திங்கள், 21 செப்டம்பர், 2015

செப்டம்பர் 28 - மஹாளய பட்சம் ஆரம்பம் கடவுள்கள் செய்த தர்ப்பணம்

ராதே கிருஷ்ணா 21-09-2015



மகாளய பட்சம் – விளக்கம்
.
மகாளய பட்சம் – விளக்கம் & மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்
"மகாளயம்’ என்றால் "கூட்டமாக வருதல்’. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். "பட்சம்’ என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்.
இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.
மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச
காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.
நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.
.
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.
முதல்நாள் – பிரதமை – பணம் சேரும்
2ம் நாள் – துவிதியை – ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள் – திரிதியை – நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள் – சதுர்த்தி – பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள் – பஞ்சமி – வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6ம் நாள் – சஷ்டி – புகழ் கிடைத்தல்
7ம்நாள் – சப்தமி – சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள் – அஷ்டமி – சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9ம்நாள் நவமி – சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள் – தசமி – நீண்நாள் ஆசை நிறைவேறுதல்
11ம்நாள் – ஏகாதசி – படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12ம் நாள் – துவாதசி – தங்கநகை சேர்தல்
13ம்நாள் – திரயோதசி – பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14ம்நாள் – சதுர்த்தசி – பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15ம் நாள் – மகாளய அமாவாசை – முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.


செப்டம்பர் 28 - மஹாளய பட்சம் ஆரம்பம்
கடவுள்கள் செய்த தர்ப்பணம்
.
இல்லத்தில் உள்ள பெரியோர்களின் ஆசி என்பது மிக உயரிய சொத்து. இது பல தலைமுறைகளைக் காக்கும் என்பதால் ராமர், கிருஷ்ணர் ஆகிய விஷ்ணு அவதாரங்கள்கூட இந்த நாளில் தர்ப்பணம் செய்தார்களாம். அவர்களோ ஆதிமுதலான தெய்வங்கள் அவர்களுக்கு எங்கே முன்னோர்கள் என்று தோன்றலாம்.
அவர்கள் விஷ்ணுவாக இருக்கும்போது, தர்ப்பணம் செய்ய வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் மனித உருவெடுத்துப் பிறந்த இல்லங்களில் முன்னோர்கள் உண்டல்லவா? அம்முன்னோர்களைத் திருப்திபடுத்தவே, ஆராதிக்கவே ராமரும், கிருஷ்ணரும் தர்ப்பணம் செய்தார்கள் என்பது குறிப்பிட்டு நோக்கத்தக்கது.
பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வல்லமை கொண்ட அவதாரங்களே தர்ப்பணம் பண்ண வேண்டுமென்றால், மனிதர்கள் எம்மாத்திரம்? பித்ருக்களின் ஆசீர்வாதம் குலத்தைக் காக்கும் என்பார்கள். மனித குலத்தைக் காக்கவே அவர்களும் தர்ப்பணம் செய்தார்கள் போலும்.
தர்ப்பணம்
உடல் நிலை சரியில்லாதவர்கள் தர்ப்பணத்தை இல்லத்திலும் அளிக்கலாம். ஆனால் தீர்த்தத் தலங்களுக்கு சென்று தர்ப்பணத்தை எள், நீர் தெளித்துச் செய்தால் பலன் பல மடங்கு கூடும் என்பது ஐதீகம்.
தர்ப்பணங்களில் எள் பித்ருக்களுக்கு உரித்தானதாக இருக்கிறது. இந்தத் தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் தீரும் என்பது சாஸ்திரம். இதனால் வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பது ஐதீகம்.
மகாளய புண்ணிய காலம்
தம் குலக் கொழுந்துகள் நன்றாக இருக்கின்றனரா என்று காண வரும் முன்னோர்கள் மனம் மகிழும்படி இக்காலகட்டத்தில் இல்லத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். சண்டை சச்சரவுகள் இன்றி, இல்லம் அமைதியாக இருப்பது அவர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்குமாம்.
இந்த மஹாளய பட்ச நாட்களைக் குறித்து கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் ஆகியவற்றில் சிறப்பித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்களில் காகத்துக்கு அன்னமிடுதலும், பசுவுக்கு அகத்திக் கீரை அளித்தலும் பல நற்பலன்களை அளிக்கும்.
பலன்
பித்ருக்கள் ஒருபோதும் தன் குலத்தைச் சபிக்கப்போவது இல்லைதான். ஆனால் அவர்கள் மனம் மகிழ்வடையும்பொழுது, வழங்கும் ஆசிகள் இல்லத்தில் கவலை அளிக்கக்கூடிய, திருமணத் தடை, புத்திரப் பேறின்மை, கடன் தொல்லை, மனக் கவலை, நவக்கிரக தோஷங்கள் ஆகியவற்றை நீக்கி மன அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும் என்பது நம்பிக்கை.இந்த நன்னாட்களில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை எனச் சில விஷயங்கள் உண்டு.
செய்ய வேண்டியவை
இல்லத்தில் உள்ள பெரியவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பசியால் வாடிவிடாமல் காக்க வேண்டும். இருக்கும்போதும், இறந்த பின்னும் முன்னோரைக் காப்போம், வழிபடுவோம்.
தர்ப்பணத்திற்குப் பின்னரே இல்லத்துப் பூஜைகள் செய்ய வேண்டும்.தர்ப்பணம் செய்ய வேண்டிய இம்மாதத்தில் திவச நாள் முடிந்த பின்னரே இல்லத்து மங்கள நிகழ்ச்சிகளை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும் பித்ருக்களை வணங்கிச் சூரியனை வழிபடலாம்.ஆண்டொன்றுக்குத் தொண்ணூற்றாறு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்ற கணக்கொன்று உண்டு.மகா புண்ணியத்தை அளிக்கக்கூடியது தாய், தந்தையருக்கு இடைவிடாமல் செய்யும் திவசமே.
தவிர்க்க வேண்டியவை
கர்த்தா என்ற தர்ப்பணம் செய்பவர் தனது பெயரை இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு எந்தப் பூஜையிலும் சங்கல்பம் செய்துகொள்ளக் கூடாது.




























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக