புதன், 9 நவம்பர், 2011

திருவாசகம் | எட்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி - 2 )




ராதே கிருஷ்ணா 09 - 11 - 2011 

12 திருமுறைகள்
    


 எட்டாம் திருமறை
திருவாசகம் | எட்டாம் திருமுறையில் பாடிய பாடல்


 (பகுதி - 2 )




விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க 



   எட்டாம் திருமறை


திருவாசகம் | எட்டாம் திருமுறையில் பாடிய பாடல்


 (பகுதி - 2 )



19. திருத்தசாங்கம் (தில்லையில் அருளிச் செய்யப்பட்டது)
அடிமை கொண்ட முறைமை
தசாங்கம் என்பது பத்து அங்கங்கள் எனப் பொருள்படுகிறது. ஓர் அரசனை அறிமுகப் படுத்தும் போது அவனுக்குரிய பத்து இயல்புகளை இயம்புவது வழக்கம். அவையாவன : பெயர், நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, முரசு, தார், கொடி என்பனவாம். இந்த ஐதீகத்தை அண்ணல் தமது இறைவன் பால் கையாளுகிறார். இப் பதிகத்திலுள்ள பத்துப் பாடல்களின் கருத்து வருமாறு.
எம் பெருமானது பெயர் மகாதேவன். அவனுடைய நாடு தென்பாட்ண்டி நாடே. ஊர் உத்தர கோச மங்கை. இறைவனது ஆறு ஆனந்தம். இமய மலையும் அதன் சிறந்த பகுதியாகிய கயிலையங்கிரியும் இவனது இருப்பிடம்; ( மானிட அமைப்பில் சுழுமுனைநாடி என்னும் மகாமேரு அவனுடைய மலையாகிறது) அவன் காளை வாகனன். (ஜீவர்கள் அனைவரும் அவனுக்கு வாகனம் ஆகின்றனர்.) திரிசூலமே சிவனுடைய ஆயுதம். அது ஞானத்தின் சின்னம்; ஞானத்துக்கு நிகரான ஆயுதம் இல்லை. அஞ்ஞானத்தில் உதிக்கின்ற மும்மலங்களை அது அகற்றுகிறது.
நாதப் பிரம்மம் அல்லது ஓங்கார தத்துவமே சிவனாரது முரசு. உடுக்கை அல்லது தமருகம் அதற்குப் புறச் சின்னமாகிறது. ஸ்தூல அமைப்பில் தாளிக் கொடியும் அறுகும் சேர்ந்தது அவன் அணியும் மாலை. உண்மையில் பிரபஞ்சத்துக்குரிய தத்துவங்கள் எல்லாம் சேர்ந்து அமைந்தது அவனுடைய மாலை. சிவனுக்குரியது காளைக் கொடி. அந்தந்தத் தெய்வத்துக்குரிய வாகனம் கொடியில் அமைவது முறை. ஜீவனைப் பரமன் தனக்குச் சொந்தமாக்குகிறான் என்பது அதன் கருத்து. அப்படிச் செய்வது அழகிய செயல். உபாசனை பண்ணாதவர்க்கு அக்கோட்பாடு ஏமாற்றத்தை உண்டு பண்ணுகிறது.
நேரிசை வெண்பா
358. ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று.
தெளிவுரை : அழகு பொருந்திய இளங்கிளியே ! எங்கள் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற தலைவனுடைய சிறப்புப் பொருந்திய திருப்பெயர் யாதெனக் கூறுவாயாக. திருவாரூரன்; செம்பெருமான்; பிரம்மாவும் திருமாலும் துதிக்கின்ற எம்பெருமானுடைய பெயர் மகாதேவன் என்பதாகும்.
359. ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
நாதனமை ஆளுடையான் நாடுரையாய் காதலவர்க்(கு)
அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
தென்பாண்டி நாடே தெளி.
தெளிவுரை : குற்றமற்ற இன்சொற்களைக் கூறும் பச்சை மணிபோன்ற கிளியே ! ஏழு உலகங்களுக்கும் தலைவனாகி நம்மை ஆட்கொண்டவனது நாடு யாது? கூறுவாய். அவன் அன்பு கொண்டு எழுந்தருளியிருப்பது தென்பாண்டி நாடு என்று அறிவாயாக. அகிலாண்டமும் அவனுடைய நாடு. ஆனால் பக்தியின் பான்மையானது அவனுக்குச் சிறப்பாக ஓர் இடம் தருகிறது.
360. தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தான் வாழ்பதி என்?  கோதாட்டிப்
பத்தரெல்லாம் பார்மேல் சிவபுரம் போல் கொண்டாடும்
உத்தர கோசமங்கை யூர்.
தெளிவுரை : மகரந்தம் நிரம்பிய பூக்களையுடைய சோலையில் உள்ள கிளியே ! நம்மை ஆட்சிசெய்கின்ற மாதொரு பாகத்தானுடைய ஊர் எது? சீராட்டி அடியார்கள் எல்லாம் உலகில் சிவபுரம் போல் கொண்டாடும் ஊர் உத்தர கோச மங்கையாகும். தத்துவப்படி பக்தர் உள்ளம் அவனுடைய ஊர் ஆகிறது.
361. செய்யவாய்ப் பைஞ்சிறகின் செல்வீநம் சிந்தைசேர்
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய்  தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தம் காணுடையான் ஆறு.
தெளிவுரை : சிவந்த மூக்கினையும் பச்சையான இறகுகளையும் உடைய கிளியே ! திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் ஐயனது ஆறு யாது சொல்லாய். ஸ்தூலமாகப் பார்க்குமிடத்துச் சிவபெருமானது ஆறு கங்கை, ஆதலால் அவனுக்குக் கங்காதரன் என்றும் பெயர் உண்டு. தத்துவ பூர்வமாக ஆனந்தமாக அவனுக்கு நதி ஆகிறது.
362. கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவு மலைபகராய்  நெஞ்சத்து
இருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து.
தெளிவுரை : முருக்கம் பூப்போன்ற வாயினையுடைய அழகிய கிளியே ! கெடுதல் இல்லாத திருப்பெருந்துறையில் அருளாட்சி செய்யும் அழகன் பொருந்தியிருக்கும் மலையாது என்று கூறுவாய். மனத்திருள் அகலுமாறு ஒளி வீசும் இமயமலையும் அதன் சிறந்த பகுதியாகிய கயிலையங்கிரியும் அவனது இருப்பிடம். மானுட அமைப்பில் சுழுமுனை நாடி என்னும் மகாமேரு அவனுடைய மலையாகிறது.
363. இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே  எப்போதும்
தேன்புரையும் சிந்தையராய்த் தெய்வப்பண் ஏத்திசைப்ப
வான்புரவி ஊரும் மகிழ்ந்து.
தெளிவுரை : என் கிளியே ! நீ காட்டுக்குள் புகாமல் இவ்விடத்து வந்து ஒப்பற்ற சீருடையவன் ஊர்ந்து செல்லும் வாகனம் எது என்று கூறு. எப்போதும் தேனை யொத்த சிந்தையர் மனமே அவன் ஊர்ந்து செல்லும் வாகனமாகும். பரமசிவம் நிர்க்குண பிரம்மமாய் இருக்கும்போது அவனுக்கு வாகனம் சித் ஆகாயமே. அவன் சகுணப் பிரம்ம மாயிருக்கும்போது அவனுக்கு வாகனம் ரிஷபம். ஜீவர்கள் அனைவரும் அவனுக்கு வாகனம் ஆகின்றனர்.
364. கோல்தேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன்
மாற்றாரை வெல்லும் படை பகராய்  ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயும்
கழுக்கடைகாண் கைக்கொள் படை.
தெளிவுரை : கொம்புத் தேன் போன்று இனிக்கப் பேசுகின்ற கிளியே ! குற்றமற்ற திருப் பெருந்துறையான் பகைவரை வெல்லும் ஆயுதம் எது என்று சொல். அடியார்கள் மன அழுக்கைப் போக்கும் திரிசூலமே சிவபெருமானுடைய ஆயுதம். அது ஞானத்தின் சின்னம்.
365. இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பால் முழங்கும் முர(சு)இயம்பாய்  அன்பால்
பிறவிப் பகை கலங்கப் பேரின்பத்(து) ஓங்கும்
பருமிக்க நாதப் பறை.
தெளிவுரை : இனிய பால்போன்ற சொல்லையுடைய கிளியே ! எங்கள் திருப்பெருந் துறையான் இனிமையாய் முழக்கும் பறை எது சொல். அன்புடன் பிறவிப் பிணியைப் போக்குகின்ற நாதப் பிரம்மமே பறையாகும். ஓங்கார தத்துவமே சிவபெருமானது முரசு ஆகும். உடுக்கை அல்லது தமருகம் அதற்குப் புறச் சின்னம் என்பர்.
366. ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த்தார்என்  தீயவினை
நாளும்அணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளிஅறு காம்உவந்த தார்.
தெளிவுரை : ஆராய்ந்த மொழியைப் பேசும் கிளிப் பிள்ளாய் ! உள்ளம் உருகும் அன்பர்கள் துதிக்கும் திருப் பெருந்துறையான் அணியும் மாலை யாது சொல்வாயாக! தீவினைகள் எப்போதும் அணுகாதவாறு என்னை ஆட் கொண்டவன் விரும்பியணியும் மாலை தாளிக் கொடியும் அறுகம் புல்லும் சேர்ந்த மாலையாகும். தத்துவங்களே அவனது மாலை என்றும் கூறுவர்.
367. சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியும் கொடிகூறாய் சாலவும்
ஏதிலார் துண்என்ன மேல்விளங்கி ஏர்காட்டும்
கோதிலா ஏ(று)ஆம் கொடி.
தெளிவுரை : சோலையில் வாழும் பசுமையான கிளியே ! தூய்மையான நீர்ப் பெருக்கினையுடைய திருப் பெருந்துறையானது கொடி இன்ன தென்று சொல்வாயாக. பகைவர்கள் மிகவும் நடுங்கும்படி உயரத்தில் எழுந்து பறக்கின்ற ரிஷபக் கொடியாகும். அந்தந்தத் தெய்வத்துக்கு உரிய வாகனம் கொடியில் அமைவது வழக்கம்.
20. திருப்பள்ளியெழுச்சி (திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது)
திரோதான சுத்தி
இறைவனுடைய ஐந்தொழில்களுள் மறைத்தல் ஒன்று. சொரூப ஞானத்தைத் தமோகுணம் மறைத்திருக்கிறது. அதிகாலையில் எழுந்து திருப் பள்ளியெழுச்சி வாயிலாக இறைவணக்கம் செய்து வருகிறவர்களுக்குத் தமோகுணம் தெளிவடைகிறது. அச் செயல் திரோதான சுத்தி எனப்படும். திரோதானம்  மறைத்தல்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
368. போற்றியென் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்(கு) இணைதுறை மலர்கொண்(டு)
ஏற்றிநின் திருமுகத்(து) எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை உடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
தெளிவுரை : எனது வாழ்வுக்குக் காரணமான பொருளே ! உனக்கு வணக்கம். பொழுது வீடிந்தது; உனது தாமரை மலர் போன்ற திருவடிகளுக்கு ஏற்றவையான பூக்களைக் கொண்டு அருச்சித்து, உனது திருமுகத்தில் உண்டாகும் புன்முறுவலை ஏற்றுக் கொண்டு உன் திருவடிகளைத் தொழுவோம். சேற்றில் வளரும் தாமரைப் பூக்கள் மலர்கின்ற குளிர்ந்த வயல்களால் சூழப்பெற்ற திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே ! உயர்ந்த ரிஷபக் கொடியை உடையவனே ! என்னை ஆண்டு கொண்டவனே ! எம்பெருமானே ! பள்ளியெழுந்தருள்வீராக.
369. அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனம்
கடிமலர் மலரமற்(று) அண்ணலம் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.
தெளிவுரை : சூரியன் கிழக்கே வர இருள் நீங்கிற்று. சூரிய உதயத்துக்கு ஒப்ப உன் முகத்தில் கருணை பொலிக. மலர் விரிவதற்கு ஒப்ப உன் கண்கள் துயில் எழுக. வண்டுகள் ரீங்காரம் இடுவதற்கு ஒப்ப நாங்கள் உன்னைப் போற்றுகிறோம். இதில் இறையே, நீ திருவுள்ளம் செலுத்துக. அருள் தரும் மலையாகவும் ஆனந்த சாகரமாகவும் இருக்கின்றவனே ! பள்ளி எழுந்தருள்வீராக. இந்திரன் திசை  கிழக்கு.
370. கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளிஒளி உதயத்(து)
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநல் செறிகழல் தாள்இணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவுஅரி யாய்எமக்(கு) எளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
தெளிவுரை : பறவைகள் கூவுகின்றன. சங்குகள் முழுங்குகின்றன. நட்சத்திர ஒளி மங்குகிறது. உதய ஒளி ஓங்குகிறது. ஒளிமயமானவனே ! நலம் தரும் உன் திருவடிகளை எங்களுக்கு இனிது காட்டியருள்க. உன்னை வணங்காதவர்களுக்கு நீ விளங்காதவன். எங்களுக்கு எளிமையானவன். எம் பெருமானே பள்ளி எழுந்தருளுக.
371. இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்(டு) இன்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
தெளிவுரை : ஒரு பக்கத்தில் வீணை, யாழ் முதலிய இன்னிசைக் கருவிகளோடு கூடி ரிக்வேதம் ஓதுகின்றனர். நெருக்கமாகக் கட்டப்பட்ட பூமாலைகளைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர் ஒரு பக்கத்திலும், அழுபவர்களும் உணர்ச்சி வேகத்தால் அசைபவர்களும் மறுபக்கத்திலும் உள்ளனர். தலைமீது கைகூப்பிக் கொண்டிருப்பவர் இன்னொரு பக்கத்திலும் உள்ளனர். திருப் பெருந்துறைச் சிவபெருமானே ! என்னையும் ஆட் கொண்டு அருள் புரிந்த எம் பெருமானே ! எழுந்தருள்வாயாக.
372. பூதங்கள் தோறும்நின் றாய்எனில் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்(து)
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
தெளிவுரை : எல்லா உயிர்களிடத்திலும் நீ கலந்திருக்கிறாய். அப்படியிருந்தும் நீ போக்கு வரவு இல்லாதவன் என்று அறிஞர்கள் நினைக்கிறார்கள். உன்னைப் பற்றித் தோத்திரப் பாடல்கள் பாடுவதும் ஆனந்தக் கூத்தாடுவதும் அல்லாமல் உன்னைக் கண்டவர்கள் எவரும் இலர். வயல்களால் சூழப்பட்ட திருப் பெருந்துறை மன்னா ! நீ சிந்தனைக்கு அப்பாற்பட்டவன். எங்களுக்குக் காட்சி யளித்து, மனத்திலுள்ள குறைபாடுகளை அறுத்து எங்களுக்கு அருள் செய்யும் பெம்மானே பள்ளி எழுந்தருள்வாயாக.
373. பப்பற வீட்டிருந்(து) உணரும் நின்அடியார்
பந்தனை வந்துறுத் தார்அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்(து) இயல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப்(பு) அறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
தெளிவுரை : உமையை இடப்பாகத்தில் கொண்ட பெருமானே ! மனம் ஒடுங்கி, உலகப்பற்று ஒழிந்து வீடு பேறு அடையப் பெற்றவருக்கு வழிபாடு வேண்டியதில்லை. ஆனால் அவர்களும் உன்னை வணங்குவதில் இன்பம் காண்பதற்காக, பெண் இயல்பாகிய பதி நாட்டத்தை விடாது பிடித்து வைத்திருக்கின்றனர். பிறவிக் கடலினின்று என்னை ஆட் கொள்பவனே, பள்ளி எழுந்தருள்வாய். பப்பு  பதைபதைப்பு; செப்பு  சிவப்பு.
374. அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்(டு) இங்கெழுந்(து) அருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
தெளிவுரை : அது பழத்தின் ரசம் எனவும், அமுதம் எனவும், ஆணவத்தோடு கூடிய அறிவுக்கு எட்டாதது எனவும், மெய் அன்புக்குச் சுலபமானது எனவும் தேவர்கள் அறியார்கள். இது அவனது திருவுருவம். இவனே அவன் என்று சொல்லும் படியாகக் கண் காண எழுந்தருளியிருக்கின்ற தேன் பெருகுகின்ற சோலைகளையுடைய திரு உத்தர கோச மங்கையில் கோயில் கொண்டிருப்பவனே, எங்களைப் பணிகொள்ளும் வழியாது? அதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். எம் பெருமானே எழுந்தருள்வாயாக.
375. முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்(று) அறிவாம்
பந்தணை விறலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந்(து) அருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்(து) ஆண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே.
தெளிவுரை : பந்தணை விறலி  அம்பிகை. ஆதிமூலமே, அனைத்தும் உன்னிடத்தில் தோன்றி, இருந்து, ஒடுங்குகின்றன. உனது அகண்டா காரத்தை அயன், அரி, அரன் ஆகிய மும்மூர்த்திகளே அறியார். பின்பு வேறு யார் அறிவார்! அம்பிகை சமேதனாய் நீ எல்லார் உள்ளத்திலும் எழுந்தருளியுள்ளாய். நீ தீப் போன்ற திருமேனியன். திருப் பெருந்துறையில் என்னை ஆட்கொள்ள வந்த அந்தணன். அழிவு இல்லாத அரிய பொருளே, பள்ளி எழுந்தருள்க.
376. விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச் செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
தெளிவுரை : தேவர்களும் அணுக மாட்டாத மேலான பொருளே ! நீ இந்த மண் உலகிற்கு இறங்கி வந்து உன் அடியார்களை உய்வித்தாய். வளம் நிறைந்த திருப் பெருந்துறையானே ! உன்னைத் துதிப்பவர் உள்ளத்தில் தேனாகவும், கடல் அமுதமாகவும் கரும்பாகவும் இனிப்பவனே. உலகில் காணப்படும் உயிரானாய். எம்பெருமானே பள்ளி எழுந்தருளுவாயாக
377. புவனியில் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற ஆறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவுநின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆர்அமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
தெளிவுரை : சுகபோகம் வேண்டிச் சுவர்க்கத்தை நாடிய தேவர்களுக்குப் பிறகு அதில் சலிப்பு உண்டாகிறது. சிவனுடைய அருளுக்குப் பாத்திரமாகிச் சிவஞானம் பெற அவர்கள் மண்ணுலகில் வந்து பிறக்க விரும்புகின்றனர். அடியார்களை ஆட்கொள்ள அருள் சக்தியுடன் மண்ணுலகுக்கு எழுந்தருள்பவனே ! பள்ளி எழுந்தருள்வாயாக.
21. கோயில் மூத்த திருப்பதிகம் (தில்லையில் அருளிச் செய்யப்பட்டது)
அநாதியாகிய சற்காரியம்
இந்தத் திருப்பதிகத்தில் தில்லை நடராஜப் பெருமானையும், அடுத்த திருப்பதிகத்தில் திருப் பெருந்துறைச் சிவபெருமானையும் நோக்கிப் பாடுவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன. இதிலுள்ள பாடல்கள் அந்தாதித் தொடை பெற்றுள்ளன.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
378. உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும்அரு
ளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே.
தெளிவுரை : உமையவள் உன்னிடையே இருப்பாள்; உமையவள் இடையே நீ இருக்கிறாய், அடியேனுடைய உள்ளத்தில் நீங்கள் இருவரும் எழுந்தருளி இருப்பதானால், பொற் சபையில் உள்ள எமது முடிவற்ற முதற்பொருளே, என் கருத்து நிறைவேறும்படி என் எதிர் நின்று அடியேன் உன் அடியார் நடுவே இருக்கும்படி அருள் செய்வாயாக (சிவமும் சக்தியும் எங்கும் ஒன்றாகக் கலந்திருக்கும் என்பதாம்)
379. முன்னின்(று) ஆண்டாய் எனைமுன்னம்
யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின்(று) ஏவல் செய்கின்றேன்
பிற்பட்(டு) ஒழிந்தேன் பெம்மானே
என்னின்(று) அருள் வரநின்று
போந்தி(டு) என்னா விடில்அடியார்
உன்னின்(று) இவனார் என்னாரோ
பொன்னம் பலக்கூத்(து) உகந்தானே.
தெளிவுரை : முன்பு என்னை ஆட்கொண்ட நீ இப்போது தெளிவுரை என்னிடத்துள்ள சிரத்தைக் குறைவை முன்னிட்டு என்னைப் புறக்கணிக்க வேண்டாம். நீ புறக்கணித்தால் உன் பக்தர்களுக்கு நான் வேற்றான் ஆவேன். பொன்னம்பலத்தில் நடனமாடும் பெருமானே இது என்னுடைய வேண்டுகோள்.
380. உகந்தா னேஅன் புடைஅடிமைக்(கு)
உருகா உள்ளத்(து) உணர்விலியேன்
சகம்தான் அறிய முறையிட்டால்
தக்க ஆ(று)அன்(று) என்னாரோ
மகம்தான் செய்து வழிவந்தார்
வாழ வாழ்ந்தாய் அடியேற்(கு)உன்
முகம்தான் தாரா விடின்முடிவேன்
பொன்னம் பலத்தெம் முழுமுதலே.
தெளிவுரை : பொற் சபையில் நடனமாடும் முழுமுதலே ! வேள்வி புரிந்தவர்களுக்கு நீ அருள் புரிந்தனை. உலகம் அறிய பக்தியில் கதறியழுகிற என்னை நீ ஆட்கொள்ளா விட்டால் பக்தி மார்க்கம் சரியல்லவென்று உலகம் குறை கூறும். நானும் சாவேன். இறைவா, அத்தகைய குறைபாடுகளுக்கு நீ இடம் தரலாகாது.
381. முழுமுத லேஐம் புலனுக்கும்
மூவர்க் கும்என்ற னக்கும்
வழிமுத லேநின் பழவடி
யார்தி ரள்வான் குழுமிக்
கெழுமுத லேஅருள் தந்திருக்
கஇரங் கும்கொல் லோஎன்(று)
அழும்அது வேயன்றி மற்றென்
செய்கேன் பொன்னம் பலத்தரைசே.
தெளிவுரை : பொன்னம்பலத்தில் நடமிடும் அரசே ! அனைவர்க்கும் முதலாய் இருப்பவனே ! என் ஐம்புலன்களுக்கும் மூவர்க்கும் எனக்கும் வழிமுதலே ! அனைத்தையும் முன்னின்று நடத்துபவனே! உன்னை நாடி முறையிடுவதைத் தவிர வேறு நான் என்ன செய்ய வல்லேன் என்பதாம்.
382. அரைசே பொன்னம் பலத்தாடும்
அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத்(து) இரவுபகல்
ஏசற்(று) இருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப்
பேசா(து) இருந்தால் ஏசாரோ.
தெளிவுரை : இரைதேடும் கொக்கை ஒத்து நான் அல்லும் பகலும் அருள் தாகம் பிடித்து வருந்தியும் வாடியும் இருக்கிறேன். வீடு பேறு அடையப் பெற்று நின் அன்பர் இன்பம் துய்க்கின்றனர். பாலில் நெய்போன்று என்பால் நீ பராமுகமாய் இருந்தால் நான் ஏளனத்துக்கு உரியவன் அல்லவா? ஏசற்று  வருந்தி; வேசற்று  வாடி.
383. ஏசா நிற்பர் என்னை உனக்(கு)
அடியான் என்று பிறர்எல்லாம்
பேசா நிற்பர் யான்தானும்
பேணா நிற்பன் நின்அருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்கும்
திருஓ லக்கம் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும்
எந்தாய் இனித்தான் இரங்காயே.
தெளிவுரை : பொன்னம் பல நாதனே ! சிலர் என்னைத் தூற்றுவர்; வேறு சிலர் உன் பக்தன் என்று என்னைப் போற்றுவர். நானோ இரண்டையும் பொருட் படுத்தாமல் உன் அருளையே நாடியிருப்பேன். ஒளி மயமானவனே ! ஈசனே ! உன் அன்பர் சூழ்ந்த உனது திருச்சபையைக் காட்டியருள்க. ஏசாநிற்றல்  தூற்றுதல்; பேசாநிற்றல்  பாராட்டிப் பேசுதல்.
384. இரங்கும் நமக்(கு) அம் பலக்கூத்தன்
என்றென்(று) ஏமாந்(து) இருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய்
ஆள்வார் இலிமா(டு) ஆவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும்
நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள்
வாழ்வே வாஎன்(று) அருளாயே.
தெளிவுரை : எனக்காக இரங்கி அருள்புரியும் அம்பலக் கூத்தனே ! என்னை ஒரு புதிய முறையில் ஏற்றாய். அது ஒரு கற்பிதமாய்ப் போயிற்று. ஏனென்றால் ஆதரிப்பார் இல்லாத மாடு போல் நான் தவிக்கிறேன். வாழ்வுக்கு வித்தே. அடியாரும் நீயும் நெருங்கி நின்று வெளிப்படையாக விளையாடும் இடத்துக்கு என்னையும் வா என்று கூட்டிக் கொள்ளமாட்டாயா?
385. அருளா(து) ஒழிந்தால் அடியேனை
அஞ்சேல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட
பொன்னே பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ(டு) உனைப்பிரிந்து
வருந்து வேனை வாஎன்றுன்
தெருளார் கூட்டம் காட்டாயேல்
செத்தே போனால் சிரியாரோ.
தெளிவுரை : பொன்னம்பலத்தில் நடனமாடும் பெம்மானே ! என்னை ஒரு பொருளாக்கி ஆட்கொண்ட இறைவா ! எனக்கு நீ அருள் புரியாவிட்டால் வேறு யாரிடமிருந்து நான் அபயம் பெறுவது? மயக்கம் நிறைந்த மனம் படைத்திருப்பதால் உன்னைப் பிரிந்து வருந்துகிறேன். என்னை வா என்று அழைத்து உன் அன்பர் கூட்டத்தில் சேர்த்து வை. இல்லையேல் நான் சாவேன். அதைக் குறித்து உலகத்தவர் ஏளனம் செய்ய மாட்டார்களா? தெருள்  ஞானத் தெளிவு.
386. சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்
திரண்டு திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
வெவ்வே(று) இருந்துன் திருநாமம்
தரிப்பார் பொன்னம் பலத்தாடும்
தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
நம்பி இனித்தான் நல்காயே.
தெளிவுரை : பொன்னம்பல நாதனே ! கல்யான குணமுடைய அண்ணலே. பக்தியின் மேலீட்டால் உன் அன்பர்கள் சிரிக்கவும், களிக்கவும் தியானிக்கவும் உன் மகிமைகளை விளக்கவும் அவைகளுக்குச் செவி சாய்க்கவும், பாராட்டவும், உன் நாமத்தை மந்திரமாகச் செபிக்கவும், உன்னைப் போற்றவும் செய்கின்றனர். அவர்களுக்கு இடையில் நான் வழிபடத் தெரியாதவன் என இகழப்படுவது முறையோ? மன்னா, என்னையும் ஆட் கொள்வாயாக. தேனித்தல்  தியானம் செய்தல்; நரிப்பாய்  இகழ்ச்சிக்கு உரியவனாய்.
387. நல்கா(து) ஒழியான் நமக்கென்றுன்
நாமம் பிதற்றி நயனம்நீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா
வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்
பரவிப் பொன்னம் பலமென்றே
ஓல்கா நிற்கும் உயிர்க்(கு)இரங்கி
அருளாய் என்னை உடையானே.
தெளிவுரை : தமக்கு அருள் புரியாது இருக்க மாட்டான் என்று நிச்சயித்து, உனது திருநாமத்தை அன்பு வசப்பட்டு அடைவு கெட வாயால் பிதற்றி, கண்களில் நீரை நிறைத்து, வாழ்த்தி, வாய் குழறி, வணங்கி மனத்தினால் நினைந்து உருகிப் பலகாலும் உன்னையே சிந்தனை செய்து துதித்து, பொன்னம்பலம் என்றே வாடுகிற எனது உயிருக்கு இரங்கி அருள வேண்டும், என்னை உடைய இறைவனே !
22. கோயில் திருப்பதிகம் (தில்லையில் அருளிச் செய்யப்பட்டது)
அனுபோக இலக்கணம்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
388. மாறிநின்(று) என்னை மயக்கிடும் வஞ்சப்
புலன்ஐந்தின் வழியடைத்(து) அமுதே
ஊறிநின்(று) என்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந்(து) அருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப் பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே என்னுடை அன்பே.
தெளிவுரை : திருப் பெருந் துறையில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானே ! தெளிந்த தேனே, முடிவில்லாத பதங்கள் யாவையும் கடந்த இன்பமே. என் அன்பே ! மெய்ம்மையினின்று பிசகியிருந்து என்னை மயக்கும் மெய்ப் பொருளைப் பொய்ப் பொருளாகக் காட்டும் ஐந்து கருவிகளின் வாசனையை நீக்கி என்னை ஆட்கொள்ளும் பரஞ்சோதியே எனக்கு அருள் செய்வாயாக.
இதிலுள்ள பத்துப் பாடல்களும் அந்தாதித் தொடை பெற்று வந்துள்ளன.
389. அன்பினால் அடியேன் ஆவியோ(டு) ஆக்கை
ஆனந்த மாய்க்கசிந் துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யானிதற்(கு) இலன்ஓர்கைம் மாறு
முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
சீருடைச் சிவபுரத்(து) அரைசே.
தெளிவுரை : எதிலும் கட்டுப் படாதவனே ! முடிவில்லாத முதற்பொருளே ! திருப் பெருந் துறை வாழ் சிவபெருமானே ! சிறப்பமைந்த சிவபுரத்தின் மன்ன! அன்பின் காரணமாய் அடியேனாகிய யான் உயிரும் உடலும் ஆனந்தமாய்க் கசிந்துருக என் தகுதிக்கு மேலான அருட்செல்வத்தை அருளியுள்ளாய். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய வல்லேன்?
390. அரைசனே அன்பர்க்(கு) அடியனேன் உடைய
அப்பனே ஆவியோ(டு) ஆக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின்(று) உருக்கிப்
பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே
திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
திருப் பெருந் துறையுறை சிவனே
உரைஉணர்(வு) இறந்துநின்(று) உணர்வதோர் உணர்வே
யான் உன்னை உரைக்குமா(று) உணர்த்தே.
தெளிவுரை : புரைபுரை  எலும்பின் உன் துளை எல்லாம். பொய் இருள் கடிந்தமெய்ச் சுடரே  பிரபஞ்சத்துக்குரிய இருள், வெளிச்சம் ஆகியவைகளுக்கு அப்பால் இருக்கும் ஆத்ம ஜோதியே; திரைபொரா  அலைமோதாமல், மன்னும் நிலைபெற்ற. பரமாத்ம ஒளியானது பிரபஞ்சத்துக்கு உரிய இருளுக்கும் வெளிச்சத்துக்கும் அப்பாற்பட்டது. பரமன் அசைவற்ற பேரானந்தம். அந்தக்கரணத் தோடு சம்பந்தப் படாத பேருணர்வே பிரக்ஞானம் எனப்படுவது. அப்பெருநிலையை அருளுமாறு யஅடிகள் இறைவனை வேண்டுகிறார்.
391. உணர்ந்தமா முனிவர் உம்பரோ(டு) ஒழிந்தார்
உணர்வுக்கும் தெரிவுஅரும் பொருளே
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
எனைப் பிறப்(பு) அறுக்கும்எம் மருந்தே
திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
திருப்பெருந் துறையுறை சிவனே
குணங்கள்தாம் இல்லா இன்பமே உன்னைக்
குறுகினேற்(கு) இனியென்ன குறையே.
தெளிவுரை : நிறை ஞானிகளும் தேவர்களும் மற்றவர்களும் பரமனை முற்றும் அறியார். சீர் தூக்குவதற்கு அவன் போன்று மற்றொரு பொருள் இல்லை. உயிர்களுக்கெல்லாம் அவன் உயிர். எனக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பை அறியும் போது நான் முக்தி பெறுகிறேன். பிரளய இருளிலும் அவன் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சிதாகாசம். அவன் குணாதீதன். அந்தப் பரம்பொருளை அறிகிறவன் பூரணன் ஆகிறான்.
392. குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயும்
திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீ என் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை என்இரக் கேனே.
தெளிவுரை : கரையற்ற வெள்ளம் போல் சிந்தையுள் பாயும் திருப்பெருந்துறையில் உள்ள சிவனே, இறைவனே, நீ என் உடலில் வந்து தங்கியுள்ளாய். இனி நான் உன்னிடம் வேண்டுவதற்கு யாது உளது? நீ பூரணன். குற்றமற்ற அமுது. முடிவற்ற செழுந்சோதி. நீ வேதமாகவும், வேதத்தின் சாரமாகவும் இருக்கின்றாய். ஆகவே எனக்குக் குறை யொன்றுமில்லை என்பதாம்.
393. இரந்(து)இரந்(து) உருக என்மனத் துள்ளே
எழுகின்ற சோதியே இமையோர்
சிரந்தனில் பொலியும் கமலச்சே வடியாய்
திருப் பெருந் துறையுறை சிவனே
நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
ஆயவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண்(டு) இன்றே.
தெளிவுரை : வேண்டி வேண்டி உருக என் மனத்தில் எழுகின்ற சோதியே ! தேவர்கள் தம் தலைமீது வைத்துப் போற்றும் திருவடியை உடையவனே, திருப் பெருந்துறையில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானே, ஐம்பூதங்களாகவும் இருக்கின்றாய். அதற்கு அப்பால் இருப்பவனும் நீயே. எங்கும் நிறைந்துள்ள உன்னை நான் இன்று கண்ணாரக் கண்டேன்.
இமையோர்  ஐம்பொறிகள் என்றும் பொருள் கொள்வர்.
394. இன்(று)எனக்(கு) அருளி இருள்கடிந்(து) உள்ளத்(து)
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீஅலால் பிறிதுமற்(று) இன்மை
சென்றுசென்(று) அணுவாய்த் தேய்ந்துதேய்ந்(து) ஒன்றாய்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றுநீ அல்லை அன்றியொன்(று) இல்லை
யார்உன்னை அறியகிற் பாரே.
தெளிவுரை : திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இப்போது நீ எனக்கு அருள்புரிந்து அஞ்ஞானமாகிய இருட்டை அகற்றி, மனத்தில் உதிக்கின்ற சூரியனை ஒத்து நின்ற உன்னுடைய இயல்பை நான் நினையாமல் நினைந்தேன். உன்னைத் தவிர வேறு ஒரு பொருளும் இல்லையாம்படி போய்ப்போய் அணு உருவமாகித் தேய்ந்து தேய்ந்து ஒரு ரூபமாகின்றன. நீ ஒரு பொருளும் அல்லை. உன்னையன்றி ஒரு பொருளும் இல்லை. உன்னை உள்ளபடி அறிய வல்லார் யாவர்?
395. பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்தோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே
யார்உற(வு) எனக்(கு)இங்(கு) ஆர்அயல் உள்ளார்
ஆனந்தம் ஆக்கும்என் சோதி.
தெளிவுரை : திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவ பெருமானே ! நிலவுலகம், சுவர்க்கம், அண்டம் அனைத்துமாய் இருப்பவனே, சோதி சொரூபனே, நீராகவும் நெருப்பாகவும் இருப்பவனே, தெளிந்த தேனே, சிவானந்தம் பெற்ற எனக்கு உற்றாரும் வேற்றாரும் இல்லை. எனக்கு எல்லாம் நீயே.
396. சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற்(கு) அரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும்ஆ னந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருள் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக்(கு) அருளாய்
வந்துநின் இணையடி தந்தே.
தெளிவுரை : திருப் பெருந்துறையுறை சிவனே ! ஒளிமயமாய்த் தோன்றும் உருவமே ! நீயே அருவமாகவும் இருக்கின்றாய். ஆதி மத்யாந்த ரகிதனாய் இருப்பவனும் நீயே. உலகப் பற்றுக்களை அறுக்கும் ஆனந்தக் கடலாகவும் விளங்குகின்றாய். குற்றமற்ற குணக் குன்றே. நீ என்னை விட்டு நீங்கும் வகை எது? ஒன்றுமில்லை. உன் திருவடிப் பேற்றை எனக்கு அருளுவாயாக. ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் பிரிவு இல்லை என்பதாம்.
397. தந்த(து)உன் தன்னைக் கொண்ட(து)என் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன்(று) இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்ற(து)ஒன்(று) என்பால்
சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடல்இடங் கொண்டாய்
யான்இதற்(கு) இலன்ஓர்கைம் மாறே.
தெளிவுரை : சங்கரனே ! மிகப் பெரியோனான உன்னை எனக்குத் தந்திருக்கின்றாய். அதற்குப் பதிலாக மிகச் சிறியேனான என்னை நீ ஏற்றுக் கொண்டிருக்கிறாய். இந்தப் பண்டமாற்றில் யார் சாமர்த்திய சாலி? முடிவு இல்லாத இன்பத்தை உன்னிடமிருந்து நான் அடைந்திருக்கிறேன். இதற்கு ஈடாக நீ என்னிடமிருந்து பெற்றுக் கொண்ட பொருள் யாது? எனது நெஞ்சையே கோயிலாகக் கொண்ட எம் பெருமானே ! திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! என் தந்தையே ! ஈசனே ! நீ என் உடம்பையே இடமாகக் கொண்டிருக்கிறாய். இந்த உபகாரத்திற்கு நான் செய்யக் கூடிய கைம்மாறு ஒன்றுமில்லை.
23. செந்திலாப் பத்து (திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது)
சிவானந்தம் அளவறுக் கொணாமை
வாழ்வுக்கு உறுதுணையாக உடல் இருக்கும்போதே அதைச் செத்ததற்கு நிகராகப் புறக்கணிக்க வல்லவனுக்கு ஞான பரிபாகம் விரைவில் வருகிறது. ஜீவ போதத்தை ஒழிப்பதை உருவகப் படுத்தி அசுர சம்காரமென்று புராணங்கள் கூறுகின்றன. திரிசூலமும் வேலும் ஞானத்தின் சின்னங்களாகின்றன. ஞானோதயத்தில் ஜீவன் சாகிறான். சிவன் மிளிர்கிறான். ஜீவவியக்தியைக் கலைப்பது குறிக்கோள்.
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
398. பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமு(து) ஊறும்
புதும லர்க்கழல் இணையடி பிரிந்தும்
கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ
விழித்திருந்(து)உள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருட்பெருங் கடலே
அத்த னேஅயன் மாற்(கு)அறி ஒண்ணாச்
செய்யமே னியனே செய்வகை அறியேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
தெளிவுரை : திருப்பெருந் துறை மேவிய சிவனே! ஜீவ வியக்தியோடு கூடி இரப்பவர்களாகிய பிரம்மா, விஷ்ணு போன்றவர்களே உன்னை முற்றும் அறிய மாட்டார்கள். பர நாட்டத்தில் மனோ நாசம் அடையப் பெற்ற அல்பனாகிய நான் எங்ஙனம் உன்னை அறிவேன்? என் உள்ளம் உலக நாட்டத்தில் பாழ்படுகிறது.
399. புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டியாய் அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும்நின் மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனமிகு உருகேன்
பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றிலேன் இன்னும் திரிதரு கின்றேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
தெளிவுரை : திருப்பெருந்துறை உறைசிவனே ! தீவிரமாகத் தவம் புரிந்த தேவர்களும் மற்றவர்களும் தவத்தில் மூழ்கிப் புற்று ஆனார்கள். நீரையும் காற்றையுமே புசித்தார்கள். களைத்துப் போனார்கள். ஆயினும் அவர்கள் உன்னை அறியவில்லை. நீயோ என்னை வலிய ஆட்கொண்டு முடிந்த நிலையை உபதேசித்தாய். நானோ ஜீவ போதத்தை ஒழிக்காமல் அதைப் பற்றிக் கொண்டிருக்கிறேன். என்னே உன் கருணை !
400. புலைய னேனையும் பொருளென நினைந்துன்
அருள்பு ரிந்தனை புரிதலும் களித்துத்
தலையி னால்நடந் தேன்விடைப் பாகா
சங்கரா எண்ணில் வானவர்க்(கு) எல்லாம்
நிலைய னேஅலை நீர்விடம் உண்ட
நித்த னேஅடை யார்புரம் எரித்த
சிலைய னேஎனைச் செத்திடப் பணியாய்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
தெளிவுரை : திருப் பெருந்துறை உறை சிவனே ! உடலில் பற்று வைத்துள்ள என்னை நீ ஆட்கொண்டாய். ஆனால் நானோ செருக்குற்று நிலை தடுமாறுகிறேன். ஆலகால விஷத்தை உண்பதும் திரிபுரங்களை எரிப்பதும் உனக்கு வெறும் விளையாட்டு. அத்தகைய இறைவா, என் ஜீவ போதத்தை அழித்திட மாட்டாயா? விடைப் பாகா, காளையை வாகனமாக உடையவனே, சிலையனே, மேரு மலையை வில்லாக உடையவனே!
401. அன்ப ராகிமற்(று) அருந்தவம் முயல்வார்
அயனும் மாலும்மற்(று) அழலுறு மெழுகாம்
என்ப ராய்நினை வார்எ னைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக்(கு) ஆண்டாய்
வன்ப ராய்முரு(டு) ஒக்கும்என் சிந்தை
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
தெளிவுரை : சிவலோக நாதனே ! உன்னிடத்துப் பக்தி படைத்துள்ள பிரம்மா, விஷ்ணு, வேறுபலரும் உன் அருளை நாடி உருகியிருக்க வைத்துவிட்டு என்னை எதற்காக ஆட் கொண்டாய்? என் மனம் பராய்க்கட்டை போன்ற வலிமையுடையது. மரத்தால் செய்தது போன்ற என்கண் உன்னைப் பார்க்கத் தகுதியற்றது. காது இருப்பினும் கடினமானது.
402. ஆட்டுத் தேவர்தம் விதிஒழித்(து) அன்பால்
ஐயனே என்றுன் அருள்வழி இருப்பேன்
நாட்டுத் தேவரும் நா(டு)அரும் பொருளே
நாத னேயுனைப் பிரிவுறா அருளைக்
காட்டித் தேவநின் கழலிணை காட்டிக்
காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய்
சேட்டைத் தேவர்தம் தேவர்பி ரானே
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
தெளிவுரை : திருப்பெருந்துறை அரசே ! இந்திரியங்களின் வழியே நான் செல்ல மாட்டேன்; உலகத்தவர் செய்யும் கர்ம காண்டத்தில் நான் ஈடுபட மாட்டேன். மும்மூர்த்திகள் செயலிலும் நான் கட்டுப்பட மாட்டேன். சிவ பெருமானே, உனது அருளை நாடி மாய உடலை ஒதுக்குவேன்.
403. அறுக்கி லேன்உடல் துணிபடத் தீப்புக்(கு)
ஆர்கி லேன்திரு அருள்வகை அறியேன்
பொறுக்கி லேன்உடல் போக்கிடம் காணேன்
போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
இறக்கி லேன்உனைப் பிரிந்தினி(து) இருக்க
என்செய் கேன்இது செய்கஎன்(று) அருளாய்
சிறைக்க ணேபுனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
தெளிவுரை : திருப் பெருந்துறை யுறை சிவ பெருமானே ! அஞ்ஞானத்தில் பிறந்துள்ள இந்த ஜீவனிலை எனக்கு வேண்டாமென்று நான் என் உடலைத் துண்டங்களாக வெட்டவில்லை. தீயில் குதித்து அதில் தங்கியிருக்கவில்லை. திருவருளைப் பெறும் விதத்தை அறிகிலேன். உடலை வைத்திருக்கச் சகியேன். சென்றடையும் இடத்தையும் அறிந்திலேன். வணங்குகின்றேன். வணங்குகிறேன் என்று யாண்டும் சொல்வோர்க்குரிய ரிஷப வாகனா, உன்னைப் பிரிந்திருந்தும் நான் இன்னும் சாக வில்லையே; சாந்தியுற்றிருக்க நான் செய்வது யாது? இன்னதைச் செய் என்று அருள் புரிவாயாக.
404. மாய னேமறி கடல்விடம் உண்ட
வான வாமணி கண்டத்தெம் அமுதே
நாயி னேன்உனை நினையவும் மாட்டேன்
நமச்சி வாயஎன்(று) உன்னடி பணியாப்
பேய னாகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞக னேயோ
சேய னாகிநின்(று) அலறுவ(து) அழகோ
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
தெளிவுரை : திருப் பெருந்துறை யுறை சிவனே! மாயைக்குத் தலைவா ! நீல கண்டா, சந்திர சேகரா! ருத்ரா ! நான் உன்னைத் தியானிப்பதில்லை, உனது நாம ஜபம் செய்வதில்லை. அத்தகைய நான் உனக்கு வேற்றானாக அழுது கொண்டிருப்பது முறையன்று. முக்தி மார்க்கத்தை எனக்குக் கொடுத்தருள்க.
405. போது சேர்அயன் பொருகடல் கிடந்தோன்
புரந்த ராதிகள் நிற்கமற்(று) என்னைக்
கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக்
குறிக்கொள் கென்றுநின் தொண்டரில் கூட்டாய்
யாது செய்வதென்(று) இருந்தனன் மருந்தே
அடிய னேன்இடர்ப் படுவதும் இனிதோ
சீத வார்புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
தெளிவுரை : என் குற்றத்தைக் களைந்து உன் திருவடியைக் காட்டியருள்க. அதை நான் உறுதியாகப் பிடித்துக் கொள்ளுதல் பொருட்டு உன் அடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்து வை. செய்வது யாது என்று தெரியாமல் நான் துன்பப் பட்டுக் கொண்டிருப்பது உனக்குச் சம்மதமாகுமா?
406. ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
நிற்க மற்றெனை நயந்தினி(து) ஆண்டாய்
காலன் ஆருயிர் கொண்டபூங் கழலாய்
கங்கையாய் அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட்(டு) அலறும்அம் மலர்க்கே
மரக்க ணேனையும் வந்திடப் பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
தெளிவுரை :  கெண்டை மீனும் நீலோற்பலமும் நிலவிய வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! மண்ணவரும் விண்ணவரும் காணுமாறு என்னை நீ ஆண்டருளினாய். கால காலனே, கங்காதரா, அனலேந்தியவனே, திருமால் அடைய விரும்பும் உன் திருவடியை அறிவிலியாகிய அடியேன் வந்தடையுமாறு பணித்து அருள்க.
407. அளித்து வந்தெனக்(கு) ஆவஎன்(று) அருளி
அச்சம் தீர்த்தநின் அருட்பெரும் கடலில்
திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே
வளைக்கை யானொடு மலரவன் அறியா
வான மாமலை மாதொரு பாகா
களிப்பெ லாம்மிகக் கலங்கிடு கின்றேன்
கயிலை மாமலை மேவிய கடலே.
தெளிவுரை : ஐயோ என்று எனக்காக இரங்கிக் கிருபை கூர்ந்து என் அச்சம் தவிர்த்த உனது அருட் கடலில் மூழ்கியும், நிரம்ப இன்புற்றும் புசித்தும் நான் பரவசம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக உலக சம்பந்தைக் குறித்து நான் செருக்குற்றிருக்கிறேன். அந்தோ!
24. அடைக்கலப் பத்து (திருப்பெருந்துறையில் அருளியது )
பக்குவ நிண்ணயம்
கலவைப் பாட்டு
408. செழுக்கமலத் திரளனநின்
சேவடி சேர்ந்தமைந்த
பழுத்தமனத்(து) அடியருடன்
போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப்
பொல்லாக்கல் விஞானமிலா
வழுக்குமனத்(து) அடியேன்
உடையாய்உன் அடைக்கலமே.
தெளிவுரை : மன பரிபாகம் அடைந்துள்ள அடியார்கள் உன்னோடு அந்தர்த் தானமாயினர். நானோ உடல் உணர்வில் ஊறியும் பொருளற்ற கலையில் உழன்றும் மனம் கேடு அடைந்தும் கிடக்கிறேன். ஆயினும் உன்னிடம் அடைக்கலம் நாடுகிறேன்.
409. வெறுப்பன வேசெய்யும் என்சிறு
மையைநின் பெருமையினால்
பொறுப்பவ னேஅராப் பூண்பவ
னேபொங்கு கங்கைசடைச்
செறுப்பவ னேநின் திருவரு
ளால்என் பிறவியைவேர்
அறுப்பவ னேயுடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே.
தெளிவுரை : உன்னைச் சார்ந்த பாம்புக்குப் பெருமை வந்துள்ளது; கங்கைக்கு அடக்கம் வந்துள்ளது. குணக் கேடனாகிய என்னைக் குணவான் ஆக்கு. உன்னிடம் அடைக்கலம் புகுகிற என் பிறவியைப் போக்கு.
410. பெரும்பெரு மான்என் பிறவியை
வேரறுத்துப் பெரும்பிச்சுத்
தரும்பெரு மான்சது ரப்பெரு
மான்என் மனத்தினுள்ளே
வரும்பெரு மான்மல ரோன்நெடு
மால்அறி யாமல்நின்ற
வரும்பெரு மானுடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே.
தெளிவுரை : நீ பிறவியைப் போக்குபவன்; பிறவிப் பித்தைப் பெருக்குபவன்; எதையும் சாதிப்பவன்; சித்த மிசைக் குடி கொள்பவன்; ஜீவ போதம் படைத்த அயனுக்கும் அரிக்கும் எட்டாதவன். ஜீவர்களை உடையவன்; ஆதலால் நீ மகாதேவன்; உன்னிடம் அடைக்கலம் புகுகிறேன்.
411. பொழிகின்ற துன்பப் புயல்வெள்
ளத்தில்நின் கழற்புணைகொண்(டு)
இழிகின்ற அன்பர்கள் ஏறினர்
வான்யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக்
காமச் சுறவெறிய
அழிகின்ற னன்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே.
தெளிவுரை : துன்பக் கடல் என்னும் மண்ணுலகுக்கு வந்த பக்தர்கள் இறைவன் திருவடி என்னும் தெப்பத்தைக் கொண்டு முக்தி என்னும் கரையேறினர். நானோ இங்குக் காம ஆபத்துக்களுக்கு ஆளாகி அழிகிறேன். ஆயினும் உன்னிடம் என்னை நான் ஒப்படைக்கிறேன்.
412. சுருள்புரி கூழையர் சூழலில்
பட்டுன் திறம்மறந்திங்(கு)
இருள்புரி யாக்கையி லேகிடந்(து)
எய்த்தனன் மைத்தடம்கண்
வெருள்புரி மான்அன்ன நோக்கிதன்
பங்கவிண் ணோர்பெருமான்
அருள்புரி யாய்டை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே.
தெளிவுரை : நான் காமநோயில் வருந்துபவன்; உன் அருள் திறனை மறந்து அஞ்ஞானத்தில் உதித்த உடலில் உழன்று இளைத்தவன்; அம்பிகை சமேதா! அத்தகைய என்னை ஆட் கொள்வாயாக. உன்னைத் தஞ்சம் அடைகிறேன்.
413. மாழைமைப் பாவிய கண்ணியர்
வன்மத் திடவுடைந்து
தாழியைப் பாவு தயிர்போல்
தளர்ந்தேன் தடமலர்த்தாள்
வாழிஎப் போதுவந்(து) எந்நாள்
வணங்குவன் வல்வினையேன்
ஆழிஅப் பாவுடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே.
தெளிவுரை : மாதர் மத்தைக் கொண்டு கடைகிற தயிரானது சிதறுண்டு மிடாவில் மோதிச் சுழல்வது போன்று நான் தளர்ச்சியடைந்தேன். வலிவு படைத்த வினையின் வசப்பட்டிருக்கும் நான் பெருமை பொருந்திய உன் தாமரைத் திருவடியை எப்பொழுது வந்து வாழ்க என்று வழுத்துவேன்? கருணைக் கடலாகிய அப்பனே அடைக்கலம் தந்தருள்க.
414. மின்கணினார் நுடங்கும் இடையார்
வெகுளிவலையில் அகப்பட்டுப்
புன்கண னாய்ப்புரள் வேனைப்
புரளாமல் புகுந்தருளி
என்கணி லேஅமு தூறித்
தித்தித்(து)என் பிழைக்(கு)இரங்கும்
அங்கண னேயுடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே.
தெளிவுரை : மாதர் இணக்கத்தில் இன்பம் இருக்கிறதென்று மயங்கித் துன்பத்தை வரவழைத்துக் கொண்ட என்னைக் காத்தருள்க. என் குற்றத்தை மன்னித்து நான் நாடும் இன்பத்தை என்னிடத்தே தோற்றுவித்து என்னை ஆள்பவனே, உன்னிடம் என்னை நான் ஒப்படைகிறேன்.
415. மாவடு வகிரன்ன கண்ணிபங்
காநின் மலரடிக்கே
கூவிடு வாய்கும்பிக் கேயிடு
வாய்நின் குறிப்பறியேன்
பாஇடை ஆடு குழல்போல்
கரந்து பரந்த(து)உள்ளம்
ஆகெடு வேன்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே.
தெளிவுரை : அம்பிகை பங்கா என்னை நீ ஆட் கொண்டால் சிவானந்தப் பேறு பெறுவேன். புறக்கணித்தால் அது எனக்கு நரக வேதனையாகும். என் மனம் நெசவு நாடா போன்று சலனப் படுகிறது. என்னை உன் உடமையாக்குக.
416. பிறிவுஅறி யாஅன்பர் நின்னருள்
பெய்கழல் தாளிணைக்கீழ்
மறிவுஅறி யாச்செல்வம் வந்துபெற்
றார் உன்னை வந்திப்பதோர்
நெறியறி யேன்நின்னை யேயறி
யேன்நின்னை யேயறியும்
அறிவுஅறி யேன்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே.
தெளிவுரை : அழியாத செல்வமாகிய உன்னை உன் அன்பர் வந்து அடைந்தனர். ஆனால் எனக்கோ உன்னை வழுத்தத் தெரியாது. உன்னை அறியேன். உன்னை அறிவதற்கான புத்தியோகம் எனக்கு இல்லை.
417. வழங்குகின் றாய்க்(கு)உன் அருளார்
அமுதத்தை வாரிக்கொண்டு
விளங்குகின் றேன்விக்கி னேன்வினை
யேன்என் விதியின்மையால்
தழங்கரும் தேன்அன்ன தண்ணீர்
பருகத்தந்(து) உய்யக்கொள்ளாய்
அழுங்குகின் றேன்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே.
தெளிவுரை : உன் அருள் அமிர்தத்தை நீ வேண்டியவாறு வாங்குகின்றனாய். அதை அள்ளி உண்கின்ற எனக்கு வல்வினைப் பயன் இன்மையால் நான் விக்கி வருந்துகிறேன். எனக்குத் தண்ணீரைப் பருகக் கொடுத்து என்னை உய்விப்பாயாக.
25. ஆசைப் பத்து (திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது)
ஆத்தும இலக்கணம்
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
418. கருடக் கொடியோன் காண மாட்டாக்
கழற்சே வடியென்னும்
பொருளைத் தந்திங்(கு) என்னை யாண்ட
பொல்லா மணியேயோ
இருளைத் துரந்திட்(டு) இங்கே வாவென்(று)
அங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
தெளிவுரை : உனது திருவடியென்னும் துளைக்க முடியாத நிறைபொருளை எனக்குக் கொடுத்தருளினாய். இப் பிரபஞ்ச வாழ்வு என்னும் மருளை நீக்கிவிட்டு அப்பால் உள்ள பரநிலை என்னும் அருளைப் பெற ஆசைப்படுகிறேன்.
419. மொய்ப்பால் நரம்பு கயிறாக
மூளை என்ற தோல்போர்த்த
குப்பாயம் புக்கிருக்க கில்லேன்
கூவிக் கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கும் அப்பாலாம்
என்னார் அமுதே யோ
அப்பா காண ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
தெளிவுரை : அழியும் தன்மையுயடைய உடல் வாழ்க்கை எனக்கு வேண்டாம். பிரபஞ்சத்துக்கு அப்பால் இருக்கிற அமிர்த சொரூபமே நான் வேண்டுவது. கண்டாய்  முன்னிலை அசை. அம்மானே  மேலான என் தலைவனே.
420. சீவாந்(து) ஈமொய்த்(து) அழுக்கொடு திரியும்
சிறுகுடில் இது சிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்(து)ஆட்
கொள்ளும் குருமணியே
தேவா தேவர்க்(கு) அரியானே சிவனே
சிறிதென் முகநோக்கி
ஆஆ என்ன ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
தெளிவுரை : உடல் வாழ்க்கையில் அருவருப்பும் ஆத்ம சொரூபத்தில் பேர் ஆர்வமும் படைத்திருப்பது ஆத்ம சாதனத்துக்கு இன்றியமையாத மனநிலையாம். அழுக்காகிய உடல் வாழ்க்கை ஒழிக. ஞானப் பிரகாசனே ! இரங்கி என்னை நீ உன் மயம் ஆக்கிக் கொள்.
421. மிடைந்தெலும்(பு) ஊத்தை மிக்கழுக்(கு) ஊறல்
வீறிலி நடைக்கூடம்
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன்
சோத்தம்எம் பெருமானே
உடைந்துநைந்(து) உருகி உள்ளொளி நோக்கி
உன்திரு மலர்ப்பாதம்
அடைந்துநின்(று) இடுவான் ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
தெளிவுரை : கீழ்மைக்கும் துன்பத்துக்கும் இருப்பிடமாகிய உடல் வாழ்க்கை எனக்கு வேண்டாம். உள்ளத்தினுள்ளே உனது சோதியையே நான் நாடியிரப்பேன்.
422. அளிபுண் அகத்துப் புறத்தோல் மூடி
அடியேன் உடையாக்கை
புளியம் பழம்ஒத்(து) இருந்தேன் இருந்தும்
விடையாய் பொடியாடீ
எளிவந்(து) என்னை ஆண்டு கொண்ட
என்னார் அமுதேயோ
அளியேன்என்ன ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
தெளிவுரை : விடையாய்  காளை வாகனனே; பொடி  திருநீறு; புளியம்பழம் அதன் ஓட்டில் ஒட்டாது இருப்பது போன்று நான் இப்புல்லிய உடலில் பற்றற்று இருக்க வேண்டும். உன் அருளுக்கு நான் உகந்தவன் என்று நீ இயம்ப வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.
423. எய்த்தேன் நாயேன் இனிஇங்(கு) இருக்க
கில்லேன் இல்வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா
மலர்ச்சே வடியானே
முத்தா உன்றன் முகவொளி நோக்கி
முறுவல் நகைகாண
அத்தா சால ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
தெளிவுரை : இப்பிரபஞ்ச வாழ்க்கை போதும். இனி உன் பேரானந்தத்திலேயே திளைத்திருக்க விரும்புகிறேன்.
424. பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும்
பரனே பரஞ்சோதீ
வாராய் வாரா உலகந் தந்து
வந்(து)ஆட் கொள்வானே
பேரா யிரமும் பரவித் திரிந்தெம்
பெருமான் எனஏத்த
ஆரா அமுதே ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
தெளிவுரை : மண்ணவரும் விண்ணவரும் போற்றும் பெம்மானே, முக்தி கொடுத்து ஆட் கொள்பவனே, உன் நாமங்கள் ஆயிரத்தையும் ஓதி உன்னை வழுத்த விரும்புகிறேன்.
425. கையால் தொழு(து) உன் கழற்சே வடிகள்
கழுமத் தழுவிக் கொண்(டு)
எய்யா(து) என்றன் தலைமேல் வைத்(து)எம்
பெருமான் பெருமான்என்(று)
ஐயா என்றன் வாயால் அரற்றி
அழல்சேர் மெழுகொப்ப
ஐயாற்(று) அரசே ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
தெளிவுரை : திருவையாற்றில் கோயில் கொண்டிருக்கும் பெருமானே! உன் திருவடியைத் தழுவிக் கொண்டு அதை என் தலைமேல் வைத்துக் கொண்டும், எம் பெருமானே என்று போற்றவும் தீயிலிட்ட மெழுகு போ;ன்று உள்ளம் உருகவும் ஆசைப்படுகின்றேன்.
426. செடியார் ஆக்கைத் திறமற வீசிச்
சிவபுர நகர்புக்குக்
கடியார் சோதி கண்டு கொண்(டு) என்
கண்இணை களிகூரப்
படிதான் இல்லாப் பரம்பர னேஉன்
பழஅடி யார்கூட்டம்
அடியேன் காண ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
தெளிவுரை : குற்றம் நிறைந்த இந்த உடம்பின் தொடர்பை அறவே ஒழித்துவிட்டு ஒப்பில்லாத சுயஞ் சோதியாகிய பரனே ! உன் சன்னிதியிலும் உன்னுடைய பழைய பக்தர்கள் கூட்டத்திலும் திளைத் திருக்க விரும்புகிறேன்.
427. வெஞ்சேல் அனைய கண்ணார்தம்
வெகுளி வலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே
நானோர் துணைகாணேன்
பஞ்(சு)ஏர் அடியாள் பாகத்தொருவா
பவளத் திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே.
தெளிவுரை : காம வலையில் சிக்கி மெலிந்தவன் நான். ஞானச் சுடரே. அம்பிகை சமேதா, உன்னையன்றி எனக்கு வேறு துணையில்லை. அஞ்ச வேண்டாம் என்று உன் பவளத் திருவாயால் பகர்வதைக் கேட்க ஆசைப் படுகிறேன்.
 26. அதிசயப் பத்து
திருப் பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது.
முத்தி இலக்கணம்
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
428. வைப்புமா(டு) என்று மாணிக்கத்(து) ஒளியென்(று)
மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவர வியர்தங்கள்
திறத்திடை நைவேனை
ஒப்பி லாதன உவமனில் இறந்தன
ஒண்மலர்த் திருப்பாதத்(து)
அப்பன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
தெளிவுரை : யாண்டும் நிலைத்துள்ள செல்வமென்றும், சுயம் சோதிப் பொருள் என்றும் நான் சிவனை நாடவில்லை; சிற்றின்பத்தை நாடினேன். ஆயினும் ஒப்பற்ற பரமன் என்னை ஆட்கொண்டு தன் அடியவர் கூட்டத்தில் சேர்த்தான். இது ஓர் அதிசயம் அல்லவா?
429. நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்
நினைப்பவ ரொடுங் கூடேன்
ஏத மேபிறந்(து) இறந்(து)உழல் வேன்தனை
என்அடி யான்என்று
பாதி மாதொடும் கூடிய பரம்பரன்
நிரந்தரமாய் நின்ற
ஆதி ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
தெளிவுரை : நல்வழியைப் பற்றி நான் நினைக்கவும் இல்லை; நினைப்பவரோடு சேரவும் இல்லை. பிறவித் துன்பக் கடலில் மூழ்கியவன் நான். அத்தகைய என்னை நித்திய வஸ்துவாகிய அர்த்த நாரீசன் தன் அடியவருள் சேர்த்துக் கொண்டான். இது அதிசயம்.
430. முன்னை என்னுடைய வல்வினை போயிட
முக்கண் அதுஉடைஎந்தை
தன்னை யாவரும் அறிவதற்(கு) அரியவன்
எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில்
இளமதி அதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
தெளிவுரை : பண்படாதவர் பரமனைக் காண மாட்டார். பண்பட்டவர்க்கு அவன் நன்கு விளங்குகிறான். அத்தகையவன் என் வினையைப் போக்கி என்னைத் தன் திருக்கூட்டத்தில் சேர்த்துக் கொண்டான். இது ஓர் அதிசயம்.
431. பித்தன் என்றெனை உலகவர் பகர்வதோர்
காரணம் இதுகேளீர்
ஒத்துச் சென்றுதன் திருவருள் கூடிடும்
உபாயமது அறியாமே
செத்துப் போய்அரு நரகிடை வீழ்வதற்கு
ஒருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
தெளிவுரை : கேட்பீராக. மனம் இசைந்து போய் இறைவனது திருவருளைப் பெறுதற்கு உரிய உபாயத்தை அறியாமல் (பிறவிப் பயன் அடையாமல்) செத்துப் போய்ச் சகித்தற்கு அருமையான நரகத்தில் வீழ்ந்து வருந்த இசைகின்ற என்னை என் தந்தையாகிய சிவபெருமான் ஆண்டருளித்தன் அடியாரோடு சேர்ந்த அதிசயத்தைக் கண்டோம் அல்லவா? பித்தன் என்று என்னைச் சொல்வதற்கு ஒரு காரணமாய் இருந்தது இதுவே.
432. பரவு வார்அவர் பாடுசென்(று) அணைகிலேன்
பன்மலர் பறித்(து)ஏத்தேன்
குரவு வார்குழ லார்திறத் தேநின்று
குடிகெடு கின்றேனை
இரவு நின்(று)எரி யாடிய எம்இறை
எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
தெளிவுரை : பக்தர்களோடு கூடிடவோ பூக்கொண்டு போற்றவோ நான் செய்யவில்லை. காம நோயில் தேய்ந்தவன் நான். மகா பிரளயத்திலும் ஞான ஒளி வீசிக் கொண்டிருக்கிறவனும் பாம்பை அணிந்தவனும் ஆகிய பரமன் அத்தகைய என்னைத் தன் அடியாரோடு சேர்த்தது அதிசயம்.
433. எண்ணி லேன்திரு நாமஅஞ்(சு) எழுத்தும்என்
ஏழைமை அதனாலே
நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடு
நல்வினை நயவாதே
மண்ணி லேபிறந்(து) இறந்துமண் ஆவதற்(கு)
ஒருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
தெளிவுரை : நான் பஞ்சாட்சர மந்திரத்தைத் தியானம் செய்யாதவன். நூல் அறிஞரோடு சேராதவன். இறைபணி இயற்றாமல் மண்ணாங்கட்டி போன்று இருப்பவன். அத்கைய என்னை இறைவன் தன் இனம் சேர்த்தது அதிசயம்.
434. பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந்(து) உளுத்(து)அசும்பு
ஒழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதிநின்(று) இடர்க்கடல்
சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த
பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
தெளிவுரை : புல்லிய பொய்யுடலை மெய்யென்று கருதி இத்துன்பக் கடலில் உழல்கின்ற என்னை ஆத்ம பிரகாசன் தனக்குச் சொந்தமாக்கியது விந்தையாம்.
435. நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை
குரம்பையில் புதுப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து
நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய்யற நுகளறுத்(து)
எழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
தெளிவுரை : என்னை தற்காலிகமாக மாயப் பிரபஞ்ச வாழ்க்கையில் வைத்துப் பக்குவப் படுத்தி மீண்டும் தன் சொரூபத்தில் அணைத்துக் கொண்டான் இறைவன்.
436. உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
எழுதரு நாற்றம்போல்
பற்றல் ஆவதோர் நிலையிலாப் பரம்பொருள்
அப்பொருள் பாராதே
பெற்ற வாபெற்ற பயனது நுகர்ந்திடும்
பித்தர்சொல் தெளியாமே
அத்தன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
தெளிவுரை : மணத்தை உண்டு பண்ணுவதற்கு மலர் இருப்பது போன்று மனிதன் உடல் எடுத்திருப்பது பரமனைத் தரிசித்தல் பொருட்டே யாகும். போகத்தில் பித்துப் பிடித்திருப்பவர்கள் இன்ப துன்பத்தில் உழன்று உடல் வாழ்க்கையை வீணாக்குகின்றனர். இறைவன் என்னை அவர்களது போக்கினின்று விடுவித்தது வியப்பாகும்.
437. இருள்தி ணிந்(து)எழுந்(து) இட்டதோர் வல்வினைச்
சிறுகுடில் இதுஇத்தைப்
பொருளெ னக்களித்(து) அருநர கத்திடை
விழப்புகு கின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச்
சினப்பதத் தொடுசெந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய
அதிசயம் கண்டாமே.
தெளிவுரை : அஞ்ஞானத்தில் உதித்த வலிய வினையின் விளைவு இவ்வுடல். இதைப் பொருளென நான் மதித்தது பொய்ந் நெறி. ஏனென்றால் நரகத்துக்கு வாயில் இதுவே. உலகறிந்த திரிபுரத்தை நொடிப் பொழுதில் காய்ந்து சம்காரம் செய்த சிவ பெருமான் தம்மை அடைவதற்கு உற்ற மெய்ந் நெறியை எனக்குக் காட்டியது அதிசயமாம்.
பிரபஞ்சத்தின் கூறுகளிலிருந்து ஜீவாத்மன் விடுபடுவது முக்தி. ஒவ்வொரு பாடலிலும் முக்தி ஒவ்வொடு விதத்தில் விளக்கப்படுகிறது.
27. புணர்ச்சிப் பத்து
திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது
அத்துவித இலக்கணம்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
438. சுடர்பொற் குன்றைத் தோளா
முத்தை வாளா தொழும்(பு)உகந்து
கடைபட் டேனை ஆண்டுகொண்ட
கருணா லயனைக் கருமால்பிரமன்
தடைபட்(டு) இன்னும் சாரமாட்டாத்
தன்னைத் தந்த என்னார் அமுதைப்
புடைபட்(டு) இருப்பது என்றுகொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
தெளிவுரை : சுயஞ்சோதியனை, அகண்டவஸ்துவை, அற்பன் எனினும் தொண்டனுக்கு அருள்புரிவனை, பிரமதேவன் எனினும் செருக்குற்றதனால் அவனால் அணுக முடியாதவனை, அமிர்த சொரூபனைச் சேர்ந்திருப்பது எந்நாளோ?
439. ஆற்ற கில்லேன் அடியேன் அரசே
அவனிதலத்(து) ஐம்புலன் ஆய
சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து
சிவன்எம் பெருமான் என்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்குநெக்(கு)
உள்ளே உருகி ஓலமிட்டுப்
போற்றி நிற்ப(து) என்றுகொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
தெளிவுரை :  நிலவுலகை நுகர்தற்குரிய ஐம்பொறிகளை நான் சேரலாகாது. அவை துன்பம் துய்க்கும் சேறு போன்றவை. சிந்தையைச் சிவன்பால் செலுத்துதல் வேண்டும். ஊற்று நீர் மணலைப் பெயர்த்து எடுப்பது போன்று சிவபோதம் ஜீவபோதத்தைக் கலைக்கிறது. அத்தகைய சிவயோகம் எப்போது வாய்க்கும்?
440. நீண்ட மாலும் அயனும்வெருவ
நீண்ட நெருப்பை விருப்பிலேனை
ஆண்டு கொண்ட என்னார்அமுதை
அள்ளூ(று) உள்ளத்(து) அடியார்முன்
வேண்டும் தனையும் வாய்விட்டலறி
விரையார் மலர்தூவிப்
பூண்டு கிடப்ப(து) என்றுகொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
தெளிவுரை : செருக்குற்ற ஜீவபோதத்துக்கு எட்டாதவன்; செருக்கற்ற ஜீவனை வலிய ஆட்கொள்பவன். அடியார் உள்ளத்தில் பேரானந்தமாய்த் திகழ்பவன்  அத்தகைய சிவனை உரக்கப் போற்றி, மணமலர் தூவி அவனோடு இணைந்திருப்பவது எப்போதோ?
441. அல்லிக் கமலத்(து) அயனும்மாலும்
அல்லா தவதும் அமரர்கோனும்
சொல்லிப் பரவும் நாமத்தானைச்
சொல்லும் பொருளும் இறந்தசுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறைஇன் னமுதை அமுதின்சுவையைப்
புல்லிப் புணர்வ(து) என்றுகொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
தெளிவுரை : தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரம்மதேவனும், திருமாலும் மற்றத் தேவர்களும் இந்திரனும் சிவ நாமத்தைச் சொல்லிப் போற்றுகின்றனர். அவன் சொல்லுக்கும் அப்பால் உள்ள சோதி. அவன் பேரானந்தம் வடிவம். ஜீவ போதத்தை இழந்து அவனிடத்து லயமாவது எப்போது?
442. திகழத் திகழும் அடியும் முடியும்
காண்பான் கீழ்மேல் அயனும்மாலும்
அகழப் பறந்தும் காண மாட்டா
அம்மான் இம்மா நிலம்முழுதும்
நிகழப் பணிகொண்(டு) என்னை ஆட்கொண்(டு)
ஆஆ என்ற நீர்மையெல்லாம்
புகழப் பெறுவ(து) என்றுகொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
தெளிவுரை : கீழ் என்றும் மேல் என்றும் பாகுபடுத்த முடியாத அகண்ட சோதியானவன் சிவன். அத்தகையவன் ஒரு மூர்த்தியாக வந்து உலகறிய இரங்கி என்னை ஆட் கொண்டான். அன்னவனது மகிமையைப் போற்றி அவனோடு ஒன்று படுவது எப்பொழுதோ?
443. பரிந்து வந்து பரமானந்தம்
பண்டே அடியேற்(கு) அருள்செய்யப்
பிரிந்து போந்து பெருமாநிலத்தில்
அருமால் உற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர்
உரோமம் சிலிர்ப்ப உகந்(து) அன்பாய்ப்
புரிந்து நிற்பது என்றுகொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
தெளிவுரை : சிவோகம் என்னும் அனுபூதியை அன்றே அவன் எனக்கு ஊட்டி அருளினான். ஆழ்ந்த மயக்கத்தால் அப்பெரு நிலையினின்று பிரிந்தவன் ஆனேன். இனி அழுதும், மனம் வருந்தியும் பக்தி பண்ணியும் அப் பெரு நிலையை மீண்டும் எப்பொழுது பெறுவேன்?
444. நினையப் பிறருக்(கு) அரியநெருப்பை
நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனையொப் பாரை இல்லாத்தனியை
நோக்கித் தழைத்துத் தழுத்தகண்டம்
கனையக் கண்ணீர் அருவிபாயக்
கையும் கூப்பிக் கடிமலரால்
புனையப் பெறுவது என்றுகொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
தெளிவுரை : ஐம்பூதங்களால் ஆகிய பிரபஞ்சமும் பரமனும் அத்வைத வஸ்து (இரண்டு அல்லாதது) என்பதை எல்லாரும் அறிவதில்லை. ஒப்பற்ற அந்த ஏக வஸ்துவைப் பார்த்துப் பூரிக்கவும் பாடிக் குரல் தழுதழுக்கவும், கண்ணீர் பெருகவும், கையால் நறுமலர்கொண்டு அலங்கரிக்கவும் செய்வது எப்பொழுது?
445. நெக்கு நெக்குள் உருகியுருகி
நின்றும் இருந்தும் கிடந்தும்எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி
நானா விதத்தால் கூத்து நவிற்றிச்
செக்கர் போலும் திருமேனி
திகழ நோக்கிச் சிலிர்சிலித்துப்
புக்கு நிற்ப(து) என்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
தெளிவுரை : பக்தியின் மேலீட்டால் மனம் உருகி நின்றும், இருந்தும், கிடந்தும், எழுந்தும், சிரித்தும், அழுதும், தொழுதும், வாழ்த்தியும், கூத்தாடியும், மயிர் சிலிர்த்தும், சிவனது செம்மேனி யழகை நோக்கி உடல் புளகித்து இருப்பது எக்காலமோ? (முதல் மூன்று செயல்கள் பிரிவாற்றாமையாலும், மற்றவை காட்சியால் விளையும் ஆனந்தத்தாலும் நிகழ்வனவாம்.)
446. தாதாய் மூவேழ் உலகுக்கும்
தாயே நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே
பெருந்தேன் பில்க எப்போதும்
மேதா மணியே என்றென்றேத்தி
இரவும் பகலும் எழிலார்பாதப்
போதாய்ந்(து) அணைவ(து) என்றுகொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
தெளிவுரை : பழைய ஞானபூமி ஏழுக்கும் தந்தையும் தாயும் ஆனவனே. என்னை ஆட்கொண்ட பித்தா. பிறவி நோய்க்கு மருந்தே. அமிர்த தாரையே. ஞான சோதியே என்று யாண்டும் துதித்து இறைவனது திருவடித் தாமரையை ஆராய்ந்து அணுகுவது எப்போதோ?
முடிந்த நிலையில் பக்தியும் ஞானமும் யோகமும் மூன்று நதிகளின் சங்கமம் போன்று ஒன்றுபடுகின்றன. யோகத்தையும் ஞானத்தையும் பக்தியையும் முறையே சத்சித் ஆனந்தம் என்றும், கிரியா சக்தி, ஞான சக்தி, இச்சா சக்தி என்றும் இயம்பலாம். அத்வைதம் இவைகளின் குறியாகிறது.
447. காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும்
கண்ணார் விசும்பின் விண்ணோர்க்(கு)எல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற
முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பா னேஎம் பரமாஎன்று
பாடிப்பாடிப் பணிந்து பாதப்
பூப்போ(து) அணைவ(து) என்றுகொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
தெளிவுரை : அனைத்தையும் படைத்துக் காத்துத் துடைப்பவனே, தேவர்க்கெல்லாம் முன்னவன் எனினும் யாண்டும் இளமையோடு இருக்கும் மூலப் பொருளே, பக்குவம் ஆவதற்கு முன்பே என்னை ஆட்கொண்ட வேதியனே, எம் பரமனே, என்றெல்லாம் பாடி உன் தாமரைத் திருவடியைச் சேரும் காலம் எது?
 28. வாழாப் பத்து
திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது
முத்தி உபாயம்
காதல் மேலீட்டினால் எழும் பிரிவாற்றாமையாலும், ஆண்டவனைக் கூடும் பேரவாவாலும் உயிர் தரித்தல் இயலாது என்கிறார்.
எழுசீர் ஆசிரிய விருத்தம்
448. பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்(து) அரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத்(து) உரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்(று) அருள்புரி யாயே.
தெளிவுரை : பூமியோடு ஆகாயமுமாய் எங்கும் பரந்த எம் ஈசனே ! உன்னைத் தவிர வேறு பற்று எனக்கு இல்லை. சிறப்போடு விளங்குகின்றன. சிவபுரத்துக்கு அரசனே ! திருப் பெருந்துறையில் உறையும் சிவபெருமானே ! என்னை ஆட்கொண்ட நீயே எனக்கு அருள் செய்யாவிட்டால், நான் யாரிடம் இதைச் சொல்லி நொந்து கொள்வேன்? பெரிய கடல் சூழ்ந்த உலகத்தால் நான் உயிர் வாழ்கிலேன். ஆதலால் என்னை வருக என்று அழைத்து நீ அருள்புரிய வேண்டும். கண்டாய்  முன்னிலை அசை.
449. வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்(கு)
உணர்விறந்(து) உலகம்ஊ டுருவும்
செம்பெரு மானே சிவபுரத்(து) அரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
எம்பெரு மானே என்னையாள் வானே
என்னைநீ கூவிக்கொண்(டு) அருளே.
தெளிவுரை : தேவர்கள் உன்னை அறிய மாட்டார்கள். நீ அகண்ட வஸ்து என்பது அயனுக்கும் மாலுக்கும் விளங்குவதில்லை. அத்தகைய நீ அருளுக்கு வேற்றானாகிய என்னை ஆட்கொண்டுள்ளாய். இனி நான் வேறு எதையும் நாடேன். ஆளுடையானே என்னை முற்றும் உனக்கே சொந்தமாக்குக.
450. பாடிமால் புகழும் பாதமே அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேடிநீ ஆண்டாய் சிவபுரத்(து) அரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஊடுவ(து) உன்னோ(டு) உவப்பதும் உன்னை
உணர்த்துவ(து) உனக்(கு) எனக்(கு) உறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்(று) அருள்புரி யாயே.
தெளிவுரை : அருள் புரிய வேண்டுமென்று சண்டை புரிவதும் உன்னோடு. மகிழ்ந்து குலாவி யிருப்பதும் உன்னோடு; என் குறையைத் தெரிவிப்பதும் உன்னிடம். இந் நிலைகளையெல்லாம் எய்தல் பொருட்டு எனக்குச் சிரத்தை வேண்டுமென்று வாடுகிறேன்.
451. வல்லைவாள் அரக்கர் புரம்எரித் தானே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா சிவபுரத்(து) அரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
எல்லைமூ வுலகம் உருவியன்(று) இருவர்
காணும்நாள் ஆதிஈ(று) இன்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்(று) அருள்புரி யாயே.
தெளிவுரை : முக்குணங்களுக்கு அப்பால் இருப்பது பரமன்; அவன் அளப்பரிய அகண்ட வஸ்து; முக்தி என்னும் பெருவாழ்வு அகண்டத்தில் இருக்கிறது. இம்மையிலோ மறுமையிலோ அது இல்லை.
452. பண்ணினேர் மொழியாள் பங்கநீ அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே யாண்டாய்  சிவபுரத்(து) அரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண்
என்றிவை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்(று) அருள்புரி யாயே.
தெளிவுரை : இனிமையான மொழிபேசும் உமா தேவியாரை இடப்பாகத்தில் கொண்டவனே. உன்னைத் தவிர எனக்கு வேறு பற்றுக் கோடு யாருளர்? திண்ணமாக ஆட் கொண்டாய். சிவபுரத்து அரசே! திருப் பெருந்துறையில் கோயில் கொண்டிருக்கும் இறைவனே. மனத்தையும் ஐம்பொறிகளையும் உன்வழிபாட்டிற்கு என்றே ஒப்படைத்துவிட்டேன். என்னை வா என்று அழைத்துக் கொள்வாயாக!
453. பஞ்சின்மெல் அடியாள் பங்கநீ அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
நெஞ்சவே யாண்டாய் சிவபுரத்(து) அரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த
அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்(று) அருள்புரி யாயே.
தெளிவுரை : அர்த்த நாரீஸ்வரனே ! உன்னை நான் பற்றுக் கோடாகக் கொண்டுள்ளேன். செம்மையாகவே நீ என்னை ஏற்றுக் கொண்டாய். நாய் போன்ற நான் அஞ்சுகின்றேன். ஏனெனில் நீ அளித்த அருளை என்னுடைய மருட்சியினால் மறந்துவிட்டேன். இனி இவ்வுலகில் நான் வாழ விரும்பவில்லை. என்னை ஏற்றுக் கொள்வாயாக.
454. பருதிவாழ் ஒளியாய் பாதமே அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர் கோலச் சிவபுரத்(து) அரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக்
கலந்துநான் வாழுமா(று) அறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்(று) அருள்புரி யாயே.
தெளிவுரை : பருதிவாழ் ஒளியாய்  சூரியப் பிரகாசனே. உயர் கோலம் அழகுமிக்க. உன்னுடைய அருள் தன்மையைப் பெறுவதற்கு மனங்கசிந்து வழிபாடு செய்ய அறியாத மருட்சியுடையேன். இனி இவ்வுலகில் வாழ நான் விரும்பவில்லை. விரைவில் என்னை அழைத்துக் கொள்வாயாக. விவேகம் இல்லாவிடினும் அருள் தாகம் இருந்தால் சாதனம் தடைபடாது என்பதாம்.
455. பந்தணை விரலாள் பங்கநீ அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத்(து) அரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
அந்தமில் அமுதே அரும்பெரும் பொருளே
ஆரமு தேயடி யேனை
வந்துய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்(று) அருள்புரி யாயே.
தெளிவுரை : பார்வதி சமேதா! உன்னையல்லால் எனக்கு வேறு பற்றுக் கோடு இல்லை. செந்தழல் வடிவம் உடையவனே ! எல்லையற்ற அமுதமே, கிடைத்தற்கரிய பொருளே, ஆரா அமுதே, அடியேனை ஏற்றுக் கொள்வாய். வந்துய  வந்து உய்ய. இறைவன் அமிர்த சொரூபம் என்று உணர்வதற்கு ஏற்ப மிருத்யு அல்லது மரணபயம் அற்றுப் போகிறது. முக்தி நிலை தானே வந்து அமைகிறது.
456. பாவநா சாவுன் பாதமே அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர்தம் தேவே சிவபுரத்(து) அரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
மூவுல(கு) உருவ இருவர்கீழ் மேலாய்
முழங்(கு)அழ லாய்நிமிர்ந் தானே
மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்(று) அருள்புரி யாயே.
தெளிவுரை : திருமாலும் பிரமனும் உன்னுடைய அடியையும் முடியையும் காண முடியாதவாறு தீயுருவாய் நின்றவனே! இச் செய்தியை உலகம் அறியும். நீ யானைத் தோலைப் போர்த்தியிருப்பது அகங்காரத்தை வென்றதற்கு அறிகுறியாகும். பாபங்களை நாசம் செய்பவனே ! என்னை ஏற்றுக் கொள்.
457.
பழுதில்தொல் புகழாள் பங்கநீ அல்லால்
பற்றுநான் மற்(று)இலேன் கண்டாய்
செழுமதி யணிந்தாய் சிவபுரத்(து) அரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்(கு)ஓர்
துணையென நினைவனோ சொல்லாய்
மழவிடை யானே வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்(று) அருள்புரி யாயே.
தெளிவுரை : மழ விடையானே  இளங்காளையை ஊர்தியாக உடையவனே, வழுத்துதற்கும் சார்ந்திருப்பதற்கும் சக்தி சமேதனைத் தவிர வேறு பொருள் ஒன்றுமில்லை. பந்தத்திலும் முக்தியிலும் அவனே கதி. ஒவ்வொரு பாட்டிலும் அம்மையைப் பாதி பாகமாகக் கொண்டவன் என்று குறித்திருப்பது அவனது அருட்செயலைக் குறிக்கிறது. பிறை மதியைச் சடையில் கொண்டிருப்பது அண்டினோரை ஆதரிப்பவன் என்பதைக் குறிக்கிறது. புலித்தோலை உடுத்தியிருப்பது, யானைத் தோலைப் போர்த்தியிருப்பது, விடையை ஊர்தியாகக் கொண்டிருப்பது முதலியன அவனது வீரத்தைக் குறிக்கின்றன. இப் பதிகத்திலுள்ள பாடல்கள் எளிமையாகவும் பொருள் பொதிந்தும் உள்ளன. இசையோடு பாடுவதற்கு ஏற்றனவாயுள்ளன.
29. அருள் பத்து
திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது
மகா மாயா சுத்தி
மகா மாயா அல்லது பிரபஞ்ச மயமாய் இருக்கும் உமாதேவி யாண்டும் பரிசுத்தமாகவே இருக்கிறாள். சித்த சுத்தி அடைகிறவனுக்கு அவ்வுண்மை விளங்குகிறது. அதை அறிவதற்கு ஏற்ப ஆத்ம சாதகன் அவள் அவளுக்குப் பாத்திர மாகிறான்.
மேலாம் திருக்கயிலைக்குச் செல்லும் திருநெறியினை அருளிச் செய்யுமாறு வேண்டுதல் அருட் பத்து.
எழுசீர் ஆசிரிய விருத்தம்
458. சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
பங்கயத்(து) அயனும்மால் அறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித்(து) அழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
தெளிவுரை : இயற்கைப் பேரொளி வடிவானவனே ! சுடர் போன்றவனே ! எல்லாவற்றையும் விளக்கும் திரு விளக்கே ! நெறித்த குழலையும் பெருத்த மார்பகங்களையும் உடைய என்றும் இளமை நீங்காத உமையம்மையாரைத் தன் உடம்பில் ஒரு பாதியாக உடையவனே. மேலான பரம்பொருளே, வெண்மையான விபூதியணிந்தவனே ! அயனும் அரியும் அறியா வண்ணம் திருவண்ணாமலையில் பேரொளிப் பிழம்பாக விளங்கியருளிய முறைப் பொருளே! திருப் பெருந்துறைக்கண் குருவாய் எழுந்தருளி நிறைந்த மலர்களை யுடைய குருந்த மர நிழலில் எழுந்தருளிய தூயோனே! வினை முதற் பொருளே! கருணை கூர்ந்து அருள் புரிந்தாய். அடியேன் அழைக்கும் அழைப்பிற்கு இரங்கி அஃது என்ன என்று அருள்புரிவாயாக.
459. நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட்(டு) அலறி
உலகெலாம் தேடியும் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித்(து) அழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
தெளிவுரை : நடராஜனே, நிர்மலனே, திருநீற்றை அணிந்தவனே, நெற்றிக் கண்ணை யுடையவனே, தேர்வகளுக்குத் தலைவனே, ஒப்பற்றவனே, உன்னை உலகமெல்லாம் தேடியும் காணேன். தூய்மையான குளத்தையுடைய திருப்பெருந்துறையில் குருந்த மரநிழலில் எழுந்தருளிய மெய்ப் பொருளே, பரிந்து அழைக்கும் எனக்குக் காட்சி தருவாயாக.
460. எங்கள்நா யகனே என்னுயிர்த் தலைவா
ஏலவார் குழலியார் இருவர்
தங்கள்நா யகனே தக்கநல் காமன்
தனதுடல் தழல்எழ விழித்த
செங்கண்நா யகனே திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணா அடியேன் ஆதரித்(து) அழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
தெளிவுரை : மயிர்ச் சாந்தணிந்த நீண்ட கூந்தலையுடைய உமா தேவியாருக்கும் கங்கா தேவியாருக்கும் தலைவனே, காமனை எரித்த நெற்றிக்கண்ணை யுடையவனே, திருப்பெருந்துறை நாயகனே, நான் அழைக்கிறேன். காட்சியளித்து என்னை ஏற்றுக் கொள்வாயாக. அம் கணா  கிருபை செய்யும் கண்களையுடையவனே.
461. கமலநான் முகனும் கார்முகில் நிறத்துக்
கண்ணனும் நண்ணுதற்(கு) அரிய
விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன
வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித்(து) அழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
தெளிவுரை : அரியும் அயனும் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி உனது அகண்டா காரத்தை நீ விளக்கினாய். பேரொலியோடு வேதம் ஓதப்படுகின்ற திருப் பெருந்துறையில் கோயில் கொண்டிருக்கும் மாசு இல்லாதவனே. நானும் உன்னைக் காண ஆசைப்பட்டு வேண்டுகிறேன். ஏன் என்று கேட்க மாட்டாயா?
462. துடிகொள்நேர் இடையாள் சுரிகுழல் மடந்தை
துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
பொடிகொள்வான் தழலில் புள்ளிபோல் இரண்டு
பொங்கொளி தங்குமார் பின்னே
செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அடிகளே அடியேன் ஆதரித்(து) அழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
தெளிவுரை : உடுக்கைபோன்ற இடையையும் சுருண்ட கூந்தலையும் உடைய உமா தேவியாரது மார்பகங்கள் பதிந்த தழும்புகளையுடைய மார்பனே, சோலைகள் சூழ்ந்த திருப் பெருந்துறையுறை சிவபெருமானே ! நீ படைத்துள்ள பொலிவும் பெருமைகளும் உனது சக்தியிடமிருந்தே உனக்கு வந்தவைகளாம். என் அழைப்புக்குச் செவி சாய்க்கும் தாய்மையையும் விளக்குவாயாக.
463. துப்பனே தூயாய் தூய வெண்ணீறு
துதைந்தெழு துளங்கொளி வயிரத்(து)
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தில்
உறுசுவை அளிக்கும்ஆர் அமுதே
செப்பமாம் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித்(து) அழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
தெளிவுரை : பவளம் போன்றவனே ! பரிசுத்த மானவனே ! பரிசுத்தமான திரு வெண்ணீறு படிந்ததனால் உண்டாகிய விளங்குகின்ற ஒளியையுடைய வயிரத்தைப் போன்றவனே. உன்னை நினைப்பவர்களுடைய மனத்தில் மிக்க சுவையைக் கொடுக்கும் அரிய அமிர்தமே ! சிறந்த வேதங்கள் முழங்குகின்ற திருப்பெருந்துறையில் வளப்பமிகுந்த பூக்களையுடைய குருந்த மரத்தடியில் அமர்ந்தருளிய சிறப்புற்ற தந்தையே! அடியேன் உன்னை விரும்பி அழைத்தால் அஞ்சாதே என்று அருள் செய்ய வேண்டும்.
464. மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
மேவலர் புரங்கள்மூன்(று) எரித்த
கையனே காலால் காலனைக் காய்ந்த
கடுந்தழல் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே அடியேன் ஆதரித்(து) அழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
தெளிவுரை : வெவ்வேறான வடிவம் எடுப்பவனே, மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்தவனே, காலனைக் காலால் சம்கரித்தவனே, செந்தழல் மேனியனே என்று தியானிப்பவருக்கு அருள் புரிகிறாய். நான் கூப்பிடுவதற்குச் செவி சாய்த்திடுக.
465. முத்தனே முதல்வா முக்கணா முனிவா
மொட்டறா மலர்பறித்(து) இறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
பரகதி கொடுத்தருள் செய்யும்
சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே அடியேன் ஆதரித்(து) அழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
தெளிவுரை : நித்திய முக்தன் என்றும், முக்கணன் என்றும், நித்திய சித்தன் என்றும் சிவனுடைய இந்த மகிமைகளை யெல்லாம் தியானித்துக் கொண்டிருக்கும் ஜீவன் பரிசுத்த மடைகிறான். மொட்டறா மலர் நைஷ்டிக பிரமச் சரியத்தையும் குறிக்கும். அதற்கு நிகரான நித்திய வழிபாடு ஆத்ம சாதகனுக்கு வேறு ஒன்றில்லை.
466. மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
மறுமையோ(டு) இம்மையும் கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவாள் அரவம்
கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளும்நான் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே அடியேன் ஆதரித்(து) அழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
தெளிவுரை : இம்மை மறுமை ஆகிய இரண்டிலும் பற்று வைக்காத தெளிந்த விவேகத்தை இறைவன் கொடுத்தருளினான். அவன் ஒருவனே மெய்ப் பொருள். அவனை மலினப் படுத்துவதற்கு வேறு ஒரு பொருள் இன்மையால் அவன் புனிதன். அருளுக்கு அவன் உறைவிடம். ஆதலால் என் அழைப்புக்கு அவன் செவி சாய்ப்பானாக.
467. திருந்துவார் பொழில்சூழ்  திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா(று) எண்ணி ஏசறா நினைந்திட்(டு)
என்னுடை எம்பிரான் என்றென்(று)
அருந்தவா நினைந்தே ஆதரித்(து) அழைத்தால்
அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
போதரா என்றரு ளாயே.
தெளிவுரை : அன்றுநீ அரிய சூழ்நிலையில் வீற்றிருந்து என்னை ஆட் கொண்ட நல்ல வாய்ப்பை எண்ணி இன்று அந்நிலை மீண்டும் கிட்டுமா என்று வருந்துகிறேன். இன்று நீ என்னை உன் மயம் ஆக்குதற் பொருட்டு அருள் புரிவாயாக.
30. திருக்கழுக்குன்றப் பதிகம்
திருக்கழுக்குன்றத்தில் அருளிச் செய்யப்பட்டது
சற்குரு தரிசினம்
மாணிக்கவாசகர் சிவத்தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருக்கழுக் குன்றத்துக்கு எழுந்தருளினார். அங்குச் சிவபெருமான் குருவாகத் தோன்றிக் காட்சியளித்தார். அத் திருக்காட்சியினைக் கண்டு களித்து அருளிய பதிகமாகும் இது.
எழுசீர் ஆசிரிய விருத்தம்
468. பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்உன் நாமங்கள் பேசுவார்க்(கு)
இணக்கி லாததோர் இன்ப மேவரும்
துன்ப மேதுடைத்(து) எம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோல நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
தெளிவுரை : மாறுபாடு இல்லாத திருப் பெருந்துறைப் பெருமானே, உன் திரு நாமங்களை உச்சரிப்பதற்கு ஒப்பு இல்லாததாகிய இன்பமே வரும். துன்பங்களை ஒழித்து, எம் பெருமானே முளைக்கும் தன்மை குன்றாத பிறவியாகிய விதை இனிமேல் முளையாத படி (இனி மேலும் பிறவி உண்டாகாதவாறு) என் இருவினைகள் ஒத்து வந்த பின்பு, நீ திருக்கழுக் குன்றத்தில் எழுந்தருளி, அளவற்ற திருக் கோலங்களைக் காட்டி யருளினாய்.
இருவினை ஒப்பு என்பது நல்வினை தீவினைகளின் பலனாகிய சுக துக்கங்களைச் சமமாகப் பாவித்தலாகிய நிலையாகும்.
469. பிட்டு நேர்பட மண்சு மந்தபெ
ருந்து றைப்பெரும் பித்தனே
சட்டம் நேர்பட வந்தி லாதச
பூக்க னேன்உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு
நாயி னுங்கடை யாயவெம்
கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
தெளிவுரை : பிட்டு வாணிச்சியிடம் இரக்கம் கொண்டு நீ பிட்டுக்கு மண் சுமந்தாய். திருப் பெருந்துறையில் கோயில் கொண்டுள்ள இறைவனே! நான் நீதிநெறியின்படி ஒழுகாதவன்; பல கஷ்டங்களில் உழல்பவன்; சீலமே உருவெடுத்த நீ, நாயினுங் கடைப்பட்ட என்னை திருக் கழுக்குன்றத்தில் வந்து ஆட் கொண்டுள்ளாய்.
470. மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றிம
லங்கெ டுத்தபெ ருந்துறை
விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி
மேல்வி ளைவ(து)அ றிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவ டிகள்இ
ரண்டும் வைப்பிடம் இன்றியே
கலங்கி னேன்கலங் காம லேவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
தெளிவுரை : திருப் பெருந்துறையில் என் கேட்டைக் களைந்து துயரத்தைத் துடைத்தாய். அப் புனிதமான பதியைப் புறக்கணித்த பாவி நான், இனி என்ன செய்வதென்று விளங்கவில்லை. உன் திருவடிகளை நிலை நாட்டுவதற்கு என் உள்ளம் தகுதியற்றது. ஆயினும் எனக்கு உன் திருக்கோலத்தைக் கழுக் குன்றிலே காட்டினாய்.
471. பூண்ஒ ணாததொர் அன்பு பூண்டுபொ
ருந்தி நாடொறும் போற்றவும்
நாண்ஒ ணாததொர் நாணம் எய்திந
டுக்க டலுள்அ ழுந்திநான்
பேண்ஒ ணாதபெ ருந்து றைப்பெருந்
தோணி பற்றி உகைத்தலும்
காண்ஒ ணாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
தெளிவுரை : உன் அன்பர் உன்னிடம் பேரன்பு பூண்டு இடையறாது வணங்கினர். நானோ வணங்குதலில் நாண முற்றுப் பிறவிக் கடலில் அழுந்திக் கிடந்தேன்.
ஏறத் தகுதியற்ற என்னை நீ திருப் பெருந்துறைத் தெப்பத்தில் ஏற்றினாய். உன் காட்சி தகுதியற்ற எனக்கு பீ கழுக்குன்றிலே காட்சி யளித்தார்.
472. கோல மேனிவ ராக மேகுண
மாம்பெ ருந்துறைக் கொண்டலே
சீலம் ஏதும்அ றிந்தி லாதஎன்
சிந்தை வைத்த சிகாமணி
ஞால மேகரி யாக நான்உனை
நச்சி நச்சிட வந்திடுங்
கால மேஉனை ஓத நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
தெளிவுரை : நீ பொன்னார் மேனியன்; அருள் மேகம்; என் உள்ளத்தில் ஒளிர்கின்ற மணி; உலகம் அறிய நான் உன்னை விரும்பினேன். ஏற்ற கால தத்துவமாக நீ வந்து ஆட் கொண்டாய்; உன்னைப் புகழ்ந்து பாட நீ கழுக்குன்றில் காட்சி யளித்தாய்.
473. பேதம் இல்லதொர் கற்ப ளித்தபெ
ருந்து றைப்பெரு வெள்ளமே
ஏத மேபல பேச நீஎனை
ஏதி லார்முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமை அற்றத
னிச்ச ரண்சர ணாமெனக்
காத லால்உனை ஓத நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
தெளிவுரை : அபேத ஞானம் அல்லது அத்துவித ஞானம் அளித்த திருப் பெருந்துறை அருள்வெள்ளமே! அயலார் முன் குற்றமே பேசிய என்னை ஆட்கொண்டாய். இறத்தல் என்ற பொல்லாங்கு இல்லாத ஒப்பற்ற உன் திருவடியை அடைக்கலம் என்று நான் புகழ்ந்து பாட நீ திருக்கழுக்குன்றத்தில் வந்து காட்சியளித்தாய்.
474. இயக்கி மார்அறு பத்து நால்வரை
எண்குணம் செய்த ஈசனே
மயக்கம் ஆயதோர் மும்ம லப்பழ
வல்லி னைக்குள் அழுந்தவும்
துயக்(கு)அ றுத்தெனை ஆண்டு கொண்டுநின்
தூம லர்க்கழல் தந்(து)எனைக்
கயக்க வைத்(து)அடி யார்மு னேவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
தெளிவுரை : அறுபத்து நான்கு கலை ஞானங்களை உலக இன்பத்துக்குப் பயன்படுத்தாமல் எண் குணங்களாகச் செய்த பரமனே ! ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களும் அஞ்ஞானத்தின் விளைவுகள். அவைகளோடு என்னைச் சேர்க்காமல் அனுக்கிரகம் செய்தாய். அத்தகைய அருள் நாட்டத்தை நீ எனக்குத் திருக் கழுக்குன்றத்தில் காட்டினாய். கலை ஞானங்களைப் பெண் பாலர்களாகக் கருதுவது மரபு.
31. கண்ட பத்து
தில்லையில் அருளிச் செய்யப்பட்டது
நிருத்த தரிசனம்
(நடனமாடுகின்ற காட்சியைக் காணுதல்)
கொச்சகக் கலிப்பா
475. இந்திரிய வயமயங்கி
இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய்
அருநரகில் வீழ்வேனைச்
சிந்தைதனைத் தெளிவித்துச்
சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம்
அணிகொள்தில்லை கண்டேனே.
தெளிவுரை : ஐம்பொறிகளில் பொருந்திய வாழ்வு மரணத்துக்கும் நரகத்துக்கும் ஏதுவானது. அவைகளின்று மீளுதல் பரத்தை அடைவதற்கு உற்ற உபாயம். அப் பெருநிலை தெளிவுரைக்குத் தில்லையில் வாய்த்தது.
476. வினைப்பிறவி என்கின்ற
வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறிதும் நினையாதே
தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப் பெரிதும் ஆட்கொண்(டு)என்
பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகும் தொழும்தில்லை
அம்பலத்தே கண்டேனே.
தெளிவுரை : சிவ சிந்தனையில் திளைத்திருப் பவரை வினையின் விளைவாகிய இன்ப துன்பங்கள் அசைக்க மாட்டா. நானோ வினையின் வசப்பட்டவன். அத்தகையவனை அவன் ஆண்டருளியதைத் தில்லையில் கண்டேன்.
477. உருத்தெரியாக் காலத்தே
உள்புகுந்(து)என் உளம்மன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக்
கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத்
தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாய்அடியேன்
அணிகொள்தில்லை கண்டேனே.
தெளிவுரை : எனக்கு அறிவு வருவதற்கு முன்பே என் உள்ளம் உடல் ஆகியவைகளைத் தன் மனம் ஆக்கிக் கொண்ட சிவ பெருமானிடத்து எனக்கு ஆசை அதிகரித்தது. திருத்துருத்தி என்னும் தலத்தில் கோயில் கொண்ட பெருமானை அடியேன் தில்லையில் கண்டேன்.
478. கல்லாத புல்அறிவின்
கடைப்பட்ட நாயேனை
வல்லாள னாய்வந்து
வனப்பெய்தி இருக்கும்வண்ணம்
பல்லோரும் காணஎன்றன்
பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சுதில்லை
அம்பலத்தே கண்டேனே.
தெளிவுரை : அறிவற்றவனாகிய என்னை, சர்வ சக்திமானாய் வந்து ஆத்மீக அழகு பெறச் செய்து, பலரும் அழியுமாறு எனது ஜீவஉபாதிகளை நீக்கியவனைப் பலரும் போற்றுகின்ற தில்லைச் சிற்சபையில் கண்டேன்.
479. சாதிகுலம் பிறப்பென்னும்
சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதம்இலி நாயேனை
அல்லல்அறுத்(து) ஆட்கொண்டு
பேதைகுணம் பிறர்உருவம்
யான்என(து)என் உரைமாறய்த்துக்
கோதில் அமு(து) ஆனானைக்
குலாவுதில்லை கண்டேனே.
தெளிவுரை :  சாதி, குலம், குடிப்பிறப்பு என்னும் சூழலில் அகப்பட்டுத் தடுமாறுகின்ற, கதியற்றவனான எளியேனான என்னை, துன்பத்தைப் போக்கி ஆட் கொண்டருளி, பேதைக் குணத்தையும் இதர தேவதைகளின் தரிசனத்தையும், நான், எனது என்கிற எண்ணங்களையும் போக்கி, குற்றமில்லாத அமிர்தம் ஆகியிருப்பவனை, விளங்குகின்ற தில்லை நகரில் கண்டு கொண்டேன் (மனத்தில் எண்ணும் கற்பிதமான எண்ணங்களே உபாதிகள் எனப்படுகின்றன)
480. பிறவிதனை அறமாற்றிப்
பிணிமூப்பென்(று) இவைஇரண்டும்
உறவினொடும் ஒழியச்சென்(று)
உலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த்
திருச்சிற்றம் பலமன்னி
மறையவரும் வானவரும்
வணங்கிடநான் கண்டேனே.
தெளிவுரை : உலகுக்கு முதல்வன் பிறவி, பிணி முதலிய உலக விகாரங்களினின்று என்னை விடுவித்துள்ளான். அவன் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த தில்லை நகர் திருச்சிற்றம்பலத்தில் நிலை பெற்றுள்ளான். வேதியரும் வானவரும் வணங்கும் அச் சிவபெருமானை நான் கண்டேன்.
481. பத்திமையும் பரிசும்இலாப்
பசுபாசம் அறுத்தருளிப்
பித்தன் இவன் எனஎன்னை
ஆக்குவித்துப் பேராமே
சித்தம்எனும் திண்கயிற்றால்
திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல்
விளங்குதில்லை கண்டேனே.
தெளிவுரை : ஜீவ உபாதி ஒழியுங்கால் மனம் சிவபோதத்தில் லயம் ஆகிறது. பின்பு சக்தி பண்ணுவதும் சதாசாரத்தில் ஊன்றி இருப்பதும் தேவையில்லை. ஆதலால் அந்த நிறை ஞானியைப் பித்தன் என்று உலகத்தவர் அறியாமையினால் பொருள் படுத்துவர். அத்தகைய ஞான சொரூபியின் திருவிளையாடல் தனக்கு விளங்கவில்லை என்கிறார் மாணிக்கவாசகர்.
482. அளவிலாப் பாவகத்தால்
அமுக்குண்(டு)இங்(கு) அறிவின்றி
விளைவொன்றும் அறியாதே
வெறுவியனாய்க் கிடப்பேனுக்(கு)
அளவிலா ஆனந்தம்
அளித்தென்னை ஆண்டானைக்
களவிலா வானவரும்
தொழுந்தில்லை கண்டேனே.
தெளிவுரை : மனத்தின் அகண்டாகார விருத்தியில் அமுக்குண்டு ஜடம் போன்று உலக விவகாரங்களைக் கருத்தில் வாங்காமல் சவம் போன்றவனாய் இருக்கும் எனக்கு அளவு இல்லாத ஆனந்தம் அளித்து, என்னை ஆட்கொண்ட பெருமானைக் கபடமற்ற தேவர்களும் தொழுகின்ற தில்லையில் கண்டேன்.
483. பாங்கினொடு பரிசொன்றும்
அறியாத நாயேனை
ஓங்கிஉளத்(து) ஒளிவளர
உவப்பிலா அன்பருளி
வாங்கிவினை மலம்அறுத்து
வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை
அம்பலத்தே கண்டேனே.
தெளிவுரை :  பண்பும், பயனும் அறியாத (சமயோசித புத்தி இல்லாத) அதாவது பரஞானமும் அதன் பிரயோசனமும் அறியாத என்னை கொண்டு, ஆத்மப் பிரகாசம் என் மனத்தில் ஓங்கி வளருமாறு செய்து கெடாத பிரேம பக்தியைக் கொடுத்து, வினையை நீக்கி, மேலான கருணையை அளித்த இறைவனை நான்கு மறைகளும் பயிலப் படுகின்ற தில்லைச் சிற்றம்பலத்தில் கண்டேன். அதாவது பரிபாகம் அடையாத என்னை அவன் தன் மயமாக்கிக் கொண்டது அவனது கருணையாகும் என்பதாம்.
484. பூதங்கள் ஐந்தாகிப்
புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப்
பேதம் இலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட
கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும்
விளங்குதில்லை கண்டேனே.
தெளிவுரை : சக்தியின் துணைகொண்டு எண்ணிறந்த பேதங்களைப் பிரபஞ்சத்தில் காட்டுகின்ற பரமன் யாண்டும் அபேதமாய், தனிப் பொருளாய்த் திகழ்கிறான். அத்தகைய பெருமானை வேதங்கள் தொழுது ஏத்துகின்ற தில்லையம்பதியில் கண்டேன்.
32. பிரார்த்தனைப் பத்து
திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது
சதாமுத்தி
காமியப் பிரார்த்தனை, நிஷ்காமியப் பிரார்த்தனை என இரண்டு விதப் பிரார்த்தனைகள் உண்டு. ஆயுள், ஆரோக்கியம், உலக சம்பத்து, சுவர்க்கப் பிராப்தி ஆகியவை காமியப் பிரார்த்தனையில் அடங்குகின்றன. மற்று ஈசனுடைய அருள், பக்தி, ஞானம், வைராக்கியம், விவேகம், முக்தி ஆகியவைகள் நிஷ்காமியப் பிரார்த்தனையில் இடம் பெறுகின்றன. ஆத்ம சாதகர்கள் ஒரு நாளும் காமியப் பிரார்த்தனை செய்யலாகாது. நிஷ்காமியப் பிரார்த்தனையே அவர்களுக்குரிய பெரும் பேறு ஆகும்.
அறுசீர் ஆசிரிய விருத்தம்
485. கலந்து நின்னடி யாரொ(டு)
அன்று வாளா களிந்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
புகுந்து நின்ற(து) இடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே
உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய்
ஆர்வம் கூர அடியேற்கே.
தெளிவுரை : அன்று உன் அன்பர் சத்சங்கத்தில் என்னை மறந்து இன்புற்றிருந்தேன். இனிய அக்காலம் கடந்து போயிற்று. உனது சோதியில் ஒன்றுபட இன்று வாடிக் கிடக்கிறேன். அருள் நாட்டத்தில் நான் மேலும் ஊக்கம் கொள்வேனாக.
486. அடியார் சிலர்உன் அருள்பெற்றார்
ஆர்வம் கூர யான்அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி
முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியேன் உடைய கடுவினையைக்
களைந்துன் கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே
ஓவாது உருக அருளாயே.
தெளிவுரை : உன்னை நாடியதால் அடியார் உன்னை அடைந்தனர். உடலைப் பேணியதால் நான் வினையைப் பெருக்கினேன். அத்தகைய எனக்கு அருள் நாட்டம் தருக. (ஒரு மனிதனுக்குக் கோபம் மேலோங்கும் அளவு அவன் விரைவில் முதுமை அடைகிறான்.)
487. அருளார் அமுதப் பெருங்கடல்வாய்
அடியார் எல்லாம் புக்கழுந்த
இருளார் ஆக்கை இதுபொறுத்தே
எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன்
வருமால் என்றிங்(கு) எனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை
உடையாய் பெறநான் வேண்டுமே.
தெளிவுரை : அடியார் எல்லாரும் உன் அருள் கடலில் ஆனந்தம் துய்க்கின்றனர். நானோ உடம்பைச் சுமந்து இளைத்தேன். நான் மெய் அன்பன் ஆகாவிட்டால் மருள் பித்தன் ஆவேன். அது வேண்டாம்.
488. வேண்டும் வேண்டும் மெய்யடியார்
உள்ளே விரும்பி எனை அருளால்
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த
அமுதே அருமா மணிமுத்தே
தூண்டா விளக்கின் சுடர்அனையாய்
தொண்ட னேற்கும் உண்டாங்கொல்
வேண்டா(து) ஒன்றும் வேண்டாது
மிக்க அன்பே மேவுதலே.
தெளிவுரை : உன்னையே பலகாலும் விரும்புகின்ற மெய்யடியார் நடுவே எளியனான என்னைப் பெருங் கருணையால் விரும்பி ஆண்டருளியவனே, அடியேனது துன்பத்தை ஒழித்த அமுதமே, அரிய பெருமை பொருந்திய இரத்தினமாகிய முத்தே, தூண்ட வேண்டாத தீபச் சுடரைப் போன்றவனே (அவசியம் இன்மையால்) வேண்டாமலும் யாதொரு வரமும் வேண்டும் என்ற எண்ணமும் எழாமலும், மிக்க அன்பையே பொருந்துதல் தொண்டனாகிய எனக்கும் உண்டாகுமா?
489. மேவும் உன்றன் அடியாருள்
விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணாள்
பங்கா உன்றன் கருணையினால்
பாவி யேற்கும் உண்டாமோ
பரமா னந்தப் பழங்கடல்சோர்ந்(து)
ஆவி யாக்கை யான்எனதென்(று)
யாதும் இன்றி அறுதலே.
தெளிவுரை : மீனின் வடிவத்தையும் கருங்குவளைப் பூவின் நிறத்தையும் கொண்ட கண்களையுடைய பராசக்தியின் பங்கா, உன் அடியார் அனைவரும் உன்னையே நாடி உனது அகண்டாகாரத்தில் ஒன்றாயினர். யானும் எனது ஜீவ வியக்தியை அங்ஙனம் கரைத்து ஒழிப்பேனாக.
490. அறவே பெற்றார் நின்அன்பர்
அந்த மின்றி அகநெகவும்
புறமே கிடந்து புலைநாயேன்
புலம்பு கின்றேன் உடையானே
பெறவே வேண்டும் மெய்யன்பு
பேரா ஒழியாப் பிரிவில்லா
மறவா நினையா அளவிலா
மாளா இன்ப மாகடலே.
தெளிவுரை : சிவானந்தம் கருவி கரணங்களுக்கு அப்பாற்பட்ட பாரமார்த்திகப் பெருநிலையாம். சிவபக்தர்கள் அதை அடையப் பெற்றனர். பரமனை நாடுகிற எனக்கும் அது வாய்ப்பதாகுக.
பேரா அவன் அகண்ட சிதாகாச மாதலால் இடம் மாறிப் போவதில்லை. ஒழியா  பிரபஞ்சம் பிரளயத்தில் ஒடுங்குவது போன்று அவன் ஒடுங்குவதில்லை. அளவிலா அவன் அளப்பரிய அகண்ட வஸ்து. மாளா அவனுக்குச் சாவு இல்லை.
491. கடலே அனைய ஆனந்தம்
கண்டார் எல்லாம் கவர்ந்துண்ண
இடரே பெருக்கி ஏசற்(று)இங்(கு)
இருத்தல் அழகோ அடிநாயேன்
உடையாய் நீயே அருளுதிஎன்(று)
உணர்த்தா(து) ஒழிந்தே கழிந்தொழிந்தேன்
சுடரார் அருளால் இருள்நீங்கச்
சோதி இனித்தான் துணியாயே.
தெளிவுரை : உன் அடியார் எல்லாரும் உனது பேரானந்தக் கடலில் திளைத்திருக்கின்றனர். நானோ இந்நிலவுலகில் துன்பத்தைப் பெருக்கி இளைத்துக் கிடப்பது அழகாகுமோ? உடையவனாகிய நீ வலிய ஆட்கொள்வாய் என்று எண்ணி நான் இதுவரைக்கும் உன்னிடம் பிரார்த்தனை பண்ணவில்லை. இப்பொழுது காலங்கடந்து பிரார்த்திக்கிறேன். ஆட்கொள்வாயாக.
492. துணியா உருகா அருள்பெருகத்
தோன்றும் தொண்டர் இடைப்புகுந்து
திணியார் மூங்கில் சிந்தையேன்
சிவனே நின்று தேய்கின்றேன்
அணியார் அடியார் உனக்குள்ள
அன்பும் தாராய் அருள்அளியத்
தணியா(து) ஒல்லை வந்தருளித்
தளிர்ப்பொன் பாதம் தாராயே.
தெளிவுரை : உன் அடியார் முற்றிலும் பக்குவமானவர்கள். நானோ இன்னும் பக்குவம் ஆகாதிருக்கிறேன்; ஆயினும் என்னை விரைவில் நீ பக்குவப் படுத்துவாயாக.
493. தாரா அருளொன்(று) இன்றியே
தந்தாய் என்றுன் தமரெல்லாம்
ஆரா நின்றார் அடியேனும்
அயலார் போல அயர்வேனோ
சீரார் அருளால் சிந்தனையைத்
திருத்தி யாண்ட சிவலோகா
பேரா னந்தம் பேராமை
வைக்க வேண்டும் பெருமானே.
தெளிவுரை : அருளைப் பரிபூரணமாக வழங்கியுள்ளாய் என்று உன் அன்பர்கள் அதில் திளைத்திருக்கின்றனர். மற்று நான் புறக்கணிக்கப் படுவது முறையோ? என் மனத்தை ஒழுங்குபடுத்தி என்னையும் உனது நிலைத்த அருளுக்கு ஆளாக்குக.
494. மானோர் பங்கா வந்திப்பார்
மதுரக் கனியே மனம்நெகா
நானோர் தோளாச் சுரைஒத்தால்
நம்பிஇத்தால் வாழ்ந்தாயே
ஊனே புகுந்த உனைஉணர்ந்தே
உருகிப் பெருகும் உள்ளத்தைக்
கோனே அருளும் காலம்தான்
கொடியேற்(கு) என்றோ கூடுவதே.
தெளிவுரை : நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று நீ என்னைப் புறக்கணிப்பது உன் பேரருளுக்குப் பொருந்துமா? உமையை இடப்பாகத்தில் கொண்டிருப்பவனே!
495. கூடிக் கூடி உன் அடியார்
குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய்
வாடி வாடி வழியற்றேன்
வற்றல் மரம்போல் நிற்பேனோ
ஊடி ஊடி உடையாயொடு
கலந்துள் உருகிப் பெருகிநெக்(கு)
ஆடி யாடி ஆனந்தம்
அதுவே யாக அருள்கலந்தே.
தெளிவுரை : இறைவா, உன் அன்பர் உன்னோடு பேரின்பம் துய்க்கின்றனர். நான் மட்டும் உலர்ந்த மரம் போன்று கிடப்போனோ? நானும் உன்னில் கலந்திருப்பேனாக.
பொருந்தியதாயுள்ள சத்தியத்தையே பேசுவது நல்ல பிரார்த்தனை யாகிறது. குரு பக்தி கொள்ளும் அளவு அறிவு வளர்கிறது. சீரிய குருபக்தி ஒப்பற்ற பிரார்த்தனையாகிறது.
33. குழைத்த பத்து
திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது
ஆத்தும நிவேதனம்.
அறுசீர் ஆசிரிய விருத்தம்
496. குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி உண்டோதான்
உமையாள் கணவா எனைஆள்வாய்
பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோஎன்(று)
அழைத்தால் அருளா(து) ஒழிவதே
அம்மா னேயுன் அடியேற்கே.
தெளிவுரை : வினையின் விளைவாகிய வியாதியில் நான் மெலிவுறுங்கால் நீ காத்தருள வேண்டும். நான் வருந்துவதில் நீ அடையும் நன்மையாது? என் பிழையைப் பொறுத்தல் உன் கடமை. நான் முறையிடுவதைக் கேளாதிருப்பது உனக்குத் தகுதியன்று.
497. அடியேன் அல்லல் எல்லாம்முன்
அகல ஆண்டாய் என்றிருந்தேன்
கொடியேர் இடையாள் கூறாஎம்
கொவே ஆஆ என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாத(து)
எத்துக்(கு) எங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா(து)
ஒறுத்தால் ஒன்றும் போதுமே.
தெளிவுரை : நீ ஆட்கொண்டபோதே பிராரப்தகர்மம் ஒழிந்தது என்று எண்ணினேன். அது தவறு. துன்பத்துக்கு உறைவிடமாகிய உடலில் என்னை மேலும் வைத்திருக்க வேண்டாம். என்னை வருத்தப் படுத்தியது போதும்.
498. ஒன்றும் போதா நாயேனை
உய்யக் கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான்
ஏழை பங்கா எம்கோவே
குன்றே அனைய குற்றங்கள்
குணமாம் என்றே நீகொண்டால்
என்தான் கெட்டது இரங்கிடாய்
எண்தோள் முக்கண் எம்மானே.
தெளிவுரை : ஒன்றுக்கும் உதவாத கடைப்பட்ட என்னை உய்விக்க முன்னமே ஆட்கொண்ட உனது அருள் இப்போது இல்லாமல் போய் விட்டதோ? உமாதேவியைச் சரீரத்தில் கொண்டவனே! எமது இறைவனே! மலைபோன்ற குற்றங்களையும் குணங்களே என்று நீ மனத்தில் கொண்டு அருளினால் அதனால் உனக்கு என்னதான் கெடுதி வந்துவிடும்? எட்டுத்தோள்களையும் மூன்று கண்களையும் உடைய எனது இறைவனே ! எனக்கு இரங்கி அருள வேண்டும்.
499. மானேர் நோக்கி மணவாளா
மன்னே நின்சீர் மறப்பித்(து)இவ்
ஊனே புகஎன் தனைநூக்கி
உழலப் பண்ணு வித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை
அறிந்து நீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளும் நான்
என்(று)என்(று) உன்னைக் கூறுவதே.
தெளிவுரை : மான் போன்ற பார்வையையுடைய உமாதேவியின் கணவா! உன் சொரூபத்தை மறந்து இவ்வுடலில் நான் புகுந்திருக்கப் பண்ணினாய். என் மயக்கத்தை அகற்றி மீண்டும் எப்போது என்னை உன்மயம் ஆக்குவாய்?
500. கூறும் நாவே முதலாகக்
கூறும் கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்புநீ
தீமை நன்மை முழுதும்நீ
வேறோர் பரி(சு)இங்(கு) ஒன்றில்லை
மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன சிவலோகா
திகைத்தால் தேற்ற வேண்டாவோ.
தெளிவுரை : உலகம் அனைத்தினுடைய உற்பத்தி. ஒடுக்கத்துக்கு, ஈசனே முதற் காரணம். உலகைத் தோற்றுவிப்பதும் துடைப்பதும் அவன் செயல். அது நிலைபெற்றிருப்பதும் அவனாலேயாம். நன்மை தீமையாகிய அனைத்தும் நீயே என்னும் தெளிவை எனக்குத் தந்தருள்வாயாக.
501. வேண்டத் தக்க(து) அறிவோய்நீ
வேண்ட முழுதும் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற்(கு) அரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா(து) அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன்(று) உண்டென்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே.
தெளிவுரை : யாம் விரும்பத் தகுந்தது இன்னது என்பதை அறிபவன் நீயே. யாம் தக்கதை அறிந்து வேண்டும் போது முழுவதையும் தருகின்றவன் நீயே. ஆணவத்தோடு காண முயன்ற பிரமனுக்கும் விஷ்ணுவுக்கும் காண அருமையானவன் நீ. வலிய வந்து விரும்பி என்னை அருளால் ஆக்கிக் கொண்டாய். மனம் விரும்பி நீ எதனை அருள் செய்வாயோ அதனையே நானும் பெற விரும்புவதல்லாது எனக்காக வேண்டும் வரம் ஒன்று உண்டு என்றால், அதுவும் உன் விருப்பமே அல்லவா?
502. அன்றே என்தன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ(று) எனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே.
தெளிவுரை : மலையைப் போலக் கம்பீரமாக இருப்பவனே! என்னை நீ ஆண்டு கொண்ட அக்காலத்தில்தானே என் உயிரையும் உடலையும் மற்றுமுள்ள எல்லாப் பொருள்களையும் நீ ஏற்றுக் கொண்டு விடவில்லையோ? இப்போது எனக்கு இடையூறு ஏதேனும் உளதோ? எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடைய எனது இறைவனே! நீ எனக்கு நல்லவற்றைச் செய்தாலும் செய் அல்லது தீமையைச் செய்தாலும் செய். அதை ஆராய நான் அதிகாரி அல்லன்.
இது அடைக்கலம் புகுதல் அல்லது சரணாகதி தத்துவம். ஆத்ம சாதனம் இதில் பூர்த்தியாகிறது.
503. நாயின் கடையாம் நாயேனை
நயந்து நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே
வைத்திட் டிருக்கும் அதுவன்றி
ஆயக் கடவேன் நானோதான்
என்ன தோஇங்(கு) அதிகாரம்
காயத்(து) இடுவாய் உன்னுடைய
கழல்கீழ் வைப்பாய் கண்ணுதலே.
தெளிவுரை : நெற்றிக் கண்ணை உடையவனே! நீ ஆட் கொண்டதனால் எனக்கு உயர்வு வந்துள்ளது. இனி நீ என்னை எந்நிலையில் வைத்தாலும் அது எனக்குப் பெரு வாய்ப்பாகும். உன் அருளைப் பெற்றுள்ள எனக்கு உடல் வாழ்க்கையும் உன் திருவடியும் ஒன்றே.
504. கண்ணார் நுதலோய் கழல்இணைகள்
கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா(து) இரவும் பகலும்நான்
அவையே எண்ணும் இதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ
அடிமை சால அழகுடைத்தே.
தெளிவுரை : யாண்டும் உனது பெருமையில் திளைத்திருப்பதே யான் பெறும் பொலிவு ஆகும். பின்பு பிரபஞ்ச வாழ்வையும் பாரமார்த்திக வாழ்வையும் சீர்தூக்கும் பிரச்சனை கிடையாது.
505. அழகே புரிந்திட்(டு) அடிநாயேன்
அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி
காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப்
புராண நீதந்(து) அருளாதே
குழகா கோல மறையோனே
கோனே என்னைக் குழைத்தாயே.
தெளிவுரை : நீ பேரழகன்; பழைய பொருள்; நித்திய யௌவனம் படைத்தவன். உனக்குப் புறம்பாக என்னை ஒரு தனிவியக்தியாக வைத்ததின் விளைவாக நான் துன்புற்றிருந்தது உனது திருவிளையாடலாகும். அதனால் பண்பாடு அடைந்தது நான் பெற்ற பேறு ஆகும்.
34. உயிருண்ணிப் பத்து
திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது
சிவானந்தம் மேலிடுதல்
தன்னை மறத்தல், இரவு, பகல் அறியாமை, மதோன்மத்தன் ஆதல் ஆகியவை சிவானந்த மேலீட்டினால் உண்டாவன.
கலிவிருத்தம்
506. பைந்நாப்பட அரவுஏர் அல்குல்
உமைபாகம தாயென்
மெய்ந்நாடொறும் பிரியாவினைக்
கேடாவிடைப் பாகா
செந்நாவலர் பரசும்புகழ்த்
திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாட்களித்(து) எந்நாளிறு
மாக்கேன்இனி யானே.
தெளிவுரை : பாம்புப்படம் போன்ற மடியினையுடைய உமையை இடப்பாகத்தில் உடையவனே, உடல் நாள்தோறும் நீங்காத சஞ்சித ஆகாமிய கர்மத்தைப் போக்குபவனே, ரிஷப வாகனனே, செவ்விய நாவன்மை உடையவர் போற்றுகின்ற திருப் பெருந்துறையில் உறைபவனே, உன்னிடமிருந்து நான் பெற்றுள்ள பேர் அருளை எண்ணி எண்ணி நான் பரவச மடைகிறேன்.
507. நானார்அடி அணைவான்ஒரு
நாய்க்குத்தவி(சு) இட்டிங்(கு)
ஊனார்உடல் புகுந்தானுயிர்
கலந்தான்உளம் பிரியான்
தேனார்சடை முடியான்மன்னு
திருப்பெருந்துறை உறைவான்
வானோர்களும் அறியாததோர்
வளம்ஈந்தனன் எனக்கே.
தெளிவுரை : அவனது திருவடியை அடைவதற்கு என்னிடத்து என்ன தகுதியிருக்கிறது. நாய்க்கு அமர ஆசனம் கொடுத்தது போன்றது. அவன் அமிர்த தாரை சொட்டும் சகஸ்ராரத்தில் இருப்பவன். திருப் பெருந் துறையில் உறைபவன். அவன் என்னைத் தன் வயம் ஆக்கி, தேவர்களும் அறியாத ஞானச் செல்வத்தை நல்கினான். அதன் விளைவாக ஒன்றுக்கும் உதவாத நான் பெறுதற்கு அரிய பேறு பெற்றவன் ஆகிறேன்.
508. எனைநான்என்ப(து) அறியேன்பகல்
இரவாவதும் அறியேன்
மனவாசகம் கடந்தான்எனை
மத்தோன்மத்தன் ஆக்கிச்
சினமால்விடை உடையான்மன்னு
திருப்பெருந்துறை உறையும்
பனவன்எனைச் செய்தபடி(று)
அறியேன்பரஞ் சுடரே.
தெளிவுரை : பரஞ்சோதியே ! நான் என்னும் உணர்ச்சி மறந்து போயிற்று. பகல் இரவு இவைகள் வருதலையும் உணரவில்லை; மனத்துக்கும் வாக்குக்கும் எட்டாத இறைவன் என்னைப் பெரும் பித்தன் ஆக்கி, கோபத்தையுடைய பெரிய ரிஷபத்தை ஏறுபவன், திருப் பெருந்துறையில் எழுந்தருளியிக்கிற வேதியன் எனக்குச் செய்த மோசத்தை நான் அறிந்திலேன். படிறுயான் அறியாமல் அவன் செய்த திருவிளையாடல்.
509. வினைகேடரும் உளரோபிறர்
சொல்லீர்வியன் உலகில்
எனைத்தான்புகுந்(து) ஆண்டான்என(து)
என்பின்புரை உருக்கிப்
பினைத்தான்புகுந்(து) எல்லேபெருந்
துறையில் உறை பெம்மான்
மனத்தான் கண்ணின் அகத்தான்மறு
மாற்றத்திடை யானே.
தெளிவுரை : அவன் திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவன்; வினையை நீக்குபவர் பரம்பொருள் ஒருவரே. பரந்த இவ்வுலகில் என்னை வந்து ஆட்கொண்டான். அவனுடைய பேரருளை நெஞ்சிலும் கண்மணிகளிலும் காணலாம். அவன் சொல்லில் உள்ளவன்.
510. பற்றாங்கவை அற்றீர்பற்றும்
பற்றாங்கது பற்றி
நற்றாங்கதி அறிவோம் எனின்
கெடுவீர் ஓடி வம்மின்
தெற்றார்சடை முடியான்மன்னு
திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கவன் கழல்பேணினர்
ஓடுங்கூடுமின் கலந்தே.
தெளிவுரை : சிறுநெறி சென்று கெட்டுப் போகின்றவர்களே நல்வழிக்கு விரைந்து வாருங்கள். அதாவது உலகப் பற்று உடையவர்களே! நிலையற்ற அப்பற்றை நீக்கித் தெய்வப்பற்றை வளருங்கள்; ஞானத்தை வளருங்கள். நல்லார் இணக்கம் கொள்ளுங்கள். பின்னிய சடைமுடியான். திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் அந்த இறைவனே இதை அருளவல்லவன்.
511. கடலின்திரை அதுபோல்வரு
கலக்கம்மலம் அறுத்(து)என்
உடலும்என(து) உயிரும்புகுந்(து)
ஒழியாவண்ணம் நிறைந்தான்
சுடரும் சுடர் மதிசூடிய
திருப்பெருந்துறை உறையும்
படரும்சடை மகுடத்(து)எங்கள்
பரன்தான்செய்த படிறே.
தெளிவுரை : சடைக் கற்றையைக் கிரீடமாகக் கொண்டுள்ளவன் திருப் பெருந்துறையில் எழுந்தருளியவன். அவன் ஒளியுடைய சந்திரனைச் சூடியவன். கடலின் அலைகள் போன்று ஓயாது உருவெடுக்கும் மனோவிருத்திகளை அழித்து அவன் என்னைத் தன்வயமாக்கியது செயற்கரிய செயலாகும். படிறு  சூழ்ச்சி.
512. வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம்
வேண்டேன்மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப்(பு) இறப்புச்சிவம்
வேண்டார்தமை நாளும்
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு
திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன் இனிப்
புறம்போகல்ஓட் டேனே.
தெளிவுரை : உலக சம்பத்தும் தெய்வ சம்பத்தும் ஒன்றோடொன்று முரண்படுபவை. நான் திருப் பெருந்துறை இறைவன் தாள்களைப் பற்றிக் கொண்டேன். உலகப் பற்று வைத்திருப்பவர்களோடு ஒரு பொழுதும் உறவு கொள்ளமாட்டேன்.
513. கோற்றேன்எனக்(கு) என்கோகுரை
கடல்வாய்அமு(து) என்கோ
ஆற்றேன் எங்கள் அரனேஅரு
மருந்தேயென(து) அரசே
சேற்றார்வயல் புடைசூழ்தரு
திருப்பெருந்துறை உறையும்
நீற்றார்தரு திருமேனிநின்
மலனேயுனை யானே.
தெளிவுரை : பிறவிப் பிணிக்கு மருந்தாகிய இறைவா நீ கொம்புத்தேனுக்கும் பாற்கடலில் வந்த அமிர்தத்துக்கும் ஒப்பானவன். சேறு நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் உறையும், இறைவனே! திரு நீறு அணிந்த திருமேனியனே! நின்மலனே உனை யான் விடேன்.
514. எச்சம்அறி வேன்நான்எனக்(கு)
இருக்கின்றதை அறியேன்
அச்சோ எங்கள் அரனேஅரு
மருந்தேஎன(து) அமுதே
செச்சைமலர் புரைமேனியன்
திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம் என நெஞ்சில் மன்னி
யானாகிநின் றானே.
தெளிவுரை : நீயே நானாக இருக்கின்றாய். இந்த உண்மையை நான் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. உனக்கும் எனக்கும் புறம்பாயுள்ள பிரகிருதியை
அறிகிறேன். அந்தோ ஆசையால் தூண்டப்பெற்றுக் கருவி கரணங்கள் வாயிலாகப் பிரகிருதி அறியப்படுகிறது. நிராசையில் நிலைத்திருக்கு மிடத்து ஜீவனும் சிவனும் ஒன்றே என்னும் அனுபூதி வாய்க்கிறது. அந்த அனுபூதியில் ஜகத்தும் பரத்தில் ஒன்று படுகிறது. அதுவே பரஞானம் அல்லது சிவஞானம். அஞ்ஞானத்தில் இருப்பவர்க்கு முப்பொருள் உண்மை என விளங்கும் பரஞானம் அடையப் பெற்றவர்க்குப் பரம் ஒன்றே மெய்ப்பொருள்.
515. வான்பாவிய உலகத்தவர்
தவமேசெய அவமே
ஊன்பா உடலைச்சுமந்(து)
அடவிமரம் ஆனேன்
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு
திருப்பெருந்துறை உறைவாய்
நான்பாவியேன் ஆனால் உனை
நல்காய்எனல் ஆமே.
தெளிவுரை : மேன்மை பொருந்திய உலகத்தவர் உன்னை நாடித் தவம் புரிந்து கொண்டிருக்கின்றனர். நான் உடலைச் சார்ந்து காட்டு மரம் போல் ஆனேன். எனினும் நீ என்னை ஆட்கொள்ளல் வேண்டும். தேன் பாய்கின்ற மலர்களையுடைய கொன்றை மரங்களையுடைய திருப் பெருந்துறையில் உறைபவனே! உன் அருளை வேண்டி நிற்கின்றேன்.
35. அச்சப் பத்து
தில்லையில் அருளிச் செய்யப்பட்டது
ஆனந்தம் உறுதல்
தீயோடு பழகுவது போன்று மன்னரோடு பழகும் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களோடு நெருங்கிப் பழகுவதோ மற்று அறவே புறக்கணிப்பதோ ஒவ்வாது. உலகில் பிரதி கூலமாய் இருப்பவைகளை அனுகூலமானவைகளாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் கோட்பாட்டை நஞ்சு உண்ணும் சிவனார் விளக்குகிறார்.
அறுசீர் ஆசிரிய விருத்தம்
516. புற்றில்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வம் தன்னை
உண்டென நினைந்(து)எம் பெம்மான்
கற்றிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
தெளிவுரை : புற்றில் வாழ்கின்ற ஒளிபொருந்திய பாம்புக்கும் பயப்படமாட்டேன். பொய்யர்தம் மெய்யுரைகளுக்கும் அஞ்சமாட்டேன். திரண்ட நீண்ட சடையையும் நெற்றிக் கண்ணையும் உடைய சிவபெருமானது பாதங்களை அடைந்து, வேறு தெய்வங்கள் உண்டென நினைந்து சிவனைப் பற்றிக் கல்லாமையினால் அவனிடத்துப் பக்தி இல்லாதவர்களோடு பழகுதல் ஒவ்வாது. அம்ம  வியப்பு இடைச் சொல்.
517. வெருவரேன் வேட்கை வந்தால்
வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா
எம்பிரான் தம்பி ரானாம்
திருவுரு அன்றி மற்றோர்
தேவர்எத் தேவர் என்ன
அருவரா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
தெளிவுரை : உலக ஆசை வந்தால் அதற்காக அஞ்ச மாட்டேன். பிறவிக் கடலில் அகப்பட நேரினும் அஞ்சேன். அயனும் அரியும் போட்டியிட்டுக்காண மாட்டாத சிவ பெருமானே எம் தலைவன். அவனுடைய திருவுறு அன்றி வேறு தெய்வங்களை வணங்குபவரைக் கண்டு நான் அஞ்சுகிறேன்.
சேய்க்குத் தன் தாயே பெரியவள் எனத் தோன்றுவது போன்று இஷ்ட தெய்வத்திடத்து நிஷ்டை வேண்டும் என்பதாம்.
518. வன்புலால் வேலும் அஞ்சேன்
வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி
அம்பலத்(து) ஆடு கின்ற
என்பொலா மணியை யேத்தி
இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
தெளிவுரை : கொடிய கொலைக் கருவியாகிய வேலுக்கும் மாதர் தம் கடைக்கண் பார்வைக்கும் அஞ்சேன். அம்பலத்தில் ஆடுகின்ற எம் தலைவனை வணங்காதவரைக் கண்டு தான் அஞ்சுகிறேன்.
519. கிளிஅனார் கிளவி அஞ்சேன்
அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ(று) ஆடும் மேனி
வேதியன் பாதம் நண்ணித்
துளிஉலாம் கண்ணர் ஆகித்
தொழுதழு(து) உள்ளம் நெக்கிங்(கு)
அளிஇலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
தெளிவுரை : மாதர் தம்சொல்லுக்கும் அவர்களின் வஞ்சகப் புன் சிரிப்புக்கும் அஞ்சேன். சிவ பெருமானைத் தொழுது உள்ளம் உருகாதவரைக் கண்டு தான் அஞ்சுகிறேன். பக்தியில் மேல் நிலைக்குப் போய்ப் பின்பு கீழ்மையில் இறங்கியவர் பதிதர் எனப்படுகின்றனர். அத்தகையவர் மற்றவர்களுடைய பக்தியையும் கெடுக்க முயலுவர். ஆதலால் அவர்களுடைய நேசம் பொருந்தாது.
520. பிணிஎலாம் வரினும் அஞ்சேன்
பிறப்பினோ(டு) இறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியி னான்தன்
தொழும்பரோ(டு) அழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்தும் காணாச்
சேவடி பரவி வெண்ணீ(று)
அணுகிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
தெளிவுரை : பிணி, பிறப்பு, இறப்பு இவைகளைக் கண்டு அஞ்சமாட்டேன். பிறைச் சந்திரனை அணிந்துள்ள சிவபெருமானை அடியார்களுடன் வணங்குவேன். திருமால் வராக உருவில் பூமியைத் தோண்டியும் அறியாத செம்மையான பாதங்களைப் பரவுவேன்; திருநீறு அணியாதவர்களைக் கண்டு அஞ்சுவேன். (சிவனிடம் வைக்கிற பக்தியைச் சிவசின்னங்களிடத்தும் வைக்க வேண்டும்)
521. வாள்உலாம் எரியும் அஞ்சேன்
வரைபுரன் டிடினும் அஞ்சேன்
தோள்உலாம் நீற்றன் ஏற்றன்
சொல்பதம் கடந்த அப்பன்
தாளதா மரைகள் ஏத்தித்
தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
தெளிவுரை : ஒளிவீசுகிற நெருப்புக்கும் அஞ்சேன்; மலை புரண்டு விழுந்தாலும் அஞ்சேன். திருநீறு அணிந்தவனும் ரிஷப வாகனத்தை உடையனுமான சிவபெருமானது பாத தாமரைகளை வணங்காத வர்களைக் கண்டு அஞ்சுகின்றேன்.
யார் எனக்கு இலை, மலர், கனி, நீர் முதலியன பக்தியோடு படைக்கிறானோ அத்தூய மனத்தானது அன்பளிப்பை நான் இன்புடன் அருந்துகிறேன். இது பகவத்கீதை. 926. மலர் போன்ற பூஜா திரவியங்களைப் பயன்படுத்துவது பக்தியை வளர்க்கும் உபாயமாகும்.
522. தகைவிலாப் பழியும் அஞ்சேன்
சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந்(து) எரிகை வீசிப்
பொலிந்தஅம் பலத்துள் ஆடும்
முகைநகைக் கொன்றை மாலை
முன்னவன் பாதம் ஏத்தி
அகம்நெகா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
தெளிவுரை : பொருத்தமில்லாத பழியையும் சாவையும் கண்டு நான் அஞ்ச மாட்டேன். புகையை யுடைய நெருப்பைக் கையிலேந்தித் திருச்சிற்றம்பலத்துள் ஆடும், கொன்றை மலர் அணிந்த பெருமானது பாதங்களை வழிபட்டு உள்ளம் இளகாதவரைக் கண்டால் நான் அஞ்சுகின்றேன்.
523. தறிசெறி களிறும் அஞ்சேன்
தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன்
விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச்
சிறந்தினி(து) இருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
தெளிவுரை : கட்டுத் தறியைச் சினந்து அசைக்கிற யானையையும், நெருப்புப் போன்ற கண்களையுடைய புலியையும் கண்டு நான் அஞ்ச மாட்டேன். அவன் மணம் கமழ் சடையை யுடையவன். தேவர்களும் அணுக முடியாத அவனது நெருங்கிய வீரக் கழல்களை வணங்காதவர்களைக் கண்டால் நான் அஞ்சு கின்றேன்.
524. மஞ்சுலாம் உருமும் அஞ்சேன்
மன்னரோ(டு) உறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுதம் ஆக்கும்
நம்பிரான் எம்பி ரானாய்ச்
செஞ்சவே யாண்டு கொண்டான்
திருமுண்டம் தீட்ட மாட்டா(து)
அஞ்சுவார் அவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
தெளிவுரை : மேகத்தோடு கூடிய இடியையும் மன்னரோடு கூடிய உறவையும் கண்டு அஞ்ச மாட்டேன். விஷத்தை அமுதமாகக் கொண்ட அந்த எம்பிரான் என்னை மிகச் செம்மையாக ஆண்டு கொண்டான். திருநீற்றை மூன்று வரியாகப் பூசாதவர் களைக் கண்டால் நான் அஞ்சுவேன்.
அஞ்சும் தன்மையுடையவர் எதற்கும் உதவார். சிறப்பாக ஆத்ம சாதகனுக்கு அன்னவர் உதவமாட்டார்கள்.
525. கோள்நிலா வாளி அஞ்சேன்
கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீள்நிலா அணியி னானை
நினைந்துநைந்(து) உருகி நெக்கு
வாள்நிலாம் கண்கள் சோர
வாழ்த்திநின்(று) ஏத்த மாட்டா
ஆண்அலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
தெளிவுரை : கொலைத்தன்மை பொருந்திய அம்புக்கு நான் பயப்பட மாட்டேன். எமனுடைய கோபத்துக்கும் நான் அஞ்சமாட்டேன். நீண்ட பிறைச் சந்திரனைச் தலையில் அணிந்து கொண்ட சிவபெருமானை எண்ணி, மனம் கசிந்துருகி, நெகிழ்ச்சியடைந்து, ஒளிபொருந்திய கண்களில் நீர் வடியும்படி, துதித்து நின்று புகழ மாட்டாத ஆண் தன்மை அல்லாதவரைக் கண்டால் நாம் பயப்படுவோம்.
36. திருப்பாண்டிப் பதிகம்
திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது
சிவானந்த விளைவு
கட்டளைக் கலித்துறை
526. பருவரை மங்கைதன் பங்கரைப்
பாண்டிற்(கு) ஆரமுதாம்
ஒருவரை ஒன்றும் இலாதவ
ரைக்கழற் போதிறைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி
மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை யன்றி உருவறி
யாதென்றன் உள்ளமதே.
தெளிவுரை : பார்வதி சமேதரும் பாண்டி மன்னனுக்கு அமிர்தமானவரும் நாம ரூபம் அற்றவரும் குதிரைமேல் வந்து கண்டவர் மனம் உருகப் பண்ணியவரும் ஆகிய சிவனையே வணங்குவேன். அவர் ஒருவரே என் காட்சிக்கு இலக்கு ஆகின்றார்.
527. சதுரை மறந்தறி மால்கொள்வர்
சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி
கழுக்கடை கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு
மேல்குடி கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப்(பு)
ஓட மறித்திடுமே.
தெளிவுரை : சிவனைச் சார்ந்தவர் தற்போதம் இழந்து ஞானவேட்கை கொள்வர். இது உறுதி, சூரியப் பிரகாசத்துக்கு மேலான சோதியாய்ச் சூலம் பிடித்துக் குதிரையில் மேல் வந்ததைப் பார்த்தவர்க்குப் பிறவிப் பிணி போயிற்று. மதுரை மன்னனுக்கு மறு பிறப்பு இல்லை.
528. நீரின்ப வெள்ளத்துள் நீந்திக்
குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர்
பாரின்ப வெள்ளங் கொளப்பரி
மேற்கொண்ட பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு
தொண்டரை உள்ளங்கொண்டார்
பேரின்ப வெள்ளத்துள் பெய்கழ
லேசென்று பேணுமினே.
தெளிவுரை : உலக இன்பம் நிலையற்றது. உலகத்தவர் எல்லாரையும் பேரின்பத்தில் நிலைத்திருக்கச் செய்யுமாறு சிவபெருமான் குதிரைச் சேவகனாக வந்தார். அப்படி வந்தவர் தொண்டரைத் தன்வயம் ஆக்கினார். பேரின்பத்தையே யாண்டும் நாடுங்கள்.
529. செறியும் பிறவிக்கு நல்லவர்
செல்லன்மின் தென்னன்நன்னாட்(டு)
இறைவன் கிளர்கின்ற காலம்இக்
காலம்எக் காலத்துள்ளும்
அறிவொண் கதிர்வாள் உறைகழித்(து)
ஆனந்த மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார்
புரள இருநிலத்தே.
தெளிவுரை : நல்லவர்கள் பிறவியைப் பெருக்கலாகாது. இறைவனுடைய அருளைப் பெறுதற்கு ஒவ்வொரு கணமும் நல்ல காலமே. அவன் ஞானவாள் ஏந்தி ஆனந்தம் என்னும் குதிரையின் மீது ஏறிவந்து உலகில் உள்ளவர் பிறப்பை எதிர்த்து ஒழிக்கிறான்.
530. காலம்உண் டாகவே காதல்செய்
துய்ம்மின் கருதரிய
ஞாலம் உண் டானொடு நான்முகன்
வானவர் நண்ணரிய
ஆலம்உண் டானெங்கள் பாண்டிப்
பிரான்தன் அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின்
றான்வந்து முந்துமினே.
தெளிவுரை : காலம் வாய்த்திருக்கின்றது. பக்தி பண்ணிக் கடைத்தேறுங்கள். திருமால், பிரமன், தேவர்கள் முதலானோர் அணுக முடியாதவனும் விஷத்தை உண்டவனுமாகிய எங்கள் பாண்டிப் பிரான் சிவானந்த போகத்தைத் தன் அன்பர்க்கு வழங்குகின்றான். விரைந்து வந்து பயன் பெறுங்கள்.
531. ஈண்டிய மாயா இருள்கெட
எப்பொரு ளும்விளங்கத்
தூண்டிய சோதியை மீனவ
னுஞ்சொல்ல வல்லனல்லன்
வேண்டிய போதே விலக்கிலை
வாய்தல் விரும்புமின்தாள்
பாண்டிய னார்அருள் செய்கின்ற
முத்திப் பரிசிதுவே.
தெளிவுரை : ஞான சோதி, குதிரையின் மீது ஏறிவந்து தோன்றியுள்ளது. அதனால் மாயை என்னும் இருள் அகன்றது. பொருள் உள்ளபடி விளங்குகிறது. இந்தச் சோதியைச் சொல்லால் யாரும் விளக்க முடியாது. வேண்டிய பொழுதே இதைப் பெறலாம். இதற்குத் தடையொன்றுமில்லை. இப்பரம் பொருளையே நாடுங்கள். முக்தி என்னும் பேறு இதனிடத்திருந்தே வருகிறது.
532. மாய வனப்பரி மேல்கொண்டு
மற்றவர் கைக்கொளலும்
போயறும் இப்பிறப்(பு) என்னும்
பகைகள் புகுந்தவருக்(கு)
ஆயஅ ரும்பெருஞ் சீருடைத்
தன் அருளே அருளும்
சேய நெடுங்கொடைத் தென்னவன்
சேவடி சேர்மின்களே.
தெளிவுரை : மாயமாகிய அழகிய குதிரை போன்றது இப்பிரபஞ்ச வாழ்க்கை என்பதை அவன் காட்ட வந்தான். அவனைச் சேர்ந்தவுடனே மாயையும் அதன் விளைவாகிய பிறப்பும் இறப்பும் அடிபட்டுப் போகின்றன. அவன் அருள் என்னும் சிறப்பு வாய்க்கிறது. அப்பெரிய பேறு சாசுவதமானது. ஆதலால் சிவனையே நாடுங்கள்.
533. அழிவின்றி நின்றதொர் ஆனந்த
வெள்ளத் திடையழுத்திக்
கழிவில் கருணையைக் காட்டிக்
கடிய வினையகற்றிப்
பழமலம் பற்றறுத்(து) ஆண்டவன்
பாண்டிப் பெரும்பதமே
முழுதுல குந்தரு வான்கொடை
யேசென்று முந்துமினே.
தெளிவுரை : அகண்ட சச்சிதானந்தம் அவன் அருளால் வருகிறது. வினை அகலுகிறது. பற்று ஒழிகிறது. சிவ சாயுஜ்யம் வாய்க்கிறது. விரைந்து போய் அதைப் பெறுங்கள்.
534. விரவிய தீவினை மேலைப்
பிறப்புமுந் நீர்கடக்கப்
பரவிய அன்பரை என்புருக்
கும்பரம் பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்திகொ
ளப்பட்ட பூங்கொடியார்
மரஇயல் மேல்கொண்டு தம்மையும்
தாமறி யார்மறந்தே.
தெளிவுரை : வினையின் விளைவாகிய பிறவிக் கடலைக் கடக்க அன்பர் இறைவனை வழிபட்டனர். அவர்களைப் பரவசம் ஆக்குவதற்குப் பரமன் குதிரையின் மேல் வந்தான். பண்பட்ட ஜீவர்கள் தங்கள் அறிவை அவனிடம் கொடுத்துவிட்டு மரம் போன்று ஸ்தம்பித்து இருந்தனர்.
535. கூற்றைவென் றாங்(கு)ஐவர் கோக்களை
யும்வென்(று) இருந்தழகால்
வீற்றிருந் தான்பெருந் தேவியும்
தானுமோர் மீனவன் பால்
ஏற்றுவந்(து) ஆருயிர் உண்ட
திறல் ஒற்றைச் சேவகனே
தேற்றமி லாதவர் சேவடி
சிக்கெனச் சேர்மின்களே.
தெளிவுரை : சிவபெருமான் யமனையும் ஐம்புலன்களையும் வென்றான். அழகாகத் தானும் தேவியுமாகப் பாண்டியன் முன் காட்சி கொடுத்து அவனது ஜீவபோதத்தையும் ஒழித்தான். இன்னும் தெளிவு பெறாத நீங்கள் அவனை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.
37. பிடித்த பத்து
திருத் தோணிபுரத்தில் அருளிச் செய்யப்பட்டது
முத்திக் கலப்பு உரைத்தல்
திருத் தோணிபுரம் சீர்காழி; மாணிக்கவாசகர் பல சிவத்தலங்களையும் தரிசித்துக் கொண்டு சீர்காழிக்கு வந்து சேர்ந்தார். வழிபட்டார். தில்லை நடராசனின் எடுத்த பொற்பாத நினைவு வர இதனைப் பாடியருளினார்.
எழுசீர் ஆசிரிய விருத்தம்
536. உம்பர்கட்(கு) அரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊத்தையேன் தனக்கு
வம்பெனப் பழுத்(து)என் குடிமுழு தாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருள் துணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெருமானே
எம்பொருட்(டு) உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்(து) அருளுவ(து) இனியே.
தெளிவுரை : யோகமே ! ஜீவ சிவ ஐக்கியமே. வம்புபுதுமை. தேவர்களுக்கு அரசே! எங்கும் நிறைந்த பொருளே! அடியேனுடைய ஜீவ போதத்தை அழித்து, சிவ சொரூபம் ஆக்கிய அமிர்தமே! உன்னை உறுதியாகப் பற்றிக் கொண்டேன். என்னிடம் உனது சான்னித்தியம் ஓங்குக.
537. விடைவிடா(து) உகந்த விண்ணவர் கோவே
வினையனேன் உடையமெய்ப் பொருளே
முடைவிடா(து) அடியேன் மூத்தற மண்ணாய்
முழுபுழுக் குரம்பையில் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை யாண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா(து) உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்(து) அருளுவ(து) இனியே.
தெளிவுரை : காளையை வாகனமாக உடையவனே! எனது உறுதிப் பொருளே! உடல் என்னும் துர்நாற்றக் கட்டையில் கட்டுறாது என்னைக் காத்த கருணாகரனே ! உன்னை இறுகப் பிடித்துக் கொண்டேன். நீ நேரில் வந்து அருள் தருவாயாக!
538. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆர் அமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்(து) அருளுவ(து) இனியே.
தெளிவுரை : தாயே! தந்தையே! உவமையில்லாத மாணிக்கமே! அன்பாகிய கடலில் உண்டான அரிய அமுதமே! பொய்யை அதிகமாகச் சொல்லிப் பொழுதை வீணாகக் கழிக்கின்ற பயனற்ற இழிவானவனுக்கு மிகச் சிறந்ததாகிய சிவ பதத்தைக் கொடுத்தருளிய செல்வனே ! சிவ பெருமானே! இந்தப் பிறவியிலேயே உன்னை உறுதியாகப் பற்றினேன். இனிமேல் நீ எழுந்தருளுவது வேறே எந்த இடத்துக்கு (எவ்வாறு)?
539. அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க்(கு) அரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத்(து) அடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத்(து) உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்(து) அருளுவ(து) இனியே.
தெளிவுரை : அருட் பெருஞ் சோதியே! ஞானத்தில் பழுத்த கனியே! தவம் செய்வோர்க்கு அரசே, பராவித்தை வடிவினனே, சொல்லில் அடங்காத தீஞ்சுவையே, யோகிகள் மற்றும் தொண்டர் உள்ளத்தில் திகழும் செல்வமே, சிவபெருமானே, இந்த அஞ்ஞான இருளில் உழலும் நான் உன்னை உறுதியாகப் பற்றிக் கொண்டேன். நீ எனக்குக் காட்சி தருவாயாக.
540. ஒப்புனக்(கு) இல்லா ஒருவன் அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
விழுமிய(து) அளித்ததோர் அன்பே
செப்புதற்(கு) அரிய செழுந்சுடர் மூர்த்தி
செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத்(து) உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்(து) அருளுவ(து) இனியே.
தெளிவுரை : ஒப்பற்ற பொருளே, என் உள்ளத்தில் ஒளிவிடுகின்ற ஒளியே, உண்மை நிலையை அறியாத மேன்மையில்லாத எனக்கு விழுமிய பொருளைப் போதித்த அன்பே, வாக்கில் அடங்காத வான்வடிவே, இளைப்புறும் நான் உன்னை விடாது பற்றிக் கொண்டேன். என்னை ஆட் கொள்வாயாக.
541. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்(டு)
அளவிலா ஆனந்தம் அருளிப்
பிறவிவேர் அறுத்(து)என் குடிமுழு(து) ஆண்ட
பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன்
செல்வமே சிவபெரு மானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்(து) அருளுவ(து) இனியே.
தெளிவுரை : நீ ஆட்கொள்வதற்கு முன்பு நான் ஆதரவு அற்றவனாக இருந்தேன். என்னை நீ ஆட்கொண்டதால் எனது உள்ளம் உனது கோயில் ஆயிற்று. அதனால் நான் பேரானந்தம் அடைந்தேன். நான் உனக்கு உரியவன் ஆதலால் என் பிறவிப் பிணி ஒழிந்தது. வெளிப்படையாக நான் உன்னைக் கண்டு கொண்டேன். இறுதியாக உன்னைப் பிடித்துக் கொண்டேன். நீ எங்குச் செல்ல முடியும்?
542. பாசவேர் அறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமா(று) அடியனேற்(கு) அருளிப்
பூசனை உகந்(து)என் சிந்தையுள் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடைய விளக்கே செழுந்சுடர் முர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்(து) அருளுவ(து) இனியே.
தெளிவுரை : உன்னைப் பற்றும்படி செய்தாய். அதனால் உலகப் பற்று நீங்கியது. எனது ஆராதனையை ஏற்றுக் கொண்டாய். உனது தாமரைத் திருவடியைக் காட்டியருளினாய். ஒளி மயமானவனே, அறிவு வடிவானவனே, உன்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். இனி என்னைக் கைவிட முடியாது.
543. அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
ஆதியே யாதும்ஈ(று) இல்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே சிவபெரு மானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்(து) அருளுவ(து) இனியே.
தெளிவுரை : இறைவா, உலகுக்கு முதல்வா, பேரறிவே, பக்த வத்சலா, அன்பரை உய்விப்பதில் அக்கறை உள்ளவா, எல்லா உயிர்களும் ஆகி அவை அல்லவையுமாய்த் திகழும் மாயவா, உன்னையே உறுதுணையாகக் கொண்டேன். என்னை ஏற்றருள் வாயாக.
544. பால்நினைந்(து) ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்(து) அருளுவ(து) இனியே.
தெளிவுரை : தன் குழந்தைக்குக் காலம் அறிந்து பாலை ஊட்டுகிற தாயைக் காட்டிலும் அதிகமாகப் பரிவுகொண்டு நீ பாவியேனாகிய எனது உடலை உருகச் செய்து மனத்தில் ஞானமாகிய ஒளியை அதிகமாக உண்டாக்கி, அழிவில்லாத இன்பமாகிய தேனைச் சொரிந்து நான் போகும் இடம் எல்லாம் கூடத்திரிந்த செல்வனே! சிவபெருமானே! நான் உன்னைப் பின் தொடர்ந்து உறுதியாகப் பற்றியுள்ளேன். இதன் மேல் நீ எழுந்தருளுவது எங்கே?
545. புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காம்
தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்(து) அருளுவ(து) இனியே.
தெளிவுரை : என் புன்புலால் உடம்பைப் பொற் கோயில் ஆக்கி அதில் புகுந்தருளினாய். அது முற்றிலும் உனக்கு ஏற்றதாயிற்று. நீயும் அதில் வசிக்கும் எளியவன் ஆகியுள்ளாய். நீ நிர்மல மாணிக்கம். என் பிறப்பு இறப்பு துன்பத்தை அகற்றிய அருள் சோதி நீ. உன்னையே நான் பற்றிப் பிடிக்கிறேன். நீ யாண்டும் எனக்குச் சொந்தம் ஆவாயாக.
38. திரு ஏசறவு
திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது
சுட்டறிவு ஒழித்தல்
ஏசறவு என்பது துதி; அதன் வாயிலாகப் பொறி புலன்களை ஒழித்தல்.
கொச்சகக் கலிப்பா
546. இரும்புதரு மனத்தேனை
ஈர்த்(து)ஈர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவையெனக்குக்
காட்டினைஉன் கழலிணைகள்
ஒருங்குதிரை உலவுசடை
உடையானே நரிகள்எல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவா(று)
அன்றேயுன் பேரருளே.
தெளிவுரை : இரும்பு போன்ற என் கடின நெஞ்சை உருக்கினாய். கரும்பின் சுவையையொத்த உன் திருவடியைக் காட்டியருளினாய். கங்கையைச் சடைமுடியில் தரித்தவனே. நீ நரியைப் பரியாக்கியது வியப்புக்கு உரிய செயலாகும்.
547. பண்ணார்ந்த மொழிமங்கை
பங்காநின் ஆளானார்க்(கு)
உண்ணார்ந்த ஆரமுதே
உடையானே அடியேனை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட்(டு)
ஆள்வாய்நீ வாஎன்னக்
கண்ணார உய்ந்தவா(று)
அன்றேயுன் கழல்கண்டே.
தெளிவுரை : இனிய மொழி பேசும் உமையம்மையை இடப்பாகத்தில் கொண்டவனே! நீ அன்பர்க்கு அமிர்தம் போன்றவன். என் பிறப்பை அறுத்தல் பொருட்டு என்னை ஆட்கொண்டாய். உன் திருவடியைக் கண்ணாரக் கண்டு உய்வடைந்தேன்.
548. ஆதமிலி யான்பிறப்பு
இறப்பென்னும் அருநரகில்
ஆர்தமரும் இன்றியே
அழுந்துவேற்(கு) ஆஆஎன்(று)
ஓதமலி நஞ்சுண்ட
உடையானே அடியேற்குன்
பாதமலர் காட்டியவா(று)
அன்றேஎம் பரம்பரனே.
தெளிவுரை : ஆதரவு அற்றவனாகிய நான் பிறப்பு இறப்பு என்னும் கொடிய நரகில் உறவினர் ஒருவரும் இல்லாமலே அழுந்திக் கிடந்தேன். அப்படிப்பட்ட எனக்கு, கடலில் எழுந்த விஷத்தை அமுது செய்தவனாகிய நீ உன் பாதமலரைக் காட்டி, என்னை ஏற்றுக் கொண்டாய். இது வியப்புக்குரிய செயலாகும்.
549. பச்சைத்தாள் அரவாட்டீ
படர்சடையாய் பாதமலர்
உச்சத்தார் பெருமானே
அடியேனை உய்யக்கொண்(டு)
எச்சத்தார் சிறுதெய்வம்
ஏத்தாதே அச்சோஎன்
சித்தத்தா(று) உய்ந்தவா(று)
அன்றேஉன் திறம்நினைந்தே.
தெளிவுரை : பச்சை நிறமான நாவினையுடைய பாம்பை அணிந்தவனே! சடை முடியை உடையவனே! தன் திருவடிகளைச் சான்றோர்க்குச் சொந்தமாக்கியவனே, நான் சிறு தெய்வங்களைச் சாராமல் உன்னையே போற்றும்படி நீ செய்தது வியக்கத் தக்கது.
550. கற்றறியேன் கலைஞானம்
கசிந்துருகேன் ஆயிடினும்
மற்றறியேன் பிறதெய்வம்
வாக்கியலால் வார்கழல்வந்(து)
உற்றிறுமாந்(து) இருந்தேன்எம்
பெருமானே அடியேற்குப்
பொற்றவிசு நாய்க்கிடுமா(று)
அன்றேநின் பொன்னருளே.
தெளிவுரை : நான் கலைஞானங்களைக் கற்கவில்லை. எனக்கு அருள் தாகமும் இல்லை. எனது சொல்திறனைக் கொண்டு சிறு தெய்வங்களையும் போற்ற வில்லை. உன்னையே சார்ந்திருந்து, பெருமிதங் கொண்டேன். அத்தகைய என்னை நீ ஆட்கொண்டாய். இது எப்படி இருக்கிறதென்றால் நாய்க்குப் பொன் ஆசனம் கொடுத்தது போல் உள்ளது. இது வியப்பிற்குரியது.
551. பஞ்சாய அடிமடவார்
கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சாய துயர்கூர
நடுங்குவேன் நின்அருளால்
உய்ஞ்சேன்எம் பெருமானே
உடையானே அடியேனை
அஞ்சேல்என்(று) ஆண்டவா(று)
அன்றேஅம் பலத்தமுதே.
தெளிவுரை : பஞ்சுபோன்ற மென்மையான பாதங்களையுடைய மாதர்களின் பாசவலைக்கு உட்பட்டுக் கலங்கிக் கிடந்தேன். நீ எனக்கு அபயமளித்து யோகத்திற்கு உரியவன் ஆக்கினாய். இது வியப்பல்லவா? உய்ஞ்சேன்  உய்ந்தேன்; கடைத் தேறினேன்.
552. என்பாலைப் பிறப்பறுத்(து)இங்(கு)
இமையவர்க்கும் அறியவொண்ணாத்
தென்பாலைத் திருப்பெருந்
துறையுறையும் சிவபெருமான்
அன்பால் நீ அகம்நெகவே
புகுந்தருளி ஆட்கொண்ட(து)
என்பாலே நோக்கியவா(று)
அன்றேஎம் பெருமானே.
தெளிவுரை : தேவர்களாலும் அறிய வொண்ணாத தென் திருப் பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நீ என் பிறவித் துன்பத்தைப் போக்கி என்னை ஆட்கொண்டது என்மீது நீ வைத்துள்ள கருணையினால் அல்லவா?
553. மூத்தானே மூவாத
முதலானே முடிவில்லா
ஓத்தானே பொருளானே
உண்மையுமாய் இன்மையுமாய்ப்
பூத்தானே புகுந்திங்குப்
புரள்வேனைக் கருணையினால்
பேர்த்தேநீ ஆண்டவாறு
அன்றேஎம பெருமானே.
தெளிவுரை : அனைவர்க்கும் மூத்தவனே! எப்போதும் இளமையோடு இருக்கும் மூலப் பொருளே! ஓதப்படும் வேதப் பொருளே! தோன்றியுள்ள பிரபஞ்சமும், தோன்றாத மூலப் பிரகிருதியும் ஆகிய இந்த இரண்டு நிலைகளிலும் இருப்பவனே! உலகச் சிறுமையில் உழலும் என்னை நீ சிவநெறியில் ஈடுபடுத்தியது விந்தையல்லவா? ஒத்துவேதம்.
554. மருவினிய மலர்ப்பாதம்
மனத்தில் வளர்ந்(து) உள்ளுருகத்
தெருவுதொறும் மிகஅலறிச்
சிவபெருமான் என்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத்
தடங்கடலில் படிவாமா(று)
அருள்எனக்கிங்(கு) இடைமருதே
இடங்கொண்ட அம்மானே.
தெளிவுரை : திருவிடை மருதூரில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானே! மணம் கமழும் உன் திருவடியை என் மனத்தில் நிலைத்திருக்கச் செய்து அதை உருக்குக. தெருக்களில் உன் பெருமையை நான் உரக்கப் புகழ்வேனாக. உன் கருணைக் கடலில் நான் திளைத்திருப்பேனாக.
555. நானோயோ தவம்செய்தேன்
சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமுமாய்த்
தித்திக்கும் சிவபெருமான்
தானேவந்(து) எனதுள்ளம்
புகுந்தடியேற்(கு) அருள்செய்தான்
ஊனாடும் உயிர்வாழ்க்கை
ஒறுத்தன்றே வெறுத்திடவே.
தெளிவுரை : தவம் செய்தவன் நான் தானா? ஆயினும் சிவாயநம என்று சொல்லும் பாக்கியத்தைப் பெற்றேன். தேனாகியும் இனிமையான அமுதமாகியும் தித்திக்கின்ற சிவபெருமான் தானாகவே எழுந்தருளி என் மனத்தில் புகுந்து உடம்போடு சேர்ந்துள்ள உயிர் வாழ்க்கையை இகழ்ந்து வெறுக்கும்படி அடியேனுக்கு அருள் செய்தான்.
நான் இப்போது பெற்றுள்ள பேறு, தவம் இவை எனது யாதொரு முயற்சி (சாதனை) யாலும் பெற்றதல்ல; அவன் அருளாலே அவன் தாள் வணங்கினேன் என்பது கருத்து.
39. திருப்புலம்பல்
திருவாரூரில் அருளிச் செய்யப்பட்டது
சிவானந்த முதிர்வு.
கொச்சகக் கலிப்பா
556. பூங்கமலத்(து) அயனொடுமால்
அறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள்
கூறாவெண் நீறாடீ
ஓங்கெயில்சூழ் திருவாரூர்
உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவைஅல்லா(து)
எவையாதும் புகழேனே.
தெளிவுரை : கோங்கம் பூவையொத்த குவிந்த மார்பகங்களையுடைய உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனே! திருநீறு பூசியவனே! உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட திருவாரூரில் எழுந்தருளியுள்ள தேவனே! உன்னை அடைவதற்கு ஏற்ற உபாயம் ஜீவபோதத்தை ஒழித்தல் என்பதைத் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் அறியார். அத்தகைய அதீதப் பொருளாகிய உன்னையே போற்றுவேன்.
557. சடையானே தழலாடீ
தயங்குமூ விலைச்சூலப்
படையானே பரஞ்சோதீ
பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில்சூழ்
பெருந்துறையாய் அடியேன்நான்
உடையானே உனையல்லா(து)
உறுதுணைமற்(று) அறியேனே.
தெளிவுரை : சடைமுடியை உடையவனே, தீப்பிழம்பைக் கையில் ஏந்தியவனே, மூன்று இலைகளாக உள்ள சூலத்தை ஆயுதமாக உடையவனே, ஒளிமயமானவனே, பசுவாகிய உயிர்களுக்குத் தலைவனே, வெள்ளை இளங்காளையை வாகனமாக உடையவனே, சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறைபவனே, உன்னைத் தவிர எனக்கு வேறு பற்றுக் கோடு இல்லை.
558. உற்றாரை யான்வேண்டேன்
ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
கற்பனவும் இனியமையும்
குற்றாலத்(து) அமர்ந்துறையும்
கூத்தாவுன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக்
கசிந்துருக வேண்டுவனே.
தெளிவுரை : உறவினர்களை நான் விரும்பவில்லை. ஊரை நான் வேண்டுவதில்லை. புகழிலும் எனக்கு ஆசை இல்லை. கற்றவர்களிடமும் எனக்குப் பற்றில்லை. கற்க வேண்டுவனவும் எனக்கு இனிப் போதும்! திருக் குற்றாலத்தில் விரும்பி எழுந்தருளியிருக்கும் கூத்தனே! ஒலிக்கின்ற கழல்களை அணிந்த உன் திருவடிகளை அடையும் பொருட்டே கன்றையுடைய பசுவின் மனத்தைப் போல் எனது மனம் கசிந்து உருக வேண்டுகின்றேன்.
உலகப் பொருள்களில் ஒன்றையும் பொருளாகக் கருதவில்லை. உன்னிடத்து மெய்யன்பு ஒன்றையே வேண்டுகிறேன் என்பதாம்.
40. குலாப் பத்து
தில்லையில் அருளிச் செய்யப்பட்டது
அனுபவம் இடையீடு படாமை
கொச்சகக் கலிப்பா
559. ஓடுங் கவந்தியுமே உறவென்றிட்(டு) உள்கசிந்து
தேடும் பொருளும் சிவன்கழலே எனத்தெளிந்து
கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்(து) அடியேன்
ஆடும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
தெளிவுரை : திருவோடும்கோவணமும் ஈண்டு உடைமை; சிவனை அடைவது குறிக்கோள். உடலும் உயிரும் ஆனந்தம் ஊட்டுகிற தில்லை நடராஜனைப் போற்றுதற்கே உரியனவாம்.
560. துடியேர் இடு(கு)இடைத்
தூமொழியார் தோள்நசையால்
செடியேறு தீமைகள்
எத்தனையும் செய்திடினும்
முடியேன் பிறவேன்
எனைத்தனதாள் முயங்குவித்த
அடியேன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.
தெளிவுரை : உடுக்கை போன்று சுருங்கிய இடையினையும், இனிய சொல்லையும் உடைய மாதர்களின் தோளின் மீது கொண்ட விருப்பத்தால் பாபம் மிகுவதற்குக் காரணமான பல தீமைகளை நான் செய்திருந்த போதிலும் எனக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை; ஏனென்றால் நான் தில்லை யாண்டானைப் பற்றியுள்ளேன். தன்னுடைய திருவடிகளில் என்னைப் பொருந்தப் பண்ணினவன் அவனே.
561. என்புள் உருக்கி
இருவினையை ஈடழித்துத்
துன்பங் களைந்து
துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்புள்ள வற்றை
முழு(து)அழிய உள்புகுந்த
அன்பின் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.
தெளிவுரை : உடலைத் தூய்மை செய்து, இருவினையின் வலிமையைப் போக்கி, துன்பங்களை நீக்கி, நன்மை தீமை மயமான இருமைகளைத் தூய்மை செய்து, இனிப் பிறப்பதற்கு ஏதுவாயுள்ள ஆகாமிய சஞ்தித கர்மங்களை முழுதும் அழியுமாறு செய்தவன் சிதம்பரத்தில் நடனமாடுகின்ற என் தலைவனே ஆவான்.
தெய்வீக நடுநிலையில் மனத்தை வைக்கின்றவர்களுக்கு இருமைகள் சித்த சுத்தியை உண்டு பண்ணுகின்றன.
562. குறியும் நெறியும் குணமும்இலார் குழாங்கள்தமைப்
பிறியும் மனத்தார் பிறிவரிய பெற்றினைச்
செறியும் கருத்தில் உருத்தமுதாம் சிவபதத்தை
அறியும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
தெளிவுரை : உலகப் பற்று உடையவர்களோடு பக்தர்கள் இணங்குவதில்லை. நல்லார் பொல்லார் ஆகிய எல்லார் உள்ளத்திலும் நீக்கமறச் சிவனார் வீற்றிருக்கிறார் எனினும் சிவபோதத்தை வளர்க்கும் சாதகர் உள்ளத்திலேயே அவருடைய சொரூபம் அமிர்த வடிவெடுத்துப் பேரானந்தமாகப் பொலிகிறது.
563. பேருங் குணமும்
பிணைப்புறும் பிறவிதனைத்
தூரும் பரிசு
துரிசறுத்துத் தொண்டரெல்லாம்
சேரும் வகையால்
சிவன்கருணைத் தேன்பருகி
யாரும் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.
தெளிவுரை : நாமரூபம், முக்குணம், மனப்பற்று ஆகிய விகாரங்களைத் திருத்தியமைத்து ஜீவபோதம் என்னும் குற்றத்தைக் களைந்த தொண்டர்கள் எல்லாரும் சிவானந்த போதத்தில் திளைத்திருந்தனர்.
564. கொம்பில் அரும்பாய்க்
குவிமலராய்க் காயாகி
வம்பு பழுத்துடலம்
மாண்டிங்கன் போகாமே
நம்பும்என் சிந்தை
நணுகும்வண்ணம் நான்அணுகும்
அம்பொன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.
தெளிவுரை : மரக்கிளையில் பூத்துக் காய்த்து வெம்பிப் பழுத்த தொன்று வீணாகப் போவது போன்று நான் உலகில் வீணே பிறந்து, இருந்து, இறத்தல் ஒவ்வாது. சிவனைச் சார்ந்து நான் சிவானுபவம் பெற வேண்டும்.
565. மதிக்கும் திறலுடைய
வல்லரக்கன் தோள்நெரிய
மிதிக்கும் திருவடி
என்தலைமேல் வீற்றிருப்பக்
கதிக்கும் பசுபாசம்
ஒன்றும்இலோம் எனக் கனித்திங்(கு)
அதிர்க்கும் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.
தெளிவுரை : இராவணனுடைய வல்லமையை உயிர்கள் அங்கீகரித்தன. அத்தகையவனுடைய தோளை நெரித்த சிவபாதம் என் சிரசில் ஏறியது. அதன் விளைவாக இராவணாகாரமாக என்னிடம் எழுந்த பசுபாதம் ஒழிந்தது. பேரானந்த முற்று நான் பரமனில் ஒன்றுபட்டேன்.
566. இடக்கும் கருமுருட்(டு)
ஏனம்பின் கானகத்தே
நடக்கும் திருவடி
என்தலைமேல் நட்டமையால்
கடக்கும் திறல்ஐவர்
கண்டகர்தம் வல்ஆட்டை
அடக்கும் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.
தெளிவுரை : தவம் புரிந்த அர்ச்சுனனைத் தாக்க அரக்கன் ஒருவன் பன்றி வடிவெடுத்துப் போனான். அப் பன்றியைத் தொடர்ந்து சிவபெருமான் வேடன் உருவெடுத்துப் போனார். அப்படிக் காட்டில் நடந்த திருவடி என் தலையில் படிந்த பொழுது ஐம்பொறிகளின் குறும்பு அடங்கியது.
567. பாழ்ச்செய் விளாவிப்
பயனிலியாய்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தால்
கிழியீடு நேர்பட்டுத்
தாள்செய்ய தாமரைச்
சைவனக்(கு)என் புன்தலையால்
ஆள்செய் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.
தெளிவுரை : பொட்டல் நிலத்தில் நட்ட செடிபோன்று நான் நிலவுலகில் வீணில் பிறந்து கிடந்தேன். பரமனோடு எனக்குக் கிடைத்த தொடர்பு முற்பிறப்பில் செய்த தவத்தின் விளைவாகக் கிட்டிய புதையல் போன்றது. அவனுடைய செந்தாமரை போன்ற திருவடிக்கு நான் தலையால் தொண்டு செய்வேன்.
568. கொம்மை வரிமுலைக்
கொம்பனையாள் கூறனுக்குச்
செம்மை மனத்தால்
திருப்பணிகள் செய்வேனுக்(கு)
இம்மை தரும்பயன்
இத்தனையும் ஈங்(கு)ஒழிக்கும்
அம்மை குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்(டு)அன்றே.
தெளிவுரை : திரட்சியும் தேமலும் உடைய மார்பகங்களையுடைய பூங்கொம்பு போன்ற உமாதேவியை வாமபாகத்தில் கொண்ட சர்வேஸ்வரனுக்கு முழுமனத்தோடு நான் செய்த சேவையின் பயனாக இவ்வுலகிலேயே இருவினைப் பயன்கள் ஒழிந்து போயின. நான் முக்தி அடைந்துள்ளேன்.
41. அற்புதப் பத்து
திருப் பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது
அனுபவம் ஆற்றாமை
அறுசீர் ஆசிரிய விருத்தம்
569. மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும்
ஆழியுள் அகப்பட்டுத்
தைய லார்எனும் சுழித்தலைப் பட்டுநான்
தலைதடு மாறாமே
பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன்
பொன்னடி இணைகாட்டி
மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே.
தெளிவுரை : பொய் உடலில் பற்று வைத்து உலக வாழ்வில் உழன்று காம நோயைத் துய்த்துக் கிடந்த என்னை இறைவன் தனக்குச் சொந்தமாக்கியது அற்புதமாம்.
570. ஏய்ந்த மாமலர் இட்டுமுட் டாததோர்
இயல்பொடும் வணங்காதே
சாந்தம் ஆர்முலைத் தையல்நல் லாரொடும்
தலைதடு மாறாகிப்
போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து
பொற்கழல் இணைகாட்டி
வேந்த னாய்வெளி யேஎன்முன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே.
தெளிவுரை : நல்ல மலரிட்டு இறைவரை அருச்சித்து வணங்குவது முறை. நானோ துன்பத்துக்கு ஏதுவான போகத்தில் புக எண்ணினேன். அருளாளன் என்னைக் காப்பாற்றியது அதிசயமாகும்.
571. நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து
நான்என(து) எனும்மாயம்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக்
கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்(று)அப் பெருமறை தேடிய
அரும்பொருள் அடியேனை
அடித்(து)அ டித்துஅக் காரம்முன் தீற்றிய
அற்புதம் அறியேனே.
தெளிவுரை : நிலையற்ற நிலவுலக வாழ்வைப் பெருக்குவதற்கு ஏதுவான கருமங்கள் பல செய்தேன். நான் எனது என்னும் மாயை அதினின்று உருவாயிற்று. பாம்பு போன்ற அந்த மாயை பிராரப்த கர்மம் என்னும் விஷத்தைக் கக்குவதாயிற்று. அதனால் நான் வருந்தி அழுதேன். எவனைக் காண வேதம் தேடி அலைகிறதோ அவன் வலிய என்னைத் தேடி வந்து அடித்துப் பிடித்து ஆட்கொண்டு எனக்குப் பரமானந்தத்தை ஊட்டினான். அஃது ஓர் அதிசயம் அன்றோ?
572. பொருந்தும் இப்பிறப்(பு) இறப்பிவை நினையாது
பொய்களே புகன்றுபோய்க்
கருங்கு ழலினார் கண்களால் ஏறுண்டு
கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடித் சிலம்பவை சிலம்பிடத்
திருவொடும் அகலாதே
அரும்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே.
தெளிவுரை : பிறவிப் பிணியை நான் எண்ணிப் பார்க்கவில்லை. பொய்யுலகை மெய்யென்று பேசி வந்தேன். போகத்தில் உழன்று கிடந்தேன். அத்தகைய என்னை உமாசங்கரன் உய்வித்தது விந்தையாம்.
573. மாடும் சுற்றமும் மற்றுள போகமும்
மங்கையர் தம்மோடும்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு
குலாவியே திரிவேனை
வீடு தந்(து)என்றன் வெந்தொழில் வீட்டிட
மென்மலர்க் கழல்காட்டி
ஆடு வித்தென(து) அகம்புகுந்(து) ஆண்டதோர்
அற்புதம் அறியேனே.
தெளிவுரை : செல்வத்திலும் சுகபோகத்திலும் சொக்கிக் கிடந்த என் வினைத் தளையைத் தகர்த்து அவன்வீடு தந்தருளினான். ஆனந்தத்தின் மேலீட்டால் என்னை ஆடும்படி அவன் செய்தது வியப்பாம்.
574. வணங்கும் இப்பிறப்(பு) இறப்பிவை நினையாது
மங்கையர் தம்மோடும்
பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத்(து) அழுந்திநான்
பித்தனாய்த் திரிவேனைக்
குணங்க ளும்குறி களும்இலாக் குணக்கடல்
கோமளத் தொடுங்கூடி
அணைந்து வந்தெனை ஆண்டுகொண்(டு) அருளிய
அற்புதம் அறியேனே.
தெளிவுரை : மாறிமாறி வருகிற ஜனன மரண துன்பத்தை எண்ணிப் பாராது சிற்றின்பக் கடலில் உழன்று கிடந்த என்னைக் கௌரி சங்கரன் காத்தருளியது அதிசயமாகும்.
575. இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான்
இயல்பொ(டு) அஞ் செழுத்தோதித்
தப்பி லாதுபொற் கழல்களுக்(கு) இடாதுநான்
தடமுலை யார்தங்கள்
மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை
மலரடி இணைகாட்டி
அப்பன் என்னைவந்(து) ஆண்டுகொண்(டு) அருளிய
அற்புதம் அறியேனே.
தெளிவுரை : தகுந்த மலர்தூவி முறைப்படி பஞ்சாட்சரம் ஓதி இறைவணக்கம் செய்வது மானுடப் பிறப்பின் குறிக்கோள். நானோ மாதர் போகத்தில் அழுந்தியவன். ஆயினும் அப்பன் என்னை ஆண்டு அருளியது விந்தையே.
576. ஊசல் ஆட்டும்இவ் வுடலுயிர் ஆயின
இருவினை அறுத்தென்னை
ஓசை யாலுணர் வார்க்(கு)உணர் வரியவன்
உணர்வுதந்(து) ஒளியாக்கிப்
பாசம் ஆனவை பற்றறுத்(து) உயர்ந்ததன்
பரம்பெருங் கருணையால்
ஆசை தீர்த்(து)அடி யார்அடிக் கூட்டிய
அற்புதம் அறியேனே.
தெளிவுரை : ஊஞ்சல் வைத்து இப்படியும் அப்படியும் ஆட்டுவது போன்று என் உடலையும் இங்கு மங்கும் அலைக் கழிக்கச் செய்கின்ற நல்வினை தீவினைகளை இறைவன் அகற்றினான். மொழி வல்லமையாலோ கலை ஞானத் திறமையினாலோ அறிய முயலுபவர்க்கு அவன் அகப்பட மாட்டான். அவன் எனக்குத் தற்போதத்தை ஊட்டினான். ஞான ஒளியைப் பெருக்கினான். பந்தங்களை அகற்றினான். ஆசையை ஓட்டினான். தன் அடியார்களோடு என்னைச் சேர்த்துக் கொண்டான். இதற்கு மேலான அற்புதத்தை நான் கண்டதில்லை.
577. பொச்சை யானகிப் பிறவியில் கிடந்துநான்
புழுத்தலை நாய்போல
இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங்(கு)
இணங்கியே திரிவேனை
இச்ச கத்(து)அரி அயனும்எட் டாததன்
விரைமலர்க் கழல்காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண்(டு) அருளிய
அற்புதம் அறியேனே.
தெளிவுரை : இந்தப் பிறவிக் காட்டில் நாய்போன்று நான் பயனில்லாது அலைந்து திரிந்தேன். மாதர்க்கு விருப்பமான செயல்களைச் செய்து அவர்களோடு இணங்கித் திரிந்தேன். அத்தகைய எனக்கு என் அப்பன் அரியும் அயனும் காணமாட்டாத தன் திருவடியைக் காட்டியருளினான். இது வியப்பே.
578. செறியும் இப்பிறப்(பு) இறப்பிவை நினையாது
செறிகுழ லார்செய்யும்
கிறியும் கீழ்மையும் கெண்டையம் கண்களும்
உன்னியே கிடப்பேனை
இறைவன் எம்பிரான் எல்லைஇல் லாததன்
இணைமலர்க் கழல்காட்டி
அறிவு தந்(து)எனை ஆண்டுகொண்(டு) அருளிய
அற்புதம் அறியேனே.
தெளிவுரை : நெருங்கியுள்ள பிறப்பையும் இறப்பையும் நீக்கும் உபாயத்தை நினைத்துப் பார்க்காமல் மகளிரின் பொய்நடை முதலியவைகளையே நினைந்து கிடந்தே எனக்கு இறைவன் தனது அகண்ட சொரூபத்தைக் காட்டிச் சிவ போதத்தை ஊட்டினான். இதைவிட மேலான அதிசயம் யாது உளது!
42. சென்னிப் பத்து
திருப் பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது.
சிவ விளைவு
ஆசிரிய விருத்தம்
579. தேவ தேவன்மெய்ச் சேவகன்
தென்பெ ருந்துறை நாயகன்
மூவ ராலும் அறியொணா
முதலாய ஆனந்த மூர்த்தியான்
யாவர் ஆயினும் அன்பர் அன்றி
அறியொ ணாமலர்ச் சோதியான்
தூய மாமலர் சேவடிக் கண்நம்
சென்னி மன்னிச் சுடருமே.
தெளிவுரை : தேவர்களுக்கெல்லாம் தலைவனாய் இருப்பவன். உண்மையான பாதுகாவலன்; திருப் பெருந்துறையில் கோயில் கொண்டிருப்பவன்; மும்மூர்த்திகளாலும் அறியமாட்டாதவன். ஆனந்த மயமானவன். அன்பர்களுக்கு அன்றி மற்றவர்களால் காண முடியாதவன். அன்னவனுடைய மலர்ப் பாதங்களில் நம் சென்னி பொருந்தி இருப்பதாக.
580. அட்ட மூர்த்தி அழகன் இன்னமு(து)
ஆய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச்சிவ லோக நாயகன்
தென்பெ ருந்துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கை யாளையோர்
பாகம் வைத்த அழகன்தன்
வட்ட மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே.
தெளிவுரை : பஞ்ச பூதங்களும் மனம், புத்தி, அகங்காரமும் சேர்ந்து அஷ்ட மூர்த்தியாய் விளங்குபவன்; அழகன்; அமுதமயமானவன். ஆனந்த வெள்ளமாய் இருப்பவன்; மேலோன்; சிவலோக நாயகன். திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவன்; மீனாட்சி சுந்தரேஸ்வரன். அவன் திருவடியில் தலைவணங்குங்கால் பேரானந்தம் ஊற்றெடுக்கும்.
581. நங்கை மீர்எனை நோக்குமின் நங்கள்
நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெ ருந்துறை
மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையும் கொண்(டு)எம்
உயிரும் கொண்டுஎம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவடிக் கண்நம்
சென்னி மின்னிப் பொலியுமே.
தெளிவுரை : பெண்களே, என்னை நோக்குங்கள், நம் இறைவனும் நம்மை அடிமையாகக் கொண்டவனும், தென்னஞ் சோலைகள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் பொருந்திய வீரனும், நாதன் ஆனவனும் பெண்களாகிய எம் கைகளில் உள்ள வளையலையும் உயிரையும் கவர்ந்து கொண்டு எம்மை அடிமையாகக் கொள்பவனும் ஆன சிவபெருமானது விளங்குகின்ற பெரிய மலரைப் போன்ற திருவடிகளில் நம் தலைபொருந்தி விளங்கும்.
ஜீவாத்மாக்களைப் பெண்பாலர்களாகவும் இறைவன் ஒரு வனையே ஆண்பாலாகவும் கருதுவது எல்லா மதங்களின் கோட்பாடாகும். வளையல் நீங்குவது உடல் உணர்வைக் கடந்ததற்கு அறிகுறியாகும். உயிர் நீங்குவது ஜீவபோதம் சிவபோதமாக உயர்வதற்கு அறிகுறியாகும்.
582. பத்தர் சூழப் பராபரன்
பாரில் வந்து பார்ப்பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான்
தில்லை மூதூர் நடஞ்செய்வான்
எத்தன் ஆகிவந்(து) இல்புகுந்தெமை
ஆளுங் கொண்(டு)எம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே.
தெளிவுரை : பக்தர்களும் சித்தர்களும் சூழும் சிவபெருமான் தில்லையில் நடனஞ் செய்பவன் தானே வந்து எம் மேனி மேவி எம்மை ஆட்கொண்டான். அவனுடைய திருவடிகளில் நம் தலைகள் பொருந்தி நிற்கும்.
583. மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
மதித்தி டாவகை நல்கினான்
வேய தோளுமை பங்கன் எங்கள்
திருப்பெ ருந்துறை மேவினான்
காயத் துள்அமு(து) ஊற ஊறநீ
கண்டு கொள்ளென்று காட்டிய
சேய மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.
தெளிவுரை : மாயப் பிரபஞ்ச வாழ்வை மெய்யென்று மதிக்காத படி எனக்குக் கிருபை செய்தவன் சிவன் உமாதேவியின் பங்கன் உடம்பினுள் அமுது சுரக்கக் காட்டியருளினான். அவனுடைய திருவடிகளில் நம் தலை படிக.
584. சித்த மேபுகுந்(து) எம்மை ஆட்கொண்டு
தீவி னைகெடுத்(து) உய்யலாம்
பத்தி தந்துதன் பொற்க ழற்கணே
பன்மலர் கொய்து சேர்த்தலும்
முத்தி தந்(து)இந்த மூவு லகுக்கும்
அப்பு றத்(து)எமை வைத்திடும்
அத்தன் மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே.
தெளிவுரை : எமது மனத்தைத் தன்கோயில் ஆக்கி, வினையைக் களைந்து, பக்தியை வளர்த்து,  முக்தியை நல்கிய, பித்தன் ஆகிய அவன் திருவடியில் நம் சென்னி சாய்க.
585. பிறவி என்னும்இக் கடலை நீந்தத்தன்
பேரருள் தந்தருளினான்
அறவை என்றடி யார்கள் தங்கள்
அருட்கு ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக் கொண்ட
பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.
தெளிவுரை : பிறவிக் கடலைக் கடப்பதற்குத் தன் அருள் என்ற கப்பலை அப்பன் கொடுத்தான். அநாதையாகிய என்னைத் தன் அடியவன் கூட்டத்தில் உறவு கொள்ளச் செய்தான். அவனது திருவடியில் நம்தலை படிந்து திகழ்க.
586. புழுவி னால்பொதிந்(து) இடுகு ரம்பையில்
பொய்த னைஒழி வித்திடும்
எழில்கொள் சோதிஎம் ஈசன் எம்பிரான்
என்னுடை அப்பன் என்றென்று
தொழுத கையினர் ஆகித் தூய்மலர்க்
கண்கள் நீர்மல்கும் தொண்டர்க்கு
வழுவி லாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே.
தெளிவுரை : புழுக் கூடாகிய இப்பொய் உடல் உணர்வை அகற்றிய ஆத்ம ஜோதி என் அப்பன். தொழுத கையினராய் நின்று இடையறாது கண்ணீர் சிந்துகின்ற மெய்யன்பருக்கு மாறாத முக்தி யருளுகிறவன் எம்பிரான். அவனுடைய தாமரைத் திருவடியில் நம்தலை பொருந்தி நிற்கும்.
587. வம்ப னாய்த்திரி வேனைவா என்று
வல்வி னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல(கு) ஊட றுத்(து)அப்
புறத்த னாய்நின்ற எம்பிரான்
அன்ப ரானவர்க்(கு) அருளி மெய்யடி
யார்கட்(கு) இன்பம் தழைத்திடும்
செம்பொன் மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.
தெளிவுரை : வம்பனாய்த் திரிகின்ற என்னை வா என்று அழைத்து என் வலிய வினைப்பகையைப் போக்கிய பெரியவன் அவன். உலகு அனைத்திலும் வியாபித்து அவைகளுக்கு அதீதத்தில் இருப்பவன் அவன். அன்பர் ஆன மெய்யடியார்க்கு அவன் இன் அமுது. அன்னவன் திருவடியில் நம் தலை சாய்த்திடுக.
588. முத்த னைமுதல் சோதியை முக்கண்
அப்ப னைமுதல் வித்தினைச்
சித்த னைச்சிவ லோக னைத்திரு
நாமம் பாடித் திரிதரும்
பத்தர் காள்இங்கே வம்மின் நீர்உங்கள்
பாசந் தீரப் பணிமினோ
சித்த மார்தரும் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.
தெளிவுரை : நித்திய முக்தன், பரஞ்சோதி, முக்கண்ணன், முதல் வித்து, வாலறிவன், சிவலோகன் என்று அவனுடைய திருநாமத்தைப் பாடித் திரிகின்ற அன்பர்களே, இங்கு வாருங்கள், உங்கள் பந்த பாசம் அறும்படி அவனைப் பணியுங்கள். அவனது திருவடியில் நம் சென்னி மன்னித் திகழ்க.
43. திருவார்த்தை
திருப் பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது.
அறிவித்து அன்புறுதல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
589. மாதிவர் பாகன் மறைபயின்ற
வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கரு ணையடியார்
குலாவு நீதிகுண மாகநல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்(து)
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த
அருள்அறிவார் எம்பிரான் ஆவாரே.
தெளிவுரை : உமையை இடப் பாகத்தில் கொண்டவன்; வேதம் பயின்றவன்; இருதய சோதி; அடியார்களுக்கு அருள் பாலிப்பவன்; திருப் பெருந்துறையில் உறைபவன்; இவ்வுலகிற்கு எழுந்தருளின பரம்பிரம்மம். மானிடனாக எழுந்தருளி என்னை ஆண்டருளினான்.
சிவபெருமான் திருவாய் மலர்ந்தருள்வது வேதவாக்கு. அதன்படி பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்னும் சொற்கள் எல்லாம் ஒரே வஸ்துவைக் குறிக்கின்றன. இது திருவார்த்தை; அதாவது மெய்ப் பொருள் விளக்கம்.
590. மாலயன் வானவர் கோனும்வந்து
வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம் அதனிடை வந்திழிந்து
நன்னெறி காட்டி நலந்திகழும்
கோல மணியணி மாடநீடு
குலாவும் இடவை மடநல்லாட்குச்
சீலம் மிகக்கரு ணையளிக்கும்
திறம்அறி வார்எம்பி ரானாவாரே.
தெளிவுரை : சிவபெருமான் தேவர்களுக்கு அருள் செய்தவன். மாடங்கள் நிறைந்த திருவிடைமருதூரில் வரகுண பாண்டியனால் அளிக்கப்பட்டவளைக் கருணையோடு ஏற்றுக் கொண்டவன். அத்தகைய சிவனது மகிமையை அறிபவர் போற்றுதற்கு உரியவர் ஆவர்.
591. அணிமுடி யாதி அமரர்கோமான்
ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவுஅதுஏறிப்
பாரொடு விண்ணும் பரவியேத்தப்
பிணிகெட நல்கும் பெருந்துறைஎம்
பேரரு ளாளன்பெண் பால்உகந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும்
வகையறி வார்எம்பி ரான்ஆவாரே.
தெளிவுரை : ஜடாதரன்; தேவதேவன்; ஆனந்தக் கூத்தன்; ஆறு சமயங்களிலும் இலங்குபவன்; பிறவிப் பிணியைப் போக்குபவன். மீனவர் மகளாக வளர்ந்த உமா தேவியாரை மணந்தவன்; இத்தகைய சிறப்புக்களைப் போற்றும் அன்பர்கள் போற்றப்படுகின்றனர்.
592. வேடுரு வாகி மகேந்திரத்து
மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான்
சிந்தனை செய்தடி யோங்கள்உய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஏறி
ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களைஎங்கும் ஆண்டுகொண்ட
இயல்பு அறிவார் எம்பிரான்ஆவாரே.
தெளிவுரை : தங்கள் குறைகளை முறையிட வந்த வானவர்க்கு எளிதில் விளங்காத வேட உருக்கொண்டு சிவபெருமான் மகேந்திர மலையில் இருந்தார். அடியவர்களை உய்விக்கத் திருவுளங்கொண்டு ஆடவல்ல குதிரை ஏறிவந்து அன்பர்களை அவர் ஆட்கொண்டருளினார். அவர் பெருமையை அறிய வல்லவர் நமது போற்றுதலுக்கு உரியவர் ஆவார்.
593. வந்திமை யோர்கள் வணங்கியேத்த
மாக்கரு ணைக்கடல் ஆயடியார்
பந்தனை விண்டற நல்குமெங்கள்
பரமன் பெருந்துறை ஆதிஅந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன்(று)
ஓங்கு மதில்இலங் கைஅதனில்
பந்தனை மெல்விர லாட்கருளும்
பரிசறி வார்எம்பி ரானாவாரே.
தெளிவுரை : தேவர்கள் வந்து வணங்கித் துதிக்கச் சிவபெருமான் அவர்கள் மீது கருணை காட்டினார். அடியார்களுடைய பிறவித் தளையை அவர் அகற்றியருளினார். அலைகடல் கடந்து இலங்கை சென்று மண்டோதரிக்கு அருள் புரிந்தார். இத்தகைய சிவமகிமைகளை அறிபவர் எமது வணக்கத்துக்கு உரியவர்களாம்.
594. வேவத் திரிபுரம் செற்றவில்லி
வேடுவ னாய்க்கடி நாய்கன்சூழ
ஏவல் செயல்செய்யும் தேவர்முன்னே
எம்பெரு மான்தான் இயங்குகாட்டில்
ஏவுண்ட பன்றிக்(கு) இரங்கிஈசன்
எந்தை பெருந்துறை ஆதியன்று
கேவலம் கேழலாய்ப் பால்கொடுத்த
கிடப்(பு)அறி வார்எம்பி ரான்ஆவாரே.
தெளிவுரை : திரிபுராந்தகனாகிய சிவபெருமான் வேடனது வடி வந்தாங்கி வேட்டைநாய்கள் புடைசூழக் காட்டில் சஞ்சரித்தான். ஆங்கு அம்பு தைத்து இறந்து கிடந்த தாய்ப் பன்றி ஒன்றுக்கு இரங்கினான். தனக்கே குற்றேவல் புரிந்த தேவர்கள் முன்னிலையில் சிவன் தனித்த தாய்ப் பன்றியாக வடிவெடுத்துக் குட்டிகளுக்குப் பால் ஊட்டினான். இறைவனது இந்த மேலாம் தன்மையை அறிபவர்கள் எமது வணக்கத்துக்கு உரியவர் ஆகின்றனர்.
595. நாதம் உடையதோர் நற்கமலப்
போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தவர் தூவியேத்த
ஒளிவளர் சோதிஎம் ஈசன்மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறைஎம்
புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதம் கெடுத்தருள் செய்பெருமை
அறியவல் லார்எம்பி ரான்ஆவாரே.
தெளிவுரை : தங்கள் கணவன்மார்களை இழந்த கலைமகளும் திருமகளும் சிவபெருமானை வழுத்தியதனால் அன்னவர்களை அவர்கள் மீண்டும் உயிருடன் பெற்றுச் சுமங்கலிகளாயினர். சிவபெருமான் பக்குவியின் ஜீவபோதத்தை அகற்றி அத்துவித நிலையை நல்குகின்றார்.
596. பூவலர் கொன்றைய மாலைமார்பன்
போர்உகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாள்உமை மங்கைபங்கன்
வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன்
இருங்கடல் வாணற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும்
உருவறி வார்எம்பி ரான்ஆவாரே.
தெளிவுரை : கொன்றைமலர் மாலையை அணிந்திருப்பவனும், புலியைக் கொன்ற வீரனும், அம்பிகை பங்கனும் திருப் பெருந்துறையில் வாசம் செய்பவனுமாகிய சிவபெருமான் வருணனது வேள்வித் தீயில் தோன்றிய மங்கையரைத் தன் மயம் ஆக்கிக் கொண்டான்.
597. தூவெள்ளை நீறணி எம்பெருமான்
சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன்
தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
காதல் பெருகக் கருணைகாட்டித்
தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதம் கெடுத்தென்னை ஆண்டருளும்
கிடப்பறி வார்எம்பி ரான்ஆவாரே.
தெளிவுரை : திருவெண்ணீறு அணிந்தவனும் மகேந்திர மலைத் தலைவனும் தேவர்களால் போற்றப் பெறுபவனும் திருப் பெருந்துறையை ஆள்பவனுமாகிய சிவபெருமான் அருள் பாலித்துக் காட்சி கொடுத்தான். என் துன்பங்களை அவன் அகற்றி விடவே அன்பினால் என்மனம் கசிந்துருகியது. இவ்வரலாற்றை அறிபவர் எமது போற்றுதலுக்கு உரியவர் ஆவார்.
598. அங்கணன் எங்கள் அமரர்பெம்மான்
அடியார்க்(கு) அமுதன் அவனிவந்த
எங்கள் பிரான்இரும் பாசந்தீர
இகபரம் ஆயதோர் இன்பமெய்தச்
சங்கம் கவர்ந்துவண் சாத்தினோடும்
சதுரன் பெருந்துறை ஆளிஅன்று
மங்கையர் மல்கு மதுரைசேர்ந்த
வகைஅறி வார்எம்பி ரான்ஆவாரே.
தெளிவுரை : கிருபா நோக்கமுடையவன்; மகாதேவன்; அடியார்க்கு அமுதம் ஆனவன். எமது பெரிய பாசத்தை நீக்கி இம்மை மறுமை இன்பம் கொடுத்தருளினான். அவன் சங்கு வளையல்களையும் அழகிய விற்பனைப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு மாதர் நிறைந்த மதுரை மாநகரை அடைந்தான். அந்த மகிமையை அறிபவர் எமது போற்றுதலுக்கு உரியவராவர்.
44. எண்ணப் பதிகம்
தில்லையில் அருளிச் செய்யப்பட்டது
ஒழியா இன்பத்து உவகை
ஆசிரிய விருத்தம்
599. பாருரு வாய பிறப்பற வேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே
செங்க மலம லர்போல்
ஆருரு வாயஎன் ஆருமு தேயுன்
அடிய வர்தொகை நடுவே
ஓருரு வாயநின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக் கொண்டருளே.
தெளிவுரை : உலகில் பிறப்பெடுப்பது இனி வேண்டாம். பக்தி பெருக வேண்டும். அரிய அமிர்தமே, உன் அடியார் கூட்டத்தில் என்னை இணைத்துத் திருவருள் பூண்டு நான் உய்வு அடையும் உபாயம் காட்டுவாயாக.
600. உரியேன் அல்லேன் உனக்கடிமை
உன்னைப் பிரிந்திங்(கு) ஒருபொழுதும்
தரியேன் நாயேன் இன்னதென்(று)
அறியேன் சங்கரா கருணையினால்
பெரியோன் ஒருவன் கண்டுகொள்
என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென்(று) அருளிய அருளும்
பொய்யோ எங்கள் பெருமானே.
தெளிவுரை : சங்கரனே! உன்னைப் பெறும் தகுதி உடையவன் அல்லேன். அப்படி இருந்தும் உன் அடிமை உன்னை விட்டுப் பிரிந்து இங்கே ஒரு கணப்போதும் சகித்திருக்க மாட்டேன். சிற்றறிவுடையவனான நான் இன்னதென்று இதை அறிய மாட்டேன். உனது அருளால் பெரியவனான ஒப்பற்றவன் நான், என்னைக் கண்டு கொள் என்று உனது வீரக்கழலை அணிந்த திருவடிகளைக் காட்டி, உன்னை விட்டு ஒரு போதும் பிரிய மாட்டேன். என்று சொல்லி யருளிய கிருபையும் பொய்யோ, எங்கள் பெருமானே!
601. என்பே உருக நின்னருள் அளித்துன்
இணைமலர் அடிகாட்டி
முன்பே என்னை ஆண்டு கொண்ட
முனிவா முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனைஉருக்கி
உயிருண் கின்ற எம்மானே
நண்பே அருளாய் என்னுயிர்
நாதா நின்னருள் நாணாமே.
தெளிவுரை : முனிவர்க்கு முழுமுதற் பொருளே, எனது எலும்பு உருகும் வண்ணம் நீ அருளைச் சொரிந்து முன்னமே திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்டுள்ளாய். இப்பொழுது என் ஜீவபோதம் ஒழிந்து சிவபோதம் இனிது ஓங்குமாறு எனது உயிர்க்கு உயிரே உனது நட்பு நிறைந்த அருளைத் தயங்காது பொழிக.
602. பத்தில னேனும் பணிந்தில னேனும்உன்
உயர்ந்தபைங் கழல்காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும்
பிறப்பறுப்பாய் எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே
முதல்வனே முறையோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை
இனிப்பிரிந்(து) ஆற்றேனே.
தெளிவுரை : என்னிடத்தில் பக்தியில்லை; பணிவு இல்லை; அருட் பித்து இல்லை; உன்னைப் போற்றுகிறபாங்கு இல்லை. ஆயினும் பிறவியை ஒழிப்பவனே! மேலாம் பொருளே, அனைத்துக்கும் ஆதியே, உன்னைப் பிரிந்திருக்க இனி எனக்கு எள்ளளவும் இயலாது.
603. காணுமது ஒழிந்தேன் நின்திருப் பாதம்
கண்டுகண் களிகூரப்
பேணுமது ஒழிந்தேன் பிதற்றுமது ஒழிந்தேன்
பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்நினைந்து உருகும்
தன்மைஎன் புன்மைகளால்
காணுமது ஒழிந்தேன் நீயினி வரினும்
காணவும் நாணுவனே.
தெளிவுரை : தரிசிப்பது, திருவடியில் அன்போடு பணிவிடை பண்ணுவது நினைந்து உருகுவது ஆகிய சிறப்புக்களைக் கைநழுவ விட்டு விட்டேன். நிலைபேறு உடையானே, இனி நீ வலிய வந்தாலும் நிலைபேறு அற்ற நான் உன்னைக் காண நாணம் கொள்வேன்.
604. பால்திரு நீற்(று)எம் பரமனைப்
பரங்கரு ணையோடும் எதிர்ந்து
தோற்றிமெய் அடியார்க்கு அருள்துறை அளிக்கும்
சோதியை நீதியிலேன்
போற்றியென் அமுதே எனநினைந்து ஏத்திப்
புகழ்ந்தழைத்து அலறியென்னுள்ளே
ஆற்றுவன் ஆக உடையவ னேஎனை
ஆவஎன்று அருளாயே.
தெளிவுரை : பால் வெண்ணீறு பூசிய பரமன்; பெருங்கருணை படைத்தவன் தானே பக்தர்கள் முன்வந்து தோன்றி அருள் வழியைக் காட்டும் சோதியன் ஆவான். நெறி நில்லாத நான் அத்தகைய அண்ணலை அமுதே என்று போற்றி நினைந்து துதித்து, புகழ்ந்து அழைத்து அலறி உள்ளத்தினுள்ளே நிறைவு பெற வேண்டும். அதற்கு அவன் அந்தோ என்று இரக்கக் குறிப்புக் காட்டுவானாக.
45. யாத்திரைப் பத்து
தில்லையில் அருளிச் செய்யப்பட்டது
அனுபவ அதீதம் உரைத்தல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
605. பூவார் சென்னி மன்னன்எம்
புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டுஅன்பாய்
ஆட்பட் டீர்வந்து ஒருப்படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
போய்விட்டு உடையான் கழல்புகவே.
தெளிவுரை : கொன்றை மலரைத் தலையிலும், பாம்பைக் கழுத்திலும், அணிந்திருப்பவன் சிவன். அவன் யாண்டும் எங்கள் உள்ளத்தில் குடி கொண்டுள்ளான். அவன் பிரிந்து நம்மைத் தன்வயம் ஆக்கும் அருளாளன். பொய்யுடலை ஒதுக்கி அவனோடு ஒன்றுபடும் காலம் வந்துள்ளது. சிவ நேயர்களே, சிவ சொரூபத்தில் கலந்துகொள்ள வாருங்கள்.
606. புகவே வேண்டா புலன்களில்நீர்
புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம்
வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து
நாயே யனைய நமையாண்ட
தகவே உடையான் தனைச்சாரத்
தளராது இருப்பார் தாம்தாமே.
தெளிவுரை : அடியார்களை இறைவன் இப்படியும் அப்படியும் ஆட் கொள்ளுதல் உண்டோ என்று மெய்யன்பர்கள் நகைக்கும் படியான பாங்கில் அவன் நம்மை ஏற்றுள்ளான். அன்னவனை அடைய முயல்பவர்களே, நீங்கள் ஐம்பொறிவழி போக வேண்டாம். உலகப் பொருள்களை ஒதுக்கித் தள்ளுங்கள். இறைவனையே நாடுங்கள்.
607. தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமாறு அமைமின் பொய்நீக்குப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.
தெளிவுரை : தமக்கு (தமது அடியார்களுக்கு) உறவு ஆவாரும் அவர் தாமே; நமக்கு விதிவகையாவதும் அவர் தாமே; நாம் என்பது யார்? எமது என்பது யாவர்? பாசம் என்பது யாவர்? இவை என்ன மாயம்? இவை நீங்கும்படியாக, ஆண்டவனுடைய பழைய அடியார்களோடும், அவனுடைய திருவுள்ளக் குறிப்பையே நமது குறிக்கோளாகக் கொண்டு, பொய்யான வாழ்வை நீக்கி, பாம்பை அணிந்தவனும் எம்மை ஆள்பவனுமாகிய சிவபெருமானுடைய பொன் போன்ற திருவடிகளின் கீழ்ப் போகும்படி செய்து கொள்ளுங்கள்.
608. அடியார் ஆனீர் எல்லீரும்
அகல விடுமின் விளையாட்டைக்
கடிசேர் அடியே வந்தடைந்து
கடைக்கொண்டு இருமின் திருக்குறிப்பைச்
செடிசேர் உடலைச் செலநீக்கிச்
சிவலோ கத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்தன்
பூவார் கழற்கே புகவிடுமே.
தெளிவுரை : சிவபக்தர்களாகிய நீங்கள் எல்லாரும் விளையாட்டுப் போன்ற நிலையற்ற இவ்வுலக வாழ்வை ஒதுக்கித் தள்ளுங்கள். உலக வாழ்வைத் துறத்தல் என்னும் சீரிய லட்சியத்தை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். பேரானந்தத்திற்கு இருப்பிடமாகிய இறைவனுடைய திருவடியில் அத்துறவு உங்களைக் கொண்டு சேர்க்கும் துன்பத்துக்கு இருப்பிடமாகிய நமது பூத உடலை நீக்கி அவன் நம்மைச் சிவசொரூபம் ஆக்குவான். அவ்வரிய செயலின் சின்னமாக அவன் திருநீறு பூசியுள்ளான்.
609. விடுமின் வெகுளி வேட்கைநோய்
மிகவோர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு
உடன்போ வதற்கே ஒருப்படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள்
அணியார் கதவது அடையாமே
புடைபட்டு உருகிப் போற்றுவோம்
புயங்கன் ஆள்வான் புகழ்களையே.
தெளிவுரை : நிலையற்ற இவ்வுலக வாழ்வு விரைவில் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆதலால் இதை வளர்க்கும் சினம், ஆசை ஆகியவைகளை நீக்குங்கள். சிவ பக்தர்களோடு சிவலோகம் போய்ச் சேரத் தீர்மானம் செய்யுங்கள். பாங்குடன் பரமனை அணுகுபவர்க்குப் பரமபத வாயில் அடைபடாது. வரவேற்கும் விதத்தில் அது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. பரமனது அருகில் நெருங்கி நின்று அவனையே போற்றுவோம்.
610. புகழ்மின் தொழுமின் பூப்புனைமின்
புயங்கன் தாளே புந்திவைத்திட்டு
இகழ்மின் எல்லா அல்லலையும்
இனியோர் இடையூறு அடையாமே
திகழும் சீரார் சிவபுரத்துச்
சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று
நெஞ்சம் உருகி நிற்போமே.
தெளிவுரை : பாம்பை ஆபரணமாய்க் கொண்ட சிவபெருமானது திருவடிகளையே துதியுங்கள். அவைகளை மனத்தில் வைத்துக் கொண்டு எல்லாத் துன்பங்களையும் அற்பமாய்க் கருதுங்கள். இனிமேலும் ஒர் இடையூறு அடையாமல் இருக்க, சிறப்பமைந்த சிவபுரத்தில் போய், சிவபெருமானது திருவடியை வணங்கி, யாம் விளங்கும் அடியார்களின் முன்பு சென்று மனம் உருகி நிற்போம்.
611. நிற்பார் நிற்கநில் லாஉலகில்
நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாம் திருமேனிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாம் தாழாதே
நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தால்
பெறுதற்கு அரியன் பெருமானே.
தெளிவுரை : உலக வாழ்வு நிலைத்திருக்கும் என்று மயங்கியிருப்பவர்கள் அதில் ஈடுபட்டு இருக்கட்டும். நமக்கு வீடாகிய இறைவனது திருவடிக்கு நாம் விரைந்து செல்லுவோம். தாங்கள் தீவிரமாக முயற்சி செய்யா திருந்ததைக் குறித்து இரண்டிலும் ஈடுபடாதவர்கள் பின்பு ஒரு நாள் வருந்துவார்கள்.
612. பெருமான் பேரா னந்தத்துப்
பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமால் உற்றுப் பின்னைநீர்
அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவம்
திறந்த போதே சிவபுரத்துத்
திருமால் அறியாத் திருப்புயங்கண்
திருத்தாள் சென்று சேர்வோமே.
தெளிவுரை : இறைவனுடைய பேரருளில் திளைத்திருப்பவர்களே! எக்காரணத்தை முன்னிட்டும் இவ்வுலக வாழ்வில் ஈடுபடாதீர்கள். அது பிறகு பெரும் சங்கடமாக முடியும். சிவபுரத்திற்குச் செல்ல நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சிவபெருமானது திருவடியாகிய வீடுபேற்றில் சென்று சேர்வோம்.
613. சேரக் கருதிச் சிந்தனையைத்
திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள்
பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத
ஆர்வங் கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே
பொய்யிற் கிடந்து புரளாதே.
தெளிவுரை : சிவனை அடைய மனத்தைச் செம்மைப் படுத்திச் சிந்தியுங்கள். உமைபங்கனும் பாம்பை அணிந்தவனுமாகிய சிவபெருமானின் அருளைப் பெற முயலுங்கள். நிலையற்ற உலக வாழ்வில் நாட்டங் கொள்ளாமல் இறைவனது திருவடியை அடைய விருப்பங் கொள்ளுங்கள்.
614. புரள்வார் தொழுவார் புகழ்வாராய்
இன்றே வந்தாள் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பார்ஆர்
மதியுட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீர் ஆகில் இதுசெய்ம்மின்
சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
அருளால் பெறுவார் அகலிடத்தே
அந்தோ அந்தோ அந்தோவே.
தெளிவுரை : சிவபக்தியில் ஊறிப் புரள்வதையும், தொழுவதையும் புகழ்வதையும் செய்யத் தயங்குபவர்களே ! இவ்வரிய வழிபாட்டு முறைகளை இப்போதே கையாளுங்கள். பின்பு பார்ப்போம் என்று ஒத்தி வைத்தால் மயக்கத்தில் மூழ்கிப் போவீர்கள். அப்போது உங்களை யாரும் மதிக்க மாட்டார்கள். நீங்களோ நல்லறிவை இழந்து கலங்கி நிற்பீர்கள். சிவஞானத்தில் தெளிவடைய விரும்புவீராகில் சாதனங்களில் ஆழ்ந்து ஈடுபடுங்கள். இப்படிச் செய்யாவிடின் சிவபெருமானது பேரருளை இப்பரந்த உலகில் யார்தான் பெற்றுப் பரகதியடைவர்? இது சிந்தனைக்கு உரிய விஷயம்.
46. திருப்படை எழுச்சி
தில்லையில் அருளிச் செய்யப்பட்டது
பிரபஞ்சப் போர்
கலிவிருத்தம்
615. ஞானவாள் ஏந்தும்ஐயர்
நாதப் பறைஅறைமின்
மாமா ஏறும்ஐயர்
மதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம்
அடையப் புகுமின்கள்
வானஊர் கொள்வோம்நாம்
மாயப்படை வாராமே.
தெளிவுரை : சிவபெருமான் ஞானமாகிய வாளை ஏந்தி நிற்கின்றார். அவருடைய திருநாமத்தை ஓதுதலாகிய பறையைச் சாற்றுங்கள். அவர் பெருமை பொருந்திய காளையை ஊர்ந்து செல்லும் தலைவர். விவேகம் என்னும் வெண்குடையைப் பிடியுங்கள். நன்மை தருகிற திருநீறு என்னும் கவசம் அல்லது போர்வையை அடைய முந்துங்கள்.
616. தொண்டர்காள் தூசிசெல்லீர்
பத்தர்காள் சூழப்போகீர்
ஒண்திறல் யோகிகளே
பேரணி உந்தீர்கள்
திண்திறல் சித்தர்களே
கடைக்கூழை செல்மின்கள்
அண்டர்நாடு ஆள்வோம்நாம்
அல்லல்படை வாராமே.
தெளிவுரை : தொண்டர்காள், நீங்கள்முன் அணியில் மேல் நோக்கிச் செல்லுங்கள். பக்தர்காள், நீங்கள் சரியாக அணிவகுத்து முன் ஏறுங்கள். யோகிகளே, நீங்கள் மதிநுட்பம் வாய்க்கப் பெற்றவர்களாக மேல் நோக்கிப் போவீர்களாக. எதற்கும் தளராத வலிமை பொருந்திய சித்தர்களே, நீங்கள் பின் அணிவகுத்து ஏகுங்கள், துன்பத்துக்கு இடம் கொடாத சிதாகாசம் நமது நாடு. அதை நாம் சென்றடைவோம்.
47. திருவெண்பா
திருப் பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டது
அணைந்தோர் தன்மை
நேரிசை வெண்பா
617. வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா(து) என்செய்கேன்  செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா(து) இருந்தேன் மனத்து.
தெளிவுரை : தேன் உந்து செந்தீ  பேரின்பம் விளைவிக்கின்ற செஞ்சுடர். கொடிய வினைகள் இரண்டும் அவிந்து ஒழிய உடல் உருகி, உலக வாழ்க்கையும், நீறாகி ஒழியாமல் நான் என்ன செய்வேன்? சிவந்த அழகு பொருந்திய திருப் பெருந்துறையில் கோயில் கொண்டிருக்கும் இறைவன், பேரின்பம் விளைவிக்கிற செஞ்சுடர். அவனை மனத்தில் அணைத்துக் கொள்ளாமல் இருந்தேன்.
618. ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்கேன்  தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானென்பார் ஆர்ஒருவர் தாழ்ந்து.
தெளிவுரை : நீக்குதற்கு அரிதாகிற இன்ப மயக்கத்தை ஏற்றுகின்ற சிவபெருமான், திருப் பெருந்துறையில் உறைபவன்; ஒப்பற்றவன். அச் சிவனாந்தத்தில் கலந்து கொள்ள வேறு யாரும் வராவிட்டால் நான் தனியாக அதில் திளைத்திருந்து ஆரவாரம் செய்வதா? அலறுவதா? ஆடுவதா? பாடுவதா? கண்டு களிப்பதா? இதைக் குறித்துத் திகைத்து நிற்கிறேன்.
619. செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன்  வையத்(து)
இருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்.
தெளிவுரை : நான் பிழை செய்து அறியேன். அவனுடைய பாதங்களையே வழிபடுகிறேன். ஆயினும் கடைத்தேறும் வகையறியேன். திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமான் பாமரனாகிய என் நெஞ்சில் ஞான வேல் எடுத்து அழுத்தமாகக் கோத்தான். எனது மயக்கம் மாய்ந்தது. தெளிவு பிறந்தது. நான் உய்வு அடையலானேன்.
620. முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்  தென்னன்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரம் தீர்க்கும் மருந்து.
தெளிவுரை : முன்வினைகள் இரண்டையும் அறுத்து முன் நிற்பவனும், இனிவரும் பிறப்பையும் தடுத்து நிறுத்துபவனும் ஆகிய இறைவன் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் அருளாளன். இனி வரும் துயரங்களையும் தீர்க்கும் அரு மருந்தும் அவனே யாவன். அவனுக்கு வைத்தீசுவரன் என்றும் பெயர் உண்டு.
621. அறையோ அறிவார்க்(கு) அனைத்துலகும் ஈன்ற
மறையோனும் மாலும்மால் கொள்ளும்  இறையோன்
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியா(து)
இருந்துறையும் என்நெஞ்சத்(து) இன்று.
தெளிவுரை : பரமனைப் புறத்தில் தேடிய பிரம்மாவும் திருமாலும் மயக்கம் தெளிந்தார் இல்லை. திருப் பெருந்துறையில் கோயில் கொண்டிருக்கும் பெம்மான் என் மனத்தில் பொருந்தியுள்ளான். தெளிந்த அறிவுடையார்க்கு அவ்வுண்மையைச் சொல்லவும் வேண்டுமோ? (அறையவோ  சொல்லவும் வேண்டுமோ?) அறையவோ என்பதன் குறுக்கம்.
622. பித்தென்னை யேற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
மத்தமே யாக்கும்வந் தென்மனத்தை அத்தன்
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்திறவாப் பேரின்பம் வந்து.
தெளிவுரை : என் மனத்தில் ஞானப் பித்தை ஏற்றினான். பிறவிப் பிணியை நீக்கினான். நான்பேசா நிலையை அடையுமாறு செய்தான். அவன் திருப் பெருந்துறையில் வாழும் கருணை வடிவினன். இறவாத பேரின்பமாகிய மருந்து அவன்.
623. வாரா வழியருளி வந்தெனக்கு மாதின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே  சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி.
தெளிவுரை : மீண்டும் பிறவாத வழியை எனக்கு அருளினான். என் உள்ளத்தில் ஒளிர்கின்ற சிவ சைதன்யம் யாண்டும் உள்ளபடி அசலமானது. அது இரண்டற்ற தனிப் பொருள். அது பேரானந்த சொரூபம். அனுபூதியில் அதை அறிந்து கொண்டதனால் இனி எனக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. நான் பெற்றுள்ள பேறு முக்தியாகும். அதை அருளியவன் திருப்பெருந்துறையுறை சிவனாகும்.
624. யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்கும் கீழாம் அடியேனை  யாவரும்
பெற்றிறயா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை.
தெளிவுரை : எல்லாருக்கும் மேம்பட்டு, அளவில்லாத சிறப்பை உடையவனும் எல்லாருக்கும் கீழ்ப்பட்ட அடியேனை ஒருவருக்கும் கிடைக்காத இன்பத்தில் வைத்தவனுமான உன்பொருட்டு, எம்பெருமானே! வேறு கைம்மாறு செய்யும் விதத்தைத் தெரிந்திலேன்.
625. மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவரும் காணாச் சிவபெருமான்  மாஏறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும்.
தெளிவுரை : பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும், முப்பத்து மூவரும் மற்றுமுள்ள தேவர்களும் காணாத சிறப்புடையவன் சிவபெருமான். குதிரை ஏறி இவ்வுலகத்திற்கு வந்து இறங்கிய அப்பெருமானின் கழல்கள் அணிந்த பாதங்களை வணங்கினால் மனத்தில் இன்பம் பெருகும். முப்பத்து மூவர் என்பவர் பதினோரு உருத்திரர்கள், பன்னிரண்டு ஆதித்தியர்கள், எட்டு வசுக்கள், இரண்டு அசுவினிதேவர் , ஆக முப்பத்து மூவர்.
626. இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்(து)
இருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம்  தரும்காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து.
தெளிவுரை : மனமே! என்னை அவன் ஆட்கொண்டான். அவனுடைய இரண்டு திருவடிகளையே தியானித்து, யாசித்துப் பெற்றுக் கொள்வாயாக, அவன் எல்லாவற்றையும் தருவான். திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள பெருங் கருணையாளன் அவன். அவன் மருந்துருவாய் என் மனத்தில் வந்து தங்கியிருப்பான்.
627. இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்வறுத்துச் சோதியாய்  அன்பமைத்துச்
சீரார் பெருந் துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து.
தெளிவுரை : சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையில் வாழும் எம்பெருமான் என் உள்ளத்தில் இன்பத்தைப் பெருக்கி, இருளை அகற்றினான். எப்போதும் துன்பம் வராமல் தடுத்துச் சோதியுருவாய் உள்ளான். என் மனத்தையே தனது இருப்பிடமாக விரும்பி ஏற்றுக் கொண்டான்.
48. பண்டாய நான்மறை
திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது
அனுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல்
நேரிசை வெண்பா
628. பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனும்
கண்டாரும் இல்லைக் கடையேனைத்  தொண்டாகக்
கொண்டருளும் கோகழிஎம் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா(று) உரை.
தெளிவுரை : மாணிக்கவாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டது கோகழி எனக் கூறப்படும் திருவாவடு துறையிலேயாம். அது திருப்பெருந்துறை என்றும் கூறப்படுகிறது.
வேதங்களுக்கு எட்டாதவன் சிவன்; ஜீவபோதத்தில் உழலும் திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் விளங்காதவன். அத்தகையவனை அடியேன் காணுமாறு கிருபை செய்தான். அதற்குக் கைம்மாறு யாதுளது!
629. உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன்
வெள்ளம் தரும்பரியின் மேல்வந்த  வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவும் கெடும்பிறவிக் காடு.
தெளிவுரை : சிவஞானம் என்னும் தேனைச்சிவன் நல்கியருள்கிறான். அதன் விளைவாக ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் அழிகின்றன. பிறவிக்காடு வேரோடு ஒழிந்து போகிறது. அந்த வள்ளல் குதிரைமேல் வந்து அருள் செய்தான். அவன் உறைகின்ற திருப்பெருந்துறையை வாழ்த்துங்கள்.
630. காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டில் பரிப்பாகன் நம்வினையை  வீட்டி
அருளும் பெருந்துறையான் அம்கமல பாதம்
மருளும் கெடநெஞ்சே வாழ்த்து.
தெளிவுரை : சிவபெருமான் அடியார்க்கு எளியவன். அருச்சுனனுக்காக அவன் காட்டில் வேடனாக வந்தான்; கடலில் வலைஞனாய் வந்தான்; நாட்டில் குதிரைப் பாகனாக வந்தான். அவனை வழுத்தினால் வினையும் அஞ்ஞான இருளும் ஒழியும். திருப் பெருந்துறையில் உள்ள அவன் பாதங்களை நெஞ்சமே வாழ்த்துவாயாக.
631. வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாரும்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாரும்  சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர்.
தெளிவுரை : சிவ வழிபாட்டின் மூலம் பக்தர்கள் நல்வாழ்வைப் பெறுகிறார்கள். பிறவித் துன்பங்களை மாய்த்துக் கொள்கிறார்கள். உலகத்தாருடைய போற்றுதலைப் பெறுகிறார்கள். ஆதலால் தேவர்கள் ஒன்றுகூடி வந்து வணங்குகின்ற திருப் பெருந்துறையுறை சிவனை நம்மவர்கள் ஏத்தி வழிபடுகிறார்கள்.
632. நண்ணிப் பெருந்துறையை நம்இடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப்  பண்ணின்
மொழியாளோ(டு) உத்தர கோசமங்கை மன்னிக்
கழியா(து) இருந்தவனைக் காண்.
தெளிவுரை : திருப் பெருந்துறைக்கு அரசனும், உமாதேவி யாரோடு உத்தர கோசமங்கையில் நிலைபெற்றிருப்பவனுமாகிய இறைவனை நம் இடர்கள் போயகல எண்ணி எழுவோமாக. அவனைக் கண்டு வழிபடுவோமாக.
633. காணும் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக்  காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு.
தெளிவுரை : உள்ளத்தில் அந்தர் யாமியாய் அமர்ந்திருந்து அங்கு எழுகின்ற எண்ணங்களுக்கு எல்லாம் சாட்சியாய் இருப்பவனை நாம் வணங்கினால் சாகும் அளவு நம்வாழ்வு நல்வாழ்வாகிறது. ஆகவே திருப் பெருந்துறையில் என்றும் பிரியாமல் இருப்பவனை நெஞ்சமே வழிபடுவாயாக.
634. பேசும் பொருளுக்(கு) இலக்கிதமாம் பேச்(சு)இறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை  பேசிப்
பெருந்துறையே யென்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து.
தெளிவுரை : பரமசிவனை மாசிலாமணி எனலாம். அவன் நாதாதீதன். அத்தகைய பெரிய பொருள் என் நெஞ்சில் நீக்கமற நிறைந்துள்ளான். எனக்கு நன்மையே செய்யும் அவனைப் பற்றிப் பேச வேண்டும். பிறவிப் பிணியைப் போக்கும் அமிர்தமாய் இருக்கிறான் அவன். அவன் திருப் பெருந்துறையுறை சிவனாவான்.
49. திருப்படை ஆட்சி
தில்லையில் அருளிச் செய்யப்பட்டது
சீவ உபாதி ஒழிதல்
படை என்னும் சொல் ஆயுதத்தைக் குறிக்கிறது. இறைவனை அடைய விரும்புபவர்க்கு ஆத்ம சாதனங்கள் மிக நல்ல படையாகின்றன. ஆதலால் அவைகள் திருப்படை ஆகின்றன. அவைகளின் ஆட்சி அல்லது அனுபவம் ஓங்கும் அளவு ஆத்ம சாதகன் முன்னேற்றம் அடைகிறான். புரிதற்குச் சாதனங்கள் பல அமைந்திருப்பது பரமனது அருளின் விளைவாம்.
பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்
635. கண்கள் இரண்டும் அவன்கழல்கள்
கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்வில்என்
வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடும்
ஆறு மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம்
இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ(டு)
ஆடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன் னாடுடை யான்படை
ஆட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம்
வந்து வெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன்
வந்து வெளிப்படும் ஆகாதே.
தெளிவுரை : வேடனாக வந்து வலைவீசி மீன் பிடித்தல் என்னும் திருவிளையாடலை நடத்திய சிவன் என்னைத் தன்வயம் ஆக்கிக் கொள்வான் ஆகில் அதன் விளைவு வருமாறு:
கண்கள் மட்டும் அல்லாது பிரபஞ்சத்தை நுகர்வதற்கென்றே அமைந்துள்ள பஞ்சேந்திரியங்கள் பரபோதத்தில் செயலற்றுப் போகின்றன. அஞ்ஞானத்தில் உழலும் ஜீவர்கள் (காரிகையார்கள்) பிரபஞ்ச வாழ்வு என்னும் கீழ்மையில் திருப்தி யடைகின்றனர். பரபோதம் அடைந்தவர்க்குத் தாங்கள் இடையில் கீழ்மை யடைந்திருந்ததின் ஞாபகம் வருவதில்லை. மீண்டும் மண்ணுலகில் வந்து பிறப்பு எடுக்குமாறு அஞ்ஞான இருள் சூழ்வதில்லை. ஜீவ உபாதி ஒழிந்த விடத்து வழிபடுவோன், வழிபடு பொருள் என்னும் வேற்றுமையில்லை.
இனிது துதி செய்வதற்கு இசை பயிலுவதில்லை. பாடல்களை ராக தாளத்துடன் பாடி பஜனை பண்ணுவதில்லை. அதனோடு பக்தி பூர்வமாக நடனம் புரிவதுமில்லை. பரபோதம் வருமிடத்து இவை யாவும் நின்றுவிடுகின்றன. பரம்பொருள் சிறப்பாக இன்ன இடத்துக்கு உரியவன் என்னும் இடவேற்றுமையும் என்னென்ன வீரச் செயல்களை அவன் செய்துள்ளான் என்னும் பாகுபாடும் பரபோதத்தில் இல்லை.
தாங்கள் உயர்நிலையில் இருப்பதாகத் தேவர்கள் மகிழ்வதும், கீழான பொருளை மேலான பொருளாக மாற்றுதல் என்னும் செயற்கரிய செயலும் பரபோதத்தில் இல்லை.
636. ஒன்றினொ(டு) ஒன்றும்ஓர் ஐந்தினொ(டு)
ஐந்தும்உ யிர்ப்பதும் ஆகாதே
உன்அடி யார்அடி யார்அடி
யோம்என உய்ந்தன ஆகாதே
கன்றை நினைந்தெழு தாயென
வந்த கணக்கது ஆகாதே
காரணம் ஆகும் அனாதி
குணங்கள் கருத்துறும் ஆகாதே
நன்றிது தீதென வந்த
நடுக்கம் நடந்தன ஆகாதே
நாமும்மே லாம்அடி யாருட
னேசெல நண்ணுதும் ஆகாதே
என்றும்என் அன்பு நிறைந்த
பராஅமு(து) எய்துவது ஆகாதே
ஏறுடை யான்என்ன ஆளுடை
நாயகன் என்னுள் புகுந்திடிலே.
தெளிவுரை : காளையை ஏறி நடத்துபவனும் என்னை ஆட்கொண்டருளிய இறைவனும் என் நெஞ்சில் புகுந்து விட்டால், ஒன்றோடு ஒன்றும், ஐந்தோடு ஐந்தும், பிழைத்திருக்க முடியாது. உன் அடியார்களுக்கு அடியோங்கள் என்ற உயர்ந்த தொழில்கள் இசையா; கன்றுக் குட்டியை நினைத்து எழுகின்ற தாய்ப் பசுவைப் போல் வந்த விதமும் ஆகாது. காரணமாகிய பழைமைக் குணங்கள் கருத்தில் பொருந்தவும் செய்யா. இது நல்லது இது கெட்டது என்று சொல்லும்படி வந்த நடுக்கங்கள் உண்டாகா. நாம் எல்லோரும் அடியவர்களோடு செல்லும் பொருட்டாக நெருங்குவதும் கூடாது. எப்போதும் என்னிடம் நிறைந்த அன்பு கொண்டருளிய மேலான அமிர்தத்தை அடைவதும் ஆகாது.
ஒன்றினோடு ஒன்று ஆத்மாவுடன் ஆத்மா. ஐந்தினோடு ஐந்து பொறிகளோடு புலன்கள்; ஆண்டவன் உள்ளத்தில் குடிகொண்டு எழுந்தருளும்போது ஆனந்த பரவசம் உண்டாகும். இந்நிலையில் இந்திரியங்கள். கரணங்கள் முதலிய தத்தம் தொழில்களைச் செய்ய முடியாமற் போகும்.
637. பந்தவி கார குணங்கள்
பறிந்து மறிந்திடும் ஆகாதே
பாவனை யாய் கருத்தினில்
வந்த பராஅமு(து) ஆகாதே
அந்தமி லாத அகண்டமும்
நம்முள் அகப்படும் ஆகாதே
ஆதி முதற்பர மாய
பரஞ்சுடர் அண்ணுவது ஆகாதே
செந்துவர் வாய்மட வார்இடர்
ஆனவை சிந்திடும் ஆகாதே
சேலன கண்கள் அவன்திரு
மேனி திளைப்பன ஆகாதே
இந்திர ஞால இடர்ப்பறி
வித்துயர் ஏகுவது ஆகாதே
என்னுடை நாயக னாகிய
ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே.
தெளிவுரை : நான் பரவஸ்துவில் ஒன்றுபடும்பொழுது நிகழ்வன வருமாறு:
பந்தத்தை உண்ணுவதற்காக விகாரப்பட்டிருக்கும் மூன்று குணங்களும் களைந்தெடுக்கப் படுகின்றன.
(ஆகாதே என்னும் சொல் இங்கு ஆகும் எனப் பொருள் படுகிறது)
பண்பட்ட மனத்தில் உதிக்கிற தெய்வீக விருத்திக்குப் பாவனை என்று பெயர். அதன் வாயிலாக வருகிற தெய்வீகக் காட்சிக்குப் பாவ சமாதி என்று பெயர். நிர்விகல்ப சமாதியில் இந்த பாவ சமாதியும் அடிபட்டுப் போகிறது. தன்னை ஒரு ஜீவன் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அவன் உண்மையில் சிவம். நிர்விகல்ப சமாதியில் இவ்வுண்மை விளங்குகிறது. சச்திதானந்தத்தை ஜீவாத்ம சென்றடைவதில்லை. சச்சிதானந்தமாய் இருப்பது சமாதியின் விளைவு. ஆண்பால் பெண்பால் என்னும் வேற்றுமையில் உருவெடுக்கிற காம விகாரத்திற்கும் சுத்த சிவத்துக்கும் வெகுதூரம். சிவ சொரூபத்தில் ஒன்றித்தவரைக் காம நோய் இடர்ப்படுத்துவதில்லை.
மீனின் கண்கள் இமைப்பதில்லை. சமாதியில் இருக்கும் ஞானியர் கண்கள் விழித்திருக்கின்றன. ஆனால் இமைப்பதில்லை. இந்த ஊனக் கண்கள் பரம்பொருளைத் தரிசிப்பதற்கு உதவுவது இல்லை.
இந்திர ஜாலவித்தை போன்று பிறவி உண்டாகிறது. அது துன்பத்தை விளைவிக்கிறது. எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவைகளால் வருகிற துக்கம் ஒழிந்து போவதில்லை. சமாதி எய்துமிடத்துத் துக்க நிவர்த்தி நிரந்தரமாய் நிகழ்கிறது.
638. என்அணி யார்முலை ஆகம்
அளைந்துடன் இன்புறும் ஆகாதே
எல்லையில் மாக்கரு ணைக்கடல்
இன்றினி(து) ஆடுதும் ஆகாதே
நன்மணி நாதம் முழங்கிஎன்
உள்ளுற நண்ணுவ(து) ஆகாதே
நாதன் அணிந்திரு நீற்றினை
நித்தலும் நண்ணுவ(து) ஆகாதே
மன்னிய அன்பரில் என்பணி
முந்துற வைகுவ(து) ஆகாதே
மாமறை யும்அறி யாமலர்ப்
பாதம் வணங்குதும் ஆகாதே
இன்னியல் செங்கழு நீர்மலர்
என்தலை எய்துவ(து) ஆகாதே
என்னை உடைப்பெரு மான்அருள்
ஈசன் எழுந்தரு ளப்பெறிலே.
தெளிவுரை : ஜீவ வியக்தியைத் துடைத்துவிட்டு நான் பரமாத்மாவில் ஒன்றித் திருக்கும் போது, மூர்த்தியாகப் பரமனைத் தரிசித்து அவனைக் கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்வது சாத்தியப் படாது. இறைவனது கருணைக் கடலில் மூழ்கிப் பேரானந்தம் துய்த்தல் என்பதும் பின் அணியில் வைக்கப்படுகிறது. யோக சாதனம் புரிகிறவர்கள் தங்கள் உடலினுள்ளே கேட்கிற அனாகத தொனி என்னும் இனிய ஓசையானது நிர்விகல்ப சமாதியினரால் கேட்கப்படமாட்டாது. சிவசின்னமாகிய திருநீறு பூசுதல் போன்ற சதாசாரக் கிருத்தியங்கள் அதீதத்தில் நிகழமாட்டா. அன்பர் பணிவிடை செய்தல் என்னும் ஆனந்தக் கைங்கரியம் அதீதத்தில் நிகழ்வதில்லை. வேதங்களால் விளக்க முடியாத திருவடியை வணங்க ஜீவ வியக்தி எஞ்சியிருப்பதில்லை. அருளே வடிவெடுத்துள்ள இறைவனது தாமரைத் திருவடி என் தலைமீது நாட்டப் பெறுவது ஆகாது.
639. மண்ணினில் மாயை மதித்து
வகுத்த மயக்கறும் ஆகாதே
வானவ ரும்அறி யாமலர்ப்
பாதம் வணங்குதும் ஆகாதே
கண்ணிலி காலம் அனைத்தினும்
வந்த கலக்கனும் ஆகாதே
காதல் செயும்அடி யார்மனம்
இன்றுக ளித்திடும் ஆகாதே
பெண்அலி ஆண்என நாம்என
வந்த பிணக்கறும் ஆகாதே
பேரறி யாத அனேக
பவங்கள் பிழைத்தன ஆகாதே
எண்இலி யாகிய சித்திகள்
வந்ததெனை எய்துவது ஆகாதே
என்னை உடைப்பெரு மான்அருள்
ஈசன் எழுந்தருளப் பெறிலே.
தெளிவுரை : நிரந்தரமாயுள்ள சிவபோதத்தில் ஜீவபோதம் கரையுங்கால் நிகழ்வன வருமாறு: மண்ணுலக வாழ்க்கையில் பெரும் பற்று வைக்கும்படி மாயா சக்தி அதற்கு மதிப்புக் கொடுக்கிறது. நிர்விகல்ப சமாதியில் அந்த மயக்கம் அறுபட்டுப் போகிறது. இந்திரியங்களைக் கொண்டு அறிந்து கொள்ள முடியாத பரமாத்ம சொரூபம் மனத்தின் அதீதத்தில் வணங்குவதற்குரிய புறப் பொருள் ஆவதில்லை. அகண்டாகாரத்தில் விரிந்துஓடும் காலத்தினுள் என்னென்ன நிகழ்ச்சிகள் புதைந்து கிடக்கின்றன என்பது யாருக்கும் விளங்குவதில்லை. அத்தகைய காலமும் அதீதத்தில் அழிந்து பட்டுப் போகிறது.
பக்தர்களிடத்துப் பக்தர்கள் வைக்கிற அன்பு ஒப்பற்றது. அதில் வருகிற ஆனந்தம் பரமானந்தமாகிறது. நிரிவிகல்ப சமாதியில் அந்த ஆனந்தம் மறைந்து போகிறது. ஜீவ வியக்தியில் பெண், அலி, ஆண் என்னும் பால் வேற்றுமை இடம் பெற்றிருக்கிறது. ஜீவன் ஒருவன் தன்னைப் பெண் என்றோ, அலி என்றோ, ஆண் என்றோ எண்ணுவது உபாதியாகிறது. அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுதலும் இயல்பே. இத்தகைய உபாதி வேறுபாடு சமாதியில் இடம் பெறுவதில்லை.
கல்நிலையிலும் புல்நிலையிலும் துவங்கிய ஜீவ பிராந்திகள் கணக்கில் அடங்கா. பின்பு சிவபோதத்தில் அவையாவும் வெறும் மனோகற்பிதம் என்று ஒதுக்கப்படுகின்றன. கணக்கற்ற சித்திகளை நான் அடையப் பெறுவது பிரபஞ்ச வாழ்க்கையில் நிகழ்வதுண்டு. பாரமார்த்திகப் பெரு நிலையில் சித்திகள் யாவும் பொருளற்றவைகளாம்.
640. பொன்இய லும்திரு மேனிவெண்
ணீறு பொலிந்திடும் ஆகாதே
பூமழை மாதவர் கைகள்
குவிந்து பொழிந்திடும் ஆகாதே
மின்இயல் நுண்ணிடை யார்கள்
கருத்து வெளிப்படும் ஆகாதே
வீணை முரன்றெழும் ஓசையில்
இன்பம் மிகுந்திடும் ஆகாதே
தன்னடி யார்அடி என்தலை
மீது தழைப்பன ஆகாதே
தானடி யோமுட னேஉய
வந்து தலைப்படும் ஆகாதே
இன்இயம் எங்கும் நிறைந்(து)இனி(து)
ஆக இயம்பிடும் ஆகாதே
என்னைமுன் ஆளுடை ஈசன்என்
அத்தன் எழுந்தருளப் பெறிலே.
தெளிவுரை : நிர்வகல்ப சமாதியில் எனது சுயசொரூபமாகிய பரமசிவத்தில் நான் ஒன்று பட்டிருக்கும்போது, சகுண பிரம்ம தர்சனம் பக்தனுக்குப் பரமானந்தத்தை ஊட்டுகிறது. இஷ்ட மூர்த்தியின் தரிசனத்துக்கும் மேலானது நிர்விகல்ப சமாதி. அரும் பெரும் தவசிகள் ஓயாது மலர் தூவி மூர்த்தி உபாசனை செய்கின்றனர். அவர்கள் செயல் மலர்மழை பொழிவது போன்று காட்சி கொடுக்கிறது. நிர்விகழ்ப சமாதியில் அத்தகைய நிகழ்ச்சிக்கு இடமில்லை.
மாதர்கள் தங்கள் மேனியழகை முன்னிட்டு அவர்கள் வெளிப்படையாக மகிழ்கிறார்கள். பரம் பொருளின் பேரமைப்பை உள்ளபடி அறியுங்கள். அத்தகைய மகிழ்ச்சி பொருளற்றதாக மறைந்துபோகும். வீணையிலிருந்து எழுகின்ற ஓசை மனிதனை மகிழ்விக்கிறது. அத்தகைய செவியின்பம் சமாதி நிலையில் இல்லை. சிவஞானம் பெற்றவரின் பாதம் படிய ஞானோதயம் உண்டாகிறது. நிர்விகல்ப சமாதியில் குரு சிஷ்ய பேதம் போகிறது.
ஜீவர்கள் உய்ய இறைவன் அருள் புரிகிறான். சிதம்பர ரகசியத்தில் உய்தலும் உய்வித்தலும் இல்லை. ஆலய வழிபாட்டில் இனிய வாத்தியங்கள் வாசிப்பதால் எழுகின்ற நாதங்கள் முழங்கிக் கொண்டிருப்பதை அதீத நிலையில் கேட்க முடியாது.
641. சொல்இய லாதுஎழு தூமணி
ஓசை சுவைதரும் ஆகாதே
துண்என என்உளம் மன்னிய
சோதி தொடர்ந்தெழும் ஆகாதே
பல்இயல்(பு) ஆய பரப்பற
வந்த பராபரம் ஆகாதே
பண்டறி யாத பரானு
பவங்கள் பரந்தெழும் ஆகாதே
வில்இயல் நன்னுத லார்மயல்
இன்று விளைந்திடும் ஆகாதே
விண்ணவ ரும்அறி யாத
விழுப்பொருள் இப்பொருள் ஆகாதே
எல்லைஇ லாதன எண்குணம்
ஆனவை எய்திடும் ஆகாதே
இந்து சிகாமணி எங்களை
ஆள எழுந்தரு ளப்பெறிலே.
தெளிவுரை : சுத்த பிரம்ம நிர்வாணம் வாய்க்குமிடத்து ஈண்டு இயம்பியுள்ள ஞான அனுபவங்கள் நிகழ்வதில்லை. நாவால் உச்சரிக்காத ஓசை கேட்டு இன்புறுதல் இல்லை. ஏனெனில் அப்போது எந்த ஓசையும் எழுதல் இல்லை. தத்துவ குணத்தில் நிலைத்துள்ள உள்ளத்தில் மின்னல் போன்ற ஒளி தென்படுவதுண்டு. குணாதீதத்தில் அத்தகைய ஒளிக்கு இடமில்லை. அசையாத தூய மனத்தில் ஈசனது பல விபூதிகள் மிளிர்கின்றன. மனாதீதத்தில் அத்தகைய தெய்வீக அனுபவங்களுக்கு அவகாசமில்லை. மனமற்ற பரிசுத்த நிலையில் நூதன அனுபவங்கள் வாய்ப்பதில்லை.
புறத்தில் அழகான வடிவங்களைக் கண்டு அவைகளுக்கு வசப்படுதல் நிர்விகல்ப சமாதிக்குப் பிறகு நிகழாது. தேவர்களாலும் அறிந்து கொள்ள முடியாத பரவஸ்து ஒன்றே இங்கு உள்ள அனைத்துமாய் இலங்குகிறது. சுத்த சைதன்யமாகிய நிர்க்குணப்பிரம்மம் எண்குண விகாரங்களை எடுப்பதில்லை.
642. சங்கு திரண்டு முரன்றெழும்
ஓசை தழைப்பன ஆகாதே
சாதி விடாத குணங்கள்நம்
மோடு சலித்திடும் ஆகாதே
அங்கிது நன்றிது நன்றெனும்
மாயை அடங்கிடும் ஆகாதே
ஆசையெ லாம்அடி யார்அடி
யோம்எனும் அத்தனை ஆகாதே
செங்கயல் ஒண்கண் மடந்தையர்
சிந்தை திளைப்பன ஆகாதே
சீரடி யார்கள் சிவானு
பவங்கள் தெரிந்திடும் ஆகாதே
எங்கும் நிறைந்தமு தூறு
பரஞ்சுடர் எய்துவது ஆகாதே
ஈறறி யாமறை யோன்எனை
ஆள எழுந்தரு ளப்பெறிலே.
தெளிவுரை : அகண்டா காரமாயுள்ள சிதாகாசத்தில் நான் ஒடுங்கிவிடுமிடத்து அதன் விளைவு வருமாறு: சங்க நாதத்துக்கு நிகரான ஓசை சகுண பிரம்மத்தின் கண் உளது. நிர்க்கண பிரம்மத்தில் அது ஒலிப்பதில்லை. முக் குணங்களும் அவைகளினின்று உருவெடுத்து வருகிற ஜாதி பேதங்களும் அதீதத்தில் இடம் பெறுவதில்லை.
கர்மம் மாயையின் கூறு ஆகிறது. நற்கருமங்களைச் செய்தல் இவ்வுலகிற்கு உரியது. அதீத நிலையில் மாயையின் ஆதிக்கம் அடங்கி விடுகிறது. அடியவர்களுக்கு அடிமை பூணுதல் திருத் தொண்டின் இயல்பு. ஆனால் நிர்விகல்ப சமாதியில் அத்திருத் தொண்டிற்கு இடமில்லை. ஞானம் பெற்ற ஜீமாத்மன் மாதர்களைப் பற்றிச் சிந்திக்க மாட்டேன். சமாதி நிலையில் மூர்த்தி தரிசனங்களும் இணக்கங்களும் மாறிவிடுகின்றன.
ஆனந்தா தீதத்துக்குப் போனவன் ஆனந்தத்துக்கு இறங்கி வருவதில்லை.
50. ஆனந்த மாலை
தில்லையில் அருளிச் செய்யப்பட்டது
சிவ அனுபவ விருப்பம்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
643. மின்னேர் அனைய பூங்கழல்கள்
அடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னேர் அனைய மலர்கொண்டு
போற்றா நின்றார் அமரரெல்லாம்
கன்னேர் அனைய மனக்கடையாய்க்
கழிப்புண்(டு) அவலக் கடல்வீழ்ந்த
என்னேர் அனையேன் இனியுன்னைக்
கூடும் வண்ணம் இயம்பாயே.
தெளிவுரை : மின்னலை யொத்தவைகளும், அழகிய தாமரை மலர் போன்ற வைகளுமான திருவடிகளை அடைந்த அடியார்கள் விவகாரங்களைத் தாண்டி, அதீதத்தைச் சென்றடைந்தார்கள். தேவர் எல்லாரும் பொன்னையொத்த அரிய மலர்களால் அருச்சித்து உன்னை ஆராதனை செய்தனர். கல்லையொத்த ஜடபுத்தி உடையவன் நான். மற்றவர்களால் மட்டமாக மதிக்கப்பட்டவன் நான். துன்பக் கடலில் விழுந்து சிறுமையுற்றேன். இனி உன்னை அடையும் வகையைச் சொல்வாயக. போற்றாநின்றார் போற்றுகின்றார்.
644. என்னால் அறியாப் பதம்தந்தாய்
யான்அது அறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றும் குறைவில்லை
உடையாய் அடிமைக்(கு) ஆர்என்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
பழைய அடியா ரொடும்கூடா(து)
என்நா யகமே பிற்பட்டிங்(கு)
இருந்தேன் நோய்க்கு விருந்தாயே.
தெளிவுரை : என்னால் அறிய முடியாத முக்தியைக் கொடுத்தாய்; அடியேன் அதனை அறியாமலே கெட்டேன்; உன்னால் ஒரு குறையும் இல்லை; உடையவனே அடியேனுக்குப் (புகழ்)யார் இருக்கிறார்கள் என்பேன். பலநாளும் உன்னை வணங்கித் துதிக்கும் பழமையான அடியார்களோடு சேராமல், என்னுடைய தலைவனே! பின்னிட்டுப் பிறவிப் பிணிக்கு விருந்தாகும்படி இவ்விடத்து இருந்தேன்.
645. சீலம் இன்றி நோன்பின்றிச்
செறிவே இன்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச்
சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலும் காட்டி வழிகாட்டி
வாரா உலகம் நெறியேறக்
கோலங் காட்டி ஆண்டானைக்
கொடியேன் என்றோ கூடுவதே.
தெளிவுரை : என்னிடத்து நல்லொழுக்கமில்லை; விரதம் இல்லை. அடக்கம் சிறிதளவும் இல்லை. விவேகம் இல்லை. நான் வீணில் அலைந்து திரிவது தோல்பாவைக் கூத்து ஆகும். நான் கொண்டுள்ள மயக்கத்தை நீக்குவதற்கான உபாயத்தை ஞாபகமூட்டி நன்னெறியைப் புகட்டியுள்ளாய். உன் திருக்கோலத்தைக் காட்டி முக்தி மார்க்கத்தையும் புகட்டியுள்ளாய். துன்மார்க்கத்தில் உழலும் நான் உன்னை எப்பொழுது கூடுவேனோ தெரியவில்லை.
646. கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்
கேடு இலாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவ(து) எல்லாம்நாம்
பட்டால் பின்னைப் பயன்என்னே
கொடுமா நரகத்(து) அழுந்தாமே
காத்தாட் கொள்ளும் குருமணியே
நடுவாய் நில்லா(து) ஒழிந்தக்கால்
நன்றோ எங்கள் நாயகமே.
தெளிவுரை : கெட்டுப்போம் தன்மையுடைய நான் எனக்குக் கேடு சூழ்ந்து கொள்கிறேன். கேடு இல்லாதவனாகிய நீ என்னை ஆட்கொண்டு, பிறகு நான் கெட்டுப் போகும் படி விட்டதனால் உனக்குப் பழியைத் தேடிக் கொண்டாய். துன்பப் படுவதற்கு ஏதுவான கீழ்மையில் உள்ள என்னைத் துன்பம் துய்க்க விட்டு விடுவதால் உனக்கு வரும் பயன்யாது? கொடிய நரகத்தில் அழுந்தாமல் என்னைக் காத்து ஆட்கொள்ளும் குருநாதன் நீ. யோகத்தில் என் மனம் நடுநிலை யடையாது போனால் ஆட்கொண்ட உனக்கு அது நலனாகுமா? இறைவா, இந்தச் சங்கடத்தின் மீது சிறிது சிந்தை செலுத்துவாயாக.
647. தாயாய் முலையைத் தருவானே
தாரா(து) ஒழிந்தால் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ
நம்பி இனித்தான் நல்குதியே
தாயே என்றுன் தாளடைந்தேன்
தயாநீ என்பால் இல்லையே
நாயேன் அடிமை உடனாக
ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.
தெளிவுரை : நம்பி! எனக்குத் தாயாகிப் பால் ஊட்டக் கடமைப்பட்டவனே! நீ அப்படி ஊட்டாவிட்டால் கீழ்ப்பட்டவனான நான் சலவைப் பிள்ளையாகி இளைத்துப் போய்விடுவேனே. தாயே என்று கூவிக்கொண்டு நான் உன் திருவடிகளை அடைந்திருக்கிறேன். இதன் பிறகாவது நீ அருள வேண்டும். என்னிடத்து நீ தயை காட்ட வில்லையே. எனது அடிமைத் திறம் நிலைத்திருக்கும் படி நீ ஆண்டருளினை. அதன் பின்னும் தயைகாட்டாவிடில் அடியேன் மட்டும் வேண்டாமோ? அடியேன் வேண்டாதவன் என்பது உன் கருத்தோ? நம்பி பூர்ணமானவனே.
648. கோவே யருள வேண்டாவோ
கொடியேன் கெடவே அமையுமே
ஆவா என்னா விடில்என்னை
அஞ்சேல் என்பார் ஆரோதான்
சாவார் எல்லாம் என்அளவோ
தக்க ஆறுஅன்(று) என்னாரோ
தேவே தில்லை நடமாடீ
திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.
தெளிவுரை : இறைவா, நீ அருள்புரிய வேண்டாவோ? கெட்டவனாகிய நான் கெட்டடொழிதல்தான் நியதியோ? என்னிடத்து நீ இரக்கம் காட்டாவிட்டால் எனக்கு ஆறுதல் கூறுவதற்கு வேறு யார் இருக்கிறார்? பிறவிப் பயன் அடையாது சாகின்றவர்கள் எல்லாரும் என் போன்றவர்களோ? என்னைக் கைவிட்டு விடுவது முறையன்று என்று சான்றோர் சொல்லாதிருப்பார்களா? அரசே, அம்பலக் கூத்தா, நான் முற்றும் குழம்பியிருக்கிறேன். எனக்கு நீ ஆறுதல் சொல்லியருள்வாயாக.
649. நரியைக் குதிரைப் பரியாக்கி
ஞாலம் எல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம்
பிச்(சு)அ(து) ஏற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவிநாசி
அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதீ
செய்வ(து) ஒன்றும் அறியேனே.
தெளிவுரை : நரியைக் குதிரை வாகனமாக்கி உலகமெல்லாம் பரவச் செய்தாய். பெரிய பாண்டிமன்னன் ஆண்ட மதுரை நகர் முழுவதிலும் பித்து ஏறும்படி செய்தாய். திருப் பெருந்துறையை யுடையவனே. அருமையாகிய மெய்ப்பொருளே, நாசமடையாத தந்தையே, பாண்டிக் கருணைக் கடலே. கட்புலனாகாத ஆத்ம ஜோதியே, உய்வு அடைவதற்கு நான் செய்யக் கிடப்பது யாது என்று சிறிதும் அறியாதிருக்கிறேன்.
51. அச்சோப் பதிகம்
தில்லையில் அருளிச் செய்யப்பட்டது
அனுபவ வழி அறியாமை
கலி விருத்தம்
650. முத்திநெறி அறியாத
மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப்
பழவினைகள் பாறும் வண்ணம்
சித்தமலம் அறுவித்துச்
சிவமாக்கி எனையாண்ட
அத்தன்எனக்(கு) அருளியவா(று)
ஆர்பெறுவார் அச்சோவே.
தெளிவுரை : முக்தி மார்க்கத்தைத் தெரிந்து கொள்ளாத அறிவில்லாதவர்களோடு சேர்ந்து, அவர்களுடைய வழியில் முயல்கின்ற எனக்குப் பக்தி மார்க்கத்தை உபதேசித்து, என் பழைய வினைகள் ஓடிப் போகும் வண்ணம் மனத்தின்கண் உள்ள மலங்களைப் போக்கி, சிவரூபமாக்கி என்னை ஆண்டு கொண்ட என் தந்தை எனக்கு அருள் செய்த பேற்றை வேறு யார் பெறவல்லார் ? இது ஆச்சரியம்.
651. நெறியல்லா நெறிதன்னை
நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே
திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத
கூத்தன்தன் கூத்தைஎனக்(கு)
அறியும்வண்ணம் அருளியஆ(று)
ஆர்பெறுவார் அச்சோவே.
தெளிவுரை : உலக வாழ்வை நாடியிருப்பது நன்னெறி யென்று நான் நினைத்திருந்தேன். அது சிறு நெறியென்று அவன் காட்டியருளினான். பரமனையும் அவனது அருளையும் சார்வது தான் பெரு நெறி. அவன் நடராஜாவாகவும் அதாவது சகுண பிரம்மமாகவும் சிதம்பர ரகசியமாகவும் அதாவது நிர்க்குண பிரம்மமாகவும் இருப்பதைக் காட்டியருளினான்.
652. பொய்யெல்லாம் மெய்யென்று
புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை
மாளாமே காத்தருளித்
தையல்இடம் கொண்டபிரான்
தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக்(கு) அருளியவா(று)
ஆர்பெறுவார் அச்சோவே.
தெளிவுரை : பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் மெய்யென்று கருதி, மாதர்களின் போகத்தில் ஈடுபட இருந்த என்னைச் சாகாமல் காத்து, உமாதேவியாரை இடப்பாகத்தில் கொண்ட எம்பிரானுடைய திருவடிகளையே அடையுமாறு என்னுடைய தலைவன் எனக்கருளிய பேற்றை வேறுயார் பெறவல்லார்? இது ஆச்சரியம்.
653. மண்ணதனில் பிறந்(து)எய்த்து
மாண்டு விழக் கடவேனை
எண்ணம்இலா அன்பருளி
எனையாண்டிட்(டு) என்னையும்தன்
சுண்ணவெண்ணீ(று) அணிவித்துத்
தூய்நெறியே சேரும்வண்ணம்
அண்ணல்எனக்(கு) அருளியவா(று)
ஆர்பெறுவார் அச்சோவே.
தெளிவுரை : பூமியில் பிறப்பெடுத்து அதன் பயன்எதையும் அடையப் பெறாது இளைத்துப் போய்ச் சாவதற்கு இருந்தேன். நினைக்க முடியாத அன்பை இறைவன் என்பால் செலுத்தி என்னை ஆண்டருளினான். திருநீறு பூசித் தெய்வ நெறியில் சேரும்படி அவன் எனக்கு அருளியது பெறுதற்கு அரிய பேறன்றோ?
654. பஞ்சாய அடிமடவார்
கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர
நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே
அடியேனை வருகஎன்று
அஞ்சேல்என்(று) அருளியவா(று)
ஆர்பெறுவார் அச்சோவே.
தெளிவுரை : பஞ்சு போன்ற மென்மையான பாதங்களையுடைய மாதர்களின் கடைக்கண்ணில் ஈடுபட்டுத் துயரம் மிகும்படி இருந்த நான் உன் அருள் பெற்றுக் கடைத் தேறினேன். அடியேனை வருக என்று அபயம் கொடுத்து உயர் நிலைக்கு உயர்த்தினாய். இது ஓர் அதிசயம் அல்லவா?
655. வெந்துவிழும் உடற்பிறவி
மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார்
குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தம் அறுத்(து) எனையாண்டு
பரி(சு)அறஎன் துரிசும்அறுத்(து)
அந்தம் எனக்(கு) அருளியவா(று)
ஆர்பெறுவார் அச்சோவே.
தெளிவுரை : தகனம் ஆகின்ற இந்த உடலை மெய்யென்று நம்பி வினையைப் பெருக்கினேன். யோகத்திற்குரிய உடலைப் போகத்தில் ஆழ்த்தினேன். மற்று உலக பந்தத்திலிருந்து இறைவன் என்னை விடுவித்தான். ஜீவ போதத்திலிருந்து அவன் என்னை உய்வித்தான். என்னுடைய குற்றங்களை யெல்லாம் நீக்கி என்னைக் குணவான் ஆக்கினான். முடிந்த நிலையாகிய சிவபதத்தை அவன் கொடுத்தருளினான். இது விந்தையல்லவா?
656. தையலார் மையலிலே
தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து
பாசமெனும் தாழ்உருவி
உய்யுநெறி காட்டுவித்திட்(டு)
ஓங்காரத்(து) உட்பொருளை
ஐயன்எனக்(கு) அருளியவா(று)
ஆர்பெறுவார் அச்சோவே.
தெளிவுரை : மரணத்துக்கு வாயிலாகிய போகத்தினின்று இறைவன் என்னைக் காப்பாற்றினான். என்னை அவன் சிறுகச் சிறுகத் தன்மயமாக்கினான். பந்த பாசத்தின் தாழ்ப்பாளை உருவினான். உய்யும் வழியை அவன் எனக்குக் காட்டியருளினான். ஓங்காது தத்துவத்தை எனக்குரியதாக்கினான். இது பெறுதற்கு அரிய பேறு அல்லவா?
657. சாதல்பிறப்(பு) என்னும்
தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக்(கு) அணிஇழையார்
கலவியிலே விழுவேனை
மாதொருகூ(று) உடையபிரான்
தன்கழலே சேரும்வண்ணம்
ஆதிஎனக்(கு) அருளியவாறு
ஆர்பெறுவார் அச்சோவே.
தெளிவுரை : இறப்பு பிறப்பு என்னும் பெரிய சுழியில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருந்த போது காம நோய்க்கு நான் ஆளாகியிருப்பது ஆச்சரியம். அத்தகைய என்னை உமாபதியாகிய அண்ணல் உய்வித்தது அதிலும் பெரிய ஆச்சரியமாகும்.
658. செம்மைநலம் அறியாத
சிதடரொடும் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து
முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி
நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மைஎனக்(கு) அருளியவா(று)
ஆர்பெறுவார் அச்சோவே.
தெளிவுரை : செவ்விதாகிய நன்மையை அறியாத மதியீனர்களோடு கூடித்திரிந்த என்னை, மும்மலங்களும் அறும்படி செய்து முதற்பொருளாகிய இறைவன் நம்மையும் ஓர்பொருள் ஆக்கி, நாயைப் பல்லக்கில் ஏற்றிவைத்த தன்மை போல எனக்கு முக்தியை அருளிய பேற்றை வேறு யார் பெறுவார்? ஆச்சரியம்!
659. செத்திடமும் பிறந்திடமும்
இனிச்சாவா(து) இருந்திடமும்
அத்தனையும் அறியாதார்
அறியும் அறி(வு) எவ்வறிவோ
ஒத்தநிலம் ஒத்தபொருள்
ஒருபொருளாம் பெரும்பயனை
அத்தனெக்(கு) அருளியவா(று)
ஆர்பெறுவார் அச்சோவே.
தெளிவுரை : செத்த இடம், பிறந்த இடம் இனிச் சாவாதிருக்கும் இடம் ஆகியவற்றை அறியாதவர்கள் இனி அறியும் அறிவு எதுவோ? ஒத்தநிலம், ஒத்த பொருள் ஒரு பொருளாகும் பெரும் பயனை மேலான எம்பெருமான் எனக்கு அருளிச் செய்தான். இப்பெருநிலையை இனி யார் பெறுவார்? இது ஆச்சரியம்.
திருச்சிற்றம்பலம்
திருவாசகம் முற்றிற்று.















































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக