புதன், 9 நவம்பர், 2011

திருக்கோவையார் | எட்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி - 1 )


ராதே கிருஷ்ணா 09 - 11 - 2011 

12 திருமுறைகள்
    



திருக்கோவையார் | எட்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி - 1 )


விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க 
http://temple.dinamalar.com/

எட்டாம் திருமறை
திருக்கோவையார் | எட்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி - 1 )


விநாயகர் வணக்கம்
1. எண்ணிறைந்த தில்லை எழுகோ புரந்திகழக்
கண்ணிறைந்து நின்றருளும்/கற்பகமே - நண்ணியசீர்த்
தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற
நானூறும் என்மனத்தே நல்கு.
நூற்சிறப்பு
2. ஆரணங் காணென்பர் அந்தணர்;
யோகியர் ஆகமத்தின்
காரணங் காணென்பர்; காமுகர்
காமநன் னூலதென்பர்;
ஏரணங் காணென்பர் எண்ணர்
எழுத்தென்பர் இன்புலவோர்;
சீரணங் காயசிற் றம்பலக்
கோவையைச் செப்பிடினே.
குறிப்பு : இச் செய்யுட்கள் இரண்டும் பிற்காலத்து ஆன்றோரால் செய்யப்பட்டன என்பர்.
இவைகளின் பொருள் :
1. புகழ்மிக்க தில்லையில் கோயில் கொண்டிருக்கின்ற கற்பக விநாயகரே ! சிறப்புமிக்க தேனூறுகின்ற செம்மையான சொற்களையுடைய திருக்கோவையார் என்கின்ற நானூறு செய்யுட்களும் என் மனத்தில் பொருந்துமாறு அருள் செய்வாயாக !
2. மக்கள் இதனைத் திருச்சிற்றம்பலக் கோவையார் என்பர். மறையவர் வேதம் என்பர்; சிவயோகத்தர் ஆகமம் என்பர்; காமுகர் இன்ப நூல் என்பர்; தர்க்க நூலவர் எண்ணூல் என்பர்; தமிழ்ப் புலவர் இலக்கண நூல் என்பர்.
அதிகார வரலாறு
இதில் இயற்கைப் புணர்ச்சி முதல் பரத்தையிற் பிரிவு ஈறாக இருபத்தைந்து அதிகாரங்கள் உள்ளன. இவைகள் கிளவிக் கொத்துக்கள் எனப்படும். இவைகளின் பெயர்களைப் பொருளடக்கத்தில் காண்க.
களவியல் (1 முதல் 18 அதிகாரங்கள்)
முதல் அதிகாரம்
1. இயற்கைப் புணர்ச்சி
இயற்கைப்புணர்ச்சி என்பது பொருளதிகாரத்தில் கூறப்பட்ட தலைமகனும் தலைமகளும் அவ்வாறு ஒரு பொழிலிடத்து எதிர்ப்பட்டுத் தெய்வம் இடைநிற்பப் பான்மை வழியோடி ஓர் ஆவிற்கு இருகோடு தோன்றினாற் போலத் தம்முள் ஒத்த அன்பினராய் அவ்விருவர் ஒத்தார் தம்முள் தாமே கூடும் கூட்டம். அது பதினெட்டு கிளவிகளை உடையது. அவையாவன:
1. காட்சி
2. ஐயம்
3. தெளிதல்
4. நயப்பு
5. உட்கோள்
6. தெய்வத்தை மகிழ்தல்
7. புணர்ச்சி துணிதல்
8. கலவி யுரைத்தல்
9. இருவயின் ஒத்தல்
10. கிளவி வேட்டல்
11. நலம்புனைந்துரைத்தல்
12. பிரிவுணர்த்தல்
13. பருவரல் அறிதல்
14. அருட் குணம் உரைத்தல்
15. இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல்
16. ஆடிடத்து உய்த்தல்
17. அருமை அறிதல்
18. பாங்கியை அறிதல்.
பான்மை - விதி
குறிப்பு : நூற்பாவை எழுதாமல் அதில் உள்ள கிளவிகளின் பெயர்கள் மேலே குறிக்கப்பட்டுள்ளன.
கட்டளைக் கலித்துறை விதிகள்
1. ஐஞ்சீர் அடிகள் நான்கைப் பெற்று வரும்.
2. மாச்சீர், விளச்சீர் நேர் நடுவாகிய காய்ச் சீர்களை முதல் நான்கு சீர்களாகப் பெறும்; ஈற்றுச் சீர் நிரை நடுவாகிய காய்ச்சீரே பெறும்.
3. முதல் நான்கு சீர்கள் வெண்தளை பெறும்.
4. நான்காம் அடி ஈற்றில் ஏகாரம் பெறும்.
5. நான்கடியும் ஒரே எதுகை (விகற்பம்) பெறும்.
6. நேரசையை முதலாக உடைய அடிக்குள் ஒற்று நீக்கி 16 எழுத்துக்கள் இருக்கும். நிரை அசையை முதலாக உடைய அடிக்குள் ஒற்று நீக்கி 17 எழுத்துக்கள் இருக்கும். இங்ஙனம் கட்டளை (அளவு) பெறலால் இக் கலித்துறைச் செய்யுள் கட்டளைக் கலித்துறை எனப்படும்.
குறிப்பு : வாசகர்களின் நலன் கருதி செய்யுட்கள் சந்தி பிரித்து எழுதப்பட்டுள்ளன. குற்றியலுகரங்கள் பிரிக்கப்படும் போது அவைகளை மெய்யெழுத்துக்கள் போல எண்ணிக்கையில் சேர்க்கக் கூடாது. ஒற்று - மெய்யெழுத்து.
எண்வகை மெய்ப்பாடு
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி என்பன
பயன் என்பது நெஞ்சின் அடுத்ததோர் மெய்ப்பாடு காரணமாகத் தன்வயின் நிகழ்ந்த சொல்லான் எய்துவது.
மெய்ப்பாடு என்பது புறத்துக் கண்டதோர் பொருள் காரணமாக நெஞ்சின்கண் தோன்றிய விகாரத்தின் விளைவு.
1. காட்சி
காட்சி என்பது தலைமகளைத் தலைமகன் கண்ணுற்று, இஃதொரு வியப்பென்றல்.
1. திருவளர் தாமரை சீர்வளர்
காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
காந்தள்கொண்(டு) ஓங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியின்
ஒல்கி அனநடைவாய்ந்(து)
உருவளர் காமன்தன் வென்றிக்
கொடிபோன்(று) ஒளிர்கின்றதே.
கொளு
மதிவாணுதல் வளர்வஞ்சியைக்
கதிர் வேலவன் கண்ணுற்றது.
கொளுவின் பொருள் : பிறையை ஒத்து ஒளி சிறந்த நெற்றியையுடைய இளைய வஞ்சிக் கொம்பை நிகரானவளை ஒளி சிறந்த வேலினை உடையவன் கண்டது.
தெளிவுரை : அழகு மிக்க தாமரைப் பூவையும் சிறப்புடைய நீலப் பூவையும், சிவனுடைய சிதம்பரத்தில், நிறமிகுந்து பொலிவுடைய குமிழம் பூவையும் கோங்கு அரும்புகளையும் செவ்விக் காந்தட் பூக்களையும் இம்மலர்களை அவயவமாகக் கொண்டு (எங்ஙனமெனில், தாமரைப் பூவை முகமாகவும், செங்கழுநீர்ப் பூக்களைக் கண்களாகவும், குமிழ மலரை நாசியாகவும், கோங்கரும்புகளை முலைகளாகவும் செங்காந்தட் பூவைக் கரங்களாகவும் இப்படி அவயவமாகக் கொண்டு) உயர்ந்த தெய்வ வாசனை மிக்க மாலை ஒரு வல்லி சாதகக் கொடிபோல் நுடங்கி, அன்னத்தின் நடைபோல நடையும் வாய்ந்து, வடிவமிகுந்த மாரவேளின் வெற்றிக்கொடியை ஒத்து விளங்கா நின்றது. என்ன அதிசயமோ !
2. ஐயம்
ஐயம் என்பது கண்ணுற்ற பின்னர் இங்ஙனம் தோன்றா நின்ற இம்மாது திருமகள் முதலாகிய தெய்வமோ அன்றி மக்கள் உள்ளாள்கொல்லோ என்று ஐயுறா நிற்றல்.
2. போதோ விசும்போ புனலோ
பணிக ளதுபதியோ
யாதோ அறிகுவ(து) ஏதும்
அரிதி யமன்விடுத்த
தூதோ அனங்கள் துணையோ
இணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோஎன
நின்றவர் வாழ்பதியே.
கொளு
தெரியஅரியதோர் தெய்வமன்ன
அருவரைநாடன் ஐயுற்றது.
இதன் பொருள் : அறிவதற்கு அருமையானதொரு தெய்வமென்று அரிய மலைநாட்டை உடையவன் சந்தேகித்தது.
தெளிவுரை : பூமியிலுள்ள இளைஞரை எல்லாம் கொல்ல வேண்டிக் காலன் வரவிட்ட தூதோ ? வசித்தற்கு அரியாரை வசிக்க அனங்கற்கு உண்டாயிற்றோர் துணையோ? தன்னை நிகரில்லாத திருஅம்பலவாணனுடைய சிதம்பரத்தில் வாழும் மாதரோ? மடப்பத்தையுடைய மயிலோ? என்று யாம் சொல்லும்படி நின்ற இவர் வாழும் இடம், தாமரைப் பூவோ, ஆகாயமோ, நீரோ, பாம்புகளின் பதியாகிய நாகர் உலகமோ இன்ன இடம் என்று அறிதற்குச் சிறிதும் அறியாதிருந்தது.
3. தெளிதல்
தெளிதல் என்பது ஐயுற்ற பின்னர் அவயவம் இயங்கக் கண்டு இவள் தெய்வம் அல்லள் என்று தெளியாநிற்றல்.
3. பாயும் விடையரன் தில்லையன்
னாள்படைக் கண்ணிமைக்கும்
தோயும் நிலத்தடி தூமலர்
வாடும் துயரமெய்தி
ஆயும் மனனே அணங்கல்லள்
அம்மா முலைசுமந்து
தேயும் மருங்குல் பெரும்பணைத்
தோளிச் சிறுநுதலே.
கொளு
அணங்கல்லள்என்(று) அயில்வேலவன்
குணங்களை நோக்கிக் குறித்துரைத்தது.
இதன் பொருள் : தெய்வம் அல்லள் என்று கூரிய வேலினை உடையவன் அவயவங்களை ஆராய்ந்து கருதிச் சொன்னது.
தெளிவுரை : பாய்ந்து செல்லுங்கின்ற இடபத்தையுடைய சிவனின் சிதம்பரத்தை நிகரானவள் வேல்போலும் கண் இமையா நின்றது. பாதங்களும் பூமியில் பொருந்தா நின்றது. பாதங்களும் பூமியில் பொருந்தா நின்றன. செவ்விப் புட்பங்களும் வாடா நின்றன. வருத்தமுற்று ஆராய்கின்ற மனமே ! தெய்வம் அலலள்காண். அழகிய பார தனங்களைச் சுமந்து தேயா நின்ற இடையினையும் பெருத்து வளர்ந்த வேயினை நிகர்த்த தோளினையும் உடைய இந்தச் சிறு நெற்றியினை உடையவள், தெய்வம் அல்லள்காண்.
4. நயப்பு
நயப்பு என்பது தெய்வம் அல்லள் என்று தெளிந்த பின்னர் மக்களுள்ளாளென்று நயந்து இடை இல்லைகொல் என்ற நெஞ்சிற்கு அல்குலும் முலையும் காட்டி இடையுண்டென்று சென்றெய்த நினையா நிற்றல்.
4. அகல்கின்ற அல்குல் தடமது
கொங்கை அவைஅவம்நீ
புகல்கின்ற(து) என்னைநெஞ்(சு) உண்டே
இடைஅடை யார்புரங்கள்
இகல்குன்ற வில்லில்செற் றோன்தில்லை
ஈசன்எம் மான்எதிர்ந்த
பகல்குன்றப் பல்உகுத் தோன்பழ
னம்அன்ன பல்வளைக்கே.
கொளு
வண்டமர் புரிகுழல் ஒண்டொடி மடந்தையை
நயந்த அண்ணல் வியந்துள் ளியது.
இதன் பொருள் : வண்டுகள் ஆர்க்கின்ற நெறித்த கூந்தலினையும் அழகிய வளைகளையுமுடைய நாயகியை விரும்பி நாயகன் அதிசயப்பட்டு நின்றது.
தெளிவுரை : அகலா நின்ற அல்குலின் பெருமை இருந்த படி அது. தனங்களும் அங்ஙனே கதித்திருந்தன. நெஞ்சமே ! ஒரு காரணமும் இன்றியே நீ சொல்லுகின்ற தென்னை? தன்னைச் சேராத அசுரர்களுடைய திரிபுரங்களினுடைய மாறுபாடு கெட, வில்லாலே அழித்தவன் திரு அம்பலத்தில் உள்ளவனாகிய பரமேசுவரன் (எம்முடைய இறைவன்) (மாறுபட்ட சூரியனுடைய) வலியழியப் பல்லைத் தகர்த்தோன். அவனுடைய திருப்பழனம் என்ற திருப்படை வீட்டையொத்த பல வளைகளை உடையாளுக்கு இடை உண்டோ ?
5. உட்கோள்
உட்கோள் என்பது மக்களுள்ளாளென்று நயந்து சென்றெய்த நினையா நின்றவன் தன்னிடத்து அவளுக்கு உண்டாகிய காதல் அவள் கண்ணிற்கண்டு தன்னுட் கொள்ளா நிற்றல்.
5. அணியும் அமிழ்தும்என் ஆவியும்
ஆயவன் தில்லைச்சிந்தா
மணிஉம்ப ரார்அறி யாமறை
யோன்அடி வாழ்த்தலரின்
பிணியும் அதற்கு மருந்தும்
பிறழப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குல்பெருந்
தோளி படைக்கண்களே.
கொளு
இறைதிருக் கரத்து மறிமான் நோக்கி
உள்ளக் கருத்து வள்ளல் அறிந்தது.
இதன் பொருள் : சுவாமியினுடைய திருக்கரத்து மான்மறியின் நோக்கினை உடையாளின் மனத்தின் நினைவை நாயகன் அறிந்தது.
தெளிவுரை : தேவர்களாலும் அறியப்படாத வேதிய வடிவன் பாதங்களை வாழ்த்த மாட்டாதவரைப் போல, பார்க்கப் பார்க்க நோயுமாய் நோய்க்கு மருந்தும் ஆகா நின்றன. மின்னையும் அரவின் படத்தையும் நிகர்த்த இடையினை உடையவளாய்ப் பெரிய தோளினை உடையாள் வேல்போலும் கண்கள்.
கண்கள் (பிறழப் பிறழ) பார்க்கப் பார்க்க நோயும் அதற்கு மருந்துமாக நின்றது. எங்ஙனமென்னின், பொது நோக்கத்தால் பார்க்க நோயாகா நின்றது. உள்ளக் கருத்து வெளிப்படுவதனோடு கூடிய நோக்கத்தால் பார்த்போது அதற்கு மருந்தாக நின்றது.
6. தெய்வத்தை மகிழ்தல்
தெய்வத்தை மகிழ்தல் என்பது, உட்கொண்டு நின்று என்னிடத்து விருப்பத்தையுடைய இவளைத் தந்த தெய்வத்தையல்லது வேறொரு தெய்வத்தை யான் வியவேனெனத் தெய்வத்தை மகிழ்ந்து கூறா நிற்றல்.
6. வளைபயில் கீழ்கடல் நின்றிட
மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்
தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கிஇக் கெண்டைஅங்
கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேன்நய
வேன்தெய்வம் மிக்கனவே.
கொளு
அன்ன மென்னடை அரிவையைத் தந்த
மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்து ரைத்தது.
இதன் பொருள் : அன்னத்தின் நடையைப் போன்ற மதுர நடையினை உடைய நாயகியைக் கூட்டின நிலைபெற்ற தெய்வத்தை மகிழ்ந்து சொன்னது.
தெளிவுரை : சங்கு செறிந்த கீழைச் சமுத்திரத்தினின்று கழியைப் போக்கிட மேலைக்கடலில் போகட்ட பெரிய நுகத்தின் துளையிடத்தில், அத்துளை கோத்த கழி சென்று கோப்புண்டாற்போலப் பெரும்பற்றப் புலியூர்க்குப் பழையவனாகிய முதலியாருடைய ஸ்ரீகயிலாயத் திருமலையின் ஆயக் கூட்டத்தாரிடத்து நின்றும் பிரித்துக் கெண்டை போலும் நயந்த கண்ணினை உடையாளை நான் கண்டு கூடுவதாகக் கூட்டின இப்படிக்கு விளைந்த விளைவையல்லது கொண்டாடுவதில்லை. வேறு தெய்வங்களையும் விரும்புவதில்லை.
7. புணர்ச்சி துணிதல்
புணர்ச்சி துணிதல் என்பது தெய்வத்தை மகிழாநின்றவன் இது நமக்குத் தெய்வப் புணர்ச்சியெனத் தன் நெஞ்சிற்குச் சொல்லி அவளோடு புணரத் துணியா நிற்றல்.
7. ஏழுடை யான்பொழில் எட்டுடை
யான்புயம் என்னைமுன்ஆள்
ஊழுடை யான்புலி யூர்அன்ன
பொன்இவ் உயர்பொழில் ஆகச்
சூழுடை ஆயத்தை நீக்கும்
விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணம் காண்அணங்(கு)
ஆய்வந்(து) அகப்பட்டதே.
கொளு
கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைப் பேதையைத்
தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது.
இதன் பொருள் : கொவ்வைக் கனியை ஒத்த சிவந்த வாயினையும் கொடிபோலும் இடையினையும் உடைய நாயகியைக் கந்தருவ மணமென்று நாயகன் அறுதியிட்டது.
தெளிவுரை : புவி ஏழுக்கும் உடையவன்; எட்டுத் திக்கையும் திருக்கரங்களாக உடையவன்; நான் தனக்கு அடிமை செய்வதற்கு முன்விதியுடையவன்; சிதம்பரத்தை ஒத்த பொன் போன்றவளை இந்த உயர்ந்த மலையிடத்துச் சுற்றிப் பிரியாத ஆயக் கூட்டத்தாரிடத்தினின்றும் நீக்கின விதியே, துணையாகிய நெஞ்சமே, கந்தருவ மணம் கைகூட ஒரு பெண்ணாக வந்து என் கைக்குள் சிக்கிக் கொண்டது.
8. கலவியுரைத்தல்
கலவியுரைத்தல் என்பது தெய்வப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன் புணர்ச்சி இன்பத்து இயல்பு கூறா நிற்றல்.
8. சொற்பால் அமுதிவள் யான்சுவை
என்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று
நானிவ ளாம்பகுதிப்
பொற்பார் அறிவார் புலியூர்ப்
புனிதன் பொதியில்வெற்பில்
கற்பா வியவரை வாய்க்கடி(து)
ஓட்ட களவகத்தே.
கொளு
கொலைவேலவன் கொடியிடையொடு
கலவியின்பம் கட்டுரைத்தது.
இதன் பொருள் : விலங்குகளின் உயிரை வேட்ட வேலினை உடைய நாயகன் பொன்மருங்குலையுடைய நாயகியுடனே கூட்டத்தால் படும் இன்பம் இசையைச் சொன்னது.
தெளிவுரை : சொல்லு பகுதியில் அமுது இவள், யான் அதன் சுவையென்று சொல்லும்படி அறுதியிட்ட படியே நல்ல கூறுபாட்டையுடைய விதியாகிய தெய்வம் தந்தின்று (தந்தது). நான் என்றும் இவள் என்றும் வேறுபட்ட இவ்வழகை யாராலே அறியப்படும்? பெரும்பற்றப்புலியூரிலே உளனாகிய தூயவன் அவனுடைய பொதிய மாமலையில் கல்பாய்ந்தகன்ற மலையிடத்துக் காவலை நீங்கின களவகத்தே.
நானென்றும் இவளென்றும் வேறுபட்ட இவ்வகை யாராலே அறியப்படும் என்ன, ஓருயிர்க்கு ஓர் உடம்பானால் இன்பம் அனுபவிக்க ஒண்ணா தென்று ஓர் உயிர்க்கு இரண்டு உடம்பானால்; இவ் வாழ்க்கை யாரேலே அறியப்படும்? அனுபவிக்கிற நானே அறியும் இத்தனை என்றபடும்.
9. இருவயின் ஒத்தல்
இருவயின் ஒத்தல் என்பது புணராத முன்னின்ற வேட்கையன்பு, புணர்ந்த பின்னும் அப்பெற்றியே நின்று வளர்ந்து சேறலால் தலைமகளை மகிழ்ந்து கூறாநிற்றல்.
9. உணர்ந்தார்க்(கு) உணர்வரி யோன்தில்லைச்
சிற்றம் பலத்தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ்
வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தால் புணரும் தொறும்பெரும்
போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாள்அல்குல்
போல வளர்கின்றதே.
கொளு
ஆராஇன்பத்து அன்புமீதூர
வாரார்முலையை மகிழ்ந்துரைத்தது.
இதன் பொருள் : அமையாத இன்பத்தால் அன்பு மிகுந்து செல்லக் கச்சார்ந்த தனங்களை உடையாளை விரும்பிச் சொன்னது.
தெளிவுரை : தன்னை உணர்ந்தவர்களுக்கு உணர்வானவன். அத்தன்மை உணராதார்க்கு அரியவன். பெரும் பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தே உளனாகிய ஒப்பில்லாதவன். அவனுக்குக் குணமாகிய சிவானந்த மகிமை வெளிப்பட்டாற்போல வெளிப்பட்ட கொவ்வைக் கனிபோல் சிவந்த வாயினை உடைய வஞ்சிக்கொடி போன்ற இடையினையுடைய இவளுடைய தோள்கள் கூடினால் கூடுந்தோறும் பெரிய போகமானது பின்னும் ஒரு காலைக்கு ஒருகால் புதிதாய் மணம் செறிந்த அளகத்தினை உடையவள் அல்குலினது பெருமைக்கு உவமை இல்லாதது போல இவ் இன்பத்திற்கு உவமையில்லாமல் பெருகாநின்றது. இதென்ன வியப்போ ?
10. கிளவி வேட்டல்
கிளவி வேட்டல் என்பது இருவயின் ஒத்து இன்புறா நின்ற தலைமகள் உறுதல் முதலாகிய நான்கு புணர்ச்சியும் பெற்று, (கண்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் நான்கு புலன்கள்) செவிப்புணர்ச்சி (கேட்டல்) பெறாமைமையின் ஒரு சொல் வேட்டு வருந்தாநிற்றல்.
10. அளவியை யார்க்கும் அறி(வு)அரி
யோன்தில்லை அம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாள்தடங்
கண்நுதல் மாமதியின்
பிள(வு)இயல் மின்இடை பேரமை
தோளிது பெற்றியென்றால்
கிளவியை யென்றோ இனிக்கிள்ளை
யார்வாயிற் கேட்கின்றதே.
கொளு
அன்னம்அன்னவள் அவயவம் கண்டு
மென்மொழி கேட்க விருப்புற்றது.
இதன் பொருள் : நடையால் அன்னத்தை ஒத்தவள் அவய வத்தைப் பார்த்து மெல்லிய வார்த்தையினைக் கேட்ட தாக விரும்பினது.
தெளிவுரை : தன்னுடைய திருவெல்லை யாவராலும் அறிதற்கு அரியவன் திருஅம்பலத்தை ஒத்த வளப்பத்தை உட்கொண்டிருந்தன, கனதனங்களும் பெரிய கண்கள் வாள் போன்றிருந்தன. நெற்றியும் பாதி மதியின் இயல்பாய் இருந்தது. இடையும் மின் போன்று இருந்தது. பெரிய தோள்களும் வேய் தாமாகி இருந்தன. அவயவங்களின் இயல்புகள் இவையானால், அவர் வார்த்தையும் இவற்றிற்குத் தக்கன அல்லவோ?
11. நலம் புனைந்துரைத்தல்
நலம் புனைந்துரைத்தல் என்பது கிளவி வேட்டு வருந்தக் கண்ட தலைமகள் மூரன் முறுவல் செய்யத் தலைமகன் அது பெற்றுச் சொல்லாடாமையான் உண்டாகிய வருத்தம் நீங்கி, நுமது அகன்ற மருத நிலத்துக் குறிஞ்சி நிலத்து இவள் வாய் போல மணக்கும் ஆம்பற் பூக்கள் உளவோ என அந்நிலத்து வண்டோடு வினவா நிற்றல்.
11. கூம்பலங் கைத்தலத்(து) அன்பர்என்(பு)
ஊடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்தில்லை
அம்பலம் பாடலரின்
தேம்பலம் சிற்றிடை ஈங்கிவள்
தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி
காள்நும் அகன்பணையே.
கொளு
பொங்கிழையைப் புனைநலம் புகழ்ந்(து)
அங்கதிர்வேலோன் அயர்வுநீங்கியது.
இதன் பொருள் : மிகுந்த ஆபரணங்களை உடையாளை (அவள் புனைந்த நலன்களைப் புகழ்ந்து) அழகிய ஒளியினையுள்ள வேலினை உடையவன் வருத்தம் அகன்றது.
தெளிவுரை : கூம்புதலை உடைத்தாகிய அழகிய கைத்தலங்களையுடைய அடியார் என்புகள் எல்லாம் கரைந்து உருகும்படி ஆடி அருளுகின்ற அரவு ஆபரண அலங்காரச் சிவன் அவனுடைய பெரும்பற்றப் புலியூரில் திருவம்பலத்தைப் பாடமாட்டாதாரைப் போலத் தளர்ச்சியையுள்ள அழகிய சிற்றிடையினையுடைய இவளுடைய நெய்த்த நிறமுடைத்தாகிய கனிவாயைப் போல மணக்கும் ஆம்பற் பூவும் சிலவுண்டோ? வண்டு காள் ! நும்முடைய அகன்ற மருது நிலத்துண்டாகிற் சொல்லுவீராக.
12. பிரிவுணர்த்தல்
பிரிவுணர்த்தல் என்பது ஐவகைப் புணர்ச்சியும் பெற்றுப் புணர்வதன் முன்னும் புணர்ந்த பின்னும் ஒத்த அன்பினனாய் நின்ற தலைமகன் பிரியுமாறு என்னை யெனின் இப்புணர்ச்சி நெடுங்காலம் செல்லக் கடவதாக இருவரையும் கூட்டிய தெய்வம் தானே பிரியாமல் பிரிவிக்கும். அது பிரிவிக்குமாறு, தலைமகன் தனது ஆதரவினால் நலம் பாராட்டக் கேட்டு, எம்பெருமான் முன் நின்று வாய் திறந்து பெரியதோர் நாண்இன்மை செய்தேன் எனத் தலைமகள் நாணி வருந்தா நிற்ப, அதுகண்டு இவள் வருந்துகின்றது யான் பிரிவேனாக நினைந்ததாக வேண்டுமென்று உட்கொண்டு அவளுக்குத் தான் பிரிவின்மை கூறா நிற்றல்.
12. சிந்தா மணிதெள் கடல்அமிர்
தம்தில்லை யான்அருளால்
வந்தால் இகழப் படுமே
மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை
யான்அகன்(று) ஆற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோஎன்னை
வாட்டம் திருத்துவதே.
கொளு
பணிவரல் அல்குலைப் பயிர்ப்புறுத்திப்
பிணிமலர்த் தாரோன் பிரிவுணர்த்தியது.
இதன் பொருள் : பாம்பினது படத்தை ஒத்து மிக்க அல்குலை உடையாளைப் பயிலாத பொருளாகிய பிரிவுக்கு அருவருக்கப் பண்ணிக் கட்டப்பட்ட மாலையை யுடையவன் பிரிவு அறிவித்தது.
தெளிவுரை : சிந்தாமணி என்கின்ற வள்ளலும் தெளிந்த கடலில் உண்டாகிய அமுதமும் திருஅம்பலநாதன் திருவருளினால் இவை சிலர்க்கு உண்டானால் வேண்டா என்று இகழப்படுமோ? மெல்லிய மான் நோக்கம் போன்ற நோக்கினை உடையாய் ! சாயலால் மயிலை ஒப்பாய் ! அழகிய தாமரைக்கண் வாழும் அன்னமே ! உயிரினும் சிறந்த தில்லை இருதலைப் புள்ளியின் ஓர் உயிரன்ன யான் பிரிவாற்றுவனோ? சிந்தையானது வருத்தமுற்று ஏன்தான் என்னை நோய் செய்கிறது? சொல்லுவாயாக.
13. பருவரல் அறிதல்
பருவரல் அறிதல் என்பது பிரிவின்மை கூறக் கேட்ட தலைமகள், பிரிவு என்பதும் ஒன்றுண்டு போலும் என உட்கொண்டு முன் நாணினால் சென்று எய்திய வருத்தம் நீங்கிப் பெரியதோர் வருத்தம் எய்த அது கண்டு, இவள் மேலும் மேலும் வருந்துகின்றது பிரிந்தால் கூடுதல் அரிதென்று நினைந்தோ, நெடும் பொழுது இவ்வாறு இருந்தால் அவ்விடத்துக் குடிப்பழியாம் என்று நினைந்தோ, அறிகிலேன் என அவள் வருத்தம் அறியா நிற்றல்.
13. கோங்கின் பொலிஅரும்(பு) ஏய்கொங்கை
பங்கன் குறுகலர்ஊர்
தீங்கில் புகச்செற்ற கொற்றவன்
சிற்றம் பலம் அனையாள்
நீங்கின் புணர்(வு)அரி(து) என்றோ
நெடி(து)இங்ங னேயிருந்தால்
ஆங்(கு)இற் பழியாம் எனவோ
அறியேன் அயர்கின்றதே.
கொளு
பிரிவுணர்ந்த பெண்கொடி தன்
பருவரலின் பரிசு நினைந்தது.
இதன் பொருள் : தன் பிரிவை அறிந்து பெண்ணுருக் கொண்ட வல்லி சாதகப் கொடியைப் போன்றவளுடைய துன்பத்தின் இயல்பை விசாரித்தது.
தெளிவுரை : கோங்கினது பொலிவு பெற்ற அரும்பையொத்த திருமுலைத் தடங்களையுடைய ஈசுவரியாரைப் பக்கத்திலுள்ளவன், தன்னை வந்து சேராதவருடைய முப்புரங்கள் தீங்காகிய புத்த சமயத்தில் புகுதலால் அழித்த வெற்றியினை உடையவன் அவனுடைய திருச்சிற்றம்பலம் போன்றவள் பிரிந்தால் தன்னைக் கூடுதற்கு அரிதென்றோ, நெடும் பொழுது இங்ஙனம் தாழ்க்க இருந்தால் அவ்விடத்து (ஆவது சுற்றத்தாரிடத்தும் அயலாரிடத்தும்) குடிப்பழியாம் என்றோ அறிகிலேன்; வருந்துகின்றது.
14. அருட்குணம் உரைத்தல்
அருட்குணம் உரைத்தல் என்பது இற்பழியாம் என்று நினைந்தோ என்று கூறக்கேட்ட தலைமகள் இது நம் தோழியறியின் என்னாம் கொல் என்று பிரிவு உட்கொண்டு பிரிவாற்றாது வருந்தா நிற்ப, அக்குறிப்பறிந்து அவள் பிரிவு உடம்படுவது காரணமாகத் தலைமகன் யாம் பிரிந்தேம் ஆயினும் பிரிவு இல்லையெனத் தெய்வத்தின் அருள் கூறாநிற்றல்.
14. தேவரில் பெற்றநம் செல்வக்
கடிவடி வால்திருவே
யாவரின் பெற்றினி யார்சிதைப்
பார்இமை யாதமுக்கண்
மூவரின் பெற்றவர் சிற்றம்
பலம்அணி மொய்பொழில்வாய்ப்
பூஅரில் பெற்ற குழலிஎன்
வாடிப் புலம்புவதே.
கொளு
கூட்டிய தெய்வத் தின்அ ருட்குணம்
வாட்டம் இன்மை வள்ளல் உரைத்தது.
இதன் பொருள் : தெய்வத்தின் அருளினது செய்திக்குக் குறை விலாமை உரைத்தது.
தெளிவுரை : தேவர் தரப்பெற்ற நம் செல்வம் உடைத்தாகிய மணத்தை அழகார்ந்த இலக்குமியை ஒப்பாய் ! இதனை அழித்தற்கு யாவரிடத்ததிலே பதம் பெற்று யாவராலே அழிக்கலாம்? இமையாத மூன்று திருநயனங்களும் சந்திரர் ஆதித்தர் அக்கினி தேவன் என்கிற மூவராலே உடையவர். அவருடைய திருச்சிற்றம்பலத்தைச் சூழ்ந்து சேர்ந்த பொழிலிடத்து (பூவினால் துற்றவள் அளகத்தினை யுடையாய்) என் தான் மெலிந்து வருந்துகின்றது.
15. இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல்
இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல் என்பது அருட் குணம் உரைத்து வற்புறுத்தவும் ஆற்றாமை நீங்காத தலைமகட்கு நும்மூர் இடத்திற்கு எம்மூர் இடம் இத்தன்மைத்து எனத் தன் ஊரின் அணிமை கூறி வற்புறுத்தா நிற்றல்.
15. வருங்குன்றம் ஒன்றுரித் தோன்தில்லை
அம்பல வன்மலயத்(து)
இருங்குன்ற வாணர் இளங்கொடி
யேஇடர் எய்தல்எம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள
பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம்
ஏய்க்கும் கனங்குழையே.
கொளு
மடவரலை வற்புறுத்தி
இடமணித்துஎன்று அவன்இயம்பியது.
இதன் பொருள் : மடப்பத்தை வெற்றியாக உடையவளை வலியுறுத்தி, உங்கள் இடத்துக்கு எங்கள் இடம் அண்ணிது என்று நாயகன் சொன்னது.
தெளிவுரை : ரிஷிகளின் யாகத்தில் தோன்றி, மலைகால் படைத்தாற் போல மேல்வருகின்ற யானையை உரித்தவன். பெரும்பற்றப்புலியூர்க்கு உளனாகிய திரு அம்பலநாதன் வரையிடத்துப் பெரிய மலைக்குக் கர்த்தாவாகிய குறவாணர்க்கு மகளாகிய வஞ்சிக் கொம்போ ! துக்கிக்க வேண்டா; எங்கள் ஊர்ப் பெரிய குன்றத்தை யொத்த மாளிகைகளில் நுண்ணிய வெண் சாந்தொளி பரக்க உங்கள் ஊர்க் கரிய குன்றத்துக்கு இட்ட வெள்ளை நிறச்சடையை ஒக்கும், கனத்த குழையினை உடையாய் ! வருந்தாதே என்றது.
16. ஆடு இடத்து உய்த்தல்
ஆடிடத்துய்த்தல் என்பது அணிமை கூறி அகலாநின்றவன், இனி நீ முற்பட்டு விளையாடு, யான் இங்ஙனம் போய் அங்ஙனம் வாராநின்றேன் என அவளை ஆடிடத்துச் செலுத்தா நிற்றல்.
16. தெளிவளர் வான்சிலை செங்கனி
வெண்முத்தம், திங்களின்வாய்ந்(து)
அளிவளர் வல்லிஅன் னாய்முன்னி
யாடுபின் யான்அளவா
ஒளிவளர் தில்லை ஒருவன்
கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரல் கரந்துங்ங
னேவந்து தோன்றுவனே.
கொளு
வன்புறையின் வற்புறுத்தி
அன்புறு மொழியை அருகு அகன்றது.
இதன் பொருள் : வலியுறுத்தும் வார்த்தைகளால் வலியுறுத்தி விரும்பத்தக்க வார்த்தையினையுடையாள் அருகி னின்று நீங்கியது.
தெளிவுரை : நான் முன்பு சொன்ன வார்த்தைகளைத் தெளிவாயாக; கால் நிமிர்ந்த பெரிய சிலைகளையும், சிவந்த கொவ்வைக் கனியையும் வெண்மையுடைய முத்து நிரையினையும் ஒரு திங்களிடத்தே வாய்க்கக் கண்டு, வண்டுச் சாதிகள் மிக்க வல்லிகாரத்தை ஒப்பாய். முற்பட்டு விளையாடுவாயாக. அதற்குப் பின்னே நான் அளவிடப்படாத ஒளியாயுள்ளவன் மிக்க பெரும்பற்றப்புலியூரிலே ஒப்பில்லாதவன். அவனுடைய ஸ்ரீ கையாலத்தில் உகாநின்ற பெரிய தேன் துளிகளால் மிகுந்த வரைச்சாரலிடத்து ஒளித்து ஒரு பக்கத்தாலே வந்து தோன்றக் கடவேன்.
17. அருமை அறிதல்
அருமை அறிதல் என்பது ஆடிடத்து உய்த்து அகலா நின்றவன் ஆய வெள்ளத்தையும் அவ்விடத்தையும் நோக்கி இவளை யான் எய்தினேன் என்பது மாயமோ? கனவோ? இன்னதென்று அறியேன். இனி இவள் நமக்கு எய்தற்கு அரியவள் என அவளது அருமை அறிந்து வருந்தா நிற்றல்.
17. புணர்ப்போன் நிலனும் விசும்பும்
பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல்
லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போ(து) அணிகுழல் ஏழைதன்
நீர்மைஇந் நீர்மையென்றால்
புணர்ப்போ கனவோ பிறிதோ
அறியேன் புகுந்ததுவே.
கொளு
சுற்றமும் இடனும் சூழலும் நோக்கி
மற்றவள் அருமை மன்னன் அறிந்தது.
இதன் பொருள் : ஆயக் கூட்டத்தாரையும் மடவரார் புகுதற்கு அரிய இடத்தையும் சூழ்ந்த பொழிலையும் பார்த்து மற்றந்த நாயகியுடைய அருமையை நாயகன் அறிந்தது.
தெளிவுரை : பூமியையும் ஆகாயத்தையும் மலைகளையும் படைக்கின்றவன் தன் பொலிவினை உடைத்தாகிய ஸ்ரீ பாதங்களாகிய இணையொத்த பூக்களை என் முடிவுக்கு அணியாக்கும் தொல்லோன் அவனுடைய பெரும்பற்றப்புலியூரைச் சூழ்ந்த பொழிலிடத்தே கொத்துப்பூ அணிந்த கூந்தலையுடைய நாயகி தன்மை இத்தன்மையாய் இருந்தது. ஆனபொழுது மாயமோ? தரிசனம் கண்டோமோ? அன்றி நாமறியாதன சிலவோ? இவளுடன் கூடின பின்பு தோன்றினது இன்னபடி என்று அறிகிலேன் இல்லை.
18. பாங்கியை அறிதல்
பாங்கியை அறிதல் என்பது அருமை அறிந்து வருந்தா நின்ற தலைமகன் ஆயத்தோடு செல்லாநின்ற தலைமகளை நோக்க, அந்நிலைமைக்கண் அவளும் இப்புணர்ச்சி இவளுக்குப் புலனாங் கொல்லோ என உட்கொண்டு எல்லாரையும் போலன்றித் தன் காதல் தோழியைப் பல்காற் கடைக்கண்ணாற் பார்க்கக் கண்டு, இவள் போலும் இவட்குச் சிறந்தாள்; இதுவும் எனக்கோர் சார்பாம் என உட்கொண்டு அவள் காதல் தோழியை அறியா நிற்றல்.
18. உயிரொன்(று) உளமும்ஒன்(று) ஒன்றே
சிறப்(பு)இவட்(கு) என்னோடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற
நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிர்ஒன்று முப்புரம் செற்றவன்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்தன் அருளென
லாகும் பணிமொழிக்கே.
கொளு
கடல்புரை ஆயத்துக் காதல் தோழியை
மடவரல் காட்ட மன்னன் அறிந்தது.
இதன் பொருள் : கடலை யொத்த ஆயக் கூட்டத்தாரிடத்து அன்புடைய தோழியை மடப்பத்தை உடையவள் காட்ட நாயகன் அறிந்தது.
தெளிவுரை : விசும்பிடத்து குற்றமுடைய மூன்று புரத்தை அழித்தவன்; பெரும்பற்றப்புலியூர் திருஅம்பலத்தே ஆடியருளுகிற திருக்கூத்தை உடையவன்; அவனுடைய திருவருளென்று சொல்லா நிற்கின்ற தாழ்ந்த வார்த்தையை உடையாளுக்குக் காதை மோதி நீண்ட வேல் போலும் கண்கள்; எனக்கும் இவளுக்கும் உயிரொன்று; இவளுடைய கருத்தும் ஒன்றுபட்டிருக்கும்; உடன் பயில்கின்ற இருவருக்கும் மாதா பிதாக்களால் செய்யப்படும் சிறப்புக்களும் ஒன்றுபட்டிருக்கும்
அதனால் இவளே தலைவிக்குச் சிறந்தவள் போலும் என உட்கொண்டான்.
இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று.

இரண்டாம் அதிகாரம்
2. பாற்கற் கூட்டம்
இனிப் பாங்கற் கூட்டம் வருமாறு: தெய்வப் புணர்ச்சி புணர்ந்த தலைவன், தெருண்டு வரைதல் தலை. தெருளானாயின், தன்பாங்கனான் ஆதல் இடந் தலைப் பாட்டான் ஆதல் இரண்டனுள் ஒன்றால் சென்றெய்தல் முறைமையென்ப. அவற்றுள் பாங்கற் கூட்டமாவது:
1. பாங்கனை நினைதல்
2. பாங்கன் வினாதல்
3. உற்றது உரைத்தல்
4. கழறியுரைத்தல்
5. கழற்றெதிர் மறுத்தல்
6. கவன்றுரைத்தல்
7. வலி யழிவுரைத்தல்
8. விதியொடு வெறுத்தல்
9. பாங்கன் நொந்துரைத்தல்
10. இயலிடங்கேட்டல்
11. இயலிடங்கூறல்
12. வற்புறுத்தல்
13. குறிவழிச்சேரல்
14. குறிவழிக் காண்டல்
15. தலைவனை வியந்துரைத்தல்
16. கண்டமை கூறல்
17. செவ்வி செப்பல்
18. அவ்விடத்து ஏகல்
19. மின்னிடை மெலிதல்
20. பொழில் கண்டு மகிழ்தல்
21. உயிரென வியத்தல்
22. தளர்வகன்று உரைத்தல்
23. மொழிபெற வருந்தல்
24. நாணிக் கண்புதைத்தல்
25. கண்புதைக்க வருந்தல்
26. நாண்விட வருந்தல்
27. மருங்கணைதல்
28. இன்றியமையாமை கூறல்
29. ஆயத்து உய்த்தல்
30. நின்று வருந்தல்
1. பாங்கனை நினைதல்
பாங்கனை நினைதல் என்பது தெய்வப் புணர்ச்சியது இறுதிக்கண் சென்று எய்துதற்கு அருமை நினைந்து வருந்தா நின்ற தலைமகள் அவள் கண்ணால் அறியப்பட்ட காதல் தோழியை நயந்து, இவள் அவட்குச் சிறந்த துணையன்றே; அத்துணை எனக்குச் சிறந்தாள் அல்லள்; எனக்குச் சிறந்தானைக் கண்டு இப் பரிசு உரைத்தால் பின்னவளைச் சென்றெய்தக் குறையில்லை யெனத் தன் காதற் பாங்கனை நினையா நிற்றல்.
19. பூங்கனை யார்புனல் தென்புலி
யூர்புரிந்(து) அம்பலத்துள்
ஆங்கெனை யாண்டுகொண் டாடும்
பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யான்அன்ன பண்பனைக்
கண்(டு)இப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப்
பாவையை எய்துதற்கே.
கொளு
எய்துதற்(கு) அருமை ஏழையில் தோன்றப்
பையுள் உற்றவன் பாங்கனை நினைந்தது.
இதன் பொருள் : கூடுதற்கு அரியபடி நாயகியிடத்தே தோன்ற அதனால் கிலேச முற்றவன் தோழனை நினைந்தது.
தெளிவுரை : பொலிவையும் ஆரவாரத்தையும் உடைத்தாகிய நிறைந்த நீராலே சூழப்பட்ட தெற்குத் திருப்பதியாய் இருந்துள்ள பெரும்பற்றப்புலியூரில் திருவம் பலத்திடத்தே, அப்படியே என்னை அடிமை கொண்டு விரும்பி ஆடுகிற சுவாமி, அவனுடைய திருவடித் தாமரைகளில் சார்புள்ளவனை எனக்கு என்னையொத்த செய்தியுடையவனை அவனைக் கண்டு இங்குப் புகுந்தபடியைச் சொன்னால் இவ்விடத்து என்னை யாராலே தகைப்படும்? மடப்பம் உடைத்தாய ஓவியம் போன்ற இவளைக் கூடுமித்து.
2. பாங்கன் வினாதல்
பாங்கன் வினாதல் என்பது, தன்னை நினைந்து வாரா நின்ற தலைமகனைத் தான் எதிர்ப்பட்டு அடியிற்கொண்டு முடிகாறும் நோக்கி, நின்னுடைய தோள்கள் மெலிந்து நீ இவ்வாறாதற்குக் காரணம் என்னோ என்று பாங்கன் முந்துற்று வினவா நிற்றல்.
20. சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்
பலத்தும்என் சிந்தையுள்ளும்
உறைவான உயர்மதில் கூடலின்
ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோஅன்றி
ஏழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ
லாம்புகுந்(து) எய்தியதே.
கொளு
கலிகெழு திரள்தோள் மெலிவது கண்ட
இன்னுயிர்ப் பங்கன் மன்னனை வினாயது.
இதன் பொருள் : புகழ் ஆர்வம் பொருந்தின தோள்கள் இளைத்தது கண்டு இனிதாகிய சீவனை ஒத்த தோழன் நாயகனைக் கேட்டது.
தெளிவுரை : வான நீரால் ஊரைச் சுற்றிச் செய்யப்பட்ட மிக்க செல்வம் பொருந்தின தில்லைச் சிற்றம்பலத்திலும் என்னுடைய மனமாகிய தூய்தலானவிடத்தும் இவ்விரண்டினும் ஒக்க உறைபவன் அவனுயர்ந்த மதிலால் சூழப்பட்ட திருவாலவாயிலில் இருந்து ஆராய்ந்த அகமும் புறமும் ஆய்ந்தாயோ? அதுவல்லாதாகில் ஏழிசைச் சூழ்ச்சியாகிய பாடலும் ஆய்ந்தாய் கொலோ சுவாமி, உன்னுடைய பெருவரை நிகர்த்த தோளுக்கு என்னதான் வந்துற்றது !
3. உற்றது உரைத்தல்
உற்றது உரைத்தல் என்பது எதிர்ப்பட்டு வினாவா நின்ற பாங்கனுக்கு, நெருநலை நாள் கைலைப் பொழிற் கண் சென்றேன். அவ்விடத்து ஒரு சிற்றிடைச் சிறுமான் விழிக்குறத்தியால் இவ்வாறு ஆயினேன் எனத் தனக்குற்றது கூறா நிற்றல்.
21. கோம்பிக்(கு) ஒதுங்கிமே யாமஞ்ஞை
குஞ்சரம் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்(து)
ஆங்(கு)அப் பணைமுலைக்கே
தேம்பல் துடியிடை மான்மட
நோக்கிதில் லைச்சிவன்தாள்
ஆம்பொன் தடமலர் சூடும்என்
ஆற்றல் அகற்றியதே.
கொளு
மற்றவன் வினவ, உற்றது உரைத்தது.
இதன் பொருள் : வருந்தியதற்குக் காரணத்தைப் பாங்கன் வினவத் தலைவன் தலைவிபால் தனக்குற்றதைக் கூறியது.
தெளிவுரை : மானின் மென்தென்ற நோக்கத்தினை உடையவளுடைய அந்தப் பணைத்த தனங்களின் பொறை ஆற்றாது தேம்புதலை உடைத்தாய தமருகம் ஒத்த இடையானது திரு அம்பலநாதனுடைய சீபாதங்களாகிய அழகிய பெரிய மலர்களைச் சூட்ட வல்ல என் வலிமையை அழித்தது. பச்சோந்திக்குப் பயப்பட்டு ஒதுங்கிப் புறப்பட்டு இரை கவரமாட்டா மயில் யானையைக் கோட் செய்து கொல்ல வல்ல பாம்பைப் பிடித்து அதனுடைய படத்தைக் கிழித்ததனோடு ஒக்கும்.
4. கழறியுரைத்தல்
கழறியுரைத்தல் என்பது உற்றது உரைப்பக் கேட்ட பாங்கன், இஃது இவன் தலைமைப் பாட்டிற்குப் போதாதென உட்கொண்டு, நீ ஒரு சிறு மான் விழிக்கு யான் இவ்வாறு ஆயினேன் என்றல் நின் கற்பனைக்குப் போதாது எனக் கழறிக் கூறாநிற்றல்.
22. உளமாம் வகைநம்மை உய்யவந்(து)
ஆண்டுசென்(று) உம்பர்உய்யக்
களமாம் விடம்அமிர்(து) ஆக்கிய
தில்லைத்தொல் லோன்கயிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து
நின்றோர்வஞ் சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம்
அண்ணல் இரங்கியதே.
கொளு
வெற்பனைத்தன் மெய்ப்பாங்கன்
கற்பனையில் கழறியது.
இதன் பொருள் : நாயகனைத் தன் மெய்யான தோழன் நெருங்கிச் சொல்லும் வார்த்தைகளால் மறுத்தது.
தெளிவுரை : உள்ளோமாயும் இல்லோமாயும் பிறந்தும் இறந்தும் திரிகின்ற தம்மை (எப்போதும் உள்ளோம் ஆம்படி) பிழைக்கும்படி தானே வந்தாண்டு (அடிமை கொண்டு) தன்னிடத்தில் சென்று தேவர்கள் பிழைக்கும்படி கண்டத்தில் நிறைந்த விடத்தைத் திரு அமுதமாகக் கொண்ட பெரும்பற்றப்புலியூரில் பழையவன், அவனுடைய கயிலாய வரையின் வளமுடைத்தாய மாமர நெருக்கத்து இடத்தே துன்பம் செய்கிற வடிவை இன்பம் செய்கிற வடிவுபோலே கரந்து நின்று வஞ்சிக் கொம்பினை ஒத்த இடையினை உடையாள் ஒரு நோக்கத்தால் இளைய மான் போல்வாள் பார்த்தாள் என்றோ இப்போது என்னுடைய நாயகன் வருந்தியது.
5. கழற்றெதிர் மறுத்தல்
கழற்றெதிர் மறுத்தல் என்பது காதற்பாங்கன் கழறவும் கேளானாய்ப் பின்னும் வேட்கை வயத்தனாய் நின்று, என்னாற் காணப்பட்ட வடிவை நீ கண்டிலை, கண்டனை யாயின் கழறாய் என்று அவனோடு மறுத்து உரைத்து வருந்தாநிற்றல்.
23. சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்
தில்லைச்சிற் றம்பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான்
கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியை
ஓவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை
மென்தோள் கரும்பினையே.
கொளு
ஆங்குயி ரன்ன பாங்கன் கழற
வளந்தரு வெற்பன் உளந்தளர்ந்து உரைத்தது.
இதன் பொருள் : அவ்விடத்தை உயிரை நிகர்த்த தோழன் மறுத்துச் சொல்ல, எல்லா வளப்பத்தினையும் தருகிற வரையினை உடையவன் மனஞ் சலித்துச் சொன்னது.
தெளிவுரை : அதிதூரத்தே பொலிந்து தோன்றுகிற செம்பொன் மண்டங்களை உடைத்தாகிய பெரும்பற்றப்புலியூரில் திருச்சிற்றம்பலத்தில் மாணிக்கம் போலும் அழகிய திருக்கூத்தினை உடையவன், அவனது வடக்கின்கண் உண்டாகிய கயிலாயத்தின் மயிலின் சாயலை ஒப்பாளை நிலைபெற்ற ஆபரணங்களால் சிறந்த முலைகளையுடைய என் உயிரை ஒப்பாளைச் சித்திரமாகப் பொன்னால் எழுதிய வல்லி சாதம் போல்வாளைக் கண்டாயாகில் இங்ஙனே வெறுத்துச் சொல்ல மாட்டாய். மெல்லிய தோள்களை உடையாளாய் அக்கரும்பை ஒப்பாளைக் கண்டிவை காண்; ஆனபடியால் சொன்னாய் இத்தனை.
6. கவன்றுரைத்தல்
கவன்றுரைத்தல் என்பது, மறுத்துரைத்து வருந்தா நிற்பக் கண்ட பாங்கன் ஒரு காலத்தும் கலங்காத உள்ளம் இவ்வாறு கலங்குவதற்குக் காரணம் என்னோவெனத் தலைவனுடன் கூறாநிற்றல்.
24. விலங்கலைக் கால்கொண்டு மேன்மேல்
இடவிண்ணும் மண்ணும் முந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுகலங்
காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத்
தான்அருள் இல்லவர்போல்
தலங்கலைச் சென்றிதென் னோவள்ளல்
உள்ளம் துயர்கின்றதே.
கொளு
கொலைகளிற் றண்ணல் குறைநயந்(து) உரைப்பக்
கலக்கஞ்செய் பாங்கன் கவன்(று) உரைத்தது.
இதன் பொருள் : கொலைத் தொழிலை உடைய யானை அனைய நாயகன் குறை பெற விரும்பிச் சொல்ல அதற்குக் கலக்கஞ்செய் பாங்கன் கிலேசத்தைச் சொன்னது.
தெளிவுரை : மேரு முதலாகிய மலைகளைக் காற்றானது மேல் கீழாக்கி ஒடித்து மென்மேல் போகட ஆகாயமும் பூமியும் கடலே கலங்குதல் அடைந்த அந்நாளிலும் உனக்கு ஒரு சலிப்பற்றிருப்பை. நறுநாற்றம் கமழ்கின்ற கொன்றைப் பூவாலே நெருங்கின மாலையை அணிந்த திருச்சிற்றம்பலவன். அவனுடைய அருள் இல்லவர் போல் நடுக்கத்தையடைந்து இங்ஙன் ஏன்தான் வள்ளலே உன்னுடைய மனம் வருந்துகின்றதே.
7. வலியழிவுரைத்தல்
வலியழிவுரைத்தல் என்பது, பாங்கன் கவன்று உறையா நிற்ப, முன்பு இத்தன்மையேனாகிய யான் இன்று ஒரு சிறு மான் விழிக்கு இவ்வாறு ஆயினேன் எனத் தலைமகன் தன் வலியழிந்தமை கூறி வருந்தா நிற்றல்.
25. தலைப்படு சால்பினுக் கும்தள
ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வார்இல்லை யாரையும்
தேற்றுவன் எத்துணையும்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற்
றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யால்அழி
வுற்று மயங்கினனே.
கொளு
நிறைபொறை தேற்றம் நீதியொடு சால்பு
மறியுறு நோக்கிற்கு வாடினேன் என்றது.
இதன் பொருள் : நிறைந்த புலன்களை நிறுத்தலும் பொறையுடைமையும் தெளிவுடைமையும் உலகத்தோடு ஒழுக்கமும் அமைவுடைமையும் இவ்வைந்து குணங்களையும் மான் கன்றின் நோக்கம் பெற்றவள் நயனா விகாரத்தால் இழந்தேன் என்றது.
தெளிவுரை : தலைமையான சால்புடைமையானும் உள்ளம் குறைவு படேன் (தலைமையான சால் பென்னே? நிறையும் பொறையும் கூடிய சால்பென்று படும்) வேறுபட விசாரித்தாய் காண் என்று மாறுபட்டு அறிவாரும் இல்லை. (தெளிவுடைமை தோன்றுகின்றது) எங்ஙனே கலங்கினவர்களையும் எவ்வளவும் செல்லத் தெளிவிப்பேன்; (கலங்கினாரைத் தெளிவிக்கை உலக நீதியாகையால், நீதியுடைமை தோன்றுகிறது) ஒரு கலையாகிய சிறு பிறையைச் சூடின திருச்சிற்றம்பல நாதனுடைய கயிலாயத் திருமலையில் இளைய மான் விழியால் அயர்ந்து மயங்கினேன்.
8. விதியொடு வெறுத்தல்
விதியொடு வெறுத்தல் என்பது, வலியழிந்தமை கூறி வருந்தா நின்ற தலைமகன் பாங்கனொடு புலந்து வெள்கி யான் செய்த நல்வினையும் வந்து பயன் தந்த தில்லை யெனத் தன் விதியொடு வெறுத்துக் கூறா நிற்றல்.
26. நல்வினை யும்நயம் தந்தின்று
வந்து நடுங்குமின்மேல்
கொல்வினை வல்லன கோங்கரும்
பாம்என்று பாங்கன் சொல்ல
வல்வினை மேருவில் வைத்தவன்
தில்லை தொழாரின் வெள்கித்
தொல்வினை யால்துய ரும்என(து)
ஆருயிர் துப்புறவே.
கொளு
கல்விமிகு பாங்கன் கழற வெள்கிச்
செல்வமிகு சிலம்பன் தெரிந்து செப்பியது.
இதன் பொருள் : கல்வியான் மிக்க பாங்கன் மறுப்பச் செல்வத்தாலே மிக்க மலையினை உடையவன் ஆராய்ந்து சொல்லியது.
தெளிவுரை : துளும்பா நின்ற மின்போன்ற இடையின் மேலே கொலைத் தொழிலைக் கற்ற. ஒத்த முலைகளாங்காணும் என்று பாங்கன் என்னைத் துவளச் சொல்ல, வில்லினது கொல்லும் தொழிலை மேரு என்னும் மலையிடத்து உண்டாக்கினவன். அவனுடைய திசை நோக்கிக் கும்பிட மாட்டாரைப் போல, மேனி வெளுத்து முன்பு செய்த தீவினையால் வருந்துகிற எனது பெறுதற்கரிய உயிர் வலியுறும்படி நான் இம்மையில் செய்த புண்ணியமும் வந்து பயன்பட்டதில்லை.
முற்பிறப்பிற் செய்த தீவினையை இப்பிறப்பிற் செய்த நன்வினை கெடுக்கும் என்பார்கள். என் அளவில் அதுவும் கண்டிலேன் என்பது கருத்து.
9. பாங்கன் நொந்துரைத்தல்
பாங்கன் நொந்துரைத்தல் என்பது, விதியொடு வெறுத்து வருந்தா நிற்பக் கண்ட பாங்கன் அமிர்தமும் மழையும் தங்குணம் கெடினும் நின்குணம் கெடாத நீ ஒருத்தி காரணமாக நின் சீலத்தை நினையாதவாறு இவ்வாறாகிய எனது தீவினையின் பயனாம் இத்தனையன்றோ எனத் தானும் அவனோடு கூட வருந்தா நிற்றல்.
27. ஆலத்தி னால்அமிர்(து) ஆக்கிய
கோன்தில்லை அம்பலம்போல்
கோலத்தி னாள்பொருட் டாக
அமிர்தம் குணங்கெடினும்
காலத்தி னால்மழை மாறினும்
மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும் நினையா(து)
ஒழிவதென் தீவினையே.
கொளு
இன்னுயிர்ப் பாங்கன் ஏழையைச் சுட்டி
நின்னது நன்மை நினைந்திலை என்றது.
இதன் பொருள் : இனிய உயிர்போன்ற தோழன் தலைவியைக் குறித்து உன்னுடைய நிலையை நீ நினைந்து பார்க்கவில்லை என்றது.
தெளிவுரை : நஞ்சை அமுதம் செய்யும்படி திருவுள்ளத்துக் கொண்ட சுவாமி, அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் திரு அம்பலத்தையொத்த அழகினை உடையாள் காரணமாக அமுதமானது தன் சுவை மாறிக் கைப்பினும் பெய்யும் காலத்து மழை பெய்யா தொழியினும் தவிராத கொடையினையுடைய உன்னுடைய அழகிய ஆசாரத்தை நீயும் நினையாது மறக்க வேண்டினது நான் செய்த பாவம் இத்தனையென்பது.
10. இயல் இடங்கேட்டல்
இயலிடங் கேட்டல் என்பது தலைமகனுடன் கூட வருந்தா நின்ற பாங்கன், யானும் இவனுடன் கூட வருந்தினால் இவனை ஆற்றுவிப்பாரில்லை என அது பற்றுக் கோடாக தான் ஆற்றி நின்று அது கிடக்க, நின்னாற் காணப்பட்ட வடிவுக்கு இயல்யாது? இடம் யாது? கூறுவாயாக என அவளுடைய இயலும் இடமும் கேளா நிற்றல்.
28. நின்னுடை நீர்மையும் நீயும்இவ்
வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி(து) என்னென்ப
தேதில்லை யேர்கொள்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல
ரோவிசும் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின்
னேசெய்த ஈர்ங்கொடிக்கே.
கொளு
கழுமலம் எய்திய காதல் தோழன்
செழுமலை நாடனைத் தெரிந்து வினாயது.
இதன் பொருள் : நாயகன் கிலேசித்ததற்கு வருத்தமுற்ற காதல் தோழன் வளப்பமுடைய மலையின் மேலுண்டாகிய நாட்டினை உடையவனை ஆராய்ந்து கேட்டது.
தெளிவுரை : நின்னுடைய தன்மையும் நீயும் இத்தன்மையாய் விட்டன என்றால், உன்னைத் தெளிவிப்பேன் என்கின்ற என்னுடைய தன்மை இது எதனில் ஏற்பட்ட தொன்று? பெரும்பற்றப்புலியூரில் உளனாகி அழகுக்கு அழகு கொண்ட மூன்று திருநயனங்களையுடைய பெருமலையோ? (வரையர மகளிர் என்று படும்) தாமரைப் பூவோ? (இலக்குமி என்று படும்) ஆகாயமோ? (வானவர் மகளிர் என்று படும்); நாயகனே இவற்றில் அவளுக்கு இடம் எந்த இடம் தான்? அவளுடைய இயல்பு யாது? சொல்லுவாயாக.
11. இயலிடங் கூறல்
இயலிடங் கூறல் என்பது இயல் இடம் கேட்ட பாங்கனுக்குத் தான் அவளை எய்தினாற் போலப் பெரியதோர் ஆற்றுதலை உடையனாய் நின்று, என்னாற் காணப்பட்ட வடிவுக்கு இயல் இவை, இடம் இது என்று இயலும் இடமும் கூறாநிற்றல்.
29. விழியால் பிணையாம் விளங்கிய
லான்மயி லாம்மிழற்று
மொழியால் கிளியாம் முதுவா
னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழல்தில்லைக் கூத்தன்
கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்(கு)எழி
லாம்எங் குலதெய்வமே.
கொளு
அழுங்கல் எய்திய ஆருயிர்ப் பாங்கற்குச்
செழுங்கதிர் வேலோன் தெரிந்து செப்பியது.
இதன் பொருள் : நாயகனுடைய அச்சத்துக்கு வருந்தின அரிய உயிர்த் தோழனுக்கு வளமையும் ஒளியும் உள்ளதொரு வேலையுடையவன் ஆராய்ந்து சொன்னது.
தெளிவுரை : நோக்கத்தால் மானென்று சொல்லாம்; விளங்குகின்ற சாயலால் மயில் எனலாம்; கொஞ்சும் மழலையால் கிளி எனலாம்; மிக்க தேவர்கள் பலரும் வந்து வணங்குகையால் அவருடைய முடித்திரள்கள் மரபு தவறாமையையுடைய கழலையுடைய பெரும்பற்றப்புலியூரில் முதல்வரின் கயிலாய மலையில் தோன்றும் தேன் அருவியானது, முத்துக்களைக் கொழித்தாற் போல விளங்குகின்ற காவுக்கு அழகாய் நிற்பவள் எம்முடைய குலதெய்வம். கா - சோலை.
12. வற்புறுத்தல்
வற்புறுத்தல் என்பது, இயலிடங் கூறக் கேட்ட பாங்கன் நீ சொன்ன கைலையிடத்தே சென்று இப்பெற்றியாளைக் கண்டு இப்பொழுதே வருவன்; அவ்வளவும் நீ யாற்றுவாயாதல் வேண்டுமெனத் தலை மகனை வற்புறுத்தா நிற்றல்.
30. குயிலைச் சிலம்படிக் கொம்பினைத்
தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பில்பைம் பூம்புனம்
காக்கும் கருங்கண்செவ்வாய்
மயிலைச் சிலம்பகண்(டு) யான்போய்
வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை
நண்ணும் பனிக்கறையே.
கொளு
பெயர்ந்துரைத்த பெருவரை நாடனை
வயங்கெழு புகழோன் வற்புறுத்தியது
இதன் பொருள் : ஆற்றாமையின் நீங்கி இடன் இயல்பு சொன்ன பெரிய மலை மேலுண்டாகிய (நாட்டிற்குத் தலைவனை) பூமியில் பொருந்தின புகழுடைய பாங்கன் வலியுறுத்தியது.
தெளிவுரை : வார்த்தையில் குயிலை ஒப்பாளை, சிலம்பை அடியில் உடையதொரு வஞ்சிக் கொம்பினை ஒப்பாளை, பெரும்பற்றப்புலியூரில் கூத்தனாகிய எமது சுவாமியுடைய ஸ்ரீ கைலாய மலை யில் பச்சென அழகிய புனங்காக்கிற கரிய கண்களையும் சிவந்த வாயினையும் உடையளாய் மயிலைப் போன்ற சாயலை உடையாளை நாயகனே, நான் போய்க் கண்டு வரக் கடவேன்; வளவிய வல்லி சாதத்தை ஒத்த பாங்கிமார்கள் பலகாலம் சிலம்பெதிர் கூவிக் களிக்கிற விளையாட்டுப் பொருந்தின பளிக்கறையிடத்து நான் போய்ப் பார்த்து வருவேன். நீ கிலேசியாது ஒழிக வேண்டும்.
13. குறவழிச் சேறல்
குறவழிச் சேறல் என்பது, தலை மகனை வற்புறுத்தி அவன் குறிவழிச் செல்லாநின்ற பாங்கன், இத் தன்மையாளை யான் அவ்விடத்துக் காணலாம் கொல்லோவென அந்நினைவோடு செல்லா நிற்றல்.
31. கொடுங்கால் குலவரை ஏழ்ஏழ்
பொழில்எழில் குன்றும்அன்றும்
நடுங்கா தவனை நடுங்க
நுடங்கு நடுவுடைய
விடங்கால் அயிற்கண்ணி மேவுங்கொ
லாம்தில்லை ஈசன்வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில்
நீழலம் தண்புனத்தே.
கொளு
அறைகழல் அண்ணல் அருளின வழியே
நிறையுடைப் பாங்கன் நினைவொடு சென்றது.
இதன் பொருள் : ஆரவாரிக்கின்ற வீரக்கழலையுடைய நாயகன் ஏவிய வழியே புலனை நிறுத்தவல்ல பாங்கன் நினைவொடு சென்றது.
தெளிவுரை : கொடிய காற்றால் அழகிய மலைகள் ஏழும் பூமிகள் ஏழும், அழகு அழிக்கின்ற ஊழியிறுதிக் காலத்தும் அன்றும் தனக்கொருற பயமில்லாதவன் ஒருவனை அவனும் நடுங்குவதாக அசைகின்ற இடையினையுடைய விடத்தைக் கான்று கொண்டிருக்கிற வேல் போன்ற கண்களை உடையவள் நிற்பள் கொல்லோ? (என்கிற ஐயத்தாலே நில்லாளோ என்றும் படும்) திருஅம்பல நாதனுடைய மலையில் பெருங்கார் தங்குகிற பெரிதாகி நீண்ட பொழிலின் நிழலுடைத்தாகிய அழகிய குளிர்ந்த புனத்து இடத்தே நிற்பாளோ நில்லாளோ என்ற ஐயத்தில் போனான்.
14. குறிவழிக் காண்டல்
குறிவழிக் காண்டல் என்பது, குறிவழிச் சென்ற பாங்கன், தன்னை அவள் காணாமல், தான் அவளைக் காண்பதோர் அணிமைக்கண் நின்று, அவன் சொன்ன இடமும் இதுவே; இயலும் இவையே; இவளும் அவளே என்று ஐயமறத் தெளியக் காணாநிற்றல்.
32. வடிக்கண் இவைவஞ்சி அஞ்சும்
இடைஇது வாய்பவளம்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி
சேயான் தொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமலர் அண்ணல்விண்
ணோர்வணங்(கு) அம்பலம்போல்
படிச்சந் தமும்இது வேஇவ
ளேஅப் பணிமொழியே.
கொளு
குளிர்வரை நாடன் குறிவழிச் சென்று
தளிர்புரை மெல்லடித் தையலைக் கண்டது
இதன் பொருள் : குளிர்ந்த மலைமேல் உண்டாகிய நாட்டினை உடையவன் குறித்த இடத்து ஏறிச்சென்று, தளிரையாத்த மதுரமான அடியினையுடைய நாயகியைக் கண்டது.
தெளிவுரை : அவன் சொன்ன மாவடு ஒத்த கண்களும் இவையே. வஞ்சிக் கொம்பைத் தோற்கச் செய்த இடையின் அழகும் இதுவே. வாயானது பவளம் போலும் துடிக்கின்றது. நாயகன் சொன்னபடியா இருந்தது. நான் பற்றிவிடாத திருவடியாகிய பெரிய மலர்களையுடைய சுவாமி அவனைத் தேவர்கள் வணங்குகின்ற திருஅம்பலத்தை. அது. எய்துவான். இவளே, தாழ்ந்த வார்த்தையினை உடையாளும் இவளே ஆக வேண்டும். (பழைய உரை சிதைந்துள்ளது).
15. தலைவனை வியந்துரைத்தல்
தலைவனை வியந்துரைத்தல் என்பது, குறிவழிக் கண்ட பாங்கன் இவ்வுறுப்புக்களையுடைய இவளைக் கண்டு பிரிந்து இங்கு நின்று அங்கு வந்து யான் கழறவும் ஆற்றி அத்தனையும் தப்பாமல் சொன்ன அண்ணலே திண்ணியானெனத் தலை மகனை வியந்து கூறாநிற்றல்.
33. குவளைக் களத்(து)அம் பலவன்
குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின்(று)
ஆண்ட அவயவத்தின்
இவளைக்கண்(டு) இங்குநின்(று) அங்குவந்(து)
அத்துணை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி
யான்இக் கடலிடத்தே.
கொளு
நயந்த உருவும் நலனும் கண்டு
வியந்த வனையே மிகுத்துரைத்தது.
இதன் பொருள் : நாயகன் விரும்பிய வடிவையும் நன்மையையும் பார்த்து ஆச்சரியப்பட்டு நாயகனையே மிகுத்துச் சொன்னது.
தெளிவுரை : நீலப் பூவை ஒத்த திருமிடற்றையுடைய திருஅம்பலநாதன் அவனுடைய திருவீரக் கழல் ஆரவாரிக்கின்ற சீபாதங்களை யொத்த தாமரைப் பூவில் உயர்ச்சியுடைய சீதேவியைப் பயப்படும்படி நின்று அடிமை கொண்ட அவயவங்களை உடைய இவளைப் பார்த்து இவ்விடத்தே நின்று அவளை அச்சொல் ஆற்றிவந்து நான் கழறவும், எவ்வளவு மறுத்துச் சொன்ன, வேண்டிய கவளம் கொள்ளுகிற யானையையுடைய நாயகனே, இந்தக் கடல் சூழ்ந்த புவியில் திட நெஞ்சன் அவனேயாய் இருந்தான் (என்றுபடும்).
16. கண்டமை கூறல்
கண்டமை கூறல் என்பது தலைமகனை வியந்துரைத்த பாங்கன் விரைந்து சென்று, தான் அவளைக் கண்டமை தலைமகனுக்குத் பிடிமிசை வைத்துக் கூறாநிற்றல்.
34. பணந்தாழ் அரவரைச் சிற்றம்
பலவர்பைம் பொற்கயிலைப்
புணர்ந்தாங்(கு) அகன்ற பொருகரி
யுன்னிப் புனத்தயலே
மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண்
பரப்பி மடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேல்கண்
டேன்ஒன்று நின்றதுவே.
கொளு
பிடிமிசை வைத்துப் பேதையது நிலைமை
அடுதிறல் அண்ணற்கு அறிய உரைத்தது.
இதன் பொருள் : ஒரு பிடி யானையைச் சொல்லுவாரைப் போல, நாயகியுடைய நிலைமையைக் கொல்லும் வினயம் வல்ல வேலினையுடைய நாயகனுக்குச் சொன்னது.
தெளிவுரை : படம் மிக்க பாம்பைத் திரு அரைநாணாகவுடைய திருஅம்பல நாதருடைய சோலையாற் பசுத்துப் பொலிவினையுடைய கயிலை மலையில் தன்னுடனே கூடி ஆங்கு அகன்ற, பொருதல் இயல்பினையுடைய களிற்று யானையை நினைந்து, புனத்தின் ஒரு பக்கத்தே, மணமிகுந்த பொழிலிடத்தே மாவடு வகிரை யொத்த கண்களால் பார்க்கப் பார்த்து, ஒரு மடப்பிடி யானை வாயில் நிணமிக்குக் கொலைக் தொழிலால் சிறந்த வேலினை உடையவனே ! நிற்கக் கண்டேன் காண். எனவே அவ்விடத்து ஏறச் செல்க என்று படும்.
17. செவ்வி செப்பல்
செவ்வி செப்பல் என்பது, பிடிமிசை வைத்துக் கூறக் கேட்ட தலைமகன் அது தனக்குச் செவ்வி போதாமையிற் பின்னும் ஆற்றாமை நீங்கானாயினான். அது கண்டு அவனை ஆற்றுவிப்பது காரணமாக அவனுக்கு அவள் அவயவம் கூறாநிற்றல்.
35. கயலுள வேகம லத்தவர்
மீது கனிபவளத்(து)
அயலுள வேமுத்தம் ஒத்த
நிரைஅரன் அம்பலத்தின்
இயலுள வேபிணைச் செப்புவெற்
பாநின(து) ஈர்ங்கொடிமேல்
புயலுள வேமலர் சூழ்ந்திருள்
தூங்கிப் புரள்வனவே.
கொளு
அற்புதன் கைலை மற்பொலி சிலம்பற்கு
அவ்வுரு கண்டவன் செவ்வி செப்பியது.
இதன் பொருள் : அழகிய முதல்வருடைய ஸ்ரீ கயிலாயத் திருமலையில் வளப்பமிக்க மலையினையுடைய நாயகனுக்கு அவன் சொன்ன உருவைக் கண்டு வந்த பாங்கன், தான் கண்ட செவ்வி செப்பியது.
தெளிவுரை : கயல், கமலம், பவளம், முத்தம், செப்பு, புயல் இவை முறையே கண், முகம், வாய், பல், தனம், கூந்தல் இவற்றைக் குறித்தன.
வெற்பா, நினது ஈர்ங்கொடிமேல் தாமரைப் பூவின்மேல் கிடப்பன சில கயல்கள் உளவே. கனிந்த பவளத்திற்கு அயல் இனம் ஒத்த நிரையாகிய முத்துக்கள் உளவே. இணையாகிய செப்பு அரனது அம்பலத்தின் இயல்பை உடையனவுளவே. மாலை சூழ்ந்து இருள் செறிந்து கிடந்து புரள்வன புயலுளவே உளவாயின் யாம் கண்ட உருவம் நீ கூறிய உருவமாம்.
18. அவ்விடத்து ஏகல்
அவ்விடத்தேகல் என்பது, செவ்வி செப்பக் கேட்ட தலைமகன் இவ்வாறு காணப்பட்டது உண்டாயின், அது என்னுயிரெனத் தான் அவ்விடம் நோக்கிச் செல்லா நிற்றல்.
36. எயிற்குலம் மூன்(று)இரும் தீஎய்த
எய்தவன் தில்லையொத்துக்
குயிற்குலம் கொண்டுதொண் டைக்கனி
வாய்க்குளிர் முத்தம்நிரைத்(து)
அயிற்குல வேல்கம லத்திற்
கிடத்தி அனம்நடக்கும்
மயிற்குலம் கண்டதுண் டேல்அது
என்னுடை மன்னுயிரே.
கொளு
அரிவையது நிலைமை அறிந்தவன் உரைப்ப
எரிகதிர் வேலோன் ஏகியது.
இதன் பொருள் : நாயகியுடைய நிலைமையை அறிந்து வந்த பாங்கன் சொல்ல மிகுந்த பிரகாசத்தையுடைய வேலினை உடையவன் போனது.
தெளிவுரை : மதிற்சாதிகள் மூன்றையும் (திரிபுரங்கள்) மிகுந்த தீயை அவை எய்தும்படி எய்தவனுடைய சிதம்பரம் போன்று வார்த்தையால் குயிலை ஒத்துக் கொவ்வைக் கனிபோன்ற வாயிலே மதுரமாகிய முத்தை (பல்) நிரைத்துக் கூரிதாகிய அழகிய வேலினைக் கமலத்தின்மேலே கிடத்தி அன்னம் போல் நடக்கிற சாயலால் மயிலை ஒப்பாளைக் கண்டாயாகில், அவளே என்னுடைய நிலை பெற்ற உயிர் ஆகும்.
19. மின்னிடை மெலிதல்
மின்னிடை மெலிதல் என்பது, நெருநலை நாளில் தலையளி செய்து நின்னிற் பிரியேன், பிரியினும் ஆற்றேன் என்று கூறிப் பிரிந்தவர் வேட்கை மிகுதியால் இடமறியாது ஆயத்திடை வருவார் கொல்லோ எனும் பெருநாணினானும் ஆற்றாமையான் இறந்து பட்டார் கொல்லோ என்னும் பேரச்சத்தினானும் யாரும் இல்லொரு சிறைத் தனியே நின்று, தலைமகனை நினைந்து தலைமகள் மெலியா நிற்றல்.
37. ஆவியன் னாய்கவ லேல்அக
லேம்என்(று) அளித்தொளித்த
ஆவியன் னார்மிக் கவாயின
ராய்க்கெழு மற்(கு) அழிவுற்(று)
ஆவியன் னார்மன்னி ஆடிடம்
சேர்வல்கொல் அம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி
லாயத்(து) அருவரையே.
கொளு
மன்னனை நினைந்து மின்னிடை மெலிந்தது.
இதன் பொருள் : நாயகனை நினைந்து மின் போன்ற இடையுடையாள் வாடியது.
தெளிவுரை : என் ஆருயிரை ஒப்பாய் ! கவலேல், நாம் நம்மிற் பிரியோம் காண் என்று தலையளி செய்து இப்போது ஒளித்துப் போன அருஞ்சுரத்தில் நீர் வேட்டற்கு உதவும் தாமரைத் தடாகம் போன்றவர், என்பேரில் மிகுந்த ஆசை உடையவராய் என்னுடைய காரணமாக நெஞ்சழிந்து என்னுடைய உயிர்த் தோழிமார்கள் நிலைபெற்று விளையாடுகின்ற இடத்தில் செல்வரோ ? இங்கே வருவாரோ?
கொல் என்ற ஐயத்தால் இங்கே வருவரோ என்றுபடும். திருஅம்பலத்தை உளனாகி யொத்த முதலியார் வாழ்கின்ற ஸ்ரீ கயிலாயமாகிய அரிய இடத்தே செல்வரோ? இங்கே வருவரோ என்னும் நினைவுடனே நின்றாள்.
20. பொழில் கண்டு மகிழ்தல்
பொழில் கண்டு மகிழ்தல் என்பது, தலை மகளை நோக்கிச் செல்லாநின்ற தலைமகன் முன்னை ஞான்று அவளைக் கண்ணுற்ற பொழிலைச் சென்று அணைந்து அப்பொழிலிடை அவள் உறுப்புக்களைக் கண்டு இப்பொழில் என் சிந்தனைக்கு அவள் தானேயெனத் தோன்றா நின்றதென்று இன்புறா நிற்றல்.
38. காம்பிணை யால்களி மாமயி
லால்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி ஒல்குத
லான்மன்னும் அம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன்
கயிலைப் பயில்புனமும்
தேம்பிணை வார்குழ லாளெனத்
தோன்றும்என் சிந்தனைக்கே.
கொளு
மணங்கமழ் பொழிலின் வடிவுகண்(டு)
அணங்கென நினைந்(து) அயர்வு நீங்கியது.
இதன் பொருள் : நறுநாற்றம் கமழ்கின்ற பொழிலின் வடிவை ஆராய்ந்து தெய்வத்தை ஒத்த தன் நாயகியாக நினைந்து வருத்தம் நீங்கியது.
தெளிவுரை : வேய் இணைந்து நிற்றலால் தோள்களை ஒத்தும் களிப்பையுடைய கரிய மயில்களால் சாயலை ஒத்தும், ஒளியுடைத்தாகிய நீல மணிகளால் கூந்தலை ஒத்தும், இளமான் நோக்கத்தால் விழியை ஒத்தும், (இருத்தலானும்) வல்லிசாதத்தின் இடமாதல் இடை நுடங்கலானும், நிலைபெற்ற புலியூர்த் திருஅம்பலவன் பாம்பைத் தன் குழையாபரணமாகக் கொண்டவனுடைய கயிலாயத்தில் இவள் வாழ்கின்ற புனமும் தேனை உடைத்தாகிய மாலையினை அணிந்த நீண்ட குழலையுடையவள் என்னும்படி தோன்ற என் மனத்தை இன்புறுத்தா நின்றது.
21. உயிரென வியத்தல்
உயிரென வியத்தல் என்பது பொழில் கண்டு மகிழ்ந்து, அப்பொழிலிடைச் சென்றுபுக்கு, அவளைக் கண்ட துணையான் என்னுயிர் இவ்வாறு செய்தோ நிற்பதென வியந்து கூறா நிற்றல்.
39. நேயத்த தாய்நென்னல் என்னைப்
புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
ஆயத்த தாய்அமிழ் தாய்அணங்
காய்அரன் அம்பலம்போல்
தேயத்த தாய்என்றன் சிந்தைய
தாய்த்தெரி யிற்பெரிது
மாயத்த தாகி இதோவந்து
நின்ற(து)என் மன்னுயிரே.
கொளு
வெறியுறு பொழிலின் வியன்பொ தும்பரின்
நெறியுறு குழலி நிலைமை கண்டது.
இதன் பொருள் : நறுநாற்றமிக்க காவிடத்து அகன்ற சோலையிடத்து நெறித்தல் பொருந்தின கூந்தலை உடையவள் நின்ற படியைக் கண்டது.
தெளிவுரை : நேற்று உள்ள மகிழ்ச்சியை உடைத்தாய் என்னைக் கூடி, பின் நேயம் இல்லது போல என்நெஞ்சு உடையும்வண்ணம் நீங்கிப் போய், ஆயத்தின் கண்ணதாய் இன்பத்தைச் செய்தலின் அமிர்தமாய், துன்பத்தைச் செய்தலின் அணங்காய், புலப்பாட்டான் அரனது அம்பலம் போலும் ஒளியை உடைத்தாய், புலப்படாது வந்து என் சிந்தைக் கண்ணதாய், ஆராயின் பெரிதும் மாயத்தை உடைத்தாய் வந்து நின்றது இதுவோ எனது மன்னுயிர்.
22. தளர்வு அகன்று உரைத்தல்
தளர்வகன்றுரைத்தல் என்பது, உயிரென வியந்து சென்று, பூக் கொய்தல் முதலிய விளையாட்டை ஒழிந்து யாரும் இல்லொரு சிறைத்தனியே நின்று இவர் செய்யா நின்ற பெரிய தவம் யாதோ என அவளைப் பெரும்பான்மை கூறித் தளர்வு நீங்கா நிற்றல்.
40. தாதிவர் போதுகொய் யார்தைய
லார்அங்கை கூப்பநின்று
சோதி வரிப்பந்(து) அடியார்
சுனைப்புனல் ஆடல்செய்யார்
போதிவர் கற்பக நாடுபுல்
லென்னத்தம் பொன்அடிப்பாய்
யாதிவர் மாதவம் அம்பலத்
தான்மலை எய்துதற்கே.
கொளு
பனிமதி நுதலியைப் பைம்பொ ழிலிடைத்
தனிநிலை கண்டு தளர்வகன்(று) உரைத்தது.
இதன் பொருள் : குளிர்ந்த மதிபோன்ற நெற்றியை உடையாளை அழகிய பொழிலிடத்தே தனியே நிற்கின்ற நிலையைக் கண்டு சலிப்பறுத்துப் பேசினது.
தெளிவுரை : அல்லி பரந்த பூக்களைக் கொய்யார் பாங்கிமார் அழகிய கைகளைக் கூப்ப நின்று ஒளியும் அழகும் உடைய பந்து அடிக்கிறார் இல்லை. சுனையில் நீர் குடைந்து விளையாடுகிறார் இல்லை. பூக்கள் பரந்த கற்பகம் உடைத்தாகிய தெய்வலோகம் இவர் போதுகையினாலே அழகு அழியத் தம்முடைய பொலிவு பெற்ற அடிகள் நிலத்தில் பரவித் திருஅம்பலநாதன் திருமலைக்கே வந்து தங்குவதற்கு இவர் பண்ணப் புகுகின்ற தவம் எதுதான் என்ன எல்லாத் தவமும் முடித்தன்றோ?
23. மொழிபெற வருந்தல்
மொழி பெற வருந்தல் என்பது தளர்வு நீங்கிய பின்னர்ச் சார்தல் உறா நின்றவன் ஒரு சொல் பெறு முறையால் சென்று சார வேண்டிப் பின்னும் அவளைப் பெரும்பான்மை கூறி ஒரு சொல் வேண்டி வருந்தா நிற்றல்.
41. காவிநின்(று) ஏர்தரு கண்டர்வண்
தில்லைக்கண் ணார்கமலத்
தேவிஎன் றேஐயம் சென்ற(து)அன்
றேஅறி யச்சிறிது
மாவியன் றன்னமென் னோக்கிநின்
வாய்திற வாவிடின்என்
ஆவியன் றேஅமிழ் தேஅணங்
கேஇன்(று) அழிகின்றதே.
கொளு
கூடற்(கு) அரிதென வாடி யுரைத்தது
இதன் பொருள் : சார்தற்கு அரிதென மனம் வாடி உரைத்தது.
தெளிவுரை : நீல மலர் நின்று ஒளி செய்கின்ற திருமிடற்றை உடையவர் அவருடைய வளமுடைய தில்லையில் இடமார்ந்த செந்தாமரைப் பூவிலுள்ள சீதேவி என்றே எனக்கு ஐயம் செல்லாநின்றது. அல்ல என்னும் இடம் அறியும்படி சிறிதாகினும், மான் நோக்கத்தால் இயன்றாற் போலவே பார்க்கின்ற பார்வையினை உடையாய் ! உன் வாயால் ஒரு வார்த்தை சொல்லாத பொழுது என் உயிர் அல்லதே. எனக்கு இன்பமும் துன்பமும் ஒருக்காலே செய்தலால் அமுதத்தையும் வருத்தத்தையும் ஒப்பாய். இப்பொழுது அழிகின்றது என் உயிரன்றோ ?
வேறொரு பொருள் அழிந்தால் மீட்டுக் கொள்ளலாம். உயிர் அழிந்தால் யாராலே மீட்டுக் கொள்ளலாகும்? என்று படும்.
24. நாணிக் கண் புதைத்தல்
நாணிக் கண் புதைத்தல் என்பது தன் முன்னின்று பெரும்பான்மை கூறக் கேட்ட தலைமகள் பெருநாணினள் ஆதலின் அவன் முன் நிற்கலாகாமல் நாணி, ஒரு கொடியின் ஒதுங்கித் தன்கண் புதைத்து வருந்தா நிற்றல்.
42. அகலிடம் தாவிய வானோன்
அறிந்திறைஞ்(சு) அம்பலத்தின்
இகலிடம் தாவிடை ஈசன்
தொழாரின்இன் னற்கிடமாய்
உகலிடம் தான்சென்(று) எனதுயிர்
நையா வகையொதுங்கப்
புகலிடம் தாபொழில் வாய்எழில்
வாய்தரு பூங்கொடியே.
கொளு
ஆயிடைத் தனிநின்(று) ஆற்றா(து) அழிந்து
வேயுடைத் தோளியோர் மென்கொடி மறைந்தது.
இதன் பொருள் : நாயகன் சொன்ன இடத்தில் தனியே நின்று ஆற்றாது அழிந்து வேயின் தன்மையால் சிறந்த தோள்களை உடையவள் ஒரு வல்லிசாதக் கொடியில் ஒதுங்கியது.
தெளிவுரை : பூமியைத் தாவி அளந்த புரு÷ஷாத்தமன், அவன் நம்மால் வணங்கப்படுவான் ஒருவன் என்று அறிந்து வணங்குகிற திருஅம்பலத்தின் மாறுபாடு உடைய இடங்களிலே தாவிச் செல்லுகிற இடபத்தினையுடைய முதலியாரைத் தொழாதவரைப் போல கிலேசத்துக்கு ஒரு கொள்கலமாய் விசனப்படும் இடத்துச் சென்று என்னுடைய உயிரானது கிலேசியாத படி நான் ஒதுங்கும்படி எனக்குப் புகலிடம் தருவாயாக, பொழிலிடத்தே அழகு வாய்க்கப் பூத்த வல்லிசாதமே !
எனக்குப் புகலிடம் தருவாயாக என்று அந்த வல்லிசாதத்து ஒதுங்கியது.
25. கண் புதைக்க வருந்தல்
கண் புதைக்க வருந்தல் என்பது, தலைமகள் நாணிக் கண் புதையாகிய நிற்ப, இவள், கண்புதையா நின்றது தன்னுடைய கண்கள் என்னை வருத்தத்தைச் செய்யும் என்று ஆகாதே என உட்கொண்டு, யான் வருந்தாதொழிய வேண்டுவையாயின் நின் மேனி முழுவதும் புதைப்பாயாக எனத் தலைமகன் தன் வருத்தமிகுதி கூறா நிற்றல்.
43. தாழச்செய் தார்முடி தன்னடிக்
கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தான்அம் பலங்கை
தொழாரின்உள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண்
புதைத்துப்பொன் னேஎன்னைநீ
வாழச்செய் தாய்சுற்று முற்றும்
புதைநின்னை வாணுதலே.
கொளு
வேல்தருங் கண்ணினை மிளிர்வன அன்றுநின்
கூற்றரு மேனியே கூற்றெனக்(கு) என்றது.
இதன் பொருள் : வேல் ஒத்த கண்ணிணைகள் உலாவுவனவே அல்ல; கொல்லுதற்கு அரிய மேனியை எனக்குக் கூற்றுவன் ஆகாநின்றது.
தெளிவுரை : தன்னை வந்து வணங்கினவர்கள் தலையினைத் தன்னுடைய திருவடி நிழலிலே வைத்த அவர்களுக்குத் தேவர்களைப் பரிவாரமாகச் செய்தவன் திருவம்பலம் தொழாதவர்களைப் போல மனம் நடுங்க (போழும்வண்ணம் செய்யாமல்) கூரிய வேல் போன்ற கண்களை மூடிக்கொண்ட பொன்னை ஒப்பாய். நான் பிழைக்கும்படி செய்தாய். ஒளி சிறந்த வெற்றியினை யுடையாய் ! என் மனம் நடுங்காமல் செய்ய வேண்டியிருந்தால் மேனி முழுதும் புதைப்பாயாக.
26. நாண்விட வருந்தல்
நாண்விட வருந்தல் என்பது தலைமகன் தனது ஆற்றாமை மிகுதி கூறக்கேட்டு, ஒரு ஞான்றும் தன்னை விட்டு நீங்காத நாண் அழலைச் சேர்ந்த மெழுகு போலத் தன்னைவிட்டு நீங்கா நிற்பத் தலைமகள் அதற்குப் பிரிவாற்றாமல் வருந்தா நிற்றல்.
44. குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக்
கூத்தனை ஏத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ
மற்றென் கண்மணிபோன்(று)
ஒருநாள் பிரியா(து) உயிரின்
பழகி யுடன்வளர்ந்த
அருநாண் அளிய அழல்சேர்
மெழுகொத்(து) அழிகின்றதே.
கொளு
ஆங்ங னம்கண்டு ஆற்றா ளாகி
நீங்கின நாணொடு நேரிழை நின்றது.
இதன் பொருள் : நாயகன் அங்ஙனம் சொன்னபடியைக் கண்டு ஆற்றாத் தன்மையுடையவளாய் நாண் நீக்கத்துடனே நுண் தொழிலாற் சிறந்த ஆபரணங்களையுடையாள் நின்றது.
தெளிவுரை : நிறம் உடைத்தாகிய செவ்வி மலர் உடைத்தாகிய சோலை சூழப்பட்ட பெரும்பற்றப்புலியூரில் கூத்தனாகிய முதலியாரை வாழ்த்தாதாரைப் போல, மேல்வரும் நாட்கள் இங்ஙனே நாணழியப் பெறாது ஒழிவேனாக. மற்றும் என் கண்ணினுள் சோதிபோன்று ஒருநாளும் என்னை விட்டு நீங்காமல் என் உயிர் போலப் பின்னமறப் பழகி நான் வளரத் தான் வளர்ந்த பெறுதற்கரிய நாணமானது அழியத்தக்க அக்கினியைச் சேர்ந்த மெழுகைப் போல உருகி அழியாநின்றது.
ஆதலால் மேல் வரும் நாட்கள் இங்ஙனே நாண் அழியப் பிறவாது ஒழிய வேண்டும் என்றது. வாழியும் அரோவும் அசைகள்.
27. மருங்கணைதல்
மருங்கணைதல் என்பது, தலைமகள் நாணிழந்து வருந்தா நிற்பச் சென்று சார்தல் ஆகாமையின், தலைமகன் தன் ஆதரவினால் அவ்வருத்தம் தணிப்பான் போன்று முலையொடு முனிந்து ஒரு கையால் இரு மருங்கல் தாங்கியும் ஒரு கையால் அளிகுலம் விலக்கி அளகந்தொட்டும் சென்று அணையா நிற்றல்.
45. கோலத் தனிக்கொம்பர் உம்பர்புக்(கு)
அஃதே குறைப்பவர்தம்
சீலத் தன்கொங்கை தேற்றகி
லேம்சிவன் தில்லையன்னாள்
நூலொத்த நேரிடை நொய்ம்மையெண்
ணாதுநுண் தேன்நசையால்
சாலத் தகாதுகண் டீர்வண்டு
காள்கொண்டை சார்வதுவே.
கொளு
ஒளிதிகழ் வார்குழல் அளிகுலம் விலக்கிக்
கருங்களிற் றண்ணல் மருங்க ணைந்தது.
இதன் பொருள் : ஒளியே மிகுத்திருக்கின்ற நீண்ட அளகத்தின் வண்டுச் சாதிகளை ஓட்டுவாரைப் போல கரிய யானையை உடைய நாயகன் பக்கத்தே சென்று சேர்ந்தது.
தெளிவுரை : அழகிய தனிக் கொம்பின் உச்சியில் நெறியிருந்து அடிக்கொம்பை வெட்டுகிறவருடைய அந்தச் செய்தி போன்று இருந்த தனங்களும் இவையிற்றைத் தெளிவிக்கப் போந்தோம் இல்லை. முதலியாருடைய திருவம்பலத்தை யொப்பவள் நூல் போன்ற இடையின் கனமில்லாதலை விசாரியாதே அற்புதத் தேனின் இச்சையால், சாலவும் தகாது காணும் வண்டுகாள் ! கொண்டையிலே சார்ந்திருக்கும் அது.
நீங்குங்கள் என்று வண்டுச் சாதிகளை ஓட்டுவாரைப் போலச் சென்று அருகு சேர்ந்தது.
28. இன்றியமையாமை கூறல்
இன்றியமையாமை கூறல் என்பது, புணர்ச்சி இறுதிக்கண் விசும்பும் நிலனும் ஒருங்கு பெற வரினும் இக்கொங்கைகளை மறந்து அதன்கண் முயலேன் எனப் பிரிவு தோன்றத் தலைமகன் தனது இன்றியமையாமை கூறா நிற்றல்.
46. நீங்கரும் பொற்கழல் சிற்றம்
பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமும்
எய்தினும் யான்மறவேன்
தீங்கரும் பும்அமிழ் துஞ்செழுந்
தேனும் பொதிந்துசெப்பும்
கோங்கரும் பும்தொலைத்(து) என்னையும்
ஆட்கொண்ட கொங்கைகளே.
கொளு
வென்றி வேலவன் மெல்லி யல்தனக்(கு)
இன்றியமை யாமை எடுத்து ரைத்தது.
இதன் பொருள் : வெற்றி வேலையுடையவன் மெல்லிய இயல்பினை யுடையாளை யின்றித் தனக்கொரு பொழுதும் செல்லாமையை மிகுத்துச் சொன்னது.
தெளிவுரை : கண்டால் விட்டு நீங்குதற்கரிய அழகிய சீபாதங்களையுடைய திருச்சிற்றம்பலநாதன் அவனுடைய மிக்க தெய்வலோகமும் வளைந்த பெரிய கடலால் சூழப்பெற்ற பூலோகமும் பெறினும் நான் மறக்கப்படாது, தீங்கரும்பு, அமிழ்து, செழுந்தேன் இவற்றைப் பரிகரித்துக் கொண்டு வடிவினால் பொற் செப்பையும் கோங்கரும்பையும் தோற்பித்து என்னையும் வசமாக்கிக் கொண்ட கொங்கைகளை.
கொங்கைகளைத் தெய்வலோகமும் பூலோகமும் நான் பெறினும் மறவேன் என்றவாறு.
29. ஆயத்து உய்த்தல்
ஆயத்துய்த்தல் என்பது, இன்றியமை யாமை கூறிப் பிரியலுறா நின்றவன், இனிப் பல சொல்லி யென்னை? என்னுயிர் நினக்கு அடிமையாயிற்று; இனிச் சென்று நின் ஆயத்திடைச் சேர்வாயாக எனத் தன் பிரிவு இன்மை கூறித் தலைமகளை ஆயத்துச் செலுத்தா நிற்றல்.
47. சூளா மணியும்பர்க்(கு) ஆயவன்
சூழ்பொழில் தில்லையன்னாய்க்(கு)
ஆளா ஒழிந்ததென் ஆருயிர்
ஆரமிழ் தேஅணங்கே
தோளா மணியே பிணையே
பலசொல்லி என்னைதுன்னும்
நாளார் மலர்பொழில் வாய்எழில்
ஆயம் நணுகுகவே.
கொளு
தேங்கமழ் சிலம்பன் பாங்கிற் கூட்டியது.
இதன் பொருள் : நறுநாற்றம் கமழ்கின்ற மலையினை உடையவன் பாங்கிமாரித்தே சேரவிட்டது.
தெளிவுரை : தேவர்களுக்கு முடி மணியாய் உள்ளவன் பொழில் சுற்றிய சிதம்பரத்தின் இயல்பை உடையாட்டு (நினக்கு) என்னுடைய பெறுதற்கரிய உயிர் வசமாகி விட்டது. பெறுதற்கரிய அமுதே போல்வாய் தெய்வமாக நிற்பாய். துளைக்கப்படாத இரத்தினத்தை யொப்பாய். நோக்கத்தால் மான்பிணைக்கு ஒப்பாய். இனிப் பல சொல்லுவது என்னை? செறிந்த நாட் செவ்வி மலரால் மிக்க சோலையிடத்தே. அழகிய கூட்டத்தாரிடத்தே சேர்வாயாக.
30. நின்று வருந்தல்
நின்று வருந்தல் என்பது தலைமகளை ஆயத்து உய்த்துத் தான் அவ்விடத்தே நின்று அப்புனத்து இயல்பு கூறித் தலைமகன் பிரிவாற்றாது வருந்தா நிற்றல்.
48. பொய்யுடை யார்க்(கு)அரன் போல்அக
லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம்
போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப்
பூண்முலை வாணுதல்வான்
பையுடை வாளர வத்(து)அல்குல்
காக்கும்பைம் பூம்புனமே.
கொளு
பாங்கிற் கூட்டிப் பதிவயின் பெயர்வோன்
நீங்கற்(கு) அருமை நின்று நினைந்தது.
இதன் பொருள் : பாங்கி மாரிடத்தே (அவளைச் சேரச் செய்து தன் பதியை நோக்கிப் பெயர்வோன்) அவள் தன்னால் விட்டு நீங்குதற்கு அரிய படியை விசாரித்தது.
தெளிவுரை : (விட்டு நீங்கினால்) பொய்யன்பு பூண்டவர்க்கு மகாதேவர் அகன்றாற் போல அகலா நிற்கும். அணைந்தால் மெய்யன்பு உடையவர்க்கு அவன் அம்பலம் போல மிகவும் அணுகா நிற்கும். மை எழுதப்பட்ட ஒளி சிறந்த கண்ணினையும் முத்து மணி அணியப்பட்டு ஆபரணங்களாற் சிறந்த முலையினையும் பிரகாசம் செய்த நெற்றியினையும் உடைய பெரிய படத்தையுடைய ஒளிபொருந்திய அரவம் போன்ற அலகுலினையுடைய அவள் காலை பச்சென்று பொலிவுடைத்தாகிய புனம் இப்படிச் செய்யா நின்றது.
பாங்கற் கூட்டம் முற்றிற்று.

மூன்றாம் அதிகாரம்
3. இடந்தலைப்பாடு
நூற்பா
பொழிலிடைச் சேறல் இடந்தலை சொன்ன
வழியொடு கூட்டி வருந்திசி னோரே.
இதன் பொருள் : பொழிலிடைச் சேறல் ஒன்றும் இடந்தலைப் பாட்டிற்கே உரியது. இதனையும் மேலைப் பாங்கற் கூட்டம் உணர்த்திய சூத்திரத்தில் ஈங்கிலை நிற்க இடந்தலை தனக்கும் எனக் கூடியவாறே மின்னிடை மெலிதல் முதல் நின்று வருந்துதல் ஈறாகக் கூறப்பட்ட கிளவிகளோடு கூட்டி இடந்தலைப் பாடாம் என்று வகுத்துரைத்துக் கொள்க. அவை பாங்கற் கூட்டத்திற்கும் இடந்தலைப்பாட்டிற்கும் உரியவாமாறு என்னையெனில் பாங்கற் கூட்டம் நிகழாதாயின் இடந்தலைப்பாடு நிகழும். இடந் தலைப்பாடு நிகழாதாயின் பாங்கற் கூட்டம் நிகழும் ஆதலின்.
பேரின்பக்கிளவி : இடந்தலைப்பாடு ஈராறும் ஒன்றும் மருட்குரு தரிசனத்து அன்பு மிகுதியால், பேரானந்தம் பெற்று அனுபவித்தல் (திருக்கோவையார் உண்மை).
1. பொழிலிடைச் சேறல்
பொழிலிடைச் சேறல் என்பது, இயற்கைப் புணர்ச்சியது இறுதிக்கண் சென்று எய்துதற்கு அருமை நினைந்து வருந்தா நின்ற தலைமகன், இப்புணர்ச்சி நெருநலும் என் அறிவோடு கூடிய முயற்சியான் வந்ததன்று; தெய்வம் தரவந்தது; இன்னும் அத்தெய்வம் தானே தரும்; யாம் அப்பொழிலிடைச் செய்வேம் எனத் தன் நெஞ்சோடு கூறா நிற்றல்.
49. என்னறி வால்வந்த(து) அன்றிது
முன்னும்இன் னும்முயன்றால்
மன்னெறி தந்த(து) இருந்தன்று
தெய்வம் வருந்தல் நெஞ்சே
மின்எறி செஞ்சடைக் கூத்தப்
பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று
மின்தோய் பொழிலிடத்தே
கொளு
ஐயரிக் கண்ணியை ஆடிடத் தேசென்(று)
எய்துவன் எனநினைந்(து) ஏந்தல் சென்றது.
இதன் பொருள் : அழகிய வரிபரந்த கண்ணினை உடையாளை விளையாடு இடத்தே சென்று சேரக் கடவேன் என்று நினைந்து நாயகன் போனது.
தெளிவுரை : முன்பு நான் இது வேண்டுமென்ன என்னுடைய நினைவினால் வந்தது ஒன்றன்று; இன்னமும் நான் உற்சாயித்தால் நிலைபெற்ற இந்நெறியைத் தந்த தெய்வம் இருந்தது. ஆதலால் நெஞ்சமே, நீ வருந்ததாதே கொள்; ஒளியுடைத்தாகிய நெறித்த சிவந்த திருச்சடையினையுடைய கூத்தனாகிய சுவாமி இணை இல்லாத திருஅம்பலத்தைச் சூழ்ந்த கடலிடத்துப் பொன் கொழிக்கப்பட்ட நீண்ட துறையுடைத்தாகிய (இடத்தே) மின்னை அடைந்த கா இடத்தே சென்று இன்னும் உற்சாயிக்கக் கடவேன்.
இடந்தலைப்பாடு முற்றிற்று.

நான்காம் அதிகாரம்
4. மதியுடம்படுத்தல்
மதியுடன் படுத்தல் வருமாறு: இரண்டனுள் ஒன்றால் சென்றெய்திய பின்னர்த் தெருண்டு வரைதல் தலை; தெருளானாயின் அவள் கண்ணாற் காட்டப்பட்ட காதல் தோழியை வழிப்பட்டுச் சென்று எய்துதல் முறைமை யென்ப, வழிப்படுமாறு: தெற்றெனத் தன்குறை கூறாமல் இரந்து வைத்துக் கரந்த மொழியால் தன் கருத்து அறிவித்து அவளை ஐய உணர்வினள் ஆக்கி அது வழியாக நின்று தன் குறை கூறுதல்.
நூற்பாவில் கூறப்பட்ட கிளவிகள் பத்து. அவையாவன :
1. பாங்கியிடைச் சேறல்
2. குறையுறத் துணிதல்
3. வேழம் வினாதல்
4. கலைமான் வினாதல்
5. வழி வினாதல்
6. பதி வினாதல்
7. பெயர் வினாதல்
8. மொழிபெறாது கூறல்
9. கருத்தறிவித்தல்
10. இடைவினாதல் என்பனவாம்.
பேரின்பக் கிளவி
மதியுடன் படுத்தல் வரும்ஈ ரைந்தும்
குருஅறி வித்த திருவருள் அதனைச்
சிவத்துடன் கலந்து தெரிசனம் புரிதல்.
1. பாங்கியிடைச் சேறல்
பாங்கியிடைச் சேறல் என்பது, இரண்டனுள் ஒன்றால் சென்றெய்திப் புணர்ந்து நீங்கிய தலைமகன், இனியிவளைச் சென்று எய்துதல் எளிதன்று; யாம் அவள் கண்ணாற் காட்டப்பட்ட காதல் தோழிக்கு நங்குறையுள்ளது சொல்வேம் என்று அவளை நோக்கிச் செல்லா நிற்றல்.
50. எளிதன்(று) இனிக்கனி வாய்வல்லி
புல்லல் எழில்மதிக்கீற்(று)
ஒளிசென்ற செஞ்சடைக் கூத்தப்
பிரானைஉன் னாரின்என்கண்
தெளிசென்ற வேற்கண் வருவித்த
செல்லல்எல் லாம்தெளிவித்(து)
அளிசென்ற பூங்குழல் தோழிக்கு
வாழி அறிவிப்பனே.
கொளு
கரந்துறை கிளவியின் காதல் தோழியை
இரந்துகுறை உறுவல்என்(று) ஏந்தல் சென்றது.
இதன் பொருள் : கரந்து சொல்லும் வார்த்தையினால் உயிர்த்தோழியைத் தொழ ஒழுகி, என் குறையைச் சொல்லக் கடவேன் என்று நினைந்து நாயகன் போனது.
தெளிவுரை : தொண்டைப்பழத்தை யொத்த வாயினையுடையவளாய் வல்லிசாதம் போல்வாளைக் கூடுவது இனி எளியதன்று. அழகிய மதியின் பிளவாகிய திரு இளம்பிறையின் பிரகாசம் பரந்து சிவந்த திருச்சடையினையுடைய கூத்தனாகிய சுவாமியை நினையாதாரைப் போல் என்னிடத்துத் தெளியக் கடைந்த வேலை ஒத்த கண்கள் உண்டாக்கின வருத்தம் எல்லாம் தாழ ஒழுகி நறுநாற்றத்தால் வண்டுகள் சென்று
அடைந்த பொலிவுடைய கூந்தலையுடைய தோழிக்கு அறிவிக்கப் கடவேன்.
2. குறையுறத் துணிதல்
குறையுறத் துணிதல் என்பது, பாங்கியை நினைந்து செல்லா நின்றவன் தெய்வத்தின் அருளால் அவ்விருவரும் ஓரிடத்து எதிர்நிற்பக் கண்டு இவள் இவட்குச் சிறந்தாள்; இனி என் குறையுள்ளது சொல்வேனெனத் தன்குறை கூறத் துணியா நிற்றல்.
51. குவளைக் கருங்கண் கொடியேர்
இடையிக் கொடிக்கடைக்கண்
உவளைத் தனதுயிர் என்றது
தன்னோ(டு) உவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம்
பலத்தான் அருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின்
னேயினிச் சொல்லுவனே.
கொளு
ஓரிடத்தவரை ஒருங்கு கண்டுதன்
பேரிடர் பெருந்தகை பேசத் துணிந்தது.
இதன் பொருள் : ஓரிடத்தில் நாயகியையும் பாங்கியையும் உறவிருக்கக் கண்டு தன்னுடைய பெரிய துன்பத்தைப் பெரிய தலைமைப் பாட்டையுடையவன் சொல்லுவதாக அறுதியிட்டது.
தெளிவுரை : நீல மலர்களை ஒத்த கரிய கண்களை யும் வல்லிசாதக் கொடியையொத்த இடையினையும் உடைய இந்த வல்லிசாதத்தை ஒப்பாளுடைய கடைக் கண்களானவை தன் பக்கத்தில் இருக்கிறவளைத் தனது உயிர் என்றது தனக்கு ஒப்பில்லாத தம்பிராட்டியைத் தன்னுடைய பாகத்திலே வைத்த திருச்சிற்றம்பலநாதன் அவருடைய திருவருள் இல்லாதவரைப் போல நான் வாடும்படி விதி வந்து என்னிடத்தில் உண்டான என் துன்பத்தை இனிச் சொல்லக் கடவேன்.
3. வேழம் வினாதல்
வேழம் வினாதல் என்பது, குறைகூறத் துணியா நின்றவன் என் குறையின்னதென்று இவளுக்கு வெளிப் படக் கூறுவேன் ஆயின், இவள் மறுக்கவும் கூடுமென உட்கொண்டு என் குறை இன்னதென்று இவள் தானே உணரும் அளவும் கரந்த மொழியால் சில சொல்லிப் பின் குறையுறுவதே காரியமென வேட்டை கருதிச் சென்றானாக அவ் இருவர் உழைச் சென்று நின்று, தன் காதல் தோன்ற இவ்விடத்து ஒரு மதயானை வரக் கண்டீரோ என வேழம் வினாவா நிற்றல்.
52. இருங்களி யாய்இன்(று) யான்சிறு
மாப்பஇன் பம்பணிவோர்
மருங்(கு)அளி யாஅனல் ஆடவல்
லோன்தில்லை யான்மலையீங்(கு)
ஒருங்(கு)அளி யார்ப்ப உமிழ்மும்
மதத்(து)இது கோட்(டு)ஒருநீள்
கருக்களி யார்மத யானையுண்
டோவரக் கண்டதுவே.
கொளு
ஏழையர் இருவரும் இருந்த செவ்வியுள்
வேழம் வினாஅய் வெற்பன் சென்றது.
இதன் பொருள் : நாயகியும் பாங்கியும் இருந்த பக்குவத்தை ஆனையை வினாவி நாயகன் சென்றது. ஏழையர் - பெண்கள்.
தெளிவுரை : சிவானந்த மகிமையாகிற பெரிய களிப்பை உடையவனாய் இப்பொழுது நான் செம்மாந்திருக்கும் படி வணங்குவாருடைய பக்கமாகிய இன்பத்தை எனக்குத் தாரார். அக்கினியை ஏந்திக் கொண்டு ஆடவல்லோன் சிதம்பரத்தில் உள்ளவன். அவனுடைய திருமலையாகிய இடத்து ஒரு வழிப்பட்டு வண்டுகள் ஆரவாரித்துச் செல்லச் சொரியாநின்ற மூன்று மதத்தினையும் இரண்டு கொம்பினையும் உயரத்தினையும் கருத்துக் களித்துச் செல்லும் ஒரு யானை உண்டோ வரக் கடவது? உண்டாகில் சொல்லுவீராக வேண்டும்.
4. கலைமான் வினாதல்
கலைமான் வினாதல் என்பது, வேழம் வினாவி உட்புகுந்த பின்னர்த் தான் கண்ணால் இடர்ப்பட்டமை தோன்ற நின்று, நம்முடைய கண்கள் போலும் கணை பொருதலால் உண்டாகிய புண்ணோடு இப்புனத்தின்கண் ஒரு கலைமான் வரக் கண்டீரோ என்று கலைமான் வினாவா நிற்றல்.
53. கருங்கண் ணனையறி யாமைநின்
றோன்தில்லைக் கார்ப்பொழில்வாய்
வருங்கள் நனையவண் டாடும்
வளரிள வல்லியன்னீர்
இருங்கண் அனைய கணைபொரு
புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் அணையதுண் டோவந்த(து)
ஈங்கொரு வான்கலையே.
கொளு
சிலைமான் அண்ணல் கலைமான் வினாயது.
இதன் பொருள் : சிலைத் தொழலினால் மாட்சிமைப்பட்ட நாயகன் கலையாகிய மான் வந்ததோ என்று கேட்டது.
தெளிவுரை : கரிய நிறத்தையுடைய புரு÷ஷாத்த மனையும் அறியாமல் ஒளித்து நின்றோன். அவனுடைய திருஅம்பலம் சூழ்ந்த இருண்ட சோலையிடத்து உண்டாகிற மதுவில் மேனி முழுதும் நனையும் படி வண்டுகள் வியாபாரிக்கிற வளர்கிற இளைய வல்லிசாதம் போல்வீர் ! உங்கள் பெரிய கண்களை அம்புபட்ட புண் பொருந்தின இந்தப் புனத்தின் பக்கத்து அத்தன்மையது ஒரு பெருங்கலை வந்ததுண்டோ? உண்டாகிற் சொல்ல வேண்டும்.
5. வழி வினாதல்
வழி வினாதல் என்பது, கலைமான் வினாவா நின்றவன் இவன் கருத்து வேறென்று தோழியறிய, அதனோடு மாறுபட நின்று, அது கூறீராயின் நும் ஊர்க்குச் செல்லும் நெறி கூறுமின் என்று வழி வினாவா நிற்றல்.
54. சிலம்பணி கொண்டசேர் சீறடி
பங்கன்தன் சீரடியார்
குலம்பணி கொள்ள எனைக்கொடுத்
தோன்கொண்டு தான்அணியும்
கலம்பணி கொண்டிடம் அம்பலம்
கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநும் சீறூர்க்(கு)
உரைமின்கள் செல்நெறியே.
கொளு
கலைமான் வினாய கருத்து வேறறிய
மலைமான் அண்ணல் வழிவி னாயது.
இதன் பொருள் : கலையாகிய மான் வந்ததோ? என்று கேட்ட கருத்து முற்றிய நினைவு வேறுபட்ட படியை அறிய மலையை ஒத்த நாயகன் வழி கேட்டது.
தெளிவுரை : சிலம்பு தன் அழகு பெற்ற சிற்றடியை உடைய ஈசுவரியை வாமபாகத்தில் உடையவன். தன் சீர் அடியார் திரள என்னை ஏவல் கொள்ளும் படிக்கு அடிமையாக என்னைக் கொடுத்தவன், தான்கொண்டு அணிகிற ஆபரணமாகப் பாம்பைக் பண்ணிக் கொண்டு சிதம்பரம் இடமாகக் கொண்டவன், தழைந்து இருட்சியுடைய சோலையதனால் கார் பரந்த ஸ்ரீ கயிலாயத் திருமலையில் அழகு கொண்ட உங்கள் ஊர்க்குச் செல்லும் வழியைச் சொல்லுவீராக.
6. பதி வினாதல்
பதி வினாதல் என்பது, மாறுபட நின்று வழி வினாவவும் அதற்கு மறுமொழி கொடாதாரை எதிர்முகமாக நின்று வழி கூறீராயின் நும்பதி கூறுதல் பழியன்றே; அது கூறுவீராமின் என்று அவர் பதி வினாவா நிற்றல்.
55. ஒருங்(கு)அட மூவெயில் ஒற்றைக்
கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க்
கரியுரித் தோன்கயிலை
இரும்கடம் மூடும் பொழில்எழில்
கொம்பர்அன் னீர்களின்னே
வருங்கள்தம் ஊர்பகர்ந் தால்பழி
யோஇங்கு வாழ்பவர்க்கு.
கொளு
பதியொடு பிறவினாய் மொழிபல மொழிந்து
மதியுடம் படுக்க மன்னன் வலித்தது.
இதன் பொருள் : ஊருடனே பலவற்றையும் வினவி வார்த்தையைப் பலகாலும் சொன்னது.
தெளிவுரை : (எயில் மூன்றையும்) ஒருக்காலே அழிப்பதாக அம்பை வாங்கின திருச்சிற்றம்பலநாதன், பெருமதம் மூன்றும் சொரியப்பட்ட தொங்குகின்ற வாயினையுடைய யானையை உரித்தவன், அவனுடைய கயிலாய மலையின் பெருங் காட்டினால் சூழப்பட்ட பொழிலில் உண்டாகிய கொம்பை ஒப்பீர்கள் ! இங்ஙனே வாருங்கள். தங்கள் ஊரின் பெயரைச் சொன்னால் இந்த நிலத்தில் வாழ்பவர்க்கு குற்றமாமோ? குற்றமாகிற் சொல்ல வேண்டுவதில்லை.
7. பெயர் வினாதல்
பெயர் வினாதல் என்பது பதி வினாவவும் அதற்கொன்றும் கூறாதாரை, நும்பதி கூறுதல் பழியாயின் அதனை ஒழிமின். நும் பெயர் கூறுதல் பழியன்றே; இதனைத் கூறுவீராமின் என்று அவரது பெயர் வினாவா நிற்றல்.
56. தாரென்ன வோங்கும் சடைமுடி
மேல்தனித் திங்கள்வைத்த
காரென்ன ஆரும் கறைமிடற்(று)
அம்பல வன்கயிலை
ஊரென்ன என்னவும் வாய்திற
வீர்ஒழி வீர்பழியேல்
பேரென்ன வோஉரை யீர்விரை
யீர்ங்குழற் பேதையரே.
கொளு
பேரமைத் தோளியர் பேர்வி னாயது.
இதன் பொருள் : பெருத்த வேயொத்த தோளியர் பெயர் கேட்டது.
தெளிவுரை : நெற்றிமாலை என்னும்படி உயர்ந்த சடைமுடி மேலே ஒரு கலையாகிய திரு இளம் பிறையை வைத்த மேகம் என்னும்படி நிறைந்த கரிய திருமிடற்றை உடைய திருஅம்பலநாதன், அவனுடைய கயிலாயத்தில் உங்கள் ஊர் எத்தன்மையது என்று கேட்கவும் வாய் திறவாமல் இருக்கிறீர்களே ! உங்கள் ஊரின் பெயர் சொன்னால் அதுபழியாமாகிலும் பெயராகிலும் சொல்லுங்கள்; நறு நாற்றத்தையுடைய கூந்தலையும் பேதைத் தன்மையும் உடையீர் !
8. மொழி பெறாது கூறல்
மொழி பெறாது கூறல் என்பது பெயர் வினாவவும் வாய் திறவாமையின், இப்புனத்தார் எதிர் கொள்ளத்தக்க விருந்தினரோடு வாய்திறவாமையை விரதமாக உடையவராதல், அதுவன்றி வாய் திறக்கின் மணி சிந்தும் என்பதனைச் சரதமாக உடையவராதல், இவ் இரண்டனுள் ஒன்று தப்பாது என்று கூறா நிற்றல்.
57. இரதம் உடைய நடம்ஆட்(டு)
உடையவர் எம்முடையர்
வரதம் உடைய அணிதில்லை
அன்னவர் இப்புனத்தார்
விரதம் உடையர் விருந்தொடு
பேச்சின்மை மீட்டதன்றேல்
சரத முடையர் மணிவாய்
திறக்கில் சலக்கென்பவே.
கொளு
தேமொ ழியவர் வாய்மொழி பெறாது
மட்டவிழ் தாரோன் கட்டு ரைத்தது.
இதன் பொருள் : தேனையொத்த வார்த்தையினை உடையவர்களிடம் ஒரு வார்த்தையும் பெறாத படியாலே மது விரிகின்ற மாலையினை உடையவன் இயல்பைச் சொன்னது.
தெளிவுரை : கண்டார்க்குக் கண்ணுக்கு இனிதாகிய திருக்கூத்தினையுடையவர் எம்முடைய மேலானவர், அவருடைய திரு அம்பலத்தை ஒத்தவர்கள் இப்புனத் திடமாக இருக்கும் அவர்கள் விருந்தினராய் வந்தாருடனே பேசாமைக்கு விரதம் பூண்டு ஒழுகினார்களாக வேண்டும். திரியவும் அது அல்லாமல் நிசிதமாகவுடையவர்கள் சலக்கென விழுபவ முத்து மணிகளைச் சாதகமாக உடையவர். ஆகையால் வாய் திறவாமல் வாழ்கிறார்கள்.
9. கருத்தறிவித்தல்
கருத்தறிவித்தல் என்பது, நீயிர் வாய் திறவாமைக்குக் காரணமுடையீர்; அதுகிடக்க, இத்தழை நும் அல்குற்குத் தருமாயின் அணிவீராமின் எனத் தழை காட்டி நின்று தன் கருத்தை அறிவியா நிற்றல்.
58. வின்னிற வாணுதல் வேல்நிறக்
கண்மெல் லியலைமல்லல்
தன்னிறம் ஒன்றில் இருத்திநின்
றோன்தன(து) அம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில்
வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற அல்குலுக்(கு) ஆமோ
மணிநிறப் பூந்தழையே.
கொளு
உரைத்தது உரையாது கருத்தறி வித்தது.
இதன் பொருள் : ஒருமுறை சொன்ன வார்த்தையைப் பின் ஒருகால் சொல்லாமல், தன் கருத்தினை அறிவித்தது.
தெளிவுரை : வில்லை ஒத்த ஒளி சிறந்த நெற்றியினையும் வேலை ஒத்த திருநயனங்களையும் மதுர இயல்பினையும் உடைய தம்பிராட்டியை வளவிய தன்னுடைய திருமேனியில் ஒரு பாகத்தில் வைத்து நின்றோன். அவனுடைய திரு அம்பலத்தை ஒத்த வாக்கினால் உரைக்கவும் அரிதாகிய நுண்ணிய இடையினையும் கனகத்தனங்களையும் அழகிய வளைகளையும் உடையீர். பொன்னை ஒத்த அல்குலுக்கு மாணிக்கம் போன்ற பூந்தழை யாமோ? ஆமாகில் வாங்கிக் கொள்ளுங்கள் என்பது கருத்து, எனவே, பொன்னுக்கு மாணிக்கம் பொருந்துதலானும் உங்களுடைய அல்குலுக்கும் இந்தத் தழை பொருந்தும்.
10. இடை வினாதல்
இடை வினாதல் என்பது, தழை காட்டித் தன் கருத்து அறிவித்து, அது வழியாக நின்று, நும் அல்குலும் முலையும் அதிபாரமாய் இரா நின்றன. இவை இவ்வாறு காரணம் யாதோ? என்று அவரிடை வினாவா நிற்றல்.
59. கலைக்கீழ் அகல்அல்குல் பாரம(து)
ஆரம்கண் ஆர்ந்(து)இலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றல்முற்
றா(து)அன்(று) இலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம்
பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர்
எதுநுங்கள் சிற்றிடையே.
கொளு
வழிபதி பிறவினாய் மொழிபல மொழிந்தது.
இதன் பொருள் : வழியையும் பதியையும் பிறவற்றையும் வினாவித் தன் புத்தியை ஒருப்படுத்துவதாக நாயகன் அறுதியிட்டது.
தெளிவுரை : மேகலா பாரத்திடத்து அகன்ற அல்குலின் பாரம் இருந்தபடியது; முத்து வடம் கண்ணுக்கு நிறைந்து விளங்குகிற முலையின் கீழே ஏதேனும் சிறிது இடையில்லாத பொழுது நிற்றல் முற்றுப் பெறமாட்டாது; அன்று இலங்கைக்கு அரசனாகிய இராவணன் மலைக்கீழ் விழும்படி அடர்த்த திருச்சிற்றம்பலநாதனின் வளவிய பொலிவினையுடைத்தாகிய ஸ்ரீ கயிலாயத்தில் வில்லோடே சேர்ந்த அம்புகளை ஒத்த கண்களை உடையீர் ! உங்களுடைய சிறிய இடை எதுதான் ? சொல்லுவீராக வேண்டும். 
மதியுடம் படுத்தல் முற்றிற்று

ஐந்தாம் அதிகாரம்
5. இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்
இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல் என்பது, தலைமகளும் தோழியும் உள்வழிச் சென்று, தலைமகன் கரந்த மொழியால் தன் கருத்து அறிவிக்கத் தோழி அவன் நினைவு அறியா நிற்றல்.
நூற்பா
ஐய நாடல் ஆங்கவை இரண்டும்
மையறு தோழி அவன்வர வுணர்தல்
1. ஐயுறுதல், 2. அறிவு நாடல் என இவை இரண்டும் இருவரும் உள்வழி அவன் வரவுணர்தலாம்.
பேரின்பக் கிளவி
இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல்
துறையோர் இரண்டும் சிவம்உயிர் விரவியது
அருளே உணர்ந்திடல் ஆகும் என்ப.
1. ஐயுறுதல்
ஐயுறுதல் என்பது தலைமகன் தழைகொண்டு நின்று கரந்த மொழியால் தன் கருத்தறிவிக்க, மேனியொளி இலனாய் இப்புனத்தினின்றும் போகாது யானையோடு ஏனம் வினாவி இவ்வாறு பொய் கூறா நின்ற இவன் யாவனோ? எனத் தோழி அவனை ஐயுற்றுக் கூறா நிற்றல்.
60. பல்இல னாகப் பகலைவென்
றோன்தில்லை பாடலர்போல்
எல்இலன் நாகத்தோ(டு) ஏனம்
வினாஇவன் யாவன்கொலாம்
வில்இலன் நாகத் தழைகையில்
வேட்டைகொண் டாட்டம்மெய்ஓர்
சொல்இலன் ஆகற்ற வாகட
வான்இச் சுனைப்புனமே.
கொளு
அடற்கதிர் வேலோன் தொடர்ச்சி நோக்கித்
தையல் பாங்கி ஐயம் உற்றது.
இதன் பொருள் : வெற்றியினையும் ஒளியையும் உடைத் தாகிய வேலினை உடையவன், இடைவிடாது வருகிற வரவைப் பார்த்து ஒப்பனையுடைய பாங்கி சந்தேகித்தது.
தெளிவுரை : ஆதித்தனைப் பல்லிழக்கும்படி வெற்றி செய்தவன். அவனுடைய சிதம்பரத்தைப் பாடமாட்டாதாரைப் போல ஒளி இழந்தான் யானையுடனே ஏனமும் வினாவி வந்தான். இவன் யாவன் தான்? கையில் வில் உடையவனும் அல்லன். இவன் கையில் சுரபுன்னைத் தழை இருந்தது. இப்படி இருகையிற்றிலும் கொண்டாட்டம் வேட்டையாய் இருந்தது. உண்மையாகச் சொல்லுவதொரு வார்த்தையும் உடையன் அல்லன். ஐயோ, இவன் கற்ற மரபு என்தான்? இந்தச் சுனைப்புனத்தை நீங்குகிறானும் இல்லை.
2. அறிவு நாடல்
அறிவு நாடல் என்பது, இவன் யாவனோ என்று ஐயுறா நின்ற தோழி பேராராய்சியள் ஆதலின் அவன் கூறிய வழியே நாடாதுவந்து தங்கள் இடைக்கே முடிதலின், இவ்வையர் வார்த்தை இருந்தவாற்றான் ஆழமுடைத்தாய் இருந்ததென்று அவன் நினைவு அறியா நிற்றல்.
61. ஆழமன் னோஉடைத்(து) இவ்வையர்
வார்த்தை அனங்கன்நைந்து
வீழமுன் நோக்கிய அம்பலத்
தான்வெற்பின் இப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற
வாய்ப்பின்னும் மென்தழையாய்
மாழைமெல் நோக்கி யிடையாய்க்
கழிந்தது வந்துவந்தே.
கொளு
வெற்பன் வினாய சொற்பதம் நோக்கி
நெறிகுழற் பாங்கி அறிவு நாடியது.
இதன் பொருள் : நாயகன் கேட்ட சொல்லினது முடிவைப் பார்த்து நெறித்த கூந்தலினை உடைய பாங்கி புத்தியினால் விசாரித்தது.
தெளிவுரை : இந்தச் சுவாமிகளுடைய வார்த்தை மிகவும் ஆழம் உண்டாயிருந்தது. முற்காலத்துக் காமன் பொடியால் விழும்படி பார்த்த திருஅம்பலநாதனுடைய திருமலையின் இந்தப் புனத்திடத்தே முன்பு யானையை வினாவி அதற்குப் பின்பு கலையை வினாவிப் பின்பு (பிறவற்றைப் பேசி) பின்பு மெல்லிய தழைகளையும் உடுப்பீர்களோ? என்னும்படியாய் மெல்ல மெல்ல வந்து குளிர்ந்த மெல்லிய நோக்கினை உடையாளுடைய இடையை வினவும்படியாய் விட்டது. இந்தச் சுவாமிகளுடைய வார்த்தை மிகவும் ஆழமுடைத்தாய் இருந்தது.
இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல் முற்றிற்று

ஆறாம் அதிகாரம்
6. முன்னுற வுணர்தல்
நூற்பா
வாட்டம் வினாதல் முன்னுற வுணர்தல்
கூட்டி உணரும் குறிப்புரை யாகும்.
இதன் பொருள் : வாட்டம் வினாதல் என இஃதொன்றும் முன்னுற உணர்தலாம்.
அது தலைமகன் இங்ஙனம் வினாயதற் கெல்லாம் தோழி மறுமொழி கொடாளாகத் தலைமகன் வாடினான். வாடவே தலைமகளும் அதுகண்டு வாடினாள். ஆதலால் இருவரது வாட்டமும் வினாவப்படுதல் அன்றியும் முன்னர்த் தலைமகனது வாட்டத்தையும் பாங்கி வினாதலாம்.
பேரின்பக் கிளவி
முன்னுற உணர்தல் எனஇஃது ஒன்றும்
சிவம்உயிர் கூடல் அருள்வினா வியது.
1. வாட்டம் வினாதல்
வாட்டம் வினாதல் என்பது தலைமகன் மதியுடம் படுத்து வருந்தா நிற்பக்கண்டு எம்பெருமான் என் பொருட்டால் இவ்வாறு இடர்ப்படா நின்றான் எனத் தலைமகள் தன்னுள்ளே கவன்று வருந்தா நிற்க, அது கண்டு, சுனையாடிச் சிலம்பு எதிர் அழைத்தோ பிறிது ஒன்றினானோ நீ வாடியது என்னோ எனத் தோழி தலைமகளது வாட்டம் வினாவா நிற்றல்.
62. நிருத்தம் பயின்றவன் சிற்றம்
பலத்துநெற் றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலும் கயிலை
மலையின் உயர்குடுமித்
திருத்தம் பயிலும் சுனைகுடைந்(து)
ஆடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி
மெல்லியல் வாடியதே.
கொளு
மின்னிடை மடந்தை தன்னியல் நோக்கி
வீங்கு மென்முலைப் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : மின்னை யொத்த இடையினையுடைய நாயகி தன்னுடைய இயல்பைப் பார்த்துப் போதுக்குப் போது விம்முகிற முலையினையுடைய பாங்கி சொன்னது.
தெளிவுரை : திருச்சிற்றம்பலத்தில் நடனமாடுகிறவன், நெற்றியில் ஒரு திருநயனத்தை உடைய ஒப்பில்லாதவன். அவன் வாழ்கிற ஸ்ரீ கயிலாமலையில் உயர்ந்த உச்சி நின்று நதியாக நீர் அறாமல் விழுகிற சுனைநீர் குடைந்து விளையாடியும் வரை எதிர் நின்று அழைத்தும் இவற்றினால் வருத்தம் மிக்கோதான் வல்லி சாதத்தை ஒத்து மெல்லிய இயல்பினை உடையாள் வாடியது.
முன்னுற வுணர்தல் முற்றிற்று

ஏழாம் அதிகாரம்
7. குறையுற வுணர்தல்
குறையுற உணர்தலாவது, தலைமகன் குறையுறத் தோழி அதனைத் துணிந்துணரா நிற்றல்.
நூற்பா
குறையுற்று நிற்றல் அவன்குறிப்பு அறிதல்
அவள் குறிப்(பு) அறிதலோ(டு) அவர்நினை(வு) எண்ணல்
கூறிய நான்கும் குறையுற உணர்வெனத்
தேறிய பொருளிற் தெளிந்திசி னோரே.
இதன் பொருள் : 1. குறையுற்று நிற்றல், 2. அவன் குறிப்பறிதல், 3. அவள் குறிப்பறிதல், 4. இருவர் நினைவும் ஒருவழி உணர்தல் என இவை நான்கும் குறையுற உணர்தலாம்.
பேரின்பக் கிளவி
குறையுற உணர்தல் துறைஒரு நான்கும்
உயிர்சிவத்(து) இடைசென்(று) ஒருப்படுந் தன்மை
பணியாற் கண்டு பரிவால் வினாயது.
1. குறையுற்று நிற்றல்
குறையுற்று நிற்றல் என்பது தலைமகளது வாட்டங் கண்டு ஐயுறா நின்ற தோழியிடைச் சென்று, யான் உங்களுக்கு எல்லாத் தொழிலுக்கும் வல்லேன்; நீயிர் வேண்டிய தொன்று சொல்லுமின். யான் அது செய்யக் குறையில்லை யென இழிந்த சொல்லால் தலைமகன் தன் நினைவு தோன்ற ஐயுறக் கூறா நிற்றல்.
63. மடுக்கோ கடலின் விடுதிமில்
அன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக்
கோபரன் தில்லைமுன்றில்
கொடுக்கோ வளைமற்று நும்ஐயர்க்(கு)
ஆயகுற் றேவல் செய்கோ
தொடுக்கோ பணியீர் அணியீர்
மலர்நும் சுரிகுழற்கே.
கொளு
கறையுற்ற வேலவன் குறையுற்றது.
இதன் பொருள் : இரத்தம் பொருந்தின வேலையுடையவன் தன் குறையைச் சொன்னது.
தெளிவுரை : விடக்கடவதொரு மரத்தோணியைக் கடலிலே விடுப்பேனோ? அது அன்றாகில் கீழது மேலதுவாக மறுகுதிரையில் புக்கு மீன் பிடிப்பேனோ? முத்துக்கள் பலவற்றையும் ஒரு குளியலில் எடுப்பேனோ? சிவனுடைய புலியூர் முற்றங்களில் புகுந்து வளைவிற்று வருகேனோ? மற்றும் உங்களுடைய அண்ணன்மார்க்குப் பொருந்தின குற்றேவல் செய்து நிற்பேனோ? அணியத்தக்க தேன் இருக்கும் மலர்களை உங்களுடைய நெறித்த கூந்தலுக்குத் தொடுப்பேனோ? இந்த ஊழியங்களில் ஒன்றேனும் எனக்கு ஏவுங்கள்.
2. அவன் குறிப்பறிதல்
அவன் குறிப்பறிதல் என்பது, குறையுறா நின்றவன் முகத்தே தலைமகனது செயல் புலப்படக் கண்டு இவ் அண்ணல் குறிப்பு இவள் இடத்ததெனத் தோழி தலைமகனது நினைவு துணிந்து உணராநிற்றல்.
64. அளியமன் னும்மொன்(று) உடைத்(து)அண்ணல்
எண்ணரன் தில்லையன்னாள்
கிளியைமன் னுங்கடியச் செல்ல
நிற்பின் கிளர்அளகத்(து)
அளியமர்ந்(து) ஏறின் வறிதே
யிருப்பின் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றுறொன்று
தோன்றும் ஒளிமுகத்தே.
கொளு
பொற்றொடித் தோளிதன் சிற்றிடைப் பாங்கி
வெறிப்பூஞ் சிலம்பன் குறிப்ப றிந்தது.
இதன் பொருள் : அழகிய வளைகளையுடையாளுடைய சிறிய இடையையுடைய தோழி நறுநாற்றம் உடைத்தாகிய பூக்களால் சிறந்த மாலையை உடையவன் நினைவை அறிந்தது.
தெளிவுரை : அளிக்கத் தக்கவனுடைய விசாரமானது நிலைபெற்ற ஒன்றை உடைத்தாயிருந்தது. அரனுடைய சிதம்பரத்தைப் போன்றவள் புனத்தில் நிலைபெற்று வாழ்கின்ற கிளிகளை ஓட்டுவதாகச் சிறிதேறச் சென்றாலும் விளங்குகின்ற கொண்டையிலே வண்டுகள் விரும்பி ஏறினும் இவையிரண்டும் செய்யாதொழிகினும் ஒளி சிறந்த முகத்தில் அன்பில்லாதாரைப் போல இருக்கையிலும் இவற்றில் இரண்டிலும் அன்பு தோன்றா நின்றது.
3. அவள் குறிப்பறிதல்
அவள் குறிப்பறிதல் என்பது தலைமகனது நினைவு அறிந்த தோழி இவனிடத்து இவள் நினைவே அன்றி இவளிடத்து இவன் நினைவு உண்டோ எனத் தலைமகளை நோக்க, அவள் முகத்தேயும் அவன் செயல் புலப்படக் கண்டு இவ் ஒண்ணுதல் குறிப்பு ஒன்று உடைத்தென அவள் நினைவும் துணிந்து உணரா நிற்றல்.
65. பிறைகொண்(டு) ஒருவிக் கெடா(து)அன்பு
செய்யின் பிறவியென்னும்
முழைகொண்(டு) ஒருவன்செல் லாமைநின்(று)
அம்பலத்(து) ஆடுமுன்னோன்
உழைகொண்(டு) ஒருங்(கு)இரு நோக்கம்
பயின்றஎம் ஒண்ணுதல்மாந்
தழைகொண்(டு) ஒருவன்என் னாமுன்னம்
உள்ளம் தழைத்திடுமே.
கொளு
ஆங்கவள் குறிப்புப் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : அவ்விடத்து நாகியுடைய நினைவைத் தோழி சொன்னது.
தெளிவுரை : பிழையான காரியத்தைக் கொண்டு, தன்னை விட்டுக் கெட்டுப் போகாதே அன்பு செய்வானாகில், பிறத்தற்கு இடமாய்க் கர்ப்பக் கொள்கையை இடங்கொண்டு செல்லாதபடி திரு அம்பலத்தில் நின்றாடி அருளுகிற பழையவன் ஸ்ரீ அத்தத்திலே ஏந்தின மானின் நோக்கத்தை ஒத்து ஒருகாலே இருவகைப் பார்வையும் கற்ற எம்முடைய அழகிய நெற்றியினை யுடையவள் மாந்தழை கொண்டு வாரா நின்றான் என்று நான் சொல்லுவதற்கு முன்னே தானே கண்டு உள்ளம் தழையா நின்றாள். (அஸ்தம் - அத்தம் - கை)
4. இருவர் நினைவும் ஒருவழி உணர்தல்
இருவர் நினைவும் ஒருவழி உணர்தல் என்பது, இருவர் நினைவும் கொண்டு இன்புறா நின்ற தோழி, இவ் இருவரும் இவ்விடத்து வந்த காரியம் இவன் முகமாகிய தாமரைக் கண் இவள் கண்ணாகிய வண்டு இன்பத்தேனையுண்டு எழில் பெற வந்த இத்துணை யல்லது பிறிதில்லை என அவ்விருவரது நினைவும் துணிந்து உணரா நிற்றல்.
66. மெய்யே இவற்(கு)இல்லை வேட்டையின்
மேல்மனம் மீட்(டு) இவளும்
பொய்யே புனத்தினை காப்பது
இறைபுலி யூர்அனையாள்
மையேர் குவளைக்கண் வண்டினம்
வாழும்செந் தாமரைவாய்
எய்யேம் எனினம் குடைந்தின்பத்
தேனுண்(டு) எழில்தருமே.
கொளு
அன்புறு நோக்(கு) ஆங்கறிந்(து)
இன்புறு தோழி எண்ணியது.
இதன் பொருள் : அன்பு மிக்க பார்வையை அவ்விடத்திலே அறிந்து இத்தன்மையாலே இன்புற்ற தோழி விசாரித்தது.
தெளிவுரை : உண்மையாக இவர்க்கு வேட்டையின் மேல் மனம் இல்லையாய் இருந்தது. மீண்டு இவளும் புனத்தினைக் காப்போம் என்னும் இது வெறும் பொய்யாய் இருந்தது. சுவாமியினுடைய பெரும்பற்றப் புலியூரை யொப்பாள் மை எழுதப்பட்ட நீல மலர் களையொத்த கண்களாகிய வண்டுச் சாதிகள் வாழும் தாமரைப் பூவிடத்தே நாம் ஒன்றை அறியே மாகிலும் அந்தப் பூவை மலர்க் கதிர் இன்பத் தேனுண்டு அழகினை விளக்கா நின்றது.
குறையுற உணர்தல் முற்றிற்று
எட்டாம் அதிகாரம்
8. நாண நாட்டம்
இனி முன்னர் நன்னிலை நாணம் என்று ஓதப்பட்ட நாண நாட்டம் என்பது, இருவர் நினைவும் ஐயமறத் துணிந்த தோழி, அவரது கூட்டம் உண்மை அறிவது காரணமாகத் தலைமகளை நாண நாடா நிற்றல். நன்னிலை நாணம் என்பது நல்ல நிலை பெற்ற நாணம்; நல்ல நிலையாவது நாணவும் நடுங்கவும் நாடுதல்.
நூற்பாவில் கண்ட கிளவிகள் வருமாறு:
1. பிறை தொழுகென்றல்
2. வேறுபடுத்துக் கூறல்
3. சுனையாடல் கூறி நகைத்தல்
4. புணர்ச்சி உரைத்தல்
5. மதியுடம் படுதல்
என இவை ஐந்தும் நாண நாட்டமாம்.
புலிமிசை வைத்தல் என இஃதொன்றும் நடுங்க நாட்டமாம். அது ஒன்பதாம் அதிகாரமாகத் தனியே பிரித்துக் கூறப்பட்டுள்ளது.
பேரின்பக் கிளவி
நாண நாட்டத் துறையோர் ஐந்து
மருள சிவத்தை அதிசயத்(து) உயிரின்
பக்குவந் தன்னைப் பலவும் வியந்தது.
1. பிறை தொழுகென்றல்
பிறை தொழுகென்றல் என்பது, பிறையைக் காட்டித் தான் தொழுது நின்று, நீயும் இதனைத் தொழுவாயாக எனத் தோழி தலைமகளது புணர்ச்சி நினைவு அறியா நிற்றல்.
67. மைவார் கருங்கண்ணி செங்கரம்
கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன்
பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின்
றோன்சடை மேல(து)ஒத்துச்
செவ்வான் அடைந்த பசுங்கதிர்
வெள்ளைச் சிறுபிறைக்கே.
கொளு
பிறைதொழு கென்று பேதை மாதரை
நறுநுதற் பாங்கி நாண நாட்டியது.
இதன் பொருள் : பிறையைத் தொழுவாயாக என்று பேதைத் தன்மையுடைய நாயகியை நல்ல நெற்றியினை உடைய தோழி நாணும்படி சொன்னது.
தெளிவுரை : மை எழுதப்பட்ட கரிய கண்களை உடையாய் ! சிவந்த கைகளைக் கூப்பித் தொழுவாயாக; அரிதேயும் மறந்தும் பொய்யான தேவர்களிடத்தே செல்லாமல் தன்னுடைய அழகிய திருவடிகளிலே அடியேன் பிழைப்பது காரணமாக ஆட்புக விளங்கா நின்ற பெரும்பற்றப்புலியூரில் எழுந்தருளி நின்றவன் அவனுடைய திருச்சடைமேல் வைத்த இளம் பிறையை நிகர்த்துச் செக்கர் வானத்தில் சேர்ந்த செவ்விக் கதிர்களையுடைய வெள்ளிய சிறுபிறைக்கு நின்னுடைய சிவந்த கைகளைக் கூப்பித் தொழுவாய் நாயகியே.
2. வேறுபடுத்தக் கூறல்
வேறுபடுத்துக் கூறல் என்பது பிறை தொழாமல் தலைசாய்த்து நாணி நிலம் கிளையா நிற்பக் கண்டு, பின்னும் இவள் வழியே யொழுகி இதனை அறிவோம் என உட்கொண்டு நீ போய்ச் சுனையாடிவா என்ன அவளும் அதற்கு இசைந்து போய் அவனோடு தலைப் பெய்து வர, அக்குறி அறிந்து அவளை வரை அணங்காகப் புனைந்து வேறுபடுத்துக் கூறா நிற்றால்.
68. அக்கின்த வாமணி சேர்கண்டன்
அம்பல வன்மலயத்(து)
இக்குன்ற வாணர் கொழுந்திச்
செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற ஆ(று)அமர்ந்(து) ஆடச்சென்
றாள்அங்கம் அவ்அவையே
ஒக்கின்ற ஆரணங் கேஇணங்
காகும் உனக்வளே.
கொளு
வேய்வளைத் தோளியை வேறு பாடுகண்(டு)
ஆய்வளைத் தோழி அணங்கென்றது.
இதன் பொருள் : மூங்கில் போன்று வளைகளை அணிந்த தோள்களை உடையாளை மேனி வேறுபாடானது கண்டு அழகிய வளைகளை அணிந்த தோளினை உடையவள் தெய்வம் என்றது.
தெளிவுரை : அக்கினது மணி நீங்காது பொருந்தின திருமிடற்றை உடையவன் திருஅம்பலநாதன். அவனுடைய பொதியின் மலையிடத்து, இக்குன்ற வாணரா நிலையவர் பேற்ற இளைய வல்லிசாதத்தை ஒப்பாள். இந்த அழகிய குளிர்ந்த புனத்தையுடையவள் அந்த மலையருவியை விரும்பி ஆடுவதாகப் போனால் அவளுடைய அவயவங்கள் தம்மை ஒக்கின்றன. தெய்வமே ! உனக்கவள் இணங்காகும். ஆதலால் அவளைக் கண்டு போவாயாக.
3. சுனையாடல் கூறி நகைத்தல்
சுனையாடல் கூறி நகைத்தல் என்பது, வேறு படுத்துக் கூற நாணல் கண்டு, சுனையாடினால் இவ்வாறு அழிந்தழியாத குங்குமமும் அளகத்து அப்பிய தாதும் இந்நிறமும் தருமாயின், யானும் சுனையாடிக் காண்பேன் எனத் தோழி தலை மகளோடு நகையாடா நிற்றல்.
69. செந்நிற மேனிவெண் ணீறணி
வோன்தில்லை அம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையில்
அங்கழி குங்குமமும்
மைந்நிற வார்குழல் மாலையும்
தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானும்
குடைவன் இருஞ்சுனையே.
கொளு
மாண நாட்டிய வார்குழல் பேதையை
நாண நாட்டி நகைசெய்தது.
இதன் பொருள் : மாட்சிமை உடைத்தாகச் சொல்லப்பட்ட நீண்ட கூந்தலையுடைய நாயகியை நாணும்படி சொல்லிச் சிரித்தது.
தெளிவுரை : சிவந்த திருமேனியில் வெள்ளிய திருநீற்றைச் சாத்தி அருளுகிறவன் பெரும்பற்றபுலியூரில் திருஅம்பலத்தை ஒத்த அழகிய மேனியை உடையாய் ! நின் கொங்கையிடத்துக் கூட்டமாகிய அவ்விடத்தே அழிந்த குங்குமமும், இருண்ட நிறமுடைய கூந்தலில் அணிந்த மாலையும் செரு குழுவும் (தாதும்) உன் மேனி முழுதும் சூழ்ந்த கந்தம் சேர்ந்த மணவொளியும் யானும் பெறுவேனாகில் நீ ஆடினேன் என்கிற பெரிய சுனையை யானும் ஆடக் கடவேன்.
என்ன, இது சுனையாட்டில் வந்ததன்று காண்.
4. புணர்ச்சி உரைத்தல்
புணர்ச்சி உரைத்தல் என்பது சுனையாடல் கூறி நகையாடா நின்ற தோழி, அது கிடக்க நீயாடிய அப் பெரிய சுனைதான் கண் சிவப்ப, வாய்விளர்ப்ப அளிதொடரும் வரை மலரைச் சூட்டவற்றோ சொல்வாயாக எனப் புணர்ச்சி உரையா நிற்றல்.
70. பருங்கண் கவர்கொலை வேழப்
படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதல்தில்லை அம்பலத்
தோன்தட மால்வரைவாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய்
விளர்ப்பக்கண் ணார்அளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற்
றோமற்றவ் வான்சுனையே.
கொளு
மணக்குறி நோக்கிப் புணர்ச்சி உரைத்தது.
இதன் பொருள் : மண ஒளியைப் பார்த்துக் கூட்டம் உண்டென்று சொன்னது.
தெளிவுரை : பரிய கண்ணினையும் விருப்பத்தால் கொல்லும் கொலையினையும் உடைய கருப்பு வில்லை உடைய காமன் பட்டு விழும்படி வர்த்திக்கிற அக்கினியைத் தருகிற திருநயனம் நெற்றியில் உடைய பெரும் பற்றப்புலியூரில் திருஅம்பலத்தில் உள்ளவன் மிகவும் பெரிய மலையிடத்துக் கரிய கண்கள் சிவப்பவும் கனிவாய் வெளுப்பவும், கண்ணுக்கு நிறைந்த வண்டுகள் பின் தொடர்கிற தேன் உடைத்தாகிய மலர்களைச் சூட்டத் தக்கதோ அப் பெரிய சுனை.
5. மதியுடம் படுதல்
மதியுடம்படுதல் என்பது, பலபடியும் நாண நாடிக் கூட்டம் உண்மை உணர்ந்த தோழி, இம்மலையிடத்து இவ்விருவர்க்கும் இன்ப துன்பங்கள் பொதுவாய் வாரா நின்றன. அதனால் இவ்விருவர்க்கும் உயிர் ஒன்றே என வியந்து கூறா நிற்றல்.
71. காகத்(து) இருகண் ணிற்(கு) ஒன்றே
மணிகலந் தாங்(கு)இருவர்
ஆகத்து ளோர்உயிர் கண்டனம்
யாமின்றி யாவையுமாம்
ஏகத்தொருவன் இரும்பொழில்
அம்பல வன்மலையில்
தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய்
வரும்இன்பத் துன்பங்களே.
கொளு
அயில்வே கண்ணியொடு ஆடவன் தனக்கு உயிர் ஒன்றென மயிலியல் தோழி மதியுடம் பட்டது.
இதன் பொருள் : கூரிய வேல்களை ஒத்த கண்களை உடையாளுடனே நாயகனுக்கும் ஓருயிர் என்னும் படியை மயில் போன்ற பாங்கி அறுதியிட்டது.
தெளிவுரை : காக்கையினுடைய இரண்டு நயனத்துக்கும் ஓரொளி கலந்து நின்றாற் போல இருவர் உடம்பிற்கும் ஓருயிர் என்கின்றதை இப்பொழுது திட்டமாகக் கண்டோம். அதுவன்றியும் எல்லாப் பொருளுமாகிய ஒன்றாகிய பராசக்தியையுடைய ஒப்பில்லாதவன். பெரிய காவினால் சூழப்பட்ட திருஅம்பல நாதனுடைய திருமலையில் மயிலை ஒத்த சாயலை உடையாளுக்கும் நாயகனுக்கும் இன்ப துன்பம் ஒருப்பட்டு வாரா நின்றன.
நாண நாட்டம் முற்றிற்று

ஒன்பதாம் அதிகாரம்
9. நடுங்க நாட்டம்
மேல் நடுங்கல் புலிமிசை வைத்தல் புகலுங்காலே என்றோதப்பட்ட நடுங்கநாட்டம் என்பது, கூட்டம் உண்மை உணர்ந்தனன் ஆயினும் தலைமகள் பெருநாணினள் ஆகலானும் தான் அவள் குற்றேவல் மகள் ஆகலானும் பின்னும் தான் சொல்லாடாமல் அவள் தன்னைக் கொண்டே கேட்பது காரணமாக நெருங்கி நின்ற ஒரு புலி ஒருவனை எதிர்ப்பட்டதெனத் தோழி அவளை நடுங்க நாடா நிற்றல்.
72. ஆவா இருவர் அறியா
அடிதில்லை அம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின்
றோனையுன் னாரின்முன்னித்
தீவாய் உழுவை கிழித்த(து)அந்
தோசிறி தேபிழைப்பித்(து)
ஆவா மணிவேல் பணிகொண்ட
வாறின்றோர் ஆண்டகையே.
கொளு
நுடங்கிடைப்பாங்கி நடுங்க நாடியது.
இதன் பொருள் : தளர்கின்ற இடையினையுடைய பாங்கி நாயகி நடுங்கும்படி சொல்லியது.
தெளிவுரை : ஆவா ! ஐயோ ! ஐயோ ! பிரம்ம விஷ்ணுக்கள் அறியாத ஸ்ரீபாதங்களைப் பெரும்பற்றப்புலியூரில் திரு அம்பலத்தில் மூவாயிரம் இருடிகள் வணங்கும் படி அளியனாகி நின்றவனை நினையாதாரைப் போல அவனை எதிர்ப்பட்டுப் புலியானது தன்னுடைய பொல்லத வாயை அங்காத்து, ஐயோ (என்னும் அளவில் நாயகி அறிந்து படும்படி ஆயது)
(இனி மீளும்படி சொல்கிறாள்) சிறிது போதிலே அதனைத் தப்புவித்து - ( ஆவா என்றது கொண்டாட்டம்) இப்பொழுது ஓர் ஆண்மைப் பட்டுத் தக்கவன் மணி பொருந்திய வேலைப் பணி கொண்டபடி ! (என்ன அவன் புலியை எறிந்தான் எறிந்தான் என்டு படும்.)
பேரின்பக் கிளவி
நடுங்க நாட்டம் ஒன்றும் சிவமே
உயிரைக் கருணையென்று உற்றருள் நோக்கல்.
நடுங்க நாட்டம் முற்றிற்று

பத்தாம் அதிகாரம்
10. மடல் திறம்
மடல் திறம் என்பது, நடுங்க நாடவும் பெருநாணினள் ஆதலின் தலைமகள் தன்குறை சொல்லமாட்டாது நிற்ப இனி இவள் இறந்து படவும் கூடுமென உட்கொண்டு தலைமகனுடன் சொல்லாடத் தொடங்காநின்ற தோழி, தானும் பெரு நாணினள் ஆதலின் பின்னும் தலைமகன் குறையுற வேண்டிநிற்ப, அந்நிலைமைக்கண் தலைமகன் சென்று, இந்நாளெல்லாம் என்குறை நின்னால் முடியுமென்று நின்னை வந்து இரந்தேன். இது நின்னால் முடியாமையின் யான் மடல் ஊர்ந்தாயினும் இக்குறை முடித்துக் கொள்வேன் எனத் தோழிக்குக் கூறாநிற்றல். என்னை, முன்னுற உணரினும் அவன் குறையுற்ற பின்னர் அல்லது கிளவி தோன்றாது (இறையனார் பொருள் 9) என்பவாகலின்.
நூற்பாவிலுள்ள கிளவிகள் ஒன்பது. அவையாவன:
1. ஆற்றாது உரைத்தல்
2. உலகின்மேல் வைத்துரைத்தல்
3. தன்துணிபு உரைத்தல்
4. மடலேறும் வகையுரைத்தல்
5. அருளால் அரிதென விலக்கல்
6. மொழிநடை எழுதல் அரிதென விலக்கல்
7. அவயவம் எழுதல் அரிதென விலக்கல்
8. உடம்படாது விலக்கல்
9. உடம்பட்டு விலக்கல் என்பன.
பேரின்பக் கிளவி
மடல்துறை ஒன்பதும் சிவத்தினுட் மோக
முற்ற உயிரருள் பற்றி உரைத்தது.
மடல் ஏறுதலாவது, ஒருத்தியைக் காதலித்தான் ஒருவன் அவளைப் பெறாதொழிந்து, அவ் ஆற்றாமை யால் அவன் இறந்துபடும் நிலை உண்டாகுமாயின் அவன் பனங்கறுக்கு மடலால் குதிரை செய்து, தன்னால் காதலிக்கப் பட்டாளது உருவத்தை ஒரு படத்தில் எழுதி அதன் மேலே அவள் பெயரையும் தன் பெயரையும் பொறித்து தான் சாம்பற்பூசி, எருக்க மாலையை அணிந்து, இவளால் யான் இறந்தொழிகின்றேன் எனப் பறையடித்துப் பாடிக்கொண்டு தெருவின்கண் வருதல். இவ்வாறு வருவானாயின் அரசன், இவளைப் பெறாதொழியின் நீ இறந்து படுதல் உண்மை என்றற்குச் சோதனை தருவாயோ? எனக் கேட்டு, தருவேன் என அவன் உடன்படின் சோதித்து அவற்கு அவளைத் தன் ஆணையாற் சேர்ப்பிப்பான். அங்ஙனம் சேர்ப்பித்தல் அக்காலத்து அரச நீதியில் இடம் பெற்றிருந்தமை பற்றி இம்மடல் திறம் அகப் பொருள் இலக்கியங்களில் பயில்வதாயிற்று. இனி, இதனைப் புலவர்கள் படைத்துக் கொண்டது என்பாரும் உளர். மடல் திறத்தை அடிகள் ஒன்பது துறைகளாக அருளிச் செய்வார்.
1. ஆற்றாது உரைத்தல்
ஆற்றாது உரைத்தல் என்பது, தலைமகள்மேல் மடல் திறம் கூறுகின்றான் ஆகலின் அதற்கு இயைவு பட அவ் இருவர் உழைச் சென்று நின்று, நீயிர் அருளாமையின் என்னுயிர் அழியா நின்றது; இதனை அறிமின் எனத் தலைமகன் தனது ஆற்றாமை மிகுதி கூறா நிற்றல்.
73. பொருளா எனைப்புகுந்(து) ஆண்டு
புரந்தரன் மாலயன்பால்
இருளாய் இருக்கும் ஒளிநின்ற
சிற்றம் பலமெனலாம்
கருளார் கருங்குழல் வெண்ணகைச்
செவ்வாய்த் துடியிடையீர்
அருளா(து) ஒழியின் ஒழியா(து)
அழியும்என் ஆருயிரே.
கொளு
மல்லல்திரள் வரைத்தோளவன்
சொல்லாற்றாது சொல்லியது.
இதன் பொருள் : வளப்பம் உடைத்தாகிய திரண்ட மலையை நிகர்த்த தோள்களையுடையவன் தன் குறையைச் சொல்லுதற்கு மராமல் சொன்னது.
தெளிவுரை : ஒரு பொருள் அல்லாத என்னை மதித்து வந்து அடிமை கொண்டு, தேவேந்திரனிடத்திலும் அரி அயன் இடத்திலும் அவர்களிடத்து இருளாய்த் தோன்றுகின்ற ஒளியாய் உள்ளவன் எழுந்தருளி நிற்கின்ற திருச்சிற்றம்பலமென்று சொல்லத் தகும் நெறித்த மிகக்கரிய குழலினையும் வெள்ளிய முறுவலினையும் சிவந்த வாயினையும் துடியொத்த இடையினையும் உடையீர் ! நீங்கள் அருளாதே விடின் என்னுடைய பெறுதற் கரிய உயிர் தப்பாமே அழியும்.
2. உலகின்மேல் வைத்துரைத்தல்
உலகின்மேல் வைத்துரைத்தல் என்பது ஆற்றாமை கூறி அது வழியாக நின்று, ஆடவர்தம் உள்ளமாகிய மீன் மகளிரது கண்வலைப்பட்டால் அதனைப் பெறுதற்கு வேறு உபாயம் இல்லாதவிடத்து மடல் ஊர்ந்தும் அதனைப் பெறுவர் என உலகின் மேல் வைத்துக் கூறா நிற்றல்.
74. காய்சின வேலன்ன மின்னியல்
கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந்
தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கும்
அணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்ச்சின மாவென ஏறுவர்
சீறூர்ப் பனைமடலே.
கொளு
புலவேல் அண்ணல் புனைமடல் ஏற்(று)
உலகின் மேல்வைத்து உய்த்துரைத்தது.
இதன் பொருள் : புலாலை நாறும் வேலினை உடைய நாயகன் செய்யப்பட்ட மடலின்மேல் ஏறுகின்றதனை உலகத்தார்மேல் வைத்து உற்சாகத்தினைச் சொன்னது.
தெளிவுரை : கொல்லும் சினத்த வேலை யொத்த ஒளி உடைத்தாகிய கண்ணாகிய வலையைக் கலந்து மகளிர் வீசின போது உள்ளமாகிய மீனை இழந்தவர்கள் பெரிய பெரும்பற்றப்புலியூரையுடைய சிவன் அணியும் சாந்தும் (திருநீறும்) எருக்க மாலையும் இவற்றாலே அலங்கரித்து, ஒரு கிழியும் கையில் பிடித்துப் பாய்ந்து செல்லுகிற சினத்துப் புரவி யென்னும்படி சீறூர் இடத்தும் பனைமடல் ஏற நிற்பார்கள்.
3. தன் துணிபு உரைத்தல்
தன் துணிபு உரைத்தல் என்பது, முன் உலகின் மேல் வைத்து உணர்த்தி அது வழியாக நின்று, என்னையும் ஒரு பெண்கொடி பிறர் இகழ மடலேறப் பண்ணாநின்றது என முன்னிலைப் புறமொழியாகத் தன் துணிபு கூறா நிற்றல்.
75. விண்ணை மடங்க விரிநீர்
பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வரும்ஒரு
காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்கல் அதள்அம்
பலவன் அருளிலர்போல்
பெண்ணை மடன்மிசை யான்வரப்
பண்ணிற்றோர் பெண்கொடியே.
கொளு
மான வேலவன் மடம்மாமிசை
யானும் ஏறுவன் என்ன உரைத்தது.
இதன் பொருள் : வீர வேலை உடையவன் பனை மடலாகிய புரவியின்மேல் நானும் ஏறக் கடவேன் என்று சொன்னது.
தெளிவுரை : தேவலோகம் அழியவும் விரிநீரால் பரந்து மலைகள் அழியவும், இந்த மண்ணுலகம் அழியவும் இப்படிக்கு வருகிற ஊழி இறுதியான காலத்தும் அன்று நிலைபெற்று நிற்கும் சுவாமி சிங்கத்தின் தோலைத் திருவுடையாகவுடைய திருஅம்பலநாதன் திருவருள் இல்லாதாரைப் போலப் பனைமடல் புரவியினால் நானும் ஏறுவதாகப் பண்ணுவித்தது ஒரு பெண் வடிவாகிய வல்லிக்கொடிச் சாதி.
4. மடலேறும் வகையுரைத்தல்
மடலேறும் வகையுரைத்தல் என்பது, துணிபு கூறவும் பெரு நாணிகள் ஆதலின் சொல்லப்படாத தோழிக்கு வெளிப்படத் தான் நாண் இழந்தமை தோன்ற நின்ற, யான் நாளை நின்னூர்த் தெருவே மடலும் கொண்டு வருவேன்; பின் வருவது காண் எனத் தலைமகன் தான் மடலேறும் வகை கூறா நிற்றல்.
76. கழிகின்ற என்னையும் நின்றநின்
கார்மயில் தன்னையும் யான்
கிழியொன்ற நாடி எழுதிக்கைக்
கொண்டென் பிறவிகெட்டின்(று)
அழிகின்ற(து) ஆக்கிய தாள்அம்
பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நும் சீறூர்த்
தெருவிடைப் போதுவனே.
கொளு
அடல்வேலன் அழிவுற்று
மடலேறும் வகையுரைத்தது.
இதன் பொருள் : வெற்றி வேலினை உடையவன் நெஞ்சழிந்து மடலேறும் கூறபாட்டைச் சொன்னது.
தெளிவுரை : நெஞ்சழிகின்ற என்னையும், இதழ்குச் சிறிதும் இரங்காதே நின்ற நின்னுடைய கார்காலத்து மயிலை ஒப்பாளையும் நான் கிழியில் பொருந்தும்படி அவருடைய அவயவங்களுக்கு உறுப்பானவற்றை விசாரித்து எழுதி என் கையில் பிடித்துக் கொண்டு என் சனனம் கெட்டழியும்படி செய்த ஸ்ரீ பாதங்களை உடைய திருஅம்பல நாதனுடைய ஸ்ரீ கயிலாயத்தில் அழகிய தேன் பொழிகின்ற சாரலின் உம்முடைய சிறிய ஊர்த் தெருவுக்கு நடுவே போதக் கடவேன்.
5. அருளால் அரிதென விலக்கல்
அருளால் அரிதென விலக்கல் என்பது, தலைமகன் வெளிப்பட நின்று மடல் ஏறுவேன் என்று கூறக் கேட்ட தோழி, இனியிவன் மடல் ஏறவுங் கூடுமென உட்கொண்டு தன்னிடத்து நாணிலை விட்டு வந்து, எதிர் நின்று, நீர் மடல் ஏறினால் உம்முடைய அருள் யார் இடத்ததாம் என்று அவனது அருளை எடுத்துக் கூறி விலக்கா நிற்றல்.
77. நடனாம் வணங்கும்தொல் லோன்எல்லை
நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத்(து) அரன்தில்லை
மல்லற்கண் ணார்ந்தபெண்ணை
உடனாம் பெடையொ(டு)ஆண் சேவலும்
முட்டையும் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண
தோமன்ன இன்னருளே.
கொளு
அடல்வேல் அண்ணல் அருளுடை மையின்
மடல் ஏற்றுனக்(கு) அரிதென்றது.
இதன் பொருள் : வெற்றிவேலை உடையவனே ! நீ அருள் உடையை ஆகையால் மடல் ஏறுவது உனக்கு அரிது என்றது.
தெளிவுரை : திருக்கூட்டத்து ஆடி அருளுகிறவன் நம் போல்வாரும் வணங்குதற்கு எளிய பழையவன் அவனுடைய திருமுடி திருவடியின் எல்லையும் அயனும் மாலும் அறியப்படாத அந்தக் கடப்பாட்டாற் சிறந்த தலைவன் அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் அழகிய இடம் மிக்க பனையில் அதனுடன் ஒன்றப்பட்ட பெடையுடனே அழகிய சேவலையும் முட்டையையும் காவல் அழித்து, நாமே மடல் பண்ணுவோமாகில் மன்னனே ! இனிதாகிய அருள் யாவரிடத்துண்டு ? என்று சொல்லியது.
6. மொழிநடை எழுதல் அரிதென விலக்கல்
மொழி நடை எழுதல் அரிதென விலக்கல் என்பது, அருள் எடுத்து விலக்கவும் தன்வழி நில்லாமை கண்டு அவன் வழி ஒழுகி விலக்குவாளாக, நுமதருள் கிடக்க, மடலேறுவார் மடலேறுதல் மடலேறப் படுவார் உருவெழுதிக் கொண்டன்றே; நுமக்கு அவள் மொழி நடை எழுதல் முடியாதாகலின் நீயிர் மடலேறுமாறு என்னோ ? என விலக்கா நிற்றல்.
78. அடிச்சந்தம் மால்கண் டிலாதன
காட்டிவந்(து) ஆண்டுகொண்டென்
முடிச்சந்த மாமலர் ஆக்குமுன்
னோன்புலி யூர்புரையும்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக்
கன்னி அனநடைக்குப்
படிச்சந்தம் ஆக்கும் படம்உள
வோநும் பரிசகத்தே.
கொளு
அவயவம் அரிதின் அண்ணல் தீட்டினும்
இவையிவை தீட்டல் இயலா(து) என்றது.
இதன் பொருள் : அவயவங்களை அரிதாக நாயகனே ! நீ எழுதினாய், ஆகிலும் இவற்றை உன்னாலே எழுத ஒண்ணாது என்றது.
தெளிவுரை : வேதமும் மாலும் கண்டறியாத ஸ்ரீ பாதங்களை எனக்குக் காட்டி என்னை வந்து அடிமை கொண்டு அத் திருவடிகளை என் தøலைக்கே பெரிதாகிய மலர்களாகச் செய்கின்ற பழையவன். அவனுடைய புலியூரை ஒத்த சிறந்த நிறமுடைத்தாகிய யாழோசையைக் கற்ற மென்மொழிக்கன்னி அன்னம் போல நடக்கிற நடைக்கும் (அது எழுத வராது) எழுதுகிற சித்திரங்களும் உண்டோ உன்னுடைய சித்திர சாலையிடத்து ! உண்டாமாகில் கடுக மடலேறும்படி கொண்டு வருவாயாக.
7. அவயவம் எழுதல் அரிதென விலக்கல்
அவயவம் எழுதல் அரிதென விலக்கல் என்பது, அவளது மொழிநடை கிடக்க இவைதாம் எழுத முடியுமோ? முடியுமாயின் யான் சொன்ன படியே தப்பாமல் எழுதிக் கொண்டு வந்தேறும் என்று அவளது அவயவம் கூறாநிற்றல்.
79. யாழும் எழுதி எழில்முத்(து)
எழுதி இருளின்மென்பூச்
சூழும் எழுதியொர் தொண்டையும்
தீட்டியென் தொல்பிறவி
ஏழும் எழுதா வகைசிதைத்
தோன்புலி யூரிளமாம்
போழும் எழுதிற்றொர் கொம்பருண்
டேற்கொண்டு போதுகவே.
கொளு
அவயவம் ஆனவை இவைஇவை என்றது.
இதன் பொருள் : அவளுக்கு அவயவங்களாவன இன்னது இன்னதென்று குறித்துச் சொன்னது.
தெளிவுரை : அவர் வார்த்தைக்கு ஒக்க இசை எழுகிற யாழோசையும் எழுதி முறுவலாக அழகிய முத்து நிரையும் எழுதி, கூந்தலும் மாயையுமாக இருளிடத்தே மெல்லிய பூவாலே தொடுக்கப்பட்ட மாலையும் எழுதி, வாயாக ஒருவகைக் கோவைக் கனியும் எழுதி, என்னுடைய பழைய பிறவிகள் ஏழையும் கூற்றுவன் கணக்கில் எழுதாதபடி அழித்தவன் அவனுடைய புலியூரில் இளமாவடு வகிரையும் எழுதினதொரு வஞ்சிக் கொம்பு உண்டாமாகில் கடுக மடலேறும்படி கொண்டு வருவாயாக.
8. உடம்படாது விலக்கல்
உடம்படாது விலக்கல் என்பது எழுதல் ஆகாமை கூறிக்காட்டி, அதுகிடக்க நும்மை யாம் விலக்குகின்றேம் அல்லேம்; யான் சென்று அவள் நினைவறிந்து வந்தால் பின்னை நீயிர் வேண்டியதைச் செய்யும். அவ்வளவும் நீயிர் வருந்தாது ஒழியும் எனத்தான் உடம்படாது விலக்கா நிற்றல்.
80. ஊர்வாய் ஒழிவாய் உயர்பெண்ணைத்
திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த
இருந்திலம் ஈசாதில்லைக்
கார்வாய் குழலிக்குன் ஆதர(வு)
ஓதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரின்அறி வார்பின்னைச்
செய்க அறிந்தனவே.
கொளு
அடுபடை அண்ணல் அழிதுயர் ஒழிகென
மடநடைத் தோழி மடல்வி லக்கியது.
இதன் பொருள் : கொல்லுகின்ற படைகளையுடைய அண்ணலே ! உன்னை அழித்தற்குக் காரணமான வருத்தத்தை ஒழிவாயாக என்று மடப்ப நடையை உடைய தோழி கூறி மடல் விலக்கியது.
தெளிவுரை : உயர்ந்த பனையில் சிக்கென்ற மடலை நீ ஊரினும் ஆம்; ஒழியினும் ஆம்; சிறப்பு வாய்ந்த மலையினை உடையவனே ! நாங்கள் திருத்த இருந்தோம் அல்லோம். முதலி யாருடைய தில்லையில் கருமை மிகுந்த கூந்தலை யுடையாளுக்கு உன் ஆசையைச் சொல்லி, அவள் உடன்படும்படி கற்பித்துப் பார்த்தால் அவள் அதற்கு இடம் தரினும் யாராலே அறியப்படும் ? பின்பு நீ அறிந்தனவற்றைச் செய்துகொள் என்று மடம் விலக்கினது.
நான்போய் அவள் நினைவு அறிந்து வருவேன். அதுவரையில் நீ வருந்தாது ஒழி என்றது கருத்து.
9. உடம்பட்டு விலக்கல்
உடம்பட்டு விலக்கல் என்பது உடம்படாது முன் பொதுப்பட விலக்கி முகங்கொண்டு பின்னர்த் தன்னோடு அவனிடை வேற்றுமை யின்மை கூறி, யான் நின்குறை முடித்துத் தருவேன். வருந்த வேண்டா எனத் தோழி தான் உடம்பட்டு விலக்கா நிற்றல்.
81. பைந்நாண் அரவன் படுகடல்
வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும்
புலியூர் மணந்தபொன்இம்
மொய்ந்நாண் முதுதிரை வாயான்
அழுந்தினும் என்னின்முன்னும்
இந்நாள் இதுமது வார்குழ
லாட்(கு)என்கண் இன்னருளே.
கொளு
அரவரு நுண்ணிடை குரவரு கூந்தல் என்
உள்ளக் கருத்து விள்ளாள் என்றது.
இதன் பொருள் : பாம்பின் படம் போன்ற அல்குல் சேர்ந்த நுண்ணிய இடையினையும் மணம் பொருந்தின கூந்தலையும் உடையவள் எம் மனத்து நினைவை நீங்காள் எனச் சொல்லியது.
தெளிவுரை : படமுடைய பாம்பைத் திருவரை ஞாணா உடையவன் சத்திக்கிற கடலிடத்தே யுண்டாகி நஞ்ச முதாகிற கருமை நாணத்தக்க நீல மணியை யொத்த திருமிடற்றை யுடையவன், அவன் நிலைபெற்ற பெரும் பற்றப்புலியூரில் பொருந்தின பொன்னை யொப்பாள். நான் கடலாடும் இடத்தே இந்தச் செறிந்த முதிர்ந்த திரை யுடைத்தாகிய கடல் இடத்தே நான் அழிந்தினும் எனக்கு முற்பட்டுத்தான் அழுந்தா நிற்பாள். இற்றை வரை (தேன் ஒழுகும் கூந்தலையுடையாளுக்கு என்னிடமுள்ள இனிய அருள்) இப்படி யிருக்கும். இனித் தெரியாது.
மடல்திறம் முற்றிற்று

பதினொன்றாம் அதிகாரம்
11. குறை நயப்புக் கூறல்
குறை நயப்புக் கூறல் என்பது, தலைமகளை மடல் விலக்கிக் குறைநேர்ந்த தோழி, தலைமகளைத் குறை நயப்பிக்க அவன் குறை கூறா நிற்றல்.
நூற்பாவிலுள்ள துறைகள்
1. குறிப்பறிதல்
2. மென்மொழியாற் கூறல்
3. விரவிக் கூறல்
4. அறியாள் போறல்
5. வஞ்சித்துரைத்தல்
6. புலந்து கூறல்
7. வன்மொழியாற் கூறல்
8. மனத்தொடு நேர்தல்
என இவை எட்டும் குறை நயப்பித்தலாம்.
பேரின்பக்கிளவி
குறைநயப் புத்துறை அவை இரு நான்கும்
சிவந்தோ(டு) உயிரைச் சேர்க்க வேண்டி
உயிர்ப்பரிவு எடுத்தெடுத்(து) உரைத்(து)அறி உறுத்தல்.
1. குறிப்பறிதல்
குறிப்பறிதல் என்பது தலைமகனது குறை கூறத் துணியா நின்ற தோழி தெற்றெனத் கூறுவேன் ஆயின் இவள் இதனை மறுக்கவும் கூடுமென உட்கொண்டு, நம் புனத்தின்கண் சேயினது வடிவை உடையராய்ச் சினவேல் ஏந்தி ஒருவர் பலகாலும் வாரா நின்றார். வந்து நின்று ஒன்று சொல்லுவதும் செய்கின்றிலர். அவரிடத்து யாம் செய்யத் தக்கது யாது எனத்தான் அறியாதாள் போலத் தலைமகளோடு உசாவி அவள் நிறைவு அறியாநிற்றல், என்னை, ஆங்குணர்ந் தல்லது கிழவோ டேத்துத் தான் குறையுறுதல் தோழிக்கு இல்லை (இளையனார் அகப்பொருள் 8) என்ப வாகலின்.
82. தாதேய் மலர்க்குஞ்சி அஞ்சிறை
வண்டுதன் தேன்பருகித்
தேதே எனும்தில்லை யோன்செய்
எனச்சின வேல்ஒருவர்
மாதே புனத்திடை வாளா
வருவர்வந்(து) யாதும்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது
வார்குழல் ஏந்திழையே.
கொளு
நறைவளர் கோதையைக் குறைநயப் பித்தற்(கு)
உள்ளறி குற்ற ஒள்ளிழை யுரைத்தது.
இதன் பொருள் : நறுநாற்றமிக்க மாலையினை யுடை யாளைக் குறையை விரும்ப இருப்பது காரணமாக மனத்தின் நினைவை அறிவதாகவுற்ற அழகிய ஆபரணங்களை உடையாள் சொன்னது.
தெளிவுரை : பெரும்பற்றப்புலியூரில் வாழ்வாருடைய மயிரிலேயுள்ள அல்லி பொருந்தின பூக்களிலே அழகிய நிறத்தை யுடைத்தாகிய வண்டுச் சாதிகள் குளிர்ந்த தேனையுண்டு தே தே என்று இசை எழுப்புகிற பெரும்பற்றப்புலியூரில் முதலியாருடைய மகளாகிய கந்தச் சுவாமி என்னும்படி சினத்த வேலையுடையார் ஒருவர், மாதே ! நம் புனத்திடத்தே வேட்டை முதலாயின ஒன்றும் குறியாதே வருவர்; வந்து ஒரு மாற்றமும் சொல்லார், அவர் திறந்து நாம் செய்யக் கடவது எது ? தேனார்ந்த கூந்தலினையும் மிக்க ஆபரணங்களையும் உடையாய் ! (வேலினை யுடையவர் தளர்ச்சியுறுகின்றமையை அவர் திறத்து நாம் செய்யக் கடவது எது? சொல்வாயாக !)
2. மென்மொழியால் கூறல்
மென்மொழியால் கூறல் என்பது நினைவு அறிந்து முகங்கொண்டு அது வழியாக நின்று, ஒரு பெரியோன் வாடிய மேனியனும் வாடாத தழையினுமாய் நம்புனத்தை விட்டுப் போவதும் செய்கின்றிலன்; தன் குறை இன்னதென்று வெளிப்படச் சொல்லுவதும் செய்கின்றிலன். இஃதென்ன மாயங்கொல்லோ; அறிகின்றிலேன் எனத் தோழி தான் அதற்கு நொந்து கூறா நிற்றல்.
83. வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம்
மிக்கென்ன மாயங்கொலோ
எரிசேர் தளிரன்ன மேனியன்
ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல்
பூங்கணை வேள்கொலென்னத்
தெரியேம் உரையான் பிரியான்
ஒருவன்இத் தேம்புனமே.
கொளு
ஒளிருறு வேலவன் தளர்வுறு கின்றமை
இன்மொழி யவட்கு மென்மொழி மொழிந்தது.
இதன் பொருள் : விளக்கமிக்க வேலினை உடையவன் தளர்ச்சி உறுகின்றமையை இனிய வார்த்தையுடையவளுக்கு மெல்லிதாகச் சொல்லிக் குறையை நயப்பித்தது.
தெளிவுரை : வரி பொருந்தின பெரிய கண்களை உடையாய் ! மயக்கம் மிகுந்து இது வென்ன மாயந்தான். நெருப்பைச் சேர்ந்த தளிரை யொத்த நிறத்தையுடையனாய்க் குளிர்ந்த தழையையும் உடையனாய்ப் பெரும்பற்றுப்புலியூரில் நெறித்த திருச்சடையினையுடைய முதலியார் புத்திரனாகிய முருகவேளோ? பூவினை அம்பாகவுடைய காமவேளோ? என்னத் தெளியேம். இருவரில் ஒருவராக நிச்சயித்தறிய மாட்டோம், தன்குறை இன்னதென்று சொல்லான்; இத்தன்மையனான ஒருவன் இத்தேன் உடைத்தாகிய புனத்தை விட்டு நீங்குவதும் செய்திலன். (இது என்ன மாயந்தான்)
3. விரவிக் கூறல்
விரவிக் கூறல் என்பது வன்மொழியாற் கூறின் மனம் மெலியும் என்றஞ்சி ஓர் அலவன் தன்பெடைக்கு நாவற்கனியை நல்கக் கண்டு ஒரு பெருந்தகை பேய் கண்டாற் போல நின்றான். அந்நிலைமையை நீ கண்டாய் ஆயின் உயிர் வாழமாட்டாய். யான் வன்கண்மையேன் ஆதலின் ஆற்றியுளேனாய்ப் போந்தேன் என மென்மொழியோடு சிறிது வன்மொழிபடக் கூறா நிற்றல்
84. நீகண் டனையெனின் வாழலை
நேரிழை அம்பலத்தான்
சேய்கண் டனையன்சென் றாங்கோர்
அலவன்தன் சீர்ப்பெடையின்
வாய்கண் டனையதோர் நாவற்
கனிநனி நல்கக்கண்டு
பேய்கண்(டு) அனையதொன் றாகிநின்
றான்அப் பெருந்தகையே.
கொளு
வன்மொழி யின்மனம் மெலிவ(து) அஞ்சி
மென்மொழி விரவி மிகுந்து ரைத்தது.
இதன் பொருள் : வலிதாகச் சொல்லிக் குறை நயப்பிக்கும் இடத்து நாயகியுடைய மனம் வாடும் என்று பயப்பட்டு மென்மையினையும் கலந்து நாயகனுடைய ஆற்றாமையைச் சொன்னது.
தெளிவுரை : நேரிழை ! நுண் தொழில்களாற் சிறந்த ஆபரணங்களையும் உடையாய், நான் முன்பு சொன்ன பெரிய தகைமைப்பாட்டை உடையவன், திரு அம்பல நாதனுடைய பிள்ளையாகிய முருகவேலைக் கண்டால் ஒப்பன். அவனுடைய சன்னதியில் ஒரு சேவல் நண்டு தன்னுடைய சீரிய பெடை நண்டின் வாயில் வண்டு, போல் கரியதொரு நாவற்கனியைக் கண்டு, பேயைக் கண்டவர்கள் தங்கள் உணர்வு இழந்து நின்றாற் போலத் தன்னுணர்வு இழந்து நின்றான் காண் இத்தன்மையை நீ கண்டாயாமாகில் உயிர் வாழமாட்டாய் காண்.
சென்று தான் பழமெடுத்த இடத்தினின்றும் சென்று, நனி, உணர்விழத்தலும் கூடும்?
4. அறியாள் போறல்
அறியாள் போறல் என்பது, பேய் கண்டாற் போல நின்றான் எனத் தலைமகன் நிலைமை கேட்ட தலை மகள் பெருநாணினள் ஆதலின் இதனை அறியாதாள் போல, இஃதொரு கடல் வடிவிருந்தவாறு காணாய் எனத் தான் ஒன்று கூறாநிற்றல்.
85. சங்கம் தருமுத்தி யாம்பெற
வான்வழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப்
பொலிகலிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலின்
ஏந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை
வானவன் நேர்வருமே.
கொளு
அறியாள் போன்று குறியாள் கூறியது.
இதன் பொருள் : பாங்கி சொன்ன வார்த்தையை அறியாதாள் போன்று தன் நெஞ்சில் நினையா தொன்றைச் சொல்லியது.
தெளிவுரை : மிக்க ஆபரணங்களை உடையாய் ! பழைய தாய்ப் பலவாய மிக்க மரக்கலங்களால் சிறந்த கடல் பெரும்பற்றப்புலியூரில் தேவனாகிய முதலியாரை ஒக்கும் காண் :-
அதற்குக் காரணம் என் என்னில், சிலேடையினாலே ஒக்கும் !
அன்பு தருகிற முத்தியை அன்பிலாத நாமும் பெறும்படி ஆகாயத்தையும் கழிந்துள்ளதான ஒரு திருவடியில் பொருந்தி மிக்க நீருடைத்தாகிய கங்கையையும் திருச்சடையில் தரித்துப் பொலிந்தவர் வார்த்தை யுடைத்தாகிய பற்றென்றும் புட்கள் உலாவப்பட்ட பெருமை மிக்க தலையோட்டைத் தரித்தலானும்:-
சங்கு தரும் முத்துக்களை முத்துக் கொழிப் பாரேயன்றி நாமும் பெறும்படி மிக்க கழிகளைத் தான் பொருந்தி மிக்க நன்னீரை உடைத்தாகிய கங்கை முதலாகிய ஆறுகளையும் தரித்து மிக்கவர் வார்த்தை உடைத்தாகியவாறு படகுகள் உலவப்பட்ட பெருமை மிகுதலையும் தரித்தலாலே:
தில்லைவானவனை ஒக்கும்.
5. வஞ்சித்து உரைத்தல்
வஞ்சித்து உரைத்தல் என்பது, நாணினால் குறை நேரமாட்டாமல் வருந்தா நின்ற தலைமகள், இவளும் பெருநாணினள் ஆதலின் என்னைக் கொண்டே சொல்லுவித்துப் பின் முடிப்பாளாம் இரா நின்றாள். இதற்கு யான் ஒன்றும் சொல்லாது ஒழிந்தால் எம் பெருமான் இறந்து படும் என உட்கொண்டு தன் இடத்து நாணினை விட்டுப் பாங்கற் கூட்டம் பெற்றுத் தோழியற் கூட்டத்திற்குத் துவளா நின்றான் என்பது தோன்றப் பின்னும் வெளிப்படக் கூறமாட்டாமல் மாயவன் மேல் வைத்து வஞ்சித்துக் கூறா நிற்றல்.
86. புரங்கடந் தான்அடி காண்பான்
புவிவிண்டு புக்கறியா(து)
இரங்கி(டு)எந் தாய்என்(று) இரப்பத்தன்
ஈரடிக்(கு) என்இரண்டு
கரங்கள்தந் தான்ஒன்று காட்டமற்(று)
ஆங்கதும் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை அம்பல
முன்றில்அம் மாயவனே.
கொளு
நெஞ்சம் நெகிழ்வகை வஞ்சித்(து) இவையிவை
செஞ்சடை யோன்புகழ் வஞ்சிக்(கு) உரைத்தது.
இதன் பொருள் : நெஞ்சத்தில் நிகழ்கிற படியைக் கரந்து செஞ்சடையோன் புகழாகிய வற்றைத் தோழிக்குச் சொன்னது.
தெளிவுரை : முப்புரங்களையும் செயித்தவனனுடைய திருவடிகளைக் காண வேண்டிப் பூமியை இடந்து புகுந்து அகங்கார முகத்தினால் அறியப்படாமையால் திருஅம்பலத்தில் புகுந்து, நீயே இரங்க வேண்டும் எந்தாய் என்று வேண்டிக் கொள்ளத் தன்னுடைய இரண்டு திருவடிகளையும் தொழுவதற்கு எனக்கு இரண்டு கைகளையும் கொடுத்தவன், அவனுக்குச் சிறிது இரங்கி ஒரு திருவடியைக் காட்டியருள மற்றத் திருவடியையும் காட்டியருள வேண்டுமென்று அங்ஙனே அகங்கரித்த மாயவன் தில்லையம்பல முன்றில் புகுந்து வரங்கிடந்தான்.
6. புலந்து கூறல்
புலந்து கூறல் என்பது வெளிப்படக் கூறாமல் வஞ்சித்துக் கூறுதலான், என்னோடு இதனை வெளிப்படக் கூறாயாயின் நின் காதல் தோழியர்க்கு வெளிப்படச் சொல்லி அவரோடு சூழ்ந்து நினக்கு உற்றது செய்வாய்; யான் சொன்ன அறியாமையை நின் உள்ளத்துக் கொள்ளாமல் மறப்பாயாக; யான் வேண்டுவது இதுவே எனத் தோழி தலைமகளோடு புலந்து கூறாநிற்றல்.
87. உள்ளப் படுவன வுள்ளி
உரைத்தக் கவர்க்குரைத்தது
மெள்ளப் படிறு துணி, துணி
யேல்இது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க்(கு) அருளா
அரன்தில்லை காணலர்போல்
கொள்ளப் படாது மறப்ப(து)
அறிவிலென் கூற்றுக்களே.
கொளு
திருந்திய சொல்லில் செவ்வி பெறாது
வருந்திய சொல்லின் வகுத்து ரைத்தது.
இதன் பொருள் : திருந்திய சொற்களால் இடம் பெறாமல் வலிதாகச் சொல்லுகிற சொற்களினால் கூறுபடுத்துச் சொன்னது.
தெளிவுரை : என்னைக் கரந்து போகிற காரியத்துக்கு விசாரிக்கத் தருவனவற்றையும் விசாரித்து உரைக்கத்தக்க போக்குரைத்துச் சொல்லத்தக்க நின் காதல் தோழிமார்க்கும் சொல்லி, எனக்கு வஞ்சித்துப் போகிற இதனை மெல்லத் துணிவாய், (அல்லது துணியாது) ஒழிவாய். வஞ்சகராய் வஞ்சகந் தன்னை ஒளிப்பார்க்கு ஒரு நாளும் அருளாத கர்த்தர் அவனுடைய திருஅம்பலத்தைத் தெரியாதாரைப் போல அறிவில்லாமல் என்னுடைய வார்த்தைகளை மனத்திற் கொள்ளாதே மறப்பாயாக; இத்தனையும் உன்னை வேண்டிக் கொள்கின்றேன் யான்.
7. வன்மொழியாற் கூறல்
வன்மொழியாற் கூறல் என்பது புலந்து கூறா நின்ற தோழி அக் கொடியோன் அருள் உறாமையான் மெய்யிற்பொடியும் கையிற் கிழியுமாய் மடலேறத் துணியா நின்றான். அக்கிழிதான் நின்னுடைய வடிவென்று உரையும் உளதாய் இருந்தது. இனி நீயும் நினக்குற்றது செய்வாயாக. யானறியேன் என வன்மொழியால் கூறா நிற்றல்.
மேவிஅம் தோல்உடுக் கும்தில்லை
யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியம் தோன்றும் கிழிநின்
எழில்என்(று) உரையுளதால்
தூவியம் தோகையன் னாய்என்ன
பாவம்சொல் ஆடல்செய்யான்
பாவிஅந் தோபனை மாமடல்
ஏறக்கொல் பாவித்ததே.
கொளு
கடல்உல(கு) அறியக் கமழலந் துறைவன்
மடலே றும்என வன்மொழி மொழிந்தது.
இதன் பொருள் : கடல் சூழ்ந்த உலகத்திலுள்ள (மக்கள் அறிய) நறுநாற்றம் கமழ்தலை உடைத்தாகிய அழகினையுடைய துறைவன் மடலேறப் புகாநின்றான் என்று வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது.
தெளிவுரை : விரும்பி, அழகிய தோலை உடுக்கிற திருஅம்பலநாதனுடைய திருநீற்றை மெய்முழுவதும் பூசிக் கையிற் பிடிக்கிற சித்திரம் விளங்குகின்ற படம் உன் வடிவாய் இருந்ததென்று வார்த்தை உண்டாகியிருந்தது. ஆதலால் தூவியால் சிறந்த அழகினையுடைய மயிலை யொப்பாய் ! தன் குறை சொல்வதும் செய்யானாய்த் தான் என்னை வந்து குறை வேண்டவும் நான் மறுக்கும் பாவத்தைப் பண்ணினவன். பனைத்துண்டாகிய மிக்க மடல் ஏறுவதாகவோ நினைந்து நின்றது. ஐயோ பாவி !
8. மனத்தொடு நேர்தல்
மனத்தொடு நேர்தல் என்பது ஆற்றாமையான் மடலேறத் துணியா நின்றானெனத் தோழியால் வன் மொழி கூறக் கேட்ட தலைமகள் அதற்குத் தான் ஆற்றாளாய்த் தலைமகனைக் காண வேண்டித் தன் மனத்தொடு கூறி நேரா நிற்றல்.
89. பொன்னார் சடையோன் புலியூர்
புகழார் எனப்புரிநோய்
என்னால் அறிவில்லை யானொன்(று)
உரைக்கிலன் வந்தயலார்
சொன்னார் எனும்இத் துரிசுதுன்
னாமைத் துணைமனனே
என்ஆழ் துயர்வல்லை யேற்சொல்லு
நீர்மை இனியவர்க்கே.
கொளு
அடல்வேலவன் ஆற்றானெனக்
கடல்அமிழ் தன்னவள் காணல் உற்றது.
இதன் பொருள் : கொலைத் தொழிலாற் சிறந்த வேலினை உடையவன் ஆற்றான் என்று சொல்லக் கேட்டுக் கடலிற் பிறந்த அமுதத்தை ஒப்பாள் காண நினைந்தது.
தெளிவுரை : பொன்னை யொத்த திருச்சடையினை உடையவன் அவனுடைய புலியூரை வாழ்த்தாதாரைப் போல வருந்தும்படி வந்த நோயானது என்னால் அறியப்பட்ட தில்லையாகிலும் (இதற்கு நான் அல்லன் என்று) யான் மறுமாற்றம் சொல்லேன்; அயலார்கள் வந்து சொன்னார்கள் என்ற இக்குற்றம் என்னிடத்துச் சேராதபடி துணையாகிய மனமே குணங்களால் நல்லவற்கு நான் அழுந்த நின்ற துன்பத்தை நீயே அறிவிப்பாய்.
குறைநயப்புப் கூறல் முற்றிற்று.

பன்னிரண்டாம் அதிகாரம்
12. சேட்படை
சேட்படை என்பது தலைமகளைக் குறை நயப்பித்துத் தன்னினாய கூட்டம் கூட்டலுறுந்தோழி தலை மகளது பெருமையும் தனது முயற்சியது அருமையும் தோன்றுதல் காரணமாகவும், இத்துணை அருமையுடையாள் இனி நமக்கு எய்துதற்கு அருமையுடையளென இதுவே புணர்ச்சியாக நீட்டியாது விரைய வரைந்து கோடல் காரணமாகவும் தலைமகனுக்கு இயைய மறுத்துக் கூறா நிற்றல்.
நூற்பாவில் கண்ட கிளவிகள் 26. அவை வருமாறு :
1. தழை கொண்டு சேறல்
2. சந்தனத் தழை தகாதென்று மறுத்தல்
3. நிலத்தின்மை கூறி மறுத்தல்
4. நினைவறிவு கூறி மறுத்தல்
5. படைத்து மொழியான் மறுத்தல்
6. நாணுரைத்து மறுத்தல்
7. இசையாமை கூறி மறுத்தல்
8. செவ்வியிலள் என்று மறுத்தல்
9. காப்புடைத்தென்று மறுத்தல்
10. நீயே கூறென்று மறுத்தல்
11. குலமுறை கூறி மறுத்தல்
12. நகையாடி மறுத்தல்
13. இரக்கத்தொடு மறுத்தல்
14. சிறப்பின்மை கூறி மறுத்தல்
15. இளமை கூறி மறுத்தல்
16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்
17. நகை கண்டு மகிழ்தல்
18. அறியாள் போன்று நினைவு கேட்டல்
19. அவயவம் கூறல்
20. கண்ணயந்துரைத்தல்
21. தழையெதிர்தல்
22. குறிப்பறிதல்
23. குறப்பறிந்து கூறல்
24. வகுத்துரைத்தல்
25. தழையேற்பித்தல்
26. தழைவிருப்புரைத்தல்
என இவை இருபத்தாறும் சேட்படையாம்.
பேரின்பக் கிளவி
சேட்படை இருபத் தாறு துறையும்
கிடையா இன்பம் கிடைத்தலால் உயிரை
அருமை காட்டி அறியாள் போலப்
பலபல அருமை பற்றி உரைத்த
அருளே சிவத்தோ(டு) ஆக்க அருளல்.
1. தழைகொண்டு சேறல்
தழைகொண்டு சேறல் என்பது, மேற் சேட்படை கூறத் துணியா நின்ற தோழியிடைச் சென்று, அவளது குறிப்பறிந்து பின்னும் குறையுறவு தோன்ற நின்று, நும்மால் அருளத் தக்காரை அலையாதே இத்தழை வாங்கிக் கொண்டு என்குறை முடித்தருளு வீராம் என்று மறுத்தற்கு இடமறச் சந்தனத் தழை கொண்டு தலைமகன் செல்வா நிற்றல்.
90. தேமென் கிளவிதன் பங்கத்(து)
இறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையும்அம் போதும்கொள்
ளீர்தமி யேன்புலம்ப
ஆமென்(று) அருங்கோடும் பாடுகள்
செய்துநும் கண்மலராம்
காமன் கணைகொண்(டு) அலைகொள்ள
வோமுற்றக் கற்றதுவே.
கொளு
கொய்ம் மலர்க் குழலி குறைந யந்தபின்
கையுறை யோடு காளை சென்றது.
இதன் பொருள் : பறித்த பூவை அணிந்த அளகத்தினை உடையவள் இறைக்கு உடன்பட்ட பின் கையுறை ஏந்திக் கொண்டு காளையாகிய நாயகன் எதிர் சென்றது.
தெளிவுரை : தேனை ஒத்து மெத்தென்ற திருவார்த்தைகளையுடைய பரமேசுவரியைப் பாகத்திலேயுள்ள சுவாமி அவன் வாழ்கின்ற புலியூரை யொப்பீர் ! பூவுடைத்தாகிய மெல்லிய தழையையும் அழகிய பூவையும் வாங்கிக் கொள்கின்றீர் இல்லை. அஃதிருக்க இழிந்து தனித்து தான் வருந்த இது பொறும் என்று பொறுத்தற்கரிய கொடுமைப் பாட்டினைச் செய்து, உங்களுடைய நயன (மலர்களாகிய) காமபாணத்தைக் கொண்டு வருந்தும் அதுவேயோ முழுதும் கற்றது.
2. சந்தனத் தழை தகாதென்று மறுத்தல்
சந்தனத் தழை தகாதென்று மறுத்தல் என்பது, தலைமகன் சந்தனத் தழை கொண்டு செல்ல, அது வழியாக நின்று சந்தனத் தழை இவர்க்கு வந்தவாறு என்னோ என்று ஆராயப்படுதலான் இத்தழை எமக்கு ஆகாதெனத் தோழி மறுத்துக் கூறா நிற்றல்.
91. ஆரத் தழையராப் பூண்(டு)அம்
பலத்(து)அன லாடிஅன்பர்க்(கு)
ஆரத் தழையன்(பு) அருளிநின்
றோன்சென்ற மாமலயத்(து)
ஆரத் தழையண்ணல் தந்தால்
இவைஅவள் அல்குல்கண்டால்
ஆரத் தழைகொடு வந்தார்
எனவரும் ஐயுறவே.
கொளு
பிறை நுதற் பேதையைக் குறைநயப் பித்தது
உள்ளறி குற்றம் ஒள்ளிழை யுரைத்தது.
இதன் பொருள் : பிறையைப் போன்ற நெற்றியினையுடைய நாயகியைக் குறையை விரும்புவிப்பது காரணமாக மனத்து நினைவை அறிவதாக உற்று அழகிய ஆபரணங்களை யுடையாள் சொன்னது.
தெளிவுரை : அரமாகிய தழைத்த அரவைப் பூண்டு திருஅம்பலத்தில் அனலை அங்கையில் ஏந்தி ஆடியருளித் தனக்கு அன்பு செய்வார்க்கு மிகுதியாகத் தழைத்த அன்பைக் கொடுத்து அவருடைய இருதயத்தில் நிலைத்து நின்றவன் அவனுடைய திருவுள்ளம் சென்றிருக்கின்ற பொதியின் மலையிடத்துச் சந்தனத் தழையை நாயகனே ! நீ தந்தால் இந்தத் தழையை அவள் அல்குலில் கண்ட காலத்து, யார்தான் அப்பொதிய மலையில் உள்ள தழைகளை இங்கே கொண்டுவந்து கொடுத்தார்கள் என்று பலர்க்கு ஐயம் தோன்றும். (ஆதலால் இத்தழை ஆகாது.)
3. நிலத்தின்மை கூறிமறுத்தல்
நிலத்தின்மை கூறி மறுத்தல் என்பது, சந்தனத் தழை தகாது என்றது அல்லது மறுத்துக் கூறியவாறு அன்றென மற்றொரு தழைகொண்டு செல்ல, அதுகண்டு, இக்குன்றில் இல்லாத தழையை எமக்கு நீர் தந்தால் எங்குடிக்கு இப்பொழுது பழியாம்; ஆதலான் அத்தழை எமக்கு ஆகாது என்று மறுத்துக் கூறா நிற்றல்.
62. முன்தகர்த்(து) எல்லா இமையோரை
யும்பின்னைத் தக்கன்முத்தீச்
சென்(று)அகத்(து) இல்லா வகைசினத்த
தோன்திருந்(து) அம்பலவன்
குன்றகத்(து) இல்லாத் தழைஅண்
ணல்தந்தால் கொடிச்சியருக்(கு)
இன்(று)அகத்(து) இல்லாப் பழிவந்து
மூடும்என்(று) எள்குதுமே.
கொளு
கொங்கலர் தாரோய் கொணர்ந்த கொய்தழை
எங்குலத் தாருக்(கு) ஏலா(து) என்றது.
இதன் பொருள் : அல்லி விரிகின்ற மாலையை உடையவனே ! நீ கொண்டு வந்த கொய்யப்பட்ட தழை எம்குடியில் உள்ளார்க்குப் பொருந்தாது என்றது.
தெளிவுரை : எல்லாத் தேவர்களையும் முற்பாடு இல்லா வகைச் சங்கரித்துப் பின்பு சென்று தக்கனுடைய மூன்று அக்கினிகளையும் குண்டத்தில் இராதபடி அழித்தவன். அழகிய திருவம்பலநாதன், அவனுடைய திருமலையில் இல்லாத தழை நாயகனே ! நீ தந்தால் குறத்தியராகிய எங்களுக்கு இப்போது எங்கள் குடியில் இல்லாத பழிவந்து சூழ்ந்து கொள்ளும் என்று பயப்படா நின்றோம்; அல்லது தழை ஏற்கக் குற்றமில்லை.
4. நினைவறிவு கூறி மறுத்தல்
நினைவு அறிவு கூறி மறுத்தல் என்பது, இத்தழை தந்நிலத்துக்கு உரித்தன்று என்றது அல்லது மறுத்துக் கூறியவாறு அன்றென உட்கொண்டு, அந்நிலத்துக்குரிய தழை கொண்டு செல்ல அது கண்டு தான் உடம்பட்டாளாய், யான் சென்று அவள் நினைவு அறிந்தால் நின்னெதிர் வந்து கொள்வேன். அதுவல்லது கொள்ள அஞ்சுவேன் என மறுத்துக் கூறா நிற்றல்.
93. யாழார் மொழிமங்கை பங்கத்(து)
இறைவன் எறிதிரைநீர்
ஏழாய் எழுமொழி லாய்இருந்
தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழில்எழில் தொண்டைச்செவ்
வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா(து) எதிர்வந்து கோடும்
சிலம்ப தரும்தழையே.
கொளு
மைதழைக் கண்ணி மனமறிந்(து) அல்லது
கொய்தழை தந்தால் கொள்ளேம் என்றது.
இதன் பொருள் : கருமை மிக்க கண்களை உடையாள் மனம் அறிந்தல்லது கொய்யப்பட்ட தழையைத் தந்தாலும் வாங்கிக் கொள்ளோம் என்றது.
தெளிவுரை : யாழிசை போன்ற வார்த்தையுள்ள பரமேசுவரியைப் பாகத்தில் உடைய சுவாமி, கரையை மோதப்பட்ட திரையினையுள்ள கடல் ஏழுமாய்ப் பூமிகள் ஏழுமாய் இருந்தோன். அவன் எழுந்தருளியிருந்த சிதம்பரம் போன்ற மாலையணிந்து சுருண்டு நீண்ட குழலினையும் கொவ்வைக் கனிபோன்று அழகும் சிவப்பும் உடைய வாயினையும் மானின் (நயனம் போன்ற நயனத்தையும் பெற்ற) அவளுடனே பேசிக் கொண்டு வந்த பின்பு அல்லது சற்றும் தாழாமல் எதிரே வந்து வாங்கிக்கொள்ளக் கடவோம் அல்லோம் நாயகனே, நீ தருகின்ற தழையை.
5. படைத்து மொழியான் மறுத்தல்
படைத்து மொழியான் மறுத்தல் என்றது, நினைவறிந்தல்லது ஏலேம் என்றது மறுத்துக் கூறியவாறன்று, நினைவறிந்தால் ஏற்பேம் என்றவாறாம் என உட்கொண்டு நிற்பச் சிறிது புடைபெயர்ந்து அவள் நினைவறிந்தாளாகச் சென்று இத்தழை யானே யன்றி அவளும் விரும்பும்; ஆயினும் இது குற்றாலத்துத் தழையாதலான் இத்தழை இவர்க்கு வந்தவாறு என்னோ வென்று ஆராயப்படும். ஆதலான் இத்தழை எமக்கு ஆகாதென்று மறுத்துக் கூறா நிற்றல்.
94. எழில்வாய் இளவஞ்சி யும்விரும்
பும்மற்(று) இறைகுறையுண்(டு)
அழல்வாய் அவிரொளி அம்பலத்(து)
ஆடும்அம் சோதிஅம்தீம்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற்
றாலத்ததுக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல(து)
இல்லைஇப் பூந்தழையே.
கொளு
அருந்தழை மேல்மேல் பெருந்தகை கொணரப்
படைத்துமொழி கிளவியில் தடுத்தவள் மொழிந்தது.
இதன் பொருள் : அரிய தழையை மேன்மேலும் பெரிய தகைமைப் பாட்டை யுடையவன் கொண்டுவரச் சிருட்டித்துச் சொல்லும் வார்த்தையாலே அத்தழையை வாங்காது விலக்கிப் பாங்கி சொல்லியது.
தெளிவுரை : அழகினால் வாய்த்த இளைய வஞ்சிக் கொம்பினை யொப்பாளும் விரும்புவாள்; சுவாமி; மற்றோர் குறையுண்டு; அழலிடத்தே வாய்ந்த பாடம் செய்கிற பிரகாசித்தினை நேரானவன்; திருவம் பலத்தில் ஆடியருளுகிற அழகிய ஒளியாய் உள்ளவன் அழ நினையும் இனிமையையும் உடைய குழலின் ஓசையை உண்டாகிய அழகிய அசோகின் பொழில் வாய்ந்த பெரிய மலைச் சாரலில் அல்லது இல்லை காண், இந்தப் பொலிவுடைத்தாகிய தழை.
6. நாணுரைத்தது மறுத்தல்
நாணுரைத்தது மறுத்தல் என்பது, பலபடியும் தழை கொண்டு செல்ல மறுத்துக் கூறியவழி, இனித் தழை யொழிந்து கண்ணியைக் கையுறையாகக் கொண்டு சென்றால் அவள் மறுக்கும் வகையில்லை எனக் கழுநீர் மலரைக் கண்ணியாகப் புனைந்து கொண்டு செல்ல, அது கண்டு, செவிலியர் சூட்டிய கண்ணியின் மேல் யான் ஒன்று சூட்டினும் காணா நிற்பாள். நீர் கொணர்ந்த இந்தக் கண்ணியை யாங்ஙனம் சூடும் எனத் தலைமகள் நாணுரைத்து மறுத்துக் கூறா நிற்றல்.
95. உறுங்கள்நி வந்த கணையுர
வோன்பொடி யாய்ஒடுங்கத்
தெறுங்கண்நி வந்தசிற் றம்பல
வன்மலைச் சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணும்என்
வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேயந்திள மந்திகள்
நாணும்இக் குன்றிடத்தே.
கொளு
வாணுதற் பேதையை நாணுதல் உரைத்தது.
இதன் பொருள் : ஒளி சிறந்த நெற்றியையுடைய நாயகி மிகவும் நாணுவள் என்று சொன்னது.
தெளிவுரை : மிக்க தேனுள்ள புஷ்ப பாணத்தால் அதிகமான காமன் நீறாகி வீழ்ந்தொடுங்கச் சுடுகிற திருநயனம் நின்று விளங்குகின்ற திருச்சிற்றம்பலநாதன், அவனுடைய மலையில் நாங்கள் சிற்றில் இழைத்து விளையாடுகிற இடத்துச் செவிலித்தாய்மார் சூட்டின மாலையொழிய நாங்கள் நறுநாற்றமுடைய தொரு மாலையைச் சூட்டினோமாகிலும் எம்முடைய ஒளி சிறந்த நெற்றியினை உடையாள் இது புதுமை என்று அதற்கு நாணா நிற்கும். இவள் நாணுவதற்குக் கேட்க வேண்டுமோ? இம்மலையின் இயல்புதான் இப்படி இருக்கும். 
சுரபுன்னையில் அழகிய பூவினால் தொடுத்த நெற்றிமாலையைச் சூட்டின பொழுது இளைய மந்திக் குரங்குகள் முதலாக வெட்கப்படும். வெட்கமடையும் இம்மலையிடத்து என்றால் இவள் நாணுதற்குக் கேட்க வேண்டுமா?
7. இசையாமை கூறி மறுத்தல்
இசையாமை கூறி மறுத்தல் என்பது, தலை மகள் நாண் உரைத்து மறுத்த தோழி, அவள் நாணங்கிடக்க யாங்கன் வேங்கை மலர் அல்லது தெய்வத்திற்கு உரிய வெறி மலர்சூட அஞ்சுதும்; ஆதலான் இக்கண்ணி எம் குலத்திற்கு இசையாது என மறுத்துக் கூறா நிற்றல்.
96. நறமனை வேங்கையின் பூப்பயில்
பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை எனநனி
அஞ்சும்அஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொடு
அணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை அதள்அம்
பலவன் நெடுவ ரையே.
கொளு
வசைதீர் குலத்திற்(கு) இசையா(து) என்றது.
இதன் பொருள் : குற்றமற்ற எங்கள் குலத்துக்கு இது பொருந்தாது என்றல்.
தெளிவுரை : தேனுக்கு இடமாகிய வேங்கைப்பூ நெருங்குதல் உள்ள பாறையை யானையானது குறுகித் தறுகண்மைக்கு இடமாகிய கொடுவரியை யுடைய புலியென்று மிகவும் பயப்படுகின்ற மேகம் கெட வளர்ந்த வரையினை உடையவனே ! குறவரிட மனையிடத்து நிற்கிற வேங்கையில் சுணங்கை யொத்த பூவோடே தெய்வத்துக்குரிய செங்கழு நீர் மலரைச் சூட்டப் பெறுமோ? நிறம் நிலை பெற்ற புலித் தோலுடைய திருவம்பலநாதனுடைய நீண்டு பெருத்த வெற்பிடத்து. (இங்ஙனே செய்யாமல் செய்யத் தகுமோ என்பது கருத்து).
8. செவ்வியிலள் என்று மறுத்தல்
செவ்வி இலள் என்று மறுத்தல் என்பது, அணங்கலர் தங்குலத்திற்கு இசையாது என்றது அல்லது மறுத்துக் கூறியவாறு அன்றென மாந்தழை யோடு மலர் கொண்டு செல்ல அவை கண்டு உடன்படாளாய், அன்னம் பிணைகிள்ளை தந்தொழில் பயில இன்று செவ்வி பெற்றன வில்லை, அது கிடக்க, என்னுழை நீர் வந்தவாறும் யானுமக்குக் குறை நேர்ந்த வாறும் இன்னும் அறிந்திலள். அதனால் செவ்வி பெற்றால் கொணரும் என மறுத்துக் கூறா நிற்றல்.
97. கற்றில கண்டன்னம் மென்னடை
கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப்
பெறாகிள்ளை பிள்ளையின்றொன்(று)
உற்றிபள் உற்ற(து) அறிந்திலள்
ஆகத்(து) ஒளிமிளிரும்
புற்றில வாளர வன்புலி
யூரன்ன பூங்கொடியே.
கொளு
நவ்வி நோக்கி செவ்வியிலள் என்றது.
இதன் பொருள் : மானினது நோக்கம் போன்ற பார்வையினை உடையவள் பக்குவியல்லள் என்றது.
தெளிவுரை : இவள் புறம் போந்து விளையாடாத படியால் இவள் நடையைக் கண்டு இப்படி நடக்கக் கற்றனவில்லை அன்னங்களும்; கண்ணாகிய மலர்கள் பார்வையைக் கொடுக்க இப்படிப் பார்க்கக் கற்றன வில்லை மானினமும்; இவள் வார்த்தையைக் கேட்டு அப்படியே பேசக் கற்றனவில்லை கிளிகளும்; இளையவள் ஆகையால் இன்னொரு விளையாட்டிலும் முயன்றிலள்; நீ குறையுற்றாயாகவும் யான் அதற்கு மறுத்தேன் ஆகவும் இப்படிப் புகுந்தவனை அறிந்திலள். திருமார்பிலே கிடந்து ஒளி மிளிரும் புற்றில் இருக்கப்பட்ட பெரிய பாம்பை ஆபரணமாக உடையவனுடைய புலியூரை நிகர்த்துப் பூத்த வல்லிசாதம் ஒத்தமின் அனையாள்.
9. காப்புடைத்தென்று மறுத்தல்
காப்புடைத்தென்று மறுத்தல் என்பது, செவ்வியிலள் என்றது செவ்வி பெற்றால் குறையில்லை யென்றாளாம் என உட்கொண்டு நிற்ப, கதிரவன் மறைந்தான். இவ்விடம் காவல் உடைத்து, நும்மிடமும் சேய்த்து; எம் ஐயன் மாரும் கடியர்; யாம் தாழ்ப்பின் அன்னையும் முனியும் நீரும்போய் நாளை வாரும் என இசைய மறுத்துக் கூறா நிற்றல்.
98. முனிதரும் அன்னையும் என்ஐயர்
சாலவும் மூர்க்கர்இன்னே
தனிதரும் இந்நிலத் தன்(று)ஐய
குன்றமும் தாழ்சடைமேல்
பனிதரு திங்கள் அணிஅம்
பலவர் பகைசெகுக்கும்
குனிதரு திண்சிலைக் கோடுசென்
றான்சுடர்க் கொற்றவனே.
கொளு
காப்புடைத் தென்று சேட்ப டுத்தது.
இதன் பொருள் : இவ்விடம் காவலுடைய தென்று நீளம் பார்த்துச் சொன்னது.
தெளிவுரை : சுவாமியே ! நீ இவ்விடத்தில் தாழ்க்கத் தாயார் ஆனவரும் குரோதம் பண்ணுவார்கள். எங்கள் ஐயன்மார்கள் மிகவும் மூர்க்கராய் இருப்பார்கள். இவ்விடந்தான் இயங்குவார் இல்லாத இடமாகையால் இப்பொழுதே தனிக்கும். சுவாமி உன்னுடைய மலையும் இந்நிலத்தில் உள்ளது ஒன்றன்று. நீண்டு தாழ்ந்த திருச்சடாபாரத்தின்மேல் குளிர்ந்த திருஇளம்பிறையைச் சாத்தியருளுகிற திருஅம்பலநாதர் நமக்குப் பகையாகிய முப்புரங்களையும் அழித்த, வளைந்து சிக்கென்ற சிலையாகிய மேருவில் சிகரம் இடமாகச் சென்றடைந்தான் சுடர்களின் தலைவனாகிய சூரியன். ஆதலால் இவ்விடத்தில் நிற்க ஒண்ணாது.
10. நீயே கூறென்று மறுத்தல்
நீயே கூறென்று மறுத்தல் என்பது, இவள் இவ்விடத்து நிலைமையை மறையாமல் எனக்கு உரைப்பாள் ஆயது என்கண் கிடந்த பரிவினான் அன்றே, இத்துணைப் பரிவுடையான் எனக்கிது முடியாமை இல்லை எனத் தலைவன் உட்கொண்டு போய்ப் பிற்றை ஞான்று செல்லத் தோழி, யான் குற்றேவல் மகளாகலின் துணிந்து சொல்ல மாட்டு இன்றிலேன். இனி நீயே சென்று நின்குறை யுள்ளது சொல் எனத் தான் உடம்படாது மறுத்துக் கூறா நிற்றல்.
99. அந்தியின் வாயெழில் அம்பலத்(து)
எம்பரன் அம்பொன்வெற்பின்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
பைந்தே னொடும்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத்(து) ஓம்பும்
சிலம்ப மனம்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
மொழிசென்றம் மொய்குழற்கே.
கொளு
அஞ்சுதும் பெரும பஞ்சின்மெல் லடியைக்
கூறுவ நீயே கூறு கென்றது.
இதன் பொருள் : பெரியோனே ! நாங்கள் அஞ்சாநின்றோம். பஞ்சு போன்ற மெல்லிய அடியினை யுடையாளுக்குச் சொல்லக் கடவன எல்லாம் நீயே சொல்வாயாக என்றது.
தெளிவுரை : அந்திச் செக்கரின் எழிலை யொத்த திருவம்பலத்தில் உளனாகிய எம்முடைய சுவாமி, அவனுடைய அழகிய பொதியின் மலையில் குரக்கு நிரையிடத்துப் பலாப்பழங்களின் இனிய சுளைகளைச் செவ்வித் தேனில் தோய்த்துக் கடுவன் குரங்கானது பெண் குரங்கின் வாயில் கொடுத்துப் பரிகரிக்கின்ற மலையினையுடைய நாயகனே ! மனம் மகிழும்படி அவளை எதிர்ப்பட்டு உன்னுடைய இனிய வார்த்தைகளை அந்தச் செறிந்த கூந்தலினை உடையாளுக்கு நீ தானே சென்று சொல்லுவாயாக.
11. குலமுறை கூறி மறுத்தல்
குலமுறை கூறி மறுத்தல் என்பது, நீயே கூறெனச் சொல்லக் கேட்டு, உலகத்து ஒருவர்கண் ஒருவர் ஒரு குறை வேண்டிச் சென்றால் அக் குறை நீயே முடித்துக் கொள்ளென்பாரில்லை. அவ்வாறன்றி இவள் இந்நாள் எல்லாம் என் குறை, முடித்துத் தருவேன் என்று என்னை அவமே உழற்றி இன்று நின் குறை நீயே முடித்துக்கொள் என்னா நின்றாளெனத் தலைமகன் ஆற்றாது நிற்ப அவனை ஆற்றுவிப்பது காரணமாக, நீர் பெரியீர்; யாம் சிறியோம்; ஆகலான் எம்மோடு நுமக்குச் சொல்லாடுதல் தகாது எனக் குலமுறை கூறி மறுத்துரையா நிற்றல்.
100. தெங்கம் பழம்கமு கின்குலை
சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத்(து) ஒளிர்குளிர்
நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றில்
குன்றன்ன மாபதைப்பச்
சிங்கம் திரிதரு சீறூர்ச்
சிறுமிஎம் தேமொழியே.
கொளு
தொழுகுலத்தீர் சொற்காகேம்
இழிகுலத்தேம் எனவுரைத்தது.
இதன் பொருள் : தொழத்தக்க உயர்ந்த குலத்துள்ளீர். நீர் சொல்லுகிற சொற்களுக்கு நாங்கள் போதோம்: நாங்கள் இழிகுலத்தவர் என்று சொன்னது.
தெளிவுரை : தென்னம் பழமானது கமுகத் தாறுகளை மோதி, வாழைக் குலைகளை முறித்துப் பூந்தாதுகளை உடைத்தாகிய தடாகங்களில் கிடந்து விளங்குகின்ற குளிர்ந்த மருத நிலத்தினையுடையன் ஒருத்தனாக இருந்தனை நீ. பரமேசுவரி சிறந்த பாகத்தினையுடைய திருஅம்பலநாதன் திருப்பரங்குன்றின் மலையொத்தயானைகள் நடுங்கச் சிங்கங்கள் வேட்டமாக உலாவுகிற சிறுமலையிடத்து இருந்தாள், எம்முடைய தேனை நிகர்த்த வசனத்தை யுடையவள். என்றாக இறப்ப உயர்ந்தார்க்கு இறப்ப இழந்தாருடனே என்ன பொருத்தமுண்டு என்றுபடும்.
12. நகையாடி மறுத்தல்
நகையாடி மறுத்தல் என்பது, இவள் குலமுறை கிளத்தலான் மறுத்துக் கூறியவாறு அன்றென மன மகிழ்ந்து நிற்ப, இனி இவன் ஆற்றுவான் என உட்கொண்டு, பின்னும் தழை எதிராது, எம் ஐயன்மார் ஏவும் கண்டறிவோம்; இவ் ஐயர் கையிலே போலப் பொலையால் திண்ணியது கண்டறியேம் என அவனே வாடல் சொல்லி நகையோடு மறுத்துக் கூறா நிற்றல்.
101. சிலையொன்று வாணுதல் பங்கன்சிற்
றம்பல வன்கயிலை
மலையொன்று மாமுகத்(து) எம்ஐயர்
எய்கணை மண்குளிக்கும்
கலையொன்று வெங்கணை யோடு
கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையென்று திண்ணிய வா(று)ஐயர்
கையிற் கொடுஞ்சிலையே.
கொளு
வாள்தழை எதிராது சேட்படுத் தற்கு
மென்னகைத் தோழி இன்னகை செய்தது.
இதன் பொருள் : ஒளிசிறந்த தழையைப் பெற்றுக் கொள்ளாதே தூரத்தன் ஆக்குவதாகப் புன்முறுவலை உடைய பாங்கி இனிமை தோன்றச் சிரித்தது.
தெளிவுரை : வில்போன்று ஒளி சிறந்த நெற்றியினையுடைய உமாதேவியைப் பாகத்தில் உடையவன், திருச்சிற்றம்பலநாதன், கயிலாய வரையிடத்துத் திரண்ட யானை அணியில் எங்கள் அண்ணன்மார் எய்த அம்பு யானை அணியில் பட்டுருவி மண்ணில் மூழ்கும். கலைதான் ஒன்றிருந்தது. அதுதான் எய்தபொழுதே விழுகையற்று எய்த அம்பையும் கொண்டு கடுக ஓடிற்றாயிருந்தது; என்றால் இந்தச் சுவாமியினுடைய கையில் வளைந்த வில்லானது கொலைத் தொழிலான ஒன்றுக்குத் திண்ணியபடி ! (எனத்தான் கொண்டாடுகிறாள்.)

கயிலை மலை யொக்கும் யானை முகத்தென்றுமாம்.
13. இரக்கத்தோடு மறுத்தல்
இரக்கத்தோடு மறுத்தல் என்பது, இவள் என்னுடனே நகையாடுகின்றது தழை வாங்குதற்பொருட்டென உட்கொண்டு நிற்பப் பின்னையும் தழை யேலாது, இவ் ஐயர் இவ்வாறு மயங்கிப் பித்தழையா நிற்றற்குக் காரணம் என்னோ என்று அதற்கு இரங்கி மறுத்துக் கூறா நிற்றல்.
102. மைத்தழை யாநின்ற மாமிடற்(று)
அம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற அன்பினர்
போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா
வினாய்க் கையில் வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ரால்என்ன
பாவம் பெரியவரே.
கொளு
கையுறை எதிராது காதல் தோழி
ஐய நீபெரி(து) அயர்த்தனை என்றது.
இதன் பொருள் : கையுறையை ஏற்றுக்கொள்ளாதே சுவாமி மிகவும் மயங்கினையோ என்றது.
தெளிவுரை : இருள் தழைத்துச் செல்லா நின்ற காள கண்டத்தையுடைய திருஅம்பலநாதன் அவனுடைய சீர்பாதங்களில் சத்தியம் தழைத்துச் செல்லுகிற அன்பரைப் போல் மிகவும் நடுநடுங்கிக் கையில் தழையையும் ஏந்திக் கொண்டு, அதற்கு மறுதலையாக மதம்பட்ட யானையையும் வினவிக் கையில் வில்லும் இன்றியே இப் பெரியவர் பித்தான வார்த்தைகளைச் சொல்லா நின்றார். இப் பாவத்திற்குக் காரணம் என்ன? (என்றுபடும்!)
பெரியோரிடத்துத் தீவினை வந்தால் அதற்குக் காரணம் ஆராயப்படுமாதலால் இதற்குக் காரணம் என் என்றது.
14. சிறப்பின்மை கூறி மறுத்தல்
சிறப்பின்மை கூறி மறுத்தல் என்பது, என் வருத்தத்திற்குக் கவலாநின்றவள் இவளாதலின் எனக்கிது முடியாமை இல்லை என உட்கொண்டு நிற்பத்தோழி, இக்குன்றிடத்து மாவும் சுனையும் இவள் வடிவுக்கு அஞ்சி மலர்ந்தறியா ஆதலான் ஈண்டில்லா தனவற்றை யாம் அணியிற் கண்டார் ஐயுறுவர் என மறுத்துக் கூறா நிற்றல்.
103. அக்கும் அரவும் அணிமணிக்
கூத்தன்சிற் றம்பலமே
ஒக்கும் இவள(து) ஒளிர்உரு
அஞ்சிமஞ் சார்சிலம்பா
கொக்கும் சுனையும் குளிர்தளி
ரும்கொழும் போதுகளும்
இக்குன்றில் என்றும் மலர்ந்தறி
யாத இயல்பினவே.
கொளு
மாந்தளிரும் மலர்நீலமும்
ஏந்தல் இம்மலை இல்லை என்றது.
இதன் பொருள் : பெருமையிற் சிறந்தோய் ! இம் மலையில் மாந்தளிரும் நீல மலரும் இல்லை என்றான் தோழி.
தெளிவுரை : அக்கு வடத்தையும் (உருத்திராட்ச மாலையையும்) பாம்பையும் சாத்தியருளுகிற மாணிக்கம் போலும் அழகிய திருக்கூத்தினை உடையவன் அவனுடைய திருவம்பலத்தை ஒக்கின்ற இவளுடைய விளங்கா நின்ற மேனிக்கு நிகர் வருமோ என்று மேகங்கள் ஆர்ந்த மலையினை உடையவளே ! மாமரங்களும் சுனையும் குளிர்ந்த தளிரும் அழகிய புட்பங்களும் இந்த மலையிடத்து இவள் தோன்றின நாளே தொடங்கி எந்தக் காலத்திலும் தளிர்த்து அலராத இயல்பின. (இவள் மேனிக்குப் பயந்து மரங்களும் தளிர் ஈன்று அறியா; ஆதலால் இந்நிலத்தில் இல்லாதது ஒன்றை நாங்கள் ஏற்றால் பலர்க்கும் வினாவுவதற்கு இடமாகும்.)
15. இளமை கூறி மறுத்தல்
இளமை கூறி மறுத்தல் என்பது அவளது வடிவுக்கு அஞ்சி மலர்ந்தறியா என்றதல்லது மறுத்துக் கூறியவாறு அன்று; சிறப்பின்மை கூறியவாறு என உட்கொண்டு, சிறப்புடவத் தழைகொண்டு செல்ல, அது கண்டு, குழலும் முலையும் குவியாத குதலைச் சொல்லிக்கு நீ சொல்லுகின்ற காரியம் சிறுதுமியை புடைத்தன்று என அவளது இளமை கூறி மறுத்து உரையா நிற்றல்.
104. உருகு தலைச்சென்ற உள்ளத்தும்
அம்பலத் தும்ஒளியே
பெருகு தலைச்சென்று நின்றோன்
பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
முருகு தலைச்சென்ற கூழை
முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக் கென்
னோஐய ஓதுவதே.
கொளு
முளைஎயிற்(று) அரிவை விளைவிலள் என்றது.
இதன் பொருள் : முளைக்கின்ற பல்லுடைய நாயகி விளைவை அறியாள் என்றது.
தெளிவுரை : உருகுதலைச் செய்து தன்னை நினைத்தவர்களின் நெஞ்சினும் அம்பலத்தினும் ஒளி பெருகும் தன்மையினை உடையனாய் எழுந்தருளி நின்றவன் அவனுடைய திருப்பெருந்துறையில் உள்ள இளையவளுடைய தேனிடத்தே உண்டவாகிய நிறைந்த நாற்றம் உண்டாய மயிரும் கடை முடிய எழுந்ததில்லை. முலைகள் இன்னும் புறப்படவில்லை. எப்போது பேசினாலும் ஒரு சொற்போல இருக்கிறது. மழலைச் சொல்லை உடையாளுக்குச் சுவாமி சொல்லுகிறது ஏதோதான்.
16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்
மறைத்தமை கூறி நகைத்துரைத்தல் என்பது, இவளது இளமை கூறுகின்றது தழை வாங்குதற் பொருட்டன்றாக வேண்டும்; அதுவன்றி இந்நாள் எல்லாம் இளைய மறுத்து இப்பொழுது, இவள் இளையல் என்று இயையாமை கூறி மறுக்க வேண்டியது என்னை? இனிஇவ் ஒழுக்கம் இவளை ஒழிய ஒழுகக் கடவேன் என உட்கொண்டு நிற்ப, நீ என்னை மறைத்த காரியம் இனி நினக்கு முடியாது என அவனோடு நகைத்துக் கூறா நிற்றல்.
105. பண்(டு)ஆல் இயலும் இலைவளர்
பாலகன் பார்கிழித்துத்
தொண்டால் இயலும் சுடர்க்கழ
லோன்தொல்லைத் தில்லையின்வாய்
வண்டால் இயலும் வளர்பூந்
துறைவ மறைக்கின்என்னைக்
கண்டால் இயலும் கடனில்லை
கொல்லோ கருதியதே.
கொளு
என்னை மறைத்தபின் எண்ணியது அரிதென
நன்னுதல் தோழி நகைசெய்தது.
இதன் பொருள் : எனக்குக் கரந்தவிடத்து நீ நினைத்த காரியம் முடிக்கை அரிதென்று நல்ல நெற்றியினை உடைய பாங்கி சிரித்தது.
தெளிவுரை : முற்காலத்தில் ஆலமரத்தினின்றும் புறப்படுகிற தளிரில் கண்வளர்ந்த புரு÷ஷாத்தமன் பூமியை இடந்து கொண்டு புக்கு, அங்ஙனம் அகங்கார முகத்தான் அறியப்படாமையால் அவன் தொண்டு செய்து காண்கைக்கு முயல்கிற சுடர்க் கழலோன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரிடத்து வண்டுகள் ஆலித்தலைச் செய்கிற மிக்க பூவுடைத்தாகிய துறையினை உடையவனே! எனக்கு மறைத்த விடத்து விசாரித்துப் பார்த்தால் நீ நினைத்த காரியம் முடித்துப் போகை அரிதுபோல இருந்தது.
என்றதால் எனக்கு மறைப்பதேன் என்றுபடும்.
17. நகை கண்டு மகிழ்தல்
நகை கண்டு மகிழ்தல் என்பது, இவள் தன்னை மறைத்தால் முடியாதென்றது, மறையாது ஒழிந்தால் முடியும் என்றாளாம் எனத் தலைமகன் உட்கொண்டு நின்று, உன்னுடைய சதுரப்பாட்டைச் சேர்ந்த மெல்லென்ற நோக்க மன்றோ எனக்குச் சிறந்த துணை அல்லது வேறு துணை உண்டோ என அவனது நகை கண்டு மகிழா நிற்றல்.
106. மத்தகம் சேர்தனி நோக்கினன்
வாக்கிறந்(து) ஊறமுதே
ஒத்தகம் சேர்ந்தென்னை உய்யநின்
றோன்தில்லை ஒத்திலங்கு
முத்தகம் சேர்மென் னகைப்பெருந்
தோளி முகமதியின்
வித்தகம் சேர்மெல்லென் நோக்கமன்
றோஎன் விழுத்துணையே.
கொளு
இன்னகைத் தோழி மென்னகை கண்டு
வண்ணக் கதிர்வேல் அண்ணல் உரைத்தது.
இதன் பொருள் : பெரிய மூங்கிலை யொத்த தோளினை உடைய பாங்கியின் மெல்லிய சிரிப்பைப் பார்த்து அழகினையும் ஒளியினையும் உடைத்தாகிய வேலினையுள்ள நாயகன் சொன்னது.
தெளிவுரை : திருநெற்றியில் சேர்ந்ததொரு திருநயனத்தை உடையவன். சொல்லளவைக் கடந்து வந்து ஊறுகின்ற அமுதத்தை ஒத்து என் நெஞ்சில் பொருந்தி என்னைப் பிழைக்கும்படிக்கு ஈடாக நின்றோன் அவனுடைய சிதம்பரத்தை ஒத்து விளங்கும் முத்துநிரையை ஒத்து உள்ளடங்கின வெள்ளிய முறுவலையுடைய பெரிய தோள்களை உடையாய்! உன் முகமாகிய சந்திரனில் சதுரப்பாடு பொருந்தின மெத்தென்ற பார்வையல்லவோ எனக்குரிய துணையாவது?
என்றால் உனக்கு நான் மறைப்பேனோ? என்றது. உள்ளக் கருத்து நுண்ணிதின் விளக்கலின் வித்தகஞ்சேர் மெல்லிய நோக்கமென்றார்.
18. அறியாள் போன்று நினைவு கேட்டல்
அறியாள் போன்று நினைவு கேட்டல் என்பது, தலைமகனது மகிழ்ச்சி கண்டு, இவன் வாடாமல் தழை வாங்குவேன் என உட்கொண்டு, என்னுடைய தோழியர் எண்ணிறந்தாருளர்; அவருள் நின்னுடைய நினைவு யார் கண்ணதோ எனத் தான் அறியாதாள் போன்று அவன் நினைவு கேளா நிற்றல்.
107. விண்இறந் தார்நிலம் விண்டலர்
என்றுமிக் கார்இருவர்
கண்இறந் தார்தில்லை அம்பலத்
தார்கழுக் குன்றினின்று
தண்நறுந் தா(து)இவர் சந்தனச்
சோலைப்பந் தாடுகின்றார்
எண்இறந் தார்அவர் யார்கண்ண
தோமன்ன நின்னருளே.
கொளு
வேந்தன் சொன்ன மாந்தளிர் மேனியை
வெறியார் கோதை யறியேன் என்றது.
இதன் பொருள் : நாயகன் சொன்ன மாந்தளிர் போன்ற சரீரத்தை உடையாளை நறுநாற்றமிக்க மாலையினை உடையவள் அறியேன் என்றது.
தெளிவுரை : அன்னமாய் ஆகாசம் கடந்தாரும் வராகமாய்ப் பூமியை இடந்தாரும் என்று சொல்லப்பட்ட அயனும் மாலுமாகிய இவ்விருவர் இடத்தையும் கடந்து நின்ற திருவம்பலத்தில் உள்ளவர், அவருடைய திருக்கழுக்குன்றம் நின்று திட்பமும் நறுநாற்றமும் உடைத்தாகிய பூப்பரந்த சந்தனச் சோலையில் பந்தாடுகின்றவர்கள்; இவர்கள் எண்ணிறந்த பேராய் இருந்தார்கள். இவர்களில் மன்னனே ! நின்னுடைய அருள் யாரிடத்தே என்று சொல்வாயாக !
19. அவயவம் கூறல்
அவயவம் கூறல் என்பது, இன்னும் அவளை இவள் அறிந்திலள்; அறிந்தாளாயின் தழை வாங்குவாள் என உட்கொண்டு நின்று, என்னால் கருதப்பட்டாளுக்கு அவயவம் இவை எனத் தோழிக்குத் தலைமகன் அவளுடைய அவயவம் கூறா நிற்றல்.
108. குவவின கொங்கை குரும்பை
குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
கவவின வாள்நகை வெண்முத்தம்
கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழில்
சிற்றம் பலம்அனையாட்(கு)
உவவின நாள்மதி போன்றொளிர்
கின்ற(து) ஒளிமுகமே.
கொளு
அவயவம் அவளுக்(கு) இவைஇவை என்றது.
இதன் பொருள் : என்னால் காதலிக்கப்பட்டவளுக்கு அவயவங்கள் இப்படியே இருக்குமென்பது.
தெளிவுரை : குவிந்த முலைகள் குரும்பையை ஒக்கும்; மயிர் கொன்றைப் பழ நெற்றுத் தானாய் இருக்கும்; சிவந்த வாயானது கொவ்வைப் பழம் போன்றிருக்கும்; உள்ளடங்க ஒளி சிறந்த முறுவல் வெள்ளிய முத்துப் போன்றிருக்கும்; கண் ஆனது செங்கழுநீர் மலரை ஒக்கும்; தவத் தொழிலை முடிவு செய்கிறவன் அந்த விரதங்களினால் வருந்தாமல் இன்புற்று நெறியை அருளுகிறவன் அவனுடைய நீண்ட பொழில் சூழப்பட்ட திருச்சிற்றம்பலத்தை ஒப்பாளுக்கு உவாநாளின் மதியை ஒத்து விளங்கா நின்றது சிறந்த முகமானது.
உவாநாள் - பவுர்ணமி. இப்படிக்கு அவயவங்களை உடையாளையும் அல்லாதாரையும் தெரியாதோ என்றுபடும்.
20. கண் நயந்து உரைத்தல்
கண் நயந்து உரைத்தல் என்பது, அவயவம் கூறியது கூறியும் அமையாது தனக்கு அன்று தோழியைக் கண்டினமை நினைந்து, பின்னும் கண்ணயந்து கூறா நிற்றல்.
109. ஈசற்(கு) யான்வைத்த அன்பின்
அகன்றவன் வாங்கியஎன்
பாசத்தின் காரென்(று) அவன்தில்லை
யின்ஒளி போன்றவன்தோள்
பூ(சு)அத் திருநீ(று) எனவெளுத்(து)
அங்கவன் பூங்கழல்யாம்
பே(சு)அத் திருவார்த்தை யிற்பெரு
நீளம் பெருங்கண்களே.
கொளு
கண்இணை பிறழ்வன வண்ணம் உரைத்தது.
இதன் பொருள் : கண் இணைகள் உலவுகிற வடிவைச் சொன்னது.
தெளிவுரை : சிவன் இடத்தில் யான் வைத்த நேசம் போல விரிந்து அவனால் வாங்கப்பட்ட வெய்ய பாசம் போல கருமையுடையதாய் திருப்புயங்களில் சாத்துகிற திருநீறு போல வெள்ளிதாய் அவனுடைய பொலிவு உடைத்தாகிய சீபாதங்களை நாம் சொல்லுகிற திருவார்த்தை போல பெரிய நீளமுடைத்தாய் இருந்தன, பெரிய கண்களே. கண்ணினால் பெரிது இடர் பட்டான் ஆதலின் இவ்வாறு கூறினார்.
21. தழையெதிர்தல்
தழையெதிர்தல் என்பது, கண் நயந்துரைப்பக் கேட்ட தோழி, இவ்வாறு ஏற்றல் எங்குடிக்கு ஏலா வாயினும் செய்த உதவிக்கும் நின் பேரன்புக்கும் ஏலா நின்றேன் எனக் கூறித் தலைமகன்மாட்டுத் தழை எதிரா நிற்றல்.
110. தோலாக் கரிவென்ற தற்கும்
துவள்விற்கும் இல்லின்தொன்மைக்(கு)
ஏலாப் பரி(சு)உள வேயன்றி
ஏலேம் இருஞ்சிலம்ப
மாலார்க்(கு) அரிய மலர்க்கழல்
அம்பல வன்மலையில்
கோலாப் பிரசம்அன் னாட்(கு)ஐய
நீதந்த கொய் தழையே.
கொளு
அகன்ற இடத்(து) ஆற்றாமை கண்டு
கவன்ற தோழி கையுறை எதிர்ந்தது.
இதன் பொருள் : நாயகன் குறைக்கு உடன்படாமல் அகன்ற இடத்துத் தான் ஆற்றாமையைக் கண்டு அத்தன்மையிலே துன்பமுற்ற தோழி கையுறை எதிர்ந்தது.
தெளிவுரை : ஒருவருக்கும் தோலாத கரியை நீ வென்ற படிக்கும், நாங்கள் குறை மறுக்கவும் நீ போகாமல் துவண்டதற்கும் எம் குடியாயின் பழமைக்கும் ஏலாத் தன்மையுண்டோ? பெரிய மலையையுடையவனே! நாங்கள் புரு÷ஷாத்தமனார்க்கு அரிய மலரையொத்த ஸ்ரீபாதங்களை உடைய திருஅம்பலநாதன், அவனுடைய திருமலையில் ஈ முதலானவற்றால் கொல்லப்படாத தேனை ஒப்பாளுக்கு நீ தந்த கொய்யப்பட்ட தழையை இவற்றாலே ஏற்கிறோம். இதனை யல்லது தழையேற்பால் சிலரல்லோம் காண்.
22. குறிப்பறிதல்
குறிப்பறிதல் என்பது, தலைமகன் மாட்டுத் தழையெதிர்ந்த தோழி, இவளுக்குத் தெற்றெனக் கூறுவேன் ஆயின் இவள் மறுக்கவும் கூடும் என உட்கொண்டு இந்நாள் காறும் தழை ஏலாமைக்குத் தக்க பொய் சொல்லி மறுத்தேன். இன்று அவனது நோக்கங் கண்டபின் பொய் சொல்லும் நெறி அறிந்திலேன். இனி அவனுக்குச் சொல்லுமாறென்னோ எனத் தலையேற்பித்தற்குத் தலை மகளது குறிப்பு அறியா நிற்றல்.
111. கழைகாண் டலும்சுளி யுங்களி
யானையன் னான்கரத்தில்
தழைகாண் டலும்பொய் தழைப்பமுன்
காண்பன்இன்(று) அம்பலத்தான்
உழைகாண் டலும்நினைப் பாகும்மெல்
நோக்கிமன் நோக்கங்கண்டால்
இழைகாண் பணைமுலை யாய்அறி
யேன்சொல்லும் ஈடவற்கே.
கொளு
தழை எதிரா(து) ஒழிவதற்கோர்
சொல்லறி யேனெனப் பல்வளைக்(கு) உரைத்தது.
இதன் பொருள் : தழை ஏற்றுக் கொள்ளாது ஒழிவதற்கு ஒரு வார்த்தையும் அறியேன் என்று பல வளைகளையும் உடையாளுக்குச் சொன்னது.
தெளிவுரை : பரிக்கோலைக் காணும் அளவில் விரிகின்ற மத யானையை ஒத்த நாயகனுடைய கையில் அத்தழையைக் காணும் அளவில், அத்தழை ஏலாசைக்குச் சொல்லும் பொய்யான வார்த்தைகளை முன்பு மிகவும் காண்பேன். இப்பொழுது திருவம்பல நாதனுடைய கையில் ஏந்தின மானின் நோக்கத்தைக் காணும் அளவில் நினைப்பாகிற மெத்தென்ற பார்வையினையுடையாய்! நாயகனுடைய புன்னோக்கத்தைப் பார்த்தால் ஆபரணங்களை விரும்பிக் காணத்தக்க பெரிய முலைகளை உடையாய் ! அத்தழை ஏலாமைக்குச் சொல்லும் பெரிய வார்த்தைகளை ஒன்றும் அறிந்திலேன் காண்.
23. குறிப்பறிந்து கூறல்
குறிப்பறிந்து கூறல் என்பது, குறிப்பறிந்து முதல் கொண்டு அது வழியாக நின்று, யானை கடிந்த பேருதவியார் கையில் தழையும் துவளத்தகுமோ? அது துவளாமல் யாம் அவரது குறை முடிக்க வேண்டாவோ எனத் தோழி நயப்பக் கூறா நிற்றல்.
112. தவளத்த நீறணி யும்தடந்
தோள்அண்ணல் தன்னொருபால்
அவள்அத்த னாம்மக னாம்தில்லை
யான்அன்(று) உரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார்
கரத்தகண் ணார்தழையும்
துவளத் தகுவன வோசுரும்
பார்குழல் தூமொழியே.
கொளு
ஏழைக்(கு) இருந்தழை தோழிகொண்(டு) உரைத்தது.
இதன் பொருள் : நாயகிக்கு மிக்க தழையைப் பாங்கி கொண்டு சென்றது.
தெளிவுரை : வெள்ளிய திருநீற்றைச் சாத்தியருளுகிற பெரிய திருப்புயங்களை உடைய சுவாமி, தனக்கொரு பாகமாகிய தன் தேவிக்குத் தகப்பனும் மகனுமான திருவம்பலநாதன் முற்காலத்தில் உரித்த யானையை ஒத்ததான வேண்டிய கவளங்களைக் கொள்ளுகிற யானை நம்மை கொல்லாமை வென்றவர்; அவர் கையில் உள்ளனவாகிய கண்ணுக்கு நிறைந்த தழையும் வாட விடப்படுவனவோ? வண்டு நிறைந்த கூந்தலையும் தூய வார்த்தையையும் உடையாய்!
24. வகுத்துறைத்தல்
வகுத்துரைத்தல் என்பது, உதவி கூறவும் பெருநாணினள் ஆதலின் தழை வாங்க மாட்டாது நிற்ப, அக் குறிப்பறிந்து, இருவகையானும் நமக்குப் பழியேறும், அதுகிடக்க, நமக்கு உதவி செய்தாற்கு நாமும் உதவி செய்யுமாறென்னோ எனத் தலைமகள் தழையேற்குமாறு வகுத்துக் கூறா நிற்றல்.
113. ஏறும் பழிதழை யேற்பின்மற்(று)
ஏலா விடின்மடன்மா
ஏறும் அவன்இட பங்கொடி
ஏற்றிவந்(து) அம்பலத்துள்
ஏறும் அரன்மன்னும் ஈங்கோய்
மலைநம் இரும்புனம்காய்ந்(து)
ஏறும் மலைதொலைத் தாற்(கு)என்னை
யாம்செய்வ(து) ஏந்திழையே.
கொளு
கடித்தழை கொணர்ந்த காதல் தோழி
மடக்கொடி மாதர்க்கு வகுத்துரைத்தது.
இதன் பொருள் : நாற்றமுடைய தழையை ஏற்றுக்கொண்டு வந்த உயிர்த்தோழி மடப்பத்தால் தக்க நாயகிக்குக் கூறுபடுத்திச் சொன்னது.
தெளிவுரை : தழை ஏற்போமாகில் பழி ஏறா நிற்கும்; மற்று நாம் தழை ஏற்காத போது மடலாகிய புரவியை அவன் ஏறா நிற்பன். இடபத்தைக் கொடியில் எழுதிப் பிடித்து வந்து, பிறவித் துன்பம் தீர்க்கக் கடவேன் என்று திருவம்பலத்தில் ஏறி நின்ற தலைவன் மன்னும் நிலைபெற்ற திருஈங்கோய் மலையில் நம் பெரும்புனத்தையும் அழித்து நம்மையும் கொல்வதாக வந்தேறுகின்ற மலையை நிகர்த்த யானையைத் தோற்பித்தவர்க்கு மிகுந்த ஆபரணங்களையுடையாய் நாம் என் செய்வோம்.
என்ன தழையேற்காமலிருப்பது சில பழியாம்; தழை ஏலாதபோது அவன் மடல் ஏறுதலால் உலகெலாம் அறிந்து பெரும் பழியாகும். ஆதலால் உபகாரம் செய்தார் ஒருவற்கு உபகார சூன்னியம் செய்து பெரும்பழி பெறுவதின் பிரதி உபகாரம் செய்து சிறு பழி பெற அமையாதோ என்று படும்.
25. தழையேற்பித்தல்
தழையேற்பித்தல் என்பது, தழை ஏலாது ஒழியினும் பழியேறுமாயின் தழையேற்பதே காரியமென உட்கொண்டு நிற்ப, அக் குறிப்பறிந்து, இத்தழை நமக்கு எளியது ஒன்றன்று; இதனை ஏற்றுக் கொள்வாயாக எனத் தோழி தலைமகளைத் தழை ஏற்பியா நிற்றல்.
114. தெவ்வரை மெய்யெரி காய்சிலை
ஆண்டென்னை ஆண்டுகொண்ட
செவ்வரை மேனியன் சிற்றம்
பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி யில்லைகண்
டாய்உள்ள வா(று)அருளான்
இவ்வரை மேற்சிலம் பன்எளி
தில்தந்த ஈர்ந்தழையே.
கொளு
கருங்குழல் மடந்தைக்(கு) அரும்பெறல் தோழி
இருந்தழை கொள்கென விரும்பிக் கொடுத்தது.
இதன் பொருள் : கரிய கூந்தலையுடைய தலைவிக்கு, பெறுதற்கரிய தோழியானவள் இந்தச் சிறந்த தழையைப் பெற்றுக் கொள்வாயாக என்று விரும்பிக் கொடுத்தது.
தெளிவுரை : வட மேருவை வில்லாக வளைத்துத் தனக்கு மாறுபாடானவர்கள் புரங்களுடனே அவர்கள் சரீரமும் எரியச் செய்தும் என் நெஞ்சக் கல்லை உருக்கியும் இவ்விரு சிலையையும் தன் வசத்தில் வரப் பண்ணிக் கொண்ட பவளமலை போன்ற திருமேனியை உடையவன் (என்றது வசமாக்க ஒண்ணாத மலை முதலானவற்றை வசப்படுத்தின சிரிப்பால் என் நெஞ்சக் கல்லைக் கரைத்து வசமாக்கினான் என்பது கருத்து) திருச்சிற்றம்பலநாதன் ஸ்ரீ கயிலாய மலையாகிய வரையின் மேலன்றி வேறோர் இடத்தும் கிடையாது காண். இவ்வார்த்தை உள்ளது காண்; நாயகன் தன்னுடைய அன்பினால் இம்மலையிடத்து நமக்கு எளிதாகக் கொண்டுவந்து தந்த குளிர்ந்த தழை அந்த வரையிடத்தன்றி வேறொரு மலைக்கும் (மலையிலும்) கண்டதில்லை காண்.
26. தழை விருப்புரைத்தல்
தழை விருப்புரைத்தல் என்பது, தலைமகளைத் தழையேற்பித்துத் தலைமகன் உழைச் சென்று, நீ தந்த தழையை யான் சென்று கொடுத்தேன். அது கொண்டு அவள் செய்தது சொல்லிற் பெருகும் எனத் தலை மகளது விருப்பங் கூறா நிற்றல்.
115. பாசத் தளையறுத்(து) ஆண்டுகொண்
டோன்தில்லை அம்பலம் சூழ்
தேசத் தனசெம்மல் நீதந்
தனசென்(று) யான்கொடுத்தேன்
பேசிற் பெருகும் சுருங்கு
மருங்குல் பெயர்ந்தரைத்துப்
பூசிற் றிலள்அன்றிச் செய்யா
தனஇல்லை பூந்தழையே.
கொளு
விருப்பவள் தோழி பொருப்பற்(கு) உரைத்தது.
இதன் பொருள் : நாயகியுடைய விருப்பத்தை அவளுடைய உயிர்த் தோழியானவள் நாயகனுக்குச் சொல்லியது.
தெளிவுரை : பிறவிச் சாகரமாகிய பாசத் தளையாகிய விலங்கை வெட்டி என்னையும் தன் வசமாக்கிக் கொண்டவன், அவனுடைய திருவம்பலத்தைச் சூழ்ந்த இடத்தில் உள்ளன; பெரியவனே! உன்னால் தரப்பட்டன. அதில் கொண்டு சென்று யான் கொடுத்தேனாய் இருந்தது. (அதனை நான் எடுத்துக் கொண்டு சென்று கொடுத்தேன்) அவள் தழையைக் கொண்டு செய்தனவற்றைச் சொல்லிற் பபெருகா நிற்கும். சிறிய இடையினையுள்ளவள். அத்தழையை அரைத்துப் பூச்சிற்றலள். தன்னை அல்லது பொலிவுடைத்தாகிய தழையைக் கொண்டு பெயர்த்துச் செய்யாத பாவகமெல்லாம் செய்தாள் காண்.
சேட்படை முற்றிற்று

பதின்மூன்றாம் அதிகாரம்
13. பகற்குறி
பகற்குறி என்பது, தலைமகளைத் தழையேற்பித்த தோழி தலைமகனுடன் அவளைப் பகற்குறிக்கண் தலைப் பெய்வியா நிற்றல்.
இதன் நூட்பாவில் கண்ட துறைகள் 32. அவையாவன:
1. குறியிடங்கூறல்
2. ஆடிடம் படர்தல்
3. குறியிடத்துக் கொண்டு சேறல்
4. இடத்துய்த்து நீங்கல்
5. உவந்துரைத்தல்
6. மருங்கணைதல்
7. பாங்கி அறிவுரைத்தல்
8. உண்மகிழ்ந்துரைத்தல்
9. ஆயத்துய்த்தல்
10. தோழிவந்து கூடல்
11. ஆடிடம் புகுதல்
12. தனி கண்டுரைத்தல்
13. பருவங் கூறி வரவு விலக்கல்
14. வரைவுடம் படாது மிகுத்துக் கூறல்
15. உண்மை கூறி வரைவு கடாதல்
16. வருத்தம் கூறி வரைவு கடாதல்
17. தாய் அச்சங்கூறி வரைவு கடாதல்
18. இற்செறிவு அறிவித்து வரைவு கடாதல்
19. தமர் நினைவு உரைத்து வரைவு கடாதல்
20. எதிர்கோள் கூறி வரைவு கடாதல்
21. ஏறுகோள் கூறி வரைவு கடாதல்
22. அயலுரை உரைத்து வரைவு கடாதல்
23. தினை முதிர்வுரைத்து வரைவு கடாதல்
24. பகல்வரல் விலக்கி வரைவு கடாதல்
25. தினையொடு வெறுத்து வரைவு கடாதல்
26. வேங்கையொடு வெறுத்து வரைவு கடாதல்
27. இரக்கமுற்று வரைவு கடாதல்
28. கொய்தமை கூறி வரைவு கடாதல்
29. பிரிவு அருமை கூறி வரைவு கடாதல்
30. மயிலொடு கூறி வரைவு கடாதல்
31. வறும் புனம் கண்டு வருந்தல்
32. பதி நோக்கி வருந்தல்
பேரின்பக் கிளவி
பகற்குறித் துறைமுப் பதினோ(டு) இரண்டு
இயற்கைபோல் சிவத்தோ(டு) இயலுறக் கூட்டிப்
பிரித்த அருளின் பெரும்பகற் குறியே.
1. குறியிடங் கூறல்
குறியிடங் கூறல் என்பது, தழை விருப்புரைத்த தோழி, ஆங்கவள் விளையாடும் இடத்து ஒரு கரியபொழில் கதிரவன் நுழையா இருளாய் நடுவண் ஒரு பளிக்குப் பாறையை உடைத்தாயிருக்கும். அவ்விடத்து வருவாயாக என்று தலைமகனுக்குக் குறியிடம் கூறா நிற்றல்.
116. வானுழை வாள்அம்ப லத்தரன்
குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாஇரு ளாய்ப்புற
நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து
திகழ்பளிங் கான்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில்
காட்டுமொர் கார்ப்பொழிலே.
கொளு
வாடிடத்(து) அண்ணல் வண்தழை எதிர்ந்தவள்
ஆடிடத்(து) இன்னியல்(பு) அறிய உரைத்தது.
இதன் பொருள் : நாயகன் வாடின இடத்து அழகிய தழையைப் பெற்றுக் கொண்டவள் விளையாடுகிற இடத்தின் இயல்பை அறியும்படி சொல்லியது.
தெளிவுரை : ஆகாயத்தில் உண்டாகிய ஒளியாய் உள்ளவன் திருவம்பலத்தில் உளனாகிய தலைவன் அவனுடைய திருமலையென்று கூசிப் புறச்சோலை எல்லாம் ஆதித்தன் புகுந்து நுழையாத இருளாய், வன்மையுள்ள நட்சத்திரங்கள் போலச் சுரபுன்னைகள் மலர்ந்து விளங்கா நின்ற பளிக்குப் பாறைகளான சந்திரன் ஆனவன் வானிடத்து வாழ்வையொத்துக் கானிடத்து வாழ்வு பெற்றாற் போலத் தன்னழகை விட்டு விளங்கா நின்றது கரிய பொழிலானது. என்ன, அவ்விடத்தேறவா என்றது.
2. ஆடிடம் படர்தல்
ஆடிடம் படர்தல் என்பது, தலைமகனுக்குக் குறியிடம் கூறின தோழி, யாம் புனத்தின்கண் போய் ஊசலாடி அருவி ஏற்று விளையாடுவேம், போதுவாயாக எனத் தலைமகளை ஆயத்தோடும் கொண்டு சென்று ஆடிடம் படரா நிற்றல்.
புயல்வளர் ஊசல்முன் ஆடிப்பொன்
னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும்
அருவி திருவுருவில்
கயல்வளர் வாட்கண்ணி போதரு
காதரம் தீர்த்தருளும்
தயல்வளர் மேனியன் அம்பலத்
தான்வரைத் தண்புனத்தே.
கொளு
வண்தழை எதிர்த்த ஒண்டொடிப் பாங்கி
நீடமைத் தோளியொ(டு) ஆடிடம் படர்ந்தது.
இதன் பொருள் : அழகிய தழையைப் பெற்றுக் கொண்ட அழகிய வளையணிந்த பாங்கி நீண்ட மூங்கிலை ஒத்த தோள்களை உடையாருடனே விளையாடுகிற இடத்தில் சென்றது.
தெளிவுரை : பொன்னை ஒப்பாய். கயலை ஒத்த ஒளி சிறந்த கண்களை யுடையாய்! போதுவாயாக. பிறவியினால் வருகின்ற அச்சத்தைத் தீர்த்தருளுகிற சங்கரி தங்குகிற திருமேனியை உடையவன் திருவம்பலநாதன். அவனுடைய திருமலையில் குளிர்ந்த புனத்திடத்தே முன்பு மேகங்கள் தங்குகிற ஊசலையாடிப் பின்பு அருவி நீரையேற்று விளையாடக் கடவேம். போதுவாயாக.
3. குறியிடத்துக் கொண்டு சேறல்
குறியிடத்துக் கொண்டு சேறல் என்பது, ஆடிடம் படர்ந்த தோழி தலைமகனுக்குத் தான் சொன்ன குறியிடத்து இவளைக் கொண்டு சென்று உய்க்கும் பொழுது, ஆயத்தாரைத் தம்மிடத்தினின்று நீக்க வேண்டுதலின் தினை காத்தல் முதலாகிய விளையாட்டுக்களைத் தான் கூறவே அவ்வவ் விளையாட்டிற்கு உரியார் தலைமகள் அவ்வவ் இடங்களில் வருவள் என்று கருதித் தோழி சொன்ன வகையே அவ்வவ் விளையாட்டு விருப்பினால் எல்லாரும் பிரிவர். அவ்வகை ஆய வெள்ளத்தைப் பிரிவித்துத் தமியளாய் நின்ற தலைமகளையும் கொண்டு யாமும் போய் மயிலாடல் காண்பேமென அக்குறியிடத்துச் செல்லா நிற்றல்.
118. தினைவளங் காத்துச் சிலம்பெதிர்
கூஉய்ச்சிற்றில் முற்றிழைத்துச்
சுனைவளம் பாய்ந்து துணைமலர்
கொய்து தொழுதெழுவார்
வினைவளம் நீறெழ நீறணி
அம்பல வன்தன்வெற்பில்
புனைவளர் கொம்பர்அன் னாய்அன்ன
காண்டும் புனமயிலே.
கொளு
அணிவளர் ஆடிடத்(து) ஆய வெள்ளம்
மணிவளர் கொங்கையை மருங்குஅ கன்றது.
இதன் பொருள் : அழகு மிக்க விளையாட்டு இடத்தே ஆயக் கூட்டத்தாரிடத்தினின்று முத்துமணி அணியப்பட்ட ஆபரணங்களை உடையாளுடனே ஒரு பக்கத்தில் சேர்ந்தது.
தெளிவுரை : தினையாகிய வளத்தையும் காவலாகியிருந்து, சிலம்பிற்கு எதிர் அழைத்துச் சிறு வீடுகளை நெடும் போதெல்லாம் எடுத்து விளையாடிச் சுனைக்கு வளமாகி நீரையும் குடைந்து, இணையொத்த புட்பங்களையும் பறித்துத் தன்னைத் தொழுது செல்வாருடைய இரு வினைகளும் நூண்பொடியாம்படி திரநீறணி அம்பலவன் திருமலையில் கை செய்து வளர்க்கப்பட்ட வஞ்சிக் கொடியை ஒப்பாய் ! அதன்மையாகிய புனத்தின் மயில்களையும் காணக் கடவோம் என்று அங்கு ஏறப்போனது.
4. இடத்துய்த்து நீங்கல்
இடத்துய்த்து நீங்கல் என்பது, குறியிடைக் கொண்டு சென்ற தோழி, யான் அவ்விடத்துச் சென்று நின் குழற்குப் பூக்கொய்து வருவேன்; அவ்விடம் வேய் முத்துதிர்தலான் நினது மெல்லடிக்குத் தகாது ஆதலான் நீ என்னோடு வாராது இங்கே நின்று பூக்கொய் வாயாக எனத் தலைமகளைக் குறியிடத்து நிறுத்தித் தான் நீங்கா நிற்றல்.
119. நரல்வேய் இனநின தோட்(டு)உடைந்(து)
உக்கநன் முத்தம்சிந்திப்
பரல்வேய் அறையுறைக் கும்பஞ்
சடிப்பரன் தில்லையன்னாய்
வரல்வேய் தருவன்இங் கேநில்உங்
கேசென்றுன் வார்குழற்(கு)ஈர்ங்
குரல்வேய் அளிமுரல் கொங்கார்
தடமலர் கொண்டுவந்தே.
கொளு
மடத்தகை மாதரை இடத்தகத்(து) உய்த்து
நீங்கல் உற்ற பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : மடப்பத்தால் தகுதியுடைய நாயகியைத் தன் குறியிடத்து (செலுத்தி தான் நீங்கிய) பூத்த வல்லி சாதம் போன்ற தோழி சொன்னது.
தெளிவுரை : நாதம் பண்ணுகிற மூங்கிலினம் உன்னுடைய தோளுக்குத் தோற்று உடுத்த நன்முத்தானது பரந்து அந்தப் பரலால் மூடப்பட்ட கற்பாறையானது உன் காலுக்கு உருத்தா நிற்கும். அடியும் பஞ்சு தானாக இருந்தது. சிவனுடைய புலியூரை ஒப்பாய்! வாராதே கொள், நான் சூட்டக் கடவேன். இங்கே நில், அவ்விடத்திலே போய் யான் உன்னுடைய நீண்ட கூந்தலுக்கு ஈரபாரமுடைத்தாகிய பூங்கொத்துக் களை மூடி, வண்டுச் சாதிகள் ஆரவாரிக்கின்ற வாசனை நிறைந்த பெரிய மலர்களைப் பறித்துக் கொண்டு வந்து நான் சூட்டக் கடவேன். அவ்வளவும் நீ இங்கு நிற்ப்பாயாக.
5. உவந்துரைத்தல்
உவந்துரைத்தல் என்பது, தோழி தலை மகளைக் குறியிடை நிறுத்தி நீங்கா நிற்பத் தலைமகன் சென்று எதிர்ப்பட்டு இக் குவட்டை மாசுனப் பள்ளியாகவும் என்னைத் திருமாலாகவும் நினைந்தோ நீ இப்பொழிற்கண் வந்து நின்றது எனத் தலைமகளை உவந்து கூறா நிற்றல்.
120. படமா சுணப்பள்ளி இக்குவ
டாக்கியப் பங்கயக்கண்
நெடுமால் எனஎன்னை நீநினைந்
தோநெஞ்சத் தாமரையே
இடமா இருக்கலுற் றோதில்லை
நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து
வைஇற்றுஇவ் வார்பொழிற்கே.
கொளு
களிமயிற் சாயலை ஒருசிறைக் கண்ட
ஒளிமலர்த் தாரோன் உவந்துரைத்தல்.
இதன் பொருள் : மயில் போன்ற சாயலை உடையாளை ஒரு புறமாக நிற்கக் கண்ட பிரகாச முடைய மாலையை அணிந்த நாயகன் சந்தோஷித்துச் சொன்னது.
தெளிவுரை : இந்த மலையைப் படமுடைத்தாகிய அராவணையாக நியமித்துச் செந்தாமரைக் கண்ணனாகிய நெடிய மாலாக என்னை நிச்சயித்தோ? என் இருதயத் தாமரைப் பூவையே இடமாகக் கொண்டிருப்பதாக எண்ணித் துணிந்தோ புலியூரிலே எழுந்தருளி நின்றவனுடைய கயிலை மலையில் முத்துவடம் ஆர்த்த முலையினையுடைய பெண்ணே! நீண்ட காவகத்தே வந்து அவதரித்தது.
6. மருங்கணைதல்
மருங்கணைதல் என்பது, உவந்துரைப்பக் கேட்ட தலைமகள் பெருநாணினள் ஆதலின் கண் புதைத்து ஒரு கொடியின் ஒதுங்கி வருந்தா நிற்பச் சென்று சார்தல் ஆகாமையின் தலைமகன் அவ்வருத்தம் தணிப்பான் போன்று முலையொடு முனிந்து அவள் இறுமறுங்குல் தாங்கி அணையா நிற்றல்.
121. தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல்
லோன்அருள் என்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின்
மூடித்தன் ஏர்அளப்பான்
ஒத்(து)ஈர்ங் கொடியின் ஒதுங்குகின்
றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலை காள்என்னுக்(கு)
இன்னும் பெருக்கின்றதே.
கொளு
வாணுதல் அரிவை நாணுதல் கண்ட
கோதை வேலவன் ஆதர வுரைத்தது.
இதன் பொருள் : ஒளி சிறந்த நெற்றியினையுடைய நாயகியை நாணினபடியைக் கண்டு மாலையணிந்த வேலினையுடையவன் ஆதரவினால் சொல்லியது.
தெளிவுரை : கொத்துப் பூவாக வளையப்பட்ட அழகிய பொழில் சூழப்பட்ட தில்லையில் பழையவனாகிய முதலியாருடைய அருளென வந்து, நேர்ப்பட்டு. முத்துப் போன்ற கண்ணின் நீர்த்துளித் தாரை விடுகிற நீலப்பூவை ஒத்த கண்களை மதுரமாகிய காந்தள் பூவொத்த கரங்களால் மறைத்துத் தன்னழகை ஒப்பிட்டுக் பார்ப்பாரை ஒத்துக் குளிர்ந்த வல்லிசாதக் கொடியில் மறைந்து நின்றவள் இடை ஒதுங்க (நெருங்க) பித்தை உடையீராகிய பெரிய முலைகாள் ! இவ் இடை இத்தன்மை ஆகியபடி கண்டும் இன்னமும் நீங்கள் பெருக்கின்ற தென்ன காரணத்தால் ? (என்று படும்)
7. பாங்கியறிவுரைத்தல்
பாங்கியறிவுரைத்தல் என்பது, மருங்கணை இறுதிக்கண் தலைமகளது ஐயந்தீர, அவளைக் கோலஞ் செய்து, இது நின் தோழி செய்த கோலமே. நீ கலங்காது ஒழிக எனத் தலைமகன் தான் தோழி யோடு தலைப் பெய்தமை தோன்றக் கூறா நிற்றல்.
122. அளிநீ(டு) அளகத்தின் அட்டிய
தாதும் அணியணியும்
ஒளிநீள் சுரிகுழல் சூழ்ந்தஒண்
மாலையும் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடல்
தில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ அனையபொன் னேபண்ணு
கோலம் திருநுதலே.
கொளு
நெறி குழற் பாங்கி அறிவறி வித்தது.
இதன் பொருள் : தாழ்ச்சியினையுடைய கூந்தலையுடைய பாங்கி இக்கூட்டத்தை அறிந்தபடியை அறிவித்தது.
தெளிவுரை : வண்டுகள் மிக்க கூந்தலில் இட்ட செருகு பூவும் ஆபரணங்கள் அணிந்த படியும் ஒளிமிக்க நீண்ட கூந்தலில் சுற்றின அழகிய மாலையும், மதுரமான தேனையுண்டு களிக்கும்படி செய்தவன் கடல் சூழ்ந்த பெரும்பற்றப்புலியூர் அனையாய்! கலங்காதே, தெளிந்துவிடு. நீ உனக்கு உன்னையொத்த பாங்கியாலே ஆராய்ந்து அணியப்பட்ட கோலந்தானே காண். ஆதலால் நாண் அணிந்த கோலம் வேறுபட்டதென்று கலங்காதே தெளிந்துவிடுக.
8. உண்மகிழ்ந்துரைத்தல்
உண் மகிழ்ந்துரைத்தல் என்பது, பாங்கி அறிவுரைப்பக் கேட்ட தலைமகள், இனி நமக்கொரு குறையில்லையென உட்கொண்டு முகமலரா நிற்ப அம்முக மலர்ச்சி கண்டு, அவளைக் கழுநீர்மலராகவும் தான் அதனின் நறவைப் பருகும் வண்டாகவும் புனைந்து, தலைமகன் தன்னுள் மகிழ்ந்து கூறா நிற்றல்.
123. செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம்
பலவன் திருக்கழலே
கெழுநீர் மையில்சென்று கிண்கிணி
வாய்க் கொள்ளும் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன்
கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு
நீர்மை அளிகுலமே.
கொளு
தண்மலர்க் கோதையை
உண்மகிழ்ந்(து) உரைத்தது.
இதன் பொருள் : குளிர்ந்த பூமாலை உடையாளை உன் மகிழ்ந்து உரைத்தது.
தெளிவுரை : அழகிய நீர்மையுடைத்தாகிய மதியைத் திருநெற்றி மாலையாகவுடைய திருவம்பலநாதன் ஸ்ரீ பாதங்களை ஒக்க வேண்டுமென்பதற்காக, போதாகிய தன்மையை விட்டுப் பூவாகிய தன்மையால் சென்று அடைந்து சிறிதே மலரத் தொடங்கும் தேனை உள்ளடக்கின கழுநீர் மலரை ஒப்பாள் இவள். நான் செங்கழுநீர் மலரிடத்து எப்போதும் பழகி அதைவிட்டு நீங்காத அழகிய நீர்மையுடைத்தாகிய தேனை உண்கிற வண்டினை ஒப்பன்.
செங்கழுநீர் மலரை ஒப்பது என்றதனால் இவளும் பேதைப்பருவம் கடந்து இளமை (இன்ப) பருவத்தளானவள் என்றது கள்ளகத்த கழுநீர் என்றதனால் இவளும் உள்ளடக்கின காதலையுடையவள். அது வெளிப்படுவதற்கு முன்னே வரைந்து கொள்ள வேண்டுமென்னும் நினைவுடையள் என்றுபடும். அச் செங்கழுநீர் மலரிடத்தே பழகி அதை விட்டு நீங்காத வண்டுச் சாதியை ஒப்பன் என்றதனால் வரைந்து கொள்ள வேண்டுமென்கிற நினைவொழிய வேறு நினைவுடையேன் அல்லன் என்றும் படும். பெருநீர்மை அளிகுலம்; பெருநீர்மை என்றது ஒருவருக்குப் பெருந்தன்மையாவது, அது தம்மால் பாதுகாக்கப் படுவாரைப் பாதுகாக்கை.
9. ஆயத்து உய்த்தல்
ஆயத்து உய்த்தல் என்பது, மலரளிமேல் வைத்து மகிழ்வுற்றுப் பிரியலுறா நின்ற தலைமகன், யாம் இத்தன்மையேம் ஆதலின், நமக்குப் பிரிவில்லை; இனி அழகிய பொழிலிடத்து விளையாடும் ஆயம் பொலிவு பெறச் சென்று, அவரோடு சேர்ந்து விளையாடுவாய் எனத் தலைமகனை ஆயத்துச் செலுத்தா நிற்றல்.
124. கொழுந்தா ரகைமுகை கொண்டலம்
பாசடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லம்எழில்
தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகையெனை ஆண்டவன்
சிற்றம் பலம்அனையாய்
செழுந்தா(து) அவிழ்பொழில் ஆயத்துச்
சேர்க திருத்தகவே.
கொளு
கனைகடல் அன்ன கார்மயில் கணத்துப்
புனைமட மானைப் புகவிட்டது.
இதன் பொருள் : ஆரவாரிக்கின்ற கடலை ஒத்த கார் காலத்து மயிலை ஒத்த ஆயக் கூட்டத்தாரின் திரளிலே ஒப்பினையுடைய பார்வையால் மான் போல்வாளைப் புகவிடுத்தது.
தெளிவுரை : அழகிய தாரகைகளாகிய முகை விரியா அரும்புகளையும் மேகங்களாகிய அழகிய பச்சென்ற இலைகளையும் உடைய ஆகாயமாகிய மடுவில் எழுந்து நிறைந்த சந்திரனாகிய வெண்தாமரைப்பூ அத்தாரகைகளுக்கு அழகளித்தாற் போல இப்பிறப்பில் வருந்தாதபடி அடிமை கொண்டவன் திருச்சிற்றம்பலத்தை ஒப்பாய். அழகிய தாது விரிகின்ற சோலையிடத்தே ஆயக் கூட்டத்தாரிடத்து சேர்வாயாக, திருத்தகவே.
அந்த ஆயக்கூட்டம் அழகுபெறும்படி செய்வாயாக. அது எங்ஙனமெனில் சந்திரன் இல்லாத போல பொலிவழிந்து கிடக்கின்ற நட்சத்திரங்களுக்கு அழகளிக்கச் சந்திரன் உதய மானாற் போல உன்னையன்றிப் பொலிவழிந்து கிடக்கிற ஆயக்கூட்டம் பொலிவு பெறும்படி சேர்வாயாக என்ற பொருளாய் வெண்தாமரையை ஒத்த தாரகைகள் என்றும் தாரகைகளைப் போன்ற பாங்கியிர் என்றும் வெண் தாமரைப் பூவை ஒத்த மதியென்றும் சொன்னால் உவமைககு உவமை ஆகாதோ எனின், ஒத்த பண்பு வேறுபடுகையாலே உவமை ஆகாது; வேறுபட்டபடி என்னெனில் வெண்தாமரை முகையுடன் தாரகைக்கு உவமை வெண்மையும் வடிவம் தாரகையுடன் பாங்கிமலர்க்கு உவமை பன்மையும் ஒன்றுக்குச் சுற்றமாய் அதில் தாழ்ந்து நிற்கையும் வெண்தாமரைப் பூவுடன் மதிக்கு உவமை வடிவம் பொலிவும்; சந்திரனுடன் நாயகிக்கு உவமை கண்ணுக்கு இனிமையும் சுற்றத்திடை மேலாயத் தோன்றுகையும்; ஆகையால் உவமைக்கு உவமை ஆகாது. உவமைக்கு உவமை இல்லென மொழிப.
10. தோழி வந்து கூடல்
தோழி வந்து கூடல் என்பது, தலைமகனைப் பிரித்த தலைமகள் தானும் பூக்கொய்யா நின்றாளாகப் பிரிவாற்றாமையானும் பெரு நாணினானும் தடுமாறி மொட்டுக்களைப் பறியா நிற்ப, யான் நின் குழற்கு ஆம் பூக் கொண்டு வந்தேன், நீ விரல் வருந்த மொட்டுக்களைப் பறிக்க வேண்டா எனத் தோழி வந்து கூடா நிற்றல்.
125. பொன்அனை யான்தில்லைப் பொங்கர
வம்புன் சடைமிடைந்த
மின்னனை யான்அருள் மேவலர்
போன்மெல் விரல் வருந்த
மென்னனை யாய்மறி யேபறி
யேல்வெறி யார்மலர்கள்
இன்னன யான்கொணர்ந் தேன்மணந்
தாழ்குழற்(கு) ஏய்வனவே.
கொளு
நெறியுறு குழலியை நின்றிடத்(து) உய்த்துப்
பிறைநுதற் பாங்கி பெயர்ந்தவட்(கு) உரைத்தது.
இதன் பொருள் : நெறித்தலுடைய அளகத்தினை உடைய நாயகியைத் தன்குறியிடத்தே நிறுத்தி, நீங்குகின்ற பிறை போன்ற நெற்றியை உடைய பாங்கி மீண்டு வந்து நாயகிக்குச் சொன்னது.
தெளிவுரை : பொன்னை ஒப்பவன், புலியூரில் மிக்க பாம்பையும் கங்கையையும் சிவந்த திருச்சடையில் நெருங்கும்படி வைத்த மின்னை நிகர்ப்பான். அவன் திருவருளைப் பொருந்தாதவரைப் போல மெல்லிய விரல்கள் வருந்த மெல்லிய அரும்புகள் பார்வையினால் மான்கன்றை நிகர்ப்பாய் ! பறியாதே கொள். நறுநாற்ற புட்பங்களை; இத்தன்மையான நான் கொண்டு வந்தேன் காண். மிகுந்த வாசனையுள்ள கூந்தலுக்குப் பொருந்துவன என்றுபடும்.
11. ஆடிடம் புகுதல்
ஆடிடம் புகுதல் என்பது, கொய்து வந்த மலரும் குழற்கு அணிந்து, இனி நின் சிறுமருங்குல் வருந்தாமல் மெல்லச் செல்வாயாக எனத் தோழி தலைமகளையும் கொண்டு ஆடிடம் புகா நிற்றல்.
126. அறுகால் நிறைமலர் ஐம்பால்
நிறையணிந் தேன்அணியார்
துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல்
லாயம்மெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா
வகைமிக என்சிரத்தின்
உறுகால் பிறர்க்(கு) யோன்புலி
யூரன்ன ஒண்ணுதலே.
கொளு
தனிவிளை யாடிய, தாழ்குழல் தோழி
பனிமதி நுதலியொ(டு) ஆடிடம் படர்ந்தது.
இதன் பொருள் : தனியே விளையாடிய நீண்ட கூந்தலையுடைய தோழி குளிர்ச்சி பொருந்தின பிறைபோன்ற நெற்றியினை உடையாளுடனே விளையாடுகிற இடத் தேறப் போனது.
தெளிவுரை : (முன் சொன்ன மொழியை மாற்றி) அழகார்ந்த நறு நாற்றம் நெருங்கின பூக்கொத்துக்களை வண்டுகள் நிறைந்த பூவையுடைய ஐம்பால் வகுத்த கூந்தலில் நிறைய அணிந்தேன். தோகை நல்லாய் ! சிறிய தென்றல் வரின் இடை தளர்ந்து வருந்தாதபடி பழைய ஆயக் கூட்டத்தாரிடத்து ஏற மெல்லச் சென்று புகுவாயாக. மிக என்னுடைய சிரத்தில் பொருந்தின ஸ்ரீ பாதங்களைப் பிறர் மிகவும் பெறுதற்கு அரியவன், அவனது பெரும்பற்றப்புலியூரினை ஒத்த நுதலினை உடையாய்!
12. தனிகண்டு உரைத்தல்
தனிகண்டு உரைத்தல் என்பது தலைமகளை ஆயத்து உய்த்துத் தலைமகன் உடை சென்று, இஃது எம்மூர்; இதன்கண் யாம் அருந்தும் தேனையும் கிழங்கையும் நீயும் அருந்தி இன்று எம்மோடு தங்கி நாளை நின் ஊருக்குப் போவாயாக என உலகியல் கூறுவாள் போன்று வரைவு பயப்பக் கூறா நிற்றல்.
127. தழங்கும் அருவிஎம் சீறூர்
பெரும இதுமதுவும்
கிழங்கும் அருந்தி இருந்(து) எம்மோ(டு)
இன்று கிளர்ந்துகுன்றர்
முழங்கும் குரவை இரவிற்கண்(டு)
ஏகுக முத்தன்முத்தி
வழங்கும் பிரான்எரி யாடிதென்
தில்லை மணிநகர்க்கே.
கொளு
வேயொத்த தோளியை ஆயத்து உயத்துக்
குனிசிலை அண்ணலைத் தனிகண்(டு) உரைத்தது.
இதன் பொருள் : மூங்கிலை நிகர்த்த தோளினையுடைய நாயகியை ஆயக் கூட்டத்தாரிடத்தில் விட்டு வளைந்த வில்லினையுடைய நாயகனைத் தனியே நிற்கக் கண்டு சொல்லியது.
தெளிவுரை : பெரியோனே ! முழங்கப்படாநின்ற அருவிகளை உடைய எங்கள் சிறிய ஊர் இதுதானாய் இருக்கும்; தேனும் கிழங்குமாக நுகர்ந்து இன்றைக்கு எங்களோடும் கூட இருந்து குன்றவரானவர் எழுந்து ஆரவாரிக்கின்ற குரவைக் கூத்தையும் கண்டு போவாயாக. அழிவில்லாதவன், அழியாத சுகத்தை நம்பின அடியார்க்கும் மற்றுள்ளவரான மக்களுக்கும் கொடுக்கிற சுவாமி, ஊழித்தீயிடத்து ஆடி தட்சிணத்துக்குப் பெரிய திருப்பதியாகிய அழகிய தில்லை நகருக்குள் இற்றைக்கு எங்களுடன் அவதரித்து உதயகாலமே போவாய் என்பது கருத்து.
13. பருவங் கூறி வரவு விலக்கல்
பருவல்கூறி வரவு விலக்கல் என்பது உலகியல் கூறுவாள் போன்று குறிப்பால் வரைவு கடாவி, இனி இவ்வாறு ஒழுகாமல் வரைவொடு வருவாயாக எனத் தலைமகளது பருவங்கூறித் தலைமகனைத் தோழி வரவு விலக்கா நிற்றல்.
128. தள்ளி மணிசந்தம் உந்தித்
தறுகண் கரிமருப்புத்
தெள்ளி நறவம் திசைதிசை
பாயும் மலைச்சிலம்பா
வெள்ளி மலையன்ன மால்விடை
யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ
போன்ற வனமுலையே.
கொளு
மாந்தளிர் மேனியை வரைந்(து) எய்தா(து)
ஏந்தல் இவ்வா(று) இயங்கல் என்றது.
இதன் பொருள் : மாந்தளிர் போன்ற மேனியை உடைய நாயகியை வரைந்து கொள்வது அன்றி, நாயகனே இவ்வழியில் வாராதே கொள் என்றது.
தெளிவுரை : மாணிக்கங்களைத் தள்ளிச் சந்தன மரங்களைத் தூக்கித் தறுகண்மையுடைய கரியின் தந்தங்களைக் கொழித்துத் தேன் ஆனது திசை திசைதோறும் பெருக்கெடுக்கிற மலைப் பக்கம் உடையனே. வெள்ளி  மலை போன்ற பெரிய இடபத்தை உடையவன். அவனது புலியூரினை ஒத்து விளங்குகின்ற கொடிச்சி இடையை வருத்துவன போன்றிருந்தன, அழகிய முலைகளானவை; ஆதலினாற் கடுக வரைந்து கொள்வாயாக.
யாவரும் அறியா இவ் வரைக்கண் வைத்த தேன் முதிர்ந்து அருவி போன்று எல்லாரும் காணத் திசை திசை பரந்தாற்போலக் கரந்த காமம் இவள் கதிர்ப்பு வேறுபாட்டால் புறத்தார்க்குப் புலனாய் வெளிப்படா நின்றதென உள்ளுறை உவமை ஆயினவாறு கண்டு கொள்க.
14. வரைவு உடம்படாது மிகுத்துக் கூறல்
வரைவு உடம்படாது மிகுத்துக் கூறல் என்பது, பருவங் கூறி வரைவு கடாய தோழிக்கு, அமராவதிக் கண்ணும் இம்மாதர்க்கு ஒப்பில்லையென நான்முகன் பயந்த பிள்ளையை யான்வரையும் துணை எளியளாக நீ கூறுகின்றது என்னோ வெனத் தலைமகன் வரைவு உடம்படாது தலைமகளை மிகுத்துக் கூறா நிற்றல்.
129. மாடஞ்செய் பொன்னக ரும்நிக
ரில்லைஇம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற
பிள்ளையை உள்ளவரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத்
தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரல் கொடிச்சியென்
றோநின்று கூறுவதே.
கொளு
வரைவு கடாய வாணுதல் தோழிக்கு
விரைமலர்த் தாரோன் மிகுத்துரைத்தது.
இதன் பொருள் : வரைவை உயர்த்திச் சொன்ன ஒளியை உடைய நுதலையுடைய பாங்கிக்கு அரிய மலைமேல் உண்டாகிய நாட்டுக்கு அதிபதியானவன் ஆற்றாது சொன்னது.
தெளிவுரை : தெய்வலோகத்திலுள்ள பெண்களும் இந்த மாதர்க்கு ஒப்பல்லர் என்னும்படி தாமரைப் பூவை நிலைபெற்ற பீடமாகத் கொண்டிருக்கிற பிரமனால் பெறப்பட்ட இவளை தன்னை நினையாதவரான மாக்களைப் புழுக்கள் மாத்திரந்தானே (என்பதற்கு ஆகமம்)  செய்து வைத்து என் பிறவியானது கெடும்படி பெரும்பற்றப்புலியூரில் எழுந்தருளி நின்றவன் கயிலை மலையில் கூடமாகச் செய்யப்பட்ட சாரல் குறத்தி யென்றோ நின்று சொல்லுவதுதான்.
கூடம் என்றது மன்றாகச் செய்யப்பட்ட தெய்வக் கோட்டத்தை மரத்திரளாற் கூடம் செய்தாற் போலும் முழைகளையுடைய சாரல் என்றுமாம். வரைவுடன் படாமை மிகுத்துச் சொன்னது.
15. உண்மை கூறி வரைவு கடாதல்
உண்மை கூறி வரைவு கடாதல் என்பது, வரைவுடம்படாது மிகுத்துக் கூறிய தலைமகனுக்கு, எங்களுக்குத் தாயும் தந்தையும் கானவர்; யாங்கள் புனங்காப்போம் சிலர். நீர் வரைவு வேண்டாமையின் எம்மைப் புனைந்து கூறல் வேண்டுவதில்லை எனத் தோழி தங்கள் உண்மை கூறி வரைவு கடவா நிற்றல்.
130. வேய்தந்த வெண்முத்தம் சிந்துபைங்
கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்த வானக மானும்
சிலம்பதன் சேவடிக்கே
ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட
அம்பல வன்மலையில்
தாய்தந்தை கானவர் ஏனல்எங்
காவல்இத் தாழ்வரையே.
கொளு
கல்வரை நாடன் இல்ல(து) உரைப்ப
ஆங்கவள் உண்மை பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : மலையின்மேல் உண்டாகிய நாட்டினை உடையவன் இல்லாத ஒன்றைச் சொல்ல அவ்விடத்து அவள் உண்மை பாங்கி பகர்ந்தது.
தெளிவுரை : வேய் ஈன்ற முத்துக்கள் பரந்து சோலைகளால் பச்சென்ற கரிய மலையானது நட்சத்திரங்களைப் பரப்பி, அதி தூரத்தில் விளங்கித் தோன்றுகிற ஆகாயப் பரப்பை ஒத்த மலையினை உடையவனே ! தன் சிவந்த சீபாதங்ககளில் அன்பு தந்து ஆட்கொண்ட அம்பலவன் மாதாவுக்கும் பிள்ளையிடத்தே உண்டான அன்பை எனக்குத் தன்னுடைய சீபாதங்களில் உண்டாக்கி அடிமை கொண்ட திருஅம்பலவன் திருமலையில் எங்களுக்கு மாதாவும் பிதாவும் குறவராக இருந்தார்கள். நீண்ட மலையிடத்து நாங்கள் காப்பது தினையாய் இருந்தது.
என்று பேராக இருத்தற்குச் செற்றியும் இதுவானால் வசப்படாது? மாதாவாலும் பிதாவாலும் செய்தொழிலாலும் செற்றியாலும் கண்டு எங்களைப் புகழ்ந்தாய் என்றது.
16. வருத்தங் கூறி வரைவு கடாதல்
வருத்தங் கூறி வரைவு கடாதல் என்பது, உண்மை உரைத்து வரைவு கடாய தோழி வரையாமை நினைந்து அவள் வருந்தா நின்றாள். வரைவென்று நினைக்க வருந்தா நின்றீர். இவ்வாறு நும் உள்ளம் மாறுபட நிகழ்தலின் இருவர்க்கும் இடையே யான் வருந்தா நின்றேன் எனத் தலைமகனுக்கு வருத்தங்கூறி வரைவு கடவா நிற்றல்.
131. மன்னும் திருவருந் தும்வரை
யாவிடின் நீர்வரைவென்(று)
உன்னும் அதற்குத் தளர்ந்தொளி
வாடுதிர் உம்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன்பரஞ்
சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புலன்
என்னப் புலம்புவனே.
கொளு
கனங்குழை முகத்தவள் மனங்குழை வுணர்த்தி
நிரைவளைத் தோளி வரைவு கடாயது.
இதன் பொருள் : கனத்த மகரக் குழைக்கிசைந்த முகத்தை உள்ளவள் மனம் வாடுகிறபடியை அறிவித்து நிறைந்த வளைகளையணிந்த தோளினையுடையவள் வரைவை வற்புறுத்திச் சொன்னது.
தெளிவுரை : நீ வரைந்து கொள்ளாதபோது அம்புயம் நிலைபெறும் சீதேவியை ஒப்பாளும் வருந்தா நிற்பள். நீ வரைவு என்று நினைக்கும் அளவில் உள்ளந் தளர்ந்து மேனி ஒளி வாடா நின்றாய். தேவர்களெல்லாம் இற்றையளவும் ஆராயும் வண்ணம் நின்ற புகழையுடைய மேலானவன், சுயம்பிரகாசமானவன், திருச்சிற்றம்பலநாதன், அவனுடைய பொற்புமிக்க பாத மலர்களை வாழ்த்த மாட்டாதவருடைய அறிவுபோல வருந்தே நின்றேன்.
தாய் அச்சங்கூறி வரைவு கடாதல்
தாய் அச்சங்கூறி வரைவு கடாதல் என்பது, வருத்தங்கூறி வரைவு கடாய தோழி எம்முடைய அன்னை அவள் முலை முதிர் கண்டு இவள் சிற்றிடைக்கு ஒரு பற்றுக் கண்டிலேம் என்று அஞ்சா நின்றாள். இனி மகட் பேசுவார்க்கு மறாது கொடுக்கவும் கூடும் எனத் தாய் அச்சங் கூறி வரைவு கடாவா நிற்றல்.
132. பனித்துண்டம் சூடும் படர்சடை
அம்பல வன்உலகம்
தனித்துண் டவன்தொழும் தாளோன்
கயிலைப் பயில்சிலம்பா
கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப்
பாரிப்புக் கண்டழிவுற்(று)
இனிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்(கு)
என்றஞ்சும் எம்அனையே.
கொளு
மடத்தகை மாதர்க்கு அடுப்பன அறியா
வேற்கண் பாங்கி ஏற்க உரைத்தது.
இதன் பொருள் : மடப்பத்தால் தகுதியை உடைய நாயகிக்கு வந்து பொருந்துவது அறியாதே வேலினை நிகர்த்த விழியுடைய பாங்கி பொருந்தும்படி சொன்னது.
தெளிவுரை : குளிர்ந்த பிறையைச் சாத்தியருளுகிற விரிந்த திருச்சடையை உடைய திருவம்பலநாதன் பதினான்கு உலகையும் ஒருகாலே அமுதுசெய்த விட்டுணு வந்து வணங்குகின்ற நாயகன் அவனுடைய கயிலைப் பதியிலுள்ள சிலம்பனே ! கொவ்வைக் கனியை ஒத்த வாயினை உடையவள் ! ஒளி உடைத்தாகிய தனங்களின் ஒருமைப்பாட்டைக் கண்டு நெஞ்சு அழிந்து இப்பொழுது சிறிய இடைக்கு ஒரு ஆதாரம் கண்டிலோம் என்று பயப்படா நின்றாள் எங்களுடைய தாயானவள்.
ஆதலால், கடுக வரைந்து கொள்வாயாக என்றது. இளமைப் பருவம் புகுந்தமையான் மகட் கூறுவார்க்கு அன்னை மறாது கொடுக்கும். நீ அதற்கு முற்பட வரைந்து கொள்ள வேண்டும் என்றது.
18. இற்செறி அறிவித்து வரைவு கடாதல்
இற்செறி அறிவித்து வரைவு கடாதல் என்பது, தாய் அச்சங் கூறி வரைவு கடாய தோழி எம் அன்னை அவளை உற்று நோக்கித் திருமலைக்கண் புறம் போய் விளையாட வேண்டாவெனக் கூறினாள். இனி இற் செறிப்பாள் போலும் என இற்செறி அறிவித்து வரைவு கடாவா நிற்றல்.
133. ஈவிளை யாட நறவிளை(வு)
ஓர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று
நோக்கிஎம் மெல்லியலைப்
போய்விளை யாடல்என் றாள்அன்னை
அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாடநின் றேவிளை
யாடி திருமலைக்கே.
கொளு
விற்செறி நுதலியை இற்செறி உரைத்தது.
இதன் பொருள் : வில் போன்ற நெற்றியினை உடையாளை இல்லில் செறிவித்தது.
தெளிவுரை : (தேனை ஒத்தபடியால்) ஈக்கள் புறப்பட்டு விளையாட நறவினை ஓர்ந்து விசாரித்து எங்கள் உறவின் முறையானவர்கள் கண்ணேணியை இயற்றுகிற மூங்கில் விளையாடும் மலையினை உடையவனே. உற்றுப் பார்த்து எம்முடைய மெல்லிய இயல்பினை உடையாளைப் புறம்பே போய் விளையாட வேண்டாம் என்றாள். திருஅம்பலநாதன் புரத்தில் தீப்புக்கு விளையாடும்படி எத்தொழில்களையும் கண்டு நின்று விளையாடினவன். அவனுடைய திருமலையிடத்துப் புறம்போய் விளையாட வேண்டா என்றாள் அன்னையானவள்.
எங்கள் அண்ணன்மார் ஈக்கள் ஒழுக்கத்தை அறிவார்கள். ஈக்கள் புறப்பட்டு விளையாடத் தேன் நெய்த்த படியை அறிந்து சிலர் கண் ஏணியை ஏற்றுவார்கள். அதற்கு முன்னே கடுக வரைந்து கொள்வாயாக வேண்டும் என்றவாறு. விளையாடல் என்றாள் அதனால் நாளை இற்செறிவிப்பாள் போலும் என்க.
19. தமர் நினைவு உரைத்து வரைவு கடாதல்
தமர் நினைவு உரைத்து வரைவு கடாதல் என்பது, இற்செறி அறிவித்து வரைவு கடாய தோழி அவள் முலை தாங்க மாட்டாது இடை வருந்து வதனைக் கண்டு எமர் இல் செறிப்பாராக நினையா நின்றார்; அயலவரும் மகட் பேச நினையா நின்றார் எனத் தமர் நினைவுரைத்து வரைவு கடாவா நிற்றல்.
134. சுற்றும் சடைக்கற்றைச் சிற்றம்
பலவன் தொழாதுதொல்சீர்
கற்றும் அறியல ரின்சிலம்
பாஇடை நைவதுகண்(டு)
எற்றும் திரையின் அமிர்தை
இனித்தமர் இற்செறிப்பார்
மற்றும் சிலபல சீறூர்
பகர்பெரு வார்த்தைகளே.
கொளு
விற்செறி நுதலியை இற்செறி விப்பரென்(று)
ஒளிவே லவற்கு வெளியே உரைத்தது.
இதன் பொருள் : வில்போன்ற நெற்றி உடையாளை நிச்சயமாக நாளை இல்லில் செறிவிப்பார்கள் என்கிற அதனை ஒளி வேலவற்கு வெளியே உரைத்தது.
தெளிவுரை : சுற்றிக் கட்டப்பட்ட சடைத்திரளையுடைய திருச்சிற்றம்பலநாதனை முற்பிறப்பில் தொழாதபடியினால் எல்லா நூல்களையும் கற்றறிந்தும் அவனுடைய பழைய சீரை அறியாதாரைப் போல, நாயகனே ! இடை துன்புறுகிற அதனைக் கண்டு கரையோடு மோதுகிற திரையை உடைத்தாகிய கடலில் பிறந்த அமுதத்தை ஒப்பாளை இப்பொழுதே உறவான பேர் இல்லில் செறிப்பார்களாய் இருந்தது. சிறிய ஊரிடத்துச் சொல்லுகிற பெரிய வார்த்தைகள் மற்றும் சிலவும் பலவுமாயிருந்தன. (சில என்பது தாங்கள் இன்ன வார்த்தையென்று அறியாமையான்; பலவென்பது எல்லாம் சொல்லுதலான்; பெரு வார்த்தையென்றது வெளிப்பட்ட காலத்துப் பெரும் பழியைத் தருவது போல என்றது.)
20. எதிர்கோள் கூறி வரைவு கடாதல்
எதிர்கோள் கூறி வரைவு கடாதல் என்பது, தமர் நினைவுரைத்து வரைவு கடாய தோழி, நீ வரை வோடு வரின், அன்னையும் ஐயன்மாரும் அயலவரும் நின் வரவு எதிர் கொள்ளா நிற்பர். இனிப் பல நினையாது பலரும் அறிய வரைவொடு வருவாயாக என எதிர்கோள் கூறி வரைவு கடாவா நிற்றல்.
135. வழியும் அதுஅன்னை என்னின்
மகிழும்வந்(து) எந்தையும்நின்
மொழியின் வழிநிற்கும் சுற்றம்முன்
னேவயம் அம்பலத்துக்
குழிஉம்பர் ஏத்தும்எம் கூத்தன்குற்
றாலமுற் றும்அறியக்
கெழிஉம்ம வேபணைத் தோள்பல
என்னோ கிளக்கின்றதே.
கொளு
ஏந்திழைத் தோழி ஏந்தலை முன்னிக்
கடியா மாறு நொடிதுஏ(கு) என்றது.
இதன் பொருள் : மிக்க ஆபரணங்களையுடைய தோழி நாயகனை எதிர்ப்பட்டுக் கலியாணத்திற்கு ஆம்படி விரைவாயாக என்று சொல்லியது.
தெளிவுரை : தாயானவள் என்னைப் போல் விரும்புவாள். வந்து என் பிதாவானவன் நீ சொன்ன வழியிலே நிற்பன். சுற்றத்தில் உள்ளார்க்கு முன்னே வசப்படுவார்கள். திரண்டு தேவர்கள் ஏத்துகிற அம்பலக் கூத்தனாய் உள்ளவன் அவனுடைய திருக்குற்றாலத்தில் உள்ளவர்கள் அறிய வேயையொத்த தோளினையும் பொருந்துவதே காரியம்; (பலர் அறியப் பொருந்துகையாவது கலியாணம் செய்து கூடுகை) இனிப் பலபடச் சொல்வது ஏன்தான்? உலகத்தின் வழி அதுவே அல்லவோ?
21. ஏறுகோள் கூறி வரைவு கடாதல்
ஏறுகோள் கூறி வரைவு கடால் என்பது, எதிர்கோள் கூறி வரைவு கடாய தோழி, எம்முடைய ஐயன்மார் அவளுடைய முலையின் பெருமையும் இடையின் சிறுமையும் கண்டு எம் ஊர்க்கண் விடையின் மருப்பைத் திருத்திவிட்டார். இனி அடுப்பன அறியேன் என ஏறுகோள் கூறி வரைவு கடாவா நிற்றல். ஈண்டுக் கூறுவான் நுதலுகின்றது முல்லைத் திணை யாகலின் அந்த முல்லைத் திணைக்கு மரபாவது ஓரிடத்து ஒரு பெண் பிறந்தால் அப் பெண்ணைப் பெற்றவர் தம் தொழுவில் அன்று பிறந்த சேங்கன்று உள்ளன வெல்லாம் தன் ஊட்டியாக விட்டு வளர்த்து அப்பரிசினால் வளர்ந்த ஏற்றைத் தழுவினான் ஒருவனுக்கு அப் பெண்ணைக் கொடுத்தல் மரபென்ப.
136. படையார் கருங்கண்ணி வண்ணப்
பயோதரப் பாரமும் நுண்
இடையார மெலிவுகண்(டு) அண்டர்கள்
ஈர்முல்லை வேலிஎம்மூர்
விடையார் மருப்புத் திருத்திவிட்
டார்வியன் தென்புலியூர்
உடையார் கடவி வருவது
போலும் உருவினதே.
கொளு
என்னையர் துணிவு இன்ன(து) என்றது.
இதன் பொருள் : எங்கள் அண்ணன்மார் அறுதியிட்ட காரியம் இக்காரியம் என்றபடி.
தெளிவுரை : வேலையொத்த கருங்கண்ணை உடையாளின் அழகிய முலைகளின் பெருமையையும் நுண்ணிய இடையினையுடைய மிக்க மெலிவையும் பார்த்து, இடையராகிய எங்கள் அண்ணர்மார் குளிர்ந்த முல்லை வேலியையுடைய எங்கள் ஊரில் இடபத்தினுடைய நிரம்ப மருப்பைச் சீவிவிட்டார்கள். (அதன் வடிவாவது பெரும்பற்றப்புலியூர் உடையவர் ஏறிச் செல்லும் இடபத்தை ஒக்கும்.) ஆதலால் இனி என் நிகழும் என்று தெரியாது. ஏறுகோள் நிகழ்வதன் முன்னே வரைந்து எய்துவாய் என்பது கருத்து.
அயல் உரை உரைத்து வரைவு கடாதல்
அயலுரை உரைத்து வரைவு கடாதல் என்பது, ஏறுகோள் கூறி வரைவு தோழி, அயலவர் நாளைப் பொன்புனையப் புகுதா நின்றார். இதற்குத் தீவினையேன் சொல்லுவ தென்னோ எனத் தான் முன்னிலைப் புறமொழியாக அயலுரை உரைத்து வரைவு கடாவா நிற்றல்.
137. உருப்பனை அன்னகைக் குன்றொன்(று)
உரித்(து)உர ஊர்எரித்த
நெருப்பனை அம்பலத்(து) ஆதியை
உம்பர்சென்(று) ஏத்திநிற்கும்
திருப்பனை யூர்அனை யாளைப்பொன்
னாளைப் புனைதல் செப்பிப்
பொருப்பனை முன்னின்(று)என் னோவினை
யேன்யான் புகல்வதுவே.
கொளு
கயல்புரை கண்ணியை அயலுரை உரைத்தது.
இதன் பொருள் : கயலையொத்த கண்களை உடையாளை அவளுக்கு அப்பாலான் வந்து வரைவுணர் என்று சொன்னது.
தெளிவுரை : பனையை ஒத்த வடிவினையுடைய கையினையுள்ள மலையை ஒத்த யானையை உரித்து வலியுடைத்தாகிய ஊரான முப்புரங்களை எரித்த நெருப்பை உடையவனை, திருஅம்பலத்திற் பழையவனை, அவனைத் தேவர்கள் சென்று வாழ்த்தி நிற்கைக்கு இடமாகிய திருப்பனையூரை ஒப்பாளை, நாளைப் பொன்னணிவார்கள் என்று சொல்லித் தீவினையைச் செய்த நான் நாயகனே ! உன்னை எதிர்ப்பட்டு என்ன வார்த்தையைச் சொல்லுவேன் !
23. தினை முதிர்வு உரைத்து வரைவு கடாதல்
தினை முதிர்வு உரைத்து வரைவு கடாதல் என்பது, அயலுரை உரைத்து வரைவு கடாய தோழி, இவ்வேங்கை தினைப்புனங் கொய்க என்று சோதிடம் சொல்லுதலைப் பொருந்தி எம்மைக் கெடுவித்தது. இனி நமக்கு ஏனல் விளையாட்டில்லை எனச் சிறைப் புறமாகத் தலைமகளோடு கூறுவாள் போன்று, தினை முதிர்வுரைத்து வரைவு கடாவா நிற்றல்.
138. மாதிடம் கொண்(டு)அம் பலத்துநின்
றோன்வட வான்கயிலைப்
போதிடம் கொண்டபொன் வேங்கை
தினைப்புனம் கொய்கஎன்று
தாதிடம் கொண்டுபொன் வீசித்தன்
கள்வாய் சொரியநின்று
சோதிடம் கொண்(டு)இதுஎம் மைக்கெடு
வித்தது தூமொழியே.
கொளு
ஏனல் விளையாட்(டு) இனிஇல் லையென
மானல் தோழி மடந்தைக்(கு) உரைத்தது.
இதன் பொருள் : தினைக் காத்து விளையாடும் விளையாட்டு இனியில்லை என்று கொண்டு கொண்டாட்டத்தினை உடைய தோழி நாயகிக்குச் சொன்னது.
தெளிவுரை : தேவியை இடப்பாகத்தில் கொண்டு அம்பலத்தே நின்றவன் அவனுடைய வடக்கின்கண் உண்டாக்கிய பெருங் கயிலாயத்தில் பக்கமலையை இடங்கொண்ட பொன் போன்ற மலரையுடைய வேங்கை புனத்தில் தினையைக் கொய்யுங்கள் என்று அல்லியிடங் கொண்டு பொன்னை ஒத்த மலர்களைச் சிதறி தன்னுடைய தேன் ஆனது இடமெல்லாம் சொரிய நின்று சோதிடத்தைச் சொல்லிற்று. ஆதலால் தூய வார்த்தையை உடையாய் எம்மைக் கெடுவித்தது.
போது - மலை. வேங்கை மரம் பூத்தால் தினையை அறுக்கும் காலமாம் என்பது அறிக.
இரும்பு முதலிய தாதுக்களை விடாமல் கொண்டு பொன்னைப் புறத்து வீசித் தான் உண்ட கள்ளைத் தான் வாய் சொரிய நிற்கும் மது மயக்கத்துடனே சோதிடம் கூறுதலை மேற்கொண்டது எனச் சிலேடை வகையால் வேங்கை மரத்தை இழித்துரைத்தாள் என்க.
24. பகல் வரல் விலக்கி வரைவு கடாதல்
பகல் வரவு விலக்கி வரைவு கடாதல் என்பது, சிறைப் புறமாகத் தினை முதிர்வுரைத்தது வரைவு கடாய தோழி, எதிர்ப்பட்டு நின்று, இப்பெருங் கணியார் நமக்கு நோவுதகப் பருவம் சொல்லுவாராயிருந்தார். எம் ஐயன்மார் இவர் சொற்கேட்டு இத்தினையை தடிவாரா இருந்தார். எமக்கும் இனித்தினைப் புனங்காவல் இல்லை. நீர் இனிப் பகல் வரல் வேண்டா எனப் பகல் வரல் விலக்கி வரைவு கடாவா நிற்றல்.
139. வடிவார் வயல்தில்லை யோன்மல
யத்துநின் றும்வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர்
தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக
யான்உமக்(கு) என்னுரைக்கேன்
தடிவார் தினைஎமர் காவேம்
பெருமஇத் தண்புனமே.
கொளு
அகல்வரை நாடனைப் பகல்வரல் என்றது.
இதன் பொருள் : அகன்ற மலைமேல் உண்டாகிய நாட்டை உடையவனைப் பகற்குறி வாராதொழிக என்றது.
தெளிவுரை : அழகார்ந்த வயல் சூழ்ந்த பெரும்பற்றப்புலியூரில் உள்ளவன் அவனுடைய பொதியின் மலையிடத்தே இவர் நின்று வைத்தும் வருகிற தேன் சாதிகளும் நறுநாற்றத்தை விரும்புகிற ஒழுங்குபட்ட களிப்புடைத்தாகிய வண்டுச் சாதிகளும் நின்று பூவை மலர்த்த, வேங்கையாராகிய இப்பெரிய கணியார் சொல்லுவாராக இருந்தார். இப்போது நமக்கு நோவத்தக்க காரியங்களை; இது கேட்டு எங்கள் உறவின் முறையார் தினையைக் கொய்வதாக இருந்தார்கள். இவ்வார்த்தையை நானும் உமக்கு என்னென்று சொல்லுகேன் !
அதாவது பெரியோனே ! நாங்கள் இந்தக் குளிர்ந்த புனத்தைத் காவேம்.
இனிக் கணி செய்வது துன்பமாய்த் தோன்றினும் பின் வரைந்தெய்தி இல்லறம் நிகழத்துதற்கு ஏதுவாகலின் அதுவும் நன்றேயாதல் அறிக.
25. தினையொடு வெறுத்து வரைவு கடாதல்
தினையொடு வெறுத்து வரைவு கடாதல் என்பது, பகல் வரவு விலக்கி வரைவு கடாய தோழி இத்தினைக் காவல் தலைக்கீடாக நாம் அவனை எதிர்ப்படலாம் என்று நினைந்து தினையை வித்திக் காத்தோம்; அதுபோய்த் தீவினையை வித்திக் காத்து அதன் விளைவையும் உண்டதாகி முடிந்ததெனச் சிறைப்புறமாகத் தினையொடு வெறுத்து வரைவு கடாவா நிற்றல்.
140. நினைவித்துத் தன்னைஎன் நெஞ்சத்(து)
இருந்(து)அம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின்
மலைப்பொருப் பன்விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின்
றேமுக்குச் சென்றுசென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட
தாகி விளைந்ததுவே.
கொளு
தண்புனத் தோடு தளர்வுற்றுப்
பண்புனை மொழிப் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : தளர்ச்சியுற்றுக் குளிர்ந்த புனத்துடனே பண்பொருந்தின சொல்லையுடைய பாங்கி சொல்லியது.
தெளிவுரை : தானே புகுந்து திருத்த வேண்டுதலால் என் நெஞ்சில் வந்திருந்து தன்னையான் எப்பொழுதும் நினையும்படி பண்ணித் திருஅம்பலத்தில் நின்று என்னைக் கொண்டு தன்னைப் புகழ்வித்துக் கொண்ட பரமேசுவரன், அவனுடைய பொதிய மலையிடத்து நாயகனைக் காணலாமென்னும் விருப்பினால் தினையை வித்தியதில் ஒரு சேதமும் படாமல் பரிகரித்துச் சிறந்து நின்றோம். தன்னுடைய தண்ணளி எம்பால் நின்ற எமக்குத் தினையை வித்தியதில் ஒன்றும் சேதப்படாமல் பரிகரித்து அது விளைந்தவாறு எய்தத் தினை அனுபவித்தாற்போல விளைந்தது இன்றே.
26. வேங்கையொடு வெறுத்து வரைவு கடாதல்
வேங்கையொடு வெறுத்து வரைவு கடாதல் என்பது, தினையொடு வெறுத்து வரைவு கடாயதோழி இவ்வேங்கை அரும்பிய ஞான்றே அரும்பறக் கொய்தோமாயின் இவர் இன்று நம்மைக் கெடுப்பான் வேண்டி இத்தினை கெட முலுமாறுமுண்டோ? யாமது செய்யப் பெற்றிலேம் என வேங்கையோடு வெறுத்து வரைவு கடாவா நிற்றல்.
141. கனைகடற் செய்தநஞ் சுண்டுகண்
டார்க்(கு)அம் பலத்(து) அமிழ்தாய்
வினைகெடச் செய்தவன் விண்தோய்
கயிலை மயிலனையாய்
நனைகெடச் செய்தனம் ஆயின்
நமைக்கெடச் செய்திடுவான்
தினைகெடச் செய்திடு மாறும்உண்
டோஇத் திருக்கணியே.
கொளு
நீங்குக இனிநெடுந் தகையென
வேங்கை மேல்வைத்து விளம்பியது.
இதன் பொருள் : பெரிய தகைமைப்பாட்டை உடையவனே ! நீங்குவாயாக என்று வேங்கை மரத்தைச் சொல்லுவாராகச் சொல்லியது.
தெளிவுரை : ஆரவாரிக்கப்பட்ட கடலில் உண்டாக்கப்பட்ட நஞ்சை அமுது செய்து வந்து தரிசித்தார்க்கு அம்பலத்தில் உண்டாய அமுதாய் இருவினையும் கெடும்படி கரணங்களை ஒடுக்கினவன் (என்றது, கடலில் நஞ்செனவே பெருமை பெற்றது; செய்த நஞ்சென பெருமை விளங்கிற்று. இந்த நஞ்சை உண்டு வைத்து அமுதமானான் என்பது கருத்து. அமுதமானது அருமையற்று அம்பலத்து அமுதமாயிருந்தது. இங்ஙனமே எளிதாய் வைத்தும் உண்டால், பலிக்கை ஒழிந்து காணும் அளவில் பலிக்கும்படியாய் இருந்தது. பலிக்கும் பொழுதும் யாக்கைத் துன்பம் ஒழிய அந்தக்கரணங்களையும் சுத்தமாக்குவதாய் இருந்தது) அவனுடைய விசும்பு தோய்ந்த கயிலையில் மயிலை நிகர்ப்பாய். அரும்புகிற நாளில் அரும்பினைப் பறித்துப் போட்டோமாகில் நம்மைக் கெடும்படியாகத் தினைகெடச் செய்திடுமாறும் உண்டோ இத் திருக்கணியே.
இத்திருக்கணியே தினை கெடும்படி சோதிடம் சொல்லுமாறு உண்டோ ? இந்தத் திருவாகிய கணி, திரு என்பது சாதிப்பெயர்; கணி என்பது தொழிற் பெயர்; அந்தச் சோதிடம் சொல்லும் சாதியிலே பிறந்து அந்தச் சோதிடம் தப்பாமே சொல்லி வருகிறவர் என்று வேங்கை மரத்திற்கு இழிவு சொன்னபடி.
27. இரக்கமுற்று வரைவு கடாதல்
இரக்கமுற்று வரைவு கடாதல் என்பது, வேங்கையோடு வெறுத்து வரைவு கடாய தோழி, யாம் அவனை எதிர்ப்படலாம் என்று இன்புற்று வளர்த்த தினைத்திரள் இப் புனத்தின்கண் இல்லாவாய் இருந்தன. இனி நாம் அவனை எதிர்ப்படுமாறு என்னோ என்று சிறைப் புறமாகத் தலைமகனுக்காக இரக்கமுற்று வரைவு கடாவா நிற்றல்.
142. வழுவா இயல்எம் மலையர்
விதைப்பமற்(று) யாம் வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்கள்எல்
லாம்எம் குழாம்வணங்கும்
செழுவார் கழல்தில்லைச் சிற்றம்
பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப
தாவ(து)இத் தொல்புனத்தே.
கொளு
செழுமலை நாடற்குக் கழுமலுற்(று) இரங்கியது.
இதன் பொருள் : அழகிய மலைமேல் உண்டாகிய நாட்டினை உடையவற்குக் கழுமல் இரங்கியது.
தெளிவுரை : விதைக்கிற் பருவமும அறுக்கிற் பருவமும் வழுவாத இல்லையுடைய மலையராகிய எங்கள் அண்ணன்மார் விதைப்ப அதனை மற்றெங்களால் வளர்க்கப்பட்ட வளவிதாய நீண்ட தினையின் திரளெல்லாம் வந்து வணங்குகிற அழகியதாகிய சீபாதங்களை யுடைய பெரும்பற்றப்புலியூரில் திருச்சிற்றம்பலத்தில் உள்ளவரைச் சென்று (கரும காண்டத்தினின்று ஞான காண்டத்தில் சென்று நின்று) தொழுவாருடைய இருவினையும் (அவர்கள்) நிற்கிலே இத்தினையின் திரள் நிற்பது.
28. கொய்தமை கூறி வரைவு கடாதல்
கொய்தமை கூறி வரைவு கடாதல் என்பது, இரக்கமுற்று வரைவு கடாய தோழி எதிர்ப்பட்டு நின்று, இப்புனத்துத் தினையுள்ளது இன்று தொடர்பறக் கொய்தற்றது. எமக்கும் இனிப் புனங்காவல் இல்லை. யாம் உமக்கு அறிவு சொல்லுகின்றேம் அல்லேம்; நீரே அறிவீர் எனத் தினை கொய்தமை கூறி வரைவு கடாவா நிற்றல்.
143. பொருப்பர்க்(கு) யாம்ஒன்று மாட்டோம்
புகலப் புகல்எமக்காம்
விரும்பர்க்(கு) யாவர்க்கும் மேலவர்க்கு
மேல்வரும் ஊர்எரித்த
நெருப்பர்க்கு நீ(டு)அம் பலவருக்(கு)
அன்பர் குலநிலத்துக்
கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற
தின்றிக் கடிப்புனமே.
கொளு
நீடிரும் புனத்தினி ஆடேம் என்று
வரைவு தோன்ற வுரைசெய்தது.
இதன் பொருள் : மிகவும் பெரிய புனத்தில் விளையாடேம் என்று வரைந்து கொள்வாயாக என்னும் இடம் தோன்றச் சொன்னது.
தெளிவுரை : நாயகனுக்கு இனி ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டோம். எமக்குப் புகலிடமானவர்க்கு விரும்பினவர்க்கு மேல் இயங்குகின்ற முப்புரங்களை எரித்த அக்கினியை உடையவர்க்கு, மிக்க திருஅம்பலத்தை உள்ளவர்க்கு அவர்க்கு அன்பு செய்தவருடைய திரள் பூமியில் கருப்பற்று விட்டாற் போல அந்தக் காவலை உடைத்தாகிய புனமானது கொய்யப்பட்டு விட்டது.
யாம் ஒரு குணம் இலேமாயினும் தமது விருப்பினால் புகலிடமாயினாள். வீடென்பதூஉம் பாடம்.
29. பிரிவு அருமை கூறி வரைவு கடாதல்
பிரிவு அருமை கூறி வரைவு கடாதல் என்பது, கொய்தமை கூறி வரைவு கடாய தோழி, இப்புனத்துப் பயின்ற கிளிகள் தமக்குத் துப்பாகாக் காலத்துத் தினைத் தாளை விடாது இரா நின்றன. நாம் போனால் நம் காதலர் இவ்விடத்தே வந்து நின்று நம்மைத் தேடுவர் கொல்லோ எனச் சிறைப்புறமாகப் பிரிவு அருமை கூறி வரைவு கடாவா நிற்றல்.
144. பரிவுசெய்(து) ஆண்(டு)அம் பலத்துப்
பயில்வோன் பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத்(து) ஐவனம்
கொய்யவும் இவ்வனத்தே
பிரிவுசெய் தால்அரி தேகொள்க
பேயொடும் என்னும்பெற்றி
இருவிசெய் தாளின் இருந்(து)இன்று
காட்டும் இளங்கிளியே.
கொளு
மறைப்புறக் கிளவியின் சிறைப்புறத்(து) உரைத்தது.
இதன் பொருள் : மறைத்துப் பிறிதொன்றைச் சொல்லுகிற வார்த்தையால் பட்சியின் மிகுதி புனத்தில் உண்டாகி விடும் என்று சொன்னது.
தெளிவுரை : என்னைப் பரிவுற்றது அடிமைகொண்டு திருஅம்பலத்தில் ஆடி அருளுகிறவன் திருப்பரங்குன்றிடத்து அருவி நீரால் வளர்க்கப்பட்ட நீண்ட புனத்திடத்துத் தினையைக் கொய்யவும், இந்தப் புனத்திடத்தே பேயோடாயினும் பிரிதல் ஆற்றுதல் அரிதென்னும்படியை இருவிசெய் தாளிலிருந்து இப்போது காட்டா நின்றன இளைய கிளிகள் ஆனவை.
தினை பயன்படாத காலத்தும் கிளிகள் விடாதே நின்றன என்பது கருத்து.
30. மயிலொடு கூறி வரைவு கடாதல்
மயிலொடு கூறி வரைவு கடாதல் என்பது, பிரிவு அருமை கூறி வரைவு கடாய தோழி, பிரிவு ஆற்றாமையோடு தலைமகளையும் கொண்டு புனம் காவலேறிப் போகா நின்றாள். கணியார் நினைவு இன்று முடிந்தது. யாங்கள் போகா நின்றோம். இப்புனத்து ஒருவர் வந்தால் இங்கு நின்றும் போனவர்கள் துணியாதன துணிந்து போனாரென்று அவர்க்குச் சொல்லுமின் என மயிலொடு கூறி வரைவு கடாவா நிற்றல்.
145. கணியார் கருத்தின்று முற்றிற்று
யாம்சென்றும் கார்ப்புனமே
மணியார் பொழில்காள் மறத்திற்கண்
டீர்மன்னும் அம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்காள்
அயில்வேல் ஒருவர்வந்தால்
துணியா தனதுணிந் தார்என்னும்
நீர்மைகள் சொல்லுமினே.
கொளு
நீங்கரும் புனம்விடு நீள்பெருந் துயரம்
பாங்கி பகர்ந்து பருவரல் உற்றது.
இதன் பொருள் : விட்டு நீங்குதற்கரிய புனத்தைவிட்டு நீங்குகிற மிகவும் பெரிய துன்பத்தைத் தோழியானவள் நினைந்து துயருற்றது.
தெளிவுரை : இந்த வேங்கையாருடைய நினைவுகள் எல்லாம் முடிந்தன. நாங்கள் போகா நின்றோம். சோலையாற் பச்சென்ற கரியபுனமே ! முத்து மணிகளால் சிறந்த பொழில்காள் உங்களுக்குச் சொன்னாலும் இந்த வேங்கையாருடைய பெற்றியினால் மறந்து விடுவீர்கள். நிலைபெற்ற திருஅம்பல நாதனுடைய அழகார்ந்த ஸ்ரீ கயிலாயத்தினின்றும் வந்த மயில்காள் ! கூரிய வேலையுடையார் ஒருவர் வந்தால் அன்புடையார் அறுதியிடாத பொருளாகிய பிரிவையும் பிரிந்தாலும் மாற்றுதலை அறுதியிட்டுப் போனார்கள் என்னும் தன்மையையும் சொல்லுவீர்களாக வேண்டும். கயிலையிடத்து மயில்காள் என்றது கண்ணோட்டம் உடையீர் என்ற கருத்து.
31. வறும்புனம் கண்டு வருந்தல்
வறும்புனம் கண்டு வருந்தல் என்பது, தலை மகளும் தோழியும் புனம் காவல் ஏறிப் போகா நிற்பத் தலைமகன் புனத்திடைச் சென்று நின்று, இப்புனம் யாம் முன் பயின்றதன்றோ? இஃது இன்று இருக்கின்றவாறு என்னோ? என்று அதன் பொலிவு அழிவு கூறித் தலைமகளைத் தேடி வருந்தா நிற்றல்.
146. பொதுவினில் தீர்த்(து)என்னை யாண்டோன்
புலியூர் அரன்பொருப்பே
இதுவெனில் என்னின்(று) இருக்கின்ற
வா(று)எம் இரும்பொழிலே
எதுநுமக்(கு) எய்திய(து) என்உற்
றனிர்அறை ஈண்டருவி
மதுவினில் கைப்புவைத் தாலொத்த
வாமற்(று)இவ் வான்புனமே.
கொளு
மென்புனம் விடுத்து மெல்லியல் செல்ல
மின்பொலி வேலோன் மெலிவுற்றது.
இதன் பொருள் : மெத்தென்ற புனத்தை விட்டு மெல்லிய இயல்பினை உடையாள் போக மின்னை நிகர்த்த வேலினையுடையவன் வாடியது.
தெளிவுரை : ஏதோ சமயமென்று பொதுவே நின்று தடுமாறுகின்ற என்னைப் பொதுமையினின்றும் நீக்கி அடிமை கொண்டவன், பெரும்பற்றப்புலியூரிலே உள்ள தலைவன். அவனுடைய திருமலை இதுவாமாகில் எம்முடைய பெரிய பொழிலே உங்களுக்கு வந்துற்ற வருத்தம் எது? அவ்வருத்தத்தாலுற்ற துன்பம் எது? ஆரவாரம் மிக்க அருவி, மதுவிலே அதன் இனிய சுவையை மாற்றிக் கைப்பாகிய சுவையை வைத்திருந்தால் ஒத்திருந்தது மற்றிந்தப் பெரிய புனம்.
32. பதி நோக்கி வருந்தல்
பதி நோக்கி வருந்தல் என்பது, வறும் புனத்திடை வருந்தா நின்ற தலைமகன், இவ்வாறு அணித்தாயினும் நம்மால் செய்யலாவது ஒன்றில்லை என்று அவளிருந்த பதியை நோக்கித் தன் நெஞ்சோடு உசாவி வருந்தா நிற்றல்.
147. ஆனந்த மாக்கடல் ஆடுசிற்
றம்பலம் அன்னபொன்னின்
தேனுந்து மாமலைச் சீறூர்
இதுசெய்ய லாவதில்லை
வானுந்து மாமதி வேண்டி
அழும்மழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயும்
தளர்ந்தனை நன்னெஞ்சமே.
கொளு
மதிநுதல் அரிவை பதிபுகல் அரிதென
மதிநனி கலங்கிப் பதிமிக வாடியது.
இதன் பொருள் : பிறை போன்ற நெறிறியினை உடையவள் பதியிற் சென்று புகுதல் அரிதென்று புத்தி மிகவும் கலங்கி நாயகன் வாடியது.
தெளிவுரை : மகிழ்ச்சியாகிய பெரிய நீரால் நிறைந்த பெரிய கடலாய் உள்ளவன் அவன் ஆடியருளுகிற திருச்சிற்றம்பலத்தை ஒத்த பொன்னை ஒப்பாளுடைய தேன் தத்திப் பாய்கிற பெரிய மலையில் சீறூர் இது காண். செயலாவதொரு பொருளும் இல்லை காண். ஆகாயத்தில் திரிகிற மதியைப் பிடித்துத் தரவேண்டி அழுகிற பிள்ளைகளைப் போல நல்ல நெஞ்சமே! அரிய பொருள்களை விரும்புதலால் நீயும் தளர்ந்தாய். அது முடித்துத் தர மாட்டாமையாலே நானும் தளர்ந்தேன்.
பகற்குறி முற்றிற்று.

பதினான்காம் அதிகாரம்
14. இரவுக் குறி
இரவுக்குறி வருமாறு: பகற்குறி புணர்ந்து விலக்கப்பட்ட தலைமகன், தெருண்டு வரைதல் தலை; தெருளான் ஆயின் பின்னையும் தோழியைத் தலைப்பட்டு, இரவுக் குறிவேண்டிச் சென்று எய்துதல் முறையென்ப. என்னை, களவினுள் தவிர்ச்சி கிழவோற்கு இல்லை (இறையனார் அப்பொருள் 33) என்றார் ஆகலின்.
நூற்பாவில் அடியிற் கண்ட 33 துறைகள் குறிக்கப்பட்டுள்ளன. அவையாவன:
1. இரவுக்குறி வேண்டல்
2. வழியருமை கூறி மறுத்தல்
3. நின்று நெஞ்சுடைதல்
4. இரவுக்குறி நேர்தல்
5. உட்கோள் வினாதல்
6. உட்கொண்டு வினாதல்
7. குறியிடங் கூறல்
8. இரவுக் குறி ஏற்பித்தல்
9. இரவரவு உரைத்தல்
10. ஏதங்கூறி மறுத்தல்
11. குறைநேர்தல்
12. குறைவேந்தமை கூறல்
13. வரவுணர்ந்துரைத்தல்
14. தாய் துயிலறிதல்
15. துயிலெடுத்துச் சேறல்
16. இடத்துய்த்து நீங்கல்
17. தளர்வகன்று உரைத்தல்
18. மருங்கணைதல்
19. முகங்கண்டு மகிழ்தல்
20. பள்ளியிடத் துய்த்தல்
21. வரவு விலக்கல்
22. ஆற்றாது உரைத்தல்
23. இரக்கங் கூறி வரைவு கடாதல்
24. நிலவு வெளிப்பட வருந்தல்
25. அல்ல குறி அறிவித்தல்
26. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்
27. காமம் மிக்க கழிபடர் கிளவி
28. காப்புச்சிறை மிக்க கையறு கிளவி
29. ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவி
30. தன்னுட் கையாறு எய்திடு கிளவி
31. நிலை கண்டு உரைத்தல்
32. இரவுறு துயரம் கடலோடு சேர்த்தல்
33. அலர் அறி உறுத்தல்
என இவை முப்பத்தி மூன்றும் இரவுக் குறியாம்.
பேரின்பக் கிளவி
இரவுக் குறித்துறை முப்பத்திமூன்றும்
அருளே சிவத்தோ(டு) ஆக்கியல் அருமை
தெரியவற் புறுத்திச் சிவனது கருணையின்
இச்சை பலவும் எடுத்தெடுத்(து) அருளல்.
1. இரவுக் குறி வேண்டல்
இரவுக் குறி வேண்டல் என்பது, பதி நோக்கி வருந்தா நின்ற தலைமகன், இற்றை இரவிற்கு யான் உங்கள் சீறூர்க்கு விருந்து; என்னை ஏற்றுக் கொள்வாயாக எனத் தோழியை இரவுக் குறி வேண்டா நிற்றல்.
148. மருந்துநம் அல்லற் பிறவிப்
பிணிக்(கு)அம் பலத்(து)அமிர்தாய்
இருந்தனர் குன்றின்நின்(று) ஏங்கும்
அருவிசென்(று) ஏர்திகழப்
பொருந்தின மேகம் புதைந்திருள்
தூங்கும் புனை இறும்பின்
விருந்தின் யான்உங்கள் சீறூர்
அதனுக்கு வெள்வளையே.
கொளு
நள்ளிருள் குறியை வள்ளல் நினைந்து
வீங்கு மென்முலைப் பாங்கிக்(கு) உரைத்தது.
இதன் பொருள் : செறிந்த இருளினது குறியை நாயகன் நினைத்துப் பொழுதுக்குப் பொழுது விம்மாநின்ற முலையினையுடைய பாங்கிக்குச் சொன்னது.
தெளிவுரை : நம்முடைய தனுகரணம் இடமாகப் பிறக்கின்ற அல்லற் பிறவியாகிற வியாதிக்குத் திருஅம்பலத்தை மருந்தையொத்து எழுந்தருளியிருந்தவர், அவருடைய திருமலையின் இடைவிடாது ஆரவாரிக்கிற அருவியானது சென்று எதிர் திகழ, அழகு விளங்கும்படி பொருந்தின மேகங்களால் மூடப்பட்டு இருள் தூங்கும் இருளே செய்கின்ற கைசெய்து வளர்க்கப்பட்ட காடுடைத்தாகிய உங்கள் சிற்றூர் தனக்கு விருந்தாகினேன் யான்; காண்; வெள்ளிய வளைகளை உடையாய் !
என்று பொருளாய், மழைக்காலத்து மாலையம்பொழுது வந்த விருந்தினரை எவரும் மறார்கள் ஆதலால் நீங்களும் எம்மை எதிர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது படும். கைசெய்து வளர்க்கப்பட்ட காடு என்பதால் உங்களுக்கு எதிர்ப்பட்டாலும் ஆம் என்றது.
2. வழியருமை கூறி மறுத்தல்
வழியருமை கூறி மறுத்தல் என்பது, தலைமகன் இரவுக் குறி வேண்டி நிற்ப, யாங்கள் வாழும்பதி ஏற்றிழிவு உடைத்தாகலின் அவ்விடத்து நினக்குச் சிந்தைக்கும் ஏறற்கு அரிது எனத் தோழி வழியருமை கூறி மறுத்துக் கூறா நிற்றல்.
149. விசும்பினுக்(கு) ஏணி நெறியன்ன
சின்னெறி மேல்மழைதூங்(கு)
அசும்பினில் துன்னி அளைநுழைந்
தால்ஒக்கும் ஐயமெய்யே
இசும்பினில் சிந்தைக்கும் ஏறற்(கு)
அரி(து)எழில் அம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான்
மலயத்(து) எம் வாழ்பதியே.
கொளு
இரவரல் ஏந்தல் கருதி உரைப்பப்
பருவரல் பாங்கி அருமை உரைத்தது.
இதன் பொருள் : இரவு வருதலை நாயகன் குறித்துச் சொல்ல அத்தன்மையாலே துன்பமுற்ற பாங்கி வழியினது அருமையைச் சொன்னது.
தெளிவுரை : ஆகாயத்துக்கு ஏறுவதாக விட்ட ஏணி வழியை ஒத்த சிறிய வழியுமாய் மெத்தென்ற மழை விடாமல் பெய்கையால் நீர் அறாத திவலைகளைச் சேர்ந்து முழையில் நுழைந்தால் ஒக்கும். சுவாமி ! உண்மையாக வழுக்குதலால் மனத்தாலும் ஏறற்கு அரிது. அழகிய திருவம்பலத்தேயுளன், செவ்விக் கதிர்களை உடைத்தாகிய திருஇளம்பிறையைச் சூடியவன், அவனுடைய பொதியின் மலையில் நாங்கள் வாழும் இடம் இப்படி இருக்கும்.
3. நின்று நெஞ்சுடைதல்
நின்று நெஞ்சுடைதல் என்பது, வழியருமை கூறக் கேட்ட தலைமகன், எய்துதற்கு அரியாளை விரும்பி நீ மெலியா நின்ற இதற்கு யான் ஆற்றேன் எனக் கூறித் தனது இறந்துபாடு தோன்ற நின்று தன் நெஞ்சு உடைந்து வருந்தா நிற்றல்.
150. மாற்றேன் எனவந்த காலனை
ஓலம் இடஅடர்த்த
கோலதேன் குளிர்தில்லைக் கூத்தன்
கொடுங்குன்றின் நீள்குடுமி
மேல்தேன் விரும்பும் முடவனைப்
போல மெலியும் நெஞ்சே
ஆற்றேன் அரிய அரிவைக்கு
நீவைத்த அன்பினுக்கே.
கொளு
பாங்கி விலங்கப் பருவரை நாடன்
நீங்கி விலங்காது நெஞ்சு டைந்தது.
இதன் பொருள் : பாங்கியானவள் இரவுக் குறிக்கு விலக்குதல் சொல்லப் பெரிய மலைமேல் உண்டாய நாட்டினை உடையவன் இரவுக் குறியினின்றும் நீங்காதே தன் நெஞ்சுடனே நொந்து சொல்லியது.

தெளிவுரை : ஒருவராலும் மாற்றப்படேன் என்று அகங்கரித்து வந்த கூற்றுவனைக் கூப்பிடும்படி நெருக்கின, அன்பருக்குக் கொம்பிடை இருந்த தேனைப் போன்றவன், மதுரமாகிய பெரும்பற்றப்புலியூரில் திருநடனமாடி அருளுகிறவன். அவனுடைய திருக்கொடுங்குன்றின்
 நீண்ட உச்சியிலே மேல் வைத்த தேனை உண்கைக்கு இச்சித்த முடவனைப் போல வாடுகின்ற நெஞ்சமே ! அரியளாயிருக்கிற அரிவைக்கு நீ வைத்த அன்பு தான் ஆற்றவொண்ணாதுகாண், என்று நெஞ்சுடன் அழுந்தியது.
4. இரவுக்குறி நேர்தல்
இரவுக் குறி நேர்தல் என்பது, தலைமகன் நெஞ்சு உடைந்து வருந்தா நிற்பக் கண்டு, இவன் இறந்து படவும் கூடும் என உட்கொண்டு, நீ, யாளிகள் நிரைத்து நின்று யானைகளைத் தேடும் இராவழியின் கண் வந்து மீள்வேன் என்னாநின்றாய்; இதற்குத் தீவினையேன் சொல்லுவது எவனோ என்று மறுத்த வாய்பாட்டால் தோழி இரவுக் குறிநேர நிற்றல்.
151. கூளி நிரைக்கநின்(று) அம்பலத்(து)
ஆடி குரைகழற்கீழ்த்
தூளி நிறைத்த சுடர்முடி
யோஇவள் தோள்நசையால்
ஆளி நிரைத்தடல் ஆனைகள்
தேரும் இரவில்வந்து
மீளி யுரைத்தி வினையேன்
உரைப்பதென் மெல்லியற்கே.
கொளு
தடவரை நாடன் தளர்வு தீர
மடநடைப் பாங்கி வகுத்துரைத்தது.
இதன் பொருள் : பெரிய மலைமேல் உண்டாகிய நாட்டினை உடையான் தளர்ச்சி நீங்க மடப்பத்தை உடைய நடையாற் சிறந்த பாங்கி கூறுபாடு சொன்னது.
தெளிவுரை : கண்ணுக்கு இனிமையால் பேய்களும் விட்டு நீங்காதபடி திருஅம்பலத்தே நின்றாடியருகிறவன், அவனுடைய வீரக்கழல் ஆரவாரிக்கிற சீபாதங்களில் தூளியால் நிரைக்கப்பட்ட ஒளியை உடைய முடியை உடையவனே ! இவள் தோள் இடத்து வைத்த விருப்பத்தால் சிங்கங்கள் நிரைத்து வெற்றியுடைய யானைகளைத் தேடுகிற இரவிடத்தே வந்து மீள்வதாகச் சொல்லா நின்றாய். மெல்லிய இயல்பினை உடையாளுக்குத் தீவினை செய்த நான் எதைச் சொல்லுவேன்?
5. உட்கோள் வினாதல்
உட்கோள் வினாதல் என்பது, இரவுக் குறி நேர்ந்த தோழி தங்கள் நிலத்து மக்கள் கோலத்தனாய் வருதற்கு அவன் உட்கொள்வது காரணமாக, நின்னூர் இடத்தார் எம்மலர் சூடி, எச்சாந்தணிந்து எம்மர நிழலின் கீழ் விளையாடுப எனத் தலைமகனை வினாவா நிற்றல்.
152. வரையன்(று) ஒருகால் இருகால்
வளைய நிமிர்த்துவட்கார்
நிரையன்(று) அழல்எழ எய்துநின்
றோன்தில்லை அன்னநின்னூர்
விரையென்ன மென்னிழல் என்ன
வெறியுறு தாதிவர்போ(து)
உரையென்ன வோசிலம் பாநலம்
பாவி ஒளிர்வனவே.
கொளு
நெறி விலக்(கு) உற்றவன் உறுதுயர் நோக்கி
யாங்கொரு சூழல் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : இந்த வழியில் வரவேண்டா என்று விலக்கப்பட்டவன் உற்ற துன்பத்தைப் பார்த்து அவ்விடத்து ஒரு சூழ்ச்சியைத் தோழி சொன்னது.
தெளிவுரை : மகாமேருவை முன்னொரு காலத்து இரண்டு காலும் வளையும்படி பண்ண, மார்பையும் தோளையும் நிமிர்த்துச் சத்துருக்களது நிரையை அன்று அழல் எழ எய்து நின்றோன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரை ஒத்தவனுடைய ஊரில் நறுநாற்றங்கள் எத்தன்மையன? மென்னிழல் எத்தன்மையன? நறுநாற்றம் மிக்க அல்லி பரந்த பூக்கள் எத்தன்மையன? சொல்லுவாயாக.
6. உட்கொண்டு வினாதல்
உட்கொண்டு வினாதல் என்பது கேட்ட வினாவையுட் கொண்டு அந்நிலத்து மக்கள் கோலத்தனாய்ச் செல்வானாக, நின்னூரிடத்து இராப்பொழுது நுமர் எம்மலரைச் சூடி எச்சாந்தை யணிந்து என்ன மரநிழலின் கீழ் விளையாடுப எனத் தலைமகன் தோழியை வினாவா நிற்றல்.
153. செம்மலர் ஆயிரம் தூய்க்கரு
மால்திருக் கண்அணியும்
மொய்ம்மலர் ஈர்ங்கழல் அம்பலத்
தோன்மன்னு தென்மலயத்(து)
எம்மலர் சூடிநின்(று) எச்சாந்(து)
அணிந்(து)என்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கண்நல் லாய்எல்லி
வாய்நுமர் ஆடுவதே.
கொளு
தன்னை வினவத் தான்அவள் குறிப்பறிந்(து)
என்னை நின்னாட்(டு) இயல்அணி என்றது.         
இதன் பொருள் : பாங்கியானவள் தன்னை வினவத் தான் அவளுடைய நினைவை அறிந்து, உங்களுடைய நாட்டியல்பு இருக்கும்படி என்ன என்று கேட்டது.
தெளிவுரை : ஆயிரம் செந்தாமரைப் பூவையிட்டுப் புரு÷ஷாத்தமன் அதிலொரு புட்பம் குறைதலால் அழகிய கண்ணை இடந்து அப்பிப் பூசிக்கிற பெரிய மலரை ஒத்துக் குளிர்ந்த ஸ்ரீபாதங்களையுடைய திருஅம்பலநாதன் நிலைபெற்ற பொதியின் மலையிடத்து அழகிய மலரை ஒத்து ஒளிசிறந்த கண்களையுடைய நல்லவளே ! இரவிடத்தே உங்கள் உறவின் முறையார் விளையாடுவது எந்த மலரைச் சூடிநின்று? எந்தச் சந்தனத்தை அணிந்து? எந்ந நல்ல நிழலிடத்தே தான்? சொல்லுவாயாக வேண்டும்.
7. குறியிடங்கூறல்
குறியிடங் கூறல் என்பது, உட்கொண்டு வினாவிய தலைமகனுக்கு, யாங்கள் சந்தனச் சாந்தணிந்து, சுனைக் காவிகள் சூடித் தோகைகள் துயில் செய்யும் வேங்கைப் பொழிற்கண் விளையாடுவேம். அவ்விடத்து நின்வரவு அறிய மயில் எழுப்புவாயாக எனத் தோழி குறியிடங் கூறா நிற்றல்.
154. பனைவளர் கைம்மாப் படாத்(து)அம்
பலத்தரன் பாதம்விண்ணோர்
புனைவளர் சாரல் பொதியின்
மலைப்பொலி சந்தணிந்து
சுனைவளர் காவிகள் சூடிப்பைந்
தோகை துயில்பயிலும்
சினைவளர் வேங்கைகள் யாங்கள்நின்(று)
ஆடும் செழும்பொழிலே.
கொளு
இரவுக் குறியிவண் என்று பாங்கி
அரவக் கழலவற்(கு) அறிய வுரைத்தது.
இதன் பொருள் : இரவுக் குறி இத்தன்மைத்து என்று தோழியானவள் ஆரவாரிக்கிற வீரக்கழலை உடைய நாயகனுக்கு அறியும்படி சொன்னது.
தெளிவுரை : பனையை ஒத்த கையினையுடைய யானையின் தோலைப் படாமாக உடையவன், திருஅம்பலத்து உளனாகிய தலைவன். அவனுடைய சீபாதங்களைச் சூடுதற்கு இடமாகிய தேவர்கள், மிக்க சாரலையுடைய பொதியின் மலைப் பொலிவுபெற்ற சந்தனத்தை அணிந்து, நீலப்பூவைச் சூடி, வேங்கை நிழலில் நின்று மயிலை எழுப்பியாக வேண்டும்.
8. இரவுக் குறிய ஏற்பித்தல்
இரவுக் குறி ஏற்பித்தல் என்பது, தலை மகனுக்குக் குறியிடம் கூறி, தலைமகள் உழைச் சென்று, அந்திக் காலத்தோர் அலவன் தன் பெடையோடு பயிலக் கண்டு ஒரு பெரியோன் வருத்த மிக்குச் சென்றான். அதற்குப் பின் அவன் சேர்துயில் அறிந்திலேன் எனத் தோழி அவனது ஆற்றாமை கூறித் தலைமகளை இரவுக்குறி ஏற்பியா நிற்றல்.
155. மலவன் குரம்பையை மாற்றிஅம்
மால்முதல் வானர்க்(கு) அப்பால்
செலஅன்பர்க்(கு) ஒக்கும் சிவன்தில்லைக்
கானலிற் சீர்ப்பெடையோ(டு)
அலவன் பயில்வது கண்(டு)அஞர்
கூர்ந்(து)அயில் வேல்உரவோன்
செலஅந்தி வாய்க்கண் டனன்என்ன(து)
ஆங்கொல்மன் சேர்துயிலே.
கொளு
அரவக் கழலவன் ஆற்றானென
இரவுக் குறி ஏற்பித்தது.
இதன் பொருள் : அரவம் செய்கின்ற வீரக்கழலை யுடையவன் ஆற்றானென்று கொண்டு இரவினிற் குறையை இசைவித்தது.
தெளிவுரை : மும்மலங்களை உடைத்தாகிய உடம்பான இக் குடிலை மாற்றி அப் புரு÷ஷாத்தமன் முதலாகிய தேவர்க்கு அப்பாற் செல்லுகிற தனக்கு அன்பு செய்வார்க்கு ஒக்கிற சிவன் என்னும் திருநாமத்தை உடையவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரைச் சூழ்ந்த கடற் சோலையில் சீரிய பெடையுடன் சேவல் நண்டானது உறவு செய்கிற படியைக் கண்டு வருத்த முற்றுக் கூரிய வேலினையுடைய நாகயன் செல்ல, அந்திக் காலத்தில் கண்டேன்; மன்னனால் ஆன பொருந்தின உறக்கமானது என் செயத்தான்?
9. இரவரவு உரைத்தல்
இரவரவு உரைத்தல் என்பது அலவன் மேல் வைத்து இரவுக் குறியேற்பித்து முகங்கொண்டு அதுவழியாக நின்று, வேட்கை மிகவால் யானைகள் நடுங்கச் சிங்கம் திரியும் மலைச்சரிவிடத்து வர வேண்டிச் செல்லா நின்றான். இதற்கு யாம் செய்வதென்னோ எனத்தோழி தலைமகளுக்குத் தலைமகன் இரவரவு கூறாநிற்றல்.
156. மோட்டங் கதிர்முலைப் பங்குடைத்
தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டந் தரும்நம் குருமுடி
வெற்பன் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள்
நாகம் நடுங்கச்சிங்கம்
வேட்டம் திரிசரி வாய்வரு
வான்சொல்லு மெல்லியலே.
கொளு
குருவரு குழலிக்(கு) இரவர வுரைத்தது.
இதன் பொருள் : குரவம் பூவையொக்க நாறுகின்ற கூந்தலினை உடையவட்கு இரவு வருதலைச் சொன்னது.
தெளிவுரை : பெரிய பெருமையையும் அழகையும் கதிர்ப்பையும் உடைத்தாகிய முலையாற் சிறந்த பாகத்தை உடைய பெரும்பற்றப்புலியூரின் பழையவன், அவனுடைய சீபாதங்களை வணங்குகிற நம்முடைய நிறமுடைத்தாகிய முடியையுடைய நாயகன் மேகங்கள் திரண்டு கண் புதைத்தாலொத்த செறிந்த இருளிடத்து யானைகள் நடுங்கச் சிங்கங்கள் வேட்டமாக உலவு வழியிடத்து மெல்லிய இயல்பினை உடையாய்! வருவானாகச் சொன்னான்.
10. ஏதங்கூறி மறுத்தல்
ஏதங்கூறி மறுத்தல் என்பது, தலைமகன் இரவரவு கேட்ட தலைமகள் தனக்கு அவன் செய்த தலையளியும் உதவியும் நினையாநின்ற உள்ளத்தளாய் அரிதிரண்டு நின்று யானை வேட்டம் செய்யும் வல்லிருட்கண் வள்ளலை வாவென்று சொல்லத் தகுமோ என ஏதங்கூறி மறுத்து உரையா நிற்றல்.
157. செழுங்கார் முழவதிர் சிற்றம்
பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர்
வோன்கழல் ஏத்தலர்போல்
முழங்கார் அரிமுரண் வாரண
வேட்டைசெய் மொய்இருள்வாய்
வழங்கா அதரின் வழங்கென்று
மோஇன்(று)எம் வள்ளலையே.
கொளு
இழுக்கம் பெரி(து)இர வரின்என
அழுக்கம் எய்தி அரிவை உரைத்தது.
இதன் பொருள் : இரவுவரின் குற்றம் பெரிதென்று வருத்தமுற்று நாயகி சொன்னது.
தெளிவுரை : அழகிய காரை ஒத்த குடமுழாக்கள் முழங்குகிற திருச்சிற்றம்பலத்தில், பெரிய மாலானவன் அழகிய நறுநாற்றத்தை உடைய புட்பத்தை யிட்டு அஞ்சலி செய்யத் திருக்கூத்தாடி அருளுகின்றவனுடைய சீபாதங்களை வாழ்த்தாதாரைப் போல, முழங்குதலால் கிட்ட வொண்ணாத சிங்கம் பாட்டையுடைய யானைகள் வேட்டம் செய்கிற செறிந்த இருளிடத்து மனிதர் நடந்தறியாத வழியில் வருவாயாக என்று எம்முடைய நாயகனை இப்பொழுது சொல்லல் தகுமோ ?
11. குறை நேர்தல்
குறை நேர்தல் என்பது, ஏதங் கூறி மறுத்த தலைமகள், அவன் ஆற்றானாகிய நிலைமை கெட்டு, யான் புனலிடை வீழ்ந்து கெடப்புக என்னுயிர் தந்த பெரியோர்க்குச் சிறியேன் சொல்லுவது அறியேன் என உடம்பட்டு நேரா நிற்றல்.
158. ஓங்கும் ஒருவிடம் உண்(டு)அம்
பலத்(து)உம்பர் உய்ய அன்று
தாங்கும் ஒருவன் தடவரை
வாய்த்தழங் கும்அருவி
வீங்கும் சுனைபுனல் வீழ்ந்(து)அன்(று)
அழுங்கப் பிடித்தெடுத்து
வாங்கும் அவர்க்(கு)அறி யேன்சிறி
யேன்சொல்லும் வாசகமே.
கொளு
அலைவேல் அண்ணல் நிலைமை கேட்டு
கொலைவேற் கண்ணி குறைந யந்தது.
இதன் பொருள் : பகைவர்களை வருத்துகிற வேலினையுடைய நாயகனது நிலைமை கேட்டுக் கொலைத் தொழிலாற் சிறந்த, நிகர்த்த கண்களையுடையாள் குறையை விரும்பினது.
தெளிவுரை : பொழுதைக்குப் பொழுது மிகுந்து துன்பம் தருவதான விடத்தைப் பானம் பண்ணித் தேவர்கள் பிழைக்கும்படி அன்று பரிகரிக்கிற திருஅம்பலத்தில் உளனாகிய ஒப்பில்லாதவன், அவனுடைய மிகவும் பெரிய மலையிடத்து ஆரவாரிக்கிற அருவிப் பெருக்கில் அகப்பட்ட சுனை நீரில் அன்று நாம் விழுந்து இறந்துபடப்புகச் சுனையினின்றும் பற்றிக் கரையிலேற விட்ட பெருங் கவியாளர்க்குச் சிறியளாகிய நான் சொல்லும் ஒரு வார்த்தையும் அறியேன்.
என்ற பொருளாய் நம் உறவின் முறையாரால் பரிகரிக்கிற காலத்திலும் நம்முடைய வருத்தம் அறிந்து தீர்ப்பார் ஒருவர் தாம் இரவுக் குறியில் வருகிற இதற்கு நாம் துன்புறுகிற துன்பமும் தாமே அறிந்து தீர்ப்பர்.
12. குறை நேர்ந்தமை கூறல்
குறை நேர்ந்தமை கூறல் என்பது தலை மகளைக் குறை நயப்பித்துத் தலைமகனுழைச் சென்று, இற்றையாமத் தெல்லாம் நின் அருள்மேல் நிற்க வேண்டித் துன்பமுற்றேன். நீ கருதியதூஉம் முடிந்த தெனத் தோழி தலைமகனுக்கு அவள் குறை நேர்ந்தமை கூறா நிற்றல்.
159. ஏனற் பசுங்கதிர் என்றூழ்க்
கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை
செய்யும்வம் பார்சிலம்பா
யான்இற்றை யாமத்து நின்னருள்
மேல்நிற்க லுற்றுச்சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லை
யுறார்செல்லும் செல்லல்களே.
கொளு
குறைந யந்தனள் நெறிகு ழலியென
எறிவேல் அண்ணற்(கு) அறிய உரைத்தது.
இதன் பொருள் : நெறித்த கூந்தலினை யுடையாள் குறை நயந்து விரும்பினாள் என்று மாலையால் நறுநாற்றத்தைப் பொருந்தின வேலுடைய நாயகற்கு அறியும்படி சொன்னது.
தெளிவுரை : தினைக் கதிரானது கோடையால் வாட மழை பெய்விப்பதாக நினைந்து காட்டில் வாழும் குறவர்கள் தெய்வத்திற்குப் பலி கொடுத்து ஆரவாரிக்கிற புதுமை ஆர்ந்த மலையின் தலைமையினை உடையவனே ! இற்றை இடை யாமத்தில் யான் உன்னுடைய திருவருளின் வழியே நிற்க வேண்டி அடைந்தோர் காணத் தேன் மலருகின்ற கொன்றை மாலை உடையவனது பெரும்பற்றப்புலியூரை யடையாதார் அனுபவிக்கும் துன்பத்தை அறிந்தனன் காண். (என்ன, இப்படி வருந்தி உடன்படுவித்தேன் காண்.)
13. வரவுணர்ந்து உரைத்தல்
வரவுணர்ந்து உரைத்தல் என்பது, தலைமகனுக்குக் குறை நயப்புக் கூறிய தோழி, யாம் விளையாடா நின்ற பொழிலிடத்து வேங்கை மேல் உண்டாகிய மயிலினம் இன்புற்றுத் துயில் பெயரா நின்றன. இதற்குக் காரணம் என்னோ என அவன் வரவு அறிந்து கூறா நிற்றல்.
160. முன்னும் ஒருவர் இரும்பொழில்
மூன்றற்கு முற்றும்இற்றால்
பின்னும் ஒருவர்சிற் றம்பலத்
தார்தரும் பேரருள்போல்
துன்னுமோர் இன்பம்என் தோகைதம்
தோகைக்குச் சொல்லுவபோல்
மன்னும் அரவத்த வாய்த்துயில்
பேரும் மயிலினமே.
கொளு
வளமயில் எடுப்ப இளமயிற் பாங்கி
செருவேல் அண்ணல் வரவு ரைத்தது.
இதன் பொருள் : அழகிய மயில் எடுப்பச் சாயலால் இளைய மயிலை யொத்த பாங்கி செருத் தொழிலுக்குச் சிறந்த வேலினை உடைய நாயகன் வந்த படியைச் சொன்னது.
தெளிவுரை : பெரிய பூமிகள் மூன்றும் தோன்றுவதற்கு முன்னும் ஒருவராய் உள்ளவர். எல்லாப் பொருளும் இறந்து பட்டாலும் ஒருவராய் உள்ளவர். திருச்சிற்றம் பலத்தே உள்ளவர். அவர் தருகிற பெரிய கிருபை போல நமக்கு வந்து சேர்கின்றதோர் இன்பத்தை மென் மயிலான தன் மயிலுடனே சொல்லுவ போல், நிலை பெற்ற ஆரவாரத்தை உடையவாய் உறக்கமானது ஒழிய நின்றன மயிற்சாதிகள் (இஃதென்னோ).
(ஓகை) - ஒசையென்பது பாடமாயின் பிரியம் செல்லுவாரைப் போல என்றுமாம்.
நிலை பெற்ற ஆரவாரம் என்றது மயில் வெருவி எழுதல். இது நிலை பெற்ற ஆரவாரம் ஆகையால் நாயகர் செய்த குறியென்றுபடும்.
14. தாய் துயில் அறிதல்
தாய் துயில் அறிதல் என்பது, தலைமகன் வரவுணர்ந்து தலைவியைக் கொண்டு செல்லக் கருதா நின்ற தோழி, யாம் விளையாடாநின்ற பொழிலிடத்து ஒரு யானை நின்று ஊசலைத் தள்ளா நின்றது. அதற்கு யாம் செய்வது என்னோ? எனத் தாயது துயில் அறியா நிற்றல்.
161. கூடார் அரண்எரி கூடக்
கொடுஞ்சிலை கொண்டஅண்டன்
சேடார் மதின்மல்லல் தில்லைஅன்
னாய்சிறு  கண்பெருவெண்
கோடார் கரிகுரு மாமணி
ஊசலைக் கோப்பழித்துத்
தோடார் மதுமலர் நாகத்தை
நூக்கும்நம் சூழ்பொழிற்கே.
கொளு
ஊசல் மிசைவைத்(து) ஒள்அ மளியில்
தாய துதுயில் தான் அறிந்தது.
இதன் பொருள் : ஊசலைச் சொல்லும் வார்த்தையில் மேல் வைத்து அழகிய சயனத்தில் கிடக்கிற தாய் உறக்கத்தைத் தான் அறிந்தது.
தெளிவுரை : பகைவரது அரணம் நெருப்புக்கு இரையாம்படி கல்லை வில்லாக வளைய வாங்கின தேவன், உயரமிக்க மதிதோய்ந்த விரிசடைத்தாகிய பெரும்பற்றப்புலியூரை ஒப்பாய் ! சிறு கண்களையும் பெரிய வெள்ளிய கொம்பினையும் (பெற்ற) யானையானது நிறமுடைத்தாகிய மிக்க மணியழுத்தப்பட்ட ஊசலின் கோவையைக் குலைத்து, இதழ் நிறைந்த தேன் உடைத்தாகிய மலரால் சிறந்த புன்னையையும் தள்ள நின்றது நம்முடைய சூழ்ந்த சோலையில்
என, அதற்குப் பொருள் எது என்று தாய் துயில் எழுந்தாளாகில், விளையாடினேன் காண் என்பாள். இதுகேட்டுத் துயின்றாளாகில் குறியிடத்துச் செல்வாள். (இவை ஆயபயன்)
15. துயிலெடுத்துச் சேறல்
துயிலெடுத்துச் சேறல் என்பது, தாய் துயில் அறிந்த தோழி குவளைப் பூக்கள் மலரா நின்றன, அவை நின் கண்ணை ஒக்குமாயின் காண்பாயாக எனத் துயிலெடுத்துச் செல்லா நிற்றல்.
162. விண்ணுக்கு மேல்வியன் பாதலக்
கீழ்விரி நீர்உடுத்த
மண்ணுக்கு
 நாப்பண் நயந்துதென்
தில்லைநின் றோன்மிடற்றின்
வண்ணக் குவளை மலர்க்கின்
றனசின வாண்மிளிர்நின்
கண்ணோக்கு மேற்கண்டு காண்வண்டு
வாழும் கருங்குழலே.
கொளு
தாய்துயில் அறிந்(து)ஆய் தருபவள்
மெல்லியற்குச் சொல்லியது.
இதன் பொருள் : தாயிடை உறக்கத்தை அறிந்து புறப்படும் உபாயம் விசாரிக்கிறவள் மெல்லிய இயல்பினை உடைய நாயகிக்குச் சொன்னது.
தெளிவுரை : ஆகாயத்துக்கு மேலாயுள்ளவன்; அகன்ற பாதலத்தும் கீழாயுள்ளவன். விரிந்த நீரால் சூழப்பட்ட பூமிக்கு நடுவாயுள்ளவன். விரும்பித் தெற்குத் திசைக்குத் திருப்பதியாய் உள்ள பெரும்பற்றப்புலியூரில் நின்றவன். அவனுடைய திருமிடற்றை ஒத்த நிறமுடைத்தாகிய நீலம் மலராய் நின்றன. சினத்த வாள்போல் உலாவுகின்ற உன் கண்ணை ஒக்குமாகில் பார்த்துக் காண்.
16. இடத்துய்த்து நீங்கல்
இடத்துய்த்து நீங்கல் என்பது துயிலெடுத்துக் கொண்டு சென்று அக்குறியிடத்து நிறுத்தி, இவை நின் கண்கள் வென்ற குவளை மலர்; இவற்றைக் காண்பாயாக. யான் நின் குழற்குச் சந்தனத் தழை கொய்யா நின்றேன் எனத் தான் சிறிது அகலா நிற்றல்.
163. நந்தீ வரமென்னும் நாரணன்
நாண்மலர்க் கண்ணிற்(கு) எஃகம்
தந்தீ வரன்புலி யூரன்ன
யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரமிவை காணின்
இருள்சேர் குழற்கெழில்சேர்
சந்தீ வரமுறி யும்வெறி
வீயும் தருகுவனே.
கொளு
மைத்தடங் கண்ணியை உய்த்திடத்து ஒருபால்
நீங்கல் உற்ற பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : மை எழுதப்பட்ட பெரிய கண்களை உடையாளைக் குறியிடத்து உய்த்து, ஒரு பாகத்தில் நீங்குவதாக நினைந்து தோழி சொன்னது.
தெளிவுரை : நந்தீசுவரனே ! வரம் தரவேண்டும் என்னும் புரு÷ஷாத்தமனுடைய செவ்வித் தாமரைப் பூவை ஒத்த கண்ணுக்குச் சக்ராயுதத்தைப் படைத்துக் கொடுத்த மேலானவன் அவனுடைய பெரும்பற்றப்புலியூரை ஒப்பாய் ! உன்னுடைய பெரிய கண்களையொத்த நீலப்பூக்கள் இவைகாண், உன்னுடைய இருள் சேர்ந்த கூந்தலுக்குச் சந்தனம் புறப்பிடவிட வருகிற (எழில் சேர்ந்த நல்ல முறிகளையும்) நறுநாற்றமுடைய பூவையும் கொண்டு வந்து நான் தரக்கடவேன். முறி - தளிர்.
அவ்வளவு நீ இந்நீலப் பூக்களைப் பறிப்பாயாக என்று குறியிடத்து நிறுத்தி நீங்கினது.
17. தளர்வகன்று உரைத்தல்
தளர்வகன்று உரைத்தல் என்பது, தோழி குறியிடை நிறுத்தி நீங்கா நிற்பத் தலைமகன் எதிர்ப்பட்டு, நும்முடைய கமலக்கோயில் கதிரவன் வருவதன் முன் நீரே திறந்து கொண்டோ போந்தது? இப்பொழிலிடை வந்து நயந்து தென்னோ எனத் தலைமகளைப் பெரும்பான்மை கூறித் தன் தளர்வு நீங்கா நிற்றல்.
164. காமரை வென்றகண் ணோன்தில்லைப்
பல்கதி ரோன்அடைத்த
தாமரை இல்லின் இதழ்க்கத
வம்திறந் தோதமியே
பாமரை மேகலை பற்றிச்
சிலம்பொதுக் கிப்பையவே
நாமரை யாமத்(து)என் னோவந்து
வைகி நயந்ததுவே.
கொளு
வடுவகிர் அனைய வரிநெடுங் கண்ணியைத்
நடுவரி அன்பொடு தளர்வகன்(று) உரைத்தது.
இதன் பொருள் : மாயின் வகிரை ஒத்து வரியை உடைத்தாகிய நெடிய கண்ணிடைத் தடுத்தற்கரிய அன்புடனே தளர்ச்சி நீங்கிச் சொன்னது.
தெளிவுரை : இறைவனையும் தன் வசமாக்க வந்த காமனாரை வெற்றி செய்த திருநயனத்தை உடையவன் பெரும்பற்றப்புலியூரிடத்துப் பல கிரணங்களை உடைய ஆதித்தனால் அடைக்கப்பட்ட தாமரைப் பூவாகிய உம்முடைய கோயில் இதழ் ஆகிய கதவை நாமே (நீரே) திறந்து கொண்டோ நடந்தது. ஒரு துணையும் இன்றியே பரந்த வரையின் மேகலையைச் சாத்தப்படாமற் பிடித்துச் சிலம்பை ஒக்கக் கடுக்கி, மெத்தனாகி அர்த்தராத்திரியில் வந்து அவதரித்த விருப்பினது எதுதான்?
என்ன, சீதேவியினால் எல்லாரும் தங்குறை முடிப்ப, நம் பக்கலிலே வருத்தலையல்லது நாம் நடந்த காரணம் என் என்றபடி.
18. மருங்கணைதல்
மருங்கணைதல் என்பது, பெரும்பான்மை கூறக்கேட்ட தலைமகள் பெருநாணினள் ஆதலின் தன்முன் நிற்கலாற்றாது நாணித் தலை இறைஞ்சி வருந்தா நிற்பச் சென்று சார்தல் ஆகாமையின் தனது ஆதரவு மிகவால் அவ்வருத்தம் தணிப்பான் போன்று முலையொடு முனிந்து, அவள் இறுமருங்குல் தாங்கிச் சென்று அணையா நிற்றல்.
165. அகிலின் புகைவிம்மி ஆய்மலர்
வேய்ந்துஅஞ் சனம்எழுதத்
தகிலும் தனிவடம் பூட்டத்
தகாள்சங் கரன்புலியூர்
இகலும் அவரில் தளரும்இத்
தேம்பல் இடைஞெமியப்
புகலும் மிகஇங்ங னேயிறு
மாக்கும் புணர்முலையே.
கொளு
அன்பு மிகுதியின் அளவளாய் அவளைப்
பொன்புனை வேலோன் புகழ்ந்துரைத்தது.
இதன் பொருள் : தன்னுடைய அன்பினது மிகுதியினால் மிகவும் கலந்தவளை, அழகிதாகிய பொன் புனையப் பட்ட வேலினை உடையவன் மகிழ்ந்து சொன்னது.
தெளிவுரை : அகிற் புகையை நிறைய ஊட்டி, அழகிய மலர்களைச் சூடிக் கண்ணுக்கு அஞ்சனம் எழுத இம்மாத்திரம் பொறுத்தாளாயினும் எகரவல்லி வடம் பூட்டவும் இடைபொறுக்கும் தகுதி உடையாள் அல்லள். சிவனுடைய பெரும்பற்றப்புலியூருடனே மாறுபடுவார் மெலிவது போலத் தளராநின்ற தேம்பு தலையுடைய இடை ஒடியப் புகினும் ஒடியாதிருக்கினும் தம்மிற் புணர்ந்த சோடு சேர்ந்த தனங்கள் மிகவும் இங்ஙனே இறுமாப்பு உடைத்தானவை என்று, இடையைத் தாங்குவாரைப் போல் சென்று சேர்ந்தது.
19. முகங்கண்டு மகிழ்தல்
முகங்கண்டு மகிழ்தல் என்பது, மருங்கணை இறுதிக் கண் தலைமகளது முகமலர்ச்சி கண்டு இவளும் யானும் மலரும் மதியும் எனத் தலைமகன் தன்னயப்பு உணர்த்தி மகிழா நிற்றல்.
166. அழுந்தேன் நரகத்து யானென்(று)
இருப்பவந்(து) ஆண்டுகொண்ட
செழுந்தேன் திகழ்பொழில் தில்லைப்
புறவில் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுதம்
இவள்யான் குரூஉச்சுடர்கொண்(டு)
எழுந்(து)ஆங் கதுமலர்த் தும்உயர்
வானத்(து) இளமதியே.
கொளு
முகையவிழ் குழலி முகமதி கண்டு
திகழ்வேல் அண்ணல் மகிழ்வுற்றது.
இதன் பொருள் : அரும்பு அவிழ்கின்ற கூந்தலை உடையவள் முகமாகிய மதியினைக் கண்டு பிரகாசத் தினை உடைய வேலையுள்ள நாயகன் விரும்பிச் சொன்னது.
தெளிவுரை : யான் இனி ஒருநாளும் நரகிற் புக்கழுந்தேன் என்று செம்மாந்திருக்கும்படி என்னைத் தானே வந்தடிமை கொண்ட அழகிய தேனை யொத்த இனியவன், அவனுடைய சிறந்த பொழில் சூழப்பட்ட பெரும்பற்றப்புலியூரில் புறச்சோலையை செய்யிடத்தே நிற்கிற அழகிய தேன் மலருகின்ற வாயினை உடைய ஆம்பற் பூவை ஒப்பாள் இவள். நான் நிறமுடைத்தாகிய கிரணங்களைக் கொண்டு உதித்து ஆம்பல் பூத்தன்னையும் மலரப் பண்ணும் உயர்ந்த ஆகாயத்தின் இளைய மாமதியொப்பேன்.
என்று பொருளாய், அத் தேன் மலருகின்ற ஆம்பல் என்றபடியால், நாயகிக்கு அதைத்தான் அறியாதபடி தோன்றும் நாண் மதியை ஒப்பென்ற படியால் நாளுக்கு நாளும் இவ்வன்பு வளருமென்றும், அவ் ஆம்பல் பூத்தன்னையே மலர்த்தும் மதி யென்ற படியால் இவளை வரைந்து கொண்டு மகிழ்விக்க வேண்டுமென்னும் நினைவொழிய வேறு நினைவு உடையேன் அல்லன் என்றுபடும்.
20. பள்ளியிடத்து உய்த்தல்
பள்ளியிடத்து உய்த்தல் என்பது மலர்மதி மேல் வைத்துக் கூறி மகிழ்வுற்றுப் பிரியலுறா நின்றவன், இப்பொழிலிடை இனித் தனியே நின்று நீலப்பூக்களைக் கொய்யாமல் நின்னரிய தோழியோடு ஆயத்திடைச் சென்று துயில் பயில்வாய் எனத் தலைமகளைப் பள்ளியிடத்துச் செலுத்தா நிற்றல்.
167. சுரும்புறு நீலம் கொய்யல்
தமிநின்று துயில்பயின்மோ
அரும்பெறல் தோழியொ(டு) ஆயத்து
நாப்பண் அமரர்ஒன்னார்
இரும்புறு மாமதிப் பொன்இஞ்சி
வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்(து)எம்
பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே.
கொளு
பிரிவது கருதிய பெருவரை நாடன்
ஒள்ளிழைப் பாங்கியொடு பள்ளிகொள் கென்றது.
இதன் பொருள் : பிரிவதாக நினைத்த பெரிய மலைமேல் உண்டாகிய நாட்டினை உடையவன் அழகிய ஆபரணங்களை யுடைய பாங்கியுடனே நித்திரை கொள்கென்று சொன்னது.
தெளிவுரை : தேவர்களுக்குப் பகைவராகிய அசுரருடைய இரும்பால் ஆகிய மிகப்பெரிய மதிலும், பொன் மதிலும், வெள்ளி மதிலும் அன்று ஓர் துரும்பின் தன்மையாய் உறும்படி அழித்த வெற்றியினையுடைய எம்முடைய சுவாமியுடைய பெரும்பற்றப்புலியூரைச் சூழ்ந்த பொழிலிடத்தே, வண்டுகள் பொருந்தின நீலப்பூக்களைத் தனியே நின்று கொய்யாது ஒழிவாயாக. பெறுதற்கரிய தோழியுடனே ஆயக் கூட்டத்தில் நடுவே உறங்குவாயாக.
21. வரவு விலக்கல்
வரவு விலக்கல் என்பது, தோழி தலை மகளைப் பள்ளி யிடத்துச் சேர்த்திச் சென்று, இக்கல்லதர் இவள் காரணமாக நினக்கு எளிதாயிற்று. ஆயினும் இனி இவ்வாறு ஒழுகற் பாலையல்லை என வரைவு பயப்பக்க கூறித் தலைமகனை வரவு விலக்கா நிற்றல்.
168. நற்பகல் சோமன் எரிதரு
நாட்டத்தன் தில்லையன்ன
விற்பகைத்(து) ஓங்கும் புருவத்(து)
இவளின் மெய்யேஎளிதே
வெற்பகச் சோலையின் வேய்வளர்
தீச்சென்று விண்ணினின்ற
கற்பகச் சோலை கதுவுங்கல்
நாடஇக் கல்லதரே.
கொளு
தெய்வம்அன் னாளைத் திருந்(து)அமளி சேர்த்தி
மைவரை நாடனை வரவுவிலக் கியது.
இதன் பொருள் : தெய்வம் போன்றவளைப் படுக்கையிற் சேர்த்துவிட்டு, மேகம் தங்கும் மலை நாடனை இனி இங்கு வரவேண்டாமென்று தடுத்துச் சொன்னது.
தெளிவுரை : நல்ல ஆதித்தனும் சந்திரனும் அக்கினியும் இவை மூன்றின் குணங்களையும் தருகின்ற நயனங்களை உடையவனின் பெரும்பற்றப்புலியூரை ஒத்த வில்லுடனே மாறு கொண்ட மேலாகிற புருவங்களை உடையவள் காரணமாக மலையிடத்து மேலுண்டாகிய மூங்கிற் சோலையில் பட்ட நெருப்புச் சென்று தெய்வலோகத்தில் நின்ற கற்பகக்காவைப் பற்றுகிற மலை நாடனே ! இக்கல் உடைத்தாகிய வழி உண்மையாக எளிதே.
எனவே, இப்படி அரிய வழி வாராதொழிக என்றவாறு, என்று பொருளாய் மூங்கிலிற் பிறந்த நெருப்பு மூங்கில் நின்ற வனத்தையும் சுட்டுப் பரந்த தெய்வலோகத்தில் நின்ற கற்பக மரத்தையும் சென்று பற்றுகின்ற நாடன் என்கையால் இவளிடத்து உண்டாகிய களவொழுக்கம் இவள் பிறந்த குடியும் அழிந்து உன்பெருமை தனக்கும் அழிவாகப் புகா நின்றமையின் இது உள்ளுறை உவமம்.
22. ஆற்றாது உரைத்தல்
ஆற்றாது உரைத்தல் என்பது வரைவு கடாவி வரவு விலக்கின தோழிக்கு வரை உடம்படாது, பின்னும் களவு ஒழுக்கம் வேண்டி, யான் முன் செய்த தவப்பயனால் எனக்கு எய்தலாம் வண்ணம் திருமகள் இவ்வாறு கொடிச்சியாய் இருந்தாளெனக் கருதியே எனது இன்னுயிர் நிற்பது; இத்தன்மையாளை யான்வரையும் துணை எளியனாக நீ கூறுகின்றதென் எனத் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றக் கூறா நிற்றல்.
169. பைவாய் அரவுஅரை அம்பலத்(து)
எம்பரன் பைங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கண் பெரும்பணைத்
தோள்சிற் றிடைக்கொடியை
மொய்வார் கமலத்து முற்றிழை
இன்றென்முன் னைத்தவத்தால்
இவ்வா(று) இருக்கும்என் றேநிற்ப(து)
என்றும்என் இன்னுயிரே.
கொளு
வரைவு கடாய வாணுதல் தோழிக்(கு)
அருவரை நாடன் ஆற்றா(து) உரைத்தது.
இதன் பொருள் : வரைவின் முடுக்கிய ஒளிசிறந்த நெற்றியினையுடைய தோழிக்கு மலைநாட்டுத் தலைமகன் ஆற்றாமல் சொன்னது.
தெளிவுரை : படத்தையும் வாயையும் உடைய அரவத்தைத் திருஅரைஞாணாக உடைய திருஅம்பலத்தில் எம்முடைய மேலானவன் சோலையால் பச்சென்ற அவனுடைய கயிலையில் சிவந்த வாயினையும் கரிய கண்ணினையும் பெரிய வேயொத்த தோள்களையும் சிறிய இடையினையும் உடைய வல்லிசாதத்தை ஒப்பாளைப் பெருத்து நீண்ட தாமரைப் பூவில் இருக்கிற தொழில் முற்றுப் பெற்ற ஆபரணங்களையுடைய சீதேவியை நான் முன்பு செய்த புண்ணியத்தால் இப்படியே குறவர் மகளாய் இரா நின்றாள் என்றல்லவோ என்னுயிர் என்றும் நிலைபெறுகிறது.
ஆதலால், நான் வரைந்து கொள்ளாது இருப்பனோ என்றது, இத்தன்மையாளை வரைந்து கொள்ள எளிதாகக் கூறுகின்றது ஏன்? என்றுமாம்.
23. இரக்கங்கூறி வரைவு கடாதல்
இரக்கம் கூறி வரைவு கடாதல் என்பது களவு விரும்பி வரைவுடம்படாத தலைமகனுக்கு, நீ செல்லு நெறிக் கண் நினக்கு இடையூறு உண்டாம் என்னும் அச்சத்தால் அவள் அழுது இரங்காநின்றாள் என்று, நீ சென்றமையறிய நின்குறி காட்டுவாய் எனத் தலைமகளது இரக்கங்கூறி வரைவு கடாவா நிற்றல்.
170. பைவாய் அரவும் மறியும்
மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன்
தில்லையின் முன்னினக்கால்
செவ்வாய் கருவுயிர்ச் சேர்த்திச்
சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடும்மன்ன
நீண்முத்த மாலைகளே.
கொளு
அதிர்க ழலவன் அகன்றவழி
எதிர்வ(து) அறியா(து) இரங்கி உரைத்தது.
இதன் பொருள் : ஆரவாரிக்கின்ற வீரக் கழலினை உடையவன் பிரிந்த விடத்து, அவனுக்குறும் துன்பத்தை அறியாதே வருந்திச் சொன்னது.
தெளிவுரை : படத்தையும் பெரிய வாயையும் உடைய பாம்பும், மான் மறியும், மழுவும் (வாளும்) வாழ்கிற மலரையொத்த கைகளையுடைய, செறிந்து நீண்ட சடா மகுடத்தையும் உடைய எல்லாப் பொருள்களுக்கும் முதல்வன் ஆனவனுடைய பெரும்பற்றப்புலியூரில் நீ போனவிடத்து, உன்னுடைய சிவந்த வாயில் கரிய கொம்பை வைப்பாயாக வேண்டும் (என்ன, சிறிது ஊதுவாயாக வேண்டும்) என்றது கருத்து. இந்த இளையவளுடைய பெரிய மலரையொத்த கண்களாகிய நீண்ட நீலப்பூக்கள், மன்னனே ! நீண்ட முத்து மாலைகளாகிய கண்ணின் நீர்த்தாரை விடா நிற்கும்.
24. நிலவு வெளிப்பட வருந்தல்
நிலவு வெளிப்பட வருந்தல் என்பது, இரக்கங் கூறி வரைவு கடாய தோழி, பிற்றை ஞான்று அவன் இரவுக் குறியிடை வந்து நிற்ப, நிலவு வெளிப்பட்டால் சென்று எதிர்ப்பட மாட்டாமல் தாங்கள் வருந்தா நின்றமை சிறைப்புறமாக மதியொடு புலந்து கூறா நிற்றல்.
171. நாகம் தொழஎழில் அம்பலம்
நண்ணி நடம்நவில்வோன்
நாகம் இதுமதி யேமதி
யேநவில் வேற்கைஎங்கள்
நாகம் வரஎதிர் நாங்கொள்ளும்
நள்ளிருள் வாய்நறவார்
நாகம் மலிபொலில் வாயெழில்
வாய்த்தநின் நாயகமே.
கொளு
தனிவே லவற்குத் தந்தளர்(வு) அறியப்
பனிமதி விளக்கம் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : இணையில்லாத வேலினை உடையவர்க்குத் தங்களுடைய தளர்ச்சியை அறியக் குளிர்ந்த மதியினுடைய விளக்கத்தைத் தோழி சொன்னது.
தெளிவுரை : நாகமாகிய பதஞ்சலி மாமுனி தொழ அழகிய சிற்றம்பலத்து பொருந்தித் திருக்கூத்தாடியருளுகிறவனிடம் காண் இது சந்திரனே ! இது ஒரு புத்தி. தான் சிலித்த (?) வேலைக் கையில் உடைய யானையைப் போன்ற எங்கள் நாயகர் வர நாங்கள் புறப்பட்டு எதிர் கொள்ளுகிற செறிந்த இருளிடத்தே தேனார்ந்த சுரபுன்னைகள் மிக்க பொழிலிடத்து அழகு வாய்ந்த உன்னுடைய முதன்மை (சந்திரனே ! சந்திரனே ! இது ஒரு புத்தி காண்) என்று பொருளாய் உன்னை வருத்துகிற பாம்பாலும் தொழப்படுவான் ஒருவன் மலையானால், இந்த ஒளியெல்லாம் பொறாது சற்றுக் கண்கூசி நடக்க வேண்டும் என்றது.
25. அல்லகுறி அறிவித்தல்
அல்லகுறி அறிவித்தல் என்பது, குறியல்லாத குறி எதிர்ப்பட்டு மீண்டமை, பிற்றைஞான்று தலை மகன் சிறைப்புறம் வந்து நிற்பத் தோழி தலை மகளுக்குக் கூறுவாள் போன்று, அன்னத்தின்மேல் வைத்து அறிவியா நிற்றல்.
172. மின் அங்(கு) அலரும் சடைமுடி
யோன்வியன் தில்லையன்னாய்
என் அங்(கு) அலமரல் எய்திய
தோஎழில் முத்தம்தொத்திப்
பொன்அங்(கு) அலர்புன்னைச் சேக்கையின்
வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரும் அளவும்
துயிலா(து) அழுங்கினவே.
கொளு
வல்லி யன்னவள் அல்ல குறிப்பொடு
அறைப்புனல் துறைவற்குச் சிறைப்புறத்(து) உரைத்தது.
இதன் பொருள் : வல்லிசாதம் போன்றவள் அல்ல குறிப்பிட்டபடியை ஆரவாரிக்கின்ற நீரையுடைத்தாகிய துறையை உற்றவற்குச் சிறைப் புறமாகச் சொன்னது.
தெளிவுரை : பின் அவ்விடத்தே பெருமை பெற்ற சடை முடியையுடையவனுடைய பெரும்பற்றப்புலியூரை ஒப்பாய் ! அவ்விடத்து என்ன அலமாப்பை உற்றது காண்; அழகிய முத்துப் போல வரும்படி அவ்விடத்துப் பொன்போல் வளர்கின்ற புன்னையில் தன் சேக்கையிடத்துத் தனிமையுற்றும், அன்னங்கள் எல்லாம் விடியும் அளவும் உறங்காதே துன்புற்றன. (அவை என்ன அலமாப்பையுற்றன காண்.)
பிற்றை ஞான்று பகற்குறி வந்து நிற்கக் கூறினாள் எனவும் அமையும்.
26. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்
கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல் என்பது, தலைமகள் இரவுறு துயரம், தலைமகன் சிறைப்புறமாக இவள் வாட நீ இரையா நின்றாய். இது நினக்கு நன்றோ எனத்தோழி கடலோடு புலந்து கூறா நிற்றல்.
173. சோத்துன் அடியம்என் றோரைக்
குழுமித்தொல் வானவர்சூழ்ந்(து)
ஏத்தும் படிநிற்ப வன்தில்லை
யன்னாள் இவள்துவள
ஆர்த்துண் அமிழ்தும் திருவும்
மதியும் இழந்தவம்நீ
பேர்த்தும் இரைப்பொழி யாய்பழி
நோக்காய் பெருங்கடலே.
கொளு
எறிகடல் மேல்வைத்(து) இரவரு துயரம்
அறைக ழலவற்(கு) அறிய உரைத்தது.
இதன் பொருள் : கரையுடனே மோதுகிற திரையைச் சொல்லும் வார்த்தையின்மேல் வைத்து, இரவிடத்து உண்டாகிய துன்பத்தை ஆரவாரிக்கின்ற வீரக் கழலினை உடையவற்கு அறியும்படி சொன்னது.
தெளிவுரை : சோத்தம் என்பது இழிந்தோர் சொல்லும் அஞ்சலி வாய்பாடு. அது சோத்தென்று கடை குறைந்து நின்றது.
அதனைச் சொல்லி, உன் அடியோம் என்னின் பழைய தேவர்கள் எல்லாம் திரண்டு அவர்களுக்குப் பரிவாரமாகச் சூழ்ந்து தன்னைப் புகழும்படி திருஅம்பலத்தில் நிற்கின்றவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரை ஒப்பாளாகிய இவள் வாட முன்பும் பயன் இன்றியே ஆரவாரித்து, உன்னிடத்து உண்டான அமுதத்தினையும் மதியையும் சீதேவியையும் பிறர் பறித்துக்கொள்ள நீ அழித்து ஒரு காரணமும் இன்றியே பின்னையும் உன்னுடைய ஆரவாரம் அடங்குவதில்லை. பிறரை வருத்துவது பழியென விசாரிக்கிறாய் இல்லை. பெரிய கடலே ! உன் பெருமை யெல்லாம் கண்டேம் அன்றே.
என்றது ஒருவருடைய உண்மையையும் செல்வத்தையும் புத்தியையும் ஒருவர் பறித்துக் கொண்டால் பின்னை அடங்குவார்கள். அது உனக்கில்லை யானது இன்றே.
காமம் மிக்க கழிபடர் கிளவி
காமம் மிக்க கழிபடர் கிளவி என்பது, தலை மகனைக் காணலுற்று வருந்தா நின்ற தலைமகள், தனது வேட்கை மிகவால் கேளாதனவற்றைக் கேட்பனவாக விளித்து, நீங்கள் என்னை ஏதுற்று அழிகின்றாய் என்று ஒருகால் வினவுகின்றிலீர்; இதுவோ நும் காதன்மை என அவற்றோடு புலந்து கூறா நிற்றல்.
174. மாதுற்ற மேனி வரையுற்ற
வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி
காள்எழிற் புள்ளினங்காள்
ஏதுற்(று) அழிதிஎன் னீர்மன்னும்
ஈர்ந்துறை வர்க்(கு)இவளோ
தீதுற்ற(து) என்னுக்(கு) என் னீர்இது
வோநன்மை செப்புமினே.
கொளு
தாமம் மிக்க தாழ்குழல் ஏழை
காமம் மிக்க கழிபடர் கிளவி.
இதன் பொருள் : மாலை மிக்க நீண்ட கூந்தலையுடைய நாயகி அன்பு மிக்கு மிகவும் சொன்னது.
தெளிவுரை : சங்கரி பொருந்தின திருமேனியை உடையவன், மலையாகிய மிக்க வில்லையுடையவன். (மென்மையால் ஒரு மிசை ஈந்திருப்பவன், வன்மையால் வரையாகிய வில்லுக்கு இசைந்திருப்பவன்) அவனுடைய பெரும்பற்றப்புலியூராகிய நகரியைச் சூழ்ந்த செவ்விய அரும்பு பொருந்திப் பூத்த பொழில் காள் ! அப்பொழிலாற் சூழப்பட்ட கழிகாள் ! கழியிட மாக வாழ்கிற புட்சாதிகாள் ! என்ன துன்பமுற்று அழுகிறாய் என்று என்னைக் கேளீர். நிலை பெற்ற குளிர்ந்த துறையை உடையவர்க்கு இவள் மிகவும் தீங்குற்றது எது காரணமென்று அவர்க்குச் சொல்வீர். பெரும்பற்றப்புலியூரைச் சேர்ந்ததும் நீங்கள் பெற்ற நன்மையைச் சொல்லுங்கள். மன், உம், ஓ - அசை நிலைகள்.
28. காப்புச் சிறைமிக்க கையறு கிளவி
காப்புச் சிறைமிக்க கையறு கிளவி என்பது, காமம் மிக்கு எதிர்ப்பட விரும்பா நின்ற தலைமகள், இவ்இடையீடு எல்லாம் நீந்தி ஒரு வழியான் வந்தாராயினும் இஞ்ஞாளி குரைதரா நின்றமையின் (நாய்) யாம் இவரை எதிர்ப்படுதல் அரிது எனக் காப்புச் சிறைமிக்கு வருந்தா நிற்றல்.
175. இன்னற வார்பொழில் தில்லை
நகரிறை சீர்விழவில்
பன்னிற மாலைத் தொகைபக
லாம்பல் விளக்கிருளின்
துன்னற வுய்க்கும்இல் லோரும்
துயிலில் துறைவர்மிக்க
கொன்னிற வேலொடு வந்திடின்
ஞாளி குரை தருமே.
கொளு
மெய்யுறு காவலில் கையறு கிளவி.
இதன் பொருள் : தப்பாமல் காவலால் செயலற்றுச் சொன்னது.
தெளிவுரை : செவ்வித் தேனார்ந்த பொழில் சூழப்பட்ட பெரும்பற்றப்புலியூர் இறைவனுடைய சீரிய திருநாளில் பலநிறம் உடைத்தாகிய நவரத்தின மாலையின் திரள்களாலே இரவு பகலாகா நிற்கும். பல விளக்குகளும் இருளினுடைய ஓங்கலைத் துரக்கும். இல் உள்ளாரும் உறங்குதல் உற்றிருப்பார்கள். துறையை உடையவனே ! மிக்க அச்சத்தைச் செய்கிற வேலோடேவரில் நாயானது கத்தா நிற்கும்.
இவ்இடையீடு எல்லாம் கழிந்தால் அல்லவோ அவர்க்கு வரலாவது என்று செயலற்றுச் சொன்னது. மாலைத் தொகை இராப்பகல் எல்லாம் விளக்கைத் துரக்கும் எனினும் அமையும். இல்லோரும் துயிலுற்று உறைவர் என்ன, அவர்களும் உறங்காமை தோன்றும்.
சிவபெருமானது தலம் விழவு அறாது நிற்றல் கூறப்பட்டது.
29. ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவி
ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவி என்பது, சிறைப் புறமாகத் தலைமகள் ஆற்றாமை கூறக்கேட்ட தலைமகன், குறியிடைச் சென்று நிற்பத் தோழி எதிர்ப்பட்டு, நீ கான்யாறு பலவும் நீந்திக் கைவேல் துணையாக அஞ்சாது வந்தால் யாங்கள் இச்சோலையிடத்து உண்டாகிய தெய்வத்துக்கு அஞ்சுவேம். அதனால் இவ் இருளிடை வரற் பாலையல்லை எனத் தங்கள் அச்சங்கூறி வரவு விலக்கா நிற்றல்.
176. தாருறு கொன்றையன் தில்லைச்
சடைமுடி யோன்கயிலை
நீருறு கான்யா(று) அளவில்
நீந்திவந் தால்நினது
போருறு வேல்வயப் பொங்குரும்
அஞ்சுகம் அஞ்சிவரும்
சூருறு சோலையின் வாய்வரற்
பாற்றன்று தூங்கிருளே.
கொளு
நாறு வார்குழல் நவ்வி நோக்கி
ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவி.
இதன் பொருள் : நறுநாற்றம் கமழ்கின்ற நீண்ட கூந்தலை உடைய இளமான் நோக்கத்தையுடைய பாங்கியானவள் வழியில் வரும் துன்பத்தை விசாரித்துப் பயப்பட்டுச் சொன்னது.
தெளிவுரை : மாலையாகிய மிக்க திருககொன்றை மாலையினை உடையான், பெரும்பற்றப்புலியூரில் சடைமுடியை உடையவன். அவனது ஸ்ரீ கைலாசத்தில் நீர்மிக்க காட்டாறுகள் அளவிலாதவற்றை நீந்தி வந்தால் உன்னுடைய பேரில் மிக்க வேலுக்கு வீரத்தை உடைத்தாய்க் கோபிக்கிற உருமேறு பயப்படுவனவாக; மேகங்கள் பரக்கிற தெய்வங்கள் மிக்க சோலையிடத்துச் செறிந்த இருள் இடத்தே வருதல் (முறையன்று) சோலையிடத்துத் தெய்வங்களை அஞ்சுதும்.
30. தன்னுள் கையாறு எய்திடு கிளவி
தன்னுட் கையாறு எய்திடு கிளவி என்பது, தலைமகனைக் காணலுற்று வருந்தா நின்ற தலைமகள், இக்கண்டல் சான்றாகக் கொண்டு இப்புன்னையிடத்துக் கலந்த கள்வரை இவ்விடத்து வரக் கண்டிலையோ? துணையில்லாதேற்கு ஒரு சொல்லருளாய் என்று, தன்னுள் கையாற்றை மதியோடு கூறி வினாவா நிற்றல்.
177. விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண்
தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப்
புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குல்எல்
லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி
யேற்கொரு வாசகமே.
கொளு
மின்னுப் புரையும் அந்நுண் மருங்குல்
தன்னுட் கையா(று) எய்திடு கிளவி.
இதன் பொருள் : மின்னினை யொத்த அழகிய நுண்ணிய இடையினை உடையாள் தன்னிடத்து உண்டாகிய செயலற்ற ஒழுக்கத்தைக் கேட்கைக்கு அல்லாது ஒன்றின் மேலிட்டுச் சொன்னது.
தெளிவுரை : தெய்வலோகத்திடத்து எல்லார்க்கும் தலைவராய் உள்ளவர் அவருடைய தெற்கின் கண் உண்டாகிய பெரும்பற்றப்புலியூரில் மெத்தென்ற அழகிய கழி சூழப்பட்ட தாழையே சான்றாக இளைய புன்னை நிழலிலே கலந்த கள்வர் வரக் கண்டிலையே தான். (ஏகாரம் எதிர்மறையாய்க் கண்டு வைத்துச் சொல்லுகின்றிலை என்பது கருத்து) இராப்பொழுதெல்லாம் ஆகாயத்து இடத்தே நின்று விளங்குகின்ற சந்திரமண்டலமே ! உணர்விழந்து தனித்த எனக்குக் கண்டு வைத்தும் கண்டேன் என்று ஒரு வார்த்தையும் சொல்கின்றிலை.
நிலைகண்டு உரைத்தல்
நிலை கண்டு உரைத்தல் என்பது தலைமகள் தன்னுள் கையாற்றை மதியோடு கூறி வருந்தா நின்றமை சிறைப்புறமாகக் கேட்ட தலைமகன் ஆற்றாமையான் இல்வரைப்பின்கண் புகுந்து நிற்பத் தோழி எதிர்ப்பட்டு, நீ இவ்வாறு இல்வரைப்பின்கண் புகுந்து நின்றால் கண்டவர் நின்னைப் பெரும்பான்மை நினையாது மற்றொன்று நினைப்பாராயின் அவள் உயிர் வாழ வல்லளோ? இனி இவ்வாறு ஒழுகற் பாலையல்லை என வரைவு தோன்றக் கூறா நிற்றல்.
178. பற்றொன்றி லார்பற்றும் தில்லைப்
பரன்பரம் குன்றில்நின்ற
புற்றொன்(று) அரவன் புதல்வ
னெனநீ புகுந்துநின்றால்
மற்றொன்று மாமலர் இட்டுன்னை
வாழ்த்திவந் தித்தலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல
ளோமங்கை வாழ்வகையே.
கொளு
நின்னின் அழிந்தனள் மின்னிடை மாதென
வரைவு தோன்ற வுரை செய்தது.
இதன் பொருள் : மின்னை ஒத்த இடையினையுடைய நாயகி உன் காரணமாக அழிந்தாளென்று வரைந்து கொள்ளும் இடந்தோன்றச் சொன்னது.
தெளிவுரை : ஒரு பற்றும் இல்லாதார் பற்றுகின்ற தில்லையின் மேலானவன் ஊரில் (புற்றில்) பொருந்துகின்ற பாம்பாபரணன், திருப்பரங்குன்றில் நின்றவன். அவனது பிள்ளையாகிய முருகவேள் என்னும்படி நீ இவ்வரை வைப்பில் புகுந்து நின்றால், உன்னைக் கண்டார் உண்டாகில் வள்முடைய துய்ய மலர்களையிட்டு, உன்பாதத்தில் முருகவேள் என்னும்படி கருதிப் புகழ்ந்து வணங்குவதல்லது, நீ இவள் காரணமாக இரவுக் குறியில் வந்த ஒருவன் எனக் கருதி ஏதம்  செய்வார்களாகில் நாயகியுடைய வாழுந் தன்மையை அவள் செய்ய வல்லளோ?
நீ இரவுக் குறி வந்து புறம் புகுந்து நின்றால், இம்மலை உறை தெய்வம் முருகவேளாகக் கருதும் - தோழி இவனை உள்ளவாறு அறிவார் இல்லையென. (இறந்து) படாது இருக்கின்றாள். அல்லது அவனை உள்ளவாறு அறிவார்கள் என்றும் இவள் கருதில் மாநிலத்து இறந்து படாளோ என்பது கருத்து.
32. இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல்
இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல் என்பது, தலைமகனை எதிர்ப்பட மாட்டாது வருந்தா நின்ற தலைமகள், இற்றையிரவெல்லாம் என்னைப் போல நீயும் துன்பமுற்றுக் கலங்கித் தெளிகின்றிலை. இவ்விடத்து நின்னையும் அகன்று சென்றார் உளரோ எனத் தானுறு துயரம் கடலொடு சேர்த்திக் கூறா நிற்றல்.
179. பூங்கணை வேளைப் பொடியாய்
விழவிழித் தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு
விழுந்தெழுந்(து) ஓலமிட்டுத்
தீங்கணைந் தோர்அல்லும் தேறாய்
கலங்கிச் செறிகடலே
ஆங்கணைந் தார்நின்னை யும்உள
ரோசென்(று) அகன்றவரே.
கொளு
எறிவேற் கண்ணி இரவரு துயரம்
செறிக டலிடைச் சேர்த்தி யுரைத்தது.
இதன் பொருள் : குத்திப் பறித்த வேலை ஒத்த கண்களை உடையவள் இரவிடத்தே உண்டாகிய துன்பத்தைச் செறிந்த கடலிடத்திலும் உண்டாக்கிச் சொன்னது.
தெளிவுரை : பூவை அம்பாக உடைய காமவேள் நீறாய் விழும்படி பார்த்தவன். அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் உயர்ந்த கரையைப் பொருத்தித் திரை புரட்சி உண்டாக்கி விழுந்து எழுந்து, மிகவும் ஆரவாரித்துப் பொல்லாச் சுவையை அளைந்து கலங்குதலுற்று, இராமுழுதும் தெளியார் அவர்களும், அக்குணங்கள் உன்னிடத்து உண்டாயிருந்தன.
எல்லை கடவாத கடல் என்றமையால் நீ எங்ஙனே பட்டும் உன் எல்லை கடக்கின்றாய் இல்லை. அவர்களும் எங்ஙனே வருந்தியும் மனையிடமாக இருக்குமது ஒழிந்து பிரிந்தாருழைச் செல்ல மாட்டார் என்பது கருத்து.
33. அலர் அறிவுறுத்தல்
அலர் அறிவுறுத்தல் என்பது, தலைமகள் இரவுறு துயரம் கடலோடு சேர்த்தி வருந்தா நின்றமை சிறைப் புறமாகக் கேட்ட தலைமகன், குறியிடைச் சென்று நிற்பத் தோழி எதிர்ப்பட்டு, நின்னருளாய் நின்ற இது எங்களுக்கு அலராகா நின்றது. இனி நீ இவ்வாறு ஒழுகாது ஒழிய வேண்டும் என அலர் அறிவுறுத்தி வரவு விலக்கா நிற்றல்.
180. அலர்ஆ யிரம்தந்து வந்தித்து
மால்ஆ யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய்
தாற்(கு)அள வில்ஒளிகள்
அலரா யிருக்கும் படைகொடுத்
தோன்தில்லை யான்அருள்போன்(று)
அலராய் விளைகின்ற(து) அம்பல்கைம்
மிக்(கு)ஐய மெய்யருளே.
கொளு
அலைவேல் அண்ணல் மனம கிழருள்
பலரால் அறியப் பட்ட(து) என்றது.
இதன் பொருள் : பகையை வருந்துகிற வேலினை உடைய நாயகனே ! உன்னுடைய மனம் விரும்ப அருள் பலரும் அறியும்படி வெளிப்பட்டது என்றது.
தெளிவுரை : (தன் ஆயிரம் கைகளினால்) ஆயிரம் செந்தாமரைப் பூவையிட்டு வணங்கிப் புரு÷ஷாத்தமன் செவ்வித் தாமரைப் பூவையொத்த சீபாதங்களில் வழிபாடு செய்ய அவற்கு, அளவில்லாத ஒளிகளை விரியாகின்ற சக்கரத்தைக் கொடுத்தருளினான். அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் உள்ளவன், அவனுடைய திருவருளை ஒத்து சுவாமி உன்னுடைய மெய்யான அருள் முகிழ்த்தலினின்று மிக்குப் பலரும் அறிய விரியா நின்றது.
இரவுக் குறி முற்றிற்று.

பதினைந்தாம் அதிகாரம்
15. ஒருவழித் தணத்தல்
இவ்வாறு இரவுக் குறி புணர்ந்து, அலர் எழுந்த தென்று விலக்கப்பட்ட பின்னர்த் தெருண்டு வரைதல் தலை. தெருளானாயின் அவ்அலர் அடங்கச் சிலநாள் ஒருவழித் தணந்து உறைதல், உடன் கொண்டு போதல், தோழியான் வரைவு முடுக்கப்பட்டு அருங்கலம் விடுத்து வரைந்து கோடல். இம்மூன்றில் ஒன்று முறைமையென்ப. அவற்றுள் ஒருவழித் தணத்தல் வருமாறு.
நூற்பாவில் அடியிற் கண்ட 13 துறைகள் உள்ளன.
1. அகன்று அணைவு கூறல்
2. கடலொடு வரவு கேட்டல்
3. கடலொடு புலத்தல்
4. அன்னமோடு ஆய்தல்
5. தேர் வழிநோக்கிக் கடலொடு கூறல்
6. கூடல் இழைத்தல்
7. சுடரொடு புலம்பல்
8. பொழுது கண்டு மயங்கல்
9. பறவையொடு வருந்தல்
10. பங்கயத்தோடு பரிவுற்றுரைத்தல்
11. அன்னமோடு அழிதல்
12. வரவுணர்ந்து உரைத்தல்
13. வருத்த மிகுதி கூறல்
என்று இவை பதின்மூன்றும் ஒருவழித் தணத்தலாம்.
பேரின்பக் கிளவி
ஒருவழித் தணத்தல் ஒருபதின் மூன்றும்
சிவனது கருணை அருள்தெரி வித்தது.
1. அகன்று அணைவு கூறல்
அகன்றணைவு கூறல் என்பது அலர் அறிவுறுத்த தோழி, இத்தன்மையை நினைந்து நீ சிலநாள் அகன்று அணைவையாயின் அம்பலும் அலரும் அடங்கி இப்பொழுதே அவளுக்குப் பழியில்லையாமெனத் தலைமகனுக்கு இசைய அகன்று அணைவு கூறா நிற்றல்.
181. புகழும் பழியும் பெருக்கில்
பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தின்அல்
லால்இது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை
யோன்அடிப் போதுசென்னித்
திகழும் அவர்செல்லல் போலில்லை
யாம்பழி சின்மொழிக்கே.
கொளு
வழிவேறு படமன்னும் பழிவேறு படும்என்றது.
இதன் பொருள் : இரவுக் குறியாகிய நிலைபெற்ற பழியும் வேறுபடும் என்றது.
தெளிவுரை : புகழேயாகப் பழியேயாகப் பெருகச் செய்யின் பெருகா நிற்கும். பெருகா நின்றவைதாம் நடத்துவானாகில் நடவா நிற்கும். அல்லாத பொழுது அவ்வளவிலேயே ஒழியும்; இப்படியே யுக்தி பண்ணு வாயாமாகில் அகழும் மதிலும் சூழப்பட்ட பெரும் பற்றப்புலியூரில் உள்ளவனுடைய திருவடிகளாகிய பூக்களை முடியில் விளங்க உடையவர்களுடைய பிறவித் துன்பம் போனாற்போல மெத்தென்ற வார்த்தையினை உடையாளுக்குப் பழியில்லையாய் விடும்.
2. கடலொடு வரவு கேட்டல்
கடலொடு வரவு கேட்டல் என்பது, ஒரு வழித் தணத்தற்கு ஆற்றாது வருந்தா நின்ற தலைமகள், நம்மை விட்டுப் போனவர் மீண்டு வரும் பரிசு உனக்கு உரைத்தாரோ எனக் கடலொடு தலைமகன் வரவு கேளா நிற்றல்.
182. ஆரம் பரந்து திரைபொரு
நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்தின் திகழ்ந்தொளி
தோன்றும் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன
ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பல் சுற்றி எற்றிச்
சிறந்தார்க்கும் செறிகடலே.
கொளு
மணந்தவர் ஒருவழித் தணந்ததற்(கு) இரங்கி
மறிதிரை சேரும் எறிகடற்(கு) இயம்பியது.
இதன் பொருள் : கூடினவர் ஒருவழிப் பிரிந்தற்குத் துன்புற்று, ஆரவாரித்து வந்து மீளும் திரை பொருந்தின கடலுக்குச் சொன்னது.
தெளிவுரை : முத்துக்களானவை பரந்து திரை பொருகிற கடலானது முகிலினையும் மின்னையும் பரப்பிக் கொண்டு சிறப்பை உடைத்தாகிய ஆகாசம் போல் விளங்கி ஒளி தோன்றுகிற துறைவர் நம்மை விட்டுப் பிரிந்தவர், வந்து மீளும்படி சொன்னாரோ தான்? பெரும்பற்றப்புலியூரில் உள்ளவனாகிய தூயவன், அவனுடைய சிறப்புடைத்தாகிய திருஅம்பரைச் சுற்றிக் கரையோடே மோதிச் சிறப்புடைத்தாய் ஆரவாரிக்கிற செறிந்த கடலே (மீளும்படி சொன்னாரோதான்?)
3. கடலொடு புலத்தல்
கடலொடு புலத்தல் என்பது கடலொடு வரவு கேட்ட தலைமகள் அது தனக்கு வாய் திறவாமையின் என்வளை கொண்டு போனார் திறம் யான் கேட்க நீ கூறாது ஒழிகின்றதென் எனப் பின்னும் அக்கடலொடு புலந்து கூறா நிற்றல்.
183. பாணிகர் வண்டினம் பாடப்பைம்
பொன்தரு வெண்கிழிதம்
சேணிகர் காவின் வழங்கும்புன்
னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன்
றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி
யூர்சுற்றும் போர்க்கடலே.
கொளு
செறிவளைச் சின்மொழி எறிகடற்(கு) இயம்பியது.
இதன் பொருள் : திரள் வளையினையும் மெத்தென்ற வார்த்தையினையும் உடையவள் கரையுடன் மோதும் கடலுக்குச் சொன்னது.
தெளிவுரை : பாண் சாதியை ஒக்கும் வண்டுகள் இசையைப் பாடத் தாதாகிய செம்பொன்னைத் தருகிற போதாகிய கிழிச் சீலையைத் தம்முடைய அதி தூரத்தே விளங்கித் தோன்றுகிற காவிடத்தே நின்று கொடுக்கிற புன்னைத் துறையை உடைய நாயகர் சந்திரன் ஒளியினையுடைய வெள்ளிய வளைகளைக் கொண்டு பிரிந்தார். அவருடைய திறத்து ஒரு வார்த்தையும் சொல்லுகின்றிலை. பூண் ஒத்த ஒளியினையுடைய பாம்பை ஆபரணமாக உடைய. அவனுடைய பெரும்பற்றப்புலியூரைச் சூழ்ந்து கரைபொரு கடலே ! அவர் திறத்து ஒரு வார்த்தையும் சொல்லுகின்றிலை.
கிழிதம் என்று கிழிக்கும் பெயராக உரைப்பினும் அமையும். வாய் திறவாய் என்று சொல்லுவாய் என்றுமாம்.
4. அன்னமோடு ஆய்தல்
அன்னமோடு ஆய்தல் என்பது, கடலொடு புலந்து கூறிய தலைமகள், புன்னையொடு புலந்து, அகன்றவர் அகன்றே ஒழிவரோ? யான் அறிகின்றிலேன்; நீ ஆயினும் சொல்லுவாயாக என அன்னமோடு ஆய்ந்து வரவு கேளா நிற்றல்.
184. பகன்தா மரைக்கண் கெடக்கடந்
தோன்புலி யூர்ப்பழனத்(து)
அகன்தா மரையென்ன மேவண்டு
நீல மணியணிந்து
முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி
புன்னையின் னும்உரையா(து)
அகன்றார் அகன்றே ஒழிவர்கொல்
லோநம் அகன்துறையே.
கொளு
மின்னிடை மடந்தை அன்னமோ(டு) ஆய்ந்தது.
இதன் பொருள் : மின்னையொத்த இடையினையுடைய நாயகி அன்னத்துடனே ஆராய்ந்தது.
தெளிவுரை : பகன் என்னும் பெயரையுடைய ஆதித்தனது தாமரைப் பூவையொத்த கண் கெடும்படி செய்தவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரைச் சூழ்ந்த தடாகத்தில் அகன்ற தாமரைப் பூவில் வாழ்கின்ற அன்னமே ! வண்டாகிய நீலமணியும் அணிந்து முகத்தை மிக்க அழகினையும் இணையினையும் உடைத்தாயதாகிய செம்பொன்னையும் அரும்பாகிய முத்துக்களையும் அணிந்திருக்கிற புன்னையானது நான் இத்தன்மையேன் ஆகக் கண்டு வைத்து இன்னமும் சொல்லுகிறதில்லை; நம்முடைய அகன்ற துறையை விட்டுப் பிரிந்தவர் பிரிந்துபோம் இத்தனையோ தான்? பொன்னையும் மணியையும் அணிந்த
முகம் குழைந்திருக்கிற புன்னை. புலியூரில் தடாகத்தில் வாழ்கிற அன்னமே நீ சொல்வாயாக.
5. தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்
தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல் என்பது, அன்னமொடு வரவு கேட்ட தலைமகள் அதுவும் வாய் திறவாமையின், இனியவர் வருகின்றார் அல்லர். எம் உயிர்க்குப் பற்றுக்கோடு இனி இதுவே; இதனை நீ அழியாது ஒழிவாய் என அவன் சென்ற தேர்வழி நோக்கிக் கடலொடு கூறா நிற்றல்.
185. உள்ளும் உருகி உரோமம்
சிலிர்ப்ப உடையவன்ஆட்
கொள்ளும் அவரிலோர் கூட்டம்தந்
தான்குனி கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன்
தேர்வழி தூரல்கண்டாய்
புள்ளும் திரையும் பொரச்சங்கம்
ஆர்க்கும் பொருகடலே.
கொளு
மீன்தோய் துறைவர் மீளும் அளவும்
மான்தேர் வழியை அழியேல் என்றது.
இதன் பொருள் : மீனைத் தோய்ந்த துறையை உடையவர் மீண்டு வரும் அளவும் புரவி பூட்டப்பட்ட வழியை அழியாதே கொள் என்றது.
தெளிவுரை : புள்ளும் திரையும் தம்முள்பொரச் சங்கு ஒலிக்கும் கரை பொருங் கடலே. நெஞ்சம் உருகி மெய்ம்மயிரும் பொடிப்ப, இப்படிக்கு அடியாரை உடையவன் தானடிமை கொள்ளும் அடியாருடனே என்னையும் அடிமையாகத் கூட்டிக் கொண்டவன். அவன் ஆடியருளுகிற பெரும்பற்றப்புலியூரை விட்டு நீங்கும்படி சென்றவன். பெரிய தேர் போன வழியை அழியாதே கொள்வாயாக வேண்டும்.
6. கூடல் இழைத்தல்
கூடல் இழைத்தல் என்பது, தேர்வழி நோக்கிக் கடலொடு கூறாநின்ற தலைமகள், இம்மணற் குன்றின் கண் நீத்து அகன்ற வள்ளலை உள்ளத்தை நெகிழ்த்து இவ்விடத்தே தரவில்லையோ எனக் கூடல் தெய்வத்தை வாழ்த்திக் கூடல் இழைத்து வருந்தா நின்றல்.
186. ஆழி திருத்தும் புலியூர்
உடையான் அருளின்அளித்(து)
ஆழி திருத்தும் மணற்குன்றின்
நீத்தகன் றார்வருகென்(று)
ஆழி திருத்திச் சுழிக்கணக்(கு)
ஓதிநை யாமல்ஐய
வாழி திருத்தித் தரக்கிற்றி
யோஉள்ளம் வள்ளலையே.
கொளு
நீடலந் துறையில் கூடல் இழைத்தது.
தெளிவுரை : பூமியைத் திருத்திச் செய்கிற பெரும்பற்றப்புலியூரை உடையவன் அவனுடைய திருவருள் போல தலையளி செய்து கடல் திரை வந்து தூய்மை செய்கிற மணல் திடரில் விட்டுப் பிரிந்தவர் வரவேண்டுமென்று வட்டமாகச் செய்து சுழிகளில் எண்ணைச் சொல்லியது கூடாமையால் துன்புறாது ஐய ! கூடல் தெய்வமாகிய பெரியவனே ! வருணராசனே ! நீ வாழ்விப்பாயாக ! உள்ளத்தைத் திருத்தி வள்ளலைத் தரவல்லையாகில் கூட்டுவாயாக.
7. சுடரொடு புலம்பல்
சுடரொடு புலம்பல என்பது, கூடல் இழைத்து வருந்தா நின்ற தலைமகள், துறைவர் போக்கும் அவர் சூளுறவும் என்னை வருத்தா நின்றன. அதன்மேல் நீயும் ஏகாநின்றாய். யான் இனி உய்யுமாறு என்னோ எனச் செல்லா நின்ற சுடரோடு புலம்பா நிற்றல். (சுடர் - சூரியன்).
187. கார்த்தரங் கம்திரை தோணி
சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்த(ரு)அங் கம்துறைமானும்
துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தர்அங் கன்தில்லைப் பல்பூம்
பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தர்அங் கம்செய்யு மால்உய்யு
மா(று)என்கொல் ஆழ்சுடரே.
கொளு
குணகடல் எழுசுடர் குடகடல் குளிப்ப
மணமலி குழலி மனம்புலம் பியது.
இதன் பொருள் : கீழ்க்கடலில் எழுந்த ஆதித்தன் மேல் கடலில் மூழ்க நறுநாற்ற மிக்க கூந்தலையுடையாள் மனம் வாடியது.
தெளிவுரை : கருந்திரையும் அத்திரைகளை ஒதுக்குகிற தோணிகளும் சுறா மீன்களும், கடல் தானும் மீன் வெட்டுகிறவர்களும் போரைத் தருகிற சதுரங்களும் போர்க் களத்தினை ஒக்கிற துறையினை உடையவர் (இவை ஒத்தபடி திரைகள் குதிரைகளை யொத்தன; அவற்றை ஒதுக்குகிற தோணிகள் குதிரைத் திரள்களைக் கெடுக்கிற தேர்களையொத்தன; சுறா மீன்கள் யானைகளை ஒத்தன. கடல் தானும் யுத்த களத்தை ஒத்தது. மீன் வெட்டுகிறவர்கள் யானைகளைக் கையும் காலும் அறவெட்டு கருவிக் காலாட்களை ஒத்தார்கள். ஒரு பொருள் வேறொரு பொருளாகத் தோன்றி நடத்தலால் நமக்கு இன்பம் செய்யப்பிரிந்த பிரிவும் துன்பம் செய்வது ஒன்று போலத் தோன்றா நின்றபடி). அவர் நம்மை வரைந்து கொள்வதாகப் பிரிந்த பிரிவு, மிக்க தூயோராகிய பிரம விட்டுணுக்களின் எலும்புகளைப் பூண்டவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் பல பூக்களை உடைத்தாகிய பொழிலில் அவர் சொன்ன வார்த்தையும் என்னை வியாதியாளர் உடம்பு போல பண்ணா நின்றது. அழுந்தா நின்ற ஆதித்தனே ! இனி நான் பிழைக்கும் வழி எது?
அத்தில்லை வரைப்பில் சூளுரையும் என்னா என்னும் அச்சத்தளாய் ஆர்த்தரங்கம் செய்யுமால் என்றாள்.
8. பொழுது கண்டு மயங்கல்
பொழுது கண்டு மயங்கல் என்பது, சுடரொடு புலம்பா நின்றவள், கதிரவன் மறைந்தான்; காப்பவர் சேயர்; அதன் மேல் இவ்விடத்து மீனுண்ட அன்னங்களும் போய்த் தம் சேக்கைகளை அடைந்தன. இனி யான் ஆற்றுமாறு என்னே என மாலைப் பொழுது கண்டு மயங்கா நிற்றல்.
188. பகலோன் கரந்தனன் காப்பவர்
சேயர்பற் றற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி
யோன்எவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற்
சேக்கைகள் நோக்கினவால்
அகலோங்(கு) இருங்கழி வாய்க்கொழு
மீனுண்ட அன்னங்களே.
கொளு
மயல்தரு மாலை வருவது கண்டு
கயல்தரு கண்ணி கவலை யுற்றது.
இதன் பொருள் : மயலைத் தருகின்ற மாலைப் பொழுது வருகிறபடியைக் கண்டு கயலைப் பொருந்த கண்களை உடையாள் வருந்தினது.
தெளிவுரை : ஆதித்தன் ஒளித்தான்; நம்மைக் காவல் செய்பவர் தூரியராக இருந்தார். புலன்களின் பற்று விட்டவற்குப் புகலிடமாய் உள்ளவன். புகுந்தார்க்கு மீண்டும் போம் தன்மை அரிதாயுள்ளவன் எல்லாரும் எல்லாம் சொல்லுவதற்கு எல்லாம் ஒத்திருக்கிறவன், அவன் வாழ்கிற புலியூரில் அழகிய பொழிலில் தம் சேக்கையை நோக்கிச் செல்கின்றன அன்னங்கள் என்றது. இரை வேண்டி உண்ண வேண்டும். பரவசத்தாலே நம்மை வினவிற்றில. வினவாதே தம் சேக்கையிடத்து ஏறச் செல்லா நின்றன. இனி ஆற்றுதல் அரிது போலே இருந்தது. கொழு மீன் என்றது மீனில் ஒரு சாதி.
9. பறவையொடு வருந்தல்
பறவையொடு வருந்தல் என்பது, பொழுது கண்டு மயங்கா நின்ற தலைமகள், இந்நிலைமைக் கண்ணும் என்னுள் நோய் அறியாது கண்ணோட்டமின்றித் தம் வயிறு ஓம்பா நின்றன. இஃதென்னை பாவம் என வண்டானப் பறவையொடு வருந்திக் கூறா நிற்றல்.
189. பொன்னும் மணியும் பவளமும்
போன்று பொலிந்திலங்கி
மின்னும் சடையோன் புலியூர்
விரவா தவரினுள்நோய்
இன்னும் அறிகில வால்என்னை
பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை
தேரும்வண் டானங்களே.
கொளு
செறிபிணி கைம்மிகச் சிற்றிடை பேதை
பறவைமேல் வைத்துப் பையுள்எய் தியது.
இதன் பொருள் : புத்திக்கு வெறுப்பைச் செய்கிற காம நோய்க் கைசார்ந்து செல்லச் சிறிய இடையினை உடைய நாயகி பறவைகளைச் சொல்லும் வார்த்தை களின் மேலே வைத்துச் சொல்லி வருத்தமுற்றது.
தெளிவுரை : பொன்னையும் மாணிக்கத்தையும் பவளத்தையும் ஒத்துச் சிறந்து விளங்கி மின்னும் திருச்சடையை உடையவன். அவனுடைய பெரும்பற்றப்புலியூரை நினைக்கும் நினைவை மற்றுள்ள நினைவுகளுடனே கலவாதாரைப் போல் (என்றது மற்றுள்ள நினைவை இந்நினைவு மாற்றும் என்பது கருத்து) உண்டாகிய வியாதியைப் பெரிய கழியிடத்தே நிலை பெற்ற பகற்பொழுதே விரும்பி இரை தேடியுண்ட நீர்க் கோழிகள் தாங்கள் இரை தேடி யுண்டும், நான் இத்தன்மையேனாகக் கண்டு வைத்தும் இன்னமும் அறிகின்றனவில்லை. இஃதென்ன பாவமோ?
பெரும்பற்றப்புலியூரை நினையாதார்க்கு உவமை பிறர் இடுக்கண் கண்டும் வினவாதிருக்கை.
10. பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்
பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல் என்பது, பறவையொடு வருந்தா நின்றவள், இவை என் வருத்தங்கண்டு இவள் வருந்தாமல் விரைய வரவேண்டுமென்று ஞாயிற்றை நோக்கித் தன் கை குவியா நின்றன. ஆதலால் என் மாட்டு அன்புடையன போலும் எனப் பங்கயத்தோடு பரிவுற்றுக் கூறா நிற்றல்.
190. கருங்கழி காதல்பைங் கானலில்
தில்லைஎம் கண்டர்விண்டார்
ஒருங்(கு)அழி காதர மூவெயில்
செற்றஒற் றைச்சிலைசூழ்ந்(து)
அருங்கழி காதம் அகலும்என்
றூழ்என்(று) அலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள்
கூப்பும் மலர்க்கைகளே.
கொளு
முருகவிழ் கானல் ஒடுபரி வுற்றது.
இதன் பொருள் : நறு நாற்றம் விரிகிற கடற் சோலையுடனே வருத்தமுற்றது.
தெளிவுரை : கரிய கழியினைச் சூழ்ந்த பச்சென்ற கடற் சோலையில் (உள்ள) அலர்ந்து கண்ணீர் வரா நின்று மிகுந்த காதலையுடைய தாமரைகள், பெரும்பற்றப்புலியூரில் உளவாகிய எம்முடைய வீரர் தம்முடைய பகைவர் ஒருங்கே அழிய அச்சத்தைச் செய்கிற முப்புரங்களையும் அழித்த தனிச்சிலையாகிய மகா மேருவைச் சூழ்ந்து ஆதித்தன் கடத்தற்கரிய காதங்களைக் கடவா நின்றான் என்று இவள் வருந்தாமல் இரவியைக் கடுக வரவேண்டுமென்று தம் மலர்களாகிய கைகளைக் கூப்பித் தொழா நின்றன.
11. அன்னமோடு அழிதல்
அன்னமோடு அழிதல் என்பது பங்கயத்தை நோக்கிப் பரிவுறா நின்றவள், உலகமெல்லாம் துயிலா நின்ற இந்நிலைமைக் கண்ணும் யான் துயிலாமைக்குக் காரணமாகிய என் வருத்தத்தைச் சென்று அவர்க்குச் சொல்லாமல் தான்தன் சேவலைப் பொருந்திக் கவற்சியின்றித் துயிலா நின்றதென அன்னத்தோடு அழிந்து கூறா நிற்றல்.
191. மூவல் தழீஇய அருள்முத
லோன்தில்லைச் செல்வன்முந்நீர்
நாவல் தழீஇயஇந் நானிலம்
துஞ்சும் நயந்த இன்பச்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும்
யான்துயி லாச்செயிர்எம்
காவல் தழீஇயவர்க்(கு) ஓதா(து)
அளிய களியன்னமே.
கொளு
இன்ன கையவள் இரவரு துயரம்
அன்னத்தோ(டு) அழிந்துரைத்தது.
இதன் பொருள் : அழகிய முறுவலை உடையவள் இரவிடத்துண்டாகிய துன்பத்தை அன்னத்துடனே அறிவுற்றுச் சொன்னது.
தெளிவுரை : மூவராகியவர் முப்புரங்களை அழித்து விட்ட திருமுறுவலைப் பொருந்தின வேதநாயகன் பெரும்பற்றப்புலியூரில் உளனாகிய செல்வனுடைய நாவலைப் பொருந்தின நால்வகைப்பட்ட பூமியும் உறங்கா நின்றன. நான் உறங்காத இக்குற்றத்தை எம்மைக் காதலைப் பொருந்தினவற்கு ஓதாதே. அளிக்கத்தக்க களிப்புடைத்தாகிய அன்னம் தான் விரும்பின இன்பத்தைச் செய்கிற சேவலைத் தழுவிக் கொண்டு போய்த் தான் உறங்கா நின்றது.
பாலைக்கு நிலம் இல்லாமையால் நால்வகைப் பட்ட நிலம் என்றார். களியன்னமே என்றபடி; தன் களிப்பால் இது சொல்லாதிருந்தது. இது சொல்விற் காப்பார் என்பது கருத்து.
மூவல் என்பது ஒரு சிவ தலம்.
12. வரவு உணர்ந்து உரைத்தல்
வரவு உணர்ந்து உரைத்தல் என்பது தலைமகள் அன்னத்தோடு அழிந்து வருந்தா நிற்பத் தலைமகன் ஒருவழித் தணந்து வந்தமை சிறைப்புறமாக உணர்ந்த தோழி, வளைகள் நிறுத்த நிற்கின்றன இல்லை. நெஞ்சம் நெகிழ்ந்து உருகா நின்றது. கண்கள் துயிலின்றிக் கலுழா நின்றன. இவையெல்லாம் யான் சொல்ல வேண்டுவதில்லை. நீயே கண்டாய்; இதனைச் சென்று அவர்க்குச் சொல்லுவாய் என மதியொடு கூறா நிற்றல்.
192. நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
கும்நெடுங் கண்துயிலது
கல்லா கதிர்முத்தம் காற்றும்
எனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோன் அருள்களில் லாரிற்சென்
றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே இதுநின்னை
யான்இன்(று) இரக்கின்றதே.
கொளு
சென்றவர் வரவுணர்ந்து நின்றவள் நிலைமை
சிறப்புடைப் பாங்கி சிறைப்புறத்(து) உரைத்தது.
இதன் பொருள் : பிரிந்தவர் வந்து நின்றபடியை அறிந்து நின்ற நாயகியுடைய நிலையைச் சிறப்புடைய தோழி சிறைப்புறமாகச் சொன்னது.
தெளிவுரை : ஒளியார்ந்த சந்திரனே ! திருஅம்பலத்தில் பழையவனுடைய அருளில்லாதாரைப் போலப் பிரிந்தவர், பிரிந்த துயரமெல்லாம் நீயே கண்டாய். ஆதலால் வளைகளும் தம்முடைய நிலைகளில் நின்றனவல்ல; நெஞ்சமானது நெகிழ்ந்து உருகா நின்றது. நெடுங்கண்கள் உறங்காவாய் ஒளியுடைத்தாகிய முத்துமாலைகளை இடா நின்றன; என்று சொல்லுவாயாக வேண்டும். இது நான் இப்போது உன்னை வேண்டிக் கொள்கிறது.
13. வருத்தமிகுதி கூறல்
வருத்தமிகுதி கூறல் என்பது, சிறைப்புறமாக மதியொடு வருத்தம் கூறிச் சென்றெதிர்ப்பட்டு வலஞ் செய்து நின்று, நீ போய் அவள் படாநின்ற வருத்தம் என்னாற் சொல்லும் அளவல்ல என வரைவு தோன்றத் தலைமகளது வருத்த மிகுதி கூறா நிற்றல்.
193. வளரும் கறியறி யாமந்தி
தின்றுமம் மர்க்(கு)இடமாய்த்
தளரும் தடவரைத் தண்சிலம்
பாதன(து) அங்கம்எங்கும்
விளரும் விழும்எழும் விம்மும்
மெலியும்வெண் மாமதிநின்(று)
ஒளிரும் சடைமுடி யோன்புலி
யூர்அன்ன ஒண்ணுதலே.
கொளு
நீங்கி அணைந்தவற்(குப் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : ஒருவழிப் பிரிந்து கூடினவற்குத் தோழி சொன்னது.
தெளிவுரை : இளைய மிளகுக் கொடியை விளைவு அறியா மந்திக் குரங்கு தின்று மயக்கத்துக்கு ஒரு கொள் கலமாய்த் தளர்ச்சியை உறுகிற பெரிய மலையில் குளிர்ச்சியுடைய பக்க மலையை உடையவனே ! தன் மேனி முழுதும் வெளுக்கும்; சயனத்திலே விழுந்தும் எழுந்தும் பொருமியும் வாடா நிற்கும்; வெள்ளிதாய் மிக்க திரு இளம்பிறை நின்று விளங்கா நின்ற சடாபாரத்தை உடையவனுடைய பெரும்பற்றப்புலியூரை ஒத்த ஒண்ணுதல் இப்படி இப்படிச் செய்யா நின்றாள்.
மிளகுக் கொடி இன்பம் செய்யாதாயினும் கண்ணுக்கு அழகிதாகத் தோன்றினாற் போல நீயும் இவளை வரைந்து கொண்டு இன்புறுத்தாய் ஆயினும் கண் மகிழ் உருவினையாய்த் தோன்ற விளைவை அறியாமையினால் அம் மிளகுக் கொடியை மந்தி தின்று வருந்தினாற் போல, இவளும் தன் பேதைமையினால் உன்னுடனே புணர்ந்து வருத்தமாகிவிட்டனள் என்றுபடும்.
வளரும் கறி கண்ணுக்கு இனிதாய் இருந்தமை பற்றி அதன் தன்மை அறியாது தின்ற இளமந்தி, பின் அதனால் வருத்தம் எய்தினாற் போல, கண்ணுக்கு இனிதாய் இருந்த நின் தோற்றத்தால் நின் தன்மை அறியாது இவள் நின்னோடு கலந்து வருந்தா நின்றாள் என உள்ளுறை உவமம் கொள்க.
ஒருவழித் தணத்தல் முற்றிற்று

பதினாறாம் அதிகாரம்
16. உடன் போக்கு
இவ்வாறு ஒருவழித் தணத்தல் நிகழாதாயின், உடன் போக்கு நிகழும். இதன் நூற்பாவில் அடியிற் கண்ட ஐம்பத்தாறு துறைகள் உள்ளன.
விளக்கம்
உடன் போக்காவது, தலைவன் தலைவியைத் தன்னுடன் கொண்டு செல்லுதல். தோழி இரவுக் குறிக்கண் அலர் அறிவுறுத்த பின்னும் தலைவன் தெருண்டு வரையானாயின் மேற்கூறியவாறு ஒருவழித் தணந்தும் நிற்பன். தணவாது தலைவியைத் தன்னுடன் கொண்டும் செல்வன். அங்ஙனம் கொண்டு செல்வதாகிய உடன் போக்கினை அடிகள் ஐம்பத்தாறு துறைகளாக வகுத்தருளிச் செய்வர்.
1. பருவங்கூறல்
2. மகட்பேச்சுரைத்தல்
3. பொன்னணி உரைத்தல்
4. அருவிலை உரைத்தல்
5. அருமை கேட்டழிதல்
6. தளர்வறிந்துரைத்தல்
7. குறிப்புரைத்தல்
8. அருமையுரைத்தல்
9. ஆதரங் கூறல்
10. இறந்து பாடுரைத்தல்
11. கற்பு நலன் உரைத்தல்
12. துணிந்தமை கூறல்
13. துணிவொடு வினாவல்
14. போக்கறிவித்தல்
15. நாணிழந்து வருந்தல்
16. துணி வெடுத்துரைத்தல்
17. குறியிடங் கூறல்
18. அடியொடு வழிநினைந்து அவனுளம் வாடல்
19. கொண்டு சென்றுய்த்தல்
20. ஓம்படுத் துரைத்தல்
21. வழிப்படுத் துரைத்தல்
22. மெல்லக் கொண்டேகல்
23. அடலெடுத்துரைத்தல்
24. அயர்வகற்றல்
25. நெறிவிலக்கிக் கூறல்
26. கண்டவர் மகிழ்தல்
27. வழி விளையாடல்
28. நகரணிமை கூறல்
29. நகர் காட்டல்
30. பதி பரிசுரைத்தல்
31. செவிலி தேடல்
32. அறத்தொடு நிற்றல்
33. கற்பு நிலைக்கு இரங்கல்
34. கவன்றுரைத்தல்
35. அடிநினைந்திரங்கல்
36. நற்றாய்க்கு உரைத்தல்
37. நற்றாய் வருந்தல்
38. கிளி மொழிக்கு இரங்கல்
39. சுடரோடு இரத்தல்
40. பருவ நினைந்து கவறல்
41. நாடத் துணிதல்
42. கொடிக் குறி பார்த்தல்
43. சோதிடங் கேட்டல்
44. சுவடு கண்டு அறிதல்
45. சுவடு கண்டு இரங்கல்
46. வேட்ட மாதரைக் கேட்டல்
47. புறவொடு புலத்தல்
48. குரவொடு வருந்தல்
49. விரதியரை வினாவல்
50. வேதியரை வினாவல்
51. புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்
52. வியந்துரைத்தல்
53. இயைபெடுத்துரைத்தல்
54. மீளவுரைத்தல்
55. உலகியல்பு உரைத்தல்
56. அழுங்குதாய்க்கு உரைத்தல்
என இவை ஐம்பத்தாறும் உடன்போக்காம்.
பேரின்பக் கிளவி
உடன்போக்(கு) ஐம்பதோ(டு) ஆறு துறையும்
அருள்உயிர்க்(கு) அருமை அறிய உணர்த்தலும்
ஆனந் தத்திடை அழுத்தித் திரோதை
பரைவழி யாக பண்புணர்த் தியது.
1. பருவங் கூறல்
பருவங் கூறல் என்பது அலர் அறிவுறுத்த தோழி இவள் முலை முதிர்வு கண்டமையான் மகட்பேசுவார்க்கு  எமர் மாறாது கொடுக்கவும் கூடும். அது படாமல் நிற்ப நீ முற்பட்டு வரைவாயாக எனத் தலை மகனுக்குத் தலை மகளது பருவம் கூறா நிற்றல்.
194. ஒராகம் இரண்டெழி லாய்ஒளிர்
வோன்தில்லை ஒண்ணுதல்அங்
கராகம் பயின்(று) அமிழ் தம்பொதிந்(து)
ஈர்ஞ்சுணங்(கு) ஆடகத்தின்
பராகம் சிதர்ந்த பயோதரம்
இப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேஇல்லை
யேஎமர் எண்ணுவதே.
கொளு
உருவது கண்டவள்
அருமை உரைத்தது
இதன் பொருள் : ஒரு திருமேனி பெண் வடிவமாக அழகு பெற்று விளங்குகின்ற பருவங் கூறல்.
தெளிவுரை : ஒரு திருமேனி பெண் வடிவும் ஆண் வடிவுமாக அழகு பெற்று விளங்குகின்றவன், அவனுடைய திருஅம்பலத்தில் அழகிய நெற்றியினை உடையாள் சந்தன குங்குமம் நெருங்கி அமுதத்தை உள்ளடக்கி, நெய்த்த நிறமுடைத்தாகிய சுணங்கான பொற் பொடியைச் சிதறின முலைகள் இப்படியே விம்மின. இம்மண ஒளியைக் கண்டால் நாயகனே ! எங்கள் உறவின் முறையார் விசாரிக்குமது ஒன்றுமில்லையே தான்.
என, மெத்தவும் விசாரிப்பார்கள் என்பது அங்கராகம் அங்கம், உடம்பு; இதனால் விரும்பப்படுவது; சந்தன குங்குமம். இராகம் - முடுகுதல் என்பாருமுளர். ஈண்டு நிறம். (அங்கராகம் - மேனிமேல் பூசப்படுவது)
2. மகட் பேச்சுரைத்தல்
மகட் பேச்சுரைத்தல் என்பது, பருவங் கூறிய தோழி, படைத்து மொழியான், அயலவர் பலரும் மேன்மேலும் பொன்னணியக் கருதா நின்றார். நீ விரைய வரைவொடு வருவாயாதல், அன்றி உடன்கொண்டு போவாயாதல், இரண்டிலொன்று துணிந்து செய்யக் கருதுவாய்; அதனை இன்றே செய்வாயாக எனத் தலைமகனுக்கு அயலவர் வந்து மகட் பேசல் கூறா நிற்றல்.
195. மணிஅக்(கு) அணியும் அரன்நஞ்சம்
அஞ்சி மறுகிவிண்ணோர்
பணியக் கருணை தரும்பரன்
தில்லையன் னாள்திறத்துத்
துணியக் கருதுவ(து) இன்றே
துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுகின் றார்பலர்
மேன்மேல் அயலவரே.
கொளு
படைத்துமொழி கிளவியில் பணிமொழிப் பாங்கி
அடற்கதிர் வேலோற்(கு) அறிய உரைத்தது.
இதன் பொருள் : சிருஷ்டித்து உரைக்கும் சொல்லினால் ஆழ்ந்த வார்த்தையினையுடைய பாங்கியானவள் உயுத்தம் விட்ட பிரகாசத்த்தினை உடைய நாயகனுக்கு அறிவு தோன்ற அறிவுறுத்திச் சொன்னது.
தெளிவுரை : அக்கு மணியைச் சாத்துகின்ற தலைவன், விடத்துக்கு அஞ்சிக் சுழன்று பின்பு தேவர்கள் வந்து வணங்க, அருளைத் தருகிற மேலானவன் அவனுடைய புலியூரையொப்பாள் அளவில் அறுதியிடத்தக்க காரியத்தை இன்றே (துணிந்து செய்) துறைவனே ! அயலார் பலரும் நிறைந்த பொன்னை அணிய நினையா நின்றார்கள், மேன்மேலும் ஆதலால் இன்றே துணிவாயாக.
3. பொன்னணி உரைத்தல்
பொன்னணி உரைத்தல் என்பது, படைத்து மொழியான் மகட் பேசல் கூறின தோழி அறுதியாக முன்றிற்கண் நின்று முரசொடு பணிலமுழங்கச் காப்பணிந்து பொன்னணியப் புகுதா நின்றார். இனி நின் கருத்தென்னோ எனத் தலைமகனுக்கு அயலவர் பொன்னணி உரையாநிற்றல்.
196. பாப்பணி யோன்தில்லைப் பல்பூ
மருவுசில் ஓதியைநற்
காப்பணிந் தார்பொன் அணிவார்
இனிக்கமழ் பூந்துறைவ
கோப்பணிவான் தோய்கொடி முன்றில்
நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழங்கத்
தழங்கும் மணமுரசே.
கொளு
பலபரி சினமலும் மலர்நெடுங் கண்ணியை
நன்னுதற் பாங்கி பொன்னணிவர் என்றது.
இதன் பொருள் : மலரை ஒத்த நெடிய கண்களை உடையாளைப் பலபடியாலும் நல்ல நெற்றியினை உடைய பாங்கி பொன்னணிவார் என்று சொன்னது.
தெளிவுரை : அரவாபரணத்தைப் பூண்டவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் பல பூக்களோடும் பயின்ற மெத்தென்ற அளகத்தினையுடையாளைக் காப்புக் கட்டினார்கள். இனிப் பொன் அணிவார்களாய் இருந்தார்கள். மணமுடைய மலரினையுள்ள துறைகளை உடையவனே ! கலியாணத்துக்குத் தக்க கோப்புக்களை நிறைந்த ஆகாயத்தே தலைசாய்ந்த கொடிகளை உடைத்தாகிய முற்றத்தில் கலியாண முரசுகள் இவை அழகாகக் குழுமித் திரண்டு நின்று, மிக்க சங்குகள் ஆர்ப்பத் தாமும் முழங்கா நின்றன.
இனிப் பொன் பூட்டுவார்களாய் இருந்தது. (இனிச் செய்ய வேண்டுவது செய்வாயாக என்றது)
4. அருவிலை உரைத்தல்
அருவிலை உரைத்தல் என்பது, பொன்னணி உரைப்பக் கேட்ட தலைமகன், யான் வரைவொடு வருதற்கு நீ முலைப்பரிசம் கூறுவாயாக என, எல்லா உலகமும் நல்கினும் எமர் அவளுடைய சிறிய இடைக்கு விலையாகச் செப்பவொட்டார். இனிப் பெரிய முலைக்கு நீ விலை கூறுவதென்னோ எனத் தோழி விலையருமை கூறா நிற்றல்.
197. எலும்பால் அணியிறை அம்பலத்
தோன்எல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்றும் நல்கினும்
கல்வரை நாடர்அம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக்
கேவிலை செப்பல்ஒட்டார்
கலம்பா வியமுலை யின்விலை
என்நீ கருதுவதே.
கொளு
பேதையர் அறிவு பேதைமை உடைத்தென
ஆதரத் தோழி அருவிலை உரைத்தது.
இதன் பொருள் : அறிவில்லாதாருடைய விசாரம் கொண்டது விடாமை உடைத்தென்று அன்புடைத் தோழி நாயகிக்கு விலையில்லாமையைச் சொன்னது.
தெளிவுரை : எலும்பால் அலங்கரிக்கிற சுவாமி திருஅம்பலத்தேயுள்ளவன். அவனுடைய எல்லையாகிய ஞான காண்டத்தைக் குறுகி நிற்பவருடைய நன்மையே பரந்த எல்லா உலகங்களையும் நீ கொடுக்கிலும் எம் மலையிடத்து உண்டாகிய நாட்டினை உடையவர் கேட்பாயாக வெற்பனே ! மாவடு வகிரை ஒத்த கண்களை உடையாளது சிற்றிடைக்கு விலையாகச் சொல்ல மாட்டார்கள். ஆபரணங்கள் பரந்த தனத்தின் விலையாக நீ எப்பொருளை நினைக்கின்றது?
5. அருமை கேட்டழிதல்
அருமை கேட்டழிதல் என்பது, அருவிலை கேட்ட தலைமகன் நீ, அவளது அருமை கருதாது அவளது அவயவங்களில் உண்டாகிய நயத்தைப் பற்றி விடாது நடுங்கா நின்றாய். இனி மதியைப் பிடித்துத் தரவேண்டியழும் அறியாக் குழந்தையைப் போலக் கிடந்து அரற்றுவாயாக எனத் தன் நெஞ்சோடு அழிந்து கூறா நிற்றல்.
198. விசும்புற்ற திங்கட்(கு) அழும்மழப்
போன்(று)இனி விம்மிவிம்மி
அசும்புற்ற கண்ணோ(டு) அலறாய்
கிடந்(து)அரன் தில்லையன்னாள்
குயம்புற் றர(வு) இடை கூர்எயிற்(று)
ஊறல் குழல்மொழியின்
நயம்பற்றி நின்று நடுங்கித்
தளர்கின்ற நன்னெஞ்சமே.
கொளு
பெருமை நாட் டத்தவள் அருமைகேட்(டு) அழிந்தது.
இதன் பொருள் : பெரிய நயனங்களை உடையவள் அருமையைக் கேட்டு நெஞ்சழிந்தது.
தெளிவுரை : அரனுடைய பெரும்பற்றப்புலியூரை ஒப்பாளுடைய முலைகளினும், புற்றிலே வாழ்கின்ற பாம்பின் கழுத்தை ஒத்த இடையினும் கூரிய முறுவல் ஊறுகின்ற நீரிலும், குழலோசை ஒத்த வார்த்தையினும் உள்ள இன்பத்தையே கருதி நடுக்கமுற்று வாடும் நல்ல நெஞ்சமே ! (நல்ல நெஞ்சமென்றது குறிப்பால் அறிவில்லாத நெஞ்சமே என்றது.) ஆகாயத்தில் பொருந்துகின்ற சந்திரனைப் பிடித்துத் தா என்று வேண்டியழுகிற பிள்ளைகளைப் போல் இப்பொழுது பொருமிப் பொருமி நீர் அறாக் கண்ணோடு கிடந்து அலறாய்.
6. தளர்வறிந்துரைத்தல்
தளர்வறிந்துரைத்தல் என்பது, வரைவு மாட்சிமைப் படாதாயின் நீ அவளை உடன்கொண்டு போ என்பது பயப்பக் கடலையும் கானலையும் நோக்கிக் கண்ணீர் கொண்டு தன் ஆயத்தாரை எல்லாம் புல்லிக் கொண்டாள். அவள் கருதியது இன்னதென்று தெரியாதென்று தோழி தலைமகளது வருத்தங் கூறா நிற்றல்.
199. மைதயங் கும்திரை வாரியை
நோக்கி மடல்அவிழ்பூங்
கைதைஅங் கானலை நோக்கிக்கண்
ணீர்கொண்(டு)எங் கண்டர்தில்லைப்
பொய்தயங் கும்நுண் மருங்குல்நல்
லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்அர வம்புரை
யும்அல்குல் பைந்தொடியே.
கொளு
தண்துறைவன் தளர்வறிந்து
கொண்டு நீங்கெனக் குறித்துரைத்தது.
இதன் பொருள் : குளிர்ந்த துறையினை உடையவன் தன் தளர்ச்சியை அறிந்து கொண்டு நீங்குவாயாக என்று கருதிச் சொன்னது.
தெளிவுரை : படம் விளங்கும் பாம்பை ஒக்கும் அல்குவை உடைய பைந்தொடி கருமை விளக்கும் திரையை உடைய கடலையும் நோக்கி, மடல் அவிழா நின்ற பூவையுடையவாகிய தாழையையுடைய கானலையும் நோக்கி, கண்ணீரைக் கொண்டு, பின் எம்முடைய கண்டரது தில்லைக்கண் உளராகிய பொய்யாதல் விளங்கும் நுண்ணிய மருங்குலையுடைய தன் ஆயத்தாராகிய நல்லாரை எல்லாம் புல்லிக் கொண்டாள். அவள் கருதியது ஒன்று உண்டு போலும்.
7. குறிப்புரைத்தல்
குறிப்புரைத்தல் என்பது, வருத்தம் கூறிப் போக்கு உணர்த்தி அது வழியாக நின்று, என்னைப் புல்லிக் கொண்டு தன்னுடைய பூவையையும் பந்தையும் பாவையையும் கிளியையும் இன்று என்கைத் தந்தாள். அது நின்னோடு உடன் போதலைக் கருதிப் போலும் எனத் தோழி தலைமகனுக்குத் தலைமகளது குறிப்பு உரையா நிற்றல்.
200. மாவைவந் தாண்டமென் னோக்கிதன்
பங்கர்வண் தில்லைமல்லற்
கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங்
கண்ணி குறிப்பறியேன்
பூவைதந் தாள்பொன்னம் பந்துதந்
தாள்என்னைப் புல்லிக்கொண்டு
பாவைதந் தாள்பைங் கிளியளித்
தாள்இன்றென் பைந்தொடியே.
கொளு
நறைக் குழலி குறிப்புரைத்தது.
இதன் பொருள் : மணம் பொருந்திய கூந்தலை உடையவளது குறிப்பை உணர்த்தியது.
தெளிவுரை : தன் பூவையையும் தந்தாள்; பொன்னாற் செய்த அழகிய பந்தையும் தந்தாள்; என்னைத் தழுவிக் கொண்டு பாவையையும் பச்சென்ற கிளியையும் தந்தாள். இப்பொழுது எம்முடைய அழகிய வளைகளையும் உடையாள். ஆதலால் மான் நோக்கத்தினைச் சென்று அடிமை கொண்ட மெல்லிய நோக்கினை உடையாள் பாகத்தினை உடையவன் அவனுடைய அழகிய பெரும்பற்றப்புலியூரில் அழகிய கொவ்வைக் கனியை வந்தடிமை கொண்ட சிவந்த வாயினையும் கரிய கண்களையும் உடையாள் நினைவு இன்னபடி என்று அறிகின்றேம் இல்லை. பூவை - நாகணவாய்ப்புள்.
8. அருமை உரைத்தல்
அருமை உரைத்தல் என்பது, குறிப்புரைத்துப் போக்கு உடம்படுத்திய தோழிக்கு, கொங்கை பொறாது நடுங்கா நின்ற இடையினை உடையாளது மெல்லிய அடிக்கு யான் செல்லும் வெஞ்சுரம் தகாது. அதன் மேலும் எம்பதியும் சேய்த்து; அதனால் நீ கருதுகின்ற காரியம் மிகவும் அருமையுடைத்து எனத் தலைமகன் போக்கு அருமை கூறா நிற்றல்.
201. மெல்லியல் கொங்கை பெரியமின்
நேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக் கடங்கடும்
தீக்கற்று வானம்எல்லாம்
சொல்லிய சீர்ச்சுடர் திங்கள்அங்
கண்ணித்தொல் லோன்புலியூர்
அல்லியங் கோதைநல் லாய்எல்லை
சேய்த்துஎம் அகல்நகரே.
கொளு
கானின் கடுமையும் மானின் மென்மையும்
பதியின் சேட்சியும் இதுவென உரைத்தது.
இதன் பொருள் : காட்டினது கடினமும் மானின் நோக்கினை உடையாளுடைய மென்மையும் தனது ஊரினது தூரமும் இத்தன்மையவென்று சொன்னது. இது என்பதனை எல்லாவற்றோடும் கூட்டுக.
தெளிவுரை : மெல்லிய இயல்பினை உடையாளது கொங்கை பெரியவாய் இருந்தன. இவற்றைத் தாங்கும் இடை மின்னை நிகர்க்கும்; மெல்லிய அடிகள் பூவாயிருந்தன. கல்லால் இயன்ற வெய்யகாடு கொடிய நெருப்பாயிருந்தது. தேவர்கள் எல்லாரும் கற்றுச் சொல்லும் புகழினை உடைய ஒளியை உடைத்தாகிய பிறையை அழகிய நெற்றிமாலையாகவுடைய பழையவனுடைய பெரும்பற்றப்புலியூரில் அல்லி மாலை உடைய நல்லாய் ! எம்முடைய அகன்ற நகரியின் எல்லை தூரிதாய் இருந்தது.
என்றால், நான் கொண்டு நீங்கும் படியேது? என்றது. தேவர்க்கெல்லாம் கற்றுச் சொல்லிய புகழ் என்றது, அவர்களும் தன் பக்கலில் கற்றுச் சொல்லுகிற சொல்லும் நல்லது தன்புகழ் தனக்கே தெரியும் என்பது கருத்து.
9. ஆதரங்கூறல்
ஆதரங் கூறல் என்பது, போக்கருமை கூறிய தலைமகனுக்கு, நின்னொடு போகப் பெறின் அவளுக்கு வெஞ்சுரமும் தண்சுரமாம், நீ அருமை கூறாது அவளைக் கொண்டு போ எனத் தோழி தலைமகளது ஆதரம் கூறா நிற்றல்.
202. பிணையும் கலையும்வன் பேய்த்தே
ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய
அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவும்இல் லாஇறை
யோன்உறை தில்லைத்தண்பூம்
பணையும் தடமும்அன் றேநின்னோ(டு)
ஏகின்எம் பைந்தொடிக்கே.
கொளு
அழல்தடம் புரையும் அருஞ்சுரம் அதுவும்
நிழல்தடம் அவட்கு நின்னொ(டு)ஏகின் என்றது.
இதன் பொருள் : காயக் கிலேசத்தை ஒத்து உரிய வகை உன்னோடே போகின் இவளுக்கு நிழல் உட்பட்ட தடாகத்தோடு ஒக்கும் என்றது, எம்முடைய அழகிய வளையினை உடையாளுக்கு.
தெளிவுரை : பிணை மானும் கலை மானும் வலிய பேய்த் தேரைப் பெரிய பெரிய நீர் வேட்கையால் தண்ணீர் என்று குறுகும் முரம்பு நிரம்பிய அத்தமும், கல்விரவி உயர்ந்த நிலங்கள், மிக்க அரிய வழியும், சுவாமி, உண்மையாகத் தனக்கு ஒப்பும் அளவும் இல்லாத இறைவனது பெரும்பற்றப்புலியூரில் தட்பமும் பொலிவும் உடைத்தாகிய மருத நிலமும் தடாகமும் அல்லவோ உன்னுடனே போதப் பெறில் அவை? நீ இவளை அந்நியமாகச் சொல்வது என்? பேய்த்தேர் - கானல்; அத்தம் - பாலை நிலம்.
10. இறந்துபாடு உரைத்தல்
இறந்துபாடு உரைத்தல் என்பது, ஆதரங் கூறிய தோழி, நீ உடன்கொண்டு  போகாயாகில் அலரானும் காவல் மிகுதியானும் நின்னை எதிர்ப்படுதல் அரிதாகலின் தடம் துறந்த கயல்போல இறந்துபடும் எனத் தலைமகளது இறந்துபாடு கூறாநிற்றல்.
203. இங்(கு)அயல் என்நீ பணிக்கின்ற(து)
ஏந்தல் இணைப்பதில்லாக்
கங்கைஅம் செஞ்சடைக் கண்ணுதல்
அண்ணல் கடிகொள்தில்லைப்
பங்கயப் பாசடைப் பாய்தடம்
நீஅப் படர்தடத்துச்
செங்கயல் அன்றே கருங்கயல்
கண்ணித் திருநுதலே.
கொளு
கார்த் தடமும் கயலும் போன்றீர்
வார்த்தட முலையும் மன்னனும் என்றது.
இதன் பொருள் : கரிய தடாகத்தையும் அதில் வாழும் கயலினையும் ஒப்பீர். கச்சணிந்த தனத்தாளும் மன்னனே நீயும் என்றது. (என்றது எதிர்மறை)
தெளிவுரை : தனக்கு ஒப்பில்லாத கங்கை அணிந்த அழகிய சிவந்த சடையினையும் கண்ணுடைத்தாகிய திருநெற்றியினையும் உடைய பெரியவன். அவன் காவல் செய்கிற பெரும்பற்றப்புலியூரில் தாமரையில் பச்சென்ற இலை செறிந்த தடாகத்தை ஒப்பை. அந்தப் பரந்த தடாகத்தில் சிவந்த கயல்மீன் அல்லவோ கயலை ஒத்த கரிய கண்ளையுடைய இந்த அழகிய நெற்றியினை உடையாள்; நீ இங்ஙனம் புக்கு அயலாரது வார்த்தை சொல்லுவது என்தான்? (ஏந்தலே.)
பங்கயப் பாசடைப் பாய்தடம் நீரிலே நிற்கிற கயலுக்கு இன்பம்; தாமரையிலை உடைத்தானால் பிறிது ஒன்றினால் வருத்தப்படாது. அதுபோல உன்னுடனே போதுகையில் இவளுக்கு இன்பம். உடன் போய் நீ வரைந்து கொள்ளுதலில் இவளுக்கு ஏமாற்றமும் வருத்தமும் படா. எனவே உன்னைப் பிரிந்து அவள் இங்கு இருந்தால் தடம் துறந்த கயல் போல இறந்துபடும் என்பது கருத்து. உடன்கொண்டு போகாய் ஆயின் அலரானும் காவல் மிகுதியானும் நின்னைத் தலைப்படுதல் அரிதாகத் தடந்துறந்த கயல் போல்வள். இவள் (இறந்து படுவள்) என்றவாறு.
11. கற்பு நலன் உரைத்தல்
கற்பு நலன் உரைத்தல் என்பது தலைமகனைப் போக்கு உடம்படுத்திய தோழி தலைமகள் உழைச் சென்று, மகளிர்க்குப் பாதுகாக்கப் படுவனவற்றுள் நாண்போலச் சிறந்தது பிறிதில்லை. அத்தன்மைத்தாகிய நாணும் கற்புச் போலச் சீரிய தன்று என உலகியல் கூறுவாள் போன்று, அவள் உடன் போக்குத் துணியக் கற்பு நலங் கூறா நிற்றல்.
204. தாயிற் சிறந்தன்று நாண்தைய
லாருக்(கு)அந் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென் தோளிதிண்
கற்பின் விழுமிதன்(று)ஈங்
கோயில் சிறந்துசிற் றம்பலத்(து)
ஆடும்எம் கூத்தப்பிரான்
வாயில் சிறந்த மதியில்
சிறந்த மதிநுதலே.
கொளு
பொய்யொத்தஇடை போக்குத்துணிய
வையத்திடை வழக்குரைத்தது.
இதன் பொருள் : பொய்யென்ற சொல்லுக்குப் பொருந்தின இடையை உடையான் உடன் போக்கு அறுதியிடப் பூமியிடத்து வழங்கும் இயல்பைச் சொன்னது.
தெளிவுரை : திருஈங்கோய் மலையில் சிறந்து எழுந்தருளியிருந்து திருச்சிற்றம்பலத்தில் ஆடி அருளுகின்ற கூத்தனாகிய எம்முடைய சுவாமி தனது திருவாய் மலர்ந்தருளின வேதாகமத்தில் மிகுந்து எண்ணப்பட்டன. மக்களுக்குப் பழிநீக்கிப் பாதுகாக்கலால் தாய் போல் சிறப்புடைத்தாகி மெல்லிய தோள்களையுடையாளுக்குச் சிக்கென்ற கற்புடைமை போலச் சீரிதல்ல. (இவையிரண்டும் வேத நூலிற் சிறந்தன காண்). பிறையினை ஒத்த நெற்றியினை உடையாய் ! உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று எனவாகலின்.
12. துணிந்தமை கூறல்
துணிந்தமை கூறல் என்பது, உலகியல் கூறுவாள் போன்று கற்புவழி நிறுத்தி, எம்பெருமான் நின்னை நீர் இல்லாத வெய்யசுரத்தே உடன் கொண்டு போவானாக நினையா நின்றான். இதற்கு நின் கருத்தென்னோ எனத் தோழி தலைமகளுக்குத் தலைமகன் நினைவு கூறா நிற்றல்.
205. குறப்பாவை நின்குழல் வேங்கையம்
போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை
வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதோர் தீவினை
வந்திடின் சென்றுசென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னும்துன்
னத்தகும் பெற்றியரே.
கொளு
பொருவேல் அண்ணல் போக்குத் துணிந்தமை
செருவேற் கண்ணிக்குச் சென்ற செப்பியது.
இதன் பொருள் : போர்த் தொழில் உள வேலினையுடைய நாயகன் உடன் போக்கு அறுதியிட்ட படியைச் செருச் செய்யும் வேலை ஒத்த கண்ணினை உடையாளுக்குச் சென்று சொல்லியது.
தெளிவுரை : குறவர் மகளே ! தம்பிரான் புலியூரை மறுத்தல் கூடுவதொரு தீவினை வருமாகில், அதனாற் சென்று சென்று பிறப்பான் அடுப்பினும் பின்னும் துன்னத்தகும் பெற்றியரே என்பதனை நிரை நிரையாக்கி யோனிகளிலே சென்று பிறத்தல் கூடுவதாகிலும், அங்கே தாமும் சென்று நாளும் கூடத்தக்க முறைமையினையுடையார் (என்று கொள்க) உன் மனையின் வேங்கைப் பூவோடே கோங்கம் பூவையும் கலந்து சூட்டுவதாக நினையா நின்றார். (எனவே கோங்கும் பாதிரியுமுள்ளது பாலை நிலமாதலின், அந்நிலத்தேற உடன் கொண்டு போவதாக அறுதியிட்டார் என்பது கருத்து)
13. துணிவொடு வினாவல்
துணிவொடு வினாவல் என்பது, தலைமகன் நினைவு கேட்ட தலைமகள் அவன் நினைவின்படியே துணிந்து நின்று, நீர் இல்லாத வெய்ய சுரத்தே இப்பொழுது இவர் நம்மை உடன் கொண்டு போகைக்குக் காரணம் என்னோ எனத் தோழியை வினாவா நிற்றல்.
206. நிழல்தலை தீநெறி நீரில்லை
கானகம் ஓரிகத்தும்
அழல்தலை வெம்பரற் றென்பர்என்
னோதில்லை அம்பலத்தான்
கழல்தலை வைத்துக்கைப் போதுகள்
கூப்பக்கல் லாதவர்போல்
குழல்தலைச் சொல்லிசெல் லக்குறிப்
பாகும்நம் கொற்றவர்க்கே.
கொளு
சிலம்பன் துணிவொடு செல்சுரம் நினைந்து
கலம்புனை கொம்பர் கலக்க முற்றது.
இதன் பொருள் : நாயகன் துணிந்த நெஞ்சுடனே போகும் சுரத்தினை நினைந்து ஆபரணங்களை அணிந்து வஞ்சிக் கொம்பை ஒப்பாள் கலங்கினது.
தெளிவுரை : இரண்டு பக்கங்களிலும் உண்டாகிய காட்டில் தண்ணீர் வேட்கையால் ஓரி கூப்பிடா நிற்கும். நிழலிடம் தீய்ந்த வழி நீரில்லை. அழலுடைத் தாகிய தலையால் சிறந்த வெம்பரலை உடைத்தென்று பலரும் சொல்லுவார்கள். பெரும்பற்றப்புலியூரில் தில்லையம்பலத்தில் உள்ளவருடைய சீபாதங்களைத் தலையில் வைத்துக் கையாகிய பூக்களைக் குவித்து அஞ்சலி பண்ணக் கல்லாதவர்களைப் போல, குழலிடத்து உண்டாகிய ஓசையை ஒத்த வார்த்தையை உடையாய் ! நம்முடைய கொற்றவற்கு இவ்வழிக் கருத்துச் சென்றபடி எது காரணமாகத்தான்?
14. போக்கு அறிவித்தல்
போக்கு அறிவித்தல் என்பது, இப்பொழுது அவர் போகைக்குக் காரணம் என்னோ என்று கேட்ட தலைமகளுக்கு, நீங்கள் உடம்பும் உயிரும் போல் ஒருவரை ஒருவர் இன்றியமையீர் ஆயினீர்; இத்தன்மைத்தாகிய நும் காதலை அறிந்து வைத்தும் அவற்கு வரும் ஏதம் நினது என்று அஞ்சி யான் அவனை வரவு விலக்குவேன். அவனும் அவ்வாறு வருதலை ஒழிந்து வரைவொடு வரின் பொன் முதலாகிய எல்லாவற்றையும் நினக்கு முலைப் பரிசம் பெறினும் நமர் நின்னைக் கொடார்; சொல்லுமிடத்து இதுவன்றோ நீர் அருஞ்சுரம் போகைக்குக் காரணம் என்று தோழி தலைமகனது போக்கு அறிவியா நிற்றல்.
207. காயமும் ஆவியும் நீங்கள்சிற்
றம்பல வன்கயிலைச்
சீயமும் மாவும் வெரீஇவரல்
என்பல் செறிதிரைநீர்த்
தேயமும் யாவும் பெறினும்
கொடார்நமர் இன்னசெப்பில்
தோயமும் நாடும்இல் லாச்சுரம்
போக்குத் துணிவித்தவே.
கொளு
பொருசுடர் வேலவன் போக்குத் துணிந்தமை
அரிவைக்(கு) அவள் அறிய உரைத்தது.
இதன் பொருள் : போர்த் தொழிலை வல்ல ஒளிவுடைத் தாகிய வேலினை உடையவன் உடன்போக்கு அறுதியிட்டபடியை நாயகிக்கு அவள் அறியும்படி சொல்லியது.
தெளிவுரை : நீங்கள் உடம்பும் உயிருமாய் இருந்தீர்கள். திருச்சிற்றம்பலநாதனுடைய ஸ்ரீகயிலாய மலையில் சிங்கத்துக்கும் மற்றுமுள்ள துட்ட மிருகங்களுக்கும் பயப்பட்டு, வாராதே கொள் என்பன நான்; செறிந்த திரைகளை உடைத்தாகிய கடல் சூழ்ந்த இந்த உலகத்தையும் மற்றுமுள்ள பொருள்களையும் பெறினும் நம் உறவின் முறையானவர்கள் உன்னைக் கொடார்கள். இத்தன்மையன காண்; சொல்லின், நீரும் மனிதரும் இல்லா வழியில் போகைக்கு அறுதியிடப் பண்ணினவை இவைகாண்.
15. நாணிழந்து வருந்தல்
நாணிழந்து வருந்தல் என்பது, உடன் கொண்டு போகைக்குக் காரணங்கேட்ட தலைமகள், ஒரு நாளும் என்னை விட்டு நீங்காது என்னுடனே வளர்ந்த பொலிவுடைத்தாகிய நாண் கற்பின் எதிர் நிற்க மாட்டாது தன்னை விட்டு நீங்காத என்னைக் கழிவதாக; மகளிர் எழுபிறப்பின்கண்ணும் குடியிற் பிறவாதொழிக எனத் தானதற்குப் பிரிவாற்றாமை யான் வருந்தா நிற்றல்.
208. மற்பாய் விடையோன் மகிழ்புலி
யூர்என் னொடும்வளர்ந்த
பொற்பார் திருநாண் பொருப்பர்
விருப்புப் புகுந்துநுந்தக்
கற்பார் கடுங்கால் கலக்கிப்
பறித்தெறி யக்கழிக
இற்பாற் பிறவற்க ஏழையர்
வாழி எழுமையுமே.
கொளு
கற்பு நாணினும் முற்சிறந் தமையின்
சேண்நெறி செல்ல வாணுதல் துணிந்தது.
இதன் பொருள் : கற்பானது நாணத்துக்கு முன்னே சிறந்த தாய்த் தோன்றுகையினால், தூரமுடைத்தாகிய வழியில் போகைக்கு ஒளிசிறந்த நெற்றியினை யுடையாள் அறுதியிட்டது.
தெளிவுரை : வளப்பம் உடைத்தாய்க் கதிபாய்கிற இடபத்தை உடையவன் விரும்பி அருளுகிற பெரும் பற்றப்புலியூரில் நான் வளர்த்ததாயினும் வளர்ந்த அழகு மிக்க சிகரமான நாணமானது, நாயகர்மேல் வைத்த அன்பானது இடையில் புகுந்து தள்ளக் கற்பாகிய பெருங்காற்றானது நிலை கலக்கிப் பறித்துப் போகடக் கழிவதாகுக. மகளிர் எழுபிறவியும் குடியிற் பிறவா தொழிவதாக வேண்டும்.
16. துணிவெடுத்து உரைத்தல்
துணிவெடுத்து உரைத்தல் என்பது, தலை மகளைக் கற்பு வழி நிறுத்திச் சென்று, நின்னோடு போதுமிடத்து நீ செல்லும் கற்சுரம் அவளது சிற்றடிக்கு நல் தளிராம் போலும் எனத் தோழி தலைமகனுக்கு அவள் துணிவெடுத்துக் கூறா நிற்றல்.
209. கம்பம் சிவந்த சலந்தரன்
ஆகம் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர்
கற்சுரம் ஆகும்நம்பா
அம்பஞ்சி ஆவம் புகமிக
நீண்(டு)அரி சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக்
கும்மலர்ச் சீறடிக்கே.
கொளு
செல்வ மாதர் செல்லத் துணிந்தமை
தொல்வரை நாடற்குத் தோழிசொல் லியது.
இதன் பொருள் : செல்வத்தையுடைய மாதர் உடன்போக அறுதியிட்டபடியைப் பழைய மலைமேல் உண்டாகிய நாட்டினை உடையவற்குப் பாங்கி சொன்னது.
தெளிவுரை : நடுக்கத்தைச் சீறின சலந்தரனுடைய வடிவைக் காய்ந்த பெரும்பற்றப்புலியூரில் உளனாகிய எல்லாராலும் விசுவாசிக்கப்பட்டவனது சிவநகர் என்கிற திருப்படை வீட்டில் நல்ல தளிராயிருக்கும் கல்லுடைத்தாகிய அரியவழி நாயகனே ! அம்பானது பயப்பட்டு ஆவ நாழிகையில் புக்கொளிப்ப மிகவும் நீண்டு செவ்வரி பரந்த கண்களையுடையவளின் செம்பஞ்சினில் மிதிக்கினும் பதைக்கின்ற மலர்போன்ற சிறிய அடிக்கு. கல்லுடைத்தாகிய அரியவழி சிவநகரில் நல்ல தளிரை ஒத்திருந்தது காண் என்றபடி.
17. குறியிடங் கூறல்
குறியிடங் கூறல் என்பது, துணிவெடுத்து உரைத்த தோழி, தாழாது இவ் இருட்காலத்துக் கொண்டு போவாயாக; யான் அவளைக் கொண்டு வாரா நின்றேன். நீ முன்பு வந்து எதிர்ப்பட்ட அக்குறியிடத்து வந்து நில்லெனத் தலைமகனுக்குக் குறியிடம் கூறா நிற்றல்.
210. முன்னோன் மணிகண்டம் ஒத்தவன்
அம்பலம் தம்முடிதாழ்த்(து)
உன்னா தவர்வினை போல்பரந்(து)
ஓங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெறல் ஆவியன்
னாய்அருள் ஆசையினால்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ
யாம்விழை பொங்கிருளே.
கொளு
மன்னிய இருளில் துன்னிய குறியில்
கோங்கிவர் கொங்கையை நீங்குகொண் டென்றது.
இதன் பொருள் : நிலைபெற்ற இருளிடத்தே சேர்ந்திருந்த குறியிடத்தே கோங்கம்பூப் பரந்த மாலையினை உடையாளைக் கொண்டு நீங்குவாயாக என்றது.
தெளிவுரை : என்னுடைய உயிரே ஒத்தவள். அவளுடைய பெறுதற்கரிய அரிய உயிரை ஒப்பாய் ! உன்னுடைய அருளைப் பெறலாம் என்னும் ஆசையினால் பொன்னை ஒத்த தூய மகிழும் பூ விழ, அதனை நீ செய்த குறியென்று நாங்கள் விரும்புகிற மிக்க இருள் எல்லாப் பொருளுக்கும் முன்னோனுடைய நீலமணி போன்ற திருமிடற்றை ஒத்து அவனுடைய திருஅம்பலத்தைத் தங்களுடைய தலை சாய்த்து வணங்க நினையாத வருடைய இருவினை போல் விரிந்து ஓங்கும்.
18. அடியொடு வழிநினைந்(து) அவன் உளம் வாடல்
அடியொடு வழி நினைந்து அவன் உளம் வாடல் என்பது, தோழி குறியிடை நிறுத்திப் போகா நிற்பத் தலைமகள் அவ்விடத்தே நின்று, அனிச்சப் பூப்போலும் அழகிய அடிகள் அழற்கடம் போதும் என்றால் இதற்கென்ன துன்பம் வந்து எய்தும் கொல்லோ எனத் தலைமகள் அடியொடு தான் செல்லா நின்ற வழி நினைந்து, தன் உள்ளம் வாடா நிற்றல்.
211. பனிச்சந் திரனொடு பாய்புனல்
சூடும் பரன்புலியூர்
அனிச்சம் திகழும்அம் சீறடி
ஆவ அழல்பழுத்த
கனிச்செந் திரளன்ன கற்கடம்
போந்து கடக்குமென்றால்
இனிச்சந்த மேகலை யாட்(கு)என்கொ
லாம்புகுந்(து) எய்துவதே.
கொளு
நெறியுறு குழலியொடு நீங்கத் துணிந்த
உறுசுடர் வேலோன் உள்ளம் வாடியது.
இதன் பொருள் : நெறித்த கூந்தலினை உடையாளுடனே நீங்க அறுதியிட்ட மிக்க ஒளியினை உடைத்தாகிய வேலினை உடையவன் மனம் வாடியது.
தெளிவுரை : குளிர்ச் சந்திரடனுனே வார்த்த நீரைச் சூடுகிற மேலானவனுடைய பெரும்பற்றப்புலியூரில் அனிச்சப் பூவை ஒத்து விளங்குகின்ற அழகிய சிறிய அடிகளையுடையவள். ஆ, ஐயோ, ஐயோ, அழகிய பழுத்த மரத்தின் சிவந்த திரளையொத்த கல்லுடைத்தாகிய அரிய வழியை என்னுடனே போந்து நடப்பாளாம் ஆகில், இப்பொழுது நிறமுடைத்தாகிய மேகலாபரண முடையாட்டு என்ன வந்துள்ளது? சொல்லுவாயாக வேண்டும்.
19. கொண்டு சென்று உய்த்தல்
கொண்டு சென்று உய்த்தல் என்பது, தலைமகன் குறியிடை நின்று, அடியொடு வழிநினைந்து, தன் உள்ளம் வாடா நிற்ப, அந்நிலைமைக்கண், நின் உள்ளத்துக் கருதியதனை இப்போது நினக்குத் தெய்வம் தாரா நின்றது; என் தோழியையும் கொண்டு வந்தேன். நீ இவளைக் கைக்கொள் எனத் தோழி தலைமகளைக் கொண்டு சென்று, அவனொடு கூட்டா நிற்றல்.
212. வைவந்த வேலவர் சூழ்வரத்
தேர்வரும் வள்ளல்உள்ளம்
தெய்வம் தரும்இருள் தூங்கும்
முழுதும் செழுமிடற்றின்
மைவந்த கோன்தில்லை வாழ்த்தார்
மனத்தின் வழுத்துநர் போல்
மொய்வந்த வாவி தெளியும்
துயிலும்இம் மூதெயிலே.
கொளு
வண்டமர் குழலியைக் கண்டுகொள் கென்றது.
இதன் பொருள் : வண்டுகள் அமர்ந்த நெறித்த கூந்தலினை உடையாளைக் காண்பாயாக என்று காட்டியது.
தெளிவுரை : அழகிய திருமிடற்றில் இருளையுடைய சுவாமியினுடைய பெரும்பற்றப்புலியூரை வாழ்த்தார் மனம் போல பூமி முழுதும் இருள் செரியா நின்றது. வாழ்த்துவார் மனம் போலப் பெருமையுடைத்தாகிய தடாகங்கள் தெளியா நின்றன. இப் பழைய ஊர் முழுதும் உறங்கா நின்றது. இப்படியே உன்னுடைய நினைவுக் கேற்ப குறி வாய்த்தபடியால் வல்ல கூர்மை உடைத்தாகிய வேல் வீரர் சூழத் தேரில் வரக் கடவ வள்ளலே ! மேலும் நீ நினைத்தன தெய்வமே முடிக்குங் காண்.
20. ஓம்படுத்துரைத்தல்
ஓம்படுத்துரைத்தல் என்பது. கொண்டு சென்றுய்த்து இருவரையும் வலம் செய்து நின்று, மறைநிலை திரியினும் கடல் முழுதும் வற்றினும், இவளிடத்து நின்னருள் திரியாமல் பாதுகாப்பாய் எனத் தோழி தலைமகளைத் தலைமகனுக்கு ஓம்படுத்து உரையா நிற்றல்.
213. பறந்திருந்(து) உம்பர் பதைப்பப்
படரும் புரங்கரப்பச்
சிறந்(து)எரி யாடிதென் தில்லையன்
னாள்திறத் துச்சிலம்பா
அறம்திருந்(து) உன்னரு ளும்பிறி
தாயின் அருமறையின்
திறம்திரிந் தார்கலி யும்முற்றும்
வற்றும்இச் சேணிலத்தே.
கொளு
தேம்படு கோதையை ஓம்ப டுத்தது.
இதன் பொருள் : தேன் துளிக்கும் மாலையினை உடையாளைப் பரிகரித்துக் கொள் என்று நாயகனுக்குக் கையடை ஆக்கினது.
தெளிவுரை : தேவர்கள் இடைவிடாது நடுங்கப் பறந்து செல்கின்ற புரங்கள் இடைவிடாமற் செல்கை அழியும் படி, மிக்க அக்கினியை ஏந்தி விளையாடியவனுடைய தெற்கிண் உண்டாகிய பெரும்பற்றப்புலியூரை ஒப்பாள் அளவில் வெற்பனே ! தருமம் திரிந்ததற்குக் காரணமாகிய உன்னுடைய அருள் வேறுபடுமாகில் அரிய வேதத்தின் முறையும் வேறுபட்டுக் கடலும் சிறிதும் ஒழியாமல் வற்றும் இந்த அகன்ற பூமியில்; என்ன, உனக்கு நான் சொல்ல வேண்டுவதில்லை.
21. வழிப்படுத்துரைத்தல்
வழிப்படுத்துரைத்தல் என்பது, ஓம்படுத்துரைத்த தோழி, ஆயமும் அன்னையும் பின் வாராமல் இவ்விடத்தே நிறுத்தி அவ்வூரிடத்துள்ள அலரையும் ஒருவாற்றான் நீக்கியானும் வந்து நுங்களைக் காண்பேனாக; நீயிரும் திருவொடு சென்று நும்பதியிடைச் சேர்வீர் ஆமின் என இருவரையும் வழிபடுத்துக் கூறா நிற்றல்.
214. ஈண்டொல்லை ஆயமும் ஒளவையும்
நீங்கஇவ் ஓர்கவ்வைதீர்த்(து)
ஆண்டொல்லை கண்டிடக் கூடுக
நும்மைஎம் மைப்பிடித்தின்(று)
ஆண்டெல்லை தீர்இன்பம் தந்தவன்
சிற்றம் பலம்நிலவு
சேண்தில்லை மாநகர் வாய்ச்சென்று
சேர்க திருத்தகவே.
கொளு
மதிநுதலியை வழிப்படுத்துப்
பதிவயிற் பெயரும் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : பிறை மிகுந்த நெற்றியினையுடையாளை ஒரு வழிப்படுத்திவிட்டுத் தான் பதியிடத்தே வரும் பாங்கி சொன்னது.
தெளிவுரை : எம்மைப்பிடித்து இப்போது வலிய அடிமை கொண்ட எல்லையற்ற இன்பமாகிய சிவானந்தத்தை அளித்தவருடைய திருச்சிற்றம்பலம் நிலைபெற்ற பெரும்பற்றப்புலியூராகிய நகரியிடத்தே அழகிதாகச் சென்று சேர்வாயாக. ஆரவாரம் உடைத்தாகிய ஆயக் கூட்டமும் எங்கள் அன்னையும் இவ்விடத்தே ஒழிய, இவ்வூரில் ஆரவாரம் அடங்க, அறத்தொடு நிலையால் உம்மை விரைய வந்து காண்பேனாக விளைவதாக.
22. மெல்லிக் கொண்டேகல்
மெல்லக் கொண்டு ஏகல் என்பது, தோழியை விட்டு உடன் கொண்டு போகா நின்ற தலைமகன், நின்னொடு சேறலான் இன்று இக்காடு திருந்தச் செய்யப்பட்டாற் போலக் குளிர்ச்சியை உடைத்தாயிருந்தது. இனி நின் சீறடி வருந்தாமல் பையச் செல்வாயாக எனத் தன்னாய வெள்ளத்தோடும் விளையாடுமாறு போலத் தலைமகளை மெல்லக் கொண்டு செல்லா நிற்றல்.
215. பேணத் திருத்திய சீறடி
மெல்லச்செல் பேரரவம்
பூணத் திருத்திய பொங்கொளி
யோன்புலி யூர்புரையும்
மாணத் திருத்திய வான்பதி
சேரும் இருமருங்கும்
காணத் திருத்திய போலும்முன்
னாமன்னு கானங்களே.
கொளு
பஞ்சி மெல்லடிப் பணைத் தோளியை
வெஞ்சுரத்திடை மெலிவு அகற்றியது.
இதன் பொருள் : பஞ்சினும் மிருது பதமான பாதமும் வேயை ஒத்த பணைத்த தோள்களையும் உடையாளை வெய்ய வழியிடத்தே. (மெலிவகற்றியது)
தெளிவுரை : தாள் பூணும்படி பெரிய பாம்பை அதன் கொடுமை திருந்தப் பண்ணின பேரொளியை உடையவன். (ஏதம் செய்ய வந்த பாம்பு இவர் திருமேனியைக் காணும் அளவில் இவ்அழகு கண்டு அவசமாய்த்து என்பது இதனைத் திருத்திய ஒளி என்க.) அவனுடைய பெரும்பற்றப்புலியூரை ஒத்த மாட்சிமைப்பட்ட திருந்தச் செய்த பெரிய ஊர்கள் இரண்டு பக்கங்களிலும் ஒன்றுக்கொன்று அண்ணி தாயிருக்கும் (புலியூரையும் பதி எனக் கூட்டுக) நமக்கு முன்னாக நிலைபெற்ற காடுகள் காட்சிக்கு ஆம்படி திருந்தச் செய்தன போலும்; ஆதலால், பாங்கிமாராலே திருத்தப்பட்ட சிறிய அடியினை உடையாய், நான் விரும்பும்படி மெல்லப் போவாயாக. அவசம் - பரவசம்.
23. அடலெடுத்துரைத்தல்
அடலெடுத் துரைத்தல் என்பது, மெல்லக் கொண்டு செல்லா நின்றவன் சேய்த்தாகச் சிலரை வரக் கண்டு தலைமகள் அஞ்சா நிற்ப, நின் ஐயன் மாராயின் அஞ்சுவேன்; அல்லது நால்வகைத் தானையும் திரண்டு வரினும் என் கையில் வடித்திலங்கா நின்ற எஃகின் வாய்க்கு இரை போதாது. இதனை இவ்விடத்தே காண்பாயாக என்று அவளது அச்சந்தீரத் தன் அடல் எடுத்து உரையா நிற்றல். அடல் - வலிமை.
216. கொடித்தேர் மறவர் குழாம்வெங்
கரிநிரை கூடின்என்கை
வடித்தேர் இலங்கெஃகின் வாய்க்குத
வாமன்னும் அம்பலத்தோன்
அடித்தேர் அலரென்ன அஞ்சுவன்
நின்ஐயர் என்னின்மன்னும்
கடித்தேர் குழன்மங்கை கண்டி(டு)இவ்
விண்தோய் கனவரையே.
கொளு
வரிசிலையவர் வருகுவரெனப்
புரிதரு குழலிக்(கு) அருளவன் உரைத்தது.
இதன் பொருள் : வரிந்த சிலையினை உடையவர் வருகிறார் என்று நெறித்த கூந்தலையுடையாளுக்கு அருளுடை யவன் சொன்னது.
தெளிவுரை : நிலைநின்ற நறுநாற்றத்தை வண்டுகள் நுகருகின்ற அளகத்தையுடைய பெண்ணே ! இந்த ஆகாய முட்டின பெருமலையிடத்தே வருகிறவர்களைப் பார்ப்பாயாக. கொடி கட்டப்பட்ட தேரும் வீரருடைய திரளும் யானைகளும் வந்தாலும் என் கையில் பிடித்த வடிக்கப்பட்டு அழகு விளங்குகிற வேலின் வாய்க்கு இரை போதாது. திருஅம்பலத்தே உள்ளவனது திருவடிகளை நினையாதவரைப் போலப் பயன் படுவேன் (ஐயர் என்னின்) இருவரினும் யாரென்று பார்த்துக் காண்.
24. அயர்வு அகற்றல்
அயர்வு அகற்றல் என்பது, அடல் எடுத்துரைத்தல் அச்சம் தீர்த்துக் கொண்டு போகா நின்றவன், இத் துன்பக் கடறு கடந்து சென்று இப்பொழுதே நாம் இன்பப் பதி காணப் புகா நின்றேம். இனி நமக்கொரு குறைவில்லை எனத் தலைமகளது வழி வருத்தம் தீரக் கூறா நிற்றல்.
217. முன்னோன் அருள்முன்னும் உன்னா
வினையின் முகர்துன்னும்
இன்னாக் கடறி(து)இப் போழ்தே
கடந்தின்று காண்டும்சென்று
பொன்னார் அணிமணி மாளிகைத்
தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா எனஉடை யான்நட
மாடுசிற் றம்பலமே.
கொளு
இன்னல் வெங்க டந்தெறி வேலவன்
அன்னம் அன்னவள் அயர்(வு)அ கற்றியது.
இதன் பொருள் : பொங்குடைத்தாகிய வெய்ய காட்டிலே எறிகிற வேலையுடையவன் அன்னத்தை ஒப்பாளிடம் சொன்னது.
தெளிவுரை : எல்லாப் பொருளுக்கும் முன்னோனுடைய திருவருளை முற்பிறப்பின் நினையாத வினையினாலே, அறிவிலாதவர் செறிகிற இன்னாத அரிய வழியைக் கழித்துச் சென்று இப்பொழுதே காணக் கடவோம். பொன்னால் செய்து அழகிய மாணிக்கங்களை இட்டு இழைக்கப்பட்ட மாட மாளிகைகளாற் சூழ்ந்த அழகிய பெரும்பற்றப்புலியூரில் புகழ்வார் தென்னாதென என்று புகழ என்னை உடையான் திருக்கூத்தாடி அருளுகிற சிற்றம்பலம் இதனை இப்பொழுதே காணக்கடவோம்.
இவ்வருத்தம் தீரச் சொன்னபடி, நம் அரிய வழியை நடந்ததனால் துன்பமுண்டோ? இப்பொழுதே தரிசித்துப் புகுகின்றது திருச்சிற்றம்பலம் அல்லவோ? என்றபடி.
25. நெறி விலக்கிக் கூறல்
நெறிவிலக்கிக் கூறல் என்பது, அயர்வு அகற்றிக் கொண்டு செல்லா நின்ற தலைமகனை, இனிச் செல்லு நெறிக்கண் நன்மக்கள் இல்லை; நீதனியை; இவள் வாடினாள்; பொழுதும் சென்றது; ஈண்டுத் தங்கிப் போவாயாக என அவ்விடத்து உள்ளோம் வழி விலக்கிக் கூறா நிற்றல்.
218. விடலைஉற் றாரில்லை வெம்முனை
வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல் வாடினள்
மன்றுசிற் றம்பலவர்க்(கு)
அடலையுற் றாரின் எறிப்(பு)ஒழிந்
தாங்(கு)அருக் கன்சுருக்கிக்
கடலையுற் றான்கடப் பாரில்லை
இன்றிக் கடுஞ்சுரமே.
கொளு
சுரத்திடைக் கண்டவர் சுடர்க்குழை மாதொடு
சரத்தணி வில்லோய் தங்கு கென்றது.
இதன் பொருள் : அரிய வழியிற் கண்டவர் ஒளியுடைத்தாகிய மகரக் குழையாற் சிறந்த நாயகியுடனே அம்பினையும் வில்லினையும் உடையவனே ? இங்கே அவதரிக்க என்றது.
தெளிவுரை : நிலைபெற்ற திருச்சிற்றம்பலத்தில் உள்ளவர்க்கு அடுத்தாலாய்யுற்றவர்களைப் போலத் தன் கிரணங்களால் விளங்க வேண்டுதலை ஒழிந்து அவ்விடத்தே தன் கிரணங்களை ஒடுக்கின அருக்கன் மேலைக் கடலைச் சேர்ந்தான். அதுவுமன்றி இக்கடிய வழியை இன்றைக்கு இனி நடப்பாரும் இல்லை. நாயகனே ! நீ சென்று அவதரிக்கைக்கும் ஒரு நன்மக்கள் உறைவிடமில்லை. (நன்மக்களை உற்றார் என்றது) வெய்ய முனையைச் செய்கிற வேடர்கள் உண்டாயிருக்கும்; தனியனாக இருந்தாய். அதுவன்றியும் மெல்லிய பூமடலை ஒத்து மணங்கமழும் நிறைந்த  கூந்தலினை உடையாளும் பொழிவழிந்தாள். என்ன, குறிப்பாலே பலபடியும் தங்கிப்போம் என்றுபடும்.
26. கண்டவர் மகிழ்தல்
கண்டவர் மகிழ்தல் என்பது நெறிவிலக்குற்று, வழி வருத்தம் தீர்ந்து, ஒருவரையொருவர் காணலுற்று, இன்புற்றுச் செல்லா நின்ற இருவரையும் கண்டு, இவர்கள் செயல் இருந்தவாற்றான் இப்பெருஞ்சுரம் செல்வதன்று போலும்; அதுகிடக்க, இதுதான் இன்புற உடைத்தாகியதோர் நாடகச் சுவை உடைத்தாயிருந்தது என எதிர் வருவார் இன்புற்று மகிழ்ந்து கூறா நிற்றல்.
219. அன்பணைத்(து) அம்சொல்லி பின்செல்லும்
ஆடவன் நீடவன்தன்
பின்பணைத் தோளி வரும்இப்
பெருஞ்சுரம் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை
தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற(வு) உண்அளி
போன்றொளிர் நாடகமே.
கொளு
மண்டழற் கடத்துக் கண்டவர் உரைத்தது.
இதன் பொருள் : மிக்க நெருப்பை ஒத்த காட்டில் கண்டவர்கள் சொன்னது.
தெளிவுரை : சிறுபுறமும் அசை நடையும் காணவேண்டி அன்பால் அணைத்துக் கொண்டு அழகிய சொல்லினை உடையாள் பின் செல்லா நிற்கும் நாயகன். இவனுடைய புறக் கொடையும் வழிச் செலவும் காண வேண்டி நெடும் பொழுதெல்லாம் வேயை ஒத்த தோள்களையுடையாள் அவன் பின்னே வாரா நின்றாள். ஆதலால் இப் பெரிய வழி போகிறபடியாய் இல்லை. இவர்கள் செய்தி பொன் கொழுந்து விட்டு எரிந்தாற் போலொத்த சுவாமி வாழ்கிற பெரும்பற்றப்புலியூரில் பொலிவுடைத்தாகிய மலரிடத்தே நல்ல மருத நிலத்தில் குளிர்ந்த தேனை உண்ட வண்டுச் சாதிகளைப் போல விளங்கா நின்ற நாடகமாய் இருந்தது.
27. வழிவிளையாடல்
வழிவிளையாடல் என்பது கண்டவர் மகிழக் கொண்டு செல்லா நின்றவன், வழிசெல் வருத்தத்தின் நெகிழ்ந்த மேனியையுடைய நின்னைக் கண்டு கண்கள் தம்மால் கொள்ளும் பயன் கொண்டனம். இனிச் சிறிது இருந்து இக் கடுங்கானகம் தண் எனும் அளவும் செவி நிறைய நின்மொழி பருக வருவாயாக எனத் தலைமகளுடன் விளையாடா  நிற்றல்.
220. கண்கள்தம் மாற்பயன் கொண்டனம்
கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப்
பருக வருகஇன்னே
விண்கள்தம் நாயகன் தில்லையின்
மெல்லியல் பங்கன்எங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங்
கான்கம் தண்ணெனவே.
கொளு
வன்தழற் கடத்து வடிவேல் அண்ணல்
மின்தங்(கு) இடையொடு விளையா டியது.
இதன் பொருள் : வலிய நெருப்பை ஒத்த காட்டில் வடித்த வேலினையுடைய நாயகன் மின்னின் தன்மை நிலைநின்ற இடையாளுடனே விளையாடிச் சொன்னது.
தெளிவுரை : கட்டளைப்பட்ட அழகினை உடையாய் ! இப்பொழுது உன்னைக் காணப்பெற்றுக் கண் படைத்ததனால் உள்ள இலாபம் பெற்றேன். தேவர்கள் தங்களுடைய தலைவனாய் உள்ளவன். பெரும்பற்றப்புலியூரில் உள்ளவனாகிய மெல்லியல்பங்கன், எமக்குச் சுவாமியாக உள்ளவன். அவனுடைய திருக்கடம்பூரில் குளிர்ந்த தடாகம் போலக் கூடிய காடானது தட்பம் உண்டாம் அளவும் உன்னுடைய பண்ணின் இயல்பாகிய மெல்லிய வார்த்தையைச் செவியாராப் பருகும்படி இங்ஙனே மெல்லிய வார்த்தையைச் செவியாராப் பருகும்படி இங்ஙனே வருவாயாக என்று ஒரு நிழலிடத்தைக் காட்டிச் சொன்னது.
என்றது, ஆதித்தன் வெம்மை தணியும் அளவு மென்னிழலில் இருந்து சில வார்த்தையை என் செவிக்கு இனிதாகச் சொல்லுவாயாக வேண்டும்.
கடம்பை ஒரு சிவ தலம்.
28. நகரணிமை கூறல்
நகரணிமை கூறல் என்பது, இருவரும் தம்முள் இன்புற்றுச் செல்லா நின்றமை கண்டு, இனிச் சிறிது நெறி சென்று அக்குன்றத்தைக் கடந்தால் நும் பதியாகிய நகர் விளங்கித் தோன்றா நிற்கும்; அத்துணையும் கடிது செல்வீராமின் என எதிர் வருவார் அவர் நகர் அணிமை கூறா நிற்றல்.
221. மின்தங்(கு) இடையொடு நீவியன்
தில்லைச்சிற் றம்பலவர்
குன்றம் கடந்துசென் றால்நின்று
தோன்றும் குரூஉக்கமலம்
துன்(று)அம் கிடங்கும் துறைதுறை
வள்ளைவெள் ளைநகையார்
சென்(று)அங்(கு) அடைதட மும்புடை
சூழ்தரு சேண்நகரே.
கொளு
வண்டமர் குழலியொடு கண்டவர் உரைத்தது.
இதன் பொருள் : வண்டுதுற்ற அளகத்தினை உடைய நாயகியுடனே நாயகனைக் கண்டவர்கள் சொல்லியது.
தெளிவுரை : நிறமுடைத்தாகிய தாமரை மலர்கள் நெருங்கின அழகிய கிடங்குகளும், வள்ளலைப் பாட்டைப் பாடுகிற வெள்ளிய முறுவலை உடையார் துறை துறை தோறும் சென்ற இடத்தே அடைகிற தடாகங்களும், மின்னினது தன்மை நிலைபெற்ற இடையினை உடையாளுடனே நீ பெரும்பற்றப்புலியூரில் திருச்சிற்றம்பலநாதனுடைய இம்மலையைக் கடந்து சென்ற பொழுதே இடை விடாமல் தோன்றும்.
29. நகர் காட்டல்
நகர் காட்டல் என்பது நகரணிமை கூறக் கேட்டு, இன்புறக் கொண்டு செல்லாநின்ற தலைமகன், அன்னம் துன்னிப் பிறையணிந்து சூலத்தை உடைத்தாகிய மாளிகை மேற்கொடி நுடங்க மதில் தோன்றா நின்ற அப்பெரிய நகர்காண் நம்முடைய நகராவது எனத் தலைமகளுக்குத் தன்னுடைய நகர் காட்டா நிற்றல்.
222. மின்போல் கொடிநெடு வானக்
கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை
காட்டப் பொலிபுலியூர்
மன்போற் பிறையணி மாளிகை
சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடைஅன்னம் துன்னிமுன்
தோன்றும்நல் நீள்நகரே.
கொளு
கொடுங்கடம் கடந்த குழைமுக மாதர்க்குத்
தடம்கி டங்குசூழ் தன்னகர் காட்டியது.
இதன் பொருள் : கொடிய வழியைக் கடந்த மரக்குழை சிறந்த முகத்தினையுடைய மாதர்க்குப் பெரிய கிடங்கு சூழப்பட்ட குளிர்ந்த நகரியைக் காட்டியது.
தெளிவுரை : மன்னாகிய முதலியாரைப் போலப் பிறையைச் சூடின மாடங்கள் சூலத்தை உடையனவாய் உன் நடையை உடைத்தாகிய அன்னங்கள். (துன்னி) முன்னே தோன்றுகிற நல்ல பெரிய நகரம் மிக்க ஆகாயமாகிய கடலிடத்தே மின்னையொத்த  கொடியானது குடையை ஒக்க விரிப்பப் பொன்னாலே செய்த மதிலானது வடக்கின்கண் உண்டாகிய மகாமேரு இப்படி இருக்குமென்று காட்டப் பொலிவு பெற்ற பெரும்பற்றப்புலியூர் காண்.
30. பதிபரிசுரைத்தல்
பதிபரிசுரைத்தல் என்பது நகர் காட்டிக் கொண்டு சென்று அந்நகரிடைபுக்கு அவ்விடத்துள்ள குன்றுகள், வாவிகள், பொழில்கள், மாளிகைகள், தெய்வப்பதி இவையெல்லாம் தனித்தனிக் காட்டி, இதுகாண் நம்பதி யாவதெனத் தலைமகளுக்குத் தலைமகன் பதி பரிசு காட்டா நிற்றல்.
223. செய்குன்(று) உவைஇவை சீர்மலர்
வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்கள்எய்ப்(பு) ஆறும்
பொழில்அவை ஞாங்கர்எங்கும்
பொய்குன்ற வேதியர் ஓதிடம்
உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை அம்பல
வற்(கு)இடம் ஏந்திழையே.
கொளு
கண்ணிவர் வளநகர் கண்டுசென்(று) அடைந்து
பண்ணிவர் மொழிக்குப் பதிபரி(சு) உரைத்தது.
இதன் பொருள் : இடம் பரந்த அழகிய நகரியைக் கண்டு சென்று குறுகி இசை போன்ற வார்த்தையை உடையாளுக்கு அவ்வூரின் இயல்பு சொல்லியது.
தெளிவுரை : செய்யப்பட்ட குன்றுகள் உவை. இவை சிறப்புடைத்தாகிய பூவோடைகள்; ஆகாயத்தில் நடந்து துன்புறுகிற சந்திரன் இளைப்பாறுகிற பொழில் அவை. பூமியில் பொய் முதலாகிய குற்றம் கெடப் பிராமணர்  வேதம் ஓதுகிற இடம் உத்திடம், இந்த விடம் எய்கிற மலையாகிய நீண்ட வில்லையுடைய திருவம்பலநாதனுக்கு இடம், மிக்க ஆபரணங்களை உடையாய் !
31. செவிலி தேடல்
செவிலி தேடல் என்பது, இருவரையும் வழிப்படுத்தி வந்து பிரிவாற்றாது கவலா நின்ற தோழியை, எம்பிள்ளை எங்குற்றது? நீ கவலா நின்றாய்; இதற்குக் காரணம் என்னோ? என்று வினாவிச் செவிலி தலை மகளைத் தேடா நிற்றல்.
224. மயிலெனப் பேர்ந்(து)இள வல்லியின்
ஒல்கிமென் மான்விழித்துக்
குயிலெனப் பேசும்எங் குட்டன்எங்
குற்றதென் னெஞ்சகத்தே
பயிலெனப் பேர்ந்தறி யாதவன்
தில்லைப்பல் பூங்குழலாய்
அயிலெனப் பேருங்கண் ணாய்என்
கொலாம்இன்(று) அயர்கின்றதே.
கொளு
கவலை யுற்ற காதல் தோழியைச்
செவிலி யுற்றுத் தெரிந்து வினாயது.
இதன் பொருள் : துன்புற்ற உயிர்த்தோழியைச் செவிலித் தாயார் ஆராய்ந்து கேட்டது.
தெளிவுரை : என் நெஞ்சகத்தே தனக்கு வாழ்வென்று பிறர் சொல்லும்படி என்னை விட்டு நீங்கி அறியாதவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் பூவணிந்த குழலினை உடையாய் ! வேல் போல் உலாவுகின்ற கண்களினை உடையாளுக்கு இப்பொழுது என்தான் வருந்துகின்றது? அதுகிடக்க, மயில்போலப் புடைபெயர்ந்து இளைய கொடிபோல நுடங்கி, மெல்லிய மான் போல விழித்து குயில்போலச் சொல்லும் எமது பிள்ளை யாண்டையது?
32. அறத்தொடு நிற்றல்
அறத்தொடு நிற்றல் என்றது, தேடா நின்ற செவிலிக்கு நீ போய் விளையாடச் சொல்ல, யாங்கள் போய்த் தெய்வக் குன்றிடத்தே எல்லாரும் ஒருங்கு விளையாடா நின்றேமாக, அவ்விடத்து ஒரு பெரியோன் வழியே தார் சூடிப் போயினான். அதனைக் கண்டு நின்மகள் இத் தாரை என் பாவைக்குத் தாரும் என்றாள். அவனும் வேண்டியது மறாது கொடுப்பான் ஆதலின் பிறிதொன்று சிந்தியாது கொடுத்து நீங்கினான், அன்று அறியாப் பருவத்து நிகழ்ந்ததனை உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர் கொண்டார்க்குரியர் கொடுத்தார் என்பதனை இன்று உட்கொண்டாள் போலும்; யான் இத்துணையும் அறிவேன் என்று உடன் போக்குத் தோன்றக் கூறித் தோழி அறத்தொடு நில்லா நிற்றல்.
225. ஆளரிக் கும்அரி தாய்த்தில்லை
யாவருக் கும்எளிதாம்
தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு
மேவித் தழல்திகழ்வேல்
கோளரிக் கும்நிகர் அன்னார்
ஒருவர் குரூஉமலர்த்தார்
வாளரிக் கண்ணிகொண் டாள்வண்டல்
ஆயத்(து)எம் வாணுதலே.
கொளு
சுடர்க்குழைப் பாங்கி படைத்துமொழி கிளவியில்
சிறப்புடைச் செவிலிக்(கு) அறத்தொடு நின்றது.
இதன் பொருள் : ஒளியினை உடைத்தாகிய குழையினை உடைய (தோழி) செவிலிதாய்க்கு அறத்தொடு நின்றது.
தெளிவுரை : ஆட்செய்தல் விட்டுணுவுக்கும் அரிதாய், அவ் ஆட்செய்தல் தான் பெரும்பற்றப்புலியூரில் எல்லாக்கும் எளிதாகிய ஸ்ரீ பாதத்தை உடையவருடைய இந்த மலையில் தன் பாவையாகிய பிள்ளைக்குப் பொருந்திப் பிரகாசமுடைய அழல் வேலினையுடைய கோள் செய்கிற சிங்க ஏற்றுக்கு ஒப்பார் ஒருவர் நிற முடைத்தாகிய பூமாலையை வளையொத்த செவ்வரி பரந்த கண்களை உடையாள் வாங்கிக் கொண்டாள்; வண்டல் இழைத்து விளையாடுகிற ஆயக் கூட்டத்தார் இடத்தில் எம்முடைய ஒளிசிறந்த நுதலினை உடையவள்.
என்று பொருளாய், வண்டல் இழைத்து விளையாடுகிற பக்குவமானபடியால் அறிவது அறியாக் காலத்தின் நிகழ்ந்ததனை அறிந்த பின்பு ஒழுக்கமாகக் கொள்கையில் கற்பினோடு மாறு கொள்ளாது, பாவைக்கென்றபடியால் சிறு பிள்ளைக்கு? மாலை தேடிக் கொடுத்த இயல்பு ஆகையால் நாயகன் பெருமையுடன் மாறுகொள்ளாது. அறியாத காலத்து நிகழ்ந்த தனை அறிந்த பின்பு ஒழுக்கமாகக் கொள்கையால் நாயகி கற்பினோடும் பெருமையோடும் மாறுகொள்ளாது. உலகினோடு மாறுகொள்ளாமையும் அதுவே.
33. கற்பு நிலைக்கு இரங்கல்
கற்பு நிலைக்கு இரங்கல் என்பது, தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட செவிலி, இஃது அறமாயினும் இவள் பருவத்திற்குத் தகாது. அது கிடக்க, இனியவளுக்கு நன்மை யாவது அவனை வழிபடுவதல்லது பிறிதில்லை எனக் கற்பு நிலைக்கு இரங்கா நிற்றல்.
226. வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத்
தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப்
பன்மலர் கேழ்கிளர
மடுத்தான் குடைந்தன் றழுங்க
அழுங்கித் தழீஇமகிழ்வுற்(று)
எடுத்தாற்(கு) இனியன வேயினி
யாவன எம்மனைக்கே.
கொளு
விற்புரை நுதலி கற்புநிலை கேட்டுக்
கோடா யுள்ள நீடாய் அழுங்கியது.
இதன் பொருள் : வில்லையொத்த நெற்றியினையுடையாள் கற்பு நிலைமை கேட்டுச் செவிலித்தாய் சொல்ல நற்றாய் வாடியது.
தெளிவுரை : வடுவகிரையொத்த கண்களை உடையாளுக்கு இது தக்கது ஒன்றன்று. தக்கனுடைய மூன்று தீயையும் கெடுத்தவன் தனக்கொரு காலமும் கெடுதல் இல்லாத பழையவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் பல மலரும் நிறம் கெடும்படி மடுவிலே விழுந்து அன்று தான் துன்புறத் தழீஇ, இவளை எடுக்கப் பெற்றோமென்று மகிழ்ந்து எடுத்தவற்கு இனியன செய்கையாலே எம் அன்னைக்கு இனியன செய்கையாவன அவையாவன வரைந்து கொடுக்கை.
34. கவன்றுரைத்தல்
கவன்றுரைத்தல் என்பது, கற்பு நிலைக்கு இரங்கா நின்ற செவிலி, நெருநலை நாள் முறுவலைத் தந்து முலை முழுவித் தழுவி நீ சிறிய விரகுகள் செய்தவெல்லாம் இன்று அவ்வலிய நாட்டைச் செல்ல வேண்டிப் போலும். இதனை அப்பொழுதே அறியப் பெற்றிலேன் என்று அவள் நிலை நினைந்து கவலா நிற்றல்.
227. முறுவல்அக் கால்தந்து வந்தென்
முலைமுழு வித்தழுவிச்
சிறுவலக் காரங்கள் செய்தஎல்
லாம்முழு தும்சிதையத்
தெறுவலக் காலனைச் செற்றவன்
சிற்றம் பலஞ்சிந்தியார்
உறுவலக் கானகம் தான்படர்
வானாம் ஒளியிழையே.
கொளு
அவள் நிலை நினைந்து செவிலி கவன்றது.
இதன் பொருள் : நாயகியுடைய நிலையை நினைந்து செவிலித்தாய் வருந்தியது.
தெளிவுரை : அப்பொழுது சிரித்துக் கொண்டு வந்து என் முலையிலே முழுகித் தழுவிக் கொண்டு சிறு விரகுகள் செய்தன வெல்லாம், ஆவி முழுதும் அழியும் படி கொல்லுகிற வலிய காலனை அழித்தவன். அவனுடைய திருச்சிற்றம்பலத்தை நினையாதார் பொருந்துகிற வலிய காட்டிடத்தை ஒளியுடைத்தாகிய வளைகளை உடையவள் அங்ஙனம் செய்தது இங்ஙனே போவதற்காயிருந்தது.
35. அடிநினைந்திரங்கல்
அடிநினைந்திரங்கல் என்பது, நிலைமை நினைந்து கவலா நின்ற செவிலி, அனிச்சப் பூமேல் மிதிப்பினும் ஆற்றாது பதைத்துப் பொங்கா நின்ற அடிகள் இன்று செறிந்த பரலையுடைய காட்டின்கண் பாவியவா றென்னோ என அவளடி நினைந்து இரங்கா நிற்றல்.
228. தாமே தமக்(கு)ஒப்பு மற்றில்
லவர்தில்லைத் தண்அனிச்சப்
பூமேல் மிதிக்கின் பதைத்தடி
பொங்கும்நங் காய்எரியும்
தீமேல் அயில்போல் செறிபரல்
கானிற் சிலம்படியாய்
ஆமே நடக்க அருவினை
யேன்பெற்ற அம்மனைக்கே.
கொளு
வெஞ்சுரமும் அவள் பஞ்சுமெல் அடியும்
செவிலி நினைந்து கவலை யுற்றது.
இதன் பொருள் : வெய்ய வழியும் நாயகியின் பஞ்சு போன்றுள்ள அடியும் செவிலி நினைந்து கவலையுற்றது.
தெளிவுரை : தமக்குத் தாமே உவமை என்னும்படி வேறு தமக்கு உவமையாக ஒருவரும் இல்லாதவருடைய பெரும்பற்றப்புலியூரில் குளிர்ந்த அனிச்சப் பூமேல் மிதிக்கில் நடுங்கி அடிகள் ஆனவை கொப்பளித்துக் கொள்ளும் பெரியவளே ! எரிகின்ற நெருப்பிடத்தே வைத்த வேலைப் போலச் செறிந்த பரல் உடைத்தாகிய காட்டிடத்தே சிலம்புடைத்தாகிய அடிகள் பரப்பி நடக்கலாமோ காண் ! அரிய தீவினையைச் செய்த நான் பெற்ற என் தாய்க்கு; இப்படிக்கு ஒத்தாரை ஒக்க நடக்கலாமோ தான்?
36. நற்றாய்க்கு உரைத்தல்
நற்றாய்க்கு உரைத்தல் என்பது, அடிநினைந்து இரங்கா நின்ற செவிலி, கற்பு முதிர்வு தோன்ற நின்று என்னை இடை விடாமல் தேடி அழாநின்ற பேதையது அறிவு இன்றென்னைத் தேய்வியா நின்றது என்று அவள் உடன் போனமை ஆற்றாது நற்றாய்க்குக் கூறா நிற்றல்.
229. தழுவின கையிறை சோரின்
தமியம்என் றேதளர்வுற்(று)
அழுவினை செய்யும்நை யாஅம்சொல்
பேதை அறிவுவிண்ணோர்
குழுவினை உய்யநஞ் சுண்(டு)அம்
பலத்துக் குனிக்கும்பிரான்
செழுவின தாள்பணி யார்பிணி
யாலுற்றுத் தேய்வித்ததே.
கொளு
முகிழ்முலை மடந்தைக்கு முன்னிய(து) அறியத்
திகழ்மனைக் கிழத்திக்குச் செவிலி செப்பியது.
இதன் பொருள் : முகிழ் முலையினையுடைய நாயகிக்கு வந்து புகுந்தது அறிய விளங்கிய மனைக் கிழத்தியாகிய நாயகிக்குச் செவிலித்தாய் சொன்னது.
தெளிவுரை : தன்னைத் தழுவிக் கொண்டு கிடக்கிற என்னுடைய கையானது உறக்கத்தால் சிறிது நழுவுமாகில், நாங்கள் தனிச்சிகள் அல்லரோ? என்று நெஞ்சழிந்து துன்புற்று அழுகிற தொழிலைச் செய்கிற அழகிய சொல்லினையும் பேதைத் தன்மையையும் உடையாளுடைய அறிவானது தேவர்கள் திரள் பிழைக்கும்படி நஞ்சை அமுது செய்து திருஅம்பலத்தே ஆடி அருளுகிற சுவாமி அவனுடைய அழகிய சீபாதங்களை வணங்காதார் உறுகிற துன்பத்தையே பொருந்தின எங்களையும் மனம் வாடப் பண்ணி விட்டது இற்றை ஞான்று.
37. நற்றாய் வருந்தல்
நற்றாய் வருந்தல் என்பது, உடன் போனமை கேட்டு உண்மகிழ்வோடு நின்று, ஓர் ஏதிலன் பின்னே தன் தோழியை விட்டு, என்னையும் முன்னே துறந்து, சேராதார் முன்னே ஊர் அலர் தூற்ற அருஞ்சுரம் போயினாள்; இனி யான் எங்ஙனம் ஆற்றுவேன் என நற்றாய் பிரிவாற்றாது வருந்தா நிற்றல்.
230. யாழியல் மென்மொழி வன்மனப்
பேதையொர் ஏதிலம்பின்
தோழியை நீத்(து)என்னை முன்னே
துறந்துதுன் னார்கண்முன்னே
வாழிஇம் மூதூர் மறுகச்சென்
றாள்அன்று மால்வணங்க
ஆழிதந் தான்அம் பலம்பணி
யாரின் அருஞ்சுரமே.
கொளு
கோடாய் கூற நீடாய் வாடியது.
இதன் பொருள் : செவிலித்தாய் சொல்ல நற்றாய் துயருற்றது.
தெளிவுரை : அன்று புருடோத்தமன் ஆனவன் வணங்கச் சக்கரத்தைக் கொடுத்தவன். அவனுடைய திருவம்பலத்தை வணங்காதாரைப் போல, அரிய வழியே யாழோசை ஒத்த மெல்லிய வார்த்தையினையும், வலிய மனத்தையும், பேதைத் தன்மையினையும் உடையவன் ஓர் அயலவன் பின்னே தன்னுடைய உயிர்த்தோழியை விட்டு, என்னை அதற்கு முன்னே விட்டுச் பகைவர்கள் முன்னே இப்பழைய ஊரில் உள்ளார் எல்லாம் அலர் எடுக்கும் படி போனாள். இத்தன்மையை இவள் கற்றபடி என்? என்றது.
வாழி என்பது அசை.
38. கிளி மொழிக்கு இரங்கல்
கிளிமொழிக்கு இரங்கல் என்பது, பிரிவாற்றாது வருந்தா நின்றவள், அவள் போன போக்கின்றி, இக் கிள்ளை என் நெஞ்சை ஈரா நின்றது எனத் தன் தாய் செலவுணர்ந்து வருந்தா நின்ற கிளியினது மொழி கேட்டு இரங்கா நிற்றல்.
231. கொன்னுனை வேல்அம் பலவன்
தொழாரின்குன் றம்கொடியோள்
என்னணம் சென்றனள் என்னணம்
சேரும் எனஅயரா
என்னனை போயினள் யாண்டையள்
என்னைப் பருந்தடும்என்(று)
என்னனை போக்கன்றிக் கிள்ளைஎன்
உள்ளத்தை ஈர்க்கின்றதே.
கொளு
மெய்த்தகை மாது வெஞ்சுரம் செல்லத்
தத்தையை நோக்கித் தாய்புலம் பியது.
இதன் பொருள் : உண்மையான அழகை உடைய மாதர் அருஞ்சுரம் போகக் கிளியைப் பார்த்துத் தாய் வருந்தியது.
தெளிவுரை : சிறந்த கூரிய திரிசூல வேலினையுடைய திருஅம்பல நாதனைத் தொழாதாரைப் போல மலை வழியைக் கொடியவளானவள் எத்தன்மையினால் போனாள்? எவ்விடத்தே சேருகின்றாள்? என்று கொண்டு மயங்கி, என் தாயானவள் போனாள்; எவ்விடத்தே உள்ளாள்? என்னைப் பருந்து கொல்ல வன்றோ புகுகின்றது என்று என் தாயானவள் போனதன்றி அவள் பிள்ளையாகிய கிளியின் வார்த்தை என் உள்ளத்தை அரிந்து போடா நின்றது.
39. சுடரோடு இரத்தல்
சுடரோடு இரத்தல் என்பது, கிளிமொழி கேட்டு இரங்கா நின்றவள், பெற்ற என்னோடு தன் கிளியிருந்து வருந்த இத்தனையும் துறந்து அறிவு முதிர்ந்து, அழற்கடம் சென்றாள் முகத்தை நின்கதிர்களான் வாட்டாது தாமரை மலர்போல மலர்த்து வாயாக எனச் சுடரோடு இரந்து கூறா நிற்றல். சுடர் - சூரியன்.
232. பெற்றே னொடுங்கிள்ளை வாட
முதுக்குறை பெற்றிமிக்கு
நற்றேள் மொழியழல் கான்நடந்
தாள்முகம் நானணுகப்
பெற்றேன் பிறவி பெறாமற்செய்
தோன்தில்லைத் தேன்பிறங்கு
மற்றேன் மலரின் மலர்த்(து)இரந்
தேன்சுடர் வானவனே.
கொளு
வெஞ்சுரந் தணிக்கெனச் செஞ்சுடர் அவற்கு
வேயமர் தோளி தாயர் பராயது.
இதன் பொருள் : வெவ் அழற்சியினைத் தணிய வேண்டுமென்று சிவந்த பிரகாசத்தினையுடைய ஆதித்தனுக்கு மூங்கிலை நிகர்த்த தோளையுடைய தாயர் வேண்டிக் கொண்டது.
தெளிவுரை : தன்னைப் பெற்ற என்னுடனே, தன் பிள்ளையாகிய கிளியும் வாட அறிவு மிகும் தன்மையானது நிரம்பி நல்ல தேனை ஒத்த வார்த்தையினை உடையவள், அழலுடைத்தாகிய காட்டில் போனவள் முகம், - தன்னை அணுகப் பெற்ற நான் பிறவியைப் பெற்றுப் பிறவாதபடி காத்தவள். அவனுடைய பெரும்பற்றப்புலியூரிலே அழகிய தேனையுடைத்தாகிய செந்தாமரைப் பூப்போல மலர்த்துவாயாக; சுடர்களின் தலைவனாகிய ஆதித்தனே ! நான் உன்னை வேண்டிக் கொள்ளா நின்றேன்.
40. பருவம் நினைந்து கவறல்
பருவம் நினைந்து கவறல் என்பது சுடரோடு இரந்து வருந்தா நின்றவள், கற்பிக்கும் முது பெண்டீரும் இன்றித் தான் அவனுக்குச் செய்யத்தகும் குற்றேவல் செய்ய வல்லள் கொல்லோ என்று அவளது பருவம் நினைந்து கவலா நிற்றல்.
233. வைம்மலர் வாட்படை யூரற்குச்
செய்யும்குற் றேவல்மற்றென்
மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல்
லாம்தில்லை யான்மலைவாய்
மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்(று)
எண்ணித்துண் ணென்றொளித்துக்
கைம்மல ரால்கண் புதைத்துப்
பதைக்கும்எம் கார்மயிலே.
கொளு
முற்றா முலைக்கு நற்றாய் கவன்றது.
இதன் பொருள் : இளைய முலையினை உடையாளுக்கு நற்றாய் வருந்தியது.
தெளிவுரை : திருச்சிற்றம்பலநாதனுடைய மலையிடத்துச் செறிந்த மலருடைத்தாகிய காந்தட் பூவைப் பெரும் பாம்பென்று விசாரித்துத் துணிக்கென்று ஒளித்துக் கைகளாகிய மலரினால் கண் புதைத்து நடுங்குகிற எம்முடைய கார் காலத்து மயிலை ஒப்பாள். கூரியதாகி மாலையணிந்த (வாளாகிய படையையுடைய) நாயகற்குச் செய்யக் கடவ குற்றேவல்களை என்னுடைய மை எழுதப்பட்ட வாள் போலும் கண்களையுடையவள் (செய்ய) வல்லளோ தான்.
41. நாடத் துணிதல்
நாடத் துணிதல் என்பது, பருவ நினைந்து கவலா நின்ற தாய்க்கு, நீ கவன்று மெலிய வேண்டா; யான் அவள் புக்கலிடம் புக்குத் தேடுவன் எனக் கூறிச் செவிலி அவளை நாடத் துணியா நிற்றல்.
வேயின தோளி மெலியல்விண்
ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
பாயின சீர்த்தியன் அம்பலத்
தானைப் பழித்துமும்மைத்
தீயின(து) ஆற்றல் சிரம்கண்
இழிந்து திசைதிசைதாம்
போயின எல்லையெல் லாம்புக்கு
நாடுவன் பொன்னினையே.
கொளு
கோடாய் மடந்தையை நாடத் துணிந்தது.
இதன் பொருள் : செவிலித் தாயானவள் நாயகியைத் தேடுவதாகத் துணிந்து அறுதியிட்டது.
தெளிவுரை : வேயின் தன்மையால் சிறந்த தோள்களை உடையாய் ! நீ வாடாதே கொள். தேவர்கள் ஆனவர்கள் தக்கன் வேள்வியிடத்துப் பரந்த பெரும் புகழினை உடைய நாயகன் திருவம்பல நாதனைப் பழித்து மூன்று வகைத் தீயும் தலைகளும் இவை முதலாகிய புலன்களையும் இழந்து, தாங்கள் போயின எல்லையெல்லாம் பொன்னை நிகர்ப்பாளைப் புகுந்து தேடக் கடவோம் என்று படும்.
42. கொடிக்குறி பார்த்தல்
கொடிக்குறி பார்த்தல் என்பது, செவிலி நாடத் துணியா நிற்ப, அவ்விருவரையும் இப்பொழுதே வரும் வண்ணம் நீ கரைந்தால் நினக்கு உணங்கலை அஞ்சாது இருந்துண்ணலாம்; அதுவன்றித் தெய்வத்திற்கு வைத்த நிணத்தையுடைய பலியையும் நினக்கே வரைந்து வைப்பேன்; அவ்வாறு கரைவாயாக என நற்றாய் கொடிக் குறி பாரா நிற்றல். கொடி - காக்கை.
235. பணங்கள்அஞ் சாலும் பருஅர(வு)
ஆர்த்தவன் தில்லையன்ன
மணங்கொள்அஞ் சாயலும் மன்னனும்
இன்னஏ வரக்கரைந்தால்
உணங்கல்அஞ் சா(து)உண்ண லாம்ஒள்
நிணப்பலி ஒக்குவல்மாக்
குணங்கள்அஞ் சாற்பொலி யும்நல
சேட்டைக் குலக்கொடியே.
கொளு
நற்றாய் நயந்து சொற்புட் பராயது.
இதன் பொருள் : நற்றாய் ஆனவள் நயந்து, வருவது சொல்லும் புள்ளை வேண்டிக் கொண்டது.
தெளிவுரை : மிக்க குணங்கள் ஐந்தாலும் (குணங்கள் ஐந்தாவன; மறைந்த புணர்ச்சியைத் தருதலும், பொழுது கடவாது இடம் புகுதலும், ஒருக்காலும் சோம்பாது ஒழிகையும், மனம் கலங்காமையும், தொலைப் பொருளைக் காணுதலும்) விளங்கும் நல்ல சேட்டிப்பையுடைய அழகிய காகமே ! அஞ்சு படங்களும் ஆலிக்கிற பெரிய பாம்பைப் பூண்டவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரை ஒத்த நறுநாற்றம் பொருந்தி அழகிய மென்மை உடையாளும் அவளுடைய நாயகனும் (மயிலின் சாயல் இணைந்த நாயகியும்) இப்போதே வரும்படி அழைத்தால் நாங்கள் போட்ட உணங்கள் உண்ணும் பொழுது ஒட்டுவாருண்டு என்று பயப்படாது இருந்து உண்ணலாம். அழகிய நிணமாகிய பலியையும் உனக்கென்ன வைத்துத் தரக்கடவேன். ஆதலால் அவர்கள் வரும்படி ஒருக்கால் அழைப்பாயாக.
43. சோதிடங் கேட்டல்
சோதிடங் கேட்டல் என்பது, கொடி நிமித்தம் பெற்று, இக்காவல் மனையின் கண்ணே யாங்கள் மணம் செய்ய அவ்விருவரையும் இன்னும் பெறுமாறு உண்டாயின் ஆராய்ந்து சொல்லுமின் என அறிவாளரைக் கிட்டிச் செவிலி சோதிடங்கேளா நிற்றல்.
236. முன்னும் கடுவிடம் உண்டதென்
தில்லைமுன் னோன்அருளால்
இன்னும் கடியிக் கடிமனைக்
கேமற்(று) யாம்அயர
மன்னும் கடிமலர்க் கூந்தலைத்
தான்பெறு மாறும்உண்டேல்
உன்னுங்கள் தீதின்றி ஓதுங்கள்
நான்மறை உத்தமரே.
கொளு
சித்தம் தளர்ந்து தேடும் கோடாய்
உய்த்துணர் வோரை உரைமின் என்றது.
இதன் பொருள் : நெஞ்சு தளர்ந்து தேடுகிற செவிலித்தாய் விசாரித்தறிய வல்லவர்களைச் சொல்லுங்கள் என்றது.
தெளிவுரை : முற்காலத்துக் கடிய விடத்தைப் பானம் பண்ணின அழகிய பெரும்பற்றப்புலியூருக்குப் பழைய முதலியார் திருவருளாலே கலியாணத்தை இக்காவல் உடைத்தாகிய மனையிலே நாங்கள் செய்ய நிலை பெற்ற நறுநாற்றத்தை உடைய மலரினைச் செறிந்த கூந்தல் உள்ளவளை இன்னமும் பெறுமாறு உண்டாமாகில் விசாரியுங்கள். குற்றமின்றிச் சொல்லுங்கள். சதுர் வேதங்களுக்கு அதிபதிகளே ! நீங்கள் சொல்வீர்களாக.
44. சுவடு கண்டறிதல்
சுவடு கண்டறிதல் என்பது, சோதிடம் பெற்றுச் செல்லா நின்றவள், இம் முரம்பின்கண் கிடந்த இவை தீவினையேன் எடுத்து வளர்த்த மாணிழை சீறடி; உவை அக்கள்வன் அடியாம் எனச் சுவடு கண்டு அறியா நிற்றல்.
237. தெள்வன் புனற்சென்னி யோன்அம்
பலம்சிந்தி யார்இனஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன்
செய்வினை யேன்எடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி
இங்கிவை உங்குவை அக்
கள்வன் பகட்டுர வோன்அடி
யென்று கருதுவனே.
கொளு
சுவடுபடு கடத்துச் செவிலி கண் டறிந்தது.
இதன் பொருள் : அடிச்சுவடு காட்டிச் செவிலித் தாயானவள் சொல்லியது.
தெளிவுரை : தெளிந்த செலமதாகிய கங்கையைத் திருமுடியிலே உடையவன், அவனுடைய சிதம்பரத்தைச் சேராதாரைப் போல முன்னாள் உடைத்தாகிய வலிய கல்விரவின உயர்ந்த நிலத்திடத்து, முற்பிறப்பிற் செய்த தீவினையுடைய நான் எடுத்து வளர்த்த அழகிதாகிய வலிதான வேலை ஒத்த கண்களை உடையவளின் சிறிய அடி இங்கு இவை. இவ்வடி அக் கள்வனாகிய யானையை ஒத்த வலியை உடையவனுடைய அடிகளாக நினையாநின்றேன்.
45. சுவடு கண்டிரங்கல்
சுவடு கண்டிரங்கல் என்பது, சுவடு கண்டறிந்து அவ்விடத்தே நின்று, தவிசின் மேல் மிதிப்பினும் பதைத்துப் கொப்புட் கொள்ளா நின்ற இக்கால் மலர், இன்னொரு விடலை பின்னே போதற்குத் தகுங்காலை எவ்வாறு ஒத்தன என அடிச் சுவடு கண்டு இரங்கா நிற்றல்.
238. பாலொத்த நீற்றம் பலவன்
கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கின்
பதைத்தடி கொப்புள்கொள்ளும்
வேலொத்த வெம்பரல் கானத்தின்
நின்றோர் விடலைபின்போம்
காலொத் தனவினை யேன்பெற்ற
மாணிழை கால்மலரே.
கொளு
கடத்திடைக் காரிகை அடித்தலம் கண்டு
மன்னருள் கோடாய் இன்னல் எய்தியது.
இதன் பொருள் : காட்டிடத்து நீர்மையுடையாளுடைய அடித்தலத்தைப் பார்த்து நிலைபெற்ற அருளுடைய செவிலித் தாயானவள் வருத்தமுற்றது.
தெளிவுரை : வெள்ளிய திருநீற்றையுடைய திருவம்பல நாதன் கழல் தொழாதவர்கள் பிறவியில் உற்ற வியாதியைப் போல அழகிய சயனத்தினை மிதிக்கில் நடுங்கி, அடிகளானவை கொப்புளங் கொள்ளா நிற்கும். வேலை ஒத்த வெய்ய பரல் உடைத்தாகிய காட்டிடத்தே இப்பொழுது ஒரு நாயகன் பின்னே போகிற கால்களாகிய மலர்கள். தீவினையைச் செய்த நான் பெற்ற மாட்சிமைப்பட்ட ஆபரணங்களை உடையவள் காலாகிய மலர்கள் இப்படியிருந்தன.
46. வேட்ட மாதரைக் கேட்டல்
வேட்ட மாதரைக் கேட்டல் என்பது, சுவடு கண்டு இரங்கா நின்று அது வழியாகச் செல்லா நின்றவள், இவ்வாறு அறியாப் பருவத்தளாய்த் தனக்கு இயைபு இல்லாத சுரத்தின்கண் அயலான் ஒருவனுடன் போந்தாள். அவளை நீ கண்டாயோ என வேட்ட மாதரைக் கேளா நிற்றல்.
239. பேதைப் பருவம் பின்சென்
றதுமுன்றில் எனைப்பிரிந்தால்
ஊதைக்(கு) அலமரும் வல்லியொப்
பாள்முத்தன் தில்லையன்னாள்
ஏதிற் சுரத்தய லானொ(டு)இன்(று)
ஏகினள் கண்டனையே
போதிற் பொலியும் தொழிற்புலிப்
பல்குரல் பொற்றொடியே.
கொளு
மென்மலர் கொய்யும் வேட்ட மாதரைப்
பின்வரு செவிலி பெற்றி வினாயது.
இதன் பொருள் : மெல்லிய மலரைக் கொய்கிற வேட்டப் பெண்களைப் பின் சென்ற செவிலித் தாயானவள் முறைமையாலே கேட்டது.
தெளிவுரை : போதால் பொலிவு பெற்ற தோழிலினையும் புலிப்பல் தாலியையும் உடைய அழகிய வளைகளையும் உடையாய். பேதைப் பருவமானது கழிந்தது. முற்றத்திடத்தே என்னை விட்டு நீங்கின பொழுது காற்றால் மயங்குகிற வல்லிசாதத்தை ஒப்பவள்; அழிவில்லாதவனுடைய பெரும்பற்றப் புலியூரை ஒப்பவள். தன்னுடைய மென்மைக்கு எத்தனையோ அந்நியமாயிருக்கிற அரிய வழியிடத்தே ஓர் அயலானவன் பின்னே இப்போது போனாள். கண்டாயாகில் சொல்லுவாயாக.
47. புறவொடு புலத்தல்
புறவொடு புலத்தல் என்பது வேட்ட மாதரைக் கேட்டு அதுவழியாகச் செல்லா நின்றவள், ஏதிலனுமாய்த் தமியனுமாய் அவன் சொற்றுணையாக வெய்ய சுரத்தே மாதர் சென்றால், எழிலையுடைய புறவே, இது நினக்குத் தகுதியன்றென்று கூறிற்றிலை; நீ வாழ்வாயாக எனப் புறவொடு புலந்து கூறா நிற்றல்.
240. புயலன்(று) அலர்சடை ஏற்றவன்
தில்லைப் பொருப்பரசி
பயலன் தலைப்பணி யாதவர்
போல்மிகு பாவம்செய்தேற்(கு)
அயலன் தமியன்அம் சொல்துணை
வெஞ்சுரம் மாதர்சென்றால்
இயலன்(று) எனக்கிற் றிலைமற்று
வாழி எழிற்புறவே.
கொளு
காட்டுப் புறவொடு வாட்டம் உரைத்தது.
இதன் பொருள் : காட்டில் வாழ்கிற புறவுடன் தன்னுடைய மெலிவைச் சொன்னது.
தெளிவுரை : நீரை அன்று விரிந்த சடையில் ஏற்றுக் கொண்டவன், பெரும்பற்றப்புலியூரில் உளனாகியும் மலையரையன் மகளுக்குத் துணையாக உள்ளவன். அவனை வணங்காதாரைப் போலவே மிகுந்த பாவம் பண்ணின எனக்கு அயலனுமாயிருந்தான். அழகிய சொல்லே துணையாக வெய்ய வழியே மாதானவள் போனாள்; இது இயல்பு அன்று என்று சொல்லிற்று இல்லையே; மற்று வாழ்வாயாக. அழகிய புறவே ! இயல்பு அல்லவென்று சொல்லிற்றிலை என்றது.

48. குரவொடு வருந்தல்
குரவொடு வருந்தல் என்பது, புறவொடு புலந்து போகா நின்றவள், என்னுடைய பாவை நின்னுடைய முன்னே இக்கொதிக்கும் கடத்தைக் கடப்பக் கண்டு நின்றும் இன்னவாறு போனாளென்று எனக்கு வாயும் திறக்கின்றிலை. இது நினக்கு நன்றோ எனக் குரவொடு வாடி உரையா நிற்றல். (குரவம் - குராமரம். பாவை போலப் பூத்து நிற்கும் குராமரத்தைக் குறிக்கின்றார்.)
241. பாயும் விடையோன் புலியூர்
அனையஎன் பாவைமுன்னே
காயும் கடத்திடை யாடிக்
கடப்பவும் கண்டுநின்று
வாயும் திறவாய் குழைஎழில்
வீசவண்(டு) ஓலுறுத்த
நீயும்நின் பாவையும் நின்று
நிலாவிடும் நீள்குரவே.
கொளு
தேடிச் சென்ற செவிலித் தாயர்
ஆடற் குரவொடு வாடி உரைத்தது.
இதன் பொருள் : தேடிச் சென்ற செவிலித் தாயானவள் அசைந்த குரவோடு நேர்ந்து சொல்லியது.
தெளிவுரை : குழையானது அழகைத் தர, வண்டுகள் ஆரவாரிப்ப, நீயும் நின் பிள்ளைகளுமாக நின்று நிலைபெறுகிற நீண்ட குரவே ! கதிபாய்ந்து செல்லுகிற இடபத்தினையுடையவனுடைய புலியூரினை ஒத்த என்னுடைய பிள்ளையானவள் நின்று கொதிக்கிற வழியில் அசைந்து போகக் கண்டு வைத்தும் வார்த்தையும் சொல்லுகிறாய் இல்லை. என்ன இப்படிக் கொத்த அரிய வழியில் போகக் கண்டதே அன்றி நான் வந்த இடத்திலும் ஒரு வார்த்தையும் சொல்கின்றிலை.
49. விரதியரை வினாவல்
விரதியரை வினாவல் என்பது, குரவொடு வருந்திச் செல்லா நின்றவள், பத்தியர் போல ஒரு பித்தி தன் பின்னே வர ஒரு பெருந்தகை முன்னே செல்லக் கண்டீரோ என விரதியரை வினாவா நிற்றல்.
242. சுத்திய பொக்கணத்(து) என்(பு)அணி
கட்டங்கம் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி
யூர்அம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு
மாந்த பயோதரத்தோர்
பித்திதன் பின்வர முன்வரு
மோஓர் பெருந்தகையே.
கொளு
வழிவரு கின்ற மாவிர தியரை
மொழிமின்கள் என்று முன்னி மொழிந்தது.
இதன் பொருள் : வழியே வாரா நின்ற பெருவிரதம் பூண்டவர்களைச் சொன்மின் என்று எதிர்ப்பட்டுச் சொல்லியது.
தெளிவுரை : இப்பி வடிவாகச் செய்யப்பட்ட சுத்த மடம் பட்ட(?) பொக்கணத்தையும் எலும்பாகிய ஆபரணங்களையும் கட்டங்கமாகிய படைக்கலத்தையும் சூழ்ந்த சடையினையும் வெள்ளிதாகத் திருநீறாறாலே பொலிவு பட்ட மேனியையும் உடையீர் ! பெரும்பற்றப்புலியூரில் திருஅம்பலநாதனுக்கு மிக்க பத்தியானவர் களைப் போல பணைத்துச் செம்மாந்த முலைகளை உடைய ஓர் அறியாதவள் தன் பின்னே வர முன்னே வரா நின்றானோ ஒரு பெரிய தகைப்பாட்டை யுடையவன்; சொல்வீராக வேண்டும்.
50. வேதியரை வினாவல்
வேதியரை வினாவல் என்பது, விரதியரை வினாவி அது வழியாகச் செல்லா நின்றவள், மான் போலும் நோக்கினையும் மயில் போலும் சாயலையும் உடைய மான் ஓர் ஏந்தலோடு நும் எதிரே வரக் கண்டீரோ என வேதியரை வினாவா நிற்றல்.
243. வெதிரேய் கரத்துமென் தோல்ஏய்
சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
அதிரேய் மறையின்இவ் வாறுசெல்
வீர்தில்லை அம்பலத்துக்
கதிரேய் சடையோன் கரமான்
எனஒரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே
வெறுப்பவொர் ஏந்தலோடே.
கொளு
மாதின்பின் வரும்செவிலி
வேதியரை விரும்பி வினாவியது.
இதன் பொருள் : மகள் பின்னே தேடி வருகிற செவிலித்தாய் பிராமணரை வினாவிக் கேட்டது.
தெளிவுரை : மூங்கில் தண்டு பொருந்தின கையினையும் மெல்லிய தோல் பொருந்தின கழுத்தினையும் வெள்ளிய பூண் நூலினையும் மேகத்தின் முழக்கத்தினை ஒத்த வேதத்தினையும் உடையீராய் இந்த வழியில் நடக்கிறவர்களே ! பெரும்பற்றப்புலியூரில் திருவம்பலத்தே உளனாகிய ஒளி பொருந்தின திருச்சடா பாரத்தையுடையவன் கையில் ஏந்தின மானை நிகர்த்த ஒரு மான் நோக்கினையுடையவள் மயிலைப் போலே எதிரே வாரா நின்றாளோ? வந்தாள் ஆகில் சொல்லுவீராக வேண்டும்.











































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக