வியாழன், 25 ஜூன், 2015

உலகம் அளந்தார்! உள்ளம் அளக்கிறார்!

ராதே கிருஷ்ணா 26-06-2015







>> உலகம் அளந்தார்! உள்ளம் அளக்கிறார்! <<

மகாபலியின் ஆணவத்தை அழிக்க, திருமால் திரிவிக்ரமனாக எழுந்தருளினார். அந்த விஸ்வரூப கோலத்தில் உலகளந்த பெருமாள் என்னும் திருநாமத்துடன் காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கிறார். கச்சி ஊரகம் எனப்படும் இக்கோயிலுக்குள் நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. இங்கு திருவோணத் திருவிழா விசேஷநிகழ்ச்சிகள் நடக்கிறது.

தல வரலாறு: மலைநாட்டு மன்னன் மகாபலியின் ஆணவத்தை அடக்கி அவனை ஆட்கொள்ள எண்ணம் கொண்டார் விஷ்ணு. அவன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள வந்தார். மூன்றடி நிலம் யாசகம் கேட்டார். பலியும் சம்மதித்தான். அப்போது அவர் திரிவிக்ரம மூர்த்தியாக உயர்ந்து ஓரடியால் மண்ணையும், மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து விட்டு மூன்றாவது அடியை மகாபலியின் சிரசில் வைத்தார். அவன் பாதாள உலகைச் சென்றடைந்தான். தானம் வாங்க வந்த பெருமாளின் விஸ்வரூப தரிசனத்தைக் காண முடியாமல் போய் விட்டதே என வருந்தி, அங்கேயே தவத்தில் ஆழ்ந்தான். அவனுடைய தவத்திற்கு இணங்கி, சத்திய விரத க்ஷேத்திரம் என்னும் காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாளாக உயர்ந்து நின்று காட்சியளித்தார். அத்தலமே ஊரகம் என்னும் உலகளந்த பெருமாள் கோயில்.

உலகளந்த பெருமாள்: கருவறையில் மேற்கு நோக்கிய திருமுகத்துடன் உலகளந்த பெருமாள் அருள்பாலிக்கிறார். இடக்கரத்தில் இரு விரல்களையும், வலக்கரத்தில் ஒரு விரலையும் உயர்த்திக் காட்டி "இன்னும் ஒரு அடி நிலம் எங்கே?' என்று கேட்கிறார். இவருக்கு திருவிக்ரமன் என்ற பெயரும் உண்டு. தாயாருக்கு அமுதவல்லி நாச்சியார் என்பது திருநாமம்.

நான்கு திவ்யதேசம்: காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள 22 திவ்ய தேசங்களில் (தொண்டை நாட்டு தலங்கள்) இத்தலம் "கச்சி ஊரகம்' எனப்படுகிறது. "கச்சி' என்றால் காஞ்சிபுரம். ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள், இந்த ஒரே கோயிலுக்குள் இருக்கின்றன. அதாவது, 108 திவ்யதேசங்களில் நான்கை, இந்த ஒரே கோயிலுக்குள் தரிசித்து விடலாம். இந்த திவ்ய தேசப் பெருமாள்கள் தொண்டை மண்டலத்தின் எப்பகுதியில் இருந்து இங்கு வந்தனர் என்பதைக் கண்டறிய முடியவில்லை. வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்த இத்தல பெருமாள்கள், ஏதோ ஒரு காலகட்டத்தில் இங்கு வந்து சேர்ந்ததாகக் கூறுகின்றனர்.
நீரகத்தில் ஜெகதீசப்பெருமாளும்,நிலமங்கைவல்லியும் அருள்பாலிக்கின்றனர். காரகத்தில் கருணாகரப் பெருமாளும், பத்மாமணி நாச்சியாரும் வீற்றிருக்கின்றனர். கார்வானத்தில் கமலவல்லி நாச்சியாரோடு கார்வானப் பெருமாள் காட்சியளிக்கிறார்.

பேரகம் உரகத்தான்: சாதாரண மனிதனாக இருந்த மகாபலி, உலகளந்த பெருமாளின் நெடிய கோலத்தை முழுமையாகக் காண முடியாமல் பதைபதைத்து நின்றான். பெருமாளும் மனமிரங்கி, மிக எளிமையாக ஆதிசேஷன் மீது காட்சியளித்தார். இந்த இடமே "பேரகம்' எனப்படுகிறது. இங்கு பாம்பு வடிவில் பெருமாள் வீற்றிருக்கிறார். "உரகத்தான்' என்பது அவரது திருநாமம். "உரகம்' என்றால் "பாம்பு'. அப்பெயரே மருவி நாளடைவில் "ஊரகத்தான்' என்றாகி விட்டது. இவருக்கு திருமஞ்சனம் செய்து "திருக்கண்ணமுது' என்னும் பாயாசம் படைத்து வழிபட்டால் புத்திரப்பேறு உண்டாகும் என்பது ஐதீகம்.

சங்கு சக்கர ஆஞ்சநேயர்: உலகளந்த பெருமாளுக்கு எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதி விசேஷமானது. சங்கு சக்கரம் ஏந்திய நிலையில், நான்கு கரங்களுடன் இவர் அருள்பாலிக்கிறார். இரு கைகள் பெருமாளை வணங்கிய நிலையில் அஞ்சலி ஹஸ்தமாக விளங்குகிறது. இவருக்கு மூலம் நட்சத்திரம், சனிக்கிழமை வழிபாடு சிறப்பாக நடக்கிறது. இவரை வழிபட்டால் துணிச்சல் அதிகரிக்கும்.

திருவோண நிகழ்ச்சி: திருவோணத்தை ஒட்டி இந்த கோயிலில், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. காலை 4மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, 5மணிக்கு திருமஞ்சனம்(அபிஷேகம்), மாலை 6 மணிக்கு பெருமாள், தாயார் வீதியுலா நடக்கிறது. இந்த காட்சியை தரிசிப்பவர்கள் உயர்ந்தநிலையை அடைவர் என்பது ஐதீகம்.

திறக்கும்நேரம்: காலை 6.00- மதியம் 12.00, மாலை 4.00- இரவு 8.00.
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில்.
போன்: 94439 03450, 94425 53820, 97874 14773.



பித்ருக்கள் !!!

நாரதர் ஒரு முறை அகத்திய பெருமானை பித்ரு லோகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பல பித்ருக்கள் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதை அகத்தியர் பார்த்து திடுக்கிட்டார்.
நாரதரிடம், ”சுவாமி, ஏன் இந்த மூர்த்திகள் இவ்வாறு தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் என்ன தவறு புரிந்தனர்?” என்று வினவ நாரதர் குறுநகையுடன், ”முனிபுங்கவரே, அவர்கள் தவறேதும் செய்யவில்லை. பூமியில் அவருடைய வழித் தோன்றல்கள் செய்த மறந்த காரியத்தால் இங்கு இவர்கள் தலை கீழாகத் தொங்கும் நிலை ஏற்பட்டது,” என்றார்.
அகத்தியர், ”சுவாமி, அப்படியானால் அவர் யார் என்று சொன்னால் அவர் காலில் விழுந்து வணங்கியாவது இந்த முதியவர்களை அவலமான இந்தச் சூழ்நிலையிலிருந்து மீட்க முயற்சி செய்கிறேன்,” என்று பணிவுடன் கூறினார்.
நாரதர், ”முனிசிரேஷ்டரே, நீங்கள் யார் காலிலும் விழ வேண்டிய அவசியமில்லை. இவர்கள் அனைவரும் உங்களுடைய மூதாதையர்கள்தான். நீங்கள் இதுவரை தவம், யோகம் என்று மூழ்கி விட்டதால் திருமணம் என்ற தெய்வீக பந்தத்தைப் பற்றி நினைக்கவில்லை. நீங்கள் திருமணம் செய்து கொண்டால்தான் உங்களுடைய மனிதப் பிறவி பூர்த்தியாகும். அப்போது நீங்கள் அளிக்கும் தர்ப்பணம்தான் இவர்களை இந்த நிலையிலிருந்து விடுவிக்கும்,” என்று கூறி முடித்தார்.
அதன் பின்னரே ஸ்ரீஅகத்தியர் லோபா மாதாவை மணந்து தன்னுடைய மூதாதையர்களை பித்ரு லோகத்திலிருந்து விடுவித்து அவர்கள் கைலாயத்தை அடைய வழிவகுத்தார்.
http://vhichu75.blogspot.in/















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக