வியாழன், 10 நவம்பர், 2011

ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்

ராதே  கிருஷ்ணா 10 - 11 - ௨௦௧௧

ஆன்மீக சிந்தனைகள்



"சிவசிவ' என்றால் பிறப்பில்லை
நவம்பர் 07,2011,
09:11  IST
* ஒரு பிறவியில் செய்த பாவத்தை மற்றெரு பிறவியில் தீர்த்துக் கொள்ளட்டும் என்பதற்காக, ஈஸ்வரன் கருணையுடன் மறுபடியும் பிறவியைத் தருகிறான்.
* பகவானிடம் பக்தி உண்டாகவும், அவனது அருள் கிடைக்கவும் முதலில் பிறருக்கு உதவி செய். மனம் பக்குவமடைந்தால் உண்மையான பக்தியும், ஈஸ்வரனின் அருளும் கிடைக்கும்.
* தேசப்பணி, சமூகப் பணியில் ஈடுபடுவதற்கு முன் சமூக சேவையை, தெய்வப்பணியுடன் இணைத்து செய்ய வேண்டும். தெய்வ சம்மதத்துடன் தேசப்பணி செய்யவது நல்லது.
* கோபம், கெட்ட எண்ணம் போன்றவை இல்லாத சாந்தமாக இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் போது நமக்கு சாந்தம் ஏற்படுகிறது.
* ஈஸ்வரனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவன் ஒருவன் இருந்தாலும், அவன் மூலமாகத் தேசம் நலமடையும். அப்போது எது வந்தாலும் பயமில்லை.
* "சிவ' என்ற இரண்டு எழுத்தை எப்போதும் உச்சரிக்க வேண்டும், எந்த பிறவி வந்தாலும் அதை மறக்காமல் கூறினால், பிறவியே இல்லாத அமைதியான நிலை ஏற்படும்.
- காஞ்சிப் பெரியவர் 

தரமான வாழ்க்கை எது?
அக்டோபர் 31,2011,
15:10  IST
* இறைவனின் அழகு, கருணை, சக்தி, ஞானம் ஆகிய கல்யாண குணங்களை கடைபிடித்தால் நமது தோஷங்கள் நீங்கி நல்லவர்களாகிறோம்.
* முளைக்கிற போதே பயிரைக் கவனிப்பது போல, குழந்தைகளாக இருக்கிற போதே, நல்ல ஒழுக்கத்தையும், பக்தியையும் கற்றுக்கொடுத்தால் அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
* தனக்கென்று எதுவும் இல்லாவிட்டால், மனதிலுள்ள அழுக்குகள் நீங்கி, மனது கண்ணாடி போல் சுத்தமாக இருப்பதுடன், நிறைந்த ஆனந்தமும் கிடைக்கிறது. எனவே பணத்தை தேடி அலைய வேண்டும் என்பதில்லை.
* அதிக பணம் தரும் தொழில், அதிக வியாதி தரும் பழக்கங்களை விட்டுவிட்டு நிம்மதியாகவும், நிறைவாகவும், அளவான ஆசையுடனும் வாழ முயற்சிக்க வேண்டும்.
* நிறைவு மனதில் தான் இருக்கிறது என்று உணர்ந்து, எல்லாரும் தம் கடமையைச் செய்து எளிமையாக இருக்க வேண்டும்.
* வெளியிலுள்ள பொருட்களில் வாழ்க்கைத்தரம் இல்லை. இருப்பதைகக் கொண்டு நிறைபடைவனே தரமான வாழ்க்கை நடத்துகிறான்.
-காஞ்சிப்பெரியவர் 

ஒழுக்கம் மிக அவசியம்
அக்டோபர் 20,2011,
15:10  IST
* மனம், வாக்கு, உடம்பு மற்றும் பணத்தால் நல்ல செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.
* ஒரு பொருளைப் பெற மனிதன் முயற்சி செய்கிறான். நியாயமான வழியில் கிடைக்காவிட்டால் குறுக்கு வழியில் பெற முயற்சிப்பது பாவம்.
* விக்கிரமாதித்தன் கதையில் கூறப்பட்ட வேதாளத்தை போன்றது மனம். நம் மனத்தை நமக்கு அடிமைப்படுத்துவது தான் நிஜமான வழிபாடு.
* துணி, உடம்பு, வீடு இவைகள் அழுக்கில்லாமல் இருந்தால் போதாது, முக்கியமாக நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.
* எதிலுமே சரி, அளவு அறிந்து, ஒரு மட்டத்தோடு நிற்கிற மனநிலை வந்தால் தான் அமைதி உண்டாகிறது.
* வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டால், பிறகு ஒவ்வொரு துறையிலும் ஒழுக்கத்தினால் உண்டாகிற அழகும் ஏற்படுகிறது.
* உடலும், மனமும் சேர்ந்து ஒன்றை ஒன்று தூய்மைப்படுத்திக் கொள்ளும் முறையில் நம் செயல்கள் அமைய வேண்டும்.
* ஆசை இல்லாவிட்டால் மனதில் கோபமோ, பயமோ இல்லை. ஆசையின்மை நமக்கு பரிபூரண ஆனந்தம் தரும்.
- காஞ்சிப்பெரியவர் 

நமக்கு தேவையான மருந்து
அக்டோபர் 14,2011,
16:10  IST
* மனதில் ஏற்படும் ஆசைகள் தான் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு மூலமாக இருக்கிறது. இதனால் பல நேரங்களில் தீமைகள் தான் வருமே தவிர நன்மைகள் ஏற்படாது.
* எல்லோரும் சாந்தமாக இருந்தால் குற்றங்களும் நோய்களும் இராது.
* ஜனங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். தப்பு தண்டாவில் சிக்கிக் கொண்டு கஷ்டப்படக் கூடாது.
* மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பயிற்சி, பக்தி, தியானம் அவசியம். மூன்றையும் முறையாக கடைப்பிடிப்பவர்கள் எளிதாக மனதை கட்டுப்படுத்த முடியும்.
* மெய், வாக்கு, மனம், பணம் இவற்றால் நாம் பாவம் செய்கிறோம், இந்த நான்கினாலும் நல்ல செயல்களைச் செய்யப் பழக வேண்டும்.
* உலகில் உள்ள பிரச்னைகளுக்கு எல்லாம் அதர்ம சிந்தனையே காரணம், இந்த நோய் தீரவேண்டுமானால் பக்தி, சாந்தம் ஆகிய இரு மருந்துகள் தேவை.
* வாழ்வில் சறுக்குவது சகஜம். ஆனால், மேலே ஏறுவதற்கு ஒவ்வொருவரும் பிரயத்தனம் செய்ய வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர் 

மனதை சுத்தம் செய்
அக்டோபர் 10,2011,
09:10  IST
* எந்த தெய்வத்தின் மூலம் எந்த பலன் கிடைக்க வேண்டுமானாலும் விநாயகரை வணங்கினாலே போதும். அவர் அந்த தெய்வத்திடம் கூறி அருளை பெற்றுத் தருவார்.
* இஷ்டதெய்வம் இருந்தாலும், வம்சாவளியாக வரும் குலதேவதையை அவசியம் பூஜிக்க வேண்டும். இதற்கு முன் விநாயகருக்கு "சுக்லாம் பரதரம்' குட்டிக் கொள்ள வேண்டும்.
* செம்பைத் தினமும் கழுவி வெளுப்பாக்குவது போல, மனதில் தினமும் சேரும் அழுக்கையும் பக்தியால் சுத்தம் செய்ய வேண்டும்.
* ஆசையை விட்டு மனம் கட்டுப்படும் வரை, ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் பைத்தியமாகத்தான் இருக்கிறான்.
* ராமநாமத்தை தாரக மந்திரம் என்கிறோம். "தாரகம்' என்றால் "பாவங்களைப் பொசுக்குவது' என்று பொருள்.
* நம் துன்பத்தையே பெரிதாக நினைக்கக்கூடாது. அந்த துன்பத்துக்கு மத்தியிலும், நம்மால் உலகத்துக்கு நலம் ஏற்பட வேண்டும் என்ற உணர்வு வேண்டும்.
* எந்தக்குற்றமும் செய்யாதவன் பாவமற்றவன். அவன் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை.
காஞ்சிப்பெரியவர் 

வாழ்வை எளிமையாக்கிக் கொள்!
செப்டம்பர் 29,2011,
12:09  IST
* பிறரிடம், நம் அன்பை ஒப்புக்கு காட்டாமல், செயலில் காட்டினால் இறைவனின் அருள் நமக்கு கிடைக்கும்.
* வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டால், பொருளுக்காக எப்போதும் அலைய வேண்டிய அவசியமில்லை.
* வெளிநாட்டு வியாபாரத்தால் அந்நியச் செலாவணி ஒரு தேசத்துக்கு கிடைக்கும். அதுபோல, மனிதனுக்கு மறு உலகத்தில் செலாவணி இறைவனின் திருவருள் ஒன்று தான். அதனைப்பெற வாழும் காலத்திலேயே பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.
* ஒரு செயலை "நான் செய்கிறேன்' என்ற மமதை எண்ணம் போய்விட்டால் அதுவே பகவானுக்கு நாம் செலுத்தும் நமஸ்காரம் தான்.
* சிவநாமாவைக் கூறுவதால் பாவங்கள் விலகி மோட்சத்திற்கான வழி கிடைக்கும்.
* வயலில் களை பிடுங்குவது போன்று, வாழ்க்கையில் தேவையில்லாத செலவுகளைப் பிடுங்கிப் போட்டால், புண்ணியமும், நிம்மதியும் கிடைக்கிறது.
* தங்களுக்கும், சமூகத்துக்கும் ஒரு செயலை செய்யும் முன், பகவானுக்கு அனைவரும் சேவை செய்ய வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர் 

முன்னோர் ஆசி பெறுவோம்
செப்டம்பர் 25,2011,
10:09  IST
* ஒருவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் மற்றொருவருக்கு துக்கத்தைத் தருகிறது. எது நடக்கவேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அதுவே நடக்கிறது.
* வீட்டுக்குப் பயனற்ற பொருட்களை வாங்குவதால் பணமும், காலமும் விரயமாகிறது. எதை வாங்கினாலும் அவசியம் தேவையா என சிந்தித்து வாங்குங்கள்.
* மாதம் இரு முறையாவது வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க விரதம் இருங்கள். பெரும்பாலான வியாதிகளில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.
* பணத்தை மணியார்டர் அனுப்பினால் அதற்குரிய நபரைச் சென்று சேர்வது போல, சாஸ்திரப்படி பிதுர்தர்ப்பணம் கொடுக்கும் தண்ணீரும் வாழைக்காயும் நம் முன்னோருக்குரிய உணவாக மாறிவிடும். இதன்மூலம் அவர்களின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.
* கோபத்தை அடக்குதல் மிக கடினமானது. பேச்சளவில் கோபத்தை அடக்குவதாகச் சொல்லலாம். ஆனால், இடைவிடாத பயிற்சியால் மட்டுமே சாந்த குணத்தை அடைய முடியும்.
- காஞ்சிப்பெரியவர் 

மனதிற்கு கடிவாளம் தேவை
செப்டம்பர் 14,2011,
08:09  IST
* அலைபாயக் கூடிய மனதை அடக்க முடியாது என பலர் எண்ணுகிறார்கள். அதற்கு சரியான ஒரு கடிவாளம் போட்டுவிட்டால் அலைபாய்ந்து கொண்டிருக்காது.
* முயற்சி, பக்தி, தியானம் உள்ளவர்கள் மனதை வசப்படுத்திவிடுகிறார்கள். செயல்களில் ஒருமுகத்தன்மையோடு ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பார்கள்.
* மனதில் ஏற்படும் ஆசைகளே நாம் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது. நாம் கண்ணால் ஒரு பொருளைப் பார்க்கும்போது, அதனை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. மனம் தான் அனுபவிக்கத் துடிக்கிறது. அதற்காக எத்தகைய செயலைச் செய்யவும் தூண்டுகிறது. அதனால் தீமைகள் தான் வருமே தவிர நன்மைகள் எதுவும் உண்டாகாது.
* மனம் உங்களது சொல்கேட்டு நடந்தால் தான் உங்களது புத்தி சரியாக இருப்பதாக அர்த்தம். மனதை கட்டுப்படுத்த முடியாதவர்கள் சரியாக புத்தி அமையப் பெறாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். எனவே, மனதை அடக்கி வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
- காஞ்சிப்பெரியவர்

நம்பித் தான் ஆக வேண்டும்
செப்டம்பர் 09,2011,
10:09  IST
* ஒரு வண்டியைப் பார்த்தால் அதை வடிவமைத்தவன் ஒருவன் என்று நம்புகிறோம். ஆகவே, அவை தாமாகவே உண்டாகவில்லை. ஒரு உத்தேசத்தோடு ஒரு அறிவுஜீவி அதை உண்டாக்கி இருக்கிறான் என்று அறிகிறோம்.
* எதைப்பார்த்தாலும் அதைச் செய்தவன் ஒருவன் இருக்க வேண்டும். அதேபோல் தான் இந்த பிரபஞ்சத்தை செய்த ஒருவன் இருக்கிறான் என்பதை நம்பித் தான் ஆக வேண்டும். எத்தனையோ விதமான பொருட்களை ஒன்று சேர்த்து உருவாக்கி, பயனும் தருகின்ற இயற்கையை, அதற்கேற்ப அமைப்பாகச் செய்து வைத்த ஒரு மகாசக்தி அல்லது பேரறிவு இருக்கத்தானே வேண்டும்.
* வானமண்டல நட்சத்திரங்களையும், கோள்களையும், அவற்றின் சுழற்சியையும் ஏற்படுத்தியது யார்? இவை எல்லாவற்றையும் ஒரே மகாசக்தி தான் இயக்கி கொண்டிருக்க வேண்டும். ஒரே காரண காரிய விதியில் இயற்கை முழுவதும் கட்டுப்பட்டு இருப்பதால், இதை செய்தது ஒரே பேரறிவு தான் என்பதும் புரியும்.
காஞ்சிப்பெரியவர் 

இறைவனுக்கு மனசு கேட்காது
ஆகஸ்ட் 31,2011,
09:08  IST
* பக்தி செலுத்துவதால் முக்தி கிடைத்துவிடும் என்றால், நாம் செலுத்தும் பக்தியே நேராக முக்தியைக் கொடுத்து
விடுகிறது என்று அர்த்தமில்லை. நாம் செய்யும் செயல் எதுவுமே தானாக எந்தப் பலனையும் தருவதில்லை. பலன்களைத் தருபவர் ஈஸ்வரனாகவே இருக்கிறார்.
* பாவ புண்ணியம் பார்த்து அனைவருக்கும் அனைத்து பலன்களையும் ஈஸ்வரன் முறையாக வழங்குகிறார். நாம் செலுத்தும் பக்திக்குப் பலனாக அருளை வழங்குவதுடன், ஞானத்தின் பலனாக மோட்சத்தையும் வழங்குகிறார். பலன் தருவது நாம் செய்யும் பக்தியே அல்ல. அதற்குப் பதிலாக ஈஸ்வரன் அளிக்கும் அருள் தான் பலனைத் தருகிறது.
* பக்தி நிஜமானதாக இருந்தால் பக்தன் பலனை எதிர்பார்க்க மாட்டான். எதிர்பார்ப்பு இருந்தால் அது வியாபாரம் தானே தவிர பக்தியில்லை. இப்படி பலன் வேண்டாம் என்றால் நிஜமான பக்தியைப் பெற்றுக் கொண்ட இறைவனுக்கு மனசு கேட்காது. அதனால் அருளை அளிப்பதுடன், ஞானத்தையும் அருள்வான். பக்தனை உலக வாழ்விலிருந்து விடுவித்து வீடு பேறும் அருள்வான்.
காஞ்சிப்பெரியவர் 

பாலுக்குள் "இவ்ளோ' இருக்கா?
ஆகஸ்ட் 24,2011,
09:08  IST
* பசு என்றால் நம்மைப்போல் ஒன்றும் அறியாத ஜீவன்கள். அவற்றை பராமரித்து, அவற்றிடம் உள்ள பாலை பயன்படுத்தி, நல்ல பலனைப் பெறுவது எப்படி என்று உபதேசிப்பவன் கோபாலன்.
* நம் மனதிற்கும் பாலுக்கும் ஒற்றுமை பலவுண்டு. முதலில் உள்ளத்தை பால் போல் தூய்மை ஆக்க வேண்டும். கோபாலனை அண்டி பக்தி என்னும் தீயில் அதை பதமாக காய்ச்ச வேண்டும்.
* சாந்தத்தைக் கொண்டு உறை ஊற்றி தயிராக்க வேண்டும். இதயம் என்னும் குடத்தில் தயிர் ஊற்றி அது உறைந்ததும், பக்தியென்ற மத்தைக் கொண்டு கடைந்து, பூத்துவரும் வெண்ணெயைப் போன்ற அனந்தசயனனான பரமபுருஷனைக் காண வேண்டும்.
* தயிரில் பால், வெண்ணெய், நெய் ஆகிய முப்பொருளும் அடங்கியிருந்தாலும், அவற்றை தக்க முறைகள் கொண்டே தனித்தனியாக்க முடியும் என்பது உண்மை. அதைப்போலவே நம் இதயத்தில் உறைந்திருக்கும் கடவுளை காண வேண்டுமானால், தக்க முயற்சிகள் எடுத்தால் தான் இயலும்.
- காஞ்சிப்பெரியவர் 

பக்தி என்றால் என்ன?
ஆகஸ்ட் 21,2011,
09:08  IST
* இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்கிறார்கள். காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக் கொள்கிறதோ, பதிவிரதையின் மனமானது பர்த்தாவினிடத்தில் போய் கவிந்து கொள்கிறதோ, நதியானது மகாசமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ. அதுபோல், கடவுளுடன் நமது மனமும் கலந்து விட வேண்டும்.
* இறைவனிடம் எதைக் கேட்டாலும் அது வியாபாரம் தான்! நமக்கு அனுக்கிரகம் செய்கிற, கடவுளிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். அதற்கு காரணமே இருக்கக் கூடாது. காரணம் என்று வந்தால் அது வியாபாரமாகி விடும்.
* ஏதோ ஒன்றுக்கொன்று கொடுப்பது போல,""செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன்,'' என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகிவிடும். அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, சதா ஈஸ்வரனிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி இருக்கிறதே, அதற்கு தான் "பக்தி' என்று பெயர்.
- காஞ்சிப்பெரியவர் 

புராணப்படிப்பு வேண்டும்
ஆகஸ்ட் 10,2011,
10:08  IST
* நல்லது கெட்டது பற்றி பாடம் கற்பிக்காமல், காலவாரியாக பல ராஜாக்கள் சண்டைபோட்டதை சரித்திரம் என்ற பெயரால் கற்றுக் கொடுப்பதில் எந்த பயனுமில்லை. வாழ்க்கைக்கு பயன்படும் படியான உபதேசம் இல்லாத சரித்திரம் நமக்கு வேண்டாம்.
* புராணங்கள் பாவ புண்ணியங்கள் தொடர்பாக மக்களுக்கு பாடம் கற்பித்து, அவர்களை தர்மத்திடம் செலுத்தும்படியான வரலாறுகளை மட்டும் தேர்வு செய்து தருகிறது. தர்மசாலிகளாக இருந்து அந்த ஜன்மாவிலேயே உயர்வடைந்தவர்கள் அல்லது தர்மத்தை விட்டதால், அந்தப் பிறவியிலேயே கெடுதல் அடைந்தவர்களின் கதைகளே புராணங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
* நல்லவர்களாக இருந்து நல்ல செயல்களை செய்து நன்மை அடைந்தவர்களுடைய சரித்திரங்களை நாம் படித்தால் நாமும் அப்படியே இருக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும். தற்கால வரலாற்றைப் படிப்பதால் ஆத்மலாபத்தை அடைய முடியாது. புராண படிப்பால் தான் நல்லது கெட்டதை உணர்ந்து கொள்ள முடியும்.
-காஞ்சிப்பெரியவர் 


ஓய்வை பயனுள்ளதாக்குங்கள்
ஆகஸ்ட் 05,2011,
08:08  IST
* ஓய்வு பெற்றவர்கள் முழு நேரமும் சமூகத்தொண்டு செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். அலுவலகங்களுக்கு செல்லும் காலத்தில் குடும்ப பொறுப்பும் நிறைய இருந்திருக்கும். இப்போது அவற்றை கூடிய வரை குறைத்துக் கொண்டு, அதற்குப் பதில், ஜனங்களுக்கு தொண்டு செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்டு புண்ணியம் சம்பாதிக்க வேண்டும்.
* இதுவரை தெரியாவிட்டாலும், இனியாவது வேத சாஸ்திரங்களை தெரிந்து கொண்டு< அதன்படி நடந்து சமூக நன்மைக்காக பாடுபட வேண்டும். இருக்கிற ஓய்வை நன்றாக பயன்படுத்திக் கொண்டு நல்ல விஷயங்களை படித்தும் கேட்டும் தெரிந்து கொள்வதோடு மற்றவர்களுக்கும் அதை எடுத்துச் சொல்வது பெரிய உதவியாகும்.
* நீங்கள் எந்தத் தொழிலைச் செய்தீர்களோ, அதை நாலு ஏழை இளைஞர்களுக்கு இலவசமாக சொல்லிக் கொடுத்து உதவி செய்யலாம். அதிகமாக பென்ஷன் வாங்குபவர்கள், படிப்புச் செலவுக்கும் பணம் வழங்கலாம். ஒன்றிரண்டு பேருக்கு அன்னதானம் செய்யலாம்.
- காஞ்சிப்பெரியவர் 

ஒருவருக்கொருவர் உதவலாமே!
ஜூலை 31,2011,
11:07  IST
* தயை என்பது ஒவ்வொருவர் மனதிலும் இருக்க வேண்டிய உயர்ந்த குணம்.
* தானம் செய்தது பற்றி வெளியில் சொல்ல வேண்டாம். நாலு பேருக்கு நாம் தானம் செய்ததை தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதுவும் கூட தோஷம் தான்.
* நாம் செய்யும் பாவம் முழுவதையும் கருணையோடு மன்னிக்கும் இறைவன், சிலரை மட்டும் கடுமையாக வதைக்கிறான் என்றால், அவர்கள் செய்த பாவம் ரொம்ப பயங்கரமாக இருந்திருக்க வேண்டும்.
* காகம் எங்கேயோ பழத்தை சாப்பிட்டுவிட்டு, நம் தோட்டத்தில் வந்து எச்சமிடுகிறது. அந்தப்பழத்தின் கொட்டை இங்கே நம் வீட்டுத் தோட்டத்தில் விழுந்து மரமாகிறது. அந்தக் காக்கை நமக்கு ஒரு உதவி செய்து உள்ளது. நாய் காவல் காக்கிறது, குதிரையை வண்டியில் கட்டி சவாரி செய்கிறோம், பசு நமக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளது. இவ்வாறு மிருகங்களிடம் கூட உதவி பெற்றுவிட்டு, மனித ஜென்மம் எடுத்துள்ள நாம், இன்னொரு மனிதனுக்கு உதவி செய்யாமல் இருப்பது பாவம்.
- காஞ்சிப்பெரியவர் 

தூங்கும் முன் சிந்தனைசெய்
ஜூலை 21,2011,
14:07  IST
* சேதுவில் அணை கட்டிய ராமனுக்கு அணில் செய்த உதவிபோல், நாமும் ஏதாவது ஒரு திருப்பணியில் ஈடுபட்டுத் தர்மம் செய்ய வேண்டும்.
* ஆசிரியர் கடமைக்கு கல்வி கற்று தராமல், மாணவனை சோதித்து சுத்தம் செய்து, நற்குணம் உள்ளவனாக, புத்தியுள்ளவனாக மாற்ற வேண்டும்.
* அரசை எதிர்பார்த்து குறை கூறி கொண்டு இருக்காமல், நாட்டின் மீது பற்றுள்ள மக்கள் சமுதாயத்திற்கு தங்களால் முடிந்த நன்மைகளில் ஈடுபட வேண்டும்.
* ஆனந்தமாக இருப்பதற்கு எப்போதும் உண்மையாக இருக்கும் கடவுளை பிடித்துக் கொள்ள வேண்டும். உலகத்துக்குச் சேவை செய்தால் சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி ஏற்படும்.
* வாழ்க்கையில் நம்முடைய துன்பத்தையே நாம் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது, நம்மால் உலகம் மேம்படும் என்று தெரிந்தால் அதற்காக நாம் பாடுபட வேண்டும்.
* தினமும் தூங்கச் செல்லும் முன் அன்றைய நாளில் நீ செய்த நல்லவை, கெட்டவைகளை எண்ணிப்பார்த்துவிட்டு, இறைவனின் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு தூங்க வேண்டும்.
-காஞ்சி பெரியவர் 


படிப்புடன் பக்தியும் வளரட்டும்
ஜூலை 17,2011,
10:07  IST
*குருகுல கல்வி முறையில் தெய்வ பக்திக்கும், குருபக்திக்கும் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது.
* வீட்டில் பெற்றோருக்கும், பள்ளியில் ஆசிரியருக்கும் கட்டுப்பட்டு மரியாதையாக நடந்து கொள்வது பிள்ளைகளின் கடமை. இதையும்விட, இஷ்டதெய்வத்திடம் பக்தி செலுத்துவதும் அவசியம்.
*மாணவர்கள் தினமும் படிப்புக்காக நேரத்தைச் செலவிடுவதோடு, கால்மணி, அரைமணி நேரமாவது பக்தியிலும் ஈடுபடுதல் நல்லது.
* மாணவப் பருவத்தில் தெய்வ விஷயமாகக் கூட ரொம்பவும் போய்விடக் கூடாது என்று ஒருபக்கம் சொல்லும்போதே, இன்னொரு பக்கம் பக்தி இல்லாதவர்கள் மனதளவில் நல்ல வளர்ச்சி இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் மறக்கக்கூடாது.
* சிறுவயதில் இருந்தே தெய்வசிந்தனையோடு ஒழுக்கம், தர்மம் போன்ற உயர்ந்த குணங்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மனிதப்பிறப்பே பயனற்றதாகி விடும்.
- காஞ்சிப்பெரியவர்

பயம் அறவே வேண்டாம்
ஜூலை 11,2011,
23:07  IST
* சாதாரணமாக ஒரு தப்புச் செய்கிற போது, ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே உறுத்துகிறது. உடனே, இந்த அழுக்கை யாரும் தெரிந்து கொண்டு விடக்கூடாது என்று அதை மூடி மறைக்கத்
தோன்றுகிறது. நியாயமாக, தவறுதல் உண்டானவுடன் பிரார்த்தனை பண்ணினால் அந்தப் பிரார்த்தனையே சோப்பைப் போல அந்தத் தப்பை அகற்றிவிடும்.
* தப்பை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் மூடவேண்டும் என்கிறபோது, பொய் சொல்ல
வேண்டியிருக்கிறது. அழுக்கைத் தேய்த்துக்
கழுவாமல் மூடி மூடி வைத்தால் சீழ் பிடித்துச் சிரங்காகி விடும். அது மாதிரி, தப்பை மூடியவுடன் அது பொய் என்னும் சிரங்காக ஆகிவிடுகிறது.
* பெரியவர்களிடம் எல்லாம் உங்களுக்கு நிறைந்த
மரியாதையும், மதிப்பும் இருக்கத் தான் வேண்டும். ஆனால், அர்த்தமில்லாத பயம் கூடாது. பயம் உள்ளத்தூய்மையைக் கெடுக்கிற அழுக்கு. தப்பு செய்தால் கூட, அவர்களிடம் உள்ளதைச் சொல்ல வேண்டுமே ஒழிய, பொய்யால் மூடி மறைக்கக் கூடாது.
- காஞ்சிப்பெரியவர்


பிராயச்சித்தம் செய்வோமே!
ஜூன் 30,2011,
10:06  IST
* அன்பை வெறும் பேச்சாக இல்லாமல், செயலில் காட்டினால், இறைவனின் அன்பு நமக்கு கிடைக்கும்.
* வாழ்க்கையை எளிதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டிய அவசியம் ஏற்படாது.
* மந்திரங்களை நாம் கூறாமல் விடுவதால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. வழிபாட்டு நேரங்களில் மந்திரங்களை உச்சரிப்பது நல்லது.
* உள்ளத்தால், மனதால் பிறருக்கு உதவி செய்வதை விட உடலால் மற்றவர்களுக்கு உதவி செய்வது வாழ்க்கையில் கிடைக்கும் பெரிய புண்ணியம்.
* உடல், வாய், மனம், பணம் என்ற நான்கு வகைகளிலும், பாவம் செய்கிறோம், இதற்கு பிராயச்சித்தமாக உடலால் உதவியும், வாயால் பகவான் நாமமும், மனதால் தியானமும், பணத்தால் தர்மமும் செய்ய வேண்டும்.
* கஷ்டம், பயம், காமம், குரோதம் போன்றவை நம்மை கட்டிப்போடுகின்றன. இதுவே குடும்ப பந்தமாகும். இந்த பந்தத்திலிருந்து விடுபட்ட நிலையே மோட்சம் அல்லது முக்தியாகும்.
காஞ்சிப்பெரியவர் 

கட்டிப்போடும் கடவுள்
ஜூன் 23,2011,
11:06  IST
* எவருக்கும், எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனதை அன்பு மயமாகச் செய்து கொள்வதே அகிம்சை.
* புத்திப்பூர்வமாக ஒரு தவறைச் செய்தால் தான் அது பாவமாகிறது, புத்தி தங்கள் வசத்திலேயே இல்லாமல் சித்தப் பிரம்மம் பிடித்தவர்கள் செய்கிற எந்தச் செயலும் பாவம் இல்லை.
* நம்முடைய துன்பத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டு பிறருக்கு நன்மை செய்யாமல் இருந்து விடக்கூடாது. நம்மால் உலகம் சிறிதளவாவது நலமாக இருப்பதற்காக பாடுபட வேண்டும்.
* பலனை எதிர்பார்க்காமல் பொதுநலத்துடன் தர்மம் செய்ய வேண்டும்.
* இயற்கையில் அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கிறது. சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகிறது. மலையும், சமுத்திரமும் கூட காலப்போக்கில் மாறுகின்றன என்பதால் உலக நடப்புகளை தெரிந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
* குழந்தை குறும்புத்தனம் செய்தால் வீட்டில் கட்டிப்போடுகிறோம். நம்மிடம் ஆசை என்ற குறும்புத்தனம் இருப்பதால் ஈஸ்வரன் நம்மை கட்டிப் போடுகிறான்.
- காஞ்சிப்பெரியவர் 

இடைஞ்சல் தவிர்க்கும் ஆயிரம்
ஜூன் 20,2011,
13:06  IST
* ஒழுக்கம் இருக்கும் ஒவ்வொரு துறையும் அழகாக இருக்கிறது. இதனால் தான் பழங்காலச் சிற்பங்கள், சித்திரங்கள், எழுத்து உட்பட அனைத்தும் ஒழுங்காக, அழகாக இருக்கின்றன.
* நாம் நல்லது செய்தால் ஈஸ்வரன் நமக்கு கைகொடுப்பார். அவர் நமக்குக் கை, கால், கண், ஆலோசிப்பதற்கு புத்தி கொடுத்திருக்கிறார். இந்த சக்தியும் புத்தியும் இருக்கும்போதே, திருந்துவதற்கான நல்ல செயல்களை செய்ய வேண்டும்.
* எக்காலமும் நமக்கு உறவாக இருந்து உதவி செய்பவன் அம்மையப்பன். அவனைவிட உலகில் நமக்கு வேறு உறவு இல்லை.
* தினமும் ஆயிரம் முறை கடவுள் நாமாவை கூறினால், நம்முடைய வாழ்க்கைக்கு பெரிதும் உதவியாக
இருப்பதுடன், இடைஞ்சல் வராமலும் காக்கும்.
* குடும்பப் பொறுப்புகளை கவனிப்பது முதல்பணி. அடுத்து, பொதுஜனங்களுக்கும் பணியாற்றி புண்ணியம் சம்பாதிக்க வேண்டும்.
* கட்டுப்பாடு இருந்தால் தான் முன்னேற முடியும், கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் வேண்டும், அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும்.
-காஞ்சிப்பெரியவர் 


சேவை செய்வதே பாக்கியம்
ஜூன் 13,2011,
11:06  IST
* பெயருக்கு தொண்டு செய்தால் அந்தத் தொண்டையே அழுக்குப் பண்ணியதாகத்தான் அர்த்தம்.
* சிக்கனமாயிருப்பது கருமித்தனம் அல்ல. சொந்த விஷயத்தில் ஆடம்பரமாக இல்லாமல் கணக்காயிருப்பது சிக்கனம். சிக்கனம் செய்யும் பணம் தர்மம் செய்வதற்கு உதவும்.
* பழைய எளிய வாழ்க்கை முறைக்குத் திரும்ப அனைவரும் ஆசைப்பட வேண்டும். நிறைவு மனதில் தான் இருக்கிறது என்று உணர்ந்து, எளிமையாக இருக்க வேண்டும்.
* நம் தவறுகளைக் கழுவிக் கொள்ள ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் அழவேண்டிய நிலையில் தான் இருக்கிறோம், இந்த நிலையில் பிறருடைய தவறுகளை கண்டுபிடித்து கோபிப்பதில் நியாயம் இல்லை.
* ஒருவரிடம் எத்தனை தவறுகள் இருந்தாலும் அதனை பெரிதுபடுத்தாதே. சிறிய நல்ல விஷயம் இருந்தால் அதனை கொண்டாட வேண்டும்.
* மனிதனாகப் பிறந்தவனுக்கு அதிக பாக்கியங்கள் உள்ளது. அனைத்து பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதாகும்.
காஞ்சிப்பெரியவர் 

முன்வந்து உதவி செய்
ஜூன் 05,2011,
11:06  IST
* மனதாலும், இனிமையான பேச்சாலும், உடம்பாலும், பணத்தாலும் நல்ல செயல்களை தினமும் செய்.
* நம்மிடம் உள்ள பணமெல்லாம் எப்போதும் நம்முடையதல்ல என்ற நினைவு இருக்கட்டும்.
* அனைத்து செயல்களிலும் அளவறிந்து நிற்கிற மனநிலை வந்தால் தான் அமைதி உண்டாகும்.
* நமது சொந்த விருப்பங்களுக்காக செயல்படுகிறோம் என்ற நிலையை மாற்றி, நமக்கு எவ்விதமான லாபமும் தராத செயல்களில் ஈடுபட வேண்டும்.
* தூய்மையோடு மகிழ்ச்சியாக இருப்பது தான் மங்களம். எங்கே நாம் போனாலும் அங்கே மகிழ்ச்சியை உருவாக்க வேண்டும்.
* அவரவரும் உரிய கடமையை பக்தியோடு பின்பற்றினால் தான் மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை ஏற்பட்டு ஞானம் கைகூடும்.
* ஒழுக்கம் இருந்தால், அப்புறம் ஒவ்வொரு துறையிலுமே ஒழுக்கத்தினால் உண்டாகிற அழகும் ஏற்பட்டு விடுகிறது.
* துன்பம் இருக்கும் இடத்திற்கு நாமாக முன்வந்து சென்று, அந்தத் துயரத்தை நீக்க நம்மால் முடிந்த செயலை செய்ய முயல வேண்டும். இது மிகப்பெரிய தர்மமாகக் கருதப்படுகிறது.
-காஞ்சிப்பெரியவர் 


மனதில் சாந்தம் நிலவட்டும்
மே 26,2011,
09:05  IST
* மனதினால் உயர்ந்து, வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொண்டுவிடலாம். அப்படி உயர்ந்தால் வாழ்க்கை நடத்துவதில் சிரமம் இருக்காது.
* அனைவரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றி கொள்ளப் பயன்படுபவை தாம் மந்திரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டுவிடக்கூடாது.
* நம் துக்கங்கள் அனைத்தையும் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள்
மூழ்கிய குடம் போன்று துக்கம் பரம லேசாகிவிடும்.
* "அன்பே சிவம்' என்கிறார் திருமூலர், "அறிவான தெய்வமே' என்கிறார் தாயுமானவர். இந்த அன்பையும் அறிவையும் அன்னபூரணி நமக்கெல்லாம் பிச்சையாகப் போட பிரார்த்திப்போம்.
* அவரவருக்கான பணியை பக்தியோடு பின்பற்றி செய்தால், மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் உண்மையான பக்தியும் ஞானமும் கிடைக்கும்.
* கோபம், கெட்ட எண்ணம் இவைகள் இல்லாமல் சாந்தமாக இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் போது நமக்கு சாந்தம் ஏற்படுகிறது.
- காஞ்சிப்பெரியவர் 


நல்லதை தொடர்ந்து செய்யுங்கள்
மே 17,2011,
10:05  IST
* நல்லது செய்தால் இறைவன் நமக்கு கைகொடுப்பார். குறிப்பாக கை, கால், கண்களை வழங்கிய இறைவன்,
சிந்திப்பதற்கு புத்தியும் வழங்கியுள்ளார். சக்தியும், புத்தியும் இருப்பதற்குள் நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும்.
* ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை, அப்படி மற்றவர்களைப் பறக்காமல் இருக்கச் செய்வதற்காக நாமும் எளிமையாக வாழ வேண்டும்.
* பேச்சு, எண்ணம், செய்கை, உணவு, உடை, செலவு இவற்றை, வாழ்க்கைக்கு தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர விரயம் செய்யக்கூடாது.
* குடும்ப பொறுப்புகளைக் கூடிய விரைவில் குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக பொதுமக்களுக்காக பொறுப்புகளை எடுத்துக் கொண்டு புண்ணியம் சம்பாதிக்க வேண்டும்.
* வாழ்க்கையில் கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும்.
காஞ்சிப்பெரியவர்
(இன்று காஞ்சிப்பெரியவர் அவதார தினம்)


மனதால் புண்ணியம் செய்வோம்
மே 15,2011,
09:05  IST
* வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பாவம் செய்து இருக்கிறோம். அவற்றை அதே வாக்கு, மனம், உறுப்புகளால் புண்ணியம் செய்து கரைத்துவிட வேண்டும்.
* அவரவருக்குரிய கடமையை நியதியோடு பின்பற்றினால் மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை உண்டாகும்.
* குணத்தினாலும், உடலாலும் சேர்ந்து ஒன்றை ஒன்று தூய்மைப்படுத்திக் கொள்ளும் முறையில் செயல் செய்ய வேண்டும்.
* தனக்காக எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிப்பது தான் தனக்கு மிஞ்சிய தர்மமாகும்.
* மனம் நாலாதிசைகளிலும் வெறிநாய் போல் ஓடாமல் இருக்கும் வகையில் கட்டுப்படுத்தி பழகுங்கள்.
* மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ, அங்கிருந்தே அவர்களை முன்னுக்கு அழைத்துச் செல்ல வேண்டியது தலைவர்களின் கடமை.
* துயரம் எங்கு காணப்படுகிறதோ, அங்கு நாமே வலுவில் சென்று அந்தத் துயரத்தை நீக்க நம்மால் முடிந்ததை செய்ய முயற்சிக்க வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர் 

கடமையை செய்தாலே போதும்
மே 08,2011,
16:05  IST
* அவரவர் கடமையை சரிவர செய்தாலே மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை அனைத்தும் உண்டாகிவிடும்.
* மனசுத்தத்தோடு மகிழ்ச்சியாக இருங்கள். எங்கு சென்றாலும் அங்கு நல்லமுறையில் மகிழ்ச்சியை உருவாக்குங்கள்.
* மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ, அதே நிலையிலிருந்து அவர்களை முன்னுக்கு அழைத்துச் செல்ல வேண்டியது தலைவர்களின் கடமை.
* தேவைக்கு குறைவாகச் செலவு செய்து எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து அதைத் தர்மத்துக்கு செலவழிப்பது தான் தனக்கு மிஞ்சிய தர்மம் என்பதன் பொருள்.
* துக்கங்கள் அனைத்தையும் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம் போன்று துக்கம் பரம லேசாகிவிடுகிறது.
* நமது சொந்த விருப்பங்களுக்காக செயல்படுகிறோம் என்ற நிலையை மாற்றி, நமக்கு எவ்விதமான லாபமும் தராத செயல்களில் ஈடுபடப் பழக வேண்டும்.
* வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டுவிட்டால், பிறகு அதன் ஒவ்வொரு துறையிலும் ஒழுக்கத்தினால் அழகு ஏற்படுகிறது.
காஞ்சிப்பெரியவர் 

அன்புதான் நிலைத்து நிற்கும்
மே 03,2011,
08:05  IST
* மனத்தாலும், வாக்காலும், உடம்பாலும், பணத்தாலும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். இதற்கு நம்மிடமுள்ள பணம் எப்போதும் நம்முடையதல்ல என்ற நினைவு முதலில் இருக்க வேண்டும்.
* துணியும், உடம்பும், வீடும் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.
* மனம், வாக்கு, உடம்பு ஆகியவற்றால் செய்யும் செயல்அனைத்தும் தர்மங்களாக இருக்க வேண்டும். நம்முடைய பணத்தை தர்மமாகிய நோட்டாக மாற்றிக் கொண்டால் தர்மம் எந்தக்காலத்திலும் செல்லும்.
* அன்பு செலுத்தாமல் வாழ்ந்தால் ஆனந்தம் இல்லை. அன்பினால் பிறரை மாற்றுவது நமக்குப் பெருமை. அதுதான் நிலைத்தும் நிற்கும்.
* அதிகமாகப் பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி பொருட்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பதாகும்.
* நாம் செய்யும் தர்மத்திற்கு பலன் கொடுக்க வேண்டியது ஈஸ்வரனின் வேலையாகும்.
- காஞ்சிப்பெரியவர் 


வாழ்வை எளிதாக்கி கொள்வோம்
ஏப்ரல் 25,2011,
11:04  IST
* அன்பை வெறும் பேச்சாக இல்லாமல், செயலில் காட்டினால் இறைவனின் அருள் கிடைக்கும்.
*வாழ்வை எளிதாக்கிக் கொண்டால், அடிப்படை பொருள்களைக் கூட தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.
* நமக்கு உணவு தருபவனுக்கு நல்ல உணவும், நமக்கு உடை தருபவனுக்கு நல்ல உடையும் கொடுக்கத் தவறி விட்டோம். நமது ஊர் கோயில் சுவாமியின் ஆடை, சுத்தமாக அழுக்கில்லாமல் இருக்கிறதா என்பதில் மனதைச் செலுத்தும் போது நம் மனதில் அழுக்கு போய்விடுகிறது.
* இறைவனை நினைத்து செய்யும் எந்த செயலுக்கும் பயன் கிடைக்கும், அறியாமல் செய்தால்கூட பலன் உண்டு.
* பொருளை பெருக்கிக் கொள்வதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடாது. தரமான வாழ்க்கை மனநிறைவில் தான் கிடைக்கிறது.
* மனிதன் கடந்த காலத்தில் நடந்ததற்கு பரிகாரம் தேடுவதைவிடப், புதிய சுமை சேராமலும், பாவம் செய்யாமலும் வாழ்வதற்கு ஈஸ்வரனைத் துணை கொள்வதே முக்கியமாகும்.
- காஞ்சிப்பெரியவர் 


கோபப்படுவது சரியல்ல!
ஏப்ரல் 19,2011,
10:04  IST
* மனம் தூய்மை பெறவும், முன்வினைப் பயனைத் தாங்கிக் கொள்ளவும், புதிதாக பாவச்சுமையை ஏற்படுத்தாமல் இருக்கவும் தியானம் உற்ற துணையாக விளங்குகிறது.
* அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்துவிட்டு, அடுத்த நிமிடமே நிழல் வந்து மூடிக் கொள்வது போல, உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப்பார்த்துவிட்டு ஓடிவிடுகிறது.
* பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதால் போட்டி மறையாது. ஞானத்தை வளர்த்துக் கொண்டால் மனதிலும், உலகிலும் போட்டி மறையும். பூரண அமைதி தழைக்கும்.
* பாவம் செய்தவர்களை வெறுப்பதிலும், கோபப்படுவதிலும் பயனில்லை, அவர்களுடைய மனமும் நல்ல வழியில் திரும்பி நல்லவர்களாக வாழவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
* நம் தவறுகளைப் போக்கிக் கொள்ள இறைவனிடம் அழ வேண்டிய நிலையில் இருக்கும் போது, பிறருடைய தவறுகளைக் கண்டு கோபப்படுவது சரியல்ல.
-காஞ்சிப்பெரியவர்


அளவுடன் பேசுவது நல்லது
ஏப்ரல் 10,2011,
14:04  IST
* திருமணம் மற்றும் சுபநிகழ்வுகளில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர ஆடம்பரத்துக்கு அல்ல.
* இந்த விதையைப் போட்டால் இந்தப் பயிர் வரும் என்பது இயற்கை வகுத்த நியதி. அச்சட்டத்தை நம்மால் மீற முடியாது. பூர்வ ஜென்மங்களில் வினையை விதைத்தோம். அவ்வினை தரும் பலன் இன்பமோ துன்பமோ இப்போது அறுவடை செய்கிறோம்.
* சத்தியம் என்பது வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை மட்டும் சொல்வதே சத்தியமாகும்.
* தெய்வப்பணியை விட்டுவிட்டு தேசப் பணி, மக்கள் பணி என்று புறப்படுவது தவறு. சமூக சேவையும், தெய்வப்பணியும் கைகோர்த்து நடக்க வேண்டும். தெய்வ சம்பந்தத்துடன் தான் தேசப்பணி செய்ய வேண்டும்.
* பணம் மட்டுமல்ல, வார்த்தைகளை உபயோகிக்கும் போதும், ஒரு சொல்கூட அதிகமாகக் கூடாது. அளவாக, கணக்காகப் பேச வேண்டும். அதனால், நமக்கும் சரி, நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி பொழுது பயனுள்ளதாகிறது.
-காஞ்சிப்பெரியவர்

புண்ணிய எண்ணம் புனிதம் தரும்
ஏப்ரல் 05,2011,
01:04  IST
* சத்தியம் என்றால், வாக்கும் மனதும் ஒன்றுபடுவது மட்டுமன்று. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை 
வாக்கில் சொல்வதே சத்தியம்.
* ஒவ்வொரு மனிதனிலும் ஈஸ்வரன் தான் குடி இருக்கிறார், ஒருவரை நமஸ்கரிக்கும் போது அந்த ஈஸ்வரனையே வழிபடுவதாக தான் அர்த்தம்.
* மனம் தியானத்தில் நிலைத்து நிற்க, அசையாத பரம்பொருளைக் கெட்டியாகப்பிடித்துக் கொள்ள வேண்டும்.
* கோபத்தால் பிறரைத் தாக்குவதாக நினைத்தாலும், அது நம்மையே தான் அதிகம் தாக்குகிறது. தேகம், மனம் இரண்டுக்கும் பெரிய பாதிப்பு உண்டாகிறது.
* பொருள் சேர்ப்பதிலும், அலங்காரம் செய்து கொள்வதிலும் தற்காலிக இன்பம் கிடைக்கலாம். ஆனால், உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே இருக்கிறது.
* புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொண்டால், உலகமே புனிதமாகும்.
* பிறரிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்துவதை தவிர்த்துவிட்டு, அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களை வெளிப்படுத்த வேண்டும். 
- காஞ்சிப்பெரியவர்

எந்த ஆசை போக வேண்டும்?
மார்ச் 27,2011,
14:03  IST
* சமூக சேவையும், தெய்வப்பணியும் கைகோர்த்து நடப்பதுடன், தெய்வத்தின் அனுமதியுடன் தேசப்பணி செய்ய 
வேண்டும்.
* ஆசைகளை விடுவது முதலில் சிரமமாக இருக்கும், அம்பாளை வேண்டி அவளுடைய அருள் பலத்தால் தேறித் தெளிந்து வெற்றி பெற்ற பிறகு தான் எளிய வாழ்க்கையில் எத்தனை நிம்மதி இருக்கிறது என்பது தெரியும்.
* நம்முடைய சாஸ்திரங்களும், புராணங்களும் தாய் மொழியிலும், சமஸ்கிருதத்திலும் இருப்பதால் குறையில்லை, அவற்றில் ஒரு ருசியை ஏற்படுத்திக் கொண்டால் நாளெல்லாம் படித்தாலும் போதாமல், ஆயுள் உள்ள வரை படித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாம்.
* கட்டி போட்டுவிட்டாள் என்று குற்றம் சொல்கிறோம், குழந்தை மண்ணைத் தின்னப் போகிற மாதிரி, நாம் பழைய தவறுகளை செய்யாமல் இருக்க கஷ்டம் என்ற கட்டை ஜெகன்மாதா போட்டிருக்கிறாள்.
* வைரத்திலும், பட்டிலும் பெண்களுக்கு ஆசை போய்விட்டால் குடும்ப வாழ்க்கையும், சமூக வாழ்க்கையும் மட்டுமில்லாமல் பெண் தர்மமே பிழைத்து விடும்.

-காஞ்சிப்பெரியவர் 

பேச்சை பாதியாகக் குறையுங்களேன்!
மார்ச் 22,2011,
09:03  IST
* இதயத்தில் பக்தி என்ற கம்பியைப் பூட்டிக் கொண்டு, சிரத்தை என்ற ஸ்விட்சைத் போட்டால், கடவுள் திவ்யமங்கள ஜோதியாகத் தரிசனம் தருவார்.
* "பிறருக்கு உதவி செய்வதற்காக சொந்த வாழ்வில் சிக்கனமாய் இருப்பது' என்ற உயர்ந்த கொள்கையை கடைபிடித்தால் புண்ணியத்துக்கு புண்ணியமும், நிம்மதிக்கு நிம்மதியும் கிடைக்கும். 
* பிற உறுப்புகளை விட வாய்க்கு தான் வேலை அதிகம். சாப்பிடுவது, பேசுவது என்று அதற்கு இரண்டு 
வேலைகள் இருப்பதால் இரண்டையும் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
* ""நம் வீட்டு பெண்ணுக்கு நாம் வரதட்சணை கொடுத்தேமே! நமக்கு நம் அப்பாவும் அந்தக்காலத்தில் வரதட்சணை கொடுத்தாரே! அதனால் இப்போது நாமும் வாங்கினால் தப்பில்லை,'' என்று வரதட்சணை விஷயத்தில் நியாயம் கற்பித்துக் கொள்ளக்கூடாது.
* தியாகம் பண்ண வேண்டும், அதைவிட முக்கியமாக தியாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ண வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்
(இன்று காஞ்சி பெரியவர் நினைவு தினம்) 

புத்தியைக் கொடுத்தது எதற்காக!
மார்ச் 10,2011,
12:03  IST
* கிணற்று நீரில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பிக்கிறது. அதுபோல் நம் துக்கங்களை ஞானமான தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கத்துக்கான காரணங்கள் இருந்தாலும், தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரி 
துக்கம் லேசாகிவிடும்.
* நல்ல செயல்கள் செய்தால் ஈஸ்வரன் நமக்கு கை கொடுப்பார், அவர் தான் நமக்கு கை, கால், கண் வழங்கியதுடன், ஆலோசிக்க புத்தியும் கொடுத்துள்ளார். இந்த சக்தியும், புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான நல்ல செயல்களை செய்ய வேண்டும்.
* வழுக்கு மரத்தின் இயல்பு சறுக்குவது. சறுக்கிச் சறுக்கி விழுவதைச் சமாளித்துக் கொண்டு முயற்சி செய்து மேலே ஏறினால் வெற்றி உண்டாகும். அப்படியே வாழ்வில் சறுக்குவதும் இயல்பாகும்.
* தீய எண்ணம் உள்ளவனோடு சேர்க்கை வைத்துக் கொள்ளும் போது தீய எண்ணம் ஏற்படுகிறது. கோபம், தீய எண்ணம் இல்லாத தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் போது நமக்கு சாந்தம் உண்டாகிறது.
- காஞ்சிப்பெரியவர் 

தெய்வம் எங்கும் இருக்கிறது
மார்ச் 02,2011,
22:03  IST
* எதையும் கண்டிக்கும் அதிகாரம் இருப்பதாக நினைக்காமல், எதிலும் உள்ள உண்மையைப் புரிந்து கொள்ள முயலும் அதிகாரம் தான் நமக்கு உள்ளது.
* உயர்ந்து மேல்நோக்கி வளரும் மனிதன் மற்ற பிராணிகளைவிட அதிகமான சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால், உண்மையில் நாம் துக்கத்தையே அதிகம் அனுபவிக்கிறோம்.
* புரியாமல் இருந்தாலும் இப்போது இருக்கும் சாஸ்திரங்களை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும். இன்றைக்குப் புரியாவிட்டாலும் பின்னொரு காலத்தில் அவை தெரிய வரும்.
* சிரத்தை குறையாமல், ஆரம்பித்த செயலை நிறுத்தாமல், முயற்சி செய்து கொண்டிருந்தால் இறைவனை 
அடைவது உறுதி.
* பக்தியும் சிரத்தையும் ஆத்மாவுக்கு உயர்ந்த மருந்து. பிரசாதங்களை விட, மக்களுக்குப் பக்தியும் சிரத்தையும் உண்டாவதே முக்கியம்.
* எங்கு தெய்வம் இருந்தாலும், அங்கு தனது குறைகளைச் சொல்லிக் கொள்ளவே மக்கள் ஆசைப்படுகிறார்கள். தெய்வம் அனைத்து இடத்திலும் தான் இருக்கிறது. ஆனால், அது அவர்களுக்கு தெரிவதில்லை.
- காஞ்சிப்பெரியவர் 

ஜென்மம் முழுக்க படியுங்கள்
பிப்ரவரி 12,2011,
23:02  IST
* சமூகப்பணியையும், தெய்வப்பணியையும் சேர்த்து செய்ய வேண்டும். ஒன்றை விட்டு ஒன்றைச் செய்வது சரியல்ல. தெய்வத்தின் ஒப்புதலுடன் தான் தேசப்பணியைச் 
செய்ய வேண்டும்.
* நம்முடைய சாஸ்திரங்கள், புராணங்கள் தாய் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் இருப்பதற்குக் குறைவே இல்லை. அவற்றில் 
ஒரு ருசியை ஏற்படுத்திக் கொண்டால், நாளெல்லாம் படித்தாலும் போதாமல், ஜென்மம் முழுவதும் படித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாம்.
* ஒரு கணவன் கற்க வேண்டியதைக் கற்று முடிந்தவுடன், உலகத்தில் தர்மங்களை செய்ய பத்தினி என்ற துணையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவளுடன் இணைந்து 
நற்பணிகளைத் தொடர வேண்டும்.
* பூர்வ ஜென்மங்களில் வினையை விதைக்கிறோம், அதற்கு இறைவன் தருகிற பலனை, கஷ்டத்தை 
இப்போது அறுவடை செய்கிறோம். 
* பிறருக்கு உதவி செய்வதற்காக சொந்த விஷயத்தில் 
சிக்கனமாய் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த 
கொள்கையை கடைபிடித்தால் புண்ணியத்துக்குப் 
புண்ணியமும், நிம்மதியும் கிடைக்கிறது.
- காஞ்சிப்பெரியவர்

பலன் தருவது அவனே!
பிப்ரவரி 04,2011,
00:02  IST
* சத்தியம் என்றால் வாக்கும், மனசும் 
ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனசிலே தோன்றுகிற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.
* இறைவனை நினைத்துச் செய்யும் 
எந்தக் காரியத்துக்கும் பயன் உண்டு. 
அறியாமல் செய்தால் கூட அதற்கும் பயன் உண்டு.
* நாம் நிலையாக நிற்க வேண்டுமானால் அசையாத 
ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். 
அதேபோல் மனம் தியானத்தில் நிலைத்து நிற்க 
வேண்டுமானால், அசையாத மரக்கட்டை போன்ற 
பரம்பொருளை நினைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
* ஒவ்வொரு மனிதனிலும் ஈஸ்வரன் தான் குடி 
இருக்கிறார். ஒருவரை நமஸ்கரிக்கும் போது அந்த 
ஈஸ்வரனையே வழிபடுவதாகத் தான் அர்த்தம்.
* பாவ சிந்தனைகளைப் போக்கிக் கொள்ளப் புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* நீ தர்மங்களைச் செய்தால் பலன் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும். பலன் கொடுக்க வேண்டியது 
ஈஸ்வரன் வேலையாகும்.
- காஞ்சிப்பெரியவர்

தர்மம் வளர்க்கும் தீபங்கள்
ஜனவரி 12,2011,
19:01  IST
* அவரவர் தேவைகளைக் குறைத்துக் கொண்டு, மனசினால் நிறைந்து, சுபிட்சமாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் 
கூட எளிய வாழ்க்கை நடத்துவது 
அவர்களுக்கும் நல்லது, மற்ற ஜன 
சமூகத்துக்கும் நல்லது.
* பெண்கள் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக உள்ளனர். இவர்களின் பண்பு கெடுகிறதற்கு இடம் 
தரக்கூடாது.
* இன்றைய தலைறையினருக்கு தர்மத்தை ஏற்கும்படியாக, நாம் சரித்திரத்தை குழைத்துக் கொடுத்தால் தான் அது நம்மை நல்வழிப்படுத்த உபயோகமாகும். புராணம் இதைச் செய்வதால் இவற்றை நாம் படிக்க வேண்டும்.
* "இளைமையில் கல்' என்று சொல்வார்கள், ஆகவே ஒருவன் இளம் வயதில் கல்வி கற்பது மிகவும் அவசியம்.
* உடல் பலம், அஹிம்சை, தைரியம் இவற்றோடு 
பிறருக்கு உதவும் மனப்பான்மையும் ஒருவருக்கு 
வேண்டும்.
* தர்மத்துக்கு ஆபத்து வந்தால் உயிரையும் கொடுத்து 
காப்பாற்றுவது தான் ஒரு நல்ல இளைஞனின் கடமை.
* ஆயிரங்காலத்துப் பயிரான திருமணத்தை, வரதட்சணை என்னும் பூச்சி அழிக்கின்ற வகையில் உள்ளது.
-காஞ்சிப்பெரியவர்

மனதுக்கு "டெஸ்ட்' வையுங்கள்
டிசம்பர் 31,2010,
07:12  IST
*பொருள்களைத் தேடிப் போவதால் 
வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. மாறாக உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கையில் மன
நிறைவோடு இருப்பது தான்.
*குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமூகப்பணிக்கு செல்ல வேண்டியதில்லை. அதையும் 
விடாமலே, இதுவும் கடமை என்ற உணர்வோடு 
சேர்த்துச் செய்ய வேண்டும். 
* நாம் நினை என்றால் தான் மனம் அதைப்பற்றி நினைக்க வேண்டும். நினைக்காதே என்றால் நினைக்காமல் இருக்க வேண்டும். இந்த தேர்வில் வென்றால் தான் அது 
கட்டுப்பாட்டில் உள்ளதாக அர்த்தம்.
* கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் வேண்டும். அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும். சகல 
விஷயங்களுக்கும் ஒழுக்கம் அடிப்படையாக இருக்க வேண்டும்.
*தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க 
முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிக்க வேண்டும். இப்படிச் செலவழிப்பது தான் "தனக்கு மிஞ்சிய தர்மம்' என்பதாகும்.
-காஞ்சிப்பெரியவர்

தேவையைக் குறையுங்கள்
டிசம்பர் 22,2010,
19:12  IST
* ஒரு ஜென்மத்தில் செய்த பாவத்தை 
மற்றொரு ஜென்மத்தில் தீர்த்துக் 
கொள்ளட்டும் என்று ஈஸ்வரன் மறுபடியும் ஜென்மத்தை அளிக்கிறார்.
* வாழ்க்கையில் போட்டி இருக்கிற வரை மனநிறைவு எவருக்கும் கிடைக்காது. வசதி 
அதிகரித்தாலும் வேறு ஏதோ வகையில் போட்டி இருக்கத்தான் செய்யும். 
* அனைவரிடம் அன்பாக இரு, தியாகம் செய், சேவை செய் என்று அனைத்து மதங்கள் கூறுவது போல் வாழ்ந்துவிட்டால், உடம்பு போன பிறகு உயிர் தானாக 
கடவுளிடம் போய்ச் சேர்ந்துவிடும்.
* தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப்படுத்திக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு சாந்தி குறையும். சவுக்கியம் குறையும், நிம்மதியும் திருப்தியும் குறையும். தரித்திரமும் துக்கமும் உண்டாகும்.
* சிக்கனமாயிருப்பது கருமித்தனம் அல்ல. ஆடம்பரம் இல்லாமல் கணக்காயிருப்பது தான் சிக்கனம். இதுவே தானமும் தர்மமும் செய்ய உதவும்.
* தன் வேலையை பிறரிடம் விட்டுவிட்டு, தான் பிறருக்கு தொண்டு செய்ய செல்கிறேன் என்று கூறிவிட்டு செல்வது மோசடியாகும்.
- காஞ்சிப்பெரியவர்

முடிந்தளவு தானம் செய்யுங்கள்
டிசம்பர் 21,2010,
01:12  IST
* பூர்வ ஜென்மங்களில் செய்த செயல்களுக்கு கடவுள் தருகிற பலன் அல்லது கஷ்டத்தை இப்போது அறுவடை செய்கிறோம்.
* தியாகம் பண்ண வேண்டும் என்பதைவிட தியாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.
* ஒரே தெய்வத்தை தொடர்ந்து வழிபடுவது சித்த ஒருமைப்பாட்டுக்கு உதவலாம். ஆனால், 
இன்னொரு தெய்வத்தை தாழ்வாக எண்ணக்கூடாது.
* வைரத்திலும், பட்டிலும் நம் பெண்களுக்கு மோகம் போய்விட்டால், நம்முடைய குடும்ப வாழ்க்கையும், சமூக வாழ்க்கையும் மட்டுமில்லாமல் பெண்களின் 
தர்மமும் பிழைக்கும்.
* மவுனமும், பட்டினியும் சேர்ந்தால் வாய்க்கு வேலை இல்லாமல் போய்விடும். அப்போது மனம் 
இறைவழிபாட்டில் ஈடுபடுவதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
* போதும் என்ற மனதோடு சம்பாதித்து, அதைக் 
கவனத்துடன் செலவழிக்க வேண்டும். சொந்தச் 
செலவுகளை குறைத்து, முடிந்தளவு தான தர்மம் செய்ய வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர் 

நடப்பது இறைவன் செயல்
டிசம்பர் 08,2010,
01:12  IST
* ஒருவருக்கு ஆனந்தத்தை தரும் சம்பவம் மற்றொருவருக்கு துக்கத்தை தருகிறது. எது நடக்க வேண்டுமோ அது இறைவன் செயல் என்று நினைப்பதே சரியாகும்.
* உடல், வாய், மனம், பணம் என்னும் நான்கு வகைகளிலும் பாவம் செய்கிறோம்.  பாவத்திற்கு பிராயச்சித்தமாக அந்த 
நான்காலும் புண்ணியம் செய்ய வேண்டும். உடலால் பரோபகாரம், வாயால் தெய்வ நாமத்தைச் சொல்வது, 
மனதால் தியானம், பணத்தால் தர்மம் முதலியவை செய்ய வேண்டும்.
* சம்பாதிப்பதாலும், வேண்டாத பொருட்களை தேடிப்போவதாலும் காலவிரயம் ஏற்படுகிறது. இதனால் 
ஆத்மசாந்தி குலைகிறது. நாம் உயிர்வாழ இந்த பொருள் அவசியம்தானா என கணக்கு பார்த்து செலவழிப்பதே உண்மையில் கணக்காயிருப்பதாகும்.
* குடிமக்கள் செய்யும் பாவம் அரசனையும், மனைவி செய்யும் பாவம் கணவனையும், சிஷ்யனின் பாவம்
குருவையும் அடையும்.
* ஆசையின்றி ஒரு செயலைச் செய்தால் பாவமில்லை. ஆசைப்பட்டு செய்வது தான் பாவம். நமக்காக 
இல்லாமல் பிறருக்காக செய்யும் செயலே உயர்ந்தது.
 -காஞ்சிப்பெரியவர்  

பாதுகாப்பாள் பராசக்தி
டிசம்பர் 04,2010,
01:12  IST
* நம் உடல் சுத்தமாக, தண்ணீரில்  குளிக்கிறோம், ஆனால், அம்பிகையைத் தியானித்தால், தியானம் என்ற அந்த 
புனித நீரில் நம் மனமும் சுத்தமாகிறது.
* பசியோ, கஷ்டமோ தாங்க முடியாமல் போனால் "அம்மா' என்று கத்தி கண்ணீர் விடுகிறோம். காரணம் உலகத்துக்கெல்லாம் தாயாக விளங்கும் பராசக்தி ஓடிவந்து நம் துயரை  நீக்குவாள் என்ற நம்பிக்கையே.
* சஞ்சலமாகிய சேற்றிலிருந்து எழவேண்டும் என்றால், கரையில் இருக்கும் ஈஸ்வரன் என்ற கெட்டியான 
பொருளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
* மெய், வாக்கு, மனம், பணம் இவற்றால் நாம் பாவம் செய்கிறோம். இவற்றால் நல்ல செயல்கள் செய்ய 
பழகிக் கொள்ள வேண்டும்.
* அன்பு தான் அழகு, காருண்யம் தான் லாவண்யம்.  ஒரு நாள் ஜுரம் அடித்தால், சிறிது கோபதாபம் வந்தால் முகத்தின் அழகு போய்விடுகிறது. ஆனால், அம்பாளின் அருளைப் பெற்றால் அதன் அழகு மறையாமல்  நிற்கிறது.
- காஞ்சிப்பெரியவர் 
பரிகாரத்தை விட உயர்ந்தது எது?
நவம்பர் 25,2010,
00:11  IST
* குழந்தையாகவே இருக்க வேண்டும் என்று உபநிஷதம் கூறுகிறது. காரணம் குழந்தைப்பருவம் கபடம் இல்லாததுடன், 
கடவுளுக்கும் ஒப்பானதாகும்.
* இறைவனை நினைத்துச் செய்யும் எந்தச் செயலுக்கும் பயன் உண்டு. அறியாமல் செய்தால் அதற்கும் பலன் உண்டு,
* பழைய தவறுகளுக்கு பரிகாரம் தேடுவதை விடப் 
புதிதாக தவறேதும் செய்யமால், பாவம் செய்யாமல் வாழ வேண்டும். 
* ஒவ்வொரு மனிதனிடமும் இறைவன் குடி 
கொண்டுள்ளார். ஒருவரை வணங்கும் போது 
இறைவனை வழிபடுவதாக அர்த்தமாகிறது.
* அன்பு அனைவரிடமும், பொறுமை தப்பு 
பண்ணுகிறவனிடமும், பொறாமையின்மை நம்மை விட உயர்ந்த இடத்தில் இருக்கிறவனிடமும் கொண்டிருக்க வேண்டும்.
* பொருள் சேர்ப்பதிலும், அலங்காரம் செய்வதிலும் 
தற்காலிக இன்பம் கிடைக்கலாம். ஆனால், உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே 
இருக்கிறது.
-காஞ்சிப்பெரியவர் 
குடும்பத்தையும் கவனியுங்கள்
நவம்பர் 22,2010,
23:11  IST
* சத்தியம் என்றால் வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில்  எழுகின்ற நல்ல எண்ணங்களை மட்டும் வாக்கில் வெளிப்படுத்துவதே சத்தியம். நல்ல விளைவுகளைத் தரும் நல்ல சொற்களைப் பேசுவதே சத்தியம்.
* தர்மம், நீதி ஆகிய குணங்களைக் கொண்டவனே பண்புடையவன். எந்த சூழலிலும் தர்மத்தைப் பின்பற்றுபவனே உயர்ந்த மனிதன். 
* சமூகசேவை எண்ணம் கொண்டவர்கள் குடும்பத்தையும் கடமையுணர்வோடு பாதுகாக்க வேண்டும்.
* இறைவனை எண்ணிச் செய்யும் செயல்கள் எளிதாக நிறைவேறும். வழிபாட்டிற்கான பலன் நிச்சயம் நம்மைத் தேடிவரும். அறியாமல் செய்தாலும்கூட அதற்கான நன்மை நமக்குண்டு.
* லாபநஷ்டக் கணக்கு மட்டுமே பார்த்துக் கொண்டு வியாபாரம் நடத்தக்கூடாது. பிறருக்கு உதவியாக வாழ வேண்டும் என்னும் லட்சிய நோக்கமும் வியாபாரத்திற்கு மிகவும் அவசியம்.
* எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாகவே  வாழ்வது தான் அதிக சக்தி வாய்ந்ததாகும். உபதேசம் செய்வது எளிதானது. ஆனால், அதன்படி வாழ்ந்து  காட்டுவதில் தான் உண்மையான பெருமை இருக்கிறது. 

- காஞ்சிப்பெரியவர்

நல்லதையும் அன்பாகச் சொல்லுங்க!
நவம்பர் 16,2010,
05:11  IST
* மனதிலுள்ள ஆசைகளைக் குறைப்பதன் மூலம் நமக்கு வரும் துன்பம் குறைந்து ஆனந்தம் பெருகும். வெளியிலுள்ள பொருட்களிலிருந்து நமக்கு ஆனந்தம் 
வருவதில்லை, நம்மிடையே இருந்து தான் ஆனந்தம் பிறக்கிறது.
* உடல் மற்றும் மனரீதியாக செய்யும் பாவத்தை போக்க புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* துக்கத்துக்கு விதை போட்டுக் கொண்டிருக்காமல் பாவத்தை போக்க தினமும் ஈஸ்வர தியானத்தில் 
ஈடுபடுவது நல்லது.
* உலகத்தில் எவரும் பாவியாக இருக்க விரும்பவது இல்லை, ஆனால், பாவகாரியம் அதிகம் செய்கிறோம். அனைவரும் புண்ணியம் பெறத்தான் விரும்புகிறோம். ஆனால் புண்ணியச் செயல்களைச் செய்வதில்லை.
* ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது, அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கூட கடுமையாகச் சொன்னால் அதை யாரும் ஏற்கமாட்டார்கள்.
* ஒருவனிடம் எத்தனை தோஷம் இருந்தாலும் அதனை பெரிதுப்படுத்தக்கூடாது. சிறிய அளவில் குண விசேஷம் இருந்தால் அதையே பெரிதாக கொண்டாட வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர் 

தண்ணீர் பந்தல் வையுங்கள்
நவம்பர் 08,2010,
19:11  IST
* உலகில் எத்தனையோ பேர் கஷ்டப்படுகிற போது நாம் மட்டும் டாம்பீகங்களைச் செய்வது நியாயமா என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும். செலவை தர்ம நியாயமாகக் கட்டுப்படுத்திக் கொண்டால், எத்தனையோ தானதர்மம் செய்யலாம்.
* சிரமமும், செலவும் குறைச்சல் என்றாலும், வாயும் தொண்டையும் வற்றி விடுகிறவர்களுக்கு ஜில்லென்று மறுவாழ்வு தருவது போன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து மோர் தீர்த்தம் தருவது மகாபெரிய புண்ணியமாகும்.
* குறைவான வருமானம் கிடைத்தாலும் ஒரு காலணாவாவது தனக்கென்று இல்லாமல் தர்மம் செய்ய வேண்டும்.
* பணம் சம்பாதித்துக் கொள்வதைவிட பணத்தைக் பிறருக்கு வழங்கும் மனப்பான்மை தான் பெரிய லட்சுமியாகும். அவளை வணங்கினால் இந்த மனோபாவத்தை அளிப்பாள்.
* தோட்டம் உள்ள அனைவரும் சிறிய இடத்தில் பசுவுக்கான அகத்திக் கீரை போட வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும்.
-காஞ்சிப்பெரியவர்  

சுவாமிக்கும் புதுத்துணி அணிவியுங்க!
நவம்பர் 02,2010,
20:11  IST
* தீபாவளி அன்று நாம் மட்டும் எண்ணெய் தேய்த்துக் கொள்வது, புது துணிகள் கட்டிக் கொள்வது என்பதோடு நிற்காமல், 
ஏழைகளுக்கும் எண்ணெய், சீயக்காய், புதிய துணிகள் வழங்க வேண்டும். 
கோயிலிலுள்ள அறுபத்தி மூவர் உட்பட அனைத்து மூர்த்திகளுக்கும் தைலம் சார்த்தி, புது வஸ்திரம் அணிவித்தும் கொண்டாட வேண்டும்.
* நம் ஊர்க் கோயிலில் சுவாமியின் வஸ்திரம் சுத்தமாக இருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டால், நம் மனசின் அழுக்கு போய்விடும்.
* தீபாவளியன்று துணியும், உடம்பும், வீடும் புதுசாக இருந்தால் போதாது. இதற்கும் மேலாக நம் மனமும் 
புதிதாக அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். 
குணமும், உடலும் இணைந்து ஒன்றை ஒன்று தூய்மைப்படுத்திக் கொள்ளும் வகையில் செயல்களைச் செய்ய வேண்டும்.
* தினமும் மனதாலும், வாக்காலும், உடம்பாலும், 
பணத்தாலும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். இதற்கு நம்மிடமுள்ள பணம் எல்லாம் எப்போதும் 
நம்முடையதல்ல என்ற நினைவு இருக்க வேண்டும். 
-காஞ்சிப்பெரியவர்
(இன்று தீபாவளி) 

"ஆஹா' என்று இருங்கள்
நவம்பர் 02,2010,
20:11  IST
* பொழுது போக்கையே வாழ்க்கைப் 
போக்காக, அதிலும் வழுக்கிவிடுகிற 
போக்காக ஆக்கிக் கொள்ளாமல், எந்த அளவோடு ருசித்துவிட்டு நிறுத்திக் கொள்ள வேண்டுமோ அப்படி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
* எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்து கொண்டோ, மூக்கைச் சிந்திப் போட்டுக் கொண்டோ 
இல்லாமல், "ஆஹா' என்று எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
* அதிகமாகப் பொருள்களைத் தேடிப் போவதால் 
வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் 
வாழ்க்கைத்தரம் என்பது தரமான வாழ்க்கை 
மனநிறைவோடு இருப்பதுதான்.
* அனைவரும் தங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு மனசினால் நிறைந்து, சுபிட்சமாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்களும் எளிய வாழ்க்கை 
நடத்துவது அவர்களுக்கும் நல்லது, மற்ற ஜன 
சமூகத்துக்கும் நல்லது.
* வியாதிக்கு மருந்து மாதிரி, பசிக்கு உணவு ரொம்ப அளவாகத்தான் போட வேண்டும். பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் உணவே, தவிர ருசியைத் தீர்க்க அல்ல.
-காஞ்சிப்பெரியவர்  

பத்து நிமிஷமாவது வணங்குங்கள்
அக்டோபர் 11,2010,
19:10  IST
* கடவுள் நமக்கு உடல் கொடுத்ததோடு 
மட்டுமல்லாமல் இப்பரந்த உலகம், 
தேவையான உணவு, உடை ஆகியவற்றையும் தந்திருக்கிறார். அதனால், நாள்தோறும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். இதன் அடையாளமாகச் சிலர் உண்பதற்கு முன் கடவுளுக்கு நிவேதனமாக உணவைக் 
காட்டியபிறகு சாப்பிடத் துவங்குவர். 
* ஒவ்வொரு வீட்டிலும் மாலை நேரத்தில் விளக்கேற்றி, பத்து நிமிஷ நேரமாவது இஷ்ட தெய்வத்தின் மீது பஜனை செய்ய வேண்டும். வீட்டில் செய்யும் வழிபாடு நிலையான இன்பத்தை தரவல்லது.
* இறைவனிடம் எதை எதையோ வேண்டுகிறோம். 
உண்மையில் வேண்டுவதாக இருந்தால், மனம் 
கண்டபடி அலையாமல், வைராக்கியத்தைக் கேட்டுப் பெறவேண்டும். அப்போது தான் மனம் திருந்தி 
புத்தியின் வழியில் செல்லும்.
* நாம் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் தப்பில்லை. ஆனால், எல்லா தெய்வங்களும் ஒன்றே என்று புரிந்து கொண்டு வழிபடவேண்டும் என்பது தான் மிகவும் 
முக்கியம்.
காஞ்சிப்பெரியவர்  

கடனே என பணி செய்யாதீர்கள்!
அக்டோபர் 11,2010,
19:10  IST
* கடவுள் நமக்கு கை, கால், கண் என்று எல்லா உறுப்புகளையும் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சிந்திப்பதற்கு புத்தியும் கொடுத்திருக்கிறார். அந்த புத்தியால் இது நல்லது இது கெட்டது என்று செயலின் விளைவை யோசித்து அணுகவேண்டும்.
* எச்செயலைச் செய்தாலும் அதனை முறையோடு செய்யப் பழகுதல் அவசியம். முறை தவறி செய்தால் துன்பம் தான் உண்டாகும். பெரியவர்கள் வகுத்துக் கொடுத்திருக்கும் நியாயமான வழியில் நடப்பவர்கள் எப்போதும் முறை தவறுவதில்லை.
* ""என் கடன் பணி செய்து கிடப்பதே'' என்பது தான் வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். கடன் என்றால் வேண்டா வெறுப்பாகச் செய்வது என்று நாம் அர்த்தம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், கடமை என்பது தான் இங்கு பொருள். அதனால், எச்செயலையும் ஆர்வத்தோடு இதயப்பூர்வமாகச் செய்யவேண்டும். 
* துக்கம் நம் உடன்பிறப்பு. மனதில் உண்டாகும் துக்கங்களை எல்லாம் ஞானம் என்னும் தண்ணீரில் மூழ்கடியுங்கள். அப்போது துக்கம் தண்ணீரில் இருக்கும் பாரம் போல பரம லேசாகி விடும்.

காஞ்சிப்பெரியவர்               

சத்தியம் இது சத்தியம்
அக்டோபர் 04,2010,
20:10  IST



* கண்டதை எண்ணி மனதை குப்பைத்தொட்டி போல ஆக்கிவிட்டோம். அதைச் சுத்தப்படுத்தி, கடவுளை வைத்து வழிபட வேண்டும். கடவுள் நாமங்களைச் சொல்லி புண்ணியம் தேடுவதே பிறவிப்பயன்.
* கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார். உலக இயக்கங்கள் அனைத்தும் அவராலேயே நிகழ்கின்றன. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று இதைத் தான் சொல்கிறோம்.
* தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க 
முடியுமோ, அந்த அளவுக்கு எளிமையாக வாழ்வதும், முடிந்த அளவுக்கு தானதர்மங்கள் செய்வதும் 
அனைவரும் பின்பற்றவேண்டியதாகும்.
* பிறவிப் பெருங்கடலைத் தாண்டிச் செல்வதற்கு குருவின் அருள் தேவை. எல்லாவிதமான இன்பத்திலும் 
துன்பத்திலும் நமக்கு அருள்பாலிப்பவர் குரு தான். நம்முடைய அறியாமை அனைத்தும் குருவால் மட்டுமே அகலும்.
* சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றுபடுவது 
மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல 
எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம் ஆகும். 
சத்தியத்தால் நல்ல விளைவுகள் மட்டுமே உண்டாகும். 
காஞ்சிப்பெரியவர்

கடவுளிடம் கேட்பதில் தவறில்லை
செப்டம்பர் 21,2010,
18:09  IST
* இறைவனுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கவே வழிபடுகிறோம். பொதுவாக, நம் வழிபாடு எதையாவது கடவுளிடம் கேட்பதாகவே இருக்கும். சில சமயங்களில் நாம் கேட்டது கிடைக்கும். சில சமயங்களில் அது நிறைவேறுவதில்லை.
* நாம் பிரார்த்தனை செய்தும் பலனில்லை என்றால் கடவுளுக்கு கருணை இல்லையா என்று தோன்றும். நம் பூர்வ ஜென்மவினைப் பயனால் தான் துன்பம் ஏற்படுகிறது. பகவான் நாம் விரும்பும் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தால், மேலும் மேலும் அது வேண்டும், இது வேண்டும் என்று தான் பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம்.
* பகவானிடம் நம் விருப்பங்களை வேண்டி நிற்பதில் மேலான ஒரு நன்மை இருக்கிறது. ஆரம்பத்தில் நம் மனக்குறைகளை பகவானிடம் சொல்வதால் நமக்கு மனநிம்மதி உண்டாகிறது. நாம் சாமான்யர்களாக இருக்கும்
வரையில் நம் குறைகளை நிவர்த்திக்க பிரார்த்திப்பதும், வரங்களைக் வேண்டிக்கேட்பதிலும் தவறொன்றும் இல்லை.
*  குடிமக்கள் செய்யும் பாவம் அரசனையும், மனைவி செய்யும் பாவம் கணவனையும், சிஷ்யனின் பாவம் குருவையும் அடையும்.
- காஞ்சிப்பெரியவர்

மன அமைதிக்கு வழி
செப்டம்பர் 21,2010,
18:09  IST
* நாள் முழுவதும் இயந்திரங்களுடன் வேலை செய்வதால் நாமும் இயந்திரம் போல் ஆகிவிட்டோம். நம் மனதில் எப்போதும் அமைதியோ, தெளிவோ இருப்பதில்லை. அலுவலகம் சென்று வந்ததும் களைத்துப்போய் தூங்கி விடுகிறோம் அல்லது பொழுது போக்குகிறோம். தரமான நல்ல புத்தகங்களை படிக்கக் கூட நினைப்பதில்லை.
* பெரும்பாலான மனிதர்கள் வாழ்வின் பெரும்பகுதியை பொருள் தேடுவதிலேயே கழித்துவிடுகிறார்கள். இன்னும் சிலர், வாழ்வின் நோக்கமே பொருள் சேர்ப்பது மட்டுமே என்று கூட நினைக்கிறார்கள். மனம் பற்றிய சிந்தனையோ, அது ஒழுங்காக இருந்தால் தான் நிம்மதியாக வாழ
முடியும் என்ற அக்கறையோ நமக்கு இருப்பதில்லை.
* அன்றாடம் காலையில் எழுந்தவுடன் உடல் தூய்மைக்காக குளியல் செய்கிறோம். ஆனால், மனத்தூய்மைக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும், நல்லவர்களின் சேர்க்கை மிக அவசியம். அப்போது தான் அவர்களுடைய வாசனையால் நமக்கும் ஆண்டவனின் நினைப்பு உண்டாகும். நோய் வந்தால் மருத்துவர் உதவி தேவைப்படுவதுபோல, கவலைப்படும் மனம் அமைதி பெற ஒரே வழி பிரார்த்தனை மட்டும் தான்.
- காஞ்சிப்பெரியவர் 
கடவுளுக்கு பயப்படுங்கள்
செப்டம்பர் 09,2010,
19:09  IST
 * எந்தவித குற்றமும் செய்யாத பாவமற்றவன் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. தைரியம் அவன் முகத்தில் பிரகாசமாய் ஜொலிக்கும்.
* ராமநாமத்தை தாரக மந்திரம் என்பார்கள்.
தாரகம் என்றால் பாவங்களைப் பொசுக்கி மேலே போவது எனப்பொருள்.
* நீ தானதர்மங்களைச் செய்தால் பலனை எதிர்பார்க்காமல் செய். பலன் கொடுக்க வேண்டியது ஈஸ்வரன் வேலை.
* மருந்தை வாங்கி விட்டு சாப்பிடாமல் இருந்தால் அதன் வீரியம் குறைந்துவிடும். அதுபோல, மந்திரத்தை ஜெபிக்காமல் இருந்தால் அதன் வீரிய சக்தி
குறைந்துவிடும்.
* உன்னுடைய துன்பத்தையே பெரிதாக எண்ணாதே.
உலகம் உன்னால் சிறிதாவது நன்மை பெற வேண்டும் என்று பாடுபட முயற்சி செய்.
* முதலில் மனிதன் மிருகநிலையிலிருந்து மனிதனாக
மாறவேண்டும். அப்புறம் தெய்வமாகத் தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும்.
* இறைவனே சர்வசாட்சியாக இருந்து நம் செயல்களுக்குப் பலன் தருகிறான் என்ற பயஉணர்ச்சி வேண்டும். அந்த எண்ணம் தான் தர்மவழியில் செல்ல நமக்கு துணை நிற்கும்.
- காஞ்சிப்பெரியவர்
பின்பற்ற வேண்டிய பத்து
ஆகஸ்ட் 31,2010,
19:08  IST
* காலையில் எழுந்தவுடன் இரண்டு
நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.
* அன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்ற இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* புண்ணியநதிகள், கோமாதா, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர் ஆகியோரை குறைந்தபட்சம் ஒரு நிமிடம் நினைப்பது அவசியம்.
* வாரத்தில் ஒருநாளாவது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள்.
* அக்கம் பக்கத்தினரையும், மற்றவர்களையும் அன்போடு நேசித்து வாழுங்கள்.
* உணவு உண்ணும் முன் மிருகங்களுக்கோ, பறவை
களுக்கோ சிறிது அளித்துவிட்டு பிறகு சாப்பிடுங்கள்.
* உங்களால் முடிந்த அளவுக்கு தர்மம் செய்து வாருங்கள்.
* நெற்றியில் எப்போதும் திருநீறு, குங்குமம் அணிந்து கொள்ளுங்கள்.
* தூங்கச் செல்லும் முன் அன்றைய நாளில் நடந்த நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து திருத்திக் கொள்ளுங்கள்.
* கடவுளின் நாமத்தை 108 முறையாவது உச்சரித்துவிட்டு பின்னர் உறங்குங்கள்.

காஞ்சிப்பெரியவர்
நல்லவனால் நாட்டுக்கே நன்மை
ஆகஸ்ட் 25,2010,
22:08  IST
*நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த பூமியில் பிறப்பெடுத்துவிட்டோம். யாராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் இவ்வுலகைவிட்டுப் போய் தான் ஆக வேண்டும். அதுவரை இந்தப்பிறவியால் நம் மனதில் எவ்வளவோ அழுக்கை ஏற்றுக்கொண்டு விடுகிறோம்.
* மனம், வாக்கு, உடம்பு ஆகியவற்றால் எவ்வளவோ பாவங்களைச் செய்துவிட்டோம். அதே உடலைக் கொண்டே பாவங்களுக்குப் பிராயச்சித்தமும் தேடவேண்டும்.
* சாஸ்திர நூல்கள், திருத்தலங்கள், தீர்த்தம் முதலிய நல்ல விஷயங்களில் நம் மனம் ஈடுபடவேண்டும். புண்ணியங்களைச் செய்து பாவங்களைக் கரைத்துவிடவேண்டும்.
* நம் மனதில் எப்போது ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை எல்லாம் உண்டாகிறதோ அப்போது தான் உண்மையான பக்தியும், ஞானமும் உண்டாகும். அதுவரை நாம் செய்யும் பூஜை, வழிபாடு எல்லாம் இரண்டாம்பட்சம் தான்.
* நல்லதையே சிந்தித்து இறையருளைப் பூரணமாகப் பெற்றவன் ஒருவன் உலகில் இருந்தாலும் போதும். அவன் மூலமாக இந்த தேசம் முழுதும் நன்மை பெறும்.
-காஞ்சிப்பெரியவர்

எளிமையே நிம்மதி தரும்
ஆகஸ்ட் 12,2010,
16:08  IST
* மனம் நிம்மதி பெற நல்லவர்களின் சேர்க்கை அவசியம். நல்லவர்களின் சேர்க்கையால் கடவுளைப் பற்றிய நினைப்பு உண்டாகும். கடவுளை நினைத்தால் கவலை விலகும்.
* வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதாகச் சொல்லிக் கொண்டு, அன்றாடத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால் தவறான ஆசைகள் தான், மனதில் வளர்கின்றன. வாழ்க்கைத்தரம் என்பது நற்குணங்கள், இறைபக்தி போன்ற உயர்வான குணங்களைப்பெற்று மனநிறைவோடு வாழ்வதேயாகும்.
* நவீன வாழ்க்கை முறையில் தேவையற்ற பொருட்களை அவசியமானவை என்று எண்ணிக்கொண்டு நம்முடைய நிம்மதியை இழக்கப் பழகிவிட்டோம். ஆடம்பர வாழ்க்கையில் யாருடைய மனதிலும் நிறைவு என்பதே இல்லாமல் போய்விட்டது. கடமையைச் சரிவர செய்து கொண்டு எளிமையாக இருப்பதில் தான் ஆனந்தம் இருக்கிறது.
* வெளியில் இருக்கும் பொருள்களில் மட்டுமே மகிழ்ச்சி இருப்பதாக எண்ணிக் கொண்டு, அவற்றை வீணாகத் தேடி அலைகிறோம். உண்மையில், மனதில் இருக்கும் மகிழ்ச்சியே உண்மையானது.
-காஞ்சிப்பெரியவர்


இறைவன் மட்டுமே கெட்டிக்காரன்
ஆகஸ்ட் 06,2010,
10:08  IST

* உடம்புக்கு எந்த துன்பம் வந்தாலும் துவண்டுபோய் விடக்கூடாது. நோய்வந்தாலும், வறுமை வந்தாலும், வேறு எந்த விதமான துன்பங்கள் வந்தாலும் அவற்றை வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* ஆடம்பரத்திற்காக பல மனிதர்கள் ஊதாரித் தனமாகச் செலவழிக்கிறார்கள். போலி கவுரவத்தைக் காப்பாற்ற பிறரிடம் கடன் வாங்கிச் செலவழிக்கும் குணம் நல்லதல்ல.
* உலகில் அமைதி தவழவேண்டுமானால் சாத்வீகமான மரக்கறி உணவுவகைகளையே சாப்பிட வேண்டும்.
* குறைவான வருமானம் இருந்தாலும் அதற்கேற்றபடி தர்மத்துக்காக செலவழிப்பது அவசியம். தர்மம் செய்வதை தள்ளிப்போடுவது கூடாது. மனம் மாறக்கூடியதாக இருப்பதால் நினைத்தவுடன் தர்மம் செய்துவிடுவதே நல்லது.
* கெட்டிக்காரன் என்று மனிதன் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறான். இத்தனை பெரிய உலகத்தையும், உயிர்களையும் படைத்த மகா கெட்டிக்காரன் ஒருவன் இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவனே இறைவன்.
-காஞ்சிப்பெரியவர்


பாவம் தீர தியானம் செய்யுங்க!
ஜூலை 29,2010,
16:07  IST

* மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும்<<, யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும்.
* செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், போகங்களில் சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்டாலும் தினமும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
* குழந்தைப் பருவத்திலிருந்தே தியானத்தை பழகினால், மனம் பாவங்களில் ஈடுபடாமல் நல்ல விஷயங்களை நாடும் நிலை உண்டாகும். இதுவரை அநாவசியமாக எவ்வளவோ காலத்தை நாம் வீணடித்திருக்கிறோம். அதனால், தியானம் செய்வதை அன்றாட வாழ்வின் அடிப்படை கடமையாகக் கொள்ள வேண்டும்.
* வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பலருக்கும் தீமை செய்திருக்கிறோம். அந்தப் பாவங்களை எல்லாம் அதே வாக்காலும், மனதாலும், கை, கால் முதலியன கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிடும் நல்லெண்ணத்தை தியானத்தால் மட்டுமே பெற முடியும்.
-காஞ்சிப்பெரியவர்


உண்டியல் செலுத்துவது ஏன்?
ஜூலை 21,2010,
20:07  IST

* கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். நமக்கு செயலுக்குத் தகுந்த பலன்களைத் தருபவர் அவரே. இந்த எண்ணம் நமக்கு இருந்தால்  தான் நம் மனம் தர்மவழியை விட்டு விலகாமல் இருக்கும்.
* கடவுளுக்கு காணிக்கையாகப் பணத்தை உண்டியலில் செலுத்துகிறோம். உலகைப் படைத்துக் காக்கின்ற பரம்பொருளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே வழிபாட்டில் இப்படி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
* நம்முடைய சுகதுக்கங்களையே பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது. நம்மால் முடிந்த நன்மைகளை உலகத்திற்கு செய்ய முயற்சிக்க வேண்டும்.
* எந்தச்செயலையும் நியாயமாகச் செய்வது அவசியம். ஒரு பொருளை அடைய வேண்டும் என்ற ஆசையினால் அநியாயமாகவும் அடைய முயற்சிக்கிறோம். அப்போது தான் நம்மைப் பாவம் தீண்டுகிறது.
* ராமநாமத்தை தாரக மந்திரம் என்பர். தாரகம் என்றால் பாவங்களைப் பொசுக்குவது என்று பொருள். மலையளவு பாவங்கள் இருந்தாலும் ராமநாமத்தைச் சொன்னால் நம் முன்வினைப்பாவங்கள் நசிந்து போகும்.
-காஞ்சிப்பெரியவர்
அவனல்லவா செய்ய வைத்தான்!
ஜூலை 11,2010,
22:07  IST
* நாம் "தானம் கொடுக்கிறோம்' என்ற வார்த்தையைச் சொல்வதே தவறு."பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான், கொடுத்தோம்' என்று அடங்கி பவ்யமாகக் கொடுக்க வேண்டும். அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.
* நமக்கு எத்தனை ஆசை இருக்கின்றனவோ, அத்தனை ஆணிகளை அடித்துக் கொண்டு, நம்மை
கட்டிப்போட்டுக் கொள்கிறோம். இதனால் துன்பம்
அதிகரிக்கிறது. ஆசைகளை குறைக்க குறைக்க துன்பமும் குறைகிறது.
* ஒருவர் நம்மிடம் நெருங்கிப் பழகாவிட்டாலும் சரி,
அவருக்கு ஆத்ம குணங்களும் அனுக்கிரக சக்தியும் இல்லாவிட்டாலும் சரி, அவரால் நமக்கு எந்தக் காரியமும் ஆகாவிட்டாலும் சரி, அப்போதும் நாம் அவரிடம் மாறாத அன்பு வைத்தால் அதுவே உண்மையான அன்பு.
* தியாகம் பண்ணவேண்டும். அதைவிட முக்கியமாக
"தியாகம் பண்ணினேன்' என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.
* மகான்கள் செய்கிற ஆசிர்வாதம், அவர்கள் கொடுக்கும் சாபம் அனைத்தும் அப்படியே பலித்துவிடுவதற்கு
காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்தி தான்.
- காஞ்சிப்பெரியவர்

அன்பால் வரும் ஆனந்தம்
ஜூலை 03,2010,
18:07  IST
* மனிதனைப் பாவத்தில் தள்ளிவிடும் சக்தி ஆசைக்கும், கோபத்திற்கும் உண்டு என்று கிருஷ்ணர் பகவத்கீதையில் குறிப்பிடுகிறார். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று இணை
பிரியாதவை.
* ஒருவனைப் பாவி என்று வெறுக்கும்போது, நாம் பாவமே செய்யாதவர்களா என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். பாவச்செயல்களைச் செய்யா
விட்டாலும் மனதிலாவது நினைக்கத் தான் செய்கிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
* நம் கோபத்தால் எதிராளியின் குணத்தை மாற்ற முடியாது. இருவருக்குமிடையே மேலும் கோபம் வளரத் தான் செய்யும். கோபத்தால் ஒருவரைப் பணியச் செய்வதில் நமக்குப் பெருமையில்லை. அன்பால் குறையைத் திருத்தி நல்வழிப்படுத்துவதே சிறந்தது.
* பெரும்பாலும் கோபம் கொள்வதால் நமக்கு நாமே பெரும் தீங்கு செய்தவர்களாகிறோம். ஆத்திரம் கொள்வதால் நம் உடலும் மனமும் பலவீனமடைகின்றன.
* அன்பாக இருப்பதே நம்முடைய இயல்பான குணம். அன்பால் நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவருக்கும் ஆனந்தம் உண்டாகும். இதையே அன்பே சிவம் என்று திருமந்திரம் கூறுகிறது.
-காஞ்சிப்பெரியவர்
இனிமையாகப் பேசுங்கள்
ஜூன் 29,2010,
00:06  IST
* எதைக் காப்பாற்றாவிட்டாலும் நாக்கைக் காக்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ஆனால், இன்று உலகம் முழுக்க பேச்சுமயமாகவே மாறிவிட்டது.
* பேச்சைக் குறைத்தால் சண்டை சச்சரவு மறையும்.மேல்நாட்டில் கூட ""பேச்சு வெள்ளி என்றால் மவுனம் தங்கம்'' என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
* பேசும்போது ஒரு வார்த்தை கூட அதிகமாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். "கொட்டி விடலாம்! ஆனால், அள்ளமுடியுமா?' என்று பாமர ஜனங்கள் கூட கேட்பதுண்டு.
* மவுனத்தை ஞானத்தின் எல்லை என்பர். ஒரேயடியாக நம்மால் மவுனமாக இருக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு பேச்சை குறைக்க முயற்சிக்கவேண்டும்.
* எப்போதுமே இனிமையாகப் பேச வேண்டும். மற்றவர் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது நல்லதல்ல. நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் மேல்நிலைக்கு உயர்த்துவதாக மட்டுமே நம் பேச்சு இருக்கவேண்டும்.
* பணத்தை மட்டும் தான் அளவாகச் செலவழிக்க வேண்டும் என்றில்லை. பேச்சையும் கணக்காகப் பேசவேண்டும்.
-காஞ்சிப்பெரியவர்

எளிமையாக வாழ்வோமே!
ஜூன் 18,2010,
17:06  IST
* கண்டதை எண்ணி மனதை குப்பைத்தொட்டி போல ஆக்கிவிட்டோம். அதைச் சுத்தப்படுத்தி மெழுகி, கடவுளை அமரவைத்து வழிபட வேண்டும். கடவுள் திருநாமங்களைச் சொல்லி புண்ணியம் தேட வேண்டும். அதுதான் மனிதப்பிறவியின் பயன்.
* மின்சாரத்தைப் போன்று கடவுளை நம்மால் காண முடியாது. ஆனால், அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். உலக இயக்கங்கள் அனைத்தும் அவராலேயே நிகழ்கின்றன.
* தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அந்த அளவுக்கு எளிமையாக வாழ்வதும், முடிந்த அளவுக்கு தானதர்மங்கள் செய்வதும் அனைவரும் பின்பற்றவேண்டியதாகும்.
* பிறவிப் பெருங்கடலைத் தாண்டிச் செல்வதற்கு குருவின் அருள் தேவை. எல்லாவிதமான இன்பத்திலும் துன்பத்திலும் நமக்கு அருள்பாலிப்பவர் குரு தான். நம்முடைய அறியாமை அனைத்தும் குருவால் மட்டுமே அகலும்.
* சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம் ஆகும். சத்தியத்தால் நல்ல விளைவுகள் மட்டும் உண்டாகும்.
-காஞ்சிப்பெரியவர்
வரதட்சணை திருட்டுச் சொத்து
ஜூன் 11,2010,
11:06  IST
* ஒரே தெய்வத்தையே இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபடுவது மன ஒருமைப்பாட்டுக்கு உதவும். நல்லவிஷயம் தான் என்றாலும், மற்ற தெய்வ வழிபாடுகளை ஒருபோதும் தாழ்வாக எண்ணுதல் கூடாது. ஒரே தெய்வமே பல வடிவங்களில் இருக்கிறது என்ற தெளிவும் நமக்கு இருக்க வேண்டும்.
* யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதே முற்பிறவியிலும், இப்பிறவியிலும் துன்பங்களைப் போக்குவதற்கான வழியாகும். 
* தானம் கொடுப்பது மிகவும் நல்ல செயல் தான். ஆனால் நான் ஏழை எளியவர்களுக்கு தானம் அளித்தேன் என்ற எண்ணத்தை தியாகம் செய்துவிடவேண்டியது மிகவும் அவசியம். 
* திருமணங்களில் நடக்கும் ஆடம்பரங்களும், வரதட்சணை வாங்குவதும் நமது சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு விரோதமானவை தான். வரதட்சணை நாமாகக் கேட்டாலும், பெண் வீட்டாரே கொடுத்தாலும் அது திருட்டுச் சொத்து மாதிரித் தான் என்பதை உணரவேண்டும். 
* சைவ உணவு சாப்பிடுவதால் நமக்கு சாந்தகுணம் உண்டாவதோடு, இன்னொரு உயிருக்கு நம்மால் இம்சை ஏற்படாமல் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். 
-காஞ்சிப்பெரியவர்
முடிந்த சேவையைச் செய்வோம்
ஜூன் 01,2010,
10:06  IST
* கல்வியின் பயன் நாம் அடக்கமுடையவர்களாக இருப்பது தான். ஆனால், நேர்மாறாக அகங்காரம் கொண்டவர்களாக பிள்ளைகள் வளர்வது பெருங்குறையாகும். பரம்பொருளான கடவுளைப் பற்றி அறிந்து கொள்வதே பயனுள்ள கல்வி.
* நமஸ்காரம் செய்வதைத் "தண்டம் சமர்ப்பித்தல்' என்று சொல்வார்கள். இந்த உடம்பு நம்முடையது அல்ல, கடவுளுடையது என்ற எண்ணத்துடன் கீழே விழுவது தான் சாஷ்டாங்க நமஸ்காரம். 
* அகிம்சையைப் பின்பற்றினால், நாம் இருக்கும் இடத்தில் சாந்தமும் தெய்வீகமும் தவழத் தொடங்கும்.
* வாக்கினாலும், மனத்தினாலும், உடம்பாலும் பாவங்கள் செய்து வருகிறோம். மாறாக புண்ணியசெயல்களைச் செய்து நம் பாவத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும். நன்மைகளைச் செய்வதற்குத் தான் நமக்கு பிறவியைக் கடவுள் கொடுத்திருக்கிறார். 
*அனாதைப் பிள்ளைகளை ஆதரிப்பது, வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவிசெய்வது, பிராணிகளைப் பராமரிப்பது,குறிப்பாகப் பசுவை பாதுகாப்பது, பசித்தவர்களுக்கு அன்னமிடுவது இப்படி எந்தவிதத்திலாவது நாம் முடிந்த சேவைகளைச் செய்யவேண்டும்.
-காஞ்சிப்பெரியவர்
நிலையான இன்பம் எது?
மே 29,2010,
15:05  IST
* எந்தச் செயலையும் அதற்குரிய தர்மத்துடன் முறையாகச் செய்ய வேண்டும். முறை பிறழும் போது, அதற்கான பின்விளைவை ஏற்றுத் தான் ஆகவேண்டும். 
* நமக்கு நியாயமாகத் தோன்றுவது இன்னொருவருக்கு அநியாயமாகத் தெரியலாம். அதனால், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான நியாயத்தைச் செய்வது தான் நல்லது.
* நிலையான இன்பம் என்பது கடவுளிடம் கொள்ளும் பக்தி மட்டுமே. ஆசாபாசங்களில் நாட்டம் உள்ள வரை அனைவருக்கும் கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். 
* ஒருவனுக்கு பணமும், பதவியும் இருக்கும்போது உண்டாகும் சுகத்தைவிட, அதைப் பாதுகாக்கவேண்டும், பதவி போய்விடக்கூடாது என்ற எண்ணம் தான் அதிகமாக இருக்கிறது.
* உலகில் இருப்பவர்கள் எல்லாருமே, தாங்களே மகாபுத்திசாலி, ஒழுக்கமுள்ளவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல தன்னைப் போல கஷ்டப்படுபவர்களும் வேறு யாருமில்லை என்றும் எண்ணிக் கொள்கிறார்கள்.
* நம் கோபம் எதிராளியை மாற்றாது. மாறாக நம் மீது மேலும் எதிர்ப்பை வளர்க்க செய்யும். அதனால், கோபம் இரு தரப்பிலும் வெறுப்பினை அதிகரிக்கவே செய்கிறது. 
-காஞ்சிப்பெரியவர்


வயிற்றுக்கும் ஓய்வு தேவை
மே 21,2010,
15:05  IST

* உணவு உண்ணாமல் விரதம் இருப்பதால் ஆரோக்கியம் போய்விடும் என்று நினைப்பது அறியாமை. உண்மையில் விரதத்தால் உடம்பில் இருக்கும் நோய்கள் விலகுகின்றன. விரதம் என்பது தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும், பயிற்சியினால் பழகிவிடலாம்.
* தொடக்கத்தில் இன்பமாக இருப்பது முடிவில் துன்பமாக அமையும். விரதத்தால் உடம்பு வாடுவது போல இருந்தாலும் அதன் பலன் நாளடைவில் மனதளவிலும், உடலளவிலும் அதிகரிப்பதை உணரமுடியும்.
* உபவாசம் என்றால் "அருகில் இருப்பது' என்று பொருள். கடவுளோடு பக்கத்தில் ஒட்டிக் கொண்டு இருப்பதாகும். வயிற்றில் ஒன்றுமே இல்லாவிட்டால் மட்டுமே மனம் முழுமையாக கடவுளிடம் ஈடுபாடு கொள்ளும் என்பதாலேயே விரதத்தை நம்மவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
* இயந்திரம் கூடவிடாமல் ஓடிக் கொண்டிருந்தால் பழுதுஅடைந்து விடுகிறது. அவ்வப்போது ஓய்வு கொடுத்து பின்னரே அதனை இயக்குவர். வயிற்றுக்கும் வாரத்தில் ஆறுநாள் வேலை கொடுத்தால் ஒருநாள் ஓய்வு கொடுக்கவேண்டியது அவசியமாகும்.
-காஞ்சிப்பெரியவர்

தப்பு செய்யாதவர் யாருமில்லை
மே 13,2010,
17:01  IST
* குழந்தை குறும்பு செய்தால் பெற்றவர்கள் கட்டிப் போடுகிறார்கள். நம்மிடம் ஆசை என்னும் குறும்பு இருப்பதால் நம்மை இறைவன் கட்டிப் போடுகிறான்.
* எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் உண்மையாக இருப்பவனை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். உண்மையாக இருப்பவன் இறைவன் மட்டுமே.
* நம் சொந்த கஷ்டத்திற்கு நடுவில் சமூகசேவையெல்லாம் தேவையா என்ற எண்ணம் கூடாது. சேவை செய்வதால் சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும்.
* நெருப்பில் விட்ட நெய் தீயை அணைக்காமல் மேலும் வளர்க்கவே செய்யும். அதுபோல மனதில் எழும் ஆசையும் மேலும் வளரவே செய்கிறது.
* தர்மவழியில் நடப்பவனை பிராணிகள் கூட ஆதரிக்கும். அதர்ம வழியில் நடப்பவனுக்கு உலகமே எதிரி தான்.
* நம்முடைய துன்பத்தையே நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம்மை விட துன்பப்படுபவர்கள் எத்தனையோ பேர் உலகில் இருக்கிறார்கள். 
* யார்மீதும் கோப்பட நமக்கு தகுதி இல்லை. ஏனென்றால், உலகில் தப்பே செய்யாதவர் என்று ஒருவர் கூட இல்லை.
-காஞ்சிப்பெரியவர்

நல்ல நாளாக அமையட்டும்
மே 08,2010,
11:02  IST
* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். அன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
* புண்ணிய நதிகள், கோமாதா, சிரஞ்சீவிகள், மகான்கள் முதலியோர்களை ஒரு நிமிட நேரமாவது பக்தியோடு நினைப்பது அவசியம். 
* வாரம் ஒருமுறையாவது வீட்டுக்கு அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது நல்லது. 
* அக்கம் பக்கத்து வீட்டினரையும் உறவினர் போல நேசிக்க வேண்டும். சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பறவைகளுக்கோ சிறிது அளவு உணவிட்ட பிறகே சாப்பிடுங்கள்.
* தூங்கும் முன் அன்று நாம் செய்த செயல்களை சிறிது நேரம் மனதில் சிந்திக்கவேண்டும். நன்மையைச் செய்தால் அதுபோல் மேலும் பல நன்மைகளைச் செய்யும் வாய்ப்பை இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். தீமையைச் செய்தவர்கள் இனிமேலாவது செய்யாமல் இருக்கும் மனவுறுதியை பெற முயற்சிக்க வேண்டும்.
* இஷ்ட தெய்வத்தின் நாமத்தை அன்றாடம் 108 முறையாவது ஜபித்து வருதல் வேண்டும். இதனால், மனத்தூய்மை உண்டாகும். 
-காஞ்சிப்பெரியவர்
பேச்சைக் குறைப்பது எப்படி?
ஏப்ரல் 30,2010,
09:45  IST
* தொண்டு செய்வதால் நமக்கென்ன பயன் என்று எண்ணுகிறார்கள். ராமாயண அணில் நமக்கெல்லாம் உதாரணம். பாலம் செய்யும் பணியில் தன்னால் முடிந்த மணலைக் கொண்டு சேர்த்த அணிலைப் போல நம்மால் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும்.
* கடவுள் அருள் என்பது எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது. ஆனால், நம் மனம் கல்லாக இருந்தால், நீருக்குள் இருக்கும் கல் போல நம்மால் இறையருளை உணர முடிவதில்லை.
* நம் வேலையை நாமே செய்து கொள்வதை கவுரவக் குறைச்சலாக நாம் நினைக்கிறோம். உண்மையில், நம் வேலையை நாம் அடுத்தவரிடம் செய்யச் சொல்வது தான் கவுரவக் குறைச்சல். 
* குடும்பத்தை புறக்கணித்துவிட்டு சேவை செய்வதால் பயனில்லை. குடும்பத்திற்கு சேவை செய்வது தான் முதல் கடமை. பெற்ற தாயை பிச்சை எடுக்கச் செய்துவிட்டு கோதானம் செய்வதெல்லாம் அதர்மம். 
* எண்ணத்தை நிறுத்தப் பழகினால் மட்டுமே வேண்டாத பேச்சுக்களை நம்மால் குறைத்துக் கொள்ள முடியும். எண்ணமும் பேச்சும் கட்டுக்குள் வந்தால்தான் பயனுள்ள செயல்களில் நம் கவனம் செல்லத்துவங்கும். 
-காஞ்சிப்பெரியவர்


மனதில் உறுதி வேண்டும்
ஏப்ரல் 25,2010,
12:51  IST

* நாம் அனைவரும் இறைவனைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். பரம்பொருளைத்தவிர, வேறெதுவுமே உலகில் நிலையானது அல்ல என்பதை உணர்வதே ஞானம்.
* வாழ்வில் இன்பங்களை எல்லாம் வெளியுலகில் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். அவை எல்லாம் நம்மை மயக்கக் கூடியவை. என்றென்றும் பூரண இன்பம் தருபவர் கடவுள் மட்டுமே.
* குழந்தைப் பருவத்தில் இருந்தே தியானம் செய்யப் பழகினால், பாவ எண்ணங்கள் நம் மனதில் உற்பத்தியாவதைத் தடுத்து உயர்ந்த நிலையை அடையலாம்.
* உலகில் யாரும் பாவியாக இருக்க விரும்புவதில்லை. ஆனால், பாவச்செயல்களையே நாம் செய்து வருகிறோம். பலன் மட்டும் புண்ணிய பலன்களை பெற விரும்புகிறோம். மன உறுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே பாவங்களில் இருந்து முற்றிலும் விடுதலை பெறலாம்.
* அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகின்றபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு, அடுத்த நிமிஷமே நிழல்வந்து மூடிக்கொள்வது போல, உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் இன்பம் தலைகாட்டிவிட்டு ஓடிவிடுகிறது.
-காஞ்சிப்பெரியவர்



குடிநீர் சிக்கனம் வேண்டும்
ஏப்ரல் 13,2010,
14:01  IST
* மனிதனாகப் பிறப்பதன் நோக்கமே மக்களுக்கு சேவை செய்வது தான். சேவை செய்வது என்பது நமக்கு சம்பந்தமில்லாதவர்களுக்கு செய்வது தான் என்பதில்லை. நம் குடும்பத்திற்கு செய்வதும் சேவை தான் என்பதை உணர வேண்டும்.
* சிக்கனமாய் இருப்பதை கருமித்தனம் என்று சொல்லக்கூடாது. பணம் தான் என்றில்லாமல் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு விஷயத்திலும் சிக்கனம் தேவை. குடிக்கும் தண்ணீரைக்கூட அளவோடு பயன்படுத்துவது மிகவும் நல்லது. 
* வாழ்க்கைக்கு எது அவசியமோ அதை மட்டும் விரும்பவேண்டும். மற்றவற்றை சிறிதும் அனுபவிக்க ஆசைப்படக்கூடாது. 
* பிறரது குற்றங்குறைகளை மட்டுமே பெரிதுபடுத்திப் பார்ப்பது சிலரது இயல்பாக இருக்கிறது. மற்றவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களை மட்டுமே காணும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
* ஒவ்வொரு நாளும் பத்து நிமிஷமாவது வழிபாட்டுக்காக ஒதுக்க வேண்டும். குடும்பத்தோடு அமர்ந்து வழிபாடு செய்வது சிறப்பு. பக்திக்கு தேவை மனம் தானே தவிர பணம் அல்ல.
-காஞ்சிப்பெரியவர்

பொருளற்ற பேச்சு வேண்டாம்
ஏப்ரல் 09,2010,
09:50  IST
* உடம்பில் உள்ள உறுப்புகளில் வாய்க்குத் தான் அதிகமான வேலை கொடுக்கிறோம். சாப்பிடுவது மட்டுமின்றி பேசுவது என்று இரு செயல்களில் வாய் ஈடுபடுகிறது. 'வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி' என்பார்கள். இதில் சாப்பாடு, பேச்சு என்ற இரண்டு விஷயங்களும் அடங்குகின்றன. 
* நடைமுறையில் நாம் தேவைக்கு அதிகமாக வாய்க்கு வேலை கொடுக்கிறோம். நொறுக்குத்தீனி, பானம் என்று ஏதாவது ஒன்றை நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். வெறுமனே பொருள் இல்லாமல் பேசிக்கொண்டே இருக்கிறோம். இவ்விரண்டுமே நம்மை வேண்டாத பிரச்னைகளில் தள்ளிவிடும். 
* பேசுவதாக இருந்தால் கடவுளைப் பற்றி பேசுங்கள். பக்திப் பாடல்களைப் பாடுங்கள். நாமஜெபம் செய்யுங்கள். இல்லாவிட்டால் மவுனமாக இருக்கப் பழகுங்கள். அதுபோல சாத்வீகமான நல்ல உணவுவகைகளை மிதமாக எடுத்துக் கொள்ளுங்கள். 
* மவுனப்பயிற்சியும் , விரதமும் நமக்கு கைகூடும்போது, மனம் கடவுளோடு ஒன்றுவதை நம்மால் உணரமுடியும். தினமும் அரைமணிநேரமாவது தியானம் பழகுவது மவுனவிரதத்திற்கு உதவியாக இருக்கும். 
-காஞ்சிப்பெரியவர்


அன்பால் பிறரைத் திருத்துவோம்
ஏப்ரல் 01,2010,
16:50  IST
* மனிதனைப் பாவத்தில் தள்ளிவிடும் சக்தி ஆசைக்கும், கோபத்திற்கும் உண்டு என்று கிருஷ்ணர் பகவத்கீதையில் குறிப்பிடுகிறார். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று இணை பிரியாதவை.
* ஒருவனைப் பாவி என்று வெறுக்கும்போது, நாம் என்ன, பாவம் என்பதே செய்யாதவர்களா, என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். பாவச்செயல்களைச் செய்யாவிட்டாலும் மனதிலாவது நினைக்கத் தான் செய்கிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
* நம் கோபத்தால் எதிராளியின் குணத்தை மாற்ற முடியாது. இருவருக்குமிடையே மேலும் கோபம் வளரத் தான் செய்யும். கோபத்தால் ஒருவரைப் பணியச் செய்வதில் நமக்குப் பெருமையில்லை. அன்பால் குறையைத் திருத்தி நல்வழிப்படுத்துவதே சிறந்தது.
* பெரும்பாலும் கோபம் கொள்வதால் நமக்கு நாமே பெரும் தீங்கு செய்தவர்களாகிறோம். ஆத்திரம் கொள்வதால் நம் உடலும் மனமும் பலவீனமடைகின்றன.
* அன்பாக இருப்பதே நம்முடைய இயல்பான குணம். அன்பால் நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவருக்கும் ஆனந்தம் உண்டாகும். இதையே அன்பே சிவம் என்று குறிப்பிட்டனர்.
-காஞ்சிப்பெரியவர்
படித்தவர்களுக்கு அடக்கம் வேண்டும்
மார்ச் 23,2010,
13:37  IST
* கல்வியின் பயன் உலகத்தை இயக்குகின்ற ஆண்டவனைத் தெரிந்து கொள்வது தான். ஆனால், இந்தக் காலத்தில் படிப்பவர்கள் பலபேருக்குத் தெய்வபக்தி என்பதே இல்லாமல் போய்விட்டது. 
* கல்வி கற்றதன் அடையாளமே அடக்கம் தான். பெரியவர்களைக் கண்டால் வணக்கம் சொல்லவேண்டும் என்பதை பிள்ளைகளுக்குக் கற்றுத்தரவேண்டும்.
* பெண்ணுக்கு இயல்பிலேயே அடக்கவுணர்வு அதிகம். கல்வி கற்கும்போது அது இன்னும் அதிகமாக வேண்டுமே ஒழிய குறையக்கூடாது. ஆனால், படித்த பெண்களுக்கு அடக்கம் என்பது அறவே இல்லாமல் போய்விடுவது பெருங்குறையே.
* அதிகமாகப் படித்துவிட்டோம் என்று பலர் அகங்காரத்தோடு நடந்து கொள்வது சரியல்ல. கல்வி குணத்தை உயர்த்துவதற்காகத்தானே தவிர, குணத்தை கெடுப்பதற்காக அல்ல.
* குருகுலக்கல்வி மீண்டும் நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், நம் பழைய முறையின் பின்னணியை மறக்காமல், அடக்கம், பணிவு, தூய்மை, குருபக்தி உள்ள குழந்தைகளை வளர்க்கவேண்டியது இன்றைய ஆசிரியர்களின் கடமையாகும். 
-காஞ்சிப்பெரியவர்

கோபம் மனதிற்கு தீங்கு தரும்
மார்ச் 19,2010,
14:09  IST
* பணத்தை சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று எண்ணி நாம் போட்டி பொறாமையை மனதில் வளர்த்துக் கொள்கிறோம். ஆனால், பணக்காரர்கள் பெரும்பாலும் மனநிம்மதி இழந்தவர்களாகவே வாழ்கிறார்கள். 
* கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம் நம் மனக்குறையைச் சொல்லி வருந்துவது நல்ல குணமல்ல. கருணைக்கடலான கடவுளிடம் உங்கள் குறைகளை முறையிட்டு வாருங்கள். நிச்சயம் மனஅமைதி கிடைக்கும். 
* வெளியில் இருந்து கிடைக்கும் ஆனந்தம் நிலையானதல்ல. உனக்குள்ளே ஆனந்தம் குடிகொண்டிருக்கிறது. அதை உணரத் துவங்கிவிட்டால் உன் வாழ்க்கை உயர்வு பெறும்.
* மனதை பாவங்களில் தள்ளிவிடுவது வேண்டாத ஆசை தான். ஆசை வயப்பட்டு மனிதர்கள் நியாய அநியாயங்களைப் புறக்கணிக்கிறார்கள்.
* மனிதனாகப் பிறந்தவன் எவ்வளவோ பாக்கியங்களைப் பெற்று வாழ்ந்தாலும், பிறருக்கு சேவை செய்வது மகிழ்வதே மேலான பாக்கியமாகும். ஏழையின் பசியைப் போக்கினால் ஆண்டவன் மனம் குளிரும். 
* கோபத்தால் யாரையும் திருத்த முடியாது. கோபப்படுவதால் நம் உடலுக்கும் மனதிற்கும் தீங்கு உண்டாகிறது. 
-காஞ்சிப்பெரியவர்

'நான் சிறியவன்' என்றுஎண்ணுங்கள்
மார்ச் 12,2010,
12:43  IST
* சிக்கனம் என்ற பெயரில் தானும் அனுபவிக்காமல், பிறரையும் அனுபவிக்கவிடாமல் கருமியாய் இருக்கக்கூடாது. செலவாளியாக இருப்பவன் பணத்தை எல்லாம் வேண்டாத ஆசைகளுக்காக செலவழித்து விட்டு கடனாளியாகிவிடக் கூடாது.
* நாலுபேர் நம்மைப் புகழவேண்டும் என்பதற்காக பலரும் சமூகசேவை செய்கிறார்கள். சேவை என்றால் வீட்டுக்கும் நாட்டுக்கும் தொண்டு செய்யவேண்டும் என்ற உணர் வோடு தன்னால் முடிந்த பணிகளைச் செய்வதாகும்.
* தொண்டு செய்பவன், தன்னை பெரியவன் என்று நினைத்து, தலைக்கனம் கொண்டு அலைவதில் பயனில்லை. இன்னும் சொன்னால், "நான் சிறியவன்' என்ற எண்ணம் வேண்டும்.
* சங்கீத ஞானம் இருந்தால் தான், கடவுளைப் பற்றி பாடமுடியும் என்பதில்லை. ஆண்டவன் மீது அன்புணர்வுடன் பாடினாலே போதும். இறைவன் நம் பக்தியை ஏற்றுக் கொள்வான்.
* பணத்தில் மட்டும் நாம் கணக்காய் இருக்க எண்ணுகிறோம். பொருளை வீணாகச் செலவழித்தால் வருத்தப்படுகிறோம். ஆனால், காலத்தை தேவையில்லாமல் வீணாக்கி விடுகிறோம். அதை முறையாகப் பயன்படுத்துவது அவசியம்.
-காஞ்சிப்பெரியவர்
ஒரே இறைவனுக்கு பல வழிபாடுகள்
பிப்ரவரி 26,2010,
15:06  IST
* நம்முடைய வீடுகளில் பலவிதமான வடிவங்களில் கடவுளை வழிபாடு செய்கிறோம். கடவுளுக்கு இத்தனை பெயர்கள் உண்டா என்பதும், அவரின் உண்மைத் தன்மையை உணர இத்தனை வடிவங்கள் தேவையா என்பதும் நம் மனதில் சந்தேகமாகத் தோன்றும். உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் உலகில் இல்லை. இருப்பவர் ஒருவர் தான். இன்னும் சொல்லப்போனால் நம் உயிரும் கூட அவரின் ஒரு வடிவம் தான். இவ்வுலகத்தை நடத்தும் பெரிய சக்தியாக இருந்து அவரே நம்மை வழிநடத்துகிறார்.
* நம் மண்ணில் தோன்றிய மகான்கள், ஒரே கடவுளையே பல வடிவங்களாக வழிபட்டு, அவரவருக்குரிய வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தி விட்டார்கள். இந்த முறைகள் அவர்களின் அனுபவத்தின் வாயிலாக கண்டறியப்பட்டவை. அம்முறைகளில் நமக்கு பிடித்ததைப் பின்பற்றினால் நாமும் அவர்களைப் போலவே, ஆண்டவனின் அருளைப் பெறமுடியும். நமது இஷ்டதெய்வ வழிபாட்டினைத் தொடர்ந்து செய்யும்போது, நமக்கென்று தனியான மனப்போக்கு தேவையில்லை என்ற நிலை உருவாகும். அப்போது, இருப்பது ஒரே கடவுள் தான் என்ற உறுதிநிலையைப் பெற்றுவிடுவோம்.
- காஞ்சிப்பெரியவர்

ஆசைப்படாமல் வாழ்வோம்
பிப்ரவரி 19,2010,
12:08  IST
* பகவத்கீதையின் அடிப்படையே அர்ப்பணமாக கடமையாற்றுவது தான். எந்தச் செயலைச் செய்தாலும், அதை காமகுரோதம் இல்லாமல் தூய உள்ளத்தோடு கடவுளுக்கு அர்ப்பணமாகச் செய்ய வேண்டும். அதனால் நமக்கு நல்லறிவு உண்டாகும்.
* ஓரிடத்தில் ஒருவருக்கு ஒரு செயல் நியாயமாக தோன்றும். அதே செயல் வேறோரிடத்தில் இன்னொருவருக்கு மற்றொன்று நியாயமானதாக இருக்கும். இருந்தாலும், எல்லோருக்கும் பொதுவான நியாயம் என்று ஒன்று உண்டு. அதைப் பின்பற்றுவது தான் சிறந்ததாகும்.
* நமக்கு எல்லாவற்றிலும் அஞ்ஞானம் இருக்கிறது. நாம் செய்யக் கூடாத செயல்களை தெரிந்து கொண்டிருந்தாலும் பல சமயங்களிலும் செய்யவே முற்படுகிறோம். அஞ்ஞானம் வியாதி போன்றது . இந்த வியாதிக்கு மருந்து ஞானம் தான். அந்த ஞானத்தை ஞானமே வடிவான அம்பிகையே நமக்கு அருள் செய்கிறாள்.
* பணம் நிறைய இருந்தாலும் கவலை; போனாலும் துக்கம் உண்டாகிறது. உலக இன்பங்கள் எல்லாமே அப்படித்தான். அவற்றுக்கு ஆசைப்படாமல் வாழப்பழகிக் கொள்ளவேண்டும். அதனால் மனதில் முழுமையான அமைதியும் ஆனந்தமும் உண்டாகும்.
-காஞ்சிப் பெரியவர்
தியானம் பழகுங்கள்
பிப்ரவரி 09,2010,
09:29  IST
* மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும்<<, யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும்.
* செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்டாலும் நாள்தோறும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* குழந்தைப் பருவத்திலிருந்தே தியானத்தை பழகினால், பாவங்களில் ஈடுபடாமல் நல்ல விஷயங்களை நாடும் மனநிலை உண்டாகும். அநாவசியமாக எவ்வளவோ காலத்தை நாம் வீணடித்திருக்கிறோம். அதனால், தியானம் செய்வதை அடிப்படை கடமையாகக் கொள்ள வேண்டும்.
* வாக்கினாலும், மனத்தினாலும், கைகால் முதலியவற்றாலும் பாவங்கள் செய்து இருக்கிறோம். அந்தப் பாவங்களை எல்லாம் அதே வாக்காலும், மனதாலும், கைகால் முதலியன கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிடும் மனவுறுதியை தியானத்தால் மட்டுமே பெற முடியும்.
-காஞ்சிப்பெரியவர்

கடவுள் மகாசக்தி படைத்தவர்
ஜனவரி 17,2010,
14:47  IST
* ஒரு வீட்டைப் பார்த்தால் அதைக் கட்டியவன் ஒருவன் இருக்கவேண்டும் என்று சொல்கிறோம். இன்ன இன்ஜினியர் இதைக்கட்டினார் என்று அறிகிறோம். ஒரு வண்டியைப் பார்த்தால் அதை உருவாக்கியவன் இன்னார் என்று கூறுகிறோம். தாமாக எப்பொருளும் உருவாவதில்லை. ஒழுங்குக்கு கட்டுப்பட்டு உருவாகி இருக்கும் எப்பொருளையும் செய்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று உணர்கிறோம்.
* எத்தனையோ ஒழுங்குகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தை செய்வதற்கும் ஒருவன் இருக்கத்தானே வேண்டும்! பஞ்சபூதங்களை ஒன்று சேர்த்து உருவாக்கி அமைத்திருக்கும் இயற்கையை இயக்க ஒரு மகாசக்தியாகிய பேரறிவாற்றல் இருக்கவேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
* அழகழகான வண்ணமலர்களுக்கு உருவம் கொடுத்த மலரச் செய்வது யார்? அத்தனை மலைகளையும் ஒரு கதியில் நிலைத்து இருக்கச் செய்தது யார்? நட்சத்திரங்களையும், கோள்களையும் ஒழுங்கான கதியில் சுழலச்செய்தது யார்? இப்படி எத்தனையோ கேள்விகளுக்கும் விடையாக இருப்பது ஒரே மகாசக்திதான் காரணம் என்பது நமக்குப் ரிகிறது. அந்த மகாசக்திக்கு, பேராற்றலுக்கு, பேரறிவிற்குப் பெயர் தான் கடவுள்.
-காஞ்சிப்பெரியவர்
பேச்சில் நிதானம் தேவை
டிசம்பர் 31,2009,
14:46  IST
* நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள். கண்ட இடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை.
* பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில் செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தருகிறார்.
* மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும். மனம் அடங்கக் கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பதுபோல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும்.
* சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது. மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியே உண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும், வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.
* பேசும்போது வளவள என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதைக் காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
காஞ்சிப்பெரியவர்
எதற்கும் அளவு வேண்டும்
நவம்பர் 29,2009,
15:07  IST
* பணம்,பேச்சு, நாம் செய்யும் செயல் எல்லாவற்றிலும் அளவுடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது தீமைகளைத் தருகின்ற செயல்களைச் செய்யவே கூடாது. 
* சத்தியம் என்றால் வாக்கும், மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம் ஆகும். 
* போட்டி பொறாமை இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவு உண்டாவதில்லை. தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால் வேண்டாத செயல்களைச் செய்து பின்னர் அவதிப்பட நேரிடும்.
* தர்மம், நீதி என்னும் இரண்டும் சேர்ந்து தான் பண்பு உண்டாகிறது. மனசில் உள்ள அசுத்தங்கள் நீங்கினால் அது தானாகவே பரமாத்மாவின் மீது திரும்பி விடும். 
* பெரும்பாலும் நம்முடைய கோபத்தினால் நமக்கே தீங்கு செய்தவர்களாகிறோம். கோபத்தினால் நமக்கும் நன்மையில்லை. மற்றவர்களுக்கும் நன்மை இல்லை. 
* பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். 
* முதலில் வெளி அடக்கம் உண்டானால் தான் கொஞ்சம் கொஞ்சமாக உள் அடக்கம் சித்திக்கும். எங்கிருந்தாலும், எந்தப் பணி செய்தாலும் பகவானின் குணங்களைக் கேட்பதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.
-காஞ்சிப் பெரியவர்

நம்மையே அவரிடம் கொடுப்போம்
நவம்பர் 15,2009,
13:36  IST
* இறைவனுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கவே கோயில்களை அமைக்கிறோம். ஆனால், பொதுவாக நம் குறைகளை நிவர்த்தி செய்து தரும்படியே பகவானிடம் வேண்டிக்கொள்கிறோம். சில சமயங்களில் நிவர்த்தி உண்டாகிறது. சில சமயங்களில் நம் விண்ணப்பம் நிறைவேறுவதில்லை. 
* நாம் பிரார்த்தனை செய்தும் பலனில்லை என்றால் கடவுளுக்கு கருணை இல்லையா என்று தோன்றும். நம் பூர்வ ஜென்மவினைப் பயனால் தான் துன்பம் ஏற் படுகிறது. பகவான் நாம் விரும்பும் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தால், மேலும் மேலும் அது வேண்டும் இது வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம்.
* விருப்பங்கள் நிறைவேற நிறைவேற, ஆசைகள் பெருகிக்கொண்டே இருக்கும். அதே நேரம், தம்மிடம் நம்பிக்கை இருக்கும்படியாக செய்வதற்காக, இறைவன் அவ்வப்போது, நம் விருப்பங்களை நிறைவேற்றியும் தருவார்.
* பகவானிடம் நம் விருப்பங்களை வேண்டி நிற்பதில் மேலான ஒரு நன்மை இருக்கிறது. ஆரம்பத்தில் நம் மனக்குறைகளை பகவானிடம் சொல்வதால் நமக்கு மனநிம்மதி உண்டாகிறது. நாம் சாமான்யர்களாக இருக்கும்வரையில் நம் குறைகளை நிவர்த்திக்க பிரார்த்திப்பதும், நமக்கான விருப்பங்களையும், வரங்களையும் வேண்டிக்கேட்பதிலும் தவறொன்றும் இல்லை. வெறும் குறைகளையும், வரங்களையும் மட்டுமே கேட்கத் தொடங்கிய நாம் இறுதியாக சரணாகதி நிலைக்கு தயாராகி நம்மையே அவரிடம் கொடுப்பதற்காகத் தான். 
-காஞ்சிப்பெரியவர்

மவுனம் நல்ல உபாயம்
நவம்பர் 05,2009,
16:39  IST
* மற்ற எந்த உறுப்பையும் விட, வாய்க்குத்தான் வேலை அதிகம். ருசி பார்ப்பது, அதாவது சாப்பிடுவது மற்றும் பேசுவது என்று அதற்கு இரண்டு செயல்கள் இருக்கின்றன. அதனால், நாக்கு இரண்டு செயல்பாடுகளைக் கொண்டதால் முறையாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
* வாயில் வந்ததையும், கண்டதையும் பேசுவது கூடவே கூடாது. பிறரைக் கெடுக்கும் நோக்கத்தில் பேசாமல் பகவத்விஷயத்தையும், நல்ல சத்விஷயங்களை மட்டுமே பேசுதல் வேண்டும். 
* மனதைக் கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு இந்திரியத்தையும் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். அதில் வாயைக் கட்டுவது மிக முக்கியமானது. வாயைக் கட்டுவது என்றால் சாப்பாட்டிலும் கட்டவேண்டும். பேச்சிலும் கட்ட வேண்டும் என்று பொருளாகிறது.
* மவுனம் கலகம் நாஸ்தி என்பார்கள். மவுனத்தை கடைப்பிடித்தால் நமக்கு நல்லது மட்டுமல்ல. இந்த சமூகத்திற்கே மிகவும் நன்மை தருவதாகும். எல்லாவிதமான நன்மைகளையும் பெற்றுத்தரும் நல்ல உபாயம் மவுனமே என்றால் மிகையில்லை. 
* வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி என்னும் போதே பேச்சு, சாப்பாடு இரண்டையும் கட்டுப்படுத்துவது அவசியம் என்று தெரிகிறது. ஆனால், நாமோ நேர்மாறாகப் பண்ணுகிறோம். இரண்டு விதங்களிலும் நாக்குக்கு வேலை அதிகமாகக் கொடுக்கிறோம். 
காஞ்சிப்பெரியவர்

நமக்குள்ளே ஆனந்தம்
செப்டம்பர் 29,2009,
14:16  IST
* சுற்றியுள்ள கயிற்றை அவிழ்ப்பதற்கு ஒருவழி தான் உண்டு. எப்படிச் சுற்றினோமோ அப்படியே மறுபடியும் திருப்பி அவிழ்க்க வேண்டும். அதைப் போலவே தவறான செயல்களை நற்செயல்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் போக்கிக் கொள்ள வேண்டும்.
* தானம், தர்மம், கடமை புரிதல், பகவந்நாமாக்களை உச்சரித்தல், திருக்கோயில்களைத் தரிசித்தல் ஆகிய நல்லசெயல்கள் பாவம் தொலைக்கும் வழிகளாகும்.
* மனத்தினால் செய்த பாவங்களை மனத்தாலும், கைகள், கால்களால் செய்த பாவங்களை அந்த உறுப்புக்களினாலும் மட்டுமே தீர்க்க முடியும்.
* வெளியில் இருந்து வரும் பொருள்களில் தான் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணி அவற்றைச் சுற்றியே மனிதன் துரத்திக் கொண்டு ஓடுகிறான். வெளியில் இருப்பது எதுவும் நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும். போனாலும் போகும். நமக்குள்ளே ஆனந்தம் இருப்பதை மனிதன் மறந்து விடுகிறான். 
* நமக்குள் இருக்கும் மகிழ்ச்சி பெரிய சமுத்திரம் போன்றது. புறவுலகில் இருக்கும் இன்பம் அனைத்தும் ஒரு நீர்த்துளி போன்றது தான். பதவி, பணம், பெயர், புகழ் என்று வெளியில் நாம் எதிர்பார்க்கும் எல்லாமே ஒரு சொட்டுத் தண்ணீர்தான். இதை முற்றிலும் உணர்ந்த ஞானிகள் வெளி இன்பத்தைத் தேடி அலைவதில்லை.
காஞ்சிப்பெரியவர்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக