்ள விரும்பினார். தந்தையே! சிவபெருமானுக்கு ரிஷப வாகனம் எப்படி அமைந்தது? அவர் ஏன் உடலெங்கும் சாம்பலைப் பூசுகிறார்? அவருடைய உருவத்தின் தத்துவம்தான் என்ன? என்று கேட்டார். பிரம்மாவுக்கு பதில் தெரியும் என்றாலும்கூட, ஏற்கனவே ஒருமுறை முருகனிடம் சிக்கிக்கொண்டது நினைவு வந்தது. ஓம் என்ற பிரணவத்திற்கு பொருள் தெரியாததால் சிறைப்பட்ட தன் பழைய கதையை நினைத்துப் பார்த்தார். மகனே என்றாலும்கூட கலகக்காரன் என்பதால் நாரதருக்கு விடைசொல்ல தயங்கினார். நாரதா! நீ என் பிள்ளையாய் இருந்தாலும் கலகக்காரன் என்பதை ஊரே அறியும். இதுபோன்ற சந்தேகங்களுக்கு நான் ஏதாவது விடை சொல்ல, அதை நீ சிவலோகத்தில் போய் சொல்ல, பிரச்னைகள் ஏற்படும். எனவே நீ திருத்தணிக்கு போ. அங்கே முருகப் பெருமானிடம் உன் சந்தேகத்தைக் கேள். அவர் உனக்கு பதில் சொல்வார், என சொல்லி லாவகமாக தப்பிவிட்டார். தன் தந்தையின் முன்னெச்சரிக்கையைக் கண்டு மனதிற்குள் சிரித்துக்கொண்ட நாரதர், உங்களையா நான் மாட்டிவிடுவேன்? இருப்பினும், தாங்கள் பதில் சொல்ல மறுத்துவிட்டதால் நான் முருகனிடமே போய் தெரிந்துகொள்கிறேன், என சொல்லிவிட்டு, முருகப்பெருமான் குடியிருக்கும் ஆனந்த லோகமான திருத்தணிகை மலைக்கு வந்து சேர்ந்தார். அங்கே வள்ளி தெய்வானை யுடன் முருகப் பெருமான் களித்திருந்தார். நாரதரின் வருகையை அறிந்ததும் அவரை வரவேற்றார். அவர் முருகனை வணங்கி, குமரப் பெருமானே! ஒரு சந்தேகத்தைத் தீர்த்துப் போவதற்காக வந்தேன். இதுகூட தெரியவில்லையே என, என் தந்தையைப் பால் என்னையும் சிறையில் அடைத்துவிடாதீர்கள். இதற்கு ஒப்புக்கொண்டால்தான் கேள்வியே கேட்பேன், என சொல்லிவிட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டார். முருகன் சிரித்தபடியே, நாரதரே! தங்களைப் போன்ற தபஸ்விகளுக்கு இது தெரியாத விஷயமல்ல.
ஒரு பழத்தை வைத்துக் கொண்டு, நீங்கள் என்னையே உலகம் சுற்ற வைத்தவர். மாபெரும் அறிவாளி. அன்னையும், பிதாவுமே முதல் தெய்வம் என்பதை எனக்கு உணர்த்தியவர். அப்படிப்பட்ட தங்களுக்கு இது தெரியாத விஷயமல்ல. இருப்பினும், தெரியாத ஒன்றை பிறர் பணிவுடன் கேட்டால் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை ஞானதானம் என்பர். தங்கள் தந்தை பிரம்மன் எல்லாம் தெரிந்தவர் போல் என்னிடம் பேசினார். அதன் காரணமாகவே அவரை சிறையில் அடைத்தேன். தாங்களோ மிகுந்த பணிவோடு இக்கேள்வியை என்னிடம் கேட்டீர்கள். பதிலைக் கேளுங்கள், என்றவர் தொடர்ந்தார். ரிஷபமாகிய காளை தர்மத்தின் சின்னமாக விளங்குகிறது. ஒரு காலத்தில் இந்த ரிஷபம் சிவபெருமானை நோக்கி தவம் செய்தது. ரிஷபத்தின் நான்கு கால்களும் மனம், புத்தி, எண்ணம், அகங்காரம் என்ற நான்கு வடிவங்களைக் குறிக்கிறது. மற்ற மூன்றாலும், அகங்காரம் என்ற காலை அடக்கி தவம் செய்தது. மேலும், ரிஷபம் கடுமையான உழைப்பின் சின்னம். எவ்வளவு உழைத்தாலும் அகங்காரம் கொள்ளாதவன் யாரோ, எவ்வளவு சிறப்புடையவனாய் இருந்தாலும் ஆணவம் இல்லாதவன் யாரோ அவர் சிவனுக்கு பிரியமானவர். இதனால், சிவபெருமான் அந்தக்காளையை தனது வாகனமாகவே கொண்டார், என்றார். முருகா! நான் இதுவரை யாரிடமும் எதுவும் கேட்டதில்லை. ஆனால், ஞானகுருவான உன்னிடம் ஒன்று கேட்கிறேன். செய்வாயா? என்றார் நாரதர். எல்லாம் வல்ல முருகன் அவர் கேட்கப்போவதை அறிந்தார். நாரதரே! பூலோகத்தில் எதிர்கால தலைமுறையினர் தங்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில், திருத்தணியான இங்கு, ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வணங்கிச் செல்லுங்கள், உங்கள் பெயரால் அந்த லிங்கம் நாரதேஸ்வரர் என அழைக்கப்படும். இத் திருக் கோயிலில் உள்ள தீர்த்தம் தங்கள் பெயரால் நாரதர் தீர்த்தம் என வழங்கப்படும், என்றார். நிறைந்த அருள்பெற்ற மகிழ்ச்சியில் நாரதர் வைகுண்டம் சென்றார். நாராயணப் பெருமாளின் திருப் பாதத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.
முற்றும்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக