புதன், 9 நவம்பர், 2011

திருக்கோவையார் | எட்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி - 2 )


ராதே கிருஷ்ணா 09 - 11 - 2011 

12 திருமுறைகள்
    

திருக்கோவையார் | எட்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி - 2 )

விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க 
http://temple.dinamalar.com/

திருக்கோவையார் | எட்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி - 2 )





51. புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்
புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல் என்பது, வேதியரை வினாவி. அது வழியாகச் செல்ல நின்றவள், நும்மைக் கண்டு, என்னால் தேடப்படுகின்றார் மீண்டார்கள் என்று கருதி மகிழ்ந்தேன். அது கிடக்க, இவ்வாறு நும்மோடு ஒத்த ஒழுக்கத்தினராய் முன்னே இருவரைப் போகக் கண்டீரோ எனப் புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவா நிற்றல்.
244. மீண்டார் எனஉவந் தேன்கண்டு
நும்மைஇம் மேதகவே
பூண்டார் இருவர்முன் போயின
ரேபுலி யூர்எனைநின்(று)
ஆண்டான் அருவரை ஆளியன்
னானைக்கண் டேன்அயலே
தூண்டா விளக்கனை யாய்என்னை
யோஅன்னை சொல்லியதே.
கொளு
புணர்ந்து டன்வரும் புரவலன் ஒருபால்
அணங்கமர் கோதையை ஆராய்ந்தது.
இதன் பொருள் : புணர்ந்து உடன்வருகிற நாயகன் தனக்கொரு பக்கத்தாளாகிய தெய்வ நறுமணம் பொருந்தின மாலையினை உடையவளைக் கேட்டது.
தெளிவுரை : உங்களைக் கண்டு என் மகளும் அவளுடைய நாயகனும் மீண்டார்கள் என்று பிரியப் பட்டிருந்தேன். இம்மெய்ப்பாடு தக்க ஒழுக்கத்தினைப் பூண்டவர்கள் இரண்டு பேர் முன்னே போனார்களோ (என்று செவிலி கேட்ப, எதிரே வருகிற நாயகன் சொல்லுவான்) புலியூரில் நின்று என்னை அடிமை கொண்டவன் அவனுடைய அரிய மலையில் சிங்கம் போன்றவனைக் கண்டேன்; அவனுக்கு அயலாகத் தூண்டப்படாத விளக்கினை ஒப்பாய் ! அன்னை சொன்ன வடிவு எத்தன்மைத்து?
52. வியந்துரைத்தல்
வியந்துரைத்தல் என்பது, புணர்ந்துடன் வருவோரை வினாவி, அது வழியாகப் போகா நின்றவள் தன் மகள் நின்ற நிலையையும் அவன் கையின் வேலினான் வேங்கை பட்டுக் கிடந்த கிடையையும் கண்டு வியந்து கூறா நிற்றல்.
245. பூங்கயி லாயப் பொருப்பன்
திருப்புலி யூரதென்னத்
தீங்கை இலாச்சிறி யாள்நின்ற(து)
இவ்விடம் சென்றெதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன்னகம்
மடுத்துக் கிடந்தலற
ஆங்(கு)அயி லாற்பணி கொண்டது
திண்திறல் ஆண்தகையே.
கொளு
வேங்கை பட்டதும் பூங்கொடி நிலையும்
நாடா வரும் கோடாய் கூறியது.
இதன் பொருள் : வேங்கைப் புலி பட்ட படியும், பூத்த வல்லி சாதம் போன்றவள் நிலையும், தேடி வருகிற செவிலித் தாய் சொன்னது.
தெளிவுரை : பொலிவுடைத்தாகிய கயிலை மலையினையுடையவள் அவனுடைய அழகிய பெரும்பற்றப்புலியூர் எனும்படி குற்றமில்லாத சிறியவள் நின்ற இடம் இவ்விடம். தன்னுடனே மாறுபட்டு வந்த புலியானது தன் வாயிலே பெரிய கையை மடுத்துக் கிடந்து கூப்பிடும்படி சிக்கென்ற தைரியத்தை உடைய நாயகன் அவ்விடத்துத் தன் கையில் வேலினை வேலை கொண்டது அவ்விடமாயிருக்கும்.
53. இயைபு எடுத்துரைத்தல்
இயைபு எடுத்துரைத்தல் என்பது வேங்கைபட்டது கண்டு வியந்து, அது வழியாகச் செல்லா நின்றவள், எதிர் வருவாரை வினாவ, அவர், நீ கூறா நின்றவரைக் குன்றத்திடைக் கண்டோம். அவ் இருவரும் தம்முள் இயைந்து செல்லாநின்றமை கண்டு, எல்லாவற்றையும் உடையளாகிய தன் காதலியோடு ஒருவடிவாய் விளையாடும் புலியூரன் என்றே கருதி, யாங்கன் எல்லாம் ஒத்து, மிகவும் அவ் எழிலைத் தொழ நினைந்தோம். அந்நன்மை சொல்லலாவது ஒன்றன்று என எதிர்வருவார் அவர் இயைபு எடுத்துக் கூறா நிற்றல்.
246. மின்தொத்(து) இடுகழல் நூபுரம்
வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்(று)ஒத் திடவுடை யாளொ(டு)ஒன்
றாம்புலி யூரன்என்றே
நன்(று)ஒத் தெழிலைத் தொழவுற்
றனம்என்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனம்அன்னை
நீசொன்ன கொள்கையரே.
கொளு
சேயிழை யோடு செம்மல் போதர
ஆயிழை பங்கன்என்(று) அயிர்த்தேம் என்றது.
இதன் பொருள் : சிவந்த ஆபரணங்களை உடையாளுடனே நாயகன் போக அழகிய ஆபரணங்களையுடைய உமாதேவி பங்கனாகிய மகாதேவன் என அயிர்த்தேம் என்றது.
தெளிவுரை : ஒளி திரண்டவண் காலில் அணிந்த வீரக்கழலும் அவள் காலில் அணிந்த சிலம்பும், அவன் உடுத்த வெள்ளைப் பட்டும் அவளுடுத்த செம்பட்டாடையும் இவை விளங்கி ஒன்றுபடப் பிரகாசிப்ப, எல்லாப் பொருளையும் உடைத்தாகிய உமாதேவி ஒன்றுபட்டுத் தோன்றுகிற பெரும்பற்றப்புலியூரை உடைய முதலியாரென்று சொல்லி மிகவும் ஒப்புக் கொண்டு அவ்வழகைத் தொழக் கடவதாக நினைந்தோம். அஃது என்ன நன்மையோதான்? தாயே ! நீ சொன்ன கோட்பாட்டை உடையவர்களை அம்மலை வழியில் கண்டோம். மலையில் வழியிடத்தே கண்டோர் கண்டோம், என்ன, நன்மைதான் என்றனர் என்றுபடும்.
54. மீள உரைத்தல்
மீள உரைத்தல் என்பது இயைபு எடுத்துரைத்தவர் அவ் இருவரும் ஓர் இடுக்கண் இன்றிப் போய்த் தில்லையின் எல்லையைச் சென்றணைவர். இனி நீ செல்வதன்று. மீள்வதே காரியம் எனத் தேடிச் செல்லா நின்ற செவிலியை மீளக் கூறா நிற்றல்.
247. மீள்வது செல்வதன்(று) அன்னைஇவ்
வெங்கடத்(து) அக்கடமாக்
கீள்வது செய்த கிழவோ
னொடுங்கிளர் கெண்டையன்ன
நீள்வது செய்தகண் ணாள்இந்
நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
ஆள்வது செய்தவன் தில்லையின்
எல்லை அணுகுவரே.
கொளு
கடுங்கடம் கடந்தமை கைத்தாய்க்(கு) உரைத்து
நடுங்கன்மின் மீண்டும் நடமின் என்றது.
இதன் பொருள் : அரிய காட்டு வழியைக் கடந்ததனைச் செவிலிக்குச் சொல்லி, நடுங்காதீர் மீண்டு போம் என்றது.
தெளிவுரை : இவ்வரையிடத்தே அந்த மதமுடைத்தாகிய யானையைக் கிழித்த நாயகனுடனே உபவாளிக்கிற கயலை ஒத்த நீளிய மாவடு வகிர்போன்ற கண் களையுடையாள் தூரிய வழியைத் தொலைத்து நம்மையாளும் தொழிலினைச் செய்து நின்றவனுடைய பெரும்பற்றப்புலியூரின் எல்லையைச் சென்று சேர்வள்; ஆதலால், நீர் இனிச் செய்யத் தகுவது மீள்வதே. செல்கை காரியம் உடைத்தன்று; தாயே !
55. உலகியல்பு உரைத்தல்
உலகியல்பு உரைத்தல் என்பது, மீளக் கூறவும் மீளாது கவலா நின்ற செவிலிக்கு சந்தனமும், முத்தும், சங்கும் தாம் பிறந்த இடங்கட்கு யாதும் பயன்படாது தம்மை விரும்பி அணிவாரிடத்தே சென்று பயன்படா நீற்கும்; அது போல மகளிரும் தாம் பிறந்த இடத்துப் பயன்படார்; நீ கவல வேண்டா என உலகியல்பு கூறா நிற்றல்.
248. சுரும்பிவர் சந்தும் தொடுகடல்
முத்தும்வெண் சங்கும்எங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்(கு) அணி
யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன்
சிற்றம் பலம்அனைய
கரும்பன மென்மொழி யாரும்அந்
நீர்மையர் காணுநர்க்கே.
கொளு
செவிலியது கவலை தீர
மன்னிய உலகியல் முன்னி உரைத்தது.
இதன் பொருள் : செவிலித்தாயுடைய வருத்தம் தீர நிலை பெற்ற உலகின் இயல்பினை எதிர்ப்பட்டுச் சொன்னது.
தெளிவுரை : வண்டுகள் பறக்கப்படா நின்ற சந்தன மரமும் சகரராலே தோண்டப்பட்ட கடலிற் பிறந்த முத்தும் வெள்ளிய சங்கும் எவ்விடத்தும் தம்மை விரும்பினவர்களிடத்தே சென்று அவர்களுக்கு மெய்க்கு அலங்காரமாகா நிற்கும். நலமாகிய கங்கை என்று சொல்லப்பட்ட அதிகசலத்தைச் சூடி அருளுகிற தலைவன், சிவன் என்னும் நாமத்தை உடையவன், அவனுடைய திருச்சிற்றம்பலத்தை ஒத்து கரும்பை நிகர்த்த வார்த்தையினை உடையாளும், விசாரிக்கில் அத்தன்மையினள் காண்; ஆதலால் நீ செல்ல வேண்டா.
56. அழுங்கு தாய்க்கு உரைத்தல்
அழுங்கு தாய்க்கு உரைத்தல் என்பது, உலகியல்பு கூறவும் மீளாது நின்று, தானெடுத்து வளர்த்தமை சொல்லிக் கவலா நின்ற செவிலியை, முன்னிலைப் புறமொழியாக, இவர் தாம் இல்லின் கண் எடுத்து வளர்த்தவர் போலும்; அவர் போய்த் தன்மை இருவரையும் கூட்டுவித்த தெய்வப்பதியாகிய தில்லையிடத்துப் பழனங்களைச் சென்றணைவர் எனத் தம்முள் கூறுவார் போன்று கூறி, மீட்டுக் கொண்டு போகா நிற்றல்.
249. ஆண்(டு)இல் எடுத்தவ ராம்இவர்
தாம்அவர் அல்குவர்போய்த்
தீண்டில் எடுத்தவர் தீவினை
தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டில் எடுத்தவ ரால்தெங்கொ(டு)
எற்றப் பழம்விழுந்து
பாண்டில் எடுத்தபல் தாமரை
கீழும் பழனங்களே.
கொளு
செழும்பணை அணைந்தமை
அழுங்கு தாய்க்(கு) உரைத்தது.
இதன் பொருள் : அழகிய மருத நிலத்தை அடைந்ததைப் பற்றி துன்புறுகிற தாய்க்குச் சொன்னது.
தெளிவுரை : அவர்கள் போய் அவதரிப்பார்கள். எவ்விடத்தே என்னில், தம்மைச் சென்று குறுகுகிறவர் பிறவி என்கிற கடலில் அழுந்தாமல் எடுத்து, அவர்கள் தீவினையைத் தீர்க்கிறவருடைய பெரும்பற்றப்புலியூரில், தூண்டிலினது இரையை விழுங்கிய வரால் தெங்குடன் மோதத் தென்னம் பழம் விழுந்து கிண்ணம் போல உயர மலர்ந்த பல தாமரைப் பூக்களை ஆங்கு அழிக்கின்ற தடாகங்களையுடைய மருத நிலத்தை சென்று புகுவார்கள். இல்லிலே எடுத்து வளர்த்த கைத்தாயராக வேண்டும் இவர்.
உடன் போக்கு முற்றிற்று.

பதினேழாம் அதிகாரம்
17. வரைவு முடுக்கம்
இவ்வாறு உடன்போக்கு நிகழாதாயின் வரைந்து கோடல் நிகழும். அது நிகழும் இடத்துத் தோழியால் வரைவு முடுக்கப்பட்டும், வரை பொருட்பிரிந்து வந்து நிகழும் என்ப. அவற்றுள் வரைவு முடுக்கம் என்னும் நூற்பாவில் அடியிற்கண்ட 16 துறைகள் உள்ளன.
1. வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல்
2. பெரும்பான்மை கூறி மறுத்தல்
3. உள்ளது கூறி வரைவு கடாதல்
4. ஏதங் கூறி இரவு வரவு விலக்கல்
5. பழிவர உரைத்துப் பகல் வரவு விலக்கல்
6. தொழுது இரந்து கூறல்
7. தாய் அறிவு கூறல்
8. மந்தி வேல் வைத்து வரைவு கடாதல்
9. காவல் மேல் வைத்துக் கண் துயிலாமை கூறல்
10. பகல் உடம்பட்டாள் போன்று இரவு வரவு விலக்கல்
11. இரவு உடம் பட்டாள் போன்று பகல் வரவு விலக்கல்
12. இரவும் பகலும் வரவு விலக்கல்
13. காலம் கூறி வரைவு கடாதல்
14. கூறுவிக் குற்றல்
15. செலவு நினைந்துரைத்தல்
16. பொலிவு அழிவு உரைத்து வரைவு கடாதல்
என இவை பதினாறாம்.
பேரின்பக் கிளவி
வரைவு முடுக்கம் ஒருபதி னாறும்
சிவனது கருணை தெரிய உரைத்தல்
இன்பம் பெறஅருள் எடுத்தியம் பியது.
1. வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல்
வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல் என்பது, அலர் அறிவுறுத்த தோழி, அலரானும் காவல் மிகுதி யானும் நின்னை எதிர்ப்பட மாட்டாது அழுது வருந்தா நின்றவள் இடத்து நின்னருள் இருக்கின்ற வாறென்னோ எனத் தலைமகளது வருத்த மிகுதி கூறித் தலைமகனை வரைவு கடாவா நிற்றல்.
250. எழுங்குலை வாழையின் இன்கனி
தின்(று)இள மந்திஅந்தண்
செழுங்குலை வாழை நிழலில்
துயில்சிலம் பாமுனைமேல்
உழுங்கொலை வேல்திருச் சிற்றம்
பலவரை உன்னலர்போல்
அழுங்குலை வேலன்ன கண்ணிக்(கு)என்
னோநின் னருள்வகையே.
கொளு
இரவுக் குறியிடத்(து) ஏந்திழைப் பாங்கி
வரைவு வேண்டுதல் வரவு ரைத்தது.
இதன் பொருள் : இரவுக் குறியிடத்து ஏந்திழைப் பாங்கி வரைந்து கொள்வாயாக என்னும் இடம் தோன்றச் சொன்னது.
தெளிவுரை : இளமந்தி குலையுடைத்தாகிய வாழையின் இனிய பழத்தைத் தின்று, அழகினையும் தட்பத்தினையும் உடைத்தாகிய குலையுடைத்தாகிய வாழை நிழலிலே உறங்குகிற மலையினை உடையவனே ! பகைவர்கள் முனையிடத்தைச் கிழித்துச் செல்லுகிற தொத்து வேலாகிய சூல வேலையுடைய திருச்சிற்றம்பலவரை நினையாதவரைப் போல், வருந்துகிற கொலைத் தொழிலாற் சிறந்த வேல் போன்ற கண்களை உடையாளுக்கு உன் அருளின் கூறுபாடு எத்தன்மைத்து?
இளமந்தி, இடையூறின்றி வாழையின் இன்கனியைத் தின்று அதன் நிழலில் உறங்கும் என்றதனால் இவள் இடையூறின்றி இன்பம் துய்த்து உனது தாள் நிழலில் இனிது வாழச் செய்தல் வேண்டும் என உள்ளுறை கொள்க.
2. பெரும்பான்மை கூறி மறுத்தல்
பெரும்பான்மை கூறி மறுத்தல் என்பது, வரைவு கடாவிய தோழிக்கு, யான் அவளைத் தெய்வமானுடம் என்றறிந்து வரைந்து கோடற்கு இக்குன்றிடத்துத் தோன்றா நின்ற இடம் தெய்வ மகளிரது இடமோ அன்றிக் குறத்தியரிடமோ கூறுவாயாக எனத் தலைமகன் தலைமகளைப் பெரும்பான்மை கூறி மறுத்துரையா நிற்றல்.
251. பரம்பயன் தன்னடி யேனுக்குப்
பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை
வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி
வேழத்தின் என்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடம்
தோன்றும்இக் குன்றிடத்தே.
கொளு
குலம்புரி கொம்பர்க்குச் சிலம்பன் செப்பியது.
இதன் பொருள் : அழகிதாய் விரும்பத்தக்க வஞ்சிக் கொடியை ஒப்பாளுக்கு நாயகன் சொன்னது.
தெளிவுரை : மேலாய பொருளாய் உள்ளவன் தன் அடியேனாகிய எனக்குப் பெரும் பயனாய், உள்ளவன் பூமியையும் ஆகாயத்தையும் ஊடுருவி நிற்கையால் அவனுடைய திருவடியின் எல்லையை அயனும் மாலும் அறியாத தில்லைவானவன் அவனுடைய தெய்வலோகத்தைச் சேர்ந்த தெய்வ மகளிரிடமோ, இக் குன்றிடத்தே தோன்றுகிறன்ற இடம்.
தெய்வ மகளிடமாகவன்றோ நான் நினைந்திருப்பது என்றது.
3. உள்ளது கூறி வரைவு கடாதல்
உள்ளது கூறி வரைவு கடாதல் என்பது பெரும்பான்மை கூறி மறுத்த தலைமகனுக்கு இவ்விடம் எந்தையது முற்றூட்டு; எமக்குற்றவர் குறவரே; எம்மைப் பெற்றாளும் கொடிச்சியே, யாங்களும் புனங்காப்போம் சிலர். நீ வரைவு வேண்டாமையின் எம்மைப் புனைந்துரைக்க வேண்டுவதில்லையெனப் பின்னும் வரைவு தோன்றத் தோழி தங்கள் உண்மை கூறா நிற்றல். முற்றூட்டு - முழுதுருமை.
252. சிறார்கவண் வாய்த்த மணியிற்
சிதைபெருந் தேனிழும்என்(று)
இறால்கழி வுற்(று)எம் சிறுகுடில்
உந்தும் இடமி(து)எந்தை
உறாவரை யுற்றார் குறவர்பெற்
றாளும் கொடிச்சி உம்பர்
பெறாஅருள் அம்பல வன்மலைக்
காத்தும் பெரும்புனமே.
கொளு
இன்மை உரைத்த மன்ன னுக்கு
மாழை நோக்கி தோழி உரைத்தது.
இதன் பொருள் : இல்லாதது ஒன்றைச் சொன்ன நாயகனுக்குக் குளிர்ந்த நோக்கினை உடையாளுடைய தோழி சொன்னது.
தெளிவுரை : சிறு பிள்ளைகள் கையில் கவண் வாய்க்கப் பெற்ற மணியாலே அழித்த பெருந்தேன் ஆனது இழுமென்கிற அநுகரணச் சத்தத்தினை உடைத்தாய் இறாலினின்றும் கழிந்து எம்முடைய சிறிய வீடுகளைத் தள்ளுகிற இடமாம் இது. என் பிதாவுக்கு முற்றூட்டாய் இருந்தது. எங்களுக்கு உறவின்முறையாரும் குறவராய் இருந்தனர்; எங்களைப் பெற்றவளும் குறத்தி; தேவர்கட்கும் பெறவரிய திருவருளையுடைய திருஅம்பல நாதனுடைய திருமலையிடத்து நாங்கள் காப்பதும் பெரும் புனமாய் இருந்தது.
என்ன, ஒருவருக்கும் வசப்படாது, மாதாவாலும் பிதாவாலும் செய்தொழிலாலும் செற்றியாலும் இருக்கும். என்றால் எங்களுக்கு மாதாவும் பிதாவும் குறக்குலமாய்ச் செய்தொழிலும் தினக் காவலாய், எம் என்ற செற்றியினாலே பண்புடைத்தாய் இருக்க, நீ ஏதுகண்டு எங்களைப் புகழ்ந்தாய் என்றது. அநுகரணம் - ஒலிக்குறிப்பு.
4. ஏதங்கூறி இரவரவு விலக்கல்
ஏதங்கூறி இரவரவு விலக்கல் என்பது, உண்மை உரைத்து வரைவு கடாய தோழி, நீ வரைவொடுவாராய் ஆயின் சிங்கம் திரண்டு தனக்கு யானையாகிய உணவுகளைத் தேடும் இருளின்கண் நினது கைவேல் துணையாக நீ வந்து அருளா நின்ற இஃதே எங்களுக்குத் துன்பமாகத் தோன்றா நின்றது. இனி இவ் இருளிடை வாராது ஒழிவாய் என ஏதங்கூறித் தலைமகனை இரவரவு விலக்கா நிற்றல்.
253. கடந்தொறும் வாரண வல்சியின்
நாடிப்பல் சீயம்கங்குல்
இடம்தொறும் பார்க்கும் இயவொரு
நீஎழில் வேலின்வந்தால்
படந்தொறும் தீஅர வன்னம்
பலம்பணி யாரின்எம்மைத்
தொடர்ந்தொறும் துன்(பு)என் பதேஅன்ப
நின்னருள் தோன்றுவதே.
கொளு
இரவரு துயரம் ஏந்தலுக்(கு) எண்ணிப்
பருவரல் எய்திப் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : நாயகனுக்கு இரவிடத்தே வருகிற வருத்தத்தை விசாரித்துத் துன்பமுற்ற தோழி சொன்னது.
தெளிவுரை : பல சிங்கங்களும் யானையாகிய உணவைத் தேடி இராக் காலத்துக் காடுதோறும் காட்டில் அவை வாழும் இடங்கள்தோறும் பார்க்கும் வழியிடத்தே ஒரு துணையும் இல்லாத நீ அழகிய வேலே துணையாக வந்தால், அன்பனே ! நின்னுடைய அருள் எங்களுக்குத் தோன்றுகிறது, படங்கள் தோறும் அக்கினியைக் கான்று விடுகிற பாம்பை உடையவன், அவனுடைய திருஅம்பலத்தை வணங்காதாரைப் போலே எம்மை இடைவிடாமல் ஒறுக்கிற துன்பம் தோன்றா நின்றது.
5. பழிவரவுரைத்துப் பகல்வரவு விலக்கல்
பழிவரவுரைத்துப் பகல் வரவு விலக்கல் என்பது, இவ் இருளிடை வாராது ஒழிகென்றது. பகல் வரச் சொன்னவாறாம் என உட்கொண்டு பகற்குறிச் சென்று நிற்பத் தோழி எதிர்ப்பட்டு, பகல் வந்து எமக்குச் செய்யா நின்ற மெய்யாகிய அருள் புறத்தார் அறிந்து வெளிப்பட்டுப் பழியாகப் புகுதா நின்றது. இனிப் பகல் ஒழிவாயாக எனப் பழிவருதல் கூறிப் பகல் வரவு விலக்கா நிற்றல்.
254. களிறுற்ற செல்லல் களைவயின்
பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை
நாட பெடைநடையோ(டு)
ஒளிறுற்ற மேனியன் சிற்றம்
பலம்நெஞ் சுறாதவர்போல்
வெளிறுற்ற வான்பழி யாம்பகல்
நீசெய்யும் மெய்யருளே.
கொளு
ஆங்ஙனம் ஒழுகும் அடல்வேல் அண்ணலைப்
பாங்கி ஐய பகல்வரல் என்றது.
இதன் பொருள் : அப்படிப் பகற்குறி வந்தொழுகும் கொலை வேலையுடைய நாயகனைப் பாங்கியானவள் பகற்குறியில் வரவேண்டா என்றது. ஆங்ஙனம் என்றது, விட்டுப் பெற்றியாய் முன் சொன்ன பகற் குறியை.
தெளிவுரை : களிறானது அளறிலே பட்டுற்ற வருத்தத்தைக் களைய வேண்டி அதன் பெண்ணாகிய பெண்யானை மரத்தை முறித்து அதன் கையிலே கொடுத்துத் தான் பற்றி வலிக்கவும் வராதபடியாலே கூப்பிடுகிற ஆகாயத்தைத் தோய்ந்த பெரிய மலைமேல் உண்டாகிய நாட்டினை உடையவனே. அன்னப் பெடையை யொத்த நடையை உடையாளுடனே விளங்குகிற திருமேனியை நினையாதாரைப் போலே பகற்பொழுதின் இடத்தே நீ செய்கிற மெய்யான அருள் வெளிப்பட்ட பெரும் பழியாகா நிற்கும். ஆதலாற் பகற்குறியின் வரவேண்டா என்றபடி.
வழி அல்லாத வழியே வந்து யானையானது பாயப் பிடியானை அதனை யெடுக்க முயன்றாற் போல நீயும் வழியில்லாத வழியாகிய களவொழுக்கத்தில் வந்து இச் சிற்றின்பத்தில் அழுந்துகையால்ற உன்னை இது மாற்றவேண்டி நானும் வருந்த நின்றேன் என்றபடி.
6. தொழுதிரந்து கூறல்
தொழுதிரந்து கூறல் என்பது பகல் வரவு விலக்கின தோழி இவன் இரவு வரவும் கூடுமென உட்கொண்டு, நின்னை எதிர்ப்பட வேண்டி அழுது வருந்தா நின்ற இவள் காரணமாக, அரிக்கும் யாளிக்கும் வெருவி யானைகள் திரண்டு புடைபெயராக மிக்க இருளின் கண்வாராது ஒழிவாயாக என்று நின் கழல்களைக் கையால் தொழுது நின்னை இரந்தேன் என வரைவு தோன்றத் தலைமகனைத் தொழுதிரந்து கூறா நிற்றல்.
255. கழிகண் தலைமலை வோன்புலி
யூர்கரு தாதவர்போல்
குழிகண் களிறு வெரீஇஅரி
யாளி குழீஇவழங்காக்
கழிகட் டிரவின் வரல்கழல்
கைதொழு தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலில்
துவளும் இவள்பொருட்டே.
கொளு
இரவரவின் ஏதம் அஞ்சிச்
சுரிதருகுழல் தோழி சொல்லியது.
இதன் பொருள் : இரவுக்குறி வரவுக்குப் பயப்பட்டு நெறித்த கூந்தலினையுடைய தோழி சொன்னது.
தெளிவுரை : பொழியா நின்ற கண்ணாகிய மேகங்களை உடையவளாய் மயில்போல் வாடுகிற இவள் காரணமாகக் குழிந்த கண்களையுடைய யானைகள் சிங்கத்துக்கும் யாளிக்கும் பயப்பட்டு ஓரிடத்தே திரண்டு போக மாட்டாதே நிற்கிற நெடிதாகிய கடுமையைச் செய்கிற இரவிடத்தே கண்கழித்த தலை ஓட்டைச் சூடுகிறவனுடைய பெரும்பற்றப் புலியூரைச் சேராதாரைப் போல் வெருவி வாராது ஒழிவாயாக.
7. தாய் அறிவு கூறல்
தாய் அறிவு கூறல் என்பது, தொழுதிரந்து கூறவும், வேட்கை மிகவால் பின்னும் குறியிடைச் சென்று நிற்ப, அக்குறிப்பறிந்து, நங்கானலிடத்து அரை இரவின்கண் ஒரு தேர் வந்தது உண்டாகக் கூடும் என உட்கொண்டு அன்னை சிறிதே கண்ணும் சிவந்து என்னையும் பார்த்தாள். இருந்த வாற்றான் இவ் ஒழுக்கத்தை அறிந்தாள் போலும் எனத் தோழி தலைமகளுக்குக் கூறுவாள் போன்று சிறைப் புறமாத் தலைமகனுக்கு வரைவு தோன்றத் தாய் அறிவு கூறா நிற்றல். கானல் - கடற்கரை; கடற்கரைச் சோலை.
256. விண்ணும் செலவறி யாவெறி
யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்தில்லை மல்லெழில்
கானல் அரையிரவில்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த
துண்டாம் எனச்சிறிது
கண்ணும் சிவந்தன்னை என்னையும்
நோக்கினள் கார்மயிலே.
கொளு
சிறைப்பு றத்துச் செம்மல் கேட்ப
வெறிக்குழல் பாங்கி மெல்லியற்(கு) உரைத்தது.
இதன் பொருள் : நாயகன் கேட்க வேண்டிச் சிறைப்புறமாக நறுநாற்றத்தினைப் பொருந்திய அளகத்தினையுடைய பாங்கி மெல்லிய இயல்பினை உடையாளுக்குச் சொன்னது.
தெளிவுரை : விண்ணும் செலவு அறியா வெறியார் கழல் வீழ்சடைத் தீவண்ணன் என்பதாவது, சென்று நின்ற நிலைமையைத் தேவர்களும் அறியாத நறுநாற்றம் உடைத்தாகிய ஸ்ரீபாதங்களையும் தாழ்ந்த சடையினையும் உடைய தழற் பிழம்பு போன்ற சுரூபத்தைக் கண்டு பிரமன் மால் அடிமுடியும் தேடும் அவர்களால் காணப்பட்டிலன் என்பது கருத்து. அப்படிக் காணப்படாதவன் அன்பர் இடு மலரில் வெளிப்பட்ட நறு நாற்றம் கமழும் திருவடியினையும் அவர்களுக்குத் தோன்றும் தாழ்ந்த சடையும் உடையவன், சிவ தத்துவனாயுள்ளவன். அவனுடைய பெரும்பற்றப்புலியூரின் வளப்பமும் அழகும் உடைத்தாகிய கடற் சோலையிடத்தே இடையாமத்தே தலையானதொரு மணிகாட்டப்பட்ட பெருந்தேர் வந்ததாக வேண்டுமென்று அற்பமாத்திரம் கண்களைச் சிவப்பித்துத் தாயானவள் என்னையும் குரோதத்துடனே பார்த்தாள் காண், கார் காலத்து மயிலை ஒப்பாய் !
8. மந்தி மேல் வைத்து வரைவு கடாதல்
மந்தி மேல் வைத்து வரைவு கடாதல் என்பது, சிறைப்புறமாகத் தாயறிவு கூறித் சென்றெதிர்ப்பட்டு, ஒரு கடுவன் தன் மந்திக்கு மாங்கனியைத் தேனின் கண் தோய்த்துக் கொடுத்து நுகர்வித்துத் தம்முள் இன்புறுவது கண்டு, இது நம் காதலர்க்கு நம்மாட்டு அரிதாயிற்றென நீ வரையாமையை நினைந்து ஆற்றாள் ஆயினாள், என மந்திமேல் வைத்துத் தலைமகளது வருத்தம் கூறி வரைவு கடாவா நிற்றல்.
257. வான்தோய் பொழில்எழில் மாங்கனி
மந்தியின் வாய்க்கடுவன்
தேன்தோய்த்(து) அருத்தி மகிழ்வகண்
டாள்திரு நீள்முடிமேல்
மீன்தோய் புனற்பெண்ணை வைத்துடை
யானையும் மேனியைத்தான்
வான்தோய் மதில்தில்லை மாநகர்
போலும் வரிவளையே.
கொளு
வரிவளையை வரைவு கடாவி
அரிவை தோழி உரை பகர்ந்தது.
இதன் பொருள் : அழகிய வளைகளையுடையாளை வரைந்து கொள்ளும்படியை முடுக்கி நாயகியுடைய தோழி சொன்னது.
தெளிவுரை : அழகிய நீண்ட சடாபாரத்தின் மேலே நட்சத்திரத்தைப் பொருந்திய புனற் கங்கையாகிய பெண்ணை வைத்து எல்லாமுடையாளையும் திருமேனியில் ஒரு பாகத்தில் வைத்தவனுடைய ஆகாயத்தைப் பொருந்தின மதில் சூழப்பட்ட அவனுடைய பெரும்பற்றப்புலியூராகிய நகரியை ஒத்த அழகிய வரி வலைகளை உடையாள், ஆகாயத்தைத் தோய்ந்த பொழிலின் அழகிய பழத்தைத் தேனிலே தோய்த்து மந்திக்குறங்கின் வாயிலே கொடுத்து இவ்வினியோகம் கொள்ளப் பெற்றோமே யென்று கடுவன் குரங்கு மகிழ்கின்றதனைக் கண்டாள்.
இதனால் இம்மலையில் விலங்கு சாதிகள் முதலாகத் தம்மால் பாதுகாக்கப்படுவனவற்றைப் பாதுகாவா நின்றன. நம்முடைய நாயகரல்லரோ நம்மை நினையாது ஒழிந்தார் என்று கருதுவள் என்பது கருத்து.
9. காவல் மேல் வைத்துக் கண் துயிலாமை கூறல்
காவல் மேல் வைத்துக் கண் துயிலாமை கூறல் என்பது, மந்தி மேல் வைத்து வரைவு கடாவப்பட்ட தலைமகன், இது நம் காதலியிடத்து நமக்கு அரிதாயிற்றெனத் தானும் ஆற்றானாய், இரவுக் குறிச் சென்று நிற்ப, அந்நிலைமைக்கண் இவ்விடத்துள்ளார், இவள் காவற்பறை கேட்கும் தோறும் கண் துயிலாமைக்குக் காரணம் என்னோவெனத் தம்முள் கூறா நிற்றல். இதுவும் சிறைப்புறமாக வரைவு கடாதலைப் பயக்கும்.
258. நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று
நாடக மாடுதில்லைச்
சிறைக்கண் மலிபுனல் சீர்நகர்
காக்கும்செவ் வேல்கிளைஞர்
பறைக்கண் படும்படும் தோறும்
படாமுலைப் பைந்தொடியாள்
கறைக்கண் மலிகதிர் வேற்கண்
படாது கலங்கினவே.
கொளு
நகர்காவலின் மிகுகழி காதல்.
இதன் பொருள் : நகரியைக் காப்பார் காவலிலே மிகவும் சிறந்த அன்பாலே சொன்னது.
தெளிவுரை : தேனினைத் தன்னிடத்தே உடையதாகிய கொன்றை மாலையை உடையவன், அவன் நின்று கூத்தாடியருளுகிற பெரும்பற்றப்புலியூராகிய அணையிடத்தே நின்று சிறைப்படும் புனல் சுற்றிச் சூழப்பட்ட சீரிய நகரியைக் காக்கின்ற சிவந்த வேலையுள்ள இளைஞருடைய துடியின் வட்டம் ஆரவாரிக்கும் தோறும் விழாத முலைகளையும் அழகிய வளைகளையும் உள்ளவளுடைய தன்னிடத்தே இரத்தம் செறிந்த ஒளி வேலை ஒத்த கண்கள் உறங்காது வருந்தின.
10. பகல் உடம்பட்டாள் போன்று இரவரவு விலக்கல்
பகல் உடம்பட்டாள் போன்று இரவரவு விலக்கல் என்பது, சிறைப்புறமாகக் கண்துயிலாமை கேட்ட தலைமகன், ஆதரவு மிகவால் எதிர்ப்படல் உற்று நிற்பத் தோழி எதிர்ப்பட்டு நீ வந்து ஒழுகா நின்ற இப்புலரா இரவும் பொழியா மழையும் புண்ணின் கண் நுழையும் வேல் மலராம்படி எங்களை வருத்தா நின்றன; இதற்கொரு மருந்தில்லையோ நும் வரையிடத்து எனப் பகல் உடம்பட்டாள் போன்று இரவரவு விலக்கா நிற்றல்.
259. கரலா யினர்நினை யாத்தில்லை
அம்பலத் தான்கழற்(கு) அன்
பிலரா யினர்வினை போலிருள்
தூங்கி முழங்கிமின்னிப்
புலரா இரவும் பொழியா
மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்இல்லை
யோநும் வரையிடத்தே.
கொளு
விரைதரு தாரோய் இரவரல் என்றது.
இதன் பொருள் : திவ்ய கந்தம் பொருந்தின மாலையினை உடையவனே ! இரவுக் குறி வாராதே கொள் என்றது.
தெளிவுரை : அறிவில்லாதவர்களால் நினையப்படாத பெரும்பற்றப்புலியூரில் திருவம்பலத்தே உள்ளவனுடைய திருவடி கண்டு அன்பிலாதார் தீவினை போல இருள் செறிந்து விடியாத இரவும் முழங்கி மின்னிப் பொழிவது போலக் காட்டிப் பொழியாத மழையும், புண்ணிலே பட்டு உருவுகின்ற வேல் பூ என்னும்படி மிகவும் கொடியதாய் வாரா நின்றன. இது, நீ வரைந்து கொள்ளாயாகில் வரைந்து கொள்ளும் அளவும் இவ்வளவில் நிற்கும்படி ஒரு மருந்தாகிலும் இல்லையோ நுங்கள் வரையிடத்தே என்றுபடும்.
11. இரவு உடம்பட்டாள் போன்று பகல் வரவு விலக்கல்
இரவு உடம்பட்டாள் போன்று பகல் வரவு விலக்கல் என்பது, இவள் மருந்தில்லையோ என்றது, யான் இரவுக் குறி செல்லின் மழைக்கால் இருளான் எதிர்ப்படல் அருமையான் வேட்கையுற்றுப் பகற்குறி உடம்பட்டாள் என உட்கொண்டு பகற்குறிச் செல்லா நிற்பத் தோழி எதிர்ப்பட்டு, பகல் வந்து அருளா நின்றது அவளுக்கு வருத்தம் உறும்படியாக மிக்க அலராகா நின்றது. அதனால் பகற்குறி வரல்பாலை அல்லை என இரவுக்குறி உடம்பட்டாள் போன்று பகற்குறி விலக்கா நிற்றல்.
260. இறவரை உம்பர்க் கடவுட்
பராய்நின்(று) எழிலியுன்னிக்
குறவரை ஆர்க்கும் குளிர்வரை
நாட கொழும்பவள
நிறவரை மேனியன் சிற்றம்
பலம்நெஞ்(சு) உறாதவர்போல்
உறவரை மேகலை யாட்(கு)அல
ராம்பகல் உன்னருளே.
கொளு
இகலடு வேலோய் பகல்வரல் என்றது.
இதன் பொருள் : மாறுபட்டாரைக் கொல்லுகிற வேலினை உடையவனே ! பகற்குறி வாராது ஒழி என்றது.
தெளிவுரை : மழை பெய்யாதொழிய மலையின் உச்சியில் இருக்கிற குறவர்கள் மழை பெய்விப்பதாக நினைந்து தெய்வத்துக்குப் பலி கொடுத்து வேண்டிக் கொண்டு குறவர் (ஐகாரம் அசைநிலை) ஆரவாரிக்கின்ற குளிர்ந்த மலைமேல் உண்டாகிய நாட்டினை உடையவனே ! அழகிய பவளத்தின் நிறம் போன்ற வரையினை நிகர்த்த திருமேனியை உடையவன், அவனுடைய திருச்சிற்றம்பலத்தை நினையாதாரைப் போல வருந்த, உன்னுடைய அருள் - பகற் குறியிடத்தே - வருவாயாகில் அரையிலே சிறந்த மேகலாபரணத்தை உடையாளுக்கு அலராக நிற்குமாதலால் பகற் குறியிடத்தே வரவேண்டா.
12. இரவும் பகலும் வரவு விலக்கல்
இரவும் பகலும் வரவு விலக்கல் என்பது, இரவு உடம்பட்டாள் போன்று பகல் வரவு விலக்கின தோழி, நீ பகல் வரின் அலர் மிகுதியான் எங்களுக்கு மிக்க பழி வந்தெய்தும்; இரவு வரின் எவ்வாற்றானும் நின்னை எதிர் படுதல் அருமையால் சிறிதும் பயனில்லை. அதனால் நீ இருபொழுதும் வரற்பாலையல்லை என இரவும் பகலும் வரவு விலக்கா நிற்றல்.
261. சுழியா வருபெரு நீர்சென்னி
வைத்தென்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம்
பலவன் கரந்தருமான்
விழியா வரும்பரி மென்குழ
லாள்திறத்(து) ஐயமெய்யே
பழியாம் பகல்வரில் நீயிர(வு)
ஏதும் பயனில்லையே.
கொளு
இரவும் பகலும் வரவொழி கென்றது.
இதன் பொருள் : இரவிடத்தும் பகலிடத்தும் வரவேண்டா வென்று விலக்கியது.
தெளிவுரை : சுழித்துக் கொண்டு வருகிற பெருநீராகிய கங்கையைத் திருமுடியில் வைத்து, என்னைத் தன் அடிமைத் திறத்துக்குப் போந்தேன் என்று நீக்கி நிறுத்தாத அருளை என்னிடத்தே வைத்த திருச்சிற்றம்பலநாதன், அவன் கையிலேந்திய மான் போலச் சதாகாலமும் விழித்துச் செல்லுகிற நெறித்த மெல்லிய கூந்தலினையுடையாள் அளவில் சுவாமி ! உண்மையாக நீ பகற் குறியிடத்தே வருகையினால் சிறிதும் பயன்படாது, என்ன இரவும் பகலும் வாராதே கொள் நாயகனே.
சுழித்துக் கொண்டு வருகிற பெரிய நீரை அதன் விசையை மாற்றித் திருமுடியிலே வைத்தாற் போல நில்லாது பரக்கும் நெஞ்சுடைய என்னையும் ஒருவழிப்படுத்தி ஆண்டான் என்பது கருத்து.
13. காலங் கூறி வரைவு கடாதல்
காலங் கூறி வரைவு கடாதல் என்பது, இரு பொழுதும் வரவு விலக்கின தோழி, மதி நிரம்பா நின்றது, வேங்கை பூவா நின்றன. இனி நினக்கு வரை வொடு வருதற்குக் காலமிது எனக் காலங் கூறி வரைவு கடாவா நிற்றல்.
குறிப்பு : ஊர்கொளும் நாளிலும் வேங்கை மலரும் நாளிலும் வரைதல் மரபு.
ஊர் கொண்டன்று - நிரம்புதல் உற்றது.
262. மையார் கதலி வனத்து
வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா(து) அயின்றன மந்திகள்
சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதென் அம்பலத்
தான்மதி யூர்கொள் வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன்
மாலையின் முன்னினவே.
கொளு
முந்திய பொருளைச் சிந்தையில் வைத்து
வரைதரு கிளவியில் தெரிய உரைத்தது.
இதன் பொருள் : முற்படத் தோன்றுகிற பொருளை நெஞ்சில் வைத்து வரைய வேண்டும் என்கிற வார்த் தையால் விளங்கச் சொன்னது.
தெளிவுரை : இருளார்ந்த வாழைக் காட்டின்கண் வருக்கைப் பலாவின் பழம் விழுதலால் உண்டாகிய தேனை இளைய மந்திகள் அறியாதே உண்டு பின் களியாற் சோரும் பெரிய சிலம்பையுடையாய். மதி நிரம்பா நின்றது. அம்பலத்தானுடைய இவ்வெற்பின் கண் செறிவார்ந்த வளரா நின்ற இளைய வேங்கை கண் பூத்துப் பொன் மாலை போலத் தோன்றின. இனி மெய்யாக உனக்கு அரியது யாது?
14. கூறுவிக் குற்றல்
கூறுவிக் குற்றல் என்பது, காலம் கூறி வரைவு கடாவவும் வரைவுடம் படாமையின் அவள் தன்னைக் கொண்டே கூறுவிப்பாளாக. அலரான்வரு நாணினையும் காணாமையான் வரும் ஆற்றாமையையும் பற்றிக் கிடந்த நம் அல்லலை நம்மால் தலையளிக்கப்படுவார் இவ்வாறு வருந்துதல் தகாதெனத் தாமாக அறிகின்றில ராயின் நாம் சொல்லும் தன்மைகள் என்னோ எனப் புலந்து நீயாகிலும் சென்று கூறு என்பது குறிப்பால் தோன்றத் தலைமகன் வரைவு உடம்படாமையைத் தோழி தலைமகட்குத் கூறா நிற்றல்.
263. தேமாம் பொழில்தில்லைச் சிற்றம்
பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில்
வோனைநண் ணாதவரின்
வாமாண் கலைசெல்ல நின்றார்
கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயின்என்
னாம்சொல்லும் தன்மைகளே.
கொளு
ஒத்த(து) ஒவ்வா(து) உரைத்த தோழி
கொத்தவிழ் கோதையால் கூறுவிக் குற்றது.
இதன் பொருள் : நாயகனுடனே பொருந்தவும் பொருந்தாமலும் வரைவினைப் பற்றித் தோழி கொத்து விரிகின்ற மாலையையுடைய நாயகி தன்னைக் கொண்டே சொல்லுவிப்பதாக நினைந்தது.
தெளிவுரை : தேமாம் பொழிலினால் சூழப்பட்ட பெரும்பற்றப்புலியூரில் திருவம்பலத்தில் தேவர்கள் வந்து வணங்க மானிடராகிய நாம் ஆதரம் பண்ணவும் திருக்கூத்தாடியருளுகிறவனைச் சேராதாரைப்போலக் குறங்கினின்று (அழகு) மாட்சிமைப்பட்ட மேகலாபாரம் கழலவும் இதனை விசாரியாதே நின்றவர் பெருகிக் கிடந்த நம்முடைய துன்பத்தைப் பார்த்தால், தாமாக அறியாராகில் இவருக்கு நாம் அறிவிக்கும் இயல்புகள் எங்ஙனதே தான். குறங்கு - தொடை.
என்ன நாயகி மறுமாற்றம் சொல்லவும் அவன் கேட்பவனாவது பயன்.
15. செலவு நினைந்து உரைத்தல்
செலவு நினைந்து உரைத்தல் என்பது, வரைவு உடம்படாமையின் தோழி தலைமகனோடு புலந்து கூறக் கேட்டு, அக்குறிப்பு அறிந்து இக்கல்லதரின் கண்நீர் வந்தவாறு என்னோ என்று வினவுவாரைப் பெற்றோமாயின் இத்தன்மையை உடைத்தாகிய மிக்க இருளின்கண் யாம் அவருழைச் சேறல் அரிதன்று; சென்றேமாயினும் அவ்வாறு சொல்வாரில்லை எனத் தலைமகள் செலவு நினைந்து கூறா நிற்றல்.
264. வல்சியின் எண்கு வளர்புற்(று)
அகழமல் கும்இருள்வாய்ச்
செல்(வு)அரி தன்றுமன் சிற்றம்
பலவரைச் சேரலர்போல்
கொல்கரி சீயங் குறுகா
வகைபிடி தானிடைச்செல்
கல்லதர் என்வந்த வாறென்
பவர்ப்பெறின் கார்மயிலே.
கொளு
பாங்கி நெருங்கப் பணிமொழி மொழிந்து
தேங்கமழ் சிலம்பற்குச் சிறைபுறக் கிளவி.
இதன் பொருள் : பாங்கியானவள் நெருங்கி வார்த்தை சொல்வதற்கு நாயகியானவள் பல வார்த்தையும் பேசியது, தேன் கமழும் மலையினையுடையவனுக்குச் சிறைப்புறத்துச் சொல்லும் வார்த்தை ஆயது.
தெளிவுரை : திருச்சிற்றம்பல நாதனைச் சேராதாரைப் போல கொலைத் தொழிலை வல்ல யானையைச் சிங்கம் சென்று குறுகாதபடி பிடியானையானது தான் இடையிலே புகுந்து தன் முகத்தைக் காட்டி அதன் மருப்பை மறைத்துப் பரிகரிக்கிற கல்லுடைத்தாகிய வழியில் நீங்கள் வந்தபடி ஏன்? என்று சொல்லுவாரைப் பெறின், கார்காலத்து மயிலையொப்பாய் ! தனக்கு உணவு காரணமாகக் கரடியானது மிக்கபுற்றை அகழும்படி செறிந்த இருளிடத்தே செல்கை அரிதன்று காண்.
சென்றாலும் வினவுவாரில்லை; எனவே மாநிலத்து இறந்துபடுவர் என்பது கருத்து. பரிகரித்தல் - நீக்குதல்.
16. பொலிவழிவு உரைத்து வரைவு கடாதல்
பொழிவழிவு உரைத்து வரைவு கடாதல் என்பது, தலைமகள் தன்னை எதிர்ப்படலுற்று வருந்தா நின்றமை சிறைப்புறமாகக் கேட்ட தலைமகன் குறியிடை வந்து நிற்பத் தோழி எதிர்ப்பட்டு, என்னையரது காவலை நீவி நின்வயத்தளாய் நின்று பொலி வழிந்து வருந்தா நின்றவளை நீ வரைந்து கொள்ளாது இவ்வாறு இகழ்ந்து மதித்தற்குக் காரணம் என்னோ எனத் தலைமகளது பொலிவழிவு கூறி வரைவு கடாவா நிற்றல்.
265. வாரிக் களிற்றின் மருப்புகு
முத்தம் வரைமகளிர்
வேரிக்(கு) அளிக்கும் விழுமலை
நாட விரிதிரையின்
நாரிக்(கு) அளிக்கமர் நன்மாச்
சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞைஇந்
நீர்மைஎன் எய்துவதே.
கொளு
வரைவு விரும்பு மன்னுயிர்ப் பாங்கி
விரைதரு குழலி மெலிவு ரைத்தது.
இதன் பொருள் : வரைந்து கொள்ளுகிறதை விரும்புகிற நிலை பெற்ற உயிர்போன்ற பாங்கி நறுநாற்றமுடைத்தாகிய கூந்தலினை உடையவள் வாடியதனைச் சொன்னது.
தெளிவுரை : இம்மலையில் குறமகளிர் ஆனை மருப்புக்கள் உகுத்த முத்துக்களைக் கள்ளுக்கு முகந்து கொடுக்கும் சீரிய மலைம÷ல் உண்டாகிய நாட்டினை உடையவனே ! விரிந்த திரையையுடைய பெண்ணாகிய கங்கைக்குக் கொடுக்கப் பொருந்தின நல்ல பெரிய திருச்சடா மகுடத்தை உடைய சிவனது பெரும்பற்றப் புலியூரில் அழகுடன் களிக்கும் கரிய மயிலை ஒப்பாள் இத்தன்மையை அடைகுவது ஏன்தான்?
என்ற பொருளாய், ஆனைக் கொம்பினின்று முகுத்த முத்துக்களை மதுபானம் காரணமாக முகந்து கொடுத்தாற் போல இவளும் தன் அண்ணன்மார்களுடைய காவல் நீங்கி உனக்கு எளியள் ஆயினமை பார்க்காது இன்பம் செய்கிற களவொழுக்கங்கள் காரணமாக இகழ மதித்தாய், அத்தனை என்றது உள்ளுறை உவமம்.
வரைவு முடுக்கம் முற்றிற்று.

பதினெட்டம் அதிகாரம்
18. வரை பொருட் பிரிதல்
வரைபொருட் பிரிதல் என்பது தோழியால் வரைவு முடுக்கப்பட்ட தலைமகன் வரைதற்கு வேண்டும் பொருளின் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லுதல். இஃது இருவரும் கூடி இல்லறம் நிகழ்த்தும் கற்புக்காலம் அன்றாயினும், பகற்குறி இரவுக் குறிகளில் தலைவன் செல்லாமை பற்றிப் பிரிவு எனப்பட்டது. இவ்வாற்றானே முன்னர் ஒரு வழித்தணத்தல் என்றது காண்க. இவ் இரண்டிடத்தும் தலைவி ஆற்றாளாதலும் தோழி ஆற்றுவித்தலும் இயல்பாதலின், இவையும் கற்பின் பாலவாம். கற்பிடத்துப் பொருள்வயின் பிரிவு உளதாகலின், இங்கு, இப்பிரிவு கொள்ளப்பட்டது. இது 33 துறைகளாக வகுக்கப் பெற்றுள்ளது. அவையாவன.
1. முலைவிலை கூறல்
2. வருமது கூறி வரைவுடம் படுத்தல்
3. வரைபொருட் பிரிவை உரையெனக் கூறல்
4. நீயே கூறு என்றல்
5. சொல்லாது ஏகல்
6. பிரிந்தமை கூறல்
7. நெஞ்சொடு கூறல்
8. நெஞ்சொடு வருந்தல்
9. வருத்தம் கண்டுரைத்தல்
10. வழியொழுகி வற்புறுத்தல்
11. வன்புறை எதிரழிந்து இரங்கல்
12. வாய்மை கூறி வருத்தம் தணித்தல்
13. தேறாது புலம்பல்
14. காலமறைத்து உரைத்தல்
15. தூது வரவுரைத்தல்
16. தூது கண்டழுங்கல்
17. மெலிவு கண்டு செவிலி கூறல்
18. கட்டு வைப்பித்தல்
19. கலக்கமுற்று நிற்றல்
20. கட்டுவித்தி கூறல்
21. வேலனை அழைத்தல்
22. இன்னல் எய்தல்
23. வெறி விலக்குவிக்க நினைத்தல்
24. அறத்தொடு நிற்றலை யுரைத்தல்
25. அறத்தொடு நிற்றல்
26. ஐயம் தீரக் கூறல்
27. வெறி விலக்கல்
28. செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்றல்
29. நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நிற்றல்
30. தேர் வரவு கூறல்
31. மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல்
32. ஐயுற்றுக் கலங்கல்
33. நிதி வரவு கூறாநிற்றல்
என்பனவாம்.
பேரின்பக்கிளவி
வரைபொருட் பிரிதல் துறைமுப் பத்து
மூன்றுங் கருணை தோன்ற அருளே
உணர்த்தலும் உணர்தலும் திரோதையும் பரையும்
தெரிசன மாகித் திவ்விய இன்பம்
கூடும் குறியும் குலவி யுணர்தல்.
1. முலை விலை கூறல்
முலை விலைக் கூறல் என்பது, வரைவு முடுக்கப்பட்ட தலைமகன், யான் வரைவொடு வருதற்கு நீ சென்று அவள் ஐயம்மாரை முலைவிலை கேட்பாயாக என, எல்லாவற்றானும் நின்வரைவை எமரேற்றுக் கொளின் அல்லது விலை கூறுவராயின் அவளுக்கு ஏழ் உலகும் விலை போதாது எனத் தோழி முலைவிலை கூறா நிற்றல். முலைவிலை - பரிசம்.
266. குறைவிற்கும் கல்விக்கும் செல்விற்கும்
நின்குலத் திற்கும் வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும்
ஏற்பின்அல் லால்நினையின்
இறைவிற் குலாவரை யேந்திவண்
தில்லையன் ஏழ்பொழிலும்
உறைவிற் குலாநுத லாள்விலை
யோமெய்ம்மை யோதுநர்க்கே.
கொளு
கொலைவேற் கண்ணிக்கு விலையிலை என்றது.
இதன் பொருள் : கொலை செய்யும் வேல் போன்ற கண்ணினை உடையாளுக்கு மதிக்கும் விலை இல்லை என்று சொன்னது.
தெளிவுரை : ஒருகுறை உடையாயிருக்கிற நீ வந்த வரத்திற்கும் உன்னுடைய கல்வி மிகுதிக்கும் உங்கள் குடிக்கேற்ற பெருமைக்கும் நின்னுடைய வமிசத்திற்கும், உன்னிடத்தே நட்புக் கொள்ள நாடி வந்த நல்லோர்களுக்கெல்லாம் பஞ்சேந்திரியங்கள் ஒருப்பட்டு நிரம்பத்தக்க நின் ஒழுக்கத்திற்கும் இவற்றான் ஏற்கின் அல்லது, விசாரிக்கில் சுவாமி வில்லாக வளைத்த மகாமேருவை ஏந்தியவன் அவனது அழகிய பெரும்பற்றப்புலியூரிலே உள்ளவன், அவனுடைய ஏழு பொழிலாகிய ஏழு பூமியும் உறையிடவும் போதாது. இத்தனை அல்லது விற்போன்ற நெற்றியினை உடையாளுக்கு, உண்மை சொல்லில் விலையோதான் ?
2. வருமது கூறி வரைவுடம் படுத்தல்
வருமது கூறி வரைவுடம்படுத்தல் என்பது, முலை விலை கூறிய தோழி, நீ வரைவொடு வாராது இரவருள் செய்யா நின்ற இது கெர்ப்பத்துக்கு ஏதுவானால் நம் எல்லார்க்கும் பொல்லாதாம். அது பாடமல் எமரால் தொடுக்கப்பட்ட அருங் கலங்களை விரைய வரவிட்டு அவளை வரைந்தெய்து வாயாக என மேல்வரும் இடுக்கண் கூறித் தலைமகனை வரைவுடம் படுத்தா நிற்றல்.
267. வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண்
நித்தில வாள்நகைக்குத்
தொடுத்தன நீவிடுத் தெய்தத்
துணியென்னைத் தன்தொழும்பிற்
படுத்தநன் நீள்கழல் ஈசர்சிற்
றம்பலம் தாம்பணியார்க்(கு)
அடுத்தன தாம்வரின் பொல்லா(து)
இரவின்நின் ஆரருளே.
கொளு
தொடுத்தன விடுத்துத் தோகை தோளெய்(து)
இடுக்கண் பெரிது இரவரின் என்றது.
இதன் பொருள் : எங்கள் ஊர் இனமுறையார் அடுக்கிச் சொல்லுகின்ற பொருள்களைக் கொடுத்து மயில் போன்றவள் தோளைப் பேணுவாயாக. இரவிடத்தேவரில் இடுக்கண் பலவும் உண்டாம் என்றது.
தெளிவுரை : வடுவிடத்தனவாகிய நீண்ட வகிரை ஒத்த கண்களையும் வெள்ளிய முத்துப் போலும் ஒளி சிறந்த முறுவலையும் உடையாளுக்கு எங்கள் உறவின் முறையாராலே அடுக்கிச் சொல்லுகின்ற வற்றை நீ கொடுத்து இவளைப் பெறும்படியை அறுதி இடுவாயாக. என்னைத் தன்னுடைய தொண்டுபடுத்தலிலே ஆக்கிக் கொண்ட நன்றாக அளவிடப்படாத சீபாதங்களை உடைய முதலியாருடைய திருச்சிற்றம்பலத்தை வணங்காதார்க்கு அடுத்தனவாகிய குற்றங்கள் வரின் பொல்லாதாய் முடியும். இவ்விடத்தே நீ ஒழுகுகின்ற பெறுதற்கரிய அருளானது பொல்லாதாக முடியும்; ஆதலால், இவளை வரைந்து கொள்ளும்படி அறுதியிடுவாயாக.
3. வரைபொருட் பிரிவை உரையெனக் கூறல்
வரை பொருட் பிரிவை உரையெனக் கூறல் என்பது மேல் வருமது கூறி வரை உடம்படுத்தின தோழிக்கு, யான் போய் நுமர் கூறும் நிதியமும் தேடிக் கொண்டு நும்மையும் வந்து மேவுவேன். நீ சென்று அவள் வாடாத வண்ணம் யான் பிரிந்தமை கூறி ஆற்றுவித்துக் கொண்டிருப்பாயாக எனத் தலைமகன் தான் வரை பொருட்குப் பிரிகின்றமை கூறா நிற்றல்.
268. குன்றக் கிடையும் கடந்துமர்
கூறும் நிதிகொணர்ந்து
மின்தங் கிடைநும் மையும்வந்து
மேவுவன் அம்பலம்சேர்
மன்தங்(கு) இடைமரு(து) ஏகம்பம்
வாஞ்சியம் அன்னபொன்னச்
சென்(று)அங்(கு) இடைகொண்டு வாடா
வகைசெப்பு தேமொழியே.
கொளு
ஆங்க வள்வயின் நீங்கல் உற்றவன்
இன்னுயிர்த் தோழிக்கு முன்னி மொழிந்தது.
இதன் பொருள் : அவ்விடத்து நாயகியிடத்தினின்றும் நீங்குவதாக நினைந்தவன் இனிதாகிய உயிர் போன்ற தோழிக்கு எதிர்ப்பட்டுச் சொன்னது.
தெளிவுரை : திருஅம்பலத்தைப் பொருந்தின தலைவன் அவன் நிலை நின்ற திருவிடைமருதூர், திருவேகம்பம், திருவாஞ்சியம் என்கின்ற திருப்படை வீடுகளை ஒப்பாளைச் சென்று அவ்விடத்தே இடங்கொண்டு வாடாதபடி சொல்லுவாயாக வேண்டும். தேனையொத்த வார்த்தையினையுடையாய் நீதான். மலைக்கிடையில் கல்லுடைத்தாகிய அரிய வழியினையும் கடந்து உங்கள் உறவின் முறையாராலே சொல்லப்பட்ட நிதியினையும் கொண்டு வந்து மின் போன்ற இடையினையுடைய உங்களை வந்து பொருந்தக் கடவேன்.
4. நீயே கூறு என்றல்
நீயே கூறு என்றல் என்பது பிரிவு அறிவிப்பக் கூறின தலைமகனுக்கு நீ இரவு வரினும் பகல் பிரிந்து செல்வையென உட்கொண்டு நின்னோடு கூடிய அப்பொழுதும் யானுயிர் வாழேன் என்று நினைந் திருப்பாளுக்குத் தாழேன் என்னும் உரை முன்னாக நின் பிரிவை நீயே சொல்லிப் போவாயாக என அவள் விரைய வருவது காரணமாகத் தோழி தலைமகளது பிரிவாற்றாமை கூறா நிற்றல்.
269. கேழ்ஏ வரையும்இல் லோன்புலி
யூர்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியாள் இரவரி
னும்பகற் சேறியென்று
வாழேன் எனஇருக் கும்வரிக்
கண்ணியை நீவருட்டித்
தாழேன் எனஇடைக் கண்சொல்லி
ஏகு தனிவள்ளலே.
கொளு
காய்கதிர் வேலோய் கனங்குழை அவட்கு
நீயே உரை நின்செலவு என்றது.
இதன் பொருள் : கொலைத் தொழிலையும் பிரகாசத்தையும் உடைய வேலினையுடைய நாயகனே ! கனத்த மகரக் குழையை உடையாளுக்கு நின்னுடைய செலவை நீயே சொல்வாய் என்றது.
தெளிவுரை : தனக்கு இணை யாவரும் இல்லாதவன் அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் வாழ்கின்ற கிளியை நிகர்த்த யாழின் இசையைப் போன்ற வார்த்தையினை உடையவள் இரவிடத்தே வரினும் பகற் பொழுதெல்லாம் பிரிந்திருப்பை என்றும், உயிர் வாழேன் என்றும் இருக்கின்ற செவ்வரி பரந்த கண்களை உடையாளை நீ நுதலும் தோளும் முதலாயினவற்றைத் தடவி, நிமிடம் அளவும் தாழ்ந்து அங்கே உயிர் கொண்டு இரேன் என்று ஒப்பில்லாத நாயகனே ! அதனிடையிலே சொல்லிப் போவாய்.
5. சொல்லாது ஏகல்
சொல்லாது ஏகல் என்பது, நீயே கூறென்ற தோழிக்கு யான் எவ்வாறு கூறினும், அவள் பிரிய உடம்படாள் ஆதலின் ஒருகாலும் வரைந்து கொள்கையில்லை. யான் விரைய வருவேன்; அவ்வளவும் நீ ஆற்றுவித்துக் கொண்டிருப்பாயாக எனக் கூறித் தலை மகன் தலைமகளுக்குச் சொல்லாது பிரியா நிற்றல்.
270. வருட்டின் திகைக்கும் வசிக்கின்
துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும்
வகையில்லை சீரருக்கன்
குருட்டின் புகச்செற்ற கோன்புலி
யூர்குரு கார்மனம் போன்(று)
இருட்டிற் புரிகுழ லாட்(கு)எங்ங
னேசொல்லி ஏகுவனே.
கொளு
நிரைவளை வாட உரையா(து) அகன்றது.
இதன் பொருள் : நிறைந்த வளைகளையுடைய நாயகி வாடச் சொல்லாதே போனது.
தெளிவுரை : பிரிவு காரணமாக நுதலும் தோளும் தடவுவேன் ஆகில் இதற்குக் காரணம் ஏது என்று திகையா நிற்கும். வசமாகச் சில வார்த்தைகளைச் சொல்வேன் ஆகில், இதற்குக் காரணம் ஏது என்று நடுங்கா நிற்கும். தெளியும்படி வார்த்தை சொல்லில் நெஞ்சு மகிழ்ந்து தெளியாள். பிரிவு அறிவிக்கலாவதொரு உபாயமில்லை. சீரிய ஆதித்தர் பன்னிருவரின் இனத்தை ஒழித்துக் குருடர்க்கு இடமாகச் சென்று சேரும்படி அழித்த சுவாமி, அவனுடைய பெரும்பற்றப் புலியூரைச் சேராதார் மனம் போல இருண்டு தெறித்த கூந்தலினை உடையாளுக்கு எங்ஙனம் சொல்லி நான் பிரிவேன்.
6. பிரிந்தமை கூறல்
பிரிந்தமை கூறல் என்பது தலைமகன், முன்னின்று பிரிவுணர்த்த மாட்டாமையின் சொல்லாது பிரியா நிற்பத் தோழி சென்று நமரால் தொடுக்கப்பட்ட எல்லா நிதியத்தையும் ஒருங்கு வரவிட்டு நின்னை வணரந்து கொள்வானாக, அழற்கட நெறியே பொருள் தேடப் போனான். அப்போக்கு அழற்கடஞ் சென்றமையான் நமக்குத் துன்பம் என்பேனோ? வரைவு காரணமாகப் பிரிந்தான் ஆதலின் நமக்கு இன்பம் என்பேனோ எனப் பொதுப்படக் கூறி வரைவு காரணமாகப் பிரிந்தான் ஆதலின் இது நமக்கு இன்பமே எனத் தலைமகள் வருந்தாமல் அவன் பிரிந்தமை கூறா நிற்றல்.
271. நல்லாய் நமக்குற்ற(து) என்னென்(று)
உரைக்கேன் நமர்தொடுத்த
எல்லா நிதியும் உடன்விடுப்
பான்இமை யோர்இறைஞ்சும்
மல்லார் கழல்அழல் வண்ணர்வண்
தில்லை தொழார்கள் அல்லால்
செல்லா அழற்கடம் இன்றுசென்
றார்நம் சிறந்தவரே.
கொளு
தேங்கமழ் குழலிக்குப் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : நறுநாற்றங் கமழா நின்ற கூந்தலினை உடையாளுக்குத் தோழி சொன்னது.
தெளிவுரை : நம்மை உடையாய் ! நாயகர் வந்துற்ற நன்மையினை என்ன நன்மையென்று சொல்லுவேன்? நம்முடைய உறவின் முறையாரால் அடுக்கிச் சொல்லப்பட்ட எல்லாப் பொருள்களையும் ஒருக்காலே கொடுத்து விடுவதாகத் தேவர்கள் வந்து வணங்குகிற வளப்பம் உடைத்தாகிய சீபாதங்களை உடைய தழல் விசும்பு போன்ற திருமேனியை உடையவர், அவருடைய வண்மை யுடைத்தாகிய பெரும்பற்றப்புலியூரைத் தொழாதார் அல்லது செல்லலாகாத நெருப்புக் காட்டை இன்று சென்றார் நம் சிறந்தவரே. நம்முடைய சிறப்புள்ளவர் இப்பொழுது போனார் ஆதலால் இந்த நன்மையை என்ன நன்மை என்று சொல்லுவேன் !
7. நெஞ்சொடு கூறல்
நெஞ்சொடு கூறல் என்பது பிரிந்தமை கூறக் கேட்டு வருந்தா நின்ற நெஞ்சிற்கு நமக்கு ஏதம் பயக்கும் ஒழுக்கம் ஒழிந்து குற்றம் தீர்ந்த முறைமையாகிய ஒழுக்கத்துப் பிரிந்த இது நம்மைக் கெடுக்கும் என்று நீ கருதின் இது ஒழிய நமக்கு இன்புற்று வாழும் உபாயம் வேறுளதோ எனத் தலைமகள் நெஞ்சினது வருத்தம் தீரக் கூறா நிற்றல்.
272. அருந்தும் விடம்அணி யாம்மணி
கண்டன்மற்(று) அண்டர்க்கெல்லாம்
மருந்தும் அமிர்தமும் ஆகும்முன்
னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
திருந்தும் கடன்நெறி செல்லும்இவ்
வாறு சிதைக்குமென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன
யாம்இனி வாழ்வகையே.
கொளு
கல்வரை நாடன் சொல்லா(து) அகல
மின்னொளி மருங்குல் தன்னொளி தளர்ந்தது.
இதன் பொருள் : கல்லுடைத்தாகிய மலைமேலுள்ள நாட்டினை உடையவன் போகிறேன் என்று சொல்லாமல் பிரிந்து அகல மின்னைப் போல் நுடங்குகிற மருங்கினையுடைய நாயகி தன்னுடைய பிரகாசம் குன்றியது.
தெளிவுரை : உண்கிற நஞ்சமும் அழகு செய்கிற நீலமணி போன்ற திருமிடற்றினை உடையவன், மற்றுள்ள தேவர்களுக்கெல்லாம் மருந்துமாய் அமுதமும் ஆகிற பழையவன். அவனுடைய பெரும்பற்றப்புலியூரைப் புகழ்கிற வள்ளலானவன் திருந்தின கடப்பாட்டை உடைய முறைமையில் செல்லுகின்ற இத்தன்மை நம்மை அழிக்குமாகில் இதற்கு வருந்துகிற அறியாத என் பேதை நெஞ்சமே ! இப்பொழுது உயிர் வாழும் ஏதாந் தன்மைதான்? மற்று - அசைநிலை.
8. நெஞ்சொடு வருந்தல்
நெஞ்சொடு வருந்தல் என்பது, பிரிந்தமை கூறக் கேட்ட தலைமகள், அன்று அவரை விடாது என்னை விட்டு அவரது தேர்ப்பின் சென்ற நெஞ்சம் இன்றும் அவ்வாறு செய்யாது என்னை வருத்தா நின்றது எனத் தன் நெஞ்சொடு வருந்தா நிற்றல்.
273. ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்
ஏத்த எழில்திகழும்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ
லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த
மணலிற் கலந்தகன்றார்
தேர்ப் பின்னைச் சென்றஎன் நெஞ்(சு)என்
கொலாம்இன்று செய்கின்றதே.
கொளு
வெற்பன் நீங்கப் பொற்பு வாடியது.
இதன் பொருள் : நாயகன் பிரிய அழகினையுடையாள் வாடியது.
தெளிவுரை : அழகிய பின்னைப் பிராட்டி தோள்களை முன் பொருந்தின புருடோத்தமன் ஏத்தப் புகழ் விளங்கா நின்ற செம்பொன்னை வெற்றி செய்கிற வீரக்கழல் செறிந்த சீபாதங்களை உடையவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரைச் சூழ்ந்த முத்தை ஒத்த வெள்ளிய மணலில் கூடிப் பிரிந்தவருடைய தேரின் பின்னே சென்ற என் நெஞ்சம் இவ்விடத்தினின்று செய்கின்றதென்னோ? அறிகின்றிலேன்.
9. வருத்தம் கண்டுரைத்தல்
வருத்தம் கண்டு உரைத்தல் என்பது, தலைமகள் தன் நெஞ்சொடு வருந்தா நிற்பக் கண்ட தோழி, இத்தன்மைத்தாகிய வெற்பராகலின் தாழாது விரைய வரைவொடு வருவர்; ஆதலால், நீ இன்னாமையை அடையாது ஒழிவாயாக என்று அவள் வருத்தம் தீரக் கூறா நிற்றல்.
274. கானமர் குன்றர் செவியுற
வாங்கு கணைதுணையா
மானமர் நோக்கியர் நோக்கென
மான்நல் தொடைமடக்கும்
வானவர் வெற்பர்வண் தில்லையின்
மன்னை வணங்கலர் போல்
தேனமர் சொல்லிசெல் லார்செல்லல்
செல்லல் திருநுதலே.
கொளு
அழலுறு கோதையின் விழுமுறு பேதையை
நீங்கலரெனப் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : அக்கினியிற் சேர்ந்த மாலைபோல் வாடிய நாயகியைப் பிரியாரென்று பாங்கி சொன்னது.
தெளிவுரை : காட்டில் வாழ்கிற குறவர் ஆனவர்கள் காதளவும் செல்ல நிரம்ப வலித்த அம்பைத் தங்கள் துணைவியராகிய மான் நோக்கத்தை ஒத்த கண்களை உள்ளவர்களுடைய பார்வையும் மான் நோக்கத் தான் நோக்கையால் மானுக்குத் தொடுத்த நல்ல பாணத்தை எய்யாதே மடக்குகிறவர். ஆகாயத்தைப் பொருந்தும் படிக்கு உயர்ந்த மலையினை உடையவர் அழகிய பெரும்பற்றப்புலியூரில் கர்த்தனை வணங்கா தாரைப் போல தேனை ஒத்த இனிய வார்த்தையினை உடையாய். போகார் காண். ஆதலால் அழகிய நெற்றியினையுடையாய் ! துன்பத்தை அடையாதே கொள்.
10. வழியொழுகி வற்புறுத்தல்
வழியொழுகி வற்புறுத்தல் என்பது தலை மகளது வருத்தங் கண்ட தோழி அவளை வழியொழுகி ஆற்றுவிக்க வேண்டும் அளவாகலின், ஆற்றாமைக்குக் காரணமாகியவற்றைக் கூறித் தானும் அவளோடு வருத்தமுற்று, அது கிடக்க இம்மலர்ப் பாவையை அன்னாட்கு இவ்வேறுபாடு வந்தவாறென்னோ என்று அயலவர் ஐயுறா நிற்பர் ஆதலான் நீயாற்ற வேண்டும் என்று அவள் வழியொழுகி வற்புறுத்தா நிற்றல்.
275. மதுமலர்ச் சோலையும் வாய்மையும்
அன்பும் மருவி வெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின்
அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை
யோன்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்(கு)என் னோவந்த
வாறென்பர் ஏந்திழையே.
கொளு
சூழிருங் கூந்தலைத் தோழி தெருட்டியது.
இதன் பொருள் : சுற்றிக் கட்டப்பட்ட அளகத்தினை உடையாளைத் தோழி தெளிவித்தது.
தெளிவுரை : காட்டில் அவர் கடிதாகிய போக்கையும் பொருள் தேடி வருகையையும் நினைந்து நீ அழுதால் அயலார் மூன்று கண் உடையவனுடைய பெரும்பற்றப்புலியூரைத் துதியாரைப் போல சீதேவியை ஒப்பாளுக்கு இது வந்தபடியேனென்று ஆராயத் தகுங்காண்; மிகுந்த ஆபரணங்களை உடையாய்.
11. வன்புறை எதிர் அழிந்து இரங்கல்
வன்புறை எதிர் அழிந்து இரங்கல் என்பது, வழியொழுகி வற்புறுத்தின தோழியோடு, தலைமகள் வரைவு நீடுதலால் தமக்கோர் பற்றுக் கோடின்றி வருந்தும் திருவினையுடையார்க்கு அவன் வரைவு மிகவும் இனிது; யான் ஆற்றேன் எனத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து இரங்கா நிற்றல்.
276. வந்(து)ஆய் பவரைஇல் லாமயில்
முட்டை இளையமந்தி
பந்தா(டு) இரும்பொழில் பல்வரை
நாடன்பண் போஇனிதே
கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென்
தில்லை தொழார்குழுப்போல்
சிந்தா குலமுற்றுப் பற்றின்றி
நையும் திருவினர்க்கே.
கொளு
வன்கறை வேலோன் வரைவு நீட
வன்புறை அழிந்தவள் மனம்அழுங் கியது.
இதன் பொருள் : நிலைநின்ற இரத்தம் பொருந்தின வேலினை உடையவன் வரைந்து கொள்ள நீட்டிய வலியுறுத்தல் இழந்து நாயகி மனம் வாடியது.
தெளிவுரை : கொத்து நிறைந்து நறுநாற்றம் உடைத்தாகிய கொன்றை மாலையை அணிந்த கூத்தனது தட்சணதிக்கில் உண்டாகிய புலியூரைத் தொழாதாருடைய திரள்போலப் பிரிந்த காலத்துச் சிந்தையானது ஒருவர் ஆதாரமும் அன்றியிலே துன்பத்தை ஆற்றியிருக்கவல்ல பாக்கியம் உடையவர்களுக்குச் சென்று ஆராய்வாரை உடைத்தல்லாத மயில் முட்டையைக் கொண்டு இளைய மந்திக்குரங்கு ஆடி விளையாடும் பெரிய பொழிலை உடைத்தாகிய பல மலைகளாற் சிறந்த நாட்டினை உடையவன் செய்தி தான் அழகாயிருந்தது.
காப்பவர் இல்லாத மயில் முட்டை தலைவனது அன்பை இழந்த தானாகவும், ஈனல் வருத்தம் அறியாத இளமந்தி காமநோயை உற்றறியாத தோழியாகவும், அம்மந்தி முட்டையை ஈன்று மயிலின் வருத்தத்தையும் முட்டையினது மென்மையையும் நோக்காது பந்தடித்து விளையாடுதல், தோழி தனது வருத்தத்தையும் காமத்தினது மென்மையையும் நோக்காது தான் வேண்டிவாறெல்லாம் சொல்லித் தன்னை வற்புறுத்தலாகவும் வைத்துத் தலைவி உள்ளுறை உவமம் கூறினாள் என்க.
12. வாய்மை கூறி வருத்தம் தணித்தல்
வாய்மை கூறி வருத்தம் தணித்தல் என்பது, வரைவு நீடுதலான் வன்புறை எதிரழிந்து வருந்தா நின்ற தலைமகளுக்கு, அவர் சொன்ன வார்த்தை நினக்குப் பொய் என்பதே கருத்தாயின் இவ்வுலகத்து மெய்யென்பது சிறிதுமில்லை எனத் தோழி தலைமகனது வாய்மை கூறி, அவள் வருத்தம் தணியா நிற்றல்.
277. மொய்யென் பதேஇழை கொண்டவன்
என்னைத்தன் மொய்கழற்(கு)ஆட்
செய்என் பதேசெய் தவன்தில்லைச்
சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்
பொய்என்ப தேகருத்தாயின்
புரிகுழற் பொற்றொடியாய்
மெய்என்ப(து) ஏதுமற்(று) இல்லைகொ
லாம்இவ் வியவிடத்தே.
கொளு
வேற்றடங் கண்ணியை ஆற்று வித்தது.
இதன் பொருள் : வேல் போலும் கண்ணை உடையாளை ஆற்றுப் படுத்தினது.
தெளிவுரை : வலிமையை உடைமை என்பதையே தனக்கு ஆபரணமாகக் கொண்டவன், என்னைத் தன்னுடைய பெரிய சீபாதங்களுக்கு ஆட்செய என்கிற கருத்தைச் செய்து நின்றவன் (என்றபடி; ஏதென்னில் பேரறிவுடையராகிய பிரமன் மால்களுக்கு மயக்கத்தைக் கொடுத்தது; அவர்கள் இறந்து படவே, அவர்களுடைய எலும்பைப் பூணாகப் பூண்டு நின்றவன் ஓர் அறிவும் இல்லாத எனக்குத் தன்னை அறிவித்துத் தனக்கு ஆட்செயக் செய்வித்துக் கொள்ளா நின்றான்) அவனுடைய பெரும்பற்றப்புலியூரைச் சூழ்ந்த கடலின் துறையையுடையவருடைய வார்த்தையும் பொய் என்பதே நினைவாயாகி நெறித்த கூந்தலினையுடைய அழகிய வளையணிந்த கையை உடையாய் ! இப்பெரு நிலத்து மெய்யென்பது சிறிதும் இல்லையாய் விடும்.
13. தேறாது புலம்பல்
தேறாது புலம்பல் என்பது, தலைமகனது வாய்மை கூறி வருத்தம் தணியா நின்ற தோழிக்கு, யான் அவர் கூறிய மொழியின்படியே மெய்ம்மையைக் கண்டு வைத்தும் என் நெஞ்சமும் நிறையும் என் வயமாய் நிற்கின்றனவில்லை. அதுவேயுமன்றி என் உயிரும் பொறுத்தற்கு அரிதாகா நின்றது. இவை இவ்வாறு ஆதற்குக் காரணம் யாதென்றறி கிலேன் என்று தான் தேறாமை கூறிப் புலம்பா நிற்றல்.
278. மன்செய்த முன்னாள் மொழிவழி
யேஅன்ன வாய்மைகண்டும்
என்செய்த நெஞ்சும் நிறையும்நில்
லாஎன(து) இன்னுயிரும்
பொன்செய்த மேனியன் தில்லை
யுறாரின் பொறைஅரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து
நீர்மைகொல் மொய்குழலே.
கொளு
தீதறு குழலி தேற்றத் தேறாது
போதுறு குழலி புலம்பியது.
இதன் பொருள் : குற்றமற்ற கூந்தலினை உடையவள் தெளிவிக்கத் தெளியாதே பூப்பொருந்தின கூந்தலினை உடையவள் வருந்தியது.
தெளிவுரை : நாயகன் ஆனவன் நமக்கு முன்னாட் சொன்ன வார்த்தைப் படியே அத்தன்மையாகிய உண்மையைக் கண்டும் என் நெஞ்சமும் நிறையும் நிற்கின்றனவில்லை. இவை என் செய்தனதாம்? என்னுடைய இனிய உயிரும் பொன்னை ஒத்த திருமேனியை உடையவனுடைய பெரும்பற்றப்புலியூரை நெஞ்சிடைப் பொருந்தாதாரைப் போல பொறையுடைமை அரிதாகி நின்றது; செறிந்த கூந்தலினையுடையாய் ! அதற்குக் காரணம் முற்பிறப்பிற் செய்த தீமையோ? கால நீர்மையோ? சொல்லுவாயாக வேண்டும்.
14. காலம் மறைத்துரைத்தல்
காலம் மறைத்துரைத்தல் என்பது, தேறாமை கூறிப் புலம்பா நின்ற தலைமகள் காந்தள் கருவுறக் கண்டு இஃது அவர் வரவு குறித்த காலமென்று கலங்கா நிற்ப, நம்முடைய ஐயன்மார் தினைக்கதிர் காரணமாகக் கடவுளைப் பராவ, அக்கடவுளது ஆணையால் காலம் அன்றியும் கார் நீரைச் சொரிய, அதனை அறியாது, காலமென்று இக்காந்தள் மலர்ந்தன; நீ அதனைக் காலமென்று கலங்க வேண்டா எனத் தோழி, அவளை ஆற்றுவித்தற்குக் காலம் மறைத்துக் கூறா நிற்றல்.
279. கருந்தினை ஓம்பக் கடவுள்
பராவி நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன்
பேரரு ளால்தொழும்பிற்
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத்
தான்பரங் குன்றில்துன்றி
விரிந்தன காந்தள் வெருவரல்
காரென வெள்வளையே.
கொளு
காந்தள் கருவுறக் கடவுள் மழைக்கென்(று)
ஏந்திழைப் பாங்கி இனிதியம் பியது.
இதன் பொருள் : காந்தளானது அரும்பத் தெய்வத்தினால் வந்த மழை காண் என்று ஆபரணங்களை உடைய பாங்கி மிகுத்துச் சொன்னது.
தெளிவுரை : பச்சென்ற தினையைப் பரிகரிப்பதாகத் தெய்வத்திற்குப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு நம்முடைய உறவினர் ஆரவாரிக்க நீரைச் சொரிந்தன மேகங்களானவை; அப் பெரிய அருளைப் பொறுக்க மாட்டாமையினால் தானாளும் வாய்மை மறுத்து என்னை அடிமை கொண்ட திருச்சிற்றம்பலநாதனுடைய திருப்பரங்குன்றில் நெருங்கி விரிந்தன காந்தளானவை; வெள்ளிய வளைகளை உடையாய் ! இது காரென்று பயப்படாதே. இது தெய்வ மழை காண்.
15. தூது வர உரைத்தல்
தூது வர உரைத்தல் என்பது, காலம் மறைத்த தோழி, ஒரு தூது வந்து தோன்றா நின்றது, அஃது இன்னார் தூதென்று தெரியாது எனத் தான் இன்புறவோடு நின்று அவள் மனம் மகிழும்படி தலை மகளுக்குத் தூது வரவு உரையா நிற்றல்.
280. வென்றவர் முப்புரம் சிற்றம்
பலத்திற்நின் றாடும்வெள்ளிக்
குன்றவர் குன்றா அருள்தரக்
கூடினர் நம்மகன்று
சென்றவர் தூதுகொல் லோஇருந்
தேமையும் செல்லல்செப்பா
நின்றவர் தூதுகொல் லோவந்து
தோன்றும் நிரைவளையே.
கொளு
ஆங்கொரு தூதுவரப் பாங்கிகண் டுரைத்தது.
இதன் பொருள் : அவ்விடத்தே ஒரு தூதுவரப் பாங்கி கண்டு சொன்னது.
தெளிவுரை : மூன்று புரங்களையும் வென்றவர், திருச்சிற்றம்பலத்தே நின்றாடியருளுகிற வெள்ளி மலையை யுடையவர். அவருடைய குறைவுபடாத அருள் கொண்டு வந்து நமக்குத் தர, நம்மைக் கூடிச் சிநேகித்தவர், நம்மை விட்டுப் பிரிந்தவர், அவர் நமக்கு விட்ட தூதோ? அவர் பிரிய ஆற்ற இருந்த எம்மிடத்தும் இன்னாமையைச் சொல்லா நின்ற ஏதிலார் தூதோ ? வந்து தோன்றுவது (என்பதாவது வருத்தம் சொல்லா நின்றவர்களுடைய தூதோ) நிரைத்த வளைகளை உடையாய்.
16. தூது கண்டழுங்கல்
தூது கண்டழுங்கல் என்பது, தூது வரவுரைப்பக் கேட்ட தலைமகள் மனமகிழ்வோடு நின்று, இஃது அயலார் தூதாகலான் இவை வருவன செல்வன ஆகா நின்றன. காதலர் தூது இன்று வாராதிருக்கின்றது. என் செய்யக் கருதி என்று அறிகின்றிலேன் என்று ஏதிலார் தூது கண்டு அழுங்கா நிற்றல்.
281. வருவன செல்வன தூதுகள்
ஏதில வான்புலியூர்
ஒருவனது அன்பரின் இன்பக்
கலவிகள் உள்ளுருகத்
தருவன செய்தென(து) ஆவிகொண்(டு)
ஏகிஎன் நெஞ்சில்தம்மை
இருவின காதலர் ஏதுசெய்
வான்இன்(று) இருக்கின்றதே.
கொளு
அயலுற்ற தூதுவரக் கயலுற்றகண்ணி மயலுற்றது.
இதன் பொருள் : அயலாருடைய தூதுகள் வருவனவும் செல்வனவுமாய் இருந்தன. பெரிய பெரும்பற்றப்புலியூரில் ஒப்பில்லாதவனுடைய அன்பரைப் போல, உள்ளுருகும்படி இன்பத்தைத் தருகிற கலவிகளைச் செய்து, என் உயிரைக் கொண்டு போய் என்னுடைய நெஞ்சிலே தம்மை இருந்தின காதலர் இப்போது இருக்கின்ற இது என் செய்வதாகத்தான் !
தெளிவுரை: அயலாருடைய தூதுகள் வருவனவும் செல்வனவுமாய் இருந்தன. பெரிய பெரும்பற்றப்புலியூரில் ஒப்பில்லாதவனுடைய அன்பரைப் போல, உள்ளுருகும்படி இன்பத்தைத் தருகிற கலவிகளைச் செய்து, என் உயிரைக் கொண்டு போய் என்னுடைய நெஞ்சிலே தம்மை இருந்தின காதலர் இப்போது இருக்கின்ற இது என் செய்வதாகத்தான் !
17. மெலிவு கண்டு செவிலி கூறல்
மெலிவு கண்டு செவிலி கூறல் என்பது. ஏதிலார் தூது கண்டு அழுங்கா நின்ற தலைமகளைச் செவிலி எதிர்ப்பாட்டு, அடியிற் கொண்டு முடிகாறும் நோக்கி, இவள் பண்டைத் தன்மையள் அல்லள், இவ்வாறு மெலிதற்குச் சேயினது ஆட்சியில் பட்டனள் போலும் என்று அறிகின்றிலேன் என்று அவளது மெலிவு கண்டு கூறா நிற்றல்.
282. வேயின மென்தோள் மெலிந்தோளி
வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டையள்
அல்லள் பவளச்செவ்வி
ஆயின ஈசன் அமரர்க்(கு)
அமரன்சிற் றம்பலத்தான்
சேயின(து) ஆட்சியில் பட்டன
ளாம்இத் திருந்திழையே.
கொளு
வண்டமர் புரிகுழல் ஒண்டொடி மேவிய
வாடா நின்ற கோடாய் கூறியது.
இதன் பொருள் : வண்டுகள் அமரப்படா நின்ற நெறித்த கூந்தலினை உடைய அழகிய வளைகளை உடையாள் வாட அதற்குத் தளரா நின்ற செவிலித்தாய் சொன்னது.
தெளிவுரை : வேயின் தன்மையால் சிறந்த மெலிந்த தோள்கள் ஆனவை மெலிந்து அழகு வாடி விழிகளும் வேறுபட்டுப் பரந்த மேகலையை உடையவள் பண்டைத் தன்மை உடையாள் அல்லள். பவளத்தின் செவ்வி நிறத்தை ஒத்த திருமேனியை உடையவன், தேவர்களுக்கு எல்லாம் தேவனாய் உள்ளவன் திருச்சிற்றம்பலநாதன். அவனுடைய திருமகனாகிய சுப்பிரமணியனாலே ஆளப்பட்ட இடத்தே சென்றாளாக வேண்டும். திருந்தின ஆபரணங்களை உடையவள்.
18. கட்டு வைப்பித்தல்
கட்டு வைப்பித்தல் என்பது, மெலிவு கண்ட செவிலி, அவளது பருவங்கூறி, இவ் அணங்கு உற்ற நோயைத் தெரிய அறிந்து சொல்லுமின் எனக் கட்டுவித்திக்கு உரைத்தது கட்டுவைப்பியா நிற்றல்.
குறிப்பு: அம்மெலிவு முருகற்குப் பிழைத் தமையான் ஆயிற்று போலும் என ஐயுற்ற செவிலி, அதனை அறிந்து கொள்ளுமாறு கட்டுவித்திகட்குக் கூறிக் கட்டு வைப்பித்தல். கட்டி வித்தி - குறிபார்ப்பவள்.
283. சுணங்குற்ற கொங்கைகள் சூதுற்
றிலசொல் தெளிவுற்றில
குணங்குற்றம் கொள்ளும் பருவமு
றாள்குறு காஅசுரர்
நிணங்குற்ற வேல்சிவன் சிற்றம்
பலநெஞ் சுறாதவர்போல்
அணங்குற்ற நோய்அறி வுற்றுரை
யாடுமின் அன்னையரே.
கொளு
மால்கொண்ட கட்டுக் கால்கொண்டது.
இதன் பொருள் : பெருமை கொண்ட கட்டைத் தொடங்கினது.
தெளிவுரை : சுணங்கு பொருந்தின முலைகளானவை சூதின் வடிவைப் பொருந்தினவில்லை. இன்னும் வார்த்தைகள் தெளிந்தனவில்லை. நன்மையும் தீமையும் அறிகிற பக்குவத்தை அடைந்திலன். தன்னை வந்து சேராத அசுரருடைய நிணத்தைக் குத்திப் பறித்த சூலவேலினையுடைய சிவன் என்னும் திருநாமத்தை உடையவன். அவனுடைய திருச்சிற்றம்பலத்தை நெஞ்சிலே பொருந்தாதாரைப் போல தெய்வத்தை ஒப்பாள் உற்றநோய், தாய்மார்! நீங்கள் விசாரித்துச் சொல்வீராக வேண்டும்.
19. கலக்கமுற்று நிற்றல்
கலக்கமுற்று நிற்றல் என்பது, செவிலி கட்டு வைப்பியா நிற்ப, இவள் உள்ளம் ஓடியவாறு முழுதையும் புலப்படுத்தி நம்மை வருத்தி, அயலார் அன்று மொழியாத பழியையும் வெளிப்படச் சொல்லி, எம்மிடத்து உண்டாகிய நாணினையும் தள்ளி, எங்குடியினையும் குற்றப்படுத்தியல்லவே இக்கட்டு வித்தி நிற்கப் புகுகின்றது எனத் தோழி கலக்கமுற்று நில்லா நிற்றல்.
284. மாட்டியன் றேஎம் வயின்பெரு
நாணினி மாக்குடிமா
சூட்டியன் றேநிற்ப(து) ஓடிய
வா(று)இவள் உள்ளமெல்லாம்
காட்டியன் றேநின்ற தில்லைத்தொல்
லோனைக்கல் லாதவர்போல்
வாட்டியன்(று) ஏர்குழ லார்மொழி
யாதன வாய்திறந்தே.
கொளு
தெய்வத்தில் தெரியுமென
எவ்வத்தின் மெலிவுற்றது.
இதன் பொருள் : தெய்வத்தாலே தெளியுமென்று துன்பத்தாலே மெலிவுற்றது.
தெளிவுரை : இவள் உள்ளம் ஓடின வழியெல்லாம் காட்டி அன்று தொட்டு நின்ற பெரும்பற்றப்புலியூரில் பழைய வினைச் சீலியாதவர்களைப் போல வாடப்பண்ணி அழகிய கூந்தலினை உடையவள் அன்று வாய் திறந்து சொல்லத் தகாதனவற்றை இப்பொழுது வாய் திறந்து சொல்லும்படி பண்ணி எம்மிடத் துண்டாகிய பெரிய நாணத்தை இப்பொழுது மாளப் பண்ணி அல்லவோ இக்குடியை மாசு உண்ணப் பண்ணுவித்தல்லவோ இவள் நிற்பது.
20. கட்டுவித்திக் கூறல்
கட்டுவித்திக் கூறல் என்பது, தோழி கலக்க முற்று நில்லா நிற்ப, இருவரையும் நன்மையாகக் கூட்டுவித்த தெய்வம் புறத்தார்க்கு இவ் ஒழுக்கம் புலப்படாமல் தானிட்ட நெல்லின்கண் முருகணங்கு காட்ட, இதனை எல்லீரும் காண்மின்; இவளுக்கு முரகணங்கு ஒழிய பிறிதொன்றும் இல்லை எனக் கட்டு வித்தி நெற்குறி காட்டிக் கூறா நிற்றல்.
285. குயிலிதன் றேயென்ன லாம் சொல்லி
கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா
இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணம்
காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லில்
தோன்றும் அவன்வடிவே.
கொளு
கட்டு வித்தி விட்டு ரைத்தது.
இதன் பொருள் : கட்டுப் படுக்கும் அவள் விட்டுச் சொன்னது.
தெளிவுரை : குயிலோசை இதுதான் அல்லவோ என்று சொல்லா நின்ற வார்த்தையினையுடைய தேவியைப் பாகத்தே உடையவன், சிற்றம்பலநாதன். அவனுடைய இயல்பு இது அன்றென்று சொல்லாலாகாத சுவாமியினது வெற்றியையுடைய பிள்ளை அவர் கடாவுகிற மயில் இதுவன்றோ? அவனுக்குக் கொடியாகிய கோழியும் பாருங்கள்; வலிய சூரனை வெட்டிய வேல் இதுவன்றோ? நெல்லிலே தோன்றினவன் வடிவு இதுவன்றோ? என்ன அவனாலே வந்ததோ காணும் என்றது.
21. வேலனை அழைத்தல்
வேலனை அழைத்தல் என்பது, கட்டுவித்தி முருகு அணங்கு என்று கூறக்கேட்டு, இப்பாலன் இக்குடியின்கண் பிறந்து நம்மை இவ்வாறு நிற்பித்த பண்பினுக்கு வேலன் புகுந்து வெறியும் ஆடுக; அதன் மேல் மறியும் அறுக்க எனத் தாயர் வேலனை அழையா நிற்றல், வேலன் - பூசாரி.
286. வேலன் புகுந்து வெறியா
டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்(து)அவி யக்கழல்
வைத்தெழில் தில்லைநின்ற
மேலன் புகுந்தென்கண் நின்றான்
இருந்தவெண் காடனைய
பாலன் புகுந்திப் பரிசினின்
நிற்பித்த பண்பினுக்கே.
கொளு
வெறியாடிய வேலனைக் கூஉய்
நெறியார் குழலி தாயர் நின்றது.
இதன் பொருள் : வெறியாடுவதாக வேலனை அழைத்து விட்டு நெறித்த கூந்தலினை உடையாளுடைய தாயர் நின்றது.
தெளிவுரை : காலன் ஆனவன் அவிந்து போம்படிக்கிடந்த சீபாதத்தை வைத்து அழகிய பெரும்பற்றப்புலியூரிலே எழுந்தருளி நின்றவன் அவன் எழுந்தருளியிருந்த திருவெண்காட்டை ஒத்த பிள்ளையானவன் புகுந்து இம்முறைமையாலே நிறுத்தின இயல்புக்கு வேலன் ஆனவன் புகுந்து வெறியாடவும் அமையும். அதற்குப் பலியாக வெள்ளாட்டு மறியையும் அறுக்கவும் அமையும்.
22. இன்னல் எய்தல்
இன்னல் எய்தல் என்பது, வெறியாடுதற்குத் தாயர் வேலனை அழைப்பக் கேட்ட தலைமகள், இருவாற்றானும் நமக்கு உயிர்வாழும் நெறியில்லை எனத் தன்னுள்ளே கூறி, இன்னல் எய்தா நிற்றல்.
287. அயர்ந்தும் வெறிமறி ஆவி
செகுத்தும் விளர்ப்(பு)அயலார்
பெயர்ந்தும் ஒழியா விடின்என்னை
பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான(து)
அம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதின் ஒழியினென்
ஆதும் துறைவனுக்கே.
கொளு
ஆடிய வெறியிற் கூடுவ(து) அறியாது
நன்னறுங் கோதை இன்னல் எய்தியது.
இதன் பொருள் : ஆடுகிற வெறியிடத்தே அவை இற்றை அறியாதே நல்ல நறு நாற்றத்தை உடைய மாலையினை உடையவள் வருத்தமுற்றது.
தெளிவுரை : வெறியாடியும் வெள்ளாட்டு மறியின் உயிரை அழித்தும் விளர்ப்பமானது மீண்டு போகாத பொழுது அயலார் அவர்கள் என்ன சொல்லுவார்கள்? தங்கள் நிலைமையினின்றும் பெயர்ந்து பிரும்மா விட்டுணுக்கள் இருவரும் அன்னமும் பன்றியுமாய், அன்னமாய் உயர்ந்து பறந்தும் பன்றியாய்த் தாழ விழுந்தும் உணரப் படாதவன். அவன் திருஅம்பலத்தை உணராதாரைப் போல வருந்தியும் அந்நியமாய் இருக்கிற வெறியாட்டிலே தீரில் துறைவனுக்கே அன்பு தரக்கடவேன் நான்?
23. வெறி விலக்குவிக்க நினைத்தல்
வெறி விலக்குவிக்க நினைத்தல் என்பது, இருவாற்றானும் நமக்கு உயிர் வாழும் நெறியில்லை ஆதலால் துறைவற்கு உற்ற நோயைப் பிறர் சிதைக்கப் படின் நாண் துறந்தும் வெறி விலக்குவிப்பன் எனத் தலைமகள் தோழியைக் கொண்டு வெறி விலக்குவிக்க நினையா நிற்றல்.
288. சென்றார் திருத்திய செல்லல்நின்
றார்கள் சிதைப்பரென்றால்
நன்றா அழகிதன் றேஇறை
தில்லை தொழாரின்நைந்தும்
ஒன்றாம் இவட்கும் மொழிதல்இல்
லேன்மொழி யாதும்உய்யேன்
குன்றார் துறைவர்க்(கு) உறுவேன்
உரைப்பன்இக் கூர்மறையே.
கொளு
அயல்தரு வெறியின் மயல்தரு மென
விலக்கல் உற்ற குலக்கொடி நினைந்தது.
இதன் பொருள் : இந்நோய்க்கு அயலார் தருகிற  வெறியாட்டாலே மயக்கத்தைத் தருமென்று விளக்குவதாக நினைத்த அழகிய வஞ்சிக் கொடியை ஒப்பாள் விசாரித்தது.
தெளிவுரை : மறிந்தவர் உண்டாக்கின துன்பத்தை இந்நோய்க்குச் சிறிதும் பொருத்தம் இன்றியே நின்றவர்கள் போக்குவார்கள் ஆமாகில் மிகவும் அழகிதாய் இருந்ததன்றே ! சுவாமியுடைய பெரும்பற்றப்புலியூரைத் தொழாதாரைப் போல துன்புற்றும், எனக்கு ஒன்றுபட்டிருக்கிறவளுக்கும் சொல்லாதிருக்கிறேன், சொல்லாதேயும் உயிர் வாழமாட்டேன்; மணற்குன்றுகள் ஆர்ந்த துறையினை உடையவர்க்குப் பொருந்தின நான் இச் சிறந்த மறையை இனிச் சொல்லக் கடவேன்.
24. அறத்தொடு நிற்றலை யுரைத்தல்
அறத்தொடு நிற்றலை உரைத்தல் என்பது, நாண் துறந்தும் மறை உரைத்தும் வெறி விலக்குவிக்க நினையா நின்ற தலைமகள்மேல் அறத்தொடு நிற்பாளாக, அயலார் ஏசுக; ஊர் - நகுக; அதுவேயுமன்றி, யாயும் வெகுள்வளாக; அதன்மேல் நீயும் முனிவாயாக; நீ தேறாயாகில் சூளுற்றுத் தருவேன்; யான் சொல்லுகிற இதனைக் கேட்பாயாக எனத் தோழிக்குக் கூறா நிற்றல்.
289. யாயும் தெறுக அயலவர்
ஏசுக ஊர்நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது
கூறுவல் என்னுடைய
வாயும் மனமும் பிரியா
இறைதில்லை வாழ்த்துநர்போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள்
தருவன் சுடர்க்குழையே.
கொளு
வெறித்தலை வெரீஇ வெருவரு தோழிக்(கு)
அறத்தொடு நின்ற ஆயிழை உரைத்தது.
இதன் பொருள் : வெறியாட்டிடத்துக்குப் பயப்பட்டு, பயப்படுகிற தோழிக்கு அறத்தொடு நின்ற அழகிய ஆபரணங்களை உடையாள் சொன்னது.
தெளிவுரை : என்னுடைய வாக்கினின்றும் மனத்தினின்றும் நீங்காத சுவாமி, அவனுடைய பெரும்பற்றப்புலியூரை வாழ்த்துவாரைப் போல உனக்கு நான் தூயேன்; ஒளி உடைத்தாகிய மகரக் குழையினை உடையாய் ! கடிய சூளுறவைத் தரக்கடவேன்; மாதாவும் கோபிக்க அமையும்; ஊரில் உள்ளாரும் சிரிக்க அமையும்; நீயும் என்னை முனிய அமையும்; புகுந்தபடியையும் சொல்லக் கடவேன்.
25. அறத்தொடு நிற்றல்
அறத்தொடு நிற்றல் என்பது, அறத்தொடு நிற்பாளாக முன் தோற்றுவாய் செய்து, எம் பெருமாற்குப் பழிவருங்கொல்லோ என்னும் ஐயத்தோடு நின்று, யாம் முன்பொரு நாள் கடற்கரையிடத்தே வண்டல் செய்து விளையாடா நின்றேமாக. அந்நேரத்து ஒரு தோன்றல் நும் வண்டல் மனைக்கு யாம் விருந்தென்று வந்து நின்றபொழுது, நீ பூக்கொய்யாச் சிறிது புடைபெயர்ந்தாய்; அந்நிலைமைக் கண் கீழ்க் காற்று மிகுதலால் கரைமேல் ஏறுங்கடல் மேல் வந்துற்றது. உற, யான் தோழியோ தோழியோ என்று நின்னை விளித்தேன். அது கண்டு இரங்கி, அவன் அருளொடு வந்து தன் கையைத் தந்தான். யானும் மயக்கத்தாலே அதனை நின் கை என்று தொட்டேன். அவனும் பிறிதொன்றும் சிந்தியாது என் உயிர் கொண்டு தந்து, என்னைக் கரைக்கண் உய்த்துப் போயினான். அன்று என் நாணினால் நினக்கு அதனைக் சொல்ல மாட்டிற்றிலேன். இன்று இவ்வாறு ஆயினபின் இது கூறினேன். இனி நினக்கு அடுப்பது செய்வாயாக எனத் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நிற்றல்.
290. வண்டலுற் றேம்எங்கண் வந்தொரு
தோன்றல் வரிவளையீர்
உண்டலுற் றேமென்று நின்றதோர்
போழ்(து) உடை யான்புலியூர்க்
கொண்டலுற்(று) ஏறும் கடல்வர
எம்உயிர் கொண்டுதந்து
கண்டலுற்(று) ஏர்நின்ற சேரிச்சென்
றான்ஓர் கழலவனே.
கொளு
செய்த வெறியின் எய்துவது அறியாது
நிறத்தொடித் தோழிக்(கு) அறத்தொடு நின்றது.
இதன் பொருள் : செய்யப்பட்ட வெறியின் வந்து புகுதுமத்தை அறியாதே நிறமுடைத்தாகிய வளைகளை உடைய தோழிக்கு அறத்தொடு நின்றது.
தெளிவுரை : விளையாட்டுப் பொருந்தின எங்களிடத்தே வந்து ஒரு தோன்றலானவன், அழகிய வளைகளை உடையீர்! உங்கள் சிற்றிலில் உண்கைக்குப் பொருந்தினோம், என்று நின்ற அவசரத்தில் உடையானுடைய பெரும்பற்றப்புலியூரிலே கீழ்க் காற்றுப் பொருந்துதலால் கரையில் ஏறுகிற கடலானது (எம்மேல் வர) எங்கள் உயிரைப் பிழைப்பித்துக் கொண்டு தந்து கடல் மரம் பொருந்தி அழகு நிலை நின்ற சேரியிடத்தே சென்றான், வீரக் கழலை உடையான் ஒருவன்; இனித்தக்கது செய்தாக வேண்டும்.
இது தெய்வத்தான் ஆயதல்லது பிறிதில்லை ஆகலான் ஒருவரையும் குற்றங் கூறுதற்கில்லை, அதனால் இனி யான் அவற்கு பிறர்க்கு உரியேன் அல்லேன் ஆகலின், அவனை உறுதல் எவ்வாறு என்னும் கலக்கமே என் நோய்க்குக் காரணம் என்பதும், ஆகவே வெறியாட்டு நமக்கு ஏலாதாகலின் நீ அது விலக்கற்பாலை என்பதும் கூறினாளாம்.
26. ஐயந்தீரக் கூறல்
ஐயந்தீரக் கூறல் என்பது எம்பெருமாற்குப் பழிவருங் கொல்லோ என்று ஐயுற்று அறத்தொடு நின்ற தலைமகளது குறிப்பறிந்த தோழி, அவள் ஐயந்தீர, நம் குடிக்குப் பழி வரினும் அவற்குப் பழி வாராமல் மறைத்துக் கூறுமாறு என்னோ எனத்தான் தலை மகளைப் பாதுகாத்தல் தோன்றக் கூறா நிற்றல்.
291. குடிக்கலர் கூறினும் கூறா
வியன்தில்லைக் கூத்தன்தாள்
முடிக்(கு)அல ராக்கும்மொய் பூந்துறை
வற்கு முரிபுருவ
வடிக்கலர் வேற்கண்ணி வந்தன
சென்றுநம் யாய்அறியும்
படிக்கல ராம்இவை என்நாம்
மறைக்கும் பரிசுகளே.
கொளு
விலங்குதல் விரும்பு மேதகு தோழி
அலங்கற் குழலிக்(கு) அறிய உரைத்தது.
இதன் பொருள் : வெறி விலக்குதலை விரும்புகிற மேம்பாடு தக்க தோழி மாலையணிந்த கூந்தலினை உடையாளுக்கு அறியும்படி சொன்னது.
தெளிவுரை : நம் குடிக்கு இழிவு சொல்லினும் சொல்ல வொண்ணாத பெரிய பெரும்பற்றப்புலியூரில் கூத்தனாகிய முதலியார் சீபாதங்களைத் தன் முடிக்குப் பூவாகக் கொள்ளுகிற பூவுடைத்தாகிய துறையை உடையவற்கு, வளைந்த புருவத்தினையும் வடித்த அலருடைத்தாகிய வேலை ஒத்த கண்களையுமுடையாய் ! நமக்கு வந்த குற்றங்கள் நம்முடைய யாய் ஆனவள் அறியும்படி சென்று அலராக நின்றன. இவையிற்றை நாம் மறைக்கும்படி என்தான் சொல்லு வாயாக வேண்டும்.
27. வெறி விலக்கல்
வெறி விலக்கல் என்பது, தலைமகளை ஐயம் தீர்த்து வெறிக்களத்தே சென்று, வேலனை நோக்கி, புனலிடை வீழ்ந்து கெடப்புக வந்தெடுத்து உய்த்த கதிர்த்தோள் நிற்க இந்நோய் தீர்த்தற்குப் பிறிதோர் உபாயத்தைக் கருதும் நின்னைப் போல இவ்வுலகத்தின் கண் அறிவுடையார் இல்லையென மேல் அறத்தொடு நிற்பாளாக தோழி வெறி விலக்கா நிற்றல்.
292. விதியுடை யார்உண்க வேரி
விலக்கலம் அம்பலத்துப்
பதியுடை யான்பரங் குன்றினில்
பாய்புனல் யாம்ஒழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க
வேறு கருதுநின்னின்
மதியுண்டை யார்தெய்வ மேயில்லை
கொல்இனி வையகத்தே.
கொளு
அறத்தொடு நின்ற திறத்தினிற் பாங்கி
வெறி விலக்கிப் பிறிதுரைத்தது.
இதன் பொருள் : அறத்தொடு நின்ற முறைமையாலே பாங்கியானவள் வெறி விலக்கிப் பிறிதொன்றைச் சொன்னது.
தெளிவுரை : மதுவுண்ண விதியுடையார் உண்ண அமையும். இது விலக்கற் போத்தோம் அல்லோம். திருஅம்பலத்தை இருப்பிடமாக உடையவன், அவனுடைய திருப்பரங்குன்றினிடத்துப் பரந்த புனலிலே நாங்கள் மூழ்கிப் போக விரைந்து வருகிற வார்த்தை உடையவன் அவனுடைய ஒளியுடைத்தாகிய தோள்களானவை நிற்க நோய்க்குக் காரணமாக வேறே எண்ணும் உன்னைக் காட்டிலும் இந்நோய்க்குக் காரணம் வேறே தேடித் திரிகிற உன்னைப் போல மதியுடையார் உலகத்து ஒருவரும் இல்லைபோல இருந்தது, தெய்வமே !
28. செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்றல்
செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்றல் என்பது வெறி விலக்க நிற்ப, நீ வெறி விலக்குவதற்குக் காரணம் என்னோ என்று கேட்ட செவிலிக்கு, நீ போய்ப் புனங்காக்கச் சொல்ல, யாங்கள் போய்த் தினைக் கிளி கடியா நின்றோம். அவ்விடத்து ஒரு யானை வந்து நின் மகளை ஏதஞ்செய்யப் புக்கது. அது கண்டு அருளுடையான் ஒருவன் ஓடி வந்து அணைத்துப் பிறிதொன்றும் சிந்தியாமல் யானையைக் கடிந்து அவளது உயிர் கொடுத்துப் போயினான். அறியாப் பருவத்து நிகழ்ந்ததனை இன்று அறியும் பருவம் ஆதலான் உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர் என்பதனை உட்கொண்டு இவ்வாறு உள்மெலியா நின்றாள்; இனியடுப்பது செய்வாயாக எனத் தோழி அறத்தொடு நில்லா நிற்றல்.
293. மனக்களி யாய்இன் றியான்மகிழ்
தூங்கத்தன் வார்கழல்கள்
எனக்களி யாநிற்கும் அம்பலத்
தோன்இருந் தண்கயிலைச்
சினக்களி யானை கடிந்தார்
ஒருவர்செவ் வாய்ப்பசிய
புனக்கிளி யாங்கடி யும்வரைச்
சாரற் பொருப்பிடத்தே.
கொளு
சிறப்புடைச் செவிலிக்(கு) அறத்தொடு நின்றது.
இதன் பொருள் : சிறப்புடைச் செவிலிதாய்க்கு அறத் தொடு நின்றபடி.
தெளிவுரை : உள்ளக் களிப்புண்டு இப்பொழுது நான் செம்மாந்திருப்பத் தன்னுடைய வார்க்கழலணிந்த சீபாதங்களை எனக்குத் தாரா நிற்கிற திருஅம்பலநாதன் அவனுடைய மிகவும் தட்பத்தினையுடைய பெரிய ஸ்ரீகயிலாசத்தில் சினக்களி யானையை ஓட்டினார் ஒருவர். சிவந்த வாயினையும் பச்சென்ற நிறத்தினையும் உடைத்தாகிய புனத்திற் கிளியை நாங்கள் ஓட்டுகிற மலையிற் சாரல் உடைத்தாகிய பக்கமலையிடத்தே ஓட்டினார் ஒருவர் என்ன, அவர்க்கு வரைந்து கொடுக்க வேண்டும் என்றுபடும்.
29. நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நிற்றல்
நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நிற்றல் என்பது, தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட செவிலி, இளையளாகிய இல்வாழ்க்கைச் செல்வத்தையுடைய இவளை என் சொல்லிப் புகழுவோம்? முன்னெழும் இரண்டு எயிறு முளையாத இளமைப் பருவத்தே அறிவு முதிர்ந்தாள் எனத் தலைமகளது கற்பு மிகுதி தோன்ற நற்றாய்க்கு அறத்தொடு நில்லா நிற்றல்.
294. இளையாள் இவளைஎன் சொல்லிப்
பரவுதும் ஈர்எயிறு
முளையா அளவின் முதுக்குறைந்
தாள்முடி சாய்த்திமையோர்
வளையா வழுத்தா வருதிருச்
சிற்றம் பலத்துமன்னன்
திளையா வரும்அரு விக்கயி
லைப்பயில் செல்வியையே.
கொளு
கற்பினின் வழாமை நிற்பித்(து) எடுத்தோள்
குலக்கொடி தாயர்க்(கு) அறத்தொடு நின்றது.
இதன் பொருள் : கற்பினின்று வழுவாமல் வளர்த்த செவிலித் தாயானவள் அழகிய வஞ்சிக் கொம்பை ஒப்பாளுடைய நற்றாய்க்கு அறத்தொடு நின்றபடி.
தெளிவுரை : முடியைச் சாய்த்து தேவர்கள் ஆனவர்கள் சூழ்ந்து புகழ்ந்து வருகிற திருச்சிற்றம்பலத்துத் தலைவன், திளைத்து வருகிற அருவியை உடைத்தாகிய ஸ்ரீ கயிலாயத்தே வாழுகிற செல்வத்தையுடையவளை இளையாளாகிய இவளை எதைச் சொல்லிப் புகழ்வோம்? முற்படத் தோன்றக்கூடிய இரண்டு எயிறும் தோன்றுவதற்கு முன்னே அறிவு முதிர்ந்துவிட்டாள்.
30. தேர் வரவு கூறல்
தேர் வரவு கூறல் என்பது, நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நில்லா நிற்ப, அந்நிலைக்கண் தலைமகனது தேரொடு கேட்ட தோழி, உவகையோடு சென்று, தலைமகளுக்கு அதன் வரவு எடுத்துக் கூறா நிற்றல்.
295. கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை
யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
புள்ளினம் ஆர்ப்பப் பொருதிரை
யார்ப்பப் புலவர்கள்தம்
வள்ளினம் ஆர்ப்ப மதுகரம்
ஆர்ப்ப வலம்புரியின்
வெள்ளினம் ஆர்ப்ப வரும்பெரும்
தேரின்று மெல்லியலே.
கொளு
மணிநெடுந் தேரோன் அணதினின் வருமென
யாழியல் மொழிக்குத் தோழி சொல்லியது.
இதன் பொருள் : மணி கட்டப்பட்ட நெடிய தேரினை உடையவன் அண்ணிதாக வருவன் என்று யாழோசையை ஒத்த வார்த்தையை உடையாளுக்குத் தோழி சொன்னது.
தெளிவுரை : வண்டுச் சாதிகள் ஆரவாரித்து உண்கிற வளவிய திருக்கொன்றை மாலையை, உடையவன் அவனுடைய பெரும்பற்றப்புலியூரைச் சூழ்ந்த கடலிடத்துப் புட்கள் ஆரவாரிக்கவும் கரையோடு பொருகிற திரைகள் ஆரவாரிக்கவும் புலவருடைய வளவிய திரள்கள் ஆரவாரிப்பவும் வண்டுகள் ஆரவாரிப்பவும் சங்கினுடைய வெள்ளிய திரள்கள் ஆரவாரிப்பவும் மெல்லிய இயல்பினை உடையாய் ! இப்பொழுது ஒரு பெரிய தேர் வாரா நின்றது காண்.
31. மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல்
மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல் என்பது தோழி தலைமகளுக்குத் தேர் வரவு கூறா நின்ற அந்நிலைமைக்கண் மணமுரசு கேட்டு மனையிலுள்ளார், இஃது இவளை நோக்கி ஒலியா நின்றது மணமுரசு என உட்கொண்டு யாம் பூரண பொற்குடம், தோரணம் முதலாயினவற்றான் மனையை அலங்கரிப்போம் என மகிழ்வொடு கூறா நிற்றல்.
296. பூரண பொற்குடம் வைக்க
மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம்
ஆர்க்கதொன் மால்அயற்கும்
காரணன் ஏரணி கண்ணுத
லோன்கடல் தில்லையன்ன
வாரண வும்முலை மன்றலென்(று)
ஏங்கும் மணமுரசே.
கொளு
நிலங்காவலர் நீண்மணத்தின்
நலங்கண்டவர் நயந்துரைத்தது.
இதன் பொருள் : பூமியைக் காக்கிறவருடைய நீண்ட மணத்தின் நன்மையைப் பார்த்தவர்கள் விரும்பிச் சொன்னது.
தெளிவுரை : பழைய மாலுக்கும் அயனுக்கும் காரணமாயுள்ளவன், அழகு பொருந்தின திருநயனத்தையும் அழகிய திருநெற்றியினையும் உடையவன், அவனுடைய கடல் சூழ்ந்த பெரும்பற்றப்புலியூரை ஒத்த முலையினை உடையவளுடைய கலியாணம் என்று ஆரவாரியா நின்றன, மணமுரசுகள், நன்றாகிய நிறைந்த பொற்கரகத்தையும் வைக்க; தோரணத்தில் நீலமணியினையும் முத்தினையும் பொன்னையும் நன்றாகச் செய்யுங்கள். வாத்தியங்களை முழங்கச் சொல்லுக.
32. ஐயுற்றுக் கலங்கல்
ஐயுற்றுக் கலங்கல் என்பது மணமுரசு கேட்டவன் மகிழ்வொடு நின்று மனையை அலங்கரியா நிற்ப, மிகவும் களிப்பை உடைத்தாய நமது சிறந்த நகரின்கண் முழங்கா நின்ற இப்பெரிய முரசம், யான் எவற்கோ அறிகின்றிலேன் எனத் தலைமகள் கலக்கமுற்றுக் கூறா நிற்றல்.
297. அடற்களி யாவர்க்கும் அன்பர்க்(கு)
அளிப்பவன் துன்பஇன்பம்
படக்களி யாவண் டறைபொழில்
தில்லைப் பரமன்வெற்பில்
கடக்களி யானை கடிந்தவர்க்
கோஅன்றி நின்றவர்க்கோ
விடக்களி யாம்நம் விழுநகர்
ஆர்க்கும் வியன்முரசே.
கொளு
நல்லவர் முரசுமற்(று) அல்லவர் முரசெனத்
தெரிவ ரிதென அரிவை கலங்கியது.
இதன் பொருள் : நாயகருடைய முரசை மற்றந்த அயலார் முரசென்று தெரிகை அரிதென்று நாயகி வவுந்தியது.
தெளிவுரை : வெற்றியுடைத்தாகிய களிப்பைத் தனக்கு அன்பரானவர் யாவர் சிலர்க்கும் கொடுப்பவன், இன்ப துன்பம் படும்படிக்கு ஈடாகத் தனக்கு ஒப்பார் சிலர் யாவர்க்கும் கொடுக்கிறவன் களித்து வண்டுகள் ஆரவாரிக்கிற பொழில் சூழப்பட்ட பெரும்பற்றப்புலியூருக்குப் பழையனாகிய முதலியாருடைய மலையில் உள்ளக் களிப்பை உடைத்தாகிய மத யானையை நம்மிடத்தில் வாராமல் ஓட்டினவர்க்கோ? சிலர்க்கோ? மிகவும் களித்து நம்முடைய விழுமிய நகரியிலே ஆரவாரிக்கிற பெரிய முரசமானது ஆர்க்கின்றது? அறிகிறோமில்லை.
33. நிதி வரவு கூறா நிற்றல்
நிதி வரவு கூறா நிற்றல் என்பது, முரசொலி கேட்டு, ஐயுற்றுக் கலங்கா நின்ற தலைமகளுக்கு, நமர் வேண்டினபடியே அருங்கலங்கொடுத்து நின்னை வரைந்து கொள்வாராக. யானை கடிந்தார் நமது கடைமுன் கொணர்ந்து இறுத்தார் குறைவில்லாத நிதி; இதனை நீ காண்பாயாக எனத் தோழி மகிழ்தரு மனத்தொடு நின்று நிதி வரவு கூறா நிற்றல்.
298. என்கடைக் கண்ணினும் யான்பிற
ஏத்தா வகையிரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச்
சங்கரன் தாழ்கயிலைக்
கொன்கடைக் கண்தரும் யானை
கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
முன்கடைக் கண்ணிது காண்வந்து
தோன்றும் முழுநிதியே.
கொளு
மகிழ்தரு மனத்தொடு வண்புகழ்த் தோழி
திகழ் நிதி மடந்தைக்குத் தெரிய உரைத்தது.
இதன் பொருள் : மகிழ்ச்சியைத் தருகிற மனத்துடனே வளவிய புகழையுடைய பாங்கி வளவிய மனைக் கிழத்தியாகிய நற்றாய்க்குத் தெரியும்படி சொன்னது.
தெளிவுரை : கடைய என்னிடத்திலும் நான் பிற தெய்வங்களை வாழ்த்தாதபடி தானே இரங்கித் தன்னுடைய திருக்கடைக்கண் வைத்துக் குளிர்ந்த பெரும்பற்றப்புலியூரில் சங்கரனாகியவன் அவனுடைய நீண்ட கயிலாயத்தில் அச்சத்தைக் கடைக்கண் தரும் யானையை ஓட்டியவர் கொண்டு வந்து விட்டார். உன் கடைக்கண் முன்னே பாராய் ! வந்து தோன்றுகிற நம் உறவின் முறையாராலே சொல்லப்பட்ட முழு நிதியைக் கடைக்கண் முன்னே பாராய்.
இயற்கைப் புணர்ச்சி முதல் வரை பொருட் பிரிதல் வரையுள்ள கிளவிக் கொத்து (அதிகாரம் 1-18) பதினெட்டும் களவொழுக்கமாகும்.
வரைபொருட் பிரிதல் முற்றிற்று.

கற்பியல் (19 முதல் 25 அதிகாரங்கள்)
பத்தொன்பதாம் அதிகாரம்
19. மணம் சிறப்புரைத்தல்
மணம் சிறப்புரைத்தல் என்பது, வரைந்த பின்னர் மணம் சிறப்புக் கூறா நிற்றல்.
நூற்பாவில் அடியிற் கண்ட ஒன்பது அதிகாரங்கள் உள்ளன.
1. மணமுரசு கூறல்
2. மகிழ்ந்துரைத்தல்
3. வழிபாடு கூறல்
4. வாழ்க்கை நலங் கூறல்
5. காதல் கட்டுரைத்தல்
6. கற்பறிவித்தல்
7. கற்புப் பயப்புரைத்தல்
8. மருவுதல் உரைத்தல்
9. கலவி இன்பங் கூறல்
என்பனவாம்.
பேரின்பக்கிளவி
மணஞ்சிறப் புரைத்தல் வரும் ஓர் ஒன்பதும்
உயிர்சிவ மணம்பெற்(று) உண்மைஇன் பாகிய
பரைகடந் தின்பப் பண்பாய் நிற்றல்.
1. மணமுரசு கூறல்
மணமுரசு கூறல் என்பது, வரைபொருட் பிரிந்து வந்த பின்னர் அருங்கலம் விடுத்தற்கு முன்றிற் கண் நின்று தலைமகனது முரசு முழங்கா நிற்பக் கண்டு மகிழ்வுறா நின்ற தோழி, நாம் துயர் தீர நம் இல்லின் கண் புகுந்து நின்று யானை கடிந்தார் முரசு முழங்கா நின்றது. இனி என்ன குறையுடையோம் என வரைவு தோன்ற நின்று, தலைமகளுக்கு மணமுரசு கூறா நிற்றல்.
299. பிரசம் திகழும் வரைபுரை
யானையின் பீடழித்தார்
முரசம் திகழும் முருகியம்
நீங்கும் எவர்க்குமுன்னாம்
அர(சு)அம் பலத்துநின்(று) ஆடும்
பிரானருள் பெற்றவரின்
புரைசந்த மேகலை யாய்துயர்
தீரப் புகுந்துநின்றே.
கொளு
வரைவு தோன்ற மகிழ்வுறு தோழி
நிரைவ ளைக்கு நின்று ரைத்தது.
இதன் பொருள் : கலியாணம் தோன்ற மகிழ்ச்சி யுறுகிற தோழி நிரைத்த வளையினை உடையாளுக்கு நின்று சொன்னது.
தெளிவுரை : எல்லாத் தேவர்களுக்கும் முன்னே உண்டாகிய அரசாயுள்ளவன் திருஅம்பலத்தில் நின்றாடியருளுகிற தலைவன் அவனுடைய திருவருளைப் பெற்றவர்களைப் போல மேலான நிறமுடைத்தாகிய மேகலாபரணறத்தையுடையாய்! துன்பம் தீரும்படிக்கு ஈடாகப் புகுந்து நின்று தேன் விளங்குகிற மலையில் ஒத்த யானையின் பெருமையை அழித்தவர் முரசானது விளங்கா நின்றது. முருகனுக்காகக் கொடுக்கிற வாத்தியங்கள் எல்லாம் நீங்கா நின்றன. ஆகையால் நீ துன்புற வேண்டாம் காண் என்றுபடும்.
2. மகிழ்ந்துரைத்தல்
மகிழ்ந்துரைத்தல் என்பது, மணமுரசு ஒலி கேட்ட தோழி சிலம்பன் தந்த பெறுதற்கரிய தழைகளை வாடாமல் வைத்து, அத்தழையே பற்றுக் கோடாக ஆற்றியிருந்தாள் எனத் தலைமகளைத் தன்னுள்ளே மகிழ்ந்து கூறா நிற்றல்.
300. இருந்துதி என்வயின் கொண்டவன்
யான்எப் பொழுதும்உன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி
யோன்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வால்எரி
முன்வலம் செய்(து)இடப்பால்
அருந்துதி காணும் அளவும்
சிலம்பன் அருந்தழையே.
கொளு
மன்னிய கடியிற் பொன்னறுங் கோதையை
நன்னுதல் தோழி தன்னின் மகிழ்ந்தது.
இதன் பொருள் : நிலைபெற்ற கலியாணத்தில் அழகிய நாற்றமுடைத்தாகிய மாலையினையுடையாளை நல்ல நெற்றியினை உடைய பாங்கி தன்னிலே மகிழ்ந்தது.
தெளிவுரை : மிக்க துதிப்பை என்னிடத்தே கொண்டவன், நான் எப்பொழுதும் நினைக்கிற மருந்தாய் உள்ளவன், திக்குகள்தோறும் முகமுடைத்தாகிய பிரமனுக்கும் விட்டுணுக்கும் அரியனாயுள்ளவன் அவனுடைய பெரும்பற்றப்புலியூரை வாழ்த்தினாரைப்போல இருந்து விளங்கின. வலிதாக எரியை வலஞ்செய்து வசிட்டனுக்கு இடப்பாகத் தாளாகிய அருந்ததியைக் காணுமளவும் சிலம்பன் அரிய தழையை (விளங்கின) என்ன அவர் வரைந்து கொள்ளும் அளவும் அத்தழையைப் பற்றுக்கோடாகக் கொண்டு ஆற்றினாள் என்று பாங்கி பிரியப்பட்டுச் சொன்னது.
3. வழிபாடு கூறல்
வழிபாடு கூறல் என்பது மணம் செய்த பின்னர் மணவினை காணவந்த செவிலிக்கு, காவலர் உடம்பும் உயிரும் போல ஒருவரையொருவர் இன்றியமையாமல் இவள் கருத்தைக் கடவார். கமலம் கலந்த தேனும் சந்தன மரமும் போல இயைந்து இவள் கற்புவலி நிற்றலை உடையராய் இவள் வழியே நின்றொழுகா நின்றார் எனத் தோழி தலைமகன் தலைமகள் வழி ஒழுகா நின்றமை கூறா நிற்றல்.
301. சீரியல் ஆவியும் யாக்கையும்
என்ன சிறந்தமையால்
காரியல் வாட்கண்ணி எண்ணக
லார்கம லங்கலந்த
வேரியும் சந்தும் வியல்தந்
தெனக்கற்பின் நிற்பர்அன்னே
காரியல் கண்டர்வண் தில்லை
வணங்கும்எம் காவலரே.
கொளு
மணமனை காண வந்தசெவி லிக்குத்
துணைமலர்க் குழலி தோழி சொல்லியது.
இதன் பொருள் : கலியாண மனை காணவந்த செவிலிக்கு இணையொத்த மலரணிந்த கூந்தலையுடையாளுடைய தோழி சொன்னது.
தெளிவுரை : பருவ மேகத்தையொத்த கருமிடற்றை உடையவர், அவருடைய வளவிய பெரும்பற்றப்புலியூரை வணங்குகிற எம்முடைய காவலரானவர் சீர்புடைத்தாகிய உடம்பும் உயிருமென்னச் சிறந்தமை யாலே கருமை பொருந்தின ஒளியார்ந்த கண்களை உடையவளுடைய விசாரத்தினின்றும் நீங்கார்; செந்தாமரைப் பூவிலே பொருந்தின தேனும் சந்தன மரமும் தம்மில் ஒத்து விளங்கினாற் போலத் தாயே ! நாயகியுடைய கற்பிடத்தே நிற்பர் காண்.
4. வாழ்க்கை நலங் கூறல்
வாழ்க்கை நலங் கூறல் என்பது, மணவினை கண்ட செவிலி மகிழ்வோடு சென்று, நின் மகளுடைய இவ்வாழ்க்கை நலத்திற்கு உவமை கூறில் நின்னுடைய இவ்வாழ்க்கை நலமல்லது வேறு உவமை இல்லை என நற்றாய்க்குத் தலைமகளது வாழ்க்கை நலம் கூறா நிற்றல்.
302. தொண்டினம் மேவும் சுடர்க்கழ
லோன்தில்லைத் தொல்நகரில்
கண்டின மேவும்இல் நீஅவள்
நின்கொழு நன்செழுமெல்
தண்டின மேவுதிண் தோளவன்
யானவள் தற்பணிவோள்
வண்டின மேவும் குழலாள்
அயல்மன்னும் இவ்அயலே.
கொளு
மணமனைச் சென்று மகிழ்தரு செவிலி
அணிமனைக் கிழத்திக்(கு) அதன்சிறப்(பு) உரைத்தது.
இதன் பொருள் : கலியாண மனையின் சென்று மகிழ்ச்சி விரும்புகிற செவிலித் தாயானவள் அழகிய மனைக் கிழத்தியாகிய நற்றாய்க்கு மிக்க சிறப்பைச் சொன்னது.
தெளிவுரை : அடியார் திரள் பொருந்தின ஒளியுடைத்தாகிய சீபாதங்களை உடையவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூராகிய பழைய நகரில் என்னாற் காணப்பட்ட அவளுடைய இல்லமானது; நம்முடைய பொருந்தின இல்லத்தோடு ஒக்கும். உன்னை ஒத்திருப்பவள் அவள். வளலிய தாய் மெத்தென்று தண்டாயுதத்தின் திரள்களை ஒத்த தோள்களை உடையவன் உன்னுடைய கொழுநன் தானாயிருக்கும். அவளை வணங்குகிறவள் என்னை ஒத்திருக்கும். வண்டுச் சாதிகள் பொருந்தின கூந்தலை உடையவளின் அயலார் நம்முடைய நிலைபெற்ற அயலோடு ஒப்பார்கள்.
5. காதல் கட்டுரைத்தல்
காதல் கட்டுரைத்தல் என்பது, அவள் இல்வாழ்க்கை நலங்கிடக்க, அவன் அவள்மேல் வைத்த காதலான் இவையே யன்றிப் பொறையாமென்று கருதி நுதலின்கண் இன்றியமையாத காப்பாகிய பொட்டையும் அணியான்; இஃது அவன் காதல் எனத் தலைமகனது காதல் மிகுதி கூறா நிற்றல்.
303. பொட்டணி யான்நுதல் போயிறும்
பொய்போல் இடையெனப்பூண்
இட்டணி யான்தவி சின்மலர்
அன்றி மிதிப்பக் கொடான்
மட்டணி வார்குழல் வையான்
மலர்வண் டுறுதல்அஞ்சிக்
கட்டணி வார்சடை யோன்தில்லை
போலிதன் காதலனே.
கொளு
சோதி வேலவன் காதல்கட் டுரைத்தது.
இதன் பொருள் : ஒளியுடைத்தாகிய வேலினை உடையவன் அன்பு இயல்பைச் சொன்னது.
தெளிவுரை : பொய்யை ஒத்த இடையானது நைந்து முறியும் என்று ஆபரணங்களைப் பூட்டி அலங்கரியான். படுக்கையிலே மிதிக்கும்பொழுது இவள் கால் நோவும் என்று மலர் இன்றி மிதிப்பக் கொடான். தேனுடைத்தாகிய நீண்ட கூந்தலில் வண்டுகள் சேர்கின்றனவோ என்று பயப்பட்டு மலரையும் வையான். கட்டப்பட்டு அழகிதாய் நீண்ட திருச்சடாபாரத்தையுடையவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரை ஒப்பாளுடைய காதலன் ஆனவன்; (இவை இத்தனையும் செய்யான் காண்; இவை செய்யாதிருக்கக் கேட்க வேண்டுமோ; இடை ஒடியுமென்று பயப்பட்டு) நெற்றியில் திலக முதலாக இட்டு அலங்கரியான்காண்.
6. கற்பறிவித்தல்
கற்பறிவித்தல் என்பது, தலைமகனது காதல் மிகுதி கூறின செவிலி, அது கிடக்க, அவள் அவனையொழிய வேறொரு தெய்வத்தைத் தெய்வமாகக் கருதாள் ஆதலான், அவன் தன்னை வணங்காத பகைவரைச் சென்று கிட்டித் திறை கொள்ளச் சென்றாலும் திறை கொண்டு வந்து அவளது இல்லத்தல்லது ஆண்டுத் தங்கி அறியான். இஃது அவரது இயல்பு எனக் கூறி நற்றாய்க்கு தலைமகளது கற்பு அறிவியா நிற்றல்.
304. தெய்வம் பணிகழ லோன்தில்லைச்
சிற்றம் பலம்அனையாள்
தெய்வம் பணிந்தறி யாள்என்று
நின்று திறைவழங்காத்
தெய்வம் பணியச்சென் றாலும்மன்
வந்தன்றிச் சேர்ந்தறியான்
பௌவம் பணிமணி யன்னார்
பரி(சு)இன்ன பான்மைகளே.
கொளு
விற்பொலி நுதலி கற்பறி வித்தது.
இதன் பொருள் : வில்லை ஒத்த நெற்றியினை உடையாளுடைய கற்பை அறிவித்தது.
தெளிவுரை : பிறரால் கொண்டாடப்படும் தெய்வங்கள் வணங்குகிற சீபாதத்தை உடையவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் திருஅம்பலத்தை ஒப்பாள் ஒரு நாளும் தன்பர்த்தாவாகிய தெய்வம் ஒழிய வேறொரு தெய்வத்தை வணங்கியறியாள் என்று முன்னின்று திறைகொடாத பகைவர்கள் எதிர்ப்புத் தொடுக்கையினாலே. அவர்கள் மேல் (அம்பை) எடுத்துவிட்டுச் சென்றாலும் அவருடைய மன்னனானவன் அதை முடித்து இவளிடத்தே வந்து அவதரிக்குமது அல்லால் வேறோர் இடத்தில் அவதரித்தறியான்; கடல் தந்த முத்தும் பணிதந்த சிகாமணியும் ஒத்த பெரிய வமிசத்துப் பிறந்து உய்வோருடைய முறைமகள் இத்தன்மைத்தாயிருந்தன.
7. கற்புப் பயப்புரைத்தல்
கற்புப் பயப்புரைத்தல் என்பது, கற்பு அறிவித்த செவிலி அவள் அவனை ஒழிய வணங்காமையின் அவன் ஊறுங் களிறும் வினைவயின் சென்றால் அவ்வினை முடித்துக் கொடுத்து வந்து தன் பந்தியிடத் தல்லது ஆண்டுத் தங்காது ஆதலான் அவளது கற்பு அந்திக் காலத்து வடமீனையும் வெல்லும் என அவளது கற்புப் பயந்தமை நற்றாய்க்குக் கூறா நிற்றல்.
305. சிற்பம் திகழ்தரு திண்மதில்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன்
பூவணம் அன்னபொன்னின்
கற்பந்தி வாய்வட மீனும்
கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல்செல்
லாதவன் ஈர்ங்களிறே.
கொளு
கற்புப் பயந்த அற்புதம் உரைத்தது.
இதன் பொருள் : கற்புடைமையைத் தந்த அழகைச் சொன்னது.
தெளிவுரை : நுண்தொழில் விளங்குகிற திண்ணிய மதில் சூழ்ந்த பெரும்பற்றப்புலியூர்ச் சிற்றம்பலத்து உளனாகிய பொன் தகட்டு நிறையை ஒத்தத் திருச்சடையை உடையவனுடைய திருப்பூவணத்தை ஒத்த பொன்னினுடைய கற்பு அந்திக் காலத்து வடபால் தோன்றும் அருந்ததி கற்பையும் செயிக்கும்; அதற்குக் காரணம் தன் இல்லம் கடந்து போனாலும் பகையை வெற்றிகொண்டு இவள் இல்லில் பந்தி இடத்தே வந்து கட்டுமதல்லது போன இடங்களில் அவ தரியாது, அவனுடைய பெரிய யானையே,
என்றது, தான் இருந்த தேசத்தில் அரசனுக்கு வெற்றியுண்டாம். ஆதலால், தன் கணவனுக்குப் படி கடந்து செல்ல வேண்டா என்பது கருத்து.
8. மருவுதல் உரைத்தல்
மருவுதல் உரைத்தல் என்பது, கற்புப் பயப்புரைத்த செவிலி வேந்தற்கு உற்றுழிப் பிரியினும் அவன் ஊருந்தேரும் வினை முடித்துத் தன்னிலையின் அல்லது புறத்துத் தங்காது. அவளும் அவனை ஒழிய மற்றோர் தெய்வமும் மனத்தாலும் நினைந்தறியாள்; இஃதிவர் காதல் என அவ்விருவர் காதலும் மருவுதல் கூறா நிற்றல்.
306. மன்னவன் தெம்முனை மேற்செல்லு
மாயினும் மாலரியே(று)
அன்னவன் தேர்புறத்(து) அல்கல்செல்
லாது வரகுணனாம்
தென்னவன் ஏத்துசிற் றம்பலம்
தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவல்அன் னாளும்மற்(று)
ஓர்தெய்வம் முன்னலளே.
கொளு
இருவர் காதலும் மருவுதல் உரைத்தது.
இதன் பொருள் : இருவர் அன்பும் பொருந்தினபடியைச் சொன்னது.
தெளிவுரை : பெருநில மன்னன் ஏவிவிட அவன் முனையிடத்தே சென்றதாயினும் பெரிய சிங்க ஏற்றை ஒப்பானுடைய தேர் பிறிதோரிடத்தும் அவதரியாது; வரகுணனாகிய பாண்டியனாலே புகழப்பட்ட திருச்சிற்றம்பலநாதன், மற்றெல்லா தேவர்களுக்கும் முன்னாயுள்ளவன். அவனுடைய திருமூவலை ஒப்பாளும் தன் கணவனாகிய தெய்வத்தையன்றிப் பிறிதொரு தெய்வத்தைத் தெய்வமாக நினையாள்.
9. கலவி இன்பம் கூறல்
கலவி இன்பம் கூறல் என்பது, இருவர் காதலும் மருவுதல் கூறின செவிலி இவ் இருவருடைய காதலும் களிப்பும் இன்ப வெள்ளத்து இடையழுந்தப் புகுகின்ற தோர் உயிர் ஓர் உடம்பால் துய்த்தல் ஆராமையின் இரண்டு உடம்பைக் கொண்டு, அவ்இன்ப வெள்ளத்திடைக் கிடந்து திளைத்ததனோடு ஒக்கும். அதுவன்றி அவ் இன்ப வெள்ளம் ஒரு காலத்தும் வற்றுவதும் முற்றுவதும் செய்யாது என நற்றாய்க்கு அவரது கலவி இன்பம் கூறா நிற்றல்.
307. ஆனந்த வெள்ளத்(து) அழுந்தும்ஓர்
ஆருயிர் ஈருருக்கொண்(டு)
ஆனந்த வெள்ளத் திடைத்திளைத்
தால்ஒக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத்(து) அறைகழ
லோன்அருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்
றா(து)இவ் வணிநலமே.
கொளு
நன்னுதல் மடந்தை தன்னலங் கண்டு
மகிழ்தூங்(கு) உளத்தோ(டு) இகுளை கூறியது.
இதன் பொருள் : நல்ல நெற்றியினையுடைய நாயகி தான் பெற்ற நலத்தைப் பார்த்து மகிழ்ச்சி மிக்க உள்ளத் தோடே தோழி சொன்னது.
தெளிவுரை : இன்ப வெள்ளத்தே அழுந்தக் கடவதோர் அரிய உயிர் இரண்டு வடிவு கொண்டு காம இன்பம் துய்த்தல் காரணமாக வற்றாத இன்பம் வளரும் திருவம்பலத்தைப் பொருந்தின இன்பவெள்ளத்தைத் தருகிற வீரக்கழல் ஆரவாரிக்கிற சீர்பாதங்களை உடையவன், அவனுடைய திருவருளைப் பெற்றவர்களைப் போல் இவ் இன்பம் ஒரு நாளும் குறையாது. இவ் அழகிய தன்மை முதிருவதும் செய்யாது. நீர்க்கடலுக்கு ஒரு நாளிலே வற்றுவதும் உண்டு. இவ் இன்பக் கடலுக்கு அது இல்லை.
மணம் சிறப்புரைத்தல் முற்றிற்று

இருபதாம் அதிகாரம்
20. ஓதற் பிரிவு
இனி, ஓதற் பிரிவு என்பது வரைந்து கொண்ட பின்னர்த் தலைமகனுக்கு முதற்பிரிவு ஓதல் ஆதலால் கல்வியின் மிகுதி கூறி நீங்கா நிற்றல். என்னை ?
ஓதல் காவல் பகைதணி வினையே
வேந்தற்(கு) உற்றுழி பொருட்பிணி பரத்தையென்(று)
ஆங்க ஆறே அவ்வயின் பிரிவே.
(இறையனார் அகப்பொருள் 35) என்று ஓதப்படுதலின் முதற்பிரிவு ஓதலாயிற்று. என்னை?
இவ்வண்ணம் முன்னர் ஓதலின்றி இவளை வரைந்த பின்னர் ஓத நின்றானோ எனின், அல்லன். முன்னர் இவனைப் பொருவு இறந்தானென்று கூறப்படுதலால் ஓதி முடித்தான் என்பது. இவன்தான் ஓதிய புருடார்த்தமாகிய தரும அர்த்த காமங்களை ஒழிய வேறும் புருடார்த்தமாகக் கூறப்படுவன உளவோ என்பதனை ஆராய வேண்டும் கருத்தினன் ஆதலானும் கல்வியால் தன்னின் தாழ்ந்தாரைத் தனது கல்வி மிகுதி காட்டி அவர்களை அறிவித்தல் தரும நூல் விதியாதலாலும் பிரியும் என்ப ஆகலின்.
நூற்பாவில் அடியிற்கண்ட நான்கு துறைகள் உள்ளன.
1. கல்வி நலம் கூறல்
2. பிரிவு நினைவுரைத்தல்
3. கலக்கம் கண்டுரைத்தல்
4. வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல்
என்பனவாம்.
பேரின்பக்கிளவி
கல்வியில் பிரிவொரு நான்கும் காதல்
புல்லும் ஆனந்த இன்பப் பூரணம்
சொல்லும் பயனின் திறம்பா ராட்டல்.
1. கல்வி நலங்கூறல்
கல்வி நலங்கூறல் என்பது, வரைந்துகொண்ட பின்னர் ஓதற்குப் பிரியலுறா நின்ற தலைமகன், தலைமகளுக்குப் பிரிவு உணர்த்துவானாக மிகவும் கூற்றால் கற்றோர் நன்மைக்கு எல்லையில்லாத தன்மையர் ஆவரெனத் தோழிக்குக் கல்வி நலம் கூறா நிற்றல்.
308. சீரள வில்லாத் திகழ்தரு
கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவுசென்
றார்அம் பலத்துள்நின்ற
ஓரள வில்லா ஒருவன்
இருங்கழல் உன்னினர்போல்
ஏரள வில்லா அளவினர்
ஆகுவர் ஏந்திழையே.
கொளு
கல்விக்(கு) அகல்வர் செல்வத் தவரெனச்
செறிகுழற் பாங்கிக்(கு) அறிவறி வித்தது.
இதன் பொருள் : இல்வாழ்க்கைச் செல்வத்தை உடை யாயவர் கல்வி காரணமாகப் பிரிவரென்று செறிந்த கூந்தலினை உடைய பாங்கி அறியத் தருவதான பிரிவை அறிவித்தது.
தெளிவுரை : சிறப்புக்கு எல்லையில்லாது விளங்கா நின்ற கல்வியாகிய மகாமேருவின் மிக்க அளவுகளால் அளவிட ஒண்ணாத எல்லையை அடைந்தவர்கள் (மிக்க அளவாவன காதம் என்றும், புகை என்றும் சொல்லுகிற எண் இலக்கணங்கள்) திருஅம்பலத்தே நின்றருளின ஒன்றாலும் அளவிடப்படாத ஒருவன் தான் (இங்கு ஒன்றாலும் என்றது காட்சியாலும் அனுமானத்தாலும்) அவனுடைய பெரிய திருவடிகளை நினைத்தவர்களைப் போல (திருவடிக்குப் பெருமையாவது, அடைந்தாரை விடாமை) அழகுக்கு எல்லையில்லாத அளவை உடையவர்கள். ஆபரணங்களை உடையாய், ஆவர். (என்று உலகத்தார் மேலே வைத்துச் சொல்ல நம்முடைய நாயகரும் பிரிவார் என்பது கருத்து.)
2. பிரிவு நினைவுரைத்தல்
பிரிவு நினைவுரைத்தல் என்பது, கல்வி நலம் கேட்ட தோழி, அவன் பிரிதற் குறிப்பறிந்து, மிகவும் கற்றோர் நன்மைக்கு எதிரில்லாத தன்மையர் ஆவர் என்பதனை உட்கொண்டு, நின் புணர்முலை யுற்ற புலவலர், அழற் கானத்தே போய்க் கல்லியான் மிக்காரைக் கிட்டி அவரோடு உசாவித் தங்கல்வி மிகுதி புலப்படுத்தப் பிரியா நின்றார் எனத் தலைமகன் ஓதுதற்குப் பிரிவு நினைந்தமை தலைமகளுக்குக் கூறா நிற்றல்.
309. வீதலுற் றார்தலை மாலையன்
தில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல்
வீதரும் என்பதுகொண்டு
ஓதலுற் றார்உற் றுணர்தலுற்
றார்செல்லல் மல்லழற்கான்
போதலுற் றார்நின் புணர்முலை
யுற்ற புரவலரே.
கொளு
கல்விக்(கு) அகல்வர் செல்வத் தவரெனப்
பூங்குழல் மடந்தைக்குப் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : இல்வாழ்க்கையுடைய நம் நாயகரும் கல்வி காரணமாகப் பிரியா

நின்றாரென்று பொலிவை உடைத்தாகிய குழைகளையுடைய நாயகிக்குத் தோழி சொன்னது.
தெளிவுரை : செத்தவருடைய தலைகளால் தொடுத்த மாலையினை உடையவன் பெரும்பற்றப்புலியூரில் மேலானவன். அவனுடைய திருவடிகளுக்கே அன்புற்றவர்கள் பெறும் நன்மையை இல்வாழ்க்கைச் செல்வத்தை உடையாய்! கல்வி தரவற்று என்னும் இதனைப் புத்தி பண்ணி ஓதலால் மிக்காரைக் கிட்டி உணர்வதாக நினைந்து நிறைந்த துன்பமுடைத்தாகிய வளவிய அழலுடைத்தாகிய காட்டிலே போவதாக நினைத்தார் காண். உன்னுடைய தம்மிற் பொருந்தின முலைகளில் அன்பு செய்த நாயகர் போனாலும் தாழார் என்பது கருத்து.
3. கலக்கம் கண்டுரைத்தல்
கலக்கம் கண்டுரைத்தல் என்பது, பிரிவு நினைவுரைப்பக் கேட்ட தலைமகளது கலக்கம் கண்ட தோழி, அன்பர் சொற்பா விரும்பின ரென்ன, அச்சொல் இவள் செவிக் கண் காய்ந்த வேல்போலச் சென்று எய்திற்று. இனி மற்றுள்ள பிரிவை எங்ஙனம் ஆற்றுவள் எனத் தன்னுள்ளே கூறாநிற்றல்.
310. கற்பா மதில் தில்லைச் சிற்றம்
பலமது காதல்செய்த
விற்பா விலங்கல்எங் கோனை
விரும்பலர் போலஅன்பர்
சொற்பா விரும்பினர் என்னமெல்
லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித்
தாங்குக் குறுகியதே.
கொளு
ஓதற்(கு) அகல்வர் மேதக் கவரெனப்
பூங்கொடி கலக்கம் பாங்கிகண்(டு) உரைத்தது.
இதன் பொருள் : மேம்பாடு தக்கவர் ஓதுதற்குப் பிரியா நின்றார் என்று சொல்லப் பூத்த வல்லிச்சாதி ஒப்பாள் கலங்கினபடியைப் பாங்கி கண்டு சொன்னது.
தெளிவுரை : கல் பரந்த மதில் சூழப்பட்ட பெரும்பற்றப்புலியூர் திருச்சிற்றம்பலத்தை விரும்பின வில்லாகிய பரந்த மலையையுடைய எம்முடைய சுவாமியை விரும்பாதாரைப் போல வருந்த, நம் நாயகர் சொல்லால் இயன்ற பாக்களைக் கற்க விரும்பினாரென்று சொல்ல, அச்சொல் கொல்தொழில் பரந்து விளங்கின இலைத் தொழிலையுடைத்தாகிய வேல் சென்று மூழ்கினாற் போல மெல்லிய மயிரினை உடையாள் செவியிடத்தே குறுகிற்று.
4. வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல்
வாய் மொழித் கூறித் தலைமகள் வருந்தல் என்பது, கலக்கம் கண்டுரைத்த தோழிக்கு, முன்னிலைப் புறமொழியாக நின்னிற் பிரியேன் பிரிவும் ஆற்றேன் என்று சொன்னவர் தாமே பிரிவராயின், இதற்கு நாம் சொல்லுவ தென்னோ எனத் தலைமகனது வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தா நிற்றல்.
311. பிரியா மையும்உயிர் ஒன்றா
வதும்பிரி யிற்பெரிதும்
தரியா மையும்ஒருங் கேநின்று
சாற்றினர் தையல்மெய்யிற்
பிரியாமை செய்துநின் றோன்தில்லைப்
பேரியல் ஊரர்அன்ன
புரியா மையும்இது வேயினி
என்னாம் புகல்வதுவே.
கொளு
தீதறு கல்விக்குச் செல்வன் செல்லுமெனப்
போதுறு குழலி புலம்பியது.
இதன் பொருள் : குற்றமற்ற கல்விக்குத் தலைவன் செல்வான் என்று மலர் அணிந்த கூந்தலையுடைய தலைவி அழுதது.
தெளிவுரை : நம்மை விட்டு நீங்காமையும் இருவருக்கும் உயிர் ஒன்றாவதும் எம்மை விட்டு நீங்கினால் மிகவும் ஆற்றாமையும் ஒருபடிப்பட மாறாமல் சொன்னார். (அவற்றில் பிரியோம் என்றது வென்றுபடக் கண்டோம். இப்போது பிரிகையாலே) பரமேசுவரி திருமேனியின்று நீங்காதே நின்றவன் அவனுடைய பெரும்பற்றப்புலியூராகிப் பெரிய இயல்பாற் சிறந்த ஊரை உடையவர் நீக்கி நின்ற இரண்டும் வேறுபடாதே யிருக்குமது இப்பிரியாமையின் விழுக்காடாய் இருக்கு மென்றால் இனி நாம் எதைச் சொல்லுவோம்.
ஓதற் பிரிவு முற்றிற்று

இருபத்தொன்றாம் அதிகாரம்
21. காவற் பிரிவு
காவற் பிரிவு என்பது, நாடு முழுதும் சென்று மூத்தார், இளையார், நோயுற்றார் முதலியோர்க்கு முறை வழங்கியும், வளமற்ற இடங்களை வளப்படுத்தியும், தேவ கோட்டம் முதலியவற்றின் அறங்களைச் செவ்வனம் நிகழ்வித்தும், வேற்று வேந்தர்தம் ஒற்றர்கள் உளராயின் அவர் தாமே தனது ஆண்மையையும் மக்களது அன்பையும் உணரப் பண்ணியும், பிறவாறும் எல்லாம் நாட்டினைக் குறையின்றி இருக்கச் செய்தற்கும் பிரிதல். இவ்வாறன்றி நாடு பகைவரால், நலி வெய்தாவாறு காத்தற்குப் பிரிதல் என்பது பொருவிறந்த தலைவற்கு ஒவ்வாது என்க.
நூற்பாவில் அடியிற்கண்ட இரண்டு துறைகள் உள்ளன.
1. பிறிவு அறிவித்தல்
2. பிரிவு கேட்டு இரங்கல்
என்பனவாம்.
பேரின்பக் கிளவி
காவற் பிரிவுத் துறையோர் இரண்டும்
இன்பத் திறத்தை எங்கும் காண்டல்.
1. பிரிவு அறிவித்தல்
பிரிவு அறிவித்தல் என்பது, தரும நூல் விதியால் நமர் உலகத்தைப் பாதுகாப்பான் பிரியக் கருதா நின்றாரெனத் தலைமகன் காவலுக்குப் பிரியக் கருதா நின்றமை தோழி தலைமகளுக்கு அறிவியா நிற்றல்.
312. மூப்பான் இளையவன் முன்னவன்
பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யான்அரு
ளால்விரி நீர்உலகம்
காப்பான் பிரியக் கருதுகின்
றார்நமர் கார்கயற்கண்
பூப்பால் நலம்ஒளி ரும்புரி
தாழ்குழல் பூங்கொடியே.
கொளு
இருநிலம் காவற்(கு) ஏகுவர் நமரெனப்
பொருசுடர் வேலோன் போக்(கு)அறி வித்தது.
இதன் பொருள் : பெரிய பூமியைக் காப்பதற்காகப் போகா நின்றார் நம் நாயகரென்று பொருகிற ஒளியையுடைய வேலவன் பிரிவை அறிவித்தது.
தெளிவுரை : எல்லாப் பொருளையும் தோற்றுவிப்பது காரணமாகத் தனக்கு முன்னே ஒரு திருவடிவு கொள்கையாலே மூப்பான், திருவடிக்கு முதிர்ச்சி இல்லாமையாலே இளையவன், அவ்வடிவு கொள்வதற்கு முன்பு முன்னவன், வடிவு தவிர்ந்த பின்பு பின்னவன், முப்புரங்களையும் அழிக்கிறவன், பெரும்பற்றப் புலியூரிலுள்ளவன், அவனுடைய திருவருளாலே விரிந்த நீரால் சூழப்பட்ட உலகைக் காப்பான் பிரிவதாக நினையாநின்றா நம்முடைய நாயகர்; கரிய கயல் போலும் கண்ணானது பாடலம் பூவின் நன்மை விளங்குகிற நெறித்து நீண்ட கூந்தலினை உடையாய் ! பூத்த வல்லி சாதியை ஒப்பாய் !
பிரிவு கேட்டு இரங்கல்
பிரிவு கேட்டு இரங்கல் என்பது, பிரிவு அறிவித்த தோழிக்கு, முற்காலத்துக் குரவர்களால் பாதுகாக்கப்பட்டு நம்மை வந்து யானை தெறப்புக அதனை விலக்கி நம்முயிர் தந்தவர் இன்று தம் அல்லது இல்லாத இக்காலத்துத்தாம் நினைக்கின்றது இதுவோ? இது தமக்குத் தகுமோ எனத் தலைமகனது பிரிவு கேட்டுத் தலைமகள் இரங்கா நிற்றல்.
313. சிறுகண் பெருங்கைத்திண் கோட்டுக்
குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய்
தோர்கருப் புச்சிலையோன்
உறுகண் தழலுடை யோன்உறை
அம்பலம் உன்னலரின்
துறுகள் புரிகுழ லாய்இது
வோஇன்று சூழ்கின்றதே.
கொளு
மன்னவன் பிரிவு நன்னுதல் அறிந்து
பழங்கண் எய்தி அழுங்கல் சென்றது.
இதன் பொருள் : நாயகனுடைய பிரிவை நல்ல நெற்றியினை உடையாள் அறிந்து வருத்தமுற்று மயக்கத்தை அடைந்தது.
தெளிவுரை : சிறிய கண்ணினையும் பெரிய கையினையும் திண்ணிய மருப்பினையும் குழைந்த செவியினையும் சிவந்த முகத்தினையும் உடைய யானையினது கோபித்த கோப்புக் குலைய முன்பு நம்மைப் பிழைப்பித்தவர் கருப்பு வில்லை உடைய காமன் நடுவே புகழப்படுகிற கண்ணிடத்தாகிய நெருப்பை உடையவன் வாழ்கிற திருவம்பலத்தை நினையாதாரைப் போல நெருங்கிய தேன் உடைத்தாகிய நெறித்த கூந்தலினையுடையாய் ! இப்பொழுது விசாரிக்கிறது இதுவே !
என்பது நன்மையான மாற்றல் பாதுகாக்கப்படுவகாலத்து யானை கொல்லாமற் காத்தவர், தம்மாற் பரிகரிக்கப் படுங்காலத்து இங்ஙனம் செய்கை தகுமோ என்றது.
காவற் பிரிவு முற்றிற்று.

இருபத்திரண்டாம் அதிகாரம்
22. பகை தணி வினைப் பிரிவு
பகை தணி வினைப் பிரிவு என்பது, வேந்தர் இருவர் தம்மிற் பகைத்து நின்றாரை அவர் போரான் வரும் அழிவிற்கு இரங்கி அப்பகைமை ஒழிந்து பொருந்தி வாழப் பண்ணுதற்குப் பிரிதல். தமக்கும் அரசனாய இவன், தம் பகை தணிவிக்கத் தானே முன்னின்றமை நோக்கியாயினும் இவனது சொற்கடப்பின் நமக்கு ஏதமாம் என்று அஞ்சியாயினும் இருவரும் தம் பகை ஒழிந்து பொருந்துவர் என்க. தூதிற் பிரிவு எனப்படுவதும் இதுவே. தூது என்பது ஒருவர் உரைக்கும் சொல்லை அவர் ஏவல் வழிச் சென்று பிறர்க்கு உரைப்பார்க்கும் பெயராய் நிற்றலின் பொருவிறந்த தலைவன் செய்யும் இச்சந்துவினையை பகை தணிவினை என்றார்.
நூற்பாவில் இரண்டு துறைகள் உள்ளன. அவையாவன:
1. பிரிவு கூறல்
2. வருத்தம் தணித்தல்
என்பனவாம்.
பேரின்பக்கிளவி
பகைதணி வித்தல் துறையோர் இரண்டும்
எங்கும் இன்பக் கனமென் றியறல்.
1. பிரிவு கூறல்
பிரிவு கூறல் என்பது ஒருவரது உள்ள மிகுதியை ஒருவர் தணித்தற்கு அரிதாகிய இருவேந்தர் தம்முள் பகைத்து உடன்மடியப் புகுதா நின்றார் எனக் கேட்டு அவ் இருவரையும் அடக்கவல்ல திறலுடையர் ஆதலின் அவரைப் பகை தணித்து அவர் தம்மில் ஒன்றுபட வேண்டி நின்னைப் பிரியக் கருதா நின்றார் எனத் தலைமகன் பகை தணிக்கப் பிரியலுறா நின்றமை தோழி தலைமகளுக்குக் கூறா நிற்றல்.
314. மிகைதணித் தற்(கு)அரி தாம்இரு
வேந்தர்வெம் போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தலுற்
றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்(கு)என்னை ஆண்டுகொண்
டோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
முகைதணித் தற்(கு)அரி தாம்புரி
தாழ்தரு மொய்குழலே.
கொளு
துன்னு பகைதணிப்ப மன்னவன் பிரிவு
நன்னறுங் கோதைக்கு முன்னி மொழிந்தது.
இதன் பொருள் : தம்மில் அடர்பட்டிருக்கிற பகைவரைத் தணிவு செய்கைக்கு நாயகன் பிரிகிறபடியை நல்ல நறுநாற்றத்தால் சிறந்த மாலையினை உடையாள் முன்னின்று சொன்னது.
தெளிவுரை : தத்தம் மிகைகளை ஒருவரால் தணிவு செய்கைக்கு அரிய இரண்டு அரசருடைய வெய்ய பூசல் நெருங்கின பகையைத் தணிவிப்பதாகப் போக நினைத்தார் நம்முடைய நாயகர்; பல பிறவித் திரளை மாற்றவல்லபடிக்குச் சாதனமாக என்னை அடிமை கொண்டவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரைச் சூழ்ந்த பொழிலிடத்துச் செவ்விய அரும்புகளாலும் தாழ்வு படுத்தவொண்ணாத மணத்தை உடைத்தாய நெறித்த நீண்ட கூந்தலினை உடையாய் !
ஒருவரை ஒருவர் மிகை தணித்தற்கு அரியவர் என்றமையான் இவர் சொல்லும் அளவில் கடுகச் சந்து செய்வர் என்பது கருத்து. சந்து - தூது.
2. வருத்தம் தணித்தல்
வருத்தம் தணித்தல் என்பது, தலைமகனது பிரிவு கேட்டு உள்ளுடைந்து தனிமையுற்று வருந்தா நின்ற தலைமகளை நின்னை விட்டு அவர் பிரியார்; நீ நெருப்பை உற்ற வெண்ணெயும் நீரையுற்ற உப்பும் போல இவ்வாறு உருகித் தனிமையுற்று வருந்தாது ஒழி எனத் தோழி அவளது வருத்தம் தணியா நிற்றல்.
315. நெருப்புறு வெண்ணெயும் நீருறும்
உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல்
பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின்
மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை
போலும் திருநுதலே.
கொளு
மணிப்பூண் மன்னவன் தணப்ப தில்லை
அஞ்சல் பொய்யென வஞ்சியைத் தணித்தது.
இதன் பொருள் : மணி அழுத்தப்பட்ட பூணினையுடைய நாயகன், பிரிவதில்லை, அஞ்சாது கொள், பொய் காண் என்று நாயகியைத் தணித்தது.
தெளிவுரை : மிக்க அன்பு செய்கிறவர்களைத் தேவர்களில் மேலாக்கிப் பகைவர்கள் இறந்துபடத் திரிக்கப்பட்ட திரிசூலத்தை உடையவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரை ஒத்த திருநுதலே ! மலையில் பொருந்தின மயிலை ஒப்பாய் ! அன்பர் போக்குப் பொய்காண். ஆதலால் நெருப்பில் உற்ற வெண்ணெய் உருகினாற் போலவும் நீரில் உற்ற உப்புக் கரைந்தாற் போலவும் இப்படிக் வருந்தாதே.
பகை தணி வினைப் பிரிவு முற்றிற்று

இருபத்துமூன்றாம் அதிகாரம்
23. வேந்தற்கு உற்றுழிப் பிரிவு
வேந்தற்கு உற்றுழிப் பிரிவு என்பது, தலைவன், தனக்கு நட்பினனாய அரசன் மாற்று அரசனால் வலியழந்து தன்னை வந்து அடைய, அவனுக்குத் துன்பம் வந்த அவ்விடத்து அது நீக்கி அவனை விளங்கச் செய்தற் பொருட்டுப் பிரிதல். துணைவயின் பிரிவு எனப்படுவதும் இதுவே, இதனை அடிகள் பதினாறு துறைகளாக வகுத்து அருளிச் செய்வர்.
நூற்பாவிலுள்ள துறைகள் வருமாறு:
1. பிரிந்தமை கூறல்
2. பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல்
3. வானோக்கி வருந்தல்
4. கூதிர் கண்டு கவறல்
5. முன் பனிக்கு நொந்துரைத்தல்
6. பின்பனி நினைந்திரங்கல்
7. இளவேனில் கண்டு இன்னல் எய்தல்
8. பருவங் காட்டி வற்புறுத்தல்
9. பருவம் அன்றென்று கூறல்
10. மறுத்துக் கூறல்
11. தேர் வரவு கூறல்
12. வினை முற்றி நினைதல்
13. நிலைமை நினைந்து கூறல்
14. முகிலொடு கூறல்
15. வரவெடுத் துரைத்தல்
16. மறவாமை கூறல்
என்பனவாம்.
பேரின்பக்கிளவி
உற்றுழிப் பிரிவுஈர் எட்டும் ஆனந்தம்
பெற்றவா ராமை முற்றும் உரைத்தல்.
1. பிரிந்தமை கூறல்
பிரிந்தமை கூறல் என்பது, தம்மை வந்து அடைந்த வேந்தனுக்குத் தாம் உதவி செய்வாராக வெய்ய போரையுடைய பாசறை மேல் நமர் சென்றார்; இனி அவ் வேந்தன் பகைவரால் இடப்பட்ட மதில் இன்று என்னாய் முடியுமோ எனத் தலைமகன் வேந்தற்கு உற்றுழிப் பிரிந்தமை தோழி தலைமகளுக்குக் கூறா நிற்றல்.
316. போது குலாய புனைமுடி
வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் னோக்கிசென்
றார்நமர் வண்புலியூர்க்
காதுகுலாய குழைஎழி
லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாயவிளை கின்ற(து)இன்(று)
ஒன்னார் இடுமதிலே.
கொளு
விறல்வேந்தர் வெம்முனைக்கண்
திறல் வேந்தர் செல்வர் என்றது.
இதன் பொருள் : வெற்றியினையுடைய அரசர் வெய்ய முனையிடத்தே வெற்றியினையுடைய நம் அரசர் போகா நின்றார் என்றது.
தெளிவுரை : பொற்பூ அழகு பெறச் சூடின முடியினை உடைய அரசருடைய போர் செய்கிற முனையிடத்தே, அழகு வீறுபெற்ற மெல்லிய நோக்கினையுடையாய் ! நம் நாயகர் போனார். வளவிய பெரும்பற்றப்புலியூரில் காது அழகு பெற்ற குழையினையுடைய அழகனை நினையாதாரைப் போல ஏதாய் விளையப் புகுகின்றது தான் இப்பொழுது பகைவர்கள் இட்ட மதில்.
2. பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல்
பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல் என்பது, பிரிவு கேட்ட தலைமகள் தனது வருத்தம் கண்டு, காதலர் வினைவயின் பிரிய நீ வருந்தினால் வினைமுடியுமாறென்னோ என்ற தோழிக்கு, யானவர் பிரிந்ததற்கு வருந்துகின்றேன் அல்லேன்; இக்கார்முகில் சென்று அப் பாசறைக்கண்ணே தோன்றுமாயின், நம்மை நினைந்து ஆற்றாராய், அவ் வினை முடிக்கமாட்டாரென்று அதற்கு வருந்துகின்றேன் எனக் கார்மிசை வைத்துத் தனது வருத்தம் கூறா நிற்றல்.
317. பொன்னி வளைத்த புனல்சூழ்
நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை
யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநம் தோன்றற்குப்
பாசறை தோன்றுங் கொலோ
மின்னி வளைத்து விரிநீர்
கவரும் வியன்முகிலே.
கொளு
வேந்தற்கு உற்றுழி விறலோன் பிரிய
ஏந்திழை பாங்கிக்(கு) எடுத்து ரைத்தது.
இதன் பொருள் : தனக்குச் சார்வாகிய அரசனுக்கு வினை உற்றவிடத்து வெற்றியை உடைய நாயகன் போக மிக்க ஆபரணங்களையுடைய தோழிக்கு மிகுத்துச் சொன்னது.
தெளிவுரை : காவேரியினின்றும் கோலப்பட்ட நீரால் சூழப்பட்ட நிலைபெற்றுச் சிறந்த பெரும்பற்றப்புலியூரில் வன்னித் தளிரால் சூழப்பட்ட மிக்க திருச்சடையை உடையவனை வணங்க மாட்டாதாரைப் போல், வருந்த நெருங்கிச் சென்று விட்டு வளைந்து கொண்ட நம் நாயகற்குப் பாசறைப் படை வீட்டிலே, மின்னிப் பூமியைச் சூழ்ந்து கொண்ட (முகிலென்று கூட்டி இப்பொழுதைத் தொழிலும் முன்னைத் தொழிலுமாக்கி, இம்முகில் தோன்றுமோ என்று கூட்டுக.
என்று பொருளாய், இது தோன்றில் எடுத்துக் கொண்ட வினை முடியாது மீள்வரென்று வருந்தி நின்றேன் அல்லது, அவர் பிரிவுக்குக் துன்புறுகின்றேன் அல்லேன் என்பது கருத்து.
3. வான் நோக்கி வருந்தல்
வான் நோக்கி வருந்தல் என்பது, உற்றுழிப் பிரிந்த தலைமகன், பார்ப்புக்களோடு பெடைக் குருகைச் சேவல் தன் சிறகான் ஒடுக்கிப் பனியால் வரும் மிக்க குளிரைப் பாதுகாக்கின்ற இரவின்கண் எனது போதரவு அவளுக்கு என்னாங் கொல்லோ எனத் தலைமகளது வடிவை நினைந்து வானை நோக்கி வருந்தா நிற்றல்.
318. கோலித் திகழ்கிற(கு) ஒன்றின்
ஒடுக்கிப் பெடைக் குருகு
பாலித் திரும்பனி பார்ப்பொடு
சேவல் பயில்இரவின்
மாலித் தனையறி யாமறை
யோன்உறை அம்பலமே
போலித் திருநுத லாட்(கு)என்ன
தாங்கொல்என் போதரவே.
கொளு
மானோக்கி வடிவு நினைத்தோன்
வானோக்கி வருந்தியது.
இதன் பொருள் : மான்நோக்கம் போன்ற நல்ல நோக்கினையுடையாள் அவள் வடிவை நினைத்தவன் ஆகாசத்தைப் பார்த்து வருந்தினது.
தெளிவுரை : சேவலானது தன் குஞ்சுகளோடே தன் பெடைக் குருகையும் விளங்காநின்ற சிறகு ஒன்றாலே கோலி ஒடுக்கி (ஒரு பக்கத்தே கொண்டு) மிக்க பனியைச் சீவிக்கிற இரவினிடத்தே (பாதுகாக்கப்படுவாரைப் பாதுகாத்தலாலே விளங்கின சிறகென்று புகழ்ந்தான். புகழவே நாமும் நம்மால் பாதுகாக்கப்படுவாரைப் பாதுகாத்தலே வழக்கம் என்பது கருத்து); மாலால் சிறிதும் அறியப்படாத பிராமணன், அவன் வாழ்கிற திருவம்பலத்தை ஒப்பாளாகிய அழகிய நெற்றியினையுடையாளாகிய இவளுக்கு என்னதான் மிகவும் நான் போந்த போதரவு? (இத்திரு நுதலாள் என்று உரு வெளிப்பாடாக்கி உரைக்கவும் அமையும்).
4. கூதிர் கண்டு கவறல்
கூதிர் கண்டு கவறல் என்பது விழா நின்ற பனியிடத்து எல்லாரும் நெருப்புத் திரளை மேவாநிற்ப, மலைத் திரளை ஏறித் துணையில்லாதாரைத் தேடும் புயலினம் நமக்கேயன்றித் தம்மை அடைந்தார்க்கு உதவி செய்யச் சென்றார்க்கும் சென்று பொருந்துமோ? பொருந்துமாயின், நம்மை நினைந்து ஆற்றாராய் அவ்வினை முடிக்க மாட்டார் எனத் தலைமகள் கூதிர் கண்டு கவலா நிற்றல்.
319. கருப்பினம் மேவும் பொழில்தில்லை
மன்னன்கண் ணார்அருளால்
விருப்பினம் மேவச்சென் றார்க்கும்சென்(று)
அல்குங்கொல் வீழ்பனிவாய்
நெருப்பினம் மேய்நடு மால்எழில்
தோன்றச்சென் றாங்குநின்ற
பொருப்பினம் ஏறித் தமியரைப்
பார்க்கும் புயலினமே.
கொளு
இருங்கூதிர் எதிர்வு கண்டு
கருங்குழலி கவலை யுற்றது.
இதன்பொருள் : பெரிய கூதிர்க்காலம் வந்து தோன்றினமையைக் கண்டு கருமையுடைய கூந்தலினை உடையாள் வருந்தினது.
தெளிவுரை : கருப்புத் திரள் பொருந்தின பொழில் சூழ்ந்த தில்லையிடத்து மன்னனுடைய நிறைந்த அருளாலே தம்மை விரும்பின திரள் தம்மால் உதவி பெற்று மகிழும்படி பிரிந்தவரிடத்தும் சென்று அவதரிக்குமோதான்? விழா நின்ற பனியிடத்தே நெருப்புத் திரளைப் பொருந்திக் கொண்டு நெடிய மாலின் அழகிய நிறம் தோன்ற அவ்விடத்தே நின்ற மலைகளின் மேலே பாய்ந்து ஏறித் தனித்தாருண்டோ நாம் உயிர்கொள்ள வேண்டுமென்று எட்டிப்பார்க்கிற மேகத் திரள்.
5. முன் பனிக்கு நொந்துரைத்தல்
முன் பனிக்கு நொந்துரைத்தல் என்பது, மக்களேயன்றிப் புள்ளம் தம் பெடையைச் சிறகான் ஒடுக்கிப் பிள்ளைகளையும் தழுவி இனஞ்சூழ வெருவாது துயிலப் பெறுகின்ற இம் மயங்கு இருட்கண் இடையறாது விழா நின்ற பனியிடைக் கிடந்து வாடித்துயர் உறுவாயாக என்று என்னைப் பெற்றவளை நோவது அல்லது யான் யாரை நோவேன் என முன்பனிக்கு ஆற்றாது தாயொடு நொந்து கூறா நிற்றல்.
320. சுற்றின வீழ்பனி தூங்கத்
துவண்டு துயர்கஎன்று
பெற்றவ ளேஎனைப் பெற்றாள்
பெடைசிற கான்ஒடுக்கிப்
புற்றில வாளர வன்தில்லைப்
புள்ளும்தம் பிள்ளைதழீஇ
மற்றினம் சூழ்ந்து துயிலப்
பெறும்இம் மயங்கிருளே.
கொளு
ஆன்றபனிக்(கு) ஆற்றா(து) அழிந்(து)
ஈன்றவளை ஏழை நொந்தது.
இதன் பொருள் : மிக்க பனியாலே ஆற்றாதே நெஞ்சழிந்து பெற்ற தாயை நாயகி நொந்தது.
தெளிவுரை : புற்றில் ஒளிசிறந்த பாம்பையுடையவன் (புற்றில்லாமை வேள்வித் தீயில் பிறந்தமையால்) அவனுடைய பெரும்பற்றப்புலியூரிடத்துப் புறட்சாதிகள் பெடையைத் தம் சிறகாலே ஒடுக்கிக்கொண்டு தம் பிள்ளைகளைத் தழுவிக் கொண்டு மற்றுள்ள தம் இனத்தையும் சூழ்ந்து உறங்கல் பெறா நின்றன. இந்த மயக்கத்தையுடைத்தாகிய இருளிலே; சுற்றிக்கொண்டு விழா நின்ற பனி; துவண்டு வருந்துவாயாக என்று பெற்றவளே என்னை இங்ஙனம் வருந்தும் படி பெற்றாள்.
6. பின்பனி நினைந்து இரங்கல்
பின்பனி நினைந்து இரங்கல் என்பது இப் பெரிய பனி வையமெங்கும் பரந்து, துவலைகளைப் பரப்பியவாறு அவள் பொறுக்கும் அளவன்று. அவளைச் சொல்லுகின்றதென் ! எனக்கும் ஆற்றுதல் அரிதென்பது போதரமிக்க தனிமையை உடையார்க்கு இப் பனி வான்சரத்தைத் தருமாயின் அதனோடு ஒக்கும் எனத் தலைமகன் தலைமகளது துயரம் நினைந்து இரங்கா நிற்றல்.
321. புரமன்(று) அயரப் பொருப்புவில்
ஏந்திப் புத் தேளிர்நாப்பண்
சிரம்அன்(று) அயனைச்செற் றோன்தில்லைச்
சிற்றம் பலம்அணையாள்
பரம்அன்(று) இரும்பணி பாரித்த
வாபரந்(து) எங்கும்வையம்
சரமின்றி வான்தரு மேலாக்கும்
மிக்க தமியருக்கே.
கொளு
இரும்பனியின் எதிர்வு கண்டு
சுரும்பிவர் குழலி துயரம் நினைந்தது.
இதன் பொருள் : மிக்க பனிக்காலம் எதிர்கொண்ட படியைக் கண்டு வண்டுகள் பறக்கப்பட்ட கூந்தலினை உடையாள் துயரத்தை நாயகன் விசாரித்தது.
தெளிவுரை : முப்புரங்களும் அன்று வருந்தும்படி மலையாகிய வில்லேந்தித் தேவர்களுக்கு நடுவே அன்று அயனது தலையை அறுத்தவன் (தேவர்கள் நடுவே அவனைத் தலையறுத்தான் என்றது, அவர்கள் பிதாவாகிய அவனைத் தலையறுப்ப ஒரு சேட்டையற்று நின்றான் என்பது கருத்து) அவனுடைய பெரும்பற்றப்புலியூர் திருச்சிற்றம்பலத்தை ஒப்பாளுடைய அவள் அளவல்ல, பெரும் பனி பரந்தபடி பூமியெங்கும் பரந்து பகைத்து ஆகாயமானது சர வருஷத்தைப் பொழியுமாகில் அதனோடு ஒக்கும், மிகவும் தனித்திருப்பார்க்கு.
என்றது, இப்பனி பொழிகிறபடி, சரவருஷம் பொழிந்தாலொக்கும் தனியே யிருப்பவர்க்கெல்லாம். என்ன, எனக்கும் அப்படி என்றது என்றால் அவனால் இது ஆற்றுவதன்று என்றபடி.
7. இளவேனில் கண்டு இன்னல் எய்தல்
இளவேனில் கண்டு இன்னல் எய்தல் என்பது மேன்மேலும் நிறம் பெற்று இருளா நின்ற இக்குயில்கள் மாம்பொழிலை வந்து பற்றின. இனி உயிர் வாழுமாறு ஒன்றும் கண்டிலேன் எனத் தலைமகள் இளவேனில் கண்டு இன்னல் எய்தா நிற்றல்.
322. வாழும் படியொன்றும் கண்டிலம்
வாழிஇம் மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின
வால்தொண்டை யங்கனிவாய்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
றம்பலம் ஆதரியாக்
கூழின் மலிமனம் போன்(று)இரு
ளாநின்ற கோகிலமே.
கொளு
இன்னிள வேனில் முன்னுவது கண்டு
மென்னகைப் பேதை இன்னல் எய்தியது.
இதன் பொருள் : இனிய இளவேனிற் காலம் எதிர்கொண்ட படியைக் கண்டு மெல்லிய முறுவலை உடைய நாயகி வருத்தமுற்றது.
தெளிவுரை : வாழ்வாயாக ! அழகிய தொண்டைக்கனி போன்ற வாயினையுடைய யாழ் ஓசையும் ஒத்த வார்த்தையினையுடைய பரமேசுவரி பாகத்தை உடையவன். அவனுடைய சிற்றம்பலத்தை அன்பு செய்யாதே கூழ்க்களிகளாலே களிக்கும் மனங்களின் இருட்சி போலத் தம் நிறமும் பொழுதைக்குப் பொழுது இருண்டு செல்லா நின்றன குயில்கள். அவை இந்த மாம்பொழிலிடத்து வண்டுகள் சூழப்பட்ட அரும்பிடத்தே சுற்றும் வளைந்தன ஆதலால் உயிர் வாழும் உபாயம் ஒன்றும் கண்டிலோம்.
8. பருவங் காட்டி வற்புறுத்தல்
பருவங் காட்டி வற்புறுத்தல் என்பது, தலைமகன் தான் வருதற்குக் குறித்துப் போகிய கார்ப்பருவத்தினது வரவு கண்டு கலங்கா நின்ற தலை மகளுக்கு, இக் கார் வந்து வானிடத்துப் பரந்தமையான், நம்மைக் கலந்தவரது தேர் இன்றாக நாளையாக இங்கே வாரா நிற்பக் காணப்படுவதே இனி உள்ளது எனத் தோழி அப்பருவந் தன்னையே காட்டி; அவளை வற்புறுத்தா நிற்றல்.
323. பூண்பதென் றேகொண்ட பாம்பன்
புலியூர் அரன் மிடற்றின்
மாண்பதென் றேஎன வானின்
மலரும் மணந்தவர்தேர்
காண்பதன் றேயின்று நாளையிங்
கேவரக் கார்மலர்த்தேன்
பாண்பதன் தேர்குழ லாய்எழில்
வாய்த்த பனிமுகிலே.
எண்ண என்பது இடைக்குறைந்து நின்றது.
கொளு
கார்வருமெனக் கலங்கு மாதரைத்
தேர் வருமெனத் தெளிவித்தது.
இதன் பொருள் : கார் காலம் வாரா நின்ற தென்று கலக்க முற்ற நாயகியை, இனி நம் நாயகர் தேர் வருமென்று தெளியச் சொன்னது.
தெளிவுரை : தேன் உடைத்தாகிய மலரிலே வண்டு பொகுட்டின் செவ்வியை ஆராய்கின்ற அழகிய கரிய கூந்தலினை உடையாய் ! அழகு பொருந்தின குளிர்ந்த மேகங்கள் பூணப்படுவதென்றே நிச்சயித்துக் கைக்கொள்ளப்பட்ட பாம்பை உடையவன். பெரும்பற்றப் புலியூர்த் தலைவனுடைய திருமிடற்றினது மாட்சிமை தோன்றுகிற அதுவல்லவோ என்னும்படி ஆகாயத்தே பரவ நின்றன; ஆதலால் பொருந்தின நம்முடைய நாயகர் தேரும்  இன்று நாளை இவ்விடத்தே வரக் காண்பது. அல்லவோ இனி உள்ளது? எனவே குறித்த பருவம் தப்பாதென்றது.
9. பருவம் அன்று என்று கூறல்
பருவம் அன்று என்று கூறல் என்பது, காரும் வந்தது; காந்தளும் மலராநின்றன; காதலர் வாராதிருந்தது என்னோ என்று கலங்கா நின்ற தலை மகளுக்குச் சிற்றம்பலத்தின் கண்ணே குடமுழா முழங்க அதனை அறியாது காரென்று கொண்டு இக்காந்தள் மலர்ந்தன. நீ இதனைப் பருவமென்று கலங்காது ஒழியெனத் தலைகன் வரவு நீட்டித்தலால் தோழி அவள் கலக்கந்தீரப் பருவத்தைப் பருவம் அன்றென்று கூறா நிற்றல்.
324. தெளிதரல் காரெனச் சீர்அனம்
சிற்றம் பலத்தடியேன்
களிதரக் கார்மிடற் றோன்நட
மாடக்கண் ணார்முழவம்
துளிதரல் காரென ஆர்த்தன
ஆர்ப்பத்தொக்(கு) உன்குழல்போன்(று)
அளிதரக் காந்தளும் பாந்தளைப்
பாரித்(து) அலர்ந்தனவே.
கொளு
காரெனக் கலங்கும் ஏரெழில் கண்ணிக்கு
இன்துணைத் தோழி அன்றென்று மறுத்தது.
இதன் பொருள் : கார்காலம் என்று கலங்குகிற மிக்க அழகினை உடைய நாயகியை அவளுக்கு இனிய துணையாகிய தோழி கார் அன்று என்று மறுத்தது.
தெளிவுரை : சீரிய அன்னத்தை ஒப்பாய் ! கரிய திருமிடற்றை உடையவன். திருச்சிற்றம்பலத்தே அடியேனும் கண்டுகளிக்கும்படி திருக்கூத்தாட முகம் நிறைந்த முழவம் மழை பொழியும் மேகம் போல ஆரவாரித்தன. ஆரவாரித்தலால் உன் கூந்தல் போல வண்டுச் சாதிகளைத் தம்மிடத்தே வருவிப்பதாக இக்காலத்தே காந்தட் பூக்களும் பாம்பின் படத்தை ஒத்து இனமாக மலர்ந்தன. கார்காலமென்று தெளியாதே, எனவே வம்பு காண் என்றது.
10. மறுத்துக் கூறல்
மறுத்துக் கூறல் என்பது, பருவம் அன்று என்ற தோழிக்குக் காந்தளேயன்றி இதுவும் பொய்யோ எனத் தோன்றியினது மலரைக் காட்டி, இது பருவமே என்று அவளோடு தலைமகள் மறுத்துக் கூறாநிற்றல்.
325. தேன்திக்(கு) இலங்கு கழல்அழல்
வண்ணன்சிற் றம்பலத்(து)எங்
கோன்திக்(கு) இலங்குதிண் தோள்கொண்டல்
கண்டன் குழைஎழில்நாண்
போன்(று)இக் கடிமலர்க் காந்தளும்
போந்தவன் கையனல்போல்
தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை
யோமெய்யில் தோன்றுவதே.
கொளு
பருவம் அன்றென்று பாங்கி பகர
மருவமர் கோதை மறுத்து ரைத்தது.
இதன் பொருள் : குறித்த பருவம் அன்று என்று தோழி சொல்லத் தேன் பொருந்தின கூந்தலை உடையாள் மறுத்துச் சொன்னது.
தெளிவுரை : தேனை ஒத்தவன் திசைதோறும் பிரகாசித்த திருவடிகளையுடைய அக்கினி ரூபியானவன். அவன் திருச்சிற்றம்பலத்தானாகி எம் போல்வார்க்குச் சுவாமியாய் உள்ளவன். திக்குகளை விளக்கா நின்ற திண்ணிய திருப்புயங்களாக உடையவனுமாய்ப் பருவமேகத்தை உடைய ஒத்த திருமிடற்றை உடையவன். அவனுக்குத் திருக்குழையும் திருஅரை நாணுமாகிய பாம்பின் படத்தை ஒத்து இந்த நறுநாற்றமாகிய காந்தளும் புறப்பட்டு அவனுடைய கையில் ஏந்தின தீயை ஒக்கத் தோன்றி இவனுடைய நறுநாற்றம் உடைத்தாகிய பூவும் மெய்யே தோன்றுகின்றதும் பொய்யோ. ஓகாரம் எதிர்மறையாய் மெய்யென்றுபடும்.
11. தேர் வரவு கூறல்
தேர் வரவு கூறல் என்பது, மறுத்துக் கூறின தலைமகளுக்கு, கொண்டல்கள் எட்டுத் திசைக் கண்ணும் வாரா நின்றமையின் இது பருவமே. இனி உடன்ற மன்னர் தம்முட் பொருந்துதலான் நம்மைக் கலந்தவர் தேர் நம் இல்லின்கண் இன்று வந்து தோன்றும் என்று அவள் கலக்கம் தீரத் தோழி தலை மகனது தேர்வரவு கூறா நிற்றல்.
326. திருமால் அறியாச் செறிகழல்
தில்லைச்சிற் றம்பலத்(து)எம்ற
கருமால் விடையுடை யோன்கண்டம்
போற்கொண்டல் எண்டிசையும்
வருமால் உடன்மன் பொருந்தல்
திருந்த மணந்தவர்தேர்
பொருமால் அயிற்கண்நல் லாய்இன்று
தோன்றும்நம் பொன்னகர்க்கே.
கொளு
பூங்கொடி மருளப் பாங்கி தெருட்டியது.
இதன் பொருள் : பருவங்கண்டு பூத்த கொடியை ஒப்பாள் மயங்கத் தோழி சொன்னது.
தெளிவுரை : திருமாலால் அறியப்படாத வீரக்கழல் செறிக்கப்பட்ட சீபாதங்களை உடைய (செறித்தலால் வீரக் கழலும் கழல் என்ற ஆகுபெயரால் திருவடியும் ஆகின்றன) பெரும்பற்றப்புலியூர்ச் சிற்றம் பலத்தே உளனாகிய எம்முடைய மிகவும் பெரிய இடபத்தினை உடையவன். அவனுடைய திருமிடற்றை ஒத்த மேகங்கள் எட்டுத் திக்கும் வரா நின்றன. கோபித்த அரசர்கள் தங்களுடன் பொருந்துதல் திருத்தம் பெறுதலால், பொருகிற பெரிய கூரிய வேலை ஒத்த கண்களை உடையாய்! நம்முடன் கூடினவர் தேர் நம் பொன்நகரிடத்தே இப்பொழுது தோன்றும் காண்.
12. வினை முற்றி நினைதல்
வினை முற்றி நினைதல் என்பது வேந்தற்கு உற்றுழி பிரிந்த தலைமகன், வினை முற்றிய பின்னர், கயலையும் வில்லையும் கொண்டு மன்கோபமுங்காட்டி ஒரு திருமுகம் வாராநின்றது. இனிக் கடிது போதும் எனத் தேர்ப்பாகன் கேட்பத் தலைமகளது முகம் நினைந்து கூறா நிற்றல்.
327. புயலோங்(கு) அலர்சடை ஏற்றவன்
சிற்றம் பலம்புகழும்
மயலோங்கு இருங்களி யானை
வரகுணன் வெற்பின்வைத்த
கயலோங்(கு) இருஞ்சிலை கொண்டுமன்
கோபமும் காட்டிவரும்
செயலோங்(கு) எயில்எரி செய்தபின்
இன்றோர் திருமுகமே.
கொளு
பாசறை முற்றிப் படைப்போர் வேந்தன்
மாசறு பூண்முலை மதிமுகம் நினைந்தது.
இதன் பொருள் : பாசறைப் படைவீட்டில் நிலைநின்ற படைப்போரையுடைய அரசன் குற்றமற்ற ஆபரணங்களை உடையாளுடைய சந்திரனை ஒத்த முகத்தை நினைந்தது.
தெளிவுரை : தொழில் மிக்க மதிலை எரித்த பின்பு (மதில் என்பது ஊரை) இப்பொழுது ஒரு திருமுகம் நீரை நீண்டு விரிந்த திருச்சடையில் ஏற்றவன். அவனுடைய திருச்சிற்றம்பலத்தை வாழ்த்தும் மயக்கம் மிக்க களிப்பை உடைத்தாகிய யானைகளையுடைய வரகுணனான பாண்டியன் இமயபருவதத்தின்கண் எழுதி வைத்த கயலையும் மிகவும் சிலையையும் தன்னிடத்தே கொண்டு நிலைபெற்ற கோபத்தையும் தோற்றுவித்து வாரா நின்றது.
இனி இங்கே நிற்கை அரிது போலும் என்றது. சிலேடை வகையால் ஊரை எரித்தற்கு முனிந்த கயலாம் சிலையையும் விற்படையையும் கொண்டு மன்னன் கோபத்தையும் தோற்றுவித்து ஒரு திருமுகம் வாரா நின்றது. இத்திருமுகம் ஆற்றல் அரிது போலும் என வேறொரு பொருளும் கொள்க.
13. நிலைமை நினைந்து கூறல்
நிலைமை நினைந்து கூறல் என்பது, வினை முற்றிய பின்னர் அவள் முகங்கண்டு வாரா நின்றவன், புறாக்கள் தந்துணையோடு துயின்று முன்றிற் கண் விளையாடுவ கண்டு, இது நமக்கு அரிதாயிற்று என்று என் நிலைமை நினைந்து ஆற்றகில்லாள் ஆவள். நீ விரையத் தேரைச் செல்த்துவாயாக எனத் தலை மகளது நிலைமை நினைந்து தேர்ப்பாகனுக்குக் கூறா நிற்றல்.
328. சிறப்பின் திகழ்சிவன் சிற்றம்
பலஞ்சென்று சேர்ந்தவர்தம்
பிறப்பின் துனைந்து பெருகுக
தேர்பிறங் கும்ஒளியார்
நிறப்பொன் புரிசை மறுகினில்
துன்னி மடநடைப்புள்
இறப்பின் துயின்றுமுற் றத்(து)இரை
தேரும் எழில் நகர்க்கே.
கொளு
பொற்றொடி நிலைமை மற்றவன் நினைந்து
திருந்துதேர் பாகற்கு வருந்துபு புகன்றது.
இதன் பொருள் : அழகிய வளைகளை உடையாள் நிலைமையை மற்று அந்த நாயகன் நினைந்து திருந்தின தேர்பாகனுக்குக் வருந்திச் சொன்னது.
தெளிவுரை : மிக்க ஒளியால் நிறைந்த மாற்றற்ற பொன்னாலே செய்த மதில் சூழ்ந்த ஊரின் தெருக்களில் பெடையும் சேவலும் தம்மிற் சேர்ந்து மடப்பத்தையுடைய நடையாற் சிறந்த புள்ளாகிய மாடப்புறா இறப்பிலே துயின்று பிற்பட்டு முற்றத்தே சேர்ந்திருப்பது இரை எடுக்கின்ற அழகிய நகரிடத்தே தம் சிவனுடைய திருநாட்களால் சிறந்த திருச்சிற்றம்பலத்தைச் சென்று அடைந்தாருடைய பிறவியற்ற கடுமை போல விரைந்து முடுகுவதாக, தேரானது.
சிற்றம்பலம் சேர்ந்தவர் பிறவியை விரையக் கடந்து பேரின்பம் உறுமாறு போல, யானும் இச்சுரத்தை விரையக் கடந்து தலைவியின் நலத்தைப் பெறுவேன் என்னும் இறைச்சியும் தோற்றியவாறு காண்க.
14. முகிலொடு கூறல்
முகிலொடு கூறல் என்பது கார் ஓட்டங்கண்ட பாகன் அதனோடு விரையத் தேரோட்டா நிற்பான்; பிரிதலால் திருந்திய அழகெல்லாம் அழிந்து துன்புறா நின்றவளது சீரிய நகரின்கண் வாராநின்ற எனது தேரின் முற்பட்டுச் சென்று இயங்காது ஒழிய வேண்டும். இயங்கினும் அத்தமியாள் கேட்ப முழங்காது ஒழிய வேண்டும் எனத் தலைமகன் முந்துற்றுச் செல்லா நின்ற முகிலொடு கூறா நிற்றல்.
329. அருந்(து)ஏர் அழிந்தனம் ஆலம்என்(று)
ஓல மிடும்இமையோர்
மருந்(து)ஏர் அணிஅம் பலத்தோன்
மலர்த்தாள் வணங்கலர்போல்
திருந்(து)ஏர் அழிந்து பழங்கண்
தரும்செல்வி சீர்நகர்(கு)என்
வரும்தேர் இதன்முன் வழங்கேல்
முழங்கேல் வளமுகிலே.
கொளு
முனைவற்(கு) உற்றுழி வினைமுற்றி வருவோன்
கழுமல் எய்திச் செழுமுகிற்(கு) உரைத்தது.
இதன் பொருள் : முனை செய்யும் அரசனுக்குப் போருற்ற இடத்து அவனுக்காக வினைமுடித்து வருகின்றவன் மயக்கமுற்று வளவிய முகிலுக்குச் சொன்னது.
தெளிவுரை : எங்கள் அழகு அழிந்தோம், இந்நஞ்சை உண்பாயாக வேண்டும் என்று முறையிடுகிற தேவர்களுக்கு ஒளடதமானவன், (என்றது அமுது வேண்டி கடல் கடைந்த நாங்கள் சாவாமல் இருப்ப இவன் சாவாமல் பரிகரித்தான் என்பது கருத்து) மிக்க அழகுடைத்தாகிய திருவம்பலத்தில் உள்ளவனுடைய மலரை ஒத்த திருவடிகளை வணங்காதாரைப் போலத் திருந்தின அழகு அழிந்து வருந்துகிற நாயகியுடைய சீரிய நகரியிடத்துப் போகிற என்னுடைய தேராகிய, இதன் முன்னே போகாது ஒழிவாயாக; (போனாய் ஆகிலும்) வளவிய முகிலே ! முழங்காதே ஒழிவாயாக வேண்டும். எனவே முகிலுக்கே முற்படத் தேர் கடாவவேண்டும் என்பது கருத்து.
15. வரவு எடுத்து உரைத்தல்
வரவு எடுத்து உரைத்தல் என்பது தலைமகன் முகிலொடு வாராநிற்பக் கண்ட தோழி, வணங்குவாராக உடம்பட்டவர் கொடுத்த திறையையும் வணங்காது மாறுபட்டவர் அடையாளங்களையும் தமது தேருக்கு முன்னாகக் கொண்டு, வீர முரசு ஆர்ப்ப, ஆலியாநின்ற மாவினோடும் வந்தணுகினார். இனி நமக்கொரு குறையில்லை எனத் தலைமகளுக்கு அவன் வரவெடுத்துக் கூறாநிற்றல்.
330. பணிவார் குழைஎழி லோன்தில்லைச்
சிற்றம் பலம்அனைய
மணிவார் குழல்மட மாதே
பொலிகநம் மன்னர்முன்னாப்
பணிவார் திறையும் பகைத்தவர்
சின்னமும் கொண்டுவண்தேர்
அணிவார் முரசினொ(டு) ஆலிக்கும்
மாவோ(டு) அணுகினரே.
கொளு
வினைமுற்றிய வேந்தன் வரவு
புனையிழைத் தோழி பொற்றொடிக்(கு) உரைத்தது.
இதன் பொருள் : வினை முடித்த நாயகன் வரவை அணியத் தக்க ஆபரணங்களை உடைய தோழி அழகிய வளைகளை உடையாளுக்குச் சொன்னது.
தெளிவுரை : நம்முடைய நாயகர் முன்னின்று வணங்குவாரிட்ட திறையும், வணங்காதே பகைத்தவருடைய விருதுகளும் (தமது வண்தேர்க்கு முன்னாகக் கொண்டு), வீர முரசுகள் முழங்க யானை குதிரைகள் கதி பாய வந்து குறுகினார். இனி பாம்பாகிய நீண்ட குழையால் உண்டாகிய அழகை உடையவன். அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் திருச்சிற்றம்பலத்தை விட்டு நீங்கவொண்ணாத அழகினை உடையாய்; நீலமணியை ஒத்த நீண்ட கூந்தலினையும் மடப்பத்தையும் உடையாய் (பொலிவு அடைவாயாக)
16. மறவாமை கூறல்
மறவாமை கூறல் என்பது, வினைமுற்றி வந்து தலைமகளோடு பள்ளியிடத்தானாகிய தலைமகன், நீயிர் வினையிடத்து எம்மை மறந்தீரே என்ற தோழிக்கு யான் பாசறைக்கண் தாழ்த்தவிடத்தும் கண் முத்து இலங்க நின்ற இவள் என்னுடைய நெஞ்சை விட்டு நீங்கிற்றிலள்; ஆதலால் யான் மறக்குமாறென்னோ எனத் தான் அவளை மறவாமை கூறா நிற்றல்.
331. கருங்குவ ளைக்கடி மாமலர்
முத்தங் கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற்
றிலள்நின்று நான்முகனோ(டு)
ஒருங்கு வளைக்கரத் தான்உண
ராதவன் தில்லையொப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை
நீடிய வைகலுமே.
கொளு
பாசறை முற்றிப் பைந்தொடியோ(டு) இருந்து
மாசறு தோழிக்கு வள்ளல் உரைத்தது.
இதன் பொருள் : பாசறைப் போரை முடித்து வந்து அழகிய வளைகளை உடையாளுடனே இருந்து குற்றமற்ற தோழிக்கு நாயகன் சொன்னது.
தெளிவுரை : நான்முகனோடே சங்கேந்திய கையை உடையவனும் மாறாமல் ஆராய்ந்தும் உணரப்படாதவனுடைய பெரும்பற்றப்புலியூரை ஒப்பாய் ! மாற்றரசனுடைய பரசறையை வளைத்துக் கொண்டு அவன் பக்கத்தே தாழ்த்திருந்த நாளெல்லாம் கண்ணாகிய குவளையில் நறுநாற்றம் உடைத்தாகிய பெரிய மலர்களிலே கண்ணீர்த் துளியாகிய முத்துக்கள் விரவி விளங்கும், நெருங்கிய வளைகளை உடையாளாகிய கிளியையொப்பாள் என்னை விட்டு நீங்கிற்றிலள்.
வினை முடிந்த பின்பு இவளை நினைத்தலே அன்றி வினை முடிவதற்கு முன்பும் இவளைக் கருதிக் கொண்டு இருந்தேன் என்னுமது தோன்ற வைகலும் என உம்மையைக் கொடுத்தார்.
வேந்தற்கு உற்றுழி பிரிவு முற்றிற்று

இருபத்து நான்காம் அதிகாரம்
24. பொருள் வயின் பிரிவு
பொருள் வயின் பிரிவு என்பது, தலைமகளோடு கூடி இல்லறம் நடத்தக் கருதிய தலைமகன் அதன் பொருட்டுப் பொருள் ஈட்டுதற்குப் பிரிதல். அங்ஙனமாயின் முன்னர்ப் பொருள் உடையன் அல்லனோ எனின் அவ்வாறன்று, பிறந்த நாள் தொட்டு இல்லறத்தை மேற்கொள்ளுங்காறும் இருமுது குரவர் தேடி வைத்த பொருளால் பயன் கொள்ளுதல் அன்றி, அதன் பின்னரும் அவர் தேடி வைத்த பொருளானே தென்புலத்தார், தெய்வம் முதலிய ஐம்புலத்தாரும் ஓம்பி வாழ்வானாயின், அவற்றின் பயன் பெரும்பான்மையும் அவர்க்கு ஆவதன்றித் தனக்கு ஆகாமையானும், தான் தேடிய பொருளால் தனக்கேயன்றித் தன் முன்னோர்க்கும் பயன் விளைத்தல் கூடும் ஆகலானும் தன் பெருளால் தான் இல்லறம் நடத்துதற் பொருட்டுப் பொருள் தேடப் பிரிவன் என்க. இதனை அடிகள் இருபது துறைகளாக வகுத்து அருளிச் செய்தார். நூற்பாவில் கண்ட துறைகள் வருமாறு:
1. வாட்டங் கூறல்
2. பிரிவு நினைவுறுத்தல்
3. ஆற்றாது புலம்பல்
4. ஆற்றாமை கூறல்
5. திணை பெயர்த்துரைத்தல்
6. பொருத்தம் அறிந்து உரைத்தல்
7. பிரிந்தமை கூறல்
8. இரவறு துயரத்திற்கு இரங்கியுரைத்தல்
9. இகழ்ச்சி நினைந்தழிதல்
10. உருவு வெளிப்பட்டு நிற்றல்
11. நெஞ்சொடு நோதல்
12. நெஞ்சொடு புலத்தல்
13. நெஞ்சொடு மறுத்தல்
14. நாளெண்ணி வருந்தல்
15. ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல்
16. பருவங் கண்டு இரங்கல்
17. முகிலொடு கூறல்
18. தேர் வரவு கூறல்
19. இளையர் எதிர் கோடல்
20. உண் மகிழ்ந்துரைத்தல்
என்பனவாம்.
பேரின்பக் கிளவி
பொருட்பிரிவு இருபதும் அருட்பிரி வுயிரே
ஆனந்த மாகி அதுவே தானாய்த்
தானே அதுவாய்ப் பேசிய கருணை.
1. வாட்டங் கூறல்
வாட்டங் கூறல் என்பது, பொருள் வயின் பிரியல் உறாநின்ற தலைமகன், இருமையும் பொருளானே முற்றுப் பெருமென்று யான் பொது வகையாற் கூற, அக் குறிப்பறிந்து கண்பனி கூர, இத் தன்மையளாய் வாடினாள்; இனி என்னாற் பிரிவுரைத்தல் அரிது; நீ உணர்த்து மாற்றான் உணர்த்து எனத் தோழிக்குத் தலைமகளது வாட்டங் கூறா நிற்றல்.
332. முனிவரும் மன்னரும் முன்னுவ
பொன்னான் முடியுமெனப்
பனிவருங் கண்பர மன்திருச்
சிற்றம் பலமனையாய்
துனிவரு நீர்மையி(து) என்னென்று
தூநீர் தெளித்தளிப்ப
நனிவரு நாளிது வோஎன்று
வந்திக்கும் நன்னுதலே.
கொளு
பிரிவு கேட்ட அரிவை வாட்டம்
நீங்கல் உற்றவன் பாங்கிக்கு உரைத்தது.
இதன் பொருள் : தலைமகன் பொருள் வயின் பிரிய இருக்கிறான் என்பதைக் கேட்ட தலைமகள் வாடினாள். அவளுக்கு ஆறுதல் கூறுமாறு தலைமகன் தோழியிடம் கூறியது.
தெளிவுரை : முனிவரும் அரசரும் நினைக்கப் படுவன (மறுமை இன்பமும் இம்மையின்பமும் இவையிரண்டும்) பொன்னுண்டாகவே முடியும் என்று சொல்லும் அளவில் கண்கள் நீர்வர வாளா நிற்பன; பரமனுடைய திருச்சிற்றம்பலத்தை ஒப்பாள் வெறுக்கும் தன்மையாகிய இது என்னவென்று தூய நீரைத் தெளித்துத் தலையளி செய்ய நெடுங்காலமாக இருந்தன. நீர் வருவேன் என்று சொன்ன நாள் இந்நாளோ என்று தொழாநிற்கும் நல்ல நெற்றியினை உடையாள்.
என்றது, பிரிவு அறிவிக்கும் அளவில் புத்தி கலங்கிக் கலங்கின காலமெல்லாம் பிரிந்த காலமாகக் கலங்கித் தலையளி செய்த பொழுது வந்த காலமாகக் கருதி, இது தன்னை நெடுங்கடலாகக் கருதித் தொழா நிற்பவள் எனவே பிரிவரிது என்றுபடும்.
2. பிரிவு நினைவுரைத்தல்
பிரிவு நினைவுரைத்தல் என்பது, வாட்டங் கேட்ட தோழி, பொருள் இல்லாதார் இருமையின் கண்வரும் இன்பமும் அறியாரென உட்கொண்டு, அருஞ்சுரம் போய் நமர் பொருள் தேட நினையா நின்றார் எனத் தலைமகளுக்குத் தலைமகனது பிரிவு நினைவுரையா நிற்றல்.
333. வறியார் இருமை அறியார்
எனமன்னும் மாநிதிக்கு
நெறியார் அருஞ்சுரம் செல்லலுற்
றார்நமர் நீண்டிருவர்
அறியா அளவுநின் றோன்தில்லைச்
சிற்றம் பலம்அனைய
செறிவார் கருங்குழல் வெண்ணகைச்
செவ்வாய்த் திருநுதலே.
கொளு
பொருள்வயின் பிரியும் பொருவே லவனெனச்
சுருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.
இதன் பொருள் : தலைமகன் பொருள் காரணமாகப் பிரிய இருக்கிறார் என்ற செய்தியைத் தோழி தலைமகளுக்குச் சொன்னது.
தெளிவுரை : அயனும் மாலும் அறியா அளவில் நீண்டு நின்றவன், அவனுடைய திருச்சிற்றம்பலத்தை ஒத்த நெருங்கி நீண்ட கரிய கூந்தலினையும் வெள்ளிய முறுவலினையும் சிவந்த வாயினையும் அழகிய நெற்றியையும் உடையாய் ! பொருள் இல்லாதார் இம்மை மறுமையாயுள்ள இன்பம் அறியார் என்று நிலைபெற்ற பெரும்பொருளுக்கு வழி அறிதற்கு அரிய போகைக்கு அரிய காட்டைப் போவதாக நினைத்தார் காண் நம்முடைய நாயகர்.
நமரென்பது நம் அன்புக்குப் பொருந்த ஒழுகும் அவர் எனவே பொருள் முடித்துக் கடுக வருவர் என்றுபடும்.
3. ஆற்றாது புலம்பல்
ஆற்றாது புலம்பல் என்பது, பிரிவு நினைவு உரைப்பக் கேட்ட தலைமகள், இத்தோழியாகிய கொடியவள் இத்தன்மையை அறிந்திருந்தும் அன்பர் பிரிவரெனக் குவளை எறிதற்கு வாளுறை கழித்தாற் போலக் கூறினாள். இதற்கு யான் கூறுவதுண்டோ என ஆற்றாது புலம்பா நிற்றல்.
334. சிறுவாள் உகிருற்(று) உறாமுன்னம்
சின்னப் படுங்குவளைக்(கு)
எறிவாள் கழித்தனள் தோழி
எழுதிற் கரப்பதற்கே
அறிவாள் ஒழிகுவ(து) அஞ்சனம்
அம்பல வர்ப்பணியார்
குறியாழ் நெறிசெல்வர் அன்பரென்(று)
அம்ம கொடியவளே.
கொளு
பொருள்தரப் பிரியும் அருள்தரு பவளெனப்
பாங்கி பகரப் பூங்கொடி புலம்பியது.
இதன் பொருள் : பொருள் கொண்டு வரப் பிரியாநின்றான் அருளைத் தரக் கடவன் என்று தோழி சொல்ல வல்லி சாதியை ஒப்பாள் வருந்தினது.
தெளிவுரை : அஞ்சனம் எழுதில் (எழுதுகின்ற) பொழுதும் நாயகர் தோன்றாமையை அறிந்திருந்தும் திருச்சிற்றம்பல நாதரை வணங்காதவர்கள் அடையாளமாக உறைகிற வழியிடத்தே அன்பர் போகா நின்றாரென்று கொடியவள் சொல்லிச் சிறு உகிர்ப்பட்டுப் படா மாத்திரையிலே பொடியாய்ப் போகிற குவளைப் பூவுக்கு வெட்ட வல்லவாளை உறைகழித்து வெட்டினாள் தோழியானவள், கொடியவள் என்ற பின்பு தோழியென்றது குறிப்பு மொழி.
4. ஆற்றாமை கூறல்
ஆற்றாமை கூறல் என்பது தலைமகளது வருத்தங் கண்ட தோழி, காதலர் கானகத்தையுடைய சுரத்தைப் போய் பொருள் தேட நினையா நின்றாரென்று யான் சொல்லுமளவில் அவளது முலையும் கண்ணும் பொன்னும் முத்தும் தரா நின்றன. இனி நீ சேட் சென்று தேடும் பொருள் யாதோ எனத் தோழி தலைமகனுக்கு அவளது பிரிவாற்றாமை கூறா நிற்றல்.
335. வானக் கடிமதில் தில்லைஎம்
கூத்தனை ஏத்தலர்போல்
கானக் கடஞ்செல்வர் காதலர்
என்னக் கதிர்முலைகள்
மானக் கனகம் தரும்மலர்க்
கண்கள்முத் தம்வளர்க்கும்
தேனக்க தார்மன்னன் என்னோ
இனிச்சென்று தேர்பொருளே.
கொளு
ஏழை யழுங்கத் தோழி சொல்லியது.
இதன் பொருள் : தாம் பிரியும் காலத்து அதற்கு நாயகி கவலைப் படுகையாலே நாயகருக்குத் தோழி சொன்னது.
தெளிவுரை : வான் அளவும் செல்ல உயர்ந்த சிறந்த மதிலால் சூழப்பட்ட பெரும்பற்றப்புலியூரில் எம்முடைய கூத்தனை வாழ்த்தாதாரைப் போலக் காடு உடைத்தாகிய அரிய வழியில் போகா நின்றார் நம்முடைய நாயகரென்று சொல்லும் அளவில் கதிர்த்த முலைகள் கொண்டாடப்பட்ட பொன்னைத் தராநின்றனமலரை யொத்த கண்கள் முத்துக்களை மிகாநின்றன. மதுமலர் மாலையினையுடைய மன்னனே ! இனிச்சென்று தேர்கின்ற பொருள் எப்பொருள்தான் !
5. திணை பெயர்த்து உரைத்தல்
திணை பெயர்த்து உரைத்தல் என்பது, யான் அவர்க்கு நினைவாற்றாமை கூறினேன். இனியவர் நினைவறியேன் என்ற தோழிக்கு, தாம் எனக்கு அருளைப் புலப்படுத்திய சொற்கள் அத்தனையும் மறந்தோ காவலர் தீவினையேற்குப் பொருள் தரத் தொடங்குகின்றது எனப் பிரிவு உன்னிப் பாலை நிலத்தனாகிய தலைமகனை மருத நிலத்தனாக்கித் தலைமகள் புலந்து கூறாநிற்றல்.
336. சுருள்தரு செஞ்சடை வெண்சுடர்
அம்பல வன்மலயத்(து)
இருள்தரு பூம்பொழில் இன்னுயிர்
போலக் கலந்திசைத்த
அருள்தரும் இன்சொற்கள் அத்தனை
யும்மறந்(து) அத்தம்சென்றோ
பொருள்தரக் கிற்கின் றதுவினை
யேற்குப் புரவலரே.
கொளு
துணைவன் பிரியத் துயருறு மனத்தொடு
திணை பெயர்த் திட்டுத் தேமொழி மொழிந்தது.
இதன் பொருள் : நாயகன் பிரிய வருத்தமுற்ற மனத்துடனே நிலம் பெயர்த்திட்டுத் தேனை ஒத்த வார்த்தையினையுடையாள் சொன்னது.
தெளிவுரை : தெரித்த சிவந்த திருச்சடையில் வெள்ளிய திருஇளம்பிறையையுடைய, திருஅம்பலநாதனுடைய பொதியின் மலையிடத்து இருளான பூம்பொழிலிடத்தே இனிய உயிர்போல நின்று சொன்ன அருளுண்டான இனிய சொற்கள் அத்தனையும் மறந்து அரிய வழியிலே சென்றோ பொருள் தரப் புகுகின்றது தனித்திருக்கப்பட்ட என்னை, புரக்கக் கடவர்.
என்றது திருஅம்பலநாதனிடமும் ஆயதிலே பொதியின் மலையும் ஆயதிலே பூம்பொழிலுமாய் இருக்கிற சத்திய பூமியிலே சொன்ன வார்த்தையை மறந்து பொருள் தர நினைக்கிறவர் புரக்கக் கடவரே அல்லவோ எனக் குறிப்பாலே இகழ்ந்தாள்; அன்றிக் கலந்தும் நினையாதவர் எனவே காமத்துக்கும் கூட்டல்லர் என்பது கருத்து. தமியேற்கு எனவே புரக்க வேண்டுமிடத்தும் புரவாதவர் என்பது கருத்து. தனி - தன் நாயகனைத் தன் அன்பர்க்குத் துணையாய்ப் பெறாத தனிமை.
6. பொருத்தம் அறிந்து உரைத்தல்
பொருத்தம் அறிந்து உரைத்தல் என்பது, திணை பெயர்த்துக் கூறின தலைமகளுக்கு, யாம் எல்லாம் சொன்னே மாயினும் காதலர்க்கு நினைவு பொருண் மேலேயாய் இருந்தது. இனி யாம் சொல்லுவ தென்னோ என, தோழி தலைமகனது பொருத்தம் அறிந்து தானதற்கு நொந்து கூறா நிற்றல்.
337. மூவர்நின்(று) ஏத்த முதலவன்
ஆடமுப் பத்துமும்மைத்
தேவர்சென்(று) ஏத்தும் சிவன்தில்லை
அம்பலம் சீர்வழுத்தாப்
பாவர்சென்(று) அல்கும் நரகம்
அனைய புனையழற்கான்
போவர்நம் காதலர் என்நாம்
உரைப்பது பூங்கொடியே.
கொளு
பொருள்வயின் பிரிவோன் பொருத்த நினைந்து
சுருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.
இதன் பொருள் :
பொருள்வயின் பிரியும் அருள்தரு பவனெனப்
பூங்கொடி மருளப் பாங்கி புகன்றது.
அருள் தரக் கடவர் பொருளிடத்துப் பிரியா நின்றாரென்று பூத்த கொடியினை ஒப்பாள் மயங்கின விடத்துத் தோழி சொன்னது.
தெளிவுரை : அரி, அயன், இந்திரனாகிய மூவரும் மாறாமல் புகழ, எல்லாப் பொருட்கும் காரணமாகியவன் ஆடா நிற்ப, முப்பத்து மும்மையாகிய எண்ணையுடைய தேவர்கள் சென்று தோத்திரம் செய்யும் சிவனுடைய பெரும்பற்றப்புலியூரில் திருவம்பலத்தைச் சிறப்பாய்ப் புகழாத பாவிகள், (இவர்களைப் பாவிகள் என்றது தேவர்களும் காரண தேவர்களும் வாழ்த்தும் மாத்திரை அல்லது தெரிக்கப்படாதே வருந்தின திருவம்பலம் வியாக்கிரபாத முனியாலே கட்புலனாகப் பெற்று வைத்தும் வாழ்த்தாமை இல்லாப் பாவிகள் என்றார்) அவர்க்கு என்றும் நிலையாக அவதரிக்கிற நாகத்தை ஒத்த அழல்கை செய்யாக் கடல் ஒத்த காட்டிலே நம்முடைய காதலர் போகா நின்றார். பூங்கொடியை ஒப்பாய், நாம் என்ன வார்த்தையைச் சொல்லுவோம்.
என்றது நம் காதலர் என்றும் அம்பலத்தை வாழ்த்துபவராய் வைத்தும் இக்காட்டில் போம் படியானால் நாம் சொல்வதற்கு ஒரு வார்த்தை இல்லை. நம்மேல் காதலராய் வைத்தும் இக்காட்டில் போகா நின்றது ஒரு காரியத்தைக் கருதியன்றே. அக்காரியம் முடிவு செய்யும் அளவு நாம் ஆற்றியிருத்தல் அன்றி, ஆம் ஆகாது என்னும் நினைவு நமக்கு என் செய்ய என்றபடி, காதலர் எனவே மீள்வர் என்பது கருத்து.
7. பிரிந்தமை கூறல்
பிரிந்தமை கூறல் என்பது, பொதுவகையான் உணர்த்தினேமாயின் இனித் தீயது பிற காணகிறோம் எனத் தலைமகன் உணர்த்தாது பிரியா நிற்ப, நின் முன்னின்று பிரிவு உணர்த்தினால் நீ மேனி ஒளி வாடுவையென உட்கொண்டு, பொருண் முடித்துக் கடிதின் மீள்வாராக நால்வகைத் தானையோடு நம் மன்னர் வினை வயின் சென்றார் எனத் தோழி, தலை மகளுக்குத் தலைமகன் பிரிந்தமை கூறா நிற்றல்.
338. தென்மாத் திசைவசை தீர்தரத்
தில்லைச்சிற் றம்பலத்துள்
என்மாத் தலைக்கழல் வைத்தெரி
யாடும் இறைதிகழும்
பொன்மாப் புரிசைப் பொழில்திருப்
பூவணம் அன்னபொன்னே
வன்மாக் களிற்றொடு சென்றனர்
இன்றுநம் மன்னவரே.
கொளு
எதிர் நின்று பிரியின், கதிர் நீ வாடுதற்(கு)
உணர்த்தா(து) அகன்றான் மணித்தேரோன் என்றது.
இதன் பொருள் : முன்னின்று சொல்லிப் பிரியில் நீ ஒளி வாடுவை என்று பயப்பட்டு மணியழுத்தப்பட்ட தேரினையுடையவன் சொல்லாதே பிரிந்தான் என்றது.
தெளிவுரை : மிக்க தென்திசையிலுள்ள குற்றம் நீங்கப் பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தில் என்னுடைய நாய்த் தலையிலே திருவடிகளை வைத்தும் எரியை ஏந்திக் கொண்டும் ஆடுகிற சுவாமி சிறந்து எழுந்தருளியிருந்த என்றது (தூயதல்லாத என்னுடைய நாய்த்தலையிலே திருவடிகளை வைத்தும் எல்லார்க்கும் தண்ணளி செய்கிற சீகரத்திலே நெருப்பை வைத்தும் இச்செய்கைகள் உடனே தூய தாயும் இருக்கிற திருச்சிற்றம்பலத்திலே ஆடினான் என்பது கருத்து) பொன்னாற் செய்த பெரிய மதிலாற் சூழப்பட்ட பொழிலாற் சிறந்த திருப்பூவணத்தை ஒத்த பொன்னே ! வலியும் பெருமையும் உடைய யானையுடனே இன்று நம் மன்னவர் போனார். திருப்பூவணம் - ஒரு சிவ தலம்.
என்ன, போர்க்குச் சிறந்தது யானையாதலால் கடுக வினை முடித்து மீள்வர் என்பது கருத்து.
8. இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல்
இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல் என்பது, பிரிவு கேட்ட தலைமகளது ஆற்றா முகங்கண்ட தோழி, இவ் உறுப்புக் குறையோடு எங்கும் திரிந்து இளைத்து, அருக்கயனது தேர் வருதல் யாண்டையது? இவள் ஆற்றுதல் யாண்டையது என, அவள் இரவுறு துயரத்திற்குத் தான் இரக்கமுற்றுக் கூறா நிற்றல். (சூரியன் தேர் குறைபாடு உடையது என்று கூறுகிறார்.)
339. ஆழியொன்(று) ஈர்அடி யும்இலன்
பாகன்முக் கண்தில்லையோன்
ஊழியொன் றாதன நான்கும்ஐம்
பூதமும் ஆறொடுங்கும்
ஏழியன் றாழ்கட லும்எண்
திசையும் திரிந்திளைத்து
வாழியன் றோஅருக் கன்பெருந்
தேர்வந்து வைகுவதே.
கொளு
அயில்தரு கண்ணியைப் பயில்தரும் இரவினுள்
தாங்குவ(து) அரிதெனப் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : வேலை ஒத்த கண்களை உடை யாளைப் பல இரவு செறிந்தால் ஒத்த இரவிடத்தே ஆற்றுவித்தல் அரிதென்று தோழி சொன்னது.
தெளிவுரை : தேருக்குக் காலும் ஒன்றே. பாகன் இரண்டு காலும் உடையவன் அல்லன். நாலு சாமங்களும் மூன்று திருநயனங்களையுடையனாகிய தில்லையோனாற் படைத்த ஊழியுடன் ஒவ்வாமல் விஞ்சியிருந்தன. பஞ்ச பூதங்களும் தோன்றி முறைமையின் சென்று ஒடுங்குகின்ற ஊழி என்று முன்னே கூட்டுக. ஏழாகச் செய்த ஆழ்ந்த கடல்களையும் எட்டுத் திக்கும் திரிந்து சுழன்று இவ்வழிச் செல்லாலே இணைத்து ஆதித்தனுடைய பெரிய தேர் வந்து அவதரிப்பது பின்பு அல்லவோ?
அவ்வளவும் இவளை எங்ஙனே ஆற்றுவிப்பேன் எனத் தன்னுள் அழிந்தது. தேர்க்கால் - தேர்ச்சக்கரம்.
9. இகழ்ச்சி நினைந்து அழிதல்
இகழ்ச்சி நினைந்து அழிதல் என்பது தோழி இரக்கமுற்றுக் கூறா நிற்ப, முற்காலத்து அவருலகின் மேல் வைத்து உணர்த்திய வழி நீட்டித்துப் பிரிவாராயினும் இப்பொழுதைக்கு இவர் பிரியாரென யான் அவர் பிரிவு இகழ்ந்திருந்தேன்; முன்னின்று பிரிவுணர்த்தின் இவளுயிர் தரியாளென்று அவர் உணர்த்துதலை இகழ்ந்து போனார். அத்தன்மையாகிய இரண்டு இகழ்ச்சியும் என்னை இத்தன்மைத்தாக அழிவியா நின்றன, எனத் தலைமகள் இகழ்ச்சி நினைந்து அழியா நிற்றல்.
340. பிரியார் எனஇகழ்ந் தேன்முன்னம்
யான்பின்னை எற்பிரியின்
தரியாள் எனஇகழ்ந் தார்மன்னர்
தாந்தக்கன் வேள்விமிக்க
எரியார் எழில்அழிக் கும்எழில்
அம்பலத் தோன்எவர்க்கும்
அரியான் அருளிலர் போலன்ன
என்னை அழிவித்தவே.
கொளு
உணர்த்தாது பிரிந்தாரென
மணித்தாழ் குழலி வாடியது.
இதன் பொருள் : அறிவியாது பிரிந்தார் என்று நீல மணியை ஒத்த நீண்ட கூந்தலினை உடையாள் மெலிந்தது.
தெளிவுரை : நம் மன்னர் முன்னாளில் நகையாடிப் பிரிவன் என்றபொழுது இவர் அருளிச் செய்கிறது நகையாட்டு அல்லது பிரியார் என நெகிழ்ந்திருந்தேன் யான். நாம் நெகிழ்ந்திருந்தது கண்டு, நம்மைப் பிரிந்தால் இவள் துன்பம் தரியாள் என்று நெகிழ்ந்து சொல்லாதே பிரிந்தார் நம் நாயகரும்; தக்கனுடைய வேள்வியிடத்து மிக்க தீயின் நிறைந்த அழகை அழிக்கிற அழகிய திருஅம்பலத்துள்ளவன் எல்லார்க்கும் அரியவன். அவனுடைய திருவருள் இல்லாதாரைப் போலே அவைகாண் என்னை அழிவித்தன.
அவர் பிரிந்தாலும் நான் துன்பமுறேன் என்று அவரும் தன்மையால் அளவில்லையாகப் பிரிவுள் நீட்டியரோ என்னக் கருதி வருந்தினேன் என்றது.
10. உருவு வெளிப்பட்டு நிற்றல்
உருவு வெளிப்பட்டு நிற்றல் என்பது, தலைமகள் இகழ்ச்சி நினைந்தழியா நிற்ப, தான் உணர்த்தாது பிரிந்தமை உட்கொண்டு பொருள் வலித்த நெஞ்சொடு செல்லா நின்ற தலைமகன், காணும் திசை தொறும் கயலையும் வில்லையும் சிவந்த கனியையும் முலையையும் கொண்டு ஒரு பூங்கொடி தோன்றா நின்றது எனத் தலைமகளது உருவை நினைந்து மேற்போக மாட்டாது மீளலுற்றுச் சுரத்திடை நில்லா நிற்றல்.
341. சேணும் திகழ்மதில் சிற்றம்
பலவன்தெண் ணீர்க்கடல்நஞ்(சு)
ஊணும் திருத்தும் ஒருவன்
திருத்தும் உலகின்னல்லாம்
காணும் திசைதொறும் கார்க்கய
லும்செங் கனியொடுபைம்
பூணும் புணர்முலை யுங்கொண்டு
தோன்றுமொர் பூங்கொடியே.
கொளு
பொருள்வயின் பிரிந்த ஒளியுறு வேலவன்
ஓங்கழற் கடத்துப் பூங்கொடியை நினைந்தது.
இதன் பொருள் : பொருளிடத்துப் பிரிந்த ஒளி வேலினையுடையவன் மிக்க அழலுடைத்தாகிய காட்டிலே பூத்த கொடியை ஒப்பாளை நினைந்தது.
தெளிவுரை : அதிதூரத்தை சிறந்து தோன்றும் மதில் சூழப்பட்ட திருச்சிற்றம்பலத்தே உள்ளவன், தெளிந்த நீரையுடைய கடலில் நஞ்சை ஊணாக அருந்தின ஒருவன் அவனால் திருந்தச் செய்யப்பட்ட உலகில் எவ்விடத்தும் பார்க்கும் திக்குகளில் எல்லாம் கண்ணாகிய கரிய கயலும் வாயாகிய சிவந்த தொண்டைப்பழமும் அழகிய ஆபரணங்களும் பூண்ட தம்மில் புணர்ந்த முலைகளும் கொண்டு தோன்றா நின்றது ஒரு வல்லிசாதி.
11. நெஞ்சொடு நோதல்
நெஞ்சொடு நோதல் என்பது, மீள நினைந்த தலைமகன் பின்னும் பொருள்மேல் செல்லா நின்ற உள்ளத்தனாய் நின்று மீள மாட்டாது இவ் விரண்டனுள் இப்பொழுது நீ ஏதுக்குப் போக முயல்கின்றாய் எனத் தன் நெஞ்சோடு நொந்து கூறா நிற்றல்.
342. பொன்னணி ஈட்டிய ஓட்டரும்
நெஞ்சம்இப் பொங்குவெங்கா
னின்னணி நிற்கும்இ(து) என்னென்ப
தேஇமை யோர்இறைஞ்சும்
மன்னணி தில்லை வளநகர்
அன்னஅன் னந்நடையாள்
மின்னணி நுண்ணிடைக் கோபொருட்
கோநீ விரைகின்றதே.
கொளு
வல்லழற் கடத்து மெல்லியலை நினைந்து
வெஞ்சுடர் வேலோன் நெஞ்சொடு நொந்தது.
இதன் பொருள் : வலிய அழல் உடைத்தாகிய காட்டிலே மெல்லிய இயல்பினை உடையாளை நினைந்து வெம்மையும் ஒளியும் உடைத்தாகிய வேலினை உடையவன் தன் நெஞ்சுடனே உசாவினது.
தெளிவுரை : பொன் திரளை ஈட்டுவதாக என்னை உன் நினைவில் ஓட்டின பெறுதற்கரிய நெஞ்சம் (பெறுதற்கு அருமை குறிப்பு மொழி) மிக்க வெய்ய காட்டிலே பொருந்தி நிற்கும் இது என்னென்று சொல்லப்படும் (நண்ணுகை - பொருந்துகை). தேவர்கள் வணங்குகிற மன்னனுடைய அழகிய பெரும்பற்றப்புலியூராகிய வளவிய நகரை ஒத்த அன்னத்தின் நடை போலும் நடையை உடையாளது மின்னையொத்த நுண்ணிடைக்கோ பொருள் தேடவோ நீ விரைகின்றது.
இடைக்காகில் மீண்டு போகவேண்டும்; பொருட்கு ஆயின் மேலே போக வேண்டும். இரண்டும் செய்யாது காட்டிலே நிற்கின்றது என் பெற வேண்டி?
நண்ணி என்பது இடைக் குறைந்து நின்றது. வெங்கானின் னணி என்பதில் னகர ஒற்றும், அன்னந் நடையாள் என்பதில் நகர ஒற்றும் விரித்தல்.
12. நெஞ்சொடு புலத்தல்
நெஞ்சொடு புலத்தல் என்பது நெஞ்சொடு நொந்து கூறா நின்றவன், பேயிடத்தும் செய்தல் அரிதாம் பிரிவை இவள் இடத்தே எளிதாக்குவித்துச் சேய்த்தாகிய இவ்விடத்துப் போந்த நினது சிக்கெனவுக்கு அஞ்சத் தக்கது எனப் பின்னும் அந்நெஞ்சொடு புலந்து கூறா நிற்றல்.
343. நாய்வயின் உள்ள குணமும்இல்
லேனைநற் றொண்டுகொண்ட
தீவயின் மேனியன் சிற்றம்
பலமன்ன சின்மொழியைப்
பேய்வயி னும்அரி தாகும்
பிரி(வு)எளி தாக்குவித்துச்
சேய்வயின் போந்தநெஞ் சேஅஞ்சத்
தக்க(து)உன் சிக்கெனவே.
கொளு
அழறகடத்(து) அழுக்க மிக்கு
நிழற்கதிர் வேலோன் நீடு வாடியது.
பாடபேதம் :
நிழற்கதிர் வேலவன் நெஞ்சொடு நொந்தது.
இதன் பொருள் : நிழலைச் செய்கிற ஒளியினை உடைய வேலவன் நெஞ்சுடனே விசாரித்தது.
தெளிவுரை : நாயிடத்தும் உள்ள குணமும் இல்லாத என்னை நல்ல தொண்டனாகக் கொண்ட தீயிடத்து உள்ள நிறத்தை ஒத்த திருநிறத்தை உடையவன் அவனுடைய சிற்றம்பலத்தை ஒத்து மெல்லிய வார்த்தையினை உடையாளிடத்துப் பேயிடத்தும் பயின்றார் செய்தற்கரிய பிரிவை எளிதாகப் பண்ணித் தூரத்திடத்தே போன நெஞ்சமே ! உன்னுடைய இரக்கமில்லாமை பயப்படத் தக்கதொன்றாய் வந்தது.
13. நெஞ்சொடு மறுத்தல்
நெஞ்சொடு மறுத்தல் என்பது, நெஞ்சொடு புலந்து கூறிப் பின்னும் பொருள் மேல் செல்லா நின்ற உள்ளத்தோடு தலைமகளை நினைந்து, இத்தன்மைத்தாகிய பொன்னை விட்டு வேறு பொன் தேடியோ எம்மை வாழச் செய்வது? இதற்கு யாம் உடம்படேம். நாமே நடக்க எனச் செலவுடம்படாது பொருள் வலித்த நெஞ்சொடு மறுத்துக் கூறா நிற்றல்.
344. தீமே வியநிருத் தன்திருச்
சிற்றம் பலம்அனைய
பூமே வியபொன்னை விட்டுப்பொன்
தேடியிப் பொங்குவெங்கான்
நாமே நடக்க ஒழிந்தனம்
யாம்நெஞ்சம் வஞ்சியன்ன
வாமே கலையைவிட் டோபொருள்
தேர்ந்தெம்மை வாழ்விப்பதே.
கொளு
நீணெறி சென்ற நாறிணர்த் தாரோன்
சேணெறி யஞ்சி மீணெறி சென்றது.
இதன் பொருள் : நெடிய வழியிலே போன நாற்றத்தாற் சிறந்த கொத்து மாலையை உடையவன் தூரமான வழிச் செலவுக்கு அஞ்சி மீளும் உபாயத்தை அடைந்தது.
தெளிவுரை : தீயிலே பொருந்திய கூத்தை உடையவனது திருச்சிற்றம்பலத்து
எல்லையிலே நிலைபெற்ற பூவிலே பொருந்தின பொன்னாகியவளை விட்டு வேறு பொன் தேடி மிக்க வெய்ய காட்டிலே நாமே நடப்போமாக, நாங்கள் ஒழிந்தோம். நெஞ்சமே ! வஞ்சிக் கொடியை ஒத்த அழகிய மேகலையை உடையாளை விட்டோ, பொருள் தேடி எம்மை வாழச் செய்வது?
14. நாள் எண்ணி வருந்தல்
நாள் எண்ணி வருந்தல் என்பது, தலைமகனது வரவு நீட்ட நினைந்து வருந்தா நின்ற தலைமகளது வருத்தங் கண்ட தோழி, இவளை நோய் பொருந்தச் சென்றவர் சென்ற நாளை எண்ணும் தன்மையால் பலகால் இடுதலின் நிலனும் குழிந்து விரலும் தேய்ந்தது என, அவன் சென்ற நாள் எண்ணி வருந்தா நிற்றல்.
345. தெண்ணீர் அணிசிவன் சிற்றம்
பலம்சிந்தி யாதவரின்
பண்ணீர் மொழியிவ ளைப்பையுள்
எய்தப் பனித்தடங்கண்
உண்ணீர் உகஒளி வாடிட
நீடுசென் றார்சென்றநாள்
எண்ணீர் மையின்நில னுங்குழி
யும்விரல் இட்டறவே.
கொளு
சென்றவர் திறத்து நின்றுநணி வாடும்
சூழிருங் கூந்தற்குத் தோழிநனி வாடியது.
இதன் பொருள் : பிரிந்தவர் திறத்து மாறாமல் மிகவும் வாடச் சுருண்டு நிறைந்த கூந்தலினையுடைய தோழி மிகவும் வாடியது என்றது, நாயகி வாட்டங்கண்டு ஆற்றுவிக்க ஒண்ணாமையாலே தோழியும் அதற்கு வாடியது.
தெளிவுரை : தெளிந்த நீராகிய கங்கையைச் சூடிய சிவன், அவனுடைய திருச்சிற்றம்பலத்தினை நினையாதாரைப் போல் வருந்தப் பண்ணின தன்மையவாகிய வார்த்தையினை உடைய இவளைக் துன்பம் பொருந்தக் குளிர்ந்த பெரிய கண்களுள் உண்டாகிய நீரைச் சிந்த மேனியொளியும் வாடிட நீட்டித்தவர் போன நாளை எண்ணும் இயல்பாலே குற்றப்பட்டு நிலனும் குழியும் இட்டு விரலும் தேய நிலனும் குழியும். எனவே தன் இன்னாமை கண்டு நாயகி ஆற்றுவது பயன்.
15. ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல்
ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல் என்பது, பொருள் முற்றி மீளல் உறாநின்ற தலைமகன் மாலைக் காலத்து நாகொடு வாராநின்ற ஏறு வரவு கண்டு, இச்சிறந்த செக்கர் மாலை அவள் பொறுக்கும் அளவன்று என இரங்கிக் கூறா நிற்றல்.
346. சுற்றம் பலம்இன்மை காட்டித்தன்
தொல்கழல் தந்ததொல்லோன்
சிற்றம் பலமனை யாள்பர
மன்றுதிண் கோட்டின்வண்ணப்
புற்றங்(கு) உதர்ந்துநல் நாகொடும்
பொன்னார் மணிபுலம்பக்
கொற்றம் மருவுகொல் ஏறுசெல்
லாநின்ற கூர்ஞ்செக்கரே.
கொளு
நீடிய பொன்னின் நெஞ்சம் நெகிழ்ந்து
வாடியவன் வரவுற்றது.
இதன் பொருள் : நீடின பொன் மேலே நெஞ்சு சென்றமை ஒழிந்து வாட்டமுற்றவன் வந்தது.
தெளிவுரை : பலமுள்ளது போலத் தோன்றும் சுற்றத்தார் பலம் இல்லாமையைத் தரிசிப்பது என்னுடைய பிறவித் துன்பம் தீர்த்தற்குப் பழையதாய் வருகிற சீபாதங்களைத் தந்தவன், அவனுடைய திருச்சிற்றம்பலத்தை ஒப்பாள் அளவிலேயன்று. சிக்கென்ற கொம்பால் அழகிய புற்றை இடந்து பொன்னார் மணி ஒலிப்ப வெற்றி பொருந்தின கொலைத் தொழிலால் சிறந்த ஏறு, நல்ல நாகுடனே அவனிருந்த ஊரிடத்தே செல்லாநின்ற செக்கரை உடைத்தாகிய மாலையம் பொழுது.
கூர்ச்செக்கர் - மிகா நின்ற செக்கர் வானம்; இஃது ஆகுபெயராய் அதனையுடைய மாலைக் காலத்தின்மேல் நின்றது. பாகன் தேரைத் திருப்பி ஊர் நோக்கிச் செலுத்துதல் இதன் பயன் என்க.
16. பருவங் கண்டு இரங்கல்
பருவங் கண்டு இரங்கல் என்பது, ஏறு வரவு கண்டு இரக்கமுற்று வாரா நின்ற தலைமகன், இம் முகில்கள் ஒன்றோடு ஒன்று தம்மில் விரவுதலால் பொழில்கள்தோறும் மயில்கள் திரண்டு ஆடாநின்ற இக் கார்காலத்து அவள் என்னை நினைந்து ஆற்றாளாம் கொல்லோ என அப் பருவம் கண்டு இரங்கா நிற்றல்.
347. கண்ணுழை யாதுவிண் மேகம்
கலந்து கணமயில்தொக்(கு)
எண்ணுழை யாத்தழை கோலிநின்(று)
ஆலும் இனமலர்வாய்
மண்ணுழை யாவும் அறிதில்லை
மன்னன(து) இன்னருள்போல்
பண்ணுழை யாமொழி யாள்என்ன
ளாங்கொல்மன் பாவியற்கே.
கொளு
மன்னிய பருவம் முன்னிய செலவின்
இன்னல் எய்தி மன்னன் ஏகியது.
இதன் பொருள் : பருவமேற் கொண்டு செல்லா நின்ற நிகழ்ச்சியிலே வருத்தமானதுற்று நாயகன் மீண்டது.
தெளிவுரை : மேகங்கள் விரவுதலால் கண் நுழைவதில்லை ஆகாயமானது. திரண்டு மயில்கள் பெடையும் சேவலுமாகச் செறிந்திருந்து, எண் சென்று புகாமல் இருக்க மற்ற பீலியை விரித்து நின்று ஆலியா நின்றன. திரண்ட மலரிடத்தே பூமியிடத்து உள்ளாராய எல்லாராலும் அறியப்படுகின்ற தில்லையில் உளனாகிய மன்னனது அவனுடைய இனிய அருள் போலத் திருந்தப்பட்ட உழை நரம்பை யொத்த வார்த்தையினை யுடையாள் எத்தன்மையாள் அவள் தான். பாவத்தைச் செய்த என் காரணமாக?
17. முகிலொடு கூறல்
முகிலொடு கூறல் என்பது பருவம் கண்டு இரங்கி விரைவொடு வாராநின்ற தலைமகன் இவ்விடத்தெல்லாம் முற்பட்டாய் ஆயினும் முதுபெண்டீர் திரண்டு அவளின் இன்னாமையை நீக்கற்கு இல்லுறை கடவுட்குப் பூசனை செய்யா நிற்கும் நீள் நகரத்திற்கு என்னின் முற்படாது ஒழிவாயாக என, முந்துற்றுச் செல்லா நின்ற முகிலொடு கூறாநிற்றல்.
348. அற்படு காட்டில்நின்(று) ஆடிசிற்
றம்பலத் தான்மிடற்றின்
முற்படு நீள்முகில் என்னின்முன்
னேல்முது வோர்குழுமி
விற்படு வாணுத லாள்செல்லல்
தீர்ப்பான் விரைமலர்தூய்
நெற்படு வான்பலி செய்(து)அய
ராநிற்கும் நீள்நகர்க்கே.
கொளு
எனைப்பல துயரமோ(டு) ஏகா நின்றவன்
துனைக்கார் அதற்குத் துணிந்துசொல் லியது.
இதன் பொருள் : எத்தனை யேனும் பல துன்பத்தினோடும் போகா நின்றவன் விரைந்து செல்லுகின்ற மேகத்திற்கு அறுதியிட்டுச் சொன்னது.
தெளிவுரை : இருளுண்டான சுடுகாட்டில் நின்றாடுகின்ற திருச்சிற்றம்பலநாதன், அவனுடைய மிடற்றை ஒத்து விரைந்து செல்லா நின்ற நீண்ட முகிலே ! முதிய பெண்டுகள் திரண்டு வில்லையொத்த ஒளி சிறந்த நெற்றியினை உடையாளது துயரத்தை ஆற்றுவ தாக நறுநாற்றம் உடைத்தாகிய பூக்களைத் தூவி நெல்லைப் பரப்பப்பட்ட வாலிய பலியை இட்டு இல்லுறை தெய்வத்தைக் கொண்டாட நிற்கிற நீண்ட நகரளவில் சென்றால் எனக்கு முற்படாதே ஒழிவாயாக வேண்டும்.
18. தேர் வரவு கூறல்
தேர் வரவு கூறல் என்பது பொருள்வயின் பிரிந்த தலைமகன் முகிலொடு வந்து புகாநிற்ப, இம்முகில் இவளது ஆவியை வெகுளாநின்ற காலத்து ஒரு தேர் வந்து காத்தமையான் இனி வரக் கடவதனை வெல்லுமாறில்லை எனத் தோழி தலைமகளுக்குத் தேர் வரவு கூறாநிற்றல்.
349. பாவியை வெல்லும் பரிசில்லை
யேமுகில் பாவையஞ்சீர்
ஆவியை வெல்லக் கறுக்கின்ற
போழ்தத்தின் அம்பலத்துக்
காவியை வெல்லும் மிடற்றோன்
அருளிற் கதுமெனப்போய்
மேவிய மாநிதி யோ(டு)அன்பர்
தேர்வந்து மேவினதே.
கொளு
வேந்தன் பொருளோடு விரும்பி வருமென
ஏந்திழைப் பாங்கி இனி(து)இயம் பியது.
இதன் பொருள் : நாயகன் பொருள் முடித்துக் கொண்டு விருப்பத் துடனே வாரா நின்றான் என்று மிக்க ஆபரணங்களையுடைய தோழி இனிய வார்த்தையைச் சொன்னது.
தெளிவுரை : மேகமானது நாயகியுடைய அழகிய சீர்மைப்பாட்டினை உடைய உயிரைச் சாய்பிப்பதாகக் கறுக்கின்ற அளவில் (கறுத்தல்  நிறமும் வெகுளியும் சிலேடை) திருவம்பலத்தே உளனாகிய நீர்ப்பூக்களைத் தோற்பிக்கிற மிடற்றை உடையவனது திருவருள் வாய்தாற்போலத் தேடப்பட்ட பொருளோடே கடிதாக அன்பருடைய தேர் வந்து பொருந்திற்று; ஆதலால் வரக்கடவே அனுபோகத்தை மாற்றும் உபாயமில்லை.
19. இளையர் எதிர்கோடல்
இளையர் எதிர்கோடல் என்பது, தோழி தலை மகட்குத் தேர் வரவு கூறா நிற்ப, இந்நிலைமைக்கண், இவள் ஆவி செல்வதற்கு முன்னே, சூழுந் தொகுநிதியோடு அன்பர் தேர் வந்து தோன்றிற்று. இனி ஊழின் வலியது வேறு ஒன்றும் இல்லை எனப் பொருள் முடித்து வாராநின்ற தலைமகனைச் சென்று இளையர் எதிர் கொள்ளா நிற்றல்.
350. யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
றம்பலத் தான்அமைத்த
ஊழின் வலியதொன்(று) என்னை
ஒளிமே கலையுகளும்
வீழும் வரிவளை மெல்லியல்
ஆவிசெல் லாதமுன்னே
சூழும் தொகுநிதி யோ(டு)அன்பர்
தேர்வந்து தோன்றியதே.
கொளு
செறிக ழலவன் திருநகர் புகுதர
எறிவேல் இளைஞர் எதிர்கொண்டது.
இதன் பொருள் : செறிக்கப்பட்ட வீரக் கழலினை உடையவன் அழகிய நகரியிலே வந்து புகுத ஏறியும் வேலினை உடைய இளையவீரர் எதிரேற்றுக் கொண்டது.
தெளிவுரை : ஒளியுடைத்தாகிய மேகலாபாரம் கழலுகிற மாத்திரையன்றிக் குதித்து வீழா நின்றது. வளைகளும் கழன்று வீழா நின்றன. மெல்லிய இயல்பினையுடையாளுடைய உயிர் போவதற்கு முன்னே தேடப்பட்டு எதிர்கொண்ட பொருளோடே இவளாற் காதலிக்கப்பட்ட நம்முடைய அரசருடைய தேர் வந்து தோன்றிற்று. ஆதலால், யாழ் ஓசையை ஒத்த வார்த்தையினையுடைய தேவியைப் பாகத்தே உடையவன், திருச்சிற்றம்பலத்தே உள்ளவன். அவனாற் செய்யப்பட்ட விதியினும் வலியதொன்று ஏதுதான்?
20. உள் மகிழ்ந்து உரைத்தல்
உள் மகிழ்ந்து உரைத்தல் என்பது, பொருள் முடித்து இளைஞர் எதிர் கொள்ள வந்து புகுந்த தலைமகன் தலைமகளுடன் பள்ளியிடத்தனாயிருந்து இம்மானைப் பிரிந்து பொருள் தேட யான் வெய்ய சுரஞ் சென்ற துன்பம் எல்லாம் இவள் கொங்கைகள் என் உறுப்புக்களிடை மூழ்க இப்பூவணை மேலணையாமுன்னம் துவளவுற்றது எனத் தன்னுள்ளே மகிழ்ந்து கூறாநிற்றல்.
351. மயின்மன்னு சாயல்இம் மானைப்
பிரிந்து பொருள்வளர்ப்பான்
வெயின்மன்னு வெஞ்சுரம் சென்றதெல்
லாம்விடை யோன்புலியூர்க்
குயில்மன்னு சொல்லிமென் கொங்கைஎன்
அங்கத் திடைகுளிப்பத்
துயில்மன்னு பூவணை மேலணை
யாமுன் துவள்உற்றதே.
கொளு
பெருநிதி யோடு திருமனை புகுந்தவன்
வளமனைக் கிழத்தியோ(டு) உள்மகிழ்ந்(து) உரைத்தது.
இதன் பொருள் : பெரும் பொருளோடு அழகிய நகரியிலே புகுந்தவன் வளவிய மனைக்கிழத்தியோடே மனம் விரும்பிச் சொன்னது.
தெளிவுரை : மயிலை ஒத்த சாயலையுடைய நோக்கத்தாள் இந்த மானை ஒப்பாளை விட்டுப் பொருள் தேடுவதாக ஆதித்த கிரணம் நிலைபெற்ற வெய்ய காட்டிலே போன வருத்தம் எல்லாம் இடபத்தை உடையவனது பெரும்பற்றப்புலியூர் இடத்துள்ள குயிலை ஒத்த வார்த்தையினை உடையாள் மெல்லிய முலைகள் என்னுடைய மார்பிலே மூழ்க உறக்கம் நிலைபெறுதற் கிடமாகிய படுக்கையிலே அணைவதற்கு முன்னே பொடியாயிற்று.
பொருள்வயின் பிரிவு முற்றிற்று.

இருபத்தைந்தாம் அதிகாரம்
25. பரத்தையிற் பிரிவு
பரத்தையிற் பிரிவு என்பது தலைவன், தலைவியை வரைந்து கொண்டு இல்லறம் நடத்துங்கால் காவல் முதலிய அறம் நிமித்தமாகவும், பகைவரை வென்று திறைகோடல் முதலிய பொருள் நிமித்தமாகவும் பிரிதல் போல, ஆடல், பாடல், கூத்து முதலிய பொழுது போக்கு நிமித்தமாகவும் பிரிவான் ஆகலின் அவ்விடத்து ஆடல் முதலியவற்றைச் செய்யும் மகளிர், தம்மையும் அவன் உடையன் ஆதல்பற்றி அவன்மேல் உள்ளம் சென்றவழி அவ்ஆடல் முதலியவற்றானே அவனை அவர் தம் மாட்டுத் தாழ்விப்ப, அவரோடு தனக்கு உள்ள உரிமைபற்றி அவன் அவர்கண்ணே தங்குதல்.
அவ்வாறன்றித் தலைமகளினும் அவரை உயர்ந்தாராகக் கருதி யாதல், அவர் தன்னையே யன்றிப் பொருள் காரணமாகப் பலரையும் நயப்பாராகத் தான் நிறையின்றித் தன் அறமும் பொருளும் கெட அவர்கண்ணே நெஞ்சம் தாழ்ந்தாதல் பிரியாமையின், இது தலைவனது பெருமையோடு மாறுகொள்ளாது என்க.
இதனால் இப்பரத்தையர் குலத்தால் பொது மகளிரேயாயினும் சிலப்பதிகாரத்துச் சித்திராபதி போலாது மாதவிபோல ஒழுக்கத்தால் வரைவுடைய ராகலின் தலைவன் இவர்மாட்டு தங்குதல் வரைவின் மகளிரிடத்துத் தங்குதல் ஆகாமை அறிந்து கொள்க.
எல்லாச் செல்வமும் உடையார்க்கு ஆடல் மகளிரை உடையராயிருத்தலும் இயல்பென்னும் கருத்தால் ஏனைப் பிரிவுகளோடு இப்பரத்தையிற் பிரிவும் உலகியல் நூலுள் வேண்டப்பட்டது. இதனை அடிகள் நாற்பத்தொன்பது துறைகளாக வகுத்து அருளிச் செய்வர். நூற்பாவிலுள்ள 498 துறைகளாவன:
1. கண்டவர் கூறல்
2. பொறையுவந் துரைத்தல்
3. பொதுப்படக்கூறி வாடியழுங்கல்
4. கனவிழந்து உரைத்தல்
5. விளக்கொடு வெறுத்தல்
6. வாரம் பகர்ந்து வாயின் மறுத்துரைத்தல்
7. பள்ளியிடத்து ஊடல்
8. செவ்வணி கண்ட இல்லோற் கூறல்
9. அயலறி வுரைத்தவள் அழுக்கம் எய்தல்
10. செவ்வணி கண்ட வாயிலவர் கூறல்
11. மனைபுகல் கண்ட வாயிலவர் கூறல்
12. முகமலர்ச்சி கூறல்
13. கால நிகழ்வுரைத்தல்
14. எய்தல் எடுத்துரைத்தல்
15. கலவி கருதிப் புலத்தல்
16. குறிப்பறிந்து புலந்தமை கூறல்
17. வாயிலவர் வாழ்த்தல்
18. புனல் வர வுரைத்தல்
19. தேர் வரவு கண்டு மகிழ்ந்து கூறல்
20. புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல்
21. தன்னை வியந்துரைத்தல்
22. நகைத்துரைத்தல்
23. நாணுதல் கண்டு மிகுந்துரைத்தல்
24. பாணன் வரவுரைத்தல்
25. தோழி இயற்பழித்தல்
26. உழையர் இயற்பழித்தல்
27. இயற்பட மொழிதல்
28. நினைந்து வியந்துரைத்தல்
29. வாயில்பெறாது மகன் திறம் நினைதல்
30. வாயிற்கண் நின்று தோழிக்கு உரைத்தல்
31. வாயில் வேண்டத் தோழி கூறல்
32. தோழி வாயில் வேண்டல்
33. மனையவர் மகிழ்தல்
34. வாயில் மறுத்துரைத்தல்
35. பாணனொடு வெகுளுதல்
36. பாணன் புலந்துரைத்தல்
37. விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல்
38. ஊடல் தணிவித்தல்
39. அணைந்தவழி ஊடல்
40. புனலாட்டுவித்தமை கூறித் புலத்தல்
41. கலவி கருதிப் புலத்தல்
42. மிகுத்துரைத்து ஊடல்
43. ஊடல் நீட வாடியுரைத்தல்
44. துனி யொழிந்து உரைத்தல்
45. புதல்வன் மேல் வைத்துப் புலவி தீர்தல்
46. கலவி யிடத்து ஊடல்
47. முன்னிகழ்வு உரைத்து ஊடல் தீர்த்தல்
48. பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல்
49. ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல்.
என்பனவாம்.
பேரின்பக்கிளவி
பரத்தையிற் பிரிதல் எண்ணா(று) ஒன்றும்
உரைத்த சிவானந்தம் உற்றது வாம்பின்
எப்பதம் எவ்வுயிர் எவ்வுல(கு) யாவும்
அப்படி யேகண்(டு) அறிவு பூரணம்
ஆகி நின்(று) அளவில் அனுபவம் பெற்று
நின்ற தன்மை நிலைமை உரைத்தது.
1. கண்டவர் கூறல்
கண்டவர் கூறல் என்பது, தலைமகன் பரத்தையர் சேரிக்கண் செல்லாநிற்ப, அப்பரத்தையர் அவனை ஒருங்கு எதிர்கொண்டு சுற்றும் பற்றிப் போர் செய்யா நின்றமையின் இஃதிலன், காதலி மாட்டு என்னாம் என அவ்விடத்துக் கண்டவர் தம்முள் கூறா நிற்றல்.
352. உடுத்தணி வாளர வன்தில்லை
யூரன் வரஒருங்கே
எடுத்தணி கையே றினவளை
ஆர்ப்ப இளமயிலேர்
கடுத்தணி காமர் கரும்புரு
வச்சிலை கண்மலர்அம்(பு)
அடுத்தணி வாள்இளை யோர்சுற்றும்
பற்றினர் மாதிரமே.
கொளு
உரைத்தகு வேலோன் பரத்தையிற் பிரியத்
திண்தேர் வீதியில் கண்டோர் உரைத்தது.
இதன் பொருள் : வலி கருதிப் பெற்ற வேலினை உடையவன் பரத்தை மனையில் நீங்கச் சிக்கென்ற தேர் உடைத்தாகிய தெருவில் கண்டவர்கள் சொன்னது.
தெளிவுரை : கச்சாகவும் உடுத்து அணியாகவும் அணிந்த ஒளி சிறந்த பாம்பை யுடையவன், அவனுடைய தில்லையில் தலைவன் அவன் வரத் தெரிந்து அணியப்பட்ட கையிற் செறிந்த வளைகள் ஆர்ப்ப, இளமயிலின் அழகை ஒத்து மிக்க அழகினையுடைய கரிய புருவமாகிய சிலையில் கண்மலராகிய அம்புகளைத் தொடுத்து ஆபரணங்களில் உண்டாகிய ஒளியினையுடைய இளமைப்பருவத்து மகளிர் திக்குகள்தோறும் சூழ நின்று பிடித்துக் கொண்டார்கள்.
2. பொறை உவந்து உரைத்தல்
பொறை உவந்து உரைத்தல் என்பது தலை மகனைப் பரத்தையர் எதிர் கொண்டமை கேட்ட தலைமகள் நெஞ்சுடைந்து புறத்து வெளிப்படாமல் பொறுத்தமை கண்ட தோழி, யான் இவ்வாறாகவும் கலங்காது நின்ற பெரும் பொறையாட்டியை யான் இன்று பேசுவன என் என்று அவளை உவந்து கூறா நிற்றல்.
353. சுரும்புறு கொன்றையன் தொல்புலி
யூர்சுருங் கும்மருங்குல்
பெரும்பொறை யாட்டியை யென்இன்று
பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யூரன் கலந்தகன்
றானென்று கண்மணியும்
அரும்பொறை யாகும்என் ஆலியும்
தேய்வுற்(று) அழிகின்றதே.
கொளு
கள்ளவிழ்க் கோதையைக் காதல் தோழி
உள்ளவிழ் பொறைகண்(டு) உவந்து ரைத்தது.
இதன் பொருள் : மது விரிகிற மாலையினை உடையாளை உயிர்த்தோழி நாயகன் வருமளவில் நெஞ்சு நெகிழ்கிற பொறையுடைமையைக் கண்டு விரும்பிச் சொன்னது.
தெளிவுரை : மிக்க ஆரவாரம் உடைத்தாகிய நீர் சூழப்பட்ட கரும்பு தங்கும் ஊரை உடையவன் கலந்து வைத்து நீங்கினான் என்று வண்டுகள் அமரப்பட்ட கொன்றை மாலையினை உடையவனது பழைய பெரும்பற்றப்புலியூரில் சிறிய இடையினை உடையவளாய்ப் பெரிய பொறையையும் உடையவளை இப்போது என் சொல்லுவேன் !
நாயகன் வாயில் வேண்டத் தோழி, நாயகி நெஞ்சு நெகிழ்ந்தமை கண்டு, எம் போல்வார் அன்றோ இவை இற்றுக்கு வெகுள்வார்கள்; இவள் பெருமனை கிழத்தி யாகையால் நீ செய்த கொடுமை கண்டு நினையாது நெஞ்சு நெகிழ்ந்தாள் என்று வாயில் நேர்ந்தது.
3. பொதுப்படக் கூறி வாடி யழுங்கல்
பொதுப்படக் கூறி வாடி யழுங்கல் என்பது, பொறை உவந்துரைத்த தோழிக்கு முன்னிலைப் புறமொழியாக, தமது நலங்கவரக் கொடுத்து வேறு துணையின்மையின் தமது அணையையே தமக்குத் துணையாகக் கொண்டு கிடந்து என்னைப் போல உயிர் தேய்வார் இனி யாவரோ எனப் பொதுப்படப் பரத்தையர்க்கு இரங்குவாள் போன்று தலைமகனது கொடுமை நினைந்து வாடா நிற்றல்.
354. அப்புற்ற சென்னியன் தில்லை
உறாரின் அவர்உறுநோய்
ஒப்புற்(று) எழில்நலம் ஊரன்
கவரஉள் ளும்புறம்பும்
வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம்
மெல்லணை யேதுணையாச்
செப்புற்ற கொங்கையர் யாவர்கொல்
ஆருயிர் தேய்பவரே.
கொளு
பொற்றிகழ் அரவன் மற்றிகழ் தில்லைப்
பிரிந்த ஊரனோ(டு) இருந்துவா டியது.
இதன் பொருள் : அழகிய சிறந்த பாம்பை உடையவன் வளப்பம் சிறந்த பெரும்பற்றப்புலியூரில் பிரிந்த நாயகன் வர அவனுடனே ஒரு சயனத்திருந்து நாயகி வாடியது.
தெளிவுரை : கங்காசலம் பொருந்தின திருமுடியை உடையவனது பெரும்பற்றப்புலியூரைச் சேராதாரைப் போல் இரக்கமின்றி தோற்றப் பொலிவையும் அழகையும் நாயகன் கொள்ளை கொள்ள அத் தில்லையைச் சேராதார் உறுநோய் போல உள்ளும் புறம்பும் வெதும்பி வெய்தாகப் பெருமூச்சுவிட்டுத் தம்முடைய மெல்லிய அணையே துணையாகக் கொண்டு பொற் செப்பை ஒத்த முலையினை உடையவர்கள் பெறுதற்கரிய உயிர் தேயா நின்றார் யாவர் காண்?
எனவே அவர் அது செய்யார்; அன்புடையராதலின் இறந்து படுவார்கள். நாமே இங்ஙனம் வருந்தியிருந்தோம் எனக் குறிப்பால் இகழ்ந்தாள்.
4. கன விழந்து உரைத்தல்
கன விழந்து உரைத்தல் என்பது, தலைமகனது கொடுமை நினைந்து கிடந்து வாடா நின்ற தலைமகள், கனவு இடை வந்து அவன் மார்புதரத் தான் அதனை நனவென்று மயங்கிப் புலந்து அவனோடு புணராது இழந்தமையைத் தோழிக்குச் சொல்லா நிற்றல்.
355. தேவா சுரர்இறைஞ் சும்கழ
லோன்தில்லை சேரலர்போல்
ஆவாகனவும் இழந்தேன்
நனவென்(று) அமளியின்மேல்
பூவார் அகலம்வந்(து) ஊரன்
தரப்புலம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன்விழித்
தேன்அரும் பாவியனே.
கொளு
சினவில் தடக்கைத் தீம்புனல் ஊரனைக்
கனவில் கண்ட காரிகை உரைத்தது.
இதன் பொருள் : சினத்த வில்லைப் பெரிய கையிலே உடைய இனிய புனலூரனைக் கனவிலே கண்ட நாயகி சொன்னது.
தெளிவுரை : சயனத்திடத்து மாலை நிறைந்த மார்பை நம் நாயகர் வந்து தரப் பரத்தையர்பால் என்று வெறுப்பாய், நலம் பரந்த சித்திரத்தை ஒப்பாய் ! தழுவிக் கொள்ளப் பெற்றிலேன் காண்; அதற்கு மேலே அரிய பாவத்தைச் செய்த நான் விழித்தேன். ஆதலால் தேவரும் அசுரரும் வணங்கும் திருவடிகளை உடையவனது பெரும்பற்றப்புலியூரைச் சேராதாரைப் போல, ஐயோ, ஐயோ, உண்மையென்று கருதிக் கனவையும் இழந்தேன்.
5. விளக்கொடு வெறுத்தல்
விளக்கொடு வெறுத்தல் என்பது, கனவு இழந்தமை கூறி வருந்தா நின்ற தலைமகள், நீ யாயினும் கலந்தவர்க்குப் பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தம் அன்றென்று இலையே என விளக்கொடு வெறுத்துக் கூறா நிற்றல்.
356. செய்ம்முக நீல மலர்தில்லைச்
சிற்றம் பலத்தரற்குக்
கைம்முகங் கூம்பக் கழல்பணி
யாரிற் கலந்தவர்க்குப்
பொய்ம்முகங் காட்டிக் கரத்தல்
பொருத்தம்அன்(று) என்றில்லையே
நெய்ம்முக மாந்தி இருள்முகங்
கீழும் நெடுஞ்சுடரே.
கொளு
பஞ்சணைத் துயின்ற பஞ்சின் மெல்லடி
அன்பனோ(டு) அழுங்கிச் செஞ்சுடர்க்(கு) உரைத்தது.
இதன் பொருள் : பஞ்சணையிலே கிடந்த பஞ்சை யொத்த மெல்லிய அடியினையுடையாள் நாயகன் திறத்து வருந்திச் சிவந்த அழகிய விளக்குடனே சொன்னது.
தெளிவுரை : செய் இடங்கள்தோறும் நீலப் பூக்கள் மலருகிற பெரும்பற்றப்புலியூரில் திருச்சிற்றம்பலத்துத் தலைவற்குக் கையிடத்தைக் குவித்து அவன் திருவடியை வணங்காதாரைப் போல எங்களுடன் கலந்தவர்க்குப் பொய் இடத்தைத் தோற்றுவித்துப் பிரியுமது பொருந்துவது ஒன்றன்று என்று சொல்லிற்றில்லையே நெய்யைக் குவளையிலே உண்டு இருளிடத்தைக் கிழிக்கின்ற விளக்கே !
என்றது, உனக்கு உணவாகிய நெய்யைப் பெற்று உண்ட செருக்காலும் உனக்குப் பகையாகிய இருள் கிழித்த மேம்பாட்டாலும் எங்களை உதாசீனம் பண்ணினாய் இத்தனை.
வாய்மைக்குச் சான்றாவனவற்றுள் விளக்கு ஒன்று ஆகலானும், அஃது இருவரோடும் உடன் இருத்தலானும் அதனை வெறுத்துக் கூறுவாள் ஆயினாள்.
6. வாரம் பகர்ந்து வாயின் மறுத்துரைத்தல்
வாரம் பகர்ந்து வாயின் மறுத்துரைத்தல் என்பது, விளக்கொடு வெறுத்து வருந்தா நின்ற தலைமகள், தலைமகன் பரத்தையின் பிரிந்து வந்து, வாயில்கண் நிற்ப, வண்டோர் அனையா ஆடவர், பூவோர் அனையர் மகளிர் ஆதலின், நாமும் அவன் தலையளி பெற்றபொழுது ஏற்றக் கொள்வதன்றோ நமக்குக் காரியம்; நாம் அவனோடு புலக்கற் பாலேம் அல்லேம் என்று வாயில் நேர்வித்தார்க்கு ஊரானது மாலையும் தோழும் அவ்விடத்து வளைத்து றவைத்து வேண்டினார் கொள்ள அமையும்; யான் பரத்தையர்க்கு உறாவரையாகக் கொடுத்தேன் என மறுத்துக் கூறா நிறறல்
357. பூங்குவ ளைப்பொலி மாலையும்
ஊரன்பொற் றோளிணையும்
ஆங்கு வளைத்துவைத் தாரேனும்
கொள்கநள் ளார்அரணம்
தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச்
சிற்றம் பலத்தயல்வாய்
ஓங்கு வளைக்கரøத் தார்க்கடுத்
தோம்மன் உறாவரையே.
கொளு
வார்புன லூரன் ஏர்திகழ் தோள்வயின்
கார்புரை குழலி வாரம் பகர்ந்தது.
இதன் பொருள் : நீண்ட புனல் சூழ்ந்த ஊரை உடையவன் அழகு சிறந்த தோளிடத்துக் காரை ஒத்த கூந்தலினை உடையவள் அன்புடைமை தோன்றச் சொன்னது.
தெளிவுரை : தன்னுடனே செருக்கொண்ட அசுரருடைய முப்புரங்களையும் தீங்கு செய்த வில்லை உடையவன் அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் சிற்றம்பலத்துக்கு அயலிலே இருக்கிற மிக்க வளைகளை அணிந்த கைகளை உடையார்க்கு மன்னனை முற்றூட்டாகக் கொடுத்துவிட்டோம்; இனிச் செங்கழு நீர்ப் பூவாலே தொடுத்த சிறந்த மாலையையும் நாயகனுடைய அழகிய தோளிணைகளையும் இங்கு வாராமல் தங்கள் இடங்களில் மறித்து வைத்து யாவராகிலும் கொள்ள அமையும்.
7. பள்ளியிடத்து ஊடல்
பள்ளியிடத்து ஊடல் என்பது வாயில் மறுத்த தலைமகள் ஆற்றாமையே வாயிலாகப் புக்குப் பள்ளியிடத்தானாகிய தலைமகனோடு, நின்னை இடைவிடாது நுகர்தற்கு முற்காலத்துத் தவத்தைச் செய்யாத தீவினையேமை நோவாது, இன்று இவ்வாறாகிய நின்னை நோவதென்னோ? அதுகிடக்க, நின் காதலிமார் புறமே கற்று நினக்குப் புதிதாகச் செய்த அப்புல்லுதலை யாம் செய்ய மாட்டோம். அதனால் எம்மைத் தொடாதே; எங்கலையை விடுவாயாக எனக் கலவி கருதிப் புலவா நிற்றல்.
358. தவஞ்செய் திலாதவெந் தீவினை
யேம்புன்மைத் தன்மைக்(கு)எள்ளா(து)
எவம்செய்து நின்(று)இனி இன்(று)உனை
நோவ(து)என் அத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை
யூரநின் சேயிழையார்
நவம்செய்த புல்லங்கள் மாட்டேம்
தொடல்விடு நற்கலையே.
கொளு
பீடிவர் கற்பின் தோடிவர் கோதை
ஆடவன் தன்னோ(டு) ஊடி உரைத்தது.
இதன் பொருள் : உனக்கேற்ப வழிபாடு செய்தற்கு முற்பிறப்பில் தவம் செய்யாதிருத்தலேயன்றி வெய்ய தீவினையைச் செய்த நாங்கள் எங்களுடைய புல்லிய இயல்புக்கு எங்களை இகழ்ந்து கொள்ளாதே. வருத்தம் செய்து நின்று இப்பொழுது உன்னை நோவது ஏன்? சுவாமி, முத்தியைத் தருகிறவன் தத்துவத்தில் உள்ளவன், அவன் செய்த சீரிய அருளாலே நிறைந்த தில்லையில் தலைவனே ! நின் கருத்து ஒத்த சேயிழையார் பொழுதைக்குப் பொழுது புதிதாகத் தழுவுகிற தழுவுதலும் அறியோம். ஆதலால் எங்களுடைய நல்ல மேகலையைத் தீண்டுதலும் ஒழிவாயாக.
தெளிவுரை : உனக்கேற்ப வழிபாடு செய்தற்கு முற்பிறப்பில் தவம் செய்யாதிருத்தலேயன்றி வெய்ய தீவினையைச் செய்த நாங்கள் எங்களுடைய புல்லிய இயல்புக்கு எங்களை இகழ்ந்து கொள்ளாதே. வருத்தம் செய்து நின்று இப்பொழுது உன்னை நோவது ஏன்? சுவாமி, முத்தியைத் தருகிறவன் தத்துவத்தில் உள்ளவன், அவன் செய்த சீரிய அருளாலே நிறைந்த தில்லையில் தலைவனே ! நின் கருத்து ஒத்த சேயிழையார் பொழுதைக்குப் பொழுது புதிதாகத் தழுவுகிற தழுவுதலும் அறியோம். ஆதலால் எங்களுடைய நல்ல மேகலையைத் தீண்டுதலும் ஒழிவாயாக.
8. செவ்வணி விடுக்க இல்லோர் கூறல்
செவ்வணி விடுக்க இல்லோர் கூறலாவது, தலைவன் பரத்தையர் இடத்து இருக்குங்கால் தலைவி பூத்து நீராடினமையை உணர்த்தற்குத் தோழியைச் செம்பட்டு உடுத்துச் செஞ்சாந்து பூசிச் செம்பூச் சூட்டிச் செவ்வணி அணிந்து விடுப்ப அவள் செல்லும் அந்நிலை கண்டு, இல்லத்துள்ளார் இரங்கிக் கூறுதல், இல்லத்தார் ஆவார் ஊரில் உள்ள இல்வாழ்க்கை மகளிர், எனவே இது கண்டோர் கூற்றாம். தலைவன் பரத்தையர் இடத்திருக்கும் வழித் தலைவி தான் பூத்து நீராடினமையைத் தோழிக்குச் செவ்வணி அணிந்து விடுத்தும், புதல்வனைப் பெற்று நீராடினமையை வெள்ளணி அணிந்து விடுத்தும் உணர்த்துதல் இலக்கியங்களிற் காணப்படும் மரபுகளாகும். அவற்றுள் இது செவ்வணி அணிந்து விடுத்தல்.
359. தணியுறப் பொங்கும்இக் கொங்கைகள்
தாங்கித் தளர்மருங்குல்
பிணியுறப் பேதைசென்(று) இன்றெய்து
மால்அர வும்பிறையும்
அணியுறக் கொண்டவன் தில்லைத்தொல்
லாயநல் லார்கண்முன்னே
பணியுறத் தோன்றும் நுடங்கிடை
யார்கள் பயின்மனைக்கே.
கொளு
பாற்செலு மொழியார் மேற்செல விரும்பல்
பொல்லா தென்ன இல்லோர் புகன்றது.
இதன் பொருள் : பால் செல்லும் மொழியார் அவர்களிடத்துச் செல்ல விரும்புதல் பொல்லா ஒழுக்கம் என்று மனையிலுள்ளார் சொல்லியது.
தெளிவுரை : பாம்பையும் பிறையையும் ஆபரணமாகக் கொண்டவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் பழைய நம் ஆயக் கூட்டத்தாராகிய நல்லோர் முன்னே பாம்பின் கழுத்தை ஒத்துத் தோன்றிய (நுடங்கிய) இடையினை உடையராகிய பரத்தையர் வாழும் மனையில் அமையும்படி விம்முகிற முலைகள் சுமந்து தளர்கிற இடையானது வருந்தப் பேதைத் தன்மையுடையாள் இன்று சென்று புகாநின்றாள்; இது தகுவது ஒன்றன்று.
9. அயல் அறிவுரைத்து அவள் அழுக்கம் எய்தல்
அயல் அறிவுரைத்து அவள் அழுக்கம் எய்தல் என்பது, இல்லோர் செவ்வணி விடுக்க நினையா நிற்ப, அயலார் முன்னே இவளால் இக்குறியறிந்த விடத்து ஒருத்தி நமக்குத் தர நாம் அவனை எய்தும்படியாயிற்று. நம்முடைய பெண்தன்மையென அயலறி வுரைத்துத் தலைமகள் அழுக்கமுற்றுக் கூறா நிற்றல்.
விளக்கம் : செல்வணி அணிந்து சேடியை விடுத்துத் தலைவனைப் பெறும் நிலை பலரும் அறிய நிகழ்தலைத் தலைவி சொல்லி வருந்துதல்.
360. இரவணை யும்மதி யேர்நுத
லார்நுதிக் கோலஞ்செய்து
குரவணை யுங்குழல் இங்(கு)இவ
ளால்இக் குறியறிவித்(து)
அரவணை யும்சடை யோன்தில்லை
யூரனை ஆங்கொருத்தி
தரஅணை யும்பரி சாயின
வாறுநம் தன்மைகளே.
கொளு
உலகியல் அறியச் செலவிடல் உற்ற
விழுத்தகை மாதர்க்கு அழுக்கஞ் சென்றது.
இதன் பொருள் : உலகியலாகிய செவ்வணியை நாயகன் அறியச் செல்ல விடுவதாக நினைந்த விழுமிய தகுதியை யுடைய நாயகி வருந்தினது.
தெளிவுரை : இராப் பொழுது தோன்றும் மதியத்தை ஒத்த நெற்றியினையுடையார் கூர்மையால் உண்டாகிய கோலம் செய்து குரவின் மணத்தை ஒத்த கூந்தலினை உடைய இவளாலே அறிவித்ததாக இந்தக் குறியை அறிவித்துப் பாம்பைப் பொருந்தின திருச்சடையை உடையவனது பெரும்பற்றப் புலியூரில் தலைவனை அப்பரத்தையர் சேரியிலேநின்றும் ஒருத்தி இரங்கி, நமக்குத் தரக்கூடும்படியானபடியே நம் பெண்மைத் தன்மை ஆயிற்று.
ஒருத்தி என்றது அவள் உரியள் அல்லாமை காட்டிற்று. நம் பெண்மை என்றது தன் உரிமையும் காட்டிக் களவுக் காலத்துத் தன்னுரிமையும் காட்டிற்று. இரவணையும் மதி என்றது பகல் விளங்காமையால்.
10. செவ்வணி கண்ட வாயிலவர் கூறல்
செவ்வணி கண்ட வாயிலவர் கூறல் என்பது தலைமகளிடத்து நின்றும் செவ்வணி செல்லக்கண்டு, நம் ஊரற்கு உலகியலாறு உரைப்பான் வேண்டிச் செம்மலரும் செம்பட்டும் செஞ்சாந்தும் நமது திருவையுடைய மனையின்கண் வந்து தோன்றின எனப் பரத்தை வாயிலவர் தம்முள் மதித்துக் கூறா நிற்றல்.
361. சிவந்தபொன் மேனி மணிதிருச்
சிற்றம் பலமுடையாறன்
சிவந்தஅம் தாளணி ஊரற்(கு)
உலகிய லாறுரைப்பான்
சிவந்தபைம் போதும்அம் செம்மலர்ப்
பட்டும்கட் டார்முலைமேல்
சிவந்தஅம் சாந்தமும் தோன்றின
வந்து திருமனைக்கே.
கொளு
மணிக்குழை பூப்பியல் உணர்த்த வந்த
ஆயிழையைக் கண்ட வாயிலவர் உரைத்தது.
இதன் பொருள் : நீலமணியை ஒத்த கூந்தலினை உடையாள் பூப்பு இயல்பை அறிவிப்பதாக வந்த அழகிய ஆபரணங்களை உடையாளைக் கண்ட வாயில் காவலர் சொன்னது.
தெளிவுரை : செம்பொன்னை ஒத்த திருமேனியை உடைய அழகிய திருச்சிற்றம்பலம் உடையவன் சிவந்த அழகிய சீர்பாதங்களைச் சூட்டிய நாயகனுக்கு உலகியல் முறையாலே பூப்பறிவு உரைக்கச் சிவந்த பசுமை பொருந்திய பூவும் அழகிய சிவந்த பூம்தொழிற் பட்டும் கச்சினால் கட்டுதலார்ந்த முலையிடத்தே அழகிய செஞ்சந்தனமுமாய் நம்முடைய அழகிய திருமனையில் வந்து தோன்றின.
உலகியல் முறைமை செய்கின்றபடி மறைக்கப்படுவதொன்றைப் பலரும் அறியும்படி உறுப்புக்கள் தோறும் எழுதிய பரத்தையர் மனைக்கண் காட்டும் படியாயிற்று.
11. மனை புகல் கண்ட வாயிலவர் கூறல்
மனை புகல் கண்ட வாயிலவர் கூறல் என்பது, செவ்வணி கண்ட தலைமகன் பரத்தையிடத்தினின்றும் வந்து தடையின்றி மனைவயின் புகுதா நிற்ப, பண்டிரவும் பகலும் வாயில் பெறாது நின்று ணங்கும் இக்காவலையுடைய கடையை இத்துணைக் காலத்திற் கழிந்து வாயிலின்றிப் புகுதா நின்றான், மனைக் கடன் பூண்டலான் இனிப் புலந்து அடங்காதார் ஒருவருமில்லை எனத் தலைமகள் வாயிலவர் தம்முள் கூறா நிற்றல்.
362. குராப்பயில் கூழை இவளின்மிக்(கு)
அம்பலத் தான்குழையாம்
அராப்பயில் நுண்ணிடை யார்அடங்
கார்எவ ரேயினிப்பண்(டு)
இராப்பகல் நின்றுணங்(கு) ஈர்ங்கடை
யித்துணைப் போழ்திற்சென்று
கராப்பயில் பூம்புன லூரன்
புகும்இக் கடிமனைக்கே.
கொளு
கடனறிந்(து) ஊரன் கடிமனை புகுதர
வாய்ந்த வாயி லவர்ஆய்ந்(து) உரைத்தது.
இதன் பொருள் : ஊரனானவன் இச்சிறந்த மனையிலே கடப்பாடு அறிந்து புக அழகிய வாயில் உள்ளார் விசாரித்துச் சொன்னது.
தெளிவுரை : முன் காலத்து இரவும் பகலும் தான் வாயில் பெறாது நின்று வாடும் குளிர்ந்த வாசலை ஒரு மாத்திரைப் பொழுதைக் குள்ளே போய்ப் பெரு முதலைகள் வாழ்கிற புனல் உடைத்தாகிய ஊரினை உடையவன் இச்சிறந்த மனையில் புகுந்தான். குரவம்பூ நெருங்கின கூந்தலினையுடைய இவளின் மேலாய்த் திருவம்பலநாதன் குழையாகிய பாம்பின் கழுத்தை ஒத்த நுண்ணிய இடையினை உடையார் இனி அடங்காதவர் யாவர்.
12. முகமலர்ச்சி கூறல்
முகமலர்ச்சி கூறல் என்பது, பரத்தையிற் பிரிந்த தலைமகன் செவ்வணி கண்டு வந்தான் என்று சொல்லுமளவில் தலைமகளது கண்கள் சிவந்தன. அப்புலவி நோக்கத்து எதிர் காதலன் நோக்க அச்சிவப்பாறி முகம் மலர்ந்தமையை அவ்விடத்துக் கண்டவர் தம்முட் கூறா நிற்றல்.
363. வந்தான் வயலணி ஊரன்
எனச்சின வாள்மலர்க்கண்
செந்தா மரைச்செவ்வி சென்றசிற்
றம்பல வன்அருளான்
முந்தா யினவியன் நோக்கெதிர்
நோக்க முகமடுவின்
பைந்தாள் குவளைகள் பூத்திருள்
சூழ்ந்து பயின்றனவே.
கொளு
பூம்புன லூரன் புகமுகம் மலர்ந்த
தேம்புனை கோதை திறம்பிறர் உரைத்தது.
இதன் பொருள் : பூவுடைத்தாகிய புனல் சூழப்பட்ட ஊரை உடையவன் மனையிடத்துப் புகுதும் அளவில் முகமலர்ந்த வாசத்தைப் புனைந்த குழலினை உடையாள் செய்தியை அயலார் சொன்னது.
தெளிவுரை : வயலணிந்த ஊரை உடையவன் வந்தான் எனும் அளவில் சினத்த வாள் போலும் தொழிலினையும் மலர் போலும் தோற்றத்தையும் உடைய கண்கள் செந்தாமரைப் பூவின் செவ்வி நிறமாகிய மிக்க சிவப்பை அடைந்தன. திருச்சிற்றம்பலத்தினிடத்தே வாழும் அவன் அருளால் முன் உண்டாகிய கோபித்த நோக்கம் நாயகன் நோக்கி எதிர்பார்த்தபொழுது முகமாகிய மடுவில் அழகிய தாளையுடைய நீலப் பூப்போல் பொலிவுற்று மலர்ந்து இருண்டு நெருங்கின.
13. கால நிகழ்வு உரைத்தல்
கால நிகழ்வுரைத்தல் என்பது, பரத்தையில் பிரிந்து வந்த தலைமகனது ஆற்றாமையைத் தலைமகள் நீக்காதிருப்ப, வண்டூது மல்லிகைப் போதானும் அந்திப் பிறையானும் கங்குல் பொழுதானும் ஆற்றானாய்ப் புகுதரா நின்றான்; இனி நீ புலக்கற்பாலை யல்லை என உழையர் கூறா நிற்றல்.
364. வில்லிகைப் போதின் விரும்பா
அரும்பா வியர்கள்அன்பில்
செல்லிகைப் போதின் எரியுடை
யோன்தில்லை அம்பலம்சூழ்
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்(டு)
ஊதவிண் தோய்பிறையோ(டு)
எல்லிகைப் போதியல் வேல்வயல்
ஊரற்(கு) எதிர் கொண்டதே.
கொளு
இகழ்வ(து) எவன்கொல் நிகழ்வதில் வாறெனச்
செழுமலர்க் கோதை உழையர் உரைத்தது.
இதன் பொருள் : இகழ்ந்திருந்த. இகழா நின்ற காலம் இக்காலம் அல்லவோ என்று வளவிய பூமாலையை உடையாள் பக்கத்தே நின்றவர் சொல்லியது.
தெளிவுரை : காமன் கையில் பூ அம்பாலே மகளிரை விரும்பாத அரிய பாவத்தை உடையவர்கள் செய்த அன்பிலே செல்லுகிறவன் கைம்மலராகிய பூவிலே நெருப்பை ஏந்தினவன் அவனுடைய திருஅம்பலத்தைச் சூழ்ந்த மல்லிகைப் பூவாகிய வெள்ளிய சங்குகளை வண்டுகள் ஊத விசும்பு தோய்ந்த பிறையோடே இரவானது கையாகிய பூவிலே சீலித்த வேலையுடைய வயல் சூழ்ந்த ஊரை உடையவர்க்கு எதிராய் வந்து நின்றது; இக் காலத்தை இகழப்படுமோ?
14. எய்தல் எடுத்துரைத்தல்
எய்தல் எடுத்துரைத்தல் என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் பூப்பு நிகழ்ந்த கிழத்தியைப் புலவி தீர்த்து இன்புறப்பண்ணி எய்தலுற்று மகிழ்ந்தமையை அவ்விடத்துள்ளார் எடுத்துக் கூறா நிற்றல்.
365. புலவித் திரைபொரச் சீறடிப்
பூங்கலம் சென்னி உய்ப்பக்
கலவிக் கடலுள் கலிங்கஞ் சென்(று)
எய்திக் கதிர்கொள்முத்தம்
நிலவி நிறைமது ஆர்ந்(து)அம்

பலத்துநின் றோன்அருள்போன்(று)
உலவிய லாத்தனம் சென்றெய்தல்
ஆயின ஊரனுக்கே.
கொளு
சீரியல் உலகில் திகழ்சுரக் கூடி
வார்புனல் ஊரன் மகிழ்வுற்றது.
இதன் பொருள் : சிறப்பு விளங்கின உலகத்தே விளக்கம் உண்டாம்படி கூடி ஒழுங்குபட்ட புனலாற் சூழ்ந்த ஊரன் மகிழ்ச்சியடைந்தது.
தெளிவுரை : புலவியாகிய திரைபொர அத்திரை நீங்குதற்கு நாயகியுடைய சிறிய அடியிலே பொலிந்த ஆபாரணங்கள் சென்னிபட (என்றது வணங்க என்றபடி) இருவருடைய நெஞ்சாகிய கடலும் கடந்த விடத்துப் புடைவையைச் சென்றுய்த்து ஒளியுடைத்தாகிய முத்தையொத்த முறுவலிலே நிலைபெற்று நிறைந்த நீராகிய தேனையுண்டு திருவம்பலத்தே நின்றவனுடைய திருவருளை ஒத்துத் தளராத முலைகள் ஊரனுக்குச் சென்று பெறலாயின் அன்றே.
என்றது நாயகன் அன்புடைமையும் நாயகி புலவிச் செவ்வியறிந்து நீர்த்த காமச்சுவை மதுவுண்டு அவள் உள்ளத்தே மகிழ்ச்சியும் கூறினவாறு.
15. கலவி கருதிப் புலத்தல்
கலவி கருதிப் புலத்தல் என்பது
, புலவி தீர்த்து இன்புறப் புணரப்பட்டு மயங்கா நின்ற தலைமகள், தனக்கு அவன் செய்த தலையளியை நினைந்து, இவ்வாறு அருளும் அருள் ஒரு ஞான்று பிறர்க்கும் ஆமென உட்கொண்டு பொருமியழுது பின்னும் அவனோடு கலவி கருதிப் புலவா நிற்றல்.
366. செவ்வாய் துடிப்பக் கருங்கண்
பிறழச்சிற் றம்பலத்(து)எம்
மொய்வார் சடையோன் அருளின்
முயங்கி மயங்குகின்றாள்
வெவ்வாய் உயிர்ப்பொடு விம்மிக்
கலுழ்ந்து புலந்துநைந்தாள்
இவ்வா(று) அருள்பிறர்க்(கு) ஆகு
மென நினைந்து இன்னகையே.
கொளு
மன்னிய உலகில் துன்னிய அன்பொடு
கலவி கருதிப் புலவி எய்தியது.
இதன் பொருள் : நிலை நின்ற உலகத்தோடு செறிந்த அன்புடனே கலவியிலே களித்துப் புலவியுற்றது.
தெளிவுரை : சிவந்த வாய் துடிப்பவும் கரிய கண்கள் உலாவவும் சிற்றம்பலத்தே உளனாகிய எம்முடைய செறிந்து நீண்ட சடையினையுடையவன் திருவருள் பெற்றாரைப் போலத் தழுவிக் கொண்டு களிக்கின்றவள் வெய்ய விடத்தையுள்ளே உடைத்தாகிய பெருக்கோடே பொருமியழுது வெறுத்துக் துன்புற்றாள், இத்தன்மையாகிய அருள் மேலொரு காலத்தில் பிறர்க்கும் செய்ய அடுக்குமோ என்று கருதி இனிய முறுவலினை உடையாள் நைந்தாள்.
16. குறிப்பறிந்து புலந்தமை கூறல்
குறிப்பறிந்து புலந்தமை கூறல் என்பது, புலவி தீர்த்து கலுழ்ந்து புணர்ந்து தானும் அவனுமேயாய்ப் பள்ளியிடத்தாளாகிய தலைமகள், பின்னும் ஒரு குறிப்பு வேறுபாடு கண்டு புலந்து, இப்பள்ளி பலரைப் பொறாதென்று இழிய, இப்பொழுது இவள் இவ்வாறு இழிதற்குக் கருதிய குறிப்பு என்னை கொல்லோ என உழையர் தம்முள் கூறா நிற்றல்.
367. மலரைப் பொறாஅடி மானும்,
தமியன்மன் னன்ஒருவன்
பலரைப் பொறா(து)என்(று) இழிந்துநின்
றாள்பள்ளி காமன்எய்த
அலரைப் பொறா(து)அன்(று) அழல்விழித்
தோன்அம் பலம்வணங்காக்
கலரைப் பொறாச்சிறி யாள்என்னை
கொல்லோ கருதியதே.
கொளு
குறப்பினிற் குறிப்பு நெறிப்பட நோக்கி
மலர்நெடுங் கண்ணி புலவி யுற்றது.
இதன் பொருள் : நாயகனுடைய முகக் குறிப்பால் நெஞ்சில் கருத்தை முறைப்பட விசாரித்து மலர்களை ஒத்த கண்களை உடையாள் புலந்தது. (என்ன புலந்த படியைச் சொன்னது என்றுபடும்)
தெளிவுரை : மலரினை மிதிக்கவும் பொறாத மெல்லிய அடியினையுடைய மானை ஒப்பவளும் தனியளாய் இருந்தாள். அவள் நாயகனும் தனியனாய் இருந்தான். (அவனுக்கொரு பாங்கனாதல் அவளுக்கொரு தோழியாதல் அங்கிருந்தார் இல்லை என்றபடி.) இந்தச் சயனம் பலரைப் பொறாது என்று இழிந்து நின்றாள். காமனால் எய்யப்பட்ட பூவம்பைப் பொறாதே அன்று அழலாக விழித்தவன், அவனுடைய திருவம்பலத்தை வணங்காத அறிவில்லாதாரைப் போல் பொறாத சிறியவள் (என்றது அம்பலம் வணங்காதாருடனே கெழுமியிருக்கப் பொறாதவள், அம்பலம் வணங்காதாரைப் போல, ஒரு காரணமின்றிச் சீறினாள் என்பது கருத்து) இவள் கருத்து
என்தான்.)
இவ்வுடலுக்கு முதல் நெஞ்சு ஒன்றைக் கருதலால், தன் குறிப்புக்கு வேறுபட இப்பொழுது இவன் கருத்து தம்மேல் அல்ல என்று வெறுத்தாள்.
17. வாயிலவர் வாழ்த்தல்
வாயிலவர் வாழ்த்தல் என்பது செவ்வணி விடுக்கப் பூப்பியற் செவ்வி கெடாமல் மெலிவறிந்து இவளது பொலிவோடு வந்தமையாள் இவன் மெய்யே தக்க வாய்மையன் எனத் தலைமகனை வாயிலவர் வாழ்த்தா நிற்றல்.
368. வில்லைப் பொலிநுதல் வேற்பொலி
கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை
யான்நின்று வான்வழுத்தும்
தில்லைப் பொலிசிவன் சிற்றம்
பலம்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய்
யேதக்க வாய்மையனே.
கொளு
தலை மகனது தகவுடைமை
நிலைதரு வாயில் நின்றோர் உரைத்தது.
இதன் பொருள் : தலைமகன் தகவுடைமையை நிலைமை தக்கவாயில் நின்றவர்கள் சொன்னது.
தெளிவுரை : வில்லை ஒத்த நெற்றியினையும் வேலை ஒத்த கண்களையும் உடையாளது வாட்டத்தையும் அறிந்து விரையச் சிறந்து வந்தமையால் மாளாதே தேவர்கள் வாழ்த்தும் பெரும்பற்றப்புலியூரில் சிறந்தவன், அவனுடைய திருச்சிற்றம்பலத்தை நெஞ்சால் நினைப்பாரைப் போல வளப்பம் உடைத்தாகிய பொலிவு பெற்ற ஊரையுடையவன் உண்மையாகத் தகுதி பெற்ற ஒரு சொல் வாசகத்தை உடையவனாய் இருந்தான்.
என்றது இவள் வாடாமல் வந்தமையால், அவன் அன்புடையன் என்று சொல்லிய வார்த்தை சத்தியமாயிருந்தது.
18. புனல் வரவுரைத்தல்
புனல் வரவுரைத்தல் என்பது, தலை மகளுடன் மனைவயின் தங்கி இன்புறா நின்றவனது தோள் களைப் பரத்தையர் பொருந்தி மகிழப் புதுப்புனல் வந்து பரந்தது. இனிப் புனலாட்டினால் இவன் காதலி புலக்கும் போலும் என வையத்தார் தம்முட் புனல் வரவு கூறா நிற்றல்.
369. சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக்(கு)
இல்துணைச் சேவல் செய்வான்
தேன்முதிர் வேழத்தின் மென்பூக்
குதர்செம்ம லூரன் திண்தோள்
மான்முதிர் நோக்கின்நல் லார்மகி
ழத்தில்லை யான்அருளே
போன்முதிர் பொய்கையில் பாய்ந்தது
வாய்ந்த புதுப்புனலே.
கொளு
புனலா டுகஎனப் புனைந்து கொண்டு
மனைபுகுந் தவனை வையம் உரைத்தது.
இதன் பொருள் : விரும்பிப் புனலாடப் புகாநின்றான் என்று மனையை விரும்பி வந்தவனைப் பூமியில் உள்ளார் சொன்னது.
தெளிவுரை : சூன் முதிர்ந்த குறுக அடியிடும் நடையினையுடைய தன் பெடைக்குச் சேவலானது கூடு எடுப்பதாகத் தேன் மிக்க வேழமாகிய கரும்பின் மெல்லிய பூவைக் கோலுகிற தலையான ஊரை உடையவன். (என்றது குறிப்பு மொழி; மகப் பேறு காரணமாக எடுக்க நினைந்தமை அல்லது தன் பெடை மேலுள்ள அன்பாகில் முன்னமே எடுக்குமென்றும் தன் காரியம் முற்றி நாற்றிமில்லாத பூவைக் கோதினாற் போலப் புதல்வன் காரணமாகத் தன் நாயகியிடத்து வியாபரிக்கிறான் என்பது கருத்து). சிக்கென்ற தோள்களை மானோக்கத்தின் தன்மை முதிர்ந்த நோக்கினை உடையவர்கள் பெற்று மகிழத்தில்லையான் அருளை ஒக்க முதிர்ந்த பொய் கையிலே புதுப்புனல் வந்து பாய்ந்தது.
ஆதலால், இவன் புதுப்புனவாடிப் பரத்தையரை மகிழ்வித்துத் தன் காதலியை வெகுள்விக்கும் போலுமெனக் கண்டார் சொல்லியது.
19. தேர் வரவு கண்டு மகிழ்ந்து கூறல்
தேர் வரவு கண்டு மகிழ்ந்து கூறல் என்பது புனல் வரவு கேட்ட தலைமகன் புனலாட்டு விழவிற்குப் பரத்தையர் சேரிக்கண் செல்லா நிற்ப, இவனைப் புணர்தற்குத் தக்க தவத்தினை முற்காலத்தே செய்தீர்கள்; தேர் வந்து தோன்றிற்று; இனிச் சென்று இவனது தோள் இணையைத் தோய்மின் எனத் தேர் வரவு கண்டு பரத்தையர் தம்முள் மகிழ்ந்து கூறா நிற்றல்.
சேயே எனமன்னு தீம்புன
லூரன்திண் தோள்இணைகள்
தோயீர் புணர்தவம் தொன்மைசெய்
தீர்சுடர் கின்றகோலம்
தீயே எனமன்னு சிற்றம்
பலவர்தில் லைந்நகர்வாய்
வீயே எனஅடி யீர்நெடுந்
தேர்வந்து மேவினதே.
கொளு
பயில்மணித் தேர்செலப் பரத்தையர் சேரிக்
கயல் மணிக் கண்ணியர் கட்டுரைத்தது.
இதன் பொருள் : பரத்தையர் தெருவில் பயின்ற மணி அழுத்தப்பட்ட தேர் செல்லக் கயலை ஒத்த தூய கண்களையுடையாராகிய பரத்தையர் சொன்னது.
தெளிவுரை : விளங்காநின்ற திருநிறம் தீ நிறமேயென்ன நிலை பெற்ற திருச்சிற்றம்பலநாதருடைய பெரும் பற்றப்புலியூராகிய நகரியின் தெருவில் நெடிய தேர் வந்து பொருந்திற்று. ஆதலால் சுப்பிரமணியனே என்னும்படி நிலைபெற்ற இனிய புனல் அணைந்த ஊரையுடையவன் சிக்கென்ற தோள் இணைகள் புணர்ச்சிக்கு வேண்டும் புண்ணியத்தை முற்பிறப்பில் செய்தவர்களே ! பூவே என்று சொல்லும்படி மெல்லிய வடிவினை உடையீர் ! இனித் தோயீர் தோள்.
20. புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல்
புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல் என்பது தலைமகனுடன் புனல் ஆடநின்ற பரத்தையர் சேடிமார் அரமங்கையரைப் போலப் புனல் ஆட நின்ற அவ்வவரே என்று விளித்து, நாம் எல்லாம் இத்தன்மையேமாக வானர மங்கையரென்று சொல்லும் வண்ணம் மற்றொருத்தி வந்து இவனைத் திரித்துக் கொள்ளக் கொடுத்துப் பின் வருந்தாது முன்னுறக் காப்போம் எனத் தம்முள் கூறா நிற்றல்.
371. அரமங் கையரென வந்து
விழாப்புகும் அவ்வவர்வான்
அரமங் கையரென வந்தணு
கும்அவள் அன்(று)உகிரால்
சிரம்அங்(கு) அயனைச்செற் றோன்தில்லைச்
சிற்றம் பலம்வழுத்தாப்
புரமங் கையரின்நை யாதுஐய
காத்துநம் பொற்பரையே.
கொளு
தீம்புனல் வாயில் சேயிழை வருமெனச்
காம்பன தோளியர் கலந்து கட்டுரைத்தது.
இதன் பொருள் : இனிய புனல் ஆடிடத்தே சிவந்த ஆபரணங்களை உடையாளாகிய காதற்பரத்தையர் வருமென்று வேயையொத்த தோள்களை உடையராகிய இற்பரத்தையர் சொன்னது.
தெளிவுரை : நீரர மங்கையர் என்னும்படி நீர் விழவிலே வந்து புகுதுகிற அவ்வவர் தாங்களே தெய்வமகள் என்று சொல்லும்படி வந்தணுகா நிற்பன். அன்று உகிராலே அவ்விடத்து அயனைத் தலையறுத்தவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் திருச்சிற்றம்பலத்தை வாழ்த்தாத புரத்திலுள்ள அசுர மகளிர் வருந்தினாற் போல வருந்தாதே தம்முடைய நாயகரைக் கண்டோர் வியக்கும்படி நம்மிடத்தே தரக் கடவோம்.
புனலாடு மகளிர் பலரும் நீரர மகளிர்க்கு உவமையாவது நீரைவிட்டு நீங்காமையும் நீருடன் விருப்பமும்; காதற் பரத்தை தெய்வ மகளிர்க்கு உவமையாதல், அலங்காரமும் நாயகனைக் கண்டால் விடா மையும்.
21. தன்னை வியந்துரைத்தல்
தன்னை வியந்துரைத்தல் என்பது, சேடிமார் பின் வருந்தாது முன்னுறக் காப்பேம் என்று தம்முள் கூறுவதனைக் கேட்டு, இவனை அமரப் புல்லும் பரத்தையர்மாட்டு இவனருள் செல்லாமல் விலக்கேனாயின் என்மாட்டு இவனைத் தந்து அழாநின்ற இவன் மனைக் கிழத்தியாகின்றேன் எனப் பரத்தைத் தலைவி தன்னை வியந்து கூறா நிற்றல்.
372. கனலூர் கணைதுணை யூர்கெடச்
செற்றசிற் றம்பலத்தெம்
அனலூர் சடையோன் அருள்பெற்
றவரின் அமரப்புல்லும்
மினலூர் நகையவர் தம்பால்
அருள்விலக் காவிடின்யான்
புனலூ ரனைப்பிரி யும்புன
லூர்கணப் பூங்கொடியே.
கொளு
அரத்தத் துவர்வாய்ப் பரத்தைத் தலைவி
முனிவு தோன்ற நனிபு கன்றது.
இதன் பொருள் : மிகவும் சிவந்த வாயினையுடையாளாகிய பரத்தையராகிய தலைவி வெறுப்புத் தோன்றுதலால் மிகவும் சொன்னது.
தெளிவுரை : அழல்பரந்த அம்பால் ஒத்த ஊராகிய முப்புரங்களும் பொடியாகச் சீறின. அவனுடைய திருவருளைப் பெற்றவர் போல நாயகனைச் சிக்கெனப் பொருந்தியிருக்கிற மின்னுதல் பரந்த முறுவலை உடையார் தம்மிடத்து நாயகன் வைத்த அருள் விலக்கி என்னிடத்தாக்கிக் கொண்டிலேனாகில் நான் புனலணிந்த ஊரனைப் பிரிந்திருக்கும் கண்ணின் நீர் பரந்த கண்களையுடைய பூங்கொடியை ஒப்பாளாகிய அவன் மனைக் கிழத்தியாகக் கடவேன்.
மனைக் கிழத்திக்கு இவள் தன்மையாகக் கருதினது, நாயகனுக்கு ஏற்ப வழிபட மாட்டாமையால் அவன் பிரிந்தானாகக் கருதி.
22. நகைத்துரைத்தல்
நகைத் துரைத்தல் என்பது, பரத்தைத் தலைவி தன்னை வியந்து கூறினாளென்று கேட்ட தலைமகள், எங்கைச்சியார் தமக்கும் ஒரு தங்கச்சியார் தோன்றின பொழுதே தம் இறுமாப்பு ஒழியத் தம்முடைய இணைமுலைகளினது இறுமாப்பும் ஒழியப் புகா நின்றது. இதனை அறியாது தம்மைத் தாம் வியக்கின்ற தென்னோ எனப் பரத்தையை நோக்கி நகைத்துக் கூறா நிற்றல்.
373. இறுமாப்(பு) ஒழியும்அன் றேதங்கை
தோன்றின்என் எங்கையங்கைச்
சிறுமான் தரித்தசிற் றம்பலத்
தான்தில்லை யூரன்திண்தோள்
பெறுமாத் தொடும்தன்ன பேரணுக்
குப்பெற்ற பெற்றியனோ(டு)
இறுமாப்(பு) ஒழிய இறுமாப்(பு)
ஒழிந்த இணைமுலையே.
கொளு
வேந்தன் பிரிய ஏந்திழை மடந்தை
பரத்தையை நோக்கி விரித்து ரைத்தது.
இதன் பொருள் : நாயகன் பிரியமிக்க ஆபரணங்களை உடைய நாயகி பரத்தைக்கு வருந்துவாள் போன்று விரித்து உரைத்தது.
தெளிவுரை : அங்கையில் இள மானை ஏந்தின திருச்சிற்றம்பலநாதனுடைய பெரும்பற்றப்புலியூரில் நாயகனுடைய சிக்கென்ற தோள்களைப் பெற்ற மேம்பாட்டோடு தன்னுடைய பெரிய அணுக்கை இயலாகப் பெற்ற முறைமையோடே செம்மாப்பு ஒழியும்படி இணையொத்த முலைகள் செம்மாத்தலை ஒழிந்தன. ஆதலால் இனித் தனக்கொரு தங்கை தோன்றில் என் தங்கையாகிய தான் செம்மாப்பு ஒழிய அதனான் வருவது அறியாது தன்னைப் புகழ்கின்றாள்.
23. நாணுதல் கண்டு மிகுந்துரைத்தல்
நாணுதல் கண்டு மிகுந்துரைத்தல் என்பது, தலைமகனைப் பரத்தையர் வசம் புனலாட விட்டுச் சூடுவாரின்றிச் செப்பின்கண் இட்டு அடைத்துத் தமியே வைகும் பூப்போல்வாள், இஃது அவனுக்குத் தகாத பழியாம் எனக் கருதி நாணி அதனை மறைத்திருந்தமை கண்ட தோழி. இவளது கற்பும் நலனும் நல்ல பகுதியை உடையனவாயிருந்தன என அவள் நலத்தை மிகுத்துக் கூறா நிற்றல்.
374. வேயாது செப்பின் அடைத்துத்
தமிவைகும் வீயின்அன்ன
தீயாடி சிற்றம் பலமனை
யாள்தில்லை யூரனுக்கின்(று)
ஏயாப் பழியென நாணியென்
கண்ணிங்ங னேமறைத்தாள்
யாயாம் இயல்பிவள் கற்புநற்
பால இயல்புகளே.
கொளு
மன்னவன் பிரிய நன்மனைக் கிழத்தியை
நாணுதல் கண்ட வாணுதல் உரைத்தது.
இதன் பொருள் : நாயகன் பிரிய நல்ல மனைக் கிழத்தியை நாணினபடியைக் கண்ட தோழி சொன்னது.
தெளிவுரை : சூடாது செப்பிலே அடைத்துத் தனியிருந்த பூவை ஒத்தாள், தீயை ஏந்தி ஆடுகிறவனுடைய திருச்சிற்றம்பலத்தை ஒப்பாள் தில்லையில் தலைவனுக்குப் பொருந்தாத பழி இதென்று நாணி இப்பொழுது என்னிடத்துக் காத்தாள் ஆதலால் இவளுடைய கற்புத் தாயான தன்மையை உடைத்தாய் இருந்தது; குணங்கள் நல்ல கூறுபாட்டையுடையன வாயிருந்தன.
பாணன் உரைத்தான் என்பது பழைய உரைகாரர் பாடம்.
24.  பாணன் வரவுரைத்தல்
 பாணன் வரவுரைத்தல் என்பது, நாணோடு தனியிருந்து வருந்தா நின்ற தலைமகளுக்கு, இராப் பொழுதின்கண் சென்று திசையைக் கடக்கும் வாவல் இரை தேடுங்காலம் அண்மையால் பகற் பொழுதின் கண் உறையும் மரம்போலும் தமியோமை அறியாது விறலியும் பாணனும் நம் வேந்தற்குத் துயிலெழு மங்கலம் பாட வந்து நின்றார் எனத் தோழிபாணன் வரவு கூறா நிற்றல்.
375. விறலியும் பாணனும் வேந்தற்குத்
தில்லை இறைஅமைத்த
திறலியல் யாழ்கொண்டு வந்துநின்
றார்சென் றிராத்திசைபோம்
பறலியல் வாவல் பகலுறை
மாமரம் போலும்மன்னோ
அறலியல் கூழைநல் லாய்தமி
யோமை யறிந்திலரே.
கொளு
இகல்வே லவன்அகல்(வு) அறியாப் பாணனைப்
பூங்குழல் மாதர்க்குப் பாங்கி உரைத்தது.
இதன் பொருள் : மாறுபாட்டாற் சிறந்த வேலினை உடையவன் அகன்றபடி அறியாப் பாணனைப் பொலிந்த மாக்குழையை உடைய நாயகிக்குத் தோழி சொன்னது.
தெளிவுரை : பாணிச்சியும் பாணனும் நம் நாயகற்கு மங்கலம் பாடுவதற்காகத் தில்லை இறையிலே சமைக்கப்பட்ட ஓசையால் மற்றுள்ள யாழை வென்ற யாழைக் கொண்டு வந்து நிற்கிறார்கள்; போய் இரவிடத்தே திக்குகளைக் கிழிக்கிற பறத்தலை இயல்பாகவுடைய வாவல் (பகலில் உறையும் பெரிய மரம் போலும்) தனித்திருக்கிற நம்மை அறிந்திலர் அறல் போலும் கூழையையுடைய நல்லாய்.
அறியாமல் அவர் இருந்ததாகக் கருதி மங்கலம் பாட வந்தார்கள் என்றது, அவர் போம் இடம் இவர்கள் அறியாமல் இருக்க நாம் எங்ஙன் அறிவோம் என்பது கருத்து.
25. தோழி இயற்பழித்தல்
தோழி இயற்பழித்தல் என்பது, பாணன் வரவுரைத்த தோழி, இவள் வருந்த அயலாரிடத்து நல்குதலால், எம்முடைய வள்ளல் இன்று தக்கிருந்திலன் எனத் தலைமகனை இயற்பழித்துக் கூறா நிற்றல்.
376. திக்கின் இலங்குதண் தோள்இறை
தில்லைச்சிற் றம்பலத்துக்
கொக்கின் இறக(து) அறிந்துநின்
றாடிதென் கூடலன்ன
அக்கின் நகையிவள் நைய
அயல்வயின் நல்குதலால்
தக்கின் றிருந்திலன் நின்றசெவ்
வேல்எம் தனிவள்ளலே.
கொளு
தலைமகனைத் தகவிலன்எனச்
சிலைநுதற் பாங்கி தீங்கு செப்பியது.
இதன் பொருள் : நாயகன் தமக்குத் தகவுடையன் அல்ல வென்று வில்லை ஒத்த நெற்றியினையுடைய பாங்கி குற்றம் சொன்னது.
தெளிவுரை : திக்குகளாகிய விளங்கின சிக்கென்ற தோள்களை உடைய சுவாமி பெரும்பற்றப்புலியூரில் திருச்சிற்றம்பலத்தில் கொக்கின் இறகை அணிந்து நின்று ஆடுவானுடைய தெற்கின்கண் உண்டாகிய கூடலை ஒத்த அக்கை ஒத்த முறுவலையுடைய இவள் வருந்த அயலாராகிய பரத்தையரிடத்தே தலையளி செய்தலால் நிலைநின்ற சிவப்பாற் சிறந்த வேலினை உடைய எம்முடைய ஒப்பில்லாத வள்ளல் தகுதி உடையவனாய் இருந்திலன். அக்கு - சங்குமணி.
26. உழையர் இயற்பழித்தல்
உழையர் இயற்பழித்தல் என்பது, தோழி தலை மகனை இயற்பழித்துக் கூறா நிற்பக் கேட்டுத் தன்மாட்டு அன்புடை நெஞ்சத்தையுடைய இவள் பேதுற இதற்குப் பரியாமையின் வயலூரன் வரம்பிலன் என உழையர் அவனை இயற்பழித்துக் கூறா நிற்றல்.
377. அன்புடை நெஞ்சத்து இவள்பே
துறஅம் பலத்தடியார்
என்பிடை வந்(து)அமிழ்(து) ஊறநின்(று)
ஆடி இருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந்(து)
அன்னம் சலஞ்சலத்தின்
வன்பெடை மேல்துயி லும்வய
லூரன் வரம்பிலனே.
கொளு
அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரியக்
குழைமுகத் தவளுக்(கு) உழையர் உரைத்தது.
பாடபேதம்
அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரியத்
திண்தேர் வீதியில் கண்டோர் உரைத்தது.
இதன் பொருள் : சிவந்த வேலினையுடைய நாயகன் பரத்தையரிடத்துப் பிரியச் சிக்கென்ற தேருடைத்தாகிய வீதியில் கண்டவர்கள் சொன்னது.
தெளிவுரை : தன் பெடை அன்னமானது வருந்தத் தகுதி அழிந்து சேவல் அன்னமானது சங்கினுடைய வலிய பெடையிடத்து, கிடந்து உறங்குகிற வயல் சூழ்ந்த ஊரையுடையவன். (அன்புடைய நெஞ்சத்தை உடைய இவள் பேதுறும்படியாக) வரம்பு கடந்தான், அடியார் எலும்புக்குள் எல்லாம அமுதம் வந்து ஊறும்படி அம்பலத்து நின்றாடி அருளுகிறவனுடைய பெரிய திருவலம் சுழி என்னும் படைவீடாகிய (வயலூரன் எனக் கூட்டுக).
சுழியல் - ஒரு சிவ தலம்.
சலஞ்சலம், ஒருவகை உயர் இனச் சங்கு.
அன்னம், அன்புடைய தன்பெடை நையுமாறு, அன்பில்லாத வேற்றினமாகிய சலஞ்சலப் பெடையின்மேல் துயிலும் வயல்களை உடைய ஊரன் என்றது இத்துறைப் பொருளை வலியுறுத்தும் உள்ளுறை உவமமாய் நின்றது.
27. இயற்பட மொழிதல்
இயற்பட மொழிதல் என்பது, தலைமகளை இயற்பழித்தவர்க்கு, அன்று நம் பொருட்டாக நம்புனத்தின்கண்ணே மாந்தழை ஏந்தி வந்தார். இன்று என் நெஞ்சத்தின் கண்ணார். அது கிடக்க மறந்து உறங்கினேன் ஆயின் அமளியிடத்து வந்து என் பயோதரத்தைப் பிரியாதார். இத்தன்மையாரை நீங்கள் கொடுமை கூறுவது என்னோ எனத் தலைமகள் அவனை இயற்பட மொழியா நிற்றல்.
378. அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம்
பலவர்அந் தண்கயிலை
மஞ்சார் புனத்தன்று மாந்தழை
யேந்திவந் தார்அவரென்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார்
நனவு கனவும்உண்டேல்
பஞ்சார் அமளிப் பிரிதலுண்
டோஎம் பயோதரமே.
கொளு
வரிசிலை யூரன் பரிசு பழித்த
உழையர் கேட்ப எழில்நகை உரைத்தது.
தெளிவுரை : தனக்கு அடங்காதாருடைய முப்புரங்களைக் கெடுத்த அழகிய குளிர்ந்த ஸ்ரீ கயிலாயத்தின் கண் மஞ்சு சூழ்ந்த புனத்தின்கண் அன்று மாந்தழையை ஏந்தி வந்தாராகிய அவர் இன்று கனவில் என் நெஞ்சின் கண்ணார். தடுப்பினும் அவ்விடத்தினின்றும் நீங்கார். நித்திரையால் கனவுண்டாயினும் பஞ்சார்ந்த அமளியின்கண்ணும் எனது பயோதரத்தைப் பிரிதலுண்டோ? ஆதலால் நீர் கொடுமையோடு கூறுகின்றதென்னை?
28. நினைந்து வியந்துரைத்தல்
நினைந்து வியந்துரைத்தல் என்பது, புனலாடப் பிரிந்து பரத்தையிடத்து ஒழுகா நின்ற தலைமகன், யான் தன்னை நினையாது வேறொன்றன் மேல் உள்ளத்தைச் செலுத்தும் வழியும் தான் என்னை நினைந்து என்னுள்ளம் புகா நின்றாள்; அவ்வாறன்றி யான் தன்னை நினையும் தோறும் பள்ளத்துப் புகும் புனல் போல நிறுத்த நில்லாது என் மனத்து ஆளாகா நின்றாள். ஆதலால் பிரிந்து ஈண்டிருத்தல் மிகவும் அரிது எனத் தலைமகளை நினைந்து வியந்து கூறா நிற்றல்.
379. தெள்ளம் புனற்கங்கை தங்கும்
சடையன்சிற் றம்பலத்தான்
கள்ளம் புகுநெஞ்சர் காணா
இறையுறை காழியன்னாள்
உள்ளம் புகும்ஒரு காற்பிரி
யாதுள்ளி உள்ளுதொறும்
பள்ளம் புகும்புனல் போன்(று)அகத்
தேவரும் பான்மையளே.
கொளு
மெல்லியற் பரத்தையை விரும்பி மேவினோன்
அல்லியங் கோதையை அகனமர்ந்(து) உரைத்தது.
இதன் பொருள் : மெல்லிய இயல்பினையுடைய பரத்தையை விரும்பிப் பொருந்தினோன் அல்லியால் தொடுத்த அழகிய மாலையை உடையாளை நெஞ்சால் விரும்பிச் சொன்னது.
தெளிவுரை : தெளிந்த நீருடைத்தாகிய கங்கை நிலை பெற்ற திருச்சடையை உடையவன், திருச்சிற்றம் பலத்தே உள்ளவன். பெரிய நுழையும் நெஞ்சினால் காணப்படாத இறைவன், அவன் உறைகிற சீகாழித்தலத்தை யொப்பாள். தான் ஒரு கால் விடாதே நினைந்து என் உள்ளத்தில் புகுதா நின்றாள், தான் தினந்தோறும் பரத்தையரின் பாவமான செய்தி தன் நெஞ்சுக்குப் பொருந்தாமை தன் நாயகியுடைய உண்மையான செய்தியை விரும்பிச் சொன்னது. காழி - சீகாழி.
29. வாயில் பெறாது மகன் திறம் நினைதல்
வாயில் பெறாது மகன் திறம் நினைதல் என்பது, பரத்தையிற் பிரிந்து நினைவோடு வந்த தலைமகன் வாயிற்கண் நின்று, இத்தன்மையான் என்னை வந்து அணைகின்றிலன்; யான் இனி வண்டுறையும் கொங்கையை எவ்வாறு நண்ணுவது என்று வாயில் பெறாது மகன் திறம் நினையா நிற்றல்.
380. தேன்வண்(டு) உறைதரு கொன்றையன்
சிற்றம் பலம்வழுத்தும்
வான்வள் துறைதரு வாய்மையன்
மன்னு குதலை யின்வா
யான்வள் துறைதரு மால்அமு
தன்னவன் வந்தணையான்
நான்வண்(டு) உறைதரு கொங்கைஎவ்
வாறுகொல் நண்ணுவதே.
கொளு
பொற்றொடி மாதர் நற்கடை குறுகி
நீடிய வாயிலின் வாடினள் மொழிந்தது.
இதன் பொருள் : அழகிய வளைகளையுடைய நாயகியது நல்ல வாசலிடத்தே குறுகி வாயில் நீடிக்கையால் மெலிந்து சொன்னது.
தெளிவுரை : தேனும் வண்டும் வாழும் திருக்கொன்றை மாலையை யுடையவன். (தேன் என்பது வண்டில் ஒரு சாதி; அல்லதூஉம் பூவின் தேன் என்னுமாம்), அவனுடைய திருச்சிற்றம்பலத்தை வாழ்த்துவார் பெறுகிற தெய்வலோகங்களில் வளவிய இடத்தை எனக்குத் தருகிற உண்மைத் தன்மையை உடையவன். (என்றது, கதிபெறுவது புதல்வராலே என்கையால்) நிலைபெற்ற இளஞ்சொல்லைச் சொல்லுகிற இனிய வாய்மையை உடையவன், வளவிய கடல்துறையால் தரப்பட்ட பெரிய அமுதத்தை ஒப்பவன் இவ்விடதத்தே வந்து அணைகிறான் இல்லை. சந்தன குங்குமத்தாலும் மாலைகளாலும் வண்டு உறையும் கொங்கைகளை நான் எத்தன்மையால் சேர்வேன்?
இது தோழிக்கு முன்னிலைப் புறமொழியாகத் தோழியைக் கொடுமை கூறியது.
30. வாயிற்கண் நின்று தோழிக்கு உரைத்தல்
வாயிற்கண் நின்று தோழிக்கு உரைத்தல் என்பது, வாயில் பெறாது மகன் திறம் நினையா நின்ற தலைமகன், நல்ல நாட்டுப் பொலிவும் மகளிர்தம் கண்ணிணையான் வந்த அச்சத்தால் வந்த மயக்கத்தால் உண்டாகிய வாட்டத்தை நீக்காத இவ்விரதம் யாதாம் என வாயில் வேண்டித் தோழிக்குக் கூறா நிற்றல்.
381. கயல்வந்த கண்ணியர் கண்ணிணை
யால்மிகு காதரத்தால்
மயல்வந்த வாட்டம் அகற்றா
விரதம்என் மாமதியின்
அயல்வந்த ஆடர(வு) ஆடவைத்
தோன்அம் பலம்நிலவு
புயல்வந்த மாமதில் தில்லைநன்
னாட்டுப் பொலிபவரே.
கொளு
பெருந்தகை வாயில் பெறாது நின்று
அருந்தகைப் பாங்கிக்(கு) அறிய உரைத்தது.
இதன் பொருள் : பெரிய தகைமைப் பாட்டை யுடையவன் வாயில் பெறாது நின்று அரிய தகைமைப்பாட்டை உடைய பாங்கிக்கு அறியும்படி சொன்னது.
தெளிவுரை : மிக்க மதியின் பக்கத்தே தன்னை ஏதம் செய்ய வந்த ஆடரவை ஆடும்படி வைத்தவன் (அம்பலம் நிலைபெற்ற) மேகத்தைச் செல்ல உயர்ந்த பெரிய மதிலாற் சூழப்பட்ட பெரும்பற்றப்புலியூரைச் சூழ்ந்த நல்ல நாட்டிற் சிறந்தவர்கள் கயலை யொத்த கண்களை உடையவர்கள்கண் இணைகளாலே உண்டான மிக்க அச்சத்தோடே பொருந்தின மயக்கத்தால் உண்டாகிய வாட்டத்தை அகற்றார். இத் தீ விரதம் என்தான். காதரம் - அச்சம்.
மதிக்கு உவமை தலைமகளும், அரவிற்கு உவமை தலைமகனும், ஈசனுக்கு உவமை தோழியும் என்றாக்கி அவ்வகைத்தாகிய பாம்பையும் மதியையும் தம்மில் பகையறுத்து ஓரிடத்தே விளங்க வைத்தாற் போல என்னுடன் அவட்கு உண்டாகிய வெறுப்பைத் தீர்த்து விளங்க வைத்தல் உனக்கும் கடன் என்றான் ஆயிற்றென உள்ளுறை காண்க.
31. வாயில் வேண்டத் தோழி கூறல்
வாயில் வேண்டத் தோழி கூறல் என்பது, வாயில் வேண்டிய தலைமகனுக்குப் பண்டு நீர் வரும் வழியிடை வரும் ஏதமும் இருளும் எண்ணாது கன்றை அகன்ற ஈற்றாவையொத்து எம்மாட்டு வருதிர். இன்று எம் பொருந்தாதார் தெருவே அன்று எம்மாட்டு ஊர்ந்து வந்த தேர் மேலேறிப் போகா நின்றீர். இது வன்றோ எம்மாட்டு நுமதருள் எனத் தோழி அவன் செய்தி கூறா நிற்றல்.
382. கூற்றா யினசின ஆளியெண்
ணீர்கண்கள் கோள்இழித்தால்
போல்தான் செறியிருள் பொக்கம்எண்
ணீர்கன்(று) அகன்றபுனிற்(று)
ஈற்றா வெனநீர் வருவது
பண்(டு)இன்(று)எம் ஈசர்தில்லைத்
தேற்றார் கொடிநெடு வீதியில்
போதிர்அத் தேர்மிசையே.
கொளு
வைவேல் அண்ணல் வாயில் வேண்டப்
பையரவு அல்குல் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : கூரிய வேலினையுடைய நாயகன் வாயில் வேண்டப் பாம்பின் படத்தினை ஒத்த அல்குலினையுடைய பாங்கி சொன்னது.
தெளிவுரை : கொடுத் தொழிலால் கூற்றுவன் தானே யாய் இருக்கிற சினத்த யாளி என்று விசாரியீர்; கண்களைக் கெடுத்தாற் போன்ற செறிகிற இருளின் குற்றத்தை விசாரியீர். கன்றைப் பிரிந்த ஈன்றணிமை உடைத்தாகிய ஈற்றுப்பசுவைப் போல, பண்டு காணும்; இப்போது எம்முடைய ஈசருடைய பெரும்பற்றப்புலியூரில் தெளியப்படாத பரத்தையருடைய கொடி கட்டப்பட்ட நெடிய தெருவிலே போகா நின்றீர். அங்ஙனம் வருந்தி எங்களிடத்து வந்த தேரின் மேலேறி, போகா நின்றீர். இதுவன்றோ எம்மாட்டு நும் ஆரருள் ஆயினவாறு.
32. தோழி வாயில் வேண்டல்
தோழி வாயில் வேண்டல் என்பது தலை மகளுக்கு அவன் செய்தது கூறிச் சென்று, அன்று நம் புனத்தின்கண்ணே வந்து யானை கடிந்த விருந்தினர் தாம் தம் பெருமையை நினையாது இன்று நம் வாயிற் கண் வந்து, வேட்கைப் பெருக்கம் தம்மிடத்துச் சிறப்ப நின்று ஒன்றும் வாய் திறக்கின்றிலர். இதற்கு யாம் செய்யுமாறு என்னோ எனத் தலைமகளைத் தோழி வாயில் வேண்டா நிற்றல்.
383. வியந்தலை நீர்வையம் மெய்யே
இறைஞ்சவிண் தோய்குடைக்கீழ்
வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற
வார்வந்த வாளரக்கன்
புயந்தலை தீரப் புலியூர்
அரன்இருக் கும்பொருப்பிற்
கயந்தலை யானை கடிந்த
விருந்தினர் கார்மயிலே.
கொளு
வாயில் பெறாது மன்னவன் நிற்ப
ஆயிழை அவட்குத் தோழி சொல்லியது.
இதன் பொருள் : வாயில் பெறாதே நாயகன் நிற்ப அழகிய ஆபரணத்தை உடையாளுக்குத் தோழி சொன்னது.
தெளிவுரை : கார் காலத்து மயிலை ஒப்பாய் ! பேதம் செய்ய வந்த வாள் அரக்கனுடைய தோளும் தலையும் நெரியப் பெரும்பற்றப்புலியூரில் தலைவன் வாழும் மலையில் மெல்லிய தலையினையுடைய யானையை நம்மைக் கொல்லாமையில் மாற்றினவருமாய் அந்நாயகர் நம்மிடத்து விருந்தினராய் வந்தவர் அலையுடைத்தாகிய கடல் சூழ்ந்த உலகத்தார் உண்மையாக வணங்கவும் விசும்பு தோய்ந்த குடையின் கீழே வேட்கை பெருகத் தம்மிடத்தே ஒரு வார்த்தையும் சொல்லுகிறார் இல்லை காண்.
33. மனையவர் மகிழ்தல்
மனையவர் மகிழ்தல் என்பது, தோழி வாயில் வேண்டத் தலைமகள் துனித்த நோக்கங் கண்டு, ஓகை கொண்டு, செல்ல வேண்டிக் காதலன் வந்தானென்று சொல்லும் அளவில் இவளுடைய காவியம் கண்கள் கழுநீர்ச்செவ்வியை வெளவுதல் கற்றன என மனையவர் தம்முள் மகிழ்ந்து கூறா நிற்றல். தலைப்பில் மனையவர் மறித்துரைத்தல் என்பது பழையவுரை.
384. தேவியங் கண்திகழ் மேனியன்
சிற்றம் பலத்தெழுதும்
ஓவியம் கண்டன்ன ஒண்ணுத
லாள்தனக்(கு) ஓகையுய்ப்பான்
மேவியம் கண்டனை யோவந்
தனன்என வெய்துயிர்த்துக்
காவியம் கண்கழு நீர்ச்செவ்வி
வெளவுதல் கற்றனவே.
கொளு
கன்னி மானோக்கி கனன்று நோக்க
மன்னிய மனையவர் மகிழ்ந்து ரைத்தது.
இதன் பொருள் : இளைய மான் நோக்கம் போன்ற நோக்கினையுடையாள் கோபித்துக் பார்க்க நிலை பெற்றமனையிலுள்ளார் மறுத்துச் சொன்னது. (கொளுவில் மறித்துரைத்தது எனவும் பாடம்)
தெளிவுரை : தன் தேவியுடைய அழகிய கண் விளங்குகிற திருமேனியை உடையவன். அவனுடைய திருச்சிற்றம் பலத்தே எழுதப்பட்ட சித்திரத்தைப் பார்த்தாலொத்த ஒண்ணுதலாள் அவளுக்கு மாயை சொல்லுவதாகப் பொருந்தின எழுச்சி தொடரும் மயலிலே கேட்டாயோ, இனி வந்தான் காண் என்று சொல்லுமளவில் வெய்தாகப் பெருமூச்சு விட்டு நீலப்பூவை ஒத்து அழகிய கண்கள் செங்கழுநீரின் செவ்வியைக் கொள்ளக் கற்றன.
முன்பு நாம் வெறுப்பன செய்யினும் முனிந்து பார்க்க அறியாத கண்கள் இவன் செய்த கொடுமையாலே மாராயம் சேரவும் வெகுண்டு பார்க்கும் படியாயிற்று, என நாயகனைக் கொடுமை கூறியவாறு. மாராயம் - வேந்தன் செய்யும் சிறப்பு; நற்செய்தி.
34. வாயின் மறுத்துரைத்தல்
வாயின் மறுத்துரைத்தல் என்பது, மனையவர் துனி கண்டு மகிழாநிற்ப, இவனை நமக்குத் தந்த பின்னர் நம்முடைய ஆயத்தார் முன்னே நங்காதலர் இன்று நம் கடையைக் கண்டர். இதுவன்றோ நம்மாட்டு அவர் அருள் எனத் தோழிக்குத் தலைமகள் வாயின் மறுத்துக் கூறா நிற்றல்.
385. உடைமணி கட்டிச் சிறுதேர்
உருட்டி உலாத்தரும்இந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன்
நான்முகன் மால்அறியா
விடைமணி கண்டர்வண் தில்லைமென்
தோகையன் னார்கண்முன்நம்
கடைமணி வாள்நகை யாய்இன்று
கண்டனர் காதலரே.
கொளு
மடவரல் தோழி வாயில் வேண்ட
அடல்வே லவனார் அருளு ரைத்தது.
இதன் பொருள் : மடப்பத்தை வெற்றியாகவுடைய நாயகி தோழி வாயில் வேண்ட வெற்றிவேல் உடையவன் நிறைந்த அருள் இருந்த படியைச் சொன்னது.
தெளிவுரை : உடைமணியைக் கட்டிச் சிறுதேர் உருட்டி உலாவுகிற நடவா நின்ற இம்மாணிக்கத்தை ஒப்பானைப் பெற்றபின் முற்காலத்து அயனும் மாலும் அறியப்படாதே வைத்தும் விடையை மேல் கொண்டு திரியும் நீலமணி போலும் திருமிடற்றை உடையவர் (என்றது இடபவாகவனனான நீலகண்டனை வாகன ரூபியாகப் போற்றும் அயனும் மாலும் அறிந்திலர் என்பது கருத்து) அவனுடைய வளவிய பெரும்பற்றப்புலியூரில் மெல்லிய மயிலை ஒப்பார்கள் முன்பு முத்து மணியை ஒத்த ஒளிசிறந்த முறுவலினை உடையாய் ! நம்முடைய வாசலைக் காதலர் இன்று கண்டார் இத்தனை அல்லவோ?
புதல்வனைத் தந்த பின்பு புலத்தல் முறைமை அன்றாயினும் மணிவாள் நகையார் முன்பு வாயில் நேர்தல் பெண்மை அன்றென மறுத்தாள் போலும். உலாத் தரும் புதல்வன் என்றமையால் இவன் உலாத்தரும் அளவும் புறத்து ஒழுக்கத்தே நின்றான் என்பது கருத்து. நடவா நின்ற மாணிக்கமெனவே, நம்மை வேண்டாராயினும் மாணிக்க நடைபெற்றால் ஒத்த தம் புதல்வனை வேண்டாராயினார் பரத்தையர் மேல் வைத்த அன்பினால் என்பது.
35. பாணனொடு வெகுளுதல்
பாணனொடு வெகுளுதல் என்பது, தோழிக்கு வாயில் மறுத்த தலைமகள், நின்னிடத்து அவர் நீங்காத அருள் பெரியரென்று நீ சொல்ல வேண்டுமோ? அது கிடக்க கொற்சேரியில் ஊசி விற்றுப் புலையா எம் இல்லத்து நின்னுடைய நல்ல நல்ல பொய்யைப் பொருந்தி நிற்கலுற்றோ நீ போந்தது என வாயில் வேண்டிய பாணனொடு வெகுண்டு கூறா நிற்றல்.
386. மைகொண்ட கண்டர் வயல்கொண்ட
தில்லைமல்(கு) ஊரர்நின்வாய்
மெய்கொண்ட அன்பினர் என்பதென்
விள்ளா அருள்பெரியர்
வைகொண்ட ஊசிகொல் சேரியில்
விற்றெம்இல் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை
ஆத்தின்னி போந்ததுவே.
கொளு
மன்னியாழ்ப் பாணன் வாயில் வேண்ட
மின்னிடை மடந்தை வெகுண்டு ரைத்தது.
இதன் பொருள் : நிலை பெற்ற யாழினையுடைய பாணன் வாயில் வேண்ட மின்னையொத்த இடையினையுடைய நாயகி கோபித்துச் சொன்னது.
தெளிவுரை : கருமை நிறத்தைக் கௌவிக் கொண்ட திருமிடற்றையுடையவர். அவருடைய வயல் சூழ்ந்த பெரும்பற்றப்புலியூரில் சிறந்த தலைவர் உன்னிடத்து உண்மை பொருந்தின அன்பை உடையவர் இன்று எனக்குச் சொல்வதென்? நீங்காத அருள் பெரியவர் அல்லரோ அவர்? கூரிய ஊசியைக் கொற்சேரியிலே விற்று, (எங்களுக்கு நீ அவர் செய்தி சொல்லுவது கொற்சேரியில் ஊசி விற்றதனோடு ஒக்கும்; ஊசியின் கூர்மை சொல்லுவாள் போன்று இவள் சொல் கூர்மை சொன்னபடி) எம் இல்லத்து உன்னுடைய மிகவும் அழகிதாய்த் தோன்றும் பொய்யைக் கொண்டு நிற்பதாக (உற்றோ) புலையாகி ஆத்தின்றவனே, நீ வந்தது?
நீங்காத அருள் புரிவோர் என்றது, அவர் பரத்தையிடத்து அன்பினாற் பிரிந்தாரல்லர். தம் காரணத்தால் அவர்கள் வருந்துகையில் அருள் உடைமையால் பிரிந்தார் என்க. இப்பொய் சொல்லியும் என் முன்னே நிற்பதாகவோ வந்தாய். என் கையில் கல்லும் கட்டியும் முதலாயின கொண்டு வெருவிக்கத் தொடங்கினார்களாகக் கொள்க. ஆத்தின்னி - சொல்லினிமை நோக்கி ஒற்று மிக்கது.
36. பாணன் புலந்துரைத்தல்
பாணன் புலந்துரைத்தல் என்பது தலைமகள் வெகுண்டு உரையா நிற்ப, நின் புருவம் நெரிய, வாய் துடிப்ப, என்னை எறிதற்குக் கல் எடுக்க வேண்டா; நினது கரிய கண்களின் சிவப்பாற்றுவாயாக; நீ வெகுளப்படுவதன்று; நினக்குப் பல்லாண்டு செல்வதாக; யான் வேண்டிய இடத்துப் போய் நின்னடியை வலங்கொள்ளா நின்றேன் என வாயில் பெறாமையின் பாணன் புலந்து கூறா நிற்றல்.
387. கொல்லாண் டிலங்கு மழுப்படை
யோன்குளிர் தில்லையன்னாய்
வில்லாண் டிலங்கு புருவம்
நெரியச்செல் வாய்துடிப்பக்
கல்லாண்(டு) எடேல்கருங் கண்சிவப்
பாற்ற கறுப்பதன்று
பல்லாண்(டு) அடியேன் அடிவலம்
கொள்வன் பணிமொழியே.
கொளு
கருமமலர்க் கண்ணி கனன்றுகட் டுரைப்பப்
புரியாழ்ப் பாணன் புறப்பட்டது.
இதன் பொருள் : கரிய மலரை ஒத்த கண்களை உடையாள் கோபித்துச் சொல்ல விரும்பத்தக்க யாழினையுடைய பாணன் புறப்பட்டது.
தெளிவுரை : கொல் தொழில் இடத்தே விளங்குகிற மழுவாயுதத்தை உடையவன், அவனுடைய குளிர்ந்த பெரும்பற்றப்புலியூரை ஒப்பாய் ! வில்லை அடிமை கொண்டு விளங்குகிற புருவம் நெரியவும் சிவந்த வாய் துடிப்பவும் அவ்விடத்துக் கல் எடாதே கொள்; கரிய கண்கள் சிவப்பை ஆற்றுவாயாக. (இவை என்னெனில்) நான் விண்ணப்பம் செய்த வார்த்தை கோபிக்கப்படுவது ஒன்றன்றுகாண். உனக்குப் பல்லாண்டுகள் சொல்லுவதாகத் தாழ்ந்த வார்த்தையினை உடையாய் ! அடியேன் சீர்பாதம் வலங்கொண்டு போகின்றேன்.
இனன் ஆகையாலே கல்லெடுத்த விடத்தும் கலங்காது நின்று புகழ்ந்தும் பல்லாண்டு கூறியும் தன் பொய் மெய்யாக்கியும் கோபம் நீக்கிக் கழன்றனன். தாழ்ந்த வார்த்தையினை உடையாள் என்றமையால், உனக்கு இக்கடுஞ்சொல் தகாது என்றது.
37. விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல்
விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல் என்பது, வாயில் பெறாது பாணன் புலந்து நீங்கா நிற்ப, யாவர்க்கும் வாயில் நேராது வெகுண்டுரைத்தலால் தழல்வேல் போல மிளிர்ந்து முத்தம் பயக்கும் இவளுடைய கண்கள் விருந்தொடு வந்தான் என்று சொல்லும் அளவில் பண்டை நிறமாகிய கருங்குவளையது செவ்வி பரந்த என்ன மனையறக் கிழத்தியோ என இல்லோர் தம்முள் கூறா நிற்றல். (தணிந்தமை என்பது பாடபேதம்.)
388. மத்தக் கரியுரி யோன்தில்லை
யூரன் வரவெனலும்
தத்தைக் கிளவி முகத்தா
மரைத்தழல் வேல்மிளிர்ந்து
முத்தம் பயக்கும் கழுநீர்
விருந்தொடென் னாதமுன்னம்
இந்தக் கருங்குவ ளைச்செவ்வி
யோடிக் கெழுமினவே.
கொளு
பல்வளை பரிசுகண்டு இல்லோர் இயம்பியது.
இதன் பொருள் : பல வளைகளை உடையாள் இயல்பைக் கண்டு இல்லிலுள்ளார் சொன்னது.
தெளிவுரை :  மதயானையின் தோலைப் போர்த்தவன் அவனுடைய பெரும்பற்றப்புலியூரின் தலைவன் வாரா நின்றான் என்று சொல்லுமளவில் கிளியை ஒத்த வார்த்தையினை உடையாள் முகமாகிய தாமரைப் பூவில் வெம்மையுடைத்தாகிய வேல்போல் உலாவிக் கண்ணின் நீர்த்துளியாகிய முத்துக்களை விடுகிற கண்ணாகிய செங்கழுநீர்கள் (செங்கழுநீர் என்றது கோபத்தால் எறிவிக்கையால்) விருந்தின ருடனே வந்தான் என்று சொல்லுவதற்கு முன்னே விரையக் கரிய நீலப்பூவின் செவ்வியை அடைந்தன என்ன, இல்லக் கிழத்தியோ என்றது.
38. ஊடல் தணிவித்தல்
ஊடல் தணிவித்தல் என்பது விருந்தேற்றுக் கொண்ட தலைமகள் உழை சென்று, நம்முடைய தோன்றலைத் தனக்குத் துணையாகக் கொண்டுவந்து தோன்றுதலான் நினதுளத்துக் கவற்சியை ஒழிந்து இனி நம் அரசற்குக் குற்றேவல் செய்வாயாக எனத் தோழி அவளை ஊடல் தணிவியா நிற்றல்.
389. கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக்
காட்டிடை ஆட்டுவந்த
தவலங்கிலாச்சிவன் தில்லையன்
னாய்தழு விம்முழுவிச்
சுவலங் கிருந்தநம் தோன்றல்
துணையெனத் தோன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற்
பாலை அரசனுக்கே.
கொளு
தோன்றலைத் துணையொடு தோழி கண்டு
வான்தகை மடந்தையை வருத்தம் தணித்தது.
இதன் பொருள் : பிள்ளையைத் துணையாக வருதலோடே தோழி கண்டு பாலியத் தகைமைப் பாட்டையுடைய நாயகியை வருத்தம் தணியும்படி சொன்னது.
தெளிவுரை : கானம் பாய்கிற பேய்த்திரள்கள் திருக்கூத்தைக் கண்டு களித்துக் கரணமிட்டுச் சுடுகாட்டில் ஆடுதலை விரும்புகிற கெடுதல் இல்லாத சிவனுடைய பெரும்பற்றப்புலியூரை ஒப்பாய் ! முத்தமிட்டுக் கொண்டு (சுவலிடத்து ஏறியிருந்த) நம் தோன்றலைப் புதல்வனைக் கொண்டு மனையிடத்தே வருகிறபொழுதே நாயகி ஊடல் அறிவான் போல் பிள்ளையைப் பாராட்டி வருதல் இந்நிலத்தைக் குலைத்து நீ ஊடுதல் போல ஆங்கு அவலமாயிருந்தது; அதனால் ஒழிவாயாக; துன்பத்தைப் விட்டு அரசன் ஏவினது செய்கையே முறைமை. அரசன் என்றது ஈண்டு உவமை வாசகம்.
39. அணைந்த வழி யூடல்
அணைந்த வழி யூடல் என்பது, தோழியால் ஊடல் தணிவிக்கப்பட்டுப் பள்ளியிடத்தாளாகிய தலைமகள், நீ செய்கின்ற இதனையறியின் நின் காதலிமார் நின்னை வெகுள்வர். அது கிடக்க, யாம் மேனி முழுதும் சிறுவனால் உண்டாக்கப்பட்ட பால் புலப்படும் தன்மையை உடையேம். அதன்மேல் யாமும் நீ செய்கின்ற இக்கள்ளத்தை விரும்பேம். அதனால் எங்காலைத் தொடாது ஒழி; எங்கையை விடுவாயாக எனத் தலைமகன் தன்னை அணைந்தவழி ஊடா நிற்றல்.
390. சேல்தான் திகழ்வயல் சிற்றம்
பலவர்தில் லைநகர்வாய்
வேல்தான் திகழ்கண் இளையார்
வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பால்தான் திகழும் பரிசினம்
மேவும் படி(று)உவவேம்
கால்தான் தொடல்தொட ரேல்விடு
தீண்டல்எம் கைத்தலமே.
கொளு
தெளிபுனல் ஊரன் சென்றணைந் தவழி
ஒளிமதி நுதலி ஊடி உரைத்தது.
இதன் பொருள் : தெளிந்த புனலை உடைத்தாகிய ஊரை உடையவன் சென்று அணைந்தவிடத்து ஒளியுடைத்தாகிய மதியை ஒத்த நெற்றியினை உடையாள் வெறுத்துச் சொன்னது.
தெளிவுரை : சேல் சிறந்த வயல் சூழ்ந்த சிற்றம்பலத்தே உள்ளவருடைய பெரும்பற்றப்புலியூராகிய நகரிடத்துள்ள வேல் போலச் சிறந்த கண்களையுடைய இளையோர் கோபிப்பர்; அதுவேயும் அன்றி உடம்பானது பிள்ளையால் உண்டாக்கப்பட்ட முலைப்பாலால் இகழத்தக்க பரிசினை உடையேம். அதுவேயும் அன்றி நீர் செய்யும் வஞ்சகங்களை விரும்பேம்; ஆதலால் காலைப் பிடியாதே கொள். எங்களைத் தீண்டப் பெறாய். ஆதலால் எம் கைத்தலங்களை விடுவாயாக.
40. புனலாட்டுவித்தமை கூறித் புலத்தல்
புனலாட்டுவித்தமை கூறித் புலத்தல் என்பது, அணைந்த வழி ஊடாநின்ற தலைமகள் ஊடல் தீரா நின்ற தலைமகனோடு, இவர் செய்த பிழையெல்லாம் பொறுக்கலாம். பலரும் அறிய ஒருத்தியைப் புனலாட்டு வித்து அது செய்யாதார் போல என் மனையின்கண் இவர் வந்து நிற்கின்ற இது எனக்குப் பொறுத்தல் அரிது எனத் தணிக்கத் தணியாது பரத்தையைப் புனலாட்டு வித்தமை கூறிப் புலவா நிற்றல்.
391. செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம்
பலவர்தில் லைநகரோர்
பந்தார் விரலியைப் பாய்புன
லாட்டிமன் பாவிஎற்கு
வந்தார் பரிசும்அன் றாய்நிற்கும்
ஆறென் வளமனையில்
கொந்தார் தடந்தோள் விடங்கால்
அயிற்படைக் கொற்றவரே.
கொளு
ஆங்கதனுக்(கு) அமுக்கம் எய்தி
வீங்கு மென்முலை விட்டுரைத்தது.
இதன் பொருள் : அவன் முன்பு செய்து வந்த புதுப் புனலாட்டுக்கு வெறுத்துப் பொழுதைக்குப் பொழுது விம்முகிற முலையினையுடையாள் தோன்றச் சொன்னது.
தெளிவுரை : நறுநாற்றம் உடைத்தாகிய கொன்றை மாலையாகிய சிவந்த மாலையையுடைய திருச்சிற்றம்பலநாதருடைய பெரும்பற்றப்புலியூராகிய நகரியிடத்துப் பந்தின் தொழில் பயின்ற விரலினை உடையாளைப் புனலாடப் பண்ணிப் புனலாட வந்தவர்கள் பாவியேற்குச் செய்தியோடு நிற்கும்படி என்தான்? வளவிய மனையிடத்தில் வந்து கொத்து மாலை நிறைந்த பெரிய தோள்களையும் விடத்தைக் காலுகிற வேலையும் உடைய நெற்றியை உடையவர் (நிற்கும்படி என் என்று கூட்டுக.)
41. கலவி கருதிப் புலத்தல்
கலவி கருதிப் புலத்தல் என்பது, புனலாட்டு வித்தமை கூறிப் புலவா நின்ற தலைமகள், ஊடல் தீர்க்க நுதலும் தோளும் முதலாயினவற்றைத் தை வந்து வருடித் தலையளி செய்யா நின்ற தலைமகளோடு, எம்முடைய சிறிய இல்லின்கண் வந்து அன்று நீயிர் செய்த தலையளி எங்கட்கு அன்று வேண்டுதும் ஆயினும் இன்று உமது திருவருள் எங்கட்கு நீயிர் வந்த இத்துணையும் அமையும்; வேறு நீயிர் தலையளி செய்ய வேண்டுவதில்லை எனக் கலவி கருதிப் புலவா நிற்றல்.
392. மின்துன் னியசெஞ் சடைவெண்
மதியன் விதியுடையோர்
சென்றுன் னியகழற் சிற்றம்
பலவன்தென் னம்பொதியில்
நன்றும் சிறியவர் இல்எம(து)
இல்லம்நல் லூரமன்னோ
இன்றுன் திருவருள் இத்துணை
சாலுமன் எங்களுக்கே.
கொளு
கலைவளர் அல்குல் தலைமகன் தன்னொடு
கலவி கருதிப் புலவி புகன்றது.
இதன் பொருள் : மேகலை அணிந்த அல்குலினை உடையாள் நாயகனுடனே கலவியைக் கருதிப் புலவி யான வார்த்தையைச் சொன்னது.
தெளிவுரை : ஒளி சிறந்த செஞ்சடையில் வெள்ளிய பிறையை வைத்தவன் தொண்டு செய்து தன்னை அடைதற்கு ஆகம விதியுடையோர்கள் கன்ம காண்டத்தினின்று ஞான காண்டத்தில் சென்று நினைக்கிற திருவடிகளையுடைய திருச்சிற்றம்பலநாதன்; அவனுடைய தெற்கின்கண் உண்டாகிய அழகிய பொதியின் மலையிடத்து மிகவும் சிறியோராகிய குறவர்குடி எங்கள் குடி; நல்ல ஊரை உடையவனே ! இக்காலத்து உன்னுடைய திருவருள் இத்தனையும் வேண்டுவது போலும் எங்கள் அளவில்.
எனவே முற்காலம் இவன் துன்புறவும் தாங்கள் அறியார் ஆனவை தோன்றச் சொன்னது.
42. மிகுத்துரைத்து ஊடல்
மிகுத்துரைத்து ஊடல் என்பது, கலவி கருதிப் புலவா நின்ற தலைமகள் புணர்தல் உறாநின்ற தலைமகனுடன், நீர் விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுமிய குடியில் உள்ளீர் எம் போல்வாரிடத்து, இவ்வாறு புணர்தல் விரும்புதல் நுமக்கு விழுமிய அல்ல என மிகுத்துரைத்து ஊடா நிற்றல்.
393. செழுமிய மாளிகைச் சிற்றம்
பலவர்சென்(று) அன்பர்சிந்தைக்
கழுமிய கூத்தர் கடிபொழில்
ஏழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய
நல்லூர் விழுக்குடியீர்
வழுமிய அல்லகொல் லோஇன்ன
வாறு விரும்புவதே.
கொளு
நாடும் ஊரும் இல்லும் சுட்டி
ஆடற் பூங்கொடி ஊடி உரைத்தது.
இதன் பொருள் : நாட்டையும் ஊரையும் வீட்டையும் குறித்து அசைந்த பூங்கொடியினை ஒப்பாள் வெறுத்துச் சொன்னது.
தெளிவுரை : வளவிய மாடங்களால் சூழப்பட்ட திருச்சிற்றம்பலத்தே உள்ளவர் அன்பர் சிந்தைகளில் சென்று செறிகிற திருக்கூத்தை உடையவர் அவரால் காக்கப்பட்ட பூமிகள் ஏழினும் வாழியரோ, சீரிய நாட்டில் சீரிய நல்லூரில் சீரிய குடியில் உள்ளீர் ! இவ் ஒழுக்கத்தை விரும்புவது சீரியதன்று போலிருந்தது.
என நாடு ஊரும் இல்லும் புகழ்ந்து, நீர் இவற்றிற்குத் தக்க ஒழுக்கமுடையீர் அல்லீர். எனவே கூட்டத்துக்கு உடன்பாடு இல்லாமை தோன்றியது.
43. ஊடல் நீட வாடி உரைத்தல்
ஊடல் நீட வாடி உரைத்தல் என்பது, தணிக்கத் தணியாது மிகுத்துரைத்துத் தலைமகள் மேன் மேலும் ஊடா நிற்ப, அன்று அம்மலையிடத்துத் தன்னை எய்துதற்கு ஓர் உபாயமின்றி வருந்தா நிற்பயான் உய்யும் வண்ணம் தன் இணை மலர்க் கண்ணினது இனிய நோக்கத்தைத் தந்தருளி என்னைத் தன் மயமாக்கிய நம் பெண் அமுதம் அது அன்று; இது நம்மை வருத்துவதோர் மாயமாம் எனத் தன் நெஞ்சிற்குச் சொல்லி ஊடல் நீடத் தலைமகள் வாடா நிற்றல்.
394. திருந்தேன் உயநின்ற சிற்றம்
பலவர்தென் னம்பொதியில்
இருந்தேன் உயவந்(து) இணைமலர்க்
கண்ணின்இன் நோக்கருளிப்
பெருந்தேன் எனநெஞ் சுகப்பிடித்(து)
ஆண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தேல் அதுவன்(று) இதுவோ
வருவதோர் வஞ்சனையே.
கொளு
வாடா ஊடல் நீடா வாடியது.
இதன் பொருள் : ஒரு வழியாலும் திருந்தாதவன் உய்யும்படி தன்கண் வரும் திருமேனி காட்டி நின்ற சிற்றம்பலநாதன், அவருடைய தெற்கின்கண் உண்டாகிய அழகிய பொதியின் மலையிடத்தே முயற்சியின்றியே இருந்த நான் பிழைக்கும்படி வந்து இணையான மலரை ஒத்த கண்களின் இனிய நோக்கைத் தந்து பெருந்தேனை ஒப்ப இனிய தூய நெஞ்சு உருகும்படி பற்றித் தன் வசமாக்கிக் கொண்ட நம் பெண்ணாகிய அமிழ்தே, அல்ல காண் இது, வரக் கடவதொரு வஞ்சனைகாண்; நெஞ்சமே வருந்தாதே கொள்.
தெளிவுரை : ஒரு வழியாலும் திருந்தாதவன் உய்யும்படி தன்கண் வரும் திருமேனி காட்டி நின்ற சிற்றம்பலநாதன், அவருடைய தெற்கின்கண் உண்டாகிய அழகிய பொதியின் மலையிடத்தே முயற்சியின்றியே இருந்த நான் பிழைக்கும்படி வந்து இணையான மலரை ஒத்த கண்களின் இனிய நோக்கைத் தந்து பெருந்தேனை ஒப்ப இனிய தூய நெஞ்சு உருகும்படி பற்றித் தன் வசமாக்கிக் கொண்ட நம் பெண்ணாகிய அமிழ்தே, அல்ல காண் இது, வரக் கடவதொரு வஞ்சனைகாண்; நெஞ்சமே வருந்தாதே கொள்.
44.  துனியொழிந்து உரைத்தல்
துனியொழிந்து உரைத்தல் என்பது, ஊடல் நீடலாம் தன்மை கண்ட தலைமகள் அன்று நம் காதலர் மிக்க இருளின் கண்ணே அரிதிரண்டு யானை வேட்டம் செய்யும் அதர் அகத்துத் தமது வேலே துணையாக வந்து இயல்பைப் பொருந்திய அன்பை நமக்குத் தந்தவர்க்கு இன்று நாம் உடம்படாது நிற்கும் இந்நிலைமை என்னோ எனத் துனியொழிந்து அவனோடு புணர்ச்சிக்கு உடம்பட்டு நிற்றல்.
395. இயல்மன்னும் அன்புதந்ற தார்க்(கு)என்
நிலைஇமை யோர்இறைஞ்சும்
செயல்மன்னும் சீர்க்கழல் சிற்றம்
பலவன்தென் னம்பொதியில்
புயன்மன்னு குன்றில் பொருவேல்
துணையாப்பொம் மென்இருள்வாய்
அயன்மன்னும் யானை துரந்(து)அரி
தேரும் அதரகத்தே.
கொளு
தகுதியின் ஊரன் மிகுபதம் நோக்கிப்
பனிமலர்க் கோதை துனியொ ழிந்தது.
இதன் பொருள் : நாயகனுடைய அன்பு மிக்க செவ்வியைப் பார்த்துத் தகுதியுடைமையால் அவ்விடத்தே ஒரு விசாரத்தைப் பாங்கி சொன்னது.
தெளிவுரை : தேவர்கள் வணங்குகிற செய்தி நிலைபெற்ற சிறந்த திருவடிகளையுடைய சிற்றம்பலநாதனுடைய தெற்கின்கண் உள்ளதாகிய பொதியின் மலையிடத்து மேகங்கள் நிலைபெற்ற பக்கத்தே சிறந்த வேலைத் துணையாகச் செறிந்த இருளிடத்தே பக்கங்கள் தோறும் நிலைபெற்ற யானைகளை ஓட்டிச் சிங்கங்கள் அவை புக்க இடத்தைத் தேடுகிற வழியிடத்தே இயற்கை நிலை பெற்ற அன்பைத் தந்தவர்க்கு நீ இங்ஙனே வெறுத்து நிற்கிற நிலை என்தான்? இது தகாது என்றவாறு.
45. புதல்வன் மேல் வைத்துப் புலவி தீர்தல்
புதல்வன் மேல் வைத்துப் புலவி தீர்தல் என்பது துனி ஒழித்துக் கூடிப் பிரிந்தவழிப் பின்னும் பரத்தைமாட்டுப் பிரிந்தானென்று கேட்டுப் புலந்து வாயின் மறுக்க வாயிற்கண் நின்று விளையாடா நின்ற புதல்வனை எடுத்தணைத்து தம்பலமிட்டு முத்தங் கொடுத்து அது வாயிலாக கொண்டு தலைமகன் செல்லா நிற்ப அப்புதல்வனை வாங்கி அணைத்துக் கொண்டு அவன் வாயின் தம்பலம் தன் வாயிற் படுதலான் எல்லார்க்கும் பொதுவாகிய தம்பலத்தைக் கொண்டு வந்தோ நீ எம்மைக் கொண்டாடுவது? அதுகிடக்க இதனை நினக்குத் தந்தவாறு சொல்லுவாயாக எனப் புதல்வன்மேல் வைத்துத் தலைமகள் புலவி தீரா நிற்றல்.
396.  கதிர்த்த நகைமன்னும் சிற்றவ்வை
மார்களைக் கண்பிழைப்பித்(து)
எதிர்த்(து)எங்கு நின்(று)எப் பரிசளித்
தான்இமை யோர்இறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை
ஈசர்வண் தில்லைநல்லார்
பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வர்
எம்மைப் பூசிப்பதே.
கொளு
புதல்வனது திறம்புகன்று
மதரரிக் கண்ணி வாட்டந் தவிர்ந்தது.
இதன் பொருள் : பிள்ளையுடைய திறத்தைச் சொல்லுவாள் போன்று நல்ல நிறம் பரந்த கண்களை உடையாள் வாடினது.
தெளிவுரை : தேவர் வணங்கப்பட்ட மதுநிலைபெற்ற கொன்றை மாலை அணிந்த நீண்ட திருச்சடையை உடைய ஈசர், அவருடைய வளவிய பெரும்பற்றப்புலியூரிடத்து நல்லோராகிய பரத்தையர்க்கெல்லாம் பொதுவாகிய நின் பிதாவின் தம்பலத்தைக் கொண்டு வந்தோ, புதல்வனே நீ எம்மைக் கொண்டாடுவது? அதுகிடக்க; ஒளி யுடைத்தாகிய முறுவல் நிலைபெற்ற சிற்றன்னையாகிய தில்லை நல்லாரைக் கண்புதைப்பித்து அவ்வளவிலே உன்னைச் சிந்தித்து எவ்விடத்து உனக்குத் தம்பலம் இட்டான் நின்று?
46. கலவி இடத்து ஊடல்
கலவி இடத்து ஊடல் என்பது புதல்வனை வாயிலாகப்புக்கு, புலவி தீர்த்துப் புணர்தல் உறாநின்ற தலைமகனைத் தலைமகள் ஒரு காரணத்தால் வெகுண்டு, அவன் மார்பகத்து உதைப்ப, அவ்வெகுடல் தீர வேண்டி அவன் அவள் காலைத் தன் தலைமேல் ஏற்றுக் கொள்ள அது குறையாக அவள் புலந்தழா நின்றமையை அவ்விடத்து உழையர் தம்முள் கூறா நிற்றல்.
397. சிலைமலி வாணுதல் எங்கைய(து)
ஆகம் எனச்செழும்பூண்
மலைமலி மார்பின் உதைப்பத்தந்
தான்தலை மன்னர்தில்லை
உலைமலி வேற்படை ஊரனின்
கள்வர்இல் என்னஉன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த
மாலை கலுழ்ந்தனவே.
கொளு
சீறடிக்(கு) உடைந்த நாறிணர் தாரவன்
தன்மை கண்டு பின்னும் தளர்ந்தது.
இதன் பொருள் : சிறிய அடியினை உடையாள் காரணமாக மலர் மாலையணிந்த தலைமகன் நிலைமையை அறிந்து மேலும் வருந்தியது.
தெளிவுரை : வில்லையொத்து ஒளி சிறந்த நெற்றியினை உடைய என் தங்கையுடைய தன் மார்பைக் கருதி (வளவிய பூணையுடைய) மலையை ஒத்த மார்பினை நான் உதைப்ப மார்பினால் ஏலாதே தலையால் ஏற்றான். நெஞ்சில் இருக்கிறவர்களுக்கு நோம் என்று கருதி தலையால் ஏற்றான் என்க. முதலியாரின் பெரும்பற்றப்புலியூரில் தொழிலால் சிறந்த வேலாயுதத்தை உடைய நாயகனுக்குக் கள்வரில்லை என்று விசாரித்து மேகலையால் சிறந்த அவளது கண்கள் முத்தமாலை போலக் கண்ணீர்த் துளி தாரையாம்படி அழுதன.
47. முன்னிகழ்வு உரைத்து ஊடல் தீர்தல்
முன்னிகழ்வு உரைத்து ஊடல் தீர்தல் என்பது கலவியிடத்து ஊடா நின்ற தலைமகளுக்கு யாம் கொடிய நெறியைச் சென்று, சிறிய ஊரின்கண் மரை அதன் பள்ளியின் இச்செறிய மெல்லிய முலைகள் என் மார்பிடை வந்து அடர்க்கத் தங்கள் சிறிய துயிற்கு மாறுகண்டிலம்; அதனை நீ உள்ளியும் அறிதியோ வென முன்னிகழ்வு உரைத்துத் தலைமகன் ஊடல் தீரா நிற்றல்.
398. ஆறூர் சடைமுடி அம்பலத்(து)
அண்டர்அண் டம்பெறினும்
மாறூர் மழலிடை யாய்கண்
டிலம்வண் கதிர்வெதுப்பு
நீறூர் கொடுநெறி சென்றிச்
செறிமென் முலைநெருங்கச்
சீறூர் மரையத ளில்தங்கு
கங்குற் சிறுதுயிலே.
கொளு
முன்னி கழ்ந்தது நன்னுதற்(கு) உரைத்து
மன்னு புனலூரன் மகிழ்வுற்றது.
இதன் பொருள் : முன் நிகழ்ந்து படிகளை நல்ல நெற்றியினை உடையாளுக்குச் சொல்லி நிலைபெற்ற புனலாற் சிறந்த ஊரினை உடையவன் மகிழ்ந்தது.
தெளிவுரை : கங்கையானது இற்றைவரை ஒழுகுகிற சடையினையுடைய அழகிய அம்பலத்தில் தேவராகிய முதலியாரால் காணப்பட்ட உலகங்கள் எல்லாவற்றையும் பெறினும் தவழாநின்ற இடபத்தினை உடையாய் ! ஒப்பாகக் கண்டிலோம். வளவிய கிரணங்கள் வெதுப்பும் தூளி பரந்த கொடிய வழியிலே போய் இந்தச் செறிந்த முலைகள் முயங்கச் சிற்றூரில் மரைத் தோலிலே அவதரித்தவற்றை இரவிற் சிறிது துயிலுக்கு மாறு உலகங்கள் எல்லாம் பெற்றாலும் நேராகக் கண்டிலம்.
48. பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல்
பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல் என்பது, முன்னிகழ் வுரைத்து ஊடல் தீர்த்து இன்புறப் புணரப்பட்ட தலைமகள் பிறர்க்கும் நீ இவ்வாறு இன்பம் செய்தி என்று கூறி, நின்னை ஒழிய யான் வேறு ஒருத்தியையும் அறியேன் என்ற தலைமகனுக்கு, நின் பரத்தை போகாநின்றவள் நம் வாயிற்கண் நின்று தேர் உருட்டி விளையாடா நின்ற புதல்வனைக் கண்டு, நின் மகன் என்று ஐயுற்றுத் தழுவ, நீ ஐயுற வேண்டா, அவன் உன் மகன்; உறவு மெய்யாகிய உறவே; ஈதும் உனது இல்லமே. ஈண்டு வருவாயாக என்று யான் கூற, அது கேட்டுத் தான் நாணிப் போயினாள். யான் அவளை அறியேனாக நீ மாயங் கூற வேண்டுவதில்லை எனத் தான் பரத்தையைக் கண்டமை கூறிப் பின்னும் அவனோடு புலவா நிற்றல்.
399. ஐயுற வாய்நம் அகன்கடைக்
கண்டுவண் தேர்உருட்டும்
மையுறு வாட்கண் மழவைத்
தழுவமற்(று) உன்மகனே
மெய்யுற வாம்இதுன் இல்லே
வருகென வெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி
யூரன்ன காரிகையே.
கொளு
பரத்தையைக் கண்ட பவளவாய் மாதர்
அரத்த நெடுவேல் அண்ணற்(கு) உரைத்தது.
இதன் பொருள் : அவன் பரத்தையைக் கண்டேன் என்ற பவளம் போலும் வாயினையுடைய மாதர் சிவந்த நெடிய வேலினையுடைய நாயகனுக்குச் சொன்னது.
தெளிவுரை : வளவிய சிறுதேரை உருட்டி விளையாடுகிற, மை பொருந்தின ஒளி சிறந்த கண்களையுடைய பிள்ளை நம் இல்லிடத்தே கண்டு தன் பிள்ளையாகக் கருதி நம் வாயிலிலே நிற்கையால், ஐயப்பட்டு, அவ் ஐயத்துடனே தழுவிக் கொண்ட பொழுது, உன் பிள்ளையேகாண். உன்னுடன் உண்டாகிய உறவு மெய்யான உறவேகாண். உன் அகமேகாண். வாராய் என்று நான் சொல்வதற்கு நாணி மேனி வெளுத்துப் போனாள். கையிலே பொருந்தின மான் மறியை உடையவனுடைய பெரும்பற்றப்புலியூரை ஒத்த வீறுபட்ட அழகினை உடையவள்.
49. ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல்
ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல் என்பது, பரத்தையைக் கண்டமை கூறிப் புலந்து வேறுபட்ட தலைமகளுக்கு, இத்தன்மையனாய் யாவர்க்கும் ஊதியம் ஆகலின் அன்பான் அன்றி அருளால் பரத்தையர்க்கும் தலையளி செய்யவேண்டுமன்றே; புறப் பெண்டிரைப் போல யாம் அவனோடு புலக்கற்பாலேம் அல்லேம்; அவன் வரும்பொழுது எதிர் தொழுதும், போம் பொழுது புறந்தொழுதும், புதல்வனைப் பயந்திருக்கை அன்றோ நமக்குக் கடனாவது எனத்தோழி தலைமகனது ஊதியம் எடுத்துரைத்து அவளை ஊடல் தீர்த்து அவனோடு பொருத்தப் பண்ணா நிற்றல்.
400. காரணி கற்பகம் கற்றவர்
நற்றுணை பாணர்ஒக்கல்
சீரணி சிந்தா மணியணி
தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர்
தம்சங்க நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க்(கு) ஊரன்மற்(று)
யாவர்க்கும் ஊதியமே.
கொளு
இரும்பரிசில் ஏற்றவர்க்(கு) அருளி
விரும்பினர் மகிழ மேவுதல் உரைத்தது.
இதன் பொருள் : வந்து ஏற்றவர்க்குப் பரிசிலைக் கொடுத்து, மற்று விரும்பினார் விரும்பின பொருள் பெற்று மகிழும்படி பலர்க்கும் பொருந்த மேவுதலைச் சொன்னது.
தெளிவுரை : வரையாது கொடுத்தலால் மேகத்தை ஒப்பான்; வேண்டினது கொடுத்தலால் அழகிய கற்பக விருட்சத்தை ஒப்பான்; நூலறிவால் நல்ல துணையாய் இருப்பான்; இச்சையாலும் கெழுதகைமையாலும் பாணர்க்கு இனமுறையாய் இருப்பான்; நினைத்தது கொடுப்பதில் எல்லாம் உடைத்தாகிய சிந்தா மணியை ஒப்பான்; அழகிய பெரும்பற்றப்புலியூரானின் அடிகளுக்கு மாலையாகிய கொன்றையை ஒப்பான்; சான்றோர் தமக்குத் தொலையாத நிதியாய் இருத்தலின் சங்க நிதியோடு ஒப்பான்; சுற்றத்தார்க்கும் பகைவர்க்கும் சுக துக்கங்களைத் தப்பாமற் செய்கையால் விதியை ஒப்பான். தன்னை வந்து சேர்வார்க்கெல்லாம் ஊர்க்(கு) அண்ணிய ஊரணி (ஊருணி) யோடு ஒப்பான்; ஆதலால், மற்றும் எல்லார்க்கும் இவன் பெரும் பயனாய் இருப்பான்.
விளக்கம்: கேட்காமலே தருவது கார் (மேகம்); கேட்டுத் தருவது (கற்பகம்) மரம்; நினைத்தைத் தருவது (சிந்தாமணி); தொலையாத நிதி (சங்க நிதி); அவரவர் செய்த வினைக்கு ஏற்ப சுக துக்கங்களைத் தருவது (விதி); சார்வார்க்கு உதவுவது (ஊருணி) குளம்.
எனவே இவர்கண் மகிழ உருவினன் ஆதலால் இவனைக் கண்டு பரத்தையர் விரும்புதலால், அவர்கள் வேட்கை தணிக்கச் செல்லுமேல் அன்புடையனாய் நின்மேல் அன்பிலாமை பிரிகின்றான் அலன்; அருளால் செய்யும் அவனை வெறுத்தல் உனக்கு மேன்மையல்ல என்று உண்ணின்ற சிவப்பாற்றுவித்தாள் (தோழி).
குறிப்பு:  இவ்வகைக் கூத்தர் மகிழ்ந்து, இன்ன போல்வன தலைமகனது குணங்களைப் பாராட்டினார் என்பது என்னை?
தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி யேற்றலும்
பல்லாற் றானும் ஊடலில் தணித்தலும்
உறுதி காட்டலும் அறிவு மெய்ந் நிறுத்தலும்
ஏதுவில் உணர்த்தலும் துணியக் காட்டலும்
அணிநிலை உரைத்தலும் கூத்தர் மேன
என்றார் தொல்காப்பியனார். இப் பாட்டு ஐவகைத் திணைக்கும் உரித்தாகலின் பொதுவகைத்தெனப் பெறுமென்பது.
பரத்தையிற் பிரிவு முற்றிற்று
திருக்கோவையார் உரை முற்றுப்பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக