புதன், 1 ஜனவரி, 2014

”குரங்கு புத்தி’ Part II ஆஞ்ஜநேய ஸ்வாமி யார்?

ராதே கிருஷ்ணா 01-01-2014

”குரங்கு புத்தி’ Part II ஆஞ்ஜநேய ஸ்வாமி யார்?


From the album: Timeline Photos
By Kalyanasundaram Ramachandaran
”குரங்கு புத்தி’ Part II
ஆஞ்ஜநேய ஸ்வாமி யார்?

சஞ்சலத்துக்கே பேர்போன கபி இனத்தில் பிறந்த அவர் ஸதாகாலமும் சஞ்சலித்துக் கொண்டேயிருக்கும் வாயுவுக்குப் புத்ரர் ! வாயு குமாரர். ‘வாதாத்மஜர்’ என்றும் சொல்வார்கள். ‘வாத’ என்றாலும் வாயுதானே? ‘ஆத்மஜன்’ என்றால் புத்ரன். வாத – ஆத்மஜன் என்றால் வாயு புத்ரன்.
வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி
‘யூதம்’ என்றால் கூட்டம். ஸேனை. வானரப்படையில் முக்யஸ்தர் இவரே. ஆனபடியால் ‘வாநர-யூத-முக்யர்’.
இது ச்லோகத்தின் பின் பாதி. முன் பாதி என்ன? அதிலே என்ன சொல்லியிருக்கிறது?
வாயுவேகம், மனோவேகம் என்று இரண்டு சொன்னேனே, அந்த இரண்டு வேகமும் படைத்தவர் இவர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் மனஸ், இந்த்ரியங்கள் ஆகியவற்றின் சலனத்தில் அல்ல. சரீரத்தாலே செய்கிற கார்யத்தில்தான் வாயுவேக, மனோவேகக்காரராக இருக்கிறவர்.
மனோ – ஜவம் மாருத – துல்ய – வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்
‘மனோ-ஜவம்’ – மனஸைப் போன்ற வேகம் கொண்டவர். ‘ஜவம்’ என்றால் வேகம்.
‘மாருத – துல்ய – வேகம்’ – காற்றுக்கு ஸமமான வேகமுடையவர். ‘மாருதம்’ என்றாலும் காற்றுதான். ‘மந்த மாருதம்’ என்கிறோமல்லவா? மாருதத்தின் புத்ரர் என்பதால்தான் அவருக்கு ‘மாருதி’ என்று பெயர். ‘வீர மாருதி கம்பீர மாருதி’ என்று (பஜனையில்) பாடுவார்கள்.
ஓயாமல் சலிக்கிற மனஸைப் போல ‘மனோஜவர்’ : அப்படியே, ஓயாமல் சலித்துக் கொண்டிருக்கிற வாயுவைப் போல ‘மாருத-துல்ய-வேகர்’; அவரே வாயுவின் பிள்ளைதான்- ‘வாதாத்மஜர்’; சஞ்சல ஸ்வபாவத்துக்கே பேர் போன கபிகுல முக்யஸ்தராக இருப்பவர் வேற- ‘வாநர-யூத-முக்யர்!’.
இப்படியெல்லாம் இருக்கிறவருடைய ஆச்சர்யமான மஹிமை என்ன என்றால், இவரையே,
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
என்று ஸ்தோத்ரிக்கும்படியாவும் இருக்கிறார் !
புலன்களை வென்றவர் இவர்: ‘ஜிதேந்த்ரியர்’- ஜித இந்த்ரியர்: ஜயிக்கப்பட்ட இந்த்ரியத்தை உடையவர். மனஸ்தான் அத்தனை இந்த்ரிய கார்யத்துக்கும் மூலம். ஆகையால் அதை ஜயிப்பவர்தான் ஜிதேந்த்ரியர். மஹா சஞ்சலம் வாய்ந்த மனஸை ஜயித்த வாய்ந்த மனஸை ஜயித்த ஜிதேந்த்ரியர் இவர்.
அதனாலேதான் புத்திமான்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள ‘புத்திமதாம் வரிஷ்ட’ராகி யிருக்கிறார். மனஸை நல்லதிலேயே ‘ஸ்டெடி’யாக நிறுத்தி வைப்பதுதான் புத்தி. ஆகையினாலே ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்ஜநேய ஸ்வாமி ‘புத்திமதாம் வரிஷ்ட’ராயிருக்கிறார்.
‘புத்திமான்’ என்று சொன்னாலே உசத்திதான். அதைவிட உசத்தி ‘புத்திமதாம் வர’ என்று சொல்லியிருந்தால். அப்படிச் சொல்லியிருந்தால் ‘புத்திமான்களில் சிறந்தவர்’ என்று அர்த்தம் கொடுக்கும். அதையும்விட உசத்தி, ‘புத்தி மதாம் வரீய’ என்று சொல்லியிருந்தால். சிறப்புப் பொருந்தியவர்களிலேயே ஒருத்தரை மற்றவரோடு ஒப்பிட்டு, ‘கம்பேரடிவ்’ – ஆக அவர் மற்றவர்களை விட உயர்வு பொருந்தியவராக இருக்கும் போது ‘வரீய’ என்பர்கள். ஆனால், ஆஞ்ஜநேயரை இப்படிச் சொன்னால்கூடப் போதாது ! இதையும்விட உசத்தியாக, ‘இதற்கு மேலே உசத்தியில்லை ; இவரோடுகூட ‘கம்பேரிஸ’னுக்கும் இடமில்லை; இவர்தான் புத்திக்கு ‘ஸூபர்லேடிவ்’; புத்திமான்கள் அத்தனை பேருக்கும் உச்சத்தில் இவரைத்தான் வைக்கணும்’ என்றே (ச்லோகத்தில்) ‘புத்திமதாம் வரிஷ்ட’ என்று சொல்லியிருக்கிறது. ‘வரிஷ்ட’தான் சிறப்பின் உச்சஸ்தானம். அதற்கு மேலேயும் இல்லை, ஸமதையும் இல்லை, அதற்கு அடுத்தபடியாக ‘கம்பேர்’ பண்ணக்கூட இன்னொன்று இல்லை.
ஞானிகளில்கூட இப்படி ப்ரஹ்மவித், ப்ரஹ்மவித்வரன், ப்ரஹ்மவித்வரீயன், ப்ரஹ்மவித்வரிஷ்டன் என்று உயர்த்திக் கொண்டே போவதுண்டு. மாருதி புத்திமதாம் வரிஷ்டர்.
ஆனால் இந்த இந்த்ரிய ஜயம், புத்திச் சிறப்பு எல்லாவற்றையும்விடப் பெரிய அவருடைய பெருமை என்ன என்றால் அவர் ராமதாஸனாக இருந்து, ‘பகவானுக்கு இவரைப் போலப் பணி புரிந்தவரில்லை’ என்று இக்ர ஸ்தானம் (முதலிடம்) பக்திமான்களுக்கும் வரிஷ்டராயிக்கிறாரே, அதுதான். தேஹ சக்தியோடு, புத்தி நுட்பத்தையும் ரொம்பவும் காட்டிச் செய்ய வேண்டிய பணி தூது போவது. அந்தத் தூதுப் பணியை ரொம்பவும் சிறப்பாகச் செய்து, ஸாக்ஷாத் ஸீதா-ராமர்களுக்கே துக்கத்தைப் போக்கிப் பெரிய நம்பிக்கையையும் உத்ஸாஹத்தையும் ஊட்டினாரே, அதற்காகத்தான் முக்யமாக அவரைத் தலைவணங்கிப் பணிய வேண்டும். ‘ஸ்ரீ ராமதூதாம் சிரஸா நமாமி’ என்று பாதத்தில் விழுந்து நமஸ்காரம் பண்ண வேண்டும்.
மனோ – ஜவம் மாருத – துல்ய – வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக