செவ்வாய், 8 நவம்பர், 2011

12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-7 | திருத்தொண்டர் புராணம்


ராதே கிருஷ்ணா 09 - 11 - 2011 

12 திருமுறைகள்
    

12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-7 | திருத்தொண்டர் புராணம்

விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க 
http://temple.dinamalar.com/


 பனிரெண்டாம் திருமறை
12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-7 | திருத்தொண்டர் புராணம்

35. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம்
காவிரியால் வளம்கொழிக்கும் சோழ நாட்டிலே  பெருமங்கலம் என்னும் நகரம் அமைந்துள்ளது. இத்தலத்திலே ஏயர் குலத்தினர் சோழருடைய படைத் தலைமை வகிக்கும் பெருமை பெற்றவர்களாக சிறந்து விளங்கினர். அக்குடியினிலே வாழ்ந்து வந்த தொண்டர்கள் பலருள் கலிக்காம நாயனார் என்பவரும் ஒருவர். இவர் பக்தியின் பேருருவாய் - அன்பின் அழகு வடிவமாய் - சிறந்த சிவத்தொண்டராய் விளங்கினார். இவர் மானக்கஞ்சாற நாயனாருடைய மகளைத் திருமணம் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தார். இச்சிவனடியார் திருவெண்ணீற்றுச் செல்வத்தையும், திருச்சடையோன் சேவடியையும் தமக்குக் கிட்டிய பேரின்ப பொக்கிஷம் என்ற எண்ணத்தில் சிவனாரின் திருவடிக் கமலங்களைச் சிந்தையில் இருத்தித் தேனினும் இனிய ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது எந்நேரமும் ஓதி வந்தார். பெருமானின் நினைவாகவே காலம் கடத்தி வந்த நாயனார் சிவனடியார்களின் வியக்கத்தக்க செயல்களையும் அவர்களது பக்திப் பெருக்கின் தன்மையையும்  கேள்வியுற்று களிப்பெய்தி வந்தார். இங்ஙனம் இவர் வாழ்ந்து வரும் நாளில்தான் எம்பெருமானாரைச் சுந்தரர் தம்பொருட்டு பரவையாரிடம் தூது போகவிட்ட நிகழ்ச்சி நடந்தது! இச்செய்தியைக் கேள்வியுற்ற கலிக்காமர் மனம் வருந்தினார்.
ஆண்டவனை அடியான் தூது அனுப்பும் தொழில் மிகமிக நன்று ! இறைவன் அவனது ஆணைக்கு உடன்பட்டு இரவு முழுவதும், தமது தூய திருவடிகள் நோகுமாறு தேரோடும் திருவீதி வழியே உழன்றுள்ளாரே ! இந்திரனும், திருமாலும், நான்முகனும் காணமுடியாத எம்பெருமானின் திருவடிகள் தூது சென்று நோக இசைந்தாலும் தொண்டன் என்று கூறிக்கொள்ளும் இவன்தான் ஏவுதல் முறையாகுமோ? இத்தகைய செயல்புரிந்த இவரும் தன்னைத் துணிந்து தொண்டன் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட வில்லையோ! இது எவ்வளவு பாவமான செயல்! பொறுக்கமுடியாத அளவிற்கு இத்தகைய பெரும் பிழையினைக் கேட்ட பின்னரும் என்னுயிர் நீங்காதிருந்ததே! என்று சினங்கொண்டார் கலிக்காமர். துன்பக் கடலில் மூழ்கினார். கலிக்காமரின் கடும் கோபத்தைப் பற்றிக் கேள்வியுற்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் மிகவும் மனம் வாடினார். தம்மால் ஒரு தொண்டர்க்கு ஏற்பட்டுள்ள துயரத்திற்கு எப்படி முடிவு காண்பது என்று சிந்தித்தார். தமது பிழையைப் பொறுத்தருள இறைவனிடம் வேண்டினார். புற்றிடங்கொண்ட பெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரையும், கலிக்காம நாயனாரையும் நண்பர்களாக்கத் திருவுள்ளம் கொண்டார். அதன்படி இறைவன் கலிக்காமருக்குக் கொடிய சூலை நோயினைக் கொடுத்து ஆட்கொண்டார். கலிக்காமர் சூலை நோயால் மிகவும் துடித்தார். கொடிய கருநாகப் பாம்பின் விடம் தலைக்கு ஏறினாற்போல் துடித்த நாயனார் மயக்கமுற்றார்.
அப்பொழுது எம்பெருமான் உன்னைத் துன்புறுத்துகின்ற சூலை நோயைத் தீர்க்க வல்லவன் வன்றொண்டனே ஆவான் ! என்று திருவாய் மலர்ந்து மறைந்தார்.  எம்பெருமான் சுந்தரரை அடைந்து, நம் ஏவலினால் நம் அன்பன் ஏயர்கோன் கொடிய சூலை நோயினால் மிகவும் வருந்தி வாடுகிறான். உடனே நீ சென்று கலிக்காமருக்கு ஏற்பட்டுள்ள சூலை நோயைத் தீர்த்து வருவாயாக! என்றார். சுந்தரர் புற்றிடங்கொண்ட பெருமானின் பூவடிகளைப் பற்றி வணங்கிப் பெருமங்கலத்துக்குப் புறப்பட்டார். இறைவன் ஆணைப்படி பெருமங்கலத்திற்குப் புறப்பட்டு வரும் செய்தியை ஏவலாளர்கள் மூலம் முன்னதாகவே சொல்லி அனுப்பினார் சுந்தரர். ஏவலர் கலிக்காமர் இல்லத்தை அடைந்து சுந்தரர் வருகையைப் பற்றிக் கூறினர். ஏற்கனவே பல வழிகளில் துவண்டு புழுப்போல் துடித்துக் கொண்டிருந்த கலிக்காமருக்கு சுந்தரரின் வருகையைப் பற்றிக் கேள்விப்பட்டதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது. பிறை முடியணிந்த பெருமானை வணங்கியவாறு உடைவாளைக் கழற்றினார். எம்பெருமானே! இனிமேலும் நான் உலகில் வாழ விரும்பவில்லை. ஆரூரன் இங்கு வந்து என்னைப் பற்றியுள்ள சூலை நோயைத் தீர்க்கும் முன் என் ஆவியைப் போக்கிப் கொள்வேன் என்று கூறி கலிக்காமர் உடைவாளால் வயிற்றைக் கிழித்துக் கொண்டார்.
கலிக்காமர் ஆவி பிரிந்ததும் அவரது மனைவி தம் கணவரோடு உயிர் துறந்து அவருடன் பரமனடியைச் சேர்வது என்று உறுதி பூண்டாள். அதற்குரிய நிலையினை உருவாக்கும் தருணத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் ஏவலாளர்கள் முன்னதாக வந்து நம்பிகள் இங்கு பொருந்த அணைந்தார் என்று கூறினர். இவ்வாறு அவர்கள் கூறியதும் அம்மையார் துயரத்தை மறைத்து கணவரது செயலினையும் மறைத்து சுந்தரமூர்த்தி சுவாமிகளை இன்முகத்துடன் வரவேற்க எண்ணினார். எண்ணியபடியே அம்மையார் ஏவலாளர்கள் அறியாவண்ணம் கணவரது உடலை உள்ளே ஓர் அறையில் மறைத்து வைத்துவிட்டுத் திருமாளிகையை அலங்கரிப்பதில் ஈடுபட்டார். சிவ அன்பர்களும் உதவலாயினர். வாயில்கள் தோறும் மணி விளக்குகளையும் மணமிக்கத் தூயநிறை குடங்களையும் வைத்தனர். நறுமலர் மாலைகளை வரிசையாக அழகுடன் தொங்க விட்டனர். அம்மையார் முக மலர்ச்சியுடன் சுந்தரர் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் இருந்தார். சுந்தரர் அன்பர்களுடன் எழுந்தருளினார் கலிக்காமரின் தேவியார் சுந்தரரை முகமன் கூறி வரவேற்றார். மலர் தூவிக் கோலமிட்ட ஆசனத்தில் அமரச் செய்து விதிமுறைப்படி அவரது திருப்பாதங்களைத் தூய நீரால் சுத்தம் செய்து மலர் தூவி வழிபட்டு மகிழ்ந்தார். சுந்தரரும் அம்மையாரின் அன்பிற்குக் கட்டுப்பட்டவராய் அம்மøயாருக்கு அருள் செய்தார். சுந்தரர், அம்மையாரை நோக்கி, அம்மையே ! என் நண்பர் கலிக்காமர் எங்குள்ளார்? அவருக்கு இப்பொழுது துன்பம் செய்து வரும் சூலைநோயினைக் குணப்படுத்தி அவரது நட்பைப் பெற்று மகிழ்வதற்குக் காலம் தாழ்ந்தது பற்றி நான் மிக்க வேதனைப்படுகிறேன் என்றார். கலிக்காமருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று அங்குள்ளோர் அம்மையாரின் ஏவுதலின்படி கூறக்கேட்ட சுந்தரர், அவருக்கு எவ்வித தீங்கும் ஏற்படவில்லை என்றாலும் என் மனம் அவரைக் காணாது தெளிவு பெறாது. நான் உடனே அவரைப் பார்த்துதான் ஆகவேண்டும் என்றார். அன்பர்கள் வேறு வழியின்றி சுந்தரரை அழைத்துச் சென்று குருதி வெள்ளத்தில் கிடக்கும் கலிக்காமரைக் காண்பித்தனர். குடர் வெளிப்பட்டு உயிர் நீங்கி உடலில் குருதி கொட்ட ஆவி பிரிந்து கிடந்த கலிக்காமரைக் கண்டு உளம்பதறிப்போன சுந்தரர் வேதனை தாளாமல் கண்களில் நீர்பெருக எம்பெருமானைத் தியானித்தார்.
எம்பெருமானே! இதென்ன அபச்சாரமான செயல்! நான் மட்டும் இவரது இத்தகைய பயங்கர முடிவைக் கண்ட பின்னரும் உயிர் வாழ விரும்பவில்லை. நானும் என் உயிரைப் போக்கிக்கொள்கிறேன் என்று கூறித் தமது ஆவியை போக்கிக் கொள்ள உறுதி பூண்டார். கலிக்காமர் அருகே கிடந்த உடைவாளைக் கையிலெடுத்தார். அப்பொழுது எம்பெருமான் திருவருளால் ஏயர்கோன் கலிக்காம நாயனார் உயிர்பெற்று எழுந்தார். கணப்பொழுதில் தெளிவு பெற்று நடந்ததை அறிந்தார்.  உடைவாளால் தம்மை மாய்த்துக் கொள்ளப் போகும் சுந்தரரைப் பார்த்து மனம் பதறிப்போனார். உடை வாளைப் பற்றினார் கலிக்காமர். ஐயனே! இதென்ன முடிவு? உங்கள் தோழமையின் உயர்வை உணராமல் என்னையே நான் அழித்துக் கொண்டதோடு உங்களது வாழ்க்கைக்கும் பெரும் பாவம் புரிந்துவிட்டேன். ஐயனே! எம்பெருமானின் அன்பிற்குப் பாத்திரமான உம் மீது பகைபூண்டு நெறி தவறிய என்னை மன்னித்தருள வேண்டும் என்று இறைஞ்சினார். சுந்தரர் எம்பெருமானின் திருவருளை எண்ணி அகமும், முகமும் மலர்ந்திட, கலிக்காம நாயனாரை ஆரத்தழுவிப் பெருமிதம் கொண்டார். கலிக்காமரும் சுந்தரரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். கலிக்காமரின் தேவியாரும் மட்டிலா மகிழ்ச்சி பூண்டார். சுந்தரர், அவரது மனைவியின் பக்தியைப் பெரிதும் போற்றினார். மானக்கஞ்சாரர் மகள் அல்லவா? என்று வியந்து கூறினார். எம்பெருமானின் திருவருட் கருணையினால் கலிக்காமரும், சுந்தரரும் தோழர்களாயினர். இரு சிவனருட் செல்வர்களும் சேர்ந்து சிவயாத்திரை செல்ல எண்ணினர். ஒருநாள் பெருமங்கலப் பெருமானைப் பணிந்து இருவரும் புறப்பட்டனர். திருப்புன்கூர் என்னும் திருத்தலத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் திருசடை அண்ணலின் திருவடிகளைப் பணிந்து துதித்தனர். சுந்தரர் அந்தனாளன் எனத் தொடங்கும் பதிகத்தைச் சுந்தரத் தமிழில் பாடினர். அங்கியிருந்து புறப்பட்டு, இருவரும் திருவாரூரை வந்தணைந்து பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் புற்றிடங்கொண்ட பெருமானின் பொற்பாதங்களைப் போற்றிப் பணிந்தனர். கலிக்காம நாயனார் சுந்தரருடன், பரவையார் திருமாளிகையில் சில காலம் தங்கினார். இருவரும் திருவாரூர்த் தியாகேசப் பெருமானை வழிபட்டு மகிழ்ந்தனர். கலிக்காமர் சுந்தரரிடம் விடைபெற்றுக்கொண்டு பிரிந்துசெல்ல மனமில்லாத நிலையில் தமது ஊருக்குப் புறப்பட்டார். பெருமங்கலத்துப் பெருமானுக்குப் பணி செய்தவாறு மனைவியுடன் இனிது வாழ்ந்து வந்த கலிக்காமர் ஆனேறும் பெருமானின் தேனூறும் திருவடிகளை நாள்தோறும் வாயாறப் போற்றி மகிழ்ந்தார். திருத்தொண்டு வழுவாமல் நின்றார். பல்லாண்டு காலம் பூவுலகில் பெருவாழ்வு வாழ்ந்த நாயனார், முடிவில் நலம் தந்த நாதரின் வரம் தரும் திருவடி நீழலில் வீற்றிருக்கும் அடியார்கள் கூட்டத்துடன் கலந்தார். மீளா நெறியில் அமர்ந்து உய்ந்தார்.
3155. நீடு வண்புகழ்ச் சோழர்நீர் நாட்டிடை நிலவும்
மாடு பொன்கொழி காவிரி வடகரைக் கீழ்பால்
ஆடு பூங்கொடி மாடம்நீ டியஅணி நகர்தான்
பீடு தங்கிய திருப்பெரு மங்கலப் பெயர்த்தால்.
தெளிவுரை : மிக்க வளமான புகழையுடைய சோழ மன்னர்க்குரிய வளம் உடைய நாட்டிலே நிலவும் பக்கங்களில் பொன் கொழிக்கும் காவிரியின் வடகரையில், கிழக்குத் திசையிலே, ஆடும் பூங்கொடிகளையுடைய மாளிகைகள் நீடியுள்ள அழகிய நகரமானது பெருமைமிக்க திருப்பெரு மங்கலம் என்னும் பெயரை உடையது.
3156. இஞ்சி சூழ்வன எந்திரப் பந்திசூழ் ஞாயில்
மஞ்சு சூழ்வன வரையென வுயர்மணி மாடம்
நஞ்சு சூழ்வன நயனியர் நளினமெல் லடிச்செம்
பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு.
தெளிவுரை : அங்கு எந்திர வரிசைகளால் சூழப்பட்ட ஞாயில்கள் மதில்களில் அமைந்திருக்கும். மலைபோல் உயர்ந்த அழகிய மாடங்கள் மேகங்களால் சூழ்ந்திருக்கும். நஞ்சின் தன்மையுடைய கொடுமை நிறைந்த கண்களையுடைய மங்கையரின் மென்மையான தாமரை போன்ற அடிகளில் ஊட்டிய செம்பஞ்சுக் குழம்பு இளங்காளையரின் முடி மயிர்களின் பரப்பில் சூழ்ந்திருக்கும்.
3157. விழவ றாதன விளங்கொளி மணிநெடு வீதி
முழவ றாதன மொய்குழ லியர்நட வரங்கம்
மழவ றாதன மங்கலம் பொலிமணி முன்றில்
உழவ றாதநல் வளத்தன ஓங்கிருங் குடிகள்.
தெளிவுரை : விளக்கமான அழகிய வீதிகள் விழாக்களை நீங்காமல் விளங்கும். அடர்ந்த கூந்தலையுடைய மங்கையரின் ஆடரங்குகள், முழவின் ஒலியை நீங்காமல் விளங்கும். மங்கலம் விளங்கும் அழகிய முற்றங்கள், சிறுவர்களை நீங்காது பொலியும், செழுமையான பெருங்குடிகள் உழவுத்தொழிலின் நீங்காத வளமைகளை உடையனவாய் இருக்கும்.
3158. நீரி னிற்பொலி சடைமுடி நெற்றிநாட் டத்துக்
காரி னில்திகழ் கண்டர்தங் காதலோர் குழுமிப்
பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர்தாள் பரவும்
சீரின் மிக்கது சிவபுரி யெனத்தகுஞ் சிறப்பால்.
தெளிவுரை : அப்பெருமங்கலம் என்ற நகரம் கங்கை நீரால் விளங்கும் சடைமுடியையும் நெற்றிக் கண்ணையும் மேகம் போன்ற கரிய கழுத்தையும் கொண்ட சிவபெருமானின் அடியவர்கள் ஒன்றுகூடி, உலகில் மிக்க ஒப்பில்லாத பெருமையினால் இறைவரின் திருவடிகளை வணங்கும் சிறப்பினால் மிகுந்தது; அச்சிறப்பால் அந்தப் பதியானது சிவபுரி எனக் கூறத்தக்கது.
3159. இன்ன வாழ்பதி யதனிடை ஏயர்கோக் குடிதான்
மன்னி நீடிய வளவர்சே னாபதிக் குடியாம்
தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய
பொன்னி நாட்டுவே ளாண்மையில் உயர்ந்தபொற் பினதால்.
தெளிவுரை : இத்தகைய தன்மையுடன் கூடிய வாழ்வுடைய அந்தப் பதியில், ஏயர் கோக்குடியானது,  நிலைபெற்று வழிவழி வளர்ந்து வரும் சோழர்களின் படைத்தலைவர் குடியாகிய தொன்று தொட்டு வரும் தொடர்ச்சியால் விளங்குவது, அது தூய்மையுடைய காவிரி நாட்டில் வேளாண்மைத் திறத்தினால் உயர்ந்த அணிநலம் வாய்ந்தது.
3160. அங்கண் மிக்கஅக் குடியினில் அவதரித் துள்ளார்
கங்கை வாழ்முடி யார்தொண்டர் கலிக்காமர் என்பார்
தங்கள் நாயகர் அடிபணி வார்அடிச் சார்ந்து
பொங்கு காதலி னவர்பணி போற்றுதல் புரிந்தார்.
தெளிவுரை : அங்குப் பெருமையால் மிகுந்த அந்தக் குடியில் வந்து தோன்றியுள்ளவர் கங்கை வாழும் சடைமுடியையுடைய சிவபெருமானின் தொண்டரான கலிக்காமர் என அழைக்கப்படுபவர். அவர் இறைவரின் திருவடிகளைச் சார்பாகக் கொண்டு மேன்மேல் வளரும் மிக்க அன்பினால் அவ்வடியவர் பணியினை விரும்பிச் செய்து வந்தார்.
3161. புதிய நாள்மதிச் சடைமுடி யார்திருப் புன்கூர்க்
கதிக மாயின திருப்பணி அநேகமுஞ் செய்து
நிதிய மாவன நீறுகந் தார்கழ லென்று
துதியி னாற்பர வித்தொழு தின்புறு கின்றார்.
தெளிவுரை : அக்கலிக்காமர், புதியதாய்த் தோன்றிய பிறைச்சந்திரனைச் சூடிய சடைமுடியுடைய இறைவரின் திருப்புன்கூருக்கு அதிகமான பல பணிகளையும் செய்பவர், திருநீற்றை விரும்பும் சிவபெருமானின் திருவடியே தமக்குச் செல்வமாகும், என்று துதிகளால் பரவிப் போற்றி இன்பம் அடைந்து வருபவர்.
3162. நாவ லூர்மன்னர் நாதனைத் தூதுவிட் டதனுக்
கியாவ ரிச்செயல் புரிந்தன ரென்றவ ரிழிப்பத்
தேவர் தம்பிரா னவர்திறந் திருத்திய வதற்கு
மேவ வந்தஅச் செயலினை விளம்புவா னுற்றேன்.
தெளிவுரை : திருநாவலூர்த் தலைவரான நம்பி ஆரூரர் சிவபெருமானைப் பரவையாரிடம் தூதாக அனுப்பியதற்கு, இங்ஙனம் செய்பவர் யாவர்? என்று அவர் குறை கூறினார். கூற, தேவ தேவரான சிவபெருமான் அவர் கருத்தைத் திருத்தும் பொருட்டு அதற்குப் பொருந்த வந்த அந்த அருட்செயலின் வரலாற்றைச் சொல்லத் தொடங்குகின்றேன்.
3163. திருத்தொண்டத் தொகையருளித் திருநாவ லூராளி
கருத்தொன்று காதலினால் கனகமதில் திருவாரூர்
ஒருத்தர்கழல் முப்பொழுதும் உருகியஅன் பொடுபணிந்து
பெருத்தெழுமெய் யன்பினாற் பிரியாதங் குறையுநாள்.
தெளிவுரை : திருநாவலூரில் தோன்றியவரான சுந்தரர் திருத்தொண்டத் தொகையான திருப்பதிகத்தைப் பாடிய பின்பு, மனம் ஒன்றுபட்ட விருப்பத்தினால் பொன் மதில் உடைய திருவாரூரில் எழுந்தருளிய தியாகராசப் பெருமானின் திருவடிகளை நாள்தோறும் மூன்று போதும் உள்ளம் உருகிய அன்புடனே வணங்கிப் பெருகி மேன்மேல் எழுகின்ற உண்மை அன்பினால் நீங்காமல் அந்தப் பதியில் தங்கியிருந்த காலத்தில்,
3164. தாளாண்மை உழவுதொழில் தன்மைவளந் தலைசிறந்த
வேளாளர் குண்டையூர்க் கிழவரெனும் மேதக்கோர்
வாளார்வெண் மதியணிந்தார் மறையவராய் வழக்கினில்வென்று
ஆளாகக் கொண்டவர்தாள் அடைந்தன்பா லொழுகுவார்.
தெளிவுரை : தம் தாளாண்மையினால் உழவுத்தொழிலில் வரும் வளங்களால் மிக்க சிறப்புடைய வேளாளரான குண்டையூர் கிழார் என்ற மேன்மையுடையவர், ஒளி பொருந்திய வெண்பிறைச் சந்திரனை அணிந்த சிவபெருமான் அந்தணராக வந்து வழக்கிட்டு வென்று ஆட்கொண்ட நம்பி ஆரூரரின் திருவடிகளைச் சார்வாய் அடைந்து அன்பு பூண்டு ஒழுகுவாராய் விளங்கினார்.
3165. செந்நெல்லும் பொன்னன்ன செழும்பருப்பும் தீங்கரும்பின்
இன்னல்ல வமுதும்முதல் எண்ணில்பெரும் பலவளங்கள்
மன்னியசீர் வன்றொண்டர்க் கமுதாக வழுவாமல்
பன்னெடுநாள் பரவையார் மாளிகைக்குப் படிசமைத்தார்.
தெளிவுரை : செந்நெல்லும் பொன் போன்ற செழும் பருப்பும் இனிய கரும்பான நல்ல அமுதும் முதலான அளவில்லாத பெரிய வளங்களையும் நிலைபெற்ற சிறப்புக்கொண்ட வன்தொண்டரான சுந்தரருக்குத் திருவமுதாய் உதவும் பொருட்டுத் தவறாமல் பல நாட்கள் பரவையாரின் திருமாளிகைக்குப் படி தந்து வந்தார்.
3166. ஆனசெயல் அன்பின்வரும் ஆர்வத்தால் மகிழ்ந்தாற்ற
வானமுறை வழங்காமல் மாநிலத்து வளஞ்சுருங்கப்
போனகநெற் படிநிரம்ப எடுப்பதற்குப் போதாமை
மானமழி கொள்கையினால் மனமயங்கி வருந்துவார்.
தெளிவுரை : அத்தகைய செயலை அன்பால் விளைகின்ற மிக்க ஆசையால் உள்ளம் மகிழ்ந்து செய்வதற்கு மழை முறைப்படி பெய்யாததால், உணவான நெல்லும் மற்றவையும் கொண்டு செல்லுதற்குப் போதாத நிலைமையால் மானம் அழிந்த கொள்கையினால் உள்ளம் மயங்கிக் குண்டையூர் கிழார் வருத்தம் அடைந்தார்.
3167. வன்றொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல்லெடுக்க
இன்றுகுறை யாகின்ற தென்செய்கேன் எனநினைந்து
துன்றுபெருங் கவலையினால் துயரெய்தி உண்ணாதே
அன்றிரவு துயில்கொள்ள அங்கணர்வந் தருள்புரிவார்.
தெளிவுரை : வன்தொண்டரின் திருவாரூர் மாளிகைக்கு நெற்படி எடுத்து உய்ப்பதற்கு இன்று குறைபாடு உண்டாயிற்றே! நான் என்ன செய்வேன்! என எண்ணி, மிக்க கவலையினால் வருந்தி, உணவு உண்ணாமல் அன்றிரவில் (ஒரு நாள் இரவில்) உறங்கினார். அங்கணரான சிவபெருமான் அவர்பால் வந்து அருள்செய்வார் ஆனார்.
3168. ஆரூரன் தனக்குன்பால் நெல்தந்தோம் என்றருளி
நீரூருஞ் சடைமுடியார் நிதிக்கோமான் தனையேவப்
பேரூர்மற் றதனெல்லை அடங்கவும்நென் மலைப்பிறங்கல்
காரூரும் நெடுவிசும்புங் கரக்கநிறைந் தோங்கியதால்.
தெளிவுரை : சுந்தரர்க்குப் படி அமைப்பதற்காக உன்னிடம் நெல்லைத் தந்துள்ளோம்! எனச் சொல்லிக் கங்கை தங்கிய சடைமுடியையுடைய இறைவர் குபேரனை ஏவிட, அதனால் பெரிய அந்தவூரில் எல்லை முழுதும், நெல் மலையான பெருக்கங்கள் மேகம் தவழும் பெரிய வானமும் மறையும்படி நிறைந்து உயர்ந்தன!
3169. அவ்விரவு புலர்காலை உணர்ந்தெழுவார் அதுகண்டே
எவ்வுலகில் நெல்மலைதா னிதுவென்றே யதிசயித்துச்
செவ்வியபொன் மலைவளைத்தார் திருவருளின் செயல் போற்றிக்
கொவ்வைவாய்ப் பரவையார் கொழுநரையே தொழுதெழுவார்.
தெளிவுரை : குண்டையூர் கிழார் அன்றைய இரவு விடியற்காலையில் உறக்கத்தினின்று விழித்து எழுந்து அதைப் பார்த்து, இது எந்த வுலகத்தில் விளைந்த நெல் மலை? என்று வியந்து செம்மையான மேருமலையை வில்லாக வளைத்த இறைவரின் திருவருட்செயலைப் போற்றித் துதித்துக் கொவ்வைக் கனியைப் போன்ற வாயினையுடைய பரவையாரின் கணவரான ஆரூரரைத் தொழுது எழுவாராயினர்.
3170. நாவலூர் மன்ன னார்க்கு நாயனார் அளித்த நெல்இங்
கியாவரா லெடுக்க லாகும் இச்செய லவர்க்குச் சொல்லப்
போவன்யா னென்று போந்தார் புகுந்தவா றருளிச் செய்து
தேவர்தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார்.
தெளிவுரை : திருநாவலூரில் தோன்றிய தலைவரான சுநதரர்க்கு இறைவர் அளித்த நெல் இங்கு எவரால் எடுக்க இயலும்? இச்செயலை அவர்க்குச் சொல்லயான் செல்வேன் எனச் சென்றார். நிகழ்ந்ததைத் தேவதேவரான சிவபெருமான் நம்பி ஆரூரர்க்குச் சொல்லிக் கட்டளையிட்டபடி, நம்பியாரூரரும் எதிரே சென்றார்.
3171. குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர்கொண்டு கோதில் வாய்மைத்
தொண்டனார் பாதந் தன்னில் தொழுதுவீழ்ந் தெழுந்து நின்று
பண்டெலாம் அடியேன் செய்த பணியெனக் கின்று முட்ட
அண்டர்தம் பிரானார் தாமே நெல்மலைஅளித்தா ரென்று.
தெளிவுரை : குண்டையூர் கிழாரும் எதிரே சென்று, குற்றம் இல்லாத வாய்மையுடைய தொண்டரான நம்பியாரூரரின் திருவடியில் தொழுது நிலத்தில் பொருந்த விழுந்து எழுந்து நின்று, முன்காலம் எல்லாம் அடியேன் தங்கட்குச் செய்து வந்த பணி விடை எனக்கு இன்று முட்டுப் பாடுற்ற போது, தேவர் பெருமானான சிவபெருமான் தாமே நெல்மலையை அளித்தருளினார் எனக் கூறினார்.
3172. மனிதரால் எடுக்கு மெல்லைத் தன்றுநெல் மலையின் ஆக்கம்
இனியெனால் செய்ய லாகும் பணியன்றி தென்னக் கேட்டுப்
பனிமதி முடியா ரன்றே பரிந்துமக் களித்தார் நெல்லென்
றினியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார்.
தெளிவுரை : இந்நெல் மலை மனிதரால் சுமந்து எடுக்கும் அளவுடையதன்று. இது என்னால் செய்யக்கூடிய பணியன்று! எனச்சொல்ல, நம்பி ஆரூரர் அதனைக் கேட்டுக் குளிர்ந்த பிறைச்சந்திரனைச் சூடிய சிவபெருமான் அல்லரோ அருள்கூர்ந்து இந்நெல் மலையை அளித்தார்! என்று இனிய சொல்லைக் கூறித் தாமும் குண்டையூரைச் சேர வந்தார்.
3173. விண்ணினை அளக்கு நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி
அண்ணலைத் தொழுது போற்றி அதிசயம் மிகவு மெய்தி
எண்ணில்சீர்ப் பரவை யில்லத் திந்நெல்லை யெடுக்க ஆளும்
தண்ணில வணிந்தார் தாமே தரிலன்றி ஒண்ணா தென்று.
தெளிவுரை : வானத்தை அளாவ உயர்ந்துள்ள நெல்மலையைப் பார்த்து, நம்பி ஆரூரர், பெருமையுடைய சிவபெருமானை வணங்கி, மிகவும் வியப்பை எய்தி, அளவில்லாத சிறப்பையுடைய பரவையாரின் மாளிகைக்கு இந்நெல்லை எடுத்துக் கொண்டு சேர்க்க ஆளினையும் குளிர்ந்த சந்திரனை அணிந்த சிவபெருமான் தாமே தந்தால் அன்றி வேறு எவ்விதத்தாலும் எடுக்க இயலாது! எனத் துணிந்து,
3174. ஆளிடவேண் டிக்கொள்வார் அருகுதிருப் பதியான
கோளிலியில் தம்பெருமான் கோயிலினை வந்தெய்தி
வாளனகண் மடவாள் வருந்தாமே எனும்பதிகம்
மூளவருங் காதலுடன் முன்தொழுது பாடுதலும்.
தெளிவுரை : தமக்கு நெல்லை எடுக்க ஆளைத் தரும்படி சிவபெருமானிடம் வேண்டுவாராய்ப் பக்கத்தில் உள்ள திருப்பதியான கோளிலியிலே தம் இறைவரின் திருக்கோயிலில் வந்து சேர்ந்து, வாளன கண்மடவாள் வருந்தாமே என்ற தொடரையும் குறிப்பையும் உடைய திருப்பதிகத்தை மேன்மேலும் பெருகும் பெருவிருப்பத்துடன் திருமுன்பு தொழுது பாடுதலும்,
3175. பகற்பொழுது கழிந்ததற்பின் பரவைமனை யளவன்றி
மிகப்பெருகு நெல்லுலகில் விளங்கியஆ ரூர்நிறையப்
புகப்பெய்து தருவனநம் பூதங்க ளெனவிசும்பில்
நிகர்ப்பரிய தொருவாக்கு நிகழ்ந்ததுநின் மலனருளால்.
தெளிவுரை : இறைவரின் திருவருளால் ஒப்பில்லாத ஒரு வாக்கு, பகல் பொழுது கழிந்த பின்பு, பரவையாரின் மனையளவு மட்டுமின்றி, மிகப்பெருகும் இந்நெல்லை, உலகில் விளங்கிய திருவாரூர் நிறையப் புகுமாறு கொண்டு நம்முடைய பூதகணங்கள் சேர்த்துத் தரும் என்று வானத்தில் உண்டாயிற்று!
3176. தம்பிரான் அருள்போற்றித் தரையின்மிசை விழுந்தெழுந்தே
உம்பரா லுணர்வரிய திருப்பாதந் தொழுதேத்திச்
செம்பொன்நேர் சடையாரைப் பிறபதியுந் தொழுதுபோய்
நம்பரா ரூரணைந்தார் நாவலூர் நாவலனார்.
தெளிவுரை : திருநாவலூரில் தோன்றியருளிய சுந்தரர், இறைவரின் திருவருளைத் துதித்து நிலத்தில் விழுந்து எழுந்து, தேவரால் உணர்தற்கரிய திருவடிகளைத் துதித்துப்போற்றிச் செவ்விய பொன்மலை போல் விளங்கும் சடையையுடைய சிவபெருமானை, மற்றப்பதிகளிலும் வணங்கிச் சென்று, சிவபெருமானின் திருவாரூரை வந்து சேர்ந்தார்.
3177. பூங்கோயில் மகிழ்ந்தருளும் புராதனரைப் புக்கிறைஞ்சி
நீங்காத பெருமகிழ்ச்சி யுடனேத்திப் புறம்போந்து
பாங்கானார் புடைசூழ்ந்து போற்றிசைக்கப் பரவையார்
ஓங்குதிரு மாளிகையின் உள்ளணைந்தார் ஆரூரர்.
தெளிவுரை : நம்பியாரூரர், திருவாரூரில் உள்ள பூங்கோயிலில் மகிழ்வுடன் வீற்றிருக்கும் புற்றிடங்கொண்ட பெருமானை உள்ளே புகுந்து வணங்கி இடையறாத பெருமகிழ்ச்சியுடன் துதித்து, வெளியே வந்து, பரிவாரங்கள் பக்கத்தில் சூழ்ந்து துதிக்கச் சென்று, பரவையாரின் உயர்ந்த திருமாளிகையின் உள்ளே சென்றார்.
3178. கோவைவாய்ப் பரவையார் தாம்மகிழும் படிகூறி
மேவியவர் தம்மோடு மிகஇன்புற் றிருந்ததற்பின்
சேவின்மே லுமையோடும் வருவார்தந் திருவருளின்
ஏவலினால் அவ்விரவு பூதங்கள் மிக்கெழுந்து.
தெளிவுரை : அங்கு அவர் கொவ்வைக் கனியைப் போன்ற வாயினையுடைய பரவையார் மகிழும்படி நிகழ்ந்த செயல்களை எல்லாம் எடுத்துச் சொல்லி அவரொடும் கூடி, மிக இன்பமுடன் இருந்தார். பின் காளையூர்தியின் மீது வரும் இறைவரின் திருவருள் செலுத்துதலால் அந்த இரவிலே பூதங்கள் மிகுந்து எழுந்து,
3179. குண்டையூர் நென்மலையைக் குறட்பூதப் படைகவர்ந்து
வண்டுலாங் குழற்பரவை மாளிகையை நிறைவித்தே
அண்டர்பிரான் திருவாரூர் அடங்கவும்நெல் மலையாக்கிக்
கண்டவர்அற் புதமெய்துங் காட்சிபெற அமைத்தனவால்.
தெளிவுரை : அந்தக் குறள் பூதப்படைகள் குண்டையூரில் இருந்த நெல் மலையை எடுத்துச் சென்று வண்டுகள் உலவுவதற்கு இடமான கூந்தலையுடைய பரவையாரின் திருமாளிகையில் நிறையச் செய்து, தேவர் தலைவரான சிவபெருமானது திருவாரூர் முழுவதும் நெல் மலையாய்க் கொண்டு செலுத்திக் கண்டவர் யாவரும் வியப்புக் கொள்ளும்படி காணும்படி செய்தன.
3180. அவ்விரவு புலர்காலை ஆரூரில் வாழ்வார்கண்டு
எவ்வுலகில் விளைந்தனநெல் மலையிவையென் றதிசயித்து
நவ்விமதர்த் திருநோக்கின் நங்கைபுகழ்ப் பரவையார்க்
கிவ்வுலகு வாழவரு நம்பியளித் தனவென்பார்.
தெளிவுரை : சிவபூதங்கள் அவ்வாறு திருவாரூர் முழுவதும் நெல்மலையாக்கிய அந்த இரவு விடியும் காலையில், திருவாரூரில் வாழ்பவர்கள் அதைப் பார்த்து, இந்நெல் மலைகள் எந்த உலகத்தில் விளைந்தன? என்று வியந்து மானின் கண்போன்ற மதர்த்த நோக்கத்தையுடைய மங்கையான புகழ் பொருந்திய பரவையாருக்கு இவ்வுலகம் வாழும் பொருட்டு வந்தருளிய நம்பிகள் தந்தவை இவை! என்று சொல்வார் ஆயினர்.
3181. நீக்கரிய நெற்குன்று தனைநோக்கி நெறிபலவும்
போக்கரிதா யிடக்கண்டு மீண்டுந்தம் மில்புகுவார்
பாக்கியத்தின் திருவடிவாம் பரவையார்க் கிந்நெல்லுப்
போக்குமிட மரிதாகும் எனப்பலவும் புகல்கின்றார்.
தெளிவுரை : விலக்குவதற்கு அரிய நெற்குன்றினைப் பார்த்து வழிகள் பல போதற்கு அரிதானதால், அதனைக் கண்டு, மீளவும் தம் வீடுகளில் புகுந்து கொண்டவர்களாய், பாக்கியத்தின் திருவுருவான பரவையாருக்கும் இந்த நெல்லைக் கொண்டு சேர்க்கும் இடம் அரியதாகும் என்று இவ்வாறு பலவும் சொல்லலாயினர்.
3182. வன்றொண்டர் தமக்களித்த நெற்கண்டு மகிழ்சிறப்பார்
இன்றுங்கள் மனையெல்லைக் குட்படுநெற் குன்றெல்லாம்
பொன்தங்கு மாளிகையிற் புகப்பெய்து கொள்கவென
வென்றிமுர சறைவித்தார் மிக்கபுகழ்ப் பரவையார்.
தெளிவுரை : மிக்க புகழையுடைய பரவையார், தமக்கு வன்றொண்டரான நம்பிகள் அளித்த நெல்லைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி பொருந்தியவராய் ஆனார். பின்பு இன்று உங்கள் இல்லங்களின் எல்லைக்குட்பட்ட நெல் எல்லாம் அவ்வவரும் தத்தம் செல்வம் மிக்க மனைகளில் புகும்படி எடுத்துச் சேர்த்துக் கொள்க! என்று வெற்றி முரசு அறையுமாறு செய்தார்.
3183. அணியாரூர் மறுகதனில் ஆளியங்கப் பறையறைந்த
பணியாலே மனைநிறைத்துப் பாங்கெங்கும் நெற்கூடு
கணியாமற் கட்டிநகர் களிகூரப் பரவையார்
மணியாரம் புனைமார்பின் வன்றொண்டர் தமைப்பணிந்தார்.
தெளிவுரை : அழகிய திருவாரூரின் தெருக்களில் ஆட்கள் செல்லும் வழியானது ஏற்படப் பறைசாற்றுவிக்கப் பணித்ததால், தத்தம் மனைகளை நிறைவித்து அவரவர்க்குள்ள பக்க இடங்களில் எங்கும் நெற்கூடுகளை அளவின்றிக் கண்டு பரவையார் மணிமாலை பூண்ட மார்பையுடைய வன்றொண்டரை வந்து பணிந்தார்.
3184. நம்பியா ரூரர்திரு வாரூரில் நயந்துறைநாள்
செம்பொற்புற் றிடங்கொண்டு வீற்றிருந்த செழுந்தேனைத்
தம்பெரிய விருப்பினொடுந் தாழ்ந்துணர்வி னாற்பருகி
இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார்.
தெளிவுரை : நம்பி ஆரூரர் திருவாரூரில் விருப்புடன் தங்கியிருந்த நாட்களில் செம்பொன் புற்றை இடமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற செழுந்தேனான இறைவரைத் தம் மிக்க விருப்புடனும் வணங்கி உணர்ச்சியின் உள்ளூர அருந்தி அனுபவித்து, இம்மண் உலகத்தவரும் விண் உலகத்தவரும் வியக்குமாறு துதித்தார்.
3185. குலபுகழ்க் கோட்புலியார் குறையிரந்து தம்பதிக்கண்
அலகில்புக ழாரூரர் எழுந்தருள அடிவணங்கி
நிலவியவன் தொண்டர்அஃ திசைந்ததற்பி னேரிறைஞ்சிப்
பலர்புகழும் பண்பினார் மீண்டுந்தம் பதியணைந்தார்.
தெளிவுரை : இங்ஙனம் இருக்கும் நாளில் விளங்கும் புகழையுடைய கோட்புலியார் என்னும் நாயனார் தம் பதியில் அளவற்ற புகழையுடைய நம்பி ஆரூரர் வந்தருள வேண்டும் என்று அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கிக் குறையிரந்து நின்று, நிலைபெற்ற வன்றொண்டர் அதற்கு இசைந்த பின்னர், மீண்டும் அவர் திருமுன்பு வணங்கி, அனைவரும் புகழத்தக்க பண்புடைய அக்கோட்புலியார் மீளவும் தம் பதியுள் சென்று சேர்ந்தார்.
3186. தேவ ரொதுங்கத் திருத்தொண்டர்
மிடையுஞ் செல்வத் திருவாரூர்
காவல் கொண்டு தனியாளுங்
கடவுட் பெருமான் கழல்வணங்கி
நாவ லூர ரருள் பெற்று
நம்பர் பதிகள் பிறநண்ணிப்
பாவை பாகர் தமைப்பணிந்து
பாடும் விருப்பிற் சென்றணைவார்.
தெளிவுரை : திருநாவலூரரான நம்பிகள் தேவர்கள் ஒருபக்கமாக வழிவிட்டு நிற்கச் சிவதொண்டர்கள் உள்ளே போய் நெருங்கி வழிபடும் செல்வம் நிறைந்த திருவாரூரினைக் காவல் பூண்டு தனியாள்கின்ற புற்றிடம் கொண்ட இறைவரின் திருவடிகளை வணங்கி அருள் விடை பெற்றுக்கொண்டு, சிவபெருமானின் மற்றத் தலங்களிலும் போய்த் தையல் பாகரை வணங்கிப் பாடும் விருப்பினால் போய் அடைவாராய்,
3187. மாலும் அயனும் உணர்வரியார்
மகிழும் பதிகள் பலவணங்கி
ஞால நிகழ்கோட் புலியார்தம்
நாட்டி யத்தான் குடிநண்ண
ஏலும் வகையால் அலங்கரித்தங்
கவரு மெதிர்கொண் டினிதிறைஞ்சிக்
கோல மணிமா ளிகையின்கண்
ஆர்வம் பெருகக் கொடுபுக்கார்.
தெளிவுரை : திருமாலும் நான்முகனும் அறிவதற்கு அரிய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் பதிகள் பலவற்றையும் வணங்கிப் போய் உலகத்தே பரந்த புகழையுடைய கோட்புலியாரின் திருநாட்டியத்தான் குடியைப் போய் (அடைந்தார்) அடையப் பொருந்தும் வகையால் அலங்காரம் செய்து கோட்புலியாரும் அவரை, எதிர்கொண்டு மகிழ்ச்சியோடும் வந்துவணங்கி, அழகிய மணிகளையுடைய தம் திருமாளிகையிடத்தில் ஆசை மிகச் சுந்தரரைத் தம் முன் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
3188. தூய மணிப்பொன் தவிசிலெழுந்
தருளி யிருக்கத் தூநீரால்
சேய மலர்ச்சே வடிவிளக்கித்
தெளித்துக் கொண்டச் செழும்புனலால்
மேய சுடர்மா ளிகையெங்கும்
விளங்க வீசி யுளங்களிப்ப
ஏய சிறப்பில் அர்ச்சனைகள்
எல்லாம் இயல்பின் முறைபுரிவார்.
தெளிவுரை : தூய்மையான மணிகள் இழைத்த பொன் பீடத்தில் நம்பியாரூரர் அமர்ந்திருக்கத் தூய நீரினால் அவருடைய செம்மையான திருமுடிகளை விளக்கி, அந்நீரைத் தம் தலைமீது தெளித்துக் கொண்டு அந்த நீரால் பொருந்திய மாளிகை முழுவதும் விளங்கும்படி வீச, உள்ளம் மகிழச் சிறப்புடைய வழிபாட்டு முறைகள் எல்லாவற்றையும் இயல்பால் விதிமுறைப்படி செய்வாரானார்.
3189. பூந்தண் பனிநீர் கொடுசமைத்த
பொருவில் விரைச்சந் தனக்கலவை
வாய்ந்த அகிலி னறுஞ்சாந்து
வாச நிறைமான் மதச்சேறு
தோய்ந்த புகைநா வியின்நறுநெய்
தூய பசுங்கர்ப் பூரமுதல்
ஏய்ந்த அடைக்கா யமுதினைய
எண்ணில் மணிப்பா சனத்தேந்தி.
தெளிவுரை : அழகிய குளிர்ந்த பனிநீர் கொண்டு அரைத்த ஒப்பில்லாத சந்தனக் கலவையும், பொருந்திய அகிற் கட்டையின் மணமுடைய சாந்தும், மணம் கமழும் கத்தூரியும் புகை தோய்ந்த மணமுடைய பச்சைக் கற்பூரமும் என்ற இம்மெய்ப் பூச்சுக்களுடனே பொருந்த வரும் அடைக்காயமுதும் இவ்வாறான பண்டங்களைத் தனித்தனி அளவற்ற அழகான தட்டுகளில் எடுத்து ஏந்தியும்,
3190. வேறு வேறு திருப்பள்ளித்
தாமப் பணிகள் மிகவெடுத்து
மாறி லாத மணித்திருவா
பரண வருக்கம் பலதாங்கி
ஈறில் விதத்துப் பரிவட்டம்
ஊழி னிரைத்தே யெதிரிறைஞ்சி
ஆறு புனைந்தா ரடித்தொண்டர்
அளவில் பூசை கொளவளித்தார்.
தெளிவுரை : வெவ்வேறு வகையான திருப்பள்ளித் தாமத்துக்குரிய அலங்கார மாலை வகைகளை மிகவும் எடுத்தும் ஒப்பில்லாத மணிகளால் ஆன அணிவகைகள் பலவற்றையும் தாங்கி எடுத்தும், எல்லையில்லாத பல விதங்களிலும் பரிவட்டங்களை முறைப்படி வரிசையாய் வைத்து எதிரில் நின்று வணங்கிக் கங்கையை முடித்த சிவபெருமானின் திருவடித் தொண்டர் அளவில்லாத பூசை முறைகளையும் ஏற்குமாறு செய்தார்.
3191. செங்கோல் அரசன் அருளுரிமைச்
சேனா பதியாங் கோட்புலியார்
நங்கோ மானை நாவலூர்
நகரார் வேந்தை நண்பினால்
தங்கோ மனையில் திருவமுது
செய்வித் திறைஞ்சித் தலைசிறந்த
பொங்கோ தம்போற் பெருங்காதல்
புரிந்தார் பின்னும் போற்றுவார்.
தெளிவுரை : செங்கோன்மையுடைய சோழ மன்னனின் அருள் உரிமையுடைய படைத்தலைவரான கோட்புலியார் நம் தலைவரான திருநாவலூர் மன்னரை நட்புரிமையால் தம் அரண்மனையில் திருவமுது செய்வித்து வணங்கிப் பெருகும் கடல் போன்ற மிகச் சிறந்த பெரு விருப்பம் உடையவராய் மேலும் போற்றுவாராகி,
3192. ஆனா விருப்பின் மற்றவர்தாம்
அருமை யால்முன் பெற்றெடுத்த
தேனார் கோதைச் சிங்கடியார்
தமையும் அவர்பின் கருவுயிர்த்த
மானார் நோக்கின் வனப்பகையார்
தமையும் கொணர்ந்து வன்றொண்டர்
தூநாண் மலர்த்தாள் பணிவித்துத்
தாமுந் தொழுது சொல்லுவார்.
தெளிவுரை : குறைபடாத மிக்க பெரு விருப்பினால் கோட்புலியார் தாம் அருமையாக முன்னே பெற்றெடுத்த தேன் பொருந்திய மலர் மாலை சூடிய சிங்கடியார் என்னும் மகளாரையும் அவர் பின்னே திருமகளைப் போல் பெற்ற மான் போன்ற பார்வையுடைய வனப் பகையார் என்ற அம்மையாரையும் அழைத்து வந்து, வன்தொண்டரான நம்பிகளின் தூய புதிதான தாமரை போன்ற அடிகளில் வணங்கும்படி செய்து, தாமும் வணங்கிச் சொல்லலானார்.
3193. அடியேன் பெற்ற மக்களிவர்
அடிமை யாகக் கொண்டருளிக்
கடிசேர் மலர்த்தாள் தொழுதுய்யக்
கருணை யளிக்க வேண்டுமெனக்
தொடிசேர் தளிர்க்கை இவரெனக்குத்
தூய மக்க ளெனக்கொண்டப்
படியே மகண்மை யாக்கொண்டார்
பரவை யார்தங் கொழுநனார்.
தெளிவுரை : இவர்கள் நான் பெற்ற மக்கள், தாங்கள் இவர்களை அடிமையாக ஏற்றுக் கொண்டருளித் தங்கள் மலரடிகளைத் தொழுது உய்யும்படி அருள் செய்ய வேண்டும் என்று உரைத்தார். பரவையாரின் கணவரான சுந்தரர், கொடிகளை அணிந்த தளிர் போன்ற கையையுடைய இவர்கள் எனக்குத் தூய்மையுடைய புதல்வியார் ஆவார்கள்! என்று திருவுளம் பற்றி, அங்ஙனமே புதல்வியர் முறையாகும்படி கொண்டருள் செய்தார்.
3194. கோதை சூழ்ந்த குழலாரைக்
குறங்கின் வைத்துக் கொண்டிருந்து
காதல் நிறைந்த புதல்வியராம்
கருத்துட் கசிவால் அணைத்துச்சி
மீது கண்ணீர் விழமோந்து
வேண்டு வனவுங் கொடுத்தருளி
நாதர் கோயில் சென்றடைந்தார்
நம்பிதம்பி ரான்தோழர்.
தெளிவுரை : நம்பியாரூரரான தம்பிரான் தோழர், மாலை சூடிய கூந்தலையுடைய அப்பெண்களை மடியில் வைத்துக் கொண்டிருந்து, மிக்க அன்புடைய புதல்வியர் என்ற கருத்தினால், உள்ளம் கசிய அணைத்து உச்சி மேல் தம் கண்ணீர் விழும்படி உச்சி மோந்து, அவர்களுக்கு வேண்டியவற்றையும் தந்தருளி, இறைவரின் திருக்கோயிலைப் போயடைந்தார்.
3195. வென்றி வெள்ளே றுயர்த்தருளும்
விமலர் திருக்கோ புரம்இறைஞ்சி
ஒன்றும் உள்ளத் தொடும்அன்பால்
உச்சி குவித்த கரத்தோடும்
சென்று புக்குப் பணிந்துதிருப்
பதிகம் பூணா னென்றெடுத்துக்
கொன்றை முடியா ரருளுரிமை
சிறப்பித் தார்கோட் புலியாரை.
தெளிவுரை : வெற்றியுடைய வெண்மையான எருதினைக் கொடியில் கொண்டருளும் விமலரான சிவபெருமானின் கோயிலின் கோபுரத்தை வணங்கி, ஒன்றிய உள்ளத்தோடும் அன்பினால் உச்சிமேல் கூப்பிய கைகளுடன் கோயிலுக்குள் போய்ப் புகுந்து பணிந்து திருப்பதிகத்தைப் பூணாண் எனத் தொடங்கிக் கொன்றை மலர் மாலை சூடிய இறைவரின் அருள் உரிமை பற்றி அப்பதிகத்துள் கோட்புலியாரைச் சிறப்பித்துப் பாடினார்.
3196. சிறப்பித் தருளுந் திருக்கடைக்காப்
பதனி னிடைச்சிங் கடியாரைப்
பிறப்பித்தெடுத்த பிதாவாகத்
தம்மை நினைந்த பெற்றியினால்
மறப்பில் வகைச்சிங் கடியப்ப
னென்றே தம்மை வைத்தருளி
நிறப்பொற் புடைய இசைபாடி
நிறைந்த அருள்பெற் றிறைஞ்சுவார்.
தெளிவுரை : அவ்வாறு கோட்புலியாரைச் சிறப்பிக்கும் பதிகத் திருக்கடைக் காப்பில் சிங்கடியாரைப் பெற்றெடுத்த தந்தையாகவே தம்மை எண்ணிப் பாடிய தன்மையினால், அவ்வாறு எண்ணியது மறவாதிருக்கும் வகையில் சிங்கடியப்பன் என்ற தன்மையால் தம் பெயரைப் பொறித்து வைத்தருளி, நிறம் என்னும் இசைப்பண்பு பொருந்தப் பண் இசையைப் பாடி நிரம்பிய அருளைப் பெற்று இறைஞ்சுவாரானார்.
3197. அங்கு நின்றும் எழுந்தருளி
அளவி லன்பில் உள்மகிழச்
செங்க ணுதலார் மேவுதிரு
வலிவ லத்தைச் சேர்ந்திறைஞ்சி
மங்கை பாகர் தமைப்பதிகம்
வலிவ லத்துக் கண்டேனென்
றெங்கும் நிகழ்ந்த தமிழ்மாலை
எடுத்துத் தொடுத்த விசைபுனைவார்.
தெளிவுரை : அந்தத் தலத்தினின்றும் புறப்பட்டுச் சென்று அளவற்ற அன்பினால் மனம் மகிழ்ந்து சிவந்த நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள, திருவலிவலத்தைச் சென்று சேர்ந்து வணங்கித் தையல் பாகரான சிவபெருமானைப் பாடும் பதிகம் வலிவலத்துக் கண்டேன் என்ற முடிவுடைய எங்கும் விளங்கும் தமிழ் மாலையைத் தொடங்கித் தொடுத்த இசையைச் சாத்துவரானார்.
3198. நன்று மகிழுஞ் சம்பந்தர்
நாவுக் கரசர் பாட்டுகந்தீர்
என்று சிறப்பித் திறைஞ்சிமகிழ்ந்
தேத்தி யருள்பெற் றெழுந்தருளி
மன்றி னிடையே நடம்புரிவார்
மருவு பெருமைத் திருவாரூர்
சென்று குறுகிப் பூங்கோயிற்
பெருமான் செம்பொற் கழல்பணிந்து.
தெளிவுரை : அங்கு நன்மை விளங்கி மகிழும் திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் என்ற இருவரின் திருப்பதிகங்களைக் கேட்டு மகிழ்ந்தீர் எனச் சிறப்பித்து வணங்கி மகிழ்ந்து துதித்தத் திருவருள் பெற்று, மேலே புறப்பட்டுப் போய், அம்பலத்தில் கூத்தை இயற்றும் சிவபெருமான் எழுந்தருளிய பெருமையுடைய திருவாரூரில் போய்ச் சேர்ந்து, பூங்கொயிலில் புற்றிடம் கொண்ட வன்மீக நாதரின் செம்பொன் போன்ற திருவடிகளை வணங்கினார்.
3199. இறைஞ்சிப் போந்து பரவையார்
திருமா ளிகையில் எழுந்தருளி
நிறைந்த விருப்பின் மேவுநாள்
நீடு செல்வத் திருவாரூர்ப்
புறம்பு நணிய கோயில்களும்
பணிந்து போற்றிப் புற்றிடமாய்
உறைந்த பெருமான் கழல்பிரியா
தோவா இன்பம் உற்றிருந்தார்.
தெளிவுரை : வணங்கிச் சென்று பரவையாரின் மாளிகையில் எழுந்தருளி நிறைந்த விருப்பத்துடன் பொருந்தியிருந்தார். அந்நாள்களில், நீடிய செல்வத் திருவாரூரின் புறத்தில் அருகே உள்ள கோயில்களையும் போய் வணங்கித் துதித்துப் புற்றிடம் கொண்டு நீங்காது எழுந்தருளிய வன்மீக நாதரின் திருவடிகளைப் பிரியாமல் இடையறாத இன்பம் அடைந்து வீற்றிருந்தார்.
3200. செறிபுன் சடையார் திருவாரூர்த்
திருப்பங் குனிஉத் திரத்திருநாள்
குறுக வரலும் பரவையார்
கொடைக்கு விழாவிற் குறைவறுக்க
நிறையும் பொன்கொண் டணைவதற்கு
நினைந்து நம்பி திருப்புகலூர்
இறைவர் பாதம் பணியவெழுந்
தருளிச் சென்றங் கெய்தினார்.
தெளிவுரை : அந்நாட்களில் செறிந்த புல்லிய சடையையுடைய இறைவரின் திருவாரூர்த் திருப்பங்குனி உத்திரத் திருநாள் நெருங்கி வந்தது. வர, பரவையார் தம்மை அணுகி வருபவர்க்குக் கொடுக்கவும், திருவிழாவில் அடியார்களுக்கு வேண்டியவற்றை அளிக்கவும் நிறைவான பொன்னைக் கொண்டு வர நினைத்து, நம்பி ஆரூரர், திருப்புகலூர் இறைவரின் திருவடிகளை வணங்குவதற்குப் புறப்பட்டுச் சென்று அங்குச் சேர்ந்தார்.
3201. சென்று விரும்பித் திருப்புகலூர்த்
தேவர் பெருமான் கோயில்மணி
முன்றில் பணிந்து வலங்கொண்டு
முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சித்
தொன்று மரபி னடித்தொண்டு
தோய்ந்த வன்பிற் றுதித்தெழுந்து
நின்று பதிக விசைபாடி
நினைந்த கருத்து நிகழ்விப்பார்.
தெளிவுரை : சேர்ந்து விரும்பித் திருப்புகலூரில் தேவதேவரான இறைவரின் திருக்கோயிலில் மணி முற்றத்தில் வணங்கி வலமாக வந்து முதல்வரின் திருமுன்பு நிலத்தில் விழுந்து வணங்கிப் பழைய மரபின் வரும் திருவடித் தொண்டின் ஊறிய அன்பினால் துதித்து எழுந்து நின்று திருப்பதிக இசையைப் பாடித் தாம் எண்ணி வந்த கருத்தை வேண்டிக் கொள்பவராய்,
3202. சிறிது பொழுது கும்பிட்டுச்
சிந்தை முன்னம் அங்கொழிய
வறிது புறம்போந் தருளியயல்
மடத்தி லணையார் வன்றொண்டர்
அறிவு கூர்ந்த வன்பருடன்
அணிமுன் றிலினோ ரருகிருப்ப
மறிவண் கையா ரருளேயோ
மலர்க்கண் துயில்வந் தெய்தியதால்.
தெளிவுரை : சிறிது நேரம் வணங்கி நின்று பின்பு உள்ளம் அங்கு நிற்க, நினைத்த பொன்னைப் பெறாது வறிதே வெளியே வந்து பக்கத்தில் உள்ள எந்தத் திருமடத்திலும் சேராமல், வன்தொண்டரான நம்பியாரூரர் அறிவு பெருகிய அடியார்களுடன் அழகிய திருமுற்றத்தில் ஒரு பக்கமாகத் தங்கியிருக்க, மானைக் கையில் கொண்ட இறைவரின் திருவருளாலோ, என்னவோ, அறியோம் அவரது மலர் போன்ற திருக்கண்கள் துயில் வந்து பொருந்தப் பெற்றன.
3203. துயில்வந் தெய்தத் தம்பிரான்
றோழ ரங்குத் திருப்பணிக்குப்
பயிலும் சுருமட் பலகைபல
கொணர்வித் துயரம் பண்ணித்தேன்
அயிலும் சுரும்பார் மலர்ச்சிகழி
முடிமேல் அணியா உத்தரிய
வெயிலுந் தியவெண் பட்டதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார்.
தெளிவுரை : அங்ஙனம் கண்களில் உறக்கம் வந்து பொருந்த தம்பிரான் தோழரான நம்பியாரூரர் அங்கு இறைவர் கோயில் திருப்பணிக்குப் பயன்பட நின்ற சுட்ட மண்பலகைகள் பலவற்றைக் கொண்டு வருமாறு செய்து, உயரமாய் அடுக்கி, தேன் உண்ணும் வண்டுகள் பொருந்திய மலர் மாலை சூடிய குடுமியை உடைய திருமுடிக்குத் தலையணையாக உத்திரியமாகிய ஒளியுடைய வெண்பட்டினை அதன் மேல் விரித்து உறங்கினார்.
3204. சுற்று மிருந்த தொண்டர்களுந்
துயிலு மளவில் துணைமலர்க்கண்
பற்றுந் துயில்நீங் கிடப்பள்ளி
யுணர்ந்தார் பரவை கேள்வனார்
வெற்றி விடையா ரருளாலே
வேமண் கல்லே விரிசுடர்ச்செம்
பொன்திண் கல்லா யினகண்டு
புகலூ ரிறைவ ரருள்போற்றி.
தெளிவுரை : சுற்றிலும் இருந்த தொண்டர்களும் உறங்கும் சமயத்தில், தாமரை மலர் போன்ற இரண்டு திருக்கண்களையும் பற்றிக் கொண்ட உறக்கம் நீங்க விழித்தெழுந்தாராகி, வெற்றி பொருந்திய காளைகளையுடைய சிவபெருமான் திருவருளால், வெந்த மண் செங்கல்லே விரிந்து ஒளிவீசும் செம்பொன்னால் ஆன திண்மையான கல்லானவற்றைக் கண்டு திருப்புகலூர் இறைவரின் திருவருளைத் துதித்து,
3205. தொண்ட ருணர மகிழ்ந்தெழுந்து
துணைக்கைக் கமல முகைதலைமேல்
கொண்டு கோயி லுட்புக்குக்
குறிப்பி லடங்காப் பேரன்பு
மண்டு காத லுறவணங்கி
வாய்த்த மதுர மொழிமாலை
பண்தங் கிசையில் தம்மையே
புகழ்ந்தென் றெடுத்துப் பாடினார்.
தெளிவுரை : உடன் உறங்கிய அடியார்களும் உறக்கம் நீங்க மகிழ்ச்சியுடன் எழுந்து இரண்டு கைகளையும் தாமரை அரும்புபோல் தலைமீது குவித்துக் கொண்டு, கோயிலுள் புகுந்து, நம் அறிவில் குறிக்கொள்ளும் அளவில் அடங்காத பேரன்புமிக்க ஆசையுடன் வணங்கி வாய்ப்புடைய இனிய தமிழ்மாலையைப் பண் பொருந்திய இசையுடன் தம்மையே புகழ்ந்து எனத் தொடங்கிப் பாடினார்.
3206. பதிகம் பாடித் திருக்கடைக்காப்
பணிந்து பரவிப் புறம்போந்தே
எதிரி லின்பம் இம்மையே
தருவா ரருள்பெற் றெழுந்தருளி
நிதியின் குவையும் உடன்கொண்டு
நிறையும் நதியுங் குறைமதியும்
பொதியுஞ் சடையார் திருப்பனையூர்
புகுவார் புரிநூல் மணிமார்பர்.
தெளிவுரை : பதிகத்தைப் பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தித் துதித்து வெளியே வந்து ஒப்பில்லாத இன்பத்தை இளமையிலே தருபவரான திருப்புகலூர் இறைவரின் அருள் விடை பெற்றுப் புறப்பட்டுச் சென்று திருப்புகலூரில் பெற்ற பொன்கட்டிகளையும் உடன் கொண்டு நீர் நிறைந்த கங்கையையும் பிறைச் சந்திரனையும் உடைய சடையினரான சிவபெருமானின் திருப்பனையூர் என்ற பதியுள் புகுபவரான மூன்று புரியான பூணூலையும் மணிமாலைகளையும் உடைய மார்பரான சுந்தரர்.
3207. செய்ய சடையார் திருப்பனையூர்ப்
புறத்துத் திருக்கூத் தொடுங்காட்சி
எய்த அருள எதிர்சென்றங்
கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி
ஐயர் தம்மை அரங்காட
வல்லார் அவரே யழகியரென்
றுய்ய வுலகு பெறும்பதிகம்
பாடி யருள்பெற் றுடன்போந்தார்.
தெளிவுரை : சிவந்த சடையரான சிவபெருமான் திருப்பனையூரின் வெளியே திருவருள் கூத்தினோடும் எதிர்காட்சிப் பொருந்தக் காட்டியருள அங்கு, ஊரின் வெளியில் எதிர் சென்று மேல் ஓங்கிய விருப்பத்தால் நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கி இறைவரை அரங்கில் ஆடுமாறு வல்லார் அவரே என்னும் கருத்துக் கொண்டதாய் உலகம் உய்யப் பெறும் வாழ்வை அளிக்கும் திருப்பதிகத்தைப் பாடித் திருவருளைப் பெற்று உடனே சென்றார்.
3208. வளமல் கியசீர்த் திருப்பனையூர்
வாழ்வா ரேத்த எழுந்தருளி
அளவில் செம்பொன் இட்டிகை
களால்மேல் நெருங்கி யணியாரூர்த்
தளவ முறுவற் பரவையார்
தம்மா ளிகையிற் புகத்தாமும்
உளமன் னியதம் பெருமானார்
தம்மை வணங்கி உவந்தணைந்தார்.
தெளிவுரை : வளம் வாய்ந்த சிறப்புடைய திருப்பனையூரில் வாழ்பவர்கள் துதிக்க எழுந்தருளிச் சென்று அளவில்லாத செம்பொன் கட்டிகளான செங்கற்கள் ஆட்களின் மேல் நெருங்கித் திருவாரூரில் முல்லை அரும்பு போன்ற முறுவலையுடைய பரவையாரின் திருமாளிகையுள் புக, தாமும் தம் உள்ளத்தில் தம் இறைவரான வன்மீகநாதரை வணங்கி மகிழ்வுடன் சேர்வாரானார்.
3209. வந்து பரவைப் பிராட்டியார்
மகிழ வைகி மருவுநாள்
அந்த ணாரூர் மருங்கணிய
கோயில் பலவும் அணைந்திறைஞ்சிச்
சிந்தை மகிழ விருப்பினொடும்
தெய்வப் பெருமாள் திருவாரூர்
முந்தி வணங்கி யினிதிருந்தார்
முனைப்பா டியர்தங் காவலனார்.
தெளிவுரை : புறப்பட்டுச் சென்று தம் பரவை நாச்சியார் மகிழும்படி தங்கிப் பொருந்தியிருக்கும் நாட்களில், அழகிய குளிர்ந்த திருவாரூரின் பக்கத்தில் அருகில் உள்ள கோயில்கள் பலவற்றையும் போய் வணங்கி, மனம் மகிழ விருப்பத்தோடும் தேவர் பெருமானான புற்றிடம் கொண்ட பெருமானின் திருவாரூரினை முதலில் வணங்கி முனைப்பாடி நாட்டின் தலைவரான நம்பிகள் இனிதாய்த் தங்கியிருந்தார்.
3210. பலநாள் அமர்வார் பரமர்திரு
வருளால் அங்கு நின்றும்போய்ச்
சிலைமா மேரு வீரனார்
திருநன் னிலத்துச் சென்றெய்தி
வலமா வந்து கோயிலினுள்
வணங்கி மகிழ்ந்து பாடினார்
தலமார் கின்ற தண்ணியல்வெம்
மையினான் என்னுந் தமிழ்மாலை.
தெளிவுரை : அவர் பல நாட்கள் அங்ஙனம் திருவாரூரில் தங்கியிருந்தார். பின் இறைவரின் திருவருளால் அங்கிருந்து சென்று பெரிய மேருமலையை வில்லாகக் கொண்ட வீரரான சிவபெருமான் வீற்றிருக்கின்ற நன்னிலம் என்ற பதியை எய்தி, வலமாகச் சுற்றி வந்து, கோயிலுள் வணங்கி மகிழ்ந்து, இவ்வுலகில் நிலவுகின்ற தண்ணியல் வெம்மையினால் எனத்தொடங்கும் தமிழ்மாலையைப் பாடினர்.
3211. பாடி யங்கு வைகியபின்
பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையான் மேம்பட்ட
அந்த ணாளர் நிறைந்தீண்டி
நாடு மகிழ அவ்வளவும்
நடைக்கா வணம்பா வாடையுடன்
மாடு கதலி பூகநிரை
மல்க மணித்தோ ரணநிரைத்து.
தெளிவுரை : அங்ஙனம் பதிகம் பாடி எழுந்தருளிய பின்பு இறைவரின் திருவீழி மிழலையில் உள்ள நீடிய வேத ஒழுக்கத்தால் மேம்பட்ட அந்தணர்கள் திரண்டு கூடி, நாடு முழுவதும் மகிழுமாறு அவ்வளவும் நடைக் காவணம் இட்டுப் பாவாடை விரித்துப் பக்கங்களில் வாழை, கமுகுகள் வரிசையாய்ப் பொருந்தச் செய்து, அழகிய மணிமாலைகள் தொங்கவிட்ட தோரணங்களை வரிசை பெற நிறுவி,
3212. வந்து நம்பி தம்மைஎதிர்
கொண்டு புக்கார் மற்றவருஞ்
சிந்தை மலர்ந்து திருவீழி
மிழலை யிறைஞ்சிச் சேண்விசும்பின்
முந்தை யிழிந்த மொய்யொளிசேர்
கோயில் தன்னை முன்வணங்கிப்
பந்த மறுக்குந் தம்பெருமான்
பாதம் பரவிப் பணிகின்றார்.
தெளிவுரை : இங்கு வந்து நம்பியாரூரை வரவேற்று அழைத்துக் கொண்டு சென்றனர். நம்பியாரூரரும் மனம் மலர்ந்து போய் திருவீழிமிழலையை வணங்கி, நீண்ட வானத்தினின்றும் முன் நாளில் இறங்கிய மொய்த்த ஒளியுடைய கோயிலை முன்னே வணங்கி, மலக்கட்டுகளை அறுக்கின்ற தம் இறைவரின் திருவடிகளைத் துதித்துப் பணிபவராய்,
3213. படங்கொள் அரவில் துயில்வோனும்
பதுமத் தோனும் பரவரிய
விடங்கன் விண்ணோர் பெருமானை
விரவும் புளக முடன்பரவி
அடங்கல் வீழி கொண்டிருந்தீர்
அடியேனுக்கும் அருளுமெனத்
தடங்கொள் செஞ்சொல் தமிழ்மாலை
சாத்தி யங்குச் சாருநாள்.
தெளிவுரை : படத்தையுடைய பாம்பின் மீது பள்ளி கொள்ளும் திருமாலும் தாமரை மலரில் வீற்றிருக்கின்ற நான்முகனும் துதிப்பதற்கரிய விடங்கரான தேவ தேவரைப் பொருந்திய மயிர்ப் புளகத்துடன் வணங்கி, அடங்கல் வீழி கொண்டிருந்தீர்! அடியேனுக்கு மருளும் என்ற கருத்தையும் முடிவையும் உடைய பெரிய செவ்விய சொற்பொருள் அமைந்த தமிழ் மாலையைப் பாடி அங்குத் தங்கியிருக்கும் நாளில்,
3214. வாசி யறிந்து காசளிக்க
வல்ல மிழலை வாணர்பால்
தேசு மிக்க திருவருள்முன்
பெற்றுத் திருவாஞ் சியத்தடிகள்
பாச மறுத்தாட் கொள்ளுந்தாள்
பணிந்து பொருவ னார்என்னும்
மாசில் பதிகம் பாடியமர்ந்
தரிசிற் கரைப்புத் தூரணைந்தார்.
தெளிவுரை : வாசி அறிந்து படிக்காசு அளிக்க வல்லவரான திருவீழிமிழலை இறைவரிடம் சிவஒளி மிகுந்த திருவருள் விடைபெற்றுப் போய்த் திருவாஞ்சியத்தில் உயிர்களின் பாசங்களை அறுத்து ஆட்கொள்ளும் இறைவரின் திருவடிகளை வணங்கிப் பொருவனார் எனத் தொடங்கும் குற்றம் இல்லாத திருப்பதிகம் பாடியருளி அங்கு விரும்பித் தங்கியிருந்து பின்பு அரிசில்கரைப் புத்தூரைப் போயடைந்தார்.
3215. செழுநீர் நறையூர் நிலவுதிருச்
சித்தீச் சரமும் பணிந்தேத்தி
விழுநீர் மையினிற் பெருந்தொண்டர்
விருப்பி னோடும் எதிர்கொள்ள
மழுவோ டிளமான் கரதலத்தில்
உடையார் திருப்புத் தூர்வணங்கித்
தொழுநீர் மையினில் துதித்தேத்தித்
தொண்டர் சூழ வுறையுநாள்.
தெளிவுரை : செழுமையான நீர்ச்சிறப்புடைய நரையூரில் நிலையான திருச்சித்தீச்சரத்தினையும் பணிந்து துதித்து, நிலத்தில் விழுந்து வணங்கித் தாமும் தன்மையுடைய பெருமையுடைய தொண்டர்கள் விருப்பத்தோடும் வரவேற்கச் சென்று மழுவோடு இளமான் கன்றைத் திருக்கையில் எடுத்த இறைவரின் திருப்பத்தூரை வணங்கித் தொழுது வழிபடுகின்ற விதிப்படி வணங்கித் துதித்துப் போற்றி அங்குத் தொண்டர்கள் சூழத் தங்கியிருந்தார். அந்நாட்களில்,
3216. புனித னார்முன் புகழ்த்துணையார்க்கு
அருளுந் திறமும் போற்றிசைத்து
முனிவர் போற்ற எழுந்தருளி
மூரி வெள்ளக் கங்கையினில்
பனிவெண் திங்கள் அணிசடையார்
பதிகள் பலவும் பணிந்துபோந்
தினிய நினைவி லெய்தினார்
இறைவர் திருவா வடுதுறையில்.
தெளிவுரை : முன்நாளில் சிவபெருமான் புகழ்த்துணை நாயனாருக்கு இப்பதியில் படிக்காசு அருள் செய்த அருள் திறத்தைப் போற்றிப் பாடி, முனிவர் போற்ற எழுந்தருளிச் சென்று, பெரிய வெள்ளமாகப் பெருகும் கங்கையுடன் பிறைச்சந்திரனையும் அணியும் சடையையுடைய இறைவர் எழுந்தருளிய தலங்கள் பலவற்றையும் வணங்கிச் சென்று மகிழ்ச்சி பொருந்திய திருவுள்ளத்துடன் இறைவரின் திருவாவடுதுறையில் வந்து சேர்ந்தார்.
3217. விளங்குந் திருவா வடுதுறையில்
மேயார் கோயில் புடைவலங்கொண்டு
உளங்கொண் டுருகு மன்பினுடன்
உள்புக் கிறைஞ்சி யேத்துவார்
வளங்கொள் பதிக மறையவன்என்று
எடுத்து வளவன் செங்கணான்
தளங்கொள் பிறப்புஞ் சிறப்பித்துத்
தமிழ்ச்சொல் மாலை சாத்தினார்.
தெளிவுரை : சிறப்புடன் விளங்கும் திருவாவடுதுறையில் எழுந்தருளிய இறைவரின் திருக்கோயிலைச் சுற்றி வலமாக வந்து, உள்ளத்தைத் தன் வயமாக்கி உருக்கும் அன்புடன் கோயிலுக்குள் புகுந்து வணங்கி, வளமுடைய திருப்பதிகத்தை மறையவன் எனத் தொடங்கிக் கொச்செங்கண் சோழரின் இடம் பொருந்திய பிறப்பையும் சிறப்பித்து வணங்கித் தமிழ்ச்சொல் மாலையான அப்பதிகத்தைப் பாடியருளினார்.
3218. சாத்தி யங்கு வைகுநாள்
தயங்கு மன்ப ருடன்கூடப்
பேர்த்து மிறைஞ்சி யருள்பெற்றுப்
பெண்ணோர் பாகத் தண்ணலார்
தீர்த்தப் பொன்னித் தென்கரைமேல்
திகழும் பதிகள் பலபணிந்து
மூர்த்தி யார்தம் இடைமருதை
யடைந்தார் முனைப்பா டித்தலைவர்.
தெளிவுரை : திருமுனைப்பாடி நாட்டுத் தலைவரான சுந்தரர், முன் கூறியபடி தமிழ் மாலையைப் பாடியருளி, அங்குத் தங்கியிருக்கும் நாளில், விளங்கும் அன்பர்களுடன் மீண்டும் வணங்கி விடைபெற்றுச் சென்று, உமையம்மையாரை ஒரு பாகத்தல் கொண்ட இறைவரின் தீர்த்தமா காவிரியின் தென்கரை மேல் விளங்கும் பல தலங்களையும் வணங்கிச் சென்று இறைவரின் திருவிடைமருதூரைப் போய் அடைந்தார்.
3219. மன்னும் மருதி னமர்ந்தவரை
வணங்கி மதுரச் சொல்மலர்கள்
பன்னிப் புனைந்து பணிந்தேத்திப்
பரவிப் போந்து தொண்டருடன்
அந்நற் பதியி லிருந்தகல்வார்
அரனார் திருநா கேச்சுரத்தை
முன்னிப் புக்கு வலங்கொண்டு
முதல்வர் திருத்தாள் வணங்கினார்.
தெளிவுரை : நிலையான மருதமரத்தின் இடமாக விரும்பி வீற்றிருக்கும் இறைவரை வணங்கி இனிய தமிழ்ச் சொல்லான மலர்களை மாலையாய்ப் புனைந்து வணங்கித் துதித்துப் போய்த் தொண்டர்களுடன் அந்தத் தலத்தினின்று நீங்கித் திருநாகேச்சரத்தை எண்ணிச் சென்று கோயிலுக்குள் புகுந்து வலங்கொண்டு இறைவரின் அடிகளை வணங்கினார்.
3220. பெருகும் பதிகம் பிறையணிவாள்
நுதலாள் பாடிப் பெயர்ந்துநிறை
திருவின் மலியுஞ் சிவபுரத்துத்
தேவர் பெருமான் கழல்வணங்கி
உருகுஞ் சிந்தை யுடன்போந்தே
யுமையோர் பாகர் தாமகிழ்ந்து
மருவும் பதிகள் பிறபணிந்து
கலைய நல்லூர் மருங்கணைந் தார்
தெளிவுரை : அவர் இன்பம் பெருகும் பிறையணி வாணுதலாள் எனத்தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி அங்கிருந்து போய்க் குறைவற்ற நிறைவான சிவச்செல்வம் நிறையும் திருச்சிவபுரத்தைச் சேர்ந்து, தேவர் தலைவரான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது உருகும் சிந்தையுடனே மேலே சென்று, உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் பதிகள் மற்றவற்றையும் வணங்கிச் சென்று திருகலயநல்லூரின் பக்கத்தை அடைந்தார்.
3221. செம்மை மறையோர் திருக்கலைய
நல்லூ ரிறைவர் சேவடிக்கீழ்
மும்மை வணக்கம் பெறவிறைஞ்சி
முன்பு பரவித் தொழுதெழுவார்
கொம்மை மருவு குரும்பைமுலை
யுமையாள் என்னுந் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவுமிகச்
சிறப்பித் திசையின் விளம்பினார்.
தெளிவுரை : செம்மையான நெறியையுடைய மறையவர்கள் வாழ்கின்ற திருக்கலய நல்லூர் சிவபெருமானின் சேவடிகளின் கீழ் முக்கரணங்களும் ஒன்றிய வணக்கம் பொருந்த வணங்கித் திருமுன் துதித்தொழுது எழுவாராகிப் பெருமையுடைய குரும்பை முலை மலர்க்குழவி எனத் தொடங்கும் திருப்பதிகத்தை மெய்ம்மையான மாபுராண வரலாறுகள் பலவற்றையும் சிறப்பாக எடுத்துச் சொல்லிப் பண் இசைப்பொருந்தப் பாடினார்.
3222. அங்கு நின்று திருக்குடமூக்
கணைந்து பணிந்து பாடிப்போய்
மங்கை பாகர் வலஞ்சுழியை
மருவிப் பெருகு மன்புருகத்
தங்கு காத லுடன்வணங்கித்
தமிழாற் பரசி அரசினுக்குத்
திங்கள் முடியா ரடியளித்த
திருநல் லூரைச் சென்றணைந்தார்.
தெளிவுரை : சுந்தரர், அந்தத் தலத்தினின்றும் திருக்குட மூக்கு என்ற தலத்தை அடைந்து, பெருகும் அன்பு உள்ளத்தை உருகச் செய்ய நிரம்பிய பெருவிருப்புடன் வணங்கித் தமிழ்ப் பதிகத்தால் போற்றி, மதியைச் சடையில் சூடிய இறைவர் நாவுக்கரசருக்குத் திருவடியைச் சூட்டியருளிய திருநல்லூரினைச் சென்றடைந்தனர்.
3223. நல்லூர் இறைவர் கழல்போற்றி
நவின்று நடுவு நம்பர்பதி
எல்லா மிறைஞ்சி ஏத்திப்போய்
இசையாற் பரவுந் தம்முடைய
சொல்லூ தியமா வணிந்தவர்தஞ்
சோற்றுத் துறையின் மருங்கெய்தி
அல்லூர் கண்டர் கோயிலினுள்
அடைந்து வலங்கொண் டடிபணிவார்.
தெளிவுரை : திருநல்லூர் இறைவரின் திருவடிகளைத் துதித்துப்பாடி, இடையில் உள்ள இறைவர் தலங்கள் எல்லாவற்றையும் துதித்துச் சென்று, தமிழிசையால் துதிக்கின்ற தம் பாக்களைப் பயனாக விரும்பி ஏற்றுக் கொள்கின்ற இறைவரின் திருச்சோற்றுத் துறையின் பக்கத்தை அடைந்து, நஞ்சு தங்கிய திருக்கழுத்தினையுடைய இறைவரின் திருக்கோயிலுள் போய் அடைந்து, வலமாகச் சுற்றி வந்து, திருவடிகளில் பணிவாராகி,
3224. அழனீ ரொழுகி யனையவெனும்
அஞ்சொற் பதிக மெடுத்தருளிக்
கழனீ டியவன் பினிற்போற்றுங்
காதல் கூரப் பரவியபின்
கெழுநீர் மையினி லருள்பெற்றுப்
போந்து பரவை யார்கேள்வர்
முழுநீ றணிவா ரமர்ந்தபதி
பலவும் பணிந்து முன்னுவார்.
தெளிவுரை : அழனீர் ஒழுகியனைய என்று அழகிய சொற்களால் திருப்பதிகத்தைத் தொடங்கித் திருப்பாதங்களைப் பெருகும் அன்பினால் துதிக்கின்ற பெருவிருப்பம் மேலும் மிகும்படிப் போற்றினார். பின்பு, உரிமையாகிய தன்மையில் இறைவரின் திருவருள் பெற்று மேற்சென்று பரவையாரின் கணவரான நம்பிகள் முழுமையும் திருநீற்றினை அணியும் இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் தலங்கள் பலவற்றையும் வணங்கி மேலும் செல்ல நினைவார்.
3225. தேவர் பெருமான் கண்டியூர்
பணிந்து திருவை யாறதனை
மேவி வணங்கிப் பூந்துருத்தி
விமலர் பாதந் தொழுதிறைஞ்சிச்
சேவில் வருவார் திருவாலம்
பொழிலிற் சேர்ந்து தாழ்ந்திரவு
பாவு சயனத் தமர்ந்தருளிப்
பள்ளி கொள்ளக் கனவின்கண்.
தெளிவுரை : தேவ தேவரான சிவபெருமான் உறையும் திருக்கண்டியூரைப் பணிந்து போய்த் திருஐயாறு சென்றடைந்து வணங்கிக் காளையூர்தியில் வரும் சிவபெருமானின் திருவாலம் பொழிலில் போய் வணங்கி, அன்று இரவில் பரப்பிய படுக்கையில் பள்ளி கொண்டிருந்தார். அன்றைய இரவின் கனவில்,
3226. மழபா டியினில் வருவதற்கு
நினைக்க மறந்தா யோவென்று
குழகா கியதம் கோலமெதிர்
காட்டி யருளக் குறித்துணர்ந்து
நிழலார் சோலைக் கரைப்பொன்னி
வடபா லேறி நெடுமாடம்
அழகார் வீதி மழபாடி
யணைந்தார் நம்பி யாரூரர்.
தெளிவுரை : திருமழபாடிக்கு வர நினைக்கவும் மறந்து விட்டாயோ? என்று இறைவர் தம் இளமையான கோலத்தைக் காட்டி அருள, அதனால் துயிலுணர்ந்து எழுந்து, நிழல் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கரையையுடைய காவிரியின் வடக்குக் கரையில் ஏறிப் போய் நெடிய மாடங்களையுடைய அழகிய தெருக்களையுடைய திருமழபாடி என்ற தலத்தைச் சுந்தரர் அடைந்தார்.
3227. அணைந்து திருக்கோ புரமிறைஞ்சி
அன்பர் சூழ வுடன்புகுந்து
பணங்கொ ளரவ மணிந்தார்முன்
பணிந்து வீழ்ந்து பரங்கருணைக்
குணங்கொ ளருளின் திறம்போற்றிக்
கொண்ட புளகத் துடனுருகிப்
புணர்ந்த விசையாற் றிருப்பதிகம்
பொன்னார் மேனி என்றெடுத்து.
தெளிவுரை : அங்ஙனம் சுந்தரர் திருமழபாடிக் கோபுரத்தை வணங்கி அன்பர்கள் சூழ உடன் புகுந்து, படத்தையுடைய பாம்பைச் சூடிய இறைவர் முன் வணங்கி வீழ்ந்து, அளக்க முடியாத கருணையுடைய பேரருள் திறத்தைத் துதித்துத் திருமேனி முழுவதும் மயிர்ப்புளகம் அடைய, மனம் உருகி இசையுடன் கூடிய திருப்பதிகத்தைப் பொன்னார் மேனி எனத்தொடங்கி,
3228. அன்னே யுன்னை யல்லால்யான்
ஆரை நினைக்கேன் எனவேத்தித்
தன்னே ரில்லாப் பதிகமலர்
சாத்தித் தொழுது புறம்பணைந்து
மன்னும் பதியில் சிலநாள்கள்
வைகித் தொண்ட ருடன்மகிழ்ந்து
பொன்னிக் கரையி னிருமருங்கும்
பணிந்து மேல்பாற் போதுவார்.
தெளிவுரை : அன்னே உன்னையல்லால் யாரை நினைக்கேன்? எனத் துதித்து, ஒப்பில்லாத பெருமையுடைய திருப்பதிகமான மாலையைச் சாத்தித் தொழுது, வெளியே வந்து நிலைபெற்ற அந்தத் தலத்தில் சிலநாட்கள் தங்கியிருந்தார். தொண்டர்களுடன் மகிழ்ந்து காவிரிக் கரையின் இரு பக்கங்களிலும் உள்ள தலங்களை வணங்கி மேற்குத் திக்கு நோக்கிச் செல்லத் தொடங்கி பொன்னார் மேனி என்பது பதிகத் தொடக்கம் அன்னே உன்னையல்லால் யாரை நினைக்கேன் என்பது முடிவு.
3229. செய்ய சடையார் திருவானைக்
காவி லணைந்து திருத்தொண்டர்
எய்த முன்வந் தெதிர்கொள்ள
இறைஞ்சிக் கோயி லுள்புகுந்தே
ஐயர் கமலச் சேவடிக்கீழ்
ஆர்வம் பெருக வீழ்ந்தெழுந்து
மெய்யு முகிழ்ப்பக் கண்பொழிநீர்
வெள்ளம் பரப்ப விம்முவார்.
தெளிவுரை : சிவந்த சடையையுடைய இறைவரின் திருவானைக்காவில் சேர்ந்து தொண்டர்கள் சேர முன்னே வந்து எதிர்கொள்ள, வணங்கித் திருக்கோயிலுள் புகுந்து, இறைவரின் தாமரை போன்ற திருவடிகளின் கீழ் ஆசைபெருக விழுந்து எழுந்து, திருமேனி முழுதும் மயிர்ப்புளகம் உண்டாகக் கண்களினின்றும் ஆனந்த வெள்ளநீர் பாயத் திளைப்பாராகி,
3230. மறைக ளாய நான்கும்என
மலர்ந்த செஞ்சொல் தமிழ்ப்பதிகம்
நிறையுங் காத லுடனெடுத்து
நிலவு மன்பர் தமைநோக்கி
இறையும் பணிவா ரெம்மையுமா
ளுடையா ரென்றென் றேத்துவார்
உறையூர்ச் சோழன் மணியாரஞ்
சாத்துந் திறத்தை யுணர்ந்தருளி.
தெளிவுரை : மறைகளாயின நான்கும் என விரிந்த செஞ்சொற்களால் ஆன தமிழ்ப் பதிகத்தை நிறைந்த பெருவிருப்புடன் தொடங்கி, நிலைபெறும் அன்பர்களைப் பார்த்து, இறையும் பணிவார் எம்மையும் ஆளுடையாரே என்று ஏத்துவார். உறையூர்ச் சோழரின் மணியாரத்தை இறைவர் அணிந்து ஏற்றுக் கொண்ட திருவருள் திறத்தை உணர்ந்தருளி,
3231. வளவர் பெருமான் மணியாரம்
சாத்திக் கொண்டு வரும்பொன்னிக்
கிளருந் திரைநீர் மூழ்குதலும்
வழுவிப் போகக் கேதமுற
அளவில் திருமஞ் சனக்குடத்துள்
அதுபுக் காட்ட அணிந்தருளித்
தளரு மவனுக் கருள்புரிந்த
தன்மை சிறக்கச் சாற்றினார்.
தெளிவுரை : சோழ மன்னர் மணி மாலை அணிந்து கொண்டபடியே காவிரியின் கொழிக்கும் அலைகளையுடைய நீரில் முழுகுதலும், அது நீருள் தவறி விழுந்து போக, அதனால் மன்னர் வருத்தம் அடைய, அளவில்லாத திருமஞ்சனக்குடத்துள் அது புக, மஞ்சனம் சூட்டிய போது அதை இறைவர் அணிந்து மனம் தளர்ந்திருந்த அந்த அரசனுக்கு அருள்புரிந்த தன்மையைச் சிறப்பித்து ஏத்தியருளினார்.
3232. சாற்றி யங்குத் தங்குநாள்
தயங்கும் பவளத் திருமேனி
நீற்றர் கோயில் எம்மருங்கும்
சென்று தாழ்ந்து நிறைவிருப்பால்
போற்றி யங்கு நின்றும்போய்ப்
பொருவி லன்பர் மருவியதொண்டு
ஆற்றும் பெருமைத் திருப்பாச்சில்
ஆச்சி ராமம் சென்றடைந்தார்.
தெளிவுரை : திருப்பதிக மாலை பாடி அப்பதியில் சுந்தரர் தங்கியிருந்தார். அந்நாட்களில் விளங்கும் பவளம் போன்ற திருமேனியில் திருநீற்றையுடையவரின் கோயில்கள் எப்பக்கத்திலும் உள்ளனவற்றைப் போய் வணங்கி, நிறையும் விருப்பால் துதித்து அங்கிருந்து மேல் சென்று ஒப்பில்லாத தொண்டர்கள் பொருந்திய தொண்டு செய்யும் பெருமையுடைய திருப்பாச்சிலாச்சிராமத்தினைப் போய் அடைந்தார்.
3233. சென்று திருக்கோ புரம்இறைஞ்சித்
தேவர் மலிந்த திருந்துமணி
முன்றில் வலங்கொண்டு உள்ளணைந்து
முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சி
நன்று பெருகும் பொருட்காதல்
நயப்புப் பெருக நாதரெதிர்
நின்று பரவி நினைந்தபொருள்
அருளா தொழிய நேர்நின்று.
தெளிவுரை : போய்க் கோபுரத்தை வணங்கித் தேவர்கள் பெருகியுள்ள திருத்தப்பாடுடைய அழகிய முற்றத்தை வலமாக வந்து, உள்ளே சேர்ந்து, இறைவரின் திருமுன்பு நிலமுற விழுந்து வணங்கி, நன்மை பெருகும் பொருளை அடையும் விருப்பத்தால் இறைவர் எதிரே நின்று வழிபட்டுத் தாம் எண்ணிய பொருளினை இறைவர் அருளாமல் போகத் திருமுன்பு நின்று,
3234. அன்பு நீங்கா அச்சமுட னடுத்த
திருத்தோழமைப் பணியாற்
பொன்பெ றாத திருவுள்ளம்
புழுங்க அழுங்கிப் புறம்பொருபால்
முன்பு நின்ற திருத்தொண்டர்
முகப்பே முறைப்பா டுடையார்போல்
என்பு கரைந்து பிரானார்மற்
றிலையோ யென்ன வெடுக்கின்றார்.
தெளிவுரை : அன்பு நீங்காத அச்சத்துடன் பொருந்திய தோழமைப் பணிவிடையினால், தாம் எண்ணியபடியே பொன் கிடைக்கப் பெறாத உள்ளத்தில் புழுக்கம் உண்டாக வருந்தி, வெளியே நின்ற தொண்டர்களை முகம் நோக்கித் தம் முறையீட்டை உரைப்பவர் போல எலும்பு கரைந்துருக  பிரானார் மற்றிலையோ! என்ற கருத்துக்கொண்ட முடிபு அமையப் பதிகத்தைத் தொடங்குவாராய்,
3235. நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி
நிலத்திடைப் புலங்கெழும் பிறப்பால்
உய்த்தகா ரணத்தை யுணர்ந்துநொந் தடிமை
யொருமையா மெழுமையு முணர்த்தி
எத்தனை யருளா தொழியினும் பிரானார்
இவரலா தில்லையோ யென்பார்
வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும்
எனவழுத் தினார்வழித் தொண்டர்.
தெளிவுரை : ஒருநாளும் நீங்காத நிலைமையின் (திருக்கயிலையினின்றும்) நீங்கி இந்த நிலத்திடத்தின் அறிவுடன் பொருந்தும் பிறவியிடத்துச் செலுத்திய காரணத்தை மனதில் உணர்ந்து வருந்தி, அடிமைத் திறத்தின் ஒருமைப்பாடானது ஏழு பிறப்பிலும் தொடர்கின்ற இயல்பை எடுத்துச் சொல்லி, எவ்வளவும் திருவருள் புரியாது ஒழியினும் இறைவர் இவரல்லாது இல்லையோ? என்று முடிப்பாராகி வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் எனத்தொடங்கி நம்பியாரூர் துதித்தார்.
3236. இவ்வகை பரவித் திருக்கடைக் காப்பும்
ஏசின வல்லஎன் றிசைப்ப
மெய்வகை விரும்பு தம்பெரு மானார்
விழுநிதிக் குவையளித் தருள
மைவளர் கண்டர் கருணையே பரவி
வணங்கியப் பதியிடை வைகி
எவ்வகை மருங்கு மிறைவர்தம் பதிகள்
இறைஞ்சியங் கிருந்தனர் சில நாள்.
தெளிவுரை : நாவலூரர் இவ்வாறு துதித்து ஏசின அல்ல என்ற திருக்கடைக் காப்பும் சேர்த்துப் பாட, மெய்யன்பையே விரும்பும் தம் இறைவர் தூய நிதிக் குவையை அளிக்கவே, நீலகண்டரின் பெருங்கருணையைத் துதித்து அப்பதியில் தங்கிப் பக்கத்தில் எப்பக்கத்தும் உள்ள இறைவரின் பதிகங்களை வணங்கி மீண்டும் அங்கு எழுந்தருளிச் சில நாட்கள் தங்கியிருந்தார்.
3237. அப்பதி நீங்கி யருளினாற் போகி
ஆவின்அஞ் சாடுவார் நீடும்
எப்பெயர்ப் பதியு மிருமருங் கிறைஞ்சி
இறைவர்பைஞ் ஞீலியை யெய்திப்
பைப்பணி யணிவார் கோபுர மிறைஞ்சிப்
பாங்கமர் புடைவலங் கொண்டு
துப்புறழ் வேணி யார்கழல் தொழுவார்
தோன்றுகங் காளரைக் கண்டார்.
தெளிவுரை : அந்தத் தலத்தை நீங்கி விடைபெற்றுப் போய் ஆன்ஐந்து என்னும் பஞ்சக்கவ்வியத் திருமஞ்சனம் ஆடியருளும் இறைவர் எழுந்தருளியுள்ள எல்லாப் பதிகளையும் காவிரியின் இரண்டு கரைப் பக்கங்களிலும் போய் வணங்கி இறைவரின் திருப்பைஞ்ஞீலியைப் போய்ச் சேர்ந்து, நச்சுப் பையையுடைய பாம்பை அணிந்த சிவபெருமானின் கோயில் கோபுரத்தை வணங்கிப் பக்கத்தைச் சுற்றி வலமாக வந்து பவளம் போலச் சிவந்த சடையையுடைய இறைவரின் அடிகளை வணங்கும் நம்பியாரூரர் முன்னே தோன்றியருளிய கங்காளக் கோலம் உடைய இறைவரைக் கண்டார்.
3238. கண்டவர் கண்கள் காதல்நீர் வெள்ளம்
பொழிதரக் கைகுவித் திறைஞ்சி
வண்டறை குழலார் மனங்கவர் பலிக்கு
வருந்திரு வடிவுகண் டவர்கள்
கொண்டதோர் மயலால் வினவுகூற் றாகக்
குலவுசொற் காருலா வியவென்று
அண்டர்நா யகரைப் பரவிஆ ரணிய
விடங்கராம் அருந்தமிழ் புனைந்தார்.
தெளிவுரை : அங்ஙனம் இறைவரைக் கங்காளக் கோலமுடையவராகக் கண்ட நம்பியாரூரர், பக்தியால் தம் கண்களினின்றும் ஆனந்தவெள்ள நீர் வடியக் கைகள் குவித்து வணங்கி, வண்டுகள் விரும்பி வாழும் கூந்தலையுடைய மங்கையரின் உள்ளத்தைக் கவர்கின்றபடி வரும் இறைவரின் திருவடிவினைப் பார்த்து, அவர்கள் கொண்ட மையலால் வினவுகின்ற பொருளுடைய சொற்களாக அமைத்து, விளங்கும் சொல் காருலாவிய எனத்தொடங்கித் தேவ தேவரைப் போற்றி ஆரணியவிடங்கரே! என்ற முடிபுடைய அரிய தமிழ்மாலை பாடி.
3239. பரவியப் பதிகத் திருக்கடைக் காப்புச்
சாத்திமுன் பணிந்தருள் பெற்றுக்
கரவிலன் பர்கள்தங் கூட்டமுந் தொழுது
கலந்தினி திருந்துபோந் தருளி
விரவிய ஈங்கோய் மலைமுத லாக
விமலர்தம் பதிபல வணங்கிக்
குரவலர் சோலை யணிதிருப் பாண்டிக்
கொடுமுடி யணைந்தனர் கொங்கில்.
தெளிவுரை : (மேல் கூறியபடி) பாடித் துதித்துத் திருப்பதிகத்தின் கடைக்காப்புப் பாடித் திருமுன்பு வணங்கி, அருள்விடை பெற்றுக் கொண்டு, கரவு இல்லாத தொண்டர் கூட்டத்தைத் தொழுது அவர்களுடன் கலந்து இனிதாய் இருந்து, மேலே போய்ப் பொருந்திய திருவீங்கோய் மலை முதலாக இறைவரின் பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று கொங்கு நாட்டில் குரவமலர்கள் பூப்பதற்கு இடமான சோலைகள் அழகுப்படுத்தும் திருப்பாண்டிக் கொடுமுடியைச் சேர்ந்தார்.
3240. கொங்கினிற் பொன்னித் தென்கரைக் கறையூர்க்
கொடுமுடிக் கோயில் முன்குறுகிச்
சங்கவெண் குழையா ருழைவலஞ் செய்து
சார்ந்தடி யிணையினில் தாழ்ந்து
பொங்கிய வேட்கை பெருகிடத்தொழுது
புனிதர்பொன் மேனியை நோக்கி
இங்கிவர் தம்மை மறக்கவொண் ணாதென்
றெழுந்தமெய்க் குறிப்பினி லெடுப்ப.
தெளிவுரை : கொங்கு நாட்டில் காவிரியின் கரையில் உள்ள கறையூர்ப் பாண்டிக் கொடுமுடிக் கோயிலின் முன்னம் சேர்ந்து, சங்கால் ஆன காதணியை அணிந்த இறைவரை, கோயிலைச் சுற்றி வலமாக வந்து சேர்ந்து திருவடிகளில் அன்பால் வணங்கி, மேன்மேலும் பொங்கிய ஆசை மேலும் பெருகத் தொழுது இறைவரின் பொன்மேனியைப் பார்த்து இங்குள்ள இறைவரை மறக்கொண்ணாது என்று உள்ளத்தில் எழுந்த மெய்க்குறிப்பால் தொடங்கிட,
3241. அண்ணலா ரடிகள் மறக்கினுநாம
அஞ்செழுத் தறியவெப் பொழுதும்
எண்ணிய நாவே யின்சுவை பெருக
இடையறா தியம்புமென் றிதனைத்
திண்ணிய வுணர்விற் கொள்பவர் மற்றுப்
பற்றிலேன் எனச்செழுந் தமிழால்
நண்ணிய அன்பிற் பிணிப்புற நவின்றார்
நமச்சிவா யத்திருப் பதிகம்.
தெளிவுரை : பெருமையுடைய இறைவரின் திருவடிகளை நான் மறந்தாலும் அவரது திருப்பெயரான ஐந்தெழுத்துப் பழகிய நாவே, இனிய சுவை பெருக இடையறாது கூறும்! என்ற இக்குறிப்பைத் தம் உறைப்புடைய உணர்வால் கொள்வாராய் மற்றுப்பற்றெனக் கின்றி எனத் தொடங்கிச் செழுமையான தமிழால் பொருந்திய அன்பினால் கட்டுப்பாடு பெறும்படி நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாடியருளினார்.
3242. உலகெ லாம்உய்ய உறுதியாம் பதிகம்
உரைத்துமெய் யுணர்வறா வொருமை
நிலவிய சிந்தை யுடன்திரு வருளால்
நீங்குவார் பாங்குநற் பதிகள்
பலவுமுன் பணிந்து பரமர்தாள் போற்றிப்
போந்துதண் பனிமலர்ப் படப்பைக்
குலவுமக் கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர்
குறுகினார் முறுகுமா தரவால்.
தெளிவுரை : உலகம் எல்லாம் உய்யுமாறு உறுதியை அளிப்பதான நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாடி மெய்யுணர்வு இடையறாத ஒன்றுபட்ட தன்மை நிலைபெற்ற உள்ளத்துடன் அருள் விடைபெற்று அவ்விடத்தினின்று நீங்கிப் பக்கத்தில் உள்ள பதிகள் பலவற்றையும் முன்னே வணங்கி இறைவரின் அடிகளைத் துதித்துச் சென்று, குளிர்ந்த பூக்களையுடைய ஆற்றின் பக்கத்தின் குளிர்ந்த நிலங்களையுடைய விளக்கமான மேல் கொங்கு நாட்டில் உள்ள காஞ்சி என்ற பேராற்றின் கரையில் உள்ள திருப்பேரூரினை மிக்கு எழும் பேரன்பினாலே போயடைந்தார்.
3243. அத்திருப் பதியை யணைந்துமுன் தம்மை
யாண்டவர் கோயிலுள் புகுந்து
மெய்த்தவர் சூழ வலங்கொண்டு திருமுன்
மேவுவார் தம்மெதிர் விளங்க
நித்தனார் தில்லை மன்றுள்நின் றாடல்
நீடிய கோலம்நேர் காட்டக்
கைத்தலங் குவித்துக் கண்களா னந்தக்
கலுழிநீர் பொழிதரக் கண்டார்.
தெளிவுரை : அந்த தலத்தை அடைந்து முன்னால் தம்மை ஆண்டருளிய இறைவரின் கோயிலுள்ளே போய், மெய்த் தொண்டர்கள் பக்கத்தே சூழ்ந்திட வலமாக வந்து, தம் எதிரில் இறைவர் தில்லைச் சிற்றம்பலத்தில் நின்று ஆடுகின்ற பெருந்திருக்கோலத்தை நேராய் இங்குக் காட்டிட இரு கைகளையும் தலைமீது கூப்பி, கண்களினின்று ஆனந்தக் கண்ணீர் ஆற்றைப் போல் பெருகக் கண்டு மகிழ்ந்தார்.
3244. காண்டலும் தொழுது வீழ்ந்துஉட னெழுந்து
கரையிலன் பென்பினை யுருக்கப்
பூண்டஐம் புலனிற் புலப்படா இன்பம்
புணர்ந்துமெய் யுணர்வினிற் பொங்கத்
தாண்டவம் புரியுந் தம்பிரா னாரைத்
தலைப்படக் கிடைத்தபின் சைவ
ஆண்டகை யாருக் கடுத்தஅந் நிலைமை
விளைவையார் அளவறிந் துரைப்பார்.
தெளிவுரை : இங்ஙனம் காட்சி தந்ததைக் கண்டவுடனே வணங்கி நிலம் பொருந்த விழுந்து உடன் எழுந்து நின்று கரையில்லாத அன்பு எலும்பையும் உருக்கிட, பொருந்திய ஐந்து புலங்களாலும் அறியப்படாத பேரானந்தம் உள்ளே கலந்து மெய்யுணர்வில் பெருக, நடனம் ஆடும் தம் சிவபெருமானை நேரே பெறுமாறு கிட்டிய பின்பு, சைவ ஆண் தகையாளரான சுந்தரர்க்கு ஏற்பட்ட ஆனந்த விளைவை அறிந்து உரைக்க வல்லவர் யார்? யாரும் இலர்.
3245. அந்நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற
அன்பனார் இன்பவெள் ளத்து
மன்னிய பாடல் மகிழ்ந்துடன் பரவி
வளம்பதி யதனிடை மருவிப்
பொன்மணி மன்றுள் எடுத்தசே வடியார்
புரிநடங் கும்பிடப் பெற்றால்
என்னினிப் புறம்போய் எய்துவ தென்று
மீண்டெழுந் தருளுதற் கெழுவார்.
தெளிவுரை : அவ்வாறு உண்டான நிறைந்த இறைவரின் அருளைப் பெற்ற நம்பியாரூரர் இன்பப் பெருக்கிலே நிறைந்த திருப்பதிகத்தை மகிழ்வுடனே பாடிப் போற்றி வளம் வாய்ந்த அந்தத் தலத்தில் சிறிது தங்கி, அழகிய பொன்னம்பலத்துள் எடுத்த சேவடியினையுடைய கூத்தப்பெருமான் செய்யும் கூத்தைக் கும்பிடும் பேற்றைப் பெற்றால், இனிப்புறம் சென்று கிடைக்கப்பெறும் பொருள் வேறு என்ன உள்ளது? ஏதும் இல்லை! என்ற கருத்துடனே அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதற்குத் துணிந்தார்.
3246. ஆயிடை நீங்கி அருளினால் செல்வார்
அருவரைச் சுரங்களும் பிறவும்
பாயுநீர் நதியும் பலபல கடந்து
பரமர்தம் பதிபல பணிந்து
மேயவண் தமிழால் விருப்பொடும் பரவி
வெஞ்சமாக் கூடலும் பணிந்து
சேயிடை கழியப் போந்துவந் தடைந்தார்
தென்திசைக் கற்குடி மலையில்.
தெளிவுரை : அந்த இடத்தினின்று நீங்கி விடைபெற்றுச் செல்லும் நம்பியாரூரர் கடப்பதற்கு அரிய மலைக் காடுகளும் மற்ற நிலப்பகுதியும் பெருக்கெடுத்துப் பாயும் ஆறுகளும் என்னும் பலவற்றையும் கடந்து போய் இறைவரின் தலங்கள் பலவற்றையும் வணங்கிப் பொருந்திய வளப்பமுடைய தமிழ்த் திருப்பதிகங்களால் துதித்துத் திருவெஞ்சமாக் கூடலையும் வணங்கி, நெடுந்தொலைவு கடந்து சென்று தெற்குத் திக்கில் உள்ள திருக்கற்குடி மலையை வந்து அடைந்தார்.
3247. வீடு தரும்இக் கற்குடியில்
விழுமி யாரைப் பணிந்திறைஞ்சி
நீடு விருப்பில் திருப்பதிகம்
நிறைந்த சிந்தை யுடன்பாடிப்
பாடும் விருப்பில் தொண்டருடன்
பதிகள் பலவும் அணைந்திறைஞ்சித்
தேடு மிருவர் காண்பரியார்
திருவா றைமேற் றளிசென்றார்.
தெளிவுரை : வீடுபேற்றை அளிக்கும் இந்தக் கற்குடி மலையில், விழுமியார் என்ற பெயரையுடைய இறைவரை வணங்கி, மிக்க விருப்புடன் அன்பால் நிறைந்த சிந்தையுடன் திருப்பதிகத்தைப் பாடி, மேலும் பல திருப்பதிகங்களைப் பாடித் துதிக்கும் விருப்பினால் திருத்தொண்டர்களுடன் பலப்பல தலங்களையும் போய் வணங்கி, மேலும் கீழுமாகத் தேடிய திருமால் நான்முகன் என்ற இருவருக்கும் காண்பதற்கு அரிய இறைவரது திருஆறைமேற்றளி என்ற பதியைப் போய்ச் சேர்ந்தார், ஆரூரர்.
3248. செம்பொன் மேருச் சிலைவளைத்த
சிவனார் ஆறை மேற்றளியில்
நம்பர் பாதம் பணிந்திறைஞ்சி
நாளு மகிழ்வார்க் கருள்கூட
உம்பர் போற்றுந் தானங்கள்
பலவும் பணிந்து போந்தணைவார்
இம்பர் வாழ இன்னம்பர்
நகரைச் சேர வெய்தினார்.
தெளிவுரை : செம்பொன் மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமானின் ஆறை மேற்றளியில், இறைவரின் திருவடிகளை வணங்கி நாள்தோறும் மகிழ்ந்து தங்கியிருந்த நம்பியாரூரர்க்கு, மேலும் பல பகுதிகளுக்குச் சென்று வணங்குமாறு திருவருள் விடை கூறியதால், தேவர்கள் துதிக்கின்ற இடங்கள் பலவற்றையும் வணங்கிச் செல்பவரான நம்பியாரூரர் இவ்வுலகத்தில் உள்ளவர் வாழும் பொருட்டுத் திருவின்னம்பரைச் சேர்ந்தார்.
3249. ஏரின் மருவும் இன்னம்பர்
மகிழ்ந்த ஈசர் கழல்வணங்கி
ஆரு மன்பிற் பணிந்தேத்தி
ஆரா அருளால் அங்கமர்வார்
போரின் மலியுங் கரியுரித்தார்
மருவும் புறம்ப யம்போற்றச்
சேரும் உள்ளம் மிக்கெழமெய்ப்
பதிகம் பாடிச் செல்கின்றார்.
தெளிவுரை : அழகால் விளங்கும் திருவின்னம்பரில் மகிழ்ந்து வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளை வணங்கி, நிறைந்த அன்பால் பணிந்து துதித்துத் தெவிட்டாத அருளால் அங்கு விரும்பித் தங்கியவரான நம்பியாரூரர், போர்த்தொழிலில் மிக்க யானைத் தோலை உரித்த சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருப்புறம்பயத்தை வழிபடுவதற்குச் சென்று சேரும் உள்ளத்தே அன்புமிக மெய்த்திருப் பதிகத்தைப் பாடிச் செல்பவராய்
3250. அங்க மோதியோ ராறை மேற்றளி
யென்றெ டுத்தமர் காதலில்
பொங்கு செந்தமி ழால்வி ரும்பு
புறம்ப யந்தொழப் போதும்என்
றெங்கும் மன்னிய இன்னி சைப்பதி
கம்பு னைந்துட னெய்தினார்
திங்கள் சூடிய செல்வர் மேவு
திருப்பு றம்பயஞ் சேரவே.
தெளிவுரை : அங்க மோதியோ ராறை மேற்றளி எனத் தொடங்கி விருப்பம் மிக்க ஆசையினால் பெருகும் செந்தமிழினால் தாம் விரும்பும் புறம்பயந் தொழப் போதுமே என்று எங்கும் நிலைபெறுகின்ற இனிய இசையையுடைய திருப்பதிகத்தைப் பாடிச் சந்திரனை அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருப்புறம்பயத்தைச் சேருமாறு உடன் சென்றார்.
3251. அப்ப திக்கண் அமர்ந்த தொண்டரும்
அன்று வெண்ணெய்நல் லூரினில்
ஒப்ப ருந்தனி வேதி யன்பழ
வோலை காட்டிநின் றாண்டவர்
இப்ப திக்கண்வந் தெய்த என்ன
தவங்கள் என்றெதிர் கொள்ளவே
முப்பு ரங்கள் எரித்த சேவகர்
கோயில் வாயிலில் முன்னினார்.
தெளிவுரை : அந்தத் தலத்தில் வாழும் தொண்டர்களும் அன்று திருவெண்ணெய்நல்லூரில் ஒப்பில்லாத தனி வேதியராக வந்த இறைவரால் பழஓலை காட்டி நின்று ஆட்கொள்ளப்பட்ட நம்பி ஆரூரர் இந்தத் தலத்திடையே வந்து சேர என்ன தவங்களை நாம் செய்தோம் என்று எண்ணி மகிழ்ந்து வரவேற்கவே, நம்பியாரூரர் முப்புரங்களையும் எரித்த சிவபெருமானின் கோயில் வாயில் முன்பு வந்து சேர்ந்தார்.
3252. நீடு கோபுர முன்பி றைஞ்சி
நிலாவு தொண்டரொ டுள்ளணைந்து
ஆடன் மேவிய வண்ண லாரடி
போற்றி யஞ்சலி கோலிநின்று
ஏடு லாமலர் தூவி எட்டினொ
டைந்து மாகும் உறுப்பினாற்
பீடு நீடு நிலத்தின் மேற்பெரு
கப்ப ணிந்து வணங்கினார்.
தெளிவுரை : அவர், பெரிய கோபுரத்தின் முன்பு வணங்கி, நிலைபெற்ற தொண்டருடனே, திருக்கோயிலுள் புகுந்து திருக்கூத்தை ஆடியருளுகின்ற இறைவரின் திருப்பொற்பாதங்களை வணங்கிக் கைக்கூப்பித் தொழுது நின்று இதழ்கள் அலர்ந்த புதிய மலர்களைத் தூவி, எட்டு அங்கத்தாலும் ஐந்து அங்கத்தாலும் வணங்கும் முறையினால் பெருமை நீடிய நிலத்தில் விழுந்து பலமுறையும் பணிந்து வணங்கினார்.
3253. அங்கு நீடருள் பெற்றுஉள் ஆர்வம்
மிகப்பொ ழிந்தெழு மன்பினால்
பொங்கு நாண்மலர்ப் பாத முன்பணிந்
தேத்தி மீண்டு புறத்தணைந்
தெங்கு மாகி நிறைந்து நின்றவர்
தாம கிழ்ந்த விடங்களில்
தங்கு கோல மிறைஞ்சு வாரருள்
தாவி லன்பரோ டெய்தினார்.
தெளிவுரை : அவர், அத்தலத்தில் இறைவரின் பெரிய திருவருளைப் பெற்று உள்ளத்தில் ஆர்வம் மிகுதலால் மேல் எழுந்து பொழியும் அன்பினால் பொங்கும் மலர் போன்ற அடிகளின் முன்னே வணங்கி, அங்கிருந்து மீண்டு வெளியே வந்து, எங்கும் நீக்கம் இல்லாது முழுதும் நிறைந்து நின்ற இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் இடங்களில் உள்ள நிலை பெற்ற திருக்கோலங்களை வணங்க, அருள்பெற்ற குற்றம் இல்லாத அடியார்கள் உடன் சூழ்ந்து வர அவர்களுடனே சென்றார்.
3254. வம்புநீ டலங்கல் மார்பின் வன்றொண்டர் வன்னி கொன்றை
தும்பைவெள் ளடம்பு திங்க டூயநீ ரணிந்த சென்னித்
தம்பிரா னமர்ந்த தானம் பலபல சார்ந்து தாழ்ந்து
கொம்பனா ராடல் நீடு கூடலை யாற்றூர் சார.
தெளிவுரை : புதுமை பொருந்திய மாலையைச் சூடிய மார்பையுடைய நம்பியாரூரர், வன்னி, கொன்றை, தும்பை, வெண்மையான அடம்பு, பிறைச்சந்திரன் தூய்மையான கங்கை நீர் என்ற இவற்றைச் சூடிய தலைமையுடைய தம் பெருமான் விரும்பி வீற்றிருக்கும் தலங்கள் பலவற்றையும் சென்று சேர்ந்து வணங்கிப் பசியகொம்பைப் போன்ற மங்கையரின் ஆடல் மிக்குள்ள திருமுக்கூடலை ஆற்றுரைச் சார.
3255. செப்பரும் பதியிற் சேரார் திருமுது குன்றை நோக்கி
ஒப்பரும் புகழார் செல்லும் ஒருவழி யுமையா ளோடும்
மெய்ப்பரம் பொருளா யுள்ளார் வேதிய ராகி நின்றார்
முப்புரி நூலுந் தாங்கி நம்பியா ரூரர் முன்பு.
தெளிவுரை : கூறுவதற்கரிய அந்தத் தலத்தில் போய்ச் சேராதவராய்த் திருமுதுகுன்றத்தை நோக்கி ஒப்பில்லாத புகழையுடைய நம்பி ஆரூரர் சென்றார். அவ்வழியிலே, உமையம்மையாருடன் கூடி மெய்ப்பரம் பொருளான சிவபெருமான் வேதியர் வடிவம் கொண்டு, முப்புரி நூலையும் வாங்கிக் கொண்டு, அந்த நம்பியாரூரரின் முன்பாக நின்றார்.
3256. நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்தசிந் தையராய்த் தாழ்வார்
இன்றியாம் முதுகுன் றெய்த வழியெமக் கியம்பும் என்னக்
குன்றவில் லாளி யாரும் கூடலை யாற்றூர் ஏறச்
சென்றதிவ் வழிதானென்று செல்வழித் துணையாய்ச் செல்ல.
தெளிவுரை : அங்ஙனம் தம் எதிரே நின்ற இறைவரை நோக்கி நம்பியாரூரர் நெகிழ்ந்த உள்ளத்தை உடையவராய் வணங்கி இன்று நாம் திருமுது குன்றத்தை அடைய எமக்கு உரிய வழியைக் கூறும் என்று வினவினார். மேருமலையை வில்லாய் வளைத்த இறைவரும் கூடலையாற்றூரைச் சேர்வதற்குரியது இவ்வழியாகும் என்று உரைத்தார். உரைத்து அவர்க்கு இறைவர் வழித்துணையாய் உடன் செல்ல,
3257. கண்டவர் கைகள் கூப்பித் தொழுதுபின் தொடர்வார்க் காணார்
வண்டலர் கொன்றை யாரை வடிவுடை மழுவென் றேத்தி
அண்டர்தம் பெருமான் போந்த அதிசயம் அறியே னென்று
கொண்டெழு விருப்பி னோடும் கூடலை யாற்றூர் புக்கார்.
தெளிவுரை : தம்முடன் வழித்துணையாய் வருகின்ற அந்தணரான இறைவரைக் கண்ட நம்பியாரூரர் அவரைக் கைக்கூப்பித் தொழுது, பின் அவ்வாறு தொடர்ந்து வருபவரைக் காணார் ஆகி, வண்டுகள் மொய்த்து அலர்த்தும் கொன்றை மாலையைச் சூடிய இறைவரை வடிவுடை மழு எனத்தொடங்கித் துதித்துத் தேவர் தலைவரான இறைவர் வேடம் காட்டிக் கூட வந்து மறைந்து போன வியப்பை இன்னது என்று அறியேன் எனக்கூறிப் பதிகம் பாடித் தம்மைப் பற்றிக்கொண்டு மேல்எழு விருப்பத்தினால், திருக்கூடலை ஆற்றூரில் புகுந்தருளினார்.
3258. கூடலை யாற்றூர் மேவும் கொன்றைவார் சடையி னார்தம்
பீடுயர் கோயில் புக்குப் பெருகிய ஆர்வம் பொங்க
ஆபுகப் பொதுவி லாடும் அறைகழல் வணங்கிப் போற்றி
நீடருள் பெற்றுப் போந்து திருமுது குன்றி னேர்ந்தார்.
தெளிவுரை : கூடலை ஆற்றூரில் பொருந்தும் கொன்றை மாலை சூடிய நீண்ட சடையையுடைய இறைவரின் பெருமையால் உயர்ந்த கோயிலுள் புகுந்து, பெருகி எழும் ஆசையானது மேலும் மேலும் அதிகரிக்க, பொன்னம்பலத்தில் ஆடுகின்ற ஒலிக்கும் வீரக்கழலை அணிந்த திருவடிகளை வணங்கித் துதித்துத் திருவருள் விடை பெற்றுத் திருமுதுகுன்றத்தைப் போய் அடைந்தார்.
3259. தடநிலைக் கோபு ரத்தைத் தாழ்ந்துமுன் னிறைஞ்சிக் கோயில்
புடைவலங் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து
நடநவில் வாரை நஞ்சி யிடை எனுஞ் செஞ்சொன் மாலைத்
தொடைநிகழ் பதிகம் பாடித் தொழுதுகை சுமந்து நின்று.
தெளிவுரை : பெரிய நிலைகளைக் கொண்ட கோபுரத்தை முன் வணங்கி, கோயிலுள் பக்கத்தில் வலமாக வந்து உள்ளே புகுந்து, துதித்துத் தொழுது, நிலமுற வீழ்ந்து வணங்கி எழுந்து, அருட்கூத்தாடும் இறைவரை நஞ்சியிடை எனத் தொடங்கும் செஞ்சொல்லால் ஆன மாலைத் தொடையாக நிகழும் திருப்பதிகம் பாடித் தொழுது கைகூப்பி நின்று,
3260. நாதர்பாற் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ண மெல்லாம்
கோதறு மனத்துட் கொண்ட குறிப்பொடும் பரவும் போது
தாதவிழ் கொன்றை வேய்ந்தார் தரஅருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில்வெண் பொடியும் பாட.
தெளிவுரை : இறைவரிடம் பொருள் பெற வேண்டும் என்னும் குற்றம் இல்லாத உள்ளத்தினுள் கொண்ட உட்குறிப்பினுடன் துதிக்கும்போது, இதழ்கள் அலரும் கொன்றை மாலையைச் சூடிய இறைவர் பொருள் தரும் அருளைப் பெறுவாராகிச் சிவவேதியர் பெருமானை நம்பிஆரூரர் மீண்டும் மெய்யின் வெண்பொடி எனத்தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடவே.
3261. பனிமதிச் சடையார் தாமும் பன்னிரண் டாயி ரம்பொன்
நனியருள் கொடுக்கு மாற்றால் நல்கிட உடைய நம்பி
தனிவரு மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்தெழுந் தருகு சென்று
கனிவிட மிடற்றி னார்முன் பின்னொன்று கழற லுற்றார்.
தெளிவுரை : குளிர்ந்த பிறைச்சந்திரனைச் சூடிய சடையையுடைய இறைவரும் பன்னிரண்டாயிரம் பொன்னை அருள் செய்யும் வகையால் தந்தருளவும், ஆளுடைய நம்பியான நாவலூரர் ஒப்பில்லாது எழுந்த மகிழ்ச்சி பெருக வணங்கி எழுந்து அருகில் சென்று கரிய கனி போன்ற திருக்கழுத்தையுடையவர் முன் மேலும் ஒரு செய்தியைச் சொல்லலானார்.
3262. அருளும்இக் கனக மெல்லாம் அடியனேற் காரூ ருள்ளோர்
மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டு மென்னத்
தெருளுற வெழுந்த வாக்கால் செழுமணி முத்தாற் றிட்டிப்
பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்திற்போய்க் கொள்க வென்றார்.
தெளிவுரை : தாங்கள் எனக்கு இங்குத் தந்தருளும் பொன்னையெல்லாம் திருவாரூரில் உள்ளவர் மயங்கவும் வியக்கவும் அங்குத் தரப் பெறல் வேண்டும்! என்று நாவலூரர் உரைக்க இறைவர் வானில் எழுந்த திருவாக்கினால், செழிப்பான மணி முத்தாற்றிலே இட்டு, இப்பொன் முழுமையும் திருவாரூர்க் குளத்தில் போய்ப் பெற்றுக் கொள்க என்று தெரியுமாறு உரைத்தருளினார்.
3263. என்றுதம் பிரானார் நல்கும் இன்னருள் பெற்ற பின்னர்
வன்றொண்டர் மச்சம் வெட்டிக் கைக்கொண்டு மணிமுத் தாற்றில்
பொன்றிரள் எடுத்து நீருள் புகவிட்டுப் போது கின்றார்
அன்றெனை வலிந்தாட் கொண்ட அருளிதில் அறிவே னென்று.
தெளிவுரை : என மேற்கூறியவண்ணம் தம் இறைவர் திருவருள் வாக்கைப் பெற்றபின்னர், வன்றொண்டரான ஆரூரர் மச்சம் (பொன்துண்டு) வெட்டி எடுத்துக் கொண்டு திருமணி முத்தாற்றிலே பொன் குவியலையெல்லாம் நீருள் புகும்படியாய் இட்டு, அன்று என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் வலிய ஆட்கொண்ட அருளை இச்செயலில் மெய்ப்பட அறிவேன்! என்று
3264. மேவிய காதல் தொண்டு விரவுமெய் விருத்தி பெற்றார்
ஆவியின் விருத்தி யான அந்தணர் புலியூர் மன்றில்
காவியங் கண்டர் கூத்துக் கண்டுகும் பிடுவன் என்று
வாவிசூழ் தில்லை மூதூர் வழிக்கொள்வான் வணங்கிப் போந்தார்.
தெளிவுரை : பொருந்திய மிக்க விருப்பத்தால் திருத்தொண்டினுடன் கூடிய நிலை தம் பிறவித் தொழிலாகப் பெற்ற நம்பியாரூரர், உயிரின் விருத்தியான அந்தணர் வாழ்கின்ற திருப்புலியூர் பொன்னம்பலத்திலே, நீலகண்டரான இறைவரின் திருக்கூத்தை நேரே கண்டு வணங்குவோம் என நினைத்துப் பொய்கைகள் சூழ்ந்த தில்லையான பழம்பதியை நோக்கிச் செல்லும் பொருட்டுச் சிவபெருமானை வணங்கிச் சென்றார்.
3265. மாடுள பதிகள் சென்று வணங்கிப்போய் மங்கை பாகர்
நீடிய கடம்பூர் போற்றி நிறைந்தஆ னந்தக் கூத்தர்
ஆடிய தில்லை மூதூர் அணைந்தணி வாயில் புக்குச்
சேடுயர் மாட மன்னுஞ் செழுந்திரு வீதி சார்ந்தார்.
தெளிவுரை : பக்கங்களில் உள்ள தலங்களில் போய் அங்கு வீற்றிருக்கும் இறைவரை வணங்கி, தையல் பாகரான இறைவர் வீற்றிருக்கின்ற திருக்கடம்பூரை வணங்கி வழிபட்டு, நிறைந்த ஆனந்தக்கூத்தர் நடனம் செய்யும் தில்லை மூதூரைச் சேர்ந்து அழகிய வாயிலுள் புகுந்து பெருமையால் உயரும் மாடங்கள் நிலைபெற்று விளங்கும் செழுமையான திருவீதியைச் சென்றடைந்தார்.
3266. பொற்றிரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும்
நற்றிரு வாயில் நண்ணி நறைமலி யலங்கல் மார்பர்
மற்றதன் முன்பு மண்மேல் வணங்கியுட் புகுந்து பைம்பொன்
சுற்றுமா ளிசைழ் வந்து தொழுதுகை தலைமேற் கொள்வார்.
தெளிவுரை : நன்மை மிக்க மாலை சூடிய மார்பையுடைய சுந்தரர், அழகிய திருவீதியை வணங்கிப் புண்ணியத்தின் விளைவான ஓங்கி விளங்கும் நல்ல திருவாயிலை அடைந்து அதன் முன்பு நிலமுற விழுந்து வணங்கி, உள்ளே புகுந்து பசும்பொன் வேய்ந்த இடங்களையுடைய சுற்று மாளிகையைச் சூழ்ந்து வலம் வந்து தொழுது, கைகளைத் தலைமீது கொள்வாராகி,
3267. ஆடிய திருமுன் பான அம்பொனின் கோபு ரத்தின்
ஊடுபுக் கிறைஞ்சி ஓங்கும் ஒளிவளர் கனக மன்றில்
நாடகச் செய்ய தாளை நண்ணுற வுண்ணி றைந்து
நீடும்ஆ னந்த வெள்ளக் கண்கள்நீர் நிரந்து பாய.
தெளிவுரை : ஆனந்தக் கூத்தர் ஆடும் திருமுன்பாகிய அழகிய பொன் கோபுரத்தின் வழியே உள்ளே சென்று வணங்கிப் பெருகும் ஒளிவளர்கின்ற பொன்னம்பலத்தின் ஆடும் திருவடிகளைச் சார, உள்ளே நிறைந்து நீடுகின்ற ஆனந்த வெள்ளமான கண்ணீர் இரண்டு கண்களினின்றும் இடைவிடாமல் பொழிய
3268. பரவுவாய் குளறிக் காதல் படிதிருப் படியைத் தாழ்ந்து
விரவுமெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை
உரனுறு திருக்கூத் துள்ளம் ஆர்தரப் பெருகி நெஞ்சில்
கரவிலா தவரைக் கண்ட நிறைவுதங் கருத்திற் கொள்ள.
தெளிவுரை : துதிக்கும் வாய் தழுதழுத்துக் குழறிப் பெருவிருப்பம் தரும் திருக்களிற்றுப் படியை வணங்கி மெய் பொருந்திய ஐந்து உறுப்பு எட்டு உறுப்பு என்ற முறையில் வணங்கிப் பெருகிய பேரன்பு வலுப்பட உள்ளத்தில் நிறைந்து நீடும் ஆனந்த வெள்ளமான கண்ணீர் இரண்டு கண்களினின்றும் விடாமல் சொரிய
3269. மடித்தாடும் அடிமைக்கண் என்றெடுத்து
மன்னுயிர்கட் கருளு மாற்றால்
அடுத்தாற்று நன்னெறிக்கண் நின்றார்கள்
வழுவிநர கணையா வண்ணம்
தடுப்பானைப் பேரூரிற் கண்டநிலை
சிறப்பித்துத் தனிக்கூத் தென்றும்
நடிப்பானை நாம்மனமே பெற்றவா
றெனுங்களிப்பால் நயந்து பாடி.
தெளிவுரை : மடித்தாடும் அடிமைக்கண் எனத்தொடங்கி உலகில் உயிர்களுக்கு அருள் செய்யும் வகையால் இறைவரை நெருங்கிச் செய்யும் சிவநெறியில் நின்றவர்கள், தவறி இயமன் கைப்பட்டு நரகத்தில் சேராதபடி தடுத்தாட்கொள்ளும் இறைவரைப் பேரூரில் முன்பு கண்டு வழிப்பட்ட நிலையைச் சிறப்பித்து, ஒப்பில்லாத தனிக்கூத்து ஆடுபவரை மனமே, நாம் பெற்றவாறு தான் என்னை! என்று களிப்பால் விரும்பிப் பாடி,
3270. மீளாத அருள்பெற்றுப் புறம்போந்து
திருவீதி மேவித் தாழ்ந்தே
ஆளான வன்றொண்டர் அந்தணர்கள்
தாம்போற்ற அமர்ந்து வைகி
மாளாத பேரன்பால் பொற்பதியை
வணங்கிப்போய் மறலி வீழத்
தாளாண்மை கொண்டவர்தங் கருப்பறிய
லூர்வணங்கிச் சென்று சார்ந்தார்.
தெளிவுரை : பிரியாத அருள் விடைபெற்று வெளியே வந்து திருவீதியை அணிந்து தொழுது, இறைவர்க்கு ஆளானவன் தொண்டரான சுந்தரர் அந்தணர் தம்மைப் போற்ற அங்குத் தங்கியிருந்தார். பின் ஒழியாத பேரன்பினால் அழகிய அத்திருப்பதியை வணங்கிப் போய், இயமன் விழும்படி காலால் உதைத்தருளிய இறைவரின் திருக்கருப்பறியலூரை வணங்கிப் போய்ச் சேர்ந்தார்.
3271. கூற்றுதைத்தார் திருக்கொகுடிக் கோயில் நண்ணிக்
கோபுரத்தைத் தொழுதுபுகுந் தன்பர் சூழ
ஏற்றபெருங் காதலினால் இறைஞ்சி யேத்தி
எல்லையிலாப் பெருமகிழ்ச்சி மனத்தி லெய்தப்
போற்றிசைத்துப் புறத்தணைந்தப் பதியின் வைகிப்
புனிதரவர் தமைநினையு மின்பங் கூறிச்
சாற்றியமெய்த் திருப்பதிகஞ் சிம்மாந் தென்னுந்
தமிழ்மாலை புனைந்தங்குச் சாரு நாளில்.
தெளிவுரை : கூற்றுவனை உதைத்த சிவபெருமானின் கொகுடிக் கோயிலைச் சேர்ந்து முதலில் கோபுரத்தைத் தொழுது உள்ளே புகுந்து, தொண்டர்கள் உடன் சூழ்ந்து வரப்பொருந்திய விருப்பத்தினால் வணங்கித் துதித்து அளவற்ற பெருமகிழ்ச்சி மனத்திலே பொருந்தத் துதித்து இறைவரை நினைத்ததால் வரும் இன்பத்தை எடுத்துச் சொல்லிய திருப்பதிகமான சிம்மாந்து எனத்தொடங்கும் தமிழ்மாலையைப் புனைந்து பாடி அங்கே தங்கியிருந்தார் அந்நாள்களில்,
3272. கண்ணுதலார் விரும்புகருப் பறிய லூரைக்
கைதொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்
மண்ணிவளம் படிக்கரையை நண்ணி யங்கு
மாதொருபா கத்தவர்தாள் வணங்கிப் போற்றி
எண்ணில்புகழ்ப் பதிகமுமுன் னவன்என் றேத்தி
யேகுவார் வாழ்கொளிபுத் தூரெய் தாது
புண்ணியனார் போம்பொழுது நினைந்து மீண்டு
புகுகின்றார் தலைக்கலன்என் றெடுத்துப்போற்றி.
தெளிவுரை : நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கின்ற திருக்கருப்பறியலூரைக் கைதொழுது வணங்கிச் சென்று, கயல் மீன்கள் பாய்வதற்கு இடமான நீர்வளம் வாய்ந்த திருப்பழனம் என்ற பதியை அடைந்து படிக்கரையைச் சேர்ந்து அங்கு உமையொரு பாகரான இறைவரின் திருவடிகளை வணங்கித் துதித்து அளவற்ற புகழைக் கொண்ட திருப்பதிகத்தையும் முன்னவன் எனத்தொடங்கிப் பாடித்துதித்து மேலே செல்வாராய்த் திருவாழ்கொளி புத்தூரைச் சேராமல் புண்ணியரான நம்பிகள் போகும்போது எண்ணிக்கொண்டு மீண்டும் திரும்பித் தலைக்கலன் எனத் தொடங்கிப் போற்றியவாறு புகலானார்.
3273. திருப்பதிகம் பாடியே சென்றங் கெய்தித்
தேவர்பெரு மானார்தங் கோயில் வாயில்
உருப்பொலியும் மயிர்ப்புளகம் விரவத் தாழ்ந்தே
உள்ளணைந்து பணிந்தேத்தி உருகு மன்பால்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லானைப்
போற்றிசைத்துப் புறம்போந்து தங்கிப் பூமென்
கருப்புவயல் வாழ்கொளிபுத் தூரை நீங்கிக்
கானாட்டு முள்ளூரைக் கலந்த போது.
தெளிவுரை : திருப்பதிகத்தைப் பாடி அங்கு சென்று அடைந்து தேவரின் தலைவரான சிவபெருமானின் கோயில் வாயிலை உடலில் விளங்கும் மயிர்க்கூச்செறிப்புப் பொருந்த வணங்கி உள்ளே புகுந்து, பணிந்து துதித்து, மலையரசன் மகளான உமையம்மையாரை இடப்பாகத்தில் கொண்ட இறைவரைத் துதித்து வெளியே வந்து தங்கியிருந்து, அழகிய மென்மையான கரும்புகளையுடைய அந்தத் திருவாழ்கொளி புத்தூரை நீங்கிச் சென்று திருக்கானாட்டு முள்ளூரை அடைந்தார்.
3274. கானாட்டு முள்ளூரைச் சாரும் போது
கண்ணுதலார் எதிர்காட்சி கொடுப்பக் கண்டு
தூநாள்மென் மலர்க்கொன்றைச் சடையார் செய்ய
துணைப்பாத மலர்கண்டு தொழுதே னென்று
வானாளுந் திருப்பதிகம் வள்வாய் என்னும்
வண்டமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்
தேனாரு மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த
திருவெதிர்கொள் பாடியினை யெய்தச் செல்வார்.
தெளிவுரை : அவ்வாறு கானாட்டுமுள்ளூரைச் சேரும் பொருது நெற்றிக் கண்øயுடைய இறைவர் எதிரே காட்சி தரக்கண்டு, தொழுதேன் என்ற கருத்தைப் புலப்படுத்தி, வானவர் உலகையும் பணி கொள்ளும் இயல்புடைய வள்வாய் எனத்தொடங்கும் வளமை உடைய தமிழ் மாலையை அழகு பொருந்தச் சாத்தினேன் பொருந்திய மலர்கள் நிறைந்த பூஞ்சோலைகள் பக்கத்தில் சூழ்ந்த திரு எதிர்கொள்பாடியை அடையச் செல்லத் தொடங்கி,
3275. எத்திசையுந் தொழுதேத்த மத்த யானை
எடுத்தெதிர்கொள் பாடியினை அடைவோம் என்னும்
சித்தநிலைத் திருப்பதிகம் பாடிவந்து
செல்வமிகு செழுங்கோயி லிறைஞ்சி நண்ணி
அத்தர்தமை அடிவணங்கி அங்கு வைகி
அருள்பெற்றுத் திருவேள்விக் குடியி லெய்தி
முத்திதரும் பெருமானைத் துருத்தி கூட
மூப்பதிலை எனும்பதிகம் மொழிந்து வாழ்ந்தார்.
தெளிவுரை : எல்லாத் திசைகளில் உள்ளவரும் வணங்கித் துதிக்க மத்தயானை எனத்தொடங்கித் திருஎதிர்கொள்பாடியை அடைவோம் என்னும் சித்த நிலையான திருப்பதிகத்தைப் பாடி வந்து, அருள் செல்வம் மிக்க செழுந்திருக்கோயிலை வணங்கிச் சேர்ந்து, இறைவரின் திருவடியை வணங்கி, அந்தப் பதியில் தங்கி, அருள் விடைபெற்றுச் சென்று, திருவேள்விக்குடியில் சேர்ந்து வீடுபேற்றை அளிக்கும் இறைவரைத் திருத்துருத்தியையும் கூட்டி, மூப்பதிலை எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடித் துதித்து வாழ்வு பெற்றார்.
3276. காட்டுநல் வேள்விக் கோலங் கருத்துற வணங்கிக் காதல்
நாட்டிய உள்ளத் தோடு நம்பிஆ ரூரர் போற்றி
ஈட்டிய தவத்தோர் சூழ அங்குநின் றேகி அன்பு
பூட்டிஆட் கொண்டார் மன்னுந் தானங்கள் இறைஞ்சிப் போந்து.
தெளிவுரை : நம்பியாரூரர், இறைவர் அங்குக் காட்டிய நல்ல திருமணக்கோலம் தம் உள்ளத்தில் பொருந்த வணங்கிப் பெருவிருப்பம் ஊன்றிய உள்ளத்துடன் துதித்துப் பலகாலம் முயன்று செய்த தவத்தையுடைய தொண்டர்கள் சூழ்ந்து வர, அங்கிருந்து புறப்பட்டுப் போய் அன்பால் பிணைத்துத் தம்மை ஆட்கொண்ட இறைவர் நிலையாய் வீற்றிருக்கின்ற தலங்களை வணங்கிச் சென்று,
3277. எஞ்சாத பேரன்பில் திருத்தொண்ட ருடனெய்தி
நஞ்சாருங் கறைமிடற்றார் இடம்பலவு நயந்தேத்தி
மஞ்சாரும் பொழிலுடுத்த மலர்த்தடங்கள் புடைசூழுஞ்
செஞ்சாலி வயன்மருதத் திருவாரூர் சென்றடைந்தார்.
தெளிவுரை : எந்நாளும் குறைவுபடாத பேரன்பு கொண்ட தொண்டருடன் கூடிச் சென்று நஞ்சு பொருந்திய கரிய கழுத்தையுடைய சிவபெருமானின் பதிகள் பலவற்றையும் சூழ்ந்த பூம்பொய்கைகள் பக்கங்களில் பொருந்தியுள்ள செந்நெல் வயல்கள் மிக்க மருதநிலங்களையுடைய திருவாரூரைப் போய் அடைந்தார்.
3278. செல்வமலி திருவாரூர்த் தேவரொடு முனிவர்களும்
மல்குதிருக் கோபுரத்து வந்திறைஞ்சி உள்புக்கங்
கெல்லையிலாக் காதன்மிக எடுத்தமலர்க் கைகுவித்துப்
பல்குபெருந் தொண்டருடன் பரமர்திரு முன்னணைந்தார்.
தெளிவுரை : செல்வம் நிறைந்த திருவாரூரிலே தேவர்களுடன் முனிவர்களும் நெருங்கியுள்ள கோபுரத்தை வணங்கிக் கோயிலுள் புகுந்து அங்கு அளவு இல்லாத காதல் மிகுதியால் தலைமீது கைகளைக் குவித்து மிக்க தொண்டர்களுடனே கூடி, இறைவரின் திருமுன் சேர்ந்தார்.
3279. மூவாத முதலாகி நடுவாகி முடியாத
சேவாருங் கொடியாரைத் திருமூலட் டானத்துள்
ஓவாத பெங்காதல் உடனிறைஞ்சிப் புறம்போந்து
தாவாத புகழ்ப்பரவை யார்திருமா ளிகைசார்ந்தார்.
தெளிவுரை : எந்நாளும் மூப்பினை அடையாத முதலும் நடுவும் ஆகி முடிதலும் இல்லாத காளைக் கொடியையுடைய இறைவரை திருமூலத் தானத்தில் ஒழியாத-பெருவிருப்புடன் வணங்கி, வெளியே வந்து, கெடுதல் இல்லாத புகழையுடைய பரவையாரின் மாளிகையை அடைந்தார்.
3280. பொங்குபெரு விருப்பினொடு புரிகுழலார் பலர்போற்றப்
பங்கயக்கண் செங்கனிவாய்ப் பரவையார் அடிவணங்கி
எங்களையும் நினைந்தருளிற் றெனஇயம்ப இனிதளித்து
மங்கைநல்லா ரவரோடும் மகிழ்ந்துறைந்து வைகுநாள்.
தெளிவுரை : பெருகும் மிக்க விருப்பத்துடன் பின்னிய புரிந்த கூந்தலையுடைய தோழியர் துதிக்க, தாமரை மலரைப் போன்ற கண்களையும் சிவந்த கனிபோன்ற வாயையும் உடைய பரவையார் நம்பியாரூரரிடம் வந்து, திருவடிகளில் வணங்கி, எங்களையும் நினைத்து எழுந்தருளிய தங்கள் அருளுக்கு யாம் அருள் உடையோமோ? என்று சொல்ல, அவருக்கு இனிய சொற்களைச் சொல்லி மங்கை நல்லாரான அவருடனே மகிழ்ச்சியுடன் தங்கியிருந்தார். அந்நாள்களில்,
3281. நாயனார் முதுகுன்றர் நமக்களித்த நன்னிதியம்
தூயமணி முத்தாற்றில் புகவிட்டேம் துணைவரவர்
கோயிலின்மா ளிகைமேல்பால் குளத்தில்அவ ரருளாலே
போய்எடுத்துக் கொடுபோதப் போதுவாய் எனப்புகல.
தெளிவுரை : திருமுதுகுன்றத்தில் சிவபெருமான் நமக்குத் தந்த நல்ல நிதியான பொன்னைத் தூயமணி முத்தாற்றில் விட்டோம். அதைத் துணைவரான சிவபெருமானின் இத்திருக்கோயில் மாளிகையின் மேற்குத் திக்கில் உள்ள கமலாலயம் என்ற குளத்தில் அவரது அருளால் போய் எடுத்துக் கொண்டு வருவதற்கு என்னுடன் வருவாயாக என்று நம்பி ஆரூரர் உரைத்தார்.
3282. என்னஅதி சயம்இதுதான் என்சொன்ன வாறென்று
மின்னிடையார் சிறுமுறுவ லுடன்விளம்ப மெய்யுணர்ந்தார்
நன்னுதலாய் என்னுடைய நாதனரு ளாற்குளத்தில்
பொன்னடைய எடுத்துனக்குத் தருவதுபொய் யாதென்று.
தெளிவுரை : மின்னல் போன்ற இடையையுடைய பரவையார், என்ன வியப்பு இது! நீங்கள் சொல்லியவாறு தான் என்னே!  என்று புன்முறுவலுடன் கூற, மெய்யுணர்வுடைய நம்பியாரூரர் நல்ல நெற்றியை உடையவளே! என் நாயகரின் அருளால் இந்தக் குளத்தில் பொன் முழுவதும் எடுத்து உனக்கு நான் தருவது பொய்க்காது! எனச் சொல்லி,
3283. ஆங்கவரும் உடன்போத வளவிறந்த விருப்பினுடன்
பூங்கோயி லுண்மகிழ்ந்த புராதனரைப் புக்கிறைஞ்சி
ஓங்குதிரு மாளிகையை வலம்வந்தங் குடன்மேலைப்
பாங்குதிருக் குளத்தணைந்தார் பரவையார் தனித்துணைவர்.
தெளிவுரை : அங்கு தம்முடன் அந்தப் பரவையாரும் வர, அளவு கடந்த விருப்பத்துடன் பூங்கோயிலுள் எழுந்தருளியுள்ள புனிதரான இறைவர் திருவடிகளை, அந்தக் கோயிலுள் புகுந்து வணங்கி, ஓங்கிய மாளிகையை வலமாகச் சுற்றி வந்து, பரவையாரின் தனித் துணைவரான நம்பி ஆரூரர் அந்த இடத்தினின்றும் உடனே மேற்குப் பக்கத்தில் உள்ள கமலாலயத் திருக்குளத்தை அடைந்தார்.
3284. மற்றதனின் வடகீழ்பால் கரைமீது வந்தருளி
முற்றிழையார் தமைநிறுத்தி முனைப்பாடித் திருநாடர்
கற்றைவார் சடையாரைக் கைதொழுது குளத்தில்இழிந்து
அற்றைநாள் இட்டெடுப்பார் போல்அங்குத் தடவுதலும்.
தெளிவுரை : அந்தக் குளத்தின் வடகிழக்குப் பக்கத்தில் உள்ள கரைக்கு வந்து பரவையாரை நிறுத்தி, நம்பி ஆரூரர் கற்றையான சடையையுடைய இறைவரைக் கையால் வணங்கித் தொழுது, குளத்திலே இறங்கி அன்றைய தினமே அப்போதே இட்டுவிட்டு எடுப்பவரைப் போல் அங்குத் (தடவினார்) தடவுதலும்,
3285. நீற்றழகர் பாட்டுவந்து திருவிளையாட் டில்நின்று
மாற்றுறுசெம் பொன்குளத்து வருவியா தொழிந்தருள
ஆற்றினிலிட் டுக்குளத்தில் தேடுவீர் அருளிதுவோ
சாற்றுமெனக் கோற்றொடியார் மொழிந்தருளத் தனித்தொண்டர்.
தெளிவுரை : திருநீற்றை அணிந்த அடிகளான இறைவர் நம்பி ஆரூரரின் பாட்டினை விரும்பித் திருவிளையாட்டைச் செய்ய எண்ணி, மாற்று உயர்ந்த பொன்னைக் குளத்தில் தேடுவீர்! அருள் இருந்தவாறு இதுவோ? கூறுவீராக! என வளையலை அணிந்த பரவையார் கூறியருள, ஒப்பில்லாத தொண்டரான நம்பி ஆரூரர்,
3286. முன்செய்த அருள்வழியே முருகலர்பூங் குழற்பரவை
தன்செய்ய வாயில்நகை தாராமே தாருமென
மின்செய்த நூன்மார்பின் வேதியர்தாம் முதுகுன்றில்
பொன்செய்த மேனியினீர் எனப்பதிகம் போற்றிசைத்து.
தெளிவுரை : மணம் அவிழும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய பரவையாரின் சிவந்த வாயில் நகை செய்யாதபடி முன்னர்த் திருமுது திருகுன்றத்தில் செய்த அருளின்படியே பொன்னைத் தந்தருள்வீர்! என்னும் கருத்துடன் விளங்கும், பூணூலை அணிந்த மார்பினையுடைய நம்பி ஆரூரர் திருமுது குன்றத்தில் வீற்றிருக்கின்ற பொன் போன்ற மேனியையுடையவரே! எனத் தொடங்கிய திருப்பதிகத்தால் துதித்து,
3287. முட்டஇமை யோரறிய முதுகுன்றில் தந்தபொருள்
சட்டநான் பெறாதொழிந்த தளர்வினால் கையறவாம்
இட்டளத்தை இவளெதிரே கெடுத்தருளும் எனுந்திருப்பாட்
டெட்டளவும் பொன்காட்டா தொழிந்தருள ஏத்துவார்.
தெளிவுரை : தேவர் யாவரும் அறியும்படி திருமுதுகுன்றத்தில் தந்த பொருளை விரைவில் நான் பெறாது விட்ட தளர்ச்சியால் வந்த செயலற்ற தன்மையுடைய துன்பத்தை இந்தப் பரவையாரின் எதிரிலே தீர்த்தருளும் என்ற கருத்துடைய எட்டாம் திருப்பாட்டின் அளவும் பொன்னை இறைவர் அங்கு வருவித்துக் காட்டாமல் போனார். நம்பி ஆரூரர், அதனால் மேலும் துதிப்பாராகி,
3288. ஏத்தாதே இருந்தறியேன் எனுந்திருப்பாட் டெவ்வுலகும்
காத்தாடும் அம்பலத்துக் கண்ணுளனாங் கண்ணுதலைக்
கூத்தாதந் தருளாய்இக் கோமளத்தின் முன்னென்று
நீத்தாருந் தொடர்வரிய நெறிநின்றார் பரவுதலும்.
தெளிவுரை : எப்போதும் துதிக்காமல் இருந்தறியேன்! என்ற கருத்துடன் அத்தொடக்கமுடைய பாட்டினை எல்லா உலகங்களையும் காத்தருள்பவரான அம்பலத்தில் உள்ள நெற்றிக் கண்ணரான இறைவரை, அருட்பெருங்கூத்தனே! இந்தக் கோமளமான பரவையாரின் முன் (பொன்னைத்) தந்தருளுக! என்று நீத்தார்களாகிய துறவியராலும் தொடர்வதற்கரிய நெறியில் நின்ற நம்பியாரூரர் துதிக்கவும்,
3289. கொந்தவிழ்பூங் கொன்றைமுடிக் கூத்தனார் திருவருளால்
வந்தெழுபொன் திரளெடுத்து வரன்முறையாற் கரையேற்ற
அந்தரத்து மலர்மாரி பொழிந்திழிந்த தவனியுளோர்
இந்தஅதி சயமென்னே யார்பெறுவார் எனத்தொழுதார்.
தெளிவுரை : கொத்துக்களாய் மலர்கின்ற கொன்றைப் பூக்களை அணிந்த கூத்தப்பெருமானின் திருவருளால் வந்து தோன்றிய பொற்குவியலை எடுத்து முறைப்படி நம்பியாரூரர் கரையேற, தேவர் உலகத்தினின்றும் பூமழை பொழிந்து விழுந்தது. இவ்வுலகத்தில் உள்ளவர், இந்த அதிசயம் இருந்தவாறு என்னே! இவ்வாறு வேறு யார்தான் பெற வல்லார்? எனக் கூறி வணங்கினார்.
பொன் செய்த மேனியினீர் என்பது பதிகத் தொடக்கம்.
3290. ஞாலம்வியப் பெய்தவரு நற்கனகம் இடையெடுத்து
மூலமெனக் கொடுபோந்த ஆணியின்முன் னுரைப்பிக்க
நீலமிடற் றவரருளால் உரைதாழப் பின்னும் நெடு
மாலயனுக் கரியகழல் வழுத்தினார் வன்றொண்டர்.
தெளிவுரை : உலகத்தவர் எல்லாம் வியப்பு அடையுமாறு வந்த பொன்னின் இடையில் எடுத்து மாற்றுக்கு மூலமாகத் தாம் முன்பு மச்சம் எடுத்து வந்த மாற்றாணியுடன் ஒப்பிட்டு உரைத்துப் பார்க்கத் திருநீலகண்டரான சிவபெருமானின் திருவருளால் மாற்றுத் தாழ்ந்திருக்கத் திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரிய திருவடிகளைப் பின்னும் துதிப்பவர் ஆனார்.
3291. மீட்டுமவர் பரவுதலும் மெய்யன்ப ரன்பில்வரும்
பாட்டுவந்து கூத்துவந்தார் படுவாசி முடிவெய்தும்
ஓட்டறுசெம் பொன்னொக்க ஒருமாவுங் குறையாமல்
காட்டுதலும் மகிழ்ந்தெடுத்துக் கொண்டுகரை யேறினார்.
தெளிவுரை : மீண்டும் நம்பியாரூரர் அது பற்றித் துதித்து வேண்டவும், உண்மையான அன்பரான அவரது அன்பில் ஊற்றெடுத்து வரும் பாட்டை மகிழ்ந்து, கூத்தாடும் பெருமான் உண்டான குறைவு நீங்கிய மாற்று உயர்ந்த செம்பொன்னை ஒரு மாப்பொன் தன்மையும் குறையாமல் காட்டவும், மகிழ்ச்சியுடன் கையில் எடுத்துக் கொண்டு நம்பியாரூரர் கரையில் ஏறினார்.
3292. கரையேறிப் பரவையா ருடன்கனக மானதெலாம்
நிரையேஆ ளிற்சுமத்தி நெடுநிலைமா ளிகைபோக்கித்
திரையேறும் புனற்சடிலத் திருமூலட் டானத்தார்
விரையேறு மலர்ப்பாதந் தொழுதணைந்தார் வீதியினில்.
தெளிவுரை : கரையில் ஏறிச்சென்று, பொன்னை எல்லாம் வரிசைப்பட ஆண்களின் மேல் சுமையாய் ஏற்றுவித்துப் பரவையாருடன் பெரிய நிலையையுடைய மாளிகையில் செல்லும்படி அனுப்பி, அலைவீசும் கங்கையைத் தாங்கிய சடையையுடைய திருமூலத்தானேசுவரரின் மணமுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளைச் சென்று வணங்கி, அதன் பின்பு சுந்தரர் திருவீதியில் வந்தருளினார்.
3293. வந்துதிரு மாளிகையின் உட்புகுந்து மங்கலவாழ்த்து
அந்தமிலா வகைஏத்தும் அளவிறந்தார் ஒலிசிறப்பச்
சிந்தை நிறைமகிழ்ச்சியுடன் சேயிழையாருடன் அமர்ந்தார்
கந்தமலி மலர்ச்சோலை நாவலர்தங் காவலனார்.
தெளிவுரை : வந்து பரவையாரின் மாளிகைக்குள் புகுந்து அளவில்லாத பேர்கள் எல்லையில்லாத வகையினால் ஏத்தும் மங்கல வாழ்த்து ஒலி விளங்கி ஒலிக்க மணம் கமழும் பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநாவலூர் தலைவரான சுந்தரர் மன நிறைவான மகிழ்ச்சியோடும் பரவையாருடன் விரும்பித் தங்கியிருந்தார்.
3294. அணியாரூர் மணிப்புற்றில் அமர்ந்தருளும் பரம்பொருளைப்
பணிவார்அங் கொருநாளில் பாராட்டுந் திருப்பதிகம்
தணியாத ஆனந்தம் தலைசிறப்பத் தொண்டருடன்
துணிவாய பேரருள்வினவித் தொழுதாடிப் பாடுவார்.
தெளிவுரை : அழகிய திருவாரூர்த் தலத்தில் மணிப்புற்றில் இடமாக விரும்பி வீற்றிருக்கின்ற பெருமானைப் பணிபவரான நம்பியாரூரர் அங்கு ஒருநாளில், இறைவரைப் போற்றுகின்ற திருப்பதிகத்தில் தணிவற்ற ஆனந்தம் மேல் எழத்திருத்தொண்டருடன் துணிவுபடப்  பேரருளின் திறங்களைத் தனித்தனி வினவுகின்ற வகையினால் வணங்கியும் ஆடியும் பாடுவாருமாகி நம்பியாரூரர்,
3295. பண்ணிறையும் வகைபாறு தாங்கியென வெடுத்தருளி
உண்ணிறையும் மனக்களிப்பால் உறுபுளகம் மயிர்முகிழ்ப்பக்
கண்ணிறையும் புனல்பொழியக் கரையிகந்த ஆனந்தம்
எண்ணிறைந்த படிதோன்ற ஏத்திமதிழ்ந் தின்புற்றார்.
தெளிவுரை : பண்ணின் இசை நிறைவு கொள்ளும்படி பாறுதாங்கி எனத் தொடங்கி, உள்ளத்துள் நிறைந்த மகிழ்ச்சி பொருந்த திருமேனியில் மயிர்கூச்செறிப்புக் கொள்ளவும் கண்கள் நிறைய நீர் சொரியவும், அளவில்லாத ஆனந்தம் எண்ணிறைந்தபடி தோன்றவும் துதித்து மகிழ்ந்து இன்பம் அடைந்தார்.
3296. இன்புற்றங் கமர்நாளில் ஈறிலரு மறைபரவும்
வன்புற்றில் அரவணிந்த மன்னவனா ரருள்பெற்றே
அன்புற்ற காதலுடன் அளவிறந்த பிறபதியும்
பொன்புற்கென் றிடவொளிருஞ் சடையாரைத் தொழப்போவார்.
தெளிவுரை : இன்பம் அடைந்து அங்குத் தங்கியிருக்கும் நாளில், எல்லையில்லாத வேதங்கள் துதித்து ஏத்துகின்ற வலிய புற்றின் பாம்பை அணிந்த மன்னவரின் திருவருள் விடைபெற்று, அன்பால் நிறைந்த பெரு விருப்பத்துடன் அளவில்லாத மற்றப் பதிகளிலும் பொன்னின் ஒளியும் கருமையுடையது என்னுமாறு ஒளிமிக்கு விளங்கும் சடையையுடைய இறைவரை வணங்குவதற்குச் செல்பவராய்,
3297. பரிசனமும் உடன்போதப் பாங்கமைந்த பதிகள்தொறும்
கரியுரிவை புனைந்தார்தம் கழல்தொழுது மகிழ்ந்தேத்தித்
துரிசறுநற் பெருந்தொண்டர் நள்ளாறு தொழுவதற்குப்
புரிவுறுமெய்த் திருத்தொண்டர் எதிர்கொள்ளப் புக்கணைந்தார்.
தெளிவுரை : தம் பரிவாரங்களும் உடன்வர, பக்கங்களில் உள்ள பதிகள் எங்கும் போய் யானைத் தோலை உரித்த இறைவரின் திருவடிகளை வணங்கி மகிழ்ச்சியுடன் துதித்துக் குற்றம் இல்லாத நல்ல தொண்டரான நம்பியாரூரர் திருநள்ளாற்றைத் தொழுவதற்கு எண்ணிச் சென்று சிவசிந்தனை மறவாத உண்மைத் திருத்தொண்டர்கள் எதிர்கொண்டு வரவேற்க அங்குப் புகுந்து சேர்ந்தார்.
3298. விண்தடவு கோபுரத்தைப் பணிந்துகர மேல்குவித்துக்
கொண்டுபுகுந் தண்ணலார் கோயிலினை வலஞ்செய்து
மண்டியபே ரன்பினொடு மன்னுதிரு நள்ளாறர்
புண்டரிகச் சேவடிக்கீழ்ப் பொருந்தநில மிசைப்பணிந்தார்.
தெளிவுரை : நம்பியாரூரர் வானத்தை அளாவ உயர்ந்த கோபுரத்தின் முன்பு நிலமுற விழுந்து வணங்கி எழுந்து, கைகளை உச்சி மீது குவித்துக் கொண்டு உள்ளே போய்ப் புகுந்து கோயிலை வலமாகச் சுற்றி வந்து, மிக்க பேரன்புடன் நிலைபெற்ற திருநள்ளாற்று இறைவரின் தாமரை போன்ற அழகிய திருவடிகளில் பொருந்துமாறு  நிலத்தில் விழுந்து வணங்கினார்.
3299. அங்கணரைப் பணிந்தேத்தி அருளினால் தொழுதுபோய்
மங்குலணி மணிமாடத் திருக்கடவூர் வந்தெய்தித்
திங்கள்வளர் முடியார்தந் திருமயா னமும்பணிந்து
பொங்குமிசைப் பதிகம்மரு வார்கொன்றை யெனப்போற்றி.
தெளிவுரை : சுந்தரர், இறைவரை வணங்கித் துதித்து விடைபெற்றுத் தொழுது போய், மேகங்கள் பொருந்தும் அழகிய மாடங்கள் நிறைந்த திருக்கடவூரினை அடைந்து சேர்ந்து, பிறைச்சந்திரன் வளர்வதற்கு இடமான திருமுடியையுடைய இறைவரின் திருக்கடவூர் மயானத்தையும் வணங்கி, மேன்மேல் பொங்கும் இசையுடைய பதிகத்தை மருவார் கொன்றை எனத் தொடங்கித் துதித்து,
3300. திருவீரட் டானத்துத் தேவர்பிரான் சினக்கூற்றின்
பொருவீரந் தொலைத்தகழல் பணிந்துபொடி யார்மேனி
மருவீரத் தமிழ்மாலை புனைந்தேத்தி மலைவளைத்த
பெருவீரர் வலம்புரத்துப் பெருகார்வத் தொடுஞ்சென்றார்.
தெளிவுரை : திருக்கடவூர்த் திருவீரட்டானத்தில் வீற்றிருக்கும் தேவதேவரின், சினம் பொருந்திய இயமனின் போரிடும் வீரத்தைத் தொலைத்த திருவடியைப் பணிந்து பொடியார்மேனி எனத்தொடங்கும் அன்புமிக்க தமிழ்மாலையைப் பாடித் துதித்துச் சுந்தரர் பொன்மலையை வில்லாக வளைத்த பெருவீரரான சிவபெருமான் வீற்றிருக்கும் திருவலம்புரத்திலே பெருகிய ஆர்வத்துடன் போய்ச் சேர்ந்தார்.
3301. வரையோடு நிகர்புரிசை வலம்புரத்தார் கழல்வணங்கி
உரையோசைப் பதிகம்எனக் கினியோதிப் போய்ச்சங்க
நிரையோடு துமித்தூப மணித்தீப நித்திலப்பூந்
திரையோதங் கொண்டிறைஞ்சுந் திருச்சாய்க்கா டெய்தினார்.
தெளிவுரை : மலை போன்ற மதிலையுடைய திருவலம்புரத்தில் வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளை வணங்கிச் சொல்லும் பொருளும் ஒத்துப் பொருந்தும் எனக்கினி எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மேலே சென்று, சங்கு வரிசைகளான வாத்தியங்களுடன் அலை நுரைத் திவலைகளான தூபத்தையும், நவமணிகளால் ஆன தீபத்தையும் அலைகள் என்னும் கைகளால் எடுத்துக் கொண்டு வழிபாடு செய்வதற்கு இடமான திருச்சாய்க்காட்டை அடைந்தார்.
3302. தேவர்பெரு மான்தன்னைத் திருச்சாய்க்காட் டினிற்பணிந்து
பாவலர்செந் தமிழ்மாலைத் திருப்பதிகம் பாடிப்போய்
மேவலர்தம் புரமெரித்தார் வெண்காடு பணிந்தேத்தி
நாவலர்கா வலரடைந்தார் நனிபள்ளித் திருநகரில்.
தெளிவுரை : நாவலர் பெருமானான சுந்தரர், தேவர்களின் பெருமானைத் திருச்சாய்க்காட்டில் வணங்கிப் பாக்களின் தன்மை விளங்கும் செந்தமிழ் மாலையான திருப்பதிகத்தைப் பாடி, மேலே சென்று பகைவர்களின் திருவெண்காட்டை வணங்கித் துதித்து அதன் பின்னர்ப் போய்த் திருநனிபள்ளித் திருநகரத்தை அடைந்தார்.
3303. நனிபள்ளி யமர்ந்தபிரான் கழல்வணங்கி நற்றமிழின்
புனிதநறுந் தொடைபுனைந்து திருச்செம்பொன் பள்ளிமுதல்
பனிமதிசேர் சடையார்தம் பதிபலவும் பணிந்துபோய்த்
தனிவிடைமேல் வருவார்தம் திருநின்றி யூர்சார்ந்தார்.
தெளிவுரை : திருநனிபள்ளியில் விருப்பத்துடன் வீற்றிருக்கின்ற இறைவரின் திருவடிகளை வணங்கி நல்ல தமிழின் இனிய தூய நல்ல மாலையைப் பாடித் திருசெம்பொன்பள்ளி முதலாகக் குளிர்ந்த பிறைச்சந்திரனைச் சூடிய சடையையுடைய இறைவரின் பல பதிகளையும் வணங்கிச் சென்று ஒப்பில்லாத காளையின் மேல் வரும் இறைவரும் திருநின்றியூரைச் சேர்ந்தார்.
3304. நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கிறைஞ்சி
ஒன்றியஅன் புள்ளுருகப் பாடுவார் உடையஅர
சென்றுமுல கிடர்நீங்கப் பாடியஏ ழெழுநூறும்
அன்றுசிறப் பித்தஞ்சொல் திருப்பதிகம் அருள்செய்தார்.
தெளிவுரை : திருநின்றியூரில் வீற்றிருப்பவரை அன்புடன் உள்ளே புகுந்து வணங்கிப் பொருந்திய அன்பினால் உள்ளமானது உருகப் பாடுவாராகி, ஆளுடைய அரசுகள் எக்காலத்தும் உலகம் துன்பம் நீங்கி இன்பம் அடையுமாறு பாடிய ஏழு எழுநூறு பதிகங்களைப் பற்றிப் பாராட்டிப் போற்றி அழகிய சொற்களால் அமைந்த திருப்பதிகத்தைப் பாடினார்.
3305. அப்பதியில் அன்பருடன் அமர்ந்தகல்வார் அகலிடத்தில்
செப்பரிய புகழ்நீடூர் பணியாது செல்பொழுதில்
ஒப்பரிய வுணர்வினால் நினைந்தருளித் தொழலுறுவார்
மெய்ப்பொருள்வண் தமிழ்மாலை விளம்பியே மீண்டணைந்தார்.
தெளிவுரை : அந்தத் தலத்தில் அன்பர்களுடன் தங்கியிருந்து மேலே புறப்பட்டுச் செல்பவராய்ச் சொல்வதற்கரிய புகழ் நீடுரினைப் பணியாமல் செல்லும்போது, ஒப்பில்லாத மெய்யுணர்வால் நினைந்து வந்து தொழுவதை மேற்கொள்பவரான நம்பியூரர் மெய்ப்பொருளையுடைய வளமையான தமிழ்மாலைப் பதிகம் பாடித் திரும்ப வந்தணைந்தார்.
3306. மடலாரும் புனல்நிடூர் மருவினர்தாள் வணங்காது
விடலாமே எனுங்காதல் விருப்புறும்அத் திருப்பதிகம்
அடலார்சூ லப்படையார் தமைப்பாடி அடிவணங்கி
உடலாரும் மயிர்ப்புளகம் மிகப்பணிந்தங் குறைகின்றார்.
தெளிவுரை : இதழ்கள் பொருந்திய மலர்ந்த நீர்கள் நிறைவளம் உடைய திருநீடுரில் பொருந்தி வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளை வணங்காமல் விட்டுப் போகலாமோ? என்னும் ஆசையைப் புலப்படுத்திடும் விருப்பம் அமைந்த திருப்பதிகத்தால், வல்லமையுடைய சூலப்படையையுடைய சிவபெருமானின் திருவடிகளைப்பாடி நிலத்தில் வீழ்ந்து வணங்கி, மேன்மேல் அதிகரிக்கும் விருப்பத்துடன் திருப்பதிகம் பாடித் துதித்தார்.
3307. அங்கண்இனி தமர்ந்தருளால் திருப்புன்கூ ரணைத்திறைஞ்சிக்
கொங்கலரும் மலர்ச்சோலைத் திருக்கோலக் காஅணையக்
கங்கைசடைக் கரந்தவர்தாம் எதிர்காட்சி கொடுத்தருளப்
பொங்குவிருப் பால்தொழுது திருப்பதிகம் போற்றிசைப்பார்.
தெளிவுரை : அங்கு இனிதாய்த் தங்கி அருள்விடை பெற்றுத் திருப்புன்கூரில் போய் வணங்கி, மேலே சென்று மணம் மிகுந்த சோலை சூழ்ந்த திருக்கோலக்காவை அடையவே, கங்கையாற்றைச் சடையிலே கொண்ட சிவபெருமான் நகரத்தில் காட்சி தந்தருள, மேன்மேல் அதிகரிக்கின்ற மிக்க விருப்பத்துடன் தொழுது திருப்பதிகம் பாடி வணங்கலானார்.
3308. திருஞான சம்பந்தர் திருக்கைக ளால் ஒற்றிப்
பெருகார்வத் துடன்பாடப் பிஞ்ஞகனார் கண்டிரங்கி
அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப்
பொருள்மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றிசைத்தார்.
தெளிவுரை : திருஞானசம்பந்தர் தம் திருக்கைகளால் தாள இசை ஒத்தறுத்துப் பெருகும் ஆர்வத்துடனே பாட, இறைவர் அதைக் கண்டு இரங்கித் திருவருளால் பொன்தாளம் தந்தருளிய தன்மையைப் பாராட்டித் துதித்து, மெய்ப்பொருள் விளங்கும் மாலையான திருப்பதிகத்தை பாடித் துதித்தார்.
3309. மூவாத முழுமுதலார் முதற்கோலக் காஅகன்று
தாவாத புகழ்ச்சண்பை வலங்கொண்டு தாழ்ந்திறைஞ்சி
நாவார்முத் தமிழ்விரகர் நற்பதங்கள் பரவிப்போய்
மேவார்தம் புரஞ்செற்றார் குருகாவூர் மேவுவார்.
தெளிவுரை : எக்காலத்தும் முதுமை அடையாத முழு முதல்வரான இறைவரின் சிறந்த திருக்கோலக்காவை அகன்றுகெடாத புகழையுடைய சீகாழிப் பதியை வலமாகச் சுற்றி வந்து நிலத்தில் பொருந்த வீழ்ந்து வணங்கி, நாவார்ந்த முத்தமிழ் வல்லுநரான திருஞானசம்பந்தரின் திருவடிகளை வணங்கிச் சென்று பொருந்தாத பகைவர்கள் வாழும் முப்புரங்களையும் அழித்த சிவபெருமானின் திருக்குருகாவூரைச் சேரலானார்.
3310. உண்ணீரின் வேட்கையுடன் உறுபசியால் மிகவருந்திப்
பண்ணீர்மை மொழிப்பரவை யார்கொழுநர் வரும்பாங்கர்க்
கண்ணீடு திருநுதலார் காதலவர் கருத்தறிந்து
தண்ணீரும் பொதிசோறும் கொண்டுவழிச் சார்கின்றார்.
தெளிவுரை : பருகும் நீர் வேட்கையுடன் பொருந்திய பசியாலும் மிகவும் வருந்திப் பெண்ணின் நீர்மையுடைய மொழியுடைய பரவையாரின் கணவரான நம்பியாரூரர் வரும் பக்கத்தில், கண் பொருந்திய நெற்றியையுடைய இறைவர் தம்மிடம் பக்தியுடைய நம்பியாரூரரின் கருத்தை அறிந்தவராதலால், தண்ணீரையும் கட்டுச் சோற்றையும் தம்முடன் கொண்டு அந்த வழியில் சார்பவராய்,
3311. வேனிலுறு வெயில்வெம்மை தணிப்பதற்கு விரைக்குளிர்மென்
பானல்மலர்த் தடம்போலும் பந்தரொரு பாலமைத்தே
ஆனமறை வேதியராய் அருள்வேடங் கொண்டிருந்தார்
மானமருந் திருக்கரத்தார் வன்தொண்டர் தமைப்பார்த்து.
தெளிவுரை : வேனிற் காலத்தில் பொருந்து வெயிலின் வெப்பத்தினைத் தணிப்பதற்கு மணமும் குளிர்ச்சியும் உடைய மென்மையான செங்கழுநீர்ப் பொய்கையைப் போன்ற பந்தலை ஒரு பக்கத்தில் அமைத்து, மான் பொருந்திய கையையுடைய இறையவர் மறை அந்தணராய் அருளுடைய திருக்கோலத்தை மேற்கொண்டு நம்பியாரூரர் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
3312. குருகாவூர் அமர்ந்தருளும் குழகர்வழி பார்த்திருப்பத்
திருவாரூர்த் தம்பிரான் தோழர்திருத் தொண்டருடன்
வருவார்அப் பந்தரிடைப் புகுந்துதிரு மறையவர்பால்
பெருகார்வஞ் செலவிருந்தார் சிவாயநம வெனப்பேசி.
தெளிவுரை : திருக்குருகாவூரில் விருப்பத்துடன் வீற்றிருக்கும் குழகரான சிவபெருமான் முன் சொன்னவாறு நாவலுர் நம்பி வரும் வழியினை எதிர்பார்த்திருந்தார். திருவாரூரில் உள்ள தம்பிரான் தோழரான சுந்தரர் அடியார்களுடன் வருபவர் அந்தப் பந்தருள் புகுந்து, அந்தணர் கோலத்தில் அங்கு இருந்த இறைவரிடம் மிக்க ஆர்வம் சென்றதால் அவரருகே சிவாயநம எனக் கூறியமர்ந்தார்.
3313. ஆலநிழற் கீழிருந்தார் அவர்தம்மை எதிர்நோக்கிச்
சாலமிகப் பசித்தீர்இப் பொதிசோறு தருகின்றேன்
காலமினித் தாழாமே கைக்கொண்டிங் கினிதருந்தி
ஏலநறுங் குளிர்தண்ணீர் குடித்திளைப்புத் தீரஎன.
தெளிவுரை : வடஆலமரத்தின் கீழ் இருந்தவரான சிவபெருமான் முன்கூறியவாறு நம்பியாரூரரை எதிர்நோக்கி நீர் அதிகமாகவும் பசியுடன் உள்ளீர்! என்னிடம் இந்தக் கட்டுச் சோற்றைத் தருகின்றேன். இனியும் காலம் தாழ்க்காமல் இதைப் பெற்று இங்கு இனிதாய் உண்டு, பொருந்தும்படி நல்ல குளிர்ந்த தண்ணீரைக் குடித்து இளைப்பைத் தீர்த்துக் கொள்க! என்று கூற,
3314. வன்தொண்டர் அதுகேட்டு மறைமுனிவர் தரும்பொதிசோறு
இன்றுநமக் கெதிர்விலக்க லாகாதென் றிசைந்தருளிப்
பொன்றயங்கு நூல்மார்பர் தரும்பொதிசோ றதுவாங்கிச்
சென்றுதிருத் தொண்டருடன் திருவமுது செய்தருளி.
தெளிவுரை : வன்தொண்டரான சுந்தரர் அதைக் கேட்டு அந்தணரான இவர் தருகின்ற கட்டுச்சோற்றைக் கைக்கொள்ள இசையாது என்று மறுப்பது நமக்குத் தகாது! என்று எண்ணி, இசைந்து அழகிய பூணூலை அணிந்த மார்பையுடைய இறைவர் தந்த கட்டுச்சோற்றைப் பெற்றுத் தம்முடன் வந்த அடியாருடன் உண்டார்;
3315. எண்ணிறந்த பரிசனங்கள் எல்லாரும் இனிதருந்தப்
பண்ணியபின் அம்மருங்கு பசித்தணைந்தார் களும்அருந்த
உண்ணிறைந்த ஆரமுதாய் ஒருகாலும் உலவாதே
புண்ணியனார் தாமளித்த பொதிசோறு பொலிந்ததால்.
தெளிவுரை : எண் இல்லாத பரிவாரங்கள் எல்லாரும் இனிதாய் உண்ணச் செய்த பின்பும், அந்தப் பக்கத்தில் பசித்து வந்தவர்களும் உண்ண, உள்ளே நிறைந்த உணவு போல் ஒரு சிறிதும் ஒரு காலும் குறைவு அடையாது புண்ணிய மறையவர் தந்த கட்டுசோறு விளங்கிற்று.
3316. சங்கரனார் திருவருள்போல் தண்ணீரின் சுவையார்ந்து
பொங்கிவரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்தேத்தி
அங்கயர்வால் பள்ளியமர்ந் தருகணைந்தார் களுந்துயிலக்
கங்கைசடைக் கரந்தார்அப் பந்தரொடுந் தாங்கரந்தார்.
தெளிவுரை : இறையவரின் திருவருளைப் போல் குளிர்ந்த தண்ணீரையும் பருகி அதன் சுவையும் நிறைந்து மேன்மேலும் அதிகரித்து எழுகின்ற அன்பால் அவரது திருப்பெயரான திருவைந்தெழுத்தைப் புகழ்ந்து போற்றி அங்கு உடல் இளைப்பால் நம்பியாரூரர் உறக்கம் கொண்டார்; பக்கத்தில் இருந்தவர்களும் உறங்கினர். கங்கையைச் சடையில் தரித்த சிவபெருமான் அந்தப் பந்தலுடனே தாமும் மறைந்தருளினார்.
3317. சித்தநிலை திரியாத திருநாவ லூர்மன்னர்
அத்தகுதி யினிற்பள்ளி யுணர்ந்தவரைக் காணாமை
இத்தனையா மாற்றை அறிந்திலேன் எனவெடுத்து
மெய்த்தகைய திருப்பதிகம் விளம்பியே சென்றடைந்தார்.
தெளிவுரை : உள்ள நிலையில் சற்றும் மாறுபாடில்லாத திருநாவலூர்த் தலைவரான நம்பியாரூரர் உறக்கத்தினின்று எழுந்து அந்த வேதியரைக் காணாமல் போக, இத்தனையா மாற்றம் அறிந்திலேன் எனத் தொடங்கி மெய்ம்மை வாய்ந்த திருப்பதிகத்தைப் பாடியவாறே திருக்குருகாவூரைப் போய்ச் சேர்ந்தார்.
3318. குருகாவூர் அமர்ந்தருளும் குழகனார் கோயிலினுக்
கருகார்பொற் கோபுரத்தை யணைந்திறைஞ்சி யுள்புக்கு
வருகாதல் கூரவலங் கொண்டுதிரு முன்வணங்கிப்
பருகாவின் னமுதத்தைக் கண்களாற் பருகினார்.
தெளிவுரை : திருக்குருகாவூரில் விரும்பி இருந்து அருள் செய்கின்ற இறைவரின் திருக்கோயிலுக்கு அருகில் சார்ந்து நிறைந்த அழகிய கோபுரத்தைச் சேர்ந்து வணங்கி, உள்ளே புகுந்து நிரம்பிய காதல் மிக வலமாகச் சுற்றி வந்து, இறைவரின் திருமுன்பு வணங்கி, முன் பருகப்படாத இனிய அமுதம் போன்ற சிவபெருமானைக் கண்களினால் பருகினார்.
3319. கண்ணார்ந்த இன்னமுதைக் கையாரத் தொழுதிறைஞ்சிப்
பண்ணார்ந்த திருப்பதிகம் பாடியே பணிந்தேத்தி
உள்நாடும் பெருங்காதல் உடையவர்தாம் புறத்தெய்தி
நண்ணார்வத் தொண்டருடன் அங்கினிது நயந்திருந்தார்.
தெளிவுரை : கண் நிறைய நுகருமாறு விளங்கிய இனிய அமுதம் போன்ற சிவபெருமானைக் கைகள் குளிரத் தொழுது வணங்கிப் பண் நிறைந்த திருப்பதிகத்தைப் பாடி வணங்கித் தொழுது, உள்ளத்தில் சிவயோகி நிலையில் நாடி நுகரும் பெருபத்தியுடைய நம்பியாரூரர் வெளியே வந்து, பொருந்திய அன்பு மிகவும் விருப்புடைய தொண்டருடன் கூடி அப்பதியிடத்து இனிதாய் விரும்பி எழுந்தருளியிருந்தார்.
3320. அந்நாளில் தம்பெருமான் அருள்கூடப் பணிந்தகன்று
மின்னார்செஞ் சடைமுடியார் விரும்புமிடம் பலவணங்கிக்
கன்னாடும் எயில்புடைசூழ் கழிப்பாலை தொழுதேத்தித்
தென்னாவ லூர்மன்னர் திருத்தில்லை வந்தடைந்தார்.
தெளிவுரை : தென்நாவலூரில் தோன்றிய தலைவரான நம்பியாரூரர் அந்நாளில் தம் இறைவரின் அருள் விடை பெற்றுப் பணிந்து அங்கிருந்து நீங்கிச் சென்று, ஒளி விளங்கும் சடையுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கின்ற தலங்கள் பலவற்றையும் வணங்கிய வண்ணம் கல்லால் ஆன அழகிய மதில் பக்கத்தில் சூழ்ந்த திருக்கழிப் பாலையை வணங்கித் துதித்து, திருத்தில்லை நகரத்தை வந்து அடைந்தார்.
3321. சீர்வளருந் திருத்தில்லைத் திருவீதி பணிந்துபுகுந்
தேர்வளர்பொன் திருமன்றுள் எடுத்தசே வடியிறைஞ்சிப்
பார்வளர மறைவளர்க்கும் பதியதனில் பணிந்துறைவார்
போர்வளர்மே ருச்சிலையார் திருத்தினைமா நகர்புகுந்தார்.
தெளிவுரை : சிறப்பு வளர்கின்ற திருத்தில்லைப் பதியின் திருவீதியை வணங்கி உள்ளே புகுந்து அழகு வளரும் பொன்னம்பலத்தில் ஆடும் தூக்கிய திருவடியை வணங்கி உலகம் வாழும் பொருட்டு மறையொழுக்கத்தை வளர்க்கின்ற அந்தப் பதியில் வணங்கித் தங்குபவரான சுந்தரர் போரில் சிறப்புற்று விளங்கிய மேருமலையான வில்லையுடைய சிவபெருமானின் திருத்தினை மாநகரினுள்ளே போய்ப் புகுந்தார்.
3322. திருத்தினைமா நகர்மேவும் சிவக்கொழுந்தைப் பணிந்துபோய்
நிருத்தனார் அமர்ந்தருளும் நிறைபதிகள் பலவணங்கிப்
பொருத்தமிகுந் திருத்தொண்டர் போற்றுதிரு நாவலூர்
கருத்தில்வரு மாதரவால் கைதொழச்சென் றெய்தினார்.
தெளிவுரை : திருத்தினை மாநகரில் பொருந்த எழுந்தருளும் சிவக்கொழுந்தான இறைவரை வணங்கிச் சென்று, ஆனந்தக் கூத்தரான இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற நிறைந்த பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று, மிக்க பொருத்தமுடைய தொண்டர்கள் போற்றும் திருநாவலூர் உள்ளத்தில் வருகின்ற அன்பினால் அங்குப் போய்த் தொழுது வணங்குவதற்காக அதை அடைந்தார்.
3323. திருநாவ லூர்மன்னர் சேர்கின்றார் எனக்கேட்டுப்
பெருநாமப் பதியோரும் தொண்டர்களும் பெருவாழ்வு
வருநாள்என் றலங்கரித்து வந்தெதிர்கொண் டுள்ளணையச்
செருநாகத் துரிபுனைந்தார் செழுங்கோயி லுள்ளணைந்தார்.
தெளிவுரை : திருநாவலூர்த் தலைவர் வருகின்றார் என்ற செய்தியைக் கேட்டுப் பெரும்புகழையுடைய அந்தப் பதியில் உள்ளவர்களும் தொண்டர்களும் தங்களுக்கு உரிய வாழ்வு வருகின்ற திருநாள் எனக் கொண்டு பதியை அலங்காரம் செய்து நகரின் வெளியே வந்து எதிர்கொண்டு அழைத்துக் கொண்டு உள்ளே போய், போரில் வல்ல யானையின் தோலைப் போர்த்திக் கொண்ட சிவபெருமானின் கோயிலுள் சுந்தரர் புகுந்தார்.
3324. மேவியஅத் தொண்டர்குழாம் மிடைந்தரவென் றெழுமோசை
மூவுலகும் போயொலிப்ப முதல்வனார் முன்பெய்தி
ஆவியினு மடைவுடையா ரடிக்கமலத் தருள்போற்றிக்
கோவலனான் முகனெடுத்துப் பாடியே கும்பிட்டார்.
தெளிவுரை : எதிர்கொண்டு வரவேற்கும் அத்தொண்டர் கூட்டம் நெருங்கி அரகர என்று முழக்குவதால் உண்டான ஓசை மூன்று உலகங்களிலும் போய் ஒலிக்க, இறைவரின் திருமுன்பு சார்ந்து, உயிரினும் சிறந்தவராய் அடைவதற்குரிய இறைவரின் திருவடித் தாமரைகளின் அருளைப் போற்றி கோவலனான் முகன் என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி வணங்கினார்.
3325. நலம்பெருகும் அப்பதியில் நாடியஅன் பொடுநயந்து
குலம்பெருகுந் திருத்தொண்டர் குழாத்தோடு மினிதமர்ந்து
சலம்பெருகுஞ் சடைமுடியார் தாள்வணங்கி யருள்பெற்றுப்
பொலம்புரிநூல் மணிமார்பர் பிறபதியுந் தொழப்போவார்.
தெளிவுரை : நன்மைகள் பெருகுவதற்கு இடமான அந்தப் பதியிலே நாடும் அன்பினால் விரும்பி, குலம் மிகுகின்ற தொண்டர் கூட்டத்துடனே இனிதாக வீற்றிருந்து, கங்கை நீர் தங்குதற்கு இடமான சடைமுடியையுடைய இறைவரின் திருவடிகளை வணங்கி, அருள் விடைபெற்று அழகுடைய பூணூல் விளங்கும் மார்பையுடைய நம்பியாரூரர் மற்றத் தலங்களையும் வணங்குவதற்குச் செல்லலானார்.
3326. தண்டகமாந் திருநாட்டுத் தனிவிடையார் மகிழ்விடங்கள்
தொண்டர்எதிர் கொண்டணையத் தொழுதுபோய்த் தூயநதி
வண்டறைபூம் புறவுமலை வளமருதம் பலகடந்தே
எண்திசையோர் பரவுதிருக் கழுக்குன்றை யெய்தினார்.
தெளிவுரை : தொண்டை நாட்டில் ஒப்பில்லாத காளையூர்தியையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற தலங்கள் பலவற்றையும் அங்கங்குத் தொண்டர்கள் எதிர்வந்து அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, வணங்கிய வண்ணம் போய்த் தூயநீரையுடைய ஆறுகளும் வண்டுகள் ஒலிக்கும் மலர்களையுயை கடந்து போய், எட்டுத் திக்கில் உள்ளவர்களும் துதித்துப் பாராட்டும் திருக்கழுக்குன்றத்தை அடைந்தார்.
3327. தேனார்ந்த மலர்ச்சோலை திருக்கழுக்குன் றத்தடியார்
ஆனாத விருப்பினொடு மெதிர்கொள்ள அடைந்தருளித்
தூநாள்வெண் மதியணிந்த சுடர்க்கொழுந்தைத் தொழுதிறைஞ்சிப்
பாநாடு மின்னிசையின் திருப்பதிகம் பாடினார்.
தெளிவுரை : தேன் நிறைந்த மலர்களையுடைய பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கழுக்குன்றத்தில் உள்ள அடியார்கள் குறைவுபடாத விருப்பத்துடன் வந்து எதிர்கொண்டு அழைத்துக் கொண்டு போகச் சேர்ந்தருளித் தூய புதிய வெண்மையான பிறைச்சந்திரனைச் சூடிய சுடர்க் கொழுந்து போன்றவரான சிவபெருமானைத் தொழுது நிலத்தில் விழுந்து வணங்கிப் பாக்களின் பண்பு நாடும் இனிய இசையுடைய திருப்பதிகத்தைப் பாடினார்.
3328. பாடியஅப் பதியின்கண் இனிதமர்ந்து பணிந்துபோய்
நாடியநல் லுணர்வினொடும் திருக்கச்சூர் தனைநண்ணி
ஆடகமா மதில்புடைசூழ் ஆலக்கோ யிலின்அமுதைக்
கூடியமெய் யன்புருகக் கும்பிட்டுப் புறத்தணைந்தார்.
தெளிவுரை : பதிகம் பாடிய அந்தப் பதியில் இனிதாக விரும்பிச் சிலநாள் தங்கியிருந்து, வணங்கி அருள்விடை பெற்றுச் சென்று இறைவரை நாடியிருக்கும் நல்லவுணர்வினோடு திருக்கச்சூரை அடைந்து, பொன் வேலைப்பாடு அமைந்த மதில் பக்கத்தில் சூழ்ந்த ஆலக்கோயிலில் வீற்றிருக்கும் அமுதம் போன்ற இறைவரைக் கூடிய மெய் அன்பினால் உள்ளம் உருகக் கும்பிட்டு, வெளியே சேர்ந்தருளினார்.
3329. அணைந்தருளும் அவ்வேலை அமுதுசெயும் பொழுதாகக்
கொணர்ந்தமுது சமைத்தளிக்கும் பரிசனமும் குறுகாமைத்
தணந்தபசி வருத்தத்தால் தம்பிரான் திருவாயில்
புணர்ந்தமதில் புறத்திருந்தார் முனைப்பாடிப் புரவலனார்.
தெளிவுரை : சேர்ந்த அப்போது திருவமுது செய்யும் நேரம் ஆகிவிடவும் கொண்டு வந்து திருவமுது சமைத்துத் தரும் பரிவாரங்கள் வந்து சேராததால் திருமுனைப்பாடி நாட்டுத் தலைவரான சுந்தரர் மிக்க பசியால் வந்த வருத்தத்தால் தம் இறைவரின் வாயிலுடன் கூடிய மதிலின் வெளியே தங்கியிருந்தார்.
3330. வன்தொண்டர் பசிதீர்க்க மலையின்மேல் மருந்தானார்
மின்தங்கு வெண்டலையோ டொழிந்தொருவெற் றோடேந்தி
அன்றங்கு வாழ்வாரோர் அந்தணராய்ப் புறப்பட்டுச்
சென்றன்பர் முகநோக்கி அருள்கூரச் செப்புவார்.
தெளிவுரை : வன்றொண்டரான சுந்தரரின் பசியைத் தீர்க்க மலையின் மேல் உள்ள மருந்தைப் போன்ற இறைவர் ஒளி பொருந்திய வெண் தலையான கபாலமாகிய பலிப்பாத்திரத்தை நீக்கி, வெற்றுத் திருவோட்டை எடுத்துக் கொண்டு அன்று அந்தவூரில் வாழ்பவரான ஓர் அந்தணரைப் போல் கோலம் கொண்டு புறப்பட்டுச் சென்று அன்பரான நம்பியின் முகத்தைப் பார்த்துக் கூறுபவராய்,
3331. மெய்ப்பசியால் மிகவருந்தி இளைத்திருந்தீர் வேட்கைவிட
இப்பொழுதே சோறிரந்திங் கியானுமக்குக் கொணர்கின்றேன்
அப்புறநீர் அகலாதே சிறிதுபொழு தமருமெனச்
செப்பியவர் திருக்கச்சூர் மனைதோறும் சென்றிரப்பார்.
தெளிவுரை : உடலில் ஏற்பட்ட பசியால் மிகவும் வருந்தி இளைத்துள்ளீர்! உம் பசித்தாபம் தீருமாறு இப்போதே சோற்றை இரந்து உமக்குக் கொண்டு வருகின்றேன். நீவிர் இவ்விடத்தினின்று அப்புறம் செல்லாது சிறிது நேரம் இங்கே இருப்பீராக! எனக் கூறினார். பின் அந்தணர் இல்லந்தோறும் சென்று இரப்பாரானார்.
3332. வெண்திருநீற் றணிதிகழ விளங்குநூல் ஒளிதுளங்கக்
கண்டவர்கள் மனமுருகக் கடும்பகற்போ திடும்பலிக்குப்
புண்டரிகக் கழல்புவிமேல் பொருந்தமனை தொறும்புக்குக்
கொண்டுதாம் விரும்பியாட் கொண்டவர்முன் கொடுவந்தார்.
தெளிவுரை : வெண்மையான திருநீற்றின் அழகு விளங்கவும் கண்டவர் அனைவரும் உள்ளம் உருகவும் கடும் பகல் உச்சிப் போதில் இடப்பெறும் பிச்சைக்காகத் தாமரை மலர் போன்ற திருவடிகள் நிலத்தில் பொருந்தவும், இல்லந்தோறும் போய்ச் சென்று இரந்த சோற்றை எடுத்துக் கொண்டு, தாம் தடுத்து ஆட்கொண்ட நம்பியாரூரர் முன் வந்தார்.
3333. இரந்துதாங் கொடுவந்த இன்னடிசி லுங்கறியும்
அரந்தைதரும் பசீதீர அருந்துவீ ரெனவளிப்பப்
பெருந்தகையார் மறையவர்தம் பேரருளின் திறம்பேணி
நிரந்தபெருங் காதலினால் நேர்தொழுது வாங்கினார்.
தெளிவுரை : இரந்து தாம் எடுத்து வந்த இனிய உணவும் கறியும் ஆகியவற்றை, துன்பத்தைத் தரும் பசி நீங்குமாறு உண்பீராக! என்று இறைவரான அந்தணர் அளித்தார். பெருந்தகையாளரான ஆரூரர் அந்த மறையவரின் பேரருள் திறத்தைப் பாராட்டி, உள்ளத்தில் எழுந்த பேரன்பினால் அவர் முன்பு வணங்கி அவர் அளித்த உணவைப் பெற்றுக் கொண்டார்.
3334. வாங்கிஅத் திருவமுது வன்தொண்டர் மருங்கணைந்த
ஓங்குதவத் தொண்டருடன் உண்டருளி யுவந்திருப்ப
ஆங்கருகு நின்றார்போல் அவர்தம்மை யறியாமே
நீங்கினா ரெப்பொருளும் நீங்காத நிலைமையினார்.
தெளிவுரை : அங்ஙனம் பெற்றுக் கொண்ட திருவமுதைச் சுந்தரர் தம் பக்கத்தில் வந்திருந்த மிக்க தவத்தையுடைய அடியாருடன் உண்டு மகிழ்ந்து இருந்தார். அங்கே அருகில் நின்றவரைப் போலவே, எந்தப் பொருளிலும் நீங்காது நிறைந்துள்ள தன்மையினரான அந்த அந்தணர் அந்த வன்தொண்டர் அறியாதபடி அங்கிருந்து மறைந்தருளினார்.
3335. திருநாவ லூராளி சிவயோகி யார்நீங்க
வருநாம மறையவனார் இறையவனா ரெனமதித்தே
பெருநாதச் சிலம்பணிசே வடிவருந்தப் பெரும்பகற்கண்
உருநாடி எழுந்தருளிற் றென்பொருட்டாம் எனவுருகி.
தெளிவுரை : திருநாவலூரில் தோன்றியவரான சுந்தரர் அந்தணராய்க் கோலம் கொண்டு வந்திருந்த இறைவர் மறைந்தருள, அம்மறையவராய் வந்தவர் சிவபெருமானே எனத் தெளிந்து, பெரிய நாதம் உடைய சிலம்பை அணிந்து செம்மையான திருவடி வருந்த பகல் உச்சிப் பொழுதில் உருவு தாங்க என் பொருட்டாக எழுந்தருளி நடந்து எழுந்தருளினாரே என்று உள்ளம் உருகி,
3336. முதுவா யோரி என்றெடுத்து முதல்வ னார்தம் பெருங்கருணை
அதுவா மிதுவென் றதிசயம்வந் தெய்தக் கண்ணீர் மழையருவிப்
புதுவார் புனலின் மயிர்ப்புளகம் புதையப் பதிகம் போற்றிசைத்து
மதுவார் இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார்.
தெளிவுரை : முதுவாய் ஓரி எனத் தொடங்கி இச்செயல் இறைவரின் கருணைத் திறமான அதுவேயாகும் என்ற கருத்துடன் அதிசயம் பொருந்தக் கண்ணீர் மழைபோல் பெருகிட, வடிந்த புதிய நீரில் திருமேனி முழுவதும் மயிர்க் கூச்செறிப்பால் மூடத் திருப்பதிகம் பாடித் துதித்துத் தேன் பொருந்திய கொன்றை சூடிய முடியையுடைய சிவபெருமானைப் பாடி மகிழ்ந்து வணங்கினார்.
3337. வந்தித் திறைவ ரருளாற்போய் மங்கை பாகர் மகிழ்ந்தவிடம்
முந்தித் தொண்ட ரெதிர்கொள்ளப் புக்கு முக்கட்பெருமானைச்
சிந்தித் திடவந் தருள்செய்கழல் பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தே
அந்திச் செக்கர்ப் பெருகொளியார் அமருங் காஞ்சி மருங்கணைந்தார்.
தெளிவுரை : வணங்கி இறைவரின் அருள் விடைபெற்று அங்கிருந்து போய், உமைபாகரான இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் மற்றப் பதிகளை, அங்குள்ள தொண்டர்கள் எதிர்கொண்டு வந்து அழைத்துச் செல்லப் புகுந்து, நினைக்க முன்வந்து அருள் செய்கின்ற முக்கண் பெருமானின் திருவடிகளை வணங்கிச் சொல்தொடை மாலைகளான திருப்பதிகங்களைப் பாடி, மாலைச் செவ்வந்தி போன்ற பெருகும் ஒளியுடைய திருமேனியுடைய ஏகம்பவாணர் வீற்றிருக்கின்ற காஞ்சிபுரத்தின் பக்கத்தை வந்து சேர்ந்தார்.
3338. அன்று வெண்ணெய் நல்லூரில் அரியும் அயனுந் தொடர்வரிய
வென்றி மழவெள் விடையுயர்த்தார் வேத முதல்வ ராய்வந்து
நின்று சபைமுன் வழக்குரைத்து நேரே தொடர்ந்தாட் கொண்டவர்தாம்
இன்றிங் கெய்தப் பெற்றோமென்று எயில்சூழ் காஞ்சிநகர் வாழ்வார்.
தெளிவுரை : திருமாலும் நான்முகனும் தொடர்ந்து அறிவதற்கு அரியவராய் நீண்டு நின்ற வெற்றியுடைய இளைய காளைக்கொடியை மேல் உயர்த்திய இறைவர், முன்நாளில் அன்று வெண்ணெய்நல்லூரில் வேதியர் தலைவராக வெளிவந்து நின்று அவையினர் முன்னம் தடுத்து ஆட்கொள்ளப் பெற்றவரான நம்பியாரூரர், தாமே இன்று இப்பதியில் எழுந்தருளும் பெரும்பேற்றைப் பெற்றோம்! என்று மனத்தில் எண்ணி மதில்சூழ்ந்த காஞ்சி நகரத்தில் வாழ்பவர்கள்,
3339. மல்கு மகிழ்ச்சி மிகப்பெருக மறுகு மணித்தோ ரணம்நாட்டி
அல்கு தீபம் நிறைகுடங்கள் அகிலின் தூபங் கொடியெடுத்துச்
செல்வ மனைகள் அலங்கரித்துத் தெற்றி யாடன் முழவதிரப்
பல்கு தொண்ட ருடன்கூடிப் பதியின் புறம்போய் எதிர்கொண்டார்.
தெளிவுரை : பொருந்திய மகிழ்ச்சி மேலும் மேலும் பெருக, தெருக்களில் அழகிய தோரணங்களைத் தொங்கவிட்டும், பெருகும் தீபங்களும், நிறைகுடங்களும், அகிலின் தூபங்களும் கொடிகளும் ஆகியவற்றை ஏந்தியும், செல்வம் உடைய இல்லங்களை அலங்காரம் செய்தும், தெற்றிகளில் ஆடல் முழவுகள் ஒலிக்க, மிக்க தொண்டர்களுடன் சேர்ந்து, அந்தத் தலத்தின் வெளியே போய் நம்பியாரூரரை வரவேற்றனர்.
3340. ஆண்ட நம்பி யெதிர்கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி
நீண்ட மதிற்கோ புரங்கடந்து நிறைமா ளிகைவீ தியிற்போந்து
பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனைமங் கலதூ ரியம்ஒலிப்ப
ஈண்டு தொண்டர் பெருகுதிரு ஏகாம் பரஞ்சென் றெய்தினார்.
தெளிவுரை : சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட நம்பியாரூரர் தம்மை எதிர்கொண்டு அழைத்த அடியார்கள் வணங்க, அவர்களைத் தாமும் வணங்கி, நீண்ட மதிலையும் கோபுரத்தைக் கடந்து, வரிசையான மாளிகைகள் உள்ள மாடவீதியில் சென்று, மேற்கொண்ட பெருவிருப்பத்துடன், பொருந்திய மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, நெருங்கிய தொண்டர் கூட்டம் பெருகும் ஏகாம்பரநாதரின் கோயிலைச் சேர்ந்தார்.
3341. ஆழிநெடுமா லயன்முதலாம் அமரர் நெருங்கு கோபுரமுன்
பூமி யுறமண் மிசைமேனி பொருந்த வணங்கிப் புகுந்தருளிச்
சூழு மணிமா ளிகைபலவுந் தொழுது வணங்கி வலங்கொண்டு
வாழி மணிபபொற் கோயிலினுள் வந்தார் அணுக்க வன்தொண்டர்.
தெளிவுரை : சக்கரத்தையுடைய திருமாலும் நான்முகன் முதலான தேவர்களும் நெருங்கியிருக்கும் கோபுரத்தின் முன்னர்ப் புழுதி படிய நிலத்தின்மீது தம்மேனி பொருந்துமாறு வணங்கி உள்ளே புகுந்து, சூழ்ந்திருக்கும் மாளிகைகள் பலவற்றையும் தொழுது வணங்கிக் கொண்டு சுற்றி வலமாக வந்து, அணுக்கத் தொண்டரான வாழ்வுடைய மணிப்பொன் கோயிலான ஏகம்பரநாதர் திருமாளிகையுள் புகுந்தார்.
3342. கைகள் கூப்பி முன்னணைவார் கம்பை யாறு பெருகிவர
ஐயர் தமக்கு மிகஅஞ்சி ஆரத் தழுவிக் கொண்டிருந்த
மையு லாவுங் கருநெடுங்கண் மலையா ளென்றும் வழிபடுபூஞ்
செய்ய கமலச் சேவடிக்கீழ்த் திருந்து காத லுடன் வீழ்ந்தார்.
தெளிவுரை : கைகளைத் தலைமீது குவித்துக் கொண்டு திருமுன்பு அடைபவரான நம்பியாரூரர், கம்பையாறு பெருக்கெடுத்து வரக்கண்டு இறைவரின் மேனிக்காக மிகவும் அஞ்சித் தம் உடம்பு நிறையத் தழுவிக் கொண்டிருந்த மை பொருந்திய கரிய நீண்ட கண்களையுடைய மலைமகளான அம்மையார் நாள்தோறும் வழிபடுகின்ற செம்மையான தாமரை மலர் போன்ற திருவடியின் கீழ் திருந்தும் பெருவியப்புடன் வீழ்ந்தார்.
3343. வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி யெழுந்து மெய்யன்பால்
வாழ்ந்த சிந்தை யுடன்பாடி மாறா விருப்பிற் புறம்போந்து
சூழ்ந்த தொண்ட ருடன்மருவும் நாளில் தொல்லைக் கச்சிநகர்த்
தாழ்ந்த சடையா ராலயங்கள் பலவுஞ் சார்ந்து வணங்குவார்.
தெளிவுரை : முன் சொன்னவாறு நிலமுற விழுந்து துதித்துப் பரவசப்பட்டு, விம்மிமேல் எழுந்து, உம்மை அன்பினால் வாழ்வடைந்த உள்ள நிறைவுடன் பாடிய பின், மாறுதல் இல்லாத விருப்புடன் வெளியே வர, தம்மைச் சூழ்ந்த தொண்டர்களுடனே கூடியிருக்கும் நாள்களில், பழமையான காஞ்சி நகரத்தில் தாழ்ந்த சடையையுடைய இறைவர் எழுந்தருளியுள்ள கோயில்கள் பலவற்றையும் வணங்கலானார்.
3344. சீரார் காஞ்சி மன்னுதிருக் காமக் கோட்டம் சென்றிறைஞ்சி
நீரார் சடையா ரமர்ந்தருளும் நீடு திருமேற் றளிமேவி
ஆரா அன்பிற் பணிந்தேத்து மளவில்நுந்தா வொண்சுடராம்
பாரார் பெருமைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார்.
தெளிவுரை : சிறப்புப் பொருந்திய காஞ்சி நகரத்தில் நிலைபெற்ற காமகோட்டத்தில் சேர்ந்து பணிந்து, கங்கையை அணிந்த சடையையுடைய இறைவர் விருப்புடன் வீற்றிருக்கின்ற கச்சிமேற்றளியைச் சேர்ந்து, நிறைவுறாது பெருகும் அன்பினாலே பணிந்து துதித்து அளவில்லாத பெருமையுடைய நுந்தா ஒண்சுடரே எனத் தொடங்கும் உலகம் நிறைந்த பெருமையுடைய பதிகத்தைப் பாடி மகிழ்ந்து போற்றினார்.
3345. ஓண காந்தன் தளிமேவும் ஒருவர் தம்மை யுரிமையுடன்
பேணி யமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் திறம்பேசிக்
காண மோடு பொன்வேண்டி நெய்யும் பாலும் கலைவிளங்கும்
யாணர்ப் பதிகம் எடுத்தேத்தி யெண்ணில் நிதிபெற் றினிதிருந்தார்.
தெளிவுரை : திருவோணகாந்தன்தளி என்ற கோயிலில் வீற்றிருக்கின்ற இறைவரை உரிமையுடன் விரும்பிக் கொண்ட தோழமைத் திறம் பற்றிப் பெருகி வளர்கின்ற அடிமைத் திறத்தைச் சொல்லி, காசுடன் பொன்னை விரும்பி, நெய்யும் பாலும் எனத் தொடங்கும் கலைத்தன்மையுடன் கூடிய அழகிய பதிகத்தைப் பாடி அளவில்லாத செல்வங்களைப் பெற்று இனிதாய்த் தங்கியிருந்தார்.
3346. அங்கண் அமர்வார் அனேகதங்கா வதத்தை யெய்தி யுள்ளணைந்து
செங்கண் விடையார் தமைப்பணிந்து தேனெய் புரிந்தென் றெடுத்ததமிழ்
தங்கு மிடமா மெனப்பாடித் தாழ்ந்து பிறவுந் தானங்கள்
பொங்கு காத லுடன்போற்றிப் புரிந்தப் பதியிற் பொருந்துநாள்.
தெளிவுரை : அந்தப் பதியில் தங்கியிருக்கும் நம்பிஆரூரர் திருக்கச்சி அனேகதங்காபதத்தினை அடைந்து கோயிலுள் புகுந்து சிவந்த கண்களையுடைய காளையையுடைய இறைவரை வணங்கித் தேனேய் புரிந்து என்ற கருத்தப்படப் பாடி வணங்கி, இறைவரின் இடங்கள் மற்றவற்றையும் மேன்மேல் அதிகரிக்கும் பெருவிருப்புடன் போய்த் துதித்து, இடையறாத நினைவுடன் அந்தக் கச்சித் திருப்பதியில் பொருந்த வீற்றிருக்கும் நாள்களில்,
3347. பாட இசையும் பணியினால் பாவை தழுவக் குழைகம்பர்
ஆடல் மருவுஞ் சேவடிகள் பரவிப் பிரியா தமர்கின்றார்
நீட மூதூர்ப் புறத்திறைவர் நிலவும் பதிகள் தொழவிருப்பால்
மாட நெருங்கு வன்பார்த்தான் பனங்காட் டூரில் வந்தடைந்தார்.
தெளிவுரை : பாடுதற்கு இசையும் பணி செய்யப் பெற்றதால், உமையம்மையார் தழுவ மேனி குழைந்தவரான திருஏகம்பநாதரின் அருட்கூத்தாடும் திருவடிகளைத் துதித்துப் பிரியாது தங்கியிருக்கும் நம்பியாரூரர் மிகவும் பழமையான அந்தக் கச்சி மூதூரின் வெளியே நிலவும் பதிகளைத் தொழுகின்ற விருப்பத்தினால் போய், மாடங்கள் நெருங்கி விளங்கும் வன்பார்த்தான் பனங்காட்டூரை வந்தடைந்தார்.
3348. செல்வ மல்கு திருப்பனங்காட் டூரிற் செம்பொற் செழுஞ்சுடரை
அல்லல் அறுக்கும் அருமருந்தை வணங்கி யன்பு பொழிகண்ணீர்
மல்கநின்று விடையின்மேல் வருவார் எனும்வண் டமிழ்ப்பதிகம்
நல்ல இசையி னுடன்பாடிப் போந்து புறம்பு நண்ணுவார்.
தெளிவுரை : செல்வம் மிக்க திருப்பனங்காட்டூரில் எழுந்தருளிய செம்பொன் போன்ற ஒளியுடைய செழுஞ்சுடரைப் பிறவித்துன்பத்தை அறுக்கும் அரிய மருந்தைப் போல்பவரை வணங்கி, அன்பு மேலீட்டால் பொழியும் கண்ணீர் பெருக நின்று, விடையில் மேல் வருவானை எனத் தொடங்கும் பதிகத்தை வண்மையுடைய நல்ல இசை பொருந்தப் பாடி வெளியே சென்று சேர்ந்தார்.
3349. மன்னு திருமாற் பேறணைந்து வணங்கிப் பரவித் திருவல்லம்
தன்னுள் எய்தி இறைஞ்சிப்போய்ச் சாரும் மேல்பாற் சடைக்கற்றைப்
பின்னல் முடியா ரிடம்பலவும் பேணி வணங்கிப் பெருந்தொண்டர்
சென்னி முகில்தோய் தடங்குவட்டுத் திருக்கா ளத்தி மலைசேர்ந்தார்.
தெளிவுரை : நிலையான திருமாற்பேறு என்னும் தலத்தை அடைந்து வணங்கிப் போய், திருவல்லத்தினை வணங்கிச் சென்று, சார்கின்ற மேற்குப் பக்கத்தில் சடைக்கற்றை பின்னி விளங்கும் முடியையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற இடங்கள் பலவற்றையும் விருப்புடன் வணங்கி, பெருந்தொண்டரான நம்பியாரூரர், உச்சியில் மேகங்கள் தோயும் பெரிய முடிகளைக் கொண்ட திருக்காளத்தி மலையை அடைந்தார்.
3350. தடுக்க லாகாப் பெருங்காதல் தலைநின் றருளுங் கண்ணப்பர்
இடுக்கண் களைந்தாட் கொண்டருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்துபணிந் தருளா லேறி அன்பாறு
மடுப்பத் திருமுன் சென்றெய்தி மலைமேல் மருந்தை வணங்கினார்.
தெளிவுரை : தடுக்க இயலாத பெரிய பத்தியில் தலை சிறந்து விளங்கும் கண்ணப்ப நாயனாரது துன்பத்தை நீக்கி ஆண்ட சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற திருக்காளத்தி மலையை அடைந்து, அம்மலையை நிலமுற விழுந்து வணங்கித் திருவருள் பெற்று மேல் ஏறி அன்பு ஆறாய்ப் பெருகி மூழ்குவிக்க, இறைவரின் திருமுன்பு போய் மலை மீது மருந்து போன்ற இறைவரைப் பணிந்தார்.
3351. வணங்கி உள்ளங் களிகூர மகிழ்ந்து போற்றி மதுரஇசை
அணங்கு செண்டா டெனும்பதிகம் பாடி யன்பாற் கண்ணப்பர்
மணங்கொள் மலர்ச்சே வடிபணிந்து வாழ்ந்து போந்து மன்னுபதி
இணங்கு தொண்ட ருடன்கெழுமி இன்புற் றிருக்கும் அந்நாளில்.
தெளிவுரை : வணங்கி உள்ளத்தில் களிப்புமிக மகிழ்ச்சியுடன், பொருந்தத் துதித்து, இனிய இசையுடைய செண்டாடும் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி, அன்பால் கண்ணப்ப நாயனாரின் மணமுடைய தாமரை மலர் போன்ற செம்மை பெற்ற திருவடிகளைப் பணிந்து வாழ்வடைந்து வெளிளே வந்து, நிலை பெற்ற அந்தப் பதியில் தொண்டருடன் அன்பு பொருந்தக் கூடி இன்பம் அடைந்து தங்கியிருந்தார். அந்நாள்களில்,
3352. வடமா திரத்துப் பருப்பதமும் திருக்கே தார மலையுமுதல்
இடமா அரனார் தாமுவந்த வெல்லா மிங்கே இருந்திறைஞ்சி
நடமா டியசே வடியாரை நண்ணி னார்போ லுண்ணிறைந்து
திடமாங் கருத்தில் திருப்பதிகம் பாடிக் காதல் சிறந்திருந்தார்.
தெளிவுரை : வடக்குத் திக்கில் உள்ள சீபர்ப்பதமும் திருக்கோதர மலையும் முதலான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் இடமாகக் கொண்ட எல்லாவற்றையும் இங்கிருந்தபடியே வணங்கி, ஆனந்தக் கூத்தாடும் திருவடியையுடைய சிவபெருமானை நேரே கண்டு பொருந்தியவர் போல் உள்ளம் நிறைந்து உறுதிப் பாடுற்ற கருத்துடனே திருப்பதிகம் பாடி மிகவும் மகிழ்ந்தார்.
3353. அங்குச் சிலநாள் வைகியபின் அருளாற் போந்து பொருவிடையார்
தங்கும் இடங்க ளெனைப்பலவுஞ் சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப்
பொங்கு புணரிக் கரைமருங்கு புவியுட் சிவலோகம் போலத்
திங்கள் முடியா ரமர்ந்ததிரு வொற்றியூரைச் சென்றடைந்தார்.
தெளிவுரை : அங்குச் சிலநாள் தங்கிய பின்பு அருள் விடையைப் பெற்றுச் சென்று, போர்க் காளையூர்தியினரான இறைவர் எழுந்தருளிய பதிகள் பலவற்றையும் போய்ச் சேர்ந்து வணங்கித் தமிழ்ப் பதிகங்களைப் பாடி வணங்கி, அலைகள் பெருகி வரும் கடலின் கரையின் பக்கத்தில் இம்மண்ணுலகத்திலே சிவலோகத்தில் போலவே பிறைச்சந்திரனை முடியில் அணிந்த இறைவர் விரும்பி எழுந்தருளிய திருவொற்றியூரை நம்பியாரூரர் போய் அடைந்தார்.
3354. அண்ணல் தொடர்ந்தா வணங்காட்டி ஆண்ட நம்பி யெழுந்தருள
எண்ணில் பெருமை ஆதிபுரி இறைவ ரடியா ரெதிர்கொள்வார்
வண்ண வீதி வாயில்தொறும் வாழை கமுகு தோரணங்கள்
சுண்ண நிறைபொற் குடந்தூப தீப மெடுத்துத் தொழவெழுங்கால்.
தெளிவுரை : இறைவர் தாமே தொடர்ந்து வந்து ஓலையைக் காட்டி ஆட்கொண்ட நம்பியாரூரர் வருவதைக் கேட்டு அளவற்ற பெருமையுடைய ஆதிபுரி என்னும் திருவொற்றியூரில் இறைவரின் தொண்டர்கள் அவரை எதிர்கொள்பவராய், அழகிய வீதிகளில் வாயில்கள் எல்லாம் வாழை, கமுகு, தோரணம் என்பனவற்றை நிலை நிறுத்தியும் தொங்கவிட்டும், சுண்ணமும், பொன்னால் ஆன நிறை குடங்கள் தூப தீபங்களும் ஏந்தியும் எதிர் போய்த் தொழுவதற்குப் புறப்பட்டார். அப்போது,
3355. வரமங் கலநல் லியம்முழங்க வாச மாலை யணியரங்கில்
புரமங் கையர்கள் நடமாடப் பொழியும் வெள்ளப் பூமாரி
அரமங் கையரும் அமரர்களும் வீச அன்ப ருடன்புகுந்தார்
பிரமன் தலையிற் பலியுகந்த பிரானார் விரும்பு பெருந் தொண்டர்.
தெளிவுரை : மேலான நல்ல மங்கல வாத்தியங்கள் யாவும் ஒலிக்கவும், மணம் பொருந்திய மலர் மாலைகளால் அழகுபடுத்தப்பட்ட ஆடரங்குகளில் அந்நகரத்தில் உள்ள ஆடற் பெண்கள் நடனம் ஆடவும், மேலிருந்து பெய்கின்ற வெள்ளமான பூமழையினை தேவ மங்கையரும் தேவர்களும் வீசவும், பிரம கபாலத்தில் விரும்பிப் பிச்சையேற்கும் சிவபெருமான் விரும்பும் பெருந்தொண்டரான நம்பியாரூரர், தம்முடன் வந்த தொண்டர்களுடன் கூடி நகரத்துள் புகுந்தார்.
3356. ஒற்றியூரி னுமையோடுங் கூட நின்றா ருயர்தவத்தின்
பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த கடல்போல் வந்தீண்டிச்
சுற்றம் அணைந்து துதிசெய்யத் தொழுது தம்பி ரானன்பர்
கொற்ற மழவே றுடையவர்தங் கோயில் வாயி லெய்தினார்.
தெளிவுரை : திருவொற்றியூரில் பார்வதியம்மையாருடன் கூடி நிலை பெற வீற்றிருந்தருளும் சிவபெருமானின் உயர்ந்த தவத்தில் மிகப் பற்றுடைய தொண்டர்கள், பரந்த கடல் போல வந்து நெருங்கிக் கூடிச் சுற்றிலும் சேர்ந்து துதிக்க, சிவபெருமானின் தொண்டரான நம்பியாரூரர், திருத்தொண்டர் கூட்டத்தை வணங்கி, வெற்றி பொருந்திய இளமையுடைய காளையையுடைய இறைவரின் கோயிலின் வாயிலை அடைந்தார்.
3357. வானை அளக்குங் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்துவளர்
கூனல் இளவெண் பிறைச்சடையார் கோயில் வலங்கொண் டெதிர்குறுகி
ஊனும் உயிருங் கரைந்துருக உச்சி குவித்த கையினுடன்
ஆன காத லுடன் வீழ்ந்தார் ஆரா வன்பி னாரூரர்.
தெளிவுரை : வானத்தை அளப்பதைப் போன்ற நீண்டு மேல் உயர்ந்த கோபுரத்தை மகிழ்ச்சியுடனே நிலம் பொருந்த வீழ்ந்து வணங்கி, உள்ளே போய், வளர்கின்ற வளைந்த இளைய வெண்மையான பிறையைச் சூடிய சடையையுடைய இறைவரின் கோயிலுள் மாளிகையை வலமாக வந்து இறைவரின் திருமுன்பு சேர்ந்து, நிறைவு படாத பேரன்பின் பெருக்கத்தால் நம்பியாரூரர், ஊனும் உயிரும் உருக, உச்சியின் மேல் கூப்பிய கையுடன் விளைந்த பெரு விருப்பத்துடன் நிலம் பொருந்த வீழ்ந்தார்.
3358. ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்தறியும்
நாட்ட மலருந் திருநுதலார் நறும்பொற் கமலச் சேவடியிற்
கூட்டு முணர்வு கொண்டெழுந்து கோதி லமுத இசைகூடப்
பாட்டும் பாடிப் பரவிஎனும் பதிக மெடுத்துப் பாடினார்.
தெளிவுரை : ஏட்டில் எழுதப்பட்ட வரியில் ஓற்றி நகர் நீங்கலாக என்பதைப் புகுத்தி எழுதும் எழுத்தறியும் பெருமானான கண் பொருந்திய நெற்றியையுடைய இறைவரின் நல்ல அழகிய தாமரை மலரடியில் கூட்டுகின்ற உணர்ச்சியை மேற்கொண்டு எழுந்து குற்றம் இல்லாத அமுத இசை பொருந்தப் பாட்டும் பாடிப் பரவி எனத் தொடங்கும் தொடக்கத்தையுடைய திருப்பதிகத்தை தொடங்கிப் பாடினார்.
3359. பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்றப் புறம்போந்து
நீடு விருப்பிற் பெருங்காதல் நிறைந்த அன்பர் பலர்போற்றத்
தேடும் அயனும் திருமாலும் அறிதற் கரிய திருப்பாதங்
கூடுங் காலங் களில்அணைந்து பரவிக் கும்பிட் டினிதிருந்தார்.
தெளிவுரை : பதிகம் பாடித் தம் அறிவு ஆனந்த பரவசமாவதற்கு ஏதுவான பேரன்பானது தம் உள்ளத்தைப் பற்றிக் கொண்டு வெளியே வந்து மிக்க விருப்பத்தால் பேரன்பு நிறைந்த அன்பர் பலரும் துதிக்கத் தேடும் நான்முகனும் திருமாலும் அறிவதற்கு அரியவரான இறைவரின் திருவடிகளை வழிபாட்டு நிலை கூடி நின்ற எல்லாக் காலங்களிலும் சேர்ந்து வழிபட்டு, நம்பியாரூரர் அங்குத் தங்கியிருந்தார்.
3360. இந்த நிலைமை யாரிவரிங் கிருந்தார் முன்பே இவர்க்காக
அந்தண் கயிலை மலைநீங்கி அருளாற் போந்த அநிந்திதையார்
வந்து புவிமேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன்தொண்டர்
சந்த விரைசூழ் புயஞ்சேர்ந்த பரிசு தெரியச் சாற்றுவாம்.
தெளிவுரை : இத்தகைய நிலைமையுடையவராகி நம்பியாரூரர் இங்குத் திருவொற்றியூரில் தங்கியிருந்தார். அவர் இங்ஙனம் இங்கு வந்து சேர்வதற்கு முன்பாகவே, இவர் பொருட்டு அழகிய குளிர்ந்த கயிலை மலையை நீங்கி இறைவரின் திருவருள் ஆணைப்படி தெற்குத் திக்கில் பிறவியில் போந்த அநிந்திதையார் வந்து நிலவுலகத்தில் தோன்றியருளி வளர்ந்து பின்பு, இந்நாள் வன்தொண்டரின் மணம் சூழ்ந்த தோளைச் சேர்ந்த வரலாற்றை யாவரும் அறியுமாறு சொல்லத் தொடங்குகின்றோம்.
3361. நாலாங் குலத்திற் பெருகுநல முடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க திருஞா யிறுகிழவர்
பாலா தரவு தருமகளார் ஆகிப் பார்மேல் அவதரித்தார்
ஆலா லஞ்சேர் கறைமிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார்.
தெளிவுரை : நாலாம் குலமான வேளாளர் குலத்தில் பெருகி வளரும் நன்மைகளையுடைய மக்கள் வாழ்கின்ற ஞாயிறு என்னும் பதியில், மேன்மை மிக்க ஒழுக்கமுடைய வேளாண்மையின் சிறந்த ஞாயிறு கிழவர் என்ற பெயர் கொண்ட சான்றோரிடத்து, அன்பு தரும் மகளாய் முன் கயிலை மலையில் அநிந்திதையார் என்ற பெயருடன் விளங்கிய அம்மையார், ஆலகாலவிடம் பொருந்தியதால் நீலகண்டரான சிவபெருமானின் ஆணையால், இந்த மண்ணுலகத்தில் தோன்றியருளினார்.
3362. மலையான் மடந்தை மலர்ப்பாதம் மறவா அன்பால் வந்தநெறி
தலையா முணர்வு வந்தணையத் தாமே யறிந்த சங்கிலியார்
அலையார் வேற்கண் சிறுமகளி ராயத் தோடும் விளையாட்டு
நிலையா யினஅப் பருவங்கள் தோறும் நிகழ நிரம்புவார்.
தெளிவுரை : மலையரசன் மகளான பார்வதியம்மையாரின் தாமரை மலர் போன்ற திருவடிகளை மறவாத அன்புடைய நெறியில் முன்னை உணர்வு வந்து பொருந்த அதனைத் தாமே இயல்பில் அறிந்தவாறே தோன்றிய சங்கிலியார் என்ற பெயர் கொண்ட அம்மையார் வருத்தும் தொழிலையுடைய வேல் போன்ற கண்களையுடைய சிறு மகளிர் கூட்டத்தோடும் விளையாட்டுகளின் நிலைமைகள் அவ்வப் பருவங்களில் வந்து நிகழ வயது நிரம்பியவராய்,
3363. சீர்கொள் மரபில் வருஞ்செயலே யன்றித் தெய்வ நிகழ்தன்மை
பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைந்தொடியார்
வாரும் அணிய அணியவாம் வளர்மென் முலைகள் இடைவருத்தச்
சாரும் பதத்தில் தந்தையார் தங்கள் மனைவி யார்க்குரைப்பார்.
தெளிவுரை : அங்ஙனம் பருவம் நிரம்பும் நாளில் சிறப்புடைய குல ஒழுக்க நெறியில் வரும் செயல்களே அல்லாது தெய்வத்தன்மை விளங்கும் பண்புகளும் அமைய உலகில் எல்லாரும் வியப்புக் கொள்ளும் இயல்பில் வளர்ந்து வருகின்ற சங்கிலி அம்மையார், கச்சும் அணியுமாறு நெருங்கிய பருவமுடைய வளர்கின்ற கொங்கைகள் இடையை வருத்தும்படி சார்கின்ற பருவத்தில் அவருடைய தந்தையார் தம் மனைவிக்கு எடுத்துக் கூறத் தொடங்கி,
3364. வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண்ணு ளோர்க்கிசையும்
படிவ மன்றி மேற்பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம்
கடிசேர் மணமும் இனிநிகழுங் கால மென்னக் கற்புவளர்
கொடியே அனைய மனைவியார் ஏற்கு மாற்றால் கொடுமென்றார்.
தெளிவுரை : நம் மகளுக்கு வடிவமும் குணமும் உலகினர்களுக்குப் பொருந்தும் தன்மையால் அன்றி மேம்பட்ட தன்மையால் அமைந்த தன்மையை என் என்று அறிகிலோம்! காப்பு அமைந்த திருமணமும் இனி நிகழ்வதற்குரிய காலம்! என்று சொன்னார். கற்புப் பெருக வளரும் கொடியைப் போன்ற மனைவியார் நமக்குப் பொருந்துமாறு திருமணம் செய்து கொடுப்பீராக! என்று மொழிந்தார்.
3365. தாய ரோடும் தந்தையார் பேசக் கேட்ட சங்கிலியார்
ஏயும் மாற்றம் அன்றிதுஎம் பெருமா னீசன் திருவருளே
மேய வொருவர்க் குரிய தியான் வேறென் விளையும் எனவெருவுற்று
ஆய வுணர்வு மயங்கிமிக அயர்ந்தே அவனி மிசைவிழுந்தார்.
தெளிவுரை : தாயுடன் தந்தையாரும் பேசிக் கொண்டதைக் கேட்ட சங்கிலியார், இது என்னிடம் பொருந்தும் பேச்சன்று. எம்பெருமானின் திருவருள் முழுதும் பொருந்திய ஒருவருக்கே நான் உரியவள்! இதற்கு மாறாக இவர்கள் எண்ணுகின்றதால், யாது விளையுமோ? என்று அச்சம் கொண்டு உணர்வு மயங்கி மிகவும் மூர்ச்சை அடைந்து நிலத்தின் மீது விழுந்தார்.
3366. பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்துப் பரிந்தெடுத்தே
ஏங்கும் உள்ளத் தினராகி இவளுக் கென்னோ உற்றதெனத்
தாங்கிச் சீத விரைப்பனிநீர் தெளித்துத் தைவந் ததுநீங்க
வாங்கு சிலைநன் னுதலாரை வந்த துனக்கிங் கென்னென்றார்.
தெளிவுரை : பக்கத்தில் நின்ற தந்தையாரும் தாயாரும் அதைக் கண்டு பரிவுடன் அவரை எடுத்து வருந்தும் உள்ளத்தை உடையவராய் இவளுக்கு என்ன நேர்ந்தது? எனக் கலக்கம் கொண்டு, அணைத்துத் தாங்கிக் குளிர்ந்த மணமுடைய பனிநீரைத் தெளித்துத் தடவி விடவே, அவரது மயக்கமும் தளர்ச்சியும் நீங்கியது. வளைந்த வில் போன்ற நல்ல நெற்றியையுடைய அவரை உனக்கு யாது நேர்ந்தது? என்று அவர்கள் வினவினர்.
3367. என்று தம்மை ஈன்றெடுத்தார் வினவ மறைவிட் டியம்புவார்
இன்றென் திறத்து நீர்மொழிந்த திதுஎன் பரிசுக் கிசையாது
வென்றி விடையா ரருள் செய்தார் ஒருவர்க் குரியேன் யானினிமேல்
சென்று திருவொற்றி யூரணைந்து சிவனார் அருளிற் செல்வனென.
தெளிவுரை : மேற்கண்ட வண்ணம் பெற்றவர் வினவ, தம் உள்ளத்தில் உள்ளதை மறவாமல் உரைப்பவராய், இன்று என்னைப் பற்றி நீங்கள் பேசியவை என் இயல்புக்குப் பொருந்தா. வெற்றி பொருந்திய காளையையுடைய சிவபெருமான் திருவருள் பெற்ற ஒருவர்க்கே நான் உரியவள். இனிமேல் போயத் திருவொற்றியூர் சேர்ந்து சிவபெருமானது திருவருள் வழியில் செல்வேன்! எனக் கூற,
3368. அந்த மாற்றங் கேட்டவர்தாம் அயர்வும் பயமும் அதிசயமும்
வந்த வுள்ளத் தினராகி மற்ற மாற்றம் மறைத்தொழுகப்
பந்தம் நீடும் இவர்குலத்து நிகராம் ஒருவன் பரிசறியான்
சிந்தை விரும்பி மகட்பேச விடுத்தான் சிலருஞ் சென்றிசைத்தார்.
தெளிவுரை : அந்தப் பேச்சினைக் கேட்ட தந்தையாரும் தாயாரும் தளர்ச்சியும் அச்சமும் வியப்பும் கொண்ட உள்ளம் கொண்டவராகி, அச்சொல்லை மற்றவர் அறியாமல் மறைத்து ஒழுகினர். ஒழுக, பல வழிகளிலும் இவர்களுடன் குலத்தொடர்பு கொண்ட இவர்கள் குலத்துடன் ஒப்புடைய ஒருவன், மேற்கண்ட சங்கிலியாரின் நிலைமை அறியாதவனாய், உள்ளத்து விருப்பத்துடன் அவரை மணம் பேசச் சிலரை அனுப்பினான். அவ்வாறு அனுப்பப்பட்ட சிலரும் அங்ஙனமே போயுரைத்தனர்.
3369. தாதை யாரும் அதுகேட்டுத் தன்மை விளம்பத் தகாமையினால்
ஏத மெய்தா வகைமொழிந்து போக்க அவராங் கெய்தாமுன்
தீதங் கிழைத்தே யிறந்தான்போற் செல்ல விடுத்தா ருடன் சென்றான்
மாத ராரைப் பெற்றார்மற்று அதனைக் கேட்டு மனமருண்டார்.
தெளிவுரை : சங்கிலியாரின் தந்தையாரும் அதைக் கேட்டு அங்கு நிகழ்ந்த தன்மையை வெளிப்படையாய், எடுத்துக் கூறிட மாட்டாமையால், மணம் பேச வந்தவர்க்கு மன வருத்தம் முதலியவை வாராதவாறு வேறான சொற்களைச் சொல்லி, அவர்களை அனுப்பி வைத்தனர். மணம் பேச வந்த அவர்கள் முன்னமேயே அங்குத் தான் பெரிய தீமை செய்ததால் இறந்து விட்டான் போல், அவன் தான் சொல்லும்படி விடுத்த அவர்களுடன் இறந்து ஒழிந்தான். சங்கிலியாரைப் பெற்றெடுத்தவரும் மற்றவரும் அதனைக் கேட்டு உள்ளம் மயக்கம் அடைந்தனர்.
3370. தைய லார்சங் கிலியார்தம் திறத்துப் பேசத் தகாவார்த்தை
உய்ய வேண்டும் நினைவுடையார் உரையா ரென்றங் குலகறியச்
செய்த விதிபோல் இதுநிகழச் சிறந்தார்க் குள்ள படிசெப்பி
நையும் உள்ளத் துடன்அஞ்சி நங்கை செயலே உடன்படுவார்.
தெளிவுரை : பெண்ணான சங்கிலியாரைப் பற்றிப் பேசத் தகாத சொல்லை இறவாமல் வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் பேசமாட்டார்கள் என்று அங்கு உலகர் அறியும்படி செய்த இறைவர் ஏற்படுத்திய விதிபோல் தோன்ற இது நிகழ்ந்திடத் தம் குலத்தில் பெரியவர்க்கு நிகழ்ந்தவற்றை உள்ளவாறே கூறி, வருந்தி உள்ளத்துடன் அச்சம் அடைந்து சங்கிலியார் உரைத்த செயலை உடன்பட்டுச் செய்பவராய்,
3371. அணங்கே யாகும் இவள்செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவரால்
வணங்கும் ஈசர் திறமன்றி வார்த்தை யறியாள் மற்றொன்றும்
குணங்க ளிவையா மினியிவள் தான் குறித்த படியே ஒற்றிநகர்ப்
பணங்கொ ளரவச் சடையார்தம் பாற்கொண் டணைவோம் எனப்பகர்வார்.
தெளிவுரை : தெய்வத் தன்மையேயான இவளது செய்கையை உணர்வுடையோர் பேசவும் அஞ்சுவர். தம்மால் வணங்கப்படும் சிவபெருமானின் திறங்களைப் பற்றிய பேச்சுக்களையன்றி வேறு சொற்களை பேசுதலை இவர் அறியார். இவருடைய குணங்கள் இத்தகையவை. இனி, இவர் தாமே குறிக்கொண்டு கூறியபடியே திருவொற்றியூரில் படத்தையுடைய பாம்பை முடித்த முடியாரான இறைவரிடம் கொண்டு செல்வோம் என்று எண்ணிச் செல்வாராய்,
3372. பண்ணார் மொழிச்சங் கிலியாரை நோக்கிப் பயந்தா ரொடுங்கிளைஞர்
தெண்ணீர் முடியார் திருவொற்றி யூரிற் சேர்ந்து செல்கதியும்
கண்ணார் நுதலார் திருவருளால் ஆகக் கன்னி மாடத்துத்
தண்ணார் தடஞ்சூ ழந்நகரிற் றங்கிப் புரிவீர் தவமென்று.
தெளிவுரை : பெற்றோருடன் சுற்றத்தாரும் கூடி பண்ணிசை போன்ற சொல்லையுடைய சங்கிலியாரைப் பார்த்து, தெளிந்த கங்கை நீரை அணிந்த சடையுடைய சிவபெருமானின் திருவொற்றியூரை அடைந்து இனிமேல் செல்கதியும் பொன் பொருந்திய திருநெற்றியையுடைய பெருமானின் திருவருளேயாகக் குளிர்ந்த பொய்கைகள் சூழ்ந்த அந்தப் பதியில் கன்னி மாடத்தில் தங்கியிருந்து தவம் செய்வீர்! என்று (கூறினர்.) கூறி,
3373. பெற்ற தாதை சுற்றத்தார் பிறைசேர் முடியார் விதியாலே
மற்றுச் செயலொன் றறியாது மங்கை யார்சங் கிலியார் தாம்
சொற்ற வண்ணஞ் செயத்துணிந்து துதைந்த செல்வத் தொடும்புரங்கள்
செற்ற சிலையார் திருவொற்றி யூரிற் கொண்டு சென்றணைந்தார்.
தெளிவுரை : பெற்ற தந்தையாரும் சுற்றத்தாரும் பிறையைச் சூடிய முடியையுடைய சிவபெருமான் விதித்த அருளால், வேறு செயல் ஒன்றையும் அறியாதவராய், முன் சங்கிலியார் தாம் சொன்னவண்ணமே செய்யத் துணிவு கொண்டு, திரண்ட செல்வத்துடன் திரிபுரங்களை அழித்த வில்லாளியாரான சிவபெருமானின் திருவொற்றியூரிலே உடன் அழைத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தனர்.
3374. சென்னி வளர்வெண் பிறையணிந்த சிவனார் கோயி லுள்புகுந்து
துன்னுஞ் சுற்றத் தொடும்பணிந்து தொல்லைப் பதியோர் இசைவினால்
கன்னி மாட மருங்கமைத்துக் கடிசேர் முறைமைக் காப்பியற்றி
மன்னுஞ் செல்வந் தகவகுத்துத் தந்தை யார்வந் தடிவணங்கி.
தெளிவுரை : தலையில் வளர்கின்ற பிறைச்சந்திரனைச் சூடிய சிவபெருமானின் கோயிலுக்குள் புகுந்து, நெருங்கிய சுற்றத்துடன் பணிந்து, பழைமையான அந்தப் பதியினர்க்குத் தெரிவித்து, அவர்களது சம்மதத்துடன் கோயிலின் பக்கத்தில் கன்னிமாடம் ஒன்றை அமைத்துக் காவல் பொருந்தும் வகையில் கட்டச் செய்து, அதற்கு மேல் ஆதரவுக்கு உரித்தாக நிலைபெற்ற செல்வங்களையும் தக்கபடி வகுத்து வைத்துத் தந்தையார் வந்து சங்கிலியாரை அடிவணங்கி,
3375. சென்னி வளர்வெண் பிறையணிந்த சிவனார் கோயி லுள்புகுந்து
துன்னுஞ் சுற்றத் தொடும்பணிந்து தொல்லைப் பதியோர் இசைவினால்
கன்னி மாட மருங்கமைத்துக் கடிசேர் முறைமைக் காப்பியற்றி
மன்னுஞ் செல்வந் தகவகுத்துத் தந்தை யார்வந் தடிவணங்கி.
தெளிவுரை : நாங்கள் உமக்கு வேண்டிய தொண்டுகளைச் செய்து கொண்டிருக்க, நீவிர் இறைவர்க்குரிய பணிகளைச் செய்தலையே விரும்பிக் கன்னி மாடத்தில் தங்கியீருப்பீர்! என்று சொல்கின்றவர் ஆகி, உள் அடங்குதற்குரிய கண்ணீர் விழிகளினின்றும் பெருகி ஒழுகப் பொறுக்கமாட்டாதவராகி, ஏங்கும் உறவினரோடும் கூடிச் சங்கிலியாரை வணங்கி, மதில் பொருந்திய தம் ஊரான ஞாயிற்றிடத்துச் சென்றார் தந்தையார்.
3376. சென்னி வளர்வெண் பிறையணிந்த சிவனார் கோயி லுள்புகுந்து
துன்னுஞ் சுற்றத் தொடும்பணிந்து தொல்லைப் பதியோர் இசைவினால்
கன்னி மாட மருங்கமைத்துக் கடிசேர் முறைமைக் காப்பியற்றி
மன்னுஞ் செல்வந் தகவகுத்துத் தந்தை யார்வந் தடிவணங்கி.
தெளிவுரை : பக்தியுடன் இடைவிடாது எண்ணித் தவத்தைச் செய்யும் கன்னியரரான சங்கிலியார் அக்கன்னி மாடத்தில் விரும்பித் தங்கியிருந்தார். தங்கி, பூதத்தலைவரான சிவபெருமானின் திருக்கோயிலில் வழிபட்டு உரிய காலங்களில் எல்லாம் புகுந்து வணங்கி அமைத்த நீதி மரபு முறை வழுவாமல் தமக்கு நேர்ந்த திருப்பணியினைச் செய்யும் பொருட்டுக் குளிர்ந்த மலர்களையுடைய பூ மண்டபத்துள் சுற்றிலும் திரையால் சூழப்பட்ட ஒரு பாகத்தில் போய்ச் சேர்ந்து,
3377. பண்டு கயிலைத் திருமலையில் செய்யும் பணியின் பான்மைமனம்
கொண்ட உணர்வு தலைநிற்பக் குலவு மலர்மென் கொடியனையார்
வண்டு மருவுந் திருமலர்மென் மாலை காலங் களுக்கேற்ப
அண்டர் பெருமான் முடிச்சாத்த அமைத்து வணங்கி யமருநாள்.
தெளிவுரை : முன் நாளில் கயிலை மலையில் செய்யும் திருப்பணியின் தன்மையே தொடர்ந்து உள்ளத்தில் கொண்ட முந்தைய உணர்ச்சியே தம்முள் ஓங்கி நிற்க, விளக்கமுடைய மலர்கள் மலர்ந்த பூங்கொடி போன்ற சங்கிலி அம்மையார் வண்டுகள் மொய்த்துப் பொருந்தும் மலர்களால் ஆன மென்மையான மாலைகளைக் காலங்களுக்கு ஏற்றபடி இறைவரின் திருமுடியுள் சாத்துதற்கு அமைத்துத் தந்து விரும்பித் தங்கியிருந்தார். அந்நாளில்,
3378. அந்தி வண்ணத் தொருவர்திரு வருளால் வந்த ஆரூரர்
கந்த மாலைச் சங்கிலியார் தம்மைக் காதல் மணம்புணர
வந்த பருவ மாதலால் வகுத்த தன்மை வழுவாத
முந்தை விதியால் வந்தொருநாள் முதல்வர் கோயி லுட்புகுந்தார்.
தெளிவுரை : மாலைக் காலம் போன்ற சிவந்த நிறமுடைய ஒருவரான இறைவரின் திருவருளால், சுந்தரர் மணமுடைய மாலை சூடிய சங்கிலியாரைக் காதல் மணத்தால் பொருந்த வந்த பருவமானது இது. ஆதலால், இறைவர் விதித்த வழுவாத நியதியின்படி முந்தைவிதியால் ஒருநாள் தமது திருமாளிகையினின்றும் வந்து இறைவரின் கோயிலுள் புகுந்தார்.
3379. அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி யங்கணரைப்
பண்டை முறைமை யாற்பணிந்து பாடிப் பரவிப் புறம்போந்து
தொண்டு செய்வார் திருத்தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார்
புண்ட ரீகத் தடம்நிகர்பூந் திருமண் டபத்தி னுட்புகுந்தார்.
தெளிவுரை : தேவரின் தலைவரான சிவபெருமான் அந்தணராக வந்து ஆட்கொண்ட நம்பியாரூரர், இறைவரை முன்னைய முறையாலே வணங்கிப் பாடித் துதித்து, வெளியே வந்து, பலவகையினாலும் தொண்டைச் செய்பவரான அடியார்களின் செயல்களைக் கண்டு வணங்கிச் செல்பவராய்த் தாமரைப் பொய்கை போன்ற பூமண்டபத்துள் புகுந்தார்.
3380. அன்பு நாரா அஞ்செழுத்து நெஞ்சு தொடுக்க அலர்தொடுத்தே
என்புள் ளுருகும் அடியாரைத் தொழுது நீங்கி வேறிடத்து
முன்பு போலத் திரைநீக்கி முதல்வர் சாத்தும் பணிகொடுத்து
மின்போல் மறையுஞ் சங்கிலியார் தம்மை விதியாற் கண்ணுற்றார்.
தெளிவுரை : அன்பே நாராகத் திருவைந்தெழுத்து என்ற மலர்களை மனம்தொடுக்கவும், தாம் கைகளால் மலர்களைத் தொடுத்தே உள்ளே எலும்பும் உருக மனம் உருக நிகழும் அடியார்களை (நம்பியாரூரர்) கண்டு வணங்கி நீங்கிய பின்பு, அங்கு வேறொரு இடத்தில், முன்புபோல் திரையை விலக்கி இறைவர்க்குச் சாத்தும் பணிகளாகிய மாலைகளைத் தொடுத்து வந்து மின்னலைப் போல் மறையும் சங்கிலியாரை விதியால் பார்த்தருளினார்.
3381. கோவா முத்தும் சுரும்பேறாக் கொழுமென் முகையு மனையாரைச்
சேவார் கொடியார் திருத்தொண்டர் கண்ட போது சிந்தைநிறை
காவா தவர்பால் போய்வீழத் தம்பாற் காம னார் துரந்த
பூவா ளிகள்வந் துறவீழத் தரியார் புறமே போந்துரைப்பார்.
தெளிவுரை : கோக்கப்படாத முத்தையும் வண்டுகள் மொய்க்காத கொழுவிய மென்மையான அரும்பையும் போன்றவரான சங்கிலியாரைக் காளைக் கொடியையுடைய இறைவரின் தொண்டரான நம்பியாரூரர் கண்டபோது, தம் மனம் நிறைவினால் காக்க இயலாது அவரிடம் சென்று விழவும் ஆற்ற இயலாதவராய் வெளியே வந்து,
3382. இன்ன பரிசென் றறிவரிதால் ஈங்கோர் மருங்கு திரைக்குள்ளால்
பொன்னும் மணியும் மலர்ந்தவொளி யமுதில் அளாவிப் புதியமதி
தன்னுள் நீர்மை யால்குழைத்துச் சமைத்த மின்னுக் கொடிபோல்வாள்
என்னை யுள்ளந் திரிவித்தாள் யார்கொல் என்றங் கியம்புதலும்.
தெளிவுரை : இதுதான் இன்ன தன்மையுடையது என்று அறிதல் அரிதாக இருக்கின்றது இங்குத் தனியாய் ஒரு பக்கத்தில் திரைக்குள் பொன்னும் மணிகளும் கூடி மலர்ந்த ஒளி அழுத்தத்துடன் கலந்து புதிய சந்திரனின் உண்ணீர்மையால் குழைத்து ஆக்கிய மின்னல் கொடி போன்ற பெண் என்னை உள்ளம் திரியுமாறு செய்தாள். அவள் யார்?
3383. அருகு நின்றார் விளம்புவார் அவர்தாம் நங்கை சங்கிலியார்
பெருகு தவத்தால் ஈசர்பணி பேணுங் கன்னி யாரென்ன
இருவ ராலிப் பிறவியைஎம் பெருமான் அருளால் எய்துவித்தார்
மருவும் பரவை ஒருத்திஇவள் மற்றை யவளாம் எனமருண்டார்.
தெளிவுரை : சுந்தரர் அவ்வாறு வினவவும், பக்கத்தில் நின்றவர் அவர்தாம் சங்கிலியார் என்ற கன்னியார், பெருகும் தவத்தினால் இறைவரின் திருப்பணிகளைத் தொடர்ந்து பற்றிச் செய்யும் கன்னியாவார்! என்று உரைத்தனர். இருவர் பொருட்டாக இறைவர் திருவருளால் இப்பிறவியை எனக்குக் கூட்டுவித்தார். முன்னே பொருந்தும் பரவை அவர்களும்ள் ஒருத்தியாவாள். இவள் அவ்விருவருள் மற்றவள் போலும்! என்று மனம் மருண்டார்.
3384. மின்னார் சடையார் தமக்காளாம் விதியால் வாழும் எனைவருத்தித்
தன்னா ரருளால் வரும்பேறு தவத்தால் அணையா வகைதடுத்தே
என்னா ருயிரும் எழின்மலரும் கூடப் பிணைக்கும் இவள்தன்னைப்
பொன்னார் இதழி முடியார்பால் பெறுவே னென்று போய்ப்புக்கார்.
தெளிவுரை : மின்னல் போன்ற சடையையுடைய சிவபெருமானுக்கே ஆளாகி ஒழுகும் விதியின்படி வாழ்வதையே கருமமாகக் கொண்டு வாழும் என்னை வருத்தி, இறைவர் திருவருளால் வரும் பேற்றை நான் சேராதபடி தன் தவத்தால் தடை செய்தே, என் அரிய உயிரையும் அழகிய மலர்களையும் ஒரு சேரக் கட்டுகின்ற இவளை, பொன் போன்ற நெருங்கிய கொன்றை மாலை சூடிய முடியையுடைய இறைவரிடம் பெறுவேன் எனப்போய்த் திரும்பவும் கோயிலுக்குள் புகுந்தார்.
3385. மலர்மே லயனும் நெடுமாலும் வானும் நிலனுங் கிளைத்தறியா
நிலவு மலருங் திருமுடியும் நீடுங் கழலும் உடையாரை
உலக மெல்லாந் தாமுடையார் ஆயும் ஒற்றி யூரமர்ந்த
இலகு சோதிப் பரம்பொருளை இறைஞ்சி முன்னின் றேத்துவார்.
தெளிவுரை : தாமரை மலரின் மேல் இருக்கும் நான்முகனும் நெடிய திருமாலும் முறையே வானத்திலும் நிலத்திலும் கிளைத்து அறியமாட்டாத பிறைச்சந்திரன் வளர்கின்ற திருமுடியையும் கழலையும் உடைய இறைவரை, உலகங்களை எல்லாம் தாம் உடையவராய் இருந்தும், ஒற்றியூரில் விரும்பி எழுந்தருளி விளங்கும் ஒளிப்பிழம்பான இறைவரை வணங்கித் திருமுன்பு நின்று துதிப்பராய்,
3386. மங்கை யொருபால் மகிழந்ததுவும் அன்றி மணிநீண் முடியின்கண்
கங்கை தன்னைக் கரந்தருளும் காதலுடையீர் அடியேனுக்
கிங்கு நுமக்குத் திருமாலை தொடுத் தெனுள்ளத் தொடையவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத் தந்தென் வருத்தந் தீருமென.
தெளிவுரை : பெண்ணான உமையம்மையாரை ஒரு பாகத்தில் மகிழ்ந்து கொண்டதே அல்லாது அழகிய நீண்ட தலைமுடியில் கங்கை என்ற மங்கையையும் மறைத்து வைத்தருளும் மிக்க காதல் உடையவரே! இங்கு உங்கட்கு மாலையைத் தொடுத்துக்கட்டி, என் கட்டுடன் நின்ற உள்ளமான தொடையை அவிழ்த்த திங்கள் போன்ற முகத்தையுடைய சங்கிலியை அடியவனான எனக்குத் தந்தருளி என் வருத்தத்தைப் போக்குவீர்! எனக் கூறி,
3387. அண்ண லார்முன் பலவும்அவர் அறிய வுணர்த்திப் புறத்தணைந்தே
எண்ண மெல்லாம் உமக்கடிமை யாமா றெண்ணும் என்னெஞ்சில்
திண்ண மெல்லா முடைவித்தாள் செய்வ தொன்று மறியேன் யான்
தண்ணி லாமின் னொளிர்பவளச் சடையீர் அருளும் எனத்தளர்வார்.
தெளிவுரை : இங்ஙனம் இறைவரின் திருமுன்பு பலவற்றையும் அவர் அறியுமாறு சொல்லி வெளியே வந்து நான் எண்ணும் எண்ணங்கள் எல்லாம் உமக்கு அடிமையேயாகும் நிலைகளை நினைக்கின்ற என் மனத்தின் உறுதிப்பாடான வலிமை எல்லாமும் உடையுமாறு செய்தாள். மேலே செய்யக்கூடியது நான் அறியேன்! குளிர்ந்த பிறைச்சந்திரன் விளங்கும்
3388. மதிவாள் முடியார் மகிழ்கோயிற் புறத்தோர் மருங்கு வந்திருப்பக்
கதிரோன் மேலைக் கடல்காண மாலைக் கடலைக் கண்டயர்வார்
முதிரா முலையார் தம்மைமணம் புணர்க்க வேண்டி முளரிவளை
நிதியா னண்பர் தமக்கருளும் நண்பால் நினைந்து நினைந்தழிய.
தெளிவுரை : சந்திரன் ஒளி வீசும் முடியையுடைய சிவபெருமான் மகிழும் கோயிலின் வெளியே ஒருபாகத்தில் நம்பியாரூரர் தங்கியிருக்க, கதிரவன் மேற்குக் கடலைச் சேரும் காலமான அப்போது மாலையான கடலைத் தாம் கண்டு தளர்வாராய், முதிராத இளங்கொங்கையையுடைய சங்கிலியாரை மணம் செய்து கொள்வதை விரும்பிப் பதுமநிதியும் சங்கநிதியும் உடைய குபேரனது நண்பரான சிவபெருமான் தமக்கு அருள்செய்யும் தோழமையான உரிமையால் நினைந்து நினைந்து மனம் வருந்த,
3389. உம்ப ருய்ய உலகுய்ய ஓல வேலை விடமுண்ட
தம்பி ரானார் வன்தொண்டர் தம்பா லெய்திச் சங்கிலியை
இம்ப ருலகில் யாவருக்கும் எய்த வொண்ணா இருந்தவத்துக்
கொம்பை உனக்குத் தருகின்றோம் கொண்ட கவலை ஒழிகென்ன.
தெளிவுரை : வானவர் உய்யவும் உலகம் உய்யவும் ஒளியுடைய கடலினின்றும் எழுந்த விடத்தை உண்டருளிய தம் பெருமானார், தாமே ஆட்கொண்ட வன்றொண்டரிடத்தில் எழுந்தருளி, இந்தவுலகத்தில் எத்தன்மையாருக்கும் அடையமுடியாத பெரிய தவமுடைய கொம்பு போன்ற சங்கிலியாரை உனக்குத் தருகின்றோம்! நீ உள்ளத்துள் கொண்ட கவலையை ஒழிப்பாயாக! எனக் கூறிட,
3390. அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய ஆண்டு கொண்டருளி
ஒன்று மறியா நாயேனுக் குறுதி யளித்தீர் உயிர்காக்க
இன்றும் இவளை மணம்புணர்க்க ஏன்று நின்றீர் எனப்போற்றி
மன்றல் மலர்ச்சே வடியிணைக்கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன்தொண்டர்.
தெளிவுரை : முன் நாளில் அன்று திருவெண்ணெய்நல்லூரில் நீவிரே வந்து வலிய ஆட்கொண்டு ஒன்றும் அறியாத நாயேனுக்கும் உறுதி தந்தருளினீர்! என் உயிரைப் போகாமல் காக்கும் பொருட்டு, அதுபோலவே, இன்றும் இவளை எனக்கு மணம் புணரச் செய்ய ஏற்றுக்கொண்டீர்! எனத் துதித்து, அவரது மணம் கமழும் தாமரை மலர் போன்ற சேவடிக்கீழ் விழுந்து வணங்கி வன்றொண்டர் மகிழ்ச்சி அடைந்தார்.
3391. ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக் கருளிக் கருணையினால்
நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறைமதியந்
தீண்டு கன்னி மாடத்துச் சென்று திகழ்சங் கிலியாராம்
தூண்டு சோதி விளக்கனையார் தம்பால் கனவில் தோன்றினார்.
தெளிவுரை : ஆட்கொண்ட அந்தணரான இறைவர் அவர்க்கு அங்ஙனம் அருள் செய்து கருணையினால் நீண்ட இரவுப்பொழுதில் யாமத்தில் நீங்கி வானத்தில் நிறைந்த மதி தீண்டுகின்ற உயர்ந்த கன்னிமாடத்தில் போய்த் தூண்டப்பட்ட ஒளியையுடைய விளக்கைப் போன்ற சங்கிலி அம்மையாரிடம் கனவில் தோன்றியருளினார்.
3392. தோற்றும் பொழுதிற் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய்
ஆற்ற அன்பு பொங்கியெழுந் தடியே னுய்ய எழுந் தருளும்
பேற்றுக் கென்யான் செய்வதெனப் பெரிய கருணை பொழிந்தனைய
நீற்றுக் கோல வேதியரும் நேர்நின் றருளிச் செய்கின்றார்.
தெளிவுரை : அங்ஙனம் இறைவர் சங்கிலி அம்மையாரின் கனவில் தோன்றிய போது, அந்தச் சங்கிலி அம்மையார், தொழுது நிலத்தில் பொருந்த விழுந்து, பரவசமாய் அன்பு மிகவும் வெள்ளமாகப் புரண்டு எழு, அடியேன் உய்யும் பொருட்டு தாங்கள் எழுந்தருளப் பெறும் பேற்றுக்கு நான் என்ன கைமாறு செய்ய வல்லேன்! எனத் துதித்தார். பெருங்கருணையே மேலே பொழிந்தாற் போல் விளங்கும் திருநீற்றுக் கோலத்தை உடைய வேதியராகித் தோன்றிய சிவபெருமானும் நேரே நின்று கூறலானார்.
3393. சாருந் தவத்துச் சங்கிலிகேள் சால என்பா லன்புடையான்
மேரு வரையின் மேம்பட்ட தவத்தான் வெண்ணெய் நல்லூரில்
யாரு மறிய யான்ஆள உரியான் உன்னை யெனையிரந்தான்
வார்கொள் முலையாய் நீயவனை மணத்தால் அணைவாய் மகிழ்ந்தென்றார்.
தெளிவுரை : சேரும் பெருந்தவத்தையுடைய சங்கிலியே! கேள்! என்னிடத்தில் மிக்க அன்புடையவன். மேருமலையை விட மேன்மையான தவத்தை உடையவன். திருவெண்ணெய்நல்லூரில் அனைவரும் காண யான் ஆளாகக் கொள்ளும் உரிமை பெற்றவன். அத்தகையவன் உன்னைத் தனக்கு வேண்டும் என்று என்னிடம் இரந்தான். கச்சணிந்த கொங்கையுடையவளே! நீ அவனை மணம் செய்து கொண்டு மகிழ்வுடனே அணைவாயாக! என அருளிச் செய்தார்.
3394. ஆதி தேவர் முன்னின்றங் கருளிச் செய்த பொழுதின்கண்
மாத ரார்சங் கிலியாரும் மாலும் மயனு மறிவரிய
சீத மலர்த்தா மரையடிக்கீழ்ச் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று
வேத முதல்வர் முன்னடுக்கம் எய்தித் தொழுது விளம்புவார்.
தெளிவுரை : ஆதிபகவரான சிவபெருமான் அங்ஙனம் கனவில் எழுந்தருளி அருளிச் செய்த சமயத்தில், சங்கிலி அம்மையாரும், திருமாலும் நான்முகனும் அறிவதற்கு அரிய குளிர்ந்த தாமரை மலர் போன்ற அடிக்கீழ்ச் சேர்ந்து வீழ்ந்து நேராக நின்று, மறை முதல்வரான இறைவரின் முன்னால் நின்று நடுக்கத்தை அடைந்து வணங்கிச் சொல்லலானார்.
3395. எம்பி ரானே நீரருளிச் செய்தார்க் குரியேன் யான்இமையோர்
தம்பி ரானே அருள்தலைமேற் கொண்டேன் தக்க விதிமணத்தால்
நம்பி யாரூ ரருக்கென்னை நல்கி யருளும் பொழுதிமயக்
கொம்பி னாகங் கொண்டீர்க்குக் கூறுந் திறமொன் றுளதென்பார்.
தெளிவுரை : எம்பெருமானே! தேவரின் தலைவரே! தாங்கள் அருளிச் செய்தவர்க்கே நான் உரியேன்! தங்கள் ஆணையைத் தலை மேற்கொண்டேன். தக்கவாறு விதி மணத்தின்படி நம்பியாரூரர்க்கு என்னைத் தந்தருளும் போது, இமயக் கொம்பான உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட தங்களுக்குச் சொல்கின்ற திறம் ஒன்று இருக்கின்றது என்று கூறினார்.
3396. பின்னும் பின்னல் முடியார்முன் பெருக நாணித் தொழுரைப்பார்
மன்னுந் திருவா ரூரின்கண் அவர்தாம் மிகவும் மகிழ்ந்துறைவ
தென்னுந் தன்மை யறிந்தருளும் எம்பி ராட்டி திருமுலைதோய்
மின்னும் புரிநூல் அணிமார்பீர் என்றார் குன்றா விளக்கனையார்.
தெளிவுரை : புரியான சடையுடைய இறைவர் முன்பு மிகவும் நாணத்துடன் வணங்கி மேலும் கூறுபவராய், நிலைபெற்ற திருவாரூரிடத்தே அவர் மகிழ்ச்சியுடன் நிலையாக எழுந்தருளுவார் என்ற தன்மையை அறிந்து அதற்கு ஏற்றவாறு தாங்கள் அருள் செய்ய வேண்டும். எம்பிராட்டியான உமையம்மையாரின் திருமார்பு தோய்ந்த மின்னும் வெண்மையான பூணூல் அணிந்த மார்பையுடையவரே! என்று குறையாத விளக்கைப் போனற சங்கிலியார் உரைத்தார்.
3397. மற்றவர்தம் உரைகொண்டு வன்தொண்டர் நிலைமையினை
ஒற்றிநகர் அமர்ந்தபிரான் உணர்ந்தருளி யுரைசெய்வார்
பொற்றொடியா யுனையிகந்து போகாமைக் கொருசபதம்
அற்றமுறு நிலைமையினால் அவன்செய்வா னெனவருளி.
தெளிவுரை : அந்தச் சங்கிலியாரின் சொற்களை ஏற்றுக்கொண்டு வன்றொண்டரின் உள்ளத்து நிலைமையையும், திருவொற்றியூரில் அமர்ந்த இறைவர் உள்ளத்தில் கொண்டு உரைப்பவராய், பொன்னால் இயன்ற வளையலை அணிந்தவளே! உன்னை விட்டுப் பிரிந்து போகாமல் இருத்தற்கு அந்தரங்கமாய்ப பொருந்துகின்ற நிலைமையில் அவன் ஒரு சபதம் செய்வான் என்று கூறி அருள் செய்து,
3398. வேயனைய தோளியார் பால்நின்று மீண்டருளித்
தூயமனம் மகிழ்ந்திருந்த தோழனார் பால்அணைந்து
நீஅவளை மணம்புணரும் நிலையுரைத்தோம் அதற்கவள்பால்
ஆயதொரு குறைஉன்னால் அமைப்பதுள தென்றருள.
தெளிவுரை : மூங்கிலைப் போன்ற தோளையுடைய சங்கிலி நாச்சியாரிடமிருந்து மீண்டு போய்த் தூய்மையான மனத்தில் மகிழ்ச்சியுடன் இருந்த நண்பரான நாவலூரரிடம் வந்து சேர்ந்து, நீ மணம் செய்து கொள்ளும் நிலையை அச்சங்கிலியாரிடம் யாம் உரைத்தோம். அதற்காக அவளிடம் உன்னால் அமைக்க வேண்டியதாகிய குறை ஒன்று இருக்கின்றது என உரைத்தார்.
3399. வன்தொண்டர் மனங்களித்து வணங்கிஅடி யேன்செய்ய
நின்றகுறை யாதென்ன நீயவளை மணம்புணர்தற்
கொன்றியுட னேநிகழ ஒருசபத மவள்முன்பு
சென்றுகிடைத் திவ்விரவே செய்கவென வருள்செய்தார்.
தெளிவுரை : வன்தொண்டரான சுந்தரர் உள்ளம் மகிழ்ந்து வணங்கி அடியேனால் செய்யப்பட வேண்டியது யாது? என்று வினவினார். இறைவர், நீங்காது அவளுடன் ஒன்றித் தங்கி வாழ்வதாக ஒரு சபதத்தை அவள் முன்பு சென்று சேர்ந்து இவ்விரவிலேயே செய்க! என்று அருள் செய்தார்.
3400. என்செய்தால் இதுமுடியும் ஆதுசெய்வன் யானிதற்கு
மின்செய்த புரிசடையீர் அருள்பெறுதல் வேண்டுமென
முன்செய்த முறுவலுடன் முதல்வரவர் முகநோக்கி
உன்செய்கை தனக்கினியென் வேண்டுவதென் றுரைத்தருள.
தெளிவுரை : மின்னொளி தங்கும் சடையையுடையவரே! எதைச் செய்தால் இந்தத் திருமணம் முற்றுப் பெறுமோ அதனை நான் செய்வேன்! அதற்கு தங்களது திருவருளை அடியேன் பெறுதல் வேண்டும் என நாவலூரர் (உரைத்தார்) உரைக்க, முன்னால் தோன்றும் சிரிப்புடனே முதல்வரான இறைவர் அவரது முகத்தைப் பார்த்து செய்வதான உன் செயலை நீ முடிப்பதற்கு என்ன வேண்டுவது? என்று (வினவினார்) வினவ,
3401. வம்பணிமென் முலையவர்க்கு மனங்கொடுத்த வன்தொண்டர்
நம்பரிவர் பிறபதியும் நயந்தகோ லஞ்சென்று
கும்பிடவே கடவேனுக் கிதுவிலக்கா மெனுங்குறிப்பால்
தம்பெருமான் றிருமுன்பு தாம்வேண்டுங் குறையிரப்பார்.
தெளிவுரை : கச்சை அணிந்த இளங்கொங்கையையுடைய சங்கிலியாருக்குத் தம் மனத்தைத் தந்த வன்தொண்டர், நம்பரான இறைவர் இவர் மற்றப் பதிகளிலும் விரும்பி எழுந்தருளியிருக்கும் திருக்கோலங்களை அங்கங்கும் போய் வணங்குவதையே கடனாகக் கொண்ட எனக்கு இது தடையாகும் என்று மனத்தில் கொண்ட குறிப்பினால் தம் இறைவரின் திருமுன்பு தாம் வேண்டும் குறையை இரப்பவராய்,
3402. சங்கரர்தாள் பணிந்திருந்து தமிழ்வேந்தர் மொழிகின்றார்
மங்கையவள் தனைப்பிரியா வகைசபதஞ் செய்வதனுக்
கங்கவளோ டியான்வந்தால் அப்பொழுது கோயில்விடத்
தங்குமிடந் திருமகிழ்க்கீழ்க் கொளவேண்டு மெனத்தாழ்ந்தார்.
தெளிவுரை : சங்கரரான இறைவரின் திருவடிகளை வணங்கிப் பணிந்து தமிழ் வேந்தரான நம்பியாரூரர் சொல்லலானார். மங்கையவரான சங்கிலியைப் பிரியாதிருப்பதற்கான சபதத்தைச் செய்வதற்காக அங்கு உம் திருமுன்பு நான் வரின் அப்போது தாங்கள் திருக்கோயிலை விட்டு நீங்கித் தாங்கள் தங்கும் இடம் மகிழமரத்தின் கீழ் இடமாகக் கொண்டருள வேண்டும் என்று அவர் சொல்லி வணங்கினார்.
3403. தம்பிரான் தோழரவர் தாம்வேண்டிக் கொண்டருள
உம்பர்நா யகருமதற் குடன்பாடு செய்வாராய்
நம்பிநீ சொன்னபடி நாஞ்செய்தும் என்றருள
எம்பிரா னேயரிய தினியெனக்கென் னெனவேத்தி.
தெளிவுரை : தம்பிரான் தோழரான நம்பியாரூரர் இங்ஙனம் வேண்டிக்கொள்ளவும், தேவர் தலைவரான இறைவரும் அதற்குத் தாம் இசைபவராய், நம்பி! நீ கூறியபடியே நாம் செய்வோம்! என்று அருளினார். எம்பெருமானே! தாங்கள் இங்ஙனம் அருளுவதானால் எனக்கு எச்செயல்தான் அரியதாகும்? எனத் துதித்து,
3404. அஞ்சலிசென் னியில்மன்ன அருள்பெற்றுப் புறம்போதச்
செஞ்சடையார் அவர்மாட்டுத் திருவிளையாட் டினைமகிழ்ந்தோ
வஞ்சியிடைச் சங்கிலியார் வழியடிமைப் பெருமையோ
துஞ்சிருள்மீ ளவும்அணைந்தார் அவர்க்குறுதி சொல்லுவார்.
தெளிவுரை : சுந்தரர் தலையின் மீது அஞ்சலியாகக் கைகளைக் குவித்து வணங்கி, அருள்விடை பெற்று வெளியே சென்றார். சிவந்த சடையையுடைய இறைவர், அந்தத் தம்பிரான் தோழரான சுந்தரரிடத்துத் திருவிளையாடலை எண்ணியோ வஞ்சிக்கொடி போன்ற இடையுடைய சங்கிலியின் அடிமைப் பெருமையை எண்ணியோ என்னவோ அறியோம், செறிந்த இருளில் மீண்டும் உறுதி கூறுவாராய்ச் சங்கிலியாரிடம் வந்தார்.
3405. சங்கிலியார் தம்மருங்கு முன்புபோற் சார்ந்தருளி
நங்கையுனக் காரூரன் நயந்துசூ ளுறக்கடவன்
அங்கு நமக் கெதிர்செய்யும் அதற்குநீ யிசையாதே
கொங்கலர்பூ மகிழின்கீழ்க் கொள்கவெனக் குறித்தருள.
தெளிவுரை : சங்கிலியாரிடம் முன்போல் கனவில் தோன்றியருளி, பெண்ணே! நம்பி ஆரூரர் விருப்புடன் உனக்குச் சபதம் செய்வான். ஆனால் அங்குக் கோயிலில் நம் எதிரில் செய்வதற்கு நீ உடன்படாதே! மணம் பரவும் மலர்கள் நிறைந்த மகிழ மரத்தின் கீழே அச்சபதம் செய்ய ஏற்றுக் கொள்வாயாக! எனக்குறித்து அருள் (செய்தார்). செய்ய,
3406. மற்றவருங் கைகுவித்து மாலயனுக் கறிவரியீர்
அற்றமெனக் கருள்புரிந்த அதனில்அடி யேனாகப்
பெற்றதியான் எனக்கண்கள் பெருந்தாரை பொழிந்திழிய
வெற்றிமழ விடையார்தம் சேவடிக்கீழ் வீழ்ந்தெழுந்தார்.
தெளிவுரை : அதைக் கேட்ட சங்கிலியாரும் கைகுவித்து வணங்கி, திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரியவரே! உண்மையான அந்தரங்கத்தை எனக்கு அருள் செய்ய அதனால் அடியேன் ஏற்றுக்கொள்ளப்பெற்றேன் யான்! என்று சொல்லி, கண்களினின்றும் பெருந்தாரையாய் நீர் பெருகி வழிய வெற்றியையுடைய இறைவரின் சேவடிக் கீழ் விழுந்து பணிந்து எழுந்தார்.
3407. தையலார் தமக்கருளிச் சடாமகுடர் எழுந்தருள
எய்தியபோ ததிசயத்தால் உணர்ந்தெழுந்தவ் விரவின்கண்
செய்யசடை யாரருளின் திறம்நினைந்தே கண்துயிலார்
ஐயமுடன் அருகுதுயில் சேடியரை அணைந்தெழுப்பி.
தெளிவுரை : சடைமுடியையுடைய இறைவர் சங்கிலியாருக்கு அருள் செய்து மறைந்து நீங்கினார். இந்த நிகழ்ச்சி பொருந்தப் பெற்ற அச்சமயத்தில் சங்கிலியார் அதிசயமான மனநிலையால் துயில் உணர்ந்து எழுந்து, அந்த இரவிலே சிவந்த சடையையுடைய இறைவரின் பெருங்கருணையின் திறத்தை நினைத்து இருந்தமையால் உறக்கம் வாராமல், ஐயத்துடன் தம் பக்கத்தில் உறங்கிய தோழியரிடம் சென்று அவர்களை எழுப்பினார்.
3408. நீங்குதுயிற் பாங்கியர்க்கு நீங்கல்எழுத் தறியுமவர்
தாங்கனவில் எழுந்தருளித் தமக்கருளிச் செய்ததெலாம்
பாங்கறிய மொழியஅவர் பயத்தினுடன் அதிசயமும்
தாங்குமகிழ்ச் சியும்எய்தச் சங்கிலியார் தமைப்பணிந்தார்.
தெளிவுரை : இங்ஙனம் உறக்கத்தினின்றும் நீங்கிய தோழியரிடம் நீங்கல் என்ற எழுத்தை எழுதி, அதனால் எழுத்தறியும் பெருமாள் என அழைக்கப்பெற்ற திருவொற்றியூர் இறைவர் தாமே, தம் கனவில், இரண்டு முறை எழுந்தருளித் தமக்கு அருள் செய்ததை எல்லாம், முறைமைப்படி அறியுமாறு சொல்ல, அத்தோழியர் அச்சத்துடன் அதிசயமும் பொருந்திய மகிழ்ச்சியும் கொள்ளச் சங்கிலியாரை வணங்கினர்.
3409. சேயிழையார் திருப்பள்ளி யெழுச்சிக்கு மலர்தொடுக்கும்
தூயபணிப் பொழுதாகத் தொழில்புரிவா ருடன்போதத்
கோயிலின்முன் காலமது வாகவே குறித்தணைந்தார்
ஆயசப தஞ்செய்ய வரவுபார்த் தாரூரர்.
தெளிவுரை : இறைவரின் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் மாலைகள் தொடுக்கும் தூய பணிக்குரிய நேரம் ஆனதால் சங்கிலியார், உடன் கூடித் தொழில் செய்யும் தோழியருடனே செல்ல, கோயிலின் முன்பு, நம்பியாரூரர் சங்கிலியாரின் வரவை எதிர்பார்த்து, முன்னர் இறைவரின் ஆணையால் ஆன சபதத்தைச் செய்வதற்காக ஏற்ற சமயம் அதுவேயாகும் என்று குறித்து வந்து சேர்ந்தார்.
3410. நின்றவர்அங் கெதிர்வந்த நேரிழையார் தம்மருங்கு
சென்றணைந்து தம்பெருமான் திருவருளின் திறங்கூற
மின்தயங்கு நுண்ணிடையார்தி விதியுடன்பட் டெதிர்விளம்பார்
ஒன்றியநா ணொடுமடவார் உடனொதுங்கி உட்புகுந்தார்.
தெளிவுரை : அங்ஙனம் எதிர்பார்த்து நின்ற சுந்தரர் தம் எதிரில் வந்த சங்கிலியாரின் பக்கத்தில் சென்று அடைந்து, தம் இறைவரின் திருவருளின் திறங்களை எடுத்துக்கூற, மின்போல் துவளும் இடையை உடைய சங்கிலியார் அங்ஙனம் விதித்ததற்குத் தம் உடன்பாட்டை எதிரே கூறாதவராய், இயற்கையில் உண்டான நாணத்துடன் தோழியர்களுடன் கூடி ஒதுங்கிச் சென்று கோயிலுக்குள் புகுந்தார்.
3411. அங்கவர்தம் பின்சென்ற ஆரூரர் ஆயிழையீர்
இங்குநான் பிரியாமை உமக்கிசையும் படியியம்பத்
திங்கள்முடி யார்திருமுன் போதுவீர் எனச்செப்பச்
சங்கிலியார் கனவுரைப்பக் கேட்டதா தியர்மொழிவார்.
தெளிவுரை : அங்கு அந்தச் சங்கிலியாருடன் பின்னால் சென்ற ஆரூரர், அரிய அணிகளை அணிந்தவரே! இவ்வூரினின்றும் நான் பிரிந்து போகாத நிலையை உம் கருத்துக்கு இசையுமாறு சூள் உரைத்துச் சொல்வதற்குப் பிறைச்சந்திரனைச் சூடிய சடையுடைய இறைவரின் திருமுன்பு வருவீராக! எனக் கூறினார். சங்கிலியார் கண்ட கனவு வரலாற்றை அவர் முன்பே சொல்லக் கேட்டிருந்த தோழியர் விடை கூறுபவராய்,
3412. எம்பெருமான் இதற்காக எழுந்தருளி யிமையவர்கள்
தம்பெருமான் திருமுன்பு சாற்றுவது தகாதென்ன
நம்பெருமான் வன்தொண்டர் நாதர்செயல் அறியாதே
கொம்பனையீர் யான்செய்வ தெங்கென்று கூறுதலும்.
தெளிவுரை : எம்பிரானே! இதன் பொருட்டுத் தாங்கள் சென்று தேவர் தலைவரான இறைவரின் முன்பு சபதம் செய்வது தக்கதாகாது! என்று உரைத்தனர். அப்போது நம் தலைவரான நம்பியாரூரர் இறைவரின் திருவுள்ளத்தை அறியாது, கொம்பைப் போன்றவரே! பின், நான் சபதம் செய்வதுதான் எங்கு? என்று வினவினார்.
3413. மாதரவர் மகிழ்க்கீழே அமையுமென மனமருள்வார்
ஈதலரா கிலும்ஆகும் இவர்சொன்ன படிமறுக்கில்
ஆதலினால் உடன்படலே அமையுமெனத் துணிந்தாகில்
போதுவீ ரெனமகிழ்க்கீழ் அவர்போதப் போயணைந்தார்.
தெளிவுரை : அதற்கு அம்மங்கையர், மகிழ மரத்தின் கீழ்ச் செய்வதே பொருந்தும் என்று உரைத்தனர். அதைக் கேட்ட ஆரூரர் மனம் மருட்சியடைந்து, இவர்கள் கூறியபடி செய்ய மறுத்தால் இது பழிச்சொல்லாக ஆகவும் கூடும். ஆதலால் இதற்கு உடன்படல் வேண்டும்! எனத் துணிந்து, அது உம் கருத்தானால் அங்ஙனம் நான் சபதம் செய்வதற்கு என்னுடன் வருவீராக! எனக்கூறி அவர்கள் மகிழ மரத்தின் கீழ்ச் செல்லத் தாமும் போய்ச் சேர்ந்து,
3414. தாவாத பெருந்தவத்துச் சங்கிலியா ருங்காண
மூவாத திருமகிழை முக்காலும் வலம்வந்து
மேவாதிங் கியானகலேன் எனநின்று விளம்பினார்
பூவார்தண் புனற்பொய்கை முனைப்பாடிப் புரவலனார்.
தெளிவுரை :  கேடில்லாத பெருந்தவத்தையுடைய சங்கிலியாரும் காணுமாறு என்றும் அழியாத மகிழ மரத்தினை மூன்று முறை வலமாகச் சுற்றி வந்து இங்கு பொருந்தியிராமல் நீங்க மாட்டேன் என்று நின்று திருந்தச் சபதமாக எடுத்துச் சொன்னார். மலர்கள் நிறைந்த குளிர்ந்த பொய்கைகள் மிக்க திருமுனைப்பாடி நாட்டின் தலைவர் ஆரூரர்.
3415. மேவியசீ ராரூரர் மெய்ச்சபத வினைமுடிப்பக்
காவியினேர் கண்ணாருங் கண்டுமிக மனங்கலங்கிப்
பாவியேன் இதுகண்டேன் தம்பிரான் பணியால்என்
றாவிசோர்ந் தழிவார்அங் கொருமருங்கு மறைந்தயர்ந்தார்.
தெளிவுரை : பொருந்திய சிறப்பை உடைய ஆரூரர் உண்மைச் சபதமான செயலை இவ்வாறு நிறைவேற்ற, நீலமலர் போன்ற விழியையுடைய சங்கிலியாரும், அதனைக் கண்டு உள்ளம் மிகவும் கலங்கி, இறைவர் அருளிச் செய்தமையால் பாவியேன் இதனைக் கண்டேன்! என்று எண்ணி, உயிர் சோர உள்ளம் வருந்துபவராகி, அங்கு ஒருபுறம் மறைந்து அயர்ந்தனர்.
3416. திருநாவ லூராளி தம்முடைய செயல்முற்றிப்
பொருநாகத் துரிபுனைந்தார் கோயிலினுட் புகுந்திறைஞ்சி
அருள்நாளுந் தரவிருந்தீர் செய்தவா றழகிதெனப்
பெருநாமம் எடுத்தேத்திப் பெருமகிழ்ச்சி யுடன்போந்தார்.
தெளிவுரை : திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரர் தம் செயலான சபதத்தை முடித்துப் போர் செய்யும் யானைத் தோலைப் போர்த்திக் கொண்ட இறைவரின் கோயிலுள் புகுந்து வணங்கி, நாள்தோறும் அருள்செய்ய இருந்தவரே, தாங்கள் செய்தது நன்றாக உள்ளது! என்று அவரது உயர்ந்த பெயரான திருவைந்தெழுத்தை எடுத்து, மிகவும் துதித்துப் பெருமகிழ்ச்சியுடன் வெளியே வந்தார்.
3417. வார்புனையும் வனமுலையார் வன்தொண்டர் போனதற்பின்
தார்புனையும் மண்டபத்துத் தம்முடைய பணிசெய்து
கார்புனையும் மணிகண்டர் செயல்கருத்திற் கொண்டிறைஞ்சி
ஏர்புனையுங் கன்னிமா டம்புகுந்தார் இருள்புலர.
தெளிவுரை : கச்சை அணிந்த கொங்கையை உடைய சங்கிலியார், நம்பியாரூரர் அங்கிருந்து நீங்கிய பின்னர், மாலைகள் கட்டும் மண்டபத்தை அடைந்து மாலை தொடுக்கும் அப்பணியை முடித்த பின்னர், மேகம் போன்ற அழகிய கழுத்தையுடைய இறைவரின் அருட்செயல்களைத் தம் உள்ளத்துள் கொண்டு வணங்கி, அழகு பொருந்திய கன்னிமாடத்துள் இருள் நீங்கி விடிகின்ற பொழுது புகுந்தார்.
3418. அன்றிரவே ஆதிபுரி ஒற்றிகொண்டார் ஆட்கொண்ட
பொன்றிகழ்பூண் வன்தொண்டர் புரிந்தவினை முடித்தருள
நின்றபுகழ்த் திருவொற்றி யூர்நிலவு தொண்டருக்கு
மன்றல்வினை செய்வதற்கு மனங்கொள்ள வுணர்த்துவார்.
தெளிவுரை : அன்றைய இரவே, ஆதிபுரியான திருவொற்றியூரை உடைய இறைவர், தாம் ஆட்கொண்ட பொன் விளங்கும் அணிகளை அணிந்த வன்றொண்டர் எண்ணி மனச் செயலை முடித்துக் கொடுப்பதற்காக, நிலைபெற்ற புகழை உடைய திருவொற்றியூரில் நிலவும் அடியார்களுக்கு அம்மணத்தைச் செய்து முடிக்கும்படி உள்ளத்தில் பொருந்த உணர்த்துவாராய்,
3419. நம்பியா ரூரனுக்கு நங்கைசங் கிலிதன்னை
இம்பர்ஞா லத்திடைநம் ஏவலினால் மணவினைசெய்
தும்பர்வா ழுலகறிய அளிப்பீரென் றுணர்த்துதலும்
தம்பிரான் திருத்தொண்டர் அருள்தலைமேற் கொண்டெழுவார்.
தெளிவுரை : நம்பி ஆரூரனுக்கு நங்கையான சங்கிலியாரை இவ்வுலகத்தில் நம் கட்டளையால் சடங்குகளுடன் மணம் செய்து வான் உலகத்தில் உள்ளவரும் அறியும்படி கொடுப்பீராக! என்று உணர்த்தியருளவும், தம் பெருமானின் தொண்டர்கள் அந்த அருளாணையைத் தலை மீது தாங்கி எழுபவராகி,
3420. மண்ணிறைந்த பெருஞ்செல்வத் திருவொற்றி யூர்மன்னும்
எண்ணிறைந்த திருத்தொண்டர் எழிற்பதியோ ருடனீண்டி
உண்ணிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர்பூ மழைபொழியக்
கண்ணிறைந்த பெருஞ்சிறப்பிற் கலியாணஞ் செய்தளித்தார்.
தெளிவுரை : உலகத்தில் நிறைந்த மிக்க செல்வத்தை உடைய திருவொற்றியூரில் நிலைபெற்று வாழும் எண்ணற்ற தொண்டர்கள், அழகிய அந்தத் திருத்தலத்தில் உள்ளவருடன் கூடிவந்து, உள்ளத்துள் நிறைந்த மகிழ்ச்சியுடனே வானவர் கற்பகம் முதலான தேவர் உலக மரங்களின் மலர்களை மழைபோல் பொழியக் கண்களிப்படையுமாறு அந்தப் பெரிய சிறப்புக்களுடன் மணத்தைச் செய்து முடித்தனர்.
3421. பண்டுநிகழ் பான்மையினால் பசுபதிதன் னருளாலே
வண்டமர்பூங் குழலாரை மணம்புணர்ந்த வன்தொண்டர்
புண்டரிகத் தவள்வனப்பைப் புறங்கண்ட தூநலத்தைக்
கண்டுகேட் டுண்டுயிர்த்துற் றமர்ந்திருந்தார் காதலினால்.
தெளிவுரை : முன் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியால் சிவபெருமானின் திருவருளால், வண்டுகள் மொய்க்கும் மலர் சூடிய கூந்தலையுடைய சங்கிலி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்ட நம்பியாரூரர், திருமகளின் அழகமைப்பை வென்ற அவரது தூய பெண் நலத்தைக் கண்டு பெருவிருப்புடன் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உண்டும் அனுபவித்திருந்தார்.
3422. யாழின்மொழி எழின்முறுவல் இருகுழைமேற் கடைபிறழும்
மாழைவிழி வனமுலையார் மணியல்குல் துறைபடிந்து
வீழுமவர்க் கிடைதோன்றி மிகும்புலவிப் புணர்ச்சிக்கண்
ஊழியா மொருகணந்தான் அவ்வூழி யொருகணமாம்.
தெளிவுரை : யாழை விட இனிய சொல்லையும் அழகிய பல் வரிசையையும் இரு காதுகளிலும் அணிந்த மகரக் குழைகளின் மேல் கடைப்பார்வை பிறழ்ந்து செல்லும் மாவடுவைப் போன்ற கண்களையும், சந்தனக் கோலம் அணிந்த கொங்கைகளையும் உடைய சங்கிலியாரின் அழகிய அல்குலான தடத்தின் துறையிலே முழுகி, அழுந்தும் நம்பியாரூரர், சங்கிலியார் என்னும் இருவருக்கும் இடையே உண்டாகி மிகும் புலவியிலும் புணர்ச்சியிலும் முறையே ஒரு கணம் ஓர் யுகமாக நீளும்; அந்த ஓர் யுகமே ஒரு கணமாகச் சுருங்கும்.
3423. இந்நிலையில் பேரின்பம் இனிதமர்வார் இறையுறையும்
மன்னுபுகழ் ஒற்றியூர் அதனில்மகிழ் சிறப்பினால்
சென்னிமதி புனைவார்தந் திருப்பாதந் தொழுதிருந்தார்
முன்னியகா லங்கள்பல முறைமையினால் வந்தகல.
தெளிவுரை : இத்தகைய நிலைமையில் பேரின்பம் நுகர்ந்து இனிதாய் விரும்பி எழுந்தருள்பவரான நம்பியாரூரர், நிலைபெற்ற புகழையுடைய திருவொற்றியூரில் தங்கி மகிழும் சிறப்பினால், தலையில் பிறைசூடிய இறைவரின் திருவடிகளை வணங்கிக் கொண்டு எண்ணிய காலங்கள் பலவும் வரும் முறையிலே வந்து தொடர்ந்து செல்ல, எழுந்தருளியிருந்தனர்.
3424. பொங்குதமிழ்ப் பொதியமலைப் பிறந்துபூஞ் சந்தனத்தின்
கொங்கணைந்து குளிர்சாரல் இடைவளர்ந்த கொழுந்தென்றல்
அங்கணையத் திருவாரூர் அணிவீதி அழகரவர்
மங்கலநாள் வசந்தமெதிர் கொண்டருளும் வகைநினைந்தார்.
தெளிவுரை : மேன்மேலும் பொங்கி வளர்கின்ற தமிழுக்கு இருப்பிடமான பொதிய மலையில் தோன்றிப் பூஞ்சந்தன மரங்களின் மணத்தில் அளவளாவிக் குளிர்ந்த நீர்ச் சாரலில் வளர்ந்த செழுமையான தென்றற் காற்று, அந்தத் திருவொற்றியூரை வந்து சேர, திருவாரூரில் அழகான வீதி விடங்கப் பெருமான் மங்கலமான திருவிழா நாட்களில் வசந்தவிழாத் திருவோலக்கத்தினைக் கொண்டருளும் தன்மையை நம்பியாரூரர் எண்ணினார்.
3425. வெண்மதியின் கொழுந்தணிந்த வீதிவிடங் கப்பெருமான்
ஒண்ணுதலார் புடைபரந்த ஓலக்க மதனிடையே
பண்ணமரும் மொழிப்பரவை யார்பாட லாடல்தனைக்
கண்ணுறமுன் கண்டுகேட் டார்போலக் கருதினார்.
தெளிவுரை : வெண்மையான பிறைச்சந்திரனைச் சூடிய வீதிவிடங்கப் பெருமானின் அழகிய நெற்றியையுடைய பெண்கள் பக்கங்களில் பரவிச் சூழ்ந்த திருவோலகத்தில் பண்ணின் தன்மையுடைய சொல்லையுடைய பரவையாரின் பாடலையும் ஆடலையும் முறையே கண்களில் பொருந்தக் காணவும், கேட்கவும் பெற்றவர்போல நம்பியாரூரர் கருதினார்.
3426. பூங்கோயில் அமர்ந்தாரைப் புற்றிடங்கொண் டிருந்தாரை
நீங்காத காதலினால் நினைந்தாரை நினைவாரைப்
பாங்காகத் தாமுன்பு பணியவரும் பயனுணர்வார்
ஈங்குநான் மறந்தேனென் றேசறவால் மிகவழிவார்.
தெளிவுரை : திருவாரூரில் பூங்கோயிலில் விரும்பி வீற்றிருப்பவரை, புற்றை இடமாகக் கொண்டு அமர்ந்திருப்பவரை, நீங்காத பக்தியுடன் தம்மை நினைப்பவரைத் தாம் நினைக்கும் இறைவரை, முறைமையாய்த் தாம் முன்நாளில் பணிய அதனால் வருகின்ற சிவானந்தமான பெரும்பயனை உணர்வில் கொள்பவராகி, இங்கு நான் மறந்திருந்தேன் என்று வருந்தி உள்ளம் அழிபவராய்,
3427. மின்னொளிர்செஞ் சடையானை வேதமுத லானானை
மன்னுபுகழ்த் திருவாரூர் மகிழ்ந்தானை மிகநினைந்து
பன்னியசொற் பத்திமையும் அடிமையையுங் கைவிடுவான்
என்னுமிசைத் திருப்பதிகம் எடுத்தியம்பி யிரங்கினார்.
தெளிவுரை : மின் போல் சிவந்த சடையையுடையவரை, மறைகளின் முதல்வராக உள்ளவரை நிலையான புகழையுடைய திருவாரூரினை மகிழ்பவரை, பிரிவாற்றாமையால் மிகவும் நினைந்து, பல முறையும் அடுக்கிய சொற்களைக் கொண்டு பத்திமையும் அடிமையையும் கை விடுவான் எனத்தொடங்கும் சொல்லும் பொருளும் கொண்ட பண் பழஞ்சுரத்தின் இசையுடைய திருப்பதிகத்தை எடுத்துப் பாடி இரங்கினார்.
3428. பின்னொருநாள் திருவாரூர் தனைப்பெருக நினைந்தருளி
உன்னஇனி யார்கோயில் புகுந்திறைஞ்சி ஒற்றிநகர்
தன்னையக லப்புக்கார் தாஞ்செய்த சபதத்தால்
முன்னடிகள் தோன்றாது கண்மறைய மூர்ச்சித்தார்.
தெளிவுரை : பின் ஒருநாள், அவர் திருவாரூரை மிகவும் அதிகமாக நினைந்து, நினைக்க இனிமை தருபவரான ஆதிபுரி ஒற்றியூரில் வீற்றிருக்கும் இறைவரின் கோயிலுள் புகுந்து வணங்கித் திருவொற்றியூரை நீங்கலானார். அப்போதே அவர் தாம் செய்த சூள் காரணத்தினால், முன்னே செல்ல அடி வைக்கும் நிலை தோன்றாது. கண் ஒளி மறைய மூர்ச்சையானார்.
3429. செய்வதனை யறியாது திகைத்தருளி நெடிதுயிர்ப்பார்
மைவிரவு கண்ணார்பால் சூளுறவு மறுத்ததனால்
இவ்வினைவந் தெய்தியதாம் எனநினைந்தெம் பெருமானை
வெவ்வியஇத் துயர்நீங்கப் பாடுவேன் எனநினைந்து.
தெளிவுரை : சுந்தரர் தாம் செய்வது இன்னது என அறியாமல் திகைப்பை அடைந்து பெருமூச்சு விட்டு மை பூசிய கண்களையுடைய சங்கிலியாரிடம் செய்த சூளினை மீறிய காரணத்தால் இந்தத் தீவினை வந்து பொருந்தியது என்று நினைத்து, எம் இறைவரை என்னிடம் பொருந்திய இத்துன்பம் நீங்குமாறு பாடுவேன் என எண்ணி,
3430. அழுக்கு மெய்கொடென் றெடுத்தசொற்
பதிகம் ஆதி நீள்புரி யண்ணலை யோதி
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்துநின் றுரைப்பார்
மாதொர் பாகனார் மலர்ப்பதம் உன்னி
இழுக்கு நீக்கிட வேண்டும்என் றிரந்தே எய்து
வெந்துயர்க் கையற வினுக்கும்
பழிக்கும் வெள்கிநல் லிசைகொடு பரவிப்
பணிந்து சாலவும் பலபல நினைவார்.
தெளிவுரை : அழுக்கு மெய் கொடு எனத்தொடங்கும் சொல் பதிகத்தை நெடிய ஆதிபுரி இறைவரைப் போற்றி வழிபட்டு, வழுத்தும் உள்ளத்துடன் நிலத்தில் விழுந்து வணங்கி, முன்பு நின்று கூறுவாராகி, உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட தாமரை மலர் போன்ற திருவடிகளை நினைந்து நினைந்து, குற்றத்தை நீக்கிட வேண்டும் என வேண்டி, அங்கு வந்து சேர்ந்த கொடுந்துன்பம் உடைய கையறு நிலைக்கும் உண்டாக பழிக்கும் நாணம் கொண்டு, நல்ல இசையினால் துதித்துப் பணிந்து மிகவும் பலவாறு நினைவாராகி,
3431. அங்கு நாதர்செய் அருளது வாக
அங்கை கூப்பியா ரூர்தொழ நினைந்தே
பொங்கு காதன்மீ ளாநிலை மையினால்
போது வார்வழி காட்டமுன் போந்து
திங்கள் வேணியார் திருமுல்லை வாயில்
சென்றி றைஞ்சிநீ டிய திருப் பதிகம்
சங்கிலிக் காகஎன் கண்களை மறைத்தீர்
என்று சாற்றிய தன்மையிற் பாடி.
தெளிவுரை : அங்கு அப்போது இறைவர் செய்யும் அருள் அதுவேயாக (அருள் செய்யாது போக) அழகிய கைகளைத் தலைமீது குவித்து வணங்கித் திருவாரூர்க்குச் சென்று வணங்க எண்ணியவாறே பொங்கி எழுகின்ற விருப்பத்தால் திருவொற்றியூரில் மீளாத நிலைமையை மேற்கொண்டு உடன் வருபவர் தமக்கு வழிகாட்ட, முன்னே சென்று பிறைச்சந்திரனைச் சூடிய இறைவரின் திருமுல்லைவாயில் என்ற தலத்தை அடைந்து வணங்கிய பெருமை நீடிய திருப்பதிகத்தைச் சங்கிலியின் பொருட்டாக என் விழிகளை மறைத்தீர் என்று ஏத்திய தன்மை விளங்குமாறு பாடி,
3432. தொண்டை மானுக்கன் றருள்கொடுத் தருளுந்
தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக்
கொண்ட வெந்துயர் களைகெனப் பரவிக்
குறித்த காதலின் நெறிக்கொள வருவார்
வண்டுலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து
மாட மாளிகை நீடுவெண் பாக்கம்
கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி
காயும்நா கத்தர் கோயிலை யடைந்தார்.
தெளிவுரை : தொண்டைமானுக்கு முன் காலத்தில் அருள் தந்தருளிய பழைமையான வள்ளன்மையும் புகழும் உடைய திருமுல்லைவாயில் இறைவரைக் கொண்ட எனது கொடிய துயரை நீக்க வேண்டும் எனத் துதித்து அகன்று மேற்சென்று, தாம் உள்ளத்தில் கொண்ட எண்ணத்தின் வழியே செல்ல வருபவராகி, வண்டுகள் மொய்க்கும் பூக்கள் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த மாடமாளிகைகள் பொருந்தி விளங்கும் திருவெண்பாக்கத்தினைக் கண்ட தொண்டர்கள் எதிர்கொண்டு வரவேற்க, அறிந்து வணங்கிச் சினமுடைய யானையை உரித்த சிவபெருமானின் திருக்கோயிலை அடைந்தார்.
3433. அணைந்த தொண்டர்க ளுடன்வல மாக
அங்கண் நாயகர் கோயில்முன் னெய்திக்
குணங்க ளேத்தியே பரவியஞ் சலியால்
குவித்த கைதலை மேற்கொண்டு நின்று
வணங்கி நீர்மகிழ் கோயிலு ளீரே
என்ற வன்தொண்டர்க் கூன்றுகோ லருளி
இணங்கி லாமொழி யால்உளோம் போகீர்
என்றி யம்பினார் ஏதிலார் போல.
தெளிவுரை : மேற்கூறியபடி எதிர்கொள்ள வந்த தொண்டருடன் கூடி வலமாகச் சுற்றி வந்து, அங்கண்ணரின் கோயிலின் முன் வந்து சேர்ந்து, இறைவரின் அருட்பெருங் குணங்களைத் துதித்துப் போற்றி வணங்கித் தாங்கள் இக்கோயிலில் வீற்றிருக்கின்றீரோ? எனக் கேட்ட வன்தொண்டரான சுந்தரருக்கு, இறைவர் ஊன்றுகோல் ஒன்றைத் தந்து, இணக்கம் இல்லாத சொற்களால் யாம் உள்ளோம்! நீர் போகீர்! என்று அயலார் போலக் கூறியருளினார்.
3434. பிழையுளன பொறுத்திடுவர் என்றெடுத்துப் பெண்பாகம்
விழைவடிவிற் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை
இழைஎனமா சுணம்அணிந்த இறையானைப் பாடினார்
மழைதவழும் நெடும்புரிசை நாவலூர் மன்னவனார்.
தெளிவுரை : பிழையினை பொறுத்திடுவர் எனத் தொடங்கி, மேகங்கள் தவழ்வதற்கு இடமான உயர்ந்த மதில்களையுடைய திருநாவலூரின் தலைவரான நம்பி ஆரூரர் உமையம்மையாரை ஒரு பாகத்தில் இருப்பதை விரும்பிய இறைவரை, திருவெண்பாக்கத்தை மகிழ்ந்தவரை, சங்கராபரணம் என்று அடியார் போற்றப் பாம்பை அணிந்த இறைவரைப் பாடினார்.
3435. முன்னின்று முறைப்பாடு போல்மொழிந்த மொழிமாலைப்
பன்னும்இசைத் திருப்பதிகம் பாடியபின் பற்றாய
என்னுடைய பிரானருள்இங் கித்தனைகொ லாமென்று
மன்னுபெருந் தொண்டருடன் வணங்கியே வழிக்கொள்வார்.
தெளிவுரை : திருமுன்பு நின்று முறையீட்டை உரைப்பவரைப் போல் மொழிந்த சொல்மாலையான இசையுடன் கூடிய திருப்பதிகத்தைப் பாடிய பின்னர், நம்பியாரூரர் என் இறைவரின் திருவருள் இங்கு இத்தனை அளவே இருந்தது போலும்! என்று உள்ளத்தில் நினைத்து பொருந்திய தொண்டருடன் வணங்கி வழியில் செல்வாராகி,
3436. அங்கணர்தம் பதியதனை அகன்றுபோய் அன்பருடன்
பங்கயப்பூந் தடம்பணைசூழ் பழையனுர் உழையெய்தித்
தங்குவார் அம்மைதிருத் தலையாலே வலங்கொள்ளும்
திங்கண்முடி யாராடுந் திருவாலங் காட்டினயல்.
தெளிவுரை : அங்கண்மையுடையவராம் இறைவரின் அந்தப் பதியை நீங்கிப் போய் அன்பர்களுடன் கூடி மேற்சென்று தாமரைப் பூக்கள் பூப்பதற்கு இடமான பொய்கைகளும் பணைகளும் சூழ்ந்த பழையனூரைச் சேர்ந்து, காரைக்கால் அம்மையார் தம் தலையாலே நடந்து வலம் கொண்ட பிறைச்சந்திரனைத் தலையில் சூடிய இறைவர் கூத்தாடும் திருவாலங்காட்டின் பக்கத்துத் தங்குவாராய்.
3437. முன்னின்று தொழுதேத்தி முத்தாஎன் றெடுத்தருளிப்
பன்னும்இசைத் திருப்பதிகம் பாடிமகிழ்ந் தேத்துவார்
அந்நின்று வணங்கிப்போய்த் திருவூறல் அமர்ந்திறைஞ்சிக்
கன்னிமதில் மணிமாடக் காஞ்சிமா நகரணைந்தார்.
தெளிவுரை : திருமுன்பு நின்று தொழுபவராய் முத்தா! எனத் தொடங்கிப் புகழும் இசை பொருந்திய திருப்பதிகத்தைப் பாடி, மகிழ்வுடன் துதிப்பவராய், அந்நிலைக் கண் நின்று வணங்கி மேலே போய், திருவூறல் என்னும் பதியை விருப்புடன் சென்று வணங்கிப் பகைவரால் அழிக்கப்படாத திருமதிலையும் அழகிய மாடங்களையும் உடைய காஞ்சி மாநகரத்தினை வந்து சேர்ந்தார்.
3438. தேனிலவு பொழிற்கச்சித் திருக்காமக் கோட்டத்தில்
ஊனில்வளர் உயிர்க்கெல்லாம் ஒழியாத கருணையினால்
ஆனதிரு வறம்புரக்கும் அம்மைதிருக் கோயிலின்முன்
வானில்வளர் திருவாயில் வணங்கினார் வன்தொண்டர்.
தெளிவுரை : தேன் வண்டுகள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கச்சிக்காம கோட்டத்தில் ஊன் பொருந்த வளரும் எல்லா உயிர்களிடத்தும் கொண்ட நீங்காத அருளால் ஆன அறங்களை எல்லாம் வளர்ந்து அருளும் காமாட்சி அம்மையாரின் கோயில் முன்னர் வானத்தில் உயர்ந்த திருவாயில் முன் வன்தொண்டரான சுந்தரர் வணங்கினார்.
3439. தொழுது விழுந் தெழுந்தருளாற் துதித்துப்போய்த் தொல்லுலகம்
முழுதும்அளித் தழித்தாக்கும் முதல்வர்திரு வேகம்பம்
பழுதில்அடி யார்முன்பு புகப்புக்குப் பணிகின்றார்
இழுதையேன் திருமுன்பே என்மொழிவேன் என்றிறைஞ்சி.
தெளிவுரை : தொழுது நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து, அருளால் துதித்து, மேலே சென்று பழைமையான உலகம் முழுதும் அளித்துக் காத்து அழிக்கும் முழு முதல்வரின் திருவேகம்பத்தினுள், குற்றம் இல்லாத அடியார்கள் முன்னே புகத் தாம் அவர்களுக்குப் பின்னால் புகுந்து வணங்குபவராய், பொய்யனான நான் தங்கள் திருமுன்பு என்ன கூறுவேன்? என வணங்கி,
3440. விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெரு விடமுண்ட
கண்ணாளா கச்சியே கம்பனே கடையானேன்
எண்ணாத பிழைபொறுத்திங் கியான்காண எழிற்பவள
வண்ணாகண் ணளித்தருளாய் எனவீழ்ந்து வணங்கினார்.
தெளிவுரை : வான் உலகத்தை ஆளும் தேவர்கள் அமுதத்தை உண்பதற்காக, மிக்க பெரிய நஞ்சை உண்டருளிய கண் போன்றவரே! கச்சித் திருஏகம்பத்தில் வீற்றிருக்கும் இறைவரே! கடையவனான நான் எண்ணாது செய்த பிழையைப் பொறுத்து, இங்கு அடியேன் காணும்படி அழகிய பவளம் போன்ற நிறம் கொண்டவரே! கண்ணை எனக்கு அளித்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு நிலத்தில் விழுந்து வணங்கினார்.
3441. பங்கயச்செங் கைத்தளிரால் பனிமலர்கொண் டருச்சித்துச்
செங்கயற்கண் மலைவல்லி பணிந்தசே வடிநினைந்து
பொங்கியஅன் பொடுபரவிப் போற்றியஆ ரூரருக்கு
மங்கைதழு வக்குழைந்தார் மறைந்தஇடக் கண்கொடுத்தார்.
தெளிவுரை : தாமரை மலர் போன்ற செங்கைத் தளிர்களால் குளிர்ந்த மலர்களைத் தூவி வழிபட்டுச் சிவந்த கயல்போன்ற கண்களையுடைய மலைமகளான பார்வதி அம்மையார் வணங்கிய திருவடிகளைத்  துதித்து மேன்மேல் மிக்கு எழும் அன்புடன் பரவித் துதித்த நம்பி ஆரூரர்க்கு, உமாதேவியார் தழுவக் குழைந்த திருமேனியையுடைய திருவேகம்பர் மறைந்த இடக்கண் பார்வையைத் தந்தருளினார்.
3442. ஞாலந்தான் இடந்தவனும் நளிர்விசும்பு கடந்தவனும்
மூலந்தான் அறிவரியார் கண்ணளித்து முலைச்சுவட்டுக்
கோலந்தான் காட்டுதலும் குறுகிவிழுந் தெழுந்துகளித்
தாலந்தா னுகந்தவன் என் றெடுத்தாடிப் பாடினார்.
தெளிவுரை : நிலத்தைத் தோண்டித் தேடிய திருமாலும் குளிர்ந்த வானத்தைக் கடந்த நான்முகனும் முறையே அடிமுடிகளின் முடிபினை அறிவதற்கு அரிய இறைவர், உமையம்மையார் தழுவக்கொங்கைச் சுவட்டையுடைய தம் திருக்கோலத்தை, ஒரு கண் தந்து காணும்படி காட்டவும், அணுகி நிலம் பொருந்த வீழ்ந்து எழுந்து மகிழ்ந்து, ஆலந்தான் உகந்து எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி ஆனந்தக் கூத்தாடினார்.
3443 .பாடிமிகப் பரவசமாய்ப் பணிவார்க்குப் பாவையுடன்
நீடியகோ லங்காட்ட நிறைந்தவிருப் புடனிறைஞ்சிச்
சூடியஅஞ் சலியினராய்த் தொழுதுபுறம் போந்தன்பு
கூடியமெய்த் தொண்டருடன் கும்பிட்டங் கினிதமர்வார்.
தெளிவுரை : மேற்கண்டவாறு மிகவும் களித்து மிகவும் பரவசப்பட்டுப் பணிபவரான நம்பியாரூரர்க்கு, அம்மையாருடன் கூடிய பழமையான நீண்ட திருக்கோலத்தை இறைவர் காட்ட, அதைப் பார்த்து நிறைந்த விருப்புடன் வணங்கித் தலைமீது கூடிய அஞ்சலி செய்பவராய்த் தொழுது திருக்கோயிலின் வெளியே வந்து அன்பில் கூடிய தொண்டர்களுடன் சேர்ந்து வணங்கிக் கொண்டு அந்தத் தலத்தில் இனிதாய் விரும்பி வீற்றிருப்பவரான நம்பியாரூரர்,
3444. மாமலையாள் முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணிந்தமதிப்
பூமலிவார் சடையாரைப் போற்றியரு ளதுவாகத்
தேமலர்வார் பொழிற்காஞ்சித் திருநகரங் கடந்தகல்வார்
பாமலர்மா லைப்பதிகம் திருவாரூர் மேற்பரவி.
தெளிவுரை : பெரிய மலை வல்லியரான காமாட்சி அம்மையாரின் கொங்கைச் சுவட்டையும், வளையல் தழும்பையும் தாங்கிய பிறையும் கொன்றை மலர்களும் மலிந்த நீண்ட சடையுடையவரைத் துதித்து, அங்கு அவர் செய்யும் திருவருள் அவ்வளவே ஆகிட, தேன் பொருந்திய மலர்களைக் கொண்ட பூஞ்சோலைகள் சூழ்ந்த காஞ்சி நகரத்தைக் கடந்து பாட்டுகளின் தன்மைகள் விரிந்து கிடக்கும் மாலையான திருப்பதிகத்தைத் திருவாரூரின் மீது பாடி வணங்கி, அங்கிருந்தும் செல்பவராய்,
3445. அந்தியும்நண் பகலும்என எடுத்தார்வத் துடனசையால்
எந்தைபிரான் திருவாரூர் என்றுகொல்எய் துவதென்று
சந்தஇசை பாடிப்போய்த் தாங்கரிய ஆதரவு
வந்தணைய அன்பருடன் மகிழ்ந்துவழிக் கொள்கின்றார்.
தெளிவுரை : அந்தியும் நண்பகலும் எனத் தொடங்கி, விருப்பத்துடனே எம் இறைவரின் திருவாரூரை என்று சென்று சேர்வேன்? என்ற குறிப்புடனே சந்தம் நிறைந்த இசை பொருந்தப் பாடிச் சென்று தாங்குவதற்கரிய பெரு விருப்பான பேரன்பு வந்து பொருந்தியதால் அன்பர்களுடன் மகிழ்ச்சியுடன் வழிச் செல்பவராய்,
3446. மன்னுதிருப் பதிகள்தொறும் வன்னியொடு கூவிளமும்
சென்னிமிசை வைத்துவந்தார் கோயிலின்முன் சென்றிறைஞ்சிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பரவியே போந்தணைந்தார்
அன்னமலி வயற்றடங்கள் சூழ்ந்ததிரு வாமாத்தூர்.
தெளிவுரை : வழியின் இடையில் உள்ள திருப்பதிகள் தோறும் வன்னியுடன் வில்வத்தையும் தலைமீது சூடி மகிழ்ந்தவரான இறைவரின் முன் சென்று வணங்கி, புகழும் தமிழ்மாலைகளைச் சாத்தி துதித்துச் சென்று, அன்னப்பறவைகள் மிக்க வயல்களும் பொய்கைகளும் சூழ்ந்த திருவாமாத்தூரைச் சேர்ந்தார்.
3447. அங்கணரை ஆமாத்தூர் அழகர்தமை யடிவணங்கித்
தங்கும்இசைத் திருப்பதிகம் பாடிப்போய்த் தாரணிக்கு
மங்கலமாம் பெருந்தொண்டை வளநாடு கடந்தணைந்தார்
செங்கண்வள வன்பிறந்த சீர்நாடு நீர்நாடு.
தெளிவுரை : அங்கண்மையுடையவரைத் திருவாமாத்தூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானைத் திருவடியில் வணங்கி, தங்கும் இசை பொருந்திய திருப்பதிகத்தைப் பாடிப் போய் உலகுக்கெல்லாம் மங்கலமாய் விளங்கும் பெருமையுடைய தொண்டை வளநாட்டைக் கடந்து போய்க் கோச்செங்கண் சோழர் அவதரித்த சிறப்புகள் நாடி வந்து அடைகின்ற நீர்நாடு என்ற சோழ நாட்டைப் போயடைந்தார்.
3448. அந்நாட்டின் மருங்குதிரு வரத்துறையைச் சென்றெய்தி
மின்னாரும் படைமழுவார் விரைமலர்த்தாள் பணிந்தெழுந்து
சொன்மாலை மலர்க்கல்வா யகில்என்னுந் தொடைசாத்தி
மன்னார்வத் திருத்தொண்ட ருடன்மகிழ்ந்து வைகினார்.
தெளிவுரை : அந்நாட்டில் ஒரு பக்கத்தில் உள்ள திருநெல்வாயில் அரத்துறையைச் சென்றடைந்து ஒளியுடைய படையான மழுவையுடைய இறைவரின் மணம் உடைய தாமரை போன்ற திருவடிகளை நிலத்தில் விழுந்து பணிந்து எழுந்து சொல்மாலையான கல்வாயகிலும் எனத்தொடங்கும் மாலையைச் சாத்தி, நிலைத்த ஆர்வமுடைய தொண்டர்களுடன் மகிழ்ச்சி பொருந்த எழுந்தருளியிருந்தார்.
3449. பரமர்திரு வரத்துறையைப் பணிந்துபோய்ப் பலபதிகள்
விரவிமழ விடையுயர்த்தார் விரைமலர்த்தாள் தொழுதேத்தி
உரவுநீர்த் தடம்பொன்னி அடைந்தன்ப ருடனாடி
அரவணிந்தார் அமர்ந்ததிரு வாவடுதண் டுறைஅணைந்தார்.
தெளிவுரை : சிவபெருமானின் திருவரத்துறையை வணங்கிச் சென்று பல பதிகளையும் சேர்ந்து காளைக் கொடியையுடைய இறைவரின் மணம் கமழும் மலர்போன்ற திருவடிகளை வணங்கித் துதித்துப் பரந்த நீரையுடைய பெருங்காவிரியைச் சேர்ந்து அன்பர்களுடன் நீராடி, பாம்பை அணிந்த இறைவர் விரும்பி வீற்றிருக்கும் குளிர்ந்த திருவாவடுதுறையை அடைந்தார்.
3450. அங்கணைவார் தமையடியார் எதிர்கொள்ளப் புக்கருளிப்
பொங்குதிருக் கோயிலினைப் புடைவலங்கொண்டு உள்ளணைந்து
கங்கைவாழ் சடையாய்ஓர் கண்ணிலேன் எனக்கவல்வார்
இங்கெனக்கா ருறவென்னுந் திருப்பதிக மெடுத்திசைத்தார்.
தெளிவுரை : அங்குத் திருவாவடுதுறையில் அணைபவரான நம்பியாரூரரை அடியார்கள் எதிர்கொண்டு வரவேற்கப் பதியில் புகுந்து, சைவமெய்த் திருப்பொங்கும் கோயிலை வலமாக வந்து, உள்ளே போய்த் திருமுன்பு சார்ந்து, கங்கையாறு வாழ்கின்ற சடையை உடையவரே ஒரு கண் இல்லேன் என்று சொல்லி, கவலை கொள்கின்றவராய் இங்கு எனக்கு யார் உறவு? என்ற கருத்துடைய திருப்பதிகத்தைத் தொடங்கிப் பாடினார்.
3451. திருப்பதிகங் கொடுபரவிப் பணிந்துதிரு வருளாற்போய்
விருப்பினொடுந் திருத்துருத்தி தனைமேவி விமலர்கழல்
அருத்தியினாற் புக்கிறைஞ்சி யடியேன்மே லுற்றபிணி
வருத்தமெனை ஒழித்தருள வேண்டுமென வணங்குவார்.
தெளிவுரை : சுந்தரர் அங்குத் திருப்பதிகத்தைப் பாடி வணங்கித் துதித்துத் திருவருள் விடையைப் பெற்றுக் கொண்டு போய், விருப்புடன் திருத்துருத்தி என்ற தலத்தை அடைந்து, அத்தலத்து இறைவரின் திருப்பாதங்களைத் தொழுது கோயிலுள் புகுந்து, என் உடலில் வந்த துன்பத்தை என்னிடம் நில்லாது நீக்கியருள வேண்டும் என்று வணங்கிடலானார்.
3452. பரவியே பணிந்தவர்க்குப் பரமர் திரு வருள்புரிவார்
விரவியஇப் பிணியடையத் தவிர்ப்பதற்கு வேறாக
வரமலர்வண் டறைதீர்த்த வடகுளத்துக் குளிஎன்னக்
கரவில்திருத் தொண்டர்தாங் கைதொழுது புறப்பட்டார்.
தெளிவுரை : இறைவரை வணங்கிய அவர்க்கு இறைவர் திருவருள் செய்பவராய்ப் பொருந்திய அந்த நோய் முழுவதும் தீர்வதற்குத் தனியாக மலர்களின் வண்டுகள் பாடும் தீர்த்தத்தையுடைய வடகுளத்தில் நீராடுவாயாக என்று கூறியருளக் கரவில்லாத தொண்டரான நம்பியாரூரர் கைகூப்பி வணங்கிப் புறப்பட்டார்.
3453. மிக்கபுனல் தீர்த்தத்தின் முன்னணைந்து வேதமெலாந்
தொக்கவடி வாயிருந்த துருத்தியார் தமைத்தொழுது
புக்கதனில் மூழ்குதலும் புதியபிணி யதுநீங்கி
அக்கணமே மணியொளிசேர் திருமேனி யாயினார்.
தெளிவுரை : மிக்க நீரையுடைய அந்நீர்நிலையின் முன்னால் போய் அடைந்து மறைகள் எல்லாம் ஒன்றாய்த் திரண்டாற் போன்ற வடிவுடன் விளங்கிய திருத்துருத்தி இறைவரை வணங்கி, அந்நீரினுள் புகுந்து முழுகியதும், புதிய நோயானது நீங்கி, அந்தக் கணத்திலேயே மணியின் ஒளி பொருந்திய மேனியை உடையவராக நாவலூரர் விளங்கினார்.
3454. கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து
மண்டுபெருங் காதலினால் கோயிலினை வந்தடைந்து
தொண்டரெதிர் மின்னுமா மேகம்எனுஞ் சொற்பதிகம்
எண்திசையு மறிந்துய்ய ஏழிசையால் எடுத்திசைத்தார்.
தெளிவுரை : பார்த்தவர்கள் எல்லாம் அதிசயம் அடையும்படி வடகுளத்தின் கரையில் ஏறி, வேறு ஆடையை உடுத்தி, மிக்க பெருங்காதலால் கோயிலை வலமாக வந்து சேர்ந்து, தொண்டர்களுக்கு எதிரில், மின்னுமா மேகம் எனும் தொடக்கம் உடைய சொல் நிறைந்த பதிகத்தை எட்டுத் திக்கில் உள்ளவர்களும் அறிந்து உய்யும் பொருட்டு, ஏழிசையும் பொருந்தப் பாடினார்.
3455. பண்ணிறைந்த தமிழ்பாடிப் பரமர்திரு வருள்மறவா
தெண்ணிறைந்த தொண்டருடன் பணிந்தங்கண் உறைந்தேகி
உண்ணிறைந்த பதிபிறவும் உடையவர்தாள் வணங்கிப்போய்க்
கண்ணிறைந்த திருவாரூர் முன்தோன்றக் காண்கின்றார்.
தெளிவுரை : பண் நிறைந்த தமிழ்த் திருப்பதிகத்தைப் பாடி, இறைவர் செய்த பேரருளை மறவாமல், எண் நிறைந்த தொண்டருடன் கூடிச் சிவபெருமானை வணங்கி, அந்தத் தலத்தில் தங்கியிருந்து, பின் புறப்பட்டுச் சென்று நினைவில் எப்போதும் நிறைவில் கொண்ட இறைவரின் மற்றப்பதிகளிலும் இறைவரின் திருவடிகளை வணங்கிச் சென்று, கண்ணுக்கு நிறைவான திருவாரூர் தம் எதிரே தோன்றக் காணலானார்.
3456. அன்றுதிரு நோக்கொன்றால் ஆரக்கண் டின்புறார்
நின்றுநில மிசைவீழ்ந்து நெடிதுயிர்த்து நேரிறைஞ்சி
வன்தொண்டர் திருவாரூர் மயங்குமா லையிற்புகுந்து
துன்றுசடைத் தூவாயார் தமைமுன்னந் தொழவணைந்தார்.
தெளிவுரை : அன்று வன்தொண்டரான அவர், தம் ஒரு கண்ணால் மட்டும் கண்டு நிறைவு பெறாமல், திருவாரூரைக் கண்ட அவ்விடத்தே நின்று நிலத்தில் விழுந்து எழுந்து பெருமூச்செறிந்து நேரே வணங்கி, பொழுது மயங்கும் மாலைப் போதில் திருவாரூரில் புகுந்து நெருங்கிய சடையையுடைய தூய இறைவரை முன்னே தொழுவதற்குச் சேர்ந்தார்.
3457. பொங்குதிருத் தொண்டருடன் உள்ளணைந்து புக்கிறைஞ்சி
துங்கவிசைத் திருப்பதிகம் தூவாயா என்றெடுத்தே
இங்கெமது துயர்களைந்து கண்காணக் காட்டாயென்
றங்கணர்தம் முன்னின்று பாடியருந் தமிழ்புனைந்தார்.
தெளிவுரை : பெருகித் திருத்தொண்டர்களுடன் சேர்ந்து கோயிலுள் புகுந்து சேர்ந்து வணங்கிச் சிறந்த இசையுடன் கூடிய திருப்பதிகத்தைத் தூவாயா எனத்தொடங்கி, இங்கே எம்முடைய துன்பத்தைப் போக்கிக் கண் காணுமாறு காட்டுதல் வேண்டுமுஞூ என்ற கருத்துடன் இறைவரின் திருமுன்பு நின்று பாடி அரிய தமிழ்ப்பதிக மாலையைப் பாடினார்.
3458. ஆறணியுஞ் சடையாரைத் தொழுதுபுறம் போந்தங்கண்
வேறிருந்து திருத்தொண்டர் விரவுவா ருடன்கூடி
ஏறுயர்த்தார் திருமூலட் டானத்துள் இடைதெரிந்து
மாறில்திரு அத்தயா மத்திறைஞ்ச வந்தணைந்தார்.
தெளிவுரை : கங்கையாற்றை அணிந்த சடையை உடைய இறைவரை வணங்கி, வெளியே வந்து அங்கு வேறோரிடத்திலே தனியாய்த் தங்கியிருந்து, தம்முடன் வருபவரான தொண்டர்களுடன் கூடிக் காளைக் கொடியை உயர்த்திய சிவபெருமானின் மூலத்தானத்தில் தக்க சமயம் அறிந்து, ஒப்பில்லாத அந்த யாமக் கால வழிபாட்டின் போது வணங்க வந்து சேர்ந்தார்.
3459. ஆதிதிரு அன்பரெதிர் அணையஅவர் முகநோக்கிக்
கோதிலிசை யாற்குருகு பாயவெனக் கோத்தெடுத்தே
ஏதிலார் போல்வினவி ஏசறவால் திருப்பதிகம்
காதல்புரி கைக்கிளையாற் பாடியே கலந்தணைவார்.
தெளிவுரை : ஆதி இறைவரின் தொண்டர்கள் அங்கே எதிரே வந்து சேர்வதைக் கண்டு அவர்களின் முகத்தை நோக்கிக் குற்றம் அற்ற இசையுடன் குருகுபாய எனக் கோவை செய்து தொடங்கிய அயலார் போல் வினவி, வருத்தத்தால் திருப்பதிகத்தைக் காதல் புலப்படும் கைக்கிளைத் திணையில் வைத்துப் பாடியவாறே அவர்களுடன் கலந்து சேர்வாராகி,
3460. சீர்பெருகுந் திருத்தேவா சிரியன்முன் சென்றிறைஞ்சிக்
கார்விரவு கோபுரத்தைக் கைதொழுதே உட்புகுந்து
தார்பெருகு பூங்கோயில் தனைவணங்கிச் சார்ந்தணைவார்
ஆர்வமிகு பெருங்காத லால்அவனி மேல்வீழ்ந்தார்.
தெளிவுரை : சிறப்புப் பெருகும் தேவாசிரிய மண்டபத்தின் முன் போய் அடைந்து வணங்கி, மேகம் தவழும் கோபுரத்தை வணங்கி, உள்ளே புகுந்து, மாலைகள் மிக்கு விளங்கும் பூங்கோயில் என்னும் திருமாளிகையை வணங்கி அணைபவராய் ஆசைபெருகும் விருப்பத்தினால் தரையின் மீது விழுந்தார்.
3461. வீழ்ந்தெழுந்து கைதொழுது முன்னின்று விம்மியே
வாழ்ந்தமலர்க் கண்ணொன்றால் ஆராமல் மனமழிவார்
ஆழ்ந்ததுயர்க் கடலிடைநின் றடியேனை யெடுத்தருளித்
தாழ்ந்தகருத் தினைநிரப்பிக் கண்தாரும் எனத்தாழ்ந்தார்.
தெளிவுரை : தரையில் விழுந்து வணங்கி எழுந்து தொழுது திருமுன்பு நின்று, விம்மி விம்மி, வாழ்வு பெற்ற மலர் போன்ற கண் ஒன்றினால் கண்டு நிறைவு பெறாது உள்ளம் வருந்துவாராகி, மிக ஆழமான துன்பக் கடலினின்றும் அடியேனை மேலே எடுத்தருளி விரும்பிய கருத்தை நிறைவாக்கிக் கண் தந்தருளுவீர் எனத் தாழ்ந்து துதித்தார்.
3462. திருநாவ லூர்மன்னர் திருவாரூர் வீற்றிருந்த
பெருமானைத் திருமூலட் டானஞ்சேர் பிஞ்ஞகனைப்
பருகாஇன் னமுதத்தைக் கண்களாற் பருகுதற்கு
மருவார்வத் துடன்மற்றைக் கண்தாரீ ரெனவணங்கி.
தெளிவுரை : திருநாவலூர் மன்னரான சுந்தரர் திருவாரூரில் வீற்றிருந்த இறைவரை மூலத்தானத்தில் வீற்றிருக்கின்ற பிஞ்ஞகரை, வாயால் பருக இயலாத இனிய அமுதம் போன்றவரை, கண்களால் கண்டு அனுபவித்தற்பொருட்டுப் பொருந்திய பேரன்பினோடு, மற்றைக் கண்தாரீர் என்ற கருத்துடன் வணங்கி,
3463. மீளா வடிமை எனவெடுத்து மிக்க தேவர் குலமெல்லம்
மாளா மேநஞ் சுண்டருளி மன்னி யிருந்த பெருமானைத்
தாளா தரிக்கும் மெய்யடியார் தமக்கா மிடர்நீர் தரியீரென்
ஆளாந் திருத்தோ ழமைத்திறத்தால் அஞ்சொற் பதிகம் பாடினார்.
தெளிவுரை : மீளா அடிமை என்று தொடங்கி மிக்க தேவர் கூட்டம் எல்லாம் இறந்துவிடாத வண்ணம் நஞ்சையுண்டு அருள் செய்து, நிலை பெற்றிருந்த இறைவரை உம்திருவடியை அன்புடன் பேணும் உண்மை அடியார்களுக்கு ஏற்படும் துன்பங்களை நீவிர் பொறுக்கமாட்டீரோ என்ற குறிப்புடன், அடிமையும் தோழமையும் ஆகிய இயல்புடன் அழகிய சொல்பதிகத்தைப் பாடினார்.
3464. பூத முதல்வர் புற்றிடங்கொண் டிருந்த புனிதர் வன்தொண்டர்
காதல் புரிவே தனைக்கிரங்கிக் கருணைத் திருநோக் களித்தருளிக்
சீத மலர்க்கண் கொடுத்தருளச் செவ்வே விழித்து முகமலர்ந்து
பாத மலர்கள் மேற்பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய்.
தெளிவுரை : பூதகணத் தலைவரான புற்றை இடமாகக் கொண்ட இறைவர், நம்பியாரூரர் காதலால் இடையறாது வேண்டிய வேதனைக்கு இரங்கியருளித் தம் அருள் செய்தருளிக் குளிர்ந்த கண்பார்வையைத் தந்தருளினார். வன்தொண்டர் செம்மையான பார்வையுடன் கூடிய கண்ணை விழித்து முகம் மலர்ச்சியடைந்து உள்ளம் தம் வயம் இழந்து பரவசப்பட்டு இறைவரின் திருவடிகளின் மீது வணங்கினார்.
3465. விழுந்தும் எழுந்தும் பலமுறையால் மேவிப் பணிந்து மிகப்பரவி
எழுந்த களிப்பி னாலாடிப் பாடி இன்ப வெள்ளத்தில்
அழுந்தி யிரண்டு கண்ணாலும் அம்பொற் புற்றி னிடையெழுந்த
செழுந்தண் பவளச் சிவக்கொழுந்தின் அருளைப் பருகித் திளைக்கின்றார்.
தெளிவுரை : அவர் நிலத்தில் பொருந்த விழுந்தும் பின் எழுந்தும் பல முறைகளாலும் பொருந்திப் பணிந்து மிகவும் துதித்து, மேன்மேல் அதிகரித்து எழுந்த மகிழ்ச்சியால் ஆடியும் பாடியும் இன்ப வெள்ளத்தில் முழுகியும் இரண்டு கண்களாலும் அழகிய புற்றிடத்தில் தோன்றிய செழுமையான குளிர்ந்த பவளம் போன்ற சிவக்கொழுந்தான இறைவரின் திருவருளைப் பருகித் திளைத்தவராகி,
3466. காலம் நிரம்பத் தொழுதேத்திக் கனக மணிமா ளிகைக்கோயில்
ஞால முய்ய வரும்நம்பி நலங்கொள் விருப்பால் வலங்கொண்டு
மாலும் அயனு முறையிருக்கும் வாயில் கழியப் புறம்போந்து
சீல முடைய அன்பருடன் தேவா சிரியன் மருங்கணைந்தார்.
தெளிவுரை : உலகம் உய்யும் பொருட்டாகத் தோன்றிய நம்பியாரூரர் அந்த அத்தயாமக் காலம் நிரம்பும் வரை தொழுது வணங்கி, பொன்மயமான அழகிய பூங்கோயிலின் மாளிகையை விருப்பத்தால் வலமாக வந்து, திருமாலும் நான்முகனும் தம் முறைக்காகக் காத்திருக்கின்ற வாயிலைக் கடந்து வெளியே வந்து, தவ ஒழுக்கமுடைய அன்பர்களுடனே தேவாசிரிய மண்டபத்தின் பக்கத்தை அடைந்தார்.
3467. நங்கை பரவை யார்தம்மை நம்பி பிரிந்து போனதற்பின்
தங்கு மணிமா ளிகையின்கண் தனிமை கூரத் தளர்வார்க்குக்
கங்குல் பகலாய்ப் பகல்கங்கு லாகிக் கழியா நாளெல்லாம்
பொங்கு காதல் மீதூரப் புலர்வார் சிலநாள் போனதற்பின்.
தெளிவுரை : பரவை அம்மையார் தம்மை நம்பி ஆரூரர் பிரிந்து சென்ற பின்னர், தங்கும் தமது மாளிகையில் தனிமை மிக்கதால் தளர்ச்சி அடைபவருக்கு, நாள்கள் முற்றும் இரவு பகலாகவும், பகல் இரவாகவும் ஆகிச் சென்று கழிந்தன. மேல் அதிகரிக்கும் ஆசையானது மேல் ஓங்க வருந்துவாரானார். இங்ஙனம் சில நாட்கள் சென்று கழிந்தன.
3468. செம்மை நெறிசேர் திருநாவ லூரர் ஒற்றி யூர்சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மைக் குலவு மணம்புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாம்அவர்பால் விட்டார் வந்து கட்டுரைப்பத்
தம்மை யறியா வெகுளியினால் தரியா நெஞ்சி னொடுந்தளர்வார்.
தெளிவுரை : செம்மை நெறி என்ற சிவநெறி சேர்ந்த திருநாவலூராளியான சுந்தரர் திருவொற்றியூரில் சேர்ந்து, பெருத்த கொங்கைகளையுடைய சங்கிலியாரை விளக்கம் மிக்க மணம் கொண்ட உண்மையான செய்தியை, அறிவதற்காகத் தாம் அவரிடத்து அனுப்பிய மக்கள் வந்து நிகழ்ந்ததை நிச்சயமாகச் சொல்ல, தம்மை அறியாதபடி எழுந்த சினத்தால் பொறுக்க இயலாத மனத்துடன் தளரலானார்.
3469. மென்பூஞ் சயனத் திடைத்துயிலும் மேவார் விழித்தும் இனிதமரார்
பொன்பூந் தவிசின் மிசையினிரார் நில்லார் செல்லார் புறம்பொழியார்
மன்பூ வாளி மழைகழியார் மறவார் நினையார் என்செய்வார்
என்பூ டுருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப்பட்டார்.
தெளிவுரை : (பரவையார்) மென்மையான பூக்கள் பரப்பிய படுக்கையில் உறங்குவதையும் விரும்பவில்லை. (உறங்க வில்லையானால் விழித்திருப்பாரோ என்றால்) அங்ஙனம் விழித்து இருத்தலையும் விரும்ப மாட்டார். படுக்கையில் படுக்காது பொன்னால் ஆன இருக்கையில் இருப்பாரோ என்றால் அதனையும் அவர் செய்யார்.  (ஆசனத்தில் இருக்கமாட்டார் என்றால்) எழுந்து நிற்பாரோ என்றால் அதையும் செய்யார். நடக்கவும் மாட்டார். காமனின் மலர் அம்புகள் இடைவிடாது மழைபோல விழவும் அதை விலக்க மாட்டார். நம்பியாரூரரை மறக்கவும் மாட்டார். அங்ஙனமேல் நினைப்பாரோ என்றால், சினத்தால் நினைக்கவும் மாட்டார். என்னதான் செய்வார்? எலும்பையும் உள் உருக்கும் புலவியிடத்தோ, அல்லது பிரிவினிடத்தோ என்று அறியமாட்டாது இவ்விரண்டின் இடையில் பட்டார்.
3470. ஆன கவலைக் கையறவால் அழியும் நாளில் ஆரூரர்
கூனல் இளவெண் பிறைக்கண்ணி முடியார் கோயில் முன்குறுகப்
பானல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால்
போன பெருமைப் பரிசனங்கள் புகுதப் பெறாது புறநின்றார்.
தெளிவுரை : முன் சொன்னபடி உள்ள கவலையுடன் செயலற்ற தன்மையினால் உள்ளம் உடைந்து வருந்தும் நாளில், நம்பியாரூரர் பிறைச்சந்திரனான மாலையைச் சூடிய சிவபெருமானின் கோயிலின் முன்பு சேர, குவளைமலர் போன்ற கண்களையுடைய பரவையாரின் மாளிகையில் முன்பெல்லாம் போகும் இயல்புடைய பரிவார மக்கள், அம்மாளிகையின் உள்ளே செல்ல இசைவு பெறாமல் வெளியே நின்றனர்.
3471. நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திருவா ரூரர்எதிர்
சென்று மொழிவார் திருவொற்றி யூரில் நிகழ்ந்த செய்கையெலாம்
ஒன்று மொழியா வகையறிந்தங் குள்ளார் தள்ள மாளிகையில்
இன்று புறமுஞ் சென்றெய்தப் பெற்றி லோம்என் றிறைஞ்சினார்.
தெளிவுரை : அவ்வாறு வெளியே நின்ற அப்பரிவாரத்தினர் நம்பியாரூரரிடம் போய் அவர்க்குத் திருவொற்றியூரில் நிகழ்ந்தவற்றை யெல்லாம் ஒன்று விடாது முழுதும் அறிந்ததால், அங்குள்ளவர் வெளியே தள்ளியதால், இன்று நாங்கள் பரவையாரின் அம்மாளிகையின் புறத்திலும் போய்ச் சேரப்பெற்றோம் இல்லை எனச்சொல்லி வணங்கினார்.
3472. மற்ற மாற்றங் கேட்டழிந்த மனத்த ராகி வன்தொண்டர்
உற்ற இதனுக் கினியென்னோ செயலேன் றுயர்வார் உலகியல்பு
கற்ற மாந்தர் சிலர் தம்மைக் காதற் பரவை யார்கொண்ட
செற்ற நிலைமை யறிந்தவர்க்குத் தீர்வு சொல்லச் செலவிட்டார்.
தெளிவுரை : வன்தொண்டர், அவர்கள் அங்ஙனம் கூறியவற்றைக் கேட்டு, அழிந்த மனத்தை உடையவராய், வந்த இதனுக்குத் தீர்வு என்னோ? என்று தேர்வாராய்த் தெளிந்து உலக இயல்பை நன்கு அறிந்து அதற்குத் தக்கவாறு இயற்றும் நிலை கை வந்த சில மக்களை, காதலையுடைய பரவையார் மேற்கொண்ட கோப நிலைமையின் தன்மையை அறிந்து, அதற்கு ஏற்றபடி அவர்க்கு அது தீரும் வகையைச் சொல்லிச் சினத்தைத் தணிக்கும்படி அனுப்பினார்.
3473. நம்பி யருளால் சென்றவரும் நங்கை பரவை யார்தமது
பைம்பொன் மணிமா ளிகையணைந்து பண்பு புரியும் பாங்கினால்
வெம்பு புலவிக் கடலழுந்தும் மின்னே ரிடையார் முன்னெய்தி
எம்பி ராட்டிக் கிதுதகுமோ என்று பலவும் எடுத்துரைப்பார்.
தெளிவுரை : நம்பியாரூரரின் அருள் ஆணை வழியே போன அம்மக்களும் பரவையாரின் பசும்பொன் அணிந்த அழகிய மாளிகையை அடைந்து சினத்தைத் தணியச் செய்கின்ற தன்மையுடன், உள்ளத்தை வெதும்பச் செய்கின்ற புலவியான கடலுள் அழுந்திக் கிடக்கும் மின் போன்ற இடையையுடைய பரவையார் முன் சேர்ந்து எம் பெருமாட்டியின் பெருந்தன்மைக்கு இங்ஙனம் ஊடியிருந்து நாயகரை வெறுப்பது தகுதியோ? என்பவை போன்ற இத்தகைய பலவற்றையும் எடுத்துக் கூறினர்.
3474. பேத நிலைமை நீதியினாற் பின்னும் பலவுஞ் சொன்னவர்முன்
மாத ரவரும் மறுத்துமனங் கொண்ட செற்றம் மாற்றாராய்
ஏதம் மருவு மவர்திறத்தில் இந்த மாற்றம் இயம்பில்உயிர்
போத லொழியா தெனவுரைத்தார் அவரும் அஞ்சிப் புறம்போந்தார்.
தெளிவுரை : முதலில் சாம உபாயம் (சமாதான வழி) உரைத்தவர்கள் அதன் பின்பு பேத நிலைமையை மேற்கொண்டு, அந்த நீதியின் உபாயம் பற்றி மேலும் பலவற்றாலும் சினம் தணியும்படி எடுத்துச் சொன்னார்கள். அம்மக்களின் முன்பு, அப்பரவையார் அக்கூற்றுக்களை மறுத்துத் தாம் கொண்ட சினத்தை மாற்றாதவராய், தீமை பொருந்திய அந்த நம்பியின் திறம் பற்றி இச்சொற்களை இன்னும் கூறவீராயின், என உயிர் நீங்குவது தவறாது என உரைத்தார். அம்மக்களும் அதற்கு அஞ்சி வெளியே வந்தனர்.
3475. போந்து புகுந்த படியெல்லாம் பூந்தண் பழன முனைப்பாடி
வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற் றயர்வார் துயர்வேலை
நீந்தும் புணையாந் துணைகாணார் நிகழ்ந்த சிந்தா குலம்நெஞ்சில்
காந்த அழிந்து தோய்ந்தெழார் கங்குல் இடையா மக்கடலுள்.
தெளிவுரை : அம்மக்கள் திரும்ப வந்து நிகழ்ந்ததை எல்லாம் அழகிய குளிர்ந்த வயலையுடைய திருமுனைப்பாடி நாட்டின் தலைவரான நம்பியாரூரர்க்குத் தெரிவிக்கவும், நம்பியாரூரர் அச்சம் கொண்டு வருந்துபவராய், துன்பக் கடலினின்றும் நீந்திக் கரையேறுவதற்குரிய துணையாகும் தோணி போன்றவரைக் காணாதவராய், உண்டான மன வேதனை உள்ளத்தைச் சுட வருந்தி, இரவின் நடுயாமமான கடலில் முழுகி மேல் எழ மாட்டாதவராய் ஆனார்.
3476. அருகு சூழ்ந்தார் துயின்றுதிரு அத்த யாமம் பணிமடங்கிப்
பெருகு புவனஞ் சலிப்பின்றிப் பேயும் உறங்கும் பிறங்கிருள்வாய்
முருகு விரியு மலர்க்கொன்றை முடிமேல் அரவும் இளமதியுஞ்
செருகு மொருவர் தோழர்தனி வருந்தி இருந்து சிந்திப்பார்.
தெளிவுரை : பக்கத்தில் இருந்தவர் உறங்கி, அத்தயமா வழிபாடும் நிறைவேறிப் பெருகும் உலகத்தில் உள்ளவர் நடமாட்டமும் ஒழிந்து, பேயும் உறங்குகின்ற நள்ளிரவில், மணம் வீசும் கொன்றை மலரைச் சூடிய சடைமீது பாம்பையும் பிறைச்சந்திரனையும் சூடிய இறைவரின் தோழரான நம்பியாரூரர் தனியே வருத்தத்துடன் இருந்து சிந்தித்தார்.
3477. அருகு சூழ்ந்தார் துயின்றுதிரு அத்த யாமம் பணிமடங்கிப்
பெருகு புவனஞ் சலிப்பின்றிப் பேயும் உறங்கும் பிறங்கிருள்வாய்
முருகு விரியு மலர்க்கொன்றை முடிமேல் அரவும் இளமதியுஞ்
செருகு மொருவர் தோழர்தனி வருந்தி இருந்து சிந்திப்பார்.
தெளிவுரை : என்னை ஆட்கொண்ட இறைவரே முன் வினையின் பயனாக இவ்வினைக்குக் காரணமாய் நின்ற பரவையாரிடம் நான் செல்வதற்கு நினைந்து அருள் செய்யீர்! இந்த நடுயாமத்தில் தாங்கள் எழுந்தருளி அன்னம் போன்ற பரவையாரின் புலவியை நீக்கினால் உய்யலாமே, அல்லது வேறு செயல் இல்லை! என வேண்டி இறைவரின் திருவடிகளை வணங்கினார்.
3478. அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர்குறை
முடியா திருக்க வல்லரே முற்று மளித்தாள் பொற்றளிர்க்கைத்
தொடியார் தழும்பும் முலைச்சுவடும் உடையார் தொண்டர் தாங்காணும்
படியால் அணைந்தார் நெடியோனுங் காணா அடிகள் படிதோய.
தெளிவுரை : அடியவரின் துன்பத்தைப் பொறுக்கமாட்டாத சிவபெருமான் தம் அடியவர் ஆவலுடன் தம்மால் ஆளாகக் கொள்ளப்பட்ட தோழரான நம்பியாரூரரின் குறையை முடிக்காமல் இருக்கவல்லர் ஆவாரோ! உலகம் முழுவதையும் ஈன்ற காமாட்சி அம்மையாரின் அழகிய தளிர் போன்ற கையில் அணிந்த வளையின் தழும்பும் கொங்கையின் தழும்பும் கொண்ட இறைவர், திருமாலும் காணாத திருவடிகள் நிலம் பொருந்தத் தொண்டரான நம்பியாரூரர் காணும்படி வந்தருளினார்.
3479. தம்பி ரானார் எழுந்தருளத் தாங்கற் கரிய மகிழ்ச்சியினால்
கம்பி யாநின் றவயவங்கள் கலந்த புளகம் மயிர்முகிழ்ப்ப
நம்பி யாரூ ரரும்எதிரே நளின மலர்க்கை தலைகுவிய
அம்பி காவல் லவர்செய்ய அடித்தா மரையின் கீழ்வீழ்ந்தார்.
தெளிவுரை : தம் இறைவர் எழுந்தருளிவரக் கண்டு தாங்குவதற்கு அரிய மகிழ்ச்சியினால் உடலின் எல்லா உறுப்புகளும் நடுங்கி, அதனுடன் உடல் முழுதும் மயிர்ப்புளகம் உண்டாக, சுந்தரர் இறைவர் திருமுன்பு தாமரை மலர் போன்ற கைகள் தலைமேல் ஏறிக்குவிய, அம்மை பாகரான இறைவரின் சிவந்த திருவடித்தாமரை கீழ்ப்பொருந்த நிலத்தில் விழுந்தார்.
3480. விழுந்து பரவி மிக்கபெரு விருப்பி னோடும் எதிர் போற்றி
எழுந்த நண்பர் தமைநோக்கி யென்நீ யுற்ற தென்றருளத்
தொழுந்தங் குறையை விளம்புவார் யானே தொடங்குந் துரிசிடைப்பட்
டழுந்து மென்னை யின்னமெடுத் தாள வேண்டு முமக்கென்று.
தெளிவுரை : திருவடியில் விழுந்து துதிக்க, மிக்க பெருவிருப்புடன் எதிரில் போற்றி, எழுந்த தோழரைப் பார்த்து, உனக்கு உண்டான துன்பம் யாது? என வினவத் தொழுகின்ற தம் குறையைச் சொல்பவராய்ச் சுந்தரர் நானே தொடங்கிக் கொண்ட குற்றத்தின் உட்பட்டு வருந்தும் என்னை அந்தக் குற்றித்தினின்றும் இன்னமும் மேல் எடுத்து ஆட்கொள்ள வேண்டுவது உம் கடமை என்று சொல்லி,
3481. அடியே னங்குத் திருவொற்றி யூரில் நீரே யருள்செய்ய
வடிவே லொண்கண் சங்கிலியை மணஞ்செய் தணைந்த திறமெல்லாம்
கொடியே ரிடையாள் பரவைதா னறிந்து தன்பால் யான்குறுகின்
முடிவே னென்று துணிந்திருந்தா ளென்னான் செய்வ தெனமொழிந்து.
தெளிவுரை : அங்குத் திருவொற்றியூரில் தாங்களே அருள் செய்ய கூரியவேல் போன்ற கண்ணையுடைய சங்கிலியாரை அடியேன் மணம் செய்து அணைந்த தன்மைகளை எல்லாம், கொடி போன்ற அழகிய இடையையுடைய பரவை, தானே அறிந்து, தன்னிடம் (நான்) சென்றால் உயிர் விடுவேன் எனத் துணிவுடன் உள்ளாள். ஆதலால் நான் செய்வது யாது? என்று (சுந்தரர்) சொல்லி,
3482. நாய னீரே நான்உமக்கிங் கடியே னாகில் நீர்எனக்குத்
தாயி னல்ல தோழருமாந் தம்பி ரானா ரேயாகில்
ஆய வறிவும் இழந்தழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும்
போயிவ் விரவே பரவையுறு புலவி தீர்த்துத் தாருமென.
தெளிவுரை : எம் இறைவ நான் தங்களின் அடியவன் ஆனால், தாங்கள் எனக்குத் தாயினும் இனிய தோழராகும் பெருமானே ஆனால், அறிவும் இழந்து உள்ளம் உடையும் என் வருத்தத்தைக் கண்டு, பரவையின் மாளிகைவரை போய், இந்த இரவிலேயே அவளிடம் பெருகிப் பொருந்திய புலவியைத் தீர்த்தருள வேண்டும் என விண்ணப்பம் செய்ய,
3483. அன்பு வேண்டும் தம்பெருமான் அடியார் வேண்டிற் றேவேண்டி
முன்பு நின்று விண்ணப்பம் செய்த நம்பி முகம்நோக்கித்
துன்பம் ஒழிநீ யாம்உனக்கோர் தூத னாகி இப்பொழுதே
பொன்செய் மணிப்பூண் பரவைபால் போகின் றோம்என் றருள்செய்தார்.
தெளிவுரை : அன்பு ஒன்றையே விரும்பும் தம் ஆன்மநாயகர், தம் அடியவரான நம்பியாரூரர் எதை விரும்பினாரோ அதையே தாமும் விரும்பி, தம் திருமுன்பு நின்று வேண்டும் சுந்தரரின் முகத்தைப் பார்த்து, நீ உன் துன்பத்தை விடுவாயாக நாம் உனக்காக ஒரு தூதனாகி இப்போதே பொன்னாலும் மணியாலும் ஆன அணிகளை அணிந்த பரவையாரிடம் போகின்றோம் எனக் கூறியருளினார்.
3484. எல்லை யில்லாக் களிப்பின ராய் இறைவர் தாளில் வீழ்ந்தெழுந்து
வல்ல பரிசெல் லாந்துதித்து வாழ்ந்து நின்ற வன்தொண்டர்
முல்லை முகைவெண் ணகைப்பரவை முகில்சேர் மாடத் திடைச்செல்ல
நில்லா தீண்ட எழுந்தருளி நீக்கும் புலவி யெனத்தொழுதார்.
தெளிவுரை : அளவில்லாத மகிழ்ச்சியுடையவராய் இறைவரின் திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்து இயன்ற தன்மைகள் எல்லாவற்றாலும் துதித்து வாழ்வடைந்து நின்றவரான வன்தொண்டர், முல்லை அரும்பைப் போன்ற வெண்மையான பற்களையுடைய பரவையாரின், மேகம் தவழ உயர்ந்துள்ள மாளிகைக்குச் சென்றருள்வதற்காக, இனி இங்கு நில்லாமல் விரைந்து போயருளி அவளது புலவியை நீக்குவீராக என்று கூறித் தொழுதார்.
3485. அண்டர் வாழக் கருணையினால் ஆல காலம் அமுதாக
உண்ட நீலக் கோலமிடற் றொருவர் இருவர்க் கறிவரியார்
வண்டு வாழும் மலர்க்கூந்தல் பரவை யார்மா ளிகைநோக்கித்
தொண்ட னார்தம் துயர்நீக்கத் தூத னாராய் எழுந்தருள.
தெளிவுரை : தேவர்களும் வாழும் பொருட்டாகக் கருணையினால் ஆலகால நஞ்சினையே அமுதமாய் உண்டு அதனால் நீலகண்டரானவரும் இருவரான நான்முகன் திருமால் என்பவர்களுக்கு அறிவதற்கு அரியவரும் ஆன, இறைவர் வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய பரவையாரின் மாளிகையை நோக்கித் தொண்டரான நம்பியாரூரரின் துன்பத்தை நீக்கப் புறப்பட்டுப் போக,
3486. தேவா சிரியன் முறையிருக்குந் தேவ ரெல்லாஞ் சேவித்துப்
போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்தொழிய
ஓவா அணுக்கச் சேவகத்தில் உள்ளோர் பூத கணநாதர்
மூவா முனிவர் யோகிகளின் முதலா னார்கள் முன்போக.
தெளிவுரை : தேவாசிரியன் மண்டபத்தின் வாயிலில் வரம் கிடந்து காத்துக் கொண்டிருக்கும் தேவர்கள் எல்லாரும் வணங்கிச் செல்பவர்களுள் வேண்டியவர் மட்டும் உள்ளே போக, மற்றவர் வெளியே அப்பால் போக, நீங்காத திரு அணுக்கத் தொண்டில் உள்ளவர்களும் சிவபூதகணநாதரும், முதுமை அடையாத முனிவர்களும் யோகியர்களுள், முதன்மை கொண்டவர்களும் முன்னால் செல்ல,
3487. அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும்அவ் விருடிகளும்
மருவு நண்பின் நிதிக்கோனும் முதலா யுள்ளோர் மகிழ்ந்தேத்தத்
தெருவும் விசும்பும் நிறைந்துவிரைச் செழும்பூ மாரி பொழிந்தலையப்
பொருவி லன்பர் விடுந்தூதுர் புனித வீதி யினிற்போத.
தெளிவுரை : பக்கத்தில் நந்தியம் பெருமானுடனே அணைந்து வரும் அந்த முனிவர்களும் பொருந்திய நட்புடைய குபேரனும் முதலாக உள்ளவர் மகிழ்ந்து துதிக்கவும், வீதியும் வானமும் நிறைந்து மணமுடைய செழுமையான பூ மழை பொழிந்து பரவ ஒப்பில்லாத அன்பராம் நம்பியாரூரர் அனுப்பித் தூதரான இறைவர் தூய திருவீதியிலே போக,
3488. மாலும் அயனுங் காணாதார் மலர்த்தாள் பூண்டு வந்திறைஞ்சும்
காலம் இதுவென் றங்கவரை அழைத்தா லென்னக் கடல்விளைத்த
ஆல மிருண்ட கண்டத்தான் அடித்தா மரைமேற் சிலம்பொலிப்ப
நீல மலர்க்கட் பரவையார் திருமா ளிகையை நேர்நோக்கி.
தெளிவுரை : திருமாலும் நான்முகனும் காண்பதற்கு அரிய இறைவரின் தாமரை மலர் போன்ற திருவடிகளைச் சிரமேல் தாங்கி வந்து வணங்குதற்குரிய காலம் இதுவாகும் என்று அவர்களை அழைத்தது போல், கடலில் எழுந்த நஞ்சு தங்கியதால் இருண்ட கண்டத்தையுடைய இறைவரின் திருவடியில் சிலம்புகள் ஒலிக்க, நீலமலர் போன்ற கண்களையுடைய பரவையாரின் மாளிகையைக் குறித்து நோக்கி,
3489. இறைவர் விரைவில் எழுந்தருள எய்து மவர்கள் பின்தொடர
அறைகொள் திரைநீர் தொடர்சடையில் அரவு தொடர அரியஇளம்
பிறைகொள் அருகு நறைஇதழிப் பிணையல் சுரும்பு தொடரவுடன்
மறைகள் தொடர வன்தொண்டர் மனமுந் தொடர வரும்பொழுது.
தெளிவுரை : இறைவர் விரைந்து செல்ல, முன் சொன்னவண்ணம் வருகின்ற அவர்கள் எல்லாம் அன்புடன் தொடர்ந்து வர, ஒலித்து வரும் அலைகளையுடைய கங்கை நீர் பொருந்திய சடையில் பாம்புகள் தொடர, அரிய இளம் பிறையின் அருகே தேன் பொருந்திய கொன்றை மாலையில் வண்டுகள் தொடர, உடன் வேதங்கள் தொடர, இவற்றுடன் வன்தொண்டரது உள்ளம் உடன் தொடர இங்ஙனமாக வரும்போது,
3490. பெருவீ ரையினும் மிகமுழங்கிப் பிறங்கு மதகுஞ் சரம்உரித்து
மரவீ ருரிவை புனைந்தவர்தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால்
திருவீ தியினில் அழகரவர் மகிழுஞ் செல்வத் திருவாரூர்
ஒருவீ தியிலே சிவலோகம் முழுதுங் காண வுளதாமால்.
தெளிவுரை : பெரிய கடலைவிட மிக்க முழக்கம் செய்து விளங்கும் மதயானையை உரித்து அத்தோலைப் போர்த்த அப்பெருமானின் பக்கத்தில், முன் சொன்ன வண்ணம் சூழ்ந்து வருபவர் நெருக்கமாய் வருதலால், வீதியில் செல்லும் அழகரான இறைவர் மகிழும் அந்தச் செல்வத் திருவாரூரின் ஒரு தெருவிலே, சிவலோகம் முழுவதும் காணுமாறு விளங்கியது.
3491. ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தூதர் பரவையார்
கோல மணிமா ளிகைவாயில் குறுகு வார்முன் கூடத்தம்
பால்அங் கணைந்தார் புறநிற்பப் பண்டே தம்மை யர்ச்சிக்கும்
சீல முடைய மறைமுனிவர் ஆகித் தனியே சென்றணைந்தார்.
தெளிவுரை : உலகம் உய்யும் பொருட்டு வந்து தோன்றிய நம்பியாரூரரின் தூதரான இறைவர், பரவையாரின் அழகிய மணிகள் அணிந்த திருமாளிகையின் வாயிலில் சேர்பவராய், முன்பே தம் பக்கம் முன் சேர்ந்தவர் எல்லாரும் வெளியே நிற்கப் பணிந்து, நீண்ட நாளாய்த் தம்மை வழிபடுகின்ற ஒழுக்கம் உடைய சிவவேதியரான முனிவர் கோலத்துடன் தனியே போய்ச் சேர்ந்தார்.
3492. சென்று மணிவா யிற்கதவம் செறிய அடைத்த அதன்முன்பு
நின்று பாவாய் திறவாய்என்று அழைப்ப நெறிமென் குழலாரும்
ஒன்றுந் துயிலா துணர்ந்தயர்வார் உடைய பெருமான் பூசனைசெய்
துன்றும் புரிநூல் மணிமார்பர் போலும் அழைத்தார் எனத்துணிந்து.
தெளிவுரை : அவ்வாறு தனியே சென்று நெருங்க, அடைக்கப்பட்ட அந்த வாயிலின் கதவின் முன்னால் நின்று, பெண்ணே கதவைத் திறப்பாயாக! என்று (இறைவர்) அழைக்க, சுருண்ட மென்மையான கூந்தலையுடைய பரவையாரும் சற்றும் உறங்காது விழித்தபடி இருந்து வருந்துபவர், என்னை ஆளும் இறைவரின் பூசையைச் செய்யும் நெருங்கிய முப்புரி நூலை அணிந்த மார்பையுடைய முனிவர் வந்து அழைத்தார் போலும் எனத் துணிந்து,
3493. பாதி மதிவாழ் முடியாரைப் பயில்பூ சனையின் பணிபுரிவார்
பாதி யிரவில் இங்கணைந்த தென்னோ என்று பயமெய்திப்
பாதி உமையாள் திருவடிவிற் பரம ராவ தறியாதே
பாதி மதிவாள் நுதலாரும் பதைத்து வந்து கடைதிறந்தார்.
தெளிவுரை : சந்திரன் வாழ்வதற்கு இடமான சடைமுடியை உடைய இறைவருக்கு, விளக்கமுடைய பூசனையான பணியைச் செய்கின்ற முனிவர் நள்ளிரவில் இங்கு வந்து காரியம் ஏதோ? என்று அச்சத்தை எய்தி, அவர் தமது திருவடிவில் பாதியான ஒரு கூற்றில் உமையம்மையாரையுடைய இறைவரே ஆவார் என்பதை அறியாமல் பாதிமதி போன்ற நெற்றியுடைய பரவையாரும் பதைப்புடன் வந்து வாயிலைத் திறந்தார்.
3494. மன்னும் உரிமை வன்தொண்டர் வாயில் தூதர் வாயிலிடை
முன்னின் றாரைக் கண்டிறைஞ்சி முழுது முறங்கும் பொழுதின்கண்
என்னை யாளும் பெருமானிங் கெய்தி யருளி னாரென்ன
மின்னு மணிநூ லணிமார்பீர் எய்த வேண்டிற் றென்என்றார்.
தெளிவுரை : நிலையான தோழராகும் உரிமையுடைய வன்தொண்டர் காரணமாக வரும் தூதரான இறைவர் வாயிலின் முன் நின்றவரைப் பார்த்து பரவையார் வணங்கி, உலகத்து உயிர்கள் எல்லாம் உறங்கும் இரவுப் பொழுதில் என்னை ஆளுடைய இறைவரே இங்கு வந்தார் என்பது போல் விளங்கும் நூலணிந்த மார்பை உடையவரே, தாங்கள் இங்கு வரவேண்டிய காரணம் யாது? என்று வினவினார்.
3495. கங்கைநீர் கரந்த வேணி கரந்தவர் அருளிச் செய்வார்
நங்கைநீ மறாது செய்யின் நான்வந்த துரைப்ப தென்ன
அங்கயல் விழியி னாரும் அதனைநீ ரருளிச் செய்தால்
இங்கெனக் கிசையு மாகில் இசையலாம் என்று சொல்லி.
தெளிவுரை : கங்கைநீரைத் தரித்த சடையுடைய இறைவர் சொல்லலானார், பெண்ணே! நீ மறுக்காமல் ஏற்பாயாயின் நான் வந்த காரணத்தைச் சொல்வேன்! என்றார். கயல்மீன் போன்ற விழியுடைய அப்பரவையாரும், நீவீர் அதை இன்னது என முதலில் சொன்னால், இங்கு அஃது இசைவதானால், நான் இணங்குதல் கூடும் என்று உரைத்தார்.
3496. என்னினைந் தணைந்த தென்பால் இன்னதென் றருளிச் செய்தால்
பின்னைய தியலு மாகில் ஆம்எனப் பிரானார் தாமும்
மின்னிடை மடவாய் நம்பி வரஇங்கு வேண்டு மென்ன
நன்னுத லாருஞ் சால நன்றுநம் பெருமை யென்பார்.
தெளிவுரை : என்னிடம் எதை எண்ணி வந்தது என்று கூறியருளினால், அதன் மேல் அது முடிவதானால் என்னால் ஆகும் என்று பரவையார் கூற, இறைவரும் மின்னல் போன்ற இடையுடையவளே! நம்பியாரூரர் இங்கு வரவேண்டும். அதுவே நாம் நினைந்து வந்தது! என்று உரைக்க; நல்ல நெற்றியையுடைய பரவையாரும் மிகவும் நன்று, நம் பெருமை இருந்தவாறு! என்பவராய்,
3497. பங்குனித் திருநா ளுக்குப் பண்டுபோல் வருவா ராகி
இங்கெனைப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி யங்கே
சங்கிலித் தொடக்குண் டாருக் கிங்கொரு சார்வுண் டோநீர்
கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகி தென்றார்.
தெளிவுரை : பங்குனித் திருவிழாவுக்காக வழக்கம் போல் மீண்டு வருபவராகி, இங்கு என்னை விட்டுப் பிரிந்து போய், திருவொற்றியூரைச் சேர்ந்து, அங்கே சங்கிலித் தொடக்கினால் பிணைக்கப்பட்ட அவருக்கு இங்கு வருதற்கு ஏற்ற தொடர்பும் உண்டோ? நீங்கள் இந்த நடுஇரவில் வந்து மேற்கொண்டு சொன்ன இக்காரியம் மிகவும் அழகிது! எனப் பரவையார் கூறினார்.
3498. நாதரும் அதனைக் கேட்டு நங்கைநீ நம்பி செய்த
ஏதங்கள் மனத்துக் கொள்ளா தெய்திய வெகுளி நீங்கி
நோதகவு ஒழித்தற் கன்றோ நுன்னையான் வேண்டிக் கொண்ட
தாதலின் மறுத்தல் செய்ய அடாதென அருளிச் செய்தார்.
தெளிவுரை : சிவபெருமானும் பரவையார் உரைத்ததைக் கேட்டு, பெண்ணே! உன்னிடம் நம்பியாரூரன் செய்த குற்றங்களை மனத்துள் வைக்காது பொருந்திய புலவியை நீங்கி, துன்பம் செய்யும் தன்மையை நீக்குவதற்கு அன்றோ உன்னை வேண்டினேன்! ஆதலால் நீ என் சொல்லை ஏற்காது மறுப்பது தக்கதாகாது! என அருள் செய்தார்.
3499. அருமறை முனிவ ரான ஐயரைத் தைய லார்தாம்
கருமம்ஈ தாக நீர் கடைத்தலை வருதல் நுந்தம்
பெருமைக்குத் தகுவ தன்றால் ஒற்றியூர் உறுதி பெற்றார்
வருவதற் கிசையேன் நீரும் போம்என மறுத்துச் சொன்னார்.
தெளிவுரை : அரிய மறை முனிவராக வந்த இறைவரை நோக்கிப் பரவையாரும் எண்ணிய செயல் இதுவேயாக மேற்கொண்டு இந்த வாயிலின் கண் வருவது உமது பெருமைக்குத் தக்கதன்று! ஒற்றியூரில் நிலைபேறுடைய உறுதியைப் பெற்ற அவர் இங்கு வருவதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்! நீங்களும் செல்லுங்கள்! என்று பரவையார் எதிர் மறுத்துச் சொன்னார்.
3500. நம்பர்தாம் அதனைக் கேட்டு நகையும்உட் கொண்டு மெய்ம்மைத்
தம்பரி சறியக் காட்டார் தனிப்பெருந் தோழ னார்தம்
வெம்புறு வேட்கை காணும் திருவிளை யாட்டின் மேவி
வம்பலர் குழலி னார்தாம் மறுத்ததே கொண்டு மீண்டார்.
தெளிவுரை : இறைவர் அவர் உரைத்த மாற்றத்தைக் கேட்டு நகைப்பையும் உள்ளே கொண்டு தம் உண்மையான இயல்பை அவர்க்குக் காட்டாமல், தம் ஒப்பில்லாத பெருந்தோழரான நம்பியின் மனம் வெதும்பும் வேட்கையைக் காணும் திருவிளையாட்டை மேற்கொண்டு, மணம் கமழ்கின்ற கூந்தலையுடைய பரவையார் மறுத்துக் கூறிய அதனையே ஏற்று மீண்டார்.
3501. தூதரைப் போக விட்டு
வரவுபார்த் திருந்த தொண்டர்
நாதரைஅறிவி லாதேன்
நன்னுதல் புலவி நீக்கப்
போதரத் தொழுதேன் என்று
புலம்புவார் பரவை யாரைக்
காதலில் இசைவு கொண்டு
வருவதே கருத்துட் கொள்வார்.
தெளிவுரை : இறைவரைத் தூதராய் அனுப்பிய பின்பு அவர் செய்கை முற்றி வருவதையே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நம்பியாரூரர் என் தலைவரான இறைவரை அறிவில்லாத  நான் பரவையாரின் புலவியைத் தீர்த்து வரும்பொருட்டு வணங்கி வேண்டினேன் எனப் புலம்புவார், பரவையாரைக் காதல் பெருக இசைவித்துக் கொண்டே மீள்வார் என்ற கருத்தை மனத்தில் நினைத்து,
3502. போயவள் மனையில் நண்ணும்
புண்ணியர் என்செய் தாரோ
நாயனார் தம்மைக் கண்டால்
நன்னுதல் மறுக்கு மோதான்
ஆயஎன் அயர்வு தன்னை
அறிந்தெழுந் தருளி னார்தாம்
சேயிழை துனிதீர்த் தன்றி
மீள்வதும் செய்யார் என்று.
தெளிவுரை : இங்கு நின்று புறப்பட்டு அப்பரவை மனைக்குச் சென்ற இறைவர் என்ன செய்தாரோ! இறைவரைக் கண்டால் பரவையார்தான் மறுப்பாளா? பொருந்திய என் வருத்தத்தை அறிந்து புறப்பட்டுப் போன இறைவர் அவளது சிறு கலகத்தை தீர்த்தாலன்றித் திரும்பிவர மாட்டார் என்று மனத்தில் நினைத்து,
3503. வழியெதிர் கொள்ளச் செல்வர்
வரவுகா ணாது மீள்வர்
அழிவுற மயங்கி நிற்பர்
அசைவுடன் இருப்பர் நெற்றி
விழியவர் தாழ்த்தா ரென்று
மீளவு மெழுவர் மாரன் பொழிமலர் மாரி வீழ
ஒதுங்குவார் புன்க ணுற்றார்.
தெளிவுரை : சுந்தரர், தூதரான இறைவர் மீண்டு வரும் வழியை நோக்கி எதிர்கொள்ளும்படி சிறிது தூரம் செல்வார். ஆங்கு அவர் வரக் காணாததால் மீண்டு வருவார். உள்ளம் வருந்த மயங்கி நிற்பார். சோர்வுடன் ஒருபக்கம் நிற்பார். நெற்றிக் கண்ணையுடைய இறைவர் தாமதித்தார் என மீண்டும் எழுவார். காமன் எய்யும் மலர் அம்புகள் மழைபோல வந்து விழ ஒதுங்குவார். இங்ஙனம் ஆரூரர் துன்பம் எய்தினார்.
3504. பரவையார் தம்பால் நம்பி
தூதராம் பாங்கிற் போன
அரவணி சடையார் மீண்டே
அறியுமாறு அணையும் போதில்
இரவுதான் பகலாய்த் தோன்ற
எதிரெழுந் தணையை விட்ட
உரவுநீர் வெள்ளம் போல
ஓங்கிய களிப்பிற் சென்றார்.
தெளிவுரை : பரவையாரிடத்தில் நம்பியின் தூதராகும் தன்மையில் போன பாம்பு அணிந்த சடையினரான இறைவர் அங்கிருந்து மீண்டு தாம் இன்னார் என்ற தன்மை அறியுமாறு உள்ள கோலத்துடன் வந்து சேர்ந்தபோது, அந்த நள்ளிரவானது இருள் இல்லாது பகலைப் போலப் பேரொளியுடன் விளங்க, நம்பியாரூரர் அவருக்கு எதிரே எழுந்து, அணையை உடைத்தெழுந்த பரந்த நீர்ப்பெருக்கைப் போன்று மிக்க மகிழ்ச்சியுடன் எதிரே சென்றார்.
3505. சென்றுதம் பிரானைத் தாழ்ந்து
திருமுகம் முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட் டோரார்
உறுதிசெய் தணைந்தா ரென்றே
அன்றுநீ ராண்டு கொண்ட
அதனுக்குத் தகவே செய்தீர்
இன்றிவள் வெகுளி யெல்லாந்
தீர்த்தெழுந் தருளி என்றார்.
தெளிவுரை : சென்று தம் இறைவரை வணங்கி அவரது திருமுகமானது புன்முறுவல் காட்ட அதைக் கண்டு, பொருந்திய விளையாட்டை உணராதவராகிப் புலவியை நீக்கி இசைவு செய்துவந்தார் என்றே நினைத்துத் தாங்கள் என்னை அன்று ஆளாகக் கொண்டருளிய செயலுக்கு ஏற்ற தன்மையாகவே இன்றும் அருள் செய்தீர் இவளது புலவியை எல்லாம் தீர்த்து எழுந்தருளிய அதனாலே! என்று கூறினார்.
3506. அம்மொழி விளம்பு நம்பிக்
கையர்தா மருளிச் செய்வார்
நம்மைநீ சொல்ல நாம்போய்ப்
பரவைதன் இல்லம் நண்ணிக்
கொம்மைவெம் முலையி னாட்குன்
திறமெலாங் கூறக் கொள்ளாள்
வெம்மைதான் சொல்லி நாமே
வேண்டவும் மறுத்தா ளென்றார்.
தெளிவுரை : அத்தகைய சொற்களைக் கூறும் நம்பியாரூரர்க்கு இறைவர் அருள் செய்வாராய் நீ எம்மிடம் வேண்டிய வண்ணமே நாம் போய்ப் பரவையின் இல்லத்தை அடைந்து, பெருத்து எழுந்த விருப்பம் தரும் கொங்கைகளையுடைய அவளுக்கு உன் திறங்களை எல்லாம் எடுத்துச் சொல்லவும் அவள் ஏற்றுக்கொள்ளாமல், விரும்பும் சொற்களையே கூறி நாமே வேண்டிக் கொள்ளவும் கேளாது மறுத்து விட்டாள்! என்றார்.
3507. அண்ணலார் அருளிச் செய்யக்
கேட்டஆ ரூரர் தாமும்
துண்ணென நடுக்க முற்றே
தொழுதுநீ ரருளிச் செய்த
வண்ணமும் அடியா ளான
பரவையோ மறுப்பாள் நாங்கள்
எண்ணஆர் அடிமைக் கென்ப
தின்றறி வித்தீ ரென்று.
தெளிவுரை : இங்ஙனம் இறைவர் கூறியதைக் கேட்ட நம்பியாரூரர், துண் என்று நடுக்கத்தை அடைந்து, அவரை வணங்கி, தாங்கள் அருளிச் செய்த தன்மையும் உம் அடியவளான பரவையோ மறுக்க வல்லாள்? நாங்கள் அடிமைத் திறத்தில் வைத்து எண்ணுவதற்கு உரியவர் அல்லோம் என்பதை இன்று அறியச் செய்தீர்! என்று கூறி,
3508. வானவர் உய்ய வேண்டி
மறிகடல் நஞ்சை யுண்டீர்
தானவர் புரங்கள் வேவ
மூவரைத் தவிர்த்தாட் கொண்டீர்
நான்மறைச் சிறுவர்க் காகக்
காலனைக் காய்ந்து நட்டீர்
யான்மிகை யுமக்கின் றானால்
என்செய்வீர் போதா தென்றார்.
தெளிவுரை : தேவர்கள் உயிர் பிழைக்க வேண்டி நீவீர் கடலில் உண்டான நஞ்சை உண்டருளினீர். அசுரரின் முப்புரங்களும் எரிந்து போகச் செய்து, அவற்றுள் இருந்த அடியவரான மூவரை மட்டும் வேகாமல் காப்பாற்றி ஆட்கொண்டீர்! நான்மறை வல்ல மார்க்கண்டேயரைக் காப்பதற்காகக் கூற்றுவனை உதைத்து அந்த மார்க்கண்டேய அந்தணனை அடிமைகொண்டீர் இத்தகைய பெருங்கருணையாளரான உமக்கு நான் இன்று மிகையானால் (வீணே) மீண்டு வாராது என்ன செய்வீர்!
3509. ஆவதே செய்தீர் இன்றென்
அடிமைநீர் வேண்டா விட்டால்
பாவியேன் தன்னை அன்று
வலியஆட் கொண்ட பற்றென்
நோவும்என் னழிவுங் கண்டீர்
நுடங்கிடை யவள்பால் இன்று
மேவுதல் செய்யீ ராகில்
விடுமுயிர் என்று வீழ்ந்தார்.
தெளிவுரை : நீவீர் தக்கதையே செய்தீர்! இன்று என் அடிமையைத் தாங்கள் விரும்பாவிட்டால் அடிமைக்கு மதிக்க வாராத பாவியேனான என்னை, அன்று நான் மறுப்பவும் திருவெண்ணெய் நல்லூரில் வலிய வந்து ஆட்கொண்டது எதற்காக? என் வருத்தத்தையும் மனம் நைதலையும் கண்டுள்ளீர். துவளும் இடையையுடைய பரவையிடத்தின் இன்றே நான் போய்ச் சேரும்படி செய்யாது போனால் என் உயிர் நீங்கும் என்று சொல்லி அவரது அடியில் விழுந்தார்.
3510. தம்பிரான் அதனைக் கண்டு
தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை அருளால் நோக்கி
நாம்இன்னம் அவள்பாற் போய்அக்
கொம்பினை இப்போ தேநீ
குறுகுமா கூறு கின்றோம்
வெம்புறு துயர்நீங் கென்றார்
வினையெலாம் விளைக்க வல்லார்.
தெளிவுரை : வினைப்பயனை எல்லாம் அந்தந்த உயிர்கள் பால் கூட்டுவிக்க வல்ல இறைவர் அதனைப் பார்த்து, அங்ஙனம் பொறுக்க இயலாது தளர்ச்சியால் தம் அடியில் விழுந்த நம்பியாரூரரை அருளால் நோக்கி, நாம் மீண்டும் ஒருமுறை தூது போய் அந்தக் கொம்பைப் போன்ற பெண்ணை நீ இப்போதே சென்று அடையுமாறு சொல்வோம்! உன்னை வருத்தும் துன்பத்தை நீக்குவாயாக! என்று உரைத்தார்.
3511. மயங்கிய நண்பர் உய்ய
வாக்கெனும் மதுர வாய்மை
நயங்கிள ரமுதம் நல்க
நாவலூர் மன்னர் தாமும்
உயங்கிய கலக்கம் நீக்கி
யும்மடித் தொழும்ப னேனைப்
பயங்கெடுத்து இவ்வா றன்றோ
பணிகொள்வ தென்று போற்ற.
தெளிவுரை : தெளியாது மயக்கம் கொண்ட நண்பரான சுந்தரர் உய்யும் பொருட்டுத் தம் திருவாக்கான இனிமையும் உண்மையும் இன்பமும் பொருந்திய அமுதத்தை இவ்வாறு அருள நாவலூர் மன்னரான சுந்தரரும் வருத்தம் உண்டாக்கிய கலக்கத்தை நீக்கி, உம் திருவடித் தொண்டரான என்னை அச்சம் போக்கி இவ்வாறன்றோ தொண்டு கொள்வது? எனத் துதிக்க,
3512. அன்பர்மேற் கருணை கூர
ஆண்டவர் மீண்டுஞ் செல்லப்
பின்புசென்றிறைஞ்சி நம்பி
பேதுற வோடு மீண்டார்
முன்புடன் போதா தாரும்
முறைமையிற் சேவித் தேகப்
பொன்புரி சடையார் மாதர்
புனிதமா ளிகையிற் சென்றார்.
தெளிவுரை : அடியாரிடம் கருணை பெருக இறைவர் இவ்வாறு திரும்பவும் போக, அவர் பின்பு சிறிது தொலைவு சென்று வணங்கி நம்பியாரூரர் மயக்கத்துடன் மீண்டார். முன் உடன் செல்லாதவர்களும் முறைப்படி வணங்கிய வண்ணம் பின்னால் செல்ல, பொன் போல விளங்கும் புரிந்த சடையுடைய இறைவரும் பரவையாரின் தூய திருமாளிகையில் போய்ச் சேர்ந்தார்.
3513. மதிநுதற் பரவை யார்தாம்
மறையவர் போன பின்பு
முதிர்மறை முனியாய் வந்தார்
அருளுடை முதல்வ ராகும்
.அதிசயம் பலவும் தோன்ற
அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன்
எதிர்மொழி எம்பி ரான்முன்
என்செய மறுத்தேன் என்பார்.
தெளிவுரை : பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையுடைய பரவையாரும் மறையவராய் வந்த இறைவர் தம் மனையினின்று நீங்கிச் சென்ற பின்னர், முதிய மறை முனிவர் கோலத்துடன் வந்த அவர் அருளுடைய இறைவரே ஆவார் என்ற நிலை தோற்றும் அதிசயம் பலவும் உண்டாக, உணர்ந்து, அச்சங்கொண்டு கெட்டேன்! எம் பெருமான் திருமுன்பு எதிர் மொழிந்தேன்! என வருந்தி,
3514. கண்துயில் எய்தார் வெய்ய
கையற வெய்தி ஈங்குஇன்று
அண்டர்தம் பிரானார் தோழர்க்
காகஅர்ச் சிப்பார் கோலம்
கொண்டணைந் தவரை யானுட்
கொண்டிலேன் பாவி யேன்என்
றொண்சுடர் வாயி லேபார்த்
துழையரோ டழியும் போதில்.
தெளிவுரை : கண் உறக்கம் கொள்ளாதவராய்க் கொடிய செயலிழந்த வருத்தம் கொண்டு இங்கு இன்று தேவர் தலைவர் தாமே தம் தோழரான நம்பியாரூரருக்காக அருச்சகர் கோலத்தைத் தாங்கி வந்து, அணைந்தவரை நான் இன்னார் என்று தெரியாத பாவியானேன் என்று இரங்கி, ஒள்ளிய விளக்கமுடைய வாயிலை நோக்கியவாறே தோழியருடன் உள்ளம் அழிந்து வருந்தும் போதில்,
3515. வெறியுறு கொன்றை வேணி
விமலருந் தாமாந் தன்மை
அறிவுறு கோலத் தோடும்
மளவில்பல் பூத நாதர்
செறிவுறு தேவர் யோகர்
முனிவர்கள் சூழ்ந்து செல்ல
மறுவில்சீர்ப் பரவை யார்தம்
மாளிகை புகுந்தார் வந்து.
தெளிவுரை : மணம் கமழும் கொன்றை மலரைச் சூடிய சடையை உடைய இறைவரும், இறைவர் என்று பார்த்தவர் அறியுமாறு வெளிக்காணும் கோலத்துடனே அளவில்லாத பல பூதகண நாதர்களும், நெருங்கிய தேவர்களும், யோகர்களும், முனிவர்களும் தம்மைச் சூழ்ந்து செல்ல, குற்றம் இல்லாத சிறப்பைக் கொண்ட பரவையாரின் மாளிகையில் வந்து புகுந்தார்.
3516. பாரிடத் தலைவர் முன்னாம்
பல்கண நாதர் தேவர்
நேர்வுறு முனிவர் சித்தர்
இயக்கர்கள் நிறைத லாலே
பேரரு ளாள ரெய்தப்
பெற்றமா ளிகைதான் தென்பால்
சீர்வளர் கயிலை வெள்ளித்
திருமலை போன்ற தன்றே.
தெளிவுரை : பூதகணத் தலைவர்கள் முதலாகப் பலவகைப்பட்ட கணநாதர்களும், தேவர்களும் நேர்மையுடைய முனிவர்களும் சித்தர்களும் இயக்கர்களும் நிறைந்ததால் பெருங்கணத்தை உடைய சிவபெருமான் எழுந்தருளி வரும் பேறு பெற்ற அந்த மாளிகை தென்திசையில் சிறப்புமிக்க கயிலை மலையைத் தன்னிடம் கொண்ட வெள்ளித் திருமலை போல் அப்போது விளங்கியது.
3517. ஐயர்அங் கணைந்த போதில்
அகிலலோ கத்துள் ளாரும்
எய்தியே செறிந்து சூழ
எதிர்கொண்ட பரவை யார்தாம்
மெய்யுறு நடுக்கத் தோடு
மிக்கெழும் மகிழ்ச்சி பொங்கச்
செய்யதா ளிணைமுன் சேர
விரைவினாற் சென்று வீழ்ந்தார்.
தெளிவுரை : எல்லாவுலகத்தில் உள்ளவரும் கூடநெருங்கிச் சூழ்ந்திட இறைவர் எழுந்தருளிய போது அவரை எதிர்கொண்டு வரவேற்ற பரவையார், தாம் உடம்பில் எய்தி நடுக்கத்துடனே மிக்கு மேல் எழும் மகிழ்ச்சி மேல் மேல் பொங்க, அவரது செம்மையான திருவடியின் முன்பு பொருந்த விரைந்து சென்று விழுந்தார்.
3518. அரிஅயற் கரியார் தாமும்
ஆயிழை யாரை நோக்கி
உரிமையால் ஊரன் ஏவ
மீளவும் உன்பால் வந்தோம்
முருகலர் குழலாய் இன்னம்
முன்புபோல் மறாதே நின்பால்
பிரிவுற வருந்து கின்றான்
வரப்பெற வேண்டும் என்றார்.
தெளிவுரை : திருமாலுக்கும் நான்முகனுக்கும் அறிவதற்கு அரிய இறைவரும் பரவையாரை நோக்கி, தோழன் என்ற உரிமையால் நம்பி ஆரூரன் அனுப்ப யாம் வந்தோம். மணமுடைய கூந்தலை உடைய பெண்ணே! முன் போல் மறுத்து விடாதபடி உன்னைப் பிரிந்தமையால் வருந்தும் நம்பி உன்னிடம் வரப்பெறல் வேண்டும்! என்று அருள் செய்தார்.
3519. பெருந்தடங் கண்ணி னாரும்
பிரான்முன்பு மிகவும் அஞ்சி
வருந்திய வுள்ளத் தோடு
மலர்க்கரங் குழல்மேற் கொண்டே
அருந்திரு மறையோ ராகி
அணைந்தீர்முன் னடியேன் செய்த
இருந்தவப் பயனாம் என்ன
எய்திய நீரோ என்பார்.
தெளிவுரை : பெரிய அகன்ற கண்ணையுடைய பரவையாரும் சிவபெருமான் முன்பு மிகவும் அச்சம் கொண்டு வருந்திய உள்ளத்துடனே மலர் போன்ற கைகளைக் கூந்தல் மேல் கூப்பிக் கொண்டே, முன் நான் செய்த தவத்தின் பயன் போல் இப்போது எழந்தருளிய தாங்களோ, முன் அரிய மறை முனிவரான அருச்சகர் கோலத்துடன் வந்தீர்? எனக் கூறுபவராய்,
3520. துளிவளர் கண்ணீர் வாரத்
தொழுதுவிண் ணப்பஞ் செய்வார்
ஒளிவளர் செய்ய பாதம்
வருந்தஓர் இரவு மாறா
தளிவரும் அன்பர்க் காக
அங்கொடிங் குழல்வீ ராகி
எளிவரு வீரு மானால்
என்செய்கேன் இசையா தென்றார்.
தெளிவுரை : துளிகளைத் துளித்துப் பெருகும் கண்ணீர் வழியத் தொழுது வேண்டுபவராகி, ஒளி வளர்வதற்கு இடமான செம்மை தரும் திருவடிகள் நோவ, ஓர் இரவு முழுதும் மாறாமல் நிலைபெற்ற அன்பையுடைய அடியார் பொருட்டு, அங்கும் இங்குமாக அலைபவராகி, எளிதாக எழுந்தருளுவீரானால், சம்மதிக்காமல் வேறு என்ன செய்வேன்? என்று கூறினார்.
3521. நங்கைநின் தன்மைக் கேற்கும்
நன்மையே மொழிந்தா யென்று
மங்கையோர் பாகம் வைத்த
வள்ளலார் விரைந்து போகத்
திங்கள் வாணுதலி னாருஞ்
சென்றுபின் னிறைஞ்சி மீண்டார்
எங்களை யாளும் நம்பி
தூதர்மீண் டேகு கின்றார்.
தெளிவுரை : பெண்ணே உன் உயர்ந்த குணத்துக்கு ஏற்றவாறே சொன்னாய்! என்று தையலை ஒரு பாகத்தில் கொண்ட வள்ளலாரான சிவபெருமான் விரைந்து செல்ல, பிறைச்சந்திரன் போன்ற நெற்றியையுடைய பரவையாரும் இறைவரின் பின் சென்று வணங்கி மீண்டார். எங்களை ஆட்கொள்ளும் நம்பியாரூரரின் தூதரான இறைவர் மீண்டு சுந்தரர் பால் சென்றார்.
3522. ஆதியும் மேலும் மால்அயன் நாடற் கருளாதார்
தூதினில் ஏகித் தொண்டரை யாளுந் தொழில்கண்டே
வீதியில் ஆடிப் பாடி மகிழ்ந்தே மிடைகின்றார்
பூதியில் நீடும் பல்கண நாதர் புகழ்வீரர்.
தெளிவுரை : அடியையும் முடியையும் முறையே திருமாலும் நான்முகனும் தேடிக் காண்பதற்கு அருள் செய்யாத இறைவர், தாமே தூதாய்ச் சென்று, தொண்டரை ஆட்கொள்ளும் அந்த அருட்செயலைப் பார்த்து, அனுபூதியில் சிறந்து விளங்கும் பலவகைப்பட்ட சிவபூதகண நாதர்களும் புகழுடைய வீரர்களும், அந்த வீதியில் ஆடியும் பாடியும் மகிழ்ச்சியுடன் நெருங்குகின்றவராய்,
3523. அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவெய்த
மின்னிடை யார்பால் அன்பரை உய்க்கும் விரைவோடும்
சென்னியில் நீடுங் கங்கை ததும்பத் திருவாரூர்
மன்னவ னார்அம் மறையவ னார்பால் வந்துற்றார்.
தெளிவுரை : அத்தகையவர் தம் முன்பும் பின்பும் பக்கங்களிலும் முறைப்படி சார்ந்துவர, திருவாரூரை ஆள்கின்ற தியாகராசர், மின்னலை ஒத்த இடையையுடைய பரவையாரிடத்துத் தம் அன்பரான நம்பியாரூரரைச் சேரும் விரைவுடனும் தம் தலையிலே நீடிய கங்கையாறு அலைந்து மோத, மறையவரான நம்பியாரூரரிடம் சேர்ந்தார்.
3524. அன்பரும் என்பால் ஆவி யளிக்கும் படிபோனார்
என்செய்து மீள்வார் இன்னமும் என்றே யிடர்கூரப்
பொன்புரி முந்நூல் மார்பினர் செல்லப் பொலிவீதி
முன்புற நேருங் கண்ணிணை தானும் முகிழாரால்.
தெளிவுரை : அன்பரான நம்பியாரூரரும் என்னிடம் உயிரை அளிக்கும்படி ஏற்றுச் சென்றவரான இறைவர் இனியும் என்ன செய்து திரும்புவாரோ? என்ற வருத்தம் மிகப் பொன் போன்ற பூணூல் அணிந்த மார்பையுடைய இறைவர் செல்லப் பொலிவு பெற்ற வீதியை எதிர்நோக்கும் தம் கண்களை இமைக்காமல் இருந்தனர்.
3525. அந்நிலை மைக்கண் மன்மதன் வாளிக் கழிவார்தம்
மன்னுயிர் நல்குந் தம்பெரு மானார் வந்தெய்த
முன்னெதிர் சென்றே மூவுல குஞ்சென் றடையுந்தாள்
சென்னியில் வைத்தென் சொல்லுவ ரென்றே தெளியாதார்.
தெளிவுரை : சுந்தரர் அந்நிலையில் நின்ற சமயத்தில் காமனின் அம்புகள் விழ, வருந்தும் நம்பியாரூரரின் நிலை பெற்ற உயிரைத் தந்தருளும் தம் பெருமான் வந்து சேர, அவர் திருமுன்பு எதிர்கொண்டு போய், மூவுலகங்களும் போயடையும் அவரது திருவடிகளைத் தலையில் வைத்துப் பணிந்து என்ன கூறுவார் என்றே தெரியாதவராய்,
3526. எம்பெரு மானீர் என்னுயிர் காவா திடர்செய்யும்
கொம்பனை யாள்பால் என்கொடு வந்தீர் குறையென்னத்
தம்பெரு மானும் தாழ்குழல் செற்றந் தணிவித்தோம்
நம்பி யினிப்போய் மற்றவள் தன்பால் நணுகென்ன.
தெளிவுரை : எம்பெருமானே! என் உயிரைக் காவல் செய்யாது துன்பம் செய்யும் கொம்பைப் போன்ற பரவையாரிடத்தினின்றும் யாது குறை கொண்டு வந்தீர்? என்று (வினவினார்) வினவ, தம் பெருமானான சிவபெருமானும், தாழ்ந்த கூந்தலையுடைய பரவையினது புலவியால் வந்த சினத்தைத் தணியச் செய்தோம். நம்பியே இனிச் சென்று அவளை அடைவாயாக! என்று அருள,
3527. நந்தி பிரானார் வந்தருள் செய்ய நலமெய்தும்
சிந்தையு ளார்வங் கூர்களி யெய்தித் திகழ்கின்றார்
பந்தமும் வீடும் தீரருள் செய்யும் படிசெய்தீர்
எந்தைபி ரானே என்னினி யென்பால் இடரென்றார்.
தெளிவுரை : நந்தி என்ற பெயரையுடைய எம் இறைவர் வந்து இங்ஙனம் அருள் செய்ய, நன்மை பொருந்திய உள்ளத்தில் ஆசை மிகுதலால் உண்டான மகிழ்ச்சியுடையவராகிப் பந்தத்தையும் வீடுபேற்றையும் நீவீரே உயிர்களுக்கு அருளும் நிலைக்கேற்றவாறு அருள் செய்தீர்! எம் இறைவரே! இனி எனக்கு என்ன துன்பம் உள்ளது? என்று கூறிப் போற்றினார்.
3528. என்றடி வீழும் நண்பர்தம் அன்புக் கெளிவந்தார்
சென்றணை நீஅச் சேயிழை பாலென் றருள்செய்து
வென்றுயர் சேமேல் வீதி விடங்கப் பெருமாள் தம்
பொன்றிகழ் வாயிற் கோயில் புகுந்தார் புவிவாழ.
தெளிவுரை : என்று இவ்வாறு அவர் சொல்லித் தம் திருவடியில் விழும் நண்பரான நம்பியாரூரரின் அன்புக்கு எளியவராய் வந்த இறைவர், நீ அந்தப் பரவையிடம் போய்ச் சேர்க என்று அருளிச் செய்து, வீதி விடங்கப் பெருமானான தியாகேசர், வெற்றியுடைய மேன்மையுடைய காளைமீது, எழுந்தருளிப் பொன் விளங்கும் திருவாயிலையுடைய தம் திருப்பூங் கோயிலுக்குள் உலகம் வாழும்படி உள்ளே புகுந்தார்.
3529. தம்பிரா னார்பின் சென்று தாழ்ந்தெழுந் தருளால் மீள்வார்
எம்பிரான் வல்ல வாறென் எய்திய மகிழ்ச்சி யோடும்
வம்பலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி
நம்பியா ரூரர் காதல் நயந்தெழுந் தருளும் போது.
தெளிவுரை : தம் இறைவரின் பின் சிறிது தொலைவு சென்று, வழிவிட்டு வணங்கி எழுந்து அருள் விடைபெற்று, மீண்டு, எம்பெருமானின் எல்லாம் வல்ல இயல்புதான் என்னே! என்று பொருந்திய மகிழ்ச்சியுடன், மணம் கமழும் கூந்தலையுடைய பரவையாரின் செம்பொன்னால் விளங்கும் மாளிகையினது வாயிலை நோக்கி நம்பியாரூரர் காதலால் விரும்பிச் சென்ற போது,
3530. முன்துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப
மின்திகழ் பொலம்பூ மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த
மன்றல்செய் மதுர சீத சீகரங் கொண்டு மந்தத்
தென்றலும் எதிர்கொண் டெய்துஞ் சேவகம் முன்பு காட்ட.
தெளிவுரை : முன்பே உறக்கத்தினின்று நீங்கி விழித்து எழுந்து, சூழ்ந்த பரிவாரங்கள் பக்கத்தில் நெருங்கிச் சூழ, ஒளியுடைய அழகான தெய்வமலர் மழையைத் தேவர்கள் பொழிந்து வாழ்த்த, மணம் வீசும் இனிய குளிர்ந்த நீர்த் திவலைகளுடன் கூடிய மேன்மையான தென்றலும் எதிர்கொண்டு செல்லும் பணியை முன்னே செய்துவர,
3531. மாலைதண் கலவைச் சேறு  மான்மதச் சாந்து பொங்கும்
கோலநற் பசுங்கர்ப் பூரம் குங்குமம் முதலா யுள்ள
சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும்பூ ணாடை வர்க்கம்
பாலனம் பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல.
தெளிவுரை : மாலையும் குளிர்ந்த கலவைச் சாந்தும் கத்தூரி கலந்த சந்தனமும் மிக அழகிய பச்சைக் கற்பூரமும் குங்குமமும் முதலாக உள்ள திருமேனியில் பொருந்தும் அணிகளும், ஒருங்கே அணியும் பூணாடை வகைகளும் தகுதியுடைய பிறவும் ஆகிய இவற்றைத் தாங்கும் பரிவாரங்கள் முன்னால் செல்ல,
3532. இவ்வகை இவர்வந் தெய்த எய்திய விருப்பி னோடும்
மைவளர் நெடுங்கண் ணாரும் மாளிகை அடைய மன்னும்
செய்வினை அலங்கா ரத்துச் சிறப்பணி பலவுஞ் செய்து
நெய்வளர் விளக்குத் தூபம் நிறைகுடம் நிரைத்துப் பின்னும்.
தெளிவுரை : இங்ஙனம் சுந்தரர் வந்து சேர, பொருந்திய விருப்பத்தோடு மை பூசிய நீண்ட கண்ணையுடைய பரவையாரும், மாளிகை முற்றும் நிலையான செய்தொழிலால் மிகும் அலங்காரத்துக்குரிய சிறப்புடைய அணிகள் பலவற்றைச் செய்து, நெய் நிறைந்த விளக்குகளையும் தூபங்களையும் நீர் நிறைந்த குடங்களையும் வரிசையாய் அமைத்து அதன் பின்னும்,
3533. பூமலி நறும்பொன் தாமம் புனைமணிக் கோவை நாற்றிக்
காமர்பொற் சுண்ணம் வீசிக் கமழ்நறுஞ் சாந்து நீவித்
தூமலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்தத் தாமும்
மாமணி வாயில் முன்பு வந்தெதி ரேற்று நின்றார்.
தெளிவுரை : மலர்கள் பொழிந்த மணமுடைய அழகான மாலைகளையும் மணிகள் இழைத்த மாலைகளையும் தொங்கவிட்டு, விருப்பம் தரும் பொன் சுண்ணத்தை வீசி மணம் கமழும் சந்தனத்தால் மெழுகிச் சுற்றிலுமுள்ள தம் தோழியர் வாழ்த்துக்களைச் சொல்லத் தூய மலர்கள் நிறைந்த வீதியில், பெருமணிகள் பதித்த வாயிலின் முன் வந்து, பரவையார் தாமும் சுந்தரரை வரவேற்று நின்றார்.
3534. வண்டுலாங் குழலார் முன்பு வன்தொண்டர் வந்து கூடக்
கண்டபோ துள்ளங் காதல் வெள்ளத்தின் கரைகா ணாது
கொண்டநாண் அச்சங் கூர வணங்கஅக் குரிசி லாரும்
தண்டளிர்ச் செங்கை பற்றிக் கொண்டுமா ளிகையுள் சார்ந்தார்.
தெளிவுரை : வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய பரவையார் முன்பு வன்தொண்டரான சுந்தரர் வந்து சேரக் கண்டபொழுது உள்ளத்தில் எழுந்த காதல் பெருக்கத்தின் எல்லை காணமாட்டாதவராய் நாணமும் அச்சமும் மிகுதியாய்ப் பெருக, அவரை வணங்கினார். அந்தப் பெருமையுடைய சுந்தரரும் அவரது குளிர்ந்த தளிரைப் போன்ற செவ்விய கைகளைப் பற்றிக் கொண்டு மாளிகைக்குள் புகுந்தார்.
3535. இருவருந் தம்பி ரானார் தாமிடை யாடிச் செய்த
திருவருட் கருணை வெள்ளத் திறத்தினைப் போற்றிச் சிந்தை
மருவிய வின்ப வெள்ளத் தழுந்திய புணர்ச்சி வாய்ப்ப
ஒருவரு ளொருவர் மேவு நிலைமையி லுயிரொன் றானார்.
தெளிவுரை : சுந்தரரும் பரவையாரும் ஆகிய இருவரும் தம் இறைவர், தம் இருவரிடையே வந்து தம்மிடம் செய்த திருவருட்கருணைப் பெருக்கின் திறத்தைத் துதித்து உள்ளத்துள் பொருந்திய இன்பப் பெருக்கினுள்ளே அழுந்தி ஒன்றிய நிலை சார்தலால் ஒருவருக்குள் ஒருவர் பொருந்தும் நிலைமையில் இருவரும் கூடி உயிர் ஒன்றாய் ஆயினர்.
3536. ஆரணக் கமலக் கோயின் மேவிப்புற் றிடங்கொண் டாண்ட
நீரணி வேணி யாரை நிரந்தரம் பணிந்து போற்றிப்
பாரணி விளக்குஞ் செஞ்சொற் பதிகமா லைகளுஞ் சாத்தித்
தாரணி மணிப்பூண் மார்பர் தாமகிழ்ந் திருந்த நாளில்.
தெளிவுரை : வேத மூலம் வெளிப்படும் பூங்கோயிலில் பொருந்திப் புற்றை இடமாகக் கொண்டு ஆளும், கங்கையையுடைய சடையாரை இடைவிடாமல் வணங்கித் துதித்து, உலகத்தை அழகு விளங்கச் செய்யும் திருப்பதிகங்களான மாலைகளையும் சாத்தித் தாமரை மலர் மாலையைப் பூண்ட மணியாரம் அணிந்த மார்பையுடைய சுந்தரர் தாம் மகிழ்வுடனே வீற்றிருந்தார். அந்நாள்களில்,
3537. நம்பியா ரூரர் நெஞ்சில் நடுக்கம்ஒன் றின்றி நின்று
தம்பிரா னாரைத் தூது தையல்பால் விட்டார் என்னும்
இம்பரின் மிக்க வார்த்தை ஏயர்கோ னார்தாங் கேட்டு
வெம்பினார் அதிச யித்தார் வெருவினார் விளம்ப லுற்றார்.
தெளிவுரை : ஆரூரரான நம்பி சிறிதும் மனம் நடுங்காமல் அச்சமின்றி நின்று தம் இறைவரை ஒரு பெண்ணிடம் தூதாக அனுப்பினார் என்ற இவ்வுலகில் பரந்த பழிச்சொல்லை, ஏயர்கோன் கலிக்காமர் கேள்வியுற்று உள்ளம் புழுங்கினார்; வியந்தார்; அஞ்சினார்; சொல்லலானார்.
3538. நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று சாலம்
ஏயுமென் றிதனைச் செய்வான் தொண்டனாம் என்னே பாவம்
பேயனேன் பொறுக்க வொண்ணாப் பிழையினைச் செவியால் கேட்ப
தாயின பின்னும் மாயா திருந்ததென் னாவி யென்பார்.
தெளிவுரை : இறைவரை அவருடைய அடியார் ஏவும் காரியம் மிகவும் நன்று! மிகவும் பொருத்தமானது என்று இச்செயலைத் துணிந்து செய்பவனும் ஒரு தொண்டன் எனப்படுவானாம்! இது என்ன பாவம்! நான் பேயேனாதலால் பொறுக்க ஒண்ணாததான இப்பிழையைச் செவியால் கேட்ட பின்பும் என் உயிர் நீங்காதிருந்தது! என்பாராய்.
3539. காரிகை தன்பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவப்
பாரிடை நடந்து செய்ய பாததா மரைகள் நோவத்
தேரணி வீதியூடு செல்வது வருவ தாகி
ஓரிர வெல்லாம் தூதுக் குழல்வராம் ஒருவ ரென்று.
தெளிவுரை : ஒரு பெண்ணிடத்துச் சேரும் காதலால் ஒருவன் அனுப்ப, அதற்கு உட்பட்டு நிலத்தின் மேல் நடந்து செம்மையான திருவடித் தாமரைகள் நோவும்படி தேர் ஓடும் திருவீதியின் வழியே போவதும் வருவதுமாகி ஓர் இரவு முழுவதும் ஒப்பில்லாத இறைவர் தூதராய் உழல்வாராம்! என்று கூறி,
3540. நம்பர்தாம் அடியார் ஆற்றாராகியே நண்ணி னாரேல்
உம்பரார் கோனும் மாலும்அயனுநேர் உணர வொண்ணா
எம்பிரா னிசைந்தார் ஏவப் பெறுவதே இதனுக் குள்ளம்
கம்பியா தவளை யான்முன் காணுநாள் எந்நா ளென்று.
தெளிவுரை : இறைவர்தாம் அடியாரின் துன்பத்தைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாது வந்தாராகில், தேவர் தலைவனான இந்திரனும் திருமாலும் நான்முகனும் நேர் உணரவும் இயலாதவரான எம் இறைவர் அவ்வாறு இசைந்து வந்தாலும், ஏவுதல் செய்யலாமோ? இப்பாவச் செயலுக்கு மனம் நடுங்காதவனை என் முன்பு காணும் நாள் எந்நாளோ? எனக்கூறி,
3541. அரிவைகா ரணத்தி னாலே ஆளுடைப் பரமர் தம்மை
இரவினில் தூது போக ஏவியங் கிருந்தான் தன்னை
வரவெதிர் காண்பே னாகில் வருவதென் னாங்கொல் என்று
விரவிய செற்றம் பற்றி விள்ளும்உள் ளத்த ராகி.
தெளிவுரை : பெண்ணின் பொருட்டுத் தம்மை ஆளுடைய சிவபெருமானை இரவிலே தூது போகும்படி அனுப்பி, அங்கே இருந்தவனை, என் எதிரே வரக் காண்பேனானால் என்ன விளைந்து விடுமோ? என்று மூண்ட சினத்தினால் வெடிப்பது போன்று விம்முகின்ற மனத்தை உடையவராகி,
3542. ஈறிலாப் புகழின் ஓங்கும் ஏயர்கோ னார்தாம் எண்ணப்
பேறிது பெற்றார் கேட்டுப் பிழையுடன் படுவா ராகி
வேறினி யிதற்குத் தீர்வு வேண்டுவார் விரிபூங் கொன்றை
ஆறிடு சடைய னாருக் கதனைவிண் ணப்பஞ் செய்து.
தெளிவுரை : அளவில்லாத புகழுடனே ஓங்கும் ஏயர்கோன் கலிக்காமர் இவ்வாறு எண்ணப்படுவதான இப்பேற்றைத் தமக்கு உரிமையாய்ப் பெற்ற நம்பியாரூரர், இதனைக் கேட்டவராய் இனி இதற்கு வேறாகத் தீர்வு தன்னை வேண்டுவாராய் விரிந்த அழகிய கொன்றையையும் கங்கையையும் அணிந்த சடையையுடைய சிவபெருமானிடம் அதனை விண்ணப்பம் செய்து,
3543. நாள்தொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கி
நீடிய தொண்டர் தம்முள் இருவரும் மேவும் நீர்மை
கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார் தம்பால் மேனி
வாடுறு சூலை தன்னை அருளினார் வருந்து மாற்றால்.
தெளிவுரை : நாள்தோறும் வணங்கித் துதிக்க இறைவரும் அதைத் திருவுளம் கொண்டு அன்பால் நீடிய தொண்டர்கள் இருவருள் தம்முள் நட்புக் கொண்டு பொருந்தும் நீர்மையில் கூடும்படி அருள் செய்பபவராய், ஏயர்கோனிடம் அவர் மேனி வாடும்படி வருந்தச் செய்கின்ற வழியால் சூலை நோயை அருள் செய்தார்.
3544. ஏதமில் பெருமைச் செய்கை ஏயர்தம் பெருமான் பக்கல்
ஆதியார் ஏவும் சூலை அனல்செய்வேல் குடைவ தென்ன
வேதனை மேன்மேற் செய்ய மிகஅதற் குடைந்து வீழ்ந்து
பூதநா யகர்தம் பொற்றாள் பற்றியே போற்று கின்றார்.
தெளிவுரை : குற்றம் இல்லாத பெருமை கொண்ட செயலையுடைய ஏயர்கோனிடம் இறைவர் அருளிய சூலைநோய் தீயில் காய்ச்சிய வேல் குடைவதைப் போல் மேன்மேலும் துன்பத்தைச் செய்ய, அதற்கு மிகவும் வருந்தி, சிவபெருமானின் பொன்னடிகளைப் பற்றிக் கொண்டு துதித்து,
3545. சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்தடி போற்றி செய்ய
எந்தமை யாளும் ஏயர் காவலர் தம்பால் ஈசர்
வந்துனை வருத்துஞ் சூலை வன்தொண்டன் தீர்க்கி லன்றி
முந்துற வொழியா தென்று மொழிந்தருள் செய்யக் கேட்டு.
தெளிவுரை : அன்புடைய ஏயர்கோன் உள்ளத்தாலும் வாக்கினாலும் இறைவரின் சீர்செய்யும் திருவடிகளைப் போற்ற, எம் தலைவரான ஏயர்கோன் பக்கம் இறைவர் தோன்றியருளி உன்னிடம் வந்து உன்னை வருத்தும் சூலைநோய் வன்தொண்டன் தீர்த்தாலன்றி வேறு வழியால் தீராது! என்று மொழிந்து அருள் செய்ய, அதை ஏயர்கோன் கேட்டு,
3546. எம்பிரான் எந்தை தந்தை தந்தைஎங் கூட்ட மெல்லாம்
தம்பிரான் நீரே யென்று வழிவழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை யென்னைநின் றீருஞ் சூலை
வம்பென ஆண்டு கொண்டான் ஒருவனோ தீர்ப்பான் வந்து.
தெளிவுரை : எம்பெருமானே! என் தந்தையும் அவர் தந்தையும் மேலும் அவர் தந்தையும் எம்கூட்டம் முழுவதும் எங்களைக் காக்கும் பெருமான் தாங்களே! என்று வழிவழியாய்த் தங்களின் திருவடிச் சார்பு பற்றியே வாழ்ந்து வருகின்றோம். இத்தகைய இவ்வுலகில் பெருகிய வாழ்வையுடைய இத்தன்மையுடைய என்னைப் பெருகி நின்று வருத்தும் சூலையைப் புதிதாகத் தங்களால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவனோ வந்து தீர்ப்பவன்!
3547. மற்றவன் தீர்க்கில் தீரா தொழிந்தெனை வருத்தல் நன்றால்
பெற்றம்மே லுயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே
உற்றவன் தொண்டற் கேயாம் உறுதியே செய்தீர் என்னக்
கற்றைவார் சடையார் தாமும் அவர்முன்பு கரந்தா ரன்றே.
தெளிவுரை : அந்த வன்தொண்டன் வந்து தீர்ப்பதை விட, அந்நோய் தீராது என்னை வருத்துவதே நல்லதாகும். காளைக்கொடியை உயர்த்திய பெருமானே! தாங்கள் செய்யும் அருளிப்பாடுகளின் பெருமையை எவரே அறியவல்லார்? புதிதாய்ப் பொருந்திய வன்தொண்டனுக்கே ஆகின்ற உறுதியைச் செய்தீர்! என்று சொல்லி வருந்தக் கற்றையான நீண்ட சடையுடைய இறைவரும் அவர் முன்பு நின்றும் அப்போதே மறைந்தார்.
3548. வன்தொண்டர் தம்பால் சென்று வள்ளலா ரருளிச் செய்வார்
இன்றுநம் ஏவ லாலே ஏயர்கோ னுற்ற சூலை
சென்றுநீ தீர்ப்பா யாகென் றருள்செயச் சிந்தை யோடு
நன்றுமெய்ம் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவ லூரர்.
தெளிவுரை : வன்தொண்டரிடத்து வள்ளலான சிவபெருமான் அருள் செய்பவராய், இன்று நம் கருணையினால் ஏயர்கோனிடம் பொருந்திய சூலை நோயை, நீ சென்று தீர்ப்பாயாக! என்று அருள் செய்தார். உள்ளத்துடன் உடலும் நன்கு மகிழ்ந்து நாவலூர் மன்னர் சுந்தரர், இறைவரைத் துதித்தார்.
3549. அண்ணலார் அருளிச் செய்து நீங்கஆரூரர் தாமும்
விண்ணவர் தம்பி ரானார் ஏவலால் விரைந்து செல்வார்
கண்ணிய மனத்தின் மேவுங் காதலாற் கலிக்கா மர்க்குத்
திண்ணிய சூலை தீர்க்க வருந்திறஞ் செப்பி விட்டார்.
தெளிவுரை : இறைவர் இங்ஙனம் அருளி நீங்கிய பின்பு, மறைந்தருள, நம்பியாரூரர் தேவ தேவரான இறைவரின் அருளாணையினால் விரைந்து செல்ல எண்ணி, ஏயர்கோன் நட்பினை மனத்தினுள் எழுந்த பெரு விருப்பத்தினால், அக்கலிக்காமர்க்கு வந்த வலிய சூலை நோயைத் தீர்க்கும்பொருட்டுத் தாம் வரும் நிலையைக் கூறிவரத் தூதரை அனுப்பினார்.
3550. நாதர்தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்பாற் கேட்ட
கேதமும் வருத்த மீண்டும் வன்தொண்டர் வரவு கேட்டுத்
தூதனாய் எம்பி ரானை ஏவினான் சூலை தீர்க்கும்
ஏதமிங் கெய்த வெய்தில் யான்செய்வது என்னாம் என்பார்.
தெளிவுரை : சிவபெருமானின் திருவருளால் வந்து பொருந்திய சூலை நோயும், அதன்மேல் அந்த இறைவர் உரைக்கக் கேட்ட துன்ப மொழியும் தம்மை மிகவும் வருத்த, அதன் மேலும் வன்தொண்டரின் வரவையும் கேட்டுத் தூதரான எம் இறைவரை ஏவியவனான நம்பியாரூரர் இங்கு வந்து என் சூலை நோயைத் தீர்க்கும்படியான பெருங்கேடும் வரின், நான் செய்வது என் ஆகுமோ? என்பவராய்,
3551. மற்றவன் இங்கு வந்து தீர்ப்பதன் முன்நான் மாயப்
பற்றிநின் றென்னை நீங்காப் பாதகச் சூலை தன்னை
உற்றஇவ் வயிற்றி னோடும் கிழிப்பன்என் றுடைவாள் தன்னால்
செற்றிட வுயிரி னோடும் சூலையுந் தீர்ந்த தன்றே.
தெளிவுரை : அவன் வந்து இங்கு என் நோயைத் தீர்ப்பதற்கு முன்பே, நான் இறக்கும் அளவு வேதனை தரும் என்னைப் பற்றி நின்ற நீங்காத இந்தப் பாதகமான சூலை நோயை அது பொருந்தித் தங்குவதற்கு இடமான வயிற்றோடும் கிழித்து அழித்து விடுவேன்! எனத் துணிந்து உடைவாளால் வயிற்றைக் கிழித்திட, அப்போதே உயிருடன் சூலை நோயும் தீர்ந்தது.
3552. கருதரும் பெருமை நீர்மைக் கலிக்காமர் தேவி யாரும்
பொருவருங் கணவ ரோடு போவது புரியுங் காலை
மருவிஇங் கணைந்தார் நம்பி என்றுமுன் வந்தார் கூற
ஒருவரும் அழுதல் செய்யா தொழிகவென் றுரைத்துப் பின்னும்.
தெளிவுரை : நினைத்தற்கு அரிய பெருமையும் அன்பும் கொண்ட கலிக்காமரின் மனைவியும் தம் ஒப்பில்லாத கணவருடனே உயிர் நீங்கி உடன் தாமும் போவதை விரும்பி அதற்குரிய நிலையை அமைக்கும் போது, நம்பியாரூரர் இங்கு வந்துள்ளார் என (அவர்க்கு) முன் வந்தவர் சொல்ல அதைக் கேட்டு, ஒருவரும் அழ வேண்டா! என்று உடன் இருந்தவர்க்கெல்லாம் சொல்லி,
3553. கணவர்தஞ் செய்கை தன்னைக் கரந்துகா வலரை நம்பி
அணைவுறும் பொழுது சால அலங்கரித் தெதிர்போம் என்னப்
புணர்நிலை வாயில் தீபம் பூரண கும்பம் வைத்துத்
துணர்மலர் மாலை தூக்கித் தொழுதெதிர் கொள்ளச் சென்றார்.
தெளிவுரை : தம் கணவரின் செயலை மறைத்துக் காவலர்களைப் பார்த்து நம்பியாரூரர் இங்கு வரும்போது இந்த இல்லத்தை மிக நன்றாக அலங்காரம் செய்து எதிர் சென்று வரவேற்று அழைத்து வாருங்கள்! என்று ஏவிட, அதைக் கேட்டவர் நிலையுடைய வாயிலில் விளக்கு, நிறைகுடம் என்பனவற்றை வைத்துக் கொத்துகளையுடைய மலர்மாலையைத் தொங்கவிட்டு, வணங்கி எதிர்கொள்ளச் சென்றனர்.
3554. செம்மைசேர் சிந்தை மாந்தர் சென்றெதிர் கொண்டு போற்ற
நம்மையா ளுடைய நம்பி நகைமுகம் அவர்க்கு நல்கி
மெய்ம்மையாம் விருப்பி னோடும் மேவியுட் புகுந்து மிக்க
மொய்ம்மலர்த் தவிசின் மீது முகம்மலர்ந் திருந்த போது.
தெளிவுரை : செம்மை உடைய உள்ளம் கொண்ட மக்கள் சென்று எதிர்கொண்டு வரவேற்றுத் துதித்து வணங்க, நம்மை ஆள்பவரான நம்பியாரூரர் அவர்க்கு இன்முகம் அளித்து, உண்மையான விருப்பத்துடன் பொருந்தி, உள்ளே புகுந்து, மிக்க மலர்களைத் தூவிய இருக்கையில் முகமலர்ச்சியுடன் அமர்ந்திருந்தபோது,
3555. பான்மைஅர்ச் சனைக ளெல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்த
நான்மறை தொடர்ந்த வாய்மை நம்பியா ரூரர் கொண்டிங்
கியான்மிக வருந்து கின்றேன் ஏயர்கோ னார்தாம் உற்ற
ஊனவெஞ் சூலை நீக்கி யுடனிருப் பதனுக் கென்றார்.
தெளிவுரை : விதிப்படி அமைந்த வழிபாட்டையெல்லாம் ஏற்றுக் கொண்ட, பொருந்திய நான்கு வேதங்களையும் தொடர்ந்த வாய்மையையுடைய நம்பியாரூரர், மிக்க துன்பம் செய்யும் கொடிய சூலை நோயை நீக்கி அவருடனே மகிழ்ந்து இனி இருத்தல் நிகழாததற்கு நான் மிகவும் வருந்துகின்றேன்! எனக் கூறினார்.
3556. மாதர்தம் ஏவ லாலே மனைத்தொழில் மாக்கள் மற்றிங்
கேதமொன் றில்லை யுள்ளே பள்ளிகொள் கின்றார் என்னத்
தீதணை வில்லை யேனும் என்மனந் தெருளா தின்னம்
ஆதலால் அவரைக் காண வேண்டுமென் றருளிச் செய்தார்.
தெளிவுரை : அம்மையாரின் ஏவலின்படி இல்லத்தல் தொழில் செய்யும் மக்கள் இங்கு கெடுதி ஒன்றும் இல்லை. அவர் (கலிக்காமர்) உறங்குகின்றார் என்று நம்பியாரூரரிடம் உரைத்தனர். நம்பியாரூரர் அதைக் கேட்டு தீமையின் சார்வு இல்லை என்றாலும், என் மனம் இன்னும் தெளிவு கொள்ளவில்லை. ஆதலால் நான் அவரைக் காண வேண்டும்! என்று கூறினார்.
3557. வன்தொண்டர் பின்னுங் கூற மற்றவர் தம்மைக் காட்டத்
துன்றிய குருதி சோரத் தொடர்குடர் சொரிந்துள் ளாவி
பொன்றியே கிடந்தார் தம்மைக் கண்டபின் புகுந்த வாறு
நன்றென மொழிந்து நானும் நண்ணுவேன் இவர்முன் பென்பார்.
தெளிவுரை : என்ற வன்தொண்டர் கூற, அவர்கள் நம்பியாரூரரை அழைத்துச் சென்று கலிக்காமரைக் காட்டினர். காட்ட, நிரம்பிய இரத்தம் வெளிப்பட்டுத் தொடர்ச்சியுள்ள குடர்வெளிப் போந்து உயிர் நீங்கியே கிடந்த அவரைப் பார்த்தார். பார்த்தவுடனே, நிகழ்ந்தவாறு நன்று! என்று சொல்லி, நானும் இவர் முன்னே இவ்வாறே சாவேன் என்று கூறுவாராய்,
3558. கோளுறு மனத்த ராகிக் குற்றுடை வாளைப் பற்ற
ஆளுடைத் தம்பி ரானார் அருளினால் அவரும் உய்ந்து
கேளிரே யாகிக் கெட்டேன் எனவிரைந் தெழுந்து கையில்
வாளினைப் பிடித்துக் கொள்ள வன்தொண்டர் வணங்கி வீழ்ந்தார்.
தெளிவுரை : தற்கொலை முடிவுடைய மனத்தை உடையராகி, அதன் பொருட்டுக் குத்திக் கொள்வதற்குரிய அந்த உடைவாளைத் தம் கையால் பற்றினார். பற்ற, ஆளுடைய நம் இறைவரின் அருளால், அக்கலிக்காமரும் மீள உயிர் பெற்று நட்புடையவராகிக் கெட்டேன்! என்று விரைவுடனே எழுந்து நம்பியாரூரரின் கையில் பிடித்த வாளைப் பிடித்துக் கொள்ள, வன்றொண்டரான நம்பியாரூரர் வணங்கி விழுந்தார்.
3559. மற்றவர் வணங்கி வீழ வாளினை மாற்றி ஏயர்
கொற்றவ னாரும் நம்பி குரைகழல் பணிந்து வீழ்ந்தார்
அற்றைநாள் நிகழ்ந்த இந்த அதிசயங் கண்டு வானோர்
பொற்றட மலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற.
தெளிவுரை : இவ்வாறு நம்பியாரூரர் வணங்கி விழப்பார்த்த ஏயர்கோனும் வாளை அகற்றி, நம்பியாரூரரின் ஒலிக்கும் கழல் அணிந்த அடிகளில் வணங்கி விழுந்தார். அன்று நிகழ்ந்த இந்த வியப்பைப் பார்த்துத் தேவர்கள் இந்நிலவுலகத்தவர் துதிக்கச் சிறந்த அழகிய மலர் மழை பொழிந்தனர்.
3560. இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பி னாலே
பொருவரு மகிழ்ச்சி பொங்கத் திருப்புன்கூர்ப் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று வன்தொண்டர் தம்பி ரானார்
அருளினை நினைந்தே அந்த ணாளன்என் றெடுத்துப் பாடி.
தெளிவுரை : விழுந்து வணங்கிய நிலையின்றும் இருவரும் எழுந்து, தழுவிக் கொண்டு, இடைவிடாத நட்புடன் ஒப்பில்லாத மகிழ்ச்சி மேன்மேல் பெருக, திருப்புன்கூரில் போய், அங்கு வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளில் பொருந்த வணங்கிநின்று, வன்தொண்டரான நம்பியாரூரர், தம் பெருமானின் திருவருளை நினைந்து அந்தணாளன் எனத் தொடங்கிப் பாடினார்.
3561. சிலபகல் கழிந்த பின்பு திருமுனைப் பாடி நாடர்
மலர்புகழ்த் திருவா ரூரின் மகிழ்ந்துடன் வந்த ஏயர்
குலமுதற் றலைவ னாருங் கூடவே குளிர்பூங் கோயில்
நிலவினார் தம்மைக் கும்பிட் டுறைந்தனர் நிறைந்த அன்பால்.
தெளிவுரை : சில நாட்கள் இங்ஙனம் சென்றன. செல்ல விரிந்த புகழையுடைய திருவாரூரில் மகிழ்ச்சியுடன் தம்முடன் கூடத்தொடர்ந்து வந்த ஏயர் மரபில் வந்த தலைவரான கலிக்காமருடன் கூடவே, குளிர்ந்த பூங்கோயிலில் நிலையாய் வீற்றிருக்கின்ற இறைவரை வணங்கி நிறைந்த அன்பினால் அங்குத் தங்கியிருந்தார்.
3562. அங்கினி தமர்ந்து நம்பி அருளினான் மீண்டு போந்து
பொங்கிய திருவின் மிக்க தம்பதி புகுந்து பொற்பில்
தங்குநாள் ஏயர் கோனார் தமக்கேற்ற தொண்டு செய்தே
செங்கண்மால் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பி னோடும்.
தெளிவுரை : அத்திருவாரூரில் இனிதாய் விரும்பி வீற்றிருந்து நம்பியாரூரரிடம் விடைபெற்று, மீண்டும் தம் நகரத்தில் சென்று சேர்ந்து தங்கியிருந்தார். அக்காலத்தில் ஏயர்கோன் கலிக்காமர் தமக்கேற்ற திருப்பணிகளைச் செய்து சிவந்த கண்ணையும் பெருமையையும் கொண்ட காளையூர்தியையுடைய இறைவரின் திருவடிகளைச் சிறப்புடன் சேர்ந்தார்.
3563. நள்ளிருள் நாய னாரைத் தூதுவிட் டவர்க்கே நண்பாம்
வள்ளலார் ஏயர் கோனார் மலரடி வணங்கிப் புக்கேன்
உள்ளுணர் வான ஞானம் முதலிய வொருநான் குண்மை
தெள்ளுதீந் தமிழாற் கூறுந் திருமூலர் பெருமை செப்ப.
தெளிவுரை : நடுஇரவிலே, தம் இறைவரைத் தூதாக அனுப்பிய நம்பியாரூரரின் நண்பரான வள்ளலார் ஏயர்கோனின் மலர் போன்ற திருவடிகளை வணங்கி, உள்ளே உணரத்தக்க ஞானம் முதலான ஒரு நான்கின் உண்மையைத் தெளிவிக்கும் இனிய தமிழால் சொல்லும் திருமூல நாயனாரின் பெருமையைச் சொல்லப் புகுகின்றேன்.
ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் முற்றிற்று.

36. திருமூலதேவ நாயனார் புராணம்
கயிலாய மலையில் நந்தி தேவரின் உபதேசத்தைப் பெற்ற யோகியார் ஒருவர், அவர் அட்டமா சித்தி பெற்றவர். அவர் அகத்தியரிடத்துக் கொண்டு நட்பால் பொதியமலை நோக்கி வந்தார். திருவாவடுதுறையை அடைந்தார். ஆங்கு இறைவரை வணங்கினார். அப்பதியினின்று அகன்று போகும் போது காவிரியாற்றின் கரையில் பசுக்கூட்டம் அழுவதைப் பார்த்தார். அப்பசுக்கள் மேய்க்கும் மூலன் என்ற இடையன் இறந்து கிடந்தான். யோகியார் அப்பசுக்களின் துன்பத்தைப் போக்க எண்ணினார். தாம் பயின்ற சித்தியினால் அம்மூலன் என்பவனின் உடலில் தம் உயிரைப் புகுத்தினார். பசுக்கள் மகிழ்ந்தன. திருமூலர் மாலையில் அப்பசுக்கூட்டங்களைக் கொண்டு அவற்றின் இருப்பிடங்களில் செல்லச் செய்தார். அவை வழக்கம் காரணமாகத் தம் வீடுகளுக்குச் சென்றன. திருமூலர் ஓரிடத்தில் நின்றார். மூலன் என்ற இடையனின் மனைவி தன் கணவன் இன்னும் வரவில்லையே என்று தேடிக் கொண்டு சென்றாள்! தன் கணவன் போல நின்ற யோகியாரைப் பார்த்தாள். அவர்க்கு ஏதோ நேர்ந்து விட்டது என்று எண்ணி அவரைத் தம் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றாள். முடியவில்லை. அதனால் மனம் கவன்று அவள் இல்லம் திரும்பினாள். அன்று இரவு கழிந்தது. மறுநாள் அவள் தன் கணவனின் நிலையைப் பலரிடம் உரைத்தாள். அவர்கள் திருமூலரிடம் சென்றனர். அப்போது திருமூலர் யோகத்தில் இருக்கக் கண்டு அவரை மாற்ற இயலாது என்று மூலனின் மனைவியிடம் உரைத்தனர். அவள் பெரிதும் துன்பம் அடைந்தாள்.
யோகத்தினின்று எழுந்து யோகியார் தாம் வைத்திருந்த உடலைத் தேடிப் பார்த்தார். அது கிடைக்கவில்லை. தம் யோகவன்மையால் இறைவரின் உள்ளத்தை உணர்ந்தார். சிவாகமப் பொருளைத் திருமூர் வாக்கால் கூற வேண்டும் என்பது இறைவரின் திருவுள்ளம். அதனால் தம் உடல் இறைவரால் மறைக்கப்பட்டது என்பதை அறிந்தார். திருமூலர் சாத்தனூரிலிருந்து சென்றபோது இடையர் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்க்கு அவர் உண்மையை உரைத்து, திருவாவடுதுறையை அடைந்து இறைவரை வணங்கிக் கோயிலுக்கு மேற்கில் உள்ள அரசமரத்தின் கீழ் சிவராச யோகத்தில் இருந்து மூவாயிரம் ஆண்டுகளில் மூவாயிரம் செய்யுளை இயற்றினார். பின் இறைவரது திருவடி நிழலை எய்தினார்.
3564. அந்தியிளம் பிறைக்கண்ணி அண்ணலார் கயிலையினில்
முந்தைநிகழ் கோயிலுக்கு முதற்பெருநா யகமாகி
இந்திரன்மால் அயன்முதலாம் இமையவர்க்கு நெறியருளும்
நந்திதிரு வருள்பெற்ற நான்மறையோ கிகளொருவர்.
தெளிவுரை : மாலைக் காலத்தில் தோன்றும் பிறைச்சந்திரனான மாலையைச் சூடிய சிவபெருமானின் கயிலைமலையில், பழமையாய் உள்ள திருக்கோயிலுக்கு முதற் பெருங்காவலரான தலைமை பெற்று, இந்திரன், திருமால், நான்முகன் முதலிய தேவர்களுக்கு நெறியை அருளும் தொண்டை மேற்கொண்ட நந்திபெருமானின் திருவருள் உபதேசத்தைப் பெற்ற நான்மறைச் சிவயோகியார் ஒருவர் இருந்தார்.
இவரது இயற்பெயர் சுந்தரர் என்றும் நந்தி தேவரால் நாதர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது என்றும் உரைப்பர்.
3565. மற்றவர்தாம் அணிமாதி வருஞ்சித்தி பெற்றுடையார்
கொற்றவனார் திருக்கயிலை மலைநின்றுங் குறுமுனிபால்
உற்றதொரு கேண்மையினால் உடன்சிலநாள் உறைவதற்கு
நற்றமிழின் பொதியமலை நண்ணுதற்கு வழிக்கொண்டார்.
தெளிவுரை : அவர் அணிமா முதலான எட்டுவகைச் சித்திகளையும் கைவரப் பெற்றவர். இறைவனின் திருக்கயிலை மலையில் குறுமுனி என்று அழைக்கப்படும் அகத்திய முனிவரிடத்துப் பொருந்திய கேண்மையான தொடர்பினால், அவருடன் சில நாள்கள் தங்கியிருப்பதைக் கருதி அவர் இருப்பிடமான நல்ல தமிழ்ப பொருத்தமுடைய இனிய பொதிய மலையைச் சேர்வதற்காக வழிக்கொண்டு செல்லத் தொடங்கினார்.
3566. மன்னுதிருக் கேதாரம் வழிபட்டு மாமுனிவர்
பன்னுபுகழ்ப் பசுபதிநே பாளத்தைப் பணிந்தேத்தித்
துன்னுசடைச் சங்கரனார் ஏற்றதூ நீர்க்கங்கை
அன்னமலி யகன்றுறைநீர் அருங்கரையின் மருங்கணைந்தார்.
தெளிவுரை : கயிலாய மலையினின்று புறப்பட்ட யோகியார் நிலையான கேதாரத்தை வணங்கிச் சிறந்த முனிவர் எடுத்துக் கூறும் புகழையுடைய பசுபதி நேபாளத்தை வணங்கித் துதித்து, நெருங்கிய சடையில் சிவபெருமான் தலையில் உள்ள தூய நீரையுடைய கங்கையாற்றில் அன்னப்பறவைகள் நிறைந்த அகன்ற நீர்த்துறையின் அரிய கரையின் பக்கத்தை வந்து அடைந்தார்.
3567. கங்கைநீள் துறையாடிக் கருத்துறைநீள் கடலேற்றும்
அங்கணர்தாம் மகிழ்ந்தருளும் அவிமுத்தம் பணிந்தேத்தி
மங்குல்வளர் வரைவிந்த மன்னுபருப் பதம்இறைஞ்சித்
திங்களணி சடையர்திருக் காளத்தி மலைசேர்ந்தார்.
தெளிவுரை : அந்த யோகியார் கங்கையின் நீர்த்துறையில் நீராடிப் பிறவித் துறையையுடைய நீண்ட கடலினின்றும் கரையேற்றும் சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற அவி முத்தத்தை (காசியை) வணங்கித் துதித்து, மேகங்கள் தங்குவதற்கு இடமான விந்த மலையையும் நிலையான சீ பருப்பதத்தையும் வணங்கிப் பிறைச்சந்திரனைச் சூடிய சடையையுடைய சிவபெருமானின் திருக்காளத்தி மலையைப் போய்ச் சேர்ந்தார்.
3568. நீடுதிருக் காளத்தி நிலவுதா ணுவைவணங்கி
ஆடுதிரு வரங்கான ஆலவனந் தொழுதேத்தித்
தேடும்இரு வர்க்கரியார் திருஏகாம் பரம்பணிந்து
மாடுயர்மா மதிற்காஞ்சி வளநகரின் வைகினார்.
தெளிவுரை : நிலையான திருக்காளத்தி மலைமீது விளங்கும் தாணுவான சிவபெருமானை வணங்கி, அப்பெருமான் அருட்கூத்தாடும் மன்றங்களுள் ஒன்றான திருவாலங்காடு என்ற தலத்தை வணங்கித் துதித்து, கீழும் மேலுமாகத் தேடிய திருமாலுக்கும் நான்முகனுக்கும் காண்பதற்கரியவராய் நிமிர்ந்த சிவபெருமான் வீற்றிருக்கின்ற ஏகாம்பரத்தையும் வணங்கி, உயர்ந்த பெரிய பொன்னால் ஆன மதில்களையுடைய காஞ்சிபுரம் என்னும் நீர்வளம் கொண்ட நகரத்தில் தங்கினார்.
3569. நற்பதியங் கமர்யோக முனிவர்களை நயந்துபோய்க்
கற்புரிசைத் திருவதிகை கலந்திறைஞ்சிக் கறைக்கண்டர்
அற்புதக்கூத் தாடுகின்ற அம்பலஞ்சூழ் திருவீதிப்
பொற்பதியாம் பெரும்பற்றப் புலியூரில் வந்தணைந்தார்.
தெளிவுரை : நல்ல பதியான அந்தக் காஞ்சியில் விரும்பித் தங்கியுள்ள சிவயோகியர்களான முனிவர்களை விரும்பி வணங்கிச் சேர்ந்திருந்து, பின்பு கல் மதில் சூழ்ந்த திருவதிகை வீரட்டானத்தில் போய் வணங்கி, நீலகண்டத்தையுடைய இறைவர் அற்புதமான அருட்கூத்தாடுகின்ற திருவம்பலத்தைச் சூழ்ந்த திருவீதியுடைய பொற்பதியான பெரும்பற்றப் புலியூரை தில்லையை வந்து சேர்ந்தார்.
3570. எவ்வுலகும் உய்யவெடுத் தாடியசே வடியாரைச்
செவ்வியஅன் புறவணங்கிச் சிந்தைகளி வரத்திளைத்து
வவ்வியமெய் யுணர்வின்கண் வருமானந் தக்கூத்தை
அவ்வியல்பில் கும்பிட்டங் காராமை அமர்ந்திருந்தார்.
தெளிவுரை : எல்லாவுலகங்களும் உய்யும்படி தூக்கிய சேவடியை உடைய கூத்தப்பெருமானின் செவ்விய அன்பு பொருந்த வணங்கி, உள்ளத்தில் மகிழ்ச்சி மிக அந்த அனுபவத்தில் அழுந்தித் தம் வசமற்று நின்று, உயிர்ப்போதத்தை விழுங்கி அதன்மேல் விளங்கும் மெய்யுணர்வான சிவபோத நிலையில் வெளிப்படுகின்ற சிவானந்த அருட்கூத்தை முழுதும் பதிஞானமான தன்மையில் நின்று அனுபவித்து வழிபட்டிருந்து அந்தப் பதியில் விருப்புடன் தங்கியிருந்தார்.
3571. தடநிலைமா ளிகைப்புலியூர் தன்னிலுறைந் திறைஞ்சிப்போய்
அடல்விடையின் மேல்வருவா ரமுதுசெய வஞ்சாதே
விடமளித்த தெனக்கருதி மேதினிக்கு வளநிறைத்தே
கடல்வயிறு நிறையாத காவிரியின் கரையணைந்தார்.
தெளிவுரை : பெரிய நிலைகளையுடைய மாளிகைகள் நிறைந்த பெரும்பற்றப் புலியூரில் தங்கியிருந்து வணங்கிச் சென்று வன்மையுடைய காளையின் மேல் வரும் இறைவர் அமுது செய்யும்படி சற்றும் அஞ்சாது நஞ்சைக் கொடுத்தது என்று எண்ணி, உலகுக்கு எல்லா வளங்களையும் நிறைய அளித்துக் கடலின் வயிற்றை நிறைக்காத காவிரி ஆற்றின் கரையை அடைந்தார்.
3572. காவிரிநீர்ப் பெருந் தீர்த்தங் கலந்தாடிக் கடந்தேறி
ஆவின்அருங் கன்றுறையும் ஆவடுதண் டுறையணைந்து
சேவில்வரும் பசுபதியார் செழுங்கோயில் வலம்வந்து
மேவுபெருங் காதலினால் பணிந்தங்கு விருப்புறுவார்.
தெளிவுரை : காவிரி நீரான பெருமையுடைய நீரில் ஆடி, அதைக் கடந்து தென்கரையில் ஏறிச் சென்று பசுவின் கன்றாய் உமையம்மையார் சேர்ந்து, தவம் செய்கின்ற திருவாவடுதுறையைச் சேர்ந்து, காலையில் எழுந்தருளும் பசுபதியான இறைவரின் செழுமையான கோயிலை வலம் வந்து வழிபட்டு, பொருந்திய பெருங்காதலால் வணங்கி அங்கே விருப்பம் உடையவராகி,
3573. அந்நிலைமைத் தானத்தை அகலாத தொருகருத்து
முன்னியெழுங் குறிப்பினால் மூளும் ஆதரவெய்தப்
பின்னுமகன் றேகுவார் பேணவருங் கோக்குலங்கள்
பொன்னிநதிக் கரைப்புறவிற் புலம்புவன எதிர்கண்டார்.
தெளிவுரை : அந்த நிலையில் உள்ள பதியை விட்டு நீங்காத ஒரு கருத்துடைய உள்ளத்தில் மிக்கு எழுகின்ற குறிப்பால் பெருகிய அந்த அன்பு பொருந்தக்கண்டும், அதன்பின்பும் அதைவிட்டு அகன்று போவாரான யோகியார், மேய்ப்பதற்கு அங்கு ஓட்டப்பட்டு வரும் பசுக்கூட்டங்கள் காவிரி நதியின் காட்டிடத்தில் புலம்புவதைப் பார்த்தார்.
3574. அந்தணர்தஞ் சாத்தனூர் ஆமேய்ப்பார் குடித்தோன்றி
முந்தைமுறை நிரைமேய்ப்பான் மூலனெனும் பெயருடையான்
வந்துதனி மேய்க்கின்றான் வினைமாள வாழ்நாளை
வெந்தொழில்வன் கூற்றுண்ண வீடிநிலத் திடைவீழ்ந்தான்.
தெளிவுரை : அந்தணரின் சாத்தனூரில் உள்ள பசுக்களை மேய்ப்பவர்களான இடையர் குடியில் தோன்றித் தன் முன்னோரின் மரபில் தொழில் முறையிலே பசுக்கூட்டத்தை மேய்த்து வருபவனான மூலன் என்ற பெயர் கொண்டவன், ஊரினின்றும் புறப்பட்டு வந்து குறுங்காட்டில் பசுக்களைத் தனியாய் மேய்த்து வந்தான். அப்போது அவனது வினை முடிந்து விட்டதால் அவனது வாழ்நாளைக் கொடிய தொழிலையுடைய (பாம்பின் விடம் உண்டு ஒழித்து விட,) அவன் உயிர் நீங்கப் பெற்று நிலத்தில் விழுந்தான்.
3575. மற்றவன்றன் உடம்பினைஅக் கோக்குலங்கள் வந்தணைந்து
சுற்றிமிகக் கதறுவன சுழல்வனமோப் பனவாக
நற்றவயோ கிகள்காணா நம்பரரு ளாலேயா
உற்றதுய ரிவைநீங்க ஒழிப்பன்என வுணர்கின்றார்.
தெளிவுரை : அச்சமயத்தில் பசுக்கூட்டங்கள் அவனது உடலை வந்து சூழ்ந்து வருதலும், கதறுதலும், சுழலுதலும், மோத்தலுமாகி இவ்வாறு வருந்தின. நல்ல தவத்தையுடைய அந்த யோகியார் அதைப் பார்த்து, இறைவரின் திருவருளினால், இப்பசுக்கள் அடைந்த துன்பத்தை நான் ஒழிப்பேன்! என்று உணர்வினில் கொண்டார்.
3576. இவன்உயிர்பெற் றெழில்அன்றி ஆக்களிடர் நீங்காவென்று
அவனுடலில் தம்முயிரை அடைவிக்க அருள்புரியும்
தவமுனிவர் தம்முடம்புக் கரண்செய்து தாம்முயன்ற
பவனவழி அவனுடலில் தம்முயிரைப் பாய்த்தினார்.
தெளிவுரை : இந்த இடையன் உயிர்பெற்றெழுந்தாலல்லது இப்பசுக்கள் துன்பம் நீங்க மாட்டா! என்று அந்த மூலன் என்ற இடையனின் உடலில் தம் உயிரைச் சேர்ப்பிக்க அருள் செய்யும் அந்தத் தவமுனிவர், தம் தவ உடலைக் காவலான ஓர் இடத்தில் சேர்த்துத் தாம் பயின்று கை வந்த உயிர் வளியை அடக்கும் வழியின் மூலமாக அவனது உடலினுள் தம் உயிரைப் புகும்படி செய்தார்.
3577. பாய்த்தியபின் திருமூல ராய்எழலும் பசுக்களெல்லாம்
நாத்தழும்ப நக்கிமோந் தணைந்துகனைப் பொடுநயந்து
வாய்த்தெழுந்த களிப்பினால் வாலெடுத்துத் துள்ளிப்பின்
நீத்ததுய ரினவாகி நிரந்துபோய் மேய்ந்தனவால்.
தெளிவுரை : அவ்வாறு உயிரைப் புகுத்திய பின்பு திருமூலராகி (உயிர்) பெற்று எழவும், பசுக்கள் எல்லாம் மகிழ்வுடன் நாத்தழும்பு ஏற அவன் உடலை நக்கியும் மோந்தும் பக்கத்திலே சேர்ந்தும் கனைப்புடன் விரும்பியும் என இவ்வாறு கொண்டு எழுந்த பெரு மகிழ்ச்சியினால் வால்களை மேலே தூக்கித் தள்ளின. பின்பு துன்பம் நீங்கியவையாய் வரிசையாய்ச் சென்று மேய்ந்தன.
3578. ஆவினிரை மகிழ்வுறக்கண் டளிகூர்ந்த அருளினராய்
மேவியவை மேய்விடத்துப் பின்சென்று மேய்ந்தவைதாம்
காவிரிமுன் துறைத்தண்ணீர் கலந்துண்டு கரையேறப்
பூவிரிதண் புறவின்நிழல் இனிதாகப் புறங்காத்தார்.
தெளிவுரை : பசுக்கூட்டங்களை முன் சொன்னபடி மகிழ்ச்சி பொருந்தக் கண்டு கருணைமிக்க அருள் உடையவராய், அப்பசுக்கள் மேய்கின்ற இடங்களில் அவற்றின் பின் சென்று அவை தாம் காவிரியாற்றின் முன் துறையில் தண்ணீர் உண்டு கரையேறப் பூக்கள் மலர்ந்த குளிர்ந்த நிழலில் உள்ள இடத்தில் இனிதாய்த் தங்க வைத்துப் பாதுகாத்தார்.
3579. வெய்யசுடர்க் கதிரவனும் மேல்பாலை மலையணையச்
சைவநெறி மெய்யுணர்ந்தோர் ஆன்இனங்கள் தாமேமுன்
பையநடப் பனகன்றை நினைந்துபடர் வனவாகி
வையநிகழ் சாத்தனூர் வந்தெய்தப் பின்போனார்.
தெளிவுரை : வெம்மையான கதிர்களையுடைய சூரியனும் மேற்குத்திக்கினை அடைய, பசுக்கூட்டங்கள் ஒருவரும் செலுத்தப்படாது தாமே முன்னே செல்வனவும் தம் கன்றுகளை எண்ணிச் செல்வனவுமாயின. உலகில் புகழ் பெற்று விளங்கும் சாத்தனூரில் வந்து சேர, சைவ நெறியின் உண்மை நிலையையுணர்ந்த யோகியரான திருமூலர் அந்தப் பசுக்கள் தாம் சென்ற வழியிலேயே தாமும் சென்றார்.
3580. போனவர்தாம் பசுக்களெலாம் மனைதோறும் புகநின்றார்
மானமுடை மனையாளும் வைகியபின் தாழ்த்தார்என்று
ஆனபயத் துடன்சென்றே அவர்நின்ற வழிகண்டாள்
ஈனம்இவர்க் கடுத்ததென மெய்தீண்ட அதற்கிசையார்.
தெளிவுரை : அங்ஙனம் பசுக்களின் பின்பு சென்றவர் பசுக்கள் யாவும் அவ்வவற்றின் வீடுகள் தோறும் புக, அந்த எல்லை அளவில் நின்றார். பெருமையுடைய அந்த இடையனின் மனைவியும் தன் கணவர் பகற்பொழுது போன பின்பும் வரத்தாழ்த்தனர் என்று எண்ணிய அச்சத்துடன் சென்று, அவர் நின்று கொண்டிருந்த நிலையைப் பார்த்தாள். இவருக்கு ஏதோ தீங்கு நேர்ந்துள்ளது என்று எண்ணி அவரது மெய்யை அவள் தீண்ட, அதற்கு அவர் இசையாமல்,
3581. அங்கவளும் மக்களுடன் அருஞ்சுற்றம் இல்லாதாள்
தங்கிவெரு வுறமயங்கி என்செய்தீர் எனத்தளர
இங்குனக்கென் னுடன்அணைவொன் றில்லையென எதிர்மறுத்துப்
பொங்குதவத் தோர்ஆங்கோர் பொதுமடத்தின் உட்புக்கார்.
தெளிவுரை : அவளும் மக்களுடன் அரிய சுற்றத்தையும் பெற்றிராதவளாதலால், தங்கி அஞ்சி மயங்கி, என்ன செய்தீர் என்று மனம் தளர்ந்து வருந்த, இங்கு உனக்கு என்னுடன் தொடர்பு ஏதும் இல்லை என்று மறுத்து மேன்மேலும் தவத்தையுடைய திருமூலர் அங்கு ஒரு பொது மடத்துள் போயடைந்தார்.
3582. இல்லாளன் இயல்புவே றானமைகண் டிரவெல்லாம்
சொல்லாடா திருந்தவர்பால் அணையாது துயிலாதாள்
பல்லார்முன் பிற்றைநாள் இவர்க்கடுத்த பரிசுரைப்ப
நல்லார்கள் அவர்திறத்து நாடியே நயந்துரைப்பார்.
தெளிவுரை : தன் கணவனின் தன்மை வேறுபட்டு மாறிய தன்மையை அறிந்து அன்று இரவு முழுவதும் எல்லாரிடத்தும் பேசாது இருந்து, அவரிடம் அணைய இயலாது உறக்கம் கொள்ளாமலும் இருந்த அந்த இடைக்குலப் பெண், அடுத்த நாள் அந்த ஊரில் உள்ள பலர் முன்னிலையில் அவரது தன்மையைக் கூறினாள். கூறவே, அதைக் கேட்ட நல்லவர் அவரது தன்மையை அருகில் சேர்ந்து நாடியறிந்து அன்போடு சொல்லலானார்.
3583. பித்துற்ற மயல்அன்று பிறிதொருசார் புளதன்று
சித்தவிகற் பங்களைந்து தெளிந்தசிவ யோகத்தில்
வைத்தகருத் தினராகி வரம்பில்பெரு மையிலிருந்தார்
இத்தகைமை யளப்பரிதால் யாராலும் எனவுரைப்பார்.
தெளிவுரை : இது பித்தம் கொண்டதால் உண்டான மயக்கம் அன்று. வேறு ஓர் சார்பு இவர்க்கு உள்ளது. உள்ளத்தின் வேறுபாடுகளை எல்லாம் நீங்கித் தெளிந்த நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்தை உடையவராகி அளவில்லாத பெருமையில் இருந்தனர். இத்தன்மை யாராலும் அளவிடற்கு அரியதாகும் எனத் துணிந்து கூறுபவரானார்.
3584. பற்றறுத்த வுபதேசப் பரமர்பதம் பெற்றார்போல்
முற்றுமுணர்ந் தனராகும் முன்னைநிலை மையில்உங்கள்
சுற்றவியல் பினுக்கெய்தார் என்றுரைப்பத் துயரெய்தி
மற்றவளும் மையலுற மருங்குள்ளார் கொண்டகன்றார்.
தெளிவுரை : இரண்டு வகையான பற்றுக்களையும் நீக்கிய, ஞான உபதேசத்தினால் சிவபெருமானின் திருவடிகளைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போல் ஒருங்கே எல்லாவற்றையும் உணர்ந்த ஞானி ஆவார். முன்னை நிலைமைப்படி உங்கள் சுற்றத்தின் தொடர்பான இயல்புக்குட்பட மாட்டார் என அவர்கள் கூறினர். அவள் மிகவும் துன்பப்பட்டு மயங்கினாள். பக்கத்தில் இருந்தவர் அவளை அழைத்துக் கொண்டு நீங்கிச் சென்றனர்.
3585. இந்தநிலை மையிலிருந்தார் எழுந்திருந்தங் கானிரைகள்
வந்தநெறி யேசென்று வைத்தகாப் பினிலுய்த்த
முந்தையுடல் பொறைகாணார் முழுதுணர்ந்த மெய்ஞ்ஞானச்
சிந்தையினில் வந்தசெயல் ஆராய்ந்து தெளிகின்றார்.
தெளிவுரை : இங்ஙனம் சாத்தனூர்ப் பொது மடத்தில் இருந்தார் திருமூலர். அவ்வாறு இருந்தவர் அந்நிலையினின்றும் எழுந்து அவ்வூர்ப் பசுக்கூட்டங்கள் ஊரை நோக்கி வந்த வழியையே பின்பற்றிச் சென்று பார்க்கத் தாம் காவலில் வைத்த தம் முன்னைய உடல் சுமையைக் காணாதவராய் முற்றுணர்வு கூடிய மெய்ஞ்ஞானம் பொருந்திய தம் உள்ளத்தில் இச்செயல் நிகழ்ந்த நிலையை ஆராய்ந்து தெளிந்தார்.
3586. தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை
மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்பக்
கண்ணியஅத் திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த வுணர்வுடையார் ஈசர்அரு ளெனவுணர்ந்தார்.
தெளிவுரை : குளிர்ந்த நிலவை அணிந்த சடையையுடைய சிவபெருமான் அருளாலே தந்த சிவாகமங்களின் பொருளை நிலவுலகத்தில் திருமூலரின் திருவாக்கினால் தமிழில் வகுப்பதற்காக எண்ணிய அத்திருவருளால் அந்த உடலை மறையச் செய்திட்டார். ஆதலால் எங்கும் நிறைந்த உணர்வுடையவரான திருமூலர் அச்செயலை உள்ளத்தில் தெளிந்து அஃது ஈசர் அருளால் ஆயிற்று என அறிந்தார்.
3587. சுற்றியஅக் குலத்துள்ளார் தொடர்ந்தார்க்குத் தொடர்வின்மை
முற்றவே மொழிந்தருள அவர்மீண்டு போனதற்பின்
பெற்றம்மீ துயர்த்தவர்தாள் சிந்தித்துப் பெருகார்வச்
செற்றமுதல் கடிந்தவர்தாம் ஆவடுதண் டுறைசேர்ந்தார்.
தெளிவுரை : சூழ்ந்துள்ள அந்த இடையர் குலத்தினர்க்கு, அந்தவூரினின்று தம்மைத் தொடர்ந்து பசுக்கூட்டம் மேய்க்கப்பட்ட இடத்துக்கு வந்த அவர்கள் அறியுமாறு, அவர்களுக்கும் தமக்கும் எவ்வகையான தொடர்பும் இல்லை என்பதை முழுதும் அறிவுறுத்தி உரைத்தார். உரைக்க, அவர்களும் மீண்டு போயினர். பின்பு, காளைக் கொடியையுயர்த்திய இறைவரின் திருவடிகளைச் சிந்தித்து, மேன்மேலும் பெருகும் இயல்புடைய ஆர்வம் சினம் முதலியவற்றை வேரறத் தோண்டிப் போக்கிய அத்திருமூலர், அங்கிருந்து திருவாவடுதுறையை அடைந்தார்.
3588. ஆவடுதண் டுறையணைந்தங் கரும்பொருளை யுறவணங்கி
மேவுவார் புறக்குடபால் மிக்குயர்ந்த அரசின்கீழ்த்
தேவிருக்கை அமர்ந்தருளிச் சிவயோகந் தலைநின்று
பூவலரும் இதயத்துப் பொருளோடும் புணர்ந்திருந்தார்.
தெளிவுரை : திருவாவடுதுறையைச் சேர்ந்து அங்குச் சிவபெருமானைப் பொருந்திய வகையால் தொழுது அங்குத் தங்கினார். அங்குக் கோயிலின் புறத்தில் மேற்குப் பக்கத்தில் மிகவும் உயர்ந்த அரசமரத்தின் கீழ், தேவாசனத்தில் அமர்ந்து எழுந்தருளியிருந்து, சிவராசயோகத்தில் மிக்கிருந்து உள்ளக் கமலத்தில் அரிய பொருளான இறைவருடன் இரண்டறக் கலந்து ஒன்றியிருந்தார்.
3589. ஊனுடம்பில் பிறவிவிடம் தீர்ந்துலகத் தோருய்ய
ஞானமுதல் நான்குமலர் நல்திருமந் திரமாலை
பான்மைமுறை ஓராண்டுக் கொன்றாகப் பரம்பொருளாம்
ஏனஎயி றணிந்தாரை ஒன்றவன்தா னெனஎடுத்து.
தெளிவுரை : ஊன் பொருந்திய இப்பிறப்பான விடத் தொடக்கு (நச்சுத்தொடர்பு) நீங்கி உலகத்தில் உள்ளவர் உய்வதற்காக சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நெறிகளும் விரிந்து காணும் நல்ல திருமந்திர மாலையை இறைவர் வகுத்திட்ட முறையால் ஓர் ஆண்டுக்கு ஒரு மந்திரமாகப் பரம்பொருளானவரும் பன்றியின் கொம்பை அணிந்தவரும் ஆன சிவபெருமானை ஒருவன் தானே எனத் தொடங்கி,
3590. முன்னியஅப் பொருள்மாலைத் தமிழ்மூவா யிரஞ்சாத்தி
மன்னியமூ வாயிரத்தாண் டிப்புவிமேல் மகிழ்ந்திருந்து
சென்னிமதி யணிந்தார்தந் திருவருளால் திருக்கயிலை
தன்னிலணைந் தொருகாலும் பிரியாமைத் தாளடைந்தார்.
தெளிவுரை : நிலைத்த அப்பொருளையுடைய திருமந்திர மாலையான தமிழ் மூவாயிரம் மந்திரங்களையும் பாடியருளி, அதன்பொருட்டுப் பெற்ற மூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகத்தில் வாழ்ந்து வீற்றிருக்கும், திருமுடியில் ஞானச்சந்திரனைச் சூடிய சிவபெருமானின் அருளால், அவர் தம் திருக்கயிலையைச் சேர்ந்து என்றும் பிரியாதபடி சிவனது திருவடி நிழலை அடைந்தார்.
3591. நலஞ்சிறந்த ஞானயோ கக்கிரியா சரியையெலாம்
மலர்ந்தமொழித் திருமூல தேவர்மலர்க் கழல்வணங்கி
அலர்ந்தபுகழ்த் திருவாரூர் அமணர்கலக் கங்கண்ட
தலங்குலவு விறல்தண்டி யடிகள்திறஞ் சாற்றுவாம்.
தெளிவுரை : நன்மை அளிப்பதில் சிறந்து விளங்கும் ஞானம், யோகம், கிரியை, சரியை என்னும் நான்கு நெறிகளும் விரிந்த மொழியுடைய திருமூல நாயனாரின் தாமரை போன்ற திருவடிகளை வணங்கி, திசைகளில் எங்கும் விரிந்து பரந்த புகழையுடைய திருவாரூரிலே சமணர்களின் கீழான செயல்கள் கலங்குதலைச் செய்த உலகில் விளங்கும் வன்மையுடையத் தண்டியடிகளின் அடிமைத் திறத்தினை எடுத்துக் கூறப்புகுகிறோம்.
திருமூல நாயனார் புராணம் முற்றிற்று.

37. தண்டியடிகள் நாயனார் புராணம்
சோழ நாட்டிலே தலைசிறந்து விளங்கும் திருவாரூர் என்னும் தலத்தில் தண்யடிகள் என்னும் சிவனருட் செல்வர் வாழ்ந்து வந்தார். இவர் பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர். புறக்கண் அற்ற இத்தொண்டர் அகக் கண்களால் திருவாரூர்த் தியாகேசப் பெருமானின் திருத்தாளினைக் கண்டு எந்நேரமும் இடையறாமல் வணங்கி வழிபட்டு வந்தார். தண்டியடிகள் நீராடும் கமலாலய திருக்குளத்திற்கு பக்கத்தில் சமணர்கள் பல மடங்களைக் கட்டிக்கொண்டு தங்கள் மதப் பிரசாரத்தை நடத்தி வரலாயினர். சமணர்கள் குலத்தை மண் மூடிவிடுவார்களோ என்று வேதனைப்பட்டு குளத்தின் பரப்பையும், ஆழத்தையும் பெரிதுபடுத்தி தம்மால் இயன்றளவு திருப்பணியைச் செய்ய எண்ணினார் அடிகளார். கண்ணற்ற அடிகளார் இறைவனின் அருளால் குளத்தின் நடுவிலும், குளத்தைச் சுற்றிலும் அடையாள முளைகள் நட்டுக் கயிறும் கட்டினார். மண்ணை வெட்டி வெட்டி கூடையில் எடுத்துக் கொண்டு கயிற்றை அடையாளமாகப் பிடித்துக்கொண்டு வந்து கொட்டுவார். நாயனாரின் நல்லெண்ணத்தைப் புரிந்துகொள்ள சக்தியற்ற சமணர்கள் அவருக்கு இடையூறுகள் பல விளைவிக்கத் தொடங்கினர்.
சமணர்கள் நாயனாரை அணுகி இவ்வாறு நீங்கள் மண்ணைத் தோண்டுவதால் இக் குளத்திலுள்ள சிறு ஜீவராசிகள் எல்லாம் இறந்துபோக நேரிடும். உமது செயல் அறத்திற்குப் புறம்பானது என்றனர். அவர்கள் பேச்சைக் கேட்டு தமக்குள் சிரித்துக் கொண்ட தண்டியடிகள், கல்லிலுள்ள தேரைக்கும், கருப்பை உயிருக்கும் நல்லுணர்வு தந்து காக்கும் ஈசனுக்கு, இந்த ஜீவராசிகளை எப்படிக் காக்க வேண்டும் என்பது தெரியும். திருசடையானுக்கு நான் செய்யும் இப்பணியால் சிறு ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல; உங்களுக்கும் எவ்வித தீங்கும் நேராது என்றார். சமணர்கள், உம்மைக் குருடன் என்றுதான் எண்ணினோம். காது மந்தம் போல் இருக்கிறது! என்று சொல்லிக் கேலியாகச் சிரித்தனர். திரிபுரத்தை எரித்த விரிசடைக் கடவுளின் திருவடியைப் போற்றித் தினமும் நான் அகக் கண்களால் கண்டு களிக்கிறேன். நான் எம்பெருமானுடைய திருவருளினால் கண் ஒளி பெற்று நீங்கள் அனைவரும் ஒளி இழந்தீர்களானால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். அங்ஙனம், நீர் கண் பெற்று நாங்கள் கண்ணை இழக்க நேர்ந்தால் நாங்கள் இந்த ஊரிலேயே இருக்கமாட்டோம். ஊரைவிட்டே ஓடிவிடுகிறோம் என்று ஆத்திரம் மேலிடக் கூறினர்! சமணர்கள் சினம் பொங்க அவரது கரத்திலிருந்த மண்வெட்டியையும், கூடையையும், முளைகளையும் பிடுங்கி எறிந்தனர். கயிற்றினை அறுத்து எறிந்தனர். சமணர்களின் இத்தகைய தீச் செயல்களால் மனம் நொந்துபோன தண்டியடிகள் கவலையோடு எம்பெருமானிடம் தமது துயரத்தைப் போக்க அருள் புரியுமாறு பிரார்த்தித்தவாறு துயின்றார். அன்றிரவு இறைவன் நாயனாரின் கனவிலே எழுந்தருளி, அன்பனே அஞ்சற்க! மனம் கலங்காதே! யாம் உம்மைக் காப்போம்! உம்மைப் பழித்தது எம்மை பழித்தது போலவே! எமக்கு நீவிர் செய்யும் திருத்தொண்டு இடையறாது நடக்க உமது கண்களுக்கு ஒளி தந்து சமணர்களை ஒளி இழக்கச் செய்வோம் என்று திருவாய் மலர்ந்தார்.
இறைவன், அரசர் கனவிலும் காட்சி அளித்து - மன்னா ! எமது திருத்தொண்டன் குளத்திலே திருப்பணி செய்கிறான். நீ அவனிடத்திலே சென்று அவனது கருத்தை நிறைவேற்றுவாயாக! அவனது நல்ல திருப்பணிக்கு சதா இடையூறுகளைச் செய்யும் சமணர்களைக் கண்டித்து என் அன்பனுக்கு நியாயம் வழங்குவாய் என்று பணித்தார். பொழுது புலர்ந்ததும் சோழவேந்தன் எம்பெருமானின் கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டான். மன்னன் திருக்குளம் வந்தான். தண்டியடிகள் தட்டு தடுமாறிக் கொண்டு திருக்குளத் திருப்பணி செய்வதைக் கண்டான். மன்னன் அடிகளாரை வணங்கினான். கனவில் செஞ்சடையான் மொழிந்ததைக் கூறினான்.
தண்டியடிகளும், சமணர்கள் தமக்கு அளித்த இடையூறுகளை ஒன்றுவிடாமல் மன்னனிடம் எடுத்து விளக்கி நியாயம் வேண்டினார். மன்னன் சமணர்களை அழைத்து வரக் கட்டளையிட்டான். சமணர்களும் வந்தனர். மன்னனிடம் சமணர்கள் தண்டியடிகளிடம் தாங்கள் சவால்விட்டு சினத்துடன் செப்பியதைப் பற்றிக் கூறினர். தண்டியடிகள் ஒளி பெற்றால், நாங்கள் ஊரை விட்டு ஓடுவது உறுதி என்று சமணர்கள் கூறியதைக் கேட்ட மன்னன் அடிகளாரையும், சமணர்களையும் தமது அமைச்சர்களையும், அவை ஆலோசகர்களையும் கலந்து ஓர் முடிவிற்கு வந்தான். மன்னன், தவநெறிமிக்க தண்டியடிகளை பார்த்து, அருந்தவத்தீர்! நீர் எம்மிடம் மொழிந்ததுபோல் எம்பெருமான் திருவருளினால் கண்பார்வை பெற்று காட்டுவீராகுக! என்று பயபக்தியுடன் கேட்டான். நாயனார் திருக்குளத்தில் இறங்கினார். மண்ணுற வீழ்ந்து கண்ணுதற் கடவுளை உள்ளக் கண்களால் கண்டு துதித்தார். ஐயனே! நான் தங்களுக்கு அடிமை என்பதை உலகறியச் செய்ய எனக்கு கண் ஒளி தந்து அருள்காட்டும் என்று பிரார்த்தித்தார். ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியவாறு, கையிரண்டையும் தலைமீது கூப்பியவாறு நீரில் மூழ்கினார் அடிகளார். இறைவன் திருவருளால் நீரிடை மூழ்கிய நாயனார் கண் ஒளி பெற்று எழுந்தார். தண்டியடிகள் கண் பெற்றதும் புளகாங்கிதம் மேலிட பூங்கோயில் திருக்கோபுரத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். கரம் தூக்கித் தொழுதார். அரசனை வணங்கினார். மன்னன் கரங்குவித்து சிரம் தாழ்த்தி நாயனாரை வணங்கினான். அதே சமயத்தில், சமணர்கள் கண் ஒளியை இழந்தனர். அனைவரும் குருடர்களாக நின்று தவித்தனர். நீதி வழுவாமல் ஆட்சிபுரியும் அரசன் அவர்களை நோக்கி, நீங்கள் கூறியபடி ஒருவர்கூட திருவாரூரில் இல்லாமல் அனைவரும் ஓடிப் போய்விடுங்கள் என்றார். அமைச்சர்களிடம், சமணர்களைத் துரத்த ஏற்பாடு செய்யுங்கள் என்றும் கட்டளையிட்டார். தண்டியடிகள் குளத்தைப் பார்த்து மகிழ்ந்தவாறு பூங்கோயிலை அடைந்து எம்பெருமானைக் கண்குளிர - மனம் குளிர கண்டு களித்துப் பேரின்பக் கூத்தாடினார். தண்டியடிகள் தாம் செய்து கொண்டிருந்த திருப்பணியைத் தொடர்ந்து செய்யத் தொடங்கினார். அரசன் அவருக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்து கௌரவித்தான். அரனார் புரிந்த அருளில் தண்டியடிகள் தாம் எண்ணியபடியே திருக்குளத்தை மிகமிகப் பெரிதாகக் கட்டி முடித்தார். அடிகளாரின் அறப்பணியை அரசரும் மக்களும் கொண்டாடி பெருமிதம் பூண்டனர். நாயனார் நெடுநாள் பூவுலகில் பக்தியுடன் வாழ்ந்து நீடுபுகழ் பெற்று திருசடையான் திருவடி நிழலை அடைந்து பேரின்ப நிலையை எய்தினார்.
3592. தண்டி யடிகள் திருவாரூர்ப்
பிறக்கும் பெருமைத் தவமுடையார்
அண்ட வாணர் மறைபாட
ஆடுஞ் செம்பொற் கழன்மனத்துக்
கொண்ட கருத்தின் அகனோக்கும்
குறிப்பே யன்றிப் புறநோக்கும்
கண்ட வுணர்வு துறந்தார்போற்
பிறந்த பொழுதே கண்காணார்.
தெளிவுரை : தண்டியடிகள் என்ற பெயர் உடையவர் திருவாரூரிலே பிறக்கும் பேறுடைய முன்னைத் தவத்தை உடையவர். தேவர்கள் வேத முழக்கங்களைச் செய்ய ஆடும் சிறந்த பொன் போன்ற கூத்தரின் திருவடிகளை உள்ளத்தினுள்ளே கொண்ட அகக்கண்ணினால் காண்கின்ற குறிப்பே அல்லாது, வெளிப்பார்வையால் நோக்கும் அளவுபட்ட உணர்வை ஒழித்தவரைப் போல் அவதரித்த நாளன்றே புறக்கண் பார்வை இல்லாதவர்.
3593. காணுங் கண்ணால் காண்பதுமெய்த்
தொண்டே யான கருத்துடையார்
பேணும் செல்வத் திருவாரூர்ப்
பெருமான் அடிகள் திருவடிக்கே
பூணும் அன்பி னால்பரவிப்
போற்றும் நிலைமை புரிந்தமரர்
சேணு மறிய வரியதிருத்
தொண்டிற் செறியச் சிறந்துள்ளார்.
தெளிவுரை : பார்ப்பதற்குரிய கண்ணால் காணப்பெறுவது சிவபெருமானின் மெய்த்தொண்டேயாகும் என்ற கருத்துடையவர், பேணுவதற்குரிய திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகப்பெருமானின் திருவடிகளையே மேற்கொண்ட அன்பினால் வழிபடும் நிலைமையை விரும்பத் தேவர்கள் தொலைவிலும் அறிதற்கு அரிய திருத்தொண்டில் உறைப்புடையவராகிச் சிறந்து விளங்கினார்.
3594. பூவார் சடிலத் திருமுடியார்
மகிழ்ந்த தெய்வப் பூங்கோயில்
தேவா சிரியன் முன்னிறைஞ்சி
வலஞ்செய் வாராய்ச் செம்மைபுரி
நாவால் இன்ப முறுங்காதல்
நமச்சி வாய நற்பதமே
ஓவா அன்பில் எடுத்தோதி
ஒருநாள் போல வருநாளில்.
தெளிவுரை : மலர்கள் பொருந்திய சடையையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் செல்வம் நிறைந்த பூங்கோயிலில், திருத்தேவாசிரிய மண்டபத்தினை முன்னே வணங்கி வருபவராய்ச் செம்மை நெறிபெறப் புரிகின்ற நாவால் இன்பம் பொருந்தும் நமச்சிவாய என்ற நற்பதத்தையே ஒழியாத அன்புடன் எடுத்து ஓதிக்கொண்டு ஒருநாள் போல பலகாலமும் வலம் செய்து வந்தார் அந்நாட்களில்.
3595. செங்கண் விடையார் திருக்கோயில்
குடபால் தீர்த்தக் குளத்தின்பாங்
கெங்கும் அமணர் பாழிகளாய்
இடத்தாற் குறைபா டெய்துதலால்
அங்கந் நிலைமை தனைத்தண்டி
யடிகள் அறிந்தே ஆதரவால்
இங்கு நான்இக் குளம்பெருகக்
கல்ல வேண்டும் என்றெழுந்தார்.
தெளிவுரை : சிவந்த கண்ணையுடைய காளையையுடைய இறைவரின் திருக்கோயில் மேற்குப் பக்கத்தில் இருக்கும் கமலாலயம் என்ற நீர்நிலையின் பக்கங்களில் எங்கும் அமணர்களில் பாழிகளாய் ஆக்கித் தூர்க்கப்பட்டு இடத்தினால் குறைபாடு உண்டாயின. அதனால் அங்குள்ள அந்த நிலைமையைத் தண்டியடிகள் அறிந்து, அன்பினால் நான் இந்தக் குளத்தை அகலமாய்ப் பெருகும்படி தோண்டிட வேண்டும் என்னும் உள்ளத் துணிவுடன் அதனை மேற்கொண்டார்.
3596. குழிவா யதனில் குறிநட்டுக்
கட்டுங் கயிறு குளக்கரையில்
இழிவாய்ப் புறத்து நடுதறியோடு
இசையக் கட்டி இடைதடவி
வழியால் வந்து மண்கல்லி
எடுத்து மறித்துந் தடவிப்போய்
ஒழியா முயற்சி யால்உய்த்தார்
ஓதும் எழுத்தஞ் சுடன்உய்ப்பார்.
தெளிவுரை : அக்குளத்தில் தோண்டும் குழியின் ஓரத்தில் குறியான கோல் நட்டு, அதில் கட்டிய கயிற்றைக் குளத்தின் கரையின் மீது தாழ்ந்த உயரத்தில் நட்ட தறியுடன் பொருந்தும்படி கட்டி, இடையில் அந்தக் கயிற்றைத் தொட்டுத் தடவிக் கொண்டு அவ்வழியால் வழிதவறாது இறங்கி வந்து, மண்ணைத் தோண்டி எடுத்துப் பின்னும் முன் தடவிய அந்த வழியிலே மேலே சென்று இப்படி இடைவிடாத முயற்சியினால் மண்ணை மேலே கொட்டினார். இச்செயலில் இடைவிடாது ஓதும் திருவைந்தெழுத்துடன் தம்மைச் செலுத்துவாராய்.
3597. நண்ணி நாளும் நற்றொண்டர்
நயந்த விருப்பால் மிகப்பெருகி
அண்ணல் தீர்த்தக் குளங்கல்லக்
கண்ட அமணர் பொறாராகி
எண்ணித் தண்டி யடிகள்பால்
எய்தி முன்னின் றியம்புவார்
மண்ணைக் கல்லிற் பிராணிபடும்
வருத்த வேண்டா வென்றுரைத்தார்.
தெளிவுரை : (இங்ஙனம்) பொருந்தி நாள்தோறும் மிக்க நல்ல தொண்டரான தண்டியடிகள் உள்ளத்தில் கொண்ட விருப்பத்தால் செய்யும் இத்தொண்டில் மேம்பட்டு இறைவரின் தீர்த்தக்குளத்தைத் தோண்டிட அதைப் பார்த்த சமணர்கள் பொறுக்காது தமக்குள் சிந்தித்துத் தண்டியடிகளிடம் வந்து, அவர் முன்நின்று சொல்பவராய் மண்ணைத் தோண்டி வீணே வருந்த வேண்டா! எனவுரைத்தனர்.
3598. மாசு சேர்ந்த முடையுடலார்
மாற்றங் கேட்டு மறுமாற்றம்
தேசு பெருகுந் திருத்தொண்டர்
செப்பு கின்றார் திருவிலிகாள்
பூசு நீறு சாந்தமெனப்
புனைந்த பிரானுக் கானபணி
ஆசி லாநல் லறமாவது
அறிய வருமோ உமக்கென்றார்.
தெளிவுரை : அழுக்குப் படிந்த முடைநாற்றம் உடைய உடலை உடைய சமணர்கள் சொன்ன மாற்றத்தைக் கேட்டு அதற்கு எதிர் மொழியாக ஒளி பெருகும் திருத்தொண்டரான தண்டியடிகள் மெய்த்திரு இல்லாதவர்களே பூசும் விபூதியையே சாந்தம் என்று அணிந்த சிவபெருமானுக்குரிய திருப்பணிகள் எவையாயினும் அவையெல்லாம் குற்றம் அற்ற நல்ல அறமே ஆகும் என்ற உண்மை உமக்குத் தெரியவருமோ? என்று கூறினார்.
3599. அந்தம் இல்லா அறிவுடையார்
உரைப்பக் கேட்ட அறிவில்லார்
சிந்தித் திந்த அறங்கேளாய்
செவியும் இழந்தா யோஎன்ன
மந்த வுணர்வும் விழிக்குருடும்
கேளாச் செவியும் மற்றுமக்கே
இந்த வுலகத் துள்ளனஎன்
றன்பர் பின்னும் இயம்புவார்.
தெளிவுரை : எல்லையற்ற அறிவுடைய தண்டியடிகள் மேற்கண்டவாறு கூற, அதைக்கேட்ட அறிவற்ற சமணர்கள், சிந்தித்து, நாங்கள் கூறிய இந்த அறச்சொல்லைக் கேளாது போனாய்! நீ கண் இழந்ததுடன் செவியையும் இழந்தாய்! என்று கூறினர். மந்தமான உணர்வும், விழியின் குருட்டுத் தன்மையும் கேளாத செவிகளும் உங்களுக்கே இந்த உலகத்தில் உள்ளன, என்று சொல்லி, அன்பரான தண்டியடிகள் மேலும் கூறலானார்.
3600. வில்லால் எயில்மூன் றெரித்தபிரான்
விரையார் கமலச் சேவடிகள்
அல்லால் வேறு காணேன்யான்
அதுநீர் அறிதற் காரென்பார்
நில்லா நிலையீர் உணர்வின்றி
நுங்கண் குருடாய் என்கண்உல
கெல்லாங் காண யான்கண்டால்
என்செய் வீர்என் றெடுத்துரைத்தார்.
தெளிவுரை : மேரு மலையான வில்லினால் மூன்று புரங்களையும் எரித்த இறைவரின் மணமுடைய தாமரை போன்ற செம்மையான திருவடிகளை அல்லாமல் வேறு ஒன்றையும் நான் பார்க்கமாட்டேன். அத்தன்மையை அறிவதற்கு நீவீர் யார்? என்றார். என்றவர், மேலும் நில்லாத நிலையை உடையவர்களே! உணர்விழந்து உம் கண்கள் குருடாக ஆகி, உலகம் எல்லாம் காணும் பொருட்டு என் கண்கள் யான் காண நேரிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என வினவினார்.
3601. அருகர் அதுகேட் டுன்தெய்வத்
தருளால் கண்நீ பெற்றாயேல்
பெருகும் இவ்வூ ரினில்நாங்கள்
பின்னை யிருக்கி லோமென்று
கருகு முருட்டுக் கைகளால்
கொட்டை வாங்கிக் கருத்தின்வழித்
தருகைக் கயிறுந் தறியுமுடன்
பறித்தார் தங்கள் தலைபறித்தார்.
தெளிவுரை : சமணர் அவர் கூறியதைக் கேட்டு உன் தெய்வத்தின் அருளால் நீ கண்ணைப் பெற்றாயானால் பெருகும் இவ்வூரில் நாங்கள் அதன் பின்பு இருக்க மாட்டோம் என்று தலையைப் பறிக்கும் இயல்புடைய அவர்கள் கரிய முருடுகளையுடைய கைகளால் தண்டியடிகளின் கூடையை வலியப் பற்றிப் பிடுங்கிக் கருத்தின் வழியே நிலைதரும் கயிற்றையும் நட்ட தறியையும் உடனே பறித்தனர்.
3602. வெய்ய தொழிலார் செய்கையின்மேல்
வெகுண்ட தண்டி யடிகள்தாம்
மைகொள் கண்டர் பூங்கோயில்
மணிவா யிலின்முன் வந்திறைஞ்சி
ஐய னேஇன்று அமணர்கள்தாம்
என்னை யவமா னஞ்செய்ய
நைவ தானேன் இதுதீர
நல்கு மடியேற் கெனவீழ்ந்தார்.
தெளிவுரை : கொடிய செயலையுடைய சமணர்களின் இச்செய்கையில் சினம் கொண்ட தண்டியடிகள், நஞ்சுடைய கண்டமுடைய இறைவரின் பூங்கோயில் முன்னே வந்து என்னை அவமதித்ததால் நான் மனம் வருந்தலானேன். இதனுக்குத் தீர்வு அடியேனுக்கு அருளல் வேண்டும் என்று வேண்டி நிலத்தில் வீழ்ந்தார்.
3603. பழுது தீர்ப்பார் திருத்தொண்டர்
பரவி விண்ணப் பஞ்செய்து
தொழுது போந்து மடம்புகுந்து
தூய பணிசெய் யப்பெறா
தழுது கங்கு லவர்துயிலக்
கனவி லகில லோகங்கள்
முழுது மளித்த முதல்வனார்
முன்னின் றருளிச் செய்கின்றார்.
தெளிவுரை : குற்றத்தைப் போக்குபவராய்த் திருத்தொண்டரான தண்டியடிகள் முன் கூறியவாறு வணங்கி வேண்டிச் சென்று தம் திருமடத்தில் புகுந்து, தூய்மையாக்கும் திருப்பணியைச் செய்யப் பெறாததால், அழுது, அன்றிரவு அவர் உறக்கம் கொண்டார். கொள்ள, எல்லா உலகங்களையும் முற்றவும் காக்கின்ற முதல்வரான சிவபெருமான் அவர் முன்பு தோன்றியருளி அருள் செய்வாராய்,
3604. நெஞ்சின் மருவும் கவலையினை
ஒழிநீ நின்கண் விழித்துஅந்த
வஞ்ச அமணர் தங்கள்கண்
மறையு மாறு காண்கின்றாய்
அஞ்ச வேண்டா வென்றருளி
அவர்பால் நீங்கி அவ்விரவே
துஞ்சும் இருளின் அரசன்பாற்
தோன்றிக் கனவி லருள் புரிவார்.
தெளிவுரை : நீ மனத்தில் கொண்ட கவலையை ஒழிப்பாயாக! உன் கண்கள் விழித்து, அந்தச் சமணர்கள் தம் கண்கள் மறையும்படி நீ காண்பாய். அஞ்ச வேண்டா! என்று கூறி மறைந்து, அந்த இரவிலே உறங்கும் இரவுப் பொழுதிலே மன்னிடத்தில் கனவில் தோன்றி, அருள் செய்யலானார்.
3605. தண்டி நமக்குக் குளங்கல்லக்
கண்ட அமணர் தரியாராய்
மிண்டு செய்து பணிவிலக்க
வெகுண்டான் அவன்பால் நீமேவிக்
கொண்ட குறிப்பால் அவன்கருத்தை
முடிப்பா யென்று கொளவருளித்
தொண்டர் இடுக்கண் நீங்கஎழுந்
தருளி னார்அத் தொழிலுவப்பார்.
தெளிவுரை : தண்டி நமக்காகக் குளம் தோண்டுவதைக் கண்ட சமணர்கள் பொறுத்துக் கொள்ளாதவராகி, வலிந்து அத்திருப்பணியைத் தடுத்துவிட, அவன் சினம் கொண்டான். அவனிடம் நீ போய் அவன் உட்கொண்ட குறிப்பால் அவனது கருத்தை முடிப்பாயாக! என்று மன்னன் மனத்துள் கொள்ளுமாறு அருள் செய்து, தொண்டரின் துன்பம் நீங்கும்படி செய்தார், அத்தொழிலில் மகிழ்பவரான இறைவர்.
3606. வேந்தன் அதுகண் டப்பொழுதே
விழித்து மெய்யில் மயிர் முகிழ்ப்பப்
பூந்தண் கொன்றை வேய்ந்தவரைப்
போற்றிப் புலரத் தொண்டர்பால்
சார்ந்து புகுந்த படிவிளம்பத்
தம்பி ரானர் அருள் நினைந்தே
ஏய்ந்த மன்னன் கேட்பஇது
புகுந்த வண்ணம் இயம்புவார்.
தெளிவுரை : மன்னன் அக்கனாவைக் கண்டு அப்போதே உறக்கத்தினின்று விழித்து உறக்கம் நீங்கி உடலில் மயிர்க் கூச்செரிய, அழகிய கொன்றை மலரைச் சூடிய சிவபெருமானைத் துதித்துப் பொழுது விடியத் திருத்தொண்டரான தண்டியடிகளைச் சார்ந்து தனக்குக் கனவில் நிகழ்ந்ததைக் கூறத் (தண்டியடிகள்) அதைக் கேட்டுத் தம் இறைவரின் திருவருளை எண்ணி மன்னன் கேட்குமாறு நிகழ்ந்ததைக் கூறலானார்.
3607. மன்ன கேள்யான் மழவிடையார்
மகிழுந் தீர்த்தக் குளங்கல்லத்
துன்னும் அமணர் அங்கணைந்தீ
தறமன் றென்று பலசொல்லிப்
பின்னுங் கயிறு தடவுதற்கியான்
பிணித்த தறிக ளவைவாங்கி
என்னை வலிசெய் தியான்கல்லுங்
கொட்டைப் பறித்தா என்றியம்பி.
தெளிவுரை : மன்னனே! கேட்பாயாக! நான் இளமை பொருந்திய காளையையுடைய சிவபெருமான் மகிழும் குளத்தைத் தோண்ட, நெருங்கும் சமணர்கள் அங்கு வந்து இஃது அறமன்று என்று பலவாறு வாயால் சொல்லி, அதன் மேலும் கையால் தடவி, வழி காண்பதற்காக நான் கயிறு கட்டிய நடுதறிகளையும் பிடுங்கி, என்னை வலியத் துன்புறுத்தி நான் மண்ணைத் தோண்டுவதற்கு வைத்திருந்த கூடையையும் பறித்தார்கள் எனச் (சொன்னார்) சொல்லி,
3608. அந்த னான வுனக்கறிவும்
இல்லை யென்றா ரியானதனுக்
கெந்தை பெருமா னருளால்யான்
விழிக்கி லென்செய் வீரென்ன
இந்த வூரில் இருக்கிலோம்
என்றே ஒட்டி னார்இதுமேல்
வந்த வாறு கண்டிந்த
வழக்கை முடிப்ப தெனமொழிந்தார்.
தெளிவுரை : குருடனான உனக்கு அறிவும் இல்லை! என்று சமணர் உரைத்தனர். அதற்கு நான், எம் சிவபெருமான் அருளால் நான் கண் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று வினவ. அவர்கள், இந்த ஊரில் அதன் பின்பு இருக்கமாட்டோம் எனச் சபதம் செய்து கூறினார்கள். இது நிகழ்ந்ததாகும்! இதன் உண்மை நிலைமை கண்டு இந்த வழக்கை முடிப்பாயாக! என்று தண்டியடிகள் மன்னனிடம் கூறினார்கள்.
3609. அருகர் தம்மை அரசனும்அங்
கழைத்துக் கேட்க அதற்கிசைந்தார்
மருவுந் தொண்டர் முன்போக
மன்னன் பின்போய் மலர்வாவி
அருகு நின்று விறல்தண்டி
யடிகள் தம்மை முகநோக்கிப்
பெருகுந் தவத்தீர் கண்ணருளாற்
பெறுமா காட்டும் எனப்பெரியோர்.
தெளிவுரை : உடனே மன்னனும் சமணர்களை அங்கு வரவழைத்துக் கேட்க, அதற்கு அவர்களும் இசைந்தார்கள். பெருந்தொண்டரான தண்டியடிகள் முன்பு செல்ல, மன்னன் அவர் பின்பு சென்று கமலாலயக் குளத்தின் அருகில் நின்று கொண்டு, ஆற்றலுடைய தண்டியடிகளின் முகத்தைப் பார்த்து, பெருகும் தவத்தை உடையவரே! திருவருளால் நீவீர் கண் பெறும் நிலையைக் காட்டுவீராக! என்று கூறப் பெரியோரான தண்டியடிகள்.
3610. ஏய்ந்த வடிமை சிவனுக்கியான்
என்னில் இன்றென் கண்பெற்று
வேந்த னெதிரே திருவாரூர்
விரவுஞ் சமணர் கண்ணிழப்பார்
ஆய்ந்த பொருளுஞ் சிவபதமே
யாவ தென்றே அஞ்செழுத்தை
வாய்ந்த தொண்டர் எடுத்தோதி
மணிநீர் வாவி மூழ்கினார்.
தெளிவுரை : சிவபெருமானுக்கு நான் பொருந்திய அடியவனாகில், இன்று இந்த மன்னன் எதிரில் நான் எனது கண்களைப் பெற, திருவாரூர் விரவும் சமணர்கள் தம் கண்களை இழப்பார்கள். ஆராய்ந்து துணிந்த முடிவான பொருளும் சிவபதமேயாகும்! என்று சூள் சொல்லித் திருவைந்தெழுத்தைத் திருத்தொண்டர் எடுத்து ஓதி அழகிய நீர் நிலையினுள்ளே முழுகினார்.
3611. தொழுது புனல்மேல் எழுந்தொண்டர்
தூய மலர்க்கண் பெற்றெழுந்தார்
பொழுது தெரியா வகையிமையோர்
பொழிந்தார் செழுந்தண் பூமாரி
இழுதை அமணர் விழித்தேகண்
ணிழந்து தடுமா றக்கண்டு
பழுது செய்த அமண்கெட்ட
தென்று மன்னன் பகர்கின்றான்.
தெளிவுரை : இறைவரின் அருளைத் தொழுது மேலே எழுந்த தொண்டர், தம் தூய்மையான மலர் போன்ற கண்களில் ஒளி பெற்றெழுந்தார். அமணர் விழித்திருந்தும் தம் கண்களை இழந்து தடுமாறுவதைக் கண்டு தீமை செய்த சமண சமயம் கெட்டது என்று மன்னன் சொல்லத் தொடங்கி,
3612. தண்டி யடிகள் தம்முடனே
ஒட்டிக் கெட்ட சமண்குண்டர்
அண்டர் போற்றுந் திருவாரூர்
நின்றும் அகன்று போய்க்கழியக்
கண்ட அமணர் தமையெங்கும்
காணா வண்ணந் துரக்கவென
மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனங்கலங்கி.
தெளிவுரை : தண்டியடிகளுடன் சபதம் செய்து தோற்றுக் கெட்ட சமணர்களாகிய கீழ் மக்கள் வானவர் போற்றும் இந்தத் திருவாரூரினின்றும் நீங்கிச் சென்று போகும்படி கண்டவிடத்தில் இனி எங்கும் காணாதபடி துரத்துக! எனக்கூற, வீரர்கள் நெருங்கிச் சாடியதால், கண் ஒளியை இழந்த அவர்கள் மனம் கலங்கி,
3613. குழியில் விழுவார் நிலைதளர்வார்
கோலும் இல்லை எனவுரைப்பரார்
வழியீ தென்று தூறடைவார்
மாண்டோம் என்பார் மதிகெட்டீர்
அழியும் பொருளை வழிபட்டுஇங்கு
அழிந்தோம் என்பார் அரசனுக்குப்
பழியீ தாமோ என்றுரைப்பார்
பாய்க ளிழப்பார் பறிதலையர்.
தெளிவுரை : குழியில் விழுபவர்களும், நிலை தளர்வார்களும், தடவிச் செல்ல ஊன்றுகோல் இல்லையே என்று கூறுபவர்களும், இது வழி என்று எண்ணிப் போய்ப் புதரை அடைபவர்களும், நாம் மடிந்தோம் என்று சொல்பவர்களும், இது மன்னனுக்குப் பழியாகுமோ? ஆகாது என்பவர்களும், உடுத்த பாய்களையும் இழப்பார்களுமாகி அந்த மயிர் பறித்த தலையையுடைய சமணர்கள்,
3614. பீலி தடவிக் காணாது
பெயர்வார் நின்று பேதுறுவார்
காலி னோடு கைமுறியக்
கல்மேல் இடறி வீழ்வார்கள்
சால நெருங்கி எதிரெதிரே
தம்மில் தாமே முட்டிடுவார்
மாலு மனமும் அழிந்தோடி
வழிக ளறியார் மயங்குவார்.
தெளிவுரை : தாம் கையில் ஏந்தும் மயிற் பீலிக் கற்றையைக் காணாமல் நகர்ந்து செல்பவர்களும், சொல்லாமல் நின்று மயங்குவார்களும், கால்களுடன் கைகள் முறியும்படி கல்லின் மீது இடறி விழுபவர்களும், மிகவும் நெருக்கமாய்ப் போய்த் தங்களுக்குள் தாங்களே முட்டிக் கொள்பவர்களும், ஆகி மனம் அழிந்து வழிகள் அறியாதவர்களாய்த் தடுமாறுபவர் ஆயினர்.
3615. அன்ன வண்ணம் ஆரூரில்
அமணர் கலக்கங் கண்டவர்தாம்
சொன்ன வண்ண மேஅவரை
ஓடத் தொடர்ந்து துரந்ததற்பின்
பன்னும் பாழி பள்ளிகளும்
பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து
மன்ன னவனும் மனமகிழ்ந்து
வந்து தொண்டர் அடிபணிந்தான்.
தெளிவுரை : அத்தகைய நிலையில் திருவாரூரில் உள்ள சமணர்களின் கலக்கத்தைப் பார்த்து அவர்கள் தாங்களே சபதம் கூறச் சம்மதித்தபடி அவர்களை ஊரில் இல்லாதபடி ஓடத் தொடர்ந்து துரத்தியபின், சொல்லிய சமணர்களின் பாழிகளையும், பள்ளிகளையும் இடித்துக் குளத்தைச் சூழ்ந்த கரையை உரியவாறு அகலமாய் அமைத்து, அரசனும் உள்ளம் மிகவும் மகிழ்ந்து வந்து, தண்டியடிகளை வணங்கினான்.
3616. மன்னன் வணங்கிப் போயினபின்
மாலு மயனும் அறியாத
பொன்னங் கழல்கள் போற்றிசைத்துப்
புரிந்த பணியுங் குறைமுடித்தே
உன்னும் மனத்தால் அஞ்செழுத்தும்
ஓதி வழுவா தொழுகியே
மின்னுஞ் சடையார் அடிநீழல்
மிக்க சிறப்பின் மேவினார்.
தெளிவுரை : இங்ஙனம் மன்னன் வணங்கிச் சென்ற பின்பு திருமாலும் நான்முகனும் அறியாத பொற்பாதங்களை வணங்கித் தாம் செய்த திருப்பணியின் குறையை நிறைவாக்கிய திருவைந்தெழுத்தையும் ஓதி, இந்த ஒழுக்கத்தில் வழுவாத நிலையில் நின்றபடியே ஒளி வீசும் சடையையுடைய சிவபெருமானின் திருவடி நிழலான மிக்க சிறப்பில் பொருந்தினார்.
3617. கண்ணின் மணிக ளவையின்றிக்
கயிறு தடவிக் குளந்தொட்ட
எண்ணில் பெருமைத் திருத்தொண்டர்
பாத மிறைஞ்சி யிடர்நீங்கி
விண்ணில் வாழ்வார் தாம்வேண்டப்
புரங்கள் வெகுண்டார் வேற்காட்டூர்
உண்ணி லாவும் புகழ்த்தொண்டர்
மூர்க்கர் செய்கை யுரைக்கின்றாம்.
தெளிவுரை : கண்ணின் மணியான ஒளியின்றிக் கயிற்றைத் தடவி வழிகண்டு போய்த் திருக்குளத்தைத் தோண்டிய அளவில்லாத பெருமையுடைய திருத்தொண்டரான தண்டியடிகளின் திருவடிகளை வணங்கி இடையூறு நீங்கி, வான் உலகில் வாழும் தேவர்கள் வேண்டுதலுக்கு இணங்கி மூன்று புரங்களையும் எரித்த இறைவரின் திருவேற்காட்டூரில் தோன்றியருளி உள்ளே பெருகும் புகழையுடைய திருத்தொண்டரான மூர்க்க நாயனாரின் திருத்தொண்டின் செயலைச் சொல்கின்றோம்.
தண்டியடிகள் நாயனார் புராணம் முற்றிற்று.

38. மூர்க்க நாயனார் புராணம்
தொண்டை நாட்டில் உள்ள திருவேற்காட்டில் மூர்க்க நாயனார் என்பவர் தோன்றினார். அவர் சிவனடியார்களை உபசரித்து அவர்களை உண்பித்த பின்பே உணவு கொள்வார். அடியார் மகிழ வேண்டுவனவற்றை அளிப்பார். நாளுக்கு நாள் அடியார்கள் அதிகமாய் வரவே அவர் தம் நிலம் முதலியவற்றை விற்று அடியாரை விருந்திட்டு உபசரித்தார். இறுதியில் அவரிடம் சிறுபொருளும் இல்லாது போயிற்று. அவர் சூதாட்டத்தைக் கற்றவர். ஆதலால் சூதாட்டத்தில் பெற்ற பொருளை அடியார்களுக்குச் செலவிட்டார். சில நாட்கள் சென்றபின் சூதாட ஒருவரும் வரவில்லை. பல தலங்களுக்குச் சென்று சூதாடிப் பெற்ற பொருளால் அடியார்களுக்கு விருந்திட்டார். அவர் ஒருநாள் கும்பகோணத்துக்குச் சென்று சூதாடினார். நிறைய பொருள் கிடைத்தது. அதனால் அங்கேயே தங்கியிருந்து சூதாடினார். சூதாடும்போது முதலில் தோற்பார். பின் வெல்வார். சூதாடித் தோற்றவர் பொருளைக் கொடுக்க மறுத்தால் அவரை வாளால் குத்திவிடுவார். அதனால் மூர்க்கர் என்ற பெயரைப் பெற்றார். இங்ஙனம் பணிகளைச் செய்து வந்தவர் இறைவன் திருவடியை அடைந்தார்.
3618. மன்னிப் பெருகும் பெருந்தொண்டை
வளநா டதனில் வயல் பரப்பும்
நன்னித் திலவெண் திரைப்பாலி
நதியின் வடபால் நலங்கொள்பதி
அன்னப் பெடைகள் குடைவாவி
யலர்புக் காட அரங்கினிடை
மின்னுக் கொடிகள் துகிற்கொடிகள்
விழவிற் காடு வேற்காடு.
தெளிவுரை : நிலைபெற்றுப் பெருகும் பெரிய தொண்டை நாட்டில் வயல்களில் பரப்பும் நல்ல முத்துகளை வீசும் அலைகளையுடைய பாலி என்ற ஆற்றின் வடகரையில் நன்மையுடைய பதியானது பெண் அன்னங்கள் தாம் நீர் குடைகின்ற நீர்நிலைகளில் உள்ள தாமரை முதலான பூக்களில் புகுந்து ஆட, ஆடரங்குகளில் மின்னல் கொடி போன்ற பெண்களும் துகிற்கொடிகளும் விழாக்களின் போது ஆடுவதற்குரிய திருவேற்காடு என்பதாம்.
3619. செம்பொற் புரிசைத் திருவேற்கா
டமர்ந்த செய்ய சடைக்கற்றை
நம்பர்க் கும்பர்க் கமுதளித்து
நஞ்சை யமுது செய்தவருக்
கிம்பர்த் தலத்தில் வழியடிமை
யென்றுங் குன்றா வியல்பில்வரும்
தம்பற் றுடைய நிலைவேளாண்
குலத்தல் தலைமை சார்ந்துள்ளார்.
தெளிவுரை : செம்பொன்னால் ஆன மதிலையுடைய திருவேற்காட்டில் விரும்பி எழுந்தருளிய சிவந்த சடையையுடைய இறைவரும் வானவர்களுக்கு அமுதத்தை அளித்துத் தாம் நஞ்சை அமுதமாய் உண்டவருமான சிவபெருமானுக்கு, இவ்வுலகத்தில் இம்மையில் வழி வழியாய் வரும் அடிமைத் திறத்தில் என்றும் தவறாத இயல்பில் வருகின்ற பற்றுடைய நிலையையுடைய வேளாளர் குலத்தில் தலைமையான நிலையைப் பெற்றுள்ளார்.
3620. கோதின் மரபில் பிறந்துவளர்ந்
தறிவு கொண்ட நாள்தொடங்கி
ஆதி முதல்வர் திருநீற்றின்
அடைவே பொருளென் றறிந்தரனார்
காத லடியார்க் கமுதாக்கி
அமுது செய்யக் கண்டுண்ணும்
நீதி முறைமை வழுவாத
நியதி பூண்ட நிலைமையார்.
தெளிவுரை : குற்றம் இல்லாத குலத்தில் பிறந்து வளர்ந்து அறுடவு தெரிந்த நாள் முதலாக ஆதி முதல்வரான சிவபெருமானின் திருநீற்றுச் சார்பே உண்மைப் பொருளாவது என்று உணர்ந்தவராய்ச் சிவபெருமானின் அடியார்களுக்கு உணவு ஆக்கி அவர்கள் முன்னால் உண்ணக் கண்டு, அதன் பின்பு தாம் உண்ணும் முறை தவறாத நியமத்தை மேற்கொண்ட தன்மையுடையவரானார்.
3621. தூய அடிசில் நெய்கன்னல்
சுவையின் கறிக ளவையமைத்து
மேய வடியார் தமைப்போற்றி
விருப்பால் அமுது செய்வித்தே
ஆய பொருளும் அவர்வேண்டும்
படியால் உதவி அன்புமிக
ஏயு மாறு நாடோறும்
இனைய பணிசெய் தின்புற்றார்.
தெளிவுரை : தூய்மையான சோறும், நெய், வெல்லம் சுவையுடைய இனிய கறிகள் என்ற இவைகளும், நன்கு அமைத்து வந்து பொருந்திய அடியார்களை உபசரித்து, முகமன் கூறி விருப்புடனே அமுது செய்வித்து, மற்ற பொருள்களையும் அந்த அடியவர்கள் வேண்டியபடியே உதவி, அன்பு பொருந்துமாறு நாள்தோறும் இத்தகைய தொண்டைச் செய்து இன்பம் அடைந்தார்.
3622. இன்ன செயலின் ஒழுகுநாள்
அடியார் மிகவும் எழுந்தருள
முன்ன முடைமை யானபொருள்
முழுதும் மாள அடிமையுடன்
மன்னு காணி யானநிலம்
மற்று முள்ள திறம்விற்றே
அன்னம் அளித்து மேன்மேலும்
ஆரா மனத்தா ராயினார்.
தெளிவுரை : இத்தகைய செயல்கள் செய்து ஒழுகி வரும் நாளில், அடியார் மிகுதியாய் எழுந்தருளிய படியால் முன்னே தமது உடைமையாய் இருந்த பொருள்கள் யாவும் தீர்ந்து போக அடிமைகளுடன் நிலைபெற்ற காணியான நிலமும் மற்றும் உள்ளவையும் ஆகியவற்றை விற்று அன்னம் அளிப்பதை விடாது செய்து, ஆசை நிறைவு கொள்ளாத மகிழ்ச்சி மிக்க மனத்தை உடையவர் ஆனார்.
3623. அங்கண் அவ்வூர் தமக்கொருபற்று
அடியார் தங்கட் கமுதாக்க
எங்குங் காணா வகைதோன்ற
இலம்பா டெய்தி யிருந்தயர்வார்
தங்கும் வகையால் தாமுன்பு
கற்ற தன்மை நற்சூதால்
பொங்கு பொருளாக் கவுமங்குப்
பொருவா ரின்மை யினிற்போவார்.
தெளிவுரை : அடியார்களுக்கு அமுது ஆக்குவதற்கு அந்நாளில் அந்தவூரில் தமக்கு எவ்விதப் பற்றுக் கோடும் எங்கும் பெறாத நிலை வெளிப்பட வறுமை சேர்ந்து இருந்து மயங்குபவராய், மறவாது தம்மிடத்தில் வந்து தங்கியிருக்குமாறு தாம் முன்நாளில் கற்றுக் கொண்ட நன்மை அமைந்த சூதினால் மிக்கப்பொருளை ஆக்க முயன்றும் அங்குச் சூதாட்டம் செய்வார் இல்லாததால், வெளியே சென்றார்.
3624. பெற்றம் ஏறிப் பலிக்குவரும்
பெருமான் அமருந் தானங்கள்
உற்றன் அன்பாற் சென்றெய்
உருகு முள்ளத் தொடும்பணிந்து
கற்ற சூதால் நியதியாங்
கடனு முடித்தே கருதாரூர்
செற்ற சிலையார் திருக்குடந்தை
யடைந்தார் வந்து சிலநாளில்.
தெளிவுரை : காளையூர்தியில் ஏறிக் கொண்டு, அஞ்சொலீர் பலி எனக் கேட்டு எழுந்தருளும் சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் பலதலங்களிலும் பொருந்திய அன்பினால் போய்ச் சேர்ந்து, உருகும் உள்ளத்துடனே வணங்கித் தாம் கற்ற நல்ல சூதினால் வரும் பொருளைக் கொண்டு வழக்கமாய்த் தாம் செய்யும் செயலை முடித்துக் கொண்டபடியே, பகைவரின் புரங்களை எரித்த வில்லையுடைய இறைவரின் திருக்குடந்தைப் பதியைச் சேர்ந்தார்.
3625. இருளாரும் மணிகண்டர் அடியார்க்கின் னமுதளிக்கப்
பொருளாயம் எய்துதற்குப் புகழ்க்குடந்தை அம்பலத்தே
உருளாயச் சூதாடி யுறுபொருள்வென் றனநம்பர்
அருளாக வேகொண்டங் கமுதுசெய்வித் தின்புறுவார்.
தெளிவுரை : கரிய நிறத்தையுடைய அழகிய கண்டத்தையுடைய சிவபெருமானின் அடியவர்களுக்கு இனிய அமுதை அளிப்பதற்காக, பொருளீட்டம் பொருந்துவதற்குப் புகழை உடைய திருக்குடந்தைப் பொதுவிடத்தில் உருளும் கருவியால் சூதினை ஆடி, அதனால் வரும் பொருளான வெற்றி பெற்றவற்றை இறைவரின் திருவருளாகவே கருதி அங்கு அடியார்க்கு அமுது செய்வித்து இன்பம் அடைவார் ஆனார்.
3626. முற்சூது தாந்தோற்று முதற்பணையம் அவர்கொள்ளப்
பிற்சூது பலமுறையும் வென்றுபெரும் பொருளாக்கிச்
சொற்சூதுதான் மறுத்தாரைச் சுரிகையுரு விக்குத்தி
நற்சூதர் மூர்க்கரெனும் பெயர்பெற்றார் நானிலத்தில்.
தெளிவுரை : முதல் ஆட்டத்தில் தாம் தோல்வியை ஏற்று, முதன் பந்தயப் பணத்தை வைத்தவர் கொள்ளுமாறு செய்து, பின்பு ஆடும் சூதாட்டத்தில் பலமுறையும் தாமே வென்று, பெரும் பொருளைத் தாமே வென்று, பெருகும் பொருளைத் தம்முடையதாக்கி, வஞ்சச் சொற்களால் மறுத்தவர்களை உடைவாளினால் குத்தி, நல்ல சூதாடுபவரான இந்நாயனார் நானிலத்தில் மூர்க்கர் என்ற பெயரைப் பெற்றார்.
3627. சூதினில்வென் றெய்துபொருள் துரிசற்ற நல்லுணர்வில்
தீதகல அமுதாக்கு வார்கொள்ளத் தாந்தீண்டார்
காதலுடன் அடியார்கள் அமுதுசெயக் கடைப்பந்தி
ஏதமிலா வகைதாமும் அமுதுசெய்தங் கிருக்குநாள்.
தெளிவுரை : முன் கண்டவாறு சூதாட்டத்தில் வெற்றி கண்டு பொருந்தும் பொருள் குற்றம் இல்லாத நல் உணர்வின் பயனாய்த் தீமை நீங்கத் தாம் கையாலும் தொடாது அமுதை ஆக்குபவர் கைக்கொள்ளச் செய்து, பெருவிருப்பத்துடன் அடியவர் உணவு உண்ணச் செய்ய, அதன்பின் குற்றமில்லாதபடி கடைப்பந்தியில் இருந்து தாமும் உணவு உண்டு அப்பதியில் தங்கியருந்தார்.  அவ்வாறு தங்கியிருக்கும் நாளில்,
3628. நாதன்தன் அடியார்க்கு நல்லடிசில் நாடோறும்
ஆதரவி னால்அமுது செய்வித்தங் கருளாலே
ஏதங்கள் போயகல இவ்வுலகை விட்டதற்பின்
பூதங்கள் இசைபாட வாடுவார் புரம்புக்கார்.
தெளிவுரை : தலைவரான சிவபெருமானின் அடியவர்களுக்கு நல்ல அமுதினை நாள்தோறும் அன்புடன் அமுது செய்வித்து அங்குத் திருவருளினால் குற்றங்கள் நீங்கப் பெற்றதால் இந்த உலகை விட்ட பின்பு பூதகணங்கள் சூழ்ந்து இசை பாட, ஆடும் சிவபெருமானின் உலகமான சிவபுரத்தில் புகுந்தார்.
3629. வல்லார்கள் தமைவென்று சூதினால் வந்தபொருள்
அல்லாருங் கறைக்கண்டர் அடியவர்கள் தமக்காக்கும்
நல்லார்நற் சூதராம் மூர்க்கர்கழல் நாம்வணங்கிச்
சொல்லார்சீர்ச் சோமாசி மாறர்திறஞ் சொல்லுவாம்.
தெளிவுரை : சூதாடுபவர்களை வெற்றி கொண்டு சூதாட்டத்தால் வந்த பொருளை எல்லாம் கரிய நிறம் பொருந்திய நஞ்சுடைய கண்டரான சிவபெருமானின் அடியவர்களுக்கே திருவமுது ஆக்குதற்கு நல்லாராதலால் நற்சூதர் எனப்பெயர் பெறும் மூக்கரின் திருவடிகளை நாம் வணங்கி, நிறைந்த சொற்களால் புகழும் வேத வாய்மைச் சிறப்புடைய சோமாசி மாற நாயனாரின் திறத்தைச் சொல்லப் புகுகின்றோம்.
மூர்க்க நாயனார் புராணம் முற்றிற்று.

சோமாசிமாற நாயனார் புராணம்
சோழநாட்டில் உள்ள அம்பர் என்ற பதியில் அந்தணர் குலத்தில் சோமாசி மாறர் தோன்றினார். இயற்பெயர் மாறன். வேத விதிப்படி வேள்வி செய்யும் அந்தணர் சோமாசி என்ற பட்டம் பெறுவர். அவர் திருவாரூர் சென்று சுந்தரரிடம் நட்புக் கொண்டிருந்தார். அதனால் சிவலோகத்தை அடைந்தார்.
3630. சூதம் பயிலும் பொழில்அம்பரில் தூய வாய்மை
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர்
ஏதம் புரியும் எயில்செற்றவர்க் கன்பர் வந்தால்
பாதம் பணிந்தா ரமுதூட்டுநற் பண்பின் மிக்கார்.
தெளிவுரை : மிக்க மாமரங்கள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவம்பர் நகரத்தில் தூய்மை செய்கின்ற வாய்மையுடைய வேதங்களைப் பயிலும் மறையவர்களின் குலத்தில் மிகவும் மேம்பட்டு விளங்குபவர், உலகத்துக்குத் துன்பத்தைச் செய்த மூன்று மதில்களையும் எரித்த இறைவருக்கு அன்பர்கள் வந்தால் அவர்களின் திருவடிகளில் வணங்கி அமுது ஊட்டுகின்ற நல்பண்பில் மிக்கவர் சோமாசி மாற நாயனார்.
3631. யாழின் மொழியாள் தனிப்பாகரைப் போற்றும் யாகம்
ஊழின் முறைமை வழுவாதுல கங்க ளான
ஏழும் உவப்பப் புரிந்தின்புறச் செய்த பேற்றால்
வாழுந் திறம்ஈசர் மலர்க்கழல் வாழ்த்தல் என்பார்.
தெளிவுரை : யாழ் போன்ற இனிய சொல்லையுடைய உமையம்மையாரின் ஒருபாகரான இறைவரைப் போற்றுகின்ற சிவயாகத்தை வழிபடுகின்ற விதிமுறை தவறாது, ஏழ் உலகங்களும் மகிழ்ந்து இன்பம் அடையும்படி செய்த பேற்றினால் உயிர்கள் நலவாழ்வு அடையும் வழியாவது சிவபெருமானின் திருவடிமலர்களை வாழ்த்துவதே ஆகும் எனத் துணிபவராய்.
3632. எத்தன் மையரா யினும்ஈசனுக் கன்பர் என்றால்
அத்தன் மையர் தாம்நமையாள்பவர் என்று கொள்வார்
சித்தந் தெளியச் சிவன்அஞ்செழுத் தோது வாய்மை
நித்தம் நியமம் எனப்போற்றும் நெறியில் நின்றார்.
தெளிவுரை : எத்தகைய தன்மையுடையரானாலும் சிவபெருமானுக்கு அன்பர் என்றால், அவரே நம்மை ஆளாகவுடையவர் என்று துணிபு கொண்டவராய்ச் சித்தம் தெளிவு பெறும் பொருட்டுச் சிவனது திருவைந்தெழுத்தையும் விதிப்படி ஓதும் வாய்மையையே நாள்தோறும் நியமம் எனக்கொண்டு போற்றும் ஒழுக்கத்தில் நின்றார்.
3633. சீருந் திருவும் பொலியுந்திரு வாரூர் எய்தி
ஆரந் திகழ்மார்பின் அணுக்கவன் தொண்டர்க் கன்பால்
சாரும் பெருநண்பு சிறப்ப அடைந்து தங்கிப்
பாரும் விசும்பும் பணியும்பதம் பற்றி யுள்ளார்.
தெளிவுரை : சிறப்பும் சைவ மெய்த்திருவும் மிகவும் நல்கும் திருவாரூரைச் சேர்ந்து ஆரங்கள் விளங்கும் மார்பையுடைய அணுக்கத் தொண்டரான, வன்தொண்டரான சுந்தரர்க்கு அப்பால் சார்கின்ற பெருநட்பைச் சிறப்பாகப் பெற்று அங்குத் தங்கி மண்ணுலகும் விண்ணுலகும் பணிகின்ற அவரது திருவடிகளைப் பற்றாக அந்நாயனார் அடைந்துள்ளார்.
3634. துன்றும் புலன்ஐந் துடன்ஆறு தொகுத்த குற்றம்
வென்றிங் கிதுநன் னெறிசேரும் விளக்க மென்றே
வன்றொண்டர் பாதந் தொழுதான சிறப்பு வாய்ப்ப
வென்றும் நிலவுஞ் சிவலோகத்தில் இன்ப முற்றார்.
தெளிவுரை : பொருந்திய ஐம்புலக் குறும்புகளுடன் ஆறு குற்றங்களையும் வெற்றி கொண்டு, இம்மையில் சைவ நெறியில் சேர்ந்து உய்யும் விளக்கம் இதுவே என்று துணிந்து சுந்தரரின் திருவடிகளைத் துதித்து, அதனால் பெற்ற சிறப்பு வாய்க்கப் பெற்றமையால் என்றும் அழியாத நித்தியமான சிவலோகத்தில் வாழும் இன்பத்தைப் பெற்றார்.
சோமாசி மாற நாயனார் புராணம் முற்றிற்று.
சுந்தரமூர்த்தி நாயனார் துதி
3635. பணையும் தடமும் புடைசூழும்
ஒற்றி யூரிற் பாகத்தோர்
துணையுந் தாமும் பிரியாதார்
தோழத் தம்பி ரானாரை
இணையுங் கொங்கைச் சங்கிலியார்
எழின்மென் பணைத்தோ ளெய்துவிக்க
அணையு மொருவர் சரணமே
அரண மாக அடைந்தோமே.
தெளிவுரை : வயல்களும் நீர்நிலைகளும் பக்கம் எங்கும் சூழ்ந்த திருவொற்றியூரிலே, தம் ஒரு பாகத்தில் உமையம்மையாரும் தாமும் பிரியாது உள்ளவரான இறைவர், தம்பிரான் தோழரை இணையான கொங்கைகளையுடைய சங்கிலியாரின் அழகிய மென்மையான பணைத்த தோள்களையடையும்படி செய்ய, அதனால் சென்றடையும் ஒருவரான நம்பியின் திருவடிகளையே நமக்குக் காப்பாய் அடைந்தோம்.
வம்பறா வரிவண்டுச் சருக்கம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக