திங்கள், 28 ஜூலை, 2014

நினைவிலே பொறி தட்டியது போல சில சிந்தனை

ராதே கிருஷ்ணா 29-07-2014


Singaravelu Balasubramaniyan added 4 new photos.
நினைவிலே பொறி தட்டியது போல சில சிந்தனை 

Status Update
By Singaravelu Balasubramaniyan
நினைவிலே பொறி தட்டியது போல சில சிந்தனை தோன்றும்போது...பழைய நினைவுகளில் மூழ்குவது போல, சமீபத்திய ஒரு இலக்கிய பேச்சில் நடிகர் திலகம் குறித்து சில விஷயங்களை நினைவு கூர்ந்தபோது...நவராத்திரி திரைப்படம் குறித்தும் சில விஷயங்களை குறிப்பிட்டேன்... அதனை குறிப்பிட்ட பிறகுக் கூட அந்த திரைப்படம் நினைவில் வட்டமிட்டு கொண்டே இருந்தது... ஆவல் தாளாமல் மீண்டும் சுவைத்தேன், தேனினும் இனிய அந்த அற்புத படைப்பினை.. நவராத்திரியை கண்டு விட்டு நடிப்பும், படமும் காட்சிகளும் நெஞ்சை விட்டு அகலாமல் .அந்த இரவு எனக்கு ...சிவராத்திரி ஆகி விட்டது என்பது என்னவோ உண்மை. தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை நாம் நன்றி கூற கடமை பட்டுள்ளோம்
A.P. நாகராஜன் என்ற பெருமகனாருக்கு.

பெறற்கரிய...பொக்கிஷத்தை எப்படி சரியாக உபயோகிப்பது என்ற வகை அறிந்தவர்... ஆம்...நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பாற்றலை, அலைகடலின் சீற்றத்தினை முழுமையாக அறிந்த காரணத்தால்தான்...அவரை அவர்தம் திறமையினை முழுமையாக வெளிக்கொணரும் வித்தை அறிந்த இந்த திறமையாளன், சரியான எளிமையான கதை களத்துடன் இறங்கி...பொறுப்பை முழுதுமாகவே அவரிடம் ஒப்படைத்து கணேசா...காப்பாத்துப்பா...என்று கூறி விட்டாரோ..என்று தோன்றுகிறது....

நாலே வரி கதைக்கு முழுமையாக உயிரூட்டி, படம் முழுவதையுமே தனது தோளில் சுமந்து கொண்டு,
தனது பன்முக நடிப்பாற்றல் திறனை முன்னிறுத்தி..
நடித்து சரித்திர சாதனை படைத்துள்ளார்..கலைக்குரிசில்
என்றால் அது மிகையல்ல.
எதிர்காலத்தில் வருகின்ற நடிகர்களுக்கெல்லாம் சந்தேகம் வந்தால் எடுத்து பார்த்து ஒ...இந்த பாத்திரம் என்றால் இப்படிதான் செய்ய வேண்டுமா என தகவல் அறியும் ஒரு
தகவல் பெட்டகமாக உண்டாக்கி தந்துள்ளார் என்பதே உண்மை.
மனிதனிடத்தில் காணப்படும் ஒன்பது வகை குணங்களான
அற்புதம், பயம், கருணை, சாந்தம், கோபம், அருவருப்பு, சிங்காரம், வீரம், ஆனந்தம் ஆகிய நவரசங்களை யுமே...வெளிக்காட்டும் அற்புதமான கதை அமைப்பு.

கதை என்றால் மிகவும் எளிமை.
பெரும் செல்வந்தரின் மகள் நளீனா கல்லூரியில் பயிலும் மாணவி தனது வீட்டில் நவராத்திரி விழாவினை தோழிகளுடன் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வந்த அவளது தந்தை அவளை பெண்பார்க்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருவதாக கூற, தன கல்லூரியில் பயிலும் ஆனந்தை காதலிக்கும் நளீனா, கல்யாணம் வேண்டாம் என தீர்மானமாக கூற கோபமாக கல்யாணம் நடந்தே தீரும் என்று அவளது அப்பா கூற...பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையும் நளீனா காதலிக்கும் ஆனந்தும் ஒருவரேதான் என்ற விபரம் அறியாமல் கோபமாக அறைக்கு சென்ற நளீனா வீட்டிலிருந்து தப்பி ஓடிவிடுகிறாள்.
அப்படி சென்ற நளீனா...பல சிக்கல்களில் இடர்ப்பாடுகளில் சிக்கினாலும் அங்கிருந்து தப்பி அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் சிக்கி முடிவாக காதலன் ஆனந்தின் சின்ன மாமனார் ஆகிய போலீஸ் அதிகாரியின் வீட்டுக்கு பாது காவலரால் அழைத்து வர பட அவர் விபரமறிந்து அவளை தனது சகோதரன் வீட்டில் உள்ள ஆனந்தை காண அனுப்பி வைக்க , இதற்கிடையில் மனமுடைந்து போன ஆனந்த் தற்கொலைக்கு முயல.. அந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற நளீனா ஆனந்தை சந்தித்து முயற்சியை தடுத்து நிறுத்த இருவரின் திருமணமும் இனிதே நடைபெறுகிறது . அந்த திருமணத்துக்கு நளீனாவுக்கு அடைக்கலமளித்த, உதவிய...அந்த நபர்களும் வருவதாக கதை அமைப்பு.

நடிகர் திலகம் ஒரு தொட்டனைத்தூறும் மணற்கேணி. யாருக்கு என்ன வேண்டுமோ...எடுத்துக்கோங்க...என்பது போல நடிப்பினை பாத்திரத்துக்கு ஏற்ப..வஞ்சமின்றி வாரி வழங்கும் நடிகரென்றால், மற்ற பாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு மிக பொருத்தம். .குறிப்பாக நடிகையர் திலகம் சாவித்திரி...வாவ்..
அந்த பைத்தியக்கார விடுதி காட்சிகள், மற்றும் நாடகத்தில் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில், கதாநாயகி வேடம் என்று பாத்திரத்தை வெகு அழகாக செய்துள்ளார். நடிகையரில் அபூர்வமான திறமை கொண்ட ஒரு அற்புதமான நடிகைதான்.
உண்மையை சொல்ல போனால், படம் முழுதுமே இரண்டு பேருமே ஆக்கிரமித்து இருந்தாலும் என்ன ஒரு அழகான நடிப்பு.
காமெடி காட்சி என்றால் ஒரு காட்சியில் வரும் பூசாரியாக வரும் நாகேஷ் கலக்கி எடுக்கிறார். நடிப்பு என்றால் எந்த ஒரு
சமாதானமும் இல்லை...என எந்த ஒரு சமரசமும் இன்றி... குடிகாரர் ஆக ஒரு வரும் காட்சியில் நடிகர் திலகம் சாவித்திரியின் காலிலே விழுவது போல ஒரு காட்சியும் உள்ளது.

திரை இசை திலகம் KV. மகாதேவன் அவர்களின் அருமையான இசை, நல்ல பல பாடல்களுடன் நம்மை கட்டி போடுகிறது. பாடல் வரிகள் கவியரசர். நாடக காட்சிக்கு மட்டும் தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் பாடலை உபயோகித்துள்ளனரோ என்று தோன்றுகிறது.

அற்புதராஜ் கதாபாத்திரம் ஒரு ஸ்டைலிஷ் பணக்காரரின் வேடம்,
' நான் சென்ஸ் என் கைலே நீ கெடச்சதுக்கு அப்புறம், என்கிட்டேர்ந்து நீ தப்ப முடியாது ' " நான்சென்ஸ் " என்ற வார்த்தையை உச்சரிக்கும் ஸ்டைலே...தனி. தன மகள் லல்லியிடம் பேசும் பாங்கு...லல்லி..துள்ளி ஓடும்போது...ஜெண்ட்லி..ஜெண்ட்லி... என்று..கூறும் ஸ்டைல்...அவருக்கே உரித்தானது.

அடுத்து குடிகாரராக விபசார விடுதிக்கு வரும் குடிகாரர் வேடம், எதிர்மறையான பாத்திரங்களை இவர் கையாளும் பாணியும் முற்றிலும் மாறுபட்டது...தன்னை பற்றி சொல்லும்போது..
' ஏண்டி...என்ன ஒனக்கு புடிக்கலையா...ன்னு என் பொண்டாட்டிக்கிட்டெ கேட்டேன்' ...என்று கூறிக்கொண்டே...ஒரு ஆப்பிளை எடுத்து தின்று கொண்டே... அலட்சியமாக பேச்சை
தொடர்வது...பைத்தியக்கார மருத்துவமனை டாக்டர் வேடம், தங்கை மீது பிரியம் கொண்ட அப்பாவி விவசாயி, வாழ்ந்து கெட்ட குஷ்டரோகி சிங்கனூர் செல்வராஜ், நாடக நடிகர் சத்தியவான் சிங்காரம், கோபம் கொண்ட கொலைகாரன் வேடம்,
கம்பீரமான போலீஸ் அதிகாரி, (அவர் CID யாக வேடமிட்டு வந்துள்ள சாவித்ரியை புரிந்து கொண்டு...இரவு உணவு அருந்தும் ஸ்டைலை பார்த்துக்கொண்டே இருந்தால் நமக்கு வயிறு நிரம்பி விடும்)
கல்லூரி மாணவன் ஆனந்த் என்று ஒன்பது வேடங்களில் ஒப்பற்ற வகையிலே நடிப்பினை
வழங்கி அசத்துகிறார் சிம்மக்குரலோன் .

ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வொரு உடல்மொழி, முகபாவனை, குரல், ஒவ்வொரு பாணியிலான பேச்சு , நடை, உடை, பாவனை என ரசிகர்களை மெய்மறக்கவும், பிற நடிகர்களுக்கு எப்படி ஒவ்வொரு கேரக்டரையும் வித்தியாசப்படுத்தி நடிப்பது என தன் படம் மூலம் பாடம் நடத்தவும் கணேசன் ஒருவரால் மட்டுமே இயலும்.

டாக்டர் பாத்திரம் எனில் அதில் ஒரு கண்ணியமும் அமைதியும் வயதான அந்த தளர்வும், போலீஸ் அதிகாரி எனில் அதற்கென ஒரு விறைப்பு கம்பீரம் என, கொலைகாரனின் கோபம், வெள்ளந்தியான அப்பாவி விவசாயி, என்று..பின்னி எடுக்கிறார். குஷ்டரோகியின் நடிப்பு என்றால் நமக்கு ரத்தக்கண்ணீர் ராதா நினைவுக்கு வருவார், இந்த படத்தில் ஒரு கண்ணியமான பணக்காரன் நல்லவராக உள்ளவருக்கு அந்த நிலைவரும்போது அவர் நிலை என்ன என தனக்குரிய பாணியில் வெளிப்படுத்தி இருக்கிறார் .பாவி ..மனுஷன் தகவல் தொடர்பு வசதிகள் குறைவாக இருந்த அந்த கால கட்டத்தில் இவ்வளவு விஷயங்களை எப்படி பிடித்தார், எங்கே கற்று கொண்டார் என்பதே..விந்தை. தனது நாடக வாழ்க்கையில் கற்று கொண்ட பல விஷயங்களை தனக்கே உரிய கற்பனையுடன் ஒவ்வொருவரை மனதில் நிறுத்தி இவர் இந்த பாத்திரத்தை செய்தால் எப்படி இருக்கும் என கற்பனையிலே உள்வாங்கி பிரதி பலித்து இருக்கிறார். இந்த படத்திலே இவர் செய்த சில பாத்திரங்களையே...பிற்பாடு சில படங்களில் இன்னும் மெருகேற்றி...முழு படத்தில்..விரிவாக செய்து விட்டாரோ ...என்றும் தோன்றும்...

அந்தந்த கேரக்டரை உள்வாங்கி, அதிலே கரைந்து போய், அந்த வேடமாகவே மாறிவிடும் பாங்கு போற்றத் தக்கது, அதிலும் குறிப்பாக அந்த மேடை நாடக கலைஞன் வேடம்,
அவர் ஒரு பிறவிக்கலைஞர் என்று நிரூபிக்கிறது. தங்க சரிகை சேலை...எங்கும் பள பளக்க என்று...பாடலுடன் துவங்கும் அந்த சத்தியவான் சாவித்திரி நாடக காட்சி...யும்...நடிகர் திலகத்தின், நடிகையர் திலகத்தின் அருமையான நடிப்பால் பிரகாசிக்கிறது.
இறுதிக்காட்சியிலே அனைத்து சிவாஜிகளும் ஒருவர் பின் ஒருவராக கல்யாண வீட்டுக்குள் வருவதும் அமர்வதும் ஒரு காணத்தக்க காட்சி என்றால்..
ஆனந்தும் நளீனாவும் சந்திக்கும் காட்சியிலே..வசனமே இன்றி, இசையும் இன்றி...கிட்டத்தட்ட ஒரு ஏழு நிமிடம்...இருவரும் பார்வையாலும், உடல்மொழிகளாலும் நடிப்பது ஒரு ஒப்பற்ற காட்சி. காசை கோடிக்கணக்கிலே கொட்டி, உலகின் தலைசிறந்த மேக்கப் கலைஞர்களை கொண்டுவந்து சில வருடங்கள் செலவழித்து பத்து வேடம் போட்டு படம் எடுக்கும் இந்த காலத்தில், சொற்பமான பொருட்செலவில் கிடைத்த மேக்கப் கலைஞர்களை கொண்டு குறுகிய கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பாற்றலை மட்டுமே தூணாக வைத்துக்கொண்டு எடுத்துள்ள இந்த படம் நிச்சயமாக ஒரு சாதனை படம்தான்.
மொத்தத்தில் முத்தான, சத்தான படைப்பு. கலை ஆர்வம் உடையோர் அவசியம் காண வேண்டிய ஒரு படைப்பு. மெருகூட்டி மீண்டும் வெளியிட..தகுதியான ஒரு படம்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக