ராதே கிருஷ்ணா 26-11-2011
ஐம்பெரும்காப்பியம் - சிலப்பதிகாரம்
இளங்கோஅடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
புகார்க் காண்டம்
2. மனையறம்படுத்த காதை
ஐம்பெரும்காப்பியம் - சிலப்பதிகாரம்
ஐம்பெரும் காப்பியம் | ||
ஐம்பெரும் காப்பியம் | ||
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
சிலப்பதிகாரம் | |
இளங்கோஅடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்நவம்பர் 11,2011
பழந்தமிழ் இலக்கியங்களில், காப்பியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை காப்பியம் எனப்பட்டன. இவற்றை ... மேலும்
புகார்க் காண்டம்நவம்பர் 14,2011
1. மங்கல வாழ்த்துப் பாடல்
(சிந்தியல் வெண்பாக்கள்)
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகுஅளித்த ... மேலும் 2. மனையறம்படுத்த காதைநவம்பர் 14,2011
(நிலைமண்டில ஆசிரியப்பா)
உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர் மலிந்த பயம்கெழு மாநகர் முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளத்தது ... மேலும் |
இளங்கோஅடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
பழந்தமிழ் இலக்கியங்களில், காப்பியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை காப்பியம் எனப்பட்டன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐம்பெருங் காப்பியங்கள் தோன்றின. இந்த ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும். இவை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று குறிப்பிடுவார்கள். இவ்விரண்டும் கதை நிகழ்ச்சியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மேலும் சமகாலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இது சேரன் செங்குட்டுவன் சகோதரர் இளங்கோஅடிகள் இயற்றிய காப்பியமாகும். அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு வாழ்ந்தவர் இளங்கோ அடிகள். கோவலன், கண்ணகி,மாதவி இக் கதையில் முக்கிய பாத்திரங்கள்.கண்ணகி கற்பு நெறி தவறாமல் வாழும் பத்தினி .மாதவி பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய். கோவலன் தனது செல்வம் அனைத்தையும் முறை இல்லாமல் செலவழித்து கடைசியில் மிஞ்சிய தனது மனைவியின் காற்சிலம்பை விற்க மதுரைக்கு வருகிறான். கடைவீதியில் அதை விற்க முயலும் போது அரண்மனைக் காவலர்களால் அரசியின் சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மன்னர் முன் விசாரணை கைதியாக நிற்க வைக்கப்படுகிறான். மன்னன் கோவலன் விற்க முயன்ற சிலம்பு அரசியின் சிலம்பு என குற்றம் சாட்ட,கோவலன் அது தனது மனைவி கண்ணகி யின் காற்சிலம்பு என மறுக்கிறான். ஆனால் மன்னனின் தவறான தீர்ப்பால் கொலை செய்யப்படுகிறான்.கணவன் கொலையுண்ட செய்தி கேட்டு கண்ணகி கோபாவவேசமாக அரசனின் அரச சபைக்கு வருகிறாள். மன்னனின் தீர்ப்பு தவறு என நீதி கேட்கிறாள். மன்னன் தனது மனைவியின் காற்சிலம்பில் உள்ளது முத்து என கூற தனது சிலம்பில் உள்ளது மாணிக்க பரல்கள் என சிலம்பை வீசி உடைத்து நிருபிக்கிறாள். நீதி தவறிய மன்னன் அக்கணமே உயிர் விடுகிறான்.அரசியும் உடன் உயிர் விடுகிறாள்.கண்ணகி மதுரை நகரமே முதியவர், குழந்தைகள்,பெண்கள் தவிர மற்ற அனைத்தும் (மதுரை நகரமே) தீக்கிரையாக சபிக்கிறாள். பதிகம் குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக் குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப் பொலம்பூ வேங்கை நளங்கிளர் கொழுநிழல் ஒருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினிக் - 5 கமரர்க் கரசன் தமர்வந் தீண்டிஅவள் காதற் கொழுநனைக் காட்டி அவளொடெங் கட்புலங் காண விட்புலம் போய திறும்பூது போலுமஃ தறிந்தருள் நீயென அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன் - 10 யானறி குவனது பட்டதென் றுரைப்போன் ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப் பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக் கோவல னென்பானோர் வாணிகன் அவ்வூர் நாடக மேத்தும் நாடகக் கணிகையொ -15 டாடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக் கண்ணகி யென்பாள் மனைவி அவள்கால் பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப் பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர் மாட மதுரை புகுந்தனன் அதுகொண்டு - 20 மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன் பொன்செய் கொலலன் றன்கைக் காட்டக் கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு யாப்புற வில்லைஈங் கிருக்கென் றேகிப் பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக் - 25 கண்டனன் பிறனோர் கள்வன் கையென வினைவிளை காலம் ஆதலின் யாவதுஞ் சினையலர் வேம்பன் தேரா னாகிக் கன்றிய காவலர்க் கூஉயக் கள்வுனைக் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் - 30 கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி நிலைக்களங் காணாள் நெடுங்கணீர் உகுத்துப் பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற முத்தார மார்பின் முலைமுகந் திருகி நிலைகெழு கூடல் நீளெரி ஊட்டிய - 35 பலர்புகழ் பத்தினி யாகு மிவளென வினைவிளை கால மென்றீர் யாதவர் வினைவிளை வென்ன விறலோய் கேட்டி அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க் கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் - 40 வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன் ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக் கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய் முதிர்வினை நுங்கட்கு முடிந்த தாகலின் - 45 முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவனொடு சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச் சங்கம னென்னும் வாணிகன் மனைவி இட்ட சாபங் கட்டிய தாகலின் வாரொலி கூந்தனின் மணமகன் றன்னை - 50 ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவிற் காண்ட லில்லெனக் கோட்டமில் கட்டுரை கேட்டனன் யானென அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம் - 55 உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி காரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுளென - 60 முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே யருளுகென் றாற்கவர் மங்கல வாழ்த்துப் பாடலுங் குரவர் மனையறம் படுத்த காதையு நடநவில் மங்கை மாதவி அரங்கேற்று காதையும் - 65 அந்தி மாலைச் சிறப்புச்செய் காதையும் இந்திர விழவூ ரெடுத்த காதையும் கடலாடு காதையும் மடலவிழ், கானல் வரியும் வேனில்வந் திறுத்தென மாதவி இரங்கிய காதையுந் தீதுடைக் - 70 கரனாத்திற முரைத்த காதையும் வினாத்திறத்து நாடுகாண் காதையும் காடுகாண் காதையும் வேட்டுவ வரியும் தோட்டலர் கோதையொடு புறஞ்சேரி யிறுத்த காதையும் கறங்கிசை ஊர்காண் காதையும் சீர்சால் நங்கை - 75 அடைக்கலக் காதையும் கொலைக்களக் காதையும் ஆய்ச்சியர் குரவையும் தீத்திறங் கேட்ட துன்ப மாலையும் நண்பகல் நடுங்கிய ஊர்சூழ் வரியும் சீர்சால் வேந்தனொடு வழக்குரை காதையும் வஞ்சின மாலையும் - 80 அழற்படு காதையும் அருந்தெய்வந் தோன்றிக் கட்டுரை காதையும் மட்டலர் கோதையர் குன்றக் குரவையும் என்றிவை அனைத்துடன் காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் வாழ்த்து வரந்தரு காதையொடு - 85 இவ்வா றைந்தும் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசா லடிகள் அருள மதுரைக் கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென். - 90 பதிகம் அஃதாவது இந்நூலின்கட்போந்த பொருளை நிரலாகத் தொகுத்துக் கூறும் சிறப்புப் பாயிரம் என்றவாறு. பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத் தொகுதி யாகச் சொல்லுத றானே என்பதுமுணர்க. இனி, பதிகம் என்ற சொல் பாயிரம் என்னும் பொருட்டுமாகும் என்பதனை, முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம், எனவரும் நன்னூற் சூத்திரத்தால் உணர்க. பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. அவற்றுள் இப்பதிகம் இந்நூற்கேயுரிய சிறப்புப் பாயிரம் ஆகும். சிறப்புப் பாயிரம் நூலாசிரியனாற் கூறப்படாது என்பதும், நூலாசிரியனின் ஆசிரியர் முதலிய பிறராற் செய்யப்படும் என்பதும் நன்னூலால் அறியப்படும். ஓருந் தமிழ் ஒருமூன்று முலகின்புற வகுத்துச் சேரன் தெரித்த இச்சிலப்பதிகாரத்திற் சேர்ந்த பொருள் ஆருந் தெரியத் தொகுத்துரைத்து இப்பதிகஞ்செய்த சான்றோர் பெயர் முதலியன அறிந்திலேமாயினும், இப்பதிகம் நூலாசிரியராகிய இளங் கோவடிகளாராற் செய்யப்பட்டிலது; பிறசான்றோராற் செய்யப்பட்டது என்பதனை ஈண்டுக் குறிக்கொண்டுணர்க. இனிப் பதிகம் நூலாசிரிய ரானும் செய்யப்படும் என்பதனைச் சீவக சிந்தாமணி யென்னும் செந்தமிழ் வனப்புநூற்பதிகம் அதனாசிரியராகிய திருத்தக்க தேவராற் செய்யப் பெற்றிருத்தலால் அறிகின்றோமெனினும், பதிகம் நூலாசிரியராற் செய்யப்படாதென்பதற்குக் காரணம் தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான் தற்புகழ்தல் தகுதியன்றே என்பது கருதியேயாம். ஆகவே, நூலாசிரியன் பதிகம் செய்யுங்கால் அவையடக்கியல்பற்றித் தான் தற்புகழாது தனது நூற்பொருளைத் தொகுத்துக்கூறுதல் அமையும் என்பதும் அவ்விதியாலேயே பெறப்படுதலின் இவ்வாற்றால் திருத்தக்க முனிவர் தம் நூற்குத் தாமே (பாயிரம்) பதிகம் செய்தனர் என்றறிக. இச்சிலப்பதிகாரத்திற்குப் பதிகம் செய்தார் பிறரே; அடிகளார் செய்திலர் என்பதை இப்பதிகத்தின் உரையின்கண் இன்றியமையாத விடத்தே கூறுதும். ஆண்டுக் கண்டுகொள்க. 1-9 : குணவாயில்........அறிந்தருள்நீயென (இதன்பொருள்) குடக்கோச் சேரல் அரசு துறந்து குணவாயில் கோட்டத்து இருந்த இளங்கோ அடிகட்கு - முத்தமிழ் நாட்டின் கண் குடக்கின்கண் அமைந்த சேர நாட்டிற்கு மன்னனாகிய சேரன் செங்குட்டுவனுக்கும், ஒருகாரணத்தால் தமக்குரிய அரசுரிமையையும் பிறவற்றையும் ஒருங்கே துறந்து திருக்குணவாயில் என்னும் கோயிலின்கண் நோற்றிருந்த சான்றாண்மை மிக்கவரும் அச் சேரலுக்குத் தம்பியாதலின் இளங்கோ என்னும் திருப்பெயருடையாருமாகிய அடிகளார்க்கும், குன்றக்குறவர் ஒருங்குடன் கூடி -அவர்தாம் அரசியற் சுற்றத்துடன் மலைவளங்காணச் சென்று பேரியாற்றடை கரை இருமணல் எக்கரிடத்தே ஒருங்கிருந்துழி ஆங்கு மலையிடத்தே வாழ்வோராகிய குறவர் எல்லாம் ஒருங்கே திரண்டு சென்று வணங்கியவர் செங்குட்டுவன் திருமுக நோக்கி, கொற்றவ! ஈதொன்று கேட்டருள்க; பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் - எம் மூர்க்கணித்தாகிய நெடுவேள் குறத்தின்கண் பொன்னிறமுடைய பூக்கள் மலிந்தவொரு வேங்கை மரத்தினது நன்மைமிக்க கொழுவிய நீழலிலே; ஒருமுலை இழந்தாள் ஓர் திருமாபத்தினிக்கு -தன் திருமுலைகளுள் ஒன்றனை இழந்தவளாய் வந்து நின்ற திருமகள் போல்வாளும் சிறந்த பத்தினியுமாகிய ஒருத்தியைக் கண்டோம்; யாங் கண்டு நிற்கும் பொழுதே அவள் பொருட்டு; அமரர்க்கரசன் தமர் வந்து ஈண்டி அகல் விசும்புளார் கோமானாகிய இந்திரனுடைய சுற்றத்தார் வானத்தினின்று மிழிந்து வந்து அவள் முன்குழீஇ; அவள் காதல் கொழுநனைக் காட்டி - வல்வினை வந்துறுத்த காலை மதுரைக் கண் அவள் இழந்த கணவனையும் அவட்குக் காட்டி, பீடு கெழு மந்நங்கையின் புகழைப் பாராட்டித் தமது வானவூர்தியின்கண் கணவனோடு ஏற்றி; அவளொடு எம் கண்புலம் காண விண்புலம் போய அது - அத்திருமாபத்தினியோடு அவ்வமரர்கள் வலவனேவா வானவூர்தியின்கண் எளிய மாந்தராகிய எம் ஊன் கண்ணும் கண்கூடாகக் காணும்படி வானிடத்தே சென்ற அக் காட்சியையும் கண்டேம் அக்காட்சி தானும்; இறும்பூது போலும் எளியேங்கட்குப் பெரிதும் மருட்கை தருவதொன்றாயிருந்தது; நீ அறிந்து அருள் என - எம்பெருமான் இந்நிகழ்ச்சியைத் திருவுளம் பற்றியருளுக ! என்று கூறி மீண்டும் வணங்கா நிற்ப என்க. விளக்கம் 1-3 : குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த இளங்கோவடிகள் என இயைக்க. குடக்கோ. தமிழகத்தின் மேற்றிசைக் கண்ணதாகிய சேர நாட்டு மன்னன்; அவனாவான் சேரன் செங்குட்டுவன் என்க. சேரல். சேர மன்னன். சேரல் இளங்கோவடிகள் என்புழிச் சேரனும் இளங்கோவடிகளும் ஆகிய இருவர்க்கும் எனல் வேண்டிய எண்ணும்மையும் ஆக்கச் சொல்லும் தொகைச்சொல்லும் தொக்கன. இனி, சேரலும் இளங்கோவடிகளும் மலைவளங்காணச் சென்று பேரியாற்றடைகரை யிடுமணல் எக்கரின்கண் ஒருங்கிருந்துழி அவ்விருவர்க்கும் குறவர் வந்து குழீஇக் கூறி பொலம்... அறிந்தருள்நீ எனச் சேரலை நோக்கிக்கூற என்பது கருத்தாகக் கொள்க. குன்றக் குறவர், குன்றுகளில் வாழ்வோராகிய குறவர். இனி குன்றம், என்றது திருச்செங்குன்று என்னும் மலை என்பர் அடியார்க்கு நல்லார். திருச்செங்கோடு என்பாருமுளர் என்று கூறி, அது பொருந்தாது என்று மறுத்துங் கூறியுள்ளார். 4. பொலம்பூவேங்கை - பொன்னிறமான பூவையுடைய வேங்கை. திருமாபத்தினிக்கு நிழலாகும் பேறுபெற்றமையின் நலங்கிளர் நிழல் என்று விதந்தார். 5. தாம் கண்கூடாகக் கண்டமை தோன்ற ஒரு முலையிழந்தாள் என்று குறவர் கூறினர் என்க. மேலும் கண்ணகியாரே இக்குன்றக் குறவர்க்கு மணமதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்துருத்தகாலை கணவனை அங்கிழந்து போந்த கடுவினையேன் யான் என்றறிவித்தமையின் ஓர் திரு மா பத்தினி என மூன்று அடைமொழிகளால் விதந்தோதினர் என்க. 6. அமரர்க்கரசன் தமர் என்றது இந்திரனுடைய அரசியற் சுற்றத்தாரை. 7-9. காதற்கொழுநன் என்றது அப் பத்தினி இழந்த காதற் கணவனை என்பதுபட நின்றது. அமரர்கள் மாந்தர் கண்களுக்குப் புலப்படாராகவும், எங் கண்களுக்குப் புலப்படலாயினர் என்று வியப்பார் எங்கட் புலம்காண என்றார். கட்புலம் காண என்றது கட்குப் புலப்பட என்றவாறு. புலம் ஈண்டு ஒளி. அதாஃவது உருவம். இறும்பூது மருட்கை. இந்நிகழ்ச்சி யாம் கண்கூடாகக் கண்டதேயாயினும் இக் காட்சி மெய்யோ? பொய்யோ? என்று மருள்கின்றோம் என்பார் போய அது இறும்பூது போலும் என்றனர். போய+அது என்று கண்ணழித்துக் கொள்க. போனதாகக் கண்ட அக்காட்சி என்பது பொருள். போலும் . ஒப்பில் போலி. இனி, அறிந்தருள் நீ என்றது, இங்ஙனம் இந்நாட்டின் நிகழ்ந்த இந் நிகழ்ச்சி இந்நாட்டிற்குத் தீங்கு பயக்குமோ? நன்மை பயக்குமோ? யாமேதுமறிகிலேம் அறிந்து ஆவன செய்யும் கடப்பாடுடைய நீ அறிந்தருள்க என்பதுபட நின்றது. என்னை, முலை யிழந்து வந்தமையால் தீமைபயக்கும் என்றும், வானவர்தமர் வந்து கணவனைக் காட்டி அழைத்துப் போனமையால் நன்மை பயக்கும் என்றும், இருவகைக்கும் இந்நிகழ்ச்சி பொருந்துதலால் யாங்கள் இவற்றுள் ஒன்று துணிகிலேம். இவற்றைத் துணியுந் தகுதியுடைய நீயே அறிந்தருள்க என்பதே அக் குறவர் கருத்தாகலின் என்க. இது மருட்கை என்னும் மெய்ப்பாடு. 10-11 : அவனுழை ........ ...... உரைப்போன் (இதன் பொருள்.) அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன் அது கேட்ட செங்குட்டுவன்றானும் பெரிதும் வியப்புற்றுத் தன் பக்கலிலுள்ளாரை நோக்க அப்பொழுது அவ்வரசன் மருங்கிலிருந்த குளிர்ந்த தமிழ்மொழிப்புலமையுடையோனாகிய சாத்தன் என்பான்; யான் அது பட்டது அறிகுவன் என்று உரைப்போன் அரசனுடைய குறிப்பறிந்து வேந்தர் பெருமானே ! யான் அந்நிகழ்ச்சியினது வரலாற்றினை நன்கு அறிந்துளேன் ஆகலின் கூறுவல் கேட்டருள்க என்று தொடங்கி அதனைக் கூறுபவன் என்க. (விளக்கம் 1) : அவன் - சேரன் செங்குட்டுவன். அவன் என்பது இளங்கோவடிகளைச் சுட்டியதாகக் கருதுவர் உயர்திரு நாட்டாரவர்கள். அது பொருந்தாது என்னை? இப்பதிகஞ் செய்த சான்றோர் தொடக்கத்தே இளங்கோவடிகள் என அடிகளாரைக்கூறிவைத்து வழக்கினாகிய உயர்சொற்கிளவியாகிய ஒருவரைக் கூறும் அப்பன்மைக் கிளவிக்குப் பொருந்தாத அவன் என்னும் ஒருமைச் சுட்டாற் சுட்டார் ஆதலின் என்க; பின்னும் இவர் அடிகளாரைப் பன்மையாலேயே அடிகள் நீரே அருளுகென்றாற்கு அவர் என்றே சுட்டுதலும் உணர்க. ஈண்டும் குன்றக்குறவர் அறிந்தருள்நீ எனச் செப்பியது சேரன் செங்குட்டுவனுக்குப் பொருந்துவதன்றி அடிகளார்க்குப் பொருந்தாமையும் அறிக. ஆகவே குன்றக்குறவர் சேரனும் அடிகளாரும் ஒருங்கிருந்துழிச் சென்று வணங்கி அவருள் சேரனுக்கே கூறினர் என்னும் எமது கருத்தே பொருத்தமாம். இனி, பழையவுரையாசிரியருள் வைத்து அரும்பதவுரையாசிரியர், குணவாயிற் கோட்டத்துக் கடவுளர் முன்னர்த் துறந்திருந்த இளங்கோவடிகளுக்குக் கண்ணகி வானவர் போற்றத் தன் கணவனோடு கூடியது கண்டு செங்குட்டுவனுக்கு உரைத்த குறவர் வந்து எல்லா மறிந்தோய் இதனை அறிந்தருள் என்று கூறிப் போக, பின்பு செங்குட்டுவனைக் கண்டு போந்து அடிகளுழை வந்தசாத்தன் அது பட்டவாறெல்லாம் கூற என்றோதுவர். இதுவும் பொருந்தாமைக்கு முன் கூறிய காரணம் ஒக்கும்; மேலும் செங்குட்டுவனுக்குக் குன்றக்குறவர் கூடிவந்து பேரியாற்றிடுமணல் எக்கரிடைக் கண்டு கூறியவர் மீண்டும் அரசு துறந்திருந்த அடிகளார்க்குக் கூறக் குணவாயிற் கோட்டத்திற்கு ஒருங்குடன் கூடிவந்து போதலும்; பேரியாற்றிடு மணல் எக்கரிடத்தே குறவர் சேரனைக் கண்டு கூறியபொழுது ஆங்கு அவனுழையிருந்த தண்டமிழ்ச் சாத்தனே ஈண்டும் அக்குறவர் கூறும் பொழுது வந்திருத்தலும் இன்னோரன்ன பிறவும் நிகழ்தற்கியையா நிகழ்ச்சிகள் (அசம்பாவிதம்) என்க. இனி, ஆசிரியர் அடியார்க்குநல்லார்தாமும் அரும்பதவுரை யாசிரியர் கருத்துப் பொருந்தாதெனக் கண்டு, தாம் வேறு கூறினர் ஆயினும் அவர் தாமும் குறவர் இளங்கோவடிகளை நோக்கி அறிந்தருள் என்பதும் பொருந்தாதென வறிக. 11. அதுபட்டது - அந்நிகழ்ச்சியினது வரலாறு. அது என்றது ஓரு முலையிழந்தனை என்பார் அடியார்க்கு நல்லார். 12-20 : ஆரங்கண்ணி.............புகுந்தனன் (இதன் பொருள்) : ஆரங்கண்ணிச் சோழன் மூதூர் பேரா சிறப்பின் புகார் நகரத்து - வேந்தே ! போந்தை வேம்பே ஆர் எனவரும் மூவகைப்பட்ட பூக்களுள் வைத்து (ஆர் என்னும்) ஆத்திப்பூங் கண்ணியை அடையாளமாகக் கொண்டு தலையிற் சூடிய சோழ மன்னனுடைய பழைய நகரங்களுள் வைத்து எக்காலத்தும் நீங்காத சிறப்பினையுடைய பூம்புகார் என்னும் நகரத்தின்கண் வாழுகின்ற பெருங்குடிவாணிகருள் வைத்து; கோவலன் என்பான் ஓர் வாணிகன்-கோவலன் என்னும் பெயரையுடைய வாணிகன் ஒருவனிருந்தனன்; அவ்வூர் நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு ஆடிய கொள்கையின் - அவன் அந்நகரத்திலேயே வாழ்பவளும் நாடகம் என்னும் கலையே தன்னைப் பாராட்டற்கியன்ற புகழொடு நாடகமாடுகின்ற பொதுமகளுமாகிய மாதவி என்னும் நாடகக் கணிகையோடுகூடி யின்புறும் கோட்பாடுடைமை காரணமாக; அரும்பொருள் கேடு உற - தன் தாயத்தார் வழித் தனக்குக் கிடைத்த தேடற்கரிய பொருளெல்லாம் அழிந்தொழிந்தமையாலே பெரிதும் நாணி; மனைவி கண்ணகி என்பாள் - அவ்வாணிகன் மனைக்கிழத்தி கண்ணகி என்னும் பெயருடையவள் ஆவள்; அவள் கால் பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டி - அவள்பால் எஞ்சியிருந்த அவளுடைய காலணியாகிய சித்திரச் செய்வினையமைந்த சிலம்புகளை விற்று அப்பொருளை முதலாகக் கொண்டு இழந்த பொருளை ஈட்டவிரும்பி; பாடல் சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர் மாடமதுரை புகுந்தனன் - புலவர் சங்கமிருந்து பாடிய பாடல் சிறந்த சிறப்பினையுடைய பாண்டியனது மிக்க புகழையுடைய மதுரைமாநகரத்தே தன் மனைவியாகிய அக்கண்ணகியுடனே சென்று புகுந்தனன் என்க. (விளக்கம் 12) ஆரங்கண்ணி - ஆத்திமாலை. இது சோழ மன்னர்க்குரிய அடையாளப்பூ. இதனை, ...........உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப் போந்தை வேம்பே ஆர் என வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் எனவருந் தொல்காப்பித்தானும், (பொருள் - 13) கொல்களிறு ஊர்வர் கொலைமலி வாள்மறவர் வெல்கழல் வீக்குவர் வேலிளையர் - மல்குங் கலங்கல் ஒலிபுனல் காவிரி நாடன் அலங்கல் அமரழுவத்(து) ஆர் எனவரும் புறப் - வெண்பாவானும், (பொது) அறிக. 15. நாடகம் இவளாற் சிறப்பெய்துதலின் அக்கலையே இவளை ஏத்தும் என்றவாறு. கணிகை - பதியிலாள்; பொதுமகள் (16) ஆடிய கொள்கை - நுகர்ந்த கோட்பாடு. கொள்கையினால் என்க. அரும் பொருள்-ஈட்டுதற்கரிய பொருள். எனவே முன்னை யூழான், தாயப் பொருளாய்க் கிடைத்த பொருள் என்பதாயிற்று. (17) அவன் மனைவி கண்ணகி என்னும் பெயருடையாள் எனச் சுட்டுப்பெயர் பெய்துரைக்க. நாடகமேத்தும் கணிகை என்றவர் ஈண்டு மனைவி என்றொழியாது பெயரை விதந்து கூறியது அவளே இக்குறவராற் கூறப்பட்டவள் என்றறிவுறுத்தற்கென்க. இது முன்மொழிந்து கோடல் என்னும் உத்தி (18) பண் அமை சிலம்பு இசை பொருந்திய சிலம்புமாம். சிலம்பு பகர்தல் வேண்டி என்றது - எஞ்சிய அணிகலன் அதுவே ஆகலான் அதனைப் பகர்தல் வேண்டி என்பதுபட நின்றது. 19. ஊழ்வினை வந்துருத்தகாலை நல்லவும் தீயவாம் என்றுணர்த்தற்கு, பாடல்சால் சிறப்பின் பாண்டியன் எனவும், பெருஞ்சீர் மாட மதுரை எனவும் பாண்டியனையும் மதுரையையும் விதந்தோதினர். ஈண்டு அடியார்க்கு நல்லார் சிறப்பிற் பாண்டியனென்றும் பெருஞ்சீர் மாடமதுரையென்றும் அடிகள் புகழ்ந்தார் என்பர். இப்பதிகம் அடிகளாராற் செய்யப்பட்டிலது என்பது வெள்ளிடைமலையென விளங்கிக் கிடப்பவும் அவர் இவ்வாறு கூறியது வியத்தற்குரியதாம். 20-22 : அதுகொண்டு.......காட்ட இதன் பொருள் : அதுகொண்டு மன் பெரும் பீடிகை மறுகின் செல்வோன் - அங்ஙனம் முன்னாள் மதுரைபுக்க அக்கோவலன் மறுநாள் அச்சிலம்புகளுள் ஒரு சிலம்பை விற்கும் பொருட்டுக் கையிலெடுத்துக் கொண்டு அந்நகரத்து அங்காடி மறுகுகளில் வைத்து, மிகப்பெரிய மறுகிற் செல்பவன்; பொன்செய் கொல்லன் தன்கைக் காட்ட - ஆங்குத் தன்னெதிரே வந்த பொற்கொல்லன் ஒருவன் கையில் அச்சிலம்பைக் கொடுத்துக் காட்டா நிற்ப என்க. விளக்கம் : 20-21 : அது கொண்டு என்றார் அவன் கொடு போனது ஒற்றைச் சிலம்பு என்பது தோன்ற. மன்-மிகுதிப் பொருட்டு, மன்னைச் சொல்லுக்கு ஆசிரியர் தொல்காப்பியனார் மிகுதிப் பொருளுண்மை கூறிற்றிலரேனும் இடையியற் புறனடையால் பவணந்தி முனிவர் அச்சொற்கு அப்பொருள் உண்மை ஓதுதலும் உணர்க. இனி, பெரும் பீடிகைக்கு மன்னைச் சொல்லையும் அடையாக்கியதனால் மக்கள் வழக்குமிக்க அம் மாபெருந்தெருவிற் சென்றும், அவன் ஊழ்வினை அவனை விட்டிலது கண்டீர் என்றிரங்குவது இப்பதிக முடையார் குறிப்பென்று கோடலுமாம். பீடிகை மறுகு-அங்காடித் தெரு. 22. கைக்காட்ட . கையிற் கொடுத்து ஆராய்ந்து காணுமாறு செய்ய என்க. இது, அவன் அதனை நன்கு நோக்கி, இது பெருந்தேவியின் சிலம்பை ஒத்துளது என்று காண்டற்கும் அவ்வழி வஞ்சித்தற்கும் ஏதுவாதல் பற்றிக் கொல்லற்குக்காட்ட என்னாது கொல்லன் கைக் காட்ட என வேண்டா கூறி விதந்தார். இனி, அடியார்க்கு நல்லார் அது கொண்டென்றார்; அச்சிலம்பால் மேல்விளைவன தோன்ற; அஃது அநியாயபுரத்தே புகுகின்றவன் கூற்றத்தையும் உடன்கொண்டு புக்கான் என்றாற் போன்றிருந்தது என்பர். 23-26 : கோப்பெருந்தேவி........கள்வன் கையென இதன் பொருள் : இச்சிலம்பு கோப்பெருந்தேவிக்கு அல்லதை யாப்புறவு இல்லை - அங்ஙனம் காட்டியபொழுது அப்பொய்த் தொழிற் கொல்லன் அச்சிலம்பினது சித்திரச் செய்வினை யெல்லாம் புரிந்துடன் நோக்கி வஞ்சகமென்று நெஞ்சகத்தே வைத்துக் கோவலனை நோக்கி ஐய! இப் பெருவிலைச் சிலம்பு கோப்பெருந்தேவிக்கே ஆவதன்றிப் பிறர் அணியப் பொருந்துவதன்று காண் ஆதலால், ஈங்கு இருக்கஎன்று ஏகி-யான் சென்று இதுபற்றி விறல் மிகு வேந்தற்கு விளம்பி வருந்துணையும் உதோ விருக்கின்ற என் சிறுகுடிலின் அயலே இருந்திடுக ! என்று கூறிச் சென்று; பண்டு தான் கொண்ட சில் அரிச்சிலம்பினை-அரசனைக் கண்டு அடிவீழ்ந்து கிடந்து தாழ்ந்து பல வேத்தி முன்பு பணிக்களரியில் தான் வஞ்சித்துக் கொண்ட தேவியின் சிலம்பு பற்றி ஆராய்ச்சி சிறிது பிறந்து வருதலால் அவ்வஞ்சம் வெளிப்படா முன்னம் அப்பழியை இவ் வேற்று நாட்டான் மேலேற்றுவல் என்றெண்ணி; கண்டனன் பிறன் ஓர் கள்வன் கையென-வேந்தர் வேந்தே, பண்டு களவு போன தேவியாருடைய சிலவாகிய பரலிடப்பட்ட சிலம்பை இன்று அடிநாயேன் பிறர் நாட்டுக் கள்வன் ஒருவன் கையிற் கண்டேன் என்று கூற என்க. விளக்கம் 2-3 : யாப்புறவு - பொருந்தும். ஈங்கு என்று சுட்டியது அப்பொற் கொல்லன் குடிலுக்கருகான ஒரு கோயிலை. (25) சில்லரிச் சிலம்பு என்றது, பண்டு தான் வஞ்சித்துக் கொண்டுள்ள தேவியார் சிலம்பினை. இப்பகுதிக்கு ஆசிரியர் அடியார்க்கு நல்லார் வகுத்த விளக்கம் மிகவும் இனியன; அவையாவன :- தான் கொண்ட என்றார், தன்னெஞ்சறியத் தான் கொண்டதனை இங்ஙனம் கூறினான் என்பது தோன்ற; ஈங்கிருக்க என்றார், பிறிதோரிடத்தாயின் ஊர்காவலர் ஆராய்வர் என்று கருதினான் என்பது தோன்ற; என்று ஏகி என்றார், அவன் கருத்தும் முயற்சியுந் தோன்ற; சில்லரிச் சிலம்பினை என்றார் தொழிற்பன்மை தோன்ற; (ஈண்டுச் சில்லரி என்பதற்கு இவர் சிலவாகிய சித்திரத் தொழில்கள் எனப் பொருள் கொண்டனர் போலும்) பிறன் ஓர் கள்வன் கையிற் கண்டனன் என்றார், தன்னையும் கள்வன் என்றமை தோன்ற (இஃது ஆற்றவும் இன்பந்தரும் நுண்ணிய விளக்கமாகும்) 27-30 : வினைவிளை.........ஈங்கென இதன்பொருள் : வினை விளைகாலம் ஆகலின் - அது கோவலன் முற்பிறப்பிற் செய்த தீவினை வந்து தன் பயனை நுகர்விக்கும் காலமாக இருந்தமையாலே; சினை அலர் வேம்பன் யாவதும் தேரான் ஆகி - அரும்புகள் மலர்கின்ற புதிய வேப்பந்தாரணிந்த அப்பாண்டியன் அப்பொய்த் தொழிற் கொல்லன் கூற்றை ஒரு சிறிதும் ஆராயாதவனாய்; கன்றிய காவலர்க் கூய்-தந்தொழிலில் பயின்றடிப்பட்ட திறமுடைய காவலர் சிலரை அழைத்து; அக்கள்வனைக் கொன்று -நீயிர் இக்கொல்லனொடு சென்று இவனாற் காட்டப்படுகின்ற அக்கள்வனைக் கொன்று; அச்சிலம்பு - அவன் கைக்கொண்டுள்ள நம்மரண்மனைச் சிலம்பினை; ஈங்குக் கொணர்க என - இப்பொழுதே இங்குக் கொண்டு வரக்கடவீர் எனக் கட்டளையிடா நிற்ப என்க. விளக்கம் : வினைவிளை காலமாதலின் எனத் தண்டமிழ்ச் சாத்தனார் கூறியது-கோவலன் முற்பிறப்பிற் செய்த தீவினை வந்து தன் பயனை நுகர்விக்கும் காலம் அதுவாகலின் என்னும் பொருளுடையதாம். என்னை? பின்னர் வினைவிளை காலம் என்றீர் யாதவர் வினைவிளைவு எனச் சேரன் வினவுதலின் அச்சேரனும் வினை கோவலன் வினை என்றே கருதி வினவினன் என்பதும், அவ்வினாவிற்கு விடை கூறும் சாத்தனாரும், கோவலனுடைய ஊழ்வினையையே மதுரைமா தெய்வங் கூறத் தாங் கேட்டாங்குக் கூறுதலாலும் யாம் கூறுமுரையே பொருத்தமாம். இனி, அடியார்க்கு நல்லார் அங்ஙனம், அவன் சொல்லக்கேட்ட பாண்டியன் தான் முற்பவத்திற் செய்த தீவினை வந்து பலிக்கின்ற காலமாதலாலே ஒன்றையுந் தேரானாய் என்று கூறும் உரை பயில்வோர்க்கு மயக்கந்தருவதாயுளது. என்னை? பாண்டியன் தான் செய்த தீவினையாலே மயங்கித் தேரானாயினன் என்பது போன்று அவ்வுரை அமைந்துள்ளது. ஆயினும் அடியார்க்கு நல்லார் தான் முற்பவத்திற் செய்த தீவினை என்புழித் தான் என்னும் பொதுப் பெயர் மறுகிற் செல்வோன் என்னும் எழுவாயின் சுட்டுப் பெயர்ப்பொருள் பயந்து கோவலனையே குறித்து நின்றது எனக்கொள்க. பாண்டியனைக் குறித்திலது என்பதனை அவர் அதற்குக் கூறும் விளக்கவுரை புலப்படுத்தும். அவர் இதனானன்றே தென்னவன் தீதிலன் தேவர் கோமான் கோயில். நல்விருந்தாயினான் என்ற கருத்து மெனக் கொள்க எனவும் (38-44) விறலோய்........யானென் என்பதன் விளக்கவுரையில் வினைவிளைவு யாதென்று வினாவினாற்குப் பாண்டியன் வினைவிளைவு கூறிற்றிலர் எனவும், ஓதுதலின் அடியார்க்கு நல்லார் தான் முற்பவத்திற் செய்த தீவினை என்புழித்தான் என்னும் பொதுப் பெயரால் கோவலனையே குறித்தனர் என அமைதி காண்பாம். அடியார்க்கு நல்லார் இவன் சொன்ன அக்கள்வனைக் கொல்ல அச் சிலம்பையும் அவனையும் இப்பொழுதே இங்கே கொண்டு வருவீராக வெனச் சொல்லக் கருதினவன் காமபரவசனாய் இச்சிலம்பு இவள் ஊடல் தீர்க்கும் மருந்தாமென்னும் கருத்தால் வாய்சோர்ந்து கொன்று அச்சிலம்பை இப்பொழுதே கொணர்க என்று கூற என்றோதியவுரை நூலாசிரியரின் கருத்துணர்ந்து விரித்தோதிய நுண்ணிய இனியவுரையேயாகும். என்னை, ஆசிரியர் இளங்கோவடிகளாரும், அப்பாண்டியனிடம் பொற்கொல்லன் சென்று வஞ்சம் புணர்க்கும் அச் செவ்விதானும் அவன் காம பரவசனாய் இருக்கும் ஒரு செவ்வியாகவே புனைந்திருத்தலான் ஆசிரியன் நெஞ்சத்து ஆழ்ந்திருக்கும் கருத்துணர்ந் துரைத்த நுண்ணுரையேயாம் என்க. இனி, அடிகளார் சினையலர் வேம்பன் ஈண்டுத் தான் அரசியல் பிழைத்தான் என்று கருதுகின்றார் இப்பிழையின் வழியே அவனுக்கு அறம் கூற்றாயிற்று என்பது அவர் கொள்கையாகும். அடிகளார் உலகியலில் அரசராவோர் இத்தகைய செய்திகளிலே மிக எளிதாகவே தமது அறத்தினின்றும் வழுவி விடுகின்றனர். அதுவே பின்னே அவர் தம் அரசாட்சியைக் கவிழ்த்து விடுகின்றது. ஆதலால் அரசராயினோர் மிகவும் விழிப்புடனிருந்து ஆட்சிசெய்தல் வேண்டும் என்று அரசர்க்கு அறிவுறுத்தவே அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் வாய்மையையும் இக்காவியப் பொருள் மூன்றனுள் ஒன்றாகக் கொள்வாராயினர். இவ்வாறன்றிப் பாண்டியன் கேடுறற்கும் காரணம் ஊழ்வினையே என்று கொள்வது ஊழ்வினையின் இயல்பறியாதார் கொள்கையேயாம் என்க. என்னை? ஊழ்வினையானது நன்னெறியிற் செல்வாரைத் தீயநெறியிற் புகுத்தும் ஆற்றலுடையதன்று. ஈண்டுப் பாண்டியன் பொன்செய்கொல்லன் தன் சொற் கேட்ட மாத்திரையே ஆராயாது கோவலனைக் கொல்வித்தது அவன் பிழையேயன்றி ஊழின் பிழை என்று கொள்ளற்க. அடிகளார் கருத்தும் பாண்டியன் அரசியல் பிழைத்தான் என்பதேயாம் என நுண்ணிதின் உணர்க. இனி, அரசராதல் அறங்கூறவையத்தாராதல் வழக்குத் தீர்க்கும் பொழுது அவர் செய்யவேண்டிய அரசியன் முறையை, தொடைவிடை ஊழாத் தொடைவிடை துன்னித் தொடைவிடை ஊழிவை தோலாத் - தொடைவேட்டு அழிபடல் ஆற்றால் அறிமுறையென் றெட்டின் வழிபடர்தல் வல்ல தவை எனவரும் புறப்பொருள் வெண்பாமாலையான் (273) உணர்க. அதனாலன்றோ வழக்குரைகாதையில் பாண்டியன் தன் பிழையுணர்ந்துயீர் நீப்பவன் தான் செய்த பிழையை, பொன்செய் கொல்லன் றன்சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் மன்பதை காக்குந் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுளென உலகறிய அரற்றி மயங்கி வீழ்ந்தனன். இனி, மதுரைமாதெய்வம் கண்ணகியார்க்கு. தோழிநீ யீதொன்று கேட்டியெங் கோமகற்கு ஊழ்வினை வந்தக் கடை மாதரா யீதொன்று கேளுன் கணவற்குத் தீதுற வந்த வினை என இருவர் வீழ்ச்சிக்கும் ஊழ்வினையே காரணம் எனக் கூறிற்றாலோ எனின் அஃதொக்கும். இரண்டும் ஊழ்வினையே. கோவலன். முற்பிறப்பிற் செய்தது பாண்டியன் அற்றைநாள் முற்பகலிலேயே செய்தது இரண்டும் ஊழே ஆதலின், தெய்வம் அவ்வாறு கூறிற்று என்க. ஆயினும், பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை யின்மை பழி என்பதுபற்றி ஈண்டுக் கோவலன் பழிக்கப்பட்டிலன். அறிவறிந்தும் ஆள்வினையில் வழீஇய அரசனே பழிக்குரியவன் ஆகின்றனன் என்க. இனி, ஈண்டும் அடியார்க்கு நல்லார் முன்னர்க் கைகுறைத்தல் முதலிய முறைசெய்தோன் இதனைத் தேர்ந்திலன் என்று அடிகள் இரங்கிக் கூறினார் என்பது பொருந்தாமை முற்கூறியது கொண்டுணர்க. 31-36 : கொலைக்கள............இதுளென இதன்பொருள் : கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி-அவ்வேம்பன் பணித்தபடியே அக்காவலராற் கொலையிடத்தே பட்டொழிந்த வணிகனாகிய அக் கோவலனுக்கு மனைவியாகிய கண்ணகி தானும் இச்செய்தி கேட்ட பின்னர்; நிலைக்களம் காணாள் - தனக்கு நிலையிடம் காணாளாய்; பத்தினியாகலின் - அவள் தான் திருமா பத்தினியாகலான்; பாண்டியன் கேடு உற நெடுங்கண் நீர் உகுத்து-அரசியல் பிழைத்த அப்பாண்டியன் உயிர் கேடுறும் படி அவன் முன்னர்ச் சென்று தன் நெடிய கண்ணினின்றும் நீர் உகுத்து; நிலை கெழு கூடல்-அற்றை நாள்காறும் நன்னிலை பொருந்தியிருந்த நான்மாடக்கூடல் என்னும் அவன் நகரத்தை; முத்து ஆரம் மார்பின் முலைமுகந்திருகி நீள் எரி ஊட்டி - சினந்து பண்டு முத்துவடம் பூண்டிருந்த தன்திருமுலைகளுள் ஒன்றைப் பற்றித் திருகி வட்டித்து விட்டெறிந்து தீக்கிரையாகச் செய்தமையாலே; பலர் புகழ்-மதுரைமாதெய்வம் முதலாகப் பலரானும் புகழப்படுகின்ற; பத்தினி ஆகும் இவள் என - திருமாபத்தினியாகிய அக்கண்ணகி நல்லாளே இங்கு இக்குன்றக் குறவராற் கூறப்பட்டவள் என்று சாத்தனார் அறிவியா நிற்ப என்க. விளக்கம் 30 : கொணர்க ஈங்கெனக், (31) கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி எனவே, அக்காவலர் கோவலனைக் கொன்றமையும்; கண்ணகியார் கோவலனுடன் மதுரைக்கு வந்திருந்தமையும் கூறியவாறாயிற்று. மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையிற்றனிச் சிலம்பும் கண்ணீரும், வையைக்கோன்....உண்டளவே தோற்றான் உயிர் என்று அடிகளார் கூறுதல் கருதி உரையாசிரியர் (அடியார்) அவனுயிர்கேடுறக் கண்ணீர் உகுத்து எனக் கண்ணீரை ஏதுவாக்கினார். கண்ணகி இடமுலை கையாற்றிருகி வட்டித்து மறுகின் விட்டெறிந்த அளவிலே அவர்முன் எரியங்கிவானவன் வந்து தோன்றலின் என்றமையால் தன் முலை முகத்தெழுந்த தீ என்றார் (அடியார்) வாழ்த்துக் காதையுள்ளும் அடிகளார் தொல்லை வினையாற் றுயருழந்தாள் கண்ணினீர் கொல்லவுயிர் கொடுத்த கோவேந்தன் என்றோதலுமுணர்க. ஈண்டு, அல்லற்பட்டாற்றா தழுதகண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை (535) என வருந் திருக்குறளையும் நினைக. 37-38 : வினைவிளை..........என்ன இதன்பொருள் : வினைவிளை காலம் என்றீர் - அது கேட்ட சேரன் செங்குட்டுவன் அக்கண்ணகியார் பொருட்டுப்பட்ட கவற்சியுடையனாய் ஐய ; நீயிர் வினைவிளை காலம் என்றீரல்லிரோ! அவர் வினைவிளைவு யாது என்ன-அவர்க்கு இத்தகைய மாபெருந்துயரம் வருவதற்குக் காரணமாய் அவர் செய்த தீவினைதான் யாது அது நிகழ்ந்த காலம் யாது? அறிவீராயிற் கூறுதிர் என்று சாத்தனாரை வேண்டவென்க. விளக்கம் 27 : வினைவிளை காலமாதலின் யாவதுஞ் சினையலர் வேம்பன் தேரானாகி எனச் சாத்தனார் உரைத்தமையுணர்க. வினைவிளை காலமாதலின் வேம்பன் யாவதுந் தேரானாகி என்றமையால் ஈண்டு வினையென்றது கோவலன் செய்த வினையோ? அல்லது வேம்பன் செய்த வினையோ? என ஐயுறுதற்கிடனாயிருந்தமையின் யாது அவர் வினைவிளைவு எனத் தானறிந்த உயர்திணைமருங்கிற் பன்மைச் சுட்டால் சுட்டினான் சேரன். என்னை? பான் மயக்குற்ற ஐயக் கிளவி தானறி பொருள்வயிற் பன்மை கூறல் (தொல்-சொல்-23) என்பது இலக்கண விதியாகலான். 38-54 : விறலோய்...........யானென இதன்பொருள்: விறலோய் கேட்டி வெற்றிவேந்தே ! கேட்டருள்க; அதிராச்சிறப்பின் மதுரை மூதூர் - பண்டொருகாலத்தும் துன்பத்தால் நடுங்கியறியாத சிறப்பினையுடைய மதுரை யாகிய அந்தப் பழைய நகரத்தின் கண்ணே; கொன்றை அம் சடைமுடி மன்றப் பொதியிலில் - அக்கண்ணகி முலைமுகந் திருகி அந்நகரத்தைத் தீக்கிரையாக்கிய அற்றை நாளிரவு யான் அந்நகரத்து மன்றங்களாகிய பொதியிலில்களுள் வைத்துக் கொன்றை வேய்ந்த சடை முடியினையுடைய இறைவன் எழுந்தருளியுள்ள; வெள்ளியம் பலத்துக்கிடந்தேன் -வெள்ளியம்பலம் என்னும் மன்றத்தே அத் தீயினுக்கஞ்சிப் புகுந்து ஆங்கொருசார் கிடந்தேனாக; நள்ளிருள் அவ்விரவின் இடையாமத்தே, அவ்வம்பலம றுகின்கண்; ஆர் அஞர் உற்ற வீரபத்தினிமுன் - பொறுத்தற்கரிய துன்பத்தோடே செல்லா நின்ற மறக்கற்புடைய அக்கண்ணகியார்க்கு முன் வருதற்கு அஞ்சி, மதுரைமாதெய்வம் வந்து தோன்றி - பாண்டியன் குல முதற் கிழத்தியாதலின் மதுராபதி என்னும் தெய்வமகள் அவனுக்குப்பட்ட கவற்சியளாய், அம் மாநகரைத் தீயுண்ணால் பொறாளாய் உருவத்திருமேனிகொண்டு அவரைப் பின்தொடர்ந்துவந்து; சீற்றம் கொங்கையில் அழல் விளைத்தோய்-பெரிய சினத்தாலே நினது கொங்கையினின்றும் கொதிக்கின்ற தீயைப் பிறப்பித்த தெய்வக் கற்புடையோய் ! ஈதொன்றுகேள்; முந்தைப்பிறப்பின் முதிர்வினை நுங்கட்கு பைந்தொடி கணவனொடு முடிந்தது-முற்பிறப்பிலே செய்யப்பட்டு இதுகாறும் முதிர்ந்த பழைய தீவினை உங்களுக்குப் பசிய தொடியினையுடைய நின் கணவன் முடிவோடு தன்பயனை ஊட்டி யொழிந்தது; ஆதலின் - அங்ஙனமாகலான் இப்பொழுது; முந்தைப் பிறப்பின் சிங்கா புகழ் வண் சிங்கபுரத்துச் சங்கமன் என்னும் வாணிகன் மனைவி முற்பிறப்பிலே குன்றாத புகழையுடைய வளவிய கலிங்க நாட்டுச் சிங்கபுரமென்னும் நகரின்கண் சங்கமன் என்னும் வாணிகனுக்கு மனைவி; இட்டசாபம் கட்டியது ஆகலின் - இட்ட சாபமானது இப்பிறப்பின்கண் வந்து நினக்கு மூண்டுளதாதலான்; வார் ஒலி கூந்தல் நின்மணமகன் தன்னை நீண்டு செறிந்த கூந்தலையுடையோய் ! நீ நின் கணவனை; ஈர்ஏழ்நாள் அகத்து எல்லை நீங்கி-இற்றைநாளினின்றும் பதினாலாநாட் பகல் நீங்கிய பொழுதிற் காண்பாய்; வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவில் காண்டல் இல் என-அங்ஙனம் காணுமிடத்தும் வானவர் வடிவில் (நின் கணவனைக்) காண்பதல்லது மக்கள் வடிவில் காண்டல் இல்லை என்று கூற; கோட்டம் இல் கட்டுரை யான் கேட்டனன் என - அவ்வஞ்சமற்ற கட்டுரையினை யான் எனது செவியாலேயே கேட்டேன் என்று அச்சாத்தனார் கூற என்க. விளக்கம் : குன்றக்குறவர் அடிகட்குக் கூறினர் என்பார்க்கு ஈண்டு (37) வினைவிளைகால மென்றீர் யாதவர்...காலம் என, பன்மை விகுதியால் அடிகளார் சாத்தனாரை வினவினர் என்பதும் சாத்தனார் அடிகளாரை (38) விறலோய் என ஒருமைக்கிளவியால் விளித்தனர் என்பதும் பொருந்தாமையுணர்க. எனவே, முன்னது அரசன் வினாவும் பின்னது புலவர் விளித்ததும் ஆகும் என்பதே அமையும் என்க. 39. அதிராச் சிறப்பின் மதுரை மூதூர் என்றது அற்றை நாள் காறும் அதிராச்சிறப்புடைய மதுரை மூதூர் என அற்றை நாள் அதிர்ந்தமையைக் குறிப்பால் உணர்த்தி நின்றது (40). கொன்றையஞ்சடை முடியையுடைய இறைவன் என்க. இறைவன் எழுந்தருளிய அம்பல மாதலின் கண்ணகியார் ஏவியவாறு தீக்கதுவா தொழிந்தமையான் யான் அதனைப் புகலிடமாகக் கருதி அதனுட் புகுந்து கிடந்தேன் என்பார் (40) சடைமுடி மன்றப் பொதியிலிற் கிடந்தேன் என்றார் என்க. இஃதறியாது பழையவுரையாசிரியர் அவர் துயின்றதாகக் கூறுவது பொருந்தாது என்னை? அற்றை நாள் பிற்பகலிலே அந்நகரம் உரக்குரங் குயர்த்த வொண் சிலையுரவோன் காவெரியூட்டியநாள் போற்கலங்க, தண்டமிழ் ஆசான் சாத்தன் வெள்ளியம்பலத்தே துயின்று கிடந்தான் என்பது வியப்பேயாகும். இனி, கிடந்தேன் என்னும் அச்சொல்தானே தீயினுக் கஞ்சி வெள்ளியம்பலத்தைப் புகலிடமாகக் கொண்டு அதனுட் புகுந்து ஒருசார் திகைத்துக் கிடந்தேன் என்பதுபடக் கிடப்பதனை இலக்கிய நயமூணர்வோர் உணர்வர் என்க. இனி, பௌத்தராகிய சாத்தனார் தாமும் கொன்றைச் சடைமுடி இறைவன் பொதியிலில் கிடக்க நேர்ந்ததூஉம், அவர் தம்மைக் காத்துக் கோடற்பொருட்டு அவர்க் கணித்தாக அதுவே புகலிடமாகக் கண்டமையேயாம் என்க. 42. ஈண்டு ஊதுலைக் குருகின் உயிர்த்தனன் உயிர்த்து மறுகிடை மறுகும்.... ஆரஞர்உற்ற வீரபத்தினி முன் என அழற்படு காதைக் கண் அடிகளார் கூறிய சொற்றொடரையே இப்பாயிர முடையாரும் பொன்போற் போற்றிக் கூறுதல் உணர்க (43) சீற்றம்-மிக்கசினம்; சீற்றத்தால் என்க. 45-46 : முதிர்வினை - பயனூட்டத்தகுந்ததாக முதிர்ந்துள்ள பழைய தீவினை முந்தைப் பிறப்பின் முதிர்வினை பைந்தொடி ! நுங்கட்குக் கணவனொடு, முடிந்தது எனமாறுக. முற்பிறப்பின் கட் செய்து முதிர்ந்துள்ள தீவினை உங்கட்குத் தன்பயனை ஊட்டி உன் கணவன் சாவோடு கழிந்தது என்றவாறு. எனவே, உன் கணவன் இம்மைச் செய்த நல்வினையால் வானவன் ஆயினன் என்பது குறிப்புப் பொருள். இங்ஙனம் நுண்ணிதின் உரைகாண மாட்டாது பழையவுரையாசிரியர், முதிர்வினை முடிந்தது என்பதற்கு நுங்கட்கு முற்பட்ட நல்வினை முடிந்ததாகலான் என ஈண்டைக்குச் சிறிதும் பொருந்தாவுரை கூறி ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதற்குச் செய்யுளிற் சொற் காணாது வறிதே போயினர். பைந்தொடி: அண்மைவிளி (47) சிங்காத என்னும் பெயரெச்சத்தீறு கெட்டது (5) வாரொலி கூந்தல்: விளி. கூந்தால் நின்னை வாணிகன் மனைவி இட்ட சாபம் கட்டியதாகலின் (51) ஈரேழ் நாளகத்தெல்லை நீங்கி வானோர் வடிவிற் கணவனைக் காண்பதல்லது மக்கள் வடிவிற் காண்டல் இல்லை என்றவாறு. கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி நிலைக்களங்காணாள் மன்றினும் மறுகினுஞ் சென்றனள் பூசலிட்டு எழுநாளிரட்டி எல்லை சென்றபின்....மலைத்தலை யேறி மால் விசும்பேணியில் கொலைத்தலைமகனைக் கூடுபு நின்றோன் எம்முறுதுயரம் செய்தோரியாவதும் தம்முறுதுயரம் இற்றாகுக என்றே விழுவோள் (49) இட்ட சாபம் கட்டியது ஆதலால், அவள்பட்டன வெல்லாம் நீயும் பட்டு ஈரேழ் நாளகத்து எல்லை நீங்கி நின் கணவனை வானோர் வடிவிற் காண்குவை என்றவாறு. நின் கணவன் திறத்தில் அச்சாபம் அவனோடு முடிந்தது நின்திறத்தில் நினக்குரிய கூறு இப்பொழுதே நின்னைக் கட்டியது ஆகலின் என்பது கருத்து (50) வாரொலி...(176) ஈனோர் வடிவிற் காண்ட லில்லென என வரும் நான்கடிகளும் அடிகளார் கூறியாங்கே ஈண்டும் கூறப்பட்டமை அறிக (34) கோட்டம் வளைவு ; ஈண்டு வஞ்சம் என்னும் பொருட்டு. கட்டுரை பொருள் பொதிந்த சொல். 55-60 : அரைசியல்..............செய்யுளென இதன்பொருள் : அரைசு இயல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்- இவ்வாறு தண்டமிழ்ச் சாத்தனார் சேரன் செங்குட்டுவனுக்குக் கோவலன் கண்ணகி இருவர்க்கும் பழவினை விளைந்த வாற்றை விளம்பி முடித்தவுடன் ஆங்குக் குன்றக்குறவர் கூறியது தொடங்கிச் சாத்தனார் கூற்று முடியுந் துணையும் தமக்கியல்பான அமைதியோடிருந்து அவர்கள் கூறியவற்றின் மெய்ப்பொருளை ஆராய்ந்துணர்ந்த இளங்கோவடிகளார் சாத்தனாரை நோக்கி ஐய ! நுமது வாய்மொழியினூடு உள்ளுறையாக யாம் மூன்று வாய்மைகளைக் கண்டோம் அவை தாம் யாவெனின்; நூனெறி நின் றொழுகுதற்குரிய அரசாட்சி ஒழுக்கின்கண்ணே அரசர் சிறிது ஒழுக்கம் பிழைப்பினும் அவரை அறக்கடவுளே கூற்றமாகிக் கொல்லும் என்பதூஉம்; உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் - புகழமைந்த கற்புடைமகளை இவ்வுலகத்து மக்களேயன்றி அமரர் முதலிய உயர்ந்தோரும் சென்று வழிபாடு செய்வர் என்பதூஉம்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் முன் செய்த இருவகை வினைகளும் செய்த முறையானே செய்தவனை நாடிவந்து உருக்கொண்டு நின்று தத்தம் பயனை நுகர்விக்கும் என்பதூஉம் ஆகிய இம் மூன்றுண்மைகளும் சிலம்பு என்னும் அணிகலனைக் காரணமாகக் கொண்டு எமக்குத் தோன்றினவாதலான்; யாம் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஓர் பாட்டு உடைச் செய்யுள் நாட்டுதும் என-யாம் இவையிற்றை உள்ளுறுத்திச் சிலப்பதிகாரம் என்னும் பெயருடைய இயலிசை நாடகம் என்னும் முத்தமிழ்க்கும் பொதுவாகப் பாட்டுக்களையும் செய்யுளையும் உடையதொரு வனப்புநூலை இயற்றி இவ்வுலகத்து மக்கட்கு எப்பொழுதும் நலம்பயக்கும்படி நிலைநிறுத்தக் கருதுகின்றேம் என்று திருவாய்மலர்ந்தருளா நிற்ப வென்க. விளக்கம் 35 : அரைசியல் என்புழி அகரத்திற்கு ஐகாரம் போலி. அரசியல் செங்கோன்மை. ஈண்டு, சினையலர் வேம்பன் பொய்த்தொழிற் கொல்லன் கூற்றை ஆராயாது நம்புதலும் அவனாற்கள்வன் என்றவனை அழைத்து வினவாமல் கடுந்தண்டம் விதித்தலும் பிறவும் அரசியல் பிழைத்தவாறாம். அவனை வீரபத்தினியின் கண்ணீரே உயிர் போக்கியது அறம் கூற்றான வாறாம் என்க. இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் (குறள் 547) என்று ஓதுதலான், அரைசியல் பிழைத்தகாலை அச்செங்கோன் முறையே அவனைக் கொல்லும் என்பதும் பெறப்படும். இன்னும், எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தாற் றானே கெடும் (குறள் 548) எனவரும் அருமைத் திருக்குறட்கு இப்பாண்டியன் சிறந்த எடுத்துக் காட்டாதலும் அறிக. 56. பத்தினிக்கு இரண்டாவதன்கண் நான்கனுருபு மயங்கிற்று. பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் என்றது குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி திருமாபத்தினிக்கு அமரர்க் கரசன் தமர் வந்து ஈண்டி அவள் காதற் கொழுநனைக் காட்டி அவளோடு எங் கட்புலம் காணவிட்புலம் போயது இறும்பூது போலும் என்றதனானும், சாத்தனார் ஆரஞர் உற்ற வீரபத்தினி முன் மதுரை மாதெய்வம் வந்து தோன்றி.........கூறிய கோட்டமில் கட்டுரை கேட்டனன் யான் என்றதனானும் அடிகளார் பெற்ற வாய்மை என்க. 57. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது சாத்தனார் மதுரை மாதெய்வம் வந்து தோன்றி, கண்ணகியை நோக்கி நுங்கட்கு முந்தைப் பிறப்பின் முதிர்வினை நின் கணவனொடு முடிந்தது என்றதனானும் வாணிகன் மனைவியிட்ட சாபம் கட்டியது ஆகலின் ஈரேழ் காளகத்து எல்லைநீங்கி நீ நின் கணவனை வானோர் வடிவிற் காண்குவை என்றதனானும் எய்திய வாய்மை என்க. 58. சூழ்வினைச்சிலம்பு என்றது உருத்து வந்தூட்டுதற்குச் சூழும் ஊழ்வினைக்குக் கருவியாகிய சிலம்பு எனவும், சூழ்ந்த சித்திரச் செய்வினை யமைந்த சிலம்பு எனவும் இரு வேறு பொருளும் பயந்து நிற்றல் அறிக. ஈண்டுச் சிலம்பு என்றது கண்ணகியார் காற்சிலம்பிற்கும் கோப்பெருந்தேவியார்க்குரிய கோயிற் சிலம்பிற்கும் பொது; என்னை? இருவர் சிலம்பும் காரணமாகலின் வாளா சூழ்வினைச் சிலம்பு காரணமாக என அடிகளார் கூறினர் என்க. 59. சிலப்பதிகாரம் - சிலம்பு காரணமாக விளைந்த கதையைக் கூறுகின்ற நூல் (60) பாட்டு-இசைக்கும் நாடகத்திற்கும் பொதுவாகிய உருக்கள். (இவற்றின் இயல்பு (3) அரங்கேற்று காதையுரையிற் காண்க) செய்யுள் இயற்றமிழ்ச் செய்யுள், எனவே, இந்நூலின்கண் இயலிசை நாடகம் என்னும் முத்தமிழும் இடம் பெற்றமையுணர்க. அவற்றை ஆண்டாண்டுக் காட்டுதும். 61-62 : முடிகெழு...............என்றாற்கு (இதன்பொருள்) முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது-அது கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து தமிழ்நாட்டு மூவேந்தர்க்கும் பொதுவுரிமையுடையதாகும் அன்றோ அடிகள் செய்யக்கருதிய அவ்வனப்பு நூல்; ஆகவே ஆர்வமும் செற்றமும் அகலநீக்கிய அடிகட்கு அச்செயல் பெரிதும் பொருந்துவதேயாகும். ஆதலால்; அடிகள் நீரே அருளுக என்றாற்கு - வினையினீங்கி விளங்கிய அடிகளாராகிய நீவிரே அந்நூலைச் செய்து இவ்வுலகிற்கருளுக என்று வழி மொழிந்து வேண்டிய அத்தண்டமிழ் ஆசான் சாத்தனார்க்கு என்க. (விளக்கம்) இந்நிகழ்ச்சி நிரலே சோழநாட்டினும் பாண்டியனாட்டினும் சேரநாட்டினும் நிகழ்ந்தமையின் அடிகளார் இந்நிகழ்ச்சியைப் பொருளாகக் கொண்டியற்றும் நூல் மூன்று தமிழ்நாட்டிற்கும் பொதுவுரிமையுடையதாம் என்பார் முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது என்றார். எனவே, இவ்வேண்டுகோள் தம்நாடு பிறர்நாடு என்னும் வேற்றுமையின்றி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கொள்கையோடு ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய மெய்யுணர்வுடைய அடிகளார் செய்யின் அவ்விலக்கியம் எல்லார்க்கும் பெரும்பயன் விளைக்கும். ஏனைய எம்போல்வார் செய்வது அத்துணைப் பயனுடையதாகாது. ஆதலால், அடிகளாரே செய்தருளுக என்று அப்புலவர் பெருமான் அடிகளாரை வழிமொழிந்து ஊக்கியபடியாம். இனி, இவ்வாறன்றி அடியார்க்கு நல்லார் (62) என்றாற்கு - தான் பாடக் கருதி வினாவின சாத்தற்கு; அங்ஙனம் கூறாது இங்ஙனம் கூறினாரென்க. என் சொல்லியவாறேவெனின், - இச்செய்கின்ற காப்பியம் மூவேந்தர்க்கும் உரியது என்பதனால், ஏனையோரை இவர் புகழ்ந்துரையாராகலின் யாம் காப்பியம் செய்யக் கடவேமென்பது கருதிநீரே? அருளுக என ஏகாரப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன்னாற்கு (உள்ளொன்று வைத்து அப்பொருள் குறிப்பாகப் புலப்படப் புறமொன்று சொன்ன சாத்தற்கு) அவன்(ர்?) கருதிய பொருளிற்கு (குறிப்புப் பொருளிற்கு) உடன்படாது சொல்லிற்கு (வெளிப்படையாகத் தோன்றும் பொருளிற்கு) உடன்பட்டார் என்பதாயிற்று என வுரைத்தனர். இவ்வுரை, நனிநாகரிகத்திற் கொவ்வாமை நுண்ணுணர்வாற் கண்டு கொள்க. ஈண்டு இனித் தாம் வகுத்துக் கொண்டதனைக் கூறுவார் எனவரும் அடியார்க்கு நல்லார் உரையில் தாம் என்னும் பொதுப் பெயர் அடிகளாரைக் கருதிக் கூறப்பட்டது. அது பொருந்தாமை முன்னும் காட்டினோம். 62- 90 : அவர் ..............மரபென் (இதன்பொருள்) அவர் - அக்கண்ணகி கோவலருடைய மணத்தில் மகளிர் வாழ்த்திய; மங்கல வாழ்த்துப் பாடலும்......வரந்தரு காதையொடு இவ் ஆறு ஐந்தும்-மங்கல வாழ்த்துப் பாடல்முதலாக வரந்தரு காதையீறாக ஈண்டுக் கூறப்பட்ட முப்பதுறுப்புக்களையு முடைய இப்பொருட் டொடர்நிலைச் செய்யுளிலக்கியத்தை; உரை இடையிட்ட பாட்டுடைச் செய்யுள் - உரையிடையிட்ட செய்யுளும் பாட்டிடையிட்ட செய்யுளுமாக; உரைசால் அடிகள் அருள - புகழமைந்த இளங்கோவடிகளார் திருவாய் மலர்ந்தருளா நிற்ப; மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் - மதுரைக் கூலவாணிகனான தண்டமிழாசான் இனிதே கேட்டு மகிழ்ந்தனன்; இது-இந்நூற்குப் புறவுறுப்பாகக் கூறப்பட்ட இது; பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபு-சிலப்பதிகாரம் என்னும் இவ்வனப்பு நூலின் உட்பகுதிகளையும் நூலும் நுவலுவோனும் உள்ளிட்ட பிறவகைகளையும் தெரிதற்குக் காரணமான பாயிரத்தின் இலக்கணம் பற்றிச் செய்து நூன்முகத்தே வைக்கப்பட்டது என்க. (விளக்கம்) (62) அவர் என்றது கண்ணகியும் கோவலனுமாகிய இருவரையும். மங்கலம்-திருமணம். மங்கலவாழ்த்துக்காதை என்னாது பாடல் என்றது, இஃது இசையொடு புணர்த்துப் பாடுதற்கியன்ற உரு என்றறிவித்தற்கு. இக்காப்பியத்தை ஓதத் தொடங்குவோர் இசையினால் வாழ்த்துப் பாடித் தொடங்கவேண்டும் என்பது அடிகளார் கருத்தாகும். எனவே, இஃது இசைத்தமிழ் என்பது பெற்றாம். இவ் வாழ்த்துப் பாடலிலேயே இக்காப்பியக் கதை தோற்றுவாய் செய்யப்படுகின்றது. இதில் கதை நிகழ்ச்சியில்லை என்று அடியார்க்கு நல்லார் கூறுவது பொருந்தாது. இதன்கண் கதை தோற்றுவாய் செய்யப்படினும் இறைவனையும் கற்புடைத் தெய்வமாகிய கண்ணகியையும் வாழ்த்துவதே குறிக்கோளாதல்பற்றி அச்சிறப்பு நோக்கிக் காதை என்னாது பாடல் என்றே குறியீடு செய்தனர். இசைத் தமிழுக்கேற்ற வாரநடையும் கூடைநடையும் திரள் நடையுமாக இதனை அடிகளார் மிக அருமையாக அதற்கியன்ற மயங்கிசைக் கொச்சகக் கலியால் யாத்துள்ளனர். இதற்கியைந்த பண்வகுத்து இசைக் கருவிகளோடு இசைவாணர்கள் இசையரங்குகளிலே பாடினால் இப்பாடல் பேரின்பம் பயக்கும் என்பது எமது துணிபாம். (63-4) குரவர் - தாய் தந்தையர். மனையறம் - மனைக்கண்ணிருந்து செய்யும் விருந்தோம்பல் முதலிய அறங்கள். அவற்றை, அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் (சிலப் - 16 : 71 - 3) எனவரும் கண்ணகியார் கூற்றானுமுணர்க. (64-5) நடநவின் மங்கை மாதவி - ஆடற்கலையை ஐயாண்டிற்றண்டியம் பிடித்து ஏழாண்டு அக்கலையை நன்குபயின்று ஆடலும் பாடலும் நிரம்பி எஞ்சிய அழகு நிரம்புகின்ற மங்கைப் பருவமெய்திய மாதவி என்றவாறு. (67) ஊர் இந்திரவிழவு எடுத்த காதை என்க. ஊர் - புகார் நகரம். (66) மடலவிழ் கானல் என்புழி மடலவிழ் என்பது கானலுக்கு இயற்கையடை. வரி-இசைப்பாட்டில் ஒருவகை. அதனியல்பு அக்கானல் வரியில் விளக்கப்படும். இக்காதைக்கு இவ்விசைப்பாடல் சிறப்பாய் நிற்றலின் அதுவே பெயராயிற்று. கானல்வரியில் கதை நிகழாமை யுணர்க என்னும் அடியார்க்கு நல்லார் உரை போலி. (66-70) வேனில்....காதையும் என்பது வேனிற்காதை என்னும் பெயர்ப் பொருட்டாய் நின்றது. (70-71) பின்னிகழும் தீங்கை யுணர்த்துதலையுடைய கனாத்திறம் என்க. (71-2) வினாத்திறத்து நாடுகாண் காதை என்றது, அக்காதையின் கண் கண்ணகி மதுரை மூதூர் யாதென வினவுதலும் கவுந்தியடிகள் என்னோ? இங்ஙனம் கருதியது என வினவுதலும், வறுமொழியாளன் கவுந்தியடிகளாரை நொசிதவத்தீருடன் ஆற்று வழிப்பட்டோர் ஆர்? என வினவுதலும், மீண்டும் உடன்வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவது முண்டோ? என்று வினவுதலும் எனப் பல்வேறு வினாக்களை யுடைமையைக் கருதி என்க. (73) வேட்டுவ வரி - வேட்டுவ மகளாகிய சாலினி கொற்றவை கோலங்கொண்டு ஆடிய வரிக்கூத்தும் என்க. இதனைக் கோலச்சாரி என்பர் அடியார்க்குநல்லார். இது கூத்தாற் பெற்ற பெயர். (73-4) தோட்டலர் - தோட்டையுடைய அலர். தோடலர் தோட்டலர் என விகாரமெய்திற்றெனினுமாம். தோட்டலர் கோதை-அன்மொழித் தொகையாய்க் கண்ணகி என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. இறுத்தல் - தங்குதல். (73-5) கறங்கிசையூர் பல்வேறு ஒலிகளும் ஒலிக்கும் மூதூராகிய மதுரை என்க. ஊர் காண்காதைக்கண் அடிகளார்(1) புறஞ்சிறைப்பொழிலும் என்பது தொடங்கி (14) காலை முரசங்கனைகுரலியம்ப என்னுந் துணையும், அந்நகரத்தில் உண்டாகின்ற இசைகளை விதந்தோதுதலை யுட்கொண்டு ஈண்டு, கறங்கிசையூர் என்று அடைதொடுத்தபடியாம். (75-6) சீர் - சிறப்பு; புகழ் எனினுமாம். ஈண்டுப் பாயிரமுடையார் அடைக்கலக் காதைக்கண் என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்.. பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு எனக் கவுந்தியடிகளார் கண்ணகியின் சிறப்பெல்லாம் மாதவிக்கு எடுத்தோதியதனையும் அவரே இளங்கொடி நங்கை எனக் கண்ணகியைச் சுட்டியதனையும் கருதிச் சீர்சால் நங்கை என்றோதினர். சீர் - அழகு என்னும் பொருட்டு எனினும் ஈண்டு ஆசிரியர் கருதியது அப்பொருளன்று என்க. (77) ஆய்ச்சியர் - ஆயர்க்குப் பெண்பாற் கிளவி. ஈண்டு மாதரி முதலிய இடைக்குல மகளிர். இக்காதையும் கதை நிகழ்ச்சிக்குறுப்பாகவே நின்றது. ஆயினும் குரவைக்கூத்தே சிறந்து நிற்றலின், ஆய்ச்சியர் குரவை என்றார். எனவே, இது கூத்தாற் பெற்ற பெயர். குரவைக் கூத்தாவது குரவை யென்பது கூறுங் காலைச் செய்தோர் செய்த காமமும் விறலும் எய்த வுரைக்கு மியல்பிற் றென்ப எனவும் குரவை யென்ப தெழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கைகோத் தந்நிலைக் கொட்பநின் றாட லாகும் (அடியார்க் - மேற்கோள்) எனவும் வரும் நூற்பாவானுணர்க. ஈண்டு ஆய்ச்சியரிடத்து நிகழ்தலின் ஆய்ச்சியர் குரவை எனப்பட்டது. மேலே குன்றத்தின்கண் நிகழ்ந்தது குன்றக் குரவை எனப்படுதலு முணர்க. (77-8) தீத்திறம் - தீய தன்மையுடையசொல். கேட்டது என்றதனாற் சொல் என்பது பெற்றாம். துன்பமாலை - துன்பத்தின் இயல்பு. மாலை - இயல்பு. இது தன்மையாற் பெற் பெயர். (78-9) நண்பகல் நடுங்கிய வூர் சூழ்வரியும் - இக்காதையை அடிகளார் பெரும்பான்மையும் நாடக வழக்கத்தாற் செய்திருத்தலின் இதுவும் கூத்தாற்பெற்ற பெயர் என்க. நடுங்கிய வூர் எனப் பெயரெச்சம் எனினும் அமையும். என்னை? கண்ணகியின் நிலைகண்டு அந்நகரமே நடுங்கியதாகலான் என்க. (78-80) சீர்சால் வேந்தன் என்றார், தான் செய்த தவறு கண்டுழியே உயிர்விட்டான் ஆகலின். சீர் - ஈண்டு மானம் போற்றிய சிறப்பு என்க. இதனாலன்றோ அடிகளாரும், அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன் வளைகோல் இழுக்கத் துயிர்ஆணி கொடுத்தாங்கு இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலின் துஞ்சியது அறியார் என அழற்படுகாதையில் உளமாரப் பாராட்டி யோதிய தூஉம் என்க. (80) வஞ்சினமாலை-அஃதாவது : கண்ணகியார் பாண்டியன் முன் சென்று வழக்குரைத்த பொழுது அம்மன்னவன் வழக்கும் ஆருயிரும் ஒருங்கே தோற்ற பின்னரும் சினந்தணியப் பெறாமல் அம்மன்னவன் தேவியை நோக்கிக் கண்ணகி சூள் மொழிந்த தன்மையும் என்றவாறு. வஞ்சினமாவது இன்னது செய்யேனேல் இன்னவாறாகுவல் என்று இயம்புவது. இதுவும் தன்மையாற் பெற்ற பெயர். (81) அருந்தெய்வம் தோன்றி என்றது - மக்கள் காண்டற்கரிய இயல்புடைய மதுராபதி யென்னும் மாதெய்வம் கண்ணகியாரை இரந்து அழல் வீடு பெறுதற்பொருட்டு அவர் கண்காண எளிவந்து என்பதுபட நின்றது. (82-3) மட்டு - தேன். கோதையர் ஈண்டுக் குறத்தியர். குன்றக்குரவை - குன்றத்துத் தெய்வமாகிய முருகவேளை நோக்கி ஆடிய குரவைக்கூத்து. மட்டலர் கோதை குன்றக் குரவை என்று பாட மோதிக் கோதை கண்ணகியெனக் கொண்டு கோதைக்குக் குன்றக் குறத்தியர் எடுத்த குரவை எனினுமாம். இதுவும் கூத்தாற் பெற்ற பெயர். (83) என்றிவை யனைத்துடன் என இவ்விருபத்து நான்கும் கண்ணகியார் வரலாறாகலின் ஒருகூறாக வகுத்தனர். மேல்வருவன சேரன் செங்குட்டுவன் செயலாகலின் அவற்றை வேறுபட வோதினர். (84-85) காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் வாழ்த்து வரந்தரு காதை எனவரும் ஆறு காதைகளுள் வைத்து இறுதியினின்ற வரந்தரு காதை ஒழிய ஏனைய காட்சி முதலிய ஐந்து காதைகளும் இளங்கோவடிகளார் பண்டைத் தமிழ்ச்சான்றோர் பொருணெறி மரபு பற்றி அந்நெறியிற் சிறிதும் பிறழாதவாறு செய்துள்ளனர். காட்சி முதலிய ஐந்தும் புறத்திணை ஏழனுக்கும் பொதுவாகிய துறைகளாம். இவற்றை, ஆசிரியர் தொல்காப்பியனார் புறத்திணையியலுள் (5) வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் நூற்பாவின்கண், காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல்லொடு புணரச் சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தே என்றோதுத லறிக. இதற்கு, ஆசிரியர் நச்சினார்க்கினியர் இது.... .... புறத்திணைக்கெல்லாம் பொதுவாகிய வழுவேழும் உணர்த்துதல் நுதலிற்று என்று விளக்குதலும் உணர்க. ஆசிரியர் தொல்காப்பியனார் போர்க்களத்தே அவிப்பலி செய்தல் விழுப்புண் பட்டுவீழ்தல் முதலியவற்றால் அறங்காத்தற் பொருட்டு உயிர்நீத்த மறவர்க்குக் கூறிய இத்துறைகள் கற்பென்னும் பேரறத்தி லொழுகி அதன் தெய்வத்தன்மையால் பாண்டியன் அரசவையேறி அவனொடு சொற்போர் தொடுத்து அரசனை வென்று நகர்தீமடுத்து விண்ணகம்புக்க கண்ணகியார்க்கும் நன்கு பொருந்துமென் றுட் கொண்டு இவற்றிற்கு அத்துறைப் பெயர்களையே நிறுவினர் என்றுணர்க. இவற்றுள் காட்சி ஈண்டுக் கண்ணகித் தெய்வத்திற்குப் படிவம் செய்தற்குத் தகுந்த கல் இஃதாம் என்று ஆராய்ந்து கண்டது என்க. அடியார்க்கு நல்லார், கற்காட்சியும் குறவர் பாகுடக் காட்சியும் என்க என்பர். ஈண்டுப் பாகுபடம் என்பது அரசிறை என்னும் பொருட்டு; கையுறை எனினுமாம். குறவர் கொணர்ந்த கையுறை அல்லது அரசிறை இக்காப்பியத்திற்குப் பொருளன்மையானும் ஏனைய துறைப்பெயரே யாதலானும் அப்பொருள் மிகைபடக் கூறலென்றொழிக. கற்காட்சி எனல் வேண்டியது கல் என்னும் சொல் தொக்கது. ஏனையவற்றிற்கும் இஃதொக்கும். (84) கால் கோள் - கல்லின்கண் படிவம் சமைக்கத் தொடங்குதல். ஈண்டுக் கால் கோள் என்பதற்குத் தொடங்குதல் என்னும் பொருளே கொள்க அடியார்க்கு நல்லார், கற்கோள் கால்கோள் என விகாரம் என்பர். இளங்கோவடிகளார் கற்கால் கோள் எனப் பல விடத்தும் வழங்குதலின் அவர் கருத்து அஃதன்றென்பது விளங்கும். ஆசிரியர் நச்சினார்க்கினியரும் கால்கோள் என்பதற்கு (தொல் புறத் 5) கல்லுறுத்து இயற்றுதற்குக் கால் கோடலும் எனவும், இது நட்டுக் கால் கொண்டது எனவும் ஓதுதலின் அவர் கருத்தும் அஃதன்றென்பது புலனாம். நீர்ப்படை - படிவமாகவைத்த கல்லை நீரில் மூழ்குவித்தல். இஃதொரு சடங்கு, குடமுழுக்குப் போன்று. நடுதல் என்பது நடுகல் எனவும் நடுதற்காதை என்பது நடுகற் காதை எனவும் ஏடெழுதுவோராற் பிறழ எழுதப்பட்டன என நினைத்தற்கிடனுளது. ஆசிரியர் இளங்கோவடிகளார் கருத்தும் நடுதற் காதை என்பதற்கே பொருந்தும். பழைய உரையாசிரியர் இருவரும் நடுதற்காதை என்றே பாடங் கொண்டனர் என்று கருதவும் இடனுளது. தொல்காப்பியத்தில் நடுதல் என்றும், நடுகல் என்றும் பாட வேறுபாடு காணப்படுதலும் உணர்க. எனவே, ஏனைய நான்கினும் கல் என்னும் சொல் தொக்கு நின்றாற் போலவே இதனினும் கல்நடுதல் என்பதில் அச் சொல் தொக்கு நின்றதாகக் கோடலே முறையாம். ஆராய்ந்து கொள்க. (85) வாழ்த்து-கற்படிவமமைத்து நன்கலம் முழுவதும் பூட்டிப் பூப்பலி செய்து காப்புக் கடைநிறுத்தி வேள்வியும் விழாவும் நாள்தோறும் வகுத்துக் கடவுண் மங்கலம் செய்யப்பட்ட கண்ணகித் தெய்வம் விண்ணிடத்தே மின்னுக் கொடிபோல் கடவுள் நல்லணி காட்டிச் செங்குட்டுவனையும் நெடுஞ்செழியனையும் ஆங்கு வந்திருந்த ஏனைய அரசரையும் வாழ்த்தியது என்க. அடியார்க்குநல்லார் பெருங் கிள்ளியையும் என்பர். இஃது ஆராய்ச்சிக்குரியது. (85) வரந்தருகாதை - அங்ஙனம் வாழ்த்திய தெய்வம் செங்குட்டுவன் முதலியோர்க்கு வரமருளிய காதையோடே என்க. (86) மேலே (83) இவையனைத்துடன் ஈண்டுக் கூறப்பட்ட காட்சி முதலியனவும் வரந்தருகாதையோடு கூடிய (89) இவ்வாறைந்தும்- முப்பதும் என்றபடியாம். (87) உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் - நாடக வழக்கத்தால் உரைச் செய்யுள்களை இடையிடையே கொண்டுள்ளதும் நாடகத்திற்கும் இசைக்கும் உரிய பாடல்களையும் இயற்றமிழ்க்கேயுரிய செய்யுள்களையுமுடைய இக்காப்பியத்தை என்க. (88) உரைசால் அடிகள் - புகழமைந்த அவ்விளங் கோவடிகளார் என்க. (89) மதுரைக் கூலவாணிகன் சாத்தன் - இவர் மணிமேகலையென்னும் பெருங்காப்பியம் செய்த பெரும் புகழுடைய புலவராவார். இவரைச் சங்க நூல்களிற் காணப்படுகின்ற சீத்தலைச்சாத்தனார் என்பாரும் அவர் வேறு இவர் வேறு என்பாரும் இருதிறத்தார் உளர். (90) இது என்றது இதுகாறுங் கூறிய இப்பகுதி என்றவாறு. அஃதாவது நூன்முகத்தே நின்ற இவ்வுறுப்பு என்றவாறு. பதிகத்தின் மரபினாற்செய்யப்பட்டது என்றவாறு. இப்பதிகம் அடிகளாரை யாண்டும் படர்க்கையிலேயே கூறுவதனால் இதனைச் செய்த சான்றோர் பிறர் என்பது தேற்றம். அவர் பெயர் முதலியன தெரிந்தில. அடிகளாரே இதனையும் செய்தவர் என்னும் கருத்தால் அடியார்க்கு நல்லார் கூறும் உரை பொருந்தா என்பது முன்னுங் கூறினாம், கடைப்பிடிக்க. இனி, இதனை, சேரற்கும் அடிகட்கும் குறவர் குழீஇ வந்து வணங்கி போயது இறும்பூது இதனை நீ அறிந்தருள் என்று அரசனுக்குக் கூற அவனுழை யிருந்த சாத்தன் உரைப்போன் இவனென; வினைவிளைவு யாது என அரசன் வினவச் சாத்தன் விறலோய் கேட்டனன் யான் என ஆங்கு இவற்றைக் கேட்டிருந்த அடிகள் சாத்தனை நோக்கி யாம் இவற்றை உள்ளுறையாக்கிச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஓர் பாட்டுடைச் செய்யுள் நாட்டுதும் எனச் சாத்தன் அடிகள் நீரே அருளுக என்றாற்கு மங்கல வாழ்த்து முதலாக வரந்தரு காதை யீறாகக் கிடந்த இவ்வாறைந்தும் அடிகள் அருளச் சாத்தன் கேட்டனன் இது பதிகம் என இயைத்திடுக. இனி இதன்கண் - பதிகத்தின் மரபு வருமாறு:- பொதுவும் சிறப்பும் எனப் பாயிரம் இருவகைப்படும் என்ப. அவற்றுள் இஃது இந்நூற்கேயுரிய சிறப்புப் பாயிரமாம். பாயிரம் பதிகம் ஒருபொருட் கிளவிகள். ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோ டாயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே எனவும், காலங் களனே காரணம் என்றிம் மூவகை யேற்றி மொழிநரும் உளரே எனவும் வரும் நன்னூற் சூத்திரங்களால் இப்பதிகத்தின் மரபு இவை என்றுணர்க. இனி, இதனுள் நிரலே, குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த இளங்கோவடிகட்கு என்பதனால், இந்நூலாசிரியரின் சிறப்பும், பெயரும்; குன்றக் குறவர் கூடி... இறும்பூது போலும் அறிந்தருணீயென, அரசனுக்கு அறிவிப்ப அவனுழையிருந்த தண்டமிழ் ஆசான் சாத்தன் உரைப்போன்... கட்டுரை கேட்டனன் யானென அது கேட்ட அடிகள் அருள என்றதனால் வழியும் முடிகெழு மூவேந்தர்க்கும் உரியது என்றதனால் எல்லையும் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் என்றதனால் நூற்பெயரும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றமையான் இம்முத்தமிழுக்குமுரிய இலக்கண முணர்வோர் இந்நூல் கேட்டற்குரியார் என யாப்பும் கேட்போரும் அரைசியல் பிழைத்தோர்க் கறங் கூற்றாவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதூஉம் என்றதனால் நுதலிய பொருளும் இம்மூன்று வாய்மைகளையும் இந்நூலின் வாயிலாய்த் தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லோர், உள நாள் வரையாது ஒல்லுவ தொழியாது செல்லுந்தேயத்துக் குறுதுணை தேடுதல் தேற்றமாதல், யாமோர் பாட்டுடைச் செய்யுள் நாட்டுதும் என்று அடிகளார் கூறுதலாற் போதருதலின் பயனும், சேரல் இளங்கோ அடிகட்கு எனவே, அவ்வரசன் காலமே இந்நூல் தோன்றிய காலம் எனக் காலமும், நாட்டுதும் என்பதற்கு உலகிற்குப் பயன்படச் செய்து நிறுத்துவேம் என்பது பொருளாகலின் அடிகளார் மக்கள்பால் வைத்த அருளே இது செய்தற்குக் காரணம் எனக் காரணமும், அடிகள் அருளக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் என்றதனால் அத்தண்டமிழாசான் தலைமை வகித்த சான்றோர் அவைக்களமே இந்நூல் அரங்கேறிய களம் எனக் களமும் ஆகிய பாயிரப் பொருள் பதினொன்றும் போந்தமையுணர்க. செய்யுள்-சூட்டச் செந்தூக்கு: (அஃதாவது இடையிடையே குறளடியும் சிந்தடியும் விரவி ஈற்றயலடி மூச்சீர்த்தாய் முடிந்த ஆசிரியப்பா என்றவாறு.) பதிகம் முற்றிற்று. உரைபெறு கட்டுரை 1. அன்று தொட்டுப் பாண்டியனாடு மழை வறங்கூர்ந்து வறுமை யெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் நங்கைக்குப் பொற்கொல்லராயிரவரைக் கொன்று கள வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமு நீங்கியது. 2. அது கேட்டுக் கொங்கிளங் கோசர் தங்க ணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்றும் மாறாதாயிற்று. 3. அது கேட்டுக் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்ட முந்துறுத் தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித்திங்களகவையி னாங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று. 4. அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே. 1. அன்றுதொட்டு...........நோயுத்துன்பமு நீங்கியது (இதன்பொருள்) அன்று தொட்டு - கல்லாக் களிமகன் ஒருவன் கையில் வெள் வாளெறியக் கோவலன் வெட்டுண்டு புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப, மண்ணகமடந்தை வான்றுயர் கூரக் காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனனாக அற்றைநாள் முதலாக; பாண்டியன் நாடு மழை வறம் கூர்ந்து - பாண்டியனுடைய நாட்டின்கண் மழையின்மையே மிகாநிற்றலாலே; வறுமை எய்தி-யாண்டும் விளைவுகுன்றி உயிர்களை வருத்தும் பசிப்பிணி முதலியவற்றிற்குக் காரணமான நல்குரவு வந்தெய்தி அது காரணமாக; வெப்பு நோயும் குருவும் தொடர - கொடிய தொழு நோயும் கோடைக் கொப்புளமும் இடைவிடாது மாந்தரை நலியா நிற்றலால்; கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் - அப்பொழுது வடவாரியர் படைகடந்து தென்றமிழ் நாடொருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பின்னர் அப் பாண்டிய நாட்டிற் கரசுரிமையுடையனாய்க் கொற்கைக்கண் அரசு வீற்றிருந்த வெற்றீவேற் செழியன் என்னும் மன்னன் அந் நலிவு தீர்த்தற்பொருட்டு; நங்கைக்குப் பொற் கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய-திருமா பத்தினியாகிய கண்ணகிக்குப் பொற்கொல்லர் ஒருபதினாயிரவரைப் பலியிட்டு அப்பலிக்களத்திலே வேள்வி செய்யுமாற்றால் விழாவெடுத்து அமைதி செய்தலாலே; நாடுமலிய மழை பெய்து நோயுந் துன்பமும் நீங்கியது- அவன் நாடானது அன்றுதொட்டு மிகவும் மழை பெய்யப்பெற்று முற் கூறப்பட்ட வறுமையும் நோய்களும் நீங்கப்பெற்றது என்க. (விளக்கம்) நாடு நீங்கியது என இயையும். அன்றுதொட்டு என்றது சினையலர் வேம்பன் யாவதும் தேரானாகி.........கள்வனைக் கொன்று சிலம்பு கொணர்க எனக் காவலருள் கல்லாக் களிமகன் வாளால் எறிந்து கோவலனைக் கொல்ல அவன் குருதி நிலத்தின் மேற் பரந்த அன்றுதொட்டு என்பதுபட நின்றது என்க. வெப்பு நோய் - தொழுநோய் என்பது அடியார்க்கு நல்லார். குரு-கோடைக் கொப்புளம். இதனை இக்காலத்தார் அம்மைநோய் என்பர். கொப்புளிப்பான் என்பதுமது. கொற்கை பாண்டியனாட்டில் ஒரு பட்டினம். இவ்வுரை பெறு கட்டுரைக் கண் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய எனவரும் சொற்றொடர் அறிஞருலகத்தைத் துன்புறுத்தும் என்பதில் ஐயமில்லை. அறிவிலா மாக்களுலகத்திற்குக் கழிபேருவகை செய்யும். எனவே, இவ்வுரை பெறு கட்டுரை என்னும் இப்பகுதி நாடெங்கணும் கண்ணகித் தெய்வத்திற்குக் கோயிலெடுத்து வழிபாடு செய்த பிற்காலத்தே கண்ணகி கதையைப் பொது மக்கட்குக் கூறிவந்த பூசகராற் செய்யப்பட்டு நூன்முகத்தே வைக்கப்பட்டது என்று கருத இடனுளது. இங்ஙனமே நூலினுள் காண்டத் திறுதிகளினும் நூலிறுதியினும் காணப்படுகின்ற கட்டுரைகளும் பிற்காலத்தே செய்யப்பட்டு நூலினுட் செருகப்பட்டன போலும். (முன்னுரையினை நோக்குக) இதன் பயன் ஆராய்ச்சியறிவில்லாத மாக்களை அத்தெய்வத்தினிடம் ஆற்றுப்படை செய்வதாகும் என்க. இவ்வாற்றான் யாமும் சாந்தி பெறுவோமாக. இதற்கு, அரும்பதவுரை யாசிரியர், உரைத்துப் போதுகின்ற கட்டுரை என்று கூறும் விளக்கம் ஒரு சான்றாகும். என்னை? இக் கட்டுரை வழிவழியாகக் கூறப்பட்டு வருவதொன்றென்பதே அவர் கருத்தாகலான் என்க. 2. அதுகேட்டு...........மாறாதாயிற்று (இதன்பொருள்) அதுகேட்டு - வெற்றிவேற் செழியன் நங்கைக்குச் சாந்திசெய்து அவன் நாட்டின்கண் தீங்ககற்றி நன்மையை நிறுவிய அச் செய்தியைக் கேட்டு, கொங்கு இளங்கோசர் கொங்குமண்டிலத்து இளங்கோக்களாகிய கோசரும்; தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய-கண்ணகிக்குத் தம்முடைய நாடாகிய கொங்குமண்டலத்திலும் விழாவெடுத்து அமைதிசெய்யா நிற்பவே; மழை தொழில் என்றும் மாறாதாயிற்று-அந்த நாடும் மழை வளம் பெற்று உழவு முதலிய தொழிலும் மாறாமல் வளமுடையதாயிற்று என்க. (விளக்கம்) நாடு மழையும் தொழிலும் மாறாதாயிற்று என்க. மழை தொழில் பெய்தற்றொழில் என்பாருமுளர். இளங்கோசர் என்பது சாதிப்பெயர். இவரைக் குறுநில மன்னர் என்பது குறித்து இளங்கோசர் எனப்பட்டார் எனினுமாம். 3. அதுகேட்டு...............நாடாயிற்று (இதன்பொருள்) அதுகேட்டு - அச்செய்தியினைக் கேள்வியுற்று; கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் - கடலாற் சூழப்பட்ட இலங்கையை ஆட்சிசெய்யும் கயவாகு என்னும் வேந்தான்; நங்கைக்கு நாள் பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்து ஆங்கு - கண்ணகிக்கு நாள்தோறும் பூப்பலி செய்தற்குரிய பலிபீடத்தை முற்படச் செய்து பின்னர்க் கோயிலுமெடுத்து அந்நாட்டினும்; இவள் - இப்பத்தினித் தெய்வம்; அரந்தை கெடுத்து வரம்தரும் என - பசியும் பிணியும் முதலிய துன்பங்களைப் போக்கி யாம் வேண்டும் வரங்களையும் அளித்தருளும் என்று கருதி; ஆங்கு ஆடித்திங்கள் அகவயின் பாடி விழாக்கோள் பல் முறை எடுப்ப - அக்கோயிலின்கண் ஆண்டுதோறும் ஆடித் திங்களிலே அவ்வரசன் தன் உரிமைச் சுற்றத்துடன் சென்று அக்கோயிலின் மருங்கே படவீடமைத்துத் தங்கியிருந்து சிறப்புகள் பன்முறையும் எடாநிற்றாலாலே; மழை வீற்றிருந்து - மழை குறைவின்றி நிலை பெறுதலானே; வளம்பல பெருகி - வளங்கள் பலவும் மல்கி; பிழையா விளையுள் நாடாயிற்று. அந்நாடும் பொய்யாது விளையும் விளைவினையுடைய நாடாயிற்று என்க. (விளக்கம்) அது கேட்டு என்றது இவ்வாறு பலரும் நங்கைக்குச் சிறப்புச் செய்து நலமெய்தும் அச்செய்தி கேட்டு என்றவாறு. கயவாகு - அக்காலத்தே இலங்கையை ஆட்சிசெய்த அரசன் என்பதும், அவன் சேரன் செங்குட்டுவன்பால் நட்புரிமையுடையவன் என்பதும் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து விழாச் செய்தபொழுது இவனும் அவ்விழாவிற்கு வந்திருந்தனன் என்பதும், அவ்விழாவின்கண் அத்தெய்வத்தின்பால் எம் நாட்டிற்கும் எழுந்தருள வேண்டும் என்று வரம் வேண்டி அங்ஙனமே வரமருளப் பெற்றவன் என்பதும்; அடிகளார், அருஞ்சிறை நீங்கிய வாரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரு கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்க ணிமைய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல் (157-164) என வரந்தரு காதையி லோதுமாற்றானு முணர்க. நாட்பலி பீடிகை - நாள்தோறும் பூப்பலி செய்தற் கியன்ற பீடம். அரந்தை - வறுமை, பிணி முதலியவற்றாலுண்டாகும் துன்பம். ஆடித்திங்கள் அகவயின் விழவெடுத்தான் - கண்ணகியார் அத்திங்களிலே தம் தெய்வத்தன்மை காட்டினமையைக் கருத்துட் கொண்டு என்க. என்னை? ஆடித் திங்கட் பேரிருட் பக்கத் தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண உரைசால் மதுரையோ டரைசுகே டுறுமெனும் உரையு முண்டே (கட்டுரைகாதை - 133-7) என மதுரைமாதெய்வம் கூறிற்றாகலின் அக்கால மதுவாதலுணர்க. பாடி-படவீடு. பாடிவிழா என்றது அரசன் உரிமைச் சுற்றத்தோடு வந்து பாடிவீடமைத்து அதிற் றங்கியிருந்து செய்யும் விழா வென்க. இதனாற் போந்தது கயவாகு கண்ணகிக்கு விழாவெடுப்பதனை அத்துணைச் சிறப்பாகக் கருதினன் என்பதாம். இவ்வாறு அரசர்கள் பாடிவிழா வெடுப்பதனைப் பெருங்கதை உஞ்சைக் காண்டத்தினும் காண்க. பாடி-நகரி என்பர். (அடியார்க்) 4. அதுகேட்டு............நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே (இதன்பொருள்) அதுகேட்டு - அச்செய்தியைக் கேள்வியுற்று; கோழியகத்து - அப்பொழுது சோழ நாட்டிற்குத் தலைநகராய்த் திகழ்ந்த உறையூரிடத்தே அரசு கட்டிலில் வீற்றிருந்த சோழன் பெருங்கிள்ளி (பெருநற்கிள்ளி) என்னும் சோழமன்னன்; இவள் எத்திறத்தானும் வரந்தரும் ஓர் பத்தினிக் கடவுள் ஆகும் என- இக் கண்ணகியாகிய நங்கை நமக்கு எவ்வாற்றானும் வரந்தருதற்கியன்றதொரு பத்தினிக் கடவுள் என மகிழ்ந்து; நங்கைக்கு - தன்னாட்டிலே தோன்றித் தெய்வமாகிய அக்கண்ணகிக் கடவுட்கு; பத்தினிக் கோட்டமும் சமைத்து - ஏனையோரினும் சிறப்பப் பத்தினிக்கோட்டமும் எடுப்பித்து; நித்தல் விழா அணி நிகழ்வித்தோனே - நாள்தோறும் வேள்வியும் விழாவும் நிகழ்வித்தனன் என்க. (விளக்கம்) பெருங்கிள்ளி - இவன் புகார் நகரத்தைக் கடல் கொண்டமையால் ஆங்கிருந்துய்ந்துபோன நெடுங்கிள்ளியின் மகன் ஆவான். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கடவுட் படிவம் சமைத்து வேள்வியும் விழவுஞ் செய்த காலத்தில் புகார் நகரம் கடல் கொள்ளப் பட்டழிந்தது. இக்காரணத்தால் இவ்வுரைபெறு கட்டுரையில் புகாரில் கண்ணகிக்குக் கோயிலெடுத்த செய்தி காணப்பட்டிலது. மேலும், புகார்ச் சோழர் வழித் தோன்றலே ஈண்டுக் கூறப்படுகின்ற பெருங்கிள்ளி என்க. இவன் கண்ணகித் தெய்வம் தன்னாட்டிற்றோன்றிய வுரிமைபற்றி இத்தெய்வம் பொதுவாக ஏனைய நாட்டினர்க்கு வரந்தருதல் போலன்றி நமக்குப் பிறப்புரிமைபற்றிச் சிறப்பாகவும் வரந்தருதற்குரியது என்பான், எத்திறத்தானும் வரந்தருமிவள் ஓர் பத்தினிக் கடவுள் என்றான் என்க. காவிரி நாட்டின்கண் பசியும் பிணியுமின்மையின் முன் கூறப்பட்டவாறு கூறாது கோட்டம் அமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோன் என்றுமட்டுமே கூறப்பட்டதென்க. இனி உரைபெறு கட்டுரை-இவை முற்கூறிய கட்டுரைச் செய்யுள் எனவும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள என்றமையால், சிறுபான்மை இவ்வுறுப்புக்களும் சிலவரும் எனவும் கொள்க என்பர் அடியார்க்கு நல்லார். இதனால் இவ்வுரைபெறு கட்டுரை என்னும் உறுப்பும் இளங்கோவடிகளாரே இயற்றியது என்பது அடியார்க்கு நல்லார் கருத்தென்பது அறியப்படும். இதன்கண், பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் சாந்தி செய்ய எனவரும் சொற்றொடரே அடிகளார் இதனைச் செய்திலர் என்பதற்குப் போதிய சான்றாம். உரைபெறு கட்டுரை முற்றிற்று. | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
புகார்க் காண்டம்
1. மங்கல வாழ்த்துப் பாடல்
(சிந்தியல் வெண்பாக்கள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகுஅளித்த லான். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு 5 மேரு வலம்திரி தலான். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல் மேநின்று தாஞ்சுரத்த லான். பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் 10 வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு ஓங்கிப் பரந்துஒழுக லான். (மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா) ஆங்கு, பொதியில் ஆயினும் இமயம் ஆயினும் பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய 15 பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும் நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின் முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே. அதனால், 20 நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில் மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள், அவளுந்தான், 25 போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும் தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும் மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ, ஆங்கு, 30 பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளொடு உயர்ந்தோங்கு செல்வத்தான் வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான் இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான், அவனுந்தான், 35 மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம் பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக் கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கிக் காதலால் கொண்டுஏத்தும் கிழமையான் கோவலன்என் பான்மன்னோ. அவரை, 40 இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால் மணஅணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி யானை எருத்தத்து அணிஇழையார் மேல்இரீஇ மாநகர்க்கு ஈந்தார் மணம். அவ்வழி, 45 முரசுஇயம்பின, முருகுஅதிர்ந்தன, முறைஎழுந்தன பணிலம்,வெண்குடை அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன, அகலுள்மங்கல அணிஎழுந்தது. மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ் வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்துச் 50 சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை. விரையினர் மலரினர் விளங்கு மேனியர் உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் 55 சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர் விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர் போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார் 60 காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல் தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடுதூவி அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை மங்கல நல்அமளி ஏற்றினார், தங்கிய இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை 65 உப்பாலைப் பொன்கோட்டு உழையதா எப்பாலும் செருமிகு சினவேல் செம்பியன் ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே. அஃதாவது :- நூலாசிரியர் தாமியற்ற வெடுத்துக்கொண்ட சிலப்பதிகாரம் என்னும் இப்பாட்டைச் செய்யுளாலியன்ற வனப்பு நூல் இனிது நிறைவேறுதற் பொருட்டுக் கடவுளை வாழ்த்துவதும், இவ்வனப்பு நூலின் தலைவியாகிய கண்ணகியையும் தலைவனாகிய கோவலனையும் திருமண வேள்விக்கண் கட்டிலேற்றிச் சேம்முதுபெண்டிர் வாழ்த்துவதுமாகிய இருவகை வாழ்த்துக்களையும் உடைய இன்னிசைப்பாடல் என்றவாறு. 1-3 : திங்களை........அளித்தலான் (இதன் பொருள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் யாம் உலகெலாம் தண்ணொளி பரப்பும் திங்கள் மண்டிலத்தைக் கைகுவித்து வணங்குவோம்! அஃது ஏனெனின்; கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெள் குடை போன்று - பூந்தாது விரிதற்கிடனான ஆத்திமாலையை யுடைய சோழமன்னனுடைய குளிர்ச்சி யுடைய வெண்கொற்றக் குடைபோன்று; இஅம கண் உலகு அளித்தலான் அஃது இந்த அழகிய இடங்களையுடைய நிலவுலகிற்குத் தண்ணொளி வழங்கிப் பாதுகாத்தலாலே; என்க. (விளக்கம்) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் எனவரும் அடுக்குச் சிறப்பின்கண் வந்தது; மேல் வருவனவற்றிற்கும் இஃதொக்கும்; இது பண்பும் பயனும் கூடின உவமம். கொங்கு பூந்தாது. மாலை ஆத்தி மாலை. சென்னி-சோழன். உவமத்திற்கு வந்த அடையைப் பொருளுக்கும் இயைத்துக் குளிர் வெண்திங்கள் என்க. 4-6 : ஞாயிறு...........திரிதலான் (இதன்பொருள்) ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் யாம் ஞாயிற்று மண்டிலத்தைக் கைகுவித்து வணங்குவோம்; அஃது ஏனெனின்; காவிரி நாடன் திகிரிபோல் பொன் கோட்டு மேரு வலம் திரிதலான்-அது தான் காவிரியாறு புரக்கும் நாட்டையுடைய சோழனது ஆணைவட்டம் போன்று பொன்னாகிய கொடுமுடியையுடைய மேருமலையினை இடையறாது வலமாகச் சூழ்ந்து வருதலான் என்க. (விளக்கம்) திகிரி ஆணைவட்டம். அரசனுடைய ஆணையை ஆழியாக உருவகித்துரைப்பது நூல் வழக்கு. இதனால் சோழமன்னனுடைய ஆணை உலகெலாம் செல்கின்ற சிறப்புடைத்தென்பது பெற்றாம். திரிதல்-இடையறாது செல்லுதன் மேற்று. இது தொழிலுவமம். ஏனைய நாட்டினும் சிறந்த நாடென்பார் அச்சிறப்பிற்குக் காரணமான காவிரியையுடைய நாடன் என்றார். என்னை? ஏரியு மேற்றத்தி னானும் பிறர்நாட்டு வாரி சுரக்கும் வளனெல்லாம் - தேரின் அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலும் கரிகாலன் காவிரிசூழ் நாடு எனவரும் பழைய வெண்பாவினையும் நினைக. 7-9 : மாமழை...........சுரத்தலான் (இதன் பொருள்) மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் - யாம் பெரிய முகிலைக் கைகுவித்து வணங்குவோம், அஃது ஏனெனின்; நாம நீர் வேலி உலகிற்கு - அச்சத்தைக் தருகின்ற கடலாற் சூழப்பட்ட இந்நிலவுலகிற்கு; அவன் அளிபோல் மேல் நின்று தான் சுரத்தலான் - அக்காவிரி நாடன தண்ணளி போன்று மேம்பட்டு நின்று பெயலாலே வளத்தைப் பெருக்குதலாலே என்க. (விளக்கம்) மழை, ஆகுபெயர்; முகில். மா-பெருமைமேற்று. நாம நீர் வேலி என்புழி நாம் என்னும் உரிச்சொல்லீறு திரிந்தது. நாம்-அச்சம். அவன் என்னும் சுட்டு மேல் காவிரிநாடன் என்பதனைச் சுட்டியவாறு. அளி-அருள். மேனின்று என்பது அரசன் அளிக்கு மேம்பட்டு நின்று எனவும், முகிலுக்கு மேலே நின்று எனவும் பொருள் பயந்து நின்றது. இனி, ஈண்டு அடிகளார், திங்கள் ஞாயிறு மழை எனும் மூன்று பொருள்களும் இவற்றிற்கு நிரலே உவமையாக வருகின்ற குடை திகிரி, அளி என்னும் மூன்றும் இவற்றையுடைய மன்னனும் ஆகிய இவற்றை வணங்கித் தமது காப்பியத்தைத் தொடங்குதல் அடிகளார்க்கு முன்னும் பின்னும் காணப்படாததொரு புதுமையுடைத்து. இவைதாம் இலக்கண நெறி நின்று ஆராய்வார்க்கு, ஆசிரியர் தொல்காப்பியனார் புறத்திணையியலில் பாடாண் திணையின்கண், அமரர்கண் முடியும் அறுவகை யானும் (....................-25) என்றோதினமையின் இவ்வாறு திங்கள் ஞாயிறு மழை என்னும் இவை அவ்விதி பற்றி வணங்கப்பட்டன போலும் எனவும், அன்றியும், புறத்திணைப்பாடாண் பகுதியில் தாவினல் லிசை எனத் தொடங்கும் நூற்பாவின்கண் நடைமிகுத்தேத்திய குடைநிழன் மரபு என்னும் துறைபற்றி ஈண்டுச் சென்னியின் குடை நிழன் மரபினை நடைமிகுத்து ஏத்தப்பட்டது எனவும், மரபு என்றதனால் திகிரியையும் அளியையும் மிகுந்தேத்தினார் எனவும் பண்டையுரையாசிரியர் தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் கூறிப் போந்தனர். இன்னும் ஈண்டு அடிகளார் வணங்கிய திங்கள் முதலிய மூன்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்னும் நூற்பாவின் பொருளோடு தொடர்புடையன என்று கொண்டு அக் கருத்திற்கேற்ப வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் இத் திங்கள் முதலிய மூன்றுமே என வுரை வகுத்தலுமாம். என்னை? கொடி நிலை என்றது திங்கள் மண்டிலம் எனவும், (நச்சினார்க்கினியர் ஞாயிற்று மண்டிலம் என்று கருதுவர்) கந்தழி என்பது ஞாயிறு மண்டிலம் எனவும், வள்ளி என்பது முகில் எனவும் கோடலுமாம் ஆகலின் என்க. இவ்வாறு தொல்காப்பியமே முதலிய பழைய இலக்கண நூலானும் இதுதான் இஃதென அறுதியிட்டுக் கூற வொண்ணாக இம்மங்கல வாழ்த்தைப் பின்னும் கூர்ந்து ஆராயுங்கால், இவ்வாழ்த்து அடிகளார் கடவுளை வாழ்த்தும் வாழ்த்தே என்பது புலப்படும். அது வருமாறு: மாந்தர் கட்புலனாகக் காணப்படாத கடவுளை அவனுடைய படைப்புப் பொருளின் வாயிலாகவே காண்டல் கூடும் என்பது அடிகளார் கருத்து. இறைவனுடய பண்புகளில் அருட்பண்பே தலைசிறந்த பண்பாகலின் அப்பண்பு திங்கள் மண்டிலத்தும், அவனுடைய தெறற்பண்பும் அறிவு விளக்கப் பண்பும் ஞாயிற்று மண்டிலத்தும், அவனுடைய ஆக்கல் அளித்தல் அழித்தல் என்னும் மூன்றுவகைத் தொழிற்பாடும் முகிலிடத்தும் காணப்படுதலால் இவற்றின்கண் இக் கடவுட்பண்புகளையே அடிகளார் கடவுளாகக் கண்டு வழிபடுகின்றார் என்பதாம். இனி, உயிரில் பொருளாகிய இவற்றினும் உயிர்களிடத்தே கடவுட்பண்பு இறைமைத்தன்மை (அரசத்தன்மை)யாக வெளிப்படுதலின் இவற்றிற் குவமையாகக் காவிரிநாடன் குடை முதலியவற்றை எடுத்தோதி வணங்குகின்றனர் என்று கொள்க. இங்ஙனம் கூறவே அடிகளாருடைய கடவுட் கொள்கையையும் யாம் ஒருவாறு அறிந்து கொண்டவராகின்றோம் என்க. இவ்வாறு எப்பொருளினும் கடவுளைக் காணுமியல்பே சமயக்கணக்கர் மதிவழிச் செல்லாது உயரிய உணர்ச்சி வாயிலாய்க் கடவுளைக் கண்டு வழிபடுகின்றவுண்மை நெறியென்று கொள்க. இவற்றை, நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள நின், தண்மையுஞ் சாயலும் திங்கள்உள நின், சுரத்தலும் வண்மையு மாரியுள நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்துள என்றற்றொடக்கத்துப் பரிபாடலானும் தீயினுட் டெறனீ பூவினுள் நாற்றம் நீ கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ என்றற்றொடக்கத்துப் பரிபாடலானும் மணிவாசகம் முதலிய நூல்களானும் உணர்ந்து கொள்க. ஈண்டு வணங்கிய திங்கள் முதலியன பொதுப் பொருள்களாக இக்காப்பியத்தோடு தொடர்புண்மை கருதி அரசன் என்று பொதுவின் ஓதாது சென்னி என்றும் காவிரிநாடன் என்றும் செம்பியன் ஒருவனையே விதந்தெடுத்தோதுவாராயினர். இது தாம் வழிபடு கடவுளை வாழ்த்தி இக்காப்பியத்திற்கு அவ்வாழ்த்தினூடே கால்கோள் செய்தபடியாம் என நுண்ணிதின் உணர்க. இனி, திங்களை முற்கூறியது இக் காப்பியத் தலைவியாகிய கண்ணகியாரைக் கருதிக் கூறியபடியாம். என்னை? திங்கள் மண்டிலம் பெண்மைத் தன்மையுடைத்தென்ப வாகலின் என்க. இக்கருத்தேபற்றி அடியார்க்கு நல்லார், இத் தொடர்நிலைச் செய்யுட்குச் சிறந்த முதன்மொழி அதுவே என்றோதினர் போலும். இனி இக் காப்பியத் தலைவியும் தலைவனும் தோன்றிய இடமாகிய பூம்புகாரை வாழ்த்திக் காப்பியக் கதையைத் தொடங்குகின்றனர் என்க. 10-12 : பூம்புகார்............. ஒழுகலான் (இதன்பொருள்) பூம்புகார் போற்றும் பூம்புகார் போற்றுதும்-யாம் இனி அழகிய புகார் நகரத்தைக் கைகூப்பி மனத்தால் நினைந்து தலையாலே வணங்குவேம்; வீங்குநீர் வேலிக்கு - கடலை வேலியாகவுடைய இந்நிலவுலகின்கண்; அவன் குலத்தோடு ஓங்கிப் பரந்து ஒழுகலான் - அக் காவிரிநாடன் குலத்தாருடைய புகழோடு தானும் உயர்ந்து தன்புகழ் இவ்வுலகெங்கும் பரவுமாறு நடத்தலாலே என்க. (விளக்கம்) பூ-அழகு; பொலிவு. பூப்புகார் எனற்பாலது விகாரத்தால் பூம்புகார் என நின்றது. இது செய்யுளின்பம் கருதி மெலிக்கும் வழி மெலித்தல். ஓங்கிப் பரந்து ஒழுகலான் என்னும் வினைக்கேற்பப் புகழ் என வருவித்தோதுக. அடிகளார் இக்காப்பியஞ் செய்கின்ற காலத்தே புகார் நகரம் கடல் வயிறுபுக்கு மறைந்து போனமை கருதி அந்நகரந்தான் மறைந்து போயினும் அதன் புகழ் அக் காவிரிநாடன் புகழோடு இவ்வுலகுள்ள துணையும் பரந்து ஒழுகும் அத்துணைப் பெருமையுடைத்தாகலான் அதனைப் போற்றுதும் என்றவாறு. இதற்குப் பழைய வுரையாசிரிய ரெல்லாம் அடிகளார் கருத்துணராது வறிய சொற்பொருள் உரை மட்டும் கூறியுள்ளனர். இக் கருத்து, அடுத்துப் பின்னும் விளக்கமுறும். 13-19 : ஆங்கு................ முழுதுணர்ந்தோரே (இதன்பொருள்) ஆங்கு-அவ்வாறு வாழ்த்தி வணங்குதலன்றி, பொதியில் ஆயினும் இமயம் ஆயினும். தம்பால் தோன்றிய உயர்ந்தோர் புகழோடு ஓங்கிப் பரந்தொழுகும் புகழுடைய பொதியமலை யேயாதல் இமயமலையேயாதல்; பதிஎழுவு அறியாப் பழங்குடி கெழீஇய பொதுஅறு சிறப்பின் புகாரேயாயினும் - தன்கண் வாழ்வோர் பகையே பசியே முதலியவற்றால் வருந்திக்குடியோடிப் போதலை எஞ்ஞான்றும் அறிந்திலாத படைப்புக் காலந்தொட்டு நிலையுற்று வருகின்ற பழைய குடிமக்களையுடைய தனக்கேயுரிய சிறப்பினையுடைய இந்தப் புகார் நகரமேயாதல், இன்னோரன்ன விடங்களை; முடித்த கேள்வி முழுது உணர்ந்தோர்-கேட்கக்கடவன வெல்லாம் கேட்டுமுற்றிய கேள்வியறிவினாலே அறியற்பாலனவனைத்தையும் ஐயந்திரிபற அறிந்துணர்ந்த சான்றோர்; நடுக்கு இன்றி நிலைஇயர் என்பது அல்லதை - கேடின்றி எஞ்ஞான்றும் புகழுருவத்தே நிலைத்திடுக! என்று உவந்து வாழ்த்துவதல்லது; ஒடுக்கம் கூறார் - அவைதாம் இயற்கை நியதியுட்பட்டு மறைந்தொழிந்தவிடத்தும் அதனைப் பொருளாகக் கருதிக் கூறுவாரல்லர்; எற்றாலெனின; உயர்ந்தோர் உண்மையின்-அவ்விடங்களிலே தோன்றிய சான்றோர் தம் பூதவுடம்பு மறைந்த வழியும் புகழுடம்பிலே எஞ்ஞான்றும் இவ்வுலகிலே நிலைத்திருத்தலாலே; என்க. (விளக்கம்) அவ்வுயர்ந்தோர் புகழோடு அவ்விடங்களின் புகழுமொன்றி ஓங்கிப் பரந்தொழுகலான் அவை ஒடுங்கியவிடத்தும் அவையிற்றின் ஒடுக்கத்தைப் பொருளாகக் கருதிக் கூறுவதிலர். அவற்றை வாழ்த்துவதே செய்வர் என்றவாறு. இங்ஙனம் கூறியதன் குறிப்பு அடிகளார் இந்நூல் செய்கின்ற காலத்தே புகார் நகரம் கடல் கொள்ளப்பட்டு மறைந்தொழிந்தமையால் அந்நிகழ்ச்சியை அடிகளார் வெளிப்படையானோதாமல் குறிப்பாக உணர்த்துவதாம் என்க. இக் குறிப்பின்றேல் புகார் நகரத்தின் சிறப்பறிவுறுத்த வந்த அடிகளார் நடுக்கின்றி நிலைஇயர் என்பதல்லதை ஒடுக்கங் கூறார் என்பது வெற்றெனத் தொடுத்தலும் மிகைபடக் கூறலுமே யாகும் என்க. வரலாற்றறிவின்கண் கருத்தில்லாத பழைய வுரையாசிரியர் இருவரும் ஈண்டு அடிகளார் ஒடுக்கம் கூறார் என வேண்டாகூறி வேண்டியது முடித்துள்ள அருமையை உணராது போயினர் இக்காலத்துரை செய்தோரும் கண்மூடி வழக்கமாக அப்பழைய வுரையாசிரியர் கூறியதே கூறியொழிந்தனர். இனி, தம் வாழ்நாளிலேயே கடல் கோட்பட்ட புகார் நகரம் உயர்ந்தோரை உலகிற்கு வழங்கிய வள்ளன்மைக்கு உவமையாகவே பொதியிலையும் இமயத்தையும் அதனோடு ஒருசேர எடுத்தோதினர். இனி, இதனால் உலகின்கண் மூதூர்கள் பல இருப்பினும் உயர்ந்தோரைத் தோற்றுவித்திலவாயின் அவை இருந்தும் இல்லாதவைகளே. மற்றுக் கடல்கோள் முதலியவற்றால் ஒடுங்கியவிடத்தும் சான்றோரை ஈன்ற திருவுடையூர்கள் என்றும் ஒடுங்காமல் நடுக்கின்றி நின்று நிலவுவனவேயாம் என்பது அடிகளார் கருத்தென்பதுணரப்படும். இக் கருத்துடனே, மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கள் மாயா தேந்திய கைகொ டிரந்தவ ரெந்தாய் வீய்ந்தவ ரென்பவர் வீய்ந்தவ ரேனும் ஈய்ந்த வரல்ல(து) இருந்தவர் யாரே? (பால-வேள்விப்-30) எனவரும் கம்பநாடர் செய்யுள் நினைந்தின்புறற் பாலதாம். இனி, அடிகளார் காலத்திலேயே புகார் நகரங் கடல் வயிறு புக்கது என்னும் இவ்வரலாற்றுண்மையைத் தண்டமிழாசான் சாத்தனார் ஓதிய மணிமேகலையின்கண்; (25: 175:) மடவர னல்லாய் நின்றன் மாநகர் கடல்வயிறு புக்கது காரணங் கேளாய் என்பது முதலிய பலசான்றுகளானும் உணர்க. மணிமேகலையிற் கிடைக்குஞ் சான்றுகள் இந்நூற்கு அகச்சான்றுகள் என்பது மிகையன்று. மேலும் உரைபெறு கட்டுரைக்கண் கண்ணகியார்க்குப் புகாரின்கண் பத்தினிக் கோட்டம் சமைக்கப்பட்டதெனக் கூறாமைக்கும் காரணம் அந்நகர் கடல் வயிறு புக்கமையே என்றுணர்க. இனி, பொதுவறு சிறப்பு என்பது இஃதென்றுணர்த்துவார் அதனையே பதியெழுவறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறுசிறப்பென அடை புணர்த்து விளக்கினர். நடுக்கின்றிநிலையிய என்பதும் பாடம். அல்லதை, ஐகாரம், அசை. நிலைஇயர் - வியங்கோள்; வாழ்த்துப் பொருளின்கண் வந்தது. கேள்வியினால் முழுதுணர்ந்தோர் என்க. உயர்ந்தோர் பொதியிலுக்கு அகத்தியனையும், இமயத்திற்கு இருடிகளையும், புகாருக்கு மன்னர்களையும் கற்புடையமகளிரையும் கொள்க. அடியார்க்கு நல்லார், இமயத்திற்கு, இறைவனைக் கொள்வர். இவ்வாறுரை கூறாக்கால் அடிகளார் கூற்று அவர் காலத்தே பொய்யாயொழிதலு முணர்க. கண்ணகி மாண்பு 20-24 : அதனால்...........அகவையாள் (இதன்பொருள்) அதனால் - அக்காரணத்தினாலே, நாக நீள் நகரொடும் நாகநாடு அதனொடும் போக-பவணர் வாழ்கின்ற நெடிய நகரத்தினோடும் வானவர் வாழ்கின்ற வானநாட்டினோடும் நம்மனோர் காட்சிக்குப் புலனாகாமல் கேள்விக்கு மட்டும் புலப்படுகின்றதொரு நகரமாய்ப் போகாநிற்ப; நீள் புகழ் என்னும் புகார்நகர் அது தன்னில் - காலந்தோறும் நீளுகின்ற புகழான் மட்டும் என்றென்றும் நடுக்கின்றி நிலைபெறுகின்ற புகார் நகரம் என்னும் அந்த மாநகரத்தின்கண் அக்காலத்தே வாழ்ந்திருந்த உயர்ந்தோருள் வைத்து; மாகவான் நிகர்வண் கை மாநாய்கன் குலக்கொம்பர் - வானத்து நின்று மழை பொழிந்து உலகோம்புகின்ற முகிலையே ஒத்த வண்மையுடைய கையையுடைய மாநாய்கன் என்னும் பெருங்குடி வாணிகன் மடமகளாய் அவன் குலமாகிய தருவீன்ற கொழுந்துபோல்வாளும், ஈகை வான் கொடி அன்னாள் - பொற் கொடிபோல்வாளும் ஆகிய நங்கை; ஈர்ஆறு ஆண்டு அகவையாள்-பன்னீராட்டையுட்பட்ட பருவத்தை யுடையளா யிருந்தனள் என்க. (விளக்கம்) அதனால் என்றது தன்கட்டோன்றிய உயர்ந்தோர் உண்மையால் என்றவாறு. உயர்ந்தோர் உண்மையால் எஞ்ஞான்றும் புகழால் மன்னும் புகார் நகரது தன்னில் என இயையும். இனி அஃது அத்தன்மையதாகலான் போகமும் புகழும் நிலைபேறுடைய என்றவாறு என்னும் அடியார்க்குநல்லார் உரை, போகத்திற்குப் புகார் நிலைபேறுடைத்தாதல் காரணம் என்றல் பொருந்தாமையின் போலியாதலறிக. புகாரின் நிலைபேறுடைமை புகழுக்குக் காரணம் என்பதும் காரணகாரிய முறைமையிற் பிறழ்ந்தவுரையாம் என்க. என்னை? புகழே நிலைபேறுடைமைக்குக் காரணம் ஆதலே நேரிதாகலின் என்க. கடற் கோட்பட்டமையால் புகார் நாகர் நகரோடும் நாக நாட்டோடும் ஒருதன்மையுடையதாய்ப் போக இப்பொழுது புகழான் மட்டும் மன்னுகின்ற (புகார் என்னும்) அந்த நகரிலே கடற்கோளின் முன்னர் வாழ்ந்திருந்த மாநாய்கன் என்பவனுடைய மகள் ஒருத்தி இருந்தனள், அவள் ஈராறாண்டகவையுடையள் ஆயிருந்தனள் என அடிகளார் காப்பியத்தலைவியை முதற்கண் நம்மனோர்க்கு அறிவிக்கின்றனர் என்றுணர்க. நாகர் நகரோடு நாக நாடதனோடும் ஒருதன்மையதாய்ப் போக என்றது இவ்வுலகத்திற் காணப்படாமல் அவ்விரண்டு நகரங்களையும் போன்று இலக்கியங்களிலே மட்டும் இருக்கின்றதாகிவிட என்றவாறு. முன்னர் உயர்ந்தோருண்மைக்குப் பொதியிலையும் இமயத்தையும் உவமை கூறினர் என்றும் ஈண்டுக் கடல் கொள்ளப்பட்ட பின்னர் இலக்கியத்தில் மட்டும் காணப்படுதற்கு நாகர் நகரையும் நாக நாட்டையும் உவமையாக எடுத்தோதினர் என்றுமுணர்க. இனி, அடியார்க்கு நல்லார், போகம் நீள்புகழ் எனக் கண்ணழித்து இவற்றை எதிர்நிரனிறை எனக் கூறினர். ஆயின் போகம் பவணர்க்குப் பொருந்துமாயினும் சுவர்க்கத்திற்குப் புகழுண்டென்றல் வம்பே, என்னை? புகழ்தானும் ஈகைமேற்றாக அது, அறஞ்செய் மாக்கள் புறங்காத்தோம்புநர், நற்றவஞ் செய்வோர், பற்றற முயல்வோர் யாவரும் இல்லாத் தேவர் நாட்டிற்கு உண்டென்பதும் அதுதானும் புகார் நகரத்திற்குப் புகழ்பற்றி உவமையாம் என்பதும் சிறிதும் பெருந்தா வென்றொழிக. அந்நகரம் இப்பொழுதின்மையான் புகார் நகரம் என்னும் அந்த நகரத்தில் என்பார் புகார் நகரது தன்னில் என்றார். எனவே, அந்நகரம் கடல் வயிறு புகுதற்கு முன்னர் அந்நகரத்தில் மாநாய்கன் என்றொரு பெருங்குடி வாணிகன் இருந்தான். அவனுக்கு மகள் ஒருத்தி இருந்தனள், அவள் பன்னீராண்டகவையினள் ஆயினள் என்றாருமாயிற்று. அவளே இக்காப்பியத் தலைவியாதலின் அவளை மகளாகப் பெறுதற்குரிய அவள் தந்தையின் தகுதிதோன்ற அவனை மாகவான் நிகர்வண்கையன் என்றார்; அவன்றானும் அரசனாற்சிறப்புப் பெயர் பெற்ற பெருந்தகை என்பார் அவனது இயற்பெயர் கூறாது மாநாய்கன் என்னும் சிறப்புப் பெயரால் கூறினர். என்னை? கருங்கடற் பிறப்பினல்லால் வலம்புரி காணுங்காலைப் பெருங்குளத்து என்றுந்தோன்றா எனவும், அட்டு நீர் அருவிக் குன்றக் தல்லது வைரந்தோன்றா எனவும், குட்ட நீர்க்குளத்தினல்லாற் குப்பைமேற் குவளை பூவா எனவும் வருகின்ற திருத்தக்கதேவர் திருமொழியும் காண்க. குலக்கொம்பர் என்புழி. கொம்பர் ஆகுபெயர். கொழுந்து என்றவாறு. இனி அவளது இயற்கை எழில்தோன்ற ஈகைவான் கொடியன்னாள் என்றார். ஈகை பொன் பொன்னிறமான பூங்கொடிபோல் வாள் என்க. இனி வானவல்லி எனினுமாம். இது கற்பகத்தருவின் மேலன்றிப் பிறதருவிற் படராதென்ப. எனவே அவளது கற்புப் பண்பிற்கு இது குறிப்புவமையாகும் என்க. ஈராறாண்டகவையாள் என்றது மணப்பருவமெய்தினள் என்றவாறு. 25-29 : அவளுந்தான்.............மன்னோ (இதன்பொருள்) அவள்தான் - அந்நங்கைதான்; மாதரார் - அந் நகரத்தே வாழுகின்ற உயர்குலத்து மகளிர்கள், இவள் (வடிவு) போதில் ஆர் திருவினாள் புகழுடை வடிவு என்றும்-இவளுடைய அழகு செந்தாமரை மலரின்கண் எழுந்தருளியிருக்கின்ற திருமகளுடைய புகழுடைய அழகையே ஒக்கும் என்றும்; இவள் திறம்-இவளுடைய கற்புடைமை, தீது இலா வடமீனின் திறம் என்றும்- குற்றமில்லாத அருந்ததியின் கற்பையே ஒக்கும் என்றும்; தொழுது ஏத்த-தன்னைத் தொழுது பாராட்டா நிற்ப; வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் - விளங்கிய தனது பெருங்குணங்களோடு அந்நகரத்தே வாழும் ஒருவன்பால் காதலுடையவளாகவுமிருந்தனள்; மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ - அவள் கண்ணகி என்று பெயர் கூறப்படுபவள் என்க. (விளக்கம்) இனி, இங்ஙனமன்றி அடியார்க்கு நல்லார் திருமகளுடைய வடிவு இவள் வடிவை யொக்கு மென்றும் அருந்ததியுடைய கற்பு இவள் கற்பை ஒக்கும் என்றும் மாதரார் தொழுதேத்த என்று உரை வகுப்பர். அவ்வாறு கூறினும் அமையும். என்னை? பொருளே உவமஞ் செயதனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃதுவமமாகும் என்பது விதி யாகலின் (தொல்-உவம 6) என்க. விதியேயாயினும் அங்ஙனம் கூறுவதனாற் பயன் யாதொன்றுமில்லை ஆகலின் அடிகளார் கருத்து யாம் கூறியதே என்றுணர்க. அவளும் தான் என்புழி உம்மை இசைநிறை. போது-செந்தாமரை மலர். வடமொழியாளராற் கூறப்படும் பத்தினிமகளிருள் வைத்து அருந்ததி மட்டுமே தீதிலாப் பத்தினி ஆதலால் கண்ணகிக்கு அவள் உவமையாதற்குக் காரணம் கூறுவார் தீதிலா வடமீனின் திறம் என்றார். எஞ்சிய சீதை பாஞ்சாலி முதலிய பத்தினிகள் இழுக்குடையராதல் அவரவர் வரலாற்றான் அறிக. இனி அக்கண்ணகி தானும் தன்னெஞ்சத்தே ஒருவனைக் காதலித்திருந்தனள் என்பது போதரப் பெருங்குணத்துக் காதலாள் என்றார். இவ்வாற்றான் கண்ணகியும் கோவலனும் முற்படத் தம்முள் ஒருவரையொருவர் காதலித்திருந்தனர் என்பது அடிகளார் இப்பாட்டிடை வைத்த குறிப்புப் பொருள். உள்ளப் புணர்ச்சியளவிலேயே அவர் காதலிருந்த தென்பது தோன்றப் பெருங்குணத்துக் காதலாள் என்றார். இனி அவளால் காதலிக்கப் பட்டான் இயல்பு மேலே கூறுகின்றார். இங்ஙனம் கொள்ளாக்கால் கண்ணகி கோவலன் மணம் ஒருவரை யொருவர் காதலியாமல் தாய் தந்தையராற் கூட்டுவிக்கப்பட்ட போலி மணமாய் முடிதலறிக. அடிகளார் முன்னர்ப் புகார் நகரின் ஒடுக்கத்தைக் கூறாமல் பிறி தொன்று கூறுவார் போன்று கூறியாங்கே ஈண்டும் கண்ணகியின் காதலையும் பிறிதொன்று கூறுவார் போன்று கூறியிருத்தல் வியந்து பாராட்டற்குரியதாம். இவ்வாறு யாம் பொருள் காணா தொழியின் ஒடுக்கம் கூறார் என்று பண்டு கூறியதும் ஈண்டுக் காதலாள் என்றோதியதும் சொற்றிறந்தேறாது வாய் தந்தன கூறியவாறாம் என்றறிக. மன், ஓ. அசைச் சொற்கள். கோவலன் 30-34: ஆங்கு ............அகவையான் (இதன்பொருள்) ஆங்கு-அப்புகார் நகரின் கண்; பெருநிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் - நெடிய நிலவுலகத்தை முழுவதும் தனது ஒரு குடை நிழலின்கண் வைத்துத் தனியே அருளாட்சி செய்கின்ற மன்னன் குடியை முதற் குடியாக வைத்து நிரலாக எண்ணுதலையுடைய ஒப்பற்ற குடிகளுள் வைத்து மிக்குயர்ந்த செல்வத்தையுடைய குடியின்கண் தோன்றிய வாணிகன் ஒருவன் உளன்; வருநிதி பிறர்க்கார்த்தும் மாசாத்துவான் என்பான்-தனக்குள வொழுக்கினின்று செய்யும் அறுவகைத் தொழிலினாலே தனக்கு ஊதியமாக வருகின்ற பொருள்களை அப்பொருளில்லாத வறியோர்க்கு வழங்கி உண்பிக்கும் அவன் மாசாத்துவான் என்று பெயர் கூறப்படுவான்; இரு நிதிக்கிழவன்-மேலும் இரு நிதிக் கிழவன் என்னும் சிறப்புப் பெயருமுடையான்; மகன் ஈர் எட்டு ஆண்டு அகவையான்-அவ்வாணிகனுக்கு மகன் ஒருவன் உளனாயினன் அவன் அப்பொழுது பதினாறாட்டை யுட்பட்ட பருவத்தை யுடையவனாயிருந்தனன்; என்க. (விளக்கம்) பெருநிலம் என்றது சோழநாட்டை ஆளும் பெருமகன் என்றதனால் அரசன் என்பது பெற்றாம். குடியென நோக்குவார்க்கு அரசன் குடியும் ஒரு குடியே ஆகலான் ஆளும் பெருமகன்றலை வைத்த ஒரு தனிக் குடிகள் என்றார். ஒருதனிக் குடிகள் என்றது மிகவும் உயர்ந்த குடிகள் என்றவாறு. குடிகளோடு என்புழி மூன்றனுருபு ஏழாவதன்கண் மயங்கிற்று. இன்னுருபு என்பர் அடியார்க்கு நல்லார். வருநிதி என்றது அறத்தாற்றினின்று தன் குலத்திற்குரிய தொழில் செய்து அதற்கு ஊதியமாக வருகின்ற பொருள் என்றவாறு. முன்னர்ச் செல்வத்தான் என்றமையின் அஃதில்லாத வறியோரைப் பிறர் என்றார். ஆர்த்துதல் - ஊட்டுதல். அங்ஙனம் பிறரையூட்டுதலையே குறிக்கோளாகக் கொண்டவன் என்பது தோன்ற வருநிதி பிறர்க்கு வழங்கும் என்னாது ஆர்த்தும் என்று ஓதினார். எனவே, இவன் தன்குலத்தொழிலின்கண் வாகை சூடியவன் என்றாராயிற்று. என்னை? உழுதுபயன் கொண் டொலிநிரை ஓம்பிப் பழுதிலாப் பண்டம் பகர்ந்து - முழுதுணர ஓதி அழல்வழிப்பட் டோம்பாத ஈகையான் ஆதி வணிகர்க் கரசு (புறப்-மாலை-264) என்பது வாணிகவாகையின் வரலாறாகலின் என்க. மாசாத்துவான் : இயற்பெயர் இருநீதிக்கிழவன் : சிறப்புப் பெயர். 35-39 : அவனுந்தான்...........என்பான் மன்னோ (இதன்பொருள்) அவனுந்தான்-அம்மாசாத்துவான் மகன்றானும்; மண்தேய்த்த புகழினான் - தன் வள்ளன்மையாலே இந்நிலவுலகம் இடம் சிறிதென்னும்படி பரவிய பெரிய புகழை யுடையவனும்; பண் தேய்த்த மொழியினார்-பண்ணினது இனிமை சிறிதென்னும்படி பேரின்பம் பயக்கும் மொழியினையுடைய; மதிமுக மடவார் - நிறைவெண்டிங்கள் போன்ற அழகிய முகத்தையுடைய பொதுமகளிர் தன்னைக் கண்டுழி; காதலால் - தன்பாலெழுந்த காதல் காரணமாக; கண்டு ஏத்தும் செவ்வேள் என்று கொண்டு - இவன் நம்மனோர் கண்களாலே கண்டு வணங்குதற்பொருட்டு இவ்வாறுருவம் கொண்டு நம்மெதிரே வந்த சிவந்த திருமேனியையுடைய முருகனே என்று நெஞ்சத்திலே கொண்டு; ஆயத்து-தமது தோழியர் குழுவினிடத்தே; பாராட்டி -தனது அழகினைப் பலபடியாகப் புனைந்து; இசை போக்கி-இசை யெழீஇ; ஏத்தும் கிழமையான் - தொழற்குரிய பேரழகுடையவன்; கோவலன் என்பான் மன்னோ - கோவலன் என்று பெயர் கூறப்படுபவன் என்க. (விளக்கம்) மண்-நிலவுலகம்; அவன் புகழ் இந்நிலவுலகின்கண் அடங்காமையின் மண்ணைத் தேய்த்தபுகழ் என்றார். புகழ் ஈகையால் வருபுகழ், அவன் அன்னாதலைப் பின்னர்க் காட்டுதும். கொடுத்தான் எனப்படும் சொல்(புகழ் அடுக்கிய மூன்றுலகும் கேட்குமே என்றார் பிறரும். மடவார் ஈண்டுப் பரத்தை மகளிர், என்னை? குலமகளிர்க்கும் பிறன் ஒருவனைப் பாராட்டுதல் ஒவ்வாமையின் என்க. மதிமுக மடவார்.....காதலாற் கொண்டேத்தும் கிழமை கோவலனுக்கு அடிப்பட்டமைந்து கிடந்தமையை இதனால் அடிகளார் குறிப்பாக ஓதினர் என்றுணர்க. இதற்கு மாறாகக் கண்ணகியின்பால் வடமீனின் திறம் (கற்பு) அடிப்பட்டுக் கிடந்தமை முன்னர் ஓதினவையும் உணர்க. கோவலன் புகழ் பெரிதாயினும் அவனது கண்ணோட்டமில்லாத பரத்தமை யொழுக்கமாகிய பழி தேய்த்தொழித்தமை குறிப்பாகப் புலப்படுமாறு தேய்த்தபுகழ் என்று சொற்றிறம் தேர்ந்து அடை புணர்த்தார். அதுதானும் தேய்க்கப்பட்ட புகழ் என்றும் பிறிதொரு பொருளும் தோற்றுவித்தலறிக. செவ்வேள் - முருகக் கடவுள்; கண்டேத்தும் செவ்வேள்; இல்பொருளுவமை. இசை போக்கி - இசை யெழீஇப் பாடி, இசைபோக்கி என்றது புகழைக்கெடுத்து எனவும் ஒரு பொருள் தோன்ற நிற்றலுணர்க. மன், ஓ : அசைகள். அடியார்க்குநல்லார்-இனி மடவார் என்பதற்குப் பூமாதும் கலைமாதும் புவிமாது மென்று கூறி இவர் அழகிற்கும் அறிவிற்கும் ஆண்மைக்கும் இவனென்று உட்கொண்டு ஏத்தும் கிழமையான் எனினும் அமையும் என்பர். இவ்வுரை அமையுமாயிற் கொள்க. மொழியினால். என்பதும் பாடம். கண்ணகியை முற்கூறினார் பத்தினியை ஏத்துதல் உட்கோளாகலின் என்பர் அடியார்க்குநல்லார். அவளே காப்பியத் தலைவியாதலின் முற்கூறினார் எனினுமாம். 40-44 : அவரை................மணம் (இதன்பொருள்) அவரை-அந்தக் காதலரிருவரையும்; இரு பெருங் குரவரும் - அவர்தம் காதற் கேண்மையைக் குறிப்பாலுணர்ந்த அவர்தம் தாயரும் தந்தைமாரும்; ஒருபெரு நாளால் மண அணிகாண மகிழ்ந்தனர்-ஒரு நல்ல நாளிலே திருமணக் கோலம் செய்வித்துப் பலருமறிய வதுவைச் சடங்காற்றிக் கண்ணாற் காணவேண்டும் என்று தம் மூட்குழீஇ உறுதி செய்து மகிழ்வாராயினர்; மகிழ்ந்துழி-அவ்வாறு மகிழ்ந்த அப்பொழுதே; அணி இழையார் யானை எருத்தத்துமேல் இரீஇ மணம் மாநகர்க்கு ஈந்தார்-அழகிய அணிகலன அணிந்த மகளிர்சிலரை யானையின் பிடரிலேற்றுவித்துத் தாம் உறுதி செய்த அத்திருமண நாளைப் பெரிய அந்நகரத்தில் வாழ்வோர்க்கெல்லாம் அவர் வாயிலாய் அறிவித்தனர் என்க. (விளக்கம்) அவரை யென்றது தம்முட் காதல்கொண்டிருந்த அக் கண்ணகியையும் கோவலனையும் என்பதுபட நின்றது. இருபெருங்குரவர் என்றது கண்ணகியின் தாய்தந்தையரையும் கோவலன் தாய் தந்தையரையும் குறித்தவாறாம். இனி, அவ்விருவருடைய தந்தையர் எனக் கோடலுமாம். பெருநாள்-நல்லநாள். மண அணி-மணக்கோலம். மக்கள் மணக்கோலங் காணவேண்டும் என அவாவுதல் முதுகுரவர்க்கியல்பு. காணவேண்டும் எனத் தம்முட்குழீஇ உறுதிசெய்து மகிழ்ந்தனர் என்பது கருத்து. யானை யெருத்தத்து அணியிழையாரை இருத்தி அவர் வாயிலாய்த் திருமணச் செய்தியை அறிவித்தல் அக்காலத்துப் பெருநிதிக்கிழவர் வழக்கம் என்பது இதனாலறியப்படும். மணம்-மணச்செய்தி. ஈதல் - ஈண்டு அறிவித்தல். 45-47 : அவ்வழி..........எழுந்தது (இதன்பொருள்) அவ்வழி - அவ்வாறு திருமணச் செய்தி யறிவித்தபின்; முரசு இயம்பின - குறித்த நாளிலே முரசு முதலியன முழங்கின; முருடு அதிர்ந்தன-முழவு முதலிய இன்னிசைக் கருவிகள் முழங்கின; பணிலம் முறை யெழுந்தன - சங்குகளின் ஒலி முறைப்படி எழலாயின; வெள்குடை அரசு எழுந்தது ஓர்படி என - மங்கலமரபினவாகிய வெண்குடை முதலியன அரசன் திருவுலாப் போதரும்பொழுது எழுமாறுபோல; எழுந்தன-மிகுதியாக எழலாயின; அகலுள் மங்கல அணி எழுந்தது - இவ்வாற்றால் அப்புகாரினது அக நகரெங்கணும் திருமண விழாவினது அழகு தோன்றலாயிற்று என்க. (விளக்கம்) இஃது இசைப்பாடலாதலால் (1) திங்களைப்போற்றுதும் என்பது தொடங்கி, (12) ஓங்கிப் பரந்தொழுகலான் என்னும் துணையும், வாரநடையாகவும் (13) ஆங்கு என்பது தொடங்கி (38) ஈந்தார் மணம் என்னுந் துணையும் கூடை நடையாகவும் (39) அவ்வழி முரசியம்பின என்பது தொடங்கித் திரணடையாகவும் படிப்படியாக வுயர்ந்து ஆரோசையாக நடத்தலறிக. இனி, (41) நீலவிதானத்து என்பது தொடங்கி அமரோசையாய்ப் படிப்படியாக இறங்கி மீண்டும் வாரநடையாகச் செல்லுதலை அவ்வாறு பாடியுணர்க. முரசு வல்லோசைத் தோற்கருவியாதலின் அவ்வினத்துக் கருவிகளையும், முருடு இன்னிசைக் கருவியாதலின் அவ்வினத்துக் கருவிகளையும் இனம் செப்புமாற்றாற் குறித்து நின்றன. இனி, பணிலம் வதுவைச் சடங்குகளின்கண் காப்பணிதல் முதலிய சடங்குதோறும் அவ்வச் சடங்கின் தொடக்கத்தேயும் இறுதியிலேயும் ஒலிக்கப்படுமாகலின் பணிலம் முறை எழுந்தன என்றார். இதனை, பருத்தமணி முத்தமணல் பாய்சதுர மாகத் திருத்தியொரு வால்வனை பயின்று திடர்சூழத் தருப்பையினு னித்தலை வடக்கொடு கிழக்காய்ப் பரப்பின னதற்குமொரு வால்வளை பயின்றான் எனவருஞ் சூளாமணியானும் (1069) உணர்க. இனி, குடை, சிறப்புப்பற்றி மங்கலப் பொருள்களைக் குறித்து நின்றது, அவையிற்றை, அயின்முனை வாளும் வயிரத் தோட்டியும் கொற்றக் குடையும் பொற்பூங் குடமும் வலம்புரி வட்டமும் இலங்கொளிச் சங்கும் வெண்கண் ணாடியும் செஞ்சுடர் விளக்கும் கவரியுங் கயலும் தவிசுந் திருவும் முரசும் படாகையு மரசிய லாழியும் ஓண்வினைப் பொலிந்த வோமா லிகையுமென் றெண்ணிரண் டாகிய பண்ணமை வனப்பின் கடிமாண் மங்கலம் கதிர்வளை மகளிர் முடிமிசை யேந்தினர் முன்னர் நடப்ப எனவரும் பெருங்கதையால் (2:5:24-35) உணர்க. அகலுள் - அகன்ற உள்ளிடம்; அஃதாவது அகநகர். மணமகள் இல்லத்திருந்து முரச முதலியன முழங்க இம்மங்கலப் பொருள் சுமந்து கதிர்வளை மகளிர் மணமகளில்லத்திற்குச் செல்லுதலையே அடிகளார் அகலுள் மங்கல அணி எழுந்தது என்றார் எனக் கோடலுமாம். இனி அரும்பதவுரையாசிரியர், மங்கல அணியெழுந்தது என்பதற்கு, மாங்கலிய சூத்திரம் (நகரை) வலஞ்செய்த தென்பர். அங்ஙனம் வலஞ்செய்தல் மரபாயின் ஆராய்ந்து கொள்க. அவ்வழி முரசியம்பின........அணியெழுந்தது என்னும் இவ்வடிகள் தம்மோசையாலேயே திருமணவாரவாரத்தைத் தோற்றுவித்து விடுதலும் உணர்க. 48-53 : மாலை...........நோன்பென்னை (இதன்பொருள்) மாலை தாழ் சென்னி வயிரமணித் தூணகத்து-மலர்மாலைகள் தூங்கவிடப்பட்ட உச்சியினை யுடையவாய் வயிர மணிகள் பதிக்கப்பட்டனவும் ஆகிய தூண்களையுடையதொரு அழகிய மண்டபத்தின்கண்; நீல விதானத்து நிததிலப் பூம் பந்தர்க்கீழ் - நீலப்பட்டினாலியன்ற மேற்கட்டியின் கீழே முத்து மாலைகளாலே அமைக்கப்பட்ட அழகிய திருமணப்பந்தரின் கீழே; வான் ஊர் மதியம் சகடு அணைய-வானத்திலே இயங்காநின்ற திங்கள் ஆகிய கோளானது உரோகிணி என்னும் விண்மீனைச் சேராநிற்ப அந்த நன்னாளிலே; வானத்துச் சாலி ஒரு மீன் தகையாளை - அவ்வானத்தே தோன்றுகின்ற ஒப்பற்ற புகழையுடைய அருந்ததி என்னும் மீனை ஒத்த கற்பென்னும பெருந்தகைமையுடைய அக்கண்ணகியை; கோவலன்-அம்மாசாத்துவான் என்பான் மகனாகிய கோவலன்; மாமுது பார்ப்பான் - அறனறிந்து மூத்த சிறப்புடைய பார்ப்பனன்; மறை வழிகாட்ட-திருமணத்திற்கு மறைநூலிற் சொன்ன நெறியை முன்னின்று காட்டாநிற்ப; தீவலம் செய்வது - திருமணஞ் செய்துகொண்டு அவ்விருவரும் வேள்வித்தீயை வலஞ்செய்யும் இக்காட்சியை; காண்பார் கண் - அங்கிருந்து காண்கின்றவர் கண்கள்தாம்; நோன்பு என்னை முற்பிறப்பிலே செய்த தவந்தான் என் கொலோ? (என்று அடிகளார் வியந்தார்) என்க. (விளக்கம்) சகடு - உரோகிணி நாள். திங்கள் உரோகிணியோடு சேர்ந்த நாளைத் தமிழ்மக்கள் திருமணச் சடங்கிற்குச் சிறந்த நாளாகக் கொண்டிருந்தன என்பது இதனானும், அங்க ணிருவிசும்பு விளங்கத் திங்கட் சகட மண்டிய துகடீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப் பண்ணை யிமிழ வதுவை மண்ணிய, எனவரும் அகநானூறு 139 ஆம் செய்யுளானும் உணர்க. இனி, மாமுதுபார்ப்பான் என்பதற்கு அடியார்க்குநல்லார் பிதாமகன்: (பிரமன்) புரோகிதனுமாம் என்பர் பிதாமகன் என்பது வேண்டா கூறலாம். காண்பார்கள் எனக் கண்ணழித்துக் கோடலுமாம். இனி, காண்பார்கண் நோன்பென்னை? என்பது நூலாசிரியர் கூற்றாகக் கோடலே சிறப்பாம். என்னை? இம்மணமகள் போன்று வாழ்க்கைத் துணைவியானவள் தன் கற் பொழுக்கத்தின் மேன்மை காரணமாக வானவர் வந்து எதிர்கொண்டழைப்ப வானவூர்தியிற்றன் கணவனொடு விண்ணகம் புக்க திருமாபத்தினி பிறளொருத்தி உலகிலின்மையால் இவள் கணவனொடு தீவலஞ் செய்யக் கண்டவர் செய்தவம் பெரிதும் உடையராதல் வேண்டும் என அடிகளார் வியந்தவாறாம் என்க. காண்பார் கண் நோன்பென்னை என்பதற்கு அடியார்க்கு நல்லாரை யுள்ளிட்ட உரையாசிரியர், காண்கின்றவர் கண்கள் முற்பவத்திற் செய்த தவம் யாதுகாணென்பாராயும் என வோதிய வுரைக்குச் செய்யுளிடந்தாராமை யறிக. (1) திங்களைப் போற்றுதும் என்பது தொடங்கி; (46) காண்பார் காணோன் பெண்னை? என்பதீறாக அடிகளார் தாம் தொடங்கும் இப்பேரிலக்கியத்திற்கு ஆக்கமாகத் திங்கள் முதலியவற்றின் வாயிலாய்த் தமக்குப் புலப்படுகின்ற வழிபடுகடவுளை வாழ்த்தி இதனைத் தோற்றுவாய் செய்தமையால் இத்துணையும் கடவுளை வாழ்த்திய மங்கல வாழ்த்துப் பாடல் என்க. இனி, அடிகளார் தோற்றுவாய் செய்த கண்ணகியையும் கோவலனையும் குலமகளிர் கட்டிலேற்றி அவரை வாழ்த்திய மணமங்கல வாழ்த்தினை ஓதுகின்றார் என்று கொள்க. 54-59 : விரையினர்............முகிழ்த்த முரலர் (இதன்பொருள்) விளங்கு மேனியர்-கண்ணகியின் கைபற்றிக் கோவலன் வேள்வித்தீயை வலஞ்செய்து தொழுத பின்னர் ஆங்குத் தளிரெனத் திகழும் மேனியையுடைய மங்கைப்பருவத்து மகளிர்கள்; விரையினர் மலரினர் உரையினர் பாட்டினர்-விரையேந்தினரும் மலரேந்தினரும் புகழெடுத்தோதுவாரும் வாழ்த்துப்பாடல் பாடுவாரும் ஆகவும்; ஒசிந்த நோக்கினர்-ஒதுங்கிப் பார்க்கும் பார்வையினையுடைய மடந்தைப் பருவத்து மகளிர்கள்; சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்-சாந்தேந்தினரும் புகையேந்தினரும் விளங்குகின்ற மலர் மாலை யேந்தினருமாகவும்; ஏந்து இளமுலையினர்-மதலையின்றமையின் தீம்பால் சுரந்து அணந்த இளமுலையினையுடைய அரிவைப் பருவத்து மகளிர்கள்; இடித்த சுண்ணத்தர் விளக்கினர் கலத்தினர்-இடிக்கப்பட்ட சுண்ணமேந்தினரும் விளக்கேந்தினரும் அணிகலன் ஏந்தினரும் ஆகவும்; முகிழ்த்த மூரலர் - தோன்றிய புன்முறுவலையுடைய தெரிவைப் பருவத்து மகளிர்; விரிந்த பாலிகை முளைக் குடம் - விரிந்த முளைகளையுடைய பாலிகை ஏந்தினரும் நிறைகுடம் ஏந்தினரும் ஆகவும்; நிரையினர் - அத் திருமண மக்களை வலம்வந்து குழீ இயினர் என்க. (விளக்கம்) விளங்கு மேனியர், விரையினராகவும் மலரினர் ஆகவும் உரையினரும் பாட்டினரும் ஆகவும், ஒசிந்த நோக்கினர் சாந்தினர் முதலியோரும் ஆகவும், ஏந்தின முலையினர் சுண்ணத்தர் முதலியோராகவும், மூரலர் பாலிகை ஏந்தினர் முதலியோராகவும் வந்து நிரையினர் என்க. நிரையினர் நிரம்பினர். இவருள் விளங்குமேனியர் என்றது மங்கைப் பருவத்து மகளிரை; ஒசிந்த நோக்கினர் என்றது மடந்தைப்பருவத்து மகளிரை; ஏந்திள முலையினர் என்றது தாய்மை எய்திய அரிவைப்பருவத்து மகளிரை; முகிழ்த்த மூரலர் என்றது தெரிவைப்பருவத்து மகளிரை. இவ்வாறு வேறுபாடு கண்டு கொள்க. விரை முதலியன மங்கலப் பொருள்கள். மேலே போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார் என்றது பேரிளம் பெண்டிரை. இவரைச் செம்முத பெண்டிர் என்றும் கூறுப. இச்செம்முது பெண்டிரே மணமக்களை மங்கல நல்லமளியேற்றி வாழ்த்துவோர் என்பதுமறிக. இவ்வாற்றால் அடிகளார் எழுவகைப் பருவத்துமகளிருள் வைத்துப் பேதைப் பருவத்து மகளிரையும் பெதும்பைப் பருவத்து மகளிரையும் விடுத்து, ஏனைய ஐவகைப் பருவத்து மகளிரையும் கூறி அவ்வப் பருவத்துக் கேற்ற செய்கையையும் அழகாகக் கூறியுள்ளமை ஆராய்ந்துணர்ந்து கொள்க. பேதைப் பருவத்தினர் தம் பிள்ளைமைத் தன்மையானும் பெதும்பைப் பருவத்தினர் தங் கன்னிமையின் நாணமிகுதியானும் இக்குழுவினுள் கூடவொண்ணாமை யுணர்க. இனி, விரை முதலியன மங்கலமாக வேந்தி மகளிர் வருதலை, ஆடி யேந்தினர் கலனேந்தினர் அவிர்ந்துவிளங்கு மணியிழையினர் கோடியேந்தினர் பட்டேந்தினர் கொழுந்திரையலின் செப்பேந்தினர் வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர் மான்மதத்தின் சாந்தேந்தினர் கண்ணியேந்தினர் பிணையலேந்தினர் கவரியேந்தினர் தூபமேந்தினர் எனவரும் வழக்குரைகாதையானும் (13-16) உணர்க. இது திருமணவிழவாகலின் விளக்கும் பாலிகையும் நிறைகுடமும் பிறவும் கூறப்பட்டன. ஏந்தினர் என்னும் சொல் யாண்டும் தந்துரைக்க. 60-64 : போதொடு.........ஏற்றினார் தங்கிய (இதன்பொருள்) போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடியன்னார்-இங்ஙனம் மங்கலப் பொருளேந்தி வந்த மகளிர் சூழுவொடு வந்த செம்முது பெண்டிராகிய மலரோடு விரிந்த கூந்தலையும் உடைய பொன்னிறமான நறிய வானவல்லியென்னும் பூங்கொடியையே போல்வாராகிய செம்முது பெண்டிர்; அங்கண் உலகில் அருந்ததி அன்னாளை - அழகிய இடங்களையுடைய இந்நிலவுலகத்தே தோன்றிய அருந்ததி போல்வாளாகிய கண்ணகியை நோக்கி; காதலன் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீது அறுக என ஏத்தி இந்நங்கை நல்லாள் தன் காதற் கணவனைக் கண்ணினும் நெஞ்சினும் எஞ்ஞான்றும் பிரியாமற் புணர்வோளாகுக என்றும் இவள் காதலன்றானும் இவளை அகத்திட்ட கை நெகிழாமல் எஞ்ஞான்றும் இவள்பாலே உறைவானாக என்றும், இவ்விருவர்பாலும் தீங்குகள் இல்லையாகுக வென்றும்; சில் மலர் தூவி சிலவாகிய மலர்களைத் தூவித் தம் வழிபடு தெய்வத்தை வாழ்த்தி; தங்கிய மங்கல நல்லமளி ஏற்றினார் - முன்னரே கோவலன் ஏறியிருந்த அழகிய திருமணக் கட்டிலின் மேலேற்றியவர் என்க. (விளக்கம்) செம்முது பெண்டிராகலின் ஏனைய மகளிர் போலத் தம் கூந்தலைக் கை செய்யாமல் வாளா அள்ளிச்செருகி மங்கலத்தின் பொருட்டு மலர்மட்டும் அக்கூந்தலிற் செருகியிருந்தமை தோன்ற போதொடு விரிகூந்தல் பொலனறுங் கொடியன்னார் என்றனர். உலகின் அருந்ததி: இல்பொருளுவமை. தங்கிய நல்லமளி என்க. தங்கிய-கோவலன் ஏறியிருந்த என்க. ஏற்றியவர் - பெயர். 65-68 : இப்பால்.............எனவே (இதன்பொருள்) இப்பால்-பின்னர்; செருமிகு சினவேல் செம்பியன் - போரின்கண் எஞ்ஞான்றும் மேம்பட்டு விளங்குகின்ற வெகுளியையுடைய வேற்படையை உடைய நம் மன்னனாகிய சோழன், இமயத்து இருத்திய வாள் வேங்கை - தனது வெற்றிக்கறி குறியாக இமய மலையிலே பொறித்து வைத்த வாள் போலும் வரிகளையுடைய புலியிலச்சினையானது; பொற்கேட்டு உப்பாலை உழையதா-எஞ்ஞான்றும் அம்மலையினது அழகிய பொற் கோட்டினது இப்புறத்ததாயே நிலைபெறுவதாக! என்றும்; எப்பாலும் ஒரு தனி ஆழி உருட்டுவோன என - அவன்றான் எஞ்ஞான்றும் இவ்வுலகத்தின் எப்பகுதியிலும் தனது ஒப்பற்ற சிறப்புடைய ஆணைச்சக்கரத்தைச் செலுத்துவோனாகுக என்றும் வாழ்த்தா நின்றனர் என்க. (விளக்கம்) இப்பால் என்றது ஏற்றிய பின்னர் என்றவாறு. வாள் போலும் வரிகளையுடைய வேங்கை என்க. உப்பாலை என்றது இப்புறத்தில் (தென்பாலில்) என்றவாறு. அவன் வெற்றி இமயங்காறும் நிலை பெறுக என்பது கருத்து உருட்டுவோன் ஆகுக என்று வாழ்த்தினர் எனச் சில சொற்பெய்து முடிக்க. மடவார் கற்பும் மாதவர் நோன்பும் பிறவுமாகிய அறமெல்லாம் செங்கோன்மையால் நிலை பெறுதலின் அரசனை வாழ்த்திய வாறாம். காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்றமையால் உள்ளப் புணர்ச்சி யளவினமைந்த களவு மணமும் இருபெருங் குரவரும் மணவழி காணமகிழ்ந்தனர் என்றமையால் அதன் வழித்தாய கற்புமே ஈண்டுக் கூறப்பட்டன என்க. இதனை, பிரசாபத்தியம் என்பர் அடியார்க்கு நல்லார். பா-இது மயங்கிசைக் கொச்சகக்கலிப்பாவி னியன்ற இசைத் தமிழ்ப்பாடல். மங்கல வாழ்த்துப் பாடல் முற்றிற்று. | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
2. மனையறம்படுத்த காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின் பரதர் மலிந்த பயம்கெழு மாநகர் முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளத்தது ஆகி அரும்பொருள் தருஉம் விருந்தின் தேஎம் 5 ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம் கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக் குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர் அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர் உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய 10 கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும் மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழிக் கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை அரும்புபொதி அவிழ்ந்த சுரும்புஇமிர் தாமரை 15 வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக் கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த் தாதுதேர்ந்து உண்டு மாதர்வாள் முகத்துப் புரிகுழல் அளகத்துப் புகல்ஏக் கற்றுத் 20 திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் கண்டு மகிழ்வுஎய்திக் காதலில் சிறந்து, 25 விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும் நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி, சுரும்புஉணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக் கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி முதிர்க்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் 30 கதிர்ஒருங் கிருந்த காட்சி போல, வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத் தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத் 35 தீராக் காதலின் திருமுகம் நோக்கிக் கோவலன் கூறும்ஓர் குறியாக் கட்டுரை குழவித் திங்கள் இமையவர் ஏத்த அழகொடு முடித்த அருமைத்து ஆயினும் உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின் 40 பெரியோன் தருக திருநுதல் ஆகஎன, அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப் படைவழங் குவதுஓர் பண்புண்டு ஆகலின் உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில் இருகரும் புருவ மாக ஈக்க, 45 மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின் தேவர் கோமான் தெய்வக் காவல் படைநினக்கு அளிக்கஅதன் இடைநினக்கு இடையென, அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும் இறுமுறை காணும் இயல்பினின் அன்றே 50 அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது? மாஇரும் பீலி மணிநிற மஞ்ஞைநின் சாயற்கு இடைந்து தண்கான் அடையவும், அன்னம் நல்நுதல் மெல்நடைக்கு அழிந்து 55 நல்நீர்ப் பண்ணை நனிமலர்ச் செறியவும், அளிய தாமே சிறுபசுங் கிளியே. குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின் மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது 60 உடன்உறைவு மரீஇ ஒருவா ஆயின, நறுமலர்க் கோதை.நின் நலம்பா ராட்டுநர் மறுஇல் மங்கல அணியே அன்றியும் பிறிதுஅணி அணியப் பெற்றதை எவன்கொல்? பல்இருங் கூந்தல் சின்மலர் அன்றியும் 65 எல்அவிழ் மாலையொடு என்உற் றனர்கொல்? நானம் நல்அகில் நறும்புகை அன்றியும் மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்? திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும் ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்? 70 திங்கள்முத்து அரும்பவும் சிறுகுஇடை வருந்தவும் இங்குஇவை அணிந்தனர் என்உற் றனர்க்கொல்? மாசறு பொன்னே. வலம்புரி முத்தே. காசறு விரையே. கரும்பே. தேனே. அரும்பெறல் பாவாய். ஆர்உயிர் மருந்தே. 75 பெருங்குடி வாணிகன் பெருமட மகளே. மலையிடைப் பிறவா மணியே என்கோ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ? யாழிடைப் பிறவா இசையே என்கோ? தாழ்இருங் கூந்தல் தையால் நின்னைஎன்று 80 உலவாக் கட்டுரை பலபா ராட்டித் தயங்குஇணர்க் கோதை தன்னொடு தருக்கி மயங்குஇணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள், வாரொலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி மறுப்புஅருங் கேண்மையொடு அறப்பரி சாரமும் 85 விருந்து புறந்தருஉம் பெருந்தண் வாழ்க்கையும் வேறுபடு திருவின் வீறுபெறக் காண உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின் காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன். 90 (வெண்பா) தூமப் பணிகள்ஒன்றித் தோய்ந்தால் எனஒருவார் காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம் தொலையாத இன்பம்எலாம் துன்னினார் மண்மேல் நிலையாமை கண்டவர்ப்போல் நின்று. உரை அஃதாவது - கண்ணகியும் கோவலனும் பலரறிமணம் புரிந்து கொண்ட பின்னர்க் கோவலனுடைய தாய் அவ்விருவரையும் இல்லற வாழ்க்கையில் இனிது பயின்று சிறத்தற்பொருட்டுத் தனித்ததோர் இல்லத்திற் குடிபுகுவித்து அந்நல்லறத்தில் கால் கொள்வித்ததனைக் கூறும் பகுதி என்றவாறு. 1-4 : உரைசால்......வளத்ததாகி (இதன்பொருள்) முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் - ஆரவாரிக்கின்ற கடலாற் சூழப்பட்ட இந் நிலவுலகத்தின்கண் வாழ்கின்ற மாந்தரெல்லாம் ஒருகால் நல்குரவான் நலிந்து ஒரு சேரத் திரண்டு தன்னைப் புகலிடமாகக் கருதி வந்துற்றாலும்; வழங்கத் தவாஅ வளத்ததாகி-அவர்கள் அனைவருக்கும் உண்டி முதலியன வழங்கத் தொலையாத வளத்தையுடைய தாகலின்; உரைசால் சிறப்பின் - ஏனைய நாட்டில் வாழ்வோரெல்லாம் புகழ்தற்கியன்ற தனிச் சிறப்பினையுடைய; அரைசு விழை திருவின் பரதர் மலிந்த - வேந்தரும் விரும்புதற்குரிய செல்வத்தையுடைய பெருங்குடிவாணிகர் மிக்குள்ள; பயம் கெழு மாநகர் - பயன்மிக்க பெரிய அப் பூம்புகார் நகரின்கண் என்க. (விளக்கம்) இது புகாரின் இயற்கை வளம் கூறிற்று. அஃதாவது, தள்ளா விளையுட்டாதல். என்னை? ஆசிரியர் திருவள்ளுவனார்தாம் நாட்டிலக்கணம் கூறுங்கால் இச்சிறப்பினையே முதன்மையாகக் கொண்டு தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்றோதுதலுணர்க. ஈண்டு அடிகளாரும் அவ்வாறே அச்சிறப்பையே முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளம் என்றார். பரதர் என்றது, வாணிகரை, வள்ளுவனார் தாழ்விலாச் செல்வர் என்றதும் வாணிகரையேயாம். இதனை ஆசிரியர் பரிமேலழகர் இக்குறளின் விளக்கவுரைக்கண் செல்வர் - கலத்தினும் காலினும் அரும் பொருள் தரும் வணிகர் என்று விளக்குதலாலறிக. மற்று அவர்தாமும் ஈண்டு அடிகளார் (7) கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட என்றோதிய அடியை நினைந்தே அங்ஙனம் விளக்கினர் என்பதூஉம் வெளிப்படை. இனி, அரைசு விழை திருவின் மாநகர் என நகர்க்கே அடையாக்கில் பிற நாட்டு மன்னரெலாம் விரும்புதற்குக் காரணமான மேழிச் செல்வத்தையுடைய நகர் எனினுமாம். என்னை? பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர் (குறள் -1034) என வள்ளுவனாரும் ஓதுதலுணர்க. உரை - புகழ். உலக முழுவதும் வரினும் வழங்கத்தவாத வளமுடைமையால் இந்நகர்க்கே சிறந் துரிமையுடைய சிறப்பு இஃதென்பது தோன்ற ஏதுவைப் பின்னர் விதந்தோதினர். புகார் நகரம் அத்தகைய புகழமைந்த நகரமாதலை, சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர் ஆற்றா மாக்கட் காற்றுந் துணையாகி நோற்றோர் உறைவதோர் நோனகர் உண்டால் என விஞ்சையர் நகரத்துள்ளான் ஒருவன் புகழ்ந்தோதுதலானும் உணர்க. (மணிமே : 17 : 62-5.) முழங்குகடல்.......வளத்ததாகி என்னும் இதனோடு, பொறை யொருங்கு மேல்வருங்கால் தாங்கி எனவரும் திருக்குறளையும் ஒப்புநோக்குக. மாநகர், புகார் நகரம் என்பது அதிகாரத்தாற் பெற்றாம். 5-7 : அரும்பொருள்.......ஈட்ட (இதன்பொருள்) கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட - அங்கு மிக்கிருந்த வாணிகர்கள் கடலிடையிட்ட நாட்டினும் மலை காடு முதலியன இடையிட்ட நாட்டினும் சென்று முறையே மரக்கலங்களானும் சகடங்களானும் கொணர்ந்து குவித்தலானே; அரும்பொருள் தரும் விருந்தின் தேசம் ஒருங்கு தொக்கு அன்ன- ஈண்டுப் பெறுதற்கரிய பொருளைத் தருகின்ற புதுமையுடைய அவ்வேற்று நாடெல்லாம் ஒருங்கே வந்து கூடியிருந்தாற் போன்ற; உடைப் பெரும் பண்டம் - தம்முடையனவாகிய பெரிய பொருள்களையுடையாரும் ஆகி என்க. (விளக்கம்) இஃது அப்புகார் நகரத்து வாணிகர் மாண்பு கூறுகின்றது. மேலே பரதர் மலிந்த மாநகர் என்றாராகலின் அப்பரதர் இவ்வாறு ஈட்ட என்க. புகார் நகரத்து வாணிகருடைய அங்காடித் தெரு விருந்தின் தேஎம் ஒருங்கு தொக்கிருந்தாற்போன்று தோன்றும் என்பது கருத்து. எனவே எந்த, நாட்டிற்றோன்றும் அரும்பொருளும் அவ்வணிகர் பாலுள்ளன என்றாராயிற்று. விருந்தின் தேஎம்-புதுமையுடைய வேற்று நாடு. கடலிடையிட்டுக் கிடந்த நாட்டின் பொருளைக் கலத்தினும் இந்நாவலந் தீவகத்திலே காடு மலை முதலியன இடையிட்டுக் கிடந்த வேற்று நாட்டுப் பொருளைக் காலினும் தருவனர் ஈட்ட என்க. தருவனர்: முற்றெச்சம். ஈட்ட என்னும் செய்தெனெச்சம் பின்னர்க் (அ) கொழுங்குடிச் செல்வர் என்பதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. கலம்-மரக்கலம். கால் : ஆகுபெயர். சகடம் - (வண்டி) ஈட்டுதலானே கொழுங்குடி ஆகிய செல்வர் என இயையும். இனி, அரும்பொருளாவன - நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும், வடமலைப் பிறந்த மணியும் பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும், தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும், கங்கை வாரியும் காவிரிப் பயனும், ஈழத் துணவும் காழகத் தாக்கமும், அரியவும் பெரியவும் என்பன. (பட்டினப் பாலை 185 - 162.) 8-11 : குலத்தின்...........கொழுநனும் (இதன்பொருள்) குலத்தின் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்-தமது குலத்திற்கென நூலோர் வகுத்த அறவொழுக்கத்தே ஒரு சிறிதும் குன்றுதலில்லாதவரும் கொழுவிய குடியிற்பிறந்தோரும் ஆகிய, மாநாய்கனும் மாசாத்துவானும் ஆகிய பெருநிதிக்கிழவர்க்கு நிரலே மகளும் மகனுமாக; அத்தகு திருவின் - அங்ஙனம் அறத்தினால் ஈட்டிய நற்பொருளினாலே; அருந்தவம் முடித்தோர் - செயற்கரிய தலைப்படு தானத்தைச் செய்த சான்றோர் சென்று பிறக்கும்; உத்தர குருவின் ஒப்ப-அவர்தம் கொழுங்குடிகள் உத்தரகுருவென்னும் போக பூமியை ஒக்கும்படி; தோன்றிய - தமது ஆகூழாலே பிறந்த; கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்-பெரிய செந்தாமரை மலர் போன்ற கண்களையுடைய கண்ணகியும் அவளால் காதலிக்கப்பட்ட கணவனாகிய கோவலனும் என்க. (விளக்கம்) குலம் - தமது குலத்திற்கு நூலோர் வகுத்த ஒழுக்கம் என்க. அவையிற்றை, இருவகைப்பட்ட ஏனோர் பக்கமும் எனவரும் தொல்காப்பியத்தானும் (புறத் -...........20) இதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஓதலும் வேட்டலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வாணிகர் பக்கமும் என்றோதிய உரையானும் உணர்க. இவற்றுள்ளும் அவர்க்கு வாணிக வாழ்க்கையே தலைசிறந்ததாம் என்பார் ஆசிரியர் தொல்காப்பியனார் மரபியலில் வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என்று வரைந்தோதுதலும் அதற்குப் பேராசிரியர் வாணிகர்க்குத் தொழிலாகிய வாணிக வாழ்க்கை உள்ளுறையாகச் செய்யுள் செய்தல் பெரும்பான்மையாம் என்று விளக்கியதும் உணர்க. ஈண்டு அடிகளாரும் ஏனைய தொழிலை விடுத்து வாணிக வாழ்க்கையையே விதந்தெடுத்தோதுதலும் உணர்க. இனி, தங்குலத் தொழிலிற் குன்றாமையாவது நெடுநுகத்துப் பகல் போல நடுவு நின்ற நன்னெஞ்சினோர், (ஆகி) வடுவஞ்சி வாய்மொழிந்து, தமவும் பிறவும் ஒப்பநாடிக் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வாழ்தல் என்க. இது (பட்டினப்பாலை 206-22). ஆசிரியர் திருவள்ளுவனாரும், வாணிகர் அவ்வாறு வாழ்தல் உலகிற்கு இன்றியமையாமை கருதி நடுவு நிலைமை என்னும் அதிகாரத்தில் அவர்க்கென, வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின் (120) எனச் சிறப்பாக விதந்து அறங்கூறுதலும் உணர்க. இனி, ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்னும் வாய்மையை அறிவுறுத்துதல் இக்காப்பியத்தின் உள்ளுறையுள் ஒன்றாகலின் ஈண்டும் அடிகளார் கண்ணகியும் கோவலனும் முற்பிறப்பிற் செய்த நல்வினை இவ்வாறு அவரைக் கொழுங்குடிச் செல்வர் மனைக்கண் பிறப்பித்துத் தம் பயனாகிய பேரின்பத்தை இங்ஙனம் ஊட்டலாயிற்று எனக் குறிப்பாக வுணர்த்துவார் அக்குறிப்பை உவமைக்கண் வைத்து அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர், உத்தரகுருவின் ஒப்பத்தோன்றிய, கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும என நுண்ணிதின் ஓதுதல் நினைந்து மகிழற்பாலது. என்னை? இக்காதைக்கண் அக்காதலர்களின் ஆகூழாகிய பழவினை அவர்க்கு உருத்துவந்தூட்டுமாறிது வென்று கூறிக் காட்டுதலே ஆசிரியர் கருத்தென்றறிக. நன்றாங்கால் நல்லவாக் காணுமாந்தர் அப்பொழுது அதற்குக் காரணமான நல்வினையை நினைவதிலர். மற்று அவர்தாமே போகூழால் அன்றாங்காற் பெரிதும் அல்லற்பட்டு அந்தோ வினையே என்றழுது வருந்துவர். நல்லூழ் வந்துருத்தூட்டும் பொழுது அதனை நினைவோர் பின்னரும் நல்வினைக்கண் நாட்டமெய்துவர். தீயூழால் வருந்துவோரும் அதனை நினையின் தீவினை யச்சமுடையராய்ப் பின்னர் அது செய்யாதுய்வாருமாவர். ஆகலான், அடிகளார் இருவகை வினையையும் நினைந்தே ஊழ்வினை உருத்துவந் தூட்டும் எனப் பொதுவாக ஓதினர். புகார்க்காண்டத்தே கயமலர்க்கண்ணிக்கும் காதற் கொழுநனுக்கும் நல்வினையாகிய ஊழ்வினை உருத்துவந்தூட்டுவதனை இக்காதையிற் குறிப்பாக ஓதுகின்றார். மதுரைக் காண்டத்தே தீவினையாகிய ஊழ்வினை உருத்துவந்தூட்டுதலை யாவரும் உணர ஓதுவர். ஆசிரியர் திருவள்ளுவனார் தாமும் மாந்தர்க்கமைந்த இப்பேதைமையை நினைந்தன்றோ? நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கால் அல்லற் படுவ தெவன் (குறள்-376) என்று வினவுவாராயினர் என்க. இனி, உத்தரகுருவின் ஒப்ப-என்புழி உத்தரகுருவாகிய உவமைக்கு (2) மாநகர் என்பதனைப் பொருளாகக் கொண்டனர் அடியார்க்கு நல்லார். யாம் கொழுங்குடிச் செல்வர் என அடிகளார் பாட்டிடை வைத்த குறிப்பினால் அச்செல்வருடைய கொழுங்குடி உத்தரகுருவினை ஒப்ப என்று உரை கூறினாம். இவற்றுள் நல்லது ஆராய்ந்து கொள்க. அத்தகு திருவின் தவம் என்ற குறிப்பினால் தவம் என்பது தானத்தைக் குறித்து நின்றது. என்னை? திருவினாற் செய்யும் தவம் அதுவேயாகலின் ஏனைத்தவம் திருவினைத் துறந்து செய்யப்படும். தானம் செய்யும் பொருளும் அறத்தாற்றின் ஈட்டிய பொருளாதல் வேண்டும் என்பது போதர அத்தகு திருவின் என்றார். அருந்தவம் என்றார் அத்தானந்தானும் என்பது தோன்ற; இனி அத்தானத்தின் அருமையை, அறத்தி னாற்றிய வரும்பெரும் பொருளைப் புறத்துறைக் குற்றமூன் றறுத்தநற் றவர்க்குக் கொள்கெனப் பணிந்து குறையிரந் தவர்வயின் உள்ளமுவந் தீவ துத்தம தானம் எனவரும் திவாகரத்தா னறிக. இனி உத்தரகுரு வென்பது ஈண்டுச் செய் நல்வினையின் பயனை நுகர்தற்குரிய மேனிலையுலகம். போகபூமி என்பதுமது. இஃது அறு வகைப்படும் என்ப. அவையிற்றை, ஆதியரி வஞ்சம் நல்லரி வஞ்சம் ஏம வஞ்சம் இரண வஞ்சம் தேவ குருவம் உத்தர குருவமெனப் போக பூமி அறுவகைப் படுமே (திவாகரம்-12) என்பதனா னறிக. இனி, இவற்றின்கட் பிறந்து போகநுகர்தலை, பதினா றாட்டைக் குமரனும் சிறந்த பன்னீ ராட்டைக் குமரியு மாகி ஒத்த மரபினு மொத்த வன்பினும் கற்பக நன்மரம் நற்பய னுதவ ஆகிய செய்தவத் தளவு மவ்வழிப் போக நுகர்வது போக பூமி (பிங்கலம் 12) என்பதனானறிக. ஈண்டுக் கண்ணகிக்கும் கோவலனுக்கும் முன்னைச் செய்தவத்தினளவே ஈண்டும் போகநுகர்ச்சி நின்று பின்னர் இல்லையாதலைக் கருதியே அடிகளார் அதனை உவமையெடுத்தோதினர் என்றுணர்க. கயமலர் என்புழிக் கய வென்பது பெருமைப் பொருட்டாகிய உரிச்சொல். கோவலன் காதல் இழுக்குடைத்தாதல் கருதிப்போலும் கண்ணியும் அவளாற் காதலிக்கப்படும் கொழுநனும் என்பதுபடக் காதற்கொழுநனும் என்றார். இக்கருத்தாலன்றோ மங்கலவாழ்த்துப் பாடலின்கண் பெருங்குணத்துக் காதலாள் எனக் கண்ணகியைக் கூறிக் கோவலனைப் பிறமகளிர் காதலாற் கொண்டேத்தும் கிழமையான் என்று கூறி யொழிந்ததூஉம் என்க. இனி, (12) மயன் என்பது தொடங்கி (37) குறியாக் கட்டுரை என்பதுமுடியக் கண்ணகியும் கோவலனும் போகம் நுகர்ந்தமை கூறும். (தென்றல் வரவு) 12 - 25 : மயன்...........சிறந்து (இதன்பொருள்) நெடுநிலை மாடத்து இடை நிலத்து - எழுநிலை மாடத்து மாளிகையின்கண் இடையிலமைந்த நான்காம் மாடத்தின்கண்; மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை - மயன் என்னும் தெய்வத்தச்சன் தன் மனத்தாற் படைத்துவைத்தாற் போன்ற மணியாலியன்ற கால்களையுடைய சிறந்த கட்டிலின்கண் இருந்தவளவிலே; கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை - கழுநீரும் இதழொடியாத முழுப்பூவாகிய செங்கழு நீரும்; அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை - நாளரும்புகள் கட்டவிழ்ந்து மலர்ந்தமையானே வண்டுகள் வந்து முரலாநின்ற தாமரைமலரும் ஆகிய; வயல்பூ வாசம் அளைஇ - மருதப் பரப்பிற் கழனிகளிலுள்ள நீர்ப் பூக்களின் நறுமணத்தைக் கலந்துண்டு, அயல்பூ-அவற்றின் வேறாகிய கோட்டுப்பூ முதலியவற்றுள், மேதகு தாழை விரியல் வெள் தோட்டு - மணத்தால் மேன்மை தக்கிருக்கின்ற தாழையின் மலர்ந்த வெள்ளிய மடலிடத்தும்; சண்பகப் பொதும்பர் -சண்பகப்பூம் பொழிலினூடே படர்ந்துள்ள; கோதை மாதவி தேர்ந்து தாது உண்டு - மாலைபோல மலருகின்ற குருக்கத்தி மலரினிடத்தும் ஆராய்ந்து அவற்றின் பாலுள்ள தேனைப் பருகிப் போந்து; வாள் முகத்து மாதர் புரிகுழல் அளகத்துப் புகல் ஏக்கற்று - ஒளியுடைய முகத்தையுடைய இளமகளிரினது கை செய்த குழற்சியையுடைய கூந்தலின்கணுண்டாகிய கலவை மணம் பெறவிரும்பி அவர்தம் பள்ளியறைக்கண் புகுதற்கு வழி காணாமல் ஏக்கறவு கொண்டு; செவ்வி பார்த்துத் திரிதரு சுரும்பொடு வண்டொடு - அம்மகளிர் சாளரந்திறக்கும் பொழுதினை எதிர்பார்த்துச் சுழன்று திரிகின்ற பெடை வண்டோடும்; மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து-முத்து முதலிய மணிமாலைகளை நிரல்பட நாற்றி இயற்றிய அழகையுடைய சாளரங்களை அம்மகளிர் திறத்தலாலே செவ்வி பெற்று அச்சாளரங்களின் குறிய புழையாலே நுழைந்து புகுந்த; மணவாய்த் தென்றல் - இயல்பாகத் தனக்குரிய ஊற்றின்பத்தோடே நறு நாற்றவின்பமும் உடைத்தாகிய தென்றலின் வரவினை; கண்டு-உணர்ந்து; மகிழ்வு எய்திக் காதலில் சிறந்த - அவ்வுணர்ச்சியாலே மகிழ்ந்து பின்னரும் அவ்வுணர்ச்சி காரணமாக இருவருக்கும் காமவுணர்ச்சி பெருகுதலானே இருவரும் ஒருபடித்தாக மெய்யுறு புணர்ச்சியை விரும்பி, என்க. (விளக்கம்) ஆம்பல் எனப் பொதுப்பெயராற் கூறினும் ஈண்டுச் சேதாம்பல் என்று கொள்க வென்றும், இஃது அவற்றோடு ஒருதன் மைத்தாகிய பகற்போதன் றெனினும் அவை விரியுங்காலத்து இது குவிதலின்மையிற் கலந்துண்டு என்றார் என்பர் அடியார்க்குநல்லார். முழுநெறி-இதழொடியாத முழுப்பூ. ஈண்டுக் குவளை - செங்கழுநீர் மலர். தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக் கூம்புவிடு முழுநெறி எனப் புறப்பாட்டினும் (123) வருதலறிக. கோதைபோல மலரும் மாதவி என்க. ஈண்டுக் கண்ணகிக்கு உத்தரகுருவின் ஒப்பப் பேரின்பம் நல்கும் ஆகூழாகிய நல்வினையின் சிறுமையினையும் அவட்குப் போகூழ் அணித்தாகவே வரவிருத்தலையும் அதுதானும் கோதைமாதவியாக உருத்துவந்திருத்தலையும் நினைந்துபோலும் அடிகளார் இக்காதையிலேயே அவள் பெயரைப் பரியாய வகையில் கோதை மாதவி என்று ஓதினர் போலும். இக்கூற்றுக் கண்ணகிக்கு ஒரு தீநிமித்தம். இவ்வாறு சொல்லிலேயே தீநிமித்தத்தைத் தோற்றுவிப்பது மாபெரும் புலவர் கட் கியல்பு. என்னை? கம்பநாடர் தமது இராமகாதைக்கண் இராமனுக்குத் திருமுடி சூட்டக் கணிகமாக்கள்பால் நன்னாள் வினவும் தயரதன் மைந்தற்கு முடிபுனை கடிகை நாள் மொழிமின் என்று வினவினன் என அவன் கூற்றையே முடிபுனைதலைக் கடிதலையுடைய நாள் எனவும் தீந்பொருளமையச் செய்யுள் யாத்துள்ளமையும் காண்க. சுரும்பொடு வண்டொடு என இயைத்து எண்ணும்மை விரித்தோதுக. சுரும்பொடும் வண்டொடும் வயற்பூவாசம் அளைஇ உண்டு அயற்பூவாகிய தோட்டினும் மாதவியினும் தேர்ந்துண்டு செவ்வி பார்த்துக் குறுங்கண் நுழைந்துபுக்க மணவாய்த் தென்றல் கண்டு சிறந்து என்க. இனி வாசம் அளைஇ, தாது தேர்ந்துண்டு திரிதரும் சுரும்பொடும் வண்டொடும் புக்க தென்றல் எனினுமாம். புக்கமணவாய்த் தென்றல் என்றது தனக்கியல்பான ஊற்றின்பத்தோடு பூ அளைஇச் செயற்கையானமைந்த மணத்தையும் உடைய தென்றல் என்பது தோன்ற நின்றது. இத்தகைய தென்றல் அவர்தம் காமவேட்கையை மிகுவித்தலின் அதனைக் கண்டமையை ஏதுவாக்ககினார். ஈண்டுக் கண்டென்றது உணர்ந்து என்றவாறு. என்னை? தென்றல் மெய்க்கும் மணமுடைமையால் மூக்கிற்கும் புலனாதலன்றிக் கட்புலனுக்குப் புலனாகாமையின் என்க. காதல் ஈண்டுக் காமத்திற்கு ஆகுபெயர். ஆகவே, காமஞ்சிறந்து என்றவாறு. மணவாய்த் தென்றல் என்புழி இரண்டாவதன் உருபும் பயனும் உடன்தொக்கன. வாய் - இடம். மணத்தைத் தன்னிடத்தேயுடைய தென்றல் என்க. இவை சண்பகத்தோடு மலர்தலின் தேர்ந்துண்டென்றார் என வரும் அடியார்க்குநல்லார் உரை நுணுக்கமுடைத்து. என்னை? சண்பகம் வண்டுணாமலர் ஆகலின் தேர்ந்துண்ணல் வேண்டிற்று என்பது அவர் கருத்தென்க. இன்ப நுகர்வு 26-27: விரைமலர்.............ஏறி (இதன் பொருள்) வேனில் விரை மலர் வாளியொடு வீற்றிருக்கும் நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி - அவ்வாறு தென்றல் வரவினால் காமப் பண்பு பெருகப் பெற்ற அக்கண்ணகியும் கோவலனும் உள்ளமொன்றி வாய்ச்சொல்லொன்றுமின்றியே அவ்விடை நிலை மாடத்தினின்றும் மேலே நிரல்பட்ட மாடங்கள் வழியாக அம்மாளிகையின் உச்சியிலமைந்ததூஉம் அவ்விடத்தே வந்தெய்துகின்ற காதலரைக் காமுறுத்தற் பொருட்டு வேனில் வேந்தனாகிய காமவேள் எப்பொழுதும் தனது படைக்கலமாகிய கருப்பு வில்லினது, நாணிற்றொடுத்த மணமுடைய மலராகிய அம்புகளோடும் அவர் தம் வரவினை எதிர்பார்த்திருத்தற் கிடனானதுமான நிலாமுற்றத்தின்மேல் ஏறி என்க. (விளக்கம்) (25) சிறந்து............(27) அரமியத்தேறி என்றார் அவர் தாம் ஒருவரை ஒருவர் அழையாமலே தம்முணர்ச்சி யொன்றினமை காரணமாகத் தாமிருந்தவிடத்தினின்றும் வாய்வாளாதே சென்றமை தோன்ற. என்னை? இத்தகைய செவ்வியிலே வாய்ச்சொற்கள் என்ன பயனும் இலவாகலின் என்க. வேனில்: ஆகுபெயர்; காமவேள். இனி, போர் செய்யப்புகுவோர் காலமும் இடனும் வாலிதின் அறிந்து காலங்கருதி இருப்பராதலின் ஈண்டு வேனிலரசன் தனது போர்த்தொழிலைத் தொடங்குதற்கு ஏற்ற இடமாக அவ்வரமியத்தைத் தேர்ந்து படைக்கலன்களோடு தனது ஆணைக்கடங்காத இளைஞராகிய பகைவர் வருகையை எதிர்பார்த்திருந்தான் என்றார். இஃதென் சொல்லியவாறோவெனின் அந்நிலா முற்றத்தின்கட் செல்வோர் யாவரேயாயினும் காமமயக்க மெய்துவர். அத்தகைய சீர்த்த இடம் அந்நிலாமுற்றம் என்றவாறு. விரைமலர் வாளி-மணமுடைய மலர்க்கணை. இனி விரைந்துபாயும் மலர்க்கண் எனினுமாம். இனி, அடியார்க்குநல்லார், பகையின்றிக் கல்வியொடு செல்வத்திடை நஞ்சுற்ற காமம் நுகர்ந்திருத்தலின் வாளியும் காமனும் வருந்தாதிருந்தமை தோன்ற வீற்றிருக்கு மென்றார் என்னும் விளக்கம் நூலாசிரியர் கருத்திற்கு முரணாம் என்க. மேலும் வாளியும் காமனும் வருந்தாதிருப்பின் அவ்விருக்கை இக்காதலர் புணர்ச்சிக்கே இழிவாம் என்க. தகுந்த இடத்தின்கண் படைவலியோடும் துணைவலியோடும் (தென்றல் வரவு) இளைஞரை எய்துவென்று தன் ஆணைவழி நிற்பித்தற்கு அவர் வரவை எதிர்பார்த்து வேனின்வேள் நெடிதிருக்கும் மாடம் என்பதே அடிகளார் கருத்தாம் என்க. இதுவுமது 28-32 சுரும்புண .......... காட்சிபோல (இதன் பொருள்) சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கை வண்டுகள் உழன்று திரியாமல் ஓரிடத்திலேயே தாம் தாம் விரும்பும் தேனை நுகர்ந்து மகிழ்தற் பொருட்டுப் பரப்பி வைத்தாற்போன்று கிடந்த நறிய மணமலரானியன்ற படுக்கையின்கண்; முதிர்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் கதிர் ஒருங்கு இருந்த காட்சிபோல முற்றிய கடலையும் நிலவுலகத்தையும் எஞ்சாமல் உயிரினங்கட்குத் தமது ஒளியாலே விளக்குகின்ற திங்களும் ஞாயிறுமாகிய ஒளிமண்டில மிரண்டும் ஒரு காலத்தே ஓரிடத்தே வந்து கூடியிருந்தாற் போல வீற்றிருந்துழி; பெருந்தோள் கரும்பும் வல்லியும் எழுதி - கோவலன் கண்ணகியின் பெரிய தோளின் கண்ணே சந்தனக் குழம்பு கொண்டு கரும்பினது உருவத்தையும் பூங்கொடியின் உருவத்தையும் அழகுற எழுதி முடித்த பின்னர் என்க. (விளக்கம்) மலர்களின் செவ்வி கூறுதற்பொருட்டு அடிகளார் சுரும்புணக்கிடந்த நறும்பூஞ் சேக்கை என்றார். இங்ஙனம் கூறியதனால் மலரின் பன்மையும் மிகுதியுந் தோன்றுதலும் உணர்க. கதிர்-திங்களும் ஞாயிறும்; இஃதில் பொருளுவமம். போல வீற்றிருந்துழி எனவும் கோவலன் கண்ணகியின் தோளில் எழுதி முடித்தபின்னர் எனவும் அவாய் நிலையானும் தகுதியானும் ஆங்காங்குச் சில சொற்களைப் பெய்துரைக்க. இவ்வாறு பெய்துரைக்கப்படுவன எஞ்சு பொருட் கிளவிகளாம். அவை சொல்லெச்சமும் குறிப்பெச்சமும் இவையெச்சமும் என மூவகைப்படும். பிறாண்டும் இவ்வெச்சக் கிளவிகளாக ஆங்காங்கு உரையின்கட் பெய்துரைக்கப் படுவனவற்றிற்கும் இவ்விளக்கமே கொள்க. இனி, கயமலர்க்கண்ணியும் காதற்கொழுநனும் தென்றல் கண்டு காதல் சிறந்து நிரை நிலைமாடத் தரமிய மேறிப் பூஞ்சேக்கைக்கண் இருந்துழியும் கண்ணகியின் காமம் நாணம் என்னும் தனது பெண்மை தட்பத் தடையுண்டு நிற்றலான் அந்நாணுத்தாள் வீழ்த்த அவளது அகக்கதவைத் திறத்தல் வேண்டி ஈண்டுக் கோவலன் அவளுடைய பெருந்தோளில் கரும்பும் வல்லியும் எழுதுதல் வேண்டிற்று. இத்தகைய புறத்தொழில்களாலே மகளிரின் காமவேட்கையை ஆடவர் தமது வேட்கையளவிற்கு உயர்த்திய பின்னரே புணர்ச்சி பேரின்பம் பயப்பதாம். இதனாலன்றோ ஆசிரியர் திருவள்ளுவனார் தாமும், மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார் (குறள் - 1289) என, தலைவனைக் கூறவைத்தனர். ஈண்டுக் கோவலன் மலரினும் மெல்லிய அக்காமத்தின் செவ்வி தலைப்படுதற்கே கண்ணகியின் பெருந்தோளில் கரும்பும் வல்லியும் எழுதினான் என்க. ஈண்டு அடியார்க்கு நல்லார் கரும்பையும் வல்லியையும் தோளில் எழுதி யெனவே தொய்யி லொன்றையும் முலைமேலெழுதி என்பதாயிற்று என வகுத்த விளக்கம் பெரிதும் நுணுக்கமுடைத் தென்க. கடலையும் ஞாலத்தையும் விளக்கும் கதிர் என்க. இதுவுமது 32-37: வண்டுவாய் ......... கட்டுரை (இதன் பொருள்) வண்டு வாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெள் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு முழுநெறி கழுநீர் பிணையல் பிறழ-வண்டுகள் புரிநெகிழ்க்க வாய் அவிழ்ந்த மல்லிகையினது பெரிய மலர்ச்சியையுடைய மாலையோடே இதழொடியாது முழுப் பூவாக இவ்விரண்டாகப் பிணைத்த செங்கழுநீர் மலர்மாலையும் குலைந் தலையாநிற்ப; தாரும் மாலையும் மயங்கிக் கையற்று - கோவலன் மார்பிலணிந்த தாரும் கண்ணகி மார்பிலணிந்த மலர் மாலையும் தம்முள் மயங்கப்பட்டு இருவரும் பேரின்பத்தாலே விழுங்கப்பட்டுச் செயலற்ற புணர்ச்சியிறுதிக் கண்ணே; கோவலன் தீராக் காதலின் திருமுகம் நோக்கி - கோவலன் தனது ஆராவன்பு காரணமாகத் திருமகளைப் போல்வாளாகிய கண்ணகியின் முகத்தை நோக்கி; ஓர் குறியாக் கட்டுரை கூறும் - அந் நங்கையின் பெருந்தகைமையைக் கருதாத நலம் பாராட்டல் என்னும் பொருள் பொதிந்த உரையைக் கூறினான் என்க. (விளக்கம்) மல்லிகைமாலை கண்ணகியணிந்த அழகுமாலை என்றும், செங்கழுநீர்ப் பிணையல் கோவலன் அணிந்திருந்த அடையாளப் பூமாலை என்றும் கொள்க. என்னை? இவற்றையே பின்னர்த் தாரும் மாலையும் என்று பெயர் கூறியதனாற் பெற்றாம். என்னை? ஆசிரியர் தொல் காப்பியனாரும் மரபியலின்கண், தார் என்னும் அடையாளப்பூ அரசர்க்குரித்தென்று கூறிப்பின்னர் வாணிகர்க்கும் கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே என்றோதுதல் உணர்க. ஈண்டுக் கழுநீர்ப்பிணையல் வாணிகர்க்குரிய அடையாளப் பூமாலை என்பது அதனைத் தார் என்றதனாற் பெற்றாம். இனி, காப்பியத்தின்கண் இன்பவொழுக்கமாகிய அகப்பொருள் சுட்டித் தலைமக்களின் பெயர் கூறப்படுதலான், அகப்புறம் என்று கொள்ளப்படும். அகப்புறமாயினும் அகவொழுக்கத்திற்குரிய மெய்ப்பாடுகள் ஈண்டும் ஏற்றபெற்றி கொள்ளப்படும். ஆசிரியர் தொல்காப்பியனார் சிறப்பு நோக்கிக் களவொழுக்கத்திற்கே யுரியன போலக் கூறிய கூழைவிரித்தல் முதலிய மெய்ப்பாடு கற்பொழுக்கத்தினும் கூட்டந் தோறும் மெல்லியல் மகளிர்பால் காணப்படும். அதனாலன்றோ ஒரு குலமகள் பரத்தையர்க்கு நாணின்மை கண்டு வியப்பவள் பன்னாளும் எங்கணவர் எந்தோண்மேற் படிந்தெழினும் அஞ்ஞான்று கண்டாற் போல் நாணுதும்; இவர்க்கு அத்தகைய நாணம் என்னும் பெண்மை நலம் இல்லா தொழிந்தது என்னையோ? என்று வியப்பாளாயினள் (நாலடி, காமத்துப்பால்). ஈண்டும் கண்ணகியார் தென்றல்கண்டு மகிழ்ச்சியாற் காதல் சிறந்து இடைநிலைமாடத்திருந்து தன் காதற் கொழுநனொடு வாய்வாளாது அம்மாடத்தின் உச்சியிலமைந்த நிலா முற்றத்திற்கேறி அவனோடு நறும்பூஞ் சேக்கைக்கண் வீற்றிருந்தது புகுமுகம் செய்தல் என்னும் மெய்ப்பாடாம் என்று நுண்ணிதின் உணர்ந்துகொள்க. அஃதாவது புணர்ச்சிக்கு நிமித்தமாகிய மெய்ப்பாடாம். புகுமுகம் செய்தலாவது புணர்ச்சி வேட்கையுற்ற மகளிர் தம்மைத் தங்கணவர் நோக்குமாற்றால் இயைந்தொழுகுதல். அவ்வாறு இயைந்தொழுகினும் உட்கும் நாணும் அவர்க்கியல்பாகலின் அவன் விரும்பி நோக்கியவழி அவர்க்கு நுதல் வியர்க்கும். அவ்வழி தாம் புணர்ச்சி வேட்கை யுடையராதலை மறைக்கவே முயல்வர். இதனை நகுநயமறைத்தல் என்னும் மெய்ப்பாடு என்ப. இதன் பின்னரும் வேட்கையுற்ற உள்ளம் சிதையுமாகலின் அச்சிதைவு கணவனுக்குப் புலப்படாமல் மறைத்தலும் அவர்க்கியல்பு. இதனைச் சிதைவு பிறர்க்கின்மை என்னும் மெய்ப்பாடென்ப. அங்ஙனம் மறைத்துழி அகத்திலே வேட்கை பெருகி அதனால் கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல் உடைபெயர்த்துடுத்தல் அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் என்னும் மெய்ப்பாடுகள் அவ்வேட்கை பெருகுந்தோறும் ஒன்றன்பின் ஒன்றாக நிழலா நிற்கும். ஆயினும் இவை தோன்றிய பின்னரும் அவர்க்கு இயல்பாகிய நாணம் அவ்வேட்கையைத் தடைசெய்தே நிற்கும்; ஆதலால், அச் செவ்வியினும் மகளிர் புணர்ச்சியை வேண்டாதார் போல்வதொரு வன்மை படைத்துக்கொண்டு தம் வேட்கையை மறைக்கவே முயல்வர். இதனை இல்வலியுறுத்தல் என்னும் மெய்ப்பாடென்ப. இத்தகைய மெய்ப்பாட்டோடு நறும்பூஞ் சேக்கைக்கண் தன்னொடு வீற்றிருந்த கண்ணகியாரின் நாணநீக்கி அவரது காமவேட்கையைத் தனது வேட்கைக்குச் சமமாகக் கொணர்தற் பொருட்டே ஈண்டுக் கோவலன் சந்தனக் குழம்பு கொண்டு அவரது பெருந்தோளிற் கரும்பும் வல்லியும் எழுதினான் என்க. இனி, இவ்வாற்றால் கண்ணகியாரின் காமப்பண்பு முழுச்செவ்வி பெற்றமையை அடிகளார் கண்ணகியார்பால் வைத்துக் கூறாமல் அவர் அணிந்திருந்த மல்லிகை மலர்மாலையின் மேல்வைத்துக் குறிப்பாகக் கூறும் வித்தகப்புலமை வேறெந்தக் காப்பியத்தினும் காணப்படாத அருமையுடைத்தென் றுணர்க. என்னை? இல்வலியுறுத்தல் என்னும் மெய்ப்பாடெய்தியிருந்த கண்ணகியாரின் திருமேனியைத் தீண்டிக் கோவலன் கரும்பும் வல்லியும் எழுதிய அளவிலே அதுகாறும் அவரது காமவேட்கையைத் தளைத்திருந்த நாணமாகிய தளையவிழவே அவரது காமவேட்கை தடை சிறிதும் இன்றி மலர்ச்சியுற்றுத் திகழ்ந்ததனையே அடிகளார் வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெண்டோட்டு மல்லிகை வீரியன் மாலையொடு என எட்டுச் சீர்களைக்கொண்ட இரண்டு அடிகளாலே கண்ணகியார் அணிந்திருந்த மாலையை வண்ணிப்பாராயினர். இதன்கண் வண்டுவாய்திறப்ப என்றது கோவலன் கரும்பும் வல்லியும் எழுதுமாற்றால் அவரது நாணத்தை அகற்றியது என்றும்; நெடுநிலா விரிந்த வெண்டோட்டு மல்லிகை என்றது இச்செய்முறையானே அவரது காமவேட்கை பெருக அவர்பால் இருகையும் எடுத்தல் என்னும் மெய்ப்பாடு தோன்றியதனை. அஃதாவது அங்ஙனம் படைத்துக் கொண்ட வலியானும் தடுக்கப்படாது வேட்கை மிகுதியால் நிறை யழிதலின் கைகள் தாமே முயங்கல் விருப்பத்தான் எழுவன போல்வதொரு குறிப்பு. இக்குறிப்பே அவர்தம் மலரினும் மெல்லிய காமம் செவ்வி பெற்றமைக்கு அறிகுறியாம் என்க. இம்மெய்ப்பாடு தோன்றுங் கால் மெல்லியதொரு புன்முறுவலாகவே வெளிப்படும்; இதனையே நெடுநிலா விரிந்த வெண்தோடு என்றார். காமச் செவ்வி தலைப்பட்ட தலைவன் கூற்றாக வருகின்ற, அசையியற் குண்டாண்டோர் ஏவர் யானோக்கப் பசையினன் பைய நகும் ( குறள் 1068) என்னும் திருக்குறளானும் இதனை உணர்க. இனி, புணர்ச்சி நிமித்தமாக இம்மெய்ப்பாடுகள் தோன்று மென்பதனை, ஓதியு நுதலு நீவி யான்றன் மாதர் மென்முலை வருடலிற் கலங்கி யுள்ளத் துகுநள் போல வல்குலின் ஞெகிழ்நூற் கலிங்கமொடு புகுமிட னறியாது மெலிந்தில ளாகி வலிந்துபொய்த் தொடுங்கவும் யாமெடுத் தணைத்தொறுந் தாமியைந் தெழுதலின் இம்மை யுலகத் தன்றியு நம்மை நீளரி நெடுங்கட் பேதையொடு கேளறிந் தனகொலிவள் வேய்மென் றோளே எனவரும் பழம்பாடலான் (தொல்-மெய்ப்-15-உரைமேற்.) உணர்க. கண்ணகியாரின் காமம் முழுதும் மலர்ச்சியுற்றமையை நெடுநிலா விரிந்த வெண்டோட்டு மல்லிகை மாலை என்னாது விரியன்மாலை என விதந்தோது மாற்றால் உணர்த்தினர். இவ்வடிகளில் இங்ஙனம் பொருள் காண்டல் பாட்டிடை வைத்த குறிப்பாற் கண்டவாறாம். இவ்வாறு காணாக்கால் பின்வரும் தாரும் மாலையும் மயங்கி என்பதே அமையும். இவற்றிற்கு இப்பொருளுண்மையால் விதந்தோதி மீண்டும் இவற்றையே அத்தாரு மாலையும் என எதிர்நிரனிறையாகக் கூறினர். முன்னர்ப் பிறழ என்றோதிப் பின்னர் மயங்க என்றோதியதூஉம் முன்னர்ப் புணர்ச்சியின் செயல் நிகழ்ச்சியும் பின்னர் இன்பத்தால், அவசமாகி இருவரும் அவை செறிய முயங்கினமையும் தோற்றுவித்தற்கு என்க. இனி, இம்மெய்ப்பாடுகள் கண்ணகியார்க்கே சிறந்தவை. கோவலனுக்கு அக்காமச் செவ்வி இயற்கையாலேயே முழுமையுற்றுச் செவ்வியுறுதலின் அவன் அணிந்த தாரினை வாளாது கழுநீர்ப் பிணையல் முழு நெறி என்றோதியொழிந்தார் என்க. கையறுதல் இருவருள்ளமும் இன்பத்தால் விழுங்கப்பட்டுச் செயலறுதல். இவ்வாறு இடக்கரடக்கி அவர்தம் கூட்டத்தை இனிதின் ஓதிய அடிகளார் அக் கையறவிற்குப் பின்னர்த்தாகிய பாராட்டெடுத்தல் என்னும் மெய்ப்பாடு இருவர்க்கும் பொதுவாயினும் கோவலனுக்கே சிறப்புடைத்தாதல் பற்றிக் கூற்று வகையால் கோவலன்பால் வைத்துக் கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை என்றார். கண்ணகிக்கு இம்மெய்ப்பாடு உள்ளத்தே அவனைப் பாராட்டுந் துணையாய் அமைதலின் அது கூறாராயினர். இனி, கோவலன் கூறுமோர் கட்டுரை என்னாது குறியாக்கட்டுரை என்றார். ஈண்டுக் கோவலன் இவ்வுலகத்துக் காதலர் தங்காதலிமாரை நலம் பாராட்டுமாறே பாராட்டினன் அல்லது அத்திருமாபத்தினியின் சிறப்பெல்லாம் குறிக்கொண்டு பாராட்டினன் அல்லன் என்றுணர்த்தற்கு. இஃதென் சொல்லியவாறோவெனின், கோவலன் ஈண்டுக் கூறும் சிறப்பைவிடப் பன்னூறுமடங்கு உயர்ந்தனவாம் அப்பெருந்தகைப் பெண்ணின் சிறப்பு. அவனுரை அவற்றைக் குறியாது வறிதே நலம் பாராட்டுதல் என்னும் பொருள்பற்றி உலகத்துக் காதலர் கூறும்மரபு பற்றிய உரையேயாம், எனக் கண்ணகியாரின் பெருஞ்சிறப்பைக் கருதி அங்ஙனம் ஓதினர். இனி இக்கண்ணகியாரின் சிறப்பெல்லாங் கருதிக் கூறுங் கட்டுரையை அடிகளார், கொற்றவையின் கூற்றாக, இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து ஓருமா மணியா யுலகிற் கோங்கிய திருமாமணி (வேட்டுவவரி - 47-50) என இனிதின் ஓதுவர். ஈண்டு அத்தெய்வம் கூறுங் கட்டுரையே கண்ணகியாரின் சிறப்பை உள்ளவாறே குறிக்கும் கட்டுரையாதல் நுண்ணிதின் உணர்க. இன்னும் அடைக்கலக் காதையின் தவமூதாட்டியாகிய கவுந்தியடிகளார் இக்கண்ணகியாரோடு ஒருசில நாள் பயின்ற துணையானே இப்பெருமகள் தான் மானுடமகளாயினும் தெய்வத்திற்கியன்ற சிறப்பெலாம் உடையள் என மதித்து மாதரி என்பாட்குக் கண்ணகியைக் காட்டி, ஈங்கு, என்னொடு போந்த விளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் (அன்னளாயினும்) கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு நடுங்கு துயரெய்தி நாப்புலர வாடித் தன்றுயர் காணாத் தகைசால் பூங்கொடி இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக் கற்புக் கடம்பூண்ட வித்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங் கண்டிலமால். என வியந்து பாராட்டுதல் கண்ணகியை உள்ளவாறுணர்ந்து அவள் நலங்குறித்த கட்டுரையாகும். இங்ஙனம், தெய்வத்தானும் செய்தவத்தோரானும் வியந்து பாராட்டுதற்குரிய இத்தகைசால் பூங்கொடியின் நலமுழுதும் இவன் உணர்ந்து அவற்றைக் குறித்துப் பாராட்டினனல்லன் என்பார் கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை என்று அடிகளார் இரங்கிக் கூறினர் என்க. கோவலன் கண்ணகியை நலம் பாராட்டுங் கட்டுரை 37-41 : குழவித் திங்கள் ............... ஆகென (இதன்பொருள்) பெரியோன் குழவித் திங்கள் இமையவர் ஏத்த அழகொடு முடித்த அருமைத்து ஆயினும் - பிறவாயாக்கைப் பெரியோனாகிய இறைவன் தன்னை அடையாளங் கண்டு தேவர் முதலிய மெய்யடியார் ஏத்துதற்பொருட்டு மேற்கொண்ட அழகிய அருட்டிருவுருவத்திற்கு இதுவும் ஓர் அழகினைத் தரும் என்று தேர்ந்து இளம் பிறையானது அவனால் தனது திருமுடிக்கண் விரும்பி யணியப்பட்ட பெறுதற் கருமையுடைத்தாகிய பேரணிகலமேயாயினும்; நின்னோடு உடன் பிறப்பு உண்மையின் - அப்பிறைதானும் நின்னுடன் பிறந்தது என்னும் ஓர் உறவுடைத்தாதலால்; உரிதினின் - அது நினக்கே உரியது என்னும் அறத்தைக் கருதி; திருநுதல் ஆக என - அது நினக்கு அழகிய நுதலாயிருந்து அழகு செய்வதாக என்று கருதி; தருக - (நினக் கருளினன் போலும் அங்ஙனம் ஆயின்) தந்தருளுக அதனால் அவனுக்குப் புகழேயல்லாமல் பழி யொன்றுமில்லை; என்றான் என்க. (விளக்கம்) பிறை இறைவன் விரும்பியணிந்த பேரணிகலனே ஆயினும் அவன் மன்னுயிர்க்கு அறமுரைத்த பெரியோனாகலின் அப்பிறை தன்னினுங் காட்டில் நினக்கே பெரிதும் உரிமையுடைத்தாதலால் பிறர்க்குரிய பொருளை அவர்க்கே கொடுப்பதுதான் அறமாகும் என்று அது நினக்கு நுதலாயிருந்து அழகு செய்யும்பொருட்டு நினக்குத் தந்தனன் போலும். அவன் செயல் அறத்திற்கும் ஒக்கும் என்றவாறு. இதனால் கோவலன் கண்ணகியையும் அவள் நுதலையும் நிரலே திருமகளோடும் பிறைத்திங்களோடும் அவள் பிறந்தகுடியைத் திருப்பாற் கடலோடும் ஒப்பிட்டுப் பாராட்டினானாதல் நுண்ணிதின் உணர்க. இனி, அடியார்க்குநல்லார் தருக என்றது சூடின பிறை இரண்டு கலையாகலின் அதனை எண்ணாட்டிங்களாக்கித் தருக என்பது கருத்து எனவும், என்னை? மாக்கட னடுவண் எண்ணாட் பக்கத்துப் பசு வெண்டிங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயல் விளக்குஞ் சிறுநுதல் (குறுந்-126) என்றாராகலின், எனவும் ஓதினர். மேலும், இதனால் மேற்கூறுகின்ற கரும்பையும் வச்சிரத்தையும் அவ்வவ்வுறுப்புக்கட்கு ஏற்பத் திருத்தி ஈக்க, அளிக்க, என்பதாயிற்று. என்றது கரும்பிற்கு நிறனும், வச்சிரத்துக்கு நேர்மையும் உண்டாக்கி என்றவாறு. இஃது எதிரது போற்றலென்னும் தந்திரவுத்திவகை, என்றும் விளக்குவர். குழவித்திங்கள் என்றது இளம்பிறையை. ஈண்டுப் பிறையின் இளமைக்குக் குழவிப் பெயர்க்கொடை பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவும் அமையும் எனவரும் மரபியற் சூத்திரத்தில் (24) கொள்ளவும் அமையும் என்பதனை எச்சவும்மையாக்கி அமைப்பர் பேராசிரியர். குழவி வேனில் (கலி - 36) குழவிஞாயிறு (பெருங்கதை - 1-33-26) எனப் பிறரும் ஓதுதலறிக. 42-45: அடையார் ........... ஈக்க (இதன் பொருள்) உருவு இலாளன் - வடிவமில்லாத காமவேள்; ஒரு பெருங் கருப்பு வில் - தான் போர் செய்தற்கு எடுத்த தனது ஒப்பில்லாத பெரிய கரும்பு வில் ஒன்றே யாயினும் அதனையும்; இரு கரும்புருவமாக - நினக்கு இரண்டு கரிய புருவங்களாம்படி; ஈக்க-திருத்தி ஈந்தருளினன் போலும் அங்ஙனம் ஈதல் அவனுக்குரிய கடமையேயாம் ஆதலால் ஈந்தருளுக அஃதெற்றாலெனின், அடையார் முனை யகத்து அமர் மேம்படுநர்க்கு - வேந்தராயினோர் தமது பகைவரோடு போர்எதிரும் களத்தின்கண் மறத்தன்மையாலே தம்மை மேம்படுக்கும் படைஞர்க்கு; படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின் - படைக்கலம் வழங்கும் மரபொன்று உண்டாகலான்; அம்மரபுபற்றி அவன் ஈந்தது முறைமையே ஆகலான்; என்றான் என்க. (விளக்கம்) அடையார் - பகைவர். வழங்குவது என்னும் வினைக்குத் தகுதிபற்றி வேந்தர் என எழுவாய் வருவித்தோதுக. ஒரு பெருங் கருப்புவில் இருகரும் புருவமாக என்புழி முரணணி தோன்றிச் செய்யுளின்ப மிகுதலுணர்க. கருப்புவில் ஒன்றனையும் நினக்குக்கரிய இருபுருவமாகத் திருத்தித்தரக் கடவன் என்று உரைவிரித்த அடியார்க்கு நல்லார், விளக்க வுரைக்கண் இரு கரும்புருவமாக வென்றது சேமவில்லையும் கூட்டி என்பது முறைமறந்தறைந்தபடியாம் என்க. காமவேளாகிய மன்னனுக்கு மகளிரே படைமறவர் ஆவர் ஆகலின் அவன் செய்யும் போரில் அவனுக்கு வெற்றிதந்து அவனை மேம்படுப்பாய் நீயே ஆகலின் நினக்கு அவன் தன்னொரு பெருவில்லையே வழங்கி விட்டனன் போலும் என்கின்றான். இதனால் நின்னுடைய கண்கள் மட்டும் அல்ல நின் புருவங்களுங்கூடத் தமது அழகாலே எம்மை மயக்குகின்றன என்று அவற்றின் அழகைப் பாராட்டினன் ஆதலறிக. இனி மன்னர் தம்மை மேம்படுக்கு மறவர்க்குப் படைவழங்கும் மரபுண்மையை, படைவழக்கு என்னும் துறைபற்றி முத்தவிர் பூண்மறவேந்தன், ஒத்தவர்க்குப் படைவழங்கின்று, எனவும், கொடுத்த பின்னர்க் கழன்மறவர், எடுத்துரைப்பினும் அத்துறையாகும், எனவும் வரும் கொளுக்களானும் இவற்றிற்கு, ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப ஐயிலை எஃக மவைபலவும் - மொய்யிடை ஆட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான் எனவும், துன்னருந் துப்பின் தொடுகழலார் சூழ்ந்திருப்பத் தன்னமர் ஒள்வாளென் கைத்தந்தான் - மன்னற்கு மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ் விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து எனவும் வரும் வரலாற்று வெண்பாக்களானும் உணர்க. (புறப்-மாலை-64-5) 46-48: மூவா மருந்தின் .......... இடையென (இதன் பொருள்) தேவர் கோமான் - தேவேந்திரன்; தெய்வக் காவல் படை - தன் கீழ்க்குடிகளாகிய தேவர்களை அசுரர் துன்புறுத்தாமல் காத்தற் பொருட்டுத் தான் அரிதிற்பெற்ற வச்சிரப்படை பெறுதற்கு அருமையுடைத்தாயினும்; மூவாமருந்தின் முன்னர்த் தோன்றலின் - தமக்கு மூவாமையையும் சாவாமையையும் அளித்த அமிழ்தத்திற்கு நீ தவ்வையாகத் திருப்பாற் கடலின்கண் அதற்கு முன்னர்ப் பிறத்தலின் அதனோடும் நினக்கு உடன்பிறப்பாகிய உறவுண்மையால் அதுவும் நினக்குரித்தாதல் கருதி; அதன் இடை நினக்கு இடை என - அவ்வச்சிரப்படையினது இடையானது நினக்கு இடையாகி அழகு செய்வதாக வென்று கருதி; நினக்கு அளிக்க - நினக்கு வழங்கினன் போலும், அங்ஙனம் வழங்கின் வழங்குக அதுவும் அமையும்; என்றான் என்க. (விளக்கம்) திருப்பாற் கடல்கடையும் காலத்தே வச்சிரப்படையும் திருமகளும் அமிழ்தமும் நிரலே பிறந்தனவாகக் கூறும் பௌராணிகர் மதத்தை உட்கொண்டு இவளைத் திருமகளாக மதித்து வச்சிரம் அமிழ்தம் பிறக்கு முன்னர் நினக்குப் பின்னாகப் பிறத்தலின் அவ்வுடன்பிறப்புண்மையின் நினக்குரித்தென்று நினக்கு இடையாகுக என்று வழங்கினன் போலும். அவன் அரசனாகலின் உரியவர்க்கு உரிய பொருளை வழங்குதல் செங்கோன் முறையாதலின் வழங்கினன் என்றான். இங்ஙனம், (திருமகளோடு) வச்சிரமும் அமிழ்தமும் கடல் கடைகின்ற காலத்துப் பிறந்தனவெனப் புராணம் கூறும் என அடியார்க்கு நல்லாரும் ஓதினர். இனி, நீ அமுதாகலின் நினக்கு முன்னர் வச்சிரம் பிறத்தலால் எனினும் அமையும் என்பர் அடியார்க்குநல்லார். இதற்கு மூவாமருந்தாகிய நினக்கு முன்னர்ப் பிறத்தலின் எனப் பொருள் காண்க. முன்னிலைப் புறமொழியாகக் கொண்டங்ஙனம் கூறினர் என்க. இனி, மூவாமருந்து தனக்குச் செய்த நன்றியைக் கருதி அதனுடன் பிறந்த நினக்கு அளித்தான் போலும் எனினுமாம். இனி, வச்சிரம் ததீசி முனிவனுடைய முதுகென்பு என்றும் அதனை அம்முனிவர் பெருமான் இந்திரனுக்கு வழங்கினன் எனவும் புராணம் கூறும். இதற்கியைய, வச்சிரம் மீண்டும் பெறுதற் கருமையுடைத்தாயினும் அவ்வருமை கருதாமல் செய்ந் நன்றியைக் கருதி நினக்கு அதனை அளித்தனன் என்றான் எனினுமாம். இதனால், கண்ணகியின் பிறப்பின் தூய்மையையும் அவளழகையும் அவளுடைய நுண்ணிடையையும் ஒருங்கே பாராட்டினன் ஆதல் அறிக. 49-52: அறுமுக வொருவன் ......... ஈத்தது (இதன் பொருள்) அறுமுக ஒருவன் ஆறுமுகங்களையுடைய இறைவன்; ஓர் பெறும் முறை இன்றியும் - முற்கூறப்பட்ட பிறை முதலியவற்றைப் போன்று நினக்குப் பெறுதற்குரிய உரிமை யாதும் இல்லையாகவும்; அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது - தன் கையிலுள்ள அழகிய ஒளியையுடைய வேல் ஒன்றையும் நின் முகத்தின்கண் சிவந்த கடைப்பகுதியையுடைய குளிர்ந்த கண்கள் இரண்டுமாம் படி வழங்கியது; இறுமுறை காணும் இயல்பினின் அன்றே தனக்கியல்பான தொழில்களுள் வைத்து உயிரினங்கள் இறந்து படுதலைச் செய்து காண்பதுவும் ஒன்றாகலால் அன்றோ; அன்றெனின் பிறிதொரு காரணமுங் கண்டிலேன் என்றான் என்க; (விளக்கம்) பெரியோனும் உருவிலாளனும் தேவர் கோமானும் நிரலே பிறையும் கருப்பு வில்லும் காவற்படையும் வழங்குதற்குக் காரணம் தெரிகின்றது. அறுமுகவொருவன் தனது வேலை நினக்குக் கண்ணாக வென வழங்கியதற்குக் காரணங் கண்டிலேன். ஒரோவழி அவன் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தொழிலையும் தனக்கியல்பாக உடையனாகலின், அவற்றுள் அழித்தற் றொழில் நிகழ்தற் பொருட்டு ஈந்தனன் போலும் என்றவாறு. இனி, இறுமுறை காணும் இயல்பினினன்றே என்பதற்கு, யான் இறந்துபடு முறைமையைத் தன் கண்ணாற் காண வேண்டுதல் காரணத்தான் என்க என்று உரைவிரித்தார் அடியார்க்கு நல்லார் இதற்கு, (கொள்ளும் பொருளிலராயினும் வம்பலர்) துள்ளுநர்க் காண்மார் (தொடர்ந்துயிர் வெளவலின்) எனவரும் கலியடியை (4:5) மேற்கோளாகவும் காட்டினார். அரும்பதவுரையாசிரியர் இவ்வாறு ஓர் உரிமையின்றியேயும் குமரவேள் தன்கையில் வேலொன்றையும் இரண்டாக்கித் தந்தது என்னை வருத்தும் இயல்பினானன்றே என்றோதுவர். இவர் தம் முரைகளோடு முருகவேள் இறுமுறை காணும் இயல்பினையுடையான் என்பது பொருந்துமாறில்லையாதல் உணர்க. இதன்கண் நின்கண் இறுமுறை காணும் இயல்பிற்று என்னுமாற்றால் அது தன்னை வருத்துமியல்பு கூறி அதன் அழகை வேலோடுவமித்துப் பாராட்டினன் ஆதலறிக. ஓக்கிய முருகன் வைவேல் ஒன்றிரண்டனைய கண்ணாள் எனவருஞ் சிந்தாமணியும் (1291) ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. இவையெல்லாம் புகழுவமையணியின் பாற்படும் என்பது அடியார்க்கு நல்லார் கருத்து. இவற்றால் கட்புலனாய் எழுதப்படும் உறுப்புக்களைப் பாராட்டி இனிக் கட்புலனாயும் ஆகாதுமாய் எழுதப்படாதன பாராட்டுவான். 53-61: மாயிரும்பீலி ............ ஒருவாவாயின (இதன்பொருள்) (55) நல்நுதால் - அழகிய நுதலையுடையோய்; மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை - கரிய பெரிய தோகையினையும் நீலமணிபோன்ற நிறத்தையும் உடைய மயில்கள்; நின் சாயற்கு இடைந்து தண் கான் அடையவும் - நின் சாயலுக்குத் தோற்று இழிந்த காட்டிடத்தே போய் ஒடுங்கா நிற்பவும்; அன்னம் மெல் நடைக்கு அழிந்து - அன்னங்கள் தாமும் நினது மெல்லிய நடையழகிற்குத் தோற்று; நல் நீர்ப்பண்ணை நளிமலர்ச் செறியவும் - தூய நீர் பொருந்தின கழனிகளிடத்தே அடர்ந்த தாமரை மலர்களினூடே புக் கொடுங்கா நிற்கவும்; மடநடைமாது - மடப்பங்கெழுமிய நடையினையுடைய மாதே!; சிறு பசுங்கிளிதாமே அளிய நின்னோடுறைகின்ற சிறிய இப்பசிய கிளிகள் மாத்திரமே நின்னால் அளிக்கற்பாலனவாயின காண்; எற்றுக்கெனின்; குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும் - வேய்ங் குழலின் இசையினிமையையும் யாழின் இசையினது இனிமையையும் அமிழ்தினது சுவைதரும் இனிமையையும் கலந்து குழைத்தா லொத்த இனிமையையுடைய நின் மழலை மொழியினைக் கேட்டு அவற்றைத் தாமும் கற்றற்குப் பெரிதும் விரும்பி, வருத்தமுடையனவாகியும்; நின் மலர்க்கையின் நீங்காது உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின-நின்னுடைய செந்தாமரைபோன்ற அழகிய கையிலிருந்து விலகாமல் நின்னோடு வதிதலைப் பொருந்திப் பிரியாவாயின ஆதலாற்காண்! என்றான் என்க. (விளக்கம்) மாயிரு என்பது கோயில் என்பதுபோல யகரவுடம்படு மெய் பெற்றது. இதனைப் புறனடைவிதியாலமைத்துக் கொள்க. மா - கருமை. இருமை - பெருமை. மணி - நீலமணி. சாயல் - மென்மை. அஃதாவது நாயும் பன்றியும் போலாது, மயிலும் குயிலும் போல்வதொரு தன்மை என்பர் இளம்பூரணர். இதனை, நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள் என்பர் தொல்காப்பியனார் (பொருளியல்-51.) ஐம்பொறியால் நுகரும் மென்மை என்பர் நச்சினார்க்கினியர். ஐம்பொறியானும் நுகரப்படும் ஒண்டொடியார் பால் அஃது எஞ்சாமற் காணப்படும். இதற்கு மயில் ஒருபுடையே அவர்க்கு ஒப்பாகும் என்க. ஈண்டுக் கோவலன் ஐம்பொறியானும் கண்ணகியார்பால் நுகர்ந்த இன்பத்திற்கு வேறுவமையின்மையால், மயிலும் நின் சாயற்கு இடைந்தது என்கின்றான். தண்கான் என் புழித் தண்மை - இழிவு என்னும் பொருட்டு. அஃதப்பொருட்டாதல் பிங்கலந்தை (3607) யிற் காண்க. பண்ணை - கழனி. செறிதல் - புக் கொடுங்குதல். ஒடுங்க வேண்டுதலின் நளிமலர் எனல் வேண்டிற்று. நளி-செறிவு. இனி குழலும் யாழும் அமிழ்துங்குழைத்த மழலைக் கிளவி என நிகழும் தொடரின்கண் தமிழ் மொழிக்குச் சிறப்பெழுத்தாகிய ழகர, வொலிமிக்கு மொழி யின்பம் பெரிதும் மிகுதலுணர்க. இஃது இல்பொருள் உவமை. கரும்புந் தேனு மமுதும் பாலுங்கலந்த தீஞ்சொல் எனத் திருத்தக்க தேவரும் ஓதுதல் (2438) உணர்க. இனி, குழல் முதலியவற்றைக் குழைத்த (வருத்திய) எனினுமாம். நன்னுதல், மாது என்பன விளி. இவை நன்னுதால் எனவும் மாதே எனவும் ஈற்றயல் நீண்டும் ஏகாரம் பெற்றும் விளியேற்கும். இனி, மயிலும் அன்னமும் இடைந்தும் அழிந்தும் தாமுய்யுமிடம் நாடிச் சென்றன. மற்று இச்சிறு கிளிகள் நின் மழலை கேட்டு அழுக்காறு கொள்ளாமல் அவற்றைக் கற்கும் பொருட்டு நின்பால் உடனுறைவு மரீஇ ஒருவா ஆயின; ஆகவே நின்னைப் புகலாகக் கொண்ட அவற்றை அளித்தல் நின்கடன் என்றவாறு. அளியகிளி தாமே என மாறி ஈற்றினின்ற ஏகாரம் பிரிநிலை என்க. தாம் அசைச்சொல். கிளிகள் தம்மனம் போனவாறு பறந்துதிரிதலை விட்டுக் கற்றற்பொருட்டு அடங்கியிருந்தலின் வருந்தினவாகியும் என்றான் என்க. என்னை? கல்வி தொங்குங் காற்றுன்பந் தருமியல்பிற் றென்பது முணர்க. இங்ஙனம் கூறாமல் மழலைக் கிளவிக்குத் தோன்றனவாயும் என்னும் அடியார்க்கு நல்லார் உரை அவை உடனுறைவுமரீஇ ஒருவா வாதற்குச் சிறவாமை நுண்ணுணர்வாற் கண்டுகொள்க. கண்ணகியார் வளர்க்குங் கிளி பலவாகலின் பன்மை கூறினான். 62 - 64: நறுமலர் .......... எவன்கொல் (இதன் பொருள்) நறுமலர்க் கோதை - நறுமணமுடைய மலர் மாலையையுடையோய்; நின் நலம் பாராட்டுநர் - நினது அழகுக்கு ஒப்பனையால் அழகு செய்கின்ற நின் வண்ணமகளிர்; மறு இல் மங்கல அணியே அன்றியும் - குற்றமற்ற நின்னுடைய இயற்கை யழகே அமைவதாகவும் அதனை யல்லாமலும்; பிறிது அணி அணியப் பெற்றதை எவன் கொல் - அவ்வழகை மறைக்கின்ற வேறு சில அணிகலன்களை நினக்கு அணிவதனாலே பெற்ற பயன்தான் யாதோ? என்றான் என்க. (விளக்கம்) எனவே, அவர் பயனில செய்யும் பேதையரே ஆதல் வேண்டும் என்றான் என்க. இதனோடு, அமிழிமைத் துணைகள் கண்ணுக் கணியென வமைக்குமா போல் உமிழ்சுடர்க் கலன்க ணங்கை யுருவினை மறைப்ப தோரார் அமிழ்தினைச் சுவைசெய் தென்ன வழகினுக் கழகு செய்தார் இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை யுடைத்து மாதோ! எனவரும் கம்பநாடர் செய்யுள் நினையற்பாலதாம். (கோலங் -3) கோதை-விளி. மங்கலவணி-இயற்கையழகு. மாங்கலிய மென்பாருமுளர் என்பர் அடியார்க்கு நல்லார். எவன்-யாது.கொல்: அசை. 65 - 66 : பல்லிருங்கூந்தல் ................ என்னுற்றனர் கொல் (இதன் பொருள்) பல் இருங்கூந்தல் சில் மலர் அன்றியும் - ஐம்பாலாகக் கை செய்யப்படும் நினது கரிய கூந்தலில் மங்கலங்கருதி அதற்குரிய மலர் சிலவற்றைப் பெய்தமையே அமைவதாக அவற்றை யல்லாமலும்; எல் அவிழ் மாலையொடு என் உற்றனர் கொல்-ஒளியோடு மலருகின்ற இந்த மலர்மாலைகள் அக் கூந்தலின்கண் நின்னிடைக்குப் பொறையாக அணிதற்கு அவற்றோடு அவர்கள் எத்தகைய உறவுடையரோ, அறிகின்றிலேன் என்றான் என்க. (விளக்கம்) இம்மாலைகள் நினது கூந்தலின் இயற்கையழகை மறைப்பதோடல்லாமல் நின் சிற்றிடைக்குப் பெரும் பொறையுமாம் என்பது நினையாமல் நின்றலையின்மேல் அவற்றை ஏற்றுதலால் அவற்றோடு அவர்க்கு உறவுண்டு போலும் என்றவாறு. என்னை? உறவினரை மேலேற்றி வைத்தல் உலகியல்பாகலின் அங்ஙனம் வினவினன் என்க. சில்மலர் என்றது மங்கலமாக மகளிர் அணியும் கற்புமுல்லை முதலியவை. சீவக சிந்தாமணியில் தேந்தாமம் என்று தொடங்குஞ் செய்யுளில் (680) முல்லைப் பூந்தாமக் கொம்பு என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் முல்லை கற்பிற்குச் சூட்டிற்று எனவும் சீவக செய்யுள் 624-ல் முல்லைச் சூட்டுவேய்ந்தார் என்பதற்கு முல்லைச் சூட்டைக் கற்பிற்குத் தலையிலே சூட்டி என்றும் உரை கூறுதலுமுணர்க. சின்மலர் - அருச்சனை மலருமாம் என்பர் அடியார்க்கு நல்லார். 67-68: நான ............. எவன்கொல் (இதன் பொருள்) நானம் நல் அகில் நறும்புகை அன்றியும் - அவ்வண்ணமகளிர் நினது பல்லிருங்கூந்தலுக்கு நெய்யையுடைய சிறந்த அகிற்புகையை ஊட்டுதலே அமைவதாகவும் அதனை யல்லாமலும்; மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல் - கத்தூரியையும் அணிதற்கு அதன்பால் அவர்க்கு உண்டான கண்ணோட்டத்திற்குக் காரணம் யாதோ? என்றான் என்க. (விளக்கம்) நானம் - நாற்றமுமாம்; திருந்து தகரச் செந்நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொளவுயிர்க்கும் கருங்காழ் அகிலின் நறும்புகை என்பான் (சிந்தா - 346) நல்லகில் நறும்புகை என்றான். அதற்குப் பொறையின்மையின் அஃது அமையும் என்பது கருத்து. மான்மதம்-கத்தூரி. வந்ததை என்புழி ஐகாரம் சாரியை. மான்மதத்தைச் சிறந்த இடத்தில் வைத்தலால் வந்தது என்னும் வினையாலணையும் பெயர் கண்ணோட்டம் என்பது தகுதியாற் கொள்ளப்பட்டது. 69-70 : திருமுலை ............ எவன்கொல் (இதன்பொருள்) திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும் - அவர்தாம், நினது அழகிய முலைப்பரப்பின் மேல் தொய்யில் எழுதுதலே மிகையாகவும் அதனை யல்லாமலும்; முத்தம் ஒரு காழொடு உற்றதை எவன்கொல் - முத்தாலியன்ற தனி வடத்தையும் பூட்டிவிட்டமைக்கு அதனோடு அவர்க்குண்டான உரிமைதான் யாதோ? என்றான் என்க. (விளக்கம்) திரு என்பதற்கு அடியார்க்கு நல்லார் முலைமேல் தோன்றும் வீற்றுத் தெய்வம், எனப் பொருள் கொண்டனர். சிந்தாமணியில் (171) ஆமணங்கு குடியிருந்தஞ்சுணங்கு பரந்தனவே எனத் திருத்தக்க தேவர் ஓதுதலும், அதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் தம் மேலுறையும் வீற்றுத் தெய்வம் இருப்பிடமாக விருக்கப்பட்டுச் சுணங்கு பரந்தன என உரை விரித்தலும் காண்க. அஃதாவது வேறொன்றற் கில்லாத கவர்ச்சியையுடைய அழகைத் தருவதொரு தெய்வம் என்றுணர்க. காழ்-வடம். 71-72: திங்கள் ......... என்னுற்றனர் கொல் (இதன் பொருள்) திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும்- அந்தோ நின்னுடைய பிறைபோன்ற நுதலின்கண் வியர்வைத் துளிமுத்துக்கள் போன்று அரும்பா நிற்பவும் நுண்ணிடை வருந்தா நிற்பவும் இங்கு இவை அணிந்தனர் - இங்குக் கூறப்பட்ட பிறிதணி முதலிய இவற்றைப் பொறையின் மேல் பொறையாக அணிந்துவிட்ட அவ்வண்ணமகளிர்; என் உற்றனர் கொல் - என்ன பேய் கொண்டனரோ? என்றான் என்க. (விளக்கம்) திங்கள், முத்து என்பன சொல்லுவான் குறிப்பினால் முகம் என்றும் வியர்வென்றும் பொருள்படுதலால் இவற்றைக் குறிப்புவமை என்ப; இவற்றைப் பிற்காலத்தார் உருவகம் என்று வழங்குப. மங்கல வணியும் சின்மலரும் அகிற்புகையும் தொய்யிலும் ஆகிய, இவையே பொறையாக இவற்றைச் சுமக்கலாற்றாது திங்கள் முத்தரும்பவும் இங்கு இவைகண்டு வைத்தும் மேலும் பொறையாகப் பிறிதணியும் மாலையும் சாந்தும் முத்தும் அணிந்தாராகலின் அவர் பேயேறப் பெற்றவரேயாதல் வேண்டும் என்பது கருத்து. என்னுற்றனரோ என்பதற்கு என்ன பித்தேறினார் எனினுமாம். 73-81 : மாசறுபொன்னே ............ பாராட்டி (இதன் பொருள்) மாசு அறு பொன்னே - குற்றமற்ற பொன்னை ஒப்போய்! என்றும்; வலம்புரி முத்தே - வலம்புரிச் சங்கீன்ற முத்தை ஒப்போய்! என்றும்; காசு அறு விரையே - குற்றமற்ற நறுமணம் போல்வோய்! என்றும்; கரும்பே - கரும்பை ஒப்போய்! என்றும்; தேனே - தேன்போல்வோய்! என்றும்; அரும்பெறல் பாவாய்-பெறுதற்கரிய பாவை போல்வோய்! என்றும்; ஆர் உயிர் மருந்தே - மீட்டற்கரிய உயிரை மீட்டுத் தருகின்ற மருந்து போல்வோய்! என்றும்; பெருங்குடி வாணிகன் பெருமடமகளே - உயர்ந்த குடிப்பிறப்பாளனாய வாணிகர் பெருமகன் செய்தவத்தாற் பிறந்த மாண்புமிக்க இளமையுடைய நங்காய்! என்றும் (ஒருவாறு உவமை தேர்ந்து பாராட்டியவன்; பின்னர் அவள் நலத்திற்குவமை காணமாட்டாமல்) தாழ் இருங்கூந்தல் தையால் நின்னை-நீண்ட கரிய கூந்தலையுடைய தையலே நின்னை யான்; மலையிடைப் பிறவா மணியே என்கோ! மலையின் கட் பிறவாத மணி என்று புகழ்வேனோ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ - அல்லது, திருப்பாற்கடலிலே பிறந்திலாத அமிழ்தமே என்று புகழ்வேனோ? யாழ் இடைப் பிறவா இசையே என்கோ - அல்லது, யாழின்கட் பிறந்திலாத இசையே என்று புகழ்வேனோ? என்று உலவாக் கட்டுரை பல பாராட்டி - எனச் சொல்லித் தொலையாத அக்கண்ணகியின் நலங்களைப் பொருள் பொதிந்த மொழிகள் பலவற்றாலே புகழ்ந்து என்க. (விளக்கம்) (46) தீராக்காதலாலே முகம் நோக்கி, குறியாக் கட்டுரை கூறும் கோவலன் பெரியோன் தருக என்றும், உருவிலாளன் ஈக்க என்றும், அறுமுக வொருவன் ஈத்தது இறுமுறை காணும் இயல்பினின் அன்றே என்றும் மஞ்ஞை கான் அடையவும் அன்னம் மலர்ச் செறியவும் கிளி ஒருவா ஆயின ஆதலால் அளிய என்றும் கோதாய்! நின் நலம் பாராட்டுநர் பிறிதணியை அணியப் பெற்றதை எவன்? என்றும், மாலையொடு என்னுற்றனர் என்றும், சாந்தொடு வந்ததை எவன்? என்றும், முத்தொடுற்றதை எவன் என்றும், இவை அணிந்தனர் என்னுற்றனர் என்றும், பொன் முதலியன போல்வோய் என்றும், மகளே என்றும், மணியே என்கோ? அமிழ்தே என்கோ? இசையே என்கோ? எனவும், உலவாக் கட்டுரை பலவற்றானும் கண்ணகியின் நலத்தைப் பாராட்டி என்றியையும். இனி, (74) கண்ணுக்கு இனிமை பயத்தல் கருதி மாசறு பொன் என்றும், ஊற்றின்பம் கருதியும் மரபின் தூய்மை கருதியும் வலம்புரி முத்து என்றும், உயிர்ப்பின் இனிமை கருதி விரையென்றும், சுவையின்பங் கருதிக் கரும்பென்றும், மொழியின்பம் கருதித் தேன் என்றும் பாராட்டினன் எனவும், இவற்றாற் சொல்லியது ஒளியும் ஊறும் நாற்றமும் சுவையும் ஓசையுமாகலின் கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள (குறள்-1101) என நலம் பாராட்டப்பட்டன என்பது அடியார்க்கு நல்லார் கருத்தாகும். இனி, கண்ணகியின் பால் தானுகர்ந்த ஐம்புல வின்பங்களையும் கருதி அவற்றிற்குத் தனித்தனியே உவமை தேர்ந்து கூறியவன் அவற்றிற்கு அவ்வுவமைகள் உயர்ந்தன வாகாமல் தான் கூறும் பொருள்களே சிறந்தன என்னுங் கருத்தினால், பிறிதோராற்றால் அந்நலங்களைப் பாராட்டத் தொடங்கி அரும்பெறல் பாவாய் என்றும், ஆருயிர் மருந்து என்றும், பெருங்குடி வாணிகன் பெருமட மகளே என்றும், பாராட்டினன். இவற்றுள், கட்கினிமை பயத்தலின் முன்பு மாசறு பொன் என்றவன், காணுமளவிலே தன்னுள்ளம் மயக்குற்றமை கருதி அத்தன்மை பொன்னுக்கின்மையால் அங்ஙனம் மயக்குறுத்தும் கொல்லிப்பாவையே என்றான் என்க. அவ்வாறு மயங்கி அழியுமுயிரைத் தன்கண் களவு கொள்ளும் சிறு நோக்கினால் பெரிதும் தழைப்பித்தலின் ஆர் உயிர் மருந்தே என்றான், என்க. மருந்து மிருதசஞ்சீவினி என்பர், அடியார்க்கு நல்லார். கட்பொறிக்கேயன்றி ஏனைப்பொறிகட்கும் இன்பம் பயத்தலின் மலையிடைப் பிறவாமணி என்பேனோ என்றான் என்க. மணி குழையாமையின் அங்ஙனம் கூறினன் என்பர் அடியார்க்கு நல்லார். இனி, உண்டார்கண் அல்லது அலையிடைப் பிறக்கும் அமிழ்து கண்டார்க்கும் தீண்டினார்க்கும், கழிபேரின்பம் நல்குதலின்மையின் அதிற்பிறவா அமிழ்தே என்பேனோ என்றான் என்க. ஈண்டு உறுதோ றுயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு, அமிழ்தி னியன்றன தோள் எனவரும் திருக்குறளையும் (1106) அதற்கு ஆசிரியர் பரிமேலழகர் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினாற் செய்யப்பட்டன என உரைகூறுதலும் காண்க. அமிழ்திற்கு வடிவின்மையின் இங்ஙனம் கூறினன் என்பாருமுளர். 82-84 : தயங்கிணர் ......... நாள் (இதன்பொருள்) வயங்கு இணர்த் தாரோன் - விளங்குகின்ற பூங்கொத்துக்களாற் புனைந்த மலர்மாலையை அணிந்த கோவலன்; தயங்கு இணர்க்கோதை தன்னொடு - விளங்குகின்ற பூங்கொத்துக்களாலியன்ற மலர்மாலையணிந்த கண்ணகியோடு; மகிழ்ந்து தருக்கிச் செல்வுழி நாள் - இவ்வாறு பேரின்ப நுகர்ந்து செருக்குற்று ஏறுபோல் பீடுற நடந்து வாழ்கின்ற நாள்களுள் வைத்து ஒருநாள்; என்க. (விளக்கம்) வயங்கிணர், தயங்கிணர் என்பன ஒரு பொருளுடையன ஆதலால் இத்தொடையைத் தலையாய எதுகைத் தொடையின்பமுடைத்தென்றும், பரியாய வணி என்றும், கூறுவர் அடியார்க்கு நல்லார். இதனைப் பொருட்பின் வருநிலையணி என்பாருமுளர். 84 - 90 : வாரொலி ........... தனக்கென் (இதன்பொருள்) வார் ஒலி கூந்தல் பேரியல் கிழத்தி - நீண்டு அடர்ந்த கூந்தலையுடைய பெருமைமிக்க மனைமாண்புடைய மாசாத்துவான் மனைவியாகிய மூதாட்டி; மறப்பருங் கேண்மையோடு - இல்வாழ்வோர் எஞ்ஞான்றும் மறத்தலில்லாத சுற்றந்தழாலோடே; அறப்பரிசாரமும் - அறவோர்க்களித்தலும்; விருந்துபுறந்தரூஉம் பெருந் தண் வாழ்க்கை - விருந்தோம்பலும் இன்னோரன்ன பிற அறங்களையும் உடைய பெரிய குளிர்ந்த இல்வாழ்க்கையை; வீறுபெறக் காண -தாமே நடத்தி அவ் வாழ்க்கையின்கட் சிறப்புறுதலைத் தன் கண்ணாற் கண்டு களிக்க வேண்டி; வேறுபடு திருவின் - தாமீட்டிய பொருளினின்றும் பகுத்துக் கொடுத்த செல்வத்தோடும்; உரிமைச் சுற்றமொடு ஒரு தனி புணர்க்க - அவ்வாழ்க்கைக் கின்றியமையாத அடிமைத் திரளோடும், கோவலனும் கண்ணகியுமாகிய தன் மகனையும் மருகியையும் தம்மினின்றும் பிரிந்து வேறாக விருந்து வாழுமாறு பணித்தலாலே; இல்பெருங் கிழமையில் - இல்லறத்தை நடத்துகின்ற பெரிய தலைமைத் தன்மையோடே; காண்தகு சிறப்பின் பிறரெல்லாம் கண்டு பாராட்டத் தகுந்த புகழோடே; கண்ணகி தனக்கு-அக்கண்ணகி நல்லாட்கு; சில யாண்டு கழிந்தன-ஒருசில யாண்டுகள் இனிதே கழிந்தன; என்க. (விளக்கம்) வார் - நெடுமை. ஒலித்தல் ஈண்டு அடர்தன் மேற்று. பேரியல் - மனைவிக்குரிய பெருங்குணங்கள். அவையாவன: கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள். என்க; (தொல்-கற்பியல். 11) ஈண்டுப் பேரியற் கிழத்தி என்றது, மாசாத்துவானின் இற்கிழத்தியை (கோவலன் தாய்). இனி, வாரொலி கூந்தல் பேரியற்கிழத்தி என்பதுவே அடியார்க்கு நல்லார் கொண்ட பாடமாம் ஆயினும் வாரொலி கூந்தல் என்பதனை அன்மொழித் தொகையாகக் கொண்டு (கண்ணகியை) வீரபத்தினியை என்பர் அடியார்க்குநல்லார். பேரியற் கிழத்தி எனினுமமையும் என்றலின் அவர் கொண்ட பாடம் வாரொலி கூந்தல் பேரியற் கிழத்தி என்பது பெறப்படும். வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி என்று காணப்படும் பாடம் பிழைபடக் கொண்டதாம். பேரிற்கிழத்தி என்பது அரும்பதவுரையாசிரியர் கொண்டபாடமாம். இன்னும் அவர் அறப்பரிகாரம் என்று பாடங்கொண்டமை அவர் உரையால் விளங்கும். வாரொலி கூந்தற் பேரியற் கிழத்தி என்று பாடங்கொண்ட அடியார்க்கு நல்லார், கூந்தலையுடைய வீரபத்தினி எனப் பொருள் கூறுதல் மிகை. பேரியற் கிழத்திக்குக் கூந்தலை அடையாக்குதலே அமையும். இவர் உரையால் மயங்கிப் பின்னர் ஏடெழுதினோர் வாரொலி கூந்தலை என்றே எழுதி விட்டனர் போலும். கேண்மை-எல்லோரிடத்தும் கேளிராந்தன்மையுடையராதல், அன்புடையராந் தன்மை. இஃது இல்லறத்தார்க்கு இன்றியமையாப் பண்பாகலின் அதனை மறப்பருங்கேண்மை என்றார். அறப்பரிசாரம்-அறங்கூறுமாற்றால் ஒழுகுதல். ஈண்டு, (கொலைக்-71-2.) அறவோர்க்களித்தலும் துறவோர்க் கெதிர்தலும் எனக் கண்ணகியார் கூறியவை இதன்கண் அடங்கும். பரிசாரம் என்பது ஏவற்றொழில் செய்தல் என்னும் பொருட்டாகலின் அறவோர் முதலிய இம் மூவரும் ஏவிய செய்வதே இல்லறத்தார் கடனாகலின் இவற்றை அடக்கி வேறு ஓதினர். எஞ்சிய விருந்தோம்பல் முதலியவெல்லாம் விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கை என்பதன்கண் அடங்கும். இல்லற வாழ்க்கை ஏனையோர்க் கெல்லாம் தண்ணியநிழல் போறலின் அதனைப் பெருந்தண் வாழ்க்கை என்று விதந்தனர். இவையெல்லாம் (கொலைகளக் காதையில்) தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் என்பதன்கண் அடங்கும். வேறுபடுதிரு - பிரிக்கப்பட்ட செல்வம். கோவலனும் கண்ணகியும் இல்லறம் நடத்தற் பொருட்டுத் தமது பழம் பொருள்களினின்றும் கூறுபடுத்துக் கொடுத்த செல்வம் எனக் கோடலே ஈண்டுப் பெரிதும் பொருந்துவதாம். என்னை? கோவலன் பொருளிழந்த பின்னரும், அவனுடைய இருமுது குரவரும் தமக்கெனப் பொருளுடையராயிருந்தமை, நீர்ப்படைக் காதையில் கோவலன் இறந்தமை கேட்ட மாசாத்துவான் தன்பாலிருந்த மிக்க பொருளையெல்லாம் தானமாக வீந்துபோய்த் துறவியாயினன் என்பதை மாடல மறையோன் கூற்றாக வருகின்ற கோவலன்றாதை கொடுந்துயர் எய்தி மாபெருந் தானமாவான் பொருளீத்தாங்கு.... துறவியெய்தவும் என்பதனால் அறியப்படும். ஆதலானும் கனாத்திறம் உரைத்த காதையில் குலந்தருவான்பொருட்குன்றம் தொலைத்த இலம்பாடு நாணுத்தரும் எனக் கோவலன் குறிப்பது ஈண்டுத் தமக்கென வேறுபடுத்துக் கொடுத்த பொருளையே ஆதலானும் என்க. இந்நுணுக்க முணரார் நானாவிதமான செல்வம் என்றும், பலபடைப்பாகிய செல்வத்தோடே என்றும் தத்தம் வாய் தந்தன கூறலாயினர். வீறு - மற்றோரிடத்தே காணப்படாத சிறப்பு. ஒருதனி புணர்க்க என்றது அவள் நடத்தும் இல்லற வாழ்க்கையினூடே தான் சென்று புகாமல் முழுவதும் அவள் தலைமைக்கே விட்டு விட்டதை உணர்த்தும். இற்பெருங் கிழமையில் ஏனையோர் கண்டு பாராட்டத் தகுந்த சிறப்புடைய கண்ணகி என்க. இதற்கு அடியார்க்கு நல்லாரை யுள்ளிட்டார் கூறும் உரைகள் போலியாதலறிக. இனி இக்காதையினை, செல்வர்க்குத் தோன்றிய கண்ணியும் கொழுநனும் தென்றலைக் கண்டு மகிழ்சிறந்து ஏறிக் காட்சிபோல இருந்து எழுதப் பின்னர் இருவரும் மயங்கிக் கையற்றுழிக் குறியாக் கட்டுரை கூறுகின்றவன் உலவாக் கட்டுரை பல பாராட்டிச் செல்வுழி ஒருநாள் பேரியற்கிழத்தி புணர்க்க, கண்ணகிக்கு இற்பெருங் கிழமையில் யாண்டு சில கழிந்தன என வினையியைபு காண்க. (இஃது எல்லாவடியும் நேரடியாய் வந்து முடிதலின்) நிலைமண்டில ஆசிரியப்பா வெண்பா தூம ........ நின்று (இதன்பொருள்) காமர் மனைவி எனக் கை கலந்து - முற்கூறிய கோவலனும் கண்ணகியும் காமவேளும் இரதியும் போன்று தம்முள் உள்ளப்புணர்ச்சியால் ஒருவருள் ஒருவர் கலந்து; தூம் அம்டணிகள் ஒன்றித் தோய்ந்தால் என - மற்று மெய்யுறு புணர்ச்சிக்கண் காமநுகரும் அழகுடைய பாம்புகள் உடலாற் பிணைந்து புணருமாறு போன்று புணர்ச்சி எய்தி; ஒருவார் - தம்மை ஊழ் கூட்டுவித்த அவ்வொரு சில யாண்டுகளினும் ஒருவரை ஒருவர் பிரியாதவராய்; மண்மேல் நிலையாமை கண்டவர் போன்று- இவ்வுலகின்கண் யாக்கையும் இளமையும் செல்வமும் ஆகியவற்றின் நிலையாமையை உணர்ந்து அவை உளவாயிருக்கும் பொழுதே அவற்றாலாகும் இன்பத்தை நுகர்தற்கு விரைவார் போன்று; நின்று நாமம் தொலையாத இன்பம் எலாம் துன்னினார் - அழகிய அவ்வின்பவொழுக்கத்திலே நிலைபெற்று நுகர்ந்து நுகர்ந்தமையாத காதலின்பம் எல்லாவற்றையும் நுகர்ந்தனர். (விளக்கம்) தூம் - தூவும்; நுகரும்; துவ்வுதல் என்னும் வினைச்சொல் அடியாகப் பிறந்த எச்சம். இதன் ஈற்றுயிர் மெய்கெட்டது. இஃது எதிர்மறைக்கண் தூவா என வரும். தூவாக்குழவி எனவருதல், அறிக. ஈண்டுக் காமம் துய்க்கும் பணிகள் என்றவாறு. அப்பணி என்பதன் விகாரம்; அம் - அழகு. பணி-பாம்பு. இவை மெய்யுறுபுணர்ச்சிக்கு உவமம். நாமம்-அழகு. உளபோதே இன்பத்தை நுகர்தற்கு விரைவராதலின் உவமமாயினர். இவ்வெண்பா பல பிரதிகளில் காணப்பட்டிலது என்பர். மனையறம்படுத்த காதை முற்றிற்று. | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக