செவ்வாய், 8 நவம்பர், 2011

11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-1 | பொன் வண்ணத் தந்தாதி (Part - I)



ராதே கிருஷ்ணா 09 - 11 - 2011 

12 திருமுறைகள்
    

11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-1 | பொன் வண்ணத் தந்தாதி

விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க 

11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-1 | பொன் வண்ணத் தந்தாதி (Part - I)


11ம் திருமுறையில் திருவாலவாய் உடையார்(ஈசன்), காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் பாடிய 1400 பாடல்களின் தொகுப்பும், அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. திருமுகப் பாசுரம் (திரு ஆலவாய் உடையார் அருளிச் செய்தது)
1. மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற(கு)
அன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்(கு)
உரிமையின் உரிமையின் உதவி, ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க;
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன்; தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்;
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
தெளிவுரை : மின்னலைப் போல் விளங்குகின்ற செம் பொன்னினாலும் இரத்தினங்களாலும் அமைந்த உப்பரிகைகள் நிறைந்த மதுரையிலிருக்கும் சிவனாகிய யாம் எழுதி விடுக்கும் திருமுகத்தை, பருவ காலத்து மேகம் போல் புலவர்களுக்குக் கைம்மாறு கருதாமல் கொடுக்கிறவரும் ஒளி பொருந்திய சந்திரனைப் போன்ற குடையின் கீழ் போரில் யானையைச் செலுத்துகிறவருமான சேரமான் பெருமாள் காண்க. தன்னைப் போல் நமதிடத்து அன்பனாகிய இன்னிசை யாழ்ப் பத்திரன் தன்னிடத்திற்கு வருகிறதனால், அவன் விரும்பிய வண்ணம் மிகுந்த திரவியங்களைக் கொடுத்து அனுப்புவீராக.
திருச்சிற்றம்பலம்
2. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் - 1 (காரைக்கால் அம்மையார் அருளிச் செய்தது)
காரைக்கால் அம்மையாருடைய வரலாறு பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணமான 12ம் திருமுறையில் விரிவாகக் கூறப்படுகிறது. அம்மையார் இல்லறத்தில் இருக்குங்கால் இலக்கண இலக்கியங்களைக் கற்றதாகவோ செய்யுள் பாடும் திறமடைந்து திகழ்ந்ததாகவோ கூறப்படவில்லை. அடியார்கட்கு அமுதளித்தல், வேண்டுவன நல்கல் முதலிய திருத்தொண்டுகளில் ஈடுபட்டிருந்ததாகவே கூறப்படுகிறது.  தம்மைக் கணவன் துறந்து விட்டான் என்பதை உணர்ந்தவுடன் அம்மையார் சதைப் பற்றுமிக்க தம்முடைய ஊனுடம்பை யொழித்து எற்புடம்பை அருள வேண்டுகிறார். அம்மையார் வேண்டிய படியே எற்புடம்பு அமைவதோடு தெய்வத் தன்மையும் மிகுதியாக அமைகிறது. தலையால் நடத்தல் முதலிய புதுமைகளும் நிகழ்கின்றன.
தெய்வீக முதிர்ச்சியினால் உள்ளத்திலிருந்து அருட் பாடல்களும் தோன்றுகின்றன. அவ்வாறு தோன்றிய பாடல்கள் தாம் மூத்த திருப்பதிகங்கள்.
திருச்சிற்றம்பலம்
2. கொங்கை திரங்கி நரம்பெழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர்பெண்பேய்
தங்கி யலறி யுலறுகாட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும்வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும்எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங்காடே.
தெளிவுரை :  மார்பகங்கள் வற்றி, நரம்புகள் மேல் எழுந்து, கண்கள் குழி விழுந்து, பற்கள் விழுந்து, வயிறு குழி விழுந்து தலை மயிர் சிவப்பாகி, கோரைப் பற்கள் இரண்டும் நீண்டு, கணுக்கால் உயர்ந்து நீண்ட கால்களையுடைய ஓர் பெண் பேய் தங்கி, அலறி, காய்ந்த காட்டில் தாழ்ந்த சடைகள் எட்டுத் திக்குகளிலும் வீசி அங்கம் குளிருமாறு ஆடும் எங்கள் அப்பன் இருக்கும் இடம் திருஆலங்காடாகும்.
3. கள்ளிக் கவட்டிடைக் காலைநீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்துமையை
விள்ள எழுதி. வெடுவெடென்ன
நக்கு வெருண்டு விலங்குபார்த்து
துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்
சுட்டிட முற்றும் சுளிந்துபூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும்எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : கள்ளிக் கிளைகளுக்கு இடையில் காலை நீட்டி கொள்ளிக் கட்டையை வாங்கி குழைத்து மையை அழித்து எழுதி நடுநடுங்குமாறு சிரித்து, மருட்சியடைந்து குறுக்கே நோக்கி, குதித்து சுடலையில் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தின் தீயானது சுடவும், சினக் குறிப்புக் கொண்டு மணலை அள்ளி அவிக்க, நின்று ஆடுகின்ற எங்கள் அப்பன் தங்கியிருக்கும் இடம் திரு ஆலங்காடாகும். இச்செய்யுளில் பேய்களின் செயல்கள் கூறப்பட்டன.
4. வாகை விரிந்துவெண் ணெற்றொலிப்ப,
மயங்கிருள் கூர்நடு நாளையாங்கே
கூகையோ(டு) ஆண்டலை பாடஆந்தை
கோடதன் மேற்குதித்(து) ஓடவீசி
ஈகை படர்தொடர் கள்ளிநீழல்
ஈமம் இடுசுடு காட்டகத்தே
ஆகம் குளிர்ந்தனல் ஆடும்எங்கள்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : பாலை நிலத்துக்குரிய வாகை மரத்தின் முற்றிய வெண்மையான நெற்றுக்கள் காற்றினால் ஒலி செய்யவும், அறிவை மயக்கும் திணிந்த இருளையுடைய நள்ளிரவில் கூகை (கோட்டான்) யோடு ஆண் தலை போன்ற வடிவுடைய பறவை பாடவும், ஆந்தை கொம்புடன் அதன் மேற்குதித்து ஓடுமாறு வீசி கொடி படர்ந்த கள்ளியின் நீழலில் ஈமம் அடுக்கப்பட்ட சுடுகாட்டில், உடல் குளிர்ந்து அனலில் ஆடுகின்ற எங்கள் அப்பன் இருக்கும் இடம் திருஆலங்காடாகும்.
5. குண்டில்ஓ மக்குழிச் சோற்றைவாங்கிக்
குறுநரி தின்ன அதனைமுன்னே
கண்டிலம் என்று கனன்றுபேய்கள்
கையடித்(து) ஓடிடு கா(டு)அரங்கா
மண்டலம் நின்றங்(கு) உளாளம்இட்டு,
வாதித்து வீசி, எடுத்தபாதம்
அண்டம் உறநிமிர்ந்(து) ஆடும்எங்கள்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : ஆழமான வேள்விக் குழியில் உள்ள சோற்றை எடுத்து குறுநரி தின்னவும், அதை முன்பே பார்க்கவில்லையே என்று பேய்கள் கோபங் கொண்டு கையடித்துச் சுடுகாட்டைச் சுற்றி ஆடும் அரங்காக வளைந்து சுற்றி வந்தும், மாறி வந்தும், எல்லா உலகங்களிலும் பொருந்துமாறு ஆடுகின்ற எங்கள் அப்பன் இருக்கும் இடம் திருவாலங்காடே.
6. விழுது நிணத்தை விழுங்கியிட்டு
வெண்தலை மாலை விரவப்பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளியென்று
பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழுதி துடைத்து முலைகொடுத்துப்
போயின தாயை வரவுகாணா(து)
அழுதுறங் கும்புறங் காட்டில்ஆடும்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : விழுதாக உள்ள ஊனை விழுங்கிவிட்டு, வெண்மையான தலைமாலையைப் பரவ அணிந்து, பேயானது தன்னுடைய குழந்தையைக் காளியென்று பெயரிட்டு, சிறப்புடன் வளர்த்து, தூசு அகற்றி, பால் கொடுத்துச் சென்ற தாயின் வரவைக் காணாமல் அழுது உறங்குகின்ற ஊழிக்கால ஈமத்தில் ஆடுகின்ற என் அப்பன் வாழும் இடம் திருஆலங்காடே.
7. பட்டடி நெட்டுகிர்ப் பாறுகாற்பேய்
பருந்தொடு கூகை பகண்டைஆந்தை
குட்டி யிடமுட்டை கூகைபேய்கள்
குறுநரி சென்றணங்(கு) ஆடுகாட்டில்
பிட்டடித் துப்புறங் காட்டில்இட்ட
பிணத்தினைப் பேரப் புரட்டிஆங்கே
அட்டமே பாயநின்(று) ஆடும்எங்கள்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : பட்டு அடிபட்ட நீண்ட நகத்தையும், மாறுபட்ட கால்களையும் உடைய பேய், பருந்து, கூகை, சீவற் பறவை, ஆந்தை ஆகியவை முட்டையிடவும் குறுநரி வெறியாடவும் பின்புறம் அடித்து, சுடுகாட்டில் இட்ட பிணத்தினை வெளியே எடுத்து, குறுக்கே பாய நின்று ஆடுகின்ற எங்கள் அப்பன் கோயில் கொண்டிருக்கும் இடம் திருஆலங்காடே.
8. சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட்(டு) ஓடிஆடித்
தழலுள் எரியும் பிணத்தைவாங்கித்
தான்தடி தின்றணங்(கு) ஆடுகாட்டிற்
கழல்ஒலி ஓசைச் சிலம்பொலிப்பக்
காலுயர் வட்டணை இட்டுநட்டம்
அழல்உமிழ்ந்(து) ஓரி கதிக்கஆடும்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : சுழலுகின்ற நெருப்புக் போன்ற கண்களையுடைய கொள்ளிவாய்ப் பேய்கள் ஒன்று கூடி துணங்கை என்னும் கூத்தை ஆடி, நெருப்பில் எறியப்படும் பிணத்தை எடுத்து அதன் ஊனைத்தின்று ஆடுகின்ற சுடுகாட்டில் கழலின் ஓசையைச் சிலம்பு ஒலிக்க, காலை உயர்த்தி வட்டனை என்னும் சுழன்றாடும் நடனம் நெருப்பைக் கக்கி நரியும் ஆட ஆடுகின்ற எங்கள் அப்பன் வாழும் இடம் திருஆலங்காடேயாகும்.
9. நாடும் நகரும் திரிந்துசென்று,
நன்னெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத்(து) இட்டமாடே
முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக்
காடும் கடலும் மலையும் மண்ணும்
விண்ணும் சுழல அனல்கை யேந்தி
ஆடும் அரவப் புயங்கன் எங்கள்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : நாடும் நகரும் திரிந்து சென்று நல்ல நெறியை விரும்பிய வரை மூடிப் புதைத்த சுடுகாட்டில் வந்தணைந்த பேய்க் கூட்டம் காடும், கடலும் மலையும் மண்ணும், விண்ணும் சுழலுமாறு நெருப்பைக் கையிலேந்தி ஆடுகின்ற, பாம்பை அணிந்து புயங்கக் கூத்தை ஆடுகின்ற எங்கள் தலைவன் கோயில் கொண்டிருக்கும் தலம் திருஆலங்காடேயாகும்.
10. துத்தங்கைக் கிள்ளை விளரிதாரம்
உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு,
தகுணிதந் தந்துபி தாளம்வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)
அத்தனை விரவினோடு ஆடும்எங்கள்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை என்ற ஏழு பண்களையும் இசைத்து, சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணி, துந்துபி, தாளம், வீணை, மத்தளம் கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை முதலிய வாத்திய வகைகளை இயக்கி அத்தன்மையோடு ஆடுகின்ற எங்கள் இறைவன் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருஆலங்காடேயாகும்.
11. புந்தி கலங்கி மதிமயங்கி
இறந்தவ ரைப்புறங் காட்டில்இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமைசெய்து
தக்கவர் இட்டசெந் தீவிளக்கா
முந்தி அமரர் முழலின்ஓசை
திசைகது வச்சிலம்(பு) ஆர்க்கஆர்க்க,
அந்தியில் மாநடம் ஆடும்எங்கள்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : அறிவு கலங்கி, மதி மயங்கி, இறந்தவர்களை மயானத்தில் வைத்து இறுதிச் சடங்குகளை நிகழ்த்தி ஈமச்சடங்கு செய்யும் உரிமை உடையவர் இட்ட தீயை விளக்காகக் கொண்டு, முன்பு தேவர்களது மத்தளத்தின் ஓசை திசைகள் தோறும் நிறைய, சிலம்புகள் மிகுதியாக ஒலிக்க, யுகமுடிவில் மாநடனம் செய்யும் எங்கள் இறைவன் தங்கியிருக்கும் இடம் திருஆலங்காடேயாகும்.
12. ஒப்பினை இல்லவன் பேய்கள்கூடி
ஒன்றினை ஒன்றடித்(து) ஒக்கலித்துப்
பப்பினை யிட்டுப் பகண்டை யாட
பாடிருந்(து) அந்நரி யாழ்அமைப்ப
அப்பனை அணிதிரு ஆலங்காட்டுள்
அடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும்வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே.
தெளிவுரை : ஒப்பில்லாதவனது, பேய்கள் கூடி ஒன்றை ஒன்று அடித்து, களிப்பு மிகுதியால் ஆரவாரித்து இசையை முழக்கி, பகண்டை பாடுதலுக்கு ஏற்ப யாழ் வாசித்தல் போல் நரி கூவ, இறைவனை அணியாகக் கொண்டுள்ள திருஆலங்காட்டுள் அடிகளை, முடிக்கப்படாமல் செடி போல் விரித்த மயிர் நிறைந்த தலையினையுடைய காரைக்காற் பேய் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் காரைக்கால் அம்மையார் பாடிய செந்தமிழ்ப் பாடல்கள் பத்தும் பாட வல்லவர் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
2. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் - 2(காரைக்கால் அம்மையார் அருளிச் செய்தது)
திருச்சிற்றம்பலம்
13. எட்டி இலவம் ஈகை
சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த
கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த
காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி
பாடக் குழகன் ஆடுமே.
தெளிவுரை : எட்டி, இலவம், ஈகை, சூரை, காரை, கள்ளி முதலிய மரங்களும் செடிகளும் சூழ்ந்ததும் கழுகுகளால் குடர் கௌவப்பட்ட பிணங்கள் நிறைந்ததுமான சுடுகாட்டில் பரந்து வட்டவடிவம் கொண்ட விழிகளையுடைய பேய் முழவங் கொட்ட, கூளி பாட, அழகன் ஆடுவான்.
இரண்டு, திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகிய நூல்கள்.
மூத்த திருப்பதிகங்கள் இரண்டினுள் சிவபெருமானுடைய தன்மைகள் முதலியன பேசப்படுகின்றன. பதிகங்களின் இறுதியில் அம்மையார் தம்மைக் காரைக்கால் பேய் என்று கூறிக் கொள்வதுடன் முதற்பதிகத்தைக் கற்று வல்லவர்கள் ஆனவர்கள் சிவகதி சேர்வர் என்றும், இரண்டாவது பதிகத்தைப் பாடப் பாபநாசம் ஆகும் என்றும் கூறுகிறார்.
14. நிணந்தான் உருகி நிலந்தான்
நனைப்ப நெடும்பற் குழிகட்பேய்
துணங்கை யெறிந்து சூழும்
நோக்கிச் சுடலை நவிழ்த்தெங்கும்
கணங்கள் கூடிப் பிணங்கள்
மாந்திக் களித்த மனத்தவாய்
அணங்கு காட்டில் அனல்கை
யேந்தி அழகன் ஆடுமே.
தெளிவுரை : தசையின் இழுது தீயினால் உருகி நிலத்தை நனைக்கவும், நீண்ட பல்லையும் குழிந்த கண்ணையும் உடைய பேய் துணங்கைக் கூத்து சுற்றிலும் ஆடவும், சுடலையை நோக்கி அவிழ்த்து கணங்கள் கூடி பிணங்களைத் தின்று வெறியாடுதலைச் செய்யும் காட்டில், அனலைக் கையிலேந்தி அழகன் ஆடுவான்.
15. புட்கள் பொதுத்த புலால்வெண்
தலையைப் புறமே நரிகவ்வ
அட்கென் றழைப்ப ஆந்தை
வீச அருகே சிறுகூகை
உட்க விழிக்க ஊமன்
வெருட்ட ஓரி கதித்தெங்கும்
பிட்க நட்டம் பேணும்
இறைவன் பெயரும் பெருங்காடே.
தெளிவுரை : பறவைகள் கொத்தித் தின்னுதலால் பொத்தல் செய்த புலால் வெண் தலையை வெளிப்புறத்தில் நரிபற்ற, அட்கு என்று அழைக்க ஆந்தை வீசவும், அருகில் சிறிய கோட்டான் அஞ்சுமாறு விழிக்க, ஊமன் என்னும் பறவை வெருட்டவும், நரியானது பெருங் குரலாற் கூவ, அந்த ஒலி விண்ணையே பிளக்குமாறு நடனம் ஆடும் இறைவன் பெயரும் இடம் சுடுகாடே.
16. செத்த பிணத்தைத் தெளியா(து)
ஒருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட்(டு)
எறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க
மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடம் கொண்டு
நட்டம் பெருமான் ஆடுமே.
தெளிவுரை : செத்ததென்று தெரியாமல் பிணத்தை ஒரு பேய் சென்று விரலால் சுட்டிக்காட்டிக் கத்தியும் உறுமியும் நெருப்பில் போட்டு விட்டுச் சென்று, ஒட்டி உலர்ந்து உள்வற்றிய வயிற்றை வருந்துமாறு அடித்துப் பல பேய்கள் அஞ்சியோட பித்த வேடங் கொண்டு பெருமான் நடனம் ஆடுவான்.
17. முள்ளி தீந்து முளரி
கருகி மூளை சொரிந்துக்குக்
கள்ளி வற்றி வெள்ளில்
பிறங்கு கடுவெங் காட்டுள்ளே
புள்ளி உழைமான் தோலொன்(று)
உடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப்
பள்ளி இடமும் அதுவே
யாகப் பரமன் ஆடுமே.
தெளிவுரை : முள்மரம் தீய்ந்து, முளரி என்னும் முள் செடியும் கருகி, மூளை சொரிந்து எழுந்து கள்ளியும் வற்றி விளாமரம் விளங்குகின்ற மிகக் கொடிய காட்டில் புள்ளிகளை உடைய ஆண்மான் தோலை முதுகில் போட்டுக் கொண்டு கோயிலாகிய இடமும் அதுவேயாக இறைவன் ஆடுவான்.
18. வாளை கிளர வளைவாள்
எயிற்று வண்ணச் சிறுகூகை
மூளைத் தலையும் பிணமும்
விழுங்கி முரலும் முதுகாட்டில்
தாளிப் பனையின் இலைபோல்
மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய்
கூளிக் கணங்கள் குழலோ(டு)
இயம்பக் குழகன் ஆடுமே.
தெளிவுரை : வாளைப் போல் விளங்க வளைந்த ஒளிவிடும் பல்லும் நிறமும் உடைய சிறிய கோட்டான் முளையோடு கூடிய தலையும் பிணமும் விழுங்கி ஒலிக்கும் சுடுகாட்டில் தாளிப் பனையில் இலை போன்ற மயிரும் தீப்போல் எரியும் வாயையும் கண்களையும் உடைய பேயும் கூளிகளின் கூட்டமும் குழல் ஓசையோடு வாசிக்க இறைவன் ஆடுவான்.
19. நொந்திக் கிடந்த சுடலை
தடவி நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித் திருந்தங்(கு) உறங்குஞ்
சிறுபேய் சிரமப் படுகாட்டின்
முந்தி அமரர் முழவின்
ஓசை முறைமை வழுவாமே
அந்தி நிருத்தம் அனல்கை
ஏந்தி அழகன் ஆடுமே.
தெளிவுரை : கிளறிக் கிடந்த சுடுகாட்டைத் தடவி அருந்தும் உணவு ஏதும் இன்றி நினைத்த வண்ணமாய் அங்கு உறங்கும் சிறுபேய் சிரமப்படுகின்ற சுடுகாட்டில் முன்பு தேவர்கள் மத்தளம் வாசிக்க முறைமை தவறாமல் யுகமுடிவாகிய அந்திப் பொழுதில் ஆடும் நடனத்தை , கையில் தீயை ஏந்தி இறைவன் ஆடுவான்.
20. வேய்கள் ஓங்கி வெண்முத்(து)
உதிர வெடிகொள் சுடலையுள்
ஓயும் உருவில் உலறு
கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள்
மாந்தி அணங்கும் பெருங்காட்டின்
மாயன் ஆட மலையான்
மகளும் மருண்டு நோக்குமே.
தெளிவுரை : மூங்கில்கள் உயர்ந்து உதிர்த்த வெண் முத்துக்கள் நாலாபக்கங்களிலும் சிதறிக் கிடக்கும் சுடலையுள் ஓய்ந்த நிலையில் வெளிறிக் கிடக்கும் கூந்தலையுடையதும் அலறுகின்ற பிளந்த வாயையுடையதுமான பேய்கள் ஒன்று கூடிப் பிணங்களைத் தின்று அணங்கு ஆடுகின்ற சுடுகாட்டில் சிவபெருமான் ஆட, பார்வதி தேவியார் மருண்டு பார்க்கும்.
21. கடுவன் உகளும் கழைசூழ்
பொதும்பிற் கழுகும் பேயுமாய்
இடுவெண் தலையும் ஏமப்
புகையும் எழுந்த பெருங்காட்டில்
கொடுவெண் மழுவும் பிறையும்
ததும்பக் கொள்ளென்(று) இசைபாடப்
படுவெண் துடியும் பறையும்
கறங்கப் பரமன் ஆடுமே.
தெளிவுரை : ஆண் குரங்கு சுற்றித்திரியும் மூங்கில்கள் நிறைந்த இளமரச் சோலையில் கழுகும் பேயும் இடுகின்ற வெண்தலையும் ஏமப்புகையும் எழுந்த சுடுகாட்டில் கொடுமையைச் செய்யும் வெள்ளிய மழுவும் பிறைச் சந்திரனும் ததும்ப, கொள்ளென்று இசை பாடவும், உடுக்கையும் பறையும் ஒலி செய்யவும், மேலோனாகிய இறைவன் ஆடுவான்.
22. குண்டை வயிற்றுக் குறிய
சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டை படர்ந்த இருள்சூழ்
மயானத்(து) எரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி
வெருட்டிக் கொள்ளென்(று) இசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள்
தாழ விமலன் ஆடுமே.
தெளிவுரை : குழி விழுந்த வயிறும் குறிய சிறிய நெடியதாய் விளங்கும் பேய் இண்டு என்ற காட்டுச் செடி படர்ந்த, இருள் சூழ்ந்த மயானத்தில் எரிகின்ற வாயையும் பற்களையும் உடைய பேயை அச்சுறுத்திக் குழந்தையைத் தடவி ஏற்றுக்கொள் என்று இசைபாட நெருங்கி விளங்கிய சடைகள் தொங்குமாறு இறைவன் ஆடுவான்.
23. சூடும் மதியம் சடைமேல்
உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
ஆட பாவம் நாசமே.
தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சடை மீது உடையவர். இடையில் பாம்பைக் கச்சையாகக் கட்டியுள்ளவர்; திருஆலங்காட்டில் எழுந்தருளியுள்ள இறைவன் அருளால் தீப்போன்ற வாயையும் பற்களையும் உடைய காரைக்கால் அம்மையார் பாடிய பத்துப் பாடல்களையும் பாடி ஆட பாவங்கள் இல்லாது போகும் என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
3. திருஇரட்டைமணிமாலை (காரைக்கால் அம்மையார் அருளிச் செய்தது)
திரு இரட்டை மணி மாலை என்பது கட்டளைக் கலித்துறை முன்னும் வெண்பாப் பின்னுமாக அந்தாதித் தொடையால் பாடப் பெறுவதாகும். இரட்டை மணிமாலை என்னும் நூலை முதன் முதலாகப் பாடியவர் காரைக்கால் அம்மையாரே என்று பலரும் எண்ணுகின்றனர். இவ் இரட்டை மணி மாலைக்கு முற்பட்டதாக வேறோர் இரட்டை மணி மாலையும் கிடைத்திலது.
உலக வாழ்வில் துன்பம் உண்டாகும் பொழுதும் உள்ளம் தளராது இறைவனையே போற்றுதல் வேண்டும். இறைவன் ஆணையின்றி இவ்வுலகத்தில் எதுவும் நிகழாது என்பது உணர்ந்து மறவாது போற்றும் அடியார்களை இறைவன் மீண்டும் பிறவாது காத்தருளுகின்றான்.
எண் தோள் முக்கண் எம்மானாகிய இறைவனுடைய திருவடிகளை வணங்கிப் போற்றுவோர் கடலனைய துன்பங்கள் அனைத்தையும் கடந்து ஈறில்லாத திருவடிப் பேற்றை எய்தி மகிழ்வர். மறைகட்கு எல்லாம் தலையாய திருஐந்தெழுத்தினை உருவேற்றிப் போற்றுவோர் இறைவன் கழல் அடைவர். மெய்யடியார்களைப் போற்றுவோரைக் கண்டு வினைகள் எல்லாம் நில்லாது ஒழிந்து போகின்றன. தீவினை வந்து அடையாதவாறு திருஐந்தெழுத்தை ஓதினால் உய்தி பெறலாம். இத்தகைய நுண் பொருள்கள் எல்லாம் இம்மாலையிற் காணலாம்.
திருச்சிற்றம்பலம்
கட்டளைக் கலித்துறை
24. கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும்
போ(து)அஞ்சி நெஞ்சம்என்பாய்த்
தளர்ந்திங்(கு) இருத்தல் தவிர்திகண்
டாய் தளராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத்(து)
இடைவளர் கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்மிருக்
குஞ்சென்னி ஈசனுக்கே.
தெளிவுரை : முன்வினை தூண்ட அது காரணமாக வெங்கும்பிக் காயத்துள் வந்து சேரும் பிறவித் துன்பம் அடர்ந்து வருத்தும் சமயத்தில் நெஞ்சம் என்று சொல்லப்படுகின்ற மனமே! அதற்கு நீ அஞ்சி, தளர்ந்திருத்தலைத் தவிர்ப்பாயாக. கங்கையையும் பிறையையும் எருக்கம் பூவையும் சென்னியில் அணிந்திருக்கும் ஈசனுக்குத் தளராமல் வணக்கம் செய்.
வெண்பா
25. ஈசன் அவன்அல்லா(து) இல்லை யெனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத்(து) என்றும்
பிறவாமைக் காக்கும் பிரான்.
தெளிவுரை : சிவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று நினைந்து, கடவுளின் பெருமையையும் தன்னுடைய சிறுமையையும் எண்ணி நாணத்தை அடைந்து, மனத்தில் இருத்தி, அவனது புகழைப் பேசி, மறவாமல் வாழ்வாரை மறுபடியும் பிறவி எடுக்காதவாறு செய்பவன் அவனேயாவான்.
26. பிரானென்று தன்னைப்பன் னாள்பர
வித்தொழு வார்இடர்கண்(டு)
இரான்என்ன நிற்கின்ற ஈசன்கண்
டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க்
கிடந்துபொம் மென்துறைவாய்
அராநின்(று) இரைக்கும் சடைச்செம்பொன்
நீள்முடி அந்தணனே.
தெளிவுரை : தலைவன் என்று தன்னைப் பல நாளும் துதித்துத் தொழுகின்றவரது துன்பங்களைப் பார்த்துக் கொண்டிராதவன். அவன் யாரெனில் கூட்டமான வண்டுகள் நெருங்கியுள்ள கொன்றை மாலையாகிய பொந்தில் உள்ள பாம்பு ஒலி செய்கின்ற சடையாகிய நீண்ட செம்பொன் முடியினையுடைய அந்தணனே யாவான்.
27. அந்தணனைத் தஞ்சமென்(று) ஆட்பட்டார் ஆழாமே
வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் கொந்தணைந்த
பொன்கண்டால் பூணாதே கோள்அரவம் பூண்டானே
என்கண்டாய் நெஞ்சே இனி.
தெளிவுரை : அழகிய தண்ணருளையுடைய சிவபிரானை அடைக்கலம் என்று ஏற்றுக் கொண்டவர்கள் பிறவிக் கடலில் ஆழ்ந்து விடாதவாறு வந்து அருள் செய்யும் பேராற்றலை உடையவன். கொத்தாகப் பொருந்திய பொன் ஆபரணங்களை அணியாமல் தீமையைச் செய்யும் பாம்பை பூண்டிருப்பவனை நெஞ்சே நீ நினை என்பதாம்.
28. இனிவார் சடையினில் கங்கையென்
பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை நாணில்என்
செய்திகை யிற்சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந்(து)
அன்றுசெந் தீயில்மூழ்கத்
தனிவார் கணைஒன்றி னால்மிகக்
கோத்தஎஞ் சங்கரனே.
தெளிவுரை : நீண்ட சடையில் உள்ள கங்கையைக் கண்டு இடப்பாகத்தில் உள்ள உமாதேவியார் நாணினால் நீ என்ன செய்வாய்? சினம் பொருந்திய திரிபுரங்கள் மூன்றையும் வெந்தழியுமாறு ஒப்பற்ற கணையைக் கோத்த சங்கரனே! இப்போது என்ன செய்வாய்! என்று ஏளனமாய்க் கேட்பது போல் உள்ளது.
மேருமலையை வில்லாகவும் திருமாலை அம்பாகவும் கொண்டார் என்று புராணம் கூறும்.
29. சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேல்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை அங்கொருநாள்
ஆவாவென்(று) ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை.
தெளிவுரை : சங்கரனை, தொங்குகின்ற சடையை உடையவனை, அந்தச் சடையில் சினம் பொங்கி எழுகின்ற பாம்பை உடைய புண்ணியனை, இறக்கும் அன்று துன்பத்தில் அமிழ்ந்தாமல் காப்பாற்றுகின்றவனை இடை விடாமல் நெஞ்சே நீ துதிப்பாயாக.
30. உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு
கேட்கிற்செவ் வான்தொடைமேல்
இரைக்கின்ற பாம்பினை என்றும்
தொடேல்இழிந்(து) ஓட்டந்(து)எங்கும்
திரைக்கின்ற கங்கையும் தேன்நின்ற
கொன்றையும் செஞ்சடைமேல்
விரைக்கின்ற வன்னியும் சென்னித்
தலைவைத்த வேதியனே.
தெளிவுரை : சொல்லப்படுவதும் ஒன்றுண்டு. அது யாதெனில், செவ்வானத்தைக் கற்றையாகத் தொகுத்தது போன்ற தொகுதியின் மேல் ஒலிக்கின்ற பாம்பை எப்போதும் தொடாதே. ஏனெனில் அது இறங்கி ஓடி விடும். அலை வீசுதலைச் செய்கின்ற கங்கையும் தேன் பொருந்திய கொன்றையும் செஞ்சடை மேல் மணம் வீசுகின்ற வன்னியும் தலையில் வைத்துள்ள வேதியனே!
31. வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்(கு)
ஆதியனை ஆதிரைநன் னாளானைச் - சோதிப்பான்
வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
கில்லேன மாஎன்றான் கீழ்.
தெளிவுரை : மறையை அருளியவனை, மறையின் உட்பொருளாக உள்ளவனை, வேதத்துக்கு ஆதியாக இருப்பவனை, திருவாதிரை நன்னாளுக்கு உரியவனை, அடியை ஆராய்ந்து கண்டறியும் பொருட்டு வலிமை தங்கிய பன்றியாய்ப் புகுந்து திருமாலும் அடியைக் காணமாட்டாது அறிய மாட்டேன் போற்றி என்றான்.
32. கீழா யினதுன்ப வெள்ளக்
கடல்தள்ளி உள்ளுறப்போய்
வீழா திருந்தின்பம் வேண்டும்என்
பீர்விர வார்புரங்கள்
பாழா யிடக்கண்ட கண்டன்எண்
தோளன்பைம் பொற்கழலே
தாழா(து) இறைஞ்சிப் பணிந்துபன்
னாளும் தலைநின்மினே.
தெளிவுரை : கீழான துன்ப வெள்ளக் கடலை அணுகாமல் அப்புறப்படுத்தி, உள்ளுறப் போய் வீழாதிருந்து இன்பம் வேண்டும் என்று சொல்வீர்கள். பகைவர்களது முப்புரங்கள் பாழாகுமாறு செய்த நீல கண்டன் எட்டுத் தோள்களை உடையவன். அவனது பைம் பொற் கழலைப் பொழுது போக்காமல் போற்றிப் பணிந்து எக்காலமும் சலியாது உறுதியுடன் நில்லுங்கள். உங்கள் கோரிக்கை øகூடும் என்பதாம்.
33. தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் - தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்.
தெளிவுரை : தலைமை பெற்ற திருஐந்தெழுத்தை இடைவிடாது கூறி எண்ணுதல் செய்து, வணங்கி, தலைமை பெற்ற பொருள்களை உணர்ந்தவர்கள் காண்பார்கள். தலைமை பெற்று உலகங்களை உடையவன். திருவாதிரைக்கு உரியவன். நஞ்சையுண்டு இருண்ட கண்டத்தை உடையவனது செம்பொற் கழலைக் காண்பார்கள் என முடிக்க.
34. கழற்கொண்ட சேவடி காணலுற்
றார்தம்மைப் பேணலுற்றார்
நிழற்கண்ட போழ்தத்து நில்லா
வினைநிகர் ஏதுமின்றித்
தழற்கொண்ட சோதிச்செம் மேனிஎம்
மானைக்கைம் மாமலர்தூய்த்
தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி
நம்அடுந் தொல்வினையே.
தெளிவுரை : வீரக்கழலணிந்த திருவடியைக் கண்ட அடியவரைப் போற்றியவர் சாயலைப் பார்த்த போது, சமானமில்லாத தழலைப் போன்ற ஒளியுடைய செம்மேனி எம்மானை மலர் கொண்டு அருச்சித்துத் தொழுதலைப் பார்த்தும் பொருந்தி நம்மை வருந்தும் பழமையான தீவினைகள் நிற்க மாட்டா என்பதாம்.
35. தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே
ஒல்லை வணங்கி உமையென்னும் - மெல்லியல்ஓர்
கூற்றானைக் கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீற்றானை நெஞ்சே நினை.
தெளிவுரை : துன்பத்தை உண்டாக்கும் தீவினை வந்து சூழாமுன், காலந் தாழ்த்தாது விரைவாக வணங்கி, உமாதேவி என்று கூறப் பெறும் மெல்லியலாளை ஒரு பாகத்தில் உடையவனும், நமனைத் தண்டித்தவனும் பொருந்தி விளங்குகின்ற திருநீற்றை அணிந்தவருமாகிய சிவபெருமானை நெஞ்சே நினைப்பாயாக.
36. நினையா(து) ஒழிதிகண் டாய்நெஞ்ச
மேஇங்கோர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையும்
தேறியோர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன்நந்
தாதைநொந் தாதசெந்நீ
அனையான் அமரர் பிரான்அண்ட
வாணன் அடித்தலமே.
தெளிவுரை : நெஞ்சமே! இங்கு ஒரு பற்றுக் கோடு என்று மனைவியையும் மக்களையும் நினையாமல் ஒழிவாயாக. மனம் தேறி, ஒப்பற்ற கங்கையாறானது புகுந்தும் ஈரமாகாத சடை முடியை உடையவனும், நம் தந்தையும், ஒளி குறைவு படுதல் இல்லாத செம்மையான தீயைப் போன்றவனும் தேவர்களுக்குத் தலைவனும் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருப்பவனுமாகிய இறைவனது பாதங்களைப் பற்றுக் கோடாகக் கொள்வாயாக என்பதாம்.
37. அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
முடித்தலமும் நீமுரித்த வாறென் - முடித்தலத்தின்
ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின்
நீறாடி நெய்யாடி நீ.
தெளிவுரை : நீ உன் திருவடிகளால் முன்பு இராவணனது இருபது தோள்களும் திருமுடிகளும் முரிந்தொழியுமாறு செய்த வகை எங்ஙனம்? உன் தலையில் கங்கையாறு படியுமாறு செய்பவன். அனலை ஏந்துபவன். நீறாடுதலைச் செய்பவன். நெய்யாடுதலை செய்பனாகிய உனக்கு இது எங்ஙனம் சாத்தியமாயிற்று என்பதாம்.
38. நீநின்று தானவர் மாமதில்
மூன்றும் நிரந்துடனே
தீநின்று வேவச் சிலைதொட்ட
வாறென் திரங்குவல்வாய்ப்
பேய்நின்று பாடப் பெருங்கா(டு)
அரங்காப் பெயர்ந்துநட்டம்
போய்நின்று பூதம் தொழச்செய்யும்
மொய்கழற் புண்ணியனே.
தெளிவுரை : நீ அரக்கர்களின் மூன்று பெரிய மதில்களையும் கலந்து உடனே எரியுமாறு வில்லேந்திய காரணம் என்ன? திரங்கிய பெரியவாயையுடைய பேய் நின்று பாட, ஊழிக்கால ஈமம் ஆடுமிடுமாகக் கொண்டு நடனமாடி பூதம் தொழச் செய்யும் வலிய வீரக்கழலை யணிந்த நல்வினை வடிவினனாகிய நீ இவ்வாறு செய்தது ஏன்? என்று முடிக்க.
39. புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் - திண்ணிய
கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த
அம்மானுக் காட்பட்ட அன்பு.
தெளிவுரை : புண்ணியங்கள் செய்தனவும், பொய்யான வழிகளில் சாராமல் எண்ணி ஒப்பற்ற திருஐந்து எழுத்துக்களும் பொருந்தின. இதற்குக் காரணம் ஆற்றல் மிக்க கையை உடைய யானையின் தோலைப் போர்த்தியுள்ளவனும். அயன், அரன், அரி என்னும் மூவுருவமும் உடைய தலைவனுமாகிய உன்னைத் தொழுது பெற்ற அன்பினாலேயாம்.
40. அன்பால் அடைவதெவ் வாறுகொல்
மேலதோர் ஆடரவம்
தன்பால் ஒருவரைச் சாரஒட்
டாதது வேயும்அன்றி
முன்பா யினதலை யோடுகள்
கோத்தவை ஆர்த்துவெள்ளை
என்பா யினவும் அணிந்தங்கோர்
ஏறுகந்(து) ஏறுவதே.
தெளிவுரை : உன்னை அன்பால் அடைவது எங்ஙனம்? உன் உடலின் மேல் ஓர் ஆடுகிற பாம்பு பொருந்தியிருக்கிறது. அது ஒருவரையும் தன்பக்கம் நெருங்க விடாது. அதுவும் அல்லாமல் முன்பு இறந்து பட்டவர்களின் தலையோடுகள் மாலையாகக் கோக்கப் பெற்று, வெண்மையான எலும்புகளையும் அணிந்து விடையின் மீது ஏறியுள்ளீர். உன்னை நெருங்குவது சாத்தியமா என்றபடி.
41. ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான்
ஆறெலாம் பாயும் அவிர்சடையார் - வேறோர்
படங்குலவு நாகமுமிழ் பண்டமரர்ச் சூழ்ந்த
தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு.
தெளிவுரை : இடபக் காளையை அல்லாமல் எம் பெருமானுக்கு வேறு வாகனம் இல்லையோ? கங்கையாறு முழுமையும் பாய்கின்ற ஒளியுடைய சடையை உடையவர்க்கு, அதுவும் அன்றி பாம்பு உலவுகின்றது. முன்பு தேவர்கள் பொருட்டு, பெரிய கடலில் தோன்றிய நஞ்சை உண்டவருக்கு இவை தாம் கிடைத்தனவோ?
42. தமக்கென்றும் இன்பணி செய்திருப்
பேமுக்குத் தாம்ஒருநாள்
எமக்கொன்று சொன்னால் அருளுங்கொ
லாமிணை யாதுமின்றிச்
சுமக்கின்ற பிள்ளைவெள் ளேறொப்ப
தொன்றுதொண்டைக் கனிவாய்
உமைக்கென்று தேடிப் பெறாதுட
னே கொண்ட உத்தமரே.
தெளிவுரை : சிவபிரானாகிய தமக்கு அடியவர்களாய் இருக்கின்ற எங்களுக்கு என்று கொடுத்தருள வேண்டுமென்றால் கேட்டால் அருளுவாரா? ஒப்பில்லாத வெள்ளிய இடபக் காளைப் போன்ற ஒன்றை, கோவைக் கனியைப் போன்ற சிவந்த வாயை யுடைய உமைக்கென்று தேடிப் பெறாமல் ஏற்றுக் கொண்ட உத்தமரே!
43. உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் - உத்தமனாம்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.
தெளிவுரை : எல்லாச் செயல்களாலும் சிறப்பாக வாழ்ந்திருந்தவர்களும் இறந்து போனால் உரியவர்கள் காய்ந்த மரம் கொண்டு சுடுவதற்கு முன்பு உயர்ந்தவனாய் பெரிய கடலில் வெளிப்பட்ட விஷத்தைப் பருகின நெய் முழுக்கு ஆடும் இறைவனது அன்பினாற் பொலிந்து நெஞ்சமே கேட்பாயாக. அதன் கண்ணே ஆழ்வாயாக.
திருச்சிற்றம்பலம்
4. அற்புதத் திருவந்தாதி (காரைக்கால் அம்மையார் அருளிச் செய்தது)
மெய்யறிவு கைவரப் பெற்ற காரைக்கால் அம்மையார் முதன் முதலாகப் பாடியருளியது இவ் அற்புதத் திருஅந்தாதியே என்பர். அற்புதத் திருவந்தாதி புதுமையான போக்குடையது. இவ் அந்தாதியின் சிறப்பை நோக்கியே சான்றோர் இவ் அந்தாதிக்கு அற்புதத் திருவந்தாதி என்று பெயர் கொடுத்தருளினர். இவ் வந்தாதி ஓதுவதற்கு இனிமையும் எளிமையும் உடையது. அறிதற்கரிய சிவஞானத்தின் இயல்பைத் தெளிவாக விளக்குவது. மெய்யன்போடு ஓதுவோர் உள்ளத்தை இவ் வந்தாதி உருக்கும் இயல்புடையது.
அம்மையார் தாம் பெற்ற திருவருள் மெய்யறி வினைத் தன்மை நிலையில் வைத்து உலகத்தார்க்கு அறிவுறுத்தும் பாடல்களும் தம்மைப் போன்ற அடியார்களுடைய இயல்பை விரித்துரைக்கும் பாடல்களும் சிவபெருமானுடைய அருட் கோலங்களையும் திருவருள் செயல்களையும் எண்ணிச் சிவபிரானை முன்னிலைப்படுத்தி அழைத்து உரையாடி மகிழும் பாடல்களும் அனைவருக்கும் இன்பத்தை அளிப்பன.
திருச்சிற்றம்பலம்
1. நீலகண்டன்
44. பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப(து) இடர்.
தெளிவுரை : எம்பெருமானே ! தேவர்கள் வணங்கிய உடனே அவர்களுக்கு அருள் செய்து கருமை நிறம் பொருந்திய கண்டத்து வானோர் பெருமானாக நிற்கும் நீ, நான் இவ்வுலகில் தோன்றி மொழி பயின்ற பின் எல்லாம் உன் திருவடிப் பேற்றில் அன்பு மிகுந்து நின் சேவடியே சேர்ந்தேன். என் பிறவித் துன்பத்தை எப்போது தீர்க்கப் போகிறாய்?
2. அன்பு அறாது
45. இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா(து) என்நெஞ் சவர்க்கு.
தெளிவுரை : சிவபெருமான் எம்முடைய இடரைக் களையார் என்றாலும், எம்பால் இரங்காமல் இருந்தார் என்றாலும், நாங்கள் செல்ல வேண்டிய வழியைக் காட்டாராயினும் சோதி வடிவமுள்ள தம் திருமேனியில் எலும்பு மாலை எப்போதும் நீங்காமல் இருக்கும் கோலத்தோடு தீயைத் திருக் கையிலேந்தி ஆடுகிற எம் தலைவருக்கு என் அன்பு என்றும் அறாது. என் நெஞ்சு அவருக்கே உரியது.
3. அவருக்கே
46. அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தன்றிப் - பவர்சடைமேற்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்(கு)
ஆகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.
தெளிவுரை : அவருக்கே அன்பாவதன்றி, கொடி போன்ற சடையின் மேல் துண்டாகத் திங்கள் பிளவைச் சூடுகின்ற அந்தப் பெருமானுக்கு அல்லாமல் வேறு ஒருவர்க்கு ஆளாவது இனி எந்தக் காலத்தும் இல்லை. எந்த நாளும் அவருக்கே ஆளாகக் கழியும் அன்றி வேறு யாருக்கும் ஆளாகாமலே அந்த நாட்கள் போகும்.
4. என்ன காரணம்?
47. ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத(து) என்கொலோ ! கேள்ஆமை - நீளாஆகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மையாட் கொண்ட இறை.
தெளிவுரை : அவன் திருமேனி சிவப்பாகத் தோன்றி, அணுகிய போது திருமிடறு வேறு நிறமாக இருப்பதைப் போலவே, பெருங் கருணை உடையவனைப் போல வலிய வந்து ஆண்டு கொண்டவன் என் அல்லலைத் தானாகவே அறிந்து போக்குவது முறையாக இருக்க, நான் பலமுறை முறையிட்டுக் கேளாமல் இருக்கிறான். இரண்டுக்கும் ஒரு பொருத்தம் இருக்கிறது.
5. பொதுவும் சிறப்பும்
48. இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான்; தோற்றி
இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான்; - இறைவனே
எந்தாய் எனஇரங்கும்; எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.
தெளிவுரை : பொதுவாக, உயிர்க் கூட்டங்களின் வினைக்கு ஈடாக அவர்களைத் தோற்றுவிக்கும் உடம்பினின்றும் பிரித்தும் செயல் புரியும் இறைவன், சிறப்பாகத் தன்னையன்றி வேறுயாரையும் புகலாக அடையாத அன்பர்களைத் துன்பத்தினின்றும் விடுவித்து, நலம் அருளுவான் என்ற கருத்தை இந்தப் பாட்டில் காரைக்கால் அம்மையார் வெளியிடுகின்றார்.
6. என் நெஞ்சத்தான்
49. வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்நஞ்சத் தாலிருண்ட மெய்யோளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தானென்பன் யான்.
தெளிவுரை : முன் நஞ்சை உண்டு அதனால் இருள் கப்பியதைப் போல கருமை நிறம் பெற்ற மொய்த்த ஒளியையுடைய கண்டம் உடையவனாகவே நான் பார்க்கிறேன். வானத்துக்குச் செல்ல வேண்டாம். தேவலோகத்துக்கும் செல்ல வேண்டாம். என் நெஞ்சமாகிய இடத்திலேயே அவனை எப்போதும் தரிசிக்கிறேன். மற்றவர்கள் என்ன சொன்னால் எனக்கு என்ன? நான் பார்ப்பதையே சொல்கிறேன்.
7. காரணமும் காரியமும்
50. யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேஅக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக்(கு) ஆளாயி னேன்.
தெளிவுரை : யான் தவமுடையேன். என் நெஞ்சு நல்ல நெஞ்சு; யான் பிறப்பு அறுக்க எண்ணினேன். யான் அந்த யானை உரியைப் போர்த்த நெற்றிக் கண்ணனும் வெண்ணீற்றை அணிந்த பெருமானுமாகிய சிவபெருமானுக்கு ஆளாகி விட்டேன்.
கஜாசுர சங்காரம் இறைவன் செய்த எட்டு வீரச் செயல்களுள் ஒன்று.
8. அவன் அருளின் தன்மை
51. ஆயினேன் ஆள்வானுக்(கு) அன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள்.
தெளிவுரை : இறைவனுக்கு நான் அடிமை ஆனேன். ஆன அப்பொழுதே யாராலும் மகவாகப் பெறுதற்கு அரியேன் ஆகிப் பிறவித் துயரைக் கடந்து விட்டேன். அஃது அல்லவா, புனிதமான புனலையுடைய கங்கையைத் திருமுடியிலே தாங்கியவனும் ஒப்பற்ற பொன் மலையாகிய மேருவைப் போன்ற தோற்ற முடையவனும் அனலை உள்ளங்கையில் தாங்கினவனுமாகிய ஆண்டவன் அருள் இருக்கும் வண்ணம்?
9. எல்லாம் அருளே
52. அருளே, உலகெலாம் ஆள்விப்ப(து) ஈசன்
அருளே, பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்; எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ(து) எனக்கு.
தெளிவுரை : பிறருக்கெல்லாம் சிறந்த பதவிகளைக் கொடுத்துப் பல வகை உலகங்களை ஆள்விப்பது இறைவன் அருளே. அந்த அருளே பிறப்பை அறுத்து முத்தி தருவது.; ஆனால் நானோ அவன் அருளாலே உண்மையான பொருளைக் காணும் நியமத்தை உடையவள். ஆதலால் அவன் அருளே, எனக்கு எல்லாக் காலத்தும் எல்லாப் பொருளும் ஆவது.
10. எனக்கு அரியது உண்டா?
53. எனக்கினிய எம்மானை, ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன்;- எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய(து) ஒன்று.
தெளிவுரை : என் உயிருக்கு இனிமை தரும் எம்பெருமானாகிய ஈசனை யான் என்றைக்கும் மனத்துக்கு இனிய பெருஞ் செல்வமாகப் பொதிந்து வைத்தேன். அவனையே எனக்கு உரிய பிரானாகக் கொண்டேன். அப்படிக் கொண்டவுடன் நான் மாறாத இன்பத்தை அடைந்தேன். இனிமேல் எனக்குக் கிடைப்பதற்கு அரியதாகிய பொருள் ஒன்று உண்டோ?
11. ஒன்றே
54. ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற்(கு) ஆளாம் அது.
தெளிவுரை : ஒன்றையே எப்போதும் நினைந்து வாழ்ந்தேன். அந்த ஒன்றையே துணிவாக உறுதி செய்து பிறவற்றினின்றும் நீங்கினேன். அந்த ஒன்றையே என் அந்தரங்கத்தினுள்ளே பொன்னைப் போலப் பொதிந்து இன்புற்றேன். அந்த ஒன்று கங்கையைத் தரித்தவனும் சந்திரனை அணிந்த ஒளி வீசும் சடாமுடியை உடையவனும் கொழுந்துவிடும் ஒளியை உடைய கனலையுடைய உள்ளங்கையைப் பெற்றவனுமாகிய சிவபெருமானுக்கு ஆளாகும் இந்த இன்பம்.
12. அது தானா?
55. அதுவே பிரான்ஆமா(று) ஆட்கொள்ளு மாறும்
அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு.
தெளிவுரை : அவர் தலைவராகும் வண்ணம் அதுதான்; அவர் அடியவரை ஆட் கொள்ளுமாறும் அதுதான்; இவ்வுண்மையை இப்போது அறிந்தோம். ஆனால் பனிக்கு வாடும் கொன்றை மாலையை அணிந்தவரும் விளக்கமான நெற்றியின் மேல் ஒப்பற்ற ஒற்றைக் கண்ணைப் படைத்தவருமாகிய சிவபெருமானுடைய பெருமை அது மட்டுமா?
13. ஏ பாவம் !
56. தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமேல் ஏபாவம் தான்,
தெளிவுரை : தகவுடையவர்கள் இல்லையா? அம்மையின் மேல் பாம்பு ஊராமல் இருக்க வேண்டுமானால் இறைவன் மார்பிலேயே அது புகும்படி செய்யக் கூடாது. அவனுக்கும் அம்மைக்கும் நெடுந் தூரமா? அவன் மார்புக்கு ஆபரணம் என்று சொல்கிறார்களே, அங்கேதான் தார் இருக்கிறதே, அது போதுமே! இந்தப் பாம்பு எதற்கு? இதுவரைக்கும் இருப்பது போலவே அது இருக்கும் என்பது என்ன நிச்சயம்? என்றேனும் ஒருநாள் மலைமகளைச் சாரலாம். அதை நினைத்தாலே பயமாய் இருக்கிறது! அப்படி ஆகி விட்டால் அதைப் போன்ற மகாபாவம் வேறு இல்லை.
14. பெருஞ்சேமம்
57. தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான்,
தானே பெருஞ்சேமம் செய்யுமால்; - தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து, பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து
தெளிவுரை : என்னுடைய நெஞ்சம் தானே தனியாக வேறு துணையின்றி இருக்கும் நெஞ்சம். இது தன்னைத் தானே உய்யக் கொள்ளும் பொருட்டு, ஒப்பற்ற, தன்னைப் பூணும் திருமேனியால் பொலிவு பெற்றுக் கொழுந்து பொங்கும் அழலின் வெம்மையைச் சேர்ந்த நஞ்சை உமிழும் நீண்ட நாகத்தை உடையவனைத் தியானம் செய்து, அவனைத் தனக்குள்ளே பெரிய சேமிப்பாகச் சேர்த்துக் கொள்ளும்.
15. அடி பொருந்தும் அன்பு
58. நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்(கு)
என்செய்வான் கொல்லோ இனி.
தெளிவுரை : தேவர்கள் தம் நலத்தையும் இறைவனை வழிபட்டால் அவை மிகும் என்பதையும் நினைந்து, சில காலம் தாழ்த்திருந்து, பிறகு நீண்ட மாலைகளால் இறைவனுடைய பாதத்தை அலங்காரம் செய்தும் அந்தத் திருவடியில் மனம் பொருந்த மாட்டார். எப்போதும் இடைவிடாது அவனையே நினைத்திருந்து, மின்னலைப் போன்ற பெரிய செம்மையுடைய சடையை உடையவனே மறையை எப்போதும் ஓதிக் கொண்டிருப்பவனே என்று வாழ்த்துகிற எனக்கு அவன் இனிமேல் என்ன செய்து அருளுவானோ?
16. இருமையிலும் இன்பம்
59. இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.
தெளிவுரை : என் நெஞ்சே, இப்போது நாம் உய்ந்து போகிறோம். இறைவன் திருத்தாளைச் சேர்ந்து விட்டோம். ஆகையால் இனி ஒரு துன்பமும் நாம் இல்லோம்; இதை இப்போது சிந்தித்துப்பார். கன்மங்களுக்கு உரிய வலிமையை உண்டாக்குவதும் தன்பால் விழுந்தவர் மீளாமல் இருக்கப் பண்ணுவதும் ஆகிய பிறவியாகிய ஒலித்தலையுடைய கடலை நாம் நீக்கி விட்டோம்.
சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்பன மூன்று வகை வினைகள், இவற்றில் நாம் செய்த பழவினைகளின் குவியலுக்குச் சஞ்சிதம் என்று பெயர். இந்தப் பிறவியில் அனுபவிக்க வாய்ந்த பகுதிக்கு பிராரப்தம் என்று பெயர். இங்கே செய்யும் புதிய வினைக்கு ஆகாமியம் என்று பெயர். இறைவன் தாளை இடைவிடாது சிந்திப்பார்க்கு இம்மை இன்பமும், மறுமை இன்பமும் எய்தும் என்பது இப்பாட்டின் கருத்து.
17. காண்பவர் மூவர்
60. காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாம் காதலால் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்(கு)
ஆதியாய் நின்ற அரன்.
தெளிவுரை : பழமையான உலகத்துக்கு மூல காரணமாக நின்ற சிவபெருமான், வடிவத்தை மட்டும் காண்பவர்களுக்கும் காணத்தக்க இயல்புடையவன். அன்பினால் இவன் நம் இறைவன் என்று எண்ணிக் கைதொழுது காணும் பக்தர்களுக்கும் காணுதல் கூடும். உள்ளே நிறைந்த பேரன்பால் காணுகிறவர்களுக்கும் அவர்களுடைய சித்தத்துக்குள்ளே சோதிமயமாகக் காட்சி அளிப்பான். முதல் நிலையினர் பொதுமக்கள். அடுத்த நிலையினர் பக்தர். கடைசியில் வருகிறவர் அநுபூதிமான்.
18. எப்படிச் சொல்வேன்!
61. அரனென்கோ நான்முகன் என்கோ அரிய
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரண் அழியத்
தானவனைப் பாதத் தனிவிரலால் செற்றானை
யானவனை எம்மானை இன்று.
தெளிவுரை : வலிமை அழியும்படி இராவணனைத் தன்னுடைய திருவடியிலுள்ள கட்டை விரலால் அடர்த்தவனை, இறைவனாகிய அவனை, என் தலைவனை இன்று அடியேன் அவன் பண்பை உணர மாட்டாதேன், அரன் என்பேனா? பிரம தேவன் என் பேனா? யாவர்க்கும் அரிய சர்வ சூட்சுமப் பொருளான பரம் பொருள் என்பேனா?
19. அருமையும் எளிமையும்
62. இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றும்ஓர்
மூவா மதியானை மூவேழ் உலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு.
தெளிவுரை : திருமாலுக்கும் நான்முகனாகிய பிரம தேவனுக்கும் இன்று போல அன்றும் அளப்பதற்கு அரியவனாக நின்றவனும் என்றைக்கும் முதுமை அடையாமல் உள்ள ஒப்பற்ற சந்திரனைத் தலையில் அணியாக உடையவனும் இருபத்தொரு உலகங்களுமாக உள்ளவனும் ஆகிய சிவபெருமானை உள்முகத்தே கண்டு அனுபவிக்கும் அனுபவம் இன்று நமக்கு எளிதாக இருக்கிறதே! இது என்ன வியப்பு!
20. எல்லாம் அவன்
63. அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே-அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.
தெளிவுரை : இறைவன் எல்லாவற்றையும் அறிபவனும் தானாக இருக்கிறான். உயிர்களுக்கு அறிவிப்பவனும் அவனாகவே இருக்கிறான். அறிவாகவும் அறிகின்றவனாகவும் தானே; அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே; விரிந்த சுடரும் விரிந்த பாரும் விரிந்த ஆகாயமும் ஆகிய அப்பொருள்களும் அவன்.
21. அட்டமூர்த்தி
64. அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.
தெளிவுரை : இயமானனாய், அட்டமூர்த்தியுமாய் ஞான மயனாகி வந்து நின்றானும் அவனே என்று பின் பகுதியில் கூட்டிப் பொருள் செய்க. இயமானனாய் ஆகிய அட்டமூர்த்தியுமாய் என்று சொல் வருவிக்க. அட்டமூர்த்தி என்பது மண், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் என்ற எட்டுமாம்.
22. பிறையும் பாம்பும்
65. வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து காண்மினோ - வந்தோர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
பிரானீரும் சென்னிப் பிறை.
தெளிவுரை : தேடி வந்து ஓர் இரவானது தன் இயல்பு பின்னும் இருண்டாற் போலக் கறுத்திருக்கும் கண்டத்தை உடையவரே, எங்கள் தலைவரே, உம்முடைய திருமுடியில் உள்ள பிறையாகிய இதனை ஊர்ந்து வந்து பற்றிக் கொள்வது போல இருக்கிறது, இந்தக் கொலைகாரப் பாம்பின் கருத்தை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.
பாம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள், அது உம்மிடம் புகல் அடைந்த பிறையை விழுங்கினாலும் விழுங்கி விடும் என்று அசதியாடுகிறார் அம்மையார்.
23. உள்ள நிறைவு
66. பிறையும், புனலும், அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க்(கு) ஆட்பட்டேம் என்றென்(று) இருக்குமே
எந்தையா உள்ளம் இது.
தெளிவுரை : பிறையையும் கங்கையையும் அனலுகின்ற பாம்பையும் தம் திருமுடிமேல் அணிந்த சிவபெருமான் எமக்கு இரங்காமல் இருப்பார் எனினும் நஞ்சை மிடற்றில் வைத்த எம் தந்தையாருக்கு நாம் ஆளாகிவிட்டோம் என்று பலகாலம் எண்ணி நிறைவோடு அமைதி பெற்றிருக்கும் எம்முடைய புண்படாத நெஞ்சமாகிய இது, இவ்வாறு எண்ணும் பக்தி நிலை எல்லாவற்றிலும் உயர்ந்தது.
24. சோதி தரிசனம்
67. இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா(று)
இதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே
இன்னுஞ் சுழல்கின்ற(து) இங்கு.
தெளிவுரை : இந்தச் சோதி வடிவம் அல்லவா இறைவனுடைய திருவுருவம் ஆகும் வண்ணம்? இது அல்லவா எனக்கு ஒரு பாதுகாப்பான இடம்? அனுபவத்தை மீண்டும் எண்ணிப் பார்க்கின்ற என் சிந்தனையில் மின்னுகின்ற சோதி வடிவாகி இன்னும் இந்த விழிப்பு நிலையிலும் சுழன்று கொண்டிருக்கிறது. இறைவனுடைய சோதியுருவக் காட்சி அனுபவநிலைக்கு, இட்டுச் செல்வது என்ற உண்மை இதனால் புலனாகிறது.
25. எதற்கு
68. இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத்(து) ஆடுவதும் என்னுக்கென்(று) ஆராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று.
தெளிவுரை : இங்கே அவனைக் காணாமல் இருந்து கொண்டு அவனைப் பற்றிக் குறை கூறுவது ஏன்? நாம் அதனை நேரிலே காணும் அன்று, எம்பெருமானே,
உன்னுடைய பெருமைமையும் மற்றவர்கள் கூறும் பழியையும் எண்ணாமல் எவ்விடத்திலும் பிச்சைக்காகத் திரிகின்ற இந்தக் கோலமும், மிக்க இரவில் சுடுகாட்டில் ஆடுவதும் எதற்காக? என்று கேட்போம். இப்படியெல்லாம் தாய் அன்பிலே காரைக்கால் அம்மையார் எண்ணுகிறார்.
26. தொங்கும் பொருள்கள்
69. ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே வைத்த அரவு.
தெளிவுரை : தொங்கும் கேசத்திலுள்ள சடைகள் பொன் மலையின் மேல் மின்னும் மின்னல்களைப் போல் உள்ளன. அவன் நீலகண்டப் பெருமான். கறுப்பான கழுத்தை உடையவன். பொன் மேனியில் அது சிறிது மாறுபாடாகத் தோன்றும். அவனுடைய பொன்னிறம் பெற்ற திருமார்பில் என்பு மாலையும் பாம்புகளும் விளங்கிப் புரண்டு தோன்றும். அக்கு - ருத்திராட்சம். தேவருடைய என்புகளையே இறைவன் மாலைகளாக அணிந்துள்ளான். அவை மற்ற தேவர்களின் பதவிகள் நிலையில்லாதன என்பதைக் காட்டுகின்றன.
27. பாம்பை அணையாதே
70. அரவம்ஒன்(று) ஆகத்து நீநயந்து பூணேல்
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண்.
தெளிவுரை : மூன்று அசுரர்களாகிய பகைவர்களுடைய வலிமையும் அழியும்படி அப்பகைவர்களுடைய மூன்று மதில்களாகிய திரிபுரங்களையும் ஓர் அம்பால் எய்தவனே, உன் திருமேனியில் ஒரு பாம்பையும் நீ விரும்பி அணிந்து கொள்ளாதே. வேறு ஒரு பொன்னாரத்தைப் பூண்பாயாக. நீ நயந்து பூணுகிறாய்; நான் பயந்து நடுங்குகிறேன் என்று தாய் அன்பினால் காரைக்கால் அம்மையார் இவ்வாறு பாடுகின்றார்.
28. எங்கும் பாம்பு
71. பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்(கு)
என்முடிவ தாக இவர்.
தெளிவுரை : இறைவராகிய இவர் கொலை புரிவதாகிய நாகப் பாம்பு ஒன்றை மார்பில் ஆபரணமாக அணிந்து, மற்றொரு பாம்பை, சிறந்து தோன்றும் புலித்தோல் ஆடையை இறுகக் கட்டும் அரை நாணாக மேலே விளங்கும்படி நன்றாகச் செறித்துக் கொண்டு மற்றொரு பாம்பை அழகிய திருமுடியின் மேல் அணிந்திருப்பதுமாகிய இந்தச் செயல் எல்லாம் அறிவில்லாத எனக்கு என்ன முடிவு உண்டாவதற்காக?
29. பேய்க் கோலம்
72. இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலங் கண்டார் பிறர்.
தெளிவுரை : இந்தச் சிவபெருமானுடைய தாமரைப் பூவின் அழகையுடைய சிவந்த திருமேனியில் சுடுகாட்டுத் திருநீற்றைப் பூசி எலும்பை ஆபரணமாக அணிந்த பேய் போன்ற வடிவத்தைப் பார்த்தவர்களாகிய அன்பர் அல்லாத பிறர் இந்தப் பெருமானுடைய உண்மையை உணரும் அறிவு வன்மையும் அருள் வன்மையும் இல்லாதவர்கள். அவர்கள் யாவரும் இப்பெருமானை இழித்துப் பேசுவதையே பாருங்கள்! என்ன அறியாமை இது!
30. சச்சிதானந்தமூர்த்தி
73. பிறர்அறிய லாகாப் பெருமையரும் தாமே
பிறர்அறியும் பேருணர்வும் தாமே - பிறருடைய
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து.
தெளிவுரை : வன்மையையுடைய பேய்களும் தாமும் கூடி மகிழ்ந்து மற்ற தேவர்களுடைய என்பைப் புனைந்து கொண்டு மயானத்தில் தீயில் கூத்தாடும் எம் பெருமானார் தாம் ஒருவரே அன்பர் அல்லாத பிறர் அறிவதற்கு இயலாத பெருமை உடையவரும் ஆவார். பிறர் தம்மை அறிவதற்குரிய பெரிய அனுபவ ஞானமாக இருப்பவரும் தாம் ஒருவரே ஆவார். மேற் சொன்ன மூன்று காரணங்களினால் அவர் (சத்து + சித்து + ஆனந்தம்) சச்சிதானந்த மூர்த்தி என்று சொன்னவாறாயிற்று.
31. அன்பைப் பெருக்கு
74. மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க்(கு) ஆட்பட்ட
பேரன்பே இன்றும் பெருக்கு.
தெளிவுரை : அறியாமை உடையையாக இருந்த நெஞ்சே, முன்பு துன்புற்ற நீ இப்போது மகிழ்கிறாய். பேயாகி விட்டோமே இனித் தாழ்ந்த நிலை வருமே என்று அஞ்சிய நீயும் மானிடரைப் போன்ற சிறப்பைப் பெற்று விளங்குகின்றாய். இதற்குக் காரணம் நீ பெரிய பாதுகாப்பான இடத்தைச் சேர்ந்து விட்டாய், யாருடைய எலும்புக்காக இருந்தாலும் இது தொடுவதற்கும் உரிய தன்று என்று பிறர் இகழ்வது போல இகழாமல் அதை அணிந்து கொண்டு ஊரூர்தோறும் பிச்சைக்காகத் திரிகின்ற இறைவருக்கு ஆளாகப் புகுந்ததற்குக் காரணமான பெரிய அன்பையே இன்னும் பெருகச் செய்வாயாக.
32. திருமார்பின் நூல்
75. பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற்(று) ஒக்கும் - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்.
தெளிவுரை : எல்லாப் பொருளுக்கும் முதலிலே உள்ளவனும் என் உயிர்க்குக் கண்ணைப் போன்றவனும் மூன்று புரங்களையும் பழங்காலத்தில் எரித்தவனும் அழியாதவனும் நெற்றியில் கண்ணை உடையவனுமாகிய சிவபெருமானுடைய திருமார்பில் உள்ள முப்புரி நூலானது, ஆராய்ந்து பார்த்தால், பெருகும் ஒளியை உடைய செம்மையான சடையின் மேல் உள்ள இளம் பிறையின் ஒரு கதிர் கீழே வந்து ஒழுகியதை ஒக்கும் என்பது இதன் பொருள்.
33. கோலமும் வடிவும்
76. நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுவந்த(து)
எக்கோலத்(து) எவ்வுருவாய்? எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்(து) அவ்வுருவே ஆம்.
தெளிவுரை : நூலைக் கற்று அதனால் வந்த அறிவையே பெரிதாக எண்ணி வீண் பேச்சுப் பேசி, நுட்பமான வாலறிவுலகத்தில் புகாதவர்கள் ஒரு பயனும் பெறாமல் திரிந்து கொண்டே இருக்கட்டும். நீலமணி போன்ற திருக்கழுத்தையுடைய பெருமானுடைய அனந்த கல்யாண குணங்களின், தொகுதியே, நான் மேலாக உவந்து ஏற்று வழிபடுவது; இறைவனை எந்தக் கோலத்தில், எந்த வடிவாக எண்ணி எத்தகைய தவம் செய்தாலும் அவன் அந்தக் கோலத்தில் அந்த வடிவுடையவனாகவே வந்து அருள் புரிவான்.
34. அணையாதார் பெறும் இன்பம்
77. ஆமா(று) அறியாவே வல்வினைகள் அந்தரத்தே
நாமாள்என்(று) ஏத்தார் நகர்மூன்றும் - வேமா(று)
ஒருகணையால் செற்றானை உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை அடும்.
தெளிவுரை : நன்மைகள் உண்டாகும் வழியைத் தீவினைகள் அறியா; நாம் இறைவனுக்கு அடிமைகள் என்பதை உணர்ந்து அவனைத் துதித்து வணங்காத மூன்று அசுரர்களுக்கு உரியனவாகிய, வானத்தில் பறந்த மூன்று நகரங்கள் வெந்து எரியும்படியாக ஓர் அம்பினால் அழித்தவனை மனத்தினால் தியானித்து அவனை நெருங்கிப் பக்தி செய்யாதவர்களை அந்த வினைகள் துன்புறுத்தும்.
35. இருள் இருக்கும் இடம்
78. அடுங்கண்டாய் வெண்மதியென்(று) அஞ்சி இருள்போந்(து)
இடங்கொண்(டு) இருக்கின்ற(து) ஒக்கும் - படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு.
தெளிவுரை : படத்தைக் கொண்டனவும் அழகிய கழுத்தை உடையனவும் ஆழமான வாயை உடையனவுமாகிய நாகப் பாம்புகளை அணிகலனாகக் கட்டியவனுடைய அழகையுடைய நீல மணி போன்ற கழுத்தில் உள்ள நஞ்சின் கறுப்பான அடையாளமானது, இந்த வெண்மதி நம்மை அழித்து விடும் என்று பயந்து இருளானது இங்கே வந்து இந்த இடத்தைப் பற்றிக் கொண்டு இங்கேயே தங்கியிருக்கிறதைப் போல் இருக்கும்.
36. வளராத மதி
79. மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான்
தளரமீ(து) ஓடுமேல் தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி.
தெளிவுரை : ஆலகால நஞ்சாகிய மறுவை அளித்த திருக்கழுத்தை உடைய பெருமானே! இளமையையுடைய பிறை, உம்முடைய நீண்ட சடையின் மேல் அணிந்துள்ள நாகப்பாம்பு தன்னை வருத்தும் என்று அஞ்சித் தேய்ந்து மனம் மறுகும், ஐயோ பாவம்! (தான் வளர்ந்து முழுத் திங்களாகி விடும் போது) மேலே உள்ள வானத்தில் உள்ளோர் தளரும்படியாக அந்தப் பாம்பு மேலே தன்னைக் கொல்ல ஓடுமானால் அந்த மதி அஞ்சி நையுமே அன்றி வளருமா?
பிறை அச்சத்தினால் வளராமல் தேய்ந்திருக்கிறது என்பது கருத்து.
37. திருக்கோல உண்மை
80. மதியா அடல்அவுணர் மாமதில்மூன்(று) அட்ட
மதியார் வளர்சடையி னானை - மதியாலே
என்(பு)ஆக்கை யால்இகழா(து) ஏத்துவரேல் இவ்வுலகில்
என்(பு)ஆக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.
தெளிவுரை : தன்னை மதிக்காத வலிமையுடைய அசுரர்களின் பெயரில் மதில்கள் மூன்றை அழித்த, சந்திரன் தங்கும் வளரும் சடையை உடைய சிவபெருமானை, அவன் அணிந்த என்புச் சட்டத்தை அறியாமையால் இகழாமல், அறிவுத் திறத்தால் உண்மையைத் தெரிந்து புகழ்ந்து இவ்வுலகத்தில் வழிபடுவார்கள். ஆனால் அவர்கள் என்போடு கூடிய உடம்புடன் இங்கே மீண்டும் பிறக்க மாட்டார்கள்.
38. சிறுத்த மதி
81. ஈண்டொளிசேர் வானத்(து) எழுமதியை வாளரவம்
தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு
கூரேறு கார்எனக் கொம்பு.
தெளிவுரை : அணிந்த ஒப்பற்ற மாலையின் தன்மையை உடைய பாம்பை உடைய சிவபெருமானுடைய திருமார்பில் நன்றாகச் சிறந்து விளங்கும் கூர்மையை உடைய கடுமையான பன்றியின் வெண்மையான கொம்பு நெருங்கிய ஒளி சேர்ந்த வானத்தில் எழுந்த சந்திரனை விடத்தையுடைய பாம்பு தீண்டி விழுங்க அது சிறுத்தது போல இருக்கிறதல்லவா?
வராக அவதாரத்தில் முரித்த கொம்பைச் சிவபிரான் திருமார்பில் அணிந்துள்ளார் என்பது நூல் முடிவு.
39. பொன் மலையும் வெள்ளி மலையும்
82. கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்தன்
அம்பவள மேனி அதுமுன்னம் - செம்பொன்
அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து.
தெளிவுரை : பூங்கொம்பு போன்ற அம்பிகையைத் தன் ஒரு பாகமாகிய இடப் பகுதியில் ஏற்றுக் கொண்ட இளமை எழிலையுடைய சிவபெருமானுடைய அழகிய பவளம் போன்ற திருமேனி முதலில் செம்பொன்னாலான அழகையுடைய மேருமலையைப் போல இருக்கும். வெண்பொடியாகிய திருநீற்றை அணிந்து கொண்டால் மறுபடியும் அந்தத் திருமேனி அழகைப் பெற்ற வெள்ளி மலையாகிய கைலாசத்தைப் போல இருக்கும்.
40. நல்லோரை மருவுதலும் அல்லோரை ஒருவுதலும்
83. மறித்தும் மடநெஞ்சே வாயாலும் சொல்லிக்
குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்(டு)
உள்ளதார் கூட்டம் ஒருவு.
தெளிவுரை : அறியாமையையுடைய நெஞ்சே, இவனைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி யாரும் ஏற்றுக் கொள்ளாத சந்திரனைக் குறுங் கண்ணியாக திருமுடியில் வைத்துக் கொண்டவரை மீட்டும் வாயினாலும் புகழ் பாடித் தியானித்து, அவருடைய தொண்டர்களின் திருவடிகளைத் தொழுவாயாக, அவரை எண்ணாதவர்களின் கூட்டத்தினின்று நீ விலகி ஒழுகுவாயாக.
41. நீ எங்கே?
84. ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ? நேர்ந்து.
தெளிவுரை : இறைவனே, உன்னுடைய ஒரு பாகத்தில் இருப்பவன் உலகத்தைத் தன் திருவடியால் அளந்த திருமாலாம். மற்ற ஒரு பாகத்தில் இருப்பவள் உமையவளாம். இவ்வாறு சொன்னால் அடியேங்கள் இரண்டு பக்கத்திலும் நின் திருவுருவமாக இதுதான் நிறம் என்று தெரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லோம். இன்னும் அணுகிப் பார்த்து நின் உருவமோ அல்லது மின்னலைப் போன்ற உமையவளின் உருவமோ என்றும் அறிய மாட்டோம்.
42. என்ன காரணம்?
85. நேர்ந்தரவம் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை
ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து
வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ
இளங்குழவித் திங்க ளிது?
தெளிவுரை : எம்பெருமானே, இளைய குழந்தை போன்ற சந்திரனாகிய இது, நீ அணிந்திருக்கும் பாம்பு பற்றிக் கொள்ள, நைந்து சிறியதாயிற்றோ? நீயே அதை அறிந்து உனக்கு வேண்டும் அளவில் கொண்டு உன் திருமுடியில் பொருந்தும்படி வைத்தாயோ? இளமையை உடையதாய் இதன் வளப்பம் மறுபடியும் வளராதோ ? என்ன காரணம்?
43. நம்மால் முடியுமா?
86. திங்கள் இதுசூடிச் சில்பலிக்(கு)என்று ஊர்திரியேல்
எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே
தானே அறிவான் தனக்கு.
தெளிவுரை : இந்தச் சந்திரனைத் தலையில் அணிந்து கொண்டு சிறிது பிச்சைக்காக ஊர்தோறும் திரியாதே, எம்பெருமானே ! கெஞ்சிக் கேட்டுக் கொண்டு மிக்க ஒளியையுடைய தேவர்கள் சிவபெருமான் பிச்சை எடுப்பதை விலக்காமல் இருப்பாரானால் ஒன்றுக்கும் பற்றாத யாம் விலக்கும் வன்மையை உடையேமா? தனக்கு உரியதைத் தானே அறிவான் எம்பெருமான்.
44. அருளுக்கு ஏங்குதல்
87. தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவா(று) என்கொல் மனக்கினிய
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான்.
தெளிவுரை : மனத்துக்கு இனியனவாக உள்ள கல்யாண குணங்களை உடையவனும் கங்காதேவியின் மணவாளனும் செம்மையான திருமேனியையுடைய பெரியவனும், தேவர்களுக்கெல்லாம் உபகாரியுமாக இருக்கின்ற சிவபெருமான் வேறுயாரையும் அணுகாமல் தனக்கே அடிமைப் பட்டேனாய்த் தன்னை அடைந்து வாழும் அடியேனுக்கே அருளாமல் இருக்கும் இயல்பு ஏன்? அதற்கு என்ன காரணம்?
45. எங்கே இருக்கிறான்?
88. பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க்(கு) எளிது.
தெளிவுரை : பரம உபகாரியாகிய ஆண்டவனை நோக்கி ஒழுகும் பெருநெறியைக் கடைப்பிடித்து, பிரானாகிய அவனுடைய பேரருளைப் பெறுவதை லட்சியமாக அதனை விரும்பி, அந்தப் பிரான் எங்கே இருக்கிறான்? என்று கேட்கிறீர்கள். அவன் இங்கே என் போல்வார் உள்ளத்திலும் இருக்கிறான். ஆர்வத்தோடு உள்ளே காண்போர்க்கு அவனுடைய காட்சி எளிதாக அமையும்.
46. எளிய செயல்
89. எளிய(து) இதுவன்றே ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற்(று)
எந்தைஅராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழுந் திறம்.
தெளிவுரை : அருட் செல்வம் பெறாத வறியவர்களே! சிறிதும் பிறருக்குக் கொடுக்காதவர்களே, அறிவில்லாதவர்களே! அந்தோ! மணியின் ஒளியைக் கொண்ட திருக்கழுத்தையுடைய எந்தையும் அராவை அணிகலனாகப் பூண்டு அன்பர்களைத் தேடித் திரியும் எம்மானுமாகிய பரமேஸ்வரனை அந்தரங்கத்தில் நினைக்கும் உள்ளம் உடையவர்களாக வாழும் திறமையாகிய இது எளிது அல்லவா?
47. இறைவனை அடையும் திரு
90. திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
இருவடிக்கண் ஏழைக்(கு) ஒருபாகம் ஈந்தான்
திருவடிக்கண் சேரும் திரு.
தெளிவுரை : இயல்பாகவே மடமையையுடைய நெஞ்சே, சொன்னாலும் புரிந்து கொள்ளாத பேதமையை உடைய மனமே, நல்ல வண்ணமுடைய இரண்டு மாவடுவின் பிளப்பைப் போன்ற திருவிழிகளையுடைய பெண்ணாகிய அம்பிகைக்குத் தன் ஒரு பாகமாகிய இடப்பாகத்தை வழங்கினவனாகிய இறைவனுடைய திருவடியைச் சேர்ந்து இன்புறும் வளவாழ்வு, அதற்குரிய தகுதியோடு அதனைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தோடு எல்லாவற்றையும் விட்டொழித்து அதனையே நாடிச் சென்று அடைவதல்லாமல் இருந்த இடத்தில் இருந்தபடியே பெறுவதற்கு நீ தகுதியுடையை ஆவாயோ?
48. மதியில்லா அரவு
91. திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இதுமதியென்(று) ஒன்றாக இன்றளவுந் தேரா
தது, மதியொன்(று) இல்லா அரா.

தெளிவுரை : ஆராய்ந்து பார்க்கும் அறிவு சிறிதும் இல்லாத (சிவபெருமான் அணிந்திருக்கும்) பாம்பு இறைவன் அழகிய மார்பில் உள்ள (இதுதான் சந்திரனோ என்று) பன்றியின் வளமான கொம்பை முதலில் பார்க்கும். பிறகு இறைவன் முடிமேல் அணிந்துள்ள இளம்பிறையைப் பார்க்கும். இந்த நாள் வரைக்கும் ஏதேனும் ஒரு நாளில் இதுதான் சந்திரன் என்று ஒரு முடிவாகத் தெரியாதது.
49. பொன்னும் வெள்ளியும்
92. அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரிய ஓடி - விராவுதலால்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
தன்னோடே யொப்பான் சடை.
தெளிவுரை : அரத்தால் வெள்ளித் தகட்டை அராவி வளைத்தாற் போன்ற தோற்றத்தையுடைய அழகிய இளம் பிறையிலிருந்து வெளியே தோன்றுகின்ற கதிர்கள் விரிவாக ஓடி இடையிடையே விராவுதலால், தனக்குத் தானே ஒப்பாகிய இறைவனுடைய சடைகள் பொன்னாலான புரிகளோடு வெள்ளிப் புரிகள் கலந்து அமைந்தாற் போலுள்ளன அல்லவா?
50. கொன்றையும் கனியும்
93. சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல்
வலப்பால்அக் கோலமதி வைத்தான்தன் பங்கின்
குலப்பாவை நீலக் குழல்.
தெளிவுரை : தன்னுடைய திருமுடியின் மேல் வலப்பக்கத்தில் அந்த அழகிய பிறையை வைத்த சிவபெருமானுடைய ஒரு பாதியில் எழுந்தருளியிருக்கும் உயர் குலப் பெண்ணாகிய உமாதேவியின் கருமையான கூந்தல் கற்றைகள் இறைவன் சடையின்மேல்  குடியிருக்கும் அந்தக் கொன்றை மலர்கள் முதிர்ந்து உண்டாக்கிய கனிகள் உருவாகி வந்து பக்கத்தில் சார்ந்து கீழே தொங்குவன போலத் தோன்றும். கொன்றைக் கனிகள் கரியனவாய் நீண்டு தொங்குபவை உமாதேவியின் குழற் சடை போன்றன என்பதாம்.
51. அங்கே அழைத்துச் செல்லாதே
94. குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்(து)
எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு.
தெளிவுரை : காலில் அணிந்த வீரக் கண்டை ஒலிக்க பெரிய நள்ளிரவில் ஈமமாகிய சுடுகாட்டில் பேய்களோடும் வெப்பம் தாங்குவதற்கு அரிய நெருப்பில் நீ தாண்டவமாடும் அவ்விடத்துக்குக் கூந்தல் தாழ்ந்திருக்கும் சிறிய முதுகை உடையவரும் திரட்சியான வளைகளை அணிந்தவருமாகிய உமாதேவியை உன் வாம பாகத்தில் அழகாக வைத்துக் கொண்டு போக வேண்டா. இவ்வாறு இறைவனுக்கு அறிவுரை கூறுவனவாக உள்ள பாடல்களில் காரைக்கால் அம்மையாரின் தாய்த்தன்மை புலனாகிறது.
52. எங்கும் முழு மதியம்
95. அங்கண் முழுமதியம் செக்கர் அகல்வானத்(து)
எங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்.
தெளிவுரை : செம்மையான கண்ணையுடைய திருமாலைத் தன் பங்கில் உடையவனாகிய சிவபிரானுடைய செம்மையான சடாபாரத்தின் மேல் அணிகலனாக வைத்த தலைமாலை தோற்றமளிக்கிற ஒப்பற்ற அழகு, அழகிய இடபத்தையுடைய பூரண சந்திரன்கள் செம்மை நிறமுடைய அகன்ற வானத்தில் எங்கும் இனிதாக உதயமானாற் போல உள்ளதல்லவா?
53. காரின் வடிவம்
96. சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் - போரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.
தெளிவுரை : சிறப்பு நிரம்பிய கொன்றைப் பூவானது தளதளவென்று மலர்ந்து விளங்க, வானுலகத்தில் ஓடி நீர் நிரம்பிய பெரிய ஆறாகிய கங்கையானது வெள்ளமாக இங்கே தங்கியிருக்க, போர் செய்யும் இயல்பு நிறைந்த கயிற்றைப் போன்ற பாம்பைக் கொண்டு கட்டிய நம் ஈசனாகிய சிவபெருமானுடைய பொன்நிறம் பெற்ற திருமுடிதான் காண்பவர்களுக்கு நன்றாக கார்காலப் பருவத்தின் வடிவேயாகும்.
54. எங்கு ஒளித்தாய்?
97. காருருவக் கண்டத்தெம் கண்ணுதலே எங்கொளித்தாய்
ஓர்உருவாய் நின்னோ(டு) உழிதருவான் - நீர்உருவ
மேகத்தால் செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு.
தெளிவுரை : மேகத்தைப் போன்ற நிறத்தையுடைய திருக்கழுத்தையும் நெற்றியில் கண்ணையும் உடைய எம்பெருமானே! ஒரே வடிவமாக நின்னோடு எங்கும் உலவுகிறவனும் நீரையுடைய அழகிய மேகத்தினால் செய்தமைத்தால் போன்ற திருமேனியை உடையவனும் நின்னுடைய இடப்பாகத்தில் இணைந்திருப்பவனுமாகிய திருமால் பழங்காலத்தில் நின்னைக் காண முடியாமல் நீ எங்கே மறைந்தாய்?
55. வேறு ஒன்றும் உண்டு
98. பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டம் கறுத்ததவும் அன்றியே - உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேல் பால்மதியின் உள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு.
தெளிவுரை : பழங்காலத்தில் தேவர்கள் அமுதம் வேண்டுமென்று கடைந்தபோது அவர்கள் அஞ்சும்படி பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சத்தை உண்டு இறைவனுடைய கண்டம் கறுப்பு நிறத்தை அடைந்ததும் அல்லாமல் பாம்புகள் இருக்கும் நீண்ட செம்மையான சடையின்மேல் பாலைப் போல வெளுப்பான சந்திரனுக்குள்ளே நீலமணியின் நிறத்தைப் பெற்ற மறுவென்ற வடிவில் தோன்றும் வடுவும் உண்டு.
56. நிலாச் சூடும் காரணம்
99. வடுவன்(று) எனக்கருதி நீமதித்தி யாயில்
சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண்
புலால்தலைவி னுள்ஊண் புறம்பேசக் கேட்டோம்
நிலாத்தலையில் சூடுவாய் நீ.
தெளிவுரை : சுட்ட வெண்மையான திருநீற்றின் நிறத்தை உடைய திருமேனிப் பெருமானே! உயிரின்றிப் பட்டுப் போன புலால் நாற்றம் கமழும் கபாலத்தினுள் பிச்சை உணவைப் பெறுவதைப் பழியன்று என எண்ணி நீ அதைச் சிறப்பாக எண்ணினையாயினும் மற்றவர்கள் புறத்தே பழிகூறுவதைக் கேட்டோம். நிலாவையுடைய சந்திரனை நீ தலையில் சூடிக் கொண்டிருக்கிறாய்! நீ அதன் காரணத்தைச் சொல்.
நிலவை அணிதல் மண்டை ஓட்டில் பலி ஏற்று உண்டதற்கு ஒரு கழுவாய் போல உள்ளதென்று கற்பனை செய்தபடி.
57. பலியிடார்
100. நீயுலகம் எல்லாம் இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விடஅரவம் மேல்ஆட மிக்கு.
தெளிவுரை : இறைவனே, நீ உலகம் எல்லாம் தெரிந்து பிச்சை எடுத்தாலும் குற்றம் இல்லை. ஆபரணமாகப் பூண்டிருக்கும் நின்னுடைய தீங்கைப் பயக்கும் கெட்ட பாம்பு ஒழிந்து நிற்கப் போவாயாக. ஏனென்றால் உனக்குப் பிச்சையிடும் தூய மனம் உள்ள பெண்கள் விடம் பொருந்திய பாம்பு உன் மேலே ஆட, அதைக் கண்டு அஞ்சி உன் அருகில் வந்து பிச்சை போட மாட்டார்கள். பாம்பாகிய அணியை நீக்கிவிட்டுச் செல்வாயாக என்பதாம்.
58. சடையும் குழலும்
101. மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையும், ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு.
தெளிவுரை : அந்திச் செவ்வானத்தைப் போலுள்ள திருமேனியையுடைய சிவபெருமானுடைய செந்நிறமான சடையும் அங்கே அவனுடைய பொலிவு பெற்ற திருவுருவத்தில் இடப் பாகத்திலுள்ள அம்பிகையின் பூவை அணிந்த கருங்குழலும் தோற்றுவிக்கும் இயல்பு, மிகவும் அதிகமாகப் பொங்கி முழங்கும் நெருப்புக் கொழுந்தும் மிகுதியாக அடர்ந்துள்ள இருளும் ஒருங்கே உடன் இருந்தால் எப்படியோ அப்படி ஒத்திராதோ?
59. நீறு அணியும் உருவம்
102. பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ(து)
எவ்வுருவோ நின்னுருவ மேல்.
தெளிவுரை : கண் சேர்ந்த நெற்றியையும் நஞ்சுக் கறுப்பையுடைய கண்டத்தையும் கொண்ட எம்பெருமானே, இடப வாகனத்தை உடையானே, உன்னுடைய இயல்பு முழுவதையும் உணரும் ஆற்றல் இல்லாதவள் யான். ஆதலால் நீயே என் ஐயம் நீங்கப் பணித்தருளல் வேண்டும். நின்னுடைய பலவகைத் திருக்கோலங்களுக்குள் உமாதேவியாகிய பெண்ணின் நல்லாள் சேர்ந்த அந்தத் திருவுருவமோ, திருமாலோடு இணைந்தபோது அந்தத் திருமாலின் பத்தியோ எவ்வுருவம் திருநீற்றை அணிவது?
60. பொன்மலை
103. மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ(து)
அம்மான் திருமேனி அன்று.
தெளிவுரை : மயக்கமே தன் உருவாக வந்து துதிக்கையை உடைய விலங்காக, மதம் மிகுந்த யானையாக வந்த கஜாசுரனைச் சங்காரம் செய்து, அந்த யானையின் கரிய தோலை அந்தப் பழங்காலத்தில் இறைவன் போர்த்துக் கொண்ட போது அவன் திருமேனி, மேலே படர்ந்த கரிய மேகங்கள் ஒன்றாகக் கூடி ஒரு பொன் மலையில் வீசிய மிக்க ஒளியை மறைத்தால் அமையும் காட்சியை ஒத்திருக்காதோ?
61. எந்த உருவம்?
104. அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்(கு) என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது
தெளிவுரை : எம்பெருமானே, உன்னை வழிபடத் தொடங்கிய அந்தக் காலத்திலும் உன்னுடைய இயல்பான திருவுருவத்தைக் காணாமலே உனக்கு அடிமையானேன். உன்னுடைய திருவருளால் உன் அருள் அனுபவத்தைப் பெற்று நிற்கும் இப்போதும் உன் திருவுருவத்தை நான் காணவில்லை. உம்முடைய கடவுள் என்றைக்கும் எந்த உருவத்தை உடையவன்? என்று கேட்கிறவர்களுக்கு நான் எந்த விடையைச் சொல்வேன்? எந்த உருவத்தைச் சொல்வது? நின் உருவம் எது?
62. வேட வடிவம்
105. ஏதொக்கும் ஏதொவ்வா(து) ஏதாகும் ஏதாகா(து)
ஏதொக்கும் என்பதனை யார்அறிவார் - பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ(டு) ஏற்றநாள்
வல்வேடன் ஆன வடிவு.
தெளிவுரை : பழங்காலத்தில் வில்லைக் கையிலேந்திய வேடனாக வந்து விசயனோடு எதிர்த்துப் போரிட்ட காலத்தில் வலிமையை உடைய வேடத்தை உடையவனான அந்த இறைவன் வடிவத்திற்கு எது ஒப்பாகும். எது ஒவ்வாது? எது சொல்லத்தகும்? எது சொல்லத் தகாது? எது உவமானமாகும். என்பதனை யார் அறிவார்கள்?
63. திங்கள் நிலா
106. வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே
நெடிதுலவி நின்றெறிக்கும் கொல்லோ - வடியுலவு
சொன்முடிவுஒன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா.
தெளிவுரை : புதுமை சேர்ந்த சொல்லுக்கு முடிவு ஒன்றும் இல்லாத சோதியாக நிற்கும் எம்பெருமானே! நின்னுடைய திருமுடியின் மேல் உள்ள திங்களின் ஒளியானது வடிவழகுடைய செந்நிறமுள்ள சூரியனுக்கு எதிராகப் பகலில் நீண்டு உலவி நின்று ஒளி வீசுமா? இதைச் சொல்வாயாக.
64. திரியும் பாம்பு
107. நிலாஇலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா கொல்லோ - நிலாவிருந்த
செக்கர்அவ் வானமே ஒக்கும் திருமுடிக்கே
புக்கரவம் காலையே போன்று.
தெளிவுரை : பாம்பானது நிலா இருந்த அந்தச் சிவப்பான அந்திவானத்தை ஒத்து விளங்கும் சிவபெருமானுடைய அழகிய முடியிலே புகுந்து நிலா விளங்குகின்ற வெண்ணிறமுள்ள சந்திரனைக் காலை நேரத்தில் தேடுவதைப் போன்று அதைத் தேடிப் பற்றிக் கொள்வதைப் போல் உலவித் திரியும் வண்ணமோ?
65. காலை முதல் இரவு வரை
108. காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும்  மிடறு.
தெளிவுரை : சிவபெருமானாகிய அவனுக்கு உதயவேளையாகிய காலை நேரத்தைப் போலச் சிவப்பாகத் திருமேனி விளங்கும். கடும் பகலாகிய நண்பகல் வேளையைப் போல அவன் திருமேனியில் அணிந்த வெண்மையான திருநீறு விளங்கும். மாலை நேரத்தில் வானம் தாங்கும் சிவப்பு உருவம் போல அவன் சடையின் தொகுதி தோன்றும். மிக்க இருளைப் போல அவனுடைய நீல கண்டம் தோன்றும்.
66. கழுத்தில் உள்ள நஞ்சு
109. மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணம் கரிதாலோ
பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு.
தெளிவுரை : திருக்கழுத்தில் ஆலகால நஞ்சை உடைய எம்பெருமானே, உம்முடைய திருமார்பில் படம் எடுத்தாடும் பாம்பு, தன் கழுத்தில் கருமை பொருந்திய இருள் போல் நிறம் கரியதாக இருக்கிறது. அது உம்முடைய திருக்கழுத்தை நக்கி அங்குள்ள விடத்தைத் தன் கழுத்திலும் கொண்ட வண்ணமோ இது?
67. இறைவன் என்னும் மலை
110. பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியும்
தாய்பயின்று தாழ்அருவி தாங்குதலால் - ஆம்பொன்
உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு.
தெளிவுரை : அணிகளாகிய பாம்பும் சந்திரனும் மென்மையான மானும், பாய்கின்ற புலியும் தாம் அவனிடத்தில் பலகாலம் இருந்து பயின்று கீழே விழுகிற கங்கையாகிய அருவி ஒழுகுவதால் பொன்னான நிறத்தையுடைய திருவுருவத்தில் சிறந்து நிற்கின்ற ஒளியைச் சேர்ந்தவனும் நெற்றியில் கண்ணை உடையவனுமாகிய சிவபெருமான் தன்னுடைய அழகிய தெய்வத் திருவடிவினால் அன்பர்கள் விரும்பிய மலையாக உள்ளான்.
68. திருமுடியின் கோலம்
111. சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டிச்
சிலம்படிமேல் செவ்வரத்தம் சேர்த்தி - நலம்பெற்(று)
எதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி.
தெளிவுரை : முதிராத இளம்பிறையை அணிந்த இறைவன் சிலம்பை அணிந்த திருமுடியை உடைய அம்பிகையின் ஊடலைத் தானே போக்குவதற்கு விரும்பி, அப்பெருமாட்டியின் சிலம்படியின் மேல் உள்ள செம்பஞ்சுக் குழம்பைப் படச் செய்து, அழகு பெற்று, முன்பு ஒப்பாக உள்ள இக் கோலத்தைத் திருமுடிக்குச் செய்தான்.
69. அவலம் உண்டோ?
112. முடிமேல் கொடுமதியான் முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோம் கூற்றைப் - படிமேல்
குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம்
இனியவலம் உண்டோ எமக்கு.
தெளிவுரை : தன்னுடைய திருமுடியின் மேல் வளைந்த பிறையை அணிந்தவனும் மூன்று கண்களை உடையவனும் ஆகிய சிவபெருமானுடைய பிறப்பு இறப்பை நீக்கும் நல்ல அடியை வணங்கித் தலையின் மேற்கொண்டு அந்தப் பலத்தால் யமனை ஒரு பொருளாக மதிக்க மாட்டோம். இந்த உலகத்தில் ஒருவரை வணங்குவற்காக உள்ளோம் அல்லோம், எங்களுக்கு ஆகிய அடியாரான தன்மையைப் பெரியோர்கள் கொண்டாடும் பேறு பெற்றோம். இப்போது எமக்கு ஏதேனும் துயரம் உண்டோ?
70. எரியில் ஆடும் இடம்
113. எமக்(கு)இதுவோ பேராசை என்றும் தவிரா(து)
எமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந் தாடும் இடம்.
தெளிவுரை : எம் தந்தையே, மற்ற ஒளிகளை அடக்கும் பொருட்டு நெருப்பானது வந்து பரந்தது போலத் தோன்றும் புரிசடையுடைய சடாபாரத்தை உடையவனே,
எமக்கு இது ஒரு பேராசை; அது எப்போதும் நீங்காமல் இருக்கிறது. இருள் விம்மித் ததும்பும் இரவில் கொழுந்துகளைத் தாங்கும் நெருப்பில் திருநடனம் ஆடும் இடத்தை எமக்கு ஒரு நாள் காட்டுவாயோ?
71. வேறுபாடு தெரியாது
114. இடப்பால வானத்(து) எழுமதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகம்
கொண்டாள் மலைப்பாவை கூறொன்றும் கண்டிலங்காண்
கண்டாயே முக்கண்ணாய் கண்.
தெளிவுரை : மூன்று கண்களையுடையாய், எம்பெருமானே! இடப் பகுதிகளைத் தன்னிடத்தே கொண்ட வானத்தில் தோன்றும் பிறையை நீ ஒப்பற்ற இளமையையுடைய சித்திரப்பாவை போன்ற உமாதேவியின் வாம பாகத்தில் வைத்துக் கொண்டால், அப்போது உன் இடப்பாகத்தைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொண்ட மலை மடந்தையாகிய பார்வதி தேவியின் கூற்றைச் சிறிதும் யாம் கண்டிலோம். இதை நீ அறிந்தாயோ? இல்லை யெனின் இப்போதாவது எண்ணிப்பார்.
72. என் கருத்து
115. கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாளுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும்
கண்ணாளா ஈதென் கருத்து.
தெளிவுரை : துண்டமாகச் சேர்ந்ததும் வானிலே ஆட்சி புரிந்ததுமாகிய பிறையைத் திருமுடியில் புனைந்துள்ள பெருமானே, ஏழு உலகங்களுக்கும் மேலாக நிற்கும் கண்ணாக உள்ளவனே, உன்னை தரிசித்து, எம் தந்தையே என்று உன்னை வணங்கி, உன்னுடைய திருத்தொண்டை அடியேன் செய்யாமல் இருப்பேனாயின் அண்டத்தைப் பெற்றாலும் அந்தப் பதவியை அடியேன் வேண்டேன். இதுவே அடியேனுடைய கருத்து.
73. நினைத்ததைப் பெறும் வழி
116. கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
திருத்தலாம் சிக்கெனநான் சொன்னேன் - பருத்தரங்க
வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீவிரும்பி
உள்ளமே எப்போதும் ஓது.
தெளிவுரை : என் நெஞ்சமே, நீ உன் கருத்துக்குள்ளே எதனை வேண்டுமென்று கருதுகிறாயோ அதனையெல்லாம் உடனே பெற்று நுகரலாம். இதை உறுதியாக நான் சொன்னேன். அதற்கு இதுதான் வழி, பெரிய அலைகளையுடையதாய் வெள்ளமாகப் பரந்து வந்த கங்கை நீரை அடக்கித் தன் தலைப் பாரத்தில் ஏற்றுக் கொண்ட சிவபெருமானுடைய திருவடித் தாமரையை நீ விரும்பி எப்போதும் அவன் திருநாமத்தையும் புகழையும் ஓதிக் கொண்டே இரு.
74. கபாலக் கலம்
117. ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
ஏதும் நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள்
எண்ணா(து) இடும்பலியால் என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம்.
தெளிவுரை : இடம் நிரம்ப உள்ளதும் இறைவன் திருக்கரத்தில் உள்ளதுமாகிய பிரம கபாலமாகிய பிச்சைப் பாத்திரமானது அலைப் பெருக்கையுடைய ஆழமான கடல்கள் எத்துணையைப் பெய்து இட இட, சிறிதும் நிறைவு பெறவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் ஒன்றும் அறியாத பேதையர்களாகிய தாருகாவனத்து முனிவரின் மனைவிமார் பிச்சைப் பாத்திரத்தின் அளவையும் பிறவற்றையும் எண்ணாமல் இட்ட பிச்சையால் நினைந்வாறு என்ன வியப்பு !
75. சடையும் விசும்பும்
118. கலங்கு புனற்கங்கை ஊடாட லாலும்
இலங்கு மதிஇயங்க லாலும் - தலங்கொள்
பரிசுடையான் நீள்முடிமேல் பாம்பியங்க லாலும்
விரிசடையாம் காணில் விசும்பு.
தெளிவுரை : பல நலங்களைக் கொண்ட தன்மையை உடைய இறைவனுடைய நீண்ட திருமுடியின்மேல் கலங்கிய புனலையுடைய ஆகாச கங்கை ஊடே அசைவதாலும், விளங்கும் பிறையானது இயங்குவதாலும் பாம்புகள் உலாவுவதாலும் அவனுடைய விரிந்த சடையை யாம் காணும்போது வானமாகத் தோற்றம் அளிக்கிறது.
76. திருவடிக்கு வந்த தீங்கு
119. விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து
பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்தெங்கும்
எந்தாய் தழும்பேறி யேபாவம் பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி.
தெளிவுரை : எங்கள் தந்தையே, வானத்தில் வாழும் நியமனத்தை உடைய தேவர்கள் கீழே விழுந்து தம்முடைய தூய பொன்னும் மணியும் கொண்டு சமைத்த கிரீடங்களைப் படியும்படி தேய்ப்பதனால், உன்னுடைய அழகிய தாமரையைத் போலத் தோற்றம் அளிக்கும் திருவடிகள் நலிவு பெற்று, எங்கும் தழும்பு ஏறிக் காண்பதற்கு அழகற்றனவாக இருக்கின்றனவே, அந்தோ பாவம்!
77. அறிந்து ஆடும்
120. அடிபேரின் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரின் மாமுகடு பேரும் - கடகம்
மறிந்தாடு கைபேரில் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா(து) அரங்கு.
தெளிவுரை : சுவாமி நீங்கள் தாண்டவம் புரியும்போது, தங்கள் திருவடி வேகமாகப் பெயர்ந்து கதி மிதித்தால் கீழே உள்ள பாதாள உலகம் நிலை பெயரும். தேவரீர் திருமுடி பெயர்த்து வேகமாக ஆடினால் பெரிய வானத்தின் உச்சியில் அது முட்டி அந்த வானம் பெயர்ந்து விடும். வளைகள் மாறி மாறி ஆடும் திருக்கரங்களை வீசி ஆடினால், பெரிய திசைகளே தம் நிலையிலும் குலைந்து மாறிவிடும். ஆகவே இவற்றை எல்லாம் அறிந்து நடனம் புரிந்தருள்வீராக. இந்தச் சிறிய நடன அரங்கு தேவரீருடைய ஆனந்த தாண்டவத்தைத் தாங்காது. நிலை குலைந்து போகும்.
78. எல்லாம் கிடைக்கும்
121. அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தால் பணிந்து.
தெளிவுரை : அறிவற்ற நெஞ்சமே, பேய்களையுடைய சுடுகாட்டில் அதையே அரங்கமாகக் கொண்டு நடனமிடும் சிவபெருமான் தராதரம் பாராமல் எல்லா உயிர்களுக்கும் வாளா இரங்குவானோ? மாட்டான். அவனைப் பலகாலம் வணங்கி வழிபட்டு விண்ணப்பித்துக் கொண்டால் இரங்குவான். அவ்வாறு இரங்குவானாயின், அவன் நம்மை எந்தப் பதவியில் உள்ளவராகத்தான் வைக்க மாட்டான்; எந்த உலகத்தைத்தான் வழங்கிக் காப்பாற்ற மாட்டான்?
79. அடிவயர்களின் பெருமிதம்
122. பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க்(கு) ஆட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க்(கு) உள்ள செருக்கு.
தெளிவுரை : படர்ந்த சடையை உடையவன் பாதங்களைப் பணிந்தும், பிறகு அந்தத் திருவடிகளை அலரும் பருவத்துள்ள மலர்களால் அலங்கரித்தும், அப்பால் அவ்வாறு அலங்கரித்த அன்பர்களை ஏத்துவதே நல்ல நெறியென்று பணிந்து நின்றோம். அப்பால் என்றும் பிறழாமல் எம் தந்தையாராகிய சிவபெருமானுக்கு ஆளாகித் தொண்டு செய்யப் பெற்றோம். அவ்வாறு பெற்ற இந்த நிலைதானோ எம்முடைய சிந்தையார்க்கு உள்ள செருக்குக்குக் காரணம்.
80. திருவடியின் ஆற்றல்
123. செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்தோள்
அரக்கனையும் முன்னின்(று) அடர்த்த - திருத்தக்க
மாலயனுங் காணா(து) அரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால்.
தெளிவுரை : திருவினால் தகுதி பெற்ற திருமாலும் அயனும் காணாமல் அரற்றி, பின்பு இறைவன் அருள் செய்தனால் மகிழ்ந்து துதி பாட, யாராலும் வெல்லற்கரிய காலனையும் உதைத்து வென்ற திருவடிகள், நம்மைவிட வலியவர் இல்லை என்ற கர்வத்தால் கைலாச மலையைத் தூக்கிய பல திண்ணிய தோள்களை உடைய அரக்கனாகிய இராவணனையும் முன்னே நின்று அழுத்தின.
81. அடியார்களின் நிலை
124. காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.
தெளிவுரை : பார்ப்பதற்கு அழகாக இருந்த கோட்டைகளாகிய திரிபுரங்களை உடைய அசுரர்கள், தம் ஊக்கம் குலைந்து இரங்கும்படியாக அந்தப்புரங்களை வெவ்விய தீயைக் கக்கும் ஓர் அம்பினால் எய்து அழித்த சிவபெருமானுடைய திருவடிகளைப் பற்றாகப் பற்றி. யாம் கால ஜெயம் பெற்றோம். கடுமையான நரக அனுபவத்தினின்றும் விலகி நிற்கின்றோம். முன்புள்ள சஞ்சித வினையையும் இப்போது சேரும் ஆகாமிய வினையையும் வேரோடு அறுத்து விட்டோம்.
82. இறைவன் திருச்சடை
125. சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது
பேரந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியதாம் தேர்ந்துணரில்
தாழ்சுடரோன் செங்கதிரும் சாயும் தழல்வண்ணன்
வீழ்சடையே என்றுரைக்கும் மின்.
தெளிவுரை : பொருந்தி உணர்ந்தால் கிரணங்கள் தங்கும் சூரியனுடைய சிவந்த கதிர்களும் மழுங்கிச் சாய்வதற்குரிய தழல் போன்ற வண்ணமுடைய சிவபெருமானுடைய தொங்கும் சடை என்று சொல்லும் மின்னல்கள் ஆனவை, இறைவனை அணுகி அன்பு செய்பவர்களுக்குப் பொன்னின் கொழுந்தைப் போலத் தோன்றி, அவ்வாறு அவனைச் சாராமல் விலகிச் செல்பவர்களுக்கு நெருப்புக் கொடியின் தன்மையை உடையனவாகும்.
83. இரண்டு குன்றுகள்
126. மின்போலும் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலும் காண்பார்கட்(கு) என்றிரேல் - தன்போலும்
பொற்குன்றும் நீல மணிக்குன்றும் தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது.
தெளிவுரை : மின்னலைப் போன்ற செம்மையை உடைய சடையை உடைய சிவபெருமான், திருமாலோடு பிரிந்து நில்லாமல் மீண்டு ஒன்றி இணைந்து நின்றால், அந்தக் கோலம் தரிசிப்பவர்களுக்கு எதைப் போல இருக்கும்? என்று கேட்பீர்களானால், சிவபிரானைப் போன்றுள்ள பொன் மலையும் நீலமணிக் குன்றும் உடன் ஒன்றி உயர்ந்து நிற்கின்றதைப் போல இருக்கும்.
84. மூன்று கண்கள்
127. நெடிதாய பொங்கெரியும் தண்மதியும் நேரே
கடிதாம் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினில்அழியக்
கண்டாலும் முக்கணான் கண்.
தெளிவுரை : கொடுமை உண்டாக மற்றவர்களினின்றும் பிரிந்து சென்று பகைவர்களாக இருந்த திரிபுரத் தலைவர்களுடைய மூன்று மதில்களும் வெம்மையான தீயினால் அழியும்படி பார்த்து, அவை அழிந்த பிறகு மகிழ்ந்த முக்கண்ணனாகிய சிவபெருமானுடைய கண்கள் உயர்ந்ததாகிய கொழுந்துவிடும் தீயையும், குளிர்ச்சியுடைய சந்திரனையும் நேரே கடுமையாக உள்ள வெய்ய கதிரவனையும் போல இருக்கும்.
85. தரிசனத்தால் பெறும் இன்பம்
128. கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்.
தெளிவுரை : எல்லாரினும் பெரியவனாகி சிவபெருமானைத் தரிசிக்கும் பேறு பெற்றால், அவனை என் கண் நிரம்பும்படியாகப் பார்த்தும், என் கைகள் நிரம்பக் கும்பிட்டும், மனம் நிரம்பும்படியாக அவனைப் பற்றிய எண்ணங்களை எண்ணியும், மகாதேவனே! எரியாடியே என்று பலகால் சொல்லியும் இன்பம் அடைவேன்.
86. வேறு நிலையே வேண்டாம்
129. பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீ(து)
உறினும் உறாதொழியு மேனும் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்.
தெளிவுரை : இயல்பான இரண்டு கண்களோடு மற்றும் ஒரு கண்ணைச் சில சமயங்களில் சிறிதளவு உணரச் செய்து, தன் நெற்றியின்மேல் வைத்துள்ள சிவபிரானுடைய பேயாகிய நல்ல கணத்தில் ஒரு பேயாகிய நாம், இந்த நிலை எப்போதும் தங்கினாலும் - தங்காமல் போய் விட்டாலும் இதனினும் சிறந்ததென்று பிறர் சொல்லும் பிறநிலை எதனையும் வேண்டோம்.
87. எப்படி அடும்?
130. நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்
அறிவினையே பற்றினால் எற்றே தடுமே
எறிவினையே என்னும் இருள்.
தெளிவுரை : என்னுடைய நெஞ்சமே! நாம் நமக்கு உறவாகிய சிவபெருமானுடைய பொன் வண்ணத் திருவடிகளுக்கே நாவினால் - அன்பால் பாமாலை சூடியும், பூ மாலையைக் கொண்டு அலங்கரித்தும், அவனை நினைக்கும் அறிவினையே பற்றி வாழ்ந்தால் பிறரை மோதித் துன்புறுத்தும் தீவினையாகிய இருள் நம்மை எவ்வாறு எதற்காக வந்து அடும்? எற்று + ஏது + அடும் எனப் பிரித்துப் பொருள் கொள்ள.
88. கண்டத்து ஒளி
131. இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ
மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத்(து) ஒளி.
தெளிவுரை : நல்லவற்றை எல்லாம் உடையவனே! செந்நிறம் படைத்த சடையின்மேல் ஒளி விட்டு விளங்கும்படி வெண்ணிறம் பெற்ற ஒன்றை உடையவனே! உன்னுடைய திருக்கழுத்தில் நஞ்சினால் உண்டான ஒளியை இருளின் உருவம் என்று சொல்வேனா ? கரிய மேகம் என்று சொல்வேனா? மயக்கம் இன்றித் தெளிவாக வண்ணம் தெரியும் நீலமணி என்று சொல்லட்டுமா? எது சரி என்பதை நீயே எமக்குச் சொல்லி அருள வேண்டும்.
89. வாயும் கண்டமும்
132. ஒளிவிலி வன்மதனை ஒண்பொடியா நோக்கித்
தெளிவுள்ள சிந்தனையில் சேர்வாய் - ஒளிநஞ்சம்
உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டம்இருள்
கொண்டவா(று) என்இதனைக் கூறு.
தெளிவுரை : எம்பெருமானே ! ஒளியை உடைய கரும்பு வில்லை உடைய வன்மையான மன்மதனைச் சாம்பலாகும்படி திருவிழியால் பார்த்து ஞானத்தினால் தெளிவு பெற்ற அன்பர்களின் சித்தத்தில் தங்கி வடிவத்தைக் காட்டும் ஐயனே, ஒளியை உடைய ஆலகால விடத்தை உண்ட வாய், தன் நிறம் மாறாமல் இருக்க, உன்னுடைய திருக்கழுத்து மட்டும் கரிய நிறத்தை அடைந்த வண்ணம் ஏன்? இதை எனக்குத் தெளிவாகச் சொல்வாயாக.
90. கங்கை பெருகினால்
133. கூறெமக்கீ(து) எந்தாய் குளிர்சடையை மீதழித்திட்(டு)
ஏற மிகப்பெருகின் என்செய்தி - சீறி
விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்தோடும் கங்கைத் திரை.
தெளிவுரை : என் அப்பனே ! இந்தக் கேள்வியை விடுக்கும் எமக்கு விடையைச் சொல். சீறிக் கோபத்தோடு விழித்து ஊர்ந்து செல்லும் ஒளியை உடைய பாம்பையும் வெண்மையான பிறையையும் இழுத்துக் கொண்டு ஒலித்து ஓடும் கங்கையில், அலைகள் தாம் தங்கியிருக்கும் நின்னுடைய குளிர்ந்த சடையை மேலே அவிழ்த்து விட்டு வெள்ளம் ஏறும்படியாக மிகப் பெருகினால் நீ என்ன செய்வாய்?
91. புறம் கூறுவது ஏன்?
134. திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவு யாமுணர்ந்தோம் கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறனுரைப்ப(து) என்.
தெளிவுரை : உலகியலில் ஈடுபட்டு எம்மைப் பற்றிப் பழி கூறுகிறவர்களே, கங்கை பொருந்திய செம்மையான சடையை உடைய சிவபெருமானுடைய செம்மையான திருவடிக்கே ஆளாகி, அவனைப் பற்றிய உரைகளையே உரைத்து, அவனை யாம் உணர்ந்தோம். இதைப் பாருங்கள்; இந்த நிலையை அறிந்து கொள்ளுங்கள். இகலோக வாழ்வுக்கும் அடுத்த வாழ்வுக்கும் உரிய எல்லா நலன்களும் அமையப் பெற்றோம். அப்படி இருக்க எம்மைப் புறத்தே நின்று பழி கூறுவது ஏன்?
92. எம்மை உடையான்
135. என்னை உடையானுமண ஏகமாய் நின்றானும்
தன்னை அறியாத தன்மையானும் - பொன்னைச்
கருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்(கு)
அருளாக வைத்த அவன்.
தெளிவுரை : என்னை உடைமையாக உடைய சுவாமியும், தானே தனித் தலைவனாக நின்றவனும், தன்னையே தான் அறியாத இயல்புள்ளவனும், செம்பொன்னைச் சுருளாகச் செய்தாற் போன்ற தூய சடையவனாகிய தேவர்களுக்கு அருள் உண்டாகும்படியாக அந்தச் சிவபெருமான் உள்ளான் என்க. உடையானும், நின்றானும் தன்மையானும் சடையான் அவன் என்று முடிக்க.
93. அன்பாய் விரும்பு
136. அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்
அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன்கண்டாய்
மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.
தெளிவுரை : என்னுடைய நல்ல நெஞ்சமே! சிவபெருமானே எல்லாக் காலத்தும் வானோர்களுக்குத் தலைவனாய் அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் பரம உபகாரியாக இருப்பவன்; இதனை நீ தெரிந்து கொள். அவனே அழகிய பவள வண்ணத் திருமேனியை உடையவன். இதையும் அறிந்து கொள். அவனே மைநிறம் பெற்றுப் பொருந்திய திருக்கழுத்தை உடையவன். இதனையும் நீ உணர்ந்து கொள். அவனிடம் உண்மையாகத் தங்கி அன்பாக இருந்து அவனை விரும்புவாயாக.
94. இணைப்புக் காரணம்
137. விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா
இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள்
மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க
அஞ்சுமோ சொல்லாய் அவள்.
தெளிவுரை : மேகம் போன்ற நிறத்தையுடைய திருமாலை விடையாகக் கொண்டவளே! நீ பார்வதியிடம் கொண்ட பெருங்காதலால் அவளைப் பிரியும் ஆற்றல் இல்லாதவனாக இருக்கிறாயோ? அன்றி உன்னை விட்டு வேறாக இருக்கும் இடம் பிறிது அவளுக்கு இல்லையோ? என்ன காரணம்? அந்தப் பார்வதி உன்னைப் பிரிந்து வேறாக இருக்க அஞ்சுவாளோ? இதை எனக்குச் சொல்வாயாக.
95. அன்பு மிக்கவர் யார்?
138. அவளோர் குலமங்கை பாகத் தகலாள்
இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ(று)
என்(பு)அணிவீர் என்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள்
அன்(பு)அணியார் சொல்லுமின்இங்(கு) ஆர்.
தெளிவுரை : வெண்மையான திருநீற்றையும் எலும்பையும் அணியும் பெருமானே! அங்கே இருக்கும் ஒப்பற்ற அவள் நல்ல குலத்தில் தோன்றிய மங்கையாகிய பார்வதி; இங்கே இருக்கும் இந்த நீர் வடிவத்திலுள்ள கங்கா தேவியும் இந்தத் திருமுடியில் இருக்கிறாள். இந்த இரண்டு தேவிமாரையும் நீர் என்றும் பிரிந்தறிய மாட்டீர். இவ்வாறு உம்மோடு ஒட்டி நிற்கும் இந்த இரு தேவிமார்களுக்குள் உம்முடைய அன்புக்கு அணிமையை உடைய நெருக்கமானவர் யார்? இதை யானாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. நீரே சொல்லும்.
96. மறைத்து வைத்தோம்
139. ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
போர்வை அதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சின் உள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து.
தெளிவுரை : அரனை அன்பு என்னும் மூடு துணியினால் போர்த்து உள்ளே அமையச் செய்து, சிறப்பு மிக்க உரிமையால் நாம் வேறெதுவும் தன்னிடம் இல்லாத எம்முடைய தனி நெஞ்சின் அந்தரங்கத்தில் அடைத்துப் பிறருக்குத் தெரியாத மாயமான முறையினால் மறைத்து வைத்து விட்டோம். ஆகையால், அவனை ஆர் காண வல்லார்?
97. செந்தீ அழல்
140. மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்
உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட்(டு)
உளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்(கு)
அளைந்தெழுந்த செந்தீ யழல்.
தெளிவுரை : எம்பெருமானே! சர்வ பிரளயகாலத்தில் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து நின்று சீறி எழுந்து நீ எரிப்பதனால் மூன்று உலகங்களிலும் கலந்து பொங்கி எழுந்த பிரளய காலாக்கினியாகிய செம்மையாகிய தீயின் கொழுந்துகளை, மற்றக் காலங்களில் இந்த உலகம் ஏழினிலும் மறைத்து வைத்தாயோ? அல்லாமல் அதனை அதன் வெம்மையோடும் நின் திருக்கரத்தில் பாதுகாத்து வைத்தாயோ? இதனை எனக்குச் சொல்லி அருள வேண்டும்.
98. சிவந்தது எப்படி?
141. அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்
பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாயிதனைச் செப்பு.
தெளிவுரை : காலில் கட்டிய வீரக் கண்டை ஆடி ஒலிக்க, சுடுகாட்டில் பேயோடு உன் கோலம் நன்றாக விளங்கும்படி தழலை ஏந்திக் கொண்டு தீயில் நடனம் புரியும் எம்பெருமானே! உன்னுடைய உள்ளங்கை அதில் ஏந்தியிருக்கும் தீயானது ஆடி எரிய அதனால் சிவந்ததோ? அன்றி உன்னுடைய உள்ளங்கையில் அழகிய செவ் வண்ணத்தால் அந்த அழல் சிவந்த படியோ? இந்த வினாவுக்கு உரிய விடையை நீ சொல்லியருள்வாயாக.
99. யார் காண?
142. செப்பேந்(து) இளமுலையாள் காணவோ தீப்படுகாட்(டு)
அப்பேய்க் கணம்அவைதாம் காணவோ- செப்பெனக்கொன்(று)
ஆகத்தான் அங்காந்(து) அனல்உமிழும் ஐவாய
நாகத்தாய் ஆடுன் நடம்.
தெளிவுரை : வாயைத் திறந்து அனலைக் கக்கும ஐந்து வாய்களையுடைய நாகத்தை அணிந்த எம்பெருமானே! நீ ஆடுகின்ற உன் நடனமானது, தங்கச் செப்பின் தன்மையை ஏந்திய இளமையின் அடையாளமாகிய தனங்களையுடைய அன்னை கண்டு களிக்கவோ? அல்லது தீ உண்டாகும் சுடுகாட்டில் உள்ள அந்தப் பேய்க் கணங்கள் கண்டு மகிழவோ? இந்த இரண்டில் இன்னதுதான் காரணம் என்று ஒன்றாக எனக்குச் சொல்.
100. இறைவன் ஊறும் ஏறு
143. நடக்கிற் படிநடுங்கும் நோக்கில் திசைவேம்
இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல்
பொரும்ஏறோ ஆனேறோ பொன்ஒப்பாய் நின்னே(று)
உரும்ஏறோ ஒன்றா உரை.
தெளிவுரை : பொன்னை ஒத்த நிறமுடையவனே! நின்னுடைய வாகனமாகிய இடபம் நடந்தால், இந்த உலகமே நடுங்கும்; கோபத்தோடு பார்த்தால் திசைகளில் உள்ளவை வெந்து போகும் இடி போல முழங்கினால் உலகிலுள்ள உயிர்கள் யாவும் அச்சத்தால் துன்பம் கொண்டு, என்ன ஆகுமோ என்ற ஏக்கத்தை அடையும்; ஆதலால் அது மலைகளோடு மோதி உடைக்கும் ஆண் சிங்கமோ? ஆனேறு தானோ? இடிதானோ? ஏதேனும் என் வினாவுக்குரிய விடையை ஒன்றாகச் சொல்.
101. பாடலின் பயன்
144. உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்கால் பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோ(டு) அண்ணலைச்சென்(று) ஏத்துவார்
பேராத காதல் பிறந்து.
தெளிவுரை : இந்த வெண்பா அந்தாதி மாலையாகிய காரைக்கால் பேயின் சொல்லைத் தம்முடைய வாக்கினால் மனக் கசிவோடு சொல்லி இறைவனைத் துதிக்கும் அன்பர்கள், என்றும் அடங்காத அன்போடு, என்றும் நீங்காத பக்தி பிறந்து இறைவனிடம் சென்று துதித்துக் கொண்டே இருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்
5. திருக்கோயில் திருவெண்பா (ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிச் செய்தது)
வேறு பெயர் : ÷க்ஷத்திரத் திருவெண்பா
திருக்கோயில் வெண்பாவைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருத்தொண்டர் புராணத்துள் கூறப்பெறும் நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் காடவர் என்னும் பல்லவ அரச வழி முறையினர். இவரும் இவருடைய வழிமுறையினரும் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசு புரிந்திருந்தனர் என்று தெரிகிறது. இவர் ஏறக்குறைய 1500 ஆண்டுகட்கு முன்பு இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். இவர் தமிழ் மொழியை நன்கு கற்றுச் செய்யுள் பாடும் திறமுடையவராகத் திகழ்ந்ததன்றி, வடமொழியிலும் வல்லவராக விளங்கினார். உலக நூல்களை அன்றி அறிவு நூல்களையும் இவர் மிகுதியாகப் பயின்ற படியால் நாளடைவில் மெய்யறிவு உண்டாகியது.
அரசாட்சி துன்பமுடையது என்று அதனைத் துறந்து துறவி போல் வாழ்தலை மேற்கொண்டார். அதனால் இவருடைய பெயர் ஐயடிகள் என்று மாறியது. இவர் சிவபெருமான் எழுந்தருளிய திருக்கோயில்கள்தோறும் சென்று இறைவனைப் போற்றினார். ஒவ்வொர் ஊரிலும் ஒவ்வொரு வெண்பாப் பாடுதலையும் மேற்கொண்டார். அவ்வாறு இவரால் பாடப் பெற்ற வெண்பாக்கள் பல. அவைகள் எல்லாம் நாளடைவில் மறைந்து போக, நம்பியாண்டார் நம்பிகள் காலத்தில் 24 வெண்பாக்களே எஞ்சி நின்றன. அவற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருமுறையிற் சேர்த்தருளினார்.
இவ்வெண்பாக்கள் யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வ நிலையாமை உற்றார், உறவினர்கள் இறுதிக் காலத்தில் கைவிடுதல், முதுமை பருவத் துன்பம் முதலியவற்றைப் பற்றியே பேசுகின்றன. பாடல்கள் யாவும் யாவருக்கும் எளிதில் விளங்கும் இனிய நடையில் அமைந்து கற்போருக்குக் கழிபேருவகை ஊட்டும் பண்புடையனவாகத் திகழ்கின்றன. சொற் சுவை, பொருட் சுவை முதலிய சுவைகள் யாவும் நன்கு அமைந்துள்ளன.
திருச்சிற்றம்பலம்
தில்லைச் சிற்றம்பலம்
145. ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே, உற்றாரும்
கோடுகின்றார் மூப்பும் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.
தெளிவுரை : வாழ்க்கையில் இயங்குகின்ற தன்மை ஒழித்தவுடன், உறவினரும் மனம் திரும்பி வேறுபடுகிறார்கள். வயோதிகமும் நெருங்கியது. விரும்புகின்ற நல்ல உடல் இறந்து சுடுகாட்டை அடைவாற்குமுன் நல்ல நெஞ்சமே! திருச்சிற்றம்பலத்தைச் சேர்வாயாக. மூன்றாம் அடியை, நல் அச்சு இற்று அம்பலமே நண்ணாமே எனப் பிரித்துக் கொள்க.
திருநாகேச்சுரம்
146. கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
நடுநடுத்து நாஅடங்கா முன்னம் - பொடிஅடுத்த
பாழ்கோட்டம் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டம் செப்பிக் கிட.
தெளிவுரை : கடுக்காய் போட்டுக் காய்ச்சப்பட்ட மருந்து நீர் கொண்டு வா; புளித்த நீர் கொடு என்று நடுநடுங்கி நாக்கு அடங்குவதற்கு முன், சாம்பல் நிறைந்த சுடுகாடு சேர்வதற்கு முன் பல மாடங்களை உடைய கும்பகோணத்தில் கோயில் கொண்டுள்ள திருநாகேசுரர் கோயிலைப் பிரார்த்தனை செய்து கொண்டிரு.
திருவையாறு
147. குந்தி நடந்து குனித்தொருகை கோல்ஊன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.
தெளிவுரை : உட்கார்ந்தபடியே நகர்ந்தும், குனிந்து ஒரு கையில் கோல் ஊன்றியும், நொந்தும் இறுமியும் வருந்தியும், நுரைதள்ளியும் கோழை பெருகி வாய் வழியே பாய்வதற்கு முன், நெஞ்சமே! திருவையாற்றை வாயால் அழைப்பாயாக.
திருவாரூர்
148. காளை வடிவொழிந்து கையுறவோ(டு) ஐயுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் - பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்(கு) ஆளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.
தெளிவுரை : காளையைப் போல் உள்ள இளமைப் பருவத்தின் வடிவு ஒழிந்து, துன்பத்தோடு கோழை பொருந்தி, நாள்தோறும் நெருங்கித் துன்புறாமுன், பாளை அவிழ்கின்ற பாக்குமரச் சோலைகள் சூழ்ந்த திருவாரூர் எம்பெருமானுக்கு அடிமையாகி முகங்கவிழ்ந்து வணங்குக. என் கைகள் கூம்புவதாக.
திருத்துருத்தி
149. வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேல் கொண்டிருந்து - கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதம் சேர்.
தெளிவுரை : வஞ்சிக் கொடியைப் போன்ற மென்மையான இடையை உடையாரது வாளைப் போன்ற பெரிய கண்களில் நீர் சோரவும், தொடையின் மேல் வைத்துக் கொண்டு கஞ்சி உண்பிக்கக் கொண்டு வா என்னாமுன் நெஞ்சமே! சோழ நாட்டிலுள்ள திருக்குத்தாலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது பாதங்களைச் சேர்வாயாக.
திருக்கோடிக்கா
150. காலைக் கலையிழையால் கட்டித்தாங் கையார்த்து
மாலை தலைக்கணிந்து மைஎழுதி - மேலோர்
பருக்கோடி மூடிப் பலர்அழா முன்னம்
திருக்கோடி காஅடைநீ சென்று.
தெளிவுரை : கால்களைத் துணியின் கரைப் பகுதியினால் இறுகக் கட்டி, கைகளை இழுத்துக் கட்டி, மாலையைத் தலைக்குச் சூட்டி, மை எழுதி, பெரிய புதுத் துணியினால் மூடுதல் செய்து, பலர் அழாமுன்பே காவிரிக்கு வடகரையில் உள்ள திருக்கோடிக்கா என்னும் திருக்கோயிலை நீ சென்று அடைவாயாக.
திருவிடைவாய்
151. மாண்டுவாய் அங்காவாய் முன்னம் மடநெஞ்சே
வேண்டுவாய் ஆகி விரைந்தொல்லைப் - பாண்டவாய்த்
தென்இடைவாய் மேய சிவனார் திருநாமம்
நின்னிடைவாய் வைத்து நினை.
தெளிவுரை : இறந்து, வாய் திறந்து போவதற்கு முன்பு, மடமை நிறைந்த நெஞ்சமே! வேண்டுதலைச் செய்து, விரைவாக விரிந்த வாயினையுடைய அழகிய திரு இடைவாய் என்னும் பதியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானுடைய திருநாமத்தை உன் மனத்தில் பதிய வைத்து எண்ணுவாயாக.
திருநெடுங்களம்
152. தொட்டுத் தடவித் துடிப்பொன்றும் காணாது
பெட்டப் பிணம்என்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.
தெளிவுரை : தொட்டுப் பார்த்தும் தடவிப் பார்த்தும் துடிப்பொன்றும் இல்லாமையால், வறிய பிணம் என்று பேரிட்டுப் பாடையில் வைத்துக் கட்டி, எடுங்கள் அத்தா என்னா முன், மடப்பம் பொருந்திய நெஞ்சமே! திருநெடுங்களம் என்னும் ஊரில் எழுந்தருளிய இறைவனது பாதங்களை நினைப்பாயாக.
குழித்தண்டலை
153. அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட்(டு) ஆவி
ஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகு
கழித்துண்(டு) அலையாமுன் காவிரியின் தென்பால்
குழித்தண் டலையானைக் கூறு.
தெளிவுரை : அழுகிப் போவதும் மாறுபட்டுப் போவதுமான உடலை விட்டு உயிர் வெளியேறும்போது அறிய முடியாமல் கழுகு உடலைச் சிதைத்து உண்டு அலையாத முன், திருக்கடம்பந்துறையில் கோயில் கொண்டுள்ள இறைவனைப் போற்றுவாயாக. இப்போது இத்தலம் குளித்தலை எனப்படுகிறது.
பொது
154. படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து மும்மைக் - கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்(டு)
ஓடேந்தி உண்ப(து) உறும்.
தெளிவுரை : உலக முழுவதையும் வெண்குடைக்கீழ் இருந்து ஆண்ட முடி சூடிய மன்னர், பெரிய அரச செல்வத்தை நுகர்ந்திருப்பதைப் பார்க்கிலும், மணமிகுந்த கொன்றை மாலையணிந்த ஒளி வடிவாகிய சிவபெருமானுக்குப் பணி செய்து ஐயம் ஏற்றுண்டல் மூன்று மடங்கு சிறந்தது என்றவாறு.
திருவானைக்கா
155. குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட
வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாம் - தழீஇயிருந்தும்
என்னானைக் காவா இதுதகா(து) என்னாமுன்
தென்னானைக் காஅடைநீ சென்று.
தெளிவுரை : சுற்றிக் கூடியிருந்த சுற்றத்தார் குணங்களை எல்லாம் பாராட்டவும், நழுவிக் கடந்த உறுப்புக்கள் எல்லாம் தழுவிச் சேர்த்துக் கொண்டிருந்து என்னுடைய ஆனையைப் போன்ற இவனுக்கு இவ்வாறு இறந்து போனது கூடாது என்னாமுன், திருவானைக்காவை நீ சென்று அடைவாயாக. (அங்கங்கள் எல்லாம் என்பது குடும்பத்தாரையும் குறிக்கும் என்க)
திருமயிலை
156. குயிலொத்(து) இருள்குஞ்சி கொக்கொத்(து) இருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே - மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை அங்காந்(து) இளைத்து.
தெளிவுரை : குயில் நிறம் போல் கருமையாக இருந்த மயிர், கொக்கைப் போல் வெண்மையாய் நரைத்து, இருமல் மிகுதிப்படத் தொடங்குவதற்கு முன், திருமயிலைச் சிவப்பதியை சிந்திக்காமற் போனால், பின்னை வாய் திறந்து இளைத்து இரு என்பதாம்.
உஞ்சேனை மாகாளம்
157. காளையர்கள் ஈளையர்கள் ஆகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள்
ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை
மாகாளங் கைதொழுது வாழ்த்து.
தெளிவுரை : காளை போன்ற இளவயதுடையவர்கள் இருமல் முதலிய நோயுடையவர்களாகி கரு மயிரும் வெண்ணிறப் பூளைப் பூவைப் போல் நரைத்து, தோற்றம் கெட்டு விலைமகளிர் வெறுப்பதற்கு முன்னே நெஞ்சமே, வடநாட்டிலுள்ள உஞ்சேனை மாகாளம் என்னும் சிவத்தலத்தைக் கைதொழுது வாழ்த்து.
வளைகுளம்
158. இல்லும் பொருளும் இருந்த மனையளவே
சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல
கிளைகுளத்து நீர்அளவே கிற்றியே நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.
தெளிவுரை : மனைவியும் செல்வமும் வீட்டில் இருந்தவரைதான். புகழ்ந்துரைக்கும் அயலாரும் உயிர் உள்ள அளவுதான். நல்ல சுற்றத்தாரும் இறந்தபின் மூழ்கும் குளத்தளவுதான். வல்லையாயின் நெஞ்சமே! வளைகுளம் என்னும் சிவப்பதியில் இருக்கும் ஈசனையே வாழ்த்துவாயாக. இது சோழ நாட்டுத் திருத்தலம்.
திருச்சாய்க்காடு
159. அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலம் கோடாமுன் - நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.
தெளிவுரை : மை தீட்டப் பெற்ற கண்களை உடையவர் வெறுக்கும் பருவமாய் மயிர் நரையாகி உடம்பு கூன் அடைவதற்கு முன் நெஞ்சமே! சுடுகாட்டிற்குப் போய்ச் சேர, இறப்புத் துன்பத்தால் பிதற்றாமல் பூம்புகாரைச் சேர்ந்த திருச்சாய்க்கொடு என்னும் சிவப்பதியைச் சார்ந்து நீ கை தொழுவாயாக.
திருப்பாச்சிலாச்சிராமம்
160. இட்ட குடிநீர் இருநாழி ஓர்உழக்காச்
சட்டஒரு முட்டைநெய் தான்கலந்(து) - அட்ட
அருவாச்சார் என்றங்(கு) அழாமுன்னம் பாச்சில்
திருவாச்சி ராமமே சேர்.
தெளிவுரை : மருந்துகள் இடப்பட்ட இரு நாழி அளவுள்ள மருந்து நீர் ஓர் உழக்களவு ஆகுமாறு செப்பமாகக் காய்ச்சி, சிறிய கரண்டியளவு நெய் கலந்து ஊட்டியிட உயிர் பிரிந்தார் என்று அங்கு இருப்பவர் அழுவதற்கு முன், திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் சோழநாட்டுச் சிவத்தலத்திற்குச் செல்வாயாக என்பதாம்.
திருச்சிராமலை
161. கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி
ஒழிந்த துடன்இரா வண்ணம் - அழிந்த(து)
இராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே
சிராமலையான் பாதமே சேர்.
தெளிவுரை : நல்ல நெற்று தளர்ச்சியடைந்து கழிந்தது; நம்முடன் வைத்திருக்க முடியாதபடி அழிந்தது; இதை எடுத்துக்கொண்டு போ என்று சொல்வதற்கு முன்பே நெஞ்சமே! திருச்சிராப்பள்ளி மலைமீது கோயில் கொண்டிருக்கும் இறைவனது பாதங்களைச் சென்று அடைவாயாக.
திருமழபாடி
162. இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவாடி ஆவிவிடா முன்னம் - மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை.
தெளிவுரை : இழவு கொண்டாடி சுற்றத்தார் எல்லாரும் கூடி பிணத்தின்மேல் விழுந்து வருந்திக் கதற, உயிர் பிரிவதற்கு முன் திருமழபாடி என்னும் சிவப்பதியில் எழுந்தருளியிருக்கும் இறைவனை, அமுதம் போன்றவனை, முன்பு பிரமனும் திருமாலும் கண்டறியாதபடி ஜோதி வடிவாய் நின்றானை, நெஞ்சே நினைவாயாக.
திருவாப்பாடி
163. உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கனையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள்.
தெளிவுரை : நெஞ்சமே! நீ நினைக்கத்தான் வல்லையோ? ஊழ்வினைகள் கொள்ளை கொள்ள வந்து சேராமுன் கொள்ளிடத்தின் தெற்கிலுள்ள திருவாய்பாடியில் கோயில் கொண்டுள்ளவனும் நான்கு வேதங்களையும் தன் திருவாயினால் பாடியவனுமான இறைவனது பாதங்களை நினைக்கவல்லையோ என்று கூட்டுக.
திருவேகம்பம்
164. என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்
கன்னஞ்செய் வாயாகில் காலத்தால் - வன்னெஞ்சேய்
மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி
ஏகம்பத் தானை இறைஞ்சு.
தெளிவுரை : என் நெஞ்சமே! உன்னை நான் வேண்டிச் சொல்கின்றேன். காது கொடுத்துக் கேட்பாயானால், காலப் போக்கில் வலிமையுடைய மனம் பொருந்திய பெரிய தூணில் கட்டப்படுகிற யானையினது தோலை உரித்தவனும், வளம் பொருந்திய காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருப்பவனுமான ஏகாம்பரநாதனை வழிபடுவாயாக.
திருப்பனந்தாள்
165. கரம்ஊன்றிக் கண்இடுங்கிக் கால்குலைய மற்றோர்
மரம்ஊன்றி வாய்குதட்டா முன்னம் - புரம்மூன்றும்
தீச்சரத்தால் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய
ஈச்சரத்தான் பாதமே ஏத்து.
தெளிவுரை : கையை ஊன்றி, கண்கள் குழிவிழுந்து, கால் தடுமாற ஊன்றுகோலை ஊன்றி, வாய் பேச முடியாமல் அசைப்பதற்குமுன், முப்புரங்களையும் தீயினைக் கூராகவுடைய அம்பினால் அழித்தவனும், திருப்பனந்தாளில் உள்ள தாடகையீச்சரத்தானுமாகிய இறைவனின் பாதங்களையே புகழ்வாயாக.
திருவொற்றியூர்
166. தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்(டு)
எஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சம்
கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி
இரந்துண் டிருக்கப் பெறின்.
தெளிவுரை : விஷத்தை மறைந்திருக்குமாறு உண்ட நீல கண்டனது திருவொற்றியூரைச் சார்ந்து யாசித்து உண்டு இருக்கப் பெற்றால், அடைக்கலப் பொருளாக மூன்று உலகங்களையும் ஆண்டு காத்து, குறைவில்லாமற் பெற்றாலும் யான் வேண்டேன் என்பதாம்.
பொது
167. நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்
வீற்றிருந்த செல்வம் விழையாதே - கூற்றுதைத்தான்
ஆடரவம் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன்
பாடவரம் கேட்ட பகல்.
தெளிவுரை : நூற்றுக்கணக்காகிய பல்லூழிக் காலம் வெண்கொற்றக்குடைக்கீழ் அரசாட்சி செய்து கொண்டிருந்த அரசாட்சிச் செல்வத்தை விரும்பாதே, எமனை அழித்தவனும் ஆடுகின்ற பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவனுமாகிய அம்மானுடைய பாட்டின் ஒலி ஒருபகல் கேட்பதனால் உளவாம் பயன், நூற்றுக்கணக்கான ஊழிக் காலம் அரசாட்சி செய்ததனாலும் உண்டாகாது என்றபடி.
திருமயானம்
168. உய்யும் மருந்திதனை உண்மின் எனஉற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்கால் - பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.
தெளிவுரை : இஃது உயிர் வாழச் செய்யும் மருந்து, உண்பாயாக என உறவின் முறையார் கையைப் பிடித்து எதிரே காட்டினால், மெள்ள எழுந்து இருமி எனக்கு வேண்டாம் என்பதற்கு முன் நெஞ்சமே! செழிப்பான திருக்கடவூர் மயானம் என்னும் தலத்தையே சென்று அடைவாயாக.
திருச்சிற்றம்பலம்
6. பொன்வண்ணத்து அந்தாதி (சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்தது)
சேரமான் பெருமாள் நாயனார் சேர நாட்டுப் பேரரசர். கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார் எனப் போற்றப்படுபவர். திருச்சிலம்பு ஓசை ஒலி வழியே சென்று நிருத்தனைக் கும்பிடும் பேறு பெற்றவர். இறைவனின் திருமுகம் பெறும் பேறுடையவர். சுந்தரரின் இனிய தோழர். அவருடன் கயிலைக்குச் சென்று இறைவனின் இன்னருள் பெற்றவர்.
காலம்: இவர் சுந்தரர் காலத்தவர்; ஆதலின், அவர் காலமாகிய எட்டாம் நுற்றாண்டே இவரது காலமும் ஆகும்.
அருளிய நூல்கள்:
1. பொன் வண்ணத்தந்தாதி 2. திருவாரூர் மும்மணிக் கோவை 3. திருக்கயிலாய ஞான உலா என்பன. இவற்றுள் முன்னயதைத் தில்லையிலும், இரண்டாவது நூலைச் சுந்தரருடன் திருவாரூர்ப் பெருமானை வழிபட்ட பொழுதும், மூன்றாவது நூலைத் திருக்கயிலையிலும் அருளிச் செய்தார்.
பொன்வண்ணத்தந்தாதி
பொன் வண்ணம் எனத் தொடங்கிப் பொன் வண்ணமே என நிறைவு பெறுதலானும், அந்தாதித் தொடையாக அமைந்திருத்தலானும் இப்பெயர் பெற்றது. இந்நூல் நூறு பாடல்களை உடையது. கட்டளைக் கலித்துறையால் ஆனது. அணி நலம் சான்றது. கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கமாகப் பாடிய பாடல்கள் 40க்கு மேல் இந்நூற்கண் உள்ளன.
இதன்கண் அமைந்துள்ள பாடல்கள் யாவும் மோனை எதுகை முதலிய தொடை நலம் பொருந்தியனவாய், நிரல் நிறை முதலிய பொருள் கோளும், தன்மை உவமை முதலிய பொருளணிகளும், யமகம் திரிபு முதலிய சொல்லணிகளும் அமையப் பெற்று விளங்குகின்றன. ஆழ்ந்து பயில்வார்க்கு இந்நூல் பேருவகையை அளிக்கும் என்பது திண்ணம்.
திருச்சிற்றம்பலம்
169. பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே.
தெளிவுரை : பொன் வண்ணம் போல மேனி அழகாகப் பொலிவுற்று விளங்கும் மின்னல் போன்று நீண்ட சடை உள்ளது. வெள்ளிக் குன்றமாகிய கயிலை மலை போன்று பெரிய இடபம் வெண்மை நிறமானது. என் நிறம் போலவே ஈசனுடைய நிறமும் உள்ளது.
இது இறைவன் மீது காமுற்ற பெண் கூறியது போன்றுள்ளது. தன்னுடைய மேனி பசலை உற்றுள்ளது என்று குறிப்பால் உணர்த்துகின்றாள்.
170. ஈசனைக் காணப் பலிகொடு
செல்லஎற் றேஇவளோர்
பேயனைக் காமுறு பிச்சிகொ
லாம்என்று பேதையர்முன்
தாயெனை ஈர்ப்பத் தமியேன்
தளரஅத் தாழ்சடையோன்
வாவெனைப் புல்லஎன் றான்இமை
விண்டன வாட்கண்களே.
தெளிவுரை : இது இறைவனுடைய பிட்சாடணத் திருக்கோலம் கண்டு காமுற்ற பெண் கூறியது. நான் இறைவனைக் காண பிச்சை எடுத்துக் கொண்டு செல்ல, இது எத்தன்மைத்து என்றால், இவள் ஓர் பேயனைக் காமுற்ற பைத்தியக்காரி போலும் என்று பேதைப் பெண்களின் முன்னால் தாயானவள் என்னைப் பிடித்து இழுக்க, யான் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க, அந்த நீண்ட சடையை உடையவன் என்னைத் தழுவ வருவாயாக என்றான். கண்கள் விழித்துக் கொண்டன.
171. கண்களங் கம்செய்யக் கைவளை
சோரக் கலையுஞ்செல்ல
ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பஒண்
கொன்றையந் தாருருவப்
பெண்களங் கம்இவள் பேதுறும்
என்பதோர் பேதைநெஞ்சம்
பண்களங் கம்இசை பாடநின்(று)
ஆடும் பரமனையே.
தெளிவுரை : கண்கள் நீர் பொழிய, கைவளைகள் கழல, ஆடை இடுப்பை விட்டு நழுவ, கழுத்தும் நெற்றியும் வேர்ப்ப, ஒளி பொருந்திய கொன்றை மாலை கழல, விண்ணின் மீது இசை பாட இவள் மயங்குவாள். பேதை நெஞ்சம் ஆடும் பரமனைக் குறித்து இசை பாடும்.
172. பரமனை யேபலி தேர்ந்துநஞ்
சுண்டது பன்மலர்சேர்
பிரமனை யேசிரம் கொண்டும்
கொடுப்பது பேரருளாம்
சரமனை யேஉடம் பட்டும்
உடம்பொடு மாதிடமாம்
வரமனை யேகிளை யாகும்முக்
கண்ணுடை மாதவனே.
தெளிவுரை : பிறர் வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்தது, ஆலகால விஷத்தை உண்டது, பல மலர்கள் சேர்ந்த பிரமனைச் சிரம் அறுத்தது, காமனை எரித்தது, உடம்பின் இடப் பாகத்தில் மேலான இல்லாளைக் கொண்டது, இவைகளே முக்கண்களையுடைய மாதவனுடைய உறவுகளாம்.
173. தவனே உலகுக்குத் தானே
முதல்தான் படைத்தவெல்லாம்
சிவனே முழுதும்என் பார்சிவ
லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி
கடலிடை நஞ்சமுண்ட
பவனே எனச்சொல்லு வாரும்
பெறுவர்இப் பாரிடமே.
தெளிவுரை : சிவனே உலகுக்கு முதல்வன். சிவனே எல்லாவற்றையும் படைத்தான் என்பார். அவனே சிவலோகம் பெறச் செய்பவன். வலிமையுள்ள காளையை ஊர்பவன். கடலிடத்து எழுந்த ஆலகால விஷத்தை உண்டவனும் அவனே என்று இவர் பெருமையைச் சொல்லுகின்றவர், இப்பெரிய உலகைப் பெறுவர்.
174. இடமால் வலந்தான் இடப்பால்
துழாய்வலப் பால்ஒண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம்
ஆழி இடம்வலம்மான்
இடமால் கரிதால் வலஞ்சே(து)
இவனுக்கு எழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலம் கொக்கரை
யாம்எங்கள் கூத்தனுக்கே.
தெளிவுரை : இது சங்கரநாராயணத் திருக்கோலம் பற்றியது. இடப்பக்கம் திருமால், வலப்பக்கம் சிவன்; இடப்பக்கம் துளசிமாலை, வலப்பக்கம் கொன்றை மாலை; இடப்பக்கம் பொன்னாடை, வலப்பக்கம் தோலாடை;  இடப்பக்கம் சக்கராயுதம், வலப்பக்கம் மான்; இடப்பக்கம் கருநிறம், வலப்பக்கம் செந்நிறம்; இடப்பக்கம் குடக் கூத்து, வலப்பக்கம் கொக்கரை என்னும் கூத்து. இந்த உருவம்தான் எங்கள் கூத்தனுடையது.
175. கூத்துக் கொலாம்இவர் ஆடித்
திரிவது கோல்வளைகள்
பாத்துக் கொலாம்பலி தேர்வது
மேனி பவளம்கொலாம்
ஏத்துக் கொலாம்இவர் ஆதரிக்
கின்ற(து) இமையவர்தம்
ஓத்துக் கொலாம்இவர் கண்ட(து)இண்
டைச்சடை உத்தமரே.
தெளிவுரை : இவர் ஆடித் திரிவது கூத்து போலும். வளைந்த வளையல்களை அணிந்த பெண்கள் பிச்சை இடுவது சோறு போலும். இவருடைய மேனி பவள நிறம் போன்றது. இவர் ஆதரிக்கின்றது துதிப்பாடல். தேவர்களுடைய வேதமே இவர் கண்டது. தலையில் உள்ளது ஊமத்தம் பூமாலை.
176. உத்தம ராய்அடி யார்உல
காளத் தமக்குரிய
மத்தம் அராமதி மாடம்
பதிநலம் சீர்மைகுன்றா
எத்தம ராயும் பணிகொள்ள
வல்ல இறைவர்வந்தென்
சித்தம ராயக லாதுடன்
ஆடித் திரிதவரே.
தெளிவுரை : இவரது அடியார்கள் உத்தமராய் உலகாளுகிறார்கள். ஆனால் ஊமத்தம் பூ, பாம்பு, பிறைச் சந்திரன் ஆகியவை இவரது உடைமைகள். எப்படிப்பட்ட தன்மை உடையவர்களையும் பணிகொள்ள வல்ல இறைவர் வந்து என் உள்ளத்தில் பொருந்தியவர். அவர் என்னை விட்டுப் பிரியாமல் திரிகின்றவர்.
177. திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின்
உள்ளும் திரிதரினும்
அரிதவர் தன்மை அறிவிப்ப
தாயினும் ஆழிநஞ்சேய்
கரிதவர் கண்டம் வெளிதவர்
சாந்தம்கண் மூன்றொ(டு)ஒன்றாம்
பரிதவர் தாமே அருள்செய்து
கொள்வர்தம் பல்பணியே.
தெளிவுரை : அவ்வாறு திரிகின்றவரது கண்ணுள்ளும் மனத்திலும் குடிகொண்டிருந்தும் அவரை அடைவது அரிது. அவரது தன்மையை அறிவிப்பதாயின், கடலில் தோன்றிய நஞ்சை அருந்தியதால் நீல கண்டத்தை உடையவர். அவர் அணிந்துள்ள நீறு வெண்மையானது. மூன்று கண்களை உடையவர். அவர் பெரிய தவத்தை உடையவர். தம் அணிகலன்களை அவரே சரி செய்து கொள்வார்.
178. பணிபதம் பாடிசை ஆடிசை
யாகப் பனிமலரால்
அணிபதங் கன்பற் கொளப்பனை
அத்தவற் கேயடிமை
துணிபதங் காமுறு தோலொடு
நீறுடல் தூர்த்துநல்ல
தணிபதங் காட்டிடும் சஞ்சலம்
நீஎன் தனிநெஞ்சமே.
தெளிவுரை : நீ அவனைப் பணிவாயாக. அவனுடைய பாதங்களைத் துதி செய். இசையோடு ஆடு. பனி மலரால் அருச்சனை செய். சூரியனது பற்களைப் பிடுங்கிய பெருமானே சிறந்தவன் என முடிவு செய்து கொள். அவனை அடைய விரும்பு, நெஞ்சமே! அவன் உன் கவலைகளைத் தீர்த்து வைப்பான்.
179. நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர்
ததும்ப முகம்மலர
அஞ்செங் கரதலம் கூம்பவட்
டாங்கம் அடிபணிந்து
தஞ்சொல் மலரால் அணியவல்
லோர்கட்குத் தாழ்சடையான்
வஞ்சம் கடிந்து திருத்திவைத்
தான்பெரு வானகமே.
தெளிவுரை : நெஞ்சம் அன்புத் தளிரை விடவும், கண்களில் நீர் பெருகவும், முகம் மலரவும், கைகள் குவியவும், எட்டு உறுப்புக்களும் தரையில் தோயப் பணிந்தும் வணங்குபவர்களுக்கு, நீண்ட சடையை உடைய இறைவன், உன் மனத்திலுள்ள வஞ்சனைகளைப் போக்கி, செம்மைப்படுத்தி வைப்பான். பெருமை பொருந்திய வீடு பேற்றை அளிப்பான் என்பதாம்.
180. வானகம் ஆண்டுமந் தாகினி
ஆடிநந் தாவனம்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல்
வோரும் சிதவல்சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப்
போரும் கனகவண்ணப்
பால்நிற நீற்றற்(கு) அடியரும்
அல்லாப் படிறருமே.
தெளிவுரை : சுவர்க்கத்தை ஆண்டு, விண்ணகக் கங்கையில் நீராடி, நந்தவனம் சூழ்ந்த தேன் பொருந்திய மலரைச் சூடிச் செல்வோரும், கந்தைத் துணியைச் சுற்றிக் கொண்டு காடு தேயத் திரிந்து யாசிப்பவரும் பால் போன்ற வெண்ணிற நீறு அணிந்த அப்பெருமாற்கு அடியவர் ஆகாதவர் வஞ்சகரே.
181. படிறா யினசொல்லிப் பாழுடல்
ஓம்பிப் பலகடைச்சென்(று)
இடறா(து) ஒழிதும் எழு, நெஞ்ச
மேஎரி ஆடிஎம்மான்
கடல்தா யினநஞ்சம் உண்ட
பிரான்கழல் சேர்தல்கண்டாய்
உடல்தான் உளபயன் ஆவசொன்
னேன்இவ் வுலகினுள்ளே.
தெளிவுரை : பொய் பேசி, இந்தப் பாழ் உடலை வளர்த்து, பல வாசல்கள் சென்று வருந்தாமல் எழுச்சி பெற்ற நெஞ்சமே ஒழிவாயாக. அவன் நெருப்பில் நடனமாடிய எம்மான். கடலில் உண்டாகிய விஷத்தை அருந்திய அப்பெருமானது பாதங்களை அடைவது தான் வழி என்பதை நீ காண்பாய். இவ்வுலகில் பிறவி எடுத்ததன் பயன் அதுதான். அறிவாயாக.
182. உலகா ளுறுவீர் தொழுமின்விண்
ணாள்வீர் பணிமின்நித்தம்
பலகா முறுவீர் நினைமின்
பரமனோ(டு) ஒன்றலுற்றீர்
நலகா மலரால் அருச்சிமின்
ஆள்நர கத்துநிற்கும்
அலகா முறுவீர் அரனடி
யாரை அலைமின்களே.
தெளிவுரை : உலகை ஆள விரும்புகிறவர்களே, இறைவனை வணங்குங்கள். அவனைத் தொழுதால் தெய்வ லோகத்தையும் ஆள்வீர்கள். அவனை நாள்தோறும் பணியுங்கள். பலவற்றையும் அடைய அலைபவர்களே, அவனை நினையுங்கள். பரமனை அடைய விரும்பினால் நல்ல மலரைக் கொண்டு அருச்சியுங்கள். ஆளுகின்ற நரகத்தில் நிற்பதற்குக் காரணமான அறமல்லாத செயல்களைச் செய்யாதீர்கள். அதாவது, அடியவரை வருத்துபவர் நரகம் புகுவர் என்றபடி நாள் நரகம் என்றும் பாடம்.
183. அலையார் புனல்அனல் ஞாயி(று)
அவனி மதியம்விண்கால்
தொலையா உயிருடம் பாகிய
சோதியைத் தொக்குமினோ
தலையாற் சுமந்துந் தடித்துங்
கொடித்தேர் அரக்கன்என்னே
கலையான் ஒருவிரல் தங்ககில்
லான்விட்ட காரணமே.
தெளிவுரை : நீர், தீ, சூரியன், பூமி, சந்திரன், ஆகாயம், காற்று, நிலைத்திராத உயிர் ஆகிய அஷ்ட மூர்த்தங்களாக உடைய ஒளி வடிவினனை அடையுங்கள். தலையால் சுமந்தும் வீழ்த்தியும் கொடி கட்டிய தேரையுடைய இராவணனை, பிறைச்சந்திரனைச் சூடிய சிவபிரான் கால் விரலால் அழுத்தி, தண்டித்த காரணம் என்னவோ?
184. காரணன் காமரம் பாடவோர்
காமரம் பூடுறத்தன்
தாரணங் காகத் தளர்கின்ற
தையலைத் தாங்குவர்யார்
போரணி வேற்கண் புனற்படம்
போர்த்தன பூஞ்சுணங்கார்
ஏரணி கொங்கையும் பொற்படம்
மூடி இருந்தனவே.
தெளிவுரை : யாவற்றிற்கும் காரணமாகிய இறைவன் காமரம் என்னும் இசையைப் பாட, ஒப்பற்ற மன்மதனுடைய கணை, மாலையாக வருத்துவதற்குரிய பொருளாக வருந்துகின்ற என் மகளை யார் தாங்குவர்? போர் செய்கின்ற வேல் போன்ற கண்கள் நீர் சொரிந்தன. பசலை என்னும் பொன்னாடை கொங்கைகளை மூடியது. 
இது தாய்க் கூற்று.
185. இருந்தனம் எய்தியும் நின்றும்
திரிந்தும் கிடந்தலைந்தும்
வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு
போகநெஞ் சேமடவாள்
பொருந்திய பாகத்துப் புண்ணியன்
புண்ணியல் சூலத்தெம்மான்
திருந்திய போதவன் தானே
களையும்நம் தீவினையே.
தெளிவுரை : பெருஞ் செல்வம் பெற்ற பின்பும், நின்றும், திரிந்தும், கிடந்து அலைந்தும் வருந்திய வாழ்க்கையை விட்டுவிடு. இன்பத்தை மென்மேலும் அடைய விரும்பும் நெஞ்சமே! உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டுள்ள புண்ணியனும் ஊன் பொருந்திய சூலத்தைக் கையில் ஏந்தியவனுமாகிய நம் தலைவன், நாம் திருந்திவிட்ட காலத்தில் அவனே வந்து நம் தீவினைகளைப் போக்குவான்.
186. தீவினை யேனைநின்(று) ஐவர்
இராப்பகல் செத்தித்தின்ன
மேவின வாழ்க்கை வெறுத்தேன்
வெறுத்துவிட் டேன்வினையும்
ஓவின(து) உள்ளந் தெளிந்தது
கள்ளங் கடிந்(து) அடைந்தேன்
பாவின செஞ்சடை முக்கணன்
ஆரணன் பாதங்களே.
தெளிவுரை : தீவினை உடையவனாகிய என்னை விடாமல் ஐம்புலக் கள்வர் இரவும் பகலும் வருத்தித் தின்ன, பொருந்திய இந்த வாழ்க்கையை வெறுத்தேன். வினையும் ஒழிந்தது. உள்ளம் தெளிந்தது. கள்ளங் கடிந்து, பரவின செஞ்சடையையும் மூன்று கண்களையும் உடைய மறை முதல்வனது பாதங்களை அடைந்தேன்.
187. பாதம் புவனி சுடர்நய
னம்பவ னம்உயிர்ப்(பு)ஓங்
கோதம் உடுக்கை உயர்வான்
முடிவிசும் பேயுடம்பு
வேதம் முகம்திசை தோள்மிகு
பன்மொழி கீதமென்ன
போதம் இவற்கோர் மணிநிறம்
தோற்பது பூங்கொடியே.
தெளிவுரை : திருவடி, உலகம்; சூரிய சந்திர அக்கினி, மூன்றும் கண்கள்; காற்று, மூச்சு; ஒலி செய்கின்ற கடல், ஆடை; உயர்ந்த வானம், தலைமுடி; ஆகாயமே உடம்பு; வேதம் முகம். திசைகள், தோள்கள்; மிகுபன்மொழி கீதம் என்று சொல்லும் போதம். இவற்கு ஒப்பற்ற மணி நிறம். தோற்பது பூங்கொடி.
188. கொடிமேல் இடபமுங் கோவணக்
கீளுமோர் கொக்கிறகும்
அடிமேற் கழலும் அகலத்தில்
நீறும்ஐ வாயரவும்
முடிமேல் மதியும் முருகலர்
கொன்றையும் மூவிலைய
வடிவேல் வடிவும்என் கண்ணுள்எப்
போதும் வருகின்றவே.
தெளிவுரை : கொடியில் எழுதியிருப்பது இடபம்; அரையில் இருப்பவை கோவணமும் கீளும்; தலையில் அணிந்திருப்பது கொக்கின இறகு; பாதத்தில் உள்ளது வீரக்கழல். மார்பில் பூசியிருப்பது திருநீறு; முடிமேல் ஐந்து தலை நாகமும் பிறைச்சந்திரனும் வாசனை மலராகிய கொன்றையும் உள்ளன. அவர் கையில் உள்ளது மூன்று நிலையாக உள்ள சூலப்படை. இவைகள் எப்போதும் என் கண்முன் வருகின்றன.
189. வருகின்ற மூப்பொடு தீப்பிணிக்
கூற்றம்வை கற்குவைகல்
பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில்
லேன்பொடி பூசிவந்துன்
அருகொன்றி நிற்க அருளுகண்
டாய்அழல் வாயரவம்
வெருகொன்ற வெண்மதி செஞ்சடை
மேல்வைத்த வேதியனே.
தெளிவுரை : வருகின்ற வயோதிகமும் தீப்பிணியாகிய எமனும் நாளுக்கு நாள் தாக்குகின்ற போரும் ஆகிய இவற்றிற்குப் பொறுக்க முடியாதவனாக இருக்கிறேன். திருநீறு பூசி வந்து உன் அருகில் வந்து நிற்க அருள் செய்வாயாக. தீயைப் போன்ற நஞ்சு பொருந்திய வாயினையுடைய பாம்பையும் பிறைச் சந்திரனையும் செஞ்சடைமேல் வைத்த வேதியனே, வேண்டுதலை இறுதியில் பொருத்திக் கொள்க.
190. வேதியன் பாதம் பணிந்தேன்
பணிந்துமெய்ஞ் ஞானமென்னும்
சோதியென் பால்கொள்ள உற்றுநின்
றேற்(கு)இன்று தொட்டியதுதான்
நீதியென் றான்செல்வம் ஆவதென்
றேன்மேல் நினைப்புவண்டேர்
ஓதிநின் போல்வகைத் தேயிரு
பாலும் ஒழித்ததுவே.
தெளிவுரை : சிவபெருமானது பாதங்களை வணங்கினேன். வணங்கியதும் உண்மையறிவு என்று சொல்லப்படுகிற ஒளி என்மேல் பாய்ந்தது. உற்றுப் பார்த்த எனக்கு இன்று முதல் இதுதான் நீதியென்றான். செல்வம் ஆவது என்றேன். மேல் நினைப்பு வண்டு பொருந்திய அழகு. கூந்தல் போல்வது வெறுத்துத் தள்ளி விட்டது என்பதாம்.
191. ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன்
உவகையை ஓங்கிற்றுள்ளம்
இழித்தேன் உடம்பினை ஏலேன்
பிறரிடை இம்மனையும்
பழித்தேன் பழியே விளைக்கும்பஞ்
சேந்தியக் குஞ்சரமும்
தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன்
இனிமிகத் தெள்ளியனே.
தெளிவுரை : பிறவியை ஒழித்துவிட்டேன்; மகிழ்ச்சியை அடக்கி விட்டேன். உள்ளம் உயர்ந்த நிலையை அடைந்தது. உடம்பை இழிவுடையதாக வெறுத்தேன். பிறரிடம் சென்று யாசிக்க மாட்டேன். குடும்ப வாழ்க்கையும் பழித்தேன். துன்பத்தையே தருகின்ற ஐம்பொறிகளாகிய யானையையும் அடக்கினேன். சிவனது பாதங்களைச் சேர்ந்தேன்.
192. தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலேன்
தீங்கவி பாடலுற்றேன்
ஒள்ளிய சொல்லும் பொருளும்
பெறேன்உரைத் தார்உரைத்த
கள்ளிய புக்காற் கவிகள்ஒட்
டார்; கடல் நஞ்சயின்றாய்
கொள்ளிய அல்லகண் டாய்புன்சொல்
ஆயினும் கொண்டருளே.
தெளிவுரை : தெளிந்த அறிவினையுடைய மாந்தர்களிடம் நான் சேரவில்லை. இனிமையான கவிகளைப் பாடலானேன். சிறந்த சொற்களும் பொருளும் பெறவில்லை. மற்றவர்கள் சொன்ன திருடப்பட்ட அப்பாடல்களைப் புலவர்கள் ஏற்க மாட்டார்கள். கடலினின்றும் எழுந்த விடத்தைப் பருகினாய். அவை கொள்ளத் தக்கனவல்ல. என்னுடைய சொற்கள் அற்பமானவை என்றாலும் ஏற்றுக் கொள்வீர்களாக.
193. அருளால் வரும்நஞ்சம் உண்டுநின்
றாயை அமரர்குழாம்
பொருளார் கவிசொல்ல யானும்புன்
சொற்கள் புணர்க்கலுற்றேன்
இருளா சறவெழில் மாமதி
தோன்றவும் ஏன்றதென்ன
வெருளா(து) எதிர்சென்று மின்மினி
தானும் விரிகின்றதே.
தெளிவுரை : தேவர்கள் மீது கொண்ட கருணையினால் கடலில் தோன்றிய விடத்தை உண்டு நின்ற உன்னை, அவர்கள் நற்பொருள்கள் நிறைந்த கவிகளைப் பாடி துதி செய்ய, யானும் பொருளற்ற பாடல்களைச் சேர்க்கலானேன். இருளாகிய குற்றம் நீங்க அழகிய சந்திரன் தோன்றவும் ஒத்திருக்கின்றது என்ன. அஞ்சாமல் எதிர் சென்று மின்மினிப் பூச்சியும் விளக்குகின்றது.
194. விரிகின்ற ஞாயிறு போன்றது
மேனி; யஞ் ஞாயிறுசூழ்ந்(து)
எரிகின்ற வெங்கதிர் ஒத்தது
செஞ்சடை அச்சடைக்கீழ்ச்
சரிகின்ற காரிருள் போன்றது
கண்டம்அக் காரிருட்கீழ்ப்
புரிகின்ற வெண்முகில் போன்றுள
தால்எந்தை ஒண்பொடியே.
தெளிவுரை : பரவுகின்ற சூரியனைப் போன்றது உன் மேனி; அச்சூரியனைச் சூழ்ந்து வெப்பம் பொருந்திய ஒளிக்கதிர் போன்றது உன் செந்நிறச் சடை; அச்சடையின் கீழ் தவழ்கின்ற கருமையான இருள் போன்றது உன் நீலகண்டம்; அந்தக் கருமையான இருளின்கீழ் மிகுகின்ற வெண்முகில் போன்றுள்ளது என் தந்தையாகிய நீ அணிந்துள்ள திருநீற்றுப் பொடி.
195. பொடிக்கின் றிலமுலை போந்தில
பல்சொற் பொருள்தெரியா
முடிக்கின் றிலகுழல் ஆயினும்
கேண்மின்கள் மூரிவெள்ளம்
குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங்
கண்டன்மெய்க் கொண்டணிந்த
கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி
யேன்பிறர் கட்டுரையே.
தெளிவுரை : முலைகள் இன்னும் திரண்டு தோன்றவில்லை. பற்கள் இன்னும் முளைக்கவில்லை. சொற்களுக்கு இன்னும் பொருள் தெரியவில்லை. கூந்தல் இன்னும் முடிக்கும் அளவுக்கு வளரவில்லை. என்றாலும் கேளுங்கள். பெரிய வெள்ளம் பொருந்தியுள்ள செஞ்சடையாகிய மேகம் அணிந்த மணம் பொருந்திய கொன்றை மலரின் வாசனையை உடையவளாய் இருக்கின்றாள். பிறர் சொல்வதை நான் அறியேன்.
196. உரைவளர் நான்மறை ஓதி
உலகம் எலாந் திரியும்,
விரைவளர் கொன்றை மருவிய
மார்பன் விரிசடைமேல்
திரைவளர் கங்கை நுரைவளர்
தீர்த்தம் செறியச்செய்த
கரைவளர் ஒத்துள தால்சிர
மாலைஎம் கண்டனுக்கே.
தெளிவுரை : புகழ் பெருகுகின்ற நான்கு வேதங்களையும் பாராயணம் செய்து உலகம் முழுவதிலும் திரிகின்ற மணம் வீசுகின்ற கொன்றை மலர் பொருந்திய மார்பை உடையவன், விரிந்த சடையின்மேல் அலைகள் பெருகுகின்ற கங்கையின் நுரையோடு கூடிய புனித நீர் செறியச் செய்த கரையின் வளர்ச்சி, தலையில் அணிந்துள்ள மாலை அப் பெருமானுக்கு ஒத்துள்ளது.
197. கண்டங் கரியன் கரியீர்
உரியன் விரிதருசீர்
அண்டங் கடந்த பெருமான்
சிறுமான் தரித்தபிரான்
பண்டன் பரம சிவனோர்
பிரமன் சிரம்அரிந்த
புண்தங் கயிலன் பயிலார
மார்பன்எம் புண்ணியனே.
தெளிவுரை : நீலகண்டத்தை உடையவன்; யானையின் உரித்த தோலை உடையவன்; பரந்த உலகங்களை எல்லாம் தாண்டிய பெருமான்; சிறிய மானைக் கையில் தரித்துள்ளவன்; பழைமையானவன்; பரமசிவன்; ஒப்பற்ற பிரமதேவனது தலையை அரிந்தவன்; ஊன் பொருந்திய சூலப்படையை உடையவன். ஆத்தி மலர் மாலை பொருந்திய மார்பை உடையவன்; அவனே நான் வணங்கும் புண்ணியனாகிய சிவபெருமான் என்றபடி.
198. புண்ணியன் புண்ணியல் வேலையன்
வேலைய நஞ்சன்அங்கக்
கண்ணியன் கண்ணியல் நெற்றியன்
காரணன் காரியங்கும்
விண்ணியன் விண்ணியல் பாணியன்
பாணி கொளஉமையாள்
பண்ணியன் பண்ணியல் பாடலன்
ஆடற் பசுபதியே.
தெளிவுரை : அறவடிவினன் ஊன் பொருந்திய சூலப் படையை உடையவன்; கடலில் உண்டான நஞ்சைக் கழுத்தில் உடையவன்; எலும்பு மாலையை உடையவன். நெற்றியில் கண்ணை உடையவன்; முத்தொழில்களுக்கும் காரணமானவன்; மேகங்கள் சஞ்சரிக்கின்ற விண் வடிவமானவன்; விண்ணில் பொருந்திய கங்கையை உடையவன்; உமாதேவியின் கையைப் பிடிக்கத் தகுதியுடையவன்; புகழ்ப் பாடல்களை உடையவன். நடனமாடுகின்ற அந்தப் பசுபதியை நீ நாடுவாயாக.
199. பதியார் பலிக்கென்று வந்தார்
ஒருவர்க்குப் பாவைநல்லீர்
கதியார் விடைஉண்டு கண்மூன்(று)
உளகறைக் கண்டமுண்டு
கொதியார் மழுவுண்டு கொக்கரை
உண்டிறை கூத்துமுண்டு
மதியார் சடையுள மாலுள(து)
ஈவது மங்கையர்க்கே.
தெளிவுரை : தலைவர் பிச்சை வேண்டி வந்தார். அந்த ஒப்பற்ற தலைவர்க்குப் பாவை போன்ற, பெண்களே! விரைவாகச் செல்லும் காளை உண்டு; மூன்று கண்கள் உள்ளன; கருமையான கழுத்தை உடையவன்; கொதித்தலைச் செய்யும் மழுவுண்டு; கொக்கரை யென்னும் வாத்தியத்தை உடையவன்; சிறிது கூத்தும் ஆடுவான்; பிறை அணிந்த சடையை உடையவன். மங்கையர்க்கு ஈவதாகிய மயக்கம் அவனிடம் உள்ளது.
200. மங்கைகொங் கைத்தடத் திங்குமக்
குங்குமப் பங்கநுங்கி
அங்கமெங் கும்நெகச் சங்கமங்
கைத்தலத் துங்கவர்வான்
கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங்
கண்ணர வங்கள்பொங்கிப்
பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங்
கும்முடிப் பண்டங்கனே.
தெளிவுரை : மங்கையர்களின் கொங்கைகளில் குங்குமச் சேறு வருந்தி, உடல் முழுதும் உருக, மயிர்க் கற்றைகளின் இடையே தங்கும் பழைமையான முழு எலும்பு அணிந்தவன். கங்கையின் அலைகள் பொங்கும். செங்கண் அரவங்கள் அங்கு தங்கியிருக்கும். பிறைச் சந்திரனும் இருக்கும். மங்கையர்களின் கைவளைகளையும் கவர்வான்.
201. பண்டங்கள் வந்து பலிதாஎன்
றான்பக லோற்(கு)இடுஎன்றேன்
அண்டங் கடந்தவன் அன்னம்என்
றான்அயன் ஊர்தியென்றேன்
கொண்டிங்(கு) உன்ஐயம்பெய் என்றான்
கொடித்தேர் அநங்கன்என்றேன்
உண்டிங்(கு) அமைந்ததென் றாற்(கு)அது
சொல்ல உணர்வுற்றதே.
தெளிவுரை : சிவபெருமான் வந்து பலிதா, பிச்சை இடு என்றான். கதிரவனுடைய (பல் இதா) பல்லைக் கொடு என்றேன். உலகங்களை எல்லாம் கடந்தவன் (அன்னம்) சோறு என்றான். அது பிரமனுடைய ஊர்தியாகிய அன்னப் பறவை என்றேன். இங்கு எடுத்து வந்து (ஐயம் பெய்) பிச்சை போடு என்றான். காமனுடைய ஐந்து கணைகளை எய்வாயாக என்றேன். இவைதான் இங்கு உள்ளவை என்று அவற்றுச் சொல்ல அறிவு உண்டாயிற்று. இப் பாட்டில் சிலேடை அமைந்துள்ளன.
202. உற்றடி யார்உல காளஓர்
ஊணும் உறக்கும்இன்றிப்
பெற்றம தாவதென்(று) ஏறும்
பிரான்பெரு வேல்நெடுங்கண்
சிற்றடி யாய்வெண்பல் செவ்வாய்
இவள்சிர மாலைக்(கு)என்றும்
இற்றிடை யாம்படி யாகாஎன்
னுக்கு மெலிக்கின்றதே.
தெளிவுரை : இவருடைய அடியார்கள் எல்லாம் உலகை ஆண்டு கொண்டிருக்க, இவர் உணவும் உறக்கமும் இல்லாமல் இடபத்தை ஊர்தியாகக் கொண்டு திரியும் காரணம் என்ன? பெரிய வேல் போன்ற நீண்ட கண்களையும் சிறிய பாதங்களையும் வெண்மையான பற்களையும் சிவந்த வாயையும் உடைய இவள், அவருடைய தலைமாலைக்காக மனம் முறிந்து இடை துவண்டு வாடும் தன்மை போல மெலிக்கின்றதே.
203. மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய்
இழுதழல் வாய்மெழுகு
கலிக்கின்ற காமம் கரதலம்
எல்லி துறக்கம்வெங்கூற்(று)
ஒலிக்கின்ற நீருறு தீயொளி
யார்முக்கண் அத்தர்மிக்க
பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை
சூடிய பல்லுயிரே.
தெளிவுரை : வெப்பமான தீ மெல்லியது; வாய் வெண்ணெய் மெழுகு போல் பெருகுகின்ற நாமம். கையில் தீ வெங்கூற்றை அழித்தவன். ஒலிக்கின்ற நீரைத் தலையில் உடையவன். மிகுந்த தீயைப் போன்ற செந்நிறம் உடையவன். மூன்று கண்களையுடைய தலைவன். பிச்சை ஏற்று வந்துள்ளான். மணம் பொருந்திய கொன்றை மாலையைச் சூடுபவன்.
204. பல்லுயிர் பாகம் உடல்தலை
தோல்பக லோன்மறல்பெண்
வில்லியோர் வேதியன் வேழம்
நிரையே பறித்துதைத்துப்
புல்லியும் கட்டும் அறுத்தும்
உரித்துங்கொண் டான்புகழே
சொல்லியும் பாடியும் ஏத்தக்
கெடும்நங்கள் சூழ்துயரே.
தெளிவுரை : இதில் நிரல் நிறையப் பொருள்கோள் வந்துள்ளது. பகலோன் பல்லைப் பறித்து, யமன் உயிரை உதைத்து, உமாதேவியின் பாகம் புல்லி, காமன் உடலைச் சுட்டு, பிரமன் தலையை அறுத்து, வேழத்தின் தோலை உரித்துப் புகழ் கொண்டவன் என்று முறையே கூட்டுக. அவனுடைய புகழைச் சொல்லியும் பாடியும் ஏத்தியும் வணங்கினால் நம்மைச் சூழ்ந்து வரும் துன்பங்கள் கெடும் என்பதாம்.
205. துயரும் தொழும்அழும் சோரும்
துகிலும் கலையும்செல்லப்
பெயரும் பிதற்றும் நகும்வெய்
துயிர்க்கும் பெரும்பணிகூர்ந்(து)
அயரும் அமர்விக்கும் மூரி
நிமிர்க்கும்அந் தோஇங்ஙனே
மயரும் மறைக்காட்(டு) இறையினுக்(கு)
ஆட்பட்ட வாணுதலே.
தெளிவுரை : திருமறைக்காட்டு (வேதாரண்யம்) இறைவனுக்கு ஆட்பட்ட வாணுதல் வருந்துவள்; தொழுவாள்; அழுவாள்; சோர்வடைவாள்; ஆடையும் மேகலா பரணமும் நழுவ நடப்பாள்; பிதற்றுவாள்; நகைப்பாள்; பெருமூச்சு விடுவாள்; பெரும் பணி கூர்ந்து அயர்வாள்; மிகுதியாக விக்குவாள்; திமிர் விடுவாள்; அந்தோ! இவ்வாறு மயங்குவாள் என்க.
206. வாணுதற்(கு) எண்ணம்நன் றன்று
வளர்சடை எந்தைவந்தால்
நாணுதற்(கு) எண்ணாள் பலிகொடு
சென்று நகும்நயந்து
பேணுதற்(கு) எண்ணும் பிரமன்
திருமால் அவர்க்(கு)அரிய
தாணுவுக்(கு) என்னோ இராப்பகல்
நைந்(து)இவள் தாழ்கின்றதே.
தெளிவுரை : ஒளி பொருந்திய நெற்றியை உடைய இவளுக்கு எண்ணம் நல்லதல்ல. பெரிய சடையை உடைய சிவபெருமான் வந்தால் நாண வேண்டுமென்று நினையாள். பிச்சை எடுத்துக் கொண்டு போய் சிரிப்பாள். விரும்பித் தழுவுவதற்கு நினைப்பாள். பிரமனும் திருமாலும் தேடியும் காண முடியாத சிவபெருமானுக்கு என்ன காரணம் பற்றி இவள் இரவு பகல் இவ்வாறு தாழ்ந்து போகின்றாள்?
207. தாழும் சடைசடை மேலது
கங்கையக் கங்கைநங்கை
வாழும் சடைசடை மேலது
திங்கள்அத் திங்கட்பிள்ளை
போழும் சடைசடை மேலது
பொங்கர(வு) அவ்வரவம்
வாழும் சடைசடை மேலது
கொன்றையெம் மாமுனிக்கே.
தெளிவுரை : தாழ்ந்திருக்கும் சடைமேல் உள்ளது கங்கை. அந்த கங்கையாகிய நங்கை வாழும் சடை மேலது பிறைச் சந்திரன்; அது பிளந்து செல்லும் சடை மேல் உள்ளது சீறுகின்ற பாம்பு. அந்தப் பாம்பு வாழும் சடை மேல் உள்ளது கொன்றை மலர். இவை யாவும் எம் முனிவர் தலைவனாகிய பரமனது சிரசில் உள்ளவை.
208. முனியே முருகலர் கொன்றையி
னாய்என்னை மூப்பொழித்த
கனியே கழலடி அல்லால்
களைகண்மற்(று) ஒன்றுமிலேன்
இனியேல் இருந்தவம் செய்யேன்
திருந்தவஞ் சேநினைந்து
தனியேன் படுகின்ற சங்கடம்
ஆர்க்கினிச் சாற்றுவனே.
தெளிவுரை : முனிவனே ! மணம் வீசுகின்ற கொன்றை மலரைச் சூடியவனே ! என்னுடைய முதுமையைப் போக்கிய கனியே ! உன்னுடைய திருவடிகளை அல்லாமல் வேறு பற்றுக் கோடு எனக்கு இல்லை. இனிமேல் ஏற்றுக் கொள்வாயாக. பெருந் தவம் செய்ய மாட்டேன். நான் திருந்துவதற்கு ஐம்புலன்களின் விடயங்களையே எண்ணி, தனியேன் படுகின்ற சங்கடத்தை யார்க்கு இனி சொல்லுவேன்.
209. சாற்றுவன் கோயில் தலையும்
மனமும் தவம்இவற்றால்
ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந்(து)
ஆற்றிஅம் சொல்மலரால்
ஏற்றுவன் ஈசன்வந்(து) என்மனத்
தான்என்(று) எழுந்தலரே
தூற்றுவன் தோத்திரம் ஆயின
வேயினிச் சொல்லுவனே.
தெளிவுரை : சிதம்பரத்தைத் துதிப்பேன். தலை, மனம், தலம் இவற்றால் செய்வேன். அன்பென்ற நெய்யை வார்த்து, அழகிய சொல்லாகிய மலரால் அருச்சிப்பேன். என் மனத்தில் இருப்பவன் என்று எழுந்து பலர் அறியச் சொல்வேன். இனி தோத்திரப் பாடல்களைப் பாடுவேன்.
210. சொல்லா தனகொழு நாவல்ல
சோதியுள் சோதிதன்பேர்
சொல்லாச் செவிமரம் தேறித்
தொழாதகை மண்திணிந்த
கல்லாம் நினையா மனம்வணங்
காத்தலை யும்பொறையாம்
அல்லா அவயவம் தானும்
மனிதர்க்(கு) அசேதனமே.
தெளிவுரை : இறைவனைப் புகழாதன இரும்புக் கொழு. நாக்குகள் அல்ல. பேரொளியாக விளங்கும் பரம்பொருளின் புகழ் நுழையாத காது மரம். தெளிந்து தொழாத கைகள் மண் திணிந்த கல். அவனை நினைக்காத மனமும் வணங்காத தலையும் சலதாரை அடைக்குங் கல். இறைவன் பொருட்டாகப் பயன்படாத உறுப்புக்கள் சடப் பொருள்களாம்.
211. தனக்குன்றம் மாவையம் சங்கரன்
தன்னருள் அன்றிப்பெற்றால்
மனக்கென்றும் நஞ்சிற் கடையா
நினைவன் மதுவிரியும்
புனக்கொன்றை யான்அரு ளால்புழு
வாகிப் பிறந்திடினும்
எனக்கென்றும் வானவர் பொன்னுல
கோ(டு)ஒக்க எண்ணுவனே.
தெளிவுரை : பொருட் குவியலையும் பெரிய நிலத்தையும் சங்கரனுடைய அருள் இல்லாமல் பெற்றால், மனத்தின்கண் நஞ்சை விடக் கீழ்ப்பட்டதாக எண்ணுவேன். தேன் நிறைந்த கொன்றை மலரையுடையவனது அருளால் புழுவாகப் பிறந்தாலும் எனக்கு என்றும் தேவர்களது பொன்னுலகுக்குச் சமமாக எண்ணுவேன்.
212. எண்ணம் இறையே பிழைக்கும்
கொலாம்இமை யோர்இறைஞ்சும்
தண்ணம் பிறைச்சடைச் சங்கரன்
சங்கக் குழையன்வந்தென்
உண்ணன் குறைவ(து) அறிந்தும்
ஒளிமா நிறங்கவர்வான்
கண்ணும் உறங்கா(து) இராப்பகல்
எய்கின்ற காமனுக்கே.
தெளிவுரை : நினைவு சிறிது தவறுமோ? தேவர்கள் வணங்கும் குளிர்ந்த பிறை சூடிய சடையினையுடைய சங்கரனும் சங்காலாகிய குண்டலங்களை உடையவனுமாகிய இறைவன் வந்து என் மனத்தில் நன்றாகத் தங்கியிருப்பது அறிந்தும், ஒளி பொருந்திய நிறம் கவரும் பொருட்டுக் கண் உறங்காமல் இரவு பகல் மலர் அம்புகளை விடுக்கும் காமனுக்காக மனம் சிறிது தவறுமோ என்று கூட்டிப் பொருள் கொள்க.
213. காமனை முன்செற்ற(து) என்றாள்
அவளிவள் காலன்என்னும்
தாமநன் மார்பனை முன்செற்ற(து)
என்றுதன் கையெறிந்தாள்
நாம்முனம் செற்றதன் றாரைஎன்
றேற்(கு)இரு வர்க்கும்அஞ்சி
ஆமெனக் கிற்றிலர் அற்றெனக்
கிற்றிலர் அந்தணரே.
தெளிவுரை : மன்மதனை முன்பு அழித்தது என்றாள். அவள், இவள் எமன் என்னும் தாமநன் மார்பனை முன்; அழித்தது என்று தன் கையை வீசினாள். தேவரீர் முதலில் அழித்தது அல்ல என்று சொன்ன எனக்கு இருவர்க்கும் அஞ்சி ஆம் என்றும் கூற மாட்டார்; அல்ல என்றும் கூறமாட்டார் அந்தணராகிய இப் பரமர்.
214. அந்தண ராம்இவர் ஆரூர்
உறைவதென் றேன்அதுவே
சந்தணை தோளியென் றார்தலை
யாய சலவர் என்றேன்
பத்தணை கையாய் அதுவும்உண்
டென்றார் உமையறியக்
கொந்தணை தாரீர் உரைமின்என்
றேன்துடி கொட்டினரே.
தெளிவுரை : அந்தணராகிய இப்பரமர் உறைவது (ஆர் ஊர்) எவருடைய ஊர் என்றேன். சந்தனக் குழம்பு பூசப்பட்ட தோள்களையுடைய பெண்ணே! அதுவே - ஆருரே; திருவாரூரே என்றார். முதன்மையான சலம் பேசுகின்றவர் என்றேன். பந்தாடுகின்ற கைகளை உடையவளே! சலவர் - சலமாகிய கங்கையை முடியிற் கொண்டவர் என்றார். உமை அறிய - உம்மை அறிந்து கொள்ளுமாறு (உமாதேவியார் சாட்சியாக) பூங்கொத்து பொருந்திய மாலையைத் தருவீராக (பூங்கொத்து பொருந்திய படுக்கையைத் தருவீராக) என்றேன். உடுக்கையை அடித்தார்.
215. கொட்டும் சிலபல சூழநின்
றார்க்கும்குப் புற்றெழுந்து
நட்ட மறியும் கிரீடிக்கும்
பாடும் நகும்வெருட்டும்
வட்டம் வரும்அருஞ் சாரணை
செல்லும் மலர்தயங்கும்
புட்டங்(கு) இரும்பொழில் சூழ்மறைக்
காட்டான் பூதங்களே.
தெளிவுரை : பறவைகள் தங்கும் நெருங்கிய மலர்ச் சோலைகளையுடைய திருமறைக்காட்டிலுள்ள இறைவனது பூதங்கள் கை கொட்டும்; ஒன்றாகக் கூடி நின்று ஆரவாரிக்கும்; குதித்தெழுந்து கூத்தாடும்; விளையாடும்; பாடும்; சிரிக்கும்; அச்சுறுத்தும்; வட்டமாகச் சுற்றி வரும். வரிசையாகச் செல்லும்.
216. பூதப் படையுடைப் புண்ணிய
ரேபுறஞ் சொற்கள்நும்மேல்
ஏதப் படஎழு கின்றன
வாலிளை யாளொடும்மைக்
காதற் படுப்பான் கணைதொட்ட
காமனைக் கண்மலரால்
சேதப் படுத்திட்ட காரணம்
நீரிறை செப்புமினே.
தெளிவுரை : பூதப் படைகளை உடைய புண்ணியரே! பழிச் சொற்கள் உம்மேல் குற்றம் உண்டாக எழுகின்றன. பார்வதியோடும் விருப்பமாகச் சேர்க்குமாறு மலரம்புகளைத் தொடுத்த மன்மதனைக் கண் மலரால் அழித்து விட்ட காரணத்தை நீர் சிறிது கூறுவீராக.
217. செப்பனக் கொங்கைக்குத் தேமலர்க்
கொன்றை நிறம்பணித்தான்
மைப்புரை கண்ணுக்கு வார்புனல்
கங்கைவைத் தான்மனத்துக்(கு)
ஒப்பன இல்லா ஒளிகிளர்
உன்மத் தமும்அமைத்தான்
அப்பனை அம்மனை நீயென்
பெறாதுநின் றார்க்கின்றதே.
தெளிவுரை : கிண்ணத்தைப் போன்ற முலைகளுக்குத் தேன் பொருந்திய கொன்றைப் பூவின் நிறத்தைக் கொடுத்தான். மை பூசிய கண்களுக்கு நீர் விட்டு அழுது கொண்டிருக்குமாறு செய்தான். மனத்துக்கு ஒப்புமையில்லாத ஒளியுள்ள மயக்கத்தை அமைத்தான். அப்பனே இது தகுமோ என்று ஆரவாரம் செய்கின்றாள் என்பதாம். பிரிவினால் மார்பில் பசலை நிறம் வந்தது என்பது பொருள்.
218. ஆர்க்கின்ற நீரும் அனலும்
மதியும்ஐ வாய்அரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும்
உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும்
பகலும் இரவும்எல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குடன்
ஆகிக் கலந்தனவே.
தெளிவுரை : ஒன்றோடு ஒன்று ஒவ்வாத பொருள்களை உடன் வைத்தவன் என்றபடி. ஒலிக்கின்ற நீரையும் தீயையும், பிறைச் சந்திரனையும் ஐந்து தலைகளையுடைய பாம்பையும், நினைத்தற்குரிய யோகத்தையும் உமையையும், உருவுள்ள பொருளையும், உருவம் இல்லாத பொருளையும், புலியையும் மானையும், பகலையும் இரவையும், கொன்றை மாலையினை உடையவர் இணைத்து வைத்துள்ளார்.
219. கலந்தனக் கென்பலர் கட்டவிழ்
வார்கொன்றை கட்டரவார்
சலந்தனக் கண்ணிய கானகம்
ஆடியோர் சாணகமும்
நிலந்தனக் கில்லா அகதியன்
ஆகிய நீலகண்டத்(து)
அலந்தலைக்(கு) என்னே அலந்தலை
யாகி அழிகின்றதே.
தெளிவுரை : அணிகலம் எலும்பு. முறுக்கு விரிகின்ற கொன்றை மலர் அணிந்தவர். அரையில் கட்டி இருப்பது பாம்பு. நிறைந்த வெள்ளப் பெருக்கு உடையவர். நெருங்கியுள்ள மயானத்தில் ஆடுபவர். ஓரு சாண் அகலமுள்ள நிலமும் தனக்குச் சொந்தமாய்ப் பெற்றிராத அகதியாகிய நீலகண்டத்து துக்கமுடையவனுக்கு ஏன் இவள் துக்கமுடையவளாகி அழிகின்றாள்?
220. அழிகின்ற(து) ஆருயிர் ஆகின்ற(து)
ஆகுலம் ஏறிடும்மால்
இழிகின்ற சங்கம் இருந்த
முலைமேல் கிடந்தனபீர்
பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது
வாய்கலை போனவந்தார்
மொழிகின்ற(து) என்இனி நான்மறை
முக்கண் முறைவனுக்கே.
தெளிவுரை : அருமையான உயிர் அழிகின்றது. கவலை மிகுகின்றது. மயக்கம் ஏறுகின்றது. சங்க வளையல்கள் நழுவி விழுகின்றன. முலைகளின் மீது பசலை படர்ந்தது. கண்களிலிருந்து நீர் பொழிகின்றது. வாய் உலர்ந்தது. தூது சென்று வந்த பெண்கள் நான்மறை உணர்ந்த முக்கண்ணனாகிய பரமனுக்கு இனி சொல்ல வேண்டியது என்ன இருக்கின்றது?
221. முறைவனை மூப்புக்கு நான்மறைக்
கும்முதல் ஏழ்கடலந்
துறைவனைச் சூழ்கயி லாயச்
சிலம்பனைத் தொன்மைகுன்றா
இறைவனை எண்குணத்(து) ஈசனை
ஏத்தினர் சித்தம்தம்பால்
உறைவனைப் பாம்பனை யாம்பின்னை
என்சொல்லி ஓதுவதே.
தெளிவுரை : நீதி உடையவன். முதுமைக்கும் நான்கு மறைகளுக்கும் முதல்வன். ஏழ் கடல் துறையை உடையவன். கயிலாய மலையை உடையவன். பழைமை குறையாத இறைவன். எண் குணத்தானாகிய ஈசன். தன்னைத் துதிப்பவர்களின் மனத்தில் வாழ்பவன். பாம்பை ஆபரணமாக உடையவன். யாம் அத்தகைய பெருமானை இன்னும் என்ன சொல்லிப் பாடுவது?
222. ஓதவன் நாமம் உரையவன்
பல்குணம் உன்னைவிட்டேன்
போதவன் பின்னே பொருந்தவன்
வாழ்க்கை திருந்தச்சென்று
மாதவ மாகிடு மாதவ
மாவளர் புன்சடையான்
யாதவன் சொன்னான் அதுகொண்(டு)
ஒழியினி ஆரணங்கே.
தெளிவுரை : ஆரணங்கே ! அவனுடைய பெயரை உரைப்பாயாக. அவனுடைய பல நற்குணங்களைச் சொல்வாயாக. உன்னை விட்டுவிட்டேன். அவன் பிறகே செல்லக் கடவாய். அவனுடைய வாழ்க்கையோடு இணைந்து கொள். திருந்த வேண்டுமானால் நீ சென்று சிறந்த தவமுடையவளாக இருக்கக் கடவாய். மாதவத்தோனாகிய அந்த இறைவன் என்ன சொல்கிறானோ அதன்படி செய். இனிச் செல்வாயாக.
223. ஆரணங் கின்முகம் ஐங்கணை
யானகம் அவ்வகத்தில்
தோரணந் தோனவன் தேரகல்
அல்குல்தொன் மைக்கண்வந்த
பூரண கும்பம் முலையிவை
காணப் புரிசடைஎம்
காரணன் தாள்தொழும் அன்போ
பகையோ கருதியதே.
தெளிவுரை : அரிய தெய்வப் பெண்ணின் முகம் காமனது வீடாம்; அவ்வீட்டில் அவனது தேர் அகன்ற அல்குல்; பழைமையாக வந்த பூரண கும்பம் முலைகள்; இவை காண நெருங்கிய சடையை உடையவன்; எம் காரணனாகிய அவன் தாள் தொழும் அன்போ பகையோ கருதியது? இதற்கு விடை அடுத்த பாட்டு.
224. கருதிய(து) ஒன்றில்லை ஆயினும்
கேண்மின்கள் காரிகையாள்
ஒருதின மும்முள ளாகஒட்
டாதொடுங் கார்ஒடுங்கப்
பொருதநன் மால்விடைப் புண்ணியன்
பொங்கிளங் கொன்றைஇன்னே
தருதிர்நன் றாயிடும் தாரா
விடிற்கொல்லும் தாழ்இருளே.
தெளிவுரை : கருதியது ஒன்றில்லை ஆயினும், கேளுங்கள். இப்பெண் ஒரு நாளும் உயிரோடு இருப்பவளாக விடாமல் பகைவர்கள் ஒடுங்கப் போர் செய்து அழித்த பெரிய இடப வாகனத்தையுடைய சிவபெருமான் அணிந்துள்ள பொங்கிளங் கொன்றை மாலையை இப்போதே தாருங்கள். குணமடைவாள். தராவிட்டால் நிரம்பிய இருள் அவளைக் கொன்று விடும்.
225. இருளார் மிடற்றால் இராப்பகல்
தன்னால் வரைமறையால்
பொருளார் கமழ்கொன்றை யால்முல்லை
புற்றர வாடுதலால்
தெருளார் மதிவிசும் பால்பௌவந்
தெண்புனல் தாங்குதலால்
அருளாற் பலபல வண்ணமு
மாஅரன் ஆயினனே.
தெளிவுரை : இருள் நிறைந்த கண்டத்தாலும், இரவாலும் பகலாலும் மலையிலுள்ள மானாலும், பொன்னிறம் பொருந்திய மணமுள்ள கொன்றையாலும், முல்லையிலுள்ள புற்றில் வாழும் பாம்பு ஆடுதலாலும், விளக்கம் பொருந்திய மதியோடு கூடிய விசும்பாலும், கடலின் தெளிந்த நீரைத் தாங்குதலாலும், அருளாலும் பலபல வண்ணங்களாக அரன் ஆயினன். குறிஞ்சி முதலிய ஐந்து நில இயல்புகளும் பெற்றான் என்றபடி.
226. ஆயின அந்தணர் வாய்மை
அரைக்கலை கைவளைகள்
போயின வாள்நிகர் கண்ணுறு
மைந்நீர் முலையிடையே
பாயின வேள்கைக் கரபத்
திரத்துக்குச் சூத்திரம்போல்
ஆயின பல்சடை யார்க்(கு)அன்பு
பட்டவெம் ஆயிழைக்கே.
தெளிவுரை : சிவபெருமானுக்கு அன்பு பட்ட ஆயிழைக்கு அந்தணர்களது உண்மையுரை ஆயின. அரையிலுள்ள ஆடையும் கையிலுள்ள வளையல்களும் நழுவின. வாள் போன்ற கண்களிலிருந்து பெருகிய மையோடு கூடிய நீர்த்தாரைகள் முலைகள் மீது ஒழுகிப் பாய்ந்தன. மன்மதனது கையிலுள்ள ஈர்வாளுக்குக் சூத்திரம் போல் ஆயின.
227. இழையார் வனமுலை வீங்கி
இடையிறு கின்ற(து)இற்றால்
பிழையாள் நமக்கிவை கட்டுண்க
என்பது பேச்சுக்கொலாம்
கழையார் கழுக்குன்ற வாணனைக்
கண்டனைக் காதலித்தாள்
குழையார் செவியொடு கோலக்
கயற்கண்கள் கூடியவே.
தெளிவுரை : அணிகலன்கள் பொருந்திய அழகிய முலைகள் இடை முரியும் தன்மை உடையதாக இருக்கிறது. அவ்வாறு முரிந்தால் உயிர் பிழையாள். இந்நோய் தணியும் என்று சொல்வதற்கில்லை. மூங்கில் புதர்கள் நிறைந்த திருக்கழுக்குன்றத்தில் எழுந்தருளியுள்ள இறைவனும் நீலகண்டனுமாகிய இறைவனைக் காதலித்தாள். குண்டலம் பொருந்திய செவியோடு அழகிய கயல் போன்ற கண்கள் கூடின.
228. கூடிய தன்னிடத் தான்உமை
யாளிடத் தானைஐயா(று)
ஈடிய பல்சடை மேற்றெரி
வண்ணம் எனப்பணிமின்
பாடிய நான்மறை பாய்ந்தது
கூற்றைப் படர்புரஞ்சுட்(டு)
ஆடிய நீறுசெஞ் சாந்திவை
யாம்எம் அயன்எனவே.
தெளிவுரை : உமையவளை இடப்பாகத்தில் கொண்டவனும் திருவையாற்றை இடமாகக் கொண்டவனும் ஆகிய இறைவனது சடையின் மேல் இருப்பது தீயின் நிறம் என்று பணியுங்கள். பாடிய நான்கு வேதங்களும் பாய்ந்தது. கூற்றை உதைத்து ஆடிய திருநீறு செஞ்சாந்து இல்லை. இவை நம் நல்வினையே.
229. அயமே பலிஇங்கு மாடுள
தாணுவோர் குக்கிக்கிடப்
பயமே மொழியும் பசுபதி
ஏறெம்மைப் பாய்ந்திடுமால்
புயமேய் குழலியர் புண்ணியர்
போமின் இரத்தல்பொல்லா
நயமே மொழியினும் நக்காம்அம்
மாஉம்மை நாணுதுமே.
தெளிவுரை : இங்கு புண்ணியமே பிச்சை. மாட்டிலேறும் சிவபெருமான் நல்ல மொழிகளையே சொன்னாலும் நக்கராய் இருக்கிறார். அதாவது ஆடையற்றவராய் இருக்கிறார். அவருடைய வயிறு வருத்தத்தையே சொல்லும். அவருடைய ஊர்தியாகிய காளை எம்மைப் பாய்ந்திடும். அழகிய கூந்தலையுடைய புண்ணியர் போய்விடுங்கள். யாசிக்க வேண்டா பொல்லாதது என்பதாம்.
230. நாணா நடக்க நலத்தார்க்(கு)
இடையில்லை நாம்எழுத
ஏணார் இருந்தமி ழால்மற
வேனுந் நினைமின்என்றும்
பூணார் முலையீர் நிருத்தன்
புரிசடை எந்தைவந்தால்
காணா விடேன்கண் டிரவா
தொழியேன் கடிமலரே.
தெளிவுரை : நாணாமல் நடக்க நலத்தார்க்கு சமயம் வாய்ப்பதில்லை. நாம் எழுத இடையில்லை என்பதுமாம். மேன்மை பொருந்திய சிறந்த தமிழ்ப் பாடல்களால் உன்னை மறவாமல் துதிப்பேன். நினையுங்கள். ஆபரணம் அணிந்த முலைகளை உடையீர், திருக்கூத்தியற்றும் புரிசடை எந்தை வந்தால் நான் பார்க்காமல் விடமாட்டேன். கண்டு கடி மலரை யாசிக்காமல் இருக்க மாட்டேன். 
231. கடிமலர்க் கொன்றை தரினும்புல்
லேன்கலை சாரலொட்டேன்
முடிமலர் தீண்டின் முனிவன்
முலைதொடு மேற்கெடுவன்
அடிமலர் வானவர் ஏத்தநின்
றாய்க்(கு)அழ கல்லஎன்பன்
தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு
ஆணை தொடங்குவனே.
தெளிவுரை : மணமுள்ள கொன்றை மாலையைத் தந்தாலும் தழுவ மாட்டேன். ஆடையை அவர் மீது பட விடமாட்டேன். முடி மலரைத் தொட்டால் சினப்பேன். முலைகளைத் தொட்டால் அழுது புலம்புவேன். தேவர்கள் வணங்கும் பெருமானுக்கு இது ஒழுங்கல்ல என்பேன். தொடி மலர்த் தோள்களைத் தொட்டால் தொடக்கூடாது என்று ஆணையிட்டுத் தடுப்பேன்.
232. தொடங்கிய வாழ்க்கையை வாளா
துறப்பர் துறந்தவரே
அடங்கிய வேட்கை அரன்பால்
இலர்அறு காற்பறவை
முடங்கிய செஞ்சடை முக்கண
னார்க்கன்றி இங்கும்அன்றிக்
கிடங்கின்றி பட்ட கராஅனை
யார்பல கேவலரே.
தெளிவுரை : துறவிகள் ஆரம்பித்த வாழ்க்கையை வீணாக ஒழித்து விடுவர். ஆசை ஒழிந்தவர் அன்பாக இலர். வண்டுகள் மொய்த்து நெருங்கியுள்ள சிவந்த சடையையுடைய முக்கணனார்க்கும் அன்றி இங்கும் அன்றி அகழியில் அகப்பட்டுள்ள முதலையைப் போன்றவர் இழிவுடையர் என்பதாம்.
233. வலந்தான் கழல்இடம் பாடகம்
பாம்பு வலம்இடமே
கலந்தான் வலம்நீ றிடம்சாந்
தெரிவலம் பந்திடமென்
பலந்தார் வலம்இடம் ஆடகம்
வேல்வலம் ஆழிஇடம்
சலந்தாழ் சடைவலம் தண்ணங்
குழல்இடம் சங்கரற்கே.
தெளிவுரை : இது, மாதொர் பாதியனது திருக்கோல வருணனை. சங்கரருக்கு வலப்பக்கம் வீரக்கழல். இடப்பக்கம் பாடகம் என்னும் அணி. பாம்பு வலப்பக்கம். இடப்பக்கம் மேகலை. வலப்பக்கம் திருநீறு. இடப்பக்கம் சாந்து. வலப்பக்கம் தீ. பந்து இடப்பக்கம். அசைகின்ற எலும்பு மாலை வலப்பக்கம். பொன்னரி மாலை இடப்பக்கம். வேல் (முத்தலை சூலம்) வலப்பக்கம். சக்கரம் இடப்பக்கம். நீர் தாழ் சடை வலப்பக்கம். தண்ணிய கூந்தல் இடப்பக்கம் என்பதாம்.
234. சங்கரன் சங்கக் குழையன்
சரணார விந்தந்தன்னை
அங்கரங் கூப்பித் தொழுதாட்
படுமின்தொண் டீர்நமனார்
கிங்கரர் தாம்செய்யும் கீழா
யினமிறை கேட்டலுமே
இங்கரம் ஆயிரம் ஈரஎன்
நெஞ்சம் எரிகின்றதே.
தெளிவுரை : தொண்டர்களே! சங்கரனும் சங்கக் குழையை உடையவனுமாகிய இறைவனது திருவடித் தாமரை மலர்களை அழகிய கைகளைக் குவித்து வணங்கி அவனுக்குத் தொண்டு செய்யுங்கள். எமனுடைய ஆட்களாகிய கிங்கரர்கள் இழிவான தொல்லைகளைச் சிறிது கேட்ட அளவில், இரும்பை அராவுங் கருவிகள் பல அராவ, நெஞ்சம் எரிகின்றது.
235. எரிகின்ற தீயொத்(து) உளசடை
ஈசற்(கு)அத் தீக்(கு)இமையோர்
சொரிகின்ற பாற்கடல் போன்றது
சூழ்புனல் அப்புனலிற்
சரிகின்ற திங்களோர் தோணிஒக்
கின்ற(து)அத் தோணிஉய்ப்பான்
தெரிகின்ற திண்கழை போன்றுள
தால்அத் திறல்அரவே.
தெளிவுரை : ஈசனுக்கு எரிகின்ற தீ போன்றுள்ளது சடை. அத் தீயினுக்குத் தேவர்கள் சொரிகின்ற பாற்கடல் போன்றுள்ளது கங்கை. அந்நீரில் ஒதுங்கிச் செல்லுகின்ற சந்திரன் தோணி போன்றுள்ளது. அத் தோணியைச் செலுத்த திண்கழை போன்றுள்ளது பாம்பு.
இப்பாட்டில் உவமையணி பயின்று வந்துள்ளது.
236. அரவம் உயிர்ப்ப அழலும்அங்
கங்கை வளாய்க்குளிரும்
குரவங் குழல்உமை ஊடற்கு
நைந்துரு கும்அடைந்தோர்
பரவும் புகல்அண்ணல் தீண்டலும்
பார்வா னவைவிளக்கும்
விரவும் இடர்இன்பம் எம்இறை
சூடிய வெண்பிறையே.
தெளிவுரை : பாம்பு மூச்சு விட கங்கை வெம்மையடையும். கலத்தலினால் குராமலர் குளிரும். உமாதேவி ஊடற்கு வருந்துவாள். அடியார்கள் போற்றும் கீர்த்தியை உடைய சிவபெருமான், தொட்டவுடன் அவர் சூடிய வெண்பிறை நிலத்தையும் வானத்தையும் விளங்கச் செய்யும். பிறை இடரும் இன்பமும் கலந்து  அனுபவிக்கும் என்பதாம்.
237. பிறைத்துண்டம் சூடலுற் றோபிச்சை
கொண்டனல் ஆடலுற்றோ
மறைக்கண்டம் பாடலுற் றோஎன்பும்
நீறும் மருவலுற்றோ
கறைக்கண்டம் புல்லலுற் றோகடு
வாய்அர ஆடலுற்றோ
குறைக்கொண் டிவள்அரன் பின்செல்வ
தென்னுக்குக் கூறுமினே.
தெளிவுரை : பிறைச் சந்திரனை அணிதலை விரும்பியோ, பிச்சை ஏற்று தீயில் ஆடுதலை விரும்பியோ, மறையைக் கண்டத்திலிருந்து பாடுதலை விரும்பியோ, எலும்பும் திருநீறும் அணிதலை விரும்பியோ, நீலகண்டத்தைத் தழுவ விரும்பியோ, நஞ்சு பொருந்திய பற்களையுடைய பாம்பு ஆடுவதை விரும்பியோ, குறையைக் கூறிக் கொண்டு இவள் அரன் பின் செல்வது என்ன காரணம் என்பதைச் சொல்லுங்கள்.
238. கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற்
றேவல் குளிர்மின்கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின்
சிவனைச் செறுமின்செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின்
அவலம் இவைநெறியா
ஏறுமின் வானத்(து) இருமின்
விருந்தாய் இமையவர்க்கே.
தெளிவுரை : ஈசனைப் புகழ்ந்து பாடுங்கள்; அவனுக்குக் குற்றேவல் செய்யுங்கள். கண்கள் குளிருமாறு செய்யுங்கள். மனம் தெளியுங்கள். சிவனை அறியுங்கள். கோபத்தை அடக்குங்கள். வேட்கை தணியுங்கள். பயனில்லாத செயல்களை அறுத்து எறியுங்கள். இவைகளையே வழியாகக் கொண்டு வானுலகம் ஏறுங்கள். தேவர்களுக்கு விருந்தாய் இருங்கள்.
239. இமையோர் கொணர்ந்திங்(கு) இழித்திட
நீர்மைகெட்(டு) ஏந்தல்பின்போய்
அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த
சலமக ளாய்அணைந்தே
எமையாளு டையான் தலைமக
ளாஅங்(கு) இருப்பஎன்னே
உமையாள் அவள்கீழ் உறைவிடம்
பெற்றோ உறைகின்றதே.
தெளிவுரை : தேவர்கள் கொண்டு வந்து இம்மண்ணுலகத்தில் இறங்கச் செய்ய நல்லியல்பு அழிந்து பகீரதன் பின்னால் சென்று பொருந்தாத வழியில் சென்று ஒரு சலமகளாய் அணைந்து இறைவனுக்குத் தலைமகளாய் அங்கு இருக்கவும் உமாதேவியார் அவளுக்குக் கீழ் தங்குமிடம் பெற்று வாழ்வதும் என்ன வியப்பு.
கங்கை தலையில் இருக்க, உமை கீழ் உறைவது நியாயமா என்றபடி.
240. உறைகின் றனர்ஐவர் ஒன்பது
வாயில்ஓர் மூன்றுளதால்
மறைகின்ற என்பு நரம்போ(டு)
இறைச்சி உதிரம்மச்சை
பறைகின்ற தோல்போர் குரம்பை
பயன்இல்லை போய்அடைமின்
அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக்
கொண்டோன் மலரடிக்கே.
தெளிவுரை : இவ்வுடம்பில் ஐம்புலன்களும் ஒன்பது வாயில்களும் மூன்று சரீரங்களும் உள்ளன. எலும்பு, நரம்பு, இறைச்சி, உதிரம், பச்சை இவைகளோடு இழித்துக் கூறப்படுகின்ற தோலால் போர்க்கப்பட்ட சிறு குடிசை இது. இதனால் பயன் இல்லை. ஒலிக்கின்ற தெளிந்த புனலைச் செஞ்சடையில் கொண்டோனது மலரடிகளை அடைமின். நற்கதி பெறுவீர்கள் என்றபடி.
241. அடிக்கண்ணி கைதொழு தார்க்(கு)அகன்
ஞாலங் கொடுத்தடிநாய்
வடிக்கண்ணி நின்னைத் தொழவளை
கொண்டனை வண்டுண்கொன்றைக்
கடிக்கண்ணி யாய்எமக்(கு) ஓரூர்
இரண்டகங் காட்டினையால்
கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே(று)
உயர்த்த குணக்குன்றமே.
தெளிவுரை : கயிறு கட்டிய கொடியில் காளை உருவை எழுதி உயர்த்திய குணக் குன்றமே! ஓர் ஊரில் இரண்டு விதமான மன இயல்பைக் காட்டினாய். இது நியாயமா என்றபடி எப்படியெனில்,
திருவடிகளை அடைந்து கைதொழுதார்க்கு அகன்ற உலகைக் கொடுத்து, மாவடு போன்ற கண்களை உடையவள் நின்னைத் தொழுதபோது அவளது கை வளைகளைப் பெற்றுக் கொண்டாய். வண்டுகள் மொய்க்கின்ற கொன்றை மாலையைத் தலையில் சூடியவரே, ஒரே ஊரில் வஞ்சனையைக் காண்பித்தாய்.
242. குன்றெடுத் தான்செவி கண்வாய்
சிரங்கள் நெரிந்தலற
அன்றடர்த் தற்றுகச் செற்றவன்
நற்றவர்க் கற்றசிவன்
மன்றிடைத் தோன்றிய நெல்லிக்
கனிநிற்ப மானுடர்போய்
ஒன்றெடுத்(து) ஓதிப் புகுவர்
நரகத் துறுகுழியே.
தெளிவுரை : கைலை மலையை எடுத்தவனாகிய இராவணனது செவி, கண், வாய், சிரங்கள் நெரிந்து அலறுமாறு கெட்டழிய நெருக்கி வருத்தியவனும், நல்ல தவமுடையோர்க்கு அருளுகின்றவனுமாகிய சிவன், பொன்னம் பலத்தில் தோன்றிய நெல்லிக்கனி நிற்க, மானிடர் போய் ஒன்றை எடுத்து ஓதி நரகத்து உறுகுழி புகுவர்.
243. குழிகட் கொடுநடைக் கூன்பற்
கவட்டடி நெட்டிடைஊன்
உழுவைத் தழைசெவித் தோல்முலைச்
சூறை மயிர்ப்பகுவாய்த்
தெழிகட் டிரைகுரல் தேம்பல்
வயிற்றுத் திருக்குவிரற்
கழுதுக் குறைவிடம் போல்கண்டன்
ஆடும் கடியரங்கே.
தெளிவுரை : ஆழமாகிய கண், விரைவான நடை, வளைந்த பல், பிளவுபட்ட அடி, நீண்ட இடுப்பு, இறைச்சி, புலி, தாழ்ந்த செவி, சதை வற்றிய முலை, சுருளுதலை உடைய மயிர், பிளந்த வாய், மிகுதியாக அதட்டிக் கூவுகின்ற குரல், வாடிய வயிறு, முறுக்கிய விரல் ஆகியவற்றையுடைய பேய்களுக்கு உறைவிடம் போல் உள்ளது நீலகண்டன் ஆடும் அச்சம் மிகுந்த அரங்கம் என்றபடி.
244. அரங்கா மணிஅன்றில் தென்றல்ஓர்
கூற்றம் மதியம்அந்தீச்
சரம்காமன் எய்யஞ்சு சந்துட்
பகையால் இவள்தளர்ந்தாள்
இரங்கா மனத்தவர் இல்லை
இரங்கான் இமையவர்தம்
சிரங்கா முறுவான் எலும்புகொள்
வான்என்றன் தேமொழிக்கே.
தெளிவுரை : இவளுக்கு, காவில் உள்ள அழகிய அன்றில் பறவை அரமாகும். தென்றல் ஒப்பற்ற யமனாகும். சந்திரன் மாலைக் காலத்துத் தீயாகும். மலர் அம்புகளை எய்யும் மன்மதன் மாலைக் காலத்தில் பகையாவான். இவைகளினால் இவள் தளர்ந்தாள். இவளைக் கண்டு இரங்காதவர் எவரும் இல்லை. ஆனால், இமையவர்களுடைய தலைகளை மாலையாக அணிய விரும்புகிறவன் மனம் இரங்கான். என் தேமொழியின் எலும்பைத்தான் கொள்வான். இவள் இவனுக்காக ஏக்கமுற்று இறந்து படுவாள் என்பதாம்.
245. மொழியக்கண் டான்பழி மூளக்கண்
டான்பிணி முன்கைச்சங்கம்
அழியக்கண் டான்அன்றில் ஈரக்கண்
டான்தென்றல் என்உயிர்மேல்
சுழியக்கண் டான்துயர் கூரக்கண்
டான்துகில் சூழ்கலையும்
கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத
லான்கண்ட கள்ளங்களே.
தெளிவுரை : தில்லையில் கோயில் கொண்டிருப்பவனும் நெற்றிக் கண்ணை உடையவனுமாகிய நடராஜப் பெருமான் கண்ட வஞ்சகச் செயல்களாவன; பழிச்சொற்கள் மொழிவதைக் கண்டான். நோயை அதிகரிக்கச் செய்தான். முன் கைகளில் உள்ள சங்க வளையல்கள் கழலுமாறு செய்தான். அன்றில் பறவையைக் கொண்டு என்னைப் பிளக்கச் செய்தான். தென்றல் காற்று என் உயிர்மேல் சுழித்தோடச் செய்தான். துயரத்தை மிகுமாறு செய்தான். ஆடைகள் நழுவுமாறு செய்தான் என்பதாம்.
246. கள்ள வளாகங் கடிந்தடி
மைப்படக் கற்றவர்தம்
உள்ள வளாகத்(து) உறுகின்ற
உத்தமன் நீள்முடிமேல்
வெள்ள வளாகத்து வெண்ணுரை
சூடி வியன்பிறையைக்
கொள்ள அளாய்கின்ற பாம்பொன்(று)
உளது குறிக்கொண்மினே.
தெளிவுரை : கள்ளமுடையவர் கூட்டத்தை வெறுத்து, கற்றவர்களுடைய உள்ளமாகிய வளாகத்தில் பொருந்தியிருக்கின்ற உத்தமனுடைய நீண்ட முடிமேல் உள்ள வெள்ளப் பெருக்த்தில் உள்ள சிறந்த பிறையைப் பற்றுவதற்குப் பாம்பு ஒன்று உள்ளது. அதைக் கவனியுங்கள்.
247. குறிக்கொண்(டு) இவள்பெய்த கோல்வளை
யேவந்து கோள்இழைத்தீர்
வெறிக்கொண்ட வெள்ளிலம் போதோ
எலும்போ விரிசடைமேல்
உறைக்கொன்றை யோவுடைத் தோலோ
பொடியோ உடைகலனோ
கறைக்கண்ட ரேநுமக்(கு) என்னோ
சிறுமி கடவியதே.
தெளிவுரை : கொள்ளுங் குறிப்பைக் கொண்டு வந்து இவள் பெய்த கைவளைகளையே கொள்ளுதலைச் செய்தீர். விளா மரத்தினது அழகிய மலர் மாலையையோ, எலும்போ, விரிசடைமேல் உள்ள கொன்றையையோ, உடுத்தியுள்ள தோல் ஆடையையோ, திருநீற்றையோ, அணிகலன்களையோ, நீலகண்டரே ! சிறுமி கேட்டது யாது என்று கூறுவீர் என்பதாம்.
248. கடவிய(து) ஒன்றில்லை ஆயினும்
கேண்மின்கள் காரிகையாள்
மடவிய வாறுகண் டாம்பிறை
வார்சடை எந்தைவந்தால்
கிடவிய நெஞ்சம் இடங்கொடுத்
தாட்(கு)அவ லங்கொடுத்தான்
தடவிய கொம்பதன் தாள்மேல்
இருந்து தறிக்குறுமே.
தெளிவுரை : கேட்கத் தக்கது ஒன்றில்லை என்றாலும் கேளுங்கள். பிறைச் சந்திரனையும் சடையையும் உடைய எந்தை வந்தால் காணலாம் என்று பொருந்திய நெஞ்சத்தில் இடம் கொடுத்தவருக்குத் துன்பத்தைக் கொடுத்தான். பெரிய அடியை வெட்டும் மடமை உடையவளான தன்மையைக் கொடுத்தான் என்பதாம்.
249. தறித்தாய் அயன்தலை சாய்த்தாய்
சலந்தர னைத்தழலாப்
பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய்
புரம்புன லும்சடைமேல்
செறித்தாய்க்(கு) இவைபுகழ் ஆகின்ற
கண்டிவள் சில்வளையும்
பறித்தாய்க்(கு) இதுபழி ஆகுங்கொ
லாம்என்று பாவிப்பனே.
தெளிவுரை : பிரமனது தலையை அறுத்தாய்; சலந்தரனைக் கொன்றாய்; மன்மதனை எரித்தாய்; திரிபுரங்களை எரித்தாய்; இவைகளைச் செய்த உனக்குப் புகழ் ஆகின்றது என்று கண்டு, இவளுடைய சிலவாகிய வளைகளையும் பறித்துக் கொண்ட உனக்கு இது பழியாகுமோ என்று எண்ணுவேன்.
250. பாவிக்கும் பண்டையள் அல்லள்
பரிசறி யாள்சிறுமி
ஆவிக்கும் குற்குலு நாறும்
அகம்நெக அங்கம்எங்கும்
காவிக்கண் சோரும்பொச் சாப்புங்
கறைமிடற் றானைக்கண்ணில்
தாவிக்கும் வெண்ணகை யாளம்மெல்
லோதிக்குச் சந்தித்தவே.
தெளிவுரை : எண்ணியறியும் பழைமையானவள் அல்லள். தன்மை அறியாள். சிறுமி பெருமூச்சு விடும். குங்கிலிய மணம் வீசப் பெற்றிருக்கிறாள். உடல் முழுதும் நடுங்குகிறாள். கருங்குவளை மலரைப் போன்ற கண்கள் சோர்கின்றன. தன்னை மறக்கும் நீலகண்டனைக் கண்ணில் நிலை பெறச் செய்கின்றாள். வெண்மையான பற்களையும் மெல்லிய கூந்தலையும் உடையவளுக்கு இவைகள் உண்டாயின.
251. சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம்
பிணிக்குத் தணிமருந்தாம்
சிந்திக்கிற் சிந்தா மணியாகித்
தித்தித்(து) அமுதமுமாம்
வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும்
வானோர் வணங்கநின்ற
அந்திக்கண் ணாடியி னான்அடி
யார்களுக்(கு) ஆவனவே.
தெளிவுரை : எதிர்ப்பட்ட நமனுக்கு நமனாம். நோய்க்கு மருந்து ஆனவன். சிந்தித்தால் சிந்தாமணியாகி இனிமை உடையதாகிய அமுதமாம். வழிபட்டால் வந்து என்னை மயக்குகின்றான். தேவர்கள் வணங்குமாறு நின்றவனும் மாலைப் பொழுதில் கூத்தாடியவனுமாகிய சிவபெருமான் அடியார்களுக்கு அருள் செய்வான்.
252. ஆவன யாரே அழிக்கவல்
லார்அமை யாவுலகில்
போவன யாரே பொதியகிற்
பார்புரம் மூன்றெரித்த
தேவனைத் தில்லைச் சிவனைத்
திருந்தடி கைதொழுது
தீவினை யேன்இழந் தேன்கலை
யோடு செறிவளையே.
தெளிவுரை : வரத் தக்கவற்றை அழிக்க வல்லவர் யார்? நிலை பெற்றிராத இவ்வுலகில் போகின்றவற்றைப் போகாமல் பாதுகாக்க வல்லவர் யார்? முப்புரங்களை அழித் தெரித்த தேவனும் தில்லைச் சிவனுமாகிய அவனது திருந்திய பாதங்களைத் தொழுது ஆடையோடு நெருங்கிய வளையல்களையும் தீவினையேனாகிய யான் இழந்தேன்.
253. செறிவளை யாய்நீ விரையல்
குலநலம் கல்விமெய்யாம்
இறையவன் தாமரைச் சேவடிப்
போதென்றெல் லோரும்ஏத்தும்
நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று
வேண்டிய நீசர்தம்பால்
கறைவளர் கண்டனைக் காணப்
பெரிதும் கலங்கியதே.
தெளிவுரை : செறிந்த வளையல்களை உடையவளே! நீ விரைந்து செல்லாதே. குல நலம், கல்வி ஆகியவை மெய்யானவை. இறைவனது தாமரை மலர் போன்ற பாதங்களை எல்லாரும் ஏத்தும் நிறையுடை நெஞ்சிது. வேண்டியதைத் தரவல்லது. இழிந்தவர்களிடம் நஞ்சுக்கறை பொருந்திய கழுத்தை உடையவனைக் காணப் பெரிதும் கலங்கியது.
254. கலங்கின மால்கடல் வீழ்ந்தன
கார்வரை ஆழ்ந்ததுமண்
மலங்கின நாகம் மருண்டன
பல்கணம் வானம்கைபோய்
இலங்கின மின்னொடு நீண்ட
சடைஇமை யோர்வியந்தார்
அலங்கல்நன் மாநடம் ஆர்க்கினி
ஆடுவ(து) எம்மிறையே.
தெளிவுரை : முன்பு இறைவன் ஆடியபோது பெரிய கடல்கள் கலங்கின. முகில் தவழ்கிற மலைகள் வீழ்ந்தன. பூமி ஆழ்ந்தது. நாகங்கள் வருத்தமடைந்தன. பல தேவக் கூட்டங்கள் மருண்டன. வானம் செயலிழந்து மின்னலோடு விளங்கியது. நீண்ட சடையைக் கண்டு தேவர்கள் வியந்தார்கள். கொன்றை மலர்மாலையோடு நன்மாடத்தில் இனி எவர்க்காக இறைவன் ஆடுவது?
முன்பு ஆடியதே போதும் என்றபடி.
255. எம்இறை வன்இமை யோர்தலை
வன்உமை யாள்கணவன்
மும்முறை யாலும் வணங்கப்
படுகின்ற முக்கண்நக்கற்(கு)
எம்முறை யாள்இவள் என்பிழைத்
தாட்(கு)இறை என்பிழைத்தான்
இம்முறை யாலே கவரக்
கருதிற்(று) எழிற்கலையே.
தெளிவுரை : எம் இறைவன் தேவர்களுக்குத் தலைவன்; உமாதேவியார்க்குக் கணவன்; மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றாலும் வணங்கப்படுகின்ற மூன்று கண்களையுடைய நிர்வாணிக்கு இவள் எம்முறையாள்? எலும்பு மாலையை விரும்பிய இவளுக்கு இறைவன் பிழை செய்தான். அழகிய ஆடையை இம்முறையால் கவரக் கருதினாள் என்க.
256. கலைதலை சூலம் மழுக்கனல்
கண்டைகட் டங்கம்கொடி
சிலைஇவை ஏந்திய எண்தோள்
சிவற்கு மனஞ்சொற்செய்கை
நிலைபிழை யாதுகுற் றேவல்செய்
தார்நின்ற மேருஎன்னும்
மலைபிழை யார்என்ப ரால்அறிந்
தோர்கள்இம் மாநிலத்தே.
தெளிவுரை : எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்தும் எட்டுப் பொருள்களைக் கூறினார். கலைமான், பிரமனது தலை, சூலம், மழுவாகிய கனல், வீரக்கழல் யோக தண்டம், கொடி, பிளாகம் என்னும் வில் என்னும் இனை எட்டையும் ஏந்திய எட்டுத் தோள்களையுடைய சிவபிரானுக்கு, மனம் வாக்கு காயம் என்னும் மூன்று நிலைகளிலும் பிழையாமல் சிறுதொண்டு செய்தார் மேருமலைக்கு ஒப்பாவர்; பிழை செய்ய மாட்டார்கள் என்று அறிந்தோர்கள் இம்மாநிலத்தில் சொல்வார்கள்.
257. மாநிலத் தோர்கட்குத் தேவர்
அனையஅத் தேவர்எல்லாம்
ஆனலத் தால்தொழும் அஞ்சடை
ஈசன் அவன்பெருமை
தேனலர்த் தாமரை யோன்திரு
மாலவர் தேர்ந்துணரார்
பானலத் தாற்கவி யாமெங்ங
னேஇனிப் பாடுவதே.
தெளிவுரை : மாநிலத்தோர்கட்குத் தேவர் ஒப்பாவர். அத்தேவர்கள் எல்லாம் பசுவிடத்தே பெறும் நல்ல பொருள்களைக் கொண்டு தொழும் அழகிய சடையை உடையவன் ஈசன். அவன் பெருமையை, நான்முகனும் திருமாலும் தேர்ந்துணராதவர்கள். இலக்கணம் அமைந்த நல்ல பாடலால் யாம் எவ்வாறு அவன் புகழை இனிப் பாடுவது?
258. பாடிய வண்டுறை கொன்றையி
னான்படப் பாம்புயிர்ப்ப
ஓடிய தீயால் உருகிய
திங்களின் ஊறல்ஒத்த(து)
ஆடிய நீறது கங்கையும்
தெண்ணீர் யமுனையுமே
கூடிய கோப்பொத்த தால்உமை
பாகம்எம் கொற்றவற்கே.
தெளிவுரை : நீற்றினால் வெண்ணிறம் பெற்ற பெருமான் மேனி கங்கையையும், உமாதேவியாரின் நீலத்திருமேனி யமுனையையும் ஒத்தன என்கிறார்.
ரீங்காரம் செய்கின்ற வண்டுகள் நிறைந்த கொன்றை மாலையையுடைய பெருமான், படத்தை உடைய பாம்பு பெருமூச்சுவிட குலைந்த தீயால் உருகிய சந்திரனின் கசிவு நீர் கலப்பையை ஒத்திருக்கின்றது. பூசிய வெண்ணீறு கங்கையையும் உமையின் திருமேனி தெளிந்த யமுனையையும் ஒத்திருக்கின்றன.
259. கொற்றவ னேஎன்றும் கோவணத்
தாய்என்றும் மாவணத்தால்
நற்றவ னேஎன்றும் நஞ்சுண்டி
யேஎன்றும் அஞ்சமைக்கப்
பெற்றவ னேஎன்றும் பிஞ்ஞக
னேஎன்றும் மன்மதனைச்
செற்றவ னேஎன்றும் நாளும்
பரவும்என் சிந்தனையே.
தெளிவுரை : வெற்றியாளனே என்றும், கோவணம் அணிந்தவனே என்றும், மாவணத்தால் நற்றவனே என்றும், விடத்தை அருந்தியவனே என்றும், ஐந்தொழில்களையும் செய்ய வல்லவன் என்றும், சிவனே என்றும், மன்மதனை எரித்தவனே என்றும், நாள்தோறும் என் சிந்தனை துதிக்கின்றது.
ஆவணம் என்று பாடம் கொண்டு அடையாளம் என்று பொருள் கூறுவர். அஞ்சு அமைக்கப் பெற்றவன் என்பதற்குப் புலன் ஐந்தும் வென்றவன் என்றும் பொருள் கூறுவர்.
260. சிந்தனை செய்ய மனம்அமைத்
தேன்செப்ப நாஅமைத்தேன்
வந்தனை செய்யத் தலைஅமைத்
தேன்கை தொழஅமைத்தேன்
பந்தனை செய்வதற்(கு) அன்பமைத்
தேன்மெய் அரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி ஈசற்(கு)
இவையான் விதித்தனவே.
தெளிவுரை : சிந்தனை செய்வதற்கு மனத்தை அமைத்தேன். துதிப் பாடல்களைப் பாட நாக்கை அமைத்தேன். வழிபாடு செய்யத் தலையை அமைத்தேன். வணங்குவதற்குக் கையை அமைத்தேன். உள்ளத்தில் கட்டுவதற்கு அன்பை அமைத்தேன். அரும்புவதற்கு உடம்பை வைத்தேன். சுட்ட வெண்ணீற்றை அணியும் ஈசற்கு இவை யான் விதித்தனவாம்.
261. விதித்தன வாழ்நாள் பெரும்பிணி
விச்சைகள் கொண்டுபண்டே
கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை
குங்குமக் குன்றனைய
பதித்தனம் கண்டனம் குன்றம்வெண்
சந்தனம் பட்டனைய
மதித்தனம் கண்டனம் நெஞ்சினி
என்செய்யும் வஞ்சனையே.
தெளிவுரை : வாழ்நாளும் பெரும் பிணியும் நான்முகனால் விதிக்கப்பட்டன. வித்தைகளைக் கூறும் நூல்களைக் கொண்டு முன்பே வருத்தத்திற்கு ஒன்றும் குறைவு இல்லை. குங்குமக் குன்று அளவு தீங்கு இழைத்தனம். கயிலாய மலையைக் கண்டனம். வெண் சந்தனம் பட்டு அனைய மதித்தனம். நெஞ்சமே, இனி என்ன வஞ்சனையைச் செய்யப் போகிறாய்?
262. வஞ்சனை யாலே வரிவளை
கொண்டுள்ள மால்பனிப்பத்
துஞ்சும் பொழுதும் உறத்தொழு
தேன்சொரி மால்அருவி
அஞ்சன மால்வரை வெண்பிறை
கவ்விஅண் ணாந்தனைய
வெஞ்சின ஆனையின் ஈருரி
மூடிய வீரனையே.
தெளிவுரை : வஞ்சனையால் வளைகளைக் கொண்டு மயக்கம் நீங்குமாறு தூங்கும் பொழுதும் பொருந்துமாறு வணங்கினேன். பெரிய அருவி நீர் சொரிகின்ற பெரிய நீல மலை, வெண்பிறை கவ்வி மல்லாந்தது போலக் கோபம் மிகுந்த யானையின் உரித்த தோலைப் போர்த்துக் கொண்டுள்ள ஈசனை வணங்கினேன் என முடிக்க. யானையின் வருணனை, பாட்டின் பிற்பகுதியில் கூறப்பட்டுள்ளது.
263. வீரன் அயன்அரி வெற்பலர்
நீர்எரி பொன்எழிலார்
காரொண் கடுக்கை கமலம்
துழாய்விடை தொல்பறவை
பேர்ஒண் பதிநிறம் தார்இவர்
ஊர்திவெவ் வேறென்பரால்
யாரும் அறியா வகைஎங்கள்
ஈசர் பரிசுகளே.
தெளிவுரை : திரிமூர்த்திகளும் இறைவனே என்றபடி. இவர்களின் பெயர்: பதி, நிறம், தார், ஊர்தி நிரல்படக் கூறப்பட்டுள்ளன. சிவபெருமானது பதி கைலைமலை நிறம் தீ; தார் கொன்றை; ஊர்தி விடை.
264. பரியா தனவந்த பாவமும்
பற்றும்மற் றும்பணிந்தார்க்(கு)
உரியான் எனச்சொல்லி உன்னுடன்
ஆவன் எனஅடியார்க்(கு)
அரியான் இவன்என்று காட்டுவன்
என்றென்(று) இவைஇவையே
பிரியா(து) உறையும் சடையான்
அடிக்கென்றும் பேசுதுமே.
தெளிவுரை : ஒழியாதனவாகி வந்த பாவமும் பற்றும் அன்றித் தொழுதவர்களுக்கு உரியவன் என்றும் சொல்லி உன்னுடன் கலந்திருப்பன் என்று சொல்லுபவன். அடியார்களால் அடைய முடியாதவன் என்று காட்டுவேன். என்றாலும் இவன் இவைகளிலிருந்து பிரியாமல் உறைபவன். அவன்தான் சடாபாரத்தை உடைய சிவபெருமான்.
265. பேசுவ(து) எல்லாம் அரன்திரு
நாமம்அப் பேதைநல்லாள்
காய்சின வேட்கை அரன்பா
லதுஅறு காற்பறவை
மூசின கொன்றை முடிமே
லதுமுலை மேல்முயங்கப்
பூசின சாந்தம் தொழுமால்
இவைஒன்றும் பொய்யலவே.
தெளிவுரை : அப் பேதை நல்லாள் பேசுவது எல்லாம் அரன் திருநாமமே. அவளை வருத்துகிற அவா அரன் பாலது. ஆறு கால்களையடைய வண்டுகள் நெருங்கியுள்ள கொன்றை மலர் அவள் முடி மேலது. முலைகள் மேல் பூசப்பட்டிருப்பது அவனது சந்தனமே. அவள் அவனையே தொழுவாள். இவை எதுவும் பொய்யல்ல.
266. பொய்யா நரகம் புகினும்
துறக்கம் புகினும்புக்கிங்(கு)
உய்யா உடம்பினோ(டு) ஊர்வ
நடப்ப பறப்பஎன்று
நையா விளியினும் நானிலம்
ஆளினும் நான்மறைசேர்
மையார் மிடற்றான் அடிமற
வாவரம் வேண்டுவனே.
தெளிவுரை : தவறுதல் இல்லாத நரகம் புகுந்தாலும், துறக்கம் புகுந்தாலும் மீண்டும் இங்கு வந்து உடம்போடு கூடி ஊர்வன, நடப்பன, பறப்பன என்று பல பிறவிகளை எடுத்து வருத்தமுற்று இறந்தாலும், இவ்வுலகை ஆட்சி செய்தாலும் நான்கு வேதங்களும் துதிக்கின்ற நீல கண்டனது பாதங்களை மறவாத வரத்தை வேண்டுவேன்.
267. வேண்டிய நாள்களில் பாதியும்
கங்குல் மிகஅவற்றுள்
ஈண்டிய வெந்நோய் முதலது
பிள்ளைமை மேலதுமூப்(பு)
ஆண்டின அச்சம் வெகுளி
அவாஅழுக் கா(று)இங்ஙனே
மாண்டன சேர்தும் வளர்புன்
சடைமுக்கண் மாயனையே.
தெளிவுரை : நமக்காக வரையறை செய்யப்பட்ட வாழ்நாளில் பாதி இரவில் தூங்கிக் கழியும். எஞ்சியுள்ள சேர்ந்துள்ள கொடிய நோய்கள் வருத்தும். ஆரம்ப நாட்களில் பிள்ளைப் பருவமும் அதன் பின்னர் வயோதிகமும், அச்சமும் வெகுளியும் அவாவும் பொறாமையும் என்னும் இவற்றோடு இறப்பும் வரும். ஆகையால் வளர்கின்ற புன்சடையானும் மாயையைத் தன்னிடம் கொண்டுள்ளவனுமான இறைவனைச் சேர்வோமாக.
268. மாயன்நன் மாமணி கண்டன்
வளர்சடை யாற்(கு)அடிமை
ஆயின தொண்டர் துறக்கம்
பெறுவது சொல்லுடைத்தே
காய்சின ஆனை வளரும்
கனக மலையருகே
போயின காக்கையும் அன்றே
படைத்தது பொன்வண்ணமே.
தெளிவுரை : மாயங்களில் வல்லவனும் நீலகண்டனும் வளர்கின்ற சடையை உடையவனுக்கு அடிமையானவர்கள் துறக்கம் பெறுவது சொல்ல வேண்டிய அவசியமும் உள்ளதோ? மிக்க கோபமுள்ள யானை வளரும் பொன் மலையைச் சார்ந்த காக்கையும் பொன்னிறம் பெற்றது என்க.
ஆக்கியோன் பெயர்
269. அன்றுவெள் ளானையின் மீதிமை
யோர்சுற் றணுகுறச்செல்
வன்தொண்டர் பின்பரி மேற்கொண்டு
வெள்ளி மலையரன்முன்
சென்றெழில் ஆதி உலாஅரங்
கேற்றிய சேரர்பிரான்
மன்றிடை ஓதுபொன் வண்ணத்
தந்தாதி வழங்கிதுவே.
தெளிவுரை : முன்பு வெள்ளை யானையின் மீது தேவர்கள் சூழ்ந்து வரச் சென்ற சுந்தரர், பின்னால் குதிரையின் மீது கயிலை மலையை அடைந்து அழகுடைய திருக்கயிலாய ஞான உலாவை அரங்கேற்றிய சேரமான்பெருமாள் நாயனார் ஓதிய பொன் வண்ணத்தந்தாதி இதுவாகும்.
திருச்சிற்றம்பலம்
7. திருவாரூர் மும்மணிக் கோவை (சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்தது)
மும்மணிக் கோவை என்பது அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் மூவகைப் பாடல்களையும் வகைக்குப் பத்து விழுக்காடு கொண்டு பாடப்பட்டதாகும். இம் மும்மணிக் கோவை திருவாரூரில் எழுந்தருளிய இறைவன் மீது பாடப்பட்டபடியால் திருவாரூர் மும்மணிக் கோவை என்னும் பெயருடையதாயிற்று. சேரமான் பெருமாள் இந்நூலை இயற்றித் திருவாரூர்ப் பூங்கோயிலில் சுந்தரர் தலைமையில் அரங்கேற்றம் செய்தருளினார்.
விண்ணகக் கங்கைப் பெரு வெள்ளத்தை அடக்கியது, அதனைச் சடையிற் சேர்த்தது, தேயுந் திங்களையணிந்து காத்தது, நஞ்சினை உண்டு, தேவர்களை உய்வித்தது, மேருமலையை வில்லாக வளைத்தது, முப்புரத்தை எரித்தது, தக்கன் வேள்வியை அழித்தது. கூற்றை அடக்கியது காமனை எரித்தது, ஆனையை உரித்துப் போர்த்தது, அருச்சுனனுக்கு அருள் செய்தது முதலிய செய்திகளும் பிறவும் இந்நூலிற் கூறப் பெறுகின்றன.
திருச்சிற்றம்பலம்
அகவல்
இவள் கார்காலத்துத் தன்மைகளை எல்லாம் காட்டினாள். இது தலைவியின் நிலை கண்ட தோழி வருந்திக் கூறியது.
270. விரிகடல் பருகி அளறுபட் டன்ன
கருநிற மேகம் கல்முக டேறி
நுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடி
பொலங்குழை மின்னப் புருவ வில்லிட்டு
இலங்கெழிற் செவ்வாய்க் கோபம் ஊர்தரக்
தெளிவுரை : விரிவான கடல் குழைசேறு ஆனாற்போல அதிலுள்ள நீரைப் பருகி, கருமையான நிறமுள்ள மேகமானது மலையின் உச்சிக்குச் சென்று, மழை பொழிவதைக் கண்ட ஒளி பொருந்திய வளையலை அணிந்த தலைவியின் பின்னிய சடை மின்ன புருவம் வில்லைப் போல் வளைந்து, அழகிய செவ்வாய் இந்திர கோபப் பூச்சி போல செந்நிறம் அடைய
கைத்தலம் என்னும் காந்தள் மலர
முத்திலங்(கு) எயிறெனும் முல்லை யரும்பக்
குழலும் சுணங்கும் கொன்றை காட்ட
எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப
உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை ஊர்தரக்
தெளிவுரை : கைகள் காந்தள் மலர் வகை போலவும் முத்துப் போல் விளங்கும் பல் முல்லை அரும்புவதைப் போலவும் (பின்னிய சடை கொன்றைப்பழம் போலவும் சுணங்கு கொன்றை மலரைப் போலவும் விளங்க), அழகிய சாயல் இளமயில் போலவும் உள்ளிருந்து வரும் பெருமூச்சு ஊதைக் காற்றைப் போலவும் - (சுணங்கு-பசலை) ஊதை - வாடைக் காற்று.
கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத்(து)
அஞ்சனக் கொழுஞ்சே(று) அலம்பி எஞ்சா
மணியும் பொன்னும் மாசறு வயிரமும்
அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக்
கொங்கை என்னும் குவட்டிடை இழிதரப்
தெளிவுரை : கண்ணீர் பெருமழை போலப் பெய்தலினால் கண்களில் பூசிய மை கரைந்து, சேறாகி, வழிந்து மணி, பொன், வயிரம், அகில், ஆரம் இவைகளை நனைத்து முலையின் மீது இறங்கி வர
பொங்குபுயல் காட்டி யோளே கங்கை
வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள்
அரிவை பாகத்(து) அண்ணல் ஆரூர்
எல்லையில் இரும்பலி சொரியும்
கல்லோ சென்ற காதலர் மனமே.
தெளிவுரை : பொங்குகின்ற புயலைக் காட்டியவளே, கங்கையின் வேகத்தைத் தவிர்த்த சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் திருவாரூர் எல்லையில் நம்மை விட்டுச் சென்ற தலைவரின் மனம் கல்லோ! கார்காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவர் கார் காலம் வந்த பிறகும் வரவில்லையே என்கிறாள்.
வெண்பா
271. மனமால் உறாதே மற்றென்செய் யும்வாய்ந்த
கனமால் விடையுடையோன் கண்டத்(து)-இனமாகித்
தோன்றினகார் தோன்றிலதேர்; சோர்ந்தனசங்(கு) ஊர்ந்தனபீர்
கான்றனநீர் ஏந்திழையாள் கண்.
தெளிவுரை : மனம் மயக்கம் அடையாமல் வேறு என்ன செய்யும்? மிகப் பெரிய காளையை உடையவன் நீல கண்டத்துக்கு ஒப்பாகி மேகங்கள் தோன்றின. தலைவனது தேர் இன்னும் வரவில்லை. கைவளைகள் கழன்றன. பசலை படர்ந்தது. தலைவியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
கட்டளைக் கலித்துறை
272. கண்ணார் நுதலெந்தை காமரு
கண்ட மெனஇருண்ட
விண்ணால் உருமொடு மேலது
கீழது கொண்டல்விண்ட
மண்ணார் மலைமேல் இளமயி
லால்மட மான்அனைய
பெண்ணாம் இவள்இனி என்னாய்க்
கழியும் பிரிந்துறைவே.
தெளிவுரை : நெற்றியில் கண்ணை உடைய சிவபெருமானது அழகிய கழுத்தைப் போல விண்ணிடத்தில் இருண்ட மேகம் இடிக்கின்ற இடியுடன் மலைமேல் மழை பொழிய, மடப்பம் பொருந்திய மடமான் போன்ற இவளது பிரிவு வாழ்க்கை எங்ஙனம் கழியும்? பிரிவுத் துயரால் துன்புறுவாள் என்றபடி.
அகவல்
துணைவனின் பிரிவுக் காலத்தில் பருவங் கண்ட தலைவி வருந்திக் கூறியது.
273. உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும்
அறைகுரல் முரசம் ஆர்ப்பக் கைபோய்
வெஞ்சிலை கோலி விரிதுளி என்னும்
மின்கரந் துரந்தது வானே நிலனே
கடிய வாகிய களவநன் மலரொடு
தெளிவுரை : உறையிலிருந்து வெளியே எடுத்த ஒளி பொருந்திய வாளைப் போல மின்னி, இடியோசை முரசம் போல் ஒலி செய்ய, வல்லமையுடையதாகி இந்திர வில்லை வளைத்து விரிந்த மழையென்னும் ஒளியுடைய அம்பு பெய்தது. வானத்திலும் நிலத்திலும் மணமுடைய களவ மலரோடு
கொடிய வாகிய தளவமும் அந்தண்
குலைமேம் பட்ட கோடலும் கோபமோடு
அலைமேம் பட்ட காந்தளும் இவற்றொடு
காயா வெந்துயர் தருமேல் அவரே
பொங்கிரும் புரிசை போக்கற வளைஇக்
தெளிவுரை : கொடியில் தோன்றுவதாகிய முல்லை மலரும், குளிர்ந்த குலையாகவுள்ள வெண் காந்தளும் இந்திர கோபம் என்றும் பூச்சியும், காந்தளும் காயா மலரும் வெந்துயர் தரும். தலைவர் பெரிய மதிலைச் சூழ்ந்து
கங்குலும் பகலும் காவில் மேவி
மாசறு வேந்தன் பாசறை யோரே
யானே இன்னே
அலகி லாற்றல் அருச்சுனற்(கு) அஞ்ஞான்று
உலவா நல்வரம் அருளிய உத்தமன்
தெளிவுரை : இரவும் பகலும் புறஞ்சோலையில் பொருந்திய குற்றமற்ற பாசறையில் உள்ளார். யானே இப்போதே எல்லையற்ற ஆற்றல் படைத்த அருச்சுனனுக்கு அப்போது அழியாத நல்ல வரத்தை அருளிய உத்தமனது
அந்தண் ஆரூர் சிந்தித்து மகிழா
மயரிய மாக்களைப் போலத்
துயருழந்(து) அழியக் கண்துயி லாவே.
தெளிவுரை : குளிர்ந்த திருவாரூரைச் சிந்தித்து மகிழாத மயக்கங் கொண்டவர்களைப் போலத் துன்ப முற்று அழியக் கண்கள் உறக்கங் கொள்ளவில்லை என்பதாம்.
வெண்பா
274. துயிலாநோய் யாம்தோன்றத்தீத் தோன்ற
மயிலால வந்ததால் மாதோ - அயலாய
அண்டத்துக்(கு) அப்பாலான் அந்திங்கட் கண்ணியான்
கண்டத்துக்(கு) ஒப்பாய கார்.
தெளிவுரை : இது கார் கால வருணனை.
தூங்காத நோயின்கண் யாம் வருந்த செங்காந்தள் மலர் தோன்ற, மயிலாட வந்தது. நிலவுலகத்திற்கு அப்பாற்பட்ட அண்டத்துக்கும் அப்பால் உள்ளவனும் பிறைச்சந்திரனைத் தலையில் அணிந்தவனுமாகிய எம்பெருமானது கழுத்துக்கு ஒப்பாய கருமேகம். கருமேகம் வந்தது என்க.
கட்டளைக் கலித்துறை
275. காரும் முழக்கொடு மின்னொடு
வந்தது காதலர்தம்
தேருந் தெருவும் சிலம்பப்
புகுந்தது சில்வளைகள்
சோருஞ் சிலபல அங்கே
நெரிந்தன துன்னருநஞ்
சாரும் மிடற்றண்ணல் ஆரூர்
அனைய அணங்கினுக்கே.
தெளிவுரை : முகிலும் ஆரவாரத்தோடும் மின்னலோடும் வந்தது. காதலருடைய தேரும், தெருவில் ஒலி செய்து கொண்டு புகுந்தது. சிலவாகிய வளைகள் சோர்ந்தன. சில பல அங்கே உடைந்தன. நெருங்குதற்கரிய நஞ்சையுண்ட நீலகண்டனது திருவாரூரைப் போன்ற சிறப்புடைய தலைவிக்கு என்றவாறு. தலைவி மகிழ்ந்தாள் என்க.
அகவல்
வரும் வழியிடையே உண்டாகும் இடையூற்றுக்கு அஞ்சினாள் தலைவி என்று தோழி தலை மகனுக்குக் கூறியது.
276. அணங்குறை நெடுவரை அருமைபே ணாது
மணங்கமழ் தெரியல் சூடி வைகலும்
விடுசுடர் நெடுவேல் முன்னடி விளக்காக்
கடுவிசைக் கான்யாற்று நெடுநீர் நீந்தி
ஒருதனி பெயரும் பொழுதிற் புரிகுழல்
தெளிவுரை : தீண்டி வருத்தும் தெய்வம் உறையும் பெரிய மலையின் அருமையைப் பாராட்டாமல், மணம் வீசுகின்ற மாலையைச் சூடி நாள்தோறும் ஒளிபொருந்திய வேலை விளக்காகக் கொண்டு விரைந்து செல்லும் காட்டாற்றின் நீரில் நீந்தி வருங்காலத்தில் புரிகுழலை உடைய
வானர மகளிர்நின் மல்வழங்(கு) அகலத்(து)
ஆனாக் காதல் ஆகுவர் என்று
புலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள்
கலைபிணை திரியக் கையறவு எய்தி
மெல்விரல் நெரித்து விம்மி வெய்துயிர்த்து
தெளிவுரை : தெய்வப் பெண்கள் உன்னுடைய வலிமை பொருந்திய மார்பைக் கண்டு குறையாத காதல் கொள்வர் என்று ஊடல் கொண்டு உறங்காத கண்ணையுடையவள். ஆண் மானோடு பெண் மான் மகிழ்ந்து விளையாடச் செயல் ஒழிந்து, கைவிரல்களை நெரித்து விம்மிப் பெருமூச்சு விட்டு (கோதை - மலர் மாலை)
அல்லியங் கோதை அழலற் றாஅங்கு
எல்லையில் இருந்துயர் எய்தினள் புல்லார்
திரிபுரம் எரிய ஒருகணை தெரிந்த
அரிவை பாகத்(து) அண்ணல் ஆரூர்
வளமலி கமல வாள்முகத்(து)
இளமயிற் சாயல் ஏந்திழை தானே.
தெளிவுரை : அல்லியங் கோதை தீயல் விழுந்தாற் போன்று எல்லையற்ற துயர் எய்தினள். பகைவரது திரிபுரங்கள் எரிய ஒரு கணை விடுத்தவனும் உமாதேவியாரை இடப் பக்கத்தில் கொண்டவனுமாகிய இறைவனது திருவாரூரில், தாமரை மலரைப் போல் ஒளியமைந்த முகத்தையும் மயிலன்ன சாயலையும் உடைய தலைவி துயர் எய்தினள் என்க.
வெண்பா
277. இழையார் வனமுலை ஈர்ந்தண் புனத்தில்
உழையாகப் போந்ததொன்(று) உண்டே - பிழையாச்சீர்
அம்மான் அனலாடி ஆரூர்க்கோன் அன்றுரித்த
கைம்மானேர் அன்ன களிறு.
தெளிவுரை : (கெடுதி வினவிப் புக்க தலை மகன் கூறியது) அணிகலன்களை உடைய வன முலையீர் ! மிகுந்த குளிர்ச்சி பொருந்திய இவ்வனத்தில், சீர் பிழையாத அம்மானும் அனலாடியும் திருவாரூர் இறைவனுமாகிய எங்கோன் முன்பு உரித்த யானையைப் போன்ற களிறு ஒன்று இப் பக்கமாக வந்ததா?
கட்டளைக் கலித்துறை
278. களிறு வழங்க வழங்கா
அதர்கதிர் வேல்துணையா
வெளிறு விரவ வருதிகண்
டாய்விண்ணின் நின்றிழிந்து
பிளிறு குரற்கங்கை தாங்கிய
பிஞ்சகன் பூங்கழல்மாட்(டு)
ஒளிறு மணிக்கொடும் பூணிமை
யோர்செல்லும் ஓங்கிருளே.
தெளிவுரை : (தோழி தலைமகனை இரவில் வரவேண்டாம் என்றல்)
யானை திரிதலால் போக்குவரவு இல்லாத வழியில் வேலைத் துணையாகக் கொண்டு வெளிச்சம் வீச வர வேண்டாம். ஆகாயத்திலிருந்து இறங்கிய உரத்த குரலைக் கொண்ட கங்கையைத் தாங்கிய சிவபெருமான் பூங்கழல் மாட்டு ஒளிரும் மணிக் கொடும் பூண் இமையோர் செல்லும் ஓங்கிருளில் வர வேண்டாம் என்றபடி.
வருதி என்பதற்கு வருக என்று சிலர் பொருள் கொண்டனர்.
அகவல்
(இது தோழி கூற்று. தலைவனுடன் அளவளாகிய தலைவி பெற்ற வேறுபாடுகளைச் சொல்கிறாள்.)
279. இருள்புரி கூந்தலும் எழில்நலம் சிதைந்தது
மருள்புரி வண்டறை மாலையும் பரிந்தது
ஒண்ணுதல் திலகமும் அழிந்தது கண்ணும்
மைந்நிறம் ஒழிந்து செந்நிறம் எய்தி
உள்ளறி கொடுமை உரைப்ப போன்றன
தெளிவுரை : கூந்தல் எழில் நலம் சிதைந்தது. வண்டு முரலும் மாலையும் நிலையழிந்தது. நெற்றித் திலகமும் அழிந்தது. கண்ணும் கருநிறம் ஒழிந்து செந்நிறம் எய்தியது. இவை வாய்விட்டுச் சொல்வது போல் உள்ளன.
சேதகம் பரந்தது செவ்வாய் மேதகு
குழைகெழு திருமுகம் வியப்புள் உறுத்தி
இழைகெழு கொங்கையும் இன்சாந்(து) அழீஇக்
கலையுந் துகிலும் நிலையிற் கலங்கி
என்னிது விளைந்த வாறென மற்றிஃது
தெளிவுரை : வாய் விளத்தற் சிவப்புற்றது. சிறந்த குழையணிந்த திருமுகம் வியப்புள் ஆழ்ந்தது. கொங்கை மீதிருந்த சாந்து அழிந்தது. கலையும் துகிலும் நிலையில் கலங்கின. கூந்தல் நலம் சிதைத்தல் முதலியன புணர்ச்சியினால் உண்டாகிய வேறுபாடுகள்.
அன்னதும் அறிகிலம் யாமே செறிபொழில்
அருகுடை ஆரூர் அமர்துறை அமுதன்
முருகுவிரி தெரியல் முக்கண் மூர்த்தி
மராமரச் சோலை சிராமலைச் சாரல்
சுரும்பிவர் நறும்போது கொய்யப்
பெருஞ்செறி வனத்தில்யான் பிரிந்ததிப் பொழுதே.
தெளிவுரை : செறித்த பொழில்களையுடைய திருவாரூரில் கோயில் கொண்டுள்ள அமுதம் போன்றவன். மணம் வீசும் மாலை அணிந்தவன். மூன்று கண்களையுடையவனது மராமரச் சோலை சிராமலைச் சோலையில் மலர் கொய்யச் சென்ற வனத்தில் நான் பிரிந்த போது நடந்தது இது என்றவாறு.
வெண்பா
280. பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத்(து) எள்கி
எழுது கொடியிடையாய் ஏகான் - தொழுதமரர்
முன்னஞ்சேர் மொய்கழலான் முக்கணான் நான்மறையான்
மன்னுஞ்சேய் போலொருவன் வந்து.
தெளிவுரை : பொழுது போனாலும் அழகிய புனத்தைக் காவல் செய்து வருந்தினாலும் சித்திரம் போன்ற கொடி இடையை உடையாய்! முன்பு தேவர்கள் வழிபட்டு அடைந்த வீரக் கழல் அணிந்த மூன்று கண்களையுடைய நான்மறையாளனின் மகனாகிய முருகன் போல் வந்து போக மாட்டான். இது தோழி கூற்று.
கட்டளைக் கலித்துறை
281. வந்தார் எதிர்சென்று நின்றேன்
கிடந்தவண் தார்தழைகள்
தந்தார் அவையொன்றும் மாற்றகில்
லேன்தக்கன் வேள்விசெற்ற
செந்தா மரைவண்ணன் தீர்த்தச்
சடையன் சிராமலைவாய்க்
கொந்தார் பொழிலணி நந்தா
வனஞ்சூழ் குளிர்புனத்தே.
தெளிவுரை : தக்கனது வேள்வியை அழித்த, செந்தாமரை மலர் போன்ற நிறத்தையுடைய, கங்கையைச் சடையில் அணிந்தவன் சிராமலை இடத்தில் சோலைகள் நிறைந்த நந்தவனம் சூழ்ந்த குளிர் புனத்தில், தலைவர் வந்தார். எதிர் சென்று நின்றேன். அங்கு அவர் தழையினாலாகிய ஆடையைக் கொடுத்தார். அதை என்னால் மறுக்க முடியவில்லை.
அகவல்
தலைமகள் தலைமகனுடன் சென்றாளாக செவிலி கவன்று கூறியது.
282. புனமயில் சாயல் பூங்குழல் மடந்தை
மனைமலி செல்வம் மகிழா ளாகி
ஏதிலன் ஒருவன் காதல னாக
விடுசுடர் நடுவுநின்(று) அடுதலின் நிழலும்
அடியகத்(து) ஒளிக்கும் ஆரழற் கானத்து
தெளிவுரை : மயில் போன்ற சாயலையுடைய பூங்குழல் மடந்தை இல்லத்தில் மிகுதியாகப் பொருந்தியுள்ள செல்வத்தைக் கண்டு மகிழாமல், அயலான் ஒருவனைக் காதலனாகக் கொண்டு சூரிய வெப்பம் எரிக்கின்ற காட்டில்
வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇ
மெய்விதிர் எறியும் செவ்வித் தாகி
முள்ளிலை ஈந்தும் முளிதாள் இலவமும்
வெள்ளிலும் பரந்த வெள்ளிடை மருங்கில்
கடுங்குரல் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப்
தெளிவுரை : வேடவர்களுடைய உடுக்கை ஒலி நடுக்கத்தைச் செய்ய உலர்ந்த ஈந்து, இலவம் விளா மரங்களில் நாய்களைப் பிணித்து
பாசந் தின்ற தேய்கால் உம்பர்
மரையதள் மேய்ந்த மயிர்ப்புன் குரம்பை
விரிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர்
விருந்தா யினள்கொல் தானே திருந்தாக்
கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன்
தெளிவுரை : மான் தோல் வேய்ந்த சிறு குடிலில் விரிந்த நரைக் கூந்தலையும் வெற்றிலை போடாத வெள்வாயையுடைய மறத்தியருக்கு விருந்தாயினாள். பாலை நிலத்தில் போற்றுவார் வேறு எவரும் இன்மையால், மறத்தியரால் போற்றப்பட்டாள் என்க. எமனது ஆற்றலை அழித்த ஒப்பற்றவன்
ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச்
செய்வளர் கமலச் சீறடிக்
கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே.
தெளிவுரை : பெருமையிற் சிறந்தவன். அவனுடைய திருவாரூர் வயலில் வளர்கின்ற கமல மலர் போன்ற சீறடிகளையும் கொவ்வைச் செவ்வாயையும் குயில் போன்ற மொழியையும் உடைய தலைவி (சென்றனள் என்க) மறத்தியர்க்கு விருந்தாயினள் என முடிக்க.
வெண்பா
283. கொடியேர் நுடங்கிடையாள் கொய்தாரான் பின்னே
அடியால் நடந்தடைந்தாள் ஆக - பொடியாக
நண்ணாரூர் மூன்றெரித்த நாகஞ்சேர் திண்சிலையான்
தண்ணாரூர் சூழ்ந்த தடம்.
தெளிவுரை : செவிலி, தன் மகள் ஆரூரை இனிது சென்று அடைவாளாக என்று வாழ்த்துகிறாள். கொடியைப் போல் அழகாக அசைகின்ற இடையை உடையவள் மாலை அணிந்த தலைவன் பின்னே நடந்து சென்றாள். பகைவர்களது திரிபுரங்களை எரித்த மேரு மலையை வில்லாகவுடையவனது குளிர்ந்த திருவாரூரைச் சென்று அடைவாளாக.
கட்டளைக் கலித்துறை
284. தடப்பாற் புனற்சடைச் சங்கரன்
தண்மதி போல்முகத்து
மடப்பால் மடந்தை மலரணைச்
சேக்கையில் பாசம்பிரீஇ
இடப்பால் திரியில் வெருவும்
இருஞ்சுரம் சென்றனளால்
படப்பா லனவல்ல வால்தமி
யேன்தையல் பட்டனவே.
தெளிவுரை : பெருந் தடத்தின் தன்மை கொண்ட பெரிய நீராகிய கங்கையைச் சடையில் உடைய சங்கரன் அணிந்துள்ள சந்திரனைப் போன்ற முகத்தையுடைய பேதைமைப் பகுதியையுடைய பெண் மலரணையாகிய படுக்கையில் பிணைப்புப் பிரிந்து இடப்பால் திரும்பினால் அஞ்சுவாள். அத்தகையவள் கொடிய பாலையில் சென்றனள். பட்ட துன்பங்கள் அவள் படுந்தன்மையுடையன அல்ல. (படுக்கையில் நான் கட்டிக் கொள்வதை விட்டு இடப்பக்கத்தில் திரும்பிப் படுத்தால் அஞ்சுவாள் என்று செவிலி கூறினாள் என்க)
அகவல் இது செவிலி கூறுதல்.
285. பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும் மூதூர் நத்தமும்
பரல்முரம்(பு) அதரும் அல்லது படுமழை
வரன்முறை அறியா வல்வெயிற் கானத்துத்
தேனிவர் கோதை செல்ல மானினம்
தெளிவுரை : போரில் பொருது இறந்தோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்ட கல்லும் வீரக் கல்லும் பழைய ஊர் இருந்து அழிந்து போன இடமும், பருக்கைக் கற்களையுடைய மேட்டு நிலத்திலுள்ள வழியும் அல்லது மழை பெய்யாத வறண்ட நிலத்தில் இவள் செல்ல மானினம்
அஞ்சில் ஓதி நோக்கிற் கழிந்து
நெஞ்செரி வுடைமையின் விலக்காது விடுக
கொங்கைக் கழிந்து குன்றிடை அடைந்த
கொங்கிவர் கோங்கமும் செலவுடன் படுக
மென்றோள் குடைந்து வெயில்நிலை நின்ற
தெளிவுரை : அழகிய சிலவாகிய கூந்தலை உடையவள் பார்வைக்குத் தோற்று விலக்காமல் இருந்தாலும் இருக்கட்டும். கோங்கமும் உடன் செல்வதாக. மெல்லிய தோள்களுக்குத் தோற்று வெயிலின்கண் நிற்கின்ற
குன்ற வேய்களும் கூற்றடைத்(து) ஒழிக
மாயிருங் கடற்றிடை வைகல் ஆயிரம்
பாவையை வளர்ப்போய் நீநனி பாவையை
விலக்காது பிழைத்தனை மாதோ நலத்தகும்
தெளிவுரை : மலை மூங்கில்களும் பேச்சின்றிக் கிடக்கட்டும். பெரிய பாலையின்கண் நாள்தோறும் பாலை போன்ற குராமலர்களைப் பூக்கும் குராமரமே. நீ என் பெண்ணை விலக்காமல் விட்டு விட்டாய். நன்மையுடைய
அலைபுனல் ஆரூர் அமர்ந்துறை அமுதன்
கலையமர் கையன் கண்ணுதல் எந்தை
தொங்கலஞ் சடைமுடிக்(கு) அணிந்த
கொங்கலர் கண்ணி ஆயின குரவே.
தெளிவுரை : நீர் வளமிக்க திருவாரூரில் எழுந்தருளியுள்ள அமுதம் போன்றவன்; மான் கன்றை ஏந்திய கையன்; நெற்றிக் கண்ணை உடையவன். எந்தை சடை முடிக்கு அணிந்த தலை மாலையாக அமைந்தன குராமலர்கள்.
இது செவிலி கூறுதல்.
வெண்பா
286. குரவம் கமழ்கோதை கோதைவே லோன்பின்
விரவும் கடுங்கானம் வெவ்வாய் - அரவம்
சடைக்கணிந்த சங்கரன் தார்மதனன் தன்னைக்
கடைக்கணித்த தீயிற் கடிது.
தெளிவுரை : இது கண்டோர் கூறியது:
குராமலர் மணம் வீசுகின்ற கூந்தலையுடையாள். கைச் சல்லடத்தையும் வேலையும் உடையவன் பின்னால் சென்ற கொங்காளமாகிய வழி, நஞ்சு பொருந்திய கொடிய வாயையுடைய அரவத்தைச் சடைக்கு அணிந்த சங்கரன் மன்மதனைக் கடைக் கண்ணாற் பார்த்து எரித்த தீயை விடக் கடுமையானது. கடுங்கானம் கடிது என முடிக்க. கோதை வேல் - மாலை அணிந்த வேல் எனினுமாம்.
கட்டளைக் கலித்துறை
287. கடிமலர்க் கொன்றையும் திங்களும்
செங்கண் அரவும்அங்கே
முடிமல ராக்கிய முக்கணநக்
கன்மிக்க செக்கரொக்கும்
படிமலர் மேனிப் பரமன்
அடிபர வாதவர்போல்
அடிமலர் நோவ நடந்தோ
கடந்த(து)எம் அம்மனையே.
தெளிவுரை : மணமுள்ள கொன்றை மாலையும் சந்திரனும் சிவந்த கண்களையுடைய பாம்பும் முடிமலராக்கிய மூன்று கண்களையுடைய ஆடையற்றவன் செவ்வானத்தை ஒத்திருப்பான். அப்பரமனது பாதங்களை வணங்காதவர் போலப் பாதங்கள் நோவ எம் அருமை மகள் நடந்தோ கடந்தாள்.
இது செவிலி கூற்று.
அகவல்
வாயிலாகப் புக்க பாணனுக்குத் தலைவி கூறியது.
288. மனையுறைக் குருவி வளைவாய்ச் சேவல்
சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈனில் இழைக்க வேண்டி ஆனா
அன்புபொறை கூர மேன்மேல் முயங்கிக்
கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்
தெளிவுரை : வீட்டில் வாழும் குருவியாகிய வளைந்த வாயையுடைய சேவல், தனது பெடையின் ஈறும் பருவம் நோக்கி, கூடு கட்ட அன்பு மீதூர, மேலும் மேலும் தழுவி கணுக்களையுடைய கரும்பின் தோகையைக் கவருகின்ற
பெருவளம் தழீஇய பீடுசால் கிடக்கை
வருபுனல் ஊரன் பார்வை யாகி
மடக்கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப்
படிற்று வாய்மொழி பலபா ராட்டி
உள்ளத்(து) உள்ளது தெள்ளிதிற் கரந்து
தெளிவுரை : பெருமை மிகுந்த நீர் வரும் பெரிய நிலப்பரப்புக் கொண்ட ஊரின் தலைவனுடைய பார்வை மிருகமாகி (பிறரை வசப்படுத்தும் கருவியாய் இருப்பவன் என்றபடி) மடக் கொடி போன்ற பெண் மக்களுக்கு வலையாய்த் தோன்றி, பொய்ம்மையான உரைகள் பலவற்றைக் கூறி மனத்திலுள்ளதை மறைத்து
கள்ள நோக்கமொடு கைதொழு(து) இறைஞ்சி
எம்மி லோயே பாண அவனேல்
அமரரும் அறியா ஆதிமூர்த்தி
குமரன் தாதை குளிர்சடை இறைவன்
அறைகழல் எந்தை ஆரூர் ஆவணத்
தெளிவுரை : கள்ள எண்ணத்தோடு கைகூப்பி வணங்கி எம் இல்லத்துக்கு வந்திருக்கும் பாணனே ! அவன், அமரரும் அறியாத ஆதிமூர்த்தி; குமரனுடைய தந்தை; குளிர் சடை இறைவன்; கழல் ஒலிக்கின்ற அவனுடைய திருவாரூர்க் கடை வீதியில்
துறையில் தூக்கும் எழில்மென் காட்சிக்
கண்ணடி அணைய நீர்மைப்
பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே.
தெளிவுரை : தொங்கிக் கொண்டிருக்கும் கண்ணாடி யார் எதிர் நின்றாலும் அவர் நிழலைக் கொள்ளும். அதுபோல யாரை எதிர்ப்பட்டாலும் தம் வசப்படுத்தும் பொது மகளிர் பக்கம் இருப்பவனே. உன் பொய் உரையை நம்ப மாட்டேன் என்றபடி.
வெண்பா
289. பாலாய சொல்லியர்க்கே சொல்லுபோய்ப் பாண்மகனே,
ஏலாஇங்(கு) என்னுக்(கு) இடுகின்றாய் - மேலாய
தேந்தண் கமழ்கொன்றைச் செஞ்சடையான் தாள்சூடும்
பூந்தண் புனலூரன் பொய்.
தெளிவுரை : தலைமகள் பாணனுக்கு உரைத்தது.
பாண்மகனே ! பால் போன்ற சொல்லையுடைய பரத்தையர்க்கு நீ போய்ச் சொல். இவ்விடத்தில் உன் சொல் எடுபடாது. எதற்காகக் கூறுகின்றாய். மேன்மையான தேன் பொருந்திய குளிர்ந்த கொன்றையைச் சூடுகின்றவன் தாளை வணங்குகின்ற தலைமகனது பொய்யான வார்த்தைகளைப் பரத்தையர்களிடம் போய்ச் சொல் என்பதாம்.
கட்டளைக் கலித்துறை
290. பொய்யால் தொழினும் அருளும்
இறைகண்டம் போலிருண்ட
மையார் தடங்கண் மடந்தையர்
கேட்கிற்பொல் லாதுவந்துன்
கையால் அடிதொடல் செல்லல்நில்
புல்லல் கலையளையல்
ஐயா இவைநன்கு கற்றாய்
பெரிதும் அழகியதே.
தெளிவுரை : தலைவன் பணிதல் கண்டு தலைவி கூறியது.
பொய்ம்மையாக வணங்கினாலும் அருள் செய்கின்ற நீலகண்டம் போல் இருண்ட மை பூசிய கண்களையுடைய பரத்தையர் இதை அறிந்தால் பொல்லாது. உன் கையால் என் கால்களைத் தொடாதே, அணுகி வாராதே. தழுவாதே. ஆடையைக் களையாதே. இவைகளை நீ எங்குக் கற்றாய். மிகவும் நன்றாக இருக்கிறது என்றபடி.
அகவல்
பரத்தையர் பிரிவில் தலைவி நெஞ்சொடு கூறியது.
291. அழகுடைக் கிங்கிணி அடிமிசை அரற்றத்
தொழிலுடைச் சிறுபறை பூண்டு தேர்ஈர்த்து
ஒருகளி(று) உருட்டி ஒண்பொடி ஆடிப்
பொருகளி(று) அனைய பொக்கமொடு பிற்றாழ்ந்து
பூங்குழற் சிறாரொடு தூங்குநடை பயிற்றி
தெளிவுரை : அழகிய கிண்கிணி அடிமீது ஒலி செய்ய, சிறுபறை முழக்கி, சிறுதேர் உருட்டி, மர யானையை இழுத்து, மண் அளைந்து, போர் செய்கின்ற யானையைப் போல மிகுதியாகப் பின்புறம் தாழ்ந்த அழகிய தலைமயிரை யுடைய சிறுவர்களோடு அசைந்து நடந்து
அக்கரை உடுத்தி ஐம்படை கட்டி
ஒக்கரை இருக்கும் ஒளிர்புன் குஞ்சிக்
குதலையங் கிளவிப் புதல்வன் தன்னை
உள்ளச் சொரிந்த வெள்ளத் தீம்பால்
உடைய வாகிய தடமென் கொங்கை
தெளிவுரை : ஆடை கட்டி ஐம்படைத் தாலியை அணிந்து இடுப்பில் வைத்து இருக்கும், கொஞ்சமான தலை மயிரையும் கொச்சைச் சொல்லையும் உடைய புதல்வனை நினைக்கச் சொரிகின்ற தீம்பாலை உடையதாகிய பருத்த என் கொங்கைகளை
வேண்டாது பிரிந்த விரிபுனல் ஊரன்
பூண்தாங்(கு) அகலம் புல்குவன் எனப்போய்ப்
பெருமடம் உடையை வாழி வார்சடைக்
கொடுவெண் திங்கள் கொழுநிலவு ஏய்க்கும்
சுடுபொடி யணிந்த துளங்கொளி அகலத்(து)
தெளிவுரை : வேண்டாமென்று பிரிந்து சென்ற விரிபுனல் ஊரனாகிய தலைவன் உடைய ஆபரண மணிந்த மார்பைத் தழுவுவேன் என்னும் எண்ணத்தை உடைய நெஞ்சமே! நீ வாழ்க! வளர்ந்த சடையில் வளைந்த பிறை நிலவொளி வீச, திருநீறு அணிந்த மார்பினை உடைய
அண்ணல் ஆரூர் திண்ணிதிற் செய்த
சிறைகெழு செம்புனல் போல
நிறையொடு நீங்காய் நெஞ்சம் நீயே.
தெளிவுரை : அண்ணலது திருவாரூரில் தேக்கிய செம்புனல் போல நீ கற்பிலிருந்து நீங்காதே!
வெண்பா
292. நீயிருந்திங்(கு) என்போது நெஞ்சமே நீள்இருட்கண்
ஆயிரங்கை வட்டித்(து) அனலாடித் - தீயரங்கத்(து)
ஐவாய் அரவசைத்தான் நன்பணைத் தோட்(கு) அன்பமைத்த
செய்வான்நல் லூரன் திறம்.
தெளிவுரை : நெஞ்சமே! நீ இங்கு இருந்து என்ன பயன்? பெரிய இருளில் ஆயிரங் கைகளை வீசி, தீயில் நின்றாடி, அந்தத் தீயாகிய அரங்கில் ஐந்து வாய்களையுடைய பாம்பை இடையில் கட்டியுள்ளவனது பருத்த தோள்களுக்கு அன்பாக அமைத்த செய்கைகளையுடைய தலைவனது வல்லமையை நீ அறியாய் என்றபடி.
கட்டளைக் கலித்துறை
293. திறமலி சின்மொழிச் செந்துவர்
வாயினர் எங்கையர்க்கே
மறவலி வேலோன் அருளுக
வார்சடை யான்கடவூர்த்
துறைமலி ஆம்பல்நல் லாயிரத்
துத்தமி யேயெழினும்
நறைமலி தாமரை தன்னதென்
றேசொல்லும் நற்கயமே.
தெளிவுரை : தோழிக்குத் தலைவி கூறியது. (கயத்தில் பல்லாயிரம் ஆம்பல் எழுந்தாலும் தனியொரு தாமரையைக் கொண்டு தாமரைப் பொய்கை என்று உலகம் சொல்லும். இது உவமானம்) திறமை நிறைந்த இன்மொழியுடையவளே! சிவந்த வாயினையுடைய எம் தங்கையர் போன்ற பரத்தையர்க்கு வீரம் மிகுந்த வேலை உடைய தலைவன் அருளுக. நீண்ட சடையினை உடைய திருக்கடவூர் துறையில் மலிந்த ஆம்பல்கள் பல மலர்ந்தாலும் தாமரைக் குளம் என்றே சொல்வார்கள். அதுபோல் தலைவன் எனக்கே உரியவன் என்பதாம்.
அகவல்
தலைவி அலர் மிகுதியை உரைத்தல்.
294. கயங்கெழு கருங்கடல் முதுகு தெருவுபட
இயங்குதிமில் கடவி எறியொளி நுளையர்
நெய்ம்மீன் கவரல் வேண்டிக் கைம்மிகுத்
தால வட்டம் ஏய்ப்ப மீமிசை
முடிகெழு தருவலை வீசி முந்நீர்க்
தெளிவுரை : கயல் மீன்கள் நிறைந்த கருங்கடல், முதுகு தெருவு போல் வழி விடுமாறு, படகுகளை வலையர் நெய் மிகுந்த மீன்களைப் பிடிப்பதற்காக, கைம்மிகுந்து ஆலவட்டம் போல, மேலிருந்து வலைகளை வீசி - கடலின்
குடரென வாங்கிக் கொள்ளை கொண்ட
சுரிமுகச் சங்கும் சுடர்விடு பவளமும்
எரிகதிர் நித்திலத் தொகுதியும் கூடி
விரிகதிர் நிலவும் செக்கரும் தாரகை
உருவது காட்டும் உலவாக் காட்சித்
தெளிவுரை : குடரைப் பிடுங்கியது போல, கொள்ளை கொண்ட உட்கழிகளையுடைய முகத்தில் சங்கும் ஒளிவிடு பவளமும், முத்தும் வானத்தில் நட்சத்திரங்களைப் போலப் பிரகாசிக்கும் காட்சி
தண்ணந் துறைவன் தடவரை அகலம்
கண்ணுறக் கண்டது முதலா ஒண்ணிறக்
காள மாசுணம் கதிர்மதிக் குழவியைக்
கோளிழைத் திருக்கும் கொள்கை போல
மணிதிகழ் மிடற்று வானவன் மருவும்
தெளிவுரை : தண்ணந்துறைவனை மலைப் பக்கத்தில் கண்ணுறக் கண்டது முதலாக, ஒளி பொருந்திய கருநிற காளத்தையுடைய பாம்பு பிறைச் சந்திரனை விழுங்குவது போல நீல கண்டத்து வானவன் மருவும்
அணிதிகழ் அகலத்(து) அண்ணல் ஆரூர்
ஆர்கலி விழவின் அன்னதோர்
பேரலர் சிறந்தது சிறுநல் லூரே.
தெளிவுரை : திருவாரூர் பெருமானது ஆரவாரமுள்ள விழாவைப் போல இச்சிறு நல்லூரில் பழிமொழி பரவியது என்க.
வெண்பா
295. ஊரெலாம் துஞ்சி உலகெலாம் நள்ளென்று
பாரெலாம் பாடஇந்தப் பாயிருட்கண் - சீரூலாம்
மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைகாட்டுப்
பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள்.
தெளிவுரை : ஊர் எல்லாம் உறங்கி, உலகெல்லாம் நடு இரவு என்று பூமியெல்லாம் ஓசையடங்கிய இந்தப் பரவிய இருளின் கண் சிறப்புப் பொருந்திய மாந்துறை என்னும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஈசனுடைய திருமறைக்காட்டு அழகிய துறையில் மேய்ந்த தூங்காத பறவையின் ஒலி கேட்கிறது. அதுவும் என்னைப் போல் ஏங்குகிறதோ?
கட்டளைக் கலித்துறை
296. புள்ளும் துயின்று பொழுதிறு
மாந்து கழுதுறங்கி
நள்ளென்ற கங்குல் இருள்வாய்ப்
பெருகிய வார்பனிநாள்
துள்ளுங் கலைக்கைச் சுடர்வண்
ணனைத் தொழு வார்மனம் போன்(று)
உள்ளும் உருக ஒருவர்திண்
தேர்வந்(து) உலாத் தருமே.
தெளிவுரை : தலைவன் வந்தமை தலைவிக்குத் தோழி உணர்த்தல்.
பறவையும் தூங்கி, பொழுது முற்றி, பேய் தூங்கி, நள்ளென்ற இடை யாமத்தில், இருண்டு நீண்ட பனி நாள் மான் கன்றைக் கையில் கொண்டுள்ள பிரகாசமான நிறத்தனைத் தொழுவார் மனம் போன்று மனமும் உருக, தலைவரின் திண்ணிய தேர் உலாவும் என்க.
அகவல்
இது தலைவன் கூற்று.
297. உலாநீர்க் கங்கை ஒரு சடைக் கரந்து
புலால்நீர் ஒழுகப் பொருகளி(று) உரித்த
பூத நாதன் ஆதி மூர்த்தி
திருமட மலைமகட்(கு) ஒருகூறு கொடுத்துத்தன்
அன்பின் அமைந்தவன் ஆரூர் நன்பகல்
தெளிவுரை : போக்கு வரவு செய்யும் தன்மையுள்ள கங்கையைச் சடையில் மறைத்து, குருதி ஒழுக போர் செய்யும் யானையின் தோலை உரித்த பூத நாதன், ஆதி மூர்த்தி, உமாதேவியாருக்கு இடப்பாகத்தை அளித்தவன். அவனது திருவாரூரில் நண்பகலில்
வலம்புரி அடுப்பா மாமுத்(து) அரிசி
சலஞ்சலம் நிறைய ஏற்றி நலந்திகழ்
பவளச் செந்தீ மூட்டிப் பொலம்பட
இப்பியந் துடுப்பால் ஒப்பத் துழாவி
அடாஅ(து) அட்ட அமுதம் வாய்மடுத்து
தெளிவுரை : வலம்புரிச் சங்கை அடுப்பாகவும் முத்தை அரிசியாகவும் சலஞ்சலம் நிறைய ஏற்றி நலந்திகழ் பவளச் செந்தீ மூட்டி, பொலம்பட இப்பியாகிய துடுப்பால் ஒப்பத்துழாவி மானசீகமாகச் சமைத்த சிறுசோறு
இடாஅ ஆயமோ(டு) உண்ணும் பொழுதில்
திருந்திழைப் பணைத்தோள் தேமொழி மாதே
விருந்தின் அடியேற்(கு) அருளுதி யோவென
முலைமுகம் நோக்கி முறுவலித்(து) இறைஞ்சலின்
நறைகமழ் எண்ணெய்ச் சிறுநுண் துள்ளி
தெளிவுரை : வாயில் போடுவதுபோல் பாவனை செய்து கூட்டத்தோடு உண்ணும் பொழுதில் இழை யணிந்த, பணைத்தோள், தேமொழி மாதே ! விருந்தில் எனக்கும் கொடுப்பாயோ என்று முலைமுகம் நோக்கி சிரித்து வேண்டுதலின், மணம் வீசுகின்ற எண்ணெய்ச் சிறுதுளி,
வெண்பா
298. ஆயினஅன் பாரே அழிப்பர் அனலாடி
பேயினவன் பாரோம்பும் பேரருளான் - தீயினவன்
கண்ணாளன் ஆரூர்க் கடலார் மடப்பாவை
தண்ணாருங் கொங்கைக்கே தாழ்ந்து.
தெளிவுரை : தலைவன் கூற்று.
உளதாகிய அன்பு, அதையாரே அழிப்பர்? தீயில் ஆடுபவன்; (தீயை ஏந்தியவன் எனினுமாம்); பேய்களைக் கணமாகக் கொண்டவன்; உலகைக் காக்கும் பேரருளான்; தீயின் மத்தியில் உள்ளவன்; கண் போன்றவன் (அருமைப் பாடு குறித்தது) திருவாரூர் கடல் போலப் பெரிதுங் குணமுடையவளது தண்ணாருங் கொங்கைக்கு விருப்பங் கொண்டுள்ளதை யாரே அழிப்பர் என்றபடி.
கட்டளைக் கலித்துறை
299. தாழ்ந்து கிடந்த சடைமுடிச்
சங்கரன் தாள்பணியா
தாழ்ந்து கிடந்துநை வார்கிளை
போலயர் வேற்(கு) இரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரைமேல்
திரையென்னும் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி
லாதிவ் விரிகடலே.
தெளிவுரை : இது தலைவி கூற்று.
தொங்கிக் கிடந்த சடை முடியையுடைய சங்கரனது தாள் பணியாமல் பிறவியில் அழுந்திக் கிடந்து உறைகின்றவர் போல, வருந்தி இளைப்பேனாகிய எனக்கு இரங்கி, சூழ்ந்து கிடந்த கரைமேல் திரைகளாகிய கையை வீசி, வீழ்ந்து, கிடந்து, அலறி இப்பரந்த கடல் துயிலாது.
திருச்சிற்றம்பலம்
8. திருக்கயிலாய ஞானவுலா (சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்தது)
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய கழறிற்றறிவார் என்னும் மறுபெயருடைய சேரமான் பெருமாள் நாயனார் கல்வி அறிவிலும் அதன் பயனாகிய சிவபக்தியிலும் சிறந்து விளங்கினார். இதனால்தான் திருஆலவாயுடைய சிவபெருமானும் இவருக்குத் திருமுகம் எழுதியருளினார். சேரமான் பெருமாள் திருக்கயிலைக்குச் செல்லும் வழியில் இவ்வுலாவை மிக விரைவாகப் பாடியருளினார். இதனால் இவர் மிக விரைவாகச் செய்யுள் இயற்றக் கூடிய ஆசுகவி என்பது பெறப்படுகின்றது. இவரை அருணகிரிநாதரும் தம்முடைய திருப்புகழில் ஆதியந்தவுலா ஆசு பாடிய சேரர் என்று ஆசுகவியாகவே குறிப்பிட்டுள்ளார். உலா என்பது தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகை நூல்ளுள் ஒன்றாகும். சேரமான் பெருமாளுக்கு முன்னர் யாரும் உலாநூல் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. இதனால் இவரே முதன் முதலாக உலா நூல் பாடியவராகச் சான்றோர்களால் கொள்ளப் பெறுகிறார். இவ்வுலா முதன் முதலாக எழுந்தது என்னும் காரணம் பற்றியே இதற்கு ஆதிஉலா என்னும் பெயர் வழங்குகிறது. சேரமான் பெருமாள் திருக்குறளைக் கற்றுத் தேர்ந்தவர் என்பது திருக்குறளை இவ்வுலாவில் எடுத்து ஆண்டிருப்பதால் பெறப்படும். சேரமான் பெருமாள் சிவபெருமான் திருமுன் அடைந்ததும் தாம் உலாப் பாடி இருப்பதாகவும் அதனைக் கேட்டருள வேண்டும் என்றும் இறைவனிடம் விண்ணப்பித்தார். இறைவனும் கூறுமாறு கட்டளையிடச் சிவபிரான் திருமுன்னே உலா அரங்கேற்றம் செய்யப்பட்டது.
சிவபெருமான் திருக்கயிலையில் எழுந்தருளியிருக்கின்றார். தேவர்கள் இறைவனைக் காண வேண்டுமென்று பேரார்வங் கொண்டு திருக்கோயிலின் முன் சென்று நின்று வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுகோளுக்கு இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் தம்மை அழகு செய்து கொண்டு வசுக்கள் போற்றிச் செய்யவும் முனிவர்கள் வாழ்த்துரை கூறவும், பன்னிரு கதிரவர்கள் பல்லாண்டு பாடவும், நாரதர் யாழ் வாசிக்கவும் மற்றும் பலவகையான சிறப்புகளோடு திருவுலாப் புறப்பட்டார். சிவபெருமான் திருவுலாப் புறப்பட்ட தெரு இனிய மொழிகளைப் பேசும் தன்மையினராகிய பெண்களின் பேராரவாரத்தை உடையதாயிற்று. எழுவகைப் பருவ மாதர்களும் அப்பெருமானைக் கண்டு காதல் கொள்கின்றனர். இறைவனைத் தலைவனாகவும் அவனருளை விரும்பிய மன்னுயிர்களை அத் தலைவன்பாற் காதல் கொண்டு மயங்கிய பெண்களாகவும் வைத்துப் பாடப் பெற்றது, இத்திருக்கயிலாய ஞான உலா. இந்நூலினால் சிவபெருமானுடைய முழு முதல் தன்மையைச்  சேரமான் பெருமாள் விளக்கிய திறம் அறிந்து இன்புறத் தக்கதாகும். இத் திருவுலாவே திருச்சிற்றம்பலக் கோவையார் போன்று செந்தமிழின் முதன்முதல் தோன்றிய திருவுலா என எல்லாராலும் சிறப்பித்துச் சொல்லப்படும்.
திருச்சிற்றம்பலம்
300. திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா(து) அன்றங்(கு)
அருமால் உறஅழலாய் நின்ற -பெருமான்
பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால்
ஆழாதே ஆழ்ந்தான் அகலா(து) அகவியான்
ஊழால் உயராதே ஓங்கினான் - சூழொளிநூல்
ஓதா(து) உணர்ந்தான் நுணுகாது நுண்ணியான்
யாதும் அணுகா(து) அணுகியான் - ஆதி
அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனும் தானே
தெளிவுரை : நாரணனும் பிரமனும் ஊன்றிச் சிந்தித்து உணராமல் முன்னொரு காலத்தில் அகலா மயக்கத்தை அடைய, தெய்வத் தீப்பிழம்பாய் அவர் முன் வெளிப்பட்ட சிவபெருமான், கருவாய்ப்பட்டுப் பிறவாமல் தூயவடிவுடன் தோன்றினவன். கண்களின் துணைகொண்டு எவற்றையும் காண்பது இன்றியே பேரறிவால் எதனையும் காண்பவன். நீக்காமல் திருமேனியைத் தானே மறைத்துக் கொண்டவன். முறை முறையாக ஆழ்ந்து சொல்லாமலேயே இயல்பாகவே ஆழ்ந்து இருப்பவன். எவ்விடத்தும் நீங்காமல் நீங்கி இருப்பவன். முன்வினைப் பயனால் வளர்ந்து உயராமல் இயல்பாகவே உயர்ந்துளன். அறிவு ஒளி ததும்பிய நூற்களை ஓதாமலேயே உணர்ந்திருப்பவன். நுண்ணியனாக இராமலேயே அணுவாக இருப்பவன். எப்பொருளையும் தான் அணுகாமலேயே அணுகியிருப்பவன். முதன்மை பொருந்திய திருமாலில் தங்கி உலகத்தைக் காப்பவனும், நான்முகன் இடத்தில் இருந்து உலகனைத்தும் படைப்பவனும் உருத்திரனிடத்தில் தங்கி ஒடுக்கம் செய்து கொள்பவனும் தானே ஆகியிருப்பவன்.
தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான் - பரனாய
மேவிய வாறே விதித்தமைத்தான் - ஓவாதே
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பான் - எவ்வுருவும்
தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்கும் காண்பரிய எம்பெருமான் - ஆனாத
சீரார் சிவலோகம் தன்னுள் சிவபுரத்தில்
ஏரார் திருக்கோயில் உள்ளிருப்ப - ஆராய்ந்து
செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்(று) ஈண்டி
எங்கட்குக் காட்சியருள் என்றிரப்ப- ஆங்கொருநாள்
தெளிவுரை : மேலான விண்ணவரும் காண முடியாத வியன் மிகுமேனியன். அந்தத் தேவர்களைத் தான் சங்கற்பித்தபடியே படைத்து உரிய சூழ்நிலை உதவினன். எவ்வௌர் எந்த எந்த உருவில் இடையறாது தன்னை எண்ணினாலும் உள்ளத்துள் அவ்வவ் உருவங்களாகவே வெளிப்பட்டு, திருவருள் பாலிப்பன். அன்பர் எண்ணும் எல்லா உருவங்களும் தானே ஆகியிருந்து புறத்திலும் காட்சி தருபவன். தன்னைக் காட்டிலும் வேறு ஓர் உருவம் எத்தகையோர்க்கும் காண்பதற்கு இயலாத பெருமையை உடைய எம் இறைவன். நீங்காத சிறப்புப் பொருந்திய சிவலோகம் தன்னுள் சிவபுரத்தில் அழகு நிறைந்த திருக்கோயிலுள் இறைவன் இனிது வீற்றிருக்க, தரிசன காலத்தைச் சிந்தித்து உணர்ந்து, செம்மையான கண்களையுடைய தேவர்கள் தலைவாயிலில் சென்று நெருக்கமாக நின்று அடியேங்கட்குச் சேவையை அருள் என்று விநயமுடன் கூவி வேண்ட,
பூமங்கை பொய்தீர் தரணி புகழ்மங்கை
நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த - சேமங்கொள்
ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை
தேன் மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப - ஊனமில்சீர்
நந்தா வனமலரும் மந்தா இனித்தடஞ்சேர்
செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் - நொந்தா
வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி
நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் - பயன்கொள்
குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு
நலமலிய ஆகம் தழீஇக்-
தெளிவுரை : அங்ஙனம் துதிக்கும் ஒரு நாளில் இனிய தாமரையில் இருக்கும் திருமகள் பொய்ம்மை இல்லாத நிலமகள் புகழ் அமைந்த உருத்திராணி, கலைமகள் என்றுள்ள இந்தத் தெய்வ மாதர்கள் நலமுறச் செய்த நலம் சிறந்த வழிபாட்டை ஏற்றுக் கொண்ட ஒளி நிறை அறிவுக் கொழுந்தான மலை மன்னன் மகளான பார்வதியார் வண்டுகள் மொய்த்த சடை மேல் அலங்காரம் செய்தற் பொருட்டுப் பழுது இல்லாத சிறப்பையுடைய நந்தனவனத்து மலர்களாலும் தேவ கங்கையில் மலர்ந்த பல இதழ்களையுடைய செந்தாமரை மலர்களாலும் அதிக சிரமப்பட்டு வசந்தன் தொடுத்து வைத்த தொடுமாலையை அணிந்து, பிறவி எடுத்த பயனைப் பெற்ற சிறந்த மாதர்கள் மேன்மை விளங்கும் சிறந்த கூட்டுச் சரக்குகளைச் சேர்த்து அமைத்த கொழுமையான சாந்தை எடுத்து நன்மை நிரம்பத் திருமேனியிற் பூசி,
கற்பகம் ஈன்ற கமழ்பட் டினைஉடுத்துப் - கலைமலிந்த
பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து - விற்பகரும்
சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்
வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் - தோளா
மணிமகர குண்டலங்கள் காதுக்(கு) அணிந்தாங்(கு)
அணிவயிரக் கண்டிகை பொன்னாண் - பணிபெரிய
ஆரம் அவைபூண்(டு) அணிதிக ழும்சன்ன
வீரம் திருமார்பில் வில்லிலக - ஏருடைய
எண்தோட்கும் கேயூரம் பெய்துதர பந்தனமும்
கண்டோர் மனமகிழக் கட்டுறீஇக் - கொண்டு
தெளிவுரை : கற்பகமரம் உதவிய மணம் கமழ்கின்ற பட்டு ஆடையை உடுத்தி, பொன்னாலாகிய வீரக்கழல்களைத் திருவடிகளின் மீது சிறப்புற அணிந்து, ஒளி வீசும் சூளாமணி பதித்த மகுடத்தைச் சூட்டி, சுட்டியோடு சேர்ந்த ஒளி நிறைந்த நெற்றிப் பட்டங் கட்டி, துளைபடாத இரத்தினக் கற்களைப் பதித்த மகரமீன் வடிவாகச் செய்யப் பெற்ற குண்டலங்களைத் திருச்செவிக்கு அலங்காரமாக அணிந்து அதனுடன் அழகிய வயிர கண்டிகையும் பொன் நாணும் சிறந்த வேலைப்பாடு அமைந்த பெரிய முத்து மாலை முதலாகச் சொல்லப்பட்ட அப்பணிகளை அணிந்து, அலங்காரமாக விளங்கும் வீர சங்கிலி சிறந்த மார்பகத்தில் ஒளி செய்ய, எழுச்சியை யுடைய எட்டுத் திருத்தோள்களுக்கும் வளையென்னும் ஆபரணத்தை அணிந்து பார்த்தவரது உள்ளங் களிக்க அரைப் பட்டிகையையும் கட்டி.
கடிசூத் திரம்புனைந்து கங்கணங்கைப் பெய்து
வடிவுடைய கோலம் புனைந்தாங்(கு) - அடிநிலை மேல்
நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள் இருக்குரைப்ப - அந்தமில்சீர்
எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும்
அண்ணல்மேல் ஆசிகள் தாமுணர்த்த - ஒண்ணிறத்த
பன்னிருவர் ஆதித்தர் பல்லாண்(டு) எடுத்திசைப்ப
மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும்
அங்கி கமழ்தூபம் ஏந்த யமன் வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் - செங்கண்
தெளிவுரை : அதன் மேல் அரை ஞாணை எடுத்து அழகாகப் பூட்டி, கரத்தில் கங்கணம் அணிந்து இயற்கைத் திருமேனிக்கு உரிமையாக உடைய செயற்கை அலங்காரங்களைச் செய்ததும், திருப்பாதுகை மேல் ஏறி, திருநந்தி தேவரும் மாகாளரும் காவல் செய்யும் திருஅணுக்கன் திருவாயிலைக் கடந்து சென்ற சமயம், அஷ்ட வசுக்கள் இறைவன் எதிரில் தோன்றி இருக்கு வேத பாராயணம் செய்ய, முடிவு இல்லாத சிறப்பினை யுடைய நினைத்தற்கும் அரிய புகழமைந்த சப்த முனிவர்களும் வந்து, பெருமையிற் சிறந்த தலைவராம் சிவபெருமான் மீது வாழ்த்துக் கூற, ஒளி வீசும் நிறத்தினை உடையவர்களான பன்னிரு சூரியர்களும் பல்லாண்டைப் பெரிதுபாட, நிலை பெற்ற அகத்திய முனிவர் யாழ்வாசிக்க, பொன்னிறத்தோடு விளங்கும் அக்கினி பகவான் மணம் வீசும் தூப கலசம் ஏந்தி வர, யமன் வந்து மங்கல மொழியால் வாழ்த்துக் கூற,
நிருதி முதலோர் நிழற்கலன்கள் ஏந்த
வருணன் மணிக்கலசம் தாங்கத் - தெருவெலாம்
வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத்
தூயசீர்ச் சோமன் குடையெடுப்ப - மேவியசீர்
ஈசானன் வந்(து) அடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்
வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் - தூய
உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்
திருத்தகு மாநிதியம் சிந்தக் - கருத்தமைந்த
கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள்
பொங்கு கவரி புரையிரட்டத்-
தெளிவுரை : செவ்விய கண்களையுடைய நிருதி முதலாயுள்ளவர்கள் ஒளி செய்யும் கண்ணாடிகளை ஏந்திக் கொண்டு வர, வருண பகவான் அழகிய நீர்க்கலச்த்தைச் சுமந்து வர, வீதிகள் முழுவதும் வாயு பகவான் பெரிதும் தூய்மை செய்ய, சிறந்த மேகங்கள் வீதியெல்லாம் நீர் தெளிப்ப, தூய்மையான சிறப்புடைய திங்கள் குடை பிடித்து வர, விரும்பத் தக்க சீர்த்தி யமைந்த ஈசானன் வந்து வெற்றிலைப் பையைக் கையில் எடுத்துக் கொண்டு வர, அஸ்வினி தேவர்கள் வாய் நிறைந்த மந்திரங்களால் வாழ்த்துச் சொல்ல, தூய்மையையுடைய உருத்திர கணத்தவர் துதி மொழிகளைக் கூற, குபேரன் மேன்மையும் தகுதியும் உடைய சிறந்த பொருள்களை வரும் வழியில் வாரி இறைக்க, அமைதி பெற்ற மனத்தினரான கங்கை யமுனையை உள்ளிட்ட நதிகளின் அதி தெய்வங்கள் அளவிலாத வெண்சாமரங்களை இருபாலும் வீச,
பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண் - தங்கிய
கைந்நாகம் எட்டும் கழல்வணங்க - மெய்ந்நாக
மேகம் விதானமாய் மின்னெலாம் சூழ்கொடியாய்
மேகத்(து) உருமும் முரசறையப் - போகஞ்சேர்
தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட - எம்பெருமான்
விண்ணோர் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்(கு) எண்ணார்
கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத்
திருக்கடைகள் ஏழ்கழிந்த போதில் - செருக்குடைய
தெளிவுரை : இந்நிலவுலகத்தின் கீழ் தலைமையாகத் தங்கியிருந்த படங்களையுடைய எட்டுப் பாம்புகளும் விளக்குகளை ஏந்தி வர, பசுமையும் அஞ்சாமையும் கொண்டு துதிக்கையையுடைய எட்டுத் திக்கு யானைகளும் திருவடிகளை வணங்கவும், மெய்ம்மையை உடைய விண்ணில் உள்ள மேகங்களே மேற் கட்டியாய் விளங்க, மின்னல்கள் அனைத்தும் சூழ்ந்திருக்கும் கொடிகளாய் அமைய, மேகத்தின் இடியே முரசு வாத்தியமாக ஒலிக்கவும், இன்பம் நிறைந்த தும்புரு நாரதர் எனும் இரு முனிவர்கள் தத்தம் யாழில் அமலன் புகழைச் சேர்த்துப் பாட, பூங்கொடி போலும் வடிவமும் நுண்ணிய இடையையும் உடைய பல மாதர்கள் எல்லா இடங் களிலும் தொடர்ச்சியாகப் பரவி, பாத நிருத்தம் பண்ணி வரவும், எமது சிவபெருமான் தரிசனத்திற்குக் காத்திருந்த தேவர்கள் எல்லாரும் வணங்கவும், உயர்ச்சி பொருந்தியதும் என்றும் விளங்குகின்ற பேரொளி உடையதுமான வெண்மை நிறைந்த இளமையை யுடைய இடபத்தின் மேல் அமர்ந்து, எப்போதும் தம்மையே தியானிக்கப் பொருந்திய மனத்தையுடைய பூதகணங்கள் ஒன்று பட்டுக் காவல் செய்துவர, சிறந்த ஏழு வாயிற் படியைக் கடந்து சென்ற சமயத்து-
சேனா பதிமயில்மேல் முன் செல்ல யானை மேல்
ஆனாப்போர் இந்திரன் பின்படர - ஆனாத
அன்னத்தே யேறி அயன்வலப்பால் கைபோதக்
கன்னவிலும் திண்தோள் கருடன்மேல் - மன்னிய
மால்இடப்பால் செல்ல மலரார் கணைஐந்து
மேலிடப்பால் மென்கருப்பு வில் இடப்பால் - ஏல்வுடைய
சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல் எய்வான்
கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த - ஐங்கணையான்
காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி
வாமன் புரவிமேல் வந்தணைய -
தெளிவுரை : களிப்புடைய முருகப் பெருமான் மயில் மேல் அமர்ந்து முன்னே செல்ல, போரில் பின் வாங்காத ஆற்றலுடைய தேவேந்திரன் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் மேல் அமர்ந்து பின் தொடர்ந்து வர, பிரமன் தன்னை விட்டு நீங்காத அன்ன வாகனத்தின் மேல் அமர்ந்து வலது பக்கத்தில் வர, மலையெனச் சொல்லப் பெறும் வன்மை வாய்ந்த தோள்களையுடைய கருடன் மேல் அமர்ந்துள்ள நாரணன் இடது பக்கத்தில் வர, தாமரை, மாம்பூ, அசோகு, முல்லை குவளையெனப் பொருந்திய மலர்க்கணை ஐந்தினை உடலின் மேற்புறத்திலும் பால் முற்றிய சுவையுள்ள கரும்பு வில்லைத் தமது இடது பக்கத்திலுமாகப் பெற்றுள்ள, வளையல் நெருங்கிய முன்னங் கைகளையும் பருத்த தனங்களையும் உடைய மாதர்கள் மேல் மகரந்தம் நிறைந்த மலர்க்கணை விடுவதன் பொருட்டு வரிசையாகக் கோத்துப் பிடித்த ஐந்து கணைகளை உடையவனும், முரசு, குடை, தென்றல் வசந்தம் விருது முதலிய வெற்றிக் கொடியுடைய சேனைகள் சூழ்ந்துள்ளவனுமாகிய மன்மதன் முன்னே செல்ல, சின மிக்க ஐயனார் அழகிய குதிரை மேல் ஏறி அண்மையில் தொடர்ந்து வர.
வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச்
சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண் கண் -தாழ் கூந்தல்
மங்கை எழுவரும் சூழ மடநீலி
சிங்க அடலேற்றின் மேற் செல்லத் - தங்கிய
விச்சா தரர் இயக்கர் சின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடசுடர் - எச்சார்வும்
சல்லரித் தாளம் தகுணிதந் தத்தளகம்
கல்லலகு கல்ல வடம் மொந்தை - நல்லிலயத்
தட்டழி சங்கம் சலஞ்சலம் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்
தெளிவுரை : யானை முகத்தவர் என்னும் பெயர் பொருந்திய கணபதியை நடுவில் இருத்தி, வளைகள் சூழ்ந்துள்ள கைகளையும் கொவ்வைக் கனியொத்த வாயினையும், சேல் கண்டை போன்று பிறழும் ஒளியுடைய கண்களையும் நீண்டு தொங்கும் கூந்தலையும் உடைய அபிராமி, மகேச்சுவரி, கௌமாலி, நாராயணி, வராகி. இந்திராணி, காளி எனப் பெறும் ஏழு மாதர்களும் சூழ்ந்துவர, மடப்பத்தை யுடைய துர்க்கை வலிமை வாய்ந்த ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்து வர, எல்லா இடங்களிலும் தங்கிய விச்சாதரர், இயக்கர், கின்னரர் கிம்புருடர் அச்சாரணர் அரக்கரோடு அசுரர் முதலாயினோர் சூழ்ந்து வர, சல்லரி, பிரமதாளம், தகுணிதம், தத்தளகம், கல்லவடம், மொந்தை, சிறந்த இலயத்தை விளைவிக்கும் தட்டழி, சங்கம், சலஞ்சலம். தண்ணுமை, வார்க்கட்டு அழியாத பேரி, கரதாளம்.
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாந் தடாரி படகம் - இடவிய
மத்தளர் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்கும் கிலுகிலுப்பத் - தங்கிய
ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும்
மாறாத முத்திரையும் மந்திரமும் - ஈறார்ந்த
காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும்
வால கிலியரும் வந்தீண்டி - மேலை
தெளிவுரை : அடிக்கப்படும் குட முழவம், கொக்கரை, வீணை, புல்லாங்குழல், யாழ், இடம் பரந்த பம்பை, படகம், வலியுடைய மத்தளம் துந்துபி, வாய்ப்பாக அமைந்த முருடு, ஆதிய இவ்வாத்தியங்களால் எல்லாத் திசைகளிலும் ஓசை மிக்கு ஒலிக்கவும், வாத்தியங்களுடன் சேர்ந்து அதே காலத்தில், மங்கலப் பாடகர் வந்து வணங்க, மல்லரும் கிங்கரரும் எவ்விடத்தும் நிறைந்து ஓசை செய்ய, பொருந்திய ஆறு பருவங்களுக்கு உரிய அதிதேவதைகளும், யோகங்கட்கு உரிய அதிதேவதைகளும், அருமையான தவங்கட்கு உரிய அதிதெய்வங்களும், சிவபூசையில் கையாளப் பெறுதலால் பயன் அளித்தலில் மாறுதல் இல்லாத தேனு, அங்குசம், பதாகை ஆதிய முத்திரைகட்கு உரிய அதிதெய்வங்களும், மந்திரங்கட்கு உரிய அதிதெய்வங்களும் முடிவாக நிறைந்த கால தேவதைகளும் கணப்பொழுதிற்கு உரிய அதிதேவதைகளும் குணங்களுக்குரிய அதிதேவதைகளும் வாலகிலியரும் சிவசன்னிதானத்தில் வந்து கூடி
இமையோர் பெருமானே போற்றி எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி - எமையாளும்
தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி
ஈசனே எந்தாய் இறை போற்றி-தூயசீர்ச்
சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி
பொங்கரவா பொன்னங் கழல் போற்றி - அங்கொருநாள்
ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி - தூய
மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர்
தலைமேலாய் போற்றிதாள் போற்றி - நிலை போற்றி
போற்றியெனப் பூமாரி பெய்து புலன்கலங்க
நாற்றிசையும் எங்கும் நலம்பெருக - ஏற்றுக்
கொடியும் பதாகையும் கொற்றக் குடையும்
வடிவுடைய தொங்கலும் சூழக் - கடிகமழும்
பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான்
வாமாள ஈசன் வரும் போழ்திற் - சேமேலே
தெளிவுரை : விண்ணுலகத்திலுள்ள தேவர்களது தலைவரே! உமக்கே அடைக்கலம்; அழகு பொருந்திய உமாதேவியாரின் மணவாளரே! உமக்கே அடைக்கலம். எம்மை ஆட் கொண்ட அழலாடும் பெருமானே! உமக்கே அடைக்கலம். சிவபெருமானே! உமது திருவடிக்கு வணக்கம். அருட் செல்வனே! எங்கள் அப்பனே! இறைவனே! உமக்கே அடைக்கலம். தூய்மையான சிறப்பையுடைய இன்ப வடிவினனே! உமக்கே அடைக்கலம். சடை முடி உடையவரே! உமக்கே அடைக்கலம். மிகுதியான பாம்புப் பணிகளை அணிந்தவரே! பொன்னாலாகிய அழகிய வீரக்கழல் அணிந்த உமது திருவடிகளுக்கே அடைக்கலம். முன் ஒரு காலத்தில் மேன்மையான போர் செய்த பார்த்தனுடைய உறுதிக்கு வியந்து அவனுக்குப் பாசுபதாத்திரம் அளித்த உமது திருவடிக்கு வணக்கம். தூய்மை பொருந்திய திருக் கயிலாய மலைமேல் வீற்றிருப்பவரே! அடைக்கலம். மயானத்தில் ஆடுபவரே! தேவர்கள் முடிமேல் இருப்பவரே! உமக்கே அடைக்கலம். உமது திருவடிகளுக்கு வணக்கம். தேவரீரது நிலை பேறுடைமைக்கு வணக்கம் என்று மலர் மழை பொழிந்து இவ்விசேடக் காட்சியால் ஐம்புலச் சேட்டை கலக்கம் கொள்ள நான்கு திசைகளும் மற்ற எல்லாப் பக்கங்களிலும் நன்மை அதிகரிக்க, விடைக் கொடியும் பெரிய கொடிகளும், வெற்றிக் குடையும் இயல்பு உருவுடைய மயில் பீலியாலான குஞ்சங்களும் சூழ்ந்திருக்க, மணம் வீசும் மலர் சூடிய சிறந்த கருமையான கூந்தலையுடைய மாதர்களின் மனம் புதிய இன்பத்தை அனுபவித்தற் பொருட்டு, அழகிய சிவபெருமான் விடைமேல் இருந்தபடியே உலாவரும் சமயம்-
குழாங்கள்
வாமான யீசன் மறுவில்சீர் வானவர்தம்
கோமான் படைமுழக்கம் கேட்டலுமே - தூமாண்பில்
வானநீர் தாங்கி மறையோம்பி வான்பிறையோ(டு)
ஊனமில் சூலம் உடையவாய் - ஈனமிலா
வெள்ளை அணிதலால் வேழத்(து) உரிபோர்த்த
வள்ளலே போலும் வடிவுடைய - ஒள்ளிய
மாட நடுவில் மலரார் அமளியே
கூடிய போர்க்கல மாக்குறித்துக் - கேடில்
சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா
விலங்கு கொடும்புருவம் வில்லா- நலந்திகழும்
தெளிவுரை : விடையின் மேல் அழகிய அருட் செல்வன் ஆகிய குற்றம் இல்லாத சிறப்புப் பொருந்திய தேவர்களுடைய பெருமானது படைப் பெருக்கத்தின் பேரொலி மாதர் செவிப் பட்டதும் தூய்மையான சிறப்புடைய ஆகாய கங்கையைத் தாங்குதலால், மறைவு இடங்களைக் காத்தலால், விண்ணில் உள்ள சந்திரனுடன் பழுதில்லாத சூலத்தைக் கொண்டிருந்ததால், களங்கம் இல்லாத வெள்ளை நீறு பூசப் பெற்று இருத்தலால், யானைத் தோல் போர்த்த வண்மைச் சிவத்தைப் போலும் தோற்றமுள்ள ஒளி மயமான மாளிகைகளின் நடுஇடத்தில் மலர்களை நிறையப் பரப்பிய படுக்கையையே கலவிப் போர் புரியும் இடமாகக் கொண்டு, குற்றம் இல்லாத சிலம்புகளே போர்ப் பறையாகவும், செவ்வரி படர்ந்த கண்களே அம்புகளாகவும், அகன்று வளைந்த புருவமே வில்லாகவும்.
கூழைபின் தாழ வளையார்ப்பக் கைப்போந்து
கேழ்கிளரும் அல்குலாம் தேருந்திச் - சூழொளிய
கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனங்கவர
அங்கம் பொருநசைந்த ஆயிழையார் - செங்கேழற்
பொற்கவசத் துள்ளால் மணிநீர் முகஞ்சேர்த்தி
நற்பெரும் கோலம் மிகப்புனைந்து - பொற்புடைய
பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக
மாதரவர் சேர மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர்
சூளிகையும் சூட்டும் சுளிகையும் சுட்டிகையும்
வாளிகையும் பொற்றோடும் மின்விலக-
தெளிவுரை : வளப்பம் விளங்கும் கூந்தல் பின்னே தொங்கவும் வளையல்கள் ஒலிக்கவும் இடம் பெயர்ந்து நிறம் மிக்கு விளங்கும் நிதம்பமாகிய தேரினைச் செலுத்தி, சூழ்ந்த ஒளியினையுடைய தனங்களாகிய யானைகள் விம்ம, தத்தம் கணவர்களுடைய உள்ளத்தை வயப்படுத்த அவர்கள் தம் உடம்போடு காமப் போர் விளைத்தலால் அசைந்த அணிகலன்கள் பல அணிந்த மாதர்கள் சிவந்த நிறத்தையுடைய பொன்பாத்திரத்து உள்ள அழகிய நீரால் முகம் துலக்கி, சிறந்த பெருமை தோன்றத் தங்களை மிக நன்றாக அலங்கரித்துக் கொண்டு, பேதைப் பருவம் முதலாகப் பேரிளம் பெண் பருவம் இறுதியாக உள்ள மாதர்கள் எங்குப் பார்த்தாலும் மகிழ்ச்சியுடன் கூட்டம் கூட்டமாகக் கூடி நிறைந்து பேரொளி அமைந்த சூட்டும் சுட்டிகையும், வாளிகையும் பொன்னாலான தோடு என்னும் ஆபரணமும் மின்னல் போல் ஒளிர,
மேலேறி நின்று தொழுவார் துயர்கொண்டு
மாலேறி நின்று மயங்குவார் - நூலேறு
தாமமே தந்து சடாதாரி நல்கானேல்
யாமமேல் எம்மை அடும் என்பார் - காமவேள்
ஆமென்பார் அன்றென்பார் ஐயுறுவார் கையெறிவார்
தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார் - பூமன்னும்
பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு
துன்னரி மாலையாச் சூடுவார் - முன்னம்
ஒருகண் எழுதிவிட்(டு) ஒன்றெழுதா(து) ஓடித்
தெருவம் புகுவார் திகைப்பார் - அருகிருந்த
கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று
பண்ணாடிச் சொற்பந்துச் குற்றுரைப்பார் - அண்ணல்மேல்
கண்ணென்னும் மாசாலம் கோலிக் கருங்குழலார்
திண்ண நிறைத்தாழ் திறந்திட்டார்-ஒண்ணிறந்த
தெளிவுரை : மாளிகையின் மேல் ஏறி நின்று, உலாவரும் இறைவனைத் தொழுவார்கள். அவனை அணைய முடியாமை கருதித் துன்பங்கொண்டு மையல் மிகுந்து அறிவு தடுமாறுவார்கள். சடைமுடியுடைய இப்பெருமான் தான் அணிந்துள்ள நூலில் கோத்த கொன்றை மாலையே ஆயினும் கொடாது போவானேல் இனிமேல் வரும் இரவுப் பொழுது எம்மைக் கொன்று விடுமே என்பார்கள். இவன் மன்மதன்தான் என்பார்கள். அதற்கு மாறாக அல்ல என்று மறுத்துக் கூறுவார்கள். ஐயத்தை அடைவார்கள். கைந் நெரிப்பார்கள்.
தங்கள் பழைய நாணத்துடன் கைவளையல்களையும் இழப்பார்கள். அழகு பொருந்திய பொன்னரி மாலையைச் சூட்டிக் கொள்வதை மறுந்து, ஆபரணம் என மயங்கிக் கழுத்தில் அணிவார்கள். கழுத்தில் அணியும் நினைவுடன் அந்த ஆபரணங்களை எடுத்து மயங்கிய அறிவால் பொன்னரி மாலையாகச் சிரத்தில் சூடுவார்கள்.
முதலில் ஒரு கண்ணில் மை எழுதியதும் அவசரத்தில் மற்றொரு கண்ணிற்கு மை தீட்டாமலேயே உலாக்காட்சி காணத் தெருவிற்கு ஓடி வருவார்கள். திகைப்படைவார்கள். அண்மையில் இருந்த கண்ணாடியின் மேல் செம்பஞ்சை ஒத்துவார்கள்.
கிளி என்று மயக்கம் அடைந்து கையில் உள்ள பூப்பந்துக்கு இசையோடு ஆராய்ந்த சொற்களைப் பயிற்றுவார்கள். கரிய கூந்தலையுடைய அம்மாதர்கள் பெருமையிற் சிறந்த பெருமான் மேல் கண்கள் என்னும் பெரிய வலைகளை வீசி அது பயன்படாது போக இறுதியில் உறுதி உடைத்தான கற்புக் கதவைத் திறந்து விட்டவராயினர்.
பேதை (வயது 5 முதல் 7 வரை)
பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ(று) அடுதொழிலாள் - தீதில்
இடையாலும் ஏக்கழுத்த மாட்டாள் நவஞ்சேர்
உடையாலும் உள்ளுருக்க கில்லாள் - நடையாலும்
கௌவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள்
எவ்வநோய் செய்யும் தொழில்பூணாள் - செவ்வனேர்
நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்தன் செவ்வாயின்
வாக்கும் பிறர்மனத்தை வஞ்சியாள் - பூக்குழலும்
பாடவந் தோன்ற முடியாள் இளவேய்ந்தோள்
ஆடவர் தம்மை அயர்வு செய்யாள் - நாடொறும்
தெளிவுரை : தூய ஒளியும் அறியாமைக்கு ஏதுவான ஏழு வயதும் கடவாதவள். சிறிய மண் பாத்திரத்தில் வெண்மையான மணலால் சிறு சோறு சமைக்கும் விளையாட்டுத் தொழிலை உடையவள். தீமையில்லாத இடுப்பினாலும் இறுமாந்திருத்தலைச் செய்யாள்; அழகு மிக்க ஆடையாலும் கண்டவர் உள்ளத்தை உருகும்படி செய்யாதவள். ஆண் மக்களை நடக்கும் அழகினாலும் வருந்தும்படி காம நோயைச் செய்ய மாட்டாள். அரும்பிய முலைகளால் ஆடவர்க்குத் துன்பநோய் செய்கின்ற தொழிலையும் மேற் கொள்ளாள். செவ்விதின் நேர் நின்று நோக்கினாலும் காம நோய் நேரும் வண்ணம் பார்க்கும் பார்வையை அறியாள். பவளம் போல் சிவந்த வாயில் இருந்து வரும் மொழியாலும் அயலாரது உள்ளத்தை வஞ்சிக்க அறியாள். மலர் சூடிய கூந்தலையும் திறமை விளங்க முடிக்க அறியாள். ஆண் மக்களை இளமையான மூங்கில் ஒத்த தோள்களால் மயக்கி அயர்ச்சி அடையும்படி செய்ய மாட்டாள்.
ஒன்றுரைத்(து) ஒன்றுன்னி ஒன்றுசெய்(து) ஒன்றின்கண்
சென்ற மனத்தினளாம் சேயிழையாள் - நன்றாகத்
தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி
நீல அறுவை விரித்துடுத்துக் - கோலஞ்சேர்
பந்தரில் பாவைகொண்டாடும்இப் பாவைக்குத்
தந்தையார் என்றொருத்தி தான்வினவ - அந்தமில்சீர்
ஈசன் எரியாடி என்ன அவனையோர்
காய்சின மால்விடைமேற் கண்ணுற்றுத் - தாய்சொன்ன
இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமன்நூல்
நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் - பொற்புடைய
தெளிவுரை : ஒவ்வொரு நாளும் ஒன்று சொல்லி வேறு ஒன்றை எண்ணி, வேறு ஒன்றைச் செய்து, மாறான வேறு ஒன்றினிடத்துச் சென்ற உள்ளத்தை உடையவளாம். செவ்விய ஆபரணங்களை அணிந்த பேதை இளம் பெண் ஒருத்தி, தனக்கு நலன் உண்டாக ஐம்படைத் தாலியை ஆன்றோர் இட்டபடி கழுத்தில் அணிந்து, உடல் எல்லாம் சந்தனம் பூசி, நீலச் சிற்றாடையை விரித்துக் கட்டிக் கொண்டு, இயற்கை அழகு அமைந்த பூப்பந்தல் கீழ், பதுமை போன்ற இச்சிறிய பெண் வைத்துக் கொண்டு விளையாடும் இந்தப் பொம்மைக்குத் தந்தை யாவர் என்று ஒருத்தி கேட்க, அக்கேள்விக்குத் தாயானவள் அளவிலாச் சிறப்புடைய அருட் செல்வன் எனப் பெறும் அழலாடும் பெருமான்தான் இப்பதுமைக்குப் பிதா என்று கூற, அதே நேரத்தில் உலாவந்த அப்பெருமானை, ஒப்பற்ற சினமிக்கு மதர்த்த விடைமேல் அப்பேதைச் சிறுமி கண்டு, தாய் விளையாட்டாகக் கூறிய சொற்களின் சிறந்த பொருள் நுட்பம் அறியாதவளாய், இப்பேதை காமனது நூலில் உரைத்த கணக்கின் மேல் சிறிது நாள்தான் பழகினவள் போன்ற உணர்வு உற்றனள். தாலி - திருமால் கூரத்துள ஐந்து ஆயுத உருவான அணிகலன்.
பெதும்பை (வயது 8 முதல் 11 வரை)
பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக் கவின்இயலாள் - சீரொளிய
தாமரை ஒன்றின் இரண்டு குழையிரண்டு
காமருவி கெண்டையோர் செந்தொண்டை - தூமருவி
முத்த முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம்
வைத்தது போலும் மதிமுகத்தாள் - ஒத்தமைந்த
கங்கணம் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின்
கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் - ஒண்கேழல்
அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியில்
சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் - வந்து
தெளிவுரை : உலகியலை உணராதவள் பேதை. உணர்ந்தும், உணராதவள் பெதும்பை. இவளுக்குப் பேதை குணம் பாதி, மங்கைப் பெண் குணத்திற் பாதி. இரண்டும் கொண்ட இவட்குப் பெதும்பை என்று பெயரிடுவர். உலகியலை உணர்ந்தும் உணராத இவள் நிலையை எடுத்து விளக்கல் எளியது அன்று, அதனால் தான், பயனான உலா நூலைப் பாடுபவர், பெதும்பைப் பருவத்தை விளக்கி எப்படிப் பாடுவது என்று அறியாமல் இடர்ப்படுவர். இயன்ற வரை முயன்று பாடும் திறம் கண்டு, பேசும் உலாவில் பெதும்பை புலி என்று அதைப் பாடினவரைப் பின்வந்தோர் பாராட்டினர்.
அழகுடைய பேரொளியமைந்த தோற்றம் உள்ள பெதும்பைப் பருவ வயதினள் ஒருத்தி, நீல நிறம் பொருந்திய மயில் போன்ற அழகிய சாயலை உடையவள் சிறந்த ஒளியினையுடைய ஒரு தாமரையில் (திருமுகத்தில் என்றபடி) இரு குழைகளும், இன்பம் பொருந்திய இரண்டு சேற் கெண்டை மீன்களும், சிவந்த ஒரு கொவ்வைக் கனியும் தூய்மை பொருந்திய முத்துக்களும் வளைந்த கொடிய வில்லும் சுட்டிகை என்ற ஆபரணமும், சிவந்த பவள நிறத் திலகமும் வைத்து இருக்கும் திங்கள் போன்ற திருமுகம் உடையவள். ஒன்று போல அமைந்து உள்ள, கங்கணம் சேர்ந்து ஒளிரும் கரங்களை உடையவள். ஒளியமைந்த மணிகள் பதித்த கிண்கிணி அணிந்த திருத்தமான கால்களையுடையவள். ஒளிரும் நிறமுடைய அழகிய ஆடை மொய்த்து அசைகின்ற நிதம்பம் உடையவள். தமிழ் ஆயும் பொதிகை மலையில் விளைந்த சந்தனம் படிந்த விசாலித்த தோள்களை உடையவள்.
திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்
கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் - மடல்பட்ட
மாலை வளாய குழலாள் மணம்நாறு
சோலை இளங்கிளிபோல் தூமொழியாள் - சாலவும்
வஞ்சனை செய்து மனங்கவரும் கண்ணுக்(கு)
அஞ்சனத்தை இட்டங்(கு) அழகாக்கி - எஞ்சா
மணியாரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி
அணியார் வளைதோள்மேல் மின்ன - மணியார்த்த
தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க்
காமன் உருவம் வரஎழுதிக் - காமன்
தெளிவுரை : (பேதைப் பருவத்து இல்லாமல் இப்பெதும்பைப் பருவத்தின் வருங்காலத்தில்) பெரிய மலையாவதற்கு இப்போதுதான் சிறிய மேடாகத் தோன்றியதோ எனும்படியான சூதாடு கருவி போன்ற தனங்களை யுடைவள். கடலில் தோன்றிய இனிய அமுதம் போன்றவள். இதழ் விரிந்து மலர் மாலை சூடிய கூந்தலை உடையவள். மணம் வீசும் பூஞ்சோலையில் உள்ள கிளி போன்ற தூய மழலை மொழியினள். பெரிதும் வஞ்சகத்தைப் புரிந்து, ஆடவர் மனத்தைக் கவர்ந்து கொள்ளும் வாள்படை போலும் கண்களுக்கு மை எழுதி அவ்விடத்தில் அழகைத் தோற்றுவித்து, குறையாத மணிகள் கோத்த மாலையைக் கழுத்தில் அணிந்து, மென்மையுள்ள விரல்களில் மோதிரம் அணிந்து, அலங்காரமான வளையெனும் கடகம் தோள் மீது ஒளிர, தோழியரும் தானுமாய்த் தூய வெள்ளை மணல் மேல் இருந்து காமன் வடிவம் தோன்ற அம்மணல் மேல் எழுதி-
கருப்புச் சிலையும் மலரம்புத் தேரும்
ஒருப்பட்(டு) உடன் எழுதும் போழ்தில் - விருப்பூரும்
தேனமரும் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன்
வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் - தானமர
நன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்தோற்று
நின்றறிவு தோற்று நிறைதோற்று - நன்றாகக்
கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் - மொய்கொண்ட
தெளிவுரை : காமனுடைய கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் தேரும் தோன்ற மனம் ஒன்றுபட்டு எழுதிக் கொண்டே இருக்கும்போது, எவர்க்கும் விருப்பம் ஊற்றெடுக்கும் தேன் நிறைந்த அழகிய கொன்றை மாலை சூடிய தூயோனாகிய சிவபெருமான் சிறந்த மதர்த்த விடையின் மேல் அமர்ந்து தான் இருக்கும் அவ்வழியே உலாவர நோக்கி, தான் வாழ்வதன் பொருட்டு, கல்வி கேள்விகளால் நலத்தை அறிந்த மேலோர் அருளிய நலம் இழந்து, எஞ்சி இருந்த அறிவையும் இழந்து, நிறைவுடைமையையும் இழந்து மிகுதியாகக் கையில் உள்ள வளையல்களும் கீழ்விழ, கண்களாகிய வண்டும் அதாவது கருவிழியும் காதளவு ஓட, ஆடையும் ஒரு தலைக் காமத்தால் அவிழ்ந்து விழ, நெய்ப்பு மிக்க மலரணிந்த கூந்தலை யுடைய அப் பெதும்மை விடை மேல் உள்ள பரமனைக் கண்டு நின்றபடியே தன்னை மறந்தனள் ஆயினாள்.
மங்கை  (வயது 12-13)
மங்கை யிடங்கடவா மாண்பினாள் வானிழந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள் - தங்கிய
அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி
கொங்கை கமலம் முகங்கமலம் - பொங்கெழிலார்
இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேயெழிலார்
பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு - மட்டுவிரி
கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில்
ஏய்ந்த மணி முறுவல் இன்முத்தம் - வாய்ந்தசீர்
வண்டு வளாய வளர்வா சிகைசுட்டிக்
கண்டி, கழுத்திற் கவின்சேர்த்திக் - குண்டலங்கள்
காதுக்(கு) அணிந்து கனமே கலைதிருத்தித்
தீதில் செழுங்கோலம் சித்திரித்து - மாதராள்
தெளிவுரை : நிறைந்த மங்கைப் பருவம் அகலாத மாண்புடைய ஒருத்தி விண்ணில் இருந்து இறங்கிய கங்கையின் நீர்ச் சுழியை ஒத்த கொப்பூழை உடையவள், சாமுத்ரிகப்படி அமைந்த அழகிய கைகளும் தாமரை, கால்களும் தாமரை, மான் போலும் மருண்ட பார்வையையுடைய அவளின் தனங்கள் இரண்டும் தாமரை, திருமுகமும் தாமரை, மிக்க பேரழகு அமைந்து நெருங்கிய சிறிய இடையும் வஞ்சிக் கொடி, பெருமை மிக்க தோள்களும் மூங்கில், எழிச்சி அமைந்த பட்டாடை உடுத்திய நிதம்பமும் தேரினது தட்டு, மணம் விரியும் கூந்தலும் கருமணல், செவ்விய வாயும் பவளம், அந்த வாயில் பொருந்திய அழகிய பற்களும் சிறந்த முத்துக்கள் ஆக விளங்கியவளாய், சிறப்புப் பொருந்தியதும் வண்டுகள் மொய்த்ததும் ஆகிய மலர் வளர்ச்சி பெற்றதொடு மாலையைச் சூட்டிக் கொண்டு, கண்டி என்னும் ஆபரணத்தைக் கழுத்தில் அழகு பெறச் சேர்த்து, குண்டலங்களைச் செவியில் அணிந்து பெரிய மேகலையைத் திருத்தமுற உடுத்தி, குற்றம் இல்லாத செழுமையான இயற்கை அழகுடன் சிறந்த செயற்கை அழகையும் சேர்த்து.
பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும்
சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் - நற்கோட்டு
வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்
ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு - தெள்ளியநீர்
தாழும் சடையான் சடாமகுடம் தோன்றுதலும்
வாழுமே மம்மர் மனத்தளாய்ச் - சூழொளியான்
தார்நோக்கும் தன்தாரும் நோக்கும் அவனுடைய
ஏர்நோக்கும் தன்ன(து) எழில் நோக்கும் - பேரருளான்
தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின்
நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து- நாண் நோக்கா(து)
உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய
தெளிவுரை : ஏல்வை - சமயம். பின் அம்மங்கை நல்லாள் பொன்னாலாகிய கூட்டில் இருந்த நாகணவாய்ப் பறவையைக் கையில் எடுத்து, அதற்குச் சொற்களைப் பேசப் பழகிக் கொண்டிருந்த சமயத்தில் சிறந்த சிகரங்களையுடைய வெள்ளி மலையின் மேல் எழுந்தருளியிருந்த பரிதி போன்று தூய்மையுள்ள மதர்த்த விடைமேல் அமர்ந்துள்ள தெளிவான கங்கை தங்கிய சடையுடைய உலாவந்த சிவபெருமானது சடைமுடி அம்மங்கையின் எதிரே தோன்றுதலும் உணர்வோடு வாழ்வாளோ? உணர்வை இழப்பாள்.
மயக்கம் கொண்ட மனத்தை உடையளாகி பேரொளி சூழ்ந்த வடிவினனாகிய பெருமான் சூடிய மாலையை நோக்குவாள். தனது மாலையையும் நோக்குவாள். அதன்பின் அப்பரமனது அழகை நோக்குவாள். தன்னுடைய அழகையும் நோக்குவாள். பெருங்கருணை பெருமானது தோள்களை நோக்குவாள். தனது தோள்களையும் நோக்குவாள். இங்ஙனம் பலமுறை ஒப்பு நோக்கியபின் அப்பரமன் திருமார்பில் நீண்ட நேரம் பார்வையைச் செலுத்தி, பெருமூச்சு விட்டாள். பெண்களுக்கு உரிய நாணத்தையும் கவனியாமல் மனம் உருக நீங்காத ஆசை வெள்ளத்தில் அழுந்தி வெம்மை தோன்ற மீண்டும் ஒருமுறை பெரு மூச்சு விட்டு நின்றனள்.
மடந்தை (வயது 14-19 வரை)
தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் - ஏய்ந்தசீர்
ஈசன் சிலையும் எழில்வான் பவளமும்
சேய்வலங்கை வேலும் திரள்முத்தும் - பாசிலைய
வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும்
மஞ்சில்வரு மாமதிபோல் மண்டலமும் - எஞ்சாப்
புருவமும் செவ்வாயும் கண்ணும் எயிறும்
உருவ நுசுப்பும்மென் தோளும் - மருவினிய
கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர்
பங்கயப் போதனைய சேவடியாள் - ஒண்கேழல்
வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்
ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள் - ஊழித்
திருமதியும் மற்றொன்றாம் என்று முகத்தை
உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் - பெருகொளிய
தெளிவுரை : தூய்மையுள் பொருள் துறை நிரம்பிய இனிய தெய்வத் தமிழின் வடிவினளான திருத்தமான சிறப்பு அமைந்த மடந்தைப் பருவமக உடையவள் ஒருத்தி, சிறப்புப் பொருந்திய சிவபெருமான் வில்லையும் எழில் மிக்க பவளத்தையும், முருகனுடைய வலத்திருக்கரத்துள்ள வேற்படையையும், திரட்சியான முத்துக்களையும் பசிய இலைகள் உள்ள வஞ்சிக் கொடியையும் மூங்கிலையும் வளர்ந்த தாமரை அரும்பையும் மேகத்தின் மேல் வரும் சிறந்த சந்திர மண்டலத்தையும் முறையே ஒத்துள்ள,
தோலாத புருவமும், சிவந்த வாயும், கண்ணும், பற்களும் சிறுத்த இடையும், மேல் தோளும் சேர்ந்துள இனிய தனங்களும் ஒளியுடைய முகமுமாகக் கொண்டு இருப்பவள். செயற்கை அழகு சேர்ந்த தாமரை மலரை ஒத்த சிவந்த பாதங்களை உடையவள். ஒளி மிக்க வாழைத் தண்டை ஒத்த தொடையை உடையவள். சிறப்பு அமைந்த சக்கரங்களையுடைய தேர்த்தட்டைப் போன்ற நிதம்பத்தை உடைய அம்மங்கை முறையாக வளர்ந்த வேறு ஒரு முழுத்திங்கள் போலும் என்று மயங்கி நிறமுடைய விண்மீன்கள் அவள் முகத்தைச் சூழ்ந்திருப்பதுபோல்,
முத்தாரங் கண்டத்(து) அணிந்தாள் அணிகலங்கள்
மொய்த்தார வாரம் மிகப் பெருகி - வித்தகத்தால்
கள்ளும் கடாமும் கலவையும் கைபோந்திட்(டு)
உள்ளும் புறமும் செறிவமைத்துத் - தெள்ளொளிய
காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த
தாளிம்பத் தாமம் நுதல்சேர்த்தித் - தோளெங்கும்
தண்ணறும் சந்தனம் கொண்(டு) அப்பிச் சதிர்சாந்தை
வண்ணம் பெறமிசையே மட்டித்தாங்(கு) ஒண்ணுதலாள்
தன்னமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப்
பின்னுமோர் காமரம் யாழ் அமைத்து - மன்னும்
விடவண்ணக் கண்டத்துவேதியன் மேல் இட்ட
மடல்வண்ணம் பாடும் பொழுதீண்(டு) அடல்வல்ல
வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க்(கு) எஞ்ஞான்றும்
மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் - கோல
தெளிவுரை : மிக்க ஒளி செய்கின்ற முத்து மாலைகளைக் கழுத்தில் அணிந்தாள், மற்ற ஆபரணங்களையும் நிரம்ப அணிந்து, பேரொளியை மிகுதியாகத் தோற்றுவித்து, அறிவின் திறமையால் தேனையும் மான் மதத்தையும் கலவைச் சாந்தையும் பூசி, உள்ளத்தும் புறத்தும் நிறைவு கொண்டு தெளிந்த ஒளியினையுடைய கலிங்க தேயப்பட்டுச் சேலை மிக்கு ஒளிர உடுத்தி, பொருந்திய நுதலணி வரிசைகளை நெற்றியில் சேர்த்து, தோள் முழுதும் குளிர்ந்த மணம் வீசும் சந்தனத்தை எடுத்து நிரம்பப் பூசி, ஒளியுடைய புருவம் உள்ள அம் மடந்தை நிரம்பப் பூசி, ஒளியுடைய புருவம் உள்ள அம் மடந்தை நல்லாள் அழகிய கூட்டுச் சாந்தைப் பொலிவு பெற மேல் எல்லாம் அப்பிய வண்ணம்,
தன்னை விரும்பிய தோழிகள் சூழ்ந்திருக்க ஒரு பீடத்தில் அமர்ந்து, உணர்வை ஒருமுகப் படுத்துகின்ற ஒப்பற்ற சீகாமரம் என்னும் பண்ணை வீணையில் சேர்த்துப் பொருந்திய அழகுடைய திருநீலகண்டப் பெருமான் மேல் பாடியுள்ள மடல் வண்ணம் என்னும் பிரபந்தத்தைப் பாடிக் கொண்டே இருந்த சமயம்,
நெருங்கி வெல்லும் வன்மை வாய்ந்த வேற்படை ஏந்திய வல்லாளன், வில்படை ஏந்திய வல்லாளன் மென்மை இயல்புள மாதரார்க்கு எக்காலத்தும் காம மயக்கம் செய்யும் வல்லாளன் எக்காலத்தும் காம மயக்கம் செய்யும் வல்லாளன் எதிர் செலுத்துகின்ற மதர்த்த விடையின்,
மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால
அணியேறு தோளானைக் கண்டாங்(கு) - அணியார்ந்த
கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக்
கோட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி - நாட்டார்கள்
எல்லாருங் கண்டார் எனக் கடவுள் இங்காயம்
நல்லாய் படுமேல் படுமென்று - மெல்லவே
செல்ல லுறுஞ்சரணம் கம்பிக்கும் தன்னுறுநோய்
சொல்லலுறும் கொல்லி உடைசெறிக்கும் - நல்லாகம்
காணல் உறுங்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன்
நாணல் உறும்நெஞ்சம் ஒட்டாது - பூணாகம்
புல்லலுறும் அண்ணல்கை வாரான்என்(று) இவ்வகையே
அல்ல லுறும் அழுந்தும் ஆழ்துயரால் - மெல்லியலாள்
தன்னுருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான் கொன்றைப்
பொன்னுருவம் கொண்டு புலம்புற்றாள் -பின்னொருத்தி
தெளிவுரை : கழுத்திற் கட்டிய அழகிய மணியின் பேரோசையைக் கேட்டதும் அவ்விடத்தை உற்றுப்பார்த்தவள் அழகு மிக்க தோள்களையுடைய உலாவந்த பரமனைக் கண்டாள். கண்டதும் பொலிவு நிறைந்த கூட்டத்தை விட்டு எழுந்து குழைவு உடைய முகத்தைப் பொலிவு குன்றச் சுளித்து, நெற்றி சிவப்பேற வாய்திறந்து தோழியை நோக்கி, சிறந்த தோழியே! அந்த எனது பெருமான் இவ்விடத்தில் வந்ததை மென் மேலும் கண்ணெச்சில் படும் போலும், என்று இவ்வண்ணம் தோழியிடம் சொல்லிக் கொண்டே மெதுவாகப் பரமனை நோக்கிச் செல்ல அடியெடுத்து வைப்பாள்.
நடக்கும் போதே இரண்டு கால்களும் நடுக்கம் அடைவாள். தனக்கு நேர்ந்த காதல் நோயைத் தோழியிடம் சொல்லத் தொடங்குவாள். சொல்லித் தடை நேர்படுத்திக் கொள்வாள். இறைவனது சிறந்த திருமார்பைக் காணத் தொடங்குவாள். கண்களில் நீர் நிரம்பப் பெருக்குவாள்.
நோக்குவார் எதிரில் பெரிது நாணம் கொள்வாள். மனம் பொருந்தாமல் ஆபரணம் அணிந்த தன் மார்பைத் தானே தழுவுவாள். பெருமான் தன் கைக்கு அகப்படான் என்று எண்ணி இவ்வண்ணமே பெரிது வருந்துவாள்.
மிக்க துன்பத்தால் நைகின்ற அம் மடந்தை தனது தேகத்தில் அப்பரமனது கொன்றை மலர் மாலையைச் சூட்டிக் கொள்ள நினைத்து, தான் கொன்றையின் பொன்னிறத்தை அடைந்தாளாய்க் கதறலானாள்.
அரிவை (வயது 20 முதல் 24வரை)
செங்கேழல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா
அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் - ஒண்கேழல்
திங்களும் தாரகையும் வில்லும் செழும்புயலும்
தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையால் - பொங்கொளிசேர்
மின்னார்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே
தன்னாவார் இல்லாத் தகைமையாள் - எந்நாளும்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் - சொல்லாலே
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலை மேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து -
தெளிவுரை : சிவந்த நிறம் உள்ள தாமரை போன்ற சிறிய பாதங்களை உடையவளான குற்றம் இல்லாத அழகிற் சிறந்த அரிவைப் பருவம் உடைய வேறு ஒருத்தி, ஒண்மை நிறம் உள்ள முகில் கூட்டமும், நிலைத்த ஒளி அமைந்த செவ்வாய்க் கிரகமும் கொண்டு இருத்தலினால் (இவை முறையே நுதல், முத்து மாலையும் பல்வரிசையும், புருவம், கூந்தல், வாய் ஆகியவற்றைக் குறிக்கும்) மிக்க ஒளி பொருந்திய மின்னல் அமைந்த வானத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ள திருமுகத்தை உடையவள். மெய்ம்மையாகவே தனக்கு ஒப்பானவர் இல்லாத தகுதியை உடையவள்.
என்றைக்கும் பொருள் இல்லாத ஏழைகளை எத்தகையோரும் இகழ்வர், செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் எனப்பெறும் சொற்களை அறிந்திருப்பதனால் நிதம்பத்தைச் சூழ்ந்திருக்கும்படி மிக உயர்ந்த மேகலையைச் சுற்றிக் கட்டினாள். அழகிய தனங்களின் மேல் நிரம்பிய மணம் வீசும் கலவைச் சந்தனம் பூசி, மேலும் பல ஆபரணங்களையும் அணிந்து,
இடையிடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்
நடைபெடை அன்னத்தை வென்றாள் - அடியிணைமேல்
பாடகங் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர்
சூடகம் முன்கை தொடர்வித்தாள் - கேடில்சீர்ப்
பொன்னரிமாலை தலைக்கணிந்து பூண்கொண்டு
மன்னுங் கழுத்தை மகிழ்வித்தாள் - பொன்னனாள்
இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம்
அண்ணல்மேல் தானிட்ட ஆசையால் - முன்னமே
பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி
கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் - கூடிய
தெளிவுரை : மிகச் சிறுத்திருந்த இடை, பாரம் தாங்காமல் வரவர வருந்தித் தேய்வுற்றது என்னும்படி செய்தாள். அழகு நிறைந்த நடையால் பெண் அன்னத்தை வென்றவள் இரண்டு கால்களில் பாடகம் என்னும் அணியை எடுத்து, சிறப்புற அணிந்தாள். பல மணிகள் பதித்த சூடகம் என்னும் வளையை முன்னங் கையில் தொடர்பு உண்டாகும் படி அணிந்தாள். கெடுதி யில்லாப் பெருமையுள்ள பொன்னரி மாலையைத் தலையில் அணிந்து, ஆபரணத்தை எடுத்து நிறைந்த கழுத்தை மகிழச் செய்தாள். திருமகளை ஒத்த அந்த அரிவை, இனிய இசையை யுடைய வீணையை எடுத்து இசை கூட்டி, தேவர்களுடைய பெருமான்மீது தான் முன்னரேயே வைத்திருக்கும் காதல் காரணமாகப் பாட்டொன்று பாடத் தொடங்கும் நேரத்தில் மேலான ஒளிப் பிழம்பினனாக உலா வந்த சிவபிரான் கெடுதல் இல்லா மதர்த்த விடை மேல் காட்சி யளித்தலும்
இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும்
மன்னிய வீணையும் கைவிட்டுப் - பொன்னனையீர்
இன்றன்றே காண்ப(து) எழில் நலம் கொள்ளேனேல்
நன்றன்றே பெண்மை நமக்கென்று - சென்றவன்தன்
ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டு
கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் - ஒண்கேழல்
கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும்
சாந்தம் திமிரும் முலையார்க்கும் - பூந்துகிலைச்
சூழும் அவிழ்க்கும் தொழும் அழும் சோர்துயருற்(று)
ஆழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் - சூழ்ஒளிய
அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள்
நங்கை இவளும் நலந்தோற்றாள் -  அங்கொடுத்தி
தெளிவுரை : நேர்ந்த நயமான இசையையும் இந்தப் பெண்மைப் பிறப்பையும், மேற் கொண்ட மேன்மையான தமிழையும் நிலை பெற்ற வீணையையும் கை நழுவச் சோர விட்டு, திருமகளை ஒத்த தோழியர்காள், அழகு இன்றைக்குத்தான் அல்லவா பயனைக் கண்டதாயிற்று. இத்தலைவனைக் கணவனாகக் கொள்ளேனாயின் இப்பெண்மைப் பிறப்பு நமக்கு இருந்தும் பயனில்லை அன்றோ என்று கூறியபடியே சென்று, அந்த இறைவனுடைய சிறந்த திருநீறு தோய்ந்த மிக்க ஒளியுடைய திருமுகத்தில் கலத்தல் செய்வது போல இரண்டு கண்களால் தன் கருத்தைக் கூறி,
ஒளியுடைய கருத்த நிறம் வாய்ந்த கூந்தலை அவிழ்ப்பாள்; மீட்டும் முடிப்பாள். ஆடையைத் திருத்தப் படுத்துவாள். சந்தனம் பூசும் தனங்களை நெருக்குவாள். அழகிய ஆடையைக் கட்டுவாள். மீட்டும் அவிழ்ப்பாள்; வணங்குவாள்; அழுவாள்; சோர்வடையும்படியான துன்பம் அடைந்து ஆழ்வாள். மீட்டும் கரை ஏறமுடியாதபடி அழுந்தி விடுவாள்; அயர்ச்சியோடு பெரு மூச்சு விடுவாள்.
சூழ்ந்த ஒளியையுடைய அழகிய கைவளையல்களைக் காத்தனள். ஆடையைக் காக்க முடியாதவள் ஆயினாள். எனவே பெண் மக்களிற் சிறந்த இவ் அரிவையும் நலன் அனைத்தும் இழந்தவளாகி நின்றிட்டாள்.
தெரிவை (வயது 25 முதல் 30 வயது வரை)
ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள் - ஓரா
மருளோசை இன்மழலை வாய்ச்சொலால் என்றும்
இருள்நீர் புலரியே ஒப்பாள் - அருளாலே
வெப்பம் இளையவர்கட்(கு) ஆக்குதலால் உச்சியோ(டு)
ஒப்பமையக் கொள்ளும் உருவத்தாள் - வெப்பம் தீர்ந்(து)
அந்தளிர்போல் சேவடியும் அங்கையும் செம்மையால்
அந்திவான் காட்டும் அழகினாள்-அந்தமில்
சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள்
ஏரார் இரவின் எழில்கொண்டாள் - சீராரும்
கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்
தண்ணிளங் காரின் சவிகொண்டாள் - வண்ணஞ்சேர்
மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால்
வாய்ந்த இளவேனில் வண்மையாள் - மாந்தர்
அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்று
பறையறைவ போலும் சிலம்பு - முறைமையால்
தெளிவுரை : தெவிட்டாத அமுத அவயவங்கள் பெற்றிருப்பதை ஒத்த சிறப்பமைந்த தெரிவைப் பருவத்தை உடையவளாய் ஒருத்தி, உணர்தலுக்கு உரிய மருண்ட ஒலியையுடைய இனிய மழலை மொழியான வாய்ச் சொற்களால் இருள் நீங்கிய காலைப் பொழுதை ஒத்தவள். ஆசையால் வெப்பத்தை இளம் காளைகட்குச் செய்தலால் உச்சிப் பொழுதுடன் சமநிலையாகக் கொண்ட உருவம் உடையவள்.
வெம்மை நீங்கி அழகிய மாந்தளிர் போலும் செவ்விய பாதங்களும், உள்ளங் கைகளும் சிவந்திருக்கும் தன்மையால் அந்திப் பொழுதின் சிறப்பைக் காட்டும் அழகினை உடையவள். அழிவு இல்லாச் சிறப்பு நிறைந்த திருமுகம் மதிபோன்று அமைந்திருத்தலால் எழுச்சி நிறைந்த இராப் பொழுதின் அழகைக் கொண்டவள்.
சிறப்பு நிறைந்து காம்பு அமைந்த பயோதரமும் நுண்ணிய இடையும் கொண்டிருத்தலால் குளிர்ந்த இளமையான மேகத்தின் அழகைக் கொண்டவள். நிறம் பொருந்திய மாந்தளிர் போலும் மேனியையும் முருக்கம் பூவின் இதழைப் போன்ற வாயையும் உடையவள். ஆதலினால் இளவேனில் பருவமாக அமைந்த வளம் உடையவள்; ஆண் மக்களில் அறிவுடையவர்களே நில்லுங்கள் அத் திடம் இல்லாதவர்கள் செல்லுங்கள் என்று பறை அடிப்பது போன்ற சிலம்புகளை,
சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல்
ஓராது அகவல் உறாதென்று - சீராலே
அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள்
மைந்தர் மனங்கவரும் என்பதனால் - முந்துறவே
பூங்கச்சி னால் அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால்
காம்பொத்த தோளிணையைக் காப்பேவி - வாய்ந்தசீர்
நற்கழுத்தை நல்லாரத் தால்மறைத்துக் காதுக்கு
விற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து - மைப்பகரும்
காவியங் கண்ணைக் கதந்தணிப்பாள் போலத்தன்
தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி - யாவரையும்
ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்
கோகிலமும் போலும் குணத்தினாள் - ஆகிப்
பலகருதிக் கட்டி கரியவாய்க் கோடி
அலர் சுமந்து கூழைய ஆகிக் - கலைகரந்து
உள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்தாழ்ந்து
கள்ளாவி நாறும் கருங்குழலாள் - தெள்ளொளிய
தெளிவுரை : சிறப்புப் பொருந்திய திருத்தமான பாதங்களில் அணிந்தாள். தேர்த்தட்டு போன்ற நிதம்பம் நினையாமல் செல்லுதல் கூடாது என்று எண்ணிச் சிறப்பு முறையாமல் அழகிய ஆடையையும் மேகலையையும் சுற்றி அணிந்தாள்.
அழகிய தனங்கள் ஆடவர் மனத்தைக் கவர்ந்து விடும் என்ற எண்ணத்தால் முதலிலேயே மென்மையான இரவிக்கையால் முழுதும் கட்டி, பொன்னால் ஆகிய தொட்டியை எடுத்து மூங்கில் ஒத்த இருதோள்களுக்குக் காவல் வைத்ததென அணிந்து, (காம்பு-மூங்கில்)
சீர்த்தி அமைந்த சிறந்த கழுத்தை உயர்ந்த முத்தாரம் அணிந்தமையால் மறைத்து, செவிகளுக்கு ஒளி மிக்கதென எவராலும் சொல்லப் பெறும் குண்டலங்களை விரும்பி அணிந்து, கருங்குவளை மலர் போன்றது எனும் அழகிய கண்களை வெம்மை தணிக்க முயன்றவள் போல, தான் செய்தமையை முதலில் கண்களுக்கு இட்டு, எவரையும் துன்பத்தில் சேர்க்கும் அழகு உடையவள்.
அன்னத்தையும் கோகிலத்தையும் ஒத்த குணம் உடையவளாய்ப் பலவகையாகச் சிந்தனை செய்து முடிந்து, கருமை நிறம் உடையதாய், எண்ணிலா மலர்களைத் தாங்கிப் பின் பாகத்தில் இருப்பதாய், சிறிதும் ஆடையின் உட்புறத்தில் இல்லாமல், புறத்தில் மணம் வீசி,கீழ் நோக்கித் தொங்கி, தேன் மணம் வீசும் கருமையுள்ள கூந்தலை உடையவள்.
செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி
அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் -பொங்கெழிலார்
பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது
நற்கமைய நாட்டிப் பெரும்பொழுதில் - விற்பகரும்
தோளான் நிலைபேறு தோற்றங்கே டாய்நின்ற
தாளான் சடாமகுடம் தோன்றுதலும் - கேளாய
நாணார் நடக்க நலத்தார்க்(கு) இடையில்லை
ஏணார் ஒழிக எழில் ஒழிக - பேணும்
குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின்
நலத்தீர் நினைமினீர் என்று - சொலற்கரிய
தேவாதி தேவன் சிவனாயில் தேன்கொன்றைப்
பூவார் அலங்கல் அருளாது - போவானேல்
கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து
வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் - ஒண்டாய
தெளிவுரை : தெள்ளிய ஒளியுடைய செங்கழுநீர் மலர் போலும் நிறமுடைய பட்டுச் சேலையை உடுத்தி, சிவந்த குங்குமப் பொட்டு இட்டு, அழகிய கழுநீர் மாலை என்னும் ஆபரணத்தை நெற்றியில் அணிந்து மிகுதியான பொலிவு அமைந்த பொன்னால் ஆன தாயக் கட்டையால் வெள்ளிப் பலகையில் மணிகளாலான சூதாடு காய்களை நன்கு பொருந்த வைத்துச் சூதுபோர் ஆடிக் கொண்டிருந்த போது,
ஒளிவீசும் தோள்களையுடையவனும் படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய முத்தொழிலும் செய்வதாய் நின்ற திருவடிகளையுடைய பெருமானது சடை முடிதோன்றவும் தன்வசம் கெட்டாள் ஆகலின், சுற்றத்தினரான அச்சம் மடம் பயிர்ப்போடு கூடிய நாணமே செல். சிறப்பு என்னும் ஒன்று இங்குத் தங்குதற்கும் இனி இடம் இல்லை. திடம் என்பவரே! செல்வீராக! அழகே, நீங்குக. என்னைக் காக்கும் வரிசையில் இருப்பார் எல்லாம் நீங்குக. குற்றம் என்பவர்களே வாருங்கள் சிறப்புடைய நாணம் திடம் அழகு முதலியவர்களே நீங்கள் என்னை மறவாது நினையுங்கள் என்று சொல்லிக் கொண்டே,
பவனி வந்தவன் சொற்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத தேவர்கட்கு எல்லாம் ஆதிமூர்த்தியான சிவபிரான் எனில் (கொன்றை மாலையைக் கொடுப்பான்.) தேன் நிறைந்த கொன்றைப் பூக்களால் ஆன நிறைந்த மாலையைக் கொடுக்காமல் போவானாயின், அவன் என்னை நோக்கினால் அவனை நான் ஒரு கை பார்க்கின்றேன் என்று கூறி, மிக்க சோர்வடைந்து, வண்டுகள் ஆரவாரிக்கும் பூமாலை சூடிய கூந்தல் தெரிவை, தன் பெண்மை வளம் அழிந்து நின்றிட்டாள்.
பேரிளம்பெண் (வயது 31 முதல் 40 வரை)
பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொல் பணிமொழியாள் - மண்ணின்மேல்
கண்டுகேட்(டு) உண்(டு) உயிர்த்(து) உற்றறியும் ஐம்புவனும்
ஒண்டொடி கண்ணே யுளவென்று - பண்டையோர்
கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல்
விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் - கட்டரவம்
அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த
வஞ்சிக் கொடி நுடங்கும் நுண்ணிடையாள் - எஞ்சாத
பொற்செப்(பு) இரண்டு முகடு மணியழுத்தி
வைத்தன போல வளர்ந்தேந்தி - ஒத்துச்
சுணங்கும் திதலையும் சூழ்போந்து கண்டார்க்(கு)
அணங்கும் அமுதமாய்த் தோன்றி - இணங்கொத்த
தெளிவுரை : ஒளி பரவிய பெண்மை உலகுக்கே அரசத் தானமாகப் பிறந்த பேரிளம் பெண் பருவத்தாள் ஒருத்தி, இசையும் விரும்பத் தக்க இனிய சொல்லும் பணிவான மொழியும் உடையவள். நிலவுலகில் கண்டும், கேட்டும், சுவைத்தும், மோந்தும், தீண்டியும் விஷயங்களை அனுபவிக்கும் ஐம்புலனும் இவ் ஒளி பொருந்திய வளையலை உடையாளிடத்தே உள்ளன என்று சொல்லும் மேலோர் வாய்மை மொழியை மேன்மையாகும்படி செய்யும் தோற்றத்தினை உடையவள்.
வட்டாகாரமான கண்ணாடிபோல விட்டுவிட்டு ஒளிரும் தூய நகங்கள் அமைந்த மேன்மையான விரல்களையுடையவள், திரண்ட படமெடுக்கும் பாம்பும் அஞ்சும்படி பரவி அகன்றுள்ள நிதம்பத்தை உடையவள். ஆராயும் நலம் உடைய வஞ்சிக் கொடி போலத் துவள்கின்ற சிறுத்த இடையை உடையவள்.
குறைவு இல்லாத பொன்னாலாகிய இரண்டு முழுக் குடத்தின் அதாவது பூரண கலசத்தின் உச்சியில் நீலமணியைப் பதித்து வைத்திருப்பது போல வளர்ச்சி பெற்றுள்ள நரம்புகளைச் சுமந்து, சமமாகி, மென்மையும் தேமலும் சுற்றிலும் நிறைந்து, நோக்கினார்க்கு வருத்தமும், அமுதமுமாக்கக் காணப்பட்டு,
கொங்கையாள் கோலங்கட்(கு) எல்லாம் ஓர் கோலமாம்
நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் - அங்கையால்
காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள்
சாந்தம் இலங்கும் அகலத்தாள் - வாய்ந்துடனே
ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்
தேய்ந்து துடித்த செழும்பவளும் - காய்ந்திலங்கி
முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும்
சித்தந் திறைகொள்ளும் செவ்வாயாள் - ஒத்து
வரிகிடந்(து) அஞ்சனம் ஆடி மணிகள்
உருவம் நடுவுடைய வாகிப் - பெருகிய
தண்ணங் கயலும் சலஞ்சலமும் தோன்றுதலால்
வண்ணம் கடலனைய வாட்கண்ணாள் - ஒண்ணிறத்த
தெளிவுரை : ஒன்றுடன் ஒன்று நெருங்கி ஒத்துள்ள தனங்களை உடையவள். அழகுடைய அனைத்திற்கும் ஒப்பற்ற அழகினையுடைய பெண் மக்களிற் சிறந்தவள். சிறிய மூங்கில் ஒத்த இரு தோள்களை உடையவள். கைகளின் அழகால் காந்தள் மலர்த் தொகுதியைத் தோற்கச் செய்தவள். மன்மதன் விரும்பும் இரதி போல்வாள். சந்தனம் பூசி ஒளிரும் மார்பை உடையவள்.
இரண்டாக அமைந்து, ஒப்பாகி, குவிவு பெற்று, திரட்சி யுற்று, மடங்கி இருமுனையிலும் தேய்வு பெற்றுத் துடித்துக் கொண்டிருக்கின்ற செழுமையான பவளம் போன்ற உதடுகளும், மிக்கு ஒளிரும் பற்களாகிய முத்துக்களும், ஊறல் நீரான தேனும் நிறைந்து, முனிவர் மனத்தையும் கப்பமாகக் கொள்ளும் சிவந்த வாயினை உடையவள்.
செவ்வரிகள் சமமாகப் படர்ந்து, அஞ்சனம் பூசி, கரு விழிகளான நீல மணிகளின் உருவம் நடுவில் இருப்பதாய், பிறழ்ச்சியாலும் ஒளியாலும் மிக்க குளிர்ந்த அழகிய கயல் மீனும், சலஞ்சலம் என்ற வெண் சங்கும் வெள்ளை விழிகளாகக் காணப்படுதலினால் கடலின் தன்மை ஒத்த ஒளிவீசும் கண்களை உடையவள்.
குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய
மண்டலமே போலும் மதிமுகத்தாள் - வண்டலம்ப
யோசனை நாறு குழலாள் ஒளிநுதல் மேல்
வாசிகை கொண்டு வடிவமைத்தாள் - மாசீல்சீர்ப்
பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த
சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் - மாதார்ந்த
பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்
வெண்கவரி வெள்ளத் திடையிருந்து - ஒண்கேழற்
கண்ணவனை அல்லாது காணா செவிஅவன(து)
எண்ணருஞ்சீர் அல்ல(து) இசைகொள்ளா - அண்ணல்
கழலடி அல்லது கைதொழா அஃதான்(று)
அழல் அங்கைக் கொண்டான்மாட்(டு) அன்பென்(று) - எழிலுடைய
தெளிவுரை : ஒண்மை நிறம் உள்ள குண்டலங்கள் சேர்ந்திருக்கும் செவிகளை உடையவள். சிறந்த குளிர்ச்சியுள்ள மதிமண்டலம் போன்ற மதிக்கத்தக்க திருமுகமுடையவள். வண்டுகள் ஒலிக்க ஒரு யோசனை தூரம் மணம் வீசும் கூந்தலையுடையவள். ஒளியுடைய நெற்றியின் மேல் வாசிகை என்னும் ஆபரணத்தைச் சேர்த்துச் செயற்கை அழகைச் செய்தவள்.
குற்றம் இல்லாச் சீர்த்தியும் அடி முதல் முடி வரை பழிப்புச் சொல்லற்கு இல்லாத சாமுத்ரிக இலக்கணமும் அமைந்தவள். தகுதியாக அமைந்து உள்ள சீதாரி என்னும் வாசனையை எடுத்து உடம்பிற்குப் புகை ஊட்டினாள். அழகு நிறைந்த இசையையும் வயப்படுத்தத் தக்க மொழிகளையுடைய தோழியர்கள், பல்லாண்டு பாட பரவிய ஒளி பொருந்திய வெண்சாமரை எடுத்துப் பலர் வீச அக்கூட்டத்தின் நடுவில் இருந்து,
ஒளிரும் நிறமுடைய என் கண்களானவை அப்பரமனை அல்லாது வேறு ஒன்றையும் காணாது. என்னுடைய செவிகள் அந்த இறைவனது நினைத்தற்கு அரிய புகழை அல்லாது வேறு எவர் புகழையும் ஏற்காது. பெருமையிற் சிறந்த சிவபிரானது வீரக்கழல் அணிந்த திருவடிகளை அல்லாமல் வேறு எவரையும் எனது கைகள் கும்பிடாது.  அழகிய திருக்கரத்தில் அழல் ஏந்திய பெருமானிடத்துக் கொண்ட என் மனத்து அன்பு அதுவேயாம்.
வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்
கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால்
அரியரணம் செற்றாங்(கு) அலைபுனலும் பாம்பும்
புரிசடைமேல் வைத்த புராணன் - எரியிரவில்
ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர்
வண்ணச் சிலம்படி மாதரார் தாமுண்ட
கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே
வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ தகவென்று - நொந்தாள்போல்
கட்டுரைத்துக் கைசோர்ந்(து) அகமுருகி மெய்வெளுத்து
மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர்
பண்ணாரும் இன்சொல் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ஆர வாரம் பெரிதன்றே - விண்ஓங்கி
மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு.
தெளிவுரை : என்று சொல்லும் அழகுடைய வெண்பாவை விரிவாக இப்பேரிளம் பெண் பாடிக் கொண்டிருக்கும் அவ்வமயம், விளக்கம் தங்கிய ஒளி பொருந்திய கண் பரவியிருக்கும் நெற்றியை உடையவனும், திருநீல கண்டனும், ஆகாயத்து இருந்த முப்புரங்கள் எனப்படும் மாற்றார் மதில்களைப் புன்னகையால் அழித்தவனும், அலைகளையுடைய கங்கையையும் அரவினங்களையும் முறுக்கேறிய அச்சடை முடிமேல் வைத்திருக்கின்ற மிகப் பழையவனும், சர்வ சம்கார காலத்து நள்ளிரவில் தாண்டவம் செய்பவனும் ஆன எம்பெருமான் தேவர்கள் கூட்டம் தன்னைச் சூழ்ந்து தொடர உயர்ந்த மாளிகைகளையுடைய வீதியில் உலாவர நோக்கி,
கெடுதி யில்லாத சிறப்புள்ள அழகான சிலம் பணிந்த பாதங்களையுடைய பெண்கள், தாம் கண்டதால் ஆன கண் பார்வையால் நேர்ந்த தோஷங்களை எல்லாம் பெருமானே! எமக்கே சேர்ப்பதன் பொருட்டு வந்தனை, வந்ததும் எம் கை வளையல்களைக் கவர்ந்து கொண்டாய். மேலும் காம மயக்கமும் நீங்குதற்கு அரிய துன்பமும் கொடுத்தனை. இது உனக்குத் தகுதியாமோ என்று மனம் நொந்தவள் போல் வாய்மைபடக் கூறி,
அயர்ச்சி மிக்கு மனம் கசிந்து உருகி, உடல் வெண்மை நிறம் அடைந்து, நிமிரும் பூமாலை சூடிய அப்பேரிளம் பெண் மயக்கம் கொண்டவள் ஆனாள்.
ஆகாயத்தை அளாவி, மேகங்கள் வந்து தங்கும், நீண்ட சிகரங்களை யுடைய ஒளியுடைய பிறைமதி சிறப்புடன் அமர்ந்திருந்த செக்கர் வானம் போன்ற சடைமுடி யுடைய பெருமான் உலா வந்த வீதியில்,
கொட்டிக் கொண்டே யிருக்கும் இமைகள் சேரப் பெற்ற கண்களையும், இசை வந்து அமையும் இனிய மொழிகளையும் பருத்த பெரிய தோள்களையும் சிவந்த பவளம் போன்ற வாயையும் உடைய இப்பெண்களினுடைய ஆரவாரம் பெரிதாய் இருந்தது.
காப்பு
301. பெண்ணீர்மை காமின் பெருந்தோள் இணைகாமின்
உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீரக்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த(து) உலா.
தெளிவுரை : பெண்மையின் இயல்பைக் காத்துக் கொள்ளுங்கள்; பெருமை வாய்ந்த முன்கை வளையல் அணிந்த இரண்டு தோள்களையும் காத்துக் கொள்ளுங்கள். நினைக்கத் தக்க நேர்மையுள்ள மேகலையையும் அவிழாவண்ணம் அகப்படுத்துங்கள். ஏனெனில் தெளிந்த கங்கை நதியையும் கார்காலத்தில் மிக்கு மலரும் கொன்றையாகிய அழகிய மாலையையும் சூடிய கபாலியும், மழுவை ஏந்தியவனுமான பெருமான் ஊர்கின்ற விடையின் மேல் உலா வந்தான்.
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக