புதன், 9 நவம்பர், 2011

பக்தி கதைகள் (பகுதி - 5 )

ராதே கிருஷ்ணா 09 - 11 - 2011 


பக்தி கதைகள்  (பகுதி - 5 )


ராமானுஜர் (17) - பரணிபாலன்

ஆனாலும், ஒரு வழியாக கோவிந்தனின் மனதை மாற்றிவிட்டார் பெரிய திருமலைநம்பி. அவரை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ராமானுஜரின் சீடராகிவிட்டார் கோவிந்தன். கோவிந்தன் தனது அருகில் இருந்ததால் ராமானுஜருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. காலப்போக்கில் ஸ்ரீமன் நாராயணனை கோவிந்தன் வழிபட ஆரம்பித்தார்.
பெரிய நம்பியை தனது குருவாக ஏற்றுக்கொண்ட ராமானுஜர் அவரிடம் பல நூல்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் பற்றி கேட்டுத்தெரிந்து கொண்டார். கவனமுடன் அவற்றைப்படித்தார். சில சமயங்களில் தனது சீடரின் அபரிமிதமான அறிவைக்கண்ட பெரிய நம்பி, தனது மகன் புண்டரீகாட்சரை ராமானுஜரின் சீடராக்கினார். ஒருமுறை ராமானுஜரிடம் பெரிய நம்பி,""சீடனே! ஸ்ரீரங்கத்திலிருந்து நான் கற்றுத்தந்த விஷயங்களை மட்டுமே தெரிந்துகொண்டாய். உனது ஆன்மிக அறிவுக்கு இது மட்டும் போதாது. இங்கிருந்து சில மைல் தூரத்தில் திருக்கோஷ்டியூர் என்ற தலம் இருக்கிறது. அந்த தலத்தில் திருக்கோஷ்டியூர் நம்பி வசிக்கிறார். அவர் மிகப்பெரிய அறிஞர். தூய்மையானவர். அவரைப்போன்ற வைணவரை உலகில் வேறு எங்குமே காண இயலாது. திரு எட்டெழுத்து என்ற மந்திரத்தை அவர் அறிந்திருக்கிறார். அதற்குரிய பொருள் அவருக்கு மட்டுமே தெரியும். மற்றவர்கள் திரு எட்டெழுத்து மந்திரம் பற்றி தெரிந்திருந்தாலும் கூட அவரளவுக்கு கற்றுத்தருவார்களா என்பது சந்தேகமே. எனவே நீ அங்கு சென்று அவரிடம் திருமந்திரத்தை பொருளுடன் படித்து வா. இவ்விஷயத்தில் எவ்வித தாமதமும் வேண்டாம்,'' என்றார்.
ராமானுஜரும் உடனடியாக திருக்கோஷ்டியூர் கிளம்பி விட்டார்.
நம்பியின் இல்லத்திற்கு சென்று அவரது பாதங்களில் பணிந்தார். திரு எட்டெழுத்து மந்திரத்தை பயில வேண்டும் என்ற தன் ஆர்வத்தை தெரிவித்தார். 
நம்பியோ அவரது கோரிக்கையை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இன்னொரு முறை இங்கு வா. அப்போது பார்த்து கொள்ளலாம், என சொல்லி விட்டார். ராமானுஜருக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவ்வளவு பெரிய மகானை வற்புறுத்தும் சக்தியும் அவரிடம் இல்லை. ஆழ்ந்த வருத்தத்துடன் ஸ்ரீரங்கம் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து திருக்கோஷ்டியூர் நம்பி ஸ்ரீரங்கத்திற்கு வந்தார். ரங்கநாதப்பெருமானை சேவித்தார். அப்போது பெருமான் நம்பியிடம்,நம்பியே! ராமானுஜன் மிகவும் புத்திசாலி. அவனுக்கு நீ திரு எட்டெழுத்து மந்திரத்தை கற்றுக்கொடுப்பாயாக, என்றார். நம்பி அப்போதும் ஒப்புக்கொள்ளவில்லை. 
ரங்கநாதா! திரு எட்டெழுத்து மந்திரம் என்பது சாதாரணமானதல்ல. நீயே ஒரு முறை தவம் செய்யாதவனுக்கும், 
சரியான வழிபாடு செய்யாதவனுக்கும் இந்த மந்திரத்தை கற்றுக்கொடுக்க கூடாது என உத்தரவு போட்டிருக்கிறாய். இப்போது, அந்த உத்தரவை நீயே மீறச் சொல்கிறாய். மனிதன் குறிப்பிட்ட காலமாவது தவம் செய்திருக்க வேண்டும். தவம் செய்யாதவனின் மனது சுத்தமாக இராது. அது மட்டுமல்ல! இந்த மந்திரத்தை யார் ஒருவன் கற்றுக்
கொள்கிறானோ, அவன் மனத்தூய்மை இல்லாதவனாக இருந்தால், இம்மந்திரத்தின் தியை தாங்கி கொள்ள மாட்டான். இதையெல்லாம் நீ அறியாதவனா என்ன? என சொன்னார். ரங்கநாதன் கலகலவென சிரித்தார். நம்பியே! ராமானுஜனுடைய மனசுத்தம் பற்றி நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் சாதாரணமானவன் அல்ல. இந்த உலகத்தை பாதுகாக்க வந்தவன். நீயே இதை அறிவாய். அவ்வாறு அறியும் காலம் வந்த பிறகு நீயே கற்றுத்தருவாய், என கூறி விட்டார். அதன் பிறகு பெருமானும், நம்பியும் பேசிக்கொள்ள வில்லை. திருக்கோஷ்டியூர் நம்பி
சேவையை முடித்து விட்டு ஊர் திரும்பி விட்டார்.
ஆனால், திருக்கோஷ்டியூர் நம்பி அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. எப்படியேனும் நம்பியிடம் திரு எட்டெழுத்து 
மந்திரத்தை பயின்றாக வேண்டும் என்ற வைராக்கியம் ராமானுஜருக்கு ஏற்பட்டது. ஸ்ரீரங்கத்திலிருந்து பதினேழு முறை நடந்தே திருக்கோஷ்டியூர் வந்து நம்பியை தரிசித்தும் கூட அவர் கண்டு கொள்வதாகக் காணோம்!
திருக்கோஷ்டியூருக்கு பதினெட்டாவது முறையாக ராமானுஜர் வந்தார். அப்போதும் நம்பி அவரை தனது சீடனாக ஏற்கவில்லை. மந்திரத்தின் பொருளை கற்றுக்கொடுக்க மறுத்து விட்டார். ராமானுஜருக்கு கண்ணீர் முட்டியது.
""இறைவா! என் மனதில் உண்மையிலேயே ஏதோ மாசு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் மந்திரத்தின் பொருளை 
கற்றுக்கொடுக்க நம்பி மறுக்கிறார். நாம் இத்தனை முறை இங்கு வந்தும் பலனேதும் இல்லை. என்று தான் நம்பியின் மனம் கனியப்போகிறதோ?'' என புலம்பி அழுதார். திருக்கோஷ்டியூர் வாசிகள் சிலர் ராமானுஜர் அழுவதை 
கவனித்தனர். அந்த இளைஞரின் மீது இரக்கம் கொண்டனர். நடந்த விஷயத்தை திருக்கோஷ்டியூர் நம்பிகளின் காதுக்கு கொண்டு சென்றனர். அவர் ராமானுஜரை வரவழைத்தார். மனம் பதைக்க ராமானுஜர் நம்பியின் முன் நின்று கொண்டிருந்தார். என்ன நடக்கப்போகிறதோ என்ற ஆதங்கம் மனத் துடிப்பை அதிகமாக்கியது. சற்று நேரம் கழித்து, திருக்கோஷ்டியூர் நம்பி, ராமானுஜர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார். அவரைக்கண்டதும் வேகமாக எழுந்தார் ராமானுஜர். அவர் என்ன சொல்லப்போகிறாரோ என்ற ஆர்வத்துடனும், கவலையுடனும் அவரது முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.





மாயவன் மாலவன் வந்தான்



அம்மா! தீபாவளி நெருங்குது! இப்போதே பலகாரம் செய்ய ஆரம்பிச்சுடு!'' என்றான் மகன் கண்ணன்.
""கண்ணா! கண்ணா!'' என அவனை வாய்நிறைய கூப்பிடுவாள் அம்மா. கண்ணன் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம்.. ஒரே பிள்ளை...கேட்கவா வேண்டும் செல்லத்துக்கு! அதேநேரம், அம்மா தனக்கு கொடுக்கும் செல்லத்தை கண்ணன் ஒருநாள் கூட தவறாகப் பயன்படுத்தியதே இல்லை. சமர்த்துப்பிள்ளை... பள்ளியில் அவன் தான் பர்ஸ்ட்! அவன் வீடு இருந்த தெருவிலேயே கிருஷ்ணன் கோயில் ஒன்றும் இருந்தது. கண்ணனும், அம்மாவும் வசதிப்படும் நாட்களில் எல்லாம் அங்கு செல்வார்கள்.
அம்மா நெய்யிலேயே பலகாரம் செய்தாள். முறுக்கு, அதிரசம், லட்டு...இத்யாதிகளெல்லாம் தயாராயின. தீபாவளியன்று காலையில், பலகாரங்களை நைவேத்யம் செய்து, ""காக்கைச் சிறகினிலே நந்தலாலா,'' என்ற பாடலை இனிய குரலில் பாடினாள். அன்று <விளையாட்டு விழாவிற்குஊர் மக்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
""அம்மா! பூஜை ஆரம்பிக்கறச்சே என்னைக் கூப்பிடு, இங்கே விளயாட்டு விழாவை வேடிக்கை பார்த்துண்டிருப்பேன்,'' என சொல்லிவிட்டு, கண்ணன் வெளியே ஓடிவிட்டான்.
பூஜைக்கான எல்லா பணிகளையும் அம்மா முடித்து விட்டு, ""கண்ணா! கண்ணா!'' என அழைத்தாள். விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தவர்கள் போட்ட கூச்சலில், கண்ணனின் காதில் அம்மாவின் சப்தம் விழவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால், எங்கே நிற்கிறான் என்றும் தெரியவில்லை.
ஆனால், ""கண்ணா...கண்ணா!'' என்று அவள் சப்தமாக அழைத்தது, கோயிலுக்குள் இருக்கிற கிருஷ்ணரின் காதில் விழுந்துவிட்டது.
""ஐயோ! எனக்கு துவாபரயுகத்தில் தேவகி, யசோதை என்று இரண்டு தாய்கள் இருந்தனர். இந்த யுகத்தில் யாருமில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். இதோ! ஒருதாய் என் பெயர் சொல்லி அழைக்கிறாள்.
""இதோ வந்துவிட்டேன் அம்மா!''
அவளது மகன் கண்ணனின் வடிவிலேயே உள்ளே வந்து விட்டான் கண்ணன்.
அம்மா அவனை அப்படியே அணைத்துக் கொண்டாள். ""எங்கே பூஜை நேரத்தில் வராமல் போய்விடுவாயோ என பயந்தேன். வா வணங்கலாம்!'' என்றாள்.
நிஜக்கண்ணன் அவள் அருகே நிற்க, சிலைக் கண்ணனுக்கு பூஜை நடந்தது. நைவேத்யம் முடித்து, கண்ணனுக்கு தட்டு நிறைய பலகாரம் அள்ளி வைத்து, ஊட்டினாள் அந்தத்தாய். 
குழந்தை அதை மென்று சாப்பிட்டான். 
இன்னும் வேண்டுமென்றான்! அவள் மேலும் ஊட்டினாள். கொஞ்சம் மட்டுமே மிச்சம்! அத்தனையையும் சாப்பிட்டு விட்டு, அம்மாவுக்கு முத்தமும் கொடுத்து,""அம்மா! ரொம்ப ருசி! பாவம் உனக்குத்தான் கொஞ்சமா இருக்கு!'' என்று பரிதாபப் பட்டுவிட்டு அவன் வெளியேறவும், அவளது மகன் கண்ணன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
""அம்மா! பூஜை முடித்து விட்டாயா! விளையாட்டைப் பார்த்தவர்கள் போட்ட கூச்சலில் நீ கூப்பிட்டது கேட்கவில்லை போலும்! சரி சரி... பலகாரங்களைக் கொடு,'' என்றான்.
""ஏனடா! அவ்வளவையும் நீ தானே சாப்பிட்டாய்,'' என்றாள் தாய் ஆச்சரியத்துடன்!
""நானா! நான் இப்போது தானே வீட்டுக்குள்ளேயே வருகிறேன்,'' என்றான் மகன்.
அப்படியானால் வந்தது....அந்த நிமிடம் அவள் கண்முன் நிஜக்கண்ணன் தோன்றினான்.
""என் தெய்வமே! உன் உலகளந்த திருவடி என் இல்லத்தில் பட்டதா!'' நரகாசுரனைக் கொன்று, உலகையே ரட்சித்த உன் கைகளா, என் வீட்டு பலகாரத்தை அள்ளி சாப்பிட்டன! அவள் புளகாங்கிதமடைந்து போனாள். பாத்திரத்தில் இருக்கும் மிச்ச பலகாரங்களை எடுத்து மகனுக்கு கொடுக்க உள்ளே போனாள். ஆச்சரியம்! பாத்திரங்கள் நிறைந் திருந்தது. அவள் வீட்டுக் கண்ணனும் ஆசை தீர சாப்பிட்டு விட்டு, பட்டாசு வெடிக்க கிளம்பினான். 

இசைப்பூக்கள் (20) - காரைசங்கரா


திரிபுரதாசர்
கிருஷ்ணர் அருள்புரியும் திருத்தலமான மதுராவில் திரிபுரதாசர் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார். இயல்பிலேயே அவரது மனம் கிருஷ்ணபக்தியில் லயித்திருந்தது. எப்போதும் கடவுளின் அருள்விளையாடல்களில் ஈடுபட்டு வந்தார். பஜனை 
பாடல்களைப் பாடுவதிலும் சிறந்து விளங்கினார். 
கல்வியறிவும் பெற்றிருந்தார். கல்வி, கேள்விகளில் சிறந்த தாசரைப் பற்றி அறிந்த மதுராவை ஆண்ட மன்னன், அவரை அமைச்சராக நியமித்தான். ஆனால், அவர் அந்தப்பதவியை விரும்பவில்லை.
""மன்னா! அரசபதவி வேப்பங்காயாகக் கசக்கிறது. இந்தப் பதவியில் இருப்பவன் போர் சிந்தனையிலேயே இருக்க வேண்டியுள்ளது. பகவானுக்கு கைங்கர்யம் செய்வதை விரும்புகிறேன். மந்திரி பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன்,'' என்று கூறினார்.
அமைச்சரின் எண்ணத்தை அறிந்த மன்னன், பக்தர் ஒருவர் தன்னிடம் பணியாற்றியதை எண்ணி மகிழ்ந்தான். தாசருக்கு நிறைய பொன்னும் பொருளும் வாரி வழங்கினான். ஆனால், பொருளாசை அற்ற தாசர், 
அதை ஏழைகளுக்கும், கோயில் திருப்பணிக்கும் செலவிட்டார். ஒரு நல்லநாளில் இல்லத்தில் பஜனை நடத்தி, அடியார்களுக்கு அன்னதானம் செய்தார். 
மனைவியை அழைத்துக் கொண்டு யாத்திரை கிளம்பினார். பக்திப்பாடல்களைப் பாடியபடியே நடந்தார். அவர்கள் பிருந்தாவனத்தை அடைந்தனர். அங்குள்ள கோயில் கோபுரத்தைக் கண்டதும், தாசரின் மனதில் பக்தி பெருக்கெடுத்தது. 
பிருந்தாவன கிருஷ்ணரைத் தரிசித்த பின், வேறு எந்த திருத்தலத்திற்கும் செல்ல அவருக்கு மனமில்லை. அங்கேயே தங்கி, கிருஷ்ணருக்கு சேவை செய்ய விரும்பினர். சிறுகுடில் அமைத்து தங்கினர். உஞ்ச விருத்தியாக (யாசகம் செய்தல்) கிடைக்கும் அரிசியைச் சமைத்து பகவானுக்கு நைவேத்யம் செய்து உண்டார். பஜனை செய்ய ஒருநாளும் தவறியதில்லை. 
ஒருமுறை, பிருந்தாவனத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகத் தொடங்கியது. மன்னர்கள், செல்வந்தர்கள் பட்டு பீதாம்பரங்களை கிருஷ்ணருக்கு காணிக்கையாக அளித்தனர். 
திரிபுரதாசர், ஒரு பட்டுவேட்டியை பகவானுக்கு கொடுக்க விரும்பினார். 
ஆனால், கையில் பணமில்லை. அவரது விருப்பத்தை அறிந்த மனைவி, ""சுவாமி! எனக்கும் இந்த காணிக்கையை அளிக்க விருப்பம் தான் என்றாலும், நம்மால் இதைச் செய்ய முடியுமா?,'' என்றார் வருத்தத்துடன்.
""அமைச்சராக இருந்த போது, கிருஷ்ணருக்கு ஆயிரம் பட்டு வேட்டியை வாங்கி கொடுத்திருக்கலாமே!,'' என்று வருந்தினார் தாசர். அவரது மனைவி அவரிடம், "" சுவாமி! ஏன் கவலைப்படுகிறீர்கள்? ஒரு நூல் வேட்டியாவது வாங்கிக் கொடுப்போம். அதை அவர் ஏற்காமலா போய்விடுவார்,'' என்றாள். 
""நீ சொல்வது சரிதான்! ஏழை நண்பர் குசேலர் கொடுத்த அவலைக் கூட அன்புடன் ஏற்ற கருணைக்கடல் அவன். அதனால், நாம் கொடுக்கும் நூல்வேட்டியையும் விருப்பமாக ஏற்பான்,'' என்று நம்பிக்கையோடு சொன்னார். 
""பணத்திற்கு எங்கே போவது என்று யோசிக்காதீர்கள். பகவானுக்கு நைவேத்யம் வைக்கும் வெண்கலப் பாத்திரம் வீட்டில் இருக்கிறது. அதை விற்று ஒரு வேட்டி இப்போதே வாங்கி வாருங்கள்! நாளை முதல் நைவேத்யத்தை மண்சட்டியில் வைத்துக் கொள்ளலாம், '' என்று மனைவி யோசனையும் சொன்னார். 
""வெண்கலப் பாத்திரத்தைக் கொண்டுவா! இப்போதே கடைத்தெருவுக்குச் சென்று வருகிறேன்,'' என்று புறப்பட்டார். பாத்திரத்தை விற்ற பணத்தில் நூல்வேட்டி வாங்கினார். தம்பதியராக கிருஷ்ணரைத் தரிசிக்க கிளம்பினர். கிருஷ்ணஜெயந்தி என்பதால், கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மூலவர் பட்டு பீதாம்பரதாரியாய் காட்சியளித்தார். அவரின் திருமேனியில் ஆபரணங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன.
அர்ச்சகரிடம்,""சுவாமி! அடியேனின் விருப்பத்தை ஏற்று அருளுங்கள். இந்த நூல் வேட்டியை பகவானுக்குச் சாத்தவேண்டும்,'' என்று தயக்கத்துடன் சொன்னார். 
""உமக்கு என்ன பைத்தியமா? ஜெயந்திக்காக ஆயிரமாயிரம் பட்டுவேட்டிகள் கோயிலில் குவிந்துள்ளன. அதையே எங்களால் சாத்தமுடியவில்லை. வெறும் நூல்வேட்டிக்கு என்ன அவசரம்?,'' என்று அலட்சியப்படுத்தினார். 
அதன்பின், அர்ச்சகர், கிருஷ்ணருக்கு அங்கு குவிந்திருந்த வெண்பட்டு வேட்டி ஒன்றைச் சாத்த முயற்சித்தார். 
மூலவரின் இடுப்பில் எந்த வஸ்திரமும் நிற்காமல் நழுவி விழத் தொடங்கியது. அதோடு, திருமேனி குளிரில் நடுங்குவது போல அர்ச்சகரின் கண்ணுக்குத் தெரிந்ததது. "" பரம பக்தனாகிய திரிபுரதாசர் கொடுத்த வேட்டியைப் போர்த்தினால் எம் நடுக்கம் தீரும்,'' என்று அசரீரி ஒலித்தது. இதைக் கேட்ட அர்ச்சகர் மெய் சிலிர்த்துப் போனார். 
""தாசரே! என் பிழையை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பக்தியின் ஆழத்தை உணராமல் தவறிழைத்து விட்டேன்,'' என்று வருந்திச் சொன்னார். தாசர் அளித்த நூல்வேட்டியை மூலவருக்கு அணிவித்ததும் பகவானின் நடுக்கம் நீங்கியது. தாசரின் புகழ் பரவியது. அவரும், அவருடைய மனைவியும் பிருந்தாவனம் கோயிலிலேயே தங்கி சேவையில் ஈடுபட்டனர். நீண்ட காலம் அங்கு வாழ்ந்து, அப்பெருமானின் திருவடியில் கலந்தனர். 

உச்சரித்தாலே உதவுபவன்

இரண்டு பெண்கள் பசுஞ்சாணத்தில் வரட்டி தயாரித்து விற்பனை செய்து பிழைத்து வந்தனர்.
ஒருசமயம், ஒருத்தி தயார் செய்த வரட்டிகளை, மற்றொருத்தி, அவள் அறியாமல் எடுத்துக் கொண்டாள். இருவருக்கும் இதனால் பிரச்னை ஏற்பட்டது. இந்த சமயத்தில் துக்காராம் என்ற மகான் அங்கு வந்தார். அவரிடம் திருட்டுக் கொடுத்தவள் முறையிட்டாள்.
""சுவாமி! நான் கஷ்டப்பட்டு தயாரித்த வரட்டிகளை இவள் திருடிக்கொண்டாள். என்னுடையதை வாங்கித்தாருங்கள்,'' என்றாள்.
துக்காராம் அந்த வரட்டிகளை கையில் எடுத்து, ஒவ்வொன்றாக காதின் அருகில் கொண்டு சென்றார். பின், ஒரு பகுதியை வலதுபுறமாகவும், ஒரு பகுதியை இடதுபுறமாகவும் வைத்தார்.
""உங்களில் வரட்டி தட்டும்போது, "விட்டல! விட்டல!' என சொன்னது யார்?'' என்றார்.
திருட்டுக் கொடுத்த பெண்,""நான் தான் அவ்வாறு சொன்னேன்,'' என்றாள்.
""அப்படியானால், வலதுபக்கம் இருப்பவை உன்னுடையவை. ஒரு தொழிலைச் செய்யும் போது, கடவுளின் திருநாமத்தை யார் உச்சரிக்கிறார்களோ, அது காற்றில் பரவி, அந்த இடம் முழுக்க எதிரொலிக்கும். அவ்வகையில் வரட்டிக்குள்ளும் கண்ணனின் திருநாமங்களில் ஒன்றான "விட்டல' என்பது ஒலித்தது,'' என்றார். 

இல்லை என்றாலும் அருள்வான்


அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத் தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான்.
அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.
""அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்?'' எனச் சொல்ல, ""போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன்,'' என பீமன் வம்புக்குப் போக, ""இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன்,'' என தர்மர் பிடிவாதமாய் சொல்ல, ""ஏன்...அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன்,'' என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி.
எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து 
நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கண்ணனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான்.
""கண்ணா! மாயம் செய்கிறாயா?'' என அனைவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.
""இல்லை..இல்லை...என்னைக் கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி. என்னை எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல! கணநேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள்,'' என்றான் கருணையுள்ள கண்ணன். தன்னை இல்லை என்று சொல்பவர்க்கும் இறைவன் அருள் செய்கிறான் என்பது தான் இந்தக்கதை சொல்லும் நீதி. 

ராமானுஜர் (16) - பரணிபாலன்


ஒரு வழியாக பேரருளாளன் வரதராஜன் கண் திறந்தான். 
பெருமாள் அரையர் வரதராஜனிடம், ராமானுஜரை தன்னோடு அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். 
பெருமாளுக்கு அதில் இஷ்டமே இல்லை. மிகுந்த பிரயாசையின் பேரில் பெருமாளிடம் அனுமதி பெற்றார் அரையர். ராமானுஜரும் அரையருடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். உலகமே போற்றும் மாபெரும் சகாப்தத்தைப் படைப்பதற்காக ஸ்ரீரங்கத்துக்கு அந்த மகான் சென்று கொண்டிருந்தார். 
அங்கு சென்றதும் பெரியநம்பியை தன் குருவாக ஏற்றுக் கொண்டார். ராமானுஜர் அங்கு வந்ததில் பெரிய
நம்பிக்கு அலாதி மகிழ்ச்சி. தன் மகன் புண்டரீகாட்சரை ராமானுஜரின் சீடனாக்கினார் என்றால் அவர் மீது நம்பி கொண்டிருந்த பாசத்திற்கு அளவீட்டைக் கூறுவதற்கில்லை.
இப்படியிருக்க ராமானுஜருக்கு தன் தம்பி கோவிந்தரைப் பற்றிய நினைவு வந்தது. இவர் ராமானுஜரின் சித்தி மகன் 
என்பது ஏற்கனவே அறிந்த விஷயம் தான். ராமானுஜர் யாதவப்பிரகாசருடன் காசி சென்ற போது, அவர் ராமானுஜரைக் கொலை செய்ய முயற்சித்த தகவலை சொல்லிக் காப்பாற்றி விட்டு, காளஹஸ்தியில் சிவவழிபாட்டில் இறங்கி விட்டார்.
ராமானுஜர் கோவிந்தனை வைணவத்துக்கு திருப்ப விரும்பினார். அவர் தன் அருகில் இருப்பது மிகப்பெரிய பலம் என கருதினார். அப்போது திருமலையில் (திருப்பதி) பெரிய திருமலை நம்பி என்பவர் ஏழுமலையானுக்கு தொண்டு செய்து கொண்டிருந்தார். 
அவருக்கு ராமானுஜர் கடிதம் எழுதினார்.
""தாங்கள், காளஹஸ்தியில் சிவப்பணியில் ஈடுபட்டுள்ள என் தம்பி கோவிந்தனுக்கு தக்க அறிவுரை சொல்லி ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வையுங்கள்,'' என குறிப்பிட்டிருந்தார். பெரிய திருமலை நம்பி கோவிந்தரை சந்திக்கச் சென்றார். கோவிந்தர் அங்குள்ள குளக்கரையில் தினமும் மலர் பறிக்க வருவார். ஒருநாள் வெண்தாடியுடன் பெரியநம்பி, குளக்கரையில் தன் சீடர்களுக்கு, பல்வேறு சாஸ்திரங்கள் குறித்து போதனை செய்து கொண்டிருந்தார். கோவிந்தன் ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டார். அந்தப் பெரியவரின் பேச்சு அவரை மிகவும் கவர்ந்தது. பின்னர் மரத்தில் இருந்து இறங்கி, மலர்களுடன் அவர் இருந்த இடத்தைக் கடந்து சென்றார். வயதில் மிகவும் சிறியவராயினும் கூட பெரிய திருமலை நம்பி கோவிந்தனை, ""மகாத்மாவே, இங்கு வாருங்கள்,'' என மரியாதையுடன் அழைத்தார். அவர் யார் எனத் தெரியாவிட்டாலும், கோவிந்தன் பணிவுடன் அவர் அருகே சென்றார்.
இருவருக்கும் அருமையான உரையாடல் நிகழ்ந்தது. அது சுற்றியிருந்தவர்களுக்கு தேனாய் இனித்தது. விஷ்ணு, சிவன் ஆகியதெய்வங்களின் பெருமையை நாவினிக்க அவர்கள் பேசினர்.
நம்பி: ""தம்பி! இந்த பூக்களை யாருக்குகொண்டு செல்கிறீர்கள்?''
கோவிந்தன்:""சுவாமி! சிவனை வழிபடுவதற்காகஇதனைப் பறித்துச்செல்கிறேன்,''
நம்பி: சிவனுக்கு பூ வழிபாடு சரியாக இருக்காது. அவர் ஆசைகளை வேரறுத்து எரித்து அதனை வெண்ணீறாக பூசியிருப்பவர் அல்லவா? அவருக்கு இந்த பூக்களின் மீது ஆசையிருக்க வாய்ப்பில்லை. மேலும் அவர் மயானத்தில் வசிப்பவர். நாராயணன் மீது அபிமானம் உள்ளவர். இந்த பூக்கள் கல்யாண குணங்கள் கொண்ட திருமாலுக்கு தானே பொருத்தமாக இருக்க முடியும்? 
கோவிந்தன்: பெரியவரே! தாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். இறைவன் என்பவன் எல்லாம் உடையவன். அவன் தான் நமக்கு கொடுப்பவனே ஒழிய, நம்மால் பக்தியை மட்டுமே அவனுக்கு திருப்பி செலுத்த இயலும். சிவன் விஷத்தைக் குடித்து உலகத்தைக் காத்தவர். அவருக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். அதற்கு இந்த மலர்கள் தேவையில்லாமல் இருக்கலாம். உள்ளத்தில் இருந்து பக்தி பூக்களைச் சொரிந்தால் போதும். இருப்பினும் மலர் தூவி வழிபடும் சம்பிரதாயம் மூலம் பக்தி வளருமென்று கருதுகிறேன்.
நம்பி: நீங்கள் சொல்வது மிகமிக சரி. அறிஞர்கள் மட்டுமே இவ்வாறான கருத்தைக் கூற முடியும். உங்கள் பக்தி மெச்சத்தகுந்தது. பகவான் ஹரி வாமனனாக "தான்' என்ற அகந்தையை அடக்க வந்தவர். அவரிடம் நம்மை ஒப்படைக்க வேண்டும் என்பதே என் கருத்து. அது மட்டுமல்ல. கீதையில் பகவான், "ஒருவன் அவனது சொந்த தர்மத்தை பின்பற்றி நடக்க வேண்டும்' என சொல்லியுள்ளார். அதன்படி பார்த்தால், நீங்கள் பகவான் ஹரியைவழிபடுவதே முறையானது.
கோவிந்தன்: திருமாலுக்கும், சிவனுக்கும் தாங்கள் பேதம் கற்பிக்க வேண்டாம். கண்டாகர்ணன் போன்ற பக்தியுள்ளவன் என என்னை எண்ணாதீர்கள். இப்படியாக அவர்களின் உரையாடல் தொடர்ந்தது. பெரிய திருமலை நம்பி, கோவிந்தனை விடுவதாக இல்லை.
யார் அந்த கண்டாகர்ணன்? அவனது கதையைக் கேளுங்கள்.
கண்டாகர்ணன் சிவனை மட்டுமே வழிபட்டான். சிவன் அவனை திருத்த எண்ணி, நாராயணனின் உடலைத் தன்னோடு சேர்த்து, சங்கர நாராயணனாக காட்சியளித்தார். அப்போதும் அவன் சிவன் இருந்த பகுதியை மட்டுமே வணங்கினான். 
தான் சமர்ப்பித்த நைவேத்யம் மற்றும் மலர்களின் வாசனை சிவனின் பக்கமே செல்லும் வகையில் விசிறினான். இதற்காக சிவன் அவனை தண்டித்து ஒரு கிராமத்தில் துன்பம் நிறைந்த வாழ்க்கையைக் கொடுத்து வாழ வைத்தார். அங்கிருந்தவர்கள் விஷ்ணுவைப் புகழ்ந்து பாடினர். அப்போதும் திருந்தாத அவன், தன் காதுகளில் கண்டாவைக் (மணி) கட்டிக் கொண்டு, விஷ்ணு என்ற சப்தம் விழாமல் இருக்க அடித்துக் கொண்டே இருந்தான். 



துவாரகா ராமதாசர்

புண்ணிய ஸ்க்ஷேத்திரமான துவாரகா அருகிலுள்ள டாங்கேர் நகரில் வாழ்ந்தவர் ராமதாசர். கிருஷ்ணரை தெய்வமாக ஏற்ற இவர், அப்பெருமானுக்கு அடிமையாகவே வாழ்ந்து வந்தார். பிச்சைப் பாத்திரம் ஏந்தி வீடுவீடாகச் செல்வார். கிடைக்கும் அரிசியை சமைத்து, அடியவர்களுக்கு உணவிட்ட பிறகே சாப்பிடுவார். ஊர்மக்கள் அவருக்கு மகிழ்ச்சியோடு தானம் அளித்து வந்தனர். 
ஏகாதசி நாளில் துளசி, தீர்த்தம் மட்டும் எடுத்துக் கொள்வார். ஆடி மாத ஏகாதசியன்று, துவாரகை நாதனை தரிசிக்க செல்வது வழக்கம். டாங்கேரில் இருந்து நாம சங்கீர்த்தனம் இசைத்தபடியே, பாதயாத்திரையாக அங்கு செல்வார். கோமதி நதியில் நீராடி ஏகாதசி விரதத்தைத் தொடங்குவார். மறுநாள் துவாதசியில் துவாரகை நாதனை தரிசிப்பார். "கண்ணனைக் கண்ட கண்கள் வேறொன்றினைக் காணாது' என்பது போல, அவருக்கு அப்பெருமானை விட்டுப் பிரிய மனமிருக்காது. 
முதுமையை எட்டிய பிறகு, அவரது உடல்நிலை தளர்ந்தது. இருந்தாலும், மனம் தளராமல் தள்ளாடியபடியே துவாரகை சென்றார். அங்கிருந்து கிளம்பும்போது துக்கம் தொண்டையை அடைத்தது.
,""ஹே! துவாரகநாதா! அடுத்த ஆண்டு ஆடி ஏகாதசியன்று உன் தரிசனத்தை காண்பேனா! ஆயிரமாயிரம் கோபியரிடம் பிருந்தாவனலீலை செய்ய மாயக்கிருஷ்ணனாய் வந்தாயே! இந்த ஏழைக்காக, நான் குடியிருக்கும் டாங்கேருக்கு வரக்கூடாதா?,'' என்று பொலபொலவென கண்ணீர் சிந்தினார். இதைப் பொறுக்காத துவாரகாநாதன் நேரில் காட்சி அளித்தான். ""ராமதாசா! கவலையை விடு! என்னையும் உன்னுடன் அழைத்துச் செல். உங்கள் ஊரிலும் எழுந்தருள யாம் சித்தமாக உள்ளோம்!,'' என்று திருவாய் மலர்ந்தார். 
""பகவானே!உன் கருணையே கருணை. நாம் எப்படி செல்வது?'' என்று கேட்டார்.
""இன்று ஜாமத்தில் கோமதி நதிக்கரையோரம் வந்துவிடு. இருவரும்தேரில்சென்றுவிடுவோம்,'' என்று சொல்லி மறைந்து விட்டார் துவாராகாநாதன். 
நாமசங்கீர்த்தனம் பாடிய படியே, கோமதி நதிக்கரைக்குச் சென்ற தாசர், ஒரு தேரைக் கண்டார். துவாரகாநாதன் அதில் தங்கச்சிலை வடிவில் அமர்ந்திருந்தான். 
ராமதாசரும் அதில் ஏறிக்கொள்ள, தேர் தானாகவே டாங்கேர் வந்தடைந்தது. 
மறுநாள் பொழுது புலர்ந்ததும், துவாரகாநாதரின் மூலவரின் தங்கச்சிலை காணவில்லை என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. அர்ச்சகர்களும், அதிகாரிகளும் பதைபதைப்புடன் ஆலோசித்தனர். இரவு பூஜைக்குப் பிறகும் சந்நிதியில் நின்றிருந்த ராமதாசர் மீது சந்தேகம் வலுத்தது. 
உடனடியாக, அனைவரும் டாங்கேருக்கு புறப்பட்டனர். அதிகாரிகள் வீட்டுக்கு வருவதை அறிந்த தாசர், சிலையைத் தூக்கிக் கொண்டு கிணற்றடிக்கு ஓடினார். சிலையை வாளிக்குள் வைத்து கிணற்றுக்குள் தள்ளினார். ஆனால், வாளி தண்ணீருக்குள் மூழ்காமல் பாதி கிணற்றிலேயே நின்றதை அவர் கவனிக்கவில்லை.
அர்ச்சகர்கள் அவரது வீடு முழுக்க தேடிமுடித்தனர். பின் கிணற்றை சோதனையிட்ட போது, அங்கே சிலை மினுமினுத்ததைக் கண்டு தூக்க ஆயத்தமாயினர். தாசருக்கு பகவானை விட்டுப் பிரிய மனமில்லை. 
குழந்தையைப் போல அழத் தொடங்கினார். அர்ச்சகர்களோ, ""செய்வதையும் செய்து விட்டு பக்திமான் போல் அழுகிறீரா?'' எனச்சொல்லி அவரை உதைக்கவும் தயங்கவில்லை. அவ்வூர் மக்களோ, ""ஐயா! இப்பெரியவரை துன்புறுத்தாதீர்கள். உங்களுக்கு தேவை சிலை தானே! அதை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக கிளம்புங்கள்!,'' என்றனர். 
""இந்தக் கிழம் செய்த காரியத்துக்கு இதற்கு ஆதரவாக வேறு பேசுகிறீர்களா! சாமான்யபட்ட சிலையா இது! சொக்கத்தங்கத்தால் ஆனது !'' என்று ஆவேசமாக கத்தினர். 
தாசர் அவர்களிடம்,"" உங்களுக்குப் பொன் தானே வேண்டும். வேண்டுமளவுக்கு நான் தருகிறேன். சிலையை என்னிடம் கொடுத்துவிடுங்கள்,'' என்று கெஞ்சினார்.
ஊர் மக்களும் தாசரின் பேச்சை ஆமோதித்தனர்.
"" தங்கம் தான் பெரிதென்று எண்ணும் உங்களுக்கு தங்கம் கொடுத்தால் போதாதா? தங்கத்தை வாங்கிக் கொண்டு சிலையை இங்கே விட்டு செல்லுங்கள்!,'' என்று வாதம் செய்தனர். 
பிச்சை எடுத்து பிழைக்கும் இவரிடம் தங்கம் ஏது என்ற எண்ணத்தில், ""தராசில் இச்சிலையை வைத்து எடைக்கு எடை தங்கம் கொடுத்தால் போதும். நாங்கள் கிளம்பிவிடுகிறோம். சிலையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்,'' என்று அர்ச்சகர்கள் நிபந்தனை இட்டனர். 
தராசில் சிலை வைக்கப்பட்டது. தாசரின் வீட்டில் தங்கம் ஏதுமில்லை. மனைவியின் ஞாபககார்த்தமாக ஒரு மூக்குத்தியை மட்டும் வைத்திருந்தார். அதை எடுத்து வந்தார். அதைக் கண்ட அர்ச்சகர் ஒருவர், ""இந்த கிழத்திற்கு பைத்தியம் பிடித்துவிட்டது போலும்,'' என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்.
மறுதட்டில் மூக்குத்தியை வைத்த தாசர் கண்ணை மூடி பகவானை வணங்கினார். தராசின் இருதட்டுகளும் சரிசமமானது. தாசரின் பக்திக்கு கட்டுப்பட்டு தராசு நிற்பதைக் கண்ட அர்ச்சகர்களும், அதிகாரிகளும் சிலையாயினர். 
சிலையை தாசரிடம் கொடுத்து விட்டு, துவாரகை கிளம்பினர். அதன்பின், அந்த இல்லமே கோயிலாக மாறியது. ராமதாசரும் சங்கீர்த்தனம் பாடி துவாரகைநாதனை தினமும் வணங்கி மகிழ்ந்தார்.

திருந்த முயற்சி பண்ணுங்க


இப்போதெல்லாம், அதிகாரிகளிடம் காசு பணம் இல்லாட்டி பேசவே முடிவதில்லை. எதுக்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கிறாங்க. திருட்டு புத்தியால் ஒரு அதிகாரி மாட்டிகிட்ட கதையைக் கேளுங்க! 
ஒரு திருடன், கோடீஸ்வரனாகி செட்டிலாக நினைத்தான். அவனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ""நீ இன்னும் பெரிய திருடனாக மாறி நிறைய சம்பாதிப்பாய்,'' என ஆசிர்வதித்தாள். 
திருடனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அதே நேரம் மகனிடம்,""எனக்காக ஒன்று செய்வாயா?'' என்றாள்.
""என்ன!'' என்ற அவனிடம், ""பொய் சொல்லமாட்டேன் என உறுதி கொடு,'' என்றாள். இவனும் சத்தியம் செய்து கொடுத்து விட்டான். அம்மா இறந்து போனாள்.
அடுத்த சில நாட்களிலேயே அரண்மனை கஜானாவில் திருடச் சென்றான். வழியில் குதிரையில் வந்த ஒருவனைப் பார்த்தான். ""எங்கே போகிறாய்?'' என்றான். பொய் சொல்வதில்லை என்ற சத்தியம் செய்திருந்ததால், திருடப்போகும் விஷயத்தை மறைக்காமல் சொன்னான்.
வந்தவன் அவனிடம், ""அப்படியானால், நானும் வருகிறேன். திருடுவதில் ஆளுக்குப் பாதி,'' என்றான். திருடன் ஒப்புக்கொண்டான்.
கஜானாவிற்கு சென்ற அவர்களில், குதிரையில் வந்தவன் வெளியே நின்று யாரும் வருகிறார்களா என்று கண்காணிக்க, திருடன் உள்ளே புகுந்து ஒரு பெட்டியை உடைத்தான். மூன்று வைரக்கற்களை எடுத்தான். வைரக்கல்லை உடைத்து ஒன்றரை வீதம் பங்கு வைத்தால் சரியாக இருக்காது என்பதால், இரண்டை எடுத்து வந்தான். ஆளுக்கொன்றாக பிரித்துக் கொண்டு போய்விட்டனர்.
மறுநாள் விஷயம் வெளியாக மந்திரி கஜானாவிற்கு சென்றார். ஒரு கல் மட்டும் இருந்தது. ஆசையில், அதை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்ட அவர், மூன்றுமே திருட்டு போய்விட்டதாக மன்னனிடம் சொல்லிவிட்டார். 
திருடன் கைது செய்யப்பட்டான். பொய் சொல்வதில்லை என சத்தியம் செய்திருந்ததால் நடந்த உண்மையை விசாரணையின் போது சொல்லிவிட்டான்.
மன்னனும் அவனிடம்,""நீ சொல்வது உண்மையே. அன்று குதிரை மீது திருடன் போல் வேடமிட்டு வந்தது நான் தான். நீ இரண்டு கல்லை எடுத்து ஒன்றை என்னிடம் கொடுத்து விட்டாய். இன்னொன்றை இந்த மந்திரி எடுத்து ஒளித்து வைத்ததும் எனக்கு தெரியும்,'' என்றவன் மந்திரியை சிறையில் தள்ளினான். திருடனின் உண்மைத் தன்மையைப் பாராட்டி மந்திரியாக்கி விட்டான்.
தப்பு செய்யும் அதிகாரிகள் மாட்டும் காலம் வரும்! இனியாவது திருந்த முயற்சி பண்ணுங்க சாமி! 




    "கடவுள் என்பவர் யார்? மனிதர்களைப் போல இருப்பாரா? ஒளியாய் பிரகாசிப்பரா? கையில் அரிவாள், கத்தி, சூலம் வைத்திருப்பாரா? அவருக்கு இரண்டு கையா, நான்கா, எட்டா, பதினாறா அதற்கு மேலா! தலைகள் எத்தனை...' இப்படி பல குழப்பம் நீண்டகாலமாக இருக்கிறது. சரி...அவரை நேரில் பார்த்து விட்டால் சந்தேகம் தீர்ந்து விடுகிறது என்றால், கண்ணில் படவே மாட்டான் என்கிறார்.
    கடவுளைக் காண வேண்டும் என்ற ஆவல் ஒரு மன்னனுக்கு ஏற்பட்டது. காட்டில் இருக்கும் முனிவர்களையெல்லாம் அரண்மனைக்கு அழைத்து வர உத்தரவு போட்டான். முனிவர்களும் வந்து சேர்ந்தனர்.
    அவர்களிடம், ""நீங்கள் கடவுளுக்கு யாகம் செய்வதாக சொல்லிக்கொண்டு, அரண்மனையில் இருந்து ஏராளமாக நிதி பெறுகிறீர்கள். யாகத்தின் அவிர்பாகத்தை (பலன்) அவர் பெற்றுச் செல்வதாகச் சொல்கிறீர்கள். உங்களில் சிலர் கடவுளை நேரிலும் பார்த்ததாகச் சொல்கிறீர்கள். எனக்கும் அவரைப் பார்க்க ஆசை. இப்போதே, என்னை காட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். யாகபலனை கடவுள் வாங்க வரும்போது, அவரை என்னிடம் அறிமுகம் செய்து வையுங்கள்,'' என்றான். முனிவர்கள் திகைத்தனர். ஒருமுனிவர் மட்டும், ""மன்னா! கொஞ்சம் பால் கொண்டு வரச் சொல்,'' என்றார்.
    ஒரு பாத்திரத்தில் பால் வந்தது. ""இதிலுள்ள வெண்ணெயை எடுத்து தா!''.
    முனிவர் இப்படி கேட்கவும் மன்னன் அவரிடம், ""அதெப்படி முடியும்! இதை தயிராக்க வேண்டும், தயிரைக் கடைந்தால் பாலுக்குள் மறைந்திருக்கும் வெண்ணெய் வெளிப்படும்,'' என்றான்.
    ""இதே போல் தான் கடவுளும்..."வா' என்றால் உடனே வந்துவிட அவர் நமது வேலைக்காரர் அல்ல. முனிவர்கள் ஆன்மிகப்பயிற்சிகளின் மூலம் தங்கள் அகக்கண்களால் அவரைப் பார்க்கின்றனர். சிலர் இதில் தீவிரமாக மூழ்கி நேரில் காணும் பாக்கியம் பெறுகின்றனர். முயற்சி உள்ள ஒவ்வொருவனும் கடவுளைக் காண்பான்,'' என்றார். 



    தன் மகன் இவருக்கு சீடராகி விட்டால், மீண்டும் பழைய நிலையை அடைவான் எனக் கருதினார். வீட்டிற்கு வந்ததும் மகனிடம் தன் கருத்தை வலியுறுத்திச் சொன்னார்.
    சீடனுக்கே சீடனாவது, யாதவப்பிரகாசருக்கு அதிர்ச்சியாய் இருந்தாலும், தாயின் சொல்லில் ஏதோ ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்தார். அந்த வரதராஜன் சித்தம் அதுதான் என்றால், யாரால் தடுக்க இயலும் என புரிந்து கொண்ட அவர், திருக்கச்சிநம்பியிடம் பேசிப் பார்ப்போம் என அவர் வீட்டுக்குச் சென்றார்.
    ""நம்பி! தாங்கள் தான் என் பிரச்னைக்கு பேரருளாளனிடம் தீர்வு கேட்டு சொல்ல வேண்டும்,'' என்றார்.
    அன்றிரவில் பெருமாளிடம் நம்பி இந்த விஷயத்தைச் சொன்னார். பெருமாள், என்ன சொல்லியிருப்பார் என்று சொல்லாமலே தெரிந்திருக்குமே! "சரி' என சொல்லிவிட்டார். மறுநாள் பெருமாளின் விருப்பத்தை யாதவப்பிரகாசரிடம் சொல்லி விட்டார் திருக்கச்சிநம்பி. அன்றிரவில் அவர் கண்ட கனவிலும் ஒரு தெய்வ சக்தி அவ்வாறே கூறியது. இனியும், கவுரவம் பார்க்கக்கூடாது எனக் கருதிய பிரகாசர், ராமானுஜரைச் சந்திக்க முடிவெடுத்தார்.
    மறுநாள் கோயிலுக்கு சென்றார். ராமானுஜர் அவரைக் கண்டதும் எழுந்து நின்று மரியாதை செய்தார். அவருக்கு இருக்கை கொடுத்தார். தன் முன்னாள் சீடனின் பணிவான தன்மையை மனதுக்குள் போற்றினார் பிரகாசர். இருப்பினும் தொட்டில் பழக்கம் கடைசி வரை வருமாமே! அவர் தன் வழக்கமான பாணியில், அதிமேதாவித்தனமான கேள்வி ஒன்றைக் கேட்டார். ""ராமானுஜா! உன் தோளில் சங்கு, சக்கரம் பொறித்துள்ளாய். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாமா? இதைப் பார்க்கும் போது நீ குணங்களுடன் கூடிய பிரம்மத்தை (உருவத்துடன் கூடியது) வணங்குவதையே சரியானதென நினைப்பதாக கருதுகிறேன். இதற்கு சாஸ்திரம் ஏதாவது ஆதாரம் வைத்துள்ளதா? சொல்,'' என்றார்.
    ராமானுஜர் கூரத்தாழ்வார் பக்கம் திரும்பி, ""இதோ! கூரத்தாழ்வார் இருக்கிறாரே. அவர் சாஸ்திர வல்லுநர். அவர் உங்களுக்கு தக்க விளக்கமளிப்பார்,'' என்றார்.
    கூரத்தாழ்வார் மடைதிறந்த வெள்ளமென தன் சாஸ்திர உரையைத் துவக்கினார். ஞாபகசக்தியில் சிறந்தவர் அல்லவா? அதனால், அவ்விடத்தில் பக்தி மழை பொழிந்தது என்று சொல்வதை விட கொட்டித் தீர்த்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
    ""ஆசிரியர் கோமானே! எங்கள் ஆச்சாரியர் உத்தரவுப்படி உங்களிடம் பேசுகிறேன். சங்கு, சக்கர சின்னங்களை அக்னியில் அழுத்தி அதை உடலில் பதித்துக் கொண்டவன் பரமாத்மாவுடன் இணைகிறான். அவன், பிரம்மலோகத்தில் வாழத் தகுதியுள்ளவன் ஆகிறான். பூணூல் தரிப்பது எப்படியோ, அதுபோல வைணவர்கள் சங்கு, சக்கர பொறியை உடலில் தரித்துக் கொள்ள வேண்டும். இது பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க உதவும். இவ்வுலகில் நாராயணனே முடிவான உண்மை. அவனே நமக்கு புகலிடம் தருபவன்,'' என்று கூரத்தாழ்வார் பேசப் பேச யாதவப்பிரகாசர், வாயே திறக்காமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார்.
    தன்னால் கொடுமைக்கு ஆளான சீடனின் சீடனே இப்படி இருந்தால், ராமானுஜரிடம் எவ்வளவு விஷயம் இருக்கும் எனக் கருதிய அவர், அப்படியே எழுந்தார். ராமானுஜர் முன் போய் நின்றார். தடாலென காலில் விழுந்து விட்டார். அம்மாவின் விருப்பம், திருக்கச்சிநம்பி மூலமாக பெருமாளே சொல்லி அனுப்பியது எல்லாம் சரியானதே என்பதை உணர்ந்தார்.
    ""ராமானுஜா! நீ சாதாரணமானவன் அல்ல. அந்த ராமபிரானின் தம்பி தான். அகந்தை என் கண்களை மறைத்திருந்தது. இனி நீயே எனக்கு கதி. என்னை சீடனாக ஏற்றுக்கொள்,'' என்றார்.
    ராமானுஜரும் அவரைத் தனது சீடராக ஏற்றார். அதன்பிறகு அவரது போக்கே மாறிவிட்டது. முந்தைய கெட்ட எண்ணங்கள் அறவே அழிந்தன. ராமானுஜரின் உத்தரவுப்படி வைணவர்களின் கடமை குறித்து ஒரு நூலையும் எழுதினார். 
    அவரது எண்பதாவது வயதில் இந்நூல் முடிவுற்றது. இதன்பிறகும் சில காலம் வாழ்ந்த அவர் திருமாலின் திருவடிகளை எய்தினார். யாதவப்பிரகாசர் ராமானுஜருக்கு சீடரானது, அவரது பக்திமயமான தோற்றம், இறைவனிடம் தன்னை அர்ப்பணித்து விட்ட பாங்கு எல்லாமே சுற்றுப்புறத்திலுள்ள வைணவர்களிடையே பரவியது. எல்லாரும் கூட்டம் கூட்டமாக வந்து அவரைத் தரிசித்தனர்.
    இதனிடையே, கிணற்றடி தண்ணீர் பிரச்னையில் ஸ்ரீரங்கம் திரும்பி விட்ட, பெரியநம்பி ஸ்ரீரங்க மடத்துக்கு தலைவர் இல்லையே என்ற கவலையில் இருந்தார். ஆளவந்தாருக்கு பிறகு, மடத்தில் திருமாலின் திருக்குணங்கள் பற்றி பேசுவதற்கு கூட சரியான ஆளில்லையே என்று வருத்தப்பட்டார். 
    ஆளவந்தார் இருந்த போது, ராமானுஜரை ஒரு தெய்வீக புருஷர் என்று சொன்னது அவர் நினைவில் மாறி மாறி வந்தது. என்ன செய்வதென கலங்கிய அவர், ரங்கநாதனிடம் சென்றார்.
    ""ரங்கநாதா, இது என்னப்பா சோதனை? இந்த பிரச்னைக்கு தீர்வு தான் என்ன?'' என்று கேட்டார்.
    அப்போது, ரங்கநாதர் பெரியநம்பியிடம் பேசினார். ""நம்பி! கவலைப்படாதே. வரதராஜன் உத்தரவின்றி ராமானுஜன் அங்கிருந்து கிளம்ப மாட்டான். எனவே வரதராஜனைப் பாடிப்புகழ்ந்து, அவனிடம் அனுமதி பெற வேண்டியது உனது பொறுப்பு. பாடுவதற்கு தகுதியான ஆள் திருவரங்க பெருமாளரையர். அந்த சங்கீத கலாநிதியை காஞ்சிபுரத்துக்கு அனுப்பு. வரதராஜன் சங்கீதப்ரியன். அவன் சங்கீதத்துக்கு மகிழ்ந்து அவன் வரம் கொடுக்கும் வேளையில், ராமானுஜனை கேட்டு பெற்று விடச் சொல்,'' என்றார்.
    இதையடுத்து பெருமாள் அரையர் காஞ்சிபுரம் சென்றார். வரதராஜனைப் பற்றி உளமுருகிப் பாடினார். ஆனால், வரதராஜனுக்கோ ராமானுஜரை அங்கிருந்து அனுப்ப மனமில்லை. அவன் பாட்டை ரசித்தானே ஒழிய, பதில் ஏதும் சொல்வதாகத் தெரியவில்லை. பெருமாள் அரையர் விடாப்பிடியாக பாடிக் கொண்டிருந்தார். தன் சக்தியனைத்தையும் திரட்டிப் பாடினார்.



    சூர்தாசர்

    கிருஷ்ணர் அரசாட்சி செய்த திருத்தலம் மதுராபுரி. இவ்வூரில் பிறந்தவர் சூர்தாசர் என்னும் அருளாளர். பிறவியிலேயே பார்வை இழந்தவர். ஆனாலும், அவர் அதற்காகக் கவலைப் பட்டதில்லை. பகவானைக் நெஞ்சில் இருத்தி அகக்கண்ணால் வணங்கியவர். அது மட்டுமல்ல! கணீரென்றும், இனிமையாகவும் பாடும் தன்மை கொண்டவர். கவிபுனையும் திறமையும் இருந்தது. கல்லையும் கரைக்கும் உருக்கமான பாடல்களைப் பாடினார். இவரது புகழ் நாடெங்கும் பரவியது. 
    அப்பகுதியை ஆண்ட பாதுஷா, சூர்தாசர் பற்றிக் கேள்விப்பட்டார். தனது ஆஸ்தான வித்வான்களை அழைத்து சூர்தாசரைப் பற்றி விசாரித்தார். அவர்களும், அவரை வெகுவாகப் போற்றினர். வித்வான்களான அவர்களே புகழ்ந்ததால், அவரை அரண்மனைக்கு அழைத்து கவுரவிக்க முடிவெடுத்தான். சேவகர்களை அவரது இல்லத்திற்கு அனுப்பினார். 
    ராஜ மரியாதையுடன், அவர் பல்லக்கில் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டார். அரசவையில் சபையினர் அனைவரும் கூடினர். தாசரின் இசைத் திறமையைப் பாராட்டிய பாதுஷா, 
    பூமாலைகளும், பொன்னாடைகளும் அணிவித்தார். ""சூர்தாசரே! உம் பாடலைக் கேட்க நாங்கள் அனைவரும் ஆவலாக இருக்கிறோம். எங்களின் விருப்பத்தை இப்போதே நிறைவேற்றுங்கள்,'' என்று கட்டளையிட்டார்.
    சூர்தாசருக்கு அரண்மனையில் அளித்த வெகுமதி பெரிதாகப்படவில்லை. பற்றற்ற ஞானியாக, பரந்தாமனையே அவர் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. அந்நினைவில் மூழ்கியவராய் தம்புராவை மீட்டிக்கொண்டு ஸ்ருதி சேர்த்தார். சிப்ளாவைத் தட்டிக் கொண்டே பாடத் தொடங்கினார். சங்கீத மழை பொழிந்தது. அவையோர் மெய்மறந்து கேட்டனர். ராஜ போக பாதுஷாவும் அந்த இசையில் லயித்து, அரண்மனையின் விருந்தாளியாக தங்கச் செய்தார். அவர் தினமும் அரசவையில் பாடி வந்தார். 
    அவரது இசை பற்றி அறிந்த அரண்மனை பெண்கள் இசைமழையில் நனைய விரும்பினர். அந்தப்புர கன்னிமாடத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ராணியரோடு<, மந்திரிப் பிரதானிகளின் மனைவியரும் கலந்து கொண்டனர். அங்கு பாடிக் கொண்டிருந்த தாசருக்கு, திடீரென பூர்வ ஜென்ம ஞாபகம் உண்டானது. 
    அந்த நினைவலைகள் அவர் மனதில் திரைப்படம் போல் ஓடியது.
    அக்ரூரர் என்பவர் கம்சனின் அவையில் மந்திரியாக இருந்தவர். ஆனால், கிருஷ்ணரின் பக்தர். கம்சன் நடத்திய யாகத்திற்காக, கோகுலத்தில் இருந்து பலராமரையும், கிருஷ்ணரையும் அழைத்து வந்தவர். அவர் யமுனையில் 
    நீராடியபோது, நீருக்குள் மகாவிஷ்ணு காட்சியளித்ததைக் காணும் பேறு பெற்றவர்.
    ஒருமுறை சத்தியபாமா, பல நாட்களாக கிருஷ்ணரைக் காணாமல் தனிமைத் துன்பத்தில் தவித்தாள். அவள் அக்ரூரரிடம், "" அக்ரூரரே! நான் சொல்வதைக் கேளுங்கள். பலநாட்களாக கிருஷ்ணரைப் பார்க்கவில்லை. இன்னும் ஒரு நாழிகைக்குள் (24நிமிஷம்) கிருஷ்ணர் என் முன் வந்தாக வேண்டும். அதை நீர் செய்யாவிட்டால், உம் கண் முன்னே என் உயிரைத் துறந்து விடுவேன்'' என்றாள். இதைக் கேட்ட அக்ரூரர் அதிர்ந்து போனார். உடனடியாக 
    கிருஷ்ணரைத் தேடிப் புறப்பட்டார். எங்கும் அவரைக் காண வில்லை. நேரம் நெருங்கி விட்டதால், தானே கிருஷ்ணராக உருமாறி, சத்தியபாமா முன் வந்தார். பட்டும் படாமலும் அவளிடம் சாதுர்யமாக பேசி சமாளித்தார். "" ""பாமா! ஏன் என்னைத் தேடுகிறாய்! அவசரமான வேலைகள் பல காத்துக் கிடக்கின்றன. அதை முடித்து விட்டு இதோ வந்துவிடுகிறேன்,'' என்று சொல்லி விட்டு, கிருஷ்ணராக வந்த அக்ரூரர் கிளம்பினார். 
    வழியில் நிஜ கிருஷ்ணர் வந்து கொண்டிருந்தார். அக்ரூரர் தான் செய்த செயலை அவரிடம் தெரிவித்தார். தன்னைப் போல உருமாறி பாமாவிடம் சென்ற விஷயத்தை கிருஷ்ணரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆத்திரத்தில் அக்ரூரரைச் சபித்து விட்டார். 
    ""அக்ரூரா! என்ன காரியம் செய்தாய்? கண்ணில்லாதவன் செய்யும் செயல் அல்லவா இது! நீ செய்த குற்றத்திற்காக பூலோகத்தில் பார்வை இல்லாதவனாகப் பிறப்பாய்,'' என்றார்.
    பகவான் கொடுத்த சாபம் பலித்தது. அன்று அக்ரூரராக வந்தவர் தான் இப்போது சூர்தாசர். பூர்வ ஜென்ம வாசனையால் கிருஷ்ண பக்தியோடு வாழ்ந்தார். சத்தியபாமாவும் அரண்மனை பணிப்பெண்ணாக மதுராபுரி அரண்மனையில் வேலை செய்து கொண்டிருந்தாள். 
    சூர்தாசர் பாடியபோது, சத்தியபாமாவும் அங்கே அமர்ந்து கீர்த்தனையை ரசித்துக் கொண்டிருந்தாள். தெய்வீகம் நிறைந்த சூர்தாசரின் அகக்கண்ணுக்கு மட்டும் அவள் பணிப்பெண்ணாக அங்கிருப்பது தெரிந்தது. அவர் கண்களில் 
    கண்ணீர் பெருக்கெடுத்தது. ஓடோடிச் சென்று,""உலகைக் காக்கும் தாயே! என்னம்மா இந்தக் கோலம்!'' என்று அவளின் பாதங்களில் விழுந்து வணங்கினார். 
    தன் மனைவியையும், பக்தனையும் காக்க வைகுண்டத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது சங்கு சக்ரதாரியாக மகாவிஷ்ணு காட்சி அளித்தார். பணிப்பெண்ணான சத்திய பாமாவையும், சூர்தாசரையும் தன்னோடு ஏற்று மறைந்தார். அரண்மனையில் இருந்த அனைவரும் இத்தெய்வீக காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.
    சூர்தாசர் பாடிய பக்திக் கீர்த்தனைகள் "சூரசாகரம்' எனப்படுகிறது. இக்கீர்த்தனைகளை பாடுவோர் பரந்தாமனின் திருக்காட்சி பெறுவர் என்பது ஐதீகம்.



    யார் ஒருவன் தன்னை பலசாலி என்றும், புத்திசாலி என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அவனுக்கு நிச்சயமாக ஒரு அடி இருக்கிறது. ஏனென்றால், மனிதரில் பாயும் புலிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பாய்கின்ற தூரத்தில் தான் வித்தியாசம்...
    ஒரு ஊரில் மகாபுத்திசாலியான திருடன். திருட்டில் எத்தனை "டெக்னிக்' உண்டோ, அத்தனையையும் பயன்படுத்தி, எவ்வளவு கவனமாக இருக்கும் ஆசாமியிடமும் திருடி விடுவான். போலீசிடம் சிக்காமலே காலத்தை கழித்துக் கொண்டிருந்தான்.
    ஒருநாள், ஒரு சிறுவன் ஒரு கிணற்றுப்பக்கமாக நின்று அழுது கொண்டிருந்தான். 
    அந்தப்பக்கமாக, திருடன் அன்று கொள்ளையடித்த பொருள் அடங்கிய மூடையுடன் வந்து கொண்டிருந்தான்.
    அழுகிற பையனிடம்,
    ""ஏண்டா அழறே! என்னாச்சு,'' என்றான்.
    ""அண்ணே! எங்கம்மா எங்கிட்ட ஒரு வெள்ளிச்செம்பைக் கொடுத்து பால் வாங்கிட்டு வரச்சொன்னாங்க. நான் இந்த கிணற்று சுவர் மேலே செம்பை வச்சுட்டு, இந்த மரத்திலே இருக்கிற மாங்காயைப் பறிக்க கல் வீசிட்டு இருந்தேன். திடீர்னு காத்தடிச்சு செம்பு கிணத்துக்குள்ளே விழுந்து மூழ்கிட்டுது. செம்பு இல்லாம போனா, எங்க அம்மா தோலை உரிச்சுடுவா,'' என்றான்.
    திருடனுக்கு புத்தி எப்படி போகும்? ஆஹா...வெள்ளிச் செம்பாயிற்றே! அரைகிலோ வெயிட்டாவது இருக்குமே! கிராம் 70 ரூபாய்க்கு விற்குதே! அதை எப்படியும் அசத்தி விடுவதென முடிவுசெய்து, ""சரிப்பா! அழாதே, நான் கிணற்றுக்குள் போய் எடுத்துட்டு வந்துடறேன்,'' என தான் கொண்டு வந்த மூடையை கிணற்றுச் சுவரில் வைத்து விட்டு குதித்தான்.
    உள்ளே எதுவும் சிக்கவில்லை. மேலே வந்தான். பையனையும் காணலே, தங்கநகைகள் கொண்ட மூடையையும் காணலே! புத்திசாலியான தன்னை ஏமாத்திப்புட்டானே ஒரு பொடிப்பயல்,'' என நொந்தபடியே சென்றான்.
    நாம் மட்டுமே புத்திசாலி என நினைத்துக் கொண்டு, பிறரை ஏமாற்றினால், நம்மை ஏமாற்ற இன்னொரு மகாபுத்திசாலி வருவான். புரிகிறதா! 

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக