செவ்வாய், 30 ஜூன், 2015

மூன்று வருஷ வித்யாஸம் கிடையாது!

ராதே கிருஷ்ணா 01-07-2015







மூன்று வருஷ வித்யாஸம் கிடையாது!

(இந்த வார கல்கி)

மூன்று வயஸாவது பெரியவனாக இருப்பவனுக்குத்தான் பூமியில் விழுந்து நமஸ்காரம், மற்றவர்களுக்கு வேறே தினுஸில் ‘விஷ்’ பண்ணுவது என்பார்கள். முன்னேயே சொன்னாற்போல, விநயம் ரொம்பக் குறைந்து வருகிற இந்நாளில் நமஸ்காரப் பழக்கத்தை எவ்வளவு வ்ருத்தி செய்து கொடுத்தாலும் நல்லதுதான் என்பதால் குறைந்த பக்ஷம் மூன்று வயஸு ஜாஸ்தி இருக்கணும் என்பதைப் பார்க்கலாம். நம்மைவிடப் பெரியவர்களாக உள்ள எல்லாருக்குமே நமஸ்காரம் பண்ணிவிடலாமென்று தோன்றுகிறது.

கண்டிப்பான சாஸ்த்ர விதிப்படியேகூட நம்மைவிட வயஸில் சின்னவர்களாகவுள்ள சில பேருக்கும் நமஸ்காரம் பண்ண வேண்டுமென்று இருக்கிறது. உதாரணமாக, மன்னி வயஸில் சின்னவளாகவே இருந்தாலுங்கூட ஸ்தானத்தால் தாயார் மாதிரி என்பதால் நமஸ்காரம் பண்ணவேண்டும். அதே மாதிரிதான் குரு பத்னியும் ஒருவேளை நம்மைவிட வயஸு குறைவானாலும் நமஸ்கரிக்கணும். பொதுவாகவே கூட, நம்மைவிட வயஸில் பெரிய எவருடைய பத்னியும் அவரில் பாதி என்பதாலும், தம்பதி ஸமேதர்களாக நம்ஸ்கரிப்பது விசேஷம் என்பதாலும் அந்த ஸ்த்ரீகளுடைய வயஸைப் பார்க்காமல் விழுந்து நமஸ்கரிக்கணும்.

வித்யையில் பெரியவர், குணத்தில் பெரியவர், அநுபூதிமானாக இருப்பவர், பக்த ச்ரேஷ்டர்கள், ஞானிகள், ஸந்நி யாஸிகள், ஆத்ம ஸம்பந்தமான, தர்ம ஸம்பந்தமான ஸ்தாபனங்களில் ஆசார்ய ஸ்தானத்தி லுள்ளவர்கள் அதாவது பணம், பதவி, அந்தஸ்துகளால் இல்லாமல் வேறே விதங்களில் பெரியவர்களாக உள்ள எல்லோருக்குமே இந்த மூன்று வருஷ வித்யாஸம் கிடையாது. நம்மைவிட வயஸில் சின்ன வர்களானாலும் நமஸ்கரிக்கணும். குரு புத்ரனையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளணும்.

நிறைய பேரின் காலில் போய் விழ விழ அஹங்காரம் குறைந்து கொண்டே வரும் என்பதுதான் பொதுக் கொள்கை.
 — with Kunchithapatham Kashyap.



ராம் ராம், இந்த நாள்இனிமையாக அமைய நம் ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி பெரியவா அவர்கள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 69

க்ஷத்ரியரும் ப்ராமணரும்

இன்னொரு விஷயமும் தோன்றுகிறது. ப்ராமண த்ரோணரை எதிர்த்தவன் க்ஷத்ரிய த்ருபதன். ப்ராமணர்கள் அத்யாபனம் செய்து வந்த வேதத்தையும், அவர்கள் அநுஷ்டானம் செய்த யஜ்ஞ கர்மாவையும் எதிர்த்த புத்தரும் ஜினரும்கூட க்ஷத்ரியர்கள்தான். பிற்காலத்தில், அதாவது தற்காலத்துக்கு ஐந்நூறு வருஷம் முந்தி வேத ப்ராமாண்யம் (வேதத்தின் ‘அதாரிடி’), வர்ணாச்ரமம் ஆகியவற்றை புத்தர், ஜினர் ஆகியவர்களைப் போலவே ஆக்ஷேபித்து, ஆனாலும் ஹிந்து தர்மத்திலிருந்து அடியோடு முறித்துக்கொண்டு போகாமல் இதிலிருந்தே நாம ஜபம், சப்த ப்ரஹ்ம அநுஸந்தானம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஸிக்கிய மதத்தை ஸ்தாபித்த நானக் யார் என்று பார்த்தால் அவரும் க்ஷத்ரியர்தான்.

கொள்கையை எதிர்த்துப் புதுசாக மதம் பண்ணாமல், ஒரு ப்ராமணரிடம் தனிப்பட்ட முறையில் த்வேஷம் கொண்டவர்களாக இருந்தவர்களைப் பார்த்தாலும் த்ரோணரிடம் விரோதம் கொண்ட த்ருபதன், அவருக்கு முந்தி ஜமதக்னி மஹர்ஷியிடம் விரோதம் பாராட்டிய கார்த்தவீர்யன் முதலானவர்கள் க்ஷத்ரியர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். த்ருபதனுக்கு ஏளனமாக ஆரம்பித்தது த்வேஷமாக முடிந்தது. கர்த்தவீர்யனுக்கோ ஜமதக்னியிடம் பொறாமையில் ஆரம்பித்தது. ‘இந்த ப்ராமணன் ஒரு கோவணத்தைக் கட்டிக்கொண்டு குடிசையில் உட்கார்ந்திருந்தாலும் இவனுடைய தபோபலத்தால் அல்லவா நம் புஜபலத்தால் பெறமுடியாத தேவலோகப் பசுவான ஸுரபியைப் பெற்று இஷ்டமானதையெல்லாம் கறக்கும் அதைக் கொண்டு, பரிவாரத்தோடு வந்திருக்கும் நமக்கு இவனுடைய பத்னி இவ்வளவு விருந்துபசாரம் பண்ண முடிகிறது?’ என்ற பொறாமை கர்த்தவீர்யாஜுனனுக்கு முற்றிப்போய்த்தான் த்வேஷமாக ஆகி அவன் அந்த மஹர்ஷியை வதம் பண்ணியது. இதேபோல ப்ராமண வஸிஷ்டரிடம் க்ஷத்ரிய விஷ்வாமித்ரருக்கு ஏற்பட்ட மாத்ஸர்யம், அவர் போட்ட போட்டி, அப்புறம் “வஸிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி” ஆனது எல்லாமும் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம்முடைய சாஸ்திர புராணங்களில் ரொம்பக் குறைவான இடங்களில் தான் என்றாலும், அங்கங்கே இப்படி ப்ராமணனின் தபோபலத்துக்கும், க்ஷத்ரியனின் புஜபலத்துக்குமிடையே மோதல் ஏற்பட்டதாகப் பார்க்கிறோம்.

இதே ஆராய்ந்து பார்த்தோமானால் தற்போது வர்ண தர்மத்தை ஆக்ஷேபித்து எழுப்பப்படும் ஒரு புரளி உடைபட்டுப் போய்விடும். தற்காலச் சீர் திருத்த வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், துருக்கர், வெள்ளைக்காரர் முதலிய அந்நிய தேசத்தார் இத்தனாம் பெரிய நம்முடைய உபகண்டத்தை அவர்களுடைய ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டு வந்ததற்குக் காரணமே வர்ண விபாகத்தால் நம்முடைய ஸமுதாயம் பிளவுபட்டு பலஹீனமாயிருந்ததுதான் என்று சொல்கிறார்கள். உள்ளர்த்தம் என்னவென்றால், ப்ராமணர்கள் ராஜாக்களைக் கையில் போட்டுக்கொண்டு மற்ற ஜனங்களை ரொம்பவும் தாழ்த்தி வைத்திருந்தார்கள். இதனால் மனம் கசந்து போயிருந்த மெஜாரிடியான மற்ற ஜாதிக்காரர்கள், ‘ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?’ என்று அந்நியர் படையெடுத்தபோது, தங்கள் ராஜாவுடன் ஒத்துழைக்காமலோ, அல்லது அந்நியர்களுக்கு ஸஹாயமே செய்தோ நாம் தோற்றுப்போகும்படியாகப் பண்ணினார்கள் என்பதுதான். ப்ராமணர்களைக் குற்றவாளிகளாகப் பண்ணவேண்டும் என்ற எண்ணத்தில் கற்பித்திருக்கிற இந்த அபிப்ரயாப்படி உண்மையில் இதர ஜாதியினர்தான் பெரிய குற்றவாளிகளாக ஆக்கபடுகிறார்கள். தங்களுக்கு உயர்வு இல்லை என்பதற்காக தேசத்தையே பிறரிடம் அவர்கள் காட்டிக் கொடுத்ததாகத்தானே இந்த அபிப்ராயப்படி ஆகிறது? இம்மாதிரி, அவர்கள் ப்ரம்ம – க்ஷத்ரியர்களிடம் த்வேஷம் கொண்டிருந்ததாகவோ, அந்நியர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவோ சரித்ர ரீதியில் ஸாக்ஷியே கிடையாது. ஆனாலும் இப்படிச் சான்று எதுவும் காட்டாத அந்த சரித்ர புஸ்தகங்களை எழுதியுள்ள வெள்ளைக்காரர்களும், அந்த வெள்ளைக்காரர்களின் மனபான்மையிலேயே ஊறிப்போய்விட்ட நம்மவர்களும், “வர்ணபேதம் இருந்ததால்தான் ஹிந்து ஸமுதாயம் கட்டுக்கோப்பில்லாமல் பிறர் ஆதிக்கத்தில் அடிக்கடி விழுந்தது” என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

நம் ராஜாக்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாமலிருந்ததால்தான் அந்நியருக்கு இங்கே ஆதிக்கம் கொடுத்துபோயிற்றே ஒழிய வர்ண விபாகத்தினால் ஏதோ உட்பூசல் ஏற்பட்டிருந்தால் இல்லவே இல்லை.

சற்று முன் காட்டிய மாதிரி, எப்போதாவது இரண்டு வர்ணங்களிடையே மோதல் ஏற்பட்டது என்றால் அது ப்ராமணர்களுக்கும் க்ஷத்ரியர்களுக்கும் இடையேதான்.





பெரியவா சூலூர்ப் பேட்டையில் தங்கியிருந்த
சமயம் ஒரு சூரிய க்ரஹணம் வந்தது.

தற்செயலாக நாங்கள் தரிசனத்துக்குச்
சென்றிருந்தோம்..

க்ரஹணம் பிடிக்க வேண்டிய ஸ்னானத்துக்கு
சற்றுத் தொலைவில் இருந்த ஆற்றுக்கு பெரியவா
சென்றார்களெல்லாரும் உடன் சென்றோம்.
ஸ்னானம் செய்வதற்குமுன் சொல்ல
வேண்டிய சங்கல்ப மந்திரம் சொல்ல அங்கு
பண்டிதர் யாரும் இல்லாததால் பெரியவாளே
சங்கல்ப மந்த்ரத்தைச் சொன்னார்.எங்கள்
பாக்யம்!

பின் க்ரஹணம் முடிந்த பிறகு ஸ்ரீமடத்துக்கு
அருகில் உள்ள திருக்குளத்துக்கு விமோசன
ஸ்னானம் செய்ய பெரியவாளுடன்
நாங்களும் சென்றோம் . வழி நெடுகிலும்
நெருஞ்சி முட்கள்.பெரியவா பாதங்களை
படாத பாடு படுத்தி விட்டன. குளத்தின்
படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு,
ஒரு கால் மேல் மற்றொறு காலை மடித்து
வைத்துக் கொண்டு தக்ஷிணாமூர்த்தியாகக்
காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தன் உள்ளங்காலை உன்னிப்பாகப் பார்த்தார்கள்.
எத்தனை முட்கள் அவரது சரணத்தில் தஞ்சம்
புகுந்தனவோ!

அடியார்களாகிய நாங்கள் சற்று தூரத்திலிருந்து
இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
என்னை மட்டும் அருகில் அழைத்தார்! எத்தனை
முட்கள் பார் என்று காட்டப் போகிறார்கள் என
நினைத்து அருகில் சென்றேன்.

''என் உள்ளங்காலைப் பார் , நிறைய சக்கரங்கள்
இருக்கு; இங்கே பார் ஒரே புள்ளியில் மூன்று
ரேகைகள் சந்திக்கின்றன. அதனால் வண்டிச்
சக்கரம் போல் ஆறு ரேகைகள் தோன்றுகிறதில்லையா?''
இதற்கு ஷடரம் என்று பெயர். இந்த ரேகை இருப்பவர்கள்
ஓரிடத்தில் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
(அதனால்தான் நானும் ஓடிக்கொண்டே இருக்கேன்!)

ராம நாதபுரம் ராஜா சொன்னார்..''உங்கள் பாதங்களில்
அபூர்வ ரேகைகள் இருக்கின்றன; நடந்தால் அவை
அழிந்துவிடும், அதனால் நான் என் ஆட்களுடன் மேனா
ஏற்பாடு செய்கிறேன் ''என்றார்.
''என்னிடமிருந்த பக்தியினால் அப்படிச் சொன்னார்
ஆனால் நான் அது காரிய சாத்யமில்லை என்று சொல்லி
விட்டேன்''

அதன்பிறகு ஸ்னானம் செய்து முகாமுக்குத்
திரும்பினோம்.

ஊர் திரும்பியதும் நடந்ததை அம்மாவிடம்
சொன்னேன்.
அம்மாவுக்குப் பரம பரவசம்!
''யாருக்கும் கிட்டாத பாத தரிசன அனுக்ரஹம்
உனக்குக் கிடைத்திருக்கு! க்ரஹண புண்ய
காலத்தில் பாத தரிசனம் கொடுத்து உன்னை
ஆசீர்வாதம் பண்ணியிருக்கா''

இதனை டைப் அடிக்கும்போது உள்ளம் நெகிழ்கிறது
முதலாவதாக பத்ம பாதம் எப்படி நொந்திருக்கும்
என்ற பாமரத்தனமான நினைவு; அடுத்து எப்பேர்ப்பட்ட
பாக்யசாலி இந்த அனுபவத்தை அடைந்த எஸ் சீதாராமன்
என்ற பக்தர்! எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
இறைவா எனப் பாடத் தோன்றுகிறதல்லவா? மிக்க
அனுக்ரஹசாலி!!

தகவல் கோதண்டராம சர்மா தரிசன அனுபவங்கள்

ஜய ஜய சங்கரா....





"விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்"

(கோபப் புயலாய் இருந்த பெரியவா

அருட் தென்றலாய் மாறிய நிகழ்ச்சி)

புத்தகம்-சொல்லின் செல்வர் ஸ்ரீகாஞ்சி முனிவர்.

ஆசிரியர்------ஸ்ரீ ரா. கணபதி.

(ஒரு மறுபதிவு)

ஓர் இரவு பெரியவாளிடம், ஒரு வெளியூர் அடியார், மறுநாள் அதிகாலை ஊருக்குப் புறப்படவிருப்பதாகச் சொல்லிப் பிரஸாதம் கேட்டபோது, " நாளைக்கு விடிகாலை ஊருக்குப் போறயா? ஸ்ரீராமநவமியாச்சே?, ஒண்ணு, வந்தது வந்தே, இங்கே மடத்துல ராமர் பூஜைக்கு இருக்கணும், இல்லாட்டா, இன்னி ஸாயங்காலம் ரயிலுக்கே போயாவது இருக்கணும். அப்ப ஊருக்குப் போய்ச்சேர்ந்து ஆத்துலயாவது பூஜை பண்ண முடிஞ்சிருக்கும். ஆத்தையும் கோட்டை விட்டுட்டு, இங்கேயும் இல்லாம, நாளை காலம்பர பஸ்ஸிலே போறேங்கறியே!" என்றார் ஸ்ரீசரணர்.

'அடியார்' என்று மரியாதையை உத்தேசித்துச் சொல்லப்பட்ட அந்நபர் ஒரு விதண்டாவாதி. மரியாதை முறை பாராது ஜகத்குருவிடமும் விதண்டை செய்பவர். அதற்கேற்பவே இப்போது, " நான் வேதத்துல ஸ்பஷ்டமா சொல்லியிருக்கிறதுகளைத்தான்பண்ணுகிறது. வேதந்தானே நமக்கு எல்லாம்? அதுல இல்லாதது எதுக்கு? வேதத்துல ராமனை, க்ருஷ்ணனைப் பத்தியெல்லாம் எங்கே இருக்கு? வேதம் ஏற்பட்டு, எத்தனையோ காலம் கழிச்சுப் பொறந்து அதைப் பின்பத்தினவாதானே அவாளும்? அதனால, ராமர், க்ருஷ்ணர் சமாசாரமெல்லம் எதுவும் நான் எடுத்துக்கிறதில்லே. ராமநவமியும் பண்றதில்லே. ராமர் படம் கூட ஆத்துல கிடையாது." என்றார்.

அப்படியானால், அவர் வேதோக்த கர்மாக்கள் செய்வாரா என்றால் அதுவும் மாட்டார்! இது ஸ்ரீசரணாளுக்கா தெரியாது?

'புரு, புரு, புரு' என்று ஒரு வேகம் ஏறி, பெரியவர்தானா பேசுகிறாரென வியப்புறுமாறு பெரியவர் விளாச ஆரம்பித்தார்!

"ஓ! வேதத்துல இல்லாத எந்த ஒண்ணும் ஒனக்குத் தள்ளுபடியாடாப்பா? ஸரி, அப்ப கார்த்தால எழுந்த ஒடனே டூத்பேஸ்ட், அப்புறம் காபி மூஞ்சில் முழிக்கறையே, டூத்பேஸ்டும் காபியும் வேதத்துல சொல்லியிருக்கோ? அப்புறம் சோப்புத்தேச்சுண்டு குளிக்கறயே, அந்த சோப்பு? ஒன் ஆம்படையா க்ரைண்டர்ல அறைச்சு, ப்ரெஸ்டீஜ்--ல சமைச்சதைச் சாப்படறயே, அந்த க்ரைண்டரும் குக்கரும் வேதத்துல சொன்னதுதானாடாப்பா? எல்லாத்தையும் விட, 'ஆபீஸ்'னு, அதைத்தான் ஜீவனோபாயத்துக்கே வழியா வெச்சுண்டு போறியே, ஸூட் மாட்டிக்கிண்டு! ஸூட் வேதத்துல இல்லேங்கறது இருக்கட்டும். மொதலுக்கே மோசமா வேதத்துலே இப்படித்தான் ப்ராமண ஜாதிக்காரனை ஆஃபீஸ் உத்யோகம் பார்க்கச்சொல்லியிருக்கோ? ஆஃபீஸுக்கு ஸ்கூட்டரோ, பஸ்ஸோ, எலெக்ட்ரிக் ட்ரெயினோ எதுவோ ஒண்ணுல போறியே, அந்த வாஹனாதிகள் எந்த வேதத்துல இருக்கு?" என்றார். அதோடு விட்டரா? மேலும் மேலும், மின்விளக்கு, மின்விசிறி, ஸினிமா, கிரிக்கெட் என்பதாக அடியாரது அனுபவத்திற்கு உரிய பலவற்றை அடுக்கிக் கொண்டே போய், அது ஒவ்வொன்றும் 'வேதத்தில் சொல்லியிருக்கா/" என்றோ, 'எந்த வேதத்தில் சொல்லியிருக்கு' என்றோ முத்தாய்ப்பு வைத்தார்!

முடிவாக, " வேதத்துல எங்கேயும் 'டைரக்'டா இந்த மாதிரி ஒரு அத்வைத ஸன்யாஸி, மடம்னு வெச்சுண்டு 'பப்ளிக்' பூஜை பண்ணீண்டு, பூஜை ப்ரஸாதம் குடுக்கலாம்னு இருக்கறதா தெரியெல்லே--ன்னு கூட உன் மாதிரி மேதைகளோட ஆராய்ச்சியில ஏற்படலாம்! அதனால், நீ இப்ப எங்கிட்ட கேக்கற ப்ரஸாதமே வேதத்துல சொல்லாததுதான்--னு ஆகறது. போய்ட்டு வா!" என்றாரே பார்க்கலாம்!

விதண்டாவாதி ஆடியே போய் விட்டார்! தடாலென்று தண்ட நமஸ்காரம் செய்து ஸ்ரீசரணரிடம் தம்மை க்ஷமித்து நல்லறிவு தர வேண்டினார்!

கோபப்புயலாயிருந்த ஸ்ரீசரணாள் அக்கணமே அருட்தென்றலாகிக் கூறலானார்.

வேதகாலத்திற்குப் பிற்பட்டும் அதில் நேராக உள்ளவற்றை அநுஸரித்தே, அந்த விருக்ஷத்துடைய புதுப் புதுக் கிளை, இலை என்றெல்லாம் காலம் தோறும் அநேகம் ஏற்பட்டு வைதீக ஸம்ப்ரதாயத்தில் அங்கமாகக் கலந்து விட்டன. அதெல்லாமும் வேதமாகவே மதித்து, போற்றி, நாமெல்லாம் அநுஸரிக்க வேண்டியவைதான். மூலமாக ஒரு 'தியரி' இருந்து அதை அப்புறம் காலம் தோறும் 'அடாப்ட்' பண்ணிப் புதுப் புது 'டிஸ்கவரி' கள் செய்தால் அதெல்லாவற்றையும் கூட அந்தத்துறையைச் சேர்ந்ததாகவேதானே எடுத்துக் கொள்கிறோம்? அப்படியும் வேத தாத்பரியங்களை ப்ரயோஜனப்படுத்திப் பிற்காலங்களில் அநேகம் சேர்ந்து தற்போதுள்ள ஹிந்து மதம் என்கிறதை ரூபம் பண்ணீயிருக்கிறது----என்பதை தீர்க்கமாக விளக்கி விட்டுத் தொடர்வார்:

"இது ஒரு அம்சம். இன்னொரு அம்சம், வேதத்தில் என்னென்ன கார்யம் சொல்லியிருக்கோ, அநுமதிச்சிருக்கோ, அந்தக் கார்யங்களுக்காகவே, ஆனா வேதத்தில் சொல்லாத உபகரணங்கள் பிற்காலங்களீல் கண்டு பிடிச்சிண்டே வந்திருக்கா. அத்யயனம், யக்ஞம், பூஜை, ஜபம், த்யானம் முதலான அநுஷ்டானங்கள் பண்றதைப்பற்றி மட்டும் வேதத்தில் சொல்லி நிறுத்திடலை. எழுந்ததும் தந்த தாவனம்--னு பல் தேய்ச்சுக்கறது, அப்புறம் ஸ்நானம் பண்றது, சாப்படறது, பானம் பண்றது, ஸ்வதர்ம கர்மா பண்ணி ஸம்பாதிக்கறது, வாழ்க்கை--ன்னு ஏற்பட்டிருக்கிறதில அங்கே இங்கே ஓடறது, ப்ரயாணம் பண்றது, 'ரிக்ரியேஷன்' னு கொஞ்சம் உல்லாஸமாயிருக்கறது---எல்லாமே வேதத்துல சொன்ன, அநுமதிச்சிருக்கற கார்யந்தான். ஆனா அந்தக் கார்யம் நடத்திக்க அன்னிக்கு இருந்த உபகரணம் போய், இன்னிக்கு வேறே வந்திருக்கலாம். அன்னிக்குக் குதிரை மேலேயோ மாட்டு வண்டியிலேயோ ப்ரயாணம் பண்ணிணா--ன்னா இன்னிக்கு ஸ்கூட்டர், எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்திருக்கலாம். இதுகளை வேதத்தில சொன்னபடியே இருந்தாத்தான் ஏத்துக்கிறதுன்னு ஒரு 'பாலிஸி'யா வெச்சுண்டு தள்ளுபடி பண்ண வேண்டியதில்லே! இந்த உபகரணங்களில் எது எது வேதத்தின் 'ஸ்பிரிட்' டுக்கு விருத்தமாயிருக்கோ[ விரோதமாகயிருக்கின்றனவோ] அநாசாரத்தை உண்டாக்கறதோ அதையெல்லாம்தான் தள்ளுபடி பண்ணணும். டூத்பேஸ்ட்லேந்து, காபிலேந்து ஆரம்பிச்சு, அநாசாரம் கலந்ததையெல்லாம்தான் நிஷேதிக்கணும் [ விலக்க வேண்டும் ]

. சிலது ஸந்தர்ப்பக் கொடுமையால் சேந்த தவிர்க்க முடியாத அநாசாரமாயிருக்கு---ப்ராமணன் வைதீக வ்ருத்தியை [ தொழிலை ] விட்டுட்டு, ஆஃபீஸ், கம்பெனி--ன்னு உத்யோகம் பார்க்கறது இப்படி ஏற்பட்டு விட்டதுதான். இது பெரிய்ய அநாசாரந்தான், பெரிய அபசாரமே! ஆனாலும் என்ன பண்ணலாம்? தவிர்க்க முடியாததா ஆயிருக்கே? அதனாலே, பெருமை பெருமையா, 'நாமாக்கும் பெரிய உத்யோகம் பண்ணி, வாரி வாரிக் குவிச்சுக்கிறோம்! இன்னும் பெரிசாப் பண்ணி ஜாஸ்தியா குவிச்சுக்கணும்'னு பறக்காம, பகவான் கிட்ட மன்னிப்பு கேட்டுண்டு, 'இப்படி இருக்கே'ன்னு தாபப்பட்டுண்டுதான், வாழ்க்கையோட அத்யாவஸ்யத் தேவைக்கானதை மட்டும் உத்யோகம் பண்ணி ஸம்பாதிச்சுக்கணும். நெறைய 'டயம்' ஒழியும்படிப் பண்ணிண்டு அந்த டயத்துல வேதத்யயனாதிகள், அநுஷ்டானாதிகள் பண்ண ஆரம்பிக்கணும். ரிடயர் ஆன விட்டு, வேதத்துக்கே வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணணும். அப்படி இப்பவே ஸங்கல்பம் பண்ணிக்கணும்.

"ராமநவமி, கோகுலாஷ்டமி, இன்னும் இப்ப இருக்கிற ரூபத்துல ஹரிகதை, பஜனை--ன்னெல்லாம் வேதத்துல இல்லாததுகளும் வேத வழியில் நாம சேர்கிறதற்கு ரொம்ப ஒத்தாசை பண்றவைதான். வேதகாலத்துப் புருஷ ஸிம்ஹங்களா இல்லாமப் பூஞ்சையா வந்திருக்கிற பின்தலைமுறைக்காராளை அவா மனஸுக்கு ரஞ்சகமான மொறையிலேயே வேத வழிக்குக் கொண்டு சேர்த்துப் பரோபகாரம் பண்ணிண்டு வந்திருக்கிறது இதுகள்தான். ஸங்கீதக் கச்சேரியில பல்லவி பாடறதுன்னு சன்ன பின்னலாத் தாளத்தை வித்யாசப்படுத்தறதைத் தேர்ந்த வித்வான்கள்தான் ரொம்பவும் ரஸிச்சுத் தாங்களும் பங்கு எடுத்துப்பா. மத்தவாளுக்கு அது கடபுடாதான்! வைதீகாநுஷ்டானங்கள் பூஞ்சையான நமக்குக் கொஞ்சம் அப்படி இருக்கறதுதான்! பல்லவிக்கு முன்னாடி ஸர்வஜன ரஞ்சகமா அநேக கீர்த்தனைகள், பல்லவியிலேயே ராகமாலிகை ஸ்வரம், அப்பறம் துக்கடான்னு கச்சேரி பத்ததியில் நன்னா இளக்கிக் குடுத்து லேசு பண்ணி எல்லாரையும்˜ப்ளீஸ்™ பண்ணிட்டா, அதனாலேயே அவாளும் இந்தப் பல்லவி ஸமாசாரம் என்னன்னு நாமுந்தான் தெரிஞ்சுப்போமேன்னு ˜இன்ட்ரெஸ்ட்™ எடுத்துக்கறாளோல்லியோ? அந்த மாதிரிதான் ராமநவமியும், ஜன்மாஷ்டமியும், பஜனையுமே நமக்கெல்லாமும் ரஞ்சகமாயிருந்துண்டு, அதோட, இதுக்கெல்லாமும் வேதந்தானே மூலம்கிறா?

அதுலயுந்தான் நமக்குப் பரிசயம் வேணும்னு நம்மை உத்ஸாகப்படுத்தற இன்ஸென்டிவ்கள்! பல்லவியானாலும், துக்கடாவானாலும் எல்லாம் ஸங்கீதம்தானே? அந்த மாதிரி, வாஜபேய யாகத்துலேந்து, ஹரி போல்வரை எல்லாமே ஒரே ஸனாதன தர்மத்தின் ஸ்பிரிட்டில் தோணினதுதான். துக்கடா கேக்கறதுலேயே ஆரம்பிச்சவா அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா ஈடுபாடு ஜாஸ்தியாயிண்டே போய் ராகம் கண்டு பிடிக்கறது, தாங்களே பாட்டுக் கத்துக்கறதுன்னு போய், பல்லவி பாடறதுலேயே ˜எக்ஸ்பெர்ட்டா ஆனதாக்கூட ஒண்னு ரெண்டு கேஸ் நானே பார்த்திருக்கேன். கச்சேரின்னா அதுக்கு நடுநாயகம் பல்லவிதான். ˜இன்னிக்கு என்ன மெய்ன்னு அதைத்தான் மெய்னாகவே வெச்சிருக்கறதாத் தெரியறது? அப்படி வேத ஸம்ப்ரதாய பத்ததின்னா, அதுக்கு வேத யக்ஞாதிகள்தான் மெய்ன். அதுதான் நமக்குப் பூர்த்தி ஸ்தானம்.

அந்த யக்ஞாதிகளைப் பண்ணணுமே தவிர, அதுதான் எல்லாம்னு சும்மா வாயால சொல்லிண்டு, ஆனா அதையும் பண்ணாம, அதுக்கு அழைச்சிண்டு போறதுகளையும் பண்ணாம விட்டுடறது தனக்குத்தானே ஹானி உண்டாக்கிக்கறதுதான். இப்படி அழைச்சுண்டு போறதுகளும், எந்த லக்ஷ்யத்துல கொண்டு சேர்க்கிறதோ அந்த லக்ஷ்யத்தின் ˜ஸ்பிரிட்டிலேயே பொறந்ததுதானானதால், இதுகளையும் ஒரு போதும் தள்ளாம யக்ஞாதிகள் பண்றவா அநுஷ்டிக்கத்தான் வேணும். மத்த ஸமூஹத்துக்கும் அப்பத்தான் தடுமாத்தம் உண்டாகாம வழிகாட்டினதா இருக்கும். இன்னி வரைக்கும் நல்ல சிஷ்டாசாரத்தோட இருக்கிறவா அப்படித்தான் ரெண்டையும் அநுஷ்டிச்சுண்டும் வரா.

நீயும் ஸ்ரீராமநவமி பூஜை மாதிரி சின்னதா ஒரு பூஜைல ஆரம்பிச்சு வாஜபேயி ஆற வரைக்கும் மேலே மேலே அபிவ்ருத்தியா [வாயாக]!. நாளைக்கு இங்கேயே வழக்கமான மடத்துப் பூஜையோட ராமர் பூஜையும் பாரு! ரெட்டை ப்ரஸாதமும் தரேன். ஸந்தோஷமாப் போய்ட்டு வா!

உருகிவிட்டார் உருகி, மாஜி விதண்டாவாதி!

அருட்செல்வம் சிந்தனைச் செல்வமாகவும், சொற்செல்வமாகவும் அலர்ந்ததற்கு ஓர் அழகான உதாரணம்!




ஸ்வஸ்திவாசனம் - குருவந்தனம்

நம்மை விட பெரியவர்களுக்கு, தம்பதிகளுக்கு நமஸ்காரம் செய்கையில் "அபிவாதன" மந்த்ரம் சொல்லி நமஸ்கரித்து அவர்களது ஆசிய்iநைப் பெறுகிறோம். நான் இன்னார் வழியில் வந்த இந்த கோத்ரத்தைச் சேர்ந்த இன்னார் எனச் சொல்வது வழக்கம். 

அதுபோல ஆச்சார்யாளை வந்தனம் செய்கையில் நாம் சொல்ல வேண்டியது அவர்களது புகழினை. அதுவே ஸ்வஸ்திவாசனம் எனும் குரு வந்தன மந்திரம். 

நம் காஞ்சி காமகோடி பீடாதிபதிகளை வந்தனம் செய்வதற்குண்டான ஸ்வஸ்தி வாசன மந்திரம் இதுவே.

ஸ்வஸ்திவாசனம் - குருவந்தனம்
============================

ஸ்ரீ குருப்யோ நம:

ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத 
ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார - 
த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித - 
ஸ்ரீ காமாக்ஷீ தேவீஸனாத - ஸ்ரீமதேகாம்ரநாத - 
ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத - ஸாக்ஷாத்கார - பரமாதிஷ்ட்டான - ஸத்யவ்ரத நாமாங்கித - 
காஞ்சீ திவ்யக்ஷேத்ரே - சாரதாமட ஸுஸ்த்திதாநாம் - 
அதுலித ஸுதாரஸ - மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல - மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ - 
ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த - 
துந்துலித - மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத - சாந்தி தாந்தி பூம்நாம் -
ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக - ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம் - நிகில பாஷண்ட ஷண்ட - கண்டகோத்காடநேந -விசதீக்ருத வேத வேதாந்த மார்க - ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம் -ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய - ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமச்சங்கர பகவத் பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே - ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமச் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம் அந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாநாம் - ததந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதநாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம:|

வாழ்வில் ஒருமுறையேனும் இந்த மந்திரத்தைச் சொல்லி நம் ஆச்சார்யாளை வந்தனம் செய்தோமானால் கட்டாயம் குருவருள் நமக்குண்டு என்பது திண்ணம்.

ஸ்ரீ குருப்யோ நமஹ ||




ஓம் ஸ்ரீ காஞ்சீ காமகோடி ஜகத்குரு ஸ்ரீ மஹாஸ்வாமிகள் நாமாவளி:

ஓம் ஸ்ரீ மஹா கணபதி ஸ்வரூபாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாத்மஜாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி கர்பத்ருதாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ அனுராதா பவாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ வைத்யனாதாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ அத்வைத சிகராய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ வேதமந்த்ர ப்ரியாய்a மஹாஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காஷ்ட மௌன ப்ரிய்aஅய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வராய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ நாராயண ஸ்மரணாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சச்சிதானந்தாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சரணாகத வத்ஸலாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ த்ரிகாலஞானாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ த்ரிபுரசுந்தரி பூஜா ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ க்ஷிப்ர ப்ரஸாதனாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ பாத யாத்ரா ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ துளசீ பில்வ ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ ப்ரத்யக்ஷ ப்ரம்ம ஸ்வரூபாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காமாக்ஷி ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காஞ்சி க்ஷேத்ரே நிவாஸாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காமகோடீஸ்வராய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி மஹா ஸ்வாமினே நமோ நம: நமோ நம: நமோ நம:
ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே சாந்த்த ரூபாய தீமஹி |
தன்னோ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||
ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ராய வித்மஹே சார்வ மபௌமாய தீமஹி |
தன்னோ ஜகத்குரு ப்ரசோதயாத்||
ஸ்ரீ ஜகத்குருப்யோ நமோ நம:
ஸ்ரீ மஹாபெரியவா சகல லோக ஜீவிதர்களுக்கும் பொதுவானவர் என்பதால்இந்த அற்புத நாமாவளிகளை உங்கள் அனைவரது மூலமாகவும் அனைத்து ஜீவிதர்களுக்கும் கிடைக்கச் செய்யும் பொருட்டு இங்கே பகிர்கிறேன். இந்த நாமாவளிகளை நாமும் பாராயணம் செய்து அனைவருக்கும் கிட்டிட இதனை பகிர்ந்து சகல சௌபாக்கியங்களும் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்து ஸ்ரீ மஹா ஸ்வாமிகளின் க்ருபாகடாக்ஷத்திற்குப் பாத்திரமாவோமாக.
ஸ்ரீ மஹா பெரியவா சரணம்!
 — with Mannargudi Sitaraman Srinivasan.





































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக