புதன், 9 நவம்பர், 2011

திருவாசகம் | எட்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி - 1 )


ராதே கிருஷ்ணா 09 - 11 - 2011 

12 திருமுறைகள்
    


 எட்டாம் திருமறை
திருவாசகம் | எட்டாம் திருமுறையில் பாடிய பாடல்


 (பகுதி - 1 )




விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க 



   எட்டாம் திருமறை


திருவாசகம் | எட்டாம் திருமுறையில் பாடிய பாடல்


 (பகுதி - 1 )





5. திருச்சதகம் (இது திருப்பெருந்துறையில் பாடப்பட்டது)
பக்தி வைராக்கிய விசித்திரம்.
திருவாசகத்தின் ஐந்தாம் பகுதியிது. தெய்வத் தன்மை பொருந்திய நூறு பாடல்களால் ஆனது. இது பத்துத் தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிலும் பத்துப் பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதியும் யாப்பில் வேறுபடுகின்றது. இந்த நூறு பாடல்களும் அந்தாதித் தொடை பெற்று விளங்குகின்றன. தம்மை ஆட்கொண்டருள திருப்பெருந்துறை இறைவன் பால் மாணிக்கவாசகர் கொண்டிருந்த பேரன்பின் திறம் திருச்சதகத்தால வெளிப்படுகின்றது. இதைப் பக்தி வைராக்கிய விசித்திரம் எனக் கருதுகின்றனர். பத்து வகையாக இரட்சித்த முறைமை எனவும் கூறுகின்றனர். தலைப்புக்களாவன:
1. மெய்யுணர்தல்
2. அறிவுறுத்தல்
3. கட்டறுத்தல்
4. ஆத்தும சுத்தி
5. கைம்மாறு கொடுத்தல்
6. அனுபோக சுத்தி
7. காருணியத்து இரங்கல்
8. ஆனந்தத்து அழுந்தல்
9. ஆனந்தப் பரவசம்
10. ஆனந்தா தீதம்.
1. மெய்யுணர்தல்- கட்டளைக் கலித்துறை
5. மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்(து)
உன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
சயசய போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேனுடை
யாய் என்னைக் கண்டுகொள்ளே.
தெளிவுரை : நறுமணம் நிறைந்த உனது திருவடியை நாடுகிற எனக்கு உடல் புளகாங்கிதம் அடைகிறது. உணர்ச்சியின் வேகத்தால் அது நடு நடுங்குகிறது. என் கைகள் இரண்டையும் தலையில் வைத்து உன்னை வணங்குகிறேன். கண்ணீர் பொங்கி வருகிறது. உள்ளத்தில் இளஞ்சூடு தட்டுகிறது. அந்த உள்ளத்தை உனக்கே கோவில் ஆக்கியதால் நிலையற்ற உலக விவகாரங்கள் எல்லாம் அதைவிட்டுப் பறந்து ஓடுகின்றன. நாவால் உன்னைப் போற்றுகின்றேன். உனது திருவருள் விலாசத்திற்கு மேலும் மேலும் வெற்றி உண்டாகுக என்று வழுத்துகிறேன். ஆதலால் எல்லாவற்றையும் உடையவனே ! நீ என்னுடைய நிலையைக் கண்டு, இரங்கி, உன் அடியவர்களில் ஒருவனாக என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.
6. கொள்ளேன் புரந்தரன் மாலயன்
வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல்
லால்நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே
இருக்கப் பெறின்இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்
லாதெங்கள் உத்தமனே.
தெளிவுரை : இறைவா, நான் உன் திருவருளுக்குப் பாத்திரமானால் இந்திரன் விஷ்ணு பிரம்மா முதலியவர்களின் பதவிகளை ஏற்றுக் கொள்ள மாட்டேன். என் குடி கெட்டாலும் உன் அன்பர்கள் அல்லாது மற்றவர்கள் நட்பை விரும்பேன். நரகம் புகுவதாயினும் அதை இகழ மாட்டேன். மேலோய், உன்னையல்லாது மற்ற தெய்வங்களை நான் மதிக்க மாட்டேன்.
7. உத்தமன் அத்தன் உடையான்
அடியேன் நினைந்துருகி
மத்த மனத்தொடு மாலிவன்
என்ன மனநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட
ஊரூர் திரிந்தெவரும்
தத்தம் மனத்தன பேசஎஞ்
ஞான்றுகொல் சாவதுவே.
தெளிவுரை : இறைவா, உன்னை எல்லோர்க்கும் மேலோன் என்றும், அப்பன் என்றும், என்னை உடையவன் என்றும் இயம்பிக் கொண்டு, நான் தலங்களுக்கெல்லாம் போகவேண்டும், உனது நினைவில் நான் பித்தம் பிடித்தவன் ஆக வேண்டும். நான் மயங்கியிருப்பதாக ஊரார் அவரவர்க்குத் தோன்றியவாறு பேசுவார்கள். செத்தவன் போன்று நான் அவைகளைப் பொருட்படுத்தாது சிவபோதத்தில் திளைத்திருப்பேனாக.
8. சாவமுன் னாள்தக்கன் வேள்வித்
தகர்தின்னு நஞ்ச மஞ்சி
ஆவஎந் தாய்என் றவிதா
இடுநம் மவரவரே
மூவர்என் றேஎம்பி ரானொடும்
எண்ணிவிண் ஆண்டுமண்மேல்
தேவர்என் றேயிறு மாந்தென்ன
பாவம் திரிதவரே.
தெளிவுரை : படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலைச் செய்கின்ற மும்மூர்த்திகள் தங்கள் வேள்வியில் ஆட்டின் ஊனைத் தின்று மகிழ்ந்தனர். வீரபத்திரனிடம் அடியுண்டு இறைவனிடம் முறையிட்டனர். பாற்கடல் கடைந்தபோது வந்த நலன்களை மகிழ்வுடன் ஏற்றனர். விஷம் என்னும் தீங்கு வந்த போது ஐயோ வென்று மகாதேவனிடம் முறையிட்டு ஓடினர். பிரபஞ்சத்தில் இன்ப துன்பங்களுக்கு ஆளாகிய இவர்கள் நம் போன்ற ஜீவர்களேயாம். ஆவ  ஐயோ. அவிதா இடும்  முறையிடும்.
9. தவமே புரிந்திலேன் தண்மலர்
இட்டுமுட் டாதிறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினை
யேன்உனக்(கு) அன்பருள்ளாம்
சிவமே பெருந்திரு எய்திற்றி
லேன்நின் திருவடிக்காம்
பவமே அருளுகண் டாய்அடி
யேற்கெம் பரம்பரனே.
தெளிவுரை : இறைவா, நான் தவம் செய்திலேன்; குளிர்ச்சி மலர்தூவி முறையாக உன்னை வழுத்தியவன் அல்லேன்; வீணில் பிறந்த பாதகன் நான்; பக்தர்களுக்குச் சொந்தமாகிய சிவபோதம் என்னும் அரிய செல்வத்தை நான் பெற்றிலேன்; உன்னை அடைவதற்கான நல்ல பிறவியை எனக்கு நல்கு. பவம்  பிறப்பு.
10. பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட்
டா(து)அடி யேஇறைஞ்சி
இரந்தஎல் லாம்எமக் கேபெற
லாமென்னும் அன்பருள்ளம்
கரந்துநில் லாக்கள்வ னேறின்றன்
வார்கழற்(கு) அன்பெனக்கும்
நிரந்தர மாய்அரு ளாய்நின்னை
ஏத்த முழுவதுமே.
தெளிவுரை : விதவிதமான நல்ல மலர்களை நின் அன்பர்கள் கவனமாய் எடுத்து விரிவாகவும் முறையாகவும் உன்னை வழுத்துகின்றனர். உன் அருளால் வேண்டியதை யெல்லாம் வேண்டியவாறு பெறலாம் என்னும் தெளிவு அவர்களுக்கு உண்டாகிறது. அன்னவர் உள்ளத்தில் நீ ஒளிர்கின்றாய். மற்றவர் உள்ளத்தில் கள்ளன் போன்று நீ மறைந்திருக்கின்றாய். இடையீடின்றி உன்னை நாள் முழுவதும் ஏத்துதற்கு எனக்கும் அருள்புரிவாயாக.
11. முழுவதும் கண்டவ னைப்படைத்
தான்முடி சாய்த்துமுன்னாள்
செழுமலர் கொண்டெங்கும் தேடஅப்
பாலன்இப் பால்எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம்
ஆடிக் கதியிலியாய்
உழுவையின் தோலுகுத்(து) உன்மத்தம்
மேற்கொண்(டு) உழிதருமே.
தெளிவுரை : பிரபஞ்சம் முழுவதையும் சிருஷ்டித்த பிரமதேவன் தந்தையாகிய திருமால் முன்பு ஒரு காலத்தில் தன் தலையைக் கீழ் நோக்கிப் பேர் ஊக்கத்துடன் பாதாளத்தில் தேடியும் அவனுக்கு உன் திருப்பாதம் தென்படவில்லை. அத்தகைய நீ இங்கு எங்களுக்கு உபகாரம் செய்பவனாய்ச் சுடுகாட்டில் பேய்களுடன் கூடி சம்காரத் தாண்டவமாடும் திருப்பாதம் காட்டியருள்கிறாய். தெய்வ சம்பத்து ஏதுமே இல்லாதவனாய் அற்பப் புலித்தோலை அணிந்து கொண்டு பித்துப் பிடித்தவன் போன்று திரிகின்றாய், ஈது என்ன விந்தை !
12. உழிதரு காலும் கனலும்
புனலொடு மண்ணுவிண்ணும்
இழிதரு காலம்எக் காலம்
வருவது வந்ததற்பின்
உழிதரு காலத்த உன்னடி
யேன்செய்த வல்வினையைக்
கழிதரு காலமும் ஆயவை
காத்தெம்மைக் காப்பவனே.
தெளிவுரை : சஞ்சரிக்கின்ற வாயுவும், தீயும், நீரும், மண்ணும், ஆகாயமும் காலாந் தரத்தில் பிரளயத்தில் ஓடுங்கும். சிருஷ்டியையும் பிரளயத்தையும் உண்டு பண்ண வல்ல காலத்தை இறைவா, நீ ஆளுகின்றாய். எனது கொடியவினையை அழிக்கும் மகா காலனாய் நீ இருப்பாயாக. வினையும் காலமும் எங்களை வந்து பாதிக்காதபடி நீ காப்பாற்றுவாயாக.
13. பவன்எம் பிரான்பனி மாமதிக்
கண்ணிவிண் ணோர்பெருமான்
சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண்
டான்என் சிறுமைகண்டும்
அவன்எம் பிரான்என்ன நான்அடி
யேன்என்ன இப்பரிசே
புவன்எம் பிரான்தெரி யும்பரி
சாவ(து) இயம்புகவே.
தெளிவுரை : பவன்  தோற்றுவிப்பவன். உலகுக்கெல்லாம் தலைவன், சந்திர சேகரன். தேவர்களுக்கெல்லாம் தலைவன். மங்களத்தையே உண்டு பண்ணுபவன். அறிவுப் பெருவெளியாய் இருப்பவன். அற்பனாகிய என்னையும் தனக்குச் சொந்தமென்று ஆட் கொண்டுள்ளான். அவன் ஆண்டானாகவும் நான் அடிமையாகவும் இருப்பது வியப்புக்குரிய அவனது பெருந்தன்மையென்று யாண்டும் பகர வேண்டும்.
14. புகவே தகேன்உனக்(கு) அன்பருள்
யான்என்பொல் லாமணியே
தகவே உனைஉனக்(கு) ஆட்கொண்ட
தன்மைஎப் புன்மையரை
மிகவே உயர்த்திவிண் ணோரைப்
பணித்திஅண் ணாஅமுதே
நகவே தகும்எம் பிரான்என்னை
நீ செய்த நாடகமே.
தெளிவுரை : பூரணனே, உன் அன்பர் கூட்டத்தில் பிரவேசிக்க நான் சிறிதும் தகுதியில்லாதவன். அத்தகைய என்னை நீ ஆட்கொண்டது உன் முறைக்கே தகும். கீழான மண்ணுலகில் இருப்பவரைச் சிவ ஞானத்தால் நீ மேலோர் ஆக்குகின்றனை ! விண்ணுலகில் இருப்பவர்க்குச் சிவஞானம் வாய்க்காவிடில் அவர்கள் கீழோர் ஆகின்றனர். அப்பனே, அமிர்தமே, இறைவா, உனது இத்தகைய திருவிளையாடல் வியப்புக்கு உரியதன்றோ !
2. அறிவுறுத்தல்
விவேகத்தைப் பெறுதல்.
(தரவு கொச்சகக் கலிப்பா)
15. நாடகத்தால் உன்னடியார்
போல்நடித்து நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான்
மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே
இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத்
தந்தருள்எம் உடையானே.
தெளிவுரை : நான் பக்தி பண்ணுவது நாடகத்தில் நடிப்பது போன்று நிலையற்றதாயும், என் இயல்பில் ஒன்றுபடாத தாயும் இருக்கிறது. அதற்கிடையில் முக்திபெற நான் அவசரப்படுகிறேன். மற்றுப் பேரன்பு பூண்டு இடையறாது நான் உருகிவந்தால் என் உள்ளம் தூயதாகும். அப்போது அம்பலத்து அரசனாகிய உனது சோதி சொரூபத்தை உள்ளத்தினுள்ளே நான் சுவானுபூதியில் காண்பேன். உடையவனே, என்பாசாங்கைப் பொருட்படுத்தாது உன் முறைப்படி என்னைப் பக்குவப் படுத்துவாயாக.
16. யானேதும் பிறப்பஞ்சேன்
இறப்பதனுக்கு என்கடவேன்
வானேயும் பெறில்வேண்டேன்
மண்ணாள்வான் மதித்தும் இரேன்
தேனையும் மலர்க்கொன்றைச்
சிவனேஎம் பெருமான்எம்
மானேயுன் அருள்பெறுநாள்
என்றென்றே வருந்துவனே.
தெளிவுரை : பிறப்பைப் பற்றியோ இறப்பைப் பற்றியோ எனக்குச் சிறிதும் அச்சமில்லை. விண்ணுலகிலோ மண்ணுலகிலோ பதவி எதையும் நான் விரும்பவில்லை. தேன் செறிந்த கொன்றைப் பூவை அணிந்திருக்கும் சிவனே, எம்பெருமானே, எம்மானே ! உனது அருள் ஒன்றையே நான் யாண்டும் வேண்டுகின்றேன்.
17. வருந்துவன்நின் மலர்ப்பாதம்
அவைகாண்பான் நாயடியேன்
இருந்துநல மலர்புனையேன்
ஏத்தேன்நாத் தழும்பேறப்
பொருந்தியபொற் சிலைகுனித்தாய்
அருளமுதம் புரியாயேல்
வருந்துவன்நல் தமியேன்மற்(று)
என்னேநான் ஆமாறே.
தெளிவுரை : தகுதி நிறைந்த மேரு மலையை வில்லாக வளைத்தவனே, இச் சிறியேன் உன்னுடைய தாமரைத் திருவடிகளைக் காணுதல் பொருட்டு நொந்து முயல்கிறேன். உறுதியான உடல் இருந்தும் நல்ல மலர்தொடுத்து உன்னை நான் அலங்கரிக்கிறேன் இல்லை. நாவில் தழும்பு உண்டாகும்படி உன்னை நான் போற்றுகிறேன் இல்லை. உன் கருணையாகிய அமிர்தத்தை நீ எனக்கு வழங்காவிடில் முற்றிலும் கதியற்ற நான் மிக வருந்துவேன். வேறு எதைத்தான் என்னால் செய்ய முடியும்?
18. ஆமாறுன் திருவடிக்கே
அகங்குழையேன் அன்புருகேன்
பூமாலை புனைந்தேத்தேன்
புகழ்ந்துரையேன் புத்தேளிர்
கோமானின் திருக்கோயில்
தூகேன் மெழுகேன் கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன்
சதுராலே சார்வானே.
தெளிவுரை : மகாதேவா, யோகாசனத்தால் அடையப் பெறுபவனே, அடியேன் உய்தல் பொருட்டு உன் திருவடியை நினைந்து நெஞ்சம் நெகிழ்ந்திலேன். அன்பு பூண்டு இளகிலேன். பூமாலை தொடுத்து உன்னை அலங்கரிக்கவில்லை. பாராட்டிப் பேசவில்லை. உன் திருக்கோயில்களைத் துப்புரவாக்கி மெழுகேன். உனது நாமத்தை உச்சரித்துக் கொண்டு நான் குதித்து ஆடினதில்லை. வீணில் மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன்.
19. வானாகி மண்ணாகி
வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி
உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென்(று)
அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை
என்சொல்லி வாழ்த்துவனே.
தெளிவுரை : விண், மண், காற்று, நெருப்பு, நீர் ஆகிய ஐம்பூதங்களானவன் நீயே. உடலும் உயிரும் ஆனவன் நீயே. தோற்றத்தில் இருப்பவைகளும், தோன்றா நிலையில் இருப்பவைகளும் நீயே ! உயிர்களுக்கு யான் எனது என்னும் ஜீவ வியக்தியைக் கொடுத்திருப்பவனும் நீயே. இவையாவுக்கும் ஈசனாய் இருப்பவனும் நீயே; இவையாவின் செயல்களெல்லாம் உண்மையில் உன் செயல்களாம். அளவு கடந்த உன் மகிமைகளை என்னால் எப்படி விளக்க முடியும்?
ஐம்பூதங்களுள் நீர் இத்திருப்பாடலில் சேர்க்கப்படவில்லையெனினும் அதை நாம் சேர்த்துக் கொள்வது முறை. யாவும் ஈசன் சொரூபம், யாவும் அவன் செயல் என்று அறிந்து கொள்வது அறிவாகும்.
20. வாழ்த்துவதும் வானவர்கள்
தாம்வாழ்வான் மனநின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து
தம்மையெலாம் தொழவேண்டிச்
சூழ்த்துமது கரமுரலும்
தாரோயை நாயடியேன்
பாழ்த்தபிறப்பு அறுத்திடுவான்
யானுமுன்னைப் பரவுவனே.
தெளிவுரை : தேனீக்கள் ரீங்காரமிட்டு மொய்த்துக் கொண்டிருக்கும் மலர் மாலையை அணிந்திருக்கும் அண்ணலே! தேவர்கள் நெடிது வாழ்ந்திருத்தல் பொருட்டும், பிறர் தம்மைத் தொழுவதற்கான பதவியைப் பெறுதற் பொருட்டும் தங்கள் மனத்தை நின்பால் செலுத்தி உன்னை வணங்குகின்றனர். சிறியேனாகிய நான் பிறவித் தளையினின்று விடுபடுதற் பொருட்டு உன்னை வழுத்துவேன்.
21. பரவுவார் இமையோர்கள்
பாடுவன நால்வேதம்
குரவுவார் குழல்மடவாள்
கூறுடையாள் ஒருபாகம்
விரவுவார் மெய்யன்பின்
அடியார்கள் மேன்மேலுன்
அரவுவார் கழலிணைகள்
காண்பாரோ அரியானே.
தெளிவுரை : அரவு  ஓசை. யாராலும் அறியப் படாதவனே. தேவர்கள் உன்னை முன்னிலையில் வைத்துப் பாராட்டுகின்றனர். வேதங்கள் உன்னைப் படர்க்கையில் வைத்துப் பாடுகின்றன. குராமலரை அணிந்த நீண்ட கூந்தலையுடைய உமாதேவி உனது சொரூபத்தின் இடப்பக்கமாகின்றாள். உன்னிடம் பேரன்பு பூண்டுள்ள அன்பர்கள் திரும்பத் திரும்ப உன்னோடு கலக்கின்றனர். ஒலிக்கின்ற நீண்ட கழல்களை அணிந்திருக்கும் உன் திருவடிகளை இவர்களுள் யார்தான் முற்றும் கண்டிருக்கின்றனர். யாரும் இல்லை.
22. அரியானே யாவர்க்கும்
அம்பரவா அம்பலத்தெம்
பெரியானே சிறியேனை
ஆட்கொண்ட பெய்கழற்கீழ்
விரையார்ந்த மலர்தூ வேன்
வியந்தலறேன் நயந்துருகேன்
தரியேன்நான் ஆமாறென்
சாவேன்நான் சாவேனே.
தெளிவுரை : நீ சிதம்பர ரகசியமாக அல்லது நிர்க்குண சொரூபமாய் இருப்பது யாருக்குமே விளங்காது. மற்று நீ சபாபதியாய் இருந்து அற்பனாகிய என்னை ஆட்கொண்டாய், அதில் நான் நிலை பெறுதல் பொருட்டு உன் திருவடிகளில் மணமலர் தூவவில்லை. உன் செயலை அதிசயித்து ஆரவாரம் செய்யவில்லை. அன்பால் நெஞ்சம் உருகவில்லை. பொருந்தாத இவ்வாழ்க்கை நான் வைத்திருக்க மாட்டேன். நான் உய்யும் வழி யாது? நான் செத்தே போவேன்.
23. வேனில்வேள் மலர்க்கணைக்கும்
வெண்ணகைச்செவ் வாய்க்கரி
பானலார் கண்ணியர்க்கும்
பதைத்துருகும் பாழ்நெஞ்சே
ஊனெலாம் நின்றுருகப்
புகுந்தாண்டான் இன்று போய்
வானுளான் காணாய் நீ
மாளாவாழ் கின்றாயே.
தெளிவுரை : மன்மத பாணத்துக்கும் காமத்துக்கும் வசப்பட்டுள்ள மனமே, நீ பாழாய்ப் போகின்றாய். உருவம் எடுத்து நம்மை ஆளவந்த ஈசன் இன்று அருவமாயிருக்கிறான். அவனைக் குறித்து முழுதும் உருகுவாயாகில் நீ உய்வு அடைவாய். காம நோய்க்கு உட்பட்டவர் ஒரு பொழுதம் பரமனை அடையார். மன்மத தகனம் செய்தவரே ஈசனை அடைவார்கள் என்னும் கோட்பாடு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் இரண்டு அடிகளில் மகளிரின் அழகு சித்திரிக்கப்பட்டுள்ளது.
24. வாழ்கின்றாய் வாழாத
நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல்
காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடுனக்குச்
சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக்
கடலாய வெள்ளத்தே.
தெளிவுரை : பெருவாழ்வு வாழத் தெரியாத நெஞ்சமே. நீ புல்லிய வாழ்வு வாழ்கின்றாய். தீவினையில் அகப்பட்டு அதனுள் அழுந்துகின்றாய். அப்படி அழுந்தாமல் காப்பாற்றும் கடவுளை வணங்காமல் உனக்கு நீயே கேட்டைத் தேடிக் கொள்ள நினைக்கின்றாய். உனக்கு நான் திரும்பத் திரும்ப இடித்துரைக்கின்றேன். ஆயினும் நீ துன்பக் கடலில் மூழ்குகின்றாய்.
3. சுட்டறுத்தல்
சுட்டு என்னும் சொல் சுட்டறிவு அல்லது சுட்டுணர்வைக் குறிக்கிறது. பஞ்சேந்திரியங்களுக்கு விஷயமாவதெல்லாம் சுட்டறிவு. அந்தக்கரணமாகிய மனம், புத்தி, அகங்காரத்தால் கிரகிக்கப் படுவதெல்லாம் சுட்டுணர்வு. இங்ஙனம் ஜீவாத்மனுக்கு எட்டுகிற பிரகிருதி சம்பந்தமான விஷயங்களில் அவன் பற்று வைக்கிறான். பற்றுதல் ராகம் எனப் பகரப் பெறுகிறது. பற்றற்ற நிலை விராகம் அல்லது வைராக்கியம் ஆகிறது. ஆகச் சுட்டறுத்தல் என்பது வைராக்கியத்தைப் பெறுதலாம்.
(எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.)
25. வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலில் கீழ்மே லாகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளந்தாள் நின்றுச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண்ணிணையும் மரமாம்தீ வினையி னேற்கே.
தெளிவுரை : கங்காதரா என்றும், ஜடாதரா என்றும், ரிஷபாரூடா என்றும், மகாதேவா என்றும் உன்னை அழைப்பதைக் கேட்ட மாத்திரத்தில் உன் அன்பர்கள் அருள் வேட்கை யெடுத்துப் பரவசமடைகின்றனர். பேர் அருவி வீழ்கின்ற மடுவினுள் தலை கீழாக மாட்டிக் கொண்டவர்கள் உயிர் தப்பிக்கத் திணறுவது போன்று உன் அன்பர்கள் உன் அருளைப் பெறப் பேரவா உறுகின்றனர். அன்னவர்களைக் காத்திருக்க வைத்துவிட்டு என்னை நீ ஆட்கொண்டுள்ளாய். அவர்கள் பெற்றுள்ள பேரவாவைப் பெறுதற்கு அடியேனது சிறுநெஞ்சம் போதாது. உள்ளங்கால் முதல் உச்சியளவு நான்நெஞ்சு ஆகி உருக வேண்டும். அவர்களுக்கு நிகராக அன்புக் கண்ணீர் மல்குதற்கு என்னை இரண்டு கண்கள் போதா. உடம்பெல்லாம் கண்ணாய் அவைகளினின்று கண்ணீர் பெருகி வெள்ளமாகப் பாய்தல் வேண்டும். ஆனால் என் தந்தையே இந்தச் சிறு நெஞ்சமும் கல் நெஞ்சமாகி உருகாதிருக்கிறது. உலர்ந்த மரக்கட்டையில் செய்த கண்கள் இரண்டும் வறண்டு கிடக்கின்றன. என்வினை எவ்வளவு கொடியது!
26. வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போதுநான் வினைகேடன் என்பாய் போல
இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை
ஆட்கொண்டுஎம் பிரான்ஆனாய்க் கிரும்பின் பாவை
அனையநான் பாடேன்நின்று ஆடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோநான் ஆன வாறு
முடிவறியேன் முதலந்தம் ஆயி னானே.
தெளிவுரை : இறைவா உயிர்களின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் காரணமாய் இருப்பவனே, கரும பந்தத்துக்கு ஆளாயிருக்கும் என்முன் நீ வந்து என்னை வானென்று அழைத்து நீ வினைத் தளையை அகற்றும் பரமன் என்று உன்னை அறிமுகப் படுத்தி என்னை ஆட்கொண்டாய். நீ எங்கள் தலைவன். உன் பொருட்டு இரும்புப் பொம்மை போன்ற நான் பாடவும் இல்லை. ஆடவும் இல்லை. வற்றி வாடவும் இல்லை. பரவசத்தால் மூர்ச்சை போகவும் இல்லை. இப்படி நான் நடந்து கொள்வது சரியா? என்கதி என்ன ஆகுமென்று எனக்கு விளங்கவில்லை.
27. ஆயநான் மறையவனும் நீயே யாதல்
அறிந்துயான் யாவரினுங் கடையன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்
நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்
அடியார்தாம் இல்லையே அன்றி மற்றோர்
பேயனேன் இதுதான்நின் பெருமை அன்றே
எம்பெருமான் என்சொல்லிப் பேசு கேனே.
தெளிவுரை : ஆராய்ந்து பார்க்குமிடத்து நீயே யாவர்க்கும் பெரியவன் என்று நான்கு வேதங்களும் முறையிடுகின்றன. நான் யாவர்க்கும் சிறியவன் என்பதும் வெளியாகிறது. ஆயினும் நான் உனக்குப் புறம்பானவன் அல்லன் என்பதும் அந்த ஆராய்ச்சியின் விளைவாம். நாயையும் பேயையும் ஒத்த நான் உனக்கு அன்பன் என்று சொன்னதும் நீ அதை உறுதிப் படுத்தி விட்டாய். உனக்கு வேறு அன்பர்கள் இல்லாமையினால் நீ இப்படிச்செய்யவில்லை. தகுந்த அன்பர்கள் பலர் உனக்கு இருக்கின்றனர். கருணையினால் நீ இங்ஙனம் செய்தாய். உன் மகிமையை நான் எப்படிக் கூறமுடியும்?
28. பேசில்தாம் ஈசனே எந்தாய் எந்தை
பெருமானே என்றென்றே பேசிப் பேசிப்
பூசில்தாம் திருநீறே நிறையப் பூசிப்
போற்றியெம் பெருமானே எனறு பின்றா
நேசத்தால் பிறப்புஇறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே அவாவெள்ளக் கள்வ னேனை
மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
என்னைநீ ஆட்கொண்ட வண்ணம்தானே.
தெளிவுரை : பின்றா  பிறழாத தேஜோ மயமான எந்தையே, பேச வேண்டியதாயின் உன் அன்பர்கள் ஈசா, எம்தாய், எம் தந்தை, எம்பெருமான் என்று ஓயாது உன்னையே பற்றிப் பேசுவார்கள். அவர்கள் திருநீற்றையே நிரம்பப் பூசுவார்கள். உன்னிடத்து மாறாத அன்பு பூண்டதனால் அவர்கள் ஜனன மரணத்தைக் கடந்தனர். நீயும் அவர்களை ஆட்கொண்டாய். பின்பு உலக ஆசை வெள்ளத்தில் மூழ்கிய கள்வனாகிய என்னையும் நீ ஆட்கொண்ட தன்மைதான் என்னே !
29. வண்ணந்தான் சேயதன்று எளிதே அன்று
அநேகன்ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்றங்கு
எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமாறு அறியாத எந்தாய் உன்றன்
வண்ணந்தான் அதுகாட்டி வடிவு காட்டி
மலர்க்கழல்கள் அவைகாட்டி வழியற் றேனைத்
திண்ணந்தான் பிறவாமல் காத்தாட் கொண்டாய்
எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக் கேனே.
தெளிவுரை : நீ நிறத்தில் சிவந்தவனா? வெளுத்தவனா? நீ அநேகனா, ஏகனா, நீ அணுவடிவினனா, பரம அணுவினனா, இப்படி யெல்லாம் ஆராய்ந்து தேவர்கள் குழப்படைந்தனர். உன்னை அடையும் மார்க்கம் அறியாதிருந்த எனக்கு அதைக் காட்டியருளி, உனது நிஜசொரூபமானது இவை யாவுக்கும் அப்பாற்பட்டது என்பதையும் அனுபூதியில் விளக்கினாய். என் ஐயங்கள் அகன்று போயின. நான் பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டவன் என்பதையும் அறிந்து கொண்டேன். சொல்லாலும் சிந்தனையா லும் உன்னைப் போற்றுவது குறைபட்ட வழிபாடாம்.
30. சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்தன்
கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையும அம்மலர்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர
வந்தனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனைசெந் தாமரைக்காடு அனைய மேனித்
தனிச்சுடரே இரணடுமிலித் தனிய னேற்கே.
தெளிவுரை : பெரிய அமிர்தக் கடலே, மலையே, செந்தாமரைக் காடுபோன்ற மேனியனே, சுயஞ்சோதியே. என் மனத்தை உனக்கு உரியதாக்கினாய். கண் இரண்டும் உன் திருவடிக் கமலங்களைக் காண்பதற்கு ஏவினாய். செய்யும் வழிபாடும் உன் திருவடிகளுக்கு உரியதாக்கினாய். என் பேச்செல்லாம் உன் பெருமையைப் புகழ்வதற்குப் பயன்படுத்தினாய். ஐம்பொறிகளுக்கும் உனது அருட் பிரசாதத்தை வழங்கினாய். என்னுள்ளே நீ பிரவேசித்திருப்பது வியப்புக்குரிய விந்தையாம். கரணங்களை ஒடுக்குதல், கரணங்களை வழிபாட்டுக்குப் பயன்படுத்துதல் ஆகிய இரண்டு நெறிகளையும் அறியாத என்னை நீ இங்ஙனம் ஆட்கொண்டுள்ளாய்.
31. தனியனேன் பெரும்பிறவிப் பௌவத்து எவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டு
இனியென்னே உய்யுமாறு என்றென்று எண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை
முனைவனே முதலஅந்தம் இல்லா மல்லல்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே.
தெளிவுரை: காலால்  காற்றால்; புனை  மரக்கலம். துணையேதும் கிடைக்கப் பெறாத நான் பிறவிப் பெருங்கடலில் தத்தளிக்கிறேன். துன்பம் என்னும் பேரலை வந்து மோதுகிறது. மாதர் மயக்கம் என்னும் காற்று வீசி என் மனத்தைக் கலக்குகிறது. ஆசை என்னும் சுறாமீன் என்னை விழுங்க வருகிறது. இனி உய்யும் வகையாது என்று பலவாறு எண்ணுகிறேன். இந்த நெருக்கடியில் பஞ்சாட்சரமாகிய நமசிவாய என்னும் மரக்கலம், முதல்வா, உனது அருளால் கிடைக்கிறது. அறிவிலியாகிய என்னை நீ முக்தி யென்னும் சாசுவதமான பெருநிலத்தில் கொண்டு சேர்க்கிறாய்.
32. கேட்டாரும் அறியாதான் கேடுஒன் றில்லான்
கிளையிலான் கேளாதே எல்லாம் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே
காட்டா தனவெல்லாம் காட்டிப் பின்னும்
கேளா தனவெல்லாம் பேட்பித் தென்னை
மீட்டேயும் பிறவாமல் காத்தாட் கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே.
தெளிவுரை : விச்சை  சிவஞானம்; பூதங்களால் ஆகிய காது கொடுத்துக் கேட்டுப் பரமனை யாரும் அறிந்து கொள்ள முடியாது. அவன் மாறுபாடு ஏதும் இல்லாதவன். அவயவங்கள் இல்லாத பூரணன். ஊனச் செவியில்லாது அவன் அனைத்தையும் கேட்கிறான். உலகத்தவர்கள் உலக போதத்தில் விழித்திருக்கையில் அவர்களுக்கிடையில் எனக்கு உட்கார்ந்திருக்க ஆசனம் கொடுத்துப் பரபோதத்தை என்பால் அவன் ஊட்டி யருளினான். கரணங்களின் துணையில்லாமல் சிவபோதத்தை நான் பெறலானேன். பிறப்பு இறப்பு அற்ற ஆத்ம சொரூபம் நான் என்பதை அனுபூதியில் அறிந்து கொண்டேன். இறைவன் தந்தருளிய சிவஞானத்தை வாக்கால் விளக்க முடியாது.
33. விச்சைதான் இதுவொப்பது உண்டோ கேட்கின்
மிகுகாதல் அடியார்தம் அடியன் ஆக்கி
அச்சந்தீர்த் தாட்கொண்டான் அமுதம் ஊறி
அகம்நெகவே புகுந்தாண்டான் அன்பு கூர
அச்சன்ஆண் பெண்அலிஆ காசம் ஆகி
ஆரழலாய் அந்தமாய் அப்பால் நின்ற
செச்சைமா மலர்புரையும் மேனி எங்கள்
சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே.
தெளிவுரை : தந்தை, ஆண், பெண், அலி, பஞ்ச பூதங்கள் ஆகிய இத்தனையுமாய் இருப்பவன் சிவன். இவை யாவும் ஒடுங்குமிடம் அவனே. இவை யாவுக்கும் அப்பால் இருப்பவனும் அவனே. அழகிய வெட்சிப் பூப்போன்று சிவந்த மேனியுடையவன் அவன். பேரன்பே வடிவெடுத்துள்ள தன் அன்பர் கூட்டத்தில் அவன் என்னைச் சேர்த்து வைத்தான். அவர்களோடு சேர்ந்திருக்கும் போது உலகப் பற்று வந்து விடுமோ என்னும் அச்சம் இல்லை. அமிர்த சொரூபமாக அவன் என் நெஞ்சில் கலந்துள்ளான். இது போன்ற பரவித்தை யொன்றை வேறு எங்கேனும் யாராவது கேட்ட துண்டா?
34. தேவர்கோ அறியாத தேவ தேவன்
செழும்பொழில்கள் பயந்துகாத்து அழிக்கும் மற்றை
மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாதாளும் பாகத்து எந்தை
யாவர்கோன் என்னையும்வந்து ஆண்டு கொண்டான்
யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவனடியால் அடியா ரோடும்
மேன்மேலும் குடைந்தாடி ஆடு வோமே.
தெளிவுரை :  மகாதேவனைத் தேவேந்திரன் அறியமாட்டான். மும்மூர்த்திளுக்கும் அவனே தலைவன். தோன்றியுள்ள அனைவர்க்கும் அனைத்துக்கும் அவனே முதற்பொருள். உமாதேவியாரை ஒரு பாகத்தில் வைத்துள்ள தந்தை என்னை வலிய வந்து ஆட்கொண்டான். அவனைத் தவிர வேறுயாருக்கும் நாங்கள் குடியல்லோம். இனி அஞ்சுவதற்கு யாண்டு ஒன்றும் இல்லை. அவன் அடியார் அனைவரும் கூடி ஆனந்த சாகரத்தில் திளைத்திருப்போம்.
கட்டறுத்தலில் அல்லது பூரண வைராக்கியத்தில் நிலைத்திருப்பவர்க்குச் சிவஞானம் வாய்க்கிறது. அதை அடையப் பெற்றவர்க்கு அபயம் அல்லது அஞ்சாமை வாய்க்கிறது.
4. ஆத்தும சுத்தி
ஆத்மா என்னும் சொல்லானது உடல், உள்ளம், ஜீவன், பரம்பொருள் ஆகிய இவை யாவையும் குறிப்பதாகும். ஈண்டு அது உள்ளம் அல்லது அந்தக் கரணத்தைக் குறிக்கிறது. சித்த சுத்தியடைதல், சாதனத்தில் முன்னேற்றத்துக்கு இன்றியமையாததாம்.
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
35. ஆடு கின்றிலை கூத்துடை
யான்கழற்கு அன்பிலை என்புருகிப்
பாடு கின்றிலை பதைப்பதும்
செய்கிலை பணிகிலை பாதமலர்
சூடு கின்றிலை சூட்டுகின்
றதுமிலை துணையிலி பிணநெஞ்சே
தேடு கின்றிலை தெருவுதோ
றலறிலை செய்வதொன் றறியேனே.
தெளிவுரை : செயலற்றுப் பிணம்போன்று கிடக்கிற நெஞ்சே! உனக்கு ஆனந்தக் கூத்தனது திருவடியில் அன்பு இல்லை. அன்பின் மேலீட்டால் நீ ஆடுவதில்லை. எலும்பு உருகப் பாடுவதில்லை. உணர்ச்சியின் வேகத்தால் பதைபதைப்பு அடைவதில்லை. வணங்குவதில்லை. பாத கமலத்தைத் தலையில் தரிப்பதில்லை. மலர் தூவிப் பாதங்களை அலங்கரிப்பதில்லை. கடவுள் நாட்டம் கொள்வதில்லை. கடவுளைப் போற்றி பாடிக் கொண்டு வீதிவீதியாய்ப் போவதில்லை. இறைவனது துணையைத் தேடாத உன்னை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று எனக்கு விளங்கவில்லை.
36. அறிவி லாத எனைப்புகுந்து
ஆண்டுகொண்டு அறிவதை அருளிமேல்
நெறியெ லாம்புலம் ஆக்கிய
எந்தையைப் பந்தனை யறுப்பானைப்
பிறவி லாதஇன் அருள்கள்பெற்று
இருந்து மாறாடுதி பிணநெஞ்சே
கிறியெ லாமிகக் கீழ்ப்படுத்
தாய்கெடுத் தாய்என்னைக் கெடுமாறே.
தெளிவுரை : ஞானமில்லாத என் உள்ளத்தில் எழுந்தருளி இறைவன் எனக்கு மெய்ஞ்ஞானத்தை நல்கி யருளினன். மேலான மார்க்கங்களை எல்லாம் எனக்குத் தெளிவாக்கிய என் தந்தை அவன், பிறவித் தளையை அகற்றியவன் அவன். அப்பெருமானை விட்டுப் பிரியாத இனிய வீபூதிகள் பல இருக்கின்றன. இவைகள் உனக்குச் சொந்தமாயிருந்தும் அற்ப மானதே. நெஞ்சே, நீ கீழ்மையில் தடுமாற்றம் அடைகின்றாய். பொய் நடைகள் உன்னிடத்து மிகுந் திருக்கின்றன. கெடுவதற்கான உபாயங்களால் என்னைக் கெடுத்துக் கீழ்மையில் ஆழ்த்துகின்றாய்.
37. மாறி நின்றெனைக் கெடக்கிடந் தனையையெம்
மதியிலி மடநெஞ்சே
தேறு கின்றிலம் இனியுனைச்
சிக்கெனச் சிவனவன் திரள்தோள்மேல்
நீறு நின்றது கண்டனை
ஆயினும் நெக்கிலை இக்காயம்
கீறு கின்றிலை கெடுவதுன்
பரிசிது கேட்கவும் கில்லேனே.
தெளிவுரை : அறிவு கெட்ட எனது மூட மனதே. பகைத்திருந்து என்னைக் கெடுக்குமாறு என்னுள் உறைகின்றமை ஒத்தாய். உம்மை இனி ஒரு போதும் நம்பமாட்டோம். தமது திரண்ட தோளின் மீது சிவனார் திருநீறு அணிந்திருந்ததை நீ கண்டாய். அப்படியிருந்தும் உள்ளக் கசிவு உனக்கு உண்டாகவில்லை. உடல் பாசம் உனக்கு நீங்கவில்லை. அழிந்து பட்டுப் போவது உன்போக்கு இதனைக் கேட்கவும் சகியேன்.
38. கிற்ற வாமன மேகெடு
வாயுடை யானடி நாயேனை
விற்றெ லாமிக ஆள்வதற்கு
உரியவன் விரைமலர்த் திருப்பாதம்
முற்றி லாவிளந் தளிர்பிரிந்
திருந்துநீ உண்டன எல்லாம்முன்
அற்ற வாறுநின் னறிவுநின்
பெருமையும் அளவறுக் கில்லேனே.
தெளிவுரை : சலிப்பில்லாது இந்திரிய விஷயங்களில் உழன்று கொண்டிருக்கும் மனமே. நீ அழிந்து பட்டுப் போவாய். யாண்டும் தனது இளமை மாறாதிருக்கும். இறைவனது திருவடிக்கே நான் ஆளாகி யிருக்கிறேன். என்னை விற்க வோ வேறு என்ன செய்யவோ அவனுக்கு உரிமை யுண்டு. அந்த இறைவனைப் புறக்கணித்து விட்டு என்னால் கணக்கிட முடியாத அற்ப சுகங்களை நீ அனுபவித்திருக்கிறாய். அதற்கேற்ற சிற்றறிவும் உன்னிடத்திருக்கிறது. நீ பெற்ற பெருமை யெல்லாம் மாயமாய் மறைந்து போனதை எண்ணிப்பார்.
39. அளவு அறுப்பதற்கு அரியவன்
இமையவர்க்கு அடியவர்க்கு எளியான்நம்
களவு அறுத்துநின்று ஆண்டமை
கருத்தினுள் கசிந்துணர்ந்து இருந்தேயும்
உளக றுத்துணை நினைந்துளம்
பெருங்களன் செய்ததும் இலைநெஞ்சே
பளகு அறுத்துடை யான்கழல்
பணிந்திலை பரகதி புகுவானே.
தெளிவுரை : தேவர்களால் அறியவொண்ணாதவன். ஆனால் அன்பர்களுக்கு எளியவன் இறைவன். அவன் நமது தீமையை அகற்றி நம்மை ஆட்கொள்ள உள்ளத்தில் உறுதி படைத்துள்ளான். அவன் கருணையைக் கருத்தில் வாங்கிக் கசிந்துருகியிருக்க வேண்டும். முத்தி அடைதல் பொருட்டு இந்திரியங்களுக்கு இலக்காயுள்ள விஷயங்களை வெறுத்து விலக்க வேண்டும். கேடுகளை அகற்றி ஆண்டவனது திருவடியை வணங்குதல் வேண்டும். மனமே, இங்ஙனம் செய்யாத உன் இயல்பு தான் எத்தகையது?
40. புகுவது ஆவதும் போதரவு
இல்லதும் பொன்னகர் புகப்போதற்கு
உகுவது ஆவதும் எந்தைஎம்
பிரான்என்னை ஆண்டவன் கழற்குஅன்பு
நெகுவது ஆவதும் நித்தலும்
அமுதொடு தேனொடு பால்கட்டி
மிகுவது ஆவதும் இன்றெனின்
மற்றிதற்கு என்செய்கேன் வினையேனே.
தெளிவுரை : சிவசாயுஜ்யம் அல்லது பராமார்த்திகப் பெருநிலை அன்பரால் அடையப் பெறுவதாகிறது. பின்பு அது ஒரு பொழுதும் இழக்கப்படுவதன்று. அதை அடைதற்கு உலகப் பற்று நீங்குதல் வேண்டும். என்தந்தை, எம் தலைவன், என்னை ஆட் கொண்ட இறைவன் திருவடியில் அன்பு வைத்து உருக வேண்டும். அப்படிச் செய்வதின் விளைவாகிய பேரானந்தம் மேலும் மேலும் வளர வேண்டும். அத்தகைய அருள் பேறுகள் எனக்கு இல்லாது போனது என் வினையின் விளைவாம்.
41. வினையென் போலுடை யார்பிறர்
ஆருடை யான்அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிரிவது
திருக்குறிப்பு அன்றுமற் றதனாலே
முனைவன் பாதநன் மலர்பிரிந்து
இருந்துநான் முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை இரும்புகல்
மனம்செவி இன்னதென் றறியேனே.
தெளிவுரை : பாவனைஉணர்ச்சி. என்னைப் போலக் கொடிய வினையாளன் யாரும் இல்லை. அதை முன்னிட்டு என்னைப் பிரித்து வைப்பது இறைவனுடைய திருவருள் நோக்கமன்று. என்வினையின் விளைவாக ஆதிபகவனிடமிருந்து நானே பிரிந்திருக்கிறேன். அதைக் குறித்து வருந்தி நான் தலையை மோதிக் கொள்வதில்லை. அதைப் பிளக்க முயலவும் இல்லை. இரும்பு போன்று நான் உணர்ச்சி யற்றவன். என் மனம் கல். இனிக் காது எத்தகையதென்று எனக்கே தெரியாது.
42. ஏனை யாவரும் எய்திடல்
உற்றுமற்று இன்னதென் றறியாத
தேனை ஆன்நெயைக் கரும்பின்இன்
தேறலைச் சிவனைஎன் சிவலோகக்
கோனை மான்அன நோக்கிதன்
கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம்
ஊனை யானிருந்து ஓம்புகின்
றேன்கெடு வேன்உயிர் ஓயாதே.
தெளிவுரை : பக்தர் அல்லாத ஏனை யோர்க்குச் சிவ சொரூபம் எத்தகையது என்பது பிடிபடாது. அவனை நாடுகின்றவர்க்குத் தேன், பசுநெய், கருப்பஞ்சாறு போன்று சிவானந்தம் அதிகரிக்கும். அவன் மங்களத்தை உண்டு பண்ணுபவன் . சிவலோகத்துக்கு இறைவன். மானின் பார்வை போன்ற நோக்குடைய உமாதேவியாரின் வலப்பக்கத்தில் இருப்பவன். அப்பெம்மானை நான் பக்தி பூண்டு அணுகவில்லை. அதற்கு மாறாக உடலை ஓம்புவதிலேயே நான் கண்ணுங் கருத்துமாய் இருக்கிறேன். இப்படிச் செய்வதைவிட நான் செத்தொழிவது நலம்.
43. ஓய்லி லாதன உவமனில்
இறந்தன ஓள்மலர்த் தாள்தந்து
நாயி லாகிய குலத்தினும்
கடைப்படும் என்னை நன்னெறி காட்டித்
தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன்
தலைவனை நனிகாணேன்
தீயில் வீழ்கிலேன் திண்வரை
உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே.
தெளிவுரை : அழிவில்லாதவைகளும் ஒப்பு உவமை இல்லாதவைகளும் ஞான ஒளிவீசும் தாமரை போன்றவைகளுமாகிய தன் திருவடிகளை இறைவன் எனக்குத் தந்தருளினான். குலத்தில் நாயினும் கடைப்பட்ட எனக்கு அவன் ஞான நெறி காட்டியருளினான். தாயின் உள்ளம் கொண்டு அவன் என்னை ஆண்டருளினான். அவனை ஓவாது காணப் பெறாமையை முன்னிட்டு நான் தீயில் வீழ்ந்தோ, செங்குத்தான மலையினின்று உருண்டோ, ஆழ்கடலில் மூழ்கியோ உயிர் துறவாது இருக்கிறேன். அந்தோ !
44. வேனில் வேள்கணை கிழித்திட
மதிசுடு மதுதனை நினையாதே
மான்நி லாவிய நோக்கியர்
படிறிடை மத்திடு தயிராகித்
தேன்நி லாவிய திருவருள்
புரிந்தஎன் சிவனகர் புகப்போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதல்
பொருட்டினும் உண்டுஉடுத் திருந்தேனே.
தெளிவுரை : வேனில் வேள்  மன்மதன். தேன்போன்று தித்திக்கிற சிவசாம்ராஜ்யத்தை நான் நாடுகின்றேனில்லை. நல்லுணவு உண்டும் அழகிய உடை உடுத்தும் உடல் வாழ்க்கையிலேயே களித்திருக்கிறேன். அதன் விளைவாக மன்மதன் பாணத்துக்கு நான் இலக்காயினேன். அது நெஞ்சைத் துளையாது துளைத்துச் சந்திரனது நிலவைப் போன்று வெப்ப மில்லாதிருந்தும் என்னை வருத்துகிறது. ஆதலால் மாதர் காம வலையில் நான் அகப்பட்டுள்ளேன்.
உடல் உணர்வு அல்லது தேகாத்ம புத்தி இருக்கும் வரையில் காம நோயும் இருக்கும். மத்தானது தயிரைக் கடைவது போன்று காமநோய் மனத்தை அலைக் கழிக்கும். மற்று அருள் நாட்டம் ஒன்றே சித்த சுத்தியை உண்டு பண்ணும்.
5. கைம்மாறு கொடுத்தல்
ஒருவர் செய்த உபகாரத்திற்குப் பிரதியுபகாரம் செய்வது கைம்மாறு கொடுப்பதாகும். பிரதி உபகாரம் செய்ய இயலாதவன் பிறர் செய்த நன்றியை மறவாதிருப்பது கைம்மாறு கொடுப்பதற்கு ஒப்பாகும். பரமாத்மனுக்குக் கைம்மாறு கொடுக்க ஜீவாத்மனுக்கு இயலாது.
(கலிவிருத்தம்)
45. இருகை யானையை ஒத்திருந்து என்னுளக்
கருவை யான்கண்டி லேன்கண்டது எவ்வமே
வருக என்று பணித்தனை வானுளோர்க்கு
ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே.
தெளிவுரை : யானை உடலில் பெரியது எனினும் அது பரஞானத்துக்குத் தகுதியற்றது. என் அறிவுக்கு அறிவாயுள்ள மூலப் பொருளைக் காண எனக்கு இயலவில்லை யாதலால் நான் இரண்டு கைகளையுடைய யானையைப் போன்றவன். இந்திரிய சுகம் என்னும் பெயர் பெற்றுள்ள துன்பத்தையே நான் அனுபவித்து வருகிறேன். தேவாதி தேவா, பேரானந்தத்தைப் பெற வாவென்று ஆக்ஞாபித்தாய். நானோ அதற்குத் தகுதியற்றவனாய்ச் சிற்றின் பத்திலேயே உழல்கின்றேன்.
46. உண்டொர் ஒண்பொருள் என்றுணர் வார்க்கெலாம்
பெண்டிர் ஆண்அலி என்றறி ஒண்கிலை
தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய்
கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே.
தெளிவுரை : பரம்பொருள் ஒன்று உண்டென்று தங்கள் அந்தக் கரணத்தைக் கொண்டு யூகிப்பவர்கள் உன்னைப் பெண் என்றோ, ஆண் என்றோ, அலி யென்றோ அறிந்து கொள்ள இயலாதவர்களாய் இருக்கின்றனர். மற்று உன் தொண்டனாகிய எனக்கு உன்னை உள்ளவாறு காட்டியருளினாய். உன்னைக் கண்ட பின்பும் காணாதவனுடைய நிலையில் இருக்கிறேன். இது என்ன மயக்கம் !
47. மேலை வானவ ரும்அறி யாததோர்
கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே
ஞால மேவிசும் பேயிவை வந்துபோம்
கால மேஉனை என்றுகொல் காண்பதே.
தெளிவுரை : மேலோராகிய தேவர்களுக்கும் காட்சிக்கு எட்டாத திருவுருவத்தையுடைய நடராஜப் பெருமானே, நீ என்னை ஆட்கொண்டுள்ளாய். பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் சாட்சியாய் இருக்கும் கால சொரூபம் நீ. உன்னை நான் எப்போது காண்பேன்?
48. காண லாம்பர மேகட்கு இறந்ததோர்
வாணி லாப்பொரு ளேயிங்கோர் பார்ப்பெனப்
பாண னேன்படிற்று ஆக்கையை விட்டுனைப்
பூணு மாறுஅறி யேன்புலன் போற்றியே.
தெளிவுரை : இறைவா, ஊனக் கண்ணால் அல்ல. ஞானக் கண்ணாலேயே காண்பதற்குரிய பரஞ்சோதி நீ. பறவைக் குஞ்சு கூட்டை விட்டுப் பறக்க முடியாதிருப்பது போன்று பாழாய்ப்போன நான் பொய்யுடலை விட்டுப் பிரிந்து உன்னோடு பொருந்தியிருக்கும் நெறியை அறியாதிருக்கிறேன். ஐம்புலன்களில் வைத்துள்ள பற்றுதலே அதற்குக் காரணம். பொறிவாயில் ஐந்தையும் எரிந்து போனவைகளாக ஒதுக்கி வைத்துப் பழகுவேனாக.
49. போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்துநின்று
ஆற்றல் மிக்கஅன் பால்அலைக் கின்றேன்
ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறும்
கூற்றம் அன்னதோர் கொள்கையென் கொள்கையே.
தெளிவுரை : இறைவா, உன்னை வாயால் காயத்தால் அங்கப் பிரதட்சணம் பண்ணியும் பலவிதங்களில் புகழ்ந்துரைத்தும் பக்தியில் நிலை நின்று அந்த உறுதியான பக்தியின் வலிவைக் கொண்டு உன்னை அழைக்கின்றேன் இல்லை. மார்க்கண்டனைப் பிடித்தல் பொருட்டு உன்னை எதிர்த்து வந்த கூற்றுவன் உன் திருவடியை அடைந்தான். என்னுடைய போக்கும் அத்தகையதாய் இருக்கிறது.
50. கொள்ளும் இல்எனை அன்பரில் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
நள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணையும் போல்நின்ற எந்தையே.
தெளிவுரை : எள்ளில் எண்ணெய் போல் என் தந்தை எல்லாப் பொருள்களின் நடுவிலும் கீழும் மேலும் எங்கும் வியாபித்துள்ளான். தேனும் அதை நுகரும் வண்டும் நீங்காத கொன்றை மலர் மாலையை அவன் அணிந்திருக்கிறான். மெய்யன்பரைக் கூவி அழைத்து ஆட்கொள்ளுவது போன்ற, ஆற்றல் இல்லாத என்னையும் அவன் அழைத்துக் கொள்வான்.
51. எந்தை யாய்எம் பிரான்மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய்தம் பிரான்தனக்கு அஃதிலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தை யாலும் அறிவரும் செல்வனே.
தெளிவுரை : ஈசன் எனக்குத் தந்தையும், தாயும், தலைவனும் ஆனவன். அவன் உயிர்கள் அனைத்துக்கும் தந்தையும் தாயும் தலைவனும் ஆகிறான். மற்றுத் தனக்கு அம்முறை உரிமை ஒன்றும் இல்லாதவன். வாக்கால் மட்டும் அல்ல. மனத்தாலும் யாராலும் அறிய முடியாத ஞான ஐஸ்வரியத்தை உடையவன் அவன். அவனை நான் அறிதற்கு முன்பே என் உள்ளம் குடிகொண்டுள்ளான்.
52. செல்வம் நல்குரவு இன்றிவிண் ணோர்புழுப்
புல்வ ரம்பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே.
தெளிவுரை : செல்வர்களுக்கு இடையிலும் வறியோர்களுக்கு இடையிலும் தேவர்களுக்கு இடையிலும் புழுப்போன்ற அற்ப உயிர்களுக்கு இடையிலும் புல்போன்ற தாவரங்களுக்கிடையிலும் சிவ சைதன்யம் பாகுபாடின்றி நிறைந்திருக்கிறது. அந்த அகண்ட சொரூபத்தைக் காணப் பெற்ற பின்பும் அப்பெரு நிலையினின்று வழுவியவன் ஆனேன். முற்றிலும் மனபரிபாகம் அடையாததே இந்தக் கஷ்டதசைக்குக் காரணமாகும்.
53. கட்ட றுத்தெனை ஆண்டுகள் ஆரநீறு
இட்ட அன்பரொடு யாவருங் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடு இரண் டும் அறி யேனையே.
தெளிவுரை : அஷ்டமூர்த்தி தத்துவத்தையும் அர்த்த நாரீசுவர தத்துவத்தையும் அறிந்து கொõள்ளாத எனது பாசத்தளையைக் களைந்து என்னை ஆட்கொண்டாய். அது மட்டுமன்று. திருநீறு பூசிய உன் மெய்யன்பர்கள் கூட்டத்தில் இருக்க நான் தகுந்தவன் என்று உலகம் அறியும்படி என்னை அவர்களது சபையில் சேர்த்து வைத்தாய்.
எட்டு என்னும் சொல் அஷ்டமூர்த்தியைக் குறிக்கிறது. நிலம்,நீர்,நெருப்பு,வாயு,ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம். ஈற்றிலுள்ள மூன்றுக்குப்பதில் சூரியன், சந்திரன், உயிர் என்றும் கூறுவர். இரண்டு என்பது சிவனும் சக்தியும் சேர்ந்த அர்த்த நாரீசுவர வடிவம். உடல் அம்பிகையின் சொரூபம்; உயிர் சிவ சொரூபம். இவை இரண்டும் பிரிந்தால் வாழ்வு நடைபெறாது.
54. அறிவ னேஅமு தேயடி நாயினேன்
அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்டது ஆண்டநாள்
அறிவ னோஅல்ல னோஅருள் ஈசனே.
தெளிவுரை : பேரறிவு சொரூபியே அமிர்த சொரூபியே அற்பனாகிய என்னை ஒரு ஞானியாக்குதற் பொருட்டன்றோ நீ என்னை ஆட்கொண்டது? நீ ஆட்கொண்டதற்கு முன்பு நான் அறிவிலியாய் இருந்தது வெளிப்படை. இன்றுநான் ஞானியோ அல்லனோ, எனக்கு விளங்கவில்லை. என் நிலைமையைக் கிருபை கூர்ந்து தெளிவுபடுத்துவாயாக.
நதியொன்று கடலுக்கு அருகில் வந்த பிறகு அதனிடத்துக் கடலின் தன்மையையும் நதியின் தன்மையையும் மாறி மாறிக்  காணலாம். அங்ஙனம் ஆத்மசாதகன் ஒருவன் சிவசாயுஜ்யமாவதற்குச் சற்று முன்பு ஜீவபோதத்தையும் சிவ போதத்தையும் மாறி மாறிப் பெறுவது இயல்பு. அத்தகைய நிலையை அண்ணல் ஈண்டு விளக்குகிறார்.
6. அனுபோக சுத்தி
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
55. ஈச னேஎன் எம்மானே
எந்தை பெருமான் என்பிறவி
நாச னேநான் யாதுமொன்று
அல்லாப் பொல்லா நாயான
நீச னேனை ஆண்டாய்க்கு
நினைக்க மாட்டேன் கண்டாயே
தேச னேஅம் பலவனே
செய்வது ஒன்றும் அறியேனே.
தெளிவுரை : இறைவா, என் தலைவா பெருமை வாய்ந்த என் தந்தையே, நீ என் பிறவி நோயைப் போக்கியுள்ளாய். சித் அம்பலச் செழுஞ் சுடரே, உடல் உணர்ச்சியில் உழன்று கிடந்த என்னை நீ பரபோதம் அடையப் பெற்றவன் ஆக்கினாய். உன்னை விட்டுப் பிசகுகிற மனத்தையுடைய எனக்கு இனி என்ன செய்வதென்று விளங்கவில்லை. சிவ போதத்தில் நிலைத்திருப்பதே அனுபோக சுத்தியாகிறது.
56. செய்வது அறியாச் சிறுநாயேன்
செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர் பெறும்பேறு அத்தனையும்
பெறுதற் குரியேன் பொய்யிலா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம்
மேவக் கண்டும் கேட்டிருந்தும்
பொய்ய னேன்நான் உண்டுடுத்திங்கு
இருப்பது ஆனேன் போர்ஏறே.
தெளிவுரை : அஞ்ஞான இருளை அறவே அகற்றும் போர் வீரனாகிய இறைவா, அப்பெரிய செயலை அறிந்து கொள்ளாத அறிவிலிநான். ஞான சொரூபியாகிய உன்னை வணங்காமல், அநித்திய மாகிய உடலைப்பேணி அதினின்று வருகிற அற்ப சுகத்தை நாடும் நாய் போன்றவன் நான். பொய்யாகிய உடல் பற்றை ஒழித்துவிட்டு மெய்ப்பொருளாகிய உன்னையே சேவிக்கும் சான்றோர்களைப் பார்த்திருந்தும் அவர்களைப் பற்றிக் கேட்டிருந்தும் அவர்களது செந்நெறி சாராது உடலை ஓம்புதலில் நான் கண்ணும் கருத்து மாயிருக்கிறேன். என்னே என் இழிசெயல் !
57. போரே றேநின் பொன்னகர்வாய்
நீபோந் தருளி இருள்நீக்கி
வாரே றிளமென் முலையா ளோடு
உடன்வந் தருள அருள்பெற்ற
சீரே றடியார் நின்பாதம்
சேரக் கண்டும் கண்கெட்ட
ஊரே றாய்இங்கு உழல்வேனோ
கொடியேன் உயிர்தான் உலவாதே.
தெளிவுரை : வார்ஏறுகச்சு கட்டிய; சீர் ஏறு அடியார்  தவத்தில் சிறப்பு எய்திய அன்பர்கள்; ஊர் ஏறுபன்றி; உலவாது நீங்கப் பெறாது. அஞ்ஞான இருளை நீக்குதல் என்னும் போர்புரிதலில் ஆண் சிங்கமே, அருள்புரிதல் பொருட்டுப் பாரமார்த்திகப் பெரு நிலையினின்று பிரபஞ்சச் சிறுநிலைக்கு, யாண்டும் யௌவன தசையில் இருக்கும் நினது அருள் சக்தியோடு நீ எழுந்தருள்கின்றாய், தவத்தால் பரிபக்குவம் அடைந்துள்ள உன் அன்பர்கள் உன் அருளால் உன்னை அடையப் பெறுவதைக் காண்கிறேன். ஆயினும் கண் இல்லாத ஊர்ப்பன்றிபோல் நான் இங்குக் கீழ்மையில் உழல்கின்றேன். இப்படி இருப்பதைவிட நான் உயிர் துறந்து விடலாகாதா?
58. உலவாக் காலம் தவமெய்தி
உறுப்பும் வெறுத்திங்கு உனைக்காண்பான்
பலமா முனிவர் நனிவாடப்
பாவி யேனைப் பணிகொண்டாய்
மலமாக் குரம்பை இதுமாய்க்க
மாட்டேன் மணியே உனைக் காண்பான்
அலவா நிற்கும் அன்பிலே
என்கொண்டு எழுகேன் எம்மானே.
தெளிவுரை : பெரிய முனிவர்கள் பலர் உடல் உணர்வைக் கடந்து நின்று உன் தரிசனத்தின் பொருட்டுப் பெரிதும் வாடியிருத்தல் என்னும் கடுத்தவத்தை நெடுநாள் செய்தனர். நீயோ, அஃதொன்றும் செய்யாத என்னை ஆட்கொண்டாய். நானோ அழுக்கில் அமைந்துள்ள உடல் ஞாபகத்தை ஒழித்திலேன். அருள் சோதியே, உன்னைக் காண்பதற்கான தீவிரமான பேரன்பு பெற்றிலேன். இறைவா, நான் உய்வு அடைவது எங்ஙனம்?
59. மானேர் நோக்கி உமையாள்
பங்கா வந்திங்கு ஆட்கொண்ட
தேனே அமுதே கரும்பின்
தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே யுன்றன் திருக்குறிப்புக்
கூடு வார்நின் கழல்கூட
ஊனார் புழுக்கூடு இது காத்திங்கு
இருப்பது ஆனேன் உடையானே.
தெளிவுரை : மான்விழி போன்ற விழியினையுடைய அம்பிகையின் வலப்பாகா, சிதம்பர நாதா, நீ சகுண பிரமமாகத் தோன்றி உன் அடியார்க்கு அமிர்தம் ஆகின்றாய். உன்னை நினைவதே மானுட வாழ்க்கையின் குறிக்கோள் என்று நீ காட்டியருளியதை அறிந்து கொண்ட நின் அன்பர் உன்னையே நினைந்து உன்னை அடைந்தனர். உன் உடைமையாகிய நானோ உடலையே நினைந்து நில உலகுக்கு உரியவன் ஆனேன். மனிதன் ஆழ்ந்து எதையாண்டும் எண்ணுகிறானோ அந்த மயம் ஆகிறான்.
60. உடையா னேநின் தனையுள்கி
உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதம்
சேரக் கண்டிங்கு ஊர்நாயின்
கடையா னேன்நெஞ்சு உருகாதேன்
கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூடு இதுகாத்து இங்கு
இருப்ப தாக முடித்தாயே.
தெளிவுரை : உயிர்கள் அனைத்தும் இறைவா, உனக்குச் சொந்தம், ஆயினும் பேரன்போடு உன்னையே நினைப்பவர் மட்டும் உன்னை அடைகின்றனர். இதை நான் கண்டிருந்தும் என் நெஞ்சம் உருகவில்லை. எனக்கு விவேகம் வரவில்லை. உள்ளக் கனிவு உண்டாகவில்லை. துர்நாற்றம் வீசும் உடலில் அபிமானம் வைத்து ஊர் நாய்க்கும் கீழ்ப்பட்டவனாக இங்கு வாழ்ந்திருக்கிறேன்.
61. முடித்த வாறும் என்தனக்கே
தக்க தேமுன் அடியாரைப்
பிடித்த வாறும் சோராமல்
சோர னேன்இங்கு ஒருத்திவாய்
துடித்த வாறும் துகில் இறையே
சோர்ந்த வாறும் முகம்குறுவேர்
பொடித்த வாறும் இவைஉணர்ந்து
கேடுஎன் தனக்கே சூழ்ந்தேனே.
தெளிவுரை : உன் வழிபாட்டின் பொருட்டு நீ எனக்கு இவ்வுடலைக் கொடுத்தது பொருந்தும். தளராது நான் முன்பு உன் அடியாரோடு சேர்ந்திருந்ததும் பொருந்தும். இங்ஙனம் யோகத்துக்கு உரிய எனது உடல் வாழ்க்கையைப் போகத்துக்குரியதாகச் செய்து விடுவேனாகில் அது பொருந்தாது. அது திருட்டுச் செயல்.
62. தேனைப் பாலைக் கன்னலின்
தெளியை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை உருக்கும் உடையானை
உம்பரானை வம்பனேன்
நான்நின் அடியேன் நீஎன்னை
ஆண்டாய் என்றால் அடியேற்குத்
தானும் சிரித்தே அருளலாம்
தன்மை யாம்என் தன்மையே.
தெளிவுரை : மனம் தெளிந்தவர்களுக்குப் பரமானந்தத்தை ஊட்டும் ஞானப் பிரகாசன் நீ. அவர்களுக்கு ஒப்பற்ற மேலாம் பொருள் நீ. மற்றும் பக்குவம் அடையாத நான் உனக்கு அடிமை என்றும் நீ எனக்குத் தலைவன் என்றும் சொந்தம் பாராட்டினால் ஒரு புன்சிரிப்பின் மூலம் நீ அதை மறுப்பாய். உன் அருளுக்குத் தகுதியற்ற நான் அதற்குத் தகுதியுடைவன் என்று சொல்லுவது தகாது.
63. தன்மை பிறரால் அறியாத
தலைவா பொல்லா நாயான
புன்மை யேனை ஆண்டுஐயா
புறமே போக விடுவாயோ
என்னை நோக்கு வார்யாரே
என்நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழும் திருமேனி
எந்தாய் எங்குப் புகுவேனே.
தெளிவுரை : இறைவா, உன் இயல்பு முழுவதையும் நீயே அறிவாய். நின் அன்பர் உட்பட வேறுயாரும் உன்னை முழுவதும் அறிந்து கொள்ள மாட்டார். தகுதியற்ற அடியேனை நீ ஆட்கொண்டு உன் அடியவன் ஆக்கினாய், இனி நீ கைவிட்டு விட்டால் எனக்கு வேறு புகலிடம் யாது உளது? பொன்னார் மேனியனே, எப்படியும் நீயே என்னைக் காத்தருள வேண்டும்.
64. புகுவேன் எனதே நின்பாதம்
போற்றும் அடியார் உள்நின்று
நடுவேன் பண்டு தோள்நோக்கி
நாணம் இல்லா நாயினேன்
நெகும்அன்பு இல்லை நினைக்காண
நீயாண்டு அருள அடியேனும்
தகுவ னேஎன் தன்மையே
எந்தாய் அந்தோ தரியேனே.
தெளிவுரை : வெட்கம் கெட்ட நான் முன்பு உன் அடியார்கள் திருக்கூட்டத்தில் இருந்து கொண்டு எனது தோளின் வலிமையையும் அழகையும் பார்த்து மனம் மகிழ்ந்திருந்தேன். உனது சொரூபத்தைக் கண்டு பரவசமடைவதற்கான பேரன்பு என்னிடமில்லை. இந்நிலைமையில் நீ என்னை ஆள உனக்கு அடிமையாய் இருக்க நான் தகுந்தவனா? என் தந்தையே என் இயல்பு இப்படியும் சிறுமையுறுமோ? இக் கீழ்மையை நான் சகியேன். எனக்குச் சொந்தமாகிய உன் திருவடியையே நான் அடையவேண்டும்.
7. காருணியத்து இரங்கல்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
65. தரிக்கிலேன் காய வாழ்க்கை
சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள்
விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர்
தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள்
நின்மலா போற்றி போற்றி
தெளிவுரை : உன் வாழ்க்கை எனக்கு வேண்டாம். சங்கரா, சிதாகாசனே, பழமையும் புதுமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவனே, முழுமுதல் பொருளே, மகாதேவா, ஆனந்தத் தாண்டவா, நிர்மலனே உன்னையே வணங்குகிறேன்.
உடல் உணர்வு படைத்தவன் ஜீவாத்மா ஆகிறான். பரமாத்மாவின் அருளால் பரமாத்ம உணர்விலேயே ஊறியிருப்பவனுக்குப் பரபோதம் உண்டாகிறது.
66. போற்றிஓம் நமச்சி வாய
புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றிஓம் நமச்சி வாய
புகலிடம் பிறிதுஒன் றில்லை
போற்றிஓம் நமச்சி வாய
புறம்எனைப் போக்கல் கண்டாய்
போற்றிஓம் நமச்சி வாய
சயசய போற்றி போற்றி.
தெளிவுரை : ஓம் நமச்சிவாய என்னும் மந்திர சொரூபியே பாம்பை அணிந்திருப்பவனே, உலக வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கிற எனக்கு அதினின்று விடுபடுவதற்கு உன்னைத் தவிர வேறு கதியில்லை. என்னைப் புறக்கணித்து விட வேண்டாம். என்னை உய்விப்பதில் உனக்கு வெற்றியுண்டாகுக.
உணர்ந்து ஆர்வத்துடன் இறை நாமத்தை ஓதுபவர்க்கு அவன் அருள் கிட்டுகிறது.
67. போற்றிஎன் போலும் பொய்யர்
தம்மையாட் கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி
நாதனே போற்றி போற்றி
போற்றிநின் கருணை வெள்ளப்
புதுமதுப் புவன நீர்தீக்
காற்றுஇய மானன் வானம்
இருசுடர்க் கடவு ளானே.
தெளிவுரை : பொய்யுடலில் வாஞ்சை வைத்துள்ள என் போன்றவர்களுக்கு அருள் புரிவதால் நீ வள்ளல் ஆகின்றாய். உன் கருணையோ புதிய தேனுக்கு ஒப்பானது. ஐம் பெரும் பூதங்கள், சூரியன், சந்திரன், ஜீவாத்மா ஆகிய அஷ்ட மூர்த்திகளாய் நீ இருக்கின்றாய். இப்படியெல்லாம் இருக்கிற உனக்கு மேலும் மேலும் வணக்கம் செலுத்துகிறேன்.
68. கடவுளே போற்றி உன்னைக்
கண்டுகொண்டு அருளு போற்றி
விடவுளே உருக்கி என்னை
ஆண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைந்திட்டு ஒல்லை
உம்பர்தந்து அருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த
சங்கரா போற்றி போற்றி.
தெளிவுரை : நான் தகவிலன் என்பதை அறிந்து என்னை ஆட்கொள். என் உள்ளத்தை உருக்கி அதை விலகச் செய். உடலை ஒதுக்கிவிட்டு விரைவில் முக்தியடையும்படி செய். கங்காதரா, உன்னை நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.
நான் தகாதவன் எனினும் நீ சங்கரன் ஆதலால் என்னை ஆட்கொண்டருள்க.
69. சங்கரா போற்றி மற்றோர்
சரணிலேன் போற்றி கோலப்
பொங்கரா அல்குல் செவ்வாய்
வெண்ணகைக் கரிய வாள்கண்
மங்கையோர் பங்க போற்றி
மால்விடை ஊர்தி போற்றி
இங்குஇல்வாழ்வு ஆற்ற கில்லேன்
எம்பிரான் இழித்திட் டேனே.
தெளிவுரை : சங்கரா, உமாதேவியார் பங்கா, ரிஷப வாகனா, உன்னையல்லால் எனக்கு வேறு அடைக்கலம் இல்லை. உடல்வாழ்வில் எனக்கு அருவருப்பு மேலிடுகிறது. இதை நான் சகியேன். என்னைக் காத்தருள்க.
70. இழித்தனன் என்னை யானே
எம்பிரான் போற்றி போற்றி
பழித்திலேன் உன்னை என்னை
ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம்
பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடுஇவ் வாழ்வு போற்றி
உம்பர்நாட்டு எம்பி ரானே.
தெளிவுரை : என்னைக் கெடுத்தவன் நான். ஆதலால் நான் உன் மீது குறை கூறலாகாது. என்னை யாண்டும் ஆள்பவனாகிய உன்னை வணங்குகிறேன். சிறியேனாகிய நான் செய்த பிழையைப் பெரியோனாகிய நீ பொறுத்தருள்க. முக்தி நல்கும் இறைவா, இப்பிரபஞ்ச வாழ்வினின்று என்னை விடுவிப்பாயாக. உன்னை நான் ஓவாது வணங்குகிறேன்.
71. எம்பிரான் போற்றி வானத்து
அவரவர் ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல் மங்கை
கூறவெண் ணீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத்
திருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை
ஆளுடை ஒருவ போற்றி.
தெளிவுரை : இறைவா, பல படித்தரங்களில் இருக்கும் தேவர்களுக்குத் தலைவா, அம்பிகையின் பங்கா, திருநீறு அணிந்தவனே, நற்குணம் அனைத்தும் உடையவனே, சிதாகாச வடிவினனே, மோட்சம் நல்குபவனே, உன்னை அல்லாது எனக்குக் கதியில்லை, என்னைக் காத்தருள் வாயாக.
72. ஒருவனே போற்றி ஒப்பில்
அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள்
கோமளக் கொழுந்து போற்றி
வருகஎன்று என்னை நின்பால்
வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி
தமியனேன் தனிமை தீர்த்தே.
தெளிவுரை : பலவாகத் தோன்றும் பொழுதும் நீ ஒருவன்தான் இருக்கிறாய். உயிர்கள் அனைத்துக்கும் நீ சிறந்த தந்தையாய் இருக்கிறாய். தேவர்களுக்கெல்லாம் நீ மூத்தவன். உயிர்கள் உள்ளத்தில் நீ நித்திய யௌவனத்தில் இருக்கிறாய். உனக்கும் எனக்கும் உள்ள சம்யோகத்தை நீ உறுதிப் படுத்து. நான் உன்மயம் ஆகுக. எனது ஜீவ போதத்தை அகற்றி விடு. உனது மகிமையை நினைந்து நான் உன்னையே போற்றுகிறேன்.
ஜீவன் ஒருவன் ஜீவபோதத்தில் இருக்கும் வரையில் அவன் தமியனாகவே இருக்கிறான். பரபோதத்தில் குறையில்லா நிறைநிலை அவனுக்கு வாய்க்கிறது.
73. தீர்ந்தஅன்பு ஆய அன்பர்க்கு
அவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும்என் பொய்ம்மை ஆட்கொண்டு
அருளிடும் பெருமை போற்றி
வார்ந்தநஞ்சு அயின்று வானோர்க்கு
அமுதம்ஈ வள்ளல் போற்றி
ஆர்த்த நின் பாதம் நாயேற்கு
அருளிட வேண்டும் போற்றி.
தெளிவுரை : உன் அன்பர்கள் உன் மீது பேரன்பு வைத்திருக்கிறார்கள். நீயோ அவர்கள் மீது அதைவிட அதிகம் வைத்திருக்கிறாய். எனது ஜீவ போதமாகிய பொய்ம்மையை அழித்து சிவ போதமாகிய மெய்ம்மையை நல்கிய பெருமை உனக்குண்டு. பாற்கடல் கடைந்த போது பெருகி வந்த விஷத்தை நீ அருந்தவும் தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுக்கவும் செய்த பெருங் கொடை யாளன் நீ. உனது அகண்டாகார சொரூபத்தில் என்னை ஏற்றருள்வாயாக. உன்னை நான் வணங்குகிறேன். இவர் விஷத்தை உண்டு அமிர்தத்தை வழங்கியது காருண்யத்தின் உச்ச நிலையாகும்.
74. போற்றிஇப் புவனம் நீர்தீக்
காலொடு வானம் ஆனாய்
போற்றிஎவ் உயிர்க்கும் தோற்றம்
ஆகிநீ தோற்றம் இல்லாய்
போற்றிஎல் லாவு யிர்க்கும்
ஈறாய்ஈறு இன்மை யானாய்
போற்றிஐம் புலன்கள் நின்னைப்
புணர்கிலாப் புணர்க்கை யானே.
தெளிவுரை : இறைவா, ஐம்பூதங்கள் உன்னிடத்திருந்து தோன்றி வந்துள்ளன. உயிர்கள் எல்லாம் உன்னிடத்திருந்து தோன்றி வந்துள்ளன. அவைகளின் தோற்றத்தை முன்னிட்டு நீவிகாரப் படுவதில்லை. உயிர்கள் எல்லாம் பிரளயத்தில் உன்னிடம் ஒடுங்குகின்றன. ஆனால் பூரணனாகிய நீ எதிலும் ஒடுங்குவதில்லை. ஐம்பொறிகள் உன்னை நுகரமாட்டா. ஆனால் ஐம்பொறிகளுக்கும் உள்ள இயல்புகள் உன்னிடத்திருந்து வருகின்றன. அத்தகைய அதீதப் பொருளே, உன்னைப் போற்றுகின்றேன்.
8. ஆனந்தத்தழுந்தல்
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
75. புணர்ப்பது ஒக்க எந்தை என்னை
ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்பது அன்றிது என்ற போது
நின்னொடு என்னொடு என்னிதாம்
புணர்ப்பது ஆக அன்றிது ஆக
அன்பு நின்க ழற்கணே
புணர்ப்பது ஆக அங்க ணாள
புங்க மான போகமே.
தெளிவுரை : எந்தையே, என்னை ஆட்கொள்ளுதலில் நீ காட்டிய காருண்யம் என்னை இரண்டற உன்னில் ஏற்றுக் கொள்வாய் போல் தென்பட்டது. ஆனால் இவ்வுடல் வாழ்க்கையில் இன்னும் சிறிது காலம் இருக்க என்னை நீ விட்டு வைத்திருக்கிறாய். நானோ உன் மீது வைத்துள்ள பேரன்பால் உடல் வாழ்க்கையை உள்ளத்தில் வாங்கிக் கொள்ளாமல் சிவானந்த போதத்திலேயே திளைத்திருப்பேன்.
தேகத்தைப் பற்றிய ஞாபகமே சிறிதும் இல்லாது இருந்ததினால் ஜனக மகாராஜாவுக்கு விதேகன் என்ற பெயர் வந்தது.
76. போகம் வேண்டி வேண்டி லேன்பு
ரந்த ராதி இன்பமும்
ஏக நின்க ழல்இணை அலாது
ஏதி லேன்என் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து
குஞ்சி அஞ்ச லிக்கணே
ஆக என்கை கண்கள் தாரை
ஆறது ஆக ஐயனே.
தெளிவுரை : ஏகனே, எம்பிரானே, என் ஐயனே சுகபோகத்தின் பொருட்டு இந்திர லோகம் முதலிய போக பூமிகளை நான் விரும்பவில்லை. உனது திருவடியல்லாது வேறு பற்றுக்கோடு எனக்கு இல்லை. உடல் நெகிழ்ந்து நடுங்கிக் கொண்டிருக்க கையைத் தலைமீது வைத்து உன்னை வணங்குகிறேன். தண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருப்பதாகுக.
77. ஐய நின்னது அல்லது இல்லை
மற்றோர் பற்று வஞ்சனேன்
கொய்க லந்தது அல்லது இல்லை
பொய்ம்மை யேன்என் எம்பிரான்
மைக லந்த கண்ணி பங்க
வந்து நின்க ழற்கணே
மெய்க லந்த அன்பர் அன்பு
எனக்கும் ஆக வேண்டுமே.
தெளிவுரை : ஐயனே, எம்பிரானே கண்ணில் மை தீட்டியுள்ள உமாதேவியாரின் வலப்பாகத்தில் இருப்பவனே. பொய்யான உடல் வாழ்க்கையில் பற்று வைத்தால் நான் வஞ்சகன் ஆவேன். அப்படி நான் பொய்ம்மையில் மூழ்கேன். மெய்ப் பொருளாகிய உன்னிடத்தே உன் அன்பர்கள் பற்று வைத்திருக்கின்றனர். நான் வேண்டுவதும் அப்பேரன்பேயாம்.
78. வேண்டும் நின்க ழற்கண் அன்பு
பொய்ம்மை தீர்ந்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயி னேனை
ஆவ என்று அருளுநீ
பூண்டு கொண்டு அடிய னேனும்
போற்றி போற்றி என்றும் என்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து
மன்ன நின்வ ணங்கவே.
தெளிவுரை : இறைவா, எனது ஜீவபோதத்தை ஒழித்து சிவ போதத்தை உறுதியாக்கி, என்மீது இரக்கம் வைத்து எனக்குப் பேரன்பைக் கொடுத்து அருளுக. பேரன்பு பூண்டு உன்னைப் போற்றும் வாய்ப்புக் கிடைக்கும் இடத்துப் பிறப்பு இறப்பு எத்தனை வந்தாலும் அதனால் எனக்குக் கேடு இல்லை.
79. வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும்
வேதம் நான்கும ஓலமிட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று
மற்றுஓர் உண்மை இன்மையின்
வணங்கி யாம்வி டேங்கள் என்ன
வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க
என்கொ லோநி னைப்பதே.
தெளிவுரை : இறைவா, நீயே மெய்ப்பொருள் ஆதலால் மண்ணுலகம் விண்ணுலகம் உன்னையே வணங்குகின்றன. நான்கு வேதங்களும் சொல்லின் மூலம் உன்னை அடைய முயன்று அது முடியாமற் போக, அவைகள் தளர்வுற்று நிற்கின்றன. பக்தர்களாகிய நாங்கள் உன்னை விடமாட்டோம் என்று பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கையில் பார்வதி நாயகா நீ பாராமுகமாய் இருப்பது பொருந்துமா?
80. நினைப்ப தாக சிந்தை செல்லும்
எல்லை ஏய வாக்கினால்
தினைத்த னையும் ஆவதில்லை
சொல்லல் ஆவ கேட்பவே
அனைத்து உலகும் ஆய நின்னை
ஐம்பு லன்கள் காண்கிலா
எனைத்து எனைத்த துஎப்பு றத்தது
எந்தை பாதம் எய்தவே.
தெளிவுரை : பரமனே உலகனைத்தும் ஆகியிருக்கிறான் எனினும் அவனை அனுபூதியில் அடைவதற்கு மனது உதவாது. வாக்கு உதவாது. ஐம்பொறிகளும் உதவமாட்டா.
அந்தக் கரணம் பாகிய கரணங்கள் ஆகிய யாவும் பிரபஞ்சத்தை நுகர்வதற்கே உதவுகின்றன. நிஷ்பிர பஞ்சப் பொருளாகிய பரமனை சாட்சாத்கரிப்பதற்கு அவைகள் சிறிதேனும் பயன்பட மாட்டா. அனுபூதி அனுபவ ஞானம்.
81. எய்தல் ஆவது என்று நின்னை
எம்பி ரான்இவ் வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன்கண் அன்றி
மற்றுஓர் உண்மை இன்மையின்
பைதல் ஆவது என்று பாது
காத்து இரங்கு பாவியேற்கு
ஈது அலாது நின்கண் ஒன்றும்
வண்ணம் இல்லை ஈசனே.
தெளிவுரை : இறைவா, உன்னை நான் அடைவது எக்காலம்? கர்மத்தில் உழலும் நான் ஈடேறுவதற்கு உன்னைச் சார்தல் அன்றி வேறு சன்மார்க்கம் இல்லை. ஆதலால் துன்பம் துய்க்கும் என்னைக் காப்பாற்றக் கருணை பூண்பாயாக. ஈசா உன்னோடு ஒன்று படுவதைவிட வேறு உபாயம் வினை கேடனாகிய எனக்கு இல்லை.
82. ஈச னேநீ அல்லது இல்லை
இங்கும் அங்கும் என்பதும்
பேசி னேன்ஓர் பேதம் இன்மை
பேதை யேன்என் எம்பிரான்
நீச னேனை ஆண்டு கொண்ட
நின்ம லாஓர் நின்னலால்
தேச னேஓர் தேவர் உண்மை
சிந்தி யாது சிந்தையே.
தெளிவுரை : இறைவா, இவ்வுலகம் அவ்வுலகம் ஆகிய எல்லாம் நீயே ஆகியிருப்பதால், உனக்கு வேறான பொருள் ஒன்றுமில்லை என்று என் சிற்றறிவுக்கு எட்டியவாறு நான் பேசியுள்ளேன். உனக்குப் புறம்பாக என்னை நான் கருதுவேனாகில் நான் நீசன் ஆவேன். உனக்குப் புறம்பாக வேறு ஒரு பொருள் இல்லாததால் நீ நிர்மலன். எங்கும் ஒரே ஒளிப்பிழம்பாக நீ இருப்பதால் நான் சிந்திப்பதற்கு மற்றோர் ஒளி வடிவம் ஏதும் இல்லை. பரமாத்ம பிரகாசமே எல்லாவிதப் பிரகாசமாக ஒளிர்கிறது. அப்பரமன் ஏகன்.
83. சிந்தை செய்கை கேள்வி வாக்குச்
சீர்இல் ஐம்பு லன்களால்
முந்தை யான காலம் நின்னை
எய்தி டாத மூர்க்கனேன்
வெந்தை யாவி மூந்தி லேன்என்
உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை யாய நின்னை இன்னம்
எய்தல் உற்று இருப்பனே.
தெளிவுரை : மனம், கர்மம், கேள்வி, மொழி ஆகியவைகளை நான் கடவுள் வழிபாட்டுக்கே பயன் படுத்தியிருக்கலாம். ஐம்பொறிகள் குறைபாடு உடையவை எனினும் அவைகளையும் அதே வழிபாட்டுக்கு ஒப்படைத்திருக்கலாம். இச்சீரிய செயல் நெடு நாளைக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டியது. அப்படிச் செய்யாத குற்றம் என்னுடையது. உன்னை அடையப் பெறாத அறிவிலியாகிய நான் தீயில் வீழ்ந்து வெந்து போகவில்லை. என் மனம் வெட்கப்பட்டு உடைந்து போகும்படி நான் செய்யவில்லை. என் தந்தையாகிய உன்னையடைய விருப்ப முடையவன் என்று இன்னமும் வீண் வார்த்தை பேசி வாழ்ந்து இருக்கிறேன்.
84. இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை
ஆண்டு கொண்ட நின்னதாள்
கருப்பு மட்டு வாய்ம டுத்து
எனைக் கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டு
இருந்தது உண்டது ஆயினும்
விருப்பும் உண்டு நின்கண் என்கண்
என்பது என்ன விச்சையே.
தெளிவுரை : இரும்பு போன்ற வலிய நெஞ்சத்தையுடைய வஞ்சகனாகிய என்னை ஆட் கொண்டருளிய உன் திருவடிகள் கரும்பின் சாற்றை அருந்துவது போன்று எனக்கு ஆனந்தத்தைக் கொடுத்தருளின. அதைவிட்டுப் பிரிந்த நான் வெந்துபட்டுப் போவதற்கு நெருப்பு இருந்தும் இன்னும் சாகாதிருக்கிறேன். உயிர் வாழவும், உணவு புசிக்கவும் செய்கிற நான் உன்னிடத்து அன்பு வைத்திருக்கிறேன் என்று சொல்லுவது என்ன மாய வித்தையோ தெரியவில்லை.
பரத்தைச் சார்தல் வேண்டும்; அஃது இல்லையேல் உயிர் துறத்தல் வேண்டும். இதுவே தீவிர அதிகாரியின் போக்கு ஆகும்.
9. ஆனந்த பரவசம்
ஜீவபோதம் முற்றும் ஒடுங்கிச் சிவபோதம் எஞ்சி இருக்கும் போது அது ஆனந்த பரவசமாகிறது. ஜீவன் அடைய வேண்டிய குறியும் அதுவேயாம்.
85. விச்சைக் கேடுபொய்க்கு ஆகாது
என்றிங்கு எனைவைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும்
வந்துன் தாள் சேர்ந்தார்
அச்சத் தாலே ஆழ்ந்திடு
கின்றேன் ஆரூர்எம்
பிச்சைத் தேவா என்நான்
செய்கேன் பேசாயே.
தெளிவுரை : நீ தியாகராஜனாயும் பிட்சாடனனாயும் இருந்து பக்குவப் பட்டுள்ள ஆத்மாக்களுக்கு இவ்வுலகப் பற்று வேண்டாமென்று புகட்டியருள்கின்றாய் நான் மட்டும் உலகப் பற்றில் உழல்வது முறையோ?
பிரபஞ்ச வாழ்வில் பற்று வைத்திருப்பவர்களுக்கு ஆனந்த பரவசம் இல்லை.
86. பேசப் பட்டேன் நின்னடி
யாரில் திருநீறே
பூசப் பட்டேன் பூதல
ரால்உன் அடியான்என்று
ஏசப் பட்டேன் இனிப்படு
கின்றது அமையாதால்
ஆசைப் பட்டேன் ஆட்பட்
டேன்உன் அடியேனே.
தெளிவுரை : உன் அன்பர்களில் நான் ஒருவன் என்று நல்லோர்களால் பாராட்டிப் பேசப்பட்டேன். ஞான குருவினால் திருநீறு பூசப் பெற்றேன். அறிவிலிகளாகிய உலகத்தவர்களால் உன் அடியவன் என்று நான் இகழப்பட்டேன். இப்படி உலகில் பட்டும் படாமலும் இருப்பது இனி ஒவ்வாது. உன்னையே அடைந்தாக வேண்டுமென்று ஆசைப் படுகிறேன். உனக்கே நான் ஆளாக வேண்டும்.
87. அடியேன்அல் லேன்கொல்லோ தானெனை
ஆட்கொண் டிலைகொல்லோ
அடியார் ஆனார் எல்லாரும்
வந்துன் தாள்சேர்ந்தார்
செடிசேர் உடலம்இது நீக்கமாட்டேன்
எங்கள் சிவலோகா
கடயேன் உன்னைக் கண்ணாரக்
காணுமாறு காணேனே.
தெளிவுரை : எங்கள் சிவலோக நாதா. உன் மெய்யன்பர்கள் உன்னை அணுகி உன் திருவடி அடையப் பெற்றனர். கல் நெஞ்சக்காரனாகிய நான் துன்பத்துக்கு இருப்பிடமாகிய இந்த உடலைப் பிரியவுமாட்டேன். உன்னை அடைவதற்கான மார்க்கத்தைப் பின்பற்றவு மாட்டேன். இத்தகைய நான் உன் அடியவன் அல்லேனோ? நீ என்னை ஆட்கொள்ள வில்லையோ?
மனிதன் தன்னை எதற்குத் தகுதியுடையவனாக்குகிறானோ அதை அவன் அடைவது திண்ணம்.
88. காணுமாறு காணேன் உன்னை
அந் நாள் கண்டேனும்
பாணே பேசி என்றன்னை
படுத்ததென்ன பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆரமுதே
அத்தாசெத்தே போயினேன்
ஏண்நாண் இல்லா நாயினேன்
என்கொண்டெ ழுகேன் நாயினேன்.
தெளிவுரை : பரஞ்சோதியே, ஆணே, பெண்ணே, ஆர் அமுதே, அத்தா, எம்மானே, உன்னை அடையும் மார்க்கத்தை நான் கண்டிலேன். அன்று உன்னைக் கண்ட பின் நான் வீண் பேச்சுப் பேசி ஒரு நலனையும் அடைந்திலேன். செத்துப் போன நிலையில் இப்போது இருக்கிறேன். எனது கீழ்மையைக் குறித்து நான் வெட்கப்படவில்லை. மேல்நிலை அடைவதற்கான ஆற்றல் என்னிடத்து இல்லை. நான் எப்படி உய்வேன்?
அனுபூதியை நாடுகிறவர்கள் பலர் இடைவழியில் ஏமாற்றமடைந்து நின்றுவிடுகின்றனர். குறியை அடையும் வரையில் தீவிர நாட்டம் கொள்வது முறை.
89. மானேர் நோக்கி உமையாள்பங்கா
மறையிறு அறியா மறையோனே
தேனே அமுதே சிந்தைக்கரியாய்
சிறியேன் பிழைபொறுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன்
சிவமா நகர்குறுகப்
போனார் அடியார் யானும்பொய்யும்
புறமே போந்தோமே.
தெளிவுரை : மான் விழிபோன்ற விழிகளையுடைய உமாதேவியாரின் தட்சிண பாகா, வேத வேதாந்தத்துக்கு எட்டாத மறைபொருளே. தேனே, அமிர்தமே, மனத்துக்கு எட்டாதவனே, என் குற்றத்தை மன்னித்து அருளும் அரசே. எனது குறைபாட்டை நான் பரிந்து உன்னிடம் முறையிட்டேன். அதாவது உன் அடியார்கள் உனக்கு உரியவர்கள் ஆயினர். நானோ பொய்யாகிய பிரபஞ்சத்துக்கு உரியனாய், நானும் பிரபஞ்சமும் உனக்கு வேறாக இருந்து வருகிறோம். தட்சிணம்  வலப்பக்கம்.
90. புறமே போந்தோம் பொய்யும்
யானும் மெய்யன்பு
பெறவே வல்லேன் அல்லா
வண்ணம் பெற்றேன்யான்
அறவே நின்னைச் சேர்ந்தஅடியார்
மற்றொன்று அறியாதார்
சிறவே செய்து வழிவந்து
சிவனே நின்தாள் சேர்ந்தாரே.
தெளிவுரை : ஜீவனாகிய நானும் ஜகத் ஆகிய மாயையும் உனக்குப் புறம்பானோம். உன்பால் பராசக்தி அல்லது அனன்ய பக்தி பண்ணுவதற்கான உறுதியான தெய்வீகத் தன்மை என்னிடம் இல்லை. உன்னைத் தவிர வேறு எதையும் அறியாத பரிபக்குவ ஆத்மாக்கள் தங்கள் ஜீவபோதத்தை அகற்றி உன்பால் இரண்டறக் கலந்தனர். அதற்காக அவர்கள் சிரேயஸ் மார்க்கத்தையே தீவிரமாகக் கையாண்டனர்.
91. தாராய் உடையாய் அடியேற்கு
உன்தாள் இணையன்பு
பேரா உலகம் புக்கார் அடியார்
புறமே போந்தேன்யான்
ஊர்ஆ மிலைக்கக் குருட்டுஆ மிலைத்திங்கு
உன்தாள் இணைஅன்புக்கு
ஆரா அடியேன் அயலே
மயல்கொண்டு அழுகேனே.
தெளிவுரை : யாண்டும் என்னை உடையவனே. எனக்கு உன்பால் மெய்யன்பு கொடுத்தருள். உன்னை முறையாக நாடிய அன்பர்கள் மீண்டும் பிறவி விளையாத முக்தியடையப் பெற்றனர். ஆனால் நானோ வீடு பேற்றுக்கு வேற்றானாய் இருக்கிறேன். கன்றைப் பார்த்தோ திண்டியைப் பார்த்தோ ஊர்ப்பசுவானது பொருள்படக் கத்துகிறது. அதைக் கேட்ட குருட்டுப் பசு பொருளற்ற கூச்சல் போடுகிறது. அங்ஙனம் உன் அன்பு வேண்டுமென்று நான் வீணில் ஓலமிடுகிறேன். செந்நெறியைப் பற்றிய அனுபவம் எனக்கில்லை. திண்டி  தம்பட்டம்.
92. அழுகேன் நின்பால் அன்பாம்
மனமாய் அழல்சேர்ந்த
மெழுகே அன்னார் மின்னார்
பொன்னார் கழல்கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தாய்
ஓடும் தொடராதே
பழுதே பிறந்தேன் என்கொண்டு
உன்னைப் பணிகேனே.
தெளிவுரை : உன்னிடத்து மெய்யன்பு உடையவராய் ஒளி பொருந்திய பொன் போன்ற உன் திருவடிகளைக் கண்டு தீயில் இட்ட மெழுகை ஒத்தவராய் உன் அன்பர்கள் தொழுது உன்னைப் பின்பற்றினர். அவர்களைப் பின்பற்றாமல் நான் புன்மைக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறேன். அத்தகைய நான் வீணில் பிறந்தவனாகிறேன். எம்முறையைக் கையாண்டு நான் உன்னை வழுத்துவது என்று எனக்கு விளங்க வில்லை.
93. பணிவார் வினைதீர்த்து அருளிப்
பழைய அடியார்க்கு உன்
அணியார் பாதம் கொடுத்தி
அதுவும் அரிதென்றால்
திணியார் மூங்கில் அனையேன்
வினையைப் பொடியாக்கித்
தணியார் பாதம் வந்துஒல்லை
தாராய் பொய்தீர் மெய்யானே.
தெளிவுரை : நிர்க்குண பிரம்மமாய் இருப்பவனே உன்னுடைய முதிர்ந்த அன்பர்களது பிறவிப் பிணியைப் போக்கி, அவர்களை உன்னிடத்து ஒன்று படுத்தி விடுகின்றனை. அப்பெரு நிலைக்கு நான் இன்னும் தகுதியாக வில்லை யென்றால் கெட்டி மூங்கில் போன்று வளையாதிருக்கும் எனது வினையைச் சாம்பலாக்கி இன்பம் நிறைந்த உன் திருவடிக்கு என்னை ஆளாக்குவாயாக.
94. யானே பொய்என் நெஞ்சம்
பொய்என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே.
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனைவந்து உறுமாறே.
தெளிவுரை : ஜீவாத்மாவாகிய நான் நித்திய வஸ்து அல்லன். ஆதலால் அநித்திய வஸ்துவாகிய நான் பெற்றிருக்கிற மனமும் நித்திய மானதன்று. நிலையற்ற அந்த மனத்தைக் கொண்டு நான் பாராட்டுகிற அன்பும் நித்திய மன்று. ஆனால் இந்த அநித்திய தத்துவங்களை, இறைவா, உன் பொருட்டுப் பயன்படுத்தினால் நித்திய வஸ்துவாகிய உன்னை நான் சேரலாம். உன்னை அணுகும் அளவு எனக்குப் பரமானந்தம் மேலிடுகிறது. எனவே உன்னை உறுதியாக அடையப் பெறுவதற்கான உபாயத்தை எனக்குக் காட்டியருள்வாயாக. பரமனை அடைவது ஜீவனது குறிக்கோள்.
 10. ஆனந்தாதீதம்
ஆனந்தாதீதம் என்பது நிர்க்குண பிரம்மம். சிதம்பர ரகசியம் எனவும் சதாசிவம் எனவும் இப்பரவஸ்து இயம்பப் பெறுகிறது. சிதம்பரம் போனவர்கள் திரும்பி வருவதில்லை என்பது கோட்பாடு. அதாவது பரவெளி அல்லது சிதாகாசத்தில் கலந்தவர்களுக்கு ஜீவ போதம் எஞ்சி இருப்பதில்லை. ஆனந்தாதீதம் சொற்பதங் கடந்த தொன்மை. சொல்லில் அடங்காததைக் கூடியவரையில் சொல்லால் விளக்க இப்பதிகம் பயன்படுகிறது.
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
95. மாறி லாதமாக் கருணை வெள்ளமே
வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை
வேறி லாப்பதப் பரிசு பெற்றபின்
மெய்ம்மை யன்பருன் மெய்ம்மை மேவினார்
ஈறிலாத நீ எளிவை யாகிவந்து
ஒளிசெய் மானுட மாக நோக்கியும்
கீறி லாதநெஞ் சுடையன் ஆயினேன்
கடையன் நாயினேன் பட்ட கீழ்மையே.
தெளிவுரை : யாண்டும் தன்மயமாயிருக்கும் தனிக் கருணைக் கடலே. முன்னாளில் முற்றும் பரிபக்குவம் அடைந்த பெருமக்கள் உனது இன் அருளால் உன்னோடு இரண்டறக் கலந்தனர். அனாதி அனந்தனாகிய நீ விளையாட்டுப் போன்று தேஜோ மயமான மானுட உடல்தாங்கி வந்து என்மீது கருணாகர நோக்கம் வைத்தாய். அதன் விளைவாக நான் ஜீவ போதத்தைக் கடந்து அகண்ட சிவபோதத்தில் ஒன்றுபட்டேன். அதற்கு முன்பு மாயையின் வசப்பட்டிருந்த போது எண்ணிறந்த பிறவிகளில் நான் கீழ்மையுற்றுக் கிடந்தேன்.
96. மையி லங்குநற் கண்ணி பங்கனே
வந்தெ னைப்பணி கொண்ட பின்பாக்
கையி லங்குபொற் கிண்ணம் என்றலால்
அரியை என்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய்
மெய்ம்மை அன்பருன் மெய்ம்மை மேவினார்
பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ
போவ தோசொலாய் பொருத்த மாவதே.
தெளிவுரை : அம்பிகை சமேதா, குழந்தையின் கையில் பொற் கிண்ணத்தைக் கொடுப்பதற்கு ஒப்ப என்னை நீ ஆட்கொண்டாய். பொற் கிண்ணத்தின் அருமையைக் குழந்தையானது அறியாதிருப்பது போல உனது அருமையை நான் அறியாதிருக்கின்றேன். மெய்ப்பொருளின் சின்னமாகிய திருநீறு பூசியிருப்பவனே, முடிந்த நிலையை அறிந்த முனிவர்கள் உன்பால் இரண்டறக் கலந்தனர். என்னை ஆட்கொண்ட பின் மாயப் பிரபஞ்சமாகிய இவ் வையக வாழ்க்கையில் என்னைப் புகும்படி செய்துவிட்டு நீ பராமுகமாய் இருக்கலாமா, இயம்புவாயாக. அப்படிச் செய்வது உனக்குத் தகுமோ?
97. பொருத்தம் இன்மையேன் பொய்ம்மை உண்மையேன்
போத என்றெனைப் புரிந்து நோக்கவும்
வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன்
மாண்டி லேன்மலர்க் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்
நீயும் அங்கெழுந் தருளி யிங்கெனை
இருத்தி னாய்முறை யோஎன் எம்பிரான்
வம்ப னேன்வினைக்கு இறுதி இல்லையே.
தெளிவுரை : செந்தாமரை மலர்போன்ற திருவடிகளை உடையவனே. செந்நிறமான திருமேனியுடையவனே, எனக்குச் சொந்தமான எங்கள் தலைவனே, உனது அருளுக்கு நான் தகுதியற்றவன்; பொய் உலக வாழ்க்கையை மெய் என்றிருப்பவன். வா என்று நீ விரும்பி அருளோடு பார்க்கவும் நான் அதைப் பற்றிக் கவலைப் படாதவன். நான் வஞ்சகத்தை உடையவன். ஏனென்றால் எனது ஜீவ போதத்தை அழிக்க நான் இன்னும் முயற்சி செய்யவில்லை. அருளுக்குப் பாத்திரமான அன்பர்களும் நீயும் அதீத நிலையில் ஒன்றுபட்டிருக்கிறீர்கள். இந்த நிலையற்ற உலக வாழ்க்கையில் என்னை நீ விட்டு வைத்திருப்பது முறையா? இங்கு வீணில் வாழ்ந்திருக்கும் எனது கர்மத்துக்கு ஒரு முடிவு இல்லையா?
98. இல்லை நின்கழற்கு அன்பது என்கணே
ஏலம் ஏலும்நற் குழலி பங்கனே
கல்லை மென்கனி ஆக்கும் விச்சைகொண்டு
என்னை நின்கழற்கு அன்பன் ஆக்கினாய்
எல்லை இல்லைநின் கருணை எம்பிரான்
ஏது கொண்டுநான் ஏது செய்யினும்
வல்லை யேஎனக்கு இன்னும் உன்கழல்
காட்டி மீட்கவும் மறுவில் வானனே.
தெளிவுரை : மயிர்ச்சாந்து அணிந்த அழகிய கூந்தலையுடைய அம்பிகையின் பாகனே, எம்பெருமானே, உனது திருவடியில் நான் அன்பு வைத்திலேன். உனது பரஞான சக்தியைக் கொண்டு கல் போன்ற என் நெஞ்சை ஞானக் கனியாகப் பக்குவப்படுத்தி என்னை உன் திருவடிக்கு அன்புடையவனாக்கினாய். நான் எதைக் கருவியாகக் கொண்டு எச் செயலைச் செய்தாலும் உனது பேரருளால் அதை உனது ஆராதனையாக ஏற்றுக் கொண்டாய். ஆயினும் சர்வ சக்திமானாகிய நீ உனது நிர்மலமாயிருக்கும் சித் ஆகாச சொரூபத்தில் என்னை இன்னும் லயமாகும் படி செய்யவில்லையே !
99. வான நாடரும் அறியொ ணாதநீ
மறையில் ஈறும்முன் தொடர்ஓ ணாதநீ
ஏனை நாடரும் தெரியொ ணாதநீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
ஊனை நாடகம் ஆடு வித்தவா
உருகி நானுனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடு வித்தவா
நைய வையகத்து உடைய விச்சையே.
தெளிவுரை : தேவர்கள் உன்னை அறிந்து கொள்ள மாட்டார்கள். உபநிடதங்கள் அன்றும் இன்றும் என்றுமே விளக்கமாட்டா. மற்ற ஜீவர்களும் உன்னை அறிந்து கொள்ள மாட்டார்கள். உன்னை அறிதற்கு என்னை நீ இனிது ஆட்கொண்டாய். என்னைப் பக்குவப் படுத்துவதற்குச் சிவ சேவையில் என்னை ஈடுபடுத்தினாய். பக்தியில் நான் உருகிப் பரவசமடைந்து உனது சொரூபத்தில் நிலைத்திருக்க வைத்தாய். ஞானவிசாரம் என்னிடத்து ஓங்குமாறு நீ அனுக்கிரகம் செய்தாய். அதன் விளைவாக என்னிடத்திருந்த அபர ஞானம் பரஞானமாக மாறிவிட்டது.
100. விச்சது இன்றியே விளைவு செய்குவாய்
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்ச கப்பெரும்
புலைய னேனையுன் கோயில் வாயிலில்
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு
உரியன் ஆக்கினாய் தாம்வ ளர்த்ததோர்
நச்சு மாமரம் ஆயி னுங்கொலார்
நானும் அங்ஙனே உடைய நாதனே.
தெளிவுரை : விண்ணுலகம் மண்ணுலகம் ஆகிய அண்டங்கள் அனைத்தையும் விதை விதைக்காமலேயே தோற்றுவிப்பாய். நிலைபெறச் செய்வாய். கரக்கவும் செய்வாய். உனக்கே உரிய நான் அந்தப் பிரபஞ்சத்துக்கு உரியவனாக என்னைச் செய்து கொண்டதனால் நான் வஞ்சகன். புலால் உடம்பை நான் என்று பாவிப்பதால் நான் புலையன். உடல்பற்று வைத்திருப்பதால் நான் உன் சொரூபத்தில் கலக்க முடியாது. என்னைப் பக்குவப்படுத்துவதற்கு உன் பொருட்டுப் பித்துப் பிடித்தவனாய் என்னை உன் கோயில் வாயிலில் வைத்தாய். உன் அன்பர்க்குத் தொண்டனாகவும் என்னை அமைத்துள்ளாய். இவையெல்லாம் உன் கருணை. உலகத்தவர் தாம் வளர்த்த ஒரு மரம் நஞ்சாகிப் பயனற்றதாயினும் அதை வெட்டிக் களைவதில்லை. அங்ஙனம் உன்னால் உருவான என்னைப் புறக்கணித்து விட வேண்டாம்.
101. உடைய நாதனே போற்றி நின்னலால்
பற்று மற்றெனக்கு ஆவது ஒன்றினி
உடைய னோபணி போற்றி உம்பரார்
தம்ப ராபரா போற்றி யாரினும்
கடையன் ஆயினேன் போற்றி என்பெருங்
கருணை யாளனே போற்றி என்னைநின்
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும்
அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே.
தெளிவுரை : நீ என்னை உடையவன் ஆதலால் எனக்கு உன்னையல்லாது வேறு ஆதாரம் ஏதேனும் உளதா. பகர்ந்தருள்வாயாக. தேவர்களுக்கெல்லாம் மேலாகிய மேலோனே, உன்னை வணங்குகிறேன். இனி யனோ எவர்க்கும் கீழ்ப்பட்டவன். அத்தகைய என்னை உன் கருணையினால் அடிமையாக்கினாய். எனக்குத் துவக்கமும் முடிவும் நீயே. அப்பனே உன்னை வணங்குகிறேன்.
102. அப்ப னேஎனக்கு அமுத னேஆ
னந்த னேஅக நெகஅள் ளூறுதேன்
ஒப்ப னேயுனக்கு உரிய அன்பரில்
உரிய னாய்உனைப் பருக நின்றதோர்
துப்ப னேசுடர் முடிய னேதுணை
யாள னேதொழும் பாளர் எய்ப்பினில்
வைப்ப னேஎனை வைப்ப தோசொலாய்
நைய வையகத்து எங்கள் மன்னனே.
தெளிவுரை : எனக்குத் தந்தையே, அமிர்தமே, ஆனந்தமே, உள்ளம் உருக வாய் ஊறுதற்கு ஏதுவாயுள்ள தேன் போன்றவனே, உனக்கு உரிமையுடைய மெய்யன்பரைப் போல நானும் உரிமையாளனாகி உன்னைப் புசித்து உயிர் வாழ்வதற்கான ஒப்பற்ற உணவே, ஒளி விளங்கும் திருமுடியை யுடையவனே. மாறாத் துணையாய் இருப்பவனே, தொண்டர்க்குத் தளர்வுற்றிருக்குங்கால் உதவும் செல்வமே, இப்பொய்யுலக வாழ்க்கையில் நான் துன்புற்றிருக்கும்படி வைப்பது முறையாகுமோ ! எங்கள் அரசே, இயம்பாய்.
103. மன்ன எம்பிரான் வருக என்னெனை
மாலும் நான்முகத்த ஒருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என்னெனை
முழுதும் யாவையும் இறுதி உற்றநாள்
பின்ன எம்பிரான் வருக என்னெனைப்
பெய்க ழற்கண்அன் பாய்என் நாவினால்
பன்ன எம்பிரான் வருக என்எனைப்
பாவ நாசநின் சீர்கள் பாடவே.
தெளிவுரை : யாண்டும் நிலை பேறுடைய எங்கள் தலைவனே ! அடியேனை வருக என்று கட்டளை இடுவாயாக. விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் மூலப் பொருளே, என்னை வருக என்று ஏற்றுக் கொள்வாயாக. சம்கார காலத்தில் எல்லாம் ஒடுங்கியிருக்கும் போதும், எஞ்சித்தன்மயமாயிருக்கும் எம் தலைவ, என்னை வருக என்று அழைப்பாயாக. உன்னை வந்து அடைந்தவர்களது பாவத்தைப் போக்குபவனே, நான் உன்னைப் புகழவும் உனது மகிமையைப் பாடவும் என்னை உன்னோடு சேர்த்துக் கொள்வாயாக.
104. பாட வேண்டும்நான் போற்றி நின்னையே
பாடி நைந்துநைந்து உருகி நெக்குநெக்கு
ஆட வேண்டும்நான் போற்றி அம்பலத்து
ஆடும் நின்கழல் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்குஎனைப் போற்றி பொய்யெலாம்
வீட வேண்டும்நான் போற்றி வீடுதந்து
அருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே.
தெளிவுரை : சிவோகம் என்னும் கேவல அவஸ்தையில் நிலை பெற்றிருப்பவர்க்கு உரிய செம்பொருளே, உனக்கு வணக்கம். உன்னைப் பற்றியே நான் பாடவேண்டும். மனம் நெகிழ்ந்து கரைந்து போகும்படி பாடிப் பரவசமடைந்து நான் கூத்தாட வேண்டும். சிதாகாசத்தில் ஊர்த்தவ தாண்டவமாடும் உன் சொரூபத்தில் நான் ஒன்று படவேண்டும். உடலை நான் என்று உணரும் உணர்வுக்கு அதீதத்தில் போவேனாக. பிரகிருதி தத்துவங்களுக்கு அப்பால் நான் போவேனாகுக. அகம் பிரம்மாஸ்மி என்னும் வீடு பேறு எனக்கு உரியதாகுக.
சிதம்பரத்துக்குப் போன ஜீவாத்மா திரும்பி வருவதில்லை என்னும் கோட்பாடு ஈண்டு நிறைவேறுகிறது. இது அத்வைத சித்தி. சிவனாருடைய ஊர்த்தவ தாண்டவம் பிரகிருதிக்கு அப்பாற்பட்டது. ஆதலால் அதுவே ஆனந்தா தீதம்.
6. நீத்தல் விண்ணப்பம்
பிரபஞ்ச வைராக்கியம்.
அநித்தியமாகிய பிரபஞ்சத்தில் பற்று வைத்திருக்கும் ஜீவாத்மாவுக்குச் சிவஞானம் கிட்டாது. உலகப் பற்றை நீத்தல் அல்லது துறத்தல் வேண்டும். சிவபெருமான் தாமே தியாகராஜனாகவும் மயான வாசியாகவும் இருந்து துறவின் அவசியத்தை விளக்குகிறார். பிருகிருதி என்னும் மாயையை நீத்துப் பரமனைப் பற்றிப் படிப்பது நல்ல ஆத்ம சாதனையாகிறது. ராகம் என்பது உலகின் கணபற்று வைத்தல்; வைராக்கியம் என்பது உலகப் பற்றை ஒழித்தல்.
(கட்டளைக் கலித்துறை)
105. கடையவ னேனைக் கருணையி
னால்கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண்
டாய்விறல் வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம்பி
ரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.
தெளிவுரை : விட்டிடுதி  என்னைக் கைவிடாது காத்தருள்வாயாக. காளை வாகனனே, புலித்தோல் அணிந்தவனே, சடையுடையவனே, கீழ்மையில் உழலும் என்னை உன் கருணையினால் அணைத்து ஆட்கொண்டாய். மீண்டும் நான் பிரபஞ்ச வாழ்க்கையில் வீழா திருக்கும்படி என்னைத் தாங்கிக் கொள்வாயாக. உத்தர கோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் இறைவனே ! இது எனது வேண்டுகோள்.
106. கொள்ஏர் பிளவக லாத்தடங்
கொங்கையர் கொவ்வைச் செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண்
டாய்நின் விழுத்தொழும்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர
கோசமங் கைக்கரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்
டாண்டதெக் காரணமே.
தெளிவுரை : என்னை விட்டு இன்னும் காமநோய் அகலவில்லை. உனக்கு உரியவனாகிய என்னை நானே காமனிடத்தில் ஒப்படைத்ததால் நான் கள்ளன். அதை அறிந்திருந்தும் ஆண்டவா என்னை நீ ஆட் கொண்டுள்ளாய். அதற்குக் காரணம் யாதோ? நானும் ஒருவாறு உன் சீரிய தொண்டில் ஈடுபட்டிருக்கிறேன். உன் அடியார்க்கு நான் வேற்றான் அல்லன். ஆதலால் என்னைப் பிரபஞ்ச பாசத்தில் விட்டு விட வேண்டாம்.
ஆழ்ந்த பிரார்த்தனை பிரபஞ்ச பாசத்தினின்று விடுபடுவதற்கு உற்றதோர் உபாயமாகும்.
107. காருறு கண்ணியர் ஐம்புலன்
ஆற்றங் கரைமரமாய்
வேருறு வேனை விடுதிகண்
டாய்விளங் கும்திருவா
ரூருறை வாய்மன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
வாருறு பூண்முல்லை யாள்பங்க
என்னை வளர்ப்பவனே.
தெளிவுரை : ஆற்றங்கரையில் வேர் பிடித்தமரம் வெள்ளத்தால் அரிப்பு உண்டு அழிவது திண்ணம். என் ஐம்பொறிகளும் காம நோயால் அரிப்புண்டு என்னை அழிக்கின்றன. என்னை நல் வழியில் வளர்ப்பதற்கென்றே மாது ஒரு பாகம் ஆகியிருப்பவனே ! என்னை விட்டு விடாதே. போகத்தை நாடுபவனுக்கு யோகம் இல்லை. இனி மாதர் போகத்துக்கு ஐம்பொறிகளும் உடந்தையாவதால் அது சம்போகம் எனப்படுகிறது. ஆதலால் போகி அழிவது திண்ணம்.
108. வளர்கின்ற நின்கரு ணைக்கையில்
வாங்கவும் நீங்கியிப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதிகண்
டாய்வெண் மதிக்கொழுந்தொன்(று)
ஒளிர்கின்ற நீள்முடி உத்தர
கோசமங் கைக்கரசே
தெளிகின்ற பொன்னும் மின்னுமன்ன
தோற்றச் செழுஞ்சுடரே.
தெளிவுரை : சந்திர சேகரா, பொன்னையும் மின்னலையும் ஒத்த தேஜோ மயமான யாண்டும் கருணையில் வளர்ந்து கொண்டே யிருக்கிற நினது திருக்கரத்தால் என்னை வளைத்துப் பிடித்தும் நான் உன்பால் பிடிபடாமல் இப்பொய்யுலக வாழ்வில் முன்னேற்றம் அடைபவன் போன்று தென்படுகிறேன். ஆயினும் என்னை நீ கைவிட்டு விடாதே.
ஈசன் கருணை எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கிறது. அதைப் பயன்படுத்த ஜீவாத்மன் முன்வருவதில்லை. பிரபஞ்சப் பற்றே அதற்குக் காரணம்.
109. செழிகின்ற தீப்புகு விட்டிலின்
சின்மொழி யாரில்பன்னாள்
விழுகின்ற என்னை விடுதிகண்
டாய்வெறி வாய்அறுகால்
உழுகின்ற பூமுடி உத்தர
கோசமங் கைக்கரசே
வழிநின்று நின்னருள் ஆரமு(து)
ஊட்ட மறுத்தனனே.
தெளிவுரை : வளர்கின்ற தீயில் விட்டில் பூச்சி வீழ்வது போன்று நான் காமக் கனலில் உழல்கிறேன். வண்டு மொய்க்கும் மணம் கமழும் பூவை முடியில் அணிந்திருக்கும் இறைவா, அத்தகைய என்னை நீ வழிமறித்து ஆட்கொண்டு, அருள் நிறைந்த அமிர்தத்தை வழங்கினாய். நானோ அதை ஏற்க மறுத்தேன். ஆயினும் நீ என்னைக் கைவிட்டு விடாதே.
பிரபஞ்சப் பற்றுதல்களுள் காமம் என்னும் நோய் மிகக் கொடியது.
110. மறுத்தனன் யானுன் அருள்அறி
யாமையில் என்மணியே
வெறுத்தெனை நீவிட் டிடுதிகண்
டாய்வினை யின்தொகுதி
ஒறுத்தெனை யாண்டுகொள் உத்தர
கோசமங் கைக்கரசே
பொறுப்பர் அன்றேபெரி யோர்சிறு
நாய்கள்தம் பொய்யினையே.
தெளிவுரை : பெறுதற்கரிய மெய்ப்பொருளே, என் அறியாமையால் நான் உனது அருளைப் புறக்கணித்து விட்டேன். அதனால் நீ என்னை வெறுத்துக் கைவிட்டு விடுவாயோ? கைவிட்டு விடாதே. ஜன்மாந்தரங்களில் நான் செய்த கர்மங்களை யெல்லாம் அகற்றி என்னை ஆண்டருள் வாயாக. பொய்யான, பிரபஞ்சத்தை மெய்யென்று மயங்குகின்ற அஞ்ஞானிளின் போக்கை மன்னிப்பது பெரியோர் செயல்.
உடலைத் தான் என்று எண்ணிச் சிறுமையுறுவோரைக் காப்பாற்றுவது இறைவன் அருளே.
111. பொய்யவ னேனைப் பொருளென
ஆண்டொன்று பொத்திக்கொண்ட
மெய்யவ னேவிட் டிடுதிகண்
டாய்விடம் உண்மிடற்று
மையவ னேமன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
செய்யவ னேசிவ னேசிறி
யேன்பவம் தீர்ப்பவனே.
தெளிவுரை : உயிர்களைக் காத்தல் பொருட்டு விஷம் உண்ட நீல கண்டனே, செம்மேனியனே, சிவனே, என்பிறவிப் பிணியை ஒழிப்பவனே, மாயப் பிரபஞ்சத்தில் மூழ்கிக் கிடந்த என்னிடத்து ஒரு பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டு வந்த மெய்ப்பொருளே, என்னை விட்டு விட வேண்டாம்.
கருணாகரனிடத்துப் பிரார்த்தனை பண்ணுவது சிறந்த ஆத்ம சாதனமாகிறது.
112. தீர்க்கின்ற வாறென் பிழையைநின்
சீர்அருள் என்கொல்என்று
வேர்க்கின்ற என்னை விடுதிகண்
டாய்விர வார்வெருவ
ஆர்க்கின்ற தார்விடை உத்தர
 கோசமங் கைக்கரசே
ஈர்க்கின்ற அஞ்சொடுஅச் சம்வினை
யேனை இருதலையே.
தெளிவுரை : ரிஷபவாகனனே, உன் காளையினது கழுத்தில் அணிந்திருக்கிற கிண்கிணி மாலையின் ஒலியே பகைவர்களைப் பயமுறுத்தி ஓட்டுகிறது. ஐம்பொறிகள் என்னைச் சிறு நெறியில் இழுக்கின்றன. பொறி வழி செல்லலாகாது என்னும் பயம் என்னை மற்றொரு பக்கம் இழுக்கிறது. இரு விதத்திலும் பிழை செய்கிற என்னை நீ எங்ஙனம் பொறுத்தருள்வாய் என்று நான் மனம் புழுங்கியிருக்கிறேன். அத்தகைய என்னை நீ கைவிட்டு விடுவாயோ?
இந்திரியங்களுக்கு வசப்படுகிறவன் சிறுமையடைகிறான். அஞ்சுபவனும் சிறுமை யடைகிறான். ஜிதேந்திரியன் அல்லது ஐம்பொறிகளை வென்றவன் ஆவதும், அபயத்தில் நிலைபெற்றிருப்பதும் ஆத்ம சாதனத்து இன்றியமையாத கோட்பாடுகளாம்.
113. இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்(பு)
ஒத்து நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண்
டாய்வியன் மூவுலகுக்(கு)
ஒருதலை வாமன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வலன்
ஏந்திப் பொலிபவனே.
தெளிவுரை : அகன்ற மூவுலகுக்கும் ஒப்பற்ற தலைவா, போரில் திரிசூலத்தை வெற்றியுடன் கையாளுபவனே. இரு பக்கமும் தீப்பற்றி எரிகிற கொள்ளியின் உள்ளே அகப்பட்டுக் கொண்ட எறும்பு போன்று உன்னைப் பிரிந்துள்ள நான் தலை விரிந்த கோலத்தோடு தவிக்கிறேன். அத்தகைய என்னை நீ விட்டு விடுவாயோ?
புறத்தில் மூவுலகாய் இருப்பன. சுவர்க்க, மத்திம, பாதாள உலகங்கள். அகத்தில் மூவுலகாய் இருப்பன. நனவு, கனவு, தூக்கம் என்பன. சுத்த சைதன்யமாகிய சிவம் இம் மூவுலகுக்கும் மேலாயது. கூர்மையான திரிசூலம் ஞானத்தின் சின்னமாகும்.
114. பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று
ஆக்கையைப்போக் கப்பெற்று
மெலிகின்ற என்னை விடுதிகண்
டாய்அளி தேர்விளரி
ஒலிநின்ற பூம்பொழில் உத்தர
கோசமங் கைக்கரசே
வலிநின்ற திண்சிலை யால்எரித்
தாய்புரம் மாறுபட்டே.
தெளிவுரை : உனது உறைவிடமாகிய உத்தரகோச மங்கையில் உள்ள பூஞ்சோலைகளில் வண்டுகள் விளரி என்னும் இசையை ஆராய்ந்தெடுத்துப் பாடுகின்றன. வலிமை பொருந்திய மகாமேரு மலையைத் திடமான வில்லாகக் கொண்டு நீ பகைத்த திரிபுரத்தைத் தகனம் செய்தாய். உடல் உணர்வைப் போக்கி உனது சித்த சொரூபத்தில் திளைத்திருக்க வேண்டிய நான் இன்னும் உடல் வாழ்க்கையிலே சிறுமையுற்றுக் கிடக்கின்றேன். ஆயினும் நீ என்னைக் கை விடாதே.
115. மாறுபட்(டு) அஞ்சென்னை வஞ்சிப்ப
யானுன் மணிமலர்த்தாள்
வேறுபட் டேனை விடுதிகண்
டாய்வினை யேன்மனத்தே
ஊறுமட்டே மன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
நீறுபட் டேயொளி காட்டும்பொன்
மேனி நெடுந்தகையே.
தெளிவுரை : கர்ம சொரூபியாகிய எனது மனத்தில் சுரக்கின்ற தேனே, திருநீறு பூசப்பெற்றுப் பிரகாசிக்கின்ற பொன் போன்ற மேனியையுடைய கருணாகரனே, மெய்ப்பொருள் காட்சியைத் திரிபு படுத்துகிற ஐம்பொறிகளில் கட்டுண்டிருப்பதால் உனது சுயஞ்சோதி சொரூபத்தை சுவானுபவத்தில் பெற இயலாமல் நான் உனக்கு வேறுபட்டவனாய் இருக்கிறேன். அதனால் நீ என்னைப் புறக்கணிப்பது பொருந்துமா?
பரம்பொருள் எனப்படுவது ஐம்பொறிகளுக்கு அப்பாற்பட்டது. அதே பொருள் ஐம்பொறிகள் வாயிலாகப் புலனாகும் போது பிரபஞ்சம் எனப்படுகிறது.
116. நெடுந்தகைநீ என்னையாட் கொள்ளயான்
ஐம்புலன் கள்கொண்டு
விடுந்தகை யேனை விடுதிகண்
டாய்விர வார்வெருவ
அடுந்தகை வேல்வல்ல உத்தர
கோசமங் கைக்கரசே
கடுந்தகை யேன்உண்ணும் தெள்நீர்
அமுதப் பெருங்கடலே.
தெளிவுரை : அஞ்ஞானம் என்னும் பகையை மாய்க்கவல்ல சூலா யுதத்தை உடையவனே. தளர்வுற்றுக் கிடக்கும் நான் பருகும் தெளிநீர் போன்ற அமிர்த சாகரமே, நீ கருணா கரனாயிருந்து என்னை ஆட் கொண்டாய் எனினும் நான் பொறி வழியே சென்று உன்னைப் பிரிந்திருக்கிறேன். ஆயினும் நீ என்னை விட்டு விடாதே.
நான் அறிவிலி எனினும், கல் நெஞ்சக்கரான் எனினும் நீ என்னைக் காப்பாற்றி யருள்வாயாக.
117. கடலினுள் நாய்நக்கி யாங்(கு)உன்
கருணைக் கடலினுள்ளம்
விடல்அரி யேனை விடுதிகண்
டாய்விடல் இல்லடியார்
உடல்இல மேமன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
மடலின்மட் டேமணி யேயமு
தேயென் மதுவெள்ளமே.
தெளிவுரை : உன்னை விடாது பற்றிப் பிடிக்கும் அன்பர்களது உடலை ஆலயமாகக் கொண்டவனே. பூவிதழில்சுரக்கும் தேனே, தேஜோமயனே, அமிர்தமே, எனக்குரிய தேன்கடலே, கடலில் நாய் நக்குவது போன்று உனது அகண்டாகாரக் கருணையை நான் நன்கு பயன்படுத்தத் தெரியாதவன். உன்பால் என் உள்ளத்தைச் செலுத்த எனக்கு இயலவில்லை. ஆயினும் நீ என்னை ஒரு போதும் கைவிட்டு விடாதே.
118. வெள்ளத்துள் நாவற்றி யாங்(கு)உன்
அருள்பெற்றுத் துன்பத்தினின்றும்
விள்ளக் கிலேனை விடுதிகண்
டாய்விரும் பும்அடியார்
உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
கள்ளத்து ளேற்(கு)அரு ளாய்களி
யாத களியெனக்கே.
தெளிவுரை : நீர்ப்பெருக்கினுள் இருந்துகொண்டே நீர் பருகாமல் நாவுலர்ந்து வருந்துவது போல் உன் அருள் வெள்ளத்தைப் பெற்றும் துன்பத்தினின்று இப்பொழுதும் விலகிக் கொள்ள எனக்கு இயலவில்லை. ஆயினும் நீ என்னை ஒதுக்கி விடாதே. உன்பால் பக்தி பண்ணுகிற பக்தர் உள்ளத்தில் நீ எப்போதும் குடியிருக்கிறாய். பொறிகளில் கட்டுண்டு கிடக்கிற எனக்கு உன் பேரானந்தத்தைக் கொடுத்தருள்வாயாக.
பொறிகளைக் கொண்டு போகத்தை நாடுபவன் துன்பத்துக்கு ஆளாவது திண்ணம்.
119. களிவந்த சிந்தையோ(டு) உன்கழல்
கண்டுங் கலந்தருள
வெளிவந்தி லேனை விடுதிகண்டாய்
மெய்ச்சுட ருக்கெல்லாம்
ஒளிவந்த பூங்கழல் உத்தர
கோசமங் கைக்கரசே
எளிவந்த எந்தைபி ரான்என்னை
யாளுடை என்னப்பனே.
தெளிவுரை : பிரகாசப் பொருள்கள் அனைத்துக்கும் மூலப் பிரகாசமே, யாண்டும் எனக்கு அப்பனாயிருந்து என்னைக் காத்தருள்பவனே, என்னை உன்மயமாக்குவதற்கு நீ எழுந்தருளியதை நான் மகிழ்வோடு பார்த்தேன். ஆனால் உன்னில் கலந்துகொள்ள உலகை விட்டு வெளியேற நானோ ஆயத்த மாயில்லை. அத்தகைய என்னை நீக்கி விட நீ நினைவு கொள்ளாதே.
120. என்னைஅப் பாஅஞ்சல் என்பவர்
இன்றிநின்(று) எய்த்தலைந்தேன்
மின்னைஒப் பாய்விட் டிடுதிகண்
டாய்வலமிக் கின்மெய்யே
உன்னைஒப் பாய்மன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
அன்னைஒப் பாய்எனக்(கு) அத்தன்ஒப்
பாய்என் அரும்பொருளே.
தெளிவுரை : சீர்தூக்கிப் பார்க்கும் இடத்து மெய்ப்பொருளே, உனக்கு நீதான் நிகர் ஆவாய். எனக்குத் தாய்போன்றவனே, தந்தை போன்றவனே, என் அரும் பொருளே, என்னை இரக்கம் கொண்டு பார்த்து, அப்பா, நீ பயப்படாதே என்று சொல்லுவார் இல்லாமையால் நான் ஏங்கி நின்று இளைத்து அலைந்தேன். பரிதாபத்துக்குரிய என்னை நீ கைவிட்டு விடாதே.
121. பொருளே தமியேன் புகலிட
மேநின் புகழ்இகழ்வார்
வெருளே எனைவிட் டிடுதிகண்
டாய்மெய்ம்மை யார்விழுங்கும்
அருளே அணிபொழில் உத்தர
கோசமங் கைக்கரசே
இருளே வெளியே இகபர
மாகி இருந்தவனே.
தெளிவுரை : யாண்டும் இருந்தபடி இருக்கிற மெய்ப்பொருளே. ஆதரவு அற்ற எனக்கு ஆதரவாய் இருப்பவனே, உன்னை நிந்திப்பவர்க்கு அச்சம் ஊட்டுபவனே, மெய்ப்பொருள் உணர்ந்த ஞானியர் அருந்தும் அருள் கனியே, அஞ்ஞான இருளும் ஞான வெளிச்சமும் ஆனவனே, பிரபஞ்சமாகவும் அதற்கு அதீதப் பொருளாகவும் இருப்பவனே, என்னைப் புறக்கணித்து விடாதே.
122. இருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள்
ஒற்றிவை என்னின்அல்லால்
விருந்தின னேனை விடுதிகண்
டாய்மிக்க நஞ்சமுதா
அருந்தின னேமன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
மருந்தின னேபிற விப்பிணிப்
பட்டு மடங்கினார்க்கே.
தெளிவுரை : கொடிய விஷத்தை அமிர்தமாக ஏற்றவனே, பிறவிப் பிணியில் முடங்கிக் கிடக்கின்றவர்களுக்கு அருமருந்தாய் இருப்பவனே, என் முன் எழுந்தருளியிருந்து என்னை உனக்கே சொந்தமாக்கிக் கொள். விலைக்கு விற்றுக் கொள். அடைமானம் வை. இவ்வாறெல்லாம் சொல்லுவதன்றி வேறு நான் என்ன செய்யக் கடவேன். உன் அருளுக்குப் புதியவனாய் வந்திருக்கும் என்னை வெறுமனே விட்டு விட வேண்டாம் என்பது ஒன்றே என் விண்ணப்பம்.
123. மடங்கஎன் வல்வினைக் காட்டைநின்
மன்னருள் தீக்கொளுவும்
விடங்கஎன் தன்னை விடுதிகண்
டாய்என் பிறவியைவே
ரொடுங்களைந்(து) ஆண்டுகொள் உத்தர
கோசமங் கைக்கரசே
கொடுங்கரிக் குன்றுரித்(து) அஞ்சுவித்
தாய்வஞ்சிக் கொம்பினையே.
தெளிவுரை : கொடியதும் குன்று போன்றதுமான யானையைக் கொன்று அதன் தோலை நீ உரித்த செயலைப் பார்த்து அம்பிகை பயந்து நடுக்க முற்றாள். எனது கொடிய வினை காடு போன்றது. அதனை முழுதும் அழியும்படி உனது பேர் அருள் என்னும் ஞானாக்கினியால் கொளுத்திவிடு. என் பிறவிப் பிணியை வேரறக் களைந்தருள்க. கட்டழகனே என்னை ஒரு பொழுதும் கைவிட்டு விடாதே.
வினையையும் பிறவியையும் போக்க வல்லது பரஞானம் ஒன்றேயாகும்.
124. கொம்பர்இல் லாக்கொடி போல்அல
மந்தனன் கோமளமே
வெம்புகின் றேனை விடுதிகண்
டாய்விண்ணர் நண்ணுகில்லா
உம்பர்உள் ளாய்மன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
அம்பர மேநில னேஅனல்
காலொ(டு)அப் பானவனே.
தெளிவுரை : தேவர்களுக்கும் எட்டாத அதீதத்தில் இருக்கும் சித் ஆகாசனே, பஞ்ச பூதங்கள் ஆனவேனே, யாண்டும் இளமையோடு கூடிய அழகனே, பற்றிப் பிடித்து வளர்வதற்குக் கொம்பு ஒன்றும் இல்லாத கொடி சுழல்வது போன்று நான் மனம் தடுமாறுகிறேன். தவிக்கின்ற என்னைக் காத்து அருள்வாயாக.
கடவுள் கோமளனாயிருப்பது போன்று அம்பிகை நித்திய யௌவனத்தோடு இருக்கிறாள். மனம் சாந்தியடைவது வாழ்வின் குறிக்கோள்.
125. ஆனைவெம் போரில் குறுந்தூ(று)
எனப்புல னால் அலைப்புண்
டேனைஎந் தாய்விட் டிடுதிகண்
டாய்வினை யேன்மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலை
யும் அமு தத்தையும் ஒத்(து)
ஊனையும் என்பினை யும்உருக்
காநின்ற ஒண்மையனே.
தெளிவுரை : யானையானது கொடும்போர் புரியும்போது சிறு செடி மிதியுண்டு அழிவது போன்று ஐம்புலன்களால் நான் அலைக்கழிக்கப் படுகிறேன். அதற்கு மாறாக ஞானப் பிரகாசனாகிய நீ, கர்ம சொரூபியாகிய என் உள்ளத்தினுள் தேன், பால், கருப்பஞ்சாறு, அமிர்தம் போன்று பேரானந்தப் பெருக்கெடுத்து ஒளிர்ந்து, ஊனையும் எலும்பையும் உருக்கி எனை உன் மயமாக்குவாயாக. பொறிகளின் ஆதிக்கத்தில் என்னை ஒரு பொழுதம் விட்டுவிடாதே.
126. ஒண்மைய னேதிரு நீற்றையுத்
தூளித்(து) ஒளிமிளிரும்
வெண்மைய னேவிட் டிடுதிகண்
டாய்மெய் அடியவர்கட்(கு)
அண்மைய னேஎன்றும் சேயாய்
பிறர்க்கறி தற்கரிதாம்
பெண்மைய னேதொன்மை ஆண்மைய
னேஅலிப் பெற்றிய னே.
தெளிவுரை : தியாகத்தின் சின்னமாகத் திருநீறு பூசித் திகழும் ஞானப் பிரகாசனே, நீ தொண்டர் உள்ளத்தில் திகழ்கின்றாய். மற்றவர்க்கு நீ புலப்படுவதில்லை. உன்னை முழுதும் யாரும் அறியார். பெண்ணாய், ஆணாய், அலியாய் இருப்பவன் நீயே, என்னைத் தகாதவன் என நீ தள்ளிவிடாதே.
திருநீறு ஐம்பொறிகளை வென்றதற்கு அறிகுறியாக விளங்குகிறது.
127. பெற்றது கொண்டு பிழையே
பெருக்கிச் சுருக்கும் அன்பின்
வெற்றடி யேனை விடுதிகண்
டாய்விடி லோகெடுவேன்
மற்றடி யேன்தன்னைத் தாங்குநர்
இல்லைஎன் வாழ்முதலே
உற்றடி யேன்மிகத் தேறிநின்
றேன்எனக்(கு) உள்ளவனே.
தெளிவுரை : அருமையாகக் கிடைத்த மானிட சரீரத்தைக் கொண்டு பிரபஞ்ச வாழ்க்கையில் மிகைபட ஈடுபட்டுக் கடவுள் பக்தியைக் குறைத்துள்ள போலிபக்தனாகிய என்னை இறைவா, விட்டு விடுவாயோ? ஒரு வேளை விட்டு விடுவாயாகில் நான் அழிந்து போவேன். பின்பு உன்னைத் தவிர எனக்கு வேறு ஆதாரம் ஒன்றுமில்லை. உன்னை முன்னிட்டே எனக்கு ஜீவப் பெற்றி வந்துள்ளது. உன்னைச் சார்ந்திருந்து உன் மயமாக்குதற்கான தெளிந்த நிலையை அடையப் பெற்றேன். அந்தர்யாமியாயும் அடிப்படை வஸ்துவாயும் யாண்டும் நீ என்னுள் இருக்கிறாய்.
பரமனைச் சார்பவனே பெருவாழ்வு வாழ்கிறான்.
128. உள்ளன வேநிற்க இல்லன
செய்யும்மை யல்துழனி
வெள்ளன்அ லேனை விடுதிகண்
டாய்வியன் மாத்தடக்கைப்
பொள்ளல்நல் வேழத்(து) உரியாய்
புலன்நின்கண் போதல்ஒட்டா
வெள்ளன வேமொய்க்கும் நெய்க்குடம்
தன்னை எறும்பெனவே.
தெளிவுரை : நீண்ட நாசித் துவாரத்தோடு கூடிய அழகிய யானையின் தோலை அணிந்திருப்பவனே, எறும்புகள் மோப்பத்தால் தேடிச் சென்று நெய்க்குடம் ஒன்றை மொய்ப்பது போன்று ஐம்பொறிகள் என்னை உன்னிடம் போக வொட்டாது தடுத்து என் உடலைத் தேய்க்கின்றன. அதற்கு உடந்தையாய் இருக்கும் நான் மெய்ப் பொருள் நாட்டம் கொள்கிறேன் இல்லை. மயக்கத்துக்கு உட்பட்டுப் பொய்ம்மை யானவற்றையே செய்து வீண்பேச்சைப் பெருக்கிக் கொண்டிருக்கிறேன். அப்படி எனக்குக் கேடு சூழும் என்னை நீ கைவிட்டு விடுவாயோ?
129. எறும்பிடை நாய்கூழ் எனப்புல
னால்அரிப் புண்டலந்த
வெறுந்தமி யேனை விடுதிகண்
டாய்வெய்ய கூற்றொடுங்க
உறுங்கடிப் போதவை யேயுணர்(வு)
உற்றவர் உம்பர்உம்பர்
பெறும்பத மேஅடி யார்பெய
ராத பெருமையனே.
தெளிவுரை : மணமலர் போன்ற உன் திருவடிகள் கூற்றுவனைச் செயல் அற்றவனாக்க வல்லவை. அத் திருவடிகளிலேயே மனத்தை நிலை நாட்டிய தேவர்களாலும் அடையப் பெறாத மோட்சம் என்னும் உனது சிவபதவியை அன்பர்கள் அடையப் பெற்றனர். உன்னை அடைந்தவர்களிடமிருந்து நழுவிப் போகாத பெரிய பெரிய பொருளே, சிறுமையில் சிந்தையைச் செலுத்தியவன் நான். அதனால் நாக்குப் பூச்சியானது எறும்புகளால் அரிப்புறுவது போன்று நான் புலன்களால் அரிப்புண்டு அவதிப்படுகிறேன். என்னை நீ காப்பாற்றி யருள்க !
130. பெருநீர் அறச்சிறு மீன்துவண்
டாங்கு நினைப்பிரிந்த
வெருநீர்மை யேனை விடுதிகண்
டாய்வியன் கங்கைபொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு
தோணி வடிவின் வெள்ளைக்
குருநீர் மதிபொதி யும்சடை
வானக் கொழுமணியே.
தெளிவுரை : பெரிய கங்கை பொங்கி வரும்போது அதன் நீர்ப் பெருக்கில் தடுமாறுகிற தோணி போன்று தென்படுகிற வெள்ளை நிறத்தோடு திகழ்கிற திங்களைச் சடையில் தரித்திருக்கும் சிதாகாசச் செழுஞ்சுடரே ! நான் விடுக்கும் விண்ணப்பம் கேள். மடுவில் நீர் வற்றும் போது சிறு மீன்கள் துடிப்பது போன்று அஞ்சும் தன்மையுடையவன் நான். அத்தகைய என்னை ஆபத்தில் விட்டு விடுவாயோ?
131. கொழுமணி ஏர்நகை யார்கொங்கைக்
குன்றிடைச் சென்றுகுன்றி
விழும்அடி யேனை விடுதிகண்டாய்
மெய்ம்முழு தும் கம்பித்(து)
அழும்அடி யாரிடை ஆர்த்துவைத்(து)
ஆட்கொண் டருளியென்னைக்
கழுமணி யேயின்னும் காட்டுகண்
டாய்நின் புலன்கழலே.
தெளிவுரை : மாதருடன் கலந்து சிற்றின்பம் துய்த்து அழிந்து போகும் அறிவிலியாகிய என்னைக் காப்பாற்ற மாட்டாயா? அன்பால் உடல் முழுவதும் நடுங்கி அழுகின்ற பக்தர்களோடு என்னைச் சேர்த்து வை. மாசிலா மணியே. உனது ஞான சொரூபத்தை எனக்குக் காட்டியருள்க.
சத்சங்கம் காமநோய்க்கு நல்ல மருந்து.
132. புலன்கள்தி கைப்பிக்க யானும்
திகைத்திங்கோர் பொய்ந்நெறிக்கே
விலங்குகின் றேனை விடுதிகண்
டாய்விண்ணும் மண்ணுமெல்லாம்
கலங்கமுந் நீர்நஞ்(சு) அமுதுசெய்
தாய்கரு ணாகரனே
துலகுநின் றேன்அடி யேனுடை
யாய்என் தொழுகுலமே.
தெளிவுரை : விண்ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் ஆகிய எல்லாரும் அஞ்சி நடுங்கக் கண்டு நீ கடலில் கிளம்பிய நஞ்சை அமிர்தமாக ஏற்றாய். அத்தகைய கருணாகரனே. நிலை கலங்குகின்ற என்னையும் காத்தருள்க. நான் உனக்கே உரியவன். என்னை உடையவனாகிய நீ எனக்கு இஷ்டமூர்த்தி. உன்னையே சார்ந்திருக்க வேண்டிய நான் புலன்களினால் பிரமிக்கப்பட்டுப் பொய் நெறியில் பிசகிப் போகிறேன். என்னை நீ காத்தருள வேண்டாமோ?
133. குலம்களைந் தாய்களைந் தாய்என்னைக்
குற்றம்கொற் றச்சிலையாம்
விலங்கல்எந் தாய்விட் டிடுதிகண்
டாய்பொன்னின் மின்னுகொன்றை
அலங்கல்அம் தாமரை மேனியப்
பாஒப்பி லாதவனே
மலங்கள்ஐந் தால்சுழல் வன்தயி
ரில்பொரு மத்துறவே.
தெளிவுரை : பொன்போல் விளங்குகின்ற கொன்றைமாலை அணிந்தவனே, அழகிய செந்தாமரை போன்ற திருமேனியையுடைய அப்பனே. உனக்கு நிகர் வேறு யாரும் இல்லாதவனே, கடைகின்ற மத்து பொருந்திய உடனே தயிர் சுழல்வது போல என்னைப் பற்றிய பாசங்கள் ஐந்தால் நான் அலைப்புண்டு வருந்துகின்றேன். என்னுடைய உபாதிகளை யெல்லாம் ஒழிக்க வல்லவனே. எனது ஜீவ போதத்தை அழிக்கவல்லவனே, மேரு மலையை வெற்றிவில்லாக உடையவனே, என்னைப் புறம்பே போக விட்டுவிடுவாயோ?
134. மத்துறு தண்தயி ரின்புலன்
தீக்கது வக்கலங்கி
வித்தறு வேனை விடுதிகண்
டாய்வெண் தலைமிலைச்சிக்
கொத்துறு போது மிலைந்து
குடர்நெடு மாலைசுற்றித்
தத்துறு நீறுடன் ஆரச்செஞ்
சாந்தணி சக்சையனே.
தெளிவுரை : வெண்மையான கபாலங்களை மாலையாக அணிந்து, கொத்துக் கொத்தாக உள்ள கொன்றை மலர்சூடி, குடராகிய நீண்ட மாலையைக் கழுத்தில் சுற்றி உடலெங்கும் பரந்து விளங்குகின்ற திரு வெண்ணீற்றொடு பொருந்தச் செஞ்சந்தனச் சாந்து அணிந்த மெய்ப்பொருளே, மத்தைக் கொண்டு கடையும்பொழுது தணுப்பான தயிர் உடைந்து கலங்குவது போன்று புலன்கள் என்னும் நெருப்புப் பற்றி நான் கலங்குகின்றேன். இங்ஙனம் பிறவிக்கு வித்து ஆகின்ற என்னை நீ காத்தருள மாட்டாயா?
135. சச்சைய னேமிக்க தண்புனல்
விண்கால் நிலநெருப்பாம்
விச்சைய னேவிட் டிடுதிகண்
டாய்வெளி யாய்கரியாய்
பச்சைய னேசெய்ய மேனிய
னேஒண் பட அரவக்
கச்சைய னேகடந் தாய்தடந்
தாள அடற்கரியே.
தெளிவுரை : அனைத்துக்கும் அடிப்படையாய் உள்ள மெய்ப்பொருளே, ஐம்பூதங்களாய் இயங்குபவனே, வியப்புக்குரியவனே, எல்லா நிறங்களிலும் ஒளிர்பவனே, பாம்பைக் கச்சையாக இடையில் கட்டியிருப்பவனே, பெரிய கால்களையுடைய வலிய யானையைக் கொன்றவனே, என்னை நிலையற்ற நிலவுலக வாழ்வில் விட்டு விடாதே.
136. அடல்கரி போல்ஐம் புலன்களுக்(கு)
அஞ்சி அழிந்தஎன்னை
விடற்(கு)அரி யாய்விட் டிடுதிகண்
டாய்விழுத்தொண் டர்க்கல்லால்
தொடற்(கு)அரி யாய்சுடர் மாமணி
யேசுடு தீச்சுழலக்
கடல்கரி தாய்எழு நஞ்(சு) அமு
தாக்கும் கறைக்கண்டனே.
தெளிவுரை : மேலான தொண்டர்கள் அல்லாது மற்றவர்களால் தொடர்பு வைக்க எட்டாதவனே. ஞானஜோதியே. கடல் நீரை ஆவியாக்கும் வடவாமுக அக்கினியையே நிலைகுலையச் செய்ததும் கடலைக் கறே ரென்று மறைத்தது மாகிய விஷத்தை அமிர்தமாக ஏற்ற நீல கண்டனே. வலிய யானை போன்ற ஐம்புலன்களுக்கு அஞ்சி மனத்தடுமாற்றத்துடன் இருக்கிறேன். உனக்கு வேற்றானாய்ப் பிரிந்திருக்க இயலாத என்னை நீ விட்டு விடுவாயோ?
137. கண்டது செய்து கருணைமட்
டுப்பரு கிக்களித்து
மிண்டுகின் றேனை விடுதிகண்
டாய்நின் விரைமலர்த்தாள்
பண்டுதந் தாற்போல் பணித்துப்
பணிசெயக்கூ வித்தென்னைக்
கொண்டென்எந் தாய்களை யாய்களை
யாய குதுகுதுப்பே.
தெளிவுரை : என் தந்தையே உனது அருளாகிய ;தேனைப் பருகச் செருக்கமடைந்து மனத்தில் தோன்றியவாரெல்லாம் செய்து மதம் பிடித்துத் திரிகிற என்னைக் கைவிட வேண்டாம். மணம் நிறைந்த உனது மலர்த்தாளை முன்பு எனக்குக் கொடுத்தருளியது போன்று இப்பொழுதும் கொடுத்தருள்வாயாக. உன் திருத்தொண்டு செய்ய அழைத்து என்னை உனக்கே ஆள் ஆக்கிக் கொள். என்பால் உள்ள குற்றமாகிய வரம்பு கடந்த மகிழ்ச்சியை அறவே களைந்தருள்க.
138. குதுகுதுப்(பு) இன்றிநின்(று) என்குறிப்
பே செய்து நின்குறிப்பில்
விதுவிதுப் பேனை விடுதிகண்
டாய்விரை யார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப்
பழத்தின் மனம்கனிவித்(து)
எதிர்வ(து)எப் போது பயில்விக்
கயிலைப் பரம்பரனே.
தெளிவுரை : கயிலையின்கண் வீற்றிருக்கும் எல்லார்க்கும் மேலான பொருளே. உன்னைச் சார்ந்திருப்பதில் ஆவல் இன்றி என் மனத்தில் தோன்றியதை நான் செய்கிறேன். பின்பு அது உன் திருவுளப் பாங்கு என்று துணிந்து சொல்லுகிறேன். இத்தகைய முரண்பாடு உடைய என்னை நீ கைவிட்டு விட வேண்டாம். தெளிந்த தேன் போன்றும் பழுத்த வாழைப் பழம் போன்றும் என்னை நீ பக்குவப் படுத்துவது எப்போது? அதற்கேற்ற பயிற்சியை எனக்குக் கொடுத்தருள்வாயாக.
139. பரம்பர னேநின் பழஅடி
யாரொடும் என்படிறு
விரும்(பு)அர னேவிட் டிடுதிகண்
டாய்மென் முயல்கறையின்
அரும்(பு)அர நேர்வைத்(து) அணிந்தாய்
பிறவிஐ வாய்அரவம்
பொரும்பெரு மான்வினை யேன்மணம்
அஞ்சிப் பொதும்புறவே.
தெளிவுரை : ஒன்றோடு ஒன்று இணங்காதவைகளும் தரத்தில் வேறு பட்டவைகளுமாகிய சந்திரனும் சர்ப்பமும் உன்னிடம் சமநிலை பெற்று உன்னை அலங்கரிக்கின்றன. அனைத்துக்கும் மேலானவனே அரனே, அங்ஙனம் உன் பழைய அடியவர்களோடு பொய் ஒழுக்கமுடைய என்னைச் சமனாக வைத்த நீ இனி என்னைக் கைவிட்டு விடாதே. பிறவியானது ஐந்துதலை நாகத்துக்கு ஒப்ப ஐம்பொறிகள் வாயிலாக வந்து என்னைப் பயமுறுத்துகிறது. பாம்புக்கு அஞ்சி எலியானது பொந்தில் பதுங்குவது போன்று கர்ம சொரூபமாகிய என் மனம் இந்த ஐம்பொறி நாகத்தோடு சண்டையிட அஞ்சி உள்முக நோக்கம் என்னும் பொந்தில் ஒடுங்குகிறது.
140. பொதும்புறு தீப்போல் புகைந்(து)எரி
யப்புலன் தீக்கதுவ
வெதும்புறு வேனை விடுதிகண்
டாய்விரை யார்நறவம்
துதும்பும்மந் தாரத்தில் தாரம்
பயின்றுமந் தம்முரல்வண்(டு)
அதும்பும் கொழுந்தேன் அவிர்சடை
வானத்(து) அடல் அரைசே.
தெளிவுரை : சிதாகாசமாகத் திகழும் பேராற்றல் படைத்த அரசே, பிரகாசிக்கின்ற உனது ஜடாபாரத்தில் மந்தாரப் பூவின் செழுந்தேன் நறுமணத்தோடு தோன்றுகிறது. ஆதலால் அப்பூவில் படியவரும் வண்டுகள் எடுத்தல் ஓசையையும் படுத்தல் ஓசையையும் உண்டு பண்ணுகின்றன. வண்டுகள் உன்னிடமிருந்து பெருவாழ்வு பெருகையில் நானோ, மரப் பொந்தில் தீப்பற்றி எரிவது போன்று உள்ளத்தினுள்ளே ஐம்பொறிகளின் ஆசை என்னும் காமத்தீயில் தவிக்கிறேன். என்னை நீ காப்பாற்றி யருள மாட்டாயா? தாரம்  எடுத்தல் ஓசை, மந்தல்  படுத்தல் ஓசை.
141. அரைசே அறியாச் சிறியேன்
பிழைக்(கு) அஞ்சல் என்னின்அல்லால்
விரைசேர் முடியாய் விடுதிகண்
டாய்வெண் ணகைக்கருங்கண்
திரைசேர் மடந்தை மணந்த
திருப்பொன் பதப்புயங்கா
வரைசேர்ந்(து) அடர்ந்தென்ன வல்வினை
தான்வந்(து) அடர்வனவே.
தெளிவுரை : வெள்ளை நிறமான பற்களையும், கடல் போன்ற கரிய கண்களையும் உடைய உமாதேவியின் பங்கா, பொன்போன்ற மேனி உடையவனே, பன்னக பூஷணா இரண்டு மலைகள் ஒன்று சேர்ந்து நெருங்குவது போன்று உறுதி வாய்ந்த நல்வினையும் தீவினையும் சேர்ந்து என்னைத் துன்புறுத்துகின்றன. ஆதலால் அரசே, மணம் நிறைந்த ஜடாபாரத்தை உடையவனே, எனது அஞ்ஞானத்தை அகற்றி அபயம் தந்தருள மாட்டாயா?
142. அடர்புல னால்நின் பிரிந்தஞ்சி
அம்சொல்நல் லார்அவர்தம்
விடர்விட லேனை விடுதிகண்
டாய்விரிந் தேஎரியும்
சுடரனை யாய்சுடு காட்டர
சேதொழும் பர்க்கமுதே
தொடர்வரி யாய்தமி யேன்தனி
நீக்கும் தனித்துணையே.
தெளிவுரை : எங்கும் வியாபித்துள்ள ஆத்ம ஜோதியே, மயான வாசியே, தொண்டர்களுக்கு அமிர்தமே. யோகத்தால் அன்றி அடைய முடியாதவனே, வேறு துணையற்ற எனக்கு ஒப்பற்ற துணையே, துன்புறுத்துகின்ற இந்திரியங்களுக்கு வசப்பட்டு, உனக்கு வேற்றானாகி, சிற்றின்பம் என்னும் காட்டில் அகப்பட்டுக் கொண்டு அங்கேயே அல்லலுற்றுக் கிடக்கின்ற என்னைக் கடைத்தேற்ற மாட்டாயா?
143. தனித்துணை நீநிற்க யான்தருக்
கித்தலை யால்நடந்த
வினைத்துணை யேனை விடுதிகண்
டாய்வினை யேனுடைய
மனத்துணை யேயென்றன் வாழ்முத
லேயெனக்கெய்ப் பில்வைப்பே
தினைத்துணை யேனும் பொறேன்துயர்
ஆக்கையின் திண்வலையே.
தெளிவுரை : நான் கர்ம சொரூபி. எனது ஜட மனதுக்குச் சேதனத்தைத் தருபவனே, எனது உயிர்க்கு உயிராய் இருப்பவனே. தளர்வுற்ற காலத்தில் எனக்குச் சேமநிதியாய் இருப்பவனே. யாண்டும் எனக்கு மூலப் பொருளாய் நீ இருக்க ஜீவ போதத்தை வளர்ப்பதற்கான செருக்குற்று நான் தலைதடுமாறிப் போயிருக்கிறேன். கர்ம பந்தத்தில் உழலும் என்னை நீ விட்டு விட வேண்டாம். துன்பத்துக்கு இருப்பிடமாகிய உடல் என்னும் உறுதியான வலையில் அகப்பட்டு அல்லல்படும் நான் இந்த அல்லலைச் சிறிதேனும் சகியேன்.
144. வலைத்தலை மான்அன்ன நோக்கியர்
நோக்கின் வலையிற்பட்டு
மிலைத்(து)அலைந் தேனை விடுதிகண்
டாய்வெண் மதியின்ஒற்றைக்
கலைத்தலை யாய்கரு ணாகர
னேகயி லாயம்என்னும்
மலைத்தலை வாமலை யாள்மண
வாளஎன் வாழ்முதலே.
தெளிவுரை : சந்திர சேகரா  கருணாகரா, கைலாய நாதா, பார்வதி சமேதா, என் வாழ்வுக்கு மூல காரணமாகிய தலைவா, வலையில் அகப்பட்ட மானின் பார்வை போன்ற பார்வையுடைய பெண்களின் மயக்கத்தில் அகப்பட்டு மருண்டு திரிகிற என்னை நீ கைவிட்டு விடாதே.
காமம் ஆத்ம சாதகனுக்கு இத சத்துருவாகிறது. அதை நீக்கி அருளும்படி ஈசனிடத்துப் பிரார்த்தனை பண்ண வேண்டும்.
145. முதலைச்செவ் வாய்ச்சியர் வேட்கைவெந்
நீரில் கடிப்பமூழ்கி
விதலைச்செய் வேனை விடுதிகண்
டாய்விடக்(கு) ஊன்மிடைந்த
சிதலைச் செய் காயம் பொறேன்சிவ
னேமுறை யோமுறையோ
திதலைச் செய் பூண்முலை மங்கைபங்
காஎன் சிவகதியே.
தெளிவுரை : புலால் நாற்றத்தையுடைய மாமிச மயமானதும் நோய்கள் பலவற்றிற்கு இருப்பிடமானதும் ஆகிய உடம்பை நான் தாங்கி யிருக்க மாட்டேன். ஈசா, என்னை இக்கீழ் நிலையில் விட்டு வைப்பது உனக்குத் தகுமோ? தேமல் படர்ந்த ஆபரண மணிந்த மார்பகங்களையுடைய உமாதேவியின் சமேதா, எனக்கு நல்ல கதியானவனே, ஆசை என்கின்ற வெந்நீரில் மூழ்கி அதனுள் இருக்கும் சிவந்த வாயையுடைய மாதராகிய முதலைகள் கடிக்க வரும்போது நடுங்குகின்ற என்னை விட்டு விடுவாயோ?
146. கதியடி யேற்(கு)உன் கழல்தந்
தருளவும் ஊன்கழியா
விதியடி யேனை விடுதிகண்
டாய்வெண் டலைமுழையில்
பதியுடை வாள்அரப் பார்த்(து) இறை
வைத்துச் சுருங்கஅஞ்சி
மதிநெடு நீரில் குளித்தொளிக்
கும்சடை மன்னவனே.
தெளிவுரை : வெள்ளை நிறமான கபாலத்தின் பொந்தில் பதுங்கியிருக்கும் பளபளப்பான பாம்பானது சிறிது படம் விரித்தாடிச் சுருங்கிற்று. அதைப் பார்த்துப் பயந்து போன பிறைச் சந்திரன் கங்கையில் மூழ்கி மறைந்து கொண்டான். முரண்படுகிற இவ் இரண்டையும் உன் ஜடாபாரத்தில் வைத்துள்ள இறைவா, நீ எனக்கு ஞாலத்தை நல்கினை. ஆனால் உடலை நான் என்று உணர்கிற நான் கர்ம வசப்பட்டவனாய் இருக்கிறேன். என்னைக் காத்தருள்வாயா?
147. மன்னவ னேஒன்றும் ஆறறி
யார்சிறி யேன்மகிழ்ச்சி
மின்னவ னேவிட் டிடுதிகண்
டாய்மிக்க வேதமெய்ந்நூல்
சொன்னவனே சொற் கழிந்தவ
னேகழி யாத்தொழும்பர்
முன்னவ னேபின்னும் ஆனவ
னேஇம் முழுதையுமே.
தெளிவுரை : மேலான வேதம் என்னும் உண்மை நூலை விளக்கினவனே, சொல்லுக்கு அப்பாற்பட்டவனே, மாறாத பக்தர்க்குப் பிரத்யட்ச மாயிருப்பவனே, மேலும் அனைத்து மாயிருப்பவனே, இறைவா, நான் உன்னோடு ஒன்றுபடும் முறையை அறியாதிருக்கிறேன். எனக்கு ஆனந்தத்தை ஊட்டி ஒளிர்பவனே, என்னைக் கைவிட்டு விடாதே.
148. முழுதயில் வேற்கண் ணியரென்னும்
மூரித் தழல்முழுகும்
விழுதனை யேனை விடுதிகண்
டாய்நின் வெறிமலர்த்தாள்
தொழுதுசெல் வானத் தொழும்பரில்
கூட்டிடு சோத்தெம் பிரான்
பழுதுசெய் வேனை விடேல்உடை
யாய்உன்னைப் பாடுவனே.
தெளிவுரை : முற்றும் கூரிய வேல் போன்ற கண்களையுடைய மாதராகிய பெருந்தீயில் குளித்து வெண்ணெய் போன்று உருகுகிற என்னை நீ புறக்கணித்து விடுவாயோ? மணம் நிறைந்த மலர் போன்ற உனது திருவடியைத் தொழுது பக்தர்கள் சிதாகாசத்தில் கலந்தனர். அவர்களோடு என்னையும் சேர்த்துக் கொள். எம்பிரானே உனக்கு வணக்கம் செலுத்துகிறேன். குற்றம் செய்கின்ற என்னை நழுவ விடாதே. உடையாய் உன்னை நான் போற்றிப் பாடுகிறேன்.
149. பாடிற்றி லேன்பணி யேன்மணி
நீஒளித்தாய்க் குப்பச்சூன்
வீடிற்றி லேனை விடுதிகண்
டாய்வியந் தாங்(கு)அலறித்
தேடிற்றி லேன்சிவன் எவ்விடத்
தான்எவர் கண்டனர் என்(று)
ஓடிற்றி லேன்கிடந்(து) உள்ளுரு
கேன் நின்(று) உழைத்தனனே.
தெளிவுரை : மாணிக்கமே, உன்னை நான் பாடிலேன்; பணி செய்யவில்லை. நீ என்னை விட்டு மறைந்து சென்றபின் பச்சை ஊனாலாகிய இந்த உடம்பை ஒழித்திலேன். அத்தகைய என்னை நீ விட்டு விடாதே. நீ பிரிந்த பிறகு சிவன் எங்கு இருக்கிறான்? அவனைக் கண்டவர் யார்? என்று வியந்து அப்பொழுதே நான் தேடவில்லை. ஓடிப்பார்க்க வில்லை. ஸ்தம்பித்து மனம் உருக வில்லை. வீணே நின்று வருந்தினேன்.
150. உழைதரு நோக்கியர் கொங்கைப்
பலாப்பழத்(து) ஈயின்ஒப்பாய்
விழைதரு வேனை விடுதிகண்
டாய்விடின் வேலைநஞ்சுண்
மழைதரு கண்டன் குணமிலி
மானிடன் தேய்மதியன்
பழைதரு மாபரன் என்றென்(று)
அறைவன் பழிப்பினையே.
தெளிவுரை : பலாப் பழத்தை ஈ நாடுவது போன்று மான் போன்ற பார்வையை யுடைய மாதர் சிற்றின்பதை நான் விரும்புகிறேன். அதை முன்னிட்டு என்னை நீ புறக்கணித்து விடுவாயோ? என்னை நீ விலக்கி விடுவாயாகில் உன்னை நான் கடல் நஞ்சு உண்டவன் என்றும், கறைக்கண்டன் என்றும், நற்குணம் இல்லாதவன் என்றும், என்னைப் போன்ற வெறும் மானிடன் என்றும் அறிவு குறைந்தவன் என்றும், வயது முதிர்ந்த வெறும் வேற்றான் அல்லது பரதேசி என்றும் பழித்துப் பேசுவேன்.
இது நிந்தாஸ்துதி : தூற்றுதல் போன்ற போற்றுதல்.
151. பழிப்பில்நின் பாதப் பழந்தொழும்(பு)
எய்தி விழப்பழித்து
விழித்திருந் தேனை விடுதிகண்
டாய்வெண் மணிப்பணிலம்
கொழித்துமந் தாரமந் தாகினி
நுந்தும்பந் தப்பெருமை
தழிச் சிறை நீரில் பிறைக்கலஞ்
சேர்தரு தாரவனே.
தெளிவுரை : கங்கா நதியானது முத்துக்களையும் சங்குகளையும் உருட்டிக் கொண்டு வருகிறது. அதில் மந்தார மலர் மிதந்து கொண்டு வருகிறது. உனது ஜடாபாரம் அணையாக அமைந்து அந்த நீரைக் தேக்கி வைத்திருக்கிறது. அதன் மீது படகு போன்று பிறைச் சந்திரன் மிளிர்கிறது. நீயோ வெற்றி மாலை அணிந்திருக்கிறாய். பழிப்புக்கு இடமில்லாத உன் திருவடிக்குத் தொன்று தொட்டு வந்துள்ள முறைப்படி பணிவிடை செய்து பிறகு அதைப் பழித்துச் சிறுமையடைந்த நான் வெருண்டு விழித்து நிற்கிறேன். அத்தகைய புல்லியனாகிய என்னை நீ பொருள் படுத்தாது விட்டுவிடுவாயோ?
152. தாரகை போலும் தலைத்தலை
மாலைத் தழல்அரப்பூண்
வீரஎன் தன்னை விடுதிகண்
டாய்விடின் என்னைமிக்கார்
ஆர்அடி யான்என்னின் உத்தர
கோசமங் கைக்கரசின்
சீர்அடி யார்அடி யானென்று
நின்னைச் சிரிப்பிப்பனே.
தெளிவுரை : நட்சத்திரம் போன்ற கபாலத்தைத் தலைமாலையாக அணிந்திருக்கிறாய். தீயை வைத்திருக்கிறாய். விஷப் பாம்பை ஆபரணமாய் வைத்திருக்கிறாய். ஆதலால் நீ ஒரு வீரனே, அத்தகைய நீ என்னைக் கீழ்மையில் விட்டு விடாதே. கீழ்மையில் வைக்கப்பட்டுள்ள என்னைப் பார்த்து, நீ யாருடைய அடியவன்? என்று சான்றோர்கள் கேட்பார்கள். உன் அடியார்க்கு அடியவன் என்று நான் பதில் சொல்லுவேன். உனது நிலைமை அப்போது சிரிப்புக்கு இடமாகும் !
153. சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத்
தொழும்பையும்ஈ சற்கென்று
விரிப்பிப்பன் என்னை விடுதிகண்
டாய்விடின் வெங்கரியின்
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ்(சு)
ஊண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்(டு)
எரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப்
பிச்சன்என்(று) ஏசுவனே.
தெளிவுரை : நான் பிழை செய்தவன் என்று நீ என்னை வெறுத்துப் புறக்கணிப்பாயாகில் உன் செயல் சரியல்ல வென்று ஊரார் சிரிக்கும்படி செய்துவிடுவேன். பின்பு நான் உனக்கே தொண்டன் என்பதை என் செயல்கள் அனைத்தின் வாயிலாக விளக்கிக் காட்டுவேன். அப்படியிருந்தும் நீ என்னை ஒதுக்கித் தள்ளி விடுவாயோ? தகாத அச் செயலைச் செய்வாய் ஆயின், நீ யானைத் தோலைப் போர்த்த பித்தன், புலித் தோலை உடுத்த பித்தன், நஞ்சுடை பித்தன், ஊர்ச்சுடு காட்டுத் தீயில் விளையாடும் பித்தன், என்னை ஆண்டு கொண்டு பிறகு புறக்கணித்த பித்தன் இப்படி யெல்லாம் உன்னைப் பழிக்கு ஆளாக்குவேன். இதுவும் நிந்தாஸ்துதி.
154. ஏகினும் யானுன்னை ஏத்தினும்
என்பிழைக் கேகுழைந்து
வேசறு வேனை விடுதிகண்
டாய்செம் பவளவெற்பின்
தேசுடை யாய்என்னை ஆளுடை
யாய்சிற் றுயிர்க்கிரங்கிக்
காய்சின ஆலம்உண் டாய்அமு(து)
உண்ணக் கடையவனே.
தெளிவுரை : நான் உன்னை வைதாலும் வாழ்த்தினாலும் என் குற்றத்தின் பொருட்டு வருந்துகிற என்னை நீ ஒதுக்கித் தள்ளிவிட வேண்டாம். ஏனென்றால் நீ யாண்டும் என்னை ஆளுடைய அண்ணல்; நான் உன் அடிமை. நீ ஞான தேஜசுடைய பவளமலை. என்னை ஞானவான் ஆக்கு. ஜீவ கோடிகள் அனைத்தும் வாழ்வு என்னும் அமுதை உண்ண முந்துகின்றன. அதன் எதிர்ச்செயலாய் வருகிற கொடிய விஷத்தை நீ ஏற்று அவ்வுயிர்களை ஓம்புகின்றாய். அது உன்னுடைய கருணை நிறைந்த தியாகமாகும். உயிர்களின் அஞ்ஞானத்தை அழித்தல் என்னும் கடைசிச் செயலைச் செய்கின்றவனே. எனது அஞ்ஞானத்தையும் அழித்து விடு.
நீத்தல் விண்ணப்பம் முழுவதும் அந்தாதியாகப் பாடப்பட்டுள்ளது. கடையவனேனை என்று ஆரம்பித்து கடையவனே என்று முடிகிறது. ஜீவாத்மனை ஜீவபோதத்திலிருந்து விடுவிப்பது என்ற செய்தியைப் கூறுகிறது.
7. திருவெம்பாவை
சத்தியை வியந்தது.
திருவண்ணாமலையில் அருளியது.
தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் ஆறு மாத காலம் சூரியனுடைய உத்தராயணம். அது தேவர்களுக்குப் பகல். ஆடிமுதல் மார்கழி வரையில் சூரியனுடைய தட்சணாயணம். அது தேவர்களுக்கு இரவு. நமக்கு அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரையில் பிரம்ம முகூர்த்தம். கடவுள் வழிபாட்டுக்கு அது சிறந்த நேரம். அதே போன்று தேவர்களுடைய நாளில் மார்கழி முழுவதும் பிரம்ம முகூர்த்தம். ஆதலால் மாதங்களுள் மார்கழி மிகச் சிறந்தது. மக்களும் அம் மாதத்தில் வழிபாடு மிகச் செய்கின்றனர். மார்கழி மாதத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்திருப்பதற்குத் திருவெம்பாவை திருவண்ணாமலையில் பாடப் பெற்றது. பரபோதம் பெற்று எழுந்திருக்க இது எக்காலத்திலும் எங்கும் யாவர்க்கும் பயன்படும்.
(வெண்டளையான்வந்த இயல்தரவிணைக் கொச்சகக் கலிப்பா)
155. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : பரமன் அகண்ட வஸ்து; அவன் அருள் பெருஞ்சோதி. அவனுடைய மகிமையை நாங்கள் பாடிக் கொண்டு வருகிறோம். ஆனால் ஒளி பொருந்திய அகன்ற கண்களையுடைய தோழீ, நீ ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறாய். உன் காது கூரியவைகள் அல்லவோ? மகாதேவனுடைய மாட்சிமைகளை நாங்கள் பாடக் கேட்ட மற்றொருத்தி திடீரென்று எழுந்திருந்தாள். தேம்பி அழுதாள். பரவசமடைந்தாள். மலர் தூவிய படுக்கையில் புரண்டு பக்தியுடையவள் ஆனாள். உணர்ச்சியின் வேகத்தால் அவள் காட்டை போன்று ஸ்தம்பித்துக் கிடந்தாள். இதுவன்றோ பாராட்டத் தக்க நிலை !
156. பாசம் பரஞ்சோதிக்(கு) என்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையும் சிலேவோ விøளாயாடி
ஏசும் இடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற் றம்பலத்துள்
ஈசனார்க்(கு) அன்(பு)ஆர்யாம் ஆரேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : சோதி சொரூபியாகிய பரமனைப் பற்றி நாம் இரவும் பகலும் பேசிக் கொண்டிருந்த பொழுதெல்லாம் உன்னுடைய பற்றுதல் எல்லாம் அவனுக்கே உரியது என்று சொல்லிக் கொண்டிருந்தாய், நல்ல நகையணிந்துள்ள நங்காய், இப்போது மலர்தூவிய படுக்கையின் மீது உனக்குப் பற்றுதல் வந்துவிட்டதோ?
பொருந்திய அணிகளைப் பூண்டிருக்கும் பெண்டிர்காள், வேண்டாம் வேண்டாம். இப்படிச் சில்லறைப் பேச்சுப் பேசிப் பரிகசித்து விளையாடுதற்கு இதுவன்று நேரம்; இதுவன்று இடம். அறிவில் சிறந்த விண்ணோர்களே பரமனைப் போற்றத் தாங்கள் தகுதியற்றவர் என்று தயங்கிப் பின்வாங்குகின்றனர். அத்கைய தேஜோ மயன், சிவலோக நாதன். தில்லைச் சிற்றம்பலத்துக்கு ஈசன், நம்மைக் காத்தருள வந்து காத்துக் கொண்டிருக்கிறான். அவனைப் பற்றிய ஞானம் சிறிதும் இல்லாது வெறும் அன்போடு நிறைந்துள்ள நாம் அவனை உள்ளபடி போற்ற வல்லவர்களா?
157. முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்(து) எதிர்எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என்(று) அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன்  கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்(து) ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : முத்துப் போன்ற வெள்ளைப் பற்களை உடையவளே, எல்லார்க்கும் முன்னே வந்து எதிரில் எழுந்து நின்று, என் தந்தை, ஆனந்தன், அமிர்த சொரூபி என்று வாயால் சொல்லி வாயூற இனிய பேச்சுப் பேசுவாய். அத்தகைய நீ இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய். எழுந்து வந்து உன் வீட்டு வாயிலின் கதவைத் திறப்பாயாக.
அயர்ந்து உறங்கிய மாது மறுமொழி கூறுகின்றாள். நீங்கள் பக்தி நிறைந்தவர்கள். ஈசனுக்கு நெடிது அடிமை பூண்டவர்கள். ஒழுங்குப் பாடு மிக உடையவர்கள். நாங்களோ புதிதாக அடிமை பூண்டவர்கள். எங்கள் குறைபாட்டைப் பொருட் படுத்தாமல் எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொண்டால் ஏதாவது தீங்கு விளையுமோ?
வந்தவர்கள்: எங்களை ஏமாற்றப் பார்க்கின்றாயா? இறைவன் பால் நீ கொண்டுள்ள இணக்கத்தை நாங்கள் அறிந்திலமோ?
மன பரிபாகம் அடைந்துள்ள பக்திமதிகள் நம் சிவனைப் போற்றிப் பாட மாட்டார்களா? நமக்கிடையில் பரஸ்பர நட்பும் சிவபக்தியும் பேரூக்கமும் தேவை.
158. ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ(டு) உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்(கு) ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்(கு) இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்(து)
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : வந்தர்களுள் ஒருத்தி: ஒளியுள்ள முத்தைப் போன்ற பல்வரிசை உடையவளே, உனக்கு இன்னும் விடியவில்லையோ !
உறங்கிக் கொண்டிருந்தவள்; அழகிய கிளிமொழி போன்ற மொழியை உடையார் எல்லாரும் வந்திருக்கிறார்களா?
வந்தவள்: எண்ணிப் பார்த்து உள்ளபடி சொல்லுகிறோம். அதற்கு இடையில் நீ கண்ணுறங்கிக் காலத்தை வீணில் போக்காதே, விண்ணுலகத்தவர்க்கு ஒப்பற்ற அமிர்தமாய் இருப்பவனை, வேதங்கள் போற்றுகிற மேலான பொருளை, ஞானக் கண்ணுக்கு விருந்தாய் இருப்பவனைப் புகழ்ந்து பாடி, மனம் குழைந்து, மனம் நெகிழ்ந்து நின்று உருகுவாயாக.
இவ் வேண்டுதலுக்குச் செவி சாய்க்காமல் உறங்கியவள் இன்னும் கொஞ்சம் உறங்கப் போனாள். அதைக் கவனித்தாள் வந்தவள். அவள் கூறுகின்றாள். நாங்கள் வந்திருப்பவர்களை யெல்லாம் கணக்கு எடுத்துக் காலத்தை விரயம் செய்யோம். நீயே வந்து கணக்கிட்டுப் பார்த்துக் கொள். கூடியிருப்பவரது எண்ணிக்கை குறையுமாயின் நீயும் சென்று கவனிக்கலாம்.
159. மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணரா உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : பரமசிவம் என்னும் மலைபோன்ற பெரியபொருள் முழுவதையும் மால் அயன் போன்ற தேவர்களே தெரிந்து கொள்ளவில்லை யென்றால் மானுட மாதர்களாகிய நம் போன்றவர்கள் எங்ஙனம் அறியப் போகின்றோம். அறிய முடியும் என்றால் நம் பேச்சு வெறும் பொய்ப் பேச்சு ஆகும்.
பால் ஊறுவது போன்றும் தேன் சொட்டுவது போன்றும், இன்சொல்லைப் பேசுகின்றனர். ஆனால் இறைவழிபாட்டில் வஞ்சக முடையவளே, உன்வீட்டு வாயில் கதவைத் திறப்பாயாக. மண்ணுலகம் விண்ணுலகம் மற்ற உலகங்களும் அவனை முற்றும் அறியமாட்டா. அத்தகைய அரிய பெரிய பொருளின் அழகை நம் அறிவுக்கு எட்டியவாறு பாடுவோம். நம்மை அவன் எப்படி ஆட்கொண்டிருக்கிறான் என்பதையும் நம்மை எப்படித் திருத்தியமைத்துச் சீர்படுத்தும் நல்லொழுக்கம் உடைத்தாயிருக்கிறான் என்பதையும் போற்றுவோம்.
மயிர்ச் சாந்தணிந்து கூந்தலை அலங்கரித்துக் கொண்டு அயர்ந்து தூங்குபவளே, நாங்கள் சிவனே சிவனே என்று உரக்கக் கத்தினாலும் நீ துயில் எழுந்திருக்க மாட்டாய்.
தமோ குணத்தில் ஊறியிருக்கும் ஜீவாத்மாவுக்குப் பரதத்துவம் பிடிபடாது.
160. மானேநீ நென்னலை நாளைவந்(து) உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகரா இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவா
ஊனே உருகா உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : நாளைக்கு நானே வந்து உங்களை எழுப்புவேன் என்று பெண்ணே, நீ நேற்றுச் சொன்ன சொல்லை வெட்கமின்றி எத்திக்கில் போகவிட்டாய்? இன்னமும் விடியவில்லையோ? விண்ணுலகத்தவரும், மண்ணுலகத்தவரும், மற்ற உலகத்தவரும் அறிந்து கொள்ள முடியாத மகாதேவன் வலிய வந்து எங்களைக் காப்பாற்றி அடிமை கொண்டருளினான். அவனுடைய மேலாம் திருவடியை நாங்கள் பாடிக் கொண்டு வருகிறோம். எங்களுக்கு உன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேச மாட்டாயா? உன் உடல் அன்பில் குழைந்து உருகாதோ? இத்தகைய புல்லிய பான்மை அலாதியாக உன்னுடையது போலிருக்கிறது.
வந்திருக்கிற எங்களை முன்னிட்டாவது இறைவனைப் புகழ்ந்து பாடு.
161. அன்னே இவையும் சிலவோ பலஅமரர்
உன்னற்(கு) அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன்என்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்அரையன் இன்னமு(து)என் றெல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாம் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : அம்மா, இப்படியும் சில இயல்புகள் உன்னிடம் இருக்கின்றனவா? தேவர்கள் பலரால் நினைத்தற்கு அரியவனும், ஒப்பு உயர்வு அற்றவனும் பெருஞ் சிறப்பு உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளி வருவதற்கு அடையாளமாகக் காளம் ஊதும் ஒலி கேட்டவுடனே சிவ என்று நீ வாய் திறப்பாயே ! தென்னா என்று அவன் பெயரைச் சொல்லுவதற்கு முன்பே தீயிலிட்ட மெழுகு போல மனம் உருகுவாயே ! அத்தகையவளாகிய உனது முன்னிலையில் எனக்கு இனியவன் என்றும், என் அரசன் என்றும், இனிய அமுதன் என்றும் நாங்கள் எல்லாரும் தனித்தனியே சொன்னோம். அவை எல்லாம் கேட்டும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே ! கல் நெஞ்சம் உடைய அறிவிலிகள் போல நீ உணர்ச்சி யற்றுக் கிடக்கின்றாயே ! நித்திரா தேவியின் தன்மை இத்தகையதோ !
162. கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில்விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : கோழிகள் கூவுகின்றன; பறவைகள் ஒலித்து ஏழுவித இசைபோல நாதம் செய்கின்றன. வெள்ளைச் சங்குகள் முழுங்குகின்றன. உவமையில்லாத பரஞ்சோதி, உவமையில்லாத கருணை, உவமையில்லாத மேலாம் பொருள்  இத்தகைய சிவனை நாங்கள் பாடுகிறோம். இவை யாவையும் நீ கேட்கவில்லையோ? நீ வாழ்ந்திருப்பாயாக. இதுவும் ஓர் உறக்கமோ? இதைக் கொஞ்சம் எடுத்துச் சொல். கேட்போம். கருணைக் கடலாகிய சிவனிடத்து அன்பு வைத்து இம் முறையில் தானோ? பிரளயத்தில் அனைத்தும் ஒடுங்கையில் எஞ்சியிருப்பவன் அவன் ஒருவனே. அவன் உமாதேவியின் சமேதன். அத்தகையவனது மகிமையைப் பாடுகிறோம்.
163. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் ஏம்பாவாய்.
தெளிவுரை : பழையவைகளில் எல்லாம் மிகப் பழையவனே, பின்பு புதியவைகளில் எல்லாம் மறுபடியும் புதிய இயல்போடிருப்பவனே, உன்னைத் தலைவனாகப் பெற்ற நாங்கள் உன் சிறப்பு வாய்ந்த திருவடிக்கே உரியவர் ஆகிறோம். உனக்கு ஆட்பட்டவர்களின் பாதங்களை வணங்குவோம். அவ்விடத்து அவர்களை அனுசரித்து ஒழுகுவோம். அத்தகையவர்களே எங்களுக்குக் கணவன் மார் ஆவார்களாக. அவர்கள் விரும்பிச் சொன்ன வண்ணமே தொண்டராய்ப் பணி செய்வோம். இந்தப் பிரகாரம் எங்கள் இறைவா எங்களுக்குக் கிருபை புரிவாய் ஆயின் எங்களுக்குக் குறைபாடு ஒன்றுமிராது.
164. பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமு டியும் எல்லாம் பொருண்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்(து)அரன்தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : சொற்கொண்டு விளக்க முடியாதபடி அவனுடைய திருவடிகள் பாதாளங்கள் அனைத்துமாயிருக்கின்றன. பூவால் நிரம்ப அலங்கரிக்கப்பட்டிருக்கிற திருமுடியோ எல்லாப் பொருள்களுக்கும் முடிவானதே. உமாதேவி யாரின் சமேதன் ஆதலால் அவனுக்கு மேனி ஒன்று அன்று. அவனை முற்றும் விளக்க வேதங்களுக்கும் தேவர்களுக்கும் மக்களுக்கும் இயலாது. சொல்லில் அடங்காத உயிர்த்தோழன் அவன். தொண்டர் உள்ளத்தில் அவன் தெளிவுற இலங்குகின்றான். குற்றமில்லாத ஏற்றத்தையுடைய அரன் அவன். அவனது ஆலயத்திலுள்ள பெண் பிள்ளைகளே, அவனுக்கு ஊர் இல்லை. பேர் இல்லை. உறவினர் இல்லை. வேற்றார் இல்லை. அவனை முழுவதும் விளக்கிப்பாடும் விதம் கிடையாது.
165. மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குன்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : நீராடுவதற்குக் கூடியுள்ள நாங்கள் நிறைந்ததும் அகன்றதுமான தடாகத்தில் இறங்கி, முகேர் என்னும் ஒலியுண்டாக்கிக் கொண்டு மூழ்கி மூழ்கி நீராடிவிட்டு உன் திருவடியைப் புகழ்ந்து பாடுகிறோம். அப்பனே ! பரம்பரையாக உன் அன்பர்களாகிய நாங்கள் உறுதியாக உன் அருளில் ஊறி வாழ்ந்து வருகிறோம். சுடர்விடுகிற தீப்போன்ற செம்மேனியனே ! வெண்ணீறு பூசியவனே, மகிமை அனைத்துக்கும் இருப்பிடமே, ஒடுங்கிய இடையும் மை பூசிய அகன்ற கண்களும் உடைய உமாதேவியாரின் தலைவா, அழகனே, உயிர்களை ஆட்கொண்டருளுதல் உன் விளையாட்டாகும். அதன்படி நாங்கள் எல்லோரும் உறுதியாகவே உய்வு அடைந்திருக்கிறோம். உனது வழிபாட்டில் நாங்கள் தளர்வடையாமல் இருக்கும்படி காத்தருள்வாயாக.
166. ஆர்த்த பிறவித் துயர் கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்சிலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : நம்மைப் பிணித்துள்ள பிறவித் துன்பம் ஒழியட்டும். நாம் மகிழ்ந்து ஆடுவது பரிசுத்தனாகிய நல்ல தில்லைச் சிற்றம்பலத்தில் ஞானாக்கினியெடுத்து ஆடுகிற கூத்தனைக் குறித்ததாகும். விண்ணுலகு மண்ணுலகு ஆகிய அனைத்தையும் படைத்துக் காத்து அழித்தலை அவன் விளையாட்டாகச் செய்கிறான். அவன் புகழையே சொல்லி வளையல் ஒலிக்கவும் பெரிய ஒட்டியாணங்கள் பெருமிதமாக ஒலிக்கவும், அழகிய கூந்தலின் மேல் வண்டுகள் முழங்கவும் மலர்கள் நிறைந்துள்ள பொய்கையில் நீராடி, இறைவனது பொன்னடியைத் துதித்துப் பெரிய சுனை நீரின் கண் மூழ்குவோம்.
167. பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : மடுவில் புதிய நீலோத்பலமும் புதிய செந்தாமரையும் நிறைந்திருக்கின்றன. அழகிய நீர்ப்பறவைகள் ஆங்கு ஓலமிடுகின்றன. உடலின் அழுக்கைப் போக்குகிறவர்கள் அங்குவந்து கூடுகின்றனர். ஆதலால் சிவ சக்தி சொரூபமாக அத் தடாகம் தென்படுகிறது. அதில் நாம் குதித்துக் குதித்து நீராடுவோம். நமது சங்கு வளையல்களும் காற்சிலம்புகளும் சேர்ந்து ஒலிக்கட்டும். நமது மார்பகங்கள் பூரிப்பு அடையட்டும். நாம் மூழ்குவதால் நீர் பொங்கட்டும். இத்தகைய புஷ்கரணியில் நீராடுவோமாக.
168. காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : காதில் அணிந்துள்ள தோடுகள் ஆடவும், பசும்பொன்னாலாகிய மற்ற ஆபரணங்கள் ஆடவும், பூமாலை பூண்டுகள் கூந்தல் ஆடவும், அதை நாடி வந்துள்ள வண்டின் கூட்டம் ஆடவும் நாம் குளிர்ந்த நீரில் முழுகி நீராடுவோம்.பின்பு சிற்றம்பலத்தானைப் போற்றுவோம். வேதம் அவனை விளக்குகிறது. நாம் அவனை அடைய வேண்டும். அவன் ஞான ஜோதிமயன். சடைமுடியில் அவன் கொன்றை மாலையை அணிந்திருக்கிறான். பிரபஞ்சத்துக்கு முன்பு இருந்தவனும் பின்பு இருப்பவனும் அவனே. நம்மைப் பிரபஞ்சத்தினிடத்திருந்து வேறுபடுத்திக் காப்பாற்றியருளுகிற அன்னை பராசக்தியின் மகிமையைப் பாடவும் ஆடவும் செய்வோமாக.
169. ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்களிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்(கு) இங்ஙனே பித்தொருவர் ஆமாறு
மாரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்(து) ஆடேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : எம்பெருமான் என்றே ஒருவேளையில் சொல்லிக் கொண்டிருப்பாள். மற்றொரு வேளையில் நம்பெருமானது பெருமையை ஓயாது வாயால் உச்சரித்துக் கொண்டு இருப்பாள். மனத்தில் களிப்பு ஓங்குவதை முன்னிட்டு மற்றொரு வேளையில் கண்ணீர் பெருக்கிய வண்ண மாயிருப்பாள். இன்னொரு வேளையில் பூமியில் வீழ்ந்து கிடப்பாள். எவ்வளவு பெரியவராய் இருந்தாலும் வேறு யாரையும் மதிக்க மாட்டாள். இறைவனிடத்தே பித்துக் கொண்டிருப்பாள். ஓர் உயிரை இப்படி முற்றிலும் தன்மயமாக்கிக் கொள்ளும் ஞான வடிவினர் யாராய் இருக்கக் கூடும்? கச்சும் பூணும் அணிந்த மார்பகத்தையுடைய பெண்களே நம் இறைவனாரை வாயாரத் துதித்து அழகிய பூ நிறைந்த பொய்கையில் குதித்து நீராடுவோம்.
170. முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : மேகமே ! இக்கடலைக் குடித்து அதன் நீரைக் குறைத்து மேலே கிளம்பி உமாதேவியாரின் கார் நிறத்தைப் பெற்றாய். நீ மின்னலாக மின்னியது அம்பிகையின் சிறிய இடையை ஒத்திருந்தது. நீ இடியாக இடித்தது தேவியின் திருவடியில் பொன் சிலம்பு ஒலித்தது போன்றிருந்தது. நீ வானவில் வீசியது அம்பிகையின் புருவத்தை ஒத்திருந்தது. எம்மை ஆட்கொண்ட அம்பிகையின் பாகன் சிவபெருமானுடைய அன்பர்க்கு முதலில் அருள் சுரந்துவிட்டுப் பிறகு எங்களுக்கும் அருள் மழையாகப் பொழிவாயாக.
171. செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நம்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்(கு) ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புலன்பாய்ந்(து) ஆடேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : இயல்பாகவே மணம் தங்கிய கரிய கூந்தலை உடையவளே ! திருமால், பிரமன் முதலிய தேவர்களிடத்து இல்லாத பேரின்பம் நமக்கு யாண்டும் சொந்தம். நம் குற்றங்கள் களையப் பெறும் பொழுது அது அனுபூதியாகிறது. அதற்காக இறைவன் நம் வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். செந்தாமரை போன்ற தனது பொற்பாதத்தை நமக்குக் கொடுத்தருளும் சேவகன் அவன். கருணை நிறைந்த கண்களை யுடைய அரசன் அவன். அடியவர்களாகிய நமக்கு அவன் நிறையமிர்தம். சிவஞானம் என்னும் நலம் அவனிடத்து இருந்து நமக்கு வருகிறது. தாமரைத் தடாகத்தில் மூழ்கி நீராடி அவன் பெருமையைப் பாடுவோம்.
172. அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந்(து) ஆடேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : திருவண்ணாமலையானுடைய தாமரைத் திருவடிகளில் சென்று வணங்குகின்ற தேவர்கள் முடியில் அணிந்துள்ள இரத்தினங்கள் தமது ஒளியை இழந்துவிடுகின்றன. இருள் நீக்கும் வண்ணத்தில் பெரிய சூரியனும் இறைவனது முன்னிலையில் தனது பிரகாசத்தை இழந்து விடுகிறான். குளிர்ந்த நட்சத்திரங்களும் ஒளியிழந்து விடுகின்றன. இறைவனோ பெண், ஆண், அலி அனைத்துமாகவும் அவைகளுக்கு வேறாகவும் இருக்கிறான். ஒளியோடு கூடிய ஆகாயம் மண் முதலிய பூதங்கள் ஆகி அவைகளுக்கு வேறாகவும் இருக்கிறான். அவன் அழிவில்லாத அரிய பொருள். பெண்ணே, அவன் பெருமை பாடிப் பூம்புனல் ஆடுவோம்.
173. உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று)
அங்(கு)அப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்(று) உரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா(து) எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழில்என் ஞாயி(று) எமக்கேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : உனது கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற அந்தப் பழமொழியைப் புதுப்பிக்க நாங்கள் அஞ்சுகிறோம். ஏனென்றால் அது தேவையில்லை. எங்கள் பெருமானே ! உனக்கு ஒன்று சொல்லுகிறோம். கேட்பாயாக. நாங்கள் உன்னுடைய மெய்யன்பர்களையே மணந்து கொள்வோம். உனக்கே நாங்கள் பணிவிடை செய்வோம். இரவும் பகலும் நாங்கள் உன்னையே யாண்டும் காண வேண்டும். இந்த வாய்ப்பை இறைவா, நீ எங்களுக்குக் கொடுத்தருள்வாய் ஆகில் பிறகு சூரியன் திசைமாறிப் போய்விடினும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை.
174. போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.
தெளிவுரை : அனைத்துக்கும் முந்தியிருக்கும் உன்னைப் போற்றுகிறோம். அருள் புரிவாயாக. அனைத்துக்கும் பிந்தியிருக்கும் உன்னைப் போற்றுகிறோம். அருள் புரிவாயாக. உயிர்கள் அனைத்துக்கும் பிறப்பிடமாயிருக்கும் உன்னைப் போற்றுகிறோம். உயிர்களுக்கு இருப்பிடமாயிருந்து இன்பம் ஊட்டும் உன்னைப் போற்றுகிறோம். உயிர்கள் அனைத்துக்கும் ஒடுங்கிடமாயிருக்கும் உன்னைப் போற்றுகிறோம். அரிக்கும் அயனுக்குமே விளங்காது மறைந்திருக்கும் உன்னைப் போற்றுகிறோம். எங்களை ஆட்கொண்டு அருள் புரிகிற உன்னைப் போற்றுகிறோம். நாங்கள் மார்கழி நீர் ஆட அனுக்கிரகம் செய்த உன்னைப் போற்றுகிறோம்.
8. திருவம்மானை
திருவண்ணாமலையில் அருளியது ஆனந்தக் களிப்பு
இது முதல் ஒன்பது பதிகங்கள் மகளிர் விளையாட்டுப் பகுதிகளாக உள்ளன. அவற்றுள், 1. மூவர் காய் ஆடும்போது பாடும் பாடலாக அமைந்த திருவம்மானை, 2. திருக்கோயிலில் இறைவனது மெய்ப்பூச்சுக்குரிய பொன்றிறப் பொடி இடிக்கும் பெண்கள் பாடும் வரிப்பாட்டு அமைப்பில் அமைந்த திருப்பொற்சுண்ணம், 3. கை கோத்து ஆடும் திருக்கோத்தும்பி, 4. முறத்தில் தெள்ளிக் கொழித்து விளையாடும் திருத்தெள்ளேணம், 5. வினாவிடைப்பாங்கில் வரும் திருச்சாழல், 6. பூக்கொய்யுங்கால் பாடும் திருப்பூவல்லி, 7. உயர எழுந்து குதித்தாடும் திருவுந்தியார், 8. மகிழ்ச்சியால் பூரித்த தோள் நோக்கிக் கைவீசி விளையாடும் திருத்தோள் நோக்கம், 9. ஊஞ்சற் பாட்டாகிய திருப் பொன்னூசல் முதலிய மகளிர் விளையாட்டு வகைப் பாடல்கள் பதிகங்களாக நிரலே அமைந்து சிவபெருமானின் கருணையினையும் அவனே முழுமுதற் கடவுள் என்பதையும் இனிது விளக்குகின்றன.
அம்மானை என்பது பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டுப் பெண்டிர் விளையாடும் ஒருவகை விளையாட்டு. அவர்கள் அம்மானைக் காய்களை வைத்துக் கொண்டு விளையாடுவர். அம்மானை ஆடுபவர் தங்களுக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டுமென்று அக்கணவனின் சிறப்புகளைக் கிளர்ந்தெடுத்து  வரிப்பாட்டாகப் பாடி ஆடுவர். அம்முறையில் மாணிக்க வாசகர் சிவபெருமான் மீது வைத்திருந்த எல்லையற்ற காதலால் கசிந்துருகி அவனது திருவடியில் கலக்கின்ற திருமணத்தை எய்துதற் பொருட்டு அம்மானை பாடியருளினார். அது திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருவம்மானை என வழங்கப்படுகிறது.
பொதுவாகப் பெண்களை அம்மா என்று அழைப்பது தமிழ் மரபு. அம்மனை என்பது இலக்கிய மரபு. அம்மானை என்னும் சொல் வரிப்பாட்டினையும் பெண்டிரின் ஆடலையும் குறித்து நிற்கிறது. அச்சொல் விளிவேற்றுமையில் ஐஈறு கெட்டு, ஆய்  என்னும் ஈற்றினைப் பெற்று அம்மானாய் என்று ஒவ்வொரு பாட்டின் ஈற்றிலும் அமைந்திருக்கிறது.
(ஒப்புமை பற்றிவந்த ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா)
175. செங்கண் நெடுமாலும் சென்றிடந்தும் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட்(டு) எம்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள் சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : மூவுலகை ஈரடியால் அளந்த செந்தாமரைக் கண்ணனாகிய திருமாலே பன்றியாய்ப் பூமியைப் பிளந்து கொண்டு போய் இறைவனது திருவடியை எட்டவில்லை. அத்தகைய இறைவன் தனது திருவடியைப் பூமியில் காட்டித் தரத்தில் குறைந்துள்ள என்னை ஆட் கொண்டான். என் பிறவிப் பிணியை ஒழித்தான். தென்னை மரங்கள் திரண்ட சோலை சூழ்ந்த, அழகும் நன்மையும் வாய்ந்த திருப்பெருந்துறைக்கு இறைவன் அவன். ஞானக் கண்ணுடைய அந்தணன் அவன். அரிய கருணையுடைய அவன் என்னை வலியக் கூவியழைத்து வீடுபேறு அளித்தருளினன். அவனைக் குறித்து நாம் பாடி அம்மானை விளையாடுவோமாக.
176. பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலும் காண்டற்(கு) அரியாளன் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : மண்ணுலகத்தவர், விண்ணுலகத்தவர், பாதாளத்தில் வசிப்பவர், மற்ற அண்டங்களில் இருப்பவர் ஆகிய ஜீவர்களது காட்சிக்கு எட்டாதவன் சிவன். தன் பெருமையினால் நான் அவனைத் தரிசிக்கும்படி அவன் செய்தான். என் உள்ளத்தில் புகுந்து அருள் பித்தத்தை வளர்த்து, முக்தி நெறியில் போகும்படி அருள் புரிந்த தெவிட்டாத அமிர்த சொரூபன் அவன். பரதவர் தலைவன் பொருட்டுக் கொந்தளிக்கும் கடலில் வலை வீசி மீன் பிடித்தவன் அவன். அன்பர்க்காகப் பெருங் கருணைக் கடலாய் இருப்பவன் அவன். (மீன் பிடித்த வரலாறு திருவிளையாடற் புராணத்தில் உள்ளது)
177. இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவன்அவனி வந்தருளி
எந்திரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச்
சிந்தனையை வந்துருக்கும் சீரார் பெருந்துறையான்
பந்தம் பரியப் பரிமேற்கொண் டான்தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : தோளில் திருநீறு பூசிய தேவதேவன், தரத்தில் மேலோராகிய தேவர்களையெல்லாம் விண்ணுலகில் காத்திருக்க வைத்து விட்டு மண்ணுலகுக்கு எழுந்தருளித்தரத்தில் மட்டமான எம்மை ஆட்கொண்டான். சிந்தனையை அவன் உருக்குகின்றான். பிறவித் தளையைப் போக்க அவன் குதிரைமேல் வந்து பேரானந்தம் நல்கினான்.
178. வான்வந்த தேவர்களும் மாலயனோ(டு) இந்திரனும்
கானின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்(டு)
ஊன்வந்(து) உரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந்(து) அமுதின் தெளிவின் ஒளிவந்த
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : விண்ணவர்கள் காட்டில் தவம் புரிந்து உலர்ந்து போயினர். அவர்கள், மீது புற்று முளைத்தது. ஆயினும் அவர்கள் உன்னைத் தரிசிக்கவில்லை. ஆனால் நீயோ தாய்போல் வலியவந்து எனக்குப் பேரருள் புரிந்தனை. உடலில் ரோமம் சிலிர்த்து, உள்ளே நெட்டுயிர்ப்பு அடைந்தேன். ஆனந்தம், அமிர்தம் அருட் சோதியாய் மிளிரும் உன் பெருமையைப் பாடுவோம்.
179. கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர் புக்குச்சிற்றம் பலமன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : பரத்துவத்தைக் கல்லாத மனத்தையுடைய நான் மிக அற்பன் ஆனேன். எல்லாம் வல்ல பரமன் என்னிடத்து அருள் பித்தைக் கிளப்பிவிட்டுக் கல்போன்ற என் மனத்தைக் கனியாகப் பக்குவப் படுத்தினான். அவனது கருணைக் கடலில் என்னை மூழ்கச் செய்து வினையை அகற்றிய பரமஞானி அவன். அவன் தில்லை நகரில் சிதாகாச சொரூபியாய் இருக்கிறான். விரைந்து செல்லும் காளை அவனுடைய வாகனமாகும். அத்தகையவனைப் பாடுவோம்.
180. கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்
தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டா தனவெல்லாம் காட்டிச் சிவங்காட்டித்
தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய நாமேலை வீடெய்த
ஆட்டான் கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : அழகியதும் நல்லதுமாகிய பெருந்துறையின் கோயில் சுவரில் சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. ஆங்கு எழுந்தருளியுள்ள சிவனார் செய்த மாவித்தை எத்தகையது என்று தோழியே, நீ கேட்டாயா? ஊனக் கண்ணுக்கு எட்டாத அவன் சொரூபத்தை ஞானக் கண் கொடுத்து அவன் காட்டியளுளினான். அது பரமானந்தம் என்னும் தேன். மாயப் பிரபஞ்ச வாழ்க்கையில் இருப்பவர்க்கு முக்தி நிலை விளங்காது. அவனது பாரமார்த்திக மகிமையை நாம் பாடுவோம்.
181. ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை யாட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : உள்ளத்தினுள் யாண்டும் மெய்ப்பொருளாயிருக்கும் அவனை ஆழ்ந்து சிந்திக்கும் அளவு அவன் சொரூபம் விளங்கும். அப்படி உபாசிக்காதவர்களுக்கு அவன் தூரத்தில் இருப்பவன் போன்று தென்படுகிறான். உள்ளும் புறமும் இனிது இருந்து அவன் உயிர்களைப் பக்குவப் படுத்திக் கொண்டே இருக்கிறான். எங்கும் வியாபகமாயுள்ள அறிவுப் பொருள் அவன். யாண்டும் சிவசக்தியாய் இருந்து அவன் ஐம்பொறிளுக்குப் புலனாகிறான். நமது பக்குவத்துக்கு ஏற்ப அவன் நமக்குத் தலைவனாய் இருப்பது விளங்குகிறது. அவைகளுக்கெல்லாம் மேலாக அவன் எப்பொழுதும் தாயாக இருந்து பரிவுடன் நம்மைப் பேணி வருகிறான். மேலும் ஏழு ஞானப் படித்தரங்களில் இருக்கும் உலகு அனைத்தும் ஆனவன் அவனே. பின்பு அவ்வுலகனைத்தையும் அவன் முறையாக ஆண்டும் வருகிறான். அத்தகையவனை நாம் பாடுவோம்.
182. பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண் டக்கோவான் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : ஆப்த வாக்கியங்களாக அமைந்த அருள் கவிதைகள் வாயிலாகப் பரமனது மகிமை நமக்கு முதலில் கொஞ்சம் கிட்டுகிறது. அனைத்தும் சிவசக்தி சொரூபம் என்னும் நல்லறிவு அதைத் தொடர்ந்து வருகிறது. திருப்பெருந்துறை போன்ற புண்ணிய ÷க்ஷத்திரங்களில் அவனது சான்னியத்தியைச் சிறப்பாகக் காணும் பக்குவம் அடுத்தபடியாக வருகிறது. அகிலாண்டத்துக்கும் அவனே ஈசன் என்ற கீர்த்தி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் ஒப்ப முடிந்தது என்பது அதன் பிறகு விளங்குகிறது. அகிலாண்டங்களுக்கும் அப்பால் உள்ள சித் ஆகாசமே அவன் என்பதை அவனுடைய நெற்றிக் கண் அல்லது ஞானக்கண் நிரூபிக்கிறது. அத்தகைய அந்தப் பொருள் தன் பக்தன் பொருட்டுப் பிரசித்தி பெற்ற மதுரையில் கூலிக்கு மண் சுமந்தான். மேலும் பாண்டி மன்னன் கையில் பிரம்பால் அடியுண்டு முதுகில் புண்பட்டான். அத்தகையவனது மகிமையைப் பாடுவோம்.
183. துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்
கண்டம் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்டமுதல் ஆயினான் அந்தமிலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழஅடியார்க்(கு) ஈந்தருளும்
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : சந்திரசேகரன், வேதியன், திருப்பெருந்துறைக்கு இறைவன், முப்புரிநூலைத் தரித்தவன், அழகிய காளை வாகனன், நீலகண்டன், சிவப்பு மேனியன், வெண்ணீறு பூசியவன். அண்டத்துக்கு மூல காரணன் முடிவற்ற ஆனந்தத்தைப் பழைய முறைப்படியே பழமையாகிய தொண்டருக்குக் கொடுத்தளும்வான். அவனது பெருஞ் சிறப்பை உலகம் அதிசயிக்கும்படி பாடுவோம்.
184. விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கும் மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையில்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : தேவர்களுக்கெல்லாம் மேலோங்கி யிருக்கும் பேரறிவுப் பொருள் சிவன். உலகை எம்முறையில் ஆளவேண்டும் என்பதை மன்னவர்கள் மகாதேவனிடத்திருந்தே கற்றுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றனர். தகை சான்ற தமிழ் நாட்டில் தீந்தமிழ் வளர்ச்சிக்கு மூல அறிவாய் இருப்பவன் சிவன். ஆண் பெண்ணின் பேரிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாய் இருப்பவன் அர்த்த நாரீசுவரன். நான் விரும்பும் திருப்பெருந்துறையில் அவன் கண்கூடாக எழுந்தருளி என்னை ஆட்கொண்டான். அந்த அண்ணாமலையானைப் பாடுவோம்.
185. செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான்
அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும்
அப்பாலைக்கு அப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : கிண்ணம் போன்ற மார்பகங்களையுடைய உமாதேவியார் சமேதன். அழகும் நலனும் உடைய திருப்பெருந்துறையான். தவறாமல் தன்திருவடியை அடைந்தவர்களுடைய மனத்தை உருக்கும் இயல்புடையவன். தனது சான்னித்தியத்தால் பாண்டி நாட்டைச் சிவலோகமாக்கியவன். கங்காதரன், பேரானந்த சொரூபி. அவனிடத்துத் தங்களை ஒப்படைக்கின்றவர்கள் உள்ளத்தில் அவன் மிளிர்கிறான். இவை யாவையும் கடந்தவனாகவும் அவன் இருக்கிறான்.
186. மைப்பொலியும் கண்ணிகேள் மாலயனோ(டு) இந்திரனும்
எப்பிறவி யும்தேட என்னையுந்தன் இன்னருளால்
இப்பிறவி யாட்கொண்(டு) இனிப்பிறவா மேகாத்து
மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய்
எப்பொருட்கும் தானேயாய் யாவைக்கும் வீடாகும்
அப்பொருளாம் நம் சிவனைப் பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : அஞ்சனம் தீட்டிய கண்களையுடைய மாதே கேள். தேவர்கள் எடுக்கிற ஒவ்வொரு பிறவியிலும் பரமனையே தேடுகின்றனர். அப்பரமனோ, தனது இனிய அருளால் தகுதியற்ற என்னை இதே பிறவியில் ஆட்கொண்டு இனிப் பிறவாமல் காப்பாற்றுகிறான். நித்தியவஸ்து தானே என்பதை உறுதிப் படுத்தித் தான் சாசுவதமாய் இருப்பதையும் தெளிவு படுத்தினான். தோன்றியுள்ள யாவும் தன்னிடத்திருந்து வந்தவைகள் என்பதையும், மேலும் அவை யாவுக்கும் மோட்ச வீடுதானே என்பதையும் காட்டியுள்ளான். அத்தகைய பரமசிவனை நாம் பாடுவோம்.
187. கையார் வளைசிலம்பக் காதார் குழையாட
மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச்
செய்யானை வெண்ணீ(று) அணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்(கு) அல்லாத வேதியனை
ஐயா(று) அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : கை  ஒழுக்கம், கையில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலிக்கவும், காதில் அணிந்திருக்கும் தோடுகள் அசையவும், கருமையாகிய கூந்தல் புரளவும், ஆங்கு அணிந்துள்ள மலர்களினின்று தேன் பெருகவும், அதை நாடிய வண்டுகள் ரீங்காரமிடவும் செய்கின்றன. சிவப்பு நிறமுடையவனை, வெண்ணீறு அணிந்திருப்பவனை, நெருங்கிப் பழகுகிறவர்களாலும் முற்றும் அறிந்து கொள்ள முடியாதவாறு ஆழ்ந்த இயற்கை நடைமுறைத் திட்டத்தை யுடையவனை, எங்கும் நிறைந்திருப்பவனை, அன்பர்க்கு மெய்ப்பொருளாய் இருப்பவனை, அன்பர் அல்லாதார்க்கு இருந்தும் இல்லாதவன் போன்றவனை, அறிவுப் பொருளை, திருவையாற்றில் எழுந்தருளியிருப்பவனைப் பாடுவோமாக.
188. ஆணையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்
ஏனைப் பிறவாய்ப் பிறந்(து) இறந்(து) எய்த்தேனை
ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து
தேனையும் பாலையும் கன்னலையும் ஓத்தினிய
கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும்
வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : கீடம்  புழு. எத்தனையோ வகை உயிர்களாகப் பிறந்து இறந்து அலுத்தப் போன என்னை இம்மானுடப் பிறவியில் அருள் தாகத்துக்கு உட்படுத்தினாய். என் வினையைக் களைந்தாய். அமிர்த சொரூப ஆனந்தத்தை வழங்கி என்னை உனக்குத் தொண்டனாக்கினாய். அத்தகைய மேலோனாகிய உனது திருவடியைப் போற்றுவோம்.
189. சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள்நெரித்திட்(டு) எச்சன் தலையரிந்து
அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : எச்சன் யாக கர்த்தா. தட்ச பிரஜாபதியின் யாகத்தில் சந்திரனை நிலத்தில் தேய்த்தும், இந்திரன் தோளை நெரித்தும், யாக கர்த்தாவின் சிரசை அறுத்தும், ஆகாயத்தில் செல்லுகிற பரந்த கிரணங்களையுடைய சூரியனது பல்லை உடைத்தும், மற்ற தேவர்களை வெவ்வேறு திக்குகளில் சிதறடித்தும் அவர்கள் ஓடுவதைப் பார்த்து மகிழ்ந்தாய். செழுமையான பூஞ்சோலைகள் சூழப் பெற்ற தென்னன் பெருந் துறையான் அணிந்துள்ள மந்தார மாலையைப் புகழ்ந்து பாடுவோம்.
190. ஊனாய் உயிராய் உணர்வாய்என் உள்கலந்து
தேனாய் அமுதமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோர் அறியா வழியெமக்குத் தந்தருளும்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : எனது அமைப்பு முழுதும் சிவபெருமான் இடத்திலிருந்து வந்தது. என்னுள் ஆனந்தமாய் அவன் வீற்றிருந்து முக்தி மார்க்கத்தையும் காட்டியருளினான். பேரறிவு சொரூபமாய் இருப்பவனும் அவனே. எல்லா உயிர்க்கும் அவன் இறைவன், நாம் அவனைப் பாடுவோம்.
191. சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள்
கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின்(று)
ஊடுவேன் செவ்வாய்க்(கு) உருகுவேன் உள்ளுருகித்
தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்து மலர்வேன் அனல்ஏந்தி
ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : பொலிவாகிய கொன்றை மாலையைச் சூடுவேன். சிவபெருமானின் திரண்ட தோள்களைத் தழுவுவேன். புணர்ந்து மயங்கி நின்று பிணங்குவேன். சிவந்த வாய்க்கு மனம் உருகுவேன்; மன உருக்கத்தோடு தேடுவேன்; சிவபெருமானது திருவடியையே சிந்தனை செய்வேன்; வாட்டம் அடைவேன்; மீண்டும் மகிழ்வேன்; தீயைக் கையில் ஏந்தி ஆடுகிற சிவபெருமானது திருவடியையே பாடுவோம்.
192. கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை
வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத்
தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையில்
எளிவந்(து) இருந்(து)இரங்கி எண்ணரிய இன்னருளால்
ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளிதிகழ
அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : கிளிபோன்ற மெல்லிய மொழியை உடைய அம்பிகையின் செம்பாதியாக இருக்கிற தேஜோமயன் சிவன். அவனைக் காண வேண்டுமென்று வடிவெடுத்து வெளியே கிளம்பிய திருமாலும் பிரம்மாவும் கண்டிராத ஞான வடிவினன் அவன். தெளிந்த தேன்போன்ற அமிர்த சொரூபமாய்ச் சிறப்பு வாய்ந்த திருப்பெருந்துறையில் எளிதாக வந்து இருந்து இரங்கிப் பேரருள் சுரந்தவன் அவன். தேஜோமயனாய் அவன் என் உள்ளத்தின் உள்ளே திகழ்ந்தவன். கருணைக் கடலாக எழுந்தருளிய அந்த ஞானாசாரியனைப் புகழ்ந்து பாடுவோம்.
193. முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கட்(கு) இன்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : மும்மூர்த்திகளுக்கும் முன்னவன். எல்லாப் பொருள்களும் தானே யானவன். அவை யாவுக்கும் பின்னவன். பிஞ்ஞகன் என்னும் திருநாமத்தை உடையவன். யாவரும் விரும்புகிற திருப்பெருந்துறையில் நிலைத்திருப்பவன். சித் ஆகாசன், அர்த்தநாரீசுவரன். தென் திருவானைக்காவில் இருப்பவன். பாண்டி நாட்டான். எனக்கு இனியவன். தன்னை அப்பன் என்று அழைப்பவர்க்கு அமிர்தம் போன்றவன். என் தந்தை. இத்தகைய சிவனாரை நாம் பாடுவோம்.
194. பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்றக் குதிரையின் மேல் வந்தருளித் தன்அடியார்
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே
பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.
தெளிவுரை : நம் பெம்மானது பெற்றி இத்தகையது என்று அன்பர் அல்லாது பிறர் அறிந்து கொள்ளமாட்டார். அவன் திருப்பெருந்துறையில் வதிபவன். வெற்றிக் குதிரை யேறி வந்து அவன்தன் அடியார்களின் குறைபாடுகளைக் களைந்து குணங்களைப் பாராட்டிச் சீராட்டி அவர்களை ஏற்றுக் கொண்டான். சூழ்ந்திருக்கிற உறவினர்களது தொடர்பு என்னும் பந்த பாசத்தை அறுத்தான். அப்பரமனது பழைய புகழையே பற்றிப் பிடித்து இப்பிரபஞ்சத்தில் பாசம் என்னும் பற்றை நாம் அறவே அகற்றுவோம். அதற்கு அப்பரமானந்தனது பற்று ஒன்றே உற்ற உபாயம். அப்பெம்மானை நாம் பாடுவோம்.
9. திருப்பொற்சுண்ணம் (தில்லையில் அருளியது )
ஆனந்த மனோலயம்
பலவகை மணப்பொருட்களை உரலில் இட்டு இடிக்கப்படுவது பொற் சுண்ணம். இது பொன் போன்ற நிறமுடையது. பொன்னும் சிறிது இதில் சேர்க்கப்படுகிறது. திருமஞ்சனத்துக்காக இது உபயோகிக்கப்படுகிறது.
இது வள்ளைப்பாட்டு, உரற்பாட்டு, உலக்கைப் பாட்டு, அவலிடி, அம்மனை, வள்ளை முதலிய பெயர்களால் வழங்கப்பெறும். காதலன் திருமுழுக்குக்கு வேண்டும் மணப் பொடியினைக் காதலியும் தோழி முதலியோரும் காதலன் பேர்பாடி இடித்தல். அந்த முறையில் சிவபெருமான் திருமுழுக்குக்கு வேண்டும் திருமணப் பொடி அமைத்தல்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
195. முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி
முளைக்குடம் தூபநல் தீபம்வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமக ளோபல் லாண்டிசைமின்
சித்தியும் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரிகொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப்பாடி
ஆடற்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : இடித்தும்  இடிப்போமாக. அழகிய முத்துமாலைகளையும் பூமாலைகளையும் தொங்க விடுங்கள். முளைப்பாலிகைகளையும் தூப கலசத்தையும் தீபத்தையும் வையுங்கள். சத்தியும், சோமியும், நிலமகளும் சரஸ்வதியோடு கூடிப் பல்லாண்டு பாடுங்கள். சித்தியும், கௌரியும் பார்வதியும் கங்கையும் வந்து சாமரம் வீசுங்கள். திருவையாற்றுக் கடவுளாகிய நம் தந்தையைக் குறித்துப் பாடி பாடி நாம் பொற் சுண்ணம் இடிப்போம். கவரி  சாமரம்.
196. பூவியல் வார்சடை எம்பிராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும்
மாவின் வடுவகிர் அன்னகண்ணீர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்
கூவுமின் தொண்டர் புறம்நிலாமே
குனிமின் தொழுமின்எம் கோன்எம்கூத்தன்
தேவியும் தானும்வந்(து) எம்மையாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே.
தெளிவுரை : அழகுவாய்ந்த, நீண்ட சடையையுடைய எம்பிரானுக்கு நயமான கதம்பப்பொடி இடிக்க வேண்டும். மாம்பிஞ்சின் பிளவை யொத்த கண்களையுடையீர், வாருங்கள். வந்து எம்மோடு சேர்ந்து பாடுங்கள். இனிய தொண்டர்கள் வெளியே காத்திராதபடி அவர்களை அழையுங்கள். கூத்தாடுங்கள். போற்றுங்கள். எம் இறைவனும் எம் கூத்தனுமாகிய சிவபெருமான், தேவியும் தானுமாக எழுந்தருளி எம்மை ஆளும் பொருட்டுச் செம்பொன் நிறமுள்ள கதம்பப் பொடியை நாம் இடிப்போம்.
197. சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடிஎடுமின்
அந்தரர் கோன்அயன் தன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன்தாதை
எந்தரம் ஆள்உமை யாள்கொழுநற்(கு)
ஏய்ந்தபொற் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : அழகிய திருவெண்ணீற்றை அணிந்து, தரையை மெழுகி, புனிதமான பொற்பொடிகளைச் சிதறி, நவதானியங்களைப் பரப்பி, இந்திரனது கற்பக விருட்சத்தை நாட்டி, எல்லா இடங்களிலும் அழகிய தீபங்களை ஏற்றி வைத்து, ரிஷபக் கொடியை உயர்த்துங்கள். இந்திரனுக்கும் பிரம்மாவுக்கும் தலைவன். விஷ்ணுவுக்கு நாயகன். முருகனுக்குத் தந்தை. எம் போன்றவர்களை ஆண்டருள்கின்ற உமாதேவிக்குக் கணவன். இத்தகைய பரமனுக்குப் பொருந்திய பொற்சுண்ணம் இடிப்போம் நாம்.
198. கா(சு)அணி மின்கள் உலக்கையெல்லாம்
காம்பணி மின்கள் கறையுரலை
நேசம் உடைய அடியவர்கள்
நின்று நிலாவுக என்றுவாழ்த்தித்
தேசமெல் லாம்புகழ்ந்(து) ஆடுங்கச்சித்
திருஏகம் பன்செம்பொற் கோயில்பாடிப்
பாச வினையைப் பறித்துநின்று
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : உலக்கைகளுக்கு மணிவடம் கட்டுங்கள். உரலுக்குப் பட்டாடை சுற்றுங்கள். அன்புள்ள அடியார்கள் நிலைத்திருந்து வாழ்க வென்று வாழ்த்துங்கள். உலகம் எல்லாம் புகழ்கின்ற காஞ்சிபுரம் ஏகாம்பர நாதரது திருக்கோயிலைப் புகழ்ந்து பாடுங்கள். நம் பாச வினைகளைக் களைந்து நின்று, பாடிக்கொண்டே பொற்சுண்ணம் இடிப்போம். காசு  மணிவடம். காம்பு பட்டாடை.
199. அறு(கு)எடுப் பார்அய னும்அரியும்
அன்றிமற்(று) இந்திர னோ(டு)அமரர்
நறுமுறு தேவர் கணங்களெல்லாம்
நம்மில்பின்(பு) அல்ல(து) எடுக்கவொட்டோம்
செறிவுடை மும்மதில் எய்தவில்லி
திருஏகம் பன்செம்பொற் கோயில்பாடி
முறுவற்செவ் வாயினீர் முக்கண்அப்பற்(கு)
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
தெளிவுரை : பிரம்மாவும் விஷ்ணுவும் குடவிளக்கு ஏந்துவார்களே அல்லாமல் அவர்களுக்கு வேறாகிய இந்திரனும் முணுமுணுக்கின்ற இதர தேவர்களும் நமக்குப் பின்பே அன்றி முன்பு விளக்கு ஏந்த நாம் இடம் தரோம். ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட முப்புரங்களை எய்தவில்லை உடையவனும் திருவேகம்பமுடையானுமாகிய சிவபெருமானது செம்பொன்னாலாகிய கோயிலைப் பாடுவோம். புன் சிரிப்புத் திகழும் சிவந்த வாயையுடைய வனிதைகாள், மூன்று கண்களையுடைய நம் அப்பன் ஆடுதற்குப் பொற் சுண்ணம் இடிப்போம். அறுகு குடவிளக்கு, நறுமுறு  முணுமுணுக்கும்.
200. உலக்கை பலஓச்சு வார்பெரியர்
உலகமெ லாம்உரல் போதாதென்றே
கலக்க அடியவர் வந்து நின்றார்
காண உலகங்கள் போதாதென்றே
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த
மலைக்கு மருகனைப் பாடிப்பாடி
மகிந்துபொற் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : இறைவனுக்குப் பொற்சுண்ணம் இடித்தல் என்னும் சிவசேவையில் கலந்து கொள்ள எண்ணிறந்த பெரியவர்கள் வந்து கூடினார்கள், அவர்கள் எல்லாரும் உயர்த்திய உலக்கைகளுக்கு இவ்வுலகம் என்னும் உரல் போதவில்லை. இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு களிக்க வந்த அடியார்களுக்கு நிற்க இவ்வுலகம் போதவில்லை. நமக்கு நலன் உண்டாதல் பொருட்டுச் சின்ன புத்தம் புதிய மலர் போன்ற தன் பாதத்தை நாம் அணிந்து கொள்ள நமக்குக் கொடுத்தருளினான். அவனோ இமவானுக்கு மருகன். அவன் பெருமையைப் பாடிப் பொற் சுண்ணம் இடிப்போம்.
201. சூடகம் தோள்வளை ஆர்ப்பஆர்ப்பத்
தொண்டர் குழாம்எழுந்(து) ஆர்ப்பஆர்ப்ப
நாடவர் நம்தம்மை ஆர்ப்பஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்பஆர்ப்ப
பாடக மெல்லடி ஆர்க்கும்மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்(கு)
ஆடக மாமலை அன்னகோவுக்(கு)
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : கைவளை, தோள்வளை முதலியன ஒலிக்கின்றன. அன்பர்கள் பெருங்கூட்டமாய் எழுந்து ஆனந்தமாக ஆரவாரிக்கின்றனர். உலகத்தவர் இவை எல்லாம் பயன்படாச் செயல் என்று ஏளனம் பண்ணுகின்றனர். அவர்கள் ஏளனம் பண்ணுவது அறிவீனம் என்று நாம் ஓலம் இடுகின்றோம். தன் மெல்லிய திருவடிகளில் பாடகம் அணிந்திருக்கும் பார்வதி தேவியின் பாகனும் பெரிய பொன் மலைபோன்ற பரம்பொருளுமாகிய சிவனாரைப் போற்றிப் பாடியாடி நாம் பொற் சுண்ணம் இடிப்போம்.
202. வாள் தடம் கண்மட மங்கைநல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத்
தோள்திரு முண்டம் துதைந்திலங்கச்
சோத்(து)எம்பி ரானென்று சொல்லிச்சொல்லி
நாள்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி
நாயிற் கடைப்பட்ட நம்மைஇம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : ஒளிவீசும் பெரிய கண்களையுடைய சுந்தரிகாள். கோடுகளையுடைய வளையல்கள் ஒலிக்கவும், பருத்த மார்பகங்கள் பூரிக்கவும், தூக்கிய தோள்கள் தலைகளோடு ஒட்டித் தகழவும் திரும்பத் திரும்ப அஞ்சலி சொல்லுவோம். புதிதாக அலர்ந்த தாமரைப் பூவைத் தோற்கடிக்கக் கூடிய எழில் வாழ்ந்தவை இறைவனுடைய திருவடிகள், அத்திருவடிகளைக் காட்டி நாயினும் கடைப்பட்ட நம்மை இப்பிறவியிலேயே ஆட்கொண்டான். அப்படி ஆட்கொண்ட விதங்களைப்பாடி அவன் நீராடுவதற்குப் பொற்சுண்ணம் இடிப்போம்.
203. வையகம் எல்லாம் உரலதாக
மாமேரு என்னும் உலக்கைநாட்டி
மெய்யெனும் மஞ்சள் நிறையக அட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி
ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : உலகம் முழுவதும் உரல்; மகாமேரு மலை உலக்கை. மங்களமாயுள்ள சிவ சான்னியத்தியத்தைத் தோற்று விப்பது அங்கு நடைபெறும் நிகழ்ச்சியாகும். நாம் பொற்சுண்ணம் இடிப்பது அதற்கு ஒப்பானது. திருப்பெருந்துறையிலும் தில்லையிலும் எழுந்தருளியுள்ள பரமனது செவ்விய திருவடியைப் பாடிப் பாடிப் பொற் சுண்ணம் இடிப்போம்.
204. முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தம் சிவனொடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணையொடு ஆட ஆட
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : முத்து மாலைகளை அணிந்திருக்கும் மார்பகங்கள் குலுங்க, அடர்ந்த கூந்தல்களில் வண்டுகள் திரண்டிருக்க, மனமானது சிவனிடம் லயமாயிருக்க, சிவந்த கெண்டைமீன் போன்ற கண்களில் நீர் அரும்ப, நான் என் இறைவனிடம் பித்துக் கொள்ள, பக்தர் அல்லாதார் பிறவிப் பிணியில் அழுந்திக் கிடக்க, என் தந்தை சிவ பெருமான் யாண்டும் கருணையோடு கூடியிருக்க, அவன் நீராடுவதற்கு நாம் பொற்சுண்ணம் இடிப்போம்.
205. மாடு நகைவாள் நிலாஎறிப்ப
வாய்திறந்(து) அம்பவ ளம்துடிப்பப்
பாடுமின் நம்தம்மை ஆண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித்
தேடுமின் எம்பெரு மானைத்தேடிச்
சித்தம் களிப்பத் திகைத்துத்தேறி
ஆடுமின் அம்பலத்(து) ஆடினானுக்(கு)
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
தெளிவுரை : மாடு  பக்கத்தில். சிரிப்பதனால் பக்கத்தில் ஒளிபொருந்திய நிலா வீசுவது போன்று பற்கள் தென்படுகின்றன. பாடும்பொழுது அழகிய சிவந்த உதடுகள் துடிக்கின்றன; இத்தகைய காட்சி கொடுக்கும் காரிகைகாள் ! இறைவன் நம்மை ஆண்டருளிய விதத்தையும், நமது பணியை ஏற்றுக் கொண்ட விதத்தையும் திரும்பத் திரும்ப பாடி அவனைத் தேடுங்கள். தேடுதலில் மனம் களித்திருங்கள். அவன் சான்னித்தியத்தை உணராத பொழுது திகைத்திருங்கள். உணரும் பொழுது தெளிவடையுங்கள். அம்பலத்தில் ஆடினவனைக் குறித்து ஆடுங்கள்; அவனுக்காகப் பொற்சுண்ணம் இடியுங்கள்.
206. மையமர் கண்டனை வானநாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை
ஐயனை ஐயர்பி ரானைநம்மை
அகப்படுத்(து) ஆட்கொண்(டு) அருமைகாட்டும்
பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
போதரிக் கண்ணிணைப் பொற்றொடித்தோள்
பையர(வு) அல்குல் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : நீலகண்டன், தேவர்க்கு அமிர்தம், மாணிக்கக் கூத்தன், தேவன், தேவர் தலைவன்  இத்தகைய சிவன் நம்மை வலிய ஆட்கொண்டுள்ளான். அவன் பொய்யர்க்குப் பொய்யன். மெய்யர்க்கு மெய்யன். தாமரை போன்ற அரிக்கண்களையுடையவர்களும், பொன் தோள்வளையம் அணிந்திருப்பவர்ளுமாகிய மகளிர் களே, நம் இறைவனைப் பாடி அவனுக்குப் பொற் சுண்ணம் இடிப்போம். அரி  சிவந்த கோடு.
207. மின்னுடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
என்னுடை ஆரமுது எங்களப்பன்
எம்பெரு மான்இம வான்மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்
தமையன்எம் ஐயன் தாள்கள்பாடிப்
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
பொன்திருச் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : மின்னல் போன்ற இடையையும் செம்பவளம் போன்ற உதடுகளையும் கரிய கண்களையும், வெண் பற்களையும் இன்னிசைக்கு ஒப்பான மெல்லிய மொழியையும் உடைய மகளிர்காள், கேளுங்கள். எனக்கு அமிர்தம், எங்கள் அப்பன், எம்பெருமான் சிவன். இவன் பார்வதி தேவிக்கு முறையே மணாளனாகவும் புதல்வனாகவும் தந்தையாகவும் மூத்த சகோதரனாகவும் இருக்கிறான். எமக்கு இவன் இறைவன். பொன் ஆபரணம் அணிந்துள்ள காரிகைகாள், இவன் திருவடிகளைப் புகழ்ந்து பாடிப் பொற் சுண்ணம் இடிப்போம்.
208. சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்
செங்கனி வாய்இத ழும்துடிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம்பாடிக்
கங்கை இரைப்ப அராஇரைக்கும்
கற்றைச் சடைமுடி யான்கழற்கே
பொங்கிய காதலில் கொங்கைபொங்கப்
பொன்திருச் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : சங்கு வளையல்கள் முழுங்குகின்றன, சிலம்புகள் ஒலிக்கின்றன. நீண்ட கூந்தலில் கட்டிய பூமாலை அசைகிறது. சிவந்த உதடு துடிக்கிறது. இப்பாங்குகளையுடைய பெண்களே, நாம் சிவ லோகத்தை மெச்சிப் பாடுவோம். கங்கை ஒலிக்கட்டும். சடைமுடியிலுள்ள பாம்பு சீறட்டும். மிக்க அன்போடு சிவனாருக்குப் பொற்சுண்ணம் இடிப்போம்.
209. ஞானக் கரும்பின் தெளிவைப்பாகை
நாடற்(கு) அரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயினானைச்
சித்தம்பு குந்துதித் திக்கவல்ல
கோனைப் பிறப்பறுத்(து) ஆண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்
பானல் தடங்கண் மடந்தை நல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : ஞானம் என்னும் கருப்பஞ் சாற்றின் தெளிவு. அதினின்று உண்டான பாகு, நாடுதற்கு அரிய நன்மை, சுவை கெடாத தேன், முக்கனியின் சுவை ஆகிய இத்தனையுமாய் இருப்பவனை மனத்தில் புகுந்து இனிக்கவல்ல இறைவனை, பிறவிப் பிணியைப் போக்கி ஆண்டு கொண்டருளிய கூத்தப் பிரானை, நாவில் தழும்பு உண்டாகும்படி தோத்திரம் பாடி வணங்குவோம். கருங்குவளை மலர்போன்ற அகன்ற கண்களையுடைய யுவதிகளே, நாம் பாடிப் பொற் சுண்ணம் இடிப்போம். (சித்தம் + புகுந்து + தித்திககவல்ல)
210. ஆவகை நாமும்வந்(து) அன்பர்தம்மோ(டு)
ஆட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேல்
தேவர் கனாவிலும் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச்
சேவகம் ஏந்திய வெல்கொடியான்
சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச்
சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : உய்தற் பொருட்டு நாமும் வந்து அன்பர்களோடு கூடி அடிமை செய்யும் விதத்தைப் பாடுவோம். தேவர்கள் சிவனைக் கனவிலும் கண்டறியார்கள். அவன் தனது தாமரைத் திருவடியை நனவில் நமக்குக் காட்டினான். ஆக்கத்துக்கு அறிகுறியாக ரிஷபம் பொறிந்த வெற்றிக் கொடியை அவன் ஏந்தியுள்ளான். திரிபுரங்களை யழித்த வெற்றி வீரன் அவன். அவனுடைய நாமங்களைப் பாடிப் பொற் சுண்ணம் இடிப்போம்.
211. தேனக மாமலர்க் கொன்றை பாடிச்
சிவபுரம் பாடித் திருச்சடைமேல்
வானக மாமதிப் பிள்ளைபாடி
மால்விடை பாடி வலக்கையேந்தும்
ஊனக மாமுழுச் சூலம்பாடி
உம்பரும் இம்பரும் உய்யஅன்று
போனக மாகநஞ்(சு) உண்டல்பாடிப்
பொன்திருச் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : தன்பால் தேனைக் கொண்டுள்ள கொன்றை மலரைப் பாடி, சிவபுரத்தைப் பாடி, சடைமுடியில் உள்ள வானில் சஞ்சரிக்கும் பிறைச் சந்திரனைப் பாடி, பெரிய காளை வாகனத்தைப் பாடி, வலக்கையில் பிடித்துள்ள மாமிசம் ஒட்டிக் கொண்டிருக்கும் மழுவையும் திரிசூலத்தையும் பாடி, விண்ணவரும் மண்ணவரும் உய்வு அடைதல் பொருட்டுக் கடல் நஞ்சை உணவாக உண்ட அரிய செயலைப் பாடிப் பொற் சுண்ணம் இடிப்போம். (மழுவும் திரிசூலமும் சம்காரத் தொழிலின் சின்னங்கள்)
212. அயன்தலை கொண்டுசெண்(டு) ஆடல்பாடி
அருக்கன் எயிறு பறித்தல்பாடிக்
கயம்தன்னைக் கொன்(று)உரி போர்த்தல்பாடிக்
காலனைக் காலால் உதைத்தல்பாடி
இயைந்தன முப்புரம் எய்தல்பாடி
ஏழை அடியோமை யாண்டுகொண்ட
நயந்தனைப் பாடிநின்(று) ஆடியாடி
நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : பிரமதேவன் தலையைக் கிள்ளி அதைப் பந்தாக வைத்துச் சிவன் விளையாடினான். சூரியனது பல்லை உடைத்தான். யானையைக் கொன்று அதன் தோலை அணிந்தான். யமனை உதைத்தான். முப்புரங்களை எரித்தான். எங்களை ஆட்கொண்டான். இந்த நன்மைகளை யெல்லாம் பாடிப் பொற் சுண்ணம் இடிப்போம்.
213. வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி
மத்தமும் பாடி மதியும்பாடிச்
சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக்
கட்டிய மாசுணக் கச்சைபாடிக்
கங்கணம் பாடிக் கவித்த கைம்மேல்
இட்டுநின் றாடும் அரவம்பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : சிவனார் அணிந்திருக்கிற வட்டமான கொன்றை மலர் மாலை, ஊமத்தம் பூ, பிறைச் சந்திரன், நல்லார் வாழ்கின்ற அழகிய தில்லை, சித் ஆகாசத்தைப் பற்றிய ஞானச் செல்வம், இறைவனுடைய இடுப்பு, கை, உடல் ஆகிய பகுதிகளில் உள்ள சர்ப்பங்கள்  இவை யாவும் பாடிப் பொற் சுண்ணம் இடிப்போம்.
214. வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
சோதியு மாய்இருள் ஆயினார்க்குத்
துன்பமு மாய்இன்பம் ஆயினார்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப்
பந்தமு மாய்வீடும் ஆயினார்க்(கு)
ஆதியும் அந்தமும் ஆயினாருக்(கு)
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.
தெளிவுரை : வேதம், வேள்வி, பரமாத்மா, பிரபஞ்சம், வெளிச்சம், இருள், துன்பம், இன்பம், சக்தி, சிவசக்தி, பந்தம், மோட்சம், துவக்கம், முடிவு ஆகிய இத்தனையுமாய் இருப்பவன் சிவன். அப்பெரிய பொருளைப் பாடிப் பொற் சுண்ணம் இடிப்போம்.
(முரண்பாடுகள் அனைத்தும் ஈசனிடம் இடம் பெறுகின்றன. வேதம் இவ்வுலகத்தை விளக்குகிறது. ஞான வேள்வி இவ்வுலகத்தைத் துறக்கச் செய்கிறது. மாயா சக்தி ஈசனது விபூதி. அது வித்யா மாயை, அவித்யாமாயை, எனப் பிரிகிறது. பிரிந்திருப்பினும் அவை இரண்டும் ஈசனுடைய கூறுகளாம்.)
10. திருக்கோத்தும்பி (தில்லையில் அருளியது)
சிவனோடு ஐக்கியம்
வண்டு வகைகளுள் மிகப் பெரியதாய் இருப்பது கோத்தும்பி அல்லது அரச வண்டு என அழைக்கப்படுகிறது. ஜீவாத்மாக்களுள் மானுட வடிவு எடுத்து வந்துள்ளவன் கோத்தும்பி என்று உருவகப் படுத்தி இயம்பப் படுகிறான். பூவிலுள்ள நறுமணத்தையும் தேனையும் தும்பி விரும்புவது போன்று மனிதனாய்ப் பிறந்திருப்பவன் பரமனையே நாடியிருக்கக் கடமைப் பட்டிருக்கிறான்.
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா
215. பூஏறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாஏறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாஏறு சோதியும் வானவரும் தாமறியாச்
சேஏறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : படைப்புத் தெய்வமாகிய பிரம்ம தேவனும், இந்திரனும், அழகிய சரஸ்வதியும், மகா விஷ்ணுவும், நான்கு வேதங்களும், சந்திரன், சூரியன் அக்கினியாகிய பெருமை பொருந்திய சோதிகளும், தேவர்களும், சிவபெருமானை முற்றும் அறிந்து கொள்ளமாட்டார்கள். அத்தகைய ரிஷப வாகனனைப் போற்றி அரச வண்டே ரீங்காரம் செய்வாயாக.
216. நானார்என் உள்ளமார்
ஞானங்களார் என்னையாரறிவார்
வானோர் பிரானென்னை
யாண்டிலனேல் மதிமயங்கி
ஊனார் உடைத்தலையில்
உண்பலித்தேர் அம்பலவன்
தேனார் கமலமே
சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : தேவர் பெருமான் என்னை ஆட்கொள்ளாது விட்டிருப்பானாகில் எனக்கு ஒரு மதிப்பும் இல்லை. என்னை மதிக்கும்படி புத்தி கெட்டவர் யாரும் இல்லை. மாமிசம் பொருந்திய பிரம்ம கபாலத்தில் பிட்சை யேற்று உண்கிற அம்பலவாணனது அமிர்த சொரூபத்தைக் கோத்தும்பீ நீ ஊதிப் போற்றுவாயாக.
217. தினைத்தனை உள்ளதோர்
பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறும் காண்தொறும்
பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும்(பு) உள்நெக
ஆனந்தத் தேன்சொரியும்
குனிப்புடை யானுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : பிருங்கராஜனே, பூவில் இருக்கிற ஒரு சிறு துளி தேனில் நீ விருப்பங் கொள்ளாமல் ஆனந்தக் கூத்தனிடத்து இருக்கும் பரமானந்தத் தேனில் நீ லயமாகிப் பின்பு அதை விளம்பரம் செய்க. குளிப்பு  கூத்து.
218. கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்ஒப்பில்
என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : அன்பின் உச்ச நிலையில் கண்ணப்பன் இருந்தான். அன்பின் ஆரம்ப நிலையில் நான் இருக்கிறேன். ஆயினும் என் தகப்பன் கீழ் நிலையில் உள்ள என்னைக் கருணையினால் ஆட்கொண்டு என்னைக் குணவான் ஆக்கும்படி செய்து அருளினான். நுண்ணியதாகப் பொடி பண்ணிய திருநீற்றையுடைய அவனிடத்துச் சென்று வண்டுகளுள் வேந்தே நீ ஒலிப்பாயாக.
219. அத்தேவர் தேவர்
அவர்தேவர் என்றிங்ஙன்
பொய்தேவு பேசிப்
புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென்
பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவர்க்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : வண்ணத்தில் பெரிய வண்டே, அந்தத் தேவர் பெரியவர், இந்தத் தேவர் பெரியவர் என்று பொய்த் தேவரைப் புகழ்ந்து பேசிப் புலம்புகின்ற இவ்வுலகில், எனக்குப் பிறவித் தொடர்பு ஒன்றும் இல்லாமல் ஒழியும்படி நான் பற்றி நிற்கின்ற மெய்த்தேவனாகிய சிவபெருமானுக்கே நீ சென்று நாதம் ஊதுவாயாக.
220. வைத்த நிதிபெண்டீர்
மக்கள்குலம் கல்வியென்னும்
பித்த உலகிற்
பிறப்போ(டு) இறப்பென்னும்
சித்த விகாரக்
கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : ஈட்டிய செல்வம், கொண்ட மனைவி, பெற்ற புதல்வர், கருதிய குலம், பயின்ற கல்வி ஆகிய இவையாவும் மயக்கம் கொண்டுள்ள இவ்வுலகில் பிறப்பு இறப்பு என்கின்ற மனோ பாவனைகளை உண்டு பண்ணக் கூடியவைகள். இத்தகைய மனத்தோற்றங்களைத் துடைத் தருளிய ஞானவடிவினனாகிய பரமனிடத்துப் போய் தும்பிக் கோவே நீ ஓசையை உண்டு பண்ணுவாயாக.
221. சட்டோ நினைக்க
மனத்தமுதாம் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ
கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித் தொழும்பரைநாம்
உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : உள்ளத்திற்கு அமிர்தம் போன்ற சிவபெருமானை நினைக்கில் நஷ்டம் ஏதேனும் உண்டோ ? இல்லை. அழியாத இறைவனது திருவடியை நான் மறந்து விடுவேனோ? அதை நினைக்க இணங்காத பாவிகளின் வடிவங்களைக் காணவும் நாம் சம்மதியோம். சீர்மையில் எல்லார்க்கும் மேலேனாகிய சிவனை வண்டு வேந்தே நீ சென்று ஊதுக.
222. ஒன்றாய் முளைத்தெழுந்(து)
எத்தனையோ கவடுவிட்டு
நன்றாக வைத்தென்னை
நாய்சிவிகை யேற்றுவித்த
என்தாதை தாதைக்கு
எம் அனைக்கும் தம்பெருமான்
குன்றாத செல்வற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : தான் ஒரு முதல் பொருளாய் நின்று, தன்னிடத்திருந்து எத்தனையோ கிளைகளைத் தோற்றுவித்தான் பரமன். என்னை நலமுடையவனாக வைத்து, பல்லக்கில் நாயை ஏற்றுவித்தது போன்று அடியார் நடுவில் இருக்க வைத்தான். அவன் எனக்குத் தந்தை, என் தந்தைக்கும் தாய்க்கும் தந்தை. அப்பெருமான் அழியாத பொருள் என்று தும்பியரசே, நீ அவன்பால் சென்று கீதம் வாசிப்பாயாக. செல்வன் + கு = செல்வற்கு.
223. கரணங்கள் எல்லாம்
கடந்துநின்ற கறைமிடற்றன்
சரணங்களே சென்று
சார்தலுமே தான்எனக்கு
மரணம் பிறப்புஎன்(று)
இவையிரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : நீலகண்டன் கருவி கரணங்களுக்கு அப்பாற்பட்டவன், அவனுடைய திருவடியைச் சாருமிடத்து எனக்கு ஜனன மரண மயக்கம் இல்லை. தும்பிக்கோவே, நீ அந்தக் கருணாகரனிடம் சென்று இசை பாடுக.
224. நோயுற்று மூத்துநான்
நுந்துகன்றாய் இங்கிருந்து
நாயுற்ற செல்வம்
நயந்தறியா வண்ணம்எல்லாம்
தாயுற்று வந்தென்னை
ஆண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : நோய் வாய்ப்பட்டு விரைவில் முதுமையடைந்து, தானாக நடக்க முடியாமல் தள்ளப்படுகின்ற கன்று போல் நான் இருக்கிறேன். பொருட் செல்வத்தை நாய் அறிந்து விரும்புவதில்லை. அது போன்று அருட் செல்வத்தை அறிந்து விரும்பாதவனாக இருக்கிறேன். ஆயினும் தாயின் கருணை கொண்டு தேஜோ மயன் என்னை வந்து ஆட் கொண்டான். தும்பிராஜனே, நீ அவன்பால் சென்று சப்தத்தை உண்டு பண்ணுவாயாக.
225. வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கன்னெஞ்(சு) உருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னம் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : வலிய நெஞ்சத்தையுடைய கள்ளன், மன அமைப்பிலோ இளகாதவன் என்று என்னைப் புறக்கணிக்காமல், எனது கல் மனத்தை உருகும்படி செய்து ஆட்கொண்டவன் அம்பலவாணன். அவனது தில்லையில் அன்னங்கள் கூடியிருந்து அலங்கரிக்கின்றன. அவனது பொன்போன்ற திருவடிக்கு வேந்தாகிய வண்டே, நீ இனிய சங்கீதம் பாடுக.
226. நாயேனைத் தன்னடிகள்
பாடுவித்த நாயகனைப்
பேயேன(து) உள்ளப்
பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென்
செய்பணிகள் கொண்டருளும்
தாயான ஈசற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : நாய்போன்ற என்னைக் கருவியாகக் கொண்டு இறைவன் தன்னைப் புகழ்வித்துக் கொண்டான். பேய் போன்ற என் மனக் குறைபாடுகளைப் பொறுக்கும் பெருமை அவனுடையது. என் பணிவிடைகளை இகழாது அவன் ஏற்றுக் கொண்டான். அவன் தாய் போன்றவன். பெரிய தும்பீ, நீ அவனிடம் போய் இசை முழக்குக.
227. நான்தனக்(கு) அன்பின்மை
நானும்தா னும்அறிவோம்
தான்என்னை ஆட்கொண்ட(து)
எல்லாரும் தாம்அறிவார்
ஆன கருணையும்
அங்குற்றே தான்அவனே
கோன்என்னைக் கூடக்
குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : நான் அன்பு இல்லாதவன் என்பதை நானும் அவனுமே அறிவோம். ஆனால் அவன் என்னை ஆட்கொண்டதை உலகம் அறியும். இதுதான் அவனுடைய கருணை. அவனுக்கும் எனக்கும் பிரியாத யோகம் உண்டாகும்படி பெரிய தும்பீ, நீ இனிய இசையைக் கிளப்புவாயாக.
228. கருவாய் உலகினுக்(கு) அப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : உலகுக்கு அவன் இருப்பிடமானான். அதீதத்தல் இருப்பவன் அவனே. இவ்வுலகில் மணம் நிறைந்த பூவை அணிந்துள்ள கூந்தலையுடைய உமா தேவியாரோடு எழுந்தருளியவன் அவன். அருவமாயிருப்பவன் அவன். வேதம் பயிலும் அந்தணனும் அவனே. அந்தச் சுந்தரேசனிடம் வண்டு மன்னா, நீ சென்று கானம் பண்ணுவாயாக.
229. நானும்என் சிந்தையும்
நாயகனுக்(கு) எவ்விடத்தோம்
தானும்தன் தையலும்
தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானும் திசைகளும்
மாகடலும் ஆயபிரான்
தேனுந்து வேவடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : அம்பிகா சமேதனாய் வந்து அவன் ஆட்கொள்ளாதிருந்தல் நான் கெட்டிருப்பேன். என் மனமும் கெட்டிருக்கும். ஆகாயம், திக்கு, கடல் ஆகிய அனைத்தும் ஆக இருக்கும் ஈசனது திருவடியாகிய தேனிடத்துச் சென்று தும்பிக் கோமானே நீ ஊதுக.
230. உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும்
கள்ளப் படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்எம் பிரான்என்னை வேறேயாட்
கொள்அப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : அவன் மனாதீதன். சிந்திக்கும் அளவு பொய் போகாத பேரின்பத்தை நல்கும் கருணைக் கடல் அவன். உபகாரம் செய்கிற எம்பெருமான் அவன். என்னைத் தனித்து அடிமை கொள்ளுகிற அந்த இறைவனிடம் அன்புடன் சென்று பெரிய வண்டே நீ கானம் செய்வாயாக.
231. பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாடோறும்
மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன்தன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : அநித்தியப் பொருட்களை நித்தியப் பொருட்கள் என்று பற்றுவைத்துக் கிடந்த என்னை அவன் உய்வித்தான். ராஜவண்டே, நீ செம்மை நிறைந்த அவன் திருவடியின் கண் சென்று அப்பனே, ஆருயிரே, அம்பலவாணா என்று போற்றி நாதம் கிளப்புவாயாக.
232. தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : அவன் அர்த்த ராரீசுவரன். சிவ சொரூபத்தில் அவன் தோல், குழை, நீறு, சூலம் ஆகியவைகளைத் தாங்கியிருக்கிறான். அம்பிகை தன் சொரூபத்தில் துகில், தோடு, சாந்து, கிளி, வளை ஆகியவற்றை உடைத்தாய் இருக்கிறான். இவ்விருபால் வடிவத்திடத்துப் போய்த் தும்பி வேந்தே, நீ இனிய இசையை உருவாக்குவாயாக.
233. கள்வன் கடியன் கலதியிவன் என்னாதே
வள்ளல் வரவர வந்தொழில்தான் என்மனத்தே
உள்ளத்(து) உறுதுயர் ஒன்றொழியா வண்ணமெல்லாம்
தெள்ளும் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : என்னைக் கள்ளன் என்றோ, கொடூரமானவன் என்றோ, கேடு உடையவன் என்றோ புறக்கணிக்காமல் வள்ளல் ஆகிய சிவன் படிப்படியாக வந்து என் உள்ளத்தில் முழுவதும் குடிகொண்டுள்ளான். என் மனத்தில் புகுந்து என்னை உறுத்திக் கொண்டிருக்கின்ற துயரங்களை யெல்லாம் ஒன்றுவிடாது அவனது தெளிந்த சன்னிதியில் தெரிவிக்கும் முறையில் ராஜதும்பீ, நீ ரீங்காரம் பண்ணுவாயாக.
234. பூமேல் அயனோடு மாலும் புகல்அரிதென்(று)
ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
நாய்மேல் தவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்தத்
தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
தெளிவுரை : சிவனாரை விளக்குவது கடினம் என்று பிரம்ம தேவனும் திருமாலும் மனம் கலங்கி நிற்கின்றனர். ஆனால் அவனைப் புகழ்ந்து பேசுதலில் நான் களிப்பு அடைந்தேன். ஏனெனில் நாய்க்கு ஓர் உயர்ந்த ஆசனம் தருவது போன்று அவன் என்னை உயர்நிலைக்கு உயர்த்தியுள்ளான். அக்கினிபோன்ற திருமேனியுடைய அவனிடம் போய்த் தும்பிமன்னா, நீ அவனது மகிமையைப் பாடுவாயாக.
11. திருத்தெள்ளேணம்
தில்லையில் அருளிச் செய்யப்பட்டது சிவனோடு அடைவு.
தெய்வத் தன்மை பொருந்திய தெளிந்த ஓசையோடு கூடிய படகம் என்னும் இன்னிசைக் கருவியைத் திருவடிப் பெருமையைப் பாடிக் கொட்டும் சிறப்புணர்த்துவது. தெள்ளேணம் என்பது மகளிரது ஒருவகை விளையாட்டு.
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா
235. திருமாலும் பன்றியாய்ச்
சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியவோர்
அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓர் உருவம்
ஒன்றுமில்லாற்(கு) ஆயிரம்
திருநாமம் பாடிநாம்
தெள்ளேணம் கொட்டாமோ.
தெளிவுரை : திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைப் பிளந்து சென்றும் சிவபெருமானது திருவடியைப் போய்ச் சேர்ந்து அறிந்து கொள்ள வில்லை. ஆனால் அவன் திருவடியை நாம் அறிந்து உய்யும் வண்ணம் அவன் ஓர் அந்தணன் உரு எடுத்து வந்தான். நாமம் ரூபம் ஒன்றுமில்லாத அப்பரமனுக்கு ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.
236. திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின் யாவரையும் கண்டதில்லை
அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும்
திருவாரூர் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.
தெளிவுரை : திருப்பெருந் துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் என் பிறவியை வேர் அறுத்துள்ளான். அதன் விளைவாக நான் அவனையன்றி வேறு யாரையும் காண்பதில்லை. அவன் அருவாயும் உருவாயும் இருக்கிறான். திருவாரூர் அவனுக்கு உகந்த தலம். அதைப் புகழ்ந்து பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.
237. அரிக்கும் பிரமற்கும்
அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும் படித்தன்றி
நின்றசிவம் வந்துநம்மை
உருக்கும் பணிகொள்ளும்
என்பதுகேட்(டு) உலகமெல்லாம்
சிரிக்கும் திறம்பாடித்
தெள்ளேணம் கொட்டாமோ.
தெளிவுரை : திருமால் பிரமன் முதலிய தேவர்களே சிவசொரூபத்தை உள்ளபடி தெரிந்து கொள்ளவில்லை. அத்தகையவன் நம்மை வந்து ஆட்கொண்டு மனம் உருகப் பண்ணினான். சிவன் செயல் இப்படியும் இருக்கிறதா என்று உலகத்தார் வியப்பதைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.
238. அவமாய தேவர்
அவகதியில் அழுந்தாமே
பவமாயம் காத்தென்னை
ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவமாய செஞ்சுடர்
நல்குதலும் நாம்ஒழிந்து
சிவமான வாபாடித்
தெள்ளேணம் கொட்டாமோ.
தெளிவுரை : தேவர் பதவியும் ஞான நிலைக்குக் கீழானதே. அது பிறவியை வளர்ப்பது. பின்பு பிறவி என்னும் மாயையினின்று என்னைக் காத்து, நூதனமான தனது ஆத்ம சோதியை எனக்குச் சிவன் வழங்கியருளினான். அதன் விளைவாக எனது ஜீவபோதம் ஒழிந்து, சிவ போதம் தலை எடுத்தது. இதைப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.
239. அருமந்த தேவர்
அயன்திருமாற்(கு) அரியசிவம்
உருகவந்து பூதலத்தோர்
உகப்(பு)எய்தக் கொண்டருளிக்
கருவெந்து வீழக்
கடைக்கணித்(து)என் உளம்புகுந்த
திருவந்த வாபாடிக்
தெள்ளேணங் கொட்டாமோ.
தெளிவுரை : பெருநிலையில் உள்ள பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் தரிசினத்திற்கு எட்டாதவன் சிவன். அத்தகையவன் மக்களை மகிழ்விக்க மானுட வடிவெடுத்து மண்ணுலகுக்கு வந்தான். அவனுடைய கிருபா நோக்கத்தால் எனது பிறவி வித்து வெந்து போயிற்று. எனது உள்ளம் என்பது அவனது ஆலயமாயிற்று. இச்சிறப்பைப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.
240. அரையாடு நாகம்
அசைத்தபிரான் அவனியின்மேல்
வரையாடு மங்கைதன்
பங்கொடும்வந்(து) ஆண்டதிறம்
உரையாட உள்ளொளியாட
ஒண்மாமலர்க் கண்களில்நீர்த்
திரையாடு மாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.
தெளிவுரை : படமெடுத்து ஆடும் பாம்பை இடுப்பில் கச்சையாகக் கட்டிய பிரான்  உமா மகேஸ்வரன் பூமியில் வந்து என்னை ஆண்டருளினான். அதை விளக்கமுடியாமல் சொற்கள் தடுமாறுகின்றன. உள்ளொளி பெருகுகின்றது. ஒளி வீசுகிற பெரிய கண்களில் நீர் அலை வீசுகிறது. இந்த மகிமையைப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.
241. ஆஆ அரிஅயன்இந்
திரன்வானோர்க்(கு) அரியசிவன்
வாவாஎன்(று) என்னையும்
பூதலத்தே வலித்தாண்டுகொண்டான்
பூஆர் அடிச்சுவ(டு)
என்தலைமேல் பொறித்தலுமே
தேஆனவா பாடித்
தெள்ளேணம் கொட்டாமோ.
தெளிவுரை : விண்ணவர்களுக் கெல்லாம் பெறுதற்கு அரிய பெம்மான் பூஉலகில் வந்து என்னை வலிய ஆட்கொண்டான். மலர் போன்ற அவனது திருவடி என் தலைமீது வைத்ததும் நான் தெய்வத் தன்மையை அடையப் பெற்றேன், என்று பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.
242. கறங்(கு)ஓலை போல்வதோர்
காயப்பிறப்போ(டு) இறப்பென்னும்
அறம்பாவம் என்(று) இரண்டுஅச்சம்
தவிர்ந்தென்னை ஆண்டுகொண்டான்
மறந்தேயும் தன்கழல்நான்
மறவாவண்ணம் நல்கியஅத்
திறம்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.
தெளிவுரை : ஓலைக் காற்றாடி சுழல்வது போன்று இந்த உடல் பிறக்கவும் இறக்கவும் செய்கிறது. புண்ணியம் பாவம் என்னும் இருவினைகளை உடல் செய்கின்றது. இந்தப் பாவத்தினின்று சிவன் என்னைக் காப்பாற்றியருளினான். அவனை நான் யாண்டும் மறவாதிருக்கும்படி செய்தருளினான். அந்தப் பெருமையைப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.
243. கல்நார் உரித்தென்ன
என்னையும்தன் கருணயினால்
பொன்ஆர் கழல்பணிந்து
ஆண்டபிரான் புகழ்பாடி
மின்நேர் நுடங்கிடைச்
செந்துவர்வாய் வெண்ணகையீர்
தென்னா தென்னாஎன்று
தெள்ளேணங் கொட்டாமோ.
தெளிவுரை : கல்லினின்று நார் உரிப்பதை ஒப்ப என்னைத் தன் பொன்போன்ற திருவடியைப் பணியும்படி செய்து சிவன் ஆட்கொண்டான். மின்னல் போன்று துவளும் இடையையும் சிவந்த வாயையும் வெண்பற்களையும் உடையவர்ளே ! அவனைத் தென்னா தென்னா என்றுபாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.
244. கனவேயும் தேவர்கள்
காண்பரிய கனைகழலோன்
புனம்வேய் அனவளைத்
தோளியொடும் புகுந்தருளி
நனவே யெனைப் பிடித்தாட்
கொண்டவா நயந்துநெஞ்சம்
சினவேற்கண் நீர்மல்கத்
தெள்ளேணங் கொட்டாமோ.
தெளிவுரை : தேவர்கள் கனவிலும் காணமுடியாத மேலோன் சிவன். அவன் அம்பாள் சகிதனாய் எழுந்தருளி நனவில் என்னைத் தடுத்து ஆட்கொண்டான். தீமையைக் காண வெறுக்கிற கண்களினின்று அவனை விரும்பிக் கண்ணீர் சிந்தித் தெள்ளேணம் கொட்டுவோம்.
245. கயல்மாண்ட கண்ணிதன்
பங்கன்எனைக்கலந்(து) ஆண்டலுமே
அயல்மாண்டூ அருவினைச்
சுற்றமும் மாண்டு அவனியின்மேல்
மயல்மாண்டு மற்றுள்ள
வாசகம்மாண்டு என்னுடைய
செயல்மாண் டவாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.
தெளிவுரை : கௌரிசங்கரன் என்னைத் தன்வயம் ஆக்கியதும் வேற்றார் உற்றார் என்னும் வேற்றுமைகள் ஒழிந்து போயின. உலகப் பற்று ஒழிந்தது. அவன் புகழ் அன்றி வேறு பேச்சு ஒழிந்தது. என் செயல் என்பதெல்லாம் அவன் செயலாய் மாறிவிட்டது. இந்த மகிமையைப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.
246. முத்திக்(கு) உழன்று முனிவர்குழாம் நனிவாட
அத்திக்(கு) அருளி அடியேனை ஆண்டுகொண்டு
பத்திக் கடலுள் பதித்த பரஞ்சோதி
தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.
தெளிவுரை : முனிவர் கூடி முக்திக்காகப் பெரும்பாடு பட்டனர். மற்று முதல்வனோ யானைக்கு அருள்புரிந்து அடியேனையும் ஆட்கொண்டான். பக்திக் கடலுள் மூழ்கிச் சோதி சொரூபியைத் தித்திக்கும்படி பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.
247. பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடும் சாரா வகையருளி ஆண்டுகொண்ட
நேர்(பு)ஆடல் பாடி நினைப்(பு)அரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.
தெளிவுரை : நிலவுலகின் கண், பாதாளத்தின்கண், சுவர்க்கத்தின் கண் அல்லது வேறு எவ்வுலகின் கண்ணாவது நான் சென்று பிறவாமல் என்னை ஆட்கொண்டருளின சிவபெருமானின் நேர்மையான திருவிளையாடலையும் பெருமையையும் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.
248. மாலே பிரமனே
மற்றொழிந்த தேவர்களே
நூலே நுழை(வு) அரியான்
நுண்ணியனாய் வந்(து) அடியேன்
பாலே புகுந்து
பரிந்துருக்கும் பாவகத்தால்
சேலேர்கண் ணீர்மல்கத்
தெள்ளேணங் கொட்டாமோ.
தெளிவுரை : தேவர்களாலும் சாஸ்திரங்களாலும் விளக்க முடியாத அதி சூட்சும வஸ்து ஆவான், சிவன். சித் சொரூபியாகிய அவன் கருணைகொண்டு என்னிடத்துப் பிரவே சித்து என் மனத்தை உருக்கும் பேரியல்பு படைத்தவன். கண்ணீர் மல்க நாம் அவனைப்பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.
249. உருகிப் பெருகி
உளங்குளிர முகந்துகொண்டு
பருகற்கு இனிய
பரங்கருணைத் தடங்கடலை
மருவித் திகழ்தென்னன்
வார்கழலே நினைந்(து)அடியோம்
திருவைப் பரவிநாம்
தெள்ளேணம் கொட்டாமோ.
தெளிவுரை : சிவயோகத்தில் மனம் உருகவும், விரிவடையவும், சாந்தியடையவும் செய்கிறது. அவனுடைய அகண்ட கருணையை அனுபவித்துப் பரமானந்தம் அடைகிறோம். அந்த ஞானச் செல்வத்தைப் புகழ்ந்து நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.
250. புத்தன் புரந்தராதி அயன்மால் போற்றிசெயும்
பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த
அத்தன் அணிதில்லை அம்பலவன் அருட்கழல்கள்
சித்தம் புகுந்தவா தெள்ளேணம் கொட்டாமோ.
தெளிவுரை : சிவன் யாண்டும் புதியவன். தேவர்கள் போற்றும் பித்தன் அவன். திருப்பெருந் துறையில் அழகிய அம்பலத்திலும் அவன் சிறப்பாக வீற்றிருக்கிறான். என் பிறவி நோயைக் களைந்த அப்பன் அவன். அவனுடைய அருள் உருவமான திருவடிகள் என் உள்ளத்தில் குடி புகுந்ததைப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.
251. உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடல்உளனாய்க் கிடந்து தடுமாறும்
கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும்
செயலைப் பரவிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.
தெளிவுரை : பொய்ச் சமயங்களும் முரண்படுகிற நூல்களும் மனக் குழப்பத்தை உண்டு பண்ணுகின்றன. அதனால் தடுமாறிக் கிடந்த என் கவலையை ஒழித்து, இறைவன் என்னை ஆட்கொண்டான். அவனது சீரிய செயலைப் புகழ்ந்து தெள்ளேணம் கொட்டுவோம்.
252. வான்கெட்டு மாருதம்மாய்ந்(து)
அழல்நீர் மண்கெடினும்
தான்கெட்டல் இன்றிச்
சலிப்பறியாத் தன்மையனுக்(கு)
ஊன்கெட்(டு) உயிர்கெட்(டு)
உணர்வுகெட்(டு) உள்ளமும்போய்
நான்கெட்ட வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.
தெளிவுரை : பஞ்ச பூதங்களும் அவைகளால் ஆகிய பிரபஞ்சமும் பிரளயத்தில் ஒடுங்கும்போது சிவபெருமான் யாண்டும் இருந்தபடி இருக்கிறார். அவரிடத்துச் சலனம் இல்லை. பிரளயத்தில் ஜீவாத்மன் தோன்றா நிலைக்குப் போகிறான். முக்தியில் சிவத்தில் லயமாகிறான்.
253. விண்ணோர் முழுமுதல்
பாதாளத் தார்வித்து
மண்ணோர் மருந்(து) அயன்
மாலுடைய வைப்படியோம்
கண்ணார வந்துநின்றான்
கருணைக் கழல்பாடித்
தென்னாதென் னாஎன்று
தெள்ளேணங் கொட்டாமோ.
தெளிவுரை : எல்லா உலகத்தவர்களுக்கும் ஆதி மூலமாய் இருப்பவன் அரன். எனக்குப் பிரத்யட்சமாகித் தோன்றி அருள் புரிந்தான். அவன் பெருமையைப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.
254. குலம்பாடிக் கொக்(கு)இற
கும்பாடிக் கோல்வளையாள்
நலம்பாடி நஞ்சுண்ட
வாபாடி நாள்தோறும்
அலம்பார் புனல்தில்லை
அம்லத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம்
தெள்ளேணம் கொட்டாமோ.
தெளிவுரை : இறைவனது மேன்மையைப் பாடி, அவன் தலையில் அணிந்து இருக்கிற கொக்கு இறகைப்பாடி, உமாதேவியின் ஆட்சி முறையைப் பாடி, சிவன் நஞ்சு அருந்தித் தியாகத்தை நிலை நாட்டியதைப் பாடித் தில்லைத் திருநடனத்தைப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.
12. திருச்சாழல் (தில்லையில் அருளிச் செய்யப்பட்டது)
சிவனுடைய காருணியம்
சாழல் என்பது ஒரு வகை மகளிர் விளையாட்டு. தடையும் தடைக்கு ஏற்ற விடையும் பாடுவது இதில் இடம் பெறுகிறது.
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா
255. பூசுவதும் வெண்ணீறு
பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால்
மறைபோலும் காணேடீ
பூசுவதும் பேசுவதும்
பூண்பதுவும் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும்
இயல்பானான் சாழலோ.
தெளிவுரை : பூசுவது வெண்ணீறு; அணிவது சீறுகிற பாம்பு; பேசுவது வேதம். தெய்வம் என்னும் ஒரு பொருளுக்கு இவையெல்லாம் பொருந்துமா? ஆம்; பொருந்தும். ஏனென்றால் ஈசன் தானே இயற்கையாகவும் அதில் உள்ள உயிர்கள் அனைத்துமாகவும் இலங்குகின்றான். அவனது இயல்பே இப்படி மூன்று விதங்களில் உருவகப்படுத்தி விளக்கப்பட்டிருக்கிறது.
256. என்னப்பன் எம்பிரான்
எல்லார்க்கும் தான்ஈசன்
துன்னம்செய் கோவணமாக்
கொள்ளுமது என்னேடீ
மன்னுகலை துன்னுபொருள்
மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச்
சாத்தினன்காண் சாழலோ.
தெளிவுரை : அனைத்திற்கும் ஈசன் என்று சொல்லுகின்றாய். அத்தகைய நிலையில் இருக்கிறவனுக்குத் தைத்த கந்தல் துணியைத் தவிர நல்ல கோவணம் கட்டுவதற்குக் கிடைக்கவில்லையா? அவனுக்குப் பொருள் செறிந்ததும் அழியாததும் ஆகிய வேதமே அரைஞாண் ஆகவும் கோவணமாகவும் அமைந்திருக்கிறது.
257. கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயும்இலி தந்தைஇலி தான்தனியன் காணேடீ
தாயும்இலி தந்தைஇலி தான்தனியன் ஆயிடினும்
காயில் உலகனைத்தும் கற்பொடிகாண் சாழலோ.
தெளிவுரை : குடியிருப்பது சுடுகாட்டில்; அணிவது புலித்தோல்; தாய் தந்தை இல்லாதவன் . ஒற்றையாள். இவனும் ஒரு தெய்வமா?
பிரபஞ்சம் அழியும் தன்மையுடையது என்பதைச் சுடுகாடு நினைவுக்குக் கொண்டு வருகிறது. ஆணவத்தை அழித்ததற்கு அறிகுறி கொல்புலித்தோல். அவன் பிறவாதவன், இறவாதவன், முழுமுதற் கடவுள். ஆதலால் அவன் தனியன். உலகம் இருப்பதும் போவதும் அவன் சங்கல்பத்தைப் பொறுத்திருக்கிறது.
258. அயனை அனங்கனை
அந்தகனைச் சந்திரனை
வயனங்கள் மாயா
வடுச் செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடைய
நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத்
தாழ்குழலாய் சாழலோ.
தெளிவுரை : பிரம தேவனையும், காமனையும், யமனையும், சந்திரனையும் சிவன் தாக்கிச் சிதைத்தான். அப்படி ஏற்பட்ட தழும்புகள் என்றைக்கும் மறைந்து பட்டுப் போகாத பழிச் சொற்களை அவர்கள் பால் கொண்டு வருவனவாயின. பரமன் இப்படிச் செய்தது நியாமா?
பரமன் முக்கண்ணன். அவனுடைய மூன்றாவது கண் அதீத நிலையைக் குறிக்கும் ஞானக்கண் ஆகிறது. பிரபஞ்சத்தில் உழலும் தேவர்கள் குறைபாடு உடையவர்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டுதற் பொருட்டுப் பரமன் அன்னவர்களைத் தண்டித்தார். தாங்கள் திருந்தியமையத் தீர்மானம் செய்து கொண்டதே தேவர்களக்கு வெற்றியாகும்.
259. தக்கனையும் எச்சனையும்
தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்ததுதான் என்னேடீ
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்தருளி அருள்கொடுத்தங்(கு)
எச்சனுக்கு மிகைத்தலைமற்(று)
அருளினன்காண் சாழலோ.
தெளிவுரை : எஜமானனாகிய தட்சனைத் தலையறுத்துத் தேவர்கள் எல்லாரையும் கூட்டமாக அழித்தது நியாமா? தேவர்களைக் கூட்டமாக அழிக்க வேண்டியது அவசியமாயிற்று. தட்ச பிரஜாபதிக்கு ஆட்டுத்தலையை ஒட்டவைத்தததும் நியதியே.
260. அலரவனும் மாலவனும்
அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற
நின்றதுதான் என்னேடீ
நிலமுதற்கீழ் அண்டமுற
நின்றிலனேல் இருவரும்தம்
சலமுகத்தால் ஆங்காரம்
தவிரார்காண் சாழலோ.
தெளிவுரை : சோதிப் பிழம்பாய்த் தென்பட்ட சிவனாரின் அடிமுடி காணத் திருமாலும் நான்முகனும் முயன்று தோல்வி யடைந்தனர் என்பது புராணக்கதை. இதற்கு வாச்சியார்த்தம் பண்ணலாகாது. ஏனென்றால் ஒரு தத்துவத்தை விளக்குவதற்கு என்று அமைந்த கதையாகிறது இது. படைத்தல் காத்தல், அழித்தல் ஆகிய மூன்று கிருத்தியங்களைச் செய்கிறவர்கள் ஜீவபோதம் அடைவது இயற்கை. அவ்வாறு அகங்காரம் படைத்தவர்கள் பரம்பொருளுக்கு அடங்க வேண்டிய நிலையை இது குறிக்கிறது.
261. மலைமகளை ஒருபாகம்
வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையில்
பாயுமது என்னேடீ
சலமுகத்தால் அவன்சடையில்
பாய்ந்திலனேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து
பெருங்கேடாம் சாழலோ.
தெளிவுரை : சிவனும் சக்தியும் ஒன்று. அந்த ஒரே பராசக்தியானது பிரபஞ்ச நடைமுறையில் பலசக்திகளாகப் பரிணமிக்கிறது. கங்காநதி அத்தகைய சக்திகளுள் ஒன்று. இமாசலமே சிவனாரது ஜடாபாரமாகக் கருதப்படுகிறது. அங்கே விழுகிற பனிக் கட்டியை யெல்லாம் அது தாங்கியிருந்து சிறிது சிறிதாக உருகிக் கீழே வரவிடுவதால் கங்கையின் பாய்ச்சல் நிலவுலகிற்கு நன்கு பயன்படுகிறது. அப்படி அல்லாமல் நீர் முழுவதும் ஒன்று சேர்ந்து வந்தால் நாட்டுக்குப் பெரு நஷ்டமாகும்.
262. கோலாலம் ஆகிக்
குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான்
அவன்சதுர்தான் என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல்
அன்(று)அயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவர்எல்லாம்
வீடுவர்காண் சாழலோ.
தெளிவுரை : புராணத்தில் சொல்லி வைத்துள்ள இந்த நிகழ்ச்சி யாண்டும் நிலவுலகில் நடைபெற்று வருகிறது. வாழ்ந்து வரும் மனிதன் நவதுவாரங்கள் வாயிலாக நஞ்சை வெளிப்படுத்தி வருகிறான். இயற்கை மயமாயுள்ள இறைவன் அந்த விஷயத்தை வாங்கி அமிர்தமாக மாற்றித் தருகிறான். அவன் அப்படிச் செய்யாவிட்டால் உயிர்கள் அனைத்தும் அழிந்து போகும்.
263. தென்பால் உகந்தாடும்
தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பால் உகந்தான்
பெரும்பித்தன் காணேடீ
பெண்பால் உகந்திலனேல்
பேதாய் இருநிலத்தோர்
விண்பால் யோ(கு) எய்தி
வீடுவர்காண் சாழலோ.
தெளிவுரை : யாண்டும் சுத்த சிவமாய் இருக்கிறவன் ஏன் மாது ஒரு பாகம் ஆகியிருக்கிறான்? சிவம் சக்தியாகப் பரிணமிக்கிக்கா விட்டால் ஜகத்தும் ஜீவர்களும் தோற்றத்துக்கு வரமாட்டார்கள்.
264. தான் அந்தம் இல்லான்
தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்(து)
அழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத்(து)
அழுத்துவித்த திருவடிகள்
வான்உந்து தேவர்கட்(கு)ஓர்
வான்பொருள்காண் காணேடீ.
தெளிவுரை : சிவன் அண்ட வஸ்து. ஆயினும் அவன் ஜீவர்கள் உள்ளத்தில் ஆனந்த சொரூபமாகத் திகழ்கிறான். எனினும் அவன் பண்பட்ட இந்திரியங்களுக்கும் எட்டாதவன்.
265. நங்காய்இ(து) என்னதவம்
நரம்போ(டு) எலும்(பு)அணிந்து
கங்காளம் தோள்மேலே
காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள்
காலாந் தரத்திருவர்
தம்காலம் செய்யத்
தரித்தனன்காண் சாழலோ.
தெளிவுரை : கோர தவசியாகிய சிவபெருமான் எலும்பை நரம்பில் கோத்து அணிந்திருப்பவன் மூலம் தனது பற்றற்ற நிலையை விளக்குகிறார். பிரம்மா விஷ்ணுவாகிய தேவர்களே ஜீவபோதம் எய்துங்கால் அவர்கள் காலத்துக்கு இரையாகி மூலப் பிரகிருதியில் ஒடுங்குகின்றனர் என்னும் கோட்பாட்டை, அவர் தோளில் சுமக்கும் கங்காளம் காட்டித் தருகிறது. ஜீவபோதம் யாருக்கும் உதவாது என்பதைச் சிவபெருமானது இக் கோலம் வலியுறத்துகிறது.
266. கான்ஆர் புலித்தோல் உடைதலையூண் காடுபதி
ஆனால் அவனுக்(கு)இங்(கு) ஆட்படுவார் ஆரேடீ
ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும்
வான்நாடர் கோவும் வழியடியார் சாழலோ.
தெளிவுரை : அநித்திய மாகிய பிரபஞ்சத்தில் எதையும் சொந்தம் பாராட்டாதே என்பதற்கு அறிகுறியாகப் புலித்தோல் உடை, கபாலம் உண்கலம், சுடுகாடு குடியிருப்பு ஆகின்றன. ஆயினும் சிவபெருமான் பரவஸ்து. ஆகையால் மற்றெல்லாரும் அவருக்குப் பரம்பரையாக அடிமைகள் ஆகின்றனர்.
267. மலைஅரையன் பொற்பாவை
வாள்நுதலாள் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான்
என்னும் அது என்னேடீ
உலகறியத் தீவேளாது
ஒழிந்தனனேல் உலகனைத்தும்
கலைநவின்ற பொருள்கள்எல்லாம்
கலங்கிடும்காண் சாழலோ.
தெளிவுரை : பார்வதி தேவி தென்முனையில் தவங்கிடந்து சிவனை மணந்து கொண்டான். இது ஜடாசக்தி சிவ சக்தியாகப் பரிணமிப்பதன் உருவகமாம். ஜடமாயும் சேதனமாயும் இருப்பது சிவசக்தி. உலகனைத்தும் சிவ சக்தியின் விளக்கமாம். சக்திக்குச் சிவம் ஆதாரம் ஆகாவிடில் இயற்கையில் ஒழுங்குப் பாடு அழிந்து பட்டுப் போகும்.
268. தேன்புக்க தண்பணைசூழ்
தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம்
பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம்
பயின்றிலனேல் தரணிஎல்லாம்
ஊன்புக்க வேல்காளிக்கு
ஊட்டாம்காண் சாழலோ.
தெளிவுரை : சிவ சைதன்யம் அனைத்திலும் ஊடுருவிப் பாய்ந்திருப்பதே சிவத் தாண்டவம். அது இல்லையெனில் பிரபஞ்சமே சூன்யமாகிவிடும்.  உலக இயக்கத்திற்கு அவனுடைய திரு நடனம் இன்றியமையாதது என்பது பெறப்படுகிறது.
269. கடகரியும் பரிமாவும்
தேரும்உகந்து ஏறாதே
இடபம்உகந்(து) ஏறியவாறு
எனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றும்
தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான்
திருமால்காண் சாழலோ.
தெளிவுரை : சத்துவம், இராஜகம், தாமசம் ஆகிய திரிபுரங்கள் நிலை பெற்றிருங்குங்கால் உயிர்கள் அனைத்தும் ஈசனுக்கு வாகனங்களே. திரிகுணாதீதத்தில் மெய்ப்பொருள் ஒன்றே மிச்சம். அதைச் சங்கரன் என்றும் சொல்லலாம். நாராயணன் என்றும் சொல்லலாம். அதீதத்தில் சங்கரனும் நாராயணனும் ஒன்று என்னும் கோட்பாடு ஈண்டு உருவகப் படுத்தப்பட்டுள்ளது.
270. நன்றாக நால்வர்க்கும்
நான்மறையின் உட்பொருளை
அன்(று)ஆலின்கீழ் இருந்தங்(கு)
அறம்உரைத்தான் காணேடீ
அன்(று)ஆலின்கீழ் இருந்தங்(கு)
அறம்உரைத்தான் ஆயிடினும்
கொன்றான்காண் புரம்மூன்றும்
கூட்டோடே சாழலோ.
தெளிவுரை : ஆலமரம் பிரபஞ்சத்தின் சின்னம். சகுண பிரம்மம் அல்லது நடராஜா பிரபஞ்சத்தில் வியாபித்திருந்து உலக நடை முறையை விளக்குகிறார். அது அறம் எனப்படுகிறது. ஆனால் முப்புரம் எரித்தல் பிரபஞ்சத்தின் ஒடுக்கம். பிறகு அதீதத்தில் உள்ள சிதம்பர ரகசியம் என்பது நிர்க்குண பிரம்மம். அது அறத்திற்கு அப்பாற்பட்டது.
271. அம்பலத்தே கூத்தாடி
அமுதுசெயப் பலிதிரியும்
நம்பனையும் தேவனென்று
நண்ணுமது என்னேடீ
நம்பனையும் ஆமாகேள்
நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசாஎன்(று)
ஏத்தினகாண் சாழலோ.
தெளிவுரை : கூத்தாடுகிறான். ஆனால் ஒன்றும் சம்பாதிக்க இயலாதவனாய் பிச்சை தேடித் திரிகிறான். அத்தகைய சிவனைத் தலைவன் என்று அணுகுதல் பொருந்துமா? அண்டங்கள் அனைத்துக்கும் அவன் ஈசன். அதற்கிடையில் ஒழுங்காக நடத்தி வைப்பது அவனது கூத்து. அதற்கிடையில் தனது என்று உரிமை பாராட்டாமல் இருப்பது அவனது மகிமை. மக்கள் அவன் போன்று இருக்கவேண்டும் என்பது கோட்பாடு.
272. சலமுடைய சலந்தரன்தன்
உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்(கு)அன்(று)
அருளியவா(று) என்னேடீ
நலமுடைய நாரணன்தன்
நயனம்இடந்(து) அரன்அடிக்கீழ்
அலராக இடஆழி
அருளினன்காண் சாழலோ.
தெளிவுரை : சலந்தரன் என்னும் பெருங்கோபியான அசுரனைச் சிவபெருமான் சக்கராயுதத்தால் அழித்தார். அந்தச் சக்கரம் தமக்கு வேண்டுமென்று திருமால் தம் கண்ணைப் பிடுங்கிப் பூவாகச் சிவன் பாதத்தில் சூட்டிச் சக்கரத்தைப் பெற்றார். சூலாயுதம் சக்கராயுதம் ஆகிய இரண்டும் பரம்பொருளின் தடஸ்த லட்சணத்தின் புறச் சின்னங்கள். ஆதலால் அரனும் அரியும் ஒன்று என்னும் தத்துவம் வெளியாகிறது. பெறுதற்கரிய பொருள் ஒன்றைப் பெறுதற்குக் கண்ணை ஈடு கொடுப்பது போன்று சிரமம் எடுத்துக் கொள்வது அவசியம்.
273. அம்பரமாம் புள்ளித்தோல்
ஆலாலம் ஆர்அமுதம்
எம்பெருமான் உண்டசதுர்
எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுஉடுத்துஅங்(கு)
ஏதுஅமுது செய்திடினும்
தம்பெருமை தானறியாத்
தன்மையன்காண் சாழலோ.
தெளிவுரை : பரமனே பிரபஞ்சத்தில் அனைத்துமாக இருக்கிறான். ஆதலால் எதை வேண்டுமானாலும் அவனுடைய ஆடை எனலாம். பாம்பின் பல்லில் நஞ்சு இருப்பது போன்று பிரபஞ்சத்திலுள்ள நலம் கேடு அனைத்தும் அவன் மயம். அந்நிலையில் விஷம் அவனுக்கு அமிர்தம் ஆவதில் வியப்பு ஒன்றும் இல்லை. அவன் மகிமை முழுவதும் அவனுக்கே தெரியாது என்றால் இனி அதை முற்றும் அறிவார் யார்?
274. அருந்தவருக்(கு) ஆலின்கீழ்
அறம்முதலா நான்கனையும்
இருந்துஅவருக்(கு) அருளும்அது
எனக்கறிய இயம்பேடீ
அரும்தவருக்(கு) அறமுதல்நான்(கு)
அன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக்(கு) உலகியற்கை
தெரியாகாண் சாழலோ.
தெளிவுரை : பிரபஞ்சமாயிருந்து இறைவன் இடையறாது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருட்களை விளக்கிக் கொண்டே இருக்கிறார். மக்களது பரிபாகத்துக்கு ஏற்ப அக்கோட்பாடுகள் அவர்களுக்கு விளங்குகின்றன. ஆலமரம் இயற்கைக்குச் சின்னமாகிறது.
13. திருப்பூவல்லி (தில்லையில் அருளிச் செய்யப்பட்டது)
மாயா விஷயம் நீக்குதல்
மாணிக்கவாசகர் திருத்தில்லையில் எழுந்தருளியிருந்த போது வில்லேர் புருவ நல்லாராம் மகளிர் அஞ்செழுத்தும் நெஞ்சு எண்ணப் பூம்பொழிலில் பூக்கொய்வதனைக் கண்டருளினார். அந்நல்லார் கூற்றாகத் திருப்பூவல்லி என்ற இதனை அருளிச் செய்தார்.
நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா
275. இணையார் திருவடி
என்தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள்
அத்தனையும் துறந்தொழிந்தேன்
அணையார் புனல்தில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : விழித்துக் கொண்டவுடன் கனவில் சொந்தம் பாராட்டி யவைகளிடத்தில் வைத்திருந்த பற்றுதல் அறவே அகலுகிறது. அங்ஙனம் சிவஞானம் வந்ததும் மாயா காரியங்களாகிய உலகப் பற்றுக்கள் எல்லாம் தாமே மறைந்து போகின்றன.
276. எந்தைஎம் தாய்சுற்றம்
மற்றுமெல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்தென்னை
ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில்
ஆனந்தத் தேன்இருந்த
பொந்தைப் பரவிநாம்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : இருதய கமலத்தில் உள்ள பரமானந்தப் பரமனைச் சுவானுபூதியில் உணருங்கால் உலகப் பற்றுக்கள் எல்லாம் தாமே பறந்தோடி விடுகின்றன.
277. நாயின் கடைப்பட்ட
நம்மையும்ஓர் பொருட்படுத்துத்
தாயின் பெரிதும்
தயாவுடைய தம்பெருமான்
மாயப் பிறப்பறுத்து
ஆண்டான்என் வல்வினையின்
வாயில் பொடியட்டிப்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : இறைவனுடைய பேரருள், தாயின் அன்பினும் மிகப் பெரியது. அவன் அருளால் ஞானம் வாய்க்கிறது. ஞானோதயத்தில் கர்மங்கள் எல்லாம் சென்று ஒழிகின்றன. பிராரப்த கர்மம் எஞ்சியிருக்கிறது. எனினும் அது உடலுக்கு ரியதே யொழிய உள்ளத்தைத் தொடுவதில்லை.
278. பண்பட்ட தில்லைப்
பதிக்கரசைப் பரவாதே
எண்பட்ட தக்கன்
அருக்கன்எச்சன் இந்துஅனல்
விண்பட்ட பூதப்
படைவீர பத்திரரால்
புண்பட்ட வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : அலங்கரிக்கப் பெற்ற தில்லை நாதனைப் போற்றாமல் மதிப்புப் பெற்ற தக்கன், சூரியன், சந்திரன், அக்கினிதேவன் ஆகியோர் தக்கனது யாக சாலையில் பூதப் படை வீரராகிய வீர பத்திரரால் துன்பப்பட்டதைப் பாடி மலர் கொய்வோமாக. தேவர்களது வாழ்க்கையும் மாயா சக்தியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கின்றது. அந்நிலையில் உள்ள அன்னவர்கள் இறைவனது அருளைப் புறக்கணித்து, போக வாழ்வு வாழ முயன்றால் அவர்கள் துன்பத்துக்கு ஆளாவார்கள்.
279. தேன்ஆடு கொன்றை
சடைக்கணிந்த சிவபெருமான்
ஊன்நாடி நாடிவந்(து)
உள்புகுந்தான் உலகர்முன்னே
நான்நாடி ஆடிநின்று
ஓலமிட நடம்பயிலும்
வான்நாடர் கோவுக்கே
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : உலகறிய சிவன் என்னை ஆட்கொண்டான். அதன் விளைவாக சிவபோதம் என்னுள் தலையெடுத்தாட, நான் அவனையே நாடியும் விண்ணப்பித்தும் நிற்கிறேன்.
280. எரிமூன்று தேவர்க்கு
இரங்கியருள் செய்தருளிச்
சிரமூன்(று) அறத்தன்
திருப்புருவம் நெரித்தருளி
உருமூன்றும் ஆகி
உணர்வரிதாம் ஒருவனுமே
புரமூன்(று) எரித்தவா
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : ஜீவாத்மாக்களைப் பக்குவப் படுத்துதற் பொருட்டு, சிவபெருமான் வேள்வித் தீ, சுடலைத் தீ, ஞானத் தீ ஆகிய மூன்று நெருப்புக்களை நிலைபெற்றிருக்கச் செய்துள்ளார். அவர் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஆகிய மும்மூர்த்திகளாகி அவர்களுக்கு அப்பாலும் இருக்கிறார். அப்பரமன் முப்பாழ் ஆகிய மூன்று குணங்களை அழிக்கின்ற போது நனவு, கனவு, உறக்கம் ஆகிய மூன்று அவஸ்தைகளும் அடிபட்டுப் போகின்றன.
281. வணங்கத் தலைவைத்து
வார்கழல்வாய் வாழ்த்தவைத்(து)
இணங்கத்தன் சீர்அடியார்
கூட்டமும்வைத்(து) எம்பெருமான்
அணங்கொ(டு) அணிதில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கூரப் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : ஜீவாத்மாவுக்கு இந்திரியங்கள் அமைந்திருப்பதும், நல்லார் இணக்கம் வாய்ப்பதும், அம்மையப்பன் மயமாய் உலகம் திகழ்வதும் ஆகிய எல்லாம் இறைவனுடைய மகிமைகளை ஏராளமாகப் போற்றுதல் பொருட்டே யாம்.
282. நெறிசெய் தருளித்தன்
சீரடியார் பொன்னடிக்கே
குறிசெய்து கொண்டென்னை
ஆண்டபிரான் குணம்பரவி
முறிசெய்து நம்மை
முழுதுடற்றும் பழவினையைக்
கிறிசெய்த வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : இறைவன் எனக்கு நல்வழியை வகுத்துள்ளான். பக்தருக்குப் பணிவிடை செய்வதை லட்சியமாக்கினான். தன் குண விசேஷங்களைப் புகழ்வதற்கு என்னை அடிமையாக்கினான். துன்புறுத்தும் பழவினையை அவன் பொய்யாக்கினான். பக்தனுக்கு முற்றிலும் அனுகூலமாகவே மாயை இயங்குகிறது.
283. பன்னாள் பரவிப்
பணிசெய்யப் பாதமலர்
என்ஆகம் துன்னவைத்த
பெரியோன் எழிற்சுடராய்க்
கல்நார் உரித்தென்னை
ஆண்டுகொண்டான் கழல்இணைகள்
பொன்னான வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : எந்நாளும் போற்றிப் பணிவிடை செய்ய அவன் தனது திருவடியை என் மனத்தில் பொருந்த வைத்தான். அவனது சேர்க்கையால் கல்போன்ற என் மனம் பக்குவம் அடைந்தது. பூரணனான அவன் என்னைப் பூரணன் ஆக்க வல்லவன்.
284. பேராசை யாம்இந்தப்
பிண்டமறப் பெருந்துறையான்
சீரார் திருவடி
என்தலைமேல் வைத்தபிரான்
காரார் கடல்நஞ்சை
உண்டுகந்த காபாலி
போரார் புரம்பாடிப்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : ஆசையின் விளைவு உடல் வாழ்க்கை. உடல் உணர்வை வெல்லுவது குறிக்கோள். சிவன் நஞ்சுண்ட கோட்பாட்டையும், முப்புரம் எரித்த கோட்பாட்டையும் அனுஷ்டிப்பது உடல் உணர்வை வெல்லுவதற்கு உற்ற உபாயமாம்.
285. பாலும் அமுதமும்
தேனுடனாம் பராபரமாய்க்
கோலம் குளிர்ந்துள்ளம்
கொண்டபிரான் குரைகழல்கள்
ஞாலம் பரவுவார்
நன்னெறியாம் அந்நெறியே
போலும் புகழ்பாடிப்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : வடிவங்களையெல்லாம் கடந்தவன் இனிய வடிவு எடுக்கவும் செய்கிறான். நல்லார் அவனைப் போற்றும் விதத்தில் நாமும் போற்றுவோம்.
286. வானவன் மாலயன்
மற்றுமுள்ள தேவர்கட்கும்
கோனவனாய் நின்று
கூடல்இலாக் குணக்குறியோன்
ஆன நெடுங்கடல்
ஆலாலம் அமுதுசெய்யப்
போனகம் ஆனவா
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : மாயையோடு சம்பந்தப்பட்டவர் யாருக்குமே எட்டாதவன் சிவன். மாயையில் உள்ள கேடுகளை யெல்லாம் அவன் நலமாக்க வல்லவன்.
287. அன்றுஆல நீழற்கீழ்
அரு மறைகள் தானருளி
நன்றாக வானவர்
மாமுனிவர் நாள்தோறும்
நின்றார ஏத்தும்
நிறைகழலோன் புனைகொன்றைப்
பொன்தாது பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை :  அவன் மாயா சகிதனாய், சகுண பிரம்மமாய் இருப்பதைச் சான்றோர் அனைவரும் சர்வ காலமும் நிரம்பப் போற்றிய வண்ணமாய் இருக்கின்றனர்.
288. படமாக என்னுள்ளே
தன் இணைப்போ(து) அவைஅளித்திங்(கு)
இடமாகக் கொண்டிருந்த
ஏகம்பம் மேயபிரான்
தடமார் மதில்தில்லை
அம்பலமே தான்இடமா
நடமாடு மாபாடிப்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : வரைந்த சித்திரம் போன்று வனப்பு வாய்ந்த இறைவன் என் உள்ளத்தில் வீற்றிருக்கிறான்.
289. அங்கி அருக்கன்
இராவணன்அந் தகன்கூற்றன்
செங்கண் அரிஅயன்
இந்திரனும் சந்திரனும்
பங்கமில் தக்கனும்
எச்சனும்தம் பரிசழியப்
பொங்கியசீர் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : அக்கினிதேவன், சூரியன், இராவணன், அந்தகன் என்னும் அசுரன், இயமன், சிவந்த கண்களையுடைய திருமால், பிரமன், இந்திரன், சந்திரன், அழிவற்ற தக்கன் யாகத்தை நடத்திய எச்சன் என்னும் புரோகிதன் ஆகியோருடைய தன்மை அழியுமாறு கோபித்த இறைவனது சிறப்பைப் பாடிப் பூக் கொய்வோமாக.
290. திண்போர் விடையான்
சிவபுரத்தார் போர்ஏறு
மண்பால் மதுரையில்
பிட்டமுது செய்தருளித்
தண்டாலே பாண்டியன்
தன்னைப் பணிகொண்ட
புண்பாடல் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : திண்ணிய போர்த்தொழில் வல்லவன்; காளை வாகனத்தை உடையவன்; சிவபுரத்தாருடைய சிங்கம் போன்ற தலைமை பெற்றிருப்பவன்; பூமியில்  மதுரையில்  கூலியாளாக வந்து பிட்டு வாணிச்சியிடம் பிட்டு வாங்கித் தின்று பாண்டியனிடம் பிரம்படிபட்டவனுடைய திறம் பாடிப் பூக்கொய்வோமாக.
291. முன்னாய மால்அயனும்
வானவரும் தானவரும்
பொன்னார் திருவடி
தாம் அறியார் போற்றுவதே
என்ஆகம் உள்புகுந்(து)
ஆண்டுகொண்டான் இலங்கணியாம்
பன்னாகம் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : மற்ற ஜீவர்களுக்கெல்லாம் முன்பே தோன்றிய திருமால், பிரமன், தேவர்கள், அசுரர்கள் ஆகியோர் இறைவனது பொன் போன்ற திருவடியைக் காணாதவரேயாவர். என் உள்ளத்தில் புகுந்து என்னை ஆண்டு கொண்டவனை அகத்தில் வைத்து வழுத்தினால் அவனை அடைதல் எளிது.
292. சீரார் திருவடித்
திண்சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத ஆசையதாய்
அடியேன் அகமகிழத்
தேரார்ந்த வீதிப்
பெருந்துறையான் திருநடம்செய்
பேரானந் தம்பாடிப்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : சிறப்புப் பொருந்திய உன் பாதச் சிலம்பின் ஓசையைக் கேட்டு அருள் தாகம் கொண்டு அகமகிழ்ந்தேன். தேர் ஓடுகின்ற அகன்ற வீதிகளையுடைய திருப் பெருந்துறையில் திரு நடனம் செய்கின்ற பெருமானது பேரானந்தத்தைப் பாடிப் பூக் கொய்வோமாக.
293. அத்தி உரித்(து)அது
போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவுகொண்(டு)
இவவுலகில் பிள்ளையுமாய்
முத்தி முழுமுதல் உத்
தரகோச மங்கைவள்ளல்
புத்தி புகுந்தவா
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியிருக்கும் திருப் பெருந்துறையின் மீது பக்தி கொண்டவர்கள் முத்திக்கு முழுமுதலாகிய உத்தர கோச மங்கையில் கோயில் கொண்டிருக்கும் பிரான் மீது பித்துக் கொள்வார்கள். அவர்களின் விவேகத்தைப் பாடிப் பூக் கொய்வோமாக.
294. மாஆர ஏறி
மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலம்
திகழப் பெருந்துறையான்
கோஆகி வந்துஎம்மைக்
குற்றேவல் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப்
பூவல்லி கொய்யாமோ.
தெளிவுரை : தெய்வத்தன்மை பொருந்திய குதிரைத் தலைவனாகச் சிவபெருமான் மதுரையில் எழுந்தருளி நம்மை ஆட்கொண்டான். அவனுடைய திருவடி மலரைப் போற்றிப் பூக் கொய்வோமாக.
14. திருவுந்தியார் (தில்லையில் அருளிச் செய்யப்பட்டது)
ஞானவெற்றி
உந்தி பறத்தல் என்பது மகளிர் விளையாட்டுக்களுள் ஒன்று.
கலித்தாழிசை
295. வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீ பற
ஒருங்குடன் வெந்தவா(று) உந்தீ பற.
தெளிவுரை : தோழி, சிவபெருமான் திரியும் புரங்களாகிய முப்புரத்தையும் அவற்றுள் அரக்கர் செய்யும் கொடுமைகளையும் நோக்கி, அவற்றை அழிக்கத் திருவுளங் கொண்டனன். உடனே பொன் மலையாகிய மேரு மலைவில்லாக வளைந்து அவர்தம் திருக் கையினிடத்து வந்து சேர்ந்தது. போரும் விளைந்தது. முப்புரங்களும் சிதறுண்டு அழிந்தன. எனப்பாடி உந்திப் பறந்து விளையாடுவோமாக. முப்புரங்களாகிய மூன்று மதில்களும் ஒருங்கு வெந்து ஒழிந்தன என்று பாடி ஆடுவோமாக.
296. ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற.
தெளிவுரை : காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் ஏகம்பர் எனப்படுவார். அவர் திருக்கரத்தில் இரண்டு அம்புகள் காணப்படவில்லை. உள்ளது ஓரம்பே யாகும். அந்த ஓர் அம்பும் அவருக்குப் பயன்படவில்லை. முப் புரங்கள் வெப்புறும்படி சிரித்தார் ஆதலின், எனவே அந்த அம்பு அவருக்குப் பாரமாயிற்று. இந்த அருளிப் பாட்டினைப்பாடி உந்தி பறந்து விளையாடுவோமாக.
297. தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு முறிந்ததென்(று) உந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற.
தெளிவுரை : விண்ணவர் தச்சுத் தொழிலால் அமைத்த தேரினைக் கொண்டு வந்து சிவபெருமான் முன் நிறுத்தினர். தேரில் ஏறிக் கொள்ளுமாறு வேண்டினர். அவர்களின் வேண்டுகோளின்படி அத்தேர்மீது திருவடி வைத்தவுடன் அத்தேரின் அச்சு முறிந்தது. வேறு தேர் இன்றியே முப்புரம் எரிந்த தென்று உந்தீபற.
298. உய்யவல் லார்ஒரு மூவரைக் காவல்கொண்(டு)
எய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கன்என்(று) உந்தீபற.
தெளிவுரை : பிழைக்க வல்லவராய் இருந்த மூன்று அரக்கர்களையும் கயிலைக்குத் துவார பாலகர்களாகச் செய்தான் சிவன். உமாதேவி சமேதன் முப்புரங்களை அம்பால் எரிக்க வல்லவன். அவரது புகழ்பாடி உந்தீபற.
299. சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக்(கு) உந்தீபற.
தெளிவுரை : வீரபத்திரராலும் பத்திரகாளியாலும் தக்கன் வேள்வி அழியுமாறு மோதப்பட்டது. தேவர்கள் தப்பி ஓடினார்கள். அந் நிகழ்ச்சியைப் பாடி உந்தீபற. உருத்திரர்களுக்குத் தலைவனைப் பாடி உந்தீபற.
300. ஆஆ திருமால் அவிப்பாகம் கொண்டன்று
சாவா திருந்தான்என்(று) உந்தீபற
சதுர்முகன் தாதையென்(று) உந்தீபற.
தெளிவுரை : நான்முகக் கடவுளும், அவருடைய தந்தையாகிய திருமாலும் வேள்வியில் கலந்திருந்தும் சாகவில்லை. (இவர்கள் இருவரும் அந்த யாகத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறுவாரும் உளர்)
301. வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான்என்(று) உந்தீபற
கலங்கிற்று வேள்வியென்(று) உந்தீபற.
தெளிவுரை : வெப்பமுடைய அக்கினி தேவன் அவியுண்ண வளைத்த கையைச் சிவன் வெட்டினான். வேள்வியும் கலங்கிற்று என்று அவரது புகழ்பாடி உந்தீ பற. (இந்தப் பதிகத்தில் வரும் மகுடத்தை ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் தேர்த்து வாசித்துக் கொள்ளவும்)
302. பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்ப(து)என் னேஏடி உந்தீபற
பனைமுலை பாகனுக்(கு) உந்தீபற.
தெளிவுரை : பார்வதி தேவியைப் பகைத்துப் பேசினான் தட்சன். அவனை உயிரோடு வைத்துப் பார்ப்பதில் சிவனுக்கு என்ன பயன்? பார்வதி சமேதனைப் புகழ்ந்து பாடி உந்தீபற.
303. புரந்தர னார்ஒரு பூங்குயி லாகி
மரந்தனில் ஏறினார் உந்தீபற
வானவர் கோன்என்றே உந்தீபற.
தெளிவுரை : தேவர்களுக்கு அரசனாகிய இந்திரன், யாகத்தை யழித்த வீரபத்திரருக்கு அஞ்சி, ஒரு குயிலின் வடிவம் எடுத்து ஒரு மரத்தின் மேல் ஏறினான்.
304. வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற.
தெளிவுரை : வியாத்திரனார்  வேள்வி செய்யும் புரோகிதர்; துஞ்சினவா அழிந்த விதத்தைப் பாடி உந்தீபற. கடுஞ் சினத்தை உடையவன் வேள்வியை நடாத்தினான். அவனது தலை போயிற்று. இதை அறிதல் பிறப்பை ஒழிப்பதற்கு உபாயம்.
305. ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின்(று) உந்தீபற.
தெளிவுரை : தலையை இழந்த தட்சனுக்கு ஆட்டின் தலையைப் பொருத்தி வைக்க வேண்டியதாயிற்று. யாகத்திற்குப் பலிகொடுத்த ஆட்டின் தலை அங்கு எஞ்சி நின்றது. சந்தர்ப்பத்திற்கு அது உதவியது.
306. உண்ணப் புகுந்த பகன்ஒளித்(து) ஓடாமே
கண்ணைப் பறித்தவா(று) உந்தீபற
கருக்கெட நாம்எலாம் உந்தீபற.
தெளிவுரை : உண்ணவந்த சூரியன் கண்ணை இழந்தான். ஆகையால் அவன் ஓட முடியவில்லை. உட்பொருளை அறிதல் பிறப்பை ஒழிக்க உபாயமாகும்.
307. நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம்நெரித்(து) உந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற.
தெளிவுரை : சரஸ்வதி மூக்கை இழந்தார். பிரம்ம தேவனுக்குத் தலை போயிற்று. சந்திரனது முகம் தேய்த்து அழிக்கப்பட்டது. நமது பழவினை கெட இந் நிகழ்ச்சிகளை அறிதல் வேண்டும்.
308. நான்மறை யோனும் மகத்(து)இய மான்படப்
போம்வழி தேடும்ஆறு உந்தீபற
புரந்தரன் வேள்வியில் உந்தீபற.
தெளிவுரை : பிரம்ம தேவனும் யாகாதி பதியாகிய தட்சனும் இறந்து விழுந்தார்கள். இந்திரனோ ஓடிப் போகும் வழியைத் தேடினான்.
309. சூரிய னார்தொண்டை வாயினில் பற்களை
வாரி நெரித்தவா(று) உந்தீபற
மயங்கிற்று வேள்வியென்(று) உந்தீபற.
தெளிவுரை : சூரியனாருடைய பற்கள் தகர்த்து உதிர்க்கப்பட்டன. யாகமானது கலக்கத்தையடைந்தது.
310. தக்கனார் அன்றே தழையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின்(று) உந்தீபற
மடிந்தது வேள்வியென்(று) உந்தீபற.
தெளிவுரை : தட்சன் தன் மக்களால் சூழப்பட்டிருந்தும் தலையிழந்தான். அவனது வேள்வியும் அழிந்தது. அறத்திற்கு மாறுபட்டுச் செய்யப்படும் செயல்கள் தட்சனது யாகம் போல் அழிந்து போகும். ஆனால் ஞான நெறியில் செல்வார்க்கு இக் கேடுகள் விளைவதில்லை.
311. பாலக னார்க்(கு)அன்று பாற்கடல் ஈந்திட
கோலச் சடையற்கே உந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற.
தெளிவுரை : முருகனுடைய தந்தையாகிய சிவபெருமான் முனிபாலகன் உப மன்யுவுக்கு வேண்டியவாறு பால் கொடுத்தருளினார். தம்முடைய தேவைகள் எல்லாம் பரமனிடத்திருந்தே வருகின்றன என்பதை ஞானியர் அறிகின்றனர்.
312. நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை அரிந்ததென்(று) உந்தீபற
உகிரால் அரிந்ததென்(று) உந்தீபற.
தெளிவுரை : பிரம்மாவின் ஐந்து தலைகளுள் ஒன்று சிவபெருமானது நகத்தால் விரைந்து கிள்ளி எடுக்கப்பட்டது. படைப்புக் கடவுளின் ஞானம் வரம்புக்கு உட்பட்டது என்பது கோட்பாடு.
313. தேரை நிறுத்தி மலைஎடுத் தான்சிரம்
ஈர்ஐந்தும் இற்றவா(று) உந்தீபற
இருபதும் இற்றதென்(று) உந்தீபற.
தெளிவுரை : மலை எடுத்தான்  இராவணன். பத்துத் தலைகளையும் இருபது கைகளையும் உடைய இராவணன் கயிலை மலையை எடுக்க முயன்றபோது அவன் நசுக்கப்பட்டான். இராவணன் மனோதத்துவத்துக்குப் புறச் சின்னமாகிறான். பரம் பொருளை அறிய மனத்துக்கு இயலாது என்பது இதன் பொருள்.
314. ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல்
ஆகாசம் காவலென்(று) உந்தீபற
அதற்கப்பாலும் காவலென்(று) உந்தீபற.
தெளிவுரை : ஏகாசம்  உத்தரீயம்; மேல் ஆடை. ஞானவான்களாகிய ரிஷிகளை இறைவன் அருள் யாண்டும் காப்பாற்றுகிறது. அஞ்ஞானத்தில் ஊறிய போக வாழ்வை ஒழிப்பதும், ஞானத்தில் ஊறிய யோக வாழ்வை உயர்த்துவதும் ஈசன் அருள்.
15. திருத்தோள் நோக்கம் (தில்லையில் அருளிச் செய்யப்பட்டது)
பிரபஞ்ச சுத்தி
மகளிர் ஒருவர் தோளை ஒருவர் அன்போடு நோக்கித் தொட்டும் தட்டியும் அகமகிழ்ந்து ஆடும் விளையாட்டாகும்.
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா
315. பூத்தாரும் பொய்கைப்
புனல் இதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும்
பேதைக் குணம் ஆகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை
அம்பலத்தே திருநடம்செய்
கூத்தாஉன் சேவடி
கூடும்வண்ணம் தோள்நோக்கம்.
தெளிவுரை : கானல் நீரைப் பூ நிறைந்த பொய்கை நீர் எனக்கருதி அதில் நீர் மொள்ள மயக்கத்தில் உள்ளவர் முயலுகின்றனர். அந்த மயக்கம் எனக்கு இல்லாது நீக்கினாய் கூத்தப்பிரானே. நான் உன் திருவடியைச் சேர முயலுகின்றேன். பிரபஞ்சம் கானல் நீர் போன்று பொய்யானது. பரமனோ பொய்கைநீர் போன்றவன்.
316. என்றும் பிறந்(து)இறந்(து)
ஆழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவுஎறிந்
தான்பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை
அம்பலவன் குணம்பரவித்
துன்றார் குழலினீர்
தோள்நோக்கம் ஆடாமோ.
தெளிவுரை : கன்றால் விளவு எறிந்தவன்  கிருஷ்ணன். அவன் திருமாலின் அவதாரம். துன்று ஆர் குழலினீர்  நெருக்கமுள்ள கூந்தலையுடையீர் ! எந்நாளும் பிறவிக் கடலில் அழுந்தாமல் இறைவன் எம்மை ஆட் கொண்டான். அரியும் அயனும் அவனைக் காணமாட்டார்கள். அத்தகைய தில்லை அம்பலவானுடைய திவ்விய குணங்களைப் புகழ்ந்து தோள் நோக்கம் ஆடுவோம்.
317. பொருள்பற்றிச் செய்கின்ற
பூசனைகள் போல்விளங்கச்
செருப்புற்ற சீரடி
வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார்
சேடறிய மெய்குளிர்ந்தங்(கு)
அருள்பெற்று நின்றவா
தோள்நோக்கம் ஆடாமோ.
தெளிவுரை : கண்ணப்ப நாயனார் அங்கீகரிக்கப்பட்ட பூசைத் திரவியங்களைக் கொண்டு செய்கின்ற ஆசாரம் நிறைந்த பூசைகள் போல் தென்பட, செருப்பு அணிந்த சிறந்த பாதம், வாயாகிய நீர்ப்பாத்திரம் இறைச்சியாகிய படைப்புப் பொருள் இவைகளைக் கொண்டு செய்த பூசையை இறைவன் விரும்பி ஏற்றுக் கொண்ட வரலாற்றைப் புகழ்ந்து தோள் நோக்கம் ஆடுவோம்.
318. கற்போலும் நெஞ்சம்
கசிந்துருகக் கருணையினால்
நிற்பானைப் போலஎன்
நெஞ்சினுள்ளே புகுந்தருளி
நற்பால் படுத்தென்னை
நாடறியத் தான்இங்ஙன்
சொற்பால(து) ஆனவா
தோள்நோக்கம் ஆடாமோ.
தெளிவுரை : எனது கல்நெஞ்சை அவன் கசிந்து உருகப் பண்ணினான். கருணை கூர்ந்து என் எதிரில் காட்சியளித்தவன் போன்று தென்பட்டவன் நிலைத்து என் நெஞ்சில் குடி புகுந்துள்ளான். நான் நல் ஒழுக்கத்தில் நிலைபெற்றிருக்க என்னைச் செய்துள்ளான். அவனை உலகத்தவர் அறிந்து கொள்ளும்படி சொல் ஓவியம் வரைய என்னை நியமித்துள்ளான்.
319. நிலம்நீர் நெருப்(பு)உயிர்
நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ(டு)
எண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்
உலகேழ் எனத்திசை
பத்தெனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா
தோள்நோக்கம் ஆடாமோ.
தெளிவுரை : உயிர் காற்று; பிராணவாயு; புலன் ஆய மைந்தனோடு அறிவு மயமான ஜீவாத்மாவோடு. ஈசன் ஒருவனே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் என்ற அஷ்ட மூர்த்தங்களாகவும், ஏழு உலகங்களாகவும், பத்துத் திக்குகளாகவும் இருக்கிறான். அவனைப் புகழ்ந்து பாடி ஆடுவோமாக.
320. புத்தன் முதலாய
புல்அறிவின் பல்சமயம்
தத்தம் மதங்களில்
தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
சித்தம் சிவமாக்கிச்
செய்தனவே தவமாக்கும்
அத்தன் கருணையினால்
தோள்நோக்கம் ஆடாமோ.
தெளிவுரை : புத்தன் முதலாகிய சமயவாதிகள் பலர் அறிவு குழம்பியவர்களாய் அவரவர் சமயங்களையே சிலாகிக்கும் தடுமாற்றம் உடையவர்களாய் இருக்கின்றனர். என் சித்தம் சிவமயமாய் தெளிந்துள்ளது. நான் செய்வதெல்லாம் சிவனுக்கு உரிய தவச் செயல். அவன் கருணையினால் இங்ஙனம் நான் தெளிந்துள்ளேன்.
321. தீதில்லை மாணி
சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன்
தாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன்
திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சென்று
பற்றினவா தோள்நோக்கம்
தெளிவுரை : மாணி  பிரம்மசாரி; தாதை  தந்தை. சேதிப்ப வெட்ட; சோறு  புண்ணியம். தண்டீசன் அல்லது சண்டேசுவர நாயனார் பிரம்மசாரியாக இருந்தார். அவர் செய்த சிவ கருமத்தைக் கெடுக்க ஒருவர் வந்தார். அவர் சாதியில் அந்தணர். முறைமையில் சொந்தத் தந்தை. அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் அவருடைய கால்கள் இரண்டையும் பிரம்மசாரி துண்டித்தார். அப்பாவப் செயல் புண்ணிய கர்மமாக அங்கீகரிக்கப்பட்டது. தண்டீசனுக்குச் சிவகதி வாய்த்தது. சிவ பூசையானது மகா பாவச் செயலையும் புண்ணியமாக மாற்றவல்லது.
322. மானம் அழிந்தோம்
மதிமறந்தோம் மங்கைநல்லீர்
வானம் தொழும்தென்னன்
வார்கழலே நினைந்துஅடியோம்
ஆனந்தக் கூத்தன்
அருள்பெறின்நாம் அவ்வணமே
ஆனந்தம் ஆகிநின்(று)
ஆடாமோ தோள்நோக்கம்.
தெளிவுரை : பக்தியின் மேலீட்டால் ஜாதி, குலம், கோத்திரம், என்னும் அபிமானத்தை நாம் கடந்து விட்டோம். உலகத்தவர்களது நடைமுறையைப் பற்றிய பேத புத்தியை நாம் மீறியிருக்கிறோம். ஆனந்தக் கூத்தனோடு நாம் ஒன்று பட்டிருக்கிறோம்.
323. எண்ணுடை மூவர்
இராக்கதர்கள் எரிபிழைத்துக்
கண்ணுதல் எந்தை
கடைத்தலைமுன் நின்றதன்பின்
எண்ணிலி இந்திரர்
எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால்பலர்
மாண்டனர்காண் தோள்நோக்கம்.
தெளிவுரை : திரிபுர தகனம் ஆனபிறகு அவைகளை ஆண்ட அரக்கர் மூவரும் கயிலைக்குத் துவாரபாலகர் ஆயினர். அதன் பிறகு இந்திரர்களும் பிரம்மாக்களும் எத்தனையோ போர் தோன்றி மறைந்தனர். பரப்பிரமத்துக்கு மற்றொரு பெயர் மகாவிஷ்ணு. சங்கரனும் நாராயணனும் ஒன்றே. அத்தகையவனுக்குத் தோற்றமும் மறைவும் இல்லை. இது வஸ்துவைப் பற்றிய தத்துவம்.
324. பங்கயம் ஆயிரம்
பூவினில்ஓர் பூக்குறையத்
தங்கண் இடந்(து)அரன்
சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான்
சக்கரமாற்(கு) அருளியவா(று)
எங்கும் பரவிநாம்
தோள்நோக்கம் ஆடாமோ.
தெளிவுரை :  ஆயிரம் தாமரை  மலர்களைக் கொண்டு திருமால் மகாதேவனை அர்ச்சித்தார். ஒரு மலர் குறையக் கண்டு அதற்கு ஈடாகத் தம் கண்ணையே அவர் தோண்டிக் கொடுத்தார். மகிழ்விற்று சிவன் சக்கராயுதத்தை அவருக்கு வழங்கினார்.
325. காமன் உடல்உயிர்
காலன்பல் காய்கதிரோன்
நாமகள் நாசி
சிரம்பிரமன் கரம்எரியைச்
சோமன் கலைதலை
தக்கனையும் எச்சனையும்
தூய்மைகள் செய்தவா
தோள்நோக்கம் ஆடாமோ.
தெளிவுரை : மன்மதனது உடல், எமனது உயிர், சூரியனின் பல், சரஸ்வதியின் மூக்கு, பிரமனது தலை, அக்கினியின் கை, சந்திரனது கலை, தக்கன், யாகத்தைச் செய்த புரோகிதன் ஆகிய இருவரின் தலை ஆகியவற்றைக் தூய்மை செய்த சிவபெருமானது செயலைப் பாடி ஆடுவோமாக.
326. பிரமன் அரிஎன்ற
இருவர்தம் பேதமையால்
பரமம் யாம்பரமம்
என்றவர்கள் பதைப்பொடுங்க
அரனார் அழல்உருவாய்
அங்கே அளவுஇறந்து
பரமாகி நின்றவா
தோள்நோக்கம் ஆடாமோ.
தெளிவுரை : பிரமன், திருமால் என்ற இருவரும் தம் அறியாமையால் தாமே பரம்பொருள் என்று அகங்காரம் கொண்டமையால் அவர்களுடைய அகங்காரத்தை அடக்கச் சிவபெருமான் அழல் உருவாகி நின்ற திறத்தைப் பாடி ஆடுவோம்.
327. ஏழைத் தொழும்பனேன்
எத்தனையோ காலமெல்லாம்
பாழுக்கு இறைத்தேன்
பரம்பரனைப் பணியாதே
ஊழிமுதல் சிந்தாத
நன்மணிவந்(து) என்பிறவித்
தாழைப் பறித்தவா
தோள்நோக்கம் ஆடாமோ.
தெளிவுரை : ஏழைத் தொண்டனாகிய நான் பலகாலமாக வீணாகக் காலத்தைக் கழித்துவிட்டேன். பரம் பொருளைப் பணியத் தவறிவிட்டேன். என்றும் அழியாத நன் மணியாகிய இறைவன் என் பிறவித் தளையை அறுத்து விட்டான். அப்பேரருளைப் பாடித்தோள் நோக்கம் ஆடுவோமாக.
328. உரைமாண்ட உள்ளொளி
உத்தமன்வந்(து) உளம்புகலும்
கரைமாண்ட காமப்
பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப்
பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித்
தோள்நோக்கம் ஆடாமோ.
தெளிவுரை : ஒளிமயமான பரமன், சொல்லுக்கு அப்பாற்பட்டவன். அவன் என்னுள் பிரசன்ன மானதும் கரை காணாத ஆசைக் கடலைக் கடந்தேன். இந்திரியப் பறவைகளோ விஷயங்களின்றிக் கெட்டொழிந்தன. நான் என்னும் ஜீவபோதமும் போயிற்று.
16. திருப்பொன்னூசல் (தில்லையில் அருளிச் செய்யப்பட்டது)
அருட்சுத்தி
அழகுள்ள பெண்கள் சோலையிடத்து ஆடும் பொன்னூசல் கண்டு அடிகளார் பொன்னம்பல வாணன் மீது பாடியருளிய பதிகம் இது. இப்பதிகத்தைப் பாடித் துதிப்பதாலும் ஊசலாடுவதாலும் இரு பேரின்பமும் ஒருங்கெய்துவர் என்பது நூற் கொள்கை.
ஒப்புமை பற்றிவந்த ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா
329. சீரார் பவளம்கால் முத்தம் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன்அறியா நாள்மலர்த்தாள் நாயடியேற்(கு)
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தாள் இணைபாடிப்
போரார்வேல் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ.
தெளிவுரை : சிறந்த பவழத்தால் கால் நாட்டி, நல்முத்துக்களால் கயிறு கோத்து, மாற்றுயர்ந்த பொன்னால் பலகை சேர்த்து, ஊசல் அமைத்துள்ளனர். வேல் போன்ற கண்களையுடைய இளமை பொருந்திய நங்கைமீர்! அவ்வூஞ்சல் பலகை மீது அமர்வோம். நாராயணனாலும் அறிய ஒண்ணாத திருவடித் தாமரை மலரை நாய் போன்ற அடியேனுக்கு உறைவிடமாகத் தந்தருளினான். அவன் உத்தர கோச மங்கையில் எழுந்தருளியுள்ளவன்; அமுதம் போன்றவன். அவனுடைய அருள் நிறைந்த திருவடிகளைப் பாடிப் பொன்னூசல் ஆடுவோமாக. (ஊசலின் தன்மையை வாழ்க்கையின் ஒப்பாக முன்னோரும் கூறியுள்ளனர்)
330. மூன்றங்(கு) இலங்கு நயத்தனன் மூவாத
வான்தங்கு தேவர்களும் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித்து அமுதூதித் தான்தெளிந்தங்(கு)
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங்(கு) இடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங்(கு) அனநடையீர் பொன்னூசல் ஆடாமோ.
தெளிவுரை : மயிலின் அழகையும் அன்னத்தின் நடையையும் படைத்துள்ள பெண்டீர்காள் ! முக்கண்ணனாய், பரமானந்த சொரூபியாய் நம் உடலை உருக்கி அருள்மயம் ஆக்குபவனாய் இருக்கும் இறைவனைப் போற்றுவோம். அவன் உத்தர கோச மங்கையில் கோயில் கொண்டிருப்பவன். அவன் தங்கும் இடை மருதைப் பாடி ஊசலாடுவோம்.
331. முன்ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பல்நூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்நீறு எனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்ஊற மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்ஏறும் மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
தெளிவுரை : ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் முனிவர் கூட்டமும் தேவர்கள் கூட்டமும் காத்திருக்க எனக்குத் திருநீறு அளித்து, அருள் பாலித்தவன். அவன் உயர்ந்த மாளிகைகளை யுடைய உத்தர கோச மங்கையில் கோயில் கொண்டிருப்பவன். பூண் அணிந்த மார்பகங்களை யுடைய பெண்களே, அவனைப்பாடி ஊஞ்சல் ஆடுவோமாக.
332. நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ.
தெளிவுரை : அவன் நீலகண்டன்; தேவர்களுக்குத் தலைவன்; மேகங்கள் படியும் உயர்ந்த மாடங்களையுடைய உத்தர கோச மங்கையில் உமாதேவியுடன் கூடி, அடியவர்கள் நெஞ்சில் அமர்ந்து, அருள் செய்து, இறப்பு பிறப்பு இல்லாமல் செய்வான். அவன் புகழ் பாடி ஊசல் ஆடுவோம். (சிவ சக்தியை உள்ளதில் உணர்பவர்களுக்குப் பிறப்பு இறப்பு இல்லை)
333. ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச் சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ.
தெளிவுரை : ஆணா, அலியா, பெண்ணா என்று அறிதற்கு முயன்ற அயனும் அரியும் காணாதவன்; தேவர்கள் பயந்து அழியாமல் இருக்க திருப்பாற் கடலில் எழுந்த ஆலகால விஷத்தை அமுது செய்தவன். அவன் உத்திர கோச மங்கையில் அமர்ந்திருப்பவன்; சந்திர சேகரன். அவனுடைய அருட் குணத்தைப் பாடி ஊஞ்சல் ஆடுவோம். அவனை அணுகினவர்களுக்குக் கேடு நலனாக மாறுகிறது.
334. மாதாடு பாகத்தன் உத்தர கோச மங்கைத்
தாதாடு கொன்றைச் சடையன் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்(டு)என் தொல்பிறவித்
தோடா வண்ணம் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்(து) அன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
தெளிவுரை : உமையை இடப்பாகத்தில் கொண்டவன்; உத்திர கோச மங்கையில் உள்ளவன்; சடையில் கொன்றை மலரைச் சூடுபவன்; அடியவர்களின் குற்றங்களைக் களைபவன்; என்னை அடியவனாக்கி என் பிறவிப் பிணியை அறுப்பவன். அவன் புகழைப்பாடி ஆடுவோம். இறைவன் அருளால் அடியவர்கள் கர்ம பந்தம் நீங்கப் பெற்று அருள் துறையில் முன்னேறுகின்றனர்.
335. உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடும் அணிமயில்போல்
என்அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
பொன்ஒத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
தெளிவுரை : திருவுத்தர கோச மங்கையில் எழுந்தருளிய வேதியன். வணங்குபவர் பாபத்தைப் போக்குபவன். அழகே வடிவெடுத்தவன். அவன் உறவு கொண்டாடுபவர்க்கெல்லாம் நெருங்கிய சொந்த மாகிறான். அவன் புகழைப் பாடி ஊசல் ஆடுவோம்.
336. கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேல் கொண்டு நமையாண்டான்
சீலம் திகழும் திருவுத்தர கோசமங்கை
மாலுக்(கு) அரியானை வாயார நாம்பாடிப்
பூலித்(து) அகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ.
தெளிவுரை : கயிலையிலிருந்து உலகுக்கு எழுந்தருளி உயிர்கள் உய்யும்படி கடல் நஞ்சை அமுது பண்ணியவன். குதிரையின் மேல் வந்து நம்மை ஆட்கொண்டான். உத்தர கோசமங்கையில் உள்ளவன். திருமாலால் அறியமுடியாதவன். அவன் சிறப்புக்களைப் பாடி ஆடு வோமாக. பூலித்து  மகிழ்ச்சியடைந்து
337. தெங்குலவு சோலைத் திருவுத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட்(டு) எம்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையும் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
தெளிவுரை : தென்னை மரங்கள் நிறைந்த சோலைகளையுடையது உத்தர கோச மங்கை. அங்குக் கோயில் கொண்டிருக்கும் இறைவன் எம் போன்ற சாமான்யரையும் அணுகி எங்களுடைய பிறவித் துன்பத்தைப் போக்கி ஆட்கொண்டான். உமையை இடப்பாகத்தில் கொண்டவன். கொன்றை மலரைச் சடையில் அணிபவன். அவனுடைய குணத்தைப் பாராட்டி இளம் பெண்களே ஊஞ்சல் ஆடுவோமாக. (இறைவன் எவரையும் ஆட் கொள்ளும் தன்மையன் என்பதாம்)
17. அன்னைப் பத்து (தில்லையில் அருளிச் செய்யப்பட்டது)
ஆத்தும பூரணம்
இறைவன் சிறப்பினைச் சிவமணங் கமழும் அருட் பெருஞ் செல்வி தன் அன்னைக்கும் எடுத்து இயம்புவது போன்று அமைந்துள்ளது இப்பதிகம். அப்பதிகத்தின் திரண்ட பொருள் வருமாறு:
சிவன் வேத மொழியன்; வெண்ணீறு பூசியவன்; ஓசை வடிவினன் என்று ஒரு சிறு குழந்தை தன் தாயிடம் சொல்லுகிறது. உள்ளம் அருள் நாட்டம் கொண்டு உருகுவது பேரானந்தத்தைப் பெறுவதற்கு உற்ற உபாயமாகும். பரத்தைச் சார்ந்துள்ள மனத்துக்கு யாண்டும் இளமையும் அழகும் ஆனந்தமும் உண்டு. பாம்பும் புலித் தோலும் உடைய நீறு பூசிய ஆண்டியைக் கண்டு சிறார் அஞ்சுவர். ஆனால் சிவ பக்தி உடையவர் அச்சத்தை வெல்லுவர். விஷயங்களில் அலைந்து திரியும் மனம் சிவ சொரூப தியானத்தில் அடங்கி ஒரு முகப்படுகிறது.
நெஞ்சத்தில் நிலைத்துள்ள சிவனைப் புறத்தில் தேடித் தட்டழிதல் வேண்டாம். சிவனார் எந்த வேடத்தில் வந்தாலும் அவர் மாந்தர் உள்ளத்தைக் கவரவல்லவர். கால தத்துவம் காலத்திற்கு அப்பாற்பட்ட சிவன் கையில் அடங்கியுள்ளது. சிவன் பிட்சாடனராய் வருவது உலக வாழ்க்கை அநித்தியம் என்பதை உணர்த்தி உயிர்களை உய்வித்தல் பொருட்டேயாகும். இறைவன் முடியில் கொன்றைப் பூவும், பிறைச் சந்திரனும், வில்வமும், ஊமத்தம் பூவும், நெருங்கி யமைந்துள்ளன. அக் கோலத்தைப் பார்க்கும் பக்தர்களுக்குப் பக்தி என்னும் பித்தம் முதிர்கிறது.
கலிவிருத்தம்
338. வேத மொழியர்வெண் ணீற்றறர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கு
நாதர்இந் நாதனார் அன்னே என்னும்.
தெளிவுரை : அன்னையே ! சிவபெருமான் வேதம் ஓதுகின்றவர்; வெண்மையான விபூதி அணிகின்றவர்; சிவந்த மேனியை உடையவர்; ஓங்கார மூர்த்தி; அயனுக்கும் அரிக்கும் தலைமை பூண்டவர் என்று ஒரு சிறு குழந்தை தன் தாயிடம் சொல்லுகிறது.
339. கண்அஞ் சனத்தர் கருணைக் கடலினர்
உள்நின்(று) உருக்கார் அன்னே என்னும்
உள்நின்(று) உருக்கி உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும்.
தெளிவுரை : கண்களில் மை பூசியவர்; கருணைக் கடலாய் இருப்பவர்; உள்ளத்தில் அன்பை வளர்ப்பவர்; வற்றாத ஆனந்தக் கண்ணீர் பெருக்குபவர். இது அன்பைப் பெறுவதற்குரிய உபாயம் என்பர்.
340. நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத்(து) இருப்பரால் அன்னே என்னும்
சித்தத்(து) இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும்.
தெளிவுரை : யாண்டும் மணம் கோலத்தில் இருப்பவர்; மிகவும் அழகாயிருப்பவர்; மனத்தில் குடி கொண்டிருப்பவர். அத்தகையவர் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தர் என்பதாம்.
341. ஆடுஅரப் பூண்உடைத் தோல்பொடிப் பூசிற்(று)ஓர்
வேடம் இருந்தவா(று) அன்னே என்னும்
என்னும் இருந்தவ கண்டுகண்(டு) என்உள்ளம்
வாடும் இதுஎன்னே அன்னே என்னும்.
தெளிவுரை : ஆபரணம், படம் எடுத்து ஆடும் பாம்பு; உடை, புலித்தோல், பூசியுள்ளது திருநீறு. இந்த வேடத்தில் உள்ள ஆண்டியைக் கண்டு சிறுவர் அஞ்சுவர். ஆனால் சிவபக்தி உடையவர் அச்சத்தை வெல்லுவர்.
342. நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்
பாண்டிநல் நாடரால் அன்னே என்னும்
பாண்டிநல் நாடர் பரந்தெழு சிந்தையை
ஆண்(டு)அன்பு செய்வரால் அன்னே என்னும்.
தெளிவுரை : அவர் நீண்ட கைகளையுடையவர்; நெருங்கிய தலை மயிரை உடையவர்; அவர் தென்பாண்டி நாட்டவர்; விஷயங்களில் அலைந்து திரியும் மனத்தை ஆட் கொண்டு அன்பு செய்பவர்.
343. உன்னற்(கு) அரியசீர் உத்தர மங்கையர்
மன்னுவ(து) என்நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவ(து) என்நெஞ்சில் மால்அயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும்.
தெளிவுரை : எண்ணுதற்கு அரியவர்; உத்தர சோச மங்கையில் நிலைத்திருப்பவர்; திருமாலும் பிரமனும் கண்டறியாத அவன் என் நெஞ்சில் வந்து நிலை பெற்றிருக்கிறார். இது அதிசயம் அல்லவா? நெஞ்சில் நிலைத்துள்ள சிவனைப் புறத்தில் தேடித் தட்டழிதல் வேண்டாம் என்பதாம்.
344. வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்(டு)என்
உள்ளம் கவர்வரால் அன்னே என்னும்.
தெளிவுரை : சிவபெருமான் வெள்ளை ஆடையை உடையவர்; மூன்று வரிகளாக அணிந்த திருநீற்றை உடையவர். துறவியர் அணியும் நீண்ட சட்டை யணிந்தவர். அரசர் குதிரை யேற்றத்தில் அணியும் சட்டை அணிந்தவர். குதிரையின் மேல் ஏறிவந்து என் உள்ளத்தைக் கவர்ந்தவர். சிவபெருமான் எந்த வேடத்தில் வந்தாலும் அவர் மாந்தர் உள்ளத்தைக் கவர வல்லவர் என்பதாம்.
345. தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்
ஆள்எம்மை ஆள்வரால் அன்னே என்னும்
ஆள்எம்மை ஆளும் அடிகளார் தம்கையில்
தாளம் இருந்தவா(று) அன்னே என்னும்.
தெளிவுரை : சிவபெருமான் தாளிக் கொடியையும் அறுகம் புல்லையும் மாலையாக அணிந்தவர். சந்தனச் சாந்தை அணிந்தவர். சந்தனச் சாந்தை அணிந்தவர். அவர் என்னை ஆட் கொள்பவர். அவர் கையில் காலத்தை அறுதியிடும் தாளம் உள்ளது. அது கால தத்துவத்தைக் குறிக்கும்.
346. தையல்ஓர் பங்கினர் தாபத வேடத்தர்
ஐயம் புகுவரால் அன்னே என்னும்
ஐயம் புகுந்(து)அவர் போதலும் என்உள்ளம்
நையும்இது என்னே அன்னே என்னும்.
தெளிவுரை : உமையம்மையை இடப் பாகத்தில் வைத்திருப்பவர். தவ வேடம் பூண்டவர். பிட்சாடனராய் வருபவர். அவர் பிட்சாடனராய் வரும்போது என் மனம் வருந்தும். இவ்வாறு அவர் வருவது உலக வாழ்க்கை அநித்தியம் என்பதை உணர்த்தி, உயிர்களை உய்வித்தல் பொருட்டேயாம்.
347. கொன்றை மதியமும் கூவிளம் மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்(று)எனக்(கு) ஆனவா(று) அன்னே என்னும்.
தெளிவுரை : இறைவன் முடியில் கொன்றைமலரும் இளம்பிறையும், வில்வமும், ஊமத்தம் பூவும் நெருங்கி அமைந்துள்ளன. அக் கோலத்தைக் காணும் பக்தர்களுக்குப் பக்தி என்னும் பித்தம் முதிர்கிறது என்பதாம்.
18. குறிற் பத்து (தில்லையில் அருளிச் செய்யப்பட்டது)
ஆத்தும இரக்கம்
மாணிக்கவாசகர் தில்லையில் எழுந்தருளியிருந்த போது இளவேனிற் காலம் வந்தது. சோலைகள் பூத்து இன்பம் பெருக்கின. குயில்கள் கூவின. அடிகளார் அக்குயில்கள் வாயிலாகச் செம்பொருள் துணிவின் சிறப்பு இயல்புகளை மொழிந்தருளி, எல்லாம் வல்ல இறைவனை வருமாறு கூவ ஓதுகின்றனர்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
348. கீதம் இனிய குயிலே
கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவின்
பாதளாம் ஏழினுக்(கு) அப்பால்
சோதி மணிமுடி சொல்லின்
சொல்லிறந்து நின்ற தொன்மை
ஆதி குணம் ஒன்றும் இல்லான்
அந்தம் இலான்வரக் கூவாய்.
தெளிவுரை : பண் அமையப்படும் இனிய ஓசையமைந்த குயிலே ! யான் அன்புடன் மொழிவதனைக் கேட்பாயாக. எங்கள் இறைவனின் திருவடி இரண்டையும் யாண்டுக் காணலாம் என வினவினால் கீழ்நிலை என்று சொல்லப்படும் ஏழு உலகங்களுக்கும் அப்பால் உள்ளன. அதுபோல் அவரது திருமுடியானது சொல் நிலையையும் கடந்த மேல் நிலையாகும். ஆரம்பமும் முடிவும் இல்லாதவன். அத் தன்மையனை எழுந்தருளி வருமாறு இனிமையாகக் கூவுவாயாக.
349. ஏர்தரும் ஏழுல(கு) ஏத்த
எவ்வுருவும்தன் உருவாய்
ஆர்கலி சூழ்தென் இலங்கை
அழகமர் மண்டோ தரிக்குப்
பேரருள் இன்பம் அளித்த
பெருந்துறை மேய பிரானைச்
சீரிய வாயால் குயிலே
தென்பாண்டி நாடனைக் கூவாய்.
தெளிவுரை : உயிர்கள் அனைத்தும் இறைவனைப் பலவிதங்களில் ஏத்துகின்றன. முறையாக ஏத்துகிறவர் கடலால் சூழப்பட்ட தென் இலங்கையில் இராவணன் மனைவியாகிய மண்டோதரி போன்று யாராயினும் அவரது அருள் இன்பத்தை எய்துகின்றனர். திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் அந்த இறைவனை தென்பாண்டி நாடனை வருமாறு கூவுவாயாக.
350. நீல உருவின் குயிலே
நீள்மணி மாடம் நிலாவும்
கோல அழகின் திகழும்
கொடிமங்கை உள்ளுறை கோயில்
சீலம் பெரிதும் இனிய
திருவுத் தரகோச மங்கை
ஞாலம் விளங்க இருந்த
நாயக னைவரக் கூவாய்.
தெளிவுரை : நீல நிறமுடைய குயிலே ! உயர்ந்த மாடங்களையுடையதும், கொடி போன்ற உமாதேவி எழுந்தருளியிருக்கும் கோயிலியையுடையதுமாகிய உத்தர கோச மங்கையில் உலகம் உய்யுமாறு அருள் ஆட்சி செய்யும் நாயகனை வருமாறு கூவுவாயாக. சிவசக்தியின் சான்னித்தியம் இருக்கும் இடங்கள் எல்லாம் அழகு நிறைந்த இடங்களாகும்.
351. தேன்பழச் சோலை பயிலும்
சிறுகுயி லேஇது கேள்நீ
வான்பழித்(து) இம்மண் புகுந்து
மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன்பழித்(து) உள்ளம் புகுந்(து)என்
உணர்(வு)அது வாய ஒருத்தன்
மான்பழித்(து) ஆண்டமென் நோக்கி
மணாளனை நீவரக் கூவாய்.
தெளிவுரை : தேனும் பழமும் நிறைந்த சோலையில் தங்கும் சிறிய குயிலே ! நான் சொல்வதைக் கேள். வானிலிருந்து இறைவன் இம் மண்ணுக்கு வந்து உலக உயிர்களை ஆட்கொண்டது அவனுடைய வள்ளல் தன்மையைக் குறிக்கிறது. என்னை உய்வித்த அந்தப் பார்வதி மணாளனை வருமாறு கூவுவாயாக.
352. சுந்தரத்(து) இன்பக் குயிலே
சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின்(று) இழிந்திங்(கு)
அடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவும்
ஆகிய மூவர் அறியாச்
சிந்துரச் சேவடி யானைச்
சேவக னைவரக் கூவாய்.
தெளிவுரை : அழகிய இனிய குரலையுடைய குயிலே. இறைவன் ஒளிமிக்க சூரியனைப் போல வானத்திலிருந்து இறங்கி வந்து அடியவர்களது உலகப் பற்றுக்களை அறுப்பவன். ஆரம்பம் நடுவு முடிவு ஆகிய மூவராலும் அறியப்படாதவன் (ஆதிமத்யாந்த ரகிதன்) சிவந்த பாதங்களையுடைய அந்தப் பாதுகாவலனை வருமாறு கூவுவாயாக.
353. இன்பம் தருவன் குயிலே
ஏழுல கும்முழு தாளி
அன்பன் அமுதளித்(து) ஊறும்
ஆனந்தன் வான்வந்த தேவன்
நன்பொன் மணிச்சுவ(டு) ஒத்த
நன்பரி மேல்வரு வானைக்
கொம்பின் மிழற்றும் குயிலே
கோகழி நாதனைக் கூவாய்.
தெளிவுரை : கோகழி  மாணிக்கவாசகர் இறைவனால் ஆட் கொள்ளப்பட்டது கோகழி எனக் கூறப்படும் திருவாவடு துறையிலேயாம். அது திருப்பெருந்துறை யென்றும் கூறப்படுகிறது.
மரக்கிளைகளின் மீதிருந்து கூவும் குயிலே ! அவன் இன்பம் தருவான். அவன் ஏழ் உலகங்களையும் ஆட்சி செய்கின்றவன். அவன் அமுதளித்து இன்பம் தரும் ஆனந்தன். வானத்திலிருந்து வந்த தேவன். பொன் போன்ற குதிரை மீது ஏறி வருபவனை அழைப்பாயாக ! அகன்ட சிதாகாசமாய் இருப்பவன். அடியார்களை ஆட் கொள்ளுதல் பொருட்டு மானுட உருவெடுத்து வருகிறான்.
354. உன்னை உகப்பன் குயிலே
உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்தநன் மேனிப்
புகழின் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த
வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரலன் சோழன்
சீர்ப்புயங் கன்வரக் கூவாய்.
தெளிவுரை : குயிலே ! பக்தி பூணுதலில் நாம் ஒருவரையொருவர் நட்புக் கொள்வோம். நித்தியமாயுள்ள பரமனது புகழ்பெற்ற அழகோ பொன்னைத் தோற்கடிக்க வல்லது. பக்தனுக்குப் பரிந்து அவன் குதிரைப் பாகனாக வந்தான். மூவேந்தர்க்கும் அவன் வேந்தன். பாம்பு போன்று ஒய்யாரமாக அசைந்தும் நெளிந்தும் நடனம் புரிபவன்.
355. வாஇங்கே நீகுயிற் பிள்ளாய்
மாலொடு நான்முகன் தேடி
ஓவிஅவர் உன்னி நிற்ப
ஒண்தழல் விண்பிளந்(து) ஓங்கி
மேவிஅன்(று) அண்டங் கடந்து
விரிசுட ராய்நின்ற மெய்யன்
தாவி வரும்பரிப் பாகன்
தாழ்சடை யோன்வரக் கூவாய்.
தெளிவுரை : குயிற் பிள்ளாய் நீ இங்கு வருவாயாக. திருமாலும் பிரமனும் தேடிச் சோர்வடைந்து திகைத்து நிற்கும்போது அவன் ஆகாயம் வரையில் தீப்பிழம்பாகி நின்ற மெய்யன். பக்தன் பொருட்டு விரைந்து செல்லும் குதிரைப் பாகனாக வந்தான். நீண்ட சடைமுடியையுடைய அவனைக் கூவி அழைப்பாயாக.
356. காடுடைப் பொன்திகழ் மேனிக்
கடிபொழில் வாழுங் குயிலே
சீருடைச் செங்கம லத்தில்
திகழ்உரு வாகிய செல்வன்
பாரிடைப் பாதங்கள் காட்டிப்
பாசம் அறுத்தெனை யாண்ட
ஆருடை அம்பொனின் மேனி
அமுதினை நீவரக் கூவாய்.
தெளிவுரை : சோலையில் வாழுங் குயிலே ! அடிமுடி காண முடியாத வஸ்து வின் சான்னித்தியம் சிறப்பாகத் தூய இருதய கமலத்தில் திகழ்கிறது. அதை அனுபூதியில் அறிபவர்க்கு உலகப் பற்று ஒழிகிறது. அன்னவர் மரணமிலாப் பெருநிலை எய்துகின்றனர். ஆத்தி மலர் சூடிய அந்த அண்ணலை நீ வருமாறு கூவுவாயாக.
357. கொந்தண வும்பொழிற் சோலைக்
கூம்குயி லேஇது கேள்நீ
அந்தண னாகிவந்(து) இங்கே
அழகிய சேவடி காட்டி
எந்தமர் ஆம்இவன் என்றிங்(கு)
என்னையும் ஆட்கொண் டருளும்
செந்தழல் போல்திரு மேனித்
தேவர் பிரான்வரக் கூவாய்.
தெளிவுரை : அழகிய பூஞ்சோலையில் கூவும் குயிலே. நான் சொல்வதைக் கேள். வேதியனாகி வந்து இவன் என் உறவினன் என்று தன் சிவந்த பொற் பாதங்களைக் காட்டி என்னை ஆட்கொண்டருளினான். அத்தகைய செம்மேனியனை, தேவர் தலைவனை வருமாறு கூவுவாயாக.
அந்தப் பொருளாகிய சிவன் பிரபஞ்சத்துக்குரிய அழகிய வடிவெடுத்து வந்து என்னை ஆட்கொண்டு என்னைத் தனக்கே உரியவன் ஆக்கினான் என்பதாம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக