வியாழன், 25 ஜூன், 2015

நேபாளத்தில் வாரியார் பார்த்த அதிசயம்!

ராதே கிருஷ்ணா 25-06-2015




நேபாளத்தில் வாரியார் பார்த்த அதிசயம்!

ஒருமுறை சொற்பொழிவு ஒன்றுக்காக கல்கத்தா சென்றிருந்த கிருபானந்த வாரியார், அப்படியே நேபாளத்துக்கும் சென்றார். அங்கு அவரின் நண்பர் வி.ஏ.பி. ஐயர் என்பவர், ''வாருங்கள், மகான் ஒருவரை தரிசிக்கலாம்'' என்று கூறி அவரை அழைத்துச் சென்றார்.

அது கரடுமுரடான பாதை என்பதால் ஜீப்பில் சென்றனர். 40 மைல் தொலைவு கடந்த பின், மலைச்சாரல், சிறு நதி, கோயில்கள் என்று அந்த இடமே ரம்மியமாக இருந்தது. இங்கு ஒரு மடத்தில் அந்த மகான் இருந்தார். வாரியாரும் அவரின் நண்பரும் மகானை வணங்கினர். ஆன்மிக விஷயங்கள் குறித்து வாரியாருடன் நீண்ட நேரம் உரையாடினார் மகான்.

மெள்ள இருள் சூழ்ந்த மாலை நேரம். அப்போது வாரியார், ''சுவாமி! கண்டகி நதிக்கு எப்படிச் செல்ல வேண்டும்? அங்கு கரையில் சாளக்கிராமங்கள் கிடைக்குமாமே! சாளக்கிராமமும் ருத்திராட்ச மாலைகளும் வாங்க வேண்டும்'' என்று சொன்னார்.

இதற்கு மகான், ''கண்டகி நதி இங்கிருந்து 300 மைல் தொலைவில் உள்ளது. தவிர, பாதையும் கடினமானது. உங்களுக்கு சாளக்கிராமமும் ருத்திராட்சமும் வேண்டும். அவ்வளவுதானே?'' என்று கேட்டுவிட்டு, தன் சீடனைப் பார்த்து, ருத்திராட்ச மணிகளை எடுத்து வரச் சொன்னார்.

ஒரு சிறு கூடையில் ருத்திராட்ச மணிகளைக் கொண்டு வந்து கொடுத்தான் சீடன். ''உனக்கு பாத்திரம் அறிந்து கொடுக்கத் தெரியவில்லையே... நிறைய கொடு!'' என்றார் மகான். பின்னர் அவன், ஒரு சாக்கு நிறைய ருத்திராட்ச மணிகளைக் கொண்டு வந்து கொடுத்தான். அத்துடன் ஐந்து சாளக்கிராமங்களையும் வாரியாருக்கு வழங்கினார் மகான். அந்த மகானின் கழுத்தில் வெள்ளிக் குமிழ் ஒன்று தென்படுவதைக் கண்ட வாரியார், ''இது சிவலிங்கமா சுவாமி?'' என்று கேட்டார்.

மகான், வெள்ளிக் குமிழைத் திறந்தார். அதற்குள் தங்கக் குமிழ் இருந்தது. அதையும் திறந்தார். சுண்டைக்காய் அளவு 'தந்த மணி'யைப் போன்றதொரு வெண்மையான மணியை எடுத்து வாரியாரின் கையில் கொடுத்தார். வியப்புடன் அதைப் பார்த்தார் வாரியார்.

''இது என்ன தெரியுமா? எவரையும் தீண்டாத உயர்ந்த ஜாதி நாகம் ஒன்று நீண்ட காலம் வாழ்ந்தால், அந்த நாகத்தின் நஞ்சு திரண்டு, நாக மாணிக்கமாக மாறி விடும். அதேபோல், சிவயோகிகளுக்கு அவர்களது யோக சக்தியால், உயிரணுக்கள் ஊர்த்துவரேதஸாக மேலே சென்று நின்றால், அந்த உயிரணுக்கள் 'சிரோன்மணி'யாக மாறி விடும்.

இப்படித்தான் மகான் ஒருவர் தவம் மேற்கொண்டார். அப்போது, அவரின் சிரசு வெடித்து, வெளியானதே இந்த சிரோன்மணி. இதைக் கால் மாட்டிலே வைத்து விட்டு, படுத்துக் கொண்டால், அது நகர்ந்து நகர்ந்து நமது தலைமாட்டுக்கு வந்து விடும். நேபாள ராஜா கூட ஒரு வாரம் வைத்திருந்து சோதித்துப் பார்த்தார்'' என்ற மகான், மீண்டும் அந்த மணியைத் தங்கக் குமிழில் வைத்து அணிந்து கொண்டார்.

இதைக் கேட்டதும் கிருபானந்த வாரியார் வியந்து போனார். ''சிரோன்மணியைக் காணும் பாக்கியம், தங்களால்தான் அடியேனுக்கு கிடைத்தது'' என்று அந்த மகானை மீண்டும் வணங்கினார் வாரியார்.

- மெய்விளம்பி மெய்யப்பன், கிருஷ்ணகிரி

















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக