ராதே கிருஷ்ணா 25-11-2011
மகாபாரதம் (முதல் பாகம் )
மகாபாரதம் பகுதி-1
மகாபாரதம் பகுதி-2
மகாபாரதம் பகுதி-3
மகாபாரதம் பகுதி-4
மகாபாரதம் பகுதி-5
மகாபாரதம் பகுதி-6
மகாபாரதம் பகுதி-7
மகாபாரதம் பகுதி-8
மகாபாரதம் பகுதி-9
மகாபாரதம் பகுதி-10
மகாபாரதம் பகுதி-11
மகாபாரதம் பகுதி-12
மகாபாரதம் பகுதி-13
மகாபாரதம் பகுதி-14
மகாபாரதம் பகுதி-15
மகாபாரதம் பகுதி-16
மகாபாரதம் பகுதி-17
மகாபாரதம் (முதல் பாகம் )
மகாபாரதம் | |
மகாபாரதம் பகுதி-1நவம்பர் 08,2010
கதைக்குள் செல்லும் முன்...
மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு கதாசிரியர், தன்னையும் ஒரு பாத்திரமாக இந்த காவியத்தில் இணைத்துக் கொண்ட பெருமை ... மேலும்
மகாபாரதம் பகுதி-2நவம்பர் 13,2010
நஹூஷன் பாம்பாக மாறிய பிறகு, அவனது மகன் யயாதி பொறுப்பேற்றான். அவன் அழகிலும், வீரத்திலும் சிறந்தவன். இவனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவென்றால், இவனுக்கு கோபமே வராது. இவனது ...மேலும்
மகாபாரதம் பகுதி-3நவம்பர் 13,2010
வந்தவன் வேறு யாருமல்ல. யயாதி ஆசைப்பட்டு மணந்து கொண்ட சன்மிஷ்டையின் மகன் பூரு தான்!அப்பா! தாங்கள் அழ வேண்டிய அவசியம் என்ன? உங்களுக்கு உதவுவதற்கு இந்த மகன் எப்போதுமே தயாராக ... மேலும்
மகாபாரதம் பகுதி-4நவம்பர் 13,2010
கங்காதேவி பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்த சந்தனு, பெண்ணே! நீ கன்னியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு அழகுக்கன்னியை நான் என் வாழ்நாளில் பார்த்ததும் ... மேலும்
மகாபாரதம் பகுதி-5நவம்பர் 13,2010
மன்னா! கங்காவாகிய நான் ஒருமுறை பிரம்மலோகம் சென்றேன். அங்கே பல தேவர்களும் இருந்தனர். அங்கிருந்த வாயுபகவான் தேவர்களின் மனவுறுதியைச் சோதிப்பதற்காக ஒரு சோதனை செய்தான். என்னுடைய ...மேலும்
மகாபாரதம் பகுதி-6ஜனவரி 07,2011
மகன் கிடைத்து விட்டான் என்ற சந்தோஷத்திலும், மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் சந்தனு கண்ணீர் விட்டான். கங்காதேவியின் செயலிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், ... மேலும்
மகாபாரதம் பகுதி-7ஜனவரி 07,2011
இளவரசர் தேவவிரதன் வந்திருக்கிறார் என்ற தகவல் செம்படவர் தலைவனுக்கு எட்டியது. அவன் ஓடிவந்து இளவரசனின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான். இளவரசே! தாங்கள் மீன்வாடை வீசும் ... மேலும்
மகாபாரதம் பகுதி-8ஜனவரி 07,2011
நாங்கள் அந்த மீனை தற்செயலாக அறுத்தோம். அதன் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருந்தன. ஒன்று ஆண்; மற்றொன்று பெண். சேதி வம்சத்து மன்னன் வசு அந்த ஆண் குழந்தையைப் பெற்றுக்கொண்டான். அந்த ... மேலும்
மகாபாரதம் பகுதி-9ஜனவரி 07,2011
அம்பா இப்படி சொன்னதும் பீஷ்மர் அவள் மேல் இரக்கம் கொண்டார்.மகளே! காதலை அழிக்கவல்லவர் யார்? காதலைக் கெடுப்பவர்கள் நன்றாக வாழ முடியாது. நீ விரும்பியபடி சாளுவதேசம் செல். உன் காதலனை ... மேலும்
மகாபாரதம் பகுதி-10ஜனவரி 07,2011
பரசுராமருக்கும், பீஷ்மருக்கும் பத்து நாட்கள் கடும் போர் நடந்தது. பீஷ்மரின் பாணங்களை பரசுராமரால் தாங்க முடியவில்லை. தசரத புத்திரன் ராமன் எப்படி அம்பு மழை பொழிவானோ அதுபோல் ... மேலும்
மகாபாரதம் பகுதி-11ஜூலை 18,2011
அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இருளில் பிறந்ததால் அது கரிய நிறமுடையதாகக் காணப்பட்டது. அந்தக் குழந்தை தான் வியாசன். பிறக்கும் போதே அவனுக்கு ஜடாமுடி இருந்தது. பிறக்கும் போதே ... மேலும்
மகாபாரதம் பகுதி-12ஜூலை 18,2011
குழந்தைகள் மூவரும் இளமைப்பருவம் எய்தினர். திருதராஷ்டிரன் பார்வையற்றவன் என்றாலும் கூட, மூத்தவனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற அடிப்படையில் அஸ்தினாபுரத்தின் மன்னர் பதவி ... மேலும்
மகாபாரதம் பகுதி-13ஜூலை 18,2011
குந்தி பணிவுடன் அமர்ந்தாள். அவளுக்கு கிடைத்தற்கரிய மந்திரம் ஒன்றை கற்றுக் கொடுத்தார் துர்வாசர். சாதாரண மந்திரமா அது? மகளே! தேவர்கள் யாராக இருந்தாலும், இந்த மந்திரத்தைக் கேட்ட ... மேலும்
மகாபாரதம் பகுதி-14ஜூலை 18,2011
பெற்ற மகனைப் பார்த்து உள்ளம் பூரித்த அதே வேளையில், குந்திக்கு பயமும் வந்து விட்டது. ஐயோ! தந்தையாருக்கு இது தெரிந்தால் என்னாகும்? குடும்ப மானம் காற்றில் பறக்குமே. சூரியனுக்கு ... மேலும்
மகாபாரதம் பகுதி-15ஜூலை 18,2011
பாய்ந்து சென்ற அம்பு அந்த மான்களை ரத்தச்சேற்றில் தள்ளியது. இரண்டும் உயிருக்கு துடிதுடித்தன. பாண்டுவின் மனைவியர் தன் கணவனின் திறமை கண்டு புளகாகிதமடைந்திருந்த வேளையில், அந்த ... மேலும்
|
மகாபாரதம் | |
மகாபாரதம் பகுதி-16ஜூலை 18,2011
அப்போது காந்தாரியின் வயிற்றில் இருந்த கரு மொத்தமாக கீழே விழுந்து ரத்தம் பெருகியது. காந்தாரி வலியாலும், துக்கத்தாலும் கதறினாள். அவசரப்பட்டு வயிற்றில் அடித்ததற்காக அவள் மனம் ... மேலும்
மகாபாரதம் பகுதி-17ஜூலை 18,2011
இதோடு விட்டானா பாண்டு... குந்தியை அழைத்தான். அன்பே! உன்னளவில் நீ எனக்கு பெரிதும் உதவியிருக்கிறாய். நமக்கு பிறந்த மூவருமே மைந்தர்கள். உன் சகோதரிக்கு (மாத்ரி) என்னால் குழந்தை ... மேலும்
மகாபாரதம் பகுதி-18ஜூலை 18,2011
பரமாத்மா மட்டுமா வந்தார்! அவரது தந்தை வசுதேவர், தாய் தேவகி, குந்தியின் தந்தை குந்திபோஜன் மற்றும் உறவுகளெல்லாம் வந்தனர். பெரிய துக்கமல்லவா! கண்ணனுக்கு குந்தி அத்தை. ஏனெனில், ... மேலும்
மகாபாரதம் பகுதி-19ஜூலை 18,2011
பீமன் மயங்கி விட்டான். இனி அவன் இறப்பது உறுதி என முடிவு செய்த துரியோதனனுக்கு உள்ளத்தில் திடீரென சந்தேகம் ஏற்பட்டது. யாராவது இவனைப் பார்த்து காப்பாற்றிவிட்டால்.... சந்தேகம் ... மேலும்
மகாபாரதம் பகுதி-20ஜூலை 18,2011
துரியோதனனுக்கு கடும் அதிர்ச்சி. இவனுக்கு விஷம் கொடுத்தோம். சாகாவிட்டாலும் பரவாயில்லை. விஷம் தாக்கி கருப்பாகவாவது மாறியிருக்கிறானா? சூரியனைப் போல் செக்கச்செவேலென ... மேலும்
மகாபாரதம் பகுதி-21ஜூலை 20,2011
நண்பனால் வஞ்சிக்கப்பட்ட இந்த துரோணர் தான் பாண்டவ, கவுரவர்களுக்கு குருவாக பொறுப்பேற்கிறார். அவரை கிருபாச்சாரியார் சந்தித்தார். பீஷ்மர் அவரை வணங்கினார். சுவாமி! சிநேகிதன் ... மேலும்
மகாபாரதம் பகுதி-22ஜூலை 20,2011
ஏகலைவா! நீ என் மாணவனாக இருக்க அனுமதிக்கிறேன். நான் நேரடியாக உனக்கு பயிற்சி கொடுக்க அவகாசமில்லை. எனினும், நீ என் மாணவன் தான். என்னை மானசீக குருவாகப் பாவித்து பயிற்சி எடுத்து வா! ... மேலும்
மகாபாரதம் பகுதி-23ஜூலை 20,2011
கேட்பவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் குணம் கொண்டவன். பிறக்கும் போதே காதில் குண்டலமும், மார்பில் கவசமும் கொண்டவன். சந்தர்ப்பவசத்தால் துரியோதனனை நட்பாக்கி கொண்டவன். ... மேலும்
மகாபாரதம் பகுதி-24ஜூலை 20,2011
துருபதனை அவிழ்த்து விட்டான் அர்ஜூனன். அவன் தலைகுனிந்தபடியே அங்கிருந்து பாஞ்சாலம் நோக்கி நடந்தான். செல்லும் வழியில் அவமானம் அவனைப் பிடுங்கித்தின்றது. இந்த துரோணனைக் கொன்றே ... மேலும்
மகாபாரதம் பகுதி-25ஜூலை 20,2011
தந்தையே! நீங்கள் சிரிப்பது எனக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. இது உங்களுக்கு சொந்தமான பூமி. இந்த பூமியை பாண்டவர்களின் வசம் ஒப்படைப்பதில் எந்த நியாயமும் இல்லை. தர்மன் முன்பு போல ... மேலும்
மகாபாரதம் பகுதி-26செப்டம்பர் 27,2011
தர்மரை வரவேற்பது போல் நடித்தான் திருதராஷ்டிரன். மகனே! தர்மா! நீயும் உன் தம்பியரும் தங்கியிருக்க வாராணவத நகரத்தை புதுப்பித்து வைத்திருக்கிறேன். சிறிது காலம் நீ அங்கே சென்று ... மேலும்
மகாபாரதம் பகுதி-27செப்டம்பர் 27,2011
உங்களைக் கொல்ல சதி செய்யப்படுகிறது என்பதை பீமன் புரிந்து கொண்டான். அதை உறுதிப்படுத்தும் வகையில் சிற்பி மேலும் சொன்னான். பீமராஜா! தங்கள் முகக்குறிப்பு உணர்த்துவது சரிதான். ... மேலும்
மகாபாரதம் பகுதி-28செப்டம்பர் 27,2011
பீமன் அவளது பேச்சுக்கு வளையவில்லை. உயிர் போய்விடும் என்பதற்காக கொள்கையை விடுபவர்கள் நாங்கள் அல்ல. மேலும், அரக்கப்பெண்ணான உன்னை ஒரு மானிடன் எப்படித் திருமணம் செய்து கொள்ள ... மேலும்
மகாபாரதம் பகுதி-29செப்டம்பர் 28,2011
பீமன் அவளது பேச்சுக்கு வளையவில்லை. உயிர் போய்விடும் என்பதற்காக கொள்கையை விடுபவர்கள் நாங்கள் அல்ல. மேலும், அரக்கப்பெண்ணான உன்னை ஒரு மானிடன் எப்படித் திருமணம் செய்து கொள்ள ... மேலும்
மகாபாரதம் பகுதி-30செப்டம்பர் 28,2011
உணவு முழுவதையும் தின்று தீர்த்தான் பீமன். பகாசுரனுக்கு ஆத்திரம் அதிகமானது. அடேய் துஷ்டா! இந்த உணவை உட்கொண்ட உன்னை அப்படியே விழுங்கி விடுகிறேன் பார், என்று அருகே நெருங்கினான். ... மேலும்
|
மகாபாரதம் | |
மகாபாரதம் பகுதி-31செப்டம்பர் 28,2011
ஆசை யாரையும் விட்டதில்லை. எல்லா அரசர்களுமே திரவுபதியின் கண்ணம் பிற்கு பலியாகி விட்டனர். அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசையில் போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தனர். ... மேலும்
மகாபாரதம் பகுதி-32செப்டம்பர் 28,2011
இந்திரசேனையின் முன்னால் சிவபெருமான் தோன்றினார்.மகளே! நீண்ட காலமாக தவமிருக்கும் உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றார். அவள் சிவனிடம், சுவாமி! எனக்கு நல்ல கணவரைத் தரவேண்டும், என ... மேலும்
மகாபாரதம் பகுதி-33செப்டம்பர் 28,2011
பேரழகுடன் விளங்கிய இந்திரபிரஸ்தம் நகரில் இந்திரலோகத்தில் கிடைக்காத பொருட்கள் கூட கிடைத்தன. அந்த பரந்தாமனே எழுப்பிய நகரம் அல்லவா? திலோத்துமை என்ற இந்திரலோகத்து பேரழகியும் ... மேலும்
|
மகாபாரதம் பகுதி-1
கதைக்குள் செல்லும் முன்...
மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு கதாசிரியர், தன்னையும் ஒரு பாத்திரமாக இந்த காவியத்தில் இணைத்துக் கொண்ட பெருமை பெற்றது. ஆம்... மகாபாரதத்தின் முக்கியஸ்தர்களான பாண்டுவும், திருதராஷ்டிரனும், விதுரனும் இவருக்குப் பிறந்தவர்களே. தேவமொழி என வர்ணிக்கப்படும் சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார். மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது உறுதி.
ராமபிரான் சூரியவம்சத்தில் அவதரித்தது போல, பஞ்ச பாண்டவர்கள் சந்திர குலத்தில் பிறந்தவர்கள். பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த போது, தோன்றியவன் சந்திரன். 14 கலைகளைக் கொண்ட இவன், தினமும் ஒன்றாக சூரியனுக்கு கொடுப்பான். திரும்பவும் அதை வாங்கிக் கொள்வான். சுட்டெரிக்கும் சூரியன், இவனிடம் பெறும் கலையால் குளிர்ந்து தான் உலகத்தை எரிக்காமல் வைத்திருக்கிறான். இவன் தாரை என்பவளைத் திருமணம் செய்து பெற்ற மகனே புதன். ஒரு முறை மநு என்ற அரசனின் மகனான இளை என்பவன் காட்டுக்கு வேட்டையாட வந்தான். இந்தக் காட்டின் ஒரு பகுதியிலுள்ள குளத்தில், ஒருசமயம் சிவபெருமானின் மனைவியான பார்வதி நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஆடவர் சிலர், அவள் குளிக்கும் அழகை ரசித்தனர். கோபமடைந்த பார்வதி அவர்களைப் பெண்ணாகும்படியும், இனி அந்த ஏரிப்பகுதிக்குள் யார் நுழைகிறார்களோ, அவர்கள் பெண்ணாக மாறுவர் என்றும் சபித்துவிட்டாள். அவள் பூவுலகை விட்டு, சிவலோகம் சென்ற பிறகும் கூட அந்த சாபம் மாறவில்லை. இதையறியாத இளன் அந்த ஏரிப்பகுதிக்குள் நுழைந்தானோ இல்லையோ, பெண்ணாக மாறி விட்டான்.
அவள் வருத்தத்துடன் இருந்த வேளையில், அழகுப் பதுமையாக இருந்த அவளை அங்கு வந்த புதன் பார்த்தான். அவளது கதையைக் கேட்ட புதன், அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு இளை என்ற பெயர் ஏற்பட்டது. புதனுக்கும், இளைக்கும் புரூரவஸ் என்ற மகன் பிறந்தான். புரூரவஸ் வாலிபன் ஆனான். அழகில் அவனுக்கு இணை யாருமில்லை. ஒருமுறை வான்வெளியில் ஒரு பெண்ணை சில அசுரர்கள் கடத்திச் செல்வதைப் பார்த்தான். அவள் தன் மானத்தைக் காத்துக் கொள்ள கதறினாள். பறக்கும் தேர் வைத்திருந்த புரூரவஸ், அவளைக் காப்பாற்றுவதற்காக மின்னல் வேகத்தில் விண்வெளியில் பறந்து சென்றான். அசுரர்களை எதிர்த்து உக்கிரத்துடன் போரிட்டான். அசுரர்கள் அவனது தாக்குதலை தாங்க முடியாமல், ஓடிவிட்டனர். அப்பெண்ணை பார்த்தான். அப்படி ஒரு அழகு... கண்ணே! நீ தேவலோகத்து ஊர்வசியோ? என்றான். அவள் வெட்கத்துடன் தலை குனிந்து, நான் நிஜமாகவே ஊர்வசி தான். என் மானம் காத்த நீங்களே எனக்கு இனி என்றும் பாதுகாவலாக இருக்க வேண்டும், என்றான். ஊர்வசியே தனக்கு மனைவியாகப் போகிறாள் என்று மகிழ்ந்த புரூரவஸ், அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவர்களது இனிய இல்லறத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.
ஆயு என்று அவனுக்குப் பெயரிட்டனர். இப்படியாக சந்திர வம்சம் பூமியில் பெருகியபடி இருந்தது. ஆயுவிற்கு நஹுஷன் என்ற மகன் பிறந்தான். இவன் நூறு அசுவமேத யாகங்களைச் செய்து தேவலோகத்தையே பிடித்துக் கொண்டவன். தேவலோக மன்னனான இந்திரனை விரட்டிவிட்டு, அரசனாகி விட்டான். அதிகார மமதையுடன், காம போதையும் சேர, இந்திரலோகத்தை ஜெயித்ததால், இந்திரனின் மனைவியான இந்திராணியும் தனக்கே சொந்தம் என அவளை ஒரு அறையில் அடைத்து விட்டான். இந்திராணியோ அவனது ஆசைக்கு இணங்க மறுத்து விட்டாள். ஒருநாள் போதை உச்சிக்கேற, அவளை வலுக்கட்டாயமாக அடைவதற்காக தன் பல்லக்கில் ஏறி புறப்பட்டான் நஹுஷன். பல்லக்கை சுமக்கும்படி முனிவர்களை மிரட்டினான். முனிவர்களும் தூக்கிச் சென்றனர். அந்த முனிவர்களில் ஒருவர் அகத்தியர். அவர் குள்ளமாக இருந்ததால், மற்றவர்களைப் போல் வேகமாகச் செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நஹுஷன், ஓய்! மற்றவர்கள் வேகமாகச் செல்லும் போது, உமக்கு மட்டும் என்னவாம்! என்று, முதுகில் ஓங்கி மிதித்தான். அகத்தியர் மகாதபஸ்வியல்லவா! அவருக்கு கோபம் வந்து விட்டது. சிறுவனே! அதிகார மமதை, காமபோதைக்கு ஆட்பட்டு, தபஸ்விகளை துன்புறுத்தினாய். மேலும், வயதில் பெரியவர்களை மதியாமல், காலால் மிதித்தாய். எனவே நீ பாம்பாகப் போ, என சாபமிட்டார். அவன் பாம்பாக மாறி, தேவலோகத்தில் இருந்து பூமியில் விழுந்தான்.
மகாபாரதம் பகுதி-2
நஹூஷன் பாம்பாக மாறிய பிறகு, அவனது மகன் யயாதி பொறுப்பேற்றான். அவன் அழகிலும், வீரத்திலும் சிறந்தவன். இவனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவென்றால், இவனுக்கு கோபமே வராது. இவனது பொறுமையை வியாசரே பாராட்டினாராம். இந்த பொறுமைசாலிக்கு, அசுரகுரு சுக்ராச்சாரியார் தன் மகள் தேவயானையைத் திருமணம் செய்து வைத்தார். அந்த தம்பதியர் இனிதே நடத்திய இல்லறத்தில், யது, துருவஸ் என்ற மகன்கள் பிறந்தனர். பொறுமைசாலியான யயாதிக்கும் இறைவன் சோதனையை கொடுத்தான். ஒருநாள், அசுரகுல மன்னனான விருஷவர்பனை அவர்களின் குலகுரு சுக்ராச்சாரியார் அழைத்தார். விருஷா! என் மகள் தேவயானையை யயாதிக்கு திருமணம் செய்து வைத்துள்ளதை நீ அறிவாய். கணவன் இல்லாத நேரத்தில் அவளுக்கு உற்ற துணை யாருமில்லை. எனவே, உன் மகள் சன்மிஷ்டை தேவயானையுடன் அரண்மனையில் தங்கட்டும். தேவயானையும், அவளும் ஒன்று சேர்ந்து இருந்தால், ஒருவருக்கொருவர் துணையாக இருப்பர். தோழிகளாகவும் விளங்குவர், என்றார். விருஷவர்பன் குலகுருவின் கட்டளைக்கு அடிபணிந்தான். உடனடியாக சன்மிஷ்டையை தேவயானையின் வீட்டில் கொண்டு சேர்த்தான். அவர்கள் உற்ற தோழிகளாயினர். இந்நேரத்தில் அரசாங்க பணியாக வெளியூர் சென்றிருந்த யயாதி வந்து சேர்ந்தான். தன் அரண்மனையில் ஒரு அழகுச்சிலை நடமாடுவதைக் கண்ட மன்னன் அவளை யாரென்று விசாரித்து தெரிந்து கொண்டான். தோழியின் கணவன் என்ற முறையில், சன்மிஷ்டை யயாதியுடன் அடிக்கடி பேசுவாள். யயாதி பொறுமைசாலி தான்! ஆனால், உணர்வுகள் இல்லாதவன் இல்லையே! தன் மனைவியை விட பேரழகு மிக்க சன்மிஷ்டையை அவன் காதலிக்க ஆரம்பித்தான். சன்மிஷ்டையும், அந்த பேரரசனின் வலையில் விழுந்து விட்டாள். இந்த விஷயம் தேவயானைக்குத் தெரியாது.
காதலர்கள் தனிமையில் சந்தித்தனர். தாலி கட்டி மனைவியாக்கினால், தேவயானைக்குத் தெரிந்து விடும். எனவே, அவளை கந்தர்வ மணம் (மானசீகமாக திருமணம் செய்தல்) செய்து கொண்டான். பிறகென்ன! தம்பதியர் ஒளிவாக வாழ்ந்தனர். ஆனால், காலம் சும்மா இருக்குமா! சன்மிஷ்டை கர்ப்பவதியாகி விட்டாள். பின்னர் தேவயானையை விட்டு பிரிந்து சென்று விட்டாள். அவள் தனி மாளிகை ஒன்றில் குடி வைத்தான் யயாதி. இப்படியாக பல ஆண்டுகள் ஓடிவிட்டன. பூரு, த்ருஹ்யு, அநு என்ற மகன்களைப் பெற்றாள். மூன்று குழந்தைகள் பிறக்கும் வரைக்கும் யயாதி தன் முதல் மனைவியிடம் மாட்டி கொள்ளாமல் தான் இருந்தான். ஒருநாள் தந்தையைத் தேடி குழந்தைகள் அரண்மனைக்கு வந்து விட்டனர். அவர்கள் தேவயானையின் கண்ணில் பட்டனர். மூவருமே, யயாதியை அச்சில் வார்த்தது போல் இருக்கவே, சந்தேகப்பட்ட தேவயானை இதுபற்றி விசாரித்தாள். சன்மிஷ்டையும், யயாதியும் தனக்கு துரோகம் செய்துவிட்டனர் என்பது புரிந்து விட்டது. அவள் யயாதியுடன் கடுமையாக சண்டை போட்டாள். அழுது புலம்பினாள். மாமன்னரே! நீர் பொறுமைசாலி என்றும், அமைதியானவர் என்றும் பெயர் பெற்றிருந்தீர். உம் அமைதியின் பொருள் இப்போது தானே எனக்கு விளங்குகிறது! வளவளவென பேசுபவர்களை நம்பலாம். வாய்மூடி மவுனிகளை நம்பவே கூடாது என்ற உலக வழக்குச்சொல் உண்மை என நிரூபித்து விட்டீர். இனி உம்மோடு வாழமாட்டேன். என் தந்தை வீட்டுக்குச் செல்கிறேன். சுக்ராச்சாரியார் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகிறேன், என சபதம் செய்து விட்டு, அவனைப் பிரிந்து விட்டாள். தனக்கு ஏதோ நடக்கப் போகிறது என்பது யயாதிக்கு தெரிந்து விட்டது. அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த தேவயானை, தகப்பனாரிடம் நடந்ததையெல்லாம் சொல்லி அழுதாள். பெற்ற மகள் கண்ணீர் வடித்தாலும், போம்மா! ஏதோ நடந்து விட்டது.
கட்டியவன் தான் உனக்கு புகல், என்று கூறும் சாதாரண தந்தையா சுக்ராச்சாரியார். அசுரர்களுக்கே அவர் குருவல்லவா! அதிகாரம் மிக்க அவர், யயாதியை தன் வீட்டுக்கே வரச்சொன்னார்.துரோகி! உன்னிடம் இளமை இருக்கும் தைரியத்தில் தானே இப்படி காதல் நாடகம் நடத்தினாய். இனியும், உன்னை விட்டு வைத்தால், என் மகளை போல பல அபலைகளை உருவாக்கி விடுவாய். சன்மிஷ்டை மீது நீ கொண்டது காதல் அல்ல! காமம். அதனால் தானே மூன்று குழந்தைகள் பெறும் வரை இதை மறைத்து வைத்திருந்தாய்! கொடியவனே! உனக்கு இளமை இருக்கும் தைரியத்தில் தானே இப்படி செய்தாய். ஒழியட்டும் உன் இளமை. இனி நீ கிழவனாக பூமியில் வலம் வா! உன்னைப் பார்ப்பவர்கள் காமத்தால் அறிவிழந்த துரோகி என தூற்றட்டும், என்றார். யயாதி உடனடியாக கிழவனானான். அசுரகுருவே! தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்கிறேன். தேவயானைக்கு நான் அநீதி இழைத்து விட்டேன். எனக்கு தாங்கள் சாபவிமோசனம் அளியுங்கள், என அவர் காலில் விழுந்தான்.யயாதி! நீ மீண்டும் இளமையைப் பெற ஒரே ஒருவழிதான் இருக்கிறது. உன் முதுமையை ஒரு இளைஞனுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு, அவனுடைய இளமையை நீ வாங்கிக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு வழியில்லை, என சொல்லி விட்டான். தேவயானை அவனுடன் வர மறுத்து விட்டாள்.அவன் வருத்தத்துடன் சன்மிஷ்டையிடமே சென்றான். அவள் யயாதியைக் கண்டு அதிர்ந்தாள்.யயாதி பலரிடமும் இளமையை யாசித்தான். யார் தருவார்கள்? அவன் கண்ணீர் வடித்த போது, ஒரு இளைஞன் அவன் முன்னால் வந்து நின்றான்.
மகாபாரதம் பகுதி-3
வந்தவன் வேறு யாருமல்ல. யயாதி ஆசைப்பட்டு மணந்து கொண்ட சன்மிஷ்டையின் மகன் பூரு தான்!அப்பா! தாங்கள் அழ வேண்டிய அவசியம் என்ன? உங்களுக்கு உதவுவதற்கு இந்த மகன் எப்போதுமே தயாராக இருக்கிறான். சொல்லுங்கள்! நான் என்ன செய்ய வேண்டும்? என்றான். அன்பு மகனே! ஒரு தந்தை மகனிடம் யாசிக்கக் கூடாத ஒன்றை யாசிக்கிறேன். இந்த உலகத்திலேயே கொடூரமான வியாதி பெண்ணாசை. அது என்னிடம் அதிகமாகவே இருக்கிறது. உன் பெரிய அன்னையான தேவயானையை மணம் முடித்திருந்தும் கூட, அவளது தோழியான உன் அன்னை மீதும் ஆசைப்பட்டேன். மன்னர் குலத்துக்கு இது தர்மம் தான் என்றாலும், பெரியவள் கோபித்துக் கொண்டு போய் விட்டாள். என் மாமனார் சுக்ராச்சாரியார் என் இளமையைப் பறித்து விட்டார். உடல்தான் முதுமை அடைந்துள்ளதே தவிர, மனதில் இளமை உணர்வு அகல மறுக்கிறது. இந்த நோயில் இருந்து விடுதலை வேண்டுமானால், எனக்கு இளமை மீண்டும் வேண்டும். இளமை திரும்பினால் தான், உன் தாய் என்னை அருகே அனுமதிப்பாள், என்றான் கண்ணீர் வடித்து.தந்தையின் நிலைமைமகனுக்கு புரிந்தது. அவன் தந்தையைக் கட்டியணைத்தான். அருமைத் தந்தையே! தாங்கள் மட்டுமல்ல. இளமை சற்றும் மாறாத லோகத்திலேயே ரூபவதியான என் தாய்க்கும் பெற்ற கடனைத் தீர்க்க நேரம் வந்திருக்கிறது. நான் உங்கள் முதுமையை ஏற்கிறேன். என் இளமையை உங்களுக்கு தருகிறேன். சுக்ராச்சாரியார் சொன்னபடி சாப விமோசனம் பெற்று, என் அன்னையோடு சுகமாக வாழுங்கள். என்று உங்களுக்கு என் இளமையைத் திருப்பித் தர முடியுமோ அன்று தாருங்கள், என்றான்.
மகனைப் பாராட்டிய மன்னன், அவனிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டான். பதிலாக தன் மனைவியோடு காலம் கழிப்பதில் மட்டுமே அவன் கவனம் செலுத்தினான். ஒரு கட்டத்தில், ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மகனிடம் இளமையைக் கொடுத்து விட்டு முதுமையைப் பெற்றுக் கொண்டான்.இப்படியாக சந்திரவம்சம் தியாக வம்சமாகத் திகழ்ந்தது. பூருவின் வம்சம் விருத்தியாகிக் கொண்டே வந்தது. இவர்களின் பரதன் என்ற மன்னன், மண்ணுலகில் மட்டுமின்றி, விண்ணுலகிலும் வெற்றிக்கொடி நாட்டினான். இந்த வம்சத்தில் வந்த மற்றொரு மன்னனான ஹஸ்தியின் ஆட்சிக்காலம் தான் சந்திர வம்சத்தின் முக்கிய காலம். இவன் தன் பெயரால் ஒரு பட்டணத்தை அமைத்து, அதை தன் நாட்டுக்கு தலைநகர் ஆக்கினான். அவ்வூரே ஹஸ்தினாபுரம் எனப்பட்டது. ஒரு காலத்தில் கஜேந்திரன் என்ற யானையை முதலையிடமிருந்து காப்பாற்ற திருமால் கருட வாகனத்தில் வந்தார். அந்த யானை, இந்திரத்யுநன் என்ற பெயரிலும், முதலை அநுரு என்ற பெயரிலும் பூமியில் மாமன்னர்களாகப் பிறந்தனர். அவர்களும் சந்திரகுலத்து அரசர்களே. இதன் பின் குரு என்ற மன்னன் பொறுப்பேற்றான். இவன் மிகச்சிறப்பாக ஆட்சி செய்ததால், சந்திரகுலம் என்ற பெயர் மறைந்து குரு குலம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டது.குருகுலத்தில் பிறந்த மன்னன் சந்தனு பேரழகன். வேட்டையாடுவதில் விருப்பமுள்ளவன். ஒருமுறை காட்டில் தாகத்தால் தவித்தவன், குதிரையில் வேகமாக கங்கைக்கரைக்குச் சென்றான். கரையில் ஒரு பெண் ஒய்யாரமாக நடந்து கொண்டிருந்தாள். தண்ணீர் அருந்த வந்த சந்தனு, தாகத்தை மறந்தான். பதிலாக தாபம் அவனைத் தொற்றிக் கொண்டது.
ஆஹா...இப்படி ஒரு பேரழகியா? மணந்தால் இவளைத் தான் மணக்க வேண்டும். இவள் எந்த நாட்டு இளவரசி? இவளைப் பெண் கேட்க வேண்டுமே! என்ற வேட்கை உந்தித்தள்ள, சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கே யாருமில்லை. துணிச்சலுடன் அவளருகே சென்றான். அழகுப்பெண்ணே! நீ யார்? யாருமில்லாத இந்த இடத்தில் தனியாகத் திரிகிறாயே! உன் அழகுக்கு உன்னை யாராவது அபகரித்துக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வாய்? உன் இருப்பிடத்தைச் சொல். உன்னைப் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கிறேன், என்றான். அவள் கலகலவென நகைத்தாள். மங்கையர் திலகமே! உன் நன்மை கருதி தான் எச்சரிக்கிறேன். நீயோ கேலி செய்வது போல நகைக்கிறாயே! இருந்தாலும், முத்துகள் சிதறுவது போல், அந்த நகைப்பும் இனிமையாகத்தான் இருக்கிறது! என்று கண் சிமிட்டினான். அவள் திரும்பவும் நகைத்தபடியே, இளைஞனே! எனக்கு பயமா? இன்று நள்ளிரவில் நீ இங்கே இரு. நீ பயப்படுகிறாயா? நான் பயப்படுகிறேனா என்பது உனக்குப் புரியும். இரவும், பகலுமாய் நான் இங்கே தான் இருக்கிறேன். இனியும் இருப்பேன். இந்த பூமி உள்ளளவும் இருப்பேன். இன்னும் பல யுகங்கள் இருப்பேன். ஆனால், அழியும் மானிடப்பிறப்பெடுத்த நீ, என்னை இங்கிருந்து போகச் சொல்கிறாய், என்று அலட்சியமாகப் பேசினாள். அப்படியானால் நீ தேவ கன்னிகை தான். சந்தேகமேயில்லை. பூலோகத்தில், இத்தகைய லட்சணமுள்ள பெண்ணை நான் பார்த்ததேயில்லை. சரி...இருக்கட்டும். தேவதையான உன்னை பூமியில் பிறந்ததால், நான் அடைய முடியாதோ? உன்னை அடையும் தகுதி தான் எனக்கில்லையா? என்ற சந்தனுவைப் பார்த்த அப்பெண், தனது தற்போதைய நிலையை நினைத்தாள். அவளது பெயர் கங்கா. ஒரு சமயம் அகம்பாவத்தின் காரணமாக, பூமியில் ஒரு மானிடனிடம் காலம் கழிக்க வேண்டும் என்ற சாபம் பெற்றவள். அதற்கு இவன் சரியான ஆள் தான். அழகாகவும் இருக்கிறான். மன்னனாகவும் விளங்குகிறான். தன் வினைப்பயனை இவனிடமே அனுபவிப்போம் எனக் கருதிய கங்கா, அவன் யார் என்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டாள். பின்னர் அவள், அன்பனே! என் பெயர் கங்கா. நானே இதோ ஓடும் இந்நதி. நதிகள் பெண்ணுருவமாக இருப்பதை நீர் அறிந்திருப்பீர். ஒரு சாபத்தால் இந்த பூமிக்கு நான் வந்தேன், என்றாள்.
மகாபாரதம் பகுதி-4
கங்காதேவி பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்த சந்தனு, பெண்ணே! நீ கன்னியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு அழகுக்கன்னியை நான் என் வாழ்நாளில் பார்த்ததும் இல்லை. நான் இந்த பூவுலகில் மிகச்சிறந்த அரசன். உன்னை மணந்து கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறது. நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எனக்கு வேண்டும். என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? என்று சங்கோஜத்துடன் கேட்டான்.அதைக்கேட்டு வெட்கப்பட்ட கங்காதேவி தலை குனிந்து நின்றாள். மவுனமொழி சம்மதத்துக்கு அறிகுறி என்பதைப் புரிந்து கொண்ட சந்தனு, பெண்ணே! உன் மவுனத்தைக் கலைத்து நேரடியாக பதில் சொல், என்றான். அவள் சந்தனுவிடம், மன்னா! உம்மைத் திருமணம் செய்து கொள்ள நான் சம்மதிக்கிறேன். ஆனால், எனது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். அதற்கு சம்மதமென்றால், திருமண ஏற்பாடுகளைச் செய்யலாம், என்றாள். அவளது அழகில் லயித்துப் போயிருந்த சந்தனு, அவள் விதித்த நிபந்தனைகளைக் கேட்டான். மன்னா! நான் உம் மனைவி யான பிறகு, நான் என்ன செய்தாலும் கேள்வி கேட்கக்கூடாது. அதாவது, நான் உம் மனம் கஷ்டப்படும்படி நடந்தாலும் என்ன ஏதென்று கேட்கக்கூடாது. உலகமே வெறுக்கும் காரியத்தைச் செய்தாலும் ஏன் செய்தாய் என்ற கேள்வி எழக்கூடாது, என்றாள்.மன்னனுக்கு இவற்றை ஏற்பதா வேண்டாமா என்று குழப்பம் இருந்தாலும், பெண்ணாசையின் பிடியில் சிக்கியிருந்த அவன் சரியென சம்மதித்து விட்டான். மகாபாரதத்தின் துவக்கமே மனிதகுலத்துக்கு பாடம் கற்றுத்தருவதாக அமைந்திருப்பதை கவனியுங்கள். பெண்ணாசைக்கு ஒருவன் அடிமையாகக் கூடாது. அப்படி அடிமையாகி விட்டால், அவன் படப்போகும் துன்பங்களின் எல்லைக்கு அளவிருக்காது. இதோ! சந்தனு தன் அழிவின் முதல் கட்டத்தில் அடியெடுத்து வைக்கப்போகிறான். கங்கா! கலங்காதே, நீ என்ன சொன்னாலும் கேட்பேன். நீ நாட்டைக் கேட்டால் உன் பெயரில் எழுதி வைக்கிறேன். அரச செல்வம் உன்னுடையது. நீ என்ன சொல்கிறாயோ, அதன்படி நடக்கிறேன், எனச் சொல்லி அவள் முன்னால் மண்டியிட்டு நின்றான்.
சந்தனு வார்த்தை மாறமாட்டான் என்பதைப் புரிந்து கொண்ட கங்கா, அவனைத் திருமணம் செய்து கொண்டாள். உலகிலேயே சிறந்த அந்த அழகியை அனுபவிப்பதில் மட்டுமே சுகம் கண்ட சந்தனு, ராஜ்ய விஷயங்களைக் கூட மறந்து விட்டான். எல்லாம் கங்காவின் இஷ்டப்படியே நடந்தது.இந்த நிலையில் கங்காதேவி கர்ப்பமானாள். சந்தனுவுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. அவளைக் கண்ணைப் போல் பாதுகாத்தான். அவளது உடல் அதிரக்கூடாது என்பதற்காக மலர்களை பரப்பி அதில் நடக்க வைத்தான். பிரசவ நாள் வந்தது. கங்கா அழகான ஆண்மகனைப் பெற்றாள். சிறிதுநாள் கடந்ததும், குழந்தையை கங்கா எடுத்துக் கொண்டு கங்கைக்கு சென்றாள். இவள் யாரிடமும் சொல்லாமல் எங்கே போகிறாள் என சந்தனு பின்னால் சென்றான். அவள் செய்த செயலைப் பார்த்து அதிர்ந்து நின்று விட்டான். அதுவரை இனிய மொழி பேசும் கிளியாக, சாந்தமே வடிவமாகத் திகழ்ந்த கங்கா, இப்போது அரக்கியாகத் தெரிந்தாள். ஆம்...பெற்ற குழந்தையை ஆற்றில் வீசி எறிந்தவளை என்ன சொல்வது? ஆத்திரத்தின் விளிம்பிற்கே போன சந்தனுவிடம் அவனது இதயம் பேசியது. சந்தனு நில்! நீ காம வயப்பட்டு, இவளை மணந்தாய். இவள் தன்னை மணக்கும் முன், நான் என்ன செய்தாலும், கேள்வி கேட்கக்கூடாது. அது கொடூரமான செயலாக இருந்தாலும் சரி... என சொன்னாள் அல்லவா? இப்போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு, அவளைக் கேட்கப் போகிறாய்? என்றது.சந்தனு சூழ்நிலைக் கைதியாய் நின்றான். ஏதும் பேசாமல் திரும்பிய அவன், சில நாட்களில் எல்லாவற்றையும் மறந்தான். மீண்டும் கங்காவின் பிடியில் சிக்கினான். அவள் வரிசையாய் ஆறு பிள்ளைகளைப் பெற்றாள். ஆறு குழந்தைகளையும் தண்ணீரில் வீசினாள். அவளைக் கேள்வி கேட்க முடியாமல் தவித்த சந்தனு, எட்டாவது ஆண்குழந்தை பிறந்ததும் கங்கா அதைத் தூக்கிக் கொண்டு கங்கை நதிக்கு போவதைப் பார்த்தான்.
கொடியவளே! நில். இந்த குழந்தையையும் கொல்லப் போகிறாயா? உன்னைக் கேள்வி கேட்கக்கூடாது என்ற நிபந்தனை இத்தனை நாளும் என்னைத் தடுத்தது. நானும் போகட்டும், போகட்டும் என பார்த்தால், உன் கொடூரம் எல்லை மீறி விட்டது. பெற்ற குழந்தைகளைக் கொல்லும் கொடூரக்காரியான உன்னை திருமணம் செய்ததற்காக வெட்கப்படுகிறேன். குழந்தையைக் கொடுத்து விடு, என்றான். இதைக் கேட்டு கங்காவின் கண்கள் கொவ்வைப்பழமாகச் சிவந்தன. மன்னா! நன்றாக இருக்கிறது நீ கேட்பது! நான் என்ன செய்தாலும் கேள்வி கேட்க மாட்டேன் என்ற நிபந்தனைக்கு கட்டுப்பட்டு தானே என்னை மணம் முடித்தாய். ஏழு குழந்தைகளைக் கொல்லும் வரை ஏன் இப்படி செய்தாய் என்று கேட்காத நீ, இப்போது கேள்வி கேட்கிறாய். ஏனென்றால், பெற்ற பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விட காமமே உன் மனதில் நிரம்பி நின்றது. அன்று கேளாதவன் இப்போது கேள்வி கேட்கும் உரிமையை எப்படி எடுத்துக் கொண்டாய். நான் சில காரணங்களால் இப்படி குழந்தைகளைக் கொல்கிறேன். அதைக் கேட்டால் நீ இதை விட அதிர்ச்சியடைவாய். நான் தேவலோகத்து கங்காதேவி, நான் இந்த பூமிக்கு வந்து, இந்தக் குழந்தைகளைக் கொன்றதற்கான காரணத்தைக் கேள், என்று சொல்லி தன் கதையை ஆரம்பித்தாள். அவள் சொல்லச் சொல்ல சந்தனு மயிர்க்கூச் செறிய நின்றான்.
மகாபாரதம் பகுதி-5
மன்னா! கங்காவாகிய நான் ஒருமுறை பிரம்மலோகம் சென்றேன். அங்கே பல தேவர்களும் இருந்தனர். அங்கிருந்த வாயுபகவான் தேவர்களின் மனவுறுதியைச் சோதிப்பதற்காக ஒரு சோதனை செய்தான். என்னுடைய மார்பு தெரியும்படியாக ஆடையை காற்றடித்து பறக்க வைத்தான். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட தேவர்கள் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டனர். ஆனால், வருணன் மட்டும் என் அங்கங்களை ரசித்தான். இதனால், அங்கிருந்த பிரம்மன் கடும் கோபமடைந்தார்.ஏ வருணா! ஒரு பெண்ணை அவளறியாமல் ரசித்த நீ பூமியில் மானிடனாகப் பிறப்பாய் என சாபமிட்டார். என்னை பார்த்து, எந்தச் சூழலிலும் ஒரு பெண் தன் மானத்தைக் காக்க முயன்றிருக்க வேண்டும், காற்றடித்த வேளையில் நீ அதைச் செய்யத் தவறியதுடன், ஒரு ஆண்மகனின் மனம் பேதலிக்கவும் காரணமாக இருந்தாய். எனவே நீயும் பூமியில் மனுஷியாகப் பிறப்பாய். இந்த வருணனுக்கு வாழ்க்கைப்பட்டு சாப விமோசன காலம் வரை வாழ்ந்து, இங்கேமீண்டும் வருவாய் என்றார்.நான் மிகுந்த கவலையுடன் பூலோகம் நோக்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது எட்டு திசைகளின் காவலர்களான அஷ்டவசுக்கள் என் எதிரே வந்தனர். அவர்களில் பிரபாசன் என்பவனும் ஒருவன். அவர்களும் கவலை பொங்கும் முகத்துடன் காட்சியளித்தனர். கவலைக்கான காரணத்தை நான் கேட்டேன்.தாயே! இந்த பிரபாசன் தன் மனைவி மீது மிகுந்த மோகம் கொண்டு, அவள் சொன்னதையெல்லாம் செய்வான். அவள் பேராசைக்காரி. நினைத்ததையெல்லாம் அடைய விரும்புபவள். வசிஷ்டரின் ஆசிரமத்தில் நினைத்ததை தரும் காமதேனு என்ற பசு இருந்தது. அதைப் பிடித்து வந்து தன்னிடம் தரும்படி கணவனிடம் அவள் சொன்னாள். இவனும் அவள் மீதுள்ள ஆசையால், பசுவைத் திருட ஏற்பாடு செய்தான். அவனை கண்டிக்க வேண்டிய நாங்கள், நண்பன் என்ற முறையிலே அவனுக்கு துணை போனோம். வசிஷ்டரின் ஆசிரமத்துக்குள் புகுந்து, காமதேனுவைத் திருடினோம். அவர் கோபமடைந்து, நாங்கள் பூமியில் மானிடர்களாகப் பிறக்க சாபமிட்டார்.
எங்களுக்கான சாப விமோசனம் பற்றி கேட்டோம். நீங்கள் பூமியில் பிறந்தவுடன் இறந்து விட்டால், மீண்டும்திசைக்காவலர் பதவியைப் பெறலாம் என அவர் கருணையுடன் சொன்னார். அதனால் பூமியில் பிறக்கவும், எங்களை உடனே கொல்லும் மனதுடையவளுமான ஒரு தாயை தேடி கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? எனக் கேட்டனர்.நானும் என் சாபம் பற்றி அவர்களிடம் சொல்லி, அவர்களிடம் இரக்கம் கொண்டு, குழந்தைகளே! வருணபகவான் பூமியில் சந்தனு என்ற மன்னனாகப் பிறப்பான். நான் அவனது மனைவியாவேன். உங்களை என் வயிற்றில் பிரசவிக்கிறேன். பிறந்த உடனேயே உங்களை ஆற்றில் எறிந்து கொன்று, உங்கள் பதவியை உடனடியாகக் கிடைக்கச் செய்கிறேன் என்றேன். அதன்படியே எனக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் கொன்றேன். மனைவியின் மோகத்தில் சிக்கிய பிரபாசனே இந்த எட்டாவது குழந்தை. வசிஷ்டரின் சாபப்படி இவன் இந்த பூமியில் பெண்ணாசையே இல்லாமல் வாழ்வான். உலகம் உள்ளளவும் இவனது புகழ் பூமியில் நிலைத்திருக்கும், என்றாள்.தானே உலகிற்கு மழையளிக்கும் வருணபகவான் என்று சந்தனு மன்னன் சந்தோஷப்பட்டாலும், இப்பிறவியில் தன் குலம் விருத்தியடையாமல் போனது பற்றி வருத்தப்பட்டான்.கங்கா! நம் ஏழு குழந்தைகளும் இறந்து விட்டார்கள். இவனும் பெண்ணாசை இல்லாமல் இருந்தால், நம் சந்திரகுலம் எப்படி விருத்தியடையும்? என்னோடு என் குலம் அழிந்து விடுமே. நாம் இன்னும் குழந்தைகளை பெறுவோம். அதன்பின் இருவருமே தேவலோகம் செல்லலாம், என்றான். கங்கா விரக்தியாக சிரித்தாள். மன்னா! நீ என் நிபந்தனையை மீறி கேள்வி கேட்டாய். எப்போது கேள்வி கேட்கிறாயோ, அப்போது நான் உன்னைப் பிரிந்து விடுவேன் என்று சொல்லித்தானே உன்னைத் திருமணம் செய்தேன். இனி உன்னோடு நான் வாழமாட்டேன். இந்த மகனுடன் நதியில் கலந்து விடுவேன்.
அவன் வாலிபன் ஆனபிறகு உன்னிடம் ஒப்படைப்பேன், என்று கூறி விட்டு கங்கையில் மறைந்து விட்டாள். கங்காவின் நினைவில் சந்தனு மூழ்கி கிடந்தான். அவள் எப்போது வருவாள் என காத்திருந்தான். கங்காதேவிக்கு முன்னதாக அவன் சில பெண்களைத் திருமணம் செய்திருந்தான். அவர்களால் அவனைத் தங்கள் வசப்படுத்த முடியவில்லை. வேட்டைக்கு போய் தன் மனதை அதில் திருப்ப முயன்றான். அப்போது கங்கைக்கரைக்கு போய், தன் மனைவி வரமாட்டாளா என காத்துக்கிடப்பான். ஆண்டுகள் பல கடந்தன. ஒருநாள் அவன் கங்கைக்கரையில் நின்ற போது, பூணூல் அணிந்து கையில் வில்லேந்திய வாலிபன் ஒருவனைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் தன் மகன் தான் என்பதை உள்ளுணர்வால் புரிந்துகொண்டான். அவனை நோக்கி ஓடிவந்தான். அந்த வாலிபன் சந்தனு மீது மோகனாஸ்திரத்தை எய்தான். அவன் தனது தந்தை என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. சந்தனு மயக்கமடைந்து கீழே விழுந்தான். அவன் மீது இரக்கம் கொண்ட கங்கா, தன் மகனுடன் கரைக்கு வந்தாள். அவன் தலையை அன்போடு வருடினாள். தன் மகனிடம், இவர் உன் தந்தை, என்றாள். அவள் கைப்பட்டதுமே அவன் எழுந்தான். அவனை அன்போடு தழுவிக் கொண்ட கங்கா, அரசே! நான் இன்று தேவலோகம் கிளம்புகிறேன். உங்களிடம் சொன்னபடி உங்கள் மகனை ஒப்படைத்து விட்டேன். இவன் பெயர் தேவவிரதன். பரசுராமரின் திருவருளால் அவரது ஆயுதங்களையே பெற்றவன். சிறந்த வில்லாளி வீரன். இவனோடு சேர்ந்து நீங்கள் இனி நாட்டை ஆளலாம், என்று சொல்லிவிட்டு, அவன் பதிலுக்கு காத்திராமல், நதியில் சென்று மறைந்தாள்.
மகாபாரதம் பகுதி-6
மகன் கிடைத்து விட்டான் என்ற சந்தோஷத்திலும், மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் சந்தனு கண்ணீர் விட்டான். கங்காதேவியின் செயலிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், சூழ்நிலைக் கைதியாகி விட்ட தன் நிலையை எண்ணி வருந்தினான்.பின்னர் தன் மகனை தேரில் ஏற்றிக் கொண்டு ஹஸ்தினாபுரம் வந்து சேர்ந்தான். மன்னன் தன் மகனுடன் வருகிறான் என்ற செய்தி ஊருக்குள் பரவி விட்டதால் முக்கியஸ்தர்களும், நாட்டு மக்களும் ஊர் எல்லையில் வந்து தங்கள் இளவரசரை வரவேற்க காத்திருந்தனர். அவர்கள் வந்தவுடன் இளவரசர் தேவவிரதன் வாழ்க என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.சந்தனு தன் மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டினான். இருவருமாக இணைந்து நல்லாட்சி நடத்தி வந்தனர்.ஒரு சமயம் சந்தனு வேட்டைக்குச் சென்றான். இளைப்பாறுவதற்காக யமுனைக்கரைக்கு வீரர்களுடன் வந்த அவனது நாசியில் சந்தன மணம் பட்டது. வரவர மணத்தின் அளவு கூடியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை சந்தன மரங்கள் ஏதும் காணப்படவில்லை. பிறகெப்படி வாசம் வருகிறது? சந்தனு குழம்பினான்.கிட்டத்தட்ட ஒரு யோஜனை தூரம் (8கி.மீ.) நடந்தான். நதிக்கரையில் ஒரு பெண் நின்றாள். அவள் பரிசல் ஓட்டுபவள். அவள் நின்ற இடத்தில் இருந்து தான் அந்த மணம் வீசியது. சந்தனு அவளை நெருங்கினான். அவள் உடலில் இருந்து நறுமணம் வீசுவது புரிந்து விட்டது.பெண்ணே! நீ யார்? உன் உடலில் இருந்து சந்தன வாசனை வீசும் மர்மம் என்ன? நீ சந்தனம் பூசியது போலவும் தெரியவில்லையே! என்றான்.ஒரு ஆண்மகன், அதிலும் அரச தோரணையில் இருப்பவன் தன்னிடம் இப்படி கேட்டதும், அப்பெண்ணுக்கு ஏதும் சொல்ல முடியவில்லை. நாக்குழறியது. வெட்கத்துடன் தலை குனிந்தாள்.சந்தனு அவளுக்கு தைரியம் சொன்னான்.மாதர் திலகமே! நீ மிகவும் அழகாகவும் இருக்கிறாய். உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தயங்காமல் சொல், என்றான்.
அவள் மிகவும் மெதுவாக, பிரபு! என் பெயர் யோஜனகந்தி. நான் இவ்வூர் பரதர் (செம்படவர்) குல தலைவனின் மகள். பிழைப்புக்காக பரிசல் ஓட்டுபவள். தாங்கள் ஆற்றை கடக்க வேண்டுமா பிரபு! நான் அழைத்துச் செல்கிறேன், என்றாள்.சந்தனு அவளது அழகை மேலும் மேலும் ரசித்தான். அவளோ நெளிந்தாள். சற்றுநேரம் அவளையே உற்று பார்த்து விட்டு, தன் தேரோட்டியை அழைத்தான்.சாரதி! நீ இந்தப் பெண்ணின் தந்தையிடம் என்னை அழைத்துச் செல். இவளைப் பார்த்ததும், முன்பு கங்காதேவியைப் பார்த்தவுடனே ஏற்பட்ட மோகம் போல என் உடல் வருந்துகிறது. இவளை மணம் முடிக்க மனம் விரும்புகிறது. நாம் அங்கு சென்றதும், நீ பரதர் தலைவனிடம் என் விருப்பத்தைச் சொல். நயமாகப் பேசி சம்மதம் பெற்று விடு, என்றான்.சாரதி மன்னனுடன் தேரேறி விரைந்தான்.பரதர் குலத்தலைவன் அவர்களை வரவேற்றான்.மாமன்னரே வர வேண்டும். தாங்கள் இந்த ஏழைகளைச் சந்திக்க வந்தது எங்கள் பாக்கியமே, என்றான்.சமயம் பார்த்து சாரதி சொன்னான்.பரதர் தலைவனே! பாக்கியம் என்றால் சாதாரண பாக்கியமல்ல! உங்கள் குப்பம் இனி சொர்க்கமாகப் போகிறது. காரணம் உன் மகள் யோஜனகந்தியல்லவா இந்த நாட்டின் ராணியாகப் போகிறாள்! என்றான்.பரதர் தலைவன் ஆச்சரியமும், குழப்பமும் விஞ்ச விழித்தான்.பரதர் தலைவா! உன்னை அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. நம் மகாராஜா உன் மகள் யோஜனகந்தியை யமுனைக்கரையிலே பார்த்தார். பார்த்தவுடனேயே அவள் மீது மோகம் கொண்டு விட்டார். இப்போது பெண் கேட்டு வந்திருக்கிறார். மகள் ராணியாகிறாள், நீ இனி பரதர் குல தலைவன் அல்ல! நாடாளும் ராணியின் தந்தை! பொன்னும், பொருளும் உன்னையும், உன்னைச் சார்ந்தோரையும் வந்து குவியப் போகிறது, என்றான்.பரதர் தலைவன் இப்போது சிரித்தான்.
யோஜனகந்தியை மாமன்னர் பார்த்தார், மோகம் கொண்டார், பெண்ணும் கேட்கிறார். மடுவிடம் மலை பெண் கேட்கிறது. எங்கள் மடு இன்னும் மலையாகப் போகிறது. இதில் எனக்கு மகிழ்ச்சி தான்! என் மகளை ஹஸ்தினாபுரத்து அரசருக்கு கொடுப்பதில் எனக்கு ஆட்சேபமில்லை. ஆனால், என் கேள்விக்கு மன்னர் பதில் சொல்ல வேண்டும். ஏற்கனவே மன்னருக்கு தேவவிரதன் என்ற மகன் இருக்கிறான். அவன் இளவரசு பட்டம் சூட்டப்பட்டு சந்தனுவிற்கு பிறகு மன்னனாக பொறுப்பேற்க தயாராக இருக்கிறான். அப்படியானால், என் மகளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் பட்சத்தில் அதன் நிலைமை என்ன? மன்னரே! இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை! நீங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும். உமக்குப் பிறகு இந்த தேசத்தை என் மகளுக்கு பிறக்கப்போகிறவன் தான் ஆளவேண்டும். சம்மதமா? என்றான்.அவ்வளவு தான்! மன்னனின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அங்கே அவன் நிற்கவே இல்லை. விடுவிடுவென்று தேரில் ஏறிவிட்டான். தேர் பறந்தது. ஹஸ்தினாபுரத்து அரண்மனைக்குள் நுழைந்தது.மன்னன் படுக்கையில் போய் விழுந்தான். யோஜனகந்தியை அவனால் மறக்க முடியவில்லை. அவளது நினைவில் அவன் உடலும் மெலிந்து விட்டது. தந்தையை கொஞ்சநாளாகவே கவனித்துக் கொண்டிருந்தான் தேவவிரதன். அவர் ஏதோ பறிகொடுத்ததைப் போல இருந்ததைப் பார்த்தான். வேட்டைக்குச் சென்று வந்த பிறகு தான் இந்த மாற்றம்? எதற்கும் சாரதியிடம் விசாரிக்கலாம் என்று அவனை அழைத்தான்.சாரதி நடந்ததைச் சொன்னான். அடுத்த கணமே தேவவிரதனின் தேர் செம்படவர் பகுதியை நோக்கி விரைந்தது.
மகாபாரதம் பகுதி-7
இளவரசர் தேவவிரதன் வந்திருக்கிறார் என்ற தகவல் செம்படவர் தலைவனுக்கு எட்டியது. அவன் ஓடிவந்து இளவரசனின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான். இளவரசே! தாங்கள் மீன்வாடை வீசும் எங்கள் பகுதிக்கு வந்தது நாங்கள் செய்த நற்பாக்கியம். இளவலே! தாங்கள் வந்த நோக்கம் தெரிவித்தால், அதன்படி செயல்பட காத்திருக்கிறோம், என்றான்.தேவவிரதன் ஆரம்பித்தான்.பாட்டனாரே! தாங்கள் இவ்வளவு பணிவுடன் என்னுடன் பேச வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், நான் உங்கள் பேரன். என்னை ஒருமையில் பேசும் உரிமை தங்களுக்கு உண்டு, என்ற தேவவிரதனை ஆச்சரியமாகப் பார்த்தான் செம்படவத்தலைவன்.தாத்தா! நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். தங்கள் மகள் யோஜனகந்தி இனி என் தாய். என் தந்தை தங்களிடம் அவளைப் பெண் கேட்டு வந்த போது, தாங்கள் விதித்த நிபந்தனையை சாரதி மூலமாக அறிந்தேன். உங்களுக்கு என்னைப் பற்றிய பயம் வேண்டாம். இனி நான் கங்காதேவியின் மகனல்ல. யோஜனகந்தியின் மகன். அவளுக்கு ஒரு குழந்தை பிறக்குமானால், அந்தக் குழந்தையே இந்த நாட்டை ஆளட்டும். நான் என் தம்பிக்கு இந்த நாட்டை விட்டுத் தருகிறேன். நீங்கள், யோஜனகந்தியை தயங்காமல் என் தந்தைக்கு திருமணம் செய்து வையுங்கள். அவள் மீது அவர் மிகுந்த காதல் கொண்டுள்ளார், என்றான் தேவவிரதன். இளவரசே! தாங்கள் சொல்வதை ஏற்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. உங்களுக்கு திருமணம் நடந்து, ஒரு குழந்தை பிறக்குமானால் அதுவும் அரசுரிமை கோருமே. அப்போது, என் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு எப்படி ஆட்சி கிடைக்கும்? அப்போதும் சண்டை தானே வரும்! என்ற செம்படவத் தலைவனிடம், தாத்தா! அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம். நான் பெண்ணாசையைத் துறக்கிறேன். எக்காரணம் கொண்டும் திருமணம் செய்யவே மாட்டேன்.
என் தந்தையின் மீதும், என்னைப் பெற்ற தாய் கங்கா மீதும், எனக்கு தாயாக வரும் யோஜனகந்தி மீதும், இந்த மண்ணின் மீதும், பரந்த ஆகாயத்தின் மீதும், இந்த பூமியிலுள்ள இதர வஸ்துக்களின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன். என் தந்தையின் சுகமே என் சுகம், என்று தேவவிரதன் ஆவேசமாக சபதம் எடுக்கவும், அதை ஆமோதிப்பது போல வானில் இருந்து தேவர்களும், முனிவர்களும், தெய்வப்பெண்மணிகளும் பூமாரி பொழிந்தனர்.பீஷ்மா...பீஷ்மா...பீஷ்மா... என்ற வாழ்த்தொலி எழுந்தது. பீஷ்மன் என்றால் மனஉறுதி உள்ளவன் என்று பொருள். எப்படிப்பட்ட தியாகம் இது? பெற்ற தந்தையின் சொல்லைக் கேளாமல் தறுதலையாய் பிள்ளைகள் இன்று எப்படியெல்லாமோ திரிகிறார்கள். இதில் ஆணென்றும், பெண்ணென்றும் பேதமில்லை. பெற்றவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து படிக்க வைப்பதை எத்தனை மகன்களும், மகள்களும் நினைத்துப் பார்க்கிறார்கள்! இவர்களில் எத்தனை பேர் மோசமான பாதையில் எல்லாம் போகிறார்கள். இதோ! இந்த பீஷ்மர் அப்படிப்பட்டவரல்ல. இவர் தன்னைப் பெற்ற தந்தை விரும்பிய பெண்ணையே அவருக்கு மணம் முடித்து வைக்கப் போகிறார்! அதற்காக, தன் வாழ்க்கையையே அழித்துக் கொள்ளப் போகிறார். பெண் சுகமின்றி வாழ எத்தனை இளைஞர்கள் இன்று முன் வருவர்? எவ்வளவு பெரிய தியாகம் இது! நமது இதிகாசங்கள் இப்படிப்பட்ட நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதால் தான் அவற்றை படிக்க வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள்.இப்படியாக தேவவிரதனாக இருந்து பீஷ்மராக மாறிய அந்த இளைஞன் ஊர் திரும்பினான். தந்தையிடம் நடந்ததைச் சொன்னான்.தந்தை சந்தனு கண்ணீர்வடித்தான்.மகனே! எந்த ஒரு பிள்ளையும் இப்படி ஒரு தியாகத்தைச் செய்ய முன் வரமாட்டான். நீயோ, என் உடல் சுகத்திற்காக, உன் உடல் சுகத்தை விட்டுக் கொடுத்தாய். நீ எனக்கு செய்த அளவுக்கு, உனக்கு எதுவும் செய்யவில்லை. இருந்தாலும் ஒரு வரத்தை தருகிறேன்.
நீ எப்போது இந்த உயிரை விடுத்து சொர்க்கத்துக்கு போக வேண்டும் என்று எண்ணுகிறாயோ அப்போது தான் உன்னை மரணம் நெருங்கும். அதுவரை யாராலும் உன்னை அழிக்க முடியாது,என்றான்.திருமண ஏற்பாடுகள் நடந்தன. செம்படவத் தலைவனுக்கு ஓலை பறந்தது. யோஜனகந்தி அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டாள். செம்படவத்தலைவன் சந்தனுவின் காலில் விழுந்து, மாமன்னரே! என் மகள் இனி உங்களுக்கு உரியவள். அதற்கு முன் இவளைப் பற்றிய ஒரு ரகசியத்தையும் சொல்லி விடுகிறேன், என்றவன், இவள் நான் பெற்ற மகளல்ல. வளர்ப்பு மகள், என்றான்.எல்லாரும் ஆவலுடன் அவனை நோக்கித் திரும்பினர்.செம்படவத்தலைவன் மன்னனிடம், மன்னா! தாங்கள் ஒரு மீனவப்பெண்ணைத் திருமணம் செய்கிறீர்களே என்று இங்கிருப்பவர்களில் சிலர் மனக்குறை அடையலாம். உண்மையில் இவள் ஒரு ராஜகுமாரி. தாங்கள் சந்திர குலத்தை சேர்ந்தவர் போல், ஒரு காலத்தில் சேதி என்ற குலம் இருந்தது. அந்த குலத்தில் வசு என்பவன் இருந்தான். அவன் தேவேந்திரனை நினைத்து தவமிருந்து வானத்தில் பறக்கும் புஷ்பக விமானம் ஒன்றைப் பரிசாகப் பெற்றான். ஒருநாள் அதிலேறி வானத்தில் பறந்த போது, அவனது மனைவி கிரிகை என்பவளின் நினைப்பு வந்து விட்டது. அப்போது உணர்ச்சிவசப்ட்டு சுக்கிலத்தை வெளியிட்டான். அதை ஒரு இலையில் பிடித்து சியேனம் என்ற பறவையிடம் கொடுத்து, அதை கிரிகையிடம் கொடுத்து விடும்படி கூறினான். அந்தப் பறவை பறந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த இன்னொரு பறவை ஏதோ உணவை அந்தப் பறவை கொத்திச் செல்வதாக நினைத்து அதனுடன் சண்டையிட்டது. அப்போது இலை தவறி கீழே விழுந்தது. யமுனை நதிக்குள் விழுந்த அந்த சுக்கிலத்தை ஒரு மீன் விழுங்கி கர்ப்பமானது. உண்மையில் அதுவும் மீனல்ல. தேவர்குலத்தை சேர்ந்த ஒரு பெண், முனிவர் ஒருவரின் சாபத்திற்கு ஆளாகி, மீனாகச் சுற்றிக் கொண்டிருந்தாள்.ஒருநாள் எங்கள் மீனவர்கள் யமுனையில் வலை வீசிய போது அந்த மீன் அகப்பட்டுக் கொண்டது, என்றவன் கதையைத் தொடர்ந்தான்.
மகாபாரதம் பகுதி-8
நாங்கள் அந்த மீனை தற்செயலாக அறுத்தோம். அதன் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருந்தன. ஒன்று ஆண்; மற்றொன்று பெண். சேதி வம்சத்து மன்னன் வசு அந்த ஆண் குழந்தையைப் பெற்றுக்கொண்டான். அந்த குழந்தைக்கு மீனவன் என்று பெயர் வைத்தான். பெண் குழந்தையை என்னிடம் ஒப்படைத்துவிட்டான். அவளுக்கு யோஜனகந்தி என பெயரிட்டு நான் வளர்த்தேன். அவள்தான் இப்போது உங்களுக்கு மனைவியாகப் போகிறவள். இவளைமீனவப் பெண் என நினைக்க வேண்டாம். உங்களுக்கே உரித்தான அரசர்குலத்தில்தான் பிறந்தவள். எனவே இவளை நீங்கள் தயக்கமில்லாமல் திருமணம் செய்துகொள்ளலாம். இன்று மிகச்சிறந்த முகூர்த்தநாள். இந்த நாளிலேயே இவளை ஏற்றுக்கொள்ளுங்கள், என செம்படவர் தலைவன் சொல்லி முடித்தான். அன்றைய தினமே சந்தனுவுக்கும் யோஜனகந்திக்கும் திருமணம் நடந்தது. தந்தையார் புதிய மனைவியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தியதால், அரசபதவியை பீஷ்மர் ஏற்றுக்கொண்டார். அவரது அரசாட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். சில ஆண்டுகளில் யோஜனகந்திக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இருவருமே சூரியனையும் சந்திரனையும் போன்று ஒளிமிக்கவர்களாக திகழ்ந்தனர். ஒருவனுக்கு சித்ராங்கதன் என்றும், மற்றொருவனுக்கு விசித்திர வீரியன் என்றும் பெயரிட்டனர். தன் சித்தி பெற்றெடுத்த புத்திரர்களை தன் உடன்பிறந்தவர்களாக கருதி பீஷ்மர் அவர்களுக்கு போதிய கல்வியறிவை புகட்டினார்.இதனிடையே சந்தனு இறந்து போனான். சித்தி பெற்றெடுத்தமக்களில் மூத்தவன் சித்ராங்கதனுக்கு பீஷ்மர் முடிசூட்டினார். சித்ராங்கதன் மானிட பிறப்பாக பூமியில் இருந்தாலும் இதே பெயரைக் கொண்ட கந்தர்வன் ஒருவன் வானலோகத்தில் சுற்றிவந்தான். அவனுக்கு தன் பெயரைக்கொண்ட சித்ராங்கதன் மீது வெறுப்பு ஏற்பட்டது. எனவே அவனைக் கொன்றுவிட முடிவுசெய்தான். ஆனால் பீஷ்மர் மீதிருந்த பயத்தால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
ஒருமுறை மிகவும் தந்திரமாக அரண்மனைக்குள் சென்று சித்ராங்கதனைக் கொன்றுவிட்டான்.மகன் இறந்த துக்கத்தில் யோஜனகந்தி மிகவும் துயருற்றாள். வேறு வழியின்றி இரண்டாவது தம்பி விசித்திரவீரியனுக்கு முடிசூட்டப்பட்டது. இந்த நேரத்தில் தங்கள் வம்சத்தைப் பெருக்கிடும் வகையில் விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்துவைக்க பீஷ்மர் எண்ணினார். அப்போது காசியை ஆண்ட மன்னன் காசிராஜன் தன் மூன்று புதல்விகளான அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகியோருக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தான். இதற்காக சுயம்வர அறிவிப்பையும் வெளியிட்டிருந்தான். தம்பியையும் அழைத்துக்கொண்டு பீஷ்மர் சுயம்வரத்திற்கு சென்றார். நீண்ட தூரம் பயணம் செய்ததால் பீஷ்மர் கங்கைக்கரையில் மிகுந்த களைப்புடன் தங்கினார். அப்போது பீஷ்மரின் தாய் கங்காதேவி நதியிலிருந்து எழுந்து வந்தாள். தன் மகனின் களைப்பைப் போக்கும் வகையில் தண்ணீர் துளிகளை அவர்மேல் தெளித்தாள். பீஷ்மர் தாயை வணங்கிவிட்டு காசி போய் சேர்ந்தார். காசி மன்னனுக்கு பீஷ்மரின் திறமை பற்றி நன்றாக தெரியும். எனவே மற்ற மன்னர்களை வரவேற்றதைவிட பீஷ்மருக்கு தனி மரியாதை கொடுத்து வரவேற்றான்.அங்கு வந்திருந்த மற்ற மன்னர்களுக்கு மனதில் சந்தேகம் ஏற்பட்டது. காலம் முழுவதும் திருமணமே செய்யமாட்டேன் என விரதம் பூண்டிருந்த பீஷ்மருக்கு இங்கு என்ன வேலை? இங்கு சுயவரமல்லவா நடக்கிறது என்பதே அந்த சந்தேகம்.ஒவ்வொருவரும் பீஷ்மரின் பராக்கிரமம் பற்றி பேசியது மூன்று சகோதரிகளின் காதிலும் விழுந்தது. அவர்களில் அம்பா நீங்கலாக மற்ற இரு சகோதரிகளும் பீஷ்மரையே திருமணம் செய்துகொண்டால் என்ன என எண்ணினர். ஆனால் பீஷ்மருக்கு வயதாகிவிட்டது என்ற விஷயம் அவர்களுக்கு தெரியாது. சுயம்வர மண்டபத்திற்கு மாலையுடன் வந்த அவர்கள் பீஷ்மரைத் தேடினர்.
பீஷ்மர் இவர்தான் என அடையாளம் காட்டப்பட்டதும் அவர் அருகில் சென்று பார்த்தபோது தாடி, மீசையுடன் வயதாகிப் போயிருந்ததைப் பார்த்து பின் தங்கினார்கள். விசித்திரவீரியனை அவர்கள் விரும்பவில்லை.அவர்கள் தயங்குவதைக் கண்டு பீஷ்மர் ஓரளவு யூகித்துக்கொண்டார். உடனே மூன்று பெண்களையும் அரண்மனைக்கு வெளியே இழுத்துவந்தார். மற்ற நாட்டு மன்னர்களெல்லாம் கொதித்து எழுந்தனர். யாரையும் பிடிக்காமல் இந்த பெண்கள் பின்வாங்குகின்றனர். இந்த சமயத்தில் பீஷ்மர் அவர்களை இழுத்துச் செல்கிறார் என்றால் மனதில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார் என பொருமினர்.பீஷ்மரை பின்தொடர்ந்து எல்லா மன்னர்களும் விரட்டினர்.வில்வித்தையில் கைதேர்ந்தவரான பீஷ்மர் பாணங்களால் அந்த மன்னர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினார். பிறகு அஸ்தினாபுரம் வந்துசேர்ந்தார். அந்த பெண்களில் ஒருத்தியான அம்பா கண்ணீருடன் காணப்பட்டாள்.மகளே! நீ எதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? உன் மற்ற சகோதரிகளிடம் இதுபோன்ற வருத்தம் காணப்படவில்லையே! என் தம்பி விசித்திரவீரியனுக்காகவே நான் சுயம்வர மண்டபத்திற்கு வந்தேன். அவனைத் திருமணம் செய்துகொள்ள உனக்கு சம்மதம்தானே! என்றார்.அவள் கண்ணீரைப் பெருக்கி, நான் தங்களின் சகோதரனை திருமணம் செய்துகொள்ள இயலாது. ஏனென்றால் நான் சாளுவ தேசத்து அரசன் பிரம்மதத்தனை காதலிக்கிறேன். அவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற என் எண்ணத்தை என் தந்தை தகர்த்துவிட்டார். அவருடைய கட்டாயத்துக்காகவே சுயம்வர மண்டபத்திற்கு வந்தேன். ஆனால் நீங்களோ என்னைக் கடத்தி வந்துவிட்டீர்கள். என்னை அவரிடமே அனுப்பி வைத்துவிடுவீர்களா? என கேட்டாள்.
மகாபாரதம் பகுதி-9
அம்பா இப்படி சொன்னதும் பீஷ்மர் அவள் மேல் இரக்கம் கொண்டார்.மகளே! காதலை அழிக்கவல்லவர் யார்? காதலைக் கெடுப்பவர்கள் நன்றாக வாழ முடியாது. நீ விரும்பியபடி சாளுவதேசம் செல். உன் காதலனை மணந்து கொண்டு சந்தோஷமாக இரு, என வாழ்த்தி, தக்க படைபலத்துடன் அவளை சாளுவ தேசத்துக்கு அனுப்பி வைத்தார்.அம்பா மிகுந்த மகிழ்ச்சியுடன் சாளுவதேசத்துக்கு சென்றாள். அரண்மனைக்குச் சென்று பிரம்மதத்தனை அப்படியே அள்ளி அணைத்தாள்.மன்னவரே! பீஷ்மரிடம் பிடிபட்டவர்கள் தப்பித்த வரலாறு உண்டா? நான் உங்கள் மீது கொண்ட காதலை அவரிடம் தெரிவித்தேன். அவரது தம்பியை மணந்து நிம்மதியாக வாழ முடியாது. மனதில் ஒருவனையும், வீட்டில் ஒருவனையும் சுமந்து கொண்டு வாழ முடியாது என்றேன். என் கருத்தை பீஷ்மர் ஏற்றார். என்னை விடுவித்து விட்டார். பிரம்மதத்தரே! இனி நம்மை பிரிக்க யாருமில்லை. நம் மணநாளைக் குறியுங்கள், என படபடவென பொரிந்தாள். சீ மானம் கெட்டவளே! வெளியே போ, என அரண்மனையே அதிரும் வகையில் கத்தினான் பிரம்மதத்தன். அம்பா அதிர்ந்தாள். ஏ அம்பா! யாரை ஏமாற்றப் பார்க்கிறாய். அந்த பீஷ்மன் தன் தம்பி விசித்திர வீரியனுக்காக உன்னை அழைத்துச் சென்றான். அவன் உன்னிடம் உல்லாசமாக இருந்திருப்பான். அங்கே இருந்துவிட்டு இங்கே வர உனக்கு எப்படி தைரியம் வந்தது? இங்கிருந்து ஓடிவிடு. உன்னை நான் இனியும் திருமணம் செய்ய மாட்டேன். ஏற்கனவே ஒருவனால் கடத்தப்பட்ட உன்னை திருமணம் செய்துகொள்ள நான் ஒன்றும் பைத்தியக்காரன் அல்ல, என்று வாய்க்கு வந்தபடி பேசினான்.மனம் உடைந்துபோன அம்பா, தலைகுனிந்து அவமானப்பட்டு அங்கிருந்து அஸ்தினாபுரத்திற்கே திரும்பினாள்.
பீஷ்மரின் முன்னால் சென்ற அவள் நடந்த சம்பவத்தை அழுதபடியே விவரித்தாள். பீஷ்மர் அவளுக்கு ஆறுதல் கூறினார்.அம்பா பீஷ்மரிடம், அன்பரே! உங்களால் கடத்தி வரப்பட்டதால்தான் என்னை திருமணம் செய்ய முடியாது என பிரம்மதத்தன் சொல்லி விட்டான். உங்கள் தம்பியை திருமணம் செய்தால் நீ பிரம்மதத்தனுடன் எத்தனை நாள் இருந்தாய் என அவர் என்னிடம் கேள்வி கேட்பார். இந்த நிலையில் நான் உங்களை மட்டுமே நம்பியுள்ளேன். நீங்கள்தான் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் என் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனக்கு நல்ல பதில் சொல்லுங்கள், என்றாள்.பீஷ்மர் தன் நிலைமையை அவளிடம் விளக்கி சொன்னார். தனது தந்தைக்காக பிரம்மச்சரிய விரதம் ஏற்றிருப்பதையும், இந்தப்பிறவியில் தனக்கு திருமணம் என்ற ஒன்று இல்லை என்றும் அழுத்தமாக சொன்னார். அம்பா பிடிவாதம் செய்தாள்.இருந்தாலும், அவளது வாதம் எடுபடாததால் தந்தை காசிராஜனின் வீட்டிற்கே திரும்பிவிட்டாள். மகளின் நிலைமையைக் கண்டு காசிராஜன் நொந்துபோனான். அவளுக்கு ஒரு ஆலோசனை சொன்னான்.மகளே! பீஷ்மர் பிரம்மச்சரிய விரதம் பூண்டிருப்பது உண்மையே. ஆனால் அதை உடைக்கும் சக்தி இந்த உலகில் ஒரே ஒருவருக்குத்தான் இருக்கிறது. அவர்தான் பரசுராமர். பரசுராமரிடம் பீஷ்மர் வில்வித்தை கற்றார். குருவின் சொல்லை சீடனால் மறுக்கமுடியாது. மேலும் பரசுராமர் அரசகுலத்திற்கு எதிரானவர். அரசர்கள் ஏதேனும் தவறுசெய்தால் அவர்களை கொல்லவும் தயங்கமாட்டார். நீ பரசுராமரிடம் செல். அவரது பாதங்களில் விழுந்து கதறி அழு. உன் நிலைமையை எடுத்துச்சொல். நிச்சயமாக அவர் உனக்கு உதவுவார். சென்று வா, எனச்சொல்லி வழியனுப்பி வைத்தான்.
அம்பா பரசுராமரின் ஆஸ்ரமத்திற்கு சென்றாள். ஒரு அபலைப்பெண் தன் ஆதரவைத்தேடி வந்திருப்பதை அறிந்த பரசுராமர் அவளிடம் நடந்த விஷயங்களை கேட்டறிந்தார். நிச்சயமாக அவளுக்கு உதவுவதாக வாக்களித்தார். அவளை அழைத்துக்கொண்டு அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தார்.பரசுராமர் தன்னை பார்க்க வருகிறார் என்பதை அறிந்த உடனேயே பீஷ்மர் அவர் வரும் வழியிலேயே சென்று வரவேற்றார். நீண்ட நாட்களுக்குப் பிறகு குருவைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரை வெகுவாக விசாரித்தார்.சீடனே! இந்த அம்பாவுக்காக பரிந்துபேச நான் வந்திருக்கிறேன். இவளை நீ திருமணம் செய்ய முடியாது என சொல்வது எந்த விதத்திலும் நியாயம் அல்ல. எந்த ஆண் மகனால் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாளோ, அவனே அவளை ஏற்றுக்கொள்வதுதான் தர்மம். என் சீடனான நீ, தர்மத்தை மீறி நடக்கமாட்டாய் என நம்புகிறேன். உன் குரு என்ற முறையில் அம்பாவை திருமணம் செய்துகொள்ள கட்டளையிடுகிறேன். திருமணத்திற்கு ஏற்பாடு செய். நானே இருந்து நடத்தி வைக்கிறேன், என்றார்.குருவின் இந்த வார்த்தைகள் பீஷ்மரின் காதுகளில் அம்பெனப் பாய்ந்தது. அவர், குருவே! என் தந்தைக்காக நான் பிரம்மச்சரிய விரதம் பூண்டுள்ளேன். எனக்கு திருமணம் என்பதே கிடையாது. ஒரு வேளை நான் கங்கா மாதாவின் வயிற்றில் இன்னொரு முறை பிறந்தால் அது நடக்கலாம். நடக்காத ஒன்றுக்காக தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீர்கள், என்று பணிவோடு சொன்னார்.பரசுராமருக்கு கோபம் வந்துவிட்டது. கண்களில் அனல் பறந்தது.உனக்கு நான் குருவாக இருந்து சொல்லிக்கொடுத்தது அனைத்தும் இந்த நிமிடத்தோடு வீணாகப் போயிற்று. குரு சொல் கேளாதவன் மனிதனே அல்ல. கடைசியாக சொல்கிறேன். இவளை மணக்க முடியுமா? முடியாதா? என்றார்.பீஷ்மர் மறுத்துவிட்டார்.
அப்படியானால் இந்த பிரச்னைக்கு போர் ஒன்றுதான் தீர்வு. நான் உன்மீது போர் தொடுக்கப் போகிறேன். நீ தோற்றுப்போனால் நான் சொன்னதை ஏற்கவேண்டும், என்று சொல்லியபடியே வில்லையும் அம்பையும் எடுத்தார் பரசுராமர்.
அப்படியானால் இந்த பிரச்னைக்கு போர் ஒன்றுதான் தீர்வு. நான் உன்மீது போர் தொடுக்கப் போகிறேன். நீ தோற்றுப்போனால் நான் சொன்னதை ஏற்கவேண்டும், என்று சொல்லியபடியே வில்லையும் அம்பையும் எடுத்தார் பரசுராமர்.
மகாபாரதம் பகுதி-10
பரசுராமருக்கும், பீஷ்மருக்கும் பத்து நாட்கள் கடும் போர் நடந்தது. பீஷ்மரின் பாணங்களை பரசுராமரால் தாங்க முடியவில்லை. தசரத புத்திரன் ராமன் எப்படி அம்பு மழை பொழிவானோ அதுபோல் பொழிந்தாராம் பீஷ்மர். தன் தோல்வியை சிஷ்யனிடம் ஒப்புக்கொண்ட பரசுராமர் அங்கிருந்து சென்று விட்டார்.அம்பா அழுகையும், கோபமும் ஒன்றையொன்று மிஞ்ச, தனக்கிருந்த ஒரே ஆதரவையும் இழந்து விட்ட நிலையில், அங்கிருந்து காட்டிற்குச் சென்றாள். அவள் கடும் தவம் ஒன்றை இருந்தாள்.இறைவனிடம், கடவுளே! பீஷ்மன் என்னும் அபாரசக்தி கொண்ட ஒருவனால் நான் ஏமாற்றப்பட்டேன். அவனால் என் வாழ்க்கை அழிந்தது. நான் இருக்கும் இந்த தவத்தை ஏற்று அவனை என்றேனும் ஒருநாள் போரில் ஜெயிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும், என வேண்டினாள். பத்தாண்டுகள் உண்ணாமல், தண்ணீர் கூட குடிக்காமல் பாதம் மீது மற்றொரு பாதத்தை வைத்து கைகளை தலை மேல் கூப்பிய நிலையில் செய்த அவளது தவம் பலித்தது. அவளது மறைவுக்குப் பின் யாகசேனன் என்பவனுக்கு மகனாகப் பிறந்தாள். சிகண்டி என்று அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டினான் யாகசேனன்.இந்த நிலையில் அம்பிகாவையும், அம்பாலிகாவையும் திருமணம் செய்த விசித்திரவீரியன் அவர்களைக் கூடாத நாளே இல்லை என்றாலும், இரண்டு பெண்களுக்கும் கருத்தரிக்கவே இல்லை. அது மட்டுமல்ல! பெண் இன்பத்தை அதிகமாக அனுபவிப்பவர்கள் பெறும் க்ஷயரோக நோயால் அவன் இறந்தே போனான். தாய் யோஜனகந்தி துக்கத்தில் ஆழ்ந்தாள். சந்திரவம்சம் இத்தோடு தொலைந்து விட்டதே, என்ன செய்யலாம்? என்ற ஏக்கத்தில் பீஷ்மரை அழைத்தாள். பீஷ்மா! நான் சொல்வதைக் கேள். நீ உன் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை நாட்டின் நலன் கருதி கைவிட வேண்டிய நிலைமை இப்போது வந்து விட்டது. மேலும், தாயின் அனுமதியுடன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறுவதில் தவறேதும் இல்லை.
தேவமுறை என்ற தர்மத்தின்படி, சகோதரன் குழந்தையின்றி இறந்து போனால், நாட்டை ஆளும் பொருட்டு, அவனது இன்னொரு சகோதரன் அப்பெண்ணைக் கூடி குழந்தை பெறலாம். அதன்படி நீ அம்பிகா, அம்பாலிகாவுடன் கூடி குழந்தைகளைப் பெறு. நாட்டைக் காப்பாற்று. இது என் உத்தரவு, என்றாள். இடியோசை கேட்ட நாகம் போல் நடுங்கி விட்டார் பீஷ்மர்.அம்மா! இது கொடுமை அல்லவா? தம்பியின் மனைவிகளை நான் தொடுவதாவது? மேலும், எந்த நிலையிலும் என் பிரம்மச்சரிய விரதத்தை கைவிடுவதில்லை என்ற சத்தியத்தை உங்கள் தந்தைக்கு செய்து கொடுத்தேன். என் தந்தையிடமும் வாக்கு கொடுத்தேன். வேண்டாம் தாயே. ஆனால், இன்னொரு யோசனை இருக்கிறது. அதை பரிசீலியுங்கள் தாயே! என்றார்.யோஜனகந்தி அவசர அவசரமாக, சொல்! பீஷ்மா, எனக்கு பேரக்குழந்தைகள் பிறக்க வழியிருக்கிறதா? சந்திரவம்சம் அழியாமல் இருக்க மார்க்கம் இருக்கிறதா? நாட்டை ஆள ஒரு புத்திரன் பிறக்கப் போகிறானா? சொல்...சொல்...ஏக்கமும் ஆவலும் என்னை பதட்டமடையச் செய்கின்றன, என்றாள்.தாயே! பரசுராமர் அரசகுலத்தின் மீது கோபம் கொண்டு, எல்லா அரசர்களையும் வேருடன் கிள்ளி எறிந்து விட்ட காலம் ஒன்று இருந்ததைத் தாங்கள் அறிவீர்கள். அப்போது கணவனை இழந்த அரசிகள் எல்லோரும் ஒன்றுகூடி, முனிவர்கள் மூலமாக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள். இது சாஸ்திரத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. அந்த விதியின் படி அம்பிகா, அம்பாலிகாவைக் குழந்தை பெறச் செய்யலாம், என்றதும், யோஜனகந்தி ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினாள். பல ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்வில் நடந்த அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தாள்.அப்போது யோஜனகந்தி மிக மிக அழகாக இருப்பாள். அவளது தொழில் படகோட்டுவது தானே! ஒருநாள் பராசரர் என்ற முனிவர் யமுனைக்கரைக்கு வந்தார். அந்த நேரத்தில் உலகம் அதுவரை கண்டிராத ஒரு அதிர்ஷ்டகரமான கிரகநிலை ஏற்பட்டது.
பராசரர் இதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். இன்னும் சிறிது நேரத்தில் அந்த கிரகநிலை மாறி விடும். அதற்குள் இந்த பூமியில் ஒரு குழந்தை பிறந்தால், அது உலகம் புகழும்படி வாழும். உலகத்துக்கு அரிய பல கருத்துக்களைத் தரும் என்று அவர் மனதில் பட்டது.யோஜனகந்தியின் படகில் ஏறினார். ஆற்றின் நடுவே சென்ற போது, பெண்ணே! உலகம் இதுவரை கண்டிராத ஒரு அதிசய கிரகநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நேரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அதனால் இந்த உலகமே பலனடையும். இங்கே நீயும், நானும் மட்டுமே இருக்கிறோம். நான் உன்னோடு கூடுகிறேன். நீ அந்தக் குழந்தையைப் பெறும் பாக்கியவதி ஆகிவிடு. குழந்தை பிறந்ததும் நீ மீண்டும் கன்னித்தன்மை உடையவளாகி விடுவாய். இது சத்தியம், என்றார்.யோஜனகந்தி கோபப்பட்டாள்.முனிவரே! உம் தரத்துக்கும் தகுதிக்கும் இந்த வார்த்தைகள் அழகா! கல்வியறிவற்றவள் என நினைத்து தானே என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்! நீர் சொல்வதை நம்ப முடியவில்லை, என்றாள்.நேரம் செல்லச்செல்ல பராசரர் பதட்டப்பட்டார். தனது நிலையில் உறுதியாக நின்றார்.கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையுமல்லவா? யோஜனகந்தியும் கரைந்து விட்டாள். தன் உடலில் இருக்கும் மீன்வாடை அவரை நெருங்க விடாது என அவரிடம் கூறினாள். அந்த மணத்தை அப்படியே மாற்றிய பராசரர் அவளது உடலுக்கு சந்தன மணத்தைக் கொடுத்தார். யோஜனா மகிழ்ந்து போனாள். அதேநேரம், பகிரங்கமாக நட்ட நடு ஆற்றில் உறவு கொள்வது எப்படி என வெட்கப்பட்டாள்.அப்போது பராசரர் தன் சக்தியால் அந்த இடத்தில் இருள் கவியச் செய்தார். அந்த நிலையில் அவர்கள் கூடினர். அவள் கர்ப்பமானாள்.
மகாபாரதம் பகுதி-11
அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இருளில் பிறந்ததால் அது கரிய நிறமுடையதாகக் காணப்பட்டது. அந்தக் குழந்தை தான் வியாசன். பிறக்கும் போதே அவனுக்கு ஜடாமுடி இருந்தது. பிறக்கும் போதே அவன் என்னிடம் பேசினான். அம்மா! நீ மீண்டும் கற்பு நிலையை அடையப் போகிறாய். அப்படியிருக்க நான் உன்னோடு இருக்க இயலாது. நான் தவம் முதலானவை இயற்றிக் கொண்டு கானகங்களில் வசிப்பேன். நீ எப்போது என்னை நினைக்கிறாயோ அப்போது உன் முன் தோன்றுவேன். உனக்கு ஏதேனும் சிரமமான சூழ்நிலைகள் வந்தால், என்னை அழை! என்று சொல்லி விட்டு மறைந்து விட்டான். இன்று அவன் பெரியவனாக இருப்பான். அவனை நான் வரவழைக்கிறேன். அம்பிகா, அம்பாலிகாவுக்கு அவன் அத்தான் முறை ஆகிறது. முறை பிறழாமல், அரச தர்மத்தை மீறாமல், அவர்களை குழந்தை பெறச் செய்வோம், என்றாள் யோஜனகந்தி. பீஷ்மர் மகிழ்ந்தார். தாயே! இறைவன் யாரையும் கைவிடுவதில்லை. ஒரு பாதை அடைபட்டால், இன்னொரு பாதையைத் திறந்து விடுவான் என்பது இதுதான் போலும். கவலையை விடுங்கள்! நீங்கள் வியாச மாமுனிவரை அழையுங்கள். நம் கவலை நீங்கும், என்றார். யோஜனகந்தி அந்தக் கணமே, மகனே வியாசா, வா என் செல்வமே, என்றாள். மிகப்பெரிய ஜடாமுடி தரையில் புரள, கன்னங்கரிய நிறத்துடன், ஆஜானுபாகுவான ஒரு உருவம் அவள் முன்னால் வந்தது. என்னைப் பெற்றவளே, வணக்கம்.
உத்தரவிடுங்கள் தாயே! கட்டளைக்கு காத்திருக்கிறேன், என்று சாஷ்டாங்கமாக அன்னையின் பாதத்தில் விழுந்தது அந்த உருவம். ஆம்... வியாசர் வந்து விட்டார். மகனை அள்ளியணைத்து உச்சி முகர்ந்தாள் யோஜனகந்தி. மகனே! என் நிலையை நீ அறிவாய். முக்காலமும் உணர்ந்த உனக்கு, எல்லாம் தெரிந்த உனக்கு எதையும் சொல்ல வேண்டியதில்லை. இந்த நாட்டுக்கு வாரிசு வேண்டும். பீஷ்மனால் வாரிசுகளைத் தர இயலாத நிலையில் நீ தான் அம்பிகா, அம்பாலிகாவுடன் கூடி குழந்தைகளைப் பெற்று தர வேண்டும், என்றாள். தாய் சொல்லைத் தட்டவில்லை வியாசர். அம்பிகா, அம்பாலிகாவிடமும் நிலைமையை எடுத்துச் சொல்லி, வியாசருடன் மகிழ்ந்திருக்க சம்மதம் பெற்றாள் யோஜனகந்தி. அன்றிரவில், அம்பிகையும், அம்பாலிகாவும் பஞ்சணையில் படுத்திருக்க வியாசர் உள்ளே நுழைந்தார். அவ்வளவு நேரமும் அவரைப் பார்க்காத அந்தப் பெண்கள் அதிர்ந்து விட்டனர். வியாசர் என்றால் செக்கச்சிவந்த கோவைப்பழமாக இருப்பார் என நினைத்தோம். குறைந்த பட்சம் ஒரு இளமைத் தோற்றமாவது இருக்கும் என நினைத்தோம். இதென்ன ஜடாமுடியும், தாடியுமாய்... ஐயோ! சுந்தரன் ஒருவன் வருவான் என பார்த்தால், கோரத்தின் சொரூபமாய் ஒருவன் வருகிறானே. வியாசர் அம்பிகாவை நெருங்கினார். அவளை அள்ளி அணைத்தார். அவளோ அவரது உருவத்தைக் காண சகியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள். வேண்டா வெறுப்பாக தன்னை அவரிடம் ஒப்படைத்தாள். அடுத்து அம்பாலிகா விடம் சென்றார் வியாசர். அவளோ பயத்தில் வியர்த்து விறுவிறுத்தாள். உடலில் உள்ள ரத்தமெல்லாம் வற்றி வெளுத்து விட்டது.
அந்த நிமிடமே அவர்கள் குழந்தைகளைப் பெற்றனர். ரிஷிகளுக்கு உடனடியாக குழந்தைகளைக் கொடுக்கும் சக்தி உண்டு என்கின்றன நமது இதிகாசங்களும், புராணங்களும். கந்த புராணத்தில் காஷ்யப முனிவர் அசுரக் குழந்தைகளை உடனுக்குடன் உருவாக்கியதாக தகவல் இருக்கிறது. மகாபாரதத்தில் வியாசர் பிறந்ததும் அப்படியே. அதுபோல், இப்போதும் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். குழந்தைகளை ஆசையோடு எடுத்தார் வியாசர். அந்தக் குழந்தையை அசைக்கவே அவ்வளவு கஷ்டமாக இருந்தது. பத்தாயிரம் யானைகளை ஒரு சேர தூக்க முடியுமா? அவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தது அந்தக் குழந்தை. அதன் கண்களைப் பார்த்த வியாசர், இது பார்வையில்லாமல் பிறந்திருக்கிறதே, பிறந்தும் பயனில்லையே. இந்தக் குழந்தையால் எப்படி நாடாள முடியும்? என்றவராய், அம்பாலிகாவின் குழந்தையைப் பார்த்தார். அதன் முகம் வெளுத்துப் போயிருந்தது. மற்றபடி குறைகள் ஏதுமில்லை. இதனால் ஆறுதலுடன் வெளியே வந்து, யோஜனகந்தியிடம் நடந்ததை விவரித்தார். பீஷ்மர் தன் தாயிடம், அம்மா! நாடாள நல்லதொரு புத்திரன் வேண்டும். இன்னொரு முறை முயற்சித்துப் பார்ப்போம், என்றார். மூத்தவள் அம்பிகாவுக்கு பார்வையற்ற பிள்ளை பிறந்துள்ளதால், நல்ல குழந்தைக்காக அவளையே அனுப்பி வைக்க எண்ணினர். அவளும் சம்மதிப்பது போல நடித்தாள். ஆனால், துறவியைப் போல் கோரமாய் தோற்றமளிக்கும் இவனுடன் இன்னொரு முறை செல்வதா என வெறுப்படைந்து, தன்னைப் போலவே அலங்கரித்து தன் தோழிப் பெண் மாதுரியை அனுப்பிவிட்டாள். இருளில் அவளை வியாசர் அடையாளம் காணவில்லை. ஒருவேளை அவருக்கே இது தெரிந்திருந்தாலும் கூட, எது விதிக்கப்பட்டதோ அதன்படியே நடந்து கொண்டார். அவள் அந்த மகானை அடைவதை தன் பாக்கியமாகக் கருதி, நல்ல மனநிலையுடன் தன்னை ஒப்படைத்தாள். அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பேரழகுடன் விளங்கினான். வியாசரைப் போல் கருப்பாக இல்லாமல், தாயைப்போல் சிவப்பாய் இருந்தான். தாம்பத்ய வாழ்க்கையில் மனமொத்த நிலை வேண்டும். சண்டை போட்டுக் கொண்டோ, குடித்து விட்டோ, விருப்பமில்லாமலோ, இருவரில் யாராவது ஒருவருக்கு உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் கட்டாயத்துக்காகவோ உறவு கொண்டால், பிறக்கும் குழந்தைகள் உருவத்திலும், குணத்திலும் மாறுபாடு கொண்டதாக இருக்கும். கெட்ட குணமுடையவர்களை உருவாக்குவதே பெற்றவர்கள் தான்.வியாசர் விடை பெற்றார். மீண்டும் தன் உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறு தாயிடம் வேண்டினார். முதல் குழந்தைக்கு திருதராஷ்டிரன், அடுத்த குழந்தைக்கு பாண்டு, மூன்றாவது குழந்தைக்கு விதுரன் என பெயர் சூட்டினர்.
மகாபாரதம் பகுதி-12
குழந்தைகள் மூவரும் இளமைப்பருவம் எய்தினர். திருதராஷ்டிரன் பார்வையற்றவன் என்றாலும் கூட, மூத்தவனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற அடிப்படையில் அஸ்தினாபுரத்தின் மன்னர் பதவி வழங்கப்பட்டது. அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார் பீஷ்மர். திருதராஷ்டிரனுக்காக காந்தார தேசத்துக்கு சென்றார் பெண் பார்த்தார் பீஷ்மர். அந்நாட்டு மன்னன் சுபலன். அவனுக்கு பீஷ்மர் குடும்பத்தில் பெண் கொடுக்க வேண்டும் என்றால் கசக்கவா செய்யும்? தன் மகள் காந்தாரியை அழைத்தான். அழகுப்பதுமையான அவள் தந்தை முன் வந்து நின்றாள். அம்மா! பீஷ்மர் வந்திருக்கிறார். தன் குலம் காக்க வந்த திருதராஷ்டிரனுக்கு உன்னைப் பெண் கேட்க. என்னம்மா சொல்கிறாய்? தந்தையே! இதெல்லாம் என்ன கேள்வி! பெற்றவர்களைப் பெருமைப்படுத்துபவளே பெண். நான் இதில் கருத்து சொல்ல என்ன இருக்கிறது? என் நன்மை என்னை விட தங்கள் கையில் தான் அதிகம் இருக்கிறது, என்றாள் பணிவோடு காந்தாரி. குடும்பத்திற்கேற்ற குலவிளக்கு, என பாராட்டினார் பீஷ்மர். காந்தாரியின் அண்ணன் சகுனி அங்கே வந்தான். காந்தா! தந்தையார் உன்னிடம் சம்மதம் கேட்பதில் ஒரு உட்பொருள் இருக்கிறது. உனக்கு பார்த்துள்ள மாப்பிள்ளைக்கு பார்வை கிடையாது. அதையும் யோசித்துக் கொள்,.
அண்ணா! இதில் யோசிக்க ஏதுமில்லை. என் சகோதரனுக்கும், தந்தைக்கும் தெரியாதது என்ன? அவர் பார்வையில்லாதவராக இருந்தால் என்ன? நானும் இந்தக்கணமே என் பார்வையை இழந்து விடுகிறேன், என்றவள், வேகமாகத் தன் அறைக்குச் சென்று, பொன்னால் செய்யப்பட்ட ஒரு பட்டையை எடுத்து வந்தாள். அதைத் தன் கண்ணில் கட்டினாள். எனக்கு வரப்போகும் கணவரால் எப்படி உலகத்தைப் பார்க்க முடியாதோ, அதே போல நானும் இவ்வுலகத்தைப் பார்க்க மாட்டேன், என சொல்லிவிட்டு குனிந்த தலையுடன் தோழிப் பெண்களின் துணையுடன் தன் அறைக்குப் போய் விட்டாள். மகாபாரதத்தை ஏன் படிக்கச் சொல்கிறோம் இதுபோன்ற நல்ல கருத்துக்களை தெரிந்து கொள்ளத்தான். பெற்றவர்கள் சொல் கேட்டு நடக்கும் பெண்கள் இப்போது குறைந்து போய் விட்டார்கள். குறிப்பாக திருமண விஷயத்தில், பெற்றவர்கள் எடுக்கும் முடிவை பல பெண்கள் ஆமோதிப்பதில்லை. போதாக்குறைக்கு காதல் என்ற படு குழியில் வேறு விழுந்து தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள். ஒரு பார்வையற்றவனை மணக்கக்கூட அந்தக்காலத்துப் பெண் சம்மதித்திருக்கிறாள். அதற்காக தன் சுகத்தையும் அழித்துக் கொண்டாள் என்று பாரதத்தில் படிக்கும் போது அக்காலப் பெண்களைப் பற்றி நம் நெஞ்சு மகிழ்ச்சியால் விம்முகிறது. இந்த தேசம் இத்தனை வன்முறைகளுக்கு மத்தியிலும் தலை நிமிர்ந்து நிற்கக்காரணம் இவளைப் போன்ற பெண்கள் செய்த தியாகத்தால் தான். பெண்கள் பெற்றவர்கள் சொல் கேட்டு நடக்க வேண்டும். காந்தாரியின் சம்மதம் கிடைத்ததும் ஒரு நல்லநாள் பார்க்கப்பட்டது. அக்காலத்தில் மன்னர்கள் பல பெண்களை திருமணம் செய்ய அனுமதி இருந்தது. அதன்படி திருதராஷ்டிரனுக்கு பல மனைவிகள் ஏற்கனவே இருந்தாலும், காந்தாரியே பட்டத்தரசியானாள்.
இங்கே இப்படியிருக்க, சுரதை என்ற பெண்மணி துர்வாச முனிவருக்கு பல சேவைகள் செய்து வந்தாள். துர்வாசர் என்றாலே எல்லாருக்கும் தெரியும். அவர் பெரிய கோபக்காரர் என்று. சுரதை ராஜகுமாரி என்றாலும் கூட, அவர் மனம் கோணாமல் சேவை செய்து வந்தாள். இவள் சூரன் என்ற மன்னனின் மகள். அவளை குந்திபோஜன் என்ற மகாராஜா, தன் மகளாக சுவீகராம் எடுத்துக் கொண்டான். குந்திபோஜனின் அரண்மனைக்குத் தான் துர்வாசர் வந்திருந்தார். வந்தவரை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள மகளையே நியமித்திருந்தான் மன்னன். குந்திபோஜனின் மகளான பிறகு சுரதைக்கு அவளது சொந்தப் பெயர் மறைந்து விட்டது. அவளுக்கு குந்தி என்று பெயர் நிலைத்து விட்டது. இப்போது குந்தி சிறுமியாகத்தான் இருந்தாள். அவள் தன் தோழியரோடு அம்மானை ஆடுவாள். ஆற்றுக்குச் சென்று தோழியருடன் நீச்சலடித்து மகிழ்வாள். ஊஞ்சல் கட்டி ஆடுவாள். இப்படி விளையாட்டு பருவமுள்ள சிறுமி கோபக்கார துர்வாசருக்கு எப்படி சேவை செய்ய முடியும் என்று மன்னன் கொஞ்சமும் எண்ணி பார்க்கவில்லை. ஏதோ ஒரு தைரியத்தில் அந்த பணியை ஒப்படைத்துவிட்டான். குந்தியும் தன் விளையாட்டுகளையெல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு, முனிவருக்கு தேவையான பணி விடையை அவரது மனம் கோணாமல் செய்து வந்தாள். துர்வாசருக்கு சந்தோஷம். எப்போதும் கடுகடுவென இருப்பவர்களைக் கூட பொறுமை மகிழ்ச்சிகரமாக்கி விடுகிறது. துர்வாசர் சமயத்தில் கோபபட்டாலும் கூட, அதைப் பொருட்படுத்தாமல் சிறுமி குந்தி சேவை செய்தாள். துர்வாசரே அசந்து விட்டார். அம்மா! குந்தி, நான் புறப்படுகிறேன். இங்கிருந்த காலத்தில் எனக்கு வேண்டிய பணிவிடைகளை நல்ல முறையில் செய்தாய். உன்னைப் போன்ற பொறுமையுள்ள பெண்ணை பூமியில் நான் இதுவரை பார்க்கவில்லை. உபசாரம் என்பது பெரியகலை. பிறர் மனம் கோணாமல் உபசரிப்பவர், சொர்க்கத்திற்கு செல்வார்கள். இந்த உபசரிப்புக்காக பரிசொன்று தரப்போகிறேன். நீ பெற்றுக் கொள், என்றாள். என்ன இருந்தாலும் குந்தி குழந்தை தானே! மேலும் அவர் கோபக்கார மகரிஷி. வேண்டாம் என்று சொல்லி அவர் சபித்து விட்டாலோ, தந்தையிடம் புகார் சொன்னாலோ என்னாவது? குந்தி பணிவுடன் கைகட்டி நின்றாள். அவளை அருகில் அழைத்த மகரிஷி, தன் மடியில் இருத்திக் கொண்டு, அம்மா! ஒரு ரகசிய மந்திரம் ஒன்றை உனக்கு கற்றுத் தரப்போகிறேன். இது யாருக்கும் கிடைக்காத அரிய பரிசு. கவனமாகக் கேள், என்றார்.
மகாபாரதம் பகுதி-13
குந்தி பணிவுடன் அமர்ந்தாள். அவளுக்கு கிடைத்தற்கரிய மந்திரம் ஒன்றை கற்றுக் கொடுத்தார் துர்வாசர். சாதாரண மந்திரமா அது? மகளே! தேவர்கள் யாராக இருந்தாலும், இந்த மந்திரத்தைக் கேட்ட மாத்திரத்தில் ஓடோடி வருவார்கள். அவர்களால் நீ கர்ப்பமடைவாய். தெய்வ மைந்தர்களைப் பெறுவாய். அவர்களது புகழ் இந்த உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். நீயும் தெய்வத்தாய் என்ற அந்தஸ்தைப் பெறுவாய், என்றார். குந்தி அப்போது தான் வயதுக்கு வந்திருந்தாள். தழதழவென்ற உருவம். அவளைப் பார்க்கும் ஆண்களின் கண்கள் பார்வையை விலக்கவே விலக்காது. அவளைத் திருமணம் செய்ய பல நாட்டு மன்னர்களும் துடித்துக் கொண்டிருந்தனர். வயதுக்கு வந்திருந்தாலும், விளையாட்டு புத்தி அந்தப் பெண்ணுக்கு இன்னும் மாறவில்லை. அது மட்டுமல்ல! மனித இனத்திடம் ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்யக்கூடாது எனச் சொல்கிறோமோ அதை செய்து பார்த்தால் என்னவென்று? காலையில் பள்ளிக்கு புறப்படும் பையனிடம் தாய், டேய்! டிபன் பாக்சிலே இன்று உனக்கு பிடித்த ஸ்நாக்ஸ் வச்சிருக்கேன். இங்கேயே திறந்து பார்க்காதே. ஸ்கூலில் போய் பார், என்பாள். பையன் பாதி வழி தான் போயிருப்பான். உடனே டிபன் பாக்சை திறந்து என்ன இருக்கிறது என பார்த்து விடுவான். குறிப்பாக குழந்தைகளிடம் இந்தக் குணம் அதிகமாகவே உண்டு. டிவியில் இன்ன நிகழ்ச்சியைப் பார்க்காதே என்றால், பெற்றவர்கள் அசரும் சமயத்தில், குழந்தை அந்த சானலைக் கண்டிப்பாக திருப்பிப் பார்ப்பான்.
குந்தியும் குழந்தை தானே! அவளுக்கும் ஆசை. இந்த முனிவர் ஏதோ வரம், குழந்தை என்றெல்லாம் சொன்னாரே! சூரியனையும். சந்திரனையும், புதனையும், சுக்கிரனையும், இந்திரனையும், வசுதேவர்களையும் யாரை அழைத்தாலும் வருவார் என்று சொன்னாரே! இன்று யாரையாவது பார்த்தால் என்ன? அப்படியெல்லாம் வரவா செய்வார்கள்! இவர் ஏதோ கதை சொல்லியிருக்கிறார், என்றவளாய், வானத்தை அண்ணாந்து பார்த்தாள்.
கண் கூசியது. உயரத்தில் சூரியன் சென்று கொண்டிருந்தான். இந்த சூரியனை அழைத்தால் என்ன! வருகிறானா என்று தான் பார்ப்போமே, என்றவளாய், சூரியனுக்குரிய மந்திரத்தை உபதேசித்தாள். அடுத்த கணமே தேஜஸான முகத்துடன் கொவ்வைப்பழமெனச் சிவந்த நிறத்தில் வந்து நின்றான் ஒரு இளைஞன். அவனைப் பார்த்ததும் குந்திக்கு நாணம். தலை குனிந்து நின்றாள். அவன் அவளது அருகில் வந்தான். அவளை ஏதும் கேட்கவில்லை. முகத்தை தன் ஒற்றை விரலால் தூக்கி அவளது கண்களின் அழகை ரசித்தான். அவள் சுதாரித்து ஒதுங்கினாள். இளைஞரே! திடீரென இங்கு வந்த தாங்கள் யார்? என் அனுமதியின்றி எப்படி என்னைத் தொடலாம்? பெண்கள் கற்புநெறியுள்ளவர்கள் என்பதைத் தாங்கள் அறிய மாட்டீர்களோ? என்றாள் சிறு கோபத்துடன். அவன் கலகலவென சிரித்தான். அன்பே! நன்றாக இருக்கிறது உன் கூற்று. நீ தானே என்னை அழைத்தாய். அதிலும் உணர்வு களைத் தூண்டும் அந்த மந்திரத்தைச் சொல்லி என்னை வரவழைத்து விட்டு, இப்போது ஒதுங்கிப் போனால் நான் என்ன செய்ய முடியும்? தாபத்தால் தவித்து இங்கு வந்தேன் கண்ணே! என்று சொல்லியபடியே, அவளது பதிலுக்கு காத்திராமல், ஆசையுடன் அணைத்தான். அவள் அவனது பிடியில் இருந்து விலகினாள்.
கண் கூசியது. உயரத்தில் சூரியன் சென்று கொண்டிருந்தான். இந்த சூரியனை அழைத்தால் என்ன! வருகிறானா என்று தான் பார்ப்போமே, என்றவளாய், சூரியனுக்குரிய மந்திரத்தை உபதேசித்தாள். அடுத்த கணமே தேஜஸான முகத்துடன் கொவ்வைப்பழமெனச் சிவந்த நிறத்தில் வந்து நின்றான் ஒரு இளைஞன். அவனைப் பார்த்ததும் குந்திக்கு நாணம். தலை குனிந்து நின்றாள். அவன் அவளது அருகில் வந்தான். அவளை ஏதும் கேட்கவில்லை. முகத்தை தன் ஒற்றை விரலால் தூக்கி அவளது கண்களின் அழகை ரசித்தான். அவள் சுதாரித்து ஒதுங்கினாள். இளைஞரே! திடீரென இங்கு வந்த தாங்கள் யார்? என் அனுமதியின்றி எப்படி என்னைத் தொடலாம்? பெண்கள் கற்புநெறியுள்ளவர்கள் என்பதைத் தாங்கள் அறிய மாட்டீர்களோ? என்றாள் சிறு கோபத்துடன். அவன் கலகலவென சிரித்தான். அன்பே! நன்றாக இருக்கிறது உன் கூற்று. நீ தானே என்னை அழைத்தாய். அதிலும் உணர்வு களைத் தூண்டும் அந்த மந்திரத்தைச் சொல்லி என்னை வரவழைத்து விட்டு, இப்போது ஒதுங்கிப் போனால் நான் என்ன செய்ய முடியும்? தாபத்தால் தவித்து இங்கு வந்தேன் கண்ணே! என்று சொல்லியபடியே, அவளது பதிலுக்கு காத்திராமல், ஆசையுடன் அணைத்தான். அவள் அவனது பிடியில் இருந்து விலகினாள்.
சூரிய பகவானே! இதென்ன தகாத செயல். முனிவர் சொன்னாரே என்பதற்காக ஏதோ விளையாட்டாக மந்திரத்தைச் சொன்னேன். அதை நிஜமென நம்பிக் கொண்டு, நீர் இப்படி அடாத செயலைச் செய்வது தேவர் குலத்துக்கு இழுக்கை விளைவிக்கும். போய் விடும், என்று சப்தமாகச் சொன்னாள் குந்தி. சூரியன் அவளை விடவில்லை. மீண்டும் அவளை அணைத்தான். அழகுப்பதுமையே! இம்மந்திரத்தைச் சொன்னவர் மந்திரத்திற்குரிய பலனை அடைந்தே தீர வேண்டும். அப்படி மறுத்தால் மந்திரத்தை உனக்கு யார் கற்றுத் தந்தார்களோ அவருக்கு சாபமிடுவேன். மேலும் மந்திரத்தை சொன்னவரின் குடும்பமும் நாசமாகி விடும். என்ன சொல்கிறாய்? என்றான். குந்தி அவனை கையெடுத்து வணங்கினாள். பகலவனே! என்னை மன்னித்து விடும். அறியாமல் செய்யும் தவறுக்கு இவ்வுலகில் மன்னிப்பு இல்லையென்றால், உலகத்தில் மனிதாபிமானம் செத்துப் போகும். நான் கன்னிப்பெண். உம்மால் நான் கர்ப்பமானால், இந்த உலகம் என்னைப் பழிக்கும். ஒளி மிகுந்த உம்மால் என் எதிர்காலம் இருண்டு போகும். என்னை மன்னித்து விட்டுவிடும், என்று காலில் விழுந்தாள் குந்தி. சூரியன் அவளிடம், பெண்ணே! கலங்காதே. தேவர்களின் உறவால் ஒரு பெண் களங்கப்படமாட்டாள். அவளது கற்புநெறி பாதிக்கப்படாது. குழந்தையைப் பெற்ற பிறகும் நீ கன்னியாகவே இருப்பாய். உன் அழகும் இரட்டிப்பாகும். சஞ்சலத்தை அகற்றி மனதை ஒருமைப்படுத்தி என்னோடு இன்பமாக சேர். உலகம் போற்றும் உத்தமன் ஒருவன் உன் வயிற்றில் பிறப்பான். அவனை உலகமே போற்றி வணங்கும், என்றான். குந்தி ஒருவாறு இதை ஏற்றுக் கொண்டாள். சூரியனின் ஆசைக்குப் பணிந்தாள். மலர்கள் தூவிய பஞ்சுமெத்தை படுக்கையை அங்கே வரவழைத்தான் சூரியன். அவளோடு இன்பமாக இருந்த பிறகு அவன் மறைந்தும் விட்டான். அந்த நேரமே அவளது வயிற்றில் கரு உற்பத்தியானது. வீட்டுக்குச் செல்லவில்லை அவள். நதிக்கரை ஒன்றில் இருந்த அரண்மனையில் இருந்த அவள் யாரையும் பார்ப்பதைத் தவிர்த்தாள். சில நாட்களிலேயே கரு முதிர்ந்து விட்டது. குந்தியின் வயிற்றில் இருந்து அழகு குழந்தை ஒன்று வந்தது. குந்தி ஆசையோடு தன் மகனை முத்தமிட்டாள். என்ன ஆச்சரியம்! குழந்தையின் காதுகளில் குண்டலம் ஒளிர்ந்தது. மார்பில் அழகான தங்கக்கவசம் இருந்தது. சூரிய மைந்தனல்லவா! பிறக்கும் போதே வீரச் சின்னங்களுடன் பிறந்திருக்கிறான்!
மகாபாரதம் பகுதி-14
பெற்ற மகனைப் பார்த்து உள்ளம் பூரித்த அதே வேளையில், குந்திக்கு பயமும் வந்து விட்டது. ஐயோ! தந்தையாருக்கு இது தெரிந்தால் என்னாகும்? குடும்ப மானம் காற்றில் பறக்குமே. சூரியனுக்கு இந்த பிள்ளையைப் பெற்றேன் என்றாலும் கூட, கன்னியாக இருந்து கொண்டே காமலீலை நடத்தினாயடி, கள்ளி, என்று தகப்பனார் திட்டுவார். ஊரார் என்ன சொல்வார்கள்? அட காமந்தகாரி, மனஅடக்கம் இல்லாத நீயா எங்கள் இளவரசி என்று வசை பாடுவார்களே, ஓ என்ன செய்வது? அப்போது அவளது அந்தரங்கத் தோழி வந்தாள். நடந்த விஷயங்கள் அனைத்தும் அவளுக்குத் தெரியும். அவளிடம், என் அன்புத் தோழியே! பெண்கள் ரகசியங்களைப் புதைக்கத் தெரியாதவர்கள் என்பார்கள். ஆனால், நீ அப்படிப்பட்டவள் அல்ல. என் நலத்தை மட்டுமே நாடுபவள். இந்த அந்தரங்கத்தை வெளியே சொல்லமாட்டாய் என நான் அறிவேன். நான் மீண்டும் கன்னியாகி விட்டேன். இப்போது இவன் என் குழந்தையல்ல. இவன் தெய்வத்தின் குழந்தை. இவனை இதோ இந்த பாகீரதி (கங்கை) ஆற்றில் விட்டு விடு. ஒரு பெட்டிக்குள் வைத்து விட்டால் ஆபத்தின்றி தப்புவான். யாராவது இவனைக் காப்பாற்றி விடுவார்கள் என நம்புகிறேன், என்றாள். தோழி குந்தியின் நிலையைப் புரிந்து கொண்டாள். இளவரசி! விளையாட்டு வினையாகி விட்டதை நானும் உணர்வேன். உன் நிலையில் நான் இருந்தாலும் இதையே தான் செய்திருப்பேன். என் உயிர் உள்ளவரை இந்த ரகசியம் வெளியே வராது. கவலைப்படாதே, என ஆறுதல் சொல்லி, சித்திரவேலைப்பாடுள்ள ஒரு அழகிய பெட்டியில் குழந்தையை வைத்தாள். குந்தி அன்று அழுது பெருக்கிய கண்ணீரின் அளவு கங்கையையும் தாண்டியது.
அந்த அழகு மகனை அவள் கங்காதேவியிடம் தாரை வார்த்தாள். புனித கங்காமாதா அந்தப் பெட்டியை மிக பத்திரமாக சுமந்து சென்றாள். ஏனெனில், பெட்டிக்குள் இருப்பவன் சூரிய மைந்தன். இந்த தேச மக்கள் சுபிட்சமாக வாழ கேட்டதையெல்லாம் கொடுக்கும் வள்ளலாகப் போகிறவன். அலைபுரண்டு ஓடினாலும், சுழல்களுக்குள் சிக்கினாலும் பெட்டி எந்த சேதாரமும் இல்லாமல் சென்றது. நீண்ட தூரம் சென்ற பிறகு ஓரிடத்தில் அதிரதன் என்பவன் தன் மனைவியுடன் புரண்டோடும் பாகீரதி நதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அந்நாட்டு தேர்ப்பாகன்களின் தலைவன். அதிரதனின் மனைவி தூரத்தில் ஒரு பெட்டி மிதந்து வருவதைக் கணவனிடம் சுட்டிக்காட்டினாள். வெள்ளமென்றும் பாராமல், நதியில் குதித்து அதை தள்ளிக் கொண்டே வந்து கரைசேர்த்தான் அதிரதன். அதிரதனின் மனைவி அவசரமாக பெட்டியைத் திறந்தாள். உள்ளே குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. அவனது முகப்பிரகாசத்தை ரசிப்பதா? அல்லது உலகில் எங்கும் இல்லாத அதிசயமாக காதில் குண்டலமும், மார்பில் கவசமும் பளபளத்ததை ரசிப்பதா? இது என்ன ஆச்சரியம்? இவ்வளவு அதிசயமும், அழகும் கொண்ட குழந்தையைப் பெற்றவள் ஏன் தண்ணீரில் மிதக்க விட்டாள்? அவள் ஒரு பெண்தானா? என்றெல்லாம் பலவாறாகப் பேசியபடி குழந்தையை எடுத்து அள்ளி அணைத்தாள் அந்த மாதரசி. இருக்காதா பின்னே! அவர்களுக்கு கடவுள் குழந்தை செல்வத்தை தரவில்லை. மரணத்துக்கு பிறகு பிதுர்க்கடன் செய்ய இதோ ஒரு மகன் வந்து விட்டான். அவர்கள் ஆனந்தப்பட்டனர். குழந்தையையும் பெட்டியையும் எடுத்துக் கொண்டு இல்லம் போய் சேர்ந்தனர்.
குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசித்தனர். குழந்தையின் கைகள் அடிக்கடி மூடித்திறந்ததைப் பார்த்து, ஓ இவன் வள்ளல். கொடுக்கும் குணமுடையவன். இவனுக்கு கர்ணன் என பெயர் சூட்டுவோம், என முடிவெடுத்தனர். அரசகுலத்தில் பஞ்சு மெத்தையில் அயர்ந்துறங்க வேண்டிய அந்தக் குழந்தை ஒரு ஏழை வீட்டு மரத்தொட்டிலில் படுத்திருந்தான். இங்கே இப்படியிருக்க, இது எதையும் அறியாத குந்தியின் தந்தை விராதன் குந்திக்கு திருமண சுயம்வர ஏற்பாடு செய்தான். பல நாட்டு மன்னர்களும் வந்திருந்தனர். வந்தவர்களில் பாண்டுவும் ஒருவன். அவனை
குந்திக்கு பிடித்து போய் விட்டது. மணமாலையை அவனுக்கே அளித்தாள். திருமணம் சிறப்பாக நடந்தது. குந்தியும், பாண்டுவும் இன்பமாய் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் மன்னர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. பாண்டுவின் பெருமையைக் கேள்விப்பட்டான் மந்திர தேசத்து மன்னன் ருதாயன். அவனுக்கு மாத்ரி என்ற மகள் இருந்தாள். அவளையும் பாண்டுவுக்கு திருமணம் செய்து வைத்தான். மாத்ரியின் சகோதரன் சல்லியனுக்கும் இந்த திருமணத்தில் பெரும் விருப்பம் இருந்தது. தங்கைக்கு நல்ல கணவன் கிடைத்தது கண்டு மகிழ்ந்தான். இந்த ஆண்வர்க்கம் இருக்கிறதே... அதனிடம் ஒரு பலவீனம் உண்டு. பெண்கள் முன்னால் தங்கள் வீரத்தைக் காட்ட வேண்டும் என்றால் விழுந்து விழுந்து காட்டுவார்கள். கிருதயுகம் முதல் கலியுகம் வரை இது இருக்கத்தான் செய்கிறது. பாண்டு மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? புதுமனைவியர் இருவரையும் அழைத்துக் கொண்டு அவன் காட்டுக்கு போனான். மனைவிகளை அருகில் வைத்துக் கொண்டு, இதோ பார் புலி, அதைக் கொல்கிறேன், என்று சொல்லி அம்பெய்தி புலியைக் கொன்றான். யானைகளைப் பிடித்தான். சிங்கங்களை அழித்தான். யாழிகள் என்ற இனம் அக்காலத்தில் இருந்தது. சிங்கமுகமும், தும்பிக்கையும் கொண்ட இந்த அதிசய மிருகங்களையும் கொன்றான். இதையெல்லாம் பார்த்த, புதுமனைவியர் தங்கள் கணவனின் வீரம் கண்டு அகம் மகிழ்ந்தனர். ஓரிடத்தில் இரண்டு மான்கள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தன. குந்தி, மாத்ரி, பாருங்கள். அந்த மான்களை இங்கிருந்தே அடிக்கிறேன், என்றான். தூரத்தில் அந்த இரண்டு மான்களும் தங்களுக்கு எமனாக வரும் அம்பைப் பற்றி அறியாமல் இன்ப சுகத்தில் மூழ்கியிருந்தன. ஆனால், அந்த அம்பு பாண்டுவுக்கும் சேர்த்து எமனாகப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது என்பதை அவனும், அவனது தேவியரும் அப்போது உணரவில்லை.
குந்திக்கு பிடித்து போய் விட்டது. மணமாலையை அவனுக்கே அளித்தாள். திருமணம் சிறப்பாக நடந்தது. குந்தியும், பாண்டுவும் இன்பமாய் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் மன்னர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. பாண்டுவின் பெருமையைக் கேள்விப்பட்டான் மந்திர தேசத்து மன்னன் ருதாயன். அவனுக்கு மாத்ரி என்ற மகள் இருந்தாள். அவளையும் பாண்டுவுக்கு திருமணம் செய்து வைத்தான். மாத்ரியின் சகோதரன் சல்லியனுக்கும் இந்த திருமணத்தில் பெரும் விருப்பம் இருந்தது. தங்கைக்கு நல்ல கணவன் கிடைத்தது கண்டு மகிழ்ந்தான். இந்த ஆண்வர்க்கம் இருக்கிறதே... அதனிடம் ஒரு பலவீனம் உண்டு. பெண்கள் முன்னால் தங்கள் வீரத்தைக் காட்ட வேண்டும் என்றால் விழுந்து விழுந்து காட்டுவார்கள். கிருதயுகம் முதல் கலியுகம் வரை இது இருக்கத்தான் செய்கிறது. பாண்டு மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? புதுமனைவியர் இருவரையும் அழைத்துக் கொண்டு அவன் காட்டுக்கு போனான். மனைவிகளை அருகில் வைத்துக் கொண்டு, இதோ பார் புலி, அதைக் கொல்கிறேன், என்று சொல்லி அம்பெய்தி புலியைக் கொன்றான். யானைகளைப் பிடித்தான். சிங்கங்களை அழித்தான். யாழிகள் என்ற இனம் அக்காலத்தில் இருந்தது. சிங்கமுகமும், தும்பிக்கையும் கொண்ட இந்த அதிசய மிருகங்களையும் கொன்றான். இதையெல்லாம் பார்த்த, புதுமனைவியர் தங்கள் கணவனின் வீரம் கண்டு அகம் மகிழ்ந்தனர். ஓரிடத்தில் இரண்டு மான்கள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தன. குந்தி, மாத்ரி, பாருங்கள். அந்த மான்களை இங்கிருந்தே அடிக்கிறேன், என்றான். தூரத்தில் அந்த இரண்டு மான்களும் தங்களுக்கு எமனாக வரும் அம்பைப் பற்றி அறியாமல் இன்ப சுகத்தில் மூழ்கியிருந்தன. ஆனால், அந்த அம்பு பாண்டுவுக்கும் சேர்த்து எமனாகப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது என்பதை அவனும், அவனது தேவியரும் அப்போது உணரவில்லை.
மகாபாரதம் பகுதி-15
பாய்ந்து சென்ற அம்பு அந்த மான்களை ரத்தச்சேற்றில் தள்ளியது. இரண்டும் உயிருக்கு துடிதுடித்தன. பாண்டுவின் மனைவியர் தன் கணவனின் திறமை கண்டு புளகாகிதமடைந்திருந்த வேளையில், அந்த ஆண்மான் ஒரு தவசீலனாக உருவெடுத்தது. அந்த முனிவர் பாண்டுவிடம் கோபத்துடன் வந்தார். பாண்டு அவரிடம், தவசீலரே! நான் பாண்டு மன்னன். வேட்டைக்காக வந்த இடத்தில் மான்களை நோக்கி அம்பெறிந்தேன். ஆனால், நீங்கள் மானிட உருவம்...அதிலும் முனிவராக வந்து நிற்கிறீர்கள். தாங்கள் யார்? என்றான் பதட்டத்துடனும் பணிவுடனும். முனிவர் அவனது பணிவு கண்டு சற்றே கோபம் அடங்கி, மன்னா! என் பெயர் கிந்தமன். முனிவர்களுக்கு எப்போதாவது ஒருமுறை இன்ப உணர்வு தலை தூக்கும். அந்த உணர்வை மன்மதன் என்னிடம் தூண்டி விட்டான். நான் அதை தாங்கமுடியாமல் தவித்தேன். இந்த நடுக்காட்டில் என்னால் என்ன செய்ய இயலும்? எனவே, நானும் என் மனைவியும் மான்களாக மாறி கூடி களித்துக் கொண்டிருந்தோம். அந்த வேளையில் நீ எங்கள் மீது அம்பெய்தாய். எங்கள் இன்பத்தை தொலைத்து விட்டாய். உலகிலேயே கொடிய பாவம், இன்பமுற்றிருக்கும் தம்பதிகளைப் பிரிப்பதாகும். அது உனக்குத் தெரியுமல்லவா? என்றார். அறிவேன் முனிவரே! ஆனாலும், இது தெரியாமல் நடந்துவிட்டது. மன்னிக்க வேண்டும் என்னை, என்ற மன்னனிடம் சற்றும் கருணை காட்டிய முனிவர், மன்னா! எங்கள் உயிர் இன்னும் சிறிது நேரத்தில் பிரித்து விடும். இந்த கொலைப்பாவம் உன்னை பிடிக்காது என்றாலும், தம்பதிகளைப் பிரித்த நீ, இனி உன் மனைவிகளிடம் சுகம் கண்டால் இறந்து போவாய், என சாபம் கொடுத்து விட்டு இறந்தார்.
பெண் மான் வடிவத்தில் இருந்த அவரது மனைவியும் சுயவடிவம் எடுத்து அக்னியில் விழுந்து மாண்டாள். பாண்டு கலங்கிப் போனான். ஐயோ! இனி நான் தாம்பத்ய வாழ்வு நடத்த முடியாதா? எனக்கு இரண்டு பட்டத்தரசிகள் இருந்தும் அவர்களைத் தொட முடியாதவன் ஆகிவிட்டேனே? இந்த தேசம் என்னாகப் போகிறதோ? அவன் கண்ணீர் வடித்தான். பின்னர் தன் மனைவியருடன் வனத்திற்கு சென்று அங்குள்ள தவசாலை ஒன்றில் தங்கினான். அங்கிருந்த போது அவனுக்கு ராஜாங்க காரியங்கள் இல்லாததால், யோசிக்க அதிக நேரம் கிடைத்தது. நிறைய வேதாந்தங்களையும் கேட்டான். உலகில் மனிதனாகப் பிறந்தவனுக்கு குழந்தை பிறக்காவிட்டால் அவனால் மோட்சத்தை அடைய முடியாது என்று வேதாந்தங்களைப் படித்து தெரிந்து கொண்டான். ஆனால், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள ஒரு வழியையும் தெரிந்து கொண்டான். குந்தியை அழைத்தான். தங்கள் தாய்மார்களான அம்பிகாவும், அம்பாலிகாவும் வியாசர் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது போல, தர்மத்திற்கு உட்பட்டு, குழந்தைகள் பெற்றுக் கொள்ள தன் மூத்த மனைவி குந்தியை வற்புறுத்தினான். கணவனே இப்படி சொல்லும் போது என்ன செய்வது? அவள் யோசித்த வேளையில், பாண்டு அவளிடம், குந்தி! உனக்கொரு விஷயம் தெரியுமா? என் தந்தை வியாசமுனிவர் ஒருநாள் திருதராஷ்டிரனின் அரண்மனைக்கு வந்தார். காந்தாரி அவரிடம் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லையே என வருந்தினாள். அவர் தன் சக்தியால் அவளை கர்ப்பமுறச் செய்தாள். அதன் மூலம் நூறு குழந்தைகள் பெறப்போகும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறாள் காந்தாரி.
நமக்கும் சந்ததிகள் வேண்டும். நாம் இறந்த பிறகு பிதுர்காரியங்கள் செய்ய பிள்ளைகள் அவசியம் என்பதை நீயே அறிவாய். நீயும் அரச தர்மப்படி, முனிவர்களைச் சேர்ந்து குழந்தைகளைப் பெறு, என்றான். தயங்கி நின்ற குந்தி, அன்பரே! என்னிடம் ஒரு விசேஷ சக்தி உண்டு. நான் சிறுமியாய் இருந்த போது துர்வாசருக்கு செய்த சேவையால் கிடைத்த சக்தி அது. நான் எந்த தேவனை நினைக்கிறேனோ, அவன் மூலம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதே அது. ஆனாலும், கற்புடைய பெண் எப்படி இதற்கு சம்மதிக்க முடியும்? என்று சொல்லி தயங்கினாள். ஆனால், தனக்கு ஒரு குழந்தை ஏற்கனவே பிறந்ததை மறைத்து விட்டாள். பாண்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குந்தி, உடனடியாக செயலில் இறங்கு. நமக்கு உடனே பிள்ளைகள் வேண்டும். உம், தேவர்களை வரவழைத்து அவர்களைத் தழுவு. குழந்தைகளைப் பெறு, என பரபரத்தான். நீண்ட வற்புறுத்தலுக்கு பின் நாட்டுநலன் கருதி இந்த யோசனைக்கு சம்மதித்த குந்திதேவி, கணவனை வணங்கினாள். பின்னர் அஞ்சும் தன்மையுடையவனும், அதே நேரம் நீதிமானுமான தர்மராஜாவாகிய எமதர்மனை அழைத்தாள். எமன் வந்தான். குந்தியின் அழகில் சொக்கிப்போய் அவளோவு இணைந்தான். ஒரு குழந்தை பிறந்தது. தர்மராஜாவுக்கு பிறந்த அவனுக்கு யுதிஷ்டிரன் என்று பெயர் சூட்டினாள். இவனே தர்மன் என்றும் அழைக்கப்படுவான். இந்த செய்தி காந்தாரியை எட்டியது. அவள் கர்ப்பமாக இருந்தாளே தவிர, குழந்தை பிறக்கவில்லை. தனக்கு முன்னதாகவே குந்திக்கு குழந்தை பிறந்த செய்தி அவளை வாட்டியது. பொறாமைக்கனல் பொங்கியது. மூத்த மருமகளான நான் குழந்தை பெறும் முன்பு நீ பெற்று விட்டாயா? என்னால் தாங்க முடியவில்லையே, ஆவேசமாக புலம்பினாள். தன் அறையில் அங்குமிங்குமாக தடதடவென நடமாடினாள். கர்ப்பஸ்திரீகள் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாதோ அத்தனையும் செய்தாள். இங்கே ஒரு அறிவியல் கருத்தும் விளக்கப்படுகிறது. ஒரு பெண் குழந்தை பெறும் சமயத்தில் நல்ல மனநிலையுடன் இருந்தால், பிறக்கும் குழந்தைகளும் நல்லவர்களாக இருப்பார்கள். தங்கள் அறிவை உலகநலனுக்கு பயன்படுத்துவார்கள். அப்படி பிறந்தவன் தான் தர்மன். ஆனால், காந்தாரி என்ன செய்தாள் தெரியுமா? பொறாமையால் தன் வயிற்றில் ஓங்கி அடித்தாள். பொறி கலங்கியது போல் வலி ஏற்பட்டது. வயிற்றில் கர்ப்பம் கலைந்து விட்டது. அவசரப்பட்டு செய்த செய்கைக்காக அவள் அழுது புலம்பினாள். வியாச பகவானே! தங்கள் வரம் பொய்க்கலாமா? எனக்கு கர்ப்பம் கலைந்து விட்டதே, என்ன செய்வேன்? என அரற்றவும், வியாசர் அங்கே தோன்றினார்.
மகாபாரதம் பகுதி-16
அப்போது காந்தாரியின் வயிற்றில் இருந்த கரு மொத்தமாக கீழே விழுந்து ரத்தம் பெருகியது. காந்தாரி வலியாலும், துக்கத்தாலும் கதறினாள். அவசரப்பட்டு வயிற்றில் அடித்ததற்காக அவள் மனம் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. வியாசர் அவளைத் தேற்றினார். காந்தாரி! கவலை கொள்ளாதே! நீ சாதாரணமானவளா? கணவனுக்கு கண் இல்லை என்பதற்காக உன் கண்ணைக் கட்டிக் கொண்ட கற்புக்கரசியல்லவா? அந்த கற்பின் வலிமை இந்த கர்ப்பத்தைக் காப்பாற்றும், என்றவர், கீழே விழுந்த கருவை துண்டு துண்டாக வெட்டினார். நூறு துண்டுகள் இருந்தன. வெட்டியது போக ஒரு துண்டு மீதி வந்தது. காந்தாரி, நெய் நிரம்பிய நூறு கும்பங்களை எடுத்து வா, என்றார். காந்தாரி அதற்கான உத்தரவைப் பிறப்பிக்கவே, தோழிப்பெண்கள் கும்பங்களை எடுத்து வந்தனர். அவற்றில் துண்டுகள் ஒவ்வொன்றையும் போட்டார் வியாசர். தனியாக இருந்த துண்டை ஒரு பானையில் போட்டு விட்டார். காந்தாரி! இவற்றை நீ பத்திரமாக பாதுகாத்து வா. இவை ஒவ்வொன்றும் வளர்ந்து ஒவ்வொரு குமாரனை உனக்கு தரும். ஆஸ்திக்கு எத்தனை ஆண்கள் பிறந்தாலும், ஆசைக்கு ஒரு பெண் வேண்டுமல்லவா? அந்தப் பானையில் உள்ள கரு பெண்ணாய் பிறக்கும், என சொல்லி விட்டு மறைந்து விட்டார். கருக்கள் வளர்ந்தன. முதல் கும்பத்தில் இருந்து ஒரு குழந்தை பிறந்தது. அவன் தான் துரியோதனன். அவன் பிறந்த போது மங்கலமுரசு முழங்கிக் கொண்டிருந்தது.
அதே நேரம் எங்கிருந்தோ பல நரிகள் ஒன்றுசேர்ந்து ஊளையிட, மங்கலச்சத்தம் அடங்கி விட்டது. கெட்ட நேரத்திற்கு அது அறிகுறியாக இருந்தது. துரியோதனன் பிறந்த விபரமும், அவனைத் தொடர்ந்து காந்தாரிக்கு நூறு குழந்தைகள் பிறக்க இருக்கும் விபரமும் பாண்டுவை எட்டியது. ஆஹா...என் அண்ணியாருக்கு நூறு குழந்தைகள் பிறக்கப் போகிறதாம்! எனக்கு ஒரு குழந்தை தான் இருக்கிறது. குந்தி! மீண்டும் தேவர்களை நினை. அந்த நூறு பேருக்கும் சமமான வலிமையுள்ள குமாரனைப் பெறு, என்றான் பாண்டு. கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த குந்தி, வாயு பகவானுக்குரிய மந்திரத்தைச் சொன்னாள். வாயு வந்தான். இருவரும் கூடிக் கலந்தனர். கர்ப்பமானாள் குந்தி. ஒருநாள் நடுப்பகலில் நல்ல முகூர்த்த வேளையில் ஒரு குழந்தை பிறந்தது. அவன் பிறந்த வேளை நல்வேளையாக அமைந்ததால் யாக குண்டங்களில் அக்னி வலப்பக்கமாக எரிந்தது. (கும்பாபிஷேகம் நடக்கும் போது யாக குண்டங்களில் அக்னி வலப்புறமாக எரிந்தால் அந்த ஊருக்கே நல்லது). அந்தக் குழந்தை தான் பீமன். பாண்டுவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இங்கே இப்படியிருக்க, காந்தாரியின் அரண்மனையில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி வழிந்தது. அங்கே கிரகங்கள் மோசமாக இருந்த நிலையில், கொடுமையின் ஒட்டுமொத்த வடிவான துச்சாதனன் பிறந்தான். இவனைத் தொடர்ந்து, வரிசையாக நாளொன்றுக்கு ஒரு குழந்தை வீதம் பிறக்க குழந்தைகளின் அழுகுரலால் அந்த அரண்மனை சிரித்தது. ஹஸ்தினாபுரத்து மக்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். ஆனால், மேகக்கூட்டங்கள் இந்த பூமிக்கு வந்துள்ள அபசகுனத்தை அறிவிக்க ரத்தமழை பொழிந்தன.
பிறந்த குழந்தைகளுக்கு திருதராஷ்டிரன் பெயர் சூட்டினான். துரியோதனன், துச்சாதனன், யுயத்சு, துச்சகன், துச்சலன், துர்முகன், விளிஞ்சதி, விகர்ணன், சலசந்தன், சுலோசனன், விந்தன், அதுவிந்தன், துர்த்தருஷன், சுவாகு, துர்ப்பிரதருஷணன், துர்மருஷ்ணன், துருமுகன், துர்க்கருணன், கர்ணன் (துரியோதனாதிகளில் ஒருவனுக்கும் இப்பெயர் உண்டு), சித்திரன், உபசித்திரன், சித்திராக்கன், சாரு, சித்ராங்கதன், துர்மதன், துர்பிரகாஷன், விவித்சு, விகடன், சமன், ஊர்ணநாபன், பத்மநாபன், நந்தன், உபநந்தன், சேனாதிபதி, சுடேணன், கண்டோதரன், மகோதரன், சித்ரவாகு, சித்ரவர்மா, சுவர்மா, துருவிரோசனன், அயோவாகு, மஹாவாகு, சித்திரசாயன், சுகுண்டலன், வீமவேகன், வீமபாலன், பாலகன், வீமவிக்ரமன், உக்ராயுதன்... இப்படி 50 பேருக்கு பெயர் சூட்டப்பட்டது. அடுத்து பிறந்த 50 குழந்தைகளுக்கு வீமசரன், கனகாயு, திருஷாயுதன், திருஷவர்மா, திருஷகத்ரன், சோமகீர்த்தி, அநூதரன், சராசந்தன், திருஷசந்தன், சத்தியகந்தன், சுகச்சிரவாகு, உக்ரச்சிரவா, உக்ரசேனன், சேனானி, மகமூர்த்தி, அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன், துராதரன், திருஷகத்தன், சுகத்தன், வாதவேகன், சுவர்ச்சசன், ஆதித்யகேது, வெகுவாதி, நாகத்தன், அநுயாயி, நிஷல்கி, கவசி, தண்டி, தண்டதரன், தனுக்கிரகன், உக்கிரன், பீமரதன், வீரன், வீரவாகு, அலோலுபன், அபயன், ரவுத்ரகம்மன், திருஷரதன், அநாதிருஷ்யன், குண்டபேதன், விராவி, தீர்க்கலோசனன், தீர்க்கவாகு, மகாவாகு, வியுகுடாகு, கனகரங்கதன், குண்டசித்து, சித்திரகன் என்று பெயர் வைக்கப்பட்டது. பானையில் இருந்த பிறந்த பெண் குழந்தைக்கு துச்சளை என்று பெயர் சூட்டினர். உலகத்திலேயே நூறு அண்ணன்மாரைப் பெற்ற பாக்கியவதியாக அவள் வளர்ந்தாள். பாண்டுவுக்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை. குந்தி! என் அண்ணி மிக மிக மகிழ்ச்சியுடன் இருக்கிறாளாம். நூறு பிள்ளை பெற்று விட்டதால் கர்வம். எனக்கு இன்னொரு குழந்தை வேண்டும். உனக்கு பிடித்த இன்னொரு தேவனை கூப்பிடு, என்றான். பொறாமை மனிதனை அழிக்கிறது. பாண்டு நல்லவன் என்றாலும், பிறர் வீட்டில் ஒரு நல்ல விஷயம் என்றால் அவனால் பொறுக்க முடியவில்லை. இந்தப் பொறாமைத் தீ அவனது குழந்தைகளை என்ன பாடு படுத்தப்போகிறது என்பதையும் அவன் உணரவில்லை. குந்தியோ, கணவன் சொல்லுக்கு கட்டுப்பட்டும், அக்கால தர்மப்படியும் தேவர்கள் மூலமாக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே இருந்தாள். இப்போது அவள் தேவர் தலைவன் இந்திரனை அழைத்தாள். இந்திரன் வந்தான். குந்தியோடு கூடினான். கர்ப்பவதியான குந்தி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் குழந்தையைப் பெற்றெடுத்தான். வெற்றிக்கென்றே பிறந்தான் விஜயன் என்னும் அர்ஜூனன்.
மகாபாரதம் பகுதி-17
இதோடு விட்டானா பாண்டு... குந்தியை அழைத்தான். அன்பே! உன்னளவில் நீ எனக்கு பெரிதும் உதவியிருக்கிறாய். நமக்கு பிறந்த மூவருமே மைந்தர்கள். உன் சகோதரிக்கு (மாத்ரி) என்னால் குழந்தை பாக்கியம் தர இயலவில்லை. அவளுக்கும் நீ இந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தால், அவளுக்கும் குழந்தை பிறக்க வழி பிறக்குமல்லவா? அன்பே! எனக்காக நீ இதைச் செய்யமாட்டாயா? என்று கெஞ்சலாகக் கேட்ட கணவனின் விருப்பத்திற்கு சம்மதித்தாள் குந்தி. கற்பு நிறைந்த பெண்கள் கணவர் சொல் தட்டுவதில்லை. மாத்ரியை அழைத்தாள். சகோதரி! கணவரின் அனுமதியுடன் தேவர்களுக்கு நான் மூன்று பிள்ளைகளைப் பெற்றேன். உனக்கும் அதே மந்திரத்தைக் கற்றுத்தரச் சொல்லியுள்ளார் பாண்டு மன்னர். உனக்கும் குழந்தைகள் பெறும் ஆசை இருக்கத்தானே செய்யும். நான் மந்திரத்தைச் சொல்கிறேன். கேள், என அந்த ரகசிய மந்திரத்தை அவளது காதில் ஓதினாள் குந்தி. மகிழ்ச்சியடைந்தாள் மாத்ரி. தேசத்தின் நலன் கருதி கணவர் அல்லாத மனமாசில்லாத ஒருவரிடம் குழந்தை பெறுவது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று என்பதையும், அதனால் கற்பிற்கு பாதிப்பில்லை என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொண்ட அவள், அசுவினி தேவர்களை அழைத்தாள். அவர்கள் இவ்வுலகிலுள்ள எட்டு திசைகளின் காவலர்கள். அந்த எட்டு பேரும் வந்தனர். ஒரே உருவம் எடுத்தனர். மாத்ரியை கட்டியணைத்தனர். அவளுக்கு ஆசி வழங்கி விட்டு சென்றனர். கர்ப்பமானாள் மாத்ரி. அவளுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும் வகையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு நகுலன், சகாதேவன் என்று பெயர் சூட்டினான் பாண்டு.
புத்திரர்கள் ஐவரும் செல்லமாய் இங்கே வளர, அஸ்தினாபுரத்தில் துரியோனாதிகள் நூறு பேரும் இன்னும் செல்லமாக வளர்க்கப்பட்டனர். பாண்டு புத்திரர்களின் நண்பர்கள் யார் தெரியுமா? புலிகளும், சிங்கங்களும். இளம் வயதிலேயே பயத்தை விரட்டுவது என்பது பெரிய கலை. பாண்டு புத்திரர்களான பாண்டவர்கள் ஐவரும் சிறு வயதிலேயே வீரம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். ஆயகலைகள் அறுபத்து நான்கும் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டன. வீரம் மிக்கவர்களுக்கு மனிதாபிமானமும் முக்கியம். பாண்டவர்கள் இளம் வயதிலேயே பல தர்மங்களைச் செய்தனர். இந்த பூமியின் அளவை விட அவர்கள் வழங்கிய பொருளின் அளவு அதிகமாக இருந்தது. வாலிப வயதை அடைந்து விட்டார்கள் பாண்டவர்களும், துரியோதனாதிகளான கவுரவர்களும். இந்த நிலையில் ஒரு வசந்தகாலம் வந்தது. பாண்டுவுக்கு வயது ஏறியிருந்தாலும், அவன் கிந்தம முனிவரிடம் பெற்ற சாபத்தால் அவனால் மனைவியரின் அருகே நெருங்க முடியவில்லை. வசந்த காலத்தின் மன்மத பாணங்கள் அவனைத் துன்புறுத்தியது. ஒருநாள் அந்த பாணங்களின் தாக்குதலுக்கு மிகக் கொடூரமாக ஆளான அவன் முன்னால் மாத்ரி வந்து நின்றாள். அவளது அழகை கண்களால் அள்ளிப்பருகிய பாண்டு, அவளை அணைத்தான். நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு ஏற்பட்ட ஸ்பரிசத்திற்கு மாத்ரியும் கட்டுப்பட்டாள். நடக்கப்போகும் விபரீதம் அவளுக்குத் தெரியவில்லை. சற்றுநேரம் சென்றது. பாண்டு அவள் மீது பிணமாகக் கிடந்தான். இன்பம் பெற வந்த மாமன்னன் துன்பக்கடலில் ஆழ்த்திவிட்டு, மீளாத்தூக்கத்தில் ஆழ்ந்தானே என மாத்ரி கதறினாள்.
ஐயோ! கணவருக்கு புத்திமதி சொல்லாமல், அவரது இச்சைக்குப் பணிந்து அவரது உயிரையே பறித்து விட்டதே! என் இதழ்களில் இருந்து நீங்கள் பருகிய அமுதம் உங்களை விஷமாக்கி கொன்று விட்டதே! மனமொத்த தம்பதிகளை உலகில் யார் ஒருவர் பிரிக்கிறாரோ, அவர்களுக்கு உங்கள் வாழ்க்கை ஒரு பாடமாகி விட்டது. ஆம்...நீங்கள் கிந்தமரிடம் பெற்ற சாபம் தீவினையாக மாறி உங்களை அழித்து விட்டதே! நான் என்ன செய்வேன். ஐந்து புதல்வர்களை வளர்க்கும் பொறுப்பை இரண்டு விதவைகளிடம் ஒப்படைத்து விட்டீர்களே!என புலம்பினாள். மாத்ரியின் புலம்பலைக் கேட்டு வந்த குந்தி, நடந்து விட்ட விபரீதத்தை எண்ணி கதறித்துடித்தாள். இந்த பட்டத்தரசிகளின் ஓலம் கேட்டு பாண்டு புத்திரர்கள் ஓடி வந்தனர். அரண்மனையில் தங்கியிருந்த முனிவர்கள், மகான்கள் எல்லாம் வந்தனர். முனிவர்களில் முதியவரான காஷ்யபர், சதசிருங்கர் போன்றவர்களெல்லாம் வருத்தப்பட்டார்கள். மாத்ரியால் கணவனின் இறப்பைத் தாங்க முடியவில்லை. மேலும் அவரது சாவுக்கு காரணமாக அமைந்தது தன்னுடன் இன்பம் துய்த்தது என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் உயிர் வாழ விரும்பவில்லை. தான் பெற்ற பிஞ்சுகளை ஏற இறங்க பார்த்தாள். எப்படியும் குந்தி அவர்களைக் காப்பாற்றி விடுவாள் என்ற நம்பிக்கை பிறந்தது. குந்தி! இனியும் நான் உயிர் வாழமாட்டேன். அவரது பிரிவைத் தாங்கும் சக்தி எனக்கில்லை. மைந்தர்களே! குந்தியின் சொல் கேட்டு நடக்க வேண்டும். நீங்கள் வீர மைந்தர்களாய் வாழுங்கள், என வாழ்த்தி விட்டு, சிதை மூட்டச்சொல்லி உத்தரவிட்டாள். அந்த தீயில் இறங்கி தன் உயிரை விட்டாள். கற்புடைய ஒரு பெண் வேறென்ன செய்வாள்! இதற்குள் இறந்து போன பாண்டு மன்னன் சொர்க்கம் போய் சேர்ந்தான். அங்குள்ள கற்பக மரத்தின் நிழலில் தங்கியிருந்தான். மாத்ரியும் அவனை அடைந்தாள். இருவரும் ஆகாயகங்கையில் நீராடினர். மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். தனிமையில் ஐந்து புத்திரர்களுடன் என்ன செய்வாள் குந்தி? அவளையும், புத்திரர்களையும் ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்துச் சென்றார்கள் முனிவர்கள். திருதராஷ்டிரன் தன் தம்பி மனைவியையும், குழந்தைகளையும் அன்போடு வரவேற்றான். தங்கள் ஐந்து சகோதரர்களையும் பார்த்து துரியோதன சகோதரர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. பெரியப்பாவின் பாதத்தில் விழுந்து வணங்கினர் பாண்டு புத்திரர்கள். அவர்களைக் கண்ணீரோடு அணைத்துக் கொண்டான் திருதராஷ்டிரன். அப்போது அங்கு வந்தார் பரமாத்மா கிருஷ்ணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக