செவ்வாய், 8 நவம்பர், 2011

ஏழாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்


ராதே கிருஷ்ணா 08 - 11 - 2011 

12 திருமுறைகள்

ஏழாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்


விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க     
http://temple.dinamalar.com/


ஏழாம் திருமறை
ஏழாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்
49. திருமுருகன் பூண்டி (அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில், திருமுருகன்பூண்டி,கோயம்புத்தூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
498. கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு
ஆற லைக்கும்இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக்கு இங்கிருந் தீர்எம்பிரானீரே.
தெளிவுரை : இத் திருப்பதிகம் நாயனார் ஆறலைப்புண்ட இடத்தில் கோயில் கொண்டிருந்த இறைவரைக் கண்டு, அந்தோ ! இக் கொடிய இடத்தில் இறைவியோடு நீர் ஏன் இருக்கின்றீர் ? அப்பாற் சென்று இருக்கலாகாதோ ? எனக் கவன்று அருளிச் செய்தது. அன்பின் மிகுதியால் இறைவவது ஆற்றல் தோன்றாதாயிற்று என்க.
எம்பெருமானே ! முடை நாற்றம் சேய்மையினும் விரையச் சென்று நாறுகின்ற உடம்பையுடைய வடுகர்கள் வாழ்கின்ற இம் முருகன்பூண்டி, வளைந்த கொடிய வில்லேந்திய வடுக வேடுவர் வருவோரைப் பொருந்தாத சொற்களைச் சொல்லி திடுகு என்றும் மொட்டு என்றும் அதட்டி அச்சுறுத்தி வழிப்பறி செய்து அவர்தம் உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம். இம் மாநகரிடத்து இங்கு எம்பெருமாட்டியோடும் நீர் எதன் பொருட்டு இருக்கின்றீர்.
499. வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமை சொல்லிக்
கல்லி னால்எறிந்து இட்டும் மோதியும்
கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன்
பூண்டி மாநகர்வாய்
எல்லை காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக்கு இங்கிருந் தீர்எம்பி ரானீரே.
தெளிவுரை : எம்பெருமானே, முல்லை மலர் மணம் வீசுகின்ற இம்முருகன் பூண்டி மாநகர் வருவோரை வேடுவர்கள் வில்லைக் காட்டி, வெருட்டியும் பொருந்தாத சொற்களைச் சொல்லிக் கல்லால் எறிந்தும் கையால் அறைந்தும் அவர்களது உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம்; இதன் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லாமை நீர் அறிந்ததேயானால் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?
500. பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்
பாவம் ஒன்றறியார்
உசிர்க்கொ லைபல நேர்ந்து நாள்தொறுங்
கூறை கொள்ளும்இடம்
முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன்
பூண்டி மாநகர்வாய்
இசுக்கழியப் பயிக்கங் கொண்டுநீர் எத்துக்கு
இங்கிருந் தீர்எம்பி ரானீரே.
தெளிவுரை : எம்பெருமானே, வேடர் பலர் குரங்குகள் போலப் பிறர் பொருளைப் பறித்து வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர், அந்தப் பாவிகள், பாவம் என்பதொன்றை அறியாராய் விலங்குகளைக் கொன்று தின்று நாள்தோறும் பலரது உயிர்களைக் கொன்று அவர்களது உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம். இங்கு நீர் பெருமை கெடும்படி பிச்சை ஏற்று எதற்காக இருக்கின்றீர் ?
501. பீறற் கூறை உடுத்தோர் பத்திரங்
கட்டி வெட்டினராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங்
கூறை கொள்ளும்மிடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்
பூண்டி மாநகர்வாய்
ஏறு காலிற்ற தில்லை யாய்விடில்
எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரா னீரே.
தெளிவுரை : எம்பெருமானே, குற்றமுடைய வேடுவரே கூடி, வழிப்பறி செய்த பொருளின் பங்காகிய பொருளை உடையவராய் வாழ்கின்ற இம்முருகன் பூண்டி மாநகர் அவர்கள் கிழிந்த உடையை உடுத்திக் கொண்டு அதற்குள் உடைவாளையும் கட்டிக் கொண்டு வருவோரை அவ்வுடைவாளால் வெட்டி, நாள்தோறும் அவர்களது உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம்; உமது எருது கால் ஒடியாமல் நன்றாக இருந்தால் அதன் மேல் ஏறி அப்பாற் போகாமல் இதன்கண் இங்கு எதற்காக இருக்கின்றீர்?
502. தயங்கு தோலை உடுத்த சங்கரா
சாம வேதம் ஓதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்கம் ஒன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானீரே.
தெளிவுரை : எம்பெருமானே, நீர் தோலை உடுத்து. சாம வேதத்தைப் பாடிக் கொண்டு, அப் பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியீரோ ? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீரென்றால் அணிகளை அணிந்த தேவியோடும் இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?
503. விட்டி சைப்பன கொக்க ரைகொடு
கொட்டித் தத்தளகம்
கொட்டிப் பாடும்இத் துந்து மியொடு
குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன்
பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண்டு உண்பது ஆகில்நீர்
எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானீரே.
தெளிவுரை : எம்பெருமானே ! நீர் கொட்டிப் பாடுதற்குரிய தாள அறுதிக்கு ஏற்ப விட்டுவிட்டு ஒலிக்கின்ற கொக்கரை, கொடுகொட்டி, தத்தளகம், துந்துமி, குடமுழா என்னும் இவற்றை விரும்பினால், மணங்கமழ்கின்ற, இம்முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதற்காக இருக்கின்றீர் ? கொக்கரை முதலியன வாச்சிய வகைகள்.
504. வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண்
கோவணந் தற்றயலே
ஓதம் மேவிய ஒற்றி யூரையும்
முத்தி நீர்மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறை கொள்ளும்
முருகன் பூண்டி மாநகர்வாய்
ஏது காரணம் ஏது காவல்கொண்டு
எத்துக்கு இங்கிருந்தீர் எம்பெருமானீரே.
தெளிவுரை : எம்பெருமானே, நீர் வேதத்தை ஓதிக் கொண்டு வெண்ணீற்றைப் பூசிக்கொண்டு வெண்மையான கோவணத்தை உடுத்து, பக்கத்தில் அலை பொருந்திய திருவொற்றியூரை உத்திர நீர் விழாவின் பொருட்டு விரும்புவீர். அங்குப் போகாமல் வேடர்கள் வருவோரைத் தாக்கி, அவரது உடையைப் பறித்துக் கொள்ளுகின்ற இம்முருகன் பூண்டி மாநகரில் யாது காரணம் பற்றி எதனைக் காத்துக்கொண்டு எதன் பொருட்டு இங்கு இருக்கின்றீர் ? உத்திர நீர் என்றும் பாடம். திருவொற்றியூரில் உத்திர நாளில் நீர் விழா நடைபெற்றது.
505. படஅ ரவுநுண் நேரிடைப் பணைத்தோள்
வரிநெ டுங்கண்
மடவ ரல்உமை நங்கை தன்னையோர்
பாகம் வைத்து உகந்தீர்
முடவர் அல்லீர் இடர்இலீர் முருகன்
பூண்டி மாநகர்வாய்
இடவம் ஏறியும் போவ தாகில்நீர்
எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானீரே.
தெளிவுரை : என் பெருமானே, நீர் தனிமையாக இல்லாமல் உமை என்னும் நங்கையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளீர். முடவர் அல்லர். ஆகவே புறப்பட்டுப் போவதில் இடர் ஒன்றும் இல்லை. அல்லாமலும் நீர் விரும்பிய இடபத்தின்மேல் ஏறியும் போகலாம் என்றால் இந்நகரில் நீர் எதன் பொருட்டு இருக்கின்றீர் ? இடைக்குப் பாம்பு உவமையாகச் சொல்லப் படுதலும் மரபு போலும்.
506. சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
பற்றலை கலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர்
பாகம் வைத்துஉகந்தீர்
மோந்தை யோடு முழக்கறா முருகன்
பூண்டி மாநகர்வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானீரே.
தெளிவுரை : எம் பெருமானே, திருநீற்றைப் பூசிக் கொண்டு வெண்மையான பற்களையுடைய தலையைக் கலமாக ஏந்தி, வெண்மையான பிறையைக் கண்ணியாக முடியின் ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே. மொந்தை என்னும் வாத்தியத்தோடு வேடர்கள் முழங்குதல் நீங்காத இம் முருகன் பூண்டியில் நீர் உமையாளோடு இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?
507. முந்திவானவர் தாம்தொழு முருகன்
பூண்டி மாநகர்வாய்ப்
பந்த ணைவிரல் பாவை தன்னையோர்
பாகம் வைத்தவனைச்
சிந்தனை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங்கொண்டு
எந்தம் அடிகளை ஏத்துவார் இடர்
ஒன்றும்தாம் இலரே.
தெளிவுரை : தேவர், ஒருவர் மற்றவரை முற்பட்டு வணங்குகிற திருமுருகன்பூண்டி மாநகரில் எழுந்தருளியிருக்கிற உமையம்மையை இடப்பாகத்தில் வைத்துள்ள சிவபெருமானை, அவனுக்குத் தொண்டனாகிய நம்பியாரூரன் அன்பினாற் பாடிய இப்பத்துப் பாடல்களால் அப்பெருமானைத் துதிப்பவர்கள் துன்பம் எதுவும் இல்லாதவராவர்.
திருச்சிற்றம்பலம்
50. திருப்புனவாயில் (அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புனவாசல், புதுக்கோட்டை மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
508. சித்தம் நீநினை என்னொடு
சூளறு வைகலும்
மத்த யானையின் ஈருரி
போர்த்த மணாளனூர்
பத்தர் தாம்பலர் பாடிநின்
றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்டுஅ
றாப்புன வாயிலே
தெளிவுரை : இத்திருப்பதிகம், நெஞ்சைத் திருத்த அதனை நோக்கி உறுதி கூறியவாறாக அருளிச் செய்தது. மனமே, நீ நும் நெறியாற் பயன் கிட்டாது என்று, இப்போது என்னோடு சூள் செய்தலை ஒழி, மத யானையின் உரித்த தோலைப் போர்த்த அழகன் எழுந்தருளியிருக்கிற ஊர். அடியவர் பலர் திருப்பாடல்களைப் பாடி ஆடுகின்ற பழைய ஊராகிய, மரப் பொந்துகளில் ஆந்தைகளின் பாட்டு ஒழியாத திருப்புனவாயிலே. அதை நாள்தோறும் தப்பாமல் நினை. பின்னர் என்னிடம் சொல். சோலைகள் இருண்டிருத்தலின் ஆந்தைகள் பாடலாயின. இத் தலத்தில் பாலை நில வருணனையே கூறப்படுகிறது.
509. கருது நீமனம் என்னொடு
சூளறு வைகலும்
எருது மேற்கொளும் எம்பெரு
மாற்குஇடம் ஆவது
மருத வானவர் வைகும்
இடம்மற வேடுவர்
பொருது சாந்தொடு பூசல்
அறாப்புன வாயிலே.
தெளிவுரை : மனமே, நீ இப்போது என்னோடு சூள் செய்தலை ஒழி; எருதை ஊர்கின்ற எம்பெருமானுக்கு இடமாய் இருப்பது இந்திரன் முதலிய தேவர் நீங்காதிருக்கின்ற இடமாகிய, வேடர்கள் வாணிகச் சாத்தோடு போர் செய்தலால் ஆரவாரம் நீங்காத திருப்புனவாயிலே. அதனை நாள்தோறும் தப்பாது நினை. பின்னர் என்னோடு சொல்.
சாத்தொடு  வியாபாரிகளின் கூட்டத்தோடு திருப்புனவாயில் நெய்தலோடு மயங்கிய பாலைக்கண் இருத்தலின், இத் திருப்பதிகத்துள் பாலைக்கேற்ற அணிந்துரையை அருளுவார்.
510. தொக்காய் மனம் என்னொடு சூளறு வைகலும்
நக்கான் நமைஆ ளுடையான் நவிலும்இடம்
அக்கோடு அரவுஆர்த் தபிரான் அடிக்குஅன்பராய்
புக்கார் அவர்போற் றொழியாப் புனவாயிலே.
தெளிவுரை : அளவற்ற நினைவுகள் பொருந்தி ஆராய்கின்ற மனமே. நீ இப்போது என்னோடு சூள் செய்தலை ஒழி. ஆடையில்லாது இருப்பவனும் நம்மை ஆளாக உடையவனும் ஆகிய சிவபெருமானுக்கு இடமாய் இருப்பது எலும்பையும் பாம்பையும் அணிந்த அப்பெருமானுக்கு அன்பராய் அவனையே புகலிடமாக அடைந்தவர் அவனைப் போற்றுதல் ஒழியாத திருப்புனவாயிலே. அவனை நாள்தோறும் தப்பாமல் நினை. பிறகு என்னொடு சொல். இத் திருப்பாடல்களில் சீர் மயக்கமும் அடிமயக்கமும் வந்துள்ளன.
511. வற்கென்று இருத்திகண் டாயமனம்
என்னொடு சூளறு
பொற்குன் றஞ்சேர்ந்த தோர்காக்கை
பொன்னாம் அதுவேபுகல்
கற்குன்றும் தூறும் கடுவெளி
யுங்கடற் கானல்வாய்ப்
புற்கென்று தோன்றிடும் எம்பெரு
மான்புன வாயிலே.
தெளிவுரை : மனமே, நீ எதற்கும் அஞ்சாமல் தைரியத்தோடு இருக்கின்றாய். என்னோடு இப்போது சூள் செய்தலை ஒழி. பொன்மலையைச் சேர்ந்த காக்கையும் பொன்னிறமாம். ஆதலின் கரையிடத்து சிறிய கற்குன்றுகளும், புதர்களும் வெப்பம் மிக்க வெற்றிடமும் பொலிவிழந்து தோன்றுவதற்குக் காரணமான எம்பெருமானது திருப்புன வாயிலாகிய அதனையே போற்று.
512. நில்லாய் மனம் என்னொடு
சூளறு வைகலும்
நல்லான் நமைஆ ளுடையான்
நவிலும் இடம்
வில்லாய்க் கணைவேட் டுவர்ஆட்ட
வெகுண்டு போய்ப்
புல்லாய்க் கணம் புக்கொளிக்
கும்புன வாயிலே.
தெளிவுரை : மனமே, நீ இப்போது என்னோடு சூள் செய்தலை ஒழி; நன்மையே வடிவானவனும் நம்மை ஆளாக உடையவனுமாகிய சிவபெருமான் பெரிதும் வாழும் இடம், வேடர்கள் தம் வில்லின்கண் தொடுத்த அம்பினால் வெருட்ட வெருண்டு ஓடி மான் கூட்டம் புகுந்து ஒளிக்கின்ற திருப்புனவாயிலே; நாள்தோறும் அதனிடம் சென்று நில்.
513. மறவல் நீமனம் என்னொடு
சூளறு வைகலும்
உறவும் ஊழியும் ஆய
பெம்மாற்கு இடம்ஆவது
பிறவு கள்ளியின் நீள்கவட்டு
ஏறித்தன் பேடையைப்
புறவங் கூம்பிடப் பொன்புனம்
சூழ்புன வாயிலே.
தெளிவுரை : மனமே, நீ இப்போது என்னோடு சூள் செய்தலை ஒழி. எல்லா உயிர்கட்கும் உறவும் காலமும õய் இருக்கும் சிவபெருமானுக்கு இடமாய் இருப்பது சேவல் புறா. தன் பெடை பிரிந்த பின்பு அதனை, கள்ளிப் புதரின் வளர்ந்த கிளையில் ஏறி நின்று கூப்பிட, புனங்களில் பொன் நிறைந்து காணப்படுகின்ற திருப்புனவாயிலே. அதனை மறவாது நினை.
514. ஏசற்று நீநினை என்னொடு
சூளறு வைகலும்
பாசற் றவர்பாடி நின்றா
டும்ப ழம்பதி
தேசத்து அடியவர் வந்திரு
போதும் வணங்கிடப்
பூசல் துடி பூசல்
அறாப்புன வாயிலே.
தெளிவுரை : மனமே, நீ இப்போது என்னொடு சூள் செய்தலை ஒழி. பாசம் நீங்கிய மெய்யுணர்வினர் புகழ்ந்து பாடி நின்று ஆடுகின்ற பழைமையான ஊர் பல நாட்டிலும் உள்ள அடியவர் பலரும் வந்து காலையிலும் மாலையிலும் வணங்க, வேடுவர்களது போர்ப்பறை ஆரவாரத்தை ஒழியாத திருப்புனவாயிலே. அதனை இகழ்தல் அற்று நாள்தோறும் இடைவிடாமல் நினை.
515. கொள்ளி வாயின கூரெயிற்று
ஏனம் கிழிக்கவே
தெள்ளி மாமணி தீவிழிக்
கும்இடம் செந்தறை
கள்ளி வற்றிப்புல் தீந்துவெங்
கானம் கழிக்கவே
புள்ளி மானினம் புக்கொளிக்
கும்புன வாயிலே.
தெளிவுரை : கொள்ளி போல முனை சிவந்து நீண்ட வாயினையும் கூரிய பற்களையும் உடைய பன்றிகள் நிலத்தைக் கிண்ட, வெளிப்பட்ட சிறந்த மாணிக்க மணியோடு நெருப்புத் தோன்றுமிடத்துச் சிவந்து காட்டும் நிலத்தின்கண் உள்ள கள்ளி உலர்ந்து, புல் தீய்ந்து கொடிய காடு அழிகையினால் புள்ளிமானின் கூட்டம் புகுந்து ஒளிக்கின்ற திருப்புனவாயிலே.
516. எற்றேநினை என்னொடு சூளறு
வைகலும்
மற்றேதும் வேண்டா வல்வினை
ஆயின மாய்ந்தறக்
கற்றூறுகார்க் காட்டிடை
மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
புற்றேறிக் கூகூ எனஅழைக்
கும்புன வாயிலே.
தெளிவுரை : மனமே, நின் செய்கைதான் எத்தன்மைத்து ! என்னொடு சூள் செய்தலை ஒழி. நம் வலிய வினையெனப் படுவன யாவும் அடியோடு கெட்டொழிதற்கு மற்றுச் சூழ்ச்சி யாதும் வேண்டா. கல்லைச் சூழ்ந்த புதரிலும் கரிய காட்டிடத்தும் இரையை உண்ட கரிய கானங்கோழிகள் ஈயற் புற்றுக்களின் மேல் ஏறி நின்று கூகூ எனக் கூப்பிடுகின்ற திருப்புன வாயிலை நாள்தோறும் தவறாமல் நினை.
517. பொடியாடு மேனியன் பொன்புனம்
சூழ்புன வாயிலை
அடியார் அடியன் நாவல
வூரன் உரைத்தன்
மடியாது கற்றிவை ஏத்தவல்
லார்வினை மாய்ந்துபோய்க்
குடியாகப் பாடிநின் றாடவல்
லார்க்கில்லை குற்றமே.
தெளிவுரை : நீற்றில் மூழ்கிய திருமேனியனாகிய சிவ பெருமானது புனங்களில் பொன் நிறைந்துள்ள திருப்புனவாயிலை அடியார்க்கு அடியானாகிய திரு நாவலூரன் பாடிய இப் பாடல்களை, சோம்பியிராமல் கற்று அவற்றால் அப்பெருமானை ஏத்த வல்லவர் முன் செய்த வினையெல்லாம் மாய்ந்து போய், அப் பெருமானுக்கே அடியராய் வாழ, அவற்றை இசைவழிப் பாடி நின்று ஆடவல்லார்க்கு செய்வன. தவிர்வனவற்றில் பிறழ்தலால் வரும் குற்றம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
51. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)
திருச்சிற்றம்பலம்
518. பத்திமையும் அடிமையையும்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோய் அதுஇதனைப்
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்திருக்கேன்
என் ஆரூர் இறைவனையே.
தெளிவுரை: பாவியும் மூடனும் ஆகிய யான், என் அன்பையும் அடிமையையும் விட்டொழியும்படி, முத்தும் சிறந்த மாணிக்கமும் வயிரமும் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து எத்தனை நாள் இங்கேயே இருப்பேன் ! என்னை மூடியுள்ள நோயாகிய இவ்வுடம்பின் மெய்ம்மையை அறிந்து கொண்டேன். ஆதலின் இங்கு இரேன். விரையச் சென்று அவனை வணங்குவேன். (பின்னும் பல இடங்களில் உடம்பை இகழ்ந்து பாடியுள்ளார்)
519. ஐவணமாம் பகழியுடை
அடல்மதனன் பொடியாகச்
செல்வணமாம் திருநயனம்
விழிசெய்த சிவமூர்த்தி
மையணவு கண்டத்து
வளர்சடைஎம் ஆரமுதை
எவ்வணம்நான் பிரிந்திருக்கேன்
என் ஆரூர் இறைவனையே.
தெளிவுரை : ஐந்து வகையான அம்புகளைப் பெற்ற வெற்றியையுடைய மன்மதன் சாம்பலாகுமாறு செந்நிறமான அழகிய நெற்றிக்கண்ணைத் திறந்த சிவமூர்த்தியாகிய கருமை பொருந்திய கழுத்தையும் நீண்ட சடையையும் உடைய எனது திருவாரூர் நாதனைப் பிரிந்து நான் எவ்வாறு இங்கு இருப்பேன்? இருக்க மாட்டேன். விரையச் சென்று அவனை வழிபடுவேன்.
மன்மதனது மலர் அம்புகள் : தாமரை, மா, அசோகு, முல்லை, நீலம் என்பன.
520. சங்கலக்கும் தடங்கடல்வாய்
விடஞ்சுடவந்து அமரர்தொழ
அங்கலக்கண் தீர்த்துவிடம்
உண்டுஉகந்த அம்மானை
இங்குஅலக்கும் உடற்பிறந்த
அறிவிலியேன் செறிவின்றி
எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.
தெளிவுரை : வருந்துகின்ற உடலிற்பட்டு இவ்வுலகிற் பிறந்த அறிவில்லாத யான் தேவர்கள் கடலில் தோன்றிய ஆலகால விடம் தங்களைச் சுட்டதனால் அடைக்கலமாக வந்து வணங்க, உடனே அவர்களது துன்பத்தை நீக்கி, அந்த விடத்தை உண்டு அவர்களைக் காப்பாற்றிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப் பிரிந்து, எவ்விடத்தில் இறத்தற் பொருட்டு, இவ்விடத்தில் இருப்பேன் ! இருக்கமாட்டேன். விரைந்து சென்று அவனை வழிபடுவேன்.
521. இங்ஙனம்வந்து இடர்ப்பிறவிப்
பிறந்தயர்வேன் அயராமே
அங்ஙனம்வந்து எனையாண்ட
அருமருந்தென் ஆரமுதை
வெங்கனல்மா மேனியனை
மான்மருவுங் கையானை
எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன்
என் ஆரூர் இறைவனையே.
தெளிவுரை : இவ்வுலகில் வந்து துன்பம் தருகின்ற பிறப்பிற் பிறந்து, மயங்கின்ற யான், அங்ஙனம் மயங்காதவாறு  நான் பிறந்த ஊரில் வந்து, என்னை ஆட்கொண்ட அரிய மருந்தும். அமுதம் போன்றவனும், நெருப்புப் போன்ற திருமேனியை உடையவனும், கையில் மானை உடையவனுமாகிய எனது திருவாரூர் பெருமானைப் பிரிந்து நான் எவ்வாறு இங்கு இருப்பேன்? இருக்கமாட்டேன். விரைவில் சென்று அவனைத் தொழுவேன்.
522. செப்பரிய அயனொடுமால்
சிந்தித்தும் தெளிவரிய
அப்பெரிய திருவினையே
அறியாதே அருவினையேன்
ஒப்பரிய குணத்தானை
இணையிலியை அணைவின்றி
எப்பரிவு  பிரிந்திருக்கேன்
என் ஆரூர் இறைவனையே.
தெளிவுரை : நீக்குதற்கரிய வினையையுடைய யான், சொல்லுதற்கரிய பெருமையையுடைய பிரமனும் திருமாலும் காண்பதற்கரியவனும், அருட் குணங்களை உடையவனும், நிகரற்றவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை நினைத்தலும் அடைதலும் இன்றிப் பிரிந்து எவ்வாறு இங்கு இருப்பேன் ? இருக்க மாட்டேன். விரைந்து சென்று அவனை வணங்குவேன்.
523. வன்னாகம் நாண்வரைவில்
அங்கிகணை அரிபகழி
தன்ஆகம் உறவாங்கிப்
புரம்எரித்த தன்மையனை
முன்னாக நினையாத
மூர்க்கனேன் ஆக்கைசுமந்து
என்னாகப்  பிரிந்திருக்கேன்
என் ஆரூர் இறைவனையே.
தெளிவுரை : வலிய பாம்பு நாணாகவும், மேருமலை வில்லாகவும், திருமால் அம்பாகவும் அக்கினி அம்பின் முனையாகவும் தன் மார்பிற் பொருந்த வலித்து முப்புரத்தை எரித்த எனது திருவாரூர் இறைவனை முன்பே நினைந்து போகாத யான் எதற்காக இங்கு இருக்கின்றேன்? இனி இருக்கமாட்டேன். விரைந்து சென்று காண்பேன்.
524. வன்சயமாய் அடியான்மேல்
வருங்கூற்றின் உரங்கிழிய
முன்சயமார் பாதத்தால்
முனிந்துகந்த மூர்த்திதனை
மின்செயும்வார் சடையானை
விடையானை அடைவின்றி
என்செயநான்  பிரிந்திருக்கேன்
என் ஆரூர் இறைவனையே.
தெளிவுரை : தன் அடியவனாகிய மார்க்கண்டேயர்மேல் வந்த கூற்றுவனைத் தனது திருவடியால் உதைத்து, பின்பு எழுப்பிய மூர்த்தியும், நீண்ட சடையையும் விடையையும் உடையவனுமாகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப் பிரிந்து இங்கு எதற்காக இருக்கின்றேன்? விரைந்து சென்று அவனைக் கண்டு வணங்குவேன்.
525. முன்னெறிவா னவர்கூடித்
தொழுதேத்தும் முழுமுதலை
அந்நெறியை அமரர்தொழும்
நாயகனை அடியார்கள்
செந்நெறியைத் தேவர்குலக்
கொழுந்தைமறந்து இங்ஙனம்நான்
என்னறிவான்  பிரிந்திருக்கேன்
என் ஆரூர் இறைவனையே.
தெளிவுரை : பிரமனும் மாயோனும் கூடி வணங்கிப் போற்றுகின்ற முழுமுதற்பொருளும் அப்பொருளை அடையும் நெறியாய் உள்ளவனும், ஏனைய தேவரும் வணங்கும் தலைவனும் அவர்களுள் சிறந்தவனும் தன் அடியார்களுக்குச் செவ்விய நெறியாய் விளங்குபவனும் ஆகிய எனது திருவாரூர் பெருமானைப் பிரிந்து மறந்து நான் எதற்காக இங்கு இருக்க வேண்டும்? விரையச் சென்று காண்பேன்.
526. கற்றுளவான் கனிவாய
கண்ணுதலைக் கருத்தார
உற்றுளனாம் ஒருவனைமுன்
இருவர்நினைந்து இனிதேத்தப்
பெற்றுளனார் பெருமையினைப்
பெரிதடியேன் கையகன்றிட்டு
எற்றுளனாய்ப்  பிரிந்திருக்கேன்
என் ஆரூர் இறைவனையே.
தெளிவுரை : நெற்றிக் கண்ணை உடையவனும், ஒப்பற்றவனும், இருவராகிய திருமாலும் பிரமனும் முன்பு நினைந்து போற்றப்பட்ட பெருமையை யுடையவனும் ஆகிய எனது திருவாரூர் பெருமானை அவன் அடியவனாகிய யான் பிரிந்து எதற்காக இறவாது இங்கு இருக்கின்றேன்? விரைந்து சென்று அவனை வழிபடுவேன்.
527. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு இடனாகி
மாழைஒண்கண் பரவையைத்தந்து ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே.
தெளிவுரை : ஏழ் இசைகளைப் போலவும், அவைகளின் பயனாகிய பண்களைப் போலவும், இனிய அமுதத்தைப் போலவும், அதன் மேல் என்னுடைய தோழனும் ஆகி யான் செய்யும் குற்றங்களுக்கு உட்பட்டு, பரவையை எனக்குத் தந்து என்னை அடிமை கொண்டவனாகிய எனது திருவாரூர் பெருமானை அறிவில்லாத யான் பிரிந்து இவ்விடத்தில் இருப்பேனோ? இருக்கமாட்டேன். இப்போதே சென்று அவனை வணங்குவேன்.
528. வங்கமலி கடல்நஞ்சை
வானவர்கள் தாம்உய்ய
நுங்கிஅமுது அவர்க்குஅருளி
நொய்யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோடு எனைப்புணர்த்த
தத்துவனைச் சழக்கனேன்
எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
என் ஆரூர் இறைவனையே.
தெளிவுரை : தேவர்களைக் காப்பாற்ற மரக்கலங்கள் நிறைந்த கடலில் தோன்றிய நஞ்சைத் தான் உண்டு அமுதத்தை அவர்களுக்கு அளித்தவனும், சிறியேனை ஒருபொருட்டாகக் கருதி என் வேண்டுகோளுக்கு இரங்கி, என்னைச் சங்கிலியோடு கூட்டுவித்த மெய்ப் பொருளாய் உள்ளவனும் ஆகிய என் ஆரூர் பெருமானைப் பிரிந்து பொய்யானாகிய யான் எதற்காக இங்கு இருக்க வேண்டும்? இனி இருக்கமாட்டேன். விரைந்து சென்று அவனை வணங்குவேன்.
529. பேரூரும் மதகரியின்
உரியானைப் பெரியவர்தம்
சீரூரும் திருவாரூர்ச்
சிவன்அடியே திறம்விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன்
அடியன்சொல் அகலிடத்தில்
ஊரூரன் இவைவல்லார்
உலகவர்க்கு மேலாரே.
தெளிவுரை : திருவாரூரில் கோயில் கொண்டிருக்கும் சிவ பெருமானது திருவடியைச் சென்று சேரும் திறத்தை விரும்பி, மதயானையின் தோலையுடைய அவனை, அவன் அடித் தொண்டனாகிய இவ்வுலகில் எங்கும் செல்கின்ற நம்பியாரூரன் சொல்லிய இப் பாடல்களைப் பாட வல்லவர் இவ்வுலகில் எல்லார்க்கும் மேலானவர் ஆவர்.
அகலிடத்தில் எங்கும் செல்லுதல் இறைவன் கோயில் கொண்டுள்ள இடங்களை வணங்க வேண்டி என்பதாம்.
திருச்சிற்றம்பலம்

52. திருவாலங்காடு (அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு,திருவள்ளூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
530. முத்தா முத்தி தரவல்ல
முகிழ்மென் முலையாள் உமைபங்கா
சித்தா சித்தித் திறங்காட்டும்
சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர்போற்றும்
பரமா பழைய னூர்மேய
அத்தா ஆலங் காடாஉன்
அடியார்க் கடியேன் ஆவேனே.
தெளிவுரை : இத்திருப்பதிகம் திருவாரூரில் உள்ள அடியவர் திருக்கூட்டத்தை அகன்று நின்ற நிலையை நினைந்து, அதனை விரையச் சென்று அடைய விரும்பி அருளிச் செய்தது.
இயல்பாகவே கட்டில்லாதவனே, கட்டற்ற உயிர்கட்கு எல்லாம் வீடு அளிக்கவல்ல, உமையவளது பாகத்தை உடையவனே. சித்திகளை உடையவனே. அச் சித்திகளை அடைய வழிகாட்டும் சிவபெருமானே. தேவர்களாகிய விலங்குகளுக்குச் சிங்கம் போன்றவனே. அடியவர்களுக்குப் பற்றாய் உள்ளவனே. அன்புடையர்கள் போற்றும் தெய்வமே. பழையனூரை விரும்புகின்ற தலைவனே. திருவாலங்காட்டில் கோயில் கொண்டிருப்பவனே. அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியனாகவே வாழ்வேன்.
திருஆலங்காடு பழையனூரைச் சார்ந்த காடு ஆதல்பற்றி அதனை விரும்பியதாக அருளினார்.
531. பொய்யே செய்து புறம்புறமே
திரிவேன் தன்னைப் போகாமே
மெய்யே வந்திங்கு எனைஆண்ட
மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே
பையாடு அரவம் அரைக்கசைத்த
பரமா பழைய னூர்மேய
ஐயா ஆலங் காடாவுன்
அடியார்க்கு அடியேன் ஆவேனே.
தெளிவுரை : மனத்தொடு பொருந்தாத செயல்களைச் செய்து, அதனால் உனக்குச் சேய்மையிலே திரிவேனாகிய என்னை, அவ்வாறு அகன்று போகாமல் தடுத்து, நேரில் வந்து என்னை ஆட்கொண்டவனே, மெய்ப்பொருளாய் உடையவனே, பாம்பை அரையிற் கட்டிய கடவுளே, பழையனூரை விரும்புகின்ற தெய்வமே, திருவாலங்காட்டில் மேவியிருப்பவனே, அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியவனாகவே வாழ்வேன்.
532. தூண்டா விளக்கின் நற்சோதீ
தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பைப் புரமூன்றும்
பொடியாச் செற்ற புண்ணியனே
பாண்தாழ் வினைகள் அவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
ஆண்டா ஆலங் காடாவுன்
அடியார்க்கு அடியேன் ஆவேனே.
தெளிவுரை : தூண்டா விளக்குப்போன்ற ஒளி வடிவினனே, வழிபடுவாரது துன்பத்தை நீக்குபவனே, எலும்பை அணிபவனே, முப்புரங்களைச் சாம்பலாகுமாறு அழித்த அறவடிவினனே. பழைமையான இருவினைகளை நீக்கியருளுகின்ற தெய்வமே. பழையனூரை விரும்புகின்ற தலைவனே, திரு ஆலங்காட்டில் மேவி யிருப்பவனே. நான் உன் அடியார்க்கு அடியவனாக இருப்பேன்.
533. மறிநேர் ஒண்கண் மடநல்லார்
வலையிற் பட்டு மதிமயங்கி
அறிவே அழிந்தேன் ஐயாநான்
மையார் கண்டம் உடையானே
பறியா வினைகள் அவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
அறிவே ஆலங் காடாஉன்
அடியார்க்கு அடியேன் ஆவேனே.
தெளிவுரை : தலைவனே, நீலகண்டனே ! தீராத வினைகளையெல்லாம் தீர்த்து வைக்கும் இறைவனே, பழையனூரை விரும்புகின்ற அறிவு வடிவானவனே, திரு ஆலங்காட்டில் எழுந்தருளி உள்ளவனே, அடியேன் இளைய அழகிய மாதர் ஆசையாகிய வலையில் அகப்பட்டு, அறிவு கெட்டேன். அவ்வாறு இனியும் கெடாதவாறு உன் அடியார்க்கு அடியவனாகவே வாழ்வேன்.
534. வேலங் காடு தடங்கண்ணார்
வலையுட் பட்டுன் நெறிமறந்து
மாலங் காடி மறந்தொழிந்தேன்
மணியே முத்தே மரகதமே
பாலங் காடீ நெய்யாடீ
படர்புன் சடையாய் பழையனூர்
ஆலங் காடா உன்னுடைய
அடியார்க்கு அடியேன் ஆவேனே.
தெளிவுரை : மாணிக்கமே ! முத்தே ! மரகதமே ! பால் முழுக்கு ஆடுபவனே ! நெய் முழுக்கு ஆடுபவனே ! விரிந்த புல்லிய சடையானே ! பழையனூரைச் சேர்ந்த திரு ஆலங்காட்டில் விரும்பியிருப்பவனே ! அடியேன் வேல்போலும் பெரிய கண்களையுடைய மாதராசையாகிய வலையில் அகல்பட்டு, உன்னாற் சொல்லப்பட்ட நெறியை மறந்து, என்னையே மறந்தேன். இனி அவ்வாறு இராமல் என்றும் உன் அடியார்க்கு அடியனாகவே வாழ்வேன்.
535. எண்ணார் தங்கள் எயில்எய்த
எந்தாய் எந்தை பெருமானே
கண்ணாய் உலகம் காக்கின்ற
கருத்தா திருத்த லாகாதாய்
பண்ணார் இசைகள் அவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங் காடாஉன்
அடியார்க்கு அடியேன் ஆவேனே.
தெளிவுரை : பகைவர்களது திரிபுரங்களை அழித்த என் தந்தையே ! என் தந்தைக்கும் பெருமானே ! உலக முதல்வனே ! குற்றமற்றவனே ! பண் பொருந்திய இசைகளைக் கொண்டு பலரும் துதிக்கின்ற பழையனூர் தெய்வமே. திருஆலங்காட்டில் மேவியிருப்பவனே. அடியேன் என்றும் உன் அடியவர்க்கு அடியவனாகவே வாழ்வேன்.
536. வண்டார் குழலி உமைநங்கை
பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரிசெய்த
விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
அண்டா ஆலங் காடாவுன்
அடியார்க்கு அடியேன் ஆவேனே.
தெளிவுரை : உமா தேவியைத் தன் பாகத்தில் உடையவனே, கங்கைக்குக் கணவனே, பகைவரது ஊர்களை எரித்த இடபவாகனனே, வேத நெறியை உடையவனே, பழைய வினைகள் பலவற்றையும் தீர்க்கின்ற கடவுளே. பழையனூரை விறரும்புகின்ற தேவனே. திருஆலங்காட்டில் கோயில் கொண்டிருப்பவனே. அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியவனாகவே வாழ்வேன்.
537. பேழ்வாய் அரவின் அணையானும்
பெரிய மலர்மேல் உறைவானும்
தாழாது உன்றன் சரண்பணியத்
தழலாய் நின்ற தத்துவனே
பாழாம் வினைகள் அவைதீர்க்கும்
பரமா பழைய னூர்தன்னை
ஆள்வாய் ஆலங் காடாஉன்
அடியார்க்கு அடியேன் ஆவானே.
தெளிவுரை : பாம்புப் படுக்கையை யுடைய திருமாலும் தாமரை மலரில் இருக்கும் பிரமனும் விரைவில் உன்னுடைய முதன்மையை உணர்ந்து உன் திருவடிகளை வணங்குமாறு தீப்பிழம்பாய் நின்ற மெய்ப் பொருளே, வினைகளை  நீக்குகின்ற கடவுளே, பழையனூரை ஆள்கின்றவனே, திரு ஆலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியவனாகவே வாழ்வேன்.
538. எம்மான் எந்தை மூத்தப்பன்
ஏழேழ் படிகால் எமைஆண்ட
பெம்மான் ஈமப் புறங்காட்டில்
பேயோடு ஆடல் புரிவானே
பன்மா மலர்கள் அவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா ஆலங் காடாஉன்
அடியார்க்கு அடியேன் ஆவேனே.
தெளிவுரை : என் தந்தை, என் தந்தைக்கு முன்னோனாகிய தந்தை முதலாக இருவகை ஏழ்தலை முறைகளில் எங்களை அடிமை கொண்டுள்ள பெருமானே, சுடுகாடாகிய புறங்காட்டில் பேய்களோடு ஆடுபவனே. பலசிறந்த மலர்களைக் கொண்டு பலரும் வழிபடுகின்ற பழையனூர்க்குத் தலைவனே, திருஆலங்காட்டில் விரும்பியிருப்பவனே, அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியவனாக வாழ்வேன்.
539. பத்தர் சித்தர் பலர் ஏத்தும்
பரமன் பழைய னூர்மேய
அத்தன் ஆலங் காடன்தன்
அடிமைத் திறமே அன்பாகிச்
சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச்
சிறுவன் ஊரன் ஒண்தமிழ்கள்
பத்தும் பாடி ஆடுவார்
பரமன் அடியே பணியாரே.
தெளிவுரை : அடியார் பலரும் சித்தர் பலரும் துதிக்கின்ற கடவுளும் பழையனூரை விரும்பிய தலைவனும் ஆகிய திருஆலங்காட்டு இறைவனது அடிமைத் திறத்தில் அன்புடையவராய், சித்தர்களும் தங்கள் சித்தத்தில் மறவாமல் வைத்துள்ள புகழையுடைய அடியானாகிய நம்பியாரூரனது இம்மெய்யுணர்வுத் தமிழ்ப் பாடல்களாகிய பத்தினையும் பாடி ஆடுவோர். சிவ பெருமானது திருவடியையே எஞ்ஞான்றும் வணங்கி வாழ்பவராவர்.
திருச்சிற்றம்பலம்

53. திருக்கடவூர் மயானம் (அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
540. மருவார் கொன்றை மதிசூடி
மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்கும்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமான் அடிகளே.
தெளிவுரை : இத்திருப்பதிகம் இறைவரது தன்மைகளைச் சிறப்பித்து அருளிச் செய்தது.
திருக்கடவூர் மயானத்தில் கோயில் கொண்டிருக்கும் பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார், நறுமணம் நிறைந்த கொன்றை மலர் மாலையையும் பிறையையும் திருமுடியில் சூடிக்கொண்டு உமாதேவியோடு பூதப் படைகள் மகிழ்ந்து சூழ, வெள்ளி மலையின்மேல் ஒரு மாணிக்க மலை வருவது போல விடையின்மேல் வருவார். திருமால் பிரமன் இந்திரன் என்ற பெருந்தேவர்கட்கும். மற்றைய தேவர். நாக லோகத்தார். அசுரர் என்பவர்கட்கும் அவரே தலைவர்.
541. விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலார் நகுதலையர்
கால காலர் கடவூரர்
எண்ணார் புரம்மூன்று எரிசெய்த
இறைவர் உமையோர் ஒருபாகம்
பெண்ஆண் ஆவர் மயானத்துப்
பெரிய பெருமான் அடிகளே.
தெளிவுரை : திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கிற பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார் தேவர்கட்குத் தலைவரும், பூணூலை மார்பில் அணிந்தவரும் வேதமாகிய இசையைப் பாடுகின்றவரும், நெற்றியில் கண்ணை உடையவரும் சிரிப்பது போன்ற தலை ஓட்டினை ஏந்தியவரும், காலனுக்குக் காலரும், திருக்கடவூரைத் தம் ஊராகக் கொண்டவரும், பகைவர்களது திரிபுரங்களை எரித்தவரும், உமை ஒரு பாகமும் தாம் ஒரு பாகமுமாய்ப் பெண்ணும் ஆணுமாய் இருக்கும் உருவத்தை உடையவரும் ஆவர்.
542. காயும் புலியின் அதளுடையர்
கண்டர் எண்தோள் கடவூரர்
தாயும் தந்தை பல்லுயிர்க்கும்
தாமே ஆய தலைவனார்
பாயும் விடையொன்று அதுஏறிப்
பலிதேர்ந்து உண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப்
பெரிய பெருமான் அடிகளே.
தெளிவுரை : பேய்கள் வாழும் திருக்கடவூர் மயானத்தில் மேவியிருக்கின்ற பெரிய பெருமான் அடிகளாகிய சிவ பெருமான் புலித்தோல் உடையை உடையவர். நீல கண்டத்தை உடையவர். எட்டுத் தோள்களை உடையவர். திருக்கடவூரைத் தம் ஊராகக் கொண்டவர். எல்லா உயிர்களுக்கும் தாமே தாயும் தந்தையும் தலைவரும் ஆனவர். ஒற்றை எருதின்மேல் ஏறிப் பிச்சை கிடைக்கும் இடங்களை நாடிச் சென்று ஏற்று உண்பவர். ஆயினும் யாவர்க்கும் மேலான இடத்தில் இருப்பவர். பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி என்பது நகைச்சுவைபடக் கூறியதாகும். கோயிலின் பெயர் மயானம். அதற்கேற்ப பேய்வாழ் மயானம் எனச் சிறப்பித்தார்.
543. நறைசேர் மலர்ஐங் கணையானை
நயனத் தீயால் பொடிசெய்த
இறையார் ஆவர் எல்லார்க்கும்
இல்லை என்னாது அருள் செய்வார்
பறையார் முழவம் பாட்டோடு
பயிலும் தொண்டர் பயில்கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமான் அடிகளே.
தெளிவுரை : மத்தளம், பறை இவைகளைப் பாட்டுக்களோடு பயில்கின்ற அடியார்கள் நிறைந்த திருக்கடவூர் மயானத்தில் வீற்றிருக்கின்ற பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமான், ஐவகை மலர் அம்புகளையுடைய மன்மதனை நெற்றிக்கண்ணில் உண்டாகிய நெருப்பில் சாம்பலாக்கியவர். யாவர்க்கும் இல்லை என்று சொல்லாமல் அவர்கள் விரும்பியவற்றை ஈவார். சடையில் பிறையை அணிந்திருப்பார்.
544. கொத்தார் கொன்றை மதிசூடிக்
கோள்நா கங்கள் பூணாக
மத்த யானை உரிபோர்த்து
மருப்பும் ஆமைத் தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள்
பாடி ஆடப் பலிகொள்ளும்
பித்தர் கடவூர்  மயானத்துப்
பெரிய பெருமான் அடிகளே.
தெளிவுரை : திருக்கடவூர் மயானத்தில் மேவியிருக்கும் பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமான், கொன்றை மாலையையும் பிறையையும் திருமுடியில் சூடி, பாம்புகள் அணிகலன்களாய் இருக்க மதயானைத் தோலைப் போர்த்து, பன்றியின் கொம்பையும் ஆமையின் ஓட்டையும் உடைய தாலியை உடையவராய் பூதகணங்கள் அன்புடன் பாடியும் ஆடியும் சூழப் பிச்சை ஏற்கின்ற பித்தர் கோலத்தராவர்.
545. துணிவார் கீளும் கோவணமும்
துதைந்து சுடலைப் பொடிஅணிந்து
பணிமேல் இட்ட பாசுபதர்
பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றும்
தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார்  மயானத்துப்
பெரிய பெருமான் அடிகளே.
தெளிவுரை : திருக்கடவூர் மயானத்தில் விரும்பியிருக்கின்ற பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமான், கிழிக்கப்பட்ட நீண்ட அரைத் துண்டும், கோவணமும் பொருந்தி, சுடலைச் சாம்பலைப் பூசி, பாம்புகளை மேலே அணிந்த, பாசுபத வேடத்தை உடையவர். பஞ்சவடியை அணிந்த மார்பினை யுடைய மாவிரத கோலத்தினர். காதில் குழையை அணிந்தவர். முப்புரங்களையும் எரித்தவர். கட்டிய நீண்ட சடையை உடையவர். பாசுபத வேடம்  கபாலத்தைக் கையில் ஏந்துதல். பஞ்சவடியை அணிபவர் மாவிரத சமயத்தார்.
546. காரார் கடலின் நஞ்சுண்ட
கண்டர் கடவூர் உறைவாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து
சிதைய விரலால் ஊன்றினார்
ஊர்தான் ஆவது உலகேழும்
உடையார்க்கு ஒற்றி யூர்ஆரூர்
பேரா யிரவர்  மயானத்துப்
பெரிய பெருமான் அடிகளே.
தெளிவுரை : திருக்கடவூர் மயானத்தில் கோயில் கொண்டிருக்கின்ற பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார், கடலினின்று தோன்றிய நஞ்சையுண்ட கண்டத்தை யுடையவர். திருக்கடவூரில் வாழ்பவர், இராவணன் தேரிலிருந்து வீழ்ந்து சிதையுமாறு கால்விரலால் தமது மலையை ஊன்றினவர். ஏழ் உலகங்களையும் உடையவராகிய அவருக்கு ஊராவது ஒற்றியாய் உள்ளது. அஃது ஒழிந்தால் யாருடைய ஊரோ ! பெருமான் ஆயிரம் பெயர் உடையவர் !
547. வாடா முலையாள் தன்னோடும்
மகிழ்ந்து கானில் வேடுவனாய்
கோடார் கேழற் பின்சென்று
குறுகி விசயன் தவம்மகிழ்ந்து
நாடா வண்ணம் செருச் செய்து
ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார்  மயானத்துப்
பெரிய பெருமான் அடிகளே.
தெளிவுரை : திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார், வேடிச்சி உருவில் உமா தேவியாரோடு வேடராய்ப் பன்றியின் பின் மகிழ்ந்து சென்று, அருச்சுனனது தவத்தை அழித்து, அவன் தம்மை அறியாத நிலையில் நின்று போர் புரிந்து, பின்பு அவனுக்கு அன்பறாத் தூணியை நிலையாக வழங்கிய பெருமையைப் பொருந்திய சடை முடியை உடையவர்.
548. வேழம் உரிப்பர் மழுவாளர்
வேள்வி அழிப்பர் சிரம்அறுப்பர்
ஆழி அளிப்பர் அரிதனக்கன்று
ஆன்அஞ்சு உகப்பர் அறம்உரைப்பர்
ஏழைத் தலைவர் கடவூரில்
இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர்  மயானத்துப்
பெரிய பெருமான் அடிகளே.
தெளிவுரை : திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார். யானையை உரிப்பர் ; மழுப்படையை உடையவர்; தக்கன் வேள்வியை அழிப்பர்; அவ்விடத்துப் பலரது தலைகளை அறுப்பர் ; திருமாலுக்குமச் சக்கரத்தைக் கொடுப்பர் ; எப்போதும் பசுவினிடத்து உளவாகின்ற பஞ்ச கவ்வியத்தை விரும்புவர்; நால்வர் முனிவர்களுக்கு அறம் உரைப்பர்; மங்கை யொருத்திக்குத் தலைவராவர்; திருக்கடவூரில் தங்குவர்; சிறிய மான் கன்றைப் பிடித்த கையை உடையவர்; விரிந்த சடையை உடையவர்.
549. மாடம் மல்கு கடவூரில்
மறையோர் ஏத்தும் மயானத்துப்
பீடை தீர அடியாருக்கு
அருளும் பெருமான் அடிகள்சீர்
நாடி நாவல் ஆரூரன்
நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடும் அடியார் கேட்பார்மேல்
பாவம் ஆன பறையுமே.
தெளிவுரை : மாடங்கள் நிறைந்த திருக்கடவூருள் அந்தணர்கள் துதிக்கின்ற மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற அடியவர்களுக்கு அவர்களது துன்பம் நீங்குமாறு அருள் செய்கின்ற பெருமான் அடிகளது புகழை, திருநாவலூரில் தோன்றிய ஆரூரன் ஆராய்ந்து பாடிய இந்த நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடுகின்ற அடியார். பாடக் கேட்கின்ற அடியார். இவர்கள்மேல் உள்ள பாவங்கள் எல்லாம் பறந்தொழிதல் திண்ணம். பறையும்  தேயும் எனினுமாம்.
திருச்சிற்றம்பலம்

54. திருவொற்றியூர் (அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர்,திருவள்ளூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
550.  அழுக்கு மெய்க்கொடுஉன் திருவடி அடைந்தேன்
அதுவும் நான்படப் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக்கு ஒருமருந்து உரையாய்
ஒற்றி யூரெனும் ஊர்உறை வானே.
தெளிவுரை : குற்றங்கள் தங்கும் உடலோடு உன் திருவடிகளைச் சரணமாகப் பற்றினேன், குற்றங்கட்கு உரிய தண்டனையும் நான் அனுபவித்தற்குரியது ஒன்றே என்று கொண்டாலும், பாலில் பிழுக்கை விழுந்துவிட்டால் அதை எடுத்துவிட்டுப் பாலை எடுத்துக்கொள்வர். நாதனே பிழை செய்துவிட்டேன் ஆயினும். உனது திருவடியை மறக்கும் குற்றத்திற்கு ஆளாகவில்லை. நன்னெறியினின்று வழுக்கிக் கீழே விழுந்தாலும் உமது திருப்பெயரைச் சொல்லுதல் அன்றி வேறு வார்த்தைகளைச் சொல்லி அறியமாட்டேன். துளி துளியாக ஊற்றுவதற்கு என் கண்ணுக்கு ஒரு மருந்தைச் சொல்லியருளுக. திருவொற்றியூரில் வாழும் பெருமானே. சாணத்தை வாரிக் கொட்டி விட்டு, பாலைக்கொண்டு செல்வர் என்று உரைகொள்வாரும் உளர். அதாவது பால் தேவையானால் சாணம் வாரும் வேலையும் உள்ளது என்பது பொருள்.
551. கட்ட னேன்பிறந் தேன்உனக் காளாய்க்
காதற் சங்கிலி காரண மாக
எட்டி னால்திக ழும்திரு மூர்த்தி
என்செய் வான்அடி யேன்எடுத்து உரைக்கேன்
பெட்ட னாகிலும் திருவடிப் பிழையேன்
பிழைப்ப னாகிலும் திருவடிக்கு அடிமை
ஒட்டி னேன்எனை நீசெய்வது எல்லாம்
ஒற்றி யூரெனும் ஊர்உறை வானே.
தெளிவுரை : எட்டு வடிவங்களாய் இருப்பவனே. ஒற்றியூரில் இருப்பவனே, தீவினை உடையவனாகிய யான் , அதன் காரணமாக இம் மண்ணுலகில் பிறந்தேன். பிறந்து உனக்கு ஆளாகி, இடையே மாதரை விரும்பி மணந்தேன் ஆயினும், உன் திருவடியை மறந்திலேன். பிறவற்றைச் செய்யத் தவறினேன் ஆயினும். திருவடிக்குச் செய்யும் அடிமையில் இடைவிடாது நின்றேன். என்ன செய்தற் பொருட்டு அவற்றை நான் இப்போது எடுத்துரைப்பேன் ! இத் துன்பமெல்லாம் என் காதலுக்கு இடமாய் நின்ற சங்கிலி காரணமாக நீ செய்வனவேயாகும். எட்டு உருவங்களாவன; பூதங்கள் ஐந்து, சூரியன், சந்திரன், ஆன்மா என்பனவாம்.
552. கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே
கட்டி யேபலர்க் கும்களை கண்ணே
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே
அத்தா என்இடர் ஆர்க்குஎடுத்து உரைக்கேன்
சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல
வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி
ஓங்கு மாகடல் ஓதம்வந்து உலவும்
ஒற்றி யூரெனும் ஊர்உறை வானே.
தெளிவுரை : கங்கா நதி தங்கப் பெற்ற சடையையுடைய கரும்பே, கற்கண்டே, பலருக்கும் ஆதரவானவனே, உள்ளங்கை நெல்லிக்கனி போல் உள்ள அமுதம் போன்றவனே, என் தந்தையே, என் துன்பத்தை உன்னை யன்றி வேறு யாரிடம் எடுத்துச் சொல்வேன், சலஞ்சலம் என்னும் சங்குகளும் இன்னும் பலவகைச் சங்குகளும், சிப்பிகளும் ஒலித்துக் கொண்டிருக்க முத்துக்களையும், வயிரம், பொன், மாணிக்கம் முதலியவற்றையும் வாரிக் கொண்டு சிறந்த பெரிய கடலின் அலைகள் கரைமேல் வந்து வீசுகின்ற திருவொற்றியூரில் எழுந்தருளிய பெருமானே ! ஓங்கும் என்பது ஒங்கும் எனக் குறுகி நின்றது.
553. ஈன்று கொண்டதோர் சுற்றம்ஒன்று அன்றால்
யாவ ராகில்என் அன்புடை யார்கள்
தோன்ற நின்றருள் செய்தளித்து இட்டால்
சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்
மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்
கொள்வ தேகணக் குவழக்கு ஆகில்
ஊன்று கோல்எனக்கு ஆவதொன்று அருளாய்
ஒற்றி ஊர்எனும் ஊர்உறை வானே.
தெளிவுரை : ஒற்றியூரில் கோயில் கொண்டிருப்பவனே. தாய் மட்டும் அல்ல: அன்புடையவர்கள் யாராய் இருப்பினும் நீ உன்னிடத்து அன்பு செய்பவரை நீ ஆட்கொண்டுவிட்டால். உன் பெயரையே சொல்லிக் கொண்டிருப்பவரை நீ எப்போதும் கடுஞ்சொற் சொல்ல மாட்டாய். அப்படி யிருக்க மூன்று கண்களையுடைய நீ. உன் அடியேனது இரண்டு கண்களைப் பறித்துக் கொள்வது நீதி நூல்களில் உள்ள முறைமையாகில் எனக்கு உதவியாய் ஊன்றுகோலையாவது அளித்தருள்.
554. வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்
உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்
சுழித்த லைப்பட்ட நீரது போலச்
சுழல்கின் றேன்சுழல் கின்றதென் உள்ளம்
கழித்த லைப்பட்ட நாயது போல
ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை
ஒழித்து நீயரு ளாயின செய்யாய்
ஒற்றி யூர்எனும் ஊர்உறை வானே.
தெளிவுரை : ஒற்றியூர் என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, நான் நன்னெறியைத் தலைப்படவே முயற்சிக்கிறேன். பெருமையுடையவனாக நினைக்கவில்லை. அப்படியிருக்க என் கண்ணைப் பறித்துக் கொண்டதனால், வழி தெரியாமல் சுழியில் அகப்பட்ட நீர் போலச் சுழல்கின்றேன். என் மனமும் சுழல்கின்றது. நீ உனது திருவருளை எனக்கு அளித்தருளுக.
கட்டி வைக்கப்பட்ட நாய், ஒருவன் கோலைப் பற்றி நிற்றற்இ உவமை.
555. மானை நோக்கியர் கண்வலைப் பட்டு
வருந்தி யானுற்ற வல்வினைக்கு அஞ்சித்
தேனை ஆடிய கொன்றையி னாய்உன்
சீல முங்குண மும்சிந்தி யாதே
நானும் இத்தனை வேண்டுவது அடியேன்
உயிரொ டுந்நர கத்தழுந் தாமை
ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்
ஒற்றி யூர்எனும் ஊர்உறை வானே.
தெளினுரை : கொன்றை மாலையை அணிந்தவனே ! ஒற்றியூரில் கோயில் கொண்டிருப்பவனே ! யான் மாதர்களது கண்ணோக்கு ஆகிய வலையில் அகப்பட்டு உனது செயல் முறையையும் குணத்தையும் நினைக்காத குற்றத்திற்கு அஞ்சி இவ்வாறு உன்னை வேண்டுவதாயிற்று. யான் உயிரோடு நரகத்தில் மூழ்காதபடி, என் குறையை நீக்கியருள்வாயாக. உயிரோடு நரகத்து அழுந்துதலாவது கண்ணிழந்து அலமருதல்.
556. மற்றுத் தேவரை நினைந்துனை மறவேன்
நெஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன்
பெற்றி ருந்து பெறாதொழி கின்ற
பேதை யேன்பிழைத் திட்டத்தை அறியேன்
முற்றும் நீஎனை முனிந்திட அடியேன்
கடவ தென்உனை நான்மற வேனேல்
உற்ற நோயுறு பிணிதவிர்த்து அருளாய்
ஒற்றி யூர்எனும் ஊர்உறை வானே.
தெளிவுரை : ஒற்றியூரில் உள்ள பெருமானே ! நான் வேறு தேவரை நினைந்து உன்னை மறக்கவில்லை. அத்தகையயோருடன் நான் சேரவும் மாட்டேன். அப்படியிருக்க, நீ என்னை முற்றும் வெருளுமாறு. பேதையேனாகிய யான் செய்த பிழைதான் என்ன ? நான் உன்னை ஓர் இமைப் பொழுதும் மறக்கவில்லை. இனி நான் செய்ய வேண்டிய கடமை யாது? ஒன்றுமில்லை. ஆதலின் யான் உற்ற துன்பத்தையும். மிக்க பிணியையும் நீக்கி அருள்வாயாக.
557. கூடி னாய்மலை மங்கையை நினையாய்
நங்கை ஆயிர முகம்உடை யாளைச்
சூடினாய் என்று சொல்லிய புக்கால்
தொழும்ப னேனுக்குஞ் சொல்லலும் ஆமே
வாடி நீஇருந் தென்செய்தி மனனே
வருந்தி யானுற்ற வல்வினைக்கு அஞ்சி
ஊடி னால்இனி ஆவதொன்று உண்டே
ஒற்றி யூர்எனும் ஊர்உறை வானே.
தெளிவுரை : ஒற்றியூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனே ! நீ முதலில் மலைமகளை இடப்பாகமாகப் பொருந்தினாய். பின்பு ஆயிரமுகமுடைய கங்கையாளை முடியில் சூடினாய். இதனை நீ நினைக்கவில்லையே என்று சொல்லப் புகுந்தால், அஃது அடிமையாகிய எனக்குக் கூடுமோ ? மனமே. நீ துன்பமுற்று என்ன பெறப்போகின்றாய்? என்று மனத்தோடு சொல்லிக் கொண்டு யான் அடைந்த குற்றத்திற்கு அஞ்சி உன்னிடத்தில் பிணங்கினால், இனி வருவதொன்று உண்டோ?
558. மகத்திற் புக்கதோர் சனிஎனக்கு ஆனாய்
மைந்த னேமணி யேமண வாளா
அகத்திற் பெண்டுகள் நான்ஒன்று சொன்னால்
அழையேல் போகுரு டாஎனத் தரியேன்
முகத்தில் கண்இழந்து எங்ஙனம் வாழ்கேன்
முக்க ணாமுறை யோமறை யோதீ
உகைக்கும் தண்கடல் ஓதம்வந்து உலவும்
ஒற்றி யூர்எனும் ஊர்உறை வானே.
தெளிவுரை : வேதத்தை ஓதுபவன ! கடல் அலைகள் வந்து உலவுகின்ற ஒற்றியூரில் நிலையாய் இருப்பவனே ! எனக்கு வலிமையாய் உள்ளவனே ! மணி போல்பவனே ! அழகுடையவனே ! நீ எனக்கு மகம் என்னும் நட்சத்திரத்தின் கீழ்வந்த சனி என்னும் கிரகம் ஆயினை. வீட்டில் உள்ள பெண்கள், நான் ஒரு காரியம் சொன்னால், கண்ணில்லாதவனே ! உனக்கு என்ன தெரியும் ? கூவாதே, போ என்று சொல்வதை நான் பொறுக்க மாட்டேன். முகத்தில் கண் இல்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன் ? மூன்று கண்களை உடையவனே ! இது முறையோ ! சனி மகத்தில் வந்தால் நாட்டிற்கும் மக்களுக்கும் தீங்கு வரும் என்பது சோதிட நூல் துணிபு.
559. ஓதம் வந்துல வுங்கரை தன்மேல்
ஒற்றி யூர்உறை செல்வனும் நாளும்
ஞாலம் தான்பர வப்படு கின்ற
நான்மறை அங்கம் ஓதிய நாவன்
சீலந் தான்பெரி தும்மிக வல்ல
சிறுவன் தொண்டன் ஊரன் உரைத்த
பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப்
பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே.
தெளிவுரை : திருவொற்றியூரில் மேவியிருக்கின்ற செல்வனை. என்றும் உலகத்தாரால் போற்றப்படுகின்ற நான்கு வேதம், வேதத்தின் ஆறு அங்கங்கள் இவற்றை ஓதிய நாவையுடையவனும் ஒழுக்கத்தில் மிகவல்ல இளமையை யுடையவனும் வன்தொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பத்துப் பாடல்களாகிய இவைகளில் வல்லவர்கள் மேலான கதியைப் போய் அடைவார்கள், இது திண்ணம்.
திருச்சிற்றம்பலம்

55. திருப்புன்கூர் (அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர்,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
560. அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்தன் ஆருயிர் அதனை
வல்வினாய்க்கு உன்றன் வன்மைகண்டு அடியேன்
எந்தை நீஎனை நமன்தமர் நலியின்
இவன்மற் றென்அடி யான்என விலக்கும்
சிந்தை யால்வந்துன் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.
தெளிவுரை : இத் திருப்பதிகம் இறைவன் பலர்க்குப் பலவகையிற் செய்த பேரருட் செயல்களை எடுத்தோதிப் புகழ்ந்து அருளிச் செய்தது.
திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே. மார்க்கண்டேய முனிவர் உன்னை அடைக்கலமாக அடைய, அவரைக் காத்தல் நிமித்தமாக, அவர்மேல் வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்த உனக்கு அடியேனாகிய யான், உனது அவ்வாற்றலை அறிந்து என்னையும் இயமன் தூதர்கள் வந்து துன்புறுத்தினால் என் தந்தையாகிய நீ இவன் என் அடியான்; இவனைத் துன்புறுத்தாதீர் என்று சொல்லி விலக்குவாய் என்று உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொள்வாயாக.
561. வைய கமுற்றும் மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலம் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை என்ன
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந்து எங்கும்
பெய்பு மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்
செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.
தெளிவுரை : திருப்புன்கூரில் கோயில் கொண்டிருக்கும் பெருமானே ! இவ்வூரில் உள்ளவர். உலக முழுவதும் மழையின்மையால் வயலில் நீர் இல்லையாயிற்று. மிக்க நிலங்களை உனக்குத் தருவோம்; எங்களை உய்யக் கொள்க என்று வேண்ட, வெண் முகிலாய்ப் பரந்திருந்தவை அந்நிலை மாறி எங்கும் பெய்த பெரு மழையினால் உண்டாகிய பெரு வெள்ளத்தை நீக்கி அதன் பொருட்டு அவர்களிடம் மீட்டும் பன்னிரு வேளி நிலத்தைப் பெற்றருளிய செயலை அறிந்து வந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன். என்னை ஏற்றுக்கொள்வாயாக.
562. ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர் கோன்உற்ற இரும்பிணித் தவிர்த்துக்
கோத னங்களின் பால்சுறந்து ஆட்டக்
கோல வெண்மணற் சிவன்தன்மேற் சென்ற
தாதை தாள்அற எறிந்தகண் டிக்குன்
சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன்
பூம்பொ ழில்திருப் புன்கூர் உளானே.
தெளிவுரை : பூத கணங்களுக்குத் தலைவனே, திருப்புன்கூரில் இருப்பவனே ! பன்னிருவேலி நிலங்களைக் கொடுத்த ஏயர்கோன் அடைந்த துன்பத்தை இப்போது தீர்த்தனை, முன்பு பசுக்களின் பாலைக் கறந்து ஊட்ட, அதைத் தடுத்து நிறுத்திய தந்தையின் பாதத்தை வெட்டிய சண்டேசுரநாயனாருக்கு நீ சூடிய கொன்றை மாலையைச் சூடியதையும் அறிந்து வந்து உனது பொன்னடியை அடைந்தேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக.
563. நற்றமிழ் வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக்கு அரையன் நாளைப்போ வானும்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லன்என் றிவர்கள்
குற்றம் செய்யினும் குணம்எனக் கருதும்
கொள்கை கண்டுநின் குறைகழல் அடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.
தெளிவுரை : தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் பொருந்தி யிருப்பவனே ! நல்ல தமிழைப் பாடவல்ல ஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், திருநாளைப்போவாரும், மூர்க்க நாயனாரும், சாக்கிய நாயனாரும், சிலந்தியும், கண்ணப்பரும் ஆகிய இவர்கள் குற்றமான செயல்களாகச் செய்திருந்தும், அவைகளைக் குணமான செயல்களாகக் கருதும் உனது திருவுள்ளத்தின் தன்மையை அறிந்து அடியேன் உனது கழலணிந்த திருவடியை அடைந்தேன். என்னை ஏற்றுக்கொள்வீராக, இவர்கள் செய்த பிழைகளாவன; பாண்டியன் சமணரைக் கழுவேற்றியதை ஞானசம்பந்தர் விலக்காதிருந்தது; நாவுக்கரசர் சமணசமயம் புகுந்து முதல்வன் திருவருளை இகழ்ந்து நின்றது; நாளைப்போவார் தில்லை நகருள்ளும் திருக்கோயில் உள்ளும் புக நினைந்தது; மூர்க்கர் சூதாடியது; சாக்கியர் இலிங்கத் திருமேனியைக் கல்லால் எறிந்தது; கண்ணப்பர் செருப்புக் காலை இலிங்கத் திருமேனி முடியின் மீது வைத்தது; கணம்புல்லர் திருக்கோயிலில் தன் தலை மயிரை விளக்கென்று எரித்தது. சிலந்தி கோச் செங்கட் சோழரைக் குறிக்கும்.
564. கோல மால்வரை மத்தென நாட்டிக்
கோளர வுசுற்றிக் கடைந்தெ ழுந்த
ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
அமரர் கட்கருள் புரிவது கருதி
நீலம் ஆர்கடல் விடந்தனை உண்டு
கண்டத் தேவைத்த பித்தநீ செய்த
சீலங் கண்டுநின் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.
தெளிவுரை : சோலைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் மேவி இருப்பவனே ! தேவர்கள் மந்திர மலையை மத்தாக நாட்டி வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்து, அதில் அமுதம் தோன்றாமல் ஆலகால விடம் தோன்றியதைக் கண்டு அவர்கள் ஓடி வர, அவர்களுக்கு உதவ வேண்டி, அக்கரு விடத்தை உண்டு அதைக் கழுத்தில் வைத்த பெருமானே ! இந்த நல்ல செய்கையை அறிந்து அடியேன் உன் திருவடிகளை அடைந்தேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக !
565. இயக்கர், கின்னரர் யமனொடு வருணன்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயர்ப்புஒன் றின்றிநின் திருவடி யதனை
அர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு
திகைப்புஒன் றின்றிநின்திருவடி அடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.
தெளிவுரை : சோலைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் கோயில் கொண்டிருக்கும் பெருமானே ! இயக்கரும், கின்னரரும், இயமனும், வருணனும், அக்கினியும், வாயுவும், சூரியனும், சந்திரனும், வசுக்களும் ஏனைய தேவர்களும், அசுரர்களும், மற்றும் அறியாமை நீங்கின புலி, குரங்கு, பாம்பு முதலியனவும் உனது திருவடியை மறவாமல் வழிபட்டு, பேறு பெற்றதை அறிந்து அடியேனும் தடுமாற்றம் இல்லாமல் உன் திருவடியை அடைந்தேன். என்னை ஏற்றுக் கொள்வீராக.
566. போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப்
பொழில்கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து
பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத்து
அருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழி யும்புனல் கங்கை
நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த
தீர்த்த னேநின்றன் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.
தெளிவுரை : தூயவனே ! வளமார்ந்த சோலைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் இருக்கும் பெருமானே ! கேள்வி ஞானமுடைய சனகாதி முனிவர்களுக்கு அன்று கல்லால மரத்தின் கீழருந்து தருமோபதேசம் சொல்லியும், அருச்சுனனுக்கு அன்று பாசுபத அஸ்திரத்தைக் கொடுத்தும், பகீரதன் வேண்டுகோளின்படி கங்கையை உன் சடையில் அடக்கி அருள் செய்தாய். அவற்றை யெல்லாம் அறிந்து, அடியேன் உன் திருவடியை வந்தடைந்தேன். என்னை ஏற்றுக் கொள்வீராக.
567. மூவெயில் செற்றஞான்று உய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என்று ஏவிய பின்னை
ஒருவ நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கஅருள் செய்த
தேவ தேவரின் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.
தெளிவுரை : தேவ தேவனே ! வளமான சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிக்கும் பெருமானே ! நீ முப்புரத்தை அழித்த காலத்தில் அழியாது பிழைத்த சுதன்மன், சுசீலன் ஆகிய இருவரை உனது திருக்கோயிலின் வாயில் காவலராக பணித்த பின்பு மற்றொருவனாகிய சுபுத்தி என்பவனை, சுடுகாடே அரங்கமாக நீ உமையவளை நோக்கி, நடனம் செய்யும் போது அழகிய மத்தளத்தை முழக்கும்படி அருள் செய்ததை யறிந்து, அடியேன் உன் திருவடியை வந்தடைந்தேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக.
568. அறிவி னால்மிக்க அறுவகைச் சமயத்து
அவ்வவர்க்கு அங்கே ஆரருள் புரிந்து
எரியு மாகடல் இலங்கையர் கோனைத்
துலங்க மால்வரைக் கீழ்அடர்த் திட்டுக்
குறிக்கொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.
தெளிவுரை : சோலைகள் நிறைந்த திருப்புன்கூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனே ! அறுவகைச் சமயங்களில் உள்ள அவரவர்க்கும் அச்சமயத்தில் திருவருளைச் செய்தும், இராவணனை அவனுக்குத் தோன்றுமாறு பெரிய மலைக்கீழ் வைத்து நெரித்து, பின்பு அவன் பாடிய பாடலினது இன்னிசையைக் கேட்டு, வாளும், மிக்க வாழ் நாளும் கொடுத்து அருளிய உனது திருவருளை அறிந்து வந்து அடியேன் உன் திருவடியைச் சரணடைந்தேன். சமயங்கள் ஆறாவன; சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணாபத்தியம், கௌமாரம் என்பனவாம்.
569. கம்ப மால்களிற்று இன்னுரி யானைக்
காமற் காய்ந்ததோர் கண்உடை யானைச்
செம்பொ னேஒக்கும் திருவுரு வானைச்
செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானை
உம்ப ராளியை உமையவள் கோனை
ஊரன் வன்தொண்டன் உள்ளத்தால் உகந்து
அன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோடு
ஐந்தும் வல்லவர் அருவினை இலரே.
தெளிவுரை : பெரிய யானையின் தோலை உடையவனும், காமனை எரித்த நெற்றிக் கண்ணை உடையவனும், அழகிய செம்மேனியை உடையவனும், தேவர்களை ஆள்பவனும், உமையவள் கேள்வனுமாகிய, திருப்புன்கூரில் உள்ள பெருமானை, வன்தொண்டனாகிய நம்பியாரூரன் மனத்தால் விரும்பிச் சொல்லிய இத் தமிழ்ப் பாடல்கள் பத்தையும் பாட வல்லவர். நீங்குதற்கரிய வினைகளிலிருந்து விடுபட்டவராவர். இது திண்ணம்.
திருச்சிற்றம்பலம்

56. திருநீடுர்  (அருள்மிகு அருட்சோமநாதர் திருக்கோயில், நீடூர், நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
570. ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை
ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக்
கார தார்கறை மாமிடற் றானைக்
கருத லார்புரம் மூன்றெரித் தானை
நீரில் வாளை வரால்குதி கொள்ளும்
நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப்
பாரு ளார்பர வித்தொழ நின்ற
பரம னைப்பணி யாவிட லாமே.
தெளிவுரை : எருது ஒன்றினை ஓர் ஊர்தியாக உடையவனும், நெற்றிக்கண்ணை உடையவனும், நீல கண்டனும், பகைவர்களது முப்புரங்களை எரித்தவனும் ஆகிய, நீரில் வாழ்வனவாகிய வாளை மீனும்வரால் மீனும் குதி கொள்ளுகின்ற கழனிகளையுடைய செல்வம் பொருந்தி திருநீடூரின்கண் உலகிலுள்ளார் யாவரும், துதித்து வணங்குமாறு எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, நாம் வணங்காமல் விடுதல் ஆகுமோ? ஆகாதன்றே. அதனால் அங்குச் சென்று அவனை வணங்குவோம்.
571. துன்னு வார்சடைத் தூமதி யானைத்
துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப்
பன்னு நான்மறை பாடவல் லானைப்
பார்த்த னுக்கருள் செய்த பிரானை
என்னை இன்னருள் எய்துவிப் பானை
ஏதி லார்தமக்கு ஏதிலன் தன்னைப்
புன்னை மாதவி போதலர் நீடூர்ப்
புனித னைப்பணி யாவிட லாமே.
தெளிவுரை : நெருங்கிய நீண்ட சடையில் வெண்மையான சந்திரனை உடையவனும், கருமத் தொடர்புகளில் கட்டுறாத வழியை அடியவர்க்குக் காண்பிப்பவனும், சிறப்பாகச் சொல்லப்படுகின்ற வேதங்கள் பாடித் துதித்தற்கு உரியவனும், அருச்சுனனுக்குப் பாசுபத அஸ்திரம் அளித்த தலைவனும், எளியேனாகிய என்னையும் தனது இனிய அருளை அடையச் செய்தவனும், அயலார்க்கு அயலானவனும், புன்னை, குருக்கத்தி பூக்கள் மலர்கின்ற திருநீடூரில் எழுந்தருளிய பரிசுத்தனும் ஆகிய பெருமானை வணங்காமல் விடலாமோ?
572. கொல்லும் மூவிலை வேலுடை யானைக்
கொடிய காலனை யுங்குமைத் தானை
நல்ல வாநெறி காட்டுவிப் பானை
நாளும் நாம்உகக் கின்றபி ரானை
அல்ல லில்அரு ளேபுரி வானை
ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க்
கொல்லை வெள்ளெருது ஏறவல் லானைக்
கூறி நாம்பணி யாவிட லாமே.
தெளிவுரை : கொல்லும் கருவியாகிய சூலத்தை உடையவனும் கொடிய இயமனை அழித்தவனும் நல்லனவாகிய நெறிகளையே காட்டுவிப்பவனும், நாம் விரும்பும் தலைவனும், திருவருளைச் செய்பவனும் ஆகிய, வயல்கள் சூழ்ந்த திருநீடூரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானை நாம் வணங்காமல் விடலாகுமோ? ஆகாதல்லவா ! அதனால் அங்குச் சென்று அவனை வணங்குவோம்.
573. தோடு காதிடு தூநெறி யானைத்
தோற்ற மும்துறப் பாயவன் தன்னைப்
பாடு மாமறை பாடவல் லானைப்
பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே
ஆடு மாமயில் அன்னமோடு ஆட
அலையு னற்கழ னித்திரு நீடூர்
வேட னாயபி ரானவன் தன்னை
விரும்பி நாம்பணி யாவிட லாமே.
தெளிவுரை : தோட்டைக் காதில் இட்ட தூய நெறியாய் உள்ளவனும், உயிர்கட்குப் பிறப்பும் இறப்புமாய் இருப்பவனும், இசையோடு பாடுதற்குரிய சிறந்த வேதத்தைச் செய்ய வல்லவனும் ஆகிய சோலைகளில் குயில்கள் கூவ மயில் அன்னத்தோடு ஆடும் வயல்களை யுடைய திருநீடூரில் எயுந்தருளியிருக்கின்ற இறைவனை, நாம் விரும்பி வணங்காமல் விடலாகுமோ? ஆகாதன்றே ! ஆதலால் அங்குச் சென்று  அவனைத் தொழுவோம். வேடனாயது அருச்சுனனுக்காக என்க. தோற்றம் முந்துறப் பாயவன் தன்னை  சிருஷ்டிக்கு முன்பே எங்கும் பரவியிருப்பவனை.
574. குற்றம் ஒன்றடி யார்இலர் ஆனாற்
கூடு மாறுஅத னைக்கொடப் பானைக்
கற்ற கல்வியி லும்இனி யானைக்
காணப் பேணும் அவர்க்குஎளி யானை
முற்ற அஞ்சும் துறந்திருப் பானை
மூவ ரின்முத லாயவன் தன்னைச்
சுற்ற நீள்வயல் சூழ்திரு நீடூர்த்
தோன்ற லைப்பணி யாவிட லாமே.
தெளிவுரை : தன் அடியவர் குற்றமொன்றும் இல்லாதவராயின் தன்னை அடையும் வழியை அருள் செய்பவனும், கற்ற கல்வியை விட மனதுக்கு இனிமையானவனும். தன்னைக் காண விரும்புகின்ற தொண்டருக்கு எளிமையானவனும் ஐம்புலன்களின் தீமை முழுதும் நீங்கியிருப்பவனும், மும்மூர்த்திகளுள் முதன்மை யானவனும் ஆகிய சுற்றிலும் பெரிய வயல்கள் சூழ்ந்த திருநீடூர் பெருமானை வணங்காமல் விடலாமோ?
575. காடில் ஆடிய கண்ணுத லானைக்
கால னைக்கடிந் திட்ட பிரானைப்
பாடி ஆடும்பரி சேபுரிந் தானைப்
பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத்
தேடி மாலயன் காண்பரி யானைச்
சித்த முந்தெளி வார்க்குஎளி யானைக்
கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க்
கூத்த னைப்பணி யாவிட லாமே.
தெளிவுரை : காட்டில் ஆடுகின்றவனும் நெற்றிக் கண்ணையுடையவனும், கூற்றுவனை அழித்த தலைவனும்,அன்பினால் ஆடுகின்ற செயலை விரும்புகின்றவனும் சார்புகளை நீக்குபவனும் மாலும் அயனும் தேடிக் காணுதற்கு அரியவனும், தன்னைத் தெளிந்தவர்க்கு எளியவனும் ஆகிய எண்ணற்ற தேவர்கள் தொழுகின்ற திருநீடூரில் மன்னியிருப்பவனுமாகிய இறைவனை நாம் வணங்காமல் விட முடியுமோ ? முடியாதன்றே ! ஆதலால் அங்குச் சென்று அவனை வணங்குவோம். காட்டில் என்பது காடில் என்றாயது: தொகுத்தல் விகாரம்.
576. விட்டி லங்குஎரி யார்கையி னானை
வீடி லாத வியன்புக ழானைக்
கட்டு வாங்கம் தரித்தபி ரானைக்
காதி லார்கன கக்குழை யானை
விட்டி லங்குஎரி நூலுடை யானை
வீந்த வர்தலை ஒடுகை யானைக்
கட்டி யின்கரும்பு ஓங்கிய நீடூர்க்
கண்டு நாம்பணி யாவிட லாமே.
தெளிவுரை : கவைவிட்டு விளங்குகின்ற தீப்பொருந்திய கையை உடையவனும், பெரும் புகழையுடையவனும் மழுவை ஏந்திய தலைவனும், காதில் பொற்குழையை உடையவனும், மார்பில் முப்புரி நூலை உடையவனும் இறந்தவரது தலை ஓட்டைக் கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவனை நாம் வெல்லக் கட்டியைத் தரும் கரும்புகள் வளர்ந்துள்ள திருநீடூரில் கண்டு வணங்காமல் விடலாகுமோ? ஆகாது. ஆதலால் நாம் அங்குச் சென்று அவனை வழிபடுவோம்.
577. மாய மாய மனங்கெடுப் பானை
மனத்து ளேமதி யாய்இருப் பானைக்
காய மாயமும் ஆக்குவிப் பானைக்
காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை
ஓயு மாறுரு நோய்ப்புணர்ப் பானை
ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை
வேய்கொள் தோள்உமை பாகனை நீடூர்
வேந்த னைப்பணி யாவிட லாமே.
தெளிவுரை : அறிவாய் இருப்பவனும், அதை ஒருவழிப் படுத்துபவனும், காற்றும் தீயும் முதலிய கருவிகளாய் நின்று உடம்பாகிய காரியத்தைப் பண்ணுவிப்பவனும், பின்னர் அதனை அழிப்பவனும், உயிர்கள் வருந்துமாறு அவற்றை அடையற் பாலனவாகிய வினைப் பயன்களைக் கூட்டு விக்கின்றவனும், பின்னர் விரைவில் அவ்வினைகளை அழிப்பவனும் இவை எல்லாவற்றையும் செய்தற்கு உமையைத் துணையாகக் கொள்பவனும் ஆகிய திருநீடூரில் உள்ள முதல்வனை நாம் வணங்காமல் விட முடியுமா? முடியாது. அதனால் அங்குச் சென்று அவனை வணங்குவோம்.
578. கண்ட முங்கறுத் திட்டபி ரானைக்
காணப் பேணும் அவர்க்குஎளி யானைத்
தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத்
துன்ப மும்துறந்து இன்புஇனி யானைப்
பண்டை வல்வினை கள்கெடுப் பானைப்
பாக மாமதி யானவன் தன்னைக்
கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க்
கேண்மை யாற்பணி யாவிட லாமே.
தெளிவுரை : கண்டத்தைக் கறுப்பாகச் செய்து கொண்ட தலைவனும், அடியார்களுக்கு எளியவனும், தொண்டர்களைப் பெரிதும் விரும்புபவனும் துன்பம் இல்லாத இன்பத்தைத் தரும் இனியவனும், பழ வினைகளை அழிப்பவனும் ஆகிய இறைவனை நாம் கெண்டை மீன்களும் வாளை மீன்களும் துள்ளுகின்ற நீரையுடைய திருநீடூரில் கேண்மையோடு வணங்காமல் விடலாமோ? விடலாகாது. ஆதலால் அங்குச் சென்று அவனை வணங்குவோம்.
579. அல்லல் உள்ளன தீர்த்திடு வானை
அடைந்த வர்க்குஅமு தாயிடு வானைக்
கொல்லை வல்லர வம்அசைத் தானைக்
கோல மார்கரி யின்உரி யானை
நல்ல வர்க்குஅணி ஆனவன் தன்னை
நானும் காதல்செய் கின்ற பிரானை
எல்லி மல்லிகை யேகமழ் நீடூர்
ஏத்தி நாம்பணி யாவிட லாமே.
தெளிவுரை : துன்பத்தைப் போக்கு கின்றவனும், தன்னை அடைந்தவர்க்கு அமுதம் போன்று பயன் தருபவனும் கொல்லும் வலிய பாம்பைக் கட்டி யிருப்பவனும், யானையின் தோலை உடையவனும் நன்னெறியில் நிற்பவர்கட்கு அணிகலமாய்த் திகழ்பவனும் அடியேனும் விரும்புகின்ற தலைவனும் ஆகிய இறைவனை, நாம், இரவில் மல்லிகை மலர்கள் மிகவும் மணம் வீசுகின்ற திருநீடூரில் துதித்து வணங்காமல் விடலாமோ? விடலாகாது. ஆதலால் அங்குச் சென்று அவனை வணங்குவோம்.
580. பேரோர் ஆயிர மும்உடை யானைப்
பேசி னாற்பெரி தும்இனி யானை
நீரூர் லார்சடை நின்மலன் தன்னை
நீடூர் நின்றுகந்து இட்டபி ரானை
ஆரூ ரன்அடி காண்பதற்கு அன்பாய்
ஆத ரித்துஅழைத் திட்டஇம் மாலை
பாரூ ரும்பர வித்தொழ வல்லார்
பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே.
தெளிவுரை : எல்லாப் பெயர்களையும் உடையவனும் வாயாற் பேசும் வழிப் பெரிதும் இனிப்பவனும், நீர் ததும்புகின்ற நீண்ட சடையை யுடைய தூயவனும் ஆகிய திருநீடூரை விரும்பி யிருக்கின்ற இறைவனை. அவன் திருவடிகளைக் கண்டு வணங்குவதற்கு அன்போடு விரும்பி, நம்பி ஆரூரன், அனைவரையும் அழைத்துப் பாடிய இத்தமிழ் மாலையால் நில உலகத்து உள்ள எந்த ஊரிலும் இறைவனைப்பாடி வணங்க வல்லவர். அவனுக்கு அடியவர் ஆகி முத்தியைப் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்

57. திருவாழ்கொளிபுத்தூர் (அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர்,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
581. தலைக்க லன்தலை மேல்தரித் தானைத்
தன்னை என்னைநினைக் கத்தரு வானைக்
கொலைக்கை யானைஉரி போர்த்துகந் தானைக்
கூற்று தைத்தகுரை சேர்கழ லானை
அலைத்த செங்கண்விடை ஏறவல் லானை
ஆணை யால்அடி யேன்அடி நாயேன்
மலைத்த செந்நெல்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
தெளிவுரை : மாணிக்க வண்ணர் என்பது இத்தல மூர்த்தியின் திருநாமம். இத்திருப்பதிகம், இறைவரை யன்றி நினைத்தற்குரிய பொருள் வேறில்லை யாதலை நினைந்து அருளிச் செய்தது.
தலையாகிய அணிகலனைத் தலையில் அணிந்தவனும், தன்னை எனக்கு நினைக்குமாறு தருபவனும், யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனும். கூற்றுவனை உதைத்த, கழலையணிந்த திருவடியை உடையவனும், இடபத்தை ஊர வல்லவனும் ஆகிய செந்நெல் வயல் சூழ்ந்த திருவாழ் கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போன்ற பெருமானை மறந்து, யான் வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன். சிவபெருமானுக்கு விடை அறக்கடவுள் ஆதலின் தீயவரை அலைத்தல் ஏற்றல் அறிக.
582. படைக்கண் சூலம் பயிலவல் லானைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்
கடைக்கண்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
காமன் ஆகந்தனைக் கட்டழித் தானைச்
சடைக்கண் கங்கையைத் தாழவைத் தானைத்
தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
மடைக்கண் நீலம்அலர் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
தெளிவுரை : படைகளுள் சூலத்தைப் பழக வல்லவனும், தன்னை நினைவாரது உள்ளத்தில் பரவி அகப்படுத்திக் கொள்பவனும், வாயில்களில் நின்று ஏற்கும் பிச்சைக்கு விரும்புதலைச் செய்பவனும், காமனை அழித்தவனும் கங்கையைச் சடையில் தங்கும்படி வைத்தவனும் மண்ணியாற்றின் கரையில் இருப்பவனும், எல்லாத் தகுதிகளையும் உடையவனும் ஆகிய, நீர் வளமிக்க திருவாழ்கொளிபுத்தூரிலுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து யான் வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன்.
583. வெந்த நீறுமெய் பூசவல் லானை
வேத மால்விடை ஏறவல் லானை
அந்தம் ஆதிஅறி தற்குஅரி யானை
ஆறுஅலைத் தசடை யானைஅம் மானைச்
சிந்தை யென்தடு மாற்றறுப் பானைத்
தேவ தேவன்என் சொல்முனி யாதே
வந்தென்உள் ளம்புகும் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
தெளிவுரை : திருநீற்றைத் திருமேனி முழுவதும் பூச வல்லவனும், வேதமாகிய பெரிய இடபத்தையேறிச் செலுத்த வல்லவனும், ஆதியையும் அந்தத்தையும் பிறர் அறிய முடியாத தன்மையனும், கங்கையைச் சடையில் உடையவனும் யாவர்க்கும் முதல்வனும் என் மனத்திலுள்ள தடுமாற்றத்தை நீக்குபவனும், தேவ தேவனும் எனது எளிய சொல்லையும் வெறுக்காமல் என் மனத்துள்ளே புகுகின்றவனுமான திருவாழ்கொளி புத்தூர் மாணிக்க வண்ணனை மறந்து நான் வேறு எதை நினைப்பேன் !
584. தடங்கை யால்மலர் தூய்த்தொழு வாரைத்
தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப்
படங்கொள் நாகம்அரை ஆர்த்துகந் தானைப்
பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை
நடுங்க ஆனைஉரி போர்த்துகந் தானை
நஞ்சம் உண்டுகண் டங்கறுத் தானை
மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
தெளிவுரை : மலர்தூவிக் கும்பிடுகிறவர்கள், பிற இடத்துச் செல்லாமல் தன் திருவடியிடத்தே செல்லுமாறு செலுத்த வல்லவனும், பாம்பை அரையில் விரும்பிக் கட்டியுள்ளவனும் தலை ஓட்டில் உண்பவனும், தன் தேவியும் நடுங்கும்படி யானைத் தோலை விரும்பிப் போர்த்துள்ளவனும் நஞ்சை உண்டு கண்டம் கருமையானவனும். மாதொரு பாகனும் ஆகிய திருவாழ் கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்துயான். வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன்.
585. வளைக்கை முன்கைமலை மங்கை மணாளன்
மார னார்உடல் நீறெழச் செற்றுத்
துளைத்தஅங் கத்தொடு தூமலர்க் கொன்றை
தோலும்நூ லுந்துதைந் தவரை மார்பன்
திளைக்குந் தெவ்வர் திரிபுரம் மூன்றும்
அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை  வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
தெளிவுரை : மலைமகளுக்கு மணாளனும், மன்மதனது உடம்பை அழித்தவனும், துளை செய்யப்பட்ட எலும்பும், தூய கொன்றை மலரும் தோலும் நூலும் நெருங்கிய கீற்றுக்களையுடைய மார்பை உடையவனும், வானத்தில் திரிகின்ற மூன்று அரண்களும் அவற்றிலிருந்த பகைவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் வெந்தொழியுமாறு வளைத்தவில்லை உடையவனும், திருவாழ் கொளி புத்தூரில் கோயில் கொண்டுள்ள மாணிக்கம் போன்றவனுமாகிய பெருமானை மறந்து யான் வேறு எதனை நினைப்பேன்? ஒன்றையும் நினையேன்?
தோல் பூணூலில் முடியப்படுவது. இது பிரமசாரி யாதலை உணர்த்தும்.
586. திருவின் நாயகன் ஆகிய மாலுக்கு
அருள்கள் செய்திடும் தேவர் பிரானை
உருவி னானைஒன் றாஅறி வொண்ணா
மூர்த்தி யைவிச யற்குஅருள் செய்வான்
செருவில் ஏந்திஓர் கேழற்பின் சென்று
செங்கண் வேடனாய் என்னொடும் வந்து
மருவி னான்தனை  வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
தெளிவுரை : திருமாலுக்குப் பல சமயங்களில் பல திருவருள்களைச் செய்த தேவர் தலைவனும், உருவம் உடையவனும், அவ்வுருவம் ஒன்றாக அறியப் படாமல் அளவற்றனவாய் அறியப்படும் கடவுளும், அருச்சுனனுக்கு அருள் செய்யும் பொருட்டுப் போருக்குரிய வில் ஒன்றை ஏந்திக் கொண்டு ஒரு பன்றியின் பின்னே சிவந்த கண்களையுடைய வேடனாய்ச் சென்றவனும், என்னிடத்திலும் வந்து பொருந்தியுள்ளவனும் ஆகிய திருவாழ்கொளி புத்தூரில் மேவியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன்.
587. எந்தை யைஎந்தை தந்தை பிரானை
ஏதமா யஇடர் தீர்க்கவல் லானை
முந்தி யாகிய மூவரின் மிக்க
மூர்த்தி யைமுதல் காண்பரி யானைக்
கந்தின் மிக்ககரி யின்மருப் போடு
கார கில்கவ ரிம்மயிர் மண்ணி
வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
தெளிவுரை : என் தந்தையும் என் தந்தை தந்தைக்கும் தலைவனும் துன்பத்திற்கு வழியாகிய இடையூறுகளைப் போக்க வல்லவனும் மும்மூர்த்திகளினும் மேலான மூர்த்தியும் தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய மண்ணியாறு தள்ளிக் கொண்டடு வரும் பல வளங்களும் நிறைந்த திருவாழ் கொளி புத்தூரில் மன்னியிருக்கும் மாணிக்கம் போன்றவனாகிய பெருமானை மறந்து, யான் வேறு எதனை நினைப்பேன் ? ஒன்றையும் நினையேன் !
588. தேனை ஆடிய கொன்றையி னானைத்
தேவர் கைதொழும் தேவர் பிரானை
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை
ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக்
கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த
கள்ளப் பிள்ளைக்கும் காண்பரி தாய
வான நாடனை  வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
தெளிவுரை : கொன்றை மலர் மாலையை உடையவனும், தேவர்கள் வணங்கும் தேவனும், குறைகளைப் போக்க வல்லவனும். ஒற்றை எருதை உடையவனும். நெற்றிக் கண்ணை உடையவனும், குவலயா பீடத்தின் கொம்பை ஒடித்த கண்ணனுக்கும் காண அரிதானவனும், வானுலகில் வாழ்பவனும் ஆகிய திருவாழ் கொளிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கிற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து யான். வேறு எதனை நினைப்பேன்? ஒன்றையும் நினையேன் !
589. காளை யாகி வரைஎடுத் தான்தன்
கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்
மூளை போத ஒருவிரல் வைத்த
மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப்
பாளை தெங்கு பழம்விழ மண்டிச்
செங்கண் மேதிகள் சேடெறிந்து எங்கும்
வாளை பாய்வயல்  வாழ்கொளி புத்தூர்
மாணிக் கத்தைமறந் தென்நினைக் கேனே.
தெளிவுரை : காளை போன்று கயிலாயத்தைப் பெயர்த்தவனாகிய இராவணனது கைகள் முரித்து, நெருங்கிய தலைகளினின்றும் மூளை வெளிப்படுமாறு தனது கால் விரல் ஒன்றை ஊன்றிய கடவுளும் தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய, நீர்வளமிக்க வயல்களையுடைய திருவாழ் கொளி புத்தூரில் கோயில் கொண்டிருக்கின்ற மாணிக்கம். வேறு எதனை நினைப்பேன். ஒன்றையும் நினையேன்.
590. திருந்த நான்மறை பாடவல் லானைத்
தேவர்க் குந்தெரி தற்குஅரி யானைப்
பொருந்த மால்விடை ஏறவல் லானைப்
பூதிப் பைபுலித் தோலுடை யானை
இருந்துண் தேரரும் நின்றுணும் சமணும்
ஏச நின்றவன் ஆருயிர்க்கு எல்லாம்
மருந்த னான்த னைவாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
தெளிவுரை : நான்கு வேதங்களையும் செவ்வனே பாட வல்லவனும் தேவர்க்கும் அறிதற்கு அரியவனும் பெரிய விடையினை ஏறவல்லவனும் திருநீற்றுப் பையும் புலித் தோலுமாகிய இவற்றை உடையவனும், சாக்கியரும் சமணரும் இகழ நிற்பவனும், அரிய உயிர்கட்கு எல்லாம் அமுதம் போல்பவனும் ஆகிய, திருவாழ் கொளி புத்தூரில் உள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து யான் வேறு எதனை நினைப்பேன் ? ஒன்றையும் நினையேன் !
591. மெய்யனை மெய்யின் நின்றுணர் வானை
மெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம்
பொய்ய னைப்புரம் மூன்றுஎரித் தானைப்
புனித னைப்புலித் தோலுடை யானைச்
செய்ய னைவெளி யதிரு நீற்றில்
திகழு மேனியன் மான்மறி ஏந்தும்
மைகொள் கண்டனை  வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
தெளிவுரை : அழிவில்லாதவனும், மெய்ம்மையில் நின்று உணரப்படுபவனும். மெய்ம்மை இல்லாதவர்க்கெல்லாம் உணரப்படாதவனும், முப்புரங்களை எரித்தவனும் குற்றமில்லாதவனும், புலித்தோலாகிய உடையை உடையவனும் சிவந்த நிறம் உடையதாய் திருநீற்றுடன் விளங்கும் திருமேனியை உடையவனும். மான்கன்றை ஏந்துகின்ற. கருநிற கண்டத்தையுடையவனும் ஆகிய திருவாழ் கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பனனாகிய பெருமானை மறந்து, யான் வேறு எதனை நினைப்பேன்.
592. வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேன்என்று
உளங்கு ளிர்தமிழ் ஊரன் வன்தொண்டன்
சடையன் காதலன் வனப்பகை அப்பன்
நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்
நங்கை சிங்கடி தந்தை பயந்த
பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல்
பறையு மாம்செய்த பாவங்கள் தானே.
தெளிவுரை : வன்தொண்டனும் சடையனார் மகனும், வனப்பகை, சிங்கடி என்னும் நங்கையர்க்குத் தந்தையும் விளைவு மிகுகின்ற வயல்களையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனும், இறைவனை உளங் குளிர்ந்து பாடும் தமிழை உடையவனும் ஆகிய நம்பியாரூரன் சோலைகளையுடைய திருவாழ் கொளி புத்தூரில் அருள்பாலிக்கின்ற மாணிக்கம் போன்றவனாகிய பெருமானை மறந்து வேறு எதை நினைப்பேன் என்று சொல்லிப்பாடிய பயன்மிகுந்த இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களிடமிருந்து அவர்கள் செய்த பாவங்கள் திண்ணமாகப் பறந்து போகும்.
திருச்சிற்றம்பலம்

58. திருக்கழுமலம்  (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
593. சாதலும் பிறத்தலும் தவிர்த்தெனை வகுத்துத்
தன்அருள் தந்தஎம் தலைவனை மலையின்
மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை
வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : இவ்வுடம்பின் இறுதிக் காலத்தில் சாதலும், பின்பு வேறோர் உடம்பில் பிறத்தலும் என்னும் இரண்டையும் விலக்கி, இந்த ஒரு பிறப்பிலேயே என்னைப் படைத்து, அவ்வாறே வந்து எனக்கு அருளியவனும், உமாதேவியைத் தன் இடப்பாகத்தில் வைத்த மாணிக்கம் போல்பவனும், கங்கையைச் சடையில் வைத்தவனும், அயலதாகிய என் நெஞ்சிற்கு. அயலாகாமல் காய்ந்த இரும்பு கவர்ந்த நீர் போல உள்ளே கலந்து நிற்பவனும் எட்டுவகைப் பொருளாய் நிற்கும் ஒருவனும் காதில் வெண்மையான குழையை அணிந்தவனும் ஆகிய எங்கள் தலைவனை அடியேன் அவன் கயிலையில் இருந்தவாறே ஊழிக்காலத்தில் உலகத்தைக் கடல் கொள்ளவும் தான் கொள்ளப்படாமல் மிதந்து நின்ற திருக்கழுமலம் என்னும் இவ்வள நகரிடத்தில் கண்டு கொண்டேன். அதனால் இனி ஒரு குறையும் இலன் ஆயினேன்.
594. மற்றொரு துணைஇனி மறுமைக்கும் காணேன்
வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமும் துணைஎன்று கருதேன்
துணைஎன்று நான்தொழப் பட்டஒண் சுடரை
முத்தியும் ஞானமும் வானவர் அறியா
முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : சுற்றத்தாரையும் துணையென்று நினையாமல் இவனே துணை என்று தெளிந்து நாள் தோறும் என்னால் வணங்கப்படுகின்ற விளக்குப் போன்றவனும் தேவராலும் அறியப்படாத மெய்ப்பொருளை எனக்கு அறிவித்த கடவுளும் ஆகிய பெருமானை அவன் கயிலையில் இருந்த படியே திருக் கழுமலம் என்னும் இவ்வள நகரில் கண்டு கொண்டேன். இனி அவனை மறவாதிருக்கும் திருவருளைப் பெற்றேன். ஆதலால் இம்மைக்கேயன்றி மறுமைக்கும் இனி மற்றொரு துணையை நாடேன்.
595. திருத்தினை நகர்உறை சேர்ந்தன் அப்பன்என்
செய்வினை அறுத்திடும் செம்பொனை அம்பொன்
ஒருத்தனை அல்லதிங்கு ஆரையும் உணரேன்
உணர்வுபெற் றேன்உய்யுங் காரணம் தன்னால்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி
விழித்துஎங்கும் காணமாட் டாதுவிட் டிருந்தேன்
கருத்தனை நிருத்தம்செய் காலனை வேலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : திருத்தினை நகரில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளுக்குத் தந்தையும், என்னுடைய முன் வினைகளை விலக்குகின்ற, செம்பொன்போலும் சிறப்புடையவனும், பொன்மேனி யுடைய ஒப்பற்றவனும் ஆகிய எங்கள் சிவபெருமானை அல்லாமல் வேறு யாரையும் நான் இறைவராக உணரேன். விருத்தனும் பாலனும் ஆகிய அவனை, அவன் கயிலையில் இருந்தவாறே, பிரளய காலத்தில் சமுத்திரத்தில் மிதந்த திருக்கழுமலம் என்னும் வளநகரத்தில் இப்போது கண்டு கொண்டேன். அதனால் இனிப் பிரிவு இல்லை. எக்காலத்தும் உளன் என்பதனை உணர்த்த விருத்தன் என்றும் பாலன் என்றும் குறிப்பிட்டார்.
596. மழைக்குஅரும் பும்மலர்க் கொன்றையி னானை
வளைக்கலுற் றேன்மற வரமனம் பெற்றேன்
பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப்
பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்
குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே
பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்
கழைக்கரும் பும்கத லிப்பல சோலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : கார்காலத்தில் மலர்கின்ற கொன்றை மாலையை அணிந்தவனை என்றும் மறவாத மனத்தைப் பெற்றேன் ஆதலின் அவனை என்னோடு பிணித்துக் கொண்டேன். இனி இவ்வுலகில் பிறக்க மாட்டேன். இப்பேற்றினை வேறு யார் பெற முடியும்? இவ்வுடம்பு நீங்கியபின் அவனை அடையவும் வல்லேன். அவனைக் காண்பதற்காகவே பாடி நிற்கின்றேன். மூங்கிலைப் போல் வளர்ச்சி பெற்ற கரும்பும் வாழையும் பல சோலையுடன் நிறைந்துள்ள திருக்கழுமலம் என்னும் இவ்வள நகரிடத்து அவனைக் கண்டு கொண்டேன். இனி ஒரு குறையும் எனக்கு இல்லை.
597. குண்டலம் குழைதிகழ் காதனே என்றும்
கொடுமழு வாட்படைக் குழகனே என்றும்
வண்டுஅலம் பும்மலர்க் கொன்றையன் என்றும்
வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே
பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்
பசுபதி பதிவின விப்பல நாளும்
கண்டலங் கழிக்கரை ஓதம்வந்து உலவும்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : யான் தூக்கத்தில், குண்டலமும் குழையும் விளங்குகின்ற காதினை உடையவனே, மழுப்படையை உடையவனே என்றும் கொன்றை மலரைச் சூடியவனே என்றும் வாய்பிதற்றி விழித்தவுடன் ஒரு நெறிப்பட்ட மனத்தை உடையேனாய். அவனது நலங்களைக் கேட்டு அறிந்து. அத்தலத்திற் கிடைப்பான் என்று எண்ணி வணங்கினேன். திருக்கழுமலம் என்னும் இவ்வள நகரிடத்தில் அவனை அவன் கயிலையில் காட்சி தருவது போன்றே கண்டு கொண்டேன். இனி எனக்கு எந்தக் குறையும் இல்லை.
598. வரும்பெரும் வல்வினை என்றிருந்து எண்ணி
வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப்பு எய்தி
வேண்டிநின் றேன்தொழு தேன்விதி யாலே
அரும்பினை அலரினை அமுதினைத் தேனை
ஐயனை அறவன்என் பிறவிவேர் அறுக்கும்
கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : பெரிய கொடிய வினைகள் வருமே என்று இருந்து நினைத்து வருந்தலுற்ற நான், பெருமான் அருளால் அவனை என்றும் மறவாத மனத்தைப் பெற்றேன். காதல் கொண்டு என் மனத்திடைத் தியானித்து, உடம்பு முழுவதும் குளிரப் பெற்று உன்னையே வேண்டி நிலையாகத் தொழுதேன். உனது அருளால் அரும்பாகி, மலராகி, அமுதம் போல் இனித்து தேனும் ஆகிய தலைவனும் தரும சொரூபியும் என் பிறவி வேரை அறுக்கும் கருப்பஞ்சாறாகியவனுமான எம் பெருமானை ஓங்கி வளர்ந்த செந்நெற் பயிர்கள் அடர்ந்த வயல்களையுடைய திருக்கழுமலம் என்னும் வளம் மிக்க ஊரில் நான் கண்டு கொண்டேன்.
599. அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்
முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை
படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்
புயலினைத் திருவினைப் பொன்னினது ஒளியை
மின்னினது உருவை என்னிடைப் பொருளைக்
கயலினம் சேலொடு வயல்விளை யாடும்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : மேகமும் செல்வமும் போன்றவனும், பொன் ஒளியும் மின் ஒளியும் போன்ற திரு மேனியை உடையவனும், என்னிடம் கிடைத்த பொருள் போன்றவனுமாகிய எங்கள் பெருமானை யான் அடைய நினைந்து மற்றவர்களைப் போல் அல்லாமல் முயல் அகப்படும் வலையில் யானை அகப்படும் என்று சொல்லிய அவர்களது சொல்லைக் கேட்டு, அவ்வழியைக் கடைப்பிடித்தேன். ஆயினும் எனது முன்னைத் தவத்தால் அவனை வயல்கள் சூழ்ந்த திருக்கழுமலம் என்னும் இவ்வளநகரில் கண்டு கொண்டேன். அதனால் என் எண்ணம் ஈடேறியது.
600. நினைதரு பாவங்கள் நாசங்க ளாக
நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை
மனைதரு மலைமகள் கணவனை வானோர்
மாமணி மாணிக்கத் தைமறைப் பொருளைப்
புனைதரு புகழினை எங்களது ஒளியை
இருவரும் ஒருவனென்று உணர்வுஅரி யவனைக்
கனைதரு கருங்கடல் ஓதம்வந்து உலவும்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : பாவங்கள் அழியும்படியான மனத்தால் நினைந்தும் கையால் தொழும் எழப்பட்ட ஒளி பொருந்திய ஞாயிறு போன்றவனும் தனக்கு மனைவியைத் தர விரும்பிய உமாபதியும் தேவர் தலைவனுமாகிய மாணிக்கம் போன்றவனும் வேதப்பொருளாய் உள்ளவனும், புகழுடையவனும் விளக்குப் போல்பவனும் மாலும் அயனும் இன்னன் என்று அறிதற்கு அரியவனும் ஆகிய இறைவனை அடியேன் திருக்கழுமலம் என்னும் இவ்வளநகரில் கண்டு கொண்டேன். மலை தரு என்று பாடம் ஓதுவாரும் உளர்.
601. மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப
வஞ்சனை செய்தவர் பொய்கையுள் மாயத்
துறையுறக் குளித்துள தாகவைத்து உய்த்த
துன்மை யெனுந்தகவு இன்மையை ஓரேன்
பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப்
பேரரு ளாளனைக் காரிருள் போன்ற
கறையணி மிடறுடை அடிகளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : வேள்வி முதலிய கருமங்களையே மெய்யென்று துணிந்தவர்கள் (மீமாஞ்சகர்) பற்றுவிடமாட்டாமல் மனை வாழ்க்கையில் கட்டுண்டு கிடத்தலும் முற்றத் துறந்தவர் போலக் காட்டினோரது (சமணரும் சாக்கியரும்) பொய்யாகிய தவங்கள் கடிதில் அழிந்து போதலும் கண்கூடாய் இருக்க, இந்தத் தீ நெறியாகிய பொருந்தா நெறியைக் பொருட்படுத்தாமல் வந்து பிறையைச் சடையில் உடையவனும் எங்கள் தலைவனும், கருணை யுடையவனும் ஆகிய சிவபெருமானை நான் திருக்கழுமலம் என்னும் இவ்வள நகரிடத்துக் கண்டு கொண்டேன்.
602. செழுமலர்க் கொன்றையும் கூவிள மலரும்
விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்டு
அழுமலர்க் கண்ணினை அடியவர்க்கு அல்லால்
அறிவரிது அவன்திரு அடியிணை இரண்டும்
கழுமல வளநகர்க் கண்டுகொண்டு ஊரன்
சடையன்தன் காதலன் பாடிய பத்தும்
தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத்
துன்பமும் இடும்பையும் சூழகி லாலே.
தெளிவுரை : கொன்றை மலரும் வில்வ இலையாகிய மலரும் கலந்துள்ள சடைமுடியையுடைய தலைவனை நினைந்து, அன்பினால் அழுகின்ற மலர்போலும் கண்களையுடைய அடியார்க்கல்லது அறிதற்கரிய திருவடிகளைத் திருக்கழுமலம் என்னும் இவ்வள நகரிடத்துக் கண்டு கொண்டு சடையனார்க்கு மகனாகிய நம்பியாரூரன் பாடிய இப் பத்துப் பாடல்களாலும் தொழுகின்ற அடியார்களைத் துன்பமும் இடும்பையும் அணுக மாட்டா.
திருச்சிற்றம்பலம்

59. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)
திருச்சிற்றம்பலம்
603. பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக மும்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே.
தெளிவுரை : பொன்னையும் உண்மைப் பொருளையும் எனக்குத் தருபவரும் போகங்களையும் செல்வத்தையும் சேர்ப்பிப்பவரும், மற்றும் என் குற்றங்களைப் பொறுத்து அருளுபவரும், குற்றங்களே என்னிடம் இல்லாதவாறு நியமிப்பவரும், இப்படிப் பட்டவரென்று வரையறுத்து அறிய முடியாத இயல்பையுடைய எம்பெருமானும். எனக்கு எளிதாகக் கிடைத்த தலைவரும் ஆகிய அன்னப் பறவைகள் தங்கப் பெற்ற வயல்களையுடைய மருத நிலங்கள் அழகு செய்யும் திருவாரூர்ப் பெருமானை நான் மறக்கவும் முடியுமேறா ?
604. கட்ட மும்பிணி யுங்களை வானைக்
காலற் சீறிய காலுடை யானை
விட்ட வேட்கைவெந் நோய்களை வானை
விரவி னால்விடு தற்குஅரி யானைப்
பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை
வாரா மேதவி ரப்பணிப் பானை
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
ஆரூ ரானை மறக்கலும் ஆமே.
தெளிவுரை : மனத் துன்பத்தையும் உடல் நோயையும் ஒழிக்கின்றவனும், கூற்றுவனை அழித்த காலை உடையவனும், துறக்கப்பட்ட ஆசை மீள வந்து எழுதலாகிய கொடிய துன்பத்தைப் போக்குபவனும், கூடினால் பின்பு பிரிதற்கு இயலாதவனும், வந்த பழிச் சொல்லும். வரக் கடவதாகிய பழிச்சொல்லும் வாராது ஒழியும்படி அருள் செய்பவனும் ஆகிய, மலர்ச்சோலைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !
605. கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்
கலைக்கெ லாம்பொரு ளாய்உடன் கூடிப்
பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்
பகலும் கங்குலும் ஆகிநின் றானை
ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை
உணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை
ஆர்க்கின் றகட லைமலை தன்னை
ஆரூ ரானை மறக்கலும் ஆமே.
தெளிவுரை : கரிய மலையிடத்து மழையாகப் பொழிபவரும் எல்லாக் கலைகளுக்கும் உரிய பொருளாகி அக்கலைகளுடன் சேர்ந்திருப்பவரும் காணப்படும் மக்களுக்கு அருள் செய்பவரும், பகலும் இரவும் ஆகியிருப்பவரும் ஓசையை அறிகின்ற காதுகளாகியவரும். சுவையை அறியும் நாக்கு ஆகியவரும், பொருள்களைக் காணும் கண்களாகியவரும், ஒலிக்கின்ற கடலாய் இருப்பவரும், மலையானவரும் ஆகிய திருவாரூர்ப் பெருமானை நான் மறத்தலும் கூடுமோ !
660. செத்த போதினில் முன்னின்று நம்மைச்
சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்
வைத்த சிந்தைஉண் டேமனம் உண்டே
மதிஉண் டேவிதி யின்பயன் உண்டே
முத்தன் எங்கள் பிரான்என்று வானோர்
தொழநின் றதிமில் ஏறுடை யானை
அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை
ஆரூ ரானை மறக்கலும் ஆமே.
தெளிவுரை : நாம் செத்த போது சிலர் வந்து கூடி நம்மை இகழ்வதற்கு முன்னே, நமக்கு இறைவன் கொடுத்த கருத்து உளதன்றோ ! நெஞ்சு உளதன்றோ ! அறிவு உளதன்றோ ! நாம் செய்த புண்ணியத்தின் பயன் உளதன்றோ ! அவற்றால், தேவர்கள் , இயல்பாகவே பாசம் இல்லாதவன் என்றும், எங்கள் தலைவன் என்றும் வணங்க நிற்கின்ற முதுகில் திமிலையுடைய எருதையுடையவனும் யாவர்க்கும் தந்தையும் என் தந்தைக்குத் தலைவனும், எமக்குத் தலைவனும் ஆகிய திருவாரூர் இறைவனை நாம் நினையாமல் மறத்தலும் இயலுமோ ! சிந்தையும் மனமும் வேறு வேறானவை.
607. செறிவுண் டேல்மனத் தால்தெளி வுண்டேல்
தேற்றத் தால்வரும் சிக்கன வுண்டேல்
மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல்
வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்
பொறிவண் டாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றை
பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை
அறிவுண் டேஉட லத்துயிர் உண்டே
ஆரூ ரானை மறக்கலும் ஆமே.
தெளிவுரை : நன்மையைத் தரும் கல்வியும், அதன் பயனாகிய உள்ளத் தெளிவும், அதன் பயனாகிய இறைவன் பற்றும் நமக்கு உள்ளன என்றால், அவற்றோடே இறப்பும், மறுபிறப்பும், வாழ்நாளை இடைமுரியச் செய்கின்ற தீங்குகளும் உள்ளன என்றால் இவற்றையெல்லாம் அறிகின்ற அறிவும். அந்த அறிவின் வழியே ஒழுகுவதற்கு உயிர் உடம்பில் நிற்றலும் உள்ளனவாதலின், வண்டுகள் யாழின் இசை போல ஒலிக்கின்ற கொன்றை மலர்த் தலை மாலையைச் சடைமேற் சூடிய திருவாரூர் இறைவனை நாம் மறத்தலும் இயலுமோ !
608. பொள்ளல் இவ்வுட லைப்பொருள் என்று
பொருளும் சுற்றமும் போகமும் ஆகி
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம்
வாரா மேதவிர்க் கும்விதி யானை
வள்ளல் எந்தமக் கேதுணை என்று
நாள்நா ளும்அம ரர்தொழு தேத்தும்
அள்ள லங்கழ னிப்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலும் ஆமே.
தெளிவுரை : எங்கும் ஓட்டைகளையுடைய இவ்வுடம்பை உறுதி என்று கொண்டு, செல்வமும் படைகளும் இன்பமுமாய் நிற்கின்றவர்கள் செய்கின்ற மயக்கங்களை யெல்லாம் நம்மிடத்து வாராதவாறு விலக்குகின்ற நன்னெறியாய் உள்ளவனும், தேவர்கள் நாள்தோறும் வள்ளல் என்றும் எங்களுக்குத் துணை என்றும் சொல்லித் துதிக்கின்ற, நீர் வளமிக்க, திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ ! பொள்ளல் உடல் என்றது அதன் நிலையாமையை உணர்த்திற்று. பொருள் மக்களையும், சுற்றம் உறவினர்களையும். போகம் மாதர்களையும் குறித்தன.
609. கரியா னைஉரி கொண்டகை யானைக்
கண்ணின் மேல்ஒரு கண்ணுடை யானை
வரியா னைவருத் தம்களை வானை
மறையா னைக்குறை மாமதி சூடற்கு
உரியா னைஉல கத்துயிர்க்கு எல்லாம்
ஒளியா னைஉகந்து உள்கிநண் ணாதார்க்கு
அரியா னைஅடி யேற்குஎளி யானை
ஆரூ ரானை மறக்கலும் ஆமே.
தெளிவுரை : யானையின் தோலை உரித்த கையை உடையவனும், இரண்டு கண்களுக்கு மேலாக மற்றொரு கண்ணை உடையவனும், அழகை உடையவனும், அடைந்தாரது வருத்தங்களைப் போக்குபவனும், வேதத்தை உடையவனும், சிறந்த பிறையைச் சூடுதற்கு உரியவனும், உலகத்தில் உள்ள உயிர்கட்கு எல்லாம் விளக்காய் உள்ளவனும், தன்னை விரும்பி நினைந்து அடையாதவர்கட்கு அரியவனும், அடியேற்கு எளியவனும் ஆகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ ?
610. வாளா நின்று தொழும்அடி யார்கள்
வான்ஆ ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாணா ளும்மலர் இட்டுவ ணங்கார்
நம்மைஆள் கின்ற தன்மையை ஓரார்
கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன்
கிளைக்கெ லாந்துணை யாம்எனக் கருதி
ஆளா வான்பலர் முன்புஅழைக் கின்றேன்
ஆரூ ரானை மறக்கலு மாமே.
தெளிவுரை : யாதும் வருந்தாமலே நின்று வணங்குகின்ற அவன் அடியார்கள் வானுலகத்தை ஆளுதலாகிய பெருஞ் செல்வத்தைப் பெற்று விடுகின்ற செய்தியைக் கேட்ட பின்பும், சிலர். அவனை நாள்தோறும் மலர்தூவி வணங்குகின்றிலர். அங்ஙனம் வணங்குகின்ற நம்மை அவன் இம்மையிலேயே நன்கு புரத்தலையும் அறிகின்றார் இலர். ஆயினும், யான். எனக்கேயன்றி என் கிளைகளுக்கும் அவன் துணையாவான் என்று கருதி, அவனையே உறவாகக் கொண்டு அவனுக்குப் பணிபுரிந்து நிற்கின்றேன். அன்றியும் பலரையும் அவனுக்கு ஆளாகுமாறு முன் நின்று அழைக்கின்றேன். ஆதலால் யான் அவனை மறத்தலும் இயலுமோ !
611. விடக்கை யேபெருக் கிப்பல நாளும்
வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக்
கடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன்
கண்கு ழிந்துஇரப் பார்கையில் ஒன்றும்
இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச்
சடையா னைஉமை யாளையோர் பாகத்து
அடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை
ஆரூ ரானை மறக்கலும் ஆமே.
தெளிவுரை : எல்லா நாட்களிலும் ஊனைப் பெருக்கவே முயன்று, அது காரணமாக எழுந்த ஆசையால் உளதாகிய துன்பத்தைக் கடக்க மாட்டாமலும், கடந்து நன்னெறியை உணரமாட்டாமலும், பசியால் கண் குழிந்து வந்து இரப்பவர் கையில் ஒன்றையும் இடமாட்டாமலும் உள்ள யான் கங்கையைச் சடையில் உடையவனும் உமையவளை இடப்பாகமாகக் கொண்டவனும் ஆகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !
612. ஒட்டி ஆட்கொண்டு போய்ஒளித் திட்ட
உச்சிப் போதனை நச்சரவு ஆர்த்த
பட்டி யைப்பக லைஇருள் தன்னைப்
பாவிப் பார்மனத் தூறும்அத் தேனைக்
கட்டி யைக்கரும் பின்தெளி தன்னைக்
காத லாற்கடற் சூர்தடிந் திட்ட
செட்டி யப்பனைப் பட்ட னைச்செல்வ
ஆரூ ரானை மறக்கலும் ஆமே.
தெளிவுரை : என்னை வழக்கிட்டு ஆட்கொண்டு அதன் பின் கோயிலுள் சென்று மறைந்த, நண் பகல்போது போன்ற ஒளியை உடையவனும், விடமுள்ள பாம்பைக் கட்டி யுள்ளவனும் பகலாயும் இரவாயும் உள்ளவனும் தன்னை நினைப்பவரது உள்ளத்தில் தேனாய் இருப்பவனும், கரும்பின் சாறும் அதன் கட்டியும் போன்றவனும் தேவர் மீது வைத்த அன்பினால் முருகனுக்குத் தந்தையும், வேதத்தில் வல்லவனும் ஆகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !
613. ஓரூர் என்றுல கங்களுக் கெல்லாம்
உரைக்க லாம்பொரு ளாய்உடன் கூடிக்
காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை
முடியன் காரிகை காரண மாக
ஆரூ ரைமறத் தற்குஅரி யானை
அம்மான் தன்திருப் பேர்கொண்ட தொண்டன்
ஆரூ ரன்அடி நாய்உரை வல்லார்
அமர லோகத்து இருப்பவர் தாமே.
தெளிவுரை : எல்லா உலகங்கட்கும் தலைமையுடைய ஓர் ஊர் என்று சொல்லத்தக்க ஊராய், தான் பரவையுடன் கூடி வாழ்ந்து மறத்தற்கு இயலாததாய் அமைந்துவிட்ட திருவாரூர் இறைவனை, கார் காலத்தில் பூக்கின்ற மணங்கமழும் கொன்றை மாலையை அணிகின்ற அப்பெருமானது திருப்பெயரைக் கொண்ட அவன் அடிக்கீழ்க் கிடக்கும் நாய்போலும் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப் பதிகத்தைப் பாட வல்லவர் அமரலோகத்தில் வாழ்பவராதல் திண்ணம்.
ஆரூரை மறவாமைக்குப் பரவை ஒரு காரணமாய் அமைந்தாள் என்றபடி.
திருச்சிற்றம்பலம்

60. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர்,தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
614. கழுதை குங்குமம் தான்சுமந்து எய்த்தால்
கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நான்உழன்று உள்தடு மாறிப்
படுசு ழித்தலைப் பட்டனன் வந்தாய்
அழுது நீஇருந்து என்செய்தி மனனே
அங்க ணாஅர னேஎன மாட்டா
இழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.
தெளிவுரை : என் அப்பனே, திருவிடைமருதூரில் இருக்கின்ற எம் குலதேவனே, கழுதை குங்குமம் பொதியைச் சுமந்து மெய் வருந்தினால் அதனால் சிறப்பு ஒன்றும் இல்லாமை கருதி அனைவரும் நகைப்பர். அதுபோல உன் தொண்டை மேற்கொண்டு அதன் மெய்ப்பயனைப் பெறாமல் மனந்தடுமாறி நீர்ச்சுழியில் அகப்பட்டவன் போல் இவ்வுலக வாழ்வில் உண்மைத் தொண்டைச் செய்யாமல் அலமறுகின்றேன். மனமே, நீ கவலைப்பட்டு என்ன பயன்? இறைவனே ! உன்னை அன்பினால் துதிக்காமல் இருக்கும் எனக்கு நீ மனம் இரங்கி உய்யும் வழியை வழங்குவாயாக. நகைப்பர் என்பது கைப்பர் என முதற் குறைந்தது. இனி, கைத்தல், வெறுத்தல் எனினுமாம்.
615. நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே
நன்றி யில்வினை யேதுணிந்து எய்த்தேன்
அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன்
அஞ்சி னேன்நம னாரவர் தம்மை
உரைப்பன் நான்உன் சேவடி சேர
உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத
இரைப்பனே னுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.
தெளிவுரை : நரைப்பும் கிழத்தனமும் நோயும் விரைவிலே வரும். நான் இதுவரை நன்மையில்லாத செயல்களையே செய்து சலித்தேன். என் வாழ்க்கை அரைக்கப்பட்ட மஞ்சளைப் போல் அவலம் ஆனதை அறிந்தேன். ஆதலால், இயமனுக்கு அஞ்சுகின்றேன். இதையே சொல்லிக் கொண்டிருக்கிறேன். உன் திருவடிகளைச் சேர்வதற்கு ஓர் உபாயத்தை அருளிச் செய்வாயாக. திருவிடை மருதூரில் எழுந்தருளிய என் தந்தையாகிய பெருமானே. நீர் வார்த்து அரைத்த மஞ்சளை உடனே உபயோகிக்கா விட்டால் பயனிலதாகும்.
616. புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்
போலும் வாழ்க்கை பொருள்இலை நாளும்
என்னெ னக்கினி இற்றைக்கு நாளை
என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய்
முன்ன மேஉன சேவடி சேரா
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
இன்னம் என்றனக்கு உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.
தெளிவுரை : என் தந்தையே. திருவிடைமருதூரில் எழுந்தருளியுள்ள எம் குலதேவனே. புல்லின் நுனியில் உள்ள பனித்துளி வெய்யிலை எதிர்ப்பட்டாற்போல இம்மானுட வாழ்க்கை ஒரு பொருளாதல் இல்லை. நாள்தோறும் நினைந்து ஏமாறினேன். இனிமேல்தான் எனக்கு என்ன வரப்போகிறது? காலமெல்லாம் வீணாகிவிட்டன. இப்போதே எனக்கு உய்யும் வழியொன்றை நீ வழங்குவாயாக.
617. முந்திச் செய்வினை இம் மைக்கண் நலிய
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
சிந்தித் தேமனம் வைக்கவும் மாட்டேன்
சிறுச்சிறி தேஇரப் பார்கட்டுஒன்று ஈயேன்
அந்தி வெண்பிறை சூடும்எம் மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீஎனக்கு உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.
தெளிவுரை : மாலையில் தோன்றுகிற பிறையைச் சூடியவனே ! திருவாரூரில் உள்ள தேவர் தலைவனே. என் தந்தையே, திருவிடை மருதூரிலுள்ள எம் குல தெய்வமே. முன் வினைப்பயனால் மூர்க்கனாகி, காலத்தைக் கழித்து விட்டேன். உலகப் பற்றினின்றும் நீங்கி, உன்னை மனத்தில் இருத்தவும் தவறினேன். யாசிப்பவர்களுக்கு ஈதலும் செய்திலேன். எனக்கு நீ கடைத்தேறும் வழியைக் காட்டியருள்வாய்.
618. அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்
ஐவ ரும்புரவு ஆசற ஆண்டு
கழித்துக் காற்பெய்து போயின பின்னைக்
கடைமு றைஉனக் கேபொறை ஆனேன்
விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை
வேண்டேன் மானுட வாழ்க்கைஈ தாகில்
இழித்தேன் என்றெனக்கு உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.
தெளிவுரை : என் மனமாகிய நிலத்துக்கு ஆட்சி உடையவரான ஐம்பொறிகள் அந்நிலத்தையே அழிக்கின்றனர். அந்த ஐவரும் அந்த நிலத்தைப் பற்றற ஆண்டு கழித்து, கால் வாங்கிப் போனபின் கடைசியாக உனக்கே சுமையானேன்; விழித்துக் கொண்டேன். மனித வாழ்க்கை இத்தன்மைத்தாயின் நான் இனி சிறிதும் இதனை விரும்பேன். இதனை இகழ்ந்தேன். ஆதலால் எனக்குக் கடைத்தேறும் வகையை அருளிச் செய்வாயாக. திருவிடைமருதூரில் எழுந்தருளிய என் தந்தையாகிய பெருமானே !
619. குற்றம் தன்னொடு குணம்பல பெருக்கிக்
கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக்
கற்றி லேன்கலை கள்பல ஞானம்
கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்
பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்
பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்
எற்று ளேன்எனக்கு உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.
தெளிவுரை : திருவிடைமருதூரிலிருந்து அருள்பாலிக்கும் எம்பெருமானே ! அழகிய மகளிரோடு கூடி மயங்கி நின்று தீவினையும் நல்வினையுமாகிய இருவினைகளை மிகுதியாகச் செய்தும் மெய்ந்நூல்கள் பலவற்றிற் புகுந்து ஞானத்தை உணராமல் மிகவும் கொடுமையான செயல்களைச் செய்தேன். அதனால் பற்றுக் கோடு இலனாயினேன். இவ்வாறு பல பாவங்களைச் செய்து பாவியாகிய யான் எதன் பொருட்டு உயிர் வாழ்கின்றேன்? எனக்கு நீ உய்யும் வழியை வழங்குவாயாக.
ஐம்புல ஆசைகளுள் தலையாய மகளிராசையின் கொடுமையை விரித்தபடியாம்.
620. கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக்
குற்றம் செற்றம் இவைமுத லாக
விடுக்க கிற்றிலேன் வேட்கையும் சினமும்
வேண்டில் ஐம்புலன் என்வசம் அல்ல
நடுக்கம் உற்றதோர் மூப்புவந்து எய்த
நமன்த மர்நர கத்திடல் அஞ்சி
இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.
தெளிவுரை : திருவிடைமருதூரிலிருந்து அருள்பாலிக்கின்ற எம்பெருமானே ! ஈகையாகத் தரும் பொருளை உலோபமும் பகைமையும் காரணமாகப் பிறருக்கு நான் கொடுக்கவில்லை; ஆசையும் கோபமும் ஆகிய இவைகளை ஒழிக்கவில்லை; ஐம்புலன்கள் மேற் செல்கின்ற ஆசைகளை விட நினைத்தால் யான் அவற்றின் வயத்தேன் அல்லது அவை என் வயத்தன அல்ல. அதனால் மூப்பு வந்தடைய அப்போது இயமனது ஏவலர் என்னைக் கொண்டு சென்று நரகத்தில் இடுதலை எண்ணி அஞ்சித் துன்புறலானேன். எனக்கு நீ உய்யும் வழியைக் காட்டியருள்வாயாக.
621. ஐவ கைஅரை யர்அவ ராகி
ஆட்சி கொண்டொரு கால்அவர் நீங்கார்
அவ்வ கைஅவர் வேண்டுவ தானால்
அவர வர்வழி ஒழுகிநான் வந்து
செய்வ கையறி யேன்சிவ லோகா
தீவ ணாசிவ னேஎரி யாடீ
எவ்வ கைஎனக்கு உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.
தெளிவுரை : சிவலோகத்திற்குத் தலைவனே ! நெருப்பு போன்ற நிறம் உடையவனே ! சிவபெருமானே ! தீயோடு நின்று ஆடுபவனே ! திருவிடைமருதூரில் இருந்து காட்சி தருபவனே ! எம் குல தெய்வமே ! ஐவர், வேறுபட்ட தன்மையை யுடைய அரசராய் என்னை ஆட்சி கொண்டு ஒருகாலும் விட்டு நீங்காமல் இருக்கின்றனர். அவர்கள் அவ்வாறு வெவ்வேறு வகையில் என்னை ஆள விரும்பினால் நான் செய்வது இன்னதென்று அறியேன். நான் உய்யும் நெறியாது ? அதனைத் தந்தருள்வாய்.
622. ஏழை மானுட இன்பினை நோக்கி
இளைய வர்வலைப் பட்டிருந்து இன்னம்
வாழை தான்பழுக் கும்நமக்கு என்று
வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக்
கூழை மாந்தர்தம் செல்கதிப் பக்கம்
போக மும்பொருள் ஒன்றறி யாத
ஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.
தெளிவுரை : திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் எம் குலதேவனே ! அறிவில்லாத மானுட இன்பத்தைக் கருதி, முன்னர்ப் பழத்தைத் தந்த வாழை, இனியும் நமக்கு அவ்வாறே தரும் என்று கருதுவாரைப் போல, இளமையுடையவராய் இன்பம் தந்த மகளிர் என்றும் இவ்வாறே இருந்து இன்பம் தருவர் என்று கருதும் மயக்க வலையுள் அகப்பட்டு, அதனால் வலிய வினையென்னும் வலையிலும் அகப்பட்டு, அறிவின் இயல்பையும், அதற்குப் புலனாய் நிற்கும் பொருளின் இயல்பையும் சிறிதும் அறியாத எளியேனுக்கு உய்யும் வழியைக் காட்டியருள்வீராக. (ஒருமுறை பழுத்த வாழை மற்ற மரங்களைப் போல மீண்டும் பழுக்கும் என்று எண்ணி ஏமாந்தது போல ஏமாந்து.)
623. அரைக்கும் சந்தனத் தோடுஅகில் உந்தி
ஐவ னம்சுமந் தார்ந்துஇரு பாலும்
இரைக்கும் காவிரித் தென்கரை தன்மேல்
இடைம ருதுறை எந்தைபி ரானை
உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை
உள்ளத் தால்உகந்து ஏத்தவல் லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி
நாதன் சேவடி நண்ணுவர் தாமே.
தெளிவுரை : சந்தனக் கட்டையையும் அகிற்கட்டையையும் இருமருங்கும் தள்ளிக்கொண்டு, மலை நெல்லைத் தாளோடு சுமந்து கொண்டு நிறைந்து ஒலிக்கின்ற காவிரியாற்றின் தென்கரைமேல் உள்ள திருவிடை மருதூரில் கோயில் கொண்டிருக்கின்ற எம் பெருமானைப் பாடிய நம்பியாரூரனாகிய எனது உணர்வு மிக்க இப் பாடல்களை விரும்பிப் பாட வல்லவர்கள். நரைத்தலும், மூத்தலும், இறத்தலும் இன்றி அந்த இறைவனது செம்மையான பாதங்களை அடைவர். இது திண்ணம்.
திருச்சிற்றம்பலம்

61. திருக்கச்சி ஏகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)
திருச்சிற்றம்பலம்
624. ஆலம் தான்உகந்து அமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழுது ஏத்தும்
சீலம் தான்பெரி தும்உடை யானைச்
சிந்திப் பார்அவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
தெளிவுரை : இத் திருப்பதிகம் தமக்குக் கண் அளித்த இறைவரது திருவருளை வியந்து அருளிச் செய்தது.
நஞ்சினைத் தான் விரும்பி உண்டு. அமுதத்தைத் தேவர்களுக்கு அளித்தவனும், யாவர்க்கும் முதல்வனும், தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை உடையவனும், தன்னை நினைவாரது நினைவில் விளங்குபவனும், மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலை உடையவளாகிய உமை என்னும் நங்கை, தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும், கால காலனும் ஆகிய திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன். கண் பெற்றவாறு வியப்பு !
625. உற்ற வர்க்குஉத வும்பெரு மானை
ஊர்வது ஒன்றுடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க்குஎன்றும் பற்றவன் தன்னைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை
அற்ற மில்புக ழான்உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
தெளிவுரை : தன்னைப் புகலிடமாகத் தேடி வந்தவர்க்கு நன்மை செய்கின்ற பெருமானும், ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும், தேவர்கட்குத் தலைவனும் தன்னைச் சார்ந்தவர்க்கு பெரிய பற்றுக்கோடாய், தன்னை நினைப்பவரது மனத்தில் தங்கியிருப்பவனும் ஆகிய, உமை விரும்பி வழிபடப் பெற்ற, நீண்ட சடையினையுடைய திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காண்பதற்கு அடியேன் கண் பெற்றது ஒரு வியப்பாகும்.
626. திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்
செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துஉகந் தானைக்
காம னைக்கன லாவிழித் தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
தெளிவுரை : வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்து ஒழியுமாறு செய்து, அப்போது திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும், யானையின் தோலைப் போர்த்தவனும் மன்மதனை எரிக்க நெற்றிக்கண்னைத் திறந்தவனும், வளைகளை அணிந்த உமை என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக் காண்பதற்கு அடியேன். கண் பெற்றது வியப்பு.
627. குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம் புமலர்க் கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்உமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
தெளிவுரை : காதில் குண்டலத்தை உடையவனும், கூற்றுவனை உதைத்துக் கொன்றவனும், கொன்றை மாலையை அணிந்தவனும், சடையில் பாம்பையும் பிறையையும் வைத்துள்ளவனும். உமை அணுகி நின்று துதித்து வழிபடப்பட்டவனும், திருநீலகண்டனும் ஆகிய, திருவேகம்பத்திலுள்ள எம் இறைவனைக் காண்பதற்கு அடியேன் கண் பெற்றது வியப்பாகும்.
628. வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
வேலைநஞ் சுண்ட வித்தகன் தன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
அரும றையவை அங்கம்வல் யானை
எல்லை யில்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
தெளிவுரை : வெல்லும் தன்மையுடைய வெண்மையான மழுவை உடையவனும், கடலில் தோன்றிய விடத்தை உண்ட ஆற்றல் உடையவனும், அடியார்களின் துன்பங்களைப் போக்கி அவர்களுக்கு அருள் செய்பவனும், அரிய வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய, உமை எந்நாளும் துதித்து வழிபடப் பெற்ற திருவேகம்பத்தில் உள்ள எங்கள் தலைவனைக் காண்பதற்கு அடியேன் கண் பெற்றது பெரும் விழப்பாகும். நன்மையுடைமை பற்றியே இறைவன், சிவன் என்று அழைக்கப்படுகிறார்.
629. திங்கள் தங்கிய சடையுடை யானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக்  கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
தெளிவுரை : சடையில் பிறைச் சந்திரனைச் சூடியவனும், தேவர்க்குத் தேவனும், காதில் சங்குக்குழையை உடையவனும், சாம வேதத்தைப் பெரிதும் விரும்புகின்றவனுமாகிய, என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி, துதித்து வழிபடப் பெற்ற, கங்கையை அணிந்த, திருவேகம்பத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைக் காண்பதற்கு அடியேன் கண் பெற்றது வியப்பாகும்.
630. விண்ண வர்தொழுது ஏத்தநின் றானை
வேதந் தான்விரித்து ஓதவல் லானை
நண்ணி னார்க்குஎன்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம்உகக் கின்றபி ரானை
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக்  கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
தெளிவுரை : தேவர்கள் தொழ நின்றவனும், வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும், தன்னை அடைந்தவர்கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும், நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய புகழ்வாய்ந்த உமை என்னும் நங்கை எந்நாளும் துதித்து வழிபடப்பெற்ற, கண்களும் மூன்றுடைய திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காண்பதற்கு அடியேன் கண் பெற்றது வியப்பு ஆகும்.
631. சிந்தித்து என்றும் நினைந்துஎழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் தன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலோடு ஆனஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக்  கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
தெளிவுரை : நாள் தவறாமல் தியானித்தும் நினைத்துக் கொண்டும் காலையில் எழுபவர்களுடைய மனத்தில் விளங்கும் சிவபெருமானும், என்னைக் கட்டுப்படுத்திய பழவினைகளின் தொடர்பை வேரோடு ஒழிப்பவனும், பால் முதலிய பசுவின் பொருள்கள் ஐந்திலும் (பஞ்ச கவ்வியத்தில்) முழுகுவதில் மகிழ்பவனும், முடிவில்லாத புகழ் உடையவனாகிய உமா தேவியாரால் அன்போடு வணங்கப்பெற்ற மணமுடைய நீண்ட திருச்சடையையுடைய திருவேகம்பனுமாகிய எம் பெருமானைக் காணும் பொருட்டு (இடக்கண்) பார்வையை அடியேன் பெற்ற விதத்தை என்னவென்று சொல்வது !
632. வரங்கள் பெற்றுழல் வாள்அரக் கர்தம்
வாலி யபுரம் மூன்றுஎரித் தானை
நிரம்பிய தக்கன் தன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக்  கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
தெளிவுரை : தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால் வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றை எரித்தவனும், தேவர்கள் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வீரம் உடையவனும் ஆகிய பரவிய புகழையுடைய உமாதேவி என்னும் நங்கை முன்னிலையாகவும் படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற எட்டுக் கைகளையுடைய திருவேகம்பப் பெருமானைக் காண்பதற்கு அடியேன் கண் பெற்றது ஒரு வியப்பாகும்.
633. எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துஉமை நங்கை
வழிப டச்சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவி ஓடித்தழு வவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
தெளிவுரை : தேவர் பெருமானாகிய சிவபெருமானை அவனது ஒரு கூறாகிய உமாதேவி தானே, தான் வழிபட வேண்டுவது இல்லை என்று இகழாமல் வழிபட விரும்பி, ஏனை வழிபாடு செய்வாருள் ஒருத்தி போலவே நின்று, முன்னர் உள்ளத்துள்ளே நினைந்து செய்யும் வழிபாட்டினை முடித்து, பின்பு புறத்தே வழிபடச்சென்று அவ்வழிபாட்டில் தலைப்பட்டு நின்ற முறைமையைக் கண்டு, அதன் அவ்விடத்துக் கம்பையாற்றின்கண் பெருவெள்ளத்தைத் தோற்றுவித்து வெருட்ட, வஞ்சிக்கொடி போல்பவளாகிய அவள் அஞ்சி ஓடித் தன்னைத் தழுவிக்கொள்ள, அதன் பின் அவள்முன் வெளிப்பட்டு நின்ற கள்வனாகிய திருவேகம்பமுடையானைக் காண்பதற்கு அடியேன் கண் பெற்றது ஒரு வியப்பாகும்.
634. பெற்றம் ஏறுஉகந்து ஏறவல் லானைப்
பெரிய எம்பெரு மான்என்றுஎப் போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன்
நற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே.
தெளிவுரை : ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும் மெய்ந் நூல்களைக் கற்றவர்கள் இவன் எம்பெரிய பெருமான் என்று எப்போதும் மறவாது துதிக்கப்படுபவன். யாவர்க்கும் தலைவனும் கூத்தாடுதலை உடையவனும் ஆகிய திருவேகம்பமுடையானைக் காண்பதற்கு அடியேன் கண் பெற்றது வியப்பாகும் என்று குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூரனாகிய நம்பியாரூரன் சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தையும் பாட வல்லவர் நன்னெறியாற் பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர்.
நன்னெறி, ஞான நெறி: அதனாற் பெறும் உலகம் சிவலோகம்.
திருச்சிற்றம்பலம்

63. திருக்கோலக்கா (அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கோலக்கா, சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
635. புற்றில் வாளரவு ஆர்த்தபி ரானைப்
பூத நாதனைப் பாதமே தொழுவார்
பற்று வான்துணை எனக்கெளி வந்த
பாவ நாசனை மேவரி யானை
முற்ற லார்திரி புரம்ஒரு மூன்றும்
பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக்
கொற்ற வில்அங்கை ஏந்திய கோனைக்
கோலக் காவினில் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : கொடிய பாம்பைக் கட்டியுள்ள பெருமானும் பூத கணங்களுக்குத் தலைவனும் அடியார்களுக்குச் சிறந்த துணைவனும் எனக்கு எளியனாய் எதிர்வந்தவனும், அடியவர் பாவங்களைப் போக்குபவனும் யாவராலும் அடைதற்கு அரியவனும் திரிபுரங்களை எரிக்க முயன்றபோது திருமால் அம்பாகி நிற்க மேரு மலையாகிய வில்லை அங்கையில் ஏந்திய தலைவனும் ஆகிய பெருமானை அடியேன் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.
636. அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும்
ஆய நம்பனை வேய்புரை தோளி
தங்கு மாதிரு உருவுடை யானைத்
தழல்ம திசடை மேற்புனைந் தானை
வெங்கண் ஆனையின் ஈருரி யானை
விண்ணு ளாரொடு மண்ணுளார் பரசும்
கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழும்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : துணை நூல்களாகிய ஆறும் முதல் நூல்களாகிய வேதம் நான்கும் ஆகி நிற்கும் நம்பனும் உமாதேவி பொருந்தியுள்ள சிறந்த திருமேனியை உடையவனும், பிறையைச் சடையில் சூடியவனும், யானையினது உரித்த தோலையுடையவனும் ஆகிய இறைவனை விண்ணோரும் மண்ணோரும் துதிக்கின்ற சோலைகளில் குராமலர்கள் கமழ்கின்ற திருக்கோலக்காவில் நான் வெளிப்படக் கண்டு கொண்டேன்.
637. பாட்ட கத்துஇசை ஆகிநின் றானைப்
பத்தர் சித்தம் பரிவினி யானை
நாட்டகத் தேவர் செய்கையு ளானை
நட்டம் ஆடியை நம்பெரு மானைக்
காட்ட கத்துறு புலியுரி யானைக்
கண்ணொர் மூன்றுடை அண்ணலை அடியேன்
கோட்ட கப்புன லார்செழுங் கழனிக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : பாட்டில் இசைபோல எல்லாப் பொருள்களிலும் வேறறக் கலந்து நிற்பவனும், அடியார்களது உள்ளம் அன்பு செய்தற்குப் பயனாய் உள்ளவனும், அந்தணர்களது வழிபாட்டின்கண் விளங்குகின்றவனும், நடனம் ஆடுபவனும், நமக்குத் தலைவனும், புலியினது தோலை உடையவனும், கண்கள் மூன்றுடையானுமாகிய இறைவனை அடியேன் நீர் வளமிக்க திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.
638. ஆத்தம் என்றெனை ஆளுகந் தானை
அமரர் நாதனைக் குமரனைப் பயந்த
வார்த்த யங்கிய முலைமட மானை
வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்த னைச்சிவ னைச்செழுந் தேனைத்
தில்லை அம்பலத் துள்நிறைந்து ஆடும்
கூத்த னைக்குரு மாமணி தன்னைக்
கோலக் காவினில் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : என்னை விரும்பி ஆண்டருளியவனும், தேவர்களுக்குத் தலைவனும், முருகனைப் பெற்ற தேவியை இடப்பாகத்தில் வைத்து, வானுலகத்தில் உள்ள கங்கையைச் சடையில் மறைத்து வைத்த தூயவனும், மங்கலம் உடையவனும், தேன்போல் இனிப்பவனும், தில்லையம்பலத்துள் நடனமாடுகின்றவனும், மாணிக்கம் போல்பவனும் ஆகிய இறைவனை அடியேன் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.
639. அன்று வந்தெனை அகலிடத் தவர்முன்
ஆள தாகஎன்று ஆவணங் காட்டி
நின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த
நித்தி லத்திரட்டு ஒத்தினை முத்திக்கு
ஒன்றி னான்தனை உம்பர் பிரானை
உயரும் வல்லர ணங்கெடச் சீறும்
கன்ற வில்லியை மெல்லிய லுடனே
கோலக் காவினில் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : அன்று அந்தணனாய்த் திருநாவலூரில் வந்து, உலகத்தார் பலர் முன்பும், நீ என் அடிமை என்று சொல்லி ஓலை காட்டி வழக்குப் பேசி நின்று, பின்பு திருவெண்ணெய்நல்லூரில் சென்று மறைந்த முத்துப் போல்பவனும் முத்தியளிப்பவனும், தேவர்கட்குத் தலைவனும் மலைவில்லை உடைய இறைவனை இறைவியுடனே யான் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.
640. காற்றுத் தீப்புனல் ஆகிநின் றானைக்
கடவு ளைக்கொடு மால்விடை யானை
நீற்றுத் தீவுரு வாய்நிமிர்ந் தானை
நிரம்பு பல்கலை யின்பொரு ளாலே
போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப்
போக்கு வான்உயிர் நீக்கிடத் தாளால்
கூற்றைத் தீங்குசெய் குரைகழ லானைக்
கோலக் காவினில் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : காற்றும், தீயும், நீரும் ஆகி நிற்பவனும் எல்லாப் பொருள்களையும் கடந்தவனும், கொடிய பெரிய இடப ஊர்தியையுடையவனும், நீற்றைத் தரும் நெருப்புருவாய் ஓங்கி நிற்பவனும், மார்க்கண்டேயனது உயிரைப் போக்க வந்த கூற்றுவனது உயிர் நீங்கும்படி தனது திருவடியால் அவனை அழித்தவனும் ஆகிய இறைவனை, அடியேன் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன். (ஐம்பூதங்களில் விடுபட்டுப்போன நிலம், வான் இரண்டையும் சேர்த்துக்கொள்க.)
641. அன்றுஅ யன்சிரம் அரிந்துஅதில் பலிகொண்டு
அமர ருக்குஅருள் வெளிப்படுத் தானைத்
துன்று பைங்கழ லிற்சிலம்பு ஆர்த்த
சோதி யைச்சுடர் போல்ஒளி யானை
மின்த யங்கிய இடைமட மங்கை
மேவும் ஈசனை வாசமா முடிமேல்
கொன்றை அஞ்சடைக் குழகனை அழகார்
கோலக் காவினில் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : அன்று பிரமனது தலையை அரிந்து அதன் கண் பிச்சை ஏற்றுத் தேவர்கட்குத் தனது திருவருள் நிலையை வெளிப்படுத்தியவனும், கழலை அணிதற்குரிய திருவடியில் சிலம்பையணிந்த ஒளி வடிவினனும் விளக்கம் உடையவனும், இளமங்கை விரும்பும் கடவுளும் கொன்றையணிந்த சடையையுடைய அழகனும் ஆகிய இறைவனை, அடியேன் அழகு நிறைந்த திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.
ஒரு காலில் கழலை அணிந்து மற்றொரு காலில் சிலம்பை அணிந்தமையின் இவ்வாறு அருளிச் செய்தார்.
642. நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
ஞான சம்பந்த னுக்குஉல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும்
தன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க ணன்தனை எண்கணம் இறைஞ்சும்
கோளி லிப்பெருங் கோயிலு ளானைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : திருஞானசம்பந்தருக்குத் தாளம் ஈந்தது இத்திருத்தலத்தில் தான்.
எந்நாளும் இனிய இசையால் தமிழ்ப் பாடலை எங்கணும் பரவச் செய்த திருஞான சம்பந்தருக்கு, பலருங் காணும்படியாகத் தாளம் ஈந்த கருணையாளனும், என் உள்ளத்துள் கொள்ளப்படும் பொருளாய் உள்ளவனும், தன்னால் ஆளப்படும் பூதங்கள் பாடல்களைப் பாட, அவற்றிற்கு ஏற்ப நின்று ஆடுகின்ற அருள் பொருந்திய கண்களையுடையவனும். பதினென் கணங்களாலும் வணங்கப்படுபவனும். திருக்கோளிலியில் உள்ள பெருங்கோவிலில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனை யான் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.
பதினெண்கணத்தை எண்கணம் என்றது முதற்குறை, சுந்தரர் திருக்கோளிலியில் நெல் பெற்றார்.
643. அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக்கு
அன்றுஇ ரங்கிய வென்றியீ னானைப்
பரக்கும் பாரளித்து உண்டுஉகந் தவர்கள்
பரவி யும்பணி தற்குஅரி யானைச்
சிரக்கண் வாய்செவி மூக்குயர் காயம்
ஆகித் தீவினை தீர்த்தஎம் மானைக்
குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
தெளிவுரை : அன்று இராவணனது வலிமையை முதலில் அழித்து, பின்பு அவன் பாடிய இசைக்கு இரங்கி, அருள் புரிந்த வெற்றியை யுடையவனும் விரிந்த உலகத்தைப் படைத்தும் உண்டும் களித்தவர்கள் துதித்துப் பணிதற்கும் அரியனாய் உள்ளவனும் தலையில் அமைந்த கண், வாய், காது, மூக்கு என்பவற்றோடு. நீண்ட உடம்புமாய் நின்று, தீமையைத் தரும் வினையை ஒழித்த எம் இறைவனை அடியேன் சோலைகளில் குரங்குக்கூட்டம் குதித்துத் திரிகின்ற வயல் சூழ்ந்த திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன். உலகத்தை அளித்தவன் (படைத்தவன்) பிரமன்: உண்டவன். திருமால், காயம் என்றது மெய் என்னும் பொறியை.
644. கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக்
கோலக் காவுள்எம் மானைமெய்ம் மானப்
பாட ரங்குடி அடியவர் விரும்பப்
பயிலும் நாவலா ரூரன்வன் தொண்டன்
நாடி ரங்கிமுன் அறியும்அந் நெறியால்
நவின்ற பத்திலை விளம்பிய மாந்தர்
காட ரங்கென நடம்நவின் றான்பால்
கதியும் எய்துவர் பதிஅவர்க்கு அதுவே.
தெளிவுரை : ஆலம் விழுதுபோலும் சடைகளை உடையவனும். கரும்பு போல இனிப்பவனும் ஆகிய திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள எம் இறைவனை, உண்மையமைந்த பெரிய பாடல்களைப் பாடும் வழி வழி அடியவர் பலரும் விரும்புமாறு அத்திருத்தொண்டில் பழகும் நம்பியாரூரன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளைப் பாடிய மாந்தர். காடே அரங்கமாக நடனம் செய்பவனாகிய சிவபிரானிடத்து உயர் கதியையும் பெறுவர். என்றும் நீடு வாழும் இடமும் அவர்க்கு அக்கதியே யாம்.
திருச்சிற்றம்பலம்

63. நம்பி என்ற திருப்பதிகம்
திருச்சிற்றம்பலம்
645. மெய்மைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி
வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி
கையில்ஓர் வெண்மழு ஏந்தியோர் நம்பி
கண்ணு மூன்றும்உடை யாய்ஒரு நம்பி
செய்ய நம்பிசிறு செஞ்சடை நம்பி
திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
தெளிவுரை : திருமேனி முழுதும் திருநீற்றைப் பூசியுள்ள ஒப்பற்ற நம்பியே. வேதங்கள் நான்கையும் விரித்துப் பாடிய நம்பியே. கையில் ஒரு வெண்மையான மழுவை ஏந்திய நம்பியே. கண்கள் மூன்றை உடைய நம்பியே. செம்மை நிறம் உடைய நம்பியே. புல்லிய சிவந்த சடையை உடையை நம்பியே, முப்புரங்களை நெருப்பு எழுமாறு வளைக்கப்பட்டதொரு வில்லால் எய்த நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே. நீயே எங்கட்கு எப் பிறப்பினும் தலைவன்.
நம்பி என்பது ஆடவருள் சிறந்தவருக்கு உரிய பெயர். கண்டாய் என்றது முன்னிலை அசை.
646. திங்கள் நம்பிமுடி மேல்அடி யார்பால்
சிறந்த நம்பி பிறந்தஉயிர்க்கு எல்லாம்
அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும்
அமரர் நம்பிகும ரன்முதல் தேவர்
தங்கள் நம்பிதவத் துக்கொரு நம்பி
தாதை என்றுள சரண்பணிந்து ஏத்தும்
எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
தெளிவுரை : திருமுடியில் பிறையை அணிந்த நம்பியே. அடியாரிடத்து இனிது விளங்கி நிற்கும் நம்பியே. பிறப்பினை எடுத்த உயிர்களுக்கெல்லாம் அவ்விடத்து மறைந்து நின்று அருள் செய்யும் நம்பியே. மயக்கத்தைத் தரும் வானுலகத்தை ஆள்கின்ற தேவர்களுக்குத் தலைவனாகிய நம்பியே, முருகன் முதலிய முத்தர்கட்குத் தலைவனாகிய நம்பியே, வழிபடப்படுதற்கு ஒப்பற்ற நம்பியே. நீயே உலகிற்குத் தந்தை என்று தெளிந்து உன் திருவடிகளைப் பணிந்து துதிக்கின்ற எங்களுக்குச் சிறந்து நிற்கின்ற நம்பியே. என்னை ஆளாக உடைய நம்பியே ! நீயே எங்கட்கு எப் பிறப்பிலும் தலைவன்.
647. வருந்த அன்றுமத யானை உரித்த
வழக்கு நம்பிமுழக் கும்கடல் நஞ்சம்
அருந்தும் நம்பிஅம ராக்கமுது ஈந்த
அருள்என் நம்பிபொரு ளால்வரும் நாட்டம்
புரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி
பொழுதும் விண்ணும் முழுதும் பலவாகி
இருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
தெளிவுரை : அன்று, மதத்தையுடைய யானையை அது வருந்துமாறு உரித்த நீதியையுடைய நம்பியே, ஓசையைச் செய்கின்ற கடலில் உண்டாகிய நஞ்சை உண்ட நம்பியே. அதனிடம் தோன்றிய  அமுதத்தைத் தேவர்களுக்கு ஈந்த அருளுடைய நம்பியே, அவ் அருளாகிய பொருள் காரணமாக அரிய நடனத்தைச் செய்கின்ற நம்பியே. பூணூலையணிந்த நம்பியே. காலமும் வானமும் முதலிய எல்லாப் பொருள்களுமாய்ப் பலவாகி நிற்கின்ற நம்பியே. என்னை ஆட்கொண்ட நம்பியே, நீயே எங்கட்கு எப் பிறவியிலும் தலைவன்.
648. ஊறு நம்பிஅமு தாஉயிர்க்கு எல்லாம்
உரிய நம்பிதெரி யும்மறை அங்கம்
கூறு நம்பிமுனி வர்க்குஅருங் கூற்றைக்
குமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்தும்
சீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி
செங்கண் வெள்ளைச்செழுங் கோட்டுஎருது என்றும்
ஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபி றப்பும்எங்கள் நம்பிகண் டாயே.
தெளிவுரை : உள்ளத்தில், அமுதம்போல ஊற்றெழுகின்ற நம்பியே. எல்லா உயிர்கட்கும் புகலிடமாகிய நம்பியே. முனிவர்களுக்கு வேதத்தையும் அதன் அங்கத்தையும் அறியக்கூறிய நம்பியே. அழித்தற்கு அரிய கூற்றுவனை அழித்த நம்பியே, அடக்குதற்கு அரிய ஐம்புல ஆசைகளையும் கடிந்து ஒதுக்கிய, திருவெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியுள்ள நம்பியே. வெண்மையான எருதையே எந்நாளும் ஏறுகின்ற நம்பியே. என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன். வெள்ளடை என்றது திருக்குரூகாவூர்க் கோயிலின் பெயர். அமுதா ஊறும் நம்பி என்க.
649. குற்ற நம்பிகுறு கார்எயில் மூன்றைக்
குலைத்த நம்பிசிலை யாவரை கையில்
பற்று நம்பிபர மானந்த வெள்ளம்
பணிக்கும் நம்பிஎனப் பாடுதல் அல்லால்
மற்று நம்பிஉனக்கு என்செய வல்லேன்
மதியி லேன்படு வெந்துயர் எல்லாம்
எற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
தெளிவுரை : அறிவில்லாதவனாகிய யான் பாடுகின்ற கொடிய துன்பங்களையெல்லாம் ஓட்டுகின்ற நம்பியே, என்னை ஆட்கொண்ட நம்பியே, மலையை வில்லாக வளைத்த நம்பியே. பின்பு அதனைக் கையிற் பிடித்து நின்ற நம்பியே. பின்பு அதனால் பகைவரது மதில்கள் மூன்றை அழித்த நம்பியே. அடியார்களுக்குப் பேரின்ப வெள்ளத்தை அளித்தருளுகின்ற நம்பியே என்று உன்னைப் பாடுவதையன்றி, ஒப்பற்ற பெரிய நம்பியாகிய உனக்கு யான் வேறு என்ன செய்ய வல்லேன் ! நீயே எங்கட்கு எப் பிறப்பிலும் தலைவன்.
650. அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய்
ஆண்டநம் பிமுன்னை ஈண்டுல கங்கள்
தெரித்த நம்பிஒரு சேவுடை நம்பி
சில்பலிக் கென்றுஅகந் தோறும்மெய் வேடம்
தரித்த நம்பிசம யங்களின் நம்பி
தக்கன்தன் வேள்விபுக்கு அன்றுஇமை யோரை
இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
தெளிவுரை : உனது திருவடிகளைக் கைகளால் தொழுகின்றவரது துன்பங்களை அரித்து ஒழிக்கின்ற நம்பியே. உலகங்கள் பலவற்றையும் முன்பு ஆக்கிய நம்பியே. பின்பு அவைகளைக் காக்கின்ற நம்பியே, ஒற்றை இடபத்தை உடைய நம்பியே, வீடுதோறும் சென்று ஏற்படும் சில பிச்சைக்கென்று திருமேனியில் அதற்குரிய வேடத்தைப் பூண்ட நம்பியே. சமயங்கள் பலவற்றிற்கும் தலைவனாகிய நம்பியே. அன்று தக்கன் வேள்விச் சாலையில் புகுந்து ஆங்கிருந்த தேவரை எல்லாம் அஞ்சியோடச் செய்த நம்பியே. என்னை ஆளாக உடைய நம்பியே. நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவர்.
651. பின்னை நம்பும்புயத் தான்நெடு மாலும்
பிரமனும் என்றிவர் நாடியும் காணா
உன்னை நம்பிஒரு வர்க்குஎய்த லாமே
உலகு நம்பிஉரை செய்யுமது அல்லால்
முன்னைநம்பி பின்னும் வார்சடை நம்பி
முழுதிவை இத்தனை யும்தொகுத்து ஆண்டது
என்னை நம்பிஎம் பிரானாய நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
தெளிவுரை : நப்பின்னை விரும்புகின்ற தோள்களையும் நீண்ட உருவத்தையும் உடைய திருமாலும் பிரமனும் என்று சொல்லப்பட்ட இவர்கள் தேடியும் காணமாட்டாத நம்பியே. உலகிற்கு ஒருவனாகிய நம்பியே. உன்னை வாழ்த்துதலாகிய அதுவன்றி, அணுகுதல் ஒருவர்க்கு இயல்வதோ ! எல்லாப் பொருட்களுக்கும் முன்னே உள்ள நம்பியே, பின்னிய நீண்ட சடையையுடைய நம்பியே ! உன் இயல்பெல்லாம் இவை போல்வனவே. ஆயினும் இத்தனையும் தோன்றாவாறு அடக்கி பெருநம்பியாகிய நீ எளிவந்து என்னை ஆண்டது என்னையோ? எமக்குப் பெருமானாகிய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.
652. சொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பி
தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
வல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்ய
வருந்தி நம்பிஉனக்கு ஆட்செய இல்லார்
அல்லல் நம்பிபடு கின்றதென் நாடி
அணங்கொரு பாகம்வைத்து எண்கணம் போற்ற
இல்ல நம்பிஇடு பிச்சைகொள் நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
தெளிவுரை : சொற்களின் வடிவமாயும் அவற்றின் பொருளாயும் இருக்கும் நம்பியே. உலகத்தின் தோற்றம் முடிவு முதலிய எல்லாமாகிய நம்பியே. எல்லாம் வல்ல நம்பியே. அடியார்க்கு அருள் செய்யும் பொருட்டு, அவர்கள் நம்மை நாடி வரவில்லையே என்று வருந்துகின்ற நம்பியே. அவ்வளவு கருணையுடைய உனக்கு ஆளாக மாட்டாதவர்களாய் உலகத்தார் வீணே துன்பப்படுவதற்கு என்ன காரணம் ? சக்தி வடிவாகிய உமாதேவியைத் திருமேனியின் ஒரு பாதியில் வைத்துக்கொண்டு, மதிக்கத்தக்க சில கணங்கள் புகழ வீடுகள்தோறும் இட்ட பிச்சையை ஏற்றுக் கொண்ட நம்பியே, நீ ஏழு பிறப்புக்களிலும் எங்கள் தலைவனே அன்றோ !
653. காண்டு நம்பிகழற் சேவடி என்றும்
கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை
ஆண்டு நம்பியவர் முன்கதி சேர
அருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பைத்
தீண்டு நம்பிசென்னி யிற்கண்ணி தங்கத்
திருத்து நம்பிபொய்ச் சமண்பொரு ளாகி
ஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பி
எழுபிறப்பும் எங்கள் நம்பிகண் டாயே.
தெளிவுரை : நம்பியாகிய உனது கழல் அணிந்த திருவடியைக் காண்போம் என்னும் உறுதியோடும் மனம்பற்றி உன்னை விரும்பி. உனக்கு ஆட்செய்கின்ற வரை. நீ ஆட்கொண்டு அவர் விரைந்து உயர்கதி அடையுமாறு அருள் செய்கின்ற நம்பி. நம்பீ ஒளியையுடைய சிறந்த பிறை. பாம்பைப் பொருந்துகின்ற முடியில் கங்கை என்னும் நங்கை தங்கும்படி இனிது வைத்துள்ள நம்பி. நம்பீ. சமணர்க்குப் பொய்ப் பொருளாய் மறைந்து நின்று. எங்கட்கு மெய்ப் பொருளாய் வெளி நிற்கின்ற நம்பியே. தேவர்கள் வணங்குகின்ற நம்பியே. நீயே எங்கட்கு எப் பிறப்பினும் தலைவன்.
654. கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மைக்
கசிந்த வர்க்குஇம்மையோடு அம்மையில் இன்பம்
பெருக்கு நம்பிபெரு கக்கருத்தா
. . . . . . . . . . . . . .. . . . . . .
இப் பாசுரம் குறையாகவே உள்ளது.
தெளிவுரை : உன்னிடத்து மனம் உருகாதவருக்கு உன்னை மறைத்துக் கொள்கின்ற நம்பியே. அன்பு செய்பவருக்கு இப்பிறப்பிலும், வரும் பிறப்பிலும் இன்பத்தை மிகத் தருகின்ற நம்பியே. . . . . முற்றுப் பெறவில்லை.
திருச்சிற்றம்பலம்

64. திருத்தினை நகர் (அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தனகிரி,கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
655. நீறு தாங்கிய திருநுத லானை
நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானைக்
குற்றம் இல்லியைக் கற்றையம் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கு
அரிய சோதியை வரிவரால் உகளும்
சேறு தாங்கிய திருத்தினை நகருள்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
தெளிவுரை : இத் திருப்பதிகம் சிவபிரானைச் சென்று அடையுமாறு நெஞ்சிற்கு அறிவுறுத்தலாக அருளிச் செய்தது.
மனமே. நீ திருநீற்றை அணிந்துள்ள அழகிய நெற்றியை உடையவனும், அந் நெற்றியில் ஒரு கண்ணை உடையவனும் வரிசைப்பட்ட வளைகளை அணிந்த உமாதேவியைத் தனது ஒரு கூற்றில் வைத்தவனும், குற்றம் இல்லாதவனும், சடையின்கண் நீரைக் கட்டியுள்ள அழகனும், தேவர்களுக்கும் அரிய ஒளியாய் உள்ளவனுமாகிய வரால் மீன்கள் துள்ளுகின்ற சேறு நிரம்பிய திருத்தினை நகரில் எழுந்தருளியுள்ள நன்மையே உருவாய் அமைந்த பெருமானைச் சென்று அடைவாயாக.
656. பிணிகொள் ஆக்கை பிறப்புஇறப்பு என்னும்
இதனைநீக்கி ஈசன் திருவடி இணைக்குஆள்
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள்நீ
அஞ்சல் நெஞ்சமே வஞ்சகர்வாழ் மதில்மூன்று
அணிகொள் வெஞ்சிலை யால்உகச் சீறும்
ஐயன் வையகம் பரவிநின்று ஏத்தும்
திணியும் வார்பொழில் திருத்தினை நகருள்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
தெளிவுரை : பல நோய்களைக் கொண்டதாகிய இவ்வுடல், பிறப்பு இறப்பு என்னும் பெருந்துன்பங்களை நீக்கி, எம்பெருமானுடைய திருவடிகளுக்கு ஆளாகும் வகையை நீ துணிவாகக் கொள்ள விரும்பின், அதற்கு நான் ஒன்று சொல்லுவேன், கேள். என் நெஞ்சே, நீ இது நம்மால் இயலாதது என்று அஞ்சாதே. வஞ்சகரான அசுரர் மூவர் வாழ்ந்து திரியும் கோட்டைகள் மூன்றும் அழிய, பொன்மயமான மேரு மலையாகிய வில்லால் கோபித்து அழித்த தலைவரும், உலகத்தார் துதிக்கும் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருத்தினை நகருள் எழுந்தருளிய சிவக்கொழுந்தீசனைப் போய்த் தஞ்சமென்று அடைவாயாக, என் மனமே.
657. வடிகொள் கண்ணினை மடந்தையர் தம்பால்
மயலது உற்றுவஞ் சனைக்குஇடம் ஆகி
முடியு மாகரு தேல்எருது ஏறும்
மூர்த்தி யைமுத லாய பிரானை
அடிகள் என்றடி யார்தொழுது ஏத்தும்
அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனைச்
செடிகொள் கான்மலி திருத்தினை நகருள்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
தெளிவுரை : மனமே, நீ. மாவடுபோலும் கண்களையுடைய மாதர்பால் செல்கின்ற மையலைப் பொருந்தி, அம்மையல் காரணமாகத் தோன்றுகின்ற பல வஞ்சனைகளுக்கும் இடமாய்க் கெட்டொழிய நினையாதே. மற்று. எருதில் ஏறுகின்ற மூர்த்தியும் எப்பொருட்கும் முதலாகிய பெருமானும் அடியார்கள், எம் அடிகள் என்று வணங்கித் துதிக்கும் அப்பனும், உமைக்குத் தலைவனும் ஆகிய காடுகள் நிறைந்த திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானைச் சென்று அடைவாயாக. அடைந்தால், என்றும் கேடின்றி வாழ்வாய்.
அபரஞான பரஞானங்களே அம்மையின் தனங்கள் ஆதலின். அவை ஒப்பிலவாதல் அறிக.
658. பாவ மேபுரிந்து அகலிடம் தன்னில்
பலப கர்ந்துஅல மந்துஉயிர் வாழ்க்கைக்கு
ஆவ என்றுழந்து அயர்ந்துவீ ழாதே
அண்ணல் தன்திறம் அறிவினாற் கருதி
மாவின் ஈருரி உடைபுனைந் தானை
மணியை மைந்தனை வானவர்க்கு அமுதைத்
தேவ தேவனைத் திருத்தினை நகருள்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
தெளிவுரை : மனமே, நீ இந்த நிலவுலகில் தீவினைகளைச் செய்தும், பொய்கள் பலவற்றைப் பேசியும் திரிந்து, உயிர் வாழ்வதற்கு இவையே ஏற்புடையன என்று கருதித் துன்பமுற்று மெலிந்து அழியாதே. மற்று உலகிற்கு முதல்வனாய் உள்ளவனது இயல்புகளை, நல்லாசிரியர்பால் பெற்ற அறிவினால் சிந்தித்துப் புலியினது உரித்த தோலை உடுத்தவனும், மாணிக்கம் போன்றவனும், யாவர்க்கும் சார்பாய் உள்ளவனும், தேவர்க்கு அமுதம் போன்றவனும் அவர்கள் அனைவர்க்கும் இறைவனும் திருத்தினை நகரில் கோயில் கொண்டிருக்கின்ற நன்மையின் உருவாய் அமைந்துள்ள பெருமானைச் சென்று அடைவாயாக.
659. ஒன்ற லாஉயிர் வாழ்க்கையை நினைந்திட்டு
உடல்த ளர்ந்தரு மாநிதி இயற்றி
என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும்
இதுவும் பொய்யென வேநினை உளமே
குன்று லாவிய புயமுடை யானைக்
கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர்
சென்றெ லாம்பயில் திருத்தினை நகருள்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
தெளிவுரை : மனமே, ஒரு பொருள் அல்லாத உயிர் வாழ்க்கையை பெரிய பொருளாக நினைத்து அந் நினைவின் வழியே பொருள் ஈட்டி, இனிது வாழ்தல் இயலும் என்று உலகத்தார் பேசுகின்ற இச் செருக்கு உரைத்தானும் பொய் என்பதை நினை: மனமே, மலை போன்ற தோள்களை உடையவனும் பல கூத்துக்களில் வல்லவனும் திருத்தினை நகரில் அமர்ந்திருப்பவனுமாகிய பெருமானைச் சென்று அடைவாயாக.
660. வேந்த ராய்உல காண்டுஅறம் புரிந்து
வீற்றி ருந்தஇவ் வுடலது தன்னைத்
தேய்ந்துஇ றந்துவெந் துயர்உழந் திடும்இப்
பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
பாந்த ளங்கையில் ஆட்டுகந் தானைப்
பரம னைக்கடற் சூர்தடிந் திட்ட
சேந்தர் தாதையைத் திருத்தினை நகருள்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
தெளிவுரை : மக்கள் அரசராய் இருந்து உலகத்தை ஆண்டு, செங்கோல் செலுத்திய மனித உடம்பாகிய இதனை, இதனோடு கொண்ட தொடர்பு நாள்தோறும் தேயப் பெற்று, பின்பு விட்டு நீங்கி, இந்நிலையில்லாத வாழ்வை, மனமே விடு. மற்று மனமே, பாம்பை அங்கையிற் கொண்டு ஆட்டுகின்றவனும், யாவர்க்கும் மேலானவனும், சூரனை அழித்த முருகப் பெருமானுடைய தந்தையும் திருத்தினை நகரில் எழுந்தருளியுள்ளவனுமாகிய பெருமானைச் சென்று அடைவாயாக.
661. தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
தவம்மு யன்றவம் ஆயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தால்
பெரிதும் நீந்துவது அரிதுஅது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
மூர்த்தி யாகிய முதல்வன் தன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருள்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
தெளிவுரை : மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை உடையவர் ஆகாமல், தவத்தொழிலைச் செய்து பயனில்லாத சொற்களைப் பேசி, சடையுடன் எலும்பை அணிந்துகொண்டால் மக்கள் பிறவியாகிய கடலைக் கடந்துவிடுதல் இயலாது. ஆதலின், அந்நிலை நின்னின் வேறாய் நிற்க, நீ தேவர்கட்குத் தேவனாய் உள்ள பெருந்தேவனும் வயல்கள் சூழ்ந்த திருத்தினை நகரில் எழுந்தருளி யிருக்கின்றவனுமாகிய பெருமானை அணுகிச் சென்று அடைவாயாக. இவனே பழைமையான முழுமுதற் கடவுள். விரதங்களே பயன்தரும்; முதல்வன் வேண்டா என்று கூறுவோர் மீமாஞ்சகர்; இவர் சிவபிரானுக்குரிய சடைமுடி முதலிய கோலத்தை அணிதலால் பயன் பெறாமை அறிக. இங்ஙனம் வேட மாத்திரத்தால் பெரியையாகக் காட்டுதலை ஒழிக என்கிறார்.
662. பரிந்த சுற்றமும் மற்றுவன் துணையும்
பலரும் கண்டழு தெழஉயிர் உடலைப்
பிரிந்து போமிது நிச்சயம் அறிந்தால்
பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்த்து
கருந்த டங்கண்ணி பங்கனை உயிரைக்
கால காலனைக் கடவுளை விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருள்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
தெளிவுரை : மனமே, அன்புள்ள சுற்றத்தாரும் துணையாய் உள்ளாரும் கண்டு உடல்மேல் விழுந்து அழுது எழும்படி, உயிர் உடலை விட்டுப் போய்விடும். இது நிச்சயம். இதனை நீ அறிந்தாயாகில், உமாதேவியை இடப்பாகத்தில் உடையவனும், உயிர்களில் நிறைந்திருப்பவனும், காலனுக்குக் காலனும், எல்லாப் பொருள்களையும் கடந்துள்ளவனும் திருத்தினை நகரில் அமர்ந்திருப்பவனுமாகிய பெருமானைச் சென்று அடைவாயாக.
663. நமைஎ லாம்பலர் இகழ்ந்துரைப் பதன்முன்
நன்மை ஒன்றிலாத் தேரர்புன் சமணாம்
சமய மாகிய தவத்தினார் அவத்தத்
தன்மை விட்டொழி நன்மையை வேண்டில்
உமையொர் கூறனை ஏறுகந் தானை
உம்பர் ஆதியை எம்பெரு மானைச்
சிமய மார்பொழில் திருத்தினை நகருள்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
தெளிவுரை : மனமே, நீ நன்மையை அடைய விரும்பினால் நன்மை சிறிதும் இல்லாத பௌத்தமும் சமணமும் ஆகிய சமயத் தவத்தினரது பயனற்ற செயல்களை விட்டொழி. நம்மைப் பிறர் இகழ்வதற்கு முன்பே உமையொரு பாகனும், இடபத்தை வாகனமாக உடையவனும், தேவர் முதல்வனும் எங்கட்குத் தலைவனும், உயர்ந்த சோலைகளையுடைய திருத்தினை நகரில் தங்கியிருப்பவனுமாகிய பெருமானைச் சென்று அடைவாயாக !
664. நீடு பொக்கையில் பிறவியைப் பழித்து
நீங்க லாம்என்று மனத்தினைத் தெருட்டிச்
சேடு லாம்பொழில் திருத்தினை நகருள்
சிவக்கொ ழுந்தினைத் திருவடி இணைதான்
நாடெ லாம்புகழ் நாவலூ ராளி
நம்பிவன் தொண்டன் ஊரன் உரைத்த
பாட லாம்தமிழ் பத்திவை வல்லார்
முத்தி யாவது பரகதிப் பயனே.
தெளிவுரை : எல்லையில்லாத நிலையற்ற பிறவியை வெறுத்து, அதனின்றும் நாம் நீங்குதலே பொருந்துவது என்று சொல்லி மனத்தைத் தெளிவித்து, திரட்சி பொருந்திய சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியுள்ள பெருமானது திருவடிகளை நினைத்தற்கு ஆகும். திருநாவலூர்க்குத் தலைவனும் வன்தொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய தமிழ்ப் பாடல்களாகிய இவை பத்தினையும் பாடவல்லவர் அடையும் இன்ப நிலையாவது, மேலான முடிந்த பயனேயாம்.
மிக மேலான நிலையாவது, இறைவனோடு இரண்டறக் கலத்தல்.
திருச்சிற்றம்பலம்

65. திருநின்றியூர் (அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர்,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
665. திருவும் வண்மையும் திண்திறல் அரசும்
சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்க ணான்தனக்கு அளித்த
வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்
பெருகு பொன்னிவந் துஉந்துபன் மணியைப்
பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
தெருவும் தெற்றியும் முற்றமும் பற்றித்
திரட்டும் தென்திரு நின்றியூ ரானே.
தெளிவுரை : இத் திருப்பதிகம் அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத என்னும் திருப்தகத்தோடு (55)ஒத்தது.
காவிரியாற்றின் நீர் கொண்டு வந்து சேர்த்த பல மணிகளைச் சிறுவர் கூட்டம் விளையாட்டிற் சென்று எடுத்து, தெருக்களிலும் திண்ணைகளிலும், முற்றங்களிலும் குவிக்கின்ற அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, நீ சிலந்தி செய்த சேவையைக் கண்டு அதன் மறுபிறப்பாய் வந்த கோச்செங்கட் சோழனுக்கு (நாயனார்க்கு)ச் செல்வத்தையும், கொடைத் தன்மையையும் அரசாட்சியையும் அளித்த செய்தியைக் கேட்டு, அடியேன் உனது மலர் போலும் திருவடிகளைப் புகலிடமாக அடைந்தேன். என்னை ஏற்றுக்கொள்வாயாக. கோச்செங்கண் நாயனாரது வரலாற்றைப் பெரிய புராணத்துள் காண்க.
666. அணிகொள் ஆடைஅம் பூண்அணி மாலை
அமுது செய்துஅமு தம்பெறு சண்டி
இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல்
ஈன்ற வன்திரு நாவினுக்கு அரையன்
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற
காத லின்அருள் ஆதரித்து அடைந்தேன்
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும்
செல்வத் தென்திரு நின்றியூ ரானே.
தெளிவுரை : திணை வரையறையைக் கொண்ட செவ்விய தமிழைப் பசிய கிளிகள் ஆராய்ந்து சொல்லுகின்ற செல்வத்தையுடைய அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே. உன்பால் பாலைக் கொண்டு வந்து ஆட்டி, ஆடை அணிகலம் சூடுகின்ற மாலை திரு அமுது என்னும் இவற்றைப் பெற்ற சண்டேசுர நாயனாரும், தனக்குத் தானே நிகராய் உள்ள பாடல்கள் நாலாயிரத்துத் தொள்ளாயிரத்தை அருளிச் செய்தவராகிய திருநாவுக்கரசு நாயனாரும், அம்பைக் கையில் கொண்ட கண்ணப்ப நாயனாரும் பெற்ற அன்பின் பயனாகிய இனிய திருவருளை விரும்பி, அடியேன் உனது திருவடியை அடைந்தேன். என்னை ஏற்றுக் கொள்வீராக.
667. மொய்த்த சீர்முந்நூற்று அறுபது வேலி
மூன்று நூறுவே தியரொடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏந்தி
ஓங்கு நின்றியூர் என்றுனக்கு அளிப்ப
பத்தி செய்தஅப் பரசுரா மற்குப்
பாதங் காட்டிய நீதிகண்டு அடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்கும்
செல்வத் தென்திரு நின்றியூ ரானே.
தெளிவுரை : சித்தர், தேவர், அசுரர் ஆகியோர் வணங்குகின்ற செல்வத்தையுடைய அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, உன்னிடத்தில் அன்பு செய்த பரசுராமன் உனக்கு மிக்க புகழையுடைய முந்நூறு வேதியரோடு, முன்னூற்று அறுபது வேலிப் பரப்புள்ள நிலத்தை என்றும் விளங்கும் திருநின்றியூர் என்று பெயரிட்டு, ஏற்புடைய பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க, அவனுக்கு உன் திருவடியை அளித்த முறைமையை அறிந்து அடியேன் உனது திருவடியை அடைந்தேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக.
இஃது இத் தலத்தின் தோற்றம் பற்றிய புராண வரலாறு.
668. இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம்
எழுந்து தன்முலைக் கலசங்கள் ஏந்திச்
சுரபி பால்சொரிந்து ஆட்டிநின் பாதம்
தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப்
பரவி உள்கிவன் பாசத்தை அறுத்துப்
பரம வந்துநுன் பாதத்தை அடைந்தேன்
நிரவி நித்திலம் அத்தகு செம்பொன்
அளிக்கும் தென்திரு நின்றியூ ரானே.
தெளிவுரை : மேலானவனே, நெற்களை அளிக்கின்ற திருநின்றியூரில் உள்ள இறைவனே, உன்னைப் பசு ஒன்று சூரிய ஒளி தோன்றுவதற்கு முன்பே எழுந்து தன் மடியாகிய கலசத்தை ஏந்திப் பால் சொரிந்து வழிபட்டு, நின் திருவடியை அடைந்த செய்தியை உறுதிபடக் கேட்டு, அடியேன் உனது திருவடிகளை நினைத்துத் துதித்து, பற்றுக்களை எல்லாம் விடுத்து வந்து அடைந்தேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக.
இது காமதேனு வழிபட்டு, பேறுபெற்ற தலம் என்று கூறுவாரும் உளர்.
669. வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
வான நாடுநீ ஆள்கென அருளிச்
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச்
சகளி செய்துஇறைஞ்சு அகத்தியர் தமக்குச்
சிந்து மாமணி அணிதிருப் பொதியில்
சேர்வு நல்கிய செல்வங்கண்டு அடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவும்
செல்வத் தென்திரு நின்றியூ ரானே.
தெளிவுரை : செவ்விய தண்ணிய சிறந்த தாமரை மலரில் இருக்கும் திருமகள் வாழும் செல்வத்தையுடைய அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே. இந்திரன் ஒருவன் உன்னிடத்து வந்து உன்னை வழிபட, அதற்கு மகிழ்ந்து அவனுக்கு நீ, விண்ணுலகை ஆள்க என்று சொல்லி வழங்கிய தலைமையையும், காலை, நண்பகல், மாலை என்னும் மூன்று சந்திகளிலும் இலிங்க உருவத்தை நிறுவி, கலை உருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, அருவிகள் மணிகளைச் சிதறுகின்ற அழகிய திருப்பொதிகையில் வீற்றிருக்க அருளிய பெருமையையும் அறிந்து, அடியேன். உனது திருவடிகளை அடைந்தேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக. கற்பந்தோறும் இந்திரர் வேறுபடுதலின் ஓர் இந்திரன் என்றார்.
670. காது பொத்தரக் கின்னரர் உழுவை
கடிக்கும் பன்னகம் பிடிப்பரும் சீயம்
கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக்
கோல ஆல்நிழற் கீழ்அறம் பகர
ஏதம் செய்தவர் எய்திய இன்பம்
யானும் கேட்டுநின் இணையடி அடைந்தேன்
நீதி வேதியர் நிறைபுகழ் உலகில்
நிலவு தென்திரு நின்றியூ ரானே.
தெளிவுரை : நீதியையுடைய அந்தணர்கள் நிறைந்திருத்தலால் உளதாகிய புகழ், உலக முழுவதும் விளங்குகின்ற அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே. கேள்வியால் மேம்பட்ட நான்கு முனிவர்கள். கின்னரர், புலி, பாம்பு, சிங்கம், தவத்தவர் குழாம் என்ற இவருடன் இருந்து கேட்ப, நீ ஆல நிழலில் இருந்து அறம் உரைக்க, அறத்தைக் கேட்டுப் பின்பு வேதங்களை இயற்றி, அவர்கள் அடைந்த இன்பத்தைக் கேட்டறிந்து, அடியேனும் உனது திருவடிகளை அடைந்தேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக.
671. கோடு நான்குடைக் குஞ்சரம் குலுங்க
நலங்கொள் பாதம்நின்று ஏத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன்
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்
பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறும்
நிலவு  தென்திரு நின்றியூ ரானே.
தெளிவுரை : பெண் மயில்கள் போலவும், இளைய பெண் மான்கள் போலவும், இளைய கிளிகள் போலவும், பிறை போலும் நெற்றியை யுடைய மகளிர், உயர்ந்த மாடங்களையுடைய மாளிகைதோறும் விளங்குகின்ற அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, நான்கு கொம்புகளையுடைய யானை உன்முன் நின்று, தனது உடல் அன்பினால் நடுங்கத் துதித்தபொழுதே, முன்னை வடிவத்தையும், விண்ணுலகத்தை அடையும் பெருமையையும் பெற்ற தன்மையைக் கேட்டு, அடியேன். உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக.
நான்கு கொம்புகளையுடைய யானை, இந்திரனது ஐராவதம்.
திருச்சிற்றம்பலம்

66. திருவாவடுதுறை  (அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
672. மறைய வன்ஒரு மாணிவந்து அடைய
வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற்
கடந்த காரணம் கண்டுகண்டு அடியேன்
இறைவன் எம்பெரு மான்என்றுஎப் போதும்
ஏத்தி ஏத்திநின்று அஞ்சலி செய்துன்
அறைகொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
தெளிவுரை : இத் திருப்பதிகமும் மேலைத் திருப்பதிகத்தோடு ஒத்தது.
திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள எங்கள் முதற்கடவுளே, உன்னை அந்தணனாகிய பிரமசாரி ஒருவன் அன்புடன் வந்து அடைய, அவனது அரிய உயிரைப் போகாமல் நிறுத்த வேண்டி உதிரத்தைக் கொண்ட சூலத்தையுடைய இயமனைக் காலால் உதைத்துக் கொன்ற காரணத்தை உணர்ந்து உணர்ந்து அடியேன் யாவர்க்கும் முதல்வன் எனக்குப் பெருமான் என்று எப்பொழுதும் துதித்துத் துதித்து அஞ்சலி கூப்பி நின்று கழலும் சிலம்பும் ஒலித்தலைக் கொண்ட உனது  செவ்விய திருவடிகளிடத்துக் கொண்ட அன்போடும் வந்து அடைந்தேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக.
இது, மார்க்கண்டேயருக்குச் செய்த திருவருளை எடுத்தோதி அருளியது.
673. தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
சித்திரப் பந்தர் சிக்கன இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண்டு அடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
போற்றி போற்றிஎன்று அன்பொடு புலம்பி
அருண்டுஎன் மேல்வினைக்கு அஞ்சிவந்து அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
தெளிவுரை : திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள எங்கள் முதற்கடவுளே. தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று தனது வாயினின்றும் உண்டாகும் நூலால் அழகிய பந்தரை உறுதிப்பட ஆக்க, அச்சிலந்தியை, நீ சோழனாய்ப் பிறக்கச் செய்த திருவருளை அறிந்து, அடியேன். எனது எதிர்வினைக்கு அஞ்சித் துணுக்குற்று. உனது திருவடிகளில் விழுந்து புரண்டு, போற்றி போற்றி என்று துதித்து, அன்பினால் அழுது, உன்னை வந்து அடைந்தேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக.
674. திகழும் மாலவன் ஆயிர மலரால்
ஏத்து வான்ஒரு நீள்மலர் குறையப்
புகழி னால்அவன் கண்இடந் திடலும்
புரிந்து சக்கரம் கொடுத்தல்கண்டு அடியேன்
திகழும் நின்திருப் பாதங்கள் பரவித்
தேவ தேவநின் திறம்பல பிதற்றி
அகழும் வல்வினைக்கு அஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
தெளிவுரை : தேவர்களுக்குத் தேவனே, திருவாவடு துறையில் எழுந்தருளியுள்ள எங்கள் முதற்கடவுளே, மிக்க புகழுடைய திருமால் நாள்தோறும் ஆயிரம் தாமரைப் பூக்களால் உன்னை அருச்சிப்பவன். ஒரு நாள் ஒரு சிறந்த பூக் குறைய அவன் அதற்காக வருந்தாமல், உறுதிப்பாட்டுடன் தனது கண்களில் ஒன்றைப் பெயர்த்து, உனக்குச் சாத்த அதனைக் கண்டு மகிழ்ந்து, அவனுக்கு நீ சிறந்த சக்கரப்படையை அளித்தமையை உணர்ந்து அடியேன். என் நிலைமையைப் பெயர்த்து வலிய வினைக்கு அஞ்சி, உனது திருவடிகளைத் துதித்து, உனது பெருமைகள் பலவற்றையும் பலகாற்பேசி, உன்னை வந்து அடைந்தேன், என்னை ஏற்றுக்கொள்வாயாக.
675. வீரத் தால்ஒரு வேடுவ னாகி
விசைத்தோர் கேழலைத் துரந்துசென்று அணைந்து
போரைத் தான்விச யன்தனக்கு அன்பாய்ப்
புரிந்து வான்படை கொடுத்தல்கண்டு அடியேன்
வாரத் தால்உன் நாமங்கள் பரவி
வழிபட் டுன்திற மேநினைந்து உருகி
ஆர்வத் தோடும்வந்து அடியிணை அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
தெளிவுரை : திருவாவடுதுறையில் கோயில் கொண்டுள்ள எங்கள் இறைவனே, நீ ஒரு வேடுவனாய் உருக் கொண்டு, ஒரு பன்றியை வீரத்துடன் விரைந்து துரத்திச் சென்று, உன்னை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்த அருச்சுனனை அடைந்து, அவன்மேல் வைத்த விருப்பத்தால் அவனோடு போர் புரிந்து, பின்பு அவனுக்குச் சிறந்த படையாகிய பாசுபதக் கணையை அளித்தமையை அறிந்து, அடியேன் உன்னை வழிபட்டு ஆர்வத்தோடு வந்து உன் திருவடிகளை அடைந்தேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக.
676. ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ
உன்னை உன்னிய மூவர்முன் சரணம்
புக்கு மற்றவர் பொன்னுலகு ஆளப்
புகழி னால்அருள் ஈந்தமை அறிந்து
மிக்க நின்கழ லேதொழுது அரற்றி
வேதியா ஆதி மூர்த்திநின் அரையில்
அக்க ணிந்தஎம் மான்உனை அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
தெளிவுரை : வேதம் ஓதுபவனே ! உலக முதல்வனே ! உன் அரையில் எலும்பை அணிந்த பெருமானே, திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள எங்கள் முதற் கடவுளே, நீ மூன்று ஊர்களில் ஓங்கி எரிகின்ற நெருப்பை ஒருசேர எழுப்பியபோது, அங்கு உன்னையே நினைத்திருந்த மூவராகிய அவர் மட்டில் உய்ந்து, உன் திருவடிகளை அடைத்து மேல் உலகத்தை ஆளும் வண்ணம் அவர்கட்குத் திருவருள் ஈந்தமையை அறிந்து, அடியேன் மேலான உனது திருவடிகளைத் தொழுது முறையிட்டு, உன்னை அடைந்தேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக.
திருச்சிற்றம்பலம்

67. திருவலிவலம் (அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
677. ஊன்அங் கத்துயிர்ப் பாய்உல கெல்லாம்
ஓங்கா ரத்துரு ஆகிநின் றானை
வான்அங் கத்தவர்க் கும்அளப் பரிய
வள்ள லைஅடி யார்கள்தம் உள்ளத்
தேன்அம் கைத்துஅமு தாகஉள் ளூறும்
தேச னைத்திளைத் தற்குஇனி யானை
மான்அங் கைத்தலத் தேந்தவல் லானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே
தெளிவுரை : புலால் வடிவாகிய உடம்பில் இருந்து உயிர்ப்பனவாகிய உயிர்களாய் நின்று. அவைகட்கு உணர்வை உண்டாக்கி நிற்பவனும், விண்ணுலக இன்பத்தையும் வெறுத்துத் தவம் செய்பவர்களுக்கும், அளத்தற்கரிய வள்ளலாய் உள்ளவனும், தன் அடியார்களது உள்ளத்தினுள்ளே, தேனும் கைப்ப, அமுதம் ஊற்றெழுவது போல எழுகின்ற ஒளி வடிவினனும் அழுந்துந் தோறும் இனிமை பயக்கின்றவனும், மானை அகங்கையிடத்து ஏந்த வல்லவனும் ஆகிய பெருமானை அடியேன் திருவலிவலம் என்னும் இத்தலத்தில் வந்து அடைந்தமையால் கண்டேன். இல்லையேல் எங்ஙனம் காண்பேன் !
678. பல்லடி யார்பணிக் குப்பரி வானைப்
பாடிஆ டும்பத்தர்க்கு அன்புடை யானைச்
செல்லடி யேநெருக் கித்திறம் பாது
சேர்ந்த வர்க்கேசித்தி முத்திசெய் வானை
நல்லடி யார்மனத்து எய்ப்பினில் வைப்பை
நானுறு குறைஅறிந்து அருள்புரி வானை
வல்லடி யார்மனத்து இச்சையு ளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
தெளிவுரை : அடியார்களது தொண்டுகளுக்கு இரங்கு பலனும் பாடலும் ஆடலும் செய்கின்ற சீர் அடியார்களைத் தமர்களாக்கிக் கொள்பவனும், தன்னை அடைந்தவர்களுக்குச் சித்தியையும் முத்தியையும் தருபவனும் அடியார்களுக்கு அமைதியைத் தருபவனும் என் குறைகளைக் களைந்து அருள் புரிபவனும் கற்றவர் மனதில் தங்கியிருப்பவனுமாகிய பெருமானை அடியேன் திருவலிவலம் என்னும் இத் தலத்திற்கு வந்ததனால் கண்டேன். இல்லையேல் எங்ஙனம் காண்பேன்.
679. ஆழிய னாய்அகன் றேஉயர்ந் தானை
ஆத்அந் தம்பணி வார்க்குஅணி யானைக்
கூழைய ராகிப்பொய் யேகுடி ஓம்பிக்
குழைந்து மெய்யடி யார்குழுப் பெய்யும்
வாழியர்க் கேவழு வாநெறி காட்டி
மறுபிறப்பு என்னை மாசறுத் தானை
மாழையொண் கண்உமை யைமகிழ்ந் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
தெளிவுரை : ஆழ்ந்து, அகன்று, உயர்ந்தவனாகியும் வழிபடுவார்க்கு அணியனாய் உள்ளவனும் மெய்யடியார் கூட்டத்துள் வைத்து எண்ணும் வாழ்க்கையை உடையார்க்கு அடிமை செய்துவந்தமையால் என்னை மறுபிறப்பு எடுக்காதவாறு தடுத்துத் தூயனாக்கியவனும் உமாதேவியை விரும்பி ஒரு பாகத்தில் வைத்தவனுமாகிய பெருமானை அடியேன் திருவலிவலம் என்னும் இத்தலத்தில் கண்டேன். வராவிடில் எங்ஙனம் காண்பேன். மாழை உண்கண் உமை: தலத்து அம்பிகை.
680. நாத்தான் உன்திற மேதிறம் பாது
நண்ணி அண்ணித்துஅமு தம்பொதிந்து ஊறும்
ஆத்தா னைஅடி யேன்தனக்கு என்றும்
அளவிறந் தபல தேவர்கள் போற்றும்
சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றித்
துருவி மால்பிர மன்அறி யாத
மாத்தா னைமாத் தெனக்குவைத் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
தெளிவுரை : எனது நா அவனது புகழையே பாடும் வண்ணம் பொருந்தியவனும், எனக்குத் துணைவனாய் உள்ளவனும் தேவர்கள் வணங்கும் வணக்கத்திற்கு உரியவனும் ஞாயிறு, திங்கள், தீ என்னும் முச்சுடர்களிலும் வேறற நிற்பவனும், திருமாலும் பிரமனும் தேடி அறியப்படாதவனும். எனக்குப் பெருமையை அளித்தவனும் ஆகிய பெருமானை அடியேன் திருவலிவலம் என்னும் இத்தலத்தில் கண்டேன். வராதிருந்திருந்தால் எங்ஙனம் காண முடியும்?
இறைவன் நாயனார்க்கு அளித்த பெருமை தோழமை, மகத்து என்பது மாத்து என வந்தது.
681. நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்கு
அரசரும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
தொண்ட னேன்அறி யாமை அறிந்து
கல்வி யல்மனத் தைக்கசி வித்துக்
கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின் றானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
தெளிவுரை : நல்ல புகழையுடைய திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடிய நல்ல தமிழ்ப் பாமாலைகளில் சொல்லியவற்றைச் சொல்லித் துதித்தலை விரும்பி அடியவனாகிய எனது அறியாமையைத் தெரிந்தும் கடினமான என் மனத்தை இளகச் செய்து, வீரக்கழலை அணிந்த தனது திருவடிகளை எனக்குக் காட்டி என் பாசங்களை அறுத்தவனும் தேவரும் வணங்கும் வண்ணம் நிற்பவனும் ஆகிய பெருமானை, திருவலிவலத்தில் வந்து நான் கண்டு கொண்டேன்.
682. பாடுமா பாடிப் பணியுமாறு அறியேன்
பனுவுமா பனுவிப் பரவுமாறு அறியேன்
தேடுமா தேடித் திருத்துமாறு அறியேன்
செல்லுமா செல்லச் செலுத்துமாறு அறியேன்
கூடுமாறு எங்ஙன மோஎன்று கூறக்
குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு
வாடிநீ வாளா வருந்தல்என் பானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
தெளிவுரை : யான், முன் உள்ள பாடல்களை அவைகளைப் பாடும் முறைப்படி பாடவும் அறியேன். புதிய பாடல்களையாத்து துதிக்கும் முறையையும் அறியேன். மனத்தில் உள்ள குற்றங்களை ஆராய்ந்து  அவைகளைத் திருத்தும் வகையையும் அறியேன். நல்லோர் என்னைக் கண்டு இரங்கிக்கூற இருக்கின்ற காலத்து, என்னைச் சிறப்பாக யாவர்க்கும் காட்டி, இவன் எனக்கு அடிமை என்று சொல்லி என்னைத் தேற்றிய பெருமானை, யான் திருவலிவலம் என்னும் இத்தலத்தில் வந்து கண்டேன்.
683. பந்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப்
படுக டற்பரப் புத்தவர்ப் பானைச்
சந்தித் ததிற லார்பணி பூட்டித்
தவத்தை ஈட்டிய தம்மடி யார்க்குச்
சிந்தித் தற்குஎளி தாய்திருப் பாதஞ்
சிவலோ கந்திறந்து ஏற்றவல் லானை
வந்திப் பார்தம் மனத்தினுள் ளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
தெளிவுரை : பிணித்துள்ள வினைத் தொடர்பு அறுதலால் பிறவியாகிய கடலினது பரப்புச் சுருங்குமாறு செய்பவனும் செய்யும் செயலை எல்லாம் தவமேயாகக் குவித்த தன் அடியவர்கட்குத் தனது திருவடிகள் ஆகிய சிவலோகத்தின் வாயிலைத் திறந்து அதன்கண் அவர்களைப் புகச் செய்ய வல்லவனும், தன்னை வணங்குகின்றவர்களது மனத்தில் விளங்குபவனும் ஆகிய பெருமானை அடியேன் திருவலிவலம் என்னும் இத் தலத்தில் வந்து கண்டேன்.
684. எவ்வௌர் தேவர் இருடிகள் மன்னர்
எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்த
அவ்வவர் வேண்டிய தேஅருள் செய்து
அடைந்தவர்க் கேஇட மாகிநின் றானை
இவ்வவர் கருணைஎம் கற்பகக் கடலை
எம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னை
வவ்விஎன் ஆவி மனங்கலந் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
தெளிவுரை : தேவர்கள் இருடிகள் அரசர்கள் முதலாகப் பலரும் எவ்விடத்திலும் இருந்து வழிபட, அங்கங்கே நின்று அவர்களது வழிபாட்டினை ஏற்று, அவரவர் விரும்பியதை அவர்களுக்கு அளித்து, இவ்வாறு தன்னை அடைந்தவர்களுக்குப் புகலிடமாய் இருப்பவனும், அருளைத் தருகின்ற எங்கள் கற்பகத் தருவும், கடல் போன்றவனும் என் நெஞ்சத்தில் எஞ்ஞான்றும் நீங்காது இருப்பவனும் ஆகிய பெருமானை யான் திருவலிவலம் என்னும் இத்தலத்தில் வந்து கண்டேன்.
நாயனார், எம்பெருமானே அருளாய் என்று வேண்டியது திருக்கைலையில்.
685. திரியும் முப்புரம் செற்றலும் குற்றத்
திறல்அ ரக்கனைச் செறுத்ததும் மற்றைப்
பெரிய நஞ்சமுது உண்டதும் முற்றும்
பின்னை யாய்முன்ன மேமுளைத் தானை
அரிய நான்மறை அந்தணர் ஓவாது
அடிப ணிந்துஅறி தற்குஅரி யானை
வரையின் பாவை மணாளன்எம் மானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
தெளிவுரை : வானத்தில் திரிகின்ற முப்புரங்களை அழித்ததும், குற்றம் செய்த வலிமையுடைய அரக்கனாகிய இராவணனைத் தண்டித்ததும் ஆலகால விடத்தை அமுதமாக உண்டதும் முடிதற்குக் காரணனான பின்னோனாய் எப்பொருட்கும் முன்னே தோன்றினவனும், அரிய நான்கு வேதங்களை ஓதுகின்ற அந்தணர்கள், மனம் மாறுபடாமல் நின்று அடிபணிந்தும், அவர்களால் அறிதற்கு அரியவனும் மலைமகளுக்குக் கணவனும் ஆகிய எம் பெருமானை அடியேன் திருவலிவலம் என்னும் இத்தலத்தில் கண்டேன்.
686. ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து
நிறைக்க மாஉதி ரத்தினை ஏற்றுத்
தோன்று தோள்மிசைக் களேபரந் தன்னைச்
சுமந்த மாவிர தத்தகங் காளன்
சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன்
தன்னைத் தன்னி லாமனத் தார்க்கு
மான்று சென்றனை யாதவன் தன்னை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
தெளிவுரை : தன்னோடு மாறுபடுதலை ஏற்ற பிரமனது தலைகளில் ஒன்றை அறுத்து, அதனை நிரப்ப மாயோனது உதிரத்தை ஏற்றவனும் யாவருக்கும் காணப்படுகின்ற தோளின் மேல் எலும்புக் கூட்டினைச் சுமக்கின்ற பெரிய விரதத்தையுடைய கங்காள வேடத்தை உடையவனும், தன்னைக் காண்பதற்குரிய வழியைக் காட்டுதற்கு அரியவனும், தன்னிடத்தில் பொருந்திய மனத்தை உடையவருக்கு எளியவனும் அறியாமை வழிசென்று அணுக இயலாதவனும் ஆகிய பெருமானை, யான் திருவலி வலம் என்னும் இத்தலத்தில் கண்டேன்.
இப்பாடலில் குறிப்பிடப்பட்ட வரலாற்றை சிவ புராணத்துள்ளும் கறாஞ்சிப் புராணத்துள்ளும் காணலாம். இச் செயல்களைச் செய்தவர் வைரவக் கடவுள்.
687. கலிவ லங்கெட ஆரழல் ஓம்பும்
கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்
வலிவ லந்தனில் வந்துகண்டு அடியேன்
மன்னும் நாவலா ரூரன் தொண்டன்
ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும்
உள்ளத் தால்உகந்து ஏத்தவல் லார்போய்
மெலிவில் வானுல கத்தவர் ஏத்த
விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே.
தெளிவுரை : வறுமையின் வலிமை கெடும்படி அரிய வேள்வித் தீயை வளர்ப்பதற்கு ஏதுவான நான்கு வேதங்களின் முடிந்த பொருளாகிய தீப்போலும் உருவினனாகிய சிவபெருமானைத் திருவலிவலம் என்னும் தலத்தில் வந்து கண்டு, அவன் அடியவனும், திருநாவலூரில் தோன்றியவனும் வன்தொண்டன் எனப் பெயர் பெற்றவனுமாகிய நம்பியாரூரன் பாடிய இனிய இசையையுடைய செவ்விய தமிழால் ஆகிய பத்துப் பாடல்களையும் பாட வல்லவர்கள், தேவர்கள் போற்ற வானுலகத்தைப்போய் அடைவர். இது திண்ணம்.
திருச்சிற்றம்பலம்

68. திருநள்ளாறு (அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு,காரைக்கால்,புதுச்சேரி மாநிலம்)
திருச்சிற்றம்பலம்
688. செம்பொன் மேனிவெண் நீறணி வானைக்
கரிய கண்டனை மால்அயன் காணாச்
சம்பு வைத்தழல் அங்கையி னானைச்
சாம வேதனைத் தன்ஒப்பி லானைக்
கும்ப மாகரி யின்உரி யானைக்
கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
நம்ப னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நி னைக்கேனே.
தெளிவுரை : செம்பொன் போன்ற திருமேனியில் வெண்மையான திருநீற்றை அணிபவனும், கரிய கண்டத்தை உடையவனும் திருமாலும் பிரமனும் காணாத சம்புவும். நெருப்பை அங்கையில் ஏந்தியவனும், சாமவேதத்தை விரும்புபவனும் தனக்கு ஒப்பாவதொரு பொருள் இல்லாதவனும் பெரிய யானையின் தோலை உடையவனும் எருதை வாகனமாகக் கொண்டவனும், எங்கள் அருந்துணைவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியுள்ளவனும் ஆகிய அமுதம் போன்றவனை மறந்து, நாய் போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன். ஒன்றையும் நினையேன்.
689. விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை
வேத கீதனை மிகச்சிறந்து உருகிப்
பரசு வார்வினைப் பற்றறுப் பானைப்
பாலொடு ஆன்அஞ்சும் ஆடவல் லானைக்
குரைக டல்வரை ஏழுல குடைய
கோனை ஞானக் கொழுந்தினைத் தொல்லை
நரைவிடை யுடைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந்து என்நினைக் கேனே.
தெளிவுரை : கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், வேதத்தின் இசையை விரும்புபவனும் அன்போடு துதிப்பவர்களது வினைத் தொடர்பை அறுப்பவனும் பால் முதலிய ஆன் ஐந்தினை ஆடவல்லவனும், கடலும், மலையும், உலகும் ஆகியவற்றை ஏழ் ஏழாக உடைய தலைவனும், ஞானத்திற்கு எல்லையாய் உள்ளவனும், முல்லை நிலத்திற்குரிய வெள்ளிய இடபத்தை உடையவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போன்றவனை மறந்து, நாய்போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன்  ! ஒன்றையும் நினையேன்.
690. பூவில் வாசத்தைப் பொன்னினை மணியைப்
புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச்
சேவின் மேல்வரும் செல்வனைச் சிவனைத்
தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக்
காவியங் கண்ணி பங்கனைக் கங்கைச்
சடைய னைக்கா மரத்திசை பாட
நாவில் ஊறும்நள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந்து என்நினைக் கேனே.
தெளிவுரை : பூவில் உள்ள மணமும், பொன்னும், மணியும் ஆகிய இவை போல்பவனும், மண், நீர், தீ, காற்று, வானம் என்னும் ஐம்பெரும் பூதங்களாய் நிற்பவனும் எருதின்மேல் வரும் செல்வத்தை உடையவனும், நன்மையே வடிவானவனும் தேவர்களுக்கு எல்லாம் தேவனும், தேன்போல் இனிப்பவனும் மங்கை பங்காளனும் சடையில் கங்கையைத் தாங்கியவனும் சீகாமரம் என்னும் இசையால் பாடுமிடத்து நாவில் இனிமை மிகுகின்றவனும் திருநள்ளாற்றில் கோயில் கொண்டிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து நாய்போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன் !  ஒன்றையும் நினையேன். சீகாமரம் என்பதனை காமரம் என்றது முதற்குறை.
691. தஞ்சம் என்றுதன் தாளது அடைந்த
பாலன் மேல்வந்த காலனை உருள
நெஞ்சில் ஓர்உதை கொண்டபி ரானை
நினைப்ப வர்மனம் நீங்ககில் லானை
விஞ்சை வானவர் தானவர் கூடிக்
கடைந்த வேலையுள் மிக்கெழுந்து எரியும்
நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந்து என்நினைக் கேனே.
தெளிவுரை : அடைக்கலம் என்று சொல்லித் தனது திருவடியை அடைந்த சிறுவன் மேல் சினந்து வந்த இயமனை, வீழ்ந்து உருளும்படி அவனது மார்பில் உதைத்த தலைவனும், தன்னை நினைப்பவரது மனத்தில் தங்கியிருப்பவனும், தேவர்களும் அசுரர்களும் கூடிக்கடைந்த கடலுள் மிகுதியாய்த் தோன்றி வெம்மையுற்று நின்ற நஞ்சினை உண்டவனும் திருநள்ளாற்றில் இருப்பவனும் ஆகிய அமுதம் போன்றவனை மறந்து அடியேன் வேறு எதனை நினைப்பேன் !
692. மங்கை பங்கனை மாசிலா மணியை
வான நாடனை ஏனமோடு அன்னம்
எங்கும் நாடியும் காண்பரி யானை
ஏழை யேற்குஎளி வந்த பிரானை
அங்கம் நான்மறை யால்நிறை கின்ற
அந்த ணாளர் அடியது போற்றும்
நங்கள் கோனைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந்து என்நினைக் கேனே.
தெளிவுரை : மங்கையை இடப்பாகத்தில் உடையவனும், மணி போன்றவனும் வானமாகிய நாட்டை உடையவனும் பன்றி உருவில் திருமாலும், அன்னம் உருவில் பிரமனும் தேடியும் காணமுடியாதவனும் எளியேனுக்கு எளியனாய் எதிர்வந்த தலைவனும், ஆறு அங்கங்களையுடைய நான்கு வேதங்களோடு அந்தணர்கள் போற்ற நின்ற தலைவனும் திருநள்ளாற்றில் இருக்கும் அமுதம் போன்றவனை மறந்து அடியேன் வேறு எதனை நினைப்பேன்.
693. கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்
காம கோபனைக் கண்ணுத லானைச்
சொற்ப தப்பொருள் இருளறுத் தருளும்
தூய சோதியை வெண்ணெய்நல் லூரில்
அற்பு தப்பழ ஆவணங் காட்டி
அடிய னாஎன்னை ஆளது கொண்ட
நற்ப தத்தைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந்து என்நினைக் கேனே.
தெளிவுரை : அடியார் வேண்டுவதைத் தருதலில் கற்பகம் ஆனவனும் பெரிய பொன் மலையாகிய மேருவைப் போன்ற பொன் மேனியுடையவனும், தன்னை எதிர்த்த காமனைக் கோபித்து எரித்தவனும், நெற்றிக் கண்ணை உடையவனும் வேத மந்திரங்களின் உட் பொருளாகிய பரிசுத்தமான சோதி வடிவானவனும் திருவெண்ணெய்நல்லூரில் அன்று அதிசயமான பழைய அடிமை ஓலையைக் காட்டி ஆட்கொண்டவனும் திருநள்ளாற்றில் கோயில் கொண்டிருப்பவனும் அன்பர்களுக்கு அமிர்தமாய் இருப்பவனும் ஆகிய பெருமானை யான் மறந்து வேறு எதை நினைப்பேன். ஒன்றையும் நினையேன்.
694. மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற
மாயனை நால்வர்க்கு ஆலின்கீழ் உரைத்த
அறவ னைஅம ரர்க்குஅரி யானை
அமரர் சேனைக்கு நாயக னான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறைவிரி யும்நள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந்து என்நினைக் கேனே.
தெளிவுரை : அன்று ஒரு பன்றியின் பின் அதனைத் துரத்திச் சென்ற வேடனும் அன்னதொரு மாயம் வல்லவனும் நால்வர் முனிவர்க்கு ஆல நிழலில் இருந்து சொல்லிய அறத்தை உடையவனும், தேவர்கட்கு அரியனாய் நிற்பவனும் தேவர் சேனைக்குத் தலைவனாகிய குறவர் மகளாகிய வள்ளி தன் கணவனைப் பெற்ற தலைவனும் நான் செய்த குற்றங்களைப் பொறுப்பவனும் திருநள்ளாற்றில் மன்னி யிருப்பவனுமாகிய அமுதம் போல்பவனை மறந்து, அடியேன் வேறு எதனை நினைப்பேன்.
695. மாதி னுக்குஉடம்பு இடங்கொடுத் தானை
மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
வேதனை வேத வேள்வியர் வணங்கும்
விமல னைஅடி யேற்குஎளி வந்த
தூதனைத் தன்னைத் தோழமை அருளித்
தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
நாத னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
தெளிவுரை : உமாதேவிக்குத் தன் உடம்பின் இடப்பாகத்தை அன்பினால் கொடுத்தவனும் மாணிக்க மணி போன்றவனும், தன்னைப் பணியும் பக்தருடைய அஞ்ஞான இருளைத் தொலைக்கத் தக்க ஞான ஒளியானவனும் வேதத்திற் கூறப்படும் யாகம் செய்வோர் வழிபடுதற்குரிய குற்றமற்றவனும் தனது அடியவனான எனக்கு எளிய தூதனாகியவனும், தன்னையே எனக்குத் தோழனாகத் தந்தருளி, தொண்டனாகிய நான் செய்த அபராதங்களைப் பொறுத்துக்கொள்ளும் தலைவனும் திருநள்ளாற்றில் கோயில் கொண்டிருப்பவனும் அமுதம் போன்றவனும் ஆகிய பெருமானை நான் மறந்து வேறு என்ன நினைப்பேன்.
696. இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை
எடுப்ப ஆங்குஇம வான்மகள் அஞ்சத்
துலங்கு நீள்முடி ஒருபதும் தோள்கள்
இருப தும்நெரித்து இன்னிசை கேட்டு
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த
வள்ள லைப்பிள்ளை மாமதிச் சடைமேல்
நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந்து என்நினைக் கேனே.
தெளிவுரை : இலங்கைக்கு அரசன் அழகு விளங்குகின்ற கயிலாய மலையைப் பெயர்க்க அப்போது உமா தேவியார் அஞ்சுதலும் அவனது பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் நெரித்து, பின்னர் அவன் செருக்கு ஒழிந்து பாடிய இனிய இசையைக் கேட்டு வலக்கையிற் பிடிக்கும் வாளையும் இராவணன் என்ற பெயரையும் அவனுக்கு அளித்த வள்ளலும் சடையில் சந்திரனை உடையவனும் திருநள்ளாற்றில் இருப்பவனும் அமுதம் போன்றவனுமாகிய அவனை மறந்து யான் வேறு எதனை நினைப்பேன்.
697. செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெம்
சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை
மறந்து நான்மற்றும் நினைப்பதுஏ தென்று
வனப்பகை யப்பன் ஊரன்வன் தொண்டன்
சிறந்த மாலைகள் அஞ்சினோடு அஞ்சும்
சிந்தை யுள்உருகிச் செப்ப வல்லார்க்கு
இறந்து போக்கில்லை வரவில்லை யாகி
இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே.
தெளிவுரை : திருநள்ளாற்றில் இருக்கும் எங்கள் சிவ பெருமானைத் திருநாவலூரில் தோன்றியவனும் சிங்கடி வனப்பகை என்பவர்களுக்குத் தந்தையும் வன்தொண்டனும் ஆகிய நம்பியாரூரன், இப் பெருமாறனை மறந்து நான் நினைப்பது வேறு யாது என்று சொல்லி. அன்பு மிகுந்து பாடிய பாடல்களாகிய இப்பத்தினையும் மனம் உள்ளுருகிப் பாட வல்லார்க்கு இறப்பும் பிறப்பும் இல்லையாகப் பேரின்ப வெள்ளத்துள் இனிதே இருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்

69. திருமுல்லைவாயில் (அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில்,சென்னை)
திருச்சிற்றம்பலம்
698. திருவும்மெய்ப் பொருளும் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்கள்என்று எண்ணி
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும்
ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
தெளிவுரை : தேன்பொருந்திய சோலைகள் சூழ்ந்த திரு முல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, ஒளி வடிவினனே, வீட்டின்பமும் அதைத் தருகின்ற மெய்ப்பொருளும் இம்மையில் பெறும் செல்வமும் எனக்கு, உனது திருவடிகளே என்று மனத்தால் நினைத்து, பிறர் ஒருவரையும் துணையாக நினையாமல் உன்னிடத்து உறைத்த பற்றுடையேனாய் திரிவேன். அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை நீ நீக்கியருள்வாய்.
699. கூடிய இலயம் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
தெளிவுரை : உமாதேவியார் கண்டு மகிழுமாறு பல திறங்களும் கூடிய கூத்தினைத் தாளவொற்றுப் பிழையாதவாறு ஆடுகின்ற அழகனே, அரிய வேதத்தின் முடிந்த பொருளாய் உள்ளவனே. கருணையாகிய அழகினையுடைய கண்களையுடையவனே. இறைவனே நீ எங்குள்ளாய்? என்று தேடிய தேவர்கள் நீ இருக்கும் இடம் அறிந்து வந்து சேர்கின்ற திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே. உயிர்களைக் காப்பவனே. மேலான ஒளியாய் உள்ளவனே, உனது திருப்புகழைப் பல இடங்களிலும் சென்று பாடிய அடியேன் மேலும் அங்ஙனமே பாடுதற்கு யான் பாடுகின்ற துன்பத்தை நீ நீக்கி அருள்வாய்.
700. விண்பணிந்து ஏத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழம்அன்று உரித்தாய்
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் தேவர்தம் அரசே
தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்
சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்பநின் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
தெளிவுரை : விண்ணுலகம் வணங்கித் துதிக்கின்ற அந்தணனே, உமாதேவியார் கண்டு நடுக்கங் கொள்ளுமாறு அன்று யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திக் கொண்டவனே, சண்பக சோலை சூழ்ந்துள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, தேவர்களுக்குத் தலைவனே, திருவொற்றி மாநகரை உடையவனே ! சங்கிலியின் பொருட்டு என் கண்களைப் பறித்துக்கொண்ட செப்பமுடையவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உன் அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.
701. பொன்னலம் கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டிசை பாட
அந்நலம் கமலத் தவிசின்மேல் உறங்கும்
அலவன்வந்து உலவிட அள்ளல்
செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலம் தமிழால் பாடுவேற்கு அருளாய்
பாசுப தாபரஞ் சுடரே.
தெளிவுரை : பொன்போலும் நெல்லைத் தருகின்ற வயல்களில் வண்டுகள் புதிய நறுமணத்தை நுகர்ந்து இசையைப் பாட, தாமரை மலராகிய படுக்கையின் மேல் கிடந்து உறங்குகின்ற நண்டு அந்த இசை நின்றபோது விழித்தெழுந்து வந்து உலாவுகின்ற அத்தன்மைத்தான சேற்றையுடைய செந்நெல்லையுடைய அழகிய வயல்கள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் இருக்கும் பெருமானே, உயிர்களைக் காப்பவனே, ஒளி மயமானவனே, உனது திருப்புகழை விருப்பத்தோடு தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள் செய்வாயாக.
702. சந்தன வேரும் றகாரகில் குறடும்
தண்மயில் பீலியும் கரியின்
தந்தமும் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளும் சமந்துகொண்டு உந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை
வாயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
தெளிவுரை : சந்தன மரத்தினது வேரையும் கரிய அகில் கட்டையையும், மென்மையான மயில் இறகையும் யானையின் தந்தத்தையும் முத்துக் குவியல்களையும் பவளக்கொடிகளையும் தள்ளிக்கொண்டும் பக்கங்களில் மோதியும் வந்து பாய்கின்ற பாலியாற்றின் வடகரையில் உள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே. மாசில்லாத மணி போன்றவனே, உயிர்களைக் காப்பவனே. ஒளிமயமானவனே, எனது பாவத்தைத் தொலைத்து யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருள்வாய். பாலியாறு வேறு: பாலாறு வேறு. இத்தலம் ஆவடி அம்பத்தூர் அருகேயுள்ளது.
703. மற்றுநான் பெற்றது ஆர்பெற வல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினும் குணமெனக் கொள்ளும்
கொள்கையால் மிகைபல செய்தேன்
செற்றுமீது ஓடும் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
தெளிவுரை : நான் பெற்ற நன்மைகளை வேறு யார் பெறக் கூடியவர்? அருட் செல்வத்தை அளவிலாது அளிக்கும் வள்ளலே உன் அடியவர் வஞ்சனையுள்ள பேச்சுக்களையே பேசிக் குற்றமுள்ள செயல்களையே செய்யினும் நீ உன் கருணையினால் அவற்றையும் குணமாகக் கொள்ளும் உனது கொள்கையால் நான் தைரியங்கொண்டு வரம்பு கடந்த செயல்கள் பலவற்றைச் செய்தேன். உலகத்தை வருத்திக் கொண்டு மேலே திரிந்த அசுரரின் முப்புரங்களைச் சிரிப்பினால் எரித்த திருமுல்லை வாயிற் பெருமானே, அடியவனாகிய நான் வேறு ஆதரவு இல்லாதவன். சிவபெருமானே, பரஞ்சோதியே எனக்கு நேர்ந்துள்ள மிக்க துன்பத்தைப் போக்கி அருளுவாயாக.
704. மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
வார்குழல் மாமயிற் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
அருநடம் ஆடல் ஆறாத
திணிபொழில் தழுவு திருமுல்லை வாயில்
செல்வனே எல்லியும் பகலும்
பணியது செய்வேன்  படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
தெளிவுரை : சிவந்த வாயையும், வெண்மையான பற்களையும், நீண்ட கூந்தலையும், மயில்போலும் சாயலையும், அழகிய கண்களையும் உடைய ஆடல் மகளிர் நடனம் ஆடுதல் நீங்காததும், செறிந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆகிய திருமுல்லைவாயிலில் பொருந்தியிருக்கும் செல்வனே, உயிர்களைக் காப்பவனே, ஒளி மயமானவனே, இரவும் பகலும் உனக்குத் தொண்டு செய்பவனாகிய நான் பாடுகின்ற துன்பத்தை நீக்கியருள்வாய்.
705. நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
நாயினேன் தன்னைஆட் கொண்ட
சம்புவே உம்ப ரார்தொழுது ஏத்தும்
தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
தேடியான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
தெளிவுரை : யாவராலும் விரும்பத் தக்கவனே, அன்று திரு வெண்ணெய்நல்லூரில் வந்து என்னை ஆட்கொண்ட சம்புவே. வானுலகத்தவர் வணங்கித் துதிக்கின்ற பெரிய கடலில் உண்டான நஞ்சை உண்ட கழுத்தை உடையவனே, உன்னைத் தேடித் திரிவேனாகிய நான் செம்பொன்னால் இயன்ற மாளிகைகள் நிறைந்த திருமுல்லைவாயிலில் கண்ட பசிய பொன் போல்பவனே, உயிர்களைக் காப்பவனே, ஒளி மயமானவனே. அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருள்வாய்.
706. மட்டுலாம் மலர்கொண்டு அடியிணை வணங்கும்
மாணிதன் மேல்மதி யாதே
கட்டுவான் வந்த காலனை மாளக்
காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லை வாயில்
செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
தெளிவுரை : தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு உனது திருவடிகளை வழிபடுகின்ற மாணவன்மேல் அவன் பெருமையை எண்ணாமல் அவனைக் கட்டிப் போவதற்கு வந்த இயமனை அவன் இறக்கும்படி காலால் அழித்த மேலோனே. திருமுல்லைவாயிலில் கோயில் கொண்டிருக்கும் செல்வனே, சொல் வளமும் பொருள் வளமும் உடைய வேதங்களைச் சொன்ன ஆசிரியனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருள்வாய்.
707. சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையால் கட்டிட்டு
எல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்டு
அருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவும் திருமுல்லை வாயில்
நாதனே நரைவிடை ஏறி
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
தெளிவுரை : சொல்லுதற்கரிய புகழை உடையவனாகிய தொண்டைமான் என்னும் அரசன் எல்லையற்ற பேரின்பத்தைப் பெறுமாறு , அவனது யானையைப் படர்ந்து கிடந்த முல்லைக் கொடியால் தடுத்து பின்னர் அவனுக்கு வெளிப்பட்டருளிய இறைவனே, எந்நாளும் நல்லவர்கள் போற்றுகின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, வெண்ணிற விடையை ஏறுபவனே, பல கலைகளின் பொருளாயும் உள்ளவனே. உயிர்களைக் காப்பவனே, ஒளி மயமானவனே. அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருள்வாய்.
708. விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்டஎம் மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயில்
செல்வனை நாவல்ஆ ரூரன்
உரைதரு மாலையோர் அஞ்சினோடு அஞ்சும்
உள்குளிர்ந்து ஏத்தவல் லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே.
தெளிவுரை : நறுமணத்தைத் தருகின்ற தாமரை மலர்மேல் இருக்கின்ற பிரமனும் திருமாலும் அச்சம் கொள்ளும் படி அவர்கள் முன் தீப்பிழம்பாய் நீண்டு நின்றவனும், திருமுல்லைவாயிலில் எழுந்தருளி யிருப்பவனுமாகிய பெருமானை, திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய பாடல்களாகிய பத்தினையும் மனம் குளிர்ந்து பாடவல்லவர்கள் நரையும் திரையும் மூப்பும் சாக்காடும் இன்றி, தேவர்களுக்கு  அரசராகும் நிலையை அடைவர்
திருச்சிற்றம்பலம்

70. திருவாவடுதுறை (அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
709. கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக்கு அனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சல்என்று அருளாய்
ஆர்எ னக்குஉறவு அமரர்கள் ஏறே.
தெளிவுரை : இத் திருப்பதிகம் பாடல் முழுவதும் எனக்கு ஆர் உறவு என்று பாடியிருத்தல் காணத்தக்கது.
கங்கையைத் தாங்கிய நீண்ட சடையை உடையவனே !  பூத கணங்களுக்குத் தலைவனே, காலனுக்குக் காலனே, காமன் உடலுக்கு நெருப்பாகியவனே, கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் உடையவனே, உயிர்கட்கு முதல்வனே, அறமே உருவானவனே, தூயோனே, திருமாலாகிய இடபத்தை உடையவனே, தெளிந்த தேன் போன்றவனே, கடவுளே, தேவர்கள் தலைவனே, திருவாவடுதுறையில் விரும்பியிருக்கும் பெருமானே, அடியேனுக்கு உறவு ஆவார் உன்னையன்றி வேறு யார் உளர்? என்னை அஞ்சேல் என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் புரிவாயாக.
710. மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை
வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே
கண்ணி லேன்உடம் பில்அடு நோயால்
கருத்த ழிந்துஉனக் கேபொறை ஆனேன்
தெண்ணி லாஎறிக் கும்சடை யானே
தேவ னேதிரு வாவடு துறையுள்
அண்ண லேஎனை அஞ்சல்என்று அருளாய்
ஆர்எ னக்குஉறவு அமரர்கள் ஏறே.
தெளிவுரை : இவ்வுலகில் மனித வாழ்க்கையில் மயங்கிக் கிடந்த என்முன் நீயே வலிய வந்து என்னை ஆட்கொண்டவனே, தெளிவாகிய நிலவொளி வீசும் சடையை உடையவனே, இறைவனே, திருவாவடு துறையில் எழுந்தருளியுள்ள அண்ணலே, தேவர்களாகிய விலங்குகளுக்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, யான் கண்ணில்லாதவன் ஆயினேன். அதன்மேலும் வருத்துகின்ற நோயினால் மனம் வருந்தினமையால் உனக்குச் சுமையாய் விட்டேன். எனக்கு உறவு ஆவார் உன்னையன்றி வேறு யாவர் உளர்? ஆதலின், என்னை அஞ்சாதே என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செல்வாயாக.
711. ஒப்பி லாமுலை யாள்ஒரு பாகா
உத்த மாமத்தம் ஆர்தரு சடையாய்
முப்பு ரங்களைத் தீவளைத்து அங்கே
மூவ ருக்கருள் செய்யவல் லானே
செப்ப ஆழ்நிழற் கீழ்இருந்து அருளும்
செல்வ னேதிரு வாவடு துறையுள்
அப்ப னேஎனை அஞ்சல்என்று அருளாய்
ஆர்எ னக்குஉறவு அமரர்கள் ஏறே.
தெளிவுரை : உமையவளை ஒரு பாகத்தில் உடையவனே, மேலானவனே, ஊமத்தம் பூப்பொருந்திய சடையை உடையவனே, முப்புரங்களைத் தீ வளையச் செய்து, அப்போதே அவற்றில் இருந்தவர்களுள் மூவருக்கு மட்டில் அருள் செய்ய வல்லவனே, அறத்தைச் சொல்வதற்கு ஆல் நிழலில் அமர்ந்த செல்வனே ! திருவாவடுதுறையில் கோயில் கொண்டிருக்கும் என் அப்பனே, தேவர்கள் தலைவனே, எனக்கு உறவு ஆவார் உன்னையன்றி வேறு யாருளர் ? என்னை, அஞ்சாதே என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.
712. கொதியி னால்வரு காளிதன் கோபம்
குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயால்
மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னால்இமை யோர்தொழுது ஏத்தும்
விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிப னேஎனை அஞ்சல்என்று அருளாய்
ஆர்எ னக்குறவு அமரர்கள் ஏறே.
தெளிவுரை : கோபத்தோடு வந்த காளியினது கோபம் தணியும்படி அவளோடு எதிர்நின்று ஆடிய நடனத்தையுடையவனே. தேவர்கள் முறைப்படி வணங்கித் துதிக்கின்ற இறைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, தேவர்கள் தலைவனே, அறிவில்லாத யான் உடம்பில் வந்து வருந்துகின்ற பிணியினால் செய்வது அறியாது மனம் கலங்குகின்றேன். எனக்கு உறவு ஆவார் வேறு யார் உளர்? என்னை, அஞ்சாதே என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.
713. வந்த வாளரக் கன்வலி தொலைத்து
வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலே
வெந்த வெண்பொடிப் பூசவல் லானே
வேட னாய்விச யற்குஅருள் புரிந்த
இந்து சேகர னேஇமை யோர்சீர்
ஈச னேதிரு வாவடு துறையுள்
அந்த ணாஎனை அஞ்சல்என்று அருளாய்
ஆர்எ னக்குஉறவு அமரர்கள் ஏறே.
தெளிவுரை : உலகமாகிய வழிக்கு முதலானவனே, வெந்ததனால் ஆகிய வெண்மையான திருநீற்றைப் பூச வல்லவனே, அருச்சுனனுக்கு வேட உருவத்தில் சென்று அருள் செய்த சந்திரசேகரனே, தேவர்கள் தலைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள அந்தணனே, எனக்கு உறவு ஆவார் உன்னையன்றி வேறு யாருளர்? அன்று நீ இருக்கும் இடத்தில் செருக்குக் கொண்டு வந்த கொடிய அரக்கனாகிய இராவணனது வலிமையை அழித்து, பின்பு அவனுக்கு வாழ்நாள் கொடுத்து அனுப்பினாய். இன்று என்னை அஞ்சாதே என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.
714. குறைவி லாரிறை வேகுணக் குன்றே
கூத்த னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை அன்றிமற்று அடியேன்
ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
செம்பொ னேதிரு வாவடு துறையுள்
அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குறவு அமரர்கள் ஏறே.
தெளிவுரை : குறைதல் இல்லாத பரிபூரணனே ! எல்லா குணங்களுக்கும் இருப்பிடமாகும் மலையே, கூத்தை உடையவனே, குண்டலங்களை அணிந்த திருச்செவிகளை உடையவனே, அடியவனான நான் உன்னையன்றி வேறு உறவினர் இல்லாதவன். என்னுடைய ஒரு பிழையைப் பொறுத்தருளின் ஏதேனும் குறையுண்டோ? சிறகுகளையுடைய வண்டுகள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் எழுந்தருளிய செம்பொன் மேனியுடைய தியாகேசப் பெருமானே, திருவாவடுதுறையில் அமர்ந்த தரும சொரூபியே, தேவர்கள் தலைவனே, என்னை அஞ்சாதே என்று அருள் செய்வாயாக. உன்னை யன்றி வேறு யார் எனக்கு உறவினர்?
திருவாரூரை அடையும் ஆர்வத்தினால் இந்நிலை வந்தது என்பதனை நினைக்கின்றார்; ஆதலின், திருவாரூர்ச் செம்பொனே என்று அருளினார்.
715. வெய்ய மாகரி ஈருரி யானே
வேங்கை ஆடையி னாய்விதி முதலே
மெய்ய னேஅடல் ஆழியன்று அரிதான்
வேண்ட நீகொடுத்து அருள்புரி விகிர்தா
செய்ய மேனிய னேதிகழ் ஒளியே
செங்க ணாதிரு வாவடு துறையுள்
ஐய னேஎனை அஞ்சல்என்று அருளாய்
ஆர்எ னக்குறவு அமரர்கள் ஏறே.
தெளிவுரை : கொடிய பெரிய யானையின் உரித்த தோலை உடையவனே. புலித்தோல் ஆடையை உடுத்தவனே, விதிவிலக்குகளுக்குத் தலைவனே, மெய்ப் பொருளானவனே, அன்று திருமால் வேண்டிக் கொள்ள, வலிமை வாய்ந்த சக்கரத்தை அவனுக்கு அளித்தருளிய இறைவனே, செம்மேனியம்மானே, ஒளி வடிவினனே, சிவந்த கண்களை உடையவனே, திருவாவடுதுறையில் அமர்ந்த தலைவனே, எனக்கு உறவு ஆவார் உன்னையன்றி வேறு யார் உளர்?  என்னை, அஞ்சாதே என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.
716. கோதி லாஅமு தேஅருள் பெருகு
கோல மேஇமை யோர்தொழு கோவே
பாதி மாதொரு கூறுடை யானே
பசுப தீபர மாபர மேட்டீ
தீதி லாமலை யேதிரு வருள்சேர்
சேவ காதிரு வாவடு துறையுள்
ஆதி யேஎனை அஞ்சல்என்று அருளாய்
ஆர்எ னக்குஉறவு அமரர்கள் ஏறே.
தெளிவுரை : கோது இல்லாத அமுதம் போன்றவனே. அருள்வெள்ளம் பெருகுகின்ற தோற்றத்தை உடையவனே, தேவர்கள் தலைவனே, உமையை இடப்பாகத்தில் உடையவனே. உயிர்கட்குத் தலைவனே. நன்மை உருவானவனே. அருள் பொருந்திய வீரனே. திருவாவடுதுறையில் உள்ள தேவாதி தேவனே, எனக்கு உறவு ஆவார் உன்னையன்றி வேறு யார் உளர்? என்னை, அஞ்சாதே என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.
717. வான நாடனே வழித்துணை மருந்தே
மாசி லாமணி யேமறைப் பொருளே
ஏன மாஎயிறு ஆமையும் எலும்பும்
ஈடு தாங்கிய மார்புடை யானே
தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே
தேவ னேதிரு வாவடு துறையுள்
ஆனை யேஎனை அஞ்சல்என்று அருளாய்
ஆர்எ னக்குஉறவு அமரர்கள் ஏறே.
தெளிவுரை : ஆகாயமாகிய நாட்டை உடையவனே, செல்லும் வழிக்குத் துணையாகிய அமுதம் போன்றவனே, குற்றமற்ற மாணிக்கம் போன்றவனே, வேதத்தின் பொருளாய் உள்ளவனே, பன்றியின் பெரிய கொம்பையும் ஆமை ஓட்டையும் எலும்பையும் மார்பில் அணிந்தவனே, தேன், நெய், பால், தயிர் இவைகளால் மூழ்குவித்தலை விரும்கின்றவனே, இறைவனே, திருவாவடுதுறையில் மேவியிருக்கும் என் யானை போல்பவனே, தேவ தேவனே, எனக்கு உறவு ஆவார் உன்னை அன்றி வேறு யார் உளர்? என்னை, அஞ்சாதே என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.
718. வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும்
வேரி மத்தமும் விரவிமுன் முடித்த
இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை
ஈச னைத்திரு வாவடு துறையுள்
அண்ட வாணனைச் சிங்கடி யப்பன்
அணுக்க வன்தொண்டன் ஆர்வத்தால் உரைத்த
தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள்
சாத லும்பிறப் பும்மறுப் பாரே.
தெளிவுரை : வெண்தலையோடு பொருந்தும் பிறையையும் கொன்றை மலர் மாலையையும் பாம்பினையும் தேனையுடைய ஊமத்த மலரையும் ஒருங்கு விரவிச் சூட்டிக்கொண்ட சிறந்த இண்டை மாலையை யுடைய சிவந்த சடை முடியை உடையவனும், முதற்கடவுளும் திருவாவடுதுறையில் கோயில் கொண்டுள்ள சிவலோக வாணனும் ஆகிய இறைவனை, அவனுக்கு அணுக்கனாய் நிற்கின்றவன் தொண்டனாகிய சிங்கடிக்குத் தந்தை மிக்க அன்போடு பாடிய தமிழ் மாலைகளாகிய பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்கள், இறத்தலையும் பிறத்தலையும் ஒழித்து எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள்.
வெண்தலை, தாருகாவனத்து முனிவர்கள் விடுத்தது. அதனைச் சிவபெருமான் தன் தலையில் அணிந்து கொண்டார்.

71. திருமறைக்காடு (அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
719. யாழைப்பழித் தன்னமொழி
மங்கைஒரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை
வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழில் ஊடேசென்று
பூழைத்தனல் நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்கு
உண்ணும்மறைக் காடே.
தெளிவுரை : யாழின் இசையைப் பழித்தது போன்ற சொற்களையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனும், பேழை போலும் சடைமுடியில் பிறையைச் சூடினவனும் ஆகிய இறைவனது இடத்தை அறிந்து வழிபட வேண்டின் அது எளிய குரங்குகள் தாழைப் புதருள் புகுந்து, சிறிய புழைகளில் நுழைந்து வாழைப் பழத்தைப் பறித்து உண்கின்ற திருமறைக் காடேயாகும். தாழையையும் வாழையையும் ஒருங்கு ஓதியது நெய்தலும் மருதமும் மயங்கிய நிலம் என்பது உணர்த்துதற்கு. இனியும் இவ்வாறு வருவதைக் காணலாம்.
720. சிகரத்திடை இளவெண்பிறை
வைத்தான்இடம் தெரியில்
முகரத்திடை முத்தின்ஒளி
பவளத்திரள் ஓதத்
தகரத்திடை தாழைத்திரள்
ஞாழல்திரள் நீழல்
மகரத்தொடு சுறவங்கொணர்ந்து
எற்றும்மறைக் காடே.
தெளிவுரை : தலையில் இளமையான பிறையைச் சூடின இறைவனது இடத்தை அறிய வேண்டின், சங்கினிடத்தில் தோன்றிய முத்துக்களின் இடையே மறைகின்ற பவளக் கூட்டத்தை உடைய அலைகள் தகர மரங்களின் அடியிலும் தாழை மரம் குங்கும மரம் இவைகளின் நிழலிலும் மகர மீனையும் சுறா மீனையும் கொணர்ந்து எறிகின்ற திருமறைக்காடேயாகும்.
721. அங்கங்களும் மறைநான்குடன்
விரித்தான்இடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும் பண்ணையும்
பழம்வீழ்மணற் படப்பைச்
சங்கங்களும் இலங்கிப்பியும்
வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயம்கூம்பொடு
வணங்கும்றைக் காடே.
தெளிவுரை : வேதங்கள் நான்கினோடு அவற்றின் அங்கங்களையும் விரித்தவனாகிய இறைவனது இடத்தை யாம் அறிந்தோம். அஃது எதுவெனின் தென்னை மரங்களும் உயர்ந்த பனை மரங்களும் தம்தம் பழங்கள் வீழ நிற்கின்ற மணலையுடைய தோட்டத்தில் சங்குகளும் சிப்பிகளும் வலம்புரிச் சங்குகளும் அலைகளால் எறியப்பட மரக்கலங்களும் உயர்ந்த பாய்மரங்களாகிய கூப்பிய கைகளுடன் வந்து வணங்குகின்ற திருமறைக் காடாகும்.
722. நரைவிரவிய மயிர்தன்னொடு
பஞ்சவ்வடி மார்பன்
உரைவிரவிய உத்தமனிடம்
உணரல்லுறு மனமே
குரைவிரவிய குலைசேகரக்
கொண்டல்தலை விண்ட
வரைபுரைவன திரைபொழுது இழிந்து
எற்றும்மறைக் காடே.
தெளிவுரை : நரை பொருந்திய மயிரால் இயன்ற பஞ்ச வடியை அணிந்த மார்பை உடையவனும், அதனால் புகழ் பொருந்திய மேலானவனும் ஆகிய சிவபெருமானது இடம் யாது என்று உணரப் புக்க மனமே, அது ஒலி பொருந்திய கரைக்கண் உள்ள மாமரத்தினது மேகங்கள் தவழ்கின்ற தலையில், உடைந்த மலை போன்ற அலைகள் மோதி மீள்கின்ற திருமறைக் காடேயாகும்.
723. சங்கைப்பட நினையாதெழு
நெஞ்சேதொழுது ஏத்தக்
கங்கைச்சடை முடிவுடையவர்க்கு
இடமாவது பரவை
அங்கைக்கடல் அருமாமணி
உந்திக்கரைக்கு ஏற்ற
வங்கத்தொடு சுறவங்கொணர்ந்து
எற்றும்மறைக் காடே.
தெளிவுரை : மனமே, கங்கையைத் தாங்கிய சடைமுடியை உடையவனாகிய சிவபெருமானுக்கு இடமாவது கடலினது அலைகள் அக்கடலின்கண் உள்ள அரிய சிறந்த மணிகளை அடித்துக்கொண்டு, கரைக்கு ஏற்புடைய மரக்கலத்தோடு சுறாமீனையும் கொணர்ந்து சேர்க்கின்ற திருமறைக்காடேயாகும். அது பற்றி ஐயமாக நினையாமல், அங்குச் சென்று அவனை வணங்கித் துதிப்பதற்கு ஒருப்படு.
724. அடல்விடையினன் மழுவாளினன்
அலரால்அணி கொன்றைப்
படருஞ்சடை முடிவுடையவர்க்கு
இடமாவது பரவை
கடலிடையிடை கழியருகினில்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே.
தெளிவுரை : வெற்றியை உடைய இடப ஊர்தியை உடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்தி மாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவ பெருமானுக்கு இடமாவது பரந்து கிடத்லையுடைய கடலின் இடை இடையும் கழியின் அருகிலும் மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடை இடையும் வெண்மையான குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற நீலமணி போலும் கடல்நீரையுடைய திருமறைக்காடேயாகும்.
725. முளைவளரிள மதியுடையவன்
முன்செய்தவல் வினைகள்
களைகளைந்தெனை ஆளல்லுறு
கண்டன்னிடம் செந்நெல்
வளைவிளைவயல் கயல்பால்தரு
குணவார்மணற் கடல்வாய்
வளைவளையொடு சலஞ்சலம்கொணர்ந்து
எற்றும்மறைக் காடே.
தெளிவுரை : புதிதாகத் தோன்றிய வளர்தற்குரிய இளமையான பிறையை உடையவனும், யான் முன்னே செய்த வலிய வினைகளை, களைகளைந்தாற் போலக் களைந்தெறிந்து, என்னை ஆட்கொண்ட தலைவனுமாகிய சிவபெருமானது இடமாவது, செந்நெற் கதிர்கள் வளைந்து தோன்றுகின்ற மிகவிளையும் வயல்களிடத்துக் கயல்மீன்கள் பாய்வதும் ஒழுகிய மணலையுடைய கீழ்க்கடற்கரைக்கண் அக்கடல் வளைந்த சங்குகளோடு சலஞ்சலத்தையும் கொணர்ந்து எறிவதும் ஆகிய திருமறைக்காடேயாகும்.
726. நலம்பெரியன சுரும்பார்ந்தன
நங்கோன்இடம் அறிந்தோம்
கலம்பெரியன சாரும்கடற்
கரைபொருதுஇழி கங்கைச்
சலம்புரிசடை முடிஉடையவர்க்கு
இடமாவது பரவை
வலம்புரியொடு சலம்சலம்கொணர்ந்து
எற்றும்மறைக் காடே.
தெளிவுரை : கங்கை நீரோடு திரித்த சடைமுடியை உடையவனாகிய சிவபெருமானுக்கு இடமாய் இருப்பது, நற்பொருள்கள் மிக்கனவும் வண்டுகள் நிறைந்தனவும் பெரியனவுமாகிய மரக்கலங்கள் பொருந்திய கடலினது கரையை மோதி மீள்கின்ற அலைகள் வலம்புரிச் சங்குகளையும், சலம்சலச் சங்குகளையும் கொண்டு வந்து வீசுகின்ற திருமறைக்காடேயாகும். இதனை அறிந்தோமாகலின் நாம் நம் பெருமானது இடத்தை அறிந்தோம்.
727. குண்டாடியும் சமணாடியும்
குற்றுடுக்கையர் தாமும்
கண்டார்கண்ட காரணம் அவை
கருதாதுகை தொழுமின்
எண்தோளினன் முக்கண்ணினன்
ஏழிசையினன் அறுகால்
வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு
மணிநீர்மறைக் காடே.
தெளிவுரை : உலகீர், சிறிய உடையை உடைய சிலர் தாமும், மூர்க்கத்தன்மை பேசியும், சமண சமயக் கொள்கைகளை உரைத்தும் சில பொருள்களை, தம் குறை அறிவால் கண்டார். எனினும் அவைகளைப் பொருட்படுத்தாமல் எட்டுத் தோள்களை உடையவனும், மூன்று கண்களையுடையவனும், ஏழிசைகளை உடையவனும் ஆகிய சிவபெருமானது திருமறைக் காட்டைக் கைகூப்பித் தொழுமின்கள். அந்நகர் சோலைகள் சூழ்ந்ததும் கடல் நீரை உடையதுமாகும். கொல்லாமை முதலிய நல்லறங்களைச் சமணர் போதித்தபோதிலும் இறைவன் உண்மையைக் காணாமையால் சுந்தரர் இவ்வாறு கூறுவாராயினார்.
728. பாரூர்பல புடைசூழ்வள
வயல்நாவலர் வேந்தன்
வாரூர்வன முலையாள்உமை
பங்கன்மறைக் காட்டை
ஆரூரன தமிழ்மாலைகள்
பாடும்அடித் தொண்டர்
நீரூர்தரு நிலனோடுயர்
புகழாகுவர் தாமே.
தெளிவுரை : உமாதேவி பங்கினனாகிய சிவபெருமானது திருமறைக்காட்டை, நிலத்தில் உள்ள ஊர்கள் பல சூழ்ந்துள்ளனவாகத் தலைமை பெற்று விளங்கும் வளமான வயல்கள் சூழ்ந்த திருநாவல் ஊரார்க்குத் தலைவனாகிய நம்பி ஆரூரனது தமிழ்ப் பாடல்களால் பாடுகின்ற அப்பெருமானது திருவடித் தொண்டர்கள், நீர் சூழ்ந்த நிலத்தோடு உயர்ந்து விளங்கும் புகழ் மிகப் பெறுவார்கள். நிலனொடு உயர்தலாவது, நிலவுலகு உள்ள துணையும் நிலைபெறுதல்.
திருச்சிற்றம்பலம்

72. திருவலம்புரம் (அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
729. எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன்
பனைக்கினி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி அவன்தமர்க்கு இனியவன் எழுமையும்
மனக்கினி அவன்தனது இடம்வலம் புரமே.
தெளிவுரை : எனக்கு இனிமேல் ஏற்ற ஒரு புகலிடம் ஆனவனைத் தினையளவு அறிந்துகொண்டேன். அவன் யாரெனில், எனக்கு நினைக்குந்தோறும் இனிமையானவனும், அதுபோலவே தன் அடியவர் யாவர்க்கும் இனியவனும், இன்னும் ஏழு பிறப்புக்களிலும் நினைப்பவர் மனத்துக்கு இனிமை பொருந்தியவனுமாகிய பெருமான். அவனுக்கு இடமாவது, கடற்கரையில் உள்ளதும் பனையின் கனிந்த பழங்கள் தாமே உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்சியை உடையதுமான திருவலம்புரமே.
730. புரமலை எரிதர வளைந்தவில் லினன்அவன்
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
அரவுரி இரந்தயன் இரந்துண விரும்பிநின்று
இரவுஎரி யாடிதன் இடம்வலம் புரமே.
தெளிவுரை : திரிபுரங்கள் எரியுமாறு வளைந்த வில்லை உடையவனும், புதியவனும் மரவுரியையும் புலித் தோலையும் அரையிற் கட்டியவனும், பாம்பின் தோல் பொருந்தப்பட்டவனும், இரந்து உண்ண விரும்புபவனும், இரவின்கண் தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம், திருவலம்புரம் என்னும் தலமே. இருந்தயல் என்றும் பாடம். சிவபெருமான் மரவுரி உடுத்தல் ஈண்டுப் பெறப்படுகின்றது.
731. நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு ஏந்தியோர் கையினன்
ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
ஏறணி அடிகள்தம் இடம்வலம் புரமே.
தெளிவுரை : நீறு அணிந்த மேனியை உடையவனும், நெருப்பை உமிழ்கின்ற பாம்பை அணிந்தவனும், பிளவுபட்ட கொடிய மழுவை ஏந்திய ஒரு கையை உடையவனும், நீரையணிந்த ஒளிவிடும் சடையாகிய நெருப்பு வளரப் பெற்றவனும் ஆகிய இளைய வெண்மையான இடபக்கொடியை உயர்ந்துள்ள இறைவனது இடம் திருவலம்புரம் என்னும் தலமே. அணி என்றதனால் ஏறு கொடியாயிற்று.
732. கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிர்இளம்
தெங்கொடு பனைபழம் படும்இடம் தேவர்கள்
தங்கிடும் இடம்தடம் கடல்திரை புடைதர
எங்களது அடிகள்நல் இடம்வலம் புரமே.
தெளிவுரை : மலர்களில் உள்ள தேனை ஆங்கு வந்த வண்டுகள் உண்ண, இளைய தென்னை மரங்களும் பனை மரங்களும் பழம் விளைகின்ற இடமும் பெரிய கடலினது அலைகள் கரையை மோத, தேவர்கள் தங்கியிருக்கும் இடமும் எங்கள் இறைவனது நல்ல இடமும் திருவலம்புரம் என்னும் தலமே. தேவர்கள் தங்குதல் இறைவனை வணங்குதற்குச் செவ்வி பெறாமையாலாம்.
733. கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன்
நெடுமதில் சிறுமையின் நிரவவல் லவனிடம்
படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந்து
இடுமணல் அடைகரை இடம்வலம் புரமே.
தெளிவுரை : கொடிய மழுவை ஏந்தியவனும், கொலை வில்லையுடையவனும், திரிபுரங்களை ஓர் இமைப் பொழுதில் பொடியாக்க வல்லவனும் ஆகிய இறைவனது இடம் கடலில் உள்ள மாணிக்கங்களையும் முத்துக்களையும் பவளங்களையும் மிகுதியாகக் கொண்டிருக்கின்ற மணல்பொருந்திய கடற்கரையாகிய இடமும் திருவலம்புரம் எனப்படுவதும் ஆகிய தலமே.
734. கருங்கடக் களிற்றுரிக் கடவுளது இடம்கயல்
நெருங்கிய நெடும்பெண்ணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந்து
இருங்கடல் அடைகரை இடம்வலம் புரமே.
தெளிவுரை : கரிய மதநீரையுடைய யானைத் தோலையுடைய இறைவனது இடம் உயர்ந்த பனை மரங்கள் கயல் மீன்களோடும் அடும்பங் கொடிகளோடும் கலந்துள்ள இடத்தில் வலம்புரிச் சங்குகளும் சலஞ்சலச் சங்குகளும் தம்தம் பெண் சங்குகளோடு மணம் செய்து கொள்ளுதலைப் பொருந்தி, பெரிய கடலினின்றும் வருகின்ற கடற்கரையாகிய இடமும் திருவலம்புரம் எனப்படுவதும் ஆகிய தலமே.
735. நரிபுரி காடரங் காநடம் ஆடுவர்
வரிபுரி பாடநின்று ஆடும்எம் மான்இடம்
புரிவரி வரிகுழல் அரிவையொர் பால்மகிழ்ந்து
எரிஎரி யாடிதன் இடம்வலம் புரமே.
தெளிவுரை : நரிகள் விரும்புகின்ற சுடுகாடே அரங்கமாக நடனம் ஆடுபவனும், யாழ் இசையைப் பாட நின்று ஆடுகின்ற எம்பெருமானும், உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்து, எரிகின்ற நெருப்பில் ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம் திருவலம்புரம் என்னும் தலமே.
736. பாறணி முடைதலை கலன்என மருவிய
நீறணி நிமிர்சடை முடியினன் நிலவிய
மாறணி வருதிரை வயல்அணி பொழிலது
ஏறுடை அடிகள்தம் இடம்வலம் புரமே.
தெளிவுரை : பருந்தைக் கொண்ட முடைநாற்றம் வீசும் தலையை உண்கலமாகப் பொருந்தியவனும், திருநீற்றை அணிந்தவனும், நீண்ட சடை முடியை உடையவனும், இடப வாகனனுமாகிய இறைவனது இடம், அலைகளையுடைய கடலையும் வயல்களையும், சோலைகளையும் உடைய திருவலம்புரம் என்னும் தலமே.
737. சடசட விடுபெணை பழம்படும் இடவகை
படவட கத்தொடு பலிகலந்து உலவிய
கடைகடை பலிதிரி கபாலிதன் இடமது
இடிகரை மணல்அடை இடம்வலம் புரமே.
தெளிவுரை : தோல் ஆடையை உடுத்திக் கொண்டு, சாம்பலைப் பூசிக் கொண்டு உலாவுகின்றவனும், இல்லங்களின் வாயில்தோறும் பிச்சைக்குத் திரிகின்ற தலை ஓட்டினையுடையவனும் ஆகிய இறைவனது இடம், சடசட என்னும் ஓசையை வெளிப்படுத்துகின்ற பனைமரங்கள் பழம் பழுக்கின்ற இடங்களின் வகை பலவும் மிகுமாறு இடிக்கின்ற கரையை மணல்கள் அடைக்கின்ற இடமும் திருவலம்புரம் எனப்படுவதும் ஆகிய தலமே. இத் தலத்திற்கு பெரும்பள்ளம் என்ற ஒரு பெயரும் வழங்குகிறது.
738. குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர்
கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்
தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்
எண்டிசைக்கு ஒருசுடர் இடம்வலம் புரமே.
தெளிவுரை : கரகத்தை யுடைய உறியை யுடைய சமணர்களது பொய்ம்மையை நன்கு உணர்ந்தவர்களும், உணர்ந்து தனது திருவடியில் வீழ்ந்து வணங்கியவர்களும், ஒலிக்கின்ற கழலையணிந்த தண்டேந்தி நிற்கும் தண்டி என்கிற சிவகணத்தவர்களும் செய்கின்ற அரகர என்னும் ஓசையுடன் எட்டுத் திசைகட்கும் ஒரு விளக்குப் போல்பவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம் திருவலம்புரம் என்னும் தலமே.
739. வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்
இருங்குலப் பிறப்பர்தம் இடம்வலம் புரத்தினை
அருங்குலத்து அருந்தமிழ் ஊரன்வன் தொண்டன்சொல்
பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே.
தெளிவுரை : கரிய கடலின்கண் வருகின்ற மரக்கலங்கள் பலவற்றையும் பேணுகின்ற உயர்குடிப் பிறப்பினரது இடமும், திருவலம்புரம் எனப்படுவதும் ஆகிய தலத்தினை அரிய குலத்தில் தோன்றிய, அரிய தமிழ்ப் பாடலில் வல்ல, வன்தொண்டனாகிய நம்பி ஆரூரனது சொல்லால் பெரிய குழாமாகிய அடியவரோடும் கூடி நின்று துதித்தல் பெருமையைத் தருவதாம்.
திருச்சிற்றம்பலம்

73. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)
திருச்சிற்றம்பலம்
740. கரையுங் கடலும் மலையும்
காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான்
ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன்
வானவர் தானவர்க்கு எல்லாம்
அரையன் இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
தெளிவுரை : இத் திருப்பதிகம் இறைவர் தம்மை ஆண்டு கொண்டருளும்படி வேண்டுமாறு அடியவரை வேண்டி அருளிச் செய்தது.
அடியார்களே, நிலம், கடல், மலை முதலாய எவ்விடத்திலும் காலை மாலை முதலிய எப்பொழுதிலும் எம் சொல்லிற் பொருந்தியிருப்பவனும், ஒப்பற்றவனும், உருத்திர லோகத்தை உடையவனும், உமையாள் கேள்வனும், தேவர் அசுரர் முதலிய யாவர்க்கும் தலைவனும் ஆகிய பெருமான், என்றும் கோயில் கொண்டிருக்கின்ற இடமும் திருவாரூரேயன்றோ ! ஆதலின் அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
கரை என்றது கடலால் சூழப்பட்டுள்ளது என நிலத்திற்கும் பெயராயிற்று.
741. தனியன் என்றெள்கி அறியேன்
தம்மைப் பெரிதும் உகப்பன்
முனிவர் தம்மை முனிவன்
முகம்பல பேசி மொழியேன்
கனிகள் பலவுடைச் சோலைக்
காய்க்குலை ஈன்ற கமுகின்
இனியன் இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
தெளிவுரை : அடியார்களே ! இனிய பொருள்கள் யாவற்றினும் இனியவனாகிய நம் பெருமானை யான் தாயும், தந்தையும், பிற சுற்றத்தவரும் இல்லாத தனியன் என்று இகழ்ந்தறியேன். அதற்கு மாறாக அவனையே பெரிதும் விரும்புவேன். அவனை வெறுப்பவரை வெறுப்பேன். மனத்தோடன்றி முகத்தான் மட்டும் இனிய பல சொற்களைச் சொல்லேன். அவன் என்றும் நிலைபெற்றிருக்கின்ற இடமும், கனிகள் பலவற்றை யுடைய சோலையில் காய்க்குலைகளை ஈன்ற கமுக மரங்களையுடைய திருவாரூரேயன்றோ ! ஆதலின் அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டு அறியுங்கள்.
இது முதலாக வரும் திருப்பாடல்கள், முதற்கண் தம் நிலையை மொழிந்து பின் இப் பெற்றியேமாகிய எம்மை ஆள்வாரோ என வினவியவாறாம்.
742. சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன்
தொடர்ந்தவர்க் கும்துணை அல்லேன்
கல்லில் வலிய மனத்தேன்
கற்ற பெரும்புல வாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான்
அருமறை ஆறங்கம் ஓதும்
எல்லை இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
தெளிவுரை : அடியவர்களே ! யான் ஏதாவது சொல்வதாயிருந்தால் எனது பெருமையையன்றி வேறொன்றைச் சொல்லேன். அயலவர்க்கேயன்றி, உறவினர்க்கும் உதவுவேன் அல்லேன். அவ்வளவு வலிய கல்மனத்தை உடையேன். நிரம்பக் கற்றவரது துன்பத்தைப் பெரிதும் நீக்குபவனும் அரிய வேதங்களும் ஆறு அங்கங்களும் சொல்லும் முடிந்த பொருளானவனும் ஆகிய பெருமான் என்றும் நிலைபெற்றிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ ! ஆதலின் அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறியுங்கள்.
743. நெறியும் அறிவும் செறிவும்
நீதியும் நான்மிகப் பொல்லேன்
மிறையும் தறியும் உகப்பன்
வேண்டிற்றுச் செய்து திரிவன்
பிறையும் அரவும் புனலும்
பிறங்கிய செஞ்சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
தெளிவுரை : அடியார்களே ! யான் ஒழுகும் நெறியிலும் பொருள்களை அறிகின்ற அறிவிலும், பிறரோடு இணங்குகின்ற இணக்கத்திலும், சொல்லுகின்ற நீதியிலும் மிக்க பொல்லாங்கு உடையேன். பிறரை வருத்தலையும் பிரித்தலையும் விரும்புவேன். மனம் போனபடி செய்து திரிவேன். பிறையையும் பாம்பையும் நீரையும் தனது விளக்கமான சிவந்த சடைமேல் வைத்துள்ள இறைவன், எப்போதும் நிலை பெற்றிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேளுங்கள்.
744. நீதியில் ஒன்றும் வழுவேன்
நிட்கண் டகஞ்செய்து வாழ்வேன்
வேதியர் தம்மை வெகுளேன்
வெகுண்டவர்க் கும்துணை ஆகேன்
சோதியில் சோதிஎம் மானைச்
சுண்ணவெண் ணீறணிந் திட்ட
ஆதி இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
தெளிவுரை : அடியார்களே ! யான் நீதியினின்றும் சிறிதும் வழுவேன். வழுவின்றி வாழ்வேன். அந்தணர்களை வெறுக்க மாட்டேன். வெறுப்பவர்களுக்குத் துணையாக மாட்டேன். ஒளிக்குள் ஒளியாய் உள்ளவனும் எங்கட்கு யானை போன்றவனும் திருநீற்றை அணிந்த முதல்வனும் ஆகிய இறைவன் என்றும் இருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின், அவர் எம்மையும் ஏற்றுக்கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டு அறியுங்கள்.
இறைவனை, அடியவர்க்கு யானை என்றல் அவர்களை எடுத்துச் சுமத்தல் பற்றி.
745. அருத்தம் பெரிதும் உகப்பன்
அலவலை யேன்அலந் தார்கள்
ஒருத்தர்க்கு உதவியேன் அல்லேன்
உற்றவர்க் குத்துணை அல்லேன்
பொருத்தமேல் ஒன்றும் இலாதேன்
புற்றெடுத்து இட்டிடங் கொண்ட
அருத்தன்  இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
தெளிவுரை : அடியார்களே ! யான் பொருளையே பெரிதும் விரும்புவேன். அதன்பொருட்டு எங்கும் திரிவேன். துன்புற்றவர்க்கு உதவி அறியேன். உறவினர்க்கும் துணைவன் அல்லன். ஆகவே நல்ல குணங்கள் எதையும் பெற்றிலேன். புற்றைப் படைத்து, அதனை இடமாகக் கொண்டவன் எப்போதும் தங்கியிருக்கும் இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் அவர் எம்மையும் ஏற்றுக்கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறியுங்கள். இயல்பாய் இருந்த புற்றினை எடுத்ததாக, பாற்படுத்தியருளிச் செய்தார். திருவாரூர்த் திருமூலட்டானர் புற்றிடங்கொண்டிருத்தலைக் காண்க.
746. சந்தம் பலஅறுக் கில்லேன்
சார்ந்தவர் தம்அடிச் சாரேன்
முந்திப் பொருவிடை ஏறி
மூவுல குந்திரி வானே
கந்தம் கமழ்கொன்றை மாலைக்
கண்ணியன் விண்ணவர் ஏத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
தெளிவுரை : அடியார்களே ! யான். வண்ணங்கள் பலவற்றை அமைத்துப் பாடுதல் மாட்டேன். இறைவனை அடைந்த அடியார்களது திருவடிகளை அடையவில்லை. கொன்றை மாலையையும் கண்ணியையும் அணிந்தவனும் தேவர்களால் துதிக்கப்படுவனுமாகிய எம் தந்தை போர் செய்கின்ற விடையை ஏறி மூவுலகிலும் திரிபவன் என்றாலும், அவன் நிலையாக இருக்கும் இடம் இத் திருவாரூரே யாம். ஆதலின் அவர் எம்மையும் ஏற்றுக்கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறியுங்கள்.
747. நெண்டிக் கொண்டேயும் கலாய்ப்பன்
நிச்சய மேஇது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன்
மெய்ப்பொரு ளன்றி உணரேன்
பண்டங்கு இலங்கையர் கோனைப்
பருவரைக் கீழ்அடர்த் திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
தெளிவுரை : அடியவர்களே ! நான் மெய்ப்பொருளையன்றிப் பொய்ப் பொருளை ஒரு பொருளாகக் கருதேன். அதனால் அம் மெய்ப்பொருளை உணராதவர்க்கு நல்ல சொற்களைச் சொல்ல மாட்டேன். வலியச் சென்றும் அவர்களோடு வாதிடுவேன். இஃது எனது துணிபு: தளர்வில்லாத குணமும் ஆகும். முன்பு இலங்கையர் கோனாகிய இராவணனைக் கைலாய மலையில் கீழ் இட்டு நெரித்த கடவுள் என்றும் நிலையாக உள்ள இடம் இத்திருவாரூரேயாகும். ஆதலின்  அவர் எம்மையும் ஏற்றுக்கொள்வாரோ ? அவரது கருத்தைக் கேட்டறியுங்கள்.
748. நமர்பிறர் என்பது அறியேன்
நான்கண்ட தேகண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பன்
தக்கவாறு ஒன்றும் இலாதேன்
குமரன் திருமால் பிரமன்
கூடித் தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
தெளிவுரை : தொண்டர்களே ! யான் இவர் நம்மவர் என்பதும், அயலவர் என்பதும் அறியவில்லை. நான் உண்மை என்று கண்டதையே கண்டு, பிறர் சொல்வனவற்றை இகழ்ந்து நிற்பேன். ஆரவாரத்தைப் பெரிதும் விரும்புவேன். தக்க நெறி ஒன்றம் இல்லாதவன். முருகனும் திருமாலும் பிரமனும் ஒருங்கு கூடிய தேவர் பலரும் வணங்கும் தேவன் எப்போதும் தங்கியிருக்கின்ற இடம் இத் திருவாரூரே யாகும். ஆதலின், அவர் எம்மையும் ஏற்றுக்கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறியுங்கள்.
749. ஆசை பலஅறுக் கில்லேன்
ஆரையும் அன்றி உரைப்பேன்
பேசிற் சழக்கலாற் பேசேன்
பிழைப்புடை யேன்மனந் தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன்
ஒலிகடல் நஞ்சமு துண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
தெளிவுரை : தொண்டர்காள் ! எனக்கு அவாக்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்றையும் நீக்கவில்லை. அந்த அவாவினால் யாவரிடத்தும் வெகுளி தோன்றுகிறது. அதனால் யாவரையும் பகைத்துக் கொள்கிறேன். பொய்யே பேசுகின்றேன். என்றாலும் புகழை விரும்புகின்றேன். இதனால் மனத்தாலும் குற்றம் செய்கின்றேன். கடலில் தோன்றிய விடத்தை அமுதாக உண்ட பெருமான் எப்போதும் கோயில் கொண்டிருக்கும் இடமும் இத் திருவாரூரே யாகும். ஆதலின், அவர் எம்மையும் ஏற்றுக்கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டு அறியுங்கள்.
750. எந்தை இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயும்திறம் வல்லான்
திருமரு வுந்திரள் தோளன்
மந்த முழவம் இயம்பும்
வளவயல் நாவலா ரூரன்
சந்தம் இசையொடும் வல்லார்
தாம்புகழ் எய்துவர் தாமே.
தெளிவுரை : வெற்றித் திருபொருந்திய திரண்ட தோள்களையுடையவனும், மெல்லென ஒலிக்கும் மத்தளம் முழங்குவதும், வளப்பம் பொருந்திய வயல்களை உடையதுமாகிய திருநாவலூரில் தோன்றியவனும் ஆகிய நம்பியாரூரன், எம் தந்தையாகிய இறைவன் என்றும் கோயில் கொண்டிருக்கும் இடமும், இத் திருவாரூரேயாகும். ஆதலின், அவர் எம்மையும் ஏற்றுக் கொள்வாரோ என்று அடியார்களோடு ஆராயும் திறம் வல்லவனாய்ப் பாடிய இந்த இசைப் பாடல்களை அவ் இசையோடும் பாட வல்லவர் புகழ்பெறுவர். சுந்தரர்க்கு அரசத்திருவும் உடைமையின். திருமருவும் திரள் தோளன் என்று அருளினார்.
திருச்சிற்றம்பலம்

74. திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் (அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
751. மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந்து அருவி
வெடிபடக் கரையொடும் திரைகொணர்ந்து எற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவாறு அறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமாறு எம்பெரு மானை
என்னுடம்பு அடும்பிணி இடர்கெடுத் தானை.
தெளிவுரை : மின்னுகின்ற பெரிய மேகங்கள் பொழிவதால் அருவியாகப் பெரு முழக்கத்துடன் இறங்கி வந்து கரையில் அலைகளை மோதுவதும், அன்னங்களை உடையதுமான காவேரியின் அகன்ற கரையில் உள்ள பல தலங்களிலும் எழுந்தருளியிருப்பவரும் தம்முடைய இரண்டு திருவடிகளையும் இடைவிடாது தொழும் அன்பர்களான அடியவர் குறைகளைச் சொன்ன படியே அறிந்து தீர்ப்பவரும், திருத்துருத்தியிலும் திரு வேள்விக்குடியிலும் அமர்ந்தவரும், என் உடம்பை வருத்துகின்ற நோய்த்துன்பத்தைப் போக்கியவரும் என் தலைவருமாகிய சுவாமியைப் பாவியும், நாய்போற் கீழ்ப்பட்டவனுமான நான் மறப்பது எவ்வாறு? மறக்க முடியாது.
752. கூடுமாறு உள்ளன கூடியும் கோத்தும்
கொய்புன ஏனலோடு ஐவனம் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
மலையெனக் குலைகளை மறிக்குமாறு உந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமாறு அறிகிலேன் எம்பெரு மானைப்
பழவினை உள்ளன பற்றறுத் தானை.
தெளிவுரை : கூடத்தக்கனவாயுள்ள யாறுகளோடு கூடியும், அவை வேறு காணப்படாதவாறு கோத்தும், கொய்யும் பருவத்தை அடைந்த கொல்லைத் தினைக்கதிர்களையும் மலைநெல் கதிர்களையும் சிதறியும் இரு பக்கங்களிலும் கோங்கு மருது முதலிய மரங்களை முறித்தும், கரைகளை மலை தகர்ந்தாற்போலத் தகருமாறு இடித்தும் ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் திருவேள்விக்குடியிலும் உள்ளவராகிய தலைவரும், எனது பழவினைகளாய் உள்ளவற்றை அடியோடு தொலைத்தவரும் ஆகிய எம்பெருமானை, குற்றமுடையேனும் நாய்போலும் கடையேனும் ஆகிய யான் பாடும் வகையை அறிகிலேன்.
753. கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்
கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட்டு எய்திப்
புல்கியும் தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும்
போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
சொல்லுமாறு அறிகிலேன் எம்பெரு மானைத்
தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வுஅறுத் தானை.
தெளிவுரை : பெரிய யானையின் தந்தங்களையும் கனிகளாகிய பயனையும் வாரிக் கொண்டு வந்து வலம் செய்தும், வணங்கியும் தவம் புரிகின்ற உலகியலாரும் வீட்டு நெறியாரும் விடியற்காலையில் வந்து மூழ்குமாறு ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக் குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், என்னைத் தொடர்ந்து வருத்திய பிணியினது தொடர்பை அறுத்தவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும் நாய்போலும் கடையேனும் ஆகிய யான் புகழும் விதத்தை அறியேன்.
754. பொறியுமா சந்தனத் துண்டமோடு அகிலும்
பொழிந்துஇழிந்து அருவிகள் புன்புலம் கவரக்
கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்
கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
அறியுமாறு அறிகிலேன் எம்பெரு மானை
அருவினை உள்ளன ஆசறுத் தானை.
தெளிவுரை : அருவிகள் பொரிந்த சந்தனக் கட்டைகளையும் அகிற் கட்டைகளையும் நிரம்பக் கொண்டு வந்து குவித்துப் புன்செய் நிலத்தை மூடிக்கொள்ள, பின்பு சிறுமிளகையும் வாழைகளையும் தள்ளிக்கொண்டு சென்று கடலில் சேர்ப்பதையே கருதிக்கொண்டு, தன் இரு மருங்கிலும் அலை வீசுகின்ற காவிரியாற்றினது கரையில் உள்ள திருத்துருத்தியிலும் திருவேள்விக்குடியிலும் வீற்றிருக்கும் தலைவரும் எனது குற்றங்களைப் போக்கினவரும் ஆகிய எம்பெருமானைக் குற்றமுடையவனும் நாய் போன்ற கடைப்பட்டவனுமாகிய யான் அறியும் வகையை அறியேன்.
755. பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும்
பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
இழிந்துஇழிந்து அருவிகள் கடும்புனல் ஈண்டி
எண்டிசை யோர்களும் ஆடவந்து இங்கே
சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றுமாறு எம்பெரு மானை
உற்றநோய் இற்றையே உறவொழித் தானை.
தெளிவுரை : மும்மதங்களையுடைய யானையது தந்தங்களையும், பொன்னைப்போல மலர்கின்ற வேங்கை மரத்தினது நல்ல மலர்களையும் அடித்துக்கொண்டு அருவிகள் பலவும் வீழ்தலால் மிக்க நீர் நிரம்பி எட்டுத்திக்கில் உள்ளவர்களும் வந்து முழுகுமாறு பாய்கின்ற காவிரியாற்றின் கரையில் உள்ள திருத்துருத்தியிலும் திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் என்னைப் பற்றிய நோயை முழுதும் நீக்கியவரும் ஆகிய எம்பெருமானை யான் பிதற்றுதலை ஒழிந்திலேன்.
756. புகழுமா சந்தனத் துண்டமோடு அகிலும்
பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி
ஆடுவார் பாவந்தீர்த்து அஞ்சனம் அலம்பித்
திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
இகழுமாறு அறிகிலேன் எம்பெரு மானை
இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை.
தெளிவுரை : சிறந்த சந்தனக் கட்டைகளையும் அகிற் கட்டைகளையும் பொன்னும் மணியுமாகிய இவைகளை வாரிக்கொண்டும் நல்ல மலர்களைத் தள்ளிக்கொண்டும் வந்து கரைகளை வளப்படுத்தி, முழுகுகின்றவர்களது பாவத்தைப் போக்கி, கண்ணில் தீட்டிய மைகளைக் கழுவி நிற்கின்ற காவிரியானது கரையில் உள்ள திருத்துருத்தியிலும் திருவேள்விக் குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், என்னைப் பற்றிய நோயை ஒழிக்க வல்லவரும் ஆகிய எம்பெருமானைக் குற்றம் உடையவனும் நாய் போன்ற கடையனும் ஆகிய யான் இகழுமாற்றை நினைய மாட்டேன்.
757. வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்
வருடியும் வணக்கியும் மராமரம் பொருது
கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
காம்பீலி சுமந்தொளிர் நித்திலம் கைபோய்
விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
உரையுமாறு அறிகிலேன் எம்பெரு மானை
உலகறி பழவினை அறவொழிந் தானை.
தெளிவுரை : மாம்பழங்களையும் வாழைப்பழங்களையும் வீழ்த்தியும் கிளைகளோடு சாய்த்தும் மராமரத்தை முறித்தும் கடலைக் காண்பதற்காக மூங்கில்களையும் மயில்தோகைகளையும் சுமந்து, முத்துக்கள் இரு பக்கங்களும் தெறிக்க, விரைந்து செல்கின்ற காவிரியாற்றினது கரையில் உள்ள திருத்துருத்தியிலும் திரு வேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் எனது பழவினைகளை முற்றிலும் நீக்கியவரும் ஆகிய எம்பெருமானை, குற்றம் உடையவனும் நாய்போலும் கடையனும் ஆகிய யான் துதிக்கும் வழியை அறியேன்.
758. ஊருமா தேசமே மனம்உகந்து உள்ளிப்
புள்ளினம் பலபடிந்து ஒண்கரை உகளக்
காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
கவரிமா மயிர்சுமந்து ஒண்பளிங்கு இடறித்
தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஆருமாறு அறிகிலேன் எம்பெரு மானை
அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை.
தெளிவுரை : அருகிலுள்ள ஊர்களில் உள்ளவர்களும் பெரியதாகிய நாடு முழுவதும் உள்ளவர்களும் மனம் விரும்பி நினைக்குமாறு, பறவைக் கூட்டங்கள் பல மூழ்கி எழுந்து, அழகிய கரையில் திரிய கடலைக் காண்பதற்காக, கவரிமானின் மயிரைச் சுமந்து, பளிங்குக் கற்களை உடைத்து நானிலங்களிலுமுள்ள பொருள்களையும் கண்டு செல்கின்ற காவிரியின் கரையில் கோயில் கொண்டிருக்கும் தலைவரும், எனக்கு இனி வரக்கடவதாகிய குற்றங்களை இப்போதே களைந்து ஒழித்தவருமாகிய எம் பெருமானை, குற்றம் உடையவனும் நாய்போன்ற கடையனும் ஆகிய யான் துய்க்கும் வழியை அறியேன்.
759. புலங்களை வளம்படக் போக்கறப் பெருகிப்
பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய்து ஆர்ப்ப
இலங்குமார் முத்தினோடு இனமணி இடறி
இருகரைப் பெருமரம் பீழ்ந்துகொண்டு எற்றிக்
கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
விலங்குமாறு அறிகிலேன் எம்பெரு மானை
மேலைநோய் இம்மையே விடுவித் தானை.
தெளிவுரை : வயல்கள் வளம்படவும் அதனால் எல்லாக் குற்றங்களும் நீங்கவும் நீர்பெருகி, பொற்கட்டிகளைச் சுமந்து கொண்டு ஒளி விளங்குகின்ற சிறந்த முத்துக்களையும் மற்றும் பலவகை மணிகளையும் வீசி இரு கரைகளிலும் உள்ள பெரிய மரங்களை முறித்து ஈத்துக் கரையைத் தாக்கும் காவிரியானது, கரையில் உள்ள திருத்துருத்தியிலும் திருவேள்விக் குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் என்னுடைய குற்றங்களை நீக்கியவரும் ஆகிய எம்பெருமானை, குற்றமுடையவனும் நாய்போன்று கடையவனும் ஆகிய யான் நீங்குமாற்றை எண்ணேன்.
760. மங்கையோர் கூறுகந்து ஏறுகந்து ஏறி
மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடி அன்றிமற்று அறியேன்
அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார்
தவநெறி சென்றமர் உலகம்ஆள் பவரே.
தெளிவுரை : உமாதேவியை இடப்பாகத்தில் வைத்தும் இடபத்தை விரும்பி ஊர்ந்தும் பகைவர்களது முப்புரங்களை நீறுபட அழித்தவரது திருவடிகளை யன்றி வேறொன்றை அறியாதவனாகியும் அவன் அடியார்க்கு அடியவனாகியும் உள்ள நம்பியாரூரன் காவிரியினது கரையில் உள்ள திருத்துருத்தியிலும் திருவேள்விக்குடியிலும் உள்ள தலைவருக்குச் சேர்ப்பித்த இப் பாடல்களைப் பாடவல்லவர்கள் சிவலோகத்தை ஆள்வர்.
திருச்சிற்றம்பலம்

75. திருவானைக்கா (அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கா,திருச்சி மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
761. மறைகள் ஆயின நான்கும்
மற்றுள பொருள்களும் எல்லாம்
துறையும் தோத்திரத் திறையும்
தொன்மையும் நன்மையும் ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே.
தெளிவுரை : வேதங்கள் நான்கும் மற்றைய பொருள்களும் பல சமயங்களும் அவற்றில் புகழ்ந்து சொல்லப்படும் கடவுள்களும், இவையனைத்திற்கும் முன்னேயுள்ள முதற்பொருளும், வீடுபேறும் என்ற இவை எல்லாமாய் நிற்கின்ற, காவிரி நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, இவனே முதல்வன் என்று அறிந்து, நாள்தோறும் அடிபணிகின்றவர் எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலை உடையவர் ஆவார்.
762. வங்கம் மேவிய வேலை
நஞ்செழ வஞ்சர்கள் கூடித்
தங்கள் மேல்அட ராமை
உண்ணென உண்டிருள் கண்டன்
அங்கம் ஓதிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எங்கள் ஈசன்என் பார்கள்
எம்மையும் ஆளுடை யாரே.
தெளிவுரை : மரக்கலம் பொருந்திய கடலில் நஞ்சு தோன்ற, தேவர்கள் ஒருங்குகூடிச் சென்று, இந் நஞ்சினை உண்டருளாய் என்று வேண்டிக்கொள்ள, அவ் வேண்டுகோளை மறுக்காமல் உண்டு, அதனால் கறுத்த கண்டத்தை உடையவனாகியும், வேதத்திற்கு உரிய துணை நூல்களைச் செய்தவனும், திருவானைக் காவைத் தனதாக உடையவனும் ஆகிய முதல்வனை, இவனே எங்களுக்குத் தலைவன் என்று நாள்தோறும் அன்பு செய்கின்றவர் எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலை உடையவர் ஆவார்.
தாங்கள் இறவாமைப்பொருட்டு இறைவனுக்கு நஞ்சூட்டத் துணிந்தமை பற்றித் தேவரை வஞ்சகர்கள் என்றார்.
763. நீல வண்டறை கொன்றை
நேரிழை மங்கைஓர் திங்கள்
சால வாள்அர வங்கள்
தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலுள் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
ஏழு மாறுவல் லார்கள்
எம்மையும் ஆளுடை யாரே.
தெளிவுரை : வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரும், நுண்தொழில் அமைந்த அணிகளை அணிந்த கங்கா தேவியும் பிறை ஒன்றும் பல கொடிய பாம்புகளும் தங்கியிருக்கின்ற சிவந்த சடையையுடைய எம் தந்தையும், ஆல நிழலில் இருப்பவனும் திருவானைக் காவைத் தனதாக உடையவனும் ஆகிய எம் முதல்வனை, நாள்தோறும் அவன் தம்மோடு பொருந்தும் செயலினைச் செய்ய வல்லவர், எம்மையும் ஆட்கொள்வர்.
764. தந்தை யாய்உல குக்கோர்
தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்த மாயின பெருமான்
பரிசுடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே.
தெளிவுரை : உலகத்து உயிர்கட்கு நலத்தைக் கருதலின் தந்தையாய் நிற்கும் ஒப்பற்ற மூல தத்துவம் ஆனவரும், உண்மைத்தவம் ஆகிய பேரன்பை வளர்க்கும் இயல்புடையவர்களுக்குப் பற்றுக்கோடாகிய தலைவரும், பரிசைப் பெற்றவருக்குப் பெருங்கடவுளும், நீர்வள மிக்க திருவானைக்காவை இடமாக உடைய முதற் பொருளை எந்நாளும் எம் தந்தை எனக் கருதி அவர் திருவடிகளைப் புகலாக அடையும் மெய்யடியார் என் போல்வாரையும் ஆட்கொள்பவராவர்.
765. கணைசெந் தீஅர வம்நாண்
கல்வளை யும்சிலை யாகத்
துணைசெய் மும்மதில் மூன்றும்
சுட்டவ னேஉல குய்ய
அணையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இணைகொள் சேவடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே.
தெளிவுரை : உலகம் உய்தற் பொருட்டு, நெருப்பு அம்பாகியும், பாம்பு நாணியாகியும் மலை வில்லாகியும் நிற்க, ஒன்றற்கு ஒன்று துணை செய்கின்ற மதில்கள் மூன்றையும் எரித்தவனும், காவிரி நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடையவானகிய முதல்வனைப் பணிகின்றவர் எம்மையும் அடிமை கொண்டு ஆட்கொள்வர்.
766. விண்ணின் மாமதி சூடி
விலையிலி கலன்அணி விமலன்
பண்ணின் நேர்மொழி மங்கை
பங்கினன் பசுவுகந் தேறி
அண்ண லாகிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எண்ணு மாறுவல் லார்கள்
எம்மையும் ஆளுடை யாரே.
தெளிவுரை : விண்ணில் உள்ள சிறந்த பிறையைக் கண்ணியாகச் சூடி, விலைப்படும் தன்மையில்லாத அணி கலன்களை அணிகின்ற தூயவனும், உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனும், ஆனேற்றை விரும்பி ஏறுபவனும், யாவர்க்கும் தலைவனும் திருவானைக் காவைத் தனதாக உடையவனுமாகிய முதல்வனை நாள்தோறும் வழிபடுபவர் எம்மையும் ஆட்கொள்வர்.
767. தார மாகிய பொன்னித்
தண்துறை ஆடி விழுத்தும்
நீரில் நின்றடி போற்றி
நின்மலா கொள்என ஆங்கே
ஆரங் கொண்டஎம் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும்
எம்மையும் ஆளுடை யாரே.
தெளிவுரை : ஆரம் கொண்ட பெருமான் என்பது இத் தலத்துச் சுவாமியின் திருநாமங்களுள் ஒன்று.
சோழன் ஒருவன் பல பண்டங்களும் உளவாதற்கு ஏதுவாகிய காவிரியின் குளிர்ந்த துறையில் மூழ்கித் தனது முத்துவடத்தை வீழ்த்தி, வீழ்த்திய வருத்தத்தால் கரை ஏறாமல் நீரிலேயே நின்று இறைவனது திருவடியைத் தொழுது, இறைவனே எனது முத்து மாலையை ஏற்றுக்கொள் என்று வேண்ட, அங்ஙனமே அவ் ஆரத்தைத் திருமஞ்சனக் குடத்துள் புகச்செய்து ஏற்றுக் கொண்ட திருவானைக் காவைத் தனமாக உடைய முதல்வனுக்கு நாள்தோறும் அன்புடையவராய் இருப்பவர் நாள்தோறும் எம்மையும் ஆட்கொண்டு ஆளுவர்.
768. உரவம் உள்ளதோர் உழையின்
உரிபுலி அதளுடை யானை
விரைகொள் கொன்றையி னானை
விரிசடை மேற்பிறை யானை
அரவம் வீக்கிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இரவும் எல்லியும் பகலும்
ஏத்துவார் எமைஉடை யாரே.
தெளிவுரை : வலிமையுள்ள மானினது தோல், புலியினது தோல் இவைகளை உடையவனும், நறுமணத்தைக் கொண்ட கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், விரிந்த சடையின்மேல் பிறையை உடையவனும், பாம்பை உடம்பின் பல இடங்களில் கட்டியுள்ளவனும், திருவானைக்காவைத் தனதாக உடையவனும் ஆகிய முதல்வனை நாள்தோறும் இரவிலும் பகலிலும் துதிப்பவர் எம்மையும் அடிமைகொண்டு ஆளுவர். ஈற்றடிக்கு பாடபேதம் வருமாறு: இரவும் எல்லையும் ஏத்து, வார்எம்மை ஆளுடையாரே.
769. வலங்கொள் வார்அவர் தங்கள்
வல்வினை தீர்க்கும் மருந்து
கலங்கக் காலனைக் காலால்
காமனைக் கண்சிவப் பானை
அலங்கல் நீர்பொரும் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இலங்கு சேவடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே.
தெளிவுரை : தன்னை வலம் வருகின்றவர்களது வலிய வினையாகிய நோயைத் தீர்க்கின்ற மருந்தாய் உள்ளவனும், கூற்றுவனைக் காலாலும் காமனைக் கண்ணாலும் அவர்கள் கலங்கி அழியுமாறு வெகுண்டவனும் ஆகிய காவிரி நீர் கரையை மோதுகின்ற திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் அவனைப் பணிகின்றவர் எம்மையும் ஆட்கொள்வர்.
770. ஆழி யாற்குஅருள் ஆனைக்
காவுடை ஆதிபொன் அடியின்
நீழ லேசர ணாக
நின்றருள் கூர நினைந்து
வாழ வல்லவன் தொண்டன்
வண்டமிழ் மாலைவல் லார்போய்
ஏழு மாபிறப்பு அற்று
எம்மையும் ஆளுடை யாரே.
தெளிவுரை : சக்கரத்தை ஏந்தியவனாகிய திருமாலுக்கு அருள் புரிந்த, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனது திருவடி நிழலையே நினைந்து வாழ வல்லவன் தொண்டனாகிய நம்பியாரூரனது வளவிய இத் தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர் எழுவகைப்பட்ட பிறப்புக்களும் நீங்கப் பெற்று, மேலே சென்று எம்மையும் ஆட்கொள்வர்.
திருச்சிற்றம்பலம்

76. திருவாஞ்சியம் (அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில், ஸ்ரீவாஞ்சியம்,திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
771. பொருவ னார்புரி நூலர்
புணர்முலை உமையவ ளோடு
மருவ னார்மரு வார்பால்
வருவதும் இல்லைநம் அடிகள்
திருவ னார்பணிந் தேத்தும்
திகழ்திரு வாஞ்சியத்து உறையும்
ஒருவ னார்அடி யாரை
ஊழ்வினை நலியஒட் டாரே.
தெளிவுரை : நம் இறைவர், தீயவரோடு மாறுபடுபவர். முப்புரி நூலை அணிபவர்; உமையோடு கூடியிருத்தலை உடையவர். தம்மை அடையாதவரிடத்தில் வருவதும் இல்லை. திருமால் வணங்கித் துதிக்கின்ற புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் கோயில் கொண்டிருக்கும் ஒப்பற்றவராகிய அவர். தம் அடியவரை ஊழ்வினை வந்து நலிய ஒட்டாமல் உறுதியாகக் காப்பார்.
772. தொறுவில் ஆனிள ஏறு
துண்ணென இடிகுரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓடச்
செங்கயல் பங்கயத்து ஒதுங்கக்
கறுவி லாமனத் தார்கள்
காண்டகு வாஞ்சியத்து அடிகள்
மறுவி லாதவெண் ணீறு
பூசுதல் மன்னும்ஒன் றுடைத்தே.
தெளிவுரை : பசுங்கூட்டத்துடன் இளைய ஆனேற்றின் குரலுக்கு அஞ்சி வயல்களில் உள்ள வானை மீன்கள் ஓடவும், செவ்வரிகளையுடைய கயல்மீன்கள் தாமரைப் பூக்களில் ஒளியவும், பகையில்லாத மனத்தையுடைய சான்றோர் அவற்றைக் கண்டு இரங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருநீற்றைப் பூசுதல் சிறந்ததொரு கருத்தையுடையது. அக்கருத்தாவது, உலகிற்குப் பற்றுக்கோடு தாமேயென்பது.
773. தூர்த்தர் மூவெயில் எய்து
சுடுநுனைப் பகழியது ஒன்றால்
பார்த்த னார்திரள் தோள்மேல்
பன்னுளைப் பகழிகள் பாய்ச்சித்
தீர்த்த மாமலர்ப் பொய்கைத்
திகழ்தரு வாஞ்சியத்து அடிகள்
சாத்து மாமணிக் கச்சுஅங்கு
ஒருதலை பலதலை உடைத்தே.
தெளிவுரை : தீர்த்தமாகிய சிறந்த பூக்களையுடைய பொய்கைகளால் புகழ்பெற்று விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் வீற்றிருக்கும் இறைவர் நெறி பிறழ்ந்தவரது மூன்று மதில்களை ஓர் அம்பினால் அழித்து, ஒருவனாகிய அருச்சுனனது திரண்ட தோள்மீது பல கூரிய அம்புகளை அழுத்தி, தாம் கட்டுகின்ற பெரிய மாணிக்கத்தையுடைய கச்சு ஒரு பக்கத்தில் பல தலைகளையுடையதாய் இருக்கின்றது. இது வியப்பு.
ஐந்தலை நாகமே இறைவர்க்குக் கச்சாகலின், அஃது ஒரு பக்கம் பல தலைகளையும் மற்றொரு பக்கம் தலையின்மையையும் உடைத்தாயிற்று.
774. சள்ளை வெள்ளையங் குருகு
தானது வாம்எனக் கருதி
வள்ளை வெண்மலர் அஞ்சி
மறுகியொர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத்
துறைமல்கு வாஞ்சியத்து அடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும்
விகிர்தம்ஒன்று ஒழிகிலர் தாமே.
தெளிவுரை : சள்ளை என்னும் மீன் வள்ளைக் கொடியின் வெண்மையான மலரை, வெண்மையான குருகு என்று கருதி அஞ்சிச் சுழன்று, பின் வாளை மீனின் வாயிலே சென்று துள்ளுகின்ற, தெளிந்த நீரையுடைய பொய்கைத் துறைகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் வீற்றிருக்கும் இறைவர் திருநீற்றைப் பூசுகின்ற வேறுபாடு ஒன்றை எஞ்ஞான்றும் ஒழியாதே உடையர்.
775. மைகொள் கண்டரஎண் தோளர்
மலைமகள் உடன்உறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை
குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலங் கழனி
கமழ்புகழ் வாஞ்சியத்து அடிகள்
பைதல் வெண்பிறை யோடு
பாம்புடன் வைப்பது பரிசே.
தெளிவுரை : கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும் எட்டுத் தோள்களையும், மலை மகளோடு உடன் உறைகின்ற வாழ்க்கையையும், பறிக்கப்பட்ட வில்வ இலையால் ஆகிய மாலை விளங்குகின்ற சடை முடியையும் உடைய அழகர். நெய்தல் பூக்களையுடைய அழகிய கழனிகளில் தாழம் பூக்கள் மணம் வீசுகின்ற புகழ் அமைந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கிறார். இளைய வெண் பிறையோடு பாம்பைச் சேர்த்து அணிவதுதான் அவருக்கு இயல்பு. தம்முள் பகைமையுடைய பிறையோடு பாம்பைச் சேர்த்து அணிதல் எல்லாவற்றையும் தம் வண்ணமாக்கி ஏற்றலைக் குறிப்பதாம்.
776. கரந்தை கூவிள மாலை
கடிமலர் கொன்றையும் சூடிப்
பரந்த பாரிடம் சூழ
வருவர்எம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு
திகழ்தரு வாஞ்சியத்து உறையும்
மருந்த னார்அடி யாரை
வல்வினை நலியஒட் டாரே.
தெளிவுரை : தம் இயல்பு காரணமாக, கரந்தைப் பூவினாலும் வில்வ இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக் கொண்டு மிக்க பூத கணங்கள் புடைசூழ வருபவர் நம் இறைவர். திருத்தமான மாடங்கள் உயர்ந்து தோன்றுகின்ற புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் வீற்றிருக்கின்றார். அவர் அமுதம் போல்பவர். அவர் தம் அடியாரை வலிய வினைகள் வந்து துன்புறுத்த ஒட்டாமல் காப்பவர் ஆவார்.
777. அருவி பாய்தரு கழனி
அலர்தரு குவளையங் கண்ணார்
குருவி யாய்கிளி சேப்பக்
குருகினம் இரிதரு கிடங்கில்
பருவ ரால்குதி கொள்ளும்
பைம்பொழில் வாஞ்சியத்து உறையும்
இருவ ரால்அறி ஒண்ணா
இறைவனது அறைகழல் சரணே.
தெளிவுரை : குவளை மலர் போன்ற கண்களையுடைய மகளிர் நீர்வளமிக்க கழனிகளில் கதிர்களை ஆராய்கின்ற குருவிகளையும் கிளிகளையும் ஓட்டுவதால் குருகுகளின் கூட்டம் அஞ்சி நீங்குகின்ற கால்வாய்களில் பருத்த வரால் மீன்கள் துள்ளுகின்ற சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியத்தில் வீற்றிருப்பவரும், மால் அயன் என்பார்க்கு அறிய ஒண்ணாதவருமாகிய இறைவரது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளே நமக்குப் புகலிடம்.
778. களங்கள் ஆர்தரு கழனி
அளிதரக் களிதரு வண்டு
உளங்கள் ஆர்கலிப் பாடல்
உம்பரில் ஒலித்திடுங் காட்சி
குளங்க ளால்நிழல் கீழ்நற்
குயில்பல வாஞ்சியத்து அடிகள்
விளங்கு தாமரைப் பாதம்
நினைப்பவர் வினைவலி விலரே.
தெளிவுரை : நெற்களம் நிறைதற்கு ஏதுவாகிய வயல்கள் அன்பைத் தர, அதனால் மகிழ்வுற்ற வணடுகளின் இசை மேற்சென்று ஒலிக்கின்ற கேள்வியை. குளக்கரைகளில் உள்ள ஆலமரத்தின் கிழ்க் கிளையில் இருந்து நல்ல குயில்கள் பழகுகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவரது ஒளிமிக்க தாமரை மலர் போன்ற திருவடிகளை நினைப்பவர் வினையால் துன்பப்படமாட்டார்.
779. வாழை யின்கனி தானும்
மதுவிம்மு வருக்கையின் சுளையும்
கூழை வானரம் தம்மில்
கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டால்
செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
ஏழை பாகனை அல்லால்
இறையெனக் கருதுதல் இலமே.
தெளிவுரை : வாழைப் பழங்களையும் சாறுமிக்கு ஒழுகுகின்ற பலாப்பழத்தின் சுளைகளையம், எனக்கு வைத்த இப்பங்கு சிறிது என்று இகழ்ந்து, அறிவு குறைந்த குரங்குகள் தமக்குள் கலகம் செய்து, தாழை மட்டையும் வாழை மட்டையும் ஆகிய கோல்களால் சண்டை செய்து செருக்குக் கொள்கின்ற திருவாஞ்சியத்தில் வீற்றிருக்கும் மங்கை பங்காளனையல்லது வேறொருவரையாம் கடவுள் என்று நினைத்தல் இலம்.
780. செந்நெ லங்கலம் கழனித்
திகழ்தரு வாஞ்சியத்து உறையும்
மின்ன லங்கலஞ் சடைஎம்
இறைவனது அறைகழல் பரவும்
பொன்ன லங்கனல் மாடப்
பொழிலணி நாவல்ஆ ரூரன்
பன்ன லங்கனல் மாலை
பாடுமின் பத்தரு ளீரே.
தெளிவுரை : செந்நெற்களையுடைய அழகிய மரக்கலம் போலும் கழனிகளையுடைய, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் வீற்றிருக்கும் இனிய மாலைகளை யணிந்த சடையையுடைய எம் இறைவனது ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடிகளைத் துதித்த நல்ல மாடங்களையும் சோலைகளையும் உடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரனது பல அழகுகளையுடைய கற்கத்தகுந்த நல்ல பாமாலையை அடியார்களே பாடுங்கள்.
பாடினால் அவனை எளிதில் பெறுவீர்கள் என்பது குறிப்பெச்சம்.
திருச்சிற்றம்பலம்

77. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
781. பரவும் பரிசுஒன்று அறியேன்நான்
பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும்
எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத்
தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளோ.
தெளிவுரை : நீரோட்டத்தைக் கரவாமல் தரும் அருவி கமுகங்குலையை விழுங்க, தென்னை மரங்களின் குலைக்கீழ் உள்ள கரும்பு ஆலைகளின் ஓசையோடு கூடி ஒலிக்கின்ற அலைகளையுடைய காவிரியாற்றின் கரையில் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், யான் உம்மைத் துதிக்கும் முறையை இயல்பாகவே சிறிதும் அறியாதவன் ஆதலின், முன்பே உம்பால் வந்து வழிபடாது ஒழிந்தேன். இரவும் பகலும் உம்மையே நினைப்பேன். என்றாலும் அழுந்த நினையமாட்டேன். ஓலம்.
782. எங்கே போவேன் ஆயிடினும்
அங்கே வந்தென் மனத்தீராய்ச்
சங்கை ஒன்றும் இன்றியே
தலைநாள் கடைநாள் ஒக்கவே
கங்கை சடைமேல் கரந்தானே
கலைமான் மறியும் கனல்மழுவும்
தங்கும் திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளோ.
தெளிவுரை : கங்கையைச் சடையில் மறைத்துக் கொண்டவரே, கலைமான் குட்டியும், தரிக்கின்ற மழுவும் திருக்கரங்களில் தங்கப்பெற்ற, அலைகள் பொருந்திய காவேரி சூழ்ந்த திருவையாற்றை இடமாக உடைய சுவாமியே, நான் எங்கே போனாலும், அங்கே நீர் வந்து சந்தேகம் இல்லாமல் என்னை ஆட்கொண்ட முதல் நாளிலும் கடைசியாகிய இந்நாளிலும் ஒரே வகையாக என் மனத்தில் எழுந்தருளியிருக்கின்றீர். ஆதலால், என் குறையைத் தீர்த்து அருள்வீராக.
783. மருவிப் பிரிய மாட்டேன்நான்
வழிநின்று ஒழிந்தேன் ஒழிகிலேன்
பருவி விச்சி மலைச்சாரல்
பட்டை கொண்டு பகடாடிக்
குருவி ஓப்பிக் கிளிகடிவார்
குழல்மேல் மாலை கொண்டோட்டம்
தரவந் திரைக்கா விரிக் கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளோ.
தெளிவுரை : நீர் பரந்து பெருகி தினை விதைக்கப்பட்ட மலைச்சாரலில் பல பிரிவுகளாய்க் காணப்பட்டு யானைகளைப் புரட்டி, புனங்களில் குருவிகளையும் கிளிகளையும் ஓட்டித் தினையைக் காக்கும் மகளிரது கூந்தல்மேல் அணிந்த மாலைகளை ஈர்த்துக்கொண்டு ஓடுவதால், அழகிய அலைகளை உடைய காவிரிக் கரையில் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், யான் சிலப்போலப் பிரியமாட்டேன். என்றும் உம் வழியிலே நின்றுவிட்டேன். இனி ஒருகாலும் இந் நிலையினின்று நீங்கேன். ஓலம்  தான் பயன் கருதி நட்புச் செய்பவன் அல்லன் என்பதை விளக்குகின்றார்.
784. பழகா நின்று பணிசெய்வார்
பெற்ற பயன்ஒன்று அறிகிலேன்
இகழாது உமக்குஆட் பட்டோர்க்கு
வேக படமொன்று அரைச்சாத்தி
குழகா வாழைக் குலைத்தெங்கு
கொணர்ந்து கரைமேல் எறியவே
அழகார் திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளோ.
தெளிவுரை : வாழைக் குலைகளையும் தென்னங் குலைகளையும் கொண்டு வந்து கரைமேல் எறிதலால், அலைகளையுடைய காவிரியாற்றங்கரையில் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், உமக்கு அடிமைப் பட்டவர் முன்னே, நீர் ஒற்றை ஆடையை அரையில் உடுத்து நிற்றலால் உம்மை அணுகி நின்று உமக்குப் பணி செய்பவர் அதனால் பெற்ற பலன் ஒன்றையும் யான் அறியேன். ஓலம், ஏக படம் என்றது வடநூல் முடிபு.
785. பிழைத்த பிழையொன்று அறியேன்நான்
பிழையைத் தீரப் பணியாயே
மழைக்கண் நல்லார் குடைந்தாட
மலையும் நிலனும் கொள்ளாமைக்
கழைக்கொள் பிரசங் கலந்துஎங்கும்
கழனி மண்டிக் கையேறி
அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளோ.
தெளிவுரை : மழைபோலும் கண்களையுடைய மகளிர் நீரில் மூழ்கி விளையாட, மலையும் நிலமும் இடம் கொள்ளாதபடி பெருகி, மூங்கில் தேன் வயல்களில் நிறைந்து வரம்புகளின் மேல் ஏறி ஒலிக்கின்ற அலைகளையுடைய காவிரியாற்றங்கரையில் உள்ள திருவையாற்றை உமதாகக் கொண்ட அடிகளே ! அடியேன் உமக்குச் செய்த குற்றம் ஒன்றும் இலேன். தெரியாமல் செய்த பிழை இருக்குமாயின் அது நீங்க அருள்செய். ஓலம்.
786. கார்க்கொள் கொன்றை சடைமேல்ஒன்று
உடையாய் விடையாய் கையினால்
மூர்க்கர் புரமூன்று எரிசெய்தாய்
முன்னீ பின்னீ முதல்வன்நீ
வார்க்கொள் அருவி பலவாரி
மணியும் முத்தும் பொன்னுங்கொண்டு
ஆர்க்குங் திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளோ.
தெளிவுரை : கார்காலத்தில் மலரும் கொன்றை மலர் மாலையைச் சடைமேல் உடையவனே, விடையை ஏறுபவனே, திரிபுரங்களைச் சிரிப்பினால் எரித்தவனே, பல அருவிகள் வாரிக் கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக்களையும் கைக்கொண்டு வரும் அலைகளையுடைய காவிரியாற்றின் கரையில் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள், எல்லாவற்றுக்கும் முன்னவனும் நீயே; பின்னுள்ளவனும் நீயே: எப்பொருட்கும் முதல்வனும் நீயே ! ஓலம்.
787. மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப்
பற்றி உலகம் பலிதேர்வாய்
சிலைக்கொள் கணையால் எயில்எய்த
செங்கண் விடையாய் தீர்த்தன்நீ
மலைக்கொள் அருவி பலவாரி
மணியும் முத்தும் பொன்னுங்கொண்டு
அலைக்கும் திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளோ.
தெளிவுரை : உமாதேவியை இடப்பாகத்திற் கொண்டு உலக முழுவதும் பிச்சைக்குத் திரிபவனே, வில்லிடத்துக் கொண்ட அம்பினால் முப்புரத்தை அழித்த, சிவந்த கண்களையுடைய இடபத்தை உடையவனே, மலையில் பெருகிய பல அருவிகள் வாரிக்கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக்களையும் கைக்கொண்டு இருபக்கங்களையும் அரிக்கின்ற அலைகளையுடைய காவிரியாற்றின் கரையில் உள்ள திருவையாற்றை உனதாகக் கொண்ட அடிகளே, இறைவனே, ஓலம்.
788. போழும் மதியும் புனக்கொன்றை
புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ
உன்னைத் தொழுவார் துயர்போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழும் திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளோ.
தெளிவுரை : பிளந்தாற் போன்ற பிறைச்சந்திரனும் புனங்களில் உள்ள கொன்றை மலரும் நீரும் பொருந்திய முடியுள்ள புண்ணியனே, சுற்றி ஊர்கின்ற பாம்பை அணிந்த சுடர்களையுடைய ஒளிவடிவினனே, உன்னை வணங்குகின்றவர்களது துன்பம் நீங்குமாறு, அலைகளையுடைய காவிரியின் கரையில் உள்ள திருவையாற்றை உனதாக உள்ள அடிகளே, ஓலம். காவிரியில் மூழ்குபவரது துன்பங்கள் நீங்குமாற்றைக் கூறுகின்றார்.
789. கதிர்க்கொள் பசியே ஒத்தேநான்
கண்டேன் உம்மைக் காணாதேன்
எதிர்த்து நீந்த மாட்டேன்நான்
எம்மான் தம்மான் தம்மானே
விதிர்த்து மேகம் மழைபொழிய
வெள்ளம் பரந்து நுரைசிதறி
அதிர்க்கும் திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளோ.
தெளிவுரை : என் தந்தை தந்தைக்கும் பெருமானே, மேகங்கள் மழையைப் பொழிவதால் வருகின்ற அலைகளையுடைய காவிரியாற்றின் கரையிலுள்ள திருவையாற்றை உனதாகக் கொண்ட அடிகளே, நான் உம்மை, பசியுடையவன் நெறிகதிரைக் கண்டாற் போலக் கண்டேன். அவன் உணவைக் கண்டாற் போலக் காணேன் ஆயினேன். நீரின் வேகத்தை எதிர்த்து நீந்தி அக்கரையை அடைய நான் வல்லேன் அல்லேன். ஓலம்.
அக்கரைக்கண் கண்டது, பசியுடையவன் நெற்கதிரைக் கண்டதுபோன்றது. திருமுன்பு சென்று காண்பது, உணவைக் கண்டது போன்றது.
790. கூசி அடியார் இருந்தாலும்
குணம்ஒன் றில்லீர் குறிப்பிலீர்
தேச வேந்தன் திருமாலும்
மலர்மேல் அயனும், காண்கிலார்
தேசம் எங்கும் தெளித்தாடத்
தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும்
வாசம் திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளோ.
தெளிவுரை : நாடெங்கும் உள்ளவர்கள் ஐயமின்றி வந்து மூழ்குமாறு தெளிந்த நீராகிய அருவியைக் கொணர்ந்து வரும் அலைகளையுடைய காவிரியாற்றின் கரையில் உள்ள திருவையாற்றை உனதாக உடைய அடிகளே ! அடியவர்கள் தாம் தம் குறையைச் சொல்ல வெட்கப்பட்டாலும் நீரும் அவர்தம் குறையை அறிந்து தீர்க்கும் குணம் சிறிதும் இல்லீர். அவ்வாறு தீர்த்தல் வேண்டும் என்னும் எண்ணமும் இல்லீர். உம்மைத் திருமாலும் பிரமனும் கூடக் காண்கிலர். பிறர் எங்ஙனம் காண்பார் ! ஓலம்.
791. கூடி அடியார் இருந்தாலும்
குணம்ஒன் றில்லீர் குறிப்பிலீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன்
உம்மைத் தொண்டன் ஊரனேன்
தேடி எங்கும் காண்கிலேன்
திருவா ரூரே சிந்திப்பன்
ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளோ.
தெளிவுரை : அசைகின்ற அலைகளையுடைய காவிரியாற்றங்கரையில் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகளே, அடியார்கள் உம்மை விட்டு நீங்காமல் இருந்தாலும் நீர் அவர்களுக்கு அருள் பண்ணும் குணம் சிறிதும் இல்லீர்; அருள் பண்ணும் எண்ணமும் இல்லீர். நிற்க, நீர் என்பால் கோபங் கொண்டிருந்தும் யான் அதனைப் பாராட்டவில்லை. யான் உம்மைப் பலவிடத்தும் தேடியும் காணவில்லை. அதனால் உம்மை நேர்படக் கண்ட திருவாரூரையே நினைப்பேன் ஆயினேன். ஓலம்.
இறைவன் அருள்கூர்ந்து யாற்றுநீரை விலக அருளினார்; ஆகலின், இத் திருப்பதிகமும் ஏனைய திருப்பதிகங்கள் போல, தன்னை ஓதுவார்க்கு எல்லாப் பயனையும் தரும்.
திருச்சிற்றம்பலம்

78. திருக்கேதாரம் (அருள்மிகு கேதாரநாதர் திருக்கோயில், கேதார்நாத், ரிஷிகேஷ், உத்தராகன்ட்)
திருச்சிற்றம்பலம்
792. வாழ்வாவது மாயம்இது
மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல்
பசிநோய்செய்த பறிதான்
தாழாதுஅறம் செய்ம்மின்தடங்
கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக்
கேதாரமென் னீரே.
தெளிவுரை : இத் திருப்பதிகம், உலகத்தார்க்கு உறுதிப் பொருளை உணர்த்தி அருளிச் செய்தது.
உலகில் செல்வம் முதலியவற்றோடு வாழும் வாழ்க்கையானது நிலையில்லாதது. இவ்வாழ்வு மண்ணாய்ப் போவது நிச்சயம். பசி நோயினால் கொள்ளை கொள்ளப்படுதலின், பிறப்பென்னும் கடலிலே தத்தளித்து அமிழ்ந்து இவ் உடல் வாழ்க்கை வீண் போகும். ஆதலால், பின்னே பார்த்துக் கொள்வோம் என்று தாமதியாமல் நல்வினை செய்யுங்கள். பெரிய தாமரை போன்ற கண்களையுடைய திருமாலும் அவருடைய திருவுந்தித் தாமரை மலரில் உள்ள பிரமனும் முறையே திருவடியையும் முடியையும் காணும் பொருட்டுப் பூமியின் கீழும், ஆகாயத்தின் மேலும் போகும்படி சோதி வடிவுடன் நின்ற பெருமானது திருக்கேதாரம் என்று சொல்லுங்கள். அதுவே உம்மை உய்விக்கும்.
793. பறியேசுமந்து உழல்வீர்பறி
நரிகீறுவது அறியீர்
குறிகூவிய கூற்றங்கொளும்
நாளால்அறம் உளவே
அறிவானிலும் அறிவான்நல
நறுநீரொடு சோறு
கிறிபேசிநின்று இடுவார்தொழு
கேதாரம்என் னீரே.
தெளிவுரை : வேறொன்றும் செய்யாமல், உடம்பைச் சுமந்தே திரிகின்றவர்களே, இவ்வுடம்பு நரிகளால் கிழித்து உண்ணப்படுவதை அறிகின்றிலீர். குறித்த நாளில் உம்மை அழைப்பதற்குக் கூற்றுவன் நினைக்கின்ற நாளில், அவனைத் தடுப்பதற்கு உம்மிடம் அறங்கள் இல்லை அல்லவா ? ஆதலால், இப்போதே அறிய வேண்டுவனவற்றை அறியும் வானுலகத்தவரினும் மேலான அறிவுடன் நல்ல நறுமணத்தையுடைய நீரையும் சோற்றையும் விருந்தினருக்கு இன்சொற் பேசி இடுகின்றவர்கள், வணங்குகின்ற திருக்கேதாரம் என்று சொல்லுங்கள்.
794. கொம்பைப்பிடித்து ஒருக்காலர்கள்
இருக்கால்மலர் தூவி
நன்பன்னமை ஆள்வான்என்று
நடுநாளையும் பகலும்
கம்பக்களிற்று இனமாய்நின்று
சுனைநீர்களைத் தூவிச்
செம்பொற்பொடி சிந்துந்திருக்
கேதாரம்என் னீரே.
தெளிவுரை : உலகீர், யோக தண்டத்தை ஊன்றி, ஒரு வழிப்படுத்துகின்ற உயிர்ப்பினை உடைய யோகிகள், இவனே நம்மை ஆள்பவன் என்று நள்ளிரவிலும் பகலிலும் மந்திர ஒலியோடு மலர்களைத் தூவி விரும்பப்படுகின்ற இறைவனது ஆண் யானையின் கூட்டம் தொடர்ந்து வந்து நின்று பல சுனைகளின் நீரை இறைத்து, செம்பொன் பொடியை உதிர்க்கின்ற திருக்கேதாரம் என்று சொல்லுங்கள்.
795. உழக்கேஉண்டு படைத்துஈட்டிவைத்து
இழப்பார்களும் சிலர்கள்
வழக்கேஎனில் பிழைக்கேம்என்பர்
மதிமாந்திய மாந்தர்
சழக்கேபறி நிறைப்பாரொடு
தவமாவது செயன்மின்
நிழக்கேசலம் இடுவார்தொழு
கேதாரம்என் னீரே.
தெளிவுரை : அறிவை அழித்துக்கொண்ட மாந்தர்களே, பொருளைத் தேடி, உழக்கரிசியைச் சமைத்து உண்ணுதல் ஒன்றைச் செய்துவிட்டு, எஞ்சியவற்றைத் தொகுத்து வைத்துப்பின் இழந்து போவாரும் சிலர் இவ்வுலகில் உளர். அவர்கள் அறம் என்றாலே அஃது எமக்கு வேண்டா; யாம் உண்டு உயிர் வாழ்வோம் என்று போவர். அத்தகைய வஞ்சனையாளர்களோடு கூடி, அவ்வாறு செய்யாதீர்கள். விடியற் காலையில் காலைச் சந்தியைச் செய்கின்றவர்கள் வழிபடுகின்ற திருக்கேதாரம் என்று சொல்லுங்கள்.
உழக்கு, நாழியின் நான்கில் ஒரு பங்கு  முகத்தல் அளவை.
796. வாளோடிய தடங்கண்ணியர்
வலையில் அழுந்தாதே
நாளோடிய நமனார்தமர்
நணுகாமுனம் நணுகி
ஆளாய்உய்ம்மின் அடிகட்குஇடம்
அதுவேஎனல் இதுவே
கீளோடுஅரவு அசைத்தானிடம்
கேதாரம்என் னீரே.
தெளிவுரை : உலகீர் ! நாட்கள் ஓடிவிட்டன. ஆதலால் இயமனது தூதுவர் வருவதற்கு முன்னே அழகிய மகளிரது ஆசையாகிய வலையில் சிக்காமல் இப்போதே இறைவனை அடைந்து அவனுக்கு ஆட்பட்டு உய்யும் வழியைத் தேடுங்கள். அதற்கு இடமாவது யாதெனின், இங்குச் சொல்லப்பட்ட திருக்கேதாரமே யாகும். அரையில் கீளுடன் பாம்பைக் கட்டியுள்ள அவனது இடத்தைத் துதியுங்கள்.
797. தனிசாலைகள் தவமாவது
தம்மைப்பெறில் அன்றே
குளியீர்உளம் குருக்கேந்திரங்
கோதாவிரி குமரி
தெளியீர்உளம் சிபர்ப்பதம்
தெற்குவடக் காகக்
கிளிவாழைஒண் கனிகீறிஉண்
கேதாரம்என் னீரே.
தெளிவுரை : உலகீர், தேவ கோட்டங்கள் தவச்சாலைகளாய் நின்று பயன் தருவது, மக்கள் அவ்விடங்களை அடைந்தால் அன்றோ? இதனை மனத்தில் கொள்ளுங்கள். தெற்கில் உள்ள கோதாவரி, குமரி என்னும் தீர்த்தங்களிலும், வடக்கில் குரு÷க்ஷத்திரத்தில் உள்ள தீர்த்தங்களிலும் சென்று முழுகுங்கள். அவ்வாறே தெற்கில் சீபர்ப்பதத்தையும் வடக்கில் திருக்கேதாரத்தையும் சென்று வணங்கித் துதியுங்கள்.
இத் திருப்பாடலுள் குமரி முதல் இமயம் வரை யாத்திரை சென்று தீர்த்தங்களில் மூழ்குமாறும் தலங்களை வணங்குமாறும் அருளுகின்றார்.
798. பண்ணின்தமிழ் இசைபாடலின்
பழவேய்முழவு அதிரக்
கண்ணின்ஒளி கனகச்சுனை
வயிரம்அவை சொரிய
மண்நின்றன மதவேழங்கள்
மணிவாரிக்கொண்டு எறியக்
கிண்என்றிசை முரலும்திருக்
கேதாரம்என் னீரே.
தெளிவுரை : உலகீர், பண்ணாகிய தமிழ்ப் பாடலினது இசையைப் பாடுமிடத்து, அதற்கு இயையப் பழைமையானதாகிய வேய்ங்குழலும் மத்தளமும் ஒலித்தலினாலும், கண்ணுக்கு இனிதாகிய ஒளியையுடைய பொன் வண்ணமான சுனைகள் வயிரங்களை அலைகளால் எடுத்து வீசுவதாலும், நிலத்தில் நிற்கின்ற மதயானைகள் மாணிக்கங்களை வாரி இறைத்தலினாலும் கிண் என்ற ஓசை இடைவிடாமல் ஒலிக்கின்ற திருக்கேதாரம் என்று சொல்லுங்கள்.
799. முளைக்கப்பிடி முகமன்சொலி
முதுவேய்களை இறுத்துத்
துளைக்கைக்களிற் றினமாய்நின்று
சுனைநீர்களைத் தூவி
வளைக்கைப்பொழி மழைகூர்தர
மயில்மான்பிணை நிலத்தைக்
கிளைக்கமணி சிந்துந்திருக்
கேதாரம்என் னீரே.
தெளிவுரை : உலகீர் ! சிறிய கையை யுடைய பெண் யானைகள் ஆண் யானைகளுக்கு உறவாய் நின்று, முகமன் கூறி, பெரிய மூங்கில்களை ஒடித்துக் கொடுத்து சுனைகளின் நீரைத் தெளித்தலால் அவற்றின் துதிக்கையிலிருந்து மழை மிகுதியாக, மயிலும் பெண் மானும் நிலத்தைக் கிண்டுதலால் மாணிக்கங்கள் தெறிக்கின்ற திருக்கேதாரம் என்று சொல்லுங்கள்.
800. பொதியேசுமந்து உழல்வீர்பொதி
அவமாவதும் அறியீர்
மதிமாந்திய வழியேசென்று
குழிவீழ்வதும் வினையால்
கதிசூழ்கடல் இலங்கைக்குஇறை
மலங்கவரை அடர்த்துக்
கெதிபேறுசெய்து இருந்தானிடம்
கேதாரம்என் னீரே.
தெளிவுரை : உலகீர் ! நீவிர், இறைச்சிப் பொதியாகிய உடம்பைச் சுமந்து திரிதல் ஒன்றையே செய்வீர். அப்பொதி தான் பயனற்று ஒழிவதை அறிய மாட்டீர். அறிவை இழந்த வழியிலே சென்று நீவிர் குழியில் வீழ்வதும் நும் வினைப் பயனேயாம். இதனை விடுத்து, முழுதும் கடலாற் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனாகிய இராவணன் மெலிவடையும்படி அவனை மலையால் முன்பு நெருக்கிப் பிறகு நன்னிலையைப் பெறச் செய்து, தான் அம்மலைமேல் இனிது இருந்தவனாகிய சிவபெருமானது இடம் திருக்கேதாரமே. அதனைத் துதியுங்கள்.
801. நாவின்மிசை அரையன்னொடு
தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவன் அடியார்களுக்கு
அடியான்அடித் தொண்டன்
தேவன்திருக் கேதாரத்தை
ஊரன்உரை செய்த
பாவின்தமிழ் வல்லார்பர
லோகத்திருப் பாரே.
தெளிவுரை : தமிழ்ப் பாடலைப் பாடிய திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் மற்றும் எவராயினும் சிவனடியார்களுக்கு அடியனாகி அவர்கட்கு அடித்தொண்டு செய்பவனாகிய நம்பியாரூரன் இறைவனது திருக்கேதாரத்தைப் பாடிய இனிய தமிழ்ப் பாடலைப் பாட வல்லவர்கள் எல்லாவற்றிற்கும் மேலுள்ள உலகமாகிய சிவலோகத்தில் இருப்பவராவர்.
திருச்சிற்றம்பலம்

79. திருப்பருப்பதம் (அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம், கர்நூல் மாவட்டம், ஆந்திரா)
திருச்சிற்றம்பலம்
802. மானும்மரை இனமும்மயில்
இனமும்கலந்து எங்கும்
தாமேமிக மேய்ந்துதடம்
சுனைநீர்களைப் பருகிப்
பூமாமரம் உரிஞ்சிப்பொழில்
ஊடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழல்துயில்
சீபர்ப்பத மலையே.
தெளிவுரை : இத் திருப்பதிகம், திருப்பருப்பதம் என்னும் சிவபிரானது திருமலையைச் சிறப்பித்து அருளிச் செய்தது.
மான்களின் கூட்டமும் மரைகளின் கூட்டமும் மயில்களின் கூட்டமும் எங்கும் பொருந்தித் தம் விருப்பப்படியே தமக்குரிய உணவுகளைத் தேடி உண்டு, சுனைகளில் உள்ள நீரைக் குடித்து, பூத்த பெரிய மரங்களில் உராய்ந்து, அவற்றின் செறிவூடே சென்று, தேமாமரச் சோலையின் நிழலில் உறங்குகின்ற திருப்பருப்பதம் என்னும் மலையே, எங்கள் சிவபிரானது மலை.
எங்கள் சிவபிரானது மலை என்பது சொல்லெச்சம். இம்மலை ஸ்ரீசைலம் எனவும் வழங்கப்படும்.
803. மலைச்சாரலும் பொழிற்சாரலும்
புறமேவரும் இனங்கள்
மலைப்பாற்கொணர்ந்து இடித்தூட்டிட
மலங்கித்தம களிற்றை
அழைத்தோடியும் பிளிறுஈயவை
அலமந்துவந்து எய்த்துத்
திகைத்தோடித்தம் பிடிதேடிடும்
சீபர்ப்பத மலையே.
தெளிவுரை : குறவர்கள் வெளி இடங்களிலிருந்து வருகின்ற யானைகளைப் பிடித்து, தங்கள் மலைக்குக் கொண்டு வந்து, கட்டி வைத்து அவைகளைத் துன்புறுத்தி உணவை உண்பிக்க. அதனைக் கண்ட பெண் யானைகள் தமது ஆண் யானைகளும் அவர்களால் பற்றப்படுங்கொல் என மலங்கலங்கி அலைகளை அழைத்து ஓடவும், அதனை அறியாமல் அந்த ஆண் யானைகள் தம் பெண் யானைகள் அவர்களால் பிடிபட்டனவோ என மருண்டு பிளிறி, பல இடங்களில் திரிந்து அவைகளைக் காணாமல் இளைத்து வந்து மீளவும் செய்வது அறியாமல் திகைத்து, அவைகளைத் தேடி ஓடுகின்ற திருப்பருப்பதம் என்னும் மலையே, எங்கள் சிவபிரானது மலை.
804. மன்னிப்புனம் காவல்மட
மொழியாள்புனங் காக்கக்
கன்னிக்கிளி வந்துகவைக்
கோலிக்கதிர் கொய்ய
என்னைக்கிளி மதியாதென்று
எடுத்துக்கவண் ஒலிப்பத்
தென்னற்கிளி திரிந்தேறிய
சீபர்ப்பத மலையே.

தெளிவுரை : தினைப்புனம் காவல் செய்யும் குறமகள் அங்குத் தங்கியிருக்குங்கால், இளம் பெண்போலும் கிளி வந்து திளைத்த தாளின்கண் உள்ள கதிர்களைக் கவர, அதனைக் கண்டு அவள், இக்கிளி என்னை மதியாது போலும் என்று சினந்து அதன்மீது கவண் கல்லை வீச, அக் கிளி வெளியேறுகின்ற திருப்பருப்பதம் என்னும் மலையே, எங்கள் சிவபெருமானது மலை.
805. மையார்தடங் கண்ணார்மட
மொழியாள்புனம் காக்கக்
செவ்வேதிரிந்து ஆயோஎனப்
போகாவிட விளிந்து
கைபாவிய கவணால்மணி
எறியஇரிந் தோடிச்
செவ்வாயன கிளிபாடிடும்
சீபர்ப்பத மலையே.
தெளிவுரை : அழகிய கண்களையும் இளமையான சொற்களையும் உடைய குறமகள் தினைப்புனத்தைக் காக்கும்பொருட்டு, பல இடத்தும் திரிந்து ஆயோ என்று சொல்லி ஓட்டவும், அவை போகாமையால் வருந்தி, கவண் கல்லை வீச, கிளி அஞ்சி ஓடி ஒலிக்கின்ற,  திருப்பருப்பதம் என்னும் மலையே, எங்கள் சிவபெருமானது மலை.
806. ஆனைக்குலம் இரிந்தோடித்தன்
பிடிசூழலில் திரியத்
தானப்பிடி செவிதாழ்த்திட
அதற்குமிக இரங்கி
மானக்குற அடல்வேடர்கள்
இலையாற்கலை கோலித்
தேனைப்பிழிந்து இனிதுஊட்டிடும்
சீபர்ப்பத மலையே.
தெளிவுரை : ஆண் யானைகளின் கூட்டம், தனது பெண் யானைகளின் கூட்டம் சாரலிற் பல இடங்களிலும் சென்று திரிதலினால் அதனைக் காணாமல் தேடி ஓட, அதேபோல் பெண் யானைகளும் தேடி அலைந்து செவி சாய்த்து நிற்க, அந் நிலைக்கு இரங்கி வீரம் பொருந்திய வேடர்கள், இலைகளால் தொன்னை தைத்து, அவைகளில் தேனைப் பிழிந்து வார்த்து அப்பெண் யானைக் கூட்டத்திற்கு இனிதாக ஊட்டுகின்ற திருப்பருப்பதம் என்னும் மலையே, எங்கள் சிவபெருமானது மலை. குறவர் என்பது சாதி குறித்தும், வேடர் என்பது தொழில் குறித்தும் நின்றன.
807. மாற்றுக்களிறு அடைந்தாய்என்று
மதவேழங்கை எடுத்தும்
ஊற்றித்தழல் உமிழ்ந்தும் மதம்
பொழிந்தும்முகம் சுழியத்
தூற்றத்தரிக் கில்லேன்என்று
சொல்லிஅயல் அறியத்
தேற்றிச்சென்று பிடிசூளறும்
சீபர்ப்பத மலையே.
தெளிவுரை : மதத்தையுடைய ஆண் யானை ஒன்று தன் பெண் யானையை, நீ மற்றோர் ஆண் யானையைச் சார்ந்தது என் என்று சொல்லிக் கையை உயர எடுத்துச் சினம் மிகுந்து, கண்களினின்று நெருப்புப் பொறியைச் சிதறி, மதநீரைப் பொழிந்து முகத்தைச் சுளிக்க, அதனைக் கண்ட பெண் யானை, நீர் இவ்வாறு அடாப்பழி சொல்லித் தூற்றின் உயிர் தரிக்கலாற்றேன் என்று, அயலறியத் தனது தவறின்மையைச் சூளுறைத்துக் காட்டி, அந்த ஆண் யானையைத் தெளியப்பண்ணி அதனை அடைகின்ற திருப்பருப்பதம் என்னும் மலையே, எங்கள் சிவ பெருமானது மலை.
808. அப்போதுவந்து உண்டீர்களுக்கு
அழையாதுமுன் இருந்தேன்
எப்போதும்வந்து உண்டால்எமை
எமர்கள் சுழி யாரோ
இப்போதுஉமக்கு இதுவேதொழில்
என்றோடிஅக் கிளியைச்
செப்பேந்தின முலையாள்எறி
சீபர்ப்பத மலையே.
தெளிவுரை : தினைப்புனத்தைக் காக்கின்ற குறப்பெண் தினையை உண்ண வந்த கிளிகளைப் பார்த்து, முன்பு வந்து தினையை உண்ட உங்களுக்கு இரங்கி, உங்களை அதட்டாமல் அப்போது விட்டு விட்டேன். ஆயினும், நீங்கள் இடைவிடாமல் வந்து தினையை உண்டால் எங்களை எங்கள் உறவினர் வெகுள மாட்டார்களோ? ஆதலின், இப்போது உமக்குச் செய்யத் தக்க செயல் இதுதான் என்று சொல்லி அவைகளைக் கவணால் எறிகின்ற, திருப்பருப்பதம் என்னும் மலையே, எங்கள் சிவ பெருமானது மலை.
809. திரியும்புரம் நீறாக்கிய
செல்வன்தன கழலை
அரியதிரு மாலோடுஅயன்
தானும்அவர் அறியார்
கரியின்இனம் ஓடும்பிடி
தேன்உண்டவை களித்துத்
திரிதந்தஐ திகழ்வாற்பொலி
சீபர்ப்பத மலையே.
தெளிவுரை : ஆண் யானைகளின் கூட்டத்தோடு பெண் யானைகளின் கூட்டம் தேனை உண்டு, பின் அவ் இரு கூட்டங்களும் களித்துத் திரிகின்ற அழகு விளங்குவதால், பொலிவு எய்திய திருப்பருப்பத மலையில் வானத்தில் திரிகின்ற முப்புரங்களைச் நீறாகச் செய்த செல்வனாகிய சிவபெருமானது திருவடிகளை ஏனையோர்க்கு அரிய திருமாலும் பிரமனும் ஆகிய அவர் தாமும் காணமாட்டார்.
810. ஏனத்திரள் கிளைக்கஎரி
போலமணி சிதறத்
தீயென்றவை மலைச்சாரலில்
திரியும்கர டீயும்
மானும்மரை இனமும்மயில்
மற்றும்பல எல்லாம்
தேனுண்பொழில் சோலைமிகு
சீபர்ப்பத மலையே.
தெளிவுரை : தீயென்றவை என்பதற்கு ஏனல்லவை என்பது பாடபேதம்.
மலைச்சாரலில் பன்றியின் கூட்டம் நிலத்தை உழ, அவ்விடத்தினின்றும் நெருப்புப் போல மாணிக்கங்கள் வெளிப்பட, அவற்றைக்கண்டு தினைக் கூட்டத்தையுடைய மலைச் சாரலை விடுத்து ஓடிய கரடியும் மானும் மரைக்கூட்டமும் மயிலும் மற்றும் பலவும் ஆகிய எல்லாம் பின்பு தேனை உண்டு களிக்கின்ற பூஞ்சோலைகளும் பிற சோலைகளும் மிகுந்திருக்கின்ற திருப்பருப்பதம் என்னும் மலையே, எங்கள் சிவ பெருமானது மலை.
கரடி என்பது கரடீ என நீண்டது செய்யுள் விகாரம்.
811. நல்லாரவர் பலர்வாழ்தரு
வயல்நாவல வூரன்
செல்லல்உற அரியசிவன்
சீபர்ப்பத மலையை
அல்லல்அவை தீரச்சொன
தமிழ்மாலைகள் வல்லார்
ஒல்லைசெல உயர்வானகம்
ஆண்டங்குஇருப் பாரே.
தெளிவுரை : துன்பம் உறுதல் இல்லாத சிவபெருமானது திருப்பருப்பத மலையை, நல்லவர் பலர் வாழ்வதும் வயல்களை உடையதுமான திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் யாவரது துன்பமும் தீருமாறு பாடிய இத் தமிழ்ப் பாமாலைகளைப் பாட வல்லவர்கள் விரைவிலேயே விண்ணுலகத்தை அடைவர்.
திருச்சிற்றம்பலம்

80. திருக்கேதீச்சரம் (அருள்மிகு கேத்தீஸ்வரர் திருக்கோயில், கேதீஸ்வரம், இலங்கை)
திருச்சிற்றம்பலம்
812. நத்தார்புடை ஞானன்பசு
ஏறிந்நனை கவிழ்வாய்
மத்தம்மத யானைஉரி
போர்த்தமழு வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு
பாலாவியின் கரைமேல்
செத்தார்எலும்பு அணிவான்திருக்
கேதீச்சரத் தானே.
தெளிவுரை : விரும்புதல் பொருந்திய பூதப்படைகளையுடைய ஞான உருவினனும், மதத்தையுடைய யானையினது தோலைப் போர்த்த மணவாளக் கோலத்தினனும் ஆகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளிய பெருமான். அடியார்கள் வணங்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல், இறந்தவர்களது எலும்பை அணிபவனாகக் காணப்படுகிறான்.
813. சுடுவார்பொடி நீறுந்நல
துண்டப்பிறைக் கீளும்
கடமார்களி யானைஉரி
அணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
திடமாவுறை கின்றான்திருக்
கேதீச்சரத் தானே.
தெளிவுரை : திருநீற்றையும், நல்ல பிளவாகிய பிறையையும், கீளினையும், யானையினது தோலையும், கறுத்த கண்டத்தையும் உடைய பெருமான், திருக்கேதீச்சரத்தில் பாலாவியாற்றின் கரைமேல் மங்கை ஒருத்தியோடு நிலையாக வாழ்பவனாய்க் காணப்படுகின்றான்.
814. அங்கம்மொழி அன்னாரவர்
அமரர்தொழுது ஏத்த
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன்
பாலாவியின் கரைமேல்
செங்கண்அரவு அசைத்தான்திருக்
கேதீச்சரத் தானே.
தெளிவுரை : பிளவு செய்த பிறையைச் சூடினவனாகிய திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வேதத்தின் அங்கங்களைச் சொல்லுகின்ற அத் தன்மையையுடைய அந்தணர்களும் தேவர்களும் வணங்கித் துதிக்க மரக்கலம் நிறைந்த, கடல் சூழ்ந்த மாதோட்டம் என்னும் நல்ல நகரத்தில் பாலாவியாற்றின் கரைமேல் பாம்பைக் கட்டியுள்ளவனாய்க் காணபப்டுகின்றான்.
815. கரியகறைக் கண்டன்நல்ல
கண்மேல் ஒரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ் செய்யும்
மாதோட்டநன் னகருள்
பரியதிரை எறியாவரு
பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான்திருக்
கேதீச்சரத் தானே.
தெளிவுரை : கருமையாகிய நஞ்சையுடைய கண்டத்தை உடையவனும், நல்ல இரு கண்கள் மேலும் மற்றொரு கண்ணையுடையவனும், திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனுமாகிய பெருமான், வண்டுகள் யாழின் இசையை உண்டாக்குகின்ற மாதோட்டம் என்னும் நல்ல நகரத்தில் பருத்த அலைகளை வீசிக் கொண்டு வருகின்ற பாலாவியாற்றின் கரைமேல், ஆராயத்தக்க வேதங்களில் வல்லவனாய்க் காணப்படுகின்றான்.
816. அங்கத்துறு நோய்கள்அடி
யார்மேல்ஒழித்து அருளி
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கம்செய்த மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
தெங்கம்பொழில் சூழ்ந்திருக்
கேதீச்சரத் தானே.
தெளிவுரை : தம் அடியார்களுக்கு வரும் நோய்களை முற்றக் களைந்து அருள்பவனாகிய சிவபெருமான். மரக்கலங்கள் நிறைந்த கடல் சூழ்ந்த மாதோட்டம் என்னும் நல்ல நகரத்தில் தனது திருமேனியில் ஒரு பாதியை அழகு செய்கின்ற மங்கை ஒருத்தியுடன் பாலாவியாற்றின் கரைமேல் தென்னஞ் சோலை சூழ்ந்த திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனாய்க் காணப்படுகின்றான்.
817. வெய்யவினை யாயஅடி
யார்மேல்ஒழித்து அருளி
வையம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பையேர்இடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
செய்யகடை முடியான்திருக்
கேதீச்சரத் தானே.
தெளிவுரை : திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தன் அடியவர்மேல் உள்ள கொடிய வினைகளாய் உள்ளனவற்றை முற்ற ஒழித்து நின்று, நிலவுலகத்தில் உள்ளார் உணர்ந்து மகிழ்கின்ற கடல் சூழ்ந்த மாதோட்டம் என்னும் நகரத்தில் பாம்பு போலும் இடையினையுடையவளாகிய ஒருத்தியோடு பாலாவியாற்றின் கரைமேல் சிவந்த சடை முடியை உடையவனாய்க் காணப்படுகின்றான்.
818. ஊனத்துறு நோய்கள்அடி
யார்மேல்ஒழித்து அருளி
வானத்துறு மலியுங்கடல்
மாதோட்டநன் னகரில்
பானத்துறும் மொழியாளொடு
பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயிறு அணிந்தான்திருக்
கேதீச்சரத் தானே.
தெளிவுரை : திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான் தன் அடியார்களின் நோய்களை முற்ற  ஒழித்து நின்று அலைகளால் வானத்தைப் பொருந்துகின்ற நீர் நிறைந்த கடல் சூழ்ந்த மாதோட்டம் என்னும் நல்ல நகரத்தில் பாலும் விரும்பத்தக்க மொழியை உடையவளாகிய ஒருத்தியோடு பாலாவியாற்றின் கரைமேல், பன்றியின் கொம்பை அணிந்தவனாய்க் காணப்படுகின்றான்.
819. அட்டன்அழ காகஅரை
தன்மேல்அரவு ஆர்த்து
மட்டுண்டுவண்டு ஆலும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பட்டவ்வரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேல்
சிட்டன்நமை ஆள்வான்திருக்
கேதீச்சரத் தானே.
தெளிவுரை : அட்ட மூர்த்தமாய் நிற்பவனாகிய திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது அரையில் பாம்பை அழகாகக் கட்டிக்கொண்டு வண்டுகள் தேனை உண்டு ஆரவாரிக்கின்ற சோலைகளையுடைய மாதோட்டம் என்னும் நல்ல நகரத்தில் பட்டத்தையணிந்த அழகிய நெற்றியையுடைய ஒருத்தியோடு பாலாவியாற்றின் கரைமேல் மேலானவனாயும் நம்மை ஆளுபவனாயும் காணப்படுகின்றான்.
820. மூவரென இருவரென
முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பாவம்வினை அறுப்பார்பயில்
பாலாவியின் கரைமேல்
தேவன்எனை ஆள்வான்திருக்
கேதீச்சரத் தானே.
தெளிவுரை : மூன்று கண்களையுடைய மூர்த்தியாகிய திருக்கேதீச்சரத்தில் கோயில் கொண்டிருக்கின்ற பெருமான், மாமரங்களின் கனிகள் தாழத் தொங்குகின்ற சோலைகளையுடைய மாதோட்டம் என்னும் நல்ல நகரத்தில்,  பாவத்தையும் இருவினைகளையும் அறுக்க விரும்புவோர் பலகாலும் வந்து மூழ்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல், மூவராகியும் இருவராகியும் முதற்கடவுளாகியும் நின்று, என்னை ஆள்பவனாய்க் காணப்படுகின்றான்.
821. கறையார்கடல் சூழ்ந்தகழி
மாதோட்டநன் னகருள்
சிறையார்பொழில் வண்டியாழ்செயும்
கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித்
தொண்டன்உரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்
கூடாகொடு வினையே.
தெளிவுரை : கறுப்பு நிறம் பொருந்திய கடல் சூழ்ந்த கழியையுடைய மாதோட்டம் என்னும் நல்ல நகரத்தின்கண் உள்ள சிறகுகள் பொருந்திய வண்டுகள் யாழிசை போன்ற இசையை உண்டாக்குகின்ற சோலைகளை உடைய திருக்கேதீச்சரத்தில் கோயில் கொண்டிருக்கின்ற பெருமானை, அவனுக்கு அடித் தொண்டனாகிய வேதத்தைச் சொல்லுகின்ற புகழையுடைய நம்பியாரூரன் பாடிய குறைதல் இல்லாத இத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட, கொடிய வினைகள் வந்து பொருந்தமாட்டா.
மறை என்பது வேதத்தையும் திருப்பதிகத்தையும் எனவும். ஆர்க்கும் என்றது ஓதுதலையும். அருளிச் செய்தலையும் எனவும் இவ்விரு பொருள் கொள்க.
திருச்சிற்றம்பலம்

81. திருக்கழுக்குன்றம் (அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுகுன்றம்,காஞ்சிபுரம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
822. கொன்று செய்த கொடுமை
யாற்பல சொல்லவே
நின்ற பாவ வினைகள்
தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின்
தேவர் பிரானிடம்
கன்றி னோடு பிடிசூழ்
தண்கழுக் குன்றமே.
தெளிவுரை : இத் திருப்பதிகம் திருக்கழுக்குன்றத்தில் இறைவரை வணங்கிப் பெற்ற இன்ப மீதூர்வால், அவ் இன்பத்தினை அனைவரும் பெறுமாறு அறிவுறுத்தி அருளிச் செய்தது.
உலகீர், தேவர்களுக்குத் தலைவனாகிய சிவ பெருமானது இடம், பிடியானைகள் தங்கள் கன்றுகளோடு சூழ்ந்திருக்கும் தண்ணிய திருக்கழுக்குன்றமே. அதனை. பிற உயிர்களை வருத்துமாற்றால் செய்த கொடுஞ் செயல்களால் பலரும் பல இகழ் உரைகளைச் சொல்லுமாறு இழிவெய்தநின்ற பாவமாகிய வினைகள் பலவும் நீங்குதற் பொருட்டுப் பலகாலும் சென்று வணங்குங்கள்.
823. இறங்கிச் சென்று தொழுமின்
இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றைச் சடையன்
எங்கள் பிரானிடம்
நிறங்கள் செய்த மணிகள்
நித்திலங் கொண்டிழி
கறங்கு வெள்ளை அருவித்
தண்கழுக் குன்றமே.
தெளிவுரை : உலகத்தவர்களே ! கொன்றைமாலை யணிந்த சடையை யுடைய எங்கள் பெருமானது இடம், பல நிறங்களையும் காட்டுகின்ற மணிகளோடு முத்தினையும் தள்ளிக் கொண்டு பாய்கின்ற ஒலிக்கும் வெண்மையான அருவிகளையுடைய குளிர்ந்த திருக்கழுக்குன்றமே. அதனைத் தலை வணங்கிச் சென்று, இனிய இசைகளைப் பாடி வழிபடுங்கள்.
824. நீள நின்று தொழுமின்
நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள்
அல்கி அழிந்திடத்
தோளும் எட்டும் உடைய
மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையும்
தண்கழுக் குன்றமே.
தெளிவுரை : உலகத்தவரே ! நம்மை ஆளுகின்ற நம் வினைகள் குறைந்து முழுதும் ஒழிதற் பொருட்டு, தோள்கள் எட்டையும் உடைய மாணிக்கம் போன்ற ஒளியை உடையவனாகிய நீலகண்டன் கோயில் கொண்டிருக்கின்ற குளிர்ந்த திருக்கழுக்குன்றத்தை நாள்தோறும் முறைப்படி நீண்டநேரம் வழிபடுங்கள்.
825. வெளிறு தீரத் தொழுமின்
வெண்பொடி ஆடியை
முளிறுஇ லங்குமழு வாளன்
முந்தி உறைவிடம்
பிளிறு தீரப் பெருங்கைப்
பெய்ம்மதம் மூன்றுடைக்
களிறி னோடு பிடிசூழ்
தண்கழுக் குன்றமே.
தெளிவுரை : உலகில் உள்ளவர்களே ! வெம்மை பொருந்திய மழுப்படையையுடைய சிவபெருமான் முற்பட்டுக் கோயில் கொண்டிருக்கும் இடம், பிளிறுகின்ற மனவலியையும் பெரிய தும்பிக்கையையும், பொழிகின்ற மதங்கள் மூன்றையும் உடைய களிற்று யானைகளோடு பிடியானைகள் சூழ்ந்துள்ள குளிர்ந்த திருக்கழுக்குன்றமே. ஆதலின், உங்கள் அறியாமை நீங்குதற் பொருட்டு, அங்குச் சென்று திருநீறு அணிந்த அப்பெருமானை வழிபடுங்கள். மதம் மூன்று: கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம்.
826. புலைகள் தீரத் தொழுமின்
புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப் படையன்
எந்தை பிரானிடம்
முலைகள் உண்டு தழுவிக்
குட்டி யொடு முசுக்
கலைகள் பாயும் புறவில்
தண்கழுக் குன்றமே.
தெளிவுரை : உலகத்தவரே ! புல்லிய சடையை உடைய அற வடிவினனும், இலை வடிவத்தைக் கொண்ட சூலப் படையை உடைய எம் தந்தையும், எங்கள் தலைவனும் ஆகிய இறைவனது இடம், பாலை உண்டு தழுவுதலை உடைய குட்டியோடு பெண் குரங்கும் அதனோடு ஆண் குரங்கும் மரக்கிளைகளில் தாவுகின்ற காட்டினை யுடைய குளிர்ந்த திருக்கழுக்குன்றமே. அதனை உங்கள் கீழ்மைகள் எல்லாம் நீங்கும் பொருட்டுச் சென்று வழிபடுங்கள்.
827. மடமுடைய அடியார் தம்மனத் தேவுற
விடமுடைய மிடறன் விண்ணவர் மேலவன்
படமுடைய அரவன் தான்பயி லும்மிடம்
கடமுடைய புறவில் தண்கழுக் குன்றமே.
தெளிவுரை : மடமு டைய எனப் பிரிந்து ஐந்து சீர்கள் ஆமாறு சில பதிப்புக்களில் காட்டப்பட்டுள்ளன.
நீலகண்டனும் தேவர்கட்குத் தலைவனும் படமுடைய பாம்பை உடையவனும் ஆகிய சிவபெருமான், தன்னை யன்றி வேறொன்றையும் அறியாத அடியவரது மனத்தில் பொருந்தும் வண்ணம் நீங்காமல் கோயில் கொண்டிருக்கும் இடம் காட்டையுடைய முல்லை நிலத்தோடு கூடிய குளிர்ந்த திருக்கழுக்குன்றமே.
828. ஊனம் இல்லா அடியார்
தம்மனத் தேஉற
ஞான மூர்த்தி நட்ட
மாடி நவிலும்இடம்
தேனும் வண்டும் மதுவுண்டு
இன்னிசை பாடியே
கான மஞ்ஞை உறையும்
தண்கழுக் குன்றமே.
தெளிவுரை : ஞான வடிவினனும் நடனம் ஆடுபவனுமாகிய சிவபெருமான் குறைபாடு இல்லாத தன் அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணம், நீங்காமல் எழுந்தருளியிருக்கும் இடம் தேனும் வண்டும் தேனை உண்டு, இனிய இசையைப் பாட, காட்டில் மயில்கள் அதனைக் கேட்டு இன்புற்றிருக்கின்ற திருக்கழுக்குன்றமே.
829. அந்தம் இல்லா அடியார்
நம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி
மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள்
நித்தலம் சேரவே
சந்தம் நாறும் புறவில்
தண்கழுக் குன்றமே.
தெளிவுரை : அளவற்ற அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணமும் திருமாலும் நான்முகனும் நாள்தோறும் வந்து வணங்கி வழிபட்ட மலர்கள் நாள் தோறும் குவிந்து கிடக்கும் வண்ணமும் நடனமாடுகின்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம் சந்தன மரம் மணம் வீசுகின்ற முல்லை நிலத்தோடு கூடிய குளிர்ந்த திருக்கழுக்குன்றமே.
830. பிழைகள் தீரத் தொழுமின்
பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன்
தான்உறை யும்இடம்
மழைகள் சாலக் கலித்து
நீடுயர் வேயவை
கழைகொள் முத்தம் சொரியும்
தண்கழுக் குன்றமே.
தெளிவுரை : உலகீர், பின்னிய சடையின்கண் தலைக் கோலங்களை உடையவனும், குழை என்னும் அணியை அணிந்த காதை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம், மேகங்கள் மிக முழங்க, மிக உயர்ந்த வேயும் கழையுமாகிய மூங்கில்கள் முத்துக்களைச் சொரிகின்ற குளிர்ந்த திருக்கழுக்குன்றமே. அதனை, உங்கள் குற்றங்கள் எல்லாம் நீங்குதற் பொருட்டு வழிபடுங்கள்.
831. பல்லில் வெள்ளைத் தலையன்
தான்பயி லும்இடம்
கல்லில் வெள்ளை அருவித்
தண்கழுக் குன்றினை
மல்லின் மல்கு திரள்தோள்
ஊரன் வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவா
ரைத்தொழு மின்களே.
தெளிவுரை : உலகத்தவர்களே ! பல இல்லங்களில் செல்லுகின்ற, வெண்மையான தலையை உடையவன் நீங்காமல் கோயில் கொண்டிருக்கின்ற இடம், பாறைகளின் மேல் வீழ்கின்ற வெண்மையான அருவிகளையுடைய குளிர்ந்த திருக்கழுக்குன்றமே. அதனை வலிமை மிக்க திரண்ட தோள்களை யுடையவனாகிய நம்பியாரூரனது வனப்புடைய பாடல்களால் துதித்து வழிபடுவோரை வழிபடுங்கள். மிக்க பயனை அடைவீர்கள் என்பது குறிப்பெச்சம்.
திருச்சிற்றம்பலம்

82. திருச்சுழியல் (அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி,விருதுநகர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
832. ஊனாய்உயிர் புகலாய் அக
லிடமாய்முகில் பொழியும்
வானாய் அதன் மதியாய்விதி
வருவான்இடம் பொழிலின்
தேனாதரித்து இசைவண்டினம்
மிழற்றுந்திருச் சுழியல்
நானாவிதம் நினைவார்தமை
நலியார்நமன் தமரே.
தெளிவுரை : உயிர்களின் உடல்களாகிய எல்லா உயிரினங்களின் புகலிடமாயும், பரந்த இவ்வுலகமாகியும், மேகங்கள் மழை பொழிவதற்கு இடமான ஆகாயமாகியும் அதில் தோன்றும் கலைகள் நிறைந்த பரிபூரண சந்திரனாகியும், அவரவர்க்குரிய மெய்ப்பொருளாயும் இருக்கின்ற பெருமானுக்குரிய இடமான, சோலைகளில் இனிய தேனை விரும்பி நல்ல கீதத்தை உடைய வண்டுக் கூட்டங்கள் ரீங்காரம் செய்கின்ற திருச்சுழியலைப் பலவகையில் நினைப்பவர்களையும் தூதர்கள் வருத்தமாட்டார்கள். அதாவது திருச்சுழியலை உண்மையுடன் வழிபடுவோர்க்கு யமபயமில்லை. மதி என்றது புத்தி தத்துவத்தை.
833. தண்டேர்மழுப் படையான்மழ
விடையான்எழு கடல்நஞ்சு
உண்டேபுரம் எரியச்சிலை
வலைத்தான் இமை யவர்க்காத்
திண்டேர்மிசை நின்றான் அவன்
உறையும் திருச் சுழியல்
தொண்டேசெய வல்லார்அவர்
நல்லார்துயர் இலரே.
தெளிவுரை : தண்டுபோல மழுப்படையை ஏந்தியவனும் இளமையான இடபத்தை யுடையவனும், தேவர்கள் பொருட்டு, கடலில் எழுந்த நஞ்சையுண்டு, திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் திண்ணிய தேரின் மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலிற் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள், இன்பம் உடையவரும் துன்பம் இல்லாதவரும் ஆவர்.
மழுப்படையைத் தண்டு போல உடையான் என்றது, நெருப்பாய் நிற்கும் அஃது அவனை யாதும் துன்புறுத்த மாட்டாமையைக் குறித்து அருளிய படியாம்.
834. கவ்வைக்கடல் கதறிக்கொணர்
முத்தங்கரைக் கேற்றக்
கொவ்வைத்துவர் வாயார்குடைந்து
ஆடும்திருச் சுழியல்
தெய்வத்தினை வழிபாடுசெய்து
எழுவார்அடி தொழுவார்
அவ்வத்திசைக்கு அரசாகுவர்
அலராள் பிரியாளே.
தெளிவுரை : ஓசையை உடைய கடல் முழக்கம் செய்து, தான் கொணர்ந்த முத்துக்களைக் கரையின்கண் சேர்க்க, அங்கு, கொவ்வைக் கனி போலும் சிவந்த வாயை யுடைய மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வழிபட்டு மீள்கின்றவரது திருவடிகளை வணங்குவோர். தாம் தாம் வாழ்கின்ற நாட்டிற்கு அரசராய் விளங்குவர். அவ்அரசிற்கு உரியவளாகிய திருமகள் அவர்களை விட்டு நீங்காள்.
835. மலையான்மகள் மடமாதுஇடம்
ஆகத்தவள் மற்றுக்
கொலை யானையின் உரிபோர்த்தஎம்
பெருமான்திருச் சுழியல்
அலையார்சடை உடையான்அடி
தொழுவார்பழுது உள்ளம்
நிலையார்திகழ் புகழால்நெடு
வானத்துஉயர் வாரே.
தெளிவுரை : மலையரையனுக்கு மகளாகிய இளைய மாது தனது திருமேனியின்கண் இடப்பாகத்தில் இருக்க, யானையின் தோலைப் போர்த்துள்ள எம்பெருமான் திருச்சுழியலில் கோயில் கொண்டிருக்கிறார். அவருடைய திருவடிகளைப் தொழுபவர்கள் மனத்தில் குற்றம் பொருந்தாதவர் ஆவர். இவ்வுலகில் விளங்குகின்ற புகழை நாட்டிய மகிழ்வோடு, நீண்ட வான் உலகத்திற்கும் மேற்செல்வார்கள்.
836. உற்றான்நமக்கு உயரும்மதிச்
சடையான்புலன் ஐந்தும்
செற்றார்திரு மேனிப்பெரு
மான்ஊர்திருச் சுழியல்
பெற்றான் இனிது உறையத் திறம்
பாமைத்திரு நாமம்
கற்றார்அவர் கதியுட்செல்வர்
ஏத்தும்அது கடனே.
தெளிவுரை : நமக்கு உறவாய் உள்ளவனும், மேன்மை தங்கிய சந்திரனை யணிந்த சடையை யுடையவனும், ஐம்புலன்களையும் வென்று பொருந்திய திருமேனியையுடைய பெருமானும் ஆகிய இறைவனது ஊர் திருச்சுழியலே. அங்குக் கோயில் கொண்டிருக்கின்ற பெருமானது திருநாமத்தைப் பயின்றவர் உயர்கதியிற் செல்வர். ஆதலின், உலகத்தவரே ! அவனது திருப்பெயரைப் போற்றுமின்; அதுவே உயிர்கட்குக் கடமையாவது.
837. மலம்தாங்கிய பாசப்பிறப்பு
அறுப்பீர்துறைக் கங்கைச்
சலம்தாங்கிய முடியான்அமர்ந்து
இடமாந்திருச் சுழியல்
நிலம்தாங்கிய மலராற்கொழும்
புகையால்நினைந் தேத்தும்
தலந்தாங்கிய புகழாம்மிகு
தவமாம்சது ராமே.
தெளிவுரை : குற்றமுள்ள பாசத்தால் வரும் பிறப்பை அறுக்க விரும்புகின்றவர்களே ! கங்கையைத் தாங்கியுள்ள முடியையுடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கிற இடமாகிய திருச்சுழியலை, நிலம் சுமந்து நிற்கின்ற மலர்களாலும் செழுமையான நறும் புகைகளாலும் வழிபட்டு நினைந்து துதிமின்கள். உமக்கு இவ்வுலகம் சுமக்கத்தக்க புகழோடு கூடிய மிக்க தவம் உளதாகும்; திறல் உளதாகும்.
838. சைவத்த செவ் வுருவன்திரு
நீற்றன்உரு மேற்றன்
கைவைத்தொரு சிலையால்அரண்
மூன்றும்எரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய
குழகன்திருச் சுழியல்
மெய் வைத்தடி நினைவார்வினை
தீர்தல்எளி தன்றே.
தெளிவுரை : சிவாகமங்களில் சொல்லப்பட்ட வேடத்தையுடைய சிவந்த திருமேனியை உடையவனாய்த் திருநீற்றை அணிபவனும் இடிபோலும் குரலையுடைய இடபத்தை உடையவனும், கையின்கண் வைத்த ஒரு வில்லால் மூன்று கோட்டைகளை எரித்தவனும், தெய்வத் தன்மையுடைய தவத்தோர் வணங்கித் துதிக்கின்ற அழகனும் ஆகிய இறைவனது திருச்சுழியலை, உள்ளத்துள் வைத்து அவனது திருவடிகளை நினைப்பவரது வினைகள் நீங்குதல் எளிது.
839. பூவேந்திய பீடத்தவன்
தானும்அடல் அரியும்
கோவேந்திய வினயத்தொடு
குறுகப்புகல் அறியார்
சேவேந்திய கொடியானவன்
உறையும்திருச் சுழியல்
மாவேந்திய கரத்தான்எம
சிரத்தான்தனது அடியே.
தெளிவுரை : இடபக் கொடியை உடைய சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் திருச்சுழியலில், மானை ஏந்திய கையை உடையவனும் எங்கள் தலைகளின் மேல் உள்ளவனும் ஆகிய அவனது திருவடிகளை அணுகச் சென்ற தாமரையில் அமர்ந்துள்ள பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும் அறிய மாட்டார். யாம் தவமுடையோம் என்றவாறு.
840. கொண்டாடுதல் புரியாவரு
தக்கன்பெரு வேள்வி
செண்டாடுதல் புரிந்தான்திருச்
சுழியற்பெரு மானைக்
குண்டாடிய சமண்ஆதர்கள்
குடைச்சாக்கியர் அறியா
மிண்டாடிய அதுசெய்தது
வானால்வரு விதியே.
தெளிவுரை : தன்னையே மதித்துக் கொள்ளுதலைச் செய்து நின்ற தக்கனது பெருவேள்வியை, பந்தாடுதல் போலத் தகர்த்து வீசி விளையாடினவனும், திருச்சுழியலில் எழுந்தருளி இருக்கின்றவனுமாகிய இறைவனை, சமணர்களும், பௌத்தர்களும் அறியாமல் வலிமை பொருந்திய வாது செய்து அதன் வண்ணமே ஆவார்களாயின், அஃது அவர் வினைப் பயனேயாகும்.
841. நீரூர்தரு நிமலன்திரு
மலையார்க்கயல் அருகே
தேரூர்தரும் அரக்கன்சிரம்
நெரித்தான்திருச் சுழியல்
பேரூரென உறைவான்அடி
பெயர்நாவலர் கோமான்
ஆரூரன் தமிழ்மாலைபத்து
அறிவார்துயர் இலரே.
தெளிவுரை : அருவிகள் பாய்கின்ற இறைவனது திருமலையில் எதிரொலி உண்டாக அதன் அருகில் தனது ஊர்தியைச் செலுத்திய இராவணனது தலையை நெரித்தவனும், திருச்சுழியலைத் தனது பெரிய ஊராகக் கொண்டு கோயில் கொண்டிருப்பவனுமாகிய இறைவனது திருவடிப் பெயரைப் புனைந்தவனும், திருநாவல் ஊரார்க்குத் தலைவனும் ஆகிய நம்பி ஆரூரனது இத் தமிழ்ப் பாடல்கள் பத்தையும் உணர் கின்றவர் துன்பம் யாதும் இலராவர்.
திருச்சிற்றம்பலம்

83. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)
திருச்சிற்றம்பலம்
842. அந்தியும் நண்பகலும்
அஞ்சுப தஞ்சொல்லி
முந்தி எழும்பழைய
வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத்
தென்திரு வாரூர்புக்கு
எந்தை பிரானாரை
என்றுகொல் எய்துவதே.
தெளிவுரை : காலை மாலைகளிலும் நடுப்பகலிலும் ஐந்தெழுத்தை நாவால் சொல்லிக் கொண்டு மனத்தில் பெருமானை அன்புடன் இருத்தி, முன்னாக வருகின்ற பழைய கொடிய வினை வந்து மனத்தை மூடிக் கொள்ளுமுன் மூடுதலால், நான் அறிவு கலங்குமுன் இனிய திருவாரூர் போய் என் தந்தையாகிய பெருமானை என்று நான் அடைவது?
843. நின்ற வினைக்கொடுமை
நீங்க இருபொழுதும்
துன்று மலர்கிட்டுச்
சூழும் வலஞ்செய்து
தென்றல் மணங்கமழும்
தென்திரு வாநீர்புக்கு
என்றன் மனங்குளிர
என்றுகொல் எய்துவதே.
தெளிவுரை : செய்யப்பட்டு நிற்கின்ற வினைகளது கொடுமைகள் எல்லாம் நீங்குமாறு காலை மாலை இரு பொழுதினும் நெருங்கிய மலர்களைத் தூவி, சுற்றிலும் வலமாக வந்து எனது மனம் குளிர்தற்குத் தென்றற் காற்று நறுமணம் கமழ வருகின்ற அழகிய திருவாரூரினுள் சென்று எந்தை பிரானாரை அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ?
844. முன்னை முதற்பிறவி
மூதறி யாமையினால்
பின்னை நினைந்தனவும்
பேதுற வும்மொழியச்
செந்நெல் வயற்கழனித்
தென்திரு வாநீர்புக்கு
என்னுயிர்க்கு இன்னமுதை
என்றுகொல் எய்துவதே.
தெளிவுரை : தொன்று தொட்டு வருகின்ற பிறவிகளில் பெரிய அறியாமை காரணமாக வருங்காலத்திற் பெற நினைத்த நினைவுகளும் அவற்றால் விளைகின்ற துன்பங்களும் ஒழியுமாறு, செந்நெற்களை விளைவிக்கின்ற நல்ல வயல்களாகிய கழனிகளையுடைய அழகிய திருவாரூரினுள் சென்று, எனது உயிருக்கு இனிய அமுதம் போன்றவனை யான் தலைக்கூடப் பெறவது எந்நாளோ?
845. நல்ல நினைப்பொழிய
நாள்களில் ஆருயிரைக்
கொல்ல நினைப்பனவும்
குற்றமும் அற்றொழியச்
செல்வ வயற்கழனித்
தென்திரு வாரூர்புக்குக்
எல்லை மிதித்தடியேன்
என்றுகொல் எய்துவதே.
தெளிவுரை : நல்ல எண்ணம் நீங்குதலால் அரிய உயிர்களை அவை உடம்போடு கூடிவாழும் நாட்களில் கொல்லுதற்கு எண்ணுகின்ற எண்ணங்களும், மற்றும் பல குற்றங்களும் அடியோடு நீங்குமாறு, நெல் வயல்கள் சூழ்ந்த திருவாரூரின் எல்லையை மிதித்து அந்நகரினுள் சென்று என் உயிர்க்கு இனிய அமுதம் போல்பவனாகிய இறைவனை அடியேன் எப்போது அடைவது?
846. கடுவரி மாக்கடலுள்
காய்ந்தவன் தாதையைமுன்
சுடுபொடி மெய்க்கணிந்த
சோதியை வன்தலைவாய்
அடுபுலி ஆடையனை
ஆதியை ஆரூர்புக்கு
இடுபலி கொள்ளியைநான்
என்றுகொல் எய்துவதே.
தெளிவுரை : நஞ்சு போலும் நிறத்தையுடைய மாமரத்தைக் கடலின் நடுவண் அழித்தவனாகிய முருகனுக்குத் தந்தையும் எல்லாவற்றினும் முன்னதாக, திருநீற்றை உடம்பின்கண் பூசிய ஒளிவடிலினனும் கொல்லும் தன்மை வாய்ந்த புலியனது தோலை ஆடையாக உடையவனும் உலகிற்கு முதல்வனும் தலையோட்டில் மகளிர் இடுகின்ற பிச்சையை ஏற்பவனுமாகிய எம் பெருமானை, திருவாரூரினுள் சென்று அடியேன் எப்போது அடைவது ?
847. சூழ்ஒளி நீர்நிலம்தீத்
தாழ்வளி ஆகாசம்
வானுயர் லெங்கதிரோன்
வண்டமிழ் வல்லவர்கள்
ஏழ்இசை ஏழ்நரம்பின்
ஓசையை ஆரூர்புக்கு
ஏழுல காளியைநான்
என்றுகொல் எய்துவதே.
தெளிவுரை : நிலமும், நீரும், தீயும், காற்றும், ஆகாயமும் வெப்பக் கதிர்களை யுடையோனாகிய பகலவனும் ஏழிசையாகிய எழுநரம்பின் ஓசையும் என்னும் இவை எல்லாமாய் நிற்பவனும், ஏழுலகமாகிய இவைகளைத் தன் வழிப்படுத்தி ஆள்பவனும் ஆகிய எம்பெருமானைத் திருவாரூரினுள் சென்று அடியேன் அடைவது எப்போது?
848. கொம்பன நுண்ணிடையாள்
கூறனை நீறணிந்த
வம்பனை எவ்வுயிர்க்கும்
வைப்பினை ஒப்பமராச்
செம்பொனை நன்மணியைத்
தென்திரு ஆரூர்புக்கு
என்பொனை என்மணியை
என்றுகொல் எய்துவதே.
தெளிவுரை : உமையவளை இடப்பாகத்தில் உடையவனும், திருநீறாகிய நறுமணப் பூச்சை அணிந்தவனும், எல்லா உயிர்கட்கும் சேமநிதி போன்றவனும், தன்னோடு ஒப்புமையில்லாத தேவர்களுக்குச் செம்பொன்னும் நவமணியும் போன்றவனும், எனக்குரிய பொன்னும் மணியுமாய் இருப்பவனும் ஆகிய எம் பெருமானை அழகிய திருவாரூருள் சென்று அடியேன் அடைவது எப்பொழுதோ?
849. ஆறணி நீள்முடிமேல்
ஆடர வஞ்சூடிப்
பாறணி வெண்டலையில்
பிச்சைகொள் நச்சரவன்
சேறணி தண்கழனித்
தென்திரு வாரூர்புக்கு
ஏறணி எம் இறையை
என்றுகொல் எய்துவதே.
தெளிவுரை : கங்கையைத் தாங்கிய நீண்ட சடையின்மேல் படம் எடுத்து ஆடுகின்ற பாம்பைச் சூடுகின்றவனும், பருந்து சூழும் வெண்மையான தலையோட்டில் பிச்சை ஏற்பவனும், நஞ்சையுடைய பாம்பை அணிபவனும் ஆகிய இடபக் கொடியையுடைய எம் பெருமானை, குளிர்ந்த கழனிகளையுடைய திருவாரூரினுள் சென்று அடைவது எப்போது?
850. மண்ணினை உண்டுமிழ்ந்த
மாயனும் மாமலர்மேல்
அண்ணலும் நண்ணரிய
ஆதியை மாதினொடும்
திண்ணிய மாமதில்சூழ்
தென்திரு வாரூர்புக்கு
எண்ணிய கண்குளிர
என்றுகொல் எய்துவதே.
தெளிவுரை : மண்ணுலகத்தை உண்டு உமிழ்ந்த திருமாலும், சிறந்த தாமரை மலர்மேல் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அணுகுதற்கரிய இறைவனை, இறைவியோடும் மறவாது நினைக்குமாறும், கண்டு கண் குளிருமாறும் மதில் சூழ்ந்த அழகிய திருவாரூரினுள் சென்று அடியேன் பொருந்துவது எப்போதோ !
851. மின்னொடும் செஞ்சடையான்
மேவிய ஆரூரை
நன்னெடும் காதன்மையால்
நாவலர் கோன்ஊரன்
பன்னெடும் சொல்மலர்கொண்டு
இட்டன பத்தும்வல்லார்
பொன்னுடை விண்ணுலகம்
நண்ணுவர் புண்ணியரே.
தெளிவுரை : சிவந்த சடையை உடைய இறைவன் கோயில் கொண்டிருக்கும் திருவாரூரை, திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பேரன்பினால் சிறந்த சொற்கள் ஆகிய மலர்களால் சாத்திய பாமாலைகள் பத்தினையும் அங்ஙனமே சாத்த வல்லவர்கள், புண்ணியம் உடையவர்களாய் விண்ணுலகத்தை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்

84. திருக்கானப்பேர் (அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில்,சிவகங்கை மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
852. தொண்டர் அடித்தொழலும் சோதி இளம்பிறையும்
சூதன மென்முலையாள் பாகமும் ஆகிவரும்
புண்ட ரிகப்பரிசாம் மேனியும் வானவர்கள்
பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமரும்
கொண்டல் எனத்திகழும் கண்டமும் எண்தோளும்
கோல நறுஞ்சடைமேல் வண்ணமும் கண்குளிரக்
கண்டு தொழப்பெறுவது என்றுகொலோ அடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
தெளிவுரை : அடியேன் வயல் சூழ்ந்த திருக்கானப்பேர் என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற காளை வடிவத்தினனாகிய பெருமானை, அவனது அடியவர்கள் வணங்குகின்ற திருவடியையும் பிறையையும், உமையவளது கூறாய் விளங்கும் இடப்பாகத்தையும், ஒளி விடுகின்ற செந்தாமரை மலர் போன்ற திருமேனியையும் தேவர்கள் ஓலமிட, அதற்கு இரங்கிக் கடலில் தோன்றிய விடத்தையுண்ட நினைவுக் குறி நீங்காதிருக்கின்ற நீலகண்டத்தையும். எட்டுத் தோள்களையும் சடையின் மேலுள்ள அணிகளையும் கண் குளிரக் கண்டு வணங்கப் பெறுவது எந்நாளோ !
853. கூதல் இடும்சடையும் கோளர வும்விரவும்
கொக்குஇற கும்குளிர்மா மத்தமும் ஒத்துனதாள்
ஓதல் உணர்ந்தடியார் உன்பெரு மைக்குநினைந்து
உள்ளுரு காவிரசும் ஓசையைப் பாடலும்நீ
ஆதல் உணர்ந்தவரோடு அன்பு பெருத்துஅடியேன்
அங்கையின் மாமலர்கொண்டு என்கணது அல்லல்கெடக்
காதல் உறத்தொழுவது என்றுகொ லோஅடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
தெளிவுரை : வளமிக்க வயல்கள் சூழ்ந்த திருக்கானப்பேர் என்னும் தலத்தில் விரும்பி யிருக்கின்ற காளை வடிவுடைய தலைவனே, அடியேன் என்பால் உள்ள துன்பங்கள் எல்லாம் கெடுமாறு அடியவர் உனது பெருமைகளை நினைந்து மனம் உருகி செறிந்த இசையைப் பாடுதலும் அவரோடு அன்பு மிகுந்து அவர்கள் பாடுமாற்றைக் கற்று உனது சடைமுடி, பாம்பு, கொக்கு, இறகு, ஊமத்தை மலர் ஆகியவற்றை மலர் கொண்டு வணங்கப் பெறுவது எந்நாளோ !
கனவில் கண்ட காளை வடிவினனை நனவிற் படர்க்கையாக அருளிச் செய்து, காதலுற்று, முன்னிலையாக இதன்கண் அருளிச் செய்தார்.
854. நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை
நற்பதம் என்றுணர்வார் சொற்பதம் ஆர்சிவனைத்
தேனிடை இன்னமுதை மற்றத னில்தெளிவைத்
தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை
வானிடை மாமதியை மாசறு சோதியனை
மாருத மும்அனலும் மண்டல மும்ஆய
கானிடை மாநடன்என்று எய்துவது என்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
தெளிவுரை : நான் பெற்றுள்ள செல்வம்போல எனக்கு நன்மைகளைச் செய்யும் பரம்பொருளும், அடியவர்களின் சொற்களால் ஆகிய துதிகளில் நிறைந்திருக்கும் மங்கள மூர்த்தியும், தேனிடத்துள்ள இனிய அமுதமும் அந்த அமுதத்தின் சாரமும் ஆனவனும், தேவர்களுக்கெல்லாம் தலைவனும் பூச்சூடிக் சிறந்து விளங்குகின்ற சிரசையுடையவனும், ஆகாயத்தில் விளங்கும் சந்திரனானவனும், குற்றமற்ற சோதி சொரூபியும், வயல்கள் சூழ்ந்த திருக்கானப்பேரில் அமர்ந்துள்ள காளைப் பெருமானை, பூமி முதலிய உலகங்களும் ஆகியவனும். காட்டினிடத்தே பெரிய ஆனந்த நர்த்தனம் செய்பவனும் என்று அறிந்து அடைவது எந்நாளோ !
855. செற்றவர் முப்புரம்அன்று அட்ட சிலைத்தொழிலார்
சேவகம் முன்நினைவார் பாவக முந்நெறியும்
குற்றமில் தன்அடியார் கூறும் இசைப்பரிசும்
கோசிக மும்அரையில் கோவண மும்அதளும்
மற்றிதழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதை
மாமலை மங்கைஉமை சேர்சுவ டும்புகழக்
கற்றன வும்பரவிக் கைதொழல் என்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
தெளிவுரை : வளமுள்ள வயல்கள் சூழ்ந்த திருக்கானப் பேர் என்னும் தலத்தில் அமர்ந்துள்ள காளை வடிவினனாகிய பெருமானை, அவனது பகைவர்களது முப்புரங்களை அன்று அழித்த வில் வீரத்தையும் தன்னை நினைத்தவரது நினைவில் நிற்கும் நிலையையும் அடியார்கள் புகழும் வகைகளையும், அரையில் உடுக்கின்ற கோவணமும், பட்டும், தோலும் ஆகிய உடைகளையும், திண்ணிய தோள்களையும் நீறணிந்த மார்பில் மலைமகள் தழுவியதால் உண்டாகிய வடுவையும் அடியேன், புகழ்ந்து பாடக் கற்றன பலவற்றானும் துதித்துக் கைகூப்பி வணங்குதல் எந்நாளோ ?
856. கொல்லை விடைக்குழகும் கோல நறுஞ்சடையில்
கொத்தல ரும்இதழித் தொத்தும் அதனருகே
முல்லை படைத்தநகை மெல்லிய லாள்ஒருபால்
மோகம் மிகுத்திலங்கும் கூறுசெய் எப்பரிசும்
தில்லை நகர்ப்பொதுவுற்று ஆடிய சீர்நடமும்
திண்மழு வும்கைமிசைக் கூர்எரி யும்அடியார்
கல்ல வடப்பரிசும் காணுவது என்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
தெளிவுரை : வயல்கள் சூழ்ந்த திருக்கானப்பேர் என்னும் தலத்தில் விரும்பியிருக்கின்ற பெருமானது விடையினது அழகையும், சடையில் கொத்தாய் உள்ள பூக்களையும் மார்பில் கொன்றை மலரின் மாலையையும், அதன் அருகே ஒரு பாகத்தில் உமாதேவி விளங்குகின்ற தன்மையையும், தில்லை நகரில் உள்ள சபையில் பொருந்தி நின்று ஆடுகின்ற நடனத்தையும், கையில் உள்ள மழு, தீ என்னும் இவற்றையும் அடியவர் சாத்தும் மணிவடத்தின் அழகையும் காண்பது எந்நாளோ !
857. பண்ணுத லைப்பயனார் பாடலும் நீடுதலும்
பங்கய மாதனையார் பத்தியும் முத்தியளித்து
எண்ணுத லைப்பெருமான் என்றெழு வார்அவர்தம்
ஏசற வும்இறையாம் எந்தையை யும்விரவி
நண்ணுத லைப்படுமாறு எங்ஙனம் என்றயலே
நைகிற என்னைமதித்து உய்யும்வ ணம்அருளும்
கண்ணுத லைக்கனியைக் காண்பதும் என்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
தெளிவுரை : திருமகளைப் போன்ற மகளிரது பாடலின் சிறப்பையும், அதில் அவர்கள் நெடிது நிற்றலையும். அவர்களது பத்தியையும் தான் ஒருவனே வீடு பேற்றை அளித்தலால், முதற்கடவுள் என்று தன்னை நினைந்து துயில் எழுகின்ற மெய் உணர்வுடையோர் வாடிநிற்கும் வாட்டத்தினையும், யாவர்க்கும் இறைவனாகிய என் தந்தையையும் ஒருங்கு காணுதலைப் பொருந்துமாறு எங்ஙனம் என்று சேய்மையில் நின்று வருந்துகின்ற என்னையும் பொருளாக நினைந்து கண்ணுதற் கடவுளும் கனிபோல் இனிப்பவனும், திருக்கானப்பேர் என்னும் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் காளை வடிவினனும் ஆகிய பெருமானை அடியேன் காணப் பெறுவது எந்நாளோ !
858. மாலை உரித்துஅதள்கொண்டு அங்கம் அணிந்தவனை
வஞ்சர் மனத்திறையும் நெஞ்சுஅணு காதவனை
மூவர் உருத்தனதாம் மூல முதற்கருவை
மூசிடு மால்விடையின் பாகனை ஆகம்உறப்
பாவகம் இன்றிமெய்யே பற்றும் அவர்க்குஅமுதைப்
பால்நறு நெய்தயிர்ஐந்து ஆடு பரம்பரனைக்
காவல் எனக்கிறைஎன்று எய்துவது என்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
தெளிவுரை : யானையை உரித்து, அத்தோலைப் போர்வையாகக் கொண்டு, எலும்பை மாலையாக அணிந்தவனும், வஞ்சனை உடையவரது மனத்தில் அணுகாதவனும், மும்மூர்த்திகளது உருவமும் தன் உருவமேயாகின்ற முதற்காரணனும், பெரிய இடபத்தை நடத்துகின்றவனும், உண்மை அன்பர்களுக்கு அமுதம் போன்றவனும், பால், நெய், தயிர் முதலிய ஐந்திலும் மூழ்கின்றவனும், மேலோர்க்கு மேலானவனும் வளமிக்க வயல்கண் சூழ்ந்த திருக்கானப்பேர் என்னும் தலத்தில் இருக்கும் காளை வடிவினனுமாகிய பெருமானை அடியேன் எனக்குத் தலைவனாகப் பெறுவது எந்நாளோ !
859. தொண்டர் தமக்குஎளிய சோதியை வேதியனைத்
தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல் நஞ்சு
உண்ட தனுக்குஇறவாது என்றும் இருந்தவனை
ஊழி படைத்தவனோடு ஒள்ளரி யும்உணரா
அண்டனை அண்டர்தமக்கு ஆகம நூல்மொழியும்
ஆதியை மேதகுசீர் ஓதியை வானவர்தம்
கண்டனை அன்பொடுசென்று எய்துவது என்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
தெளிவுரை : அடியார்களுக்கு எளிய ஒளியுருவினனும், வேதத்தை ஓதுபவனும், அத் தூய வேதத்தின் பொருளாய் உள்ள நீதிவடிவினனும், கடலில் எழுந்த விடத்தை உண்டு அதனால் இறவாமல் எக்காலத்தும் இருப்பவனும். பிரமனும், திருமாலும் அறிய வொண்ணாத தேவனும், தேவர்களுக்கு ஞான நூலைச் சொல்லிய முதல்வனும், தேவர்களது கூற்றில் உள்ளவனும் புகழுடையவனும் நீர்வளமிக்க வயல்கள் சூழ்ந்த திருக்கானப்பேர் என்னும் தலத்தில் மன்னியிருப்பவனும் காளை வடிவனனுமாகிய பெருமானை அடியேன் அன்போடு சென்று அடையப் போவது எந்நாளோ?
860. நாதனை நாதமிகுத்து ஓசையது ஆனவனை
ஞான விளக்கொளியாம் ஊன்உயி ரைப்பயிரை
மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும்
பற்றுவி டாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை என்றனையாள் தோழனை நாயகனைத்
தாழ்மக ரக்குழையும் தோடும் அணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவது என்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
தெளிவுரை : நாத தத்துவமானவனும், அந்நாதம் தூலமாகி முதிர்ந்து சப்தம் ஆனவனும், ஞான தீபச் சுடராய் உயிராய் இருப்பவனும், தாவரங்கள் ஆனவனும், பெண்ணைப் பாதியில் உடையவனும், மேன்மையுடைய தன் பக்தர்களின் மனத்தினின்றும் கணமும் பிரியாதவனும், குற்றமற்ற கோட்பாடு உடையவனும், தூதனும், என்னை ஆட்கொண்ட தலைவனும், தோழனும் ஆகியவனும் ஒருபால் மகரகுண்டலமும் மற்றொருபால் தோடும் அணிந்த திருச்செவிகளை உடையவனும், கரிய வயல்கள் சூழ்ந்த திருக்கானப்பேரில் எழுந்தருளியிருப்பவனுமாகிய காளைப் பெருமானை, நாய்போல் கீழ்ப்பட்ட அடியவனாகிய நான் போய் அடைவது என்றோ ? குழை, அப்பனுக்கும்; தோடு, அம்மைக்கும் உரியன.
861. கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப்
பேருறை காளையைஒண் சீருறை தண்தமிழால்
உன்னி மனத்துஅயரா உள்ளுரு கிப்பரவும்
ஒண்பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன்
பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார்
பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும்
மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே.
தெளிவுரை : கரும்பும் இனிய அமுதமும் போன்றவனாகிய நீர்வளமிக்க வயல்கள் சூழ்ந்த திருக்கானப்பேர் என்னும் தலத்தில் பொருந்தி யிருக்கின்ற காளை வடிவினனாகிய பெருமானை எய்துவது என்று கொலோ என்று நினைந்து மனம் உளைந்து, உளம் உருகி, தண்ணிய தமிழால் துதிக்க முயன்ற அழகிய சோலைகளையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இவ் இசைப் பாடல்கள் பத்தினையும் பாடவல்லவர்கள் சிவனடியார்க்கு உள்ள இயல்புகள் அனைத்தையும் எய்தி எல்லாத் திசைகளும் புகழ நெடிது வாழ்ந்து, பின்பு ஒருகால் பிறவி எய்துவராயினும் மண் உலகிற்குத் தலைவராய் வாழ்தல் திண்ணம்.
திருச்சிற்றம்பலம்

85. திருக்கூடலையாற்றூர் (அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர்.,கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
862. வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்
கொடிமணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்
அடிகள்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
தெளிவுரை : சோதிமயமான தோற்றத்தையுடைய மழுவாயுதத்தை வலக்கையில் தாங்கிய மதயானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டு திருநீற்றை யணிந்த திருமேனியின் பாதியில் பின்னப்பட்ட கூந்தலையுடைய உமாதேவியாரோடும், துகிற்கொடிகள் அழகு செய்யும் பெரிய மாளிகைகளையுடைய திருக்கூடலையாற்றூர்ப் பெருமான் இவ்வழியே என் கண்கள் காண எதிர்வந்த அதிசயம் இன்னவாறென்று அறியேன் !
863. வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும்
பையரவு அகல்அல்குல் பாவையொ டும்உடனே
கொய்யணி மலர்ச்சோலைக் கூடலை யாற்றூரில்
ஐயன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
தெளிவுரை : உலகம் முழுவதையும் உண்ட திருமாலோடும் பிரமதேவனோடும் உமாதேவியோடும் உடனாகி, பூஞ்சோலைகள் நிறைந்த திருக்கூடலையாற்றூரில் பொருந்தியிருக்கின்ற தலைவன் இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாமல் போனேன். என்னே என் ஏழைமை இருந்தவாறு !
864. ஊர்தொறும் வெண்டலைகொண்டு உண்பலி இடும்என்று
வார்தரு மென்முலையாள் மங்கையொடும் உடனே
கூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்றூரில்
ஆர்வன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
தெளிவுரை : ஊர்தோறும் சென்று வெண்மையான தலையோட்டை ஏந்தி பிச்சை இடுமின் என்று இரந்துண்டு உமாதேவியோடும் உடனாய் கூரிய முனையையுடைய மழுவை ஏந்திக்கொண்டு திருக்கூடலையாற்றூரில் அமர்ந்துள்ள பேரன்புடையவனாகிய பெருமான் இவ்வழியிடை என் முன் வந்த வியத்தகு செயலை நான் அறியாமல் போனேன். என்னே என் ஏழைமை இருந்தவாறு !
865. சந்தண வும்புனலும், தாங்கிய தாழ்சடையன்
பந்தண வும்விரலாள் பாவையொ டும்உடனே
கொந்தண வும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே.
தெளிவுரை : பிறை முதலியவற்றோடு கங்கையையும் தாங்கியிருக்கின்ற நீண்ட சடை முடியை உடையவனாய், பாவைபோலும் உமையோடும் உடனாகி, பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் விரும்பியிருக்கின்ற கருணையை உடையவனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் போந்த வியத்தகு செயலை நான் அறியாமற் போனேன். இதற்காக வருந்துகிறேன்.
866. வேதியர் விண்ணவரும் மண்ணல ரும்தொழநற்
சோதியது உருவாகிச் சுரிகுழல் உமையோடும்
கோதிய வண்டறையும் கூடலை யாற்றூரில்
ஆதிஇவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
தெளிவுரை : அந்தணமும், தேவமும், மக்களும் வணங்கி நிற்க, உமாதேவியோடும் வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலையாற்றூரில் மேவியிருக்கின்ற முதல்வன். இவ்வழியிடை என்முன் வந்த அற்புதச் செயலை நான் அறியேன் ஆயினேன். இது என்ன பரிதாபம். ஒளியுருவம்  இலிங்க வடிவம்.
867. வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல் மங்கையொ டும்உடனே
கொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
அத்தன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
தெளிவுரை : தான் கலைத்திறம் வாய்ந்த வீணையோடும் வெண்மையான முப்புரி நூலை அணிந்து, உமாதேவியோடும் உடனாகி பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் மன்னியிருக்கின்ற எந்தை இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாமல் போனேன். இஃது என் அறியாமையே.
868. மழைநுழை மதியமொடு வாளர வம்சடைமேல்
இழைநுழை துகில்அல்குல் ஏந்திழை யாளொடும்
குழையணி திகழ்சோலைக் கூடலை யாற்றூரில்
அழகன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
தெளிவுரை : மேகத்தில் நுழைகின்ற சந்திரனையும் கொடிய பாம்பையும் சடைக்கண் வைத்து, உமாதேவியோடும் உடனாகி, சோலைகள் நிறைந்த திருக்கூடலையாற்றூரில் அமர்ந்துள்ள அழகன், இவ்வழியிடை என் முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாமல் போனேன். இதற்கு நான் என் செய்வேன்?
869. மறைமுதல் வானவரும் மால்அயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண மும்சூழக்
குறள்படை யதனோடும் கூடலை யாற்றூரில்
அறவன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
தெளிவுரை : வேதத்தில் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும், அத்தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும், பேய்க் கூட்டமும் சூழ்ந்திருக்க, பிறை போன்ற நெற்றியை யுடைய உமாதேவியோடும் பூதப் படையோடும் திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை யான் அறியாமற் போனேன். இதற்குயான் என் செய்வேன் ?
870. வேலையின் நஞ்சுண்டு விடையது தான்ஏறிப்
பாலன மென்மொழியாள் பாவையொ டும்உடனே
கோலமது உருவாகிக் கூடலை யாற்றூரில்
ஆலன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
தெளிவுரை : கடலில் எழுந்த விடத்தை உண்டு, இடபத்தை ஊர்ந்து, பால்போன்ற இனிய மொழியினளாகிய உமா தேவியோடும் உடனாகிய கோலமே தனது உருவமாகக் கொண்டு திருக்கூடலையாற்றூரில் கோயில் கொண்டுள்ள ஆல் நிழற் பெருமான் இவ்வழியிடை என்முன் வந்த செயலை நான் அறியாமற் போனேன். என்னே என் பேதைமை இருந்தவாறு!
871. கூடலை யாற்றூரில் கொடியிடை அவளோடும்
ஆடல்உ கந்தானை அதிசயம் இதுவென்று
நாடிய இன்தமிழால் நாவல வூரன்சொல்
பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே.
தெளிவுரை : திருக்கூடலை யாற்றூரில் உமாதேவியோடும் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை அவன் செய்த இச்செயல் அதிசயம் என்று சொல்லி ஆராய்ந்த இனிய தமிழால் திருநாவலூரனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்களது வினை, பற்றறக் கெடுதல் திண்ணம்.
திருச்சிற்றம்பலம்

86. திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம்,விழுப்புரம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
872. விடையின்மேல் வருவானை
வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானை
யாவர்க்கும் அறியொண்ணா
மடையில்வா ளைகள்பாயும்
வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையில்கங்கை தரித்தானைச்
சாராதார் சார்பென்னே.
தெளிவுரை : இத் திருப்பதிகம், சிவபெருமானை உணர மாட்டாதாரது நிலைமைக்கு இரங்கி அருளிச் செய்தது.
இடபத்தின்மேல் ஏறிவருபவனும், வேதத்தின் பொருளாய் உள்ளவனும் தன்னை அடைந்தவர்களிடம் அன்பாய் உள்ளவனும் ஆகிய நீர் மடைகளில் வாளை மீன்கள் துள்ளுகின்ற திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் அமர்ந்துள்ள யாவராலும் அறிய வொண்ணாத சடையில் கங்கையைத் தாங்கியுள்ள பெருமானை அடையாதவரது நிலைதான் என்னே !
873. அறையும்பைங் கழல்ஆர்ப்ப
அரவாட அனல்ஏந்திப்
பிறையுங்கங் கையும்சூடிப்
பெயர்ந்தாடும் பெருமானார்
பறையும்சங்கு ஒலிஓவாப்
படிறன்தன் பனங்காட்டூர்
உறையும்எங்கள் பிரானாரை
உணராதார் உணர்வென்னே.
தெளிவுரை : ஒலிக்கின்ற பொற்கழல்கள் ஒலிக்கவும், பாம்புகள் சுழன்று ஆடவும், கையில் நெருப்பை ஏந்தி, தலையில் பிறையையும் கங்கையையும் அணிந்து கொண்டு, அடி பெயர்ந்து நின்று நடனம் ஆடுகின்ற பெருமானாகிய, யாவராலும் அறியவொண்ணாமையால் கள்வனாய், முழங்குகின்ற பறைகளும், சங்குகளும் எப்போதும் ஒலிக்கின்ற திருவன் பார்த்தான் பனங்காட்டூரில் உறைகின்ற எங்கள் இறைவனை உணராதவர்களது உணர்வுதான் என்னே ! எவராலும் அறிய ஒண்ணாமையால் படிறன் என்றார்.
874. தண்ணார்மா மதிசூடித்
தழல்போலும் திருமேனிக்கு
எண்ணார்நாள் மலர்கொண்டங்கு
இசைந்தேத்தும் அடியார்கள்
பண்ணார்பா டல்அறாத
படிறன்தன் பனங்காட்டூர்
பெண்ஆணா யபிரானைப்
பேசாதார் பேச்சென்னே.
தெளிவுரை : குளிர்ச்சி பொருந்திய சிறந்த சந்திரனை முடிமேல் சூடி, கள்வனாய், நெருப்புப் போலும் தனது திருமேனிக்கு உரியனவாக அன்றலர்ந்த மலர்களைக் கொண்டு துதித்து வழிபடும் அடியவர்களது பண்ணிறைந்த பாடலின் ஒலி நீங்காத தனது திருவன் பார்த்தான பனங்காட்டூரில் தங்கியிருக்கின்ற பெண்ணும் ஆணும் ஆகிய உருவத்தினனாகிய பெருமானைப் பற்றிப் பேசாதவரது பேச்சுதான் என்னே !
875. நெற்றிக்கண் உடையானை
நீறேறும் திருமேனிக்
குற்றமில் குணத்தானைக்
கோணாதார் மனத்தானைப்
பற்றிப்பாம்பு அரைஆர்த்த
படிறன்தன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்றுஏ றும்பிரானைப்
பேசாதார் பேச்சென்னே.
தெளிவுரை : நெற்றிக் கண்ணை உடையவனும் திருநீறு மிகுதியாகப் பூசப்பட்ட திருமேனியையும் குற்றமில்லாத குணங்களை உடையவனும், ஒழுக்கம் உடையவரது மனத்தில் எப்போதும் இருப்பவனும், பாம்பைப் பிடித்து அரையில் கட்டிக் கொண்ட கள்வனும், தனது பனங்காட்டூரில் ஓர் இடபத்தின் மேல் ஏறுபவனும் ஆகிய பெருமானைப் புகழ்ந்து பேசாதவருடைய பேச்சு என்ன பேச்சு !
நாயனார், தமது ஆற்றாமையினாலும் பரிவாலும் உலகத்தாரை எல்லாப்படியாலும் தனுகரன புவனபோகங்களை ஆண்டவன்பால் செலுத்தி உய்யுமாறு வேண்டுகிறார்.
876. உரமென்னும் பொருளானை
உருகில்உள் உறைவானைச்
சிரமென்னும் கலனானைச்
செங்கண்மால் விடையானை
வரம்முன்னம் அருள்செய்வான்
வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பரமன்எங் கள்பிரானைப்
பரவாதார் பரவென்னே.
தெளிவுரை : ஞானம் என்று சொல்லப்படும் பொருளாய் உள்ளவனும், உள்ளம் அன்பால் உருகினால் அதன் கண் நீங்காது தங்குகின்றவனும், தலை ஓடாகிய உண்கலத்தை உடையவனும், பெரிய இடப வாகனத்தை உடையவனும், தன்னை வழிபடுவார் விரும்பும் வரத்தை விரைந்து அருளுபவனும், மேலானவனும் ஆகிய திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனைத் துதியாதவரது துதிதான் என்னே !
877. எயிலார்பொக் கம்எரித்த
எண்தோள்முக் கண்இறைவன்
வெயிலாய்க்காற் றெனவீசி
மின்னாய்த்தீ எனநின்றான்
மயிலார்சோ லைகள்சூழ்ந்த
வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பயில்வானுக்கு அடிமைக்கண்
பயிலாதார் பயில்என்னே.
தெளிவுரை : பொலிவு நிறைந்த மதில்களை எரித்தவனும், எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடைய கடவுளும் வெயிலாய்க் காய்ந்து காற்றாய் வீசி, மின்னாய் மின்னி, தீயாய் எரிந்து நிற்பவனும் ஆகிய மயில்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவன் பார்த்தான் பனங்காட்டூரில் நீங்காதிருக்கும் பெருமானுக்குச் செய்யும் தொண்டிற் பயிலாதவரது பயிற்சிதான் என்னே !
878. மெய்யன் வெண் பொடிபூசும்
விகிர்தன்வே தமுதல்வன்
கையில்மான் மழுவேந்திக்
காலன்கா லம்அறுத்தான்
பைகொள்பாம்பு அரைஆர்த்த
படிறன்தன் பனங்காட்டூர்
ஐயன்எங் கள்பிரானை
அறியாதார் அறிவென்னே.
தெளிவுரை : மெய்ப்பொருளாய் உள்ளவனும், வெண்மையான நீறணிந்த வேறுபட்ட இயல்பினனும், வேதத்திற்குத் தலைவனும், கையில் மான் மழுக்களை ஏந்துபவனும் காலனது காலத்தை இடை முரித்தவனும் பாம்பை அரையில் கட்டியுள்ள கள்வனும். யாவர்க்கும் தலைவனும் ஆகிய தனது திருவன் பார்த்தான் பனங்காட்டூரில் பொருந்தியிருக்கின்ற எங்கள் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்ன ?
879. வஞ்சமற்ற மனத்தாரை
மறவாத பிறப்பிலியைப்
பஞ்சிச்சீ றடியா ளைப்
பாகம்வைத்து உகந்தானை
மஞ்சுற்ற மணிமாட
வன்பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்துஎங் கள்பிரானை
நினையாதார் நினைவென்னே.
தெளிவுரை : தூய மனம் உடையவரை என்றும் மறவாதவனும் பிறப்பில்லாதவனும் செம்பஞ்சு ஊட்டிய சிறிய அடிகளை உடைய உமாதேவியை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளவனும் ஆகிய மேகங்கள் தவழும் மணிகள் இழைத்த மாடங்களையுடைய திருவன் பார்த்தான் பனங்காட்டூரிலும் எங்கள் நெஞ்சத்திலும் கோயில் கொண்டிருக்கின்ற பெருமானை நினையாதவரது நினைவுதான் என்னே !
880. மழையானும் திகழ்கின்ற
மலரோன்என்று இருவர்தாமும்
உழையாநின்று அவர்உள்க
உயர்வானத்து உயர்வானைப்
பழையானைப் பனங்காட்டூர்
பதியாகத் திகழ்கின்ற
குறைகாதற்கு அடிமைகட்கு
குழையாதார் குழைவென்னே.
தெளிவுரை : மேகம் போன்ற நிறமுடைய திருமாலும் மலரில் இருப்பவனாகிய பிரமனும் என்ற இருவரும் பணிசெய்ய வானத்திலும் உயர்ந்தவனும் எல்லாரிலும் பழையவனும் ஆகிய திருவன்பார்த்தான் பனங்காட்டூரைத் தனது ஊராகக் கொண்டு விளங்குகின்ற குழை யணிந்த காதையுடைய பெருமானுக்குத் தொண்டு புரிவதில் மனம் நெகிழாதவரது மன நெகிழ்ச்சிதான் என்னே !
881. பாரூரும் பனங்காட்டூர்ப்
பவளத்தின் படியானைச்
சீரூரும் திருவாரூர்ச்
சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் அடித்தொண்டன்
அடியன்சொல் அடிநாய்சொல்
ஊரூரன் உரைசெய்வார்
உயர்வானத்து உயர்வாரே.
தெளிவுரை : தனது பெயர் நிலம் முழுவதும் பரவிய திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிக்கின்ற பவளம் போன்ற நிறமுடைய பெருமானை, புகழ்மிக்க திருவாரூர் பெருமானது பெயரைத் தலையில் வைத்துள்ள, அப்பெருமானுக்கு அடித் தொண்டு செய்யும் நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களை. அவரவர் ஊரில் உரை செய்வாரும் சிவலோகத்தில் உயர்வு பெற்று விளங்குவர்.
திருவாரூர்ச் சிவன்பேர் சென்னியில் வைத்த என்றது ஆரூரன் எனப்பெயர் பெற்றதன் காரணத்தை விளக்கியவாறு.
திருச்சிற்றம்பலம்

87. திருப்பனையூர் (அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருப்பனையூர்,திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
882. மாடமாளிகை கோபுரத்தொடு
மண்டபம்வள ருள்வளர்பொழில்
பாடல் வண்டறையும்
பழனத் திருப்பனையூர்த்
தோடுபெய்தொரு காதினிற்குழை
தூங்கத் தொண்டர் துள்ளிப் பாடநின்று
ஆடு மாறுவல்லார்
அவரே அழகியரே.
தெளிவுரை : உயர்ந்த மேல்மாடங்களும், சிறந்த மாளிகைகளும் கோபுரங்களும் மண்டபங்களும் நாள்தோறும் பெருகுகின்ற சோலைகளில் வண்டுகள் ஒலிக்கின்ற நல்ல வயல்களையுடைய திருப்பனையூரில் கோயில் கொண்டிருக்கின்ற ஒரு காதில் குழையும் மற்றொரு காதில் தோடும் அணிந்து அடியார்கள் ஆடிப்பாட நின்று ஆடவல்லவரே யாவரினும் மிக்க அழகுடையவர். குழை அப்பனுக்கு உரியது. தோடு அம்மைக்குரியது.
883. நாறுசெங்கழு நீர்மலர்நல்ல
மல்லிகை சண்பகத்தொடு
சேறுசெய் கழனிப்
பழனத் திருப்பனையூர்
நீறுபூசிநெய் யாடிதன்னை
நினைப்பவர்தம் மனத்தன் ஆகிநின்று
ஆறு சூடவல்லார்
அவரே அழகியரே.
தெளிவுரை : மணம் வீசுகின்ற செங்கழு நீர் மலரையும் நல்ல மல்லிகை மலரையும், சண்பக மலரையும், வயல்களையும் உடைய திருப்பனையூரில் எழுந்தருளி இருக்கின்றவரும் நீறணிந்து, நெய்யில் மூழ்கித் தம்மை நினைப்பவரது மனத்தில் உறைபவரும் நீரை முடியில் தாங்குப வரும் ஆகிய அவரே யாவரினும் மிக்க அழகுடையவர்.
884. செங்கண் மேதிகள் சேடெறிந்து
தடம்படிதலிற் சேல்இனத்தொடு
பைங்கண் வாளைகள்பாய்
பழனத் திருப்பனையூர்த்
திங்கள்சூடிய செல்வனார்அடி
யார்தம் மேல்வினை தீர்ப்பராய்விடில்
அங்கிருந்து உறைவார்
அவரே அழகியரே.
தெளிவுரை : சிவந்த கண்களையுடைய எருமைகள். வயலைச் சேறாக்கி, குளங்களில் சென்று வீழ்தலினால், அங்குள்ள கயல் மீன்களின் கூட்டமும், பசிய கண்களையுடைய வாளை மீன்களும் துள்ளி வீழ்கின்ற வயல்கள் நிறைந்த திருப்பனையூரில் விரும்பியிருக்கின்ற சந்திரனைச் சூடிய செல்வனார், தம் அடியார் மேல் வருகின்ற வினையைத் தீர்ப்பாரானால் அந்நகரில் இருக்கின்ற அவரே யாவரினும் மிக்க அழகுடையவர்.
தீர்ப்பராய் விடில் என்றது தெளிவுப் பொருட்கண் வந்தது.
885. வாளைபாய மலங்கிளங்கயல்
வரிவரால்உக ளுங்கழனியுள்
பாளைஒண் கமுகம்
புடைசூழ் திருப்பனையூர்த்
தோளும்ஆகமும் தோன்ற நட்டமிட்டு
ஆடுவார்அடித் தொண்டர் தங்களை
ஆளு மாறுவல்லார்
அவரே அழகியரே.
தெளிவுரை : வாளை மீன்கள் துள்ள மலங்கும் இளமையான கயலும், வராலும் ஆகிய மீன்கள் பிறழ்கின்ற கழனிகளில் பக்கங்களில் கமுக மரங்கள் சூழ்ந்துள்ள திருப்பனையூரில் அமர்ந்துள்ள திரண்ட தோள்களும் அகன்ற மார்பும் பொலிவுற நடனம் ஆடுபவரும் தம் தொண்டர்களை ஆளவல்லவரும் ஆகிய அவரே யாவரினும் மிக்க அழகு உடையவர்.
886. கொங்கை யார்பலரும் குடைந்து
ஆட நீர்க்குவளை மலர்தரப்
பங்கயம் மலரும்
பழனத்  திருப்பனையூர்
மங்கை பாகமும் மாலோர் பாகமும்
தாம்உடையவர் மான்மழுவினோடு
அங்கைத் தீஉகப்பார்
அவரே அழகியரே.
தெளிவுரை : மகளிர் பலரும் மூழ்கி விளையாடுதலினால் குளத்து நீரில்குவளைப் பூக்கள் மலர, அவற்றிற்கு எதிராகத் தாமரை மலர்கள் மலர்கின்ற வயல்கள் நிறைந்த திருப்பனையூரில் விரும்பி யிருக்கின்ற வரும், உமையையுடைய ஒரு பாகத்தையும் திருமாலையுடைய ஒரு பாகத்தையும் கொண்டவரும் அகங்கையில் மான், மழு, தீ என்னும் இவற்றை விரும்பி ஏந்துபவரும் ஆகிய அவரே யாவரினும் மிக்க அழகுடையவர். மங்கையும் மாலும் இருத்தல் இடப்பாகம் ஒன்றிலே தான். அவை வேறு வேறு நிலைகளாதலின் அவற்றை ஏற்ற பெற்றியான் உடையவர் எனக் கொள்க.
887. காவிரிபுடை சூழ்சோணாட்டவர்
தாம்பரவிய கருணையங்கால் அப்
பாவிரி புலவர்
பயிலும் திருப்பனையூர்
மாவிரிமட நோக்கிஅஞ்ச
மதகரிஉரி போர்த்துஉகந்தவர்
ஆவில்ஐந்து உகப்பார்
அவரே அழகியரே.
தெளிவுரை : காவிரி நதி சூழ்ந்த சோழநாட்டில் உள்ளவர்கள் துதிக்கின்ற கருணைக் கடலாய், பாக்களை விரித்துப் பாடுகின்ற புலவர்கள் பலகாலும் சொல்லும் திருப்பனையூரில் பொருந்தியிருக்கின்ற வரும் உமாதேவி அஞ்சுமாறு மதம் பொருந்திய யானையின் தோலை விரும்பிப் போர்த்தவரும் பசுவில் தோன்றுகின்ற ஐந்தினை விரும்பி மூழ்குகின்றவரும் ஆகிய அவரே யாவரினும் மிக்க அழகுடையவர்.
888. மரங்கள்மேல்மயில் ஆலமண்டப
மாடமாளிகை கோபுரத்தின்மேல்
திரங்கல்வன் முகவன்
புகப்பாய் திருப்பனையூர்த்
துரங்கன்வாய் பிளந்தானும்
தூமலர்த் தோன்றலும் அறியாமல் தோன்றிநின்று
அரங்கில் ஆடவல்லார்
அவரே அழகியரே.
தெளிவுரை : மரக்கிளைகளின்மேல் நின்று மயில்கள் ஆட மண்டபம், மாடம், மாளிகை, கோபுரம் இவைகளின் மேல் தோல் சுருங்கிய முகத்தையுடைய குரங்குகள் தாவுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற வரும் குதிரை உருவங்கொண்டு வந்து கேசி என்னும் அசுரனது வாயைப் பிளந்து அழித்த திருமாலும், பிரமனும் அறியாதபடி விளங்கி நின்று மன்றில் நடனமாட வல்லாரும் ஆகிய அவரே யாவரினும் மிக்க அழகுடையவர்.
889. மண்ணெலாம் முழ வம்அதிர்தர
மாடமாளிகை கோபுரத்தின்மேல்
பண்ணி யாழ்முரலும்
பழனத்  திருப்பனையூர்
வெண்ணிலாச்சடை மேவியவிண்
ணவரோடு மண்ணவர்தொழ
அண்ணல் ஆகிநின்றார்
அவரே அழகியவரே.
தெளிவுரை : மாடம், மாளிகை, கோபுரம் இவைகளில் மண் பொருந்திய மத்தளம் அதிர, யாழ்கள் பண்களை இசைக்கின்ற நல்ல வயல்கள் சூழ்ந்த திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்றவரும் வெண்மையான சந்திரன் சடைமேல் பொருந்த விண்ணவரும் மண்ணவரும் தொழுமாறு தலைவராகி நின்றவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகு உடையவர். மண்ணிலா முழவம் என. பாட பேதங்கொண்டு மார்ச்சனை எனப்பொருள் கொள்ளப்பட்டது.
890. குரக்கினங்குதி கொள்ளத்தேன்உகக்
குண்டுதண்வயல் கெண்டை பாய்தரப்
பரக்குந் தண்கழனிப்
பழனத்  திருப்பனையூர்
இரக்கம் இல்லவர் ஐந்தொடு ஐந்தலை
தோள்இருபது தாள்நெரிதர
அரக்கனை அடர்த்தார்
அவரே அழகியரே.
தெளிவுரை : குளத்தினுள் பூக்களில் உள்ள தேன் சிந்தும் படி குரங்கின் கூட்டம் குதிக்க, அவற்றின் அருகில் கெண்டை மீன் துள்ளும்படி பரந்திருக்கின்ற குளிர்ந்த வயல்களையுடைய திருப்பனையூரில் மேவியிருக்கின்ற வரும் இரக்கம் இல்லாதவராய், அரக்கனாகிய இராவணனை அவனது பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியும்படி தமது காலால் நெருக்கிய வரும் ஆகிய அவரே யாவரினும் மிக்க அழகுடையவர்.
891. வஞ்சி நுண்ணிடை மங்கை பங்கினர்
மாதவர்வளரும் வளர்பொழில்
பஞ்சின் மெல்லடியார்
பயிலும் திருப்பனையூர்
வஞ்சியும் வளர் நாவலூரன்
வனப்பகையவள் அப்பன் வன்தொண்டன்
செஞ்சொற் கேட்டுகப்பார்
அவரே அழகியரே.
தெளிவுரை : வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையையுடைய உமாதேவியது பங்கை உடையவராய், பெரிய தவத்தவர்கள் மிகுகின்ற வளர்கின்ற சோலைகளையுடைய மகளிர் ஆடல் பாடல்களைப் பயில்கின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்றவரும் நொச்சியேயன்றி வஞ்சியும் வளர்கின்ற திருநாவலூரில் தோன்றியவனும் வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்தொண்டரது செவ்விய சொற்களாகிய பாடல்களைக் கேட்டு மகிழ்கின்றவருமாகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையவர்.
திருச்சிற்றம்பலம்

88. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை,திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
நம்பினார்க்கருள் செய்யும்அந்தணர்
நான்மறைக்குஇடம் ஆயவேள்வியுள்
செம்பொனார் மடவார்
அணிபெற்ற திருமிழலை
உம்பரார்தொழுது ஏத்தமாமலை
யாளொடும்உட னேஉறைவிடம்
அம்பொன் வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
தெளிவுரை : இத் திருப்பதிகம், இறைவர் திருமால் முதலிய பலர்க்கு அருள் புரிந்தமையைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் புலப்படுத்தி, தமக்கும் அருளுமாறு வேண்டி அருளிச் செய்தது.
அந்தணர்களது நான்கு வேதங்களுக்கு இடமாகிய வேள்வியினுள் உம்மை விரும்பி வழிபடுவோர்க்கு அருள் செய்கின்றவரே, செம்பொன்னால் இயன்ற பாவை போன்ற மகளிர் அழகு பெற்று விளங்குகின்ற திருமிழலையுள் நீர் உயர்ந்த மலைமகளோடு உடளாகித் தேவர்கள் தொழுது துதிக்க உறைகின்ற இடத்தை அழகிய பொன்போலச் சிறந்த வீழி மரத்தின் நிழலாகக் கொண்டவரே. அடியேனுக்கும் அருள் செய்வீராக.
வீழி மரமே இத்தலத்தின் மரம்.
893. விடங்கொள் மாமிடற் றீர்வெள்ளைச்சுருள் ஒன்று
இட்டுவிட்ட காதினீர் என்று
திடங்கொள் சிந்தையினார்
கலிகாக்கும் திருமிழலை
மடங்கல்பூண்ட விமானமண்மிசை
வந்திழிச்சிய வானநாட்டையும்
அடங்கல் வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
தெளிவுரை : விடத்தை உண்ட கரிய கண்டத்தையுடையவரே, வெண்மையான சங்கக்குழையை யுடைய காதை உடையவரே என்று போற்றி, உறுதி கொண்ட உள்ளத்தையுடைய அந்தணர்கள் உலகிற்கு வறுமை வாராமல் காக்கின்ற திருமிழலையுள் சிங்கங்கள் தாங்குகின்ற விமானம் ஒன்றை உம் பொருட்டு மண் மேல் வந்து இறங்கச் செய்த வானுலகத்தையும் தன்கீழ் அடக்குதலையுடைய வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே. அடியேனுக்கு அருள் செய்வீராக.
இத்தலத் திருக்கோயிலில் உள்ள விமானம் திருமாலால் கொண்டு வரப்பட்டு, விண்ணிழி விமானம் எனப்பெயர் பெற்று விளங்குகிறது.
894. ஊனைஉற்றுயிர் ஆயினீர்ஒளி
மூன்றுமாய்த்தெளி நீரோடுஆன் அஞ்சின்
தேனை ஆட்டுகந்தீர்
செழுமாடத் திருமிழலை
மானைமேவிய கையினீர்மழு
ஏந்தினீர்மங்கை பாகத்தீர்விண்ணில்
ஆன வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
தெளிவுரை : உடம்பைப் பொருந்திய உயிரானவரே. ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளிகளும் ஆனவரே. தெளிவாகிய நீரோடு ஆன் ஐந்தினிடைத் தேனை ஆடுதலை விரும்புபவரே. மானைப் பொருந்திய கையை உடையவரே. உயர்ந்த மாடங்களையுடைய திருமிழலையில் வானின்கண் ஓங்கிய வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே. அடியேனுக்கும் அருள் செய்ய வேண்டுகிறேன்.
895. பந்தம் வீடுஇவை பண்ணினீர்படி
றீர்மதிப்பிதிர்க் கண்ணி யீர்என்று
சிந்தைசெய் நான்மறையோர்
சிறந்தேத்தும் திருமிழலை
வந்துநாடகம் வானநாடியர்
ஆடமால்அயன் ஏத்தநாடொறும்
அந்தண் வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
தெளிவுரை : உயிர்களுக்கு, பந்தம், வீடு என்னும் இரண்டையும் அமைத்தவரே, அவ்வாறு அமைத்தும் அவைகட்கு ஒளித்து நிற்பவரே, நிலாத் துண்டாமாகிய கண்ணியைச் சூடியவரே என்று நினைந்திருக்கும் செவ்விய ஒழுக்கத்தை உடையவர்களது திருமிழலையுள் நாள்தோறும் வானுலக நாடக மகளிர் வந்து நடனம் ஆடவும் திருமாலும் பிரமனும் துதிக்கவும் அழகிய குளிர்ந்த வீழி மரத்தின் அடியை இடமாகக் கொண்டவரே, அடியேனுக்கும் அருள் செய்வீராக.
896. புரிசைமூன்றையும் பொன்றக் குன்றவில்
ஏந்திவேதப் புரவித்தேர்மிசைத்
திரிசெய் நான்மறையோர்
சிறந்தேத்தும் திருமிழலைப்
பரிசினால்அடி போற்றும் பத்தர்கள்
பாடிஆடப் பரிந்துநல்கினீர்
அரிய வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
தெளிவுரை : வேதங்களாகிய குதிரைகளைப் பூண்ட தேரின் மேல் மலையாகிய வில்லை ஏந்தி நின்று மதில்கள் மூன்றையும் அழியும்படி வேறுபடுத்தியவரே, நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள் அறிவு மிகுந்து துதிக்கின்ற திருமிழலையுள், நீர் உமது திருவடியைப் போற்றுகின்ற அடியவர்கள் அன்பினால் பாடி ஆட, அவர்களுக்கு மனம் இரங்கி, அவர்க்கு வேண்டுவனவற்றை அளித்தீர். அதுபோல அடியேனுக்கும் அருள் செய்ய வேண்டுகிறேன்.
897. எறிந்தசண்டி இடந்தகண்ணப்பன்
ஏத்துபத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர்
செறிந்த பூம்பொழில்
தேன்துளிவீசும் திருமிழலை
நிறைந்த அந்தணர் நித்தம் நாள்தொறும்
நேசத்தால் உமைப் பூசிக்கும் இடம்
அறிந்து வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
தெளிவுரை : பூஞ்சோலைகள் நிறைந்த திருமிழலையுள், நிறைந்துள்ள அந்தணர் பலரும் நாள்தோறும் நிலையாக அன்பினால் உம்மை வழிபடும் இடத்தை அறிந்து வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே. நீர் தந்தையது தாளை வெட்டிய சண்டேச நாயனார், தமது கண்ணைப் பெயர்த்து அப்பிய கண்ணப்ப நாயனார் முதலாக உம்மை வழிபட்ட அடியவர் பலர்க்கு உயர்கதியைத் தந்தருளினீர்; அது போல அடியேனுக்கும் அருள் செய்வீராக.
898. பணிந்தபார்த்தன் பகீரதன்பல
பத்தர் சித்தர்க்குப் பண்டுநல்கினீர்
திணிந்த மாடந்தோறும்
செல்வம் மல்கு திருமிழலைத்
தணிந்த அந்தணர் சந்திநாள்தொறும்
அந்திவான்இடு பூச்சிறப்பவை
அணிந்து வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
தெளிவுரை : நெருங்கிய மாடங்கள்தோறும் செல்வம் நிறைந்த திருமிழலையுள் சினம் தவிர்ந்த அந்தணர்கள் காலை, நடுப்பகல், அந்தி ஆகிய மூன்று காலங்களிலும் இடுகின்ற பூக்களின் ஒப்பனையை அணிந்து கொண்டு வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே. நீர் உம்மை வணங்கிய அருச்சுனன், பகீரதன், பல அடியவர், சித்தர் முதலியோர்க்கு முற்காலத்தில் அருள் செய்தீர். அதே போன்று அடியேனுக்கும் அருள்பாலிப்பீராக. அந்தியை வேறு ஓதினார்  அஃது ஒப்பனைக்குச் சிறந்த காலமாதல் பற்றி.
899. பரந்தபாரிடம் ஊரிடைப்பலி
பற்றிப் பார்த்துஉணும் சுற்றம்ஆயினீர்
தெரிந்த நான்மறை
யோர்க்குஇடம் ஆகியதிருமிழலை
இருந்துநீர் தமிழோடுஇசைகேட்கும்
இச்சையாற் காசு நித்தம் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
தெளிவுரை : மிகுந்த பூதகணங்கள், ஊர்களில் பிச்சையேற்று அதனைப் பகுத்து உண்ணும் சுற்றமாக உடையவரே, நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்க்கு இடமாகிய திருமிழலையுள் அரிய குளிர்ந்த வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே, நீர் இனிதிருந்து இசையைத் தமிழோடு படிப்போர்க்குப் பொற்காசினை நாள்தோறும் வழங்கினீர். அதுபோல அடியேனுக்கும் அருள் செய்ய வேண்டுகின்றேன்.
இத்தலத்தில் ஞானசம்பந்தருக்கும் அப்பர் சுவாமிகளுக்கும் சிவபெருமான் படிக்காசு அருளினார்.
900. தூயநீர்அமு தாயவாறுஅது
சொல்லுகென்றுஉமைக் கேட்கச்சொல்லினீர்
தீயராக்குலை யாளர்
செழுமாடத் திருமிழலை
மேயநீர்பலி ஏற்றதுஎன்என்று
விண்ணப்பஞ்செய் பவர்க்குமெய்ப்பொருள்
ஆய வீழி கொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
தெளிவுரை : தீ வளர்த்தலை ஒழியாத அந்தணர்களது வளவிய மாடங்களையுடைய திருமிழலையுள் விரும்பியிருக்கின்ற நீர் பிச்சை எடுப்பது ஏன் என்று விளவுவோர்க்கு, மெய்ப்பொருளாய் விளங்குகின்ற வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே, நீர், உமக்குத் தூய்மையாகிய நீரே அமுத மாயினவாற்றைச் சொல்லுக என்று உமையவள் கேட்க, அதனைச் சொல்லியிருளினீர். அதுபோல அடியேனுக்கும் அருள் செய்வீராக.
இறைவன் தன்னை அடியவர்கள் நீராட்டி வழிபடுதலை மிகவும் விரும்புகின்றவர். சிவபெருமான் உமைக்கு ஆகமங்கள் பலவற்றையும் சொல்லி அவற்றின் முடிவாக, யாம் விரும்புவது பூசை ஒன்றையே என அருளினார்.
901. வேதவேதியர் வேதநீதியர்
ஓதுவார்விரி நீர்மிழலையுள்
ஆதி வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுகென்று
நாதகீதம்வண் டோதுவார் பொழில்
நாவலூரன்வந் தொண்டன்நற்றமிழ்
பாதம் ஓதவல்லார்
பரனோடு கூடுவரே.
தெளிவுரை : வேதத்தை ஓதுகின்ற வேதியர்களும் வேதத்தின் பொருளை விளக்குபவர்களும் வாழ்கின்ற பரந்த நீரையுடைய திருமிழலையுள் பழையதாகிய வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே, அடியேனுக்கும் அருள்செய்வீர் என்று பாடிய இனிய இசையை வண்டுகள் பாடுகின்ற நீண்ட சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றினவனும் வன்தொண்டனும் ஆகிய நம்பியாரூரனது இந்நல்ல தமிழ்ப் பாடல்களை, அப்பெருமான் திருவடிக்கீழ் நின்று பாட வல்லவர் அவனோடு இரண்டறக் கலப்பர்.
திருச்சிற்றம்பலம்

89. திருவெண்பாக்கம் (அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில், பூண்டி,திருவள்ளூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
902. பிழையுளன பொறுத்திடுவர்
என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே
படலமென்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா
கோயிலுளா யேஎன்ன
உழையுடையான் உள்ளிருந்து
உளோம்போகீர் என்றானே.
தெளிவுரை : குழைபொருந்திய தொங்கும் காதினை உடையவனே, நம்மாட்டுப் பிழை உளவாவனவற்றை நம் பெருமானார் பொறுத்துக் கொள்வர் என்னும் துணிவினால் அடியேன் பிழை செய்தால், அதனைப் பொறாததனால் உனக்கு உளதாகும் பழியை நினையாமலே நீ என் கண்களைப் படலத்தால் மறைத்து விட்டாய். இதுபோது இக்கோயிலின் உள்ளே இருக்கின்றாயோ ? என்று நான் வினாவ, மானை ஏந்திய அவன், உளோம் போகீர் என்று சொன்னான் அன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !
903. இடையறியேன் தலையறியேன்
எம்பெருமான் சரணம் என்பேன்
அடையுடையன் நம் அடியேன்
என்றவற்றைப் பாராதே
விடையுடையான் விடநாகன்
வெண்ணீற்றன் புலியின்தோல்
உடையுடையான் எனையுடையான்
உளோம் போகீர் என்றானே.
தெளிவுரை : யான் யாதொரு செயலிலும் முதல் இன்னது; நடு இன்னது; முடிவு இன்னது என்று அறியேன், எம் பெருமானே எனக்குப் புகலிடம்; ஆவது ஆகுக என்று கவலையற்றிருப்பேன். அதனை அறிந்திருந்தும் இடபவாகனத்தை உடையவனும், விடம்பொருந்திய பாம்பை அணிந்தவனும் வெண்மையான திருநீற்றைப் பூசுபவனும், புலியின் தோலாகிய உடையை உடையவனும் என்னை ஆளாக உடையவனும் ஆகிய இறைவன் இவன் நம்மையே அடைக்கலமாக உடையவன் என்று நினையாமல் உளோம் போகீர் என்று சொன்னான் அல்லவா ? இதுவோ அவனது கண்ணோட்டம் !
904. செய்வினைஒன்று அறியாதேன்
திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும்
பொறுத்திடநீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தா
யோஎன்னப் பரிந்தென்னை
உய்யஅருள் செய்யவல்லான்
உளோம்போகீர் என்றானே.
தெளிவுரை : செய்யத்தக்கதொரு காரியத்தை அறியாத நான். பெருமானுடைய திருவடிகளே புகல் என்று பொய்யுடையேன் தவறு (சபதம்) செய்தாலும், பொறுத்தலையுடைய நீ பொறுத்துக் கொள்ள வேண்டாமோ? நச்சுப்பையையுடைய பாம்புகளை அணிந்த பெருமானே, இங்கே (கோயிலில்) இருக்கின்றாயோ என்று கேட்க (என்னிடம்) அன்பு கொண்டு என்னைக் கடைத்தேறும்வகை அருள் செய்ய வல்ல பெருமான் இப்போது அத்தன்மையை விட்டு அயலார் போல, நாம் இருக்கின்றோம் நீர் போம் என்று கூறினானே, யான் யாது செய்வேன் ?
905. கம்பருங் கரிஉரியன்
கறை மிடற்றன் காபாலி
செம்பவளத் திருவுருவன்
சேயிழையோடு உடனாகி
நம்பிஇங்கே இருந்தீரே
என்றுநான் கேட்டலுமே
உம்பர்தனித் துணைஎனக்கு
உளோம்போகீர் என்றானே.
தெளிவுரை : நம்பியே, நீ, செவ்விய அணியினையுடைய மலைமகளோடு உடனாயினவன் ஆதலின், இருவீடும் இங்கே இருக்கின்றீர்களோ என்று நான் வினவ, அசைதல் பொருந்திய யானையினது தோலையும் கறுத்த கண்டத்தையும் கபாலத்தையும் செவ்விய பவளம் போன்ற உருவத்தையும் உடையவனும், தேவர்களுக்கு ஒப்பற்ற தலைவனும் ஆகிய இறைவன். எனக்கு, உளோம் போகீர் என்று சொன்னான் அன்றே ! யான் யாது செய்வேன் ?
906. பொன்இலங்கு நறுங்கொன்றை
புரிசடைமேல் பொலிந்துஇலங்க
மின்இலங்கு நுண்இடையாள்
பாகமா எருதேறி
துன்னியிரு பால்அடியார்
தொழுதேத்த அடியேனும்
உன்னமதாய்க் கேட்டலுமே.
உளோம்போகீர் என்றானே.
தெளிவுரை : கொன்றை மலர் சடையின்மேல் பொருந்துதலால் மேலும் பொலிவுற்று விளங்க, மெல்லிடையாளாகிய உமாதேவி ஒருபாகத்தில் இருக்க, எருதை வாகனமாக உடைய சிவபெருமானை இரண்டு பக்கங்களிலும் அடியார்கள் நெருங்கி வணங்கித் துதிக்க, யானும் உயர்ந்த முறையில் கோயில் உளாயே என்று கேட்க, அவன் உளோம் போகீர் என்று சொன்னான் அல்லவா ? யான் யாது செய்வேன் ? உயர்ந்த முறைமையிற் கேட்டது நீ அடியவர்கள்பால் இரக்கம் உடையவன் ஆயிற்றே என்னும் பொருள் உடையது.
907. கண்ணுதலால் காமனையும்
காய்ந்ததிறல் கங்கைமலர்
தெண்ணிலவு செஞ்சடைமேல்
தீமலர்ந்த கொன்றையினான்
கண்மணியை மறைப்பித்தாய்
இங்கிருந்தா யோஎன்ன
ஒண்ணுதலி பெருமானார்
உளோம்போகீர் என்றானே.
தெளிவுரை : காமனைத் தனது நெற்றிக் கண்ணால் எரித்த ஆற்றலையுடைய, கங்கை விளங்குகின்ற தெள்ளிய நிலவை அணிந்த, சடையின்மேல் தீப்போன்ற கொன்றை மலரையுடைய பெருமானை, அடியேன் என் கண்பார்வையை மறைத்தவனே இங்கு உள்ளாயோ? என்று வினவ உமாதேவியின் தலைவன், நாம் இருக்கின்றோம் நீர் போகலாம் என்று கூறுகின்றானே, யான் என் செய்வேன் ?
908. பார்நிலவு மறையோரும்
பத்தர்களும் பணிசெய்யத்
தார்நிலவு நறுங்கொன்றைச்
சடையனார் தாங்கரிய
கார்நிலவு மணிமிடற்றீர்
இங்கிருந்தீ ரேஎன்ன
ஊர்அரவம் அரைக் கசைத்தான்
உளோம்போகீர் என்றானே.
தெளிவுரை : கொன்றைப் பூவை அணிந்த சடையை உடையவரே ! நஞ்சுபொருந்திய நீலகண்டரே, நீர் அந்தணர்களும் அடியவர்களும் பணி செய்ய இங்கு இருக்கின்றீரோ ? என்று யான் வினவ, பாம்பை அரையிற் கட்டிய இறைவன், நாம் இருக்கின்றோம் நீர் போகலாம் என்றான். யான் என் செய்வேன்?
909. வாரிடங்கொள் வனமுலையாள்
தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பலசூழப்
பயின்றாடும் பரமேட்டி
காரிடங்கொள் கண்டத்தன்
கருதும்இடம் திருவொற்றி
யூரிடங்கொண்டு இருந்தபிரான்
உளோம்போகீர் என்றானே.
தெளிவுரை : உமையோடு, பூதங்கள் பலசூழ முதுகாட்டில் பலகாலும் ஆடுகின்ற மேலான நிலையில் உள்ளவனும், நீலகண்டத்தை உடையவனும், தான் விரும்பும் திருவொற்றியூரையே தனக்கு இடமாகக் கொண்டவனும் ஆகிய பெருமான் யான் வினவியதற்கு, நாம் இருக்கின்றோம், நீர் போம் என்று சொன்னான். இதுவோ அவனது இரக்க குணம்.
910. பொன்நவிலும் கொன்றையினாய்
பொய்மகிழ்க்கீழ் இருஎன்று
சொன்ன எனைக் காணாமே
சூளறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே
இங்கிருந்தா யோஎன்ன
ஒன்னலரைக் கண்டார்போல்
உளோம்போகீர் என்றானே.
தெளிவுரை : கொன்றை மலரை அணிந்த பெருமானே, நீ கோயிலை விட்டுப்போய் மகிழ மரத்தின்கீழ் இரு என்று சொன்ன என்னை, அதன் பொருட்டுக் காணாமல் சங்கிலியிடம் சென்று சூளுறவு மகிழ மரத்தின் கீழே ஆகுக என்று சொல்லவல்ல பெருமானே, நீ இங்கு இருக்கின்றாயோ என்று யான் வினவ, எம்பெருமான் என்னைப் பகைவரைக் கண்டாற்போல வெறுத்து உளோம் போகீர் என்று சொன்னானே. இதுவோ அவனது இரக்கம் ! இந்நிகழ்ச்சியின் விரிவைப் பெரிய புராணத்துள் காணலாம்.
911. மான்திகழும் சங்கிலியைத்
தந்துவரு பயன்கள்எல்லாம்
தோன்ற அருள் செய்தளித்தாய்
என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில்
இங்கிருந்தா யோஎன்ன
ஊன்றுவதோர் கோல்அருளி
உளோம்போகீர் என்றானே.
தெளிவுரை : மான் போன்ற சங்கிலியை எனக்கு ஈந்து, அதனால் ஏற்படும் பயன்கள் எல்லாம் எனக்கு விளங்கும்படி கூறிக் காத்தாய் என்று சொல்லுவற்கு, தந்தையே, வெண்கோயிலாகிய இவ்விடத்தில் நீ இருக்கின்றாயோ என்று யான் வினவ, எம்பெருமான், ஊன்றுவதாகிய ஒரு கோலைக் கொடுத்து, உளோம் போகீர் என்றானே. இதுதானா அவனது தாட்சணியம்.
912. ஏராரும் பொழில்நிலவு
வெண்பாக்கம் இடங்கொண்ட
காராரும் மிடற்றானைக்
காதலித்திட்டு அன்பினொடும்
சீராரும் திருவாரூர்ச்
சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் தமிழ்வல்லார்க்கு
அடையாவல் வினைதானே.
தெளிவுரை : புகழ்நிறைந்த திருவாரூரில் உள்ள சிவபெருமானது திருப்பெயரைத் தலையில் வைத்துள்ள நம்பியாரூரன், சோலைகள் நிறைந்த திருவெண்பாக்கத்தை இடமாகக் கொண்ட திருநீல கண்டனை மிக விரும்பி அன்போடும் பாடிய இத் தமிழ்ப் பாடல்களைப் பாடவல்லவர் மேல் வலிய வினைகள் வந்து சேராவாம்.
திருச்சிற்றம்பலம்

90. கோயில் (அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்,கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
913. மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே
மனனேநீ வாழும் நாளும்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடு கரதலத்தில் தமருகமும்
எரிஅகலும் கரிய பாம்பும்
பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றாம் அன்றே.
தெளிவுரை : மனமே, நீ குஞ்சித்து ஆடுகின்ற தனது திருவடிக்குச் செய்யும் தொண்டின்கண் வாழாமல் உண்டு உடுத்தே வாழும் நாட்களிலும் உன்னை அவ்வாறே சென்று கெடாதவாறு தடுத்து தனது இச்சைவழி நடாத்தி பின்பு நீ செய்த பாவத்தின் பொருட்டு உன்னைக் கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்கு முயலும் போது அதனையும் தடுத்து ஆட் கொள்பவனாகிய, கையில் தமருகத்தையும் நெருப்பு எரிகின்ற தகழியையும் சினந்து ஆடுகின்ற கரிய பாம்பையும் பிடித்துக் கொண்டு ஆடுகின்ற, பெரும்பற்றப்புலியூரில் திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம்பெருமானை அடைந்து விட்டோம் அன்றே. இனி நாம் பெற வேண்டுவது யாது ?
இத் திருப்பாடலுள், நாயனார் தம்மைத் தடுத்தாட் கொண்ட அனுபவத்தையே கூறியுள்ளார்.
914. பேராது காமத்தில் சென்றாற்போல்
அன்றியே பிரியாது உள்கிச்
சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன்
அடிவீழும் திருவி னாரை
ஓராது தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றாம் அன்றே.
தெளிவுரை : மீளாது காமவசப்பட்டுச் சென்றவனைப் போல் நீங்காமல் வேறொரு நினைவும் இல்லாமல் தியானித்துப் பெருமை வாய்ந்த மெய்யடியார்களாய் கோவிலுக்குச் சென்று, இறைவன் முன் செல்வத்தை உடையாரை ஆராயாமல் யமபடர்கள் செக்கிலிடுதல் முதலிய நரக வேதனைக்கு உட்படுத்த முயலும்போது தடுத்து, தன்னைச் சேர்ந்தவனாக்கிக் கொள்ளுபவனாகிய, அடியார்கள் போற்றும் புலியூரில் உள்ள சிற்றம்பலத்தில் ஆடும் எம் சிவபெருமானைப் பெற்றோமல்லவா? பேராளர் என்றது தில்லைவாழ் அந்தணரை.
915. நரியார்தம் கள்ளத்தால் பக்கான
பரிசொழிந்து நாளும் உள்கித்
திரியாத அன்பராய்ச் சென்றுமுன்
அடிவீழும் சிந்தை யாரைத்
தரியாது தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றாம் அன்றே.
தெளிவுரை : மனமே, நரியினது வஞ்சனை போன்ற வஞ்சனையினால் இரண்டுபட்ட தன்மையிலிருந்து நீங்கி, நாள்தோறும் தன்னை நினைத்து மாறுபடாத அன்பை உடையவராய்த் திருமுன் சென்று திருவடியில் விழுந்து வணங்கும் கருத்துடையாரை யமபடர்கள் துன்புறுத்த முயலும்போது, சிறிதும் தாழாமல் அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோம். இனி நாம் பெறவேண்டுவது ஒன்றுமில்லை.
916. கருமையார் தருமனார் தமர்நம்மைக்
கட்டியகட்டு  அறுப்பிப் பானை
அருமை யாம் தன்னுலகந் தருவானை
மண்உலகம் காவல் பூண்ட
உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா
மன்னவரை மறுக்கம் செய்யும்
பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றாம் அன்றே.
தெளிவுரை : மனமே, கறுத்த யமனது ஏவலர் நம்மைக் கட்டுவார் ஆயின், அக்கட்டினை அறுத்து எறிபவனும் நமக்குப் பிறர் பெறுதற்குரிய தனது உலகத்தைத் தருபவனும், பல்லவ மன்னனுக்குத் திறைகொடாமல் மாறுபடும் பிற மன்னர்களை வருத்துபவனும் ஆகிய பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோம். இனி நமக்கு என்ன குறை ?
917. கருமாவின் உரியாடைச் செஞ்சடைமேல்
வெண்மதியக் கண்ணி யானை
உருமன்ன கூற்றத்தை உருண்டோட
உதைத்துகந்து உலவா இன்பம்
தருவானைத் தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றாம் அன்றே.
தெளிவுரை : மனமே, யானைத் தோலைப் போர்வையாக உடைய சிவந்த சடைமேல் வெண்மையான பிறையைச் சூடியவனும், கூற்றுவனை உதைத்துப் பின்னர் அருள் செய்து மார்க்கண்டேயருக்கு அழியாத இன்பத்தைத் தந்தவனும், நம்மை, அக்கூற்றுவனது ஏவலர்கள் தண்டிக்க முயலும்போது அதைத் தடுத்து ஆட்கொள்பவனும் ஆகிய பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் இருக்கின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோம். இனி நமக்கு எந்தக் குறையும் இல்லை.
918. உய்த்தாடித் திரியாதே உள்ளமே
ஒழிகண்டாய் ஊன்கண் ஓட்டம்
எத்தாலும் குறைவில்லை என்பர்காண்
நெஞ்சமே நம்மை யாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன்
பரஞ்சோதி பாவந் தீர்க்கும்
பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்துதெம்
பெருமானைப் பெற்றாம் அன்றே.
தெளிவுரை : மனமே, பாம்பையும் சடையையும் உடையவனும் ஒளிமயமாய் உள்ளவனும், அடைந்தவரது பாவங்களை நீக்குகின்றவனும், பித்துக்கொண்டு ஆடுகின்றவனுமாகிய பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோம். இனி நமக்கு என்ன குறை ? இதைப்பற்றி நம்மைப் பலரும் புகழ்கின்றனர். ஆதலின், மனமே. நீ இனி உடம்பின்மேல் பற்று வைத்து அலையாதே.
919. முட்டாத முச்சந்தி மூவா
யிரவர்க்கும் மூர்த்தி என்னப்
பட்டானைப் பத்தராய் பாவிப்பார்
பாவமும் வினையும் போக
விட்டானை மலைஎடுத்த இராவணனைத்
தலைப்பத்தும் நெரியக் காலால்
தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்துஎம்
பெருமானைப் பெற்றாம் அன்றே.
தெளிவுரை : மனமே, தப்பாத முப்போதும் செய்யும் வழிபாட்டையுடைய அந்தணர் மூவாயிரவர்க்கும் ஒரு மூர்த்தியே என்று அனைவராலும் சொல்லப்பட்டவனும், தன்னை நினைப்பவரது பாவ புண்ணியமாகிய இருவினைகளும் விலகுமாறு நீக்குகின்றவனும், தனது மலையைத் தூக்கிய இராவணனை அவனது பத்துத் தலைகளும் நெரியும்படி காலால் அழுத்தியவனும் ஆகிய பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோம். இனி நமக்கு என்ன குறை ?
தில்லை மூவாயிரவர், பிறிதொரு கடவுளை நோக்கார் என்பதாம்.
920. கற்றானும் குழையுமாறு அன்றியே
கருதுமா கருத கிற்றார்க்கு
எற்றாலும் குறைவில்லை என்பர்காண்
உள்ளமே நம்மை நாளும்
செற்றாட்டித் தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
பெற்றேறி புலியூர்ச்சிற் றம்பலத்துஎம்
பெருமானைப் பெற்றாம் அன்றே.
தெளிவுரை : மனமே, கல்லும் தன் தன்மை மாறி உருகும் படி தன்னை நினைக்கும் முறையில் நினைக்க வல்லவர்க்கு எத்தகைய பொருளாலும் குறைவில்லை என்று பெரியோர் சொல்லுவர். அவ்வகையில் நாம், நம்மை, இயமனது தூதர்கள் பலகாலும் ஆட்டக் கருதிச் செக்கிலிட முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்கின்ற விடை ஏறுபவனாகிய பெரும்பற்றப் புலியூரிலுள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளியிருக்கின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோம். இனி நாம் வேண்டுவது எதுவும் இல்லை.
921. நாடுடைய நாதன்பால் நன்றென்றும்
செய்மனமே நம்மை யாளும்
தாடுடைய தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
மோடுடைய சமணர்க்கும் முடையுடைய
சாக்கியர்க்கும் மூடம் வைத்த
பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்துஎம்
பெருமானைப் பெற்றாம் அன்றே.
தெளிவுரை : மனமே, நம்மைக் கூற்றுவனது ஏவலர் துன்புறுத்த முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும், சமணர்க்கும் சாக்கியர்கட்கும் அறியாமையை வைத்த பெருமையை உடையவனும் ஆகிய பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் இருக்கின்ற நம் பெருமானை அடைந்து விட்டோம். இனி நமக்கு ஒரு குறையும் இல்லை. அதனால் அந்த இறைவனிடத்தில் தொண்டு செய்வாயாக.
922. பாரூரும் அரவல்குல் உமைநங்கை
அவள்பங்கன் பைங்கண் ஏற்றன்
ஊரூரன் தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன்
மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற்
றம்பலத்தே பெற்றாம் அன்றே.
தெளிவுரை : மனமே, உமாதேவியை இடப்பாகத்தில் உடையவனும், இடபத்தை வாகனமாக உடையவனும், ஊர்தோறும் எழுந்தருளி யிருப்பவனும், நம்மை இயமனது தூதர்கள் துன்புறுத்த முற்படும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும், நம்பியாரூரனுக்குத் தலைவனும், திருவாரூரை உடையவனும், மேற்றிசையில் உள்ள கொங்குநாட்டில் அழகிய காஞ்சி நதியின் (நொய்யல் ஆறு) கரையில் கோயில் கொண்டுள்ளவனும், பேரூரில் உள்ளவரது கடவுளும் ஆகிய பட்டீஸ்வரனைப் பெரும்பற்றப்புலியூரிலுள்ள திருச்சிற்றம்பலத்தில் அடைந்து விட்டோம். இனி நமக்கு யாதொரு குறையும் இல்லை.
பேரூர், மேலைச் சிதம்பரம் என வழங்கப்படுகிறது.
திருச்சிற்றம்பலம்

91. திருவொற்றியூர் (அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர்,திருவள்ளூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
923. பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டும் கலமும் திமிலுங் கரைக்கே
ஓட்டும் திரைவாய் ஒற்றி யூரே.
தெளிவுரை : இத் திருப்பதிகம் இறைவரது பெருமையை வகுத்தோதி அவருக்கு ஏற்ற இடம் திருவொற்றியூரே என அருளிச் செய்தது.
உரையாற் சொல்லுதலேயன்றிப் பாட்டாலும் பாடித் துதித்து நிற்பார் செய்த வினைகளை நீக்குகின்ற இறைவரது இடம், மக்கள் தம்பால் சேர்க்கின்ற பெரிய மரக்கலங்களையும் சிறிய படகுகளையும் கரையில் சேர்க்கின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரே.
924. பந்தும் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
எந்தம் அடிகள் இறைவர்க்கு இடம்போல்
உந்தும் திரைவாய் ஒற்றி யூரே.
தெளிவுரை : பந்தாடுதலையும் கிளியை வளர்த்தலையும் பலகாலும் செய்கின்ற பாவை போல்வாளாகிய உமாதேவியின் மனத்தைக் கவர்பவரும், செந்நிற மேனியரும், எங்கள் தலைவருமாகிய இறைவருக்கு இடமாவது பல பொருள்களைத் தள்ளி வருகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரே.
925. பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர் சடையாற்கு இடம்போல்
உகளும் திரைவாய் ஒற்றி யூரே.
தெளிவுரை : பவளமும் கனியும் போன்ற இதழையுடைய பாவை போன்றவளாகிய உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனும் ஆண் யானையின் தோலைப் போர்த்தவனும் பிறையைச் சடையில் அணிந்தவனும் ஆகிய இறைவனுக்கு இடமாவது, புரளுகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரே.
926. என்னது எழிலும் நிறையும் கவர்வான்
புன்னை மலரும் புறவில் திகழும்
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்
உன்னப் படுவான் ஒற்றி யூரே.
தெளிவுரை : முதலில் யான் நினைக்குமாறு தன்னைத் தருபவனும், பின்பு என்னால் நினைக்கப்படுபவனும் ஆகிய இறைவன், எனது அழகையும், மன உறுதியையும் கவர்தற்பொருட்டு, திருவொற்றியூரில் புன்னை மலர்கள் மலர்கின்ற கானலிடத்தே விளங்குவான். இது சிவபிரான்மேல் காதல் கொண்டாள் ஒருத்தியது கூற்றாக அருளிச் செய்யப்பட்டது.
927. பணங்கொள் அரவம் பற்றி பரமன்
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி
வணங்கும் இடைமென் மடவார் இட்ட
உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே.
தெளிவுரை : பாம்பைக் கையில் பிடித்திருப்பவனும், மேலானவனும், பூதகணங்கள் சூழத் தலையோட்டை ஏந்திச் சென்று மகளிர் இடுகின்ற சோற்றை ஏற்பவனும் ஆகிய இறைவன் திருவொற்றியூரில் நீங்காமல் எழுந்தருளியிருப்பான்.
928. படையார் மழுவன் பால்வெண் ணீற்றன்
விடையார் கொடியன் வேத நாவன்
அடைவார் வினைகள் அறுப்பான் என்னை
உடையான் உறையும் ஒற்றி யூரே.
தெளிவுரை : மழு ஆயுதத்தையும் திருநீற்றையும் இடபக் கொடியையும், வேதத்தை ஓதுகின்ற நாவையும் உடையவனும் தன்னை அடைக்கலமாக அடைபவரது வினைகளை ஒழிப்பவனும், என்னை ஆட்கொண்டவனும் ஆகிய இறைவன் திருவொற்றியூரில் நீங்காமல் பொருந்தியிருப்பான்.
929. சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன் வினையை வீட்ட
நன்று நல்ல நாதன் நரையேறு
ஒன்றை உடையான் ஒற்றி யூரே.
தெளிவுரை : வானத்தில் உலாவிய திரிபுரங்களை வெந்து ஒழியுமாறு செய்தவனும், வினைகளைப் போக்குகின்ற நல்ல கடவுளும், வெண்மையான இடபத்தை வாகனமாக உடையவனும் ஆகிய இறைவன் திருவொற்றியூரில் நீங்காமல் கோயில் கொண்டிருப்பான்.
930. கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப் படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவும் திரைவாய் ஒற்றி யூரே.
தெளிவுரை : மயில் போன்ற சாயலையும் வளையல்களை அணிந்தவர்களுமாகிய அழகிய மகளிர் பலரும் துதிக்கின்ற பவளம் போன்ற உருவத்தை உடையவனாகிய இறைவன், கரையில் வந்து உலாவுகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரில் இருந்தே உலகில் உள்ளவரது வினைகளை எல்லாம் தீர்ப்பான்.
931. பற்றி வரையை எடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பர் ஓதம்
ஒற்றும் திரைவாய் ஒற்றி யூரே.
தெளிவுரை : தமது மலையைப் பற்றி அசைத்த அரக்கனாகிய இராவணனை, அவனது உறுப்புக்கள் இற்று முறியும்படி நெருக்கினவராகிய இறைவர், கடல் நீர் வந்து மோதுகின்ற திருவொற்றியூரிலிருந்தே அடியவரைத் தாக்கும் வினைகளை நீக்குவார்.
932. ஒற்றி யூரும் அரவும் பிறையும்
பற்றி யூரும் பவளச் சடையான்
ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாடக் கழியும் வினையே.
தெளிவுரை : பாம்பும் பிறையும் பற்றுக் கோடாக நின்று ஊரும் பவளம்போன்ற சடையையுடைய இறைவனது திருவொற்றியூர்மேல் நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களை நன்கு கற்றுப் பாடினால் வினைகள் நீங்கும். பாம்பும் பிறையும் பகையின்றி வாழ்கின்ற சடை என்பது பொருள்.
திருச்சிற்றம்பலம்

92. திருப்புக் கொளியூர் அவிநாசி (அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி,கோயம்புத்தூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
933. எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
எம்பெரு மானையே
உற்றாய்என்று உன்னையே உள்குகின்
றேன்உணர்ந்து உள்ளத்தால்
புற்றாடு அரவா புக்கொளி
யூர்அவி நாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி
யேபர மேட்டியே.
இத் திருப்பதிகத்தில் பல பாடவேதங்கள் உள்ளன.
தெளிவுரை : பாம்பை அணிந்தவனே, உயிர்களுக்கெல்லாம் தலைவனே, மேலான இடத்தில் உள்ளவனே, திருப்புக் கொளியூரில் உள்ள அவினாசி என்னும் திருக்கோயிலில் விரும்பியிருப்பவனே. ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து, மனத்தால் நினைக்கின்றேன். உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன்; உன்னை எக்காரணத்தால் மறப்பேன் !
934. வழிபோவார் தம்மோடும் வந்துடன்
கூடிய மாணிநீ
ஒழிவது அழகோ சொல்லாய்
அருளோங்கு சடையானே
பொழிலாரும் சோலைப் புக்கொளி
யூரில் குளத்திடை
இழியாக் குளித்த மாணி
எனைக்கிறி செய்ததே.
தெளிவுரை : அருள்மிக்க தவக்கோலத்தை உடையவனே. பொழில்களையும் சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தில் இறங்கிக் குளித்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் யாது? உன்னை வணங்கச் செல்பவர்களுடன் வந்து உடன் சேர்ந்த அச்சிறுவன் உன் திருமுன்னே இறந்து போவது உனக்குப் பொருந்துவதோ ? நீ சொல்லாய்.
935. எங்கேனும் போகினும் எம்பெரு
மானை நினைந்தக்கால்
கொங்கே புகினும் கூறைகொண்டு
ஆறலைப் பார்இலை
பொங்காடு அரவா புக்கொளி
யூர்அவி நாசியே
எங்கோ னேஉனை வேண்டிக்கொள்
வேன்பிற வாமையே.
தெளிவுரை : பாம்பை அணிந்தவனே, திருப்புக்கொளியூரிலுள்ள அவினாசி என்னும் திருக்கோயிலில் உள்ளவனே, எங்கள் தலைவனே, எம்பெருமானாகிய உன்னை நினைத்தால் கொங்கு நாட்டில் புகுந்தாலும் வேறு எங்குச் சென்றாலும் என்னை ஆறலைத்துக் கூறையைப் பறித்துக் கொள்பவர் சிலராவர். ஆகவே, உன்னிடம் நான் பிறவாமை ஒன்றையே வேண்டிக் கொள்வேன்.
936. உரைப்பார் உரைஉகந்து உள்கவல்
லார்தங்கள் உச்சியாய்
அரைக்குஆடு அரவா ஆதியும்
அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி
யூர்அவி நாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை
தரச்சொல்லு காலனையே.
தெளிவுரை : உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையில் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே. எல்லாப் பொருள்களுக்கும் முதலும் முடிவும் ஆனவனே. சிறந்த முல்லை நிலத்தையும் சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள அவினாசி என்னும் திருக்கோயிலில் உள்ளவனே ! கூற்றுவனையும் முதலையையும் இக்குளக்கரைக்கண் பிள்ளையைக் கொண்டு வந்து தருமாறு ஆணையிட்டு அருள்வீராக.
நாயனார் இப் பாடலைப் பாடி முடிக்கு முன்பே, பிள்ளை கரைக்கு வந்து சேர்ந்தனன் என்க.
937. அரங்குஆவது எல்லாம் மாய்இடு
காடது அன்றியும்
சரங்கோலை வாங்கி வரிசிலை
நாணியிற் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளி
யூர்அவி நாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண்
டகுழைக் காதனே
தெளிவுரை : திருப்புக்கொளியூரில் உள்ள குரங்குகள் குதித்து ஆடுகின்ற சோலையையுடைய அவினாசி என்னும் கோயிலை இடமாகக் கொண்ட, குழையை அணிந்த காதினை உடையவனே. உனக்கு நடனமாடும் இடமாய் இருப்பது, எல்லாரும் அழிகின்ற முதுகாடு, அதுவன்றியும் நீ அம்பை எடுத்து வரிந்த வில்லில் உள்ள நாணியில் தொடுத்து, மூன்று ஊர்கள் அழிய அழித்தாய்.
938. நாத்தானும் உனைப் பாடல் அன்றி
நவிலாது எனாச்
சோத்தென்று தேவர் தொழநின்ற
சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளி
யூர்அவி நாசியே
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட
குற்றமும் குற்றமே.
தெளிவுரை : எங்கள் நாவும் உன்னைப் பாடுதலன்றி வேறொன்றைச் சொல்லாது என்றும், உனக்கு வணக்கம் என்றும் சொல்லித் தேவர்கள் வணங்க நிற்கின்ற அழகிய ஒளி வடிவாய் உள்ளவனே, பூவை யணிந்த நீண்ட சடையை உடையவனே, நடனம் ஆடுபவனே, திருப்புக்கொளியூரில் உள்ள அவினாசி என்னும் திருக்கோயிலில் இருப்பவனே ! நான் உனக்கு ஆளான தன்மையும் குற்றமோ ?
939. மந்தி கடுவனுக்கு உண்பழம்
நாடி மலைப்புறம்
சந்திகள் தோறும் சலபுட்பம்
இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி
யூர்அவி நாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன்
நரகம் புகாமையே.
தெளிவுரை : பெண் குரங்கு ஆண் குரங்குக்கு அது செல்லும் மலைப் புறங்களில் உண்ணத்தக்க பழங்கள் கிடைக்க வேண்டி, மூன்று வேளைகளிலும் நீரையும்  பூவையும் இட்டு வழிபாடு செய்ய, அவைகளின் மனத்திலும் புகுந்து இருப்பவனே. திருப்புக்கொளியூரில் உள்ள அவினாசி என்னும் திருக்கோயிலில் விரும்பி இருக்கின்ற நந்தி என்னும் பெயரையுடையவனே, உன்னிடம் நான் நரகம் புகாது இருத்தலையே வேண்டிக் கொள்வேன். நந்தி என்னும் வடசொல், இன்பம் உடையவன் எனப் பொருள்படும்.
940. பேணாது ஒழிந்தேன் உன்னை
அலாற்பிற தேவரைக்
காணாது ஒழிந்தேன் காட்டுதி
யேல்இன்னங் காண்பன்நான்
பூணான் அரவா புக்கொளி
யூர்அவி நாசியே
காணாத கண்கள் காட்டவல்
லகறைக் கண்டனே.
தெளிவுரை : அணிகலமாகவும் வில் நாணாகவும் பாம்பைக் கொண்டுள்ளவனே ! திருப்புக்கொளியூரில் உள்ள அவினாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே ! அடியேன் உன்னையன்றிப் பிற தேவரை விரும்பாமல் நீங்கினேன். அதனால் அவர்களைக் காணவும் இல்லை. பார்வை இழந்த என் கண்களைக் காணும்படி செய்த நீலகண்டனே. என் அறிவாகிய கண்ணையும் அங்ஙனம் அறியச் செய்வையாயின், உனது பெருமைகளை இன்னும் மிகுதியாக அறிந்து கொள்வேன்.
941. நள்ளாறு தெள்ளாறு அரத்துறை
வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின்
தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி
யூரில் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென்
னைக்கிறி செய்ததே.
தெளிவுரை : திருநள்ளாறு திருஅறத்துறைகளில் உள்ள நம்பனே. வெள்ளாடையை விரும்பாமல் புலித்தோல் ஆடையை விரும்புவனே. பறவைகள் தங்கும் சோலைகளையுடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தில் உள்ளே முழுகப் புகுந்த அந்தணச் சிறுவன் செய்த மாயம் யாது ?
942. நீரேற ஏறும் நிமிர்புன்சடை
நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி
யூர்அவி நாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன்
ஆரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல்
லார்க்கில்லை துன்பமே.
தெளிவுரை : நீர் தங்குதலால் பெருமை பெற்ற நீண்ட புல்லிய சடையை உடைய தூய பொருளானவனும், போர் செய்யும் எருதை ஏறுபவனும், நீலகண்டனுமாகிய திருப்புக்கொளியூரிலுள்ள அவினாசி என்னும் திருக்கோயிலில் இருக்கின்ற பெருமானை அவனது தொண்டனாகிய நம்பியாரூரன் ஒரு பயன் கருதிப் பாடிய இப் புகழ்மிக்க பாடல்களைப் பாடவல்லவர்கட்குத் துன்பம் இல்லையாகும்.
திருச்சிற்றம்பலம்

93. திருநறையூர்ச் சித்தீச்சரம் (அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர்,தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
943. நீரும் மலரும் நிலவும் சடைமேல்
ஊரும் அரவம் உடையான் இடமாம்
வாரும் அருவி மணிபொன் கொழித்துச்
சேரும் நறையூர்ச் சித்தீச் சரமே.
தெளிவுரை : இத் திருப்பதிகம் இத்தலத் திருக்கோயில் இறைவனுக்கு இடமாயிருக்கும் சிறப்பனை அருளிச் செய்தது.
இடையறாது ஒழுகும் நீர்ப்பெருக்கு மணியையும் பொன்னையும் கொழித்துக் கொண்டு சேர்கின்ற திருநறையூரில் உள்ள சித்தீச்சரம் என்னும் திருக்கோயில் சடையின்மேல் நீரையும் பல மலர்களையும் பிறையையும் ஊர்ந்து செல்லுகின்ற பாம்பையும் உடையவனாகிய இறைவனது ஊராகும்.
944. அளைப்பை அரவுஏர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்
வளைக்கைம் மடவார் மடுவில் தடநீர்த்
திளைக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே.
தெளிவுரை : கையில் வளையணிந்த இளமகளிர் மிக்க நீரினுள் மூழ்கி இன்புறும் திருநறையூரில் உள்ள சித்தீச்சரம் என்னும் திருக்கோயில், பாம்பு போன்ற இடையினையுடையவளாகிய தன் தேவி அஞ்சும்படி யானையினது தோலை உரித்துப் போர்த்தவனாகிய இறைவனது இடமாகும்.
945. இகழும் தகையோர் எயில்மூன்று எரித்த
பகழி யொடுவில் உடையோன் பதிதான்
முகிழ்மென் முலையார் முகமே கமலம்
திகழும் நறையூர்ச் சித்தீச் சரமே.
தெளிவுரை : இளமகளிரது முகங்கள் தாமரை மலர்போல விளங்குகின்ற திருநறையூரில் உள்ள சித்தீஸ்வரம் என்னும் திருக்கோயில், தன்னை இகழும் அசுரர்களது மதில்கள் மூன்றை எரித்த அம்பையும் வில்லையும் உடைய இறைவனது இடமாகும்.
946. மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம்
நறக்கொள் கமலம் நனிபள் ளிஎழத்
திறக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே.
தெளிவுரை : தேனைக் கொண்டுள்ள தாமரை மலரை நன்கு துயில் எழும்படி வண்டுகள் திறக்கின்ற திருநறையூரில் உள்ள சித்தீச்சரம் என்னும் திருக்கோயில், வீரம் பொருந்திய இராவணனது மலை போன்ற தோள்களைத் தனது மலையால் முரியச் செய்த விரலையுடையலைவனாகிய இறைவன் இருக்கும் இடமாகும்.
மலர்கள் கூம்புவதைத் துயில்வதாகவும், மலர் தலை விழிப்பதாகவும் கூறுதல் இலக்கிய வழக்கு.
947. முழுநீறு அணிமே னியன்மொய் குழலார்
எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம்
கழுநீர் கமழக் கயல்சேல் உகளும்
செழுநீர் நறையூர்ச் சித்தீச் சரமே.
தெளிவுரை : குளங்களில் செங்கழுநீர்ப் பூவின் மணம் கமழுமாறு அவைகளின்மேல் கயல் மீன்களும் சேல் மீன்களும் துள்ளி வீழ்கின்ற மிக்க நீரையுடைய திருநறையூரில் உள்ள சித்தீச்சரம் என்னும் திருக்கோயில், திருமேனி முழுவதும் திருநீற்றை அணிந்தவனும் அடர்ந்த கூந்தலையுடைய மகளிரது உயர்ந்த பண்புகளைக் கொண்டவனும் ஆகிய இறைவன் விரும்பி இருக்கின்ற இடமாகும்.
மொய் குழலார் என்றது தாருகாவனத்து முனிவர் பத்தினியரை.
948. ஊனார் உடைவெண் தலைஉண் பலிகொண்டு
ஆனார் அடலேறு அமர்வான் இடமாம்
வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த்
தேனார் நறையூர்ச் சித்தீச் சரமே.
தெளிவுரை : விண்ணில் பொருந்திய சந்திரன் நுழைந்து செல்லும் வளவிய சோலைகளில் தேன் நிறைந்து நிற்கும் திருநறையூரில் உள்ள சித்தீச்சரம் என்னும் திருக்கோயில், தலையோட்டில் உண்ணுவதற்குரிய பிச்சையை ஏற்று, இடபவாகனனாகிய இறைவனது இடமாகும்.
949. காரூர் கடலில் விடம்உண்டு அருள்செய்
நீரூர் சடையன் நிலவும் இடமாம்
வாரூர் முலையார் மருவும் மறுகில்
தேரூர் நறையூர்ச் சித்தீச் சரமே.
தெளிவுரை : இளமகளிர் அழகுடன் நிறைந்து நிற்கும் தெருக்களில் தேர்கள் ஓடுகின்ற திருநறையூரில் உள்ள சித்தீச்சரம் என்னும் திருக்கோயில் கருநிறக் கடலில் தோன்றிய விடத்தையுண்டு தேவர்களுக்கு அருள் செய்த நீர்ததும்பும் சடையை உடையவனாகிய இறைவன் விரும்பியிருக்கும் இடமாகும்.
950.கரியின் உரியும் கலைமான் மறியும்
எரியும் மழுவும் உடையான் இடமாம்
புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள்
தெரியும் நறையூர்ச் சித்தீச் சரமே.
தெளிவுரை : தமது கடமைகளை விரும்பிச் செய்யும் அந்தணர்கள், நிறைந்த சொற்களின் பொருள்களை ஆராய்கின்ற திருநறையூரிலுள்ள சித்தீச்சரம் என்னும் திருக்கோயில், யானைத் தோலையும் ஆண் மான் கன்றையும் எரிகின்ற மழுவையும் உடைய இறைவனது இடமாகும்.
951. பேணா முனிவான் பெருவேள் வியெலாம்
மாணா மைசெய்தான் மருவும் இடமாம்
பாணார் குழலும் முழவும் விழலில்
சேணார் நறையூர்ச் சித்தீச் சரமே.
தெளிவுரை : பண் நிறைந்த குழல்களின் ஓசையும் மத்தளங்களின் ஒலியும் விழாக்களில் நிறைந்துள்ள திருநறையூரில் உள்ள சித்தீச்சரம் என்னும் திருக்கோயிலே, தன்னை மதிக்காத தக்கனது பெரிய யாகத்தின் பெருமைகளை எல்லாம் அழித்தவனாகிய இறைவன் கோயில் கொண்டிருக்கும் இடமாகும். முனிவன் என்பதும் பாடம்.
952. குறியில் வழுவாக் கொடும்கூற் றுதைத்த
எறியும் மழுவாள் படையான் இடமாம்
நெறியில் வழுவா நியமத் தவர்கள்
செறியும் நறையூர்ச் சித்தீச் சரமே.
தெளிவுரை : நன்னெறியைக் கடைப்பிடிக்கின்ற உயர்ந்தவர்கள் மிகுந்துள்ள திருநறையூரில் உள்ள சித்தீச்சரம் என்னும் திருக்கோயிலே, கொடிய கூற்றுவனை உதைத்த, சக்தி வாய்ந்த மழுப்படையை ஏந்திய இறைவனது இடமாகும்.
953. போரார் புரம்எய் புனிதன் அமரும்
சீரார் நறையூர்ச் சித்தீச் சரத்தை
ஆரூ ரன்சொல் இவைவல் லவர்கள்
ஏரார் இமையோர் உலகெய் துவரே.
தெளிவுரை : திரிபுரங்களை எரித்த தூயவனாகிய இறைவன் விரும்பிக் கோயில் கொண்டிருக்கின்ற புகழ் நிறைந்த திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைப் பாடவல்லவர்கள் எழுச்சி பொருந்திய தேவர் உலகத்தை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்

94. திருச்சோற்றுத்துறை (அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை,தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
954. அழல்நீர் ஒழுகி அனைய சடையும்
உழையீர் உரியும் உடையான் இடமாம்
கழைநீர் முத்தும் கனகக் குவையும்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.
தெளிவுரை : இத் திருப்பதிகம், மேலைத் திருப்பதிகத்தோடு ஒருங்கு ஒத்தது என்க.
மூங்கிலின் சிறந்த முத்துக்களும், பொற் குவியல்களும் சுழிகளில் சுழல்கின்ற நீரையுடைய காவிரியாற்றையுடைய திருச்சோற்றுத்துறை என்னும் தலமே நெருப்பு நீரானது போன்ற சடையையும் மானையும் யானை, புலி இவைகளை உரித்த தோலையும் உடையவனாகிய இறைவனது இடமாகும்.
955. பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் இடமாம்
இண்டை கொண்டன் பிறைஅ றாத
தொண்டர் பரவும் சோற்றுத் துறையே.
தெளிவுரை : நீங்காத அன்புடைய அடியார்கள் இண்டை மாலை முதலியவைகளைக் கொண்டு வழிபடுகின்ற திருச்சோற்றுத்துறை என்னும் தலமே. உயிர்கள் செய்த பழவினைகள் பாறும் வண்ணம் நிற்கின்ற உலகிற்கு முதல்வனும் தூயவனும் ஆகிய இறைவனது இடமாகும். இங்கு மெய்யடியார்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
956. கோல அரவும் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியும்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.
தெளிவுரை : ஆடுகின்ற மயில்களையும் சுழலுகின்ற வண்டுகளையும் உடைய சோலைகள் மிக்க நீரையுடைய திருச்சோற்றுத்துறை என்னும் தலமே, அழகிய பாம்பையும் கொக்கின் இறகையும் மாலையில் தோன்றும் பிறையையும் முடியில் கொண்டுள்ள இறைவனது இடமாகும்.
957. பளிக்குத் தாரை பவள வெற்பில்
குளிக்கும் போல்நூற் கோமாற்கு இடமாம்
அளிக்கும் ஆர்த்தி அல்லால் மதுவம்
துளிக்கும் சோலைச் சோற்றுத் துறையே.
தெளிவுரை : தேனை வண்டுகள் நிரம்ப உண்ணச் செய்து, மேலும் நிலத்திற் சிந்துகின்ற சோலைகளையுடைய திருச்சோற்றுத்துறை என்னும் தலமே, பவளமலையின் மேல் பதிந்து ஓடுகின்ற பளிங்கு அருவிபோலும் முப்புரி நூலை அணிந்த தலைவனாகிய இறைவனுக்கு இடமாகும்.
958. உதையும் கூற்றுக்கு ஒல்கா விதிக்கு
வதையும் செய்த மைந்தன் இடமாம்
திதையும் தாதும் தேனும் ஞிமிறும்
துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே.
தெளிவுரை : நிலையான மகரந்தமும் தேனும் வண்டும் சோலைகளில் நிறைந்திருக்கின்ற காவிரியாற்றையுடைய திருச்சோற்றுத் துறை என்னும் தலமே, கூற்றுவனுக்கு உதையையும் பிரமதேவனுக்கு அழிவையும் ஈந்த வலிமையுடைய இறைவனுக்கு இடமாகும்.
959. ஒதக் கடல்நஞ் சினைஉண் டிட்ட
பேதைப் பெருமான் பேணும் பதியாம்
சீதப் புனல்உண்டு எரியைக் காலும்
சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே.
தெளிவுரை : குளிர்ந்த நீரை உண்டு தீயை உமிழ்கின்ற மாஞ் சோலைகள் நிறைந்த திருச்சோற்றுத்துறை என்னும் தலமே, மிக்க நீரையுடைய கடலில் உண்டாகிய விடத்தை உண்ட அருள் மிகுந்த பெருமான் விரும்பும் ஊராகும்.
960. இறந்தார் என்பும் எருக்கும் சூடிப்
புறங்காட் டாடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றம் திருஎன்று இன்ன
துறந்தார் சேரும் சோற்றுத் துறையே.
தெளிவுரை : உயிர் போலச் சிறந்த மனைவி மக்களும் ஏனைய சுற்றத்தாரும், செல்வமும் என்று சொல்லப்பட்ட இவற்றைத் துறந்த ஞானியர் சேர்கின்ற திருச்சோற்றுத்துறை என்னும் தலமே, இறந்தவரது எலும்புகளையும் எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு சுடுகாட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம். புறங்காட்டில் ஆடினும் தூயவனே என்பது கருத்து.
961. காமன் பொடியாக் கண்ஒன்று இமைத்த
ஓமக் கடலார் உகந்த இடமாம்
தேமன் குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பார் சோற்றுத் துறையே.
தெளிவுரை : தேன் பொருந்திய மெல்லிய கூந்தலையுடைய மகளிர் தம் இருக்கையில் இட்ட நறும்புகைகள் வானத்தில் சென்று நிறைகின்ற திருச்சோற்றுத்துறை என்னும் தலமே. மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணைத் திறந்த. வேள்வியாகிய கடலையுடைய இறைவர் விரும்பும் இடமாகும். ஓமங்களில் முதற்கண் வழிபடப்படுபவர் இவரே.
962. இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்
தலையால் தாழும் தவத்தோர்க்கு என்றும்
தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே.
தெளிவுரை : பச்சிலையால் அன்போடு துதிக்கும் அடியவர்க்கு நிலையில்லாத இவ்வுலக வாழ்க்கைப் பற்றை நீக்கியருளுகின்ற பெருமான் அமர்வதற்கு இடமாய், தன்னைத் தலையால் வணங்கும் தவம் உடையவர்க்கு என்றும் அழியாத முத்திச் செல்வத்தைத் தரவல்லது திருச்சோற்றுத்துறையாகும். பூவும் பெறாவிடில் பச்சிலையுண்டு புனலுண்டு என்றார் பட்டினத்தாரும்.
663. சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள்
முற்றா மதிசேர் முதல்வன் பாதத்து
அற்றார் அடியார் அடிநாய் ஊரன்
கொற்றான் இவைகற் றார்துன் பிலரே.
தெளிவுரை : பற்றற்றவராகிய அடியார்களது அடிக்கு நாய் போலும் நம்பியாரூரன், சுற்றிலும் நிறைந்த நீரையுடைய திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளியிருக்கின்ற பிறை சூடிய முதல்வனது திருவடியில் இப் பாடல்களைப் பாடினான். இவைகளைக் கற்றவராவார் யாதொரு துன்பமும் இல்லாதவராவர்.
திருச்சிற்றம்பலம்

95. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)
திருச்சிற்றம்பலம்
964. மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே.
தெளிவுரை : உமக்கே என்றும் பிரியாத அடிமை ஆளாகி வேறு எவரையும் விரும்பாமல் ஆட்பட்டிருக்கும் அடியவர்கள் உள்ளேயே குமுறுகின்ற தீயைப் போல, உள்ளே கனன்று மிகவும் முகவாட்டமடைந்து தங்கள் துன்பத்தைச் சொன்னால், சும்மா இருக்கின்றீர். திருவாரூர்ப் பெருமானே, நீரே வாழ்ந்துபோம். நான் கெட்டால் கெடுகிறேன்.
965. விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன்
விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்த தில்லை
கொத்தை ஆக்கினீர்
எற்றுக்கு அடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால்
வாழ்ந்து போதீரே.
தெளிவுரை : நான் உம்மிடத்து ஒருவரால் அடகு வைக்கப்பட்டவன் அல்லேன். மனம் ஒப்பி அடிமைப்பட்டேன். ஆதலால், நீர் வேண்டும்போது என்னை விற்றுக் கொள்வதற்கு உரிமை உடையீர். நான் ஒரு குற்றமும் செய்தது இல்லை. இரக்கமின்றி என்னைக் குருடாக்கி விட்டீர். என் சுவாமியே, என் கண்ணை எதற்காக அபகரித்தீர் ? இதனால் நீரே பழிக்கு உட்பட்டீர். என் மீது இரங்கி எனது வலக்கண்ணையும் தந்தருளாவிட்டால் நீரே வாழ்ந்துபோம். நான் கெட்டால் கெடுகிறேன்.
966. அன்றில் முட்டாது அடையும் சோலை
ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த
காலி யவைபோல்
என்றும் முட்டாப் பாடும் அடியார்
தங்கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால்
வாழ்ந்து போதீரே.
தெளிவுரை : அன்றிற் பறவைகள் நாள்தோறும் தப்பாமல் வந்து சேர்கின்ற சோலையையுடைய திருவாரூரில் இருக்கின்ற பெருமானே. கன்றுகள் முட்டி உண்ணத் தொடங்கிய பின்னே பால் சுரக்கின்ற பசுக்களிடத்தில் பாலை உண்ணும் அக்கன்றுகள்போல, நாள்தோறும் தப்பாமல் பாடியே உம்மிடத்துப் பயன்பெறுகின்ற அடியார்கள் பலநாள் பாடிய பின்னும் தங்கள் கண் காணப் பெறாமல், குன்றின்மேல் முட்டிக் குழியினுள் வீழ்ந்து வருந்துவாராயின் நீரே இனிது வாழ்ந்து போமின்.
967. துருத்தி உறைவீர் பழனம் பதியாச்
சோற்றுத் துறைஆள்வீர்
இருக்கை திருவா ரூரே உடையீர்
மனமே எனவேண்டா
அருத்தி உடைய அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமை பணித்தால்
வாழ்ந்து போதீரே.
தெளிவுரை : இருக்குமிடம் திருவாரூராகவே உடையவரே ! நீர் இன்னும் திருத்துருத்தி, திருப்பழனம் என்பவைகளையும் ஊராகக் கொண்டு வாழ்வீர். திருக்சோற்றுத் துறையையும் ஆட்சி செய்வீர். ஆதலின் உமக்கு இடம் அடியவரது மனமே எனல் வேண்டா. அதனால் உம்பால் அன்பு மிக்க அடியார்கள் தங்கள் அல்லலை உம்மிடம் வந்து சொன்னால் நீர் அவர்களை இப்பிறப்பில் வருத்தியே வைத்து, மறுபிறப்பில்தான் நன்மையைச் செய்வதாயின் நீரே இனிது வாழ்ந்து போமின்.
968. செந்தண் பவளம் திகழும் சோலை
இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமாறு
உமக்குஆட் பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார்
தங்கண் காணாது
வந்துஎம் பெருமான் முறையோ என்றால்
வாழ்ந்து போதீரே.
தெளிவுரை : எங்கள் தலைவரே, இது செவ்விய தண்ணிய பவளம் போன்ற இந்திர கோபங்கள் விளங்குகின்ற சோலைகளையுடைய திருவாரூர்தானோ ? நன்கு காண இயலாமையால் இதனைத் தெளிகின்றிலேன். உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் இதுதானோ? இசை வண்ணங்கள் பலவும் அமைந்த பாடலால் உம்மைப் பாடுகின்ற அடியார்கள் தங்கள் கண் காணப் பெறாமல் உம்பால் வந்து எம் பெருமானே முறையோ, என்று சொல்லி நிற்றல் ஒன்றே உளதாகுமானால் நீரே இனிது வாழ்ந்து போமின் ! இந்திரகோபம் என்பது ஒரு செந்நிறப் பூச்சி.
969. தினைத்தாள் அன்ன செங்கால் நாரை
சேரும் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப்
புரிபுன் சடையீரே
தனத்தால் இன்றித் தாந்தாம் மெலிந்து
தங்கண் பேணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால்
வாழ்ந்து போதீரே.
தெளிவுரை : தினையது தாள்போலும் சிவந்த கால்களையுடைய நாரைகள் திரளுகின்ற திருவாரூரில் கோயில் கொண்டிருக்கும், முல்லை நிலத்தில் உள்ள கொன்றையினது மலரால் ஆகிய பொன்மாலை போன்ற மாலையை அணிந்த திரிக்கப்பட்ட புல்லிய சடையை உடையவரே. உம் அடியவர் தாம் பொருளில்லாமையால் இன்றி, தங்கள் கண் காணப்பெறாமல் வருந்தி மனத்தினுள்ளே வாட்டமுற்றிருப்ப தானால், நீரே இனிது வாழ்ந்து போமின் ! பொருள் இன்மையால் வருந்தினும் பெரிதன்று. கண்ணின்மை யால் வருந்துதலைத் தீர்க்க வேண்டாவோ என்றவாறு. தினைத்தாள் அன்ன என்ற உவமை குறுந்தொகையிலும் உள்ளது.
970. ஆயம் பேடை அடையும் சோலை
ஆரூர் அகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவே ஆமாறு
உமக்காட் பட்டோர்க்கு
மாயங் காட்டிப் பிறவி காட்டி
மறவா மனங்காட்டிக்
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்
வாழ்ந்து போதீரே.
தெளிவுரை : ஆண் பறவைக் கூட்டம் பெண் பறவைக் கூட்டத்துடன் வந்து சேர்கின்ற சோலையை யுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்றவரே, எங்களுக்கேற்ற பெருமானே, உமக்கு அடிமைப்பட்டவர்க்கு உண்டாகும் பயன் இது தானோ? நீர் எனக்கு உம்மை மறவாத மனத்தைக் கொடுத்து, பின்பு ஒரு மாயத்தை உண்டாக்கி, அது காரணமாகப் பிறவியிற் செலுத்தி உடம்பைக் கொடுத்து இப்போது கண்ணைப் பறித்துக் கொண்டால், நீரே இனிது வாழ்ந்து போமின்.
971. கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்
கலந்த சொல்லாகி
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை
இகழாது ஏத்துவோம்
பழிதான் ஆவது அறியீர் அடிகேள்
பாடும் பத்தரோம்
வழிதான் காணாது அலமந்து இருந்தால்
வாழ்ந்து போதீரே.
தெளிவுரை : அடிகளே, யாங்கள் இழிவில்லாத உயர்குலத்திலே பிறந்தோம்; அதற்கேற்ப உம்மை இகழ்தல் இன்றி நீர், கழியும், கடலும், மரக்கலமும் நிலமுமாய்க் கலந்து நின்ற தன்மையைக் சொல்லும் சொற்களை உடையேமாய்த் துதிப்போம். அவ்வாறாகலின் எம்மை வருத்துதலால் உமக்குப் பழி உண்டாதலை நினையீர்; அதனால் உம்மைப் பாடும் அடியேமாகிய யாங்கள் வழியைக் காண மாட்டாமல் அலைந்து வாழ்வதாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.
972. பேயோ டேனும் பிறிவொன்று இன்னாது
என்பர் பிறரெல்லாம்
காய்தான் வேண்டிற் கனிதான் அன்றோ
கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும்
உமக்குஆட் பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ரூரிர்
வாழ்ந்து போதீரே.
தெளிவுரை : திருவாரூரில் கோயில் கொண்டிருக்கின்ற பெருமானே ! விரும்பப்பட்டது காயே எனினும், விரும்பிக் கைக்கொண்டால் அது கனியோடு ஒப்பதே யன்றோ? அதனால் உம்மைத் தவிரப் பிறரெல்லாம் பேயோடு நட்புச் செய்யினும் பிரிவு என்பதொன்று துன்பம் தருவதே என்று சொல்லி அதனைப் பிரிவு ஒருப்படார். ஆனால், நீரோ உமது திருவோலக்கத்தின் நடுவே நாய்போல முறையிட்டுத் திரிந்தாலும் உமக்கு ஆட்பட்டவர்கட்கு வாய் திறந்து ஒரு சொற் சொல்லமாட்டீர். இதுவே உமது நட்புத் தன்மையாயின். நீரே இனிது வாழ்ந்து போமின் !
973. செருந்தி செம்பொன் மலரும் சோலை
இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூ லட்டா னம்மே
இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை
இகழாது ஏத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்
வாழ்ந்து போதீரே.
தெளிவுரை : திருமூலட்டானத்தையே பொருந்தி இடமாகக் கொண்டவரே, இது செருந்தி மரங்கள். தமது மலர்களாகிய செம்பொன்னை மலர்கின்ற திருவாரூர்தானோ? இருத்தல், நிற்றல், கிடத்தல் முதலிய எல்லா நிலைகளிலும் உம்மை இகழாமல் துதிப்போமாகிய யாம், உம்பால் வருத்தமுற்று வந்து ஒரு குறையை வாய்விட்டுச் சொன்னாலும் நீர் வாய் திறவாமல் இருப்பீராயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.
974. காரூர் கண்டத்து எண்தோள் முக்கண்
கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூ லட்டா னத்தே
அடிப்பேர் ஆரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்
வாழ்ந்து போதீரே.
தெளிவுரை : பல நூல்களுமாகி, கருத்த கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடைய திருவாரூர்த் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற உமாதேவியது பாகத்தைக் கொண்டவரே. இவ்வுலகில் உள்ள ஊரெல்லாம் அறிய நீர் உமது திருவடிப் பெயரைப் பெற்ற நம்பியாரூரனாகிய எனது கண்ணைப் பறித்துக்கொண்டீர். அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர். இனி நீர் இனிது வாழ்ந்து போமின்.
தம் பெயரைப் பெய்தருளிச் செய்தமையின், இது திருக்கடைக்காப்பாயிற்று. இதன் பின்னர் இறைவர், நாயனார் பெருமகிழ்வு எய்துமாறு கண்ணளித்து அருளினார்.
திருச்சிற்றம்பலம்

96. திருவாரூர்ப் பரவையுண் மண்டளி (அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் கீழ வீதி,திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
975. தூலாயா தொண்டுசெய்
வார்படு துக்கங்கள்
காவாயே கண்டுகொண்
டார்ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே
நல்லன சொல்லுவேற்கு
ஆவாஎன் பரவையுண்
மண்டளி எம்மானே.
தெளிவுரை : வேதத்தை அருளிய பரிசுத்தமான திருவாக்கை உடையவனே, உனக்குத் திருவடித் தொண்டு செய்யும் அன்பர் வினைவசத்தால் அனுபவிக்கின்ற துக்கங்களை நீக்கிக் காக்கமாட்டாயா? அறிந்துகொண்டவர்களான ஐம்புலன்கள் தடுப்பினும் உன் பெருமைகளைப் பேசுவதற்கு ஆதாரமான நாக்கையுடைய வாயினால் உன்னையே துதிக்கின்ற எனக்கு, இவன் இரங்கத் தக்கவன் என்று திருவருள் செய்வானாக. திருவாரூர்ப் பரவையுண் மண்டளி என்னும் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பெருமானே.
ஆவா என்று இரங்கி அச்சம் தீர்த்தருள் என்பதாம்.
976. பொன்னானே புலவர்க்கு
நின்புகழ் போற்றலாம்
தன்னானே தன்னைப்
புகழ்ந்திடும் தற்சோதி
முன்னானே செக்கர்
வானத்து இளஞாயிறு
அன்னானே பரவையுண்
மண்டளி அம்மானே.
தெளிவுரை : பொன் போலச் சிறந்தவனே, தன்னாலே தன்னைப் புகழ்கின்ற, தானே விளங்குவதோர் ஒளியானவனே, ஒரோ ஒருகால் தோன்றி மறைதலால் மின்னலொடு ஒப்பவனே. செக்கர் வானத்தில் தோன்றும் இளஞ்சூரியன் போன்ற திருமேனியை உடையவனே. திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, நின்புகழை எடுத்துரைத்தல் ஞானியர்க்கு இயல்வதாம்.
977. நாமாறாது உன்னையே
நல்லன சொல்லுவார்
போமாறென் புண்ணியா
புண்ணியம் ஆனானே
பேய்மாறாப் பிணம்இடு
காடுஉகந்து ஆடுவாய்க்கு
ஆமாறுஎன் பரவையுண்
மண்டளி அம்மானே.
தெளிவுரை : புண்ணியத்தின் பயனாயும் புண்ணியமாயும் உள்ளவனே. திருப்பரவையுண் மண்டளியுள் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே ! நீ அருளாமல் விடின் நாப்பிறழாமல் உன்னையே நல்லனவற்றால் புகழ்கின்றவர்கள் போவது எவ்வாறு ? பேய்கள் நீங்காத, பிணத்தை இடுகின்ற காட்டில் விரும்பி ஆடுகின்ற உனக்கு அடியவராதல் எவ்வாறு ?
978. நோக்குவேன் உன்னையே
நல்லன நோக்காமைக்
காக்கின்றாய் கண்டுகொண்
டார்ஐவர் காக்கினும்
வாக்கென்னும் மாலைகொண்டு
உன்னை என்மனத்து
ஆர்க்கின்றேன் பரவையுண்
மண்டளி அம்மானே.
தெளிவுரை : திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, ஐவர் என்னை நல்லனவற்றை நோக்காமல் குறிக்கொண்டு காக்கின்றனர். அவ்வாறு காத்து நிற்பினும் சொல்லென்னும் மாலையால் உன்னை என் மனத்தில் இருத்துகின்றேன். உன்னையே நினைக்கின்றேன். என்னை இவ்வாறு வருத்துதல் முறையோ என்பது குறிப்பெச்சம்.
979. பஞ்சேரும் மெல்லடி
யாளைஓர் பாகமாய்
நஞ்சேரும் நன்மணி
கண்டம் உடையானே
நெஞ்சேர நின்னையே
உள்கி நினைவாரை
அஞ்சேல்என் பரவையுண்
மண்டளி அம்மானே.
தெளிவுரை : செம்பஞ்சு காணப்படும் மெல்லிய அடிகளையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ள நீலகண்டனே, திருப்பரவையுண் மண்டளியில் விரும்பியிருக்கின்ற தலைவனே, உன்னை நெஞ்சில் விளங்கும்படி அழுத்தி நினைக்கின்ற அடியார்களை அஞ்சேல் என்று சொல்லிக் காத்தருள்வாயாக.
980. அம்மானே ஆகம
சீலர்க்கு அருள்நல்கும்
பெம்மானே பேரரு
ளாளன் பிடவூரன்
தம்மானே தண்தமிழ்
நூற்பல வாணர்க்கோர்
அம்மானே பரவையுண்
மண்டளி அம்மானே.
தெளிவுரை : யாவர்க்கும் தலைவனே, ஆகம ஒழுக்கத்தை உடையவர்களுக்கு உனது திருவருளைத் தருகின்ற பெரியோனே, திருப்பிடவூரில் உறையும் பேரருளாளனுக்குத் தலைவனே, தமிழ் நூல்களை வல்ல புலவர்களுக்கு ஒப்பற்ற முதல்வனே. திருப்பரவையுண் மண்டளியில் மேவியிருக்கின்ற இறைவனே, உன்னை மறவாது நினைக்கின்ற அடியார்களை அஞ்சேல் என்று சொல்லிக் காத்தருள்வாயாக. ஆகமம் சைவாகமம்.
981. விண்டானே மேலையார்
மேலையார் மேலாய
எண்டானே எழுத்தொõடு
சொற்பொருள் எல்லாம்உன்
கண்டானே கண்டனைக்
கொண்டிட்டுக் காட்டாயே
அண்டானே பரவையுண்
மண்டளி அம்மானே.
தெளிவுரை : மேல் உள்ளார்க்கு மேல் உள்ளார்க்கு மேல் உள்ள வானம், எண், எழுத்து, சொல், பொருள் மற்றும் எல்லாவற்றையும் முதலிற் படைத்தவனே. வானுலகத்தில் உள்ளவனே. திருப்பரவையுண் மண்டளியில் பொருந்தியிருக்கின்ற தலைவனே, முன்பு என் கண்ணைக் கொண்டாய்; இப்போது அதனைக் கொடுத்து உன்னைக் காட்டியருள்வாயாக.
982. காற்றானே கார்முகில்
போல்வதோர் கண்டத்துஎம்
கூற்றானே கோல்வளை
யாளைஓர் பாகமாய்
நீற்றானே நீள்சடை
மேல்நிறை உள்ளதோர்
ஆற்றானே பரவையுண்
மண்டளி யம்மானே.
தெளிவுரை : காற்றாய் உள்ளவனே, கரிய மேகம் போன்ற ஒப்பற்ற கண்டத்தையுடைய எம் இனத்தவனே, கோல் தொழில் அமைந்த வளைகளை அணிந்த உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திருநீற்றை அணிந்தவனே. நீண்ட சடையின்மேல் நிறைவுள்ளதாகிய கங்கையை உடையவனே, திருப்பரவையுண் மண்டளியில் கோயில் கொண்டிருக்கும் தலைவனே.
983. செடியேன்நான் செய்வினை
நல்லன செய்யாத
கடியேன்நான் கண்டதே
கண்டதே காமுறும்
கொடியேன்நான் கூறுமாறு
உன்பணி கூறாத
அடியேன்நான் பரவையுண்
மண்டளி அம்மானே.
தெளிவுரை : திரப்பரவையுண் மண்டளியில் பொருந்தியிருக்கின்ற தலைவனே, நான் குற்றமுடையேன்; செய்யும் செயல்களை நல்லனவாகச் செய்யாத தீமையேன்; கண்டதையெல்லாம் பெற விரும்பும் கொடியேன்; உன் ஆணையின் வண்ணம் உன்னைப் பாடுமாற்றால் பாடாத ஓர் அடியேன்.
984. கரந்தையும் வன்னியும்
மத்தமும் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண்
மண்டளி அம்மானை
நிரம்பிய ஊரன்
உரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார்
மேலையார் மேலாரே.
தெளிவுரை : கரந்தை, வன்னி, ஊமத்தை, கூவிளை இவைகளை அணிந்த பரவிய புகழையுடைய திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனை, அன்பு நிறைந்த நம்பியாரூரன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளை விருப்புற்றுப் பாடுவோர் மேலோர்க்கு மேலோர்க்கு மேலோராவர்.
திருச்சிற்றம்பலம்

97. திருநனிபள்ளி (அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
985. ஆதியன் ஆதிரையன்
அயன்மால் அறிதற்குஅரிய
சோதியன் சொற்பொருளாய்ச்
சுருங்காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர்தங்கோன்
உலகத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெருமான்
நண்ணும்ஊர் நனிபள்ளியதே.
தெளிவுரை : எப்பொருட்கும் முதலானவனும், ஆதிரை நட்சத்திரத்தைத் தனக்கு உரியதாகக் கொண்டவனும், பிரமனும் திருமாலும் அறிதற்கரிய ஒளி வடிவானவனும். சொல்லும் சொற் பொருளுமாய் நின்று சுருங்குதல் இல்லாத வேதங்கள் நான்கினையும் ஓதியவனும். தேவர்களுக்குத் தலைவனும், உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் தந்தையுமாகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே. திருவாதிரையில் சிவன் பிறந்தார் என்ப.
986. உறவிலி ஊனமிலி
உணரார்புரம் மூன்றெரியச்
செறுவிலி தன்னினைவார்
வினையாயின தேய்ந்தழிய
அறவில கும்அருளான்
மருளார்பொழில் வண்டறையும்
நறவிரி கொன்றையினான்
நண்ணும்ஊர் நனிபள்ளியதே.
தெளிவுரை : உறவுத் தொடக்கு இல்லாதவனும், குறைவில்லாதவனும், தன்னை மதியாதவரது மூன்று ஊர்களும் எரிந்து ஒழியும்படி அழித்த வில்லையுடையவனும், தன்னை நினைப்பவரது வினையெல்லாம் வலிமை குறையும்படி விளங்கும் திருவருளையுடையவனும், தேன் பொருந்திய கொன்றை மலர்மாலையை அணிந்தவனும் ஆகிய இறைவன் தங்கியிருக்கின்ற ஊர், அடர்ந்த சோலைகளில் வண்டுகள் ஒலிக்கின்ற திருநனிபள்ளியே.
987. வானுடை யான்பெரியான்
மனத்தாலும் நினைப்பரியான்
ஆனிடை ஐந்தமர்ந்தான்
அணுவாகியோர் தீஉருக்கொண்டு
ஊனுடை இவ்வுடலம்
ஒடுங்கிப்புகுந் தான்பரந்தான்
நானுடை மாடுஎம்பிரான்
நண்ணும்ஊர் நனிபள்ளியதே.
தெளிவுரை : முக்தர் வாழும் திருக்கயிலாயத்தை உடையவனும், மிக்க பெருமையுடையவனும். மனத்தால் நினைப்பதற்கும் அருமையான தன்னையனும், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கவ்யத்தை விரும்புகின்றவனும். அணு வடிவாய்க் குறுகி ஒளியுரு கொண்டு மாமிசமயமான இவ்வுடலுள் புகுந்தவனும், உடல் முழுவதும் பரந்திருப்பவனும், நான் பெற்ற செல்வமும் ஆன எம் பெருமான் திருவுளங் கொண்டு எழுந்தருளிய ஊர் திருநனிபள்ளி ஆகும்.
988. ஓடுடை யன்கலனா
உடைகோவண வன்உமையோர்
பாடுடை யன்பலிதேர்ந்து
உணும்பண்புடை யன்பயிலக்
காடுடை யன்இடமா
மலைஏழும் கருங்கடல்சூழ்
நாடுடை நம்பெருமான்
நண்ணும்ஊர் நனிபள்ளியதே.
தெளிவுரை : ஓட்டினை உண்கலமாகவும், கோவணத்தை உடையாகவும் உடையவனும் ஒரு பக்கத்தில் உமையை உடையவனும், பிச்சை எடுத்து உண்ணும் தன்மையை உடையவனும், வாழ்வதற்குரிய இடமாகக் காட்டை உடையவனும், ஏழு மலைகளையும் கரிய கடல் சூழ்ந்த ஏழு நாடுகளையும் உடையவனும் ஆகிய நம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனி பள்ளியே.
பலிதேர்ந்து உண்டு காடு இடமா உடையன் எனினும். உலகம் எல்லாவற்றையும் உடையன் என்றவாறு.
989. பண்ணற்கு அரியதொரு
படைஆழி தனைப்படைத்தும்
கண்ணற்கு அருள்புரிந்தான்
கருதாதவர் வேள்விஅவி
உண்ணற்கு இமையவரை
உருண்டோட உதைத்துஉகந்து
நண்ணற்கு அரியபிரான்
நண்ணும்ஊர் நனிபள்ளியதே.
தெளிவுரை : செய்தற்கு அரிய சக்கரப்படை ஒன்றைச் செய்து, அதனைத் திருமாலுக்கு அளித்தவனும், தன்னை மதியாதவனாகிய தக்கனது வேள்வியில் அவிர்பாகத்தை உண்ணச் சென்ற தேவர்களைச் சிதறி ஓடும்படி தாக்கிப் பின் அவர்களுக்கு அருள் செய்து, அணுகுவதற்கரிய தலைவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனி பள்ளியே.
990. மல்கிய செஞ்சடைமேல்
மதியும்அர வும்உடனே
புல்கிய ஆரணன்எம்
புனிதன்புரி நூல்விகிர்தன்
மெல்கிய வில்தொழிலான்
விருப்பன்பெரும் பார்த்தனுக்கு
நல்கிய நம்பெருமான்
நண்ணும்ஊர் நனிபள்ளியதே.
தெளிவுரை : நிறைந்த, சிவந்த சடையின்மேல் சந்திரனும் பாம்பும் ஒருங்கியைந்து பொருந்திய திருமேனியனாகிய வேதமுதல்வனும், எங்கள் தூயோனும் முப்புரி நூலை யணிந்த வேறுபட்ட தன்மையை உடையவனும், தன்மேல் அன்புடையவனாகிய மிக்க தவத்தையுடைய அருச்சுனனுக்கு மெல்லிய வில் தொழிலினால் அருள் செய்தவனும் ஆகிய இறைவன் விரும்பியிருக்கும் ஊர், திருநனி பள்ளியே.
அருச்சுனனோடு அருள் காரணமாக, போர் செய்ததனால் அதை மெல்லிய வில் தொழில் என்றார்.
991. அங்கம்ஓர் ஆறுஅவையும்
அருமாமறை வேள்விகளும்
எங்கும் இருந்துஅந்தணர்
எரிமூன்றுஅவை ஓம்பும்இடம்
பங்கய மாமுகத்தாள்
உமைபங்கன் உறைகோயில்
செங்கயல் பாயும்வயல்
திருவூர்நனி பள்ளியதே.
தெளிவுரை : தாமரை மலர்போன்ற முகத்தையுடைய உமாதேவியை இடப்பாகத்தில் உடைய இறைவன் உறைகின்ற இடம், அந்தணர்கள் மூன்று எரிகளோடு ஆறு அங்கங்களையும் அரிய வேதங்களையும் வேள்விகளையும் எவ்விடத்தும் இருந்து வளர்க்கின்ற இடமாகிய, செவ்விய கயல் மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய அழகிய ஊரான திருநனி பள்ளியே.
992. திங்கட் குறுந்தெரியல்
திகழ்கண்ணியன் நுண்ணியனாய்
நங்கட் பிணிகளைவான்
அருமாமருந்து ஏழ்பிறப்பும்
மங்கத் திருவிரலால்
அடர்த்தான்வல் அரக்கனையும்
நங்கட்கு அருளும்பிரான்
நண்ணும்ஊர் நனிபள்ளியதே.
தெளிவுரை : சிறிய பிறையாகிய கண்ணி மாலையைச் சூடியவனும், நுண்ணியவனாய் நின்று, எழுவகைப் பிறப்புக்களும் கெடும்படி நம்மிடத்துள்ள வினையாகிய நோயை நீக்குகின்ற, உயர்ந்த அரிய பெரிய மருந்தாய் உள்ளவனும், வலிய அரக்கனாகிய இராவணனையும் ஒரு விரலால் நெரித்தவனும் ஆகிய, நமக்கு அருள் செய்யும் பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் திருநனி பள்ளியே.
993. ஏன மருப்பினொடும்
எழில்ஆமையும் பூண்டுகந்து
வான மதிள்அரணம்
மலையேசிலை யாவளைத்தான்
ஊனமில் காழிதன்னுள்
உயர்ஞானசம் பந்தர்க்குஅன்று
ஞானம் அருள்புரிந்தான்
நண்ணும்ஊர் நனிபள்ளியதே.
தெளிவுரை : பன்றியின் கொம்பையும் ஆமை ஓட்டையும் விரும்பியணிந்து, வானத்திற் செல்லும் மதிலாகிய அரணின்முன் மலையையே வில்லாக வளைத்து நின்றவனும், குறையில்லாத சீகாழிப்பதியுள் உயர்ந்தோராகிய ஞான சம்பந்தர்க்கு ஞானத்தை அருள் செய்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர் திருநனி பள்ளியே.
994. காலமும் நாழிகையும்
நனிபள்ளி மனத்தின்உள்கிக்
கோலமது ஆயவனைக்
குளிர்நாவல ஊரன்சொன்ன
மாலை மதித்துரைப்பார்
மண்மறந்துவா னோர்உலகில்
சாலநல் இன்பம்எய்தித்
தவலோகத்து இருப்பவரே.
தெளிவுரை : காலமும் நாள்தோறும் கழியும். அதனால் குளிர்ந்த திருநாவலூரனாகிய நம்பியாரூரன், கருணையால் திருவுருக்கொண்ட இறைவனைத் திருநனி பள்ளியுள் வைத்து மனத்தில் நினைத்துப் பாடிய இப்பாமாலையின் பெருமையை உணர்ந்து பாடுவோர், தேவருலகில் மிக்க இன்பத்தைத் துய்த்து, பின்பு மண்ணுலகத்தில் வருதலை மறந்து சிவலோகத்தில் இருப்பவரேயாவர்.
திருச்சிற்றம்பலம்

98. திருநன்னிலத்துப் பெருங்கோயில் (அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில், நன்னிலம்,திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
995. தண்ணியல் வெம்மையினான்
தலையிற்கடை தோறும்பலி
பண்ணியல் மென்மொழியார்
இடக்கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறையோர்
முறையால்அடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
தெளிவுரை : புண்ணியத்தைச் செய்கின்ற, நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள், முறைப்படி தனது திருவடிக்குப் போற்றி சொல்லி வழிபடும்படி பலரும் அடைந்து வணங்கும் திருநன்னிலத்தில் உள்ள பெருங் கோயிலை, விரும்பி அமர்ந்திருக்கின்ற பெருமான் தண்ணிய இயல்பையும் வெவ்விய இயல்பையும் ஒருங்குடையவன். வாயில்கள்தோறும் சென்று மகளிரிடம் தலையோட்டில் பிச்சையேற்றுத் திரிகின்ற பாண்டரங்கம் என்னும் கூத்தினை உடையவன்.
996. வலங்கிளர் மாதவம்செய்
மலைமங்கையோர் பங்கினனாய்ச்
சலங்கிளர் கங்கைதங்கச்
சடைஒன்றிடை யேதரித்தான்
பலங்கிளர் பைம்பொழில்தான்
பனிவெண்மதி யைத்தடவ
நலங்கிளர் நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
தெளிவுரை : பயன்மிகுந்த, பசிய சோலைகள் குளிர்ந்த வெண்மையான சந்திரனைத் தொடுவதனால், அழகு மிகுகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பியிருக்கின்ற பெருமான், வெற்றி மிக்க பெரிய தவத்தைச் செய்த மலைமகளை ஒரு பாகத்தில் உடையவனாய், வெள்ளம் மிகுந்த கங்கையைத் தனது சடைகளுள் ஒன்றில் தங்கும்படி தடுத்து வைத்துள்ளான்.
997. கச்சிய னின்கருப்பூர்
விருப்பன்கரு திக்கசிவார்
உச்சின் பிச்சைஉண்ணி
உலகங்கள்எல் லாம்உடையான்
நொச்சியம் பச்சிலையான்
நுரைதீர்புன லால்தொழுவார்
நச்சிய நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
தெளிவுரை : நொச்சியின் பச்சிலையும் நுரையில்லாத தூய நீரும் கொண்டு வழிபடுவோர் விரும்புகின்ற திரு நன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பியிருக்கின்ற பெருமான், கச்சிப்பதியில் எழுந்தருளியிருப்பவன், இனிய கரும்பில் செல்லுகின்ற விருப்பம் போன்று விரும்புவதற்கு இடமானவன். தன்னை நினைந்து உருகுபவரது தலைமேல் இருப்பவன், பிச்சையெடுத்து உண்பவன், உலகங்கள் எல்லாவற்றையும் உடையவன். சிறப்புடைத்தலங்களுள் ஒன்றாதல் பற்றிக் கச்சியை விதந்து ஓதினார்.
998. பாடிய நான்மறையான்
படுபல்பிணக்கு ஆடரங்கா
ஆடிய மாநடத்தான்
அடிபோற்றிஎன்று அன்பினராய்ச்
சூடிய செங்கையினார்
பவதோத்திரம் வாய்த்தசொல்லி
நாடிய நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
தெளிவுரை : தலைமேற் குவித்த கையை உடைய பலர் மிக்க அன்புடையவர்களாய், திருவடி போற்றி என்று பொருந்திய தோத்திரங்களைச் சொல்லி அடைகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற இறைவன், தன்னால் பாடப்பட்ட நான்கு வேதங்களை உடையவன். இறந்த பல பிணங்களையுடைய காடே அரங்கமாக ஆடுகின்ற சிறந்த நடனத்தை உடையவன்.
999. பிலந்தரு வாயினொடு
பெரிதும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம்இரு
பிளவாக்கிய சக்கரமுன்
நிலந்தரு மாமகள்கோன்
நெடுமாற்குஅருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
தெளிவுரை : நன்மையைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், பிலம் போன்ற வாயையும் வலிமையையும் உடைய சலந்தராசுரனது உடலை இரண்டாகச் செய்த சக்கராயுதத்தை முன்பு மண்ணையுண்டு உமிழ்ந்த, திருமகள் கேள்வனாகிய திருமாலுக்கு அளித்த தலைவன். நிலமகளுக்கும் மாமகளுக்கும் கோன் எனினுமாம்.
1000. வெண்பொடி மேனியினான்
கருநீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடையான்
பிரமன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர்
பயின்றேத்திப் பல் கால்வணங்கும்
நண்புடைய நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
தெளிவுரை : நான்கு வேதங்களை உணர்ந்தவர்களாகிய அந்தணர்கள், பல மந்திரங்களையும் நன்கு பயின்று பன்முறை துதித்து வணங்கும் நட்புடைய திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பியிருக்கின்ற பெருமான். திருநீற்றைப் பூசிய மேனியன். திருநீலகண்டன்; கங்கையைச் சடையில் உடையவன்; பிரமதேவனது தலையை, பெருமை கெட அறுத்தவன்.
1001. தொடைமலி கொன்றைதுன்றும்
சடையன்சுடர் வெண்மழுவாள்
படைமலி கையன்மெய்யிற்
பகட்டு ஈருரிப் போர்வையினான்
மடைமலி வண்கமலம்
மலர்மேல்மட அன்னம்மன்னி
நடைமலி நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
தெளிவுரை : இள அன்னப் பறவைகள், நீர் மடைகளில் நிறைந்துள்ள வளவிய தாமரை மலர்மேல் தங்கிப் பின் அப்பாற் சென்று நடத்தல் நிறைந்த திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பியிருக்கின்ற பெருமான், மாலையாக நிறைந்த கொன்றை மலர் பொருந்திய சடையை உடையவன். மழுவாயுதம் நிறைந்த கையை உடையவன். திருமேனியில் யானையின் உரித்த தோலாகிய போர்வையை உடையவன்.
1002. குளிர்தரு திங்கள்கங்கை
குருவோடுஅரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடைமேல்
உடையான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்குவேங்கை
தடமாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
தெளிவுரை : நறுமணம் பொருந்திய தளிர்களைத் தருகின்ற கோங்கு, வேங்கை, குருக்கத்தி, சண்பகம் முதலிய பூமரங்கள் குளிர்ச்சியைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பியிருக்கின்ற பெருமான் தனது ஒளிமிக்க கடையின் மேல் குளிர்ந்த சந்திரன், கங்கை, பாம்பு, குராமலர், கூவிள இலை முதலியவற்றை உடையவன். இடபத்தை வாகனமாக உடையவன்.
1003. கமர்பயில வெஞ்சுரத்துக்
கடுங்கேழற்பின் கானவனாய்
அமர்பயில் வெய்திஅருச்
சுனனுக்கருள் செய்தபிரான்
தமர்பயில் தண்விழவில்
தகுசைவர் தவத்தின்மிக்க
நமர்பயில் நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
தெளிவுரை : உலகத்தவர் மிக்குள்ள தண்ணிய விழாக்களையுடைய தகுதி வாய்ந்த சைவர்களாகிய தவத்திற் சிறந்தோர் வாழ்கின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பியிருக்கின்ற பெருமான், நிலப் பிளப்புக்கள் நிறைந்த கொடிய கற்சுரத்தில் கொடிய பன்றியின் பின்னே வேடுவனாய்ச் சென்று அருச்சுன னோடு போர் செய்து அவனுக்குத் திருவருள் செய்த தலைவனாவான்.
1004. கருவரை போல்அரக்கன்
கயிலைம்மலைக் கீழ்க்கதற
ஒருவிர லால்அடர்த்துஇன்
னருள்செய்த உமாபதிதான்
திரைபொரு பொன்னிநன்னீர்த்
துறைவன்திகழ் செம்பியர்கோன்
நரபதி நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
தெளிவுரை : அலை மோதுகின்ற காவிரியாற்றினது நல்ல நீர்த்துறையை உடையவனும் சோழர் கோமகனும் ஆகிய அரசன் செய்த திருநன்னிலத்துப் பெருங் கோயிலை விரும்பி யிருக்கின்ற பெருமான், அரக்கனாகிய இராவணன் கயிலாய மலையின்கீழ் கரிய மலை போலக் கிடந்து கதறும்படி ஒரு விரலால் நெருக்கிப் பின்பு அவனுக்கு அருள் புரிந்த உமை கணவனாகும்.
1005. கோடுயர் வெங்களிற்றுத்
திகழ்கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனைச்
சேடியல் சிங்கிதந்தை
சடையன்திரு வாரூரன்
பாடிய பத்தும்வல்லார்
புகுவார்பர லோகத்துளே.
தெளிவுரை : தந்தங்கள் உயர்ந்து காணப்படுகின்ற யானையின்மேல் விளங்குகின்ற கோச் செங்கட்சோழ நாயனார் செய்த, யாவரும் விரும்புகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பியிருக்கின்ற பெருமானைச் சிங்கடிக்குத் தந்தையும் சடையனார்க்கு மகனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பத்துப் பாடல்களையும் பாட வல்லவர்கள், பரலோகத்துள் புகுவார்கள்.
திருச்சிற்றம்பலம்

99. திருநாகேச்சரம் (அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம்,தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1006. பிறையணி வாள்நுதலாள்
உமையாள்அவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சுஅனுங்க
நீலமால்விடம் உண்டதென்னே
குறையணி குல்லைமுல்லை
அளைந்துகுளிர் மாதவிமேல்
சிறையணி வண்டுகள்சேர்
திருநாகேச் சரத்தானே.
தெளிவுரை : சிறகுகளையுடைய அழகிய வண்டுகள் இன்றியமையாத அழகிய துளசியிலும் முல்லை மலர்களிலும் மகரந்தத்தை அளைந்து, பின்பு குருக்கத்திக் கொடியின் மேல் சேர்கின்ற திருநாகேச்சரத்தில் கோயில் கொண்டிருப்பவனே. நீ, பிறை போலும் நெற்றியை யுடைய உமையவள். மருளவும் திட்பம் பொருந்திய மனம் கலக்கவும் நீல நிறமுடைய விடத்தை உண்டதற்குக் காரணம் யாது? தேவர்களைக் காத்தற் காரணமாக எழுந்த கருணை தானோ ? என்பது குறிப்பு.
1007. அருந்தவ மாமுனிவர்க்கு
அருளாகியோர் ஆல்அதன்கீழ்
இருந்துஅற மேபுரிதற்கு
இயல்பாகியது என்னைகொலாம்
குருந்தய லேகுரவம்
அரலின்எயிறு ஏற்றுஅரும்பச்
செருந்திசெம் பொன்மலரும்
திருநாகேச் சரத்தானே.
தெளிவுரை : குருந்த மரத்தின் பக்கத்தில் குராமரம் பாம்பினது பல் போன்ற அரும்புகளைத் தோற்றுவிக்க, செருந்தி மரம் செம்பொன் போன்ற மலரைக் கொண்டு விளங்கும் திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ அரிய தவத்தையுடைய சிறந்த முனிவர்கள்மேல் கருணை கூர்ந்து ஓர் ஆலமரத்தின் கீழ் இருந்து அறத்தைச் சொல்ல இசைந்ததற்குக் காரணம் யாது ? உலகத்தை உய்விக்கும் கருணை தானோ ? என்பதாம்.
1008. பாலனது ஆருயிர்மேல்
பரியாது பகைத்தெழுந்த
காலனை விடுவித்துக்
கருத்தாக்கியது என்னைகொலாம்
கோல மலர்க்குவளைக்
கழுநீர்வயல் சூழ்கிடங்கில்
சேலொடு வாளைகள்பாய்
திருநாகேச் சரத்தானே.
தெளிவுரை : அழகிய குவளை மலர்களையும் செங்கழுநீர் மலர்களையும் உடைய வயல்களைச் சூழ்ந்துள்ள வாய்க்கால்களில் சேல்மீன்களும் வாளைமீன்களும் துள்ளுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே. மார்க்கண்டேயர் மேல் இரக்கங் கொள்ளாமல் அவரது அரிய உயிரைக் கவர வந்த இயமனை நீ அழித்து, அச்சிறுவனுக்கு அருளை வழங்கியதற்குக் காரணம் யாது?
அடைக்கலமாக அடைந்தவரைக் காக்கும் கருணைதானோ ? என்பதாம்.
1009. குன்ற மலைக்குமரி
கொடியேரிடை யாள்வெருவ
வென்றி மதகரியின்
உரிபோர்த்தலும் என்னைகொலாம்
முன்றில் இளங்கமுகின்
முதுபாளை மதுவளைந்து
தென்றல் புகுந்துலவும்
திருநாகேச் சரத்தானே.
தெளிவுரை : இல்லங்களில் முன்னுள்ள இளைய கமுக மரத்தின் பெரிய பானைகளில் கட்டப்பட்ட தேன் கூடுகளில் உள்ள தேனை, தென்றற் காற்றுத் துழாவி, தெருக்களில் வந்து பாய்கின்ற திருநாகேச்சரத்தில் விரும்பியிருப்பவனே, நீ பல குன்றுகளையுடைய இமயமலையின் மகளாகிய கொடிபோலும் இடையை உடைய யானையின் தோலை உரித்ததேயன்றி, அதனைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டதற்குத் காரணம் யாது?
1010. அரைவிரி கோவணத்தோடு
அரவுஆர்த்துஒரு நான்மறைநூல்
உரைபெரு கவ்வுரைத் தன்று
உகந்தருள் செய்ததென்னே
வரைதரு மாமணியும்
வரைச்சந்துகி லோடும்உந்தித்
திரைபொரு தண்பழனத்
திருநாகேச் சரத்தானே.
தெளிவுரை : மலைகள் தந்த சிறந்த மாணிக்கங்களையும் அவற்றில் உள்ள சந்தனக் கட்டை அகிற்கட்டை என்பவைகளுடன் தள்ளிக் கொண்டு வந்து அலைகள் மோதுகின்ற குளிர்ந்த வயல்களையுடைய திருநாகேச்சரத்தில் பொருந்தியிருக்கின்ற பெருமானே. நீ அரையின்கண் அகன்ற கோவணத்தோடு பாம்பைக் காட்டிக் கொண்டு ஒப்பற்ற நான்கு வேதங்களின் பொருளை, அன்று விரிவாகச் சொல்லி, அதனைக் கேட்டோரை விரும்பி, அவருக்கு அருள் செய்ததற்குச் காரணம் யாது?
முதல் நூலின் உண்மைப்பொருள் பிறழாது விளங்கக் கருதியோ ? என்பதாம்.
1011. தங்கிய மாதவத்தின்
தழல்வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலியும்
செழுமால்கரி யோடுஅலறப்
பொங்கிய போர்புரிந்து
பிளந்துஈருளி போர்த்ததுஎன்னே
செங்கயல் பார்கழனித்
திருநாகேச் சரத்தானே.
தெளிவுரை : செவ்விய கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே ! நீ, நிலை பெற்ற பெரிய தவத்தினையுடைய தாருகாவனத்து முனிவர்களின் வேள்வித்தீயினின்றும் தோன்றிய சிங்கமும் நீண்ட புலியும். பருத்த பெரிய யானையோடே கதறி அழியும்படி மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின்றும் உரித்த தோலைப் போர்த்த தற்குத் காரணம் யாது? உன்னை உணரும் உணர்வில்லாதோர்க்கு உணர்வு உண்டாக்குவதற்கோ ? என்பதாம்.
1012. நின்றஇம் மாதவத்தை
ஒழிப்பான்சென்று அணைந்துமிகப்
பொங்கிய பூங்கணைவேள்
பொடியாக விழித்தலென்னே
பங்கய மாமலர்மேல்
மதுவுண்வெண் தேன்முரலச்
செங்கயல் பாய்வயல்சூழ்
திருநாகேச் சரத்தானே.
தெளிவுரை : இதே கருத்து ஒன்பதாம் திருப்பாடலிலும் வருகிறது. தாமரை மலர்மேல் தேனைவுண்டு வண்டுகள் ஒலி செய்கின்றதும் செம்மையான கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்கள் சூழ்ந்ததுமான திருநாகேச்சரத்தில் மேவியிருக்கின்ற பெருமானே ! நீ மேற்கொண்டிருந்த யோகத்தைக் கெடுப்பதற்காக வந்த மலராகிய அம்பையுடைய காமன் எரிந்து போகுமாறு உன்னுடைய நெற்றிக்கண்ணைத் திறந்த காரணம் என்ன ?
உனது காமம் இன்மையைக் காட்டுவதற்காகவோ ? என்பதாம்.
1013. வரிஅர நாணதாக
மாமேரு வில்லதாக
அரியன முப்புரங்கள்
அவைஆரழல் மூட்டல்என்னே
விரிதரு மல்லிகையும்
மலர்ச்சண்பக மும்அளைந்து
திரிதரு வண்டுபண்செய்
திருநாகேச் சரத்தானே.
தெளிவுரை : சோலைகளில் திரிகின்ற வண்டுகள் மலரும் நிலையில் உள்ள மல்லிகை மலரிலும், சண்பக மலரிலும் மகரந்தத்தை அளைந்து இசையைப் பாடுகின்ற திருநாகேச்சரத்தில் மேவியிருப்பவனே, நீ கீற்றுப் பொருந்திய பாம்பே நாணாகவும் மாமேரு மலையே வில்லாகவும் கொண்டு அரியவான மூன்று ஊர்களை அரிய தீ உண்ணும்படி செய்ததற்குக் காரணம் யாது?
நின்னை மறந்த குற்றத்தைத் தீர்த்தற் பொருட்டுத்தானோ என்பதாம்.
1014. அங்கியல் யோகுதன்னை
அழிப்பான்சென்று அணைந்துமிகப்
பொங்கிய பூங்கணைவேள்
பொடியாக விழித்தல்என்னே
பங்கய மாமலர்மேல்
மதுவுண்டுபண் வண்டறையச்
செங்கயல் நின்றுகளும்
திருநாகேச் சரத்தானே.
தெளிவுரை : குளங்களில் தாமரை மலர்களின்மேல் வண்டுகள் தேனை உண்டு, இசையைப் பாட, செவ்விய கயல்மீன்கள் துள்ளுகின்ற திருநாகேச்சரத்தில் கோயில் கொண்டிருப்பவனே ! நீ கயிலையின்கண் செய்த யோகத்தைக் கெடுத்தற்குச் சென்று சேர்ந்து பெரிதும் சினங்கொண்ட மலர்க்கணையையுடைய மன்மதன் சாம்பராகும்படி ஒரு கண்ணைத் திறந்ததருக்குக் காரணம் யாது ?
உனது காமம் இன்மையைக் காட்டுதற்காகவோ ? என்பதாம்.
1015. குண்டறை குறைஇன்றித்
திரியும்சமண் சாக்கியபேய்
மிண்டரைக் கண்டதன்மை
விரவாகியது என்னைகொலோ
தொண்டிரைத் துவணங்கித்
தொழில்பூண்டடி யார்பரவும்
தெண்டிரைத் தண்வயல்சூழ்
திருநாகேச் சரத்தானே.
தெளிவுரை : அடியார்கள் அடிமைத் தொழில் பூண்டு ஆரவாரித்து வணங்கித் துதிக்கின்ற தெளிந்த அலைகளையுடைய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநாகேச்சரத்தில் விரும்பியிருப்பவனே. சமணரும் புத்தரும் என்பவரை, அவர் கண்டதே கண்ட தன்மையைப் பொருந்தச் செய்ததற்குக் காரணம் யாது ?
அவர்களது வினைதானோ? என்பதாம்.
1016. கொங்கணை வண்டரற்றுக்
குயிலும்மயி லும்பயிலும்
தெங்கணை பூம்பொழில்சூழ்
திருநாகேச் சரத்தானை
வங்கம் மலிகடல்சூழ்
வயல்நாவலா ரூரன்சொன்ன
பங்கமில் பாடல்வல்லார்
அவர்தம்வினை பற்றறுமே.
தெளிவுரை : மகரந்தத்தை அடைந்த வண்டுகள் ஒலிக்க, குயிலும் மயிலும் பாடுதலையும் ஆடுதலையும் செய்கின்ற தேனினது மணங்கமழ்கின்ற பூஞ்சோலைகள் நிறைந்த திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, மரக்கலங்கள் நிறைந்த கடல் போலச் சூழ்ந்துள்ள வயல்களையுடைய திருநாவலூரனாகிய நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாட வல்லவர்களது வினை பற்றறக் கழியும்.
திருச்சிற்றம்பலம்

100. திருநொடித்தான்மலை (அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாயம், திபெத்)
திருச்சிற்றம்பலம்
1017. தானெனை முன்படைத்தான்
அதறிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ
நாயினேனைப் பொருட்படுத்து
வானெனைவந்து எதிர்கொள்ள
மத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான்
நொடித்தான்மலை உத்தமனே.
தெளிவுரை : இத்திருப்பதிகம் பல பெருமைகளையுடையது. அவை தேவாரத் திருமுறைகளை நிறைவு செய்தமை. களையா உடலோடு நாயனார், வெள்ளானையின்மீது வான் வழியாகத் திருக்கயிலை செல்லுங்கால், இறைவரது எல்லையற்ற பேரருள் திறத்தை நினைந்து எழுந்த இன்பமேலீட்டால் பாடிக் கொண்டு சென்றமை. நாயனாரது வரலாற்றுக்குரிய அகச்சான்றுகள் பலவற்றைத் தருவதுடன், உரையளவைக்குரிய சிறப்பியல்பு தெற்றென விளங்க நிற்றல், திருக்கைலையில் முற்றுப்பெற்று நாயனாரது அருளாணையால் வருணனால் நிலவுலகிற் கொணர்ந்து அளிக்கப்பட்டமை முதலியனவாம்.
திருக்கயிலையில் வீற்றிருக்கும் முதல்வன் தானே முன்பு என்னை நிலவுலகில் தோற்று வித்தருளினான். தோற்றுவித்த அத் திருக்குறிப்பினை உணர்ந்து அவனது திருவடிகளுக்கு நான் எத்தனை பாடல்கள் செய்தேன் ! என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்து எண்ணி வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு பெரியதோர் யானையை எனக்கு அளித்து, எனது உடலோடு உயிரை உயர்வு பெறச் செய்தான். அவனது திருவருள் இருந்தவாறு என்னே !
1018. ஆனை உரித்தபகை
அடியேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட்டி
ஒள்ளியானை நினைந்திருந்தேன்
வானை மதித்துஅமரர்
வலஞ்செய்துஎனை ஏறவைக்க
ஆனை அருள்புரிந்தான்
நொடித்தான்மலை உத்தமனே.
தெளிவுரை : யான், கருவி கரணங்களை அறிவினால் அடக்கி அறிவே வடிவாய் உள்ள தன்னை உள்கியிருத்தலாகிய ஒன்றே செய்தேன். அவ்வளவிற்கே திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் அம்முதல்வன், வான் உலகத்தையே பெரிதாக மதித்துள்ள தேவர்கள் வந்து என்னை வலம் செய்து ஏற்றிச் செல்லுமாறு ஒரு யானை ஊர்தியை எனக்கு அளித்தருளினான். அஃது அவன் முன்பு யானையை உரித்ததனால் நிலைத்திருக்கும் பகையை அடியேனால் நீங்கச் செய்து, அதற்கு அருள் பண்ணக் கருதியதனாலோ; அன்றி, என்மாட்டு வைத்த பேரருளாலோ ?
1019. மந்திரம் ஒன்றறியேன்
மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால்
துரிசேசெயும் தொண்டன்எனை
அந்தர மால்விசும்பில்
அழகானை அருள்புரிந்த
துந்தர மோநெஞ்சமே
நொடித்தான்மலை உத்தமனே.
தெளிவுரை : அடியவனாகிய நான் மந்திரம் ஒன்றையும் அறிய மாட்டேன். இவ்வாழ்க்கையில் மன மகிழ்ச்சி கொண்டு வெளிக்கு அழகிய சிவ வேடங்களுடன் குற்றங்களையே செய்யும் தொண்டனான எனக்குத் திருநொடித்தான் மலையெனப்படும் கயிலாயத்தில் எழுந்தருளிய முதல்வனாகிய பெருமான் மேலிடத்து உள்ளதாகிய பெரிய ஆகாயத்தில் செல்லத்தக்க அழகிய வெள்ளை யானையை நான் ஏறிச்செல்ல அருள் செய்ததும் தகுதியுடையதாகுமோ ? மனமே !
1020. வாழ்வை உகந்தநெஞ்சே
மடவார்தங்கள் வல்வினைப்பட்டு
ஆழ முகந்தஎன்னை
அதுமாற்றி அமரர்எல்லாம்
சூழ அருள்புரிந்து
தொண்டனேன் பரம்அல்லதொரு
வேழம் அருள்புரிந்தான்
நொடித்தான்மலை உத்தமனே.
தெளிவுரை : உலக இன்பத்தை விரும்பிய மனமே, பெண்டிரால் உண்டாகும் வலிய வினையாகிய குழியில் விழுந்து அழுந்திக் கிடந்த என்னை, திருக்கயிலை மலையில் எழுந்தருளியிருக்கும் முதல்வன் அந்நிலையினின்று நீக்கி, தேவர்கள் சூழ்ந்து அழைத்து வருமாறு ஆணையிட்டு, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்டதாகிய ஒரு யானை ஊர்தியை அளித்தருளினான். அவனது திருவருள் இருந்தவாறு என்னே !
1021. மண்ணுல கிற்பிறந்து
நும்மைவாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறுதல்
தொண்டனேன்இன்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர்கள்
விரும்பவெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான்
நொடித்தான்மலை உத்தமனே.
தெளிவுரை : மண்ணுலகில் மக்களாய்ப் பிறந்து நும்மைப் பாடுகின்ற பழவடியார் பின்பு பொன்னுலகத்தைப் பெறுதலாகிய உரையளவைப் பொருளை அடியேன் இன்று நேரிற் கண்டேன் என்று தன்பால் வந்து சொல்லுமாறு திருக்கயிலை மலையில் விரும்பியிருக்கும் முதல்வன் தேவரும் கண்டு விருப்பங் கொள்ள என் உடம்பை வெள்ளை யானையின் மேல் காணச் செய்தான். அவனது திருவருள் இருந்தவாறு என்னே !
1022. அஞ்சினை ஒன்றிநின்று
அலர்கொண்டடி சேர்வறியா
வஞ்சனை என்மனமே
வைகிவானநன் னாடர்முன்னே
துஞ்சுதல் மாற்றுவித்துத்
தொண்டனேன்பரம் அல்லதொரு
வெஞ்சின ஆனைதந்தான்
நொடித்தான்மலை உத்தமனே.
தெளிவுரை : திருக்கயிலை மலையில் கோயில் கொண்டிருக்கும் முதல்வன் ஐம்புலன்களைப் பொருந்தி நின்று, பூக்களைக் கொண்டு தனது திருவடியை அணுக அறியாத வஞ்சனையுடைய என் மனத்தில் குடிகொண்டு, எனக்கு இறப்பை நீக்கி, தேவர்களது கண்முன்னே என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்ட வெவ்விய சினத்தையுடைய யானை ஊர்தியை அளித்தருளினான். அவனது திருவருள் இருந்தவாறு என்னே !
1023. நிலைகெட விண்அதிர
நிலம்எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி
வழியேவரு வேன்எதிரே
அலைகட லால்அரையன்
அலர்கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம்
நொடித்தான்மலை உத்தமனே.
தெளிவுரை : திருக்கயிலையில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வன் விண்ணுலகம் தனது நிலை கெடுமாறு அதிரவும், நிலவுலகம் முழுவதும் அதிரவும் மலையிடைத் திரியும் யானை மீதேறி என் எதிரே அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணன் பூக்களைக் கொண்டு, முன்வந்து வணங்குமாறு, உடல் அழியாமல் இருக்கும் நிலையை எனக்கு அளித்தான். அவனது திருவருள் இருந்தவாறு என்னே !
1024. அரவொலி ஆகமங்கள்
அறிவார்அறி தோத்திரங்கள்
விரவிய வேதஒலி
விண்ணெலாம்வந்து எதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந்து
வழிதந்தெனக்கு ஏறுவதோர்
சிரமலி யானைதந்தான்
நொடித்தான்மலை உத்தமனே.
தெளிவுரை : அரகர என்னும் ஒலியும் ஆகமங்களின் ஒலியும் அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும் பல்வேறு பிரிவுகளையுடைய வேதங்களின் ஒலியும். ஆகாயம் முழுவதும் நிறைந்து வந்து எதிரே ஒலிக்கவும். மேன்மையுள்ள வாணன் என்னும் கணத்தலைவன் வந்து முன்னே வழிகாட்டிச் செல்லவும். சிறந்த யானையைத் திருக்கயிலை மலையில் கோயில் கொண்டிருக்கும் இறைவன் எனக்கு அளித்தருளினான். அவனது பேரருள் இருந்தவாறு என்னே !
1025. இந்திரன் மால்பிரமன்
எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை
மத்தயானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர்
இவனார்என எம்பெருமான்
நந்தமர் ஊரன்என்றான்
நொடித்தான்மலை உத்தமனே.
தெளிவுரை : திருக்கயிலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமான், இந்திரன், பிரமன், சிறந்த தேவர் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர்கொள்ளுமாறு எனக்கு யானை ஊர்தியை அளித்தருளி, அங்கு மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள் இவர் யார்? என்று கேட்க இவன் நம் தோழன்; ஆரூரன் என்னும் பெயரினன் என்று திருவாய் மலர்ந்தருளினான். அவனது திருவருள் இருந்தவாறு என்னே !
1026. ஊழிதோ றூழிமுற்றும்
உயர்பொன்நொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும்பின்
சுவைநாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்தமிழால்
இசைந்தேத்திய பத்திவையும்
ஆழி கடல்அரையா
அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே.
தெளிவுரை : திருக்கயிலை மலை உலகமெல்லாம் அழிகின்ற ஒவ்வொர் ஊழியிலும் ஓங்கி உயர்வது என்பது இத் திருப்பாடலில் குறிக்கப்பட்டிருப்பது அறியத்தக்கது.
இத்திருப்பதிகம் நிலவுலகத்தில் மலை நாட்டிலுள்ள திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு உரித்தாதல் அறிக.
வருணனே ! உலகம் அழியுங் காலந்தோறும் உயர்வதும் பொன் நிறமாவதும் ஆகிய திருக்கயிலையில் எழுந்தருளியிருக்கும் முதல்வனை, திருநாவலூரனாகிய நான் இசை நூலிற் சொல்லப்பட்ட ஏழிசைகளையுடைய இனிய தமிழால்; மிக்க புகழ் உடைய, கரும்பின் சுவைபோன்ற, அப்பெருமானோடு ஒன்றுபட்டுப் பாடிய இப் பத்துப் பாடல்களையும் திருவஞ்சைக்களத்தில் வீற்றிருந்தருளும் பெருமானுக்கு நீ அறிவிக்க வேண்டும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் மூலமும் உரையும் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக