புதன், 1 ஜனவரி, 2014

காஞ்சி மகாபெரியவா

ராதே கிருஷ்ணா 01-01-2014

காஞ்சி மகாபெரியவா
December 16, 2013 


கர்மாவுக்குண்டான பலன்...!!!
-மஹா பெரியவா

[ ஒரு சாதாரண, அன்றாடம் கவனத்தில் கூட வராத PIN னை வைத்தே, எப்பேர்பட்ட பெரிய சந்தேஹத்தை போக்கிவிட்டார்!]

செகந்தராபாதில் பெரியவா முகாம். அப்போது ரயில்வேயில் மூத்த அதிகாரிகள் சிலபேர் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தனர். அவர்களுக்கு ஒரு பெரிய குறை. அது என்னவென்றால்..........

"பெரியவாளோட அனுக்ரகத்தால எங்களோட கர்மானுஷ்டானங்களை எல்லாம் கூடியவரைக்கும் விடாமப் பண்ணிண்டு இருக்கோம். ஆனா.........இந்த ஊர்ல, பூஜை, ஸ்ராத்தம், தர்ப்பணம் இதெல்லாத்தையும் சரியாப் பண்ணிவெக்க, வேதம் படிச்ச சாஸ்த்ரிகள் இல்லே! ஒரே ஒர்த்தர்தான் இருந்தார்.......அவருக்கும் பண்ணி வெக்கும்போது அவர் சொல்ற மந்த்ரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை........அர்த்தம் தெரியாம கர்மாக்களை பண்றதை, எங்காத்து பிள்ளைகள் ஏத்துக்க மாட்டேங்கறா........இந்தக் காலத்து பசங்களாச்சே! அதான்......பெரியவா தயவுபண்ணி மடத்துலேர்ந்து யாராவது வேதம் படிச்ச சாஸ்த்ரிகளா பாத்து இந்த ஊருக்கு அனுப்பிச்சுக் குடுக்கணும்" என்று ப்ரார் த்தனை பண்ணினார்கள்.

"ஒங்காத்து பிள்ளைகள் சொல்றதுலேயும் ஞாயம் இருக்கு.........." என்று அவர் ஆரம்பித்தபோது, ஸ்ரீமடத்துக்கான அன்றைய தபால்களை எடுத்துக் கொண்டு ஒரு postman வந்தார். பெரியவா மேலாக சில கடிதங்களைப் படித்துவிட்டு, ஒரு லெட்டரை எடுத்தார். அதில் PIN என்று இருந்த இடத்தை அந்த அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி, "PIN ..ன்னு போட்டிருக்கே.....அதோட அர்த்தம் தெரியுமா?"

ரொம்ப சாதாரண கேள்விதான். ஆனால் அந்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை. கொண்டுவந்த தபால்காரருக்கும் தெரியவில்லை.

"POSTAL INDEX NUMBER " என்று தானே அதற்கு விளக்கமும் குடுத்தார். சிரித்துக்கொண்டே அந்த அதிகாரிகளைப் பார்த்து " நீங்கள்ளாம் நெறைய படிச்சு பெரிய உத்தியோகம் பாக்கறவா.........ஆனா, சாதாரண தபால்ல வர PIN க்கு ஒங்களுக்கு அர்த்தம் தெரியலே........அவ்வளவு ஏன்? PINCODE ன்னு எதையோ எழுதின அந்த ஆஸாமிக்கே கூட அதோட அர்த்தம் தெரியாம இருக்கலாம். ஆனா..........PINCODE ன்னு போட்டிருக்கற எடத்ல சரியான நம்பரை எழுதிட்டா........அது சரியா போய்சேர வேண்டிய எடத்துக்கு போறா மாதிரி.........பண்ணி வெக்கற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டாலும், எந்த கர்மாவுக்கு எந்த மந்த்ரம் சொல்லணுமோ....அதை செரியா சொன்னா, அதுக்குண்டான பலனை அது குடுக்கும்! அதுல ஒங்களுக்கு எந்த விதமான சந்தேஹமும் வேணாம். அதுனால, இப்போ இருக்கற ப்ரோஹிதரை நிறுத்தாம, நீங்க பண்ண வேண்டிய கர்மாக்களை ஸ்ரத்தையோட பண்ணிண்டு வாங்கோ! ஒரு கொறைவும் வராது!" கையைத் தூக்கி ஆசிர்வதித்தார்.

அதிகாரிகள் விக்கித்துப் போனார்கள்! ஒரு சாதாரண, அன்றாடம் கவனத்தில் கூட வராத PIN னை வைத்தே, எப்பேர்பட்ட பெரிய சந்தேஹத்தை போக்கிவிட்டார்!


December 15, 2013 · Edited 


"எழுத்துக்களை அறியும்போதே மதத்திலும் இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தித் தர ஜகத்குருவின் சுவையான பாடம்."

ரா.கணபதி அண்ணாவின் “மைத்ரீம் பஜத’….


மேனா எனப்படும் பல்லக்கு ஸ்ரீபெரியவாளுக்குச் ‘சென்றால் ஊர்தியாம்; இருந்தால் சிங்காசனமாம்; புணையாம்’ (உறங்கப் பாயாம்)! ‘இருந்த திருக்கோல’த்தில் மேனாவுக்குள்ளிருந்து அவர் ராஜ்யபாரம் நடத்துவார். அப்படி ஒரு நாள்.

பக்கத்தில் ஒரு பெண் குழந்தை வந்து நின்றது.

“பேர் என்ன?” என்று விசாரித்தார் பெருமான்.

“தீபா” என்று கீச்சுக்குரலில் குட்டி கூறிற்று.

பெரியவாளுக்கு அது சரியாகக் காது கேட்கவில்லை. குழந்தையிடம், “நீ சொன்னது எனக்குக் கேக்கலியே! பலமாச் சொல்லும்மா”! என்றார்.

அது அழுத்தந்திருத்தமாக, “D for Donkey, E for Egg, இன்னொரு E for Elephant, P for People, A for Ant” என்றது.

பெரியவாள் மெய்யாலுமே அதில் வியப்படைந்தாலும் அவ்வியப்பை ஆயிரமாகப் பெருக்கி அபிநயித்து, “பேஷ், பேஷ், மஹா கெட்டிக்காரியா இருக்கியே! பொளந்து தள்றியே!” என்று குட்டியைச் சிலாகித்தார்.

அதற்கு ஏக மகிழ்ச்சி.

சின்னஞ் சிறிசிடம் பென்னம் பெரியவர் தொடர்ந்தார்: “நீ நன்னாதான் சொன்னே, ஆனா ஒம் பேரோட ‘டாங்கி’யையும் ‘எக்’கையும் சேக்கறதுக்குப் பதிலா நான் இன்னூரு தினுஸா சொல்லித் தரட்டுமா? ரொம்ப ஒஸ்த்தியானவாளோட சேத்துச் சொல்லித் தரேன். நீ D-e-e-p-aன்னு அஞ்சு எழுத்துல சொன்ன பேருக்கே இன்னுங் கொஞ்சம் ஈஸியா D-i-p-aன்னு நாலு எழுத்துலயும் ஸ்பெல்லிங் சொல்லலாம். அப்படி வெச்சுக்கலாம்.

“D for Devi, தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார். அம்மாஸ்வாமியா அவர் ரொம்ப அன்போட வரச்சே தேவின்னு பேரு. அம்மன் கோவில்னு கோவில்லே பாத்திருக்கியோ?”

“பாத்திருக்கேன்”.

“அங்கே இருக்கிற அம்மன் தான் தேவி. எங்கே சொல்லு, D for Devi”.

“D for Devi”.

”பேஷ்! அப்புறம் நீ ரெண்டு E சொன்னதுக்குப் பதிலா ஒரே I. I for Ilango. இ-ள-ங்-கோ. சொல்லு”.

“இளங்கோ அப்படின்னா?”

“இளங்கோ-ங்கிறவர்தான் தமிழ்லயே ரொம்ப ஒஸ்த்தியான பொயட்ரி கதை எழுதினவர். கண்ணகி-ன்னு ஒரு அம்மாவைப் பத்தி பொயட்ரியாவே ஸ்டோரி சொன்னவர். அந்த ஸ்டோரி ரொம்ப நன்னா இருக்கும். எனக்கு இப்ப சொல்றதுக்கு டயம் இல்லே. அப்பாவைப் பொஸ்தகம் வாங்கித் தரச் சொல்லு. I for Ilango”.

“I for Ilango”

”அப்புறம் P for Prahlada – ப்ரஹ்லாதன்…”

“தெரியும், தெரியும். பக்தியா இருந்த boy. அவனுக்காக Godஏ சிங்கம் மாதிரி வந்து அவனுக்கு enemy-யா இருந்த father-ஐ kill பண்ணினார்”.

“பேஷ், பேஷ், நன்னா தெரிஞ்சு வெச்சுண்டிருக்கியே! கடைசியா, A for Anjaneya. ஆஞ்சநேயர் தெரியுமா?”

”ஊஹூம்”.

“ஹநுமார்?”

”தெரியும். Monkey-God”.

“அவரே தான். அவருக்கே தான் ஆஞ்சநேயர்னு பேரு. சொல்லு”.

“ஆஞ்சநேயர். A for Anjaneya.”.

“கரெக்டா சொல்லிட்டே! இந்தாம்மா!” என்று பாலகியிடம் கற்கண்டை வீசினார் அருளாளர்.

“D for Devi, I for Ilango” என்று சொல்லியவாறு துள்ளி ஓடினாள் சூட்டிகைச் சிறுமி.

எழுத்துக்களை அறியும்போதே மதத்திலும் இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தித் தர ஜகத்குருவின் சுவையான பாடம்.

December 15, 2013 "உங்களில் எத்தனை பேருக்கு "சாம்பார்" பண்ணத் தெரியும்?"
.
மகா பெரியவாளின் கேள்வி.[மகா பெரியவாளின் அறிவுரைகள் பல முறை நகைச்சுவையுடன் கலந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்கள் பல முறை பக்தர்கள் முன் நடந்துள்ளது.)

ஒருமுறை இருபதுபேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் அவரை தரிசிக்க வந்திருந்தனர். ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் அமர்ந்திருக்க, அனைவரையும் ஆசிர்வதிக்கும் முன் பெரியவர் ஆண்கள் கூட்டத்தை நோக்கி கேட்டார்.

"உங்களில் எத்தனை பேருக்கு "சாம்பார்" பண்ணத் தெரியும்?".

திடீரென்று சம்பந்தமில்லாத கேள்வியை கேட்டு அதிர்ந்து போனாலும், அனைவரும் சமாளித்துக் கொண்டு கை தூக்கினர்.

பெண்கள் அமர்ந்திருந்த பக்கத்தை நோக்கி "இந்த கேள்வி உங்களுக்கு இல்லை. கையை கீழே இறக்குங்கள்" என்றுவிட்டு ஆண்கள் அமர்ந்திருந்த திசையை நோக்கி "சரி! சாம்பார் செய்வது எப்படி என்று விளக்குங்கள்" என்றார்.

ஒரு நாள் கூட சமையல் அறை பக்கம் எட்டிக்கூட பார்க்காத ஆண்கள் பலரும் பலவிதத்தில் விவரித்தனர்.

"சம்பார்பொடி, தேவையான உப்பை, புளி தண்ணீர் இவை கலந்து கொதிக்க வைத்தால் சாம்பார் ரெடி" இது ஒருவர் விளக்கம்.

"மிளகாய் வற்றலை தேவையான பருப்பு வகைகளுடன் எண்ணை விட்டு வறுத்து எடுத்து பொடியாக்கி, புளியை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீருக்கு தேவையான உப்பை போட்டு, கொதிக்க வைத்து இறக்கும் வேளையில் மல்லி, கருவேப்பிலை இலைகளை போட்டு சாம்பார் தயாரிக்கவேண்டும்" இது ஒருவர்.

இப்படி பல ஆண்களும் பல விதத்தில் விவரிக்க பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் தலையாட்டிக்கொண்டே இருந்தார்.

சட்டென்று அனைவரையும் அமைதியாக இருக்க கை காட்டி விட்டு பேசினார்.

"நீங்கள் அனைவருமே ஞானிகள். நான் என்ன ஞானி?

அந்த எளிய பக்குவம் கூட எனக்கு வரவே இல்லையே!" என்றார்.

கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள். பெரியவர் என்னவோ மனதில் நினைத்து தான் இதை சொல்கிறார் என்று மடத்து சிப்பந்திகளும் புரிந்து கொண்டு அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பெரியவர் பேசலானார்.

"இத்தனை பேர் விளக்கம் அளித்தீர்கள். ஒருவர் கூட "தான்" போட வேண்டும் என்று சொல்லவில்லையே. அந்த தான் என்பதை மறந்தவர்கள் அல்லவா ஞானிகள். நான் பேசும் போது கூட அந்த "தான்" என்கிற வார்த்தையை உபயோகப் படுத்துகிறேனே. நீங்கள் அதையும் மறந்து அல்லவா மிக எளிய விஷயத்தை விவரிக்கிறீர்கள். அது தான் நமது மதத்தின் பெருமை. சின்ன சின்ன விஷயங்களில் கூட ஞானம் அடைய வேண்டி வார்த்தைகளை, கருத்துக்களை நம் பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள். அதை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் அனைவரும் க்ஷேமமாக இருக்கலாம். அனைத்தையும் உன்னிப்பாக கவனியுங்கள். செம்மை அடையலாம்" என்று கூறி அனைவரையும் ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.

"தான்" என்கிற வார்த்தை இரண்டு அர்த்தங்களை உட்கொண்டது. ஒன்று "நான்" என்பது பொருள். இன்னொன்று சாம்பாரில் போட உபயோகிக்கும் காய்கறி வகைகள்.

பெரியவர் மிகப் பெரிய உண்மைகளை எப்படி எளிய வழியை கையாண்டு நமக்கு உபதேசித்தார் என்பதற்கு இது மிக எளிய உதாரணம்.
December 14, 2013 - பரப்ரஹ்மம்.....ஜகந்நாதம்


ஷோலாப்பூரில் பெரியவா முகாம். ஒருநாள் பெரியவாளை தர்சனம் செய்ய ஒரு யோகீஸ்வரர் வந்தார். வெள்ளைவெளேரென்று வேஷ்டி, தாடி, விபூதி, ருத்ராக்ஷம் அணிந்து கொண்டிருந்தார். அகஸ்மாத்தாக அவரை பார்ப்பவர்கள் கூட அவர் முகத்தில், உருவத்தில் தெரிந்த தேஜஸ்ஸை கண்டுபிடித்து விடலாம். அப்படி ஒரு தேஜஸ்!


பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார். ஒரு ஏகமுக ருத்ராக்ஷம் ஒன்றை பெரியவாளுக்குக் காணிக்கையாக குடுத்தார்.

"பரப்ரஹ்மம்.....ஜகந்நாதம்;பரப்ரஹ்மம்...ஜகந்நாதம் ; பரப்ரஹ்மம்..ஜகந்நாதம்." என்று மூன்று முறை கூறிவிட்டுப் பேரானந்தம் பொங்க பெரியவாளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "வந்த கார்யம் ஆகிவிட்டது....புறப்படுகிறேன்" என்று ஹிந்தியில் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

இந்த அறிய காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு "வந்தவர் யார்?" என்ற கேள்வி மூளையைக் குடைந்தது. சிலர் அவரைத் தொடர்ந்து போய் அவரைப் பற்றி விஜாரிக்க கிளம்பியதும், பெரியவா ஒரு சொடுக்கில் அவர்களை நிறுத்தினார்......

"அவர்ட்ட எதுவும் விஜாரிக்கத் தேவையில்லே...போய் வேற வேலையைப் பாருங்கோ" என்றதும், யாரும் அதற்கு மேல் எதுவும் செய்யவில்லை.

பெரியவாளுக்குத் தெரிந்திருக்கும் வந்தவர் யாரென்று. முதலில் நம்மை நாமே யாரென்று தெரிந்துகொண்டால் மற்ற எதுவும் தனியாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அவஸ்யமே இருக்காதே!
-------------------------------------------------------------

தானே தானே தத்துவமிதனை
தானே காட்டுவாய் அருணாச்சலா
December 10, 2013 "ஒம்பொண்ணு கல்யாணத்த நான் நடத்தி வெக்கறேன்.."

(நண்பரும் நம் மெம்பரும் ஆன திரு கௌரிசங்கர் வைத்யநாதன்

அனுப்பிய மெயயில் நேற்று)

ஸதாராவில் பெரியவா முகாம். அங்கு ரயில்வேயில் பணிபுரியும் ஒரு பக்தர் பெரியவாளை தர்சனம் பண்ணிவிட்டு வேலைக்குச் செல்ல எண்ணி, ரெண்டு மணி நேரம் காத்திருந்தும் தர்சனம் கிடைக்காததால், ஒரு நமஸ்காரம் பண்ணிவிட்டு கிளம்பிவிட்டார். ரெண்டு மணி நேரம் கழித்து மடத்து கார்யஸ்தர் ஒருவர் இவரைத் தேடிக்கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கே வந்துவிட்டார்.

"என்ன விஷயம்?"

"பெரியவா ஒங்கள அழைச்சிண்டு வரச் சொன்னா.."

"பெரியவா சொன்னதை அப்டியே சொல்லுங்கோ" [மஹான்கள் வேறு யாரிடமாவது நம்மைப் பற்றி ஏதாவது சொல்லியிருந்தால், அதை நம்மிடம் வந்து சொல்பவர்கள், அப்படியே verbatim சொல்லக் கேட்டால், நேரில் தர்சிப்பதை விட, பெரிய இன்பமாக இருக்கும்]

"ஸதாரா ஸ்டேஷன்ல போய்ப் பாரு. inspection பண்ணிண்டிருப்பான், அந்த ராமஸ்வாமி. வரச்சொல்லு"ன்னு சொன்னா"

உடனே மடமடவென்று வேலையை முடித்துக் கொண்டு பெரியவா முன் போய் நின்றார்.

"பெரியவா மன்னிச்சுடுங்கோ! பெரியவா ரொம்ப பிஸியா இருந்தேள். நான் ஆபீஸ் வேலையை முடிக்காம, ஹெட்க்வார்டர்ஸ் போகமுடியாது. மேல இருக்கற ஆபீஸர் சத்தம் போடுவார்....."

அவர் சொன்னதை பெரியவா சட்டை செய்யாமல், "ஒனக்கு என்ன வேணும்?.."

"எனக்கு எதுவும் வேணாம். ஒரே ஒரு கவலைதான். எம்பொண்ணுக்கு நல்ல எடத்ல கல்யாணம் ஆகணும். அப்பா ரொம்ப வருத்தப்படறார். நெறைய எடங்களுக்கு ஜாதகம் அனுப்பறார்; ரொம்பப் பேர் பதிலே போடறதில்லே; வர்றதும் பொருந்தலே;.."

"அவ்ளோவ்தானே? செரி போ! ஒம்பொண்ணு கல்யாணத்த நான் நடத்தி வெக்கறேன்.."

"சத்யமா சொல்றேளா?.." மஹா பாமரத்தனமான கேள்வி வந்து விழுந்தது. சத்ய ஸ்வரூபத்திடமிருந்து சத்யம்தானே வரும்!

பெரியவா அழகாகப் புன்னகைத்தார். திரும்பிச் செல்ல உத்தரவு கிடைத்தது.

என்ன மாதிரி தெளிவான அபயம்! "நான் நடத்தி வெக்கறேன்" .....

ஊருக்கு சென்று ரெண்டு மாசம் கழித்து, அவருடைய அப்பா அனுப்பிய ஜாதகம் பொருந்தியிருப்பதாக பம்பாயிலிருந்து பிள்ளை வீட்டார் வந்தார்கள்; பெண் பார்த்தார்கள்; கல்யாணம் முடிந்தது. ரெண்டு வருஷம் கழித்து பெரியவாளை தர்சனம் பண்ண, பெண், மாப்பிள்ளை, பேத்தி சஹிதம் கர்னூலுக்கு சென்றார்.

பெரியவாளுடைய திருவடி கீழே குழந்தையை படுக்க வைத்துவிட்டு நமஸ்கரித்தனர். அவர்களுடைய க்ஷேமலாபங்களை விஜாரித்தார். குழந்தை அப்படியே தூங்கி விட்டாள். கொஞ்ச நேரத்தில் எல்லாருக்கும் ப்ரஸாதம் குடுத்து ஊருக்குத் திரும்ப உத்தரவு குடுத்தார். அவர்கள் திரும்பி கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்ததும், பெரியவாளுக்கே உரித்தான சொடக்கு சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தார்கள்...

"இந்தக் கொழந்தைய மடத்ல வெச்சிண்டு எப்டி ஸம்ரக்ஷிக்கறது?... எடுத்துண்டு போ!.."

மூன்று பேருக்கும் ஒரே வெட்கமாகப் போய்விட்டது. பெரியவாளை ரொம்ப நாள் கழித்து தர்சனம் செய்த ஆனந்தத்தில், குழந்தையை மறந்தே போனோமே! என்று. அவருடைய பெண் ஓடிப்போய் குழந்தையை தூக்கிக் கொண்டாள். அப்போது பெரியவா பக்கத்தில் இருந்த கார்யஸ்தரிடம், "ராமஸ்வாமிக்கி த்ருப்தியான்னு கேளு" என்றார்.

எதற்கு? ராமஸ்வாமிக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு இந்தக் கேள்வி? அவரிடம் பதில் இல்லை. பெரியவாளே சொன்னார்.....

"அவன் பொண்ணோட பேரென்ன கேளு"

"உமா.."

"மாப்பிளை பேரு?.."

"ஸதாசிவன்..." இன்னமும் அவருக்குப் புரியவில்லை.

பெரியவா நமுட்டாக சிரித்துக் கொண்டே "சரிதானே? என்னைக் குத்தஞ்சொல்லப்...டாது ! பேர் பொருத்தம் பாத்துதான் கல்யாணம் பண்ணி வெச்சிருக்கேன்!..." என்றதும்தான் ராமஸ்வாமிக்கு பொட்டில் அடித்தாற்போல் "நான் நடத்தி வெக்கறேன்" என்று பெரியவா மூன்று வருஷங்களுக்கு முன் சொன்னது ஞாபகம் வந்தது. "இப்படி ஒரு ஞாபக சக்தியா? இப்படி ஒரு அனுக்ரஹமா? ஏதோ ஸுஹ்ருதம் பண்ணியிருக்கிறோம் இப்படி ஒரு அருளை அனுபவிக்க"....ராமஸ்வாமி கண்களில் நன்றிக் கண்ணீர் வழிய மீண்டும் நமஸ்கரித்தார்.
------------------------------ ---------

நம் அத்தனை பேருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு க்ஷணத்தையும் நல்லதாகவோ, கெட்டதாகவோ பகவான்தான் நடத்தி வைக்கிறான், நம் கர்ம பலனை அனுசரித்து. "எது நடந்தாலும் உன் சித்தம்" என்று ஆத்மார்த்தமாக உணர்ந்துவிட்டால், வெளியே நாம் எப்படி react பண்ணினாலும், உள்ளூர உண்மையில் எதுவும் நம்மை பாதிக்காது.
December 10, 2013 


"பெரியவாளுக்குத் தெரியாதது எதுவும் இல்லை.
பெரியவா செய்ய முடியாதது எதுவும் இல்லை.
இருந்தாலும் 'எங்களைக் கூட வெச்சுண்டு
ஆட்டம் போட்டிருக்கா"

கட்டுரையாளர்; ரா.கணபதி.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

பெரியவாள் காசி யாத்திரை (1933) செல்லும் வழியில்
ஒரு ஆந்திர குக்கிராமம் ஒன்றில் முகாமிட்டபோது
ஸ்ரீ ஸி.எஸ்,விக்கு (விச்வாநாதையர்) பொத்துக்கொண்டு
வந்து விட்டதாம்.

"எடுத்துச் செலவழிப்பதற்கு நம் மடத்தில் என்ன கொட்டியா
கிடக்கிறது? இந்தத் தரித்திரம் பிடித்த ஊரில் இத்தனை
யானையையும்,ஒட்டையையும்,ஜனங்களையும் கட்டித்
தீனி போடுவதென்றால் எப்படி?" என்கிற ரீதியில்
பெரியவாள் காதுபடப் பொரிந்து தள்ளி விட்டாராம்.

பெரியவாள் அவரைக் கூப்பிட்டார். சாந்தமாக " நீ ஏன்
பதட்டப்படறே? நாம நல்ல காரியத்தை உத்தேசிச்சுப்
பொறப்பட்டிருக்கோம்.நம்ப லக்ஷ்யம் நன்னாயிருந்தா
அம்பாள் கை கொடுக்காமப் போவாளா? அவதானே
எல்லாருக்கும் படியளக்கிறா? நமக்கும் நிறைய
அளப்பா"என்றாராம்.

மறுநாள், விச்வநாதய்யரால் நம்பவே முடியவில்லை!
அந்தக் கிராமத்தில் ஏதாவது திருவிழா நடந்ததா,
அல்லது சந்தை கூடிற்றா, அல்லது இப்படி எதுவுமே
நடக்காமல் பெரியவாளின் சக்தி மட்டும்தான் வேலை
செய்ததா என்று அவருக்குச் சொல்ல தெரியவில்லை.
ஆனால் சொல்லத் தெரிந்தது, மறுநாள் காலையிலிருந்து
அந்த நிர்மாநுஷ்யக் குக்கிராமத்தில் புற்றீசலாகப்
பக்தர்கள் பெரியவாளை வழிபட வந்து கொண்டேயிருந்ததுதான்.
வந்தது மட்டும் இல்லை.அக்காலத்தில் வெள்ளி நாணயம்
வழங்கி வந்ததல்லவா?

வந்த பக்தர்கள் யாவரும் இப்படி நாணயங்களைக் கொண்டு
வந்து கொட்டினார்கள்.

"நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா

{இதை ஸி.எஸ்,வி.என்னிடம் கூறியது சுமார் பத்து
ஆண்டுகளுக்கு முன்பு-கட்டுரை-1960-பின் பாதியில்)

அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி
குவிஞ்சதேயில்லை!.மடத்து ஜாகையிலே எல்லாத்தையும்
சேத்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து எடுத்துச்
சாக்கிலே போட்டுக் கட்டினோம்.

பெரியவாள்,"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன்.
ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே'
அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!.

"பெரியவாளுக்குத் தெரியாதது எதுவும் இல்லை.
பெரியவா செய்ய முடியாதது எதுவும் இல்லை.
இருந்தாலும் 'எங்களைக் கூட வெச்சுண்டு
ஆட்டம் போட்டிருக்கா.

December 22, 2013 பிசிபேளாபாத்

(ஒரு பழைய தினமணியிலிருந்து)


தேவையான பொருட்கள்: பச்சரிசி - 2

டம்ளர், துவரம் பருப்பு - 11/2 டம்ளர், முருங்கைக்காய் - 1 , கத்தரிக்காய் - 4 , புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு , மல்லி இலை - சிறிதளவு, பெருங்காயம் - சிறிதளவு, தக்காளி - 3 , பெரிய வெங்காயம் - 3 , சாம்பார்பொடி - 2 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைக்க: முழு தனியா - 2 டீஸ்பூன், வரமிளகாய் - 6, சீரகம் - 1 டீ ஸ்பூன், மிளகு - 1 டீ ஸ்பூன், கடலைப்பருப்பு - 1 கைப்பிடி, தேங்காய்த்துருவல் - 3 டேபிள்

ஸ்பூன்

தாளிக்க: கடுகு -1டேபிள் ஸ்பூன், வரமிளகாய்-3, கறிவேப்பிலை- சிறிதளவு, வெந்தயம் 1/2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், சாம்பார் வெங்காயம் - 10, நெய் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

* குக்கரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, அரிசி, பருப்பு, மஞ்சள்பொடி ஆகியவற்றைச் சேர்த்து குழைவாக வேக

வைக்கவும்.

* வறுத்து அரைக்க வேண்டியவற்றைச் சிறிது எண்ணெயில் வறுத்து நீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

* நறுக்கிய காய்கறிகள், மஞ்சள் பொடி, பெருங்காயம், சாம்பார் பொடி, உப்பு மற்றும் புளி நீரையும் சேர்த்து வேக வைக்கவும்.

* சாம்பார் வெங்காயத்தை நெய்யில் வதக்கிக் கொள்ளவும்.

* வறுத்து அரைத்த மசாலா, வேகவைத்த காய்கறிகள், நெய்யில் வதக்கிய சாம்பார் வெங்காயம் இவை அனைத்தையும் குழைவாக வேக வைத்த சாதத்தில் கலக்கவும்.

* தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துப் போட்டு, இந்தக் கலவையை நன்கு கிளறி மறுபடியும் லேசாக சூடாக்கி இறக்கவும்.

இப்போது கம,கம, பிசிபேளாபாத் ரெடி.

* இதற்கு அப்பளம்,சிப்ஸ் போன்றவற்றுடன் சேர்த்துப் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

கா.ராஜம்


December 23, 2013 "குடி" மகன்களை திருத்திய பெரியவா.

(நெட்டில் படித்த கட்டுரை)
சிவாஸ்தானத்தில் பெரியவா தங்கியிருந்தபோது, காட்டுப்புத்தூரை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் தர்சனம் பண்ண வந்தார். அவர் கொண்டு வந்த காணிக்கை என்ன தெரியுமா? ரெண்டு ரஸ்தாளி வாழைப்பழத்தார்கள். ஒவ்வொன்றிலும் பத்து,பன்னெண்டு சீப்புகள் இருக்கும். ஒரு தாரையே ரெண்டு பேர் சுமக்க வேண்டியிருந்தது. அத்தனை பெரிய பழங்கள்! சீப்பு…… கனம் என்பதால் மட்டும் இல்லை, பெரியவாளுக்கு சமர்ப்பிக்கும்போது, பழங்கள் நசுங்காமல் இருக்கவே ரெண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர்.அன்போடு தன்னைக் காண வந்த பக்தருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டு, சிஷ்யரைக் கூப்பிட்டார்.
“டேய்! அந்த ரெண்டு தார்களையும் ஜாக்ரதையா எடுத்து உள்ள வை ! பழத்த பாத்தியோ ! எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு!……..ஒரு பழம் சாப்ட்டாலே போறும் போலருக்கு. சாப்பாடே தேவையில்லே!….நாலு நாளைக்கு ஒங்களுக்கெல்லாம் கவலையே இல்லே!”ம்ஹும் ! இது வெறும் சிஷ்யாளோட கல்பனை. ஏனென்றால் பெரியவா இந்த மாதிரி உத்தரவிடவில்லை……….மாறாக,

“டேய்! இந்தா…….இந்த ரெண்டு தாரையும் கொண்டு போய், வாசல்ல ஒரு பெரிய புளியமரம் இருக்கோல்லியோ?……..அதோட கெளைல [கிளை] கைக்கு எட்டறா…ப்ல கட்டி தொங்க விடுங்கோடா !” என்று சொன்னார்.

அந்யாயம்! அக்ரமம்!…பெரியவா இப்பிடி எல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது! நாங்கள் இதை பலமாக கண்டிக்கிறோம்……என்றெல்லாம் வாயால் சொல்லவே முடியாது என்பது மட்டுமில்லை………..மனசால் கூட நினைக்க முடியாது.

சிவாஸ்தானம்-தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாடுபவர்கள். பொறுப்பில்லாத ஆண் ‘குடி’ மக்கள் நன்றாக குடித்து விட்டு, பசியோடு வீட்டுக்கு போய் அங்குள்ள பெண்கள், குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள். இது அன்றாடம் வாடிக்கையாக நடப்பது! நம்முடைய கருணைக் கடலுக்கு இது தெரியாதா? ஏழை பங்காளன் இல்லையா?வாழைத்தார் கட்டின அன்று இரவு அவ்வழியாக குடித்துவிட்டு வீட்டுக்கு போனவர்கள், வாழைதாரிலிருந்து பழத்தை பிய்த்து சாப்பிட்டுவிட்டு போனார்கள். பெரியவா ‘ப்ளான்’ படி, பசி வெகுவாக அடங்கியதால், வீட்டில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அடியிலிருந்து தப்பித்தனர். [பெரியவாளுக்கு தெரியாத சூக்ஷ்மமா?]

மறுநாள், நிரந்தர உத்தரவு வந்தது………….”மடத்துக்கு வர்றவா குடுக்கற பழத்தையெல்லாம் புளியமரத்ல தொங்க விடுங்கோ !” அதிலிருந்து புளிய மரத்தில் தினமும் வாழைப்பழம் !!

சுமார் பதினைந்து நாட்களுக்குப்பின், அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் வந்தார்………”ஸாமி, இப்போ ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. ‘தண்ணி’ போடறதையே நிறுத்திட்டாங்க ஸாமி! குடிசைல பொம்பளைங்க, கொளந்தைங்க எல்லாம் இப்போ சந்தோஷமா இருக்காங்க ஸாமி!…” வணங்கினார்.மாற்றத்துக்கு காரணம்…………வாழைப்பழமா? இல்லை. ஞானப்பழமாக பூமியில் உதித்த பெரியவாளின் பெரும் கருணை மட்டுமே இது!பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்த பெரியவா, பழங்களில் [பழம்+கள்] உள்ள ‘கள்ளை’ ஒழித்து, பழத்தை மட்டும் தன் குழந்தைகளுக்கு ஊட்டினார்.
December 24, 2013 "சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றும் கப்பலோட்டி"

வாயிலை ஒட்டியுள்ள அறையில் அமர்ந்திருந்த பெரியவா, கப்பல்களை பற்றிய விசாரணை செய்தார்......எத்தனை கப்பல் ஒன்றுக்கொன்று இடிக்காமல் போகின்றன, எதாவது மூழ்கி போயிடுத்தா என்று கேள்விகள் வேறு.


யாரை கேட்க்கிறார் என்று ஒருத்தருக்கும் புரியவில்லை. விசாகபட்டினம் போர்ட் ஆபீசர் ஒருவர் தன்னிடம்தான் பெரியவா கேட்கிறார் என்றுநினைத்தார். புரிபடாத 
கேள்வியாக இருந்ததால், பெரியவாளிடமே தெளிவுபடுத்துமாறு கேட்டார்.

பெரியவா அழகாக சிரித்தார். "த்ளாயிரத்து முப்பத்தார்ல நான் வைசாக் வந்து போர்ட் எல்லாம் சுத்தி பாத்திருக்கேன். ஆனா,......இப்ப நான் கேள்விகேட்டுண்டு இருந்தது, ஒங்க கப்பலை பத்தி இல்லே......நான் பண்ணின கப்பல்களை பத்திதான் கேட்டுண்டு இருந்தேன். இங்கே சில பசங்கள் அழுதுண்டுஇருந்ததுகள். மழை பெய்யறதோன்னோ? அதனால காயிதத்துல அஞ்சாறு கப்பல் பண்ணி அதுகளுக்கு கொடுத்து, ரோட்ல ஜலம் ஓடிண்டிருக்கொன்னோ, அதுல விட்டு வெளையாட அனுப்பிச்சேன்....அந்த கப்பல்களோட "க்ஷேமலாபம்"தான் விசாரிசுண்டிருக்கேன். நீ என்னமா பதில்சொல்லுவே?"

சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றும் கப்பலோட்டி இப்படி ஒரு இனிய விதத்தில் கப்பல் தயாரிப்பாளராகி இருக்கிறார் !!!!!!!!December 23, 2013 "மைத்ரீம் பஜத"-புதிய தகவல்.

கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா

தட்டச்சு;வரகூரான்.

எம்.எஸ்.அம்மாவுக்கு 'யுனைடட் நேஷன்ஸ்'ல பாட
வாய்ப்பு வந்தது.அவர் பெரியவாளிடம் தெரிவித்து
ஆசி வேண்டி நின்றார். அவரும் "இது உனக்கு மட்டும்
கிடைத்த கௌரவம் இல்லை; இந்திய மண்ணுக்கே
கிடைத்த பெருமை.வெற்றிக் கொடி நாட்டி வா!"
என்று ஆசி கூறி அனுப்பினார்.

அப்போதுதான் அது சர்வதேச அரங்கமாக இருப்பதால்
அங்கு பாட 'மைத்ரீம் பஜத' என்ற பாட்டை எழுதிக்
கொடுத்தார்.அது பெரியவா உபதேசப் பாடல்.பிரபல
இசை மேதை வஸந்த தேசாய் என்பவர் மெட்டமைத்துக்
கொடுத்தார்.

நியூயார்க்கில் போய் இறங்கியதும் சோதனை போல்
எம்.எஸ்.அம்மாவுக்குத் தொண்டை கட்டிக்கொண்டது.
சுற்றி இருந்த அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சி.வருத்தம்
தாங்காமல் பெரியவாளையே நினைத்துப் புலம்ப,
"தேசத்துக்கே பெரிய பெருமை என்று பாராட்டி,பாட்டும்
எழுதிக் கொடுத்துவிட்டு இது என்ன சோதனை?"
என்று ஏங்கினார் எம்.எஸ்.

கச்சேரி பண்ண வேண்டிய நாளும் வந்துவிட்டது.
அரங்கத்துக்கும் சென்றாகிவிட்டது. தொண்டை அடைப்பில்
எந்தவித மாற்றமும் இல்லை. "ஈசுவரன் விட்ட வழி" என்று
மேடை ஏறினார்.

ஸ்ருதி கூட்டப்பட்டது.கண்ணை மூடிக்கொண்டார். தன்னை
மறந்து பாடத் தொடங்கினார்.கடைசியில் அவர் 'மைத்ரீம்
பஜத' பாட சபையே STANDING OVATION செய்து கரவொலியால்
அதிர்ந்தது.அதைக் கேட்டுத்தான் அவருக்கு, "தான் பாடிக்
கொண்டுதான் இருந்தோம்" என்ற சுய உணர்வே வந்தது.
வாழ்நாள் இறுதிவரை இந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர்
நினைத்தவுடன் அழுது விடுவார்.

"பெரியவா தன்னை நம்பினவர்களைக் கைவிட்டதே கிடையாது"
என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
From the album: Timeline Photos
By Mannargudi Sitaraman Srinivasan
யானை நாய் போன்ற விலங்குகளுக்கும்
ஸ்ரீ பெரியவாளிடம் பக்தி உண்டு.


காஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார். அந்த மடத்தில் இருந்த யானை மஹா பெரியவரைக் கண்டால் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும்.

பெரியவரும் யானையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார்.ஒருநாள் இரவில் யானையைக் கட்டியிருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. மறுநாள் பாகனும், மடத்து ஆட்களும் காட்டில் யானையைத் தேடி அலைந்தும் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை.சிலநாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சித்தான். அது வர மறுத்து அடம்பிடித்தது.


விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று, யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார். யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது. பெரியவர் அதைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார்.


இதேபோல, யானையிடம் சிக்கிய பக்தரைக் காத்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது.

சிதம்பரத்தில் ஆடிட்டராக இருந்தவர் பாலசுப்ரமண்யம். இவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பரம்பரையில் வந்தவர். அவர் மஹாபெரியவரின் தீவிரபக்தர். எப்போதும் சந்திரசேகரா ஈசா என்று உச்சரிக்கும் வழக்கம் கொண்டவர்.

ஒருநாள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சென்ற ஆடிட்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோயில் யானைக்கு மதம் பிடித்து வந்தவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது ஆடிட்டர் உள்ளே நுழைந்தார். அது அவரை கோபத்துடன் தூக்கியது. அவர் பயத்தில் நடுங்கினார்.

ஆனால், வாய் மட்டும் சந்திரசேகரா ஈசா என்ற நாமத்தை சொல்ல மறக்கவில்லை. அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.


மதம் கொண்ட யானை ஒரு நிமிஷத்தில் அமைதியானது. ஆடிட்டரை கீழே இறக்கி விட்டுவிட்டு பாகனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து மண்டியிட்டது. பக்தர்கள் இதைப் பார்த்து அதிசயப்பட்டனர்.

சுவாமிகளின் மீது நாய்க்கும் கூட பக்தி உண்டு. 1927ல் மடத்தில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது. மடத்து பொருட்களையும், கால்நடைகளையும் பாதுகாத்து வந்தது. சுவாமிகள் ஒவ்வொரு நாளும் நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகி விட்டதா? என்று அக்கறையாய் விசாரிப்பார். அவரைக் கண்டவுடன் அது சுற்றிச் சுற்றிவரும்.ஒருமுறை சிறுவன் ஒருவன் அந்த நாயைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தினான். அதன் பின் அது பார்ப்பவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது. மடத்து அதிகாரிகள் நாயை 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கிராமத்தில் கொண்டு விட்டுவிட்டு வந்தனர்.


மஹாபெரியவருக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், நாயை விட்டு வந்தவர்கள் மடத்திற்கு வருவதற்கு முன் நாய் மடத்திற்கு வந்து சேர்ந்தது.


மடத்து ஆட்களிடம், நாய் வந்து விட்டதா? என்று கேட்டார் பெரியவர். நாயும் அன்போடு பெரியவரிடம் வந்து நின்று சாந்தமானது. மடத்தில் இருப்பவர்கள் பெரியவர் செய்த அற்புதத்தை எண்ணி வியந்தனர். மடத்து நாய்க்கு இருந்த பக்தி உணர்வு மனிதர்களான நமக்கும் இருக்கட்டும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக