வியாழன், 18 ஜூன், 2015

ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா உணர்த்திய அத்வைதம்

ராதே கிருஷ்ணா 18-06-2015


நம் கலி தீர ஜகத் குருநாதர் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா உணர்த்திய அத்வைதம்
இது த்வைதம் அன்று! அத்வைதம்!
இரண்டாவது ஒன்று இருந்தால், அது நம்மைவிடச் சக்தி உள்ளதாக இருந்தால், பயம் உண்டாகிறது. அழகாக இருந்தால் ஆசை உண்டாகிறது; சித்த விகாரம் உண்டாகிறது. இரண்டாவது இல்லாவிட்டால் ஆசை இல்லை; த்வேஷம் இல்லை; பயம் இல்லை. இப்படி இரண்டாவது இல்லாமல் பண்ணுவது தான் அத்வைதம். இரண்டாவது இல்லையானால் பயம் நீங்குகிறதென்று உபநிஷத் சொல்கிறது. இரண்டாவதாக ஒன்றை நினைத்து விட்டாயோ பயத்துக்கு விதை போட்டு விட்டாய் என்கிறது: "த்விதீயாத்வை பயம் பவதி"
இரண்டாவது அன்று! ஒளிவீசும் ஒன்று அத்வைதம்!
ஒளிவீசும் ஒன்று அத்வைதம்!
அத்வைதம் ஒன்று! அத்வைதம் ஒன்று!
ஒன்று! என்று உணர்த்திய உயர்வான அத்வைதம்!
உணர்த்திய உயர்வான அத்வைதம் காஞ்சி ஜகத்குருநாதர் அத்வைதம்
கலி தீர்த்த காஞ்சி ஜகத் குருநாதர் சங்கரரின் அத்வைதம்
காத்தருள் புரியும் காஞ்சி ஜகத்குருவின் அத்வைதம்
கருணையே வடிவான காஞ்சி ஜகத்குருவின் அத்வைதம்
தன்னலமில்லாத தாயவரின் அத்வைதம்
தன்னிலை மறந்துருகும் அன்பரைக் காக்கும் அத்வைதம்
இன்னல்களைப் போக்கும் அருளை சேர்த்திருக்கும்
ஈடிணை இல்லாத ஈஸ்வரனின் அத்வைதம்...
உணர்த்திய உயர்வான அத்வைதம்
இது ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா
உன்னுள் நீ எனை நினைத்தாய்
உன்னுறு மட்டுமோ நான்?
உரு தாண்டியே திகழ்வேன்!
உன் அகத்தில் பிரதிபலிக்கும்
உன்னுருவைக் காண்கின்றாய்
உள்ள உருவெல்லாம் பிரதிபலிக்கும்
தடாகமும் நானே, பல்லுயிரும் நானே
விருக்ஷமும் அதேறும் ,பூச்சி புழுவும்
எறும்பு ஈறாய் ஜீவன் அனைத்தும் நானே
என்னை உணரவே பிரபஞ்சம் உணர்வாய்! உன்னுள்
உன்னைத் தாண்டினால் நீ எனை உணர்வாய் !(உணர்த்தும் அத்வைதம்)
இது நான்-
புண்ணியம் வழங்கிடும் புண்ணியன் உம் தோற்றம்
புண்ணியத்தாலே மண்ணினில் கண்டதும்
புண்ணியம் வேண்டியே பொன்னடி பணிந்திட
புண்ணியம் வருமே உம்மருளாலே….
உம்மருளாலே உம் தாள் வணங்கி
உம்மருள் வேண்டி உம் நிழல் நாடிட
உம்மருள் தருவாய் அவனியில் வாழ்ந்திட
உம்மருள் வருமே உம்மில் சேர்த்திட.
இது ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா-
எண்ணுவார் மனதில் எல்லாம் ஒளிவீசும்
நறும்புகை மணம் சுமக்கும் காற்றும் நானே
மணமும், அதன் குணமும், காணமுடியாததும்,
காணும் தினமும் விடியலும், உறக்கமும் நானே!
நீ என்பதும் நானென்பதும் ஒன்றே என்பதறிய
நீ தன்னுள் காணவே புரியும், பிரபஞ்ச சக்தி நாமே!
என்னை(அத்வைதம்) நீ உணர
அழகிய முகம் தோன்றும்
செவியில் வேணுகானம் இனிமையாய் கேட்கும் .
இகபர சுகமனைத்தும் இனிதே அமையும்
இவ்வுலகில் வாழும் காலமெல்லாம் சொர்க்கமாகும்.
எல்லாம் ஈச்வரனாகி ஒன்றாகி விட்டால் எந்தக் கிளர்ச்சியும் இல்லை. ஒரே சாந்திதான். அப்போது எல்லாம் நாமாக ஆகிறோம். நமக்கே நம் மேல் ஆசை அப்பொழுது ஏற்படாது. ஆசையில்லாவிட்டால் பாபம் இல்லை. பாபம் இல்லையென்றால் தேகம் இல்லை. இந்த தேகம் இருக்கிறபோதே அது இல்லை என்ற ஞானம் உண்டாகிவிடும். இது போனபின் இன்னொரு தேகம் வராது. அப்படியே அத்விதீயமான ஆனந்தத்தோடு ஒன்றாகியிருப்போம். தேஹம் இல்லாவிட்டால் துக்கமே இல்லை. அந்த துக்க நிவர்த்திக்கு அத்வைதம் மருந்து. இரண்டாவது இல்லாமற் பண்ணுவது அத்வைதம். எல்லாம் பகவானாகப் பார்ப்பது அத்வைதம். உள்ளதை உள்ளபடி பார்ப்பதுதான் அத்வைதம்.
பிரபஞ்சத்திலுள்ள ஸகல வஸ்துக்களும் பொய்யாகப் போய், அவற்றைக் கண்ட அறிவு ஒன்றுதான் மிச்சம். ஸத்யமான வஸ்து அதுதான். அதற்குத்தான் அத்வைதம் என்று பெயர்.
இது உண்மை! இது உண்மை! இது உண்மை!
இது சத்தியம்! இது சத்தியம்!
இந்த நிலைக்கு வருவதற்கு ஸுலபமான ஸாதனம் பக்தி உபாஸனை என்று அப்பைய தீக்ஷிதர் சொல்லியிருக்கிறார். அதை எல்லோரும் அநுஸரித்து அத்வைத ஸித்தியை அடைய வேண்டும்.
ஸ்ரீ மஹா பெரியவா கதி என்று உம் பதம் சரணடைந்தேன்!
உம்முடன் நான் வாழ்ந்திட்ட காலமெல்லாம் சொர்க்கம்.
உம்மை உணரவே பிரபஞ்சம் உணர்ந்து தாம் அத்வைதம் உணர்ந்து
இவ்வுலகில் வாழும் காலமெல்லாம் சொர்க்கமாகும்
விதி என்ன செய்யும் ஐயா ? உம் இதயமே குளிர்ந்தால்
மண்ணினில் உணர்ந்து கண்ட அத்வைதம்!
உன்னைத் தாண்டினால் நீ எனை உணர்வாய் ! என உணர்த்திய அத்வைதம்!
சரணாகதி அடைந்தோர்க்கு அருள் மழை பொழிந்த மஹாமுனிவர் தாள் பணிவோம்!
மறுபடி மறுபடி உம் திருவடி சரணம்!
நடமாடும் தெய்வமாக நம்மிடையே வாழ்ந்த சாக்ஷாத்
மஹேஸ்வர ஸ்வரூபமாகிய கலி தீர்த்த ஜகத் குருநாதர் ஸ்ரீ மஹா பெரியவா!
அத்வைத சங்கர ஸ்ரீ வித்யா சங்கர ஸ்ரீ வித்யா சங்கர வினய சங்கர
ஸ்ரீ வித்யா சங்கர வினய சங்கர ஸ்ரீ மங்கள சங்கர ஸ்ரீ ஜகத் குரு சங்கர
ஸ்ரீ மங்கள நாயக போற்றி! ஸ்ரீ மஹா ஸ்வாமியே! போற்றி போற்றி!
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர
Dr.KRISHNAMOORTHI BALASUBRAMANIAN
Courtesy: THE MAHAN OF THIS MILLINEUM


முதல் தெய்வம்  - பெற்றோர் 

மிக மிக நல்ல நாள் - இன்று 

மிகப்பெரிய வெகுமதி  - மன்னிப்பு 

மிகவும் வேண்டாதது - வெறுப்பு 

மிகப்பெரிய தேவை - புத்திசாலித்தனம் 

மிகக்கொடிய நோய் - பேராசை 

மிகவும் சுலபமானது - குற்றம் கானல் 

மிகவும் கீழ்த்தரமானது - பொறாமை 

நம்பக்கூடாதது - வதந்தி 

ஆபத்தை விளைவிப்பது - அதிகப்பேச்சு 

செய்யக்கூடாதது - துரோகம் 

செய்யவேண்டியது - உதவி 

விலக்கவேண்டியது - வீண் வாதம் 

உயர்வுக்கு வழி - உழைப்பு 

நழுவக்கூடாதது - வாய்ப்பு 

பிரியக்கூடாதது - நட்பு 

மறக்கக்கூடாதது - நன்றி



வரிகள்: தியாகராஜர்
ராகம்: குறிஞ்சி
சீதா கல்யாண வைபோகமே!
ராமா கல்யாண வைபோகமே!
பவனஜ ஸ்துதி பாத்ர, பாவன சரித்ர
ரவி சோம வர நேத்ர, ரமணீய காத்ர
அனுமானும் துதி செய்யும், புண்ணிய சரிதா!
கதிர்மதியக் கண்ணாளா, மனத்துக்கு இனியா!
(சீதா கல்யாண)
பக்த ஜன பரிபால, பரித சர ஜால
புக்தி முக்தி தலீல, பூதேவ பால
தாழாதே சர மழையால், அன்பர்களைக் காக்கும்!
இம்மைக்கும் மறுமைக்கும், எங்களையும் சேர்க்கும்!
(சீதா கல்யாண)
பாமரா அசுர பீம, பரிபூர்ண காம
சியாம ஜகத் அபிராம, சாகேத தாம
அல்லார்க்கு மருள் அருளி, நல்லார்க்கும் அருளும்!
அயோத்தி நகர் அபிராமன், கார்மேனி்த் திரளும்!
(சீதா கல்யாண)
சர்வ லோக ஆதார, சமர் ஏக வீர
கர்வ மானவ தூர, கனக அக தீர
பார்க் களத்தில் ஆதாரம், போர்க் களத்தில் வீரம்!
சீர்க் குணங்கள் உனது ஆரம், சினந்தார்க்கு தூரம்!
(சீதா கல்யாண)
நிகம ஆகம விஹார, நிருபம சரீர
நக தர அக விதார, நதலோக ஆதார
ஆகமங்கள் வேதங்களும், உன் அழகு பார்க்கும்!
ஆறாத பாவங்களை, அறுத்து(ன்) அடி சேர்க்கும்!
(சீதா கல்யாண)
பரமேச நுத கீத பவ ஜலதி போத
தரணி குல சஞ்சாத தியாக ராஜ நுத
சிவபெருமான் உளம் பாடும், பிறவிக் கடல் கலமே!
தியாகராஜன் உனைத் துதிக்க, தரணி வளர் நலமே!
(சீதா கல்யாண)



நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!
(கற்பக வல்லி)
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்
நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!
(கற்பக வல்லி)
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!
(கற்பக வல்லி)
அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் - அருள்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!
(கற்பக வல்லி)
மயிலாய் மாறி, "அவரே" எனத் தவம் கிடக்கும் "கற்பகம்"
வரிகள்: யாழ்ப்பாணம் வீரமணி ஐயர்
குரல்: TM சௌந்தரராஜன்
ராகம்: ராகமலிகை
தாளம்: ஆதி







"பெரியவாள் மரத்தில் ஏறி உட்கார்ந்த விளையாட்டு"

(பல்லக்கு இரண்டு சம்பவங்கள்)

அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா

புத்தகம்-தாயுமான மகான்-3

தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஒரு நாள் ஸ்ரீ பெரியவா ரிப்போர்ட்டர் எல்லோரையும்
கூப்பிடு என்றார். எனக்கு ஒன்றும் புரியாமல், மடத்தின்
அலுவகத்தில் சொல்ல அவர்கள் ரிப்போர்ட்டரை
வரவழைத்தார்கள். அவர்களிடம்,....

"என்னை ஸ்ரீ பெரியவா மகான் தெய்வம் என்கிறார்கள்.
அவர் எல்லா இடமும் நடந்தே போகிறார் என்றும்
எழுதியிருக்கு. அது தப்பு. நான் பல்லக்கில் போயிருக்கேன்.
நான் பொய் சொல்லக்கூடாது.நீங்கள் எழுதும்போது
பல்லக்கிலும் போவார், நடந்தும் போவார் என்று எழுதவும்.
என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இன்றும் மடத்திற்கு பக்தர்கள் வருகிறார்கள் என்றால்
மகா பெரியவா சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.

ஒருமுறை ஸ்ரீ பெரியவா பல்லக்கில் போகும்போது
திடீர் என்று ஒரு மரக்கிளையை பற்றிக்கொண்டு மரத்தின்
மீது ஏறி உட்கார்ந்து விட்டார். இது பல்லக்கு தூக்கிக்கொண்டுபோகிறவர்களுக்குத் தெரியாது.சிறிது தூரம் போன உடனே அவர்கள் பல்லக்கு கனமாக இருப்பதை உணர்ந்துஅவர்களுக்குள் "என்னடா பல்லாக்கு இவ்வளவு கனமாக இருக்கு" என்று பேசிக்கொண்டே பல்லாக்கை ,
பார்க்க பல்லாக்கிலே ஸ்ரீபெரியவா இல்லை.

அதாவது, ஸ்ரீ மகாபெரியவா பல்லக்கில் இருக்கும்போது,
பல்லக்கு கனமாக இருக்காது. பல்லக்கில் இல்லையென்றால் பல்லக்கு கனமாக இருக்கும்.

அங்கிருந்தவர்களிடம் ஒரு சைக்கிள் வாங்கிக் கொண்டு
ஸ்ரீபெரியவாளை தேடி போனதில், ஸ்ரீ பெரியவா மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டிருக்கார்.

இப்படியெல்லாம் ஸ்ரீபெரியவா விளையாடுவார்


ராம் ராம், இந்த நாள்இனிமையாக அமைய நம் ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி பெரியவா அவர்கள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 58
சோதித்துத் துலக்குவது
பிரகாசம் ஜாஸ்தியாவதற்கே ஒரு மணியைக் கடைசல் பிடிக்கிற மாதிரி, மாணாக்கன் சோபிக்கவேண்டுமென்றே அந்நாள் குரு அவனை எவ்வளவோ சோதித்தார். பாடமே சொல்லித் தராமல் நீண்டகாலம் வேலை மட்டும் வாங்கி அவனைப் பணிவில் புடம் போட்ட ரிஷிகளும் உண்டு.
உதாரணமாக1 உபகோஸலன் என்று ஒரு சிஷ்யன். குருவின் பேர் ஜாபால ஸத்யகாமர். இவர் அந்தக்கால ‘ஸிலிபஸ்’, ‘கர்ரிகுலம்’ இதுகளின்படி பன்னிரண்டு வருஷங்களில் அநேக சிஷ்யர்களுக்கு வேத சாஸ்த்ர சிஷை கொடுத்தார். ஆனால் இந்த உபகோஸலன் என்கிற பையனை மட்டும் பாடம் கேட்க அநுமதிக்கவில்லை. பன்னிரண்டு வருஷமும் தம்முடைய அக்னிகளைக் கவனித்துக் கொள்கிற பொறுப்பிலேயே அவனை ஈடுபடுத்தியிருந்தார்2. அந்தப் பிள்ளையும் முணமுணக்கவில்லை. குருகுலத்தில் பன்னிரண்டு வருஷம் வஸித்தும் ஒரு பாடம்கூடக் கேட்காமல், அவர் சொன்ன கார்யத்தையே பண்ணிக் கொண்டிருந்தது.
அத்யயனம் பூர்த்தியானவுடன் ஸமாவர்த்தனம் என்று பிரம்மசாரிக்கு (சிஷ்யனுக்கு) ஒரு ஸம்ஸ்காரம் பண்ணி குருகுலத்திலிருந்து அகத்துக்குத் திருப்பி அனுப்புவார்களென்றும் அதற்கப்புறம் அவன் கல்யாணம் செய்து கொண்டு க்ருஹஸ்தாச்ரமம் ஏற்க வேண்டுமென்றும் சொன்னேனல்லவா? இந்த மாதிரி மற்றப் பசங்களுக்கு ஸத்யகாமர் ஸமாவர்த்தனமும் பண்ணிவிட்டார். உபகோஸலனை மட்டும் அப்படியே ignore (அலக்ஷ்யம்) பண்ணிவிட்டு – அல்லது பண்ணின மாதிரி!
அப்போதும் அந்தப் பிள்ளை பாட்டுக்குப் பொறுமையாகவே இருந்தது.
1இக்கதை சாந்தோக்ய உபநிஷத்தில் (4-10) உள்ளது.
2 வைதிகரின் மூன்று அக்னிகளைக் குறித்து இரண்டாம் பகுதியில் ‘கிருஹஸ்தாச்ரமம்’ என்ற உரையில் “அக்னி காரியங்கள்” என்ற உட்பிரிவில் பார்க்க.
குரு பத்னி
ஆனால் ஸத்யாகமருடைய பத்னிக்குத்தான் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. அவள் அவரிடம் போய், “இந்தப் பிள்ளை நல்ல ப்ரம்மசார்யத்தோடு, தபஸ்ஸோடு இத்தனை வருஷம் உம்முடைய அக்னிகளைப் போஷித்து வந்திருக்கிறான். நீரானால் அவனுக்குப் பாடமே சொல்லித் தரக் காணோம். இந்த அக்னிகள் உம்மை சபிக்காமலிருக்க வேண்டுமானால் இந்த ஸாதுப் பிள்ளைக்கு இப்போதிலிருந்தாவது பாடம் ஆரம்பியும்” என்று சண்டைக்கு வந்துவிட்டாள்.
சண்டை என்றாலும் அதிலேயும் ரஸம் இருக்கிறது. அவள் சொன்னதிலிருந்து அநேக ரஸமான விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். முதலில், குரு பத்னி என்பவள் எப்படி குருவைவிடவும் சீஷப்பிள்ளைகளிடம் வாஞ்சையோடு இருந்தாள், அகத்தைவிட்டு வந்த குழந்தைகளுக்கு எப்படி அம்மாவாக இருந்தாள் என்று தெரிகிறது.
தர்ம பத்னிகளில் உள்ள இரண்டு தினுஸில் ஒன்றும் இங்கே தெரிகிறது. பத்னியின் தர்மம் புருஷன் சொல்வது தர்மமா அதர்மமா என்றே பார்க்காமல் அதன்படி செய்ய வேண்டுமென்று கருதும் பதிவ்ரதைகள் ஒரு தினுஸு. நளாயினி இப்படித்தான் அழுகிச் சொட்டும் புருஷனை அவனுடைய இச்சா பூர்த்திக்காகத் தகாத இடத்துக்குத் தூக்கிக்கொண்டு போனாள். இன்னொரு தினுஸு, பதியானவன் தர்மத்திலிருந்து தப்பிவிடக்கூடாதே என்ற விசாரத்தில் அவனுக்கே தர்மங்களை நினைப்பூட்டுவதுதான் பத்னியின் கடமை என்று கருதும் பதிவ்ரதைள். இப்படித்தான் ஸீதை ராமரிடம், அவர் அவளை விட்டுக் காட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, “எந்தக் கஷ்ட நஷ்டத்திலும் பதியை விட்டுப் பிரியாமலிருப்பதுதானே ஸ்த்ரீ தர்மம்? இந்த தர்மத்தை உங்களுடைய தாயாருக்கு எடுத்துக் காட்டித்தானே அவர் உங்களோடு காட்டுக்கு வராமல் உங்கள் அப்பாவின் பக்கத்தில் இருக்கும்படிப் பண்ணியிருக்கிறீர்கள்? அப்படியிருக்க எனக்கு மட்டும் அந்த தர்மம் இல்லையா என்ன? என்னைக் காட்டுக்கு வராமல் இங்கேயே இருக்க வேண்டுமென்று நீங்கள் சொல்வது எப்படி நியாயம்?” என்று நிரம்ப வாதம் பண்ணிமுடிவில் ராமரையும் ஸம்மதிக்கச் செய்தாள்.
“அக்னி கோபித்துக் கொண்டுவிடும்” என்று ஸத்யாகாம ரிஷியின் பத்னி அவரிடம் சொன்னது, “உம்மாச்சி கண்ணைக் குத்திவிடும்” என்று குழந்தைகளை நாம் பயமுறுத்துகிற மாதிரி இல்லை. வாஸ்தவமாகவே ரிஷிகளின் க்ருஹங்களில் திவ்ய சக்திகள் உயிருள்ள ஸாந்நித்யத்தோடு இருந்ததால் அவர்கள் தர்ம விருத்தமாகப் போனால் அவை அவர்களிடம் கோபம் கொள்ளத்தான் செய்யும். ‘உபகோஸலன் உபதேசமாகாமல் இப்படிப் பல வருஷங்களாக இருக்கிறானே’ என்று அவனுக்காகக் கவலைப்பட்டாற்போலவே, ‘இப்படிப் பதி உபதேசிக்காமலிருக்கிறாரே! இவரை அந்தப் பிள்ளை காத்து வளர்க்கிற இவருடைய அக்னியே சபித்துவிடாமலிருக்க வேண்டுமே!’ என்றும் வாஸ்தவமாகவே அந்த அம்மாள் கவலை பட்டிருக்கிறாள்.
அக்னிகள் அந்த ஆச்ரமத்தில் ரொம்பவும் ஜீவசக்தியோடு ஸாந்நித்யமாகத்தான் இருந்தன என்பதும் மேலே போகிற கதையில் தெரிகிறது.
அவள் அப்படிச் சொல்லியும் ரிஷி பாட்டுக்கு, இன்னும் சோதித்துப் பார்ப்போமென்கிறார்போல், வெளியே போய் விட்டார்.
‘குரு பத்னி சொல்லியும் குரு கேட்கவில்லையே! இப்படி நம் நிமித்தமாக அவர்களுக்குள் அபிப்ராய பேதம் வேறே ஏற்பட்டுவிட்டதே’ என்றெல்லாம் உபகோஸலனுக்கு வேதனையாகிவிட்டது. அவனுக்குச் சாப்பாடே இறங்கவில்லை.
“ஏண்டா கொழந்தே, சாப்பிடாமலிருக்கே?” என்று குருபத்னி விசாரமாகக் கேட்டாள்.
“மனோ வ்யாதிதான். சாப்பாடு கேட்கமாட்டேன் என்கிறது” என்றான் பையன்.

From Periva forum
காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?
சதா ஏன் காயத்ரி பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்? காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?- காஞ்சி மஹா பெரியவர்
சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம்.
த்ரிபம் ஏவது வேதேப்ய:பாதம் பாதமதூதுஹம் (மநுஸ்மிருதி)
காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?
ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம்.
காயத்ரீ என்றால், "எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது"என்பது அர்த்தம்.
காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே !
கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை; பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது,
காயத்ரீம் சந்தஸாம் மாதா
என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு 'த்ரிபதா' காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது.
காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும்.
மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தேஹோ தேவாலய:ப்ரக்தோ ஜீவ:ப்ரோக்தோ ஸநாதன:|
தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம். ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும். வீட்டுக்கும் தேவாலயத்திற்கும் வித்தியாஸம்இருக்கிறது. ஆனாலும் தேவாலயத்தைப் போல அவ்வளவு கடுமையாக அசுத்தம் வராமல் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மூலையிலாவது வாய் கொப்புளிக்கவும்,ஜல மல விஸர்ஜனத்துக்கும், பஹிஷ்டா (மாதவிடாய்) ஸ்திரீக்கும் இடம் வைக்கிறோம். Flat system -ல் கடைசியில் சொன்னது போய், அநாசார மயமாகி விட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆலயத்தில் கொஞ்சங்கூட இடமில்லையல்லவா?
ஒரு தேசத்தில் வீடும் வேண்டும், ஆலயமும் வேண்டும். அதே மாதிரி ஜனசமூகத்தில் லோக காரியங்களைச் செய்யும் வீடு மாதிரியான தேகங்கள், ஆத்ம காரியத்தைச் செய்யும் ஆலயம் மாதிரியான தேகங்கள் இரண்டும் வேண்டும். தேஹங்களுக்கு ஆத்மாவை ரக்ஷிப்பவை தேவாலயத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டிய பிராம்மண தேஹங்கள். வேத மந்திர சக்தியை ரக்ஷிக்க வேண்டியவைகளாதலால் ஆலயம்போல் அதிக பரிசுத்தமாக அந்த தேகங்கள் இருக்க வேண்டும். அசுத்தியான பதார்த்தங்களை உள்ளே சேர்க்கக் கூடாது.
மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. "மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?"என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக்கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக்கூடாது. "பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல.
லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது"என்று (வாஸிஷ்ட ஸ்ம்ருதி'யில்) சொல்லியிருக்கிறது:"ப்ராஹ்மணஸ்ய சரீரம் து நோபபோகாய கல்பதே!இஹ க்லேசாய மஹதே". லோக க்ஷேமத்திற்காக மந்த்ரங்களை அப்யஸிக்க வேண்டும் என்பதற்காகவேதான் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செய்து கொள்வது. வேத மந்திரங்களை ரக்ஷிப்பதற்காகவே-
அதன் மூலம் ஸகல ஜீவ ஜந்துக்களையும் ரக்ஷிப்பதற்காகவே - தேஹத்தை வைத்துக் கொள்ள வேண்டும். 'எல்லோரும் ஸெளகரியமான தொழில் பண்ணுகிறார்களே!ஏன் நாம் செய்யக் கூடாது?என்று பிராம்மணன் நினைக்கக் கூடாது. தன்னுடைய கடமையை நன்றாகச் செய்துவிட்டுப் பிறகுதான் ஜீவனோபாயத்தை நினைக்க வேண்டும். முன்பு இவன் பிராம்மண தர்மங்களைச் செய்தாலே போதுமென்று ராஜாவும் ஸமூஹமும் இவனுக்கு மானியம், ஸம்பாவனை செய்து வாழ வசதி தந்தார்கள்.
இப்போது நிலைமை மாறிவிட்டதால், பணத்துக்கும் கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியதுதான். ஆனால் நிரம்பப் பணத்தை ஸம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படக்கூடாது. இதற்காக அநாசார வழிகளில் பிரவேசிக்கக் கூடாது. பிராம்மணர்களுக்கு தரித்திர நிலை வேண்டியதுதான். இன்பங்களைத் தேடாமல் காயக் காயக் கிடந்தால்தான் இவனுக்கு ஞானப் பிரகாசம் உண்டாகும். அதனால் லோகம் வாழும். கண்ட தேசங்களுக்குச் சென்று ஆசார அநுஷ்டானங்களை விட்டுவிட்டு ஸம்பாதிக்கிற ஐச்வர்யம் இவனுக்கு வேண்டாம். அதுபடி ஸம்பாதிக்காவிட்டால் ஒன்றும் முடியாது என்பது இல்லை.
லோகத்தில் மந்திர சக்தியைக் காப்பாற்றிக் கொண்டு தன்னுடைய தர்மத்தை அநுஷ்டிப்பது முதல் கடமை. ஸம்பாதிப்பது secondary (இரண்டாவது) தான். மந்திர சக்தி என்ற அக்கினியை இவன் காப்பாற்றிக் கொண்டு வந்தால் அது எல்லோருக்கும் க்ஷேமத்தை உண்டாக்கும். லோகத்தில் எவருக்குக் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்திக்கும் சக்தி பிராம்மணனுக்கு மந்திர சக்தியின் மூலம் இருக்க வேண்டும். யாராவது கஷ்ட காலத்தில் வந்து பிரார்த்தித்தால், அவன் பண்ணுவதைத்தான் நானும் பண்ணுகிறேன், உனக்கு இருக்கிற சக்திதான் எனக்கும் இருக்கிறது"என்று ஒரு பிராம்மணன் சொன்னால் அவனுடைய ஜன்மா வீண்.
மந்திர சக்தியாகிய அக்கினி இப்பொழுது பெரும்பாலும் அணைந்திருக்கிறது. பிராம்மண தேஹம் விகாரம் ஆகிவிட்டது. அதில் அசுத்தமான பதார்த்தங்கள் சேர்க்கப் படுகின்றன. ஆனால், ஒரு பொறி மட்டும் அணையாமல் இருக்கிறது. அதை விருத்தி பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் எப்பொழுதாவது பற்றிக்கொள்ளும். அந்த நெருப்புப் பொறிதான் காயத்ரீ. அது பரம்பரையாக வந்திருக்கிறது.
மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராம்மணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்ரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் ப்ராம்மணர்கள் என்று பெயரளவாது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்ப்ராம்மணன்; கெட்டுப்போன ப்ராம்மணன். கெட்டாலும் 'ப்ராம்மணன்' என்ற பேராவது இருக்கிறது! மறுபடியும் பிராம்மணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்றுதலைமுறையாக விட்டுவிட்டால் பிராம்மணத்வம் அடியோடு போய் விடுகிறது. அவன் மறுபடியும் பிராம்மணனாக மாட்டான். அவன் பிரம்மபந்துதான்;அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன்தான்!அப்படியே க்ஷத்ரியன் காயத்ரீயை விட்டுவிட்டால் க்ஷத்ரிய பந்துவாகிறனான்;வைசியன் வைசிய பந்துவாகிறான்.
ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப் படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.
ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அநாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !





யானக்கும்,நாய்க்கும் உள்ள பெரியவா பக்தி"

"இந்த பக்தி உணர்வு மனிதர் களான நமக்கும் இருக்கட்டும்."

2013-போஸ்ட் இது.

காஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார். அந்த மடத்தில் இருந்த யானை மகாப் பெரியவரைக் கண்டகாõல் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும்

. பெரியவரும் யானையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார். ஒருநாள் இரவில் யானையைக் கட்டியிருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. மறுநாள் பாகனும், மடத்து ஆட்களும் காட்டில் யானையைத் தேடி அலைந்தும் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. சிலநாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கி.மீ.,தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சித்தான். அது வர மறுத்து அடம்பிடித்தது. விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று, யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார். யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது. பெரியவர் அதைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார். இதேபோல, யானையிடம் சிக்கிய பக்தரைக் காத்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. சிதம்பரத்தில் ஆடிட்டராக இருந்தவர் பாலசுப்ரமண்யம். இவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பரம்பரையில் வந்தவர். அவர் மகாபெரியவரின் தீவிரபக்தர். எப்போதும் சந்திரசேகரா ஈசா என்று உச்சரிக்கும் வழக்கம் கொண்டவர். ஒருநாள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சென்ற ஆடிட்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோயில் யானைக்கு மதம் பிடித்து வந்தவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது ஆடிட்டர் உள்ளே நுழைந்தார். அது அவரை கோபத்துடன் தூக்கியது. அவர் பயத்தில் நடுங்கினார். ஆனால், வாய் மட்டும் சந்திரசேகரா ஈசா என்ற நாமத்தை சொல்ல மறக்கவில்லை. அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.

மதம் கொண்ட யானை ஒரு நிமிஷத்தில் அமைதியானது. ஆடிட்டரை கீழே இறக்கி விட்டுவிட்டு பாகனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து மண்டியிட்டது. பக்தர்கள் இதைப் பார்த்து அதிசயப்பட்டனர். சுவாமிகளின் மீது நாய்க்கும் கூட பக்தி உண்டு. 1927ல் மடத்தில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது. மடத்து பொருட்களையும், கால்நடை களையும் பாதுகாத்து வந்தது. சுவாமிகள் ஒவ்வொரு நாளும் நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகி விட்டதா? என்று அக்கறையாய் விசாரிப்பார். அவரைக் கண்டவுடன் அது சுற்றிச் சுற்றிவரும். ஒருமுறை சிறுவன் ஒருவன் அந்த நாயைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தினான். அதன் பின் அது பார்ப்பவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது. மடத்து அதிகாரிகள் நாயை 40 கி.மீ., தூரத்தில் இருக்கும் கிராமத்தில் கொண்டு விட்டுவிட்டு வந்தனர். மகாபெரியவருக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், நாயை விட்டு வந்தவர்கள் மடத்திற்கு வருவதற்கு முன் நாய் மடத்திற்கு வந்து சேர்ந்தது. மடத்து ஆட்களிடம், நாய் வந்து விட்டதா? என்று கேட்டார் பெரியவர். நாயும் அன்போடு பெரியவரிடம் வந்து நின்று சாந்தமானது. மடத்தில் இருப்பவர்கள்

பெரியவர் செய்த அற்புதத்தை எண்ணி வியந்தனர். மடத்து நாய்க்கு இருந்த பக்தி உணர்வு மனிதர் களான நமக்கு இருக்கட்டும்.""




"மரத்தைத் தண்ணீரில் போடு!"

காஞ்சிப் பெரியவர்கள் ஒன்று கூறியிருக்கிறார்கள்:

வலையில் படித்த அருள்வாக்கு

“கிணற்று நீருக்குள் நீரை நிரப்பிக்கொண்ட குடத்தை இழுக்கும்போது கனம் தெரியவில்லை; ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது.

எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்தில் உருட்டித்தான் புரட்டி இழுப்பது வழக்கம்.

அதேமாதிரி நம் துன்பங்களையெல்லாம் `ஞானம்’ என்னும் தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனால், தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரித் துக்கம் பரமலேசாகி விடும்.”

லெளகீகத்தில் இருந்து சுத்தமாக விடுபட்டு விட்ட ஒரு சந்நியாசி, லெளகீக வாழ்வில் துக்கத்தைக் குறைப்பதற்குச் சொல்லும் அற்புத வழி அது.

இந்துமதம் லெளகீகத்தையே முதற்படியாகக் கொண்டது என்பதற்கு சாட்சி.

வாழ்வைப் பற்றிய சிக்கலில் மனதை ஈடுபடுத்திக் கொண்டு குழம்பித் தவிக்கும் கோடானுகோடி மக்களுக்கு இந்து மதம் ஒரு ஆறுதல் சொல்கிறது.

சித்தம் தெளிவற்றிருந்தால் பிரமை பிடித்து விடுகிறது. அது தெளியும்போது, ஞானஒளி பெற்று விடுகிறது.

இக வாழ்க்கையைச் சுகமாக்கித் தர, பிற மதங்கள் செய்யாத முயற்சியை இந்து மதம் செய்கிறது.

துக்கமே இல்லாத சந்நியாசிகள்கூடத் துக்கத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்.

மரணமே இல்லாத பரமாத்மாகூட மரணத்தைப் பற்றிப் பேசுகிறது.

எங்கே எது இல்லை? காட்டில் மட்டுந்தானா முள் இருக்கிறது? அது ரோட்டிலும் இருக்கிறது! பார்த்து நடப்பவன் காட்டில்கூட நடந்துவிட முடியும்; பாராமல் நடப்பவன் ரோட்டில்கூட நடக்க முடியாது.

கவலை என்பது ஒரு வலை.

தனக்குத்தானே அதை வீசிக் கொள்கிறவர்கள் உண்டு.

பல நேரங்களில் ஆண்டவனும் அதை வீசுவதுண்டு.

வலைக்குத் தப்பிய மீன்கள், நீர் வற்றிவிட்டால், மரணத்துக்குத் தப்புவதில்லை.

காலம்தான் வித்தியாசம். சில முந்திக் கொள்கின்றன. சில பிந்திக் கொள்கின்றன.

ஒவ்வொருவன் கண்ணுக்கும், அடுத்தவன் சந்தோஷமாக இருப்பது போலவே தோன்றுகிறது.

அவன் பார்க்கும் கண்ணாடி நல்ல கண்ணாடியாக இருந்தால்தானே, அவன் முகத்தைக் காட்டும்.

வண்டியின் மீது மற்றவர்கள் பாரத்தை ஏற்றுக்கிறார்கள். வண்டி தானே ஏற்றிக்கொள்வதில்லை.

மனித மனமோ தானே சுமைகளை ஏற்றிக் கொள்கிறது.

ஏற்றிய சுமையை எளிமைப்படுத்த என்ன வழி?

`ஞானம் எனும் தண்ணீரை நிறையக் குடி’ என்கிறார்கள் காஞ்சிப் பெரியவர்கள்.

`ஞானம் ஞானம்’ என்கிறோமே அது என்ன?

சட்டையைப் போடும்போது, கிழிந்த சட்டை என்று தெரிந்தே போட்டுக் கொள்வது; பிறகு `ஐயோ, இது கிழிந்திருக்கிறதே’ என்று அங்கலாய்க்காமல் இருப்பது; அதன் பெயரே ஞானம்.

`இது இவ்வளவுதான்; இப்படித்தான்’ என்று தேறுவதும் தெளிவதும் ஞானம்.

`எது எப்படியிருந்தால் என்ன; இறைவன் விட்ட வழி, என்றிருப்பது ஞானம்.

குடிசைகளே நிரம்பிய காட்டில்கூட ஏதாவது ஒரு ஓட்டு வீடு இருக்கிறல்லவா?

துயரங்களே நிரம்பியே மனதிற்கும் ஏதாவது ஒரு நிம்மதி வந்தே தீரும்.

எந்தச் சந்நிதியில் நிற்கிறோம் என்பது முக்கியம்.

குளிக்கும் அறைக்குள் போய் நின்று கொண்டு கோகுலக் கண்ணன் படத்தைத் தேடக்கூடாது. பூஜை அறைக்குள் `ஷவர்பாத்’ இல்லையே என்று வருந்தக் கூடாது.

தேர்வும் தெளிவும் சரியாக இருந்தால், ஞானம் சரியாகிவிடும்.

ஞானத்தண்ணீர் பெருகி ஓடினால், துன்ப மரங்கள் எளிமையாகி விடும்.

மாட்டி இருப்பது விலங்குதான் என்று தெரிந்து கொண்டு, நடக்க ஏன் முயல வேண்டும்?

“ஐயோ! நடக்கமுடியவில்லையே” என்று ஏன் அழ வேண்டும்?

ஒவ்வொரு மரமும் இடைவெளி விட்டு நிற்கும் தென்னந்தோப்பைப்போல இரண்டு சுகங்களுக்கிடையில் ஒரு துயரம் இருக்கிறது.

இரண்டு துயரங்களுக்கிடையே ஒரு சுகம் இருக்கிறது. இதுதான் லெளகீக வாழ்க்கை.

கல் குத்தினால் வலிக்கிறது. கண்ணாடி குத்தினால் ரத்தம் வருகிறது. கவனித்து மருந்து போட்டால் ஆறிவிடுகிறது. கவனிக்காமல் விட்டால் `ஸெப்டிக்’ ஆகிறது. கவனித்தும் `ஸெப்டிக்’ ஆனால் ஏதோ பூர்வ ஜென்ம பாபம் இருக்கிறது.

துன்பத்தின் கதை இத்தோடு முடிந்துவிடுகிறது.

ஜன்னலின் அளவைப் பொறுத்து காற்று வருகிறது.

ஜன்னல்கள் இல்லாத வீடு சுகாதாரத்தைக் கெடுக்கிறது.

அதுபோல், சூழ்நிலைகளைப் பொறுத்துத் துன்பம் வருகிறது; அந்தச் சூழ்நிலைகளை நீக்கிக்கொள்ளும் பொறுப்பு மனிதனுக்குத் தான் இருக்கிறது.

நம்மையறியாமல் வருவது நாம் அறியாமலே தீர்க்கப்படுகிறது.

நாம் அறிந்து வருவதை நாமே தீர்த்துவிட முடியும்.

இந்த இரண்டுவகைத் துன்பங்களில், முதல்வகை ஈஸ்வர பக்தியால் விலகுகிறது.

இரண்டாவது வகை, கூரிய புத்தியால் விலகுகிறது.

பக்தியும் இல்லாமல் புத்தியும் இல்லாமல், `ஐயோ அம்மா’ என்று அலறுவதில் என்ன பொருள்?

பசுவை வாங்கி வந்தால் பால் கறக்கலாம்; காளையை வாங்கிவிட்டுக் கடவுள்மீது குறை சொல்வதில் என்ன அர்த்தம்?

காரணத்தோடு வரும் துன்பங்களை, விவேகத்தோடு சமாளிக்க வேண்டும்.

குடித்துவிட்டுக் காரோட்டி விபத்திற்குள்ளானால் அது காரணத்தோடு வரும் துன்பம்.

ரயில் விபத்தில் நீ சிக்கிக்கொண்டால், அது காரணமில்லாமல் வரும் துன்பம்.

முன்னதை நீ தடுக்கலாம்; பின்னதைக் கடவுள் தான் தடுக்க வேண்டும்.

இரண்டுக்கும் `ஞானம்’ என்றுதான் பெயர்.

சம்பாதிப்பது போதவில்லை என்றால் அது ஒருவகைத் துன்பம். நிறையச் சம்பாதித்தும் போதவில்லை என்றால் அது ஒருவகைத் துன்பம். சம்பாத்தியமே இல்லை என்றால் அது ஒருவகைத் துன்பம்.

எது உன் வாழ்க்கையில் நேர்ந்தாலும், அதன் மறுபகுதி துன்பம்.

தலையில் கை வைத்துக்கொண்டு தடுமாறுகிறவனுக்குத் துன்பம் தீராது.

ஞானம் என்ற தண்ணீரில் துன்பத்தை அமுக்கி இழுத்தால் பாரம் குறையும்.

நம்மைப் பிறக்க வைத்தபோது, தாய் பட்டது துன்பம்;
தாய் இறந்துபோனால் உறவினர் படப்போவது துன்பம்; இரண்டுக்கும் இடையிலே நாம் அனுபவிப்பது துன்பம்.

எல்லாவற்றுக்கும் பரிகாரம் மனதை ஞானத்தண்ணீரில் முக்கி எடுப்பதே.

வாழ்க்கையில் எந்தப் படிக்கட்டில் துன்பம் இல்லை?

பணம் இல்லை என்றால் துன்பம்.

அதிகம் சேர்ந்துவிட்டால் வருமான வரித்துன்பம்.

வடதுருவத்திற்குப் போனாலும் பனிக்கட்டிதான்; தென் துருவத்திற்குப் போனாலும் பனிக் கட்டிதான்.

`துன்பம் ஒரு சோதனை’ என்று முன்பே நான் எழுதி இருக்கிறேன்.

துக்கச் சுமையைக் குறைக்கக் காஞ்சிப் பெரியவர்கள் சொன்ன உதாரணம் என்னை மெய்சிலிர்க்க வைத்ததால், இதனை மீண்டும் எழுதுகிறேன்.

`ராமன் கிடைப்பானா?’ என்று கலங்கிய சீதை;

அவன் கிடைத்த பின்னாலும் காடு சென்று கலங்கிய சீதை;

காட்டிலும் ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டுக் கலங்கிய சீதை;

அவனைக் காணாமல் தினந்தினமும் கலங்கிய சீதை;

வந்து தன்னை மீட்டதும் அவனால் சந்தேகிக்கப் பட்ட சீதை!

சீதையின் வாழ்க்கையிலே ஒரு சுவடுக்கு மறுசுவடு துன்பம் என்றால், என் நிலையும் உன் நிலையும் என்ன?

காட்டில் முளைத்த மரமும் கவலையுறும் காலம் இலையுதிர் காலம்.

ஆற்று மணலும், கவலைப்படும் காலம், கோடைக் காலம்.

பகுத்தறிவற்ற விலங்குகளும் கவலைப்படும் காலம், அவை பயப்படும் காலம்.

இவற்றுக்கெல்லாம் யார் ஆறுதல் கூறப்போனார்கள்?

மானிட ஜாதி ஆறுதல் தேடுகிறது.

திடீரென்று கேரளாவில் இருந்தொருவர் `ட்ரங்கால்’ போட்டுத் தம் துன்பங்களைச் சொல்லி என்னிடம் ஆறுதல் கேட்கிறார்.

அதையே அவர் பக்கத்து வீட்டுக்காரனிடம் சொன்னால், அவன் தன் துன்பங்களைச் சொல்வான்; அதுவே ஆறுதலாகி விடும்.

மறுபடியும் தொடக்கத்தைச் சொல்லி முடிக்கிறேன்.

மரங்களைத் தண்ணீரில் போட்டு இழுப்பது போல், துக்கங்களை ஞானத்திலும் நிதானத்திலும் இழுத்துப் பாருங்கள்.

அப்போதும் அது குறையவில்லையென்றால், துக்கப்படுவதையே வாழ்க்கையாக்கிக் கொள்ளுங்கள்; வேறென்ன செய்வது?
 — with Balaji Periyava Dasan.



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக