ராதே கிருஷ்ணா 26-11-2011
ஐம்பெரும்காப்பியம் - மணிமேகலை ( இரண்டாம் பகுதி )
ஐம்பெரும் காப்பியம் | ||
ஐம்பெரும் காப்பியம் | ||
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
6. சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை
ஆறாவது மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் சக்கரவாளக் கோட்டம் உரைத்து அவளை மணிபல்லவத்துக் கொண்டுபோன பாட்டு
அஃதாவது-அரசன் மகன் சென்ற பின்னர் அங்குப் பதியகத் துறையுமோர் பைந்தொடியாகி வந்த மணிமேகலா தெய்வம் நீயிர் எற்றிற்கு இங்கு நிற்கின்றீர் என வினவ, சுதமதி மன்னன் மகன் நிலைமை கூறுதலும் அது கேட்ட தெய்வம் நீங்கள் வந்த வழியே சென்றால் மன்னன் மகன் மணிமேகலையைப் பற்றிக் கொள்வான் ஆதலால் இட் பொழிலின் மேற்றிசை மதிலிலமைந்த சிறிய வழியே சென்று, சக்கரவாளக் கோட்டத்தேயுள்ள துறவோர் இருக்கைக்குச் செல்லுமின், என அதுகேட்ட சுதமதி சுடுகாட்டுக் கோட்டம் என்பதனை நீ சக்கரவாளக் கோட்டம் என்கின்றினை அதற்குக் காரணம் என்? என வினவ அத் தெய்வம் அதன் வரலாற்றை விரிவாகக் கூறக் கேட்டிருந்த சுதமதி, உறங்கி விட்டாள். அப்பால் அத் தெய்வம் மணிமேகலையை மயக்கி எடுத்து வான் வழியே சென்று மணிபல்லவத்தீவிலே துயில்வித்தவாறே இட்டுச் சென்ற செய்தியைக் கூறுஞ்செய்யுள் என்றவாறு. இதன்கண் சக்கரவாளக் கோட்டத்து வரலாறு கூறு மாற்றால், தமிழ்ச்சான்றோருடைய புறப்பொருளின்பாற்படும் காஞ்சித்திணைப் பொருள் பயில்வோருளத்தே நன்கு பதியுமாறு சாத்தனார் மிகவும் திறம்பட வகுத்தோதுகின்றார். அப்பாலும் ஒரு பார்ப்பனச் சிறுவன் அச் சக்கரவாளக் கோட்டத்துட் புகுந்து அஞ்சி இல்லம் புகுந்து உயிர் துறந்தமையும், அவன் தாய் கோதமையெனபாள் குழந்தையின் பிணத்தை எடுத்துக் கொண்டு சென்று சம்பாதி கோயிலின் முன்னின்று முறையிடுதலும், சம்பாபதி அவட்கு வெளிப்பட்டுக் கூறுதலும் அத் தெய்வத்தின் அறிவுரைகளும் செயலும் கற்போருளத்தே. பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே என ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதிய காஞ்சித் திணைப் பொருளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் தோன்றுமாறு இக்காதை திகழ்கின்றது. இது துறவு நூலாகலின் நிலையாமை யுணர்ச்சி கைவந்தர்லொழிய மெய்யுணர்வு பெறுதல் சாலாமையின் அவ் வுணர்ச்சியைத் தோற்றுவிக்கும் இக் காதை இந் நூலுக்கு இன்றியமையாச் சிறப்புடையதுமாகும். அந்தி மாலை நீங்கிய பின்னர் வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம் சான்றோர் தம் கண் எய்திய குற்றம் தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல மாசி அறு விசும்பின் மறு நிறம் கிளர ஆசு அற விளங்கிய அம் தீம் தண்கதிர் வெள்ளி வெண் குடத்துப் பால் சொரிவது போல் கள் அவிழ் பூம் பொழில் இடைஇடைச் சொரிய உருவு கொண்ட மின்னே போல திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் 06-010 ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி ஈங்கு நின்றீர் என் உற்றீர்? என ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும் அரசு இளங் குமரன் ஆய் இழை தன் மேல் தணியா நோக்கம் தவிர்ந்திலனாகி அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும் புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் 06-020 பெருந் தெரு ஒழித்து இப்பெரு வனம் சூழ்ந்த திருந்து எயில் குடபால் சிறு புழை போகி மிக்க மாதவர் விரும்பினர் உறையும் சக்கரவாளக் கோட்டம் புக்கால் கங்குல் கழியினும் கடு நவை எய்தாது அங்கு நீர் போம் என்று அருந் தெய்வம் உரைப்ப வஞ்ச விஞ்சையன் மாருதவேகனும் அம் செஞ் சாயல் நீயும் அல்லது நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார் 06-030 சக்கரவாளக் கோட்டம் அஃது என மிக்கோய்! கூறிய உரைப் பொருள் அறியேன் ஈங்கு இதன் காரணம் என்னையோ? என ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவன் மாதவி மகளொடு வல் இருள் வரினும் நீ கேள் என்றே நேர் இழை கூறும் இந் நாமப் பேர் ஊர் தன்னொடு தோன்றிய ஈமப் புறங்காடு ஈங்கு இதன் அயலது ஊரா நல் தேர் ஓவியப் படுத்துத் தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும் 06-040 நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும் வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும் மடித்த செவ் வாய் கடுத்த நோக்கின் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும் நால் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய காப்பு உடை இஞ்சிக் கடி வழங்கு ஆர் இடை உலையா உள்ளமோடு உயிர்க் கடன் இறுத்தோர் 06-050 தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில் காடு அமர் செல்வி கழி பெருங் கோட்டமும் அருந் தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும் ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் நால் வேறு வருணப் பால் வேறு காட்டி இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும் அருந் திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும் 06-060 நிறைக் கல் தெற்றியும் மிறைக் களச் சந்தியும் தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் உண்டு கண் படுக்கும் உறையுள் குடிகையும் தூமக் கொடியும் சுடர்த் தோரணங்களும் ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து சுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர் தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர் இரவும் பகலும் இளிவுடன் தரியாது வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி 06-070 நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும் துறவோர் இறந்த தொழு விளிப் பூசலும் பிறவோர் இறந்த அழு விளிப் பூசலும் நீள் முக நரியின் தீ விளிக் கூவும் சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும் புலவு ஊண் பொருந்திய குராலின் குரலும் ஊண் தலை துற்றிய ஆண்டலைக் குரலும் நல் நீர்ப் புணரி நளி கடல் ஓதையின் இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி 06-080 கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து காய் பசிக் கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும் வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ் சிறந்து புள் இறைகூரும் வெள்ளில் மன்றமும் சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீ உறுக்கும் வன்னி மன்றமும் விரத யாக்கையர் உடை தலை தொகுத்து ஆங்கு இருந் தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும் பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில் 06-090 விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும் அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும் பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும் யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை தவத் துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர் ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோர் என்னான் இளையோர் என்னான் கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இவ் 06-100 அழல் வாய்ச் சுடலை தின்னக் கண்டும் கழி பெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து மிக்க நல் அறம் விரும்பாது வாழும் மக்களின் சிறந்த மடவோர் உண்டோ? ஆங்கு அது தன்னை ஓர் அருங் கடி நகர் என சார்ங்கலன் என்போன் தனி வழிச் சென்றோன் என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க் கொண்டு 06-110 உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் கலைப் புற அல்குல் கழுகு குடைந்து உண்டு நிலைத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும் கடகம் செறித்த கையைத் தீநாய் உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும் சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும் பண்பு கொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர் கருந் தலை வாங்கி கை அகத்து ஏந்தி 06-120 இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள் புயலோ குழலோ கயலோ கண்ணோ குமிழோ மூக்கோ இதழோ கவிரோ பல்லோ முத்தோ என்னாது இரங்காது கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து தண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக் கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு எம் அனை! காணாய்! ஈமச் சுடலையின் வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என 06-130 தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத் தீத்தொழிலாட்டியேன் சிறுவன் தன்னை யாரும் இல் தமியேன் என்பது நோக்காது ஆர் உயிர் உண்டது அணங்கோ? பேயோ? துறையும் மன்றமும் தொல் வலி மரனும் உறையுளும் கோட்டமும் காப்பாய்! காவாய் தகவு இலைகொல்லோ சம்பாபதி! என மகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇ ஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலில் 06-140 கோதமை என்பாள் கொடுந் துயர் சாற்ற கடி வழங்கு வாயிலில் கடுந் துயர் எய்தி இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை என் உற்றனையோ? எனக்கு உரை என்றே பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற ஆரும்இலாட்டியேன் அறியாப் பாலகன் ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது உறங்குவான் போலக் கிடந்தனன் காண் என அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா 06-150 பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது மா பெருந் துன்பம் நீ ஒழிவாய் என்றலும் என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்தருளில் என் கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும் இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும் முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள் ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால் செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல்? ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் 06-160 ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல் கொலை அறம் ஆம் எனும் தொழில் மாக்கள் அவலப் படிற்று உரை ஆங்கு அது மடவாய் உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் இலரோ இந்த ஈமப் புறங்காட்டு அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்! நிரயக் கொடு மொழி நீ ஒழிக என்றலும் தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை நான்மறை அந்தணர் நல் நூல் உரைக்கும் மா பெருந் தெய்வம்! நீ அருளாவிடின் 06-170 யானோ காவேன் என் உயிர் ஈங்கு என ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது ஆழித் தாழி அகவரைத் திரிவோர் தாம் தரின் யானும் தருகுவன் மடவாய்! ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே நால் வகை மரபின் அரூபப் பிரமரும் நால் நால் வகையில் உரூபப் பிரமரும் இரு வகைச் சுடரும் இரு மூவகையின் பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும் பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம் 06-180 எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும் பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும் தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து வரம் தரற்கு உரியோர் தமை முன் நிறுத்தி அரந்தை கெடும் இவள் அருந் துயர் இது எனச் சம்பாபதி தான் உரைத்த அம் முறையே எங்கு வாழ் தேவரும் உரைப்பக் கேட்டே கோதமை உற்ற கொடுந் துயர் நீங்கி ஈமச் சுடலையில் மகனை இட்டு இறந்த பின் சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற 06-190 எங்கு வாழ் தேவரும் கூடிய இடம் தனில் சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து நடுவு நின்ற மேருக் குன்றமும் புடையின் நின்ற எழு வகைக் குன்றமும் நால் வகை மரபின் மா பெருந் தீவும் ஓர் ஈர் ஆயிரம் சிற்றிடைத் தீவும் பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன பெறு முறை மரபின் அறிவு வரக் காட்டி ஆங்கு வாழ் உயிர்களும் அவ் உயிர் இடங்களும் பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து 06-200 மிக்க மயனால் இழைக்கப்பட்ட சக்கரவாளக் கோட்டம் ஈங்கு இது காண் இடு பிணக் கோட்டத்து எயில் புறம் ஆதலின் சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார் இதன் வரவு இது என்று இருந் தெய்வம் உரைக்க மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்துத் தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழியப் பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ 06-210 அந்தரம் ஆறா ஆறு ஐந்து யோசனைத் தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் அணி இழை தன்னை வைத்து அகன்றது தான் என் 06-214 உரை திங்கள் மண்டிலத்தின் தோற்றம் 1-8: அந்தி...........சொரிய (இதன் பொருள்) அந்தி மாலை நீங்கிய பின்னர்-அவ்வாறு வந்திறுத்த அந்திமாலைப் பொழுது போன பின்பு; வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்-குணகடலினின்று மெழுந்து வானத்தே தனது ஒளியாலே விரிந்து தோன்றிய திங்கள் மண்டிலமானது; சான்றோர் தங்கண் எய்திய குற்றம் தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல-நற்பண்புகளால் நிறைந்த உயர்குடிப்பிறந்தார் மாட்டுளதாகும் குற்றம் தான் சிறிதேயாயினும் அது பிறரால் காணப்படும்பொழுது பெரிதாக விளங்கித் தொன்றுமாறு போலே; மாசுஅறு விசும்பின் மறுநிறம் கிளர-குற்றமற்ற வானிடத்தே தன் மறுவானும் ஒளியானும் விளங்கித் தோன்றா நிற்ப; ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர் வெள்ளி வெள்குடத்துப் பால் சொரிவது போல்-குற்றமில்லாமல் விளங்கிய அதனுடைய அழகிய இனிய குளிர்ந்த நிலாக்கதிர்கள் வெள்ளியாலியன்ற தூய வெண்மையான குடத்தினின்றும் பால் பொழியுமாறு போலே; கள் அவிழ் பூம்பொழில் இடை இடைச் சொரிய தேன் துளிக்கின்ற உவவனம் என்னும் அம் மலர்ப்பூம்பொழிலகத்தே இடையிடையே பொழியா நிற்ப என்க. (விளக்கம்) வந்து தோன்றிய என்றது வானத்திலே உயர்ந்து வந்து தோன்றிய என்பதுபட நின்றது. மலர்கதிர்: வினைத்தொகை. சான்றோர் தங்கண் எய்திய குற்றம்போல........மறுநிறம் கிளர என்னுமிதனோடு; குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போ லுயர்ந்து (957) எனவரும் திருக்குறளையும் நினைவு கூர்க. மாசு அறு விசும்பின் என்புழி மாசு என்றது முகில் மழை முதலியவற்றை மறுவானும் நிறத்தானும் கிளர என்க. இனி மறுவானது அதன் மார்பிலே மட்டும் விளங்க, அதன் கதிர்கள் பூம்பொழிலினும் வந்து இடை இடையே சொரிய எனக்கோடலுமாம். நிறம்-ஈண்டு மார்பு. கள்தேன். பொழில்-உவவனம். மணிமேகலா தெய்வம் சுதமதியையும் மணிமேகலையையும் அணுகி வினாதல் 9-15: உருவு.......உற்றீரென (இதன் பொருள்) உருவு கொண்ட மின்னே போலத் திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள்-பெண்ணுருக் கொண்டதொரு மின்னல் போன்ற மணிமேகலா தெய்வம் இந்திரவில் போன்று பல்வேறு நிறங்களையும் வானிடத்தே பரப்பி விளங்குகின்ற திருமேனியுடையவளாய்; ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி-எண்ணில் புத்தர்கட்கும் முற்படத் தோன்றிய முதல்வனும் உலகினைத் தனது அறமாகிய சக்கரத்தையுருட்டி அருளாட்சி செய்பவனும் ஆகிய புத்தபெருமானுடைய பாதபங்கயம் கிடந்த பீடிகையை வலஞ்செய்து வணங்கி வாழ்த்தியவள் பின்னர்; பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி-அப் பூம்புகார் நகரத்தே வாழ்வாள் ஒருத்தியின் வடிவத்தை மேற்கொண்டு; சுதமதி நல்லாள் மதிமுகம் நோக்கி ஈங்கு நின்றீர் என்உற்றீர் என-ஐந்து விற்கிடைத் தொலைவில் அங்குநின்ற சுதமதி என்னும் அறப்பண்பு மிக்கவளது திங்கள் போன்ற திருமுகத்தை நோக்கி நீவிரிருவீரும் இப்பொழுது இவ்விடத்திலே தமியராய் நிற்கின்றீர், இவ்வாறு நிற்றற்குக் காரணமான இடுக்கண் ஏதெனும் எய்தினிரோ இயம்புக! என்று வினவ என்க. (விளக்கம்) உருவு கொண்டமின்னே போல என்றாரேனும் மின் ஒரு பெண்ணுருவு கொண்டாற் போல என்பது கருத்தாகக் கொள்க. திருவில்-இந்திரவில். இந்திரவில் போன்று பல்வேறு ஒளிகளையும் பரவவிட்டு என்க ஆதிமுதல்வன் என்றது-கௌதம புத்தரை. உலகத்தே அறத்தைச் சான்றோர் உள்ளத்தே புகுத்தி அருளாட்சி செய்தலின், அறவாழி ஆள்வோன் என்றார். அழி என்றது ஆணையை. அதனை ஆழியாகக் கூறுவது மரபு. இந்திரவில் இன்னவாறு தோன்றும் எனப் புலப்படாமையினால் அங்ஙனம் தோன்றுகின்ற தெய்வங்கட்குவமை யாயிற்று என்பாருமுளர். அவ் விளக்கம் போலி என்னை? அஃது எவ்வாறு தோன்றுகின்றது என்பது யாவர்க்கும் இனிது விளக்குதலின். பாத பீடிகை என்றது. பளிக்கறையினகத்தே மயனால் இயற்றப்பட்ட பீடிகையை. பணிந்தனள்-பணிந்து. பைந்தொடி, என்றது பெண் என்னுந் துணையாய் நின்றது. மதிமுகம்: உவம உருபு கொக்கது. மகளிர் நிற்கத்தகாத இடத்தினும் பொழுதினும் நிற்கின்றீர் என்பாள் ஈங்கு நின்றீர் என்றாள். அதற்கொரு காரணம் இருத்தல் வேண்டும், அது தெரிந்திலது என்பாள் போல வினவியபடியாம். பதியகத்து உறையு மோர் பைந்தொடியாகி வந்தமைக் கிணங்க வினவியவாறு. என்-என்ன இடுக்கண். சுதமதியோடு மணிமேகலையையும் உளப்படுத்திப் பன்மையால் வினவினள். மணிமேகலா தெய்வம் அம் மகளிர்க்குக் கூறுதல் 16-26: ஆங்கவள்..........உரைப்ப (இதன் பொருள்) ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்-அங்ஙனம் வினவியபொழுது அச்சுதமதி நல்லாள் அத் தெய்வத்திற்கு முன்பு அவ்விடத்தே அவ்வரசிளங்குமரன் கூறியதனை எடுத்துக் கூறாநிற்ப; அரசு இளங்குமரன் ஆயிழை தன் மேல் தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி-அது கேட்ட அம்மணிமேகலா தெய்வம் அம் மகளிரை நோக்கி அன்புடையீர்! அவ்வரசன் மகனாகிய இளமையுடைய உதயகுமரன், நீ கூறியவாறு இம் மணிமேகலையின்பால் தணியாத் காம நோக்கம் தவிராதவனாயிருந்தும் ; அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்-இழுக்கொடு புணரா விழுக்குடிப் பிறப்புடையோன் ஆதலின் இவ் வுவவனம் பகவனதாணையிற் பன்மரம் பூக்கும் இயல்புடையதாய் அச் சமயத் துறவோர்க்கே உரிய தெய்வத் தன்மையுடைய தாகலின் இதனூடே இவளைக் கைப்பற்றுதல் பழியாம் என்பது கருதி இப்பொழுது இவ்விடத்தினின்று நீங்கினன் ஆயினும்; புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்-துறவோரல்லாத ஏனையோர் வாழுகின்ற வீதியினிடத்தே நீயிர் செல்லுங்கால் அவன் இவளைக் கைப்பற்றுதலின்றிப் போகான்காண்!; பெருந்தெருவொழித்துப் பெருவனம் சூழ்ந்த திருந்து எயில் குடபால் சிறுபுழை போகி-ஆதலால் நீயிர் நுமது பள்ளிக்குச் செல்லும் பொழுது நீவிர்வந்த அந்தப் பெரிய தெருவழியே செல்லுதலைக் தவிர்த்துப் பெரிய இந்த உவவவனத்தைச் சூழ்ந்துள்ள அழகிய மதிலிடத்தே மேற்றிசையிலுள்ள சிறியதொரு புழைக்கடைவாயில் வழியே சென்று; மிக்க மாதவர் விரும்பினர் உறையும் சக்கரவாளக் கோட்டம் புக்கால்-மிகுந்த பெரிய தவத்தையுடைய துறவோர் விரும்பித் தங்குஞ் சிறப்புடைய சக்கரவாளக்கோட்டத்துள் புகுந்து விட்டால்; கங்குல் கழியினும்-அதனூடேயே இவ்விரவுப் பொழுது முழுவதும் கழிந்தாலும்; கடுநவை எய்தாது அங்கு நீர்போம் என்று அருந்தெய்வம் உரைப்ப-கடிய துன்பம் ஒன்றும் நுமக்குண்டாக மாட்டாது ஆதலாலே அவ்வழியே சென்று அச் சக்கரவாளக் கோட்டத்திறகே நீவிரிருவீரும் போவீராக என்று காண்டற்கரிய அத் தெய்வம் கட்டுரைப்ப; என்க. (விளக்கம்) ஆங்கு இரண்டனுள் முன்னது காலத்தையும் பின்னது இடத்தையும் சுட்டியவாறு. அவள்: சுதமதி. அவன்: உதயகுமரன். தணியாத காமநோக்கம்-பெயரெச்சத்தின் ஈறு கெட்டது. அறத்தோர் என்றது துறவோரை. அவன் உயிர்குடிக் பிறப்பினன் ஆகலின் ஈண்டு இவளைக்கைப்பற்றுதல் பழியென்றுட் கொண்டு அகன்றனன் என்றவாறு பெருந்தெருவில் இவளைக் கைப்பற்றுதல் அவனுக்குப் பழியாகாமையின் அவன் இவள் வரவு பார்த்து அங்குத் தேற்றமாக இருப்பான்; ஐயமில்லை, ஆதலின் அவ்வழியே செல்லற்க என்று தெரிந்தோதிய படியாம். புழைபுழைக்கடைவழி. பெருவனம் என்றது உவவனத்தை. சக்கரவாளக் கோட்டத்தே கடுநவை எய்தாமைக்கு ஏதுக்கூறுவாள், மிக்க மாதவர் விரும்பி யுறையும் சக்கரவாளக் கோட்டம் என்றாள். காண்டற்கரிய தெய்வம் இங்ஙனம் எளிவந்துரைப்ப என்பார், அருந்தெய்வம் உரைப்ப என்றார். சுதமதி மணிமேகலா தெய்வத்தை வினாதல் 27-36: வஞ்ச.....கூறும் (இதன் பொருள்) வஞ்ச விஞ்சையான் மாருத வேகனும் அம் செஞ்சாயல் நீயும் அல்லது-அது கேட்ட சுதமதி அத் தெய்வத்தை நோக்கி அன்புடையோய்! வஞ்ச நெஞ்சமுடைய மாருதவேகன் என்னும் விச்சாதரனும் அழகிய செவ்விய மென்மையுடைய நங்கையே நீயும் அல்லது; நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் நெடிய இப் பூம்புகார் நகரத்தில் வாழுகின்ற மாந்தர் எல்லாருமே நின்னாற் கூறப்பட்ட கோட்டத்தை; சுடுகாட்டுக் கோட்டம் என்றலது உரையார்-சுடுகாட்டுக் கோட்டம் என்று குறிப்பிட்டுக் கூறுவதேயன்றிப் பிறிதொரு பெயரானும் கூறுதலிலர்; மிக்கோய் அது சக்கரவாளக் கோட்டம் எனக் கூறிய உரைப் பொருள் அறியேன்-அறிவான் மிக்க நீதானும் அதனைச் சக்கரவாளக் கோட்டம் என்றே கூறிய சொல்லின் பொருளை யான் சிறிதும் தெரிகிலேன்; ஈங்கு சொல்லின் பொருளை யான் சிறிதும் தெரிகிலேன்; ஈங்கு இதன் காரணம் என்னையோ என-இங்கு நீ இவ்வாறு இதற்குப் பெயர் கூறுதற்கியன்ற காரணந் தான் யாதோ? என்று வினவாநிற்ப; ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவன்-அது கேட்ட அத் தெய்வம் நல்லாய் நன்றுவினவினை அவ்வாறு அதனைக் கூறுவதற்குரிய காரணம் நீ நன்கு அறிந்து கொள்ளுமாறு விளக்கமாகக் கூறுவேன்; நீ மாதவி மகளோடு வல் இருள் வரினும் கேள்- நீ தானும் இம் மாதவி மகளோடு பொறுமையுடனிருந்து நள்ளிரவு வந்துறினும் கேட்டறிந்து கொள்ளக்கடவை, கேட்பாயாக என்று; நேரிழை கூறும்-முற்பட வலியுறுத்துப் பின்னர் நேரிய அணிகலன்களையுடைய அம் மணிமேகலா தெய்வம் கூறாநிற்கும் என்க. **** (விளக்கம்) தன்னைக் கண்ணோட்டஞ் சிறிதுமின்றிக் கைவிட்டுப் போனமையாலே விஞ்சையான் என்னாது வஞ்சவிஞ்சையன் என்றான். நெடுநகர் என்றது- பூம்புகார் நகரத்தை. வஞ்ச விஞ்சையான் கூற்றுப் பொய்யாதலும் கூடும் என்றிருந்தவன் இவளும் அங்ஙனம் கூறுதலின் ஒரு காரணம் உவதாதல் வேண்டும் என்னும் ஊகத்தால் வினவுகின்றாளாகலின் மிக்கோய் கூறிய உரைப்பொருள் என்றாள். வஞ்சவிஞ்சையனே அன்றி மிக்கோயும் கூறுகின்றனை ஆதலின் அது பொருள் உரையே ஆதல் வேண்டும் அஃதறிகிலேன் என்றவாறு. இனி, அத் தெய்வந்தானும் அஃதறிந்து கொள்ள வேண்டிய தொன்றே ஆதலால் கூறுவன் கேள் என்கின்றது. மணிமேகலையும் உணரற்பாலது அச் செய்தி என்பது தோன்ற மாதவி மகளோடு வல்லிருள் வரினும் கேள் என்றாள். என்னை? அவட்குக் துறவின் செல்லும் ஏது நிகழ்ச்சி எதிர்துண்மையின் அதற்கின்றியமையாத நிலையாமை யுணர்ச்சியைத் தோற்றுவிக்கும் செய்தியாகலின்; வல்லிருள்-என்றது ஆகு பெயராய் இரவு என்னும் துணை. இச் செய்தியைக் கேட்டல் அவட்கு ஆக்கமாம் ஆதலின் என்க. நிலையாமை யுணர்ச்சியைத் மெய்யுணர்வார்க்கு இன்றியமையாத தென்பதனை: அவற்றுள் நிலையாமையாவது- தோற்ற முடையன யாவும் நிலையுதலிலவாந்தன்மை. மயங்கிய வழிப் பேய்த்தேரிற் புனல்போலத் தோன்றி, மெய்யுணர்ந்த வழிக் கயிற்றில் அரவுபோலக் கெடுதலிற் பொய்யென்பாரும், நிலைவேறுபட்டு வருதலால் கணந்தோறும் பிறந்திறக்கு மென்பாரும் ஒருவாற்றான் வேறுபடுதலும் ஒருவாற்றான் வேறுபடாமையும் உடைமையின் நிலையாமையும் நிலையுதலும் ஒருங்கேயுடைய வென்பாருமெனப் பொருட்பெற்றி, கூறுவார் பலதிறத்தராவார்; எல்லார்க்கும் அவற்றது நிலையாமையும் உடம்பாடாகலின் ஈண்டு அதனையே கூறுகின்றார். இஃதுணர்ந்துழியல்லது பொருள்களின்மேல் பற்று விடாதாகலின், இது முன் வைக்கப்பட்டது எனவரும் பரிமேலழகர் பொன் மொழிகள் ஈண்டு நினைவிற் கொள்ளற் பாலனவாம்(குறள் அதி-34-முன்னுரை). (34-இந்நாமப் பேரூர் என்பது முதலாக; 205-இதன் வரவு இது என்னுமளவும் மணிமேகலா தெய்வத்தின் கூற்றாய் ஒரு தொடர்) சக்கரவாளக்கோட்ட வண்ணனை 36-49: இந்நாம...... இஞ்சி (இதன் பொருள்) இந்நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய ஈமப் புறங்காடு ஈங்கு- பகைவர்க்கு அச்சம் விளைவிக்கும் பெரிய தலை நகரமாகிய இந்நகரம் தோன்றிய காலத்தே அதனோடு தோன்றிய முதுமையுடைய ஈமவிறகுகளையுடைய சுடுகாடு இவ்வுவவனத்தின்; அயலாது- பக்கத்திலே உளதாம்; ஊரா நல்தேர் ஓவியப் படுத்துத் தேவர் புகுதரூஉம் செழுங்கொடி வாயிலும்-அது தானும் வலவன ஏவா வானவூர்தியின் ஓவியம் வரையப்பட்டுத் தேவர்கள் மட்டும் உள்ளே புகுதற்கமைந்த வளவிய கொடியுயர்த்தப்பட்ட வாயினும்; நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி எழுதிய நலம்கிளர் வாயிலும்- நெற்பயிரும் கரும்பும் நீர்நிலைகளும் சோலையும் உடைய நல்ல நெறியும் வரைந்து ஓவியப்படுத்தப்பட்ட அழகுமிகும் வாயிலும்; வெள்ளி வெள்சுதை இழுகிய மாடத்து உள்உருவு எழுதா வெள் இடை வாயிலும்- மிகவும் வெண்மையான சுண்ணச்சாந்து தீற்றிய மாடத்தையும் அதனுள் ஓவியம் ஒன்றும் வரையாமல் வெற்றிடமாக விடப்பட்டிருக்கின்ற வாயிலும்; மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து-உதடுகளை மடித்துள்ள சிவந்த வாயையும் கடிய வெகுளியையுடைய நோக்கத்தையும் நரகன் ஒருவனைக் கட்டிய கயிற்றையும், அவனை எறிதற்கு ஓக்கிய சூலப்படையையும் உடையதாய்க் கட்டிவிடப்பட்ட; நெடுநிலை மண்ணீடுநின்ற வாயிலும்-நேராக உயர்ந்து நிற்கின்ற நிலையினையுடைய பூதப்படிமம் நிற்கின்ற வாயிலும் ஆகிய; நால்பெருவாயிலும் பால்பட்டு ஓங்கிய காப்பு உடை இஞ்சி- நான்கு பெருவாயில்கள் நான்கு பக்கங்களினும் அமைக்கப்பட்டு நாற்புறமும் சூழ்ந்து உயர்ந்த காவலையுடைய மதிலையும் என்க. (விளக்கம்) நாமம்-அச்சம். ஊராநற்றேர்-வலவனேவா வானவூர்தி. தேவர் புகுதரூஉம் செழுங்கொடிவாயிலும் என்றது, தேவராதற்குரிய நல்வினை செய்தார் நுண்ணுடம்போடு கூடிய உயிரைத் தங்களுலகிற்கு அழைத்துச் செல்லுதற்கு அச் சக்கரக் கோட்டத்தில் வந்து புகுவாராதலின் அவர்க்கெனவே சிறப்பாக வகுக்கப்பட்டு அச்சிறப்புக்கு அறிகுறியாக வானவர் ஊர்தியாகிய வலவனேவா வானவர் ஊர்தியின் ஓவியம் வரையப்பட்டும் அதற்கேயுரிய கொழுங்கொடி உயர்த்தப்பட்டும் திகழும் வாயிலும் என்றவாறு. இனி இதனைப் பாட்டிடைவைத்த குறிப்பினாலே ஏனைய மூன்று வாயிலின் சிறப்புகளையும் இப் புலவர் பெருமான் இதனைப் பயில்பவர்களே குறிப்பாக வுணர்ந்து கொள்ளுமாறு புனைந்திருக்கும் பேரழகு நம்மைப் பேரின்பத்திலே திளைப்பிக்கின்றது. அக் குறிப்புப் பொருளை இனி ஈண்டு ஆராய்ந்தெடுத்துக் காட்டுவாம். உயிரினங்கள் தத்தம் வினையின் பயனாக மூன்றுலகங்களினும் சென்று பிறக்கும் என்பதும், பற்றற்ற உயிர் பேராவியற்கையாகிய பேரின்ப வாழ்வைப் பெறும் என்பதும், உலகாயத சமயத்தார்க் கல்லது ஏனைய சமயத்தார்க்கும் பெரும்பாலும் ஒப்பமுடிந்த கொள்கையாம். பேராவியற்கை என்னும் இந் நிலையே வீடு எனவும் முத்தி எனவும் கூறுவர் பௌத்தர். இந் நிலையையே நிருவாணம் என்று கூறுவர். ஆகவே இம்மையே நல்வினை செய்த உயிர்கள் தேவர்களால் வரவேற்கப்பட்டு அச் சக்கரவாளக் கோட்டத்தினின்றும் புறப்படும் வாயிலை மட்டும் விளக்கினர். இனி, நல்வினையும் தீவினையும் விரவச் செய்த வுயிர்கள் மீண்டும் இன்பமும் துன்பமும் விரவிய நுகர்ச்சியையுடைய மக்கள் பிறப்பையே எய்தும் ஆகலின் அவ்வுயிர் புறப்படுதற்கும் அவற்றிற்குரிய கடன்கள் செய்தற்குரிய மக்கள் புகுதருதற்கும் உரிய வாயில் என்பதற்குரிய அடையாளங்களாகவே இவ் வுலக வாழ்விற்கின்றியமையாத பொருள்களாகிய நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி மருங்கே பொறிக்கப்பட்டது ஒரு வாயில் எனவும் இனித் தீவினை செய்தவுயிர்கள் காலதூதர்களாலே பாசத்தால் பிணிக்கப்பட்டு நரகிலிடப்பட்டு வதைக்கப்படும் என்பதற்கறிகுறியாகவும் அவ்வினத்துப் பேயும் பூதமும் புகுதருதற்கும் அத்தீய வுயிர்கள் புறப்படுதற்கும் உரிய வாயிலது என்றறிவுறுத்தற்கு மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து நெடுநிலை மண்ணீடு ஒருவாயிலின்கண் சிற்பியரால் கட்டி நிறுத்தப்பட்டது எனவும், இனி, மெய்யுணர்வு சிறந்து அவாவறுத்த தூயவுயிர்கள் பேராவியற்கை பெறுதற்கு இவ்வுலகிற்கு ஈண்டு வாராநெறிச் செல்வன புறப்பட்டுப் போதற்கியன்ற வாயில் என்பதற்கு அறிகுறியாகவே ஒரு வாயில் வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்து உள்ளுரு எழுதா வெள்ளிடை வாயில் மயனால் அமைக்கப்பட்டது. என்னை? வீடெய்துவோர் உளம் இவ் வுலகப் பொருள்களில் யாதொன்றனிடத்தும் பற்றில்லாமல் முழுத்தூய்மை பெற்று வறிதிருக்குமாதலின், அவ்வுயிர் போகும் அவ் வாயில் தூய்மைக்கே அறிகுறியாகிய வெள்ளி வெண்சுதை தீற்றி ஓவியப் பொருள் ஏதும் வரையப்படாமல் வெள்ளிடையாக (வெற்றிடமாக) விடப்படல் வேண்டிற்று. இவையெல்லாம் யாம் நுண்ணுணர்வாற் காணுங்கால் அக் காட்சி பேரின்பம் பயத்தலும் உணர்ந்து கொள்க. இவ்வாறு நான்கு வாயிலும் நால் வேறு வகை பட்டனவாகப் புலவர் பெருமான் ஓதுதற்குக் காரணம் இருத்தல் வேண்டும் என்னும் கருத்தாலே ஆராய்ந்து கூறும் பொரும் இவை. மண்ணீடு-சுடுமண் கொண்டு செய்து சுதை தீற்றிய படிவம்(உருவம்). இத் தொழில் செய்வோரை மண்ணீட்டாளர் என்று அறிவுறுத்துவர் ஆசிரியர் இளங்கோவடிகளார்(சிலப். 5-30). மண் மாண்புனை பாவை என்பர் வள்ளுவனார். அதற்குப் பரிமேலழகர் சுதையான் மாட்சிமைப்படப் புனைந்த பாவை என்றுரை வகுப்பர்(407-குறள்). வாயிலும் வாயிலும் வாயிலும் ஆகிய நாற் பெருவாயிலும் என இயையும். இஞ்சி-மதில் இதுவுமது 49-53: கடி....கோட்டமும் (இதன் பொருள்) கடி வழங்கும் ஆர்இடை-அம் மதிலக வரைப் பினூடே மக்கள் வழங்குதலரிய நிலப்பரப்பிலே; உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர் தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்து புறம் சுற்றி-உறுதியிற்றளராத நெஞ்சத்தோடே நின்று தம் தலைமயிரால் மரக்கிளையில் நன்கு முடியிட்ட பின்னர்த் தாமே தம் கழுத்தை யரிந்து தாம் தமது பராவுக்கடனாகிய உயிரைக் கொடுத்த வீரமறவருடைய தலைகள் தூங்காநின்ற நெடிய மரங்களின் கிளைகள் தாழ்ந்து பக்கமெல்லாம் சூழப்பெற்று; பீடிகை ஓங்கிய முன்றில் காடு அமர்செவ்வி கழிபெருங் கோட்டமும் சுடுகாட்டை விரும்பியறையும் இறைவியாகிய கொற்றவை எழுந்தருளியிருக்கின்ற மிகவும் பெரிய திருக்கோவிலும் என்க. (விளக்கம்) உயிர்க்கடன் இறுத்தோர்-தம் தலையைத் தாமே அரிந்து தமதின்னுயிரை இறைவிக்குப் பலியாக வழங்குபவர். இங்ஙனம், உயிர்க் கடன் இறுத்தலை அவிப்பலி என்று தமிழருடைய பொருளியல் நூல் கூறும். அவி-ஆவி. ஆவிப்பலி கொடுக்கும் மறவரே மறத்திற்குத் தலைவரம்பாவார் என்ப. இங்ஙனம் அவிப்பலி கொடுத்தலை. ஆர்த்துக் களங்கொண்டோர் ஆரம ரழுவத்துச் சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரன் முழக்கத்து மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி எனவரும் சிலப்பதிகாரத்தானும்(5:83-8), அங்ஙனம் உயிர்க் கடனிறுக்குங் காலத்தே அம் மறவருடைய உலையா உள்ளத்தினியல்பை, மோடி முன்றலையை வைப்பரே முடிகுலைந்த குஞ்சியை முடிப்பரே ஆடிநின்று குருதிப்புதுத் திலதமும் அம்மு கத்தினி லமைப்பரே எனவரும் (சிலப்-5:76-88: அடியார்க்-உரைமேற்கோள்) தாழிசையானும், அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்பராலோ கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவுமாலோ குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ எனவரும் கலிங்கத்துப் பரணியானும்(கோயில்-15) அறிக. இனி உயிர்கடனிறுப்போர் சிலர் தமது சிகையை மரக்கிளையில் முடிந்துவிட்டுப் பின் கழுத்தை அரிதலால் தலைதூங்கு நெடுமரம் என்றார், இதனை வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறும் திசைதோறும் விழித்து நின்று தூங்குதலை சிரிப்பனகண் டுறங்குதலை மறந்திருக்குஞ் சுழல்கட் சூர்ப்பேய் என்பதனாலறிக.(கலிங்க- கோயில்-21) பெரும்பலி என்றார் அவிப்பலி யாதலின். பீடிகை- பலிபீடம். காடமர் செல்வி-கொற்றவை. இதுவுமது 54-65: அருந்தவர்......பரந்து (இதன் பொருள்) அருந் தவத்தார்க்கு ஆயினும் அரசற்கு ஆயினும் ஒருங்கு உடன்மாய்ந்த பெண்டிர்க்காயினும்-அரிய தவவொழுக்கந் தாங்கிய துறவோர்க் காதல், அரசருக்கு ஆதல் தங்கணவர் மாய்ந்தக்கால் அவரோடு ஒருங்கே தம்முயிரையும் மாய்த்துக் கொண்ட கற்புடைய மகளிர்க்காதல்; நால்வேறு வருணப் பால் வேறுகாட்டி-அந்தணரும் அரசரும் வணிகரும் வேளாளரும் ஆகிய பகுதிகளையுடைய மாந்தர்களுக்கு அப் பகுதிகளுக்குரிய மரபுகளையும் வேறு வேறு தெரியும்படி அவற்றிற்குரிய அடையாளங்களோடு காட்டி; இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த-இறந்துபட்டவர் திறத்திலே அவரவர்க்குச் சிறந்த கேளிராயோர் எடுத்த; குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்-குறியனவாகவும் நெடியனவாகவும் அமைந்த மலைக்கூட்டத்தைக் கண்டாற் போன்ற காட்சியையுடைய செங்கலாலியற்றப்பட்ட உயர்ந்த நிலையினையுடைய கோயில்களும்; அருந் திறல் கடவுள் திருந்து பலிக்கந்தமும்-தடுத்தற்கரிய பேராற்றல் பொருந்திய கடவுளர்க்குத் திருத்தமுடைய பலிகளையிடுதற்பொருட் டமைக்கப்பட்ட பல வேறுவகையான தூண்களும்; நிறைக் கல் தெற்றியும்-வீரமறவர்க்கு நிறுத்தப்பட்ட கல்களையுடைய மேடைகளும்; மிறைக்களச் சந்தியும்-குற்றம்புரியும் கொடியாரைக் கொலை செய்தொறுத்தற்கியன்ற கொலைக்களமாகிய சந்தியும்; தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் உண்டுகண் படுக்கும் உறையுள் குடிகையும்-தடியும் மட்கலமும் கையிற்கொண்டு அச் சக்கரவாளக் கோட்டத்தைக் காவல் செய்கின்ற காவலர்கள் உணவுண்டு உறங்குதற்கியன்ற இடமாகிய குடில்களும்; தூமக்கொடியும்-எரிகின்ற ஈமத்தினின்று தோரணங்களும்-ஈமத்தில் எரிகின்ற தீப்பிழம்புகளாகிய தோரணங்களும்; ஈமப்பந்தரும் யாங்கணும் பரந்து-ஈமநெருப்பு மழையாலவியாமைப் பொருட்டு இடப்பட்டுள்ள சாரப்பந்தர்களும் ஆகிய இவையெல்லாம் எங்கும் பரந்து காணப்பட்டு; என்க. (விளக்கம்) அருந்தவர்க்கும் அரசர்க்கும் கற்புடை மகளிர்க்கும் இடுகாட்டில் கோவில் எடுக்கும் வழக்கம் உண்மை அறிக. அந்தணர் முதலிய வருணம் நாள்கிற்கும் வேறு வேறு அடையாளம் உண்மையின் கோயில்களினும் அவ்வடையாளமிட்டு இவர் இனையர் இன்ன வகுப்பினர் என யாவரும் அறியும்படி காட்டி என்பது கருத்து. சிறந்தோர்-இறுதிக்கடன் செய்தற்குச் சிறப்புரிமையுடையோர் எனினுமாம். பொருளுடைமைக்கும் இறந்தோர் தகுதிக்கும் ஏற்பக குறியவும் நெடிவுமாக எடுக்கப்பட்டவை என்க. சுடுமண்- செங்கல். கந்தம்-தூண். நிறைக்கல்-வீரமறவர்க்கு நினைவுச்சின்னமாக நிறுத்தப்பட்ட கல். இறுத்தல்-இறை என்றானாற் போன்று, நிறுத்தல்- நிறை என்றாயிற்று. தெற்றி-மேடை. மிறை-குற்றம். களம் என்றமையால் இது கொலையால் கொடியாரை வேந்தொறுக்கும் கொலைக்களம் என்பது பெற்றாம். இக் களம் பல கோத் தொழிலாளரும் கூறுமிடகலின் சந்தி எனப்பட்டது. இதற்குப் பிற ரெல்லாம் சிறப்பில்லாவுரை கூறிப்போந்தார். உறையுளாகிய குடிகை, குடில் என்பன தூய தமிழ்ச் சொற்களே. கடி-வீடு. கை, இல் என்னும் சிறுமைப் பொருட்பின்னொட்டு சேர்ந்து குடிகை, குடில் என ஆயிற்று. கொடி-ஒழுங்கு, கொடி என்றதற்கிணங்க நூலாசிரியர் தோரணமும் பந்தரும் என்ற நயமுணர்க. சக்கரவாளக் கோட்டத்தெழும் ஓசைவகைகள் 66:79: சுடுவோர்..... நின்றறாது (இதன் பொருள்) சுடுவோர் இடுவோர் தொடுகுழிப்படுப்போர் தாழ்வயின் அடைப்போர் தாழியின் கவிப்போர்-அச் சக்கரவாளக்கோட்டத்து மக்கட்பிணத்தை ஈமத்தேற்றிச் சுடுபவரும் அவற்றைக் கொணர்ந்து ஒருபுறத்தே வாளாது போகடுவோரும் தோண்டப்பட்ட குழியிலிட்டுப் புதைப்பவரும் தாழ்ந்த பள்ளங்களிலே அடைத்து வைப்பவரும் மண்ணாற்செய்த தாழீயிலிட்டுக் கவிழ்ப்பவருமாய்; இரவும் பகலும் இளிவுடன் தரியாது வருவோர் பெயர்வோர் மாறாச்சும்மையும்-இரவும் பகலுமாகிய இருபொழுதினும் வாலாமையுடன் இருத்தல் பொறாமல் வருபவரும் கடன்முடித்துப் போவாரும் எழுப்புகின்ற இடையறாத ஆரவாரமும்; எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி-இறவாதிருந்தோர்க்கெல்லாம் நுங்கட்கும் இவ்வாறு செய்யும் ஈமச்சடங்குண்டு என்பதனை அறிவுறுத்துக் கேட்டோர்; நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்-நெஞ்சத்தை அச்சத்தால் நடுங்கப்பண்ணுகின்ற நெய்தற்பறை முழக்கமும்; துறவோர் இறந்த தொழுவிளிப் பூசலும்-துறவுபூண்டவர் இறந்தமையாலே ஏனையோர் அவரைத் தொழுது வாழ்த்தும் வாழ்த்தொலியும்; பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்-துறவாத மாந்தர் இறந்தமையால் அவர் சுற்றத்தார் அழுதலாலே எழுகின்ற அழுகை ஒலியும்; நீள்முக நரியின் தீவிளிக்கூவும்- நீண்ட முகத்தையுடைய நரிகள் ஊளையிடுகின்ற கேள்விக்கின்னாததாகிய கூக்குரலும்; சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்- சாகக்கிடக்கின்றவரை விரைந்து சாகும்படி கூப்பிடுகின்ற கூகையின் குழறல் ஒலியும்; புலஊண்பொருந்திய குராலின் குரலும்-ஊன் உண்ணுதலிலே பொருந்திய கோடான் குரல்களும்; ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும்-உணவாக மாந்தர் தலைமூளையை உண்ட ஆண்டலைப்புள் மகிழ்ந்தெடுத்த குரலோசையும்; இன்னா இசையொலி ஆகிய இன்னாமதருகின்ற இசைகளின் கூட்டமாகிய பேரொலியானது; நல்நீர் புணரி நளிகடல் ஓதையின்-நல்ல நீரையுடைய ஆறுகள் புக்குப் புணர்தலையுடைய செறிந்த கடலினது முழக்கம் போன்று; என்றும் நின்று அறாது-எப்பொழுதும் நிலைபெற்று நிற்ப தல்லது ஒருபொழுதும் ஒழியமாட்டாது என்றாள் என்க. (விளக்கம்) பிணங்களைச் சுடுவோரும் இடுவோரும் குழிப்படுப்போரும் அடைப்போரும் கவிப்போருமாய்ப் பல்வேறுவகையாக இறுதிக் கடன்கள் செய்ய, இரவும் பகலுமாகிய இருபொழுதும் வருவோரும் செல்வோரும் செய்யும் ஆரவாரமும் நெய்தற்பறை முழக்கம் ஓசையும் தொழும் பூசலும் அழும் பூசலும் நரி கூகை குரால் ஆண்டலைப்புள்ளும் ஆகிய இவை செய்யும் ஆரவாரமும் ஆகிய எல்லாம் இன்னா இசையாய் ஒன்றாகிக் கடலோதை போல் எப்பொழுதும் ஒலிக்க. இடுவோர்-வாளாது போகட்டுச் செல்வோர். மக்கட் பிணமும் நரிமுதலிய பிறவுயிர்கட்கு உணவாதலின் அவற்றைச் சுடுதல் முதலியன செய்யாமற் போகட்டுப் போவதும் சிறந்த அறமாம் என்று கருதும் கோட்பாடுடையோரும் அக்காலத்திருந்தனர் என்பது இதனால் அறியப்படும். தாழ்வயின் அடைத்தலாவது பள்ளத்திலிட்டுப் பிணத்தைப் பல விடங்கட்கும் இழுத்தேகாமல் அவ்விடத்திலேயே தின்றுவிடும்படி வழியை அடைத்து விடுதலாம். தாழி- மட்பாண்டம். இதனை முதுமக் கட்டாழி என்ப. கீழே ஒரு தாழியிலிட்டு மற்றொரு தாழியாற் கவிப்பது என்க. இளிவு-வாலாமை தரியாது என்றது-காலந்தாழ்த்தாமல் என்றவாறு. சும்மை-ஆரவாரம். எஞ்சியோர் மருங்கின் ஈமஞ்சாற்றுதலாவது சாப்பறை முழக்கம். சாவுண்டென்பதனை மறந்துவாழ்வோர்க்கு நுமக்கும் சாவுண்டென்பதனை அறிவுறுத்தல். இதனை மணங்கொண்டீண் டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே டொண்டொண்டொண்ணென்னும் பறை எனவரும் நாலடியானும்(25) உணர்க. கூகை குழறுதலை இறக்கும் காலம் அணித்தாக வந்துற்றோரை அறிந்துவிரைவில் இறந்து பட்டு ஈமப்புறங்காட்டிற்கு வருமாறு அழைப்பதாகக் கருதுமொரு கோட்பாடு பற்றிச் சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும் என்றார். இல்லத்திற் கணுக்கமாகக் கூகையிருந்து குழறினால் இற்றை நாளும் அஞ்சி அதனை ஓட்டுவாரும், அணுமையில் யாரேனும் ஈண்டுச் சாவார் உளர் என்பாரும் உளர். தலையூண்துற்றிய ஆண்டலை என மாறுக. ஈண்டு ஊண் என்றது மூளையாகிய உணவை. துற்றுதல்- தின்னல். நன்னீராகிய யாறுகள் சென்று புணர்தலையுடைய நளிகடல் என்க. ஓதை-முழக்கம். சக்கரவாளக் கோட்டத்துள்ள மரங்களும் மன்றமும் (இதன் பொருள்) தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து-தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஆகிய மரங்கள் வளரப் பெற்றுக் கான்றையும் சூரையும் கள்ளியுமாகிய செடிகள் செறியப்பெற்று; காய் பசிக் கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் மாமலர் பெருஞ்சினை வாகை மன்றமும்-உடம்பு வற்றுதற்குக் காரணமான பதியையுடைய கடிய பேய் கூட்டமாகக் கூடியிருக்கின்ற முகில் தவழ்கின்ற பெரிய கிளைகளோடு கூடிய வாகை மரம் நிற்றலாலே வாகை மன்றம் என்று கூறப்படுகின்ற மன்றமும்; புள்வெள்நிணம் தடியோடு மாந்தி மகிழ் சிறந்து இறைகூறும் வெள்ளில்மன்றமும்- பல்வேறு பறவைகளும் மக்கள் யாக்கையின் வெள்ளிய நிணத்தையும் தசையையும் நிரம்பத் தின்றமையாலே மகிழ்ச்சி மிகப்பெற்று நெடும்பொழுது தங்குதற்கிடமான விளாமரம் நிற்றலாலே வெள்ளில்மன்றம் எனப்படும் மன்றமும்; சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும்-சுடலையிலேயே சாந்துணையுமிருந்து இறந்துபடுவது என்னும் நோன்பினை மேற்கொண்டு அந்நோன்பினை தளராத உள்ளத்தோடிருந்து தாம் பெற்ற வாய்க்கரிசியாலே சோறு சமைத்தற்கு மண்டையிலிட்டுத் தீயின் மேல் ஏற்றும் இடமாகிய வன்னிமறம் நிற்கும் மன்றமும்; விரத மாக்கையர் உடைதலை தொகுத்து ஆங்கு இருந்தொடர்பபடுக்கும் இரத்தி மன்றமும்-விரதங்காக்கும் யாக்கையினையுடையோர் உடைத்த தலைகளைத் தொகுத்துப் பெரிய மாலையாகத் தொடுக்குமிடமாகிய இலந்தை மரம் நிற்கும் மன்றமும்; பிணம்தின் மாக்கள் நிணம்படு குழிசியில் விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்-பிணத்தைத் தின்று வாழும் இயல்புடைய மாக்கள் கொண்டாடும் வெற்றிடமாகிய மன்றமும் ஆகிய இவ்விடங்களிலெல்லாம் என்க. (விளக்கம்) தான்றி முதலிய மூன்றும் மரங்கள் என்றும், கான்றை முதலிய மூன்றும் செடிகள் என்றும் கொள்வாருமுளர். காய்பசி: வினைத்தொகை எனினுமாம். காய்தற்குக் காரணமான பசியுமாம்; காய்தல்-வற்றுதல்; நெடும்பசியால் அறவுலர்ந்து நெற்றாய் அற்றேம் என்பது பேய் முறைப்பாடு (கலிங்கத்து) பேய்ப் பிறப்பிற் பெரும் பசியே எஞ்ஞான்றும் அலைக்கும் என்னும் கோட்பாடு பற்றி; காய்பசிக் கடும்பேய் என்று விதந்தார். மால்-முகில். மால்-என்பதற்கு மயக்கம் எனவே பொருள் கொண்டு மயக்கமே உருக்கொண்டு எஞ்ஞான்றும் அமர்பந்திருத்தற்கிடமான பெருஞ்சினை எனலுமாம். பேய்கள் இருந்து மயக்குறுத்துதல் பற்றி அங்ஙனம் கூறினர். என்க. மன்றம்-உயிரினங் கூடும் இடம். பெரும்பாலும் மன்றங்களில் யாதானும் மரம் நிற்பதுண்டு. ஈண்டு வாகை மரம் நிற்கும் மன்றம் வாகை மன்றம் எனவும், வெள்ளில் நின்ற மன்றம் வெள்ளில் மன்றம் எனவும், வன்னி மரம் நின்ற மன்றம் வன்னி மன்றம் எனவும், இரத்தி மரம் நின்ற மன்றம் இரத்தி மன்றம் எனவும் கூறப்படுகின்றன. மரமொன்றும் நில்லாத மன்றத்தை வெள்ளிடை மன்றம் என்றனர். சிலப்பதிகாரத்தினும் நகரத்துள்ளே அமைந்த மன்றம் பல கூறப்பட்டன, அவற்றுள்ளும் உள்ளுநர்ப பனிக்கும் வெள்ளிடை மன்றம் என ஒரு மன்றம் கூறப்படுதலறிக(5-17) இனி, ஈமப்புறங்காட்டிலிருந்து நோன்பு செய்வாரும் உளர் என்பதனை, நீலகேசியில், இறைவி கோட்டத்து ளீரிரு திங்கள தகவை உறையு ளாகவவ் வுறையருங் கேட்டகத் துறைவான் பொறையும் ஆற்றலும் பூமியு மேருவு மனையான் சிறைசெய் சிந்தைய னந்தமில் பொருள்களைத் தெரிந்தான் ஆகிய முனிச்சந்திர பட்டாரகன் எனும் பெயர் முனிவன் பலாலயம் என்னும் சுடுக்காட்டினூடிருந்தே நோன்பு செய்தான் எனக் கூறப் பட்டிருத்தலாலுணர்க. இத்தகையோரும் சுடலை நோன்பிகள் ஆகுவர். இனி இவரைக் காபாலிக சமயத்துறவோர் என்பாரும் உளர்(நீலகேசி-33). சுடலை நோன்பிகள் தம் வயிற்றுத் தீத்தணித்தற்கு அங்குக் கிடைக்கும் வாய்க்கரிசியை மண்ணுலியன்ற மண்டையில் உலை நீர் பெய்து சோறு சமைத்தற்கு அம் மண்டையை ஈமத்தீயில் வைப்பர் என்று கொள்க. அவருறையுமிடம் வன்னி மன்றம் என்று கொள்க. விரத யாக்கையர் என்றது மாவிரத சமயத் துறவோரை. இவர் மாந்தர் தலை யோட்டினை மாலையாகக் கோத்து அணிவாராதலின் உடைதலை தொகுத்து இரத்தி மன்றத்தே தொடர்ப்படுத்துவர் என்க. மாவிரதமாவது... சாத்திரத்திற் கூறும் முறையே தீக்கை பெற்று எலும்பு மாலை யணிதல முதலிய சரியைகளின் வழுவாதொழுகினவர் முத்தராவார் என்பது மாதவச் சிவஞான யோகியாரின் மணிமொழி.(சிவஞானபாடியம். அவையடக்கம்) பிணந்தின் மாக்கள் நிணம்படு குழிசியில் விருந்தாட்டயரும் வெள்ளிடை மன்றமும் என் புழிக் கூறப்படும் மாக்களும் ஒரு வகைச் சமயத் துறவோர் என்று கோடலுமாம். என்னை? காபால சமயத்துறவோர் நாடோறும் மனிதர் தலையோட்டில் ஐயமேற்றுண்பவர் எனச் சிவஞான முனிவர் கூறுதலானும் (சிவ-அவையடக்) மெய்ஞ்ஞான விளக்கத்தில் இவரைக் காளாமுக மதத்தினர் என்று கூறி இவர் கபால பாத்திர போசனம் சவ பஸ்மதாரணம் சவமாம் சபத்துவம் தண்டதாரணம்: சுராகும்பத் தாபன பூசை முதலியன உடையவர்(மெய்ஞ். மதவிளக்) எனக் கூறப் படுதலால், இவரையே ஈண்டு வெள்ளிடை மன்றத்து நிணம்படு குழிசியில் விருந்தாட்டயரும் பிணந்தின் மாக்கள் என்று சாத்தனார் குறிப்பிடுகின்றனர் எனல் மிகையன்று. அவ்வீம்ப்புறங்காட்டிற் காணப்படும் பொருள்கள் 92-96: அழற்பெய்...... பறந்தலை (இதன் பொருள்) அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் புழல் என்னும் தின்பண்டத்தைப் பெய்து கொணரும் மட்பாண்டமும்; வெள்ளில் பாடையும்- வெள்ளிலாகிய பாடையும்; உள்ளீட்டு அறுவையும்- பிணத்தை அகத்தே இட்டு மூடிக்கொணர்ந்த கோடிச் சீலையும்; பரிந்த மாலையும்- பாடை பிணம் இவற்றிற் கணியப்பட்டு அறுத்தெறியப்பட்ட மலர் மாலைகளும்; உடைந்த கும்பமும்-உடைக்கப்பட்ட குடங்களின் ஓடுகளும்; நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்-சிதறிய நெல்லும் பொரிகளும் ஆவிக்குப் பலிப் பொருளாகப் பிணத்தின் வாயிலிடும் சில அரிசிகளும்; யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை-எவ்விடத்தும் பரந்து கிடக்கின்ற உயர்ந்த பெரிய அப் பாழிடமாகிய சுடு காடுதானும்; என்க. (விளக்கம்) அழல்- பிணஞ்சுடக் கொணரும் நெருப்பு. குழிசி- பானை. வெள்ளில்-பாடை; வெள்ளிலாகிய பாடை என்க. பிணமாகிய உள்ளீட்டை உடைய அறுவை என்க. பாடையின் உள்ளே விரித்த அறுவையுமாம். அறுவை-துகில். நெல்சிந்தும் வழக்கமும் பலி அரிசியிடுதலும் இக்காலத்தும் உண்டு. ஆவிக்குப் பலியாகப் பிணத்திலிடும் அரிசையைச் சில்பலியரிசி என்றார். என்னை? ஒரு பிடியளவாகச் சிலரே இடுதலின் சிலவாகிய பலியரிசி என்றார். இக்காலத்தே வாய்க்கரிசி என்பது மது. இனி ஈண்டுக் கூறப்படும் இவ் வருணனைகளோடு ஆங்கமாநக ரணைந்தது பலாலைய மென்னும் பேங்கொள் பேரதவ் வூரது பிணம்படு பெருங்காடு ஏங்கு கம்பலை யிரவினும் பகலினு மிகலி யோங்கு நீர்வையத் தோசையிற் போயதொன் றுளதே எனவும், விண்டு நீண்டன வேய்களும் வாகையும் விரவி இண்டு மீங்கையு மிருள்பட மிடைந்தவற் றிடையே குண்டு கண்ணின பேய்களும் கூகையும் குழறிக் கண்ட மாந்தர்தம் மனங்களைக் கலமலக் குறுக்கும் எனவும் ஈமத் தூமமு மெரியினு மிருளொடு விளக்கா வூமைக் கூகையு மோரியு முறழுறழ் கதிக்கும் யாமத் தீண்டிவந் தாண்டலை மாண்பில வழைக்கும் தீமைக் கேயிட னாயதோர் செம்மலை யுடைத்தே எனவும், வெள்ளின் மாலையும் விரிந்தவெண் டலைகளுங் கரிந்த கொள்ளி மாலையுங் கொடிபடு கூறையு மகலும் பள்ளி மாறிய பாடையு மெல்லும்புமே பரந்து கள்ளி யாரிடைக் கலந்ததோர் தோற்றமுங் கடிதே எனவும், காக்கை யார்ப்பன கழுதுதங் கிளையொடு கதறித் தூக்க ளீர்ப்பன தொடர்ந்தபல் பிணங்களுந் தூங்கச் சேக்கை கொள்வன செஞ்செவி யெருவையு மருவி யாக்கை கொண்டவர்க் கணைதலுக் கரிதது பெரிதும் எனவும், கோளி யாலமும் கோழரை மரங்களுங் குழுமித் தூளி யார்த்தெழு சுடலையும் உடலமுந் துவன்றி மீளி யாக்கைய தாக்கியுண் பேய்க்கண மிகைசூழ் கூளி தாய்க்கென வாக்கிய கோட்டமொன் றுளதே எனவும் வரும், நீலகேசிச் செய்யுள்கள் ஒப்பு நோக்கற்பாலன. (தருமவுரை: 27,28,29,30,31,32.) மணிமேகலா தெய்வம் மக்களின் அறியாமைக் கிரங்குதல் 97-104: தவத்துறை....... உண்டோ (இதன் பொருள்) (நங்கையீர்! ஈதொன்று கேண்மின்!;) தவத்துறை மாக்கள் மிகப் பெருஞ்செல்வர் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோர் என்னான் இளையோர் என்னான்-இவர் உயர்ந்த தவநெறியிலே ஒழுகுகின்ற பெரியோர் இவர் மிகப் பெரிய செல்வமுடையோர் இவர் அணிமைக் காலத்தே மகவீன்ற இளம் பருவமுடைய மகளிர், இவர் துன்பம் பொறுக்கமாட்டாத இளங்குழவிகள், இவர் ஆண்டான் முதிர்ந்த சான்றோர், இவர் ஆண்டிளைய காளையர் என்று சிறிதும் எண்ணிப் பார்த்து இரங்காதவனாய்; கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப-கொடிய கொலை செய்யுந் தொழிலையே மேற் கொண்டிருக்கின்ற கூற்றுவன் நாள்தோறும் மன்னுயிர்களைக் கொன்று குவியாநிற்ப; இவ்வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்- இந்த நெருப்பையே வாயாகக் கொண்ட ஈமப்புறங்காடு கொன்று போகட்ட உடல்களைத் தின்று தீர்ப்பதனைக் கண்கூடாகக் கண்டு வைத்தும்; கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டயர்ந்து- மிகப் பெரிய செல்வமாகிய கள்ளை யுண்டு களித்து விளையாடி; மிக்க நல் அறம் விரும்பாது வாழும்- மிகச் சிறந்த நல்ல அறங்களைச் செய்தற்கு விரும்பாமல் உயிர் வாழுகின்ற; மக்களில் சிறந்த மடவோர் உண்டோ- மாந்தரினுங் காட்டில் பெரிய மடமையுடையோர் பிறர் உளரோ? கூறுமின்! என்றாள் என்க. (விளக்கம்) துறவின்கட்புகுதற் கியன்ற ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ள மணிமேகலைக்கும் அந்நெறிக்கட் பயிலும் சுதமதிக்கும் ஒரு சேர யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை இளமை நிலையாமை என்னும் மூவகை நிலையாமைகளும் உள்ளத்தின்கண் நன்கு பதியுமாறு முதன் முதலாக மணிமேகலா தெய்வம் சக்கரவாளக் கோட்ட வரலாறு கூறுதலைத் தலைக்கீடாகக் கொண்டு கேட்போர்க்கு அவ் வுணர்ச்சி தலைதூக்குமாறு தனது தெய்வ மொழியாலே செவியறிவுறுத்துகின்றது என்பதனை இதனைப் பயில்வோர் நன்குணர்ந்து கொள்ளுதல் வேண்டும். ஈண்டு யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை ஆகிய மூன்று நிலையாமை போதரத் துறவோர் இறந்து படுதலையும் மிகப் பெருஞ்செல்வர் இறந்து படுதலையும் இளம் பெண்டிர் இறந்துபடுதலையும் பாலகர் இறந்துபடுதலையும் நிரல்பட வோதுதல் உணர்க. ஈங்குக் கூறப்படுவோருள் துறவோரிறந்து பாடுறுதல், தவத்தாலும் யாக்கையை அழியாதபடி செய்தல் சாலாது என்பதுணர்த்தற் பொருட்டாம். இனிச் செல்வ நிலையாமையும் இரு வகைப்படும். அவையாவன செல்வத்தை யீட்டிய செல்வர் இறத்தலும் அவருளராகச் செல்வமே அவரைக் கைவிட்டழிந்து போதலுமாம். சிறப்பு நோக்கிச் செல்வம் நிற்கச் செல்வரே இறந்துபடுதல் கூறியவாறு. இளமை நிலையாமை தோன்ற இளம் பெண்டிர் எனப்பட்டது. இன்பம் நுகர்தற்கியன்ற பருவம் வந்துறு முன்னரும் யாக்கை அழிதலுண்மையின் ஆற்றாப் பாலகர் அழிவையும் உடன் கூறிற்று. ஈற்றிளம் பெண்டிர் என்றமையால் பீட்பிதுக்கியும் கூற்றம் கொல்லுதலும் போந்தமை யுணர்க. மெய்யுணர்வார்க்கு நிலையாமையுணர்ச்சி இன்றியமையாமையை முன்னும் கூறினாம். கொடுந் தொழிலாளன்- கூற்றுவன். கொன்றனன்- கொன்று. அழலாகிய வாய். சுடலை-சுடுகாடு. கண்டும் என்றது காட்சியளவையால் கண்கூடாகத் தாமே ஐயந்திரிபறக் கண்டு வைத்தும் என்பதுபட நின்றது. செல்வம் செருக்கைத் தோற்றுவித்தலின் கள்ளாகக் குறிப்புவமம் செய்யப்பட்டது. அறம் ஒன்றே செல்வத்துப் பயனாகவும் பிறந்தோர்க்கு ஆக்கமாகவும், பொன்றுங்காற் பொன்றாத் துணையாகவும் மீண்டும் பிறப்புற்று வாழ்நாள் வழியிடைக்கும் கல்லாகவும் அமையும் மாபெருஞ் சிறப்புடையது என்பது தோன்ற மிக்க நல்லறம் என்றும் அத்தகைய பேற்றினை அறியத்தகும் பிறப்பு மக்கட் பிறப்பே என்பது தோன்றவும் மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ? என்றும் ஓதியவாறாம். ஓகாரம் வினா. அதன் எதிர்மறையாகிய இல்லை என்னும் பொருளை வற்புறுத்தி நின்றது. இனி, மணிமேகலை நெஞ்சம் காமத்தால் நெகிழ்ந்து புதுவோன் பின்றைப் போயதனை அங்ஙனம் போகாமைப் பொருட்டுத் தானிற்கின்ற துறவறத்தை உறுதியாகக் கடைப்பிடித்திடுக என்று ஈண்டு வற்புறுத்துவதே அத் தெய்வத்தின் கருத்தாகலின் ஈண்டு அறம் என்பது துறவின் மேனின்றது அது தோன்றவே அறம் என வாளாது கூறாமல் மிக்க அறம் என்று அத்தெய்வம் விதந்து கூறிற்று. யாக்கையின் இழிதகைமை 105-115: ஆங்கது....ஓதையும் (இதன் பொருள்) ஆங்கு அது தன்னை-அவ்வாறிருக்கின்ற அச் சக்கரவாளக் கோட்டத்தை; ஓர் அருங்கடி நகர் என-ஓர் அரிய காவலமைந்த நகரம் என்று கருதி அதனூடே புகுந்து; தனிவழிச் சென்றோன் சார்ங்கலன் என்போன்-இரவிலே தமியனாய்ச் சென்றவனாகிய சார்ங்கலன் என்னும் ஒரு பார்ப்பனச் சிறுவன் அவ்விடத்தே; யாக்கை என்புந் தடியும் உதிரமும் என்று அன்பு உறும் மாக்கட்கு அறியச் சாற்றி- மாக்களே உடம்பென்று நும்மால் பேணப்படும் பொருள் வறிய எழும்பும் தசையும் குருதியுமாகிய அருவருக்கத் தகுந்த இவ்விழிதகைப் பொருள்களின் கூட்டமேயன்றிப் பிறிதொரு பெருந்தகைமையும் உடையதன்று காண்! என்று அதன்பால் பெரிதும் அன்பு கொள்ளுகின்ற அறிவிலிகளுக்குத் தன்னையே சான்றாக்கி நன்கு அறிவுறும்படி; வழுவொடு கிடந்த புழுவூண் பிண்டத்து- நிணத்தோடு கிடந்த புழுக்கள் நெளிகின்ற அழுகிய ஊனோடு கூடிய பிணத்தினது; அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க்கொண்டு உலப்பில் இன்பமொடு உளைக்கும் ஓதையும்- பண்டு செம்பஞ்சுக் குழம்பூட்டி அழகு செய்யப்பட்டிருந்த அடிகளை நரிகள் தம் வாயாற் கொண்டு அழியாத இன்பதோடு ஊளையிடாநின்ற ஒலியையும்; கழுகு கலைப்புற அல்குல் குடைந்து உண்டு நிலத்திலை நெடுவிளி எடுக்கும் ஓதையும்- கழுகு மேகலையென்னும் அணிகலனாலே பண்டு புறத்தே அழகு செய்யப்பட்ட அல்குலை அலகினாலே குடைந்து குடைந்து வயிறு நிரம்பத் தின்றமையாலே பெரிதும் மகிழ்ந்து நிலத்தின்மேனின்று நீளிதாகக் கூவுகின்ற ஒலியும்; கடகம் செறிந்த கையைத் தீ நாய் உடையக் கல்வி ஒடுங்கா ஓதையும்- பண்டு கங்கணம் செறிந்து கிடந்த கையைச் சுடுகாட்டு நாய் என்புமுறிய வாயாற் கவ்வித் தின்று ஒழியாமல் குரைக்கின்ற ஒலியும்; என்க. (விளக்கம்) ஈண்டுக் கூறப்படும் பிணம் பெண்பிணம் என்பது கூறாமலே விளங்கும். கேட்போர் மகளிராதலின் தம்முடம்பிலேயே அருவருப்புத் தோன்றுதற் பொருட்டு அத் தெய்வம் பெண்ணுடம்பையே விதந்தெடுத்துக் கூறியபடியாம். பின்னும் இவ் விளக்கம் கொள்க. தடி- தசை. வழு-உடம்பிலுள்ள நிணம். அலத்தகம்- செம்பஞ்சுக் குழம்பு. உளைக்கும்- ஊளையிடும். நிலைத்தலை என்ற பாடத்திற்கு நிமிர்த்திய தலை என்க. கலை-மேகலை. கடகம்-கங்கணம். தீநாய்-சுடு காட்டிலேயே வாழும் நாய். இதனை ஒரு சாதி நாய் என்பாருமுளர். என்புடையக் கவ்வி என்க. இனி இப் பகுதியோடு குடருங் கொழுவுங் குருதியு மென்பும் தொடரும் நரம்பொடு தோலும்-இடையிடையே வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள் எத்திறத்தா ளீர்ங்கோதை யாள் (46) எனவரும் நாலடி வெண்பா ஒப்புநோக்கற்பாலது. இதுவுமது 116-127: சாந்தம்....எய்தி (இதன் பொருள்) சாந்தம் தோய்ந்த ஏந்து இளமுலை காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்- சந்தனம் நீவப்பெற்ற அணந்த இளமுலையின் ஊனை மிகவும் வருந்திய பசியோடு வந்த பெருங்கழுகு அலகினாலே கவர்ந்து தின்று மகிழ்ந்து கூவும் ஒலியும்; பண்பு கொள் யாக்கையின் வெள்பலி யரங்கத்து-பல்வேறு பண்புகளைக் கொண்டுடிருந்த மக்கள் உடம்பைச் சுட்டமையாலேயுண்டான வெண்ணிறமான் சாம்பற் குவியலாலியன்ற மேடை மேலே: ஓர் பேய் மகள் ஆங்கு ஓர் கருந்தலை வாங்கி-ஒரு பெண் பேயானது ஆங்குக் கூந்தலாலே கறுப்பாகக் கிடந்த தலையைத் திருகித் தன்; கையகத்து- கையிடத்திலே; மண்கணை முழவம் ஆக ஏந்தி- மண் பூசப்பெற்ற தண்ணுமையாக ஏந்திக் கொண்டு; இரும்பேர் உவகையின் எழுந்து- மிகவும் பெரிய மகிழ்ச்சியோடு எழுந்து நின்று அத் தலையின்கண் அமைந்த உறுப்புக்களைத் தனித்தனி நோக்கிக் காமுகர்; புயலோ குழலோ கயலோ கண்ணோ குமிழோ மூக்கோ இதழோ கவிரோ பல்லோ முத்தோ என்னாது இரங்காது-இது முகிலோ அல்லது கூந்தல் தானோ? இவை கயல் மீனகளோ அல்லது கண்கள் தாமோ? இது குமிழ் மலரோ அல்லது மூக்குத்தானோ? இவை அதரங்களோ அல்லது முருக்கமலரிதழ்களேயோ? இவை பற்களோ அல்லது முத்துக் கோவையோ? என்று அவற்றைச் சிறிதும் பாராட்டாமலும் அவற்றின் பால் இரக்கங் கொள்ளாமலும்; கண்தொட்டு உண்டு அத் தலையிலமைந்த கண்களை அகழ்ந்தெடுத்துத் தின்றவாறே; கவை அடிபெயர்த்து- தனது கவைத்த விரல்களையுடைய அடிகளைப் பெயர்த்து; தண்டாக் களிப்பின் ஆடும்- தணியாத மகிழ்ச்சியோடே ஆடா நின்ற கூத்தினை; கண்டனன் வெரீஇ கடுநவை எய்தி அச்சத்தாலே பெருந் துன்பமெய்தி என்க. (விளக்கம்) சார்ங்கலன் என்போன், ஓதைபல கேட்டுச் சென்றவன் பேய்மகள் ஆடும் கூத்துக்கண்டு நவை எய்தி என்க. கடுநவை எய்தி என்பதற்குப் பேயாற் பிடிக்கப்பட்டு என்று கூறுவாருமுளர். அவ்வுரை போலி என்னை? அணங்கும் பேயும் பிடிப்பதுமில்லை உயிருண்பதுமில்லை என்று சாதிப்பதே இந்நூலாசிரியரின் மேற்கோளாதலின் பேயாற் பிடியுண்டதாகவும் பேய் உயிருண்டதாகவும் கருதுவதற்குக் காரணம், பேதமையேயன்றி அந் நிகழ்ச்சியெல்லாம் ஊழ்வினையின் நிகழ்ச்சிகளே என்று காட்டுவதற்கே நூலாசிரியர் இச் சார்ங்கலன் கதையே ஈண்டுப் படைத்துள்ளார் ஆதலின் என்க. எருவை-கழுகில் ஒருவகை. பண்புகொள் யாக்கை என்றது இகழ்ச்சி எனினுமாம். வெண்பலி யரங்கம் என்றது சாம்பலாலியன்ற மேட்டினை. மண்பூசப் பெற்ற திரண்ட முழவம் என்க. உவகை- சிறந்த ஊண் கிடைத்தமை பற்றி யுண்டாயது. காமுகர் கூந்தல் முதலியவற்றைப் புயல் முதலியனவாகக் குறிப்புவமஞ் செய்து பாராட்டுதலை நலம் பாராட்டுதல் என்ப. இப் பேய் அங்ஙனம் பாராட்டிற்றில்லை: பரிவு கொள்ளவுமில்லை என்பாள் புயலோ.... என்னாது இரங்காது என்றாள். தொட்டு- அகழ்ந்து. தண்டா- தணியாத. சார்ங்கலன் செயல் 128-131: விண்டோர்.....வைத்தலும் (இதன் பொருள்) விண்டு ஓர்திசையின் விளித்தனன் பெயர்ந்து-அவ்விடத்தினின்றும் நீங்கி மெய்மறந்து தான்சென்ற திசையை நோக்கி அம்மையே என்று கூவியவனாய் விரைந்து தன்னில் முன்றிலை எய்தி ஆங்கெதிர்வந்த அன்னையை நோக்கி. எம்மனை ஈங்கு காணாய் ஈமச் சுடலையின்- என் அன்னையே ஈங்கு என்னை நோக்குதி ஈமம் எரிகின்ற சுடுகாட்டின்கண்; வெம் முதுபேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என- வெவ்விய முதுமையுடைய தொரு பேய்க்கு யான் என் உயிரைக் கொடுத்தொழிந்தேன்! என்று பிதற்றிய வண்ணம்; தம்மனை தன்முன் வீழ்ந்து மெய்வைத்தலும்- தன் தாயின் முன்னிலையிலேயே வீழ்ந்து உயிர்நீத்தலும்; என்க. (விளக்கம்) விண்டு- நீங்கி. ஓர் திசை என்றது தான் சென்று கொண்டிருந்த அத் திசையில் என்றவாறு. விளத்தனன் என்றது அம்மையே! என்று தன் அன்னையே அழைத்து அலறியவனாய் என்றவாறு. பெயர்ந்து- ஓடி. எம்மனை- எம்மன்னை; மரூஉவழக்கு தம்மனை என்பதும் அது: வெம்முது பேய்க்கு என்னுயிர் கொடுத்தேன் என்றது இவ்வாறு சொல்லிப் பிதற்றி என்றவாறு. மெய்வைத்தலும் என்றது வீழ்ந்து இறத்தலும் என்றவாறு. சார்ங்கலன் தாய் கோதமை செயல் 132-138: பார்ப்பான் ....பதியென (இதன் பொருள்) பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத் தீத்தொழிலாட்டி- தன் கணவனாகிய பார்ப்பனனோடு தானும் கண்ணிழந்திருந்த இந்தப் பார்ப்பனிதானும் காவற்றெய்வமாகிய சம்பாபதியை உள்ளத்தால் நோக்கி; சம்பாபதி- சம்பாபதி யென்னுந் தெய்வமே! கேள்!; என் சிறுவனை- அளியேனாகிய என் ஒரு மகனாகிய இச் சிறுவனை; யாருமில் தமியேன் என்பது நோக்காது- களைகணாவார் யாரும் இல்லாதேன் என்பதனை எண்ணியிரங்காமல்; ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ- அரிய உயிரையுண்டது தெய்வமேயோ அல்லது அவன் கூறியவாறு முதுபேய்தானோ? அறிகிலேன்; துறையும் மன்றமும் தொல்வலிமரனும் உறையுளும் கோட்டமும் காப்பாய்- நீர்த்துறைகளிடத்தும் மன்றங்களிடத்தும் பழைமையான வலிமையுடைய மரங்களிடத்தும் மக்கள் வதியும் பிறவிடங்களினும் கோயில்களிடத்தும் மக்களுக்குத் தெய்வத்தானால் பேய்களினானாதல் தீங்கொன்றும் நிகழாவண்ணம் காக்கும் பேரருள் உடையாய்; காவாய்- எளியேமாகிய எம்மைக் காவாது கைவிட்டனை; தகவு இலை கொல்லோ- எம்மாட்டு அத்தகைய அருள் உடையாய் அல்லையோ! என்று அரற்றி; என்க. (விளக்கம்) பார்ப்பான் என்றது- பார்ப்பனனாகிய என் கணவன் என்பதுபட நின்றது. பார்ப்பானொடு கண்ணிழந்திருந்த தீத் தொழிலாட்டி என்றமையால் தானும் கண்ணிழந்தமை குறித்தாள். இவ்வாற்றால் தீத் தொழிலாட்டி என்றது தீவினையாட்டி என்னும் பொருளுடைய தெனினுமாம். சிறுவன் என்றாள் அவனும் இரங்கற் குரியான் என்பது தோற்றுவித்தற்கு. யாருமில் தமியேன் என்பதுமது. அணங்கு- தீண்டி வருத்தும் தெய்வம். துறை- நீராடுதுறை. துறை முதலியன அணங்கானும் பேயானும் தீங்குறுத்தப் படுமிடம். தகவு என்றது மன்னுயிர்புரக்கும் பேரருளுடைமையை. எல்லார்க்கும் அருள் செய்யும் அருளுடையாய்க்கு எம்பால் அஃதொழிந்ததோ என்றரற்றியபடியாம். இனி, இக் காதையில் சக்கரவாளக் கோட்டத்தின் வரலாறு கூறுதல் தலைக்கீடாக 34. இந் நாமறப் பேரூர் தோன்றிய ஈமப்புறங்காடு என்பது தொடங்கி 131. வீழ்ந்து மெய் வைத்தலும் என்பதீறாக, பிறப்பாகிய துன்பம் எய்துதற்குக் காரணமான, காம வெகுளி மயக்கங்கள் என்னும் முக்குற்றமும் விளைதற்குக் காரணமான பிறப்பினை உண்டாக்கும் பற்றினை அறுத்தற்கு இன்றியமையாத ஐவகைப் பாவனை யுள்ளும் தலைசிறந்த (துன்பியல்) அசுப பாவனை மணிமேகலைக்குக் கைவருதற் பொருட்டு இவ்வுடம்பு, அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என்னும் நான்கு மெய்யுணர்ச்சிகளையும் மிகவும் நுண்ணிதாகச் செவியறிவுறுத்திய அருமையை உணர்க. இவ்வுண்மை அறியப்படாவிடின் இதனைப் பயில்வோர் இக் காதையின் சிறப்பைச் சிறிதும் உணராராவர் என்க. மேலே கூறப்பட்ட ஐவகைப் பாவனைகளும் 30. பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதையில் நன்கு விளக்கப்படும். கோதமை சம்பாபதியிடம் முறையிடுதல் 139-149: மகன்மெய்....காணென (இதன் பொருள்) கோதமை என்பாள் மகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇ-இவ்வாறு அரற்றிய கோதமை என்னும் அப் பார்ப்பினி செய்தமை கேண்மின்! அவள்தான் தன் மகனுடைய உயிரற்ற மெய்யாகிய அவ்வுடம்பினைத் தன் கைகளாலே எடுத்துத் தன்மார்புபோடு நன்கு பொருந்துமாறு தழுவிச் சுமந்து கொடுபோய்; ஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலின் கொடுந்துயர் சாற்ற- அச்சுடுகாட்டுக் கோட்டத்தின் மதிலினது வாயிற்புறத்திலே கிடத்திநின்று சம்பாபதியை மனத்தானினைந்து வாயால் அழைத்துத் தானெய்திய கொடிய அத் துன்பத்தைக் கூறி முறை வேண்டாநிற்ப; பொன்னின் பொலிந்த நிறத்தாள்- பொன் போன்ற நிறமுடையவளாகச் சம்பாபதி என்னும் அத் தெய்வந்தானும் அவளுடைய அகக்கண் முன்னர் வந்து; கடி வழங்கு வாயிலின் கடுந்துயர் எய்தி இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை என் உற்றனையோ எனக்கு உரை என்று தோன்ற-நங்காய்! பேய்கள் திரிகின்ற இவ் வாயிலிடத்தே கொடிய துன்பமெய்தி நள்ளிரவில் இவ்விருள்மிக்க யாமத்திலே என்னை இங்கு வருமாறு அழைக்கும் நீ தான் எத்தகைய இன்னல் எய்தினையோ அதனை எனக்கு இயம்புக என்று பரிவுரை கூறத் தோன்றாநிற்ப ஆரும் இல்லாட்டி என் அறியாப் பாலகன் ஈமப்புறங் காட்டு எய்தினோன் தன்னை-பாதுகாவல் செய்தற்குரியார் யாருமில்லாத அளியேனாகிய என் ஒருமகனாகிய விரகறியாத சிறுவன் நீயே எழுந்தருளியிருக்கின்ற இச் சுடுகாட்டின்கண் வந்தடனை ஆருயிர் உண்டது அணங்கோ பேயோ-அரிய உயிரைக் குடித்ததுநின் ஆட்சியிலடங்கிய அணங்கேயோ பேயோயான் அறிகின்றிலேன்; உறங்குவான் போலக் கிடந்தனன்காண் என-உதோ துயில்பவனைப் போன்று கிடக்கின்றனன் நீயே கண்டருளுதி என்று கூற; என்க. (விளக்கம்) மெய்யாகிய யாக்கை: இரு பெயரொட்டு. கொடுந்துயர்- மகனை இழந்த பொறுக்கொணாத் துன்பம். சாற்ற- கூறிமுறை வேண்ட என்க. புறக்கண் குருடாகலின் அகக்கண் முன்னே உருவத்தோடு தோன்ற என்க. என்னுற்றனையோ எனக்குரை என்றது பரிவுரை. பொன்னிற் பொலிந்த நிறத்தாள் தோன்ற என்றமையால் அத் தெய்வம் அவள் அகக் கண்ணால் காண்டற்கியன்ற அருளுருவம் கொண்டு தோன்ற என்க. இக் காட்சி கனாக்காட்சி போல்வதாம் என்றுணர்க. கணவனும் கண்ணிலன் யானும் கண்ணிலேன் எம்மைத் தாங்குங்கேளிரும் இலேன் எமக்குதவியாயிருந்த இச் சிறுவனைக் கொன்றது உன் அருளாட்சிக்கண் நிகழத் தகாததொரு கொடுமை; இங்ஙனம் நிகழவும் நீ வாளா திருந்தது என்னையோ? என்று முறையிட்ட படியாம். சம்பாபதி மறுமொழிழும் கோதமை வேண்டுகோளும் 150-153: அணங்கும்.... என்றலும் (இதன் பொருள்) அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா-அது கேட்ட அத் தெய்வம் அவள் வினாவிற்கு மறுமொழியாக, பார்ப்பனியே ஈதொன்றுகேள்! நீ நினைக்கின்றபடி அணங்காதல் பேயாதல் அரிய உயிரை உண்ண மாட்டா; பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது- முறுக்குண்ட பூணூலணிந்த இச் சிறுவனுடைய பேதமையையே பற்றுக்கோடாகக் கொண்டு இவன் முற்பிறப்பிலே செய்த தீவினையாகிய இவனது ஊழே இவன் உயிரைக் கவர்ந்து கொண்டு போயிற்றுக்காண்! இஃதியற்கை என்றுணர்ந்து கொள்வாயாக!; மாபெருந்துன்பம் நீ ஒழிவாய் என்றலும்- நின் பேதமை காரணமாக நீ எய்துகின்ற இம் மாபெருந்துன்பத்தைக் களைந்து அமைதிகொள்வாயாக என்று தேற்றுரை கூறாநிற்ப என்க. (விளக்கம்) அணங்கு-பிறவுயிரைத் தீண்டி வருத்தும் தெய்வம். உயிர் அணங்கு முதலியவற்றால் உண்ணப்படும் உணவுப் பொருளன்று ஆதலால் அதனை அவை உண்ணும் என்று கருதுவதே அறியாமை என்று விளக்கியபடியாம். இனி தீதும் நின்றும் பிறர்தர வாரா அவை முன்பு செய்த பழவினைப் பயனாகத் தாமே வருவன. உன் மகன் இறந்தமைக்கும் அவன் பழவினையே காரணம் என்றுணர்ந்து துன்பந்தவிர் என்று ஆறுதல் கூறியபடியாம். இதுவுமது 154-163: என்னுயிர்...மடவாய் (இதன் பொருள்) என் உயிர் கொண்டு இவனுயிர் தந்து அருளின் இவன்கண் இல் என் கணவனைக் காத்து ஓம்பிடும்-அதுகேட்ட அவ்வன்புமிக்க தாயாகிய கோதமை அத் தெய்வத்தை நோக்கி எல்லாம்வல்ல தெய்வம் நீ அதலாலே இவன் ஊழ்வினை வேண்டுவது ஓர் உயிரேயாகலின் என்னுயிரைக் கைக்கொண்டு இச்சிறுவன் உயிரைமீட்டுத் தந்தருள்வாயாயின் அளியேனுடைய கண்ணில்லாத கணவனை இச்சிறுவன் பேணிக்காப்பாற்றுவனாகலின்; இவன் உயிர்தந்து என் உயிர்வாங்கு என்றலும்-இச்சிறுவன் உயிரை மீட்டுத்தந்து அதற்கீடாகக் கண்ணற்றவளாகிய என் உயிரைக் கவர்ந்து கொண்டருள்க! என்று வேண்டாநிற்ப; முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள்-அவ் வேண்டுகோள் கேட்ட அம் மிகப் பழைய தெய்வமாகிய சம்பாபதிதானும் அவள் பொருட்டுப் பெரிதும் பரிவு கொண்டு அவட்குக் கூறுபவள்; மடவாய்- மடப்பமிக்க பார்ப்பன மகளே கேள்!; ஆருயிர் போனால் செய்வினை மருங்கின் சென்று பிறப்பெய்துதல் ஐயம் உண்டோ- ஓருடலின்கண்ணிருந்து- வாழும் உயிர் இறந்துபோனக்கால் அவ்வுயிர் மீண்டும் அப் பழவினைசார்பாகவே போய் மற்றுமொரு பிறப்பின் எய்தும் என்னும் திறவோர் காட்சியில் உனக்கு ஐயமும் உண்டேயோ? ஐயுறாதே கொள், அஃது அங்ஙனமே சென்று மீண்டும் பிறப்பெய்தா நிற்கும் என்பது தேற்றமேகாண்; ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல்- அவ்வாறாகிய நின்மகன் உயிரை மீட்டுக்கொணர்ந்து இறந்துபட்ட இவ் வுடம் பிலே புகுத்தி நீ எய்திய ஆற்றுதற்கரிய துன்பத்தைக் களைதல்; ஈங்கு எனக்கும் ஆவது ஒன்று அன்று- ஈங்குக் காவற்றெய்வ மாயிருக்கின்ற எனக்கும் ஆற்றலாகும் ஓர் எளிய செயல் அன்று காண்!; நீ இரங்கல்- நீ இங்ஙனம் வருந்தாதே கொள்; ஆங்கது- நீ கூறுவது; கொலை அறம் ஆம் எனும்-ஓர் உயிரின துயர்களைதற்குப் பிறிதோர் உயிரைக் கொலை செய்தலும் அறம் ஆகும் என்று கூறுகின்ற; கொடுந்தொழில் மாக்கள் அவலப் படிற்று உரை- கொலைத்தொழில் செய்கின்ற மடவோர் கூறுகின்ற துன்பத்திற்குக் காரணமான வஞ்சகமொழியே காண்!; என்க. (விளக்கம்) மன்பதையின் துயர்தீர்த்தற் பொருட்டு வேள்விக் களத்திலே உயிர்ப்பலி செய்கின்றவர் கொள்கையே ஓருயிர்க்கு ஈடாக மற்றோர் உயிரைப் பலி யிடுவதும் அறமாம் என்பது. அது தீவினையேயன்றி அறமாகாது அதனால் விளைவது மீண்டும் துன்பமேயன்றிப் பிறிதில்லை; ஊன் உண்ணுதற்கு விரும்பும் தீயோர் கூறும் வஞ்சக மொழியே அஃது; அதனைக் கைவிடுக என்று தேற்றியபடியாம். இங்ஙனம் கூறுவோர் இயல்பும் அவர்வினை இயல்பும் அவர் மொழியியல்பும் ஒருசேரத் தெரித்தோதுகின்ற அத் தெய்வம் கொலை அறம் ஆம் எனும் கொடுந்தொழின் மாக்கள் அவலப் படிற்றுரை ஆங்காது எனச் சொற்றிறம் தேர்ந்து கூறுதலறிக. ஈங்கு எனக்கும் ஆவது ஒன்றன்று எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. போன நின்மகன் உயிரும் புதுப்பிறப்பெய்தி வாழும். ஆதலால் நீ இரங்கல் என்று தேற்றியபடியாம். இரங்கல்- இரங்காதேகொள். அவலம்-துன்பம்; படிறு-வஞ்சம். ஆங்கது ஓருயிர்க்கு ஈடாக மற்றோருயிரைக் கொடுத்து மீட்கலாம் என்னும் நின்கோட்பாடு. இதுவுமது 163-167: உலக.... என்றலும் (இதன் பொருள்) ஆங்காது மடவாய் அவ்வுண்மை கேட்பாயாக! உலக மன்னர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் இலரோ-அன்புடையோய்! இந்நிலவுலகத்தை ஆளும் திருவுடைய மன்னர்கள் இறந்தபொழுது அவர் உயிர்க்கு ஈடாக உயிர் வழங்குவோர் இப் பேருலகில் இலர் என்றோ நினைதி!; எண்ணிறந்தோர் உயிர்வழங்க முன்வருபவர் உளர்காண்; இந்த ஈமப் புறங்காட்டு அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்- பார்ப்பன மகளே! இந்தச் சுடுகாட்டுக் கோட்டத்தினுள்ளேயே இறந்த அரசரைப் புதைத்து அதன்மேல் நினைவுக்குறியாக எடுக்கப்பட்ட கோயில்கள் ஆயிரத்திற்கு மேலும் இருக்கின்றனகாண்!; நிரயக் கொடு மொழி நீ ஒழி என்றலும்-ஆதலாலே, உயிர்க்குயிர் ஈவேன் என்னும் நிராயத்துன்பந்தரும் இம் மொழியைக் கூறாது விடுக என்று; கூறியருளுதலும் என்க. (விளக்கம்) உலக மன்னவர் என்றது சோழ மன்னர்களை. இலரோ என்புழி ஓகாரம் எதிர்மறை. பலர் உயிரீவோர் உளராவர் என அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்து நின்றது. ஆயிரங் கோட்டம் என்றது மிகுதிக்கு ஓரெண் காட்டியவாறு. நிரயக் கொடுமொழி என்றது. இவனுயிர்க்கு என்னுயிர் கொள் என்றதனை. கோதமை கூற்று 168-171: தேவர்......ஈங்கென (இதன் பொருள்) தேவர் வரம் தருவர் என்று நால்மறை அந்தணர் நல்நூல் ஒரு முறை உரைக்கும்- தெய்வமே கேட்டருள் துன்புழந்து வருந்தினோர் வழிபாடு செய்து வேண்டினால் தெய்வங்கள் அத் துயர் தீர்க்கும் வரத்தை வழங்குவர் என்று நான்கு மறைகளாகிய அந்தணருடைய மெய்ந்நூல்கள் அவர்க்கு உய்திபெறும் ஒரு முறைமையினைக் கூறாநிற்கும்; மாபெருந் தெய்வம் நீ அருளாவிடின்-அத் தெய்வங்களுள்ளும் மிகப் பெரிய தெய்வமாகிய நீயே யான் கேட்ட இவ்வரத்தை வழங்கி அருளாதொழியின்; யான் ஈங்கு என் உயிர் காவேன் என-அளியேன் இவ்வுலகத்துப் பின்னும் வாழ்வுகந்து என் உயிரைப் பேணுவேனல்லேன் காண்! என்றாள் என்க. (விளக்கம்) ஒரு முறை-துன்புற்றோர்க்குய்தி பயக்கும் ஒரு வழி நான்மறையாகிய நன்னூல் அந்தணர் நன்னூல் எனத் தனித்தனி இயையும். தெய்வங்களுள் வைத்துத் தலைசிறந்த தெய்வமாகிய நீயே என்பாள், மாபெருந் தெய்வம் நீ என்றாள், பிரிநிலை ஏகாரஞ் செய்யுள் விகாரத்தால் தொக்கது. சம்பாபதியின் மறுமொழி 172-185: ஊழிமுத....இதுவென (இதன் பொருள்) ஊழி முதல்வன் உயிர்தரின் அல்லது -ஊழி முடிவின் மீண்டும் உலகியற்றும் பெருங்கடவுளாகிய பிரமன் இறந்தொழிந்த உயிரைப் படைத்துத் தந்தால்(தருதல் கூடும் அவன்) அல்லது; ஆழித்தாழி அகவரைத் திரிவோர் தாம்தரின் யானும் தருகுவன்-சக்கரவாளமாகிய தாழியினூடே என்னைப் போன்று திரிகின்ற தேவர்கள் தாம் நீ வேண்டுமாறு நின் மகன் உயிரை மீட்டுத் தருவார் உளராயின் யானும் நின்மகன் உயிரை மீட்டுத் தருகுவேன் காண்!. மடவாய்- மடப்ப மிக்க பார்ப்பன மகளே நீயே; ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்று இப்பொழுதே என்னுடைய ஆற்றலையும் காணக்கடவாய் என்று கூறி; நால்வகை மரபின் அரூபப் பிரமரும் நால் நால் வகையின் உரூபப் பிரமரும்-நரல்வேறு முறைமையினையுடைய அரூபப் பிரமர்களும், பதினாறு வகைப்பட்ட உரூபப் பிரமரும்; இருவகைச் சுடரும்-ஞாயிறுந் திங்களுமாகிய இருவகைப்பட்ட ஒளிக்கடவுளரும்-இரு மூவகையின் பெருவனப்பு எய்திய தெய்வதகணங்களும்-ஆறு வகைப்பட்ட பேரழகுடைய தெய்வக் கூட்டங்களும்; பல்வகை அசுரரும்-பலவேறு வகைப்பட்ட அசுரர்களும் படுதுயர் உறூஉம் எண்வகை நரகரும்-பெருந்துன்பத்தை எய்தா நின்ற எட்டு வகைப்பட்ட நரகரும்; இருவிசும்பு இயங்கும் பல்மீன் ஈட்டமும்- பெரிய வானத்திலே இயங்கா நின்ற பலவாகிய மீன் கூட்டமும்; நாளும் கோளும் தன் அகத்து அடக்கிய- நாண்மீன்களும் கோள்களும் ஆகிய தேவ கணங்களையெல்லாம் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற; சக்கரவாளத்து- சக்கரவாளமாகிய இவ்வண்டத்தினுள்ளே உறைகின்ற; வரந்தரர்க்கு உரியோர் தமை முன் நிறுத்தி- மாந்தர்க்கு வரந்தருதற்கு உரிமையுடையோரை எல்லாம் சம்பாபதி தனது ஆற்றலாலே வரவழைத்து அக்கோதமையின் அகக்கண் முன்னர் நிறுத்தி வைத்து; இவள் அருந்துயர் இது- தேவர்களே கேண்மின்! இப் பார்ப்பனிக்கு இப்போது எய்தியிருக்கின்ற தீர்ததற்கரிய துயரம் இஃதேயாம்; அரந்தை கெடுமின் என-நும்மில் யாரேனும் இவளுடைய இத் துன்பத்தைப் போக்கியருளுமின் என்று வேண்டாநிற்ப என்க. (விளக்கம்) ஊழி முதல்வன் என்றது இவ் வுலகம் அழிந்தொழிந்த ஊழியின் பின்னர் மீண்டும் உலகத்தைப் படைக்கின்ற பிரமதேவனை இவன் செந்தாமரை மலர்மேல் வீற்றிருப்பவன் என்பது பௌத்தர் கொள்கை. பிரமர் பலவகைப்பட்டுப் பலராதலின் இவனை ஊழி முதல்வன் என்றும். செம்மலர் முதியோன் என்றும் மகாப்பிரமா என்றும் விதந்தோதுவர். உலகப் படைப்பு அந்தம் ஆதி என்மனார் புலவர் எனச் சைவசித்தாந்தத்தே கூறப்படுமாறே இவரும் ஊழிக்குப் பின் உலகம் படைக்கும் முதல்வன் என்றே கூறுதல் உணர்க. ஆழித்தாழி- சக்கரவாளக் கோட்டமாகிய தாழிவடிவிற்றாகிய அண்டம் என்க. திரியுந் தேவரில் யாரேனும் தருவார் உளராயின் யானுந் தருகுவன் என்றது, அவ் வரந்தருதற்கு எத் தேவராலும் இயலாது என்பதுபட நின்றது. எனக்குரிய ஆற்றல் எனக்குளது அதனைக் காட்டுவல் நீயே அதனையும் காண்க. நீ கேட்கும் வரந்தரும் ஆற்றல் ஊழி முதல்வற்கன்றிப் பிற தேவருக்கில்லை என்பதனைக் தெரிந்து விளக்கியபடியாம். தேவர்களை எல்லாம் ஒருங்கழைத்துக் காட்டுமாற்றால் சம்பாபதி தன் ஆற்றலை வெளிப்படுத்திக் காட்டியவாறாம் நால்வகை மரபின் அரூபப் பிரமர்- நால்வகை உலகங்களின் வாழும் உருவமற்ற பிரமர்கள்; இவர்கள் ஐந்தாந்தியானத்தில் தேறியவர் என்பர். இவர் இருப்பிடம்(1) ஆகாசாநந்தியாயதன லோகம்; (2) விஞ்ஞானா நந்தியாயதன லோகம்; (3) ஆகிஞ்சந் யாயதன லோகம்; (4) நைவசம்ச்ஞானா சம்ச்ஞானாயதன லோகம் என்னும் நான்குமாம். இவை நான்கும் அரூபப்பிரம லோகங்கள் எனப்படும். பதினாறு வகை மரபின் உரூபப்பிரமர்: பதினாறு வகை உலகங்களில் உருவத்தோடு வாழும் பிரமர்கள் என்பர்; இவர்களில் முதலாந் தியானத்தில் தேறியவர் வாழுமுலகம்(1) பிரமகாயிக லோகம்; (2) பிரமபுரோகித லோகம். (3) மகாப்பிரம லோகம் (4) பரீத்தாப லோகம் என்னம் நான்குமாம். இரண்டாந்தியானத்தில் தேறியவர் வாழுமிடம் (1) அப்பிர மாணாபலோகம்; (2) ஆபாசுவர லோகம்; (3) பரீத்தசுப லோகம்; (4) அப்பிரமாணசுப லோகம் என்னும் நான்குமாம். மூன்றாந் தியானத்தில் தேறியவர் வாழுமிடம்-(1) சுபகிருஞ்ஞ லோகம்(2) பிருகத்பல லோகம்; (3) அசஞ்ஞாசத்துவ லோகம்; (4) அப்பிருக லோகம் என்னும் நான்குமாம். நான்காந்தியானத்தில் தேறியவர் வாழுமிடம்-(1) அதப லோகம்; (2) சுதரிச லோகம்; (3) சுதரிசி லோகம்; (4) அகநிட்டலோகம் என்னும் நான்குமாம். இவை தியானவகையால் நால் நான்கு வகைப் படுதலின் நானால்வகையின் உரூபப் பிரமரும் என்று தெரித்தோதினர். இனி அரூபப்பிரமரும் உரூபப்பிரமரும் ஆகிய இருவகைப் பிரமரும் வாழும் உலகம் இருபதனையும் நிட்காம லோகங்கள் என்றும் ஓதுப இருவகைச் சுடரும் என்றது-ஞாயிற்றுத் தேவனையும் திங்கட்டே வனையுமாம் பெருவனப் பெய்திய தெய்வதகணங்களும் என்றது இந்நிலவுலகத்தியே செய்த நல்வினையின் பயனாகிய இன்ப நுகர்ச்சி எய்துதற்கியன்ற ஆறுவகைப்பட்ட தேவலோகங்களினும் வாழும் தேவரினங்களை. இவர் இன்ப நுகர்தற்குரிய லோகம் என்பது தோன்ற பெருவனப் பெருவனப் பெய்திய தெய்வதகணம் என்றார். நல்வினையால் தேவராய்ப் பிறந்த இவர் வாழும் உலகங்கள் (1) மகாராசிக லோகம்; (2) திரயத்திரிஞ்ச லோகம்; (3) யாம லோகம்;(4) துடிதலோகம்; (5) நிருமாணரதி லோகம்; (6) பரநிருமித வய வருத்தி லோகம் என்னும் இந்த ஆறுலகங்களுமாம். மேலே கூறப்பட்ட இருபத்தாறுலகங்களும் நல்வினை செய்தோர்க் குரிய மேலுலகங்களாம். இனி, மக்கள் வாழும் இந்நிலவுலகம் ஒன்றுமே நடுவிலமைந்த உலகமாம். ஆகவே நல்வினை என்னும் இருவகை வினைகளும் விரவிய உயிர்கள் இதன்கட் பிறந்து இன்பம் துன்பம் என்னும் இருவகை நுகர்ச்சிகளையும் எய்தும் என்ப. இக் காரணத்தால் பௌத்தர்கள் வினைகளின் கூட்டத்தை வேதனைக் கந்தம் என்பர். வினைகள் இரண்டென்னாது மூன்று என்பர். இதனை, இனிவே தனையா வனஇன்ப மொடு துனிவே தருதுன் பமுமாம் இடையும் நனிதா நலதீ வினையன் மையினாம் பனிவே யிணைபன் னியதோண் மடவாய் (488) எனவரும் நீலகேசிச் செய்யுளானும்; அதற்கு நுகர்ச்சிக் கந்தம்-இன்ப நுகர்ச்சியும் துன்பநுகர்ச்சியும். இவ்விரண்டும் விரவிய சமநுகர்ச்சியும் என மூவகைப்படும் என்று விளக்கிய விளக்கவுரையானும் உணர்க. பல்வகை அசுரர் என்றார் அவர் தாமும் தாஞ்செய்த தீவினையின் பயனாக அவற்றின் வன்மை மென்மைகட் கேற்பப் பலவகைப்படுதலின். தீவினை மிகுதியால் எட்டுவகைப்பட்ட நரகப் புரைகளிலே இடப்பட்ட உயிர்களைப் பிரித்து எண்வகை நரகர் என்றார். இவ்வெண்வகை நரகப் பகுதிகளும் நரகலோகம் என்னும் ஓருலகத்தின் உட்பகுதிகளாம். அந்நரகங்கள்-(1) மகாநிரயம்; (2) இரௌரவம்; (3) காலசூத்திரம்; (4) சஞ்சீவனம்; (5) மகரவீசி; (6) தபனம்;(7) சம்பிரதாபனம்;(8) சங்கதம் என்னும் இவ் வெட்டுமாம். இனித் தீவினைப் பயனாகச் சென்று பிறப் பெய்தும் உலகங்களை இருள் உலகம் என்ப. அவை தாமும் நான்கு வகைப்படும். (1) நரகலோகம்; (2) திரியக் குலோகம்; (3) பிரேதலோகம்;(4) ஆசுரிக லோகம் என்னும் இந்த நான்குமாம். நிலவுலகத்தின் கீழுள்ள இவை நான்கும் கீழுலகம் எனத் தொகுத்தோதப்படும். இனி, நல்வினை தீவினை இரண்டும் விரவு வினையுமாகிய மூன்று வினைகளானும் உயிர்கள் எய்தும் இருள் உலகம் நான்கும் நிலவுலகம் ஒன்றும் ஒளி உலகம் ஆறுமாகிய பதினொருலகத்தையும் காமலோகங்கள் என்றும் தொகுத்தும் கூறுப. மேலே கூறியவாற்றால் பௌத்த சமயத்தார் கூறுகின்ற காம லோகம் பதினொன்றும் நிட்காம லோகம் இருபதும் ஆகிய முப்பத்தோரு லோகங்களையும் அவற்றினியல்புகளையும் அறிக. பன்மீனீட்டம் என்றது விசும்பில் எண்ணிறந்தனவாகக் காணப்படுகின்ற விண்மீன்களே. நாள் என்றது அசுவனி முதலிய இருபத்தேழு மீன்களையுமாம். கோள்களில் முன்னர்த் தேவரோடு கூட்டிய ஞாயிற்றையும் திங்களையும் தவிர்த்து எஞ்சிய ஏழு கோள்கையுமாம். மேலே கூறப்பட்ட முப்பத்தோருலகங்களையும் பன்மீன்களையும் கோள்களையும் நாள்களையும் தன்னகத்தே அடக்கியிருக்கும் ஓர் அண்டமே சக்கரவாளம் ஆம். இங்ஙனமே எண்ணிறந்த சக்கரவாளங்கள் உள என்பது பிடக நூலோர் துணிவாம் என்றுணர்க. வரந்தருதற் குரியோர் என்றது இவற்றுள் மேலுலகத்தும் நிலவுலகத்தும் உறையும் தெய்வங்களை அரந்தை-துன்பம். தேவர் கூற்றும் கோதமையின் செயலும் 126-129: சம்பாபதி.... இறந்தபின் (இதன் பொருள்) எங்கு வாழ் தேவரும்-எவ்வெவ்வுலகத்தும் வாழ்வோராய்ச் சம்பாபதியின் ஆணைக்கடங்கிச் சுடுகாட்டுக் கோட்டத்தே வந்து சேர்ந்த தேவரெல்லாம்; சம்பாபதி தான் உரைத்த அம்முறையே உரைப்பக் கேட்டு-அச் சம்பாபதி என்னும் ஆற்றல் சால் தெய்வம் உரைத்தவாறே ஊழி முதல்வன் உயிர்தரின் அல்லது ஆழித்தாழி அகவரைத் திரியும் யாந்தர வல்லேம் என்று கூற அது கேட்டு; கோதமை உற்ற கொடுந்துயர் நீங்கி- மெய்யுணர்ந்தமையாலே கோதமை என்னும் அப்பார்ப்பனிதானும் பேதமை காரணமாகப் பண்டு தான் எய்திய கொடிய துன்பத்தினின்று நீங்கி; மகனை ஈமச் சுடலையின் இட்டு இறந்தபின்- சார்ங்கலன் உடம்பினை ஈமவிறகின் எரிகின்ற தீயிலிட்டுத் தானும் இறந்த பின்னர் என்க. (விளக்கம்) எல்லாத் தேவலோகங்களினும் வாழ்கின்ற எல்லாத் தேவரும் சம்பாபதி உரைத்தவாறே தமது ஆற்றாமையைக் கூற அது கேட்ட கோதமை துயர்துறந்து மகனுடம்பையும் தீயிலிட்டுத் தானும் தீயினுட்புக் கிறந்த பின்னர் என்றவாறு. மயன் சக்கரவாளக் கோட்டம் சமைத்தல் 1090-202: சம்பாபதி.... இதுகாண் (இதன் பொருள்) சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற- சம்பாபதி என்னும் அக்காவற்றெய்வத்தின் ஆற்றல் கோதமை முதலிய உலகமாந்தர்க்கெல்லாம் நன்கு விளங்கும் பொருட்டு; எங்கு வாழ் தேவரும் கூடிய இடந்தனில்-அத் தெய்வத்தின் ஆணை வழியே நிலவுலகமுதலாக மேலுள்ள இருபத் தேழுலகங்களினும் உறைகின்ற தேவரெல்லாம் ஒருங்குடன் வந்து கூடிய சிறப்பினையுடைய இந்தச் சுடுகாட்டுக் கோட்டத்திலே; சூழ்கடல் விளை இயஆழி அம்குன்றத்து நடுவு நின்ற மேருக்குன்றமும்- நாற்புறமும் சூழ்ந்த கடலையுடைய சக்கரவாளத்தினுள்ள மலைகளின் நடுவண் நிலை பெற்றுநின்ற மேருமலையும்; புடையின் நின்ற எழு வகைக் குன்றமும்-அதன் மருங்கிலே நிற்கின்ற ஏழுவகையான குலமலைகளும்; நால்வகை மரபின் மாபெருந்தீவும்-நான்கு வகைப்பட்ட மிகப் பெரிய நாவலந்தீவு முதலிய தீவுகளும்; ஓர் ஈர் ஆயிரம் சிறு இடைத்தீவும்-அப்பெருந்தீவுகளைச் சூழ்ந்துள்ள இரண்டாயிரம் சிறிய தீவுகளும்; பிறவும்-இவையல்லா தனவாகிய இடவகை காட்டுதற்குரியவற்றை அவ்வவற்றிற்குரிய இடத்தைப் பெறுமாறு; அறிவுவரக் காட்டி- காண்பவர்க்கு சக்கரவாளத்தின் இயல்புபற்றிய அறிவு பிறக்கும்படி இயற்றி; ஆங்கு வாழ் உயிர்களும் அவ்வுயிர் இடங்களும்-ஆங்கே வாழும் உயிர் வகைகளும், அவ்வுயிர்னங்கள் சிறப்புரிமை கொண்டுவாழு முலகங்களும்; பாங்கு உற மண்ணீட்டின் பண்பு உற வகுத்து-அழகுற மண்ணீடுகளிலே அவ்வவற்றின் இயல்பு பொருந்தும்படி வகுத்து; மிக்க பயனால் இழைக்கப்பட்ட சக்கரவாளக் கோட்டம் ஈங்கு இது காண்- தொழிற்றிறமிக்க மயனால் இயற்றப்பட்ட சக்கரவாளக் கோட்டமே இங்குள்ள இக் கோட்டம் என்றறிதி. இதுவே எம்மனோர் அப் பெயராற் கூறுதற்குரிய காரணம் என்று அத் தெய்வம் கூறா நிற்ப என்க. (விளக்கம்) எங்குவாழ் தேவரும் சம்பாபதியின் கட்டளையின்படி ஓரிடத்தே வந்து கூடியதனால் அத் தெய்வத்தின் தலைமைத் தன்மையுடைய பேராற்றல் தோன்றிற்று என்பது கருத்து. நிகழ்தற்கரிய நிகழ்ச்சி ஒரு காலத்தே இவ்விடத்தே நிகழ்ந்தது என்று பிற்காலத்து மாந்தர் அறிந்து கொள்ளற் பொருட்டு மயன் என்னும் தெய்வச் சிற்பி சக்கரவாளத்தின் அமைப்பைச் சிற்பங்களாலே இவ்விடத்து அமைத்தனன் என்றவாறு. கடல் வளைஇய-பெரும் புறக்கடல் சூழ்ந்துள்ள. ஆழியங் குன்றம்-சக்கரவாளத்துளடங்கிய மலைகள் என்க. அக் குன்றத்து நடுவே மேருமலையும்; அதன் பக்கங்களிலே ஏழுகுல மலைகளும், மாபெருந் தீவுகளும், இரண்டாயிரம் இடைத் தீவுகளும், இவையல்லாத இடைவகைகளும், ஆங்காங்கு வாழும் உயிர் வகைகளும், மயனால் அழகிய சிற்பப்படிமங்களாக இயற்றப்பட்டன என்க. மண்ணீடு-சுதை (சிற்பப்படிமம்). பாங்கு-அழகு. பண்பு-இயல்பு. மணிமேகலை நிலையாமையை நினைவு கூர்தல் 203-205: இடுபிண.......உரைக்க (இதன் பொருள்) இடுபிணக் கோட்டத்து எயில்புறம் ஆதலின்- பிணங்களைக் கொணர்ந்து போகடுகின்ற கோட்டத்தோடு அக நகரத்தின் மதிலின் புறம்பாகிய இடமாதலாலே இதனை; சுடுகாட்டுக் கோட்டம் என்றலது உரையார்-இவ்வரலாறறியாத மாந்தர் சுடுகாட்டுக் கோட்டம் என்று கூறுதலல்லது சக்கரவாளக் கோட்டம் என்று கூறுதலிலர்; இது இதன் வரவு என்று இருந்தெய்வம் உரைப்ப-இதுவே இதன் வரலாறு ஆதனால் இதனைச் சக்கரவாளக் கோட்டம் என்று யான் கூறினேன் காண்! என்று அப் பெருந்தெய்வம் அறிவியாநிற்ப என்க. (விளக்கம்) மக்கள் உள்ளத்தே இவ் வரலாறு பதிவது அரிதாகலின் அவர்கட்கு இவ்விடத்தே நிகழும் நிகழ்ச்சியால் பிணஞ்சுடுமிடம் என்பதே நன்கு புலப்படுதலான் அவர் சுடுகாட்டுக் கோட்டம் என்றல் இயல்பேகாண். வரலாறறிந்த எம்மனோர்க்கு இது, சக்கரவாளக் கோட்டம் என்றே தோன்றுதலின் அவ்வாறு யான் கூறினேன் என்று விடுத்தபடியாம். மணிமேகலா தெய்வம் மணிமேகலையை எடுத்து போதல் 204-214: மதனின்....தானென் (இதன் பொருள்) சிறந்தோள்-அத்தெய்வங் கூறிய வரலாற்றைக் கேட்டிருந்த மகளிர் இருவருள் ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையாலே அவ்வரலாற்று வழியாக அத் தெய்வம் அறிவுறுத்திய நிலையாமையுணர்ச்சியை ஏற்றுக் கோடற்குச் சிறந்த மாணவியாயிருந்த மணிமேகலையானவள்; வான் துயர் எய்தி- அவ் வுணர்ச்சி காரணமாக மிகப் பெரிய துன்பத்தை உடையவளாகி மதன் இல் நெஞ்சமொடு- செருக்கவிந்த தன்னெஞ்சத்திற்கு; பிறந்தோர் வாழ்க்கை உரைப்ப- பிறந்தவர் இவ்வுலகில் எய்தும் பெருகிய துன்பத்தையும் அதன் நிலையாமையையும் எடுத்துக் கூறா நிற்ப; இறந்து இருள் கூர்ந்து இடை இருள் யாமத்து-அற்றை நாளிரவிற் பொழுது ஒருபாதி கழிந்தமையாலே அவ் வுவவனத்தின் இயற்கையாகவே புக்கிருந்த நள்ளிரவாகிய இடையாமத்திலேயே; தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழிய- மிக்குத் தூங்குதலாகிய ஆழ்ந்த துயிலில் அழுந்தியிருந்த மகளிர் இருவருள் சுதமதியை அந்நிலையிலேயே இருக்கவிட்டு; பூங்கொடி தன்னைப் பொருந்தி தழீஇ அந்தரம் ஆறா-காமவல்லி போல் வாளாகிய மணிமேகலையை அணுகித் துயில் கலையாவண்ணம் தழுவி எழுத்துக் கொண்டு வான் வழியாகப் பறந்து போய் அவ்வுவவனத்தினின்றும்; ஆறு ஐந்து யோசனை தென் திசை மருங்கில் சென்று-முப்பது யோசனைத்தொலைவு தென் திசை நோக்கிச் சென்று; திரை உடுத்த மணிபல்லவத்து இடை- நாற்புறமும் கடல் அலைகளைப் பூண்டுள்ள மணிபல்லவம் என்னுந் தீவினிடத்தே; மணிமேகலா தெய்வம்-அந்த மணிமேகலா தெய்வம்; அணி இழை தன்னை வைத்து அகன்றது-மாதவி மாளாகிய மணிமேகலையை அவளது துயில் கலையாவண்ணம் வைத்து அவ்விடத்தினின்றும் நீங்கியது; என்பதாம். (விளக்கம்) மதன்-செருக்கு. சிறந்தோள்: மணிமேகலை. தெய்வத்தின் கூற்றின் பயனாகிய மெய்க் காட்சியை; அஃதாவது நிலையாமையை உணர்தற்குச் சிறந்திருந்த மணிமேகலை என்பது கருத்து. தூங்கு துயிலெய்திய இருவருள் சுதமதி யொழிய என அவாய் நிலைப்பற்றி ஒருசொல் பெய்துரைக்க. இங்ஙனம் உரையாக்கால் மணிமேகலை விழிப்பு நிலையினளாகவே தெய்வம் எடுத்துப் போயதாகி மேல் வருவனவற்றோடும் முரணும் என்க. இனித் தெய்வம் மணிமேகலையை மயக்கி எடுத்துப் போயது எனின் அதற்குஞ் சொல்லின்மையால் யாம் கூறியவாறே கூறுதலே அமையும் என்க. இனி, இக் காதையை,மண்டிலம் சொரியத் திகழ்தரு மேனியள் பீடிகை ஏத்தி நல்லாள் முகம் நோக்கி என் உற்றீர் என அவள் அவன் கூறிய துரைத்தலும் குமரன் நீங்கான் வீதியில் பொருந்துதல் ஒழியான் சிறுபுழை போகிக் கோட்டம் புக்கால், நவை எய்தாது அங்கு நீர் போமென்று அருந்தெய்வம் உரைப்ப மிக்கோய் சக்கரவாளக் கோட்டம் அஃதென்க கூறிய பொருள் அறியேன் என அதன் காரணம் கூறுவன் இருள் வரினும் நீ கேள் என்று கூறும்-கூறுபவள் இதன் வரவு இதுவென மயனால் இழைக்கப்பட்ட சக்கரவாளக் கோட்டம் இது காண் என சிறந்தோள் நெஞ்சமொடுரைப்ப, இடையாமத்துத் துயிலெய்திய (இருவருள்)சுதமதி ஒழியப் பூங்கொடி தன்னைத் தழீஇ அந்தரம் ஆறாச் சென்று மணிபல்லவத்திடை அத் தெய்வம் அணியிழையை வைத்து அகன்றது என இயைபு காண்க. சக்கரவாளக் கோட்டமுரைத்த காதை முற்றிற்று. | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
7. துயிலெழுப்பிய காதை
ஏழாவது மணிமேகலா தெய்வம் உவவனம் புகுந்து சுதமதியைத் துயிலெழுப்பிய பாட்டு
அஃதாவது: மணிமேகலையை உவவனத்தினின்றும் எடுத்துப் போய் முப்பது யோசனைத் தொலைவில் கடலினுள்ளிருக்கும் மணிபல்லவம் என்னும் தீவின்கண் வைத்து அவ்விடத்தினின்றும் மீண்டும் புகார் நகரத்து உவவனத்தினூடே துயிலில் ஆழ்ந்திருந்த சுதமதியை எழுப்பித் தான் செய்தமையைக் கூறி மாதவிக்கும் அந் நற்செய்தியைக் கூறும்படி பணித்து மறைந்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு. இதன்கண்- உவவனத்தின்கண் மணிமேகலையைக் கண்ணெதிரே கண்டு வைத்தும்; அவளது மடங்கெழுநோக்கின் மதமுகந் திறப்புண்டு இடங்கழி தன் நெஞ்சத்திளைமையானை கல்விப்பாகன் கையகப்படா அது ஒல்காவுள்ளத் தோடுமாயினும் ஒழுக்கொடு புணர்ந்த விழுக்குடிப் பிறந்தோ னாதலின் பகவனது ஆணையிற் பன்மரம் பூக்கும் அத் தெய்வப் பூம்பொழிலில் அவளைக் கைப்பற்றுதல் குடிப்பழியாம் என்றஞ்சி அகன்ற அரசிளங் குமரனாகிய உதயகுமரன் தன் அரண்மனைக்கண் காம நோயாற் பெரிதும் வருந்தி நாளைக்கு அவளை யான் எப்படியும் கைப்பற்றுவேன் என்னும் துணிவுடன் பொங்கு மெல்லமளியில் கண்டுயிலாது கிடந்தோன் முன்னர், மணிமேகலா தெய்வம் தோன்றி மன்னறம் கூறி மன்னவன் மகனே! தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிக என்றறிவுறுத்து அப்பால் உவவனத்திலே துயில் கொண்டிருந்த சுதமதியை எழுப்பித் தான் மணிமேகலா தெய்வம் என்றறிவித்து மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாலின் அவளை நன்னெறிக்கட் செலுத்தவே யான் எடுத்துப் போயினேன், என்னை மாதவி முன்னரே அறிகுவள், மணிமேகலை இற்றைக்கு ஏழா நாள் நலம் பல எய்தி இங்கு வந்து சேர்வாள் என்று கூறும் அத் தெய்வத்தின் அருட்டிறமும், பின்னர்ச் சுதமதி சக்கரவாளக் கோட்டம் புக்கதும்; ஆங்குக் கந்திற் பாவை சுதமதிக்குக் கூறும் அற்புதக் கிளவியும்; இரவு வண்ணனையும் பெரிதும் இன்பம் பயப்பனவாக அமைந்திருத்தலைக் காணலாம். மணிமேகலை தனை மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி மணிமேகலை தனை மலர்ப் பொழில் கண்ட உதயகுமரன் உறு துயர் எய்தி கங்குல் கழியின் என் கை அகத்தாள் என பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே! கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை 07-010 மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் தவத் திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத் திறம் ஒழிக என்று அவன்வயின் உரைத்த பின் உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில் கொள்ளும் சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி இந்திர கோடணை இந் நகர்க் காண வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் ஆதிசால் முனிவன் அறவழிப்படூஉம் ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின் 07-020 விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு இழை தன்னை ஓர் வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன் பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு இன்று ஏழ் நாளில் இந் நகர் மருங்கே வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள் களிப்பு மாண் செல்வக் காவல் பேர் ஊர் ஒளித்து உரு எய்தினும் உன்திறம் ஒளியாள் ஆங்கு அவள் இந் நகர் புகுந்த அந் நாள் ஈங்கு நிகழ்வன ஏதுப் பல உள மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும் 07-030 ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும் உரையாய் நீ அவள் என் திறம் உணரும் "திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு" என கோவலன் கூறி இக் கொடி இடை தன்னை என் நாமம் செய்த நல் நாள் நள் இருள் "காமன் கையறக் கடு நவை அறுக்கும் மா பெருந் தவக்கொடி ஈன்றனை" என்றே நனவே போலக் கனவு அகத்து உரைத்தேன் ஈங்கு இவ் வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று அந்தரத்து எழுந்து ஆங்கு அருந் தெய்வம் போய பின் 07-040 வெந் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு அகல் மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின் கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று பண்ணுக் கிளை பயிரும் பண் யாழ்த் தீம் தொடை கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு வளை சேர் செங் கை மெல் விரல் உதைத்த வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும் பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது 07-050 உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர் விரைப் பூம் பள்ளி வீழ் துணை தழுவவும் தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலி குதலைச் செவ் வாய் குறு நடைப் புதல்வர்க்குக் காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும் இறை உறை புறவும் நிறை நீர்ப் புள்ளும் 07-060 கா உறை பறவையும் நா உள் அழுந்தி விழவுக் களி அடங்கி முழவுக் கண் துயின்று பழ விறல் மூதூர் பாயல் கொள் நடு நாள் கோமகன் கோயில் குறு நீர்க் கன்னலின் யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும் உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து நிறை அழி யானை நெடுங் கூ விளியும் தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும் முழங்கு நீர் முன் துறைக் கலம் புணர் கம்மியர் 07-070 துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து பழஞ் செருக்கு உற்ற அனந்தர்ப் பாணியும் அர வாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை விரவிய மகளிர் ஏந்திய தூமத்து புதல்வரைப் பயந்த புனிறு தீர் கயக்கம் தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும் வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் புலிக் கணத்து அன்னோர் பூத சதுக்கத்து கொடித் தேர் வேந்தன் கொற்றம் கொள்க என இடிக் குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும் 07-080 ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் கடுஞ் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர் தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் மன்றப் பேய்மகள் வந்து கைக்கொள்க என நின்று எறி பலியின் நெடுங் குரல் ஓதையும் பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து முருந்து ஏர் இள நகை நீங்கிப் பூம்பொழில் திருந்து எயில் குடபால் சிறு புழை போகி மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த 07-090 சக்கரவாளக் கோட்டத்து ஆங்கண் பலர் புகத் திறந்த பகு வாய் வாயில் உலக அறவியின் ஒரு புடை இருத்தலும் கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய அந்தில் எழுதிய அற்புதப் பாவை மைத் தடங் கண்ணாள் மயங்கினள் வெருவ திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின் இரவிவன்மன் ஒரு பெரு மகளே! துரகத் தானைத் துச்சயன் தேவி! தயங்கு இணர்க் கோதை தாரை சாவுற 07-100 மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய்! காராளர் சண்பையில் கௌசிகன் மகளே! மாருதவேகனோடு இந் நகர் புகுந்து தாரை தவ்வை தன்னொடு கூடிய வீரை ஆகிய சுதமதி கேளாய்! இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும் அஞ்சல் என்று உரைத்தது அவ் உரை கேட்டு நெஞ்சம் நடுக்குறூஉம் நேர் இழை நல்லாள் 07-110 காவலாளர் கண் துயில்கொள்ளத் தூ மென் சேக்கைத் துயில் கண் விழிப்ப வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்பப் புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்கப் புகர் முக வாரணம் நெடுங் கூ விளிப்ப பொறி மயிர் வாரணம் குறுங் கூ விளிப்ப பணை நிலைப் புரவி பல எழுந்து ஆலப் பணை நிலைப் புள்ளும் பல எழுந்து ஆலப் பூம்பொழில் ஆர்கைப் புள் ஒலி சிறப்பப் பூங்கொடியார் கைப் புள் ஒலி சிறப்பக் 07-120 கடவுள் பீடிகைப் பூப் பலி கடைகொளக் கலம் பகர் பீடிகைப் பூப் பலி கடை கொளக் குயிலுவர் கடைதொறும் பண் இயம் பரந்து எழக் கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்து எழ ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்துக் கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும் ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த மா நகர் வீதி மருங்கில் போகி போய கங்குலில் புகுந்ததை எல்லாம் மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும் 07-130 நல் மணி இழந்த நாகம் போன்று அவள் தன் மகள் வாராத் தனித் துயர் உழப்ப இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் துன்னியது உரைத்த சுதமதி தான் என் 07-134 உதயகுமரன் முன்னர் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றல் 1-7: மணிமே...... தோன்றி (இதன் பொருள்) மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை மணிமேகலைதனை வைத்து நீங்கி-இவ்வாறு மணிமேகலா தெய்வமானது உவவனத்தினின்று முப்பதி யோசனைத் தூரத்தில் தென் கடலிற் கிடக்கும் மணிபல்லவம் என்னும் தீவினிடை மணிமேகலையைக் கொடுபோய்த் துயில் கலையாவண்ணம் மெத்தென வைத்துப் பின்னர் அத் தீவினின்றும் நீங்கி; மணிமேகலைதனை மலர்ப்பொழில் கண்ட உதயகுமரன் உறுதுயர் எய்தி-அம் மணிமேகலையைப் பகவனதாணையில் பல்மரம் பூக்கும் தெய்வத்தன்மையுடைய உவவனமாகிய மலர்ப் பொழிலிற் கண்ட அரசிளங்குமரனாகிய உதயகுமரன் அவ்விடத்தே அவளைக் கைப் பற்றுதற்கஞ்சி மீண்டவன் மிக்க காமநோயாலே வருந்தி; கங்குல் கழியில் என் கையகத்தாள் என-இற்றை நாளிரவு கழிந்தக்கால் அவள் என் கையகத்தே இருப்பாள் அதற்காவன செய்குவல் என்னும் துணிவோடு பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் முன்னர்த் தோன்றி-ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுயர்ந்த மெல்லிய படுக்கையின் மேலே கண்ணிமைகள் பொருந்தாமல் படர்மெலிந்திருப்பவன் கண்முன் மின்னே போலப் பெண்ணுருவங் கொண்டு நின்று என்க. (விளக்கம்) மணிமேகலா தெய்வம் மணிமேகலையைப் பாதுகாத்துக் கடைபோக நன்னெறியிலே செலுத்தும் குறிக்கோளுடன் அவளை எடுத்து மணிபல்லவத்திடை வைத்தாலும், அவள் மீண்டும் புகார் நகரத்திற்கு வரும் பொழுது அவள் பால் கழிபெருங் காமம் கொண்டவனாய் உதயகுமரன் அவளைக் கைப்பற்றவே முயல்வான் ஆகலின் அவள் தெய்வத்தின் துணைவலியும் தவவலியும் உடையாள் என்று அவன் அறியும்படி செய்து அச்சுறுத்தற் பொருட்டு அப்பொழுதே அவன் முன் தோன்றியவாறு. இஃது எதிரதாக் காக்கும் அறிவு எனப்படும் என்னை? எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய் (429) என நிகழும் தமிழ் மறையும் நினைக. மணிமேகலா தெய்வம் உதயகுமரனுக்குச் செங்கோல் காட்டல் 7-14: மன்னவன்.......உரைத்தபின் (இதன் பொருள்) மன்னவன் மகனே! எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோனன்றியும், வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சு சுடத் தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோனுமாகிய செங்கோன் மன்னர் வழிவழிச் சிறந்து வந்த சோழ மன்னவன் மகனே! ஈதொன்று கேள்! கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்-அரசன் குறிக்கொண்டு பேணுதற் கியன்ற செங்கோன்மை பிறழுமானால் வெள்ளி முதலிய கோள்கள் தம் நிலையி லியங்காமல் பிறழ்ந்தியங்கா நிற்கும்; கோள் நிலை திரிந்திடின் மாரி வறங்கூரும்-அங்ஙனம் கோள்கள் நிலை பிறழ்ந்தியங்கினாலோ மழை பொய்த்து உலகிலே வற்கட மிகாநிற்கும்; மாரி வறங்கூரின் மன்னுயிர் இல்லை-மாரி பொய்த்து வற்கட மிகுமாயின் உடம்பொடு தோன்றி நிலைபெற்று வாழ்கின்ற உயிர்கள் இறந்துபடும்; மன்னுயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்-இங்ஙனம் ஆயின் உலகில் நிலைபெற்று வாழ்கின்ற உயிர்கள் எல்லாம் அரசனுடைய உயிரே ஆகும் என்று ஆன்றோர் கூறும் பெருந்தகைமை அவ்வரசன்பால் சிறிதும் இல்லையாம்; தவத்திறம் பூண்டோள் தன் மேல் வைத்த அவத்திறம் ஒழிக என்று அவன்வயின் உரைத்தபின்- செங்கோன் முறை பிறழாது அத்தகைய பெருந்தகைமையோடு அருளாட்சி புரிந்த நின்முன்னோர் நெறிநின்று நீ தானும் தவவொழுக்கத்தை மேற்கொண்டொழுகுகின்ற மணிமேகலையின்பாற் கொண்டுள்ள நின் கேட்டிற்கே காரணமான இடங்கழி காமத்தைக் கைவிட்டு விடுவாயாக! என்று அத் தெய்வம் அவனுக்குக் கூறி அச்சுறுத்திய பின்று என்க. (விளக்கம்) மன்னவன் என்றது- செங்கோன்மை பிறழாத சிபியும் மனுவும் போன்ற புகழ் மிக்கோர் மரபின் வந்த சோழமன்னன் என்பது பட நின்றது. கோல்-அரசியலறம். அஃது ஒருபாற் கோடாது செவ்விய கோல் போறலின் செங்கோல் என வழங்கப்படும். ஈண்டு அடை மொழியின்றிக் கோல் என நின்றது. முறை கோடுதலை ஈண்டுக் கோல் திரியின் என்றார். முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி யொல்லாது வானம் பெயல் (559) எனவரும் திருக்குறளையும் நினைக. கோள்-மழைதரும் வெள்ளி முதலிய கோள்கள். மாரிவறங் கூர்தல்- மழை பெய்யா தொழிதல். மன்னுயிரெல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிர் எனபதனோடு நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் அதனால் யானுயி ரென்ப தறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே (புறநா-186) எனவரும் மோசிகீரனார் பொன்மொழி ஒப்புநோக்கற் பாலதாம். இனி ஈண்டுத் தண்டமிழ் ஆசான் சாத்தனார் கூறிய இதனை, ஆசிரியர் திருத்தக்க தேவரும் தம் பெருங்காப்பியத்தூடே( சீவக:225) கோள்நிலை திரிந்து குறைபடப் பகல்கண் மிஞ்சி நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியும் நீடி பூண்முலை மகளிர் பொற்பின் கற்பழிந் தறங்கண் மாறி ஆணையிவ் வுலகு கேடாம் அரசுகோல் கோடி னென்றான் எனப் பொன்போற் பொதிந்து வைத்துள்ளமையும் உணர்க. தவத்திறம்- நோன்பு. அவத்திறம்- கேட்டிற்குக் காரணமான பொருந்தாக் காமம். அது கோன்முறையன்றாகலின் ஒழிக என்றறிவுறுத்தபடியாம். மணிமேகலா தெய்வம் உவவனத்தே சென்று சுதமதியைத் துயிலெழுப்பித் தெருண்மொழி கூறுதல் (15- உவவனம் என்பது தொடங்கி 40- போயின் என்னுமளவும் ஒரு தொடர்) 15-25: உவவனம்.....தோன்றும் (இதன் பொருள்) உவவனம் புகுந்து ஆங்கு உறுதுயில் கொள்ளும் சுதமதி தன்னைத் துயில் இடை நீக்கி மீண்டும் மணிமேகலா தெய்வம் உவவனத்திலே புகுந்து அவ்விடத்தே மிக்க துயில் கொண்டிருந்த சுதமதியைத் துயிலுணர்த்தி; அஞ்சல் யான் மணிமேகலை இந்நகர் இந்திரகோடணை காண வந்தேன்-சுதமதி அஞ்சாதே கொள்! யான் நும்மோடுறவு கொண்டுள்ள மணிமேகலா தெய்வங்காண்! இப் பூம்புகார் நகரத்தே நிகழாநின்ற இந்திரவிழாக் காண்டற்கு ஈண்டு வந்தேன்! இளங்கொடிக்கு ஆதிசால் முனிவன் அறவழிப்படூஉம் ஏது முதிர்ந்துளது ஆகலின்-இப்பொழுது இளமையுடைய மணிமேகலைக்குப் புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளிய அறநெறியில் ஒழுகுதற்குக் காரணமான பழவினைத் தொகுதி முதிர்ச்சியுற்றுப் பயனளிக்கும் செவ்வி பெற்றிருத்தலாலே; நின் விளங்கு இழை தன்னை விஞ்சையில் பெயர்த்து ஓர் வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்- நின் வளர்ப்பு மகளாகிய மணிமேகலையை என் வித்தையினாலே துயில் கலையாவண்ணம் இவ்விடத்தினின்றும் எடுத்துப் போய் என் காவலிலமைந்தமையின் சிறிதும் வஞ்சச் செயல் நிகழ்தலில்லாத மணிபல்லவம் என்னும் தீவிடத்தே வைத்துள்ளேன்; பண்புற பண்டைப் பிறப்பும் உணர்ந்து-அவள் அவ்விடத்தே நிகழும் தெய்வப் பண்பு எய்துதலாலே அவளுடைய அறிதற்கரிய பழைய பிறப்பின் வரலாற்றையும் உணர்ந்துகொண்டு; ஈங்கு இந்நகர் மருங்கே இன்று ஏழ் நாளில் வந்து தோன்றும்-இந் நாவலம் பொழிலகத்துள்ளே இப் பூம்புகார் நகரத்தின்கண் இற்றைக்கு ஏழா நாள் வான் வழியாக வந்து தோன்றுவள்; என்க. (விளக்கம்) உறுதுயில்- மிக்கவுறக்கம். இந்திரகோடணை-இந்திர விழா. மணிமேகலை- மணிமேகலா தெய்வம். ஆதிசான் முனிவன் என்றது கௌதம புத்தரை. ஏது- பழவினை. இளங்கொடி: மணிமேகலை. விஞ்சை- வித்தை. மணிபல்லவத் தீவின்கண் அவட்கு ஏதம் சிறிதும் வரமாட்டா தென்பாள், வஞ்சமில் மணிபல்லவம் என்றாள் ஈங்கு-இந் நாவலந் தீவின்கண். நகர்-புகார் நகரம். உரையாய்- கூறுவாயாக; அவள் என்திறம் உணரும்- அம் மாதவி என் பெயர் கேட்கு மளவிலேயே என்னை இன்னார் என்று உணர்ந்து கொள்ளுவள், எங்ஙனமெனின்; கோவலன் திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு எனக் கூறிக் கொடியிடை தன்னை நாமம் செய்த நல் நாள்- மணிமேகலையின் தந்தையாகிய கோவலன் அலையெறியும் பெரிய கடலிடத்தே எங்குலதெய்வம் ஒன்றுளது என்று என் வரலாற்றை மாதவி முதலியோர்க்கு எடுத்துச் சொல்லித் தன் குழவியாகிய அவட்கு மணிமேகலை என்னும் என் பெயரையே சூட்டிய அந்த நல்ல நாளில்; என்க. இதுவுமது 25-35: மடக்கொடி......நன்னாள் (இதன் பொருள்) மடக்கொடி நல்லாள் களிப்புமாண் காவல் பேரூர் ஒளித்துரு எய்தினும் உன் திறம் ஒளியாள்-மடப்பமுடைய பூங்கொடி போலும் அழகுடைய அம் மணிமேகலை களித்து வாழ்தற்குப் பெரிதும் மாட்சிமையுடைய செல்வச் செழிப்பும் காவலும் அமைந்த தலைநகரமாகிய இப் பூம்புகாருக்கு அவள் மீண்டும் வரும்போது தனக்குரிய வுண்மையுருவத்தோடு வாராமல் வேற்றுருக் கொண்டே வருவள் காண்! அவ்வாறு அவள் வேற்றுருவில் வந்து ஈண்டுக் கரந்துவருவாளாயினும் தன்னை உனக்கு மறையாமல் உன் திறத்திலே தன்னை வெளிப்படுத்திக் காட்டுவள்; ஆங்கு அவள் இந்நகர் புகுந்த அந்நாள் ஈங்கு நிகழ்வன ஏதும் பலவுள-அவ்வாறு அவள் வேற்றுருவத்தோடு இம்மாநகர் புகுந்த அக்காலத்தே இங்கே நிகழ்விருக்கின்ற பழவினை நிகழ்ச்சிகள் பற்பல உள அவை நிகழுங்காண்!; நீ மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும் மகள் ஏதம் இல் நெறி எய்திய வண்ணமும்- நங்காய்! இவை நிற்க! இனி நீ போய் மாதவியைக் காண்புழி, யான் இந்நகரத்திற்கு வந்த செய்தியையும் என் வாயிலாய் அவள் அருமை மகளாகிய மணிமேகலை குற்றமில்லாத நன்னெறியிலே சென்றுள்ள செய்தியையும்; உரையாய்-கூறுவாயாக; அவள் என்திறம் உணரும் அம்மாதவி என் பெயர் கேட்குமளவிலேயே என்னை இன்னார் என்று உணர்ந்து கொள்ளுவள், எங்ஙனமெனின்; கோவலன் திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு எனக் கூறிக் கொடியிடை தன்னை என் நாமம் செய்த நல் நாள்-மணிமேகலையின் தந்தையாகிய கோவலன் அலையெறியும் பெரிய கடலிடத்தே எங்குலதெய்வம் ஒன்றுளது என்று என் வரலாற்றை மாதவி முதியோர்க்கு எடுத்துச் சொல்லித் தன் குழவியாகிய அவட்கு மணிமேகலை என்னும் என் பெயரையே சூட்டிய அந்த நல்ல நாளில்; என்க. (விளக்கம்) நல்லாள்: மணிமேகலை. களிப்பு- ஈண்டு வாழ்க்கையின்பம் என்னும் பொருட்டு. பேரூர்- தலைநகரமாகிய பூம்புகார். ஒளித்துரு- வேற்றுருவம். உன்திறம்-உனக்கு. ஆங்கு-அவ்வாறு. அந்நாள் என்றது அக்காலத்தே என்பதுபட நின்றது. ஏது நிகழ்ச்சி- பழவினை விளைவுகள். தெய்வமாகலின் எதிர்காலத்து நிகழ்ச்சிகளாகிய உதயகுமரன் கொலையுண்ணல் முதலியவற்றைக் கருதி ஏதுநிகழ்ச்சி பலவுள என்று கூறுகின்றது. யான் வந்த வண்ணம் என்றது மணிமேகலா தெய்வமாகிய யான் வந்த வண்ணமும் என்பதுபட நின்றது. இனி, சுதமதி, மாதவி இத்தெய்வத்தை அறியாளாகலின் தெய்வத்தால் எடுத்துப் போகப்பட்ட தன் மகட்கு என்னுறுமோ? என்று அஞ்சுதல் இயல்பாதல் பற்றிச் சொல்லாது விடுவாளாதலின், அத் தெய்வம் என்பெயர் கேட்குமளவிலேயே மாதவி என்னை அறிந்து கொள்வாள். மேலும் தன் மகட்கு ஏதம் சிறிதும் நிகழமாட்டாதென்று ஆறுதலும் அடைகுவள்; ஆதலால் நீ இவற்றை அஞ்சாது அவட்குக் கூறுக என்று தெளிவித்தற் பொருட்டு இக் கருத்தெல்லாம் அடங்க அவள் என்றிறம் உணரும் என்று கூறும் நுணுக்கம் உணர்க. பின்னும் அவள் அறிந்தமை எவ்வாறு என்னும் ஐயம் சுதமதிக்குப் பிறக்கு மாகலின் அவ்வையம் அகற்றுதற்கு அவ் வரலாற்றையும் அறிவித்தல் வேண்டிற்று. மணிமேகலைக்குப் பெயர் சூட்டிய நாளில் கோவலன் எங்குல தெய்வம் ஒன்றுளது, அதன் பெயரையே இக் குழவிக் கிடுக என்று என் பெயரை இடுவித்த பொழுது என் வரலாற்றையும் மாதவி முதலியோர்க்குக் கூறினன்; இவ்வாற்றால் மாதவி என்னை அறிகுவள் என்றவாறு. இனி, ஈண்டுக் கூறும் இச் செய்தியை மாந்தளிர் மேனி மாதவி மடந்தை பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து வாலா மைந்நா ணீங்கிய பின்னர் மாமுது கணிகையர் மாதவி மகட்கு நாம நல்லுரை நாட்டுது மென்று தாமின் புறாஉந் தகைமொழி கேட்டாங் கிடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல் உடைகலப் பட்ட வெங்கோன் முன்னாள் புண்ணிய தானம் புரிந்தோ னாகலின் நண்ணுவழி யின்றி நாள்சில நீந்த இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் வந்தே னஞ்சன் மணிமே கலையான் உன்பெருந் தானத் துறுதி யொழியாது துன்ப நீங்கித் துயர்க்கடல் ஒழிகென விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென அணிமே கலையார் ஆயிரங் கணிகையர் மணிமே கலைஎன வாழ்த்திய ஞான்று மங்கல மடந்தை மாதவி தன்னோடு செம்பொன் மாரி செங்கையிற் பொழிய ...........................கருணை மறவ! எனவரும் சிலப்பதிகாரத்து. அடைக்கலக் காதையில்(22-53) மாடல மறையோன் கூற்றானும் உணர்க. மாதவிக்கு யான் நேரிலே தோன்றியும் உவகை கூறியுளேன்; ஆதலின் அவள் அறிகுவள் என்று அத் தெய்வம் கூறுதல் 35-40: நள்ளிருள்.........போயபின் (இதன் பொருள்) நள் இருள் கனவு அகத்தே நனவு போல- செறிந்த இருளையுடைய இடையாமத்தே துயிலிலாழ்ந்திருந்த அம் மாதவியின் கனவிலே நனவிலே தோன்றுமாறு போல அவள் நன்குணர்ந்து கொள்ளும்படி உருவங் கொண்டு தோன்றி; காமன் கை அறக் கடுநவை அறுக்கும் மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்றே உரைத்தேன்- நங்காய்! காம வேளின் குறும்பு தன்பாற் செல்லாமையாலே கையறவு கொள்ளும்படி பெருந் துன்பத்திற் கெல்லாம் பிறப்பிடமாகிய பிறவிப் பிணியை அறுத்தொழிக்கும் மிகப் பெரிய நோன்புகளாகிய நறுமண மலர்களைப் பூத்தற் கியன்றதொரு தெய்வப்பூங்கொடியையே நீ பெற்றுள்ளனை நீடூழி வாழ்க! என்று அவளை வாழ்த்தியுமிருக்கின்றேன்; ஈங்கு இவ்வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று-ஈங்கு இப்பொழுது கூறுகின்ற இந் நிகழ்ச்சியையும் நீ ஆங்கு அவள்பாற் சென்று கூறக்கடவை என்று சுதமதிக்குப் பணித்து; அருந்தெய்வம் ஆங்கு அந்தரத்து எழுந்து போனபின்-காண்டற்கரிய அம் மணிமேகலா தெய்வம் அப்பொழுதே அவள் கட்புலங் காண விசும்பிலே எழுந்து மறைந்து போனபின்பு; என்க. (விளக்கம்) நள்ளிருள்-என்றது மாதவி துயிலில் ஆழ்ந்திருந்த இடையாமம் என்பதுபட நின்றது. காமன் கையற என்றது-காமன் தன் செயலில் இவள்பால் தோல்வியுற்று வருந்த என்பதுபட நின்றது. இனி இவள் துறவுபூணுவதால் தன் வெற்றிக்கு இனி இவள் துணையாகாள் என்று காமன் கையறவு கொண்டான் என்பது மொன்று. கடுநவை என்றது பிறப்பினை. நோன்பாகிய மலர்களை மலரும் பூங்கொடி போல்வாள் என்க. எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் (குறள்-92) என்பதும், தம்மிற் றம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது (குறள்-68) என்பதும் கருதி மாதவி மகிழுமாற்றால் மணிமேகலா தெய்வம் அத்தகு மகவினைப் பெற்றாய் எனப் பாராட்டற் பொருட்டு மாபெருந்தவக் கொடியீன்றனை என ஓகை கூறினேன் என்று சுதமதிக்குக் கூறிய படியாம். கனவிற் பெரும்பாலன விழிப்புற்ற பின்னர்த் தெளிவாகத் தோன்றா அத்தகைய கனவன்று, அவள் நெஞ்சில் அழியாது பதிவுற்றிருக்கும் கனவு என்பது தோன்ற நனவே போலக் கனவகத் துரைத்தேன் என்றது. யான் ஈங்குக் கூறிய இந் நிகழ்ச்சியை நான் கூறியவாறே கூறிக் காட்டுக என்பதற்கு ஈங்கிவ் வண்ணம் ஆங்கவட்குரை என்று பணித்தது எனலுமாம். சுதமதி துயரொடு சக்கரவாளக் கோட்டம் புகப்போதலும் புகார் நகரத்து நள்ளிரவு வண்ணனையும் (42 ஆம் அடி முதலாக 86 ஆம் அடி முடியுந்துணையும் நள்ளிரவின் வண்ணனையாய் ஒரு தொடர்) 41-49: வெந்துயர்........ திரியவும் (இதன் பொருள்) சுதமதி வெம்துயர் எய்தி ஆங்கு எழுந்து- சுதமதி மணிமேகலையின் பிரிவாற்றாமையாலுண்டான வெவ்விய துன்பத்தை எய்தி அம் மலர்பொழிலின்கண் அவ்விடத்தினின்றும் எழுந்து செல்பவள்; அகல் மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி- அகன்ற தமதில்லத்திலே இயற்றப்பட்ட ஆடலரங்கத்திலே அக் கலைப் பயிற்சி செய்விக்கும் இயலாசிரியனும் ஆடலாசிரியனும் யாழாசிரியனும் குழலோனும் தண்ணுமையோனுமாகிய ஆசிரியரோடிருந்து ஆடற்கலையின் வகைகளைப் பயின்று கொள்ளும் மக்கட்கு வட்டணை முதலிய அவிநய வகைகளை யெல்லாம் செய்து காட்டி ஆடல்புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின்-ஆடல்கலையைப் பயிற்றுவிக்கின்ற அரங்கத்தே ஆடும் மகளிர் அத் தொழிலை நிறுத்திக் கண் முகிழ்த்துயிலுதல் போன்றே; கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று-அவ்வாடன் மகளிரோடு கூடி முழங்கிய, குழல் முதலிய குயிலுவக் கருவிகளும் தத்தம் கண்ணவிந்து வாளாது கிடப்பவும்; பண்ணுக்கிளை பயிரும் பண் யாழ்த் தீந்தொடை கொளைவல் ஆயமோடு இசை கூட்டு உண்டுபண்களையும் திறன்களையும் நன்கிசைக்கின்ற பண்ணுறுத்தப் பட்ட இனிய ஒலிகளையுடைய நரம்புகளை வருடிப் பண்பாடுதலில் வல்ல மகளிரோடே கூடியிருந்து யாழிசையும் மிடற்றுப் பாடலும் பிறவும் ஆகிய இசையின்பங்களை இனிது நுகர்ந்து பின்னர்; விளைசேர் செங்கை மெல்விரல் உதைத்த வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும்-துயில் மயக்கத்தால் மகளிர் வளைமணிந்த சிவந்த தம்முடைய கைவிரலாலே மெல்லென வருடிய நரம்புகள் வெப்பம் வேண்டுமளவு வெய்தாக உறாமையாலே தளர்ந்து அவற்றிலெழும் இசை தன் தன்மையில் பிறழா நிற்பவும் என்க. (விளக்கம்) ஆசிரியர்-ஆடற்கலைக் கின்றியமையாத குழலாசிரியர் முதலியோர். வட்டணை- வர்த்தனை; கமலவர்த்தனை. அஃதாவது கைத்தலங் காட்டல். இதனை, தோற்பொலி முழவும் யாழுந் துளைபயில் குழலு மேங்கக் காற்கொசி கொம்புபோலப் போந்து கைத்தலங்கள் காட்டி எனவரும் சிந்தாமணிக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் வலக் கால் முன் மிதித்தேறி வலத்தூணைச் சேர்ந்து கைத்தலங் காட்டுதல் கமலவர்த்தனை என்னும் விளக்கவுரையானு முணர்க. மாக்களை என்பதற்கு முதனீண்டதெனக் கொண்டு தம்மக்கட்கு எனக் கொள்க. ஆடற்கலையைக் கற்பிக்கும் மகளிர் என்க. குயிலுவக் கருவி குழல் முதலிய இசைக் கருவிகள். இதனை கூடிய குயிலுவக் கருவிக ளெல்லாம் குழல் வழி நின்ற தியாழே யாழ் வழித் தண்ணுமை நின்றதுதகவே, தண்ணுமைப் பின் வழி நின்றது முழவே முழவொடு கூடிநின் றிசைத்த தாமந் திரிகை என்பதனானுமுணர்க. (சிலப். 3:138-142) பண்ணும் கிளையும் என்க. கிளை- திறம். கொளை- பண். துயில் மயக்கத்தாலே மெல்விரலால் மெல்ல வருடலின் நரம்பில் வெப்பம் வெய்தாக உறதாக ஒலி தன்மையில் திரியவும் என்க. இதுவுமது 50-59: பண்பில்...... வதியவும் (இதன் பொருள்) பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது- தமது பாடறிந்தொழுகும் பண்பற்றவராகிய தம் காதலர் பரத்தையரோடு கூடியொழுகும் ஒழுக்கத்தைப் பொறாத குலமகளிர்; உண் கண் சிவந்து-அவர்பா லெழுந்த சினத்தாலே தம்மையுண்ட கண்கள் சிவக்கப் பெற்று; தெருட்டவும் தெருளாது ஊடலொடு துயில்வோர்- தம் கணவர் தம் பள்ளியிடத்தே வந்து தமது குற்றமின்மையைக் கூறி ஊடலுணர்த்தா நிற்பவும் ஊடல் தீராதாராய்ப் பொய்த்துயில் கொள்பவர்; விரைப் பூம்பள்ளி வீழ்துணை தழுவவும்- தம் சினத்திற்கஞ்சி மணமலர் பரப்பிய அப் பள்ளியிலே ஒரு புறத்தே கிடக்கின்ற தம்மால் விரும்பப்படும் அக் காதலரைத் துயில் மயக்கத்தாலே தழுவுவார் போலத் தழுவிக் கொள்ளவும் என்க. (விளக்கம்) காதலன் பரத்தமை நோனாது துயில்வோர் என்றது ஒருமைப் பன்மைமயக்கம். இதனை, அஃதை தந்தை அண்ணல் யானை அடுபோர்ச் செழியர் என்புழிப் போலக் கொள்க. ஊடலொடு பொய்த்துயில் கொள்வோர், தம் ஆற்றாமையால் தம்மருகே அஞ்சிக் கிடக்கும் காதலரைத் துயில் மயக்கத்தாலே தம்மையறியாது தழுவுவார் போலத் தழுவவும் என்க. என்னை? குலமகளிர்க்குத் தங்காதலர் பரத்தைமை நோனாது கடிந்தொழுகல் கூடாமையான் இங்ஙனம் உபாயத்தால் தழுவினர் என்க. இதனை. சேக்கை இனியார்பாற் செல்வான் மனையாளால் காக்கை கடிந்தொழுகல் கூடுமோ கூடா எனவரும் பரிபாடலினுங் காண்க.(பரி-20-86-7) இதுவுமது 54-63: தளர்நடை.......நடுநாள் (இதன் பொருள்) தளர் நடை ஆயிமொடு தங்காது ஓடி விளையாடு சிறு தேர் ஈர்த்து- தளர்த்த நடையையுடைய சிறாஅர் கூட்டத்தோடு கூடி ஓரிடத்தும் தங்கி இளைப்பாறுதலின்றி ஓடுதலைச் செய்து தாம் விளையாடுதற்கியன்ற சிறிய தேர்களை இழுத்து; மெய் வருந்தி-உடல் வருந்தி; அமளித்துஞ்சும் ஐம்படைத்தாலிக்குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்கு- அவ் வருத்தம் தீரப் பஞ்சணைமிசை ஆழ்ந்து துயில்கொண்டுள்ள ஐம்படைத்தாலி என்னும் பிள்ளைப் பணி பூண்டுள்ள மழலை பேசுகின்ற சிவந்த வாயையும் குறுகுறு நடக்கும் நடையையுமுடைய மக்களுக்கு; காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து தூபம் காட்டித் தூங்கு துயில் வதியவும்- செவிலித் தாயர் ஐயவியைத் தூவி அகிற்புகை காட்டிய பின்னர் அவர் பக்கலிலே தாமும் மிக்க துயிலிலே ஆழ்ந்து கிடப்பவும்; இறை உறை புறவும் நிறை நீர்ப்புள்ளும் காஉறை பறவையும்-இல்லிறப்பிலே தங்குகின்ற புறாக்களும் நிறைந்த நீர் நிலைகளிலே மலரின் மேலுறைகின்ற பறவைகளும் பொழிலிலே உறைகின்ற பறவைகளும்; நாஉள் அழுந்தி- தத்தம் நா அலகினாடே அழுந்தி ஓலியவிந்துறங்கியிருப்பவும்; விழவுக்களி அடங்கி முழவுக்கண் துயின்று பழவிறல் மூதூர் பாயல் கொள் நடுநாள்- விழாவின் மகிழ்ச்சியாரவாரமும் அடங்கி முழவு முதலிய இசைக்கருவிகளும் தம் கண்களில் ஒலியெழாது அவிந்து கிடப்பவும் பழைதாகிய வெற்றியையுடைய முதுமையுடைய அப் பூம்புகார் நகரமே இவ்வாறு பள்ளி கொண்டிருக்கின்ற இரவின் நடுயாமத்தே என்க. (விளக்கம்) தளர்நடை ஆயம் என்றது இளஞ்சிறாஅர் கூட்டத்தை அவர் ஆடும் பொழுது இளைப்பாற வேண்டும் என்று கருதி ஓரிடத்தும் தங்கியிருத்தலில்லை, இஃதவரியல்பு ஆகலின் தங்காது ஓடி என்றார். தேரில் ஏறி யின்புறுதற்கு மாறாக இவர் தேரினை ஈர்த்தலிலேயே பேரின்பம் எய்துவர், விளையாட்டினாலே மெய்வருந்திய வருத்தம் தீர இவர் பள்ளியில் ஆழ்ந்து துயிலுவர். இவர்க்குக் காவற் பெண்டிர் எறிந்து காட்டிப் பின் தாமும் துயில என்க. காவற் பெண்டிர்-செவிலித்தாயர். தூங்குதுயில்- மிக்கதுயில். கடிப்பகை-ஐயவி; வெண்சிறு கடுகு. ஐம்படைத்தாலி- திருமாலின் சங்கு முதலிய ஐந்து படைகளையும் பொன்னாற் செய்து கோத்ததொரு பிள்ளைப்பணி திருமால் காவற் கடவுளாதலின் மக்களைக் காத்தற் பொருட்டு அணிவது இவ் வைம்படைத்தாலி என்க. இறை-இறப்பு. புறவு- புறா, நீர்ப்புள்-நீரில் வாழுமியல்புடைய பறவைகள். பறவைகள் துயிலுங் காலத்தே மிகவும் ஆழ்ந்து துயல்வன ஆதலின் அவ்வியல்பு தோன்ற நாவுள்ளழுந்தி என்றார். அழுந்தித் துயிலவும் அடங்கித் துயின்றும் மூதூர் பாயல்கொள் நடுநாள் என்க. நள்ளிரவில் அந் நகரத்துள் நிகழும் நிகழ்ச்சிகள் 64-76: கோமகன்......அரவமும் (இதன் பொருள்) கோமகன் கோயில் குறுநீர்க் கன்னலின்- சோழமன்னனுடைய அரண்மனையின்கண் நாழிகை வட்டிலின் உதவியாலே; யாமங் கொள்பவர் ஏத்தொலியரவமும்- பொழுதினை அளந்து காணும் கணிமாக்கள் அரசனை வாழ்த்தும் பாடலோடு தாங்கண்ட பொழுதினை நகரத்துள்ளார்க்கு அறிவிக்கின்ற அரச வாழ்த்துப் பாடலாலெழுகின்ற ஒலியும்; உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து நிறை அழியானை நெடுங் கூவிளியும் கட்டப்பட்டிருக்கின்ற கொட்டிலினூடேயே நின்று கவளமும் கொள்ளாமையாலுண்டான மெய் வருத்தத்தோடே காம மிகுதியாலே நெஞ்சத்தின்கண் நிறையழிந்து யானைகள் தத்தம் காதற்றுணையைக் கருதி நீளிதாகப் பிளிறாநின்ற பிளிற்றொலியும்; தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும்- தேரோடுதற்குரிய பெருந் தெருக்களிடத்தும் சிறிய வழியாகிய முடுக்குகளிடத்துள்; ஊர் காப்பாளர் எறி துடியோதையும்- நகரங்காக்கும் காவன் மறவர் முழக்கும் துடியும் முழக்கமும்; முழங்கு நீர் முன் துறைக் கலம்புணர் கம்மியர்- ஆரவாரிக்கின்ற கடற்றுறையிடத்தே மரக்கலம் இயைக்கின்ற கம்மத் தொழிலாளர்; துழந்து அடுகள்ளின் தோப்பியுண்டு அயர்ந்து பழஞ் செருக்கு உற்ற அனந்தல் பாணியும்- தம்மிலத்திலேயே துழாவிச் சமைத்த நெல்லாலியன்ற கள்ளைப் பருகித் தம்மை மறந்து முதிர்ந்த செருக்குடனே அக் கள் மயக்கத்தூடே பாடுகின்ற பாடலோசையும்; அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை விரவிய மகளிர் ஏந்திய தூமத்து அரம் போன்ற வாயினையுடைய வேப்பிலையாகிய பேய்ப் பகையினையும் வெண்சிறு கடுகாகிய பேய்ப்பகையினையும் விரவியிட்ட தூபக்காலை மகளிர் கையிலேந்திய புகையினோடும் வந்து; புதல்வரைப் பயந்து புனிறுதீர் கயக்கம் தீர்வினை மகளிர்- மகவீன்றமையால் வாலாமையுடைய அணுமைக் காலம் தீர்ந்து தாயாராகிய மகளிர் ஈனுதலாலெய்திய கயக்கத்தை நீராடுதலாலே தீர்க்கின்ற தொழிலையுடைய குலமகளிர்; குளன் ஆடு அரவமும்- பிறர் தம்மை நோக்காமைப் பொருட்டு அவ்விடையிருள் யாமத்தே குளத்தின்கண் நீராடுதலாலே எழுகின்ற ஒலியும் என்க. (விளக்கம்) கோமகன்: சோழமன்னன். கோயில்-அரண்மனை குறுநீர்க் கன்னல் -காலத்தை அளந்து காண்டற்குரியதொரு கருவி. அஃதாவது ஒரு வட்டிலின்கண் நீரை நிரப்பி அதன் அடியில் மிகச்சிறியதொரு துளையமைத்து அத் துளை வழியாக நீர் வடியும் பொழுதினை நொடி நாழிகை முதலிய காலக் கூறுபாடாக அறிதற்கு வரையிட்டுப் பொழுதினை அளந்து காண்டல். இதனை. பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள் தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி எறிநீர் வையகம் செலீஇய செல்வோய்நின் குறிநீர்க் கன்னல் இனைத்தென் றிசைப்ப எனவரும் முல்லைப் பாட்டானும்(55-58) அறிக. யாமங் கொள்பவர்- நாழிகைக் கணக்கர். அவர் அரசனுக்குச் சென்று நாழிகைக்குக் கவி சொல்லுவார் எனவும், பூமென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு காமன் திரியும் கருவூரா- யாமங்கள் ஒன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையும் ஒன்றுபோ யொன்றுபோய் ஒன்று என்றோர் எடுத்துக் காட்டும் தந்தனர் அடியார்க்கு நல்லார் (சிலப்-5: 49-உரை விளக்கம்) உறையுள்-யானைக் கொட்டில். காமக்குணம் மேலிட்டிருத்தலால் கவளங் கொள்ளாது உடம்பு மெலிந்து வருந்தும்யானை நிறையழியானை எனத் தனித்தனி கூட்டுக. துடி-ஒருவகைத் தோற் கருவி. கலம் புணர் கம்மியர் என்றது மரக்கலஞ் செய்யும் கம்மாளரை. இனி மரக்கலத்தில் சேர்ந்து தொழில் செய்வோருமாம். துழந்தடுதல்-துடுப்பினாலே துழாவிச் சமைத்தல். தோப்பி- நெல்லாற் சமைத்த ஒருவகைக் கள் இல்லடுகள்ளின் தோப்பி பருகி எனவரும் பெரும்பாணாற்றுப் படையும் நோக்குக(142). செருக்கு-ஈண்டுக் கள்ளினா லெய்திய வெறி. அது தானும் நெடுங்காலமாகப் பயின்று முதிர்ந்த வெறி யென்பார், பழஞ்செருக்கு என்றார். அணந்தர்-மயக்கம். எனவே வாய்தந்தன பாடும் பாட்டு என்க. பாணி- பாட்டு. அரவாய்- வேப்பிலை: அன்மொழித்தொகை. ஐயவி வெண்சிறு கடுகு. கடிப்பகை- பேய்ப்பகை. அஃதாவது பேய் அஞ்சி யகலுதற்குக் காரணமாதலின் அதற்குப் பகையாகிய பொருள் என்றவாறு. புனிற்று மகளிராதலின் இருவகைக் காப்பும் வேண்டிற்று. கயக்கம் என்றது மகப்பேற்றால் உண்டான பொலிவழிவினை. மகவீன்ற சில நாளில் அக் கயக்கம் தீர்தற்கு நீராடி ஒப்பனை செய்தற்கேற்றதாக உடம்பு சீர்படும் அன்றோ, அத்தகைய செவ்வியைப் புனிறு தீர்ந்த செவ்வியாகக் கேடல் மரபு. அங்ஙனஞ் செவ்வியுறுதற்கு ஒன்பது நாட்கள் வேண்டும். பத்தா நாளிரவிற் சென்று குளிர்ந்த நீரினாடி வாலாமை கழிப்பர் எனக் கூறும் நூல் உளது என்பர் அறிஞர் இவ்வாறு நீராடும் வழக்கத்தை கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து பணைத்தேந் திளமுலை யமுத மூறப் புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு வளமனை மகளிர் குளநீ ரயர எனவரும் மதுரைக் காஞ்சியானும் (600-603) உணர்க. குளன்: போலி இதுவுமது 77-87: வலித்த....கலங்கி (இதன் பொருள்) வலத்த நெஞ்சின் ஆடவர் அன்றியும்- தம்முள் ஒருவரோடொருவர் பகை கொண்டு கறுவு கொண்ட நெஞ்சினையுடைய பகை மறவர் யாருமில்லாதிருந்தும்; புலிக்கணத்து அன்னோர் பூத சதுக்கத்து-புலிக்கூட்டத்தையே ஒத்தவராகிய அந்நகரத்து மறக்குடிப் பிறந்த போர் வீரர்கள் பூத சதுக்கம் என்னுமிடத்திற்குத் தாமே வந்து; கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்க என- புலிக்கொடி யுயர்த்திய தேரையுடைய நங்கள் சோழ மன்னன் சென்ற போர்தொறும் வென்றியே கொள்வானாக என்று பராவி; இடிக்குரல் முழக்கத்து இடும்பலி ஓதையும்-இடி போன்று முழங்கும் வீர முரசமுழக்கத்தோடே சதுக்கப்பூதத்திற்குத் தம்முயிரைத் தாமே வழங்குகின்ற ஆரவாரமும்; ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் கடுஞ்சூல் மகளிர் நெடும்புண் உற்றோர் தம் துயர் கெடுக்கும் மந்திரமாக்கள் மகவீன்ற இளமகளிரும் துன்பம் பொறாத பால்வாய்ச் சிறு குழவிகளும் தலைச் சூல் உற்றிருக்கின்ற மகளிரும் நெடிய புண்பட்டு வருந்துவோரும் ஆகிய இத்தகையோர் பேய் முதலியவற்றானும் பிணியானும் எய்திய துன்பத்தைத் தீர்த்தற் பொருட்டு மந்திரம் பண்ணும் மந்திரவாதியர்; மன்றப் பேய்மகள் வந்துகைக் கொள்கென நின்று எறி பலியின் நெடுங்குரல் ஓதையும்-வாகை மன்றத்திலே வதிகின்ற பேய்த்தலைவி வந்து யாம் தருகின்ற ஆடு கோழி முதலியவற்றின் குருதிப் பலியை ஏற்றருள்கவென்று அப் பேயை வண்ணித்துப் பாடிக் கூவி அழைக்கின்ற நெடிய அழைப்பாரவாரமும்; பல்வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்பக் கேட்டு உளங் கலங்கி- நரியின் ஊளையும் நாயின் குரைப்பும் ஆகிய இன்னோரன்ன பிற ஆரவாரங்களும் திசையெலாம் பரவி ஒருங்கே கேட்கும் பேராரவாரத்தைக் கேட்டு நெஞ்சம் அச்சத்தாலே கலங்கி; என்க. (விளக்கம்) பகைவர் இல்லாத காலத்தேயும் மன்னவன் கொற்றம் நாளும் நாளும் உயர்க என்று வீரமறவர் தம் முயிரையே தெய்வத்திற்குப் பலியிடும் வழக்க முண்மையை, ஆர்த்துக் களங்கொண்டோர் ஆரம ரழுவத்துச் சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங் குயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரன் முழக்கத்து மயிர்க்கண் முரசமொடு வான்பலி யூட்டி எனவரும் சிலப்பதிகாரத்தானும் (5:83-8) உணர்க. இதனை அவிப்பலி என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். இது வீரச்சுவை: அவிப்பலி செய்வோர் பலிக்கும் வலிக்கும் தலைவரம்பாயோர் என்னும் மாபெரும் புகழ்க்குரியோர் என்ப. ஈற்றிளம் பெண்டிர் முதலியோர் பிணி முதலியவற்றிற்கியன்ற மருந்துண்ணவும் பத்தியங் காக்கவும் வலியற்றவர் ஆவர். இவர்க்கு மனவலியும் இன்மையின் பேயாலே எளிதிற் பற்றப்படுவர். ஆதலின் இவர் துயர் மந்திர மாக்களாலேயே தீர்க்கப்படும்; ஆதலால் இத்தகையோரைத் தனியே வாங்கி எண்ணினர். இச் செயல் தமக்குடன்பாடன்மையின் மந்திர மாக்கள் என்றார். என்னை? உயிர்க் குயிரீதல் மடமை என்பாள் சம்பாபதி கொலை அறமாமெனும் கொடுங்தொழி லாளர் அவலப் படிற்றுரை ஆங்கது என முன்னைக் காதையில் (162-163) அறிவுறுத்துதலும் நினைக. மன்றம்- வாகைமன்றம். காய்பசிக் கடும்பேய் கணங்கொண்டீண்டு மாமலர் பெருஞ்சினை வாகை மன்றமும் என் முன்னும் கூறினமை (சக்கர. 82-83) நினைக. நின்றெறி பலி என்றது ஆடு கோழி முதலியவற்றின் குருதியிற் குழைத்த சோற்றினை வானத்தே எறியும் பலி என்றவாறு. இவ்வோசையெல்லாம் சுதமதி கேட்டுக் கலங்கி என்க. சுதமதி உலக வறவியிற் புகுதல் 87-93: ஊட்டிருள்.......இருத்தலும் (இதன் பொருள்) முருந்து ஏர் இளநகை ஊட்டு இருள் அழுவத்து பூம்பொழில் நீங்கி-முருந்து போன்ற கூர்த்த வெள்ளிய பற்களையுடைய அச் சுதமதியானவள் காரரக்கின் குழம்பினை ஊட்டினாற் போன்று பெரிதும் இருண்டுகிடக்கும் பரம்பினையுடைய அந்த உவவனமாகிய பூம்பொழிலினின்றும் நீங்கி; திருந்து குடபால் எயில் சிறுபுழை போகி-அழகிய மேற்றிசைமதலி னமைந்த சிறிய வாயிலிற் புகுந்து சென்று; மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த சக்கரவாளத்து ஆங்கண்- மிகவும் சிறந்த அருளுடைய பெரிய மணிமேகலா தெய்வம் வியந்து எடுத்துக் கூறிய சக்கரவாளக் கோட்டத்தே ஆங்கோரிடத்தே; பலர் புகத்திறந்த பகுவாய் வாயில்- வருவோர் பலரும் புகுதற் பொருட்டுத் திறந்தே கிடக்கின்ற பிளந்தவாய் போன்ற வாயிலிற் புகுந்து; உலக வறவியின் ஒருபுடை இருந்தாலும்-உலக வறவி என்னும் ஊரம் பலத்தே ஒரு பக்கத்திலே அமர்ந்திருத்தலும்; என்க. (விளக்கம்) அருளுடைமைபற்றி மணிமேகலா தெய்வத்தை மிக்க மா தெய்வம் என்றார். பகுவாய்- பிளந்த வாய். வாய் போன்ற வாயில் என்க. உலகவறவி-பூம்புகார் நகரத்துப் பெரியதோர் ஊரம்பலம். அஃதுலகத்துள்ள மாந்தர்க் கெல்லாம் பொதுவிடம் என்பது புலப்பட அதற்கு அப் பெயர் இடப்பட்ட தென்க. கந்தற்பாவை சுதமதியை விளித்தல் 94-105: கந்துடை........கேளாய் (இதன் பொருள்) நெடுநிலை உடைக் கந்து அந்தில்- நெடிதாக நிற்கும் நிலையினையுடைய தூணாகிய அவ்விடத்தே; காரணம் காட்டிய எழுதிய அற்புதப் பாவை- பண்டு மயன் என்பான் வருபவர் பிறப்பிற்குக் காரணமாகிய அவருடைய முற்பிறப்பு முதலியவற்றை அறிவித்தற் பொருட்டியற்றிய வியத்தகு படிமத்திலே உறைகின்ற தெய்வம் ஒன்று; மைத்தடங் கண்ணாள் மயங்கியருள் வெருவ- அச் சுதமதி பின்னும் அவ்விருளில் மயங்கி அஞ்சும்படி; திப்பியம் உரைக்கும் தெய்வக்கிளவியின்-இறந்த கால எதிர்கால நிகழ்ச்சிகளைக் கூறுகின்ற தெய்வத்தன்மையுடைய தனக்குரிய தெய்வ மொழியாலே பேசத் தொடங்கி; இரவி வன்மன் ஒரு பெருமகளே துரகத்தானைத் துச்சயன் தேவி- இரவி வன்மன் என்பவனுடைய ஒப்பற்ற பெருமையுடைய மகளே! குதிரைப்படை மிக்க துச்சயன் என்பவனுடைய மனைவியே! தயங்கு இணர்கோதை தாரை சாவு உற- விளங்குகின்ற மலர் மாலையணிந்த நின் தமக்கையாகிய தாரை என்பாள் பொறுக்ககில்லாது இறந்தொழியும்படி; மயங்கி யானை முன் மன்னுயிர் நீத்தோய்- மயக்கமுற்று யானை முன் சென்று நிலைபெற்ற உயிரை விட்டவளே!; காராளர் சண்பையில் கௌசிகன் மகளே- காராளர் மிக்கு வாழ்கின்ற சண்பை மாநகரத்தேயுறையும் கௌசிகன் என்னும் பார்ப்பனன் மகளே! மாருத வேகனொடு இந்நகர் புகுந்து தாரை தன்னொடு கூடிய வீரையாகிய சுதமதி கேளாய்- மாருதவேகன் என்னும் விச்சாதரன் கைப்பற்றின்மையாலே அவனோடு இப் பூம்புகார் நகரத்தே வந்து தாரையாகிய நின் தமக்கை மாதவியோடு கூடி யுறைகின்ற வீரையாகிய சுதமதியே! ஈதொன்று கேட்பாயாக! (என்று விளித்து முன்னிலைப்படுத்தி) என்க. (விளக்கம்) நெடுநிலை உடைக்கந்து அந்தில் என மாறிக் கூட்டுக. காரணம்-இப் பிறப்பிற்குக் காரணமான பழம்பிறப்பு. காட்டிய: செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; காட்ட என்க.மயன் எழுதிய பாவை, அற்புதப் பாவை எனத் தனித்தனி கூட்டுக. மைத்தடங் கண்ணாள் என்றது சுதமதி என்னும் பெயராந்துணை. மயங்கி வெருவ என்க. திப்பியம்- தெய்வத் தன்மையான செய்தி. அஃதாவது, பழம்பிறப் புணர்த்துதல் எதிரது கூறல் முதலியன. தெய்வக்கிளவி- தெய்வத்திற் கியன்ற மொழி. அஃதாவது வாயாற் கூறாமல் வானொலி மாத்திரையாகவே கூறுதல். இரவிவன்மன்- அசோதர நகரத்து அரசன். சுதமதியின் முற் பிறப்பில் அவட்குத் தந்தையானவன். துச்சயன்- சுதமதியின் முற்பிறப்பிற் கணவனாயிருந்தவன். இவன் கச்சய நகரத்து மன்னன். தாரை- சுதமதியின் முற்பிறப்பிலே அவளுக்குத் தமக்கையாயிருந்தவள். வீரை என முற்பிறப்பிற் பெயர் பெற்றிருந்த சுதமதி, யானை யாலறையுண் டிறந்தாள்; அது பொறாமல் தாரை தானே உயிர் விட்டாள் என்பது கருத்து. சண்பை- சீகாழி. அங்க நாட்டிலுள்ள சம்பா நகரம் என்பாருமுளர். மயங்கி- கள்ளால் மயங்கி என்பதுபட நின்றது. தாரை மறுபிறப்பில் மாதவியாகப் பிறந்தாள்; வீரையாகிய நீ சுதமதியாகப் பிறந்து அவளோடு கூடினை என்றறிவித்தபடியாம். இனி, அன்புக் கேண்மை கொண்டு வாழ்பவர் இம்மை மாறி மறுமை எய்திய விடத்தும் மீண்டும் கூடி அவ்வன்பினை வளர்த்துக் கொள்வார் என்பது பௌத்த சமயத்தினர் கோட்பாடாதல் பெற்றாம். ஆசிரியர் இளங்கோவும் இக்கொள்கையை யுடையர் என்பதனைச் சிலப்பதிகாரத்து (30) வரந்தரு காதையின் நிகழ்ச்சிகளால் அறியலாம். மேலும் அவர் நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும் அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும் என்றோதியதற்கு ஈண்டுத் தாரையும் வீரையுமாகிய அற்புளஞ் சிறந்த உடன் பிறந்த மகளிரிருவரும், மறுபிறப்பில் மாதவியும் சுதமதியும் வேறு இடங்களினும் குடிகளினும் பிறந்திருந்தும் பற்றுவழி மீண்டும் கூடியது சிறந்த எடுத்துக் காட்டாதலும் அறிக. இதுவுமது 104-110: இன்றேழ்.......... நல்லாள் (இதன் பொருள்) இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து- இற்றைக்கு ஏழாநாளின் இரவின் இருள் செறிந்த இடையாமத்திலே; இலக்குமியாகிய நினக்கு இளையாள் தன் பிறப்பதனொடு நின்பிறப்பு உணர்ந்து ஈங்கு வரும்- முற்பிறப்பிலே இலக்குமி என்னும் பெயரோடிருந்த நின் தங்கை தன் முற்பிறப்பினையும் உன்னுடைய முற்பிறப்பினையும் அறிந்துகொண்டு இந் நகரத்திற்கு வருவாள் காண்!; அஞ்சல் என்று உரைத்தது அவ் உரை கேட்டு- ஆதலால் நீ அஞ்சாதே கொள்! என்று அக் கந்திற் பாவை தன் தெய்வக் கிளவியாலே தெரிந்துக் கூறியதாக அந்த மொழிகளைக் கேட்டு; நெஞ்சம் நடுங்குறூஉம் நேரிழைநல்லாள்- அச்சத்தால் தன்னுள்ளம் நடுங்குகின்ற அச் சுதமதி நல்லாள்; என்க. (விளக்கம்) இடையிருள் யாமம்- நள்ளிரவு. இலக்குமி என்றது மணிமேகலையின் முற்பிறப்பின்கண் அவட்கெய்திய பெயரை. இதனால் மாதவியும் சுதமதியும் மணிமேகலையும் பிறப்பிலே நிரலே தாரையும் வீரையும் இலக்குமியும் என்னும் பெயர்களையுடைய ஒரு தாய்வயிற்றுடன்பிறந்த மகளிராயிருந்தனர் என்பது பெற்றாம். தெய்வம் கூறிற்றேனும் அது தெய்வமொழியாதல் பற்றியும் மகளிர் இயல்பு பற்றியும் சுதமதிக்கு அச்சமே பிறந்தது. என்னை? அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே (மெய்-8) எனவரும் தொல்காப்பியம் அணங்கும் அச்சம் பிறத்தற்கு நிலைக்களமாம் எனக் கூறுதலும் நினைக. அணங்கு- தெய்வம். நேரிழை நல்லாள் என்றது வாளாது சுதமதி என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. (111 ஆம் அடிமுதலாக 124 ஆம் அடிமுடிய வைகறைப் பொழுதின் வண்ணனையாய் ஒரு தொடர்) பூம்புகாரில் வைகறை யாமத்து நிகழ்ச்சிகள் 111-124: காவலாளர்..........பரந்தெழ (இதன் பொருள்) காவலாளர் கண்துயில் கொள்ள- இரவெல்லாம் துயிலின்றி நகரங்காத்த காவற் றொழிலாளர் கண் மூடித் துயிலா நிற்பவும்; தூமென் சேக்கைத் துயில் கண் விழிப்ப-தூய மெல்லிய பஞ்சணையிற் றுயின்று கொண்டிருந்த காதலர்கள் கண்கள் துயிலுணர்ந்து விழித்துக் கொள்ளவும்; வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப- வலம்புரிச் சங்கங்கள் பொருளின்றி மங்கலமாக ஆரவாரிப்பவும்; புலம்புரிச்சங்கம் பொருளொடு முழங்க அறிவை விரும்புகின்ற புலவர் கூட்டம் கடவுள் வாழ்த்தாகிய பொருளோடு பாடி முழங்கா நிற்பவும்; புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்ப-புள்ளிகளையுடைய முகத்தையுடைய யானைகள் தம்மைக் குளிர் நீராட்டும் பாகரை நெடிதாகக் கூவிப் பிளிறவும்; பொறி மயிர் வாரணம் குறுங்கூ விளிப்ப- புள்ளி பொருந்திய மயிரையுடைய கோழிச் சேவல்கள் குறிய கூவுதலாலே கதிர்வரவியம்பா நிற்பவும்; பணைநிலைப் புரவி பல எழுந்து ஆல- பந்தியிற் கட்டப் பெற்று நிற்றலையுடைய பலப்பலவாகிய குதிரைகளும் அந் நிலையை வெறுத்து நிலை யெர்ந்து கனையா நிற்பவும்; பணைநிலைப் புள்ளும் பல எழுந்து ஆல- மரக்கிளைகளிலே உறக்கத்தே நிலை பெற்ற காக்கை முதலிய பறவைகளும் எழுந்து ஆரவாரிப்பவும்; பூம்பொழில் ஆர்கை புள்ளொலி சிறப்ப- மலர்ப் பொழில்களினூடே நிறைந்துள்ள பறவைகளின் பாட்டொலி மிகா நிற்பவும்; பூங்கொடியார் கை புள்ளொலி சிறப்ப- மலர்க் கொடி போன்ற மகளிரின் கையிலணிந்த வளையல்களின் ஒலியும் மிகா நிற்பவும்; கடவுள் பீடிகை பூப்பலி கடைகொள்-இரவில் விழாக் கொள்ளும் கடவுளர்க்குப் பலிபீடங்களிலே மலர்ப்பலியிட்டு விழாவை முடிவு செய்யா நிற்பவும்; கலம்பகர் பீடிகை கடை பூம்பலி கடை கொள்-அணிகலம் விற்கும் அங்காடித் தெருவில் கடைகளெல்லாம் முற்றத்தே மலர்ப்பலி கொள்ளா நிற்பவும்; குயிலுவர் கடைதொறும் பண்இயம் பரந்து எழ-இசைக்கருவியாளர் உறையுமிடமெல்லாம் பண்ணிசையும் கருவியிசையும் பரவி எழாநிற்பவும்; கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் சிற்றுண்டி செய்து கொடுப்போர் கடைதோறும் சிற்றுண்டிகள்; பரந்து எழ- பரவுதல் செய்து மிகா நிற்பவும்; என்க. (விளக்கம்) காவலளார்-ஊர்காப்பாளர்; தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் ஊர்காப்பாளர் எறிதுடி யோதையும் என இக் காதையில்(68-69) முன்னும் கூறப்பட்டமை யுணர்க. சேக்கைத் துயில்கண் என்றது காதலர் கண்களை துயில்வோர் விரைப் பூம்பள்ளி வீழ்துணை தழுவவும் என முன்னும்(52-53) கூறப்பட்டமை உணர்க. வலம்புரிச்சங்கம்- சங்குகளிற் சிறந்தது. இது மங்கலச் சங்கு புலம்-அறிவு. புகர்முக வாரணம்-யானை. பொறிமயிர் வாரணம்- சேவல். பொழில் ஆர்கை- பொழிலில் நிறைதலையுடைய. பூங்கொடியார் கைப்புள் என்றது-வளையலை. மாதர் இல்லத்தே தொழிலில் முனைதலின் வளைகள் மிக்கொலித்தன என்றவாறு. இனி, பூங்கொடியில் தாதுண்ணும் அறுகாற் சிறு பறவையின் இசையொலி எனினுமாம். கலம்பகர் பீடிகை-அணிகலம் விற்கும் அங்காடித் தெரு. கடை- அங்காடித் தெருவிலுள்ள பல்வேறு கடைகளும் என்க. கடை வாயிலில் வைகறையில் பூவிடுதங் மரபு. குயிலுவர்-இசைக் கருவி குயிலுவோர். கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று என முன்னும் வந்தமை யறிக. பண்ணியம்- தின் பண்டங்கள். கொடுப்போர்- செய்து கொடுப்போர். இவர் உணவு விற்போர் என்க. சுதமதி மாதவியைக் கண்டு மணிமேகலையைப் பற்றிக் கூறுதலும்; இருவர் நிலைமையும் 125-134:ஊர்துயில்.........தானென் (இதன் பொருள்) ஊர் துயில் எடுப்ப-இவ்வாறு அம் மூதூரில் வாழ்வாரையெல்லாம் உறக்கத்தினின்றும் எழுப்புதற்கு; உரவு நீர் அழுவத்துக் கார் இருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும் வலிமைமிக்க நீர்ப்பரப்பாகிய குணகடலினின்றும் கரிய இருளைத் துரந்து கதிரவன் தோன்றா நிற்பவும்(சுதமதி நல்லாள்) ஏ உறு மஞ்ஞையின் இனைந்து-அம்பேறுண்ட மயில் போன்று பெரிதும் உளம் வருந்தித் தன் மெல்லடிகள் வருந்துமாறு, மாநகர் வீதி மருங்கின் போகி-அப் பூம்புகார் நகரத்து வீதி வழியாக நடந்து சென்று; போய கங்குலிற் புகுந்ததை யெல்லாம் கழிந்த இரவிலே நிகழ்ந்த நிகழ்ச்சிகளை யெல்லாம்; மாதவி தனக்கு வழுவின்று உரைத்தலும்- மாதவிக்குச் சிறிதும் பிறழாமல் கூறியதனாலே; அவள் நல் மணி இழந்த நாகம் போன்று தன் மகள் வாராத் தனித்துயர் உழப்ப-அம் மாதவிதானும் தான் உமிழ்ந்த அழகிய மணியை இழந்துவிட்ட நாகப் பாம்பு போன்று தன் மகளாகிய மணிமேகலை மீண்டு வாராமையாலே எழுந்த மாபெருந்துன்பத்திலே அழுந்தா நிற்ப; துன்னியது உரைத்த சுதமதி- மணிமேகலைக்கு நிகழ்ந்ததனை மாதவிக்குக் கூறிய அச் சுதமதி தானும்; இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்- தனக்கினிய உயிரையே இழந்தொழிந்த உடம்புபோல இருப்பாளாயினள்; என்பதாம். (விளக்கம்) உரவுநீர்-கடல். ஆக்கல் அளித்தல் அழித்தல் என்னும் மூன்று பேராற்றலும் உடையதாகலின் அதற்கது பெயராயிற்று. உரவு-ஆற்றல். அழுவம்-பரப்பு. ஏ-அம்பு. இனைதல்-வருந்துதல். இஃது உள்ளத்தின்கண் எய்திய துயரத்திற்குவமை ஆதலின் அடிவருத்தத்தை வேறு கூறினர். போய கங்குல்-கழிந்த இரவு. எல்லாம்- எஞ்சாமைப் பொருட்டு. வழு-குற்றம்; ஈண்டுப் பிறழ்ச்சி. வாராத் துயர் என்புழி பெயரெச்சத் தீறு கெட்டது. தனித் துயர்- பெருந்துன்பம். சுதமதிதானும் எனல் வேண்டிய எச்சவும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. இனி இக்காதையை- மணிமேகலையை மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி உதயகுமரன் இருந்தோன் முன்னர்த் தோன்றி மகனே! கோல் திரிந்திடின் கோள் திரியும் கோள் திரிந்திடின் வறங்கூறும் கூரின் உயிர் இல்லை. உயிர் வேந்தன் உயிர் என்னும் தகுதி இன்றாகும். அவத்திறம் ஒழிகென உரைத்தபின் சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி அஞ்சல், மணிமேகலை யான், ஏது முதிர்ந்தது, இளங்கொடிக்கு; ஆதலின் பெயர்த்து வைத்தேன் இன்று ஏழ் நாளில் வந்து தோன்றும். ஒளியாள் ஈங்கு நிகழ்வன பலவுள. மாதவிக்கு உரையாய்! என்திறம் உணரும்! கனவகத்துரைத்தேன் உரை எனப் போயபின், சுதமதி எழுந்து கேட்டுக் கலங்கிப் போகி ஒரு புடை இருத்தலும், பாவை கிளவியின் மகளே! தேவி நீத்தோய், சுதமதி கேளாய் இளையாள் வரும் அஞ்சல் என்றுரைத்த உரை கேட்டு, நல்லாள் கதிரவன் முளைத்தலும் வருந்தப் போகி மாதவிக்கு உரைத்தலும், அவள் உழப்ப, சுதமதி இருந்தனள் என இயைத்துக் கொள்க. துயிலெழுப்பிய காதை முற்றிற்று. | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை
எட்டாவது மணிமேகலை மணிபல்லவத்துத் துயிலெழுந்து துயருற்ற பாட்டு
அஃதாவது: மணி பல்லத்தின்கண் மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் துயில் கலையாமலே வைத்துப் போன பின்னர் அத்தீவகத்தில் துயில்கொண்டிருந்த மணிமேகலை வைகறையிலேயே வழக்கம்போல் துயிலுணர்ந்து நோக்கினவள் அவ்விடம் தான் கண்டிராத புதிய இடமாயிருத்தல் கண்டு யாதொன்றும் காரணங் காணமாட்டாளாய்ப் பெரிதும் திகைத்தனள். கதிரவன் தோன்றிய பின்னர் ஆங்கு எழுந்து சுற்றிப் பார்த்து மக்கள் வழக்கமும் இல்லாமையால் வருந்தித் தன் தந்தையை நினைந்து அழுதரற்றும் செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு. இதன்கண் மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் துயிலக்கிடத்திய மணிபல்லவத்தின் வண்ணனையும் பூம்புகார் நகரத்து உவவனத்தே துயில்கொண்டு மணிபல்லவத் தீவின் கண் துயிலுணர்ந்த மணிமேகலை பண்டறி கிளையொடு பதியும் காணாளாய்க் கண்டறியாதன கண்ணிற் கண்டு மருள்பவளின் நிலைமையை இப் புலவர் பெருமான் தன்மை நவிற்சியாகக் கூறிக் காட்டும் புலமைத்திறமும் பெரிதும் போற்றத் தகுவனவாக அமைந்திருத்தல் காணலாம். மணிமேகலை மருண்டு தந்தையை நினைந்து அழுதரற்றும் பகுதி ஓதுபவர் உள்ளத்தை உருக்கம் இயல்பிற்றாக அமைந்துளது. மணிபல்லவத் தீவு அழகொழுகப் புனைந்துரைக்கப்பட்டுள்ளது. அப்பால் அத் தீவிலுள்ள புத்தபீடிகையின் வரலாறும் தெய்வத்தன்மையும் இக்காதையில் இனிது கூறப்பட்டுள்ளன. ஈங்கு இவள் இன்னணம் ஆக இருங் கடல் வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின் முத்து விளை கழனி முரி செம் பவளமொடு விரை மரம் உருட்டும் திரை உலாப் பரப்பின் ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின் ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி முடக் கால் புன்னையும் மடல் பூந் தாழையும் வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் 08-010 அறல் விளங்கு நிலா மணல் நறு மலர்ப் பள்ளித் துஞ்சு துயில் எழூஉம் அம் சில் ஓதி காதல் சுற்றம் மறந்து கடைகொள வேறு இடத்துப் பிறந்த உயிரே போன்று பண்டு அறி கிளையொடு பதியும் காணாள் கண்டு அறியாதன கண்ணில் காணா நீல மாக் கடல் நெட்டிடை அன்றியும் காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப உவவன மருங்கினில் ஓர் இடம்கொல் இது! சுதமதி ஒளித்தாய்! துயரம் செய்தனை! 08-020 நனவோ கனவோ என்பதை அறியேன்! மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்! வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் மெல் வளை! வாராய் விட்டு அகன்றனையோ? விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள் வஞ்சம் செய்தனள்கொல்லோ? அறியேன்! ஒரு தனி அஞ்சுவென் திருவே வா! எனத் திரை தவழ் பறவையும் விரி சிறைப் பறவையும் எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும் அன்னச் சேவல் அரசன் ஆக 08-030 பல் நிறப் புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி பாசறை மன்னர் பாடி போல வீசு நீர்ப் பரப்பின் எதிர் எதிர் இருக்கும் துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும் யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள் குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி வீழ் துயர் எய்திய விழுமக் கிளவியின் தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி எம் இதில் படுத்தும் வெவ் வினை உருப்ப 08-040 கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து வை வாள் உழந்த மணிப் பூண் அகலத்து ஐயாவோ! என்று அழுவோள் முன்னர் விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி உரை பெறு மும் முழம் நிலமிசை ஓங்கித் திசைதொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று விதி மாண் நாடியின் வட்டம் குயின்று பதும சதுரம் மீமிசை விளங்கி அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது 08-050 பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது தேவர் கோன் இட்ட மா மணிப் பீடிகை பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம் கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும் இருவர் மன்னவர் ஒரு வழித் தோன்றி எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார் செங் கண் சிவந்து நெஞ்சு புகையுயிர்த்துத் தம் பெருஞ் சேனையொடு வெஞ் சமம் புரி நாள் இருஞ் செரு ஒழிமின் எமது ஈது என்றே 08-060 பெருந் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் பொரு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் 08-063 மணிபல்லவத்தே மணிமேகலை துயிலுமிடத்தின் மாண்பு 1-12: ஈங்கிவள்.........அஞ்சிலோதி (இதன் பொருள்) இவள் ஈங்கு இன்னணம் ஆக- இப் பூம்புகார் நகரத்திலே மணிமேலையைப் பிரிந்து ஆற்றாமையால் பெரிதும் வருந்திய சுதமதி என்பாளின் நிலைமை இவ்வாறாக; இருங்கடல் வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்து இடை- பெரிய கடலினது நாற்புறமும் வளைந்து வந்து மோதுகின்ற அலைகளை அணிந்துள்ள மணி பல்லவம் என்னும் தீவினகத்தே; தத்து நீர் அடை கரை சங்கு உழுதொடுப்பின் முத்து விளை கழனி-தவழுகின்ற நீரை அடைக்கின்ற கரையினையும் சங்குகளால் உழப்பட்டு விதைத்த விதைப்பின்கண் முத்துக்களாகிய கூலம் விளைகின்ற வயல்களையும்; முரி செம்பவளமொடு விரை மரம் உருட்டும் திரை உலாப் பரப்பின்- கொடிகளிலே முரிந்த சிவந்த பவளக் கொடிகளையும் உடை கலங்களினின்றும் மிதந்த சந்தனம் முதலிய நறுமண மரங்களையும் சுமந்து வந்து உருட்டுகின்ற அலைகள் உலாவுகின்ற நெய்தனிலப்பரப்பினையும்; ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின்- புலிநகக் கொன்றை மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள தாழ்ந்த நன்னீர் ஊற்றுக் கண்களையுடைய ஈரம்புலராத நிலப்பகுதியினையும் ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி வண்டு உண மலர்ந்த- ஆம்பலும் குவளையுமாகிய கொடிகள் தம்முள் விரவிப் படர்ந்து கலந்து பசித்துவருகின்ற வண்டுகள் தாதுண்டு மகிழுமாறு மலர்ந்திருக்கின்ற; குண்டு நீர் இலஞ்சி- ஆழமான நீரையுடைய பொய்கைக் கரையினையும்; முடக்கால் புனையும் மடல் பூந் தாழையும் வெயில் வரவு ஒழித்த-அக்கரையின் மேனின்ற முடம்பட்ட காலையுடைய புன்னை மரமும் மடலாற்சிறந்த பூவினையுடைய தாழையும் தழைத்துச் செறிதலாலே வெயில் புகுதாதபடி தடுத்துள்ள; பயில் பூம் பந்தர்-பயிலுதற் கினிய பூக்களோடியன்ற நீழலின் கீழ்; அறல் விளங்கு நிலாமணல் நறுமலர்ப்பள்ளி- வரிவரியாகத் திகழா நின்ற நிலவொளி போன்ற நிறமமைந்த மணற்பரப்பின் மேல் மணிமேகலா தெய்வம் பரப்பிய நறிய மலராகிய பாயலின் மேலே; துஞ்சு துயில் எழூஉம் அம்சில் ஓதி-ஆழ்ந்து துயின்ற துயிலினின்றும் வழக்கம் போன்று எழுகின்ற மணிமேகலை; என்க. (விளக்கம்) ஈங்கு இவள் என்றது புகார் நகரத்துள்ள சுதமதி என்றவாறு. இன்னணம்- இவ்வாறு இவள் இவ்வாறாக எனவே, இஃது இனி யாம், மணிமேகலா தெய்வம் விஞ்சையிற் பெயர்த்து மணி பல்லவத்திடை வைத்து நீங்கிய மணிமேகலையின் திறங் கூறுவாம் என்று குறிப்பாக நுதலிப் புகுந்தவாறாயிற்று. வாங்கு- வளைந்த. அடைகரையினையுடைய கழனி சங்கு உழுகழனி தொடுப்பின் கழனி முத்துவிளை கழனி என்று தனித்தனி கூட்டுக. இது சொல் மாத்திரையால் மருதத்திணை கூறியபடியாம். உழுதல் கூறவே வித்தலும் விளைபொருளும் கூறினார். சங்கு உழுது முத்தாகிய விதையை விதைப்ப முத்தாகிய கூலங்களே விளையும் கழனி என்றார். கழனி- மருதத்திணையில் விளைநிலம். முரி செம்பவளம்: வினைத்தொகை. கொடியில் முரிந்த செம்பவளம் என்றவாறு. விரை மரம்-சந்தன மரம் முதலியன. இவை உடை கலத்தினின்றும் மிதந்தவை. நீரினின்றும் மரங்களைக் கரை யேற்றுவார் அவற்றை உருட்டியே ஏற்றவர் ஆதலின் உருட்டுந்திரை என்றார். மரமுருட்டியவர் இளைப்புற்றுச் சிறிது வாளாதுலாவுதலும் இயல்பாதலின், இத் திரைகளும் அங்ஙனமே உலாவும் என்றார். ஞாழல்- புலிநகக் கொன்றை. தீவுகளின் கரையோரப் பகுதிகள் தாமே நன்னீர் ஊற்றெடுக்கும் ஊற்றுக் கண்களையுடையனவாய் எப்பொழுதும் நீர்க்கசிவுடையவாய் வளமுடையவாகவும் இருத்தல் இயல்பு. அவ்விடத்தே ஞாழல் முதலிய மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. அசும்பு- நீர்க்கசிவுடைய நிலம். அவ்விடத்தே இலஞ்சியும் ஒன்றுளதாயிருந்தது. அதன்கரையில் புன்னையும் தாழையும் தழைத்தோங்கி வெயில் புகாதபடி தடுத்து நிழலிட்டிருந்தன. அதன்கீழ் நிலவொளி தவழும் மணற் பரப்பின் மேலே புதிய மலர்களைப் பரப்பி அம் மலர்ப் பாயலின் மேல் மணிமேகலா தெய்வம் தனது பேரருளுக்கு ஆளான மணிமேகலையைத் துயிலவிட்டு அத் தெய்வம் அகன்றது என்பது இதனால் இனிது பெற்றாம். கதிரவன் எழுமுன்னர்த் துயிலுணர்ந்து எழுகின்ற தன் வழக்கப்படியே மணிமேகலை துயிலெழுந்தாள் என்பது தோன்ற அந்நறுமலர்ப் பள்ளித் துஞ்சுதுயில் எழு மஞ்சில் ஓதி என்றார். என்னை? ஆண்டுத் துயிலுணர்த்துவார் பிறர் யாரும் இன்மையின் அப்பொழுது அங்ஙனம் துயிலுணர்ந் தெழுவது அவள் வழக்கம் என்பது போதருதலறிக. துஞ்சு துயில் என்றது துஞ்சுதல் போன்று தன்னையறியாது ஆழ்ந்து துயிலும் துயில் என்றவாறு. துஞ்சினாற் செத்தாரின் வேறல்லர் என்பார் வள்ளுவனார். நல்லுறக்கத்திற்கு இயல்பும் இதுவே என்றுணர்க. மணிமேகலையின் மருட்கை நிலை 13-27: காதல்.......வாவென (இதன் பொருள்) காதல் சுற்றமும் மறந்து கடைகொள் வேறு இடத்துப் பிறந்த உயிரே போன்று-அன்பு காரணமாகத் தனக்குத் தாயே தந்தையே மாமனே மாமியே இன்னோரன்ன உறவுத் தொடர்ப்பாட்டோடு தன்னைச் சூழ விருந்த சுற்றத் தாரை எல்லாம் ஒருசேர மறந்து இம்மை வாழ்க்கை இறுதி எய்த மீண்டும் வேறோர் இடத்தே சென்று புதிய பிறப்பினை எய்தியதோர் உயிர் போலவே; பண்டு அறிகளையொடுபதியும் காணாள்-முன்பு தான் பயின்றறிந்த தாய் முதலிய சுற்றத்தாரோடு தான் வாழ்தற் கிடமான புகார் நகரத்தையும் காணாதவளாகி; கண்டு அறியாதன கண்ணிற் காணா-முன்பு ஒரு பொழுதும் கண்டறியாத புதிய பொருள்களையும் இடத்தையுமே தன் கண்களாலே கண்டு மருளும் பொழுது; நீல மாக்கடல் நெட்டிடை அன்றியும் காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப நீலநிறமுடைய பெரிய கடல் நெடுந்தூரத்திற் கிடத்தலின்றித் தன்னருகே கிடத்தலாலே அந்த விடியற்காலத்தே ஞாயிற்றுமண்டிலம் தன் கதிர்களை விசும்பிலே பரப்பி அக்கடலினின்றும் தோன்றுதல் கண்டு தான் இருக்கும் இடத்தை ஐயுற்று ஆராய்பவள்; உவவனம் மருங்கினில் இது ஓர் இடம் கொல்- நெருநல் யான் சுதமதியோடு மலர் கொய்ய வந்துபுக்க உவவனத்தினுள் அமைந்துள்ள ஓரிடமே இவ்விடம் ஆதல் வேண்டும். ஆம். ஆம். இஃதுவ வனத்தில் ஓரிடமே; ஆயின், சுதமதி யாண்டுப் போயினள்? அவள் நம்மை அசதியாடக் கருதி அயலிலே ஒளிந்திருப்பாள் என்று கருதி; சுதமதி ஒளித்தாய் துயரஞ் செய்தனை-சுதமதீ! சுதமதீ! நீ ஒளித்திருக்கின்றாய்காண்! விளையாடுஞ் செவ்வி இஃதன்று காண்! ஒளித்துறைதல் வாயிலாய் நீ எனக்குத் துன்பமே செய்தொழிந்தாய்!; நனவோ கனவோ என்பதை அறியேன்- அன்புடையோய்! யான் இப்பொழுது விழிப்பு நிலையிலிருக்கின்றேனா! அல்லது துயிலிடத்தே கனவுதான் கண்டு மருள்கின்றேனா! இவற்றுள் எந்நிலையினேன் என்று அறிகின்றிலேன்; மனம் நடுங்குறூஉம் மாற்றம் தாராய்-என் நெஞ்சம் அச்சத்தால் நடுங்குகின்றது ஆதலால் விளையாடாதே கொள்! மறுமொழி தருவாய்!; வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் வலிய இரவு எப்படியோ கழிந்தொழிந்தது நம்மைக் காணாமையால் அன்னையாகிய மாதவி பெரிதும் மயங்கித்துன்புறுவாள் அல்லளோ? எல்வளை வாராய்-ஓ சுதமதி! இத்துணை கூறியும் நீ என்முன் வந்தாயில்லையே!; விட்டு அகன்றணையோ-அன்புடையோய் ஒரோவழி நீ என்னைத் தமியளாய் ஈண்டே துயில விட்டுப் போய்விட்டனையோ? அவ்வாறு போகவும் துணியாயே! விஞ்சையில் தோன்றிய விளக்கு இழைமடவாள் வஞ்சம் செய்தனள் கொல் அறியேன்-என்னிது! என்னிது! ஒரோவழி நெருநல் இரவு விந்தையுடையவளாய் நம்பால் வந்தெய்திச் சக்கரவாளக் கோட்டத்து வரலாறு கூறிக்கொண்டிருந்த மங்கை ஏதேனும் வஞ்சகச் செயல் செத்தொழிந்தனளோ? அவள் என்னாயினள் என்றும் அறிகின்றிலேனே! ஒரு தனி அஞ்சுவென் திருவேவா என- பெருந்தனிமையாலே எய்தும் துன்பத்திற்கும் அஞ்சுகின்றேன் அருட்செல்வமேயனைய சுதமதியே விரைந்து என்முன் வருதி! என்று பற்பலவும் கூறிக்கொண்டு; என்க. (விளக்கம்) மணிமேகலா தெய்வத்தாலே முழுதும் வேறாய இடத்திலே விஞ்சையாற் பெயர்த்து வைத்த மணிமேகலைக்கு இம்மைமாறி வேறிடத்திற் பிறந்த உயிரை இப்புலவர் பெருமான் உவமையாக எடுத்துக்கூறும் புலமைத்திறம் நினைந்து நினைந்து மகிழற் பாலதாம். ஓரிடத்தே துயின்று அத்துயில் கலையாமலேயே மற்றோரிடத்தே பெயர்த்திடப்பட்ட ஒரு பெண் துயிலுணர்ந்து கொள்ளும் மருட்கையை இவர் எத்துணைத் திறம்படத் தன்மை நவிற்சியாகப் புனைந்துள்ளார், நோக்குமின்! மணிபல்லவத்தின் கீழ்ப்பகுதியில் கடன் மருங்கிலமைந்தது மணிமேகலையை வைத்த இலஞ்சிக்கரை ஆதலால் கதிரவன் நீரினின்றே அணித்தாகத் தோன்றும் காட்சியை மணிமேகலை நன்கு கண்டனன் என்பது தோன்ற நீல மாக்கடல் நொட்டிடை யன்றியும் காலை ஞாயிறு கதிர் விரிந்து முளைப்ப எனக் கதிரவன் தோற்றத்தை விதந்தெடுத்து விளம்பினர். முன்னாளிரவு உவவனத்திலேயே இரவிடை இவள் துயில்கொண்டவளாதலின் இஃது உவவனத்தின்கண்ணமைந்த ஓரிடமே என்று ஊகிக்கின்றாள். அங்ஙனமாயின் நம்மோடிருந்த சுதமதி யாண்டுளள் என்று பின்னர் ஆராய்கின்றனள். மற்று அவளைக் காணாமையின், அவள் நம் பால் கழிபெருங் காதலுடையாள் ஆதலின் நம்மைக் கைவிட்டுப் போகத் துணியாள் ஆயின், அவள்? .......அவள் முன்பே துயிலுணர்ந்தவள் நம்மை எழுப்பவும் மனமின்றி இவள் தானே எழுக! என்றிருந்தவள் நாம் எழுந்து திகைப்பது கண்டு நகைப்பது கருதி இவ்விடத்திலே மறைந்துறைபவள் ஆதல் வேண்டும் என்று மணிமேகலை ஊகிக்கின்றாள்; இஃது இயற்கையோடு எத்துணைப் பொருத்தமாக அமைந்துளது காண் மின்! இங்ஙனம் ஊகித்தவள் உரத்த குரலில் சுதமதீ! சுதமதீ! சுதமதீ! என்று பன்முறை கூவி அழைத்திருப்பாள்; அங்ஙனம் அழைத்தாள் என்பதனைப் புலவர் பெருமான் அடுக்கிக் கூறாது சுதமதி ஒளித்தாய்! என ஒருமுறை விளித்தாள் போலக் கூறினரேனும் இதனைப் பாட்டிடை வைத்த குறிப்பால் யாம் உரையில் அடுக்கிக் கூறினாம். சுதமதி ஒளிந்துறைந்தாலும் அண்மையிலேயே ஒளிந்திருப்பாள் என்னும் கருத்தால் சுதமதி ஒளித்தாய் என அண்மை விளியால் விளித்தனள்; விளித்து நீ ஒளித்திருக்கின்றனை என்பது தெரிந்து கொண்டேன் எழுந்து வருதி என்பது இதன் குறிப்பாம். பின்னர்ப் பன்முறை விளித்தும் அவள் வாராமையாலே, இது கனவோ நனவோ என்பதை யறியேன் மனம் நடுங்குறூஉம் மாற்றந்தாராய் என்று தன்னிலை கூறி விரைந்து வெளிவர வேண்டுகின்றனள். பின்னும் சுதமதி அசதியாட ஒளிந்தே இருக்கின்றாள் என்றுட் கொண்டு அங்ஙனம் விளையாட்டயரும் செவ்வியோ இஃது என்று அவட்குப் பேதைமை யூட்டுவாள் வல்லிருள் கழிந்தது நம் வரவு காணாமையாலே மாதவி பெரிதும் மயங்குவளே அதனை நீ நினைந்திலையோ என அவள் விரைந்து வருதற்கு ஏதுவும் கூறி அழைக்கின்றாள். பின்னும் சுதமதி வாராமையால் முன்னாளிரவு தம்மோடு சொல்லாடி யிருந்த விஞ்சையிற் றோன்றிய விளங்கிழை மடவாள்நினைவு அவள் உள்ளத்தே அரும்புகின்றது. அவள் ஏதேனும் வஞ்சம் செய்திருப்பாளோ என்று ஐயுறுகின்றாள்; மருள்கின்றாள். பின்னும் சுதமதியே ஒரு தனி அஞ்சுவன் திருவே வா என்றிரந்து வேண்டுகின்றாள்.இத்துணையும் நிகழ்ந்தபின் சுதமதி ஈண்டில்லை. ஆதலின் அவ் வஞ்சவிஞ்சை மகளால் ஏதோ குறும்பு செய்யப்பட்டுளதோ என்று ஐயுறுகின்றாள்; இஃது உவவனம் அன்று போலும்! அதனை ஆராய்வல் என்னும் எண்ணத்தாலே எழுந்து ஆராயத் தலைப்படுகின்றனள். இப்புலவர் பெருமான் தாமே ஈண்டு அம் மணிமேகலையாய் மாறிவிடுகின்ற அவர்தம் வித்தகப் புலமையை எத்துணைப் புகழ்தாலும் மிகையாகாது. வாழ்க அவர் புகழும் அவர் வழங்கிய தண்டமிழ்க் காப்பியமும். மணிமேகலை எழுந்து திரிந்து இடம் ஆராய்தல் 28-35: திரைதவழ்........காணாள் (இதன் பொருள்) திரை தவழ் பறவையும் விரிசிறைப் பறவையும் எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும்- நீரின் மேலே தவழ்ந்து சென்று இரை தேர்கின்ற கடற்பறவைகளும் விரிந்த சிறகுகளோடு வானத்தில் பறந்து திரிந்து இரை தேர்கின்ற பறவைகளும் ஓரிடத்தினின்றும் மற்றோரிடத்திற்கு நீரினின்றும் எழுந்து பறந்துபோய் வீழுகின்ற சில்லைச்சாதிப் பறவைகளும்,ஓடுங்கிய சிறகுகளுடனே நீரினுள் முழுகித் தமக்கியன்ற இரையைப் பற்றிக்கொண்டு தலைதூக்கும் முழுவற் சாதிப் பறவைகளும் ஆகிய நால் வேறு வகைப்பட்ட பறவைகளும் நால் வேறு படை மறவர்களாகவும்; சேவல் அன்னம் அரசனாக-அவற்றுள் சேவலாகிய அன்னப் பறவையே அரசனாகவும்; பல் நிறப் புள்ளினம் பரந்து ஒருங்கு ஈண்டி-பல்வேறு நிறம் அமைந்த பறவைக்கூட்டம் பரந்து தனித்தனியிடத்தே குழுமி; பாசறை மன்னர் பாடி போல- பகை மன்னரிருவர் போர் ஆற்றுதற் பொருட்டு நால் வேறு படைகளுடனே வந்து பாசறையிலிருப்போர் ஒருவர்க்கொருவர் எதிர் எதிர் ஆகத் தத்தம் படையை எதிர் எதிரே விட்டிருந்தாற் போன்று; வீசு நீர்ப்பரப்பின் எதிர் எதிர் இருக்கும்-அலைஎறிகின்ற நெய்தனிலப் பரப்பிலே (துறையினது) இருபக்கங்களிலும் எதிர் எதிரே இருக்கின்ற கடற்றுறையும்; துறைசூழ் நெடுமணற் குன்றமும் யாங்கணும் திரிவோள்-அத் துறையைச் சூழ்ந்துள்ள நெடிய மணற் குன்றுகளும் ஆகிய எவ்விடத்தும் திரிந்து நோக்கி வருபவள்; பரங்கு இனம் காணாள் பண்டு தன் பக்கத்திலே காணப்படும் பொருள்களுக்கு இனமாகிய எப் பொருளையும் காணப் பெறாளாகி என்க. (விளக்கம்) இவர் கடற்பறவையை அவை இரைதேருமாற்றாலேயே ஈண்டு நான்கு வகையாகப் பிரித்துக் காட்டுகின்றனர். அவையாவன; நீரின்மேல் தவழ்ந்து தமது தோலடியாலே நீரை உதைத்துச் சென்று எதிர்ப்படுகின்ற இரையை அலகாற் பற்றிக் கொள்வனவும்; விசும்பிலே பறந்த வண்ணமே திரிந்து இரையைக்காணும் பொழுது வீழ்ந்து பற்றிக் கொள்வனவும்,ஓரிடத்தினின்றும் மற்றோரிடத்திற்குப் பறந்துபோய் விழுந்து இரை தேர்ந்து பற்றிக் கொள்வனவும், சிறகொடுக்கி நீரினுள் முழுகி நீரினூடேயே இயங்கி ஆங்ககப்படும் இரையைப்பற்றிப் பின் தலை தூக்குவனவுமாம். இவற்றிற்கு(1. அன்னம், 2. சிரல், 3. கடற்காக்கை, 4. குளுவை முதலியவற்றை எடுத்துக் காட்டுகளாகக் கொள்க. இவற்றுள் அன்னச் சேவல் சிறந்திருத்தலின் அதனை அரசன் என்றார். நால் வேறுபடைகளுக்கு நால்வேறு பறவை இனம் காட்டினர். வீசு நீர்ப்பரப் பென்றது அலைதவழும் நிலப் பகுதியை. துறை கூறினர் ஆங்கு மக்கள் இலரேனும் மரக்கலங்கள் வந்து நங்கூரமிட்டு நிறுத்தப் படுவதும் மக்கள் கலத்தினின்றும் இறங்கித் தங்கியிருத்தலும் நிகழ்தலின் அதற்கான துறையும் அங்கு உண்டு என்பதுணர்த்தற்கு. இதனை, வங்க மாக்களொடு மகிழ்வுட னேறிக் கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின் மாலிதை மணிபல் லவத்திடை வீழ்த்துத் தங்கிய தொருநாள் தானாங் கிழிந்தனன் இழிந்தோன் ஏறினன் என்றிதை எடுத்து வழங்குநீர் வங்கம் வல்லிருள் போதலும் வங்கம் போயபின் வருந்துதுயர் எய்தி அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் எனவும்(14-79-86) கம்பளச் செட்டி கலம்வந் திறுப்ப எனவும் இந்நூலில் பிறாண்டும் வருவனவற்றாலறிக. (25:184) இனி, இதனோடு கம்புட் கோழியுங் கனைகுர னாரையுஞ் செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும் கானக் கோழியு நீர்நிறக் காக்கையும் முள்ளு மூரலும் புள்ளும் புதாவும் வெல்போர் வேந்தர் முனையிடம் போலப் பல்வேறு குழூஉக் குரல்பரந்த வோதையும் எனவரும் சிலப்பதிகாரப் பகுதியை (10.114-119) ஒப்பு நோக்குக. மணிமேகலை தந்தையை நினைந்து அழுதல் 36-43: குரற்றலை.......முன்னர் (இதன் பொருள்) குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழகொத்துக் கொத்தாக அடர்ந்துள்ள தன் தலையின்கட் கூந்தல் சரிந்து பின்புறத்தே வீழுமாறு; அரற்றினள் கூஉய் அழுதனள் வாய்விட்டு அரற்றிக் கூவி அழுதவளாய்; ஏங்கி வீழ்துயர் எய்திய விழுமக்கிளவியில் தாழ்துயர் உறுவோள்-ஏங்கி நிலத்தில் வீழ்தற்குக் காரணமான துன்பமுடைய துயரந் தருகின்ற மொழிகளைக் கூறுதலோடே ஆழ்ந்த தனிமைத் துன்பத்தை நுகர்பவள்; தந்தையை உள்ளி-தன் அன்புத் தந்தையாகிய கோவலனை நினைவு கூர்ந்து; எம் இதின் படுத்தும் வெவ்வினை உருப்ப எம்மை இந்நிலையாமைக் காளாக்கிய வெவ்விய ஊழ்வினை வந்துருத்தலாலே; கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து வைவாள் உழந்த- திரண்ட வளையலணிந்த காதலாளாகிய என் அன்னையுடனே வேற்றுவர் நாட்டிலே சென்று ஆங்குக் கூரியவாளே றுண்ணும் கொடிய துன்பத்தை நுகர்ந்த; மணிப்பூண் அகலத்து ஐயாவோ என்று அழுவோள் முன்னர்- மணியணிகலன் அணியும் அழகிய மார்பினையுடைய ஐயாவோ என்று கதறி அழுகின்ற அம் மணிமேகலையின் முன்னர் என்க. (விளக்கம்) குரல் தலைக்கூந்தல்- கொத்துக் கொத்தாகத் தலையிலுள்ள கூந்தல் என்க. துன்பத்தானாதல் இன்பத்தானாதல் நெஞ்சம் நெகிழ்ந்துழிக் கூந்தல் நெகிழ்தல் ஒரு மெய்ப்பாடாம்; இதனை கூழைவிரித்தல் என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார்(மெய்ப்-14) விழுமக் கிளவி- துன்பத்திற் பிறந்த சொல். துன்ப மிக்கவர் அன்புடையோரை உள்ளுதலியற்கை. மகளிர்க்கு அவ்வழி அழுகை வருதல் இயல்பு. தந்தைக்கு வந்த வெவ்வினையே தம்மை இந் நெறியிற் செலுத்தியது என்னாமல் எம்மை இங்ஙனம் துன்புறும் நெறியிற் செலுத்தவந்த யாஞ் செய் வெவ்வினையே நும்மை வைவாள் உழப்பித்தது என்பாள் எம்மிதிற் படுத்தும் வெவ்வினை என்கின்றாள். மாதர்-காதல். மாதர் என்றாள் கண்ணகியின் கற்புச் சிறப்பு மேம்பட்டுத் தோன்றுதற்கு. ஐயா என்றது அத்தனே என்றவாறு. மணிமேகலைக்குப் புத்த பீடிகை புலப்படுதல் (44 ஆம் முதலாக, 42 ஆம் அடி முடியப் புத்த பீடிகையின் வண்ணனையாய் ஒரு தொடர்) 44-53: விரிந்திலங்.......ஆசனம் (இதன் பொருள்) விரிந்து இலங்கு அவிர் ஒளிசிறந்து கதிர் பரப்பி- நாற்றிசையினும் பரவித்திகழும் பேரொளி இடையறாது மிகுதலாலே எப்பொழுதும் சுடரைப் பரப்பிக்கொண்டு, உரை பெறும் மும்முழம் நிலமிசை ஓங்கி- சிற்பநூலிற் கூறப்படுகின்ற முறைப்படி மூன்று முழம் நிலத்தினின்று முயர்ந்தம்; திசை தொறும் ஒன்பான் முழம் நிலம் அகன்று- நான்குதிசைகளினும் ஒன்பதுமுழம் நிலப்பரப்பின்மேல் அகன்றும்; மீமிசை-அப்பீடத்தின் உச்சியிலே நடுவிடத்தே, விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று- நூல்விதியினாலே மாண்புடைய பளிங்கினாலே வட்ட வடிவமான பீடமிட்டு; பதும் சதுரம் விளங்கி-அதன் நாப்பண் புத்தருடைய பாதபங்கயம் அழுந்திக் கிடந்த சதுரவடிவிற்றாகிய மேடையால் விளக்கமெய்தி; தேவர்கோமான்- அமரர்க்கு அரசனாகிய இந்திரன் இதுதான்; அறவோற்கு அமைந்த ஆசனம் என்று-அறத்தின் திருவுருவமாகிய புத்த பெருமான் எழுந்தருளுதற்குப் பொருந்திய இருக்கையாம் என்று சொல்லி, இட்ட மாமணிப் பீடிகை-இடப்பட்ட சிறந்த மணிகள் இழைத்த பீடிகையாதலாலே; மரம் நறுமலர் அல்லது பிற சொரியாது-அயலில் நிற்கின்ற மரங்கள் தாமும் தன்மேலே நறிய மணங்கமழும் புதிய மலர்களைக் சொரிவதல்லது பிறவற்றைச் சொரியப்படாததும்; பறவையும் உதிர் சிறை பாங்கு சென்று அதிராது பறவைகள் தாமம் உதிரும் இயற்கையையுடைய சிறகுகள் தமக்கிருத்தலாலே தன் பக்கலிலே தம் சிறகுகளை அடித்துப் பறத்தலில்லாததும்; பிறப்பு விளக்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம்-தன்னைக் கண்டவர்க்கெல்லாம் அவரவர் முற்பிறப்பு விளங்கித் தோன்றுவதற்குக் காரணமாய் விளங்குகின்ற தெய்வத்தன்மையுடைய ஒளியையுடையதும் ஆகிய அறப்பெருந் தகையாளனாகிய புத்தருடைய இருக்கையாம்; என்க. (விளக்கம்) அப்பீடிகை தன்னைக் கண்ட முற்பிறப்புக்களை யுணர்த்துவது. அவ்வாறே பறவைகளும் மரமும் பறவையும் அதன் தெய்வத்தன்மையை உணர்தலின் மரம் மலரன்றிப் பிறவற்றைச் சொரியாது. பறவை அதன் சிறகதிர்ந்து பறவாது என்றவாறு. பரப்பி ஓங்கி அகன்று குயின்று விளங்கி அமைந்த ஆசனம் அது தானும் சொரியப் படாததும் அதிர்க்கப்படாததும் தேவர்கோன் இட்டதும் ஆகிய பீடிகை, அதுதானும் பிறப்பு விளங்கும் ஒளியையுடைய அறத்தகை ஆசனமுமாம் என இயைத்திடுக. அறத்தகை-புத்தர். இதுவுமது 54-63: கீழ்நில......ஆங்கென் (இதன் பொருள்) கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி ஈது எமது என்றே எடுக்கல் ஆற்றார்- கிழக்குத் திசையிலுள்ள நாகநாட்டினை ஆளுகின்ற இருவேறு மன்னர்கள் அம் மணிபல்லவத்திலே ஒரே செவ்வியில் வந்து, இத் தீவு எம்முடையதாகலின் இம் மாமணிப்பீடிகையும் எமக்கே உரியதாகும் என்று இருவரும் தனித் தனியே உரிமை கொண்டாடி அதனைத் தத்தம் நாட்டிற்குக் கொண்டுபோக எண்ணித் தனித்தனியே நிலத்தினின்றும் பெயர்த்தெடுத்தற்குப் பெரிதும் முயன்றும் அது செய்யவியலாதாராகிய பின்னரும்; தம் பெரும் பற்று நீங்கலும் நீங்கார்-அதன்பால் பசைஇய தத்தம் அவாவினை விலக்குதலும் செய்யவியலாதாராய்த் தம்முடையதே என்னும் உரிமையை நிலைநாட்டுதற் பொருட்டு ஒருவரோடொருவர் இகலி; செங்கண் சிவந்து நெஞ்சு புகை உயிர்த்து தம் பெருஞ் சேனையோடு வெஞ்சமம் புரிநாள்-இயற்கையாகவே சிவந்துள்ள தங்கண்கள் சினத்தாலே மேலும் சிவக்க நெஞ்சம் புகையை உயிர்ப்பத் தத்தமக்குரிய பெரிய படைகளைத் திரட்டிக் கொண்டு வெவ்விய போர்த்தொழிலைச் செய்கின்றபொழுது; பெருந்தவ முனிவன்- பெரிய தவத்தினையுடைய வினையினீங்கி விளங்கிய அறிவினையுடைய முனைவனாகிய புத்தபெருமான் எழுந்தருளி; ஈது எமது இருஞ்செரு ஒழிமின் என்றே- இப் பீடிகை எமக்கே உரிமையுடையதாகும் ஆதலால் நீயிர் ஆற்றும் போரினை ஒழிமின் என்று இருவரையும் அமைதியுறச் செய்த பின்னர்; இருந்து அறமுரைக்கும்-அதன்மேலமர்ந்து அவ்விருவருக்கும் தமது அறத்தைச் செவியறிவுறுத்தியருளிய; பொருவு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் தரும் பீடிகை தோன்றியது-ஒப்பற்ற சிறப்புண்மையாலே மேலோர் வாழ்த்தி வணங்குகின்ற அத் தரும பீடிகை மணிமேகலை கண்ணிற்குப் புலப்படுவதாயிற்று; என்பதாம். (விளக்கம்) நாவலந் தீவிற்குக் கிழக்கே கடலினூடமைந்த நாக நாட்டை ஆட்சி செய்யும் இருவேறு மன்னர் என்க. தீவு; தமக்கே உரியதாகலின் அதன் கண்ணமைந்த மாமணிப் பீடிகையும் எமக்கே உரியதாம் என்று உரிமை கொண்டாடி எடுக்க முயன்று இயலாமையால் தம்முடைய தென்னும் உரிமையை நிலைநாட்ட இருவரும் படை கூட்டிப் பெரும்போர் செய்தனர் என்பது கருத்து. அவர் போரை ஒழித்து அவ்வரசர்க்கு அதன் மேலிருந்து புத்தர் தாமே அறமுரைத்தலாலே அப் பீடிகை பொருவறு சிறப்புடையதாயிற் றென்க. மற்று அவ்வரசர் அதனைக் கண்டபோது அவர்க்கு அவர்தம் பழம் பிறப்புணர்ச்சி வாராமைக்குக் காரணம் அவர் உள்ளம் அன்பிற்படாது அவாவின்பாற் பட்டிருந்தமை என்க. அன்றி, புத்தன் எழுந்தருளித்தன்மேலமர்ந்து அறமுரைத்த பின்னரே அப் பீடிகைக்கும் அவ்வாற்றல் வந்துற்றதென்க கோடலுமாம். பற்று- பொருள்களின்பால் பசைஇய அறிவு. இருஞ்செரு- பெரும்போர். பெருந்தவ முனிவன்: புத்தன். உலகிலுள்ள பிற புத்த பீடிகைகளுக்கு முற்பிறப்புணர்த்தும் ஆற்றலின்மையின் பொருவது சிறப்பின் தரும்பீடிகை என அதன் தனித்தன்மையை விதந்தோதினர். இதன் இக் காதையை- ஈங்கு இவள் இன்னணமாக, மணிபல்லவத் திடை நறுமலர்ப் பள்ளித் தூங்கு துயில் எழூஉம் அஞ்சில் ஓதி, காணாள் கண்டு, முளைப்பச் சுதமதி துயரஞ் செய்தனை அறியேன் மாற்றம் தாராய் மாதவி மயங்கும் அகன்றனையோ மடவாள் செய்தனள் கொல்லோ அஞ்சுவன் வா எனத் திரிவோள் காணாள் வீழ ஏங்கி உறுவோள் உள்ளி அழுவோள் முன்னர்ப் பீடிகையாகிய ஆசனம், முனிவன் அறமுரைக்கும் அத் தரும் பீடிகை தோன்றியது என இயைத்திடுக. மணிபல்லவத்துத் துயருற்ற காதை முற்றிற்று. | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
9. பீடிகைகண்டு பிறப்புணர்ந்த காதை
ஒன்பதாவது மணிமேகலை மணிபல்லவத்திடைப் பீடிகை கண்டு பிறப்புணர்ந்த பாட்டு
அஃதாவது மணிமேகலை மணிபல்லவத்தில் நறுமலர்ப் பள்ளியினின்றும் துயிலுணர்ந்தவள் அவ்விடத்துப் புதுமையால் பெரிதும் மருண்டு ஞாயிறு தோன்றிய பின்னர் எழுந்து யாங்கணும் திரிபவள் தன்முன்னே தோன்றிய புத்தபீடிகையைக் கண்ணுற்றபொழுது அப் பீடிகையின் தெய்வத்தன்மை காரணமாகத் தனது பழம் பிறப்பு வரலாற்றைக் உணர்ந்துகொண்ட செய்தியைக் கூறுஞ்செய்யுள் என்றவாறு. இதன்கண் ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ள காரணத்தாலே மணிமேகலை புத்தபீடிகையைக் கண்டவுடனேயே இறையன்பாலே அவட்கெய்திய மெய்ப்பாடுகளும், அதனை அன்புடன் வலம் வந்து நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்தவுடனே தனது முற்பிறப்பின் செய்திகளை எல்லாம் உணர்ந்துகோடலும், முற்பிறப்பிலே பிரமதருமன் என்னும் முனிவனைத் தான் கண்டவாறே தன் அகக்கண் முன்னர்க் காண்டலும், முற்பிறப்பிலே காயங்கரை என்னும் யாற்றின் கரையிலிருந்து அம்முனிவர் பெருமான் தனக் குரைத்தவை எல்லாம் அவ்வாறே நிகழ்கின்றன என்று விம்மித மெய்துதலும், தான் அசோதரம் ஆளும் இரவிவன்மன் என்னும் அரசனுக்கும் அமுதபதி என்னும் அரசிக்கும் மகளாய் இலக்குமி என்னும் அரசிளங்குமரியா யிருந்தமையும்; தான் , சித்திபுரம் என்னும் நகரத்து அரசன் தேவியாகிய நீலபதி என்னும் அரசி வயிற்றிற் றோன்றிய அரசிளங் குமரனாகிய இராகுலனுக்கு வாழ்க்கைத்துணைவியாகியதும் பிறவும் ஆகிய செய்திகள் பலவும் மருட்கையணி தோன்ற மிகவும் அழகாகப் புனைந்துரைக்கப்படுகின்றன. ஆங்கு அது கண்ட ஆய் இழை அறியாள் காந்தள் அம் செங் கை தலை மேல் குவிந்தன தலைமேல் குவிந்த கையள் செங் கண் முலை மேல் கலுழ்ந்து முத்தத் திரள் உகுத்து அதின் இடமுறை மும் முறை வலமுறை வாரா கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து ஆங்கு எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து தொழு தகை மாதவ! துணி பொருள் உணர்ந்தோய்! காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் 09-010 வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன் காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டுப் பூருவ தேயம் பொறை கெட வாழும் அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன் மைத்துனன் ஆகிய பிரமதருமன்! ஆங்கு அவன் தன்பால் அணைந்து அறன் உரைப்போய் தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவிடை இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள் நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே! பூமி நடுக்குறூஉம் போழ்தத்து இந் நகர் 09-020 நாக நல் நாட்டு நானூறு யோசனை வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும் இதன்பால் ஒழிக என இரு நில வேந்தனும் மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம் ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே பறையின் சாற்றி நிறை அருந் தானையோடு இடவயம் என்னும் இரும் பதி நீங்கி வட வயின் அவந்தி மா நகர்ச் செல்வோன் காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை சேய் உயர் பூம்பொழில் பாடி யெய்து இருப்ப 09-030 எம் கோன் நீ ஆங்கு உரைத்த அந் நாளிடைத் தங்காது அந் நகர் வீழ்ந்து கேடு எய்தலும் மருள் அறு புலவ! நின் மலர் அடி அதனை அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டிச் சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய அருளறம் பூண்ட ஒரு பேர் இன்பத்து உலகு துயர் கெடுப்ப அருளிய அந் நாள் அரவக் கடல் ஒலி அசோதரம் ஆளும் இரவிவன்மன் ஒரு பெருந்தேவி அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று 09-040 இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன் அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள் நீலபதி எனும் நேர் இழை வயிற்றில் காலை ஞாயிற்றுக் கதிர் போல் தோன்றிய இராகுலன் தனக்குப் புக்கேன் அவனொடு பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும் எட்டு இரு நாளில் இவ் இராகுலன் தன்னைத் திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால் தீ அழல் அவனொடு சேயிழை மூழ்குவை 09-050 ஏது நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின் கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய தவாக் களி மூதூர்ச் சென்று பிறப்பு எய்துதி அணி இழை! நினக்கு ஓர் அருந் துயர் வரு நாள் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி அன்று அப் பதியில் ஆர் இருள் எடுத்து தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் வேக வெந் திறல் நாக நாட்டு அரசர் சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு அறச் செவி திறந்து மறச் செவி அடைத்து 09-060 பிறவிப் பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும் திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி அன்றைப் பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என, சா துயர் கேட்டுத் தளர்ந்து உகு மனத்தேன் காதலன் பிறப்புக் காட்டாயோ? என ஆங்கு உனைக் கொணர்ந்த அரும் பெருந் தெய்வம் பாங்கில் தோன்றி பைந்தொடி! கணவனை ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை ஆங்கு அத் தெய்வதம் வாராதோ? என ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான் என் 09-071 மணிமேகலை புத்தபீடிகையை வலம்வந்து வணங்கலும் பழம் பிறப்புணர்தலும் 1-8: ஆங்கது.........உணர்ந்து (இதன் பொருள்) ஆங்கு அதுகண்ட ஆயிழை அறியாள்-அம்மணிபல்லவத்தின்கண் புத்த பெருமானுக்கியன்ற அத் தருமபீடிகையைக் கண்ணாற் கண்டதுணையானே மணிமேகலை நல்லாள் தான் எய்திய துயரங்களைச் சிறிதும் அறியாள் என்பதென்னை? அவள் தன்னை முழுதும் அறியாததொரு நிலையினை எய்தினள்; காந்தள் அம்செங்கை தலைமேல் குவிந்தன-அவளுடைய செங்காந்தள்மலர் போன்ற சிவந்த கைகள் தாமே எழுந்து அவள் தலையின்மேல் கூம்பிக் கும்பிட்டன; தலைமேல் குவிந்த கையள் செங்கண் கலுழ்ந்து முலைமேல் முத்தத்திரள் உகுந்து- தாமே தலைமேலேறிக் குவிந்து கும்பிட்ட சிவந்த கைகளையுடைய மணிமேகலை அன்பு மேலீட்டாலே நெஞ்சுருகி அழுது தன் சிவந்த கண்களினின்றும் கண்ணீர்த்துளிகளை முத்துக்கள் போன்று மிகுதியாக முலைமேற் சொரிந்து; அதினிடம் முறை மும்முறை வலமுறை வாரா-அப் பீடிகையின் மருங்கே சென்று நூல்சொன்ன முறைப் படியே மூன்று முறை அதனை வலமுறையாகச் சுற்றி வந்து; கொடிமின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன- கொடியுருவமுடைய மின்னலொன்று முகிலோடே நிலத்தில் வந்து பொருந்தினாற் போன்று; இறும் நுசுப்பு அலச ஆங்கு-ஒடிவது போன்று நுணுகிய தன்னிடை வருந்தும்படி அப் பீடிகையின் முன்னர்; வெறு நிலம் சேர்ந்து எழுவோள்- வெற்றிடத்திலே விழுந்து வணங்கி அந்நிலத்தினின்றும் எழுபவள்; பிறப்பு வழுவு இன்று உணர்ந்து- தனது முற்பிறப்பின் வரலாற்றைச் சிறிதும் குற்ற மில்லாமல் நன்குணர்தலாலே; என்க. (விளக்கம்) அது-அத் தரும பீடிகை. ஆயிழை- மணிமேகலை. அறியாள் என்றது தன்னைக் கவ்விய துயரத்தோடு தன்னையும் அறியாமல் மெய்மறந்தாள் என்பதுபட நின்றது. புத்த பீடிகையைக் கண்டவுடன் மணிமேகலை தன்னை மறத்தற்குக் காரணம் பழவினை காரணமாக அவள் நெஞ்சத்தின்கண் நிகழ்ந்த இறையன்பு மேலிட்டமையே யாகும். ஆகவே இஃது அன்பின் மெய்ப்பாடேயாகும். பண்டும் பண்டும் பல பிறப்புக்களிலே புத்தன்பால் அடிப்பட்டுவந்த அன்புதான் வெளிப்படுதற்கியன்ற ஏது நிகழ்ச்சி எதிர்ந்தமையாலே ஈண்டு மணிமேகலைக்கு நிகழும் மெய்ப்பாடுகள் எல்லாம் அவ்விறையன்பின் மிகுதியால் பிறப்பனவே என்றுணர்க. இது புதுமை பற்றிவந்த மருட்கை என்னும் மெய்ப்பாடு என்பாரு முளர். அது பொருந்தாது. என்னை? ஈண்டு மணிமேகலையின் பால்நிகழும் மெய்மறத்தலும் கைகுவித்தலும் கண்ணீரரும்பலும் பிறவும் இறையன்பு மிக்குழி யுண்டாகும் மெய்ப்பாடுகளோடு ஒத்திருத்தலும் மருட்கை யுற்றோர்க்கு இம் மெய்ப்பாடுகள் சிறிதும் ஒவ்வாதிருத்தலும் கீழே தரும் எடுத்துக் காட்டுக்களாலே இனிதினுணர்க அவற்றுள் இறையன்பின் மேலீட்டால் நிகழும் மெய்ப்பாடுகளை கையுந் தலைமிசை புனையஞ் சலியன கண்ணும் பொழிமழை யொழியாதே பெய்யுந் தகையன கரணங் களுமுடன் உருகும் பரிவின பேறெய்தும் மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரு மின்றாழ் சடையொடு நின்றாடும் ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர் ஆர்வம் பெருகுத லளவின்றால் (திருத்தொண்டர்-1438) எனவரும் அருமைச் செய்யுளை ஈண்டு மணிமேகலை நிலைகூறும் பகுதியோடு ஒப்பு நோக்கி யுணர்க. இனி, மருட்கை யுற்றோர் மெய்ப்பாடுகள் வருமாறு: அற்புத அவிநய மறிவரக் கிளப்பிற் சொற்சோர்வுடையது சோர்ந்தகையது மெய்ம்மயிர் குளிர்ப்பது வியத்தக வுடைய தெய்திய திமைத்தலும் விழித்தலும் இகவாதென் றையமில் புலவர் அறைந்தன ரென்ப என வரும் அடியார்க்கு நல்லார் மேற்கோளான் (சிலப். 3.12-25) உணர்க. அல்லதூஉம், புதுமை பற்றி வந்த மருட்கையணி முன்னைக் காதையிலே 15 ஆம் அடி முதலாக 43 ஆம் அடிகாறும் கூறிப் போந்தமையும் அறிக. அதனிடம் முறை எனக் கண்ணழித்து முறை நூன்முறைப்படி என்க. மணிமேகலையின் திருமேனிக்கு மின்னற்கொடியும் அவள் கூந்தலுக்கு முகிலும் உவமை. இறுநுசுப்பு: வினைத்தொகை. இறும் என்றையுறுதற்குக் காரணமான நுசுப்பு என்க. வெறுநிலம் என்றது வெற்றிடம் என்றவாறு. அலச-வருந்த. வழுவின்றுணர்ந்து என்புழி இன்றி என்னும் குற்றியலிகரம் குற்றியலுகரமாய்த் திரிந்தது. மணிமேகலை பிரமதருமன் என்னும் முனிவனை முன்னிலைப்படுத்துப் பழம்பிறப்பி னிகழ்ச்சிகளை உரைத்தல் 9-16: தொழுதகை........உரைப்போய் (இதன் பொருள்) தொழு தகை மாதவ துணிபொருள் உணர்ந்தோய்- அமரரும் முனிவரும் தொழுதற்கியன்ற தகுதியையுடைய பெரிய தவத்தையுடையோய்! தெளிதற்குரிய மெய்ப்பொருளை உணர்ந்த பெரியோய்!; காயங் கரையின் நீ உரைத்ததை எல்லாம் வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன்- காயங் கரை என்னும் பேரியாற்றின் கரையின்மேல் பூம்பொழிலின்கண்ணிருந்தருளி அடிச்சிக்குத திருவாய் மலர்ந்தருளிய செய்தி எல்லாம் உண்மையே ஆதலே அடிச்சி ஐயமும் திரிபுமாகிய மயக்கஞ் சிறிதும் இல்லாமல் உணர்ந்துள்ளேன்; காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டு பூருவதேயம் பொறைகெட வாழும் காந்தாரம் என்னும் பெயரையுடைய மிகப் பெரிய நாட்டின்கண்ணதாகிய பூருவதேயம் என்னும் நாட்டின்கண் நிலமகட்குப் பொறையாகிய தீவினையாளர் மிகாவண்ணம் செங்கோலோச்சி வாழ்கின்ற; அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன் மைத்துனன் ஆகிய பிரமதரும-அத்திபதி என்னும் பெயரோடு அரசாட்சி செய்கின்ற மன்னனுக்கு மைத்துனனாகிய பிரமதருமனென்னும் சிறப்புப் பெயர் பெற்ற பெருமானே! ஆங்கு அவன்றன்பால் அணைந்து அறன் உரைப்போய்-அப் பூருவதேயத்தே அம் மன்னன்பாற் சென்று அறஞ்செவியறிவுறுத்துகின்ற நீதானும்; என்க. (விளக்கம்) புத்தபீடிகையை வணங்கி எழும்பொழுதே பழம் பிறப்புணர்ச்சியோடே எழுந்த மணிமேகலை முற்பிறப்பிலே தான் காயங்கரை என்னும் யாற்றங்கரையிற் கண்டளவளாவிய பிரமதத்தமுனிவனைத் தனது அகக்கண் முன்னர்க் கண்டு அக்காலத்தே அவன் கூறியவையனைத்தும் உண்மையாகவே நிகழ்ந்து வருதலைக் கண்டு அம் முனிவனைப் பாராட்டுபவள் அவனை மாதவ எனவும் உணர்ந்தோய் எனவும் முன்னிலைப்படுத்திப் பாராட்டுகின்றபடியாம். காயங்கரை-ஓரியாறு உரைத்ததை என்புழி ஐகாரம் சாரியை. வாய்-உண்மை. காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டின் கீழ்த்திசை நாட்டை ஆளும் அரசன் எனினுமாம். பூருவம்- கீழ்த்திசை. பிரமதருமன் என்னும் முனிவன் அத்திபதி என்னும் அரசனுடைய மைத்துனனாயிருந்து துறவு பூண்டவன் என்பது இதனாற் பெற்றாம். பிரமதரும என்றது விளி. ஆங்கு-அப் பூருவதேயத்தில். அவன்: அத்திபதி என்னும் அரசன். உரைப்போய்: விளி. இதுவுமது 17-28: தீங்கனி...........செல்வோன் (இதன் பொருள்) நீள் நிலவேந்தே தீங்கனி நாவல் ஓங்கும் இத்தீவு இடை இன்று ஏழ் நாளில்- நெடிய நிலத்தை ஆளுகின்ற அத்திபதியரசே! ஈதொன்று கேட்பாயாக! இனிய கனிதரும் நாவல் மரம் நிலை பெற்று ஓங்கி நிற்கும் இந்நாவலந்தீவினிடத்தே இற்றைக்கு ஏழா நாளிலே; இரு நில மாக்கள் நின்று நடுக்கு எய்த- பெரிய நிலத்திலே வாழுகின்ற மாந்தரெல்லாம் செயலற்று நின்று அச்சத்தால் நடுக்கமுறும்படி; பூமி நடுக்குறூஉம் போழ்தத்து-நிலநடுக்கம் உண்டாகும் அப் பொழுது; இந்நகர் நாக நல் நாட்டு நால் நூறு யோசனை வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்- நினது தலைநகரமாகிய இந்த நகரமும் கிழக்குத் திசையிலமைந்த நாகருடைய நல்ல நாட்டின்கண் நானூறு யோசனை நிலப்பரப்பும் அகன்ற பாதலத்திலே அழுந்தி அழிந்தொழியும் காண்! இதன் பால் ஒழிக என- ஆதலால் இங்கு நின்றும் புறம் போவாயாக! என்று அறிவுறுத்தியருளுதலாலே; இரு நில வேந்தனும்-அது கேட்ட பெரிய நிலத்தை ஆள்கின்ற அத்திபதி யரசன்றானும் நின் பணி தலைமேற்கொண்டு; மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம்- மிகமிகப் பெரியதாகிய தனது நகரத்தே வாழுகின்ற தன் குடிமக்கட் கெல்லாம்; ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே பறையில் சாற்றி-அச் செய்தியை அறிவிப்பவன் நுங்கள் ஆக்களையும் ஏனைய விலங்கினங்களையும் கைக்கொண்டு அப்பாற் சென்றுய்யுங்கோள் என்று பறையறைவிக்குமாற்றால் அறிவித்து; நிறை அருந் தானையோடு- தன்பாலமைந்த நிறைந்த வெலற்கரிய நால்வேறு வகைப்படைகளோடே; இடவயம் என்னும் இரும்பதி நீங்கி வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன்- இடவயம் என்னும் தனது பெரிய தலைநகரத்தினின்றும் புறப்பட்டு வடதிசையிலுள்ள அவந்தி என்னும் பெரிய நகரம் புகச் செல்லுபவன்; என்க. (விளக்கம்) தீங்கனி நாவலோங்குமித் தீவிடை என்றது நாவலந்தீவத்தை. இதன் பெயர்க் காரணம் தெரித்தோதிய படியாம். இந் நகரும்-என்றது இடவய நகரத்தை. இந் நாகநன்னாட்டு நானூறி யோசனையும் எனல் வேண்டிய எண்ணும்மை தொக்கன. நாக நன்னாடு நாவலந்தீவின் கீழ்த்திசையிற் கடலின்கண்ணமைந்ததொரு பெரிய நாடு. இதனை முன்னைக் காதையினும்(54) கீழ் நில மருங்கின் நரகநாடு என்றுகுறிப்பிட்டமை யுணர்க. பூமி நடுக்குறூஉம் போழ்தத்து என்றாரேனும் பூமி நடுக்குறும் என்னும் அப்போழ்தத்து என்றும் அறுத்தோதுக. விலங்குகளில் ஆக்கள் தம்முயிர் கொடுத்தும் காப்பாற்றப்படுஞ் சிறப்புடைமை பற்றி அதனைத் தனித்து வாங்கி ஏனையவற்றை மா என்னும் பொதுப் பெயரோ லோதியவாறு ஆவிற்கு அச்சிறப்புண்மையை ஆவும் ஆணியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும்... ... எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்எனா அறத்தாறு நுவலும் பூட்கை எனவரும் நெட்டிமையார் கூற்றானும் பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டு எனவரும் கண்ணகியார் கூற்றானும் (சிலப்-21:53-4) இனிதினுணர்க இதுவுமது 29-37: காயங்கரை.....அந்நாள் (இதன் பொருள்) காயங்கரை யெனும் பேரியாற்று அடைகரை சேய் உயர் பூம் பொழில் பாடி செய்திருப்ப-காயங்கரை என்னும் பெரிய யாற்றினது நீரடைகரையிடத்தே மிகவும் உயர்ந்து வளர்ந்துள்ளதொரு பொழிலின்கண் அவ்வரசன் கட்டூரமைத்துப் படைகளோடு தங்கியிருந்தானாக; எங்கோன் நீ ஆங்கு உரைத்த அந்நாளிடை அந்நகர் தங்காது வீழ்ந்து கேடு எய்துதலும்- எம்பெருமானே நீ இடவயநகரத்தே கூறியவாறே அற்றைக்கு ஏழாநாளிலேயே அவ்விடவய நகரம் சிறிதும் எஞ்சாது பாதலத்திலே நில நடுக்கத்தாலே வீழ்ந்தழிந் தொழிதலும் மருள் அறு புலவ- பேதைமை அற்ற மெய்க்காட்சியாளனே; அரசொடு மக்கள் எல்லாம் நின் மலர் அடியதனை ஈண்டி சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய-அந் நிகழ்ச்சி வாய்மையே ஆதல் அறிந்த அத்திபதி யரசனோடு ஏனைய மக்களும் நின்னுடைய செந்தாமரை மலர் போன்ற திருவடியிற் புகல் புகுந்து நின்னைச் சூழ்ந்துகொண்டு வணங்கித் திருவடியிலே வீழ்ந்து நின் புகழ் பலவும் கூறி ஏத்தியதும்; அருள் அறம் பூண்ட ஒரு பேரின்பத்து-ஆதிபகவன் திருவாய் மலர்ந்தருளிய அனைத்துயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுதலாகிய அருள் அறத்தை மேற்கொள்ளுமாற்றால் வந்துறும் ஒப்பற்ற பேரின்பத்தை எய்துவித்து; உலகு துயர் கெடுப்ப அருளிய அந்நாள்- நின்னைச் சரண்புகுந்த அம் மக்களே யன்றி இப் பேருலகத்து வாழும் மாந்தரனைவருடைய துயரத்தையும் போக்கி உய்யக் கொள்வான் திருவுளங் கொண்டு அவ்வருளறத்தை எல்லா மக்கட்கும் செவியறிவுறுத்தியதும் ஆகிய அந்தக் காலத்திலே; என்க. (விளக்கம்) (28) செல்வோன் பாடி செய்திருப்ப என்க. பாடிகட்டூர்; படைவீடு. எங்கோன்: முன்னிலைப் புறமொழி. ஆங்கு-அவ்விடவய நகரத்தில். அந்நாள்-அற்றைக்கு ஏழாநாள். தங்காது- சிறிதும்எஞ்சாமல், சூழ்ந்தனர்: முற்றெச்சம். பூண்டமையால் வந்துறும் ஒரு பேரின்பம் என்க. அஃதாவது நிருவாண நிலை. அதனை எய்தினாலன்றித் துயரம் போகாமையின் அதனை ஏதுவாக்கினார். தாழ்ந்து பல ஏத்தியதும் அருளியதும் ஆகிய அந்நாள் என இயைக்க. அந்நாள் என்றது அந்தக்காலத்திலே என்பதுபட நின்றது. மணிமேகலை தன் முற்பிறப்பின் வரலாறு கூறுதல் 38-47: அரவ.....பணிதலும் (இதன் பொருள்) அரவக் கடல் ஒலி அசோதரம் ஆளும் இரவி வன்மன் ஒரு பெருந்தேவி- ஆரவார முடைய கடல் இடையறா தொலிக்குமாறு இடையறாத பேராரவாரமுடைய அசோதரம் என்னும் நகரத்திருந்து அரசாட்சி செய்கின்ற இரவிவன்மன் என்னும் அரசனுடைய முதன் மனைவியாகிய கோப்பெருந்தேவி அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன்- செம்பஞ்சிக் குழம்பூட்டிய சிறிய அடிகளையுடைய அமுதபதி என்பவளுடைய வயிற்றிலே அடிச்சி இலக்குமி என்னும் பெயருடையேனாய்ப் பிறந்திருந்தேன்; அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி அடிச்சிக்குப் பெதும்பைப் பருவம் வந்துற்றபோது யான், அத்திபதி என்னும் அரசனுடைய கோப்பெருந் தேவியும்; சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்- சித்திபுரத்தில் ஆட்சி செய்யும் சீதரன் என்னும் அரசனுடைய அழகிய மகளும் ஆகிய; நீலபதி என்னும் நேர் இழைவயிற்றின் காலை கதிர் ஞாயிறு போல் தோன்றிய- நீலபதியென்னும் நேரிய அணிகலன் அணிந்த அரசியின் திருவயிற்றிலே காலையில் தோன்றும் கதிர்களையுடைய ஞாயிறு போல் தோன்றிய; இராகுலன் தனக்குப் புக்கேன- இராகுலன் என்னும் கோக்குமரனுக்கு வாழ்க்கைத் துணையாகப் புகுந்தேன்; அவனோடும் பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும்; ஒருநாள் என் கணவனாகிய இராகுலனோடு வந்து யான் நின்னைக் கண்டு புகழ்தற்கரிய முறைமையினையுடைய நின் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கினேனாக அப்பொழுது என்க. (விளக்கம்) அரவக்கடல் போன்ற ஒலியினையுடைய அசோதர நகரம் என்க. அலத்தகம்- செம்பஞ்சிக் குழம்பு. அமுதபதி: பெயர். இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன் என்றாரேனும் பிறந்து இலக்குமி என்னும் பெயர் பெற்றேன் என்பது கருத்தாகக் கொள்க. சீதரன்- சீதர மன்னன். காலைக் கதிர் ஞாயிறுபோல் என்க. புக்கேன் என்றது வாழ்க்கைத் துணைவியாகப் புக்கேன் என்றவாறு. பராவு அரும்-பராவுதல் அரிய. இதுவுமது 48-57: எட்டிரு........வைத்தலும் (இதன் பொருள்) எட்டு இரு நாளின் இவ் விராகுலன் தன்னை திட்டிவிடம் உண்ணும்- எம்பெருமான் அடிச்சியை நோக்கி இற்றைக்குப் பதினாறாநாள் நின் கணவனாகிய இந்த இராகுலனைத் திட்டிவிடம் என்னும் நாகம் உயிர் பருகிவிடும்; செல் உயிர் போனால் சேயிழை அவனொடு தீ அழல் மூழ்குவை- செல்லுதற்குரிய போகூழ் தலைப்பட்ட நின் கணவன் உயிர் போனக்கால் நீ அவனோடு ஈமத் தீயாகிய நெருப்பில் முழுகி உயிர் துறப்பாய் காண் என்றும்; ஈங்கு ஏது நிகழ்ச்சி இன்று ஆதலின்- அப்பால் இந் நாட்டில் நினக்குப் பழவினையாலுண்டாகும் நிகழ்ச்சி யாதும் இல்லையாதலின்; கவேரகன்னிப் பெயரொடு விளங்கிய தவாக்களி மூதூர் சென்று பிறப்பு எய்துதி- நீ கவேரன் மகவாகிய காவிரியின் பெயரை அடை மொழியாகப் பெற்றுக் கெடாத மகிழ்ச்சியையுடைய பழைமையுடைய காவிரிப்பூம் பட்டினத்திலே போய்ப் பிறப்பாய் காண் என்றும்; அணியிழை நினக்கு ஓர் அருந்துயர் வருநாள் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி அழகிய அணிகலன்களையுடைய இலக்குமியே இன்னும் கேள், இம்மை மாறி மறுமையாகி அந்தப் பிறப்பிலே நின்னால் கடத்தற் கரிய ஒப்பற்ற துயர் (ஒன்று வந்துறும்) வந்துறுகின்ற அந்த நாளிலே, மணிமேகலா தெய்வம் என்னும் நின்குல தெய்வம் தானே நின்னை அத் துயரத்தினின்றும் எடுத்து நன்னெறிப் படுத்துதற்கு எளிவந்து நின் கண்முன் தோன்றி; அன்று அப்பதியின்ஆர் இருள் எடுத்துத் தென் திசை மருங்கில் ஓர் தீவு இடைவைத்தலும்- அற்றை நாளிலேயே நள்ளிரவிலே நின்னை எடுத்துப் போய்த் தென்திசையிலமைந்த ஒரு தீவின்கண் இட்ட பின்னர்; என்க. (விளக்கம்) இராகுலன்- முற்பிறப்பில் இலக்குமியா யிருந்த மணிமேகலையின் காதலன். எட்டிருநாள்- பதினாறாம் நாள். இதனால் பிரமதத்த முனிவர் இந் நிகழ்ச்சிகளை அவள் கணவன் அறியாவண்ணம் இலக்குமிக்கு மட்டும் தனித்துக் கூறியதாதல் வேண்டும் என்று கருதுக. செல்லுயிர் என்றாள் இறந்துபாடுறும் போகூழ் வந்தெய்தப் பெற்ற உயிர் என்பதறிவித்தற்கு. திட்டிவிடம்- தன் நோக்கம் பட்ட துணையானே உயிர்கள் இறந்து படுதற்குக் காரணமான கொடிய நச்சுத் தன்மையை நோக்கத்திலேயே கொண்டிருக்கும் ஒரு நாகப் பாம்பு. இதனால் இதற்குத் திட்டி விடம் என்பதே பெயராயிற்று. புத்தர் பிறந்த பிறப்புக்களிலே திட்டிவிடம் என்னும் நச்சுப் பாம்பாகப் பிறந்து கண் விழித்தாற் பிறவுயிர் சாமென்றஞ்சிக் கண் விழியாதே கிடந்தார் என்னும் ஒரு கதை புத்தசாதகக் கதையிலுள தென்பது நீலகேசி உரையிற் காணப்படுதலு முணர்க. திட்டிவிட மன்ன கற்பின் செல்வியை என்பது கம்பர் வாக்கு;(தாடகை-10) கவேரன் என்னும் அரசன் தவம் செய்து பெண் காவிரிநதி யாகினள் என்பது பௌராணிக மதம். கவேரகன்னிப் பெயரொடு விளங்கிய மூதூர் என்றது காவிரி என்னும் அடைபுணர்த்தோதப்படும் காவிரிப் பூம்பட்டினத்தை. அருந்துயர் என்றது- கடத்தற்கரிய துயரம் என்றவாறு. அஃதாவது உதயகுமரன் மணிமேகலையின்பாற் கழிபெருங்காமமுடையவனாய் அவளைக் கைப்பற்ற முயன்றதனை. மணிமேகலையின் நெஞ்சமும் அவன் பின்னர்ப் போனமையால் அஃது அவளால் கடந்தற்கரிய துயர் ஆயிற்றென்பார் ஆயிழை நினக்கோர் அருந்துயர் வரும் நாள் என்று பிரமதத்த முனிவர் அறிவித்தனர் என்றவாறு. அப் பதி- பூம்புகார் நகரம். தீவு- மணிபல்லவம். பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என- அற்றைநாட் பகற் பொழுதிலேயே உன்னுடைய இப்பிறப்பின் வரலாற்றினை உணர்ந்து மேலும் இற்றைநான் இங்கியான் உனக்குக் கூறகின்ற இம் மொழி யெல்லாம் வாய்மையே ஆதலையும் நீலே உணர்ந்து கொள்வாய் என்றும் கூறாநின்றனை என்றாள் என்க. (விளக்கம்) வேகம்-சினமிகுதி. திறல்- போர் செய்யும் ஆற்றல். மனமாசு-அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் என்னும் நான்குமாம். மறச்செவி-தீயவற்றைக் கேட்டற்கவாவும் செவி. இது பயிற்சியா லெய்துமொரு வழக்கம். அறச்செவி-அறங்கேட்டற்கு அவாவுடைய செவி. இதுவும் பயிற்சியா லெய்துவதேயாம். பிறவிப்பிணி மருத்துவன்- பிறவிநோய் தீர்தற் கியன்ற நல்லற மருந்துகளை ஊட்டி மீண்டும் பிறவிப்பிணி வாராமற் செய்யும் மருத்துவனாகிய புத்த பெருமான். ஈங்கு என்றது முற்பிறப்பிலே பிரமதத்த முனிவரைக் கண்ட இடத்தை. உரை வாயேயாதலை நீயே தெளிந்து கொள்ளுவாய் என்று நீ கூறியவாறே இற்றைநாள் காயங்கரையின் நீ உரைத்ததை யெல்லாம் வாயே ஆகுதல் மயக்கற உணர்ந்தேன் என்று முன்பே நுதலிப் புகுதல்(10-11) ஈண்டு நினைக. (முற்பிறப்பிலே இலக்குமி யாகிய) மிணமேகலை பிரமதத்தனை வினவினமையும் அவன் கூறிய மாற்றமும்) 45-71: சாதுயர்....தானேன் (இதன் பொருள்) சாதுயர் கேட்டுத் தளர்ந்து உகும் மனத்தேன் காதலன் பிறப்பும் காட்டாயோ என-என் ஆருயிர்க் கணவன் திட்டிவிடத்தாற் சாதலும் யான் தீயினிற் புகுந்துசாதலும் ஆகிய சாதற்றுன்பங்களைக் கேட்டு அப்பொழுதே தளர்ந்துருகி ஒழுகும் மனத்தை யுடையேனாகிய யான் பெரும்! அடிச்சியின் மறுபிறப்பிஃதொன்று மட்டும் கூறியருளினை அதனினும் காட்டில் யான் பெரிதும் அறிந்துகொள்ள விரும்புகின்ற என் காதலன் மறுமையில் எய்தும் பிறப்பினையும் அறிவித்தருள மாட்டாயோ? என்று நின்னை அவலத்தோடு வினவ; ஆங்கு உனைக்கொணர்ந்த அரும் பெருந்தெய்வம் பாங்கின் தோன்றி ஈங்கு இவன் பைந்தொடி கணவனை என்னும் என்று எடுத்து ஓதினை- அது கேட்ட நீ அம் மணிபல்லவத்திற்கு உன்னை கொண்டுவந்த அந்த மாபெருஞ் சிறப்புடைய மணிமேகலா தெய்வத்தானே மீண்டும் நின்பக்கலிலே வந்து தோன்றி இன்ன விடத்துப் பிறந்திருக்கின்ற இன்ன பெயருடையவனே நின் கணவனாகிய இராகுலன் என்று அறிவிக்கும் என்று எடுத்துக்கூறா நின்றனை; ஆங்கு அத்தெய்வம் வாராதோ என இளங்கொடி ஏங்கினள் அழூஉம் நீ கூறியாங்கு அவ்வரும் பெருந் தெய்வம்(இப்பொழுது என்பக்கலிலே வரற்பாலது) வாராதொழியுமோ? என இளமையுடைய அம் மணிமேகலை பின்னும் தன் பேதைமை காரணமாக ஏங்கி அழாநின்றனள்; என்பதாம். (விளக்கம்) (48) எட்டிரு நாளிலிவ் விராகுலன் திட்டி விட முணும் என்பது முதலாக(64) இன்றியான் உரைத்த உரை தெளிவாய் என்பதீறாக நீ காயங்கரையில் உரைத்தவை எல்லாம் வாயே ஆகுதல் மயக்கற வுணர்ந்தேன். பின்னர் அரும் பெருந் தெய்வம் பாங்கிற்றோன்றி ஈங்கு இவன் என்னும் என்று எடுத்தோதினை அல்லையோ! அத் தெய்வம் வரக் கண்டிலேன் அது மட்டும் பொய்ப்ப ஒரோ வழி வாரா தொழியுமோ என்று சொல்லி ஏங்கி அழுதனள் என்றவாறு. காதலன் சாவாகிய துயர் கேட்டு என்றவாறு. காதலன் பிறப்புங் காட்டாயோ? என்றது என் பிறப்புக் காட்டினை அங்ஙனமே காதலன் பிறப்புங் காட்டாயோ என்பதுபட நின்றது. பைந்தொடி முன்னிலைப் புறமொழி. கணவனை: ஐகாரம் அசைச் சொல். நின் கணவன் இன்னவிடத்தே பிறந்து இப் பெயரோடிருக்கும் இவன் என்று நினக்குக் கூறும் என்று எடுத்தோதினை என்றவாறு. அது மட்டும் பொய்க்குமோ என்னையுற்றேங்கி அழுதனள் என்க. இனி, இக் காதையை-ஆங்கு அது கண்ட ஆயிழை அறியாள் கைதலைமேற் குவிந்தன, குவிந்த கையள் வலமுறை வாராச் சேர்ந்து எழுவோள் உணர்ந்து மாதவ உணர்ந்தோய் நீ உரைத்ததை எல்லாம் வாயே ஆகுதல் உணர்ந்தேன், பிரமதரும! உரைப்போய் இந்நகர் கேடெய்தலும், புலவ அருளிய அந்நாள் கேடெய்தலும் ஒழிகெனச் சாற்றிச் செல்வோன் இருப்ப நீ உரைத்த நாளிடைகேடெய்தலும், புலவ அருளிய அந்நாள் பிறந்தேன் புக்கேன் பணிதலும், விடமுணும் மூழ்குவை ஈங்கின்றாதலின் சென்று பிறப்பெய்துதி துயர்வருநாள் தெய்வம் தோன்றி எடுத்து வைத்தலும் சென்று தொழுதி தெளிவாய் என, தளர்ந்துகு மனத்தேன் காட்டாயோ என, தெய்வம் தோன்றி இவன் என்னும் என்று ஓதினை அத் தெய்வம் வாராதோ என இளங்கொடி அழூஉம் என்றியைத்திடுக. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை முற்றிற்று. | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
10. மந்திரங் கொடுத்த காதை
பத்தாவது மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி மந்திரங் கொடுத்த பாட்டு
அஃதாவது: மணிமேகலையை மணிபல்லவத்திடை வைத்து நீங்கிய மணிமேகலா தெய்வம் அவள் மாமலர்ப் பள்ளியினின்றும் துயிலுணர்ந்து மருட்கையாலே பெரிதும் வருந்தி எழுந்து யாங்கணும் திரிபவள் தந்தையை உள்ளி ஐயாவோ என்று அழுது புலம்புங்கால் தன் கண்ணுக்குத் தோன்றிய மாமணிப் பீடிகையைக் கண்டு தன்னையும் மறந்து அதனை வலஞ்செய்து வீழ்ந்து வணங்கி எழுந்த பொழுது தனது பழம்பிறப்புணர்ச்சியோ டெழுந்தாளன்றே; எழுந்தவள் முற்பிறப்பில் காயங்கரை என்னுமிடத்துப் பிரமதத்தன் கூறியவை எல்லாம் வாய்மையாதல் கண்டு அவளை முன்னிலைப்படுத்து அவன் உரைத்தவை எல்லாம் உரைத்து, யான் பழம் பிறப்புணர்ந்துழி மாபெருந் தெய்வம் வந்து உனக்குப் பேருதவி செய்யும் என்றாயன்றே! அத் தெய்வம் வந்திலதே என் செய்கோ? என்று அழுபவள் முன்னர் மணிமேகலா தெய்வம் தோன்றி அவள் மேற் கொள்ளும் அருளறம் முட்டின்றி நடைபெறுதற்கு இன்றியமையாத மந்திரஞ் சிலவற்றைச் செவியறிவுறுத்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு. இதன்கண்- மணிமேகலா தெய்வம் வந்தவுடன் மணிமேகலைக்கு அப் பீடிகையே நங்கடவுள் என்றுணர்த்தற் பொருட்டு அதனைப் புகழந்தேத்தி வணங்குதலும்; மணிமேகலை அத் தெய்வத்தைத் தன் கணவனாகிய இராகுலன் எங்குளன் என்று வினாதலும், அத் தெய்வம் முற்பிறப்பிலே இலக்குமியாகி இராகுலனோடு இல்லறம் நிகழ்த்துங்கால் மணிமேகலை சாதுசக்கரன் என்னும் துறவோனை உண்டி கொடுத்து வழிபாடு செய்தமையும் அதனாலாம் பயனும் அம் முற்பிறப்பிலே மாதவியும் சுதமதியும் அவட்குடன் பிறந்தாராயிருந்தமையும் இப் பிறப்பில் மணிமேகலைக்கு அவர் தாயும்தோழியுமாயிருப்பதுவும்; இனி எதிர்காலத்தே நிகழவிருப்பனவும் இனிதின் அறிவுறுத்தலும் பின்னர் மந்திரங்களைச் செவியறிவுறுத்தலும் பிறவும், அழகாகக் கூறப்படுகின்றன. அறவோன் ஆசனத்து ஆய் இழை அறிந்த பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து பொரு அறு பூங் கொடி பூமியில் பொலிந்தென வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம் முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி பொருள் வழங்கு செவித் துளை தூர்ந்து அறிவு இழந்த வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்கச் சுடர் வழக்கு அற்றுத் தடுமாறுகாலை ஓர் 10-010 இள வள ஞாயிறு தோன்றியதென்ன நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன் நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் ஆசனம் நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன் பூமிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர்ப் பொலம் கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன் என் பெருங் கணவன் யாங்கு உளன்? என்றலும் இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு 10-020 புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின் இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன் மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன் தெரு மரல் ஒழித்து ஆங்கு இரத்தினத் தீவத்துத் தரும சக்கரம் உருட்டினன் வருவோன் வெங்கதிர் அமயத்து வியன் பொழில் அகவயின் வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி மெல் இயல்! கண்டனை மெய்ந் நடுக்குற்றனை நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச 10-030 இராகுலன் வந்தோன் யார்? என வெகுளலும் விரா மலர்க் கூந்தல்! அவன் வாய் புதையா வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது நா நல்கூர்ந்தனை என்று அவன் தன்னொடு பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு அமர! கேள் நின் தமர் அலம் ஆயினும் அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம் உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும் எம் அனை! உண்கேன் ஈங்குக் கொணர்க என அந் நாள் அவன் உண்டருளிய அவ் அறம் 1 10-040 நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும் உவவன மருங்கில் உன்பால் தோன்றிய உதயகுமரன் அவன் உன் இராகுலன் ஆங்கு அவன் அன்றியும் அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்கும் உண்டு ஆகலின் கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர் வெந்து உகு வெங் களர் வீழ்வது போன்ம் என அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர் திறப்படற்கு ஏதுவா சேயிழை! செய்தேன் இன்னும் கேளாய் இலக்குமி! நீ நின் 10-050 தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும் ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அகவயின் கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன் அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி கங்கைப் பேர் யாற்று அடைகரை இருந்துழி மற வணம் நீத்த மாசு அறு கேள்வி அறவணன் ஆங்கு அவன்பால் சென்றோனை ஈங்கு வந்தீர் யார்? என்று எழுந்து அவன் பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும் 10-060 ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் மா துயர் எவ்வம் மக்களை நீக்கி விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக தொன்று காலத்து நின்று அறம் உரைத்த குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும் பாத பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது பாதபங்கய மலை எனும் பெயர்த்து ஆயது தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இப் பழுது இல் காட்சியீர்! நீயிரும் தொழும் என 10-070 அன்று அவன் உரைத்த அவ் உரை பிழையாது சென்று கைதொழுது சிறப்புச் செய்தலின் மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் கோதை அம் சாயல்! நின்னொடு கூடினர் அறிபிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம் அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள் இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும் 10-080 அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அருந் திறல் மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி மதி நாள் முற்றிய மங்கலத் திருநாள் பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி நின் பதிப் புகுவாய் என்று எழுந்து ஓங்கி மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து சிறந்த கொள்கைச் சேயிழை! கேளாய் மக்கள் யாக்கை உணவின் பிண்டம் 10-090 இப் பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து நீங்கியது ஆங்கு நெடுந் தெய்வம் தான் என் உரை தனிமைத்துயராலே தெய்வத்தின் வரவு காணாமல் அழுது நிற்கும் மணிமேகலை காணும்படி மணிமேகலா தெய்வம் வானத்தினின்றும் மலர் ஏந்திய கையளாய் இறங்கி வந்து மலர்தூவி மணிமேகலை கேட்கும் வண்ணம் புத்த பீடிகையைப் பரவிப் பணிந்து ஏத்தல் 1-12: அறவோன்.............பணிந்தேன் (இதன் பொருள்) அறவோன் ஆசனத்து ஆயிழை அறிந்த பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என-புத்த பெருமானுடைய இருக்கையாகிய பீடிகையைக் கண்டு கை தொழுது வணங்கினமையாலே மணிமேகலை நல்லாள் தன் பழம் பிறப்பை அறிந்தவளாயினள் இனி, மேலே நன்னெறிக்கண் செல்லுதற் கியன்ற பழவினையாகிய ஏதுவும் நன்கு முதிர்ந்து அவள் பண்பும் அழகிதாயிருக்கின்றது என மகிழ்ந்து, விரை மலர் ஏந்தி-கைகளிலே பீடிகைக்குப் பலிதூவுதற்குரிய நறுமணங் கமழும் மலர்களை ஏந்திக்கொண்டு; விசும்புஊடு இழிந்து- மணிமேகலை கண்காண வானத்துள்ளிருந்து இறங்கி; பொருவு அறு பூங்கொடி பூமியிற் பொலிந்தென வந்து தோன்றிய-ஒப்பற்ற காமவல்லி என்னும் வானநாட்டுப் பூங்கொடி ஒன்று நிலவுலகத்திலிறங்கிப் பொலிந்து தோன்றுமாறு போலே மணிமேகலையின் பக்கலிலே வந்து தோன்றிய; மணிமேகலா தெய்வம் முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப-மணிமேகலா தெய்வமானது தனது பழம்பிறப் புணர்ச்சி கைவரப் பெற்றமையால் தன்வரவினை எதிர் பார்த்து அழுது நிற்கும் அம் மணிமேகலை கேட்கும்படி, பீடிகையை நோக்கிக் கை தொழுது கூறுபவள்; உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி பொருள் வழங்கு செவித்துளை தூர்ந்து அறிவு இழந்த வறந்தலை உலகத்து-எந்தையே! இந் நிலவுலகத்திலே வாழுகின்ற மாந்தரெல்லாம் தமக்குரிய நல்லுணர்வு அழியப் பெற்று உறுதிப் பொருள்கள் புகும் வழியாகிய அவர்தம் செவித்துளை யெல்லாம் தீ மொழிகள் செறிந்து தூர்ந்து போதலாலே மெய்யறிவினை இழந் தொழிந்தமையால் மெய்யறிவின் திறத்திலே வற்கடமுற்றுக் கிடந்த இந்நிலவுலகத்திலே; அறம் பாடு சிறக்க மீண்டும் அந் நல்லறம் தனக்குரிய பெருமையோடு சிறந்து தழைக்கும்படி; சுடர் வழக்கு அற்றுத் தடுமாறு காலை ஓர் இளவள ஞாயிறு தோன்றியது என்ன-ஞாயிற்று மண்டிலம் தோன்றாமலொழிந்து போதலாலே உயிர்கள் நெறியறியாது தடுமாற்றமுறுகின்ற பொழுது ஒப்பற்ற இளஞாயிறு குணகடலினின்றுந் தோன்றினாற் போலே; நீ தோன்றினை; துடிதலோகம் ஒழிய நீ வந்து பிறந்து இவ்வுலகத்தை உய்யக் கொண்டனை யல்லையோ! நின் அடி பணிந்தேன்-நின் மலர் அடிகளில் இம்மலர்களை இட்டுப் பணிகின்றேன் காண்! என்றாள் என்க. (விளக்கம்) இது மணிமேகலா தெய்வம் மணிமேகலையை நன்னெறிப்படுத்தும் குறிக்கோள் உடையதாகலின் ஈண்டுத் தமக்குத் தெய்வம் புத்த பெருமானே என்றும், அத் தெய்வத்தைப் பீடிகையாகிய அவனுடைய அறிகுறியை அவனாகவே மதித்து இவ்வாறு வாழ்த்தி வணங்குதல் வேண்டும் என்றும் அறிவுறுத்தற் பொருட்டு அதனை வாயாற் கூறாமல் தனது செயலாலே அறிவுறுத்திய படியாம். மக்கட்கு நல்லறிவு கொளுத்தும் நல்லாசிரியன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயினும் தனது சொல்லாலே அறிவுறுத்துதலினுங் காட்டில் தனது ஒழுக்கத்தாலே அறிவுறுத்துதலே தலைசிறந்த வழியாகும் என்பதனை ஈண்டு இம் மாபெருந் தெய்வத்தின் செயலே அறிவுறுத்துதலறிக. உலகத்தில் அறவொழுக்கம் தலைதடுமாறும்பொழு தெல்லாம் அறவோர் தோன்றி இவ் வுலகத்தை மீண்டும் அறந்தலை நிறுத்துவர் என்பது பல சமயத்தார்க்கும் ஒப்ப முடிந்தொரு கொள்கையாம். அதற்கிணங்கவே ஈண்டுப் புத்தருடைய பிறப்பு நிகழ்ச்சியையும் இத் தெய்வம்-உயிர்கள் எல்லாம்...........நீயோ தோன்றினை! என்று பாராட்டுதலும் அறிக. பௌத்த சமயத்தவர் உலகம் அநாதியாக உள்ளது அதன்கண் ஆருயிரை அறஞ் செவியறிவுறுத்திய புத்த பெருமானே இறைவன் ஆவான் என்னும் சித்தாந்த முடையவராவார். அப் புத்த பெருமானைப் பீடிகையிற் கண்டு பீடிகையை அவனாகவே கருதி வழிபாடு செய்தல் வேண்டும் என்பது அவர்தம் பிடகநூல் காட்டும் நெறியாம். இதனை, மேலே நீயேயாகி நிற்கமைந்த இவ்வாசனம் என இத் தெய்வம் கூறுமாற்றானுணர்க. இனிப் பௌத்தர்கள் புத்த பெருமானையே கடவுளாகக் கருதுபவர் என்பதனை முற்றுணர்ந்து புவிமீது கொலை முதலா கியதீமை முனிந்து சாந்த முற்றிருந்து கருணையினாற் பரதுக்க துக்கனா யும்ப ரோடு கற்றுணர்ந்த முனிவரருங் கண்டுதொழப் பீடகநூல் களிவான் முன்னம் சொற்றிருந்த வுரைத்தருளுந் தோன்றலே கடவுள்அருட் டோன்ற லாவான் எனவரும் மெய்ஞ்ஞான விளக்கத்தானும்(32-புத்த.சருக்கம்) உணர்க. ஈண்டு மணிமேகலா தெய்வம் சொல்வனவும் செய்வனவும் மணிமேகலை கண்டும் கேட்டும் அறிந்து கொள்ளற் பொருட்டேயாம் என்பது முந்தைப் பிறப்பெய்தி நின்றோள்கேட்ப என்றமையாற் பெற்றாம். சுடர் வழக்கற்றுத் தடுமாறு காலை ஞாயிறு தோன்றிய தென்ன என்னும் உவமை இல்பொருளுவமையாம். என்னை? சுடர் வழக்கறுதல் எஞ்ஞான்று மின்மையின். நீயோ தோன்றினை என்புழி ஓகாரம் பிற கடவுளர் அவ்வாறு தோன்றினாரிலர் எனப் பொருள் கொள்ளின் பிரிநிலையாம்; வாளாது அசைநிலை என்னலுமாம். இதுவுமது 13-16: நீயே........முன்னர் (இதன் பொருள்) நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் ஆசனம் நாமிசை வைத்தேன்- பெருமானே எம்மனோர்க்கு நீயாகவே காட்சி தருகின்ற நீ இருந்தற முரைத்தற் கமைந்த இத் தரும பீடிகையை யான் இடையறாது வாழ்த்துமாற்றால் எனது நாவின்மேலேயே வைத்திருக்கின்றேன்; தலை மிசைக் கொண்டேன் தலையாலே வணங்குமாற்றால் எஞ்ஞான்றும் என்தலைமேலும் தாங்கியிருக்கின்றேன்; பூமிசை ஏற்றினேன்-என் உள்ளத் தாமரைப்பூவில் இடையறாது நினையுமாற்றால் எழுந்தருளவும் செய்துள்ளேன்; புலம்பு அறுகு என்றே-அஃது எற்றுக்கெனின் துன்பத்திற் கெல்லாம் காரணமாயிருக்கின்ற என் பவத்திறம் அற்றொழிவேனாதற் பொருட்டே என்று சொல்லி; வலங்கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர்- வலம் வந்து அத் தரும பீடிகையை வணங்கி வழிபாடு செய்கின்ற அம் மணிமேகலா தெய்வத்தின் முன்பு என்க. (விளக்கம்) இதனால் மனமொழி மெய்களாகிய முக்கருவிகளாலும் புத்த பெருமானை வழிபாடு செய்யும் மரபு அறிவுறுத்தமை அறிக. இவ்வாறு வணங்கும் மரபினை மும்மையின் வணங்கி எனப் பிறாண்டும் (பவத்திற மறுகென.......3) கூறுதலாலறிக. பூ- நெஞ்சத் தாமரைப்பூ புலம்பு: ஆகுபெயர்; பிறவிப்பிணி அறுகு-அறுவேன். வணங்குவோள்-வணங்கும் தெய்வம். மணிமேகலை மணிமேகலா தெய்வத்தை வணங்கி வினவுதலும் அத் தெய்வம் விடை கூறுதலும் 17-23: பொலங்கொடி....வணங்குழி (இதன் பொருள்) பொலம் கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி-அவ்விடத்தே அத் தெய்வத்தின் வரவு பார்த்து நின்ற மணிமேகலை தன் வழிபாட்டை முடித்தெழுந்த மணிமேகலா தெய்வத்தின் திருவடிகளிலே பொற்கொடி ஒன்று நிலத்தின் மேலே வீழ்ந்து கிடப்பது போலே வீழ்ந்து வணங்கி எங்கள் குல தெய்வமே நீயே எளிவந்து என்னை இத் தீவினிடை இட்டனை ஆதலால்; உன் திரு அருளால் என் பிறப்பு உணர்ந்தேன்- நின்னுடைய திருவருளாலே இப் புத்த பீடிகையைக் கண்டு தொழுது அடிச்சி என்னுடைய பழம்பிறப்பினை உணர்ந்து கொண்டிருக்கின்றேன்!; என் பெருங் கணவன் யாங்கு உளன் என்றலும்-என் முற்பிறப்பிற் கணவனாயிருந்து திட்டி விடத்தாலிறந்து போயவன் இப்பொழுது இருக்கின்றனன் இதனை எனக்கறிவித்தருளுக! என்று வேண்டா நிற்றலும்; இலக்குமி கேளாய்- இலக்குமியே கேள்!; இராகுலன் தன்னொடு பூம் பொழில் அகவயின் புலத்தகை எய்தினை-நீ தானும் நின் கணவனொடு கூடிக் களித்து வாழுங்காலத்தே ஒரு நாள் பூம் பொழிலிடத்தே சென்று அவனோடாடிய நீ சிறிது ஊடல் கொண்டு அவனுக்கு முகங்கொடாயாயினை; இடங்கழி காமமொடு அடங்கானாயவன்- நின் கணவன் பணிமொழி பல கூறி ஊடலுணர்த்தியும் நீ உணராது பின்னும் ஊடுதலாலே நின்பாற் கொண்ட மிகப் பெரிய காமம் காரணமாக நின் சினத்திற்கு அடங்கானாகியவன்; மடந்தை மெல்லியல் மலரடி வணங்குழி- மடந்தாய்! நின்றுடைய மெல்லியல்புடைய மலர் போன்ற அடிகளிலே வீழ்ந்து வணங்கும் பொழுது, என்க. (விளக்கம்) பொலம் கொடி- பொன்னிறமான காமவல்லி என்னும் மலர்க்கொடி. இது மணிமேகலைக்குவமை. தான் அத் தீவிற்கு வந்ததும் பீடிகை கண்டு தொழுதலும் பழம்பிறப் புணர்ந்ததும் எல்லாம் அத் தெய்வத்தின் அருள் காரணமாக எய்திய நலங்களே என்பாள் உன்திருவருளால் உணர்ந்தேன் என்றாள். என் கணவன் யாண்டுளன் என்று இப்பொழுது நீ எனக்கறிவுறுப்பாய் என்று யான் அறிகுவெனாயினும் அவனிலை அறிய விதுப்புறும் நெஞ்சம் உண்மையால் அதனை இப்பொழுதே கூறியருள்க என்பது தோன்ற என் பெருங் கணவன் யாங்குளன் என்று விதுப்புற்று வினவுகின்றனள். நீ நின் பழம்பிறப்புணர்ந்தமையையும் யான றிகுவன் என்பது மணிமேகலை யுணரும் பொருட்டு மணிமேகலை என்று விளியாது இலக்குமி! என்றே அத் தெய்வம் அவளை விளிப்ப தாயிற்று. அதனைக் கூறுவன் கேள் என்பதுபட இலக்குமி கேளாய் என்று பணித்தது. புலத்தகை- புலக்குந் தன்மை. ஊடுதல் காமத்திற் கின்பமாதலின் நீ புலத்தகை எய்தினை. அவனுடைய அல்லல் நோய் காண்கஞ் சிறிது என நீ அவன் உணர்த்தவும் உணராயாய் ஊடனீட்டித்தனை; அவ்வழி நீயே ஊடல் தீரும் அளவும் அடங்குதலே அவன் செய்யற்பாற்றாகவும் அங்ஙனம் அடங்கானாய் அவன் நின் மலரடி வணங்கினான், அத்துணைப் பெரிது அவன் நின்பாற் கொண்ட காமம் என்பாள் இடங்கழி காமமொடு அடங்கானாய் என்றாள். இத்துணையும் இடங்கழி காமம் எனப் பாட்டிடை வைத்த குறிப்பினாற் கொண்ட பொருளென்றுணர்க. மடந்தை: விளி; முன்னிலைப்புறமொழியுமாம். சாதுசக்கரன் வரவும், இராகுலன் சினத்தலும் 24-35: சாது........பணிந்தாங்கு (இதன் பொருள்) சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்- சாதுசக்கரன் என்னும் பெயருடையவனாய் உயர்ந்த வானத்திலே இயங்கி நாடு தோறும் சென்று அறங்கூறும் சாரணன் ஒருவன்; இரத்தின தீவத்து தெருமரல் ஒழித்து- இரத்தினத் தீவிற் சென்று அங்கு வாழும் மாந்தர் மனச்சுழற்சியைத் தனது அறவுரையாலே அகற்றி; ஆங்கு தருமசக்கரம் உருட்டினன் வருவோன்- அத் தீவிலே அறவாழி இடையறாது உருளும்படி செய்து வான்வழியே வருபவன்; வெங்கதிர் அமயத்து வியன் பொழில் அகவயின் வந்து தோன்றலும்- வெவ்விய வெயில் சுடுகின்ற நண்பகலிலே நீவிர் காமவிளையாட்டயர்ந்த அகன்ற அப் பூம்பொழிலினூடே இழிந்து நுங்கள் முன்பு வந்து தோன்றாநிற்ப; மெல்லியல் கண்டனை மயங்கினை கலங்கி மெய்ந் நடுங்குற்றனை நல்கூர் நுகப்பினை நாணினை இறைஞ்ச- மெல்லியலாகிய இலக்குமியே நீயே அவன் வரவினை முற்படக் கண்டனை உடல் நடுங்கினாய் மயங்கினாய் நெஞ்சு கலங்கினை ஒருவாறு தெளிந்து அம்முனிவனை எதிர் கொண்டு நின் நுண்ணிடை துவள் நாணி வணங்கினாய்; இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும்-இடங்கழி காமத்தாலே நின்னடிக்கண் வணங்கிய இராகுலன் அவன்வரவு தனக்கு இடையூறு விளைத்தலின் இப்பொழுது ஈங்கு வந்தெய்தியவன் யாவன் என்று வெகுண்டு உரப்புதலும்; விரா மலர்க் கூந்தல் விரவிய மலர் அணிந்திருந்த கூந்தலையுடைய நீ பெரிதும் அஞ்சி; அவன் வாய் புதையா வானூடு இழந்தோன் மலரடி வணங்காது நாநல் கூர்ந்தனை என்று-அவ்விராகுலனுடைய வாயினை நின்கையாற் பொத்தி வானத்தினின்றும் இழிந்து வருகின்ற இருத்தியுடைய இம்முனிவரை மலரடியிலே வீழ்ந்து வணங்காதொழிந்தது மன்றி நாவினால் இன்சொலியம்பாமல் சிறுமையுற்றனை என்று அறிவுறுத்துப் பின்பு; அவன் தன்னொடு-தன்பிழையுணர்ந்து கொண்ட இராகுலனோடு நீ சென்று; பகை அறு பாத்தியன் காம முதலிய உட்பகை அறுதற்குக் காரணமான புத்தருடைய திருவடிக்கன்பனாகிய அச் சாதுசக்கரனுடைய; பாதம் பணிந்து ஆங்கு-திருவடிகளில் வீழ்ந்து வணங்கியவுடன் என்க. (விளக்கம்) சாதுசக்கரன் அறவோர் குழுவிலுள்ளோன். என்னை? குழு மண்டலித்துக் குழுமி இருத்தலியல்பாகலின் அதற்குச் சக்கரம் என்பது பெயராயிற்று. எனவே சாதுசங்கத்துள்ளோன் என்ப தாயிற்று. ஈண்டுச் சாதுசங்கம் என்றது பௌத்தரில் துறவோர் கூட்டத்தை. மீவிசும்பு திரிவோன் என்றதனால் இவன் இருத்தி(சித்தி) கை கூடுப் பெற்றவன் என்பது பெற்றாம்; இருத்தி பெற்றவர், நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச் சலத்தில் திரியும் தெய்வத்தன்மை யுடையராயிருப்பர் என்பது நிலத்திற் குளித்து நெடுவிசும்பேறிச் சலத்திற் றிரியு மோர் சாரணன் தோன்ற என இந் நூலில் வருதலானும்(24-46-7) உணர்க. இத்தகைய சாரணர் நாடுகள்தோறும் சென்று மக்கட்கு அறஞ் செவியறிவுறுத்துவது வழக்கம். சமண் சமயத்தும் இத்தகைய சாரணர் உளர் என்பது பெரும்பெயர் ஐயர் ஒருங்கட் னிட்ட இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப் பெருமக னதிசயம் பிறழா வாய்மைத் தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்ற எனவரும் சிலப்பதிகாரத்தானும்(10-160-163) தெளிக. இவரை அந்தரசாரிகள் என்றும்கூறுப. பாசிலைப்போதி அணிதிகழ் நீழலறவோன் திருமொழி அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும் என்பர்இளங்கோவடிகளார்; (சிலப்-11-13). இனி அறத்தை ஆழியாக உருவகித்த லுண்டாகலின் அறஞ் செவியறிவுறுத்தலையே சக்கரம் உருட்டுதலாகக் கொண்டு இவனை அறவாழி யுடையோன் என்னும் பொருள்படச் சாது சக்கரன் என்றழைத்தனர் எனினுமாம். இதனை இரத்தினத் தீவத்துத் தரும சக்கர முருட்டினன் வருவோன் என்பது வலியுறுத்துதலுணர்க. இனி, பௌத்தத் துறவோர் ஓம் மணிபத்மே கூஉம் என்ற மறை மொழி பொறித்த வட்டவடிவமாகப் பொன்னாற் செய்யப்பட்ட சக்கரத்தைக் கையிற் கொண்டுருட்டும் வழக்க முடையோராதலின், இவனும் அச்சக்கரத்தை உருட்டுபவனாய் வருபவன் எனினுமாம் என்பாருமுளர் தரும சாரணர் தங்கிய குணத்தோர் கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோர் எனப் பிறாண்டுளம் ஓதுதல் போன்று ஈண்டும் விசும்பு திரிவோன் என்றமையாது,மீவிசும்பு திரிவோன் என்றார். இரத்தின தீவம் மணிபல்லத்திற்கு அணித்தாகிய மற்றொரு தீவு. சாது சக்கரன் நிலத்திலிழிந்தமைக்குக் குறிப்பாக ஏதுக் கூறுவார் வெங்கதிரமையத்து வியன்பொழி லகவயின் வந்து தோன்றலும் என்றார். நின் கணவன் நின் அடியில் வீழ்ந்து வணங்கும் செவ்வியில் அச்சாது சக்கரன் வந்துற்றமையால் செய்வதறியாது மயங்கினை, கலங்கி மெய்ந்நடுக்குற்றனை, நாணினை என்று அத் தெய்வம் கூறியபடியாம். இனி, நின் கணவன் இடங்கழி காமமுடையனாய் நின்னூடல் தீர்க்குஞ் செயலுக்கு இடையூறாக விருந்தமையால் வெகுண்டு இன்னாச் சொல் கூறி உரப்பினன் என்பாள் இராகுலன் வந்தோன் யாரென வெகுளலும் என்றாள். இதனால் காமவெகுளி மயக்கங்களின் புன்மையை இத் தெய்வம் எடுத்துக் காட்டிய நுணுக்கமும் ஈண்டு நினைக. மலரடி வணங்குதற்கு நீ ஏதுக்காட்டுவாய் வானூடிழிந்தோன் மலரடி வணங்காது நாநல் கூர்ந்தனை என்றவாறு. இன் சொல்லே நாவிற்கியன்ற செல்வம் ஆதலின் அது கூறி வரவேலாததூஉமன்றி வந்தோன் யார் என இன்னாச்சொல் இயம்பி நின் நாவினது வறுமையைக் காட்டினை என்று நீ நின் கணவனை அறிவுறுத்தினை என்றவாறு. பாத்தியன் என்பது அடியவன் என்னும் பொருளுடையது. திருவாதவூர்ச் சிவபாத்தியன் எனவரும் நம்பியாண்டார் நம்பி வாக்கிற்கும் சிவனடியான் என்பதே பொருள் என்க. பகையறு பாதத்திற்கு அன்பன் என்பாள் பகையறு பாத்தியன் என்றாள். பகையறுபாதம் என்றது புத்தர் திருவடியை. பகை காம முதலியன. இனி, இலக்குமி மெய்ந்நடுக்குறுதல் இறைபொருளாகப் பிறந்த அச்சம் என்னும் மெய்ப்பாடு. இராகுலனுக்குத் தன் கருத்து நிறைவேறுதற்கு இடையூறாகத் தோன்றி அலைத்தல் பற்றி வெகுளி பிறந்தது என்க. தன் மனைவி இறைஞ்சக் கண்டு வெகுளி பிறந்ததெனின் மனைவியையே வெகுள்வான்மன். என்னை? ஈண்டுக் குடிகொன்றவள் இலக்குமியே யாதலின் அக் கருத்துப் போலி என்க. இதுவுமது 34-41: அமர......அறுத்திடும் (இதன் பொருள்) அமர கேள்- தேவனே! அடிச்சியின் வேண்டு கோளிதனைக் கேட்டருள்வாயாக! நின் தமர் அலம் ஆயினும்-அடியேங்கள் உனக்குச் சுற்றத்தாராகும் தகுதியுடையேமல்லே மாயினும்; அமுதொடு அம்தீம்தண்ணீர் கொணர்கேம்-உணவினோடு அழகிய இனிய குளிர்நீரும் கொணர்வேம்; உண்டி அவற்றை உண்டருள்க; யாம் உன் குறிப்பினம்-அடியேங்கள் முன்னர் அறியாமையாற் பிழை செய்தேமாயினும். இனிப் பெருமான் குறிப்பின் வழி ஒழுகுவேம், என்று நீ அச் சாது சக்கரனுக்கு இனியன் கூறவே; அவனும் எம் அனை உண்கேன் ஈங்குக் கொணர்க இன் சொல்லால் உள்ளமுருகி எம்மனோர்க்கெல்லாம் அன்னை அனையாய் ஒருதலையாக நீ கொணருபவற்றை யான் உண்பேன் காண்! அவற்றை இங்கே கொண்டு வருவாயாக என்று ஆர்வத்தோடே பணிப்ப, நீயும் கொணர்ந்து அன்புடன் அம்முனிவனை ஊட்டினையல்லையோ!; அந்நாள் அவன் உண்டருளிய அவ்வறம் அக்காலத்தே அச்சாது சக்கரன் நின் உணவை ஏற்று உண்டருளினமையாலே நினக்கெய்திய நல்வினை; நின் ஆங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்-அப் பிறப்பிலேயே நின்னிடத்தினின்றும் ஒழியாமல் இப் பிறப்பினும் தொடர்ந்து வந்து நின் பிறவிப்பிணியையும் அறுத்திடும் காண்! அத் தகையது அறவோர்க் கெதிரும் நல்வினை என்றாள் என்க. (விளக்கம்) சாதுக்கரன் நிலவுலகத்திலேயே மக்கள் யாக்கையிலேயே அமரனாகி விட்டான் என்பது தோன்ற அமர! என்று இலக்குமி விளித்த வாறாம். தன் கணவன் சாதுசக்கரனைக் கண்டபொழுதே மலரடி வணங்காமல் வந்தோன் யார்! என வெகுண்டமை கருதி அவனெனத் தான் என வேற்றுமை நோக்காது அப் பிழையை இருவருடையதாகவும் கொள்க என்பாள் யாம் நின் தமரலம் ஆயினும் என்றாள். சிறியேம் பிழையைப் பொறுத் தருள்க. அதற்கு அறிகுறியாக யாம் கொணரும் அமுதம் நீரும் உண்டருளுதல் வேண்டும் என்றிரந்த படியாம். இனி, சாது சக்கரனும் இலக்குமியின் அன்பின் பெருமையைத் தான் உணர்ந்தமை தோன்ற எம்மனை உண்கேன் ஈங்குக் கொணர்க என்று விதுப்புற்றுப் பணித்ததின் இலக்கிய நயமுணர்க. இனி, அந்நாள் அவன் உண்டருளிய அறம் ஒழியாது நின்பிறப் பறுத்திடும் எனவரும் இதனோடு சிவஞானச் செயலுடையோர் கையிற் றானம் திலமளவே செய்திடினும் நிலமலைபோல் திகழ்ந்து பவமாய்க் கடலினழுந் தாதவகை யெடுத்துப் பரபோகம் துய்ப்பித்துப் பாசத்தை அறுக்கத் தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச் சரியைகிரி யாயோகந் தன்னிலுஞ் சாராமே நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி நாதனடிக் கமலங்கள் நண்ணுவிக்குந் தானே எனவரும் சிவஞானசித்தியார்ச் (சுப-278) செய்யுளை ஒப்பு நோக்கி இரண்டற்கும் நெருங்கிய உறவுண்மை உணர்க. ஈண்டு இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் (87) எனவரும் அருமைத் திருக்குறளும் நினைக. இதுவுமது 42-49: உவவன........செய்தேன் (இதன் பொருள்) சேயிழை உவவனம் மருங்கில் உன்பால் தோன்றிய உதயகுமரன் அவன் உன் இராகுலன்- மணிமேகலையே கேள்! புகார் நகரத்துப் பகவனது ஆணையிற் பன்மரம் பூக்கும் உவவனத்துள் பளிக்கறையின்பக்கலிலே உனக்குமுன் வந்து தோன்றிய அரசிளங்குமரனாகிய உதயகுமரனே நீ இலக்குமியாயிருந்த பொழுது நின் கணவனாயிருந்தவனாகிய அந்த இராகுலன் காண்!; ஆங்கு அவன் அன்றியும்- பழவினை காரணமாக அவ்வாறு மாறிப்பிறந்த பிறப்பினும் உன்னைக் காமுற்று வந்தணுகிய அவ்வுதயகுமரனே யன்றியும்; அவன் பால் உள்ளம் நீங்காத்தன்மை நினக்கும் உண்டாகலின்-முற்பிறப்பிற் கணவனாயிருந்தமையாலே அவ்வுதயகுமரன் பால் நின் நெஞ்சம் சென்று அவனை மறவாது காமுற்றுருக்குமொரு பண்பு உன்னிடம் உளது ஆதலாலே; கந்த சாலியின் கழிபெருவித்து ஓர் வெந்துகு வெள்களர் வீழ்வது போன்ற என-நின்னெஞ்சம் அவளைத் தொடர்ந்து செல்லுமிந்நிகழ்ச்சி நெற்களுள் சிறந்ததாகிய கந்தசாலி என்னும் நெற்பயிரினது வளமுடைய மிகப் பெரியதொரு விதையானது வெந்து மாவாகி உதிர்வதற்கிடனான் வெள்ளிய களர்நிலத்திலே வீழ்வதனை ஒக்கும் என்று யான் கருதி; அறத்தின் வித்து ஆகிய உன்னை ஓர் திறப்படற்கு ஏதுவாச் செய்தேன்- நல்லறத்தின் சிறந்த வித்தாகத் திகழுகின்ற நின்னை அவ்வறம் முளைத்துப் பயிராகித் தழைத்துத் தன் பயனை விளைவிக்கும் தன்மையைப் பெறுதற்குத் தகுதியாக நின்னை உவவனத்தினின்று என் விஞ்சையிற் பெயர்த்துப் பழம் பிறப்புணர்த்தும் இத்தரும பீடிகையைக் கண்டு நீ ஆக்க முறுதற்கு அதனயலிலே யான் நின்னை இட்டகன்றேன் காண்; என்று கூறிற்று என்க. (விளக்கம்) (49) சேயிழை என்னும் விளி ஈண்டு மணிமேகலை என விளித்தபடியாம். உதயகுமரனாகிய அவனே முற்பிறப்பில் உன் கணவனாயிருந்த இராகுலன் என்றவாறு. அவன் முற்பிறப்பின் பால் நின்னிடத்தே இடங்கழி காம முடைமையின் அப் பற்றுக் காரணமாகவே ஊழ்வினை அவனை நின்பாற் கொணர்ந்தது; நீயும் அவன்பாலங்ஙனமே காமமுடைய ஆதலின் நின்னெஞ்சமும்(5: 848) கற்புத்தானிலள் நற்றவவுணர்வு இலள் வருணக்காப்பிலள் பொருள் விலையாட்டி யென்று இகழ்ந்தனனாகி நயந்தோன் என்னாது அவன் பின் சென்றதன்றே! அந் நெகிழ்ச்சியை நீ அறியுமாறே யானும் அறிந்தேன், அந் நிகழ்ச்சி நல்வித்துக் களர் நிலத்துகுவது போன்றதாம்.யான் என் விஞ்சையிற் பெயர்த்து ஈங்குக் கொணருமாற்றால் உன் ஊழ் வலியைக் கெடுத்து நன்னெறிப் படுத்தினேன் காண் என்று அத் தெய்வம் கூறுகின்றது ஈண்டு, ஊழையும் உப்பக்கங் காண்ப ருலைவின்றித் தாழா துஞற்று பவர் (620) என்னும் அருமைத் திருக்குறள் நிலைக்கத்தகும் மணிமேகலாய்! புதுவோன் பின்றை நின்னெஞ்சம் போன தெனினும் காமத்தியற்கை இதுவே யாயின் அதன் திறம் கெடுக என்று அதற்குலைவின்றி நெஞ்சுறுதியும் பூண்டு நின்றனை.யானும் அச்செவ்வியறிந்து காமத்தின் திறங்கொடுதற் கேதுவாக ஓர் திறப்பட இது செய்தேன் என்று கூறுகின்றது. அத் தெய்வம் ஈண்டு குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றத் தான்முந் துறும் (1023) எனவரும் திருக்குறள் நினைக்கத்தகும். ஓர் திறப்படலாவது பொறிவழி மணஞ் செல்லாமல் தடுத்து மெய்ப் பொருளை உணரும் ஒரே நெறியில் மனத்தைச் செலுத்துதல் அது ஈண்டு அருளறம் பூணுதலாம் என்க. தெய்வம் மாதவி, சுதமதி, என்னும் இருவருடைய பழம் பிறப்புக்களையும் மணிமேகலைக்கு அறிவித்தல் 50-60: இன்னும்.........பணிதலும் (இதன் பொருள்) இன்னும் கேளாய்- மணிமேகலாய்! இன்னும் நீ அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளும் உள அவற்றையும் கூறுவல் கேட்பாயாக!; நீ இலக்குமி-முற்பிறப்பிலே நீ இலக்குமியாயிருந்தனையல்லையோ அப் பிறப்பிலே; நின் தவ்வையர் ஆவோர்; தாரையும் வீரையும்- நினக்குத் தமக்கையராய்த் தாரை என்பாளும் வீரை என்பாளும் ஆகிய இருமகளிருளராயினர் காண்; ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அகவயின் கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்-அங்ஙனம் இருந்த நின்னுடன் பிறந்த மகளிரிருவரையும் அங்க நாட்டினகத் தமைந்த கச்சயம் என்னும் குறு நிலத்தை ஆளும் வீரக்கழலணிந்த துச்சயன் என்னும் வேந்தன் ஒருவனே வாழ்கைத் துணைவியராக மணந்து கொண்டனன்; ஆங்கு அவன் அவருடன் அகல் மலையாடிக் கங்கைப் பேரியாற்று அடைகரை இருந்துழி-அங்கு அத் துச்சய மன்னன் தன் மனைவியராகிய தாரையோடும் வீரையோடும் அகன்ற மலையிடத்தே சென்று விளையாட்டயர்ந்து கங்கை என்னும் பேரியாற்றின் நீரடை கரையின்கண் ஒரு பொழிலின்கண் இளைப்பாறி இருந்த பொழுது; மறவணம் நீத்த மாசு அறு கேள்வி அறவணன் ஆங்கு அவன் பால் சென்றோனை- தீவினையின் தன்மை முழுவதையும் துடைத்தொழிந்த குற்றமற்ற பிடகநூற் கேள்வியையுடைய அறவண வடிகள் என்பார் அக்கரையிடத்திருந்த துச்சயமன்னன்பால் வந்த வரை நோக்கி; ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்தவன்-இவ்விடத்திற்கு வந்துற்ற நீர் யாவிரோ என்று வினவி எழுந்து எதிர் சென்றவன்; பாங்கு உளி மாதவன் பரதம்பணிதலும் அவருடைய அறிவொளி திகழும் திருவுருவத்தை நோக்கி இவர் அறத்தின் திருவுருவமே ஆயவர் என்று நினைத்து அம் மாதவருடைய திருவடியிலே வீழ்ந்து வணங்கா நிற்றலும்; என்க. (விளக்கம்) பிரமதத்த முனிவனை முற்பிறப்பிலே காதலன் பிறப்புங்காட்டாயோ என்றிரந்தாய்க்கு அச் செய்தியை மறுமையில் அரும்பெருந் தெய்வம் அறிவுறுத்தும் என்றொழிந்தான் அல்லனோ அதற்கேற்ப யான் இதுகாறும் இயம்பியது நின் கணவனுடைய செய்தியாம். அதுவே அன்றி யான் நினக்கு அறிவுறுத்தும் செய்தியும் உள அவற்றையும் கேள் என்பதுபட இன்னும் கேளாய்! என அருள் கெழுமிய அத் தெய்வம் உள்ளி உள்ளி அறிவுறுத்த வேண்டிய வெல்லாம் அறிவுறுத்துகின்றது என்க. நீ இலக்குமி என மாறுக. நீ முற்பிறப்பில் இலக்குமியாயிருந்தனை இதனை நீயே அறிகுதி என்பது இதன் குறிப்பு. தாரையும் வீரையும் என்னுமிருவரும் நின் தவ்வையராயிருந்தனர் என வழி மொழியுமாற்றால் கூறிக் கொள்க. அங்க நாட் டகவயிற் கச்சயம் எனவே கச்சயம் அங்க நாட்டிலமைந்துள்ள குறுநிலப் பகுதி என்பதாயிற்று. கச்சயம் ஒரு நகரம் எனினுமாம். அவருடன்- தாரையும் வீரையும் ஆகிய மனைவியரிருவருடனும் மலையில் விளையாடி என்க. வந்தவுடன் ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து சென்று அவர் பாங்கு உள்ளி மாதவன் என்றுணர்ந்து அவன் பாதம் பணிதலும் என்க. பாங்கு உளி என்புழி உள்ளி-உளி என விகாரம் எய்தி நின்றது. இதுவுமது 61-70: ஆதி......தொழுமென (இதன் பொருள்) ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன்-புத்தர்களுக்கெல்லாம் தலைவனாகிய புத்தபெருமானும் தனது அறவாழியையுருட்டி அறிஞர் உலகத்தைத் தன் அருளாட்சியின் கட்படுத்து ஆள்கின்றவனும், ஆகிய நம்மிறைவன்; மக்களை மாதுயர் எவ்வம் நீக்கி-மாந்தரினத்திற்குப் வெகுளி மயக்கங்களாகிய பெரிய துன்பங்களைப் போக்கி; விலங்கும் தம்முள் வெரூஉம் பகைநீக்கி உடங்கு உயிர் வாழ்க என்று- விலங்கினங்களும் தம்முள் ஒன்றினை ஒன்று அஞ்சுதற்குக் காரணமான தமதுட்பகை களைந்து அன்பினாலே ஒன்றி இன்புற்று வாழ்க என்னும் தனது கருணாபாவனை காரணமாக; உள்ளம் கசிந்து உக-கேட்போர் உள்ளமுருகி ஒழுகுமாறு; தொன்று காலத்து நின்று அறமுரைத்த குன்றம் மருங்கில் பழைய காலத்திலே ஏறி நின்று தன் மெய்க்காட்சிகளாகிய அருளறத்தை மாந்தர்க்கு அறிவுறுத்திய இந்த மலையின் மேலே; குற்றம் கெடுக்கும் பாத பங்கயம் கிடத்தலின்- கண்டவர்களின் மனமாசு தீர்க்கும் அப் பெருமானுடைய திருவடித்தாமரைகளின் சுவடு பதிந்து கிடத்தலாலே; ஈங்கு இது பாத பங்கய மலை எனும் பெயர்த்து ஆயது- இவ்விடத்தே உள்ள இந்த மலை, பாதபங்கய மலை என்னும் பெயர் உடையதாயிற்று; ஈங்கு தொழுது வலம் கொள வந்தேன்- இம் மலையை யான் தொழுது வலம் செய்து வணங்கவே இங்கு வந்துள்ளேன்; இப் பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என-இந்த அருளறமாகிய குற்றமற்ற மெய்க் காட்சியையே மேற்கொண்டு இல்லறத்தே நிற்கின்ற நீவிரும் எம்மோடு வலம் வந்து மலையைக் கைதொழுது உய்யுங்கோள் என்று அறிவுறுத்துதலாலே என்க. (விளக்கம்) ஆதி முதல்வன் என்றது கௌதம புத்தரை. அறம் முதலும் முடிவு மற்றது ஆகலின் அதனை முதலும் முடிவுமற்ற சக்கரமாகக் குறிப்புவமம் செய்வது நூனெறி வழக்கமாகும். தனது அறவாழியாலே அறிஞர் உலகத்தை ஆளுபவன் என்க. எவ்வம் என்றது ஆகு பெயராக அதற்குக் காரணமாகிய பிறப்பின் மேனின்றது. என்னை? பிறந்தோருறுவது பெருகிய துன்பம் என்பது புத்தருடைய மெய்மைகளுள் முதலாவதாதலறிக. அதனை நீக்குதலாவது. விசுத்தி மார்க்கத்தே செலுத்தி விடுவது. விலங்குந் தம்முள் வெரூஉம் பகைநீங்கி உடங்குயிர் வாழ்கவென் றுள்ளங் கசிந்து .........................................அறமுரைத்த என நிகழும் இதனோடு எல்லாவுயிரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே எனவரும் தாயுமானார் திருவாக்கினை ஒப்பு நோக்கி யுணர்க. அன்பினாலே உடங்குயிர் வாழ்க என்று என்க தொன்று காலம்- பழைய காலம். பாதபங்கயம் என்றது புத்தருடைய திருவடிச் சுவடுகளை. துச்சயனும் மனைவிமாரும், பௌத்த சமயத்தைச் சார்ந்த இல்லறத் தாராதலின் அவரைப் பழுதில் காட்சியீர்! என்று அறவண அடிகள் விளித்தனர் என்க. அப் பாத பங்கயம் தன்னை கண்டோர் காம வெகுளி மயக்கங்களைக் கெடுக்கும் தெய்வத்தன்மையுடைய தாகலின் நீயிருந் தொழும் என்றார் என்க. இதுவுமது 71-80: அன்றவன்..............உரையார் (இதன் பொருள்) அன்று அவன் உரைத்த அவ்வுரை பிழையாது சென்று கைதொழுது சிறப்புச் செய்தலின்-அற்றை நாள் அவ்வறவணவடிகள் பணிந்த மொழி பிழைபடாவண்ணம் தாரையும் வீரையும் ஆகிய நின் தமக்கையரிருவரும் கணவனும் அவ்வடிகளார் பின் சென்று அப் பாதபங்கயமலையை வலம் வந்து கை கூப்பித் தொழுது அதற்கு விழா வெடுத்தலாலே; மாதவியாகியும் சுதமதியாகியும் கோதை அம்சாயல் நின்னோடு கூடினர்-அவரிருவருள் தாரை யென்பவள் மாதவியாகியும் வீரை சுதமதியாகியும் வேறு வேறிடத்துப் பிறந்து வைத்தும் அந் நல்வினைப் பயனாக அருளறம் பூண்டு நினைக்குத் தாயாகவும் செவிலித்தாயாகவும் மணிமேகலை நல்லாய் நின்னோடு அன்புத் தொடர்புடையராயினர் காண்! அறிபிறப்பு உற்றனை அறம்பாடு அறிந்தனை-இனி நீ தானும் முற்செய் நல்வினைப் பயனாக முற்பிறப்பினை அறியத்தகுஞ் சிறப்புடைய பிறப்பினையும் பெற்றிருக்கின்றனை அதன் மேலும் அருளறத்தின் பெருமைகளையும் நன்கறிந்துள்ளனை அல்லையோ! பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை-இனி எதிர் காலத்திலே இவ்வருளறமல்லாத பிற அறங்களைக் கூறுகின்ற பல்வேறு சமயக்கணக்கர் தந் துணி பொருள்களையும் நீயே கேட்டுத் தெரிந்து கொள்குவை; அல்லியங்கோதை- மணிமேகலையே நீ; பல்வேறு சமயப்படிற்றுரை எல்லாம் கேட்குறும் அந்நாள் உனக்கு பல்வேறு வகைப்பட்ட சமயவாதிகளும் தத்தம் சமயப்பொருளாக நினக்குக் கூறுகின்ற பொய் மொழிகளையெல்லாம் நீ அவ்வவர் பாற் சென்று வினவித் தெரிய முயலுகின்ற உனக்கு; யாவரும் இளையன் வளையள் என்று விளைபொருள் உரையார்-அச் சமயக் கணக்கர் எல்லாம் இவள் இளைமையுடையோள் என்றும் வளையலணியும் பெண்பாலினள் என்றும் கருதித் தத்தம் சமயத்தின் துணிபொருளாகிய சித்தாந்தத்தைக் கூறுதற்கு உடன்படார் ஆதலாலே; என்க. (விளக்கம்) அவன்: அறவணன். அவ்வுரை என்றது அறவணவடிகள் நீயிரும் தொழும் என்று பணிந்த மொழியை. சிறப்பு- விழா. இனி அறவணவடிகளார்க்கு உண்டி முதலியன கொடுத்துச் சிறப்புச் செய்தலின் எனலுமாம். அவ்வறப் பயன் விளைதலின் மாதவியும் சுதமதியும் ஆகி, நின்னொடுங் கூடி அருளறம்பூண்டனர் என்பது கருத்து. அறிபிறப்புற்றனை அறம்பாடறிந்தனை ஆதலின் நின் முற்பிறப்பைப் பற்றி யான் கூற வேண்டியதில்லை என்றவாறு. படிற்றுரை- பொய்யுரை. வஞ்சகவுரையுமாம். வளையோள் என்றது பெண்பாலினள் என்றவாறு. மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு மந்திரம் செவியறி வுறுத்துதல் 80-88: வேற்றுரு..........இழிந்து (இதன் பொருள்) வேற்றுருவு எய்தவும் அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அருந்திறன் மந்திரம் கொள்க என-இத்தகைய இடையூறுண்டாகாமைக்கும் யாண்டும் இனிதிற் போக்குவரவு புரிதற்கும் உதவியாக நின்னை வேற்றுருவம் எடுத்துக் கொள்ளவும் விசும்பினூடு திரியவும் செய்யும் பெறற்கரிய தெய்வத்தன்மையையுடைய இந்த மந்திரங்களை நின் செவியினூட் கொள்வாயாக என்று கூறி; வாய்மையின் ஓதி-அம் மந்திரம் அவட்கு வாய்க்குந்தன்மையோடு செவியறிவுறுத்து; மதி நாள் முற்றிய மங்கலத் திருநாள் பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் திருஅறம் எய்துதல் சித்தம் என்று நீ உணர்- பின்னரும் மணிமேகலைக்குத் தேற்றுரை கூறுகின்ற அந்த மணிமேகலா தெய்வம் நல்லாய்! திங்களும் விசாகநாளும் முதிர்ந்து பொருந்தும் மங்கலமுடைய வைகாசித் திங்கள் நிறைமதி நன்னாளிலே இவ்வுலகியலறிவு தூர்ந்துபோம்படி அவற்றை நீ இகழ்ந்து கைவிட்டு மெய்மூலம் பெருந்தியிருந்து மாரனை வென்று வீரனாகத் திருவாய் மலர்ந்தருளிய திருவறம் தலைப்படுதல் ஒருதலையாம் என்று நீ உணர்ந்து கொள்வாயாக என்று பணிந்து அவ்விடத்தினின்றம் வானத்திலே எழுந்து உயர்ந்து பின்னரும்; மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து- நங்காய்! நினக்குக் கூறவேண்டியது ஒன்றனை யான் மறந்து விட்டதுமுண்டு என்று கூறக் கொண்டு மீண்டும் அவ்விடத்திலேயே இழிந்து வந்து என்க. (விளக்கம்) வேற்றுருக்கோடல் சமயக் கணக்கரிடம் மாதவன்வடிவிற் சென்று வினாதற்கு மட்டுமின்றி வேறு செவ்விகளினும் மணிமேகலைக்கு வேண்டப்பட்டமையின் மந்திரங் கொடுத்தற்கு விளை பொருள் உரையார் என்றது ஞாபகவேதுவாந்துணையே ஆயிற்று. பொதுவறிவு-உலகியலறிவு. புலம்-மெய்க்காட்சி. மாதவன் புத்தன். திருவறம் என்றது, அருளறத்தை-அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லையாகலின் அதனையே செல்வம் ஆக்கி, திருவறம் என்றாள். என்னை? ஆகவே மக்களாய்ப்பிறந்தோர் எய்துதற்குரிய சிறப்புச் செல்வமாகவும், ஏனைய செல்வமெல்லாம் பொதுச் செல்வமாம் ஆதலின் என்க, இதனை. அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள (241) எனவும், நல்லாற்றா னாடி அருளாள்க பல்லாற்றான் தேரினும் அஃதே துணை (242) எனவும் வரும் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் திருவாக்கானு முணர்ந்து கொள்க. சித்தம்-ஒருதலை. இது மணிமேகலையை அத் தெய்வம் அந் நெறியிலூக்குவித்தற்குக் கூறியபடியாம். நின் பதி என்றது-புகார் நகரத்தை. விடை கொடுத்து விசும்பிலேறிய தெய்வம் மீண்டும் யான் மறந்ததும் உண்டு எனத் தன் பிழையைக் கூறிக் கொண்டு இழிந்து வந்தது என்னுமிது, அத் தெய்வம் அவள்பால் வைத்த அருட்பெருமையை நன்கு விளக்குதலறிக. இது, தண்டமிழாசான் சாத்தனாருடைய புலமை வித்தகத்தையும் விளக்குதலுணர்க. மணிமேகலா தெய்வம் மீண்டும் பசியறுக்கும் மந்திரங்கொடுத்தல் 89-93: சிறந்த........தானென் (இதன் பொருள்) சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய்- மக்கட் பிறப்பிற்குரிய சிறந்த கொள்கையை மேற்கொண்டொழுகுகின்ற சேயிழாய் இது கேள்!; மக்கள் யாக்கை உணவின் பிண்டம்-மக்களுடைய உடம்பானது உணவினாலியன்றதொரு தொகுதியே ஆதலால் இப் பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும் என்று-இப் பொழுது யான் நினக்குச் செவியறிவுறுக்கும் இந்த மந்திரமானது நினக்கெய்தும் பெரிய பசியைத் தீர்க்குமொரு தெய்வத்தன்மை யுடைத்து இதுவும் நினக்கின் றியமையாததாம், ஆகவே இதனையும் ஏற்றுக் கொள்ளுதி! என்று சொல்லி; ஆங்கு அது கொடுத்து ஆங்கு-அவ்வாறே அம் மந்திரத்தையும் செவியறிவுறுத்த பொழுதே; நெடுந்தெய்வம் அந்தரம் எழுந்து ஆங்கு நீங்கியது- நெடிய புகழுடைய அம் மணிமேகலா தெய்வம் வானத்திலே எழுந்து போய் அவ் வானத்தினூடேயே மறைந்து போயிற்று; என்பதாம். (விளக்கம்) மக்கள் யாக்கை உணவின் பிண்டம் என்றது நீயும் மக்கட் பிறப்பினள் ஆதலின் உனக்குப் பசித்துன்பம் அடிக்கடி வந்துறும். ஆதலின் அதற்கும் ஒரு பாதுகாப்பு வேண்டும் என்றவாறு. உண்டி முதற்றே உணவின் பிண்டம் என்பது புறநானூறு. மந்திரங்களுள் தலைசிறந்த மந்திரம் இதுவே என்பது தோன்ற, பெருமந்திரம் என்று கூறிற்று. இனி, இக் காதையினை ஆயிழை ஆயினள் பெற்றியும் ஐதென வந்து தோன்றிய தெய்வம் வணங்குவோள் முன்னர்ப் பொருந்தி உணர்ந்தேன் யாங்குளன் என்றலும் கேளாய் புலந்தாய் இராகுலன் வணங்குழித் திரிவோன் உருட்டி வருவோன் தோன்றலும் கண்டனை உற்றனை இறைஞ்ச இராகுலன் வெகுளலும் நீ வாய் புதையா, நல்கூர்ந்தனை என்று அவனொடு பாத்தியன் பாதம் பணிந்து கொணர்கேம் உண்டியாம் குறிப்பினம் என்றலும் கொணர்கென உண்டருளிய அறம் அறுத்திடும், உதயகுமரன் உன்இராகுலன், உன்னைத் திறம்படச் செய்தேன், கேளாய் நின் தவ்வையராவோர் தாரையும் வீரையும் சிறப்புச் செய்தலின் மாதவி யாகியும் சுதமதியாகியும் நின்னொடு கூடினர், உற்றனை அறிந்தனை கேட்குவை உரையார் எய்தவும் திரியவும் ஆக்கும் இம் மந்திரம் கொள்கென ஓதி, திருநாள் அறம் எய்துதல் சித்தம் உணர் நீ பதிப் புகுவாய் என்று எழுந்து ஓங்கி உண்டென மறித்து இழிந்து கேளாய் பிண்டம் இம் மந்திரம் பசி அறுக்கும் என்று கொடுத்து எழுந்து தெய்வம் நீங்கியது என இயைத்திடுக. மந்திரம் கொடுத்த காதை முற்றிற்று. | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக