செவ்வாய், 7 ஜனவரி, 2014

பத்திரப்பதிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

ராதே கிருஷ்ணா 08-01-2014


பத்திரப்பதிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைFrom the album: Timeline Photos
By R.r. Murrugesan
பத்திரப்பதிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

சொந்த வீட்டு கனவை நினைவாக்கும் முதல் அஸ்திவாரமாக பத்திரப்பதிவு அமைகிறது. வாங்கும் இடம் நமக்கு உரிமையுடையது என்பதை உறுதி செய்யும் அடிப்படை தாக்கீதாக இருக்கும் பத்திரப்பதிவை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.

* வாங்கும் இடத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லை என்பதை அது சம்பந்தமான ஆவணங்கள் மூலம் சரிபார்த்த பிறகு இடத்தின் விலையை பேசி முடிவு எடுத்ததும் வழிகாட்டி மதிப்பின்படி தான் பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும்.

* இடத்துக்கான வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பதை அந்த இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று தெரிந்து கொள்வது நல்லது. பின்னர் அந்த மதிப்புக்கு ஏற்ப முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.

* அதைத்தொடர்ந்து சொத்து தொடர்பான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு எழுத்தரை நாடி பத்திரம் எழுதும் நடவடிக்கையை தொடங்க வேண்டும். அப்போது பத்திரத்தில் சேர்க்க வேண்டிய முக்கியமான விவரங்கள் விடுபட்டு போகாமல் சேர்க்கப்பட்டு இருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும். அதற்கு நேரடியாக முத்திரைத்தாளில் எழுத தொடங்காமல் முதலில் ஒரு பேப்பரில் எழுதி பார்த்து விவரங்கள் அனைத்தும் இடம் பெற்று இருக்கிறதா? என்று அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

* ஒருமுறைக்கு இருமுறை படித்து பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் முத்திரைத்தாளில் எழுத வேண்டும்.

* முத்திரைத்தாளில் சொத்து சம்பந்தமான விவரங்கள் அனைத்தும் தெளிவாக குறிப்பிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். முக்கியமாக சொத்தை விற்பனை செய்பவரின் பெயர், அவருடைய தந்தை பெயர், முகவரி, சொத்து தொடர்பான விவரங்கள், அதை விற்பனை செய்ய அவருக்கு உண்டான அதிகாரம், விற்க சம்மதித்த விவரம், சொத்தை வாங்குபவர் பெயர், தந்தை பெயர், முகவரி, சொத்து விற்பனைக்கு பரிமாறிக்கொண்ட தொகை, சாட்சிகள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்க வேண்டும்.

* வாங்கும் இடத்தின் அளவு எவ்வளவு? அது இருக்கும் திசை, அதை சூழ்ந்துள்ள விவர குறிப்புகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

* இந்த விவரங்களில் பிழைகள் எதுவும் இல்லாதவாறு சரி பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக அவசர கதியில் பத்திரப்பதிவுக்கான வேலை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுவே பிழைகள் நிகழ்வதை பெரும்பாலும் தடுக்கும்.

* பத்திரப்பதிவு செய்யும் நாளில் வாங்கும் சொத்துக்கு கொடுத்திருக்கும் முன்தொகை போக மீதமுள்ள தொகையை கொடுக்க வேண்டும். அதற்கு முன்பு மொத்த பணத்தையும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

* பத்திரப்பதிவு செய்யும் நேரத்தில் சொத்தை வாங்குபவர், விற்பவர், சாட்சிகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருப்பதற்கு ஏதுவாக சில மணி நேரத்துக்கு முன்பே சென்று விட வேண்டும்.

* பத்திரத்தில் இடம்பெறும் விற்பவர், வாங்குபவர்களின் புகைப்படங்கள் தெளிவாகவும் சமீபத்தில் எடுக்கப்பட்டதாகவும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

* பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான ஆவணங்களின் ஒரிஜினல்கள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும்.

* ஆவண சரிபார்ப்புக்கு பின்னர் பத்திரப்பதிவு முடிந்ததும் அதற்குரிய ரசீதை கேட்டு வாங்கவேண்டும். சில நாட்களுக்கு பிறகு அந்த ரசீதை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து பத்திரத்தை வாங்கி விட வேண்டும். அதை வாங்குவதற்கு தாமதம் செய்யக்கூடாது. அதுபோல் பத்திரம் வாங்கிய உடனே பட்டா மாற்றத்துக்கும் உடனே விண்ணப்பித்து விட வேண்டும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக