திங்கள், 7 நவம்பர், 2011

பகவத்கீதை - Part - 1 ( அத் 1 முதல் அத் 5 வரை )

ராதே கிருஷ்ணா 07 - 11 - 2011

( அத்தியாயம்  1 முதல் அத்தியாயம் 5 வரை )

பகவத்கீதை


Bhagavad Gita in Tamil

பகவத்கீதை - அத்தியாயம் விபரம்


முதல் அத்தியாயம்

1. அர்ஜுன விஷாத யோகம்
குரு÷க்ஷத்திரப் போரில் தனக்கு எதிராளியாக தனது உறவினர்களே இருக்கின்றனர் என அர்ஜுனன் வருந்தினான். அந்த வருத்தமே, அர்ஜுன விஷாத யோகம் என்ற, பகவத்கீதையின் முதல் அத்தியாயமாக உருவெடுத்தது. இந்த அர்ஜுன விஷாத யோகமே, அடுத்துப் பதினேழு அத்தியாயங்களில் பகவான் சொல்லிய  உபதேசமான பகவத் கீதைக்கு வித்து போன்றது. வித்து என்றால் விதை. வித்தினால் வித் (ஞானோபதேசம்) உண்டாயிற்று.
கண்ணில்லாத திருதராஷ்டிர ராஜன் போருக்குச் செல்ல இயலாததால் அஸ்தினாபுரத்தில் உள்ள தன் அரண்மனையில் இருந்துகொண்டே போர்க்களத்தில் நடக்கும் செய்திகளைத் தனக்குச் சொல்லும்படி சஞ்ஜயன் என்ற மந்திரியை நியமிக்கிறான். வேதவியாசரருளால் ஞானதிருஷ்டி பெற்றவனாய் சஞ்ஜயன் போர்க்களத்துச் செய்திகளைத் திருதராஷ்டிரனுக்குச் சொல்கிறான். இதுவே முதல் அத்தியாயம் ஆகும்.
த்ருதராஷ்ட்ரரது வினா - சுலோகம் - போருக்கு இருதரத்தாரும் அணிவகுத்திருப்பதை ஸஞ்ஜயர் விளக்குகிறார் 2-20 -தன்னை எதிர்ப்பவர்களைக் காண அர்ஜுனன் தவிக்கிறான் 21-23 -அர்ஜுனன் எதிரிகளுக்குப் பதிலாக உறவினர்களையே காண்கிறான் 24-27 -அர்ஜுனனது தடுமாற்றம் 28-30 அர்ஜுனனது போலி வேதாந்தம் 31-46.
த்ருதராஷ்ட்ர உவாச
1. தர்ம÷க்ஷத்ரே குரு÷க்ஷத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​:
மாமகா​: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய
த்ருதராஷ்ட்ர உவாச-திருதராஷ்டிரன் சொல்லுகிறான், தர்ம÷க்ஷத்ரே குரு÷க்ஷத்ரே-அற நிலமாகிய குரு நிலத்தில், ஸமவேதா-ஒன்று கூடி, யுயுத்ஸவ-போர்செய்ய விரும்பித் திரண்ட, மாமகா-நம்மவர்களும், பாண்டவா-பாண்டவரும், கிம் அகுர்வத-என்ன செய்தனர்?
பொருள் : திருதராஷ்டிரன் சொல்லுகிறான்: சஞ்ஜயா, அற நிலமாகிய குரு நிலத்தில் போர்செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவரும் என்ன செய்தனர்?
ஸஞ்ஜய என்னும் சொல் விருப்பு வெறுப்பு முதலியவைகளை அறவே வென்றவன் என்று பொருள்படுகிறது. ஓரம் சாராது நடு நிலையில் இருப்பவனுக்கே ஞானக்கண் உண்டாகிறது. ஆதலால் தான் வியாச பகவான் ஸஞ்ஜயனுக்கு யுத்தத்தில் நிகழ்பவைகளை உள்ளபடி காணவல்ல ஞானக்கண்ணைக் கொடுத்தருளுகிறார்.
தம் பிள்ளைகளைத் தம்பியின் பிள்ளைகளிடமிருந்து பிரித்துக் கூறுவதால் திருதராஷ்டிரருடைய மனநிலை வெளியாகிறது. போர்புரியாது நாடு தம் பிள்ளைகளுக்குச் சேர்ந்துவிடவேண்டுமென்பது அவரது விருப்பம். தொன்று தொட்டு அறத்துக்கு நிலைக்களமாயிருக்கும் குரு÷க்ஷத்திரத்தின் மகிமையால் பாண்டவர்களிடமிருந்து மண்ணாசை ஒழியவில்லையா என்பது அவருக்கு ஏற்பட்ட ஐயம். போருக்கு இரு கட்சியினரும் அணிவகுத்திருப்பதை ஸஞ்ஜயர் விளக்குகிறார்.
2. ஸஞ்ஜய உவாச
த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா
ஆசார்யமுபஸங்கம்ய ராஜா வசநமப்ரவீத்
ஸஞ்ஜய உவாச-ஸஞ்ஜயன் சொல்லுகிறான், ததா துர்யோதந-அப்போது துர்யோதனன்; வ்டம் பாண்டவாநீகம்-அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை, த்ருஷ்ட்வா-பார்த்துவிட்டு, ஆசார்யம் உபஸங்கம்ய-துரோணனிடம் போய், வசனம் அப்ரவீத்-வார்த்தைகளை சொல்லலாயினன்.
பொருள் : சஞ்ஜயன் சொல்லுகிறான்: அப்போது துரியோதன ராஜன் அணிவகுத்து நின்ற பாண்டவர் படையைப் பார்த்துவிட்டு, ஆசாரிய (துரோண)னிடம் போய்(ப் பின்வரும்) வார்த்தை சொல்லலாயினன்:
3. பஸ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்
வயூடாம் த்ருபதபுத்ரேண தவ ஸிஷ்யேண தீமதா
ஆசார்ய தவ ஸிஷ்யேண-ஆசார்யரே! உன்னுடைய சீடனான, தீமதா- நிபுணனான, த்ருபத புத்ரேண-துருபதன் மகனால், வ்டாம் பாண்டுபுத்ராணாம்-வகுப்புற்ற பாண்டுவின் பிள்ளைகளின், ஏதாம் மஹதீம் சமூம்-இந்த பெரிய படையை, பஸ்ய-பார்.
பொருள் : குருவே, துருபதன் மகனும் நின் சீடனுமாகிய நிபுணனால் வகுப்புற்ற இப்பெரிய பாண்டவப் படையப் பார்.
4. அத்ர ஸூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி
யுயுதாநோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத​:
அத்ர-இங்கு, மஹேஷ்வாஸா-பெரிய வில்லாளிகளும், யுதி-போரில், பீமார்ஜுநஸமா-வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய, ஸூரா-சூரர், யுயுதாந-யுயுதானன், த்ருபத-மகாரதனாகிய துருபதன்.
பொருள் : இங்கு சூரரும் பெரிய வில்லாளிகளும் போரில் வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள் யுயுதானன்; விராடன்; மகாரதனாகிய துருபதன்;
5. த்ருஷ்டகேதுஸ்சேகிதாந​: காஸிராஜஸ்ச வீர்யவாந்
புருஜித்குந்திபோஜஸ்ச ஸைப்யஸ்ச நரபுங்கவ​:
த்ருஷ்டகேது-திருஷ்ட கேது, சேகிதாந-சேகிதானன், வீர்யவாந் காஸிராஜ-வீரியமுடைய காசி ராஜன், புரூஜித் -புரூஜித், குந்திபோஜ-குந்தி போஜன், நரபுங்கவ ஸைப்ய-மனிதரேறாகிய சைவியன்.
பொருள் : திருஷ்ட கேது சேகிதானன்; வீரியமுடைய காசி ராஜன்; புருஜித்; குந்தி போஜன்; மனிதரேறாகிய சைவியன்;
6. யுதாமந்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச வீர்யவாந்
ஸெளபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா​:
விக்ராந்த-வலிமை மிக்க, யுதாமந்யு-யுதாமந்யு, வீர்யவாந் உத்தமௌஜா-வீரன் உத்தமௌஜா, ஸௌபத்ர-சுபத்திரை மகன், த்ரௌபதேயா-திரௌபதி மக்கள்,
ஸர்வ ஏவ மஹாரதா-எல்லோருமே மகாரதர்.
பொருள் : வலிமை மிக்க யுதாமந்யு; உத்தமௌஜா என்ற வீரன்; சுபத்திரை மகன்; திரௌபதி மக்கள்; எல்லோருமே மகாரதர்.
7. அஸ்மாகம் து விஸிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம
நாயகா மம ஸைந்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே
த்விஜோத்தம்-இருபிறப்பாளரில் மேம்பட்டவனே, அஸ்மாகம்-நம்முள்ளே, யே விஸிஷ்டா-எவர் விசேஷமாக இருக்கின்றனரோ, தாந்-அவர்களை, நிபோத-தெரிந்து கொள், மம ஸைந்யஸ்ய-எனது படையின், யே நாயகா-எவர் நாயகர்களோ, தாந்-அவர்களை, ஸம்ஜ்ஞார்தம்-கவனத்திற்காக, ப்ரவீமி-சொல்லுகிறேன்.
பொருள் : இனி, எனது படைக்கு நாயகராய், நம்முள்ளே சிறந்தோரையுந் தெரிந்து கொள். இருபிறப்பாளரில் மேம்பட்டவனே, குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்குச் சொல்லுகிறேன்.
துர்யோதனன் மறைமுகமாகத் தனது குருவை நிந்திக்கிறான். போர் முறையைப் புகட்டுதலில் நீர் எவ்வளவு வல்லவராயிருந்தாலும், முடிவாகப் பார்க்குமிடத்து நீர் ஒரு பிராம்மணர் தானே! பயங்கொள்ளியாகிய உமக்குச் சண்டையில் எங்கிருந்து உற்சாகம் வரப்போகிறது? பாண்டவப் படையைப் பார்த்து நீர் பயப்படுவது இயல்பு. எனினும் எதற்கும் அஞ்சாதீர். நம் பக்கத்திலும் பேராற்றல் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர்-இதுதான் அவன் பேச்சின் கருத்து.
8. பவாந் பீஷ்மஸ்யுச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்ஜய​:
அஸ்வத்தாமா விகர்ணஸ்ச ஸெளமதத்திர்ஜயத்ரத:
பவாந்-நீ, பீஷ்ம: கர்ண: க்ருப-பீஷ்மன், கர்ணன், கிருபன், ஸமிதிஞ்ஜய-பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய, ததா ஏவ-அதே போல, அஸ்வத்தாமா விகர்ண, ஸௌமதத்தி-அசுவத்தாமன் விகர்ணன் சோமதத்தன் மகன்.
பொருள் : நீ; பீஷ்மன்; கர்ணன்; பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய கிருபன்; அசுவத்தாமன்; விகர்ணன்; சோமதத்தன் மகன்;
துரோணாசாரியரை அளவுக்குமிஞ்சி அவமரியாதை செய்து விட்டதாக அஞ்சுகிற துர்யோதனன் அதற்கு ஈடாக சேனாதிபதியாகிய பீஷ்மருக்கு முன்பாக அவரை வைத்து முகஸ்துதி செய்கிறான். மேலும் துரோணருடைய மைத்துனராகிய கிருபரை போர் முனையில் வெற்றியே வடிவெடுத்துள்ளவர் என்று புகழ்ந்து பேசுகிறான். இதுபோன்ற முகஸ்துதிக்கு யார்தான் வசப்படமாட்டார் !
9. அந்யே ச பஹவ​: ஸூரா மதர்த்தே த்யக்தஜீவிதா​:
நாநாஸஸ்த்ரப்ரஹரணா​: ஸர்வே யுத்தவிஸாரதா​:
அந்யே ச-இன்னும் வேறு, பஹவ: ஸூரா-பல சூரர், மதர்தே -என் பொருட்டு, த்யக்தஜீவிதா-வாழ்க்கையைத் துறந்தோர், ஸர்வே-எல்லோருமே, நாநாஸஸ்த்ரப்ரஹரணா-பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர், யுத்வவிஸாரதா-போரில் நிபுணர்.
பொருள் : இன்னும் வேறு பல சூரர்; என் பொருட்டு வாழ்க்கையைத் துறந்தோர்; பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்; எல்லோருமே போரில் நிபுணர்.
10. அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்
பீஷ்மாபிரக்ஷிதம்-பீஷ்மனால் காக்கப்படும், அஸ்மாகம் பலம்-நமது படை, அபார்யாப்தம்-(கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை, பீமாபிரக்ஷிதம்-வீமனால் காக்கப்படும், ஏதேஷாம் பலம்-இவர்களுடையை படையோ, பர்யாப்தம்-நிறைந்திருக்கிறது
பொருள் : (எனினும்) பீஷ்மனால் காக்கப்படும் நமது படை (கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை. வீமனால் காக்கப்படும் இவர்களுடையை படையோ நிறைந்திருக்கிறது.
அசுர இயல்பு உடையானுக்கு அழிவுகாலம் அணுகும் பொழுது வீண்பெருமை கொள்ளுதல் அதிகரிக்கிறது. அத்தகைய தற்புகழ்ச்சியில் தனக்கே கேடுதரும் கருத்துகள் தற்செயலாய் வந்து அமைவதும் உண்டு. இங்கு துர்யோதனனுடைய கூற்று இக்கோட்பாட்டுக்கு இலக்காகிறது. தனக்கு ஜன்ம சத்துருவாயிருக்கின்ற பீமனைவிட பீஷ்மர் சிறந்த சேனாதிபதி என்பது அவன் கருத்து. பீமன் தன் வெற்றிக்காகப் பாடுபடுபவன். பாட்டனாராகிய பீஷ்மரோ பட்சபாதமில்லாதவர். உடன்படிக்கையின் படி துர்யோதனனுக்காப் போர் புரிந்தாலும் அவர் தர்மம் ஒன்றே வெற்றியடைய வேண்டும் என்னும் கோரிக்கையுடையவர். அவருடைய சீரிய மனநிலையை துர்யோதனன் அறிந்திலன்.
ஆட்களின் எண்ணிக்கையிலிருந்து ஒரு சேனையின் வலிவை அறிந்துகொள்ள முடியாது. கட்டுக்கு அடங்கியிருக்கிற பாங்கிலிருந்து ஒரு படையின் திறமை தோன்றும். தங்களுடைய சேனை கட்டுக்கு அடங்காதது; பாண்டவர்களுடையதோ கட்டுக்கு அடங்கியது என்று எண்ணிக்கையின் விரிவைத் துர்யோதனன் தற்பெருமையாகச் சொல்லுகிறான். வண்ணத்தில் பெரியது எனினும் வலிவில் சிறியது என்ற அமங்கலக் கருத்து அதில் அடங்கியிருக்கிறது.
ஒரு சமூகத்தினுடைய வாழ்க்கை முறைக்கும் இக்கோட்பாடு பொருந்தும். கட்டுப்பாடும் திட்டமும் உடைய சிறு சமூகங்கள் நன்கு முன்னேற்றமடைகின்றன. கட்டில் அடங்காத பெரிய சமூகங்கள் பிற ஆட்சிக்கு அடிமையாகின்றன; அல்லது சீரும் சிறப்புமின்றித் தம்மைத் தாமே ஆண்டுவருகின்றன. அடக்கமுடைமைக்கும் அடக்கமின்மைக்கும் உள்ள சிறந்த வேறுபாட்டை உலகில் எப்பொழுதும் காணலாம்.
11. அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா​:
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த​: ஸர்வ ஏவ ஹி
ஸர்வேஷு அயநேஷு-எல்லா இடங்களிலும், யதாபாகம் அவிஸ்ததா-வகுப்புகளின்படி நின்றுகொண்டு, பவந்த: ஸர்வ-நீங்களனைவரும், பீஷ்மம் ஏவ-பீஷ்மனையே, அபிரக்ஷந்து-காக்கக் கடவீர்.
பொருள் : நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்றுகொண்டு பீஷ்மனையே காக்கக் கடவீர்.
முயற்சியற்றவர்களாகிய நீங்கள் என் சொற்படியாவது கேட்டு நடந்துகொள்ளுங்கள் என்று சேனாதிபதிகளை அவமதிப்பது போன்றிருக்கிறது துர்யோதனனது கூற்று.
12. தஸ்ய ஸஞ்ஜநயந் ஹர்ஷம் குருவ்ருத்த​: பிதாமஹ​:
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை​: ஸங்கம் தத்மௌ ப்ரதாபவாந்
குருவ்ருத்த-கௌரவரில் மூத்தவராகிய, ப்ரதாபவாந் பிதாமஹ-கீர்த்திமிக்க பாட்டன், தஸ்ய-அவனுடைய(துரியோதனனுடைய இதயத்தில்), ஹர்ஷம் ஸஞ்ஜநயந்-மகிழ்ச்சி விளைவிக்குமாறு, உச்சை: ஸிம்ஹநாதம்-உயர்ந்த குரலில் சிங்கநாதம், விநத்ய-புரிந்து, ஸங்கம் தத்மௌ-சங்கை தினான்.
பொருள் : (அப்போது) துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு கீர்த்திமிக்க கௌரவர் கிழவனாகிய பாட்டன் உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கை தினான்.
துரோணாசாரியரை இகழ்கின்ற போக்கில் துர்யோதனன் மிகைபடப் பேசிவிட்டான். அதனால் அவருடைய ஊக்கமும் குறைந்தது. மற்ற சேனாதிபதிகள் ஓரளவில் அவமதிக்கப்பட்டனர். துர்யோதனனுடைய உள்ளத்திலோ அச்சம் குடி புகுவதாயிற்று. நிலைமை கெட்டு வருவதை பீஷ்மர் பார்த்தார். மேலும் மனத்தளர்ச்சிக்கும் குழப்பத்துக்கும் இடந்தரலாகாது. தம் பேரன் மீது இரக்கம் வைத்துப் பாட்டனார் சங்குநாதித்துத் திடீரென்று காட்சியை மாற்றுகிறார். அதன் மூலம் கௌரவர்களே யுத்தத்தைத் துவக்கியவர் ஆகின்றனர். ஆக்கிரமிப்பு என்னும் குற்றம் அவர்களைச் சார்ந்ததாகிறது.
13. தத​: ஸங்காஸ்ச பேர்யஸ்ச பணவாநககோமுகா​:
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஸப்தஸ்துமுலோ பவத்
தத-அப்பால், ஸங்கா ச பேர்ய: ச-சங்குகளும், பேரிகைகளும், பணவ ஆநக கோமுகா-தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும், ஸஹஸா-திடீரென, அப்யஹந்யந்த-ஒலித்தன, ஸ: ஸயுப்த-அந்த ஓசை, துமுல-பயங்கரமாக, அபவத்-இருந்தது.
பொருள் : அப்பால், சங்குகளும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும், திடீரென ஒலித்தன. அஃது பேரோசையாயிற்று.
இது கௌரவர்கள் பக்கம் உண்டாகிய இரைச்சல்.
14. தத​: ஸ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ
மாதவ​: பாண்டவஸ்சைவ திவ்யௌ ஸங்கௌ ப்ரதத்மது​:
தத-பின்பு, ஸ்வேதை: ஹயை: யுக்தே-வெள்ளை குதிரைகள் பூட்டிய, மஹதி ஸ்யந்தநே-பெருந் தேரில், ஸ்திதௌ மாதவ: பாண்டவ-நின்ற மாதவனும் பார்த்தனும், திவ்யௌ ஸங்கௌ-தெய்வீகமான சங்குகளை, ப்ரதத்மது-ஊதினர்.
பொருள் : பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெருந் தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும் (தம்முடையை) தேவச் சங்குகளை தினர்.
மாதவன் என்பது கிருஷ்ணனுடைய பெயர்களில் ஒன்று. மா-இலக்ஷ்மியின், தவ: -தலைவன். இலக்ஷ்மீபதியே பாண்டவர் பக்கமிருப்பதால் இனி ராஜ்யலக்ஷ்மிக்கு அல்லது விஜயலக்ஷ்மிக்கு இருப்பிடம் பாண்டவர் பக்கமாகப் போகிறது.
பாண்டவன் என்று ஐவரில் யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம். நாராயணன், நரன் என்ற இரண்டு ரிஷிகள் இப்பொழுது கிருஷ்ணனாகவும் அர்ஜுனனாகவும் அவதரித்திருக்கிறார்கள். அவர்கள் இணைபிரியாதிருப்பதால் ஈண்டுப் பாண்டவன் என்னும் சொல் சிறப்பாக அர்ஜுனனைக் குறிக்கிறது.
15. பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேஸோ தேவதத்தம் தநஞ்ஜய​:
பௌண்ட்ரம் தத்மௌ மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர​:
ஹ்ருஷீகேஸ: பாஜ்ஜந்யம்-கண்ணன் பாஞ்சஜன்யம் என்கிற பெயருடைய சங்கை, நஞ்ஜய: தேவதத்தம்-அர்ஜுனன் தேவ தத்தம் என்ற சங்கை, பௌணட்ரம் மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர-பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன், தத்மௌ-ஊதினான்.
பொருள் : கண்ணன் பாஞ்சஜன்யத்தை தினான்; தேவ தத்தம் என்ற சங்கை தனஞ்ஜெயன் ஒலித்தான்; அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை ஊதினான்.
ஹிருஷீகேசன் என்பது இந்திரியங்களுக்குத் தலைவன் என்று பொருள்படுகிறது. இது கிருஷ்ணனுக்கு ஓர் அடைமொழி. இந்திரியங்களைக் கட்டி ஆளுபவன் எச்செயலைச் செய்தாலும் அதை ஒழுங்காகவும் நேர்மையாகவும் செய்வான்.
தனஞ்ஜயன் என்ற சொல் செல்வத்தை வென்றவன் என்ற கருத்துடையது, அர்ஜுனன் ஆங்காங்குச் சென்று அரசர்களிடம் ஒன்றுக்கும் பயன்படாது அடைபட்டுக்கிடந்த செல்வங்களை யெல்லாம் பெயர்த்தெடுத்துக் கொண்டுவந்து சேர்ந்தான். ஆகையால் அவனுக்கு அப்பெயர் வந்தது. பீமசேனனுக்கு வ்ருகோதரன் என்று பெயர். ஓநாயின் வயிறுபோன்று ஒடுங்கிய வயிறு உடையவன் என்றும், எதையும் எளிதில் ஜீரணம் செய்யக்கூடியவன் என்றும் இது பொருள்படுகிறது. நல்ல ஜீரணசக்தி யுடையவர்கள் எச்செயலையும் ஆற்றவல்லவர் ஆகின்றனர்.
16. அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர​:
நகுல​: ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ
அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர​-அநந்த விஜயம் என்ற சங்கை குந்தியின் மகனான ராஜா யுதிஷ்டிரன், நகுல​: ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ-சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளை நகுலனும் சகாதேவனும்
பொருள் : குந்தி மகனாகிய யுதிஷ்டிரன் அநந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகதேவனும் (முறையே) சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினர்.
நாடு ஆண்டாலும் ஆளாவிட்டாலும் அரசனது இயல்புகள் அனைத்தையும் அடையப் பெற்றிருக்கிறபடியால் யுதிஷ்டிரனுக்கு ராஜா என்னும் சிறப்புச்சொல் பொருத்தமாக அமைகிறது. இப்பொழுது அவன் மூடிசூடாத மன்னனாயிருக்கிறான்.
17. காஸ்யஸ்ச பரமேஷ்வாஸ​: ஸிகண்டீ ச மஹாரத​:
த்ருஷ்டத்யும்நோ விராடஸ்ச ஸாத்யகிஸ்சாபராஜித​:
பரமேஷ்வாஸ: காஸ்ய: ச-வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும், மஹாரத: ஸிகண்டீ ச-மகாரதனாகிய சிகண்டியும், த்ருஷ்டத்யும்ந விராட: ச-திருஷ்டத்யும்னனும் விராடனும், அபராஜித: ஸாத்யகிஸ்ச-வெல்லப்படாத ஸாத்தியகியும்.
பொருள் : வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும், மகாரதனாகிய சிகண்டியும், திருஷ்டத்யும்நனும், விராடனும், வெல்லப்படாத ஸாத்தியகியும்,
சிகண்டி என்ற சொல் முகத்தில் மீசையில்லாதவன் எனப் பொருள்படுகிறது. இவன் பேடுவாக இருந்தான். பீஷ்மருக்கு எதிரில் இவனை நிறுத்தியபொழுது அவர் போர்புரியாது சும்மா இருந்துவிட்டார். ஆதலால் அவருக்குத் தோல்வியுண்டாயிற்று. திருஷ்டத்யும்னன் என்ற பதத்திற்குப் பொருள் எவராலும் எதிர்க்க முடியாதவன் என்பதாம்.
18. த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வஸ​: ப்ருதிவீபதே
ஸௌபத்ரஸ்ச மஹாபாஹு​: ஸங்காந் தத்மு​: ப்ருதக் ப்ருதக்
த்ருபதோ த்ரௌபதேயா: ச-துருபதனும் திரௌபதியின் புதல்வர்களும், மஹாபாஹு: ஸௌபத்ர-பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும், ஸர்வஸ-எல்லோரும்,
ப்ருதிவீபதே-பூமிக்குத் தலைவனே! (சஞ்சயன் திருதராட்டிரனிடம்), ப்ருதக் ப்ருதக்-தனித்தனியாக, ஸங்காந் தத்மு-சங்குகளை ஒலித்தனர்.
பொருள் : துருபதனும், துரோபதை மக்களும், பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும் தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர். பூமிக்குத் தலைவனே!
பிருதிவீபதே - மண்ணாள்பவனே என்று திருதராஷ்டிரன் இங்கு ஸஞ்ஜயனால் அழைக்கப்படுவது அரசனது பொறுப்பை அவனுக்கு ஞாபகமூட்டுதற் பொருட்டேயாம். நாட்டைக் கடும் போரில் ஆழ்த்திவிடுவதும் சண்டை சச்சரவின்றி சமாதானமாயிருக்கச் செய்வதும் ஆகிய இரு செயல்களும் நாடாள்பவனுக்கு இயலும். உனது விருப்பம் யாதோ என்னும் எச்சரிக்கை இங்கே தொக்கி நிற்கிறது.
19. ஸ கோ÷ஷா தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந்
ஸ: துமுல: கோஷ-அந்த பயங்கர ஓசை, நப: ப்ருதிவீம் ச-ஆகாயத்தையும் பூமியையும், வ்யநுநாதயந்-ஒலிக்கச் செய்து, தார்தராஷ்ட்ரணாம்-திருதராஷ்டிரக் கூட்டத்தாரின், ஹ்ருதயாநி-நெஞ்சுகளை, வ்யதாரயத்-பிளந்தது.
பொருள் : அந்தப் பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது.
பாண்டவப்படை தொகையில் சிறியது எனினும் அப்பக்கம் இருப்பவர்களுக்குப் பெருமுழக்கம் செய்ய இயன்றது. தெய்வத்தின் துணையும் தர்மத்தின் வலிவுமே அதற்குக் காரணமாயிற்று. குற்றமுடையவர்கள் நெஞ்சில் சிறுபிள்ளையின் பழிப்பும் சுடுசரம் போன்று பாயும். கௌரவர்களுடைய நெஞ்சத்தில் வஞ்சகமிருந்தபடியால் அது வீறப் பிளக்கப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.
20. அத வ்யவஸ்திதாந்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ​:
ப்ரவ்ருத்தே ஸஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ​:
அத-அப்பால், கபித்வஜ: பாண்டவ-குரங்குக் கொடியர்த்த பார்த்தன், வ்யவஸ்திதாந் தார்தராஷ்ட்ராந்-எதிர் நிற்கும் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை, த்ருஷ்ட்வா-நோக்கி, ததா ஸஸ்த்ரஸம்பாதே ப்ரவ்ருத்தே-அப்போது ஆயுதங்களை விடுக்க முனைகின்ற போது, தநு: உத்யம்ய-வில்லையேந்திக் கொண்டு.
பொருள் : அப்பால், (இரு திறத்தும்) அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.
தன்னை எதிர்ப்பவர்களைக் காண அர்ஜுனன் தவிக்கிறான்.
அர்ஜுன உவாச
21. ஹ்ருஷீகேசம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே
ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேச்யுத
ஹ்ருஷீகேஸம் இதம் வாக்யம்-கண்ணனிடம் இந்த வார்த்தைகளை, ஹ-சொல்கிறான், மஹீபதே-ராஜனே!, அச்யுத-ஹே அச்சுதா, மே ரதம்-என்னுடைய ரதத்தை, உபயௌ:ஸேநயோ-இரண்டு படைகளின், மத்யே-நடுவே, ஸ்தாபய-நிறுத்துக
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக என்று. (கேளாய், திருதராஷ்டிர ராஜனே!)
22. யாவதேதாந்நிரீ÷க்ஷஹம் யோத்துகாமாநவஸ்திதாந்
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே
அஸ்மிந் ரணஸமுத்யமே-இந்தப் போர்த் தொடக்கத்தில், மயா கை: ஸஹ யோத்வவ்யம்-என்னால் எவருடன் போர் செய்ய நேருமோ யோத்துகாமாந் அவஸ்திதாந் ஏதாந்-சமரை விரும்பி நிற்கும் இவர்களை, யாவத்-எவ்வளவு நேரம், அஹம் நிரீக்ஷ÷க்ஷ-நான் பார்க்கிறேன்
பொருள் : சமரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும். இந்தப் போர்த் தொடக்கத்தில் என்னோடு போர் செய்யக் கடவோர் யார்?”
அச்யுதன் என்பது விஷ்ணுவுக்கு அமைந்துள்ள பெயர்களில் ஒன்று. தன் பெருநிலையினின்று இறங்காதவன் என அது பொருள்படுகிறது. (21-22)
23. யோத்ஸ்யமாநாநவே÷க்ஷஹம் ய ஏதேத்ர ஸமாகதா​:
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ​:
துர்புத்தே: தார்தராஷ்ட்ரஸ்ய-கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்கு, யுத்தே ப்ரியசிகீர்ஷவ-போரில் நன்மை செய்யும் வண்ணம், யே-எவர், ஏதே-இந்த அரசர்கள், அத்ர ஸமாகதா: இங்கே வந்துள்ளனர், யோத்ஸ்யமாநாந்-போர் செய்ய திரண்டு நிற்பவர்களை, அஹம் அவே÷க்ஷ-நான் காண வேண்டும்
பொருள் : “கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்குப் பிரீதி செய்யும் வண்ணம், இங்கு போர் செய்யத் திரண்டு நிற்போரை நான் காண வேண்டும்” என்றான்.
அளவுக்கு மிஞ்சிய ஊக்கம் விரைவில் சோர்வை உண்டு பண்ணக்கூடியது. இனி வரப்போகும் மனத்தளர்ச்சிக்கு முன்னறிகுறியாக அர்ஜுனனுக்கு அளவில்லாப் போர்த்திறம் பிறக்கிறது. ஆகவே தன்னை எதிர்ப்பார் யார் என்று காண அவன் காமுறுகிறான்.
அர்ஜுனன் எதிரிகளுக்குப் பதிலாக உறவினர்களைக் காண்கிறான்.
24. ஏவமுக்தோ ஹ்ருஷீகேஸோ குடாகேஸேந பாரத
ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோயுத்தமம்
பாரத-(கேளாய்) பரத நாட்டரசே, குடாகேஸேயுந-அர்ஜுனனால், ஏவம் உக்த-இவ்வாறு சொன்னவற்றை கேட்டு, ஹ்ருஷீகேஸயு-கண்ணன், உபயோ: ஸேநயோ-இரண்டு படைகளுக்கும், மத்யே-நடுவில், ரதோயுத்தமம்-மேன்மை கொண்ட அத்தேரை, ஸ்தாயுபயித்வா-நிறுத்தி.
பொருள் : சஞ்ஜயன் சொல்லிக்கொண்டு வருகிறான்: (கேளாய்) பரத நாட்டரசே, இங்ஙனம் பார்த்தனுரைத்துக் கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான்.
25. பீஷ்மத்ரோணப்ரமுகத​: ஸர்வேஷாம் மஹீ÷க்ஷதாம்
உவாச பார்த்த பஸ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி
பீஷ்மத்ரோணப்ரமுகத-பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்ற வேந்தருக்கும் முன்பாக,
ஸர்வேஷாம் மஹீ÷க்ஷதாம்-எல்லா அரசர்களுக்கு முன், இதி உவாச-இவ்வாறு சொன்னான், ஸமவேதாந்-கூடி இருக்கும், ஏதாந் குருந்-கௌரவரை, பஸ்ய-பார்
பொருள் : பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக்கொண்டு, “பார்த்தா! இங்குக் கூடி நிற்கும் கௌரவரைப் பார்!” என்றான்.
அர்ஜுனனுக்குக் குடாகேசன் அல்லது தூக்கத்தை வென்றவன் என்பது ஒரு பெயர். நினைத்தபடி நினைத்தபொழுது தூங்கவோ அல்லது தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும். மனதை நன்கு வென்றவனுக்கே இது இயலும். மனதை வென்றவன் எதற்கும் கலங்கான். அத்தகைய மனவுறுதியுடையவனையும் கலக்கும்படியான பெரியதோர் போராட்டம் வரப்போகிறது என்பது அவனுக்குப் காண்பிக்கப்படுகிறது. (24-25)
26. தத்ராபஸ்யத் ஸ்திதாந் பார்த​: பித்ரூநத பிதாமஹாந்
ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ரூந் புத்ராந்பௌத்ராந் ஸகீம்ஸ்ததா
27. ஸ்வஸுராந்ஸுஹ்ருதஸ்சைவ ஸேநயோருபயோரபி
தாந்ஸமீ÷க்ஷய ஸ கௌந்தேய​: ஸர்வாந்பந்தூநவஸ்திதாந்
28. க்ருபயா பரயா விஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத்
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்
29. ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஸுஷ்யதி
வேபதுஸ்ச ஸரீரே மே ரோமஹர்ஷஸ்ச ஜாயதே
30. காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே
ந ச ஸக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந​:
31. நிமித்தாநி ச பஸ்யாமி விபரீதாநி கேஸவ
ந ச ஸ்ரேயோ நுபஸ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே
32. ந காங்÷க்ஷ விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா
33. யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா​: ஸுகாநி ச
த இமே வஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச
34. ஆசார்யா​: பிதர​: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா​:
மாதுலா​: ஸ்வஸுரா​: பௌத்ரா​: ஸ்யாலா​: ஸம்பந்திநஸ்ததா
அத பார்த-இதற்கு பின் அர்ஜுனன், தத்ர ஸ்திதாந்-அங்கே நிற்கும்,
பித்ரூந் பிதாமஹாந் ஆசார்யாந் மாதுலாந்-தந்தை உடன் பிறந்தவர்களையும் பாட்டனா ரும் குருக்களும் மாமன்மார்களும், ப்ராத்ருந் புத்ராந் பௌத்ராந்-சகோதரர்களும், பிள்ளைகளும், பேரரும், ததா-அதே போல, ஸகீந்-நண்பர்களும், அபஸ்யத்-பார்த்தான்
ஸேநயோ: உபயோ: அபி-இரண்டு படைகளிலும், ஸ்வஸுராந்-மாமன்மாரும், ஸுஹ்ருத ச-நண்பர்களும், ஸர்வாந் பந்தூந்-உறவினரெல்லாரும், அவஸ்திதாந்-நிற்பவர்களை, ஸமீக்ஷ்ய-நன்றாக பார்த்து, கௌந்தேய​-அர்ஜுனன்
ஸ: கௌந்தேய-அந்த அர்ஜுனன், பரயா க்ருபயா அவிஷ்ட-மிகுந்த இரக்கத்துடன் நிரம்பியவனாக, விஷீதந்-துயரடைந்து, இதம் அப்ரவீத்-இவ்வாறு சொல்லுகிறான்
க்ருஷ்ண-ஹே கிருஷ்ணா, யுயுத்ஸும்-போர் செய்ய விருப்பத்துடன், ஸமுபஸ்திதம்-நிற்கிற, இமம் ஸ்வஜநம் த்ருஷ்ட்வா-இந்த சுற்றத்தார்களை கண்டு.
மம காத்ராணி ஸீதந்தி-என்னுடைய உறுப்புகள் சோர்கின்றன, முகம் பரிஸுஷ்யதி-வாய் உலர்கிறது, மே ஸரீரே வேபது-என்னுடைய உடலில் நடுக்கம் ரோமஹர்ஷ: ஜாயதே-மயிர் சிலிர்ப்பு அடைகிறது.
ஹஸ்தாத் காண்டீவம் ஸ்ரம்ஸதே-கையிலிருந்து காண்டீபம் என்கிற வில் நழுவுகிறது, த்வக் ச ஏவ பரிதஹ்தே-உடலிலும் எரிச்சல் உண்டாகிறது, மந: ப்ரமதி இவ-மனம் குழம்புவது போல, அவஸ்தாதும் ந ஸக்நோமி-நிற்கவும் முடியவில்லை.
விபரீதாநி நிமித்தாநி ச பஸ்யாமி-விபரீதமான சகுனங்களும் காண்கிறேன், ஆஹவே-போரிலே, ஸ்வஜநம் ஹத்வா-சுற்றத்தார்களை கொன்று, ஸ்ரேய: ச-நன்மையும், ந அநுபஸ்யாமி-தோன்றவில்லை.
விஜயம் ராஜ்யம் ச ஸுகாநி-வெற்றியையும் ராஜ்யத்தையும் இன்பங்களையும், கோவிந்த -ஹே கோவிந்தா, ந காங்÷க்ஷ-விரும்புகிலேன், ஜீவிதேந ராஜ்யேந: போகை வா-உயிர் வாழ்க்கையாலோ அல்லது ராஜ்யத்தாலோ அல்லது இன்பங்களாலோ கிம்-என்ன
யேஷாம் அர்தே-எவருக்காக, ராஜ்யம் போகா: ஸுகாநி தநாநி-அரசு, போகங்கள் இன்பங்கள், செல்வம், ந: காங்க்ஷிதம்-நமக்கு விருப்பமோ, தே இமே-அந்த இவர்களே, யுவே-யுத்தத்தில், ப்ராணாந்-உயிர்களை, த்யக்த்வா-இழந்தவராய், இமேஅவஸ்திதா-நிற்கிறார்கள்.
ஆசார்யா: பிதர: புத்ரா-குருமார்கள், தந்தையர், மக்கள், ததா பிதாமஹா: மாதுலா: ஸ்வஸுரா-அதே போல, பாட்டன்மார், மாமன்மார், மாமனார்கள், பௌத்ரா: ஸ்யாலா: ஸம்பந்திந-பேரரும், மைத்துனரும், உறவினர்களும்.
பொருள் : அங்குப் பார்த்தன் தன்னுடைய தந்தையாரும், பாட்டன்மாரும், குருக்களும், மாதுலரும், அண்ணன் தம்பிகளும், மக்களும், பேரரும், தோழர்களும் நிற்பது கண்டான்.
பொருள் : அங்ஙனமே மாமன்மாரும், நண்பர்களும், உறவினரெல்லாரும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய அப்பார்த்தன் மிகவும் இரக்கமுற்றவனாய்த் துயருடன் சொல்லுகிறான்:
பொருள் :அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, போர் செய்ய வேண்டு இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு,
பொருள் : என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.
பொருள் :காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.
பொருள் : கேசவா, விபரீதமான சகுனங்கள் பல காண்கிறேன். போரிலே சுற்றத்தார்களை மடிப்பதில் எனக்கு நன்மை தோன்றவில்லை.
பொருள் :கண்ணா, நான் வெற்றியை விரும்புகிலேன்; ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன். கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென்? உயிர் வாழ்க்கையாலேனுமாவதென்னே?
பொருள் : யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தோராய் இங்கு வந்து நிற்கிறார்கள்.
பொருள் :குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும், பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும்
குந்தியின் மகன் என்று இயம்புவதன் மூலம், தாயின் இயல்பை-பேதைமையை அர்ஜுனன் விரைவில் பெற்றுவிட்டான் என்பது குறிப்பிடப்படுகிறது. இதுகாறும் சத்துரு பாவனையோடிருந்த அவனுக்கு இப்பொழுது ஒரு நெருக்கடியில் திடீரென்று மித்திரபாவனை வருகிறது. இதை விவேகத்தின் விளைவு எனலாகாது. விவேகமின்மைக்கே இது எடுத்துக்காட்டாகும். நிலை தடுமாற்றம் நிகழ்ந்துவிட்டது. அஞ்ஞானமோ இருள் போன்றது. மனிதனுடைய வீழ்ச்சிக்கு அதுவே காரணமாகிறது. வீழ்ச்சியின் முதற்படி இப்பொழுது ஆரம்பித்திருக்கிறது.
அர்ஜுனனது தடுமாற்றம்
இங்ஙனம் இப்பதத்துக்கு மூன்று அர்த்தங்கள் இருக்கின்றன. நிமித்தம், சகுனம், குறி முதலியவைகள் ஒரு பொருட்சொற்கள். சகுனத்தில் ஓரளவு உண்மையுண்டு. கால தேச நிமித்தம் ஆகிய மூன்றுக்கும் நெருங்கிய தொடர்வுண்டு. நாடிய கருமம் ஒன்று குறித்த வேளையில் அல்லது இடத்தில் நிறைவேறும் அல்லது நிறைவேறாது என்பதற்கு இயற்கையில் இதர உயிர்களின் செயல்கள் சில முன்னறிகுறிகளாக வந்தமைகின்றன. ஓரிடத்தில் ஒரு வேளையில் ஒரு மனிதனைக் காண மற்றொருவன் புறப்படுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அது இயலும் அல்லது இயலாது என்பதற்குத் தற்செயலாய்ச் சகுனம் வந்தமைவதுண்டு. முக்கியமல்லாத செயல்களை இன்று செய்யலாமா அல்லது நாளைக்குச் செய்யலாமா என்று சகுனம் பார்த்துவிட்டு ஒத்தி வைக்கலாம். ஆனால் மாணாக்கன் ஒருவன் பரீøக்ஷக்குப் போம்பொழுது, நாடு ஒன்று தர்மயுத்தத்தில் பிரவேசிக்கும் பொழுது சகுனம் பார்ப்பது பொருள்படாச் செயலாகும். அப்போதைக்கப்போது செய்து முடிக்கவேண்டிய வினையில் தீவிரமாகக் கருத்தைச் செலுத்தவேண்டும். தம் கடமையை முறையாகச் செய்பவர் குறி பார்ப்பதில் கருத்து வைக்கலாகாது.
அர்ஜுனனுக்கு அபசகுனங்கள் தென்பட்டதற்கு அவனுடைய மனக்கலக்கமே காரணமாகும். வீரன் ஒருவனுக்கு மனக் கலக்கம் பொருந்தாது.
அர்ஜுனனது போலி வேதாந்தம்.
இந்த விரக்தி விவேகத்தினின்று வந்ததன்று. மயக்கத்தின் விளைவானது பற்றற்றவனது பாங்கு போன்று வடிவெடுக்கிறது.
கோவிந்தன் (கோ-உயிர்; விந்தன்-அறிபவன்) உயிர்களின் உள்ளத்தில் இருப்பதை நன்கு அவன் அறிகிறபடியால் இதற்கு ஒரு முடிவு அவன்தான் சொல்லியாக வேண்டும். (26-34)
35. ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோ பி மதுஸூதந
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ​: கிம் நு மஹீக்ருதே
மதுஸூதந-மதுசூதனா, க்நத: அபி-நான் கொல்லப்பட்டாலும் த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ-மூவுலகின் ஆட்சிக்காகவும், ஏதாந் ஹந்தும் ந இச்சாமி-இவர்களை கொல்ல விரும்பவில்லை, மஹீக்ருதே கிம் நு-பூமிக்காக (சொல்லவும் வேண்டுமா).
பொருள் :மதுசூதனா, யான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்புகிலேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் (இது செய்யேன் செய்யேன்!) பூமியின் பொருட்டு செய்வனோ?
மது என்ற அசுரனைக் கொன்றதனால் கிருஷ்ணனுக்கு மது சூதனன் என்ற பெயர் வந்தது.
36. நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந​: கா ப்ரீதி​: ஸ்யாஜ்ஜநார்தந
பாபமேவாஸ்யுரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந​:
ஜநார்தந-ஜனார்தனா, தார்தராஷ்ட்ராந் நிஹத்ய-திருதராஷ்டிரக் கூட்டத்தாரை கொன்று, ந: கா ப்ரீதி: ஸ்யாத்-நமக்கு என்ன இன்பம் ஏற்படப் போகிறது, ஏதாந் ஆததாயி, த்வா-இந்த பாவிகளை கொல்வதால், அஸ்மாந் பாபம் ஏவ ஆஸ்ரயேத்-நம்மை பாவமே சாரும்.
பொருள் : ஜநார்த்தன! திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தையடையப் போகிறோம்? இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மைப் பாவமே சாரும்.
ஜநார்தனன்-பொருள், வீடு இரண்டின் பொருட்டு ஜனங்களால் வழுத்தப்படுபவன். இது கிருஷ்ணனுடைய மற்றொரு பெயர்.
ஆததாயினர் என்னும் சொல் பெரும் பாபிகள் எனப்பொருள்படும். ஒருவன் குடியிருக்கும் வீட்டில் தீ வைத்தல், உணவில் விஷத்தை வைத்து வழங்கல், உருவிய வாளோடு ஒருவனைக் கொல்லப் பாய்தல், ஒருவனுடைய செல்வத்தை , நிலத்தை அல்லது மனைவியைத் திருடவும் அபகரிக்கவும் முயலுதல் ஆகிய இவை யாவும் மகா பாபங்களாகின்றன. திருதராஷ்டிரனுடைய மக்கள் இத்தனைவிதக் குற்றங்களையும் செய்தவர்கள் ஆவர். ஆததாயி ஒருவன் பண்டிதனாயிருப்பினும் அவனைக் கொல்லுதல் முறை. ஆனால் இளகிய நெஞ்சத்தால் அர்ஜுனன் அங்ஙனம் செய்ய இசையவில்லை.
37. தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந்ஸ்வபாந்தவாந்
ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந​: ஸ்யாம மாதவ
மாதவ-ஹே மாதவா, தஸ்மாத்-இதிலிருந்து, ஸ்வபாந்தவாந் தார்தராஷ்ட்ராந் -சுற்றத்தார்களான திருதராஷ்டிர வர்க்கத்தாரை, ஹந்தும் வயம் ந அர்ஹா-கொல்வதற்கு நாம் உரியவர் அல்லர், ஹி-ஏனெனில், ஸ்வஜநம் ஹத்வா-பந்துக்களை கொன்றபின், கதம் ஸுகிந: ஸ்யாம-எப்படி இன்புற்று இருப்போம்?
ஆதலால், சுற்றத்தாராகிய திருதராஷ்டிர வர்க்கத்தாரைக் கொல்வது நமக்குத் தகாது. மாதவா, பந்துக்களைக் கொன்றபின் நாம் இன்புற்றிருப்பதெப்படி?
38. யத்யப்யேதே ந பஸ்யுயந்தி லோபோபஹதசேதஸ​:
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம்
லோப உபஹதசேதஸ-அவாவின் மிகுதியால் அறிவிழந்து, ஏதே-இவர்கள் குலக்ஷயக்ருதம் தோஷம்-குலத்தை அழிப்பதால் வரும் குற்றம், மித்ரத்ரோஹே பாதகம்-நண்பருக்கு துரோகம் இழைக்கும் பாவத்தையும், ந பஸ்யந்தி-காண்கிலர், யத்யபி-இருந்தும்,
அவாவின் மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலத்தையழிப்பதில் விளையும் தீங்கையும் நண்பருக்குச் சதி செய்வதிலுள்ள பாதகத்தையும் காண்கிலராயினும்,
39. கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி​: பாபாதஸ்மாந்நிவர்திதும்
குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபஸ்யத்பிர்ஜநார்தந
ஜநார்தந-ஜனார்தனா, குலக்ஷயக்ருதம் தோஷம்-குல நாசத்தினால் வரும் குற்றம் ப்ரபஸ்யத்பி-நன்கு அறிந்த அஸ்மாபி​-நம்மால் பாபாத் நிவர்திதும்-பாவத்தில் இருந்து விலக, கதம் ந ஜ்ஞேயம்-அறியாமல் இருப்பது ஏன்?
ஜநார்த்தன! குலநாசத்தால் ஏற்படுங் குற்றத்தையுணர்ந்த நாம் இப்பாவத்தினின்று விலகும் வழியறியாதிருப்பதென்ன?
நாளைக்கு அர்ஜுனனே இக்குலநாசத்தைச் செய்யப்போகிறான் என்பது இப்போது அவனுக்குத் தெரியாது. ஆசை மிகுதியால் கௌரவர்கள் உற்றாரை ஒழிக்க முன்வந்திருக்கிறார்கள். மற்று உறவினர் வாஞ்சையால் அர்ஜுனன் மனந்தளர்ந்து பின் வாங்கப் பார்க்கிறான். பொருளாசை ஒருபக்கம், மக்கள் வாஞ்சை மற்றொரு பக்கம். வாழ்வின் கோட்பாடு வேறு ஏதும் இல்லையா? (38-39)
40. குலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா​: ஸநாதநா​:
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ பிபவத்யுத
குலக்ஷயே-குலநாசத்தினால், ஸநாதநா​-தொன்று தொட்டு வருகின்ற, குலதர்மா​-குல தர்மங்கள், ப்ரணஸ்யந்தி-அழிகின்றன, தர்மே நஷ்டே-தர்மம் அழிவதில், க்ருத்ஸ்நம் குலம்-குலம் முழுவதிலும், அதர்ம: உத அபிபவதி-அதர்மமும் பரவுகிறது.
பொருள் : குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே?
41. அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய​:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர​:
அதர்ம: அபி பவாத்-அதர்மம் பரவுவதால், க்ருஷ்ண-கண்ணா, குலஸ்த்ரிய​-குலப் பெண்கள், ப்ரதுஷ்யந்தி-கெட்டுப் போகிறார்கள், துஷ்டாஸு ஸ்த்ரீஷு-கெட்ட பெண்களால், வர்ணஸங்கர​: ஜாயதே-வர்ணக் கலப்பு உண்டாகிறது, வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே!
பொருள் : கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது.
42. ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா​:
ஸங்கர-குழப்பத்தால், குலஸ்ய ச-குலத்தையும், குலக்நாநாம்-குல நாசம் செய்தவர்களையும், நரகாய ஏவ-நரகத்துக்கே (கொண்டு செல்கிறது), பிண்ட, தகக்ரியா​: லுப்த-பிண்டமும் சடங்குகளும் இன்றி, ஏஷாம் பிதர: ஹி-இவர்களுடைய முன்னோர்களும், பதந்தி-வீழ்வர்.
பொருள் : அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள்.
மரணமடைந்தவர் கொஞ்சகாலம் பித்ருலோகத்தில் வசிக்கின்றனர். அவர்களையும், பித்ருலோகத்தில் அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களையும் குறித்து எண்ணும் நல்லெண்ணம் அவர்களுக்குச் சகாயம் செய்கிறது. இச்செயல் சிராத்தம் என்று சொல்லப்படுகிறது. முன்னோர்களைக் குறித்து எழும் நல்லெண்ணம் உறுதிப்படுதற் பொருட்டுப் பிண்டம், ஜலம் முதலிய பண்டங்கள் கையாளப்படுகின்றன. மற்றும் பல மனிதர்களுடைய நல்லெண்ணங்களை அவ்வேளையில் துணைகொள்ளுதற்பொருட்டு வறியோர்க்கும் மற்றவர்க்கும் சிராத்த காலங்களில் உணவளிக்கப்படுகிறது.
43. தோஷைரேதை​: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை​:
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா​: குலதர்மாஸ்ச ஸாஸ்வதா​:
குலக்நாநாம்-குலநாசம் செய்பவர்களின், ஏதை: வர்ணஸங்கரகாரகை​: தோஷை-இந்த வர்ணக் கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களால், ஸாஸ்வதா​-என்றும் உள்ள, ஜாதிதர்மா​: குலதர்மா ச-குல ஜாதி தருமங்கள், உத்ஸாத்யந்தே-அழிகின்றன.
பொருள் : வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக்குற்றங்களால் ஜாதி தர்மங்களும் தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன.
44. உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந
நரகே நியதம் வாஸோ பவதித்யநுஸுஸ்ரும
உத்ஸந்ந குலதர்மாணாம்-எடுபட்டுப் போன குல தருமங்கள், மநுஷ்யணாம் -மனிதர்களுக்கு, அநியதம் நரகே வாஸ-அளவற்ற காலம் நரக வாசம், வதி-ஏற்படுகிறது,
இதி அநுஸுஸ்ரும-கேள்விப்படுகிறோம்.
பொருள் : ஜநார்த்தனா! குலதர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.
45. அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்
யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா​:
அஹோ-அந்தோ, பத-பாவம், வயம் மஹத் பாபம் கர்தும்-பெரும் பாவம் செய்வதற்கு நாம், வ்யவஸிதா-முனைந்து இருக்கிறோம், யத் ராஜ்ய ஸுக லோபேந-ஏனெனில் ராஜ்ய சுகத்திற்கு ஆசைப் பட்டு, ஸ்வஜநம் ஹந்தும்-சுற்றத்தாரைக் கொல்ல, உத்யதா​-முனைந்து விட்டோம்,
பொருள் : அந்தோ! அரசவின்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரிய பாவஞ் செய்யத் தலைப்பட்டோம்!
46. யதி மாமப்ரதீகாரமஸஸ்த்ரம் ஸஸ்த்ரபாணய​:
தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே ÷க்ஷமதரம் பவேத்
அஸஸ்த்ரம்-ஆயுதம் இன்றி, அப்ரதீகாரம்-எதிர்த்து போரிடாமல், மாம்-என்னை,
ஸஸ்த்ரபாணய​-ஆயுதம் தாங்கிய, தார்தராஷ்ட்ரா-திருதராஷ்டிரக் கூட்டத்தார், யதி ரணே ஹந்யு-ஒருவேளை போரில் கொன்று விடினும், தத் மே-அதில் எனக்கு, ÷க்ஷமதரம் பவேத்-நன்மையே ஆகிறது.
பொருள் : கையிலாயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார் ஆயுதபாணிகளாய்ப் போரில் மடித்துவிடினும் அது எனக்குப் பெரிய நன்மையேயாம்.
இக் கூற்றானது அளவுக்கு மிஞ்சிய மனக்குழப்பத்தின் அறிகுறியாகும்.
ஸஞ்ஜய உவாச
47. ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத்
விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:
ஸங்க்யே-போர்க்களத்தில், ஸோக ஸம்விக்ந மாநஸ​-சோகத்தினால் கலங்கிய மனத்துடன், அர்ஜுந​: ஏவம் உக்த்வா-அர்ஜுனன் இவ்வாறு கூறி, ஸஸரம் சாபம்- அம்பையும் வில்லையும், விஸ்ருஜ்ய-எறிந்து விட்டு, ரதோபஸ்த-தேர்த்தட்டில், உபாவிஸத்-உட்கார்ந்தான்.
சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக்களத்தில் இவ்வாறு சொல்லிவிட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப்பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.



இரண்டாம் அத்தியாயம்
பகவத்கீதை | ஸாங்கிய யோகம்

போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்:- “அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால், நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். அதுவும் ஈசுவரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய். இதனால் ஆத்மஞானம் பெருகி, அதில் நிலைபெற்று நற்கதியடைவாய். ஈசுவர பிரீதியைத் தவிர மற்ற பலனைக் கோரினால் சம்சாரக்கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது.” சஞ்ஜயன் சொல்லுகிறான்:
பலவான் ஆவது குறிக்கோள் 2-3 -பெரியோரோடு போர் புரியேன் என்கிறான் அர்ஜுனன் 4-6 -அருள் பெறுவதற்கு ஏற்ற மன நிலை 7-8 -அருள் சுரப்பதன் அறிகுறி 10-யோகத்துக்கு அஸ்திவாரம் 11-ஆத்மாவுக்கு அழிவில்லை 12- மரணத்தின் கூறு 13-குளிரும் வெப்பமும் உடலுக்கு உண்டு 14-15 -ஸத் எது? அஸத் எது? 16-20 -வினையில் பற்று அற்று இரு 21 -மறு பிறப்பு 22- ஆத்மா நிஷ்பிரபஞ்சப் பொருள் 23-25- ஆத்மா அழிகிறது என்றாலும் வருந்துவது பொருந்தாது 26-28- ஆத்மா மனம் மொழிக்கு எட்டாதது 29-30 -கடமையினின்று வழுவலாகாது 31-37 -கர்மத்தைக் கர்மயோகமாக்கு 38-41 -உலகத்தவர் போக்கு 42-44- யோகத்துக்குத் திறவுகோல் 45-53 -நிறைஞானியின் லக்ஷணம் 54-72.
ஸஞ்ஜய உவாச
1. தம் ததா க்ரிபயாவிஷ்டமஸ்ருபூர்ணாகுலேக்ஷணம்
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந:
ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான் ததா க்ரிபயா ஆவிஷ்டம்-அவ்வண்ணம் இரக்கம் மிஞ்சியவனாய் அஸ்ருபூர்ண ஆகுல ஈக்ஷணம்- நீர் நிரம்பிய விழிகளுடன்
விஷீதந்தம்-சோகத்தோடு கூடிய தம்-அவனை (அர்ஜுனனை) மதுஸூதந: இதம் வாக்யம் உவாச- மதுசூதனன் இந்த வாக்கியத்தை சொல்லுகிறான்
பொருள் : அவ்வண்ணம் இரக்க மிஞ்சியவனாய் நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய அர்ஜுனனை நோக்கி மதுசூதனன் சொல்லுகிறான்:
தன் மனதை முற்றிலும் தன் வசத்தில் வைத்திருக்கும் ஒருவன் பிறர்படும் துக்கத்தைப் போக்க முயலுவது கிருபையாகும். இங்கு அர்ஜுனனிடத்துக் கிருபைபோன்று தென்படுவது உண்மையில் கிருபையன்று. உணர்ச்சியானது அவனது உடைமையாயிருப்பதுபோய், அவன் உணர்ச்சிக்கும் மனத்தளர்ச்சிக்கும் அடிமையாகிவிட்டான்.
ஸ்ரீ பகவாநுவாச
2. குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந
ஸ்ரீ பகவான் உவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் அர்ஜுந!-அர்ஜுனா விஷமே-தகாத சமயத்தில் குத த்வா இதம் கஸ்மலம் ஸமுபஸ்திதம்-எங்கிருந்து உன்னை இந்த உள்ளச் சோர்வு அடைந்தது அநார்யஜுஷ்டம்-ஆரியருக்கு தகாதது அஸ்வர்க்யம்-வானுலகை தடுப்பது அகீர்திகரம்-புகழையும் தராதது
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!
இதுவரையில் பேசாதிருந்த பகவான் இப்பொழுதுதான் திருவாய் மலர்ந்தருளுகிறார். ஆக, ஸ்ரீமத் பகவத்கீதையின் துவக்கம் இதுவே. எடுத்த எடுப்பில் இரண்டு சுலோகங்களில் இந்த சாஸ்திரத்தின் மூல தத்துவம் வெளியாகிறது. பகவானது போதனையின் சாரம் இவ்விரண்டு சுலோகங்களில் அடங்கப் பெற்றுள்ளது. இதுபோன்ற சிறப்பை மேலாம் நூல்கள் அனைத்திடத்தும் காணலாம். அதாவது ஆய்ந்த அடிப்படைக் கருத்தானது துவக்கத்திலேயே தெளிவுபட வந்தமைகிறது.
3. க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே
க்ஷúத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப
க்லைப்யம் மா ஸ்ம கம:-அலியின் தன்மையை அடையாதே ஏதத் ந உபபத்யதே-இது பொருத்தமன்று க்ஷúத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வா-இழிந்த மனத்தளர்ச்சியை விடுத்து உத்திஷ்ட பரந்தப-எழுந்து நில், பகைவரைச் சுடுவோனே.
பொருள் : பார்த்தா பேடித்தன்மையடையாதே! இது நினக்குப் பொருந்தாது. இழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே!
ஆண்மையை இழந்து பேதைபோன்று நடந்துகொள்பவன் அலி ஆகின்றான். அர்ஜுனன் பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் அத்தகையவைகளல்ல. அவன் உண்மையில் எதிரிகளைப் பறந்தோடச் செய்பவன். மகாதேவனோடு போர் புரிந்த அர்ஜுனனுக்கும் மனத்தளர்ச்சிக்கும் வெகு தூரம். தற்காலிகமாக வந்துள்ள தளர்ச்சியை இழித்துப் பேச அதை அடியோடு அப்புறப்படுத்தும்படி பகவான் தூண்டுகிறார்.
அர்ஜுந உவாச
4. கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதந
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான் அஹம் ஸங்க்யே-நான் போரில் கதம் இஷுபி:-எவ்வாறு அம்புகளால் பூஜார்ஹௌ பீஷ்மம் த்ரோணம் ச-தொழுதற்குரிய பீஷ்மர், துரோணர் ஆகியோரை ப்ரதியோத்ஸ்யாமி-எதிர்ப்பேன் அரிஸூதந-பகைவர்களை அழிப்பவனே
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, பீஷ்மனையும் துரோணரையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன்? இவர்கள் தொழுதற்குரியவர்; பகைவரை யழிப்போய்!
கிருஷ்ணா, உமக்கு அரிசூதனன் என்றும் மதுசூதனன் என்றும் பெயர் வந்துள்ளது பொருந்தும்; ஏனென்றால் பகைவனைக் கொல்லுவதும் அரக்கனை அழிப்பதும் முறை. மற்று, பீஷ்மரையும் துரோணரையும் நான் எதிர்த்து விவாதம் செய்வதே தகாது. அத்தகையவர்களைப் போரில் எதிர்த்து வில்லெடுத்து அடிக்க எனக்குத் துணிவு எப்படி உண்டாகும்? பாட்டனாரோடு போர் புரிந்தவன் என்றும், ஆசாரியரை எதிர்த்தவன் என்றும் எனக்கு அவதூறு வந்துவிடுமல்லவா?
5. குரூநஹத்வா ஹி மஹாநுபாவாஞ்
ச்யுரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே
ஹத்வார்தகாமாம்ஸ்து குரூநிஹைவ
புஞ்ஜீய போகாந் ருதிரப்ரதிக்தாந்
மஹாநுபாவாந் குரூந் அஹத்வா- பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல் இஹ லோகே-இவ்வுலகத்தில் பைக்ஷ்யம் அபி-பிச்சையெடுத்து போக்தும் ஸ்ரேய:-உண்பதும் நன்றுஹி-ஏனெனில் அர்தகாமாந் குரூந் ஹத்வா-பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று இஹ-உலகில் புஞ்ஜீய-துய்க்கும் போகாந் ருதிரப்ரதிக்தாந் ஏவ-இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்
பொருள் : பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல், உலகத்தில் பிச்சையெடுத்துண்பதும் நன்று. பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்.
பீஷ்மர் நைஷ்டிக பிரம்மசாரியாவார். இச்சாமிருத்யு அல்லது விரும்பியபொழுது மரணத்தை அடையும் வல்லமையுடையவர். அவர் தன்னலம் கருதாத தபோ நிஷ்டையுடையவர். இனி துரோணரோ சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர்; ஆசார சீலமுடையவர். கிருபரும் அத்தகையவரே. ஆகையால் இவர்கள் எல்லாரும் மஹானுபாவர்களாகிறார்கள். இவர்களைக் கொல்லுவதால் இவ்வுலக வாழ்க்கையே நரக வாழ்க்கையாக மாறிவிடும். குருக்கள் என்னும் சொல் வயதிலும் அறிவிலும் மூத்தவர்கள் எனப் பொருள்படுகிறது.
6. ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ
யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்
தேவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:
ந:-நமக்கு கதரத் கரீயோ-இவற்றுள் எது மேன்மை யத்வா ஜயேம-இவர்களை வெல்லுதல் யதி வா நோ ஜயேயு:-இவர்கள் நம்மை வெல்லுதல் ந வித்ம:-விளங்கவில்லையாந் ஹத்வா ந ஜிஜீவிஷாம -எவரைக் கொன்றபின் நாம் வாழ விரும்ப மாட்டோமோ தே தார்தராஷ்ட்ரா: ஏவ-அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் ப்ரமுகே  அவஸ்திதா:-முன்னே நிற்கிறார்கள்
பொருள் : மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் -இவற்றுள் எது நமக்கு மேன்மையென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர்கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கிறார்கள்.
7. கார்பண்யதோ÷ஷாபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:
யச்ச்ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்ரூஹி தந்மே
ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம்
கார்பண்யதோஷ உபஹத ஸ்வபாவ:-கோழைத் தனத்தால் சீரழிந்த சுபாவம் தர்மஸம்மூடசேதா:-அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன் த்வாம் ப்ருச்சாமி-உன்னைக் கேட்கிறேன் யத் ஸ்ரேய: ஸ்யாத்-எது நல்லது தத் மே நிஸ்சிதம் ப்ரூஹி-அதை நிச்சயப் படுத்தி சொல்லுகஅஹம் தே ஸிஷ்ய-நான் உங்கள் சீடன்
த்வாம் ப்ரபந்நம் மாம் ஸாதி-உன்னை சரணடைந்த எனக்கு கட்டளை இடுக
பொருள் : சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.
மனதின்கண் அமைந்துள்ள ஏழ்மையானது கார்ப்பண்யம் எனப்படுகிறது. பிறர் பார்த்து இரங்கி வருந்துதற்கேற்ற நிலையும் கார்ப்பண்யமாம். ஒரு நெருக்கடியில் மனதினுள் வருவித்துக்கொண்ட தளர்வும் துயரமும் அதன்கண் உண்டு. யார் ஒருவனிடத்துக் கார்ப்பண்யம் இருக்கிறதோ அவன் கிருபணன். தன்னிடத்துள்ள செல்வத்தைச் சிறிதும் செலவு செய்ய மனம் துணியாதவனுக்கும் அப்பெயர் வந்தமைகிறது. உலகில் பிறந்துள்ள மானுடன் ஒருவன் பரம்பொருளைப்பற்றிய ஞானத்தை அடையாது போவானாகில் அவன் கிருபணன் ஆகின்றான் என்று உபநிஷதம் கூறுகிறது. தன்னைக் கிருபணன் என்று ஈண்டு அர்ஜுனன் பகவானிடம் பகர்வது முற்றிலும் பொருத்தமானதே.
மனிதனால் தேடப் படுபவைகளில் பிரேயஸ், சிரேயஸ் என்று இரண்டு இயல்புகள் இருக்கின்றன.
8. ந ஹி ப்ரபஸ்யாமி மமாபநுத்யாத்
யச்சோகமுச்சோஷணமிந்த்யூரியாணாம்
அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம்
ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்
ஹி-ஏனெனில் பூமௌ-பூமியில் அஸபத்நம்-எதிரிகளற்றருத்தம்-செழிப்பான ஸுராணாம் ச அதிபத்யம் ராஜ்யம்-வானோர்மிசை ஆட்சி அவாப்ய அபி-அடைந்தாலும்
யத் மம இந்த்ரியாணாம்-என்னுடைய புலன்களை உச்சோஷணம் சோகம்-வாட வைக்கின்ற சோகம் அபநுத்யாத்-போக்கடிக்கும் ந ப்ரபஸ்யாமி-காணவில்லை
பொருள் : பூமியின் மேல் நிகரில்லாத செல்வமுடைய ராஜ்யம் பெறினும், அன்றி வானோர்மிசை ஆட்சி பெறினும் புலன்களை அடக்கும் இயல்புடைய இந்தத் துயர் எம்மை விட்டு நீங்குமென்று தோன்றவில்லை.
தனக்கு ஏற்பட்ட துயரத்தைப் பார்த்தன் முதலில் கொஞ்சம் மறைத்துவைத்துப் பேசுகிறான். இம்மையிலும் மறுமையிலும் உயிர்களுக்குத் தீங்குவரும் என்று முதல் அத்தியாயத்தில் சொன்னதெல்லாம் மேற்பூச்சு. உனக்கு இத்தகைய சோர்வு ஏற்படுவதற்குக் காரணம் யாது? என்று பகவான் பரிந்து கேட்டவுடன், உண்மை உள்ளபடி வெளியாகிறது. மற்றவர்களிடத்துத் தனது மனத்துயரத்தை மறைத்துவைக்கும் இளம் மாது ஒருத்தி பெற்ற தாயினிடம் தயங்காது யாவையும் வெளியிடுவாள். அன்பும் அனுதாபமும் உள்ள இடத்தில் மனதை உள்ளபடி சமர்ப்பிப்பது மிக எளிதாகிறது. தாயினும் சாலப் பரிந்து கேட்பவர் ஒருவரிடம் அங்ஙனம் வாய்விட்டுப் பகர்வதால் துயரம் என்னும் மனச்சுமை குறைகிறது. ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் உள்ள இணக்கம் மிக நெருங்கியது. தாயின் இனிமையும், தந்தையின் பராமரிப்பும், குருவின் கட்டுப்பாடும், அரசனது நேர்மையும், கடவுளது கிருபையும் ஒன்று கூடியது கிருஷ்ணனுடைய இவ்விணக்கம். ஆகையால் தங்கு தடையின்றி அர்ஜுனன் தன் மனக்கிலேசத்தை விரித்து விளக்குகிறான்.
ஸஞ்ஜய உவாச
9. ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸம் குடாகேஸ: பரந்தப:
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ
ஸஞ்ஜய உவாச-ஸஞ்ஜயன் சொல்லுகிறான் பரந்தப:-எதிரிகளை எரிப்பவனே! குடாகேஸ: ஹ்ருஷீகேஸம் ஏவம் உக்த்வா-உறக்கத்தை வென்றவன் அர்ஜுனன்), ஸ்ரீ கிருஷ்ணனிடம் இவ்விதம் சொல்லி ந யோத்ஸ்யே இதி ஹ கோவிந்தம் உக்த்வா-இனி போர் புரியேன் என்று கோவிந்தனிடம் சொல்லி தூஷ்ணீம் பபூவ-மௌனம் ஆனான்.
பொருள் : சஞ்ஜயன் சொல்லுகிறான்: பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு பசுநிரை காக்கும் பகவனை நோக்கிப் போரினிப் புரியேன் என்று வாய்புதைத்திருந்தான்.
இங்கு ஸஞ்ஜயர் கையாளுகிற பதங்களில் பரந்த கருத்துக்கள் அடங்கப் பெற்றிருக்கின்றன. யுத்தமும் நடைபெறலாகாது, ராஜ்யமும் தன் பிள்ளைகளுக்கே இருக்கவேண்டும் என்பது திருதராஷ்டிர மன்னனது மனோரதம். அது நிறைவேறாது என்று குறிப்பிடப்படுகிறது. தன்னளவில் அர்ஜுனன் குடாகேசன் என்ற பட்டம் பெற்றவன். அதாவது அவன் தூக்கத்தை அறவே வென்றவன். விரும்பிய வேளையில் விரும்பிய அளவுக்குத்தான் அவனுக்கு உறக்கம் வரும். தன் உடலையும் உள்ளத்தையும் நன்கு கட்டி ஆளுபவனுக்கே இது இயலும். (நெப்போலியன், சிவாஜி முதலியவர்களும் அர்ஜுனனைப் போன்று குடாகேசர்களாக இருந்தார்கள்) அர்ஜுனன் தன்னையே கட்டி ஆண்டதுபோன்று எதிரிகளை விரட்டியோட்டவும், வென்று வசப்படுத்தவும் வல்லவனாயிருந்தான்.
அத்தகையவனுக்கு ஸாரதியாக வந்தமைந்தவர் ஹிருஷீ கேசர். அதாவது இந்திரியங்களுக்கெல்லாம் இறைவனாயிருப்பவர். ஸ்ரீகிருஷ்ணனிடம் அத்தகைய மகிமை யிருந்தமையால் அவர் அங்ஙனம் அழைக்கப்பட்டார். மேலும் அவர் கோவிந்தன். (கோ=உயிர்கள்; விந்தன் -அறிபவன்) ஆக, அர்ஜுனனுக்கு ஏற்பட்ட தளர்வு தற்காலிகமானது. தானே அதைத் துடைக்க வல்லவன். துணைபுரிபவனோ உலகில் ஒப்பிலான் ஆகிய கிருஷ்ண பரமாத்மா. ஆக, திருதராஷ்டிரனது எண்ணம் நிறைவேறாது என்று ஸஞ்ஜயர் குறிப்பிடுகிறார்.
10. தமுவாச ஹ்ருஷீகேஸ: ப்ரஹஸந்நிவ பாரத
ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச:
பாரத-பாரதா உபயோ: ஸேநயோ: மத்யே-இரண்டு படைகளுக்கும் நடுவே விஷீதந்தம்- துயருற்று இருக்கும் தம்-அவனிடம் (அர்ஜுனன்) ப்ரஹஸன் இவ- புன்னகை பூத்து
இதம் வச: உவாச-இவ்வசனம் கூறினான்.
பொருள் : பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து, இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ்வசனமுரைக்கிறான்:
பரத வம்சத்துதித்தவரே என்று திருதராஷ்டிரன் அழைக்கப்படுகிறார். பரதனுடைய ஆட்சியில் இருந்தமையால் இந்தியாவுக்கு பாரதவர்ஷம் என்ற பெயர் வந்தது.
பகவான் புன்னகை பூத்ததில் பரந்த கருத்து அடங்கப்பெற்றிருக்கிறது. உலகெங்கும் இரவில் இருள் சூழ்ந்து செயலற்றுக் கிடக்கிறது. பின்பு, புன்முறுவல் பூத்தாற்போன்று கீழ்வானம் வெள்ளென வெளுக்கிறது. இனி சூரியோதயமாகி உயிர்களை எழுப்பிச் செயலில் ஈடுபடுத்தப் போகிறது என்பதற்கு அது முன் அறிகுறி. அங்ஙனம் பகவானது இளநகை இனிவருகின்ற யோகத்துக்கும் ஞானத்துக்கும் முன் அறிகுறி. அர்ஜுனன் அவரிடமிருந்து இதுபரியந்தம் பெற்றது பிரேயஸ் - பிரியத்தைத் தருவதாகிய இகலோகப் பிராப்தி. இனிப் பெறப்போவது சிரேயஸ். அது இருமையிலும் ஸர்வதுக்க நிவர்த்தி செய்வது. பாரமார்த்திகப் பெருநிலம் அளிப்பதும் அதுவே. அதைப் பெற்ற பின் அதற்குமேல் பெறவேண்டியது ஒன்றுமில்லை. அதற்கேற்ற தருணம் அர்ஜுனனுக்கு இப்பொழுது வந்துவிட, இளநகையின் மூலம் இறைவன் அதைப் பாராட்டி, அருள்புரிய ஆரம்பிக்கிறார்.
11. அஸோச்யாநந் வஸோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே
கதாஸூநகதாஸூம்ஸ்ச நாநுஸோசந்தி பண்டிதா:
ஸ்ரீ பகவான் சொல்கிறான்
த்வம்-நீ அஸோச்யாந்-துயர் படத் தகாதார் அந்வஸோச:-வருந்துகிறாய் ப்ரஜ்ஞாவாதாந்-பண்டிதர்களைப் போன்று பாஷஸே-பேசுகிறாய் கதாஸூந்-இறந்தார்க் கேனும் அகதாஸூந்-இருந்தார்க் கேனும் பண்டிதா: ந அநுஸோசந்தி-பண்டிதர்கள் வருந்துவது இல்லை
பொருள் : துயர்ப் படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகின்றாய். ஞான வுரைகளு முரைக்கின்றாய்! இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந் துயர் கொளார் அறிஞர்.
முதல் அத்தியாயம் முப்பத்தைந்தாவது சுலோகத்திலிருந்து நாற்பத்து நான்காவது சுலோகம் வரையில் அர்ஜுனன் பகர்ந்ததை பிரக்ஞாவாதம் (ஞானியரது நல்லுரை) என்று பகவான் பரிகசிக்கிறார்.
புஸ்தங்கள் பல படித்திருப்பவனைப் பண்டிதன் என்று சொல்லுவது வழக்கம். ஆனால் பண்டிதனுக்கு பகவான் தரும் லக்ஷணம் வேறு. இயற்கையின் நடைமுறையை உள்ளபடி அறிந்திருப்பவன் பண்டிதன் ஆவான். சூரியன் தோன்றுவதையும் மறைவதையும் குறித்து யாரும் வருந்தாதிருப்பது போன்று ஜனன மரண தத்துவத்தை அறியும் ஆத்மஞானி சாவுக்கு வருந்துவதில்லை. வருத்தப்படுதலில் அவனுக்கு அர்த்தமில்லை. எதைக் குறித்தும் மனம் தளராமை பண்டிதனுடைய போக்கு. அர்ஜுனனோ தனது ஞானமொழியோடு பொருந்தாத மனத்தளர்ச்சி கொள்கிறான்.
12. நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்
ஜாது அஹம் ந ஆஸம் ந ஏவ-எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன், ந த்வம் இமே ஜநாதிபா: ச ந ஏவ-நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே, அத: பரம்-இனி மேலும், வயம் ஸர்வே ந பவிஷ்யாம:-நாம் அனைவரும் இல்லாமற் போகவும் மாட்டோம்
பொருள் : இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.
தேகங்களத்தனையும் தோன்றியவாறு அழியும். எது ஓயாது தகனமாய்க்கொண்டிருக்கிறதோ அது தேகம். தேகங்களுள் குடியிருக்கும் ஆத்மா அழிவற்றது; முக்காலத்திலும் அது பொதுவாயுள்ளது. ஒரு காலத்தில் இருந்து இன்னொரு காலத்தில் இல்லாமற் போய்விடுவது அதற்கில்லை. எப்படி அது காலத்தில் அடிபடுவதில்லை என்று வினவின், அதற்கு விடை வருகிறது:
13. தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி
யதா தேஹிந:-எப்படி ஆத்மாவுக்கு, அஸ்மிந் தேஹே-இந்த உடலில்
கௌமாரம் யௌவநம் ஜரா-பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் ததா தேஹாந்தரப்ராப்தி-அப்படியே வேறு உடலும் வந்து சேருகிறது தீர தத்ர ந முஹ்யதி-தீரன் அதில் கலங்கமாட்டான்.
பொருள் : ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.
ஒருவன் குழந்தையாய்க் காளையாகிப் பிறகு கிழவனாகிறான் இந்த மாறுதல்களெல்லாம் ஒரே மனிதனிடத்து உண்டாகின்றன. குழந்தையாக இருந்தவன் ஒருவன், காளையானவன் மற்றொருவன் என்று சொல்லுதல் பொருந்தாது. அங்ஙனமே ஓர் உடலைவிட்டு இன்னோர் உடலுக்குப் போகிறவனும் அதே ஆள். ஞானிக்கு இவ்வுண்மை சுவானுபவமாக விளங்குவதால் அவன் மனக்கலக்க மடைவதில்லை. பின்பு மனங்கலங்காதிருந்து பழகுபவன் தீரன் அல்லது ஞானி ஆவதற்குத் தன்னை ஆயத்தப்படுத்துகிறான். மாறுபாடு யாவும் உடலினுடையது என்றும், மாறாத்தன்மை ஆத்மாவினுடையதென்றும் அறிபவன் தீரன். ஆத்மா நித்தியப்பொருள் எனினும் அதற்குக் குளிர் வெப்பம், இன்ப துன்பம் முதலியன இருப்பது இயல்புதானே என்ற எண்ணம் வரலாம். அதைப் பற்றிய உண்மை வருமாறு:
14. மாத்ராஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஸீ÷க்ஷதாஷ்ணஸுகது:கதா:
ஆகமாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத
கௌந்தேய-குந்தியின் மகனே, ஸீதோஷ்ண ஸுகது:கதா:-குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும், மாத்ராஸ்பர்ஸா: து-இயற்கையின் தீண்டுதல்கள், ஆகமாபாயிந:-உண்டாகி அழிபவை அநித்யா:-அநித்யமானவை பாரத - தாந் ஸ்திதிக்ஷஸ்வ-பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.
பொருள் : குந்தியின் மகனே, குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன. என்றுமிருப்பனவல்ல. பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.
கண், செவி முதலிய ஐம்பொறிகள் அதனதன் புலனாகிய வடிவம், ஒலி முதலியவைகளில் உலவுகின்றன. அதனால் உலகம் வேண்டப்படுபவை, வேண்டப்படாதவைகளாகப் புலனாகி இன்ப துன்பங்களை விளைவிக்கின்றன. இந்திரியங்களுக்கு விஷயமாகும் பொழுது தோன்றவும், விஷயமாகாதபொழுது அவைகள் மறையவும் செய்கின்றன. ஒருவேளையில் இன்பம் தருகிற அதே பொருள் மற்றொரு வேளையில் துன்பம் தருகிறது. குளிர் அல்லது வெப்பம் இதற்குச் சான்று. இன்பம் தரும் உணவு நோய்வாய்ப் பட்டிருக்கும்போது துன்பம் தருகிறது. ஆகையால் அவையாவும் அநித்தியமானவைகள். அவைகளைப் பொறுத்துப் பழகுபவன் உறுதியைப் பெறுகிறான். திதிøக்ஷ அல்லது பொறையைப் பழகுதல் நல்வாழ்க்கைக்கு ஓர் இன்றியமையாத சாதனமாகிறது. அத்தகையவன் இன்ப துன்பங்களுக்கு ஆளாவதில்லை; ஞானத்துக்குத் தகுதியுடையவன் ஆகிறான். தகுதி அவனுக்கு எப்படி வந்து அமைகிறது என்று கேட்கின், அதற்கு விடை வருகிறது:
15. யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப
ஸமது:கஸுகம் தீரம் ஸோऽம்ருதத்வாய கல்பதே
ஹி-ஏனெனில், புருஷர்ஷப-புருஷர்களில் சிறந்தவனே, ஸமது:கஸுகம்-இன்பமுந்துன்பமும் நிகரென, யம் தீரம் புருஷம்-எந்த தீர புருஷன், ந வ்யதயந்தி-கலங்க வைப்பதில்லையோ,
ஸ: அம்ருதத்வாய கல்பதே-அந்த தீரன் சாகாதிருக்கத் தகுவான்.
பொருள் : யாவன் இவற்றால் துயர்ப்படான், இன்பமுந்துன்பமும் நிகரெனக் கொள்வான், அந்த தீரன், சாகாதிருக்கத் தகுவான்.
உடல் என்னும் புரியிலே வாசம் பண்ணுபவன் புருஷன் எனப்படுகிறான். பொருள்களைப் புலன்கள் வாயிலாகச் சேர்வதால் உடலின்கண் இன்பதுன்பங்கள் தப்பாமல் வந்தமையும். அவ்வுடலைத் தான் என்று எண்ணுபவன் துன்புறுவது திண்ணம். ஆத்ம சொரூபத்திலேயே நிலைத்திருப்பவனது மனம் அசைவதில்லை. அமைதியே வடிவெடுத்தவனாக அவன் இருக்கிறான். நிலையற்ற நிகழ்ச்சிகளால் சஞ்சலப்படாதிருப்பது அவனது உள்ளத் தெளிவைக் காட்டுகிறது. ஆதலால் அவன் தீரன் அல்லது பேரறிவுடையவன் ஆகிறான். சாகாநிலையாகிய மோக்ஷத்துக்கு அவனே தகுதியுடையவன்.
இவ்வுலக நிகழ்ச்சிகளை முறையாகப் பயன்படுத்தி நம்மைத் தீரர்களாக்குதற்கு நாம் இவ்வுலகில் வந்துள்ளோம். அக்ஞானம் அகலுகின்றவளவு துக்க நிவர்த்தியும் வந்தமைகிறது. உள்ளது எது என்ற ஆராய்ச்சி அடுத்த படியாக வருகிறது:
16. நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:
உபயோரபி த்ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஸிபி:
அஸத: பாவ ந வித்யதே-இல்லாததற்கு இருப்பது என்பது இல்லை, ஸத: அபாவ ந வித்யதே-உள்ளதற்கு இல்லாதது என்பது இல்லை, அநயோ உபயோ அபி அந்த:-இந்த இரண்டுக்குமுள்ள தத்துவம் தத்த்வதர்ஸிபி: த்ருஷ்டா-தத்துவ தரிசிகள் உணர்வார்.
பொருள் : இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது. உண்மையறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.
தத்துவ தர்சனம் என்பது உண்மையைக் காணுதல். உண்மையைக் காண்பதற்கே உயிர்கள் முயன்று வருகின்றன. தேடிய பொருளைக் கண்டெடுத்தவர்க்கு மேலும் தேடித்திரிய வேண்டிய அவசியமில்லை. உள்ளது எது என்று தேடுவது உயிர்களின் இயல்பு. இருப்பதை உரியதாக்கிக்கொள்ளச் செய்யும் முயற்சியே வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறது. கோடைக்காலத்தில் நதியின் நீர் ஒடுங்கியிருக்கும்போது நெடுந்தூரத்துக்கு நனைந்த பூமி அதில் கண்ணுக்குத் தென்படுகிறது. ஆயினும் அதைச் சாகுபடிக்கு உரியதாக்கிக்கொள்ள யாரும் முயலுவதில்லை. ஏனென்றால் மாரிக்காலத்தில் மீண்டும் பெருக்கெடுத்து ஓடும் பிரவாகத்துக்கு அது உட்படும். நாளைக்குப் பயன்படாது போகுமாதலால் இன்றே அது பயனற்றதென்று கருதப்படுகிறது. தத்துவதர்சிகள் தேகத்தையும் அதினின்று தோன்றும் சுக துக்கங்களையும் அங்ஙனம் கருதுகின்றனர். முன்பு ஒரு காலத்தில் நம் தேகம் இல்லை. இடையில் அது வந்துள்ளது. பின்பு அது இல்லாமற்போம். ஆகையால் இடையில் இருக்கும்பொழுதும் உண்மையில் அது இல்லாததே-அபாவமே. கனவில் வந்துள்ள செல்வம் வந்திருக்கும்பொழுதும் உண்மையில் இல்லை.
தேகம் அஸத்து, அதாவது இல்லாதது. ஏனென்றால் அதனிடத்து பாவமில்லை; இருக்கின்றேன் என்ற உணர்ச்சியில்லை. முன்பு இல்லாதது இடையில் வந்து, இறுதியில் மறைவது விகாரப்படும் தன்மையது. ஆதலால் அது இருக்கும்பொழுதும் இல்லாததெனத் தள்ளத் தகுந்தது. அதனிடத்திருந்து வரும் சுகதுக்கங்களையும் அப்படியே புறக்கணிக்க வேண்டியது பெரியோர் கடமை. ஆத்மாவோ ஸத்து, அதாவது உள்ளது. ஏனென்றால் அதனிடத்து உணர்வு உண்டு. இருக்கிறேன் என்ற உணர்ச்சி அல்லது பிரக்ஞை வடிவமானது அது. பிரக்ஞையானது காலத்தால், தேசத்தால் அல்லது அவஸ்தையால் அடிபடாதது. ஒரு விகாரத்தையும் அது எடுப்பதில்லை. மாறுபாடு என்பது ஆத்மாவுக்கு இல்லை. அது நித்தியமாய் உள்ளது. மேலும் அதன் சொரூபம் வருமாறு:
17. அவிநாஸி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்
விநாஸமவ்யயஸ்யாஸ்ய ந கஸ்சித்கர்துமர்ஹதி
அவிநாஸி து-அழிவற்றது தான் என்று, தத் வித்தி:-அதை அறிந்து கொள். யேந இதம் ஸர்வம்-எதனால் இவை அனைத்தும், ததம்-வியாபிக்கப் பட்டிருக்கிறதோ அஸ்ய அவ்யயஸ்ய-அந்த அழிவற்றதற்கு, விநாஸம் கர்தும் கஸ்சித் ந அர்ஹதி-அழிவை ஏற்படுத்த யாருக்கும் இயலாது.
பொருள் : இவ்வுலக முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்ற தென்றறி; இது கேடற்றது; இதனை யழித்தல் யார்க்கும் இயலாது.
ஆகாசத்தில் அதாவது வெட்டவெளியில் திடீரென்று மேகங்கள் தோன்றுகின்றன. நீக்கமற எங்கும் பரவியுள்ள வெட்ட வெளியைப் பிளவுபடுத்த அம்மேகங்களுக்கு இயலாது. பெரியதாகப் பரிணமிப்பதும் சிறியதாக ஒடுங்குவதும் மேகத்துக்கு உண்டு. ஆனால் ஆகாசத்துக்குக் கூடுதல் குறைதல் இல்லை. அங்ஙனம் சிதாகாசத்தில் அதாவது அறிவு வெளியில் ஜகத் தோன்றவும், நிலைபெற்றிருக்கவும், மறையவும் செய்கிறது. அதனால் சிதாகாசத்தில் ஒருவித மாறுதலும் உண்டாவதில்லை. அதைக் கூட்டவோ, தேய்க்கவோ, மறைக்கவோ யாருக்கும் இயலாது. சாக்ஷியாக உள்ளது அது.
18. அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஸரீரிண:
அநாஸிநோப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத
அநாஸிந:-அழிவற்றான், அப்ரமேயஸ்ய-அளவிடத்தகாதான், நித்யஸ்ய-நித்தியன், ஸரீரிண: இமே தேஹா-ஆத்மாவினுடைய இந்த வடிவங்கள், அந்தவந்த உக்தா:-அழியக் கூடியவையாக என்பர், தஸ்மாத் யுத்யஸ்வ பாரத-ஆதலால் பாரதா, போர் செய்.
பொருள் : ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.
கடல் இருந்தபடி இருக்க அதனுள் நீர் இடம் மாறி அமைகிறது; ஆறாக ஓடுகிறது; பனிக்கட்டியாக உறைகிறது. ஆத்மாவில் அதுபோன்ற மாறுதல் இல்லை. ஆதலால் ஆத்மா நித்தியம். குட்டையில் உள்ள நீர் ஆவியாகக் கிளம்பிக் குட்டைக்கு நாசம் ஏற்படுகிறது. ஆத்மாவினிடத்து அத்தகைய நாசம் ஒன்றுமில்லை. மேலும் மனம் மொழிக்கு எட்டாமையினால் அது அளப்பறியதாகிறது. கடலில் ஏற்படுகிற மாறுதல் உடலிலும் உண்டாகிறது. குட்டைக்கு வருகிற நாசம் போன்று ஆக்கைக்கு மரணம், தகனம் ஆகியவைகள் வாயிலாக நாசம் வருகிறது. தேகத்தின் தன்மையை மனதைக் கொண்டும், மற்றொரு தேகத்தைக்கொண்டும், அறிவைக் கொண்டும் அளந்தெடுக்கமுடியும். ஆத்மாவை அப்படி மதிப்பிடமுடியாது.
பொருளைப்பற்றி வந்த மயக்கத்தால் அர்ஜுனன் போர்புரிய மாட்டேன் என்கிறான். மயக்கம் கொள்ளுதலும், போர் முனையினின்று பின்வாங்குதலும், அதாவது தன் கடமையைச் செய்யாது ஒழிதலும் ஒருவிதத்திலும் பார்த்தனுக்குப் பொருந்தாது. ஆதலால் பார்த்தா, போர்புரிக என்கிறார் பகவான். ஆதலால் போர்புரிக என்ற பல்லவியை இன்னும் பல தடவை கேட்கிறார்கள்.
19. ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைநம் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே
ய: ஏநம்-எவன் இந்த (ஆத்மாவை), ஹந்தாரம் வேத்தி-கொல்பவனாக நினைக்கிறானோ, ய: ஏநம் ஹதம் மந்யதே-எவன் இந்த ஆத்மாவை கொல்லப் பட்டவனாக நினைக்கிறானோ,
தௌ உபௌ-அந்த இருவருமே, ந விஜாநீத:-அறியாதவர்கள், அயம் ந ஹந்தி-இவன் கொல்லுவதுமில்லை, ந ஹந்யதே-கொலையுண்டதுமில்லை.
பொருள் : இவன் கொல்வானென்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று நினைப்போனும் இருவரும் அறியாதார். இவன் கொல்லுவதுமில்லை, கொலையுண்பதுமில்லை. இவன் பிறப்பதுமில்லை;
செல்வத்தில் பெரும் பற்றுடைய ஒருவனது செல்வம் திடீரென்று அழிந்துபோனால், நான் தொலைந்தேன் என்கிறான் அவன். செல்வம் தன் சொரூபமாகாது. தன்னுடைய ஒன்று அழிய, மனிதன் தானே அழிந்து போவதாக நினைக்கிறான். தன்னுடையது என்பது மமகாரம். தடித்த மமகாரம் அகங்காரம் போன்று ஆய்விடுகிறது. தேகத்தைத் தான் என்று எண்ணுவது அகங்காரம். மாறுபடும் தன்மையது தேகம். மாறாப்பெருநிலையில் வீற்றிருப்பது ஆத்ம சைதன்யம். தோன்றிய மேகம் மறையும்பொழுது ஆகாசம் எப்படி அழிவதில்லையோ, அப்படி ஆக்கை அழியும்போது ஆத்மா அழிவதில்லை.
20. ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஸாஸ்வதோऽயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே
அயம் கதாசித்-இந்த ஆத்மா எப்போதும், ந ஜாயதே வா ம்ரியதே-பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை, பூத்வா பூய: ந பவிதா-முன் உண்டாகி பிறகு ஏற்படக் கூடியதும் இல்லை, அயம் அஜ: நித்ய: ஸாஸ்வத: புராண:-இவன் பிறப்பற்றான்; அனவரதன்; சாசுவதன்; பழையோன், ஸரீரே ஹந்யமாநே ந ஹந்யதே-உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.
பொருள் : எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.
பிறத்தல், இருத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல், மாய்தல் ஆகிய ஆறுவித பாவ விகாரங்கள் பூதங்களாலாகிய உடலத்துக்கு உண்டு; ஆத்மாவுக்கு விகாரம் இல்லை.
21. வேதாऽவிநாஸிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்
பார்த-பார்த்தா! ஏநம்-இந்த பொருள் (ஆத்மா), அவ்யயம்-மாறாதது, நாஸிநம்-அழிவற்றது, நித்யம்-என்றும் உளது, அஜம்-பிறப்பற்றது, ய: புருஷ: வேத-எந்த மனிதன் உணர்கிறானோ, ஸ: கதம் கம் காதயதி ஹந்தி-அவன் யாரை கொல்வது? யாரை கொல்விப்பது?
பொருள் : இப்பொருள் அழிவற்றது, பிறப்பற்றது, என்றுமுளது இங்ஙனமுணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்பதெவனை?
ஆத்மா செயலற்றது. ஆத்மஞானம் அடையப்பெற்றவன் அகங்காரமற்றவனாதலால் எவ்வினைக்கும் தான் கர்த்தா என்ற உணர்ச்சி அவனுக்கு வருவதில்லை. ஒரு வினையும் ஆத்ம ஞானியைச் சாராது என்பதற்குச் சான்றாகக் கொல்லுதல் கொல்வித்தல் ஆகிய இரண்டு கொடிய வினைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. எச்செயலைச் செய்தாலும், செயல்புரிந்தேன் என்ற எண்ணம் ஆத்மஞானியிடம் இல்லை. ஞானசாதனம் பழகுபவன் தனக்குற்ற கர்மத்தைச் செய்து கொண்டிருப்பதற்கிடையில் தன்னைக் கர்த்தாவாக உணரலாகாது.
22. வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோऽபராணி
ததா ஸரீராணி விஹாய ஜீர்ணாந்
யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ
யதா நர:-எப்படி மனிதன், ஜீர்ணாநி வாஸாம்ஸி விஹாய-பழைய துணிகளை நீக்கி விட்டு
நவாநி க்ருஹ்ணாதி-புதியதை எடுத்துக் கொள்கிறானோ, ததா தேஹி ஜீர்ணாநி ஸரீராணி விஹாய-அவ்வாறே ஆத்மா நைந்த உடல்களை களைந்து, அந்யாநி நவாநி ஸம்யாதி-வேறு புதியதை அடைகிறான்.
பொருள் : நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்.
பழைய துணியை எறிந்துவிட்டு மனிதன் புதியது தேடுவதில்லை. புதியது கைக்குக் கிடைத்தபின்பே பழையது புறக் கணிக்கப்படுகிறது. பாம்பு புதிய சட்டையைப் பண்ணிக் கொண்டு பழையதை நீக்குகிறது. அங்ஙனம் ஆத்மா ஒரு சரீரத்தை விடுதற்கு முன்பே, தன் வினைக்கு ஏற்றாற் போன்று சூக்ஷ்மமாகப் புதியது ஒன்றைப் பண்ணிக்கொள்கிறது. அது காரண சரீரம் என்றும் சூக்ஷ்ம சரீரம் என்றும் சொல்லப்படுகிறது. மரத்தின் நுண்ணிய விதை போன்று அது நெடுநாள் தோன்றா நிலையிலிருந்து பிறகு பிறக்கிறது. ஸ்தூல உடல் எடுப்பதை நாம் பிறப்பு என்கிறோம்.
23. நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஸோஷயதி மாருத:
ஏநம் ஸஸ்த்ராணி ந சிந்தந்தி-இவனை ஆயுதங்கள் வெட்டுவதில்லை, ஏநம் பாவக: ந, தஹதி-இவனை நெருப்பு எரிப்பதில்லை, ஏநம் ஆப: ந க்லேதயந்தி-இவனை தண்ணீர் நினைப்பதில்லை, மாருத: ச ந ஸோஷயதி-காற்றும் உலர்த்துவதில்லை.
பொருள் : இவனை ஆயுதங்கள் வெட்ட மாட்டா; தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது.
ஐம்பெரும் பூதங்களில் ஆகாசம் செயலற்றது. ஆகையால் அதைப்பற்றிய பேச்சு ஈண்டு எழவில்லை. பாக்கி நான்கு பூதங்களின் செயல் ஆத்மாவினிடத்துச் செல்லா. மண்ணிலிருந்து ஆயுதம் வருகிறது. பிளவுபடாப் பொருள் ஒன்றை வெட்டுவ தெங்ஙனம்? பூதாகாசத்தையே, ஏனைய நான்கு பூதங்களும் விகாரப்படுத்த முடிவதில்லை. பின்பு அதற்கு அப்பாலுள்ள சிதாகாசத்தை அவை பாழ்படுத்தா என்பது சொல்லாமலே விளங்குகிறது.
24. அச்சேத்யோऽயமதாஹ்யோऽயமக்லேத்யோऽஸோஷ்ய ஏவ ச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோயம் ஸநாதந:
அயம் அச்சேத்ய:-இவன் பிளத்தற்கரியவன், அயம் அதாஹ்ய:-எரிக்கப் பட முடியாதவன், அக்லேத்ய:-நனைக்கப் படமுடியாதவன், அஸோஷ்ய:-உலர்த்தப் படமுடியாதவன், நித்ய: ஸர்வகத:-நித்தியன்; எங்கும் நிறைந்தவன், ஸ்தாணு அசல:-உறுதி உடையவன்; ஆசையாதான் ஸநாதந:-என்றும் இருப்பான்.
பொருள் : பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்; எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பான்.
இவ்வாத்மா வெட்டப்படுகிறதில்லையாதலால் அது நித்தியமாயுள்ளது. ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்தில் இல்லாதது நித்தியப்பொருள் ஆகாது. ஏனென்றால் இல்லாத இடத்துக்கு அது அநித்தியமாய்விடும். நித்தியமாதலால் அது எங்கும் நிறை பொருள் ஆகிறது. இடம் மாறுவது அசைவது எனப்படுகிறது. எங்கும் நிறைபொருளோ போவதற்குப் புதிய இடமில்லையாதலால் அது ஸ்தாணு, ஸ்திரமாய் இருப்பது. அப்படி நிலைத்திருப்பதால் அது அசலம், அசைவற்றதெனப்படுகிறது. எதற்குப் போக்கும் வரவும் இல்லையோ அது ஸநாதனம்; உண்டுபண்ணப்படாதது. அது எப்பொழுதுமிருப்பதாகிறது.
ஆத்மாவானது சொல்லில் அடங்காத தொன்மையது ஆயினும் வெவ்வேறு சொற்களால் அதை விளக்குவதால் ஏதேனும் ஒருவித விளக்கம் ஒருவர் உள்ளத்தில் படியலாம். அதன் உண்மை மனதில் படிகின்றவளவு துக்க நிவிருத்தியாகும். யாண்டும் வேண்டப்படாத துக்கத்தை அக்ஞானத்தால் மனிதன் வருவித்துக்கொண்டு தனது மேன்மைகளையெல்லாம் இழக்கிறான். அக்கீழ்மை வேண்டப்படுவதன்று என்று அறிவுறுத்துதற்கே வாசுதேவர் இத்தனைவித விளக்கங்களைக் கையாளுகிறார்.
25. அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஸோசிதுமர்ஹஸி
அயம் அவ்யக்த:-இந்த ஆத்மா புலன்களுக்கு புலப் படாதவன், அயம் அசிந்த்ய:-மனத்தால் சிந்தனைக்கு அரியவன், அயம் அவிகார்ய:-மாறுதல் இல்லாதவன், உச்யதே-என்று கூறப் படுகிறது, தஸ்மாத் ஏநம் ஏவம் விதித்வா-இவனை இவ்வாறு அறிந்து கொண்டு அநுஸோசிதும் அர்ஹஸி-வருத்தப் படாமல் இரு.
பொருள் : தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப! ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்து நீ துயர்ப் படாதிருக்கக் கடவாய்.”
ஆத்மா ஓர் இந்திரியத்துக்கும் விஷயமாகாதிருப்பதால் அது அவ்யக்தம் எனப்படுகிறது. இந்திரியங்களுக்கு எட்டாப் பொருள் ஒன்று மனதிலும் படியாது. ஆதலால் அது அசிந்த்யம். மாறுபடுகின்ற காற்று, தீ, நீர், நிலம் ஆகிய நான்கு பூதங்களும் நன்கு கட்புலனாவது போன்று மாறுபடாத ஆகாசம் கட்புலனாவதில்லை. ஆகாசத்தின்கண் அவயவங்கள் இன்மையால் அது மாறாதது. சிதாகாசமாகிய ஆத்மாவுக்கும் அவயவம் இல்லையாதலால் விகாரத்தை, மாறுபடும் தன்மையை அதனிடம் காணமுடியாது. இனி, அதைக் குறித்து வருந்துவது எங்ஙனம் பொருந்தும்?
26. அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்
ததாபி த்வம் மஹாபாஹோ நைநம் ஸோசிதுமர்ஹஸி
அத ச த்வம்-ஆயினும், ஏநம் நித்யஜாதம் நித்யம் ம்ருதம் வா மந்யஸே-இந்த ஆத்மா எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது, அல்லது எப்போதும் இறந்து கொண்டே இருப்பான் என்று நினைப்பாயானால், மஹாபாஹோ-நீண்ட கைகளை உடையவனே, ததாபி த்வம் ஏவம் ஸோசிதும் ந அர்ஹஸி-அப்போதும் வருத்தப்படுவது தகாது.
பொருள் : அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று கருதினால், அப்போதும், பெருந்தோளுடையாய், நீ இவன் பொருட்டுத் துயருறல் தகாது.
நித்தியவஸ்து ஒன்றும் இல்லை என்பது லோகாயதர்களுடைய கோட்பாடு. பேச்சுக்காக பகவான் இங்கு அதை எடுத்துக்கொள்கிறார். அவர்களுடைய கொள்கை உண்மையெனின் அப்பொழுதும் வருந்துதற்கு இடமில்லை. ஒருவன் ஆஸ்திகனாக இருப்பதும் நாஸ்திகனாயிருப்பதும் அவனுடைய வாழ்க்கைக்கு முக்கியமானதன்று. கொள்கை எதுவாயினும் அவன் வருத்தப்படாதிருக்க வேண்டும். துயரம் ஒரு மனிதனை அழித்து விடுவதுபோன்று வேறு எதும் அவனுக்குக் கேடு செய்யாது.
27. ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச
தஸ்மாதபரிஹார்யேऽர்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி
ஜாதஸ்ய ம்ருத்யு: த்ருவ: ஹி-பிறந்தவன் சாவது உறுதி எனில், ம்ருதஸ்ய ச ஜந்ம த்ருவம்-செத்தவன் பிறப்பது உறுதி எனில், தஸ்மாத் அபரிஹார்யே அர்தே-ஆகவே பரிகாரம் இல்லாத விஷயத்துக்காக, த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ துயரப் படுவது தகாது.
பொருள் : பிறந்தவன் சாவது உறுதியெனில், செத்தவன் பிறப்பது உறுதியெனில், இந்த விலக்கொணாச் செய்திக்கு நீ அழுங்குதல் தகுதியன்று.
இது இன்னும் முக்தியடையாதவர்களைக் குறித்துப் பேசும் பேச்சாகும். ஆசையிருக்கும் பரியந்தம் பிறப்பதும் இறப்பதும் இயல்பு. வினையின்படி வருகிற சாவைத் தடுக்க யாருக்கும் இயலாது.
நாஸ்திகரின் கோட்பாட்டின்படி வினையிருக்கும் பரியந்தம் பிறப்பு இறப்பு இருக்கிறது. வினைமுடிவது தீபத்தில் எண்ணெய் முடிவது போன்றது. எரிகின்ற தீபம் பிறகு ஒன்றுமில்லாது போய்விடுகிறது. அதே விதத்தில் வினை முடிந்ததும் மனிதன் என்னும் தோற்றம் கலைந்து போய்விடுகிறது. நவீன நாஸ்திகர்களுக்கிடையில் இன்னொரு கோட்பாடு உண்டு. களிமண்ணில் வடிவம் செய்து உருமாற்றுவது போன்று பிரகிருதியில் உயிர்கள் என்ற வடிவங்கள் மாறி மாறி அமைகின்றன. அச் செயல் பிறப்பு இறப்பு என்னும் பெயர் பெறுகிறது. அதற்கு ஏன் வருந்தவேண்டும் என்பது அவர்களின் கேள்வி.
28. அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத
அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா
பாரத-பாரதா! பூதாநி அவ்யக்தாதீநி-உயிர்கள் ஆரம்பம் தெளிவில்லை, அவ்யக்தநிதநாநி ஏவ-இறுதியும் தெளிவில்லை, வ்யக்தமத்யாநி-நடுநிலைமை தெளிவுடையது, தத்ர கா பரிதேவநா-இதில் துயற்படுவது என்ன ?
பொருள் : பாரதா, உயிர்களின் ஆரம்பம் தெளிவில்லை; நடுநிலைமை தெளிவுடையது; இவற்றின் இறுதியுந் தெளிவில்லை. இதில் துயர்ப்படுவதென்ன?
உற்றார் உறவினரெனத் தோன்றும் உயிர்களெல்லாம் இடையில் வந்தவர்கள். கனவில் காணப்படுபவர் முன்பிருந்ததில்லை பின்பு இருக்கப்போவதில்லை; இடையில் இருந்தும் உண்மையில் இல்லாதவரேயாம்; பந்துக்கள் எனப்படுவர்கள் லோகா யதர்களின் கோபாட்டின்படி பூதங்களின் சேர்க்கையால் காரண காரியமாக இடையில் வந்தவர்கள். கடைசியில் அவர்கள் இருக்கப்போவதில்லை. ஆகையால் இடையில் தோன்றியுள்ளவர்களுக்காக இன்னல்படுவது தகாது.
லோகாயதத்தின் கோட்பாடு இது ஈறாக மூன்று சுலோகங்களில் முடிவடைகிறது. பழையபடி ஆத்ம தத்துவ விசாரத்துக்கு பகவான் திரும்புகிறார்.
29. ஆஸ்சர்யவத்பஸ்யதி கஸ்சிதேந
மாஸ்சர்யவத்வததி ததைவ சாந்ய:
ஆஸ்சர்யவச்சைநமந்ய: ஸ்ருணோதி
ஸ்ருத்வாऽப்யேநம் வேத ந சைவ கஸ்சித்
கஸ்சித் ஏநம்-யாரோ ஒருவன், ஆஸ்சர்யவத் பஸ்யதி-வியப்பெனக் காண்கிறான், ஆஸ்சர்யவத் வததி-வியப்பென ஒருவன் சொல்கிறான், ஆஸ்சர்யவத் அந்ய ஸ்ருணோதி-வியப்பென ஒருவன் கேட்கிறான், கஸ்சித் ஸ்ருத்வா அபி ஏநம் ந ஏவ வேத-கேட்கினும் இதனை அறிந்தவன் எவனும் இலன்.
பொருள் : இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.”
கட்புலனாகின்ற உலகப் பொருள்களைப் போன்றதல்ல ஆத்மா. பொறி புலன்களுக்கு அதீதத்திலுள்ளதை ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பே ஆயிரத்தில் ஒருவனுக்குக் கிடைப்பதரிது. ஆகையால் ஆத்ம விசாரம் செய்கின்றவர்களே ஆச்சரியத்துக்குரியவர்களாம். மன பரிபாகம் ஏற்படாமையால் அவர்களில் பெரும்பான்மையோருக்கு ஆத்ம தத்துவம் விளங்குவதில்லை. அழுக்குப் படிந்த கரடு முரடான கண்ணாடியின் வாயிலாக விளக்கு வெளிச்சம் சிதைந்து வெளிவருவது போன்று ஆத்ம சொரூபம் அவர்களுக்கு விளங்கியும் விளங்காமலும் இருக்கிறது.
30. தேஹீ நித்யமவத்யோऽயம் தேஹே ஸர்வஸ்ய பாரத
தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஸோசிதுமர்ஹஸி
பாரத-பாரதா, அயம் தேஹீ-இந்த ஆத்மா, ஸர்வஸ்ய தேஹே-எல்லா உடலிலும், நித்யம் அவத்ய-எப்பொழுதும் கொல்லப் படமுடியாதவன், தஸ்மாத் ஸர்வாணி பூதாநி-ஆகவே எந்த உயிரின் பொருட்டும், த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ வருந்துதல் தகாது.
பாரதா, எல்லாருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன். ஆதலால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா!
லோகாயதர்களுடைய கோட்பாடு இங்கு நிராகரிக்கப்படுகிறது. அதன்மேல் ஆத்ம தத்துவத்தைப் பற்றிய முடிவான சித்தாந்தமும் இயம்பப்படுகிறது. ஆத்ம ஞானமும் துக்க நிவிருத்தியும் மனிதன் மேன்மையுறுதற்கு இன்றியமையாதவைகள் என்பது நன்கு வற்புறுத்தப்படுகின்றன.
31. ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோऽந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே
ஸ்வதர்மம் சாவேக்ஷ்ய அபி-ஸ்வதர்மத்தைப் கருதினாலும், விகம்பிதும் ந அர்ஹஸி-நீ நடுங்குதல் தகாது, க்ஷத்ரியஸ்ய தர்ம்யாத் யுத்தாத் அந்யத்-மன்னருக்கு அறப்போரைக் காட்டிலும் ஸ்ரேய: ந வித்யதே-உயர்ந்ததொரு நன்மை இல்லை.
பொருள் : ஸ்வதர்மத்தைக் கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை.
அரசனுக்கு உயிரிலும் பெரிதாக உள்ளது அறம். இது போன்ற போர் புரிவதால் அறம் வளர்க்கப்படுகிறது. போரினின்று விலகுவதால் மறம் மேலோங்குகிறது. மறம் மேலோங்க விடுபவன் அரசன் ஆகான். அறம் செய்யாது மறம் செய்யும் மனிதனோ சிரேயஸைப் பெறாது இழிவை அடைவான். ஒரு மனிதனுக்கு சிரேயஸைத் தருபவைகளில் முதலானது ஸ்வதர்மம். எம்மனிதன் எச்செயலுக்கு நன்கு தகுதியுடையவனாகிறானோ அச்செயல் அவனுடைய ஸ்வதர்மமாம். கிடைப்பதற்கு அரிய ஆங்காலம் அல்லது அனுகூலமான காலத்தை ஒரு மனிதன் எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்ற கேள்விக்கு இனி விடை வருகிறது.
32. யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஸம்
பார்த-பார்த்தா, யத்ருச்சயா உபபந்நம்-தானே வந்திருப்பதும், அபாவ்ருதம் ஸ்வர்கத்வாரம்-திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில், ஈத்ருஸம் யுத்தம்-இத்தகைய போர்
ஸுகிந: க்ஷத்ரியா: லபந்தே-பாக்கியமுடைய மன்னரே அடைகிறார்கள்.
பொருள் : தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது. இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்பமுடையார்!
வாழ்க்கையில் தற்செயலாய் வந்தமையும் ஆங்காலம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. முறை பிறழாது ஒருவன் தன் கடமையைச் செய்துகொண்டு போக வல்லவனாகவேண்டும். நதியில் நீரோட்டத்தை எதிர்த்து ஓடத்தைச் செலுத்துவதுபோன்று அது இடர் சூழ்ந்த செயலாகும். பிறகு கடல் பொங்கும் வேளை யொன்று வருகிறது. அப்பொழுது நதியில் நீர் எதிர்த்து ஓடுகிறது. ஓடத்தைக் கடத்துதற்கு அது அனுகூலமாகிறது. துடுப்புப் போடாவிட்டாலும் அது குறியை நோக்கி நகர்கிறது. காற்றும் வசதியாகவே தொடர்ந்து வீசுகிறது. அப்பொழுது பாயை விரிப்பதுதான் பாக்கி. சிறு முயற்சியில் பெரிய காரியம் நிறைவேறுகிறது. இதுதான் தற்செயலாய் வந்தமையும் நற்காலம். அர்ஜுனனுக்கு அந்த வாய்ப்பு இப்பொழுது கிடைத்திருக்கிறது. வனவாச துக்கமும் சோதனையும் முடிவடைந்துவிட்டன. இனி, தன் கடமையைச் சிறிது முயற்சியோடு செய்தால் போதுமானது. வலிய வந்து விண்ணுலகும் மண்ணுலகும், வெற்றியும் கீர்த்தியும் அமையப் போகின்றன. க்ஷத்திரிய தர்மத்தைப் பற்றிய சந்தேகமும் மனக் கிலேசமும் இவ்வேளையில் பொருந்தா.
இதுபோன்று ஆங்காலம் எல்லா மனிதருக்கும் எப்பொழுதாவது வந்து வாய்ப்பதுண்டு. அதைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்பவனே இவ்வுலகில் சீரும் சிறப்பும் அடையப்பெறுகிறான். ஆங்காலத்தைப் பயன்படுத்தாது விட்டுவிட்டால் வரும் கேடு யாது என்பதற்கு விடை வருகிறது:
33. அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி
அத-அன்றி, இமம் தர்ம்யம் ஸங்க்ராமம்-இந்தத் தர்மயுத்தத்தை, த்வம் ந கரிஷ்யஸி சேத்-நீ நடத்தாமல் விடுவாயானால், தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா-அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று, பாபம் அவாப்ஸ்யஸி-பாவத்தையடைவாய்
பொருள் : அன்றி நீ இந்தத் தர்மயுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று பாவத்தையடைவாய்.
அதர்மத்தைச் செய்பவன் யாண்டும் கேடு அடைகிறான். தன் கடமையாக வந்து அமைந்த தர்மத்தைத் தக்க தருணத்தில் செய்யாதவன் அதனினும் பெருங் கேட்டையடைகிறான். தகுந்ததைச் செய்யாமையால் வரும் கேடானது, தகாததைச் செய்வதால் வரும் கேட்டைவிடப் பெரியதாம்.
முறையான இகலோக வாழ்க்கையைக் கீர்த்தி பின் தொடர்வது போன்று முறை தவறிய வாழ்க்கையை அபகீர்த்தி பின் தொடர்கிறது. அது எப்படியெனில்:
34. அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேऽவ்யயாம்
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே
பூதாநி ச-உலகத்தாரும், தே அவ்யயாம்-உனக்கு நீண்டகாலம் இருக்கக் கூடிய, அகீர்திம் அபி கதயிஷ்யந்தி-வசை உரைப்பார்கள், ஸம்பாவிதஸ்ய-புகழ் கொண்டோன் அகீர்தி: மரணாத் அதிரிச்யதே-அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?
பொருள் : உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்னரெய்தும் அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?
எப்படியாவது உயிர் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற உணர்ச்சி விலங்கினத்தைச் சேர்ந்தது. வீரன் ஒருவனுக்கோ நன்கு உயிர்வாழவும் தெரியும். வேண்டுமிடத்து உயிர் வழங்கவும் தெரியும். அப்படி முறையாக மகிழ்ச்சியுடன் உயிரைக் கொடுப்பதால் அவன் புகழ் பரவுகிறது. எதிரி காலால் உதைக்கையில் அவன் காலைத் தொட்டு வணங்கி உயிர்ப்பிச்சை கேட்பது எவ்வளவு இழிவோ அதிலும் பன்மடங்கு புன்மையது பழிக்கு ஆளாகி உயிர்வாழ்ந்திருத்தல். உலகில் பழிப்பவர் தமது மனத்துக்குத் தோன்றியதையெல்லாம் முகாமையாக வைத்துப் பழிப்பர். எப்படியெனில்:
35. பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்
ச யேஷாம் த்வம் பஹுமதோ பூத்வா-மேலும் எவர்களுடைய (கருத்தில்) நீ நன்மதிப்பைப் பெற்று இருந்து, லாகவம் யாஸ்யஸி-தாழ்மையாய் அடைவாயோ, மஹாரதா: த்வாம்-அந்த மகாரதர்கள் உன்னை, பயாத் ரணாத் உபரதம்-பயத்தினால் யுத்தத்திலிருந்து பின்வாங்கியவனாக, மம்ஸ்யந்தே-கருதுவார்கள்.
பொருள் : நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மகாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய்.
ஜன்ம சத்துருக்களாகிய துர்யோதனன் முதலாயினோர் அர்ஜுனனுடைய பராக்கிரமத்தைப் பாராட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. மகாதேவனை எதிர்த்துப் போர்புரிந்தவன் என்றும், பாசுபதாஸ்திரத்தைப் பெற்றவன் என்றும் பார்த்தனைப் பாராட்டி வந்துள்ளார்கள். ஆனால் அவனை எப்படியாவது ஒழித்துவிடவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்டவர்கள் அவர்கள். இந்த நெருக்கடியில் அர்ஜுனன் அன்பின் வழியில் பின்வாங்கினான் என்று அவன் செயலைப் பொருள்படுத்த மாட்டார்கள்; அஞ்சிப் புறங்காட்டி ஓடினான் என்று இகழ்வார்கள். போற்றுதல் மிக எளிதில் தூற்றுதலாக மாறிவிடும். அந்த இகழ்ச்சிக்குப் பிறகு எவ்விதத்திலும் ஈடு தேடிக்கொள்ள முடியாது. பயம் வீரனுக்கு அழகன்று. பயமுடையார் இவ்வுலகில் எதற்கும் உதவார் என்பது வெளிப்படை. அச்சத்துக்கு இடங் கொடுத்து நாளைக்கு வருந்துதற்கேற்ற ஒரு செயலை இன்று செய்வது தகாது. எள்ளி நகையாடுதல் இன்னும் எப்படியெல்லாம் வடிவெடுக்கும் எனில்:
36. அவாச்யவாதாம்ஸ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்
தவ அஹிதா:-உனக்கு வேண்டாதார், தவ ஸாமர்த்யம் நிந்தந்த-உன் திறமையைப் பழிப்பார்கள், பஹூந் அவாச்யவாதாம் ச-சொல்லத் தகாத வார்த்தைகள் பல, வதிஷ்யந் -சொல்லுவார்கள், தத: து:கதரம் நு கிம்-இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது
பொருள் : உனக்கு வேண்டாதார் சொல்லத் தகாத வார்த்தைகள் பல சொல்லுவார்கள். உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது?
ஒருவன் கெட்டுப் போய்விட்டால் அவனுடைய வாழ்க்கையின் காட்சி திடீரென்று மாறிவிடுகிறது. காலமெல்லாம் அர்ஜுனனைப் புகழ்ந்து கொண்டிருந்தவர்கள் இனி இகழ்ந்து பேசுதற்குக் கூசார்கள். அவன் பெற்றிருந்து பொருள் சேர்ந்த புகழ்ச்சி. அவனைப்பற்றி நினைக்கும்பொழுதே எதிரியின் உள்ளத்தில் அச்சம் வடிவெடுக்கும். பரபரப்போடு பார்த்தன் போர்க்களத்துக்கு வந்தது பகைவர் உற்சாகத்துக்கே அணைகட்டிற்று. இனி, அவன் பின்வாங்குவானாகில் அங்ஙனம் கட்டப்பட்ட அணை உடைக்கப்படும். முன்பு தாங்கள் புகழ்ந்து பேசியதற்கே புதிய வியாக்யானம் வந்தமையும். மனிதனால் கேட்டுச் சகிக்க முடியாத சுடு சொற்களை வேண்டியவாறெல்லாம் வழங்குவார்கள். இவ்வேளையில் யுத்தத்தினின்று விலகுவது பெருந்தவறாகும். அதனால் அர்ஜுனனுடைய ஆண்மையே அடிபட்டுப்போம். அதற்கு மேல் பெருவாரியாக வரும் வசைச்சொற்கள் அவனை இடையறாது துன்புறுத்திக்கொண்டிருக்கும். சிறுமையையும் துன்பத்தையும் வலிய வருவித்துக்கொள்வானேன்? போர்புரிவது பெருங்கேடு என்று சொன்ன அர்ஜுனனுக்கு பகவான் என்ன சொல்கிறார் என்றார்.
37. ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஸ்சய:
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம்-கொல்லப்படினோ வானுல கெய்துவாய், ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்-வென்றால் பூமியாள்வாய், தஸ்மாத் கௌந்தேய-ஆகவே குந்தி மைந்தனே, க்ருதநிஸ்சய: யுத்தாய உத்திஷ்ட-நிச்சயித்துக் கொண்டு போருக்கு எழுந்திரு
பொருள் : கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.
போர் புரியாமையினால் வரும் சீர்கேட்டை யெல்லாம் மேலே சொல்லியான பிறகு, போர்புரிவதால் வரும் சீர்மை ஈண்டு இயம்பப்படுகிறது. அறப்போர் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தருமேயொழிய ஒரு நாளும் துன்பம் தராது. அப்படி வலியக்கிடைத்த பெரு வாய்ப்பை எந்தப் போர்வீரன் தான் விட்டுவிடுவான்.
லௌகிகமாகப் பார்க்கிறவிடத்தும் அர்ஜுனன் துன்புறுவதும், போரினின்று பின்போவதும் பொருந்தாது என்பது பகரப்பட்டது. இனி, எத்தகைய மனப்பான்மையுடன் கடமையைச் செய்தால் அது யோகசாதனமாகும் என்ற கோட்பாடு வருகிறது.
38. ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி
ஸுக – து:கே-இன்பம், துன்பம், லாப – அலாப= பேறு, இழவு, ஜய அஜயௌ-வெற்றி, தோல்வி, ஸமே க்ருத்வா-நிகரெனக் கொண்டு, ததோ யுத்தாய யுஜ்யஸ்வ-அதற்கு பின் யுத்தத்துக்கு தயாராவாயாக, ஏவம் ந பாபம் அவாப்ஸ்யஸி-இவ்விதம் (செய்தால்) பாவத்தை அடைய மாட்டாய்.
பொருள் : இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு, நீ போர்க்கொருப்படுக. இவ்வணம் புரிந்தால் பாவமெய்தாய்.
சுகத்துக்கு ஏதுவான லாபம், ஜயம் ஆகியவைகளில் விருப்பமும், துக்கத்துக்கு ஏதுவான நஷ்டம், அபஜயம் ஆகியவைகளில் வெறுப்பும் கொள்ளுதல் பாமரர் இயல்பு. தங்களைப் பண்படுத்துவோர் அங்ஙனம் விருப்பும் வெறுப்பும் கொள்ளாது நிகழ்வன யாவையும் நடுநிலையிலிருந்து சமனாகக் கருதவேண்டும். விருப்பும் வெறுப்பும்தான் மனிதனைக் கருமத்தில் கட்டுப்படுத்துகின்றன. கருமத்தில் அல்லது கருமபலனில் பற்றில்லாது அதைச்செய்யும் பொழுது பழைய கருமம் குறைகிறது; புதியது ஒன்றும் சேர்க்கப்படுவதில்லை. இந்த மனநிலை முக்திக்கு மார்க்கமாகிறது.
உலகப்பற்றுடைய ஒருவன் செய்கிற அதே கர்மத்தைக் கர்மயோகியும் செய்கிறான். ஆனால் மனநிலையில் இருவருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மனநிலையைக் கொண்டுதான் எது பந்தபாசம், எது பற்றற்ற பாங்கு என்று தெரிந்து கொள்ள முடியும்.
39. ஏஷா தேபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ருணு
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி
பார்த-பார்த்தா, ஏஷா புத்தி தே-இந்த புத்தி (அறிவுரை) உனக்கு, ஸாங்க்யே அபி ஹிதா-ஸாங்கிய வழிப்படி சொன்னேன், து இமாம் யோகே ஸ்ருணு-இனி யோக வழியால் (சொல்லுகிறேன்) கேள், யயா புத்த்யா யுக்த: இந்தப் புத்தி கொண்டவன் கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி-கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.
பொருள் : இங்ஙனம் உனக்கு ஸாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள். இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.
ஆறு தர்சனங்களில் ஒன்று ஸாங்கியம் என்ற பெயர் பெறுகிறது. அது கபில முனிவர் இயற்றியது. எண்ணிக்கை என்பது ஸாங்கியம் என்ற சொல்லுக்கு அர்த்தம். பிரகிருதியும் புருஷனும் சேர்ந்து 25 தத்துவங்களாகின்றன என்பது அதன் கோட்பாடு. இங்கு பகவான் ஸாங்கியம் என்று சொல்லுவது ஆத்ம ஞானத்தைப்பற்றிய விசாரம் ஒன்றேயாம். பின்பு யோகம் என்று சொல்லப்படுவது பெரிதும் கருமயோகமாகும். ஒவ்வொரு கலைஞானத்திலும் சாஸ்திரத்திலும் தத்துவ விசாரம் அல்லது உபபத்தி (தியரி) என்றும் அனுஷ்டானம் (பிராட்டிஸ்) என்றும் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. முந்தியது புத்தியில் தத்துவத்தை நன்றாகப் படியும்படி செய்கிறது. பிந்தியது பழக்கத்தில் வந்து பயன்படுகிறது. சிற்பி ஒருவன் வீடுகட்டும் விஷயத்தை மனதில் தெளிபட ஓர்கிறான். அது தத்துவவிசாரம். பின்பு அதன்படி அதைக் கட்டி முடிக்கிறான்; அது அனுஷ்டானம். விசாரம், அனுஷ்டானம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன. நன்கு விசாரிக்கின்றவன் முறையாக அனுஷ்டிக்கக் கூடும். திரும்பத் திரும்ப அனுஷ்டிக்கின்றவனுக்கு அதன் தத்துவம் உள்ளத்தில் தெளிவுபடப் பதியும்.
இங்கு பகவான் தத்துவ விசாரத்தை ஸாங்கியம் என்றும் அதன் அனுஷ்டானத்தை யோகம் என்றும் சொல்லுகிறார். ஆக, வாழ்க்கை சம்பந்தமான உண்மைகளை விசாரிப்பதும் அனுஷ்டிப்பதும் சேர்ந்து பெரு நன்மை விளைவிக்கும். பலபேர் விசாரித்துப் பார்க்காது வினையாற்றுகின்றனர். சிலர் கருத்தில் வாங்குவார்கள்; செயலில் கொண்டுவரமாட்டார்கள். அறிவைப்பெறுவதும், அது செயலாகப் பரிணமிப்பதும் சேர்ந்தே இருக்க வேண்டும். கர்மயோகம் பூர்த்தியாகாவிட்டால் அது வீண் நஷ்டந்தானே என்ற சந்தேகத்துக்கு விடை வருகிறது:
40. நேஹாபிக்ரமநாஸோऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்
இஹ-இதில் (கர்ம யோகத்தில்), அபிக்ரமநாஸ: ந அஸ்தி-விதைக்கு (முயற்சிக்கு) நஷ்டம் இல்லை, ப்ரத்யவாய: ந வித்யதே-நேரெதிரான விளைவும் இல்லை, அஸ்ய தர்மஸ்ய ஸ்வல்பம் அபி-இந்த தர்மத்தில் (கர்ம யோகம்) சிறிதிருப்பினும், மஹதோ பயாத் த்ராயதே-பேரச்சத்தினின்று காப்பாற்றும்.
பொருள் : இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும், அஃதொருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற்றும்.
வீடு கட்டுபவர் அதற்குக் கூரை போடாவிட்டால் அதுவரையில் செய்த முயற்சி வீணாய்ப் போம். பயிர்த் தொழில் செய்பவர்கள் அறுவடை செய்யாவிட்டால் பட்டபாடெல்லாம் பயன்படாமற்போம். கருமயோக அனுஷ்டானம் அத்தகையதன்று. ஒரு நாள் உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று அனுஷ்டானத்துக்கு ஏற்றவளவு யோகத்தில் பயன் உண்டு. மருந்து வகைகளை முறைதவறிக் கையாண்டால் நோயைப் போக்குதற்குப் பதிலாக உயிரைப் போக்கும் விஷமாக அவை மாறியமைக்கூடும். அத்தகைய குற்றம் யோகத்தில் ஏதாவது வந்துவிடுமோ என்ற சந்தேகம் வேண்டியதில்லை. அதைக் கொஞ்சம் அப்பியசித்தாலும் ஆத்ம சொரூபத்தை அது விளக்க வல்லது. ஆத்ம சொரூபத்தை அறிகிறவன் ஜனன, மரண சம்பந்தமான பெரும் பயத்தினின்று விடுபடுகிறான்.
ஸாங்கியம், யோகம் ஆகிய இரண்டையும் முறையாகக் கையாளுபவர்களுக்கு வந்தமையும் நன்மை யொன்று உண்டு. அதாவது:
41. வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந
பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோऽவ்யவஸாயிநாம்
குருநந்தந-குருகுலத் தோன்றலே! இஹ வ்யவஸாயாத்மிகா புத்தி ஏகா-இந்த உலகத்தில் உறுதியுடைய புத்தி ஒருமையுடையது, அவ்யவஸாயிநாம்-உறுதியில்லாதோரின் புத்தய:-புத்திகள், பஹுஸாகா-பல கிளைப்பட்டது, அநந்தா: ச-முடிவற்றது,
பொருள் : குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது. உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.
பல மாணாக்கர்கள் ஒரு கணக்கைப் போடும்போது தப்பான விடைகள் கணக்கற்றவை வரக்கூடும். ஆனால் சரியான விடை ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அங்ஙனம் காமிய கருமங்கள் செய்கின்றவர்களுக்குக் கணக்கற்ற புத்திகள் உருவெடுக்கின்றன. எத்தனையோ விதங்களாக எண்ணியும் செயல் புரிந்தும் அவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். ஆனால் செயல்களெல்லாம் ஈசுவரனுக்குரியவைகள் என்றறிந்து அவனுக்கே தொண்டு புரிகின்றவனுக்கு புத்தி ஒன்றேயாம்.
மனதை ஒருமுகப்படுத்துதல் உலகக் காரியத்துக்கும் பயன்படும், பாரமார்த்திகப் பெரும்பேறு பெறுதற்கும் பயன்படும். முதலில் மனம் ஒருமுகப்படுகின்றவளவு அதற்கு வல்லமை வருகிறது. விரிந்தோடும் சூரிய கிரணங்களைப் பூதக்கண்ணாடியின் வாயிலாகக் குவியச்செய்தால் ஒளியும் வெப்பமும் குவிந்து அதிகரிக்கின்றன. ஒரு செத்தையில் தீ மூட்டுதலும் அப்பொழுது சாத்தியமாகிறது. அங்ஙனம் மனது குவியும்பொழுது எதை எண்ணுகிறதோ அதன் பாவனையை அது விரைவில் எடுக்கிறது; செயலும் திறம்பட்டதாகிறது. அர்ஜுனன் துரோணாசாரியரிடத்தில் மாணாக்கனாயிருந்த போது ஒரு மரத்தின்மீது வைத்த குறியை மற்றவர்கள் அம்பால் அடிக்க இயலாதிருந்த சமயத்தில் அவன் எதை எளிதில் அடித்துப் பொத்தலாக்கினான். குவிந்த மனமே அவ்வெற்றிக்குக் காரணமாயிற்று.
அமெரிக்காவில், நூலில் கட்டுண்டு ஓர் ஓடையில் தத்தளித்துக்கொண்டிருந்த முட்டையோடுகளை மாணாக்கர்கள் துப்பாக்கியால் சுடமுடியவில்லை. முன்பு துப்பாக்கியைக் கையால் கூடத் தொட்டறியாத விவேகானந்த சுவாமிகள் அவ்வோடுகளை ஒரே தடவையில் சுட்டுச் சுக்கலாக்கினார். அதற்குக் காரணம் கேட்ட போது மனம் குவிதல் என்று அவர் விடையிறுத்தார்.
நவீன பௌதிக சாஸ்திரிகளில் ஒருவராகிய ஜகதீச சந்திரவசு என்பவர் மனிதர்களுக்குள்ள உணர்ச்சிகள் யாவும் மரம் செடி கொடிகளுக்கும் உண்டு என்று காட்சி பூர்வமாக நிரூபித்துக் காட்டினார். அதையெல்லாம் தெரிந்துகொள்ளும் வல்லமை அவருக்கு எப்படி உண்டாயிற்று என்று கேட்டபொழுது செடியின் இயல்புகளைத் தெரிந்துகொள்ளுதற்கு மனதை ஒருமுகப்படுத்தி பாவனையில் நானே செடியானேன் என்று பதிலுரைத்தார். குவிந்து ஒருமுகப்பட்ட மனதுக்கு எதையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டாகிறது.
ஒரே புத்தி படைத்திருப்பது எத்தகைய மகிமையையுண்டு பண்ணும் என்பதற்கு ஸ்ரீமதி ராதையின் பிரேமை பக்தி சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். அவளுடைய மனதும் இந்திரியங்களும் ஒரே ஒரு லட்சியத்துக்காகத்தான் வேலை செய்யும். உள்ளத்தில் எழும் எண்ணங்களெல்லாம் கிருஷ்ணனைப் பற்றியவைகள். கண்கொண்டு பார்ப்பதெல்லாம் அவனோடு சம்பந்தப்பட்டவைகள். காதால் கேட்பதெல்லாம் அவன் பெருமைக்கு விளக்கமாகின்றன. உண்ணும் உணவு அவன் ஊட்டுவதாகும். அவனது அருளே உயிர்க்கு உயிராகிறது. மற்றொரு மகிமை ஸ்ரீமதி ராதையின் ஒருமை புத்தியிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. குவிந்த மனமுடையார்க்கு ஓர் இந்திரியம் செய்யும் தொழிலை மற்ற இந்திரியங்களும் செய்யக் கூடும். கிருஷ்ணனது வேணுகானம் சுரக்கிறது. அது காற்றில் மிதந்து எங்கும் பரவுகிறது. ஸ்ரீமதி ராதையின் காதில் அந்த இன்னிசை விழுகிறது. அவள் உள்ளம் அந்த ஓசைக்கு உறைவிடமாகிறது. உள்ளம், புறம் என்ற வேற்றுமை அகலுகிறது. ஓசை வடிவினனாக, நாத பிரம்மமாகக் கிருஷ்ணன்தான் யாண்டும் நிறைந்துள்ளான். ஆங்குக் காது ஓசையைக் கேட்பதில் வியப்பொன்றுமில்லை. ஓசைக்கு ஒரு வடிவம் உண்டு என்பதைக் கண் காண்கிறது; ஓசைக்கு ஒரு மணம் உண்டு என்பதை மூக்கு முகர்கிறது; ஓசைக்கு ஓர் ஊறு உண்டு என்பதை மேனி உணர்கிறது. ஓசைக்குச் சுவையொன்று உண்டு என்பதை நா நுகர்கிறது. ஓசையின் உட்பொருள் அனைத்தும் எப்பொறிக்கும் புலனாகிறது. என்னே ஒருமை புத்தியின் மகிமை! இயற்கையில் நோக்கரிய நுண்பொருளையும் நுகர்ந்தறிதற்கு ஒருமை புத்தியே உற்ற துணையாகிறது. இறைவனையே கண்டுணரவும், அவனில் கலந்திருக்கவும் ஒருமை புத்தி முற்றும் உதவுகிறது. ஒரு புத்தியுடையவன் மக்களுள் மேலோன். சாங்கியமும் யோகமும் சேர்ந்தவிடத்துக் குவிந்த கூர்மையான புத்தி உண்டாகிறது.
பல புத்தியுடையவரின் போக்குப் பின்வருமாறு:
42. யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஸ்சித:
வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந:
43. காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்
க்ரியாவிஸேஷபஹுலாம் போகைஸ்வர்யகதிம் ப்ரதி
44. போகைஸ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே
பார்த-பார்த்தா!வேதவாதரதா:-வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார், புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய-பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள், ந அந்யத் அஸ்தி இதி வாதிந:-தமது கொள்கை தவிர மற்றது பிழையென்கிறார்கள்.
காமாத்மாந:-ஆசைகளில் மூழ்கியவர்கள், ஸ்வர்கபரா:-சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர்
ஜந்மகர்மபலப்ரதாம்-பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர், போகைஸ்வர்யகதிம்-போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர், க்ரியாவிஸேஷபஹுலாம்-பலவகையான கிரியைகள்.
தயா அபஹ்ருத சேதஸாம்-அந்த (பேச்சினால்) மனம் அபஹரிக்கப் பட்டு, போக ஐஸ்வர்ய ப்ரஸக்தாநாம்-போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோர், வ்யவஸாயாத்மிகா புத்தி:-நிச்சய புத்தி, ஸமாதௌ ந விதீயதே-சமாதியில் நிலைபெறாது.
பொருள் : வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கையழிய மற்றது பிழையென்கிறார்கள்.
பொருள் : இவர்கள் காமிகள்; சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.
பொருள் : இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலைபெறாது.
ஆசை என்னும் பாசத்தில் கட்டுண்டு கிடப்பவர்கள் மக்களுள் கடைத்தரமானவர்கள். இம்மையிலும் மறுமையிலும் இந்திரிய சுகங்களை நாடுதல் ஒன்றிலேயே அவர்கள் கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள். அவர்களது கல்வியும், கேள்வியும், சொல்வன்மையும் சிற்றின்பத்துக்கென்றே கையாளப்படுவனவாகின்றன. வேதத்தில் கருமகாண்டம் இத்தகைய புன்மையரது புல்லியல்பை நிறைவேற்றுவதற்காக அமைந்தது. பல் வகைப்பட்ட இன்பங்களை நாடிப் பிறவிப் பெருங்கடலில் அழுந்திக் கிடப்பவர்க்கு மட்டும் அது பயன்படும். வேதங்கள் மிகப் பழையவை எனினும் அவை புகட்டுவனவெல்லாம் சிறப்பு வாய்ந்தவைகளென்று எண்ணி ஏமாற்றமடையலாகாது. இன்பங்களைப் பெறுவது வாழ்க்கையின் லட்சியமன்று. பரிபூரணமடைவதே முடிவான லட்சியமாகும். அதற்கு ஞானத்திலும் யோகத்திலும் உறுதிபெற்ற உள்ளம் வேண்டும். வேதங்கள் புகட்டுகின்ற கரும காண்ட அனுஷ்டானத்தினின்று ஒருக்காலும் உறுதியான உள்ளம் (சமாதி) உண்டாகாது. பரிபூரண நிலையை அடைவதற்கு விலக்கப்படுவது எது, வேண்டப்படுவது எது என்ற கேள்வி பிறக்கலாம். அதற்கு விடை வருகிறது. (42-44)
45. த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோக÷க்ஷம ஆத்மவாந்
வேதா-வேதங்கள், த்ரைகுண்ய விஷயா-மூன்று குணங்களுக்குட்பட்டன, நிஸ்த்ரைகுண்யோ-மூன்று குணங்களையும் கடந்தோனாக, நிர்த்வந்த்வ-இருமைகளற்று, நித்யஸத்த்வஸ்த-எப்போதும் உண்மையில் நின்று, நிர்யோக÷க்ஷம-யோக ÷க்ஷமங்களைக் கருதாமல் ஆத்மவாந் பவ-ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.
பொருள் : மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக. இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக ÷க்ஷமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.
ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணமயமாயிருப்பது பிரபஞ்சம். சுவர்க்கங்கள் அனைத்தும் இப்பிரபஞ்சத்தில் அடங்கியிருக்கின்றன. இதிலிருந்து பெறுகின்ற இன்பங்களுக்கு வழி காட்டியாயிருக்கும் நூல்களுக்கு வேதங்கள் என்று பெயர். அவைகள் எம்மொழியில், எக்காலத்தில், யாரால் இயற்றப் பெற்றிருப்பினும் நிலையற்ற பிரபஞ்சத்தைப் பற்றியவைகளேயாம். முக்குணங்கள் முப்பாழ் என்று இயம்பப்படுகின்றன. முப்பாழுக்கு அப்பால் இருக்கின்ற பரம்பொருளை அடைந்தாகவேண்டும். யோகத்தில் நிலைபெற்றிருப்பதே அதற்கு உற்ற உபாயம். யோக சாதனமும் ஈண்டு இயம்பப்படுகிறது. லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி, சுகம் துக்கம் ஆகியவைகளுக்கு துவந்த்வம் அல்லது இருமைகள் என்று பெயர். இவைகளில் கட்டுண்டு மனது ஊசலாடாது நடுவு நிலையிலேயே அமைதியுற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்வதே யோக சாதனமாகிறது. இனி யோகம் என்பதற்குச் சாமான்யமான பொருள் ஒன்று உண்டு. அதாவது பிரபஞ்சப் பொருள்களைத் தேடித்திரிதலுக்கு உலக வழக்கத்தில் யோகம் என்றும், அவைகளைக் காப்பாற்றி வைப்பதற்கு ÷க்ஷமம் என்றும் பெயர். அப்படி யோக÷க்ஷமத்திலும் மிகைபட்ட கருத்து வைக்கலாகாது. சுவாசிப்பதற்குக் காற்றுத்தானாக வந்தமைவதுபோன்று சரீரம் இருக்குமளவும் அதற்குத் தேவையானவைகள் ஈசுவரானுக்கிரகத்தால் ஆத்ம சாதகன் ஒருவனுக்குத் தாமாக வந்தமையும். முறை வழுவாத இக்கோட்பாட்டில் விசுவாசம் வைக்காதவர்களே யோக ÷க்ஷமத்தைப் பற்றி யெண்ணி மனங்கலங்குகின்றனர். அப்படி மனங்கலங்காது யாண்டும் ஆத்ம சொரூபத்திலேயே சாதகன் திளைத்திருக்க வேண்டும். எந்த யோகிக்கு இது சாத்தியமாகிறதோ அவன் முப்பாழைக் கடக்க வல்லவனாகிறான். திரிபுர தகனம் என்பது இதுவே.
இவ் வையகத்தில் வேண்டியதை வேண்டியாங்கு வருவித்துக்கொள்ளலாம். அப்படி அவைகளைப் பெற்று இன்புற்றிராது முக்குணங்களைக் கடந்து செல்வதால் வரும் நன்மை யாது? விடை வருகிறது :
46. யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:
ஸர்வத: ஸம்ப்லுத உதகே-எங்கும் நீர் நிரம்பிய இடத்தில், யாவாந் அர்த உதபாநே-ஒரு சிறு குட்டை என்ன பொருளுடையது, ஸர்வேஷு வேதேஷு-எல்லா வேதன்களினாலும், விஜாநத: ப்ராஹ்மணஸ்ய-ஞானமுடைய பிராமணனுக்கு, தாவாந்-அவ்வளவு தான் (பயன்).
பொருள் :எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது; அன்னபொருளே ஞானமுடையை பிராமணனுக்கு வேதங்களுமுடையன.
நீர் இல்லாத இடங்களில் கிணறு நிச்சயமாகப் பயன்படுகிறது. எங்கும் தெளிநீர் மயமாயிருக்குமிடத்தில் கிணற்றைத் தேடுவார் யாருமிலர். அதுபோன்று அக்ஞானத்தில் இருக்குமளவு வேதங்களால் பயனுண்டு. அவைகள் காட்டுகின்ற நெறிகளைப் பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் பலவிதமான இன்பங்களைப் பெற்று இனிது வாழ்ந்திருக்கலாம். ஆனால் பிரம்ம ஞானமோ பேரின்ப சொரூபமானது. அதன் கிரணங்களாக வந்தவைகளே ஏனைய இன்பங்கள் யாவும். கனவில் உண்ட உணவு உடலை வளர்ப்பதில்லை. நனவில் உண்ட உணவு நனவு, கனவு ஆகிய இரண்டிலும் உடலை வளர்க்கிறது. அப்படிப் பிரம்ம ஞானம் என்ற பேரானந்தத்தில் எல்லா ஆனந்தங்களும் அடங்கப் பெற்றிருக்கின்றன.
கிணறு மட்டும் அமையப்பெற்றுள்ள ஊரில் இருக்கும் ஒருவன் கிணற்று நீரை உண்டு திருப்தியடைந்தாகவேண்டும். அங்ஙனம் அக்ஞானத்தில் இருக்கும் பரியந்தம் ஒருவன் உலக இன்பங்களைத் துய்த்திருப்பதுதானே அவன் கடமை? அப்படியல்ல. ஞானத்துக்குத் தன்னைப் பக்குவப்படுத்துதற்கு வழியொன்று உண்டு. அதாவது :
47. கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி
தே கர்மணி ஏவ அதிகார-தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு, கதாசந மா பலேஷு-எப்போதுமே பலன்களில் இல்லை, கர்மபலஹேது மா பூ-செய்கையின் பயனைக் கோருபவனாக ஆகாதே, தே அகர்மணி-உனக்கு கர்மங்களை ஆற்றாமல், ஸங்க: மா அஸ்து-இருப்பதிலும் பற்று கூடாது.
பொருள் : தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.
வாழ்க்கையில் இது ஒரு பெரிய முரண்பாடாகத் தென்படுகிறது. வினைப்பயனை விரும்பாது யாரும் வினையாற்ற முடியாது. வினைப்பயனை விரும்பாதார் வினையாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால் பகவானோ இதற்கு நேர் மாறாக உபதேசிக்கிறார். கருமம் புரியாது வெறுமனே இருக்கவேண்டாம். ஓயாது பெரு வினையாற்றிக்கொண்டிரு. வினையினின்று விளையும் பயன் யாது என்ற ஏக்கம் உனக்கு வேண்டாம். அத்தகைய பற்றற்ற பாங்கினின்றுதான் நன்மை விளையும். ஏனென்றால் கருமம் தன்னளவில் கொடியதன்று. ஆசையோடு கூடிய கருமமே கொடியது. பிறவிப் பெருங்கடலில் அது மனிதனை ஆழ்த்துகிறது. சுவர்க்காதி போகங்களை விரும்பி வினையாற்றியவர்களெல்லாம் ஆசைக்கு அடிமைப்பட்டவர்களே. வினைப்பயனை விரும்பாதவர்களெல்லாம் ஆசையை வென்றவர்கள். ஆசையை வெல்லுமளவு மனிதன் சுதந்திரத்தில் நிலைபெறுகிறான். பயன் கருதாது பணிசெய்பவனுக்குச் சித்தம் தெளிவடைகிறது. ஞானத்தைப் பெற அவன் தகுதியுடையவன் ஆகிறான். ஆற்றலும் அவனுக்கு அதிகரிக்கிறது. ஆக, கருமம் நடைபெறவேண்டும். கரும பலனில் ஆசை வைக்கலாகாது. ஆசையை வென்றவன் நிஷ்காமிய கருமம் செய்யும் விதம் வருமாறு:
48. யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே
தநஞ்ஜய-அர்ஜுனா! யோகஸ்த:-யோகத்தில் நின்று, ஸங்கம் த்யக்த்வா-பற்றை நீக்கி, ஸித்தி அஸித்தயோ: ஸமோ பூத்வா-வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு, கர்மாணி குரு-தொழில்களைச் செய்க, ஸமத்வம் யோக உச்யதே-நடுநிலையே யோகமெனப்படும்.
பொருள் : தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.
தான் செய்யும் வினையெல்லாம் ஈசுவரனுடையது என்கிற எண்ணத்தில் நிலைத்திருப்பது யோகத்தில் நிலைத்திருப்பதாகிறது. செயலெல்லாம் அவனுடையது என்று எண்ணுவதால் பற்றுதல் போய்விடுகிறது. ஈசுவரனுடைய வேலைக்காரனாகத் தன்னை வைத்துக்கொண்டு யோகி வினையாற்றுகிறான். பக்கத்து ஊரிலிருக்கும் ஒருவனை அழைத்து வரும்படி வேலைக்காரனை எஜமானன் ஏவுகிறான். வேலைக்காரன் அங்குச் சென்று அம்மனிதன் அவ்வூரில் அப்பொழுது இல்லையென்று அறிகிறான். அங்ஙனம் தன் யத்தனத்தில் நேர்ந்த தோல்வியை முன்னிட்டு அவன் வருந்துவதில்லை. மற்றொரு நாள் சென்று அம்மனிதனைக் காண்கிறான். அவ்வெற்றியால் அவன் தனி மகிழ்ச்சி யடைவதில்லை. தலைவன் தூண்டுதல்படி தன் கடனாற்றுவதே அவ்வேலைக்காரனுக்குப் போதுமானது. கருமயோகியும் அவ்வாறு வெற்றி தோல்விகளை ஒப்பாய் உணர்கிறான்.
தராசுமுள் போன்று மனது நடுவுநிலையில் இருப்பதற்கு யோகம் என்று பெயர். மனது நடுவுநிலையில் உறுதி பெறுமளவு அது மேன்மையுறுகிறது. ஓரம் சாரேல் என்பது கோட்பாடு. மனது இப்பக்கம் அப்பக்கம் சாராது இருத்தல் வேண்டும். இனியதைப் பெறுகிற வேளையில் இன்புறவும், இன்னாததைப் பெறுகிற வேளையில் துன்புறவும் செய்கிறது மனது. இவ்விரண்டும் ஓரம் சார்ந்த நிலைகளாகும். இன்ப துன்பமிரண்டையும் ஒரே பாங்கில் பொருள்படுத்துவது நடுவுநிலை. அதனால் மனத்தகத்துத் தெளிவும், உறுதியும் உண்டாகின்றன. தெளிந்து அசையாதிருக்கும் நீரில் பிம்பம் நன்கு புலப்படுகிறது. தெளிந்து உறுதி பெற்றுள்ள உள்ளத்தில் மெய்ப்பொருள் காட்சி நன்கு புலனாகும். அது நடுவு நிலையினின்று மனது பெறும் மேன்மையாம். எத்தகைய வாழ்க்கை அல்லது மனநிலை ஒவ்வாது என்பது இனி இயம்பப்படுகிறது :
49. தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநஞ்ஜய
புத்தௌ ஸரணமந்விச்ச க்ருபணா: பலஹேதவ:
தநஞ்ஜய-தனஞ்ஜயா! புத்தியோகாத் கர்ம-புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம், தூரேண அவரம்-நெடுந்தொலைவு தாழ்ந்தது, புத்தௌ ஸரணம் அந்விச்ச-புத்தியைச் சரணடை
பலஹேதவ: க்ருபணா:-பயனைக் கருதுவோர் லோபிகள்.
பொருள் : தனஞ்ஜயா, புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம் நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை. பயனைக் கருதுவோர் லோபிகள்.
இருப்புப்பாதை வண்டியில் பிரயாணம் செய்த ஒருவனுக்கு ஏவலாளன் ஒருவன் கூலிக்காக மூட்டை சுமந்தான். வழிப் போக்கனாக வந்த வேறு ஒரு பிரயாணி அன்பினால் தூண்டப் பெற்று சமபுத்தியுடன் மூட்டை சுமந்து அவனுக்கு உதவி புரிந்தான். இருவர் செயலும் ஒன்றே யெனினும் கூலிக்காகச் சுமந்தவன் கீழ்மகன். போதியவளவு கூலி கிடைக்கவில்லை யென்ற மனக்குறை அவனுக்கு வந்து அமைகிறது. தன்னைக் குறித்து அவன் தானே பரிதாபப் படுவதுமுண்டு. ஆகவே அவன் கிருபணன். அர்ஜுனன் தன்னைக் கிருபணன் என்று இயம்பிக்கொண்டதை ஈண்டு ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும். இவ்வுலகில் கரும பலனை நாடும் பெரும்பான்மையோர் கூலிக்காரன் போன்று அலைந்து திரிந்து அழிகின்றனர். வேற்றானாயிருந்தும் அன்புக்காக மூட்டை சுமந்தவனே மேன்மகன். கொடையாளி போன்று செயல்புரிபவன் மேன்மையுறுகிறான். நீரை இறைக்க இறைக்க அது மேலும் கிணற்றில் ஊறுவது போன்று சுயநலம் கருதாத சேவையானது ஆற்றலை வளர்க்கிறது. மனதின் சம நிலைக்கு அந்த ஆற்றல் யாண்டும் உற்ற துணையாகிறது. சமநிலையினின்று ஞானசமாதி இனிது வடிவெடுக்கிறது.
மனதின் சமநிலை இவ்வுலக வாழ்க்கைக்கு எப்படித் துணை புரிகிறது என்னும் கேள்வி எழுகிறது. அதற்குப் பகவான் விடையளிக்கிறார்.
50. புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஸலம்
புத்தியுக்த:-புத்தியுடையவன், ஸுக்ருத துஷ்க்ருதே-நற்செய்கை தீச்செய்கை, உபே இஹ ஜஹாதி-இரண்டையும் இங்கு துறக்கிறான், தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ-ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு, யோக: கர்மஸு கௌஸலம்-யோகம் செயல்களில் திறமையாம் (விடுபட உபாயமாகும்).
பொருள் : புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறக்கிறான். ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில் திறமையாம்.
மனிதனை அக்ஞான இருளில் சேர்க்கும் இயல்புடையவைகள் இருவினையும். ஆனால் கருமயோகியை வினைகள் தளைக்கமாட்டா. அவனுக்கு சுயநல எண்ணம்  சிறிதுமில்லாமையே அதற்குக் காரணம். இரண வைத்தியன் ஒருவன் நோயாளியின் உடலை அறுக்கிறான். நோயாளி உயிர் பிழைப்பதால் வைத்தியனுக்குப் புண்ணியம் இல்லை. அவன் சாவதால் வைத்தியனுக்குப் பாபம் இல்லை. நடுவு நின்று முறையாகத் தன் கடமையை அவ்வைத்தியன் புரிகிறான். நோயாளியைக் கொல்லவேண்டும் என்ற கெட்ட எண்ணம் அவனுக்கு இல்லை. ஈசுவர சங்கற்பத்தை மீறி நோயாளியைக் காப்பாற்ற முடியும் என்ற அகங்காரமும் அவனிடத்தில்லை. ஆதலால் இருவினையும் அவனைச் சேர்வதில்லை.
இரண வைத்தியன் பல உடல்களை அங்ஙனம் அறுத்துச் சிகிச்சை செய்கிறான். பின்பு ஒரு நோயாளியைப் பார்த்து இவன் என் புதல்வன் என்று அவன் பற்று வைத்தால் அவனது நடுவு நிலை கலைந்து போகிறது. முறையாக இரண வைத்தியம் செய்ய அவனுக்கு இயலுவதில்லை. எல்லாக் கருமங்களுக்கும் இதுவே விதி. எல்லாத் தொழில்களிலும் மனது நடுவு நிற்பது யோகம். மனமானது நடுவுநிற்கின்றவளவு கருமம் திறம்படச் செய்யப்படுகிறது. விருப்பு அல்லது வெறுப்புக்கொள்ளுமிடத்துத் திறமை குறைந்துபோகிறது. யுத்தம் புரிதல் போன்ற ஒரு கோர கர்மத்தையும் நடுவு நின்று திறமையாகச் செய்துகாட்டினார் பீஷ்மர். கணவனுக்குப் பணிவிடை செய்த மாது ஒருத்தி திறம்படத் தன் கடமையைச் செய்ததினால் காட்டில் தவம்புரிந்து கொக்கை எரித்த தவசியைவிட மேலானவள் ஆயினாள். பற்றற்றுத் திறம்படக் கசாப்புக்கடை வைத்திருந்த வியாதன் அதே தவசிக்கு ஞானம் புகட்டவல்ல பரிபாகம் அடைந்தான். நடுவு நிற்பதால் புதிய வினைத்தளைகள் உண்டாவதில்லை; பழைய கட்டுகள் தாமே அவிழ்கின்றன. அதனால் மனபரிபாகம் உண்டாகிறது.
திறம்படச் செய்யும் வினைகளுள் தலைசிறந்த வினை யாது என்ற கேள்வி எழுவதால் விடை வருகிறது.
51. கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண:
ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம்
ஹி புத்தியுக்தா மநீஷிண:-ஏனெனில் புத்தியுடைய மேதாவிகள், பலம் த்யக்த்வா-பயனைத் துறந்து, ஜந்மபந்தவிநிர்முக்தா:-பிறவித் தளை நீக்கி, அநாமயம் பதம் கச்சந்தி-மாறுதலற்ற பரமபதத்தை அடைகிறார்கள்.
பொருள் : புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி, ஆனந்தப் பதவி அடைகிறார்கள்.
துன்பத்துக்கு ஏதுவான இவ்வுலக வாழ்க்கையைத் துன்பமற்றதாக யோகி செய்துகொள்கிறான். பிறவிக்கு வித்தாயிருப்பதைப் பின்பற்ற பெருநிலையாகவும் அவன் செய்துகொள்கிறான். கேட்டைக் கேடின்மையாகச் செய்வதே வல்லமையில் பெரு வல்லமையாம். தம்மை விழுங்கவந்த விஷத்தை யெடுத்து அமிர்தமாகப் பானம் பண்ணுகிறார் சிவபெருமான். விஷ வைத்தியர்களுள் அவர் தலைசிறந்த வைத்தீசுவரன். மனிதனைக் கட்ட வந்த கருமத்தை யெடுத்துக் கருமயோகி முக்தி மார்க்கமாக மாற்றிக்கொள்கிறான். அப்படிச் செய்யும் செயலே செயற்கரிய செயலாகிறது. பெருநிலையடைந்ததன் அறிகுறி பின் வருகிறது.
52. யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி
ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச
யதா தே புத்தி-எப்போது உனது புத்தி, மோஹகலிலம்-மோகக் குழப்பத்தை, வ்யதிதரிஷ்யதி-கடந்து செல்லுகிறதோ, ததா-அப்போது, ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச-கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும், நிர்வேதம் கந்தாஸி-வேதனையேற்படாது.
பொருள் : உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது.
ஆத்மா, அனாத்மா இவ்விரண்டுக்கும் வேற்றுமை விளங்காத நிலை அவிவேகமாகும். விவேகம் உதயமானதும் உண்மை விளங்குகிறது. கனவைக் கனவு என்று தெரிந்துகொண்டவனுக்குக் கேள்விப்பட்ட கனவும், இனிக் கேட்கப்போம் கனவும் ஆகிய இரண்டும் பொருள்படாதவைகளாம். அங்ஙனம் உலக நடைமுறையின் உண்மையை அறிந்துகொண்டவனது உள்ளத்தில் அதைப்பற்றிய செய்திகள் எந்தவிதமான தடுமாற்றத்தையும் உண்டுபண்ணுவதில்லை.
தனக்கு அத்தகைய பெருநிலை எப்பொழுது வரும் என்று ஒரு சாதகன் கேட்கிறான். அதற்கு விடை வருகிறது.
53. ஸ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஸ்சலா
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி
ஸ்ருதிவிப்ரதிபந்நா-கேள்வியிலே கலக்கமுறாததாய், தே புத்தி-உனது புத்தி, மாதௌ-சமாதி நிலையில், நிஸ்சலா அசலா-உறுதிகொண்டு, அசையாது, யதா ஸ்தாஸ்யதி-நிற்குமாயின், ததா யோகம் அவாப்ஸ்யஸி-அப்போது யோகத்தை அடைவாய்.
பொருள் : உனது புத்தி, கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில் அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய்.
தான் அனுபவியாத ஒரு பொருளைப்பற்றி பிறர் சொல்லுவதையெல்லாம் கேட்டுக் குழப்பமடைவது மனதின் இயல்பு. நான் உயிரோடு இருக்கிறேனா, அல்லது இறந்து ஒழிந்துபோய் விட்டேனா? என்று தன்னைப்பற்றி யாரும் பிறரிடம் கேட்பதில்லை. தான் உயிர் வாழ்வது தனக்குப் பிரத்தியக்ஷம். அதற்கு வேறு பிரமாணம் ஒன்றும் வேண்டியதில்லை. மனது ஒடுங்கி ஆத்ம சொரூபத்தில் நிலைத்திருக்குங்கால் அது சமாதி என்று சொல்லப்படுகிறது. அப்பொழுது ஆத்ம சொரூபத்தின் பெருமையை அதுவே சொல்லும். அந்நிலையில் ஆத்ம ஞானமும் யோகமும் பூர்த்தியாகின்றன. மனிதன் அடைய வேண்டிய பெருநிலையைப் பெற்றவனாகிறான்.
ஈண்டு வினா ஒன்று கேட்பதற்கு அர்ஜுனனுக்கு அவகாசம் ஏற்படுகிறது. ஆக, அவன் அதைப் பகவான் முன்னிலையில் சமர்ப்பிக்கிறான்.
அர்ஜுந உவாச
54. ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஸவ
ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், கேஸவ-கேசவா! ஸமாதிஸ்தஸ்ய ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா-உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்?
ஸ்திததீ:-ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? கிம் ப்ரபாஷேத-என்ன சொல்வான்?
கிம் ஆஸீத-எப்படியிருப்பான்? கிம் வ்ரஜேத-எதனையடைவான்?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: கேசவா, உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனையடைவான்?
ஸமாதி கூடியவன், பிரம்மஞானி, ஸ்திதப்பிரக்ஞன் ஆகிய இச்சொற்களெல்லாம் ஒரே கருத்தை விளக்குகின்றன. பரிபூரணமுணர்ந்த ஞானி தானே பரிபூரணமாகிறான். அத்தகையவன் சமாதியில் இருக்கும்போது அவனுடைய அந்தக்கரணம் எத்தன்மையதாகிறது? பகிர்முகமாக அவன் மனதைத் திருப்பும் போது அவனுடைய செயல்கள் எப்படிப்பட்டவைகளாயிருக்கும்?
இந்த அத்தியாயத்தின் இறுதிவரையில் இனி வரும் பதினெட்டு சுலோகங்களில் நிறைஞானியின் இயல் இயம்பப்படுகிறது. நல்ல எழுத்து எழுத விரும்புபவர் மாதிரி எழுத்தைத் தங்கள் முன்னிலையில் வைத்துக்கொள்கின்றனர். சிறந்த சித்திரம் வரைய விரும்பும் ஓவியக்காரன் அழகிய படம் ஒன்றைத் தன்முன்பு மாதிரியாக வைத்துக்கொள்கிறான். பரிபூரணத் தன்மையை முன்மாதிரியாக வைத்துக்கொள்ளுதல் ஒவ்வொரு துறையிலும் இடம்பெறுகிறது. ஆத்மீகத் துறையிலும் இம்முறை பொருந்தும். சான்றோர்க்கு சாத்தியமாகக்கூடிய சம்பூரண நிலை ஈண்டுச் சாற்றப்படுகிறது. அந்நிலையை அடைய முயல்வார் தம் சாதனத்தில் செய்யவேண்டியது யாது என்பதும் இதில் அடங்கப்பெறுகிறது. ஆக, இப்பெருநிலையைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு இதன் பொருட்டுப் பாடுபடுவதெல்லாம் யோக சாதனங்களாகின்றன. குறியும் நெறியும் அடங்கப்பெற்ற சிறந்த பதினெட்டு சுலோகங்களும் வருகிறது.
ஸ்ரீ பகவாநுவாச
55. ப்ரஜஹாதி யதா காமாந்ஸர்வாந்பார்த மநோகதாந்
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே
ஸ்ரீ பகவாநுவாச- ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பார்த-அர்ஜுனா! மநோகதாந் ஸர்வாந் காமாந்-மனதில் எழும் விருப்பங்களனைத்தையும், ப்ரஜஹாதி-துறக்கிறான், யதா ஆத்மநா ஆத்மநி ஏவ துஷ்ட:-தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், ததா ஸ்திதப்ரஜ்ஞ: உச்யதே-அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.
அர்ஜுனனுடைய கேள்வியில் முதல் பகுதிக்கு இது விடை:
அக்கினி தானே உஷ்ண சொரூபம். வெப்பத்தை நாடி அது வேறு பொருளிடத்துப் போகவேண்டியதில்லை. அங்ஙனம் ஆத்மா ஆனந்த சொரூபம். தன்னிடத்துள்ள ஆனந்தத்தை அது பிறபொருள்மீது ஏற்றுவித்து, மனதைக் கொண்டு அவைகளை நாடிச் செல்லுகிறது. அத்தகைய நாட்டத்துக்குக் காமம் என்று பெயர். நீரில் அலை உண்டாவதுபோன்று காமம் மனதில் வடிவெடுக்கிறது. அலைகள் வீசும்பொழுது நீரின் அடிப்பாகம் தென்படுவதில்லை. மனதில் காம அலைகள் வீசும்பொழுது அதற்கு அடிப்படையாயுள்ள ஆத்மாவின் ஆனந்தசொரூபம் சிதறடைந்தது போன்று ஆகிறது. காம அலைகளற்று மனது தேங்கியிருக்கும் போது ஆத்மாவின் ஆனந்த சொரூபம் தனக்குத் தானே விளங்குகிறது. தான் உலகெல்லாம் தேடிய இன்பம் தன்னிடத்தே யாண்டும் இருக்கிறது என்று மனம் தெளிபவனே நிறைஞானி. ஆத்ம திருப்தன் நிறைஞானி.
மனம் தெளிந்திருத்தல் என்பதன் விளக்கம் வருகிறது :
56. து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே
து:கேஷு அநுத்விக்நமநா:-துன்பங்களிலே மனங்கொடாதவனாய், ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:-இன்பங் களிலே ஆவலற்ற வனாய், வீதராகபயக்ரோத:-அச்சமும் சினமுந் தவிர்த்தவன்
முநி ஸ்திததீ உச்யதே-அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.
பொருள் : துன்பங்களிலே மனங்கொடாதவனாய், இன்பங் களிலே ஆவலற்ற வனாய், அச்சமும் சினமுந் தவித்தவ னாயின், அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.”
துன்பத்துக்கு ஏதுவான நிகழ்ச்சிகள் இவ்வுலகில் நிறைந்திருக்கின்றன. தெளிந்த மனமுடையவனை அவைகள் அசைத்துத் துன்படுத்தமாட்டா. விறகுக்கட்டை சேரச் சேரத் தீ வளர்கிறது. திடஞானியினிடத்து ஆசை அப்படி வளர்வதில்லை. சுகத்தைத் தரும் பொருள்கள் பெருகினாலும் அவன் அவைகளிடத்து நாட்டம் கொள்வான். பற்று, அச்சம், சினம் என்னும் மூன்று விதக் குற்றங்களினின்று நீங்கி அவனது மனம் நிறை நிலையடைகிறது. உலகப் பொருள்களிடத்துப் பற்றற்றிருக்கவேண்டும். பாம்பினிடத்தும் மரணத்தினிடத்தும் நமக்குப் பற்று இல்லை. ஆனால் அவைகளைக் குறித்துப் பயம் உண்டு. அது ஒண்ணாது. பற்றற்றிருப்பது போன்று பயமற்றும் இருக்கவேண்டும். பீமன் போன்றவனுக்குப் பகைவனிடத்துப் பற்றுமில்லை, பயமும் இல்லை. எனினும் பெருமிதமாகக் கோபம் இருந்தது. அதும் தகாது. பற்றற்று, பயமற்று, சினமற்றிருக்கும் மனதே சீரிய மனதாகிறது. தெளிவடைதலும் அத்தகைய மனதுக்குச் சாத்தியமாகிறது. இன்ப துன்பங்களை நிகராக நினைப்பவன் நிறைஞானி. விருப்பும், வெறுப்பும், அச்சமும் அற்றிருப்பவன் நிறைஞானி. மனன சீலத்தையுடையவன் முனி. அதாவது ஸதலதாரை போன்று யாருடைய மனது இடையறாது ஆத்ம சொரூபத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறதோ அம்மனிதன் முனியாகிறான்.
புறவுலகோடு முனிவன் எவ்வித இணக்கம் வைக்கிறான் என்னும் வினாவுக்கு விடை வருகிறது.
57. ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஸுபாஸுபம்
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
ய:-எவன், ஸுப அஸுபம்-நல்லதும் கெட்டதும், ப்ராப்ய-அடைந்து, ந அபிநந், ததி -மகிழ்வதில்லை, ந த்வேஷ்டி-வெறுப்பதும் இல்லை, ஸர்வத்ர அநபிஸ்நேஹ-பகைப்பதுமின்றியிருப்பானோ, தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.
பொருள் : எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும் பகைப்பதுமின்றியிருப்பானோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.
நலமும் கேடும் கலந்துள்ளது உலகம். பற்றுடையார்க்கு அது இன்ப துன்பங்களை விளைவிக்கிறது. பற்றற்ற ஞானிக்கு அதனால் இன்ப துன்பங்கள் உண்டாவதில்லை. ஆகையால் அவன் புகழ்வதுமில்லை, இகழ்வதுமில்லை.
எப்படிப் பேசுகிறான் என்று கேட்ட கேள்விக்கு இது விடையாகிறது:
58. யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்காநீவ ஸர்வஸ:
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
கூர்ம ஸர்வஸ: ச-ஆமை தன் அவயங்களையும், ஸம்ஹரதே இவ-இழுத்துக்கொள்ளுவது போல், அர்தேப்ய இந்த்ரிய-விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை, யதா அயம்-எப்போது இந்த மனிதன் (இழுத்துக் கொள்ள வல்லானாயின்) தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.
பொருள் : ஆமை தன் அவயங்களை இழுத்துக்கொள்ளுவது போல், எப்புறத்தும் விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை யருவன் மீட்க வல்லானாயின், அவனறிவே நிலைகொண்டது.
ஆபத்துக்களினின்று தன்னைக் காத்துக்கொள்ள ஆமை மிக எளிதில் உறுப்புக்களை உள்ளே இழுத்துக்கொள்கிறது. அவ்வளவு எளிதில் இந்திரியங்களை ஆளும் அறிஞன் இந்திரியங்களை உன்முகமாகத் திருப்புகிறான். இப்படிச் செய்வது பிரத்தியாகாரம் எனப்படுகிறது. வீட்டின் கதவுகளைத் தாழ் இட்டு அடைத்து வெளியுலகின் வியவகாரத்தில் தொடர்வு அற்றவனாக மனிதன் உள்ளே வீற்றிருப்பது போன்று ஞானி பொறி வாயிலை அடைத்துவைத்துச் சமாதியில் சுகித்திருக்க வல்லவனாகிறான். அப்படிச் சமாதியில் திளைத்திருப்பதுதான் நிறைஞானியின் உண்மை நிலை. நிலத்தில் திண்டாடுகிற மீனை நீரில் விட்டால் அது எப்படி உணர்கிறதோ அப்படியிருக்கிறது ஞானிக்கு ஆத்ம சொரூபத்தில் இருப்பது. பூரணப் புலனடக்கம் நிறைஞானிக்கு முற்றிலும் இயல்பானது.
ஸ்திதப்பிரக்ஞன் எங்ஙனம் அமர்கிறான் என்று அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு விடையாக அடுத்த மூன்று ஸ்லோகங்கள் வருகிறது.
59. விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:
ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே
நிராஹாரஸ்ய தேஹிந:-கவராத ஜீவனிடமிருந்து, விஷயா விநிவர்தந்தே-விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன, ரஸவர்ஜம்-(எனினும் இவன் அவற்றிடமுள்ள ) சுவையை மறப்பதில்லை, அஸ்ய பரம் த்ருஷ்ட்வா-இவன் பரம்பொருளைக் கண்டதும், ரஸ: அபி நிவர்ததே-அச்சுவையுந் தீர்ந்துவிடும்.
பொருள் : தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும்.
நோய்வாய்ப்பட்டிருப்பவனுடைய இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களில் செல்லத் தகுதியற்றவைகளாகின்றன. ஆயினும் சுகமடைந்ததும் விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளத்தில் குடிகொண்டிருக்கிறது. சிறைச்சாலையில் அடைபட்டிருப்பவனுக்கும் இந்திரியார்த்தங்களை நுகர இயலாது. விஷயங்களையெல்லாம் விட்டு அவன் பலவந்தமாக விலக்கப்பட்டவனாகிறான். ஆனால் அவைகளை அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் உதித்துக்கொண்டிருக்கிறது. யாராலும் அதை அடக்கிவைக்க முடியாது. புலனடக்கம் முதலிய தபசுகளைச் செய்பவனது நிலைமையும் அத்தகையது. வாசனைகள் மிக சூக்ஷ்மமாக இருந்துகொண்டு கூத்தாடும். தீயிலிட்டு வறுத்த விதை முளைக்காது. அவ்வாறு வாசனை அறவே ஒழியவேண்டும். இந்த ஆசையை பகவான் ரஸம் என்கிறார். வாசனை, ரஸம், ஆசை ஆகிய சொற்களுக்குப் பொருள் ஒன்றேயாம். ஆசையானது திரும்பவும் முளைக்காதபடி அவிந்துபட்டுப் போகவேண்டும்.
ஆசையை வேர் அறுப்பதற்கு வழியொன்று உண்டு. சிற்றின்பத்துக்கு ஏதுவான பொருள்களாகத் தென்படுபவைகளெல்லாம் உண்மையில் பரமாத்மாவே என்று அறிபவர்கள் அதன் கண் அசையோ அல்லது பயமோ கொள்ளமாட்டார்கள். அதைப் போற்றிப் பாராட்டுவார்கள்.
அடங்காத இந்திரியங்கள் செய்யும் இன்னல்கள்:
60. யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித:
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:
கௌந்தேய-குந்தியின் மகனே, ஹி-ஆனால், யதத: விபஸ்சித:-முயற்சியுள்ள புத்திசாலியான
புருஷஸ்ய மந: அபி-புருஷனின் மனதிலே கூட, ப்ரமாதீநி இந்த்ரியாணி-கலக்குபவையான இந்திரியங்கள், ப்ரஸபம் ஹரந்தி-வலிய வாரிச் செல்கின்றன.
பொருள் : குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும்போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.
இந்திரியங்கள் பொல்லாதவைகள். தவ விரதமுடையவர்களையும் அவைகள் தத்தளிக்கச் செய்கின்றன. அவைகளைப் பின்பற்றுவது காட்டுக் குதிரையின் மீது சவாரி செய்வதற்கு ஒப்பாகும். அறிஞர்களையே அவைகள் படுகுழியில் வீழ்த்துபவைகள். பின்பு, பாமரர்களை அவைகள் என் செய்யமாட்டா? இந்திரியங்களை வெல்லுமளவு மனிதன் மேலோன் ஆகிறான். தனி மனிதன் அல்லது ஒரு சமுதாயம் அடைந்துள்ள பண்பாட்டை ஆங்குத் தென்படும் புலனடக்கத்தைக்கொண்டு அளந்துவிடலாம். சீரிய புலனடக்கமே மேலான நாகரிகம் என்று கருதப்படுகிறது. இம்மை மறுமையாகிய இரண்டிலும் மேன்மைக்கு இந்திரிய நிக்கிரகமே உற்ற உபாயம்.
அவ்விந்திரியங்களை அடக்கும் வழி:
61. தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
தாநி ஸர்வாணி ஸம்யம்ய-அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, மத்பர:-என்னைப் பரமாகக் கொண்டு, யுக்த ஆஸீத-யோகத்தில் அமர்ந்தவனாய், யஸ்ய இந்த்ரியாணி வஸே-எவன் புலன்களை வசப்படுத்தியிருக்கிறானோ, தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.
பொருள் : அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.
மனது ஏககாலத்தில் இரண்டு பொருள்களை நினைக்க முடியாது. நான் விஷயங்களை விட்டுவிடவேண்டும் என்று நினைக்கும்போதும் விஷய எண்ணங்கள் தான் மனதில் குடிகொள்கின்றன. வேர் ஊன்றி மனதுக்குள் பாய்ந்து மறைமுகமாக அவைகள் வலிவு பெறுகின்றன. விஷய எண்ணங்களுக்கு மனமுவந்து அனுமதி கொடுக்கிறபொழுது அவைகள் மேலே கிளைகளாகத் தளிர்க்கின்றன. வேண்டாமென்று அக்கிளைகளைக் கொய்ய முயலும்போது அவைகளின் ஆணிவேர் மனதினுள் ஆழமாகச் செல்லுகிறது. அதற்குப் பதிலாக எண்ணத்தையே மாற்றியமைக்க வேண்டும். இந்திரியங்களைப் பற்றிய எண்ணம் ஈசனைப் பற்றிய எண்ணமாக மாறவேண்டும். இவ்விரண்டு எண்ணங்களுள் எது வலுக்கிறதோ அது மற்றதைத் தகர்க்கிறது. தீயதைத் தகர்க்கும் தன்மை தெய்விக எண்ணத்துக்கு உண்டு. பக்தி ஓங்குமளவு இந்திரியங்களின் வேகம் தணிகிறது.
கேடு அனைத்துக்கும் முதற்காரணம் யாது? விடை வருகிறது:
62. த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே
ஸங்காத்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோऽபிஜாயதே
பும்ஸ: விஷயாத் த்யாயத-மனிதன் விஷயங்களைக் கருதும் போது, தேஷூ ஸங்க: உபஜாயதே-அவற்றில் பற்றுதலுண்டாகிறது, ஸங்காத் காம: ஸஞ்ஜாயதே-பற்றுதலால் விருப்பமுண்டாகிறது, காமாத் க்ரோத: அபிஜாயதே-விருப்பத்தால் சினம் பிறக்கிறது.
பொருள் : மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது.
63. க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:
ஸ்ம்ருதிப்ரம்ஸாத்புத்திநாஸோ புத்திநாஸாத்ப்ரணஸ்யதி
க்ரோதாத் ஸம்மோஹ: பவதி-சினத்தால் மயக்கம் உண்டாகிறது, ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:-மயக்கத்தால் நினைவு தவறுதல், ஸ்ம்ருதிப்ரம்ஸாத் புத்தி நாச நினைவு தவறுதலால் புத்தி நாசம், புத்திநாஸாத் ப்ரணஸ்யதி-புத்தி நாசத்தால் அழிகிறான்.
பொருள் : சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் அழிகிறான்.
இந்திரியங்களை விஷயங்களில் உலவவிட்டுக் கொண்டு மனிதன் ஒருவன் வீதியில் நடக்கிறான். பல வடிவங்களை அவன் பார்க்கிறான். கண்ணாடியில் பிம்பம் போன்று அவைகள் தோன்றித் தோன்றி மறைகின்றன. மனதில் ஒரு பதிவையும் அவைகள் செய்வதில்லை. அவைகளுக்கிடையில் கட்டழகுள்ள வடிவம் ஒன்று தோன்றுகிறது. அதைக் கூர்ந்து பார்க்க மனது விரும்புகிறது. திரும்பவும் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது. பன்முறை பார்க்கும் வாய்ப்பும் அமைகிறது. அதைப் பார்ப்பதில், பிறகு நினைப்பதில் மகிழ்ச்சி உண்டாகிறது. நினைந்து நினைந்து அவ்வழகு வடிவத்தின்கண் விருப்பம் வருகிறது. வலுத்த விருப்பம் பற்றுதல் எனப் பெயர் பெறுகிறது. பார்த்தல் என்கிற ஓர் இந்திரிய நுகர்ச்சி மற்ற இந்திரிய நுகர்ச்சிகளுக்கும் இடந்தேடப் பார்க்கிறது. அதாவது அச் சுந்தர சொரூபத்தைத் தனக்குரியதாக்கிக் கொள்ளத் தீர்மானம் செய்யப்படுகிறது. இத்தீர்மானத்துக்கு ஆசை அல்லது காமம் என்று பெயர். எரியும் தீயை விறகுக்கட்டை வளர்ப்பதுபோன்று என்ணம் காமத்தை வளர்க்கிறது. இனி, ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கான முயற்சி எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் உலகம் அதற்கு இடந்தருவதில்லை. இந்த ஆசையை அவர்கள் தடைப்படுத்துகின்றனர். தடைப்பட்ட ஆசை சினமாக வடிவெடுக்கிறது. சினத்தைக் காணுமிடத்தெல்லாம் அதைத் துருவி ஆராய்ந்தால் அது தடைப்பட்ட ஆசை என்பது தெளிவாகும். சினம் பைத்தியத்துக்கு ஒப்பானது. பைத்தியம் நிலைத்துள்ளது; சினம் தற்காலிகமானது. அவ்வளவுதான் வித்தியாசம். சினம் கொண்டவனுக்கும் பித்தம் பிடித்தவனுக்கும் நடைமுறை ஒன்றே. குழம்பிய மனநிலை அதன் விளைவு.
அமைதி குடிகொள்ளுங்கால் வனத்தில் உள்ள மரம் செடி கொடிகள் உள்ளபடி தென்படுகின்றன. அவைகளுள் இது இப்பெயருடையது என்கிற நினைவு இருக்கிறது. ஆனால் புயல் காற்று அடிக்குங்கால் எல்லாம் ஒரே அமளி. சினம் கொண்ட மனதிலும் ஒரே புயல்காற்று. அது சம்மோகம் என்றும், குழப்பம் என்றும் பெயர் பெறுகிறது. நன்று இது, தீது இது என்ற நினைவு அப்பொழுது இருப்பதில்லை. பண்டு, பலகால் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ள நலம் கேடுகளைப் பற்றிய ஞாபகம் போய்விடுகிறது. பழைய நினைவுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு மனிதன் புதிய செயல்களை நன்றென்றும் தீதென்றும் பாகுபடுத்துகிறான். எப்பொருள் எத்தன்மையது என்கிற ஞாபகம் இருந்தால்தான் அப்பொருளின் மெய்ம்மையை புத்தியானது பாகுபடுத்த வல்லதாகும். ஆக, நினைவு போய்விட்டால் விவேகம் அல்லது நல்லறிவு அழிகிறது. அறிவை இழந்தவன் தானே அழிவுபட்டவன் ஆகிறான். ஏனென்றால் நெறி வழுவுதல் மாய்தலுக்கு ஒப்பாகிறது.
விஷயாதிகளில் உலவும் எண்ணத்தை மீட்டெடுத்து எதன் கண் நிலை நிறுத்தினால் நன்மையுண்டாகும்? விடை வருகிறது :
64. ராகத்வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ்சரந்
ஆத்மவஸ்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி
விதேயாத்மா-தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் (சாதகன்), ராக த்வேஷ வியுக்தை: -விழைதலும் பகைத்தலுமின்றி, ஆத்மவஸ்யை இந்த்ரியை:-தனக்கு வசப்பட்ட புலன்களுடன்
விஷயாந் சரந்-போகத்தில் சஞ்சரித்துக் கொண்டு, ப்ரஸாதம் அதிகச்சதி-உள்ளத் தெளிவை அடைகிறான்.
பொருள் : விழைதலும் பகைத்தலுமின்றி தனக்கு வசப்பட்ட புலன்களுடன் விஷயங்களிலே ஊடாடுவோனாய் தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் ஆறுதலடைகிறான்.
இந்திரியங்கள் இயல்பாகப் புறவுலகில் செல்லும் பாங்குடையவைகள். புறப்பொருள்களை அனுபவிக்க வேண்டும் என்ற அவாவுடன் பொறிகள் அவைகளைத் தாவிப் பற்றுகின்றன. ஆனால் பொருள்கள் துன்பம் தருவனவாயிருப்பின் பொறிகள் அவைகளை வெறுத்துப் பின்வாங்குகின்றன. இங்ஙனம் விருப்பும் வெறுப்பும் இந்திரியங்கள்பால் இயல்பாய் அமைந்துள்ளன. அந்த இயல்பை இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து ஆராயுமிடத்து மனது ஆட்டிவைக்கின்ற பிரகாரம் இந்திரியங்கள் ராகதுவேஷ வடிவெடுத்துத் தொழில்புரிகின்றன.
மனதை அடியோடு அடக்கி வென்றவன் மனவேந்தன். அத்தகையவனது மனம் பெரிதும் ஆத்ம சொரூபத்திலேயே திளைத்திருக்கிறது. அது வெளி விஷயங்களில் செல்லுமாயின் ஆசைப்படாது புனித இயல்போடு சஞ்சரிக்கிறது. அதனால் அதனுடைய அமைதியும் தெளிவும் அதிகரிக்கின்றன. சுத்த மனதோடு இந்திரியங்களைப் பயன்படுத்துவதே ஒருவித சமாதியாகிறது. ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸர் கண்கொண்டு கார்மேகத்தையும் அதன் கீழ் உலாவிய கொக்கையும் பார்த்தார். அதனால் அவருக்கு ஆனந்த சமாதி ஏற்பட்டது. அவர் சிறுவராயிருந்தபோது நாடகத்துக்குச் சிவவேஷம் பூட்டினார்கள். சாம்பல் பூசுதல் முதலிய ஸ்பரிச உணர்ச்சி அவருக்கு சிவ பாவ சமாதியை உண்டுபண்ணிற்று. காதால் பகவந் நாமத்தைக் கேட்டபொழுதெல்லாம் அவருக்கு சமாதி வந்தது. நறுமணத்தை நுகர்ந்தபோதெல்லாம் ஈசுவர சிந்தனையும் சமாதியும் அவருக்கு வருவனவாயின. வாயில் வைத்துச் சுவைத்ததெல்லாம் அவருக்கு ஈசுவரப் பிரசாதம். ஆக, இந்திரியங்கள் ஐந்தையும் நன்கு பயன்படுத்தி அவர் ஈசுவர சந்நிதியையே சார்ந்திருந்தார். மனம் அடங்கப் பெற்றார்க்கு இந்திரியங்கள் கேடுடையவைகளல்ல என்பதற்கும், பிரசாதம் அல்லது தெளிந்த நிலையில் மனது திளைத்திருக்கும் என்பதற்கும் அவரது வாழ்க்கையே சான்றாகிறது.
ஸ்திதப்பிரக்ஞன் எப்படி நடமாடுகிறான் என்ற கேள்விக்கு இது விடை :
65. ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு புத்தி: பர்யவதிஷ்டதே
ப்ரஸாதே-உள்ளம் தெளிவு பெற்ற சாந்தி நிலையில், ஸர்வது:காநாம்-எல்லாத் துன்பங்களுக்கும் ஹாநி: உபஜாயதே-அழிவு ஏற்படுகிறது, ப்ரஸந்ந சேதஸ:-சித்தம் சாந்தி பெற்ற மனிதன், புத்தி ஆஸு ஹி பர்யவதிஷ்டதே-புத்தி விரைவிலே நிலைப்படுகிறது
பொருள் : சாந்தி நிலையில் மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் அழிகின்றன. சித்தம் சாந்தி பெற்ற பின்ஒருவனுடைய புத்தி விரைவிலே நிலைப்படுகிறது.
பலபேர் உலகைக் கேடு மிக நிறைந்ததாக நினைக்கின்றனர். நலம் கேடு ஆகிய இரண்டும் நிறைந்தது உலகம் என்ற எண்ணம் பொதுவாக எல்லார்க்குமுண்டு. இவ்வுலகம் திருந்தியமையும்பொழுது தங்களுக்கு மனவமைதியுண்டாகும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். உலகில் அல்லல் நிறைந்திருப்பதும் தாங்கள் அசாந்தியில் மூழ்கியிருப்பதும் இணைபிரியாதவைகளாம். வெளியுலகில் காணும் கேடுகளெல்லாம் மனதில் இருக்கும் கேட்டின் புறத்தோற்றங்களாம். மனது திருந்தியமையுமளவு புறவுலகக் காட்சியும் திருந்தியமைகிறது.
உண்மையில் புறவுலகம் கேடுடையது அன்று; அது ஈசுவர சொரூபம். அதைக் கடவுள் சொரூபமாகக் கருதுமளவு மனது அமைதியுறுகிறது. அமைதியுற்ற உள்ளத்தில் ஆத்ம சொரூபம் தென்படுகிறது. பிறகு அம்மனதே ஆத்ம சொரூபமாய் மாறுகிறது.
66. நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா
ந சாபாவயத: ஸாந்திரஸாந்தஸ்ய குத: ஸுகம்
அயுக்தஸ்ய-யோகமில்லாதவனுக்கு, புத்தி நாஸ்தி-புத்தியில்லை, அயுக்தஸ்ய ந பாவநா ச-யோகமில்லாதவனுக்கு மனோபாவனையும் இல்லை, அபாவயத: ந ஸாந்தி ச-மனோபாவனையில்லாதவனுக்குச் சாந்தி இல்லை, அஸாந்தஸ்ய குத: ஸுகம்-சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?
பொருள் : யோகமில்லாதவனுக்குப் புத்தியில்லை. யோகமில்லாதவனுக்கு மனோபாவனை இல்லை. மனோபாவனையில்லாதவனுக்குச் சாந்தி இல்லை. சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?
விருப்பு வெறுப்பை வென்றவனே யோகி. அத்தகையவன் யுக்தன் எனப்படுகிறான். மேலே மொழிந்த விஷயம் மீண்டு மொருமுறை எதிர்மறையாகச் சொல்லப்படுகிறது. மனமடங்கப் பெறாதவனுக்கு இம்மிளயவும் இன்பமில்லை, புலன்களில் வேட்கையிருக்குமளவு மனிதன் துன்பப்பட்டே ஆகவேண்டும். துக்கப் பிராப்தி மட்டுமல்ல, வேறு என்னென்ன நஷ்டங்களெனின், இந்திரியங்களை வெல்லாதவனுக்கு ஆத்மாவைப் பற்றிய விவேகமில்லை. ஆகையால் ஆத்ம தியானம் அவனால் செய்யமுடியாது. ஆத்ம தியானம் செய்யாதவனுக்கு ஆத்ம சொரூப ஞானமில்லை. அதினின்று உண்டாகிற சாந்தியுமில்லை. இத்தனைவித நஷ்டங்கள் மனமடங்காமையால் வருகின்றன.
மனமடங்காதவனுக்கு ஞானம் ஏன் உண்டாவதில்லை? அதற்கு விடை வருகிறது:
67. இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோऽநுவிதீயதே
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி
ஹி-ஏனெனில், அம்பஸி நாவம் வாயு: ஹரதி இவ-கடலில் தோணியைக் காற்று இழுப்பது போல், சரதாம் இந்த்ரியாணாம்-(போகங்களில்) சஞ்சரிக்கின்ற இந்திரியங்கள் (புலன்கள்)
யத் மந: அநுவிதீயதே-மனமும் ஒட்டி இருக்கிறதோ, தத் அஸ்ய ப்ரஜ்ஞாம் ஹரதி-அதுவே அவனது அறிவை இழுத்து செல்கிறது.
பொருள் : இந்திரியங்கள் சலிக்கையில் ஒருவனுடைய மனமும் அவற்றைப் பின்பற்றிச் செல்லுமாயின், அம்மனம் கடலில் தோணியைக் காற்று மோதுவதுபோல் அறிவை மோதுகிறது.
துடுப்பு, நங்கூரம், உள்யந்திரம், சுக்கான் முதலியவைகளால் ஆளப்பெறாத கப்பல் காற்றடிக்கும் திசையில் தள்ளுண்டு தடுமாற்றமடையும். அலைகின்ற இந்திரியங்களைப் பின்தொடரும் மனதுக்கு வரும் கேடும் அத்தகையது. புறவுலகைச் சார்தற் கென்றே இந்திரியங்கள் அமைந்தவைகள். ஒருவன் தூங்கும் பொழுது அவன் வாயில் இனிப்புப் பண்டத்தை வைத்தால் மனதின் வேகமின்றியே வாய் தானாக அப்பண்டத்தைச் சப்புகிறது; கசப்புப் பண்டத்தை வைத்தால் அதைத் துப்புகிறது. பழக்கத்தால் இவ்வியல்புகள் இந்திரியங்களுக்கு வந்துள்ளன. பண்படாத மனது இப்பொறிகள் வாயிலாகப் புறவுலகில் போமாயின் அது ஆத்ம சொரூபத்தைப் பற்றிய விவேகத்தை இழப்பதாகிறது.
அப்படியானால் அத்தகைய இந்திரியங்களை என்ன செய்ய வேண்டும்?
68. தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஸ:
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
மஹாபாஹோ-பெருந்தோளாய், தஸ்மாத்-ஆகையால், யஸ்ய இந்த்ரியாணி-எவனுடைய புலன்கள், இந்த்ரிய அர்தேப்ய-புலன்களுக்குரிய போக விஷயங்களில் இருந்து
நிக்ருஹீதாநி-மீட்கப் பட்டு விட்டதோ, தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனறிவே நிலைகொண்டது.
பொருள் : ஆதலால், பெருந்தோளாய், யாங்கணும் விஷயங்களினின்றும் இந்திரியங்களைக் கட்டவல்லான் எவனோ, அவனறிவே நிலைகொண்டது.
இந்திரியங்கள் தத்தம் தொழில் புரியாதிருக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள். வஸ்துக்களை போகத்துக்குரியவைகளென்று எண்ணி அவைகள் மீது இந்திரியங்கள் உலாவுதலால் கேடு விளைகிறது. நலன் தரக்கூடிய வேறு ஒரு போக்கில் இந்திரியங்களைப் பழக்கலாம். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பது பழமொழி. ஆனால் அது கெட்ட உபாதியை உண்டுபண்ணுகிறபடியால் அதைத் தொடவேமாட்டேன் என்று ஸ்ரீராம கிருஷ்ணர் ஆழ்ந்து சங்கற்பித்தார். அதன் பயனாக அவரது நாடி நரம்புகளில் பெரியதொரு மாறுதல் வந்தமைந்தது. ஒரு நாணயத்தால் அவரது உடலைத் தூங்கும்பொழுது தொட்டாலும் அவருக்குச் சகிக்க முடியாத வலி வருவதாயிற்று. அவரைக் கீழ்மையில் இழுக்கக் காமக்கிழத்திகள் தோன்றியவுடனே, அம்பிகையை எண்ணி அவருக்கு ஆழ்ந்த சமாதி கூடிற்று. இந்திரிய நிக்கிரகம் என்பது. இந்திரியங்களைக் கீழ்மையினின்று மீட்டெடுத்து மேன்மையில் வைப்பது என்று அவரது ஜீவிதம் விளக்குகிறது. அப்படி இந்திரியங்களை நியாஸம் செய்பவர் ஞானம் பெறுகின்றனர். (நியாஸம் -சப்ளிமேஷன்-கீழ்மையை மேன்மையாக மாற்றுதல்)
அப்படி இந்திரியங்களின் தொழிலைத் தூயதாக மாற்றுபவன் அடையும் நன்மை யாது?
69. யா நிஸா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே:
ஸர்வபூதாநாம் யா நிஸா-எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், தஸ்யாம் ஸம்யமீ ஜாகர்தி-(தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான், யஸ்யாம் பூதாநி ஜாக்ரதி-மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ, பஸ்யத: முநே: ஸா நிஸா-பரமனைக் கண்ட (உண்மையை உணர்ந்த) முனிக்கு அது இரவு.
பொருள் : எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான். மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு.
ஸ்தூல உலகில் மக்களுக்குப் பகலாயிருக்கும் வேளையில் ஆந்தை, புலி முதலியன நன்கு பார்க்கமாட்டா. ஆக, அவ்வேளை அவைகளுக்கு இரவு. அவைகளுக்குப் பகல் போன்று கண் தெரியும் வேளையோ மற்றப் பிராணிகளுக்கு இரவு. இனி, இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துறை பகல் போன்றிருக்கிறது. திருடர்களுக்குத் திருட்டைப்பற்றிய விவரங்கள் பகல் போன்று விளங்கும். மற்ற இயக்கங்கள் இருள் போன்று அவர்களுக்குப் புலப்படா. சூது ஆடுபவர்க்கு அச்செயல்மட்டும் பகல் போன்று விளங்கும். கற்றவர்க்கு அறிஞர் கூட்டம் பகலுக்கு ஒப்பானது. இங்ஙனம் இவ்வுலகிலேயே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துறை பகல் போன்று விளங்கவும், ஏனைய துறைகள் இரவு போன்று விளங்காமலும் இருக்கின்றன.
இந்திரியங்களை வென்ற யோகிக்கு உலகக் காட்சிகள், உலக வியவகாரங்கள் ஆகியவைகள் இருள்போன்று மறைந்து கிடக்கின்றன. பரமாத்ம தத்துவ சம்பந்தமான யாவும் பகல் போன்று அவனுக்கு நன்கு விளங்குகின்றன. அனைத்தையும் ஈசுவர சொரூபமாகக் காண்பவனுக்கு யாண்டும் மங்களம் பொலிகிறது; அவனது வாழ்க்கை இன்பமே வடிவெடுத்ததாகிறது. இந்திரிய நுகர்ச்சியுடைய போகிக்கு உலகக் காட்சி பகல். இந்திரியங்களை அடக்கிய யோகிக்குக் கடவுள் காட்சி பகல்.
ஈசுவரக் காட்சி காண்பதால் வரும் நன்மை யாது?
70. ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம்
ஸமுத்ரமாப: ப்ரவிஸந்தி யத்வத்
தத்வத்காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே
ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ
யத்வத்-எவ்விதம், ஆப: ப்ரவிஸந்தி-நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில், ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்டம் ஸமுத்ரம்-நிறைந்து இருந்து அசையா நிலைகொண்டிருக்கும் கடல்
தத்வத்-அதே விதமாக, யம் காமா: ப்ரவிஸந்தி-எவன் விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது (கடலைப் போல இருக்கிறானோ), ஸ ஸாந்திம் ஆப்நோதி-அவன் சாந்தியடைகிறான்
காமகாமீ ந-விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.
பொருள் : கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலைகொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.
பொருள் : கடலின்கண் கூட்டுதல் குறைத்தல் முதலியன செய்தல் எவருக்கும் இயலாது. உலகிலுள்ள நதிகளெல்லாம் ஓயாது அதில் வந்து வீழ்ந்தாலும் அது மிகைபடுவதில்லை. நதிகள் வராதொழியினும் கடல் குறைபடுதலில்லை. உள்ளே வரும் நதிகளோ உருவை இழந்துவிடுகின்றன. நாம ரூபம் அடிபட்டுப் போய் விடினும் நதி எப்பொருளாலானதோ அப்பொருளுக்கு நஷ்டமில்லை. கருவி கரணங்களை வென்ற முனிவனது மனம் கடல் போன்றது. காமத்தை உண்டுபண்ணும் பொருள்கள் ஓயாது அவனது முன்னிலைக்கு வந்துகொண்டிருக்கலாம். பொறிவாயிலாக அவன் அவைகளைப் பொருள்படுத்தவும் செய்யலாம். கடலில் நதிகள் ஒடுங்குவது போன்று இந்திரியார்த்தங்கள் என்னும் சித்த விருத்திகள் அவனது உள்ளத்தில் ஒடுங்கி மறைகின்றன. மனம் ஒரு விகாரத்தையும் அடையாத பரிபூரண நிலையில் அவன் வீற்றிருக்கின்றான். அகண்டாகார விருத்தி யென்று அதைப் பகர்வதுண்டு. கடல்போன்று அகண்டமாய்விடுகிறது ஞானியின் உள்ளம். கடலைக் கலக்கிச் சேறுபடுத்த யாராலும் முடியாது. முனியின் நிறைமனது கலங்கிய மனது ஆவதில்லை. சாந்தம் அல்லது ஜீவன் முக்தி என்ற பெருநிலையும் அவனுக்கே உரியது. ஆசை வலையில் அழுந்துபவர்க்கும் அதற்கும் வெகு தூரம்.
இந்நிலையை அடைதற் பொருட்டுச் சாதகன் என்ன செய்ய வேண்டும்?
71. விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஸ்சரதி நி:ஸ்ப்ருஹ:
நிர்மமோ நிரஹங்கார: ஸ ஸாந்திமதிகச்சதி
ய: புமாந்-எந்த மனிதன், ஸர்வாந் காமாந் விஹாய-எல்லா இன்பங்களையும் துறந்து
நிர்மம: நிரஹங்கார:-எனதென்பதற்றான், யானென்பதற்றான், நி:ஸ்ப்ருஹ: சரதி-இச்சையற்றான், ஸ ஸாந்திம் அதிகச்சதி-அவனே சாந்தி நிலை அடைகிறான்.
பொருள் : இச்சையற்றான், எல்லா இன்பங்களையும் துறந்தான், எனதென்பதற்றான், யானென்பதற்றான், அவனே சாந்தி நிலை அடைகிறான்.
ஆசை இருக்குமளவு மனிதனுக்கு அசாந்தி; ஆசை அறுபடுமளவு அமைதி உண்டாகிறது. நான், எனது என்னும் எண்ணம் மனிதனைக் கரும பந்தத்தில் தளைக்கிறது. நான், எனது என்ற மன விருத்திகளை அகங்கார மமகாரம் என்று இயம்புவதுண்டு. கடலானது அலைகளாக வடிவெடுத்துச் தன்னைச் சிறு சிறு துண்டங்களாக மேற்பரப்பில் காட்டிக்கொள்கிறது. தோற்றத்தளவில் கடல் துண்டுபட்டது. உண்மையில் அது அகண்டமானது. அகங்காரமும் மமகாரமும் சேர்ந்து மனிதனிடத்து ஜீவபோதம் என்ற அலையை உண்டுபண்ணுகின்றன. ஆசை என்னும் காற்றே அகங்காரம் மமகாரம் என்ற அலையை உண்டுபண்ணுதற்கு முதற் காரணம். ஆசை ஒழிந்தால் நான், எனது என்பன ஒழிகின்றன. அகங்கார மமகாரம் அற்றவிடம் அகண்டாகார ஆனந்த சொரூபமே எஞ்சியுளது. நான், எனது என்னம் இப்பந்தங்களை ஒழித்தற்பொருட்டு வாழ்தலே பெருவாழ்வாம்.
ஸ்திதப்பிரக்ஞன் எப்படி வாழ்கிறான் என்பது மீண்டும் இயம்பப்படுகிறது. அத்தகைய வாழ்வினின்று உண்டாகும் மாண்பு வருமாறு :
72. ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி
ஸ்தித்வாஸ்யாமந்தகாலேऽபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி
பார்த ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி:-பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி, ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி-இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை, அந்தகாலே அபி-இறுதிக் காலத்திலேனும் அஸ்யாம் ஸ்தித்வா-இதில் நிலை கொண்டு, ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி-பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.
பொருள் : பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்தி லேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.
கனவில் இருக்கும்போது கனவில் காண்கிற பொருள்களுக்கு மதிப்புண்டு; ஆங்கு உண்டாகிற இன்ப துன்பங்களுக்கும் மதிப்புண்டு. அத்தகைய கனவைவிட பெருநிலையாகின்றது நனவு. நனவுக்கு வந்தமையுடனே கனவைப்பற்றிய மயக்கம் போய்விடுகிறது. கனவில் வந்த இன்ப துன்பங்களுக்குப் பிறகு மதிப்பில்லை. அங்ஙனம் கனவுக்கும் நனவுக்கும் மேம்பட்ட நிலையொன்று உண்டு. அது பிரம்ம நிர்வாணம் என்று பகரப்படுகிறது. அதை அடையப் பெற்றவனுக்குக் கனவு, நனவு ஆகிய அவஸ்தைகளைப்பற்றிய மயக்கம் கிடையாது.
பிரம்ம நிர்வாணம் என்பது அபரோக்ஷ அனுபூதி. மனம் மொழிக்கு எட்டாத பேரானந்தப் பெருநிலை அது. அப்பெரு நிலையினின்று கீழே இறங்கி வந்தவன் ஜீவன். திரும்பவும் அப்பெருநிலையை அடையப்பெற்றவன் முக்தன். நதிகளெல்லாம் கடலைப் போய்ச் சேர்ந்து கடலில் இரண்டறக் கலத்தல் போன்று பிரம்ம நிர்வாணம் அடைதல் ஜீவர்களின் குறிக்கோளாம். சாகும் தறுவாயில் அது வந்து அமைவதாயினும் அது முக்தியேயாம். விடுதலை யென்றும் வீடுபேறு என்றும் அதைப் பகர்வதுண்டு.
இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ஸாங்க்யயோகோ நாம த்விதீயோऽத்யாய:
பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ஸாங்கிய யோகம் என்ற இரண்டாம் அத்தியாயம்.



மூன்றாம் அத்தியாயம்
பகவத்கீதை | கர்ம யோகம்

கர்ம யோக ஞான யோகங்களுள் ஞான யோகமே கடுகப் பலனை அளிக்குமென்றாலும் கர்ம யோகமே செய்யத் தக்கது. ஆக்கையிருக்கும் வரையில் மனிதனுக்கு ஏதாவதொரு தொழிலைச் செய்வதே இயற்கையாயிருக்கும். அவன் துணிந்து வேறு துறைகளிலிருந்த போதிலும் புலன்கள் அவனை இழுத்துச் செய்கையிலேயே கொண்டுவந்து நிறுத்தும். இந்திரியங்களை அடக்கி ஞான நிலையில் நிற்கும் திறமை வாய்ந்தவனும் கர்மங்களையே செய்யக் கடவன். ஏனெனில், இவனது உண்மை நிலையறியாத பாமரர்களும், இவனைக் கண்டு தாங்களும் கர்மங்களைவிட்டு ஞானத்துறையில் துணிவுறுகிறார்கள்.
அதனால் அவர்கள் கர்ம யோகத்தை யிழந்ததுமன்றி ஞான யோகத்தையுமிழந்து முன்னிலும் தாழ்ந்த நிலைமைக்கு வந்து விடுவார்கள். அவர்கள் கெடுவதற்கு இவனே காரணமாவான். ஆகையால் ஞானயோகத்தில் திறமையுள்ளவனுக்கும், திறமையில்லாதவனுக்கும் கர்ம யோகமே மேலானது. கர்மங்களைச் செய்யும்போது, இந்நிலைமை எனக்கு பிரகிருதி சம்பந்தத்தால் வந்தேறியதென்றும், ஈசுவரனுடைய கட்டளையினால் அவனுதவியைக் கொண்டு அவனுடையை பிரீதிக்காகவே செய்கிறோம், என்றும் எண்ணிச் செய்ய வேண்டும்.
அர்ஜுனனுக்கு ஏற்பட்ட ஐயம் 1-2 -ஒன்றை ஒன்று அனுசரித்து இரண்டு மார்க்கங்கள் உள 3-8 -யக்ஞத்தின் சிறப்பு 9-13 -பிரவிருத்திச் சக்கரம் 14-16 -ஆத்ம நிஷ்டனுக்குக் கர்மமில்லை 17-18 -சாதனதசையில் இருப்பவன் செய்யவேண்டியது 19-26 -அஹங்காரத்தை அகற்றும் விதம் 27-32 -சுபாவத்துக்கு ஏற்ற சாதனம் 33-35 -பாபத்துக்குப் பிறப்பிடம் 36-43.
அர்ஜுன உவாச
1. ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஸவ
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், ஜநார்தந-ஜநார்த்தனா, கர்மண: புத்தி ஜ்யாயஸீ-செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது, தே மதா சேத்-நின் கொள்கையாயின், தத் கோரே கர்மணி-இந்தக் கொடிய செய்கையில், மாம் கிம் நியோஜயஸி கேஸவ-என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜநார்த்தன, செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது நின் கொள்கையாயின் இந்தக் கொடிய செய்கையில் என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?
2. வ்யாமிஸ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே
ததேகம் வத நிஸ்சித்ய யேந ஸ்ரேயோऽஹமாப்நுயாம்
வ்யாமிஸ்ரேண இவ வாக்யேந-குழம்பியது போன்ற பேச்சினால், மே புத்திம் மோஹயஸி இவ-என் புத்தியை மயங்கச் செய்கிறாய் போல! யேந அஹம் ஸ்ரேய: ஆப்நுயாம்-எது எனக்கு நன்மை தருமென்பதை, தத் ஏகம் நிஸ்சித்ய வத-அந்த ஒன்றை நிச்சயப் படுத்தி சொல்
பொருள் : குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கச் செய்கிறாய். ஆதலால் எது எனக்கு நன்மை தருமென்பதை உறுதிப்படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல்.
எக்காரணத்தாலும் அர்ஜுனன் கர்மத்தைப் புறக்கணிக்கலாகாது என்று பகவான் எடுத்தோதினார். கர்மத்தில் அவனைத் தூண்டியவர் கர்மத்தைக் கர்மயோகமாக மாற்றிவிடவேண்டுமென்று மேலும் உபதேசித்தார். கர்மயோகிதான் அனைத்தையும் சாதிக்கவல்லவன் என்பது பகவானது கோட்பாடு. பின்பு ஞானமடைந்தவனது சம்பூரண நிலையை சந்தேகத்துக்கு இடமில்லாது அவர் சிலாகித்துப் பேசினார். அதனால் அர்ஜுனனுக்கு இந்த ஐயம் வருவதாயிற்று. அவன் சொல்லுவதாவது: பிரபோ, தாம் உயிர்களின் அக்ஞானத்தைப் போக்குபவர்; துன்பங்கள் அனைத்தையும் துடைத்து வைப்பவரும் தாமே. அத்தகைய தாம் என்னைமட்டும் ஏன் குழப்பத்தில் ஆழ்த்திக்கெடுத்து விடுகிறீர்? பகவானுடைய பேச்சில் முரண்பாடு இருப்பது போன்று என் புல்லறிவுக்குத் தென்படுகிறது. அதனால் என்னிடத்துள்ள சிறிய அறிவு மேலும் கலங்குகிறது. என்னைக் கெடுத்து விடுவது உமது எண்ணம் அல்ல என்று நான் உறுதியாக நினைக்கிறேன். எனக்கு சிரேயஸைப் புகட்டவேண்டுமென்று நான் பணிந்து தங்களிடத்து விண்ணப்பித்திருக்கிறேன். ஆதலால் எனக்கு நலம் தரும் கோட்பாடு ஒன்றைமட்டும் நன்கு எடுத்துப் புகட்டுவீராக.
ஸ்ரீ பகவாநுவாச
3. லோகேऽஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்
ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், அநக-பாபமொன்று மில்லாத அர்ஜுனா
லோகே மயா-இவ்வுலகில் என்னால், த்விவிதா நிஷ்டா-இரண்டுவித நிஷ்டை, புரா ப்ரோக்தா-முன்னர் கூறப்பட்டது, ஸாங்க்யாநாம் ஜ்ஞாநயோகேந-ஸாங்கியர்களின் ஞான யோகத்தால், யோகிநாம் கர்மயோகேந-யோகிகளின் கர்ம யோகத்தால்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பாபமொன்று மில்லாத அர்ஜுனா, இவ்வுலகில் இரண்டுவித நிஷ்டை முன்னர் என்னால் கூறப்பட்டது. ஸாங்கியர்களின் ஞான யோகத்தால் எய்துவது, யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என.
விவேகம், வைராக்கியம், துறவு முதலியவைகள் வாயிலாகத் தெளிவுபட்ட அறிவானது ஆத்ம சொரூபத்தை நேரே கிரகிக்குமானால் அதற்கு ஞானயோகம் என்று பெயர். கர்மானுஷ்டானத்தை முறையாகச் செய்து வருவதால் அறிவு தெளிவடைகிறது. தெளிந்த அறிவு ஆத்ம சொரூபத்தை விளக்குகிறது. ஆக ஞானயோகம், கர்மயோகம் ஆகிய இரண்டும் ஆத்ம சொரூபத்தை விளக்குதற்கு உபாயங்களாயிருப்பதால் இரண்டும் நன்னெறிகளாகின்றன. விசாரத்தில் ஈடுபடுபவரும் செயலில் ஈடுபடுபவரும் என்றென்றும் இருக்கிறார்களாதலால் ஞான மார்க்கம், கர்மமார்க்கம் ஆகிய இரண்டு நிஷ்டைகளும் தொன்று தொட்டு உலகில் இருந்து வருகின்றன.
இவ்விரண்டு சாதனங்களும் எப்படி ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகள் என்று கேட்குமிடத்து விடை வருகிறது :
4. ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புரு÷ஷாऽஸ்நுதே
ந ச ஸந்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி
புருஷ: கர்மணாம் அநாரம்பாத்-தொழில்களைத் ஆரம்பிக்காமல் இருப்பதால், நைஷ்கர்ம்யம் ந அஸ்நுதே-செயலற்ற நிலை அடைவதில்லை, ஸந்ந்யஸநாத் ஏவ-துறவினாலேயே
ஸித்திம் ச ந ஸமதிகச்சதி-ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்,
பொருள் : தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.
கல்வி வேண்டுபவர்கள் எல்லாரும் பள்ளிக்கூடத்துக்குப் போகக் கடமைப்பட்டிருக்கின்றனர். ஆனால் பள்ளிக்கூடத்திலேயே எக்காலமும் இருப்பது மக்களின் லட்சியமன்று. கற்க வேண்டியவைகளைக் கற்றானபிறகு பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற வேண்டும். கல்வி பூர்த்தியாகும் முன்பு வெளியேகுதல் பொருந்தாது. உலக வாழ்க்கை என்கிற பள்ளிக்கூடமும் அத்தகையதே.
நைஷ்கர்ம்யம் என்பதற்கும் சித்தி என்பதற்கும் பொருள் ஒன்று. பழம் முற்றும் பழுக்குமிடத்து அது சித்தியாய்விட்டது எனலாம். அதற்கு முன்பு அது காய்த்து முதிர்ந்து கனிகிற செயல்களெல்லாம் அதனுடைய கர்மமாகிறது. முற்றும் கனிந்த நிலை நைஷ்கர்ம்யம். ஆக, நைஷ்கர்ம்யமும் சித்தியும் ஒன்றே. பழுத்த பழம் மரத்தைவிட்டுப் பிரிவது அதன் சந்யாசம். பிஞ்சு அல்லது காயாக இருக்கும்பொழுது அதை மரத்தைவிட்டுப் பறித்து எடுப்பதால் அது சித்தியடைந்ததாகாது.
மனிதனுடைய வாழ்க்கை இதற்கு ஒப்பானது. ஓயாது காய் முதிர்வது போன்று கர்மத்தின் மூலம் மனிதன் ஞான முதிர்ச்சியடைகிறான். பரிபூரணம் அடைதற்கு முன்பு அவன் கர்மத்தைத் துறப்பதால் ஒரு நன்மையையும் பெறுகிறதில்லை. முறையாகக் கர்மம் செய்துகொண்டிருப்பதே நிறைநிலை எய்துதற்கு உற்ற உபாயமாகிறது.
5. ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்
கார்யதே ஹ்யவஸ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:
ஹி கஸ்சித் ஜாது க்ஷணம் அபி-எவனும் ஒரு கணப்பொழுதேனும், அகர்மக்ருத் ந திஷ்டதி-செய்கையின்றிருப்பதில்லை, ஹி ப்ரக்ருதிஜை குணை:-இயற்கையில் விளையும் குணங்களே, ஸர்வ: அவஸ:-எல்லா உயிர்களையும் தன் வசமின்றி, கர்ம கார்யதே-தொழில் புரிவிக்கின்றன.
பொருள் : எவனும் ஒரு கணப்பொழுதேனும் செய்கையின்றிருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன.
சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணமயமாயிருப்பது பிரகிருதி. அது கர்ம சொரூபம். ஆதலால் அதில் கட்டுண்டு கிடப்பவர்கள் கர்மம் செய்தே ஆகவேண்டும். உண்பது, உறங்குவது, சுவாசிப்பது, ஹிருதயம் அடிப்பது ஆகிய எல்லாம் கர்மம். இயற்கையில் இயங்காதிருப்பது எது? அணுமுதல் அண்டம் வரையில் எல்லாம் அசைகின்றன. அதில் பிணிக்கப்பட்டுள்ள உயிர்க்குக் கர்மத்தை விடும் சுதந்திரம் கிடையாது.
பிரகிருதியில் கட்டுண்டிருக்கும்போது கர்மத்தை விட்டுவிட முயலுதலின் விளைவைக் கேட்குமிடத்து அதற்கு உத்தரம் வருகிறது:
6. கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே
ய: விமூடாத்மா-எந்த மூடாத்மா, கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய-கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, இந்த்ரியார்தாந்-இந்திரிய விஷயங்களை, மநஸா ஸ்மரந் ஆஸ்தே-மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருக்கிறானோ, ஸ மித்யாசார: உச்யதே-பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.
பொருள் : கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, ஆனால் இந்திரிய விஷயங்களை மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருப்போனாகிய மூடாத்மா பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.
பிரகிருதியில் ஆத்மா கட்டுண்டிருக்குமளவு மனது இருக்கிறது. ஓயாது சங்கற்பித்துக்கொண்டிருப்பது அதன் தொழில். மனது எண்ணுகிறது; அதே வேளையில் புறக்கரணங்கள் தடுக்கப்படுகின்றன. அப்படிச் செய்வது முறையன்று. உபமானத்தால் இதை விளக்குமிடத்து நீராவி யந்திரத்தில் ஆவி நிறைந்திருக்கிறது. ஆவி ஒருபுறம் சக்கரத்தை உந்தித்தள்ளுகையில் மற்றொரு புறம் அதற்கு முட்டுப்போடுவது சரியன்று. முதலில் ஆவியை அடைக்க வேண்டும். பிறகு சக்கரத்துக்கு முட்டுப் போட வேண்டும். ஆவியை அடைக்காது சக்கரத்துக்கு முட்டுப் போட்டால் யந்திரம் ஒடியும் அல்லது பழுதுபடும். மனிதன் மனதை அடக்காது வெளிக்கரணங்களை அடக்குவதால் தன் இயல்பை அவன் பிளவுபடுத்துகிறான். ஆகையால் அது மித்தியாசாரம் (பொய்யொழுக்கம்) எனப்படுகிறது. எது வாழ்வைக் குலைக்கிறதோ அது பொய்யொழுக்கம். அக்ஞானத்தில் இருப்பவன் கர்மத்தை விட்டுவிடுவதாகப் பாசாங்கு செய்வது மித்தியாசாரம் ஆகிறது. அது துராசாரத்துக்கு ஒப்பானது.
7. யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேऽர்ஜுந
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஸிஷ்யதே
து அர்ஜுந-ஆனால் அர்ஜுநா, ய மநஸா இந்த்ரியாணி-எவன் இந்திரியங்களை மனத்தால்
நியம்ய அஸக்த:-கட்டுப்படுத்திக்கொண்டு பற்றில்லாமல், கர்மேந்த்ரியை: கர்மயோகம் ஆரபதே-கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, ஸ விஸிஷ்யதே-அவன் சிறந்தவன்.
பொருள் : அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.
முன்பு கூறப்பட்டுள்ள மித்யாசாரி இந்திரியங்களை அடக்கினான்; ஆனால் மனதை அடக்க முடியவில்லை. அவனை விட மேலானவன் ஈண்டு எடுத்துச் சொல்லப்படுகிற கர்மயோகி. இவன் மனதை ஒழுங்குப்படுத்திக்கொண்டு இந்திரியங்களைப் பயன்படுத்துகிறான். பசித்த நாய் ஒன்று தன் முன்னே வைத்துள்ள உணவுக்காகப் பதைபதைக்கிறது. அவிழ்த்துவிட்டவுடன் அது பேர் ஆர்வத்துடன் உண்கிறது. அடங்காத மனதையுடையவனுடைய நிலைமை கிட்டத்தட்ட இது போன்றது. ஆசை சர்வ காலமும் அவனது உள்ளத்தில் குடிகொள்கிறது. அறிவுடையவனோ உணவு சர்வேசுவரனுடைய ஆராதனைக்கு நைவேத்யமாகச் சமைக்கப்படுகிறது என்று அதன்கண் பற்றற்றிருக்கிறான். பிறகு உண்ணும்பொழுது பகவானது பிரசாதம் என்று அமைதியோடு, தூய உணர்ச்சியோடு அதை ஏற்கிறான். இத்தகைய மனநிலையுடன் எல்லாக் கர்மங்களையும் செய்வது மேலானது. ஞானேந்திரியங்களைக் கையாளும் வகையும் இதில் அடங்கப்பெறுகிறது. உணவை உண்பது கர்மம். அதைச் சுவைப்பது ஞானம். சுவையைத் தனக்கேற்ற இன்பம் தருவது என்று ரசிப்பது போகம். அதே சுவையை ஈசுவரப் பிரசாதமாகப் போற்றுவது யோகம். ஆக, இந்திரியங்களைப் பாழ்படுத்துவது ஒண்ணாது; அடங்கிய மனதால் அவைகளை மேம்படுத்துவது முறை.
ஆகையால் சாதன தசையில் இருக்கிற ஒவ்வொருவனும் செய்யவேண்டியது யாதெனில் :
8. நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
ஸரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:
நியதம் கர்ம த்வம் குரு-விதிக்கப்பட்ட தொழிலை நீ செய், ஹி அகர்மண: கர்ம ஜ்யா ய:-ஏனெனில் தொழிலின்மையைக் காட்டிலும் தொழில் சிறந்ததன்றோ, அகர்மண:-தொழிலின்றி, தே ஸரீரயாத்ரா அபி-உனக்கு உடம்பைப் பேணுதல் கூட, ந ப்ரஸித்த்யேத்-சாத்தியம் ஆகாது.
பொருள் : விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டுசெலுத்துதல்கூட உனக்கில்லாமல் போய்விடும்.
உண்பது, உறங்குவது, நீராடுவது இவைபோன்றவைகளுக்கு நித்திய கர்மங்கள் என்று பெயர். உயிர் வாழ்க்கைக்கு இவைகள் முற்றிலும் இன்றியமையாதவைகள். நித்திய கர்மங்களைச் செய்வதால் புண்ணியம் ஏதும் கிடையாது. ஆனால் அவைகளைச் செய்யாவிட்டால் பாபம் உண்டு. உதாரணம் ஒன்று எடுத்துக்கொள்வோம். உணவு அருந்துதலில் புண்ணியம் ஒன்றும் இல்லை. ஆனால் உண்ணாது பட்டினி கிடந்தால் உடல் நலிதல் என்ற பாபம் ஏற்படுகிறது. குறித்த இடத்துக்குப் பயணம் போய்ச் சேருதற்கு வாகனம் வேண்டும். அங்ஙனம், குறித்த லட்சியத்தை அடைவதற்குச் சரீர வாழ்க்கை முற்றிலும் வேண்டப்படுகிறது. ஆகையால் உடலைக் காப்பாற்றி வைப்பதே ஒரு பெரும் பயணம் போவதற்கு ஒப்பாகிறது. கர்மத்தாலன்றி இது சாத்தியப்படாது. மேம்பட வாழ விரும்புபவர் ஓயாது கர்மம் செய்தே ஆக வேண்டும். நித்திய கர்மத்தைமட்டும் செய்தால் போதுமா? போதாது. ஏனென்றால் தான் அடைந்த பண்பை இருந்தபடி காப்பாற்றி வைப்பதற்குமட்டும் நித்திய கர்மம் பயன்படும். ஒரு பருவத்தில் தவழ்தல் குழந்தைக்கு நித்தியகர்மம்.
அவ்வளவில் நின்று விட்டால் அதன் வாழ்க்கையில் முன்னேற்றமில்லை. நிற்கவும் நடக்கவும் ஓடவும் ஆகிய புதிய கர்மங்களில் குழந்தை ஈடுபட்டாக வேண்டும். அங்ஙனம் மனிதன் புதிய புதிய கர்மங்களைச் செய்வதால்தான் ஜீவிதத்தில் முன்னேற்றமடைகிறான். ஆனால் முன்னேற்றத்துக்கு ஈடாக மற்றொரு புறம் இவன் கர்மபந்தத்தில் தளைக்கப்படுகிறான். ஆகையால் முன்னேற்றமும் வேண்டாம், கர்மபந்தமும் வேண்டாம் என்று கருதிக் கர்மத்தைச் சுருக்கிக்கொள்வார் உளர். அது தகாது. முன்னேற்றமும் அடையலாம்; கர்மபந்தத்தில் கட்டுப்படாதும் இருக்கலாம். எப்படி எனின், பகவானே பகர்ந்தருள்கிறார்:
9. யஜ்ஞார்தாத்கர்மணோऽந்யத்ர லோகோऽயம் கர்மபந்தந:
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர
யஜ்ஞார்தாத் கர்மண:-வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது, அந்யத்ர அயம் லோக கர்மபந்தந:-தவிர (மற்றைத் தொழில்) மனிதருக்குத் தளையாகிறது, கௌந்தேய முக்தஸங்க:-குந்தி மகனே, பற்றைக் களைந்து, ததர்தம் கர்ம ஸமாசர-அந்த வேள்வியின் பொருட்டே தொழில் செய்து கொண்டிரு.
பொருள் : வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்குத் தளையாகிறது. ஆதலால், குந்தி மகனே, பற்றைக் களைந்து தொழில் செய்து கொண்டிரு.
கர்மத்தில் பறித்தல், பங்கிடுதல், படைத்தல் என்று மூன்று இயல்புகள் உண்டு. கடைநிலையில் உள்ள உயிர்கள் பறித்துப் புசித்து உயிர்வாழ்கின்றன. இந்நிலையில் வாழ்க்கை என்பது ஓர் ஓயாத போராட்டம். வலிவுடையது முன்னணிக்கு வருகிறது. வலிவற்றது பின்னணியில் வருந்தி வாழ்கிறது அல்லது அறவே துடைக்கப்படுகிறது. விலங்கு உலகு இக்காட்சியளிக்கிறது. இடைநிலையில் உள்ள உயிர்களுக்கிடையில் பறித்தல் குறைகிறது. பங்கிடுதல் அதிகரிக்கிறது. போட்டிக்கு ஈண்டு அதிக இடமில்லை. ஓர் உயிர் மற்றோர் உயிர்க்குத் துணைபுரிந்து வாழ்கிறது. மானுட சமூக அமைப்பு இதை அடிப்படையாகக் கொண்டது.
தலைநிலை என்பது இதனிலும் மேலானது. தனக்கென்று தேடாது, தன்னிடத்திருப்பதைப் பிறர்க்கென்றே பண்புடன் படைத்துவருவது இதன் கோட்பாடாகும். வகையறிந்து அன்புடன் கொடுப்பதால் கொடுப்பவனுக்கும் ஏற்பவனுக்கும் குறையொன்றும் வருவதில்லை. இறைக்க இறைக்கக் கேணிநீர் ஊறுவது போன்று, எடுத்து முறையாக வழங்க வழங்க ஆற்றலும் ஆக்கமும் உயிரின்கண் உயர்கிறது. தலைசிறந்த இச்செயலுக்கு யாகம் என்று பெயர். இது வாழ்க்கையின் மேலாம் கோட்பாடாகும். கல்வியை மற்றவர்களுக்குப் புகட்டுகிறவளவு ஒருவன் தானே கல்விமான் ஆகிறான். ஞானத்தை வழங்குபவனுக்கு ஞானம் வளர்கிறது. செல்வத்தையும் அப்படியே பொது நன்மையின் பொருட்டு முறையாகத் தேடிப் பயன்படுத்துகிறவளவு அது வளர்கிறது. பொது நன்மையில் தனி நன்மை அடங்கியிருக்கிறது.
தனி நலம் கருதாத புண்ணியச் செயல், தியாக புத்தியோடு செய்யும் சேவை, உலகத்தின் நன்மைக்கென்றே செய்யப்படும் செயல், ஈசுவர ஆராதனையாக ஆற்றும் வினை, பாரமார்த்திகப் பெரு நோக்கத்தோடு செய்யப்படும் கர்மம் ஆகிய இவையாவும் யக்ஞம் என்று அழைக்கப்படுகின்றன. போர்புரிவதை ஒருவன் உலக நன்மைக்காகவென்று செய்வானாகில், பொருள் ஈட்டுவதையும் பயிர்த்தொழில் செய்வதையும் ஒருவன் பொதுநலத்துக்காகவென்ற பாங்குடன் இயற்றுவானாகில், குற்றேவல் புரிவதையும் சமூகத் தொண்டாக ஒருவன் ஆற்றுவானாகில் இவை யாவும் யக்ஞமாகின்றன. எங்கு யக்ஞம் நடைபெறுகிறதோ அங்கு தெய்வ சான்னித்தியம் இருக்கிறது. விஷ்ணுவே யக்ஞசொரூபம் என்பது மறைமொழி. இப்படி யாகமாகக் கருதிச் செய்யும் கருமங்கள் மனிதனைப் பந்தப்படுத்தமாட்டா. யாக கர்மங்களை வேண்டிய அளவு விரிக்கலாம். அதனால் யாண்டும் சிறப்பே உண்டாகிறது. ஒழுங்கான உலக நடைமுறைக்கு ஆதாரமாயுள்ள திட்டம் யாது என்று வினவில் :
10. ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோऽஸ்த்விஷ்டகாமதுக்
புரா-முன்பு, ப்ரஜாபதி: ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா-பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை படைத்து, உவாச-சொல்லினான், அநேந ப்ரஸவிஷ்யத்வம்-இதனால் பல்குவீர்கள், ஏஷ: வ: இஷ்டகாமதுக் அஸ்து-இது (இந்த வேள்வி) உங்களுக்கு விரும்பும் விருப்பங்களையெல்லாம் தருவதாக ஆகட்டும்.
பொருள் : முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்: இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.
உலகில் பிறப்பதும், பிறந்து உயிர்வாழ்வதும் துன்பம் என்று சிலர் கருதுகின்றனர். இன்னும் சிலர் அதை இன்பமாக எண்ணி இறுதியில் ஏமாற்றமடைந்து துன்பப் படுகின்றனர். போட்டி போடுதலை வாழ்க்கைத் திட்டமாகக் கொண்டவர்கள் ஏமாற்ற மடைந்தே ஆகவேண்டும். அதற்கு விலக்கு என்பது இல்லவே இல்லை. ஒரே ஒரு வழியில்தான் அதற்கு விலக்கு உண்டு. வாழ்க்கையில் அமைந்த செயல்கள் அனைத்தையும் யாகமாகச் செய்கிறவர்களுக்குத் துவக்கத்திலும் துன்பமில்லை; இடையிலும் துன்பமில்லை; இறுதியிலும் துன்பமில்லை. இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்னும் பெரும் பேறு அடையப்பெற்றவர்கள் சிருஷ்டியின் உட்கருத்தை அறிந்தவர்களாம். தங்களுக்கென்று தேடுபவர்க்குச் செல்வம் சேர்ந்து பிறகு தங்களைவிட்டுச் சென்று விடுகிறது. ஒன்றையும் எதிர்பாராது கொடுத்துக்கொண்டே இருப்பவர்க்குக் கொடைக்கு வேண்டிய பொருள் தானே வந்தமைகிறது. அந்த மனநிலையே அக்ஷய பாத்திரம் எனப்படுகிறது. ஆகையால் அதில் துன்பமில்லை. இதுதான் சிருஷ்டியின் மேலாம் திட்டம். அனுஷ்டித்துப் பார்ப்பவர்களுக்கெல்லாம் இவ்வுண்மை விளங்கும். ஆக, யாகத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது சிருஷ்டி. யாகம் செய்பவர்க்கு வேண்டிய பொருள்களெல்லாம் தாமாக வந்தமைகின்றன. அதாவது பொது நன்மைக்கென்றே பொருள் தேடுபவர்க்கும், பொது நன்மைக்கென்றே பொருளைப் சேகரிப்பவர்க்கும் தடையின்றிப் பொருள் வந்துகொண்டேயிருக்கும். அவர்களுடைய மனதும் விரிவடைகிறது. மனது விரிவடைவது ஒப்பற்ற பேறு ஆகும்.
காமதேனு என்பது ஒருவகை தெய்வீகப் பசு என்று புராணம் கூறுகிறது. அதை வைத்திருப்பவர்களுக்கு எப்பொழுதும் நிறை செல்வமும் சிறப்பும் உண்டு. அக்காமதேனு யக்ஞத்துக்குப் புறம்பானதல்ல. யக்ஞமே காமதேனு என்று உருவகப்படுத்தி இயம்பப்படுகிறது. வாழ்க்கையை யக்ஞமாக நடாத்துபவனுக்கு ஆக்கமே அதிகரிக்கிறது. யக்ஞம் சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும், முக்தி ஈறாக அனைத்தையும் ஈனும். இதை அறிபவரே சிருஷ்டியின் உட்கருத்தை உள்ளவாறு அறிபவர் ஆகின்றனர்.
இதை அறிந்தவர் இதை அனுஷ்டானத்தில் கொண்டுவருவது எப்படி? அதற்கு விடை வருகிறது:
11. தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:
பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத
அநேந தேவாந் பாவயத-இதனால் தேவர்களைக் கருதக் கடவீர், தே தேவா வ: பாவயந்து-அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர், பரஸ்பரம் பாவயந்த:-பரஸ்பரமான பாவனை செய்வதனால், பரம் ஸ்ரேய:-உயர்ந்த நலத்தை, அவாப்ஸ்யத-எய்துவீர்கள்.
பொருள் : இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர். (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.
ஆத்மப் பிரகாசம் பொருந்தியவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பின்பு சரீரத்திலுள்ள இந்திரியங்களுக்குத் தேவர்கள் என்று பெயர் உண்டு. சில நாட்களாக உடலுக்கு உணவு கொடாது விட்டுவைத்தால் இந்திரியங்கள் தொழில் புரியா. கண் பூத்துப்போம், காது அடைக்கும். மறுபடியும் உணவு கொடுத்தால் இந்திரியங்கள் தத்தம் வேலைகளைப் புரியும். இந்திரியங்கள் ஒழுங்காக வேலை செய்தால் வாழ்க்கையானது செவ்வனே நடைபெறும். இப்படி உடல் வாழ்பவர் இந்திரியங்களைப் பேண, இந்திரியங்கள் அவர்களைப் பேண, பரஸ்பர உதவியால் வாழ்க்கை இனிது நடைபெறுகிறது.
மண்ணுலகிலும் விண்ணுலகிலும் உள்ள மேலோர்க்கு தேவர் என்று பெயர். மேதக்க செயல்களிலேயே அன்னவர் ஈடுபடுவார்கள். அவர்களது நல்வினையில் ஒத்துழைப்பது யாகமாகிறது. கைம்மாறு கருதாது சான்றோர்க்குத் துணைபுரிகின்றவளவு சான்றோர் அவர்களுக்குச் சகாயம் செய்வார்கள். சமூகத் தொண்டிலேயே ஈடுபட்டிருப்பவர்களுக்குத் தேவையாயிருப்பவைகளை யெல்லாம் சமூகத்தார் எடுத்து வழங்குவதைக் கண் கூடாகக் காணலாம். ஒரு மனிதன் உலகத்தவர்க்கென்றே உயிர் வாழ்ந்திருக்கும்போது உலகம் முழுவதும் அவனது நன்மையில் கருத்துடையதாகிறது. தெய்வத்தை மனிதன் யாண்டும் முழுமனதோடு ஆராதித்தால் அத்தெய்வத்தின் விபூதிகளெல்லாம் அம்மனிதனை வந்தடைகின்றன. பிறர்க்கு மனிதன் எதை எடுத்து வழங்குகின்றானோ அதையே இயற்கையானது எடுத்துப் பன்மடங்கு அதிகமாக அவனுக்கு வழங்குகிறது. இப்படிப் பரஸ்பரம் பேணுதல் என்ற யாகத்தால் எல்லார்க்கும் நன்மையே வந்தமைகிறது.
பிறரைப் பேணாதார் யார்? அதற்கு விடை வருகிறது :
12. இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:
தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:
யஜ்ஞபாவிதா: தேவா:-வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர், வ: இஷ்டாந் போகாந்-உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாம், ஹி தாஸ்யந்தே-தருவர், தை தத்தாந்-அவர்கள் தந்தவற்றுக்கு, ஏப்ய: அப்ரதாய ய: புங்க்தே-அவர்களுக்கு கைம்மாறு (அர்ப்பணம்) செய்யாமல் உண்போன், ஸ: ஸ்தேந ஏவ-கள்வனே ஆவான்.
பொருள் : வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர் உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாந் தருவர். அவர்களுக்குக் கைம்மாறு செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன் கள்வனே யாவன்.”
உலகில் பிறந்தது முதல் ஒருவன் அனுபவிக்கும் நன்மைகளெல்லாம் பிறர் செய்த யாகத்தின் பயனாகும். குழந்தை பரிபாலிக்கப்படுகிறது. அது பெற்றோர் செய்த யாகத்தின் பயன். இளைஞன் கல்வி பெறுகிறான். கலாசாலை நிறுவியவர்களின் யாக பலன் அது. உண்ண உணவும், குடியிருக்க வீடும், விதவிதமான இன்ப நுகர்ச்சிகளையும், பிரயாண வசதிகளையும், இதர சுகங்களையும் மனிதன் பெறுகிறான். இவை யாவும் மற்றவர் செய்த யக்ஞத்தின் பயனேயாம். இனி, தன்னுடைய வாழ்க்கை உலகுக்கு எப்படிப் பயன்படுகிறது என்று மனிதன் எண்ணிப் பார்க்கவேண்டும். ஒருவனால் உலகம் எவ்வளவு நன்மையடைந்திருக்கிறதோ அவ்வளவு அரும்பெரும் செயல்கள் அவனிடத்திருந்து உருவெடுத்தவைகளாகின்றன. ஆற்றுகின்ற வினையைப் பிறர்க்குப் பயன்படும்படி விரிக்குமளவு அது வேள்வியாக வடிவெடுக்கிறது. கணக்குப் பார்க்குமிடத்து மனிதன் உலகிலிருந்து நன்மைகளைப் பெறுவதைவிட அதிகம் உலகுக்கு எடுத்து வழங்க வேண்டும். பெறுவது பெரியது, வழங்குவது சிறியதாயிருக்குமிடத்து அவன் கடன்பட்டவனாகிறான். உலகுக்கு ஒன்றையும் கொடாது உலகத்திலிருந்து எல்லாம் தனக்காகவென்று ஏற்றுக் கொள்ளுதலிலேயே கண்ணுங்கருத்துமாயிருப்பவன் திருடனாகிறான். இத்தகைய இழி நிலை அறிவுடையோர்க்கு ஒவ்வாது. அப்படியாயின் வாழ்க்கைக்குத் தக்கது எது? தகாதது எது? விடை வருகிறது :
13. யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்
யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்த:-வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர், ஸர்வகில்பிஷை: முச்யந்தே-எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள், யே பாபா: ஆத்மகாரணாத் பசந்தி-தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள், தே து அகம் புஞ்ஜதே-பாவத்தை உண்ணுகிறார்கள்.
பொருள் : வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர் எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள். தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள் பாவத்தை உண்ணுகிறார்கள்.
கர்மம் தன்னளவில் புண்ணியமுமல்ல, பாபமுமல்ல. எண்ணத்திற்கு ஏற்றாற்போன்று அது புண்ணியம் அல்லது பாபம் ஆகிறது. தீயாரைத் தகர்த்து நல்லாரைப் பேணுதற்கென்று புரியும் வெம்போர் புண்ணியச் செயலாகும். தனது தனி நலத்தை நாடிச்செய்யும் தேவாராதனை பாபச் செயலாகும். எத்தொழிலைச் செய்தாலும் அதன்மூலம் உலக நன்மையும் இறைவனது பெருமையும் முன்னணியில் நிற்கவேண்டும். தான் தனது என்னும் செருக்குப் பின்னணிக்குப் போகுமளவு அது புண்ணியச் செயலாம். நித்திய கர்மத்தில் தக்கதொரு சான்று எடுத்துக்கொள்ளுமிடத்து, சமைத்த உணவை மற்றவர்களுக்கு முதலில் வழங்கியபின் மிஞ்சியதை உண்பவன் மேலோன். மற்றவர்களைப்பற்றிய எண்ணமில்லாது தனக்கென்றே உணவைச் சமைப்பவன் அல்லது தேடிக்கொள்பவன் கர்மபந்தத்தைப் பெருக்குகிறான். அந்த அளவில் அவன் பாபத்தைப் புசிப்பவன் ஆகிறான்.
யக்ஞம் செய்யாத வாழ்நாளோ வீண்நாள் ஆகிறது. இல்வாழ்வான் ஒருவன் வீண்நாள் வழியடைப்பதற்கு ஐம்பெரும் வேள்விகளை நாள்தோறும் செய்தாக வேண்டும். அவையாவன :
1. தேவயக்ஞம் : கடவுள் வழிபாடு இல்லாது ஒரு நாளும் கழியலாகாது. இஷ்ட தேவதையை முறைப்படி நாள்தோறும் வாழ்த்தி வணங்கவேண்டும். 2. ரிஷியக்ஞம்: உலக நன்மையின் பொருட்டுச் சான்றோர் சிறந்த சாஸ்திரங்களை இயற்றி வைத்திருக்கின்றனர். அவர்களில் பலர் தங்கள் பெயரையும் வெளிக்குக்காட்டாது வைத்துச் சென்றனர். அவர்கள் அமைத்த தெய்வ நெறி நூல்களை முறையாக ஆராய்வதும் அவைகளை மற்றவர்களுக்கு எடுத்து ஓதுவதும் ஆகிய செயல்கள் அன்னவர்களைப் போற்றுதலுக்கு ஒப்பாகும். நூல்களை ஓதுதலிலும் ஆராய்தலிலும் ஒவ்வொரு நாளும் கழியவேண்டும். இதற்குப் பிரம்மயக்ஞம் என்றும் பெயர் உண்டு. 3. பித்ருயக்ஞம்: மனிதன் வாழ்ந்து வரும் உடல் வாழ்க்கையில் தன் முன்னோர்களுக்குக் கட்டுப்பாடு உடையவன் ஆகிறான். அவர்கள் எவ்வுலகில் எந்நிலைமையில் இருப்பினும் இன்புற்றிருப்பார்களாக, என்று அவர்களைக் குறித்து நித்தமும் நல்லெண்ணம் எண்ணுதல் வேண்டும். உயிரோடிருக்கும் பெற்றோர்களுக்கு நாள்தோறும் பணிவிடை செய்வதும் பித்ருயக்ஞத்தின் பிரிவினையாகும். 4. நரயக்ஞம்: மக்களது பசியைப் போக்குதல், பிணியை நீக்குதல், வாழ்க்கையைப் பண்படுத்துதல், கல்வியைப் பெருக்குதல் ஆகிய இவை யாவும் நரயக்ஞத்தில் அடங்குகின்றன. காலத்துக்கு ஏற்றாற் போன்று நரயக்ஞத்தை மாற்றியமைத்தல் வேண்டும். 5. பூதயக்ஞம்: ஆடு மாடு முதலிய ஜீவஜந்துக்கள் மக்களது வாழ்க்கைக்குப் பல விதங்களில் பயன்பட்டு வருகின்றன. அவ்வுயிர்வகைகளை மக்கள் நன்கு பேணிவருதல் பூதயக்ஞமாகும்.
இங்ஙனம் பஞ்ச மகாயக்ஞத்தில் மனிதன் உறுதியாக ஈடுபடவேண்டும். வேள்வியாக அமைத்து வினைகளை வெவ்வேறு விதமாக விரித்துக்கொண்டு போவதுதான் வாழ்க்கைக்கு உற்ற துணை. அதனால் இயற்கையின் நடைமுறை என்னும் சக்கரத்தின் பிரவிருத்தியும் நன்கு நடைபெறுகிறது. அது எப்படி எனின் :
14. அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ:
பூதாநி அந்நாத் பவந்தி-உயிர்கள் அன்னத்தால் உண்டாகின்றன, பர்ஜந்யாத் அந்ந ஸம்பவ:-மழையால் உணவு தோன்றுகிறது, பர்ஜந்ய: யஜ்ஞாத் பவதி-மழை வேள்வியால் ஆகிறது, யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:-வேள்வி செய்கையினின்று பிறப்பது.
பொருள் : அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன. மழையால் உணவு தோன்றுகிறது. மழை வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கையினின்று பிறப்பது.
முறைப்படி கர்மம் செய்தால் அது யக்ஞமாகிறது. அந்த யக்ஞத்தில் கர்மபலன் சூக்ஷ்ம வடிவெடுக்கிறது. வைதிக பரி பாஷையில் அது அபூர்வம் என்று அழைக்கப்படுகிறது. இரண்டொரு உதாரணங்களால் இதை அறியலாம். கடலில் உள்ள நீர் ஆவியாக மாறுகிறது. அந்த ஆவி கண்ணுக்குத் தென்படுவதில்லை. அது அபூர்வமாகிறது. பிறகு மழையாக மாறி வீழ்கிறது. குப்பை செத்தைகளை வைத்துக் கொளுத்தினால் அவை எரிந்து கரியமிலவாயு ஆகின்றது. கரியமிலவாயு கண்ணுக்குத் தென்படாததாகிறது. அந்நிலையில் அது அபூர்வம். செடிகள் அவ்வாயுவை இலைகள் வாயிலாக உண்டு வளர்கின்றன. அதே போன்று யாகம் மந்திரசக்தி அல்லது மனோ தத்துவத்தோடு கூடியிருக்கும் போது அது அபூர்வமாகிறது. உச்சரிக்கிற வார்த்தையே சக்தி படைத்த மந்திரமாகாது. அந்த வார்த்தைக்கு அடிப்படையாயிருக்கும் உணர்ச்சி மந்திர சக்தியாகிறது. அறச்செயல் புரிந்து வருபவர் நல்லார் ஆகின்றனர். அவர்களே நல்ல மனமுடையவர். மழை வேண்டுமென்று அவர்கள் விரும்பினால் மழை பெய்யும். யக்ஞத்தினின்று மழை வருகிறது என்னும் கோட்பாடு இதுவே. அறத்துப்பாலுக்கு முகப்பில் வான் சிறப்பை வள்ளுவர் வைத்ததின் உட்கருத்து இதுவே. முறையாக மழை பெய்யுமிடத்து அதினின்று உணவு உண்டாகிறது. உணவிலிருந்து உயிர்கள் தோன்றுவதும் நிலைபெற்றிருப்பதும் வெளிப்படை.
15. கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்
கர்ம ப்ரஹ்மோத்பவம்-செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர், ப்ரஹ்ம: அக்ஷரஸமுத்பவம் வித்தி-பிரம்மம் அழிவற்ற பரமாத்மாவில் தோன்றுவது, தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம-ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம், நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்-எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.
பொருள் : செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுவது. ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.
வேதம் அல்லது பிரம்மா என்பது முக்குணமயமாய், கால தேச வர்த்தமான மயமாய் உள்ள இயற்கையேயாம். தோன்றியுள்ள அனைத்தும் இயற்கையின் கூறுபாடுகளாதலால் அதை எங்கும் நிறைபொருள் எனலாம். அது வித்யாசாகரம் அல்லது அறிவுக்கடல். அனைத்தையும் அது விளக்குவதாதலாலும் அதை எங்கும் நிறைபொருள் எனலாம். சர்வக்ஞனாகிய பரமாத்மாவினிடத்திருந்து இந்த வேதம் அல்லது இயற்கை உதித்துள்ளது. பிரபஞ்ச முழுவதும் கர்மசொரூபமாக இருப்பதால் கர்மம் இந்த இயற்கையினிடத்திருந்து வந்ததாகிறது. இனி, இக்கருமத்தைச் சிறந்த முறையில் கையாளுமிடத்து இது யக்ஞம் என்ற பெயர் பெறுகிறது. உண்ணுதல் என்கிற கர்மத்தை முறையாகச் செய்தால் அது யக்ஞமாகிறது. வாழ்க்கை என்ற கர்மத்தைப் பண்புடன் செய்தால் அது யாகமாகிறது. நாட்டிலுள்ள மக்களெல்லாம் சட்டத்திற்கு நன்கு கீழ்ப்படிந்தால் ஆட்சிமுறை சிறப்படைகிறது. அங்ஙனம் உயிர்கள் அனைத்தும் யக்ஞம் செய்தால் தொகைவினை மயமாயுள்ள இயற்கையே சிறப்புற்று விளங்குகிறது. உயிர்கள் யக்ஞத்தைப் பலன் கருதிச் செய்தால் ஆக்கத்தை அடைகின்றன. பலன் கருதாது நிஷ்காமியமாகச் செய்தால் ஆக்கத்தையும் அடைகின்றன; பெரும்பேறு ஆகிய முக்தியையும் அடைகின்றன. பலன் கருதியோ, பலன் கருதாதோ யாகம் செய்கின்றவளவு இயற்கை தெய்வ சொரூபமாகத் திகழ்கிறது. ஆகையால்தான் வேதம் யாண்டும் யக்ஞத்தில் நிலை பெற்றுள்ளது எனப்படுகிறது. பூலோகத்தைச் சுவர்க்கமாக மாற்றியமைப்பது மனிதனுக்குச் சாத்தியமாகிறது. நல்வினையை நல்லெண்ணத்துடன் ஆற்றுவதே அதற்கு உற்ற உபாயம். இது இயற்கையின் பெருந்திட்டம். ஆயினும் இதில் ஈடுபடாவிட்டால் மனிதனுக்கு ஏதாவது குறை வந்துவிடுமோ? விடை வருகிறது :
16. ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி
பார்த ய: இஹ-பார்த்தா எவன் இவ்வுலகில், ஏவம் ப்ரவர்திதம் சக்ரம்-இங்ஙனம் சுழலும் வட்டத்தை, ந அநுவர்தயதி-பின்பற்றி ஒழுகாதவனாக, இந்த்ரியாராம:-புலன்களிலே களிக்கிறானோ, ஸ: அகாயு:-அவன் பாப வாழ்க்கையுடையான், மோகம் ஜீவதி-(அவன்) வாழ்க்கை விழலேயாம்.
பொருள் : இங்ஙனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒழுகாதோன் பாப வாழ்க்கையுடையான்; புலன்களிலே களித்தான்; பார்த்தா, அவன் வாழ்க்கை விழலேயாம்.
பண்டங்களைப் பண்படுத்துதற்குத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அங்ஙனம் உயிர்களை ஓம்பி அவைகளை உயர்த்துதற்கு இயற்கைச் சக்கரம் இறைவனால் இயக்கப்பெற்றுள்ளது. பாடம் படிக்காவிட்டால் மாணாக்கன் பள்ளிக்கூடத்துக்குப் போயும் போகாதவனாகிறான். ஓர் ஊருக்குப் போனவன், போன காரியத்தைக் கவனிக்கா விட்டால் அங்குப் போயும் போகாதவனாகிறான். இவ்வுலகுக்குள் மக்கள் வந்துள்ளது இந்திரிய போகத்தில் உழல்தலுக்காகவன்று. ஜகத் பிரவிருத்தி சக்கரத்தில் கலந்துகொண்டு, யாகங்கள் செய்து, இயற்கை நடைமுறையை இனியதாக்கி, தம் வாழ்க்கையைப் பண்படுத்துதற்கென்றே மக்கள் இங்கு வந்துள்ளனர். அப்பெரு நோக்கத்தைப் புறக்கணித்து விட்டுச் சிற்றின்ப வாழ்க்கையில் புகுபவர் பிறந்தும் பிறவாதவர் ஆகின்றனர்.
முறையாகக் கர்மம் செய்தே ஆகவேண்டும் என்னும் விதிக்கு விலக்கானவர் யாருமில்லையா? விடை வருகிறது :
17. யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஸ்ச மாநவ:
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே
து ய: மாநவ:-ஆனால் எந்த மனிதன், ஆத்மரதி ஏவ ச-தன்னிலேதான் இன்புறுவான், ஆத்மத்ருப்த ச-தன்னிலேதான் திருப்தியடைவான், ஆத்மநி ஏவ ஸந்துஷ்ட: ஸ்யாத்-தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான் எனில், தஸ்ய கார்யம் ந வித்யதே-அவனுக்குத் தொழிலில்லை.
பொருள் : தன்னிலேதான் இன்புறுவான்; தன்னிலேதான் திருப்தியடைவான்; தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான், அவனுக்குத் தொழிலில்லை.
பிரகிருதி கர்ம சொரூபம். ஆத்மாவிடத்துக் கர்மம் இல்லை. மனதோ பிரகிருதியின் கூறுபாடாகும். ஆகையால் அதனிடத்து ஓயாது கர்மம் நடந்துகொண்டிருக்கிறது. ஆயினும் அக்கர்மத்தில் ஒரு விசேஷம் உண்டு. மனது உலகப் பொருள்களை இந்திரியங்கள் வாயிலாகப் பற்றுங்கால் அதன் கர்மம் அதிகரிக்கிறது. அது ஆத்மாவைப் பற்றுங்கால் அதன் கர்மம் ஓய்கிறது. அதன் கர்மங்களில் கடைசியானது ஆத்மாவைப் பற்றுதல் என்ற கர்மம். ஆத்மாவானது ஆனந்த சொரூபம். ஆதலால் மனது ஆத்மாவைப் பற்றும்பொழுது அதற்கு நிலைத்த இன்பமும் திருப்தியும் மகிழ்வும் உண்டாகின்றன. நதியானது கடலை அடையும் பரியந்தம் ஓடுதல் என்ற கர்மம் அதற்கு இருக்கிறது. கடலை அடைந்தான பிறகு அதற்குக் கர்மம் ஒன்றுமில்லை. ஆத்மாவைச் சார்ந்து ஆத்மாவில் லயமாவது ஒப்பற்ற கர்மமாகிறது. எல்லா ஜீவர்களும் அறிந்தோ அறியாமலோ குறிக்கோளாகக் கொண்டிருப்பது இதுவே. ஆக, ஆத்மாவில் ஒடுங்கியிருக்கும் மனதுக்குக் கர்மமில்லை.
உலகத்தவரிடமிருந்தாவது அவன் எதையும் எதிர்பார்ப்பதில்லையா? விடை வருகிறது:
18. நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஸ்சந
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்தவ்யபாஸ்ரய:
தஸ்ய இஹ க்ருதேந-அவனுக்குச் செய்கையில், கஸ்சந அர்த ந-யாதொரு பயனுமில்லை. அக்ருதேந: ஏவ ந-செயலின்றி இருப்பதிலும் (அவனுக்கு பயன்) இல்லை, ச ஸர்வபூதேஷு-எந்த உயிரிலும், அஸ்ய அர்த வ்யபாஸ்ரய:-அவனுக்கு எவ்வித பயனும், கஸ்சித் ந-சிறிது கூட இல்லை.
பொருள் : அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை; செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை; எவ்விதப் பயனையுங் கருதி அவன் எந்த உயிரையுஞ் சார்ந்து நிற்பதில்லை.
ஆத்மாவை அடைந்தவன் பூர்ணானந்தத்தைப் பெற்றவன் ஆகிறான். அதற்குமேல் அவன் பெறவேண்டியது ஒன்றுமில்லை. பெற்ற அப்பரமானந்தத்தை இழப்பதும் கிடையாது. ஆகையால் புல் முதல் பிரம்மா பரியந்தம் எந்த உயிரிடத்திருந்தும் எவ்விதமான தயவையும் அந்த ஆத்மஞானி எதிர்பார்ப்பதில்லை.
இந்நிலையை அடைந்து விட்டதாகப் பாசாங்கு செய்வதில் பயனில்லை. இப்பெருநிலையின் பொருட்டுக் கர்மத்தின் வாயிலாகத் தன்னை ஆயத்தப்படுத்த வேண்டும். எப்படிக் கர்மம் செய்யவேண்டும்? விடை வருகிறது :
19. தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:
தஸ்மாத் ஸததம் அஸக்த:-ஆதலால், எப்போதும் பற்று நீக்கி, கார்யம் கர்ம-செய்யத்தக்க தொழிலை, ஸமாசர-செய்து கொண்டிரு, ஹி அஸக்த:-ஏனெனில் பற்றில்லாமல், கர்ம ஆசரந் பூருஷ:-தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன், பரம் ஆப்நோதி-பரம்பொருளை எய்துகிறான்.
பொருள் : ஆதலால், எப்போதும் பற்று நீக்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு. பற்றில்லாமல் தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான்.
ஓயாது ஹிருதயம் அடித்துக்கொண்டிருப்பதால் உடல் வாழ்க்கை நன்கு நடைபெறுகிறது. ஆனால் ஹிருதயம் அடிப்பதில் மனிதன் கருத்துச் செலுத்துவதில்லை. அதுபோன்று பல கருமங்களைப் பற்றற்றுச் செய்யவேண்டும். பற்று நீங்குமளவு வேலைகளுக்கிடையில் விச்ராந்தி தானே உண்டாகிறது. ஆத்ம சொரூபத்தை அறிதலும் அத்தகைய மனதுக்கு எளிதாகிறது. வேலை செய்யாது விச்ராந்தி பெறமுடியாது. விச்ராந்தி என்பது மனவமைதி.
அப்படி ஏராளமாக வியவகாரங்களைச் செய்து கொண்டிருப்பதற்கு இடையில் விச்ராந்தியடைந்தவர்கள் உண்டா? உண்டு. அவர்கள் யார் எனின் :
20. கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய:
லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந்கர்துமர்ஹஸி
ஜநகாதய: ஹி-ஜனகன் முதலியோரும், கர்மணா ஏவ-செய்கையாலேயே, ஸம்ஸித்திம் ஆஸ்திதா-சித்தி (சிறந்த பேற்றை) பெற்றார்கள், லோகஸங்க்ரஹம் ஸம்பஸ்யந்-உலக நன்மையைக் கருதியும், அபி கர்தும் ஏவ அர்ஹஸி-நீ தொழில் புரிதல் தகும்.
பொருள் : ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும் நீ தொழில் புரிதல் தகும்.
ஜனகர், அசுவபதி முதலிய ராஜரிஷிகள் ராஜ்யபரிபாலனம் என்ற நானாவிதமான கர்மங்களில் பிரவேசித்திருந்தனர். நன்கு அரசாளுதலோடு அவர்களுடைய பிரவேசித்திருந்தனர். நன்கு அரசாளுதலோடு அவர்களுடைய வாழ்க்கை நின்றுவிடவில்லை. கர்ம மார்க்கத்தைப் கைப்பற்றியே அவர்கள் முக்தியடைந்தார்கள்.
ஞானியர்கள் கர்மத்தில் ஈடுபடுதலில் இன்னொரு சிறப்பு உண்டு. குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது. கண்ணுடையவன் தான் கண்ணில்லாதவனைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போகமுடியும். ஞானக் கண்ணுடையவர்கள் கர்மத்தைத் தவறுதலின்றிச் செய்யவல்லவர் ஆவர். கர்மம் செய்தே முன்னேற்றம் அடைந்தாகவேண்டிய உலக மக்களை நல்வழியில் நடாத்துதல் அவர்களுக்கு இயலும். ஆக, அப் பொறுப்பை எண்ணிப்பார்க்குமிடத்து, கர்மம் செய்வது அவசியமாகிறது.
உலகத்தைப்பற்றிய பொறுப்பு அனாவசியமாக வருவித்துக் கொள்ளப்பட்டதல்லவா? அப்படியன்று. ஏனெனில் :
21. யத்யதாசரதி ஸ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே
ஸ்ரேஷ்ட யத் யத் ஆசரதி-எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ, இதர ஜந: தத் தத் ஏவ-மற்ற மனிதர் அதை அதையே (பின்பற்றுகிறார்கள்), ஸ யத் ப்ரமாணம் குருதே-அவன் எதை பிரமாணம் ஆக்குகிறானோ, லோக தத் அநுவர்ததே-உலகத்தார் அதையே தொடருகிறார்கள்.
பொருள் : எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள். அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.
மனிதன் ஈசுவரானுக்கிரகத்தால் மேலோன் ஆகிறான். அப்படி மேன்மையுற்றவர்களிடத்து ஈசுவர விபூதியும் விசேஷமாக மிளிர்கிறது. உலகுக்கு மாதிரி மனிதனாக அல்லது வழிகாட்டும் ஆசாரியனாக அமைந்திருப்பவனும் அவனே. அவன் செய்வதையே முன் மாதிரியாக உலகம் ஏற்றுக்கொள்கிறது. ஆதலால் அவனுடைய பொறுப்பு மிகப் பெரியது. உடலை விட்டு உறுப்பு ஒன்றை எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படியே சமூகத்தை விட்டு மனிதன் பிரிந்திருப்பவன் அல்லன். அவனுடைய எண்ணமும் செயலும் நேர்முகமாக அல்லது மறைமுகமாக சமூகத்தைப் பாதிக்க வல்லவைகளாம். ஆதலால்தான் அவனுடைய செயல்களெல்லாம் நல்வழியில் செல்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தாக வேண்டும். ஈசுவரன் கொடுத்துள்ள பொறுப்பைப் புறக்கணிப்பது ஈசுவரனையே புறக்கணிப்பதற்கு ஒப்பாகும்.
பிறகு ஈசுவரனே எத்தகைய பொறுப்புடையவர் என்று வினவுமிடத்து அவர் விடையளிக்கிறார் :
22. ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந
நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி
பார்த-பார்த்தா, மே-எனக்கு, த்ரிஷு லோகேஷு-மூன்றுலகத்திலும், கர்தவ்யம் கிஞ்சந ந அஸ்தி-யாதொரு கடமையுமில்லை, அவாப்தவ்யம் அவாப்தம் ச ந-பெற்றிராத பேறுமில்லை, கர்மணி ஏவ வர்தே-தொழிலிலேதான் இயங்குகிறேன்.
பொருள் : பார்த்தா, மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலிலேதான் இயங்குகிறேன்.
ஈசுவரன் செயலை எண்ணிப்பார்க்குமிடத்து அண்டம் முழுதும் நீக்கமற அவன் நிறைந்திருந்து அனைத்தையும் இயக்குகிறான். ஓர் அவதார மூர்த்தியாக அவனைப் பார்க்குமிடத்து மகாபாரத யுத்தத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வருகிற லாப நஷ்டம் ஒன்றுமில்லை. எனினும் மற்றவர்களையெல்லாம்விட அதிகமாகக் கருமத்தில் ஈடுபட்டவர் கிருஷ்ணபகவான் ஒருவரேயாம். ஏன் அவர் அப்படிச் செய்யவேண்டுமென்று கேட்குமிடத்து :
23. யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித:
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:
ஹி பார்த-ஏனெனில் பார்த்தா! ஜாது அஹம் அதந்த்ரித:-ஒருக்கால் நான் சோம்பலில்லாமல் யதி கர்மணி ந வர்தேயம்-எப்போதும் தொழில் கொண்டிராவிடின், ஸர்வஸ: மநுஷ்யா: மம வர்த்ம அநுவர்தந்தே-எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
பொருள் : நான் சோம்பலில்லாமல் எப்போதும் தொழில் கொண்டிராவிடின், பார்த்தா, எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
நன்மை கடைப்பிடித்தல், ஓயாது உழைத்தல் முதலிய நல்வழிகளில் பெரியாரைப் பின்பற்றுதல் உலகில் மிகக் குறைவு. சோம்பித்திரிதல், முயற்சி குன்றுதல் முதலியன மேலோரிடத்தும் இருக்கின்றனவென்று சாக்குச் சொல்லி வாழாதொழிதல் பெரும்பாலோரது போக்காகும். நரோத்தமனாகிய பகவான் வீணே செயலற்றிருப்பதில்லை. மற்றவர்க்கு எடுத்துக்காட்டாக அவர் ஓயாது உழைக்கிறார். பின்பு வினை வழுவுவதில் வரும் கேடு யாது? பகவான் பதில் அளிக்கிறார் :
24. உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா:
அஹம் கர்ம ந குர்யாம் சேத்-நான் தொழில் செய்யாவிட்டால், இமே லோகா: உத்ஸீதேயு-இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள், ஸங்கரஸ்ய கர்தா-குழப்பத்தை ஆக்கியோன், இமா: ப்ரஜா:-இந்த மக்களை, உபஹந்யாம் ஸ்யாம்-கொல்வோன் ஆவேன்.
பொருள் : நான் தொழில் செய்யாவிட்டால், இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்; குழப்பத்தை நான் ஆக்கியோன் ஆவேன்; இந்த மக்களை யெல்லாங் கொல்வோனாவேன்.
விதைகளுக்கிடையில் தரத்தில் அதிகம் வித்தியாசம் தெரிவதில்லை. அப்படி வித்தியாசம் தெரிந்தாலும் அவைகளின் வலிவும் வனப்பும் முளைத்து வளர்தல் என்னும் வினையால்தான் நன்கு தெரியும்.
தொழில் புரியாதிருப்பது உயிர் வாழாதிருப்பதற்கு ஒப்பாகிறது. செயல் புரியாதவர்களுக்கும் செத்தவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் மிகக் குறைவு. செத்தவர்களுடைய உடல் கண்ணுக்குத் தென்படுவதில்லை. செயல் புரியாதிருப்பவர்களுடைய உடல் கண்ணுக்குத் தென்படுகிறது. செயல் ஒன்றும் அதனிடத்திருந்து உதிப்பதில்லை. உலகுக்குச் சுவையாக அது வளர்கிறது. உடலை வளர்ப்பது கீழோர் மேலோர் ஆகிய எல்லார்க்கும் பொதுவானது. வெறுமனே உடலை வளர்த்துக்கொண்டிருப்பவர்களுக்கிடையில் தக்கார் தகவிலர் என்னும் வேற்றுமையைக் காணமுடியாது. அது ஜாதிக்கலப்புக்கு ஒப்பாகும். முறையாகத் தத்தம் தொழில்புரியும்பொழுது அதன் மூலம் அவரவர் மேன்மை மிளிரும். ஒவ்வொருவனுடைய வகுப்பு அல்லது ஜாதியும் அவன் புரியும் கர்மத்தினின்று விளங்குகிறது. ஆக, வினையாற்றாவிடின் வாழ்வு குன்றுகிறது; மேன்மையும் மறைகிறது. பகவான் பிரகிருதிகளைச் செயலில் தூண்டாவிடில் இத்தகைய சீர்கேடுகள் வந்தமையும்.
வினையாற்றுதலில் விவேகிகளுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேற்றுமை வருமாறு :
25. ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத
குர்யாத்வித்வாம்ஸ்ததாஸக்தஸ்சிகீர்ஷுர் லோகஸங்க்ரஹம்
பாரத-பாரதா, அவித்வாம்ஸ: கர்மணி ஸக்தா:-அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய், யதா குர்வந்தி-எப்படித் தொழில் செய்கிறார்களோ, ததா வித்வாம்ஸ: அஸக்த:-அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி, லோகஸங்க்ரஹம் சிகீர்ஷு-உலக நன்மையை நாடி, குர்யாத்-தொழில் செய்ய வேண்டும்.
பொருள் : பாரதா, அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில் செய்ய வேண்டும்.
வினைப்பயனை அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையானது பாமரரைக் கர்மத்தில் தூண்டுகிறது. ஞானிக்கோ ஆசையொன்றும் கிடையாது. ஆயினும் அவன் ஓயாது வினையாற்றவேண்டும். சான்றோரைப் பின்பற்றி உலகம் நல்வழிக்கு வருதல் அதனால் விளையும் சீரிய பயனாகும்.
சொல்லாலும் செயலாலும் ஞானி எதைச் செய்யலாகாது எனின் :
26. ந புத்திபேதம் ஜநயேதஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வாந்யுக்த: ஸமாசரந்
யுக்த: வித்வாந்-அறிவுடையோன், கர்மஸங்கிநாம் அஜ்ஞாநாம்-தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு, புத்திபேதம் ந ஜநயேத்-புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது
ஸர்வகர்மாணி ஸமாசரந்-எல்லா கர்மங்களையும் செவ்வனே ஆற்றி, ஜோஷயேத்-(அவர்களையும்) செய்யச் செய்ய வேண்டும்.
பொருள் : அறிவுடையோன் தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது. அவன் யோகத்தில் நின்று தொழில் செய்து எல்லாத் தொழில்களையும் கவர்ச்சியுடையவனாக்க வேண்டும்.
தேகம் எடுத்தவன் ஒருவன் கர்மம் செய்யாது வீணில் வாழ்வதைவிட மேலானது பற்றுடன் கர்மம் செய்வது. பெரும்பான்மையோர் பற்றுடையவராயிருத்தால்தான் கர்மம் செய்ய வல்லவராயிருக்கின்றனர். பற்றற்றுக் கர்மம் செய்தற்கு மிக மிகச் சிலருக்கே சாத்தியப்படும். பற்றற்றுக் கர்மம் செய்பவர் இகம், பரம் ஆகிய இரண்டையும் பெறுகின்றனர். எல்லாரும் இகபரமிரண்டையும் பெறுக, என்னும் நல்லெண்ணத்துடன் அனைவர்க்கும் நிஷ்காமிய கர்மம் புகட்டினால் அதனால் நன்மையை விடக் கேடே அதிகம் விளையும். நிஷ்காமிய கருமத்தின் தத்துவத்தை அறியாமையே புத்திபேதமாகும். பண்டிதரைப் போன்று பாசாங்கு செய்து கர்மத்தைக் கடைப்பிடியாது அவர்கள் இம்மையையே இழந்துவிடுவார்கள். இம்மை ஒன்றையாவது பெறுதற்கு அவர்கள் பற்றுடன் கர்மம் செய்துகொண்டிருக்கட்டும். ஞானியர்கள் தீவிரமாகக் கர்மத்தில் ஈடுபடுவதைப் பார்த்து மற்றவர்கள் இகலோக வாழ்க்கையைப் பலப்படுத்த முயலுவார்கள்.
பாமரர் பூணும் பற்றுக்குப் பிறப்பிடம் யாது எனின் :
27. ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ:
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே
ப்ரக்ருதே: குணை: ஸர்வஸ:-இயற்கையின் குணங்களால் எங்கும், கர்மாணி க்ரியமாணாநி-தொழில்கள் செய்யப்படுகின்றன, அஹங்கார விமூடாத்மா-அகங்காரத்தால் மயங்கியவன், கர்தா அஹம் இதி மந்யதே-“நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.
பொருள் : எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.
சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களால் ஆகிய பிரகிருதி அல்லது இயற்கை கர்ம சொரூபமானது. பிரகிருதி வேறு, ஆத்மா வேறு என்று அறியாதவன் அக்ஞானி. தனக்குப் புறம்பான ஒன்றைத் தன் மயமாகக் கருதுதல் அகங்காரம். பிரகிருதியை ஆத்மாவென்று அகங்கரித்து கர்மம் செய்யாத ஆத்மா கர்மம் செய்வதாக எண்ணி அவன் மயங்குகிறான். எதிரில் நிற்கும் ஒரு ரயில்வண்டித் தொடரைப் பார்த்துகொண்டிருப்பவன், அவ்வண்டி ஓட ஆரம்பித்ததும் தானிருக்கும் ரயில்வண்டியே ஓடுவதாக மயங்குதலை ஒத்தது இது.
பின்பு ஞானியோவெனின்,
28. தத்த்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ:
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே
து மஹாபாஹோ-ஆனால் பெருந்தோளாய்! குண கர்ம விபாகயோ:-குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின், தத்த்வவித்-உண்மையறிந்தோன், குணா குணேஷு வர்தந்த-குணங்கள் குணங்களில் செயல்படுகின்றன, இதி மத்வா ந ஸஜ்ஜதே-என்று கருதி பற்றற்றிருப்பான்.
பொருள் : குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின் உண்மையறிந்தோன், குணங்கள் குணங்களில் இயலுகின்றன’ என்று கருதி பற்றற்றிருப்பான்.
மேகம் மேகத்தின் மீது மோதினாலும் ஆகாசம் செயலற்றிருக்கிறது. இந்திரியங்களாக வடிவெடுத்துள்ள குணங்கள் விஷயங்களாக வடிவெடுத்துள்ள குணங்களில் பிரவர்த்திக்கின்றன. சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். ஒளி வீசுவது அக்கினி தத்துவத்தின் குணம். ஒளியைக் காணும் பாங்கு கண்ணில் அமைந்திருக்கிறது. அக்கினியின் குணம் கண்ணாக வடிவெடுத்து அக்கினியின் குணமாகிய வெளியுலக ஒளியை நுகர்கிறது. பஞ்சேந்திரியங்களுக்கும் இக்கோட்பாடு பொருந்தும். ஆத்மசைதன்யத்தை இவை வந்து தொடுவதில்லை. இவ்வுண்மையை அனுபவத்தில் கண்டுகொண்டவனுக்குப் பற்று உண்டாவதில்லை. இனி,
29. ப்ரக்ருதேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு
தாநக்ருத்ஸ்நவிதோ மந்தாந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத்
ப்ரக்ருதே: குணஸம்மூடா:-இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள், குணகர்மஸு ஸஜ்ஜந்தே-குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள், தாந் அக்ருத்ஸ்நவித:-அந்த முற்றும் அறிந்திராத, மந்தாந் ந விசாலயேத்-சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை உழல்விக்கக் கூடாது.
பொருள் : இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள். சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை முழுதுணர்ந்த ஞானி உழல்விக்கக் கூடாது.
பிஞ்சு ஒன்றில் மேல் தோலுக்கும் சுளைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. முதிர்ந்து பழுத்த பின்பே அது விளங்குகிறது. அங்ஙனம் அறிவு தெளிவடையாதவர்களுக்குப் பிரகிருதியின் இயல்பு கர்மம் என்பதும், ஆத்மாவுக்குக் கர்மம் இல்லை யென்பதும் தெரியாது. ஆதலால் அவர்கள் கர்மபந்தத்தில் இருந்தே ஆகவேண்டும். ஆத்ம அநாத்ம விசாரம் வெறும் குழப்பத்தைத் தான் அவர்கள் உள்ளத்தில் உண்டுபண்ணும். அவர்கள் பற்றுடன் கர்மம் செய்துகொண்டிருப்பதில் தோஷமில்லை. தம் இயல்புக்கு ஏற்றபடி கர்மம் செய்யும்படி அவர்களை உற்சாகப்படுத்துதற்கிடையில், அறிவுடையோர் செய்யவேண்டியது யாது எனில்:
30. மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்யாத்மசேதஸா
நிராஸீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர:
அத்யாத்மசேதஸா:-என்னிடம் ஒன்றிய மனதுடயவனாக, ஸர்வாணி கர்மாணி-எல்லாச் செய்கைகளையும், மயி ஸந்ந்யஸ்ய-என்னில் அர்ப்பணம் செய்து விட்டு, விகதஜ்வர:-மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய், நிராஸீ நிர்மம: பூத்வா-ஆசை நீங்கி, எனது என்பது அற்று, யுத்யஸ்வ-போர் செய்.
பொருள் : எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று, மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்ப் போர் செய்யக் கடவாய்.
எல்லாம் ஈசன் செயல், எல்லாம் அவன் உடைமை. நான் அவனது தொண்டன் என்கின்ற எண்ணம் வரும்பொழுது மனக் கொதிப்புப் போய்விடுகிறது. பின்பு கடமையும் நன்கு ஆற்றப்படுகிறது.
அனைத்துக்கும் தலைவன் ஈசுவரன் என்பதை அறியாவிட்டாலும்;
31. யே மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா:
ஸ்ரத்தாவந்தோऽநஸூயந்தோ முச்யந்தே தேऽபி கர்மபி:
யே மாநவா: அநஸூயந்த:-எந்த மனிதர் பொறாமையின்றி, ஸ்ரத்தாவந்த:-சிரத்தையுடையோராய், மே இதம் மதம்-என்னுடைய இந்த கொள்கையை, நித்யம் அநுதிஷ்டந்தி-எப்பொழுதும் பின்பற்றுகிறார்களோ, தே அபி கர்மபி: முச்யந்தே-அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.
பொருள் : என்னுடைய இந்த நித்தியமான கொள்கையை எந்த மனிதர் சிரத்தையுடையோராய்ப் பொறாமையின்றிப் பின்பற்றுகிறார்களோ, அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.
ஓர் ஊருக்குச் செல்லுதற்கு வழி இன்னதென்று ஒரு மனிதன் யூகத்தாலும் தெரிந்துகொள்ள இயலாதவனாயிருக்கிறான். ஆனால் அவன் அவ்வூருக்குச் செல்பவர்கள் சொல்லில் விசுவாசம் வைத்து அவர்களைப் பின்பற்றுகிறான். அப்படிச் செய்வதால் அவன் அவ்வூரை நிச்சயமாகப் போய்ச் சேருவான். ஆத்ம சாதன சம்பந்தமான விஷயங்கள் ஒரு மந்த அதிகாரிக்கு நன்கு விளங்காவிட்டாலும் சான்றோர் சொல்லும் நெறியில் சிரத்தை வைத்துத் தானும் அவ்வழியில் செல்லுவானாகில் வினைத்தளைகளினின்று அவன் விடுபடுவான்.
சிரத்தை என்பது சிறந்ததோர் மனநிலை. எடுத்துக்கொண்ட கருமத்திலேயே கண்ணாயிருத்தல், பணிந்திருத்தல், எல்லார்க்கும் வணக்கம் காட்டுதல், விசுவாசம் பூணுதல் இவையாவும் சிரத்தையில் அடங்குகின்றன. குருவை வணங்குதல் அவரிடத்துச் சிரத்தை காட்டுவதாகும். பகவத்கீதையினிடத்துச் சிரத்தை கொள்ளுதல் என்பது அதில் அறிவுக்கு எட்டுகிற பகுதிகளைப் பாராட்டுதலும், எட்டாத பகுதிகள் கூடத் தனக்கு நன்மை பயப்பனவென்று விசுவாசம் வைத்தலுமாம். சிரத்தையோடு வறியோர்க்குத் தானம் கொடுத்தல் வேண்டும். கொடுக்கிற பொருளை அம்மனிதர் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்றும், அப்பொருள் அவர்களுக்குப் பயன்படவேண்டுமென்றும் அடக்க ஒடுக்கத்தோடு உணர்வது சிரத்தையாகும்.
தன்னால் அடைய முடியாத நல்லது ஒன்றை மற்றவர்கள் அடைந்தால் அதைக் கண்டு சகியாத மன நிலைக்குப் பொறாமையென்று பெயர். ஒரு மனிதனுடைய மேன்மைகளையெல்லாம் பொறாமையானது தேய்த்துவிடுகிறது. மற்றவர்களது முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்கின்றவளவு ஒரு மனிதன் தானே முன்னேற்றமடைகிறான்.
சிரத்தையோடு நன்னெறியைப் பின்பற்றுதலுக்குப் பதிலாக :
32. யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்
ஸர்வஜ்ஞாநவிமூடாம்ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ:
து யே அப்யஸூயந்த:-யாவர் பொறாமையால், மே எதத் மதம் ந அநுதிஷ்டந்தி-என்னுடைய இக்கொள்கையை பின்பற்றாது விடுகிறார்களோ, தாந் அசேதஸ:-அந்த மூடர்களை, ஸர்வஜ்ஞாந விமூடாந்-முழுமையான ஞானத்தில் அறிவு மயக்கம் அடைந்தவர்கள் என்றும், நஷ்டாந் வித்தி-நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.
பொருள் : என்னுடைய இக்கொள்கையை யாவர் பொறாமையால் பின்பற்றாது விடுகிறார்களோ, எவ்வித ஞானமுமில்லாத அம்மூடர்களை நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.
தீயில் கையை வைத்தால் அது சுடும். அதே அக்கினியை முறையாகப் பயன்படுத்தினால் அதைக்கொண்டு சமைக்கலாம். இதைத் தெரிந்துகொள்ளாதவர்கள் நஷ்டத்தையடைகிறார்கள். அங்ஙனமே ஆத்ம தத்துவங்களை அறிந்து அவைகளுக்கேற்றபடி வாழ்க்கை வாழாதவர்கள் நஷ்டத்தையும் கேட்டையும் அடைகிறார்கள்.
ஞானிகள் அக்ஞானிகள் ஆகிய எல்லோரையும் பற்றிய ஒரு பேருண்மை யாதெனின்:
33. ஸத்ருஸம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி
பூதாநி ப்ரக்ருதிம் யாந்தி-எல்லா உயிர்களும் (இயற்கைக்கு ஏற்ப) இயல்பை அடைகின்றன,
ஜ்ஞாந்வாந் அபி-ஞானமுடையவன் கூட, ஸ்வஸ்யா: ப்ரக்ருதே ஸத்ருஸம்-தன்னுடைய இயற்கைக்கு தக்கபடியே, சேஷ்டதே-நடக்கிறான், நிக்ரஹ: கிம் கரிஷ்யதி-(என்றால்) பலவந்தமாக அடக்குதல் என்ன செய்யும்?
பொருள் : ஞானமுடையவன்கூடத் தன் இயற்கைக்குத் தக்கபடியே நடக்கிறான். உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது.
செடிகள் தத்தம் இயல்புக்கேற்றாற்போன்று ஓங்கி அல்லது படர்ந்து வளர்கின்றன. அவைகள் இனிப்பதும் கைப்பதும் அவ்வகைகளின் இயல்பின்படியே. அவைகளின் இயல்பைத் தடுப்பது வளர்ச்சியையே தடுப்பதற்கு ஒப்பாகும். இயல்புக்கு ஒப்ப ஓங்கி வளரும்படி செய்தலே சாலச்சிறந்த முறையாகும். மனிதர்களுக்கிடையில் ஞானியர்களே வெவ்வேறு இயல்புடையவர்களாயிருக்கின்றனர். ஒருவர் அந்தர்முக திருஷ்டியிலேயே ஆழ்ந்து செல்லுகிறார். மற்றொருவர் பகிர்முக திருஷ்டியில் அனைத்தையும் கடவுள் மயமாக இந்திரியங்களைக் கொண்டு பொருள்படுத்துகிறார். ஒருவர் பக்தியில் பிரியமுடையவர். வேறு ஒருவர் ஞான விசாரத்தில் விச்ராந்தி பெறுகிறார். இப்படி இயல்புகளுக்கேற்ற படி நெறிகள் மாறினும், சாதகர்கள் அடையும் குறி ஒன்றே. ஆக, அவரவர் இயல்பின்படியே ஞானியர்கள் முன்னேற்றமடைந்து வருகின்றனர்.
பிரகிருதியில் கட்டுண்டு கிடக்கும் பாமரர் பல ஜன்மாந்தரங்களின் வாசனையினூடு வசப்பட்டவர்கள். அவர்கள் இயல்பைத் தடுப்பது வளர்ச்சியைக் கெடுப்பதற்கு ஒப்பாகும். அப்படி வளர்ச்சியை வீணாக்காது இயல்புக்கு ஏற்றபடியே வினையாற்றி முன்னேற்றமடைய அவர்களைத் தூண்டவேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வோர் இயல்பு உண்டு. அதைப் பின்பற்றுவதே அவனுடைய போக்கு என்றால் சுயப்பிரயத்தனம் அல்லது புருஷாகாரத்துக்கு இடமில்லை. இன்னதைச் செய், இன்னதைச் செய்யாதே என்று சாஸ்திரம் ஆணையிடுதலிலும் அர்த்தமில்லை. இத்தகைய ஆட்சேபம் ஈண்டு இயல்பாக எழலாம். அதற்கு விடை வருகிறது.
34. இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ
தயோர்ந வஸமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ
இந்த்ரியஸ்ய இந்த்ரியஸ்ய அர்தே-இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில், ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ-விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன, தயோ: வஸம் ந ஆகச்சேத்-இவ்விரண்டுக்கும் வசப்படலாகாது, ஹி தௌ அஸ்ய பரிபந்திநௌ-ஏனெனில் இவ்விரண்டும் இவனுக்கு வழித்தடைகளாம்.
பொருள் : இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில் விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விரண்டுக்கும் ஒருவன் வசப்படலாகாது. இவை இவனுக்கு வழித்தடைகளாம்.
இத்தனைவித இயற்கைபேதம் உயிர்வகைகளுக்கிடையில் இருப்பதற்கு மூல காரணம் ஈண்டு இயம்பப்படுகிறது. மூன்று குணங்களின் தாரதம்மியத்தால் பிரபஞ்சம் முழுதும் உண்டாயின. அதே போன்று ஐந்து இந்திரியங்கள் விஷயங்களில் செல்லுதற்கிடையில் உண்டாகும் விருப்பு வெறுப்பின் தாரதம்மியத்தால் உயிர்களின் இயல்புகள் கணக்கற்ற விதங்களில் பிரிகின்றன. மல்லிகைப்பூவின் மணத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அதை வெறுப்பவர் பலர். அதன் பெருமித மணத்தால் ஒருவர்க்குத் தலைவலி. சிற்றின்ப நுகர்ச்சியை ஞாபக மூட்டுவதால் இன்னொருவருக்கு அது பிடிப்பதில்லை. சிறுமிகள் அதன் பொருட்டுக் காசை விரயம் செய்வதால் வேறு ஒருவருக்கு அதன் மீது வெறுப்பு. இனி, இதை விரும்புபவர்க்கிடையில் நறுமணத்தை முன்னிட்டும், இன்ப நுகர்ச்சியை முன்னிட்டும், அம்பிகையின் ஆராதனையை முன்னிட்டும் அதைப் போற்றுவார் பலர் உளர். இப்படியே எல்லா இந்திரியங்கள் வாயிலாகவும் எல்லாப் பொருள்களிடத்தும் வெவ்வேறு படித்தரங்களில் விருப்பு வெறுப்பு வளர்க்கப்படுகின்றன. விருப்பு வெறுப்பின் தொகுதியே ஒவ்வொரு ஜீவனது இயல்பு ஆகிறது.
இனி, சுயப் பிரயத்தனத்துக்கும் சாஸ்திரத்துக்கும் இடம் இந்த விருப்பு வெறுப்பை மாற்றியமைப்பதில்தான் இருக்கிறது. விருப்பு வெறுப்பை ஒரு மனிதன் ஒரு நெடிப்பொழுதில் மாற்றி விட முடியாது. விஷயங்களில் கொண்டுள்ள விருப்பு வெறுப்பை மீட்டெடுத்து சர்வேசுவரனிடம் வைத்தால் அவைகள் சத்துருக்கள் ஆகமாட்டா.
விருப்பு வெறுப்பு வாழ்க்கையை இன்னும் எப்படிக் குலைத்துவிடுகிறது எனின் :
35. ஸ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:
ஸ்வநுஷ்டிதாத் பரதர்மாத்-நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும், விகுண: ஸ்வதர்மோ ஸ்ரேயாந்-குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது, ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய:-ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம், பரதர்ம: பயாவஹ:-பரதர்மம் பயத்துக்கிடமானது.
பொருள் : நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும் குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது. ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கிடமானது.
இன்பம் தருவதில் விருப்பும், துன்பம் தருவதில் வெறுப்பும் கொள்ளுதல் மனிதனது இயல்பு. அர்ஜுனன் இளமையிலிருந்து பெற்ற பயிற்சி போர் புரிதற்கானது. அப்பயிற்சியில் அவன் பெருமகிழ்ச்சியும் பெறலானான். அதுவே அவனது ஸ்வதர்மம். இப்பொழுது அறப்போர் தொடுத்தவிடத்து அது பாட்டனாரையும் ஆசாரியரையும் கொல்லுதல் என்ற துன்பத்தைத் தருமாதலால் ஸ்வதர்மத்தில் அவன் வெறுப்புக்கொள்ளலானான். காட்டில் போய் நிஷ்டை புரிதல், ஐயமேற்றுண்ணல் என்ற பரதர்மத்தில் பிரவேசிக்கப் பார்த்தான். வெறுப்பினால் அல்லது அச்சத்தினால் ஒருவன் தன் தொழிலை விட்டுவிடுவானானால் அதனால் ஒரு நன்மையும் வந்தமையாது. இனிய வாழ்க்கை கிட்டுமென்ற விருப்பத்தால் பரதர்மத்தில் பிரவேசிப்பதும் ஒண்ணாது. மனதைப் பக்குவப்படுத்துதலே வாழ்க்கையின் குறிக்கோள். விருப்பு வெறுப்பின் வசப்பட்டுத் தொழிலை மாற்றுவது உறுதியற்ற மனதின் போக்காகும். உயிரையே வழங்கவேண்டிவரினும் தன் கடமையினின்று பிறழாதிருத்தல் பக்குவமான வீரனது செயலாகும். பயப்படுவது சாதற்கு ஒப்பாகிறது. பயந்து தொழிலை மாற்றுபவன் ஓயாது செத்துக்கொண்டே இருக்கிறான். அத்தகையவன் அழியாப் பெருநிலையைப் பெறுதல் எங்ஙனம்.
கேடுகளுக்கெல்லாம் மூலகாரணம் யாது என்று அத்-2 சுலோ-62 லும், அத்-3 சுலோ-34 லும் பகவான் குறிப்பாகச் சொல்லியிருந்தும் வெளிப்படையாக விடை வாங்கவேண்டுமென்ற எண்ணத்துடன் அர்ஜுனன் ஈண்டு ஒரு கேள்வியைக் கேட்கிறான்.
அர்ஜுந உவாச
36. அத கேந ப்ரயுக்தோऽயம் பாபம் சரதி பூருஷ:
அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே
அத அயம் பூருஷ:-பின் இந்த மனிதன், அநிச்சந் அபி-இச்சையில்லாத போதும், பலாத் நியோஜித: இவ-வலியக் கொண்டு புகுத்துவதுபோல், கேந ப்ரயுக்த: பாபம் சரதி-எதனால் ஏவப்பட்டு பாவம் செய்கிறான்?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: விருஷ்ணி குலத் தோன்றலே, மனிதனுக்கு இச்சையில்லாத போதும் அவனை வலியக் கொண்டு புகுத்துவதுபோல் தூண்டிப் பாவம் செய்விப்பது யாது?
ஸ்ரீ பகவாநுவாச
37. காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:
மஹாஸநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்
ஸ்ரீ பகவாநுவாச-பகவான் சொல்லுகிறான், ரஜோகுணஸமுத்பவ:-ரஜோ குணத்திற்பிறப்பது
ஏஷ: காம: க்ரோத-இஃது விருப்பமும் சினமும், மஹாஸந: மஹாபாப்மா-பேரழிவு செய்வது; பெரும்பாவம், யேநம் இஹ வைரிணம் வித்தி-இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.
பொருள் : பகவான் சொல்லுகிறான்: இஃது விருப்பமும் சினமும்; ரஜோ குணத்திற்பிறப்பது; பேரழிவு செய்வது; பெரும்பாவம். இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.
உலகத்தவர் எல்லார்க்கும் பரம சத்துருவாயிருப்பது ஆசை, அந்த ஆசைக்குத் தடையுண்டாகும்போது அது கோபமாக வடிவெடுக்கிறது. ஆகையால் காமத்தையும் குரோதத்தையும் ஒன்றாகப் பகவான் பகருகிறார். அது ரஜோ குணத்திலிருந்து உதிக்கிறது. மேலும் ரஜோகுண வளர்ச்சியையும் உண்டுபண்ணுகிறது. நெருப்புக்கு எவ்வளவு விறகு கொடுத்தாலும் அதைப் பொசுக்கிவிட்டு மேலும் விறகை வேண்டி நிற்கிறது. அங்ஙனமே காமத்துக்கு விஷயங்களை ஊட்ட ஊட்ட அது அவைகளை உண்டு வளர்க்கிறது. விஷயம் என்னும் உணவை வேண்டியவாறு அது உண்ண வல்லது. ஆசை பெருகப் பெருக பாவமும் பெருகுகிறது. மனிதனுக்கு வரும் கேடுகளெல்லாம் ஆசையிலிருந்து வந்தவைகள். ஆகையால் அது இவ்வுலக வாழ்க்கையில் எல்லார்க்கும் பகையாம்.
ஆசை எப்போக்கில் பகை என்பது இனி விளக்கப்படுகிறது :
38. தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்ஸோ மலேந ச
யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேநேதமாவ்ருதம்
யதா தூமேந வஹ்நி- எப்படி புகையினால் தீயும், மலேந ஆதர்ஸ: ச-அழுக்கால் கண்ணாடியும், ஆவ்ரியதே-மறைக்கப் படுகிறதோ, யதா உல்பேந கர்ப ஆவ்ருத:-எப்படி தசையால் கர்ப்பம் மூடப் பட்டிருக்கிறதோ, ததா தேந இதம் ஆவ்ருதம்-அதே போல இது (ஞானம்) இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.
பொருள் : புகையினால் தீ சூழப்பட்டிருப்பது போலவும், கண்ணாடி அழுக்கால் மாசுபடுவது போலவும் இது இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.
ஆசை என்னும் திரையினால் ஆத்மசொரூபம் மூடப்பட்டிருக்கிறது. மூன்று குணங்களை ஆதாரமாகக்கொண்டு ஆசையும் மூன்று படித்தரங்களில் இருக்கிறது. தீயைப் புகை மூடிக்கொண்டிருப்பது முதல் உபமானமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சத்வ குணத்தோடுகூடிய ஆசை இத்தகையது. புகைந்துகொண்டிருக்கிற தீயின்மீது சிறிது காற்று அடித்தால் அது பற்றி எரிகிறது; புகையும் மறைகிறது. தீயின் சுடர் நன்கு தென்படுகிறது. அங்ஙனம் சிறிது விவேகம் என்னும் காற்று வீசினால் சாத்வீக ஆசை என்னும் புகை பறந்தோடிவிடும். ஆத்ம சொரூபம் உள்ளபடி ஒளிரும். இரண்டாவது ஆசை ரஜோகுண மயமானது. கண்ணாடியின் மீது படிந்துள்ள அழுக்கைப் போக்குதற்குக் கொஞ்சம் சிரமம் எடுத்துக்கொள்ளவேண்டும். ரஜோகுணத்தோடு கூடிய ஆசையைச் சிறிது முயற்சி செய்தே போக்கமுடியும். மூன்றாவது ஆசையோ தமோகுணமயமானது. காலக்கிரமத்தில் தான் தக்க வாழ்க்கையின் மூலம் சிசுவைக் கருப்பையிலிருந்து விடுவிக்கமுடியும். அங்ஙனம் தமோகுணத்தில் உதித்த ஆசையைப் போக்கக் காலமும் ஆயத்தமும் தேவை.
மேல் சுலோகத்தில் இயம்பப்பட்ட ஆசையானது இன்னும் தெளிவுபட இங்கு விளக்கப்படுகிறது:
39. ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச
ச கௌந்தேய-மேலும் குந்தியின் மகனே, துஷ்பூரேண அநலேந-திருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும், காமரூபேண-விருப்பமேனும் வடிவில் இருப்பதும், ஜ்ஞாநிந: நித்யவைரிணா-ஞானிக்கு நித்தியப் பகை, ஏதேந ஜ்ஞாநம் ஆவ்ருதம்-இந்த காமம் (ஆசை) ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.
பொருள் : குந்தியின் மகனே, விருப்பமெனப்படும் இந் நிரப்பொணாத் தீ, ஞானிக்கு நித்தியப் பகையாய் ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.
உலகம் முழுதுக்குமே பகையாகிய ஆசையை அக்ஞானியானவன் அதன் வசப்பட்டிருக்கும்பொழுது நலம் செய்யும் நண்பனாக நினைக்கிறான். பிறகு அதனால் விளையும் கேடு வலுத்துவிடும்பொழுதே அதை ஹிதசத்துரு என்று அறிகிறான். ஆயினும் இந்த அனுபவம் நிலைத்திருப்பதில்லை. திரும்பவும் அவன் ஆசையின் வசப்படுகிறான். ஆனால் ஞானியின் நிலை அத்தகையதன்று. ஆசையின் வசப்பட்டிருக்கும்பொழுதும் வசப்படா திருக்கும்பொழுதும் அதைப் பகையென்று அவன் நன்கு உணர்கிறான். ஆகையால் ஆசை அவனுக்கு மட்டும் நித்திய சத்துருவாகிறது; என்றென்றும் அது அவனுக்கு எதிரி. ஆசையின் வடிவு ஒன்று இரண்டு அல்ல. விரும்பியவாறெல்லாம் அது வடிவெடுக்கிறது. ஒரே நாளில் ஒரு மனிதனது ஆசை எத்தனை விதமான வடிவெடுக்கிறது என்பதை அவன் கொஞ்சம் ஆராய்ந்துபார்த்தால் தெரியும். ஆதலால் அது காமரூபம் என்று அழைக்கப்படுகிறது. ஓட்டைச் சட்டியில் நீர்வார்த்து நிரப்பமுடியாது. ஆசையையும் நிரப்பி ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியாது. விஷய சுகத்தைப் போதும் என்று ஆசையானது ஒருபொழுதும் பகர்வதில்லை.
ஆசைக்கு இருப்பிடம் எது? விடை வருகிறது :
40. இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தேஹிநம்
இந்த்ரியாணி மந: புத்தி-இந்திரியங்களும், மனமும், புத்தியும், அஸ்ய அதிஷ்டாநம் உச்யதே-இதற்கு நிலைக்களன் என்பர், ஏதை: ஏஷ: ஜ்ஞாநம் ஆவ்ருத்ய-இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து, தேஹிநம் விமோஹயத்-மனிதனை மயங்குவிக்கிறது.
பொருள் : இந்திரியங்களும், மனமும், புத்தியும் இதற்கு நிலைக்களன் என்பர். இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து மனிதனை மயங்குவிக்கிறது.
எதிரி எந்தக் கோட்டையில் எப்படி வாசம் செய்கிறான் என்பது தெரிந்தால் பின்பு அவனை எதிர்ப்பது எளிதாகிறது. ஆசை என்னும் எதிரி மனிதனது மனக்கோட்டையில் வசிக்கிறான். இந்திரியங்களையும், மனதையும், புத்தியையும் தன் கருவிகளாக அவன் கைப்பற்றிக்கொண்டான். கண்கொண்டு பார்ப்பதெல்லாம் காமத்தை வளர்ப்பதற்கேயாம். அப்படியே காது முதலிய மற்ற இந்திரியங்களும் காமத்தைப் பெருக்குதற்கே தொழில் புரிகின்றன. மனதில் உதிக்கும் உணர்ச்சிகளும். சங்கற்பங்களும் காமத்துக்கு உட்பட்டவைகளாகவே எப்பொழுதும் இருந்து வருகின்றன. அறிவைக்கொண்டு தீர்மானிப்பது, நூல்கள் பல கற்பது, வாதாடுவது இவையாவும் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளுதற்கென்றே நடைபெறுகின்றன. ஆத்மாவுக்கு அடிமைபூண அமைந்துள்ள கருவி கரணங்கள் ஆசைக்கு அடிமைகளாயின; அந்தோ!
இந்த ஆசையை வெல்லுதல் எங்ஙனம்? விடை வருகிறது :
41. தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஸநம்
தஸ்மாத் பரதர்ஷப-ஆதலால் பாரத ரேறே, ஆதௌ இந்த்ரியாணி நியம்ய-தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ஜ்ஞாந விஜ்ஞாந நாஸநம்-ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய, ஏநம் பாப்மாநம் ஹி ப்ரஜஹி-இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.
பொருள் : ஆதலால் பாரத ரேறே, நீ தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.
முதலில் இந்திரியங்களை முற்றுகைபோட்டுக் கைப்பற்றிக் கொண்டால் எதிரியாகிய ஆசைக்கு இருப்பிடம் இல்லாது போய்விடுகிறது. அதில் எதிரியின் பலம் பெரிதும் குறைகிறது. பிறகு அதை வெல்தலும் எளிதாகிறது. நூலறிவு ஞானமென்றும், சுவானுபவம் விக்ஞானமென்றும் சொல்லடுகின்றன. இவ்விரண்டையும் தொலைக்கவல்லது ஆசை. ஆத்ம சொரூபத்தை மறைப்பதால் அது பாப சொரூபமானது. அத்தகைய ஆயையை வெல்லுதல் வீரனது செயல்.
சாதகன் எந்த இடத்தில் நின்றுகொண்டு ஆசையை முற்றுகை போடவேண்டும் என்ற கேள்வி எழுவதால் அதற்கு விடை வருகிறது.
42. இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:
இந்த்ரியாணி பராணி ஆஹு-இந்திரியங்களை உயர்வுடையன என்பர், இந்த்ரியேப்ய: பரம் மந:-அவற்றிலும் மனம் மேல், மநஸ: து பரா புத்தி-மனத்தைக் காட்டிலும் புத்தி மேல், புத்தே: பரத து ஸ:-புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).
பொருள் : இந்திரியங்களை உயர்வுடையன வென்பர். அவற்றிலும் மனம் மேல்; மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்; புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).
சூக்ஷ்மமானது ஸ்தூலத்தைவிட யாண்டும் மேலானது. பொறிகள் ஐந்து உள. பருத்த உடலைவிடப் பொறிகள் மேலானவை. ஏனென்றால் உடலைவிடப் பரந்த போக்கில் அவைகள் செயல் புரிகின்றன. மனதோ இந்திரியங்களைவிட சூக்ஷ்மமானது. அது உணரவல்லது; சங்கல்ப விகல்ப மயமானது மனதில் தொழிலாகிய எண்ணத்துக்கு இந்திரியங்களின் தொழிலைவிட அதிக வியாபகமுண்டு. அதனினும் பெரியது புத்தி. மனது சந்தேகம் கொள்கிறது. மற்று, புத்தியோ மெய்ப் பொருளை நிச்சயிக்கிறது. ஆகையால் அது பெரியது. புத்திக்கும் எட்டாதது தேகி அல்லது ஆத்மா. ஆசையானது மனம் முதலியவைகளைப் பற்றிக்கொண் ஆத்ம சொரூபத்தை மறைக்கிறது.
பழம் ஒன்றின் மேல்தோலினின்று உட்பகுதிக்குப் போகப் போக அது சுளையின் பாங்கைப்பெறுகிறது. அங்ஙனம் தேகம், இந்திரியங்கள், மனது, புத்தி ஆகியவைகளுள் பிந்தியவைகள் படிப்படியாக உள்ளிருக்கும் ஆத்ம சொரூபத்தை அடைகின்றன. நுண்ணியத்தைப் பற்றுமளவு ஆசையும் வலிவு மிகப் பெறுகிறது. இந்திரியங்களைப் பற்றும் ஆசை உடல் ஆசையை வெல்லுகிறது. தூசி நிறைந்த காற்றும் மின்னலும் இடியும் வரும்போது உடலில் தூசி படிவதில் தடையில்லை. ஆனால் கண்ணும் காதும் காப்பாற்றப்படுகின்றன. நோய்வாய்ப்பட்ட கண்ணை நீக்காவிட்டால் அது மூளையைத் தாக்கி, பைத்தியம் பிடிக்கும் என்ற பிரச்னை ஏற்படுகிறது. அப்பொழுது நல்ல மனதின் பொருட்டுக் கண் என்ற இந்திரியம் பறிகொடுக்கப்படுகிறது. அறிவை வளர்ப்பதற்காக எத்தனை துன்பங்களையும் சகிக்கும் தன்மை மனிதனுக்கு வருகிறது. ஏனென்றால் புத்தியைப் பற்றியுள்ள ஆசையானது மனதைப் பற்றியுள்ள ஆசையை அகற்றுகிறது. இங்ஙனம் நுண்ணியதற்குப் போகப்போக ஆசையின் வலிவும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
புத்தியைப் பற்றியுள்ள ஆசையும் பந்தத்துக்கு ஏதுவானதே. ஆதலால் அதை அறுப்பது எங்ஙனம்? விடை வருகிறது:
43. ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா
ஜஹி ஸத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம்
ஏவம் புத்தே: பரம்-இங்ஙனம் புத்திக்கு மேலான, புத்த்வா-பொருளை (ஆத்மாவை) உணர்ந்து, ஆத்மநா ஆத்மாநம் ஸம்ஸ்தப்ய-தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு, துராஸதம் காமரூபம்-வெல்லற்கரிய விருப்பமாம், ஸத்ரும் ஜஹி மஹாபாஹோ-பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!
பொருள் : இங்ஙனம் புத்திக்கு மேலான பொருளை (ஆத்மாவை) உணர்ந்து, தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு, வெல்லற்கரிய விருப்பமாம் பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!
ஆசையானது இந்திரியங்களையும் மனதையும் புத்தியையும் பற்றி நிற்கும்பொழுது ஜீவபோதம் தடிக்கிறது. அதனால் மனிதனுக்குத் துன்பமே அதிகரிக்கிறது. மற்று, வாழ்வானது இன்பம் நிறைந்திருக்கிறது என்று மக்கள் கருதுகின்றனர். ஒவ்வோர் இன்பமும் இறுதியில் துன்பமாகப் பரிணமிப்பதை அவர்கள் நாளடைவில் அறிவார்கள். இந்திரியங்கள், மனது புத்தி ஆகிய இவை யாவும் பரமாத்மாவைச் சார்ந்திட அருள்தாகம் பெருக்கெடுக்கும்பொழுது விஷய ஆசை அடிபட்டு ஒழிகிறது. ஜீவபோதம் தேய்கிறது; பரபோதம் வளர்கிறது; பேரானந்தம் ஊற்றெடுக்கிறது. அது பின்பு துன்பமாக மாறுவதில்லை.



நான்காம் அத்தியாயம்
பகவத்கீதை | ஞானகர்ம ஸந்யாஸ யோகம்




அர்ஜுனா, உன்னை ஏமாற்றிச் சண்டையில் உற்சாகமூட்டுவதற்காக உன்னைக் கர்மயோகத்தில் தூண்டுகிறேன் என்று எண்ணாதே. உலகத்தைப் படைக்கும்போதே இக் கர்மயோகத்தை நான் மனுவுக்கு உபதேசித்தேன். பிறகு மனுவின் வழியாக உலகில் அது பரவிற்று என்று சொல்லிக் கண்ணன் தனது அவதார ரகசியத்தைக் கூறுகிறான். பிறகு கர்மயோகத்தின் பிரிவுகளையும் அவற்றுள் அடங்கிய ஆத்ம ஞானத்தின் பெருமையையும் விளக்குகிறான். கர்மயோகம் ஞானபாகத்தை உள்ளடக்கிக் கொண்டிருப்பதால் அதுவே ஞானயோகத்தின் பலனையும் அளிக்கும் என்று கூறுகிறான்.
ஞானகுரு சிஷ்ய பரம்பரை 1-3 -அவதார மூர்த்தியின் மஹிமை 4-9 -ஞானயோகத்தின் சிறப்பு 10-எல்லா மார்க்கங்களும் இறைவனைப் போய்ச் சேர்கின்றன 11- சிறு தேவதைகளின் வழிபாட்டின் பயன் 12-நான்கு வர்ணமும் கர்மமும் 13-15 -கர்ம தத்துவம் 16-22 -விதவிதமான யக்ஞங்கள் 23-33 -குரு சிஷ்ய இணக்கம் 34 -ஞானத்தின் உயர்வு 35-39 -சந்தேகம் உதவாது 40-42.
ஸ்ரீ பகவாநுவாச
1. இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம்
விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேऽப்ரவீத்
ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், இமம் அவ்யயம் யோகம்-இந்த அழிவற்ற யோகத்தை, அஹம் விவஸ்வதே ப்ரோக்தவாந்-நான் சூரியனுக்கு (விவஸ்வான்) சொன்னேன்
விவஸ்வாந் மநவே ப்ராஹ-விவஸ்வாந் மனுவுக்கு சொன்னான், மநு: இக்ஷ்வாகவே அப்ரவீத்-மனு இக்ஷ்வாகு மன்னனுக்கு சொன்னார்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகு ராஜனுக்குக் கூறினான்.
இந்த யோகத்தால் அடையப்படுவது அழிவற்ற வீடுபேறு ஆதலால் அதற்குச் சாதனமாயிருக்கும் யோகமே அழிவற்றது எனப்படுகிறது. முக்தியடைதற்கு மனிதன் எடுத்துக்கொள்ளும் முயற்சி சர்வகாலமும் நிலவுலகில் இருக்கும். அதற்கு ஏதுவாயுள்ள இந்த யோகத்தின் அனுஷ்டானமும் என்றென்றும் நிலைத்திருக்கும். விவஸ்வான் என்பது சூரியனுடைய பெயர். மனு என்பவர் ஸ்மிருதியை இயற்றியவர். அவர் தம் புதல்வனும் சூரியகுலத்து முதல் அரசனுமாகிய இக்ஷ்வாகுவுக்கு அதைப் புகட்டினார். அதை அனுஷ்டிப்பவர்களுக்கு இகபரமிரண்டையும் பெறுதற்கான வலிவு வந்தமைகிறது. உலகத்தைக் காக்கும் பொறுப்புடையவர்களுக்கு அத்தகைய பலம் இன்றியமையாதது.
2. ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப
பரந்தப-எதிரிகளை எரிப்பவனே ! ஏவம் பரம்பராப்ராப்தம்-இவ்விதம் வழிவழியாக வந்த
இமம் ராஜர்ஷய: விது:-இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தனர், ஸ: யோக மஹதா காலேந-அந்த யோகம் வெகுகாலமாக, ஹ நஷ்ட:-இவ்வுலகில் இழக்கப் பட்டது.
பொருள் : இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். பரந்தபா, அந்த யோகம் காலமிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது.
வழிமுறை வழிமுறையாக அரசர்கள் இந்த யோகத்தைக் கடைப்பிடித்து அதன்படி சிறப்படைந்துவந்தார்கள். நாளடைவில் தக்கார் குறைந்து, தகவிலர் மலிந்துவர யோகமும் பழுதுபட்டுப் போயிற்று.
நல்ல மனிதர் இல்லாத காலத்தில் நல்ல திட்டம் எதுவும் தலையெடுக்காது என்பது வெளியாயிற்று. நிழல் மனிதனைத் தொடர்ந்து வருவதுபோன்று நல்லாரைத் தொடர்ந்தே நல்ல திட்டம் வருகிறது. அதை பகவான் இங்ஙனம் நிரூபிக்கிறார்.
3. ஸ ஏவாயம் மயா தேऽத்ய யோக: ப்ரோக்த: புராதந:
பக்தோऽஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்
மே பக்த: ஸகா ச அஸி-என்னுடைய பக்தனும் நண்பனும் ஆவாய், இதி ஸ: ஏவ புராதந: அயம் யோக:-ஆகவே அதே பழமையான இந்த யோகத்தை, அத்ய மயா தே ப்ரோக்த:-இன்று என்னால் உனக்கு சொல்லப் பட்டது, ஹி எதத் உத்தமம் ரஹஸ்யம்-ஏனெனில் இந்த யோகம சிறந்தது ரகசியமானது.
பொருள் : அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன், நீ என் பக்தனும் தோழனுமென்பது கருதி. இது மிகவும் உயர்ந்த ரகசியம்.
இரஹஸ்யம் அல்லது மறை என்பது மற்றவர்களுக்குத் தெரியாது ஒளித்து வைப்பதாம். பலர் சுயநலம் கருதியே அதை வேறு யாருக்கும் தெரியாது மூடி வைக்கின்றனர். மனிதனை மேலோன் ஆக்குகின்ற இந்த யோகமானது அப்படி சுயநலம் கருதி மறைத்து வைக்கப்படுவதன்று. தகுதியில்லார்க்கு இது என்றைக்கும் மறைபொருள். ஏற்கனவே இயம்பியபடி காலாந்தரத்தில் இது மறைதற்குக் காரணம் இதைக் கையாளவல்ல மேன்மக்கள் இல்லாது போய்விடுவதேயாம். இன்று அதைப் பெற வல்லவனாய் நீ வந்துள்ளாய்; அந்த யோகமும் உன் பொருட்டு வெளிப்படுவதாயிற்று என்பது பகவானது கருத்து. ஒரு மனிதன் எதற்குத் தகுதியுடையவனாகத் தன்னைச் செய்து கொள்கிறானோ அதனை இயற்கை வலியக் கொண்டுவந்து அவனுக்குத் தக்க தருணத்தில் கொடுத்துதவுகிறது.
இங்கு அர்ஜுனனுக்கு இயல்பாக ஒரு சந்தேகம் வருகிறது:
அர்ஜுந உவாச
4. அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:
கதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், பவத: ஜந்ம அபரம்-உன் பிறப்பு பிந்தியது
விவஸ்வத: ஜந்ம பரம்-விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது, த்வம் ஆதௌ ப்ரோக்தவாந் இதி-நீ இதை ஆதியில் சொன்னவனென்று, ஏதத் கதம் விஜாநீயாம்-நான் தெரிந்துகொள்வதெப்படி?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்துகொள்வதெப்படி?
இக்காலத்தில் வசுதேவருக்குப் புதல்வராகப் பிறந்தவர் நீர். விவஸ்வானோ இச்சிருஷ்டித் துவக்கத்தில் தோன்றியவர். பல் காலம் முன் இருந்தவர்க்குப் பல்காலம் பின் வந்தவர் புகட்டுதல் எப்படிச் சாத்தியமாகும் என்பது கேள்வி.
ஸ்ரீபகவாநுவாச
5. பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பரந்தப அர்ஜுந-அர்ஜுனா, மே தவ ச-எனக்கும் உனக்கும், பஹூநி ஜந்மாநி வ்யதீதாநி-பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன,
தாநி ஸர்வாணி த்வம் ந வேத்த-அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய், அஹம் வேத-நான் அறிவேன்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.
அர்ஜுனனோ கர்ம பந்தத்துக்கு உட்பட்ட ஜீவன். ஆகையால் பழைய பிறவிகளைப் பற்றிய ஞாபகம் இல்லை. கிருஷ்ணன் அவதார புருஷன். ஈசுவரனே ஒரு வடிவத்தின் மூலம் தன்னை விளக்குவது அவதாரமாகும். அவர் நித்திய சுத்தனாக, முக்தனாக, பூரண ஞானமுடையவராக இருக்கிறார். ஆகையால் தாம் முன்பு எடுத்த எல்லா ஜன்மங்களும் அவருக்குத் தெரியும். வேறு ஒரு வடிவந்தாங்கியிருந்து விவஸ்வானுக்கு அன்று புகட்டினார். இன்று இவ்வடிவெடுத்து அர்ஜுனனுக்குப் புகட்டுகிறார்.
ஜீவர்கள் வினையில் கட்டுண்டு பிறவி எடுக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படுகிறது. பகவானோ நித்திய முக்தன். தர்மம் அதர்மம் ஆகிய வினையேதும் அவரிடத்து இல்லை. பின்பு அவர் பிறவி எடுப்பது எப்படி? விடை வருகிறது:
6. அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா
அஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி-பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும், பூதாநாம் ஈஸ்வர: அபி ஸந்-உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாய-யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று, ஆத்ம மாயயா ஸம்பவாமி-என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்.
பொருள் : ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.
ஜீவர்கள் பிரகிருதியில் கட்டுண்டு பிறக்கிறார்கள். ஈசுவரனுக்கு அடிமைத்தொழில் புரிகிறது பிரகிருதி. பிறவாத அவன் பிறப்பவனாகவும், வளர்பவனாகவும் தன்னைக் காட்டிக்கொள்ளுதல் தனக்கு அடிமைப்பட்டுள்ள மாயா சக்தியின் வல்லமையாலேயாம். அதனால் தனக்கு இல்லாத கர்மத்தை இருப்பதுபோன்று அவன் காட்டுகிறான். அந்தக் கர்மமானது வெறும் குருட்டு வாய்ப்பாக அமைந்தது அன்று. ஜன சமூகத்தின் தொகைவினை முழுதும் அவதார புருஷனது ஜீவிதத்தில் விளங்குகிறது. அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் சிறந்த கருத்து ஒன்று அடங்கப் பெற்றிருக்கும். மானுடர் முன்னேற்றம் அடைவதற்கான மார்க்கத்தையும் அவதார புருஷன் விளையாட்டுப் போன்று வினையாற்றிக் காட்டுகிறான். ஆக, தனக்கென்ற வினையில்லை. மக்கள் உய்வதற்கான நெறி அவதார புருஷனது வாழ்வில் உண்டு. இயற்கையில் ஒவ்வொன்றும் தோன்றுதற்கேற்ற காலமுண்டு. அவதார புருஷன் ஒருவன் தோன்றுதற்கு ஏற்ற காலம் உளதா? விடை வருகிறது :
7. யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத
அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்
பாரத யதா யதா-பாரதா, எப்போதெப்போது, தர்மஸ்ய க்லாநி-தர்மம் அழிந்துபோய், அதர்மஸ்ய அப்யுத்தாநம் பவதி-அதர்மம் எழுச்சி பெறுமோ, ததா ஹி ஆத்மாநம் ஸ்ருஜாம், யஹம்-அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.
பொருள் : பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.
சமூக முன்னேற்றத்திற்குத் துணைபுரியும் கர்மங்கள் தர்மங்களாகின்றன; தடையாயிருப்பவைகள் அதர்மங்களாகின்றன. அதர்மம் தலையெடுத்துப் பெருங் குழப்பங்களை உண்டுபண்ணும் நெருக்கடிகளிலெல்லாம் அவர் அவதரிக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்படி அவதரித்து வந்து அவர் என்ன செய்கிறார்?
8. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே
ஸாதூநாம் பரித்ராணாய-நல்லோரைக் காக்கவும், துஷ்க்ருதாம் விநாஸாய ச-தீயன செய்வோரை அழிக்கவும், தர்ம ஸம்ஸ்தாபநார்தாய-அறத்தை நிலை நிறுத்தவும், யுகே யுகே ஸம்பவாமி-நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.
பொருள் : நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.
களை யெடுத்தலும் நல்ல செடிகளுக்கு உரம் போடுதலும் சேர்ந்து அமைவது சிறந்த கிருஷியாகும். உலகில் கெட்டவர்களுடைய கூட்டம் பெருகிவிட்டால் அவர்களுக்கிடையில் தர்மம் தலையெடுக்காது. ஆகையால் யுத்தம், கொள்ளை நோய், பஞ்சம் இவைகள் வாயிலாக பகவான் அவர்களுக்குத் துன்பத்தை யூட்டுகிறார். துன்பம் ஒன்றே மக்களைச் சீர்திருத்துதற்கு உற்ற உபாயம். மரணத்தின் வாயிலாக அவர்களில் பெரும்பான்மையோரை ஒதுக்கித் தள்ளுதலும் அவசியமாகிறது.
மூன்று குணங்களில், ரஜோகுணமும், தமோகுணமும் அதிகரிக்கப் பெறுபவர்கள் அதர்மத்தில் ஈடுபடுகிறார்கள். ஆதலால் அவர்களுடைய தொகையைக் குறைத்தல் வேண்டும். சத்வ குணத்தில் இருப்பவர்களை ஓம்புதல் அடுத்தபடி நிகழ்கிறது. இங்ஙனம் மூன்று குணங்களுக்கிடையில் தாரதம்மியம் ஓரளவில் சமப்படுவதாகிறது. இதைத்தான் அவதார புருஷர் செய்து வைக்கிறார்.
மண்ணுலகில் கடவுளால் காப்பாற்றப்படுவது ஒன்றுதானா நல்லார் அடையும் பயன்? காக்கப்படுவதிலும் மேலான பயன் ஒன்றுண்டு. அதாவது :
9. ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந
அர்ஜுந!-அர்ஜுனா!  மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது, ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன், ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர், புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை,
மாம் ஏதி-என்னை எய்துகிறான்.
பொருள் : எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.
பிறவாத பரம்பொருள் பிறப்பவன் போன்று தனது மாயாசக்தியால் காட்டிக்கொள்கிறான். அங்ஙனமே கர்மத்துக்கு அதீதமான அவதார மூர்த்தி சத்கர்மங்கள் யாவையும் செய்து வருபவனாகத் தென்படுகிறான். இவ்வுண்மையை உள்ளபடி சுவானுபவத்தில் அறியும் ஆத்மசாதகர்கள் தாங்களும் அங்ஙனம் உலகில் வாழ்ந்து பிறவிப் பெருங்கடலை நீத்த வல்லவராகின்றனர்.
ஒரு தத்துவத்தை விசாரித்து அறிந்துகொள்ளுதல் மிகக் கஷ்டமானது. ஆனால் அதே தத்துவத்தை அவதார புருஷன் ஒருவன் தனது ஜீவிதத்தின் மூலம் விளக்குகிறான். மேலும் அவன் அருளுக்கு உறைவிடமாகிறான். அவனை நேரில் காண இயலாதவரும் அவனைப்பற்றி நினைக்க நினைக்க அவனது சொரூபத்தை அறிகிற பரிபாகம் அடைகின்றனர்.
இராமபிரான், ஸீதாதேவி, கிருஷ்ணன், ராதை இவர்கள் சரித்திரபூர்வமானவர்களல்ல என்றும், சும்மா உருவகப்படுத்திக் கூறப்பட்டவர்களே யென்றும், இதிஹாஸங்கள் வெறும் அத்யாத்மிக அர்த்தங்களை மட்டும் உடையன வென்றும் நினைக்காதே. அவர்கள் உன்னைப் போலவே ஊனும் உதிரமும் பெற்ற சரீரத்தை யுடையவர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் தெய்வீகம் வாய்ந்தவர்களாதலால் அவர்களுடைய வாழ்க்கைகளைச் சரித்திரபூர்வமாகவும் ஆத்மீக உண்மைகளை விளக்குவனவாகவும் கொள்ளலாம். ஸமுத்திரமும் அதன் அலைகளும் போல பிரம்மமும் அவதாரங்களுமாகும்.
திவ்விய குணங்களுடனும் திவ்விய சக்திகளுடனும் அவதார புருஷர்கள் மண்ணுலகில் அவதரிக்கிறார்கள். அவர்கள் தாழ்ந்ததிலிருந்து மிக உயர்ந்த எந்தச் சமாதி நிலையிலும் எளிதில் புகுவார்கள்; திரும்புவார்கள். அரசன் அரண்மனையில் அன்னியர் ஒரு குறிப்பிட்ட எல்லைவரைக்குந்தான் போகமுடியும். அரசனுடைய குழந்தையோ அரண்மனையின் எந்த மூலைக்குப் போய்வரலாம். அவதார புருஷர்களை அறிந்துகொள்வது அரிதான காரியமாகும். எல்லையற்ற அகண்ட வஸ்து எல்லைக்குட்பட்ட கண்டத்துள் அடங்கி இருப்பதற்கு ஒப்பாகும் அவர்களது வாழ்க்கை. ஸ்ரீ ராமபிரான் இவ்வுலகில் அவதரித்த து ஏழு ரிஷிகள் மாத்திரமே அவர் ஈசுவராவதார மென்பதைத் தெரிந்து கொண்டிருந்தனர். எனவே, இவ்வுலகில் எப்போது ஈசுவரன் வந்த போதிலும் சரியே, சிலர் மட்டுமே அவருடைய தெய்வீக சுபாவத்தைத் தெரிந்துகொள்வர்.
ஈசுவரன் அனந்தன்; ஸர்வ சக்திமான். அவன் அருள் மயமான தனது தெய்வீக சக்தியை மானிட சரீரத்தில் தோற்றுவித்து, நம்மிடையே ஓர் அவதார புருஷனாகத் தோன்றத் திருவுளங் கொள்ளலாம். ஈசுவராவதாரத்தினின்றும் அருள்வெள்ளம் பெருகிப் பக்தர்களை இன்புறுத்துகிறது. வார்த்தைகளால் இவ்விஷயத்தை விளக்க முடியாது. ஞானக்கண்ணால்தான் இந்த உண்மையைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும். இதை நம்பவேண்டுமானால், ஈசுவரனை அனுபூதியில் காணவேண்டும்.
என்ன சாதனம் செய்து ஞானியர் ஈசுவரனைத் தெரிந்து கொள்ள வல்லவர்களானார்கள்? விடை வருகிறது:
10. வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா:
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:
வீத ராக பய க்ரோதா- விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், மந்மயா:-என் மயமாய், மாம் உபாஸ்ரிதா:-என்னை அடைக்கலம் புகுந்து, பஹவ: ஜ்ஞாநதபஸா பூதா-ஞானத்தவத்தால் தூய்மை பெற்று, மத்பாவம் ஆகதா: பஹவ:-என்னியல்பு எய்தினோர் பலர்.
பொருள் : விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞானத்தவத்தால் தூய்மை பெற்று என்னியல்பு எய்தினோர் பலர்.
சேற்று நீரிலுள்ள அழுக்கை நீக்கினால் அது நல்ல நீரோடு கலப்பதற்குத் தகுதியுடையதாகிறது. மனதிலுள்ள ஆசை, அச்சம், சினம் என்ற அழுக்குகளை நீக்கினால் அது ஈசுவரமயமாய் அமைகிறது. பிறகு ஈசுவரனுடைய மகிமையை அது அறிய வல்லதாகிறது. அவன் பெருமையை அறிந்தபின் அவனிடத்து அடைக்கலம் புகுதல் எளிதாகிறது. தீயோடு தொடர்வு வைக்கின்ற இரும்பு தானே தீ மயமாகிறது. சர்வேசுவரனிடத்து ஐக்கிய புத்தி வலுக்க வலுக்க ஜீவனுக்குப் பரபோதம் மேலிடுகிறது. ஆகையால் இந்த ஞானத்துக்கு நிகரான தபசு இல்லை. ஜீவபோதம் அறவே நீங்கிப் பரபோதம் நிலைத்து விடுவதால் இது மனிதனைப் பரிசுத்தவான் ஆக்குகிறது. இங்ஙனம் முக்தியடைவது இன்று ஏற்பட்டதன்று. தொன்றுதொட்டு இது உலகில் நிலைத்துள்ளது.
ஈசுவரன் ஏன் எல்லார்க்கும் முக்தி யளிப்பதில்லை? விடை வருகிறது:
11. யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:
பார்த யே மாம் யதா ப்ரபத்யந்தே-பார்த்தா! யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ
தாந் அஹம், ததா ஏவ பஜாமி-அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன், மநுஷ்யா: ஸர்வஸ:-மனிதர் யாங்கணும், மம வர்த்ம அநுவர்தந்தே-என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
பொருள் : யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன். பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
இயற்கையின் அமைப்பில் உணவு வகைகள் பல இருக்கின்றன. சுவையிலும், குணத்திலும், தரத்திலும் அவைகளுள் பேதமும் உள. ஓர் உயிர்க்கு உணவாவது மற்றோர் உயிர்க்கு நஞ்சு ஆவதும் உண்டு. ஆனால் அந்தந்த உயிர் தான் ஏற்கும் உணவைச் சேமித்து ஜீரணம் பண்ணுகிறது; அவ்வுணவினின்று புஷ்டியும் பெறுகிறது. உடலை வளர்த்து ஓம்புதல் உணவின் பயன் ஆகும். அதே விதத்தில் உலகில் மதங்கள் பல இருக்கின்றன. அவைகளுள் ஒன்றோடு ஒன்று ஒவ்வாதவைகளும் உண்டு. விக்கிரஹ ஆராதனை மஹாபாபம் என்கிறது ஒரு மதம். தானே ஒரு விக்கிரஹமாக வாய்த்துள்ள மனிதன் மற்றொரு விக்கிரஹத்தின் வாயிலாகவே பரமனை வழுத்தியாக வேண்டும் என்கிறது மற்றொரு மதம். இன்னும் வழிபாடு வேற்றுமை மதங்களுள் உண்டு. ஒரு மதம் ஆராதனை என ஆமோதிப்பதை மற்றொரு மதம் அடாத செயல் என ஒதுக்குகிறது. இப்படி மதங்கள் வேறுபட்டிருப்பினும் அவை யாவுக்கும் ஆதிநாயகனாக ஈசன் இலங்குகிறான். மக்களின் இயல்பு வேறுபாட்டுக்கு ஒப்பமத வேறுபாடும் இருக்கிறது. யார் யார் எந்த எந்த மதத்தின் மூலம் எப்படியெப்படி இறைவனை வணங்குகின்றார்களோ அப்படியெல்லாம் அவர் மக்களுக்கு ஊக்கம் கொடுத்து, பக்தியை வளர்த்து அவர்கள் தம்மை வந்தடைவதற்கு வழிகாட்டித் தருகிறார். மதங்கள் அனைத்துக்கும் அவருடைய அனுக்கிரஹம் உண்டு. மதங்கள் பலப்பலவாக அமைந்திருப்பது மானுட இயல்புகளுக்குத் தேவையாம். அவரவர் மதத்தை மக்கள் ஆழ்ந்து அனுஷ்டிப்பதற்கிடையில் மதங்களுள் சமரசம் காண்பது முற்றிலும் அவசியமாகிறது. சமரசம் காண்பது இறைவனுடைய பெருந்திட்டத்தைப் போற்றுவதாகும்.
முக்தியை நாடுபவர்களுக்கு பகவான் முக்தியைக் கொடுக்கிறான். புத்தியை (போகத்தை) நாடுபவர்களுக்கு பகவான் போகத்தைக் கொடுக்கிறான். போகப் பொருள்களாய்ப் பரிணமித்திருப்பதும் பகவானே யாதலால் போகத்தை நாடுபவர்களும் தம் அறிவுக்கு எட்டியபடி பகவானையே நாடுகிறார்கள். இயற்கையோடு வைத்துள்ள வெவ்வேறு விதமான இணக்கத்துக்கு ஏற்றாற்போன்று பலவிதமான அனுபவங்கள் வாயிலாக எல்லா உயிர்களும் இறைவனையே இறுதியாக வந்தடைவதால் மார்க்கங்கள் யாவும் அவனை நோக்கிச் செல்பவைகளாகின்றன. ஈசுவரன் கற்பக விருக்ஷம் போன்றவன். கற்பக விருக்ஷத்தின் அடியில் இருந்துகொண்டு யார் எதை விரும்புகிறார்களோ அதை அடைகின்றனர்.
ஈசுவரனையே அடைய விரும்பாது சிறிய பொருள்களைப் பெற மக்கள் ஆசைப்படுவது ஏன்?
12. காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா
இஹ மாநுஷே லோகே-இந்த மனிதவுலகத்தில், கர்மணாம் ஸித்திம் காக்ஷந், த:-தொழில்களில் வெற்றியை விரும்புவோர், தேவதா: யஜந்தே-தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள், ஹி கர்மஜா ஸித்தி:-தொழிலினின்றும் வெற்றி, க்ஷிப்ரம் பவதி-விரைவில் விளைவதன்றோ!
பொருள் : தொழில்களில் வெற்றியை விரும்புவோர் இங்கு தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள். மனிதவுலகத்தில் தொழிலினின்றும் வெற்றி விரைவில் விளைவதன்றோ!
ஆத்ம ஞானத்தைவிட மிக எளிதில் அடையப்பெறுவது கர்மபலன். இம்மை என்றும் மனுஷ்யலோகம் என்றும் சொல்லப்படுவது இந்திரியங்களுக்குப் புலனாகும் இவ்வுலகம். அறிவிலிகள் எது விரைவில் அகப்படுகிறதோ அதில் பற்றுவைத்து அதையே நாடுகின்றனர். ஓர் அரசனோடு இணக்கம் வைப்பது அரிது எனினும் அவ்விணக்கம் எல்லா நன்மையையும் மேன்மையையும் பயக்கும். அரசனுடைய சிப்பந்திகளில் கீழ்நிலையில் இருப்பவர்களிடம் விரைவில் தொடர்வுகொள்ளலாம். ஆயினும் அவர்களிடமிருந்து அடையும் நன்மையும் மிக அற்பமானதேயாம். சர்வேசுவரனை ஆராதிப்பவர்கட்கு பக்தி, ஞானம், முக்தி முதலியன வரும். சிறு தெய்வங்களை வணங்குபவர்க்கு அதற்கேற்ற கர்மபலன் கிடைக்கிறது. மக்களுக்கிடையில் மனபரிபாகம் வேறுபடுகிறது. அதற்கு ஏற்ப அவர்கள் நாடுகின்ற நலனும் வெவ்வேறு வகைப்பட்டது.
அப்படியாயின் அவர்களது வகைகளை அறிவது எங்ஙனம்? விடை வருகிறது :
13. சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்
குண கர்ம விபாகஸ:-குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக சாதுர்வர்ண்யம், மயா ஸ்ருஷ்டம்-நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது, தஸ்ய கர்தாரம் அபி-நானே அவற்றை செய்தேன் என்றாலும், அவ்யயம் மாம்-அழிவற்றவனாகிய என்னை
அகர்தாரம், வித்தி-கர்த்தா அல்லேன் என்று உணர்.
பொருள் : குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.
குணபேதத்தால் சிருஷ்டி ஏற்படுகிறது. சத்வகுணம் நிறைந்திருக்கும் ஜீவன் பிராம்மணன். சத்வகுணமும் சிறிது ரஜோகுணமும் கூடியிருப்பவன் க்ஷத்திரியன். ரஜோகுணம் பெரும்பகுதியும் சிறிது தத்துவம், தமசு ஆகியவை கூடியிருப்பவன் வைசியன். தமோகுணம் பெரிதும் சிறிது ரஜோகுணமும் சேர்ந்திருப்பவன் சூத்திரன். சத்வத்தின் வர்ணம் வெண்மை. ரஜோகுணம் சிவப்பானது. தமோகுணம் கறுப்பு. பிராம்மணனுடைய நிறம் வெண்மை. க்ஷத்திரியன் செந்தாமரை போன்றவன். வைசியனுக்கு நிறம் மஞ்சள். சூத்திரன் கறுத்திருக்கிறான். இந்நிறங்கள் ஸ்தூல சரீரத்தில் தென்படுபவைகளல்ல. ஸ்தூல உடலில் ஐரோப்பியர் வெள்ளையர்; ஆனால் அவர்கள் எல்லோரும் பிராம்மண இயல்புடையவர் அல்லர். அமெரிக்க இந்தியர் சிவப்பு நிறம்; ஆயினும் அவர்கள் எல்லார்க்கும் க்ஷத்திரிய இயல்பு இல்லை. மங்கோலியர் மஞ்சள் நிறம். இராமன், கிருஷ்ணன் போன்ற இந்தியர் கறுப்பு நிறம். ஆக, ஸ்தூல சரீரத்தின் நிறம் மனிதனது இயல்பை விளக்காது.
பின்பு, நான்கு வருணத்தார் நிறம் அந்தக்கரணம் அல்லது மனதை ஒட்டியதாகும். உலகத்தவர் பழக்க வழக்கத்தில் கொண்டுள்ள நான்கு வருணங்கள் பிறப்பை ஒட்டியனவாகும். சமூக அமைப்பில் ஒழுங்குப்பாடு இருக்கும் போது அவை தத்துவ அமைப்போடு ஒருவாறு ஒத்திருக்கும். இன்றைக்கு சமூகத்தில் உள்ள நிலைமையில் பிறப்பை அனுசரித்து வருணத்தை நிர்ணயிப்பது சிறிதும் பொருந்தாது. அத்யாத்ம வித்தைக்கு ஏற்ப நான்கு வருணங்கள் மனபரிபாகத்தை ஒட்டியனவாம். அதன்படி நான்கு சகோதரர்களுக்கிடையில் மனபரிபாகத்துக்கு ஏற்ப ஒருவன் பிராம்மணனாகவும், இன்னொருவன் க்ஷத்திரியனாகவும், மற்றொருவன் வைசியனாகவும், வேறு ஒருவன் சூத்திரனாகவும் இருக்கமுடியும். வருணத்தில் மேல்நோக்கிப் போகப் போக பரவித்தையில் ஈடுபடுதல் அதிகரிக்கிறது. வருணத்தில் கீழே போகப் போக கர்ம பலனில் பற்று அதிகரிக்கிறது. பழுத்த பழத்தில் தோல், சதை, விதை முதலியன பாகுபாடு அடைகின்றன. பிஞ்சில் எல்லாம் ஒரே பாங்கில் இருக்கின்றன. வருணத்தில் மேலோனுக்கு ஆத்ம தத்துவம், பிரகிருதி தத்துவம் முதலியன விளங்குகின்றன. பரிபாகம் அடையாத கீழ் வருணத்தவனுக்குப் பரவித்தை விளங்காது. (நான்கு வருணத்தின் கர்மங்கள் 18வது அத்தியாயம் 42,43,44வது சுலோகங்களில் விளக்கப்படுகின்றன.
இயற்கையில் முக்குணத்தாலாகிய எல்லாப்பொருள்களிடத்தும் உயிர்களிடத்தும் நான்கு வருணங்கள் உண்டு. வாழ்க்கை முறையில் ஒரு வருணம் மற்றொரு வருணமாகப் பரிணமிப்பதும் சர்வ சாதாரணம்.
சமூகத்தார் தங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளும் வருண தர்மம் பாரமார்த்திக உண்மைக்கு ஒத்ததாயிருக்குமானால் அச்சமூகம் முன்னேற்றமடைகிறது. பாரமார்த்திக உண்மையினின்று அது பிறழுகின்றவளவு சமூகமும் சீர்கேடு அடையும். அப்போதைக்கப்போது தோன்றும் அவதார புருஷர்கள் வருண தர்மத்தை ஒழுங்குப்படுத்தி வைக்கின்றனர். பகவான் உலகத்தைச் சிருஷ்டித்த போதிலும் அவர் கர்த்தா அல்ல என்பதன் உட்பொருள் 9வது அத்தியாயம் 5-10 வது சுலோகங்களில் விளக்கப்படுகிறது.
பகவான் பிரகிருதியிலுள்ள கர்மங்களுக்கெல்லாம் கர்த்தா அல்லவாதலால் :
14. ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா
இதி மாம் யோऽபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே
மே கர்மபலே ந ஸ்ப்ருஹா-எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லைல, மாம் கர்மாணி ந லிம்பந்தி-என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை, ய: இதி மாம், அபிஜாநாதி-இங்ஙனம் என்னை யறிவோன், ஸ: கர்மபி: ந பத்யதே-கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.
பொருள் : என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை. இங்ஙனம் என்னை யறிவோன் கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.
அகங்காரம் உடையவர்களிடத்துக் கர்மம் மனோவிகாரத்தை உண்டுபண்ணுகிறது. பகவானிடத்தோ அகங்காரம் சிறிதேனும் இல்லை. ஆகையால் கர்மங்களால் தீண்டப் பெறாதவராக அவர் இருக்கிறார். அடையாத ஒன்றை அடைய விரும்புதல் ஆசையாகும். பகவானோ பரிபூரணர். அனைத்தையும் தம்மகத்து அடக்கிக்கொண்டு அவைகளுக்கு அப்பாலும் அவர் இருக்கிறார். ஆதலால் அவர் ஆசைப்படுவதற்கு ஒன்றுமில்லை. பகவானது சொரூபத்தை அறிபவர் தாமும் அகங்காரமற்று ஆசையற்றிருப்பார்கள். எக்கருமமும் அவர்களைக் கட்டுப்படுத்தமாட்டாது. அவர்கள் மேன்மையை அறிந்ததன் அறிகுறி தாமும் மேன்மையில் நிலைபெற்றிருத்தலாம்.
பரமாத்மா நிர்விகாரி என்று அறிந்தவர்கள் தத்தம் கர்மங்களையே ஒழித்துவிட்டார்கள். அதைப்பற்றி பகவான் பகர்வதாவது :
15. ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷúபி:
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம்
பூர்வை: முமுக்ஷúபி: அபி-முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும், ஏவம் ஜ்ஞாத்வா-இதையுணர்ந்து, கர்ம க்ருதம்-தொழிலே செய்தனர், தஸ்மாத் த்வம்-அதனால் நீயும், பூர்வை: பூர்வதரம் க்ருதம்-முன்னோர்கள் முன்பு செய்தபடி, கர்ம ஏவ குரு-தொழிலையே செய்யக் கடவாய்.
பொருள் : முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும் இதையுணர்ந்து தொழிலே செய்தனர். ஆதலால், முன்னோர்கள் முன்பு செய்தபடி, நீயும் தொழிலையே செய்யக் கடவாய்.
விவேகமுடைய தேகியானவன் அகங்காரத்தையும் ஆசையையும் விட்டுவிடுகிறானே யொழிய அவன் கர்மத்தையே விட்டு விடுவதில்லை. முக்தியை நாடியவர்கள் எல்லோரும் தொன்று தொட்டு இம்முறையைத்தான் கையாண்டார்கள். அர்ஜுனனுக்காகவென்று இது புதிதாக வந்த ஏற்பாடு அல்ல.
அப்படியானால் அர்ஜுனனுக்கு இதைப்பற்றி மனக் குழப்பம் ஏன் உண்டாயிற்று? அதில் ஆச்சரியம் இல்லை ஏனென்றால் :
16. கிம் கர்ம கிமகர்மேதி கவயோऽப்யத்ர மோஹிதா:
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸுபாத்
கிம் கர்ம கிம அகர்ம இதி-எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில், கவய: அபி அத்ர மோஹிதா:-ஞானிகளும் இங்கே மயக்கமெய்துகிறார்கள், யத் ஜ்ஞாத்வா-எதை தெரிந்து கொள்வதால், அஸுபாத் மோக்ஷ்யஸே-தீங்கினின்றும் விடுபடுவாய்,
தத் கர்ம தே ப்ரவக்ஷ்யாமி-அந்த கர்மத்தின் தத்துவத்தை உனக்கு சொல்லப் போகிறேன்.
பொருள் : எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில் ஞானிகளும் மயக்கமெய்துகிறார்கள். ஆதலால் உனக்குத் தொழிலினியல்பை உணர்த்துகிறேன். இதை அறிவதனால் தீங்கினின்றும் விடுபடுவாய்.
அசுபங்களிலெல்லாம் மிகப் பெரியது பிறவிப் பிணி என்பது. தொலையாத இத்தொல்லையைத் தொலைப்பதற்கு வினையின் கூறு முழுதும் விளக்கப்பெறல் வேண்டும். உடலைக்கொண்டு ஓயாது வேலை வாங்குவதுதானே கர்மம் என்று அவசரப்பட்டு முடிவு கட்டிவிட வேண்டாம்.
17. கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:
அகர்மணஸ்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி:
கர்மண: அபி-தொழிலின் இயல்பும், போத்தவ்யம்-தெரிய வேண்டும், அகர்மண: ச போத்தவ்யம்-தொழிற் கேட்டின் இயல்பும் தெரிய வேண்டும், விகர்மண: ச போத்தவ்யம்-தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும், ஹி கர்மண: கதி: கஹநா-ஏனெனில் கர்மத்தின் போக்கு ஆழமானது.
பொருள் : தொழிலின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிற் கேட்டின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்; கர்மத்தின் நடை மிகவும் சூழ்ந்தது.
இன்னதைச் செய் என்று சாஸ்திரம் விதித்துள்ளது கர்மம். இன்னதைச் செய்யாதே என்று சாஸ்திரம் விலக்கியிருப்பது விகர்மம். (விகர்மம் இங்கு இந்த அத்தியாயத்தில் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அது 16வது 17வது அத்தியாயங்களில் ஆராயப்படுகிறது)
கர்மம் அகர்மம் ஆகிய இரண்டின் இயல்புகளாவன:
18. கர்மண்யகர்ம ய: பஸ்யேதகர்மணி ச கர்ம ய:
ஸ புத்திமாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்
கர்மணி அகர்ம-செய்கையில் செயலின்மையும், ச அகர்மணி கர்ம-செயலின்மையில் செய்கையும், ய: பஸ்யேத்-எவன் காணுகிறானோ, ஸ மநுஷ்யேஷு புத்திமாந்-அவனே மனிதரில் அறிவுடையோன், ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்-அந்த யோகி அனைத்துக் கர்மங்களையும் செய்கிறவன் (ஆகிறான்).
பொருள் : செய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ, அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்.
1. கர்மம் பிரகிருதியின் இயல்பாகும்; அகர்மம் ஆத்ம சொரூபம். அவிவேகிகள் இரண்டுக்குமிடையில் வித்தியாசம் தெரியாது குழப்பமடைகின்றனர். ரயில்வண்டி ஓடுகிறது. அதில் ஊர்ந்து செல்லும் பிரயாணி யொருவன் நிலத்தில் நிற்கும் மரங்கள் தன்னை எதிர்த்து ஓடுவதாகக் காண்கிறான். செயல் இல்லாத ஒன்றில் ஓடுதல் என்னும் செயல் காணப்படுகிறது. இங்கு அக்ஞானத்தால் அகர்மத்தில் கர்மம் காணப்படுகிறது. கடலில் தூரத்தில் ஓடும் கப்பல் கரையிலிருந்து பார்ப்பவனுக்கு அசையாது நிற்பது போன்று தென்படுகிறது. வானத்தில் சஞ்சரிக்கும் சந்திரனும் அப்படியே காட்சி கொடுக்கிறது. ஈண்டு அக்ஞானத்தால் கர்மம் அகர்மமாக விளங்குகிறது. ஆக, இயற்கையில் எப்பொழுதுமே கர்மம் கர்மமாகவும், அகர்மம் அகர்மமாகவும் பொருள்படுகின்றன என்று சொல்லமுடியாது. மயக்கத்தால் ஒன்றின் இயல்பு மற்றொன்றின்மீது சுமத்தப்படுகிறது. அக்ஞானியானவன் தேகத்தைத் தான் என்று வைத்துக்கொள்கிறான். நான் இப்பொழுது வேலை செய்கிறேன். நான் இப்பொழுது இளைப்பாறுகிறேன் என்று பிரகிருதியின் செயலை ஆத்மாவின்மீது ஆரோபிக்கிறான். இத்தகையவன் ஒரு செயலும் புரியாது சும்மா உட்கார்ந்திருந்தாலும் அகங்காரமும் கர்த்ருத்வமும் அவனிடம் இருக்குமளவு அவன் கர்மம் செய்பவனே ஆகிறான். இந்த அக்ஞான நிலை அகர்மத்தில் கர்மம் என்பதாகும். ஆத்ம சொரூபத்தை அறிந்த ஞானிக்கு அகங்காரமில்லை. அவனது உடல் ஓயாது வேலை செய்தாலும் ஆத்மா சாக்ஷியாயிருக்கிறது. ஒரு கர்மத்தோடும் அது சம்பந்தப்பட்டதல்ல. ரயில் வண்டியில் தூங்கிக்கொண்டு போனவன் நடந்தவனுமல்லன், தூக்கங்கெட்டவனுமல்லன். உடல் செய்யும் கர்மமெல்லாம் ஆத்மாவைச் சேர்வதில்லை. கர்மத்தில் அகர்மம் என்ற பெரு நிலையாகும் இது. ஞானியர்க்கும் நல்ல விவேகமுடையவர்க்குமே இது சாத்யம்.
2. கர்மம்=சரீரம் முதலானவைகளைக் கொண்டு. நடை பெறும் தொழில் யாவும். அகர்மம்=ஞானம்.
ஒரு மனிதன் முறையாக உணவைச் சமைத்துக்கொண்டே வருகிறான். சமைத்தல் என்னும் கர்மம் அவனிடம் நடைபெறுகிறது. அது நாளடைவில் நன்றாய்ச் சமைத்தல் என்ற ஞானத்தில் கொண்டு சேர்க்கிறது. ஆக கர்மத்தில் அகர்மத்தைக் காணுதல் என்பது செவ்வையாகக் கர்மம் செய்பவர்க்கு ஞானம் உண்டாகிறது என்பது அனுபவபூர்வமாகக் காணப்படுகிறது. சமைத்தலைப்பற்றிய ஞானம் வந்த பிறகு அச்சமையல் தொழில் இன்னும் திறமையுடன் செய்யப்படுகிறது. இஃது அகர்மத்தில் கர்மத்தைக் காணுதல் எனப்பொருள்படுகிறது. இங்ஙனம் கர்மம் ஞானவளர்ச்சிக்குத் துணைபுரிகிறது; ஞானவளர்ச்சி திறமையுடன் தொழில்புரிதலைத் தோற்றுவிக்கிறது. நல்வாழ்க்கை என்னும் கர்மம் ஆத்ம ஞானத்தை உண்டுபண்ணுகிறது. ஆத்ம ஞானம் அடைந்தவர் வாழ்க்கையை மிக மேலானதாகச் செப்பனிட்டு வாழ்கின்றனர்.
3. கர்மம்=ஜீவர்களால் செய்யப்படும் தொழில். அகர்மம்=(அ=விஷ்ணு) விஷ்ணுவின் கர்மம்.
ஜீவன் செய்கிற கர்மங்களுக்குத் தானே கர்த்தாவென்று அவன் எண்ணுகிறான். உண்மையில் அந்தக் கர்மங்கள் யாவும் விஷ்ணுவினுடையவைகளேயாம். தான் கர்த்தா என்ற எண்ணத்தையும் அகங்காரத்தையும் அகற்றி, தன் மூலம் நடைபெறுகிற கர்மங்களெல்லாம் பகவானுடையவைகள் என்ற எண்ணத்தில் நிலைத்திருப்பவன் கர்மத்தில் அகர்மத்தைக் காண்பவனாகிறான். சொப்பனத்தில் ஒரு ஜீவன் செய்யும் கர்மத்துக்கு அவன் கர்த்தாவல்லன். அங்கு நடைபெறுகிற கர்மங்களும் உண்மையில் விஷ்ணுவினுடையவைகளாம். சொப்பனத்தில் தான் கர்த்தா அல்லாத நிலையில் ஜீவன் அகர்மத்தில் இருக்கிறான். அப்பொழுதும் விஷ்ணுவினுடைய கர்மம் நடைபெறுகிறதென்று உணர்பவன் அகர்மத்தில் கர்மத்தைக் காண்கிறான். மனிதன் தன்னுடைய கர்மம் என்று எண்ணிச் செய்வதும், அகங்காரமில்லாது செய்வதும் ஆகிய எல்லாக் கர்மங்களும் உண்மையில் விஷ்ணுவினுடைய கர்மங்களாகின்றன. இதை அறிந்துகொள்பவனே புத்திமான்.
4. ஜீவனைப் பந்தப்படுத்துவது கர்மத்தின் இயல்பு. அகங்கார மமகாரமற்றுக் கர்மத்தை ஈசுவரார்ப்பணமாகச் செய்தால் அத்தகைய கர்மம் மனிதனைப் பந்தப்படுத்துவதில்லை. நிஷ்காமியமாகச் செய்யும் கர்மம் பழைய பந்தங்களையும் நீக்குகிறது. ஆக, கர்மத்தில் அகர்மத்தைக் காணுதல் என்பது பந்தத்தை உண்டு பண்ணுகிற கர்மத்தைக் கட்டவிழ்க்கும் கர்மமாக மாற்றுதல் என்று பொருள்படுகிறது. சோம்பலால் அல்லது அறிவின்மையினால் ஒருவன் நல்வினையொன்றும் செய்யாதிருப்பானாகில் அதனால் அவனுக்குக் கேடு விளைகிறது. கர்ம பந்தமும் அவனுக்கு அதிகரிக்கிறது. நல்வினையைச் செய்யாதொழித்தல் அகர்மமாகிறது. அதனால் விளையும் கேடு கர்மமெனப்படுகிறது. இங்ஙனம் அகர்மத்தில் கர்மத்தைக் காணுதல் விவேகியினுடைய செயலாகிறது.
5. சந்தடி நிறைந்துள்ள சமூக வாழ்க்கை, நிசப்தமான ஏகாந்த வாழ்க்கை ஆகிய இரண்டிலும் மனது பண்பட்டிருக்க வேண்டும்.
கர்மத்தில் அகர்மம்=யுத்தம் புரிதலும் அதற்கு ஒப்பானதுமாகிய பல்வேறு அலுவல்களுக்கிடையே மனது ஒரே சாந்த சொரூபமாயிருத்தலாம். அகர்மத்தில் கர்மம்=வெளிப்பார்வைக்கு வினையாற்றுதல் என்பது ஒன்றுமில்லாமல் ஏகாந்தமாக ஒரு குகையில் அமர்ந்திருக்கையில் மனது தைலதாரை போன்று இடையறாது ஈசுவரனே நாடிச் செல்லுதல் என்ற சிறந்த கர்மத்தைச் செய்தலாம்.
ஒரு சார்பாகப் பண்பட்ட மனது அரைகுறையானது. சிலர் ஏகாந்த வாசத்தில் நன்கு பயிற்சியடைந்திருக்கின்றனர். அத்தகையவர் சமூகக் குழப்பத்துக்கிடையில் வந்தால் தடுமாற்றமடைகின்றனர். இன்னும் சிலர் சர்வகாலமும் ஜனக்கூட்டத்துக்கிடையில் வாழ்ந்து வருகின்றனர். சிறிது நேரமாவது தனியாயிருக்க இவர்களுக்கு இயலுவதில்லை. இவர்களை ஏகாந்த வாசத்தில் வைத்தால் விரைவில் பைத்தியம் பிடித்துவிடும். தனியாக வசித்திருக்கமட்டும் தெரிந்துகொண்டவர், சமூகத்தைச் சார்ந்திருத்தலை மாத்திரம் தெரிந்துகொண்டவர் ஆகிய இவ்விருதிறத்தாரும் அரைகுறையான பயிற்சி பெற்றவர்களே. ஏகாந்தத்தில் ஈசுவர சிந்தனை என்ற சிறந்த செயல் நடைபெறுகிறது. சமூகச் சந்தடிக் கிடையில் சாந்தமே சித்தமிசை குடிகொள்கிறது. இப்படி இருவித இயல்பிலும் பயிற்சி பெற்றவரே நிறைமனிதர் ஆகின்றனர்.
6. ஸ்ரீ கிருஷ்ணனும் அர்ஜுனனும் அமர்க்களத்துக்கு வருகிறார்கள். பகவான் தேர் ஓட்டுகிறார். பார்த்தன் போருக்கு ஆயத்தமாக வருகிறான். யாரை எதிர்த்து எத்தகைய கடும் போர் புரிந்தாகவேண்டும் என்ற எதார்த்தம் இப்பொழுதுதான் அர்ஜுனனுக்குத் திடீரென்று விளங்குகிறது. எட்ட எறிகிறான் அம்பையும் வில்லையும். வேண்டாம் இவ்வெம்போர் என்று விளம்புகிறான். செயலற்றுச் சும்மா உட்கார்ந்துவிடுகிறான்.
ஒன்றோடொன்று ஒவ்வாத இரண்டுவிதக் காட்சிகளை இப்பொழுது பகவானும் பார்த்தனும் தருகிறார்கள். கர்மத்தில் அகர்மத்துக்கு விளக்கமாக வந்தமைகிறது பகவானது பெற்றி. தேர் கடவும் கடமை அவருடையது. அதில் பூட்டியுள்ள வேகம் வாய்ந்த வெண்குதிரைகள் நான்கையும் இடது கையில் அவர் கெட்டியாகக் கயிற்றால் பிடித்துக்கொண்டிருக்கிறார். கீதோபதேசம் செய்தவன் புறச்சின்னமாக வலது கையில் அவர் சின்முத்திரை தாங்கியிருக்கிறார். கைகள் இரண்டும் இப்படிச் செயலில் ஈடுபட்டிருக்கையில் முகவிலாசம் மற்றொரு காட்சி தருகிறது. அங்குச் சாந்தி தவழ்கிறது. மனம் மலைபோன்று அசையாதிருக்கிறது என்று அது விளக்குகிறது. கர்மம் பிரகிருதியோடு சேர்ந்தது. புருஷன் கர்மம் செய்வதில்லை என்ற பேருண்மையை ஸ்ரீ கிருஷ்ணன் என்ற பெயர்பூண்டுள்ள மூர்த்தியானவர் விளக்குகிறார். விரைந்து வினையாற்றுதற்கிடையில் விச்ராந்தி-கர்மத்தில் அகர்மம் என்ற கோட்பாட்டுக்கு அவரே சான்றாகின்றார்.
இனி, அர்ஜுனன் அம்பையும் வில்லையும் எறிந்துவிட்டுச் செயலற்றிருப்பவனாகத் தென்படுகிறான். பெயரளவில் வினையைத் துறந்துவிட்டான். அவனுக்கு மனதுக்குள் ஒரே குழப்பம். அச்சம் ஒருபுறம் அவனை அல்லற்படுத்துகிறது. மற்றொருபுறம் துன்பம் தேகத்தைத் துளைக்கிறது. அகத்தின் நிலைகுலைவு அவன் முகத்தில் மிளிர்கிறது. கர்மத்தைத் துறந்தவனாகத் தென்படுபவன் கர்மத்தில் காய்கிறான். அவனது நிலை அகர்மத்தில் கர்மமாகும்.
உலக வாழ்க்கையை யோகி ஒருவன் எங்ஙனம் நடாத்த வேண்டும் என்று யோகேசுவரனாகிற கிருஷ்ணன் தாமே நடாத்திக் காட்டுகிறார். முறை தெரியாது மனிதன் ஏமாற்றம் அடைந்து விடலாகாது என்பதற்கு அர்ஜுனனுடைய கீழ்நிலையே எடுத்துக்காட்டாகும். எல்லாப் பாஷ்யங்களினுடைய உட்கருத்தும் இவ்விருவர் தரும் காட்சியில் அடங்கப்பெற்றிருக்கின்றன. இவைகளைத் துருவி ஆராய்பவன் புத்திமானாகிறான்; அவன் சிறந்த யோகியாவான். முக்தி ஈறாக இகபர மிரண்டையும் பெறவல்லவனும் அவனே.
ஸ்ரீராமகிருஷ்ணர் வெளித்தோற்றத்தில் அகர்மத்தில் இருந்தார். உள்ளே கடவுள் நாட்டம் என்ற பெரிய கர்மம் நடை பெற்றது. விவேகானந்தர் லோகஹிதம் என்ற பெரிய கர்மத்துக்கிடையில் உள்ளே ஆத்ம சொரூபம் என்ற அகர்மத்தில் நிலைத்திருந்தார். தூணைப் பிடித்துக்கொண்டிருக்கும் பாலன், கீழே விழுந்து விடுவோம் என்ற பயம் கொஞ்சமுமில்லாமல், கன வேகத்துடன் அதைச் சுற்றிச் சுற்றி வருகிறான். அதுபோலவே, ஈசுவரனிடம் மனத்தைத் திடமாக நிறுத்திவிட்டு, நீ உனது காரியங்களைச் செய். அப்போது உனக்கு அபாயங்களே நேரமாட்டா.
19. யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்பவர்ஜிதா:
ஜ்ஞாநாக்நிதக்தகர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா:
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா:-எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம், காம ஸங்கல்ப வர்ஜிதா:-விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம்-எவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவோ, தம் புதா:-அவனை ஞானிகள், பண்டிதம் ஆஹு:-அறிவுடையோன் என்கிறார்கள்.
பொருள் : எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள்.
கயிறு ஒன்று கட்டுதற்கு உதவுகிறது. அக்கயிறு வெந்து பஸ்மமான பிறகு பழைய வடிவத்தை உடைத்திருக்கிறது. எனினும் அது கட்டுதற்கு உதவாது. கர்மமானது ஆசையினால் தூண்டப் பெற்றதாயிருக்கும்பொழுதும், அது சங்கற்பத்தில் தோய்ந்திருக்கும்பொழுதும் மனிதனைப் பிணிக்கவல்லதாகிறது. சர்வேசுவரனது அருளால் வந்த கர்மங்கள் சர்வேசுவரன் என்ற அக்கினியில் ஆகுதியாக அர்ப்பிக்கப்பட்டுள்ளன என்ற எண்ணத்துடன், கர்மம் செய்கிறவனுக்கு அகங்காரம் இல்லை. தான் கர்த்தா என்ற எண்ணமும் இல்லை; ஆகையால் அவன் ஓயாது வினையாற்றினாலும் வினை என்னும் தளையில் பிணிக்கப்பட்டவன் அல்லன். அவனைப் பேரறிஞன் என்று ஞானிகள் பகர்கின்றனர். கர்மத்துக்கிடையில் அகர்மம் அவன்பால் எங்ஙனம் நிலைபெறுகிறது எனின் :
20. த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராஸ்ரய:
கர்மண்யபிப்ரவ்ருத்தோऽபி நைவ கிஞ்சித்கரோதி ஸ:
கர்ம பலா ஸங்கம் த்யக்த்வா-கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாக, நித்யத்ருப்த: நிராஸ்ரய:-திருப்தியுடையோனாக சார்பற்று நிற்போனாக, ஸ: கர்மணி அபிப்ரவ்ருத்த: அபி-அவன் கர்மத்தில் நன்கு ஈடுபட்டிருந்தாலும் கூட, கிஞ்சித் ஏவ ந கரோதி-சிறிது கூட செய்வதே இல்லை (செயலற்றவனாவான்).
பொருள் : கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாய் எப்போதும் திருப்தியுடையோனாய் எதனிலும் சார்பற்று நிற்போன் செய்கை செய்து கொண்டிருக்கையிலும் செயலற்றவனாவான்.
அகர்மம் எது என்பதைப் புறத்தே தென்படும் செயலற்ற காட்சி விளக்காது. அகத்தில் உள்ள மனநிலை ஒன்றே அகர்மத்துக்கு விளக்கமாகும். தபால்காரன் ஒருவன் பணம்கொண்டு வந்து செலுத்தி ஒருவரை மகிழ்வூட்டுகிறான்; நற்செய்தி அடங்கப்பெற்ற கடிதம் கொடுத்து இன்பம் விளைவிக்கிறான். மற்றொருவர்க்கு இழவு செய்தி கொண்ட கடிதம் கொடுத்துத் துன்பம் விளைவிக்கிறான். இப்படி இன்ப துன்பங்களை வழங்கும் வினைகளில் அவன் பற்றுடையவன் அல்லன். இங்ஙனம் யோகி ஒருவன் தன் அலுவல்களெல்லாம் சர்வேசுவரனது ஆராதனையென்று கருதி ஆசையைத் துறந்து அவைகளை நன்கு செய்து முடிக்கிறான். பற்று இன்மையினால் அவன் நித்திய திருப்பதனாகிறான். கர்ம பலனில் ஆசையில்லாது தன் கடமையைச் செய்பவர்க்கு அரசன் முதல் ஆண்டிவரையில் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய மன நிலையுடையவன் கர்மத்துக்கிடையில் அகர்மத்தில் நிலைத்திருப்பவன் ஆகிறான்.
ஆத்ம ஞானத்துக்கு ஞான சாதனைகள் மிகவும் அவசியம். ஆனால் விசுவாசம் பூரணமாக இருந்தால், கொஞ்சம் அப்பியாசமே போதுமானதாக இருக்கும்.
ஒரு சமயத்தில் வியாஸர் யமுனை நதியைக் கடந்துபோக இருந்தார். அதே தருணத்தில் கோபிகாஸ்திரீகளும் அங்கு வந்தனர். ஆனால் ஓடக்காரன் ஒருவனுமில்லை. ஆதலால் அவர்கள் வியாஸரை நோக்கி, சுவாமி! இப்போது என்ன செய்கிறது! என்று கேட்டனர். அதற்கு வியாஸர், விசாரப்படவேண்டாம். நான் உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றேன். ஆனால், எனக்குப் பசியாக இருக்கிறது. உங்களிடம் ஏதாவது தின்பண்டம் இருக்கிறதா? என்றார். கோபிகாஸ்திரீகள் தாங்கள் வைத்திருந்த பால், ஏடு, வெண்ணெய் எல்லாவற்றையும் கொடுக்க, வியாஸர் அவைகளை வாங்கிப் புசித்தார். பிறகு கோபிகள், ஆற்றைக் கடப்பது எப்படி? என்று கேட்க, வியாஸர் ஆற்றங்கரையில் நின்றுகொண்டு, யமுனாதேவீ! நான் இன்று உபவாஸமிருப்பது மெய்யானால் நீ எங்களுக்கு வழிவிடவேண்டும்; நாங்கள் ஆற்றைக் கடந்து அக்கரை போய்ச் சேருகிறோம் என்று பிரார்த்தித்தார். அப்படிப் பிரார்த்தித்தவுடன் யமுனை நதியின் ஜலத்தில் ஒரு பிளவு உண்டாயிற்று; தரை தெரிந்தது. கோபிகளுக்கு அதியாச்சரியமுண்டாயிற்று. அவர்கள் கொடுத்த பால் முதலியவற்றை வியாஸர் வாங்கிப் புசித்திருக்க அவர் இன்று உபவாஸமிருப்பது மெய்யானால் என எப்படிச் சொல்லக்கூடும் என்று அவர்கள் நினைத்தனர். அந்தப் பண்டங்களைப் புசித்தது அந்தர்யாமியான ஈசுவரனே தவிர வியாஸரல்லர். இந்த விஷயத்தில் வியாஸருக்கு இருந்த விசுவாசத்தின் பலத்தினால் அவர் அப்படிச் சபதம் பண்ணினார் என்பதைக் கோபிகா ஸ்திரீகள் தெரிந்து கொள்ளவில்லை.
யோகியின் மனநிலை மேலும் விளக்கப்படுகிறது :
21. நிராஸீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹ:
ஸாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்
யதசித்தாத்மா-சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, த்யக்த ஸர்வ பரிக்ரஹ:-எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து, நிராஸீ-ஆசையற்றவனாய், கேவலம் ஸாரீரம் கர்ம குர்வந்-வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருந்தாலும், கில்பிஷம் ந ஆப்நோதி-பாவத்தையடைய மாட்டான்.
பொருள் : ஆசையற்றவனாய், சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து, வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருப்போன் பாவத்தையடைய மாட்டான்.
ஆத்ம வளர்ச்சிக்குத் தடையாக பந்தத்தை உண்டுபண்ணும் கர்மம் பாபமெனப்படுகிறது. எந்த யோகிக்குப் பாபமில்லை? ஆசையை அறவே அகற்றியவனுக்குப் பாபமில்லை. ஆசை என்னும் வேகம் கெடுமிடத்து அந்தக்கரணம், பாகியகரணம், உடல்  ஆகிய யாவும் ஒழுங்காக வினையாற்றுகின்றன. காற்றை எம் மனிதனும் தனக்காகவென்று அலாதியாக எடுத்து வைத்துக் கொள்வதில்லை. அங்ஙனம் யோகி எப்பொருளையும் அலாதியாகத் தனக்காகவென்று தேடியோ அல்லது தானமாக வாங்கியோ வைத்துக்கொள்வதில்லை. ஒரு பொருளுக்கும் உரிமை பாராட்டாதிருப்பது அபரிக்கிரஹம் எனப்படும். உடலுக்கு வலிவு இருக்குமளவு அதைக்கொண்டு உழைக்கலாம். வேண்டியவளவு ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். உழைப்புக்கென்றே ஏற்பட்ட உடல் வீணாய்க்கிடந்து கெட்டுப்போகவிடலாகாது. தேகம் தொழில் புரிகையில் மனத்துக்கண் நான் கர்த்தா என்ற விகாரம் ஏதேனும் ஏற்படலாகாது. ஸ்ரீ கிருஷ்ணபகவானும் மற்ற அவதார புருஷர்களும் உடல் தாங்கியிருந்த பாங்கே இதற்குச் சான்றாகும்.
பொருள்களினிடத்து உரிமை பாராட்டாதவனுக்கு உடல் வாழ்க்கை எங்ஙனம் நடைபெறும் என்ற கேள்வி பிறக்கிறது. அதற்கு விடை வருகிறது :
22. யத்ருச்சாலாபஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே
யத்ருச்சா லாப ஸந்துஷ்ட-தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாக, விமத்ஸர:-பொறாமையற்றவனாக, த்வந்த்வ அதீத:-இருமைகளைக் கடந்தவனாக, ஸித்தௌ அஸித்தௌ ச ஸம:-வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான், க்ருத்வாபி ந நிபத்யதே-தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.
பொருள் : தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாகி, இருமைகளைக் கடந்து, பொறாமையற்றவனாய் – வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான் தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.
தான் முயற்சி யெடுத்துக்கொண்டாலொழியத் தனக்குப் பொருள் வந்து கைகூடாது என்று எண்ணுபவன் தன் கர்மத்துக்குக் கர்த்தாவாகிறான். இவ்வெண்ணம் அக்ஞானத்தினின்று உதிப்பதாகும். தனது உடலின் தேவைகளைப்பற்றி எண்ணாதிருக்குமளவு ஒருவன் ஆத்மசாதனத்துக்குத் தகுதியுடையவனாகிறான். அவன் தேவைகளைக் கவனித்துக் கொள்வது ஈசுவரனுடைய பொறுப்பாகிறது. ஈசுவரப் பிரீதியாக எது வந்து அமைகிறதோ அதைக்கொண்டு சாதகன் திருப்தியடைகிறான். குளிர் வெப்பம், வெற்றி தோல்வி இவைபோன்ற இருமைகளில் எது வந்து வாய்த்தாலும் அது ஈசுவரப் பிரசாதம் என்றே சாதகன் நினைக்கிறான். அந்நினைவால் அவன் இருமைகளை வென்றவனாகிறான். மற்றவர்களுக்குக் கிடைக்கும் லாபம் லௌகிகன் ஒருவன் உள்ளத்தில் பொறாமைக்கு இடம் கொடுக்கிறது. சாதகன் ஒருவனோ அது முற்றும் இறைவனது ஆணையென்று கருதி மகிழ்வடைகிறான். ஈசுவர கிருபையால் எல்லாம் நடை பெறுகிறது என்று அவன் முயற்சியற்றிருப்பதில்லை. தான் செய்ய வேண்டிய முயற்சிகளையெல்லாம் செய்துகொண்டேயிருக்கிறான். அம்முயற்சியால் வரும் வெற்றியும் தோல்வியும் தனதல்லவென்று அவன் நடுவு நிற்கிறான். இத்தகைய பான்மையுடையவனுக்குக் கர்மபந்தம் ஒன்றும் கிடையாது.
23. கதஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:
யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே
கதஸங்கஸ்ய-உலகப் பற்றை ஒழித்து, முக்தஸ்ய-உடற்பற்று மமதை ஆகியவற்றை ஒழித்து
ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:-ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றவன், யஜ்ஞாய ஆசரத:-வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான், ஸமக்ரம் கர்ம ப்ரவிலீயதே-கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது.
பொருள் : பற்றுதலகன்றான், விடுதலை கொண்டான், ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றான், வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான் அவனுடைய கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது.
பந்தமும் முக்தியும் மனதைப் பொறுத்தனவாம். பகவத் பிரீதியின் பொருட்டுக் கர்மம் செய்கிறவன் யாகம் செய்கிறவனாகிறான். மனப்பற்று நீங்கியபின் எவ்வளவு கர்மம் செய்தாலும் கேடு ஒன்றும் உண்டாவதில்லை. கடலுக்குள்ளே கொட்டிய உப்புப்போன்று கர்மம் பந்தத்தை உண்டுபண்ணாது கரைந்து போகிறது.
முதலில் உள்ளங்கைகளில் எண்ணெயைத் தடவிக்கொண்டு பலாப்பழத்தை அறுத்துச் சுளைகளை எடுப்பாயானால் பிசின் உன் கைகளில் ஒட்டிக்கொண்டு தொந்தரை செய்யாது. அதுபோல, முதலில் பரமாத்மாவைப்பற்றிய ஞானத்தால் உனக்குப் பாதுகாப்பை உண்டாக்கிக்கொள். பிறகு செல்வம் முதலான உலகப் பொருள்களினிடையே நீ வசித்தால், அவைகளில் நீ எவ்வழியிலும் வசப்படமாட்டாய்.
24. ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவி:
ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம்
ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா
அர்பணம் ப்ரஹ்ம-வேள்வியில் உபயோகப் படும் பொருட்கள் பிரம்மம் தான், ஹவி: ப்ரஹ்ம-ஹோமம் செய்யப் படும் திரவியமும் பிரம்மம் தான், ப்ரஹ்மாக்நௌ ஹுதம்-பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் செய்யும் செயலும் பிரம்மம்தான், ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா தேந-பிரம்மத்தின் செய்கையில் ஊன்றி நிற்கின்ற அந்த யோகியினால், கந்தவ்யம் ப்ரஹ்ம ஏவ-அடையத்தக்க பயனும் பிரம்மம் தான்.
பொருள் : பிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் பண்ணுவோன், பிரம்மத்தின் செய்கையில் சமாதானமெய்தினோன், அவன் பிரம்மத்தை அடைவான்.
தன்னைக் கர்த்தாவாக அஹங்கரித்து யாகம் செய்பவனுக்குப் பேத புத்தியிருக்கிறது. யாகம் செய்கிற தன்னை எஜமானனென்றும், யாகத்துக்குரிய தீ யென்றும், திரவியம் என்றும், அதை ஏற்றுக்கொள்ளும் தேவதையென்றும் அவன் வேற்றுமை பாராட்டுகிறான். ஆனால் ஞானயக்ஞத்தில் நிலைபெற்றிருப்பவனுக்குத் தான், தீ, திரவியம், தேவதை, யாகம் ஆகிய அனைத்தும் பிரம்ம சொரூபமேயாம்.
ஆகாரத்தை ஏற்றுக்கொள்ளுதல் ஞானிக்கு இன்றியமையாத நித்திய கர்மமாகிறது. அந்த நித்திய கர்மத்தையே அவன் ஞான யக்ஞமாகக் கருதுகிறான். உண்ணும் உணவு பிரம்மம்; உண்ணுதல் என்ற செயலும் பிரம்மம்; உண்கிறவனும் பிரம்மம்; அதைச் செமிக்கும் உதரக்கனலும் பிரம்மம். இங்ஙனம் பிரம்ம நிஷ்டையில் நிலை நின்று ஒருவன் பிரம்மத்தை அடைகிறான்.
உண்ணலும் உனதே; உயிர்த்தலும் உனதே; உடலுயிர் மனமெல்லாம் உனதே. எண்ணலும் உனதே; இச்சையும் உனதே; என் செயற் பயனெலாம் உனதே.
25. தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி
அபரே யோகிந:-சில யோகிகள், தைவம் யஜ்ஞம் ஏவ-தேவருக்குச் செய்யப்படும் வேள்வியையே, பர்யுபாஸதே-வழிபடுகிறார்கள், அபரே ப்ரஹ்மாக்நௌ-வேறு சிலர் பிரம்மத் தீயில், யஜ்ஞேந ஏவ யஜ்ஞம்-வேள்வியையே ஆகுதி செய்து, உபஜுஹ்வதி-ஹோமம் செய்கிறார்கள்.
பொருள் : சில யோகிகள் தேவருக்குச் செய்யப்படும் வேள்வியை வழிபடுகிறார்கள். வேறு சிலர் பிரம்மத் தீயில் வேள்வியையே ஆகுதி செய்து வேட்கின்றனர்.
தேவதைகளை ஈசுவரனுடைய அம்சங்களாகக் கருதி அவர்களுக்கு யாகம் செய்வது சிலருக்குச் சாதனமாகிறது. ஆத்மாவுக்கு அமைந்துள்ள பெயர்களில் யக்ஞம் என்பதும் ஒன்று. ஆக யக்ஞத்தினால் யக்ஞத்துக்கு ஆகுதிகொடுப்பது என்பது ஆத்மாவினால் ஆத்மாவுக்கு ஹோமம் செய்தல் என்று பொருள்படுகிறது. நதி கடலில் கலந்து தன் தனி வியக்தியை இழக்கிறது. அங்ஙனம் உபாதியோடு கூடிய ஜீவாத்மாவானது அகண்ட சச்சிதானந்தமாகிய பரமாத்மாவின்கண் ஆஹுதியாகச் சமர்ப்பிக்கப்படுகிறது. அப்பொழுது ஜீவபோதம் அகன்றுபோய் பரபோதம் எஞ்சி நிற்கிறது. இதுவே ஞானிகள் செய்யும் ஞான யக்ஞமாகிறது.
26. ஸ்ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி
ஸப்தாதீந்விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி
அந்யே ஸ்ரோத்ராதீநீ இந்த்ரியாணி-வேறு சிலர் செவி முதலிய இந்திரியங்களை, ஸம்யமாக்நிஷு, ஜுஹ்வதி-அடக்கம் என்னும் அக்னிகளில் ஆகுதி செய்கிறார்கள், அந்யே ஸப்தாதீந் விஷயாந்- வேறு சிலர் ஒலி முதலிய புலன் நுகர் விஷயங்களை, இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி-இந்திரியங்களாகிய தழல்களில் ஹோமம் செய்கிறார்கள்.
பொருள் : வேறு சிலர் உட்கரணத்தை யடக்குதலாகிய சம்யமம் என்ற தீயில் செவி முதலிய இந்திரியங்களை ஆகுதி செய்கிறார்கள். வேறு சிலர் இந்திரியங்களாகிய தழல்களில் ஒலி முதலிய விஷயங்களைச் சொரிகிறார்கள்.
சம்யமம் செய்தல் என்பது அடக்குதல் என்று பொருள்படுகிறது. இந்திரியங்கள் விஷயாதிகளில் செல்லாது அடக்குதல் ஒருவித யாகம். இந்திரியங்கள் விஷயங்களில் பொருந்தும் படி செய்தல் மற்றொருவித யாகம். இதில் முரண்பாடு ஏதுமில்லை.
இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களிலே பற்றுதலோடு செல்லுதல் அவைகளின் இயல்பு. பொறிவாயில் ஐந்தும் அவிந்து வேலைக்கு உதவாதவைகள்போல் அடங்கியிருக்குங்கால் அவைகள் முறையாக சம்யமம் செய்யப்பட்டவைகளாகின்றன. இதனால் மனது ஞானத் தெளிவடைகிறது. ஆக, இது ஒருவித யாகமாகிறது.
ஒவ்வொரு இந்திரியமும் ஈசுவர சம்பந்தமான விஷயத்தையே பொருள்படுத்துமாயின் அந்த இந்திரியத்தால் கேடு ஒன்றும் உண்டாவதில்லை. கண்கொண்டு பார்ப்பதெல்லாம் கடவுள் சம்பந்தமானவைகள்; காதால் கேட்பதெல்லாம் கடவுளைப்பற்றிய சொற்களேயாம். இங்ஙனம் ஐந்து இந்திரியங்களையும் தெய்விக விஷயங்களிலேயே பிரவிருத்திக்கும்படி செய்வதால் மனது தெளிவடைகிறது. அது ஞானத்துக்குத் தகுதியுடையதாகிறது.
அடங்காத இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களைப் போகத்துக்குரியவைகளாகப் பொருள்படுத்துகின்றன. கட்டுக்கு அடங்கிய இந்திரியங்களோ இந்திரியார்த்தங்களில் செல்லுவதில்லை. அல்லது அவைகள்பாற் சென்றால் அவைகளையெல்லாம் போகவஸ்துக்களென்று பொருள்படுத்தாது ஈசுவர மயமாகப் பொருள்படுத்துவனவாகின்றன. ஆக, இரண்டு விதத்திலும் ஞான யக்ஞம் கைகூடுகிறது.
27. ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே
ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீபிதே
அபரே ஸர்வாணீ இந்த்ரியகர்மாணி-வேறு சிலர் எல்லா இந்திரியச் செயல்களையும், ப்ராணகர்மாணி ச-உயிர்ச்செயல்களையும், ஜ்ஞாநதீபிதே-ஞானத்தால் ஒளிபெற்ற, ஆத்ம ஸம்யம யோகாக்நௌ-தன்னாட்சியென்ற யோகத் தீயில், ஜுஹ்வதி-ஹோமம் செய்கிறார்கள்.
பொருள் : வேறு சிலர் ஞானத்தால் கொளுத்துண்ட தன்னாட்சியென்ற யோகத் தீயில் எல்லா இந்திரியச்செயல்களையும் உயிர்ச்செயல்களையும் ஓமம் பண்ணுகிறார்கள்.
எண்ணெய் வார்க்குமிடத்துத் தீபம் பிரகாசிக்கிறது. அங்ஙனம் விவேகம் உதயமாகுமிடத்து ஞான தீபம் பிரகாசிக்கிறது. மனது வெளி விஷயங்களுக்கு உரியதல்ல; ஆத்மாவுக்கே உரியது என்ற எண்ணம் வலுக்குமிடத்து அதுவே விவேகமாகும். அக்னியில் நெய்யை ஆகுதியாகப் போடுங்கால் அந்த நெய்யே அக்னியாக மாறுகிறது. மனதை ஆத்மஞானம் என்ற அக்னியில் சமர்ப்பித்தால் அப்படி மனதுக்கும் ஆத்மாவுக்கும் ஏற்படும் யோகம் சுடர்விட்டெரியும் தீ போன்றதாகும். மனது ஆத்ம சொரூபத்தில் ஒடுங்கவே இந்திரிய கர்மங்களும் பிராண கர்மங்களும் கொடிய செயலற்று ஆத்மசொரூபமாய் மாறுகின்றன. தமது கீழான இயல்பை மேலான இயல்பாக மாற்றுவது இவர்கள் செய்யும் யாகமாகும். பிராண கர்மம் என்பது உடல் முழுதும் வியாபித்துள்ள உயிர்ச் சக்தியாம்.
28. த்ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே
ஸ்வாத்யாயஜ்ஞாநயஜ்ஞாஸ்ச யதய: ஸம்ஸிதவ்ரதா:
அபரே த்ரவ்யயஜ்ஞா-வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர், தபோயஜ்ஞா-தவத்தால் வேட்போர், ததா யோகயஜ்ஞா ச-அதே போல யோகத்தால் வேட்போர்
ஸம்ஸிதவ்ரதா: யதய:-அகிம்சை முதலிய கொள்கை உடையோர், முயற்சி செய்வோர்,
ஸ்வாத்யாய ஜ்ஞாநயஜ்ஞா-சிலர் ஞானத்தால் வேட்போர்.
பொருள் : விரதங்களை நன்கு பாதுகாக்கும் முனிகளில் வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்; சிலர் தவத்தால் வேட்போர்; சிலர் கல்வியால் வேட்போர்; சிலர் ஞானத்தால் வேட்போர்.
நல்வழியில் பொருளை ஈட்டுதல், அதைப் பொது நன்மைக்கென்று பயன்படுத்துதல் ஆகிய செயல்கள் திரவிய யக்ஞமாகும். இரும்பை உருக்கிப் புதுப்பிப்பதுபோன்று மனதை தெய்வப்பெற்றியில் இளக்கித் தெய்வத்தன்மை வாய்ந்ததாகச் செய்வது தபசு. இப்படித் தவம் புரிதலையே யாகமாகச் செய்பவர் சிலர். அஷ்டாங்க யோகத்தை அனுஷ்டிப்பது இன்னும் சிலர்க்கு யாகமாகிறது. தன்னடக்கம் பயிலுகிறவளவு ஒரு சாதகனுக்குச் சாஸ்திர ஆராய்ச்சி பயன்படும். அத்துடன் நல்வாழ்க்கையைப் பற்றிய உறுதியான விரதத்தைக் கையாளுதல் வேண்டும். ஆன்றோர் இயற்றிய நூல்களைக் கற்பதையும், அவைகளினின்று தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு வழங்குதலையும் யாகமாகச் செய்பவனுக்குச் சாஸ்திர ஞானமும் அனுபவ ஞானமும் வளர்கின்றன. மற்றவர்களுக்கு ஒருவன் எதை எடுத்து வழங்குகின்றானோ அதுவே அவனிடத்து இன்னும் அதிகமாக வளர்கிறது. இதுதான் யாகத்தைப் பற்றிய உண்மை.
29. அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணேऽபாநம் ததாபரே
ப்ராணாபாநகதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா:
அபரே ப்ராணாயாமபராயணா:-வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், ப்ராணஅபாநகதீ, ருத்த்வா-பிராணன் அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி
அபாநே ப்ராணம், ப்ராணே அபாநம்-அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும், ஜுஹ்வதி-ஆகுதி பண்ணுகிறார்கள்.
பொருள் : இனி வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், பிராணன், அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும் ஆகுதி பண்ணுகிறார்கள்.
மனதுக்கும் வாயுவுக்கும் நெருங்கிய தொடர்வு உண்டு. மனம் ஒடுங்குமிடத்து வாயு ஒடுங்கும்; வாயு ஒடுங்குமிடத்து மனம் ஒடுங்கும். மனதில் உண்டாகும் பயம், காமம், குரோதம் ஆகிய கெட்ட விகாரங்களுக்கு ஏற்றபடி சுவாசப் போக்குவரவு தடுமாற்றமடைகிறது. அமைதி, அன்பு, மகிழ்வு ஆகிய நல்ல விருத்திகள் சித்தத்தில் உண்டானால் அவ்வேளைகளில் சுவாசத்தின் போக்குவரவு ஒழுங்காக நடைபெறுகிறது. இனி, சுவாசத்தின் போக்குவரவை ஒழுங்குபடுத்தினால் அதற்கு ஏற்றபடி மனது தெளிவடைகிறது. இத்தத்துவத்தை அறிந்து இதை அனுஷ்டிப்பவர் பிராணாயாமத்தில் ஈடுபடுபவர் ஆகின்றனர்.
வாய் வழியாகச் சுவாசிக்கலாகாது; நாசித்துவாரங்களிலேயே சுவாசித்தல் வேண்டும். நாசியில் உட்கொள்ளும் வாயுவுக்கு அபானன் என்று பெயர். நாசியில் வெளிப்படுத்தும் வாயுவுக்குப் பிராணன் என்று பெயர். அபானனை உள்ளுக்கு இழுப்பதைப் பூரகம் என்று சொல்வார்கள். பிராணனை வெளியில் விடுவதை ரேசகம் என்பர். பூரகம் அல்லது ரேசகம் செய்தான பிறகு வாயுவை உள்ளே அல்லது வெளியில் அடக்குதல் கும்பகம் எனப்படும். இந்த முறையை முரட்டுத்தனமாக உபயோகிப்பவர் நாடி நரம்புகளின் வலிவை இழந்து, மண்டையிடி முதலிய நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
பிரசாந்தமான மனதையுடைய யோகி சிரமப்படாது அளவெடுத்தாற்போன்று ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். கும்பகம் பெரிதும் எல்லார்க்கும் பொருந்தாது. பிராணன், அபானன் ஆகிய இரண்டையும் ஒன்றில் ஒன்றை ஆகுதி செய்வதுபோன்று (அதாவது கொழுந்துவிட்டு எரியும் தீயில் நெய்யை இலேசாகச் சொரிவது போன்று) சுவாசிப்பது சிறந்த பிராணாயாமம் ஆகிறது.
நன்றாக நடப்பவன் கால்களைப்பற்றிய உணர்ச்சி யில்லாது நடப்பதுபோன்று, நன்றாகப் பிராணாயாமம் செய்பவன் சுவாசத்தைப் பற்றிய உணர்ச்சியில்லாது ஒழுங்காகச் சுவாசிக்கிறான். அவனே பிராணாயாமத்தில் முறையாக ஈடுபடுபவன் ஆகிறான். மனது தெளிவு அடையுமளவு பிராணாயாமம் இயல்பாக நடைபெறுகிறது.
30. அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி
ஸர்வேऽப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞக்ஷபிதகல்மஷா:
அபரே நியதாஹாரா:-வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி, ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி-உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள், ஏதே ஸர்வே அபி-இவ்வனைவரும்
யஜ்ஞவிதோ-வேள்வி நெறியுணர்ந்து, யஜ்ஞக்ஷபிதகல்மஷா:-வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.
பொருள் : வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள். இவ்வனைவரும் வேள்வி நெறியுணர்ந்து வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.
யோகி ஒருவனுக்கு உண்டி சுருங்கின் உபாயம் பலவுள. உண்பதின் மூலம் உயிரை உயிருக்கு அவன் ஆகுதியாகக் கொடுக்கிறான். இரத்தம் குறைந்துள்ள ஒரு சரீரத்துக்கு மற்றொரு சரீரத்திலிருந்து இரத்தம் எடுத்து அப்போதைக்கப்போதே செலுத்தினால் வலிவும் ஊக்கவும் உண்டாகிறது. இது நவீன மருத்துவம் கையாளும் ஒரு சிறந்த முறையாகிறது. உண்மையில் இயற்கையெங்கும் உயிரைக்கொண்டே உயிர் வளர்கிறது. உயிர் அனைத்தையும் ஒரு பேருயிராகக் கருதி அதன் பொருட்டு அளவு எடுத்தாற்போன் உணவைப் கொடுக்கவும் வாங்கவும் செய்பவன் பிராணனில் பிராணனைச் சொரிகிறான். உயிர் வாழ்க்கையே அவனுக்கு ஒரு யாகமாகிறது.
இது பரியந்தம் (25வது சுலோகத்திலிருந்து 29வது சுலோகம் வரையில்) விதவிதமான யாகங்கள் விளக்கப்பட்டன. மக்களுள் இயல்பு வேறுபாடு ஏராளமாயுண்டு. அவரவர் இயல்புக் கேற்றவாறு வெவ்வேறு யாகங்களைச் செய்ய மக்கள் கடமைப்பட்டிருக்கின்றனர். உலக பந்தம் என்னும் பாபத்தினின்று விடுபடுதற்கு யாகம் செய்தல் ஒன்றே உற்ற உபாயம்.
அது எப்படி எனில் :
31. யஜ்ஞஸிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்
நாயம் லோகோऽஸ்த்யயஜ்ஞஸ்ய குதோऽந்ய: குருஸத்தம
குருஸத்தம-குரு குலத்தாரில் சிறந்தோய், யஜ்ஞஸிஷ்ட அம்ருதபுஜ:-வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர், ஸநாதநம் யாந்தி ப்ரஹ்ம-என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள், யஜ்ஞஸ்ய அயம் லோக: ந அஸ்தி-வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை, அந்ய: குத:-வேறு (பர உலகம்) ஏது?
பொருள் : வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர் என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள். வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை. அவர்களுக்குப் பரலோகமேது, குரு குலத்தாரில் சிறந்தோய்?
மனிதன் எத்தொழிலைச் செய்தாலும் அதனால் உலகம் எல்லா நன்மைகளையும் அடையவேண்டும். தன்னலம் பின்னணிக்குத் தள்ளப்படுமளவு அவன் அருந்துவது அமிர்தம். தான், தனது என்ற ஜீவபோதத்தை துறப்பதே இயற்கையின் மேலாம் திட்டம். ஜீவபோதத்தை அடியோடு யாகம் செய்தவனுக்குப் பரபோதம் ஒன்றுதான் எஞ்சி நிற்கிறது. ஆக, தன்னையே ஆகுதியாகக் கொடுத்தவன் அடைவது சநாதன பிரம்மம். பெறுமவற்றுள் பிரம்மத்துக்கு நிகரானது ஒன்றுமில்லை. பெறுதற்கரிய பிரம்மமே யாகத்தின் மூலம் அடையப்பெறுகிறது என்றால் அதற்குக் கீழாகிய எதையும் யாகத்தால் பெறலாம் என்பது சொல்லாமலே விளங்குகிறது.
மிக எளிதில் அடையப்பெறுவது இவ்வுலகம்; இதைவிட எளிதானது ஒன்றுமில்லை. ஆனால் இவ்வுலகில் ஒருவன் ஒரு பிராப்தியையும் அடையப்பெறாது, பிறர்க்கு அடிமைப்பட்டு, பிறரால் அவமதிக்கப்பட்டு வாழ்வானாகில் அவன் சுயநலத்தில் ஊறியவனாம். ஒருவனிடத்துச் சுயநலம் வலுக்கின்றவளவு அவன் யாகத்தைப் புறக்கணித்தவனாகிறான். சில நாடுகள், சில சமூகங்கள், சில மனிதர்கள் க்ஷீணதசையடைவதற்குக் காரணம் சுய நலப் பற்றாகும். சுயநலம் நாடுபவன் இவ்வுலகத்தில் ஒரு மேன்மையையும் அடையப்பெறாது மக்களால் புறக்கணிக்கப்படுகிறான். இனி, அவன் சுவர்க்கம் முதலிய, இதைவிட மேலான உலகத்தைப்பெறுவது எங்ஙனம்? அது ஒருபொழுதும் வாய்க்காது. ஆக, வாழ்க்கையின் தத்துவம் யாது எனின்:
32. ஏவம் பஹுவிதா யஜ்ஞா விததா ப்ரஹ்மணோ முகே
கர்மஜாந்வித்தி தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே
ஏவம் பஹுவிதா யஜ்ஞா-இங்ஙனம் பலவித வேள்விகள், ப்ரஹ்மண: முகே-வேதங்களின் வாயிலாக, விததா-விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன, தாந் ஸர்வாந் கர்மஜாந்-அவையெல்லாம் தொழிலிலே பிறப்பன, வித்தி-என்று உணர். ஏவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே-இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.
பொருள் : பிரம்மத்தின் முகத்தில் இங்ஙனம் பலவித வேள்விகள் விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் தொழிலிலே பிறப்பனவென்றுணர். இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.
பிரம்மா, வேதம், இயற்கை இவை யாவும் ஒரே பொருளைக் குறிக்கும் சொற்கள். இயற்கையின் நடைமுறையை அறிபவன் வேதத்தை அறிபவன் ஆகிறான். இயற்கை கர்ம சொரூபமானது. அந்தக் கர்மத்துக்கும் அடிப்படையான திட்டம் ஒன்று உண்டு. அதாவது கர்மத்தை யாகமாக மாற்றுபவர் எல்லாரும் இயற்கை அல்லது வேதத்தின் திட்டத்தைத் தெரிந்துகொண்டவர் ஆகின்றனர். இயற்கையில் நடைபெறுகிற எல்லாக் கர்மங்களையும் யாகமாக மாற்றலாம். கர்மம் மனிதனைப் பந்தப்படுத்தும் தன்மையது. அதே கர்மத்தை யாகமாகச் செய்தால் அது விடுதலையை உண்டுபண்ணுகிறது.
விடுதலை எங்ஙனம் வந்து அமைகிறது? விடை வருகிறது :
33. ஸ்ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரந்தப
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே
பரந்தப பார்த-பரந்தப அர்ஜுனா! த்ரவ்யமயாத் யஜ்ஞாத்-திரவியத்தைக் கொண்டு செய்யப்படும், ஜ்ஞாநயஜ்ஞ: ஸ்ரேயாந்-ஞானவேள்வி சிறந்தது, அகிலம் கர்ம: ஸர்வம் -கர்மமெல்லாம், ஜ்ஞாநே பரிஸமாப்யதே-ஞானத்தில் முடிவு பெறுகிறது.
பொருள் : பரந்தபா, திரவியத்தைக் கொண்டு செய்யப்படும் வேள்வியைக் காட்டிலும் ஞானவேள்வி சிறந்தது. பார்த்தா, கர்மமெல்லாம், முற்றிலும், ஞானத்தில் முடிவு பெறுகிறது.
மனிதன் அறிவைப் பெறுதற்கு உயிர் வாழ்ந்திருக்கிறேன். பொருளைப் பெருக்குவதால் கவலை அதிகம் உண்டாகிறது. ஓரளவுக்குமேல் திரவியம் ஒருவனுக்குப் பயன்படாது. ஞானம் பெறுகின்றவளவு சாந்தியும் மோக்ஷமும் கைகூடும். திரவிய விருத்தி ஜடபுத்தியை உண்டுபண்ணுகிறது. ஞான வளர்ச்சி ஆத்ம சைதன்யமாகிறது. திரவியம் பிரகிருதியில் கட்டுப்படுத்துகிறது. ஞானமோ, ஆத்மாவானது கர்மத்தில் கட்டுப்படாத சாக்ஷி என்ற பேருண்மையை விளக்குகிறது. ஆகையால்தான் யக்ஞமெல்லாம் விரைவில் ஞான யக்ஞமாக வடிவெடுக்கவேண்டும். தேவாராதனையில் ஒருவன் ஒரு மணங்கு கற்பூரத்தை எரித்து அதைப் பெரிய பூஜையென்று எண்ணினான். மற்றொருவன் கற்பூரம் எரிந்தால் எஞ்சியிருப்பது ஒன்றுமில்லை; அங்ஙனம் கர்மம் ஞானமாய்விடுங்கால் ஜீவபோதத்தில் எஞ்சியிருப்பது ஒன்றுமில்லை என்று அறிகிறான். முந்தையது திரவிய யக்ஞம்; பிந்தியது ஞான யக்ஞம். சாதகனுக்கு சிரேயஸைத் தருவது ஞானயக்ஞம்.
பணம் எவனுக்கு அடிமையோ அவன்தான் வாஸ்தவமான மனிதன். பணத்தை எப்படி உபயோகிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளாதவர்கள் மனிதர்கள் என்ற பெயருக்கு அருகரல்லர்.
ஞானத்தைப் பெறுதற்கு இன்னும் எத்தகைய மனப்பான்மை வேண்டும்? விடை வருகிறது :
34. தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஸிந:
ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா-வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும், தத் வித்தி-அதனை அறிந்துகொள், தத்த்வதர்ஸிந: ஜ்ஞாநிந-உண்மை காணும் ஞானிகள், தே ஜ்ஞாநம் உபதேக்ஷ்யந்தி-உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.
பொருள் : அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்துகொள். உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.
பண்டம் மாற்றுவது போன்று ஞானத்தைப் பெறமுடியாது. அதற்கேற்ற சீரிய இணக்கத்தை சிஷ்யன் குருவோடு வைத்துக் கொள்ளவேண்டும். வீழ்ந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பதன் மூலம் சிஷ்யன் தன்னைக் குருவிடம் ஒப்படைக்கிறான். பந்தம் மோக்ஷம், ஆத்மா அநாத்மா ஆகியவைகளைப்பற்றி முறையாகக் கேள்விகள் கேட்பதால் தனது மனபரிபாகத்தை அவன் தெரிவிக்கிறான். குற்றேவல் புரிவதால் குருவுடைய உடல் வாழ்க்கை என்ற யக்ஞத்தில் சிஷ்யன் தன்னை ஆகுதியாகச் சமர்ப்பிக்கிறான். இங்ஙனம் முறையாக மெய், மொழி, மனம் ஆகிய முக்கரணங்களும் ஆசாரியனுக்கென்றே அர்ப்பிக்கப்படுகின்றன.
அத்தகையவனிடத்து குரு கருணைகூர்ந்து ஆத்ம ஞானத்தை உபதேசிக்கிறார். வெறும் வாசாஞானி குருவாகமுடியாது. எரியும் விறகுக்கட்டைதான் மற்றொரு விறகில் தீ மூட்டும். அங்ஙனம் யாரிடத்துப் பிரம்ம ஞானம் பூர்த்தியாயிருக்கிறதோ அவரே சிஷ்யனுக்கும் பிரம்மஞானத்தைப் புகட்டவல்லவராவார். பூரண ஞானமும் கருணையும் யாரிடத்து நிறைந்திருக்கிறதோ அவர் குரு ஸ்தானத்துக்குத் தகுதியுடையவர் ஆவார்.
தனது குருவைக் கேவலம் மனுஷ்யராகக் கருதுபவனுக்குப் பிரார்த்தனையாலும் பக்தியாலும் என்ன பலனுண்டாகக்கூடும்? குருவைக் கேவலம் மனுஷ்யரென அவன் கருதக்கூடாது. ஈசுவரனைக் காண்பதற்கு முன்னால், அத் திவ்விய தரிசனத்தின் முதல் அங்கமாகக் குருவைத்தான் சிஷ்யன் காண்கிறான். பிறகு அந்தக் குருவே ஈசுவரனாக மாறி ஈசுவர சொரூபத்தைக் காட்டுகிறார். அப்பால் ஈசுவரனும் குருவும் ஒருவரேயென்று சிஷ்யன் தெரிந்து கொள்கிறான். அவன் விரும்பும் வரங்களையெல்லாம் திவ்விய குரு அருளுவார். இம்மட்டோ! அவனைப் பிரம்ம நிர்வாணமாகிய பரமானந்த சுகத்துக்கும் அழைத்துச் செல்வார். அன்றி, பக்தன், ஈசுவரன் என்ற சம்பந்தமுள்ள துவைத நிலைமையில் அவன் இருக்கவேண்டினும் அங்ஙனமே இருக்கலாம். சிஷ்யன் எதைக் கேட்டாலும் குரு அதை நிச்சயமாகத் தருகிறார்.
மனுஷ்ய குருவானவர் மஹாமந்திரத்தை உனது காதில் மட்டும் உபதேசிக்கிறார். தெய்வ குருவோ, ஆத்மாவுக்குள் சைதன்யத்தைச் செலுத்துகிறார். ஈசுவரனுடைய ரகஸியங்களை அறிய வேண்டுமென்ற தீவிர புத்தி உனக்கு இருக்குமானால், அவ்வீசுவரனே ஸத்குரு ஒருவரை உன்னிடம் அனுப்புவார். பக்தனே, குருவைத் தேடவேண்டிய விஷயத்தில் உனக்குக் கவலையே வேண்டாம்.
குருவும் சிஷ்யனும் மேலோராய் அமையுமிடத்து :
35. யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ
யேந பூதாந்யஸேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி
யத் ஜ்ஞாத்வா-எதை அறிந்து கொண்ட பின்னர், பாண்டவ புந: ஏவம் மோஹம்-பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கம், ந யாஸ்யஸி-அடைய மாட்டாயோ, யேந பூதாநி அஸேஷாணி-இதனால் எல்லா உயிர்களையும், மிச்சமின்றி, ஆத்மநி அதோ மயி த்ரக்ஷ்யஸி-நின்னுள்ளேயும், பிறகு என்னுள்ளேயும் காண்பாய்.
பொருள் : அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய். இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.
பொருள்களை உள்ளபடி காணாதிருப்பது மயக்கம். மெய்ஞ் ஞானம் உதயமாகுமிடத்து எல்லாப் பொருள்களும், உயிர்களும் ஒரே பரம்பொருளிடத்து ஒன்றித்திருப்பது பிரத்தியக்ஷமாகும். ஒன்றென உணர்வது ஞானம்; பலவாகக் காண்பது அக் ஞானம்.
ஞானத்தீயில் பாபச் செயல்களெல்லாம் வெந்து ஒழிகின்றன. எப்படி யெனின் :
36. அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம:
ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி
ஸர்வேப்ய: பாபேப்ய: அபி-பாவிகளெல்லாரைக் காட்டிலும், பாபக்ருத்தம: அஸி சேத்-நீ அதிகப் பாவியாக இருந்தாலும், ஜ்ஞாநப்லவேந ஏவ-ஞானத்தோணியால், ஸர்வம் வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி-அப்பாவத்தையெல்லாம் கடந்து செல்வாய்.
பொருள் : பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப்பாவத்தையெல்லாம் ஞானத்தோணியால் கடந்து செல்வாய்.
பாபம் என்னும் சொல்லில் புண்ணியமும் அடங்கியிருக்கிறது. ஏனென்றால் ஒரேசெயல் பயன்படுத்துதற்கு ஏற்றவாறு புண்ணியமாகவோ பாபமாகவோ காட்சி கொடுக்கிறது. ஞானமில்லாதவர்கள் கர்மத்தை முறைதவறிச் செய்து அதைப் பாபமாகக்கிக் ள்கின்றனர். ஞானமுடையவர் அதே கர்மத்தை முறையாகச் செய்து அதைப் புண்ணியமாக மாற்றுவது மல்லாது கர்ம பந்தத்திலிருந்தும் விடுபடுகின்றனர். ஞானம் பாபத்தை எப்படிப் போக்குகிறது? அது ஒரு உபமானத்தால் விளக்கப்படுகிறது.
37. யதைதாம்ஸி ஸமித்தோऽக்நிர்பஸ்மஸாத்குருதேऽர்ஜுந
ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா
அர்ஜுந-அர்ஜுனா! யதா ஸமித்த அக்நி-நன்கு கொளுத்துண்ட தீ, ஏதாம்ஸி பஸ்மஸாத் குருதே-விறகுகளைச் சாம்பராக்கி விடுகிறதோ, ததா ஜ்ஞாநாக்நி:-அதே போல ஞானத் தீ,
ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே-எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.
பொருள் : நன்கு கொளுத்துண்ட தீ, விறகுகளைச் சாம்பராக்கி விடுதல் போலவே, அர்ஜுனா, ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.
பிராரப்த கர்மத்தைத் தவிர மற்ற கர்மங்களெல்லாம் வெந்து போகின்றன. வெந்துபோன விதை பழைய வடிவத்தோடு இருப்பினும் அதை விதைத்தால் செடியாக முளைக்காது. அங்ஙனம் ஞானத் தீயானது கர்மங்களை அவித்துவிடுகிறது. பிராரப்த கர்மம் மட்டும் வேலை செய்யும் எனினும் அதற்கு வேகம் கிடையாது. சொப்பனத்தில் பயந்து எழுந்த ஒருவனுக்கு ஹிருதயம் துடிதுடிக்கிறது. எனினும் விழித்துக்கொண்ட பிறகு அதில் கேடு ஒன்றுமில்லை. அங்ஙனம் பிராரப்த கர்மமும் ஞானியை ஒன்றும் செய்யாது.
ஞானம் இவ்வளவு சிறப்பு வாய்ந்ததனால் :
38. ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஸம் பவித்ரமிஹ வித்யதே
தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி
இஹ ஜ்ஞாநேந ஸத்ருஸம்-இவ்வுலகத்தில் ஞானத்தைப் போல், பவித்ரம் ஹி ந வித்யதே-தூய்மை தரும் பொருள் வேறெதுவுமில்லை, தத் காலேந யோகஸம்ஸித்த:-தக்க பருவத்தில் கடைப்பிடித்து யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன், ஸ்வயம் ஆத்மநி விந்ததி-தனக்குத்தானே ஆத்மாவிடம் எய்தப் பெறுகிறான்.
பொருள் : ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான்.
கனவில் ஒருவன் அடியுண்கிறான்; குத்துப்படுகிறான்; பெருந்துன்பத்துக்கு ஆளாகிறான். அப்படி அவன் வருந்துகையில் தூக்கத்தினின்று அவனைத் தட்டியெழுப்பினால் ஜாக்கிரதாவஸ்தைக்கு வருகிறான். தன்னைப்பற்றிய உண்மை ஞானம் ஓரளவு ஜாக்கிர தாவஸ்தையில் வருகிறது. தன்னை யாரும் துன்புறுத்தவில்லை யென்றும், தான் உண்மையில் வருந்தவில்லையென்றும் ஜாக்கிரதா வஸ்தையில் அவன் உறுதிப்படுத்துகிறான். அந்த அளவில் விழிப்பானது அக்ஞான மலத்தினின்று அவனைத் தூயவனாக்குகிறது. இங்ஙனம் மனிதனுக்குத் தன் சொரூப ஞானம் உதயமாகுங்கால் ஜனன மரணம் என்ற அக்ஞான அழுக்கினின்று நித்திய சுத்தனாக மாற்றப்பெறுகிறான். ஆகையால்தான் பரிசுத்தப்படுத்துபவைகளுள் ஞானத்துக்கு நிகரானது ஒன்றுமில்லை. முறையாகக் கர்மயோகம் செய்பவன் வாழ்க்கையையே ஞான யக்ஞமாகச் செய்துகொள்கிறான். அதனால் நாளடைவில் மன பரிபாகம் அடைந்து ஞானத்தை நிச்சயமாகப் பெறுகிறான்.
கர்ப்பவாசம் செய்யும் சிசு பத்துமாசத்தில் பிறக்கிறது. அதுபோன்று காலக்கிரமத்தில் என்பதற்கு வரையறை இல்லை. அதற்கு விடை வருகிறது :
39. ஸ்ரத்தாவாம்லூல்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:
ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஸாந்திமசிரேணாதிகச்சதி
ஸம்யதேந்த்ரிய:-இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாக, தத்பர: ஸ்ரத்தாவாந்-சாதனையிலேயே ஒன்றிய சிரத்தையுடையோன், ஜ்ஞாநம் லபதே-ஞானத்தையடைகிறான், ஜ்ஞாநம் லப்த்வா-ஞானத்தையடைந்த பின், அசிரேண பராம் ஸாந்திம் அதிகச்சதி-விரைவிலே பர சாந்தி பெறுகிறான்.
பொருள் : பிரம்மத்தைப் பரமாகக் கொண்டு, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தையடைந்த பின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான்.
குருவை வணங்குதல், கேட்டல், பணிவிடை செய்தல் ஆகிய இவையாவும் சில சமயங்களில் வெளி வேஷமாய்ப் போய்விடலாம். ஆனால் எவ்விடத்தில் உண்மையான சிரத்தையும், ஞான முயற்சியும், புலனடக்கமும் மேலோங்கியிருக்கின்றனவோ அங்கு ஞான வளர்ச்சி உருவெடுப்பது உறுதி. சிரத்தை முதலியவைகளின் தீவிரத்திற்கு ஏற்றவாறு ஞானம் விரைவில் வந்தமையலாம்; பல ஜன்மங்களில் அது கைகூடலாம்; ஒரே ஜன்மத்தில் வந்தமையலாம்; சில வருஷங்களில் சித்தியாகலாம். ஒரு வருஷம், ஒரு கணப்பொழுது-இப்படித் தீவிரத்துக்கு ஏற்றவாறு காலம் குறுகுகிறது. ஞானத்தை அடைபவன் எல்லாம் ஈசுவரனிடத்து அடங்கப் பெற்றிருப்பதாகக் காண்பது மட்டுமல்ல, ஞானத்துக்கு ஏற்ற சாந்தியை அல்லது முக்தியையும் அக்கணமே பெறுகிறான்.
சம்சயம் வாழ்க்கைக்குச் சத்துருவாகிறது. அது எப்படி எனின் :
40. அஜ்ஞஸ்சாஸ்ரத்ததாநஸ்ச ஸம்ஸயாத்மா விநஸ்யதி
நாயம் லோகோऽஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஸயாத்மந:
அஜ்ஞ ச ஸ்ரத்ததாந் ச-அறிவும் சிரத்தையுமின்றி, ஸம்ஸயாத்மா விநஸ்யதி-ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான், ஸம்ஸயாத்மந: அயம் லோக: ந அஸ்தி-ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை, பர: ந ஸுகம் ச ந-மேலுலகமில்லை; இன்பமுமில்லை.
பொருள் : அறிவும் சிரத்தையுமின்றி ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான். ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை; மேலுலகமில்லை; இன்பமுமில்லை.
ஆத்ம சொரூபத்தை அறியாதவன் அறிவிலி அல்லது அக்ஞானியாவான். தன் மீதும், குரு மீதும், சாஸ்திரத்திடத்தும் நம்பிக்கை வைக்காதவன் சிரத்தையில்லாதவனாகிறான். உலகத்தில் எல்லாரிடத்தும் சந்தேகம் கொள்ளும் இயல்புடையவர் சிலர் இருக்கின்றனர். அத்தகையவர் ஐயமே வடிவெடுத்தவர் ஆவர். யார் எதைச் சொன்னாலும், செய்தாலும் அவையெல்லாம் தமக்குக் கேடு விளைவிக்கும் என்றே அன்னவர் கருதுகின்றனர். இம்மைக்குத் தகுதியுடையவனே மறுமைக்கும் தகுதியுடையவன் ஆகிறான். உலகத்தவரை நம்புகிறவளவு உலகத்தவர் ஒரு மனிதனுக்கு உரியவர் ஆகின்றனர். பரஸ்பர நம்பிக்கையிலும் உதவியிலுந்தான் உலக வாழ்க்கையில் சுகம் உண்டாகிறது. ஒருவரையும் நம்பாது உலகத்தவருக்கு வேற்றானாயிருப்பதே பெரிய வேதனையாகிறது. இத்தகைய பான்மையுடையவனுக்கு ஆத்ம ஞானம் கைகூடாது; வாழ்க்கைக்கும் அவன் தகுதியற்றவனாகிறான்.
நம்பிக்கையில் குழந்தையைப்போல ஆனாலொழிய ஈசுவரனைக் காண்பது துர்லபம். யாரேனும் ஒருவனைச் சுட்டிக்காட்டி, அவன் உன் சகோதரன் என்று தாய் ஒரு குழந்தையிடம் சொன்னால் அக் குழந்தை அவள் சொல்வதை உண்மையெனவே நம்பும். இப்படிப்பட்ட குழந்தையின் விசுவாசம் எவனிடமிருக்கிறதோ அவனிடந்தான் ஈசுவரனுக்குக் கருணை பிறக்கிறது. எல்லாவற்றிலும் கணக்குப் பார்க்கும் சுபாவத்துடனிருந்தால் ஈசுவரனைக் காணவே முடியாது.
ஐயத்தை அகற்றுவதற்கு உற்ற உபாயம்:
41. யோகஸந்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸஞ்சிந்நஸம்ஸயம்
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய
தனஞ்ஜயா!-அர்ஜுனா, யோக ஸந்ந்யஸ்த கர்மாணம்-யோகத்தால் செய்கைகளைத் துறந்து,
ஜ்ஞாந ஸஞ்சிந்ந ஸம்ஸயம்-ஞானத்தால் ஐயத்தை அறுத்து, ஆத்மவந்தம்-தன்னைத் தான் ஆள்வோனை, கர்மாணி ந நிபத்நந்தி-கட்டுப்படுத்த மாட்டா.
பொருள் : யோகத்தால் செய்கைகளைத் துறந்து, ஞானத்தால் ஐயத்தை அறுத்துத் தன்னைத் தான் ஆள்வோனை, தனஞ்ஜயா! கர்மங்கள் கட்டுப்படுத்த மாட்டா.
மீன் சேற்றுக்குள் புதைந்திருந்தும் சேற்றின் அழுக்கு அதன் மீது படிவதில்லை. ஓயாது கர்மம் செய்தும் அதில் கட்டுப்படாதவன் யோகி. உலகத்தைப்பற்றிய உண்மையை உள்ளபடி அறியுமளவு அதன்மீது சந்தேகம் நீங்கி சிரத்தை அதிகரிக்கிறது. அது பூரண ஞானமாகப் பரிணமிக்குமிடத்து எல்லாம் ஒரு பொருளின் பல்வேறு தோற்றம் என்ற ஐக்கிய புத்தி உண்டாகிறது. ஐயம் கொள்ளுதற்குப் பின்பு இடமில்லை. அனைத்திடத்தும் பூரண விசுவாசம் மேலிடும். ஆத்மபோதம் அடையப்பெற்ற நிறை மனிதன் ஆகிறான் அவன். நிறைகுடம் நீர் தளும்புவதில்லை. நிறை மனிதன் கர்மத்தில் தளையுறுவதுமில்லை; கர்மத்தை அவன் செய்யாது நிறுத்திவிடுவதுமில்லை.
42. தஸ்மாதஜ்ஞாநஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிநாத்மந:
சித்த்வைநம் ஸம்ஸயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத
தஸ்மாத் பாரத-ஆகவே பாரதா, ஹ்ருத்ஸ்தம்-நெஞ்சில் நிலைகொண்டிருக்கும்,
அஜ்ஞாநஸம்பூதம் ஆத்மந: ஏநம் ஸம்ஸயம்-அஞ்ஞானத்தால் தோன்றும் இந்த ஐயத்தை,
ஜ்ஞாந அஸிநா: சித்த்வா-ஞானவாளால் அறுத்து, யோகம் ஆதிஷ்ட: உத்திஷ்ட-யோக நிலைகொள், எழுந்து நில்.
பொருள் : அஞ்ஞானத்தால் தோன்றி நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் இந்த ஐயத்தை உன் ஞானவாளால் அறுத்து யோக நிலைகொள். பாரதா, எழுந்து நில்.
எல்லாக் கேடுகளையும் உண்டுபண்ணுவது சந்தேகம். அது அக்ஞானத்தில் பிறந்து அந்தக்கரணத்தில் குடியிருக்கிறது. வெளிச்சம் வந்தால் இருள் தானே மறைவது போன்று ஆத்ம ஞானம் ஒன்றே ஐயத்தை அகற்றுதற்கு உற்ற உபாயம்.
கேடு, தாபம், தவறு இவைகளை ஒழிக்கவல்லது ஞானம். சூரியோதயத்தில் வெளிச்சமும் வருகிறது; விழிப்பும் வருகிறது; வினையாற்றுகிற பான்மையும் வருகிறது. அங்ஙனம் ஆத்ம ஞானத்தில் ஆத்ம போதமும்; வினையாற்றும் வல்லமையும்சேர்ந்து வருகின்றன. ஆத்மபோதம் என்னும் விழிப்பைத் தருவதுதான் ஜீவன் ஒருவனுக்குச் செய்யும் சேவைகளில் தலைசிறந்ததாகிறது. விழித்துக்கொண்ட மனிதன் வாழ்க்கையில் தன் வல்லமையைக் காட்டுவான்.
சீதையைத் தேடித் தேன் திசைக்குச் சென்ற ஆஞ்ஜனேயனுக்குக் கடல் கரையில் ஐயம் வந்து அல்லல்படுத்தியது. ஆனால் அவனது நிஜசொரூபத்தை ஜாம்பவான் அவனுக்கு ஞாபக மூட்டினான். உடனே ஆத்மபோதம் பெற்று எழுந்திருந்தான். ஐயம் அகன்றது. அரும் செயலுக்கு அவன் அருகதையுடையவனானான்.
இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ஞானகர்ம ஸந்யாஸ யோகோ நாம
சதுர்த்தோऽத்யாய:



ஐந்தாம் அத்தியாயம்
பகவத்கீதை | ஸந்யாஸ யோகம்

கர்ம யோகத்தில் ஞான பாகமடங்கி இருப்பதாலும் ஞான யோகத்தில் கர்ம பாகமடங்கியிருப்பதாலும் இரண்டும் ஒன்றே. அவை இரண்டும் ஒரே விதமான பலனைக் கொடுக்கக் கூடியவை. அவை வெவ்வேறு பலனை அளிக்கும் என்று கூறுபவர் பலர். அவர்கள் அறிவில் தேர்ச்சி பெறாதவர்கள். ஆனால், கர்ம யோகமின்றி ஞான யோகத்தைப் பெற இயலாது. சுக துக்கங்களைப் பொருட்படுத்தாமல் கர்ம யோகத்தையே தழுவியிருந்தால் பலனைக் கடுகப் பெறலாம். எல்லா ஆத்மாக்களும் ஒரே மாதிரியானவை. தோற்றம் வேறுபாடுகளெல்லாம் தேக சம்பந்தத்தால் வந்தவை என்ற உணர்வு வேண்டும்.
கர்மயோகமே கர்ம ஸந்யாஸமாகிறது 1-13 -கர்மம் பிரகிருதிக்கு உரியது; ஆத்மாவுக்கு கர்மம் இல்லை 14-17 -சமதிருஷ்டி ஞானத்தின் விளைவு 18-19 -விஷய சுகம் வேறு, பிரம்ம சுகம் வேறு 20-29.
அர்ஜுந உவாச
1. ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச ஸம்ஸஸி
யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஸ்சிதம்
அர்ஜுந உவாச க்ருஷ்ண-அர்ஜுனன் சொல்லுகிறான், கண்ணா ! கர்மணாம்-செய்கைகளின்
ஸந்ந்யாஸம் புந: யோகம் ச ஸம்ஸஸி-துறவியும் பின்னர் அவற்றுடன் கலப்பதை பற்றியும் புகழ்ந்து பேசுகிறாய், ஏதயோ: யத் ஏகம்-இவ்விரண்டில் எதுவொன்று, ஸ்ரேய: ஸுநிஸ்சிதம்-சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி, தத் மே ப்ரூஹி-என்னிடம் சொல்!
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய்; பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி என்னிடஞ் சொல்.
நான்காவது அத்தியாயம் 18,19,21,22,24,32,33,37,41 சுலோகங்களில் கர்ம ஸந்யாஸத்தைப் பகவான் வற்புறுத்தினார். பிறகு அதே அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில் கர்ம யோகத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றார். முரண்படுகிற இவ்விரண்டையும் ஏககாலத்தில் மனிதன் கையாள முடியாது. ஆக, அர்ஜுனன் உள்ளத்தில் இந்த ஐயம் எழுந்தது.
ஸ்ரீபகவாநுவாச
2. ஸந்ந்யாஸ: கர்மயோகஸ்ச நி:ஸ்ரேயஸகராவுபௌ
தயோஸ்து கர்மஸந்ந்யாஸாத்கர்மயோகோ விஸிஷ்யதே
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ஸந்ந்யாஸ: கர்மயோக உபௌ ச-துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும், நி:ஸ்ரேயஸகரௌ-உயர்ந்த நலத்தைத் தருவன, து தயோ: கர்மஸந்ந்யாஸாத் கர்மயோக-இவற்றின் கர்மதுறவைக் காட்டிலும் கர்ம யோகம், விஸிஷ்யதே-மேம்பட்டது.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றின் கர்மதுறவைக் காட்டிலும் கர்ம யோகம் மேம்பட்டது.
சிரேயஸ் அல்லது சிறப்பு என்பது முக்தி. ஜீவன் அடைபவைகளுள் தலைசிறந்ததாகிய முக்தியானது கர்ம ஸந்யாஸத்தால் அடையப்படும். அதே முக்தி கர்மயோகத்தாலும் அடையப்படும். ஹிமாசலத்தில் பத்ரிகாச்ரமத்துக்கு ஆகாய விமானத்திலும் செல்லலாம், நடந்தும் போகலாம். இரண்டு முறைகளிலும் அந்த ÷க்ஷத்திரம் அடையப்பெறுகிறது. ஆனால் நடந்து செல்பவருக்கு உண்டாகும் உடல் பயிற்சியும், மக்கள் இணக்கமும், இதர இயற்கை ஞானமும் விமானத்தில் பறந்து செல்பவருக்கு உண்டாகாது. நடந்து செல்லுதற்கு ஒப்பானது கர்மயோகம். பல விதங்களில் அது ஜீவனைப் பண்படுத்துகிறது. தேகம் எடுத்தவர் கர்மயோகம் செய்வதே சிறந்தது. ஸந்யா ஸமோ சாந்தியையும் ஞானத்தையும் தருகிறது. கர்மயோகம் சாந்தியையும் ஞானத்தையும் எப்படித் தரும் என்று எண்ணலாம். அதற்கு விளக்கம் வருகிறது.
3. ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே
மஹாபாஹோ!-பெருந்தோளாய்! ய: ந த்வேஷ்டி-எவன் வெறுப்பு இல்லாமலும், ந காங்க்ஷதி-விரும்புதலும் இல்லாமலும், ஸ நித்ய ஸந்ந்யாஸீ ஜ்ஞேய:-அவன் எப்பொழுதும் சந்நியாசியே தான் என்று அறியத்தக்கவன், ஹி நிர்த்வந்த்வ:-இருமை நீங்கி, ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே-எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.
பொருள் : பகைத்தலும் விரும்புதலுமில்லாதவனை நித்திய சந்யாசி என்றுரைக்கக் கடவாய். பெருந்தோளுடையாய், இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.
மனிதனைக் கட்டுப்படுத்துவது கர்மமல்ல. கஷ்டப்பட்டு வேலை செய்வதை ஒருவன் வெறுப்பானாகில், அல்லது வேலை செய்யாது சோம்பித்திரிவதை ஒருவன் விரும்புவானாகில் அவன் இன்பதுன்பம் முதலிய இருமைகளில் கட்டுண்டவனாகிறான். எத்தனையோ அலுவல்களை ஆற்றுதற்கிடையில் யோகி ஒருவன் விருப்பு வெறுப்பற்றிருப்பானாகில் அவன் சித்தத்தில் ஒரு விருத்தியும் உண்டாவதில்லை. மனதை எதுவும் தளைப்பதில்லை. ஆகையால் கர்மம் செய்தும் செய்யாதவனாகிறான். அந்த அளவில் அவன் நித்தியஸந்யாஸியே. ஸந்யாஸ ஆச்ரமம் எடுத்துக்கொண்டதன் வெளியறிகுறிகள் அவனிடத்து இருக்கவேண்டும் என்பதில்லை. மனமே பந்தம் அல்லது மோக்ஷத்துக்கு ஏதுவாகிறது.
4. ஸாங்க்யயோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:
ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம்
ஸாங்க்யயோகௌ-(மேலே கூறிய) சந்நியாசத்தையும் யோகத்தையும், ப்ருதக்-வெவ்வேறென்று, பாலா: ப்ரவதந்தி பண்டிதா: ந-அறியாதவர் கூறுகிறார்கள், பண்டிதர்கள் அங்ஙனம் கூறார், ஏகம் அபி ஸம்யக் ஆஸ்தித:-யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன், உபயோ: பலம் விந்ததே-இரண்டின் பயனையும் எய்துகிறான்.
பொருள் : சாங்கியத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள்; பண்டிதர்கள் அங்ஙனம் கூறார். இவற்றுள் யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான்.
கர்ம ஸந்யாஸம் ஈண்டு சாங்க்யம் எனப்படுகிறது. சாஸ்திரத்தின் உட்கருத்தை அறியாத அவிவேகிகள் பாலர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒன்றை அனுஷ்டிப்பது இரண்டின் பலனைப் பெறுவது எங்ஙனம் என்ற கேள்வி பிறக்கிறது. அதற்கு விடை வருகிறது :
5. யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பஸ்யதி ஸ பஸ்யதி
ஸாங்க்யை: யத் ஸ்தாநம் ப்ராப்யதே-சாங்கியர் எந்த நிலையை பெறுகின்றனரோ, தத் யோகை: அபி கம்யதே-அந்த நிலையையே யோகிகளும் அடைகிறார்கள், ய: ஸாங்க்யம் யோகம் ச ஏகம் பஸ்யதி-எவன் சாங்கியத்தையும் யோகத்தையும் ஒன்றாகக் காண்பானோ,
ஸ ச பஸ்யதி-அவனே காட்சியுடையோன்.
பொருள் : சாங்கியர் பெறும் நிலையையே யோகிகளும் பெறுகிறார்கள். சாங்கியத்தையும் யோகத்தையும் எவன் ஒன்றாகக் காண்பானோ, அவனே காட்சியுடையோன்.
அறிவைக் கையாண்டு இயற்கையின் இயல்பு எத்தகையது என்று எண்ணிப் பார்ப்பது சாங்க்யம். ஞானமார்க்கம் என்பதும் இதுவே. அப்படி விசாரித்துப் பார்க்குமிடத்துப் பிரகிருதியில் பற்று வைப்பதே துன்பமனைத்துக்கும் முதற்காரணம் என்பது விளங்கும். பிரகிருதியினின்று விலகியிருத்தலே முக்தியாகிறது. இனி, யோகம் என்பது கர்மத்தின் மூலம் பிரகிருதியோடு தொடர்வு வைத்தலாகும். பற்றில்லாது கர்மம் செய்பவனுக்குப் பிரகிருதியானது தாய்போன்று துணைபுரிகிறது; ஆற்றலும் அறிவும் ஆனந்தமும் பெருகும்படி செய்கிறது. பிரகிருதியில் கட்டுப்படாதிருப்பதே அதன்கண் புனிதம் காண்பதற்கு உற்ற உபாயம். அதில் கட்டுப்படாமையினால் முக்தியின் மேன்மையெல்லாம் யோகிக்கு வந்தமைகிறது. இங்ஙனம் சாங்க்யமும் யோகமும் ஒன்றாகின்றன. இரண்டும் ஒன்று என்று அறிந்தவன் உண்மையை அறிந்தவனகிறான்.
இவ்விரண்டு மார்க்கங்களுள் பொதுவாக எல்லா சாதகர்களுக்கும் நன்கு பயன்படுவது எது? அடுத்த சுலோகம் விளக்குகிறது :
6. ஸந்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத:
யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம ந சிரேணாதிகச்சதி
து மஹாபாஹோ-ஆனால் பெருந் தோளாய், அயோகத: ஸந்ந்யாஸ: ஆப்தும் து:கம்-யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம், யோக யுக்த: முநி: ப்ரஹ்ம-யோகத்தில் பொருந்திய முனி பிரம்மத்தை, நசிரேண அதிகச்சதி-விரைவில் அடைகிறான்.
பொருள் : பெருந் தோளாய், யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம். யோகத்தில் பொருந்திய முனி விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.
காய் ஒன்று மரத்தில் முறையாக ஒட்டியிருந்தால் மரத்திலிருந்து பெறவேண்டிய சாரத்தையும் வலிவையும் பெற்றுப் பின் தானே மரத்தைவிட்டுப் பிரிந்து பழமாக விழுகிறது. யோகி ஒருவன் முறையாகக் கர்மயோகம் செய்வதால் பிரகிருதியினின்று பெறவேண்டிய அனுபவங்களைப் பெற்று, அந்த ஞான முதிர்ச்சியால் பிரம்ம நிஷ்டனாகிறான். இதுவே முறையான கர்ம ஸந்யாஸமாகிறது. ஆக, எல்லாரும் கர்மயோகத்தைக் கையாளுதல் வேண்டும்.
கர்மயோகம் சாதகனை எப்படிப் பண்படுத்துகிறது? பகவான் பகர்கிறார்.
7. யோகயுக்தோ விஸுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:
ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே
விஜிதாத்மா-தன்னைத் தான் வென்றோன், ஜிதேந்த்ரிய:-இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன், விஸுத்தாத்மா-தூய்மையுற்றோன், ஸர்வ பூதாத்ம பூதாத்மா-எல்லா உயிர்களுந் தானே யானவன், யோகயுக்த: குர்வந் அபி-அவன் கர்மயோகியாக தொழில் செய்து கொண்டிருப்பினும், ந லிப்யதே-அதில் ஒட்டுவதில்லை.
பொருள் : யோகத்திலே மருவித் தூய்மையுற்றோன், தன்னைத் தான் வென்றோன், இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன், எல்லா உயிர்களுந் தானே யானவன் அவன் தொழில் செய்து கொண்டிருப்பினும், அதில் ஒட்டுவதில்லை.
ஜீவர்களெல்லாம் கர்மத்தில் ஈடுபடுகின்றவளவு அதில் கட்டுண்டு கீழ்மையடைகின்றனர். ஆனால் கர்மயோகி கர்மம் செய்கின்றவளவு அதினின்று விடுதலையடைகின்றான். நிஷ்காமியமாகக் கர்மம் செய்யப்படுவதால் நிராசை மனத்தெளிவை உண்டு பண்ணுகிறது. ஆசை அகலுகின்றவளவு உடலும் இந்திரியங்களும் வசப்படுகின்றன. நிராசை நாளடைவில் ஞானமாக வடிவெடுக்கிறது. எல்லா உயிர்க்கும் அந்தர்யாமியாயிருப்பவர் பரமாத்மா ஒருவரே என்ற அனுபவம் அத்தகைய ஞானத்தின் பயனாம். இங்ஙனம் கர்ம பந்தத்தை நீக்குவதால் கர்மயோகமே கர்ம ஸந்யாஸமாகப் பரிணமிக்கிறது.
ஒருவனுக்கு எவ்வளவு காலம் திவ்விய சக்ஷúஸ் உண்டாக வில்லையோ, எவ்வளவு காலம் பொற்குளிகையால் பித்தளை பொன்னாக மாறவில்லையோ அவ்வளவு காலம் வரையில் நான்தான் கர்த்தா என்ற மதிமயக்கம் இருக்கும்; அதுவரையில் இந்த நற்காரியத்தை நான் செய்தேன். அந்தக் கெட்ட காரியத்தை நான் செய்தேன் என்ற வித்தியாச மனோபாவம் இருந்து தீரும். இந்த வேறுபாடுற்ற மனோபாவந்தான் சம்ஸாரம் நீடித்திருப்பதற்குக் காரணமாகிய மாயை. நல்வழியில் செலுத்துவதும், ஸத்வகுணம் மேலோங்கி நிற்பதுமாகிய வித்யாமாயையில் சரணம் புகுந்தாலோ ஒருவன் ஈசுவரனை அடைவான். ஈசுவரனே நேரில் கண்டு அவனுடைய ஸ்வரூபத்தை அறிபவன்தான் உண்மையான முக்தன்; அவன் மாயையாகிய ஸமுத்திரத்தைத் தாண்டுபவன். ஈசுவரனே கர்த்தா, தான் கர்த்தா அல்லன் என்று உணர்பவன் சரீரத்தோடிருப்பவனும் அவன் முக்தனே.
கர்மபந்தத்தினின்று விடுபட்டதன் அறிகுறிகளாவன:
8. நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்
பஸ்யஞ்ச்ருண்வந்ஸ்ப்ருஸஞ்ஜிக்ரந்நஸ்நங்கச்சந்ஸ்வபந்ஸ்வஸந்
9. ப்ரலபந்விஸ்ருஜந்க்ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்
பஸ்யந்-காண்கினும், ச்ருண்வந்-கேட்கினும், ஸ்ப்ருஸந்-தீண்டினும், ஜிக்ரந்-மோப்பினும், அஸ்நந்-உண்பினும், கச்சந்-நடப்பினும் ஸ்வபந்-, உறங்கினும், ஸ்வஸந்-உயிர்ப்பினும்
தத்த்வவித் யுக்த:-உண்மை அறிந்த யோகி, கிஞ்சித் ஏவ ந கரோமி-நான் எதனையும் செய்வதில்லை, இதி மந்யேத-என்று நினைக்க வேண்டும்.
ப்ரலபந்-புலம்பினும், விஸ்ருஜந்-விடினும், க்ருஹ்ணந்-வாங்கினும், உந்மிஷந்-இமைகளைத் திறப்பினும், நிமிஷந் அபி-மூடினும் இந்த்ரியாணி, இந்த்ரியார்தேஷு-இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில், வர்தந்தே இதி தாரயந்-செயல் படுகின்றன என்று உணர்ந்து கொண்டு, (நான் எதனையும் செய்வதில்லை என்று கருதி இருக்க வேண்டும்).
பொருள் : உண்மை அறிந்த யோகி, “நான் எதனையுஞ் செய்வதில்லை” என்றெண்ணக் கடவான். காண்கினும், கேட்கினும், தீண்டினும், மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும்,
பொருள் : புலம்பினும், விடினும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும், எதிலும், இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் சலிக்கின்றன” என்று கருதியிருக்கக் கடவான்.
வாழ்க்கை சம்பந்தமான செயல்கள் யாவும் சரீரத்தில் நடை பெறுகின்றன. ஆத்மாவுக்கோ செயலில்லை என்ற உண்மையைத் தெரிந்து அதில் நிலைத்திருப்பவனுக்கு நான் கர்த்தா என்ற எண்ணமில்லை. வண்டியில் ஊர்ந்து செல்பவன் தன் செயலாய் அகங்கரிக்கும்பொழுது நான் போகிறேன் என்கிறான். தூக்கத்தில் பேசிய பேச்சுக்கு ஒருவன் கர்த்தாவல்லன். ஏதோ ஒன்றை ஆழ்ந்து எண்ணிக்கொண்டு ஆகாரம் புசித்தவனுக்கு என்ன பதார்த்தங்களை உண்டான் என்பது தெரியாது. அங்ஙனம் ஆத்ம சொரூபத்தில் திளைத்திருப்பவனுக்கு ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், பிராணன் ஆகியவைகளின் செயல்கள் தன்னுடையவைகளாகத் தென்படா.
தான் வெறும் கருவி; ஈசனே கர்த்தா என்று அனுபூதியில் அறிந்து கொண்டவனது வாழ்க்கை எப்படிப்பட்டது?
சுவர்ண குளிகையின் ஸ்பரிசத்தால் முற்றும் பொன்னாக மாறிய கத்தியானது பழைய வடிவத்தில் இருக்கிறது. ஆனால் அது வெட்டுதற்கு உதவாது. அங்ஙனம் எல்லாம் ஈசன் செயல் என்ற அனுபூதியடைந்தவன் பழையபடி கிருத்தியங்களைச் செய்கிறான். ஆயினும் அவனிடம் அகங்காரத்தின் விஷம் சிறிதளவுமில்லை. அவன் யாருக்கும் தீங்கு செய்வதில்லை.
கர்மத்துக்கும் அவனுக்கும் உள்ள சம்பந்தம் எத்தகையது? விடை வருகிறது. (8-9)
10. ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:
லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா
ய: கர்மாணி ப்ரஹ்மணி ஆதாய-எவன் செய்கைகளையெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டு,
ஸங்கம் த்யக்த்வா, கரோதி-பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அம்பஸா பத்ம பத்ரம் இவ-நீரில் தாமரையிலை போல், ஸ: பாபேந ந லிப்யதே-அவன் பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.
பொருள் : செய்கைகளையெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அவன், நீரில் தாமரையிலை போல், பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.
தாமரையானது தண்ணீரிலே தோன்றி தண்ணீரிலே வளர்ந்து தண்ணீரிலே நிலைபெற்றிருக்கிறது. தண்ணீர் இல்லாவிட்டால் அது தானே பட்டுப்போம். தண்ணீரில் தொடர்ந்திருப்பினும் தாமரையில் அதில் நனைவதில்லை. அங்ஙனம் மனிதன் கர்மத்திலே பிறந்து, கர்மத்திலே வளர்ந்து, கர்மத்திலே நிலை பெற்றிருக்கிறான். எனினும் தன் பேரியல்பாகிய பிரம்மத்தைச் சார்ந்திருக்கும் யோகி கர்மத்தில் கட்டுப்படுவதில்லை.
யோகிக்குக் கர்மம் எப்படிப் பயன்படுகிறது?
11. காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி
யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மஸுத்தயே
யோகிந: ஸங்கம் த்யக்த்வா-யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்மஸுத்தயே-ஆத்ம சுத்தியின் பொருட்டாக, காயேந மநஸா புத்த்யா-உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும்
கேவலை: இந்த்ரியை: அபி-வெறுமே இந்திரியங்களாலும், கர்ம குர்வந்தி-தொழில் செய்வார்.
பொருள் : யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்ம சுத்தியின் பொருட்டாக உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும் அன்றி வெறுமே இந்திரியங்களாலும் தொழில் செய்வார்.
அகங்காரமும் சுயநலமும் யோகியினுடைய உள்ளத்திலிருந்து அடிபட்டுப்போய்விடுகின்றன. அப்பொழுது அகக்கரணங்களும் புறக்கரணங்களும் வெறுமனே வேலை செய்கின்றன. உள்ளிருந்து ஆசை என்னும் வேகம் ஒன்றும் அவைகளுக்கு வருவதில்லை. நீராவி, பெட்ரோல் எண்ணெய், மின்சக்தி முதலியன யந்திரங்களுக்கு விசையாகின்றன. விசையை அடைத்த பின்பும் யந்திரம் சிறிது ஓடுவது போன்று கரணங்கள் ஆசை என்ற விசையில்லாது வேலை செய்கின்றன. அதனால் சித்தம் தெளிவடைகிறது. கர்மத்தினின்று யோகி அடையப்பெறும் நன்மை இதுவே. மேலும் :
12. யுக்த: கர்மபலம் த்யக்த்வா ஸாந்திமாப்நோதி நைஷ்டிகீம்
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே
யுக்த: கர்மபலம் த்யக்த்வா-யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து, நைஷ்டிகீம் ஸாந்திமாப்நோதி-நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான், அயுக்த: காமகாரேண-யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப், பலே ஸக்த:-பயனிலே பற்றுதல் கொண்டு, நிபத்யதே-தளைப்படுகிறான்.
பொருள் : யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான். யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான்.
வினையாற்றுதல் யோகிக்கும் யோகியல்லாதவனுக்கும் பொதுவானது. தன்மூலம் நடைபெறுகிற செயலெல்லாம் ஈசன் செயல் என்ற நினைவே யோகிக்கு நிஷ்டையாகிறது. அதில் அவன் உறுதிப்பாடு அடையுமளவு கவலையில்லை; சாந்தி நிலவுகிறது. சித்த சுத்தி வலுக்கிறது; ஞானம் உதயமாகிறது. யோகி யல்லாதவன் ஆசையின் வசப்பட்டுத் தன் செயலைத் தனக்காக வென்று புரிகிறான். அது அவனைத் தளைக்கின்ற வல்வினையாக வடிவெடுத்து வேதனைப்படுத்துகிறது.
ஈசுவரக் கிருத்தியம் தன்மூலம் நடைபெறுகிறது என்ற நிஷ்டையில் நிலைத்திருப்பவனது பான்மை எத்தகையது? விடை வருகிறது :
13. ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வஸீ
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்
வஸீ தேஹீ-தன்னை வசங்கொண்ட ஆத்மா, ந குர்வந் ந காரயந் ஏவ-எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, நவத்வாரே புரே-ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில், ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்ய-எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து,
ஸுகம் ஆஸ்தே-இன்புற்றிருக்கிறான்.
பொருள் : தன்னை வசங்கொண்ட ஆத்மா எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில் இன்புற்றிருக்கிறான்.
மனப்பான்மைக்கு ஏற்றபடி கர்மங்கள் வெவ்வேறு வடிவெடுக்கின்றன. அவைகளுள் முக்கியமானது நித்திய கர்மம். எதைச் செய்தால் புண்ணியமில்லையோ, ஆனால் செய்யாவிட்டால் பாபமேற்படுமோ, அது நித்திய கர்மம். உண்பது, உறங்குவது, நீராடுவது, வழிபடுவது முதலியன நித்திய கர்மங்களாம். நைமித்திக கர்மம் என்பது சிவராத்திரி, ஏகாதசி, கிரகண வேளை போன்ற விசேஷகாலங்களில் செய்யப்படும் கர்மங்களாம். மூன்றாவதாக வருவது காமிய கர்மம். குறித்த பலனுக்காக அது செய்யப்படுவதாகும். ஆனால் அதைச் செய்யாது விட்டுவிடுவதால் கேடு ஒன்றுமில்லை. செய்யத்தகாதது என்று அடியோடு விலக்கப்பட்ட கர்மம் எதுவோ அது நிஷித்த கர்மம். யோகிக்கு ஆசையும் அகங்காரமும் இல்லாததினால் இந்த நான்குவித கர்மங்களில் எக்கர்மமும் அவனை வந்து சார்வதில்லை. அதாவது அவன் தன்னைக் கர்த்தாவென்று நினைப்பதில்லை.
ஒன்பது வாசல்களையுடைய உடல் ஓர் ஊராகக் கருதப்படுகிறது. அரசன் போன்று ஆத்மா அதில் கர்மம் ஒன்றும் செய்யாது சும்மாயிருக்கிறது. அதனுடைய மந்திரிபிரதானிகளாகிய அகங்காரம், மனம், புத்தி, பிராணன், இந்திரியங்கள் முதலியன தொழில் புரிகின்றன. பிராரப்த கர்மம் முடிவடையும் வரையில் இங்ஙனம் செயல்கள் நடைபெறுகின்றன. செயலுக்கு நான் கர்த்தா என்ற எண்ணம் யோகியினிடத்து இல்லை.
எல்லாம் ஈசன் செயல் என்று உறுதிகொண்டு யோகி கர்த்ருத்வத்தை ஒழிக்கிறான். அப்படியானால் சர்வேசுவரனே தொழில் புரிகின்றாரா? விடை வருகிறது.
கர்மம் பிரகிருதிக்கு உரியது : ஆத்மாவுக்கு அல்ல.
14. ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:
ந கர்மபலஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே
கர்த்ருத்வம்-செயலின் கர்த்தா என்னும் தன்மை, கர்மாணி-கர்மங்கள், கர்ம பல ஸம்யோகம்-செய்கைப் பயன் பெறுதல், ப்ரபு: லோகஸ்ய ந ஸ்ருஜதி-(இவற்றுள் எதனையும்) இறைவன் மனிதர்களுக்கு தரவில்லை, து ஸ்வபாவ: ப்ரவர்ததே-ஆனால் இயல்புதான் செயல்படுகிறது.
பொருள் : செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப் பயன் பெறுதல் இவற்றுளெதனையும் கடவுள் மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல்பெறுகிறது.
கர்த்ருத்வம் என்பது வினைத்தலைமை அல்லது செயலுக்கெல்லாம் தானே தலைவன் என்ற உணர்ச்சியாம். ஸ்வபாவம் என்பது இயற்கை அல்லது பிரகிருதியின் மற்றொரு பெயர். பிரகிருதியின் செயல் ஆத்மாவின் செயல்போன்று தென்படுவது அக்ஞானத்தால். ஆகையால் அக்ஞானத்தில் இருக்கும் ஜீவாத்மா தன்னைக் கர்த்தாவென்று எண்ணுகிறான். கர்மத்தைத் தன்னுடையது என்று எண்ணுகிறவனுக்குக் கர்ம பலனைச் சார்தலும் உண்டாகிறது. இவையாவும் உண்மையில் பிரகிருதியின் செயல்களே யொழிய ஆத்மாவின் செயல்களல்ல. அது மேலும் விளக்கப்பெறுகிறது.
15. நாதத்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு:
அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ:
பாபம் ஸுக்ருதம் ச-பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று, கஸ்யசித் ந ஆதத்தே-எவனையும் கடவுள் ஏற்பதில்லை, அஜ்ஞாநேந ஆவ்ருதம் ஜ்ஞாநம்-அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது, தேந ஜந்தவ: முஹ்யந்தி-அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.
எவனையும் பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று கடவுள் ஏற்பதில்லை. அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.
எங்கும் நிறைந்துள்ள ஆகாசத்தின்மீது ஏனைய நான்கு பூதங்களும் நிலைபெற்றிருக்கின்றன. மண்ணில், நீரில், காற்றில் காணும் கேடுகளெல்லாம் ஆகாசத்தைக் கெடுப்பதில்லை. அவைகளில் உள்ள நன்மைகள் ஆகாசத்தை அலங்கரிப்பதில்லை. அங்ஙனம் பிரகிருதியின்கண் உள்ள நன்மை தீமைகளைப் பரமாத்மா ஏற்றுக்கொள்ளுதலுமில்லை, பொருட்படுத்துதலுமில்லை. ஸ்படிகத்துக்குப் பக்கத்திலுள்ள புஷ்பத்தின் நிறத்தை, ஸ்படிகம் ஏற்பது போன்று தென்படுகிறது. உண்மையில் நிறம் ஒன்றையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. அங்ஙனம் ஆத்மாவானது பிரகிருதியின் இயல்பை ஏற்றுக்கொண்டது போன்று காட்சி கொடுக்கிறது. அத்தகைய அக்ஞானத்தினால் ஜீவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.
ஈசுவரனுக்கும் ஜகத்துக்கும் உள்ள தொடர்வு இந்த இரண்டு சுலோகங்களில் நன்கு விளக்கப்படுகிறது. சர்வேசுவரன் ஆனந்த சொரூபி; பரிபூரணன். காரண காரியத்தில் அவன் சம்பந்தப்பட்டவன் என்பது அவனது சொரூபத்துக்குச் சிறிதேனும் பொருந்தாது. அவனுடைய சன்னிதான விசேஷத்தால் பிரகிருதிக்கு சர்வ சக்தியும் வந்தமைகிறது. பிரகிருதியோடு தன்னை இணைத்துக்கொள்கையில் ஜீவன் பந்தத்துக்கு ஆளாகிறான். பிரகிருதியினின்று தன்னை விலக்கிக்கொள்கையில் அவன் விடுதலையடைகிறான். வேதாந்த சாரம் முழுதும் இக்கோட்பாட்டில் அடங்கியிருக்கிறது.
வெளிச்சத்தைத் தருவது தீபத்தின் சுபாவம். அதன் உதவியால் சிலர் சமையல் செய்கின்றனர். சிலர் பொய்ப்பத்திரம் தயார்ப்படுத்துகின்றனர்; வேறு சிலர் பாகவத படனம் பண்ணுகின்றனர். அதுபோல ஈசுவரனுடைய நாமத்தின் உதவியால் சிலர் மோக்ஷமடையப் பார்க்கின்றனர். வேறு சிலர் தங்கள் தீய எண்ணங்களைச் சாதித்துக்கொள்ள முயலுகின்றனர். என்றாலும் பகவந்நாமம் ஒருபோதும் அசுத்தமடையாமல் எப்போதும் தூயதாகவே இருக்கிறது.
சர்வேசுவரன் ஜீவர்களுடைய பாப புண்ணியங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை யென்றால் ஜீவர்கள் பாபத்தை நீக்கிப் புண்ணியத்தைச் செய்ய வேண்டுமென்று வற்புறுத்துதல் எதற்காக? விடை வருகிறது :
16. ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஸிதமாத்மந:
தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஸயதி தத்பரம்
து ஏஷாம் தத் அஜ்ஞாநம்-ஆனால் எவர்களுடைய அஞ்ஞானம், ஆத்மந: ஜ்ஞாநேந நாஸிதம்-ஆத்ம ஞானத்தால் அழிக்கப் பட்டதோ, தேஷாம் ஜ்ஞாநம் ஆதித்யவத் -அவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய், தத்பரம் ப்ரகாஸயதி-பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.
பொருள் : அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.
சூரியன் உதிக்கும்பொழுது இருள் தானே மறைந்து போகிறது. ஞானம் உதிக்கும்போது அக்ஞானமும் அப்படியே அழிந்துபோகிறது. சூரியன் பிரபஞ்சப் பொருள்களை உள்ள படி காட்டுவது போன்று ஆத்ம ஞானம் பரப்பிரம்மத்தை நேராக விளக்குகிறது. ஆத்ம ஞானமும் பிரம்ம ஞானமும் ஒன்றே.
பரப்பிரம்மத்தை சாக்ஷõத்கரிக்க ஆரம்பித்த சாதகர்கள் அதைச் சாரும் விதம் சாற்றப்படுகிறது.
17. தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா:
கச்சந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூதகல்மஷா:
தத்புத்தய: ததாத்மாந: தந்நிஷ்டா: தத்பராயணா:-பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர், ஜ்ஞாந நிர்தூத கல்மஷா:-ஞானத்தால் தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், அபுநராவ்ருத்திம் கச்சந்தி-மீளாப் பதமடைகிறார்கள்.
பொருள் : பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர், தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள்.
சூரியன் எங்குச்சென்று தேடினாலும் இருளைக் காணாது; ஒளியையே காணும். அங்ஙனம் பிரம்ம ஞானத்தை அடைபவன் உள்ளும் புறமும் எங்கும் பிரம்ம சொரூபத்தையே காண்கின்றான். அவன் பெற்றுள்ளது பிரம்ம சாக்ஷõத்காரம் ஆகையால் அவன் பிரம்மஞானியாகத் திகழ்கிறான். மேலும் அவன் தானே பிரம்ம சொரூபம் ஆகின்றான். திரும்பவும் பிறப்பெடுப்பதென்பது அவனுக்கில்லை. அவன் முக்தியடைகிறான்.
யுக்தியினால் பெறப்படும் ஞானம் ஒருவகையானது என்பதையும், தியானத்தினால் வரும் ஞானம் முற்றிலும் வேறானதென்பதையும், ஈசுவர தரிசனத்தால் அதைவிட முற்றிலும் மேலான ஞானம் உதயமாகிறதென்பதையும் நான் தெரிந்துகொண்டிருக்கிறேன்.
முக்தியடைந்ததன் அறிகுறியை இவ்வுலகில் உடலோடு கூடியிருக்கும்போதே தெரிந்துகொள்ளுதல் எப்படி?
18. வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி
ஸுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஸிந:
வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே -கவி ஹஸ்திநி ஸுநி ச ஏவ-பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும் கூட, ஸ்வபாகே: ச-நாயைத் தின்னும் புலையனிடத்தும்,
பண்டிதா: ஸமதர்ஸிந:-பண்டிதர் சமப் பார்வையுடையோர்.
பொருள் : கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சமப் பார்வையுடையோர்.
சூரிய வெளிச்சம் எல்லாப் பொருள்கள் மீதும் சமமாகவேபடுகிறது. இது கங்கை, இது சாக்கடை யென்று சூரியன் பேதம் பாராட்டுவதில்லை. அங்ஙனம் பிரம்ம ஞானி பிரம்மத்தையே யாண்டும் காண்கிறான். வெறும் புஸ்தகங்கள் பல படித்தவன் பண்டிதன் அல்லன்; பிரம்ம சாக்ஷõத்காரம் பண்ணினவனே பண்டிதன். உலகத்தவர் காட்சியில் கல்வியடக்கமுடைய பிராம்மணன் மக்களுள் சிறந்தவன்; நாயை யுண்பவன் கடைப்பட்டவன். மிருகங்களுள் பரிசுத்தமானது பசு; அதிசயிக்கத்தக்கது யானை; அருகில் வரத் தகுதியற்றது நாய். அக்ஞானிக்கு வேற்றுமையை உண்டுபண்ணும் இந்த உயிர்வகைகளை யெல்லாம் ஞானி பிரம்ம சொரூபமாகவே காண்கிறான். ஆக, அவனுக்கு வேற்றுமையில்லை.
பேத புத்தியைத் தருவது அக்ஞானம்; ஐக்கிய புத்தியைத் தருவது ஞானம்.
இவ்வுலகில் இருப்பவர் இத்தகைய சமநிலையை அடைய முடியுமா? விடை வருகிறது:
19. இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந:
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:
ஏஷாம் மந: ஸாம்யே ஸ்திதம்-எவர்களுடைய மனம் சமநிலையில் நிற்கிறதோ, தை: இஹ ஏவ ஸர்க: ஜித:-இவ்வுலகத்திலேயே (உயிர் வாழும் போதே) இயற்கையை வென்றோராவர்,
ஹி ப்ரஹ்ம நிர்தோஷம் ஸமம்-ஏனெனில் பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது,
தஸ்மாத் தே ப்ரஹ்மணி ஸ்திதா:-ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.
பொருள் : மனம் சமநிலையில் நிற்கப் பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவர். பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது. ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.
கண்ணாடி கரடுமுரடாயிருந்தால் அதன் மூலம் காணப்படும் பொருள்களெல்லாம் பின்னப்பட்டுத் தெரியும். கண்ணாடி ஸமமாயிருந்தால் அதன் மூலம் பொருள்களை உள்ளபடி காணலாம். காண்போன் காணப்படுபொருளுக்கிடையில் தூய கண்ணாடியிருந்தால் மெய்க் காட்சிக்கு அது தடையாவதில்லை. மனது விருத்தி என்னும் வேகத்தோடு கூடியிருந்தால் பிறப்பு இறப்புக்கு ஏதுவான பிரபஞ்சத்தை அது காண்கிறது. மனம் ஸம நிலையில் உறுதியாயிருந்தால் பொருளை அது உள்ளபடி காண்கிறது. மெய்ப்பொருளுக்கு பிரம்மம் மற்றொரு பெயர். அதன்கண் அசைவொன்றும் இன்மையால் அது யாண்டும் ஸமமாயுள்ளது. சுத்த சைதன்யம் விகாரப்படுவதில்லை. கூடுதல், குறைதல், மாறுதல் என்பன அதனிடத்தில்லை. ஆகையால் அது தோஷமற்றது. கேடில்லாதது அது ஒன்றே. ஸமநிலையில் நிலைத்திருப்பவர் அதன் காட்சி கண்டு அதனிடத்தே நிலைத்திருப்பவர் ஆகின்றனர். கேடின்மை பிரம்ம ஞானிகளிடத்தும் வந்தமைகிறது.
மாயையும் பிரம்மமும் முறையே ஓடும் பாம்பையும் சலனமற்றுக் கிடக்கும் பாம்பையும் ஒக்கும். கிரியா சக்தி மாயையாகும்; நிஷ்கிரியா சக்தி பிரம்மம்.
ஞானிகளிடத்துக் கேடில்லையென்று எப்படித் தெரிந்து கொள்வது? விடை வருகிறது:
20. ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்ப்ராப்ய சாப்ரியம்
ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித்ப்ரஹ்மணி ஸ்தித:
ப்ரியம் ப்ராப்ய ந ப்ரஹ்ருஷ்யேத்-விரும்பிய பொருளைப் பெறும்போது மகிழ்ச்சி அடையாமலும், அப்ரியம் ப்ராப்ய ச ந உத்விஜேத்-பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்படாமலும்,
ஸ்திரபுத்தி: அஸம்மூட: ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித:-பிரம்மஞானி பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.
பொருள் : விரும்பிய பொருளைப் பெறும்போது களிகொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரம்மஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.
விருப்பு வெறுப்பு, இன்ப துன்பம் இவையாவும் உடல் கூற்றோடு சம்பந்தப்பட்டவைகள். தேகத்தைத் தானென்று எண்ணுபவன் மனக் குழப்பமடைந்தவன். பிரம்ம திருஷ்டியிலேயே இருப்பவனுக்கு இத்தகைய சித்தவிருத்திகள் உண்டாவதில்லை.
காமமும் காசு ஆசையும் மனதை விட்டகலும்போது ஆத்மாவினிடம் வேறு என்ன தங்கியிருக்கும்? பிரம்மானந்தமே அங்குக்குடி கொண்டிருக்கும். பிரம்மசொரூபத்தில் நிலைபெற்றிருப்பதால் :
21. பாஹ்யஸ்பர்ஸேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம்
ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஸ்நுதே
பாஹ்ய ஸ்பர்ஸேஷு-புறத் தீண்டுதல்களில், அஸக்தாத்மா ஆத்மநி-பற்றற்ற சாதகன் உள்ளத்தில், யத் ஸுகம் விந்ததி-எந்த சுகம் தியானத்தால் விளைகிறதோ அதை பெறுகிறான்,
ப்ரஹ்ம யோக யுக்தாத்மா-(அதன் பிறகு) பிரம்ம யோகத்தில் பொருந்தி, ஸ: அக்ஷயம் ஸுகம் அஸ்நுதே-அவன் அழியாத இன்பத்தை எய்துகிறான்.
பொருள் : புறத் தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன் பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான்.
புறத்தில் பொறிகள் வாயிலாக வரும் போக சுகங்கள் நிலையற்றவைகள். அவைகள் சிற்றின்பம் எனப்படுகின்றன. அகத்தில் சுத்தியடைந்த அந்தக்கரணம் ஆத்மானந்தத்தை அனுபவிக்கிறது. அது தேயாது தெளிவடைகிறபடியால் அதற்குப் பேரின்பம் என்று பெயர்.
சிலர் ஏற்கனவே விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அறிந்து கொள்வதற்கு அவர்களிடம் சில அடையாளங்கள் இருக்கிறது. சக்கரவாகம் என்னும் பக்ஷி எப்போதும் ஆகாயத்தில் பறந்துகொண்டே இருக்கும். ஏழு சமுத்திரங்களிலும் தண்ணீர் இருக்கின்றது. கங்கை, யமுனை முதலிய அநேக ஆறுகளிலும் தண்ணீர் நிறைந்துள்ளது. என்றாலும் அப்பறவை மழை நீரையன்றி இவை யொன்றினின்றும் தண்ணீர் அருந்தாது. எவ்வளவுதான் தாகத்தால் தொண்டை வறண்டு போயினும் மழை நீரைத் தவிர்த்து வேறு எந்த நீரையுமே அது அருந்தவே அருந்தாது. அதுபோல இவர்களும் கடவுளைப் பற்றியும் கடவுள் சம்பந்தப்பட்டவைகளைப் பற்றியுமன்றி வேறு எந்த விஷயங்களைப் பற்றியும் கேட்கவும் பேசவும் மாட்டார்கள்.
முந்தியது சிற்றின்பம் என்று ஏன் சொல்லப்படுகிறது? விளக்கம் வருகிறது :
22. யே ஹி ஸம்ஸ்பர்ஸஜா போகா து:கயோநய ஏவ தே
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத:
ஸம்ஸ்பர்ஸஜா யே போகா:-புறத் தீண்டுதல்களில் எந்த இன்பங்கள் உள்ளனவோ, தே ஹி து:கயோநய: ஏவ-அவை நிச்சயமாக துன்பத்துக்குக் காரணங்களாகும், ஆதி அந்தவந்த:-தொடக்கமும் இறுதியுமுடையன (அநித்யமானவை), கௌந்தேய-குந்தி மகனே,
புத: தேஷு ந ரமதே-அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.
பொருள் : புறத் தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணங்களாகும். அவை தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே, அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.
மனிதனுக்கு வருகிற எல்லா துக்கத்துக்கும் காரணம் விஷய சுகத்தை நாடுவதாலேயாம். இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களில் தொடர்பு வைக்கும்பொழுது சுகம் ஆரம்பிக்கிறது. அர்த்தங்களை விட்டு அவைகள் விலகும்போது துக்கமாகப் பரிணமிக்கிறது. இடையில் மின்னல் போன்று சிறிது இன்பம் தென்பட்டது தான் மிச்சம். அறிவு இல்லாத விலங்குகளும் மாக்களும் அவைகளை நாடிச் செல்லுகின்றன. விவேகமுடையவன் அவைகளை அறவே விலக்கிவிடுகிறான்.
பாம்பைக் கண்டதும் மானஸதேவி! வாலைக்காட்டித் தலையை மறைத்துக்கொண்டு ஒதுங்கிப் போ என்று ஜனங்கள் சொல்லுவது வழக்கம். அதுபோல இந்திரிய சுகங்களைத் தூண்டும் விஷயங்களினின்றும் விலகியிருப்பது நல்லது. அவைகளில் அழுந்தி வருந்துவதனால் உண்டாகும் அனுபவத்தைக்காட்டிலும், அவைகளுடைய ஸஹவாசமே இல்லாது செய்து கொள்வது வெகு மேலானது.
ஆசையைப் போக்க எத்தகைய பிரயத்தனம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
23. ஸக்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ஸரீரவிமோக்ஷணாத்
காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர:
ய: இஹ ஏவ-எவன் இவ்வுலகத்திலேயே, ஸரீரவிமோக்ஷணாத் ப்ராக்-சரீரம் நீங்குமுன்னர், காம க்ரோத உத்பவம்-விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும், வேகம் ஸோடும் ஸக்நோதி-எழுச்சியை பொறுக்க வல்லானோ, ஸ நர: யுக்த:-அந்த மனிதன் யோகி, ஸ ஸுகீ-அவன் இன்பமுடையோன்.
பொருள் : சரீரம் நீங்குமுன்னர் இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்க வல்லானோ அந்த மனிதன் யோகி. அவன் இன்பமுடையோன்.
மனிதன் உடலில் உயிர்வாழுமளவு காமம் அல்லது குரோதம் தலையெடுப்பது திண்ணம். சாகும் தறுவாயிலும் இவைகள் தோன்றவல்லவைகள். இன்பம் தரும் பொருள்களை இந்திரியங்களால் நுகர்வதால், கேட்பதால் அல்லது எண்ணுவதால் காமம் தலையெடுக்கிறது. குரோதம் அல்லது சினம் என்பது துன்பம் தரும் பொருள்களை இந்திரியங்களால் நுகர்வதால், கேட்பதால் அல்லது சிந்திப்பதால் தோன்றுகிறது. காமம் உள்ளத்தில் தடிக்கும்போது அது புறத்தில் முகமலர்ச்சியாகவும் மயிர்க்கூச்சாகவும் வடிவெடுக்கிறது. சினம் சிந்தையில் சீறியெழும்போது உடல் வியர்த்து நடுங்குகிறது; உதடு கடியுண்கிறது; கண் சிவக்கிறது. இத்தகைய விருப்புவெறுப்பின் விசையை அடக்குபவனே யோகி. அவனுக்குத் தன்னகத்துள்ள இன்பம் தானே உதயமாகிறது.
காமமும் காசு ஆசையும் உலகம் முழுவதையும் பாபத்தில் அமிழ்த்திவிட்டன. ஸ்திரீகளே லோகமாதாவின் தோற்றங்களென்று கருதுவாயானால், உனக்கு அவர்களால் துன்பமுண்டாகாது.
ஆசை நசிக்காதிருக்கும் வரையில் ஈசனைக் காணமுடியாது.
எத்தகைய யோகி பிரம்மத்தில் நிலைத்திருந்து பிரம்மத்தை யடைகிறான்? பகவான் பதில் சொல்லுகிறார்.
24. யோऽந்த:ஸுகோ’ந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய:
ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோऽதிகச்சதி
ய: ஏவ அந்த:ஸுக-எவன் தனக்குள்ளே இன்பமுடையவனாக, அந்தராராம:-உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், ததா ய: அந்தர்ஜ்யோதி:-அவ்வாறே உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி எவனோ, ஸ: ப்ரஹ்மபூத:-அவன் தானே பிரம்மமாய், ப்ரஹ்மநிர்வாணம் அதிகச்சதி-பிரம்ம நிர்வாணமடைகிறான்.
பொருள் : தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.
விஷயங்களில் சுகம் காணாது சுகத்துக்கு யதாஸ்தானமாகிய ஆத்மாவின்கண் அது காணப்பெறுகிறது. விளையாடி மகிழ்வூட்டும் பொருள் வெளியுலகில் இல்லாது ஆத்மாவின்கண்ணே அமைகிறது. ஞான வெளிச்சத்தை நாடி இந்திரியங்கள் வாயிலாக வெளியுலகில் செல்லாது ஆத்மா தன்னிடத்தே அதை அடைகிறது. சுருங்கச் சொல்லின் தான் நாடும் அனைத்தும் தன்னிடத்தே இருப்பதை சுவானுபவத்தில் காணும் யோகி தானே பிரம்ம சொரூபமாகி பிரம்ம நிர்வாணம் அல்லது முக்தியடைகிறான்.
உலகப்பற்று அதிகமுள்ள மனிதனுக்கு ஞானம் உதிக்காது. எவ்வளவுக்கு உலகப்பற்று குறைந்து இருக்கிறதோ அதற்கேற்றபடி ஞானமும் வளர ஆரம்பிக்கும்.
25. லபந்தே ப்ரஹ்மநிர்வாணம்ருஷய: க்ஷீணகல்மஷா:
சிந்நத்வைதா யதாத்மாந: ஸர்வபூதஹிதே ரதா:
சிந்நத்வைதா-இருமைகளை வெட்டிவிட்டு, ஸர்வபூதஹிதே ரதா:-எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தி, யதாத்மாந:-எவர்கள் சஞ்சலமின்றி பரமாத்மாவில் நிலைத்துள்ளதோ, ருஷய: க்ஷீணகல்மஷா:-(அந்த) ரிஷிகள் பாவங்களழிந்து, ப்ரஹ்மநிர்வாணம் லபந்தே-பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.
பொருள் : இருமைகளை வெட்டிவிட்டுத் தம்மைத் தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தும் ரிஷிகள் பாவங்களழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.
ரிஷிகள் என்பவர்கள் தத்வதர்சனம் அடையப்பெற்றவர்கள். பற்றற்ற வாழ்க்கையால் அவர்களுக்குப் பூரண ஞானம் வருகிறது. பற்று இல்லை யெனினும் எல்லா உயிர்களும் இன்புற்றிருப்பதற்கான உபாயங்களையெல்லாம் அவர்கள் கையாளுகிறார்கள். மனமும் இந்திரியங்களும் அடங்கப் பெறாமையினால் அவர்கள் அங்ஙனம் செயலில் ஈடுபடுபவர்கள் அல்லர்; முற்றிலும் தன்னடக்கமே வடிவெடுத்தவர்கள். ஆக, அவர்களுக்கும் பாபம் ஒன்றும் வந்தமைவதில்லை. பிரம்ம நிர்வாணம் அல்லது பேரானந்தப் பிராப்திக்கு அவர்கள் தகுதியுடையவர்கள் ஆகின்றனர்.
மேலும் அவர்களது மகிமை யாதெனில் :
26. காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்
அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம்
காமக்ரோதவியுக்தாநாம்-விருப்பமும் சினமும் தவிர்த்து, யதசேதஸாம் விதிதாத்மநாம்-சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய, யதீநாம் அபித:-முனிகளுக்கு நாற்புறமும்,
ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே-பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.
பொருள் : விருப்பமும் சினமும் தவிர்த்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.
யாண்டும் மோக்ஷமுளது என்பதன் பொருள் இங்கு இவ்வுடலத்தோடு இருக்கும்பொழுது அத்தகைய பரிபாகமுடைய துறவிகள் ஜீவன் முக்தர்களாக யிருக்கிறார்கள். இவ்வுடலத்தை விடும்பொழுது அவர்கள் விதேகமுக்தர்களாகிறார்கள். ஆக, எங்கும் எப்பொழுதும் அவர்கள் முக்தர்களே.
முக்தியின் பொருட்டு மனதை ஒருமுகப்படுத்தியாகவேண்டும். அதன் விவரம் வருகிறது.
27. ஸ்பர்ஸாந்க்ருத்வா பஹிர்பாஹ்யாம்ஸ்
சக்ஷúஸ்சைவாந்தரே ப்ருவோ:
ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா
நாஸாப்யந்தரசாரிணௌ
28. யதேந்த்ரியமநோபுத்திர்முநிர்மோக்ஷபராயண:
விகதேச்சாபயக்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ:
பாஹ்யாந் ஸ்பர்ஸாந் பஹி ஏவ க்ருத்வா-புறத் தீண்டுதல்களை வெளியிலேயே தள்ளி,
சக்ஷú: ப்ருவோ: அந்தரே-புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி, நாஸாப்யந்தர சாரிணௌ-மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும்,
ஸமௌ க்ருத்வா ச-சமமாகச் செய்துகொண்டு.
யதேந்த்ரிய: மந: புத்தி:-புலன்களை, மனத்தை, மதியையும் அடக்கி, விகத: இச்சா பய க்ரோத:-விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்த்து, மோக்ஷபராயண:-மோட்சத்தை குறிக்கோளாக கொண்டிருக்கிற, ய: முநி: ஸ: ஸதா முக்த ஏவ-அந்த முனிவன் எக்காலமும் முக்தனே யாவான்.
பொருள் : புறத் தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்துகொண்டு;
பொருள் : புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி விடுதலை யிலக் கெனக் கொண்டு விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்ந்தான் முக்தனே யாவான் முனி. (27-28)
ஓசை முதலிய வெளி விஷயங்களை எண்ணாது விட்டுவிடும் பொழுது அவைகள் புறத்தே வைக்கப்படுவனவாகின்றன. தியானத்தில் கண்கள் பாதி மூடப்பெற்றிருக்கும்போது அவைகள் அசைவதில்லை; புருவங்களுக்கிடையில் குவிவனபோன்று அவைகள் தென்படும். நாசியால் புறத்தே விடும் மூச்சுக்குப் பிராணன் என்றும் உள்ளே இழுக்கும் காற்றுக்கு அபானன் என்றும் பெயர். இங்ஙனம் பிராணாயாமத்தின் மூலம் சுவாசத்தின் போக்கு வரவு ஒழுங்குபடுத்தப்படுகிறது. மனதின் அமைதிக்கும் பிராண அபானனின் ஒழுங்கு முறைக்கும் நெருங்கிய தொடர்வுண்டு. வாயு ஒடுங்குமிடத்து மனம் ஒடுங்குகிறது. மனம் ஒடுங்குமிடத்து வாயு ஒடுங்குகிறது.
ஆசை, அச்சம், சினம் குடிகொள்ளுமிடத்து மனம் தத்தளிக்கிறது. அசையும் நீரில் நிழல் அல்லது பிரதிபிம்பம் நன்கு தென்படாது. அசையும் மனதில் ஆத்ம சொரூபம் தென்படாது. மனதுக்குத் தேக்கம் முதலில் உண்டாகவேண்டும். தியானம் அதைத் தொடர்ந்து கைகூடும்.
யாருடைய மனது தைலதாரை போன்று ஈசுவரனை நோக்கிச் செல்லுகிறதோ அம்மனிதன் முனி, அல்லது மனன சீலத்தையுடையவன். ஆத்ம சாக்ஷõத்காரம் பண்ணிக்கொண்டிருக்குமளவு ஒருவன் முக்தனாகிறான். பின்வரும் அத்தியாயம் முழுதும் இந்த இரண்டு சுலோகங்களுக்கு விளக்கமாகும். ஈசுவரனிடத்து மனதைத் திருப்புகிற முனி ஈசுவரனே எங்ஙனம் கருதவேண்டும்? விடை வருகிறது :
29. போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்வரம்
ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம்ருச்சதி
மாம் யஜ்ஞதபஸாம் போக்தாரம்-என்னை வேள்வியும் தவமும் ஏற்பவன் என்றும், ஸர்வலோகமஹேஸ்வரம்-உலகுகட்கெல்லாம் ஒருபேரரசன் என்றும், ஸர்வபூதாநாம் ஸுஹ்ருதம்-எல்லா உயிர்கட்கு நண்பன் என்றும், ஜ்ஞாத்வா ஸாந்திம் ருச்சதி-என்று அறிபவன் அமைதி அடைகிறான்.
பொருள் : வேள்வியுந் தவமும் மிசைவோன் யானே; உலகுகட்கெல்லாம் ஒரு பேரரசன்; எல்லா உயிர்கட்கு நண்பன் யான்” என்றறிவான் அமைதி யறிவான்.
யாகம், தபசு இவைகளைக் செய்விக்கும் கர்த்தாவாயிருப்பவரும், இவைகள் வாயிலாக யோகியால் அடையப்பெறும் தெய்வமாயிருப்பவரும் நாராயணனே. உலகம் முழுவதையும் அவர் ஆளுகிறார். அப்படிச் செய்வதால் அவரிடத்து அன்பு இல்லாதுபோய்விடவில்லை. கைம்மாறு கருதாது எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்கிறார் அவர். எல்லாருடைய உள்ளத்திலும் மன சாக்ஷியாக வீற்றிருந்து அவரவர் கர்மத்துக்கு ஏற்ற பலனை அவர் எடுத்து வழங்குகிறார். செயலுக்குத் தலைவனாயிருப்பது போன்று அறிவுக்கும் அறிவாய் இலங்குகின்றார் அவர். இவ்வுண்மையை அறிகின்றவர்களுக்கு மனச்சஞ்சலம் இல்லை. சாந்தி தானே வந்தமையும்.
இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ஸந்யாஸயோகோ நாம பஞ்சமோऽத்யாய:
பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ஸந்யாஸ யோகம் என்ற ஐந்தாம் அத்தியாயம்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக