செவ்வாய், 8 நவம்பர், 2011

11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-1 | பொன் வண்ணத் தந்தாதி (Part - II)


ராதே கிருஷ்ணா 09 - 11 - 2011 

12 திருமுறைகள்
    

11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-1 | பொன் வண்ணத் தந்தாதி (Part - II)

விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க 


11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-1 | பொன் வண்ணத் தந்தாதி (Part - II)


9. கயிலைபாதி காளத்திபாதித் திருவந்தாதி (நக்கீர தேவ நாயனார் அருளிச் செய்தது)
நூறு பாடல்களைக் கொண்டது. ஒற்றைப்படை எண்களில் அமைந்த ஐம்பது வெண்பாக்களும் திருக்கயிலையைப் போற்றுவனவாகவும், இரட்டைப் படை எண்களில் அமைந்த ஐம்பது வெண்பாக்களும் திருக்காளத்தி மலையைப் போற்றுவனவாகவும் அமைய, அந்தாதித் தொடைப்பட அமைந்திருத்தலின் இந்நூல் இப்பெயர் பெறுவதாயிற்று. மலை வளரும் இறைவனின் அருள் நலமும் ஒருங்கு காணும் நிலையில் இந்நூல் அமைந்துள்ளது.
கயிலை
302. சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா
நல்லிடிஞ்சல் என்னுடைய நாவாகச் - சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகர்க்(கு) ஏற்றினேன் பெற்று.
தெளிவுரை : சொல், தூய்மையுடைய திரிசீலையாகவும், பொருள் நெய்யாகவும் என் நாக்கு நல்ல அகலாகவும் கொண்டு சொல்லுதற்கருமையான வெண்பா என்னும் விளக்கை, பெருமையுடைய கயிலை மலை மேல் எழுந்தருளியிருக்கும் உமாதேவியை இடப் பாகத்தில் கொண்டுள்ள சிவபெருமானுக்கு ஏற்றினேன்.
காளத்தி
303. பெற்ற பயனிதுவே அன்றே பிறந்தியான்
கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத்
தோளாகத் தாடரவம் சூழ்ந்தணிந்த அம்மானுக்(கு)
ஆளாகப் பெற்றேன் அடைந்து.
தெளிவுரை : நான் இவ்வுலகில் பிறந்து கற்றவர்கள் ஏத்துகின்ற சிறப்புடைய காளத்தியில் கோயில் கொண்டிருக்கும் வெற்றி பொருந்தியவரும் தோளிலும் மார்பிலும் ஆடுகின்ற பாம்பை அணிந்திருப்பவருமாகிய அம்மானுக்கு ஆளாக அடைந்தேன். இது யான் பெற்ற பெரும் பயன் அல்லவா? என்று முடிக்க.
கயிலை
304. அடைந்துய்ம்மின் அம்மானை உம்மாவி தன்னைக்
குடைந்துண்ண எண்ணியவெங் கூற்றம் - குடைந்துநும்
கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்(து)
அண்ணலே கண்டீர் அரண்.
தெளிவுரை : உன் உயிரைத் தோண்டி எடுத்துண்ண எண்ணிய கொடிய எமன், குடைந்து கண்ணால் பார்க்கும் சமயத்தில் கயிலாயத்து அண்ணலே பாதுகாப்பாவான் என்பதைக் கண்டீர்கள். ஆதலால் அந்தப் பெருமானையே அடைந்து பிழையுங்கள்.
காளத்தி
305. அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழ
முரணம்பு கோத்த முதல்வன் சரணமே
காணுமால் உற்றவன்தன் காளத்தி கைதொழுது
பேணுமால் உள்ளம் பெரிது.
தெளிவுரை : மூன்று மதில்களும் நிறைந்த நெருப்பால் அழிய, வலிமையுள்ள கணையைத் தொடுத்த முதல்வன் சரணத்தைக் காண வேண்டும் என்னும் விருப்பம் கொண்டு சென்று அவனுடைய காளத்தி மலையைக் கைதொழுது வணங்க உள்ளம் பெரிதும் விரும்பும்.
கயிலை
306. பெரியவர்கா ணீர்என் உள்ளத்தின் பெற்றி
தெரிவரிய தேவாதி தேவன் - பெரிதும்
திருத்தக்கோர் ஏத்தும் திருக்கயிலைக் கோனை
இருத்தத்தான் போந்த(து) இடம்
தெளிவுரை : பெரியோர்களே! காணுங்கள், தேவர்களாலும் காண இயலாத தேவனும் மிகவும் சிவஞானப் பெருஞ் செல்வத்தினை யுடையவர்கள் வணங்குகின்ற திருக்கயிலையில் கோயில் கொண்டிருப்பவனுமாகிய சிவபெருமானை என் உள்ளத்தில் வீற்றிருக்குமாறு வைக்க என் உள்ளம் விழைகிறது என்க.
காளத்தி
307. இடப்பாகம் நீள்கோட்(டு) இமவான் பயந்த
மடப்பாவை தன்வடிவே ஆனால் - விடப்பாற்
கருவடிசேர் கண்டத்தெம் காளத்தி ஆள்வார்க்(கு)
ஒருவடிவே அன்றால் உரு.
தெளிவுரை : இறைவனது இடப்பாகம் நீண்ட சிகரங்களையுடைய இமவான் பயந்த உமாதேவியாரின் வடிவமாகும். நஞ்சின் பகுதியால் கருமை நிறம் கொண்ட கழுத்தினையுடைய காளத்தியப்பனுக்கு உருவம் ஒரு வடிவினை உடையதன்று.
கயிலை
308. உருவு பலகொண்(டு) உணர்வரிதாய் நிற்கும்
ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினிய
பூக்கையிற் கொண்(டு) எப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சு
மாக்கயிலை என்னும் மலை.
தெளிவுரை : பல உருவங்கொண்டு அறிய முடியாதவாறு இருக்கும் ஒருவன் ஒரு பக்கத்தில் வீற்றிருப்பது, மணமுள்ள இனிய பூக்களைக் கையிற் கொண்டு எப்போதும் தேவர்கள் வந்து வணங்குகின்ற பெருமை பொருந்திய கயிலை என்னும் மலையாகும்.
காளத்தி
309. மலைவரும் போல் வானவரும் தானவரும் எல்லாம்
அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி - நிலைதளரக்
கண்டமையால் நண்சாரல் காளத்தி ஆள்வார்நஞ்(சு)
உண்டமையால் உண்டிவ் வுலகு.
தெளிவுரை : மலையானது வருதலைப் போல, தேவர்களும் அசுரர்களும் அலைகளையுடைய கடலிலிருந்து ஆலகால விஷம் வருவதைக் கண்டு பயந்து, நிலை தளர்வதைக் கண்டு குளிர்ந்த சாரலையுடைய காளத்தியப்பர் நஞ்சை உண்டமையால் இவ்வுலகு நிலை பெற்றிருக்கின்றது.
கயிலை
310. உலகம் அனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட
திலகம் எனப்பெறிறும் சீசீ - இலகியசீர்
ஈசா திருக்கயிலை எம்பெருமான் என்றென்றே
பேசா(து) இருப்பார் பிறப்பு.
தெளிவுரை : உலகம் அனைத்திற்கும் ஒளி பொருந்திய நெற்றியில் இட்ட திலகம் போன்று இருந்தாலும் பிறப்பு சீசீ என்று இகழத் தக்கது. விளங்குகின்ற சிறப்பினை உடைய ஈசன் திருக்கயிலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே என்று அறிவுடையோர் மவுனமாய் இருப்பர்.
காளத்தி
311. பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும்
சிறப்புடையர் ஆனாலும் சீசீ - இறப்பில்
கடியார் நறுஞ்சோலைக் காளத்தி யாள்வார்
அடியாரைப் பேணா தவர்.
தெளிவுரை : நற்குடிப் பிறப்புடையவர், கற்றவர், பெருஞ் செல்வர் மற்றும் சிறப்புடையர் ஆனாலும், அழிவில்லாத மணமிக்க சோலைகளையுடைய காளத்தி ஈஸ்வரனது அடியார்களை வழிபடாதவர்களின் பிறப்பு இகழத் தக்கது என்க. இங்கு அடியார்களின் சிறப்புக் கூறப்பட்டது.
கயிலை
312. அவரும் பிறந்தவராய்ப் போவார்கொல் ஆவி
எவரும் தொழுதேத்தும் எந்தை - சிவமன்னு
தேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதே
போக்குவார் வாளா பொழுது.
தெளிவுரை : எவரும் வணங்குகின்ற எம் தந்தையாகிய நன்மை நிலை பெற்ற தேன் ஒழுகுகின்ற பொழில்கள் நிறைந்த திருக்கயிலையை வணங்காமல் வீணாகக் காலத்தைக் கழிப்பவர் இவ்வுலகத்தில் பிறந்து நடமாடினாலும் பிணம் போல்வர் என்பது கருத்து.
காளத்தி
313. வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்
கேளார்போல் அந்தோ குறிபட்டார் - கீளாடை
அண்ணற்(கு) அணுக்கராய்க் காளத்தி யுள்கின்ற
கண்ணப்பர் ஆவார் கதை.
தெளிவுரை : மானிடர்கள் வீணாகக் காலத்தைக் கழிக்கின்றனர். பொய் வாழ்க்கையில் அகப்பட்டவர்கள் கேட்க மாட்டார்களோ! அந்தோ! கிழித்து உரித்த படியினால் வந்த ஆடையை யுடைய அண்ணற்கு நெருங்கிய அன்பராகில் காளத்தி கோயிலில் இருக்கின்ற கண்ணப்ப நாயனார் கதை போல் சிறப்பு உடையவர் ஆவார். (சுமார் 8 அடி உயரமுள்ள கண்ணப்பர் கற்சிலை காளத்தி கோயிலில் உள்ளது)
கயிலை
314. கதையிலே கேளீர் கயிலாயம் நோக்கிப்
புதையிருட்கண் மாலோடும் போகிச் - சிதையாச்சீர்த்
தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில்
பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு.
தெளிவுரை : பாரதக் கதையில் கேளுங்கள். கயிலாயத்தை நோக்கி மிகுந்த இருளில் மாலின் பிறப்பாகிய கண்ணனோடும் சென்று, அழிவு படாத சிறப்பினையுடைய தூய்மை உடையவனாகிய சிவபெருமானிடம் பசுபதியாகிய இறைவன் கணையைப் பெற்று, போர்க் களத்தில் அருச்சுனன் முன்பு வெற்றி பெற வில்லையா?
காளத்தி
315. பண்டு தொடங்கியும் பாவித்தும் நின்கழற்கே
தொண்டு படுவான் தொடர்வேனைக் கண்டுகொண்(டு)
ஆளத் தயாவுண்டோ இல்லையோ சொல்லாயே
காளத்தி யாயுன் கருத்து.
தெளிவுரை : முன்கால முதல் நினைந்து உன்னுடைய பாதங்களுக்கே வழிபாடு செய்யத் தொடர்ந்து பற்றுகின்ற என்னைக் கண்டு அருள் செய்யத் தயவு உண்டோ இல்லையோ சொல்வாயாக. காளத்தியில் குடி கொண்டிருப்பவனே உன் கருத்து யாது?
கயிலை
316. கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காண
இருத்தி திருக்கயிலை என்றால் - ஒருத்தி
அறிவான் உறுவார்க்(கு) அறியுமா றுண்டோ
நெறிவார் சடையாய் நிலை.
தெளிவுரை : எண்ணத்துக்குத் தொலைவானவனாகி, காணத் தகுதி உடையவர்கள் காண்பதற்குத் திருக்கயிலையில் இருப்பாய் என்றால் நன்றாக நீண்ட சடையினை உடையாய்! உன்னை அறிய விரும்புகின்றவர்களுக்கு அறியும் வழி உண்டோ?
காளத்தி
317. நிலையில் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத்
தலைவ தடுமாறு கின்றேன் - தொலை வின்றிப்
போந்தேறக் கைதாராய் காளத்திப் புத்தேளிர்
வேந்தேயிப் பாசத்தை விட்டு.
தெளிவுரை : நிலையற்ற பிறவியாகிய நெடுஞ்சுழியில் அகப்பட்டு, தலைவனே! தடுமாறுகின்றேன். முடிவில்லாமல், வீடு பேறாகிய கரையில் வந்து ஏற கை கொடுப்பாயாக. காளத்தியில் எழுந்தருளி இருக்கும் தேவர்களுடைய அரசனே! இப்பாசத்தை விட்டுக் கடைத்தேற வழி செய்வாயாக என்பதாம்.
கயிலை
318. பாசத்தை விட்டு நீன் பாதத்தின் கீழேயென்
நேசத்தை வைக்க நினைகண்டாய் - பாசத்தை
நீக்குமா வல்ல கயிலாயா நீ என்னைக்
காக்குமா(று) இத்தனையே காண்.
தெளிவுரை : உலகப் பற்றை விட்டு உன் பாதத்தின் கீழே என் அன்பை வைக்க அருள் செய்வாயாக. பாசத்தை நீக்கும் வல்லமை யுடைய கயிலாய வாசனே! நீ என்னைக் காக்கும் வழி இவ்வளவே.
காளத்தி
319. காணா(து) அலக்கின்றார் வானோர்கள் காளத்திப்
பூணார மார்பன்தன் பொற்பாதம் - நாணாதே
கண்டிடுவான் யானிருந்தேன் காணீர் கடல்நஞ்சை
உண்டிடுவான் தன்னை ஒருங்கு.
தெளிவுரை : தேவர்கள் காளத்தியில் எழுந்தருளியிருக்கும் பூணுதற்குரிய அணிகலன்களைப் பூண்ட மார்பை யுடையவனுடைய பொற் பாதங்களைக் காணாமல் வருந்துகின்றார்கள். கடலில் இருந்து எழுந்த ஆலகால விஷத்தை உண்டவனை நான் நாணாமல் காணத் துணிந்திருக்கின்றேன். என்னுடைய அறியாமையை நோக்குங்கள்.
கயிலை
320. ஒருங்கா துடனேநின்(று) ஓர்ஐவர் எம்மை
நெருங்காமல் நித்தம் ஒருகால் - நெருங்கிக்
கருங்கலோங் கும்பல் கயிலாயம் மேயான்
வருங்கொலோ நம்பால் மதித்து.
தெளிவுரை : அடங்காமல் உடனிருந்தே ஐம்பொறிகள் எம்மை நெருங்காமல், நாள்தோறும் ஒருகால் நெருங்கி, கரிய மலைகள் போல் உயர்ந்த யானைகள் சுற்றித் திரியும் கயிலாய மலையில் எழுந்தருளியவன் நம்பால் மதித்து வருவானோ?
காளத்தி
321. நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே
வம்பார் மலர்தூய் வணங்காதே - நம்பாநின்
சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்
காலங்கள் போன கழிந்து.
தெளிவுரை : சிவபெருமானே ! நம்மிடம் மதித்தலைச் செய்து உறையும் காளத்தியை நெருங்காமலும் மணமுள்ள மலர்களைத் தூவி வணங்காமலும் உன்னுடைய நல்லியல்புகளைப் புகழாலும் பாவியேனாகிய நான் வீணாக இருந்து விட்டேன். காலங்கள் கழிந்து போயின.
கயிலை
322. கழிந்த கழிகிலாய் நெஞ்சே கழியா(து)
ஒழிந்தநாள் மேற்பட்(டு) உயர்ந்தோர் - மொழிந்தசீர்க்
கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையே
நண்ணுதலாம் நன்மை நமக்கு.
தெளிவுரை : கழிந்து போன நாட்களுக்காக நெஞ்சே நீ இரங்கினாய் இல்லை. எஞ்சியிருக்கும் நாட்கள் மேம்பாடு அடைந்து உயர்ந்தவர்கள் புகழ்ந்த சிறப்புக்களையுடைய நெற்றிக் கண்ணையுடைய எந்தையினது கயிலாய மலையைப் பொருந்துதல் நமக்கு நன்மை பயக்கும்.
காளத்தி
323. நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால் நம்பர்
தமக்கழகு தாமே அறிவர் - அமைப்பொதும்பிற்
கல்லவா நீடருவிக் காளத்தி ஆள்வாரை
வல்லவா நெஞ்சமே வாழ்த்து.
தெளிவுரை : நமக்குப் பொருந்தியபடி நாம் வழிபட்டால் இறைவன் தமக்கு அழகாகிய காரியத்தைச் செய்யத் தாமே அறிவார். மூங்கிற் புதர் நிறைந்த கற்களை உடைய நீண்ட அருவிகளையுடைய காளத்தி நாதரை இயன்றபடி நெஞ்சமே வாழ்த்து.
கயிலை
324. வாழ்த்துவாய் வாழ்த்தா(து) ஒழிவாய் மறுசுழியிட்(டு)
ஆழ்த்துவாய் அஃதறிவாய் நீயன்றே - யாழ்த்தகைய
வண்டார் பொழிற்கயிலை வாழ்கென்(று) இருப்பதே
கண்டாய் அடியேன் கடன்.
தெளிவுரை : வாழ்த்துவாய் வாழ்த்தாமல் இருந்து விடுவாய். மறுபிறவியாகிய சுழியின் கண் சேர்த்து அழுத்துவாய். அதை அறிபவன் நீதானே. வீணையின் அழகையுடைய வண்டுகள் நிறைந்த சோலைகளையுடைய கயிலை வாழ்வதாக என்று இருப்பதே அடியேன் கடனாகும். வண்டுகள் பாடும் இசை யாழிசை போன்றிருத்தலின் யாழ்த்தகைய வண்டு என்றார்.
காளத்தி
325. கடநாகம் ஊடாடும் காளத்திக் கோனைக்
கடனாகக் கைதொழுவார்க்(கு) இல்லை - இடம்நாடி
இந்நாட்டிற் கேவந்திங்(கு) ஈண்டிற்குக் கொண்டுபோய்
அந்நாட்டில் உண்டுழறு மாறு.
தெளிவுரை : மத யானைகள் சுற்றித் திரிதற்கு இடமாகிய காளத்தி மலைக்குத் தலைவனைக் கடமையாகக் கை தொழுவார்க்கு, இடம் நாடி இவ்வுலகில் வந்து பிறந்து மிகுதியாகச் சேர்த்துக் கொண்டு போய் மறுமையில் உண்டு வருந்துமாறு இல்லை என முடிக்க.
கயிலை
326. மாறிப் பிறந்து வழியிடை ஆற்றிடை
ஏறி இழியும் இதுவல்லால் - தேறித்
திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும்
இருக்கையிலை கண்டீர் இனிது.
தெளிவுரை : மறுபடியும் பிறந்து இடை வழியில் நல்வினை தீவினைகட்கு ஈடாக விண்ணுலகிலும் நிரயத்திலும் ஏறியிறங்குகின்ற இதனை யல்லாமல், மனம் தெளிவடைந்து திருக்கயிலையை ஏத்தாவிடில் பாது காவலால் யார்க்கும் இருத்தல் இல்லை. இதை நீங்கள் கண்டு தெளிவீர்களாக.
காளத்தி
327. இனிதே பிறவி இனமரங்கள் ஏறிக்
கனிதேர் கடுவன்கள் தம்மில் - முனிவாய்ப்
பிணங்கிவருந் தண்சாரல் காளத்தி பேணி
வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து.
தெளிவுரை : கூட்டமாகிய மரங்களில் ஏறி, பழங்களைத் தேடுகின்ற ஆண் குரங்குகள் தம்மில் சினங் கொண்டு, மாறுபட்டு வரும் குளிர்ந்த சாரல்களை உடைய காளத்தியை விரும்பி வணங்க வல்லராயின் பிறவி இனிதே என்று கூட்டுக.
கயிலை
328. மகிழ்ந்தவரும் வண்கொன்றை மேலே மனமாய்
நெகிழ்ந்து நெகிழ்துள்ளே நெக்குத் - திகழ்ந்திலங்கும்
விண்ணுறங்கா ஓங்கும் வியன்கயிலை மேயாயென்
பெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு.
தெளிவுரை : இது நற்றாய் இரங்கல் என்னும் துறை. அலருகின்ற வண்கொன்றை மேல் மனமாக மகிழ்ந்து மிகுதியான தளர்ச்சியை அடைந்து, உருகி, திகழ்ந்து இலங்கும் விண்ணையளாவ அழகிய பொழில் மேலெழும் வியன் கயிலையில் இருப்பவனே ! என் பெண் உறங்கவில்லை. என்ன செய்வேன்? சொல் வாயாக.
காளத்தி
329. பேசும் பரிசறியாள் பேதை பிறர்க்கெல்லாம்
ஏசும் பசிசானாள் ஏபாவம் - மாசுனைநீர்க்
காம்பை அலைத்(து) ஆலிக்கும் காளத்தி என்றென்று
பூம்பயலை மெய்ம் முழுதும் போர்த்து.
தெளிவுரை : இவள் பேசும் வகையறியாத பேதைப் பெண். பிறரால் பழி தூற்றப்படும் தன்மை யுடையவள் ஆனாள். ஐயோ பாவம் பெரிய சுனை நீர்க்கு மூங்கில் அசைத்து ஒலிக்கும் காளத்தி என்று அடிக்கடி கூறுவாள். அழகிய பசலை உடல் முழுதும் போர்த்து ஏசும் பரிசானாள் என முடிக்க.
கயிலை
330. போர்த்த களிற்றுரியும் பூண்ட பொறியரவும்
தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் - மூர்த்தி
குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும்
கயிலாயா யான்காணக் காட்டு.
தெளிவுரை : போர்த்துள்ளது யானைத்தோல், பூண்பது புள்ளிகளையுடைய பாம்பு. சடையில் இருப்பவள் கங்கை. குயில் போல இனிமையாகப் பேசும் மொழியை உடைய உமாதேவியை இடப்பாகத்தில் கொண்ட மூர்த்தியாகிய கயிலைவாசா ! இந்தக் கோலத்தை யான் காணக் காட்டுவாயாக.
காளத்தி
331. காட்டில் நடமாடிக் கங்காள ராகிப்போய்
நாட்டிற் பலிதிரிந்து நாடோறும் - ஓட்டுண்பார்
ஆனாலும் என்கொலோ காளத்தி ஆள்வாரை
வானோர் வணங்குமா வந்து.
தெளிவுரை : புறங் காட்டில் நடமாடி, முழு எலும்புக் கூடாகி, பிறகு ஊர்களில் பிச்சை எடுத்துத் திரிந்து நாள் தோறும் ஓட்டிலே உணவு கொள்வார். என்றாலும் காளத்திநாதரைத் தேவர்கள் வணங்குவதற்காக வருவது யாது காரணம் கருதி என்பதாம்? ஓட்டுண்பார் - பிரம கபாலத்தில் பிச்சை ஏற்று உண்பார்.
கயிலை
332. வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும் வார்சடைமேல்
கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல் ! - வந்தித்து
வாலுகுத்த வண்கயிலைக் கோனார்தம் மாமுடிமேல்
பாலுகுத்த மாணிக்குப் பண்டு.
தெளிவுரை : தேவர்கள் வந்து வணங்குகின்ற பரிகல சேடமும் நீண்ட சடை மேல் கொத்துக்கள் விரிகின்ற நிருமாலிய மாலையும் கொடுத்தார் அல்லவா? அது என் கருதி? வணங்கி வெள்ளொளியைப் பரப்புகிற வளம் பொருந்திய கயிலைக் கோன் தம் முடிமேல் பாலைத் திருமுழுக் காட்டிய பிரமசாரியாகிய சண்டேசுரருக்குக் கொடுத்தது ஏன் என முடிக்க.
காளத்தி
333. பண்டிதுவே அன்றாயின் கேளீர் கொல் பல்சருகு
கொண்டிலங்கத் தும்பிநூற் கூடிழைப்பக் - கண்டு
நலந்திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர்
சிலந்திக்குச் செய்த சிறப்பு.
தெளிவுரை : இது மட்டும் அன்று. கேளுங்கள். ஆராயுங்கால் பல சருகு கொண்டிலங்க சிலந்திவாயின் நூலால் கூடு கட்டக் கண்டு நன்மையை எடுத்துப் புகழும் காளத்தி நாதர் சிலந்திக்குச் செய்த சிறப்புக் கேளீர் கொல் எனக் கூட்டுக. கேளீர் கொல் - கேட்டிலீரோ? சிலந்திக்குச் செய்த சிறப்பென்றது சிலந்தியைக் கோச் செங்கட் சோழராகப் பிறக்கச் செய்த சிறப்பை.
கயிலை
334. செய்த சிறப்பெண்ணில் எங்குலக்கும் சென்றடைந்து
கைதொழுவார்க்(கு) எங்கள் கயிலாயர் - நொய்தளவில்
காலற்காய்ந் தார்அன்றே காணீர் கழல்தொழுத
பாலற்காய் அன்று பரிந்து.
தெளிவுரை : செய்த சிறப்பை எண்ணினால் எப்படி முடிவு பெறும்? என்பதைச் சென்றடைந்து கைதொழுவார்க்கு எங்கள் கயிலாயர் சிறிது போதில் அருள் செய்வார். தனது பாதங்களை வணங்கிய பாலகனாகிய மார்க் கண்டேயனுக்காக நமனைக் காய்ந்தாய் அல்லவா? காண்பீர்களாக.
காளத்தி
335. பரிந்துரைப்பார் சொற்கேளாள் எம்பெருமான் பாதம்
பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர்
நாதாவா காளத்தி நம்பாவா என்றென்று
மாதாவா உற்ற மயல்.
தெளிவுரை : என் மகள், அந்தோ, அடைந்த மயல் எத்தகையது என்று சொல்கிறேன் கேளுங்கள். அன்பு கொண்டு கூறுவார் சொல்லைக் கேட்க மாட்டாள். எம்பெருமானது பாதத்தைப் பிரிந்திருக்க முடியாமல் பேசுவாள். விரும்பித் தேவர்களின் நாதா வா, காளத்தி நம்பா வா, என்று பேசும் என முடிக்க.
கயிலை
336. மயலைத் தவிர்க்க நீ வாராய் ஒருமூன்(று)
எயிலைப் பொடியாக எய்தாய் - கயிலைப்
பருப்பதவா நின்னுடைய பாதத்தின் கீழே
இருப்பதவா உற்றாள் இவள்.
தெளிவுரை : இவள் மையலைத் தீர்க்க வருவாயாக. ஒப்பற்ற மூன்று மதில்களை அழித்தவனே! கயிலை மலையை உடையவனே ! உன்னுடைய பாதத்தின் கீழே இருப்பதற்கு இவள் விரும்புகின்றாள்.
காளத்தி
337. இவளுக்கு நல்லவா(று) எண்ணுதிரேல் இன்றே
தவளப் பொடியிவள்மேல் சாத்தி - இவளுக்குக்
காட்டுமின்கள் காளத்தி காட்டிக் கமழ்கொன்றை
சூட்டுமின்கள் தீரும் தூயர்.
தெளிவுரை : இவளுக்கு நன்மையான செய்கையைச் செய்ய எண்ணினால் இன்றே திருநீற்றை இவள் மேல் சாத்தி, இவளுக்குத் திருக்காளத்தி மலையைக் காட்டுங்கள். மணம் வீசுகின்ற கொன்றை மாலையை அணியுங்கள். இவளது துயர் தீரும். அதாவது துன்பம் நீங்கும் என்றபடி. இது செவிலி கூற்று.
கயிலை
338. துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு
மயக்கில் வழிகாண மாட்டேன் - வியற்கொடும்போர்
ஏற்றானே வண்கயிலை எம்மானே என்கொலோ
மேற்றான் இதற்கு விளைவு.
தெளிவுரை : துன்பக் கூடாகிய, தோலாற் செய்த சிறுகுடிலாகிய உடல் புகுந்து, மயக்கமில்லாத வழியைக் காண மாட்டாதவனாக உள்ளேன். பெருமையுள்ள கொடும் போரைச் செய்யும் காளையை வாகனமாக உடையவனே! வளம் பொருந்திய கயிலை எம்மானே. இனிமேலாயினும் இதற்கு என்ன முடிவு என்று கூறுவாயாக ! கடைத்தேறும் வழியாது என்பதாம்.
காளத்தி
339. விளையும் வினையரவின் வெய்ய விடத்தைக்
களைமினோ காளத்தி ஆள்வார் - வளைவில்
திருந்தியசீர் ஈசன் திருநாமம் என்னும்
மருந்தினைநீர் வாயிலே வைத்து.
தெளிவுரை : வினைகளாகிய பாம்பின் கொடிய விஷத்தை வேரறப் போக்குங்கள். திருக்காளத்தியில் கோயில் கொண்டிருக்கும் பெருமானே! கோடுதல் இல்லாத திருத்தமாகிய சிறப்புடைய ஈசன் திருநாமம் என்னும் மருந்தினை உபதேசிப்பாயாக. வாயில் வைத்துக் களைமின் என்று கூட்டுக.
கயிலை
340. வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயவே
கம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத்(து)
எம்பெருமான் ஓர்அஞ் செழுத்து.
தெளிவுரை : தூய்மையுடைய திருவேகம்பரே! தேவியோடு நிலை பெற்றிருக்கும் கயிலாயத்து எம்பெருமானே! திரு ஐந்தெழுத்தை உபதேசித்த அளவில் அது மருந்தாகி, கொடிய பிறவி நோயைத் தீர்க்கும்.
காளத்தி
341. அஞ்செழுத்தும் கண்டீர் அருமறைகள் ஆவனவும்
அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும் - நஞ்சவித்த
காளத்தி யார்யார்க்கும் காண்டற்(கு) அரிதாய்ப்போய்
நீளத்தே நின்ற நெறி.
தெளிவுரை : நஞ்சின் வேகத்தைத் தணித்த, திருக்காளத்தியில் எழுந்தருளிய திருக்காளத்தி நாதரைக் காண முடியாத அளவு நீளத்தே நின்ற நெறி, அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும். அஞ்செழுத்தே அறுமறைகளாகும் என்பதைக் காணுங்கள்.
கயிலை
342. நெறிவார் சடையாய் நிலையின்மை நீயொன்(று)
அறியாய் கொல் அந்தோ அயர்ந்தாள் - நெறியிற்
கனைத்தருவி தூங்கும் கயிலாயா நின்னை
நினைத்தருவி கண்சோர நின்று.
தெளிவுரை : வழியில் ஒலி செய்யும் அருவி தூங்கும் கயிலாயா! நின்னை நினைத்து என் மகள் கண்ணீர் அருவியாக வெளிப்பட நின்று சோர்ந்தாள். நெறித்த நீண்ட சடையை யுடையவனே! அவள் இறந்து படுவாள் என்பதை நீ அறியாயா? வந்து அருள் செய்வாயாக என்பதாம்.
காளத்தி
343. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் யாம்
என்றும் நினைந்தாலும் என்கொலோ - சென்றுதன்
தாள்வா னவர்இறைஞ்சும் தண்சாரல் காளத்தி
ஆள்வான் அருளாத வாறு.
தெளிவுரை : குளிர்ந்த சாரலையுடைய காளத்தியப்பரே! தேவர்கள் வந்து வணங்கியும் அவர்களுக்கு இன்னும் அருள் செய்யாத காரணம் என்ன? அவர்களே பயன் பெறாதபோது நாங்கள் நின்றும், இருந்தும் கிடந்தும், நடந்தும் இடையறாது நினைந்தும் யாது பயன்?
கயிலை
344. அருளாத வாறுண்டே யார்க்கேனும் ஆக
இருளார் கறைமிடற்றெம் ஈசன் - பொருளாய்ந்து
மெய்ம்மையே உன்னில் வியன்கயிலை மேயான்வந்(து)
இம்மையே தீர்க்கும் இடர்.
தெளிவுரை : இருளைப் போற் பொருந்திய நஞ்சுக் கறையமைந்த கழுத்தையுடைய ஈசன் உண்மையாக எண்ணினால் யார்க்கேனும் அருள் செய்யாமல் இருந்த துண்டா? ஆகவே கயிலை வாசன் வந்து இப் பிறப்பிலேயே நம் இடரைத் தீர்ப்பார் என்று அறிக.
காளத்தி
345. இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு
நடவீரோ காலத்தால் நாங்கள் - கடல்வாய்க்
கருப்பட்டோங்(கு) ஒண்முகில்சேர் காளத்தி காண
ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து.
தெளிவுரை : கடலிடத்து சூல்கொண்டு மேலெழுந்து மேகங்கள் சேர்கின்ற காளத்தியைக் காண நாங்கள் மனம் துணிந்தோம். ஆகவே துயர் உறுத்தும் துன்பங்களே! உமக்கோர் இடம் நாடிக் கொண்டு நடவீரோ? செல்லுங்கள் என்றபடி.
கயிலை
346. உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய்
புணருங்கால் ஆரமுதே போலும் - இணரில்
கனியவாம் சோலைக் கயிலாயம் மேயாய்
இனியவா காண்நின் இயல்பு.
தெளிவுரை : அறியுமிடத்து ஒன்றை வடிவம் தெரியுமாறு காட்டு வாயாக. புணருங்கால் ஆரமுதே போலும் பூங்கொத்துக்களையுடைய சோலைகள் நிறைந்த கயிலாயத்தில் உள்ளவனே! நின் இயல்பு இனிமை உடையதாகும்.
காளத்தி
347. நின்னியல்பை யாரே அறிவார் நினையுங்கால்
மன்னியசீர்க் காளத்தி மன்னவனே - நின்னில்
வெளிப்படுவ(து) ஏழுலகும் மீண்டே ஒருகால்
ஒளிப்பதுவும் ஆனால் உரை.
தெளிவுரை : நிலை பெற்ற சிறப்பமைந்த காளத்தி மன்னவனே! நினையுமிடத்து உன் பெருமையை யார் அறிய வல்லார்? உன்னிடத்திலிருந்து ஏழு உலகங்களும் தோன்றுகின்றன. மறுபடியும் அவை உன்னிடத்தி லேயே ஒடுங்குகின்றன. ஆகவே உன் பெருமையை அளவிட முடியுமோ என்றபடி.
கயிலை
348. உரையும் பொருளும் உடலும் உயிரும்
விரையும் மலரும்போல் விம்மிப் - புரையின்றிச்
சென்றவா(று) ஓங்கும் திருக்கயிலை எம்பெருமான்
நின்றவா(று) எங்கும் நிறைந்து.
தெளிவுரை : உரையும் பொருளும் போலவும், உடலும் உயிரும் போலவும், மணமும் மலரும் போலவும் பெருகி, குற்றமில்லாமல் சென்றவாறு ஓங்கும் திருக்கயிலை எம்பெருமான் எங்கும் நிறைந்து நிற்கின்றான் என்பதாம்.
காளத்தி
349. நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றின்
மறைந்தைப் புலன்காண வாராய் - சிறந்த
கணியாரும் தண்சாரல் காளத்தி ஆள்வாய்
பணியாயால் என்முன் பரிசு.
தெளிவுரை : நீ எங்கும் நிறைந்து நின்றாலும், ஒன்றில் மறைந்து ஐம்புலன்களும் காண வருவாயாக, சிறந்த வேங்கை மரங்கள் நிறைந்த குளிர்ந்த சாரலையுடைய காளத்தி மலையை ஆள்பவனே ! காட்சி தருவாயாக, ஒன்றில் என்றது கல் மரம் முதலிய யாதேனும் ஒன்றில் என்றபடி.
கயிலை
350. பரிசறியேன் பற்றிலேன் கற்றிலேன் முற்றும்
கரியுரியாய் பாதமே கண்டாய் - திரியும்
புரம்மாளச் செற்றவனே பொற்கயிலை மன்னும்
பரமா அடியேற்குப் பற்று.
தெளிவுரை : உன் பரிசு முற்றும் அறியேன். எதிலும் பற்றில்லாதவன். கற்றறியாதவன். யானைத் தோலைப் போர்த்தவனே! யாண்டும் உலாவும் திரிபுரங்களை எரித்தவனே! பொற்கயிலையில் நிலையாகவுள்ள மேலானவனே! அடியேற்குப் பற்று உன் பாதமே. அறிவாயாக.
காளத்தி
351. பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே
முற்றாவெண் திங்கள் முளைசூடி - வற்றாவாம்
கங்கைசேர் செஞ்சடையான் காளத்தி யுள்நின்ற
மங்கைசேர் பாகத்து மன்.
தெளிவுரை : எல்லா உயிர்களுக்கும் எந்தை பசுபதியே. இளம்பிறையைச் சூடியவன். வற்றாததாகிய கங்கையைச் சடையில் வைத்திருப்பவன். காளத்தியுள் நின்ற மங்கைசேர்மன். பற்றாவான் என்க, பற்று-பற்றுக் கோடு. பசுபதி-உயிர்கட் கெல்லாம் தலைவன்.
கயிலை
352. மன்னா கயிலாயா மாமுத்தம் மாணிக்கம்
பொன்னார மாக்கொண்டு பூணாதே - எந்நாளும்
மின்செய்வார் செஞ்சடையாய் வெள்ளெலும்பு பூண்கின்ற(து)
என்செய்வான் எந்தாய் இயம்பு.
தெளிவுரை : நிலை பேறுடையவனே! (எல்லா உலகங்கட்கும் மன்னனாக இருப்பவனே எனினுமாம்.) கயிலாயத்திலுள்ள சிறந்த முத்து மாணிக்கம் பொன் முதலியவற்றை ஆரமாகக் கொண்டு பூணாமல் எப்போதும் ஒளி செய்கின்ற செஞ்சடையை உடையவனே. வெள்ளெலும்பு பூண்கின்ற காரணம் என்ன? என்ன செய்யும் பொருட்டு இவ்வாறு இருக்கிறாய்?
காளத்தி
353. இயம்பாய் மடநெஞ்சே ஏனோர்பால் என்ன
பயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய் புயம்பாம்பால்
ஆர்த்தானே காளத்தி அம்மானே என்றென்றே
ஏத்தாதே வாளா இருந்து.
தெளிவுரை : பிற கடவுளரிடத்தில் என்ன பயன் கருதிப் பற்றுக் கொண்டாய். தோள்களில் பாம்பைக் கட்டியவன். காளத்தி அம்மானே என்று எப்போதும் துதி செய்யாமல் வீணாகக் காலங் கழிக்கின்றாய். மட நெஞ்சே! சொல்வாயாக.
கயிலை
354. இருந்தவா காணீர் இதுவென்ன மாயம்
அருந்தண் கயிலாயத்(து) அண்ணல் - வருந்திப்போய்த்
தானாளும் பிச்சை புகும்போலும் தன்னடியார்
வானாள மண்ணாள வைத்து.
தெளிவுரை : அருமையான குளிர்ந்த கயிலாயத்து அண்ணல் தன் அடியார்கள் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் ஆளுமாறு விட்டு விட்டு, தான் வருந்தி சென்று பிச்சையேற்று உண்பான் போலும். இந்தச் செய்தி இருந்த விதத்தைப் பாருங்கள்.
காளத்தி
355. வைத்த இருநிதியே என்னுடைய வாழ்முதலே
நித்திலமே காளத்தி நீள்சுடரே - மொய்த்தொளிசேர்
அக்காலத்(து) ஆசை அடிநாயேன் காணுங்கால்
எக்காலத்(து) எப்பிறவி யான்.
தெளிவுரை : பாதுகாத்து வைக்கப்பட்ட செல்வமே! என்னுடைய வாழ் முதலே! முத்துப் போன்றவனே! காளத்தியின் ஒளிச் சுடரே! இனி வரப்போகும் காலத்தில் என் ஆசை யாதெனில் நான் எப்பிறப்பை எடுப்பேன் என்பதாகும். எத்தகைய பிறப்பையும் எடுக்க மாட்டேன் என்றபடி.
கயிலை
356. யானென்று தானென்(று) இரண்டில்லை என்பதனை
யானென்றும் கொண்டிருப்பன் ஆனாலும் - தேனுண்(டு)
அளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான்
தெளிகொடான் மாயங்கள் செய்து.
தெளிவுரை : அடியேன் என்றும், காளத்தியான் அடியேன் என்றும், இரண்டில்லை, என்பதை யான் உறுதியாகக் கொண்டிருப்பினும் தேனை உண்டு வண்டுகள் பாடும் விசாலமான கயிலையில் எழுந்தருளியிருக்கும் இறைவனே! மாயங்கள் செய்து காளத்தி மேயான் எனக்கு மயக்கத்தை உண்டாக்கி விடுவான் என்றபடி.
காளத்தி
357. மாயங்கள் செய்தைவர் சொன்ன வழிநின்று
காயங்கொண் டாடல் கணக்கன்று - காயமே
நிற்பதன்(று) ஆதலால் காளத்தி நின்மலன்சீர்
கற்பதே கண்டீர் கணக்கு.
தெளிவுரை : உலகில் பிறந்து, ஐம்புலன் சொன்ன வழி நடந்து உடம்பைப் பாராட்டுதல் நல்ல வழக்கமன்று. இந்த, உடம்பு நிலை பெற்றிருக்காது ஆதலால், காளத்தி நின்மலன் சீர் கற்பதே கணக்கு என்பதாம். அதாவது கடவுளைப் போற்றுவதே உய்யும் வழி என்பதை உணர்வாயாக.
கயிலை
358. கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை
வணக்கி வலைப்படா முன்னம் - பிணக்கின்றிக்
காலத்தால் நெஞ்சே கயிலாயம் மேவியநற்
சூலத்தான் பாதம் தொழு.
தெளிவுரை : உலக வாழ்க்கையைச் சதமென்று நம்பி வாழ்ந்து, எமன் நம்மை வணங்கச் செய்து பாசவலையிற் அகல் படுத்துவதற்கு முன்பாக, மாறுபாடு இல்லாமல், காலம் இருக்கும் போதே சூலப்படையை உடைய சிவபெருமான் பாதங்களைத் தொழுவாயாக.
காளத்தி
359. தொழுவாள் பெறாளேதன் தோள்வளையும் தோற்றாள்
மழுவாளன் காளத்தி வாழ்த்தி - எழுவாள்
நறுமா மலர்க்கொன்றை நம்முன்னே நாளைப்
பெறுமாறு காணீர்என் பெண்.
தெளிவுரை : என் மகள், மழு வேந்தியவனது காளத்தியை வாழ்த்தித் தொழுவாள். கைவளைகளைத் தோற்பாள். அவள் திரும்பப் பெற மாட்டாளோ? நாளைய தினம் உன் மணம் பொருந்திய மலர்க் கொன்றையைப் பெறுமாறு அருள் செய்வாயாக. அப்போதுதான் அவள் எழுவாள்.
கயிலை
360. பெண்ணின்(று) அயலார்முன் பேதை பிறைசூடி
கண்ணின்ற நெற்றிக் கயிலைக்கோன் - உண்ணின்ற
காமந்தான் மீதூர நைவாட்குன் கார்க்கொன்றைத்
தாமந்தாம் மற்றிவளைச் சார்ந்து.
தெளிவுரை : பேதைப் பெண்ணாகிய இவள், அயலார் முன் பிறைசூடியவனும் நெற்றிக் கண்ணை உடையவனுமாகிய கயிலை நாதனாகிய உன் மீது கொண்ட காமத்தால் நைகின்றாள். ஆகையால் அவளைச் சார்ந்து கார்க் கொன்றைத் தாமத்தை அவளுக்குத் தருவாயாக.
காளத்தி
361. சார்ந்தாரை எவ்விடத்தும் காப்பனவும் சார்ந்தன்பு
கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் - கூர்ந்துள்ளே
மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும்
காளத்தி யார்தம் கழல்.
தெளிவுரை : தம்மைப் பற்றுக் கோடாக அடைந்தாரை எல்லா இடங்களிலும் காப்பனவும், சார்ந்து அன்பு மிகுந்தவர்க்கு முக்தி கொடுப்பனவும் உள்ளே அன்பு பற்றுமாறு தியானிப்பவர்களுக்கு முன் வந்து நிற்பனவும் காளத்தியார் தம் கழல்களே என்றவாறு.
கயிலை
362. தங்கழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலன்சலனென்(று)
அங்கழல்கள் ஆர்ப்ப அனலேந்திப் - பொங்ககலத்(து)
ஆர்த்தா(டு) அரவம் அகன்கயிலை மேயாய்நீ
கூத்தாடல் மேவியவா கூறு.
தெளிவுரை : வீரக் கழல்கள் ஒலிக்கவும் விளக்குச் சலசல என்று அழல்கள் ஒலிக்கவும், அனலை ஏந்தி. உன் மார்பகத்தில் படமெடுத்து ஆடுகிற பாம்பைக் கட்டி அகன்ற கயிலையில் மேவி இருப்பவனே கூத்தாடல் பொருந்திய விதத்தைக் கூறுவாயாக.,
பொங்கு + அகலத்து எனப்பிரிக்க.
காளத்தி
363. கூறாய்நின் பொன்வாயால் கோலச் சிறுகிளியே
வேறாக வந்திருந்து மெல்லெனவே - நீல் தாவும்
மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச்
செஞ்சடைஎம் ஈசன் திற்ம.
தெளிவுரை : நீல நிறமுடைய முகில்கள் வந்து படிகின்ற உயர்ந்த சிகரங்களையும் அருவிகளையும் உடைய காளத்தியில் எழுந்தருளியிருக்கும் செஞ்சடையினையுடைய எம் ஈசனது திறத்தை, கோலச் சிறுகிளியே உன் பொன் வாயால் தனியாக வந்து மெல்லெனவே கூறுவாயாக.
கயிலை
364. ஈசன் திறமே நினைந்துருவம் எம்மைப்போல்
மாசில் நிறந்த மடக்குருகே - கூசி
இருத்தியால் நீயும் இருக்கயிலை மேயாற்(கு)
அருத்தியாய்க் காமுற்றா யாம்.
தெளிவுரை : குற்றமற்ற நிறத்தையுடைய இளமையுடைய நாரையே! ஈசன் திறமே நினைந்து எம்மைப் போல நீயும் உருகுகின்றாய். அதனால் கூச்சத்துடன் இருக்கிறாய். கயிலையில் மேவி யிருப்பவனைக் காதலிக்கின்றாய். உன் விருப்பம் நிறைவேற வேண்டும்.
காளத்தி
365. காமுற்றா யாமன்றே காளத்ட யான்கழற்கே
யாமுற்ற துற்றாய் இருங்கடலே - யாமத்து
ஞாலத்(து) உயிரெல்லாம் கண்துஞ்சம் நள்ளிருள்கூர்
காலத்துந் துஞ்சாதுன் கண்.
தெளிவுரை : இருங் கடலே ! நீ காளத்தியான் கழற்கே காமுற்றாய். யாம் அடைந்த நிலையை நீயும் அடைந்திருக்கிறாய். இந்த நள்ளிரவில் உலகத்து உயிர்கள் எல்லாம் உறங்கும். இந்த நடுயாமத்திலும் உன் கண்கள் உறங்கவில்லையே! சற்று உறங்குவாயாக என்பதாம்.
கயிலை
366. கண்ணும் கருத்தும் கயிலாய ரேஎமக்கென்(று)
எண்ணி இருப்பன்யான் எப்பொழுதும் - நண்ணும்
பொறியா(டு) அரவசைத்த பூதப் படையார்
அறியார் கொல் நெஞ்சே அவர்.
தெளிவுரை : நெஞ்சமே! யான் எப்போதும் கண்ணும் கருத்தும் கயிலாயரே எமக்கு என்று எண்ணி இருக்கின்றேன். புள்ளிகளையுடைய, ஆடுகின்ற, பாம்பைக் கட்டியவரும் பூதப்படையாருமாகிய அவர் என் நிலையை அறியவில்லை போலும்.
காளத்தி
367. நெஞ்சே அவர்கண்டாய் நேரே நினைவாரை
அஞ்சேல் என்(று) ஆட்கொண்(டு) அருள் செய்வார் - நஞ்சேயும்
கண்டத்தார் காளத்தி ஆள்வார் கழல்கண்டீர்
அண்டத்தார் சூடும் அலர்.
தெளிவுரை : நஞ்சு பொருந்திய கண்டத்தையுடைய காளத்தி ஆள்வார் கழல்தான் தேவர்கள் சூடும் மலராகும். அவரை அணுகித் துதிப்பவர்களை அஞ்சாதே என்று ஆட்கொண்டு அருள் செய்வார். ஆதலால் நெஞ்சமே! அவரே கதி என்று காண்பாயாக.
கயிலை
368. அலரோன் நெடுமால் அமரர்கோன் மற்றும்
பலராய்ப் படைத்துக் காத்(து) ஆண்டு - புலர்காலத்(து)
ஒன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான்
குன்றாத சீர்க்கயிலைக் கோ.
தெளிவுரை : குன்றாத சீர்கயிலைக்கோ, பிரமன், திருமால், இந்திரன் ஆகியோரைப் படைத்துக் காத்து ஆண்டு, யுக காலத்தில் அழித்து, மீண்டும் பலவாகி நிற்கின்றான். இது இறைவனுடைய சிறப்பைக் கூறியதாகும்.
காளத்தி
369. கோத்த மலர்வாளி கொண்(டு) அநங்கள் காளத்திக்
கூத்தன்மேல் அன்று குறித்தெய்யப் - பார்த்தலுமே
பண்பொழியாக் கோபத்தீச் சுற்றுதலும் பற்றற்று
வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.
தெளிவுரை : வில்லில் தொடுத்த மலர் அம்புகளைக் கொண்டு காமன் காளத்திக் கூத்தன் மேல் அன்று குறித்து எய்யவும், இறைவன் திருக்கண்களைத் திறந்து பார்த்ததும் குணம் நீங்காத கோபத் தீ சுற்றியது. ஓர் ஆதரவும் இல்லாமல் அவன் வெந்து சாம்பலானான்.
கயிலை
370. வெந்திறல்வேல் பார்த்தற்(கு) அருள்செய்வான் வேண்டியோர்
செந்தறுகண் சேழல் திறம்புரிந்து - வந்தருளும்
கானவனாம் கோலம்யான் காணக் கயிலாயா
வானவர்தங் கோமானே வா.
தெளிவுரை : வெந்திறல்வேல் அருச்சுனனுக்கு, அருள் செய்வதற்காக, ஒப்பற்ற அஞ்சாமையையுடைய பன்றியைக் காரணமாக வைத்து வந்த வேடுவனாம் கோலத்தையாம் காண, கயிலாயா, வானவர்தம் கோமானே வருவாயாக.
காளத்தி
371. வாமான்தேன் வல்ல வயப்போர் விசயனைப்போல்
தாமார் உலகில் தவமுடையார் - தாம்யார்க்கும்
காண்டற்(கு) அரியராய்க் காளத்தி ஆள்வாரைத்
தீண்டத்தாம் பெற்றமையால் சென்று.
தெளிவுரை : தாவிச் செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட தேரை யுடைய வெற்றியை யுடைய போர்த்திறன் கொண்ட அருச்சுனனைப் போல் இவ்வுலகில் தவமுடையர் யாருளர்? நம்மால் காண்டற்கு அரியராய்க் காளத்தி ஆள்வாரை நாம் தீண்டப் பெற்றமையால் சென்று காண்போமாக.
கயிலை
372. சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்கும் சேயராய்
என்றும் அடியார்க்கு முன்னிற்பர் - நன்று
கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார்
இனியவா பத்தர்க்(கு) இவர்.
தெளிவுரை : சென்று வழிபாடு செய்யும் தேவர்களுடைய சிந்தைக்கும் எட்டாதவர். ஆனால் அவர் அடியார்கள் துகிக்கும்போது வந்து முன் நிற்பார். நல்ல கனிகள் நிறைந்த சோலைகளையுடைய கயிலாயத்தில் மேவி இருப்பவராகிய இவர் பக்தர்களுக்கு இனியவர்.
காளத்தி
373. இவரே முதல்தேவர் எல்லார்க்கும் மிக்கார்
இவரல்லர் என்றிருக்க வேண்டா - கவராதே
காதலித்(து) இன்(று) ஏத்துதிரேல் காளத்தி ஆள்வார்நீர்
ஆதரித்த தெய்வமே ஆம்.
தெளிவுரை : முதன்மை அமைந்த தேவர் இவரே. எல்லார்க்கும் மேலானவர் இவரல்லர் என்று இருந்து விட வேண்டா. மனம் வேறுபடாமல் பேரன்பு செய்து இன்றிலிருந்தே வழிபடுவீரானால் நீர் விரும்பிய தேவர் காளத்தி நாதரே என்று அறிவீர்.
கயிலை
374. ஆமென்று நாளை உளஎன்று வாழ்விலே
தாமின்று வீழ்கை தவமன்று - யாமென்றும்
இம்மாய வாழ்வினையே பேணா(து) இருங்கயிலை
அம்மானைச் சேர்வ(து) அறிவு
தெளிவுரை : ஆமென்று, நாளை உளவென்று வாழ்வில் இப்போது வீழ்ந்து அழுந்துதல் தவமாகாது. யாம் எப்போதும் இந்த நிலையில்லாத வாழ்வைப் போற்றிக் கொண்டிராமல் திருக்கயிலை அம்மானை அடைவதே அறிவாகும்.
காளத்தி
375. அறியாம லேனும் அறிந்தேனும் செய்து
செறிநின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று
நன்முகில்சேர் காளத்தி நாதன்  அடிபணிந்து
பொன்முகலி ஆடுதலும் போம்
தெளிவுரை : தெரிந்தோ தெரியாமலோ செய்து மிகுதியாகப் பொருந்தி யிருக்கின்ற தீவினைகள் எல்லாம் நல்ல நெறியில் நின்று மேகங்கள் சேர்கின்ற காளத்தி நாதனது பாதங்களைப் பணிந்து பொன் முகலியாற்றில் நீராடினால் போகும்.
கயிலை
376. போகின்ற மாமுகிலே பொற்கயிலை வெற்பளவும்
ஏகின்(று) எமக்காக எம்பெருமான் - ஏகினால்
உண்ணப் படாநஞ்சம் உண்டாற்(கு) என்
விண்ணப்பம் செய்கண்டாய் வேறு உள்ளுறுநோய்
தெளிவுரை : விண்ணிற் செல்கின்ற மேகங்களே, பொற் கயிலை மலைவரையில் செல்வீர்களாயின், எமக்காக அந்த எம்பெருமானிடம் செல்ல நேர்ந்தால், எவரும் உண்ணுதல் இல்லாத விஷத்தை உண்டவற்கு, என் உள்ளே பொருந்திய காம நோய் பற்றி, தனியாக விண்ணப்பம் செய்வீர்களாக.
காளத்தி
377. வேறேயும் காக்கத் தகுவேனை மெல்லியலாள்
கூறேயும் காளத்திக் கொற்றவனே - ஏறேறும்
அன்பா அடியேற்(கு) அருளா(து) ஒழிகின்ற(து)
என்பாவ மேயன்றோ இன்று.
தெளிவுரை : தனியாகவாயினும் காக்க வேண்டிய நிலையிலுள்ள எனக்கு அருள் செய்யாமல் இருப்பது ஏன்? இது பாவமல்லவா? உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டு காளத்தி மலையை ஆட்சி செய்பவனே, காளை ஊர்தியை உடைய அன்பனே இது உனக்கு நீதியோ என்றபடி.
கயிலை
378. இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக்(கு)
என்றும் இளமதியே எம்பெருமான் - என்றுமென்
உட்காதல் உண்மை உயர்கயிலை மேயாற்குத்
திட்காதே விண்ணப்பம் செய்.
தெளிவுரை : பிறைத் திங்களே! இன்று தொடங்கி எப்போதும் உனக்கு யான் பணி செய்வேன். உயர் கயிலையில் மேவி யிருப்பவருக்கு என் நெஞ்சத்தில் காதலிக்கும் உண்மையை அந்த எம்பெருமானுக்கு அஞ்சாமல் விண்ணப்பம் செய்வாயாக.
காளத்தி
379. செய்ய சடைமுடியென் செல்வனையான் கண்டெனது
கையறவும் உள்மெலிவும் யான்காட்டப் - பையவே
காரேறு பூஞ்சோலைக் காளத்தி ஆள்வார்தம்
போரேறே இத்தெருவே போது.
தெளிவுரை : சிவந்த சடை முடியையுடைய என் செல்வனை யான் கண்டு, எனது துன்பத்தையும் மனமெலிவையும் யான் காட்டுவதற்காக, மேகங்கள் படிகின்ற காளத்தி ஆள்வார்தம் போர்க் காளையே, மெதுவாக இத் தெருவில் போவாயாக.
கயிலை
380. போது நெறியனவே பேசிநின் பொன்வாயால்
ஊதத் தருவன் ஒளிவண்டே காதலால்
கண்டார் வணங்கும் கயிலாயத்(து) எம்பெருமான்
வண்தார்மோந்(து) என்குழற்கே வா.
தெளிவுரை : ஒளி வண்டே! நீ சென்று முறையாகப் பேசி, உன் பொன் வாயால் ஊதத் தருவேன். காதலால் கண்டார் வணங்கும் கயிலாயத்து எம்பெருமானுடைய வளவிய கொன்றை மலர் மாலையை மோந்து என் குழற்கு வருவாயாக.
காளத்தி
381. வாவா மணிவாயால் மாவின் தளிர்கோதிக்
கூவா(து) இருந்த குயிற்பிள்ளாய் - ஓவாதே
பூமாம் பொழிலுடுத்த பொன்மதில் சூழ் காளத்திக்
கோமான் வரஒருகாற் கூவு.
தெளிவுரை : மாந்தளிர் நீங்காமல் இருக்கும் அழகிய மாஞ்சோலையாற் சூழப்பட்ட பொன் மதில்களை யுடைய காளத்திக் கோமான் வர குயிற் பிள்ளாய் ஒருகாற் கூவு. உன் மணி வாயால் மாவின் தளிர் கோதிக் கூவாதிருந்த குயிற் பிள்ளாய் வருவாயாக. ஒரு முறை கூவுவாயாக என முடிக்க.
கயிலை
382. கூவுதலும் பாற்கடலே சென்றவனைக் கூடுகஎன்(று)
ஏவினான் பொற்கயிலை எம்பெருமான் - மேவியசீர்
அன்பால் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால்
தன்பாற்பால் வேண்டுதலும் தான்.
தெளிவுரை : பொற் கயிலை எம்பெருமான் சிறந்த அன்பினால் புலிக்கால் முனிவராகிய வியாக்கிர பாதரின் மகனாகிய உபமன்யு, பாலுக்காக அழுதவுடன், திருப்பாற் கடலுக்குச் சென்று அவனைக் கூடுக என்று ஏவினான்.
காளத்தி
383. தானே உலகாள்வான் தான்கண்ட வாவழக்கம்
ஆனால்மற்(று) ஆரிதனை அன்றென்பார் - வானோர்
களைகண்தா னாய்நின்ற காளத்தி ஆள்வார்
வளைகொண்டார் மால்தந்தார் வந்து.
தெளிவுரை : தேவர்களின் பற்றுக் கோடாக நின்ற காளத்தி மலையை ஆட்சி செய்பவர் வந்து என் கைவளையல் களைக் கொண்டதோடு காம மயக்கத்தையும் தந்தார். தானே உலகை ஆள்வதற்காகத் தான் கண்ட வண்ணம் வழங்குதலை உடையவன் ஆயின் யார் இதனை அன்று என்பார்?
கயிலை
384. வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத்
தந்தோள் வலியினையே தாம்கருதி - அந்தோ
இடந்தார் இடந்திட்(டு) இடார்க்கீழ் எலிபோல்
கிடந்தார் வலியெலாம் கெட்டு.
தெளிவுரை : இராவணன் வந்து வண்கயிலை மால்வரையைத் தன் தோள் வலிமையைப் பெரிதெனக் கருதி, தோண்டினான். அவ்வாறு தோண்டியபோது பொறியிற் அகப்பட்ட எலிபோல் வலியெலாம் கெட்டுக் கிடந்தான். வருந்தினான் என்றபடி.
காளத்தி
385. கெட்ட அரக்கரே வேதியரே கேளீர் கொல்
பட்டதுவும் ஓராது பண்டொருநாள் - ஒட்டக்
கலந்தரனார் காளத்தி யாள்வார்மேல் சென்று
சலந்தரனார் பட்டதுவும் தாம்.
தெளிவுரை : தீய அரக்கர்களே வேதியர்களே கேளுங்கள்! பட்ட பாட்டையும் எண்ணிப் பாராமல் முன்பொரு காலத்தில் நெருங்கக் கூடி காளத்தி நாதன் மீது சென்று சலந்தரன் என்னும் அவுணன் பட்டதையும் கேளீர் எனக் கூட்டுக. வேதியர் என்பது தாருகாவனத்து இருடிகளை.
கயிலை
386. தாம்பட்ட தொன்றும் அறியார்கொல் சார்வரே
காம்புற்ற செந்நெற் கயிலைக் கோன் - பாம்புற்ற
ஆரத்தான் பத்தர்க்(கு) அருகணையார் காலனார்
தூரத்தே போவார் தொழுது.
தெளிவுரை : மூங்கிலில் தோன்றிய செந்நெல் கிடக்கும் கயிலைக் கோன். அவர் பாம்பணிந்த சிவபெருமான். எமன் அவருடைய அடியார்களை நெருங்கமாட்டான். தொழுது தூரத்தே போவான். அவன் முன்பு தான் பட்ட துன்பத்தை அறியானோ என்றபடி. மார்க்கண்டேயர் வரலாற்றை நினைவு கூர்கிறார்.
காளத்தி
387. தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும்
வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால் பணிந்தகலப் போமின்கண்
எத்தனையும் சேய்த்தாக என்று.
தெளிவுரை : குற்றமற்ற சிறப்புக்களையுடைய காளத்தி மன்னனது பழுதில்லாத அன்பர்களைக் கண்டால், அவர்களைப் பணிந்து விலகிச் செல்லுங்கள். எவ்வளவு தூரமாயினும் தொலைவாகச் செல்லுங்கள் என்று எமன் தன் தூதுவர்க்குச் சொல்லுவான்.
கயிலை
388. வென்றைந்தும் காமாதி வேரறுத்து மெல்லவே
ஒன்ற நினைதிரேல் ஒன்றலாம் - சென்றங்கை
மானுடையான் என்னை உடையான் வடகயிலை
தானுடையான் தன்னுடைய தாள்.
தெளிவுரை : ஐம்பொறிகளையும் வெற்றி கொண்டு, காமம் முதலிய அறுபகைகளையும் வேரோடு களைந்து, மெதுவாகப் பொருந்த நினைந் தீர்களானால் போய்ச் சேரலாம். (நினைதிரேல் தாள் ஒன்றலாம் என்க.) கையில் மானை ஏந்தியவனும் என்னை ஆட்கொண்டவனும் வட கயிலையை இருப்பிடமாகக் கொண்டவனுமான அவனைக் காணுங்கள் என்று அவனது தாளின் சிறப்பைக் கூறினார்.
389. தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில்
தாளொன்றால் அண்டங் கடந்துருவித் - தோளொன்றால்
திக்கனைத்தும் போர்க்குந் திறற்காளி காளத்தி
நக்கனைத்தான் கண்ட நடம்.
தெளிவுரை : திருக்காளத்தியில் எழுந்தருளிய சிரிப்புக்கு இடமாகிய சிவபெருமான் காளியோடு நடனம் ஆடும்போது, பாதம் ஒன்றால் பாதாளம் ஊடுருவ, தண்விசும்பில் தாள் ஒன்றால் அண்டம் கடந்துருவி, தோள் ஒன்றால் திக்கனைத்தும் போர்க்கும்.
சிவபெருமான் காளியோடு ஆடிய நடனக் காட்சியை விவரித்துள்ளார் ஆசிரியர்.
கயிலை
390. நடமாடும் சங்கரன்தாள் நான்முகனும் காணான்
படமாடு பாம்பணையான் காணான் - விடமேவும்
காரேறு கண்டன் கயிலாயன் தன் உருவை
யாரே அறிவார் இசைந்து.
தெளிவுரை : நடனமாடும் சங்கரனுடைய பாதத்தைப் பிரமனும், காணவில்லை; படமாடுகின்ற பாம்பைப் படுக்கையாகவுடைய திருமாலும் காணவில்லை. அப்படியிருக்க நஞ்சு பொருந்திய கருநிறங் கொண்ட கழுத்தையுடைய கயிலாய நாதனுடைய உருவை யார் இசைந்து அறிவார்?
காளத்தி
391. இசையும்தன் கோலத்தை யான்காண வேண்டி
வசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக்
காட்டுமேல் காட்டிக் கலந்தென்னைத் தன்னோடும்
கூட்டுமேல் கூடலே கூடு.
தெளிவுரை : ஒரு பெண் கூடல் இழைக்கும் போது சொல்வது இது, கூடல் - மணலில் சுழித்துப் பார்க்கும் நிமித்தம். கூடற் சுழியே நீ கூடுவாறயாக என்று வேண்டிக் கொள்வது, காளத்தி நாதன் தன் கோலத்தை யான் காண வேண்டிக் காட்டு. மேல், காட்டிக் கலந்தென்னைத் தன்னோடும் கூட்டு மேல் கூடலே கூடு என்கிறாள்.
கயிலை
392. கூடி யிருந்து பிறர்செய்யும் குற்றங்கள்
நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடி
வடகயிலை யேத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில்
அட(கு) அயில ஆரமுதை விட்டு.
தெளிவுரை : கூடியிருந்து, பிறர் செய்யும் குற்றங்களை மட்டும் நாடி, தம் குற்றங்களை நாடாமல் வாடி, வட கயிலையை ஏத்தாமல் வாழ வேண்டுமானால் அருமையான அமுதத்தைவிட்டு இலையை உண்பாராக.
காளத்தி
393. விட்டாவி போக உடல்கிடந்து வெந்தீயில்
பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாதாம்
கள்ளலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்ற
வள்ளலைச் சென் றேத்த மனம்.
தெளிவுரை : உயிர் விட்டுப் போக, உடல் தனியாகக் கிடந்து வெம்மையான தீயில் பட்டு எரிவதைப் பார்த்தும், தேன் சிந்தும் பூஞ்சோலைகள் நிறைந்த காளத்தி மலையில் கோயில் கொண்டிருக்கும் வள்ளலைச் சென்று மனம் போற்றவில்லையே என்று ஏங்குகிறார்.
கயிலை
394. மனமுற்றும் மையலாய் மாதரார் தங்கள்
கனமுற்றும் காமத்தே வீழ்வர் - புனமுற்(று)
இனக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான்
தனக்குறவு செய்கலார் தாழ்ந்து.
தெளிவுரை : மனம் முழுவதும் மையலாய் மாதர்கள் தங்கள் பெருத்த காமத்தில் வீழ்வார்கள். புனத்திற்குச் சென்று கூட்டமான குறவர்கள் வழிபாடு செய்யும் பெரிய கயிலையில் மேவி யிருக்கின்ற இறைவனுக்கு வணங்கி வழிபாடு செய்யவில்லையே என ஏங்குகிறார்.
காளத்தி
395. தாழ்ந்த சடையும் தவளத் திருநீறும்
சூழ்ந்த புலியதளும் சூழ்அரவும் - சேர்ந்து
நெருக்கிவா னோர்இறைஞ்சும் காளத்தி யாள்வார்க்(கு)
இருக்குமா கோலங்கள் ஏற்று.
தெளிவுரை : நீண்டு தொங்குகின்ற சடையும், வெண்மையான திருநீறும், இடையில் கட்டியுள்ள புலித் தோலும், சூழ்ந்துள்ள பாம்பும் சேர்ந்து, நெருங்கித் தேவர்கள் வணங்குகின்ற காளத்தி மலையை ஆட்சி செய்யும் எம்பெருமானுக்கு அழகாகத் தோற்றமளிக்கும்.
கயிலை
396. ஏற்றின் மணியே அமையாதோ ஈர்ஞ்சடைமேல்
வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ - ஆற்றருவி
கன்மேற்பட் டார்க்கும் கயிலாயத்(து) எம்பெருமான்
என்மேற் படைவிடுப்பாற்(கு) ஈங்கு.
தெளிவுரை : என்மேல் மலர் அம்புகளைப் பெய்யும் காமனுக்கு இறைவனது ஊர்தியாகிய காளையின் மணியே போதாதோ? குளிர்ந்த சடா மகுடத்தின் மேல் கொலு வீற்றிருக்கும் பிறைச் சந்திரனும் வேண்டுமோ? ஆறாகிய அருவிகள் விழும் ஒலியினையுடைய கயிலாயத்து எம்பெருமானும் வேண்டுமோ? காமுற்ற மாதர்க்கு மணியோசையும் நிலவொளியும் துன்பந் தரும் என்க.
காளத்தி
397. ஈங்கேவா என்றருளி என்மனத்தில் எப்பொழுதும்
நீங்காமல் நீவந்து நின்றாலும் - தீங்கை
அடுகின்ற காளத்தி ஆள்வாய் நான் நல்ல
படுகின்ற வண்ணம் பணி.
தெளிவுரை : இங்கே வருவாயாக என்று அருள் செய்து, என் மனத்தில் எப்போதும் நீங்காமல் நீ வந்து நின்றாலும் தீங்கைச் சிதைக்கின்ற காளத்தி மலையானே! நான் வந்து உன்னை வணங்குமாறு செய்வாயாக என்பதாம். எனக்கு நன்மையுண்டாகக் கட்டளையிட்டருள் என்றும் கூறலாம்.
கயிலை
398. பணியாது முன்னிவனைப் பாவியேன் வாளா
கணியாது காலங் கழித்தேன் - அணியும்
கருமா மிடற்றெங் கயிலாயத்(து) எங்கள்
பெருமான(து) இல்லை பிழை.
தெளிவுரை : பாவியேனாகிய நான் முன் இவனைப் பணியாமலும் மதியாமலும் வீணாகக் காலத்தைக் கழித்து விட்டேன். இந்தத் தவறு, அழகாகப் பொருந்தும் கருமையான கழுத்தையுடைய கயிலாயப் பெருமானுடையதன்று. என்னுடையதேயாம் என்க.
காளத்தி
399. பிழைப்புவாய்ப்(பு) ஒன்றறியேன் பித்தேறி னாற்போல்
அழைப்பதே கண்டாய் அடியேன் - அழைத்தாலும்
என்னா தரவேகொண்(டு) இன்பொழில்சூழ் காளத்தி
மன்னா தருவாய் வரம்.
தெளிவுரை : குற்றமும் குணமும் அறியாதவனாய் உள்ளேன். பைத்தியம் பிடித்தவனைப் போல் அடியேன் அழைக்கின்றேன். காண்பாயாக. நான் அழைத்தாலும் என்னுடைய விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இனிய பொழில்கள் சூழ்ந்த காளத்தி மன்னா! வரம் தருவாயாக.
கயிலை
400. வரமாவ(து) எல்லாம் வடகயிலை மன்னும்
பரமாவுன் பாதார விந்தம் - சிரமார
ஏத்திடும்போ தாகவந்(து) என் மனத்தில் எப்பொழுதும்
வைத்திடுநீ வேண்டேன்யான் மற்று.
தெளிவுரை : வடகயிலை மன்னும் மேலானவனே! நான் வேண்டுவது எல்லாம் உன் திருவடித் தாமரையேயாகும். தலையார வணங்கும் போது என் மனத்தில் எப்போதும் உன் திருவடித் தாமரையை வைத்திடு. வேறு எதுவும் வேண்டேன்.
காளத்தி
401. மற்றும் பலபிதற்ற வேண்டாம் மடநெஞ்சே
கற்றைச் சடையண்ணல் காளத்தி - நெற்றிக்கண்
ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்
சோராமல் எப்பொழுதும் சொல்.
தெளிவுரை : மட நெஞ்சே! இன்னும் பல பிதற்ற வேண்டாம். கற்றைச் சடையண்ணல் காளத்தி நெற்றிக்கண் தெவிட்டாத அமுது. அவனுடைய திருநாமமாகிய ஐந்தெழுத்தை மறவாமல் எப்பொழுதும் சொல்வாயாக.
திருச்சிற்றம்பலம்
10. திருஈங்கோய்மலை எழுபது (நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்தது)ஈங்கோய் மலையைப் பற்றிய எழுபது பாடல்களைக் கொண்டிருத்தலின் இப்பெயர் பெற்றது. கொடிய விலங்குகளும் நெடிது வழிபாடு செய்யும் நீர்மையை இவ் அருள் நூல் பெரிதும் விளக்குகின்றது.
திருச்சிற்றம்பலம்
402. அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும் பாய்ந்(து) ஏறி - நொடியுங்கால்
இன்ன(து) என அறியா ஈங்கோயே - ஓங்காரம்
அன்னதென நின்றான் மலை.
தெளிவுரை : உன்னுடைய அடியையும் முடியையும் காண்பதற்காக முறையே திருமாலும் பிரமனும் நிலவுலகையும் ஆகாயத்தையும் ஊடுருவித் தேடியும், கூறுமிடத்து, இன்னது என அறிய முடியாததாக இருக்கின்ற ஈங்கோய், ஓங்காரம் அன்னதென நின்றானது மலையாகும்.
403. அந்தஇள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக்
கொந்தவிழ்தேன் தோய்த்துக் குறமகளிர் - சந்தின்
இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே மேரு
மலைவளைக்கை வில்லி மலை.
தெளிவுரை : அந்த இளைய மான்கன்று தனது கூட்டத்திலிருந்து பிரிந்து விட்டதால் குறமகளிர் சந்தன மரத்தின் இலையில் கொந்தவிழ்த் தேனைத் தோய்த்து வளையலணிந்த தம் கையால் கொடுக்கும் ஈங்கோய் மேருமலையை வில்லாக வளைத்தவரது மலையாகும்.
404. அம்பவள வாய் மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச்
செம்பவளம் தாஎன்னச் சீர்க்குறத்தி - கொம்பின்
இறுதலையி னாற்கிளைக்கும் ஈங்கோயே நம்மேல்
மறுதலைநோய் தீர்ப்பான் மலை.
தெளிவுரை : அழகிய பவளம் போன்ற வாயினையுடைய மகளிர், அம்மானை ஆடுவதற்குத் தம்முடைய தாயைச் செம்பவளம் தா என்று கேட்க சீர் குறத்தி கொம்பின் நுனியால் கிளறுகின்ற ஈங்கோயே, நம்மேல் மறுபடியும் வருகிற பிறவித் துன்பங்களைத் தீர்ப்பவனுடைய மலையாகும்.
405. அரிகரியைக் கண்டவிடத்(து) அச்சலிப்பாய் ஓடப்
பிரிவரிய தன்பிடியைப் பேணிக் - கரிபெரிதும்
கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயே
மையடுத்த கண்டன் மலை.
தெளிவுரை : சிங்கம், யானையைப் பார்த்த போது பயந்து ஓட, பிரிவதற்கு இயலாத பெண் யானையைக் காப்பாற்றி ஆண்யானையானது பெரிதும் துதிக்கையைத் தூக்கிக் கோபங் கொள்ளும் ஈங்கோயே, கருமை நிறம் பொருந்திய கழுத்தை உடையவனது மலையாகும்.
406. அரியும் உழுவையும் ஆளியுமே ஈண்டிப்
பரியிட்டுப் பன்மலர்கொண்(டு) ஏறிச் - சொரிய
எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே கூற்றம்
திரியாமல் செற்றான் சிலம்பு.
தெளிவுரை : சிங்கமும், புலியும், ஆளியும் நெருங்கிப் பரிவாரமாகப் பல மலர்களைக் கொண்டு ஏறிச் சொரிய தீயிலாடும் இறைவன் கண்டு மகிழும் ஈங்கோய், எமன் திரியாமல் அழிந்தான் மலையாகும். ஆளி - யாளி. (பழங்காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் கொடிய விலங்கு வகையைச் சேர்ந்தது.)
407. ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே
வாளி கொடு தொடரும் மாக்குறவர் - கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே நம்மேல்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று.
தெளிவுரை : ஆளி தொடர சிங்கம் தொடர அவ்விடத்தில் உடனே அம்புகளோடு தொடரும் வேடுவர்கள் கொடிய வில்லினால் கொன்றழிக்கும் ஈங்கோய் மலையே, நம்மேல் வர இருக்கும் கொடிய வினைகளைக் கெடுத்து ஒழிப்பவனது மலையாகும்.
408. இடுதினைதின் வேழம் கடியக் குறவர்
வெடிபடு வெங்கவண்கல் ஊன்ற - நெடுநெடென
நீண்டகழை முத்துதிர்க்கும் ஈங்கோயே ஏங்குமணி
பூண்டகழை யேறி பொருப்பு.
தெளிவுரை : பயிரிடப்பட்ட தினையைத் தின்ன வந்த யானையை ஓட்டுவதற்காகக் குறவர் கவண் கொண்டு வீசிய கற்கள் விரைந்து தாக்கியதனால் உயர்ந்த மூங்கில்கள் முத்தை உதிர்க்கும் ஈங்கோய் மலையே, ஒலி செய்கின்ற மணிகளைப் பூண்ட காளை வாகனனது மலையாகும்.
409. ஈன்ற குறமகளிர்க்(கு) ஏழை முதுகுறத்தி
நான்றகறிக் கேறசலை நற்கிழங்(கு) - ஊன்றவைத்(து)
என் அன்னை உண்ணென்(று) எடுத்துரைக்கும் ஈங்கோயே
மின்னன்ன செஞ்சடையான் வெற்பு.
தெளிவுரை : வறிய வயது முதிர்ந்த குறத்தி தான் ஈன்ற குறமகளிர்க்கு உண்பதற்குரிய அசலை என்னும் மீனை கிழங்கோடு சேர்த்து உண் என்று சொல்லும் ஈங்கோய் மலை, மின்னலைப் போன்று ஒளி வீசும் சடையை உடையவனது மலையாகும்.
410. ஈன்ற குழவிக்கு மந்தி இறுவரை மேல்
நான்ற நறவத்தைத் தான்நணுகித் - தோன்ற
விரலால்தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே நம்மேல்
வரலாம்நோய் தீர்ப்பான் மலை.
தெளிவுரை : பிறந்த குட்டிக்குப் பெண் குரங்கு, பிளவுபட்ட மலை மேல் தொங்குகின்ற தேனடையை நெருங்கி, தன் விரலைக் கொண்டு எடுத்த தேனைத் தோய்த் தூட்டும் ஈங்கோய், நம்மேல் வர இருக்கும் துன்பங்களைத் தீர்ப்பவனது மலையாகும்.
411. உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்போய்ப்
பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் - கண்டிருந்த
மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே
பூமயிலி தாதை பொருப்பு.
தெளிவுரை : உண்டு எஞ்சியிருந்த தேனை வண்டுகள் பிணங்கிச் சென்று முன்பிருந்த யாழ் போல் முரல பசுமையான சோலையினிடத்துப் பார்த்த மயில்கள் ஆடி மருங்கு வரும் ஈங்கோய் அழகிய மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகக் கடவுளது தந்தையின் மலையாகும்.
412. ஊடிப் பிடியுறங்க ஒண்கதலி வண்கனிகள்
நாடிக் களிறு நயந்தெடுத்துக் - கூடிக்
குணமருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே வானோர்
குணமருட்டும் கோளரவன் குன்று.
தெளிவுரை : பெண் யானை பிணங்கி உறங்க, ஆண்யானை யானது சென்று ஒளி பொருந்திய வாழையின் வளப்ப மிக்க பழங்களை விரும்பி எடுத்து வந்து கூடி, பிடியின் ஊடலைப் பேதித்துக் கொண்டாடும் ஈங்கோய் மலையே, தேவர்களின் குணமருட்டும் பாம்பை மாலையாகக் கொண்டவனது மலையாகும்.
413. எய்யத் தொடுத்தோன் குறத்திநோக்(கு) ஏற்றதேனக்
கையிற் கணைகளைந்து கன்னிமான் - பையப்போ
என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கெயில்கள்
சென்றன்று வென்றான் சிலம்பு.
தெளிவுரை : எய்வதற்குக் கணையைத் தொடுத்த வேடன் குறத்தியின் பார்வைக்கு ஏற்ற தென்று, கணையை நீக்கி விட்டு, ஈனாத இளமானை மெதுவாகப் போ என்று பாவனை செய்கின்ற ஈங்கோய் மலையே, தொங்குகின்ற மதில்களைச் சென்று அன்று வென்றவனுடைய மலையாகும்.
414. ஏழை இளமாதே என்னொடுநீ போதென்று
கூழை முதுவேடன் கொண்டுபோய் - வேழ
இனைக்குவால் வீட்டுவிக்கும் ஈங்கோயே நந்தம்
வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு.
தெளிவுரை :  ஏழை இளமாதே என்னோடு நீ வருவாயாக என்று வயது முதிர்ந்த வேடன் ஒருவன் கொண்டு போய் யானைக் கூட்டத்திலிருந்து விடுவித்த ஈங்கோயே, நம்முடைய வினைத் தொகுதியை அழிப்பவனது மலையாகும். யானக் கூட்டத்தில், அகப்பட்டுக் கொண்ட இளமாது ஒருத்தியைக் கிழவேடன் ஒருவன் காத்த செய்தி கூறப்படுகிறது.
415. ஏனம் உழுத புழுதி இனமணியைக்
கானவர்தம் மக்கள் கனலென்னக் - கூனல்
இறுக்கங் கதிர்வெதுப்பும் ஈங்கோயே நம்மேல்
மறுக்கங்கள் தீர்ப்பான் மலை.
தெளிவுரை : காட்டுப் பன்றி உழுத புழுதியில் கிடந்த சிறந்த மாணிக்கக் கற்களை வேடர்களது மக்கள் நெருப்பென்று, வளைந்த சோளக் கதிர்களை வேக வைக்கும் ஈங்கோயே, நம் மேல் வரவிருக்கும் கவலைகளைப் போக்குவானது மலையாகும்.
416. ஏனங் கிளைத்த இனபவள மாமணிகள்
கானல் எரிபரப்பக் கண்டஞ்சி - யானை
இனமிரிய முல்லைநகும் ஈங்கோயே நம்மேல்
வினையிரியச் செற்றுகந்தான் வெற்பு.
தெளிவுரை : காட்டுப் பன்றிகள் தோண்டியெடுத்த மிக்க பவளப் பெருமணிகள் நெருப்புப் போல, ஒளி வீசக் கண்டு அஞ்சி யானைக் கூட்டங்கள் பிரிந்து செல்ல, முல்லை மலர் எள்ளி நகையாடினாற் போல் காட்சி யளிக்கும் ஈங்கோய் மலையானது நம்மேல் வரக் கடவதாகிய வினைகள் கெடுமாறு செய்யும் இறைவனது மலையாகும்.
417. ஒருகணையும் கேழல் உயிர்செகுத்துக் கையில்
இருகணையும் ஆனைமேல் எய்ய - அருகணையும்
ஆளரிதான் ஓட அரிவெருவும் ஈங்கோயே
கோளரிக்கும் காண்பரியான் குன்று.
தெளிவுரை : ஒரு கணையால் பன்றியினது உயிரைப் போக்கி, கையிலுள்ள இரண்டாவது கணையை யானைமேல் விடுக்க அப்போது அருகில் வந்த சிங்கம் பயந்து ஓடும், ஈங்கோய் மலை, விரதத்தையுடைய திருமாலுக்கும் காண்பதற்கு அரிய முடியாதவனுடைய மலையாகும்.
418. ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவத் தண்போதைத்
தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் - மூங்கில்
தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே சங்கக்
குழையிறுத்த காதுடையான் குன்று.
தெளிவுரை : உயர்ந்து வளர்ந்திருந்த இலவமரத்தின் குளிர்ந்த மலரை, தொங்குகின்ற கொள்ளி என்று நினைத்த ஆண் குரங்கு மூங்கில் தழையை ஒடித்து வீசுகின்ற ஈங்கோய் மலையானது சங்கினாலாகிய குண்டலங்களைக் காதில் அணிந்தவனுடைய மலையாகும்.
419. ஓடும் முகிலை உகிரால் இறவூன்றி
மாடுபுக வான்கை மிகமடுத்து - நீடருவி
மாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயே
கோச்சீயம் காண்பரியான் குன்று.
தெளிவுரை : வானத்தில் செல்லுகின்ற மேகத்தை நகத்தால் அறுத்து உண்ண வானத்தில் கைநீட்டிய சிங்கம், அருவி நீரை அருந்தி மனங்களிக்கும் ஈங்கோய், நரசிங்க மூர்த்தியாகிய திருமால் காண முடியாத மலையாகும்.
420. கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர்
உண்டு குளிர்ந்திலஎன் றூடிப்போய்க் - கொண்டல்
இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே நான்கு
மறைக்கீறு கண்டான் மலை.
தெளிவுரை : பார்த்த பழங்களையெல்லாம் உண்ட பெண் குரங்கு, கருஞ் சுனை நீரைக் குடித்து, மனங்குளிர வில்லை என்று பிணங்கிச் சென்று மேகத்தைச் சிறிது கிழித்துக் குடிக்கும் ஈங்கோய், நான்கு வேதங்களுக்கும் முடிவானவனது மலையாகும்.
421. கருங்களிற்றின் வெண்கொம்பால் கல்லுரல்வாய் நல்லார்
பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப - வருங்குறவன்
கைக்கொணரும் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே
மைக்கொணரும் கண்டன் மலை.
தெளிவுரை : கரிய ஆண்யானையின் வெண்மையான தந்தத்தால் கல் உரலில் மகளிர் தினைமாவை இடிப்ப, குறவன் கையில் கொண்டு வந்த செந்தேனை மாவோடு கலந்துண்ணும் ஈங்கோய், நீல கண்டனது மலையாகும்.
422. கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்க
நனைய கலத்துரத்தில் ஏந்தி - மனைகள்
வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே பாங்கார்
குருஅரும்பு செஞ்சடையான் குன்று.
தெளிவுரை : மிகுதியான பலாப் பழங்களைக் கொண்ட கல்லிலையர் ஒன்று கூடி, தேனைப் பாத்திரங்களில் ஏந்தி வீட்டுக்கு வரும் விருந்தினர்களை எதிர்பார்க்கும் ஈங்கோய், பாங்கார் குராமலர்கள் மலருகின்ற செஞ்சடையானது குன்றாகும்.
423. கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச்
சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு - மடக்கிளிகள்
கீதம் தெரிந்துரைக்கும் ஈங்கோயே ஆல்கீழ்நால்
வேதம் தெரிந்துரைப்பான் வெற்பு.
தெளிவுரை : மதம் பொருந்திய ஆண்யானை உறங்க, கருநிற வண்டுகள் ஆரவாரஞ் செய்ய, ஒளி தங்கிய குண்டலத்தை அணிந்த பெண்களின் பாட்டு எழுதலைக் கேட்டு மடக் கிளிகள் கீதம் தெரிந்துரைக்கும் ஈங்கோய், கல்லால மரத்தின் கீழ் நால் வேதத்தைத் தெரிந்துரைப்பானது மலையாகும்.
424. கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம்
இறுத்துக்கை நீட்டும்ஈங் கோயே - செறுத்த
கடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்த
விடமிடற்றி னான்மருவும் வெற்பு.
தெளிவுரை : கறுத்த முலைகளையுடைய சூல்கொண்ட பெண் யானைக்கு, கரிய ஆண்யானை சந்தனத்தைப் பறித்து, கை நீட்டும் ஈங்கோய், கோபங் கொண்ட மதம் பொருந்திய பெரிய யானையின் தோலைப் போர்த்த நீல கண்டன் பொருந்தி யிருக்கும் மலையாகும்.
425. கங்குல் இரைதேரும் காகோ தரங்கேழற்
கொம்பி னிடைக்கிடந்த கூர்மணியைப் - பொங்கி
உருமென்று புற்றடையும் ஈங்கோயே காமன்
வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு.
தெளிவுரை : இரவில் இரைதேடும் பாம்பு பன்றிக் கொம்பின் இடைக் கிடந்த கூர் மணியை, கோபித்த இடியென்று அஞ்சிப் புற்றுக்குள் செல்லும் ஈங்கோய் மலையானது, மன்மதன் அச்சத்தை யடைய, கண் சிவந்தவனது மலையாகும். நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்த செய்தி சொல்லப்படுகிறது.
426. கலவிக் களிறசைந்த காற்றெங்கும் காணா(து)
இலைகைக்கொண் டேந்திக்கால் வீச - உலவிச்சென்(று)
ஒண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காய
வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு.
தெளிவுரை : கலவி செய்தலையுடைய ஆண்யானை பல இடங்களிலும் சுற்றியலைந்து காணாமல் இலையைக்கைக் கொண்டு காற்றுண்டாகுமாறு வீச, பெண் யானை காற்றை யடைந்து மகிழும் ஈங்கோய், சிறப்புப் பொருந்திய வெண்ணீறு அணிந்த இறைவன் பொருந்தியுள்ள மலையாகும்.
427. கன்னிப் பிடிமுதுகிற் கப்புருவம் உட்பருகி
அன்னைக் குடிவர லாறஞ்சியே - பின்னரே
ஏன்தருக்கி மாதவம்செய் ஈங்கோயே நீங்காத
மான்தரித்த கையான் மலை.
தெளிவுரை : கன்னிப் பிடி முதுகிற்கு அப்பருவம் உட்பருகி, அன்னைக் குடிவரலாறு அஞ்சிப் பிறகு தருக்கி மாதவர் செய் ஈங்கோய், எப்போதும் கையில் மான் கன்றைக் கையில் ஏந்திய சிவபெருமானது மலையாகும்.
428. கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை
கொள்ளென்(று) அழைத்த குரல்கேட்டுத் - துள்ளி
இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே நந்தம்
மனக்கவலை தீர்ப்பான் மலை.
தெளிவுரை : கள்ளம் நிறைந்த முதுமை பொருந்திய வேடர்கள் வாழும் காட்டில் மிருக வேட்டை மேற் கொள்வாயாக என்ற குரல் கேட்டுத் துள்ளிப் பாய்ந்தோடும் ஈங்கோய் நம்முடைய மனக் கவலையைத் தீர்ப்பவனாகிய சிவபெருமானுடைய மலையாகும்.
429. கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக்
கொல்லை எழுந்த கொழும்புறவின் - முல்லையங்கள்
பல்லரும்பு மொய்த்தீனும் ஈங்கோயே மூவெயிலும்
கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.
தெளிவுரை : மலைச்சாரலில் உள்ள கொல்லையில் மேய்ந்து கார்காலத்தில் பூக்கும் கொன்றை மாலையை அணிந்து கொல்லை யெழுந்த வளமான காட்டில் முல்லை அரும்பில் மொய்த்து ஈனும் ஈங்கோய், மூன்று மதில்களும் அழிந்தொழிய கணை தொடுத்தவனுடைய மலையாகும்.
430. கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட
எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி - வல்லே
இருந்துகிரால் கற்கிளைக்கும் ஈங்கோயே மேனிப்
பொருந்தவராப் பூண்டான் பொருப்பு.
தெளிவுரை : கல்வி அறிவில்லாத குரங்கு, பளிங்குக் கல்லில் வேறிடத்தில் உள்ள கனியின் நிழலைக் காட்ட எல்லாக் குரங்குகளும் ஒன்று கூடி நகத்தினால் கல்லைப் பறிக்கும் ஈங்கோய் மலையானது உடலில் பொருந்த பாம்பை அணிந்தவனது மலையாகும்.
431. கண்கொண்(டு) அவிர்மணியின் நாப்பண் கருங்கேழல்
வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் - தண்கோ(டு)
இளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே வேதம்
விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு.
தெளிவுரை : கண் கொண்டு விளங்குகின்ற மணியின் நடுவில் கரிய பன்றியின் வெண்மையான கொம்பு வீழ்ந்த பெருமை மிகுந்த சாரல் குளிர்ந்த கொம்பு போன்ற பிறைச் சந்திரன் சேர்ந்த ஆகாயத்தை ஒத்திருக்கும் ஈங்கோய், வேதத்தை விளம்பிய பிறையணிந்தவனை ஒத்திருக்கும் மலையாகும்.
432. காந்தளம் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞை
கூந்தல் விரித்துடனே கூத்தாடச் - சாய்ந்திரங்கி
ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
கார்க்கொன்றை ஏன்றான் கடறு.
தெளிவுரை : காந்தள் கூத்தாடுமாறு கையைக் காட்ட, களிப்பு மிக்க மயில் தோகையை விரித்துக் கூத்தாடச் சாய்ந்து தாழ்ந்து அழகிய கொன்றை மரம் பொன் கொடுப்பதைப் போல மலர்ந்து விளங்கும் ஈங்கோய் செஞ்சடைமேல் கார்க்கொன்றையை ஏற்றுக் கொண்டவனது காடு ஆகும்.
433. குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குத்தி
நறவமாக் கஞ்சகங்கள் நாடிச் - சிறுகுறவர்
கைந்நீட்டி உண்ணக் களித்துவக்கும் ஈங்கோயே
மைந்நீட்டுங் கண்டன் மலை.
தெளிவுரை : குறப் பெண்கள் ஒன்று சேர்ந்து செழிப்பான தினையைக் குத்தி, தேன் கலந்து மாவினால் செய்த பண்டத்தை விரும்பிக் குறச் சிறுவர்கள் கை நீட்டி உண்ண மகிழ்ச்சி பொங்கும் ஈங்கோய் நீல கண்டனது மலையாகும்.
434. கூழை முதுமந்தி கோல்கொண்டு தேன்பாய
ஏழை இளமந்தி சென்றிருந்து - வாழை
இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே இஞ்சி
சிலையால்தான் செற்றான் சிலம்பு.
தெளிவுரை : குட்டையான கிழப்பெண் குரங்கு கோல் கொண்டு தேன் அடையைக் குத்த அறிவற்ற இளமந்தி சென்று, இரந்து வாழையிலையில் தேன் உண்டு மகிழ்கின்ற ஈங்கோய் திரிபுரங்களை வில்லால் அழித்தவனது மலையாகும்.
435. கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனை
மல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண்(டு) ஒல்லை
இருங்கைக் களிறேறும் ஈங்கோயே மேல்நோய்
வருங்கைக் களைவான் மலை.
தெளிவுரை : கொல்லையிலுள்ள இளவேங்கை மரத்தினது கொத்தை ஒடித்துக்கொண்டு, சுனை நீரை மஞ்சனமா நாட்டிக் கொண்டு பெரிய துதிக்கையினையுடைய ஆண்யானை விரைவில் ஏறிவரும் ஈங்கோய், இனிவரும் பிறவி நோயைக் களைவானது மலையாகும்.
436. கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர்
கவ்வைக் கடிபிடிக்கும் காதன்மையால் - செவ்வை
எறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே அன்பர்
குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று.
தெளிவுரை : கொவ்வைக் கனி போன்ற வாயினையுடைய குற மகளிர் கூந்தலில் சேர்ந்த மலரின் மணத்தைப் பிடிக்கும் அன்புடைமையால் செவ்வை எறித்த மலர் கொண்டு விடும் ஈங்கோய் அன்பர்கள் குறித்த வரத்தைக் கொடுப்பவனது மலையாகும்.
437. கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல்
படுகுழிகள் கல்லுதல்பார்த்(து) அஞ்சி - நெடுநாகம்
தண்டூன்றிச் செல்லும்நீர் ஈங்கோயே தாழ்சடைமேல்
வண்டூன்றும் தாரான் மலை.
தெளிவுரை : வளைந்த வில்லையுடைய வேடர் தினைக் கொல்லைக்குள் புகாமல் படுகுழிகள் தோண்டுவதைக் கண்டு அஞ்சிப் பெரிய யானை குழியிருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காகத் தடியினால் ஊன்றிப் பார்த்துக் கொண்டு செல்லும் ஈங்கோய், தாழ் சடைமேல் வண்டுகள் மொய்க்கும் மாலைகளையுடைய வனது மலையாகும்.
438. கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர்
வேங்கைமணி நீழல் விளையாடி - வேங்கை
வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்கு
வரவதனைக் காப்பான் மலை.
தெளிவுரை : கோங்கின் அரும்பைத் தோல்வியுறச் செய்த கொங்கைகளையுடைய குறமகளிர் வேங்கை மரத்தினது அழகிய நீழலில் விளையாடி, வேங்கைப் புலி வருவதைக் கண்டு ஓடும் ஈங்கோய், தீங்கு வருவதை வராமல் காப்பவனது மலையாகும்.
439. சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை
மந்த மடப்பிடியின் வாய்க்கொடுப்ப - வந்ததன்
கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே தேங்காதே
விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு.
தெளிவுரை : சந்தனப் பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்து ஆண் யானையானது, மந்தத் தன்மையுள்ள பெண் யானையின் வாய் கொடுக்கவும், வந்து அதன் கண் களிக்கத் தான் களிக்கும் ஈங்கோய், காலந் தாழ்த்தாமல் விண்ணுலகத்தவர்கள் மகிழ்ச்சி யடைய நஞ்சை உண்டவனது மலையாகும்.
440. சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து
கொந்தியினி துண்ணக் குறமகளிர் - மந்தி
இனமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே வெற்பின்
வளமகளிர் பாகன் மலை.
தெளிவுரை : குறமகளிர் சந்தன மரத்தின் இலையில் குளிர்ந்த தினை மாவில் தேன் கலந்து எடுத்து இனிதுண்ண, பெண் குரங்கு இளமகளிர் வாயில் கொடுத்து, தானும் உண்ணும் ஈங்கோய், இமயமலையின் மகளாகிய உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனது மலையாகும்.
441. சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி
சேரத் தருக்கி மதுக்கலந்து - வீரத்
தமரினிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே இன்பக்
குமரன்முது தாதையார் குன்று.
தெளிவுரை : மலைச் சாரல் குறத்தியர்கள் குளிர்ந்த தந்தத்தால் வெண்மையான அசோக மரத்தருகில் மதுவைக் கலந்து வீரம் பொருந்திய தம் மலர்களோடு இனிதாக உண்ணுகின்ற சீர் ஈங்கோய் இன்பக் குமரன் ஆகிய முருகக் கடவுளது பழைமை பொருந்திய தந்தை யாராகிய சிவபெருமானது குன்று ஆகும்.
442. தாயோங்கித் தாமடரும் தண்சாரல் ஒண்கானம்
வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் - தியோங்கிக்
கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கொன்றைத் தாரான் வரை.
தெளிவுரை : தாவி யோங்கி தாம் நெருங்கி வளரும் குளிர்ந்த சாரலையுடைய ஒளி பொருந்திய காடு, மூங்கில் உயர்ந்து முத்தம் உதிர்ந்து தீயை உண்டாக்கும் கணுக்கள் உராய்ந்து தீயை உண்டாக்கும் ஈங்கோய், செஞ்சடை மேல் வண் கொன்றைத் தாரை அணிந்தவனது மலையாகும்.
443. செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக்(கு) அஞ்சிப்
பிடியட்ட மாக்களிறு பேர்ந்து - கடம்முட்டி
என்னேசீ என்னுஞ்சீர் ஈங்கோயே ஏந்தழலிற்
பொன்னேர் அனையான் பொருப்பு.
தெளிவுரை : செடிகள் மோத சிங்கத்தின் கோபத் தீக்கு அஞ்சி பெண் யானை மோத ஆண்யானை பெயர்ந்து காட்டை முட்டி சீ என வெறுக்கும் ஈங்கோய், கையில் ஏந்திய தீயில் பொன்னின் அழகிற்கு ஒப்பானவனது மலையாகும்.
444. சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப்
புனைநீடு பொன்னிறத்த வண்டு - மனைநீடி
மன்னி மணம்புணரும் ஈங்கோயே மாமதியம்
சென்னி அணிந்தான் சிலம்பு.
தெளிவுரை : சுனையிற் பொருந்திய தாமரை மலரின் மகரந்தப் பொடியைத் துழாவி ஒளி புனைந்து பொன்னிற மடைந்த வண்டு வீடு திரும்பிப் பொருந்தி மணம் புணரும் ஈங்கோய், பிறைச் சந்திரனைத் தலையில் அணிந்த சிவபிரானது மலையாகும்.
445. செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து
வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி - பந்தியாத்
தேக்கிலைகள் இட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே
மாக்கலைகள் வைத்தான் மலை.
தெளிவுரை : செந்தினையின் வெண்மையான மாவைப் பச்சைத் தேனால் குழைத்து வந்த விருந்தினருக்கு அளிக்கும் மணிக் குறத்தி வரிசையாகத் தேக்கிலையில் வைத்து உபசரிக்கும் ஈங்கோய், சிறந்த அறிவுக் கலைகளை வைத்தவனது மலையாகும்.
446. தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்
இடம்புகுந்தங்(கு) இன்நறவம் மாந்தி - உடன்கலந்து
மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே
கோக்குரவை ஆடிகொழுங் குன்று.
தெளிவுரை : பெரிய சுனையில் நீராடிய கொங்கைக் குறமகளிர் தங்கள் இருப்பிடம் சேர்ந்து வீட்டிலிருந்த இனிய தேனைப் பருகி , ஒன்று சேர்ந்து, மகளிர் கை கோத்தாடும் குரவைக் கூத்தை ஆடி மகிழ்ந்து வரும் ஈங்கோய், ஊழிக் கூத்தை ஆடும் பெருமானது வளமுள்ள குன்றாகும்.
447. தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள்தகையத்
தாமரையில் பாய்ந்துகளும் தண்புறவில் - தாமரையின்
ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே எவ்வுயிர்க்கும்
வாட்டங்கள் தீர்ப்பான் மலை.
தெளிவுரை : தாவுகின்ற மானின் காலைத் தடுத்த, தாமரைக் கொடிகள் காலைத் தடுக்க, தாமரையில் பாய்ந்து உகளும் குளிர்ந்த காட்டில் மான் கூட்டத்தால் புலிகள் சிதறி ஓடுகின்ற ஈங்கோய், எல்லா உயிர்களின் வருத்தங்களையும் தீர்ப்பவனது மலையாகும்.
448. தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய்
வள்ளவட்டப் பாழி மடலேறி - வெள்ளகட்ட
காராமை கண்படுக்கும் ஈங்கோயே வெங்கூற்றைச்
சேராமல் செற்றான் சிலம்பு.
தெளிவுரை : தெளிந்த நடுவிடத்தையுடைய பூஞ்சுனையை உடையதாய், தாமரை மலரின் கிண்ணம் போன்ற வட்ட வடிவமான பெரிய மடலில் ஏறி, வெண்மையான வயிற்றை உடைய கரிய ஆமை கண் உறங்கும் ஈங்கோய், கொடிய எமனை வராமல் அழித்தவனது மலையாகும்.
449. தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு
தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து - வான்குணங்கள்
பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு.
தெளிவுரை : இனிமை மிகுந்த பலாவின் சிறந்த சுளைகளை சிவந்த முகத்தையுடைய பெண் குரங்கு கொண்டு வந்து, தம் குட்டிகளின் கையிற் கொடுத்து, சிறந்த குணங்களைப் பாராட்டி ஊட்டுகின்ற சிறப்புடைய ஈங்கோய், பாங்காய் அமரர்கள் சீராட்ட நின்றானது மலையாகும். சீராட்ட - சிறப்புச் செய்ய.
450. தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின்
கானமர்கற் பேரழகு கண்குளிர - மேனின்(று)
அருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே வானோர்
வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு.
தெளிவுரை : தேன் பொருந்திய பூஞ்சுனைகளில் நீராடி, செழுமையான சந்தன மரங்கள் நிறைந்த நாட்டின் பேரழகைக் கண் குளிரக் கண்டு மேல் நின்று அருவிகள் வந்து விழுகின்றதைக் காணும் காட்சிகளை உடைய ஈங்கோய் தேவர்கள் அஞ்சிய கடல் நஞ்சினை உண்டவனது மலையாகும்.
451. தோகை மயிலினங்கள் சூழ்ந்து மணிவரைமேல்
ஓகை செறிஆயத் தோடாட - நாகம்
இனவளையில் புக்கொளிக்கும் ஈங்கோயே நம்மேல்
வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு.
தெளிவுரை : தோகையை யுடைய மயில் கூட்டங்கள் சூழ்ந்து, அழகிய மலையின் மேல் உவகை பொருந்திய பெண்கள் கூட்டத்தோடு ஆட, பாம்பு வளையிற் புகுந்து, ஒளிந்துக் கொள்ளும் ஈங்கோய், நம்மேல் வினை சூழ்ந்து கொள்ள அவைகளைப் போக்கி மகிழ்ந்தவனது மலையாகும்.
452. நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம்
இறவில் இயங்குவான் பார்த்துக் - குறவர்
இரைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே நங்கை
விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு.
தெளிவுரை : தேனை மிகுதியாக உண்டு, நள்ளிரவில் பன்றி, தினைப்புனத்தில் நடமாடுவதைக் கண்டு குறவர் ஒலி செய்து, சுற்றிலும் வலையைக் கட்டியிருக்கும் ஈங்கோய், கங்கையின் மணம் பொருந்திய துளிகள் சிந்துகின்ற செஞ்சடையான் மலையாகும்.
453. நாக முழைநுழைந்த நாகம்போய் நல்வனத்தில்
நாகம் விழுங்க நடுக்குற்று - நாகந்தான்
மாக்கையால் மஞ்சுரிக்கும் ஈங்கோயே ஓங்கியசெந்
தீக்கையால் ஏந்தி சிலம்பு.
தெளிவுரை : மலைப்பாம்பு வளையில் நுழைந்த யானை, வனத்தில் பாம்பு விழுங்குவதைக் கண்டு நடுக்குற்று, யானையானது தனது பெரிய துதிக்கையை உயர்த்தி முகிலை உறிஞ்சிக் குடிக்கும் ஈங்கோய், ஓங்கிய செந்தீயைக் கையில் ஏந்துகிற சிவபெருமானது மலையாகும்.
454. நாகங் களிறுநு(ங்)க நல்லுழுவை தாமரையின்
ஆகந் தழுவி அசைவெய்த - மேகம்
கருவிடைக்க ணீர்சோரும் ஈங்கோயே ஓங்கு
பொருவிடைக்க ணூர்வான் பொருப்பு.
தெளிவுரை : ஆண்யானை தாக்க, புலி பயந்து தாமரையின் ஆகம் தழுவி, தளர்ச்சி யடைய, மேகம் கண்ணீர் சொரியும் ஈங்கோய், போர் செய்யும் தன்மையுள்ள காளையை ஊர்தியாக உடையவனது மலையாகும்.
455. பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை
கணவ னிடந்திட்ட கட்டி - உணவேண்டி
எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கங்கை ஏற்றான் மலை.
தெளிவுரை : பாம்புப் புற்றிலுள்ள புற்றாஞ் சோற்றை ஆண்கரடி எடுக்க அதை உண்ண வேண்டி பெண் கரடி அழகிய கையை ஏந்திக் கொண்டிருக்கும் ஈங்கோய், செஞ்சடைமேல் வளமுடைய கங்கையாற்றை ஏற்றுக் கொண்டிருக்கும் சிவபெருமானது மலையாகும்.
456. பன்றி பருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித்
தென்றி மணிகிடப்பத் தீயென்று - கன்றிக்
கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே வானோர்
மருவரியான் மன்னும் மலை.
தெளிவுரை : பன்றியின் பெரிய கொம்பினால் பூமியை உழுததால் ஏற்பட்ட புழுதியில் கிடந்த மணிகளைத் தீயென்று வருந்தி யானை பயந்து காட்டிற்குச் செல்லும் ஈங்கோய், தேவர்கள் பொருந்துவதற்கு ஒண்ணாதவன் நிலை பெற்றிருக்கும் மலையாகும்.
457. பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று
சீறி மருப்பொசித்த செம்முகமாத் - தேறிக்கொண்(டு)
எல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும்
வில்லே கொடுவெகுண்டான் வெற்பு.
தெளிவுரை : பாறையின் மீது தன் நிழலைக் கண்டு ஆண் யானை என்று கோபித்துக் கொம்பை ஒடித்த செம்முக யானை மனந்தேறிச் சென்ற போது பிடி ஏளனம் செய்யும் ஈங்கோய், திரிபுரங்களை வில்லைக் கொண்டு சினந்தவனது மலையாகும்.
458. பிடிபிரிந்த வேழம் பெருந்திசைநான் கோடிப்
படிமுகிலைப் பல்காலும் பார்த்திட்(டு) - இடரா
இருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே வானோர்
குருவருட்குன் றாய்நின்றான் குன்று.
தெளிவுரை : தனது பெண் யானையைப் பிரிந்த ஆண்யானை நான்கு திசைகளிலும் தேடியலைந்து மலையில் படிகின்ற மேகத்தைப் பல தடவை பார்த்து, துன்பமுடையதாய் தன் பெரிய தந்தத்தைக் காட்டும் ஈங்கோய், தேவர்களுக்குக் குருவருட் குன்றாய் நின்றவனது மலையாகும்.
459. பொருத கரியின் முரிமருப்பிற் போந்து
சொரிமுத்தைத் தூநீரென்(று) எண்ணிக் - கருமந்தி
முக்கிவிக்கி நக்கிருக்கும் ஈங்கோயே மூவெயிலும்
திக்குகக்கச் செற்றான் சிலம்பு.
தெளிவுரை : போர் செய்த யானையின் முரிந்த கொம்பை எடுத்துச் சென்று அதிலிருந்து சொரிந்த முத்தைத்தூ நீர் என்றெண்ணிக் கரிய பெண் குரங்கு முயற்சி செய்து நக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் ஈங்கோய், திக்குகளில் உள்ளார்கள் எல்லாம் மகிழ்ச்சியை அடையத் திரிபுரங்களை, அழித்தவனது மலையாகும்.
460. மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம்
குறவர் சிறார்குடங்கைக் கொண்டு - நறவம்
இளவெயில்தீ அட்டுண்ணும் ஈங்கோயே மூன்று
வளவெயில்தீ யிட்டான் மலை.
தெளிவுரை : மதங் கொண்ட ஆண் யானையின் தந்தத்திலிருந்து சிந்திய முத்துக்களைக் குறச்சிறுவர்கள் உள்ளங்கைகளில் வைத்துத் தேன் சேர்த்து இள வெயில் தீயில் காயவைத்து உண்ணும் ஈங்கோய், திரிபுரங்களையும் தீயில் இட்டவனுடைய மலையாகும்.
461. மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச்
சிலைநுதலி சீறிச் சிலைத்துக் - கலைபிரிய
இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே
மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு.
தெளிவுரை : மலையில் திரிந்த மாக்குறவன் மான் கொண்டு வந்ததைப் பார்த்து, வில்லைப் போன்ற நெற்றியை யுடைய குறத்தி கோபித்து, பெருங் குரலெடுத்து, ஆண் மானைப் பிரியவிட்டு இம்மானைக் கொணர்தல் குற்றம் என்று சொல்லும் ஈங்கோய் மலை, மானைக் கையில் ஏந்திய சிவபெருமானது மலையாகும்.
462. மரையதளும் ஆடு மயிலிறகும் வேய்ந்த
புரையிதணம் பூங்கொடியார் புக்கு - நுரைசிறந்த
இன்நறவுண்(டு) ஆடி இசைமுரலும் ஈங்கோயே
பொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு.
தெளிவுரை : மான் தோலும் ஆடுகின்ற மயிலிறகும் வேய்ந்த காவற் பரணில் பூங்கொடியார் புகுந்து நுரையோடு கூடிய இனிய தேனை உண்டு மகிழ்ந்து பாட்டுப்பாடும் ஈங்கோய், பொன் போன்ற திருமேனி நிறமும் திருவெண்ணீறும் உடைய சிவபெருமானது மலையாகும்.
463. மலையர் கிளிகடிய மற்றப் புறமே
கலைகள் வருவனகள் கண்டு - சிலையை
இருந்தெடுத்துக் கோல்தெரியும் ஈங்கோயே மாதைப்
புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு.
தெளிவுரை : மலையில் வாழ்பவர்கள் கிளிகளை ஓட்ட, அக்காட்டில் மான்கள் வருவதைக் கண்டு வில்லை எடுத்து, கணை தொடுக்கும் ஈங்கோய், உமாதேவியை விரும்பி இடப்பாகத்தில் கொண்ட சிவபெருமானது மலையாகும்.
464. மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறஒளிர்
முத்தம் பனிநிகர்க்கும் மொய்ம்பிற்றால் - அத்தகைய
ஏனற் புனம்நீடும் ஈங்கோயே தேங்குபுனல்
கூனற் பிறையணிந்தான் குன்று.
தெளிவுரை : மத்தகத்தையுடைய யானையின் முகத்தைச் சிங்கங்கள் கிழிக்க ஒளி வீசும் முத்துக்கள் பனிபோல் காட்சியளிக்கும், அத்தகைய தினைப்புனங்கள் நிறைந்திருக்கும் ஈங்கோய், கங்கையையும், வளைந்த பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானின் மலையாகும்.
465. மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல்
முந்தி இருந்து முறைமுறையே - நந்தி
அளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே கூற்றம்
வளைந்தோடச் செற்றான் மலை.
தெளிவுரை : பெண்குரங்குக் கூட்டங்கள் அழகிய மலையின் உச்சி மேல் முன்னாடியாகப் போய் முறையாக மறைந்து துழாவுதல் செய்து ஆரவாரிக்கும் ஈங்கோய், எமன் தோற்றோட உøத்தழித்த பெருமானின் மலையாகும்.
466. மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண்
முந்திப் பறித்த முறியதனுள் - சிந்திப்போய்த்
தேனாறு பாயும்சீர் ஈங்கோயே செஞ்சடைமேல்
வானாறு வைத்தான் மலை.
தெளிவுரை : மந்தியின் குட்டிகள் வளப்பம் பொருந்திய பலாவின் சுளைகளை முதலில் பறித்த தளிருள் சிந்திய தேன், ஆறு போல் பாயும் சிறப்பமைந்த ஈங்கோய், செஞ்சடை மேல் கங்கையை வைத்தவனது மலையாகும்.
467. முள்ளார்ந்த வெள்இலவம் ஏறி வெறியாது
கள்ளார்ந்த பூப்படியும் கார்மயில்தான் - ஒள்ளார்
எரிநடுவுள் பெண்கொடியார் ஏய்க்கும்ஈங் கோயே
புரிநெடுநூல் மார்பன் பொருப்பு.
தெளிவுரை : முள் பொருந்திய வெள் இலவ மரத்தில் ஏறி, மணமில்லாமல் தேன் பொருந்திப் பூவில் அமரும் கார் மயில் ஒளி பொருந்திய தீயின் மத்தியில் உள்ள பெண்களை ஒத்திருக்கும் ஈங்கோய், பூணூல் அணிந்த மார்பை யுடையவனது மலையாகும்.
468. வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை
அளைந்து வடுப்படுப்பான் வேண்டி - இளந்தென்றல்
எல்லிப் புகநுழையும் ஈங்கோயே தீங்கருப்பு
வில்லிக்குக் கூற்றானான் வெற்பு.
தெளிவுரை : வளர்ந்த இளங்கன்னி, மாங்கொம்பின் பூந்தாதைக் கீண்டி, மாவடுவை உண்டாக்கும் பொருட்டு இளந் தென்றல் உள்ளே புக நுழையும் ஈங்கோய், கரும்பு வில்லோனாகிய காமனுக்கு நமன் ஆனவனது மலையாகும்.
மன்மத தகனத்தைக் குறிப்பிடுகிறார்.
469. வான மதிதடவல் உற்ற இளமந்தி
கான முதுவேயின் கண்ணேறித் - தானங்(கு)
இருந்துயரக் கைநீட்டும் ஈங்கோயே நம்மேல்
வருந்துயரம் தீர்ப்பான் மலை.
தெளிவுரை : வானத்திலுள்ள திங்களைத் தடவ முயன்ற இளமந்தி வனத்திலுள்ள பழமையான மூங்கிலின் மேல் ஏறித் தான் அங்கிருந்து, உயரக் கை நீட்டும் ஈங்கோய், நம்மேல் வர இருக்கும் துயரங்களைத் தீர்ப்பவனது மலையாகும்.
470. வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்து
காய்வனத்தே வேடன் கணைவிசைப்ப - வேயணைத்து
மாப்பிடிமுன் ஓட்டும்ஈங் கோயே மறைபரவு
பூப்பிடிபொற் றாளான் பொருப்பு.
தெளிவுரை : மூங்கில் நிறைந்த காட்டினுள் யானை தினைக் கதிரைக் கவர, வேடன் மறைந்திருந்து அம்பை விரைவாகச் செலுத்த, மூங்கிலை வளைத்துப் பெரிய பெண் யானை, கணைக்கு இலக்கு ஆகாமல் யானையை விலகச் செய்யும் ஈங்கோய், வேதங்கள் போற்றும் பூப்பிடி பொற்றாளான் மலையாகும்.
471. வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
முழுகிய(து)என்(று) அஞ்சிமுது மந்தி - பழகி
எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கள்
கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.
தெளிவுரை : வழவழப்பான இதழ்களையுடைய காந்தள் மேல் வண்டு இருக்க, ஒளி பொருந்திய தீயில் மூழ்கியது என்று அஞ்சி, கிழக்குரங்கு பழகி எழுந்தெழுந்து கை நெரிக்கும் ஈங்கோய், பிறைச்சந்திரனைச் செஞ்சடையில் தரித்தவனது மலையாகும்.
திருச்சிற்றம்பலம்
11. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை (நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்தது)
திருவலஞ்சுழி என்பது சோழவள நாட்டில் திருக்குடந்தைக்குக் குடபால் உள்ள தேவாரம் பெற்ற ஒரு சிவப்பதி. அப்பதியில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப் பெற்ற மும்மணிக் கோவையாதலின் இது திருவலஞ்சுழி மும்மணிக்கோவை என்று பெயர் பெற்றது. இப்பதி காவிரி வலமாகச் சூழ்ந்து செல்லும் இடத்தில் அமைந்திருப்பதனால் இவ்வாறு பெயர் பெற்ற தென்பர். வேறு காரணம் கூறுவாரும் உளர்.
மும்மணிக்கோவை ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் மூவகைப் பாக்களால் முப்பது செய்யுட்கள் அமையுமாறு பாடப் பெறுவதாகும். ஆனால் இம்மும்மணிக் கோவையில் பதினைந்து செய்யுட்களே அமைந்துள்ளன. ஆயினும் இது முதலும் முடிவும் இயைய நிரலே அந்தாதித் தொடை விடாது அமைந்துள்ளது. அதனால் இது பதினைந்து பாட்டே கொண்டதாகும்.
இந்நூலில் திருவலஞ்சுழியில் திருக்கோயில் கொண்டுள்ள சிவபிரானைக் கண்டு அவ் இறைவனது பேரழகில் ஈடுபட்டுக் காதல் கொண்டு வருந்தும் தலைவியின் நீங்கா அன்பின் திறத்தைப் புலப்படுத்தும் பாடல்களும், திருவலஞ்சுழி இறைவனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் போற்றும் அகத்துறைப் பாடல்களும் உள்ளன.
திருச்சிற்றம்பலம்
ஆசிரியப்பா
472. வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன்
பொருகடல் முகந்து கருமுகிற் கணம்நற்
படவர வொடுங்க மின்னிக் குடவரைப்
பொழிந்து கொழித்திழி அருவி குணகடல்
மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல்
உடுத்த மணிநீர் வலஞ்சுழி
அணிநீர்க் கொன்றை அண்ணல(து) அடியே.
தெளிவுரை : நெஞ்சமே! உடன் பொருந்தி, அலை மோதும் கடலில் இருந்து நீரை முகந்து, கரிய மேகக் கூட்டம் நல்ல படத்தினை யுடைய பாம்பு ஒடுங்க மின்னி, மேற்கு மலையில் பெய்து, கொழித்து இறங்கி வருகின்ற அருவி கீழ்க்கடலில் வந்து பொருந்தும் காவிரி மடந்தையின் நீண்ட வெள்ளத்தை உடுத்த அழகிய நீரையுடைய வலஞ்சுழியில் உள்ள அணி நீர்க் கொன்றை யணிந்த அண்ணலது அடியை வணங்குவோமாக.
வெண்பா
473. அடிப்போது தந்தலைவைத்(து) அவ்வடிகள் உன்னிக்
கடிப்போது கைக்கொண்டார் கண்டார் - முடிப்போதா
வாணாகஞ் சூடும் வலஞ்சுழியான் வானோரும்
காணாத செம்பொற் கழல்.
தெளிவுரை : அவ் அண்ணலது அடியாகிய அலரும் பருவத்து அரும்பைத் தம் தலையில் வைத்து, அவ் அடிகளைச் சிந்தித்து மணமுள்ள மலரை கைக் கொண்டவர், திருமுடியிற் பூவாக ஒளியுள்ள பாம்பைச் சூடும் திருவலஞ்சுழியில் கோயில் கொண்டுள்ளவனது, தேவர்களும் காணாத செம்பொற் கழலைக் கண்டார்கள்.
கட்டளைக் கலித்துறை
474. கழல்வண்ண மும்சடைக் கற்றையும்
மற்றவர் காணகில்லார்
தழல்வண்ணம் கண்டே தளர்ந்தார்
இருவரந் தாமரையின்
நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிற
வண்ணம் நெடியவண்ணம்
அழல்வண்ண முந்நீர் வலஞ்சுழி
ஆள்கின்ற அண்ணலையே.
தெளிவுரை : தாமரையின் நிழல் வண்ணம், பொன் வண்ணம், நீர் நிற வண்ணம், நெடிய வண்ணம், அழல் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டவனும், முந்நீர் வலஞ்சுழியை ஆள்கின்றவனாகிய அண்ணலது கழல் வண்ணத்தையும் சடைக் கற்றையையும் பிறர் காண மாட்டார்கள். தீயின் நிறத்தைக் கண்டே தளர்ந்தார். வண்ணம் - நிறம், அழகு, ஒப்பனை, குணம், வகை, முதலிய பல பொருள்களை யுடையது.
ஆசிரியப்பா
475. அண்ணலது பெருமை கண்டனம் கண்ணுதற்
கடவுள் மன்னிய தடமல்கு வலஞ்சுழிப்
பனிப்பொருட் பயந்து பல்லவம் பழிக்கும்
திகழொளி முறுவல் தேமொழிச் செவ்வாய்த்
திருந்திருங் குழலியைக் கண்டு
வருந்திஎன் உள்ளம் வந்தவப் போதே.
தெளிவுரை : நெற்றிக் கண்ணை யுடைய சிவபெருமானது நிலை பெற்ற இடம் வளமிக்க வலஞ்சுழியாகும், பனிப் பொருட் பயந்து, தளிரைப் பயக்கும் திகழொளி முறுவல் தே மொழியானது செவ்வாய் திருந்து கரிய குழலியைக் கண்டு வருந்தி என் உள்ளம் வந்த அப்போதே பெருமை பொருந்திய உன் பெருமையைக் கண்டேன் என்று பாங்கன் தலைவனை வியந்தது. தலைவியைக் கண்டு வந்த பாங்கன் அவளது சிறப்பைத் தலைவனுக்குக் கூறியது என்க.
வெண்பா
476. போதெலாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத்
தாதெலாம் தன்மேனித் தைவருமால் - தீதில்
மறைக்கண்டன் வானோன் வலஞ்சுழியான் சென்னிப்
பிறைக்கண்டம் கண்டணைந்த பெண்.
தெளிவுரை : மலரெல்லாம் பூங்கொன்றை; கொண்டிருந்த பூங்கொன்றைத் தாது எல்லாம் திருமேனியைத் தடவி வரும், தீதில்லாத வேதத்தை ஓதுபவன், விண்ணுலகத்தவன். வலஞ்சுழியில் கோயில் கொண்டிருப்பவன். தலையில் பிறைத் திங்களை வைத்திருப்பவன் என்று தோழி தலைவிக்குக் கூறுகின்றாள்.
கட்டளைக் கலித்துறை
477. பெண்கொண் டிருந்து வருந்துங்கொ
லாம்பெரு மான்திருமால்
வண்கொண்ட சோலை வலஞ்சுழி
யான்மதி சூடிநெற்றிக்
கண்கொண்ட கோபம் கலந்தன
போல்மின்னிக் கார்ப்புனத்துப்
பண்கொண்டு வண்டினம் பாடநின்(று)
ஆர்த்தன பன்முகிலே.
தெளிவுரை : இது தலைவன் கார் வரவு கண்டு தேர்ப்பாகனொடு கூறியது.
தலைவி வீட்டில் இருந்து வருந்துவாள். திருமால் வழிபட்ட திருவலஞ்சுழியில் எழுந்தருளியிருக்கும் பெருமான் பிறைச் சந்திரனை முடியில் சூடியிருப்பவன். அவனது நெற்றிக் கண்ணில் தோன்றிய கோபம் போல் மின்னி மேகங்கள் புனத்தில் இசை கொண்டு வண்டினம் பாட ஆரவாரித்தன. ஆகவே, நாம் உடனே புறப்பட வேண்டும் என்பதாம்.
ஆசிரியப்பா
478. முகிற்கணம் முழங்க முனிந்த வேழம்
எயிற்றிடை அடக்கிய வெகுளி ஆற்ற
அணிநடை மடப்பிடி அருகுவந்(து) அணைதரும்
சாரல் தண்பொழில் அணைந்து சோரும்
தேனுகு தண்தழை செறிதரு வனத்தில்
சருவரி வாரல்எம் பெருமநீர் மல்கு
சடைமுடி ஒருவன் மருவிய வலஞ்சுழி
அணிதிகழ் தோற்றத்(து) அங்கயத்(து) எழுந்த
மணிநீர்க் குவளை அன்ன
அணிநீர்க் கருங்கண் ஆயிழை பொருட்டே.
தெளிவுரை : இது, இரவுக்குறி வரும் தலைவனைத் தோழி வரவேண்டா என விலக்கியது. வழி ஆபத்துக்குரியது என்பது பொருள். மேகக் கூட்டங்கள் ஒலி செய்ய, ஆண் யானையின் கோபத்தைத் தணிக்க அழகிய நடையினை யுடைய பெண்யானை அருகில் வந்து அணைதரும் சாரல், குளிர்ந்த சோலை சூழ்ந்த தேனுகு தண்தழை செறிந்த வனத்தில் இரவில் வரவேண்டா. எம் தலைவனே ! கங்கையைச் சடையில் வைத்த ஒருவன் பொருந்தியிருக்கும் திருவலஞ்சுழி. அணிதிகழ் தோற்றத்து அழகிய தடாகத்திலிருந்து எழுந்த மணி நீர் குவளை போன்ற அழகிய கருங்கண்களையுடைய தலைவியின் பொருட்டு வராதே என்பதாம்.
வாரல் - வராதே. அல் ஈற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று.
வெண்பா
479. பொருள்தக்கீர் சில்பலிக்கென்(று) இல்புகுந்தீ ரேனும்
அருள்தக்கீர் யாதும்ஊர் என்றேன் - மருள்தக்க
மாமறையாம் என்றார் வலஞ்சுழிநம் வாழ்வென்றார்
தாம்மறைந்தார் காணேன்கைச் சங்கு.
தெளிவுரை : இது தலைவி கூற்று. நல்ல பொருள் அமைதியுடையவரே! சிறுபிச்சை வேண்டி என்வீடு நோக்கி வந்தீரேனும் அருள் அமைதி யுடையவரே! உம்முடைய ஊர் எது என்று கேட்டேன். மருளத்தக்கவாறு பெரிய மறைக்காட்டில் உள்ளோம் என்றார். திருவலஞ்சுழி நம்வாழ்விடம் என்றார். அவர் மறைந்து சென்றள். என் கைவளையலைக் காணேன்.
கட்டளைக் கலித்துறை
480. சங்கம் புரளத் திரைசுமந்(து)
ஏறுங் கழியருகே
வங்கம் மலியும் துறையிடைக்
காண்டிர் வலஞ்சுழியா(று)
அங்கம் புலன்ஐந்தும் ஆகிய
நான்மறை முக்கணக்கன்
பங்கன்(று) இருவர்க்(கு) ஒருவடி
வாகிய பாவையையே.
தெளிவுரை : சங்குகள் புரண்டு வர அலையைச் சுமந்து ஏறும் கழியருகே மரக்கலங்கள் நிறைந்திருக்கும் துறையிடையில் காணுங்கள். திருவலஞ்சுழியில் ஆறு அங்கமும், புலன் ஐந்துமாகிய நான்மறை மூன்று கண்களையுடைய சிவபெருமான் இருவர்க்குப் பங்கன்று ஒருவடிவாகிய பாவையையே காண்டீர் என முடிக்க.
எண்கள் ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்று வரிசைப் படுத்தியிருப்பதைக் காண்க.
இது தலைவன், இவ்விடத்து இன்ன இயல்புடையது என்று இயம்பியது.
அகவல்
481. பாவை ஆடிய துறையும் பாவை
மருவொடு வளர்ந்த அன்னமும் மருவித்
திருவடி அடியேன் தீண்டிய திறனும்
கொடியேன் உள்ளங் கொண்ட சூழலும் கள்ளக்
கருங்கண் போன்ற காவியும் நெருங்கி
அவளே போன்ற(து) அன்றே தவளச்
சாம்பல் அம்பொடி சாந்தெனத் தைவந்து
தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த
வெள்ளேற் றுழவன் வீங்குபுனல் வலஞ்சுழி
வண்டினம் பாடுஞ் சோலைக்
கண்ட அம்மஅக் கடிபொழில் தானே.
தெளிவுரை : இது தலைவன் கூறியது.
பாவை நீராடிய துறையும், பாவை அன்போடு வளர்ந்த அன்னமும் பொருந்தி, தங்கள் பாதங்களைத் தொட்ட திறனும், கொடியேனாகிய எனது உள்ளம் கொண்ட சூழலும் கள்ளத் தன்மையுடைய கரிய கண்கள் போன்ற கருங்குவளையும் நெருங்கி அவளே போன்றது திருநீற்றைச் சந்தனம் போலப் பூசி, பிறைச் சந்திரனைத் தலைமீது அணிந்த வெண்மையான காளை ஊர்தியை உடையவளின், நிறைந்த நீர்வளமுள்ள திருவலஞ்சுழி என்னும் தலத்தில் வண்டுக் கூட்டங்கள் பாடும் மணம் பொருந்திய சோலையாகும்.
இந்தச் சோலை தலைவியைப் போன்றது எனத் தலைவன் கூறுவது இப்பாடல்.
வெண்பா
482. தானேறும் ஆனேறு கைதொழேன் தன்சடைமேல்
தேனேறு கொன்றைத் திறம்பேசேன் - வானேறு
மையாரும் சோலை வலஞ்சுழியான் என்கொல்என்
கையார் வளைகவர்ந்த வாறு.
தெளிவுரை : தன் கைவளைகளைக் கவர்ந்து சென்றமையால் தலைவி புலந்து கூறியது, இப்பாடல். சிவபெருமான் ஏறும் காளை ஊர்தியை வணங்கமாட்டேன். அவன் சடை மீதுள்ள தேன் பொருந்திய கொன்றை மலரின் சிறப்பைப் புகழ மாட்டேன். விண்ணில் ஏறுகின்ற இருள் பொருந்திய சோலைகளையுடைய திருவலஞ்சுழியான் என் கையிலிருந்த வளையைக் கவர்ந்தது ஏன்? இது தலைவியின் கூற்று.
கட்டளைக் கலித்துறை
483. ஆறுகற் றைச்சடைக் கொண்டொரொற்
றைப்பிறை சூடிமற்றைக்
கூறுபெண் ணாயவன் கண்ணார்
வலஞ்சுழிக் கொங்குதங்கு
நாறுதண் கொம்பரன் னீர்களின்
னேநடந் தேகடந்தார்
சீறுவென் றிச்சிலைக் கானவர்
வாழ்கின்ற சேண்நெறியே.
தெளிவுரை : இஃது உடன் போக்கைக் கண்டவர்கள் செவிலிக்கு உரைத்தது. கங்கையாற்றைச் சடையில் கொண்டு, பிறைச் சந்திரனைச் சூடி, உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனது திருவலஞ்சுழி மணம் தங்கும் பூங்கொம்பைப் போன்றவர்ளே ! அவர்கள் இந்நேரம் கோபங் கொண்ட வில்லேந்திய வேடர்கள் வாழ்கின்ற தொலை வழியில் நடந்து சென்றார்கள்.
தலைவனும் தலைவியும் உடன் போக்கில் சென்றனர் என்க.
ஆசிரியப்பா
484. நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்த
செறிதரு தமிழ்நூல் சீறியாழ்ப் பாண
பொய்கை யூரன் புதுமணம் புணர்தர
மூவோம் மூன்று பயன்பெற் றனவே நீயவன்
புனைதார் மாலை பொருந்தப் பாடி
இல்லதும் உள்ளதும் சொல்லிக் கள்ள
வாசகம் வழாமல் பேச வண்மையில்
வாரை மகளிர் வான்பொருள் பெற்றனை, அவரேல்
எங்கையர் கொங்கைக் குங்குமம் தழீஇ
விழையா இன்பம் பெற்றனர் யானேல்
அரன்மர்ந்(து) உறையும் அணிநீர் வலஞ்சுழிச்
சுரும்பிவர் நறவயல் சூழ்ந்தெழு கரும்பில்
தீநீர் அன்ன வாய்நீர் சோரும்
சிலம்புகுரல் சிறுபறை பூண்ட
அலம்புகுரல் கிண்கிணிக் களிறுபெற் றனனே.
தெளிவுரை : இது தலைவி பாணனை நோக்கி வெகுண்டு கூறியது.
நெறித்த கூந்தலையுடைய விறலியோடு சேர்ந்த செறிவினையுடைய தமிழ் நூல்வல்ல சீறியாழையுடைய பாணனே! பொய்கைகளை யுடைய ஊரனாகிய தலைவன் புதுமணத்தை நுகர மூன்று பேரும் மூவகையான பயனைப் பெற்றோம். நீ அவனுடைய புனைதார் மாலையைப் பொருந்தப் பாடி இல்லாததும் உள்ளதுவும் சொல்லி, கள்ள வாசகம் வழாமல் பேசும் திறமுடைய பரத்தையரிடமிருந்து மிக்க பொருளைப் பெற்றனை. அவர்கள் எம் தங்கையராகிய பரத்தையர். கொங்கைகளில் குங்குமக் குழம்பைப் பூசி மிக்க இன்பத்தைப் பெற்றனர். என் நிலை யாதோ எனில் சிவபெருமான் அமர்ந்துறையும் அழகிய நீர்வளம் பொருந்திய திருவலஞ்சுழி வண்டுகள் தேன் உண்ணும் வயல் சூழ்ந்து எழு கரும்பில் உள்ள கரும்பஞ்சாறு போன்ற வாயில் நீர் சோரும் காற்சிலம்பும் சிறுபறையும் உடைய கிண்கிணி ஒலிக்கும் புதல்வனைப் பெற்றேன்.
வெண்பா
485. தனமேறிப் பீர்பொங்கித் தன்னங்கம் வேறாய்
மனம்வேறு பட்டொழிந்தாள் மாதோ - இனமேறிப்
பாடாலம் வண்டலம்பும் பாய்நீர் வலஞ்சுழியான்
கோடாலம் கண்டணைந்த கொம்பு.
தெளிவுரை : இது தோழி கூறியது. தனங்களின் மீது, பசலை பூத்து தன் உடம்பு வேறுபட்டு மனம் வேறுபட்டு ஒழிந்தாள். பாதிரி மரத்தில் வண்டு அலம்பும் நீர் வளமிக்க திருவலஞ்சுழியான் மாலையில் உலா வந்ததைக் கண்ட பூங்கொம்பு போன்ற தலைவி இந்நிலையை அடைந்தாள் என்க.
கட்டளைக் கலித்துறை
486. கொம்பார் குளிர்மறைக் காடனை
வானவர் கூடிநின்று
நம்பா எனவணங் கப்பெறு
வானை நகர்எரிய
அம்பாய்ந் தவனை வலஞ்சுழி
யானைஅண் ணாமலைமேல்
வம்பார் நறுங்கொன்றைத் தாருடை
யானை வணங்குதுமே.
தெளிவுரை : பூங்கொம்பு நிறைந்த குளிர்ந்த சோலைகளை யுடைய திருமறைக் காட்டில் உள்ளவனைத் தேவர்கள் கூடி நின்று, இறைவனே! என வணங்கப் பெறுவானை, திரிபுரங்கள் எரிந்து அழியுமாறு அம்பு தொடுத்தவனை, திருவலஞ்சுழியானை, அண்ணாமலை மேல் மணமுள்ள நறுங் கொன்றைத் தாருடையானை நாம் வணங்குவோமாக.
திருச்சிற்றம்பலம்
12. திருஎழுகூற்றிருக்கை (நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்தது)
திருஎழுகூற்றிருக்கை என்பது மிறைக் கவி, (ஓவியப் பாட்டு) வகைகளில் ஒன்று. ஒன்று என்னும் எண்ணை முதலாகக் கொண்டு தொடங்கிப் படிப்படியே ஒவ்வொர் எண்ணாகக் கூட்டியும் அவ்வாறே ஒன்று ஒன்றாக ஒன்று முடியக் குறைத்தும் இவ்வாறு ஒன்று முதல் ஏழ் ஈறாக எண்ணும் நிலையில் அமைந்த செய்யுள் எழு கூற்றிருக்கை யென்று பெயர் பெறும்.
எழுகூற்றிருக்கை என்னும் ஓவியப் பாட்டை முதன் முதலாகப் பாடியவர் திருஞானசம்பந்தரே. அதனை அடியொற்றிப் பாடப் பட்டதேயாகும் இப்பாட்டு. உமையொரு பாகனாகிய சிவபெருமானுடைய அருளுருவத் தோற்றத்தினையும், அவ்விறைவன் உயிர்களின் பொருட்டுச் செய்தருளிய அருட் செயல்களையும் நக்கீர தேவ நாயனார் இத்திரு எழு கூற்றிருக்கையில் இனிய முறையில் இயம்புகின்றார்.
திருச்சிற்றம்பலம்
487. ஓருடம்பு ஈருரு ஆயினை ஒன்றுபுரிந்(து)
ஒன்றி னீர்இதழ்க் கொன்றை சூடினை
மூவிலைச் சூலம் ஏந்தினை
சுடரும் சென்னி மீமிசை
இருகோட்(டு) ஒருமதி எழில்பெற மிலைச்சினை
தெளிவுரை : ஓர் உடம்பில் ஆணும் பெண்ணுமாகிய இரண்டு உருவம் உடையவன் ஆனாய். ஒன்றைச் செய்து, அதிலிருந்து ஈரிதழ்க் கொன்றை சூடினை. மூன்று இலைகளாகப் பிரிந்துள்ள சூலத்தைக் கையில் ஏந்தினை. ஒளிவிடும் தலையின் மேல் இரு முனைகளும் உயர்ந்து காணப்படும் பிறைச் சந்திரனை அழகு பெறச் சூடினாய்.
ஒருகணை இருதோள் செவியுற வாங்கி
மூவெயில் நாற்றிசை முரணஅரண் செகுத்தனை
ஆற்ற முன்னெறி பயந்தனை
செறிய இரண்டும் நீக்கி
ஒன்று நினைவோர்க்(கு) உறுதி யாயினை
தெளிவுரை : ஒப்பற்ற அம்பை, இருதோள் செவியோடு பொருந்த இழுத்துத் திரிபுரங்களை நான்கு திசைகளிலும் கெடுமாறு அழித்தாய். பொருந்த முன் மாதிரியாகச் செய்தனை. நல்வினை தீவினையாகிய இரண்டையும் நீக்கி, ஒன்றாகிய தெய்வத்தை நினைப்பவர்களுக்குப் பற்றுக் கோடாக இருக்கின்றாய்.
அந்நெறி ஒன்று
மனம்வைத்(து) இரண்டு நினைவி லோர்க்கு
முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி
நான்கென ஊழி தோற்றினை
சொல்லும் ஐந்தலை அரவசைத்(து) அசைந்தனை
தெளிவுரை : அந்த நெறி ஒன்றேயாம். இரண்டு நினைவு இல்லோர்க்கு, அதாவது மன ஒருமைப்பாடு உடையவர்க்கு வீடு பேற்றினைக் காட்டினை. அந்நெறி நான்கென நான்கு யுகங்களை உண்டாக்கினாய். சிறப்பாகச் சொல்லப்படும் ஐந்தலை நாகத்தைக் கட்டிக் கொண்டு ஆடினாய்.
நான்முகன் மேன்முகம் கபாலம் ஏந்தினை
நூல்முக முப்புரி மார்பில்
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய
ஒருவநின் ஆதி காணா(து) இருவர்
மூவுல(கு) உழன்று நாற்றிசை உழிதர
ஐம்பெருங் குன்றத்(து) அழலாய் தோன்றினை
தெளிவுரை : பிரமனது மண்டை ஓட்டைப் பிச்சைப் பாத்திரமாக ஏந்தினை. மார்பில் முப்புரி நூலை அணிந்தனை. நான்முகன், திருமால் ஆகிய இருவர் அங்கத்தினையும் ஒருங்கே ஏந்தினாய். அதற்குக் காயாரோகணத் திருக்கோலம் என்று பெயர். உன்னுடைய ஆதியைக் காணாமல் பிரமனும் திருமாலும் மூன்று உலகங்களிலும் சுற்றி, நான்கு திசைகளிலும் அலைய அழகிய பெருமலையில் தீயாய்த் தோன்றினை. (இது நடைபெற்றது திருவண்ணாமலையில்.)
ஆறுநின் சடையது ஐந்துநின் நிலையது
நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே
இரண்டுநின் குழையே ஒன்றுநின் ஏறே
தெளிவுரை : கங்கையாறு உன் சடையில் உள்ளது. திருஐந்தெழுத்து (பஞ்சாட்சர மந்திரம்) உன் நிலையாகும். உன் வாய் மொழி நான்கு வேதங்களாகும். மூன்றாக உள்ளவை உன் கண்களே. இரண்டு நின் குழைகளே. ஒன்றாக உள்ளது உன் வாகனமாகிய காளையே.
ஒன்றிய காட்சி உமையவள் நடுங்க
இருங்களிற்(று) உரிவை போர்த்தனை நெருங்கி
முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய
அறுதொழி லாளர்க்(கு) உறுதி பயந்தனை
தெளிவுரை : உன் ஒன்றிய காட்சியைக் கண்டு உமையவள் நடுங்க பெரிய யானைத் தோலைப் போர்த்திக் கொண்டாய். நெருங்கி, முத்தீயை வளர்த்து நான்மறை ஓதி ஐம்புலன்களை அடக்கிய அறுதொழிலாளர்களுக்கு உறுதியான நன்மைகளைச் செய்யும்.
ஏழில் இன்னரம்(பு) இசைத்தனை
ஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில்
விறலியர் கொட்டும் அழுத்த ஏந்தினை
ஆல நீழல் அன்றிருந்(து) அறநெறி
நால்வர் கேட்க நன்கினி(து) உரைத்தனை
தெளிவுரை : ஏழாகிய இனிய நரம்புகளை இசைத்தாய். ஆறில் அமுதத்தைக் கொடுத்தாய். ஐந்தில் விறலியர் கொட்டும் அழுத்த ஏந்தினை. கல்லால மரத்தின் நிழலில் தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளி அறநெறியை நால்வர் கேட்க நன்கு இனிது உரைத்தனை.
நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்
கொன்றங்(கு) இருவரை எறிந்த ஒருவன்
தாதை ஒருமிடற்று இருவடி(வு) ஆயினை
தெளிவுரை : கடலில், நன்றி இல்லாத சூரபதுமன் மாவடியாக நின்றபோது, அவனைக் கொன்று, அங்கிருந்த இருவரையும் அழித்த முருகக் கடவுளது தாதையே! ஒப்பற்ற கண்டத்தையுடைய இரு வடிவு ஆயினை. (இரு நிறம் - கழுத்து கருநிறம்; உடல் செந்நிறம்)
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
ஐங்கணை அவனொடு காலனை அடர்த்தனை
அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
ஏழின் ஓசை இராவணன் பாடத்
தாழ்வாய் கேட்டவன் தலையளி பொருத்தினை
தெளிவுரை : மூவகை தருமத்தையும் உலகம் உணரக் கூறுபவை. நால்வகை இலக்கண இலக்கியங்களை நலத்தக மொழிந்தனை. காமனோடு எமனையும் அழித்தனை. அறுவகைச் சமயமும் முறையாக வகுத்தனை. ஏழிசையோடு இராவணன் பாட, அமைதியாக இருந்து கேட்டு அவனது வேண்டுகோளைப் பூர்த்தி செய்தாய்.
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித்
தேரொடு திசைசெல விடுத்தோன்
நாற்றோள் நலனே நந்தியிங்(கு) இருடியென்(று)
ஏற்ற பூதம் மூன்றுடன் பாட
இருகண் மொந்தை ஒருகணம் கொட்ட
மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண
நட்டம் ஆடிய நம்ப அதனால்
தெளிவுரை : மனம் சாந்தம் அடைந்து ஐந்து கதியில் செல்லும் தேரோடு எல்லாத் திக்குகளிலும் விஜயம் செய்ய அனுப்பியது. நான்கு தோள்களை உடைய உனது நலனாகும். நந்தி, பிருங்கி முனிவர் என்று ஏற்ற பூதம் மூன்றுடன் பாட இரு கண் மொந்தை யென்ற தோற்கருவி ஒருகணம் கொட்டவும், தேன் பிலிற்றும் மாலையணிந்த உமையவள் காண நடனம் ஆடிய நம்பி ! அதனால்,
சிறியேன் சொன்ன அறிவில் வாசகம்
வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில(வு) அணிந்து
கீதம் பாடிய அண்ணல்
பாதம் சென்னியில் பரவுவன் பணிந்தே.
தெளிவுரை : சிறியேன் சொன்ன பொருளற்ற வாசகம் சிறப்பில்லாதது என்று விட்டு விடாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். மணம் வீசும் கொன்றையொடு வெண்ணிலவு அணிந்து கீதம் பாடிய அண்ணலே ! உன் பாதங்களைப் பணிந்து துதிக்கின்றேன்.
வெண்பா
488. பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ(று)
பணிந்(து)ஆல வாயில் அமர்ந்தாய் - தணிந்தென்மேல்
மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே
ஐயுறவொன் றின்றி அமர்ந்து.
தெளிவுரை : பரமேட்டி ! உன் பாதங்களைப் பணிந்தேன். பால் போன்ற வெண்ணீறு அணிந்து, மதுரையில் அமர்ந்தாய். கோபம் தணிந்து என்மேல் நெற்றிக் கண் பார்வையினால் உடம்பு முழுவதும் உண்டாகிய எரிச்சல் தீரப் பணித்தருள்வாய் வேதியனே! சந்தேகம் ஏதும் இன்றி அமர்ந்து அருள் செய்வாய் என்றபடி.
13. பெருந்தேவபாணி (நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்தது)
தேவபாணி என்பது இசைப் பாவகைகளில் ஒன்று. இது பெருந்தேவபாணி எனவும் சிறுதேவபாணி எனவும் இருவகைப்படும். நக்கீர தேவ நாயனாரால் பாடப் பெற்ற இப் பெருந்தேவபாணி 67 அடிகளால் நீண்ட பெருமையுடையதாய், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை முன்னிலைப்படுத்தி அப் பெருமானுடைய திருவருள் திறத்தைப் பண் பொருந்தப் பரவிப் போற்றுவதாகலின் பெருந்தேவபாணி என்று பெயர் பெற்றது.
திருச்சிற்றம்பலம்
489. சூல பாணியை சுடர்தரு வடிவனை
நீல கண்டனை நெற்றியோர் கண்ணனை
பால்வெண் ணீற்றனை பரம யோகியை
காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை
நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை
தெளிவுரை : சூலமேந்திய கையை உடையவனாக இருக்கிறாய். ஒளி பொருந்திய வடிவம் உடையவனாக இருக்கிறாய். நீலகண்டத்தை உடையவனாக உள்ளாய். நெற்றியில் கண்ணை உடையை. பால் போன்ற திருநீற்றை உடையை. பரம யோகியாகவும் உள்ளாய். நீ காலனைக் கோபித்த நீலகண்டன். மார்பில் முப்புரி நூலை அணிந்துள்ளாய். நுண்ணிய கேள்வி ஞானம் உடையாய்.
கோல மேனியை கொக்கரைப் பாடலை
வேலுடைக் கையனை விண்தோய் முடியனை
ஞாலத் தீயினை நாதனைக் காய்ந்தனை
தேவ தேவனை திருமறு மார்பனை
கால மாகிய கடிகமழ் தாரனை
தெளிவுரை : அழகிய திருமேனியை உடையாய். இசைக் கருவியோடு பாடும் வல்லமை உடையை. சூலத்தை ஏந்திய கையினை உடையாய். விண்ணில் தோய்கிற முடியை உடையவனாக இருக்கிறாய். அக்கினி தேவனைக் காய்ந்தனை. தேவர்களுக்கெல்லாம் தேவனாக உள்ளாய். திருமாலாகி இருக்கிறாய். காலத்தையே மணம் பொருந்திய மாலையாகக் கொண்டுள்ளாய்.
வேத கீதனை வெண்தலை ஏந்தியை
பாவ நாசனை பரமேச் சுவரனை
கீதம் பாடியை கிளர்பொறி அரவனை
போதணி கொன்றையெம் புண்ணிய ஒருவனை
ஆதி மூர்த்தியை அமரர்கள் தலைவனை
தெளிவுரை : வேத கீதனாக உள்ளாய். பிரமனது மண்டை ஓட்டை ஏந்தியுள்ளாய். பாவங்களை நாசம் செய்கின்றாய். பரமேஸ்வரனாக உள்ளாய். கீதம் பாடுகிறாய். புள்ளிகளையுடைய பாம்பை உடையாய். கொன்றை அணியும் புண்ணியனாக உள்ளாய். ஆதி மூர்த்தியாகவும் தேவர்கள் தலை வனாகவும் இருக்கின்றாய்.
சாதி வானவர் தம்பெரு மான்தனை
வேத விச்சையை விடையுடை அண்ணலை
ஓத வண்ணனை உலகத்(து) ஒருவனை
நாத னாகிய நன்னெறிப் பொருளினை
மாலை தானெரி மயானத்(து) ஆடியை
தெளிவுரை : பிரிவுகளை உடைய வானவர் தலைவனாகவும் வேத விற்பன்னனாகவும் உள்ளாய். காளையை வாகனமாக உடையை. ஓத வண்ணனாகவும் உலகத்து ஒருவனாகவும் உள்ளாய். நாதனாகவும் நன்னெறிப் பொருளாகவும் இருக்கின்றாய். மாலையில் எரிகின்ற மயானத்தில் ஆடுகின்றாய்.
வேலை நஞ்சினை மிகஅமு தாக்கியை
வேத வேள்வியை விண்ணவர் தலைவனை
ஆதி மூர்த்தியை அருந்தவ முதல்வனை
ஆயிர நூறுக்(கு) அறிவரி யானை
பேயுருவு தந்த பிறையணி சடையனை
தெளிவுரை : கடலில் இருந்து எழுந்த நஞ்சினைச் சிறந்த அமுதமாகச் செய்தாய். வேத வேள்வியாகவும் விண்ணவர் தலைவனாகவும் உள்ளாய். ஆதிமூர்த்தியாகவும் அருந்தவ முதல்வனாகவும் இருக்கின்றாய். காரைக்கால் அம்மையாருக்கு பேயுருவு தந்த பிறையணி சடையனாகவும் இருக்கின்றாய்.
மாசறு சோதியை மலைமகள் கொழுநனை
கூரிய மழுவனை கொலற்கருங் காலனைச்
சீரிய அடியாற் செற்றருள் சிவனை
பூதிப் பையனை புண்ணிய மூர்த்தியை
பீடுடை யாற்றை பிராணி தலைவனை
தெளிவுரை : குற்றமற்ற சோதி வடிவாக உள்ளாய். பார்வதி தேவியின் கணவனாகவும், கூரிய மழுவாளை உடையவனாகவும் கொல்வதற்கரிய நமனையும் உன்னுடைய சிறப்பமைந்த அடியால் அடித்து, பிறகு அருள் செய்த சிவனாகவும் இருக்கின்றாய். திருநீற்றுப் பையை உடையாய். புண்ணிய மூர்த்தியாகவும் உள்ளாய். பெருமை பொருந்திய கங்கை ஆற்றை சடையில் அணிந்தவனாயும் இருக்கின்றாய்.
நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை
ஈசனை இறைவனை ஈறில் பெருமையை
நேசனை நினைப்பவர் நெஞ்சத்(து) உள்ளனை
தாதணி மலரனை தருமனை பிரமனை
காதணி குழையனை களிற்றின் உரியனை
தெளிவுரை : பெரிய குற்றமற்றவனாய் விளங்குகின்றாய். நிறைந்த வேதப் பொருளாகவும், ஈசனாகவும், இறைவனாகவும் முடிவில்லாத பெருமை உடையவனாகவும் விளங்குகின்றாய். நேசனாகவும் நினைப்பவர். நெஞ்சத்தில் நிலைத்திருப்பவனாகவும் உள்ளனை. மகரந்தத்தோடு கூடிய மலரினை அணிபவனாகவும், தரும சொரூபியாகவும், பிரமனாகவும், காதுகளில் குழையினை உடையவனாகவும், யானைத் தோலைப் போர்த்தியவனாகவும் உள்ளனை.
சூழ்சடைப் புனலனை சுந்தர விடங்கனை
தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை
வித்தக விதியனை
தீதமர் செய்கைத் திரிபுரம் எரித்தனை
பிரமன் பெருந்தலை நிறைவ தாகக்
கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை
தெளிவுரை : சடையில் கங்கையை உடையை. சுந்தரவிடங்கனாகவும் இருக்கின்றாய். கொன்றை மலர் மாலையை மார்பில் தரித்துள்ளாய். அறிவுள்ள விதியனாகவும், குற்றமற்ற செய்கையோடு திரிபுரங்களை எரித்தனை; பிரமனுடைய மண்டை ஓடு நிறைவதற்காகத் திருமாலின் குருதியை அந்தக் கபாலத்தில் நிறைத்தனை.
நிறைத்த கபாலச் செந்நீர் நின்றும்
உறைத்த உருவார் ஐயனைத் தோற்றினை
தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த
ஆர்வமுண் நஞ்சம் அமுத மாக்கினை
தெளிவுரை : கபாலம் நிறைந்த குருதி நின்ற பிறகும் உறைத்த உருவார் ஐயனைத் தோற்றுவித்தாய். தேவர்களும் அசுரர்களும் திறம்படக் கடைந்த ஆர்வத்தில் வெளியான விடத்தை அமுதமாகச் செய்தனை.
ஈரமில் நெஞ்சத்(து) இராவணன் தன்னை
வீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனை
திக்கமர் தேவரும் திருந்தாச் செய்கைத்
தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை
வேதமும் நீயே வேள்வியும் நீயே
நீதியும் நீயே நிமலன் நீயே
புண்ணியம் நீயே புனிதன் நீயே
பண்ணியன் நீயே பழம்பொருள் நீயே
ஊழியும் நீயே உலகமும் நீயே
வாழியும் நீயே வரதனும் நீயே
தெளிவுரை : நெஞ்சில் இரக்கமில்லாத இராவணனது வீரத்தை அழித்து, வெற்றி பொருந்திய வாளைக் கொடுத்தனை. திக்குகளில் அமர்ந்த தேவர்களும், திருந்தாத செய்கையுடைய தக்கனும் செய்த வேள்வி தளர்ந்து ஒழியுமாறு அழித் தொழித்தாய். நீதியும் நீயே. நிமலனும் நீயே. புண்ணியனாகவும் புனிதனாகவும் உள்ளாய். பண்ணியல் நீயே; பழம் பொருள் நீயே; ஊழியாகவும் உலகமாகவும் உள்ளாய். வாழியும் நீயே; வரதனும் நீயே.
தேவரும் நீயே தீர்த்தமும் நீயே
மூவரும் நீயே முன்னெறி நீயே
மால்வரை நீயே மறிகடல் நீயே
இன்பமும் நீயே துன்பமும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
தெளிவுரை : தேவர்களாவும் தீர்த்தமாகவும் உள்ளவன் நீயே. மூவரும் முன்னெறியும் நீயே. மால் வரையும் மறிகடலும் நீயே. இன்பமாகவும் துன்பமாகவும் உள்ளவன் நீயே. தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்றாய்.
விண்முதற்பூதம் ஐந்தவை நீயே
புத்தியும் நீயே முத்தியும் நீயே
சொலற்கரும் தன்மைத் தொல்லோய் நீயே, அதனால்
கூடல் ஆலவாய்க் குழகன் ஆவ(து)
அறியா(து) அருந்தமிழ் பழித்தனன் அடியேன்
ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்று
வேண்டும் மதுவினி வேண்டுவன் விரைந்தே.
தெளிவுரை : விண் முதலாகிய ஐந்து பூதங்களும் நீயே. புத்தியாகவும் முத்தியாகவும் உள்ளவன் நீயே. சொல்வதற்கு அரிய தன்மைகளையுடைய பழமையை உடையவன் நீயே. அதனால், மதுரையில் கோயில் கொண்டுள்ள குழகனே! ஆவது அறியாத அருந்தமிழைப் புகழ்ந்து போற்றவில்லை. அடியேன், பொருந்திய சிறப்போடு உன் இரண்டு அடிக்கீழ் நின்று வேண்டியவற்றை இனி விரைந்து வேண்டுவேன்.
வெண்பா
490. விரைந்தேன்மற்(று) எம்பெருமான் வேண்டியது வேண்டா(து)
இகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் - விரைந்தென்மேல்
சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே
ஆற்றவும் செய்யும் அருள்.
தெளிவுரை : விரைந்தேன். பெருமான் வேண்டியதை, வேண்டாமல் இகழ்ந்து விட்டேன். அதாவது நீ நெற்றிக் கண்ணைக் காட்டியபோது இகழ்ந்து தவறு செய்து விட்டேன். அப்படியே விரைந்து என்மேல் உள்ள கோபத்தைத் தீர்த்து அருள்வீராக. தேவாதி தேவனே ! நீ செய்யும் அருள், சீற்றத்தைத் தீர்த்தருளுதலே என்க.
திருச்சிற்றம்பலம்
14. கோபப் பிரசாதம் (நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்தது)
அருட் கடலாகிய சிவபிரான், உயிர்த் தொகைகளின் மாட்டுப் பேரருள் படைத்தவர். அருளே வடிவமாக அமைந்த அப்பெருமான் யாவர் மாட்டேனும் சினங் கொள்வாராயின், அச் சினமும் அம் மக்களின்பாற் கொண்ட பேரருள் திறத்தின் விளைவேயாகும். அச் சினம் அவ்வுயிரை ஒறுத்து நல்வழிக்கண் செலுத்துதல் பொருட்டு அமைந்த தாகலின் அதனையும் அருட்பேறு என்றே கூறுதல் வேண்டும். சிவபிரான் சிலரிடத்துச் சின அருள் கொண்டு செய்த திருவருள் திறத்தை விளக்குவது கோபப் பிரசாதம் என்னும் இத் திருப்பாட்டு.
திருச்சிற்றம்பலம்
491. தவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே
வெண்திரைக் கருங்கடல் மேல்துயில் கொள்ளும்
அண்ட வாணனுக்(கு) ஆழியன்(று) அருளியும்
உலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்த
மலரோன் தன்னை வான்சிரம் அரிந்தும்
தெளிவுரை : தவறு பெரிதானது; தவறு பெரிதானது . வெள்ளிய திரையையுடைய கருங்கடல் மேல் துயில் கொள்ளும் திருமாலுக்கு சக்கராயுதத்தை அன்று அருள் செய்தும், மூன்று உலகங்களையும் ஒரே சமயத்தில் படைத்த பிரமனது தலையை அரிந்தும்,
கான வேடுவன் கண்பரிந்(து) அப்ப
வான நாடு மற்றவற்(கு) அருளியும்
கடிபடு பூங்கணைக் காம னார்உடல்
பொடிபட விழித்தும் பூதலத்(து) இசைந்த
மானுட னாகிய சண்டியை
வானவன் ஆக்கியும்
தெளிவுரை : காட்டு வேடுவனாகிய கண்ணப்ப நாயனார் அன்பு கொண்டு கண்ணைப் பெயர்த்து அப்ப, அவருக்கு வான நாடு அருள் செய்தும், மணமுள்ள மலர் அம்புகளையுடைய மன்மதனது உடல் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணைத் திறந்தும் இவ்வுலகிற்கு ஏற்ற மனிதனாகிய சண்டிகேசுவரரைத் தேவன் ஆக்கியும்,
மறிகடல் உலகின் மன்னுயிர் கவரும்
கூற்றுவன் தனக்கோர் கூற்றுவ னாகியும்
கடல்படு நஞ்சம் கண்டத்(து) அடக்கியும்
பருவரை சிலையாப் பாந்தள் நாணாத்
திரிபுரம் எரிய ஒருகணை துரந்தும்
தெளிவுரை :  கடலால் சூழப்பட்ட உலகின் மன்னுயிர்களைக் கவரும் கூற்றுவனாகியும், கடலில் தோன்றிய விடத்தைக் கழுத்தில் நிறுத்தியும், மேரு மலையை வில்லாகவும் ஆதிசேடனை நாணாகவும் கொண்டு திரிபுரம் எரிய ஒரு கணையைச் செலுத்தியும்,
கற்கொண்(டு) எறிந்த சாக்கியன் அன்பு
தற்கொண்(டு) இன்னருள் தான்மிக அளித்தும்
கூற்றெனத் தோன்றியுங் கோளரி போன்றும்
தோற்றிய வாரணத்(து) ஈருரி போர்த்தும்
தெளிவுரை : கற்கொண்டு எறிந்த சண்டேசுவர நாயனாரின் அன்பை ஏற்று, இன்னருள் செய்தும், எமனைப் போலவும் சிங்கம் போலவும் தோன்றிய யானையின் தோலை உரித்துப் போர்த்தியும்,
நெற்றிக் கண்ணும் நீள்புயம் நான்கும்
நற்றா நந்தீச் சுவரர்க்(கு) அருளியும்
அறிவின் ஓரா அரக்க னார் உடல்
நெறநெற இறுதர ஒருவிரல் ஊன்றியும்
தெளிவுரை : நெற்றிக் கண்ணும், நீண்ட புயம் நான்கும் நந்தீஸ்வரர்க்கு அருளியும், அறிவில்லாதவனாகிய இராவணனது உடல் நெறுநெறுவென்று முறியக் கால் விரல் ஒன்றினால் ஊன்றியும்,
திருவுரு வத்தொடு செங்கண் ஏறும்
அரியன திண்திறள் அசுரனுக்(கு) அருளியும்
பல்கதிர் உரவோன் பற்கெடப் பாய்ந்து
மல்குபிருங்(கு) இருடிக்கு மாவரம் ஈந்தும்
தக்கன் வேள்வி தகைகெடச் சிதைத்தும்
மிக்கவரம் நந்தி மாகாளர்க்(கு) அருளியும்
தெளிவுரை : திருவுருவத்தொடு செங்கண் ஏறும் அரியன திண்திறல் அசுரனுக்கு அருளியும், பல கதிர்களையுடைய சூரியனுடைய பல்லை உடைத்தும், பிருங்கி முனிவருக்குப் பெரிய வரத்தைக் கொடுத்தும், தட்சனது யாகத்தை அழித்தும், மிக்க வரத்தை நந்திக்கும், மாகாளர்க்கும் அருளியும்,
செந்தீக் கடவுள்தன் கரதலம் செற்றும்
பைந்தார் நெடும்படை பார்த்தற்(கு) அருளியும்
கதிர்மதி தனையோர் காற்பயன் கெடுத்தும்
நிதிபயில் குபேரற்கு நீள்நகர் ஈந்தும்
சலந்தரன் உடலந் தான்மிகத் தடிந்தும்
தெளிவுரை : அக்கினி தேவனது கைகளைச் சிதைத்தும் பார்த்தனுக்குத் தார் அணிந்த பாசுபதக் கணையைக் கொடுத்தும், சந்திரனது உருவில் காற்பங்கு குறைத்தும், குபேரனுக்கு வடதிசையிலுள்ள அளகாபுரி என்னும் பட்டணத்தை ஈந்தும், சலந்திரனது தோள்களை வெட்டியும்,
மறைபயில் மார்க்கண் டேயனுக்(கு) அருளியும்
தாருகற் கொல்லமுன் காளியைப் படைத்தும்
சீர்மலி சிலந்திக்(கு) இன்னர(சு) அளித்தும்
கார்மலி உருவக் கருடனைக் காய்ந்தும்
ஆலின் கீழிருந்(து) அறநெறி அருளியும்
தெளிவுரை : வேதம் பயில் மார்க்கண்டேயனுக்கு அருள் செய்தும், தாரகனைக் கொல்ல முன் காளியைப் படைத்தும், சீர்மலி சிலந்திக்கு இன்னரசு அளித்தும், கார்மலி உருவக் கருடனைக் காய்ந்தும், கல்லால நிழலில் இருந்து நால்வருக்கு உபதேசம் செய்தும்,
இன்னவை பிறவும் எங்கள் ஈசன்
கோபப் பிரசாதம் கூறுங் காலைக்
கடிமலர் இருந்தோன் கார்க்கடற் கிடந்தோன்
புடமுறு சோலைப் பொன்னகர் காப்போன்
உரைப்போர் ஆகிலும் ஒண்கடல் மாநீர்
அங்கைக்கொண்(டு) இறைக்கும் ஆதர் போன்றுளர்
தெளிவுரை : இது போன்ற பிறவும் எங்கள் ஈசன் கோபப் பிரசாதங்களாகும். இன்னும் இதுபற்றிச் சொல்ல வேண்டுமானால் நான்முகனும் திருமாலும் இந்திரனும் பற்றி உரைக்க கடல் நீரை உள்ளங்கையினால் இறைக்கும் அறிவில்லாதவர் இருக்கின்றனர்.
ஒடுங்காப் பெருமை உம்பர் கோனை
அடங்கா ஐம்புலத்(து) அறிவில் சிந்தைக்
கிருமி நாவாற் கிளத்தும் பரமே, அதாஅன்று
ஒருவகைத் தேவரும் இருவகைத் திறமும்
தெளிவுரை : குறையாத பெருமையினையுடைய தேவர்கள் தலைவனை அடங்காத ஐம்புலத்தறிவில் சிந்தை கிருமி நாவாற் பேசும் பரமேயாகும். அதுவும் அல்லாமல் ஒருவகைத் தேவரும், இருவகைத் திறமும் கொண்ட
மூவகைக் குணமும் நால்வகை வேதமும்
ஐவகைப் பூதமும் அறுவகை இரதமும்
எழுவகை ஓசையும் எண்வகை ஞானமும்
ஒன்பதின் வகையாம் ஒண்மலர்ச் சிறப்பும்
பத்தின் வகையும் ஆகிய பரமனை
தெளிவுரை : மூவகைக் குணமும், நான்கு வகையான வேதங்களும், ஐம்பெரும் பூதங்களும், அறுவகையான சுவைகளும், எழுவகையான ஓசைகளும், எட்டு வகையான ஞானமும், ஒன்பது வகையாக உள்ள ஒளியுள்ள மலர்களின் சிறப்பும், பத்து வகையாக உள்ள பரமனை,
இன்பனை நினைவோர்க்(கு) என்னிடை அமுதினைச்
செம்பொனை மணியினைத் தேனினைப் பாலினைத்
தஞ்சமென்(று) ஒழுகும் தன்னடி யார்தம்
நெஞ்சம் பிரியா நிமலனை நீடுயர்
செந்தழற் பவளச் சேணுறு வரையனை
தெளிவுரை : இன்ப வடிவாக உள்ளவனை, நினைவோர்க்கு என்னிடை அமுதம் போன்றவனை, செம்பொன், மணி, தேன், பால் ஆகியவற்றைத் தஞ்சம் என்று ஒழுகும் சிவனடியார்களுடைய நெஞ்சத்தினின்றும் பிரியாது இருக்கின்ற நிமலனை, நீடுயர் செந்தழற் பவளச் சேணுறு வரையனை, (கயிலை வாசனை)
முக்கட் செல்வனை முதல்வனை மூர்த்தியைக்
கள்ளங் கைவிட்(டு) உள்ளம(து) உருகிக்
கலந்து கசிந்துதன் கழலிணை அவையே
நினைந்திட ஆங்கே தோன்றும் நிமலனைத்
தேவ தேவனைத் திகழ்சிவ லோகனைப்
தெளிவுரை : மூன்று கண்களையுடைய செல்வனை, முதல்வனை, மூர்த்தியை, கள்ளம் கைவிட்டு, உள்ளமது உருகி, கலந்து, கசிந்து தன் கழல் இணைகளை நினைந்திட, அங்கு தோன்றும் குற்றமற்றவனை, தேவதேவனை, திகழ சிவலோகனை,
பாவ நாசனைப் படரொளி உருவனை
வேயார் தோளி மெல்லியல் கூறனைத்
தாயாய் மன்னுயிர் தாங்கும் தந்தையைச்
சொல்லும் பொருளும் ஆகிய சோதியைக்
கல்லும் கடலும் ஆகிய கண்டனைத்
தெளிவுரை : பாவங்களை நாசம் செய்பவனை, பிரகாசமான உருவம் உடையவனை, மூங்கில் போன்ற தோள்களையுடைய உமாதேவியை இடப்பாகத்தில் வைத்துள்ளவனை, தாய் போல் இருந்து நிலை பெற்ற உயிர்களைத் தாங்கும் தந்தையை, சொல்லும் பொருளும் ஆகிய ஒளி வடிவினனை, மலையும் கடலும் ஆகிய நீலகண்டனை,
தோற்றம் நிலைஈ றாகிய தொன்மையை
நீற்றிடைத் திகழும் நித்தனை முத்தனை
வாக்கும் மனமும் இறந்த மறையனைப்
பூக்கமழ் சடையனைப் புண்ணிய நாதனை
இனைய தன்மையன் என்றறி அரியவன்
தெளிவுரை : தோன்றுதல், நிற்றல், அழிதல் ஆகிய பழைமையை, திருநீறு திகழும் நித்தனை, முத்தனை, வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாமல் மறைந்து நிற்கும் மெய்ப் பொருளை, பூக்கமழ்கின்ற சடையனை, புண்ணிய நாதனை, எத் தன்மையுடையவன் என்று அறிய முடியாது.
தனைமுன் விட்டுத் தாம்மற்று நினைப்போர்
மாமுயல் விட்டுக்
காக்கைப் பின்போம் கலவர் போலவும்
விளக்கங் கிருப்ப மின்மினி கவரும்
அளப்பரும் சிறப்பில் ஆதர் போலவும்
தெளிவுரை : தனை முன் விட்டு, வேறு கடவுளர்களை நினைப்போர் மாமுயல் விட்டு, காக்கைப் பின் போகின்ற கீழ்மக்கள் போலவும், விளக்கு கையில் இருக்க, மின்மினி கவரும் அளப்பரும் சிறப்பில் அறிவில்லாதவர் போலவும்,
கச்சங் கொண்டு கடுந்தொழில் முடியாக்
கொச்சைத் தேவரைத் தேவரென்(று) எண்ணிப்
பிச்சரைப் போலவோர்
ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று
வட்டணை பேசுவர் மானுடம் போன்று
தெளிவுரை : ஆடையைக் கச்சமாகக் கட்டிக் கொண்டு, கடுந்தொழில் முடியா கீழான தேவரைத் தேவரென்று எண்ணி, பித்தரைப் போல ஓர் ஆரியப் புத்தகப் பேய் கொண்டு புலம்பி பெருமை பேசுவர். மானுடம் போன்று,
பெட்டினை உரைப்போர் பேதையர் நிலத்துன்
தலைமீன் தலைஎண் பலமென் றால்அதனை
அறுத்து நிறுப்போர் ஒருத்தர் இன்மையின்
மந்திர ஆகுவர் மாநெறி கிடப்பவோர்
சித்திரம் பேசுவர் தேவ ராகில்
தெளிவுரை : வீண் பெருமை சொல்லுவோர் பேதையராவர். பூமியில் உன் தலை மீன், தலை எள், பலம் என்றால் அதனை அறுத்து நிறுப்போர் ஒருத்தரும் இல்லாமையின் கோபம் உடையவர் ஆவர். மாநெறி கிடப்ப ஒரு பொய் பேசுவர். தேவர்களானால்,
இன்னோர்க் காய்ந்தனர் இன்னோர்க்(கு) அருளினர்
என்றறிய உலகின்
முன்னே உரைப்ப தில்லை ஆகிலும்
ஆடு போலக் கூடிநின்(று) அழைத்தும்
மாக்கள் போல வேட்கையீ(டு) உண்டும்
தெளிவுரை : இன்னோரை வருந்தினர், இன்னோர்க்கு அருளினர் என்று அறிய உலகின் முன்னே உரைப்பதில்லை. என்றாலும், ஆடு போலக் கூடி நின்று அழைத்தும் மாக்கள் போல அதாவது விலங்குகளைப் போல விருப்பம் ஏற்படும்போது உண்டும்,
இப்படி ஞானம் அப்படி அமைத்தும்
இன்ன தன்மையன் என்றிரு நிலத்து
முன்னே அறியா மூர்க்க மாக்களை
இன்னேகொண்(டு) ஏகாக் கூற்றம்
தவறுபெரி(து) உடைத்தே தவறுபெரி(து) உடைத்தே.
தெளிவுரை : இப்படியுள்ள ஞானத்தை அப்படி அமைத்தும் இன்ன தன்மையன் என்று இந்தப் பெரிய உலகில் முன்னே அறியாத மூர்க்கரை, அதாவது ஆறறிவு பெறாத மக்கள் உருவாய்க் காணப்படுவோரை, இப்போதே கொண்டு செல்லாத கூற்றம் பெரிய தவறு செய்கிறது என்க. இது பெருந்தவறாகும்.
திருச்சிற்றம்பலம்
15. கார் எட்டு (நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்தது)
இந் நூல் கார் கால வரவினைக் கூறும் எட்டுப் பாடல்களால் அமைந்தபடியால் கார் எட்டு என்னும் பெயருடையதாயிற்று. உலகமும் அதற்கு உறுதியாகிய அறம் பொருளின்பங்களும் நடத்தற்குக் காரணமாகிய மழையினது வரவினை எடுத்துக் கூறுமுகத்தான், அம் மழைக்கும் காரணமாகிய இறைவனுடைய திருவருள் வண்ணத்தை எண்ணச் செய்வது இந் நூலாகும்.
திருச்சிற்றம்பலம்
492. அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல்
விரவி எழுந்தெங்கும் மின்னி - அரவினங்கள்
அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே
கைச்சங்கம் போல்முழங்கும் கார்.
தெளிவுரை : பாம்பை அரையில் கட்டிய சிவபெருமானது சடையைப் போல் பரவி, எழுந்து எங்கும் மின்னி, பாம்புக் கூட்டங்கள் அச்சங் கொண்டு ஓடி அணைய அடைவுற்று கையில் வைத்து ஊதப்படும் சங்குப் போல கார் பருவத்து மேகம் முழங்கும் என்க.
493. மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன்
கையார் சிலை விலகிக் காட்டிற்றே - ஐவாய்
அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக்
கழலரவம் காண்புற்ற கார்.
தெளிவுரை : கருமை நிறம் பொருந்திய அழகிய கழுத்தைப் போலக் கருதி, பிறகு அவனுடைய கையிலுள்ள வில்லைப் போல விலகிக் காட்டிற்று. ஐந்து வாயினை உடைய தீயைப் போலும் நஞ்சுள்ள பாம்பை அணிந்தவனது ஒளிவிடும் சடையைப் போல் மின்னி கழலின் ஒலி போல மேகம் இடித்தது.
494. ஆலமர் கண்டத்(து) அரன்தன் மணிமிடறும்
கோலக் குழற்சடையும் கொல்லேறும் - போல
இருண்டொன்று மின்தோன்றி அம்பொனவ் வானம்
கருண்டொன்று கூடுதலிற் கார்.
தெளிவுரை : நீலகண்டத்து அரனுடைய அழகுள்ள கழுத்தும் அழகு பொருந்திய குழலாகிய சடையும் கொல்லும் தன்மையுள்ள காளையும் போல முறையே இருண்டு, மின்னி, தோன்றி அழகிய அந்த செவ்வானத்தில் மேகம் கருநிறமுற்றது. கழுத்துப் போல் இருண்டு, சடை போல் மின்னி, ஏறு போல் தோன்றி என நிரல் நிறையாகப் பொருள் கொள்க.
495. இருள்கொண்ட கண்டத்(து) இறைவன்தன் சென்னிக்
குருள்கொண்ட செஞ்சடைபோல் மின்னிச் - சுருள்கொண்டு
பாம்பினங்கள் அஞ்சிப் படம்ஒடுங்க ஆர்த்ததே
காம்பினங்கள் தோளீயக் கார்.
தெளிவுரை : இருளின் நிறத்தைக் கொண்ட கழுத்தையுடைய இறைவனது தலையில் சுருள் கொண்ட செஞ்சடை போல் மின்னி, சுருளுதலைக் கொண்டு பாம்பினங்கள் அஞ்சிப் படம் ஒடுங்க, மூங்கில் தொகுதிகள் தோள் கொடுக்க மேகம் ஆரவாரம் செய்தது.
496. கோடரவங் கோடல் அரும்பக் குருமணிகான்(று)
ஆடரவம் எல்லாம் அளையடைய - நீடரவப்
பொற்பகலம் பூண்டான் புரிசடைபோல் மின்னிற்றே
கற்பகலம் காண்புற்ற கார்.
தெளிவுரை : காந்தள், வளைந்த பாம்பைப் போல அரும்ப, நிறம் பொருந்திய மணியைக் கக்கி, ஆடுகின்ற பாம்புகள் எல்லாம் வளையை அடைய பொன் போன்ற மார்பை உடையவனது சடை போல், தலைவர் வருமளவும் ஆற்றியிருந்து அறஞ் செய்யும் தலைவியரது கற்பின் விரிவைக் கண்ட கார் மின்னிற்று.
497. பாரும் பனிவிசும்பும் பாசுபதன் பல்சடையும்
ஆரும் இருள்கீண்டு மின்விலகி - ஊரும்
அரவம் செலவஞ்சும் அஞ்சொலார் காண்பார்
கரவிந்தம் என்பார்அக் கார்.
தெளிவுரை : புவியும் குளிர்ச்சி பொருந்திய விண்ணும் சிவபெருமானது பல சடையும் நிறைந்துள்ள இருளைக் கிழித்து மின் விலகி, ஊர்ந்து செல்லும் பாம்பும் செல்ல அஞ்சும் மேகத்தை அஞ்சொல்லை உடைய மகளிர், கையாகிய தாமரை என்பர்.
498. செழுந்தழல் வண்ணன் செழுஞ்சடைபோல் மின்னி
அழுந்தி அலர்போல் உயர - எழுந்தெங்கும்
ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதே
காவிசேர் கண்ணாயக் கார்.
தெளிவுரை : செழுமை தங்கிய தீ நிறக் கடவுளின் செழுஞ் சடைபோல் மின்னி, அழுந்தி, பழிச் சொல் போல் உயர, எழுந்து எங்கும் ஆவிசோர் நெஞ்சினரை அன்பளிக்க, கருங்குவளை மலரைப் போன்ற கண்களை நிகர்த்த மேகம் நேரிட்டது.
மேகத்தைக் கண்டு மகளிர் ஆறுதல் பெற்றனர் என்க.
499. காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப்
பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே - ஏந்தொளிசேர்
அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர்
கண்டம்போல் மீதிருண்ட கார்.
தெளிவுரை : காந்தள் மலர, மணமுள்ள கொன்றை மலர்ந்திருக்கும் காட்சி பொன் சொரிவதைப் போன்று இருக்கும் என்க. பூக்களையுடைய முல்லை பொருந்தப் புகுந்தது. மேகம் ஏந்தொளி சேர் அண்டம் போலவும் ஆதியான் ஆய்மணிசேர் கண்டம் போலவும் இருண்டது என்க.
திருச்சிற்றம்பலம்
16. போற்றித் திருக்கலிவெண்பா (நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்தது)
சிவபெருமான் உலகத்தில் உள்ள உயிர்த்தொகைகளுக்கு அருள் புரியும் பொருட்டு அவ்வக் காலங்களில் செய்தருளிய அருட் செயல்களை எடுத்துரைத்துப் பாராட்டுங் கருத்துடன், நக்கீரதேவ நாயனாரால் பாடப் பெற்ற இப்போற்றித் திருக்கலி வெண்பாவின்கண் சிவபெருமான் இயற்றி யருளிய அருட் செயல்கள் விரித்துரைத்துப் பெற்றுள்ளன.
திருச்சிற்றம்பலம்
500. திருத்தங்கு மார்பில் திருமால் வரைபோல்
எருத்தத்(து) இலங்கியவெண் கோட்டுப் - பருத்த
குறுத்தாள் நெடுமூக்கில் குன்றிக்கண் நீல
நிறத்தாற் பொலிந்து நிலமேழ் - உறத்தாழ்ந்து
பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள்
நின்றவா நின்ற நிலைபோற்றி - அன்றியும்
புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய்
அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் - பண்டொருநாள்
காணான் இழியக் கனக முடிகவித்துக்
கோணாது நின்ற குறிபோற்றி - நாணாளும்
தெளிவுரை : திருமகள் வாசம் செய்கின்ற மார்பினையுடைய திருமால், மலை போல் பெரிய பிடரியையும் இரண்டு வெண்மையான கொம்புகளையும் பருத்த குறுகிய கால்களையும் கொண்டு நீண்ட மூக்கில் குறுகி, கண் நீல நிலத்திற் பொலிந்து நிலத்தைத் தோண்டி பன்றி உருவாகித் தேடியும் காணாத உன் பாதங்கள் இருந்த நிலைக்கு வணக்கம். அதன்றியும் தாமரை மலரில் இருந்த பிரமன் கழுகு உருவமாகி எல்லா அண்டங்களும் ஊடுருவப் பறந்து சென்று முன்பொரு நாள் தேடியும் காணாமல் இறங்கி வந்து அவருக்குப் பொன் முடி சூட்டி, கோணாது நின்ற இறைவா, உனக்கு வணக்கம்.
பிரமன் எடுத்தது அன்ன உருவம் என்றும் கூறுவர்.
பேணிக்கா லங்கள் பிரியாமை பூசித்த
மாணிக்கா அன்று மதிற்கடவூர்க் - காண
வரத்திற் பெரிய வலிதொலைத்த காலன்
உரத்தில் உதைத்தஉதை போற்றி - கரத்தாமே
வெற்பன் மடப்பாவை கொங்கைமேல் குங்குமத்தின்
கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் - பொற்புடைய
வாமன் மகனாய் மலர்க்கணையொன்(று) ஓட்டியஅக்
காமன் அழகழித்த கண்போற்றி - தூமப்
தெளிவுரை : உன்னையே பல காலம் பிரியாமல் வழிபட்டு வந்த மார்க்கண்டேயனுக்காக, அன்று மதில்களையுடைய திருக்கடவூர்க் காண, வரத்திற் பெரிய வலி தொலைத்த எமதர்ம ராஜனை மார்பில் உதைத்த உதையை நினைத்து உன்னை வணங்குகிறேன். பர்வத ராஜனது மகளாகிய பார்வதி தேவியின் கொங்கைமேல் குங்குமத்தால் உனக்கு விருப்பம் உண்டாக்குவதற்காக, பொற்புடைய வாமனாவதாரம் எடுத்த திருமாலின் மகளாகிய மன்மதன் மலர்க்கணை ஒன்றை உன்மேல் செலுத்தியதால், அவனை எரித்தழித்த நெற்றிக் கண்ணிற்கு வணக்கம்.
படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி
விடமெடுத்த வேகத்தால் மிக்குச் - சடலம்
முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை
அடங்க மிதித்த அடி போற்றி - நடுங்கத்
திருமால் முதலாய தேவா சுரர்கள்
கருமால் கடல்நாகம் பற்றிக் - குருமாற
நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த
ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி - சாலமண்டிப்
தெளிவுரை : தீய படத்தை எடுத்த வாள் போன்ற பாம்பு பார்த்து அடரப் பற்றி விடமெடுத்த வேகத்தால் மிகுந்த சடலம் முடங்க வலிக்கும் முயலகனுடைய வலிமை அடங்க, அவனைக் காலடியில் போட்டு மிதித்த உன் பாதங்களுக்கு வணக்கம். திருமால் முதலாகிய தேவர்களும் அசுரர்களும் நடுங்க, எழுந்த கரிய பெரிய கடல் நாகத்தைப் பற்றி, செந்நிறமான நீலமுண்ட நீண்ட மேகத்தைப் போல மனம் கொதிக்க வந்தெழுந்த விஷத்தை உண்ட கண்டத்துக்கு வணக்கம்.
போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும்
தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் - வீரம்
கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர
எடுத்த நடத்தியல்பு போற்றி - தடுத்து
வரையெடுத்த வாளரக்கன் வாயா(று) உதிரம்
நிறையெடுத்து நெக்குடலம் இற்றுப் - புரையெடுத்த
பத்தனைய பொன்முடியும் தோள்இருப தும்நெரிய
மெத்தெனவே வைத்த விரல்போற்றி - அத்தகைத்த
தெளிவுரை : மிகுதியாக நெருங்கி, போரை விரும்பிய வானவர்கள் ஓடி ஒளிக்க நெருக்கி வருத்தும் தாருகாசுரனது மார்பில் ஒப்பற்ற சூலத்தை வீரமுடன் எறிய, மாகாளியினது கோபம் தணியுமாறு எடுத்த நடனத்தினது இயல்பிற்கு வணக்கம். தடுத்து இமய மலையை எடுக்க முயன்ற இராவணனது வாயில் ஆறாக இரத்தம் பெருகி, உடலும் நொறுங்கி, பத்து தலைகளின்மேல் இருந்த பொன் முடிகளும், தோள் இருபதும் நெரிய மெத்தெனவே வைத்த உன் கால் விரலுக்கு வணக்கம்.
வானவர்கள் தாங்கூடி மந்திரித்த மந்திரத்தை
மேனவில ஓடி விதிர்விதிர்த்துத் - தானவருக்(கு)
ஒட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை
வெட்டிச் சிரித்த விறல்போற்றி - மட்டித்து
வாலுலகத்தால் நல்லிலிங்க மாவகுத்து மற்றதன்மேல்
பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி - மேலுதைத்தங்(கு)
ஓட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை
வீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கண்
பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும்
நற்கோலம் ஈந்த நலம்போற்றி - நிற்க
தெளிவுரை : அத்தகைய வானவர்கள் ஒன்று கூடி மந்திரித்த மந்திரத்தை மேல் நவில ஓடி நடுநடுங்கி, அரக்கர்களுக்குச் சாதகமாகப் புறங்கூறிய பிரமனது தலையை வெட்டிச் சிரித்த உன் வல்லமைக்கு வணக்கம். வெண்மணலால் பூசி நன்றாக இலிங்கமாகச் செய்து மற்றதன்மேல் பால் அபிஷேகம் செய்வதைக் கண்டு பதைத்தோடி இலிங்கத்தைக் காலால் உதைத்த தனது தந்தையினது இரண்டு கால்களையும் வெட்டி, அவரது உயிரைப் போக்கிய சண்டிகேசுவரருக்குத் தனியாக நாட்டின்கண் பொற்கோயிலை நிறுவிப் பூமாலை, பிரசாதம் தந்து நற்கோலம் தந்த உன் நலத்திற்கு வணக்கம்.
வலந்தருமால் நான்முகனும் வானவரும் கூடி
அலந்தருமால் கொள்ள அடர்க்கும் - சலந்திரனைச்
சக்கரத்தால் ஈரந்தரிதன் தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கஅஃ(து) ஈந்த விறல்போற்றி - அக்கணமே
நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம்
தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய - மிக்கிருந்த
அங்கைத் தலத்தே அணிமானை ஆங்கணிந்த
செங்கைத் திறத்த திறல்போற்றி - திங்களைத்
தெளிவுரை : வெற்றியைத் தரும் திருமாலும், பிரமனும் தேவர்களும் ஒன்று கூடித் துன்பத்தை அடைய மயக்கத்தைத் தந்து தாக்கிய சலந்தரனைச் சக்கரத்தால் அழித்த திருமால் தனது தாமரை மலர் போன்ற கண்ணை இடந்து அருச்சித்த அந்த வெற்றிக்கு வணக்கம். அப்போதே நகைத்திருந்த சரஸ்வதியை மூக்கு அரிந்து, நான்கு வேதங்களும் விரும்பி துதி செய்ய, மிக்கிருந்த அழகிய மானைக் கையில் ஏந்திய உன் வெற்றிக்கு வணக்கம்.
தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேல் சேர்வித்து
வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் - பாய்த்திப்
பிரமன் குறையிரப்பப் பின்னும் அவர்க்கு
வரம்அன்(று) அளித்தவலி போற்றி புரமெரித்த
அன்றுய்ந்த மூவர்க்(கு) அமர்ந்து வரமளித்து
நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து - நன்று
நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில்
கடைகாவல் கொண்டவா போற்றி - விடைகாவல்
தெளிவுரை : காலால் தேய்த்த சந்திரனைச் செம்பொற் செழுஞ்சடைமேல் சேர்வித்து, தேவர்களைச் சிறையில் அடைத்து, பிரமன் வேண்டிக் கொள்ள, பிறகு அவர்களுக்கு வரமளித்து அருளிய உன் வலிமைக்கு வணக்கம். திரிபுரங்களை எரித்த போது, தப்பிய அசுரர்கள் மூவர்க்கும் அருள் கூர்ந்து வரமளித்து அவர்களைக் கோயில்களில் காவல் தெய்வமாக்கிய உன் அருள் தன்மைக்கு வணக்கம்.
தானவர்கட்(கு) ஆற்றாது தன்னடைந்த நன்மைவிறல்
வானவர்கள் வேண்ட மயிலூரும் - கோனவனைக்
சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து
வானாள வைத்த வரம் போற்றி - மேனாள்
அதிர்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக்
கொதித்தெழுந்த சூலத்தால் கோத்துத் -துதித்தங்(கு)
அவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்(து)அங்(கு) எழேழ்
பவமறுத்த பாவனைகள் போற்றி - கவைமுகத்த
தெளிவுரை : அசுரர்கள் சிறையிலிருந்த தேவர்கள் துன்ப மிகுதியால் உன்னிடம் முறையிட, மயில்வாகனனாகிய முருகப் பெருமானைச் சேனா பதியாகச் செம்பொன் முடி கவித்து வானாள வைத்த உன் வரத்திற்கு வணக்கம். முற்காலத்தில் ஆரவாரம் செய்தெழுந்த எமதர்மராஜனை உலகமெல்லாம் கடைத்தேற கொதித்தெழுந்த சூலத்தால் கோத்து, பிறகு அவன் வேண்டிக் கொண்டபடி அருள் செய்து நாற்பத்தொன்பது பலத்தை அறுத்த உன் பாவனைகளுக்கு வணக்கம்.
பொற்பா கரைப்பிளந்து கூறிரண்டாப் போகட்டும்
எற்பா சறைப்போக மேல்விலகி - நிற்பால
மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண்
வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி - விம்மி
அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக
எடுத்துரித்துப் போர்த்த இறை போற்றி - தொடுத்தமைத்த
தெளிவுரை : பிளவுபட்ட முகத்தையுடைய பொற்பாகரைப் பிளந்து இரண்டு கூறாக எடுத்து வீசியும் பாசறையை விட்டு வெளியே வந்து நின்ற மூன்று மறதத்தையும் வெண் கோட்டையும் கார் நிறத்தையும் அஞ்சாமையோடு மதங் கொண்டு வேகமாக ஓடி விம்மிப் பேரொலி செய்து பாய வந்த அடுகளிற்றைக் கொன்று அதன் தோலைப் போர்த்திக் கொண்ட உன் வீரத்திற்கு வணக்கம்.
நாண்மாலை கொண்டணிந்த நால்வர்க்(கு)அன்று(று) ஆல்நிழற்கீழ்
வாண்மாலை ஆகும் வகையருளித் - தோள்மாலை
விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம்
எட்டிலங்க வைத்த இறைபோற்றி - ஒட்டி
விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி
அசைய உடல்திரியா நின்று - வசையினால்
பேசு பதப்பாற் பிழைபொறுத்து மற்றவற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி - நேசத்தால்
தெளிவுரை : அன்றலர்ந்த மலர்மாலை அணிந்த சனகாதி முனிவர்கள் நால்வர்க்கு, கல்லால நிழலின்கீழ் நல்லுபதேசம் செய்து, தோள் மீதிருந்த மாலை பிரகாசிக்க, அப்போதே பார்த்து, வியந்த குணம் எட்டிலங்க வைத்த இறையே வணக்கம். அதை அடுத்து, அருச்சுனனது ஆற்றலின் அளவை அறிய வேண்டி, வேடுருவம் தாங்கி அசைய, உடல் திரியா நின்று வசையினால் பேசிய சொற் குற்றம் பொறுத்து, அவனுக்குப் பாசுபதக் கணை தந்த உன் பாதங்களுக்கு வணக்கம்.
வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந்திறைஞ்சி
ஆயசீர் போனகமா அங்கமைத்து -தூயசீர்க் 42
கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து
விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி - மண்ணின்மேல் 43
காளத்தி போற்றி கயிலைமலை போற்றியென
நீளத்தி னால்நினைந்து நிற்பார்கள் - தாளத்தோடு 44
எத்திசையும் பன்முரசும் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப
அத்தனடி சேர்வார்கள் ஆங்கு.
தெளிவுரை : அன்பினால் வாயில் நீர் முகந்து வந்து, உன் முடிமீது அதை உமிழ்ந்து, இறைச்சியினாலாகிய உணவை அங்கு வைத்து, தூய்மையான சிறப்புடைய கண்ணைத் தோண்டிய கண்ணப்பரது கையை மிக விரும்பி விண்ணுலகம் அளித்த உன் வெற்றிக்கு வணக்கம். பூமியில் காளத்திபதிக்கு வணக்கம், கயிலை மலைக்கு வணக்கம் என்று நெடுங் காலமாக எண்ணி நிற்பவர்கள் தாளத்தோடு எல்லாப் பக்கங்களிலும் பல பேரிகைகளும் ஒலி செய்ய இமையோர் வணங்க, அத்தனாகிய உனது அடியை அப்போதே சேர்வார்கள் என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
17. திருமுருகாற்றுப்படை (நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்தது)
ஆற்றுப் படை என்பதன் பொருள், வழிப்படுத்துதல் என்பதாகும். திருமுருகாற்றுப்படை என்னும் இந் நூல் திருமுருகனுடைய திருவருளைப் பெற்றான், ஒருவன் பெறாதானாகிய ஒருவனை அக் கடவுளிடத்தே ஆற்றுப்படுத்துவதாகப் பாடப்பட்டதாகும். இதன்கண் முதலில் முருகப் பெருமானுடைய தலைமைத் தன்மையின் சிறப்பினைக் கூறிப் பிறகு அப் பெருமானுடைய திருவுருவச் சிறப்பும் அப் பெருமானை வழிபட்டுத் தேவ மகளிர் ஆடும் சிறப்பினையும், திருப்பரங்குன்றத்துப் பெருமையும் பிறகு திருச்சீர் அலைவாயின்கண் வீற்றிருக்கும் அம்முருகப் பெருமானுடைய ஆறுமுகங்களும் பன்னிரண்டு கைகளும் அமைந்திருப்பதை விரிக்கும் வகையால், அவர் இயற்றும் ஐந்தொழிற் சிறப்பும் திருவாவினன்குடியின்கண் அப்பெருமானைக் கண்டு வழிபடற்கு முனிவர் தேவர் முதலியோர் வந்து சேரும் காட்சியும், திருவேரகத்தின்கண் இரு பிறப்பாளர் முருகப் பெருமானைப் போற்றும் சிறப்பும், குன்றுகள் தோறும் முருகப் பெருமானுக்கு வேல் முருகன் ஆடும் வெறியாட்டம் பிற செய்திகளும் அழகுற விரித்தோதப் பெற்றுள்ளன.
திருச்சிற்றம்பலம்
1. திருப்பரங்குன்றம்
501. உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்(கு) அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள்
செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
தெளிவுரை : உயர்ந்தோர் விரும்பும்படி எழுந்து மேருவை வலமாக வருகின்ற பலராலும் புகழப்பட்ட ஆதித்தன், கடலிடத்து கண்டாலொத்த ஒழிவில்லாமல் விளங்குவதாய் நீண்ட தூரத்தில் சென்று விளங்குகின்ற ஒளியினையும், தன்னை அடைந்தோராகிய அடியார்களைத் தாங்குகின்ற செருக்கும் வலியும் உளவான சீர் பாதங்களையும் பகைவர்களை மாய்த்த மேகம் போன்ற வளவிய கையினையும் உடைய குற்றமில்லாத கற்பினையும், ஒளி சிறந்த நெற்றியினையும் உடைய தெய்வயானையார்க்குக் கணவனாய் உள்ளவன்.
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்(து)
இருள்படப் பொதுளிய பராஅரை மராஅத்(து)
உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்
தெளிவுரை : கடலில் நீர் முகந்த முதிர்ந்த சினையை யுடைய கரிய மேகங்களானவை வாளால் பிளந்தாற்போல மின்னுகின்ற வானத்தில் நின்ற வளவிய நீர்த் துளிகளைச் சிந்தி முதற் பெயலைப் பெய்துவிட்ட தட்பத்தையும் நறுநாற்றத்தையும் உடைத்தாய காட்டிடத்து இருளுண்டாகும்படி நெருங்கித் தழைத்த பருத்த வரை வடிவினையுடைய திருக்கடம்பின் வட்டப் பூவால் தொடுத்த குளிர்ந்த மாலை அசைகின்ற திருமார்பினை உடையவன்.
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோள்
கோபத் தன்ன தோயாப் பூந்துகில்
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
தெளிவுரை : பெரிய மூங்கில்கள் ஓங்கி, மிகவும் உயர்ந்த மலையில் பாதசாலம் பொருந்தின அழகியதாகச் சிவந்த சிறிய அடிகளையும் அம்புக்குதையடி போன்ற சுருங்கிய இடையையும் பணைத்த தோள்களையும், இந்திர கோபத்தை யொத்த சிவந்த தோய்க்கப்படாத பூத்தொழிற் பட்டினையும் பல இரத்தினங்களால் நிறைக்கப்பட்ட நுண் தொழிலாற் சிறந்த மேகலை அணிந்த அல்குலையும்;
கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்
சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச்
தெளிவுரை : கையால் திருத்திச் செய்ய வேண்டாத நன்மை பெற்ற அழகையும், நாவலால் பேர் பெற்ற சாம்பு நதம் என்ற பொன்னால் செய்யப்பட்ட விளங்குகிற ஆபரணங்களையும், அதிதூரம் கடந்து விளங்குகிற குற்றம் தீர்ந்த மேனியையும் உடையவராய்ப் பாங்கிமாரால் வகிரப்பட்ட இணையொத்த குளிர்ச்சியை உடைத்தாகிய மயிரில்;
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்
துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்(டு)
உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்
பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் ஆகந் திளைப்பத் திண்காழ்
தெளிவுரை :  சிவந்த தாளையுடைத்தாகிய வெட்சியின் சிறிய இதழையும், இடையிட்டுப் பச்சென்ற தாளையுடைத்தாகிய நீலப் பூவின் துய்ய இதழையும், கிள்ளிச் சீதேவி என்னும் தலைக் கோலத்துடன் வலம்புரிச் சங்கு வடிவான அணியையும், இடம் வாய்க்க வைத்துத் திலகத்தை அணிந்த நறுநாற்றம் கமழ்கின்ற நெற்றியில் சுறாமீனின் அங்காத்த வாய் தோற்கும்படி செய்த அணியை அலங்காரம் பெற அணிந்து, முற்றுப் பெற முடித்த குற்றமற்ற உச்சிக் கொண்டையில் மிகவும் குளிர்ந்த சண்பகப் பூவையும் சொருகி, பச்சென்ற புற இதழையும் துய்யினையும் உடைய மலர்களைப் பொருந்திய மருதினது ஒள்ளிய கொத்துக்களையும் இட்டு, கிளை அரும்பீன்று அழகியதாய் மேல் நோக்கின நீர்க் கீழ்ச் சிவந்த அரும்பினால் தொடுக்கலுற்ற மாலையை நெற்றி மாலையாகச் சுற்றி இணையொத்த வளவிய காதில் நிறைய விட்ட அசோகினது அழகிய தளிர் நுண் தொழிலால் சிறந்த ஆபரணம் அணிந்த மார்பில் வந்தலைய;
நறுங்குற(டு) உருஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்
வேங்கை நுண்தா(து) அப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென்(று) ஏத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச்
சூரர மகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
தெளிவுரை : திண்ணிய வயிரத்தையுடைய நறுமணமுள்ள சந்தனக் குறட்டைத் தேய்த்த பொலிவையும் நிறத்தையும் உடைய குழம்பை, மணங் கமழ்கின்ற மருதின் பூவை அப்பினால் ஒப்பக் கோங்கினது குவிந்த அரும்பை ஒத்த இளமுலைகளில் அப்பி, வேங்கையின் இதழ் விரிந்த பூவில் உள்ள நுண்ணிய தாதையும் குழம்பின் மேலதாய் அப்பி அழகு பெற விளாவின் இளந்தளிரையும் கிள்ளிப் பிள்ளையார் சீர்பாதங்களுக்குப் பத்திரியாகத் தெரித்து, கோழியை உயரக் கொண்டிருக்கின்ற மிக்க வெற்றியை உடைய உயர்ந்த கொடியை மிகவும் வாழ்வதாக என்று வாழ்த்தி மகளிர் பலருடனே சிறப்பு மிக்க மலையிடமெல்லாம் எதிராய் ஆரவாரிக்கும்படி பாடி, தெய்வப் பெண்கள் விளையாடுகின்ற சோலையையுடைய, குரங்குகளாலும் ஏறி அறியப் படாத உயர்ந்த மரங்கள் நெருங்கிய பக்கவரையாகிய காட்டில் வண்டுகள் மொய்க்காத சுடரை ஒத்த காந்தட்பூவால் தொடுத்த மிகவும் குளிர்ந்த மாலையைச் சூடிய திருமுடியை உடையவன்;
பார்முதிர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச்
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
உலறிய கதுப்பிற் பிறழ்பல் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கிற்
கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதில் பிணர்மோட்(டு)
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல்
கண்தொட்(டு) உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா
நிணந்தின் வாயள் துணங்கை தூங்க
இருபே ருருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்
தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்
தெளிவுரை : பூமியைச் சூழ்ந்த குளிர்ந்த கடல் கலங்கும்படி அதன் உள்ளே புகுந்து சூரனை வேரோடு வெட்டின ஒளியினையும், இலைத் தொழிலையும் உடைய மிக்க திருக்கை வேலினால்,
உயர்ந்த மயிரையும் பிறழ்ந்த பல்லையும் பெரிய வாயையும் வட்ட விழியாலாகிய பச்சைக் கண்ணால் கண்டோர் பயப்படும்படி பார்க்கின்ற பார்வையையும், கழன்று விழுவது போன்ற கண்களையுடைய கோட்டானுடனே கடுங்கோபத்தையுடைய பாம்பு தொங்குதலால் பெரிய முலைகளை வருத்துகின்ற காதுகளையும், சருச்சரை பொருந்திய முதுகையும் வெப்பங் கெழுமின நடையையும் உடைய கண்டார் அஞ்சத் தக்க பேய்ப் பெண் உதிரந்தோய்ந்த கூரிய உகிரையுடைய வளைந்த விரலால் கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட ஊன் கழிந்த முடை நாற்றத்தை உடைய பெரிய தலையை அழகிய வளையிட்ட பெரிய கையிலேந்தி, அஞ்சத்தக்க திருக்கை வேலால் வெற்றி செய்து கொண்டருள்கின்ற பிள்ளையாருடைய போர்க்களத்தைப் பாடித் தோளோடு தோளிட்டு நிணம் தின்கின்ற வாயினை உடையவளாய்ப் பேய்க் கூத்தை இடைவிடாதே ஆடச் சூரன் என்றும் பதுமன் என்றும் இரண்டு பெயரையும் பிறர் அஞ்சத் தக்க வடிவையும், ஒப்பற்ற பெரிய உடம்பையும் உடைய சூரன் ஆனவன், ஆறு வேறு வகைப்பட்ட வடிவினாலும் அஞ்சும்படி அடுக்கச் சென்று, அசுரருடைய நல்ல வெற்றி அழியும்படி மாயையினால் கீழ் நோக்கிக் கவிழ்ந்த கொத்தினை உடைய மாமரத்தை வேரோடே வெட்டின குற்றமில்லாத வெற்றியினையும் ஒருவராலும் அறியப்படாத நல்ல கீர்த்தியினையும் சிவந்த வேலையுமுடைய பிள்ளையாரின்;
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்(து) உறையும்
செலவுநீ நயந்தனை யாயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத்(து) இன்னிசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
தெளிவுரை : சிவந்த திருவடிகளைத் தேடிச் செல்லுகிற செம்மாந்த உள்ளத்தோடே நன்மை புரிந்த கோட்பாட்டையுடைய நீ, அவன் விரும்பி வாழ்கிற கோட்பாட்டையுடைய நீ, அவன் விரும்பி வாழ்கிற நிலத்தில் செல்வதற்கு விரும்பினாயானால் நற்குணங்கள் பலவும் வாய்க்கப்பெற்ற அழகிய நெஞ்சத்து இனிதாக நச்சின பொருள்கள் எல்லாம் வாய்க்கும்படி இப்பொழுதே நீ நினைத்த காரியங்களைப் பெறுபவை;
இனி மதுரை வளம் சொல்லுகிறார்.
செருப்புகன்(று) எடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
மாடமலி மறுகில் கூடற் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் கணைமலர்
அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்(து) உறைதலும் உரியன் அதாஅன்று
தெளிவுரை : பூசலைக் கூறி எடுத்த அதிதூரத்தில் உயர்ந்து தோன்றுகிற மிகுந்த கொடிகளின் அருகில் அழகியதாகச் செய்த பந்துடன் வீரத்துக்கு அறிகுறியாகப் பன்னிரண்டு பாவைகளும் தூங்கும்படி; பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுவதற்குப் பந்தும் பாவையும் தொங்கவிடுவர்.
பொருவாரை அழித்ததனால் போர் செய்வதற்கு அரிதாகிய மதில் வாயிலையும், திருமகள் சிறப்போடு அமர்ந்திருந்த குற்றம் தீர்ந்த அங்காடி வீதியையும், மாடங்கள் மிகுந்த மற்றத் தெருக்களையும் உடைய திரு ஆலவாய்க்கு மேற்குப் பக்கத்தில்,
இனி, திருப்பரங்குன்றின் வளம் சொல்லப் புகுகின்றார்.
பெரிய சேற்றிடத்து அகன்ற வயலின்கண் கிண்கிணி போல வாய் செய்து மலர்ந்த முள்ளுடைத் தாகிய தாளாற் சிறந்த தாமரைப் பூவில் உறங்கி, விடியாமத்து மதுக் கமழுகின்ற நெய்தற் பூவில் ஊதி ஒளியுண்டாகும்படி, மகளிர் கண் போல் மலர்ந்த அழகிய சுனையில் குவளைப் பூவில் அழகிய சிறகை உடைய வண்டுத்திரள் ஆரவாரிக்கும். இப்படிப்பட்ட திருப்பரங்குன்றம் என்கிற திருமலையிடத்தே விரும்பி வாழ்தற்கு உரியன்; அங்குச் செல்க.
2. திருச்சீர் அலைவாய் (திருச்செந்தூர்)
வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டு மருங்கின் கடுநடைக்
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன வேழம் மேல் கொண்(டு)
தெளிவுரை : கோட்டின் கூரிய நுனியில் தோன்றி அத்தழும்பு வாழும் வரியுடைத்தாகிய நெற்றியையும், பொன்னரி மாலையானது பட்டத்துடனே அசைய, ஓசையுடையவனாகிய மணிகள் ஆரவாரிக்கின்ற பக்கத்தையும் கடிய நடையையும் உடைய கூற்றுவனை ஒத்த மாற்றுவதற்குரிய வலியையும் உடையதாய்க் காற்றுக் கிளர்ந்தாலொத்த ஆனையின் மேல் ஏறியருளி;
ஐவே(று) உருவில் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்னுறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விலங்(கு) இயற்கை வான்மதி கவை(இ)
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்
மனனேர்(பு) எழுதரு வாணிற முகனே
தெளிவுரை : ஐந்து வேறு வகைப்பட்ட வடிவிலும் செய்தொழில் முற்றுப்பெற்ற மகுடத்துடன் விளங்கிய விளக்கம் பெற்ற மாறுபாடு, மிக்க அழகிய மாணிக்கங்கள் மின்னை ஒத்த விளக்கத்துடன் திருமுடியில் நின்று அழகு செய்ய, மணியொளி தங்கி மிக்கு அசைகின்ற கூறுபாடு மிக்க பொன்னால் செய்த மகரக் குழையானது அதி தூரத்தைக் கடந்து விளங்குகின்ற இயல்பையுடைய ஒளி பொருந்திய சந்திரனைப் பொருந்தி அகலாது நின்ற வான் மீன்களை ஒப்பப் பாடம் செய்து விளங்குகிற குற்றமில்லாத கோட்பாட்டினை உடைய தமது தவத் தொழிலை முடிக்கிற பெரியோருடைய மனத்தில் அழகியதாக உதித்துத் தோன்றுகிற ஒளி நிறமுடைய திருமுக மண்டலங்களில்,
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்(று) ஒருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி(து) ஒழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
தெளிவுரை : மிகவும் பெரிய பூமி குற்றமின்றி விளங்கப் பல ஒளிகளுமாக விளங்குமாறு நின்றது ஒரு திருமுக மண்டலம். ஒரு முகமானது ஒரு பொருள் மேல் ஆசைப்பட்டார் வாழ்த்த விரும்பி இனிதாகச் சென்று அன்பினால் மகிழ்ந்து அவர் வேண்டின வரங்களைக் கொடுத்தருளியது; ஒரு முகமானது மந்திரங்கள் விதிக்கப்பட்ட வேத விதியால் மரபு வழுவாத பிராமணர்களுடைய யாகத்தைத் திருவுளம் பற்றி அருளியது.
எஞ்சிய பொருளை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்(கு)அம்
மூவிரு முகனும் முறைநவின்(று) ஒழுகலின்
தெளிவுரை : ஒரு முகமானது வேதங்களில் மறைந்த பொருள்களைத் தெய்வ இருடிகள் இன்புறும் வண்ணம் விசாரித்துப் பூரண சந்திரன் போலத் திக்கெல்லாம் விளக்கி நின்றது, ஒரு முகமானது, முன்புள்ள பகைவர்களை மாய்த்து இப்பொழுதுள்ள பூசலையும் கெடுத்து மேலும் பொருவாருண்டோ என்று கறுவின திருவுளத்தோடு போர்க்களத்தை விரும்பி நின்றது; ஒரு முகமானது, குறவருடைய மெல்லிய மகளாகிய கொடி போன்ற இடையினை உடைய மடப்பத்தை வேலியாகக் கொண்ட வள்ளி நாச்சியாருடனே திருமுறுவல் செய்து மிளிர்கின்றது. அத்தொழில்களில் அந்த ஆறு திரு மண்டலங்களும் முறைமையிற் சொன்னபடியே நடத்தலினால்,
ஆரந் தாழ்ந்த அம்பகட்டு மார்பில்
செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின் ஐயர்க்(கு) ஏந்திய(து) ஒருகை
உக்கம் சேர்த்திய(து) ஒருகை
நலம்பெறு கலிங்கத்து குறங்கின்மிசை அசைஇய(து) ஒருகை
அங்குசம் கடாவ ஒருகை இருகை
ஐயிரு வட்டமொ(டு) எஃகுவலந் திரிப்ப ஒருகை
தெளிவுரை : முத்து வடம் தாழ்ந்த அழகிய பெரிய மார்பில் அழகிய கரும்பும் கொடியுமாக எழுதப்பட்ட வலியுடைய ஒளிவிட்டு வளவிய புகழை நிறைய உடைத்தாய் வசிகரணம் உண்டாக வளைப்பட்டு நிமிர்ந்த தோள்களில், திருப்புயங்களைச் சொல்லப் புகுகின்றார். ஆகாயத்தில் செல்லுகிற இயல்பினையுடைய தெய்வ இருடிகளுக்கு அபயத்தம் கொடுத்தது ஒரு கை; ஒரு கை திருங்குலைச் சேர்த்து அருளியது. (இரண்டு கையும் முதல் முகத்துக்கு ஏற்ற கைகள்). நன்மை பெற்ற திருவுடையால் சிறந்த திருத்தொடையின்மேல் அசைத்தருளியது ஒரு கை. தோட்டியால் யானையைக் கடாவி அருளி நின்றது ஒரு கை (இவை இரண்டாவது முகத்திற்கு ஏற்ற கைகள்)
இரண்டு கைகள் அழகிய பெரிய கேடகத்தோடு வாளையும் வெற்றியுண்டாக நின்றன. (இவை மூன்றாவது முகத்திற்கு ஏற்ற கைகள்)
மார்பொடு விளங்க ஒருகை
தாரொடு பொலிய ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை
பாடின் படுமணி இரட்ட ஒருகை
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட ஆங்கப்
பன்னிரு கையும் பாற்பட இயற்றி
தெளிவுரை : ஒரு கை, திருமார்பில் யோக முத்திரையைக் கொடுத்து நின்றது. ஒரு கை திருமாலையைத் திருத்தியது. (இவை இரண்டும் நான்காவது முகத்திற்கு ஏற்ற கைகள்) ஒரு கை பாதாள லோகத்தில் விழுகின்ற பருவளையை எடுத்து மேன்மேல் சுற்றுகின்றது. ஒரு கை திருவரையில் சுற்றின மணிகளை அசைக்கின்றது. (இவை இரண்டும் ஐந்தாவது முகத்திற்கு ஏற்ற கைகள்). ஒரு கை நீல நிறமுடைத்தாகிய ஆகாயத்தில் மிக்க மழையைப் பொழிவிக்கின்றது, ஒரு கை தெய்வயானை யாருக்குத் திருமண மாலையைச் சூட்டி அருளியது. (இவை இரண்டும் ஆறாவது முகத்திற்கு ஏற்ற கைகள்)
ஆங்கு அசை. அந்தப் பன்னிரண்டு கைகளையும் முறைமையில் திருமுக மண்டலங்களுக்குச் சொன்ன படியில் செலுத்தி,
அந்தரப் பல்லியங் கறங்கத் திண்காழ்
வயிரெழுந் திசைப்ப வால்வளை நரல
உரம்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ
விசும்பா றாக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று
தெளிவுரை : ஆகாயத்தில் பல தெய்வ துந்துபிகளும் நின்று முழங்கித் திண்ணிய கருங் கொம்புகள் மிகவும் ஆரவாரிக்க, வெள்ளிய சங்குகள் முழங்க வலிமையைத் தன்னிடத்தே கொண்ட உருமேற்றை ஒத்து முழங்கிய வீர முரசோடு பலவரிகளை யுடைய மயிலின் வெற்றிக் கொடியைப் பொருந்த எடுத்து ஆரவாரிக்க ஆகாயமே வழியாக விரைந்து வருவதாகத் திருவுள்ளத்து அடைந்தருளி உயர்ந்தோரால் புகழப்பட்ட மிகவும் உயர்ந்த விழுமிய சீர்மைப் பாட்டினையுடைய திருஅலைவாயில் எழுந்தருளி வந்தது தொடங்கி நிலை நின்று வாழ்கிற பண்பினையுடையவன் அங்கேறிச் செல்க. அங்கன்றாயின் நம் பிள்ளையாரைக் காணலாமிடம் சொல்லப் புகுகின்றார்.
3. திருஆவினன்குடி
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வானரை முடியினர்
மாசற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந்(து) இயங்கும் யாக்கையர் நன்பகல்
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புகப்
தெளிவுரை : மரவுரியைப் பொருந்தின உடையாக உடையவர்களும் சிறப்புடனே வலம்புரிச் சங்கை யொத்த வெள்ளிய நரை முடியை யுடையவர்களும் குற்றமற விளங்குகிற வடிவை உடையவர்களும், மான் தோல் பொருந்தின, பட்டினியால் ஊன் சென்றதால் எலும்புடனே ஒடுங்கின மார்பை உடையவர்களும் எலும்புச் சட்டை மேல் எழுந்து உலாவுகின்றாற் போல இருக்கிற உடம்பினை உடையவர்களும் மாற் சரியத்தையும் கோபத்தையும் விட்ட மனத்தினை யுடையவர்களும், எல்லா நூல்களையும் கற்று வல்லோராலும் அறியப்படாத அறிவை உடையவர் களும் பல கலைகளையும் கற்றோர்க்குத் தாங்கள் எல்லையாய் இருக்கிற தலைமையானவர்களும் ஒரு பொருள் மேலே விரும்புதலும் வேறுபடுதலும் அற்ற அறிவினை யுடையவர்களும் கிலேசத்தைச் சிறிதும் அறியாத இயல்பினை யுடையவர்களும் ஆகிய திருவுள்ளத்துக்குப் பொருந்த வெறுப்பற்ற அறிவினையுடைய இருடிகள் முன்னே செல்ல, (அவர் பின்னாக)
புகைமுகத் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம் புளர
தெளிவுரை : புகையைக் கையினால் முகந்தாற்போல மென்மையாய் இருக்கும் குற்றமற்று விளங்குகிற உடையையும், அரும்புகள் வாய் அவிழ்ந்து விரிந்த அழகிய மாலையை யணிந்த மார்பினையும் செவியால் அளந்து செய்யப்பட்ட வார்க்கட்டையுடைய நல்ல யாழைச் சேவித்த இனிமையுடைய மனத்தையும் உடைய மென்மையான சொற்களைப் பொருந்திய கந்தருவர் இனிய யாழ் நரம்பை வாசித்துக் கொண்டு செல்ல, அவருடனே,
நோயின் றியன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப்
பருமம் தாங்கிய பணிந்தேந்(து) அல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
தெளிவுரை : நோயின் இயன்ற உடம்பினை யுடையவர்களும் மாவினுடைய விளங்குகின்ற தளிரை யொத்த நிறத்தினை உடையவர்களும் விளங்குந்தோறும் பொன்னை உரைத்தால் ஒத்த அழகிய தேமலை உடையவர்களும் இனிய முறுவலையும் அரையாபரணம் தரிக்கப்பட்ட தாழ்ந்து பக்கம் உயர்ந்த அல்குலையும் உடையவர்களுமாகிய குற்றமில்லாத கந்தர்வ மகளிருடனே குற்றமின்றி விளங்க, அதன்பின்,
கடுவோ(டு) ஒடுங்கிய தூம்புடை வாலெயிற்(று)
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்(து)
ஈரிரண்(டு) ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்
தெளிவுரை : நஞ்சோடு இணங்கின உள்ளே வெளியுடைத்தாகிய வெள்ளிய எயிற்றையும் (பல்) நெருப்புப் போல மூச்சு விடுகிற கண்டார் அஞ்சத்தக்க கடிய கோபத்தையும் உடைய பாம்பையும் படும்படி புடைக்கிற பலவரிகளையும் வளைந்த சிறகையும் உடைய கருடாழ்வாரை அழகிய கொடியாகவுடைய நாராயணனும், வெள்ளை இடபத்தை வலப்பக்கத்தே கொடியாக எடுத்த பலராலும் புகழப்பட்ட திருப்புயங்களையும் தம்பிராட்டியை விரும்பி விளங்குகிற இமையாத மூன்று நயனங்களையும் உடைய திரிபுரங்களை அழித்த வலிமை மிக்க செல்வனாகிய மகாதேவனும், ஆயிரங் கண்களையும் நூறுபல பத்தாயிரம் வேள்வி செய்து கொல்லுகிற எயிற்றையும் நன்கு ஏந்தப்பட்ட கொம்புகளையும் அழகிய நடையையும் நீண்ட பெரிய கையினையும் உடைய யானையின் கழுத்தில் ஏறியிருந்த அழகு மிக்க தேவேந்திரனும்
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவ ராக
ஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப்
பகலில் தோன்றும் இகலில் காட்சி
நால்வே(று) இயற்கைப் பதினொரு மூவரோ(டு)
ஒன்பதிற்(று) இரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத்
தீஎழுந் தன்ன திறலினர் தீப்பட
உருமிடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில்தம் பெருமுறை கொண்மார்
தெளிவுரை : அந்தணர் பூதம், அரசர் பூதம், வணிகர் பூதம், வேளாளர் பூதம் என்று நான்கு பெரிய தெய்வங்களையும் உடைய நல்ல கோபுரங்கள் நிலை பெற்ற இந்த உலகத்தைக் காக்கின்ற உண்மை ஒன்றினையே விரும்பிய கோட்பாட்டினால் நாராயணனும் மகாதேவரும் தேவேந்திரனும் தலைவர்களாக வேண்டி, ÷க்ஷமமுற்ற பூமியில் வந்து தோன்றித் திருமால் திருநாபிக் கமலத்தில் பிறந்த கேடு இல்லாத ஊழிக்காலத்தையுடைய நான்கு முகங்களை யுடைய பிரமாவைச் சுட்டிப் பிள்ளையாரைக் காண வருவதாக ஆதித்தனைப் போலத் தோன்றுகிற வெறுப்பற்ற அறிவினை யுடையவர் நாலு வேறுபட்ட இயல்பினையுடைய பன்னிரு ஆதித்தியரும், பதினொரு உருத்திரமும், அட்டவசுக்களும், மருத்துவர் இருவரும், ஆகிய முப்பத்து மூவருடனே பதினெட்டு வகையினாலும் உயர்ந்த நிலையைப் பெற்றவர்களும் ஆகிய பதினெண் கணங்களும், விண்மீனால் பொலிவு பெற்றால் ஒத்த தோற்றத்தையுடைவர்களாயும் மீனுடனே காற்றுக் கலந்தாலொத்த கூடிய நடையினை யுடையவர்களாயும், காற்றிடத்தே நெருப்புப் பிறந்தாலொத்த வலியை உடையவர்களாயும், நெருப்புப் பிறப்ப இடி எறிந்தால் ஒத்த குரலை உடையவர்களாயும், சீரிய தாங்கள் வந்து உறைகிற இடத்தே தாங்கள் பெறற்கு உரியவற்றைக் கடலமுதம் போலப் பெறுவதற்காக,
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவி னன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று
தெளிவுரை : ஆகாயத்தில் சுழலுகின்ற தேவர்கள் வந்தபொழுதே காணும்படி குற்றமில்லாத கோட்பாட்டையுடைய வள்ளி நாச்சியாருடனே எந்நாளும் செவ்வியனாய்த் திருஆவினன்குடியில் இருக்கவும் உரியன். (சின்-அசை) அங்குச் செல்க. அதன் பின்னர் இன்னும் முருகப் பெருமானைக் காணும் இடம் சொல்லப் புகுகின்றார்.
அதாஅன்று - இனி மேலும் சொல்லுகிறேன் என்றவாறு.
4. திருவேரகம்
இருமூன்(று) எய்திய இயல்பினின் வழாஅ(து)
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்(கு) இரட்டி இளமை நல்லியாண்(டு)
ஆறினிற் கழிப்பிய அறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்(து)
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
தெளிவுரை : ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், இரத்தல் என்ற ஆறு இயல்பையும் பொருந்திய முறையில் வழுவாமல் மாதாவின் கோத்திரமும் பிதாவின் கோத்திரமும் நன்றென்று மதிக்கப்பட்ட பலவாய் வேறுபட்ட பழைய குடியின் கண் பிறந்த நாற்பத்தெட்டு ஆண்டாகிய நல்ல இளமைக் காலத்தைப் பிரமசரிய நெறியில் கழித்துத் தருமத்தில் செல்லுகிற கோட்பாட்டையுடைய மூன்று வகையால் குறிக்கப்பட்ட மூன்று தீமையும் செல்வமாக வுடைய இரண்டு பிறப்பான உபநயனம் பண்ணுதற்கு முன்பே ஒரு பிறப்பும், உபநயனம் பண்ணின பின் ஒரு பிறப்பும் ஆகிய இரண்டு பிறப்பினையும் உடைய பிராமணர் முக்காலமும் அறிந்து தோத்திரம் செய்ய, முச்செல்வம் - மூத்தீயோடு நித்திய ஓமம் பண்ணும் செல்வம்.
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்(து)
ஆறெழுத்(து) அடக்கிய அருமறைக் கேள்வி
நாவியல் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்(து)
ஏரகத்(து) உறைதலும் உரியன் அதாஅன்று.

தெளிவுரை : அந்தப் பிராமணர்கள் ஒன்பது வடம் கொண்டு முறுக்கின மூன்று புரியாகிய நுண்ணிய பூணு நூலைத் தரித்தவராய் நீரில் முழுகின படியினால் ஈரம் புலராத கழாயத்தை வேள்வித் தீயால் உலரும்படி உடுத்துச் சிரசிற் குவத்த கையை உடையவர்களாய் முருகப் பெருமானைப் புகழ்ந்து அவருடைய திருமந்திரமாகிய ஆறெழுத்துக்களையும் அடக்கின அரிய வேதக் கேள்வியினை நாவால் இயன்ற விடத்தை ஆரவாரிக்கும்படி பாடி நறுநாற்ற மிக்க நல்ல மலர்களை ஏந்தி வணங்கி நிற்க, அவர்கள் வணங்கு கைக்குப் பெருகவும் திருவுள்ளம் விரும்பியருளித் திருஏரகம் என்ற திருப்படை வீட்டில் வாழ்தற்கும் உரியன். அங்கே செல்க; அடுத்த படியாக முருகப் பெருமானைக் காணும் இடம் சொல்லப் புகுகின்றார்.
5. குன்றுதோறாடல்
பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்
அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பில்
தெளிவுரை : பச்சென்ற வெற்றிலைக் கொடியையும் நல்ல பழுக்காயையும் இடை இடையே யிட்டுப் படிமத்தோன் அழகிதாகத் தழைத்த சாதிக்காய் புட்டிலையும் குளவிப் பூவுடனே கலந்து வெள்ளிய கூதளம் பூவையும் இடை இடையே தொடுத்த தலைமாலையை உடையவனாயும் நல்ல சந்தனத்தைப் பூசின நிறங் கிளர்ந்த மார்பினையுடைய வனாயும்; படிமத்தோன் - பூசாரி; குளவி - காட்டு மல்லிகை.

கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கள் தேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
தெளிவுரை : கொடிய தொழிலைச் செய்கின்ற வலிய வில்லினால் கொலைத் தொழிலைத் தமக்கு இயல்பாகவுடைய குறவர் நீண்ட மூங்கிலில் விளைந்த இனிய கள்ளின் தெளிவை மலையிடத்தில் சிற்றூர்களில் தங்கள் உறவின் முறையார்களுடனே குடித்து மகிழ்ந்து தொண்டக மென்னும் பெயரையுடைய சிறு பறையைக் கொட்டிக் குரவைக் கூத்தை யாடுவதாக,
(உயர்ந்த மூங்கிலில் கட்டின தேனை யழித்து என்று கொள்க)
விரல்உளர்ப்(பு) அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல்
முடித்த குல்லை இலையுடைய நறும்பூச்
செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
தெளிவுரை : விரலை யொத்த விரிந்த வேறுபட்ட நறுநாற்றமுடைய ஆழ்ந்த சுனையில் பூத்த நீலப் பூவால் தொடுத்த வண்டுகள் வந்து படிகிற மாலையையும் இதர மலர்களால் கட்டிய மாலையையும் செருகப் பெற்ற மயிரையும் உடையவராய் முடித்தாற் போன்ற கஞ்சங் குல்லையினையும் முடித்த பச்சிலையுடனே நறுநாற்றம் உடைத்தாகிய பூவையும் சிவந்த தாளினை உடைத்தாகிய கடம்பினது வெள்ளிக் கொத்துக்களையும் இடையில் இட்டு வண்டுச் சாதிகள் மதுவுண்ணும்படி தொடுக்கப்பட்ட மிகவும் குளிர்ந்து நிறைந்த தழையைத் திருந்திய மேகலாபரணம் அணிந்த அல்குலில் அலைய வுடுத்து மயிலைக் கண்டால் ஒத்த சாயலை யுடைய மடப்பத்தாற் சிறந்த மகளிருடனே,
செய்யன் சிவந்த ஆடையன் செல்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
தரம்பார்த் தன்ன இன்குரல் தொழுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
தெளிவுரை : சிவந்த நிறமுடையவனும் சிவந்த பரிவட்ட மென்னும் ஆடை அணிந்தவனும் செவ்விய மலையில் தளிர்த்த அசோகினது குளிர்ந்த களிர் அசைகின்ற காதினை உடையவனும், பூங்கச்சை உடுத்தவனும் வீரக் கழலை உடையவனும், வெட்சி மாலை அணிந்தவனும், வேய்ங்குழலை ஊதுகின்றவனும், குறிக்கப்பட்ட கருங்கொம்பினையுடையவனும், சிறிய பலவான வாச்சியங்களை உடையவனும், கைக்கிடாயை யுடையவனும், மயிலை உடையவனும், குற்றமில்லாத சேவலங் கொடியை உடையவனும், எல்லாரிலும் நெரியவனும், வாகுவலயம் செறிந்த தோள்களை உடையவனும், யாழ் ஆரவாரித்தால் ஒத்த கந்தருவ மகளிர் திரளுடனே மார்பில் சந்தனம் குங்குமங்களால் நுண்ணிய வரியாக எழுதப்பட்ட நறு நாற்றமும் தட்பமும் உடைத்தாகிய திருமேனியை உடையவனும், இடையில் கட்டின நிலத்திற் பொருந்திய திருவுடை ஆடையை யுடையவனும் ஆகி,
முழுவுறழ் தடக்கையின் இயல ஏந்தி
மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே அதாஅன்று
தெளிவுரை : குடமுழாவை யொத்த பெரிய தடக்கையில் மாற்சரியம் உடைய பெரிய வேலை எடுத்து மெல்லிய தோள்களை உடையராய் நோக்கத்தால் பலவாகிய மான் பிணைகளைப் போன்ற தீண்டி விளையாடற்குரிய தெய்வப் பெண்களைத் தழுவிக் கொண்டு அவர்களுடன் தானும் ஒரு தலையிலே கைகோத்து மலையிடங்கள் தோறும் ஆடுகின்ற குரவைக் கூத்தில் நிலை நின்று வந்த பண்புடையவன்! அங்கே செல்க! அதுவன்றி மேலும் முருகப் பெருமானைக் காணும் இடம் சொல்லப் புகுகின்றார்.
6. பழமுதிர்சோலை
சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறிஅயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூம் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்
தெளிவுரை : சிறிய தினையையும் பூவையும் கலந்து இடப்பட்ட வெள்ளாட்டுக் கிடாயை அறுத்து கோழிக் கொடியுடனே தான் உண்டாகும் வண்ணம் இடம் வாய்க்க நிறுத்திக் குறவர் இருக்கும் ஊர் தோறும் எடுத்த சிறப்புப் பொருந்திய திருநாள் கொண்ட இடங்களிலும், தன்மேல் அன்பு கொண்ட அடியார்கள் துதிக்கத்தான் விரும்பி வீற்றிருக்கின்ற இடத்திலும் படிமத்தான் படிமைத் தொழிலினால் அழகியதாக அலங்கரிக்கப்பட்ட வெறியாட்டக் களத்திலும், காடுகளிலும், சோலைகளிலும், அழகு பெற்ற ஆற்றிடைக் குறைகளிலும், ஆறுகளிலும், குளங்களிலும் பலவேறு வகைப்பட்ட ஊர்களிலும், நாற்சந்தி கூடின இடங்களிலும், முச்சந்தி கூடின இடங்களிலும், புதிதாகப் பூத்த திருக்கடம்பிலும், ஊர் அம்பலங்களிலும், புறத்திண்ணை மரத்திலும், கம்பம் உடைத்தாகிய ஆலைக் கொட்டில்களிலும்,
மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோ(டு) ஐயவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச்
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையுற அறுத்துத் தூங்க நாற்றி
தெளிவுரை : மாட்சிமையும் தலைமையும் உடைய கோழிக் கொடியுடன் மயிலையும் அலங்கரித்துக் கையிலேந்தி, நெய்யையும் கடுகையும் கலந்து உண்டை பண்ணிப் பேய்கட்குப் பலியாக அப்பி அழகிய மூலமந்திரம் உச்சரித்துக் கையெடுத்துக் கும்பிட்டு வளவிய பூக்களைச் சிதறி மாறுபாடு மிக்க வடிவினையுடைய நீலமும் சிவப்புமாகிய இரண்டு உடைகளையும் தரித்துச் சிவந்த வல்லிக் கயிற்றைக் கட்டி வெள்ளிய பொரிகளை இறைத்துச் செருக்கும் வலிவும் நிலைபெற்ற பெரிய காலினை உடைத்தாய்க் கொழுத்த செம்மறிக் கிடாயின் உதிரத்தோடே கலந்து தூயதாகிய வெள்ளிய அரிசியினைச் சிறு பலியாக இட்டுப் பல பிரம்புகளையும் வைத்து மலைச்சிறு பசு மஞ்சளுடனே நறுமணமுடைய பலவிதைகளையும் தெளித்து மிகவும் குளிர்ந்த அலரிப்பூவால் தொடுத்த நறுநாற்றமுடைய மாலையை இணையொக்க மட்டம் செய்து அசையும்படி பூங்கோயிலாக தூக்கி,
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியோ(டு) இன்னியம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்திணை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர்
தெளிவுரை : குளிர்ச்சியாகிய பக்க வரைகளையுடைய மலையின்கண் உள்ள முருகப் பெருமான் வீற்றிருக்கும் நகரங்களை வாழ்க என வாழ்த்தி நல்ல மணமுள்ள சீதாரிப் புகைகளையும் எடுத்து மலைநிலத்துக்குரிய குறிஞ்சி யென்னும் பண்ணையும் பாடி இம்மென்ற மிக்க ஆரவாரத்தால் சிறந்த அருவியுடன் இனிய பல வாத்தியங்களும் முழங்க அழகிய பூக்களை எங்கும் தூவிக் கண்டார். அஞ்சும்படி உதிரத்தை யொத்த சிவந்த தினையையும் பரப்பிக் குறத்தியானவள் முருகை மேல் நிறுத்திய முருகப் பெருமானை மெய்யிலே ஏற்றிக் கொண்டு பகைவர்கள் பயப்படும்படி முருகனை வழிப்பட்ட அழகு பொருந்திய பெரிய நகரியில்;
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்(கு) எய்தினர் வழிபட
ஆண்டாண்(டு) உறைதலும் அறிந்த வாறே
தெளிவுரை : வெறியாட்டுக் களத்தின் எதிரே ஆரவாரிக்கும்படி முருகனைப் பாடி பலரும் உடனே கருங்கொம்பை வாயிலே வைத்து ஊதி வட்ட மணிகளையும் எப்பொழுதும் மேற்கோளையுடைய மயிற் கொடியை வாழ்த்தி வேண்டிய பொருள்களை வேண்டியபடியே பெறுபவர்கள் வழிபாடு செய்ய, விழாவிடம் முதல் நகர் ஈறாகச் சொல்லப்பட்ட அவ்விடங்களில் தங்குதற்கும் உரியவன். யான் அறிந்த படியே கூறினேன்.
ஆண்டாண் டாயினும் ஆக காண்டக
முந்துநீ கண்டுழி முகனமர்ந்(து) ஏத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெரும் சிமயத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல்கெழு கடவுள் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி
வானோர் வணங்குவில் தானைத் தலைவ
தெளிவுரை : அந்தந்த இடங்களில் ஆகிலும் பிற இடங்களிலும் ஆகிலும் நீ காணத் தகும்; முற்பட நீ கண்ட பொழுது முகமலர்ந்து வாழ்த்திக் கைகளால் தொழுது புகழ்ந்து சீர் பாதங்களைப் பொருந்தும்படி தெண்டனிட்டு மிகவும் பெரிய மாமேருவின் உச்சியில் நீல நிறமுடைய அழகிய சுனையில் ஐவருள் ஒருவனான அக்கினி தேவன் அவன்தன் கையால் ஏற்பக் கார்த்திகை மாதர் அறுவரானும் வளர்க்கப்பட்ட முறையை விரும்பின செல்வனே! ஆலின் கீழிருந்து அறமுரைத்த மகாதேவருடைய புத்திரனாய் உள்ளவனே! பகைவர்களுக்குக் கூற்றுவனாய் உள்ளவனே! வெற்றி செய்து கொல்லுகிற போரைச் செய்யும் வீர துர்க்கைக்குப் பிள்ளையாய் உள்ளவனே! ஆபரணம் அணிந்த சிறப்பினையுடைய எல்லாருக்கும் மூத்தாளாகிய காடு இழாளுக்குப் பிள்ளையாய் உள்ளவனே! தேவர்கள் வணங்குகின்ற விற்படைக்குத் தலைவனாய் உள்ளவனே!
மாலை மார்ப நூலறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ
குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
தெளிவுரை : மாலையணிந்த மார்பினை உடையவனே! நூல்களைக் கற்றறிந்த அறிவினை யுடையவனே! பூசலுக்கு ஒப்பில்லாதவனே! மிக்க வெற்றியை யுடைய வீரனே! பிராமணருக்குப் பொருளாய் உள்ளவனே! அறிந்தோர்க்கு எல்லாம் சொன்மாலையாய் உள்ளவனே! வள்ளி நாச்சியாருக்கும் தெய்வயானை நாச்சியாருக்கும் கணவனாய் உள்ளவனே! இளையோராய் உள்ளவர்க்கு எல்லாம் இடபத்தை ஒப்பானவனே! வேலைப் பொருந்தின பெரிய திருக்கையை யுடைய பெருஞ் செல்வனே! கிரவுஞ்சமென்னும் மலையை எறிந்த குறையாத வெற்றியினை உடையவனே! விண்ணில் பொருந்திய நெடிய மூங்கிலை
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக
நசையினர்க்(கு) ஆர்த்தும் இசைபே ராள
அலந்தோர்க்(கு) அளிக்கும் பொலம்பூட் சேஎய்
வண்டமர் கடந்தநின் வென்றா(டு) அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும உருகெழு நெடுவேள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூர்மருங்(கு) அறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு நொருந குரிசில் எனப்பல
தெளிவுரை : எல்லாச் சமயத்தாரும் புகழ்கின்ற நன்மையான மொழியறிவை அறிந்த புலவர் என்னும் யானைகளுக்குச் சிங்கம் போன்ற முதன்மை யுடையோனே! அருமையாகப் பெறுதற்குரிய முறையை உடைய பெரும் பொருளாயுள்ள முருகனே! விரும்பினவர்க்கு இன்பத்தை நுகர்விக்கின்ற புகழமைந்த பெயரை ஆள்பவனே! பிறரால் இடுக்கண் பட்டு வந்தோர்க்கு அவர்கள் துன்பம் தீரும்படி வரங்கொடுக்கும் பொன்னணியணிந்த சேயே! நெருங்கிய அமர்க்களத்தில் பகைவர்களை வென்ற நினது வெற்றி விளங்குகின்ற மார்பினை உடையவனே! இரப்போரைப் பாதுகாக்கின்ற அழகு பொருந்திய நெடியவேளே! சான்றோர்கள் துதிக்கின்ற மிகவும் பெரிய பெயரையுடைய கடவுளே! சூரனை வழியுடன் அறுத்த தோளினது மிக்க வலிமையை உடையவனே! போர் மிக்க வீரருக்குத் தலைவனாய் உள்ளவனே! என்று பலவும்,
யான்அறி அளவையின் ஏத்தி ஆனாது
யுடைய குறிஞ்சி நிலத்துத் தலைவனே!
நின்னளந்(து) அறிதல் மன்னுயிர்க்(கு) அருமையின்
நின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு
புரைகுநர் இல்லாப் புலமை யோய்எனக்
குறித்தது மொழியா அளவையில் குறித்துடன்
தெளிவுரை : நான் அறிந்து கூறிய அளவில் நீயும் புகழ்ந்து கூறி அவ்வளவில் அமையாமல் மேலும் உன்னுடைய புகழை முற்ற அளந்து அறியுமது நிலை பெற்ற பல உயிர்கட்கும் அரிதாகையினால் உன்னுடைய சீர் பாதங்களை யடைய வேண்டுமென்று நினைத்து வந்தேன். உன்னோடு ஒப்பாவோர் இல்லாத மெய்யறிவை உடையவனே! என்று புகழ்ந்து நீ கருதிச் சென்ற பொருளினை விண்ணப்பம் செய்வதற்கு முன்னே,
வேறுபல் உருவில் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் தானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந்(து) எய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத்(து) இளநலங் காட்டி
தெளிவுரை : நீ நினைந்து வந்ததைத் தானே திருவுள்ளம் பற்றியருளி அப்பொழுதே இளமையுடையோராய்ப் பலராக முருகப் பெருமானைச் சேவித்து நிற்போர் திருநாள் கொண்ட இடத்திலே அழகு பெறத்தோன்றி அளிசெய்யத் தக்கான் தானே கற்றுவல்ல வாயையுடைய பரிசில் பெறத்தக்க இரப்போன் வந்துள்ளான் பெருமானே, நினது வளவிய புகழைக் கூற விரும்பி, கேட்டோர்க்கு இனிமை பயப்பனவும் நன்மை பயப்பனவுமாக மிகவும் பலபடப் புகழ்ந்து, என்று கூறிய அப்பொழுதே நனிபல ஏத்தி என என்று கூட்டுக.
அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவென
அன்புடை நன்மொழி அளைஇ விளிவின்(று)
இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்(து)
ஒருநீ யாகத் தோன்ற விழுமிய
தெளிவுரை : தெய்வத் தன்மை மிக்க வலிமை விளங்கும் வடிவையும் விண்ணில் தோய்கின்ற உயர்ச்சியை யுடைய தான் (முருகப்பெருமான் காணும் படி சாறு அயர் களத்தை) வந்து சேர்ந்து, தெய்வத் தன்மை சான்ற தனது உயர்ந்த தன்மையை உள்ளடக்கிக் கொண்டு பண்டே உண்டாகிய தன்னுடைய நறுமணம் கமழ்கின்ற தெய்வீகமான இளைய திருவழகைக்காட்டி, நீ கருதிய பொருள் எய்துதல் அரிதென்று அஞ்சுதலைப் பரிகரிப்பாயாக; கருதியது பெற வந்த நின் வரவும் யான் அறிவேன் என்று அன்புடைய நல்ல வார்த்தைகளைப் பல தரமும் கலந்து சொல்லிக் கேடின்றி இருண்ட நிறமுடைத்தாகிய கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் நீ ஒப்பில்லாதவனாக தோன்றும்படி சிறந்த பேரின்பமாகிய பெறுதற்கரிய பரிசைத் தருவன்.
பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன்
வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆரம் முழுமுதல் உருட்டி வேரல்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரை பரிதியில் தொடுத்த
தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல
 பலவுடன் சேர்ந்து வேறு பல வகைப்பட்ட விரித்த துகிற் கொடிகள் போல் அசைந்த அகில் மரங்களை மேலே சுமந்து கொண்டு பெரிய சந்தன மரத்தை வேரொடு பிடுங்கி உருட்டி மூங்கிலினது பூக்களையுடைய அசைகின்ற கொம்புகள் தனிப்ப வேரைக் கிழித்து ஆகாயத்தைத் தீண்டிய நெடிய மலையிடத்து ஆதித்தனைப் போல வட்டமாகத் தொடுக்கப்பட்ட தட்பத்தையும் நறுமணத்தையும் உடைய விரிந்த தேன்கூடு, கெட, நல்ல பலவாகிய,
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
தெளிவுரை : ஈரப்பலாக்களின் முற்றிய சுளைகள் கலக்க மிகவும் உயர்ந்த இடத்தில் உண்டான சுர புன்னையினது நறுமண மிக்க பூக்கள் உதிரக் கருங்குரங்குடனே இருள் நிறம் பொருந்திய பெற்ற நெற்றியையுடைய பெரும்பிடி யானைகள் நடுங்கும்படி திரையை வீசிப் பெரிய களிற்றானையின் முத்தையுடைய வெள்ளிய கொம்புகளை உட்கொண்டு குதித்து.
நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை இரியக் கேழலோ(டு)
தெளிவுரை : நல்ல அழகு மிக்க மாணிக்க மணிகள் ஒளி விளங்கும்படி பொற் பொடிகளைத் தெள்ளி வாழையினது பெருத்த முதல் துணியவும் தெங்கினது இளநீரின் மிக்க சீரியருலைகள் உதிரவும் மோதி மிளகுக் கொடியின் கரிய கொத்துக்கள் சாயப் புள்ளிகளையுடைய மேற்புறத்தையும் மடப்பம் பொருந்திய நடையையும் உடைய மயில்கள் பலவும் ஒரு சேரப் பயந்து காட்டுக் கோழியின் வலிமையுள்ள பெடையானது கெட்டு ஓடும்படி பன்றியுடனே,
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடாஅடி உளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்(டு)
மா நல்லேறு சிலைப்பச் சேணின்(று)
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே
தெளிவுரை : உள்ளில் வெளிற்றினையுடைய பெரிய பனையின் புன்மையாகிய செறும்பினைப் போன்ற கருநிற மயிரால் மிக்க உடம்பினையும் வளைவாகிய அடியினையும் உடைய கரடி பெரிய கற்பிளப்பின் முழைகளில் செறியும்படி நீரை வீசிக் கரிய கொம்புகளையுடைய காட்டுப் பசுக்களின் நல்ல ஏறுகள் சிலைத்துக் கொண்டு நிற்ப மலையின் உச்சியில் இருந்து இழுமென்னும் ஓசையுண்டாக ஒழுகுகின்ற அருவியை உடையதாய்ப் பழங்கள் முற்றப் பெற்ற சோலை மலைக்கு உரியவனாய் உள்ளவனே!
திருச்சிற்றம்பலம்
நேரிசை வெண்பா
502. குன்றம் எறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்தலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத் துறை.
தெளிவுரை : கிரளெஞ்ச கிரியை அழித்தாய்; ஒலிசெய்கின்ற கடலில் சூரபன்மாவைக் கொன்றாய், புல்லிய தலையை உடைய பூதங்களைக் கொண்ட படையை உடையாய், எப்பொழுதும் இளமையாய் இருக்கின்றாய், அழகுடையவனாய் உள்ளாய். காளை ஊர்தியையுடைய சிவபெருமானது மகனே. வலிமையை உடையவனே! என் உள்ளத்தில் உறைவாயாக.
503. குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங்(கு) அமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்.
தெளிவுரை : கிரௌஞ்ச கிரியை அழித்ததுவும் குன்றப் போர் செய்ததுவும் முன்பு அங்குத் தேவர்களது துன்பத்தைத் தீர்த்ததுவும் இன்று என்னைக் கைவிடாமல் காப்பாற்றியதும் மலைக் குகையில் காத்ததுவும் உடம்பை விடாத வீரனுடைய கையிலுள்ள வேலாகும்.
504. வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.
தெளிவுரை : வீரம் பொருந்தியவேல், நீளமானவேல், தேவர்களைச் சிறையிலிருந்து மீட்ட தீரம் பொருந்திய வேல். செவ்வேள் ஆகிய முருகனது திருக்கையில் உள்ளவேல், வாரியில் குளித்தவேல், வெற்றி பொருந்திய வேல், சூரபன்மனுடைய மார்பையும் கிரௌஞ்ச மலையையும் துளைத்த வேல் எனக்குத் துணையாக இருக்கிறது.
505. இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும்.
தெளிவுரை : இன்னும் ஒரு தடவை என் துன்ப மலைக்கு, சூரபதுமனைக் கொன்ற வெற்றி வீரனே, முன்பு பனி பொருந்திய பெரிய மலையைத் துளைத்த ஒப்பற்ற வேலை எடுத்தால் போதும்.
506. உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே.
தெளிவுரை : உன்னைத் தவிர வேறு யாரையும் நம்ப மாட்டேன். அதன்றியும் வேறுயார் பின்னாலும் செல்ல மாட்டேன். பன்னிரு கைகளையுடைய அழகையுடைய அப்பனே. தேவர்களது கொடிய வினையைத் தீர்த்தருளும் வேலப்பா, திருச்செந்தில் கோயில் கொண்டிருப்பவனே. கோல அப்பா என்றது கோலப்பா என நின்றது.
507. அஞ்சு முகம்தோன்றில் ஆறு முகம்தோன்றும்
வெஞ்ச மரம்தோன்றில் வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன்.
தெளிவுரை : எனக்கு முகத்தில் அச்சம் தோன்றினால் உன்னுடைய ஆறுமுகம் தோன்றும். பெரிய போர் ஏற்பட்டால் அங்கே வேல் வந்து முன் நிற்கும். நெஞ்சில் ஒருதரம் நினைத்தால் இரண்டு முறை தோன்றும். முருகா என்று ஓதுவார் முன் மேற் கூறப்பட்டவை தோன்றும் என்க.
508. முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.
தெளிவுரை : அழுகுடையவனே! திருச்செந்தூரில் எழுந்தருளி யிருப்பவனே. திருமாலின் மருகனே! சிவபெருமானின் மகனே! விநாயகனுடைய தம்பியே. உன்னுடைய தண்டை அணிந்த கால்களை எப்போதும் நம்பியே நான் கைதொழுவேன்.
509. காக்கக் கடவியநீ காவா(து) இருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி.
தெளிவுரை : என்னைக் காப்பதற்குக் கடமைப்பட்ட நீ காவாமல் இருந்தால், எவர்க்குப் பாரமாம். ஆறுமுகங்களை உடையவனே. கடம்ப மாலையைத் தரித்தவனே ! இளவழகனே! ஒளியுடைய வேலைத் தாங்கியவனே இது தக்க சமயமாகும். இனி அருள் புரிவாயாக.
510. பரங்குன்றில் பன்னிருகைக் கோமான்தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்.
தெளிவுரை : திருப்பரங்குன்றில் எழுந்தருளியிருக்கும் பன்னிரண்டு கைகளையுடைய கோமானுடைய பாதங்களைக் கைகூப்பிக் கண் குளிரக் கண்டு, உள்ளச் சோர்வடையாமல் விருப்பத்தோடு நெஞ்சமே அழகுடைய திருமுருகாற்றுப்படை என்னும் இத்தோத்திரப் பாவைப் பூசையாக வைத்து துதிப்பாயாக.
511. நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும்.
தெளிவுரை : நக்கீரர் தாம் உரைத்த நல்ல திருகாற்றுப்படை என்னும் தெய்வீக நூலைத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தினந்தோறும் ஓதினால் அதுமுடியுமுன்னே மாமுருகன் வந்து மனக்கவலையைத் தீர்த்தருளி, நாம் நினைத்ததை யெல்லாம் தருவான்.
திருச்சிற்றம்பலம்
18. திருக்கண்ணப்ப தேவர் திருமறம் (நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்தது)
மறம் என்றால் வீரம் என்று பொருள். 63 நாயன்மார்களில் ஒருவராகிய கண்ணப்ப நாயனார் தம்முடைய கண்ணையிடத்து சிவபெருமானுக்கு அப்புதலாகிய மாபெரும் வீரத்தைச் செய்தவராதலின் அவர்மீது மறம் என்னும் இப்பாட்டுப் பாடப்பட்டது. இது 158 அடிகளால் ஆக்கப் பெற்ற ஆசிரியப்பாவாகும். சேக்கிழார் பாடிய கண்ணப்ப நாயனார் புராணத்துக்கு இப்பாட்டு ஆதாரமாகும்.
திருச்சிற்றம்பலம்
512. திருக்கண் ணப்பன் செய்தவத் திறத்து
விருப்புடைத் தம்ம விரிகடல் உலகே, பிறந்தது
தேனிழித்(து) ஊனூண் கானவர் குலத்தே, திரிவது
பொருபுலி குமுறும் பொருப்பிடைக் காடே, வளர்ப்பது
செங்கண் நாயொடு தீவகம் பலவே, பயில்வது
தெளிவுரை : விரிகடல் உலகு, திருக்கண்ணப்பரது செய்தவத் திறத்தில் விருப்புடையதாக இருக்கிறது. அவர் தேன் அழித்து, ஊன் உண்ணும் கானவர் குலத்தில் பிறந்தார். அவர், போர் குணமுடைய புலிகள் குமுறுகின்ற பொருப்பிடைக் காட்டில் திரிந்தார். அவர், சிறந்த கண்களையுடைய நாய்களையும் பார்வை மிருகங்கள் பலவற்றையும் வளர்த்தார்.
வெந்திறற் சிலையொடு வேல்வாள் முதலிய
அந்தமில் படைக்கலம் அவையே, உறைவது
குறைதசை பயின்று குடம்பல நிரைத்துக்
கறைமலி படைக்கலம் கலந்த புல்லொடு
பீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடை
வாலிய புலித்தோல் மறைப்ப வெள்வார்
தெளிவுரை : அவர், கொடிய திறலுடைய வில்லோடு, வேல், வாள், முதலிய எண்ணற்ற படைக்கலங்களையும் பயின்றார். அவர் குறை தசை பயின்று, குடம் பல நிறைந்து, கறைமலி படைக்கலங் கலந்த புல்லொடு பீலி வேய்ந்த குடிசையில் வாழ்ந்தார். பிரிந்த வெள்ளிடையை ஒளி பொருந்திய புலித்தோல் மறைத்தது.
இரவும் பகலும் இகழா முயற்றியொடு
மடைத்த தேனும் வல்நாய் விட்டும்
சிலைவிடு கணையிலும் திண்சுரி கையிலும்
பலகிளை அவையொடும் பதைப்பப் படுத்துத்
தொல்லுயிர் கொல்லும் தொழிலே, வடிவே
தெளிவுரை : வெள்வார் இரவும் பகலும் குறையாத முயற்சியோடு உண்ணுதற்குரிய தேனுடன், வல்லமை பொருந்திய நாய்களை முன் விட்டு வில்லில் வைத்துச் செலுத்துகின்ற அம்புகளுடன் திண்ணிய உடைவாளோடு பல உதவியாளரோடு வேட்டையாடி பல உயிர்களைக் கொல்வதே அவருடைய தொழிலாகும்.
மறப்புலி கடித்த வன்திரள் முன்கை
திறற்படை கிழித்த திண்வரை அகலம்
எயிற்றெண்கு கவர்ந்த இருந்தண் நெற்றி
அயிற்கோட் டேனம் படுத்தெழு குறங்கு
செடித்தெழு குஞ்சி செந்நிறத் துறுகண்
கடுத்தெழும் வெவ்வுரை அவ்வாய்க் கருநிறத்(து)
அடுபடை பிரியாக் கொடுவிரல் அதுவே, மனமே
தெளிவுரை : வீரப்புலி கடித்த வலிய திரண்ட முன்கையையும் வலிய ஆயுதங்கள் கிழித்த கெட்டியான மலை போன்ற மார்பையும் உடையது அவரது வடிவம். இவையே யன்றி, நீண்ட பற்களையுடைய கரடி கவர்ந்த இருந்தண் நெற்றியும், வேல் போன்ற கொம்பினையுடைய காட்டுப்பன்றி படுத்தெழுகின்ற தொடையும், செடியைப் போல எழுந்து விளங்குகின்ற தலை மயிரும், செந்நிறங் கொண்ட கூர்மையான கண்களும், கோபத்தோடு எழும் கொடிய சொற்களை யுடைய வாழும் கருநிறத்துக் கொடிய ஆயுதங்களைப் பிரியாத அவருடைய வீரமும் கொண்டது அவரது உருவமாகும்.
மிகக்கொலை புரியும் வேட்டையில் உயிர்கள்
அகப்படு துயருக்(கு) அகனமர்ந் ததுவே, இதுஅக்
கானத் தலைவன் தன்மை; கண்ணுதல்
தெளிவுரை : அவருடைய மனம் எத்தகையது என்றால் மிகக் கொலை புரியும் வேட்டையில், உயிர்கள் அகப்படு துயருக்கு மிகவும் பொருத்தமுடையது. இதுவே அந்தக் கானத் தலைவனது தன்மையாகும்.
வானத் தலைவன் மலைமகள் பங்கன்
எண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும்
புண்ணிய பாதப் பொற்பார் மலரிணை
தாய்க்கண் கன்றெனச் சென்றுகண் டல்லது
வாய்க்கிடும் உண்டி வழக்கறி யானே, அதாஅன்று
தெளிவுரை : நெற்றிக் கண்ணையுடையவரும், வானத் தலைவரும், உமாதேவியை இடப்பாகத்தில் வைத்துள்ளவரும் எண்ணற்ற பெருமைகளை யுடைய தேவர்கள் வழிபடும் புண்ணியருமான அவருடைய பொற்பார் இரண்டு மலர்ப் பாதங்களைத் தாயைக் கண்ட கன்று போலச் சென்று கண்ட பிறகே உணவு கொள்ளும் தன்மையுடையவர். அதுவுமல்லாமல்,
கட்டழல் விரித்த கனற்கதிர் உச்சியிற்
சுட்டடி இடுந்தொறும் சுறுக்கொளும் சுரத்து
முதுமரம் நிரந்த முட்பயில் வளாகத்து
எதிரினங் கடவிய வேட்டையில் விரும்பி
எழுப்பிய விருகத் தினங்களை மறுக்குறத்
தன்நாய் கடித்திரித் திடவடிக் கணைதொடுத்து
எய்து துணித்திடும் துணித்த விடக்கினை
விறகினிற் கடைந்த வெங்கனல் காய்ச்சி
நறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு
அண்ணற்(கு) அமிர்தென்று அதுவேறு அமைத்துத்
தெளிவுரை : நெருப்புப் போன்ற வெப்பத்தை யுடைய உச்சி வேளையில் கால் சுடும் பாலையில் பழைமையான மரங்களும் முட்களும் கலந்த பகுதியில் மேற் கொண்ட வேட்டையில் இவர்கள் எழுப்பிய காட்டு மிருகங்களை நாய் துரத்திக் கடித்து இரித்திட அம்பு தொடுத்துக் கொன்று துணி ஊனை, விறகினைக் கடைந்து வெங்கனலில் காய்ச்சி நறுமணமுள்ள நல்ல இறைச்சி இது என்று சுவைகண்டு, அண்ணற்கு அமிர் தென்று அதைத் தனியாக எடுத்து வைத்து,
தண்ணறுஞ் சுனைநீர் தன்வாய்க் குடத்தால்
மஞ்சன மாக முகந்து மலரெனக்
குஞ்சியில் துவர்க்குலை செருகிக் குனிசிலை
கடுங்கணை அதனொடும் ஏந்திக் கனல்விழிக்
கடுங்குரல் நாய்பின் தொடர யாவரும்
வெருக்கோ ளுற்ற வெங்கடும் பகலில்
திருக்கா ளத்தி எய்திய சிவற்கு
வழிபடக் கடவ மறையோன் முன்னம்
தெளிவுரை : குளிர்ந்த சுனைநீரைத் தன்வாய்க் குடத்தால் மஞ்சனமாக முகந்து, மலரெனத் தலைமுடியில் துவர்க்குலை செருகி, வளைந்த வில்லையும் கொடிய களைகளையும் அதனோடும் ஏந்தி, நெருப்புப் போன்ற கண்களையும் கடுமையான குரலையும் உடைய நாய் பின் தொடர, யாவரும் கண்டு நடுங்கும் வெங்கொடும் பகலில் திருக்காளத்தியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு வழிபாடு செய்யும் சிவகோசரியார் முன்பு,
துகிலிடைச் சுற்றித் தூநீர் ஆட்டி
நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி
சொல்லின பரிசில் சுருங்கலின் பூவும்
பட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித்(து)
அருச்சுனை செய்தாங்கு அவனடி இறைஞ்சித்
திருந்த முத்திரை சிறப்பொடும் காட்டி
மந்திரம் எண்ணி வலமிடம் வந்து
விடைகொண் டேகின பின்தொழில்
தெளிவுரை : இலிங்கத்திற்கு நீராட்டி, ஆடை உடுத்தி, நல்ல மணமுள்ள மலர்களைச் சூட்டி, நறும்புகையும் விளக்கும் காட்டி திருவமுதைப் படைத்து, (அதாவது தூப தீப நைவேத்தியங்களை முறைப்படி செய்து என்க) மந்திரங்களைச் சொல்லி ஆபரணங்கள், பூமாலை, காதணி இவைகளைக் கொண்டு அலங்கரித்து அருச்சனை செய்து இறைவனது பாதங்களில் வணங்கி, திருந்த முத்திரை சிறப்பொடுங் காட்டி, மந்திரம் சொல்லி, சுவாமியை வலம் வந்து அவர் சென்ற பிறகு,
பூசனை தன்னைப் புக்கொரு காலில்
தொடுசெருப்(பு) அடியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைத்
தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில்
பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக்
கண்டுகண்(டு) உள்ளங் கசிந்து காதலில்
கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல்
அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா
அன்பொடு கானகம் அடையும் அடைந்த
தெளிவுரை : கண்ணப்பர், பூசை செய்யத் தொடங்கினார். காலில் இருந்த செருப்பினால் முன்பு இட்டிருந்தவற்றை அப்புறப்படுத்தினார். வாயில் இருந்த நீரால் நீராட்டினார். தன் தலையில் செருகியிருந்த செந்நிறப் பூக்களைச் சுவாமியின் தலைமீது அணிவித்து இறைச்சியாகிய உணவைப் படைத்து, சிவபிரானை உற்று நோக்கி, உள்ளங் கசிந்து, அன்பினால் சுவாமியின் முன் கூத்தாடி குரைகழல் அன்பொடு இறுக வணங்கி, தெவிட்டாத அன்போடு காட்டை அடைந்தார்.
அற்றை அயலினிற் கழித்தாங்(கு) இரவியும்
உதித்த போழ்தத்து உள்நீர் மூழ்கி
ஆதரிக்கும் அந்தணன் வந்து
சீரார் சிவற்குத் தான்முன் செய்வதோர்
பொற்புடைப் பூசனை காணான் முடிமிசை
ஏற்றிய துவர்கண்(டு) ஒழியான் மறித்தும்
இவ்வா(று) அருச்சனை செய்பவர் யாவர்கொல் என்று
காத்திருந்(து) அவன்அக் கானவன் வரவினைப்
பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று
தெளிவுரை : இரவு, மறுநாள் காலை, நீராடி, ஆதரிக்கும் அந்தணன் வந்து சிறப்புடைய சிவபெருமானுக்குத் தான் வழக்கமாய்ச் செய்யும் பூசையைக் காணாதவராகி, இவ்வாறு பூசை செய்தவர் யார் என்று காணும் பொருட்டு, தூரத்தில் வந்து கொண்டிருந்த வேடுவனைக் கண்டு பயந்து,
வந்தவன் செய்து போயின வண்ணம்
சிந்தையிற் பொறாது சேர்விடம் புக்கு
மற்றை நாளும்அவ் வழிப்பட்(டு) இறைவ
உற்றது கேட்டருள் உன்தனக்(கு) அழகா
நாடொறும் நான்செய் பூசனை தன்னை
ஈங்கொரு வேடுவன்
நாயொடும் புகுந்து மிதித் துழக்கித்
தொடுசெருப் படியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலை
தங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியை
நின்திருக் கோயிலில் இட்டுப் போமது
என்றும் உன்தனக்(கு) இனிதே எனையுருக்
தெளிவுரை : வந்தவன் செய்துவிட்டுப் போன விதத்தைக் கண்டு மனம் பொறுக்காமல், தன் வீடு சேர்ந்து, மறுநாளும் அவ்வாறு வழிபடப்பட்ட விதத்தை அறிந்து இறைவா! இது உனக்கு அழகோ? நாள்தோறும் நான் செய்யும் பூசனையை இங்கொரு வேடுவன் நாயுடன் வந்து புகுந்து, மிதித்து உழக்கி, செருப்பினால் அப்புறப்படுத்தி, வாயில் கொண்டு வந்த நீரினால் உன் மேனியை நீராட்டி, அவன் தலையில் செருகி வைத்திருந்த சருகுகளையும் இலைகளையும், எடுத்துச் சாத்தி, இறைச்சியை உன் திருக்கோயிலில் இட்டுப் போவது உனக்கு இனிதோ?
காணில் கொன்றிடும் யாவ ராலும்
விலக்குறும் குணத்தன் அல்லன் என்றும்
திருக்குறிப்(பு) என்றவன் சென்ற அல்லிடைக்
கனவில்ஆ தரிக்கும் அந்தணன் தனக்குச்
சீரார் திருக்கா ளத்தியுள் அப்பன்
பிறையணி இலங்கு பின்னுபுன் சடைமுடிக்
கறையணி மிடற்றுக் கனல்மழுத் தடக்கை
நெற்றி நாட்டத்து நிறைநீற் றாக
ஒற்றை மால்விடை உமையொடு மருங்கில்
திருவுருக் காட்டி அருளிப்
தெளிவுரை : என்னை அவன் காணில் கொன்று விடுவான் என்று சிவகோசிரியார் முறையிட்டார். அதற்கு இறைவன் அன்றிரவு அந்தணர் கனவில் தோன்றி, அவன் கொடியவன் அல்லன்; என்று கூறினார். அந்தக் காட்சியை ஆசிரியர் விவரிக்கும் பாங்கைப் பாருங்கள்! சிறப்புடைய திருக் காளத்தியப்பன் பிறையணிந்த சடை முடியோடும், கறையணி மிடற்றோடும், கனல் மழு தடக்கையோடும், நெற்றிக் கண்ணோடும், நிறைந்த திருநீற்றோடும், காளை மீது இவர்ந்து, உமாதேவியோடு காட்சியளித்து,
புரிவொடு பூசனை செய்யும்
குணிசிலை வேடன் குணம் அவை ஆவன
உரிமையிற் சிறந்தநன் மாதவன் என்றுணர்
அவன்உகந் தியங்கிய இடம்முனி வனம்அதுவே; அவன்
செருப்படி யாவன விருப்புறு துவலே
எழில் அவன் வாயது தூயபொற் குடமே
அதனில் தங்குநீர் கங்கையின் புனலே
புனற்கிடு மாமணி அவன்நிரைப் பல்லே
அதற்கிடு தூமலர் அவனது நாவே
உப்புனல் விடும்பொழு(து) உருஞ்சிய மீசைப்
புன்மயிர் குசையினும் நம்முடிக்(கு) இனிதே; அவன்தலை
தங்கிய சரு(கு) இலை தருப்பையிற் பொதிந்த
அங்குலி கற்பகத் தவரே; அவன் உகந்(து)
இட்ட இறைச்சி எனக்குநன் மாதவர்
இட்ட நெய்பால் அவியே
இதுஎனக்(கு) உனக்கவன்
கலந்ததோர் அன்பு காட்டுவன் நாளை
நலந்திகழ் அருச்சனை செய்தாங்(கு) இருவென்று
இறையவன் எழுந்த ருளினன்
தெளிவுரை : அந்த வேடன் அன்போடு செய்கின்ற பூசை எத்தகையது என்றால், அவன் சிறந்த மாதவன்; அவன் விரும்பி வாழும் இடம் முனிவர்கள் வாழும் வனம். அவன் செருப்படிகள் நான் விரும்பும் பூ. அவனுடைய வாய் ஆனது அழகுடைய தூய பொற் குடமாகும். அதில் தங்கியுள்ள நீர் கங்கை நீராகும். புனலுக்கு இடுகின்ற மாமணி வரிசையான பல் இரத்தினம் ஒக்கும். அதற்கு இடும் தூமலர் அவனது நாவாகும் வாயிலுள்ள நீரை விடும்போது உரிஞ்சிய மீசைப் புன்மயிர் தருப்பையோடு கூடிய மோதிரம். கற்பகத்து அலருமாகும். அவன் விரும்பியளித்த இறைச்சி எனக்கு நன்மாதவர் இட்ட நெய்பால் அவியுணவாகும் இது எனக்கு. உனக்கு அவன் கலந்ததோர் அன்பைக் காட்டுவன். நாளையதினம் நீ பூசையைச் செய்த பிறகு மறைந்திரு என்று இறையவன் எழுந்தருளினன்.
அருளலும் மறையவன் அறிவுற்(று) எழுந்து
மனமிகக் கூசி வைகறைக் குளித்துத்
தான்முன் செய்வதோர்
பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து
தோன்றா வண்ணம் இருந்தனன் ஆக, இரவியும்
தெளிவுரை : இவ்வாறு இறைவன் அருள் செய்து மறைந்ததும், அந்தணன் அறிவுற்றெழுந்து மனம் மிகக் கூசி, வைகறைக் குளித்து, தான் முன் செய்வதோர் பொற்புடைப் பூசையைச் சிறப்பாகச் செய்து ஒரு முறை விடத்தில் ஒளிந்திருந்தான்.
வான்தனி முகட்டில் வந்தழல் சிந்தக்
கடும்பகல் வேட்டையில் காதலித்(து) அடித்த
உடும்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்
தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்
தெளிவுரை : சூரியன் உச்சிப் பொழுதில் வெயிலைக் கடுமையாக வீச, கடும் பகல் வேட்டையில் கண்ணப்பர் விரும்பிக் கொண்டு வந்த உடும்போடு, வில், அம்பு, உடைத்தோல், செருப்பு, தொடர்ந்து வந்த நாயோடு வந்து சேர்ந்தார்.
செல்வன் திருக்கா ளத்தியுள் அப்பன்
திருமேனியின் மூன்று கண்ணாய்
ஆங்கொரு கண்ணிலும் உதிரம்
ஒழியா(து) ஒழுக இருந்தன னாகப்
பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று
வாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக்
கையில் ஊனொடு கணைசிலை சிந்த
நிலப்படப் புரண்டு நெடிதினில் தேறிச்
சிலைக்கொடும் படைகடி(து) எடுத்திதுப் படுத்தவர்
அடுத்தஇவ் வனத்துளர் எனத்திரிந் தாஅங்கு
தெளிவுரை : வந்ததும் செல்வனாகிய திருக்காளத்தியப்பனது திருமேனியின் மூன்று கண்களில் ஒரு கண்ணில் இரத்தம் நிற்காமல் ஒழுகிக் கொண்டிருந்தது. அதைக் கண்ணப்பர் கண்டதும் நடுங்கி, பதைத்து, மனம் சுழன்று, வாயிலிருந்த நீர் சிந்த, கண்ணீர் பெருக, கையிலிருந்த இறைச்சியோடு அம்பு வில் யாவும் சிதறின. அவர் தரையில் விழுந்து புரண்டு, பிறகு ஒருவாறு மனம் தேறி, வில்லையும் மற்ற ஆயுதங்களையும் விரைந்து எடுத்து, இவ்வாறு செய்தவர் அடுத்துள்ள காட்டில் யாராக இருக்கும்? என்று திரிந்தார்.
இன்மை கண்டு நன்மையில்
தக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறும்
நெக்கிழி குருதியைக் கண்டுநிலை தளர்ந்தென்
அத்தனுக்(கு) அடுத்ததென் அத்தனுக்(கு) அடுத்ததென் என்(று)
அன்பொடும் கனற்றி
இத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்டஎன்
கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறு
புண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக்
கணையது மடுத்துக் கையில் வாங்கி
அணைதர அப்பினன் அப்பலுங் குருதி
தெளிவுரை : அங்கு யாரும் இல்லாமை கண்டு, நல்ல தகுந்த மருந்துத் தழைகளைக் கொண்டு வந்து பிழிந்தார். அப்போதும் குருதி நிற்கவில்லை. நிலை தளர்ந்தார். என் அத்தனுக்கு என்ன நேர்ந்தது? என்று பலமுறை அன்பொடு அழுது அரற்றி இதை என்னால் பொறுக்க முடியாது. இதைக் கண்ட என் கண்ணைப் பெயர்த்து எடுத்து, இறைவனது கண்ணில் ஏற்பட்ட புண்ணில் அப்புவேன் என்று ஒரு கண்ணிடை அம்பைப் பாய்ச்சி, கையில் அதை எடுத்து இறைவனது கண்ணில் வைத்து அப்பினார்.
நிற்பதொத்(து) உருப்பெறக் கண்டுநெஞ்(சு) உகந்து
மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும்
நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன்
அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன்(று)
இன்னுரை அதனொடும் எழிற்சிவ லிங்கம்
தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால்
அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப் பிடித்(து)
அருளினன் அருளலும்
தெளிவுரை : அவ்வாறு அப்பவும், இரத்தம் நின்றது கண்டு மகிழ்ச்சி யடைந்தார். ஆனால் மற்றக் கண்ணிலும் இரத்தம் ஒழுக ஆரம்பித்தது. உடனே கண்ணப்பர் தன் அம்பை மற்றக் கண்ணில் பாய்ச்சினார். உடனே இறைவன், நில்லு கண்ணப்ப, நில்லு கண்ணப்ப என்று இனிமையாகக் கூறி, அதனோடு சிவலிங்கத்திலிருந்து தோன்றிய தடமலர்க் கையால் கண்ணப்பருடைய கையில் உள்ள அம்போடு பிடித்து அருளினன்.
விண்மிசை வானவர்
மலர்மழை பொழிந்தணர் வளையொலி படகம்
துந்துபி கறங்கின தொல்சீர் முனிவரும்
ஏந்தினர் இன்னிசை வல்லே
சிவகதி பெற்றனன் திருக்கண் ணப்பனே.
தெளிவுரை : அவ்வாறு அருளவும் வானத்தில் தேவர்கள் தோன்றி மலர் மழை பொழிந்தனர். வளையொலி, படகம், துந்துபி முதலியன முழங்கின. தொல்சீர் முனிவரும் ஏத்தினர். திருக்கண்ணப்பர் இன்னிசை வல்லே சிவகதி பெற்றனர்.
வெண்பா
513. தத்தையாம் தாய்தந்தை நாகனாம் தன்பிறப்புப்
பொத்தப்பி நாட்டுடுப்பூர் வேடுவனாம் - தித்திக்கும்
திண்ணப்ப னாஞ்சிறுபேர் செய்தவத்தால் காளத்திக்
கண்ணப்ப னாய்நின்றான் காண்.
தெளிவுரை : தாயின் பெயர் தத்தை, தந்தையின் பெயர் நாகன், அவர் பிறந்தது பொத்தப்பி நாடு, ஊர் உடுப்பூர், வேடுவர் குலத்தில் பிறந்தார். அவரது பிள்ளைத் திருநாமம் திண்ணப்பன். அவர் செய்த முன் தவப் பயனால் காளத்திக் கண்ணப்பனாய் நின்றார். அறிவாயாக என்பதாம்.,
திருச்சிற்றம்பலம்
19. திருக்கண்ணப்ப தேவர் திருமறம் (கல்லாடதேவ நாயனார் அருளிச் செய்தது)
பதினோராம் திருமுறை ஆசிரியர்களுள் கல்லாட தேவநாயனாரும் ஒருவர். கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவராகிய கல்லாடரும், கல்லாடம் என்னும் நூலைப் பாடிய கல்லாடர் என்பவரும், இத்திருமறப் பாட்டைப் பாடிய கல்லாடரும் வெவ்வேறாவர் என்று துணிதற்கு அவர்கள் இயற்றிய நூல்களின் நடையே சான்றாக அமைந்து திகழ்கின்றன. கல்லாடம் என்பது ஒரு சிவப்பதி. அதில் எழுந்தருளிய சிவபெருமான் கல்லாடர் எனப் பெறுவார். கடவுளரின் பெயர்களை மக்களுக்கு இட்டு வழங்கும் முறைப்படியே இப்புலவர்களும் கல்லாடர் என்று பெயர் பெற்றனர்.
திருச்சிற்றம்பலம்
514. பரிவின் தன்மை உருவுகொண் டனையவன்
போழ்வார் போர்த்த தாழகச் செருப்பினன்
குருதி புலராச் சுரிகை எஃகம்
அரையிற் கட்டிய உடைதோற் கச்சையன்
தோல்நெடும் பையிற் குறுமயிர் திணித்து
வாரில் வீக்கிய வரிக்கைக் கட்டியன்
உழுவைக் கூனுகிர் கேழல்வெண் மருப்பு
மாறுபடத் தொடுத்த மாலைஉத் தரியன்
தெளிவுரை : கண்ணப்பன் அன்பே உருவு கொண்டு வந்தவன் எனலாம். போழ்ந்த வாரினால் மூடப் பெற்ற கரிய செருப்பை உடையவன். இரத்தம் உலராத உடை வாளை உடையவன். அரையில் தோலால் செய்த கச்சையை உடையவன். தோலால் ஆகிய நீண்ட பையில் குறுமயிரைத் திணித்து வாரினால் இழுத்துக் கட்டிய கையை யுடையவன். புலியினது வளைந்த நகத்தையும் பன்றியின் வெண்மையான கொம்புபையும் மாறி மாறி கட்டிய மாலையைத் தரித்தவன்.
நீலப் பீலி நெற்றி சூழ்ந்த
கானக் குஞ்சிக் கவடி புல்லினன்
முடுகு நாறு குடிலை யாக்கையன்
வேங்கை வென்று வாகை சூடிய
சங்கரன் தன்னினத் தலைவன் ஓங்கிய
தெளிவுரை : நீலநிற மயில் தோகையை நெற்றியில் சூழ்ந்த காட்டுக் குடுமியில் சோழியைக் கோத்துக் கட்டியிருப்பவன். முடை நாற்றம் வீசும் குடிசையில் வாழ்பவன். வேங்கைப் புலியை வென்று வாகை சூடிய சங்கரனது இனத் தலைவன்.
வில்லும் அம்பும் நல்லன தாங்கி
ஏற்றுக் கல்வனம் காற்றில் இயங்கிக்
கணையில் வீழ்த்துக் கருமா அறுத்துக்
கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சி
நாவில் வைத்த நாட்போ னகமும்
தெளிவுரை : ஓங்கிய வில்லும் அம்பும் நல்லன தாங்கி, மலைக்காடுகளில் காற்றைப் போல விரைந்து சென்று அம்பினால் கொன்று, பன்றியை அறுத்து கோலில் மாட்டி கொழுந்தீயில், வேகவைத்து, நாவில் வைத்து ருசி பார்த்த நல்ல உணவும்,
தன்தலைச் செருகிய தண்பள்ளித் தாமமும்
வாய்க்கல சத்து மஞ்சன நீரும்
கொண்டு கானப் பேருறை கண்ணுதல்
முடியிற் பூசை அடியால் நீக்கி
நீங்காக் குணத்துக்
கோசரிக்(கு) அன்றவன் நேசங் காட்ட
தெளிவுரை : தன் தலையில் செருகிய கடவுளுக்கு அணியும் மாலையும் வாயாகிய பாத்திரத்தில் திருமஞ்சன நீரும் கொண்டு காட்டில் வாழும் சிவபெருமானது முடியில் இருந்த பூசை மலரை செருப்புக் காலால் தள்ளி விட, சிவபக்தியில் குறையாத சிவகோசரியாருக்கு, கண்ணப்பரது அன்பைக் காட்டுவான் வேண்டி,
முக்கண் அப்பனுக்(கு) ஒருகணில் உதிரம்
தக்கி ணத்திடை இழிதர அக்கணம்
அழுது விழுந்து தொழுதெழுந்(து) அரற்றிப்
புன்மருந் தாற்றப் போகா தென்று
தெளிவுரை : மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்கு ஒரு கண்ணில் உதிரம் அப்போது ஒழுக, அப்போதே கண்ணப்பர் கீழே விழுந்து அழுது தொழுது எழுந்து வாய் விட்டுக் கதறி, மூலிகைகளைக் கொண்டு வந்து சாறு பிழிந்து தடவியும் இரத்தம் ஒழுகுவது நிற்காமையால்,
தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப
ஒழிந்தது மற்றை ஒண்திரு நயனம்
பொழிந்த கண்ணீர்க் கலுழி பொங்க
அற்ற தென்று மற்றக் கண்ணையும்
பகழித் தலையால் அகழ ஆண்டகை
ஒருகை யாலும் இருகை பிடித்து
தெளிவுரை : தானே அதற்கு மருந்தென்று மனம் தேறி, தனது கண்ணைப் பெயர்த்தெடுத்து அப்ப, இரத்தம் பெருகுவது நின்றது. ஆனால் அடுத்த கண்ணில் இரத்தம் பெருக, ஆரம்பித்தது. தனது மற்றொரு கண்ணையும் அம்பின் நுனியால் அகழ ஆரம்பித்த போது, சிவபெருமான் தனது ஒருகையால் கண்ணப்பரது இரண்டு கைகளையும் பிடித்து,
ஒல்லை நம்புண் ஒழிந்தது பாராய்
நல்லை நல்லை எனப்பெறும்
திருவேட் டுவர்தந் திருவடி கைதொழக்
கருவேட் டுழல்வினைக் காரியம் கெடுமே.
தெளிவுரை : விரைவில் எம்புண் ஆறியது பார்ப்பாயாக. நலம் பெருவாயாக. நலம் பெறுவாயாக என்று இறைவன் அருள் பாலித்தார். கண்ணப்பர் இறைவர் தம் திருவடிகளை வணங்கினார். பிறவியை விரும்பி உழலுகின்ற காரியம் கெடும் என்றவாறு. அதாவது அவர் இனி பிறவா வரம் பெற்று இறைவனது திருவடி நீழலை அடைந்தார் என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
20. மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை (கபிலதேவ நாயனார் அருளிச் செய்தது)
இவரது நாடு, ஊர் முதலிய செய்திகளை உணர்ந்து கொள்ளுதற்குத் தக்க ஆதாரங்கள் இல்லை. இவர் தம்முடைய, பாடல்களில் போற்றிப் பரவிய சிவதலங்களைப் பற்றிய குறிப்புக்களை ஆழ்ந்து நோக்குமிடத்து, இவர் சிவதலப் பயணத்தை மேற்கொண்டு வாழ்ந்தவர் என்று தெரிகிறது.
கடைச் சங்கப் புலவராகிய கபிலர் அல்லர் இவர். கபிலதேவர் பிற்காலத்துப் புலவர். இவரால் இயற்றப் பெற்ற நூல்கள் மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்பன.
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை என்னும் இந்நூல் ஆனைமுகக் கடவுள்மீது வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் அடுத்தடுத்து வர இருபது செய்யுட்களால் அந்தாதித் தொடையாக இயற்றப் பெற்றது. ஆனைமுகக் கடவுளைத் தேவர்களும் வழிபடுகின்றனர். ஆனைமுகக் கடவுளே தீவினைகளெல்லாம் வேரோடு களைய வல்லவர். ஆனைமுகக் கடவுளைப் போற்றி வழிபடுபவர் இடத்தன்றி மற்றவர்களிடம் திருமகள் சேர மாட்டாள் என்பன போன்ற செய்திகள் இந்நூலில் கூறப்படுகின்றன.
திருச்சிற்றம்பலம்
வெண்பா
515. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
தெளிவுரை : செல்வத்தைப் பெருகச் செய்யும். செய்கின்ற வேலை வெற்றி பெரும், செம்மையான சொல் பெருகும். பெருமையை அதிகரிக்கச் செய்யும். சாரூப பதவியைக் கொடுக்கும். ஆதலால் தேவர்களும் யானைமுகக் கடவுளாகிய விநாயகனை அன்போடு வழிபடுவார்கள் என்பதாம்.
கட்டளைக் கலித்துறை
516. கைக்கும் பிணியொடு காலன்
தலைப்படும் ஏல்வையினில்
எய்க்கும் கவலைக் கிடைந்தடைந்
தேன்வெம்மை நாவளைக்கும்
பைக்கும் அரவரை யான்தந்த
பாய்மத யானைபத்துத்
திக்கும் பணிநுதற் கண்திரு
வாளன் திருவடியே.
தெளிவுரை : வெறுக்கும் நோயோடு எமன் முயற்சிக்கும் சமயத்தில் குறைக்கும். கவலைக்குத் தளர்ந்து இருந்தேன். வெம்மை நாவளைக்கும், படம் எடுத்து ஆடுகின்ற பாம்பை இடையில் கட்டியுள்ள சிவபெருமான் பெற்ற பாய் மதயானையாகிய விநாயக் கடவுள். அந்த நெற்றிக் கண்ணையுடைய திருவாளன் திருவடிகளைப் பணிவாயாக. விநாயகப் பெருமானது திருவடிகளை வணங்கினால் துன்பங்கள் இரா என்பதாம்.
வெண்பா
517. அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
இடியவலோ(டு) எள்ளுண்டை கன்னல் - வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்.
தெளிவுரை : நெஞ்சமே! அவனது அடிமைத் தொழிலிற் பொருந்திய இருப்பாயாக. அப்பம், மாவாற் செய்யப்பட்ட கொழுக்கட்டை, அவலோடு, எள்ளுருண்டை, கரும்பு இவற்றின் சுவையில் விரும்பி ஆழ்ந்திருப்பவனும், தன் அடியார் உள்ளத்து வாழ்கின்றவனுமாகிய விநாயகனை வாழ்த்தி வாழ்வாயாக.
கட்டளைக் கலித்துறை
518. வாழைக் கனிபல வின்கனி
மாங்கனி தாஞ்சிறந்த
கூழைச் சுருள்குழை அப்பம்எள்
உண்டைஎல் லாம்துறத்தும்
பேழைப் பெருவயிற் றோடும்
புகுந்தென் உளம்பிரியான்
வேழத் திருமுகத் துச்செக்கர்
மேனி விநாயகனே.
தெளிவுரை : வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், சிறப்பமைந்த கூழைச்சுருள் குழையப்பம், எள் உருண்டை எல்லாம் வெளியே நீட்டும்படியாகச் சேர்த்து வைத்திருக்கிற பெட்டகமாகிய பெருவயிற்றோடும் புகுந்தது என் மனத்தை விட்டகலான் யானைத் திருமுகத்துடன் செவ்வானம் போன்ற மேனியையுடைய விநாயகன்.
விநாயகன் உளம் பிரியான் எனக் கூட்டுக.
வெண்பா
519. விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
தெளிவுரை : விநாயகனே கொடிய துன்பங்களை வேர் அறுக்க வல்லான், விநாயகனே பொருட்பற்றைத் தணிவிப்பான். விநாயகனே வானுலகத்திற்கும் மண்ணுலகத்திற்கும் நாதனாகும். இத்தன்மைகளினால், நன்மைகளைப் பெற எண்ணினால் அவளது பாதங்களை மனங்குழைந்து பணியுங்கள்.
கட்டளைக் கலித்துறை
520. கனிய நினைவொடு நாடொறும்
காதற் படும்அடியார்க்(கு)
இனியன் இனியொர் இன்னாங்(கு)
இலம்எவ ரும்வணங்கும்
பனிவெண் பிறை,நறுங் கொன்றைச்
சடைப்பலி தேர்இயற்கை
முனிவன் சிறுவன் பெருவெங்கொல்
யானை முகத்தவனே.
தெளிவுரை : மனங்குழைந்த நினைவோடு நாள்தோறும் துதி செய்யும் அடியார்களுக்கு இனியனாம். இனி எந்த துன்பமும் நமக்கு இராது. எல்லாரும் வணங்குகின்ற குளிர்ந்த வெண்மையான பிறையும் நறுங் கொன்றையும் உடைய சடையை உடையவனும் ஐயமேற்கும் இயற்கைத் தன்மையை உடையவனுமாகிய சிவபெருமானது சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவன். அவனைப் பணிமின் என்பதாம்.
வெண்பா
521. யானை முகத்தான் பொருவிடையான் சேழ் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் - மேல்நிகழும்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்.
தெளிவுரை : யானை முகத்தை உடையவன், போர் செய்கின்ற காளையை வாகனமாக உடைய சிவபெருமானது மூத்த மகன். அழகுடைய நீல மணி போன்ற நிறத்தினை உடைய திருமாலினது மாமருகன். மேல் நிகழும் வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என் உள்ளக் கருத்தில் இருக்கின்றான்.
கட்டளைக் கலித்துறை
522. உளதள வில்லதொர் காதல்என்
நெஞ்சில்வன் நஞ்சமுண்ட
வளரிள மாமணி கண்டன்வண்
டாடுவண் கோதைபங்கத்(து)
இளவளர் மாமதிக் கண்ணியெம்
மான்மகன் கைம்முகத்துக்
களகள மாமதம் சேர்களி
யானைக் கணபதியே.
தெளிவுரை : உளது. அளவில்லதோர் காதல் என் நெஞ்சில். விடமுண்ட வளர் இள மாமணிகண்டன், வண்டுகள் சுற்றித் திரிகின்ற வண் கோதை பங்கத்து இளவளர் திங்கள் மாலை எம்மான் மகன் சிவன். கைம் முகத்துக் களகள மாமதம் சேர் களியானை கணபதியாகும்.
வெண்பா
523. கணங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப்
பணங்கொண்ட பாந்தள் சடைமேல் - மணங்கொண்ட
தாதகத்த தேன்முரலும் கொன்றையான் தந்தளித்த
போதகத்தின் தாள்பணியப் போம்.
தெளிவுரை : கூட்டம் கொண்டு வந்த கொடிய வினைகள், நெற்றிக் கண்ணைக் கொண்டவனும் படத்தையுடைய பாம்பைச் சடையில் கொண்டவனும் ஆகிய அந்தத் தேன் முரலும் கொன்றையான் தந்தளித்த ஆனைமுகத்தையுடைய பிள்ளையாருடைய திருவடிகளைப் பணிந்தால் போகும் என்க. வல்வினைகள் போம் எனக் கூட்டுக.
கட்டளைக் கலித்துறை
524. போகபந் தத்தந்தம் இன்றிநிற்
பீர்புனை தார்முடிமேல்
நாகபந் தத்தந்த நாளம்
பிறையிறை யான்பயந்த
மாகபந் தத்தந்த மாமழை
போல்மதத் துக்கதப்போர்
ஏகதந் தத்துஎந்தை செந்தாள்
இணைபணிந்(து) ஏத்துமினே.
தெளிவுரை : உலக இன்பங்கள் உள்ள பற்றில் முடிவின்றி ஆழ்ந்திருப்பவர்களே! முடிமேல் பாம்பை அணிகலமாகக் கட்டுதலை யுடைய பிறையான் பயந்த விண்ணில் ஒன்றனோடு ஒன்று இணைந்துள்ள மாமழை போல் மதத்துக் கதப்போர் செய்யும் ஒற்றைக் கொம்பையுடைய எந்தையினது இரண்டு செம்மையான பாதங்களைப் பணிந்து ஏத்துமின்.
வெண்பா
525. ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் - தூத்தழல்போல்
செக்கர்த் திருமேனிச் செம்பொற் கழலங்கை
முக்கட் கடாயானை முன்.
தெளிவுரை : வழிபாடு செய்தே என் உள்ளம் நிற்கும். எப்பொழுதும் யானையின் ஒப்பற்ற வெண்கோட்டு மதமுகத்துத் தூய நெருப்புப் போன்ற சிவந்த உடலழகுடைய செம்பொற்கழல், அம்கை, முக்கண் கடாயானை முன் வழிபாடு செய்வாயாக என்பதாம்.
கட்டளைக் கலித்துறை
526. முன்னிளங் காலத்தி லேபற்றி
னேன்வெற்றி மீனுயர்த்த
மன்னிளங் காமன்தன் மைத்துன
னேமணி நீலகண்டத்(து)
என்னிளங் காய்களி றேஇமை
யோர்சிங்க மேயுமையாள்
தன்னிளங் காதல னேசர
ணாவுன் சரணங்களே.
தெளிவுரை : இளமைப் பருவத்திலேயே பற்றினேன். வெற்றி பொருந்திய மீனக் கொடியை உயர்த்திய மன் இளம் காமன் தன் அத்தை உமாதேவியின் மகனாகிய விநாயகனே ! (மைத்துன முறையைக் காண்க) மணிநீல கண்டத்தானுடைய இளங்களிறே! தேவர்களின் சிங்கமே! உமையாளது அன்பு மகனே! உன்பாதங்களுக்கு வணக்கம்.
வெண்பா
527. சரணுடை யேனென்று தலைதொட் டிருக்க
முரணுடையேன் அல்லேன் நான்முன்னம் - திரள்நெடுங்கோட்(டு)
அண்டத்தான் அப்புறத்தான் ஆனைமுகத் தானமரர்
பண்டத்தான் தாள்பணியாப் பண்டு.
தெளிவுரை : வணக்க முடையேன் என்று முதன்மை தொடர்கிறது. நான் மாறுபாடு உடையவன் அல்லன். முன்பு திரண்ட நீண்ட கொம்பினை யுடைய வனாகவும் அண்டங்களை உடையவனாகவும் அண்டங்களுக்கு அப்பாற்பட்டவனாகவும் ஆனை வணங்கப்படுவனாகவும் உள்ளவனது பாதங்களைப் பணிவாயாக.
கட்டளைக் கலித்துறை
528. பண்டந்த மாதரத் தான்என்(று)
இனியன வேபலவும்
கொண்டந்த நாள்குறு காமைக்
குறுகுவர் கூருணர்வில்
கண்டந்த நீண்முடிக் கார்மத
வார்சடைக் கற்றை யொற்றை
வெண்தந்த வேழ முகத்தெம்
பிரானடி வேட்கையரே.
தெளிவுரை : (பண்+தந்த) சிறப்பைத் தந்த பெரியோன் என்று இனியவான பலவும் கொண்டு அந்த நாள் குறுக முடியாதவாறு குறுகுவர். கூரிய அறிவு கொண்டு நீல கண்டனது மகனும் வெண்மையான தந்தத்தையுடைய யானை முகக் கடவுளினது வேட்கையுடையர் குறுகுவர் என முடிக்க.
வெண்பா
529. வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க்(கு) இன்பஞ்செய்
ஆட்கொண் டருளும் அரன்சேயை - வாட்கதிர்கொள்
காந்தார மார்பிற் கமழ்தார்க் கணபதியை
வேந்தா உடைத்(து) அமரர் விண்.
தெளிவுரை : விரும்பிய தொழில் நிறைவேறும்படி செய்து உன் மெய்யடியார்களுக்கு இன்பம் செய்து ஆட்கொண்டருளும் சிவபிரானது மூத்த பிள்ளையை ஒளி பொருந்திய கதிர்களையுடைய காந்தார மார்பில் மணம் பொருந்திய மாலையையுடைய கணபதியைத் தேவர் உலகம் அரசனாக உடையது.
கட்டளைக் கலித்துறை
530. விண்ணுதல் நுங்கிய விண்ணுமண்
ணுஞ்செய் வினைப்பயனும்
பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய்
அன்பர்கள் பாய்மதமா
கண்ணுதல் நுங்கிய நஞ்சமுண்
டார்க்கு மாமிடற்றுப்
பெண்ணுதல் நும்பிரி யாவொரு
பாகன் பெருமகனே.
தெளிவுரை : ஆகாயம் அடர்ந்த மேலுலகமும் மண்ணுலகமும் செய்யும் வினைப் பயனும் தீர்த்து வைப்பது உன் கடன் என்று மெய் அன்பர்கள் சொல்வார்கள். பாய்கின்ற மதங்கொண்ட நெற்றிக்கண்ணையுடைய நஞ்சுண்ட வரும் நீலகண்டரும் உமையை இடப்பாகத்தில் கொண்டவருமான சிவபெருமானது மூத்த மகனே!
வெண்பா
531. பெருங்காதல் என்னோடு பொன்னோடை நெற்றி
மருங்கார வார்செவிகள் வீசி - ஒருங்கே
திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள் சோர
வருவான்தன் நாமம் வரும்.
தெளிவுரை : பொன்னாலாகிய முகபடாமும், நெற்றியின் பக்கங்களில் அசைந்தாடுகின்ற செவிகளும் ஒரு மிக்க செல்வம் மிகுந்த செந்நிற முகமும் கார்மதங்கள் சோர வருகின்றவனது பெயர் என்னோடு பெருங்காதலோடு வரும் என்க. கார்மதங்கள் சோரவருபவன் - ஆனை முகக்கடவுள்.
கட்டளைக் கலித்துறை
532. வருகோட் டருபெருந் தீமையும்
காலன் தமரவர்கள்
அருகோட் டரும்அவர் ஆண்மையும்
காய்பவன் கூர்ந்தன்பு
தருகோட் டருமர பிற்பத்தர்
சித்தத் தறியணையும்
ஒருகோட் டிருசெவி முக்கட்செம்
மேனிய ஒண்களிறே.
தெளிவுரை : கிரகங்கள் தருகின்ற பெருந்தீமைகளையும், நமனுடைய தூதர்கள் தருகின்ற இம்சைகளையும் போக்குபவனும் அன்பு கூர்ந்து அடியார்களுடைய உள்ளமாகிய கட்டுத் தறியில் கட்டுப்படும் இறைவன் யாரெனில் ஒற்றைக் கொம்பையும் இருசெவிகளையும், மூன்று கண்களையும் செம்மேனியையும் உடைய ஒண்களிறாகிய விநாயகனே யாம்.
வெண்பா
533. களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க்(கு) உதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்.
தெளிவுரை : களிப்பு மிகுந்த யானைக் கன்றை, கணபதியை, செம்பொன் ஒளியானை, உலகத்தவர்க்கு உதவும் அருளுடையவனை எண்ணுவதும், கைத்தலங்கள் கூப்புவதும் மற்றும் அவனுடைய பாதங்களை அடைவதும் நல்லவர்களது கடனாகும்.
கட்டளைக் கலித்துறை
534. நல்லார் பழிப்பில் எழிற்செம்
பவளத்தை நாணநின்ற
பொல்லா முகத்தெங்கள் போதக
மேபுரம் மூன்றெரித்த
வில்லான் அளித்த விநாயக
னேஎன்று மெய்ம்மகிழ
வல்லார் மனத்தன்றி மாட்டாள்
இருக்க மலர்த்திருவே.
தெளிவுரை : நல்லவர்களின் பழிப்பில்லாத அழகிய செம்பவளத்தை நாணநின்ற உளியால் பொளியப் படாத திருமுகத்தையுடைய எங்கள் யானையே, திரிபுரங்களை எரித்த மேரு மலையை வில்லாகவுடையவன் அளித்த விநாயகனே ! என்று மெய்ம் மகிழ வல்லவர்கள் மனத்திலன்றி மற்றவர்கள் மனத்தில் திருமகள் பொருந்தியிருக்க மாட்டாள். அதாவது ஆனைமுகக் கடவுளைப் போற்றுவாரிடத்தன்றிப் பிறரிடத்தில் திருமகள் தங்க மாட்டாள் என்க.
திருச்சிற்றம்பலம்

21. சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை (கபிலதேவ நாயனார் அருளிச் செய்தது)
இதில் முப்பத்தேழு பாடல்கள் உள்ளன. இந்நூலில் சிவபெருமானுடைய பெருமையும், அவர் அடியார்கட்கு அருள் செய்யும் முறைமையும், அப்பெருமானைப் போற்றாதார் அடையும் சிறுமையும், திருவருட் சிறப்பின் அருமையும் கூறப்பட்டுள்ளன.
திருச்சிற்றம்பலம்
வெண்பா
535. அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்
அந்தியே போலும் அவிர்சடையான் - அந்தியில்
தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீல மிடறு.
தெளிவுரை : மாலையில் தோன்றும் பிறையைச் சூடியவன். அந்திமாலையில் தோன்றும் செந்நிறம் போன்ற மேனியை உடையவன். அந்தியே போலும் ஒளிமிக்க சடையை உடையவன். திருநீற்றை யணிந்தவன். மிக்க இருள் சேர்ந்த கழுத்து, தூங்கிருள் சேர் யாமமே போன்றிருக்கும்.
கட்டளைக் கலித்துறை
536. மிடற்றாழ் கடல்நஞ்சம் வைக்கின்ற
ஞான்றுமெல் லோதிநல்லாள்
மடற்றா மரைக்கைகள் காத்தில
வேமழு வாள்அதனால்
அடற்றா தையைஅன்று தாளெறிந்
தாற்(கு) அருள் செய்தகொள்கைக்
கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண்
காட்டெங் கரும்பினையே.
தெளிவுரை : கடலில் இருந்து எழுந்த நஞ்சைத் தாங்கள் பருக முயன்றபோது பக்கத்திலிருந்த உமாதேவி தடுத்து நிறுத்தியதால் அன்றோ அந்த விடம் கழுத்தோடு நின்றது. மழுவினால் தனது தந்தையின் தாளை வெட்டிய சண்டிகேசுவரருக்கு அருள் செய்த கொள்கை திருவெண்காடருக்கு அருள் செய்ய உதவியது என்க.
வெண்பா
537. கருப்புச் சிலையநங்கன் கட்டழகு சுட்ட
நெருப்புத் திருநெற்றி நாட்டம் - திருச்சடையில்
திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி
எங்கள் இமையோர் இறைக்கு.
தெளிவுரை : கரும்பு வில்லையுடைய மன்மதன் பெற்றிருந்த கட்டழகை எரித்த நெருப்புப் போன்ற நெற்றிக் கண்ணும், திருச்சடையில் பிறைச்சந்திரனும் பொன்னிறமான மேனியும் உடையவன் தேவர்களுக்கு இறைவனாகிய எங்கள் சிவபெருமான்.
கட்டளைக் கலித்துறை
538. இறைக்கோ குறைவில்லை உண்டிறை
யேஎழி லார்எருக்கு
நறைக்கோ மனக்கொன்றை துன்றும்
சடைமுடி நக்கர் சென்னிப்
பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக்
கொண்டெம் பிரானுடுக்கும்
குறைக்கோ வணமொழிந் தாற்பின்னை
ஏதும் குறைவில்லையே.
தெளிவுரை : இறைவனுக்கு ஒரு குறையும் இல்லை; சிறிதளவு மாத்திரம் உண்டு. அவையாவை யெனில், அழகிய எருக்குமலர், மணமுள்ள கொன்றை மாலை யணிந்த சடைமுடி நக்கர் சென்னிப் பிறைக்கு ஓர் பிளவு. பிரான் உடுப்பது கோவணம். (எருக்கு, மண்டையோடு, கோவணம் முதலியவைகளை ஒழித்துவிட்டால் பிறகு எம்முடைய இறைவனுக்கு எத்தகைய குறையும் இல்லை யென்க).
வெண்பா
539. இல்லை பிறவிக் கடலேறல் இன்புறவில்
முல்லை கமழும் முதுகுன்றில் - கொல்லை
விடையானை வேதியனை வெண்மதிசேர் செம்பொற்
சடையானைச் சாராதார் தாம்.
தெளிவுரை : இனிய காட்டில் முல்லை கமழும் பழமலையில் (விருத்தாசலம்) முல்லை நிலத்தில் காளை வாகனத்தை யுடையவனை, வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடிய செம்பொற் சடையானைச் சாராதார் பிறவிக் கடல் ஏறல் இல்லை என்க.
கட்டளைக் கலித்துறை
540. தாமரைக் கோவும்நன் மாலும்
வணங்கத் தலையிடத்துத்
தாமரைக் கோவணத் தோ(டு) இரந்(து)
உண்ணினும் சார்ந்தவர்க்குத்
தாமரைக் கோமளத் தோடுவ
காளத் தருவர் கண்டீர்
தாமரைக் கோமளக் கைத்தவ
ளப்பொடிச் சங்கரரே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் வணங்க, தாம் அரைக் கோவணத்தோடு இரந்துண்ணினும், தம்மை வழிபடுகின்றவர்களுக்குத் திருமகளோடு (செல்றவத்தோடு) உலகை ஆளவும் தரவல்லவர். அவர் யாரென்னில் அழகிய கைகளையும் திருநீற்றையும் உடைய சங்கரர் என்க.
வெண்பா
541. சங்குகோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம்
பங்குபோய் நின்றாலும் பாய்கலுழிக் - கங்கை
வரியராப் போதும் வளர்சடையாய் நின்போல்
பெரியர்ஆ வாரோ பிறர்.
தெளிவுரை : கைவளைகளைக் கொள்ளும் எண்ணம் உடையவரே! தம் உடம்பில் பாதி பாகத்தை உமையவள் எடுத்துக் கொண்ட போதிலும் கங்கையையும் பாம்பையும் சடையில் உடையவரே, உம்போல் பிறர் பெரியர் ஆவாரோ?
கட்டளைக் கலித்துறை
542. பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை
வேற்குநின் பேரருளின்
சிறப்பார் திருக்கை தரக்கிற்றி
யேதிரி யும்புரமூன்(று)
அறப்பாய் எரியுற வான்வரை
வில்வளைத் தாய்இரவாய்
மறப்பா வரியர நாணிடைக்
கோத்தகை வானவனே.
தெளிவுரை : பிறப்பாகிய பாழ்குழியில் விழுந்து வருந்துகின்றவனாகிய எனக்கு, உன்பேரருளின் சிறப்பமைந்த திருக்கையைத் தரவில்லையே! திரிபுரங்களை அடியோடு எரிக்க மேருமலையை வளைத்தாய் ஆதிசேஷனை நாணாகக் கோத்த வானவனே!
வெண்பா
543. வானம் மணிமுகடா மால்வரையே தூணாக
ஆன பெரும்பார் அரங்காகக் - கானகத்தில்
அம்மா முழவதிர ஆடும் பொழுதாரூர்
எம்மானுக்(கு) எய்தா(து) இடம்.
தெளிவுரை : ஆகாயமே உச்சியாகவும், பெரிய மலையே தூணாகவும், பெரிய இந்தப் பூமியே அரங்காகவும் கானகத்தில் மத்தளம் முதலிய ஒலிக்கருவிகள் அதிர ஆடும் பொழுது திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் எம் தலைவனுக்கு இடம் போதாது.
கட்டளைக் கலித்துறை
544. இடப்பா கமும்உடை யாள்வரை
ஈன்இள வஞ்சியன்ன
மடப்பால் மொழியென்பர் நின்வலப்
பாகத்து மான்மழுவும்
விடப்பா சனக்கச்சும் இச்சைப்
படநீ(று) அணிந்துமிக்க
கடப்பார் களிற்றுரி கொண்டெங்கும்
மூடும்எங் கண்ணுதலே.
தெளிவுரை : பர்வதராஜன் பெற்ற மகளாகிய பார்வதி உன் இடப்பாகத்தில் உள்ளாள். அவளுடைய மொழி இனிமையானது. நீ, உன் வலப்பாகத்தில் மான், மழு, பாம்புக் கச்சை, திருநீறு இவைகளை அணிந்துள்ளாய். கொடிய யானையின் தோலை உரித்து உடலைப் போர்த்திக் கொண்டுள்ளாய். என் கண்ணுதலே! இது என்ன கோலம் !
வெண்பா
545. கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும்
நண்ணி இருந்தால் நலமில்லை; - தண்ணலங்கல்
பூங்கொன்றை யின்தேன் பொதியும் சடைப்புனிதா
வாங்கொன்றை இன்றே மதித்து.
தெளிவுரை : தலைமாலையாகச் பிறைச் சந்திரனையும் கோப மிக்க பாம்பையும் ஒரு சேர வைத்திருப்பது நல்லது அல்ல. ஏனெனில் அவை இரண்டிற்கும் பகை. குளிர்ந்த கொன்றை மாலையின் தேன் பொதிந்த சடைப் புனிதா ! இவற்றுள் ஒன்றை நீக்கி விடு என்பதாம். வாங்கு+ஒன்றை எனப்பிரிக்க.
கட்டளைக் கலித்துறை
546. மதிமயங் கப்பொங்கு கோழிருள்
கண்டவ ! விண்டவர்தம்
பதிமயங் கச்செற்ற கொற்றவில்
வானவ! நற்றவர்சூழ்
அதிகைமங் கைத்திரு வீரட்ட
வாரிட்ட தேனுமுண்டு
கதிமயங் கச்செல்வ தேசெல்வ
மாகக் கருதுவதே?
தெளிவுரை : கண்டவர் மயங்குமாறு மிக்க இருள் சூழ்ந்த கண்டத்தை உடையவரே! சிவபிரான் அருள் பெற்று வானத் திருந்த முப்புர அரக்கர்களது திரிபுரங்களை எரித் கொற்ற வில்லையுடைய வானவ! நல்லோர்கள் வாழ்கின்ற திருவதிகை வீரட்டானத் தேனும் உண்டு கதி மயங்கச் செய்வதே செல்வமாகக் கருதுகின்றாய் என்பதாம்.
வெண்பா
547. கருதுங் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப்
பெரிதும் பிறதிறத்துப் பேசேன் - அரிதன்றே
யாகப் பிறையான் இனியென் அகம்புகுந்து
போகப் பெறுமோ புறம்.
தெளிவுரை : உன்னைக் கருதும் கருத்துடையேன். உன்னை வணங்க கைகளை உடையேன். வேறு வகைகளில் பேச மாட்டேன். வேள்வியில் தோன்றிய பிறையை அணிந்தவன். இனி என் மனத்தில் புகுந்து, வெளியே போக முடியுமோ? அரிதென்க.
கட்டளைக் கலித்துறை
548. புறமறை யப்புரி புன்சடை
விட்டெரி பொன்திகழும்
நிறமறை யத்திரு நீறு
துதைந்தது நீள்கடல்நஞ்(சு)
உறமறை யக்கொண்ட கண்டமும்
சால உறப்புடைத்தால்,
அறமறை யச்சொல்லி வைத்(து)ஐயம்
வேண்டும் அடிகளுக்கே.
தெளிவுரை : முதுகு மறையச் செய்கிற சடையை உடையாய். பிரகாசமான உன் மேனி மறையத் திருநீறு பூசியுள்ளாய். கடலில் இருந்து எழுந்த விடத்தை மறைக்க நீலகண்டத்தை உடையாய். அறம் மறையச் சொல்லி வைத்து, பிச்சை வேண்டிச் செல்கின்றாய். அடிகளே இது சரியா?
வெண்பா
549. அடியோமைத் தாங்கியோ ஆடை உடுத்தோ
குடியோம்ப மாநிதியங் கொண்டோ - பொடியாடு
நெற்றியூர் வாளரவ நீள் சடையாய் நின்னூரை
ஒற்றியூர் ஆக்கிற்(று) உரை.
தெளிவுரை : கடன் கொண்ட இடத்தில் ஒற்றியாக வைக்கப்பட்ட திருஒற்றியூரை உடையாய், இவ்வாறு கடன் பட்டதற்கு என்ன காரணம்? சொல்வாயாக! அடியவர் களாகிய எங்களைத் தாங்கியா? ஆடை உடுத்தியா? குடும்பத்தைக் காப்பாற்ற பெருங்கடன் பட்டா? அடகு வைத்தீர்? நெற்றியில் திருநீறும் சடையில் பாம்பையும் உடையவரே! ஊரை ஏன் அடகு வைத்தீர் !
கட்டளைக் கலித்துறை
550. உரைவந் துறும்பதத் தேயுரை
மின்களன் றாயினிப்பால்
நரைவந் துறும்பின்னை வந்துறுங்
காலன்நன் முத்திடறித்
திரைவந் துறுங்கரைக் கேகலம்
வந்துறத் திண்கைவன்றாள்
வரைவந் துறுங்கடல் மாமறைக்
காட்டெம் மணியினையே.
தெளிவுரை : போற்றிப் புகழ்வதற்கு நல்ல சொற்கள் அமையும் பக்குவ காலத்தில் உரையுங்கள் என்று சொன்னாய். இனி, பால் போன்ற நரை வந்துறும். பிறகு எமன் வருவான். பிறகு நன்முத்து இடறித்திரை வந்துறுங் கரைக்கு கப்பல் வந்துற யானை வந்துறும். கடல் கரையிலும் வேதாரண்யத் (திருமறைக்காடு) தில் கோயில் கொண்டுள்ள இறைவனே! (யானைத் தீ - தீராத பசி நோய் எனினுமாம்)
வெண்பா
மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை
அணியமர ரோ(டு)அயனும் மாலும் - துணிசினத்த
செஞ்சூட்ட சேவற் கொடியானு மாய்நின்று
நஞ்சூட்ட எண்ணியவா நன்று.
தெளிவுரை : மணிகள் பதிக்கப்பட்ட பெரிய மாடங்களை யுடைய திருவாய் மூவராகிய அப்பர் பெருமானைத் தேவரோடு பிரமனும் திருமாலும் போற்ற அமைத்தனை. மிகவும் கோபமுடைய சிவந்த தலைச் சூட்டையுடைய சேவற் கொடியோனாகிய முருகப் பெருமானோடு நன்கு அருள் செய்தார்.
கட்டளைக் கலித்துறை
552. நன்றைக் குறும்இரு மற்பெரு
மூச்சுநண் ணாதமுன்னம்
குன்றைக் குறுவது கொண்டழி
யாதறி வீர்செறிமின்
கொன்றைக் குறுநறுங் கண்ணியி
னான்தன்கொய் பூங்கயிலைக்
குன்றைக் குறுகரி தேனும்உள்
ளத்திடைக் கொள்மின்களே.
தெளிவுரை : உடல் நலத்தைக் கெடுக்கும் இருமலும், பெரு மூச்சும் வந்தடைவதற்கு முன்பு, கர்வங் கொண்டு அழிந்து போகாதீர்கள். நல்லதை அறிந்து சேருங்கள் கொன்றையின் சிறிய மணம் பொருந்திய மாலையைத் தலைமாலையாகக் கொண்டவனது கயிலை மலையைச் சேர்வது அருமையாயினும் உங்கள் மனத்தில் கொள்வீர்களாக.
வெண்பா
553. கொண்ட பலிநுமக்கும், கொய்தார் குமரர்க்கும்
புண்டரிக மாதினுக்கும் போதுமே? - மண்டி
உயிரிழந்தோர் சேர்புறங்காட்(டு) ஓரிவாய் ஈர்ப்ப
மயிரிழந்த வெண்டலைவாய் வந்து.
தெளிவுரை : நெருங்கிய இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டில் நரி வாயினால் ஈர்த்து மயிரிழந்த கபாலத்தைக் கொண்டு எடுத்த பிச்சை உமக்கும், முருகனுக்கும், திருமகளுக்கும் போதுமோ என இயைக்க.
கட்டளைக் கலித்துறை
554. வந்தா(று) அலைக்கும் வலஞ்சுழி
வானவ வானவர்தம்
அந்தார் மகுடத் தடுத்தபைம்
போதில் தேனுழக்கிச்
செந்தா மரைச்செவ்வி காட்டும்
திருவடிக் கும்செல்லுமே
எந்தாய் அடித்தொண்டர் ஓடிப்
பிடித்திட்ட இன்மலரே.
தெளிவுரை : காவிரியாறு வந்து யாண்டும் மோதும் வலஞ்சுழி என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் தேவனே. வானவர்கள் சூட்டிய மலர்மாலையிலுள்ள தேனைக் கலக்கச் செய்து திருமகள் வணங்கும் பாதங்களுக்கும் செல்லும் எம் தந்தையே. உன் அடியார்கள் ஓடிப் பிடித்திடும் இன் மலராகும் அப்பாதங்கள் என்றபடி.
வெண்பா
55. மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப்
புலர்ந்தும் புலராத போதும் - கலந்திருந்து
கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பெளியன்
தெண்ணீர் சடைக்கரந்த தே.
தெளிவுரை : மலர்ந்த மலர்களை அருச்சித்து, மனத்தை ஒருமுகப்படுத்தி விடியற்காலையிலேயே கலந்திருந்து, கண்ணீர் அரும்பக் கசிந்து உருகுபவர்களுக்கு காண்பதற்கு எளியன். அவன் கங்கையைச் சடையில் மறைத்து வைத்துள்ள தெய்வமாவான் என்பதாம்.
கட்டளைக் கலித்துறை
556. தேவனைப் பூதப் படையனைக்
கோதைத் திருஇதழிப்
பூவனைக் காய்சினப் போர்விடை
தன்னொடும் போற்றநின்ற
மூவனை ஈருரு வாயமுக்
கண்ணனை முன்னுமறை
நாவனை நான்மற வேனிவை
நான்வல்ல ஞானங்களே.
தெளிவுரை : தேவனாக இருப்பவனை, பூதங்களைப் படையாக உடையவனை, கொன்றை மாலையை அணிந்தவனை, மிகுந்த கோபமுள்ள காளை வாகனத்தைத் தன்னோடும் போற்ற நின்ற மும்மூர்த்திகளாக இருப்பவனை ஆணும் பெண்ணுமாகிய இரண்டு உருவங்களும் மூன்று கண்களும் உடையவனை எண்ணுகின்ற மறையோதும் நாவினை உடையவனை நான் மறக்க மாட்டேன். இவை நான் அறிந்த ஞானங்களாகும்.
வெண்பா
557. நானும்என் நல்குரவும் நல்காதார் பல்கடையில்
கானிமிர்ந்து நின்றிரப்பக் கண்டிருக்கும் - வானவர்கள்
தம்பெருமான் மூவெயிலும் வேவச் சரந்தூர்த்த
எம்பெருமான் என்னா இயல்பு.
தெளிவுரை : நானும் என் வறுமையும், லோபிகளின் கடை வாசலில் கால் நோவக் காத்திருந்து யாசிக்கக் கண்டிருக்கும் வானவர்கள் தம் பெருமானே! திரிபுரங்களும் பற்றி எரியச் சரந்தொடுத்த எம்பெருமானே உன் இயல்பு என்ன?
கட்டளைக் கலித்துறை
558. இயலிசை நாடக மாயெழு
வேலைக ளாய் வழுவாப்
புயலியல் விண்ணொடு மண்முழு
தாய்ப்பொழு தாகிநின்ற
மயிலியல் மாமறைக் காடர்வெண்
காடர்வண் தில்லை மல்கு
கயலியல் கண்ணிபங் கார்அன்பர்
சித்தத்(து) அடங்குவரே.
தெளிவுரை : இயல் இசை நாடகமாய் ஏழுகடல்களாய் வழுவாப் புயலியல் விண்ணொடு மண் முழுதாய்ப் பொழுதாகி நின்ற மயில்கள் அசைகின்ற திருமறைக்காட்டில் எழுந்தருளியிருந்த வரும் வெண்காடரும் வண்தில்லை மல்கு அம்மையைப் பங்காக உடையவரும் ஆன பெருமான் அடியார்களின் மனத்துக்குள் அடங்குவர்.
வெண்பா
559. அடங்காதார் ஆரொருவர் அங்கொன்றை துன்று
மடங்காதல் என்வளைகொள் வார்த்தை - நுடங்கிடையீர்
ஊரூரன் சென்றக்கால் உண்பலிக்கென்(று) அங்ஙனே
ஆரூரன் செல்லுமா(று) அங்கு.
தெளிவுரை : யார் ஒருவர் அடங்காதவர்? (எல்லாரும் அடங்குவர் என்றபடி) அழகிய கொன்றை மலர் பொருந்திய காதலினால் வளைகளை இழந்த பெண் மக்களே! ஊர் ஊராகப் பிச்சை ஏற்றுச் சென்றால் அப்படியே திருவாரூர் இறைவன் நீங்கள் இருக்கும் இடத்திற்கும் வருவான்.
கட்டளைக் கலித்துறை
560. அங்கை மறித்தவ ரால்அவி
உண்ணும்அவ் வானவர்கள்
தங்கை மறித்தறி யார்தொழு
தேநிற்பர் தாழ்சடையின்
கங்கை மறித்தண வப்பண
மாசுணக் கங்கணத்தின்
செங்கை மறித்(து)இர விற்சிவன்
ஆடுந் திருநட்டமே.
தெளிவுரை : அங்கை மறித்தவரால் அவி உண்ணும் வானவர்கள் வணங்காமல் இரார். தொழுதே நிற்பர். நீண்ட சடையில் உள்ள கங்கை திரும்பிப் பாய, படத்தை யுடைய பாம்பு கங்கணத்தின் செங்கை மறித்து, இரவில் சிவபெருமான் திருநடனம் ஆடுவார்.
வெண்பா
561. நட்டம்நீ ஆடும் பொழுதத்து நல்லிலயம்
கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ - வட்டுக்
கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்த
கொடுங்குன்ற பேயின் கொடிறு.
தெளிவுரை : நீ நடனம் செய்யும் போது நல்ல தாளம் கொட்ட முடியாமற் போயிற்றோ? ஆடை கொடிய மலையைப் போன்ற மால் யானையின் தோலாகும். கொடுங்குன்ற பேயின் கன்னம் போர்த்திருக்கும்.
கட்டளைக்கலித்துறை
562. கொடிறு முரித்தன்ன கூன்தாள்
அல்லன் குருகினம் சென்(று)
இடறுங் கழனிப் பழனத்
தரசை எழில் இமையோர்
படிறு மொழிந்து பருகக்
கொடுத்துப் பரவை நஞ்சம்
மிடறு தடுத்தது வும்அடி
யேங்கள் விதிவசமே.
தெளிவுரை : கன்னம் முரிந்தது போன்ற வளைந்த காலையுடைய நண்டுகளைப் பறவைக் கூட்டம் சென்று இடறும் கழனிகளையுடைய அரசை, எழில் இமையோர் வஞ்சக மொழிகளைச் சொல்லி உண்ணும் படியாகக் கொடுத்த கடலின் விடத்தைக் கண்டம் தடுத்ததுவும் எங்கள் விதிவசமே.
வெண்பா
563. விதிகரந்த செய்வினையேன் மென்குழற்கே வாளா
மதுகரமே எத்துக்கு வந்தாய் - நதிகரந்த
கொட்டுக்காட் டான்சடைமேல் கொன்றைக் குறுந்தெரியல்
தொட்டுக்காட் டாய்சுழல்வாய் தொக்கு.
தெளிவுரை : விதி மறைத்த செய்வினையேன் மென்மையான கூந்தலுக்கு வீணாக வண்டே! எதற்காக வந்தாய்? கங்கையை மறைத்த சுடுகாட்டில் நடனமாடுகின்ற சிவனது சடைமேல் உள்ள கொன்றை மாலையைத் தொட்டுக் காட்டுவாயாக. தொக்குச் சுழல்வாயாக.
கட்டளைக் கலித்துறை
564. தொக்கு வருங்கணம் பாடத்தொல்
நீறணிந் தேநிலவும்
நக்கு வருங்கண்ணி குடிவந்
தார்நறும் புன்னைமுன்னம்
அக்கு வருங்கழிக் கானலை
யாறரைக் காணஅன்பு
மிக்கு வரும்அரும் போதவ
ரைக்காண வெள்குவனே.
தெளிவுரை : ஒரு சேர வரும் பூதக் கூட்டம் பாட, பழைமையான திருநீறு அணிந்து நிலவும் ஒளி பொருந்திய மாலையைச் சூடிவந்தார். மணமுள்ள புன்னை முன்பு சங்கு வரும் கழிக்கானல் ஆற்றை உடையவரைக் காண அன்பு மிக்கு வரும் போது அவரைக் காண நாணம் உறுவேன்.
வெண்பா
565. வெள்காதே உண்பலிக்கு வெண்டலை கொண்(டு) ஊர்திரிந்தால்
எள்காரே வானவர்கள் எம்பெருமான் - வள்கூர்
வடதிருவீ ரட்டானத் தென்அதிகை மங்கைக்
குடதிருவீ ரட்டானங் கூறு.
தெளிவுரை : நாணாமல், பிச்சையேற்க கபாலத்தைக் கொண்டு ஊர் திரிந்தால் வானவர்கள் இகழ்ந்து கூற மாட்டார்களா ? எம் பெருமானே! வளப்பம் பொருந்திய வட வீரட்டானத்துத் தென் அதிகை மங்கை மேற்குத் திருவீரட்டானங் கூறு.
கட்டளைக் கலித்துறை
566. கூறு பெறுங்கண்ணி சேர்கருங்
கூந்தல்சுண் ணந்துதைந்து
நீறு பெறுந்திரு மேனி
நெருப்புப் புரைபெயருப்பொத்(து)
ஆறு பெறுஞ்சடை அங்கொன்றை
யந்தேன் துவலைசிந்த
வீறு பெறுஞ்சென்று சென்றெம்
பிரானுக்கு வெண்ணிறமே.
தெளிவுரை : கூறுபெறும் கண்ணிசேர் கருங்கூந்தல் பொடியாக நெருங்கி, திருநீறு பூசிய திருமேனி நெருப்பு மலை போன்று பெறுஞ்சடை அங்கொன்றை அந்தேன் துளிகள் சிந்த, பெருமை பொருந்திய எம்பெருமானுக்கு வெண்ணிறமே வாய்த்தது.
வெண்பா
567. நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளா
புறம்புறமே நாள்போக்கு வாளோ - நறுந்தேன்
படுமுடியாப் பாய்நீர் பரந்தொழுகு பாண்டிக்
கொடுமுடியாய் என்றன் கொடி.
தெளிவுரை : இது நற்றாய் கூற்று. என்னுடைய இளம்பெண் நிறம் வேறுபட்டு, உள்ளம் மெலிந்து, நெஞ்சு உருகி, வீணாகத் திரிந்து நாள் போக்குவாளோ? நறுந்தேன் பாய்கின்ற, நீர்பரந்து ஒழுகுகின்ற திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் சிவப்பதியாய்! அவளுக்கு ஆறுதல் கூறுவீராக.
கட்டளைக் கலித்துறை
568. கொடிக்குல வும்மதிற் கோவலூர்
வீரட்டக் கோளரவம்
பிடிக்கில அம்முடிப் பூணலை
யத்தொடு மால்விடையின்
இடிக்குரல் கேட்டிடி என்றிறு
கக்கடி வாளெயிற்றால்
கடிக்க லுறும்அஞ்சி நஞ்சம்
இருந்தநின் கண்டத்தையே.
தெளிவுரை : கொடி வீசுகின்ற உயர்ந்த மதிலை யுடைய கோவலூர் வீரட்டத்து, தீமை இழைக்கும் பாம்பு சிவபெருமானது முடியில் இருப்பதைப் பிடிக்காமல் பெரிய விடையின் இடி போன்ற குரலைக் கேட்டு, முழக்கம் செய்து இறுக, கூரிய பற்களால் கடித்துவிடும் என்று அஞ்சி நஞ்சு பொருந்திய நின்கண்டம் நடுங்கிற்று.
வெண்பா
569. கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல்நஞ்(சு)
உண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் - தொண்டடைந்தார்
கூசுவரே கூற்றைக் குறுகுவரே தீக்கொடுமை
பேசுவரே மற்றொருவர் பேச்சு.
தெளிவுரை : கண்டம் நிறங்கறுப்ப ஒலிமிகுந்த கரிய கடலின் விஷத்தை உண்ட உத்தமருக்குத் தொண்டாற்றுகின்றவர்கள் எமனைக் கண்டு அஞ்சுவார்களோ? தீக் கொடுமையைக் குறுகுவரோ? மற்றொருவர் பேச்சைப் பேசுவார்களோ?
கட்டளைக் கலித்துறை
570. பேய்ச்சுற்றம் வந்திசை பாடப்
பிணமிடு காட்டயலே
தீச்சுற்ற வந்துநின் றாடல்என்
னாஞ்செப்பு முப்பொழுதும்
கோச்சுற்ற மாக்குடை வானவர்
கோனயன் மால்முதலா
மாச்சுற்றம் வந்திறைஞ் சுந்திருப்
பொற்சடை மன்னவனே.
தெளிவுரை : பேய்களாகிய உறவினர்கள் வந்து இசை பாடப் பிணத்தை இடுகின்ற சுடுகாட்டில் தீச்சுற்ற வந்து ஆடுகின்ற ஆடல் எதற்காக என்று சொல்வாயாக ! மூன்று நேரத்திலும் இந்திரன், பிரமன், திருமால் முதலான பெருமை தங்கிய உறவு வந்து துதிக்கின்ற பொற் சடை மன்னவனே செப்பு என்று முடிக்க.
வெண்பா
571. மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாளரக்கன்
துன்னும் சுடர்முடிகள் தோள்நெரியத் - தன்னைத்
திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள் வைத்தான்
திருச்சத்தி முற்றத்தான் தேசு.
தெளிவுரை : இராவணன் துன்னும் சுடர் முடிகளும் தோளும் நெரிய அழகிய ஆண்மை முழுவதுமாகத் தன் சித்தத்துள் வைத்தான். திருச்சித்தி முற்றம் என்னும் சிவப்பதியில் கோயில் கொண்டிருக்கும் இறைவனது தேசை, நிலை பெற்ற பிறப்பறுக்கும் மாமருந்து என வைத்தான் என்க.
திருச்சிற்றம்பலம்
22. சிவபெருமான் திருவந்தாதி (கபிலதேவ நாயனார் அருளிச் செய்தது)
இவ் அந்தாதியில் திருவாரூர், திருவொற்றியூர், திருவண்ணாமலை, ஆவூர், திருவாமாத்தூர், திருவேங்கடம், கூடல், திருவெண்காடு, திருமறைக்காடு, சிராமலை. பூம்புகார், திருக்கானப்பேர், இடுமணல், ஆக்கூர், புறந்தை, காரோணம், திருவாடானை, திருப்பழனம், திருப்புன்கூர், மண்டளி, கோகரணம், கோப்பாடி, குற்றாலம், புகலூர், களந்தை, தலையாலங்காடு, செங்குன்றூர் முதலிய பல திருவூர்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. பலபாடல்களின் பொருள்கள் இதுதான் என்று உறுதிபெற உரைக்க முடியாத நிலையில் உள்ளன.
திருச்சிற்றம்பலம்
வெண்பா
572. ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந்(து)
ஒன்றும் மனிதர் உயிரையுண் - டொன்றும்
மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மால்.
தெளிவுரை : ஒன்று முதலாக நூறு ஆண்டுகள் வாழ்ந்து சேர்ந்திருக்கும் மனிதர்களது உயிரையுண்டு, யாதொன்றையும் மதியாமல் இருக்கும் காலனை உதைத்த செம்மையான பாதங்களையுடைய சிவபெருமான், சடையில் திங்களையுடையவன். இடப்பக்கத்தில் திருமாலை யுடையவன்.
573. மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை
மாலை ஒருபால் முடியானை - மாலை
ஒளியானை உத்தமனை உண்ணாநஞ்(சு) உண்டற்(கு)
ஒளியானை ஏத்தி உளம்.
தெளிவுரை : திருமாலை இடப்பாகத்தில் கொண்டிருப்பவனை, வண்கொன்றை மாலையை முடியில் உடையானை, மாலைப் பொழுதைப் போன்ற ஒளியுடையவனை, உத்தமனை, உண்ணத்தகாத நஞ்சை உண்டற்கு மறைந்து கொள்ளாதவனை, மனமே! நீ துதிப்பாயாக.
574. உளமால்கொண்(டு) ஓடி ஒழியாது யாமும்
உளமாகில் ஏத்தாவா(று) உண்டே - உளம்மாசற்(று)
அங்கமலம் இல்லா அடல்வெள்ளே(று) ஊர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி.
தெளிவுரை : உள்ளம் மயக்கம் கொண்டு ஓடாமல் நாமும் இருந்தால் நம்மையும் புகழ்வாருண்டு. மனம் குற்றங்களினின்று நீங்கி, வலிமைமிக்க வெள்ளேறு ஊர்ந்து உழலும் அழகிய தாமரை மலர் போன்ற நிறமுடைய சிவபெருமானது பாதங்களை வணங்குவோமாக.
575. அடியார்தம் ஆருயிரை அட்டழிக்கும் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான்- அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி
அந்தரத்தார் சூடும் அலர்.
தெளிவுரை : அடியார்களுடைய ஆருயிரைக் கொன்றழிக்கும் காலனைத் தம் பாதங்களால் உருவம் இல்லாதபடி அழித்தவனை, அடியார்கள் மனதினால் தியானித்து, உள்ளம் உருகி, மெய் சிலிர்த்து, மனத்தினால் மலர் மாலை சூட்டி வழிபடுவர்.
576. அலராளுங் கொன்றை அணியல் ரூரற்(கு)
அலராகி யானும் அணிவன் - அலராகி
ஓதத்தான் ஒட்டினேன் ஓதுவன்யான் ஓங்கொலிநீர்
ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.
தெளிவுரை : கொன்றை மாலையை அணியும் ஆரூரற்கு நான் பழிச்சொல் ஆகி அணிவன், பேரொலி யுடையானை விரும்பினேன். கடலிலிருந்து எழுந்த நஞ்சை உண்டவனது ஊரை நான் துதிப்பேன். இது தலைவி கூற்று.
577. ஊரும(து) ஒற்றியூர் உண்கலனும் வெண்தலையே
ஊரும் விடையொன்(று) உடைதோலே - ஊரும்
படநாகம் மட்டார் பணமாலை ஈதோ
படநாகம் அட்டார் பரிசு.
தெளிவுரை : அவனது ஊர் திருவொற்றியூர். அவன் உண்ணும் பாத்திரம் பிரம கபாலம், வாகனமாக உள்ளது காளை, ஆடை தோல், ஊர்ந்து செல்லும் படத்தையுடைய பாம்பு அவனது மாலையாகும். இறந்து படும்படி யானையைச் சங்கரித்து அவனது பரிசாகும்.
578. பரியானை ஊராது பைங்கண் ஏ(று) ஊரும்
பரியானைப் பாவிக்க லாகா - பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ் நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.
தெளிவுரை : குதிரையையும் யானையையும் வாகனமாகக் கொள்ளாமல் பசுமையான கண்களையுடைய காளையை ஏறி நடத்தும் பெரியவனை, கட்டிய எலும்பை ஆபரணமாக ஏந்தியவனை மனமே! மழு ஏந்திய அவனைக் கண்டு வாழ்வாயாக.
579. கண்டங் கரியன் உமைபாலும் தன்பாலும்
கண்டங் கரியன் கரிகாடன் - கண்டங்கள்
பாடியாட் டாடும் பரஞ்சோதிக்(கு) என்னுள்ளம்
பாடியாக் கொண்ட பதி.
தெளிவுரை : அவன் நீல கண்டன்; (கழுத்துக் கருமையாக அமையப் பெற்றவன்) உமையின் பாகமும் தன்பாகமும் தன்னிடத்தே தங்கிய அருமையானவன். சுடுகாட்டில் ஆடுபவன். கண்டங்கள் பாடி ஆட்டாடும் பரஞ் சோதிக்கு என்னுள்ளம் தங்கும் இடமாயிற்று.
580. பதியார் பழிதீராப் பைங்கொன்றை தாவென்
பதியான் பலநாள் இரக்கப் - பதியாய
அம்மானார் கையார் வளைகவர்ந்தார் அஃதேகொல்
அம்மானார் கையார் அறம்.
தெளிவுரை : ஊரார் அலர் உரையைத் தீர்க்காத பைங்கொன்றைதா என்று யான் பல நாளும் யாசிக்கின்றேன். தலைவராகிய அழகிய மான் பொருந்திய கையை உடையவர் என் வளையைக் கவர்ந்தார். இதுதான் அந்த இறைவரது ஒழுக்கம் போலும்.
581. அறமானம் நோக்கா(து) அநங்கனையும் செற்றங்(கு)
அறமாநஞ் சுண்ட அமுதன்- அறமான
ஓதியாள் பாகம் அமர்ந்தான் உயர்புகழே
ஓதியான் தோற்றேன் ஒளி.
தெளிவுரை : அறமானவைகளைப் பாராமல் மன்மதனை எரித்து அறத்துக்காக நஞ்சை அமுதமாகக் கருதி உண்டவன். அறமே கூந்தலாக உடையவளைத் தனது இடப்பாகத்தில் உடையவன். உயர்புகழையே உரைத்து நான் என் அழகை இழந்தேன்.
582. ஒளியார் சுடர்மூன்றும் கண்மூன்றாக் கோடற்(கு)
ஒளியான் உலகெல்லாம் ஏத்தற்(கு) - ஒளியாய
கள்ளேற்றான் கொன்றையான் காப்பிகந்தான் நன்னெஞ்சே
கள்ளேற்றான் கொன்றை கடிது.
தெளிவுரை : ஒளியுடைய ஞாயிறு, திங்கள், தீ ஆகிய மூன்றையும் கண் மூன்றாகக் கொள்ளுதலுக்கு மறைக் காதவன். உலகெல்லாம்  புகழ்வதற்கு ஒளியாய தேன் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தான் கட்டுப் பாட்டை இழந்தான். நன்னெஞ்சே! விரைவில் கொன்றை மாலையைத் தா என்று கேள்.
583. கடியரவர் அக்கர் கரிதாடு கோயில்
கடியரவர் கையதுமோர் சூலம் - கடியரவர்
ஆனேற்றார்க்(கு) ஆட்பட்ட நெஞ்சமே அஞ்சல்நீ
ஆனேற்றார்க்(கு) ஆட்பட்டேம் யாம்.
தெளிவுரை : கடிக்கும் இயல்பை யுடைய பாம்பை யுடையவர். உருத்திராக்கத்தை அணிந்தவர். சுடுகாடே அவரது கோயில். கடுமையானவர். சூலத்தைக் கையில் ஏந்தியவர். இடப வாகனத்தை உடையவருக்கு ஆட்பட்ட நெஞ்சமே, நீ பயப்படாதே அவர் நம்மைக் கைவிடமாட்டார் என்பதாம்.
584. யாமான நோக்கா(து) அலர்கொன்றைத் தார்வேண்ட
யாமானம் கொண்டங்(கு) அலர்தந்தார் - யாமாவா
ஆவூரா ஊரும் அழகா அனலாடி
ஆவூரார்க்(கு) என்னுரைக்கோம் யாம்.
தெளிவுரை : யாம் மானத்தை நோக்காமல் ( நாம் பெருமையைப் பொருட்படுத்தாமல்) அலர்ந்த கொன்றை மாலையை வேண்ட, அவர் நம்முடைய மானத்தை எடுத்துக் கொண்டு ஊரார் பழிச் சொல்லைத் தந்தார். யாம் விரும்புகின்ற ஆவூரா, அழகா, தீயின் நடுவில் நின்று ஆடுகின்றவனே! யாம் ஊரார்க்கு என்ன பதில் சொல்வது?
585. யானென்றங்(கு) அண்ணா மலையான் அகம்புகுந்து
யானென்றங்(கு) ஐயறிவும் குன்றுவித்து - யானென்றங்(கு)
ஆர்த்தானே ஆயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை
ஆர்த்தானேல் உய்வ(து) அரிது.
தெளிவுரை : யான் என்று அங்கு அண்ணாமலையான் வீடு புகுந்து, அன்று என் ஐயறிவையும் குறையச் செய்து, ஆர்த்தானே ஆயிடினும் விண்வெளியை உடையவன் தனது கொன்றை மாலையைத் தராவிட்டால் பிழைப்பது அரிது என்றவாறு.
586. அரியாரும் பூம்பொழில்சூழ் ஆமாத்தூர் அம்மான்
அரியாரும் பாகத்(து) அமுதன் - அரியாரும்
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் வியந்து.
தெளிவுரை : வண்டுகள் பொருந்திய பூம்பொழில்கள் சூழ்ந்த திருவாமாத்தூர் அம்மான், திருமாலை இடப்பாகத்தில் உடையவன். சிங்கங்கள் சஞ்சரிக்கின்ற திருவேங்கடத்தில் கோயில் கொண்டிருக்கும் பெருமானைப் பொருந்தாத உயிரெல்லாம் உடல் நோயால் வேம் என்று கூட்டுக.
587. வியந்தாழி நன்னெஞ்சே மெல்லியலார்க்(கு) ஆளாய்
வியந்தாசை யுள்மெலிய வேண்டா - வியந்தாய
கண்ணதலான் எந்தைகா பாலி கழலடிப்பூக்
கண்ணுதலாம் நம்பாற் கடன்.
தெளிவுரை : நன்னெஞ்சே ! புகழ்ந்து ஆழ்வாயாக, மெல்லியலார்க்கு ஆளாய் வியந்து ஆசையுள் மெலிய வேண்டா, வியந்தாய கண்ணுதலான், எந்தை மண்டை யோட்டை ஏந்தியவன் கழலடியை எண்ணுதல்தான் நம் கடன் என்பதாம்.
588. கடனாகம் ஊராத காரணமும் கங்கை
கடனாக நீகவர்ந்த வாறும் - கடனாகப்
பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி
பாரிடந்தான் மேயாப் பணி.
தெளிவுரை : பூமியைத் தோண்டிய திருமாலை ஒருபாகமாக வைத்துப் பயிலும் பரஞ்சோதி இவ்வுலகைப் பொருந்தியிருப்பதால் அவனைப் பணி, கடல் நாகம் ஊர்ந்து செல்லாத காரணமும் கங்கையை நீ கவர்ந்த செயலும் யாது கருதி?
589. பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம்
பணியாத பத்தர்க்குஞ் சேயன் - பணியாய
ஆகத்தான் செய்துமேல் நம்மை அமரர்கோன்
ஆகத்தான் செய்யும் அரன்.
தெளிவுரை : மடநெஞ்சே! பல்சடையான் பாதங்களைப் பணிவாயாக. அவ்வாறு பணியாத பக்தர்களுக்கு அவன் தொலைவில் உள்ளவன். பாம்புகள் பொருந்திய உடம்பை உடையவன். அவனை வணங்கினால் அவன் நம்மை இந்திரனாகச் செய்வான்.
590. அரன்காய நைவேற்(கு) அநங்கவேள் அம்பும்
அரன்காயும் அந்தியும்மற்(று) அந்தோ! - அரங்காய
வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான் களிறுண்ட
வெள்ளில்போன்(று) உள்ளம் வெறிது.
தெளிவுரை : அரன் வருத்த வருந்துகின்ற எனக்கு மன்மதனது அம்பும் மாலைப் போதும் ஐயோ; அரங்காகப் பொருந்திய வெள்ளியம்பலத்தில் சேர்ந்த இடுகாட்டில் ஆடுபவன் வேண்டான். யானை நோயால் உள்ளீடற்ற விளாங்கனி போல் ஆனேன் என்பதாம்.
591. வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை
வெறியார்பூந் தாரான் விமலன் - வெறியார்தம்
அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன்
அல்லனோ நெஞ்சே அயன்.
தெளிவுரை : மதம் பிடித்த யானையைத் தொடர்ந்து ஊர் வேந்தர் பின் செல்லும் வேட்கை உடையவர்கள். அதுபோல மணம் பொருந்திய மலர் மாலையை யுடைய விமலன் பித்துப் பிடித்தவர்கள் துன்ப நோயைத் தீர்க்கும் அருமருந்தாகும். திருவாரூரில் கோயில் கொண்டிருக்கும் அந்த இறைவனை நெஞ்சே வணங்குவாயாக.
592. அயமால்ஊண் ஆடரவம் நாண்அதள(து) ஆடை
அயமாவ(து) ஆனேறூர் ஆரூர் - அயமாய
என்னக்கன் தாழ்சடையன் நீற்றன் எரியாடி
என்னக்கன் றாழும் இவள்.
தெளிவுரை : பிச்சை எடுக்கும் சோறு உணவாகும். ஆடுகின்ற பாம்பு நாணாகும். தோலே ஆடையாகும். குதிரையைப் போன்ற வாகனமாக இருப்பது காளை. ஊர் திருவாரூர். என் தலைவனாகிய சிவபெருமான் தொங்குகின்ற சடையை உடையவன் திருநீறு அணிந்தவன். தீயில் ஆடுபவன். அவனிடத்தில் இவள் விருப்பம் கொண்டவள்.
593. ஆழும் இவளையும் கையகல ஆற்றேனென்(று)
ஆழும் இவளை அயராதே - ஆழும்
சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய்
சலமுடியா(து) இன்றருள்உன் தார்.
தெளிவுரை : துன்பத்தில் ஆழும் இவளையும் கைவிட மாட்டேன் என்று அயராமல் ஆழும் கங்கையை முடியில் வைத்த சங்கரனே சங்கக் குழையாய் துன்பத்தைத் தாங்க முடியாது. குண்டலத்தால் தாங்க முடியாது என்க.
594. தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத்
தாராதே சங்கம் சரிவித்தான் - தாராவல்
ஆனைமேல் வைகும் அணிவயல்ஆ ரூர்க்கோன்நல்
ஆனையும் வானோர்க்(கு) அரசு.
தெளிவுரை : குளிர்ந்த கொன்றை மாலையைத் தருமாறு நான் வேண்டிக் கேட்க, அதை அவன் தாராமல் என் கைவளையல்களைக் கழலச் செய்தான். தாராவல் யானைமேல் வைகும் நிலவள மிக்க திருவாரூர் எம்பெருமான் தேவர்க்குத் தலைவனாவான்.
595. அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க்(கு) அம்மான்
அரசுமாம் அங்கொன்று மாலுக்(கு) - அரசுமான்
ஊர்தி எரித்தான் உணரும் செவிக்கின்பன்
ஊர்தி எரித்தான் உறா.
தெளிவுரை : அடியவர்களுக்கு அவன் அரசாய் இருந்து ஆள்விப்பான் உமாதேவிக்கும் திருமாலுக்கும் அரசாவான். மன்மதனை எரித்தான். செவிக்கு இன்பமானவன். பகையாய திரிபுரங்களையும் எரித்தவன் அவன் என்க.
596. உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்(து)
உறாவேதீ உற்றனகள் எல்லாம் - உறாவேபோய்க்
காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்மறந்தாள்
காவாலி தானின் கலை.
தெளிவுரை : என் சொற்கள் பொருந்த மாட்டா, பெண்ணே! நான் சொல்வது உன்மனத்தில் பொருந்தவில்லையே! நீ நினைப்பவை யாவும் கைகூடிவரா அந்தக் காபாலியிடம் (கபாலத்தைக் கையில் ஏந்தியவன்) மையல் கொண்டு ஆடை நெகிழ கைசோர்ந்து மெய்மறந்தாள் என்க.
597. கலைகாமின் ஏர்காமின் கைவளைகள் காமின்
கலைசேர் நுதலிர்நாண் காமின் - கலையாய
பான்மதியன் பண்டரங்கன் பாரோம்பு நான்மறையன்
பால்மதியன் போந்தான் பலிக்கு.
தெளிவுரை : பிறைத் திங்களைப் போன்ற நெற்றியை உடையவர்களே ! கலைகளையுடைய வெள்ளிய பிறைத் திங்களைச் சூடியவன். பாண்டரங்கம் என்னும் சிவபுரக் கூத்தை ஆடுபவன்; இவ் உலகைக் காக்கும் நான்மறையன்; அவன் பிச்சைக்குப் புறப்பட்டு விட்டான். உங்கள் ஆடைகளையும் அழகையும், கைவளைகளையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
598. பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப்
பலிக்கு மனைபுகுந்து பாவாய் - பலிக்குநீ
ஐயம்பெய் என்றானுக்கு ஐயம்பெய் கின்றேன்மேல்
ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.
தெளிவுரை : பிச்சைக்கு மண்டை யோட்டை ஏந்தி, பூதங்கள் சூழ வீடுகளுக்குச் சென்று, பாவாய்! பிச்சை போடு என்றான். நான் பிச்சை போட்ட போது மன்மதன் என்மேல் ஐந்து மலர் அம்புகளைச் செலுத்தினான்.
599. ஆயம் அழிய அலர்கொன்றைத் தார்வேண்டி
ஆயம் அழிய அயர்வேன்மேல் - ஆயன்வாய்த்
தீங்குழலும் தென்றலும் தேய்கோட்(டு) இளம்பிறையும்
தீங்குழலும் என்னையே தேர்ந்து.
தெளிவுரை : தோழியர்கள் கூட்டம் அங்கிருந்து செல்ல, அவர் கொன்றைத் தார் வேண்டி நான் வருந்திய போது இடையன் இனிமையாக ஊதும் வேய்ங் குழலும் தென்றலும் தேய்பிறையும் என்னைத் தேர்ந்தெடுத்து, தீமையைச் செய்து திரிகின்றன.
600. தேரோன் கதிரென்னும் செந்தழலால் வெந்தெழுபேய்த்
தேரோன் கதிரென்னும் செய்பொருள்நீ - தேராதே
கூடற்கா வாலி குரைகழற்கா நன்னெஞ்சே
கூடற்கா வாலிதரக் கூர்.
தெளிவுரை : தேரையுடைய கதிரவனின் ஒளி வெப்ப மிகுதியால் வெந்தெழுகின்ற கானலின் எழுச்சி கானலைப் போன்றது. நெஞ்சமே ! நீ ஆராயாமல் கூடற் பெருமானைச் சேரும் பொருட்டு, உருகிக் கண்ணீர் ஒழுக வருந்துகின்றாய்.
601. கூரால மேயாக் குருகோடு நைவேற்குக்
கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே - கூரார்
பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே
பனிச்சங்காட் டாய்கடிக்கப் பாய்ந்து.
தெளிவுரை : பிறையைப் பொருந்திய நஞ்சேயாக, வளையலோடு வருந்துகின்றவளாகிய எனக்கு, கூர்மையான சூலபாணியே ! குளிர்ந்த சடையின் மேல் உள்ள வெண்மையான பிறையைப் பாம்பு கடிக்குமாறு எனக்கு வேடிக்கை காட்டுகின்றாய் ! பிறை என்னை வருத்துவதை நீ அறியாயா என்றபடி.
602. பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது
பாயிற் புகுதப் பணை முலைமேல் - பாயில்அனற்
கொன்றாய் குளிர்சடையாற்(கு) என்நிலைமை கூறாதே
கொன்றாய் இதுவோ குணம்.
தெளிவுரை : பாயும் தன்மையுள்ள இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமான் வந்து எனது பாயில் புகுந்த அளவில், பருத்த முலைமேல் பொருந்தினால் நல்ல கொன்றை மாலையே! குளிர்ந்த சடையை யுடையவர்க்கு என் நிலைமையைக் கூறாமல் விட்டு விட்டாயே! உன்னுடைய குணம் இதுதானா ?
603. குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின்
குணக்கோடிக் குன்றம்சூழ் போகிக் - குணக்கோடித்
தேரிரவில் வாரான் சிவற்(கு)ஆளாம் சிந்தனையே
தேரிரவில் வாழும் திறம்.
தெளிவுரை : குணக்கோடி கோணாத குளிர் சடையான் வில்லின் கிழக்காய் ஓடி மலையைச் சுற்றிச் சென்று குணம் வேறுபட்டு இரவில் தேரில் வரமாட்டான். அத்தகைய சிவபெருமானுக்கு ஆளாகும் நினைவையே கொள்வாயாக ! அதுதான் நீ இரவில் துன்பப்படாமல் வாழும் திறமாகும்.
604. திறங்காட்டும் சேயாள் சிறுகிளியைத் தான்தன்
திறங்காட்டும் தீவண்ணன் என்னும் - திறங்காட்டின்
ஊர்அரவம் ஆர்த்தானோ(டு) என்னை உடன்கூட்டின்
ஊரஅரவம் சால உடைத்து.
தெளிவுரை : அழகு காட்டும் செந்நிறமுடையவன் இந்தச் சிறு கிளியை நோக்கி, தன் திறத்தைக் காட்டும் தீ வண்ணன் என்பாள். அந்தத் திறத்தைக் காட்டினால் ஊர்ந்து செல்லும் பாம்பைக் கட்டியவனோடு என்னைச் சேர்த்து வைத்தால் ஊரார் தூற்றும் பழிச் சொல் அதிகரிக்கும் என்பாள்.
605. உடையோடு காடாடி ஊர்ஐயம் உண்ணி
உடையாடை தோல்பொடிசந்(து) என்னை - உடையானை
உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே
உன்மத் தகமுடிமேல் உய்.
தெளிவுரை : தோலாடையோடு சுடுகாட்டில் நடனமாடுகின்றவன். ஊரார் இடும் பிச்சையை உண்பவன். திருநீறே பூசும் சந்தனம். என்னை அவன் ஆட்கொண்டான். ஊமத்தை மலர் சூடிய சடையை உடையவன். நன்னெஞ்சே!  உன்மத்தக முடிமேல் அவனை வைத்து உய்தி பெறுவாயாக.
606. உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும்
உய்யா(து) உடம்பழிக்கும் ஒண்திதலை - உய்யாம்
இறையானே ஈசனே எம்மானே நின்னை
இறையானும் காண்கிடாய் இன்று.
தெளிவுரை : என் உயிர் பிழைக்காது. ஒளிவளையும் மேகலையும் உடம்பிலிருந்து நழுவி விடும், ஒளியுள்ள பசலை மார்பில் படரும். இறைவனே! ஈசனே! எம்மானே ! உன்னை இன்று கொஞ்ச நேரமாகிலும் காண அருள் செய்வாயாக.
607. இன்றியாம் உற்ற இடரும் இருந்துயரும்
இன்றியாம் தீர்தும் எழில்நெஞ்சே - இன்றியாம்
காட்டாநஞ் சேற்றாஅன் காமரு வெண்காட்டான்
காட்டான்அஞ் சேற்றான் கலந்து.
தெளிவுரை : இன்று யாம் உற்ற துன்பமும். பெருந் துயரமும் இல்லாமல் யாம் போக்குவோம். எழில் நெஞ்சே! திருநீல கண்டனும் திருவெண் காட்டை யுடையவனுமாகிய அவன் அருள் பாலிப்பான். அஞ்சாதே என்பதாம்.
608. கலம்பெரியார்க்(கு) ஆம்சிரம்காய் வில்மேரு என்னும்
கலம்பெரிய ஆல்கீழ் இருக்கை - கலம்பிரியா
மாக்கடல்நஞ் சுண்டார் கழல்தொழார்க்(கு) உண்டாமோ
மாக்கடனஞ் சேரும் வகை.
தெளிவுரை : உண்கலம் நான் முகனுடைய தலையோடு, பகைவரைக் காயும் வில் பெரிய மேரு என்னும் மலை, இருப்பிடம் அழகிய பெரிய ஆலமரத்தின் கீழ் இடம் மரக்கலம் பிரியாத பெரிய கடலில் இருந்து எழுந்த விடத்தை உண்டவரது கழலைத் தொழாதவர்க்குப் பிறவிக் கடலைக் கடக்கும் வகை உண்டோ? இல்லை என்பதாம்.
609. கையா(று) ஆவாவெகுளி அச்சம் கழிகாமம்
கையாறு செஞ்சடையான் காப்பென்னும் - கையாறு
மற்றிரண்ட தோளானைச் சேர்நெஞ்சே சேரப்போய்
மற்றிரண்ட தோளான் மலை.
தெளிவுரை : (திருக்குறள்) அழுக்காறு, அவா, வெகுளி, அச்சம், அளவு கடந்த காமம் இவைகளைக் கடிந்தவனும் செஞ்சடையை உடையவனுமாகிய இறைவன் காப்பான் என்னும் ஒழுக்க நெறியுடன் மற்போருக்கு ஏற்றவாறு திரண்டுள்ள தோள்களை யுடையவனை, நெஞ்சமே! நீ சேர்வாயாக! அதுவே அவனை அடையும் வழியாகும்.
610. மனையாய் பலிக்கென்று வந்தான்வண் காமன்
மனையா சறச்செற்ற வானோன் - மனையாய
என்பாவாய் என்றேனுக்(கு) யானல்லேன் நீதிருவே
என்பாவாய் என்றான் இறை.
தெளிவுரை : மனைக்கு, பிச்சைக்கென்று வந்தான், மன்மதனை எரித்த வானோன். என்பு மாலையை அணிந்தவனே, என்றேனுக்கு யான் அல்லன். நீ திரு; என்னுடைய பெண்ணே என்றான் இறைவன்.
611. இறையாய வெண்சங்(கு) இவைதருவேன் என்னும்
இறையாகம் இன்றருளாய் என்னும் - இறையாய்
மறைக்காட்டாய் மாதவனே நின்னுருவம் இங்கே
மறைக்காட்டாய் என்னும்இம் மாது.
தெளிவுரை : முன்கை இடத்தவாய வெள்ளிய வளையல் ஆகிய இவை தருவேன். கொஞ்ச நேரம் உன் மார்பை அருளாய் என்னும். இறைவனே ! திருமறைக் காட்டை யுடையவனே! மாதவனே! நின் உருவம் இங்கே காட்டாது ஒழி என்று இம்மாது கூறுவாள்.
612. மாதரங்கம் தன்னரங்கஞ் சேர்த்தி வளர்சடைமேல்
மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து - மாதரங்கத்
தேரானை யூரான் சிவற்காளாம் சிந்தனையே
தேரானை யூரானைத் தேர்.
தெளிவுரை : உமாதேவியை இடப்பாகத்தில் வைத்து, சடைமேல் கங்கையைப் பொருத்துவித்து காவிரி யாற்றின் அலை வீசுகின்ற திருவானைக்காவில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு ஆளாகும் எண்ணத்தையே கொள்.
613. தெருளிலார் என்னாவார் காவிரிவந் தேறும்
அருகில் சிராமலையெங் கோமான் - விரியுலகில்
செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவிச்
செல்லும்எழில் நெஞ்சே தெளி.
தெளிவுரை : தெளிவில்லாதவர்கள் என்னாவார்கள். அருகில் காவிரி வந்து மோதுகின்ற திரிசிராமலையில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமான் சுற்றித் திரியும் இயல்புள்ள மூன்று மதில்களையும் எரித்த சேவடியே யாம் பரவிச் செல்லும் எழில் நெஞ்சே ! தெளிவாயாக.
614. தெளியாய் மடநெஞ்சே செஞ்சடையான் பாதம்
தெளியாதார் தீநெறிக்கண் செல்வர் - தெளியாய
பூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன்நற்
பூவாய வாசம் புனைந்து.
தெளிவுரை : மட நெஞ்சே ! நீ தெளிய மாட்டாய். செஞ்சடையான் பாதம் தெளியாதார் தீ நெறிக்கண் செல்வர். தெளிவு அமைந்த பூவார் செஞ்சடையான் பொன்னடிக்கே நற்பூவாய வாசம் புனைந்து ஏத்துவன் என்றபடி.
615. புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான்
புனைகடுக்கை மாலைப் புராணன் - புனைகடத்து
நட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம்
நட்டங்க மாட்டினேன் நக்கு.
தெளிவுரை : புனை கடற்குப் பொன்னியென்னும் காவிரியைக் கொடுக்கும் காவிரிப்பூம் பட்டினத்தில் மேவியிருக்கும் கொன்றை மாலையை யணியும் பழமையானவன். சுடுகாட்டில் நடனமாடும் நம்சிவன் திருப்பெயரைப் பொருந்த அழுத்தி வைத்தேன்.
616. நக்கரை சாளும் நடுநாளை நாரையூர்
நக்கரை வக்கரையோம் நாமென்ன - நக்குரையோம்
வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான் மற்றவர்க்காய்
வண்டாழங் கொண்டான் மதி.
தெளிவுரை : விரும்பி அரசாளும் நடுநாளை நாரையூரில் மேவியிருக்கும் சிவபெருமானை இகழ்ந்துரையோம். வண்டு படிகின்ற அழகிய கொன்றை மாலையை உடையவன். மற்றவர்க்கா மயக்கத்தைத் தந்தான். நீ அவனை மதித்து வணங்குவாயாக.
617. மதியால் அடுகின்ற தென்னும்மால் கூரும்
மதியாதே வைதுரப்பார் என்னும் - மதியாதே
மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா ஈதேகொல்
மாதெய்வம் கொண்ட வனப்பு.
தெளிவுரை : திங்கள் வருந்துகின்றது என்று சொல்வாள். மயக்கத்தை அடைவாள். பொருட் படுத்தாமல் ஏசுகின்றார்கள் என்பாள். தேவர்கள் போற்றும் திருமறைக் காடனே! பெரிய தெய்வத்தின் அழகிய செயல் இதுதானோ?
618. வனப்பார் நிறமும் வரிவளையும் நாணும்
வனப்பார் வளர்சடையான் கொள்ள - வனப்பாற்
கடல்திரையும் ஈரும்இக் கங்குல்வா யான்கண்
கடல்திரையும் ஈருங் கனன்று.
தெளிவுரை : அழகுள்ள என் நிறத்தையும் வரிகளையுடைய வளையல்களையும் நாணத்தையும் அழகுள்ள வளர் சடையான் கவர்ந்து கொள்ள, வனப்பாற் கடல் அலையும் உயிரைப் பிளக்கும். இரவு முழுவதும் யான் விடும் கண்ணீரும் சினந்து என் உயிரைப் பிளக்கும்.
619. கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க்(கு) ஆளாய்க்
கனன்றார் களிற்றுரிமால் காட்டக் - கனன்றோர்
உடம்பட்ட நாட்டத்தர் என்னையுந்தன் ஆளா
உடம்பட்ட நாட்டன் உரு.
தெளிவுரை : கோபித்துக் காமனுடைய உடலை எரித்த நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் என்னையும் ஆளாக ஏற்றுக் கொள்ள உடன்பட்ட நாட்டனது உருகனன்று ஆழ்ந்திருக்கின்ற நன்னெஞ்சே ! கண்ணுதலார்க்கு ஆளாய் இருப்பாயாக.
620. உருவியலும் செம்பவளம் ஒன்னார் உடம்பில்
உருவியலும் சூலம் உடையன் - உருவியலும்
மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய்
மாலேற்றாற்(கு) ஈதோ வடிவு.
தெளிவுரை :  வடிவம் செம்பவளத்தை ஒத்திருக்கும். பகைவர் உடம்பில் உருவிச் செல்லும் சூலத்தை உடையவன். உருவும் திருமாலை இடபமாகக் கொண்டவன். பிரமனும் மண்ணும் விண்ணும் சுற்றிப் பார்த்தாயிற்று. அவருக்கு வடிவு இதுதானா?
621. வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி
வடிவார் வடம்புனைந்தும் பொல்லா - வடிவார்மேல்
முக்கூடல் அம்மா முருகமரும் கொன்றையந்தார்
முக்கூட மாட்டா முலை.
தெளிவுரை : வடிவார் அறப் பொங்கி வண்ணக்கக் கோட் சொல்வோள் அழகு பொருந்திய மாலை புனைந்தும் சிறந்த வடிவாராகிய சிவபெருமான் மீது முக்கூடல் அம்மா வாசனை வீசும் கொன்றை மாலை பொருந்த முலை கூடமாட்டா என்றபடி.
622. முலைநலம்சேர் கானப்பேர் முக்கணான் என்னும்
முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும் - முலைநலஞ்சேர்
மாதேவா என்று வளர்கொன்றை வாய்சோர
மாதேவா சோரல் வளை.
தெளிவுரை : முலை நலஞ் சேர்ந்த திருக்கானப்பேர் என்னும் பதியில் கோயில் கொண்டிருக்கும் முக்கணான் என்னும். முலை நலஞ்சேர்மாதே ! வா என்று வளர் கொன்றை சொல்ல மாதின் கையிலிருந்த வளைகள் கழன்றன. இது இறைவனுக்கும் அவன் மீது மையல் கொண்ட மாதுக்கும் இடையே நடந்த உரையாடல்.
623. வளையாழி யோடகல மால்தந்தான் என்னும்
வளையாழி நன்னெஞ்சே காணில் - வளையாழி
வன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்த
வன்னஞ்சக் கண்டன் வரில்.
தெளிவுரை : வளை பொருந்திய கடலில் இருந்து எழுந்த கொடிய விடத்தைக் கண்டு தேவர்கள் நடுங்க, அதை ஏற்றுக் கொண்ட நீல கண்டன் வந்தால் வருவான். வளையல்கள் கணையாழியோடு கழல, முன்பு மயக்கத்தைதைத் தந்தான். ஆகவே நன்னெஞ்சே விழிப்பாய் இரு என்று சொல்லுவாள்.
624. வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ்
வரிநீர் வலம்புரிகள் உந்தி - வரிநீர்
இடுமணல்மேல் அந்நலங்கொண்(டு) இன்னாநோய் செய்தான்
இடுமணல்மேல் ஈசன் எமக்கு.
தெளிவுரை : வரிகளையுடைய கருவண்டு ஒலிக்கின்ற திருமறைக் காட்டுக் கடல் நீரில் வலம்புரிச் சங்குகள் மோதிய இடு மணல்மேல் என்னைச் சேர்ந்து, துன்பத்தைத் தரும் நோயைச் செய்தான். அவன் அப்பதியில் கோயில் கொண்டிருக்கும் இறைவன்தான்!
625. அக்காரம் ஆடரவம் நாண்அறுவை தோல்பொடிசாந்(து)
அக்காரம் தீர்ந்தேன் அடியேற்கு - வக்காரம்
பண்டரங்கன் எந்தை படுபிணஞ்சேர் வெங்காட்டுப்
பண்டரங்கன் எங்கள் பவன்.
தெளிவுரை : அவனுக்கு எலும்பே மாலை. ஆடுகின்ற பாம்பே நாண். தோலே ஆடை. திருநீறே பூசுகின்ற சந்தனம். பாண்டரங்கம் என்னும் கூத்தை ஆடும் எந்தை. சுடுகாட்டில் எங்கள் சிவபெருமான் அருள் செய்வான். அதுவே அவனது அரங்கம்.
626. பவனடிபார் விண்நீர் பகலோன் மதிதீப்
பவனஞ்சேர் ஆரமுதம் பெண்ணாண் - பவனஞ்சேர்
காலங்கள் ஊழி அவனே கரிகாட்டிற்
காலங்கை ஏந்தினான் காண்.
தெளிவுரை : இறைவனது பாதம் பூமி; ஆகாயம், நீர், சூரியன், சந்திரன், தீ, காற்று சேர்ந்த ஆரமுதம். பெண்ணாகவும் ஆணாகவும் இருப்பவன். பவனம் சேர்காலங்கள், ஊழி எனப்படும். அவன் சுடுகாட்டிற் காலங் கழித்து, பிச்சைக்குக் கை ஏந்துவான். நீ அறிவாயாக என்பதாம்.
627. காணங்கை இன்மை கருதிக் கவலாதே
காணங்கை யால்தொழுது நன்னெஞ்சே - காணங்கை
பாவனையாய் நின்றான் பயிலும் பரஞ்சோதி
பாவனையாய் நின்ற பதம்.
தெளிவுரை : கையிலே பொருள் இல்லாமையை எண்ணிக் கவலைப் படாதே. நன்னெஞ்சே ! கை கூப்பி அவனை வணங்கு! அவன் அருள் செய்யும் பாவனையாய் நிற்கின்றான். அவன் பேரொளியாய் நின்றவன் என அறிக.
628. பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான் பண்டு
பதங்கன் எயிறு பறித்தான் - பதங்கையால்
அஞ்சலிகள் அன்பாலும் ஆக்குதிகாண் நெஞ்சேகூர்ந்(து)
அஞ்சலிகள் அன்பாலும் ஆக்கு.
தெளிவுரை : பதங்க வரை உயர்ந்தான்பால் பண்டு மகிழ்ந்தான். பின்பு சூரியன் பல்லைப் பிடுங்கினான். ஆகவே உன் கைகளைக் கூப்பி வணங்குவாயாக. நெஞ்சே ! அவனை அன்போடு அஞ்சலி செய். நலம் பெறுவாய் என்பதாம்.
629. ஆக்கூர் பனிவாடா ஆவிசோர்ந்து ஆழ்கின்றேன்
ஆக்கூர் அறலர்தான் அழகிதா - ஆக்கூர்
மறையோம்பு மாடத்து மாமறையோ நான்கு
மறையோம்பு மாதவர்க்காய் வந்து.
தெளிவுரை : திருஆக்கூர் என்னும் சிவப்பதியில் பனியால் வாடி, ஆவி சோர்ந்து, துன்பத்தில் ஆழ்கின்றேன். ஆக்கூரில் எழுந்துள்ள பழிச்சொல் கேட்டு அமைதியாய் உள்ளாயே! இது உமக்கு அழகிதோ ! ஆக்கூர், வேதம் ஓதுகின்ற மாடத்து மாமறையோ நான்கு மறை யோம்பும் மாதவர்க்காய் வந்து அருள் செய்வாயாக.
630. வந்தியான் சீறினும் ஆழி மடநெஞ்சே
வந்தியா உள்ளத்து வைத்திராய் - வந்தியாய்
நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை
நம்பரனை நாள்தோறும் நட்டு.
தெளிவுரை : மடநெஞ்சே ! வந்தியான் சீறினும் வருந்தாதே. வந்தியா உள்ளத்து வைத்திராய். நம்முடைய இறைவனை வணங்குவாயாக. ஆடும் நளிர் புன் சடையானை நம்சிவனை - நாள் தோறும் உள்ளத்தே பதித்துத் துதி. நம்பரனை - சிவனை நம்புவாயாக.
631. நட்டமா கின்றன வொண்சங்கம் நானவன்பால்
நட்டமா நன்னீர்மை வாடினேன் - நட்டமா
டீயான் எரியாடி எம்மான் இருங்கொன்றை
ஈயானேல் உய்வ(து) இலம்.
தெளிவுரை : ஒள்ளிய வளையல்கள் இழக்கப்படுகின்றன. நான் அவன்பால் கொண்ட நன்னீர்மை நஷ்டமாகின்றன. வாடினேன். அவன் நடன மாடுகின்றவன். தீயில் நின்றாடுகின்ற எம்மான். குளிர்ந்த கொன்றை மாலையைத் தாரானேல் நான் இறந்து படுவேன் என்பதாம்.
632. இலமலர்அஞ் சேவடியார் ஏகப் பெறாரே
இலமலரே யாயினும் ஆக - இலமலரும்
ஆம்பல்சேர் செவ்வாயார்க்(கு) ஆடாதே ஆடினேன்
ஆம்பல்சேர் வெண்தலையர்க்(கு) ஆள்.
தெளிவுரை : இலவ மலர் போன்ற அழகிய திருவடிகளை யுடையவர் போகாமல் இருக்க மாட்டாரா? பழிச் சொல் இல்லாதவர்கள் ஆனோம். என்றாலும் செவ்வல்லிசேர் செவ்வாயார்க்கு ஆடாமல் ஆம்பல் சேர் வெண்தலையார்க்கு ஆளாய் ஆடினேன்.
633. ஆளானம் சேர்களிறும் தேரும் அடல்மாவும்
ஆளானார் ஊரத்தான் ஏறூரும் - தாளான்பொய்
நாடகங்கள் ஆட்டயரும் நம்பன் திருநாமம்
நாடகங்கள் ஆடி நயந்து.
தெளிவுரை : மற்றவர்கள் யானை, தேர், குதிரை ஆகியவற்றின் மீது ஏறிச் செல்ல, இடபத்தின் மீது ஏறிச் செல்வது பொய் நாடகங்கள் ஆடி அயரும் நம்பன் கூத்தாகும். அவருடைய திருநாமத்தை நாடு. மனம் விரும்பி வழிபடு என்பதாம்.
634. நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை
நயந்தநாள் நன்னீர்மை வாட- நயந்தநாள்
அம்பகலம் செற்றான் அருளான் அநங்கவேள்
அம்பகலம் பாயும் அலர்ந்து.
தெளிவுரை : நாள்தோறும் விரும்பி யான் யாசிக்க, நற்சடை யான் கொன்றை மாலையின் நலம் வாட, மன்மதன் என் மார்பில் மலர் அம்பை எய்தான். இதைக் கண்டும் இறைவன் அருள் செய்யாமல் செல்கின்றான்.
635. அலங்காரம் ஆடரவம் என்புதோல் ஆடை
அலங்கார வண்ணற்(கு) அழகார் - அலங்காரம்
மெய்காட்டு வார்குழலார் என்னாவார் வெள்ளேற்றான்
மெய்காட்டும் வீடாம் விரைந்து.
தெளிவுரை : அழகு செய்தல், ஆடுகின்ற பாம்பும் எலும்பும். ஆடை, தோல் அசைகின்ற மாலையை உடைய தலைவர் அவர். அவருக்கு அழகார் அலங்காரம் மெய் காட்டும் வார்குழலார். அவர்கள் என்னாவர்? வெள்ளேற்றான் விரைந்து வீடாம் மெய் காட்டும் என்க.
636. விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னார்
விரையார் பொழில்உறந்தை மேயான் - விரையாநீ(று)
என்பணிந்தான் ஈசன் இறையான் எரியாடி
என்பணிந்தான் ஈசன் எனக்கு.
தெளிவுரை : விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னார் விரையார் பொழில்கள் நிறைந்த உடையூரில் மேவியவன். திருநீறும் எலும்பும் அணிந்த ஈசன். எப்போதும் தீயில் ஆடுபவன். நீ விரைந்து சென்று அவனைப் பணிவாயாக என்பதாம்.
637. எனக்குவளை நில்லா எழில்இழந்தேன் என்னும்
எனக்குவளை நில்லாநோய் செய்தான் - இனக்குவளைக்
கண்டத்தான் நால்வேதன் காரோணத்(து) எம்மானைக்
கண்டத்தான் நெஞ்சேகாக் கை.
தெளிவுரை : கைவளையல் நிற்க மாட்டாது. அழகை இழந்தேன் என்று சொல்லுவாள். எனக்குக் காதல் நோயைத் தந்தான். அவன் நீலகண்டன். நான்கு வேதங்களையும் ஓதுபவன். நாகைக் காரோணத்தில் எழுந்தருளிய தலைவன். நெஞ்சமே ! அவனைத் தஞ்சமாகக் கொள் என்பதாம்.
638. காக்கைவளை என்பார்ப்பார்க்(கு) அன்பாப்பா னையாதே
காக்கைவளை யென்பார்ப்பான் ஊன்குரக்குக் காக்கைவளை
ஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன்
ஆடானை யான(து) அமைவு.
தெளிவுரை : இப்பாடலில் குரக்குக்கா, திருவாடானை என்ற இரண்டு தலங்கள் போற்றப்படுகின்றன. (காக்கைவளை - வளையைக் காத்தல்) என்பை அணிகின்றவனுடைய ஊர் குரக்குக்கா. அசையும் இயல்புள்ள ஆனையை உரித்த தோலை உடையவன். ஆண் பெண் உருவும் அவிர் சடையும் உடையவன். திருவாடானை அவன் இருக்கும் இடம்.
639. அமையாமென் தோள்மெலிவித்(து) அம்மாமை கொண்டிங்(கு)
அமையாநோய் செய்தான் அணங்கே - எமையாளும்
சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்
சாமத்தன் இந்நோய்செய் தான்.
தெளிவுரை : மூங்கில் போன்ற மென்மையான தோள்களை மெலிவித்து, மாமை என்னும் தணியாத நோயைச் செய்தான். எமையாளும் நீலகண்டன். சடையில் இளம்பிறையைச் தரித்தவன். சாமகானம் பாடுபவன். நள்ளிரவில் கூத்தியற்றுபவன் எனினுமாம். அவனே இந்நோயைச் செய்தான்.
640. தானக்கன் நக்க பிறையன் பிறைக்கோட்டுத்
தானக் களிற்றுரியன் தண்பழனன் - தானத்
தரையன் அரவரையன் ஆயிழைக்கும் மாற்கும்
அரையன் உடையான் அருள்.
தெளிவுரை : சிவன் விளங்குகின்ற பிறையை உடையவன். பிறையைப் போன்ற தந்தங்களையுடைய யானையின் தோலை உடுத்தியவன். குளிர்ந்த திருப்பழனம் என்னும் சிவப்பதியை உடையவன். பாம்பை இடையில் கட்டியவன். உமாதேவிக்கும் திருமாலுக்கும் அரைப் பாகத்தைக் கொடுத்தவன். அவன் அருளுடையவன்.
641. அருள்நம்பால் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான்
அருள்நம்பால் நல்கும் அமுதன் - அருள்நம்பால்
ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை
ஓராழி நெஞ்சே உவ.
தெளிவுரை : திருவாமாத்தூரில் எழுந்தருளிய தலைவன், நம்பால் அருள் உடையவன். செஞ்சடையை உடையவன். அமுதம் போன்றவன். கதிரவன் பற்களை உகுத்த உத்தமனை நெஞ்சே! மகிழ்ந்து வழிபடு என்பதாம்.
642. உவவா நறுமலர்கொண்(டு) உத்தமனை உள்கி
உவவா மனமகிழும் வேட்கை - உவவா(று)
எழுமதிபோல் வாள்முகத்(து) ஈசனார்க்(கு) என்னே
எழுமதிபோல் ஈசன் இடம்.
தெளிவுரை : உவத்தல் செய்யும் நறுமணமுள்ள மலர்களைக் கொண்டு உத்தமனை எண்ணி, உவவா மனமகிழும் பற்றுள்ளம் கொண்டு எழுமதி போல் ஒளி பொருந்திய முகத்தையுடைய ஈசனார்க்கு (எழுமதி போல் ஈசன் இடம் இதுவாகும்) எழுகின்ற மதியே இதுதான் ஈசன் இருக்கும் இடம் என்பதாம்.
643. இடமால் வலமாலை வண்ணமே தம்பம்
இடமால் வலமானஞ் சேர்த்தி - இடமாய
மூளா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான்
மூவா மதியான் முனி.
தெளிவுரை : இடப்பக்கம் கரிய நிறம். வலப்பக்கத்தில் மாலை. வானத்தைப் போன்ற சிவந்த நிறம். தம்பம் இடமால் வலமானஞ் சேர்த்தி, இடமாய முதிராத சந்திரனை ஒத்திருக்கும் முன்னிலங்கு மொய் சடையான். மூவா மதியான் முனி யோக முறையில் சொல்லப்படும் இடைகலை பங்கலையைக் கையாண்டு அறியாமையை முனி என்பாரும் உளர்.
644. முனிவன்மால் செஞ்சடையான் முக்கணான் என்னும்
முனிவன்மால் செய்துமுன் நிற்கும் - முனிவன்மால்
போற்றார் புரம்எரித்த புண்ணியன்தன் பொன்னடிகள்
போற்றாநாள் இன்று புலர்ந்து.
தெளிவுரை : செஞ்சடையான் மயக்கத்தைப் போக்குவான், மூன்று கண்களையுடையவன் என்று சொல்லுவாள். அத்தகையவன் மயக்கத்தையும் செய்வான். திரிபுரங்ககளை எரித்த புண்ணியன். அவனைப் போற்றாத நாள் இன்று புலர்ந்தது. விரைந்து போற்றுவாயாக என்பதாம்.
645. புலர்ந்தால்யான் ஆற்றேன் புறனுரையும் அஃதே
புலர்ந்தானூர் புன்கூரான் என்னும் - புலர்ந்தாய
மண்டளியன் அம்மான் அவர்தம் அடியார்தம்
மண்டளியன் பின்போம் மனம்.
தெளிவுரை : ஊடி யிருந்தால் என்னால் தாங்க முடியாது என்பாள். வெளியே இருக்கும் அதுவே திருப்புன்கூரில் எழுந்தருளியவன் ஊராகும். திருப்புன்கூரான் என்று அழைப்பாள். புலர்வதற்குக் காரணமாய அருளுடையவன் அவன். அவனுடைய அடியார்களை நோக்கிச் செல்கின்றது என் மனம்.
646. மனமாய நோய்செய்தான் வண்கொன்றை தாரான்
மனமாய உள்ளார வாரான் - மனமாயப்
பொன்மாலை சேரப் புனைந்தான் புனைதருப்பைப்
பொன்மாலை சேர்சடையான் போந்து.
தெளிவுரை : மனம் அழிய மையல் நோய் செய்தான். அவன் வண்கொன்றை மாலை யணிந்தவன். (தரமாட்டான் என்பதுமாம்) மனம் உள்ளார பொருந்துமாறு வரமாட்டான். மனமாய பொன்மாலை சேரப் புனைந்தான். தருப்பையாகிய பொன்மாலை சேர் சடையான் வந்து போனான்.
647. போந்தார் புகவணைந்தார் பொன்னேர்ந்தார் பொன்னாமை
போந்தார் ஒழியார் புரமெரித்தார் - போந்தார்
இலங்கோல வாள்முகத்(து) ஈசனாற்(கு) எல்லே
இலங்கோலம் தோற்ப(து) இனி.
தெளிவுரை : வந்தார்; புகுந்து என்னை அணைந்தார். என்மார்பில் பசலை பூத்தது. (பொன்னிற மாயிற்று) அவர் திரிபுரங்களை எரித்தவர். இலங்கோல வாள் முகத்து ஈசனாற்கு, இளம் பெண்ணே! இனிதோற்பது ஏது? இனி நான் தோற்க மாட்டேன் என்றபடி.
648. இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல் எண்ணார்
இனியானஞ்(சு) ஊணிருக்கைக்(கு) உள்ளான் இனியானைத்
தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடைய
தாளங்கை யால்தொழுவார் தாம்.
தெளிவுரை : இனிமேல் எவரும் ஆளாக எண்ணுவார்களோ. எண்ணமாட்டார்கள். இனிமை யுடையவன். (இனிமையில்லாதவன் எனினுமாம்) கையால் தாளம் போட்டுப் பாடி, தாழ் சடையானது திருவடிகளை அழகிய கையினால் வணங்குபவர் நற்கதி அடைவர் என்பதாம்.
649. தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார்
தாமரைசேர் பாம்பர் சடாமகுடர் - தாமரைசேர்
பாணியார் தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார்
பாணியார் தீர்ந்தளிப்பர் பார்.
தெளிவுரை : தாமரை மலரில் சேர்தலையுடைய பிரமனுக்கும் திருமாலுக்கும் அறிய மாட்டாதவர். தமது அரையில் பாம்பைக் கட்டியுள்ளவர்; சடா மகுடத்தர். தாவுகின்ற மானை ஏந்திய கையை உடையவர். நல்ல அருளினைச் செய்பவர். உலகை ஓம்புகின்ற நான்மறையாளர். காலந் தாழ்த்த மாட்டார். நல்லதையே செய்வார் என்றபடி.
650. பார்கால்வான் நீர்தீப் பகலோன் பனிமதியோன்
பார்கோல மேனிப் பரனடிக்கே - பார்கோலக்
கோகரணத் தானறியக் கூறுதியே நன்னெஞ்சே
கோகரணத் தானாய கோ.
தெளிவுரை : பூமி, காற்று, ஆகாயம், நீர், தீ, சூரியன், சந்திரன் இவைகளோடு கூடிய பரமனது அடிகளுக்கே, அழகிய திருக்கோகரணம் என்னும் தலத்தில் எழுந்தருளிய இறைவன் அழியுமாறு கூறுவாயாக. நன்னெஞ்சே! அவனை நீ வணங்குவாயாக என்பதாம்.
651. கோப்பாடி ஓடாதே நெஞ்சம் மொழி கூத்தன்
கோப்பாடிக் கோகரணங் குற்றாலம் - கோப்பாடிப்
பின்னைக்காய் நின்றார்க்(கு) இடம்கொடுக்கும் பேரருளான்
பின்னைக்காம் எம்பெருமான் பேர்.
தெளிவுரை : திருமகள் பொருட்டாக அமைந்த திருமாலுக்கு இடம் கொடுக்கும் அதாவது வலப்பாகத்தைக் கொடுக்கும் பேரருளாளன். பிற்காலத்திற்கு அதாவது இறக்குங் காலத்திற்கு அவன் திருநாமம் பயன்படும். நெஞ்சமே வேறு எங்கும் அலையாமல் திருக் கோகரணத்திற்கும் குற்றாலத்திற்கும் செல்வாயாக.
652. பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண்
பேரானை ஈருருவம் பெற்றானைப் - பேராநஞ்(சு)
உண்டானை உத்தமனை உள்காதார்க்(கு) எஞ்ஞான்றும்
உண்டாம்நாள் அல்ல உயிர்.
தெளிவுரை : பெரிய யானையைப் பிளந்து உரித்த தோலை போர்த்தவனை, ஆயிரத் தெட்டுப் பெயர்களை உடையவனை, ஆண், பெண் என்ற இரண்டு உருவத்தினைப் பெற்றவனை, நஞ்சுண்டவனை, உத்தமனை எண்ணாதவர்களுக்கு எப்போதும் இருக்கும் நாள் அல்ல; இறந்த நாளே.
653. உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி உள்ளத்(து)
உயிராய ஒண்மலர்த்தாள் ஊடே - உயிரான்
பகர்மனத்தான் பாசுபதன் பாதம் பணியப்
பகர்மனமே ஆசைக்கண் பட்டு.
தெளிவுரை : உயிராகிய மும்மலத்தைத் தடுத்து, ஐம்பொறிகளைப் புலன்வழி செல்லாதவாறு மடக்கி உள்ளத்தில் உயிர் போன்ற ஒளி பொருந்திய மலர்த்தாளின் ஊடே பாசுபதன் பாதம் பணிய, மனமே ! நீ ஆசைப்படுவாயாக, இறைவனை உள்ளத் திருத்தி வழிபடுவாயாக என்பதாம்.
654. பட்டாரண் பட்டரங்கன் அம்மான் பரஞ்சோதி
பட்டார் எலும்பணியும் பாசுபதன் - பட்டார்ந்த
கோவணத்தான் கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே
கோவணத்து நம்பனையே கூறு.
தெளிவுரை :இறந்தொழிந்த நான்முகன் திருமால் ஆகியோருடைய எலும்புகளை அணியும் பாசுபதன். பட்டினால் பொருந்திய கோவணத்தைக் கட்டியவன். கொல்லுந் தன்மையுள்ள இடபத்தை ஊர்தியாக உடையவன் என்று நெஞ்சமே! அந்தக் கோவணத்து நம்பனையே நீ துதிப்பாயாக, அவன் பரஞ்சோதி.
655. கூற்றும் பொருளும்போற் காட்டியென் கோல்வளையைக்
கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் - கூற்றின்
செருக்கழியச் செற்ற சிவற்கடிமை நெஞ்சே
செருக்கழியா முன்னமே செய்.
தெளிவுரை : சொல்லும் பொருளும் போல் காட்டி, என் (கோல் வளையை அணிந்த) பெண்ணை, நமனுடைய ஆணவத்தை அழித்த குற்றாலநாதன் தன் சொல்வன்மையினால் தன் வசமாக்கிக் கொண்டான். ஆகையால் நெஞ்சமே! செருக்கழியாமுன் அவனை அடைக்கலமாகக் கொள் என்க.
656. செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ்
செய்யான் பழனத்தான் மூவுலகும் - செய்யாமுன்
நாட்டூணாய் நின்றானை நாடுதும்போய் நன்னெஞ்சே
நாட்டூணாய் நின்றானை நாம்.
தெளிவுரை : அவன் செம்மேனியை உடையவன். நீலகண்டன் செஞ்சடையன் நிலவளம் உள்ளவன். மூன்று உலகங்களையும் படைத்து முன் நாட்டூணாய் நின்றானை, நன்னெஞ்சே ! நாம் போய் நாடுவோமாக, அதுதான் உய்யும் வழி.
657. நாவாய் அகத்துளதே நாமுளமே நம்மீசன்
நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே - நாவாயால்
துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும் மற்றவர்க்காள்
துய்க்கப் படுவதாம் சூது.
தெளிவுரை : நாவானது வாயினுள்ளே உள்ளது. நம் ஈசன் நாவாய் போல் நாம் உள்ளோம். அவன் நம்மை நன்னெறிக் கண்செலுத்துவான். தோணியினால் நுகரப் பெறும் பொருளை நமக்கு அளிப்பான். மற்றவர்கள் நமக்குத் தீ நெறியைத்தான் காட்டுவார்கள்.
658. சூதொன்(று) உனக்கறியச் சொல்லினேன் நன்னெஞ்சே
சூதன் சொலற்கரிய சோதியான் - சூதின்
கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக்
கொழுந்தே இழந்தேன் குருகு.
தெளிவுரை : சூழ்ச்சி ஒன்றை உனக்கறியச் சொன்னேன். நன்னெஞ்சே ! கதிரவன் சொலற்கரிய சோதியான். மாமரத்தின் கொழுந்தேன் கமழ்கின்ற சோலைகளையுடைய குற்றாலத்தைப் பாடிக் கொழுந்தே, வளையலை இழந்தேன், குற்றாலம் ஒரு சிவத்தலம்.
6590 குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் புல்கிக்
குருகிளையார் கோடு கொடாமே - குருகிளரும்
போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும்
போதாநின் பொன்முடிக்கண் போது.
தெளிவுரை : மூங்கில் போலும் தோள் மெலிய, கொங்கை மாரைத் தழுவி அவர்களுடைய வளையல்களைத் தராமல், புகழ் விளங்கும் வயல்கள் நிறைந்துள்ள திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள மெய்யறிவுடையவனே ! உன் முடியிலுள்ள மலரைத் தருவாயாக.
660. போதரங்க வார்குழலார் என்னாவார் நன்னெஞ்சே
போதரங்க நீர்கரந்த புண்ணியனைப் - போதரங்கக்
கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும்
கானகஞ்சேர் வாற்(கு) அடிமை கல்.
தெளிவுரை : மலரினை அணிந்த மிக நீண்ட கூந்தலையுடையவர் என்னாவர்? நன்னெஞ்சே ! அலையோடு கூடிய கங்கையைச் சடையில் மறைத்த புண்ணியனை, போதரங்கக் கானகஞ்சேர் சோதியே கைவிளக்காகக் கொண்டு நின்றாடும் சேர்வார்க்கு அடிமை செய். நற்கதி பெறுவாய் என்பதாம்.
661. கற்றான்அஞ் சாடுகா வாலி களந்தைக்கோன்
கற்றானைக் கல்லாத நாளெல்லாம் - கற்றான்
அமரர்க்(கு) அமரர் அரர்க்(கு)அடிமை பூண்டார்
அமரர்க்(கு) அமரர்ஆ வார்.
தெளிவுரை : கன்றையுடைய பசுவினிடத்திலிருந்து பெறும் ஐந்து பொருள்களால் அபிடேகம் கொள்ளும் இறைவன் திருக்களந்தையில் எழுந்தருளியிருக்கிறான். அவனை வணங்காத நாள் எல்லாம் வீணாகக் கழியும் நாளாகும். அவன் யாவற்றையும் கற்றவன். அவனுக்கு அடிமை பூண்டவர்கள் தேவர்களுக்குத் தலைவர் ஆவார்கள். அவன் தேவதேவன்.
662. ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும்
ஆவார்போற் காட்டி அழிகின்றார் - ஆஆ
பகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப்
பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.
தெளிவுரை : அவனுக்கு அடிமையாகாத மனிதர் அறிவில்லாதவர் ஆவர். எல்லாச சிறப்பும் பெற்று உயர்ந்தவர்களைப் போல் தங்களை உலகத்துக்குப் புலப்படுத்தி அழிகின்றார்கள். ஐயோ ! பகலில் அவனைப் புகழ்ந்துபாடி, படர் சடைக்குப் பகல் நாடி ஏத்தாதார் வருந்துவர் என்றபடி.

663. பகனாட்டம் பாட்டயரும் பாட்டோ(டு)ஆட்(டு) எல்லி
பகனாட்டம் பாழ்படுக்கும் உச்சி - பகனாட்டம்
தாங்கால் தொழுதெழுவார் தாழ்சடையார் தம்முடைய(து)
தாங்கால் தொழுதல் தலை.
தெளிவுரை : பகல் எல்லாம் பாட்டுப் பாடி காலங் கழித்து இரவில் தூங்கிக் கழிக்கும் மாந்தர், தாழ் சடையார் திருவடிகளை வணங்கி எழுந்தால் நற்கதி பெறுவார்கள். அதுதான் அவர்களுடைய தலையாய கடமை, மற்ற முயற்சிகள் பலன்தரா என்பதாம்.
664. தலையாலங் காட்டிற் பலிதிரிவர் என்னும்
தலையாலங் காடர்தாம் என்னும் - தலையாய
பாகீ ரதிவளரும் பல்சடையீர் வல்விடையீர்
பாகீ ரதிவளரும் பண்பு.
தெளிவுரை : தாருகாவனத்தில் அழகைக் காட்டும் வீடுகளில் கபாலத்தில் பிச்சையேற்றுத் திரிவார். அவர் தலையாலங்காடு என்னும் சிவப்பதியில் எழுந்தருளியிருப்பவர். கங்கை வளரும் பல்சடையீர் ! வல்லிடையீர் ! பாகீரதி வளரும் பண்பு எத்தகையது ?
665. பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதோந்தான்
பண்பாய பைங்கொன்றைத் தாரருளான் - பண்பால்
திருமாலு மங்கைச் சிவற்(கு) அடிமை செய்வான்
திருமாலு மங்கைச் சிவன்.
தெளிவுரை : பிரமதேவனது கபாலத்தைக் கையிலேந்திப் பிச்சை எடுத்தான். கொன்றை மாலையைத் தராமல் காலங் கடத்துகின்றான். திருமாலும் சிவற்கு அடிமை செய்வான். திருமாலையும் சிவன் தன் உருவில் கொண்டுள்ளான்.
666. சிவன்மாட் டுகவெழுதும் நாணும் நகுமென்னும்
சிவன்மேய செங்குன்றூர் என்னும் - சிவன்மாட்டங்(கு)
ஆலிங்ச கனம்நினையும் ஆயிழையீர் அங்கொன்றை
யாலிங் கனம்நினையு மாறு.
தெளிவுரை : சிவன்பால் மையல் கொண்டு அவனை அடைய இவள் அவன் உருவை எழுதுவாள், நாணுவாள், சிரிப்பான் என்பாள். சிவன் எழுந்தருளியிருக்கும் செங்குன்றம் என்பாள். சிவனைத் தழுவிக் கொள்ள எண்ணுவாள். கொன்றை மாலையால் இவ்வாறு நினைக்கிறாள் என்பதாம்.
667. ஆறாவெங் கூற்றுதைத் தானைத்தோல் போர்த்துகந்தங்(கு)
ஆறார் சடையீர்க்(கு) அமையாதே - ஆறாத
ஆனினத்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை
ஆனினத்தார் தாந்தவிர்ந்த தாட்டு.
தெளிவுரை : கோபமிக்க காலனை உதைத்து, யானைத் தோலைப் போர்த்து, கங்கையைச் சடையில் வைத்தவர்க்கு அமையாதோ? ஆனினத்தார் தாம் தம் அணியிழையினார்க்கு அடிமை. ஆனினத்தார் தாம் ஆட்டு தவிர்ந்தது.
668. ஆட்டும் அரவர் அழிந்தார் எலும்பணிவார்
ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் - ஆட்டுமோர்
போரேற்றான் கொன்றையான் போந்தான் பலிக்கென்று
போரேற்றான் போந்தான் புறம்.
தெளிவுரை : பாம்பை ஆட்டும் இறைவன், இறந்தவருடைய எலும்பை அணிவார். பலியேற்று உண்பார். அமரர்களை நடத்தும் எருதை வாகனமாக உடையவர். கொன்றை மாலையை அணிபவர். அவர் பிச்சைக்காக வந்தார். மன்மதனும் வெளியே வந்து நின்றான்.
669. புறந்தாழ் குழலார் புறனுரைஅஞ் சாதே
புறந்தாழ் புலிப்பொதுவுள் ஆடி - புறந்தாழ்பொன்
மேற்றளிக்கோன் வெண்பிறையான் வெண்சுடர்போல் மேனியான்
மேற்றளிக்கோன் என்றுரையான் மெய்.
தெளிவுரை : புறத்தே தொங்குகின்ற கூந்தலை உடையவர் பழிச் சொல்லை அஞ்சாமல் பொன்னம்பலத்தில் நடனமாடுகின்ற இறைவன், திருமேற்றளி என்னும் கோயிலில் உள்ளவன். வெண்பிறையை அணிந்தவன். வெண்சுடர் போல் திருமேனியை உடையவன் தான் இன்னான் என்று சொல்லவில்லை.
670. மெய்யன் பகலாத வேதியன் வெண்புரிநூல்
மெய்யன் விரும்புவார்க்(கு) எஞ்ஞான்றும் - வெய்ய
துணையகலா நோக்ககலா போற்றகலா நெஞ்சே
துணையிகலா கூறுவான் நூறு.
தெளிவுரை : உண்மையான அன்பு அகலாத வேதியன். வெண்மையான முப்புரி நூலை உடலில் அணிந்தவன். தன்னை விரும்பியவர்களுக்கு எப்போதும் துணையாய் இருப்பவன், நெஞ்சமே! அவன் நூறு ஆறுதல் மொழிகளைக் கூறுவான்.
671. நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து
நூறா நொடிஅதனின் மிக்கதே - நூறா
உடையான் பரித்தஎரி உத்தமனை வெள்ளே(று)
உடையானைப் பாடலால் ஒன்று.
தெளிவுரை : நூறு பசுவினுடைய பாலைப் பொழிந்து, நூறு மலர்களை அருச்சித்து, நூறு தோத்திரங்களைச் சொல்வதைக் காட்டிலும் சிறந்தது. மழுவேந்திய உத்தமனை, வெள்ளேறு உடையானை ஒரு பாடலால் ஒன்று படுவதேயாம்.
திருச்சிற்றம்பலம்
23. சிவபெருமான் திருவந்தாதி (பரணதேவ நாயனார் அருளிச் செய்தது)
பரணர், இவர் கபில பரணர் என இலக்கண நூல்களில் சிறப்பாகக் கூறப்படும் பெருமை உடையவர். கபிலரும் பரணரும் இணை பிரியா நண்பர்கள். சங்கப் புலவர் ஆலவாய் அவிர்சடைக் கடவுளின் அடியவராய்த் திகழ்வதில் ஐயமோ வியப்போ இல்லை. உயிர்க்கு உறுதி பயக்கும் சிவபெருமானைப் பாடியது அவர்தம் நிலைக்கு ஏற்புடையதே. இந்நூலை ஓதுவார் சிறந்த பயன் எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
672. ஒன்றுரைப்பீர் போலப் பலஉரைத்திட்(டு) ஓயாதே
ஒன்றுரைப்பீர் ஆயின் உறுதுணையாம் - ஒன்றுரைத்துப்
பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும்
பேரரவம் பூணும் பிரான்.
தெளிவுரை : சிறந்த ஒன்றைச் சொல்லுவார் போல பொதுவானவற்றைச் சொல்லி சோர்வுறாது, ஒப்பில்லாத திருஐந்தெழுத்தை அருளினால் உறுதுணையாக இருக்கும். ஒன்றைச் சொல்லி பாம்பை அணிந்து கபாலத்தில் பிச்சை ஏற்று உண்டு உழலுகின்ற எம் தலைவன் பேரொலி செய்யும்.
673. பிரானிடபம் மால்பெரிய மந்தாரம் வில்லுப்
பிரானிடபம் பேரொலிநா ணாகம் - பிரானிடபம்
பேணும் உமைபெரிய புன்சடையின் மேலமர்ந்து
பேணும் உமையிடவம் பெற்று.
தெளிவுரை : பிரான் ஊர்வது ஆனேறு; மேரு மலையே வில்; பாம்பு நாண்; பிரானது இடப்பாகத்தில் உள்ளவள் உமாதேவி; பொன் போன்ற சடையில் இருப்பது கங்கை; (ஆதிசக்தி); திரிபுரங்களை எரித்தபோது மந்தரம் என்ற மேருமலை வில்லாக உதவியது. மந்தரம் என்பது மந்தாரம் என நின்றது.
674. பெற்றும் பிறவி பிறந்திட்(டு) ஒழியாதே
பெற்றும் பிறவி பிறந்தொழிமின் - பெற்றும்
குழையணிந்த கோளரவக் கூற்றுதைத்தான் தன்னைக்
குழையணிந்த கோளரவ நீ.
தெளிவுரை : பிறந்து பிறந்து ஓய்வின்றி உழலும் நெஞ்சே ! பிறவி நீங்கப் பார்ப்பாயாக. சிவபெருமான் காதணி பாம்பு, அவன் காலனைக் கடிந்தவன். குண்டலியாகிய மாயையை ஈற்றடியில் குறிக்கிறார்.
675. நீயேயா ளாவாயும் நின்மலற்கு நன்னெஞ்சே
நீயேயா ளாவாயும் நீள்வாளின் - நீயே
ஏறூர் புனற்சடையா எங்கள் இடைமருதா
ஏறூர் புனற்சடையா என்று.
தெளிவுரை : நன்னெஞ்சமே ! நீயே உலக ஆசையைக் கொள்ளாதே. ஆய்ந்து நீ அவாக் கொள்ள வேண்டுவது எங்கள் இடைமருதனே என்றும், கங்கைச் சடையானே என்றும் விரும்பு. என்னை ஆண்டுகொள் என்பதாம்.
676. என்றும் மலர்தூவி, ஈசன் திருநாமம்
என்றும் அலர்தூற்றி பேயிருந்தும் - என்றும்
புகலூரா புண்ணியனே என்.
தெளிவுரை : நீ நாள்தோறும் மலர் தூவி ஈசன் திருநாமமாகிய ஐந்து எழுத்தைத் (நமசிவய) துதிப்பாயாக. தலைவியின் காதலைப் பிறர் வெளிப்படுத்தினாலும் திருப்புகலூரா என்றும் புண்ணியனே என்றும் கூறி வணங்குவாயாக.
677. என்னே இவளுற்ற மாலென்கொல் இன்கொன்றை
என்னே இவள்ஒற்றி யூரென்னும் - என்னே
தவளப் பொடியணிந்த சங்கரனே என்னும்
தவளப் பொடியானைச் சார்ந்து.
தெளிவுரை : இவளுற்ற காதல் நோய் சொல்லும் தரமோ ! கொன்றை மலரையே நினைந்து வாடுகிறாள். திருவொற்றியூரா என்பாள். திருநீறு அணிந்த சங்கரனே என்பாள். எப்போதும் அந்தத் திருநீறு அணிந்த சிவபெருமானையை நினைந்து வருந்துவாள்.
678. சார்ந்துரைப்ப(து) ஒன்றுண்டு சாவாமூ வாப்பெருமை
சார்ந்துரைத்த தத்துவத்தின் உட்பொருளைச் - சார்ந்துரைத்த
ஆதியே அம்பலவா அண்டத்தை ஆட்கொள்ளும்
ஆதியேன்(று) என்பால் அருள்.
தெளிவுரை : சார்ந்துரைப்பது ஒன்றுண்டு; அது யாதெனில் இறந்துபோகாத, மூப்படையாத உண்மையாகும். இது உட்பொருள். உயிர் அடிமையாய் ஆண்டவனோடு ஒட்டி வாழ்வதைக் குறிக்கும் அறிவு அடையாளமாகிய சின்முத்திரை. முதற்காரணமே ! அம்பலத்தில் நடனம் ஆடுபவனே! அண்டத்தை ஆட்கொள்ளும் பரனே ! அருள் செய்வாயாக.
679. அருள்சேரா தாரூர்தீ ஆறாமல் எய்தாய்
அருள்சேரா தாரூர்தீ யாடி - அருள்சேரப்
பிச்சையேற் றுண்டு பிறர்கடையிற் கால்நிமிர்த்துப்
பிச்சையேற் றுண்டுழல்வாய் பேச்சு.
தெளிவுரை : (அருள் சேராதார் ஊர்) திரிபுரத்தை அணைந்து விடாதபடி எரித்தாய். (அருள்சேர் + ஆதார் + ஊர்) ஆதரம் உடையார் விருப்பப்படி மெய்யுணர் ஒளியாகிய தீயை ஒழுக்கமெனும் திருக்கையில் வைத்து ஆடுபவனே ! அருள் சேரப் பிச்சையேற்று உண்டு நடந்து சென்று உழல்பவனே ! சொல்வாயாக. அருள் சேராதார் ஊர் எனப் பிரிக்க.
680. பேச்சுப் பெருகுவதென் பெண்ஆண் அலியென்று
பேச்சுக் கடந்த பெருவெளியைப் - பேச்சுக்(கு)
உரையானை ஊனுக்(கு) உயிரானை ஒன்றற்(கு)
உரியானை நன்னெஞ்சே உற்று.
தெளிவுரை : பேச்சைப் பெருக்குவானேன்? பெண், ஆண், அலி என்று பேச்சுக்கு எட்டாத திருச்சிற்றம்பலத்தைச் சொல்லுக்கு உரையாய் இருப்பவனை, உயிருக்கு உயிராய் இருப்பவனை, பொருந்துதற்கு உரியானை நன்னெஞ்சே பொருந்தியிரு.
681. உற்றுரையாய் நன்னெஞ்சே ஓதக் கடல்வண்ணன்
உற்றுரையா வண்ணம்ஒன் றானானை - உற்றுரையா
ஆனை உரித்தானை அப்பனை எப்பொழுதும்
ஆனையுரித் தானை அடைந்து.
தெளிவுரை : திருமால் தேடியும் காணாமல் ஒப்பில்லாத தீப்பிழம்பாக அடிமுடி அறியா வண்ணம் நின்றானை, யானையைக் கொன்றவனை, அப்பனை, நன்னெஞ்சே ! உற்றுரையாய். உமையாளை இடப்பாகத்தில் கொண்ட இறைவனை அடைந்து நற்கதி பெறுவாயாக.
682. அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண்(டு) அர்ச்சித்(து)
அடைந்துன்பால் மேலுகுத்த மாணிக்(கு) - அடைந்துன்பால்
அவ்வமுதம் ஊட்டி அணிமலரும் சூழ்ந்தன்று
அவ்வமுதம் ஆக்கினாய் காண்.
தெளிவுரை : உன்னிடத்து அடைந்து அன்பால் மலரிட்டு அருச்சித்து பால் அபிடேகம் செய்த சண்டேசுவரருக்கு இறைவன் திருவடி இன்பம் நுகர்வித்து சிவபிரானுக்கு ஊட்டிய மலரும் அன்றிலிருந்து அவருக்கு உரியதாகுமாறு செய்யும் என்பதாம்.
683. காணாய் கபாலி கதிர்முடிமேல் கங்கைதனைக்
காணாய்அக் காருருவில் சேருமையைக் - காணாய்
உடைதலைகொண்(டு) ஊரூர் திரிவானை நச்சி
உடைதலைகொண்(டு) ஊரூர் திரி.
தெளிவுரை : மண்டை ஓட்டைத் திருக்கையில் தாங்கியவன் கதிர் முடிமேல் கங்கையைக் காண்பாயாக. அந்தக் காருருவில் உமாதேவியைக் காண்பாயாக. அந்தக் கபாலத்தைக் கொண்டு ஊர் ஊராகத் திரிவானை விரும்பி உள்ளம் உடைந்து கலங்குதலைக்கொண்டு நீயும் அவன் பின்னால் திரிவாயாக.
684. திரியும் புரமெரித்த சேவகனார் செவ்வே
திரியும் புரமெரியச் செய்தார் - திரியும்
அரியான் திருக்கயிலை என்னாதார் மேனி
அரியான் திருக்கயிலை யாம்.
தெளிவுரை : முப்புரங்களை எரித்த வீரன், செம்மையாக வேதிப்பு வகையால் மாற்றும் உயிர் உடல் மாறுபடும். அருமையானவனது திருக்கயிலை என்று வணங்காதவர் மேனியைத் திருக்கை மூவிலையால் நீக்கான். அவனை வணங்காதவர் நற்கதி பெறார் என்பதாம்.
685. ஆம்பரிசே செய்தங் கழியாக்கை - ஆம்பரிசே
ஏத்தித் திரிந்தானை எம்மானை அம்மானை
ஏத்தித் திரிந்தானை ஏத்து.
தெளிவுரை : தோன்றி மறையும் தடத்தத்திருமேனி இதன் தன்மை. ஆம் பரிசே ஏத்தித் திரிந்தானை, உமையம்மையை இடப்பாகத்தில் வைத்துத் திரிந்தானை நீ வணங்கு.
686. ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல்
ஏத்துற்றுப் பார்த்தன் இறைஞ்சுதலும் - ஏத்துற்றுப்
பாசுபதம் அன்றளித்த பாசூரான் பால்நீற்றான்
பாசுபதம் இன்றளியென் பால்.
தெளிவுரை : அருச்சுனன் தவம் புரிந்து எழில் வான் அடைவான் போல் வழிபாட்டை ஏற்று வணங்கவும், வழிபாட்டை ஏற்று, பாசுபதப் படையை அன்றளித்த திருப்பாசூரில் கொண்டிருப்பவன் எங்கும் நிறைந்த தூய திருவடிப் பேற்றை இன்று எனக்கு அளிப்பானாக.
687. பாலார் புனல்வாய் சடையானுக்(கு) அன்பாகிப்
பாலார் புனல்பாய் சடையானாள் - பாலாடி
ஆடுவான் பைங்கண் அரவூர்வான் மேனிதீ
ஆடுவான் என்றென்றே ஆங்கு.
தெளிவுரை : பராசக்தியின் கூறாகிய திரோதான சத்தியாகிய கங்கை நிறைந்த பால் போலும் தூய நீர் முழுகாத தன்மையினால் சடை பிடித்தவள் ஆனாள். பசுவின் பாலால் அபிடேகம் பெறும், பைங்கண் பாம்பு அணிந்தவன் மேனி தீ செந்நிறம். ஆட்டுவிப்பான் என்று துதிப்பாயாக.
688. ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாதம் அஃதன்றே
ஆங்குரைக்க லாம்பொன் அணிதில்லை - ஆங்குரைத்த
அம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்ற
அம்பரத்தும் அண்டத்தும் ஆம்.
தெளிவுரை : பொன்மலர்ப் பாதத்தை உரைத்துப் பார்க்கலாம். அஃதன்றே புகழ்ந்து போற்றலாம். அணிதில்லையிலும் பொன்னம்பலத்தும் அடைத்தும் அப்பாலுமாய் நின்ற அம்பரத்தும் வெளியிலும் இருப்பான். அப்பாலும் முப்பத்தாறு தத்துவம் கடந்த இடத்தும்.
689. மாயனைஓர் பாகம் அமர்ந்தானை வானவரும்
மாயவரு மால்கடல்நஞ்(சு) உண்டானை - மாய
வருவானை மாலை ஒளியானை வானின்
உருவானை ஏத்தி உணர்.
தெளிவுரை : ஆதியில் தன்பால் தோற்றுவித்த காத்தற் கடவுள் இறந்து பட்டுப் போக, பெரிய பசை மலமும் அடங்க, தேவர்களும் மாய, கடலில் இருந்து எழுந்த நஞ்சை உண்டவனை மாயவருவானை மாலையில் தோன்றும் செவ்வானம் போன்ற நிறமுடையவனை, வானின் உருவானைத் துதி செய்து உணர்வாயாக.
690. உணரா வளைகழலா உற்றுன்பாற் சங்கம்
உணரா வளைகழல ஒட்டி - உணரா
அளைந்தான மேனி அணியாரூ ரேசென்(று)
அளைந்தானை ஆமாறு கண்டு.
தெளிவுரை : உணர்ந்து, வளை சோர, பொருந்தி உன்பால் சங்கத்தாராலும் உணர முடியாத சூழ்ந்த ஐயம் நீங்கும் படியாகச் செய்து, ஒட்டிய பொன் (தருமிக்குப் பொன் கொடுத்த குறிப்பு) ஐந்து நிறமான மேனி ஆரூர் சென்று அணைந்தானை ஆமாறு கண்டு விளங்கு என்பதாம்.
691. கண்திறந்து காயெரியின் வீழ்ந்து கடிதோடிக்
கண்டிறந்து காமன் பொடியாகக் - கண்டிறந்து
கானின் உகந்தாடும் கருத்தர்க்குக் காட்டினான்
கானினுகந் தாடுங் கருத்து.
தெளிவுரை : நெற்றிக் கண்ணை விழித்து, காமன் எரியும் படியாகச் செய்து சுடுகாட்டில் விரும்பி நடனமாடும் முதல்வர்க்கு, கருத்தால் ஐந்தொழிலும் புரிபவன் என்பதாம்.
692. கருத்துடைய ஆதி கறைமிடற்றெம் ஈசன்
கருத்துடைய கங்காள வேடன் - கருத்துடைய
ஆனேற்றான் நீற்றான் அனலாடி ஆமாத்தூர்
ஆனேற்றான் ஏற்றான் எரி.
தெளிவுரை : ஆதி சத்தியை உடைய மூலகாரணன்; நீல கண்டன் (இஃது ஆறெழுத்து அருந்தமிழ் மந்திரம்) முழு எலும்புக் கூடாகிய வேட உருவம். ஆன்மாவை அடிமையாக ஏற்றருவானவன். திருநீறு அணிந்தவன்; தீயில் ஆடுபவன்; திருவாமாத்தூரில் கோயில் கொண்டிருக்கும் காளை வாகனன், தீயைக் கையிலேந்தினான்.
693. எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனி
எரியாடி ஏகம்ப மாகும் - எரியாடி
ஈமத்(து) இருங்காடு தேரும் இறைபணிப்ப
ஈமத் திடுங்காடு தான்.
தெளிவுரை : சிவபெருமான் என்றும், கச்சி ஏகம்பம் என்றும் சொல்லி வணங்காதவருடைய உடம்பு துன்பத் தீப்பற்றி நடுங்கும். எரியாடிப் பிணம் சுட விறகு அடுக்கும் கடவுளின் திருத்தொண்டு புரி.
694. தானயன் மாலாகி நின்றான் தனித்துலகில்
தானயன் மாலாய தன்மையான் - தானக்
கரைப்படுத்தான் நான்மறையைக் காய்புலித்தோ ஆடைக்
கரைப்படுத்தான் தன்பாதஞ் சார்.
தெளிவுரை : தானே அயனாகவும் மாலாகவும் இருந்து செயல்பட்டான். தனித்து உலகில் அவர்களாக இருக்கும் தன்மையுடையவன் அவன். நான்மறை ஆனவன் அவன். புலித்தோல் ஆடையை அரையில் கட்டிக் கொண்டான். அவனுடைய பாதங்களைச் சார்வாயாக.
695. சாராவார் தாமுளரேல் சங்கரன் தன் மேனிமேல்
சாராவார் கங்கை உமைநங்கை - சார்வாய்
அரவமது செஞ்சடைமேல் அக்கொன்றை ஒற்றி
அரவமது செஞ்சடையின் மேல்.
தெளிவுரை : சார்ந்திருப்பவர் யார் என்னில், சங்கரன் தன் மேனிமேல் உள்ள பாம்பு, கங்கை, உமாதேவி, கொன்றை ஆகியவரே. சடையின் மீது அரவம் ஏறிக் கொன்றையை ஒற்றிச் சீறும் என்க.
696. மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம்
மேலாயம் இன்றிவே றுண்பொழுதில் - மேலாய
மங்கை உமைவந் தடுத்திலளே வானாளும்
மங்கை உமைவந் தடுத்து.
தெளிவுரை : மேலுலக தேவர்கள் அஞ்ச, கடலில் இருந்து எழுந்த ஆலகாலவிடத்தை மேல் விளைவைப் பற்றிச் சிந்தியாமல் நீ உண்டபோது, தேவர்க்கும் யாவர்க்கும் மேலாக வீற்றிருக்கும் உமையம்மை தடுத்திரா விட்டால் நீ இறந்துபட்டிருப்பாய் என்பதாம்.
697. அடுத்தபொன் அம்பலமே சார்வும் அதனுள்
அடுத்த திருநட்டம் அஃதே - அடுத்ததிரு
ஆனைக்கா ஆடுவதும் மேலென்பு பூண்பதுவும்
ஆனைக்கா வான்தன் அமைவு.
தெளிவுரை : பொன் அம்பலத்தைச் சார்ந்து அதனுள் திருநடனம் ஆடுவதுதான் உன் தொழிலாகும். அதனை அடுத்த திருவானைக்காவில் குளிப்பதும், என்பு மாலையைப் பூண்பதும், விடையை ஊர்ந்து செல்வதும் உனக்கு இயல்பாகும். பிறை சூடியிருப்பதால் தாங்குபவனாகியும், ஆனேற்றை ஊர்வதால் தாங்கப்படுவோன் ஆகியும் ஓங்கியுள்ளான் என்பதாம்.
698. அமைவும் பிறப்பும் இறப்புமாம் மற்றாங்(கு)
அமைவும் பரமான ஆதி - அமையும்
திருவால வாய்சென்று சேராது மாக்கள்
திருவால வாய்சென்று சேர்.
தெளிவுரை : பிறப்பும் இறப்பும் இயல்பாகும். மேலான ஆதி காரணனே ! பொருத்தமான மதுரை சென்று ஆறறிவு பெறாதார் ஐயறிவு உடையவரே, நஞ்சொத்த வினைப் பிறப்பையே அடைவர்.
699. சென்றுசெருப் புக்காலாற் செல்ல மலர்நீக்கிச்
சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் - சென்றுதன்
கண்ணிடந்தன்(று) அப்பும் கருத்தற்குக் காட்டினான்
கண்ணிடந்தன்(று) அப்பாமை பார்த்து.
தெளிவுரை : கண்ணப்ப நாயனார் சரிதம் இது. ஆலயத்துள் செருப்புக் காலோடு சென்று, அதைக் கொண்டே சுவாமியின் முடியில் இருந்த மலரை நீக்கி, வாயில் கொண்டு சென்ற நீரை வார்த்து, தன் கண்ணையே தோண்டி எடுத்து அப்பியவர் கண்ணப்பர்; ஞான சம்பந்தர் கண்ணப்பர் திருவடியில் விழுந்து வணங்கினார்.
700. பார்த்துப் பரியாதே பால்நீறு பூசாதே
பார்த்துப் பரிந்தங்கம் பூணாதே - பார்த்திட்(டு)
உடையானஞ் சோதாதே ஊனாரைக் கைவிட்(டு)
உடையானஞ் சோதாதார் ஊண்.
தெளிவுரை : பார்த்து வணங்காமல், திருநீறு பூசாமல், சிவ மணியைப் பூணாமல் திருஐந்தெழுத்தை ஓதாமல் ஊன் உணவைக் கைவிட்டு, சிவபெருமானுடைய அழகிய திருவடி வேட்கையே இன்பம் என்று இருப்பாயாக.
701. ஊணொன்றும் இல்லை உறக்கில்லை உன்மாலின்
ஊணென்று பேசவோர் சங்கிழந்தாள் - ஊணென்றும்
விட்டானே வேள்வி துரங்தானே வெள்ளநீர்
விட்டானே புன்சடைமேல் வேறு.
தெளிவுரை :  சிவபெருமானின் திருவடி வேட்கையை இன்பம் என்று இடையறாது பேசுவதால் ஊண் உறக்கம் விட்டாள். சிறந்த சங்கு வளையலும் இழந்தாள். தக்கன் வேள்வியூன் தீது என்று ஓட்டினான், கங்கையை; பகீரதன் வேண்டுகோளுக்காக நிலத்தே போகச் செய்தான். இதுவே அவனது சிறப்பு.
702. வேறுரைப்பன் கேட்டருளும் வேதம்நான் காறங்கம்
வேறுரைத்த மேனி விரிசடையான் - வேறுரைத்த
பாதத்தாய் பைங்கண் அரவூர்வாய் பாரூரும்
பாதத்தாய் என்னும் மலர்.
தெளிவுரை : வேறொன்று சொல்வேன் கேள். நான்கு வேதம், ஆறு அங்கம் வேறு உரைத்த மேனி விரிசடையான். வேறு உரைத்த பாதத்தாய். பைங்கண் பாம்பை உடையவனே ! நிலவுலகத்தோர் ஊரும் திருவடியினை நிலைத்த உறையுளாகக் கொள்ளும் திருவடியை உடையாய். அதுவே சின்முத்திரையாம்.
703. மலரணைந்து கொண்டு மகிழ்வாய்உன் பாத
மலரணைந்து மால்நயன மாகும் - மலரணைந்து
மன்சக் கரம்வேண்ட வாளா அளித்தனையால்
வன்சக்க ரம்பரனே வாய்த்து.
தெளிவுரை : மலருக்கு ஒப்பாகத் திருமால் கண்ணை இடந்து வைத்தான். அதனை மலர் போல் கொண்டு மகிழ்வாய். அவனுக்குச் சக்கரம் கருணையால் அளித்தாய் என்பதாம். செந்நிற மேனியனே, உனக்குக் கதி என்று உணர்வாயாக.
704. வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால்
வாய்த்த அடிமுடி யுங்காணார் - வாய்த்த
சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ
சலந்தரனாய் நின்றவா தாம்.
தெளிவுரை : வாய்த்த அடியார் வணங்க, பிரமனும் திருமாலும் வாய்த்த அடியையும் முடியையும் காண இயலாதவராயினர். வாய்த்த சலந்தரன் என்ற அசுரனைக் கொன்றுவிட்டு, கங்கையை முடியில் தாங்கி நிற்கின்றாய். இது யாது காரணம் கருதி என்றவாறு.
705. தாமென்ன நாமென்ன வேறில்லை தத்துறவில்
தாமென்னை வேறாத் தனித்திருந்து - தாமென்
கழிப்பாலை சேரும் கறைமிடற்றார் என்னோ
கழிப்பாலை சேரும் கடன்.
தெளிவுரை : தாங்கப்படும் பொருளாகிய நாமும், தாங்கும் பொருளாகிய சிவமும் வெவ்வேறு இடங்களில் இருப்பதற்கில்லை. வான் கலந்திருக்கும் ஏனைப் பூதங்கள்போல் கலந்து ஒன்றாய் இருப்பதால் வேறில்லை. ஒருவரும் உண்ணாத நஞ்சைக் கண்டத்தில் உடையவர். எதற்காகத் திருக்கழிப்பாலையில் எழுந்தருளினார்? தெரியவில்லையே ! கழிப்பாலை - ஒருவரும் உண்ணாத நஞ்சு.
706. கடனாகக் கைதொழுமின் கைதொழவல் லீரேல்
கடல்நாகைக் காரோணம் மேயார் - கடநாகம்
மாளவுரித் தாடுவார் நம்மேலை வல்வினைநோய்
மாளஇரித் தாடுமால் வந்து.
தெளிவுரை : கடமையாக எண்ணிக் கைதொழுங்கள். அவ்வாறு வணங்க வல்லீரேல், கடற்கரையிலுள்ள திருநாகைக் காரோணம் என்னும் சிவப்பதியில் எழுந்தருளி இருப்பவரும், மத யானை மாள, தோலை உரித்து ஆடுவாராகிய சிவபெருமான் நம் வல்வினை நோய் மாள வந்து ஆடுவான் என்க.
707. வந்தார் வளைகழல்வார் வாடித் துகில்சோர்வார்
வந்தார் முலைமெலிவார் வார்குழல்கள் - வந்தார்
சுரிதருவார் ஐங்கொன்றைத் தாராரைக் கண்டு
சுரிதருவார் ஐங்கொன்றைத் தார்.
தெளிவுரை : வளையை இழப்பர்; வருந்தித் துகில் சோர்வர். முலை மெலிவர். நீண்ட குழல்கள் சோர்வர் (சுருங்குவர்). அழகிய கொன்றை மாலை அணிந்தவரைக் கண்டு சூழ்ந்திருப்பர். ஐம்பொறிகளை அடக்கியவர் வந்தார்.
708. தாரான் எனினும் சடைமுடியான் சங்கரனந்
தாரான் தசமுகனைத் தோள்நெரித்துத் - தாராய
நாளுங் கொடுத்தந்த வானவர்கள் தம்முன்னே
வாளுங் கொடுத்தான் மதித்து.
தெளிவுரை : சங்கரன் மாலையணிந்தவன் எனினும் சடை முடியை உடையவன். அழகிய மாலை அணிந்த இராவணனைத் தோள் நெரித்து நீண்டதாய நீண்டதாய வாழ் நாளும் கொடுத்து, அந்தத் தேவர்கள் முன்னிலையில் வாளும் கொடுத்தான். இராவணன் செய்த சிவபூசையைத் திருவுள்ளத்தமைத்து முக்கோடி வாழ்நாளை அளித்தான் என்க.
709. மதியாரும் செஞ்சடையான் வண்கொன்றைத் தாரான்
மதியாரும் மாலுடைய பாகன் - மதியாரும்
அண்ணா மலைசேரார் ஆரோடுங் கூடாகி
அண்ணா மலைசேர்வ ரால்.
தெளிவுரை : பிறைச் சந்திரன் பொருந்திய செஞ்சடையான்; வண்கொன்றைத் தாரான். உமாதேவியை இடப் பாகத்தில் கொண்டவன். அவனைச் சேராதவர் பிறவித் துன்பத்திலிருந்து மீளார். அண்ணாமலையைச் சேர்வரேல் நற்கதி பெறுவர் என்பதாம்.
710. ஆல நிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுதுசெய்வ தாடுவதீ - ஆலந்
துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு.
தெளிவுரை : இருப்பது கல்லால மரநிழலில்; ஆய்வது அறமாகும்; அமுது செய்வது ஆலகால விடம்; ஆடுவது தீயின் மத்தியில், ஆலந்துறை என்னும் சிவப்பதியில் வாசம் செய்பவன்; யானையின் தோலைப் போர்த்திருப்பான். திருச்சோற்றுத் துறை என்னும் சிவப்பதியை உடையவன், திருஐந்தெழுத்தை ஓதுவாயாக.
711. சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண்
சொல்லாய்ப் பெருத்த சுடரொளியாய்ச் - சொல்லாய்
வீரட்டத் தானை விரவாய் புரம்அட்ட
வீரட்டத் தானை விரை.
தெளிவுரை : சொல் ஆதாயம் இல்லாமல், தொலைவில்லாமல் தூநெறிக்கண் சொல்லாய், பெருத்த சுடரொளியாய் திருவதிகை வீரட்டானம் என்னும் பதியில் எழுந்தருளியிருப்பவன், பகைவர்களின் திரிபுரத்தை எரித்தவன். அவனை விரைந்து வழிபடுவாயாக. இங்குதான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
712. விரையாரும் மத்தம் விரகாகச் சூடி
விரையாரும் வெள்ளெலும்பு பூண்டு - விரையாரும்
நஞ்சுண்ட ஆதி நலங்கழல்கள் சேராதார்
நஞ்சுண்ட வாதி நலம்.
தெளிவுரை : மணமுள்ள ஊமத்த மலரை மகிழ்ந்து சூடி, விரையாரும் வெள்ளெலும்பு பூண்டு விரையாரும் விடத்தை உண்ட முதல்வனது கழல்களைச் சேராதார், பிறப்பு இறப்பை வெல்ல முடியாதவர் ஆவர் என்பதாம்.
713. நலம்பாயும் ஆக்க நலங்கொண்டல் என்றல்
நலம்பாயும் மான்நன்(கு) உருவ - நலம்பாய்செய்(து)
ஆர்த்தார்க்கும் அண்ணா மலையா னிடந்.................
தார்த்தார்க்கும் அண்ணா மலை.
தெளிவுரை : நலம் பாயும் ஆக்கந்தரும் மேகம் பெருமை தரும் நெற்பயிர் நன்கு வளர நலம் பாயுமாறு செய்தார்க்கும், எட்டாத மலையானிடம் உண்ணத்தக்க சோறு இல்லாமல் போகுமோ? அமலை என்பது ஆமலை என நீண்டது.
714. மலையார் கலையோட வாரோடக் கொங்கை
மலையார் கலைபோய்மால் ஆனாள் - மலையார்
கலையுடையான் வானின் மதியுடையான் காவாத்
தலையுடையான் என்றுதொழு தாள்.
தெளிவுரை : யானைத் தோலைப் போர்வையாக உடையவன், வேட்கையுற்ற பெண்ணைக் காவாத தலைமைப் பாருடையவன்மேல் இவள் ஆடை நெகிழ மையல் கொண்டாள். கையில் மானை உடையவன். வானின் மதியை உடையவன். பிரமாவின் கபாலத்தை ஏந்தியவன் என்று தொழுதாள்.
715. தாளார் கமல மலரோடு தண்மலரும்
தாளார வேசொரிந்து தாமிருந்து - தாளார்
சிராமலையாய் சேமத் துணையேயென் றேத்தும்
சிராமலையார் சேமத் துளார்.
தெளிவுரை : பாதமாகிய கமல மலரோடு குளிர்ந்த மலரும் பொருந்துமாறு அருச்சித்து, திருச்சிராமலையில் எழுந்தருளி இருப்பவனே ! பாதுகாப்பாக உள்ளவனே! என்று துதிபாடி சிராமாலையை தலைமாலையாகக் கொண்டாள். மாலை மலையெனக் குறுகி நின்றது.
716. ஆர்துணையா ஆங்கிருப்ப தம்பலவா அஞ்சலுமை
ஆர்துணையா ஆனை உரிமூடி - ஆர்துணையாம்
பூவணத்தாய் பூதப் படையாளி பொங்கொளியாய்
பூவணத்தாய் என்னின் புகல்.
தெளிவுரை : அம்பலவா! உமையம்மை அஞ்சுதல் செய்ய நீ யார் துணைகொண்டு அங்கு இருக்கின்றாய்? யானைத் தோலைப் போர்த்தவனே ! திருப்பூவணம் என்னும் தலத்தில் உனக்கு யார் துணை? பூதங்களைப் படையாகப் பெற்றவனே ! பேரொளியுடையாய்! செந்தாமரைப் பூவின் நிறத்தாய்! நீயே என்னுடைய புகலிடம்.
717. புகலூர் உடையாய் பொறியரவம் பூணி
புகலூர்ப் புனற்சடையெம் பொன்னே - புகலூராய்
வெண்காடா வேலை விட முண்டாய் வெள்ளேற்றாய்
வெண்காடா என்பேனோ நான்.
தெளிவுரை : புகலூர் என்னும் சிவத்தலத்தில் உள்ளவனே ! புள்ளிகளையுடைய பாம்பைப் பூண்டுள்ளவன். புகலாக ஊரும் கங்கையைச் சடையில் வைத்துள்ள பொன்னே ! திருவெண்காடா ! கடல் நஞ்சை உண்டாய். வெண்மையான காளையை ஊர்தியாகக் கொண்டாய், நான் உன்னை மிக்க பெரு வெளி என்பேனோ?
718. நானுடைய மாடேஎன் ஞானச் சுடர்விளக்கே
நானுடைய குன்றமே நான்மறையாய் - நானுடைய
காடுடையாய் காலங்கள் ஆனாய் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்.
தெளிவுரை : என் செல்வமே! என் ஞானச் சுடர் விளக்கே! என்னுடைய குணக் குன்றமே! நான்கு வேதங்களை உடையாய். கால தத்துவங்கள் ஆனாய். சுடுகாட்டை உடையாய்; அழகிய திருவடியை உடையாய். எனக்கு அருள் செய்வாய் என்பதாம்.
719. ஆயன்(று) அமரர் அழியா வகைசெய்தாய்
ஆயன்(று) அமரர் அழியாமை - ஆயன்
திருத்தினான் செங்கண் விடையூர்வான் மேனி
திருத்தினான் சேதுக் கரை.
தெளிவுரை : அந்நாளில் உனக்குத் துணையாய் இருந்த தேவர் அழியாவண்ணம் காப்பாற்றினாய். தேவர்களுக்குத் தலைவன் ஆனாய். சிவந்த கண்களையுடைய காளையை வாகனமாக உடையாய். கடலில் இராமன் கட்டிய அணையைத் திருத்தினாய். (சேதுக்கரை இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ளது.)
720. கரையேனு மாதர் கருவான சேதுக்
கரையேனு மாது கரையாம் - கரையேனும்
கோளிலியெம் மாதி குறிபரவ வல்லையே
கோளிலியெம் மாதி குறி.
தெளிவுரை : திருக்கோளிலி என்பது ஒரு சிவத்தலம் (அவிநாசி); குற்றமில்லாத தலம். ஆதி-முதற் கடவுள்; காரணக் கடவுள். திருக்கோளிலியில் எழுந்தருளி யிருக்கும் இறைவனைக் குறியாகக் கொண்டு வழிபடுவாயாக. சேதுக்கரையில் உள்ள சிவபெருமானது சிறப்புக் கூறியவாறு. பிறவிக் கடலைக் கடக்க அந்த இறைவன் அருள் பாலிப்பானாக.
721. குறியார் மணிமிடற்றுக் கோலஞ்சேர் ஞானக்
குறியாகி நின்ற குணமே - குறியாகும்
ஆலங்கா(டு) எய்தா அடைவேன்மேல் ஆடரவம்
ஆலங்கா(டு) எய்தா அடை.
தெளிவுரை : ஞானக்குறி - திருவருட் குறி - இலிங்கம். நீலகண்டப் பெருமான் இலிங்க உருவாகியுள்ளான். அவன் எண் குணத்தான். நான் சுடுகாட்டை அடையாமல் இருக்கப் பாம்பை யணிந்த பெருமான் அருள் பாலிப்பானாக. அவன் திருஆலங்காட்டில் எழுந்தருளியிருக்கின்றான். அவனை அடைவாயாக.
722. அடையும் படைமழுவும் சூலமிலம் பங்கி
அடையும் இறப்பறுப்ப தானால் - அடைய
மறைக்காடு சேரும் மணாளரென்பாற் சேரா
மறைக்காடு சேர்மக்கள் தாம்.
தெளிவுரை : தாக்கும் படையாகிய மழுவும் சூலமும் ஆடையும் இறப்பு அறுப்பதானால் வந்து பொருந்தும். நீங்காப் புகலாக மறுக்கும் சுடுகாடு. இறைவனை
அடைய திருமறைக்காட்டிற்கு (வேதாரண்யத்திற்கு) மக்கள் வந்து சேர்வார்கள். பிறப்பு அறுத்தவர்க்குச் சுடுகாடு இல்லை என்பதாம்.
723. தாமேய ஆறு சமய முதற்பரமும்
தாமேய வாறு தழைக்கின்றார் - தாமேல்
தழலுருவர் சங்கரவர் பொங்கரவம் பூண்ட
தழலுருவர் சங்கரர்என் பார்.
தெளிவுரை : ஆறு சமயங்களாக உள்ளவரும் இவரே. அவர் தீ உருவினர்; அவர் சங்கரர்; பொங்கு அரவம் பூண்ட தழலுருவர். இது அவராகக் கொண்ட உருவம். தாமே ஆறு சமயங்களாக இருந்து தழைக்கின்றார் என்க. ஆறு சமயங்களாவன: சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம் என்பனவாம்.
724. பார்மேவு கின்ற பலருருவர் பண்டரங்கர்
பார்மேவு கின்ற படுதலையர் - பார்மேல்
வலஞ்சுழியைச் சேர்வர் மலரடிகள் சேர்வார்
வலஞ்சுழியைச் சேர்வாகு வார்.
தெளிவுரை : இவ்வுலகம் பொருந்துகின்ற பல உருவினை உடையவர்; பாண்டரங்கம் என்னும் கூத்தை ஆடியவர். பருந்து வழிபட்ட திருவலஞ்சுழியைச் சேர்பவர்கள் இறைவனது மலரடிகளைச் சேர்வார்கள் என்பதாம்.
725. வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளா
வாரணிந்த கொன்றை மலர்சூடீ - வாரணிந்த
செஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா சேயொளியாய்
செஞ்சடையாய் செல்ல நினை.
தெளிவுரை : கச்சணிந்த கொங்கைகளையுடைய உமாதேவியின் மணவாளா! நீண்ட கொன்றை மாலையை அணிந்தவனே. நீண்டு தொங்குகின்ற சடையினை உடையாய். சிவலோகத்தில் இருப்பவனே! செம்மை நிறம் உடையவனே. எங்களுக்கு அருள் செய்வாயாக.
726. நினைமால் கொண்டோடி நெறியான் தேடி
நினைமாலே நெஞ்சம் நினைய - நினைமால்கொண்(டு)
ஊர்தேடி உம்பரால் அம்பரமா காளாஎன்(று)
ஊர்தேடி என்றுரைப்பான் ஊர்.
தெளிவுரை : நினைத்தபடி மயக்கம் கொண்டு ஓடி, அறமானவற்றைத் தேடி, பேரன்பு கொண்டு, ஊர் தேடி திருஅம்பரம், திரு அம்பர்மாகாளம் என்று தேவர்களால் தேடி அலைகின்ற ஊரைச் சேர்வாயாக.
727. ஊர்வதுவும் ஆனே(று) உடைதலையில் உண்பதுவும்
ஊர்வதுவும் மெல்லுரக மூடுவர்கொல் - ஊர்வதுவும்
ஏகம்பம் என்றும் இடைமருதை நேசித்தார்க்(கு)
ஏகம்ப மாய்நின்ற ஏறு.
தெளிவுரை : ஏறிச் செல்வது இடபமாகும். கபாலம் உண்கலமாகும். மேலே ஊர்ந்து செல்வது பாம்பாகும். குடியிருக்கும் ஊர் ஏகம்பம் திருஇடை மருதை நேசித்தவர்க்குப் பற்றுக் கோடாக உள்ள தூண் ஆகும்.
728. ஏறேய வாழ்முதலே ஏகம்பா எம்பெருமான்
ஏறேறி யூரும் எரியாடி - ஏறேய
ஆதிவிடங் காகாறை அண்டத்தாய் அம்மானே
ஆதிவிடங் காவுமைநன் மாட்டு.
தெளிவுரை : ஆனேற்றை வாழ்முதலாகக் கொண்டவனே ! ஏகம்பனே ! எம்பெருமான் தீயில் ஆடுபவன். ஆதி விடங்கப் பெருமானே ! திருக்காறை என்னும் தலத்தில் உள்ளவனே ! உளியால் செய்யப்படாதவனே. (சுயம்பு வாய்த் தோன்றியவன் என்றபடி) நான் உன்னை அடையச் செய்வாயாக.
729. மாட்டும் பொருளை உருவை வருகாலம்
வாட்டும் பொருளாய் மறையானை - வாட்டும்
உருவானைச் சோதி உமைபங்கா பங்காய்
உருவான சோதி உரை.
தெளிவுரை : தந்தருளிய உலகியற் பொருளை, உடம்பை. எதிர் காலத்தில் வாட்டும் பொருளாய்ச் செய்பவனே. சோதி வடிவானவனே ! உமாதேவியை இடப்பாகத்தில் வைத்துள்ளவனே. நீ சோதி உருவாய் மாறியதைப் பாங்காய் உரைப்பாயாக.
730. உரையா இருப்பதுவும் உன்னையே ஊனின்
உரையாய் உயிராய்ப் பொலிந்தாய் - உரையாய்
அம்பொனே சோதி அணியாரூர் சேர்கின்ற
அம்பொனே சோதியே ஆய்ந்து.
தெளிவுரை : ஓதிக் கொண்டிருப்பதுவும் உன்னையே. உடம்பின் போர்வையாய்க் கொண்டிருப்பதுவும், உயிருக்கு உயிராய் விளங்குகின்றதுவும், மாற்றுரைக்குப் பொருந்திய அம்பொன் சோதியாக இருப்பதுவும் அழகிய திருவாரூர் சேர்கின்ற அம்பொன் சோதியென்று நீ ஆய்ந்து உணர்வாயாக.
731. ஆய்ந்துன்றன் பாதம் அடையவரும் என்மேல்
ஆய்ந்தென்றன் பாச மலம்அறுத் - தாய்ந்துன்தன்
பாலணையச் செய்த பரமா பரமேட்டி
பாலணையச் செய்த பரம்.
தெளிவுரை : திருமுறை மெய்கண்ட நூல்வழி நின்று, திருவருளால் ஆராய்ந்து உன் பாதம் அடையவரும் என்மேல் நுணுகி என் பாச மலம் அறுத்து ஆய்ந்து உன்தன்பால் அணையச் செய்த பரமா! பரமேட்டி, திருவடிப் பேரின்பம் அடையச் செய்வாயாக.
732. பரமாய பைங்கண் சிரமேயப் பூண்ட
பரமாய பைங்கண் சிரமே - பரமாய
ஆறடைந்த செஞ்சடையாய் ஐந்தடைந்த மேனியாய்
ஆறுடைந்த செஞ்சடையாய் அன்பு.
தெளிவுரை : ஐந்தொழில்களாவன: ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன.
பாம்பு சிரத்தில் பொருந்த, பரமாய அபயம் சிரத்தில் அமைய கங்கைகளையுடைய செஞ்சடையாய்; பஞ்சகௌவிய அபிடேகம் கொண்ட திருமேனியை உடையாய். உன் அன்பையே நாடி நிற்கிறேன் என்பதாம். ஐந்து - ஐந்து தினைகளுக்கும் உரியவன். ஐந்து முகத்தை உடையவன்; ஐந்து தொழில்களைச் செய்பவன் என்பதாம்.
733. அன்பே உடைய அரனே அணையாத
அன்பே உடைய அனலாடி - அன்பே
கழுமலத்து ளாடும் கரியுரிபோர்த் தானே
கழுமலத்து ளாடும் கரி.
தெளிவுரை : ஆருயிர்கள் உய்ய வேண்டுமெனக் கருதும் உள்ளம் உடையவனே! அணையாத அன்பே உடைய அனலாடி. கழுமலம் என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியிருக்கும் ஆடுங் கடவுளே! யானைத் தோலைப் போர்த்தவனே ! மிக்க மலத்தில் ஆடும் தெய்வம் என்பதற்கும் நீயே சான்று.
734. கரியார்தாம் சேரும் கலைமறிகைக் கொண்டே
கரியார்தாம் சேரும் கவாலி - கரியாகி
நின்ற கழிப்பாலை சேரும் பிரான்நாமம்
நின்ற கழிப்பாலை சேர்.
தெளிவுரை : கரிய நிறம் சேர்ந்த மான் கன்றைக் கையில் ஏந்தியவர்தாம் சான்றாவார். பிரமனது தலை ஓட்டைக் கையில் கொண்டவர். பாலை நிலத்தில் சேரும் பிரான் திருநாமத்தைச் சொல்லுகின்ற திருக் கழிப்பாலை என்னும் தலத்தைச் சென்று அடைவாயாக.
735. சேரும் பிரான்நாமம் சிந்திக்க வல்லீரேல்
சேரும் பிரான்நாமம் சிந்திக்கச் - சேரும்
மலையான் மகளை மகிழ்ந்தாரூர் நின்றான்
மலையான் மகளை மகிழ்ந்து.
தெளிவுரை : சிவபிரான் திருப்பெயரைச் சிந்திக்க வல்லீரேல், அவனுடைய திருப்பெயரைக் கொண்ட கயிலை மலைக்குச் செல்லுங்கள். மலைமகளைச் சேர்ந்து மகிழ்ந்திருக்கும் திருவாரூரில் நின்றான். அவன் மலை வில்லாதவன். அவனை வழிபடுங்கள்.
736. மகிழ்ந்தன்பர் மாகாளம் செய்யும் மகளிர்
மகிழ்ந்தம் பரமாகி நின்றார் - மகிழ்ந்தங்கம்
ஒன்றாகி நின்ற உமைபங்கன் ஒற்றியூர்
ஒன்றாகி நின்ற உமை.
தெளிவுரை : (அம்பரம் - வான், திசை, கடல், சீலை, ஆடை, துயிலிடம்) அன்பர்களுக்குப் பெருங் களிப்பைச் செய்பவன். மகளிர் மகிழ்ந்து அவன் மயமாகி நின்றனர். விரும்பி அர்த்தநாரீஸ்வர உருவாய் உள்ளவன். உமையை இடப்பாகத்தில் கொண்டவன். திருவொற்றியூரில் உமையோடு ஒன்றாகி நின்றவன்.
737. உமைகங்கை என்றிருவர் உற்ற உணர்வும்
உமைகங்கை என்றிருவர் காணார் - உமைகங்கை
கார்மிடற்றம் மேனிக் கதிர்முடியான் கண்மூன்று
கார்மிடற்றம் மேனிக்(கு) இனி.
தெளிவுரை : உமையும் கங்கையும் இறைவன் கையில் வைத்திருக்கும் பிரம கபாலத்தை அறியார். அவ்விருவரும் ஒருவரையொருவர் அறியார். இறைவன் நீலகண்டன். செந்நிறச் சடையை உடையவன். கண் மூன்று உடையவன். அவன் அவ்விருவர் உணர்வுகளை அறியான்.
738. இனியவா காணீர்கள் இப்பிறவி எல்லாம்
இனியவா ஆகாமை யற்றும் - இனியவா(று)
ஆக்கை பலசெய்த ஆமாத்தூர் அம்மானை
ஆக்கை பலசெய்த அன்று.
தெளிவுரை : இந்த உடம்பு இதுவரை துன்பமாகக் காணப்பட்டாலும் இனியாவது இன்பமாக இருக்கப் பல உயிர்களைப் படைத்த திருஆமாத்தூர் பதியில் கோயில் கொண்டிருக்கும் அம்மானை இனியாவது நற்கதி காட்ட வேண்டுவாயாக.
739. அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளி
அன்றவுணர் வீட அருள்செய்தோன் - அன்றவுணர்
சேராமல் நின்ற அடிகள் அடியார்க்குச்
சேராமல் நின்ற சிவம்.
தெளிவுரை : அந்நாளில் தேவர் வாழ்வதற்காக அமுதத்தை அவர்களுக்குக் கொடுத்து, அவுணர் மாள அருள் செய்தவன். மாறுபட்ட அசுரர்களோடு சேராமல் நின்ற இறைவன், அடியார்க்கும் இன்று சேராமல் இருக்கின்றான் என்பதாம்.
740. சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்சேர்வ தாக்கும்
சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்ணாம் - சிவனந்தம்
சேரும் உருவுடையீர் செங்காஅட் டங்குடிமேல்
சேரும் உருவுடையீர் செல்.
தெளிவுரை : சிவனை அடைவதற்குரிய வழி யாதெனில் அடியார்கள் நற்கதி பெறுவதற்காகச் செல்லும் திருச் செங்காட்டங்குடியில் கோயில் கொண்டிருக்கும் இறைவனை வழிபடுங்கள். அதுவே அவனை அடைவதற்குரிய கண்போன்ற நெறியாகும்.
741. செல்லு மளவும் சிதையாமல் சிந்திமின்
செல்லும் மளவும் சிவனும்மைச் - செல்லும்
திருமீச்சூர்க்(கு) ஏறவே செங்கணே(று) ஊரும்
திருமீச்சூர் ஈசன் திறம்.
தெளிவுரை : உயிர் பிரியும் வரையில் சிதையாமல் அவனை நினையுங்கள். திருமீச்சூரில் உள்ள இறைவன்தான் கடைசிவரை வழி நடத்திச் செல்வான். இடபத்தை ஊரும் ஈசன் திறம் அதுவாகும். அதுவே நற்கதி பெறுவதற்குரிய மார்க்கமாகும்.
742. திறமென்னும் சிந்தை தெரிந்தும்மைக் காணும்
திறமென்னும் சிந்தைக்கும் ஆமே - திறமென்னும்
சித்தத்தீர் செல்வத் திருக்கடவூர் சேர்கின்ற
சித்தத்தீ ரே செல்லும் நீர்.
தெளிவுரை : திறம் என்னும் சிந்தை தெரிந்து உம்மைக் காணும் திறம் என்னும் சிந்தைக்கும் ஆமே. திறம் என்னும் நெஞ்சுடையீர் ! செல்வமிக்க திருக்கடவூர் சேர்கின்ற அறிவுடையீர் ! நீரே செல்லும், சித்து - அறிவு. நான் கடைத் தேறும் வழியைக் காட்டுவீராக.
743. நீரே எருதேறும் நின்மலனார் ஆவீரும்
நீரே நெடுவானில் நின்றீரும் - நீரே
நெருப்பாய தோற்றத்து நீளாறும் பூண்டு
நெருப்பாய தோற்றம் நிலைத்து.
தெளிவுரை : நீர் இடபத்தை வாகனமாக உடையவர். நின்மலமானவர். நீரே தீப்பிழம்பாய் நெடுவானம்வரை நிமிர்ந்து நின்றீர். பிரமனும் திருமாலும் அறிய முடியாத படி (அடிமுடி காணாதவாறு) நின்றனை. உம்மை யாரே காண வல்லார்? இது திருவண்ணாமலையில் நிகழ்ந்தது.
744. நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்
நிலைத்திவ் வுலகனைத்தும் நீரே - நிலைத்தீரக்
கானப்பே ரீர்க்கங்கை சூடினீர் கங்காளீர்
கானப்பே ரீர்கங்கை யீர்.
தெளிவுரை : நிலைத்து இவ்வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர். இவ்வுலகனைத்தும் நீரே நிலைத்தீர். திருக்கானப்பேர் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளீர். கங்கையைத் தலையில் சூடினீர். மண்டை ஓட்டைக் கையில் ஏந்தினீர். கானப்பேர் - காடு போன்ற பெரிய நீர்.
745. ஈரம் உடைய இளமதியம் சூடினீர்
ஈரம் உடைய சடையினீர் - ஈர
வருங்காலம் ஆயினீர் இவ்வுலகம் எல்லாம்
வருங்கால மாயினீர் வாழ்வு.
தெளிவுரை : குளிர்ந்த பிறைமதியைத் தலையில் சூடினீர். கங்கையைத் சடையில் வைத்தீர். முழுவதையும் அழிக்க எதிர் காலத்தை நோக்குகின்றீர், இவ்வுலக மெல்லாம் வருங்காலமாக வாழ்வு நடத்தப் போகிறீர். உம்முடைய திருவிளையாடல்களை யார் அறிவார் என்பதாம்.
746. வாழ்வார் மலரணைவார் வந்த வருநாகம்
வாழ்வார் மலரணைவார் வண்கங்கை - வாழ்வாய
தீயாட வானாள்வான் வான்கழல்கள் சேராதார்
தீயாட வானாளு மாறு.
தெளிவுரை : உன்னுடைய மலர் போன்ற பாதங்களை அடைந்தவர்கள் எல்லா நலன்களையும் பெற்று வாழ்வார். கயிலாய மலையில் வாசம் செய்யும் உன் பாதங்களைப் பெற்றவர்கள் கங்கையைப் போல நல் இன்பத்தைப் பெறுவர். உன் பாதத்தைச் சேராதவர் நெருப்புக்கு இரையாகித் துன்புறுவர்.
747. மாறாத ஆனையின்தோல் போர்த்து வளர்சடைமேல்
மாறாத நீருடைய மாகாளர் - மாறா
இடுங்கையர் சேரும் எழிலவாய் முன்னே
இடுங்கையர் சேர்வாக ஈ.
தெளிவுரை : பகையாக வந்த யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து, வளர் சடைமேல் வற்றாத கங்கையை உடையவர்; கையில் கபாலத்தை ஏந்தியவர். மாறாத ஒழுக்கமுடையவரைச் சேருங்கள். தானம் செய்யுங்கள் அதுவே இறைவனை அடையும் வழியாகும்.
748. ஈயும் பொருளே எமக்குச் சிவலோகம்
ஈயும் பொருளே  இடுகாட்டில் - நீயும்
படநாகம் பூணும் பரலோகீர் என்னீர்
படநாகம் பூணும் படி.
தெளிவுரை :  நீங்கள் பிறருக்குத் தானமாகக் கொடுக்கும் பொருளே சிவலோகம் நமக்குத் தரும் அருள் கொடையாகும். சுடுகாட்டில் நீயும் படத்தையுடைய பாம்பை அணியும் இறைவனைத் துதியுங்கள். அப்போதுதான் உங்கள் ஆணவம் அழியும்.
749. படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டிப்
படியேறும் பார்த்துப் பரனெப் - படியேனைப்
பாருடையாய் பைங்கண் புலியதளாய் பால்நீற்றாய்
பாருடையாய் யானுன் பரம்.
தெளிவுரை : இறைவனே, என்னைப் பார். பசுமையான கண்களையுடைய புலித்தோலை ஆடையாக உடையாய். திருநீற்றை அணிந்தவனே ! இவ்வுலகை உடையாய். நான் உன் பொறுப்பில் வந்து விட்டேன். நீ என்னை ஆட்கொண்டால் துன்பங்கள் என்னை விட்டு நீங்கும். அது தவிர வேறு வழியில்லை.
750. பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன்
பரமாய ஆதிப் பரனே - பரமாய
நீதியே நின்மலனே நேரார் புரமூன்றும்
நீதியே செய்தாய் நினை.
தெளிவுரை : வினைச் சுமைகளை விட்டு, உன் பாதங்களை வணங்கினேன். மேலான முதல்வன் நீயே. மேலான அறவடிவினனே. குற்றமற்றவனே. பகைவர்களின் திரிபுரங்களை நீ எரித்தாய். நீ தீயே என்பது நீதியே எனக் குறைந்தது. நினைத்துப் பார்.
751. நினையடைந்தேன் சித்தம் நிலையாகும் வண்ணம்
நினையடைந்தேன் சித்த நிமலா - நினையடைந்தேன்
கண்டத்தாய் காளத்தி யானே கனலாரும்
கண்டத்தாய் காவாலி கா.
தெளிவுரை : உன்னைப் புகலிடமாக அடைந்தேன். என்னுடைய மனம் நேர் வழியில் செல்லும் வண்ணம் உன்னைப் பற்றுக் கோடாகத் தேர்ந்தேன். மனத்தில் குற்றமில்லாதவனே ! தாய் போன்றவனே. திருக்காளத்தியில் உள்ளவனே! திருநீலகண்டனே. என்னைக் காப்பாற்றுவாயாக.
752. காவார் பொழிற்கயிலை ஆதீ கருவேயெம்
காவாய்ப் பொலிந்த கடுவெளியே - காவாய
ஏறுடையாய் என்னை இடைமருதி லேயென்றும்
ஏறுடையாய் நீயே கரி.
தெளிவுரை : சோலைகள் சூழ்ந்த கயிலையில் வீற்றிருக்கும் ஆதியெம் பொருளே! உலகக் காரணனே. எம்மைக் காத்தருள்வாய். அறிவுப் பேரொளியே. எருதாகிய ஊர்தியை உடையாய். என்னைத் திருவிடைமருதூரில் எப்போதும் இருக்கச் செய்வாய். நீயே சான்றாவாய்.
753. கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ணன்
கரியாரும் கூற்றங் கனியே - கரியாரும்
காடுடையாய் காலங்கள் ஆனாய் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்.
தெளிவுரை : திருமாலும் பிரமனுமாய் நின்ற கண்ணன்; கரியாருங் கூற்றம் கனியே, சுடுகாட்டில் இருப்பவனே; பல யுகங்களைக் கண்டவன் நீ; கனலாடும் சுடுகாடாகவும் காலமாகவும் இருக்கின்றவன் நீ.
754. ஆனாய னாய அடலேறே ஆரூர்க்கோன்
ஆனாய னாவமுத மேயானாய் - ஆனாய்
கவரெலும்போ டேந்தி கதநாகம் பூணி
கவரெலும்பு தார்கை வளை.
தெளிவுரை : ஆனாய னாய வலிமை பொருந்திய சிங்கமே. திருவாரூர் இறைவன் உயிர்களுக்கு அமுதம் போன்றவன். பிளவுபட்ட எலும்பு ஓடு ஏந்தி, கோபமுள்ள பாம்புகளை அணிந்தனனே ! கை வளையல்களைக் கழலுமாறு செய்பவனே ! உன் எலும்பு மாலையைத் தா.
755. வளைகொண்டாய் என்னை மடவார்கண் முன்னே
வளைகொண்டாய் மாசற்ற சோதி - வளைகொண்டாய்
மாற்றார் கதுவ மதிலாரூர் சேர்கின்ற
மாற்றாரூர் கின்ற மயல்.
தெளிவுரை : உன்மீது மையல் கொண்ட என் கை வளைகளைப் பறித்துக் கொண்டாய். என்னைப் பெண்கள் முன்னை வளைத்துக் கொண்டாய். குற்றமற்ற சோதி வடிவானவனே! பகைவர்கள் மாள மதில்களை உடைய திருவாரூர் சேர்கின்ற மாற்றாருடைய ஊரின் மீது மயல் கொண்டாய் போலும்.
756. மயலான தீரும் மருந்தாகும் மற்றும்
மயலானார் ஆரூர் மயரார் - மயலான
கண்ணியர்தம் பாகா கனியே கடிக்கொன்றைக்
கண்ணியலான் பாதமே கல்.
தெளிவுரை : மயலானது நம்மைப் பற்றி ஈர்க்கும் மருந்தாகும். அப்படியிருந்தும் மயல் கொண்டவர்களைக் கண்டு திருவாரூர் பெருமான் மயங்க மாட்டார். மயல் கொண்ட உமையைப் பாகமாகக் கொண்டவரே. கனி போன்றவனே என்று போற்றி, மனமே ! மணமுள்ள கொன்றையைத் தலை மாலையாகக் கொண்டவரது பாதங்களை அடையும் வழியைக் கற்பாயாக.
757. கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்
கலைமான் கறைகாண் கவாலி - கலைமானே
ஆடுவதும் பாடுவதும் காலனைப்பொன் அம்பலத்துள்
ஆடுவதும் ஆடான் அரன்.
தெளிவுரை : கையில் உள்ளது மான் கன்று பன்றிக் கொம்பு ஆபரணம். அவனைக் கயிலையில் காண்பாயாக. அவன் கழுத்தில் கறையுள்ளவன். பொன்னம்பலத்துள் ஆடுவான் பாடுவான். அவன் காலனை அழித்தவன் என்க. அடுவது ஆடுவது என நீண்டது.
758. அரனே அணியாரூர் மூலட்டத் தானே
அரனே அடைந்தார்தம் பாவம் - அரனே
அயனார்தம் அங்கம் அடையாகக் கொண்டாய்
அயனாக மாக அடை.
தெளிவுரை : அரனே, அணி திருவாரூர் மூலட்டத்தானே ! தம்மை அடைந்தவர்களது பாவத்தை அழிப்பவனே ! பிரமனது உடம்பை அடைக்கலமாகக் கொண்டாய் என்று துதித்து அத்தகையவனை மனமே ! அடைக்கலமாகக் கொள்வாயாக.
759. அடையும் திசைஈசன் திண்தோளா காசம்
அடையும் திருமேனி அண்டம் - அடையும்
திருமுடிகால் பாதாளம் ஆடைகடல் அங்கி
திருமுடிநீர் கண்கள்சுடர் மூன்று.
தெளிவுரை : இது சிவபெருமான் உலகமே உருவமாகக் கொள்ளும் நிலையை உணர்த்துகின்றது. திசைகளே தோள்; ஆகாயமே மேனி; அண்டமே திருமுடி; பாதாளமே திருவடி; கடலே ஆடை; திருமுடியில் இருப்பது கங்கையாகிய நீர்; மூன்று சுடர்களும் மூன்று கண்கள்.
760. மூன்றரணம் எய்தானே மூலத் தனிச்சுடரே
மூன்றரண மாய்நின்ற முக்கணனே - மூன்றரண
மாய்நின்ற சோதி அணியாரூர் சேர்கின்ற
வாய்நின்ற சோதி அறம்.
தெளிவுரை : திரிபுரங்களை அழித்தவனே ! எல்லாவற்றிற்கும் மூலகாரணமாகிய ஒப்பற்ற ஒளிச்சுடரே. மூன்று காவலாய் நின்ற முக்கணனே. மூன்று கோட்டைகளை உடையவனே ! அவன்தான் திருவாரூரில் கோயில் கொண்டுள்ள சோதி வடிவினன். அவனே அறக் கடவுள்.
761. அறமாய்வ ரேனும் அடுகாடு சேர
அறமானார் அங்கம் அணிவர் - அறமாய
வல்வினைகள் வாரா எனமருக லாரென்ன
வல்வினைகள் வாராத வாறு.
தெளிவுரை : தருமத்தை ஆராய்ச்சி செய்பவரேனும் சுடுகாடே கதியாய் உள்ளவர். இறந்தவர்களின் எலும்பை அணிபவர். அருவினைகள் நம்மைச் சேராவண்ணம் காப்பவர். வல்வினைகள் நம்மை அணுகாமல் இருக்க அவன் அருள் பாலிப்பானாக.
762. ஆறுடையர் நஞ்சுடையர் ஆடும் அரவுடையர்
ஆறுடையர் காலம் அமைவுடையர் - ஆறுடைய
சித்தத்தீர் செல்வத் திருக்கயிலை சேர்கின்ற
சித்தத்தீர் எல்லார்க்கும் சேர்வு.
தெளிவுரை : தலையில் கங்கையாற்றை உடையவர்; கழுத்தில் விடத்தை உடையவர்; உடம்பில் பாம்பை அணிந்தவர்; பெரும்பொழுது சிறுபொழுது எனக் காலம் ஆறு உடையவர்; நன்னெறியை உடைய மனமுடையவர்களே, செல்வத் திருக்கயிலையைச் சென்று வழிபடுங்கள்.
763. சேர்வும் உடையர் செழுங்கொன்றைத் தாரார்நஞ்
சேர்வும் உடையர் அரவுடையர் - சேரும்
திருச்சாய்க்காட் டாடுவரேல் செய்தக்க என்றும்
திருச்சாய்க்காட் டேநின் உருவு.
தெளிவுரை : திருச்சாய்க் காட்டில் எழுந்தருளியிருக்கும் பெருமானை நீங்கள் வழிபடுங்கள். அவர் செல்வம் உடையவர். செழுங்கொன்றைத் தாருடையவர். நீலகண்டர். பாம்பு அணிபவர். திருகல் சாயும் இடம் அப்பதியேயாகும்.
764. உருவு பலகொண்(டு) ஒருவராய் நின்றார்
உருவு பலவாம் ஒருவர் - உருவு
பலவல்ல ஒன்றல்ல பைஞ்ஞீலி மேயார்
பலவல்ல ஒன்றாப் பகர்.
தெளிவுரை : திருப்பைஞ்ஞீலி என்னும் சிவப்பதியின் சிறப்பைக் கூறுகின்றார். அங்குள்ள இறைவன் ஒருவரே பல உருவங்களைக் கொண்டவர். உருவு பலவாயினும் அவர் ஒருவரே. உருவு பலவும் அல்லன் அவன் எங்கும் நிறைந்தவன் என்பதாம். தடத்த வடிவம் கலப்பால் பலவாம் பான்மையர் என்க. தடத்தம் - நடுநிலை தொழில் நிலை.
765. பகரப் பரியானை மேலூரா தானைப்
பகரப் பரிசடைமேல் வைத்த - பகரப்
பரியானைச் சேருலகம் பல்லுயிர்கள் எல்லாம்
பரியானைச் சேருலகம் பண்.
தெளிவுரை : சொல்லப்படும் குதிரை, யானை ஆகியவற்றை ஊர்தியாகக் கொள்ளாதவன். அழகிய சடையை உடையவன். அவன் இன்ன தன்மையன் என்று சொல்ல ஒண்ணாதவன். மனமே ! இந்த இறைவனை அடையத் துதிப்பாயாக.
766. பண்ணாகப் பாடிப் பலிகொண்டாய் பாரேழும்
பண்ணாகச் செய்த பரஞ்சோதீ - பண்ணா
எருதேறி யூர்வாய் எழில்வஞ்சி எங்கள்
எருதேறி யூர்வாய் இடம்.
தெளிவுரை : இசையோடு பாடி, பிச்சை ஏற்கின்றாய். ஏழு உலகங்களையும் பண்ணுதலாகச் செய்த ஒளி மயமானவனே! அலங்காரம் செய்த இடபத்தை வாகனமாகக் கொண்டவனே. அழகிய வஞ்சி என்னும் சிவத்தலம் நாம் வணங்கும் இறைவனுக்கு உகந்த இடமாகும்.
767. இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார்
இடமானார்க்(கு) ஈந்த இறைவர் - இடமாய
ஈங்கோய் மலையார் எழிலார் சிராமலையார்
ஈங்கோய் மலையார் எமை.
தெளிவுரை : தனது இருப்பிடமாகத் திருவேகம்பத்தைக் கொண்டவர். இடப்பாகத்தை உமாதேவியார்க்கு அளித்தவர். தனக்கு இடமாக ஈங்கோய் மலையையும் திருச்சிராப்பள்ளியையும் உடையவர். நமக்கு வரும் துன்பங்களை இங்கு ஓயும்படி செய்வார்.
768. எமையாள வந்தார் இடரான தீர
எமையாளும் எம்மை இமையோர் - எமையாளும்
வீதிவிடங் கர்விடம(து) உண்டகண் டர்விடையூர்
வீதிவிடங் கர்விடையூர் தீ.
தெளிவுரை : நமது துன்பங்களைப் போக்க வந்தவர். இவர் இமையோர் தலைவன், வீதிவிடங்கப் பெருமான் நீலகண்டர். திருவிடைமருதூரில் எழுந்தருளியிருப்பவர் . அவரே நமக்குக் கதியாவார் என்க.
769. தீயான மேனியனே செம்பவளக் குன்றமே
தீயான சேராமற் செய்வானே - தீயான
செம்பொற் புரிசைத் திருவாரூ ராயென்னைச்
செம்பொற் சிவலோகம் சேர்.
தெளிவுரை : செந்நிற மேனியனே ! செம்பவளக் குன்றமே. தீமைகள் நம்மை வந்து அடையாமல் செய்பவன் இவனே. செம்பொன் மதில்களையுடைய திருவாரூராய் என்னைச் செம்பொற் சிவலோகத்தில் சேர்ப்பாயாக.
770. சேர்கின்ற சிந்தை சிதையாமல் செய்வானே
சேர்கின்ற சிந்தை சிதையாமல் - சேர்கின்றோம்
ஒற்றியூ ரானே உறவாரும் இல்லையினி
ஒற்றியூ ரானே உறும்.
தெளிவுரை : உயிர்களுடன் புணர்ப்பாய் ! ஒற்றியூர்பவனே ! மனம் ஒன்றுபடும்படி செய்ய வல்லவனே ! உன்னைப் புகலிடமாகக் கொள்ள நாங்கள் வருகின்றோம். எங்களுக்கு வேறு உறவினர்கள் இல்லை. நீயே கதி என்பதாம். திருவொற்றியூரானே நீங்காப் பேருறவு.
771. உறுமுந்த முன்னே உடையாமல் இன்னம்
உறுமுந்த முன்னே உடையாமல் - உறுமுந்தம்
ஓரைந் துரைத்துற்(று) உணர்வோ(டு) இருந்தொன்றை
ஓரைந் துரைக்கவல்லார்க்(கு) ஒன்று.
தெளிவுரை : பஞ்சாட்சர மகிமை கூறியவாறு. இந்த உடம்பு அழிவதற்கு முன்பாக ஐந்தெழுத்தை உரைப்பாயாக. உயிரோடு இருக்கும்போதே நாம் ஓதினால் நற்கதி பெறலாம் என்றபடி. ஓர் ஐந்து - ஓர்ந்து உணர்தற்கு உரிய அவ்வைந்து,
772. ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல
ஒன்றைப் பகரில் ஒருகோடி - ஒன்றைத்
தவிரா(து) உரைப்பார் தளரார் உலகில்
தவிரார் சிவலோகந் தான்.
தெளிவுரை : பரணர் பாடிய இந்தச் சிவபெருமான் திரு அந்தாதியை முறைப்படி ஓதினால் சிவலோகத்தைத் தவறாமல் பெறலாம். மற்ற நூல்கள் பலவற்றை ஓதுவதை விட இது சிறந்தது என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
24. சிவபெருமான் திருமும்மணிக்கோவை (இளம்பெருமான் அடிகள் அருளிச் செய்தது)
திருமும்மணிக்கோவையை திருவாய் மலர்ந்து அருளிய இளம் பெருமான் அடிகளுடைய ஊர், குலம் முதலியன தெரியவில்லை. பெருமான் அடிகள் என்பது சிவ பெருமானைக் குறித்து வழங்கும் பெயராகும். இளம் என்னும் சொல்லும் சேர்ந்திருத்தலின் இப்பெயர் முருகக் கடவுளைக் குறிக்கக்கூடும். கடவுட் பெயரை மக்களுக்கு இட்டு வழங்கும் முறைப்படி இந் நூலின் ஆசிரியரும் இவ்வாறு பெயரிட்டு அழைக்கப் பட்டிருத்தல்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர்.
இம்மும்மணிக்கோவையின்கண் உள்ள பாடல்கள் யாவும் செறிவு உடையன. இறைவனை முன்னிலைப் படுத்தி உரையாடி மகிழும் நிலையில் பாடிய பாடல்களும், இறைவனைக் கண்டு காமுற்ற தலைவியின் துயர் உரைக்கும் அகத்துறைப் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

திருச்சிற்றம்பலம்
அகவல்
773. முதல்வன் வகுத்த மதலை மாடத்து
இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புய லுள்விழு துறீஇப்
புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்
எறிவளி எடுப்பினும் சிறுநடுக் குறாநின்
அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
இலங்குவளைத் தனிப்போது விரித்த
அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.
தெளிவுரை :  நான்முகன் படைத்த தூண்களை உடைய மாடத்தில் இடப் பக்கத்திலுள்ள மலையில் பொருந்திய தெய்வத்தன்மையுள்ள தகழியில் பள்ளிச் செம்புயலுள் விழுந்த தேவருலகம், உயர்ந்த முத்தமாகிய பேரொளி. காற்று வீசினாலும் சிறிதும் அசையாத உன் பாத நிழல் அளியுமாறு வைத்த உச்சியின்மீது விளங்குகின்ற வளைந்த திங்களாகிய மலர்மாலையை நீ அணிந்ததன் காரணம் யாது?
வெண்பா
774. மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின்
கீறு தடுப்பக் கிடக்குமே - நீறடுத்த
செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனி
எந்தாய்நின் சென்னி இடை.
தெளிவுரை : நீறு பூசிய செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனியை உடைய எம் தந்தையே ! தலை முடியில் இருக்கும் கங்கையாறு பிறைச் சந்திரனின் இரு பக்கக்கீற்றுக்கள் தடுத்ததனால் தேங்கிக் கிடக்கிறதோ?
கட்டளைக் கலித்துறை
775. இடைதரில் யாமொன்(று) உணர்த்துவ(து)
உண்டிமை யோர்சிமையத்
தடைதரு மூரிமந் தாரம்
விராய்நதி வெண்ணிலவின்
தொடைதரு துண்டங் கிடக்கினும்
தொண்டர் ஒதுக்கியிட்ட
புடைதரு புல்லெருக் குஞ்செல்லு
மோநின் புரிசடைக்கே.
தெளிவுரை : இடம் தந்தால், யாம் உணர்த்துவது ஒன்று உண்டு. அது யாது எனில், தேவர்கள் உச்சியில் இருந்த பெருமையுள்ள மந்தார மலர் விரவிவரும் நதியாகிய வெண்ணிலவின் மாலைத் துண்டம் கிடந்தாலும் தொண்டர்கள் ஒதுக்கியிட்ட நிறைந்த எருக்க மலர்கள் நின் புரிசடைக்கு ஏற்புடையனவோ?
அகவல்
776. சடையே, நீரகம் ததும்பி நெருப்புக் கலிக்கும்மே
மிடறே, நஞ்சகம் துவன்றி அமிர்து பிலிற்றும்மே
வடிவே, முளியெரி கவைஇத் தளிர்தயங் கும்மே
அடியே, மடங்கல்மதம் சீறி மலர்பழிக் கும்மே
அஃதான்று, இனையஎன்(று) அறிநிலம் யாமே முனைதவத்
தலைமூன்று வகுத்த தனித்தாட்
கொலையூன்று குடுமி நெடுவே லோயே.
தெளிவுரை : கூர்மையான முத்தலைகளை அமைத்த முத்தலைச் சூலத்தை ஏந்தியவரே ! உமது கூடை நீர்ப்பாகம் ததும்பி நெருப்பு கொழுந்துவிடும். கழுத்து விடம் பொருந்தி அமிழ்தம் வெளிப்படுத்தும். உம்முடைய வடிவம் மூண்டெறியும். தீ கிடைவிட்டுத் தளிர் தயங்கும். பாதம் கூற்றுவன் செருக்கை அழிக்கும். அதுவும் அல்லாமல் இவைபோன்றவை இனியும் உளவோ? அறியோம். முத்தலைச் சூலம் தனித்தாளையும் கொலையூன்று குடுமியையும் உடையது.
வெண்பா
777. வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த
காலைநீர் எங்கே கரந்தனையால் - மாலைப்
பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ
இறைக்கூறாய் எங்கட்(கு) இது.
தெளிவுரை : மாலையில் பிறைக்கீற்றையும் நெற்றிக் கண்ணையும், இடப்பாகத்தில் உமா தேவியையும் கொண்டுள்ளவரே ! கடலின் உச்சியையும் ஆகாயத்தின் வயிற்றையும் ஊழிக் காலத்துப் பெரு நீரையும் எங்கே மறைத்து வைத்தீர்? இதற்கு எங்களுக்குப் பதில் சொல்வீராக.
கட்டளைக் கலித்துறை
778. இதுநீர் ஒழிமின் இடைதந்
துமையிமை யத்தரசி
புதுநீர் மணத்தும் புலியத
ளேயுடை பொங்குகங்கை
முதுநீர் கொழித்த இளமணல்
முன்றில்மென் றோட்டதிங்கள்
செதுநீர் ததும்பத் திவளஞ்செய்
செஞ்சடைத் தீவண்ணரே.
தெளிவுரை : உமாதேவி உம்மை மணந்த காலத்தும், இடையில் இந்தப் புலித்தோல் ஆடையையா அணிந்திருந்தீர்? பொங்கு கங்கை முதுநீர் கொழித்த இளமணல் முன்றிலில் மென்றோட்ட திங்கள் நீர் ததும்ப திவளும்செய் செஞ்சடையையும் தீ வண்ணத்தையும் உடையவரே ! இந்த ஆடை வேண்டாம். நீக்கி விடுங்கள்.
அகவல்
779. வண்ணம், ஐஞ்சுதலை கவைஇப்  பவள மால்வரை
மஞ்சுமி விலகிப் பகல்செருக் கும்மே
என்னைப் பழமுடைச் சிலகலத் திடுபலி பெய்வோள்
நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தே
அஃதான்று, முளையெயிற்றுக் குருளை இன்துயில் எடுப்ப
நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும் கொடும்பிறைத்
தேமுறு முதிர்சடை இறைவ
மாமுறு கொள்கை மாயமோ உடைத்தே.
தெளிவுரை : நிறம், ஐந்து தலைகளாகப் பிரிந்துள்ள பவள மால் வரை மேகத்தை விலக்கி பகல் போல் பிரகாசிக்கும். பழைய புலால் நாற்றத்தையுடைய கபாலமாகிய சிறிய பிச்சைப் பாத்திரத்தில் பிச்சை போடுகிறவள் நெஞ்சத்தை ஈர்க்கும் வஞ்சம் என்னிடம் உண்டாகிறது. அஃதல்லாமல், முளைக்கின்ற சிறிய பற்களையுடைய முயல்குட்டி தூக்கத்திலிருந்து எழுந்து நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும் வளைந்த பிறை தவழும் முதிர்சடையை உடைய இறைவ இந்தக் கொள்கை மாயம் உடையது.
வெண்பா
780. உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கை
புடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ - சடைமுடிமேல்
முன்னநாள் பூத்த முகிழ்நிலவோ முக்கணா
இன்னநாள் கண்ட(து) இவள்.
தெளிவுரை : இறந்தவர்களின் தலைகளைக் கொண்டு கட்டிய மாலையே கொங்கைகளின் இடையில் பொருந்திய வெள்ளெருக்கும் பூவோ, உன் சடை மேல் பண்டைக் காலத்தில் பூத்த முகிழ் நிலவோ, மூன்று கண்களை உடையவனே ! இவள் இன்று கண்டது எது?
கட்டளைக் கலித்துறை
781. இவளப் பனிமால் இமையத்(து)
அணங்குகற் றைச்சடைமேல்
அவளப்புத் தேளிர் உலகிற்(கு)
அரசி அதுகொண்டென்னை
எவளுக்கு நீநல்ல தியாரைமுன்
எய்திற்றெற் றேயிதுகாண்
தவளப் பொடிச்செக்கர் மேனிமுக்
கண்ணுடைச் சங்கரனே.
தெளிவுரை : வெண்மையான திருநீறு அணிந்து, செவ்வானம் போன்ற மேனியையும் மூன்று கண்களையும் உடைய சங்கரனே ! உமையாள் அப்பனிமால் இமயத்து அணங்கு. கற்றைச் சடைமேல் உள்ள கங்கை அந்த தேவர் உலகத்து அரசி. இவர்கள் இருவருள் யாரை நீ முதலில் அடைந்தாய்? சொல்வாயாக என்பதாம்.
அகவல்
782. கரதலம் நுழைத்த மரகதக் கபாடத்து
அயில்வழங்கு குடுமிக் கயிலை நாடநின்
அணங்குதுயில் எடுப்பிற் பிணங்குநிலாப் பிணையல்
யாமே கண்டதும் இலமே தாமா
மூவா எஃகமும் முரணும்
ஓவாது பயிற்றும் உலகமால் உளதே.
தெளிவுரை : கரதலம் நுழைந்த மரகதம் பதித்த கதவுகளையும் உயர்ந்த சிகரங்களையும் உடைய கயிலை நாடனே! அணங்கு துயின்ற எடுப்பில் கோபித்துக் கொண்ட திங்களாகிய மாலையை யாம் பார்த்ததில்லை. அழியாத சூலமும் முரணும் ஒழியாமல் பயிற்றும் உலகம் மயங்குகின்றதே. அது ஏன்?
வெண்பா
783. உளரொளிய கங்கை ஒலிதிரைகள் மோத
வளரொளிதேய்ந்(து) உள்வளைந்த(து) ஒக்கும் கிளரொளிய
பேதைக் கருங்கண் பிணாவின் மணாளனார்
கோதைப் பிறையின் கொழுந்து.
தெளிவுரை : ஒளி பொருந்திய கங்கையின் ஒலி பொருந்திய திரைகள் மோதுவதால் சந்திரன் வளர்கின்ற ஒளி தேய்ந்து உள் வளைந்து காணப்படுகிறது. ஒளி மிகுந்த பேதைக் கருங்கண் பிணாவின் மணாளனார் கோதை பிறையின் கொழுந்து ஒக்கும் என்க.
கட்டளைக் கலித்துறை
784. எழுந்திரள் தெண்ணில வஞ்சிநின்
கூரிருள் வார்பளிங்கின்
செழுந்திரட் குன்றகஞ் சென்றடைந்
தாலொக்கும் தெவ்வர்நெஞ்சத்
தழுந்திரள் கண்டத் தவளப்
பொடிச்செக்கர் மேனிநின்றோர்
எழுந்திரட் சோதிப் பிழம்புமென்
உள்ளத்(து) இடங்கொண்டவே.
தெளிவுரை : சந்திரனின் ஒளி மிகுதியால் கயிலை மலையின் பளிங்கின் செழுந்திரள் குன்று அகம் சென்று அடைந்தது போல் இருக்கும். பகைவர் நெஞ்சத்தில் அழுந்திரள் நீலகண்டமும் திருநீறும் செக்கர் வானம் போன்ற உன் மேனியின் சோதிப் பிழம்பும் என் மனத்தில் இடம் கொண்டன.
அகவல்
785. கொண்டற் காரெயிற்றுச் செம்மருப்(பு) இறாலின்
புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமி
வரையோன் மருக புனலாள் கொழுந
இளையோன் தாதை முதுகாட்டுப் பொருநநின்
நீறாடு பொலங்கழல் பரவ
வேறாங்கு கவர்க்குமோ வீடுதரு நெறியே.
தெளிவுரை : கொண்டல் கார் எயிற்றுச் செம்மருப்பு தேனடை புண்படுகின்ற உச்சியில், புலவு நாறுகின்ற சிகரங்களை உடைய பர்வத ராஜனின் மருக ! கங்கா தேவியின் மணாளனே ! முருகப் பெருமானின் தந்தையே ! சுடுகாட்டில் கூத்தாடுபவனே ! நின் நீறாடு பொலங்கழல் வீடு அடைவதற்குரிய வழியைப் பெற, துணை செய்வதாக.
வெண்பா
786. நெறிவிரவு கொன்றை நெடும்படற்கீழ்க் கங்கை
எறிதிரைகள் ஈர்த்தெற்ற ஏறிப் - பொறிபிதிர
ஈற்றராக் கண்படுக்கும் இண்டைச் சடைச்செங்கண்
ஏற்றரால் நீரும் இடர்.
தெளிவுரை : கொன்றை மலர் பொதிந்த சடையில் கங்கை வீசுகின்ற அலைகள் இழுத்து மோத, ஏறி நிலை தடுமாறிய பாம்பு உறங்கும் தலை மாலை பொருந்திய சடையை உடைய இறைவனை வணங்கினால் இடர் நீங்கும்.
கட்டளைக் கலித்துறை
787. இடர்தரு தீவினைக்(கு) எள்கிநை
வார்க்குநின் ஈரடியின்
புடைதரு தாமரைப் போதுகொ
லாம்சரண் போழருவிப்
படர்தரு கொம்பைப் பவளவண்
ணாபரு மாதைமுயங்(கு)
அடைதரு செஞ்சுடர்க் கற்றையொக்
குஞ்சடை அந்தணனே.
தெளிவுரை : துன்பத்தைக் கொடுக்கிற தீவினைக்கு மிகவும் வருந்துகின்றவர்களுக்கு, உன்னுடைய இரண்டு பாதங்களில் அருச்சிக்கப்பட்ட தாமரை மலர்களே சரணாகும் ! அருவிப் படர்கின்ற கொம்பு போல்பவளை, முயங்குகின்ற பவள வண்ணன் செஞ்சுடர்க் கற்றையொக்கும் அந்தணனே.
அகவல்
7880 அந்த ணாளர் செந்தொடை ஒழுக்கமும்
அடலோர் பயிற்றும்நின் சுடர்மொழி ஆண்மையும்
அவுணர் நன்னாட்(டு) இறைவன் ஆகிக்
குறுநெடுந் தானை பரப்பித் தறுகண்
மால்விடை அடரத் தாள்நிமிர்ந் துக்க
காய்சின அரவுநாண் பற்றி நீயோர்
நெடுவரை நெளிய வாங்கிச்
சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்றே.
தெளிவுரை : அந்தணர்களுடைய செந்தொடையாகிய ஒழுக்கமும் ஆண்மையுடையோர் பயிற்றுகின்ற உன் ஒளி மிகு சொல் ஆண்மையும், அரக்கர்களுடைய நன்னாட்டிற்கு இறைவனாகி சிறிய பெரிய சேனையைப் பரப்பி அஞ்சாமையுடைய மால்விடை அடரத் தான் நிமிர்ந்து செலுத்த கோபமிக்க பாம்பை நாணாகக் கொண்டு, மேரு மலையை வளைத்து சுடுகணை எரி நிமிர்த்து செலுத்திய போது,
வெண்பா
789. ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம்
ஈன்ற நிலவோடும் இவ்வருவான் - மூன்றியங்கு
மூதூர் வியன்மாடம் முன்னொருகால் துன்னருந்தீ
மீதூரக் கண்சிவந்த வேந்து.
தெளிவுரை : அந்தச் சமயத்தில் புனமாலை தோளில் இலங்க பூர்ண சந்திரன் அளித்த நிலவோடும் வருவான்; திரிபுரங்களை முன்னொரு சமயம் தீக்கு இரையாக்கினான். கண்சிவந்து மீதூர - மிகவும் கோபங்கொண்டு இறைவன் இச்செயலைச் செய்தான் என்க.
கட்டளைக் கலித்துறை
790. வேந்துக்க மாக்கடற் சூரன்முன்
னாள்பட வென்றிகொண்ட
சேந்தற்குத் தாதையிவ் வையம்
அளந்ததெய் வத்திகிரி
ஏந்தற்கு மைத்துனத் தோழனின்
தேன்மொழி வள்ளியென்னும்
கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம்
மால்விடைக் கொற்றவனே.
தெளிவுரை : நம் இறைவன், கடல் மத்தியிலிருந்த சூரபத்மன் அழியக் காரணமாயிருந்த வெற்றியுடைய முருகப் பெருமானுக்குத் தந்தை; இவ்வுலகை அளந்த, சக்கரப் படையை ஏந்திய திருமாலுக்கு மைத்துனன்; தேன்மொழி வள்ளி என்னும் கொடி போலும் இடையை உடையவளுக்கு மாமன்; வெம்மால் விடைக் கொற்றவன் என்க. இத்தகைய சிறப்புக்களை உடையவன் சிவபெருமான் என்பதாம்.
அகவல்
791. கொற்றத் துப்பில் ஒன்றை ஈன்ற
துணங்கையஞ் செல்வத்(து) அணங்குதரு முதுகாட்டுப்
பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுநநின்
நேர்கழல் கவைஇ இலங்கிதழ்த் தாமம்
தவழ்தரு புனல்தலைப் படுநர்
அவல மாக்கடல் அழுந்தலோ இலரே.
தெளிவுரை : கொற்றத்துப்பில் ஒன்றை ஈன்ற துணங்கைக் கூத்தை ஆடுகின்ற சுடுகாட்டில், பேய்களின் கூட்டத்திற்குத் தலைவியாகிய துர்க்கையின் கணவனே ! உன்னுடைய வீரக் கழலைக் கட்டி இலங்குகின்ற மாலையை அணிந்து ஆடுதலை மேற்கொண்டவர் துன்பக் கடலில் அழுந்த மாட்டார்கள் என்பதாம்.
வெண்பா
792. இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென்(று)
உலகெலாம் சென்றுழல்வ ரேனும் - மலர்குலாம்
திங்கட் குறுந்தெரியல் தேவர்க்காட் செய்வதே
எங்கட் குறுந்தெரியின் ஈண்டு.
தெளிவுரை : இவர் யாதும் இல்லாதவரோ என்று இளைஞர் பழி சொல்ல, பிச்சைக்கு என்று உலகமெல்லாம் சுற்றித் திரிவரேனும், மலர் நிறைந்த பிறையாகிய சிறிய கண்ணியை அணிந்த தேவனாகிய சிவபெருமானுக்கு ஆட்செய்வதே எங்களுடைய கடமையாகும்.
கட்டளைக் கலித்துறை
793. ஈண்டுமுற் றத்(து)ஒற்றை மால்விடை
ஏறியை அம்முனைநாள்
வேண்டிமுற் றத்திரிந்(து) எங்கும்
பெறாது வெறுங்கைவந்தார்
பூண்டஒற் றைச்செங்கண் ஆரமும்
கற்றைச் சடைப்புனலும்
நீண்டஒற் றைப்பிறைக் கீளும்எப்
போதும்என் நெஞ்சத்தவே.
தெளிவுரை : இப்போது நம் முற்றத்தில் வந்துள்ள ஒற்றை மால் விடை ஏறியை (இறைவனை), முன்பு அவனைக் காண வேண்டி எங்கும் திரிந்து காணப் பெறாது வெறும் கையோடு வந்தார். எனினும், அவர் பூண்ட ஒற்றைச் செங்கண் ஆரமும், கற்றைச் சடை புனலும், நீண்ட ஒற்றைப் பிறைக் கீளும், எப்போதும் என் நெஞ்சத்தை விட்டு விலகவில்லை.
முன்பு தேடியும் காணாதவர், இன்று என் வீட்டு முற்றத்தில் வந்துள்ளார் என்பதாம்.
அகவல்
794. நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தே
மடவோர் விரும்புநின் விளையாட் டியல்போ
மருள்புரி கொள்கைநின் தெருளா மையோ
யாதா கியதோ எந்தை நீதியென்(று)
உடைதலை நெடுநிலா வெறியல்
கடைதலென் றருளிச் சூடிய பொருளே.
தெளிவுரை : உன் நெஞ்சில் வஞ்சத்தைக் கொண்டுள்ளீர். அறிவில்லாதவர் அறிய முடியாதவாறு விளையாடுவது உன் இயல்போ. மயக்கத்தைப் புரிகிற உன் கொள்கை தெளிவில்லாமையாலா? யாதானும் ஆகுக. எந்தை நீதியென்று கபாலத்தையும் பிறைச் சந்திரனையும் மயக்கத்தை நீக்கும் பொருள்கள் என்று சூடுகின்றாயோ அறியேன்.
வெண்பா
795. பொருளாக யானிரந்தால் புல்லெருக்கின் போதும்
அருளான்மற் றல்லாதார் வேண்டின் - தெருளாத
பான்மறா மான்மறிக்கைப் பைங்கண் பகட்டுரியான்
தான்மறான் பைங்கொன்றைத் தார்.
தெளிவுரை : நான் விரும்பி யாசித்தால், புன்மையான எருக்கம் பூவையும் தாரான். மற்றவர்கள் கேட்டால் தெருளாத பால் மறா மான் கன்றைக் கையில் உடைய பைங்கண் யானைத் தோலைப் போர்த்தவன், தான் அணிந்திருக்கும் பைங்கொன்றை மாலையை மறவாமல் தருவான். இது வஞ்சனை அல்லவா?
கட்டளைக் கலித்துறை
796. தாரிளங் கொன்றைநல் ஏறு
கடாவித் தலைமைமிக்க
ஏரிள மென்முலைப் பொன்மலை
யாட்டிக்(கு)எற் றேயிவனோர்
பேரிளங் கொங்கைப் பிணாவொடுங்
கூடிப் பிறைக்கொழுந்தின்
ஓரிளந் துண்டம் சுமந்(து)ஐயம்
வேண்டி உழிதருமே.
தெளிவுரை : இளங்கொன்றைத் தார் அணிந்து, இடப வாகனத்தில் ஏறி, தலைமை மிக்க இளமுலை நாயகியாகிய பார்வதி தேவிக்கு, இவன் ஓர் பேரிளம் கொங்கைப் பிணாவாகிய கங்கையோடும் கூடி பிறைச் சந்திரனைச் சுமந்து பிச்சை ஏற்று எதற்காக அலைய வேண்டும் என்று தெரியவில்லையே !
அகவல்
797. உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும்
இடருறு முதுகாட்டுச் சீரியல் பெரும
புகர்முகத் துளைக்கை உரவோன் தாதை
நெடியோன் பாகநின் சுடர்மொழி ஆண்மை
பயிற்று நாவலர்க்(கு)
இடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே.
தெளிவுரை : பேய் உறங்கும் துன்பம் மிகுந்த சுடுகாட்டில் இருக்கும் பெருமானே ! விநாயகப் பெருமானின் தந்தையே ! திருமாலை இடப்பாகத்தில் கொண்டவனே ! நீர் திரிவதை விட்டுவிட்டு, உன் சுடர்மொழி ஆண்மை பயிற்றும் நாவலர்க்கு, துன்பத்தைக் கொடுக்கிற தீவினைகளை அழிப்பது எளிதாகும்.
வெண்பா
798. எளியமென்(று) எள்கி இகழாது நாளும்
அளியம்ஆட் செய்தாலும் ஐயோ - தெளிவரிய
வள்கயிலை நீள்பொருப்ப வான்தோய் மதிச்சடையாய்
கொள்கையிலை எம்மாற் குறை.
தெளிவுரை : வளப்பம் பொருந்திய கயிலை மலையை உடையவனே !  ஆகாயத்தில் உறையும் சந்திரனைச் சடையில் வைத்துள்ளவனே ! நாங்கள் எளிமையானவர்கள் என்று எள்ளி இகழாமல் அரும் செய்ய வேண்டுகிறோம். இதுவே எங்கள் குறையாகும். வேறு நினைவு ஒன்றுமில்லை.
கட்டளைக் கலித்துறை
799. குறையாப் பலியிவை கொள்கஎன்
கோல்வளை யும்கலையும்
நிறையாக்கொண் டாயினிச் செய்வதென்
தெய்வக்கங் கைப்புனலில்
பொறைபாய் ஒருகடல் நஞ்சுண்ட
கண்டா பொடியணிந்த
இறைவா இடுபிணக் காடசெம்
மேனியெம் வேதியனே.
தெளிவுரை : தெய்வ கங்கைப் புனலில் பொறைபாய் கடல் விஷத்தை உண்டாய். நீலகண்டப் பெருமானே ! திருநீறு அணிந்த இறைவா ! சுடுகாட்டில் வாசம் செய்பவனே ! செம்மேனி எம் வேதியனே ! என் வளையல்களையும் ஆடையையும் கப்பமாகக் கொண்டாய். இனிச் செய்வது என்ன இருக்கிறது ? குறையாத இந்தப் பிச்சையை ஏற்றுக் கொள்வாயாக என்பதாம்.
அகவல்
800. வேதியர் பெரும விண்ணோர் தலைவ
ஆதி நான்முகத்(து) அண்ட வாண
செக்கர் நான்மறைப் புத்தேள் நாட
காய்சின மழவிடைப் பாகநின்
மூவிலை நெடுவேல் பாடுதும்
நாவலம் பெருமை நல்குவோய் எனவே.
தெளிவுரை : வேதியர் பெரும ! தேவர்களுக்குத் தலைவனே ! ஆதியில் நான்கு முகத்தையுடைய அண்டவாண ! சிவந்த நான்மறையோதும் தேவர் நாட! கோபமிக்க காளையை வாகனமாக உடையவனே ! உன் முத்தலைச் சூலத்தைப் பாடுவோம். நீ நாவன்மையாகிய சிறப்பை நல்குவோன் என்பதற்காகப் பாடுவதும் என முடிக்க.
வெண்பா
801. எனவே உலகெலாம் என்றிளைஞர் ஏச
நனவே பலிதிரிதி நாளும் - சினவேங்கைக்
கார்க்கயிலை நாட களிற்றீர் உரியலாற்
போர்க்கையிலை பேசல்நீ பொய்.
தெளிவுரை : பொய் பேசுகின்றாய் என்று இளைஞர் இகழ, உண்மையாகவே நீ நாள்தோறும் பிச்சை ஏற்றுத் திரிகின்றாய். சின வேங்கைக் கார்க்கயிலை நாடனே ! யானைத்தோல் அல்லாமல் வேறு போர்வையில்லை என்று பொய் பேசாதே என்பதாம்.
கட்டளைக் கலித்துறை
802. பொய்நீர் உரைசெய்தீர் பொய்யோம்
பலியெனப் போனபின்னை
இந்நீள் கடைக்கென்று வந்தறி
யீர்இனிச் செய்வதென்னே
செந்நீர் வளர்சடைத் திங்கட்
பிளவொடு கங்கைவைத்த
முந்நீர்ப் பவளத் திரட்செக்கர்
ஒக்கும் முதல்வனே.
தெளிவுரை : நீர் பொய் வார்த்தை சொன்னீர். யாம் பொய் கூற மாட்டோம். பிச்சைக்கென்று போன பிறகு இந்த நீண்ட வாசலுக்கு நீர் வந்ததில்லை. இனி என்ன செய்யப் போகிறீர். செம்மையான தன்மை கொண்ட வளர் சடைத் திங்கட் பிளவோடு கங்கை வைத்த, கடலில் உண்டாகும் பவளம் போன்ற செந்நிறமாகக் காட்சியளிக்கும் முதல்வனே !
திருச்சிற்றம்பலம்
25. மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை (அதிராஅடிகள் அருளி செய்தது)
இம் மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவையினைப் பாடிய அதிராவடிகளுடைய வரலாறு தெரியவில்லை. மூத்தபிள்ளையார் என்பது ஆனை முகக் கடவுளைக் குறிக்கும். சிவபிரானுடைய மக்கள் இருவரில் இவர் முதற்கண் தோன்றியமையால், ஆனைமுகக் கடவுள் இவ்வாறு குறிக்கப் பெறுகிறார். தம்மை அன்பினால் வழிபடும் மெய்யடியார்களின் பிறவிப் பிணியைப் போக்க வல்லவர் ஆனைமுகக் கடவுள். அவருடைய திருவடிகளை எண்ணி வாழ்வார்க்கு மனக்கவலை இல்லை.
திருச்சிற்றம்பலம்
நேரிசை ஆசிரியப்பா
803. ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்
குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன்
மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்
கடதடக் கபோலத்(து) ஓரிட மருப்பிற்
கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்
சேவடி யுகளம் அல்லது
யாவையும் இலமினி இருநிலத் திடையே.
தெளிவுரை : ஒரு நெடுங் கங்கை இறுங்குறும் பசுமையான புள்ளிகளை உடைய மும்முகமும் செந்நுதி நாலிணர் வெண்மையான குடலின் புலால் நாற்றம் வீசுகின்ற கொல்லும் தன்மையுள்ள சூலப் படையையுடைய சிவபெருமானது மகன் விநாயகன். மாமதம் பொருந்திய கோபமுடைய கடதடக் கபோலத்தில் இடப் பக்கத் தந்தத்தில் குடலைப் போன்ற வயிற்றை உடைய முரண்பாடு உடைய குழவியினது இரண்டு பாதங்களை வணங்குவதல்லாது வேறு எதுவும் இந்தப் பெரிய நிலத்தில் இனிப் பெற்றிலோம் என்பதாம். சூலப்படை மூன்று கிளைகளாகப் பிரிந்து நுனி கூர்மையாக உள்ளது.
வெண்பா
804. நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலந்துளங்கச் சப்பாணி கொட்டும் - கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.
தெளிவுரை : பிள்ளைத்தமிழ் பிரபந்தத்தில் சப்பாணிப் பருவம் நான்காவதாகும்.
பூமி நடுங்க, மேரு மலை நடுங்க, ஆகாயம் முழுவதும் நடுங்க கை கொட்டும். கலந் துளங்கொள் காமனை எரித்த சிவபெருமான் பெற்றெடுத்த கருங்கையையும் மதச்சுவட்டிலிருந்து பெருகும் மத மழையையும் உடைய விநாயகப்பெருமான் கை கொட்ட இவை அனைத்தும் நடுங்கும் என்க.
கட்டளைக் கலித்துறை
805. மணிசிந்து கங்கைதன் மானக்
குருளையை வாளரக்கர்
அணிசிந்த வென்றஎம் ஐயர்க்(கு)
இளங்கன்றை அங்கரும்பின்
துணிசிந்த வாய்ப்பெய்த போதகத்
தைத்தொடர்ந்(து) ஓர்பிறவிப்
பிணிசிந்து கார்முளை யைப்பிடித்
தோர்க்கில்லை பேதுறவே.
தெளிவுரை : மணியைச் சிந்துகின்ற கங்கையினுடைய சிறந்த குழந்தையை வாள் ஏந்திய அரக்கர் அழிய வென்ற சிவபெருமானுக்கு மகனாகிய இளங் கன்றைக் கரும்பின் துணி இந்த வாய்ப்பெய்த யானையைப் பின் தொடர்ந்தோர்க்கு இனி பிறப்பில்லை என்பதாம். இனி பிறவியுண்டோ என்ற மயக்கம் இல்லையென்க. விநாயகப் பெருமானை வணங்கியோர்க்கு இனி, பிறவித் துன்பம் இல்லை என்று கூறியவாறு.
அகவல்
806. பேதுறு தகையம் அல்லது தீதுறச்
செக்கர்க் குஞ்சிக் கருநிறத் தொக்கல் நாப்பண்
புக்கவண் இரும்பொறித் தடக்கையும்
முரணிய பெருந்தோட்
கொட்ட நாவி தேவிதன்
மட்டுகு தெரியல் அடிமணந் தனமே.
தெளிவுரை : மயங்கும் இயல்பையுடையேம். அல்லது தீதுறச் செக்கர் குஞ்சிக் கருநிற உறவினர் மத்தியில் புகுந்த இரும்பொறித் தடக்கையும் முரணிய பெருந்தோள் கொட்ட கஸ்தூரி மணம் வீசும் தேவிதன் மணமிகுந்த மாலையின் அடி மணந்தனம்.
807. மேய கருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனை
ஓய மணியூசல் ஆடின்றே - பாய
மழைசெவிக்காற் றுந்திய வாளமர்க்கண் எந்தை
தழைசெவிக்காற் றுந்தத் தளர்ந்து.
தெளிவுரை : பொருந்திய கரிய கழுத்தையும், வெள்ளிய பற்களையும் உடைய சிவபெருமானது திண்சேனை ஓய மணியூசல் ஆடியது. விநாயகப் பெருமானது மழை செவிக்காற்று உந்திய வாளமர்க்கண் எந்தை தழை செவிக்காற்று உந்தத் தளர்ந்து ஆடியது என்க.
கட்டளைக் கலித்துறை
808. உந்தத் தளரா வளைத்தனம்
முன்னம்மின் ஓடைநெற்றிச்
சந்தத் தளரா ஒருதனித்
தெவ்வர்தந் தாளிரியூர்
விந்தத் தளரா மருங்கில்
கிளிபெற்ற வேழக்கன்றின்
மந்தத் தளரா மலர்ச்சர
ணங்கள் வழுத்துமின்னே.
தெளிவுரை : நெட்டித் தள்ளியதால் முன்னம் வளைத்தனம். மின்னுகின்ற முகபடாத்தை அணிந்த நெற்றி சந்தத்தளரா ஒப்பற்ற பகைவர் நடுங்க கிளியைப் போன்ற உமாதேவியார் தந்தார். அவர் யாரெனில், யானைக் கன்றின் உருவாய் அமைந்த விநாயகப் பெருமான். அவரது பாத கமலங்களை வணங்குவோமாக.
நேரிசை ஆசிரியப்பா
809. மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து
ஓவற விளங்கிய துளைக்கைக் கடவுளை
யாம்மிக வழுத்துவ(து) எவனோ அவனேல்
பிறந்த(து)இவ் வுலகின் பெருமூ தாதை
உரந்தரு சிரம்அரிந் தவற்கே வரைந்தது
மேருச் சிமையத்து மீமிசை
வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே.
தெளிவுரை : மின்னலோடும் கூடிய பெரிய மேகம் செய்த பெருமுழக்கத்தில் (இடி) ஒழிவில்லாமல் விளங்கிய யானை முகக் கடவுளை (விநாயகனை) யாம் மிகவும் துதிப்பதற்குக் காரணம் யாதென்றால், அவன் இன்றேல் பாரதக் கதை தோன்றியிராது. பிரமனது தலையை அரிந்த சிவபெருமானுக்காக மேரு மலையின் மீது பரதவன் மகளாகிய பரிமளகந்தியின் மகனாகிய வியாசர் பாரதத்தைச் சொல்லிக் கொண்டே வர விநாயகர் எழுதினார் என்க.
வெண்பா
810. மொழியின் மறைமுதலே முந்நயனத்(து) ஏறே
கழிய வருபொருளே கண்ணே - தெழிய
கலாலயனே எங்கள் கணபதியே நின்னை
அலா(து)ஐயனே சூழாதென் அன்பு.
தெளிவுரை : பாரதத்தை எழுதிய முதற்கடவுளே ! மூன்று கண்களை உடைய இடியேறு போன்றவனே ! கல்விக்கு அதிபதியே ! எங்கள் கணபதியே ! உன்னைத் தவிர வேறு எவரையும் என் அன்பு சூழாது என்க.
கட்டளைக் கலித்துறை
811. அன்பு தவச்சுற்று காரழல்
கொண்டெயில் மூன்றெரிய
வன்புத வத்துந்தை மாட்டுகின்
றாம்மதஞ் சூழ்மருப்பிற்(கு)
அன்பு தவக்கரத் தாளமிட்
டோடிக் கடுநடையிட்(டு)
இன்பு தவச்சென்று நீயன்று
காத்த(து) இயம்புகவே.
தெளிவுரை : அன்பு தவச்சுற்று ஆரழல் கொண்டு திரிபுரங்களை எரித்த உன் தந்தைக்காக வணங்குகின்றோம். தந்தத்துக்கு கைத்தாளமிட்டு ஓடி, விரைந்து சென்று நீ உதவி செய்தாய். நீயல்லவா அதைச் செய்தாய் சொல்லுக என்பதாம்.
இணைக்குறள் ஆசிரியப்பா
812. கவவுமணிக் கேடகக் கங்கணக் கரவனா
அறைகழல் அவுணரொடு பொருத ஞான்றுநீள்
புழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதை
விரைநனி கீறி மூரி
அஞ்சேறு புலர்த்தும் என்பர்
மஞ்சேறு கயிலை மலைகிழ வோயே.
தெளிவுரை : வளைத்த மணிக் கேடகமும் காப்பும் கரவோசையோடு வீரக் கழல் ஒலிப்ப, அரக்கரோடு போர் செய்த பொழுது நீண்ட துதிக்கையை உயர்த்த நெருப்பு என்று சொல்லத் தக்க பெருங்காற்று விரைந்து நன்றாகக் கீறி மூரி அஞ்சேற்றைக் காயச் செய்யும். முகில்கள் ஏறுகின்ற கயிலை மலையில் வாழும் தெய்வமே !
வெண்பா
813. மலைசூழ்ந்(து) இழிகின்ற மாசுணப்பொற் பாறை
தலைசூழ்ந்து தானினைப்ப(து) ஒக்கும் - கலைசூழ்
திரண்டகங்கொள் பேரறிவன் திண்வயிற்றின் உம்பர்க்(கு)
அரண்டகங்கொள் காலுயிர்க்கும் கை.
தெளிவுரை : மலையைச் சூழ்ந்து இறங்குகின்ற பெரும் பாம்பு போன்ற பொற் பாறை தலையிலிருந்து தொங்குகின்ற துதிக்கை, கலைசூழ்ந்து திரண்டு அகங்கொண்டு பேரறிவன்; திண் வயிறன்; தேவர்களது பூக்குடலை; காற்றை உயிர்க்கும் துதிக்கை. துதிக்கையின் சிறப்புக் கூறியவாறு.
கட்டளைக் கலித்துறை
814. காலது கையது கண்ணது
தீயது கார்மதநீர்
மேலது கீழது நூலது
வெற்பது பொற்பமைதீம்
பாலது தேனது தானது
மென்மொழிப் பாவைமுப்பூண்
வேலது வாளது நான்மறைக்(கு)
ஈன்ற விடுசுடர்க்கே.
தெளிவுரை : நான்மறைக்கு அளித்த பேரொளியாகிய விநாயகருக்கு உள்ளது காலளவும் நீண்ட துதிக்கை. கண் தீயைப் போன்றது. முப்புரி நூல் மேலும் கீழுமாக உள்ளது. ஆனைமுகக் கடவுளின் வடிவமோ அழகிய மலையைப் போன்றது. அதன்றியும் மேகம் போன்று மத நீர் பொழிவது; இனிய பால்போலும் தேன்போலும் மொழியினை உடைய பாலையின் முப்பூண் சேர்ந்த வேலும் வாளும் உடையது.
நேரிசை ஆசிரியப்பா
815. சுடர்ப்பிழம்பு தழைத்த அழல்தனி நெடுவேல்
சேய்மூ வுலகம் வலம்வர வேயக்
கொன்றையம் படலை துன்றுசடைக் கிடந்த
ஓங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி
அள்ளல் தீஞ்சுவை அருந்திய
வள்ளற்(கு) இங்கென் மனங்கனிந் திடுமே.
தெளிவுரை : சிவபெருமானிடமிருந்து விநாயகன் மாங்கனி பெற்ற செய்தி சொல்லப்படுகிறது. ஒளி வீசுகின்ற நீண்ட வேலையுடைய முருகப் பெருமான் மூன்று உலகங்களையும் சுற்றி வந்தார். ஆனால், கொன்றை மாலை அணிந்த சடையினையுடைய தந்தையாகிய சிவபெருமானை இந்த விநாயகர் வலம் வந்து மாங்கனியைப் பெற்று அதன் தீஞ்சுவையை அருந்தினார். அத்தகைய வள்ளற்கு இங்கு என் மனம் கனிந்திடும்.
வெண்பா
816. இக்கயங்கொள் மூவலயம் சூழேழ் தடவரைகள்
திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை - புக்கியங்கு
தேனாட வண்டாடச் செங்கீரை ஆடின்றே
வானாடன் பெற்ற வரை.
தெளிவுரை : (இது செங்கீரைப் பருவ நிகழ்ச்சியைக் குறிக்கிறது. கைகளையும் முழங்கால்களையும் ஊன்றிக்கொண்டு ஐந்தாம் திங்களில் பிள்ளைகள் தலை நிமிர்ந்தாடும் பருவம்.) வான நாடனாகிய சிவபெருமான் பெற்ற மலையைப் போன்ற ஆனைமுகக் கடவுள், இவ்வுலகைச் சுற்றியுள்ள பெருமலைகள் போன்ற திக்கு யானைகள் பெயர்த்து செங்கீரை ஆட, புக்கியங்கு தேனாட, வண்டாட, செங்கீரை ஆடியது. விநாயகக் கடவுளாகியவரை , செங்கீரை ஆடியது என முடிக்க.
கட்டளைக் கலித்துறை
817. பெற்றமெல் லோதி சிலம்பின்
மகள்பெறப் பிச்சுகந்த
மற்றவள் பிச்சன் மயங்கன்முன்
னோன்பின் னிணைமைமிகக்
கற்றவன் துயன் புறங்காட்
டிடைநடம் ஆட்டுகந்தோ
செற்றவெண் தந்தத் தவன்நம்மை
ஆட்கொண்டு செய்தனவே.
தெளிவுரை : மலையரசனாகிய பர்வதராஜன் மகளாகிய உமாதேவி மகனைப் பெற, பொறாமை கொண்டவளை மகிழ்விப்பான் வேண்டி சிவபெருமான் சுடுகாட்டில் நடனமாடியதைக் கண்டு மகிழ்ந்த விநாயகப் பெருமான், நம்மை ஆட்கொண்டு இவனும் நடனமாடினன் என்க. வெண்மையான தந்தங்களை உடைய விநாயகன் என்பதாம்.
இணைக்குறள் ஆரிரியப்பா
818. செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளை
வெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப்
பெருந்திரள் புழைக்கை
மண்முழை வழங்கும் திண்முரண் ஏற்றின்
பனையடர்ப் பாகன் றனதிணையடி
நெடும்பொற் சரணம் ஏத்த
இடும்பைப் பௌவம் இனிநீங் கலமே.
தெளிவுரை : செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக் குருளை வெள்ளிய தந்தமும் கூரிய நகங்களையும் திரண்ட வாயையும் பெரிய திரண்ட துளைக்கையையும் (துதிக்கை) மண்முழை முழங்கும் திண்முரண் காளையை ஊர்தியாக உடையவனது இரண்டு பாதங்களாகிய பொற் சரணங்களை ஏத்தத் துன்பக் கடலை நீங்கலாம்.
வெண்பா
819. அலங்கல் மணிகனகம் உந்தி அருவி
விலங்கல் மிசையிழிவ(து) ஒக்கும் - பலங்கனிகள்
உண்டளைந்த கோன்மகுடத் தொண்கடுக்கைத் தாதளைந்து
வண்டணைந்து சோரும் மதம்.
தெளிவுரை : மாலை போன்று மணியையும் பொன்னையும் கொழித்துக் கொண்டு மலையிலிருந்து விழும் அருவி போன்றது. அது எது எனில், பழங்களை உண்டு அளைந்த கோன் மகுடத்து ஒளி பொருந்திய கொன்றை மலரின் தாதளைந்து வண்டணைந்து ஒழுகும் மதம். அருவி போன்று மதம் பொழிந்தது.
கட்டளைக் கலித்துறை
820. மதந்தந்த மென்மொழி மாமலை
யாட்டி மடங்கல்கொன்ற
மதந்தந்த முக்கண் ணாற்குமுன்
ஈன்றவம் மாமலைபோல்
மதந்தந்த கும்பக் குழவிமந்
தாரப்பொன் னாட்டிருந்து
மதந்தந்த செம்மலன் றோவையம்
உய்ய வளர்கின்றதே.
தெளிவுரை : மதந்தந்த மென்மொழி உமாதேவியிடம் சிங்கத்தைக் கொன்ற மதந்தந்த மூன்று கண்களையுடைய சிவ பெருமானுக்கு முதல் மகனாகப் பிறந்தவன் விநாயகன். மந்தாரமரம் பொருந்திய பொன் உலகத்திலிருந்து மதந்தந்த அந்த விநாயகப் பெருமான் அல்லவோ இவ்வுலகம் உய்யுமாறு வளர்கின்றார்.
இணைக்குறள் ஆசிரியப்பா
821. வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப்
பொதும்பர்த் தும்பி ஒழிகின் றோச்சும்
பாரிடைக் குறுநடைத் தோடி ஞாங்கர்
இட்ட மாங்கனி
முழுவதும் விழுங்கிய முளைப்பனைத் தடக்கை
எந்தை அல்லது மற்று யாவுள
சிந்தை செய்யும் தேவதை நமக்கே.
தெளிவுரை : வளர்கிற கிளைகளை உடைய கற்பகச் சோலையில் விநாயகப் பெருமானாகிய யானை இடைவிடாது அரசு செய்யும். இவ்வுலகில் குறுநடையோடு எல்லா இடங்களிலும் இட்ட மாங்கனி முழுவதும் விழுங்கிய பனை மரம் போன்ற பெரிய கையை உடைய எமது தந்தையாகிய விநாயகப் பெருமானை அல்லது வணங்குவதற்கு உரிய வேறு தெய்வம் யாவுள. இவரைத் தவிர நமக்கு வேறு தெய்வம் இல்லை என்பதாம்.
வெண்பா
822. கேளுற்றி யான்தளர ஒட்டுமே கிம்புரிப்பூண்
வாளுற்ற கேயூர வாளரக்கர் - தோளுற்(று)
அறுத்தெறிந்து கொன்றழித்த அங்கயங்கண் மீண்டே
இறுத்தெறிந்து கொன்றழித்த ஏறு.
தெளிவுரை : உறவு உற்றி யான் தளருமாறு செய்யுமோ ? யானைத் தந்தத்திற்கு உரிய அணியைப் பூண்டு வாளுற்ற தோளணியை உடைய வாளேந்திய அரக்கர் தோள்களை அரிந்து கொன்றழித்தவன் ஆண் சிங்கம் போன்ற கணபதி என்றபடி.
கட்டளைக் கலித்துறை
823. ஏறு தழீஇயவெம் புத்தேள்
மருகவெங் குந்தவள
நீறு தழீஇயஎண் தோளவன்
செல்வவண் டுண்ணநெக்க
ஆறு தழீஇய கரதலத்(து)
ஐயநின் றன்னைஅல்லால்
வேறு தழீஇத்தொழு மோவணங்
காத வியன்சிரமே.
தெளிவுரை : ஏழு தழுவிய திருமாலின் மருக ! கங்கையைத் தழுவிய வெண்ணீறு பூசிய எண்தோள் எம்மானாகிய சிவபெருமானது செல்வ ! வண்டுண்ண மதநீர் தழுவிய துதிக்கையை உடைய ஐய ! உன்னை அல்லாமல் வேறு யாரையாவது என் சிரம் தொழுமோ? தொழாது என்க.
நப்பின்னைப் பிராட்டிக்காகக் கண்ணன் ஏறு தழுவிய நிகழ்ச்சியைக் குறிக்கிறார்.
நேரிசை ஆசிரியப்பா
824. சிரமே, விசும்பு போத உவரி இரண்டசும்பு பொழியும்மே
கரமே, வரைத்திரண் முரணிய விரைத்து விழும்மே
புயமே, திசைவிளம்பு கிழியச் சென்று செறிக்கும்மே
அடியே, இடுந்தொறும் இவ்வுலகம் பெயரும்மே
ஆயினும், அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ
நெஞ்சகத்(து) ஒடுங்குமோ நெடும்பணைச் சூரே.
தெளிவுரை : உன்னுடைய தலை ஆகாயம் வரை உயர்ந்து இரண்டு துளிகளைப் பொழியும். கைகளோ மலைகளோடு மோதி விழுமாறு செய்யும். தோள்களோ திக்குகளின் எல்லை கிழியுமாறு செய்து செறிக்கும். பாதங்களோ பதியும்போது இவ்வுலகம் பெயரும். என்றாலும், அஞ்சுடர் தழுவி நெடும் பணைச்சூர் நெஞ்சத்து ஒடுங்குமோ? ஒடுங்காது என்க.
வெண்பா
825. சூர்தந்த பொற்குவட்டின் சூளிகையின் வானயிர்த்து
வார்தந்(து) எழுமதியம் மன்னுமே - சீர்தந்த
மாமதலை வான்மதியம் கொம்பு வயிறுதித்த
கோமதலை வாண்மதியம் கொம்பு.
தெளிவுரை : சூர்தந்த பொன் போன்ற நிலா முற்றத்தைவிட மிக உயர்ந்து வளர்ந்து எழுகின்ற சந்திரன், உமாதேவி பெற்றெடுத்த விநாயகப் பெருமானது ஒளி பொருந்திய தந்தத்தைவிட உயர்ந்து பொருந்தியிருக்குமோ? இராது என்றபடி.
பதினோராம் திருமுறை முதல் தொகுதி முற்றிற்று.


























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக