திங்கள், 7 நவம்பர், 2011

பக்தி கதைகள் - I (முதல் தொகுப்பு)

ராதே கிருஷ்ணா 07 - 11 - 2011

பக்தி கதைகள் - I (முதல் தொகுப்பு)


உங்கள் ஆசையெல்லாம் நிறைவேறட்டும்! 

பக்தி கதைகள்
    உங்கள் ஆசையெல்லாம் நிறைவேறட்டும்!

    ஒரு துறவி, தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் செய்ய காசிக்குப் புறப்பட்டார். சீடனிடம், நான் இன்னும் இரண்டு தீபாவளிகளுக்கு அங்கே தான் இருப்பேன். மூன்று வருஷம் கழித்தே வருவேன். அதுவரை என் சொத்தை பத்திரமாக பார்த்துக் கொள், என்றார். அப்படி என்ன சொத்து! ஒரே ஒரு கோவணம் மட்டும் தான்! ஒருநாள், காலை எழுந்து பார்த்தபோது, கோவணம் சின்னா பின்னமாகி கிடந்தது. எலி செய்த கைங்கர்யம் என புரிந்து கொண்ட சீடன், ஒரு பூனையை வாங்கினான். பூனைக்கு பால் வாங்க ஒரு பசுவை வாங்கினான். பசுவுக்கு புல் போட ஒரு வயலை வாங்கினான். அங்கே, களை பிடுங்க வந்த ஒரு இளசு மீது காதல் கொண்டான். அது திருமணத்தில் முடிந்தது.
    குழந்தைகளைப் பெற்றான். துறவி திரும்பி வந்தார். ஏண்டா! போகும் போது சீடனாக இருந்தாய். இப்போது சம்சாரியாகி விட்டாயே! எப்படி? என்றார். எல்லாம் உங்கள் கோவணத்தால் வந்த வினை தான் என்றான்.  ஒரு புதுக்கோவணம் வாங்கியிருந்தால் பிரச்னை அப்போதே தீர்ந்திருக்கும். ஆசைகளை இவனாகவே பெருக்கிக் கொண்டு கோவணத்தின் மீது பழியைப் போட்டால் எப்படி? அதனால் உழைப்பைப் பெருக்குங்கள். சிரமங்களை எதிர்கொள்ளும் போது, இறைவனிடம் பாரத்தைப் போட்டுவிட்டு, பணிகளைத் தொடருங்கள். உங்க ஆசை நிறைவேறும்.

     சேராத இடந்தனிலே சேர வேண்டாம்!

    பக்தி கதைகள்
      சேராத இடந்தனிலே சேர வேண்டாம்!


      புத்திசாலிகளுடன் பழகுவது தான் நல்லது. நம்மைச் சேர்ந்தவர்கள் நண்பர்கள், உறவினர்களே ஆயினும் கூட, முட்டாள்தனமான யோசனை சொன்னால், அதைத் தவிர்த்து விட வேண்டும். இல்லாவிட்டால், இந்த வியாபாரிக்கு நேர்ந்த கதை தான் நமக்கும்!  ஒரு வியாபாரியும், அவரது வேலைக்காரனும் அன்றைய வியாபாரத்தை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இரவு நேரமாகி விட்டதால், ஒரு ஊரில் தங்கி மறுநாள் செல்ல முடிவெடுத்தனர். தங்கும் விடுதிகள் ஏதும் கிடைக்காத நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு மடத்தில் வந்து படுத்தனர்.
      வியாபாரி மண்டபத்தின் உள்ளேயும், வேலைக்காரன் திண்ணையிலுமாகப் படுத்தனர். அப்போது, சில திருடர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவன், இருட்டில் படுத்திருந்த வேலைக்காரனின் காலில் தெரியாமல் மிதித்து விட்டான். அவன் அலறியடித்து எழுந்தான். ஏய், காலை மடக்கிப் படுக்கக்கூடாதா? நான் ஏதோ கட்டை கிடப்பதாக நினைத்து மிதித்து விட்டேன், என்றான் மிதித்தவன். வேலைக்காரனுக்கு கோபம்.  உங்க ஊரிலெல்லாம் கட்டைகள் மடியில் பத்து ரூபாய் கட்டை வைத்துக் கொண்டு படுத்திருக்குமாக்கும், என்றான்.  ஆகா...இவனிடம் பணம் இருக்கிறது போலிருக்கிறதே என்று நினைத்தவன், அவனிடமிருந்ததை பறித்துக் கொண்டான்.
      திடீரென அவனுக்கு சந்தேகம். ஏய்! இதெல்லாம் யாருக்கு உரியது? நல்ல நோட்டா, கள்ள நோட்டா? என்று அதட்டினான். அதெல்லாம் எனக்கு தெரியாது. உள்ளே படுத்திருக்கிறாரே எனது எசமான், இதுஅவருடைய பணம். அவரிடம் போய் அந்த விஷயத்தையெல்லாம் கேட்டுக் கொள், என்றான் அந்த அடிமுட்டாள். வேலைக்காரனிடமே இவ்வளவு பணத்தை கொடுத்து வைத்துஇருக்கிறார் என்றால், எஜமானனிடம் எவ்வளவு இருக்கும் என்று கணக்கு போட்ட திருடர்கள், உள்ளே சென்று வியாபாரியிடம் இருந்த பணத்தையும் பறித்துச் சென்று விட்டனர்.  இந்த வியாபாரிக்கு வேலைக்காரன் எப்படி சரியாக அமையவில்லையோ, அப்படித்தான் சிலருக்கு நட்பு, உறவு வட்டாரம் சரியில்லாமல் இருக்கிறது. முட்டாள்களின் சேர்க்கையால் தப்பாமல் கேடு வரும். சரி தானே!

      திருச்செந்தூர் திருநீறு!


      பக்தி கதைகள்
        திருச்செந்தூர் திருநீறு!

        திருச்செந்தூர் அருகிலுள்ள குரும்பூர் கிராமத்தில் வசித்த கந்தவேல் கடும் உழைப்பாளி. நெசவாளியான அவன் எந்நாளும்  உழைத்தாலும், வருமானம் போதவில்லை. கஷ்டஜீவனமே நடந்தது. மனைவி வள்ளியம்மை சிறந்த முருகபக்தை. அவள் நாவில் எந்நேரமும் சரவணபவ என்ற மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கும். மனைவியின் பக்தியில் கணவன் தலையிடமாட்டான். ஆனால், வள்ளியம்மைக்கோ தன் கணவரையும் முருக பக்தனாக்கி விட வேண்டுமென்று ஆசை.  ஒருநாள், அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். அவர், பக்தர்களுக்கு தீட்சை அளித்தார். கணவனின் அனுமதி பெற்று, வள்ளியம்மையும் தீட்சை பெற்று வந்தாள். பின்னொரு நாளில், அவனையும் தீட்சை பெற அழைத்தாள். வள்ளி! உனக்கும், அந்த முருகனுக்கும் தெரியாதா நம் நிலைமை! ஒரு நிமிடம் தறியை விட்டு இறங்கினாலும், அன்றைய புடவையை அன்றே நெய்ய முடியாதென்று! எவ்வளவோ வேகமாக பணி செய்தாலும் இரவாகி விடுகிறது.
        பணி முடிய! புடவையைக் கொண்டு கொடுத்தால் தானே கால் வயிற்று கஞ்சிக்குரிய கூலியாவது கிடைக்கிறது! இது புரியாமல் பேசுகிறாயே! என்றான் . அவளும், நீங்கள் உடலைப் பற்றி மட்டுமே கவலைப் படுகிறீர்கள்! இந்த உடலைப் பயன்படுத்தி ஆன்மாவுக்காக நாம் சேர்த்து வைக்க வேண்டிய சொத்தைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை. இந்த உழைப்பு, வறுமை, குடும்பம் போன்ற நிலைகளைக் கடந்து, அந்த செந்திலாண்டவனின் திருவடியை ஒருநாள் எட்ட வேண்டும். அதற்குரிய கடமையைச் செய்ய வேண்டாமா? என்பாள். அந்த ஆன்மிக அறிவுரை அவனுக்கு புரிந்தும் புரியாதது போலவும் இருக்கும். இருந்தாலும், அவன் தன் நிலையில் இருந்து மாறவில்லை. ஒருநாள், அந்த துறவியையே வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாள் வள்ளியம்மை.  தம்பி! நீ தறியை விட்டு இறங்கி வந்து திருநீறு பூசிக்கொள், செந்திலாண்டவனின் பன்னீர் விபூதி உன்னைத் தேடி வந்துள்ளது என்றார்.  ஐயா! இதைப் பூச இறங்கும் நேரத்திற்குள் ஐந்தாறு இழை ஓடி விடும். எனக்கு உழைப்பே பிரதானம், என்று வேலை யிலேயே கவனமாக இருந்தான்.
        பரவாயில்லை! இனி திருநீறு பூசிய முகத்தையாவது பார்த்துவிட்டு பணியைத் துவங்கு, என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அதை ஏற்றுக்கொண்ட கந்தவேல், பக்கத்து வீட்டு செந்தில் என்பவர் தன் வீட்டு ஜன்னல் வழியே பேச வரும் போது, அவர் முகத்தைப் பார்ப்பான். அவர் அடிக்கடி திருச்செந்தூர் செல்பவர், அங்கிருந்தே பன்னீர் இலை திருநீறு கொண்டு வந்து தினமும் பூசிக்கொள்பவர். ஒருநாள், அவரைக் காணவில்லை. நீறு பூசிய நெற்றியைக் காணாமல் பணி துவங்க முடியாதே. என்ன செய்யலாம்? என கருதி, அவர் ஒரு குளக்கரைக்கு சென்றதை அறிந்து அங்கே ஓடினான். குளக்கரையில் நின்ற அவரது கையில் இருந்த இரண்டு பெட்டிகளில் இரண்டு லட்சம் பணம் இருந்தது. பார்த்துவிட்டேன், பார்த்துவிட்டேன், என்று சொல்லிக்கொண்டே திரும்ப ஓடிவந்து தறியில் அமர்ந்து, ஓடிய நேரத்தை மிச்சப்படுத்த வேகமாக நெய்ய ஆரம்பித்து விட்டான் கந்தவேல். உண்மையில் அவன் பார்த்தது அவரது திருநீற்று நெற்றியைத் தான். சிறிதுநேரத்தில் செந்தில் வந்தார். வள்ளியை அழைத்து, வள்ளி! உன் கணவர் நான் வைத்திருந்த பணப் பெட்டிகளை பார்த்து விட்டார். இவை எனக்கு குளக்கரையில் கிடைத்தன. யாரோ அங்கே மறைத்து வைத்து விட்டு போயிருந்தார்கள். அதில் ஒன்றை உனக்கு தந்து விடுகிறேன். விஷயத்தை உன் கணவனைத் தவிர யாரிடமும் சொல்லாதே, எனச்சொல்லி திணித்து விட்டு போய்விட்டார். ஒன்றுமே இல்லாதவன் கையில் லட்சம் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும்! எல்லாம் பன்னீர் இலை திருநீற்றின் மகிமை என்றவாறே, கந்தவேலும் தீட்சை பெற்று முருகனை வணங்க நேரம் ஒதுக்கினான். மகிழ்ந்த வள்ளி முருகனுக்கு நன்றி சொன்னாள்.

        நாலாவேலையும் நாமே பார்க்கணும்!


        பக்தி கதைகள்
          நாலாவேலையும் நாமே பார்க்கணும்!

          ஒரு எஜமானன் தன் பல்லக்கைத் தூக்க சில பணியாட்களை நியமித்தான். அவர்களும் அவர் சொல்லும் இடத்துக்கு தூக்கிச் செல்வார்கள். ஒருநாள், எஜமானன் பல்லக்கு தூக்கிகளிடம், இன்று பால் கறப்பவன் வரவில்லை. உங்களில் யாராவது கறந்து வாருங்கள், என்றான். அவர்களோ, எங்களுக்கு பல்லக்கு தூக்குவது மட்டுமே வேலை, இதையெல்லாம் செய்யமாட்டோம், என்றனர். அடுத்தநாள், எஜமானன் வீட்டு ஆட்டுக்குட்டி காணாமல் போனது. அதைத் தேடிக் கண்டுபிடித்து வர உத்தரவு போட்டான். இந்த வேலையெல்லாம் எங்களுக்கு தெரியாது. பல்லக்கு தூக்கச் சொன்னால் மட்டும் செய்கிறோம், என்று கறாராகச் சொல்லி விட்டனர். அவர்களுக்கு புத்தி கற்பிக்க நினைத்தான் எஜமானன்.
          ஜோராக உடையணிந்து பல்லக்கில் ஏறி, காட்டு பக்கமாக போங்கள், என்றான். எதற்கு? என்றனர் பல்லக்கு தூக்கிகள். பல்லக்கு தூக்குவது உங்கள் வேலை. அதில் அமர்ந்த படியே, காட்டுக்குப் போன ஆட்டுக் குட்டியைத் தேடுவது என் வேலை, என்றான். பல்லக்கு தூக்கிகளும் வேறு வழியின்றி சுமந்தனர். எஜமான் சொன்னதுமே சென்றிருந்தால் பல்லக்கின் எடையாவது குறைந்திருக்கும். இப்போது கல்லும், முள்ளும் நிறைந்த பாதையில் பல்லக்கையும் எஜமானனையும் சேர்த்து சுமக்க வேண்டியதாயிற்று. முதலாளி சொன்ன வேலையைச் செய்வதே தொழிலாளியின் கடமை. இல்லாவிட்டால், அவனுக்கு சலுகைகள் கேட்க உரிமை கிடையாது.



          தீபாவளி நாயகன்!



          பக்தி கதைகள்
            தீபாவளி நாயகன்!

            நரகாசுரனை வெற்றி கொண்ட கிருஷ்ணன் எந்நேரமும் நம் நினைவில் இருந்தால் போதும். உலகில் எதையும் சாதிக்கலாம். பக்தனின் உண்மை அன்புக்கு மட்டுமே அவன் கட்டுப்படுவான். ஒருசமயம், கிருஷ்ணர் தனக்கு தலைவலி வந்ததுபோல நடித்தார். அவரது மனைவி சத்யபாமாவுக்கு விஷயம் தெரிந்து மருந்துடன் ஓடோடி வந்தாள். அடுத்து ருக்மணி வந்தாள். அவர்கள் தங்களால் ஆன வைத்தியத்தை எல்லாம் செய்து பார்த்தார்கள். வலியால் துடிப்பது போல நடித்தார். அந்த சமயத்தில் நாரதர் அங்கு வந்தார். ஊரையே ஏமாற்றும் நாரதரை உலகளந்த எம்பெருமான் ஏமாற்றி விட்டார். உண்மையிலேயே,சுவாமிக்கு தலைவலி தான் போலும் என்று நம்பிவிட்டார். இதற்கான மருந்தை அந்த பரந்தாமனைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும் என நினைத்து,ஐயனே! எங்களைப் போன்ற ஜடங்களுக்கு வியாதி வந்தால் வைத்தியர் மருந்தளிப்பார். நீயே உலகம். உனக்கு ஒன்று என்றால், அதற்கு மருந்தும் உன்னிடம் தானே இருக்கும். என்ன மருந்து என சொல். வரவழைக்க ஏற்பாடு செய்கிறேன், என்றார்.
            கிருஷ்ணர் அவரிடம், என் மீது அதிக பக்திகொண்டவன் யாரோ, அவனது பாதத்தில் படிந்த மணலை உதிர்த்து தண்ணீரில் கலக்கிக் கொண்டு வாருங்கள். அந்த பாததூளி தீர்த்தம் என்னைக் குணமாக்கி விடும்,  என்றார். நாரதரும் தேடிப்பார்த்தார். யாரும் சிக்கவில்லை. எல்லாரும் தங்கள் பக்தியில் ஏதோ ஒரு குறையைத்தான் கூறினர். கிருஷ்ணரிடமே திரும்பிய நாரதர், மருந்தைச் சொன்ன நீ மருந்து எங்குள்ளது? என்பதையும் சொல்லி விடு, என்றார். அதற்கு, கிருஷ்ணர் சொன்ன பதிலைக் கேட்டு சிரித்துவிட்டார். கிருஷ்ணா! கோபியர்களின் கால் தூசைக் கொண்டு வரச்செல்கிறாயே! எங்களைப் போன்றவர்கள் யாகம்,பூஜைகளால் உன்னை ஆராதிக்கிறோம். அப்படிப்பட்ட நாங்களே எங்கள் பாத தூசை தருவதற்கு யோசிக்கிறோம். கல்வியறிவற்ற கோகுலத்துப் பெண்களின் கால் தூசை கேட்கிறாயே! என்ன விளையாட்டு இது, என்றார். சொன்னதைச் செய்,என்றார் கிருஷ்ணர். நாரதர் கோகுலம் சென்றார்.
            கோபியரே! கிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியில்லை, என்றார். இதைக் கேட்ட மாத்திரத்திலேயே பல கோபிகைகள் மயங்கி விழுந்து விட்டனர். சிலர் அரைகுறை மயக்கத்தில்,கண்ணா! உனக்கு என்னாயிற்று! கிருஷ்ணா! நீ பிழைக்காவிட்டால் நாங்களும் பிழையோம். இந்த உலகில் வாழ மாட்டோம், என்று உயிர்போகும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். சிலர், பித்துப் பிடித்ததைப் போல தயிர் பானைகளை கீழே போட்டு விட்டு அங்குமிங்குமாக ஓடினர். கிருஷ்ணா! உனக்கு என்னாயிற்று? இப்போதே உன்னைப் பார்க்க வேண்டும்! என்று அரற்றினர். அவர்களின் பக்தியைப் பார்த்து நாரதர் அசந்து போனார். தேவலோகத்தில் போய், கிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியில்லை, உங்களில் பக்தி மிக்கவர் பாதத்தூளியைக் கொடுங்கள் என்ற போது, நாங்கள் ஒன்றும் அவர் நினைக்குமளவு பக்தி செலுத்தவில்லையே! என்றார்களே தவிர, ஒருவராவது இப்படி வருத்தப்பட்டார்களா! ஏன்! நாரதனான நானே கூட அப்படி ஒரு நிலையை அடைய வில்லையே! இந்தக் கோபிகைகளோ, கிருஷ்ணனின் உடல்நிலை சரியில்லை என்ற வார்த்தையைக் கேட்டதுமே கலங்கித் துடிக்கிறார்களே! உயிரையே விடுமளவு பக்தி செலுத்துகிறார்களே! இவர்களின் பாதத் தூளியே கிருஷ்ணரின் வியாதியைக் குணப்படுத்தும் என்று நினைத்த நாரதர், அவர்கள் பாதம்பட்ட கோகுலத்து மண்ணில் சிறிதளவு நீரில் கரைத்து கொடுத்தார். கிருஷ்ணருக்கு சுகமாகி விட்டது. நரகாசுரனை அழித்து, நம்மை மகிழ்வுடன் தீபாவளி கொண்டாட வைத்த கண்ணனை நாமும் பக்தியுடன் நினைப்போம்.

            

            கருத்துகள் இல்லை:

            கருத்துரையிடுக