வியாழன், 18 செப்டம்பர், 2014

காந்தி நகர் to பரப்பன அக்ரஹாரா! ''சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ராசியான இடம்..

ராதே கிருஷ்ணா 19-09-2014
66 கோடி சொத்துக் குவிப்பை விசாரிக்க மூன்று கோடி செலவு!
ஆதாரங்களை அடுக்கும் மனித உரிமை ஆர்வலர்!
http://bit.ly/1pkarrh


66 கோடி சொத்துக் குவிப்பை விசாரிக்க மூன்று கோடி செலவு!
ஆதாரங்களை அடுக்கும் மனித உரிமை ஆர்வலர்!
பெங்களூரு ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் 20-ம் தேதி அறிவிக்கப்படும் நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குக்கு கர்நாடக அரசு எவ்வளவு செலவு செய்திருக்கிறது என்பதோடு, கடந்த 10 ஆண்டுகளில் ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வராமல் இருந்ததே பெரும் குற்றம் என்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

நரசிம்ம மூர்த்தியை சந்தித்துப் பேசியபோது, ''சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால், அரசாங்கத்தை ஏமாற்றி வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துகள் சேர்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா என்ற ஒரு தனி மனிதருக்கு இந்த அரசாங்கம் எவ்வளவு செலவு செய்கிறது என்ற ஆதங்கத்தில்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்குக்கு ஆன செலவுகளைப் பெற்றேன்.
இந்த வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, 2004 முதல் 31.3.2014 வரை ஒவ்வோர் ஆண்டும் ஆன செலவு விவரம்:
2004-05-ம் ஆண்டு ரூ.20,57,318, 2005-06-ம் ஆண்டு ரூ.35,07,489, 2006-07-ம் ஆண்டு ரூ.11,02,878, 2007-08-ம் ஆண்டு ரூ.16,62,143, 2008-09-ம் ஆண்டு ரூ.9,99,542, 2009-10-ம் ஆண்டு ரூ.8,68,891, 2010-11-ம் ஆண்டு ரூ.19,92,031, 2011-12-ம் ஆண்டு ரூ.38,96,828, 2012-13-ம் ஆண்டு ரூ.39,61,506,  2013-14-ம் ஆண்டு ரூ.86,50,990... என கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2,86,99,616 செலவாகி இருக்கிறது. இன்னும் இந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து இன்றைய தேதி வரை கடந்த 6 மாதங்களுக்கான செலவையும், சென்னையில் ஏழு ஆண்டுகள் நடைபெற்றபோது ஆன செலவையும் சேர்த்தால் ரூபாய் ஐந்து கோடியைத் தாண்டும்.
கர்நாடகாவில் உள்ள பல நீதிமன்றங்களில் இன்னும் அடிப்படை வசதிகள்கூட இல்லை. கர்நாடக ஏழை எளிய மக்கள் சட்ட விழிப்பு உணர்வு, சட்ட உதவிகள் இல்லாமல் தவிக்கிறார்கள். ஓர் அரசு துறையில் ஒரு விண்ணப்பப் படிவம் கேட்டால்கூட, 'போய் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு வா’ என்று ஜெராக்ஸ் எடுப்பதற்கான ஒரு ரூபாயைக்கூட மக்களுக்கு அரசாங்கம் செலவு செய்யத் தயங்குகிறது. ஆனால், ஒரு தனி மனித வழக்குக்கு அரசாங்கம் இவ்வளவு பணம் செலவு செய்திருப்பதை நினைக்கும்போது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. அதனால் வழக்குக்கு ஆன மொத்த செலவுகளையும் ஜெயலலிதாவின் சொந்தப் பணத்தின் மூலமாகவே வசூலிக்கப்பட வேண்டும்.  
மேலும் கர்நாடகாவில் உள்ள பல கீழ் நீதிமன்றங்களிலும் உயர் நீதிமன்றத்திலும் நீதிபதிகள் பற்றாக்குறையாக இருக்கின்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் விசாரணை செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கின்றன. ஆனால், இந்த வழக்குக்காக ஒரு தனி நீதிமன்றத்தையே ஒதுக்கி, அதற்கு ஒரு தனி நீதிபதியையும் அரசு சிறப்பு வழக்கறிஞர்களையும் நியமித்து நீதிமன்றத்தின் முழு வேலை நேரத்தையும் பயன்படுத்திக்கொள்ளாமல் பல நேரங்களில் 1/2 மணி நேரமும், ஒரு மணி நேரமும் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம்?  
சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் உள்ள தலைமை நீதிபதியின் நீதிமன்றம்கூட சாதாரணமாக இருக்கிறது. ஜெயலலிதா வழக்கு நடைபெறும் சிறப்பு நீதிமன்றம் 50, 60 ஸ்பெஷல் இருக்கைகள் போட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதே மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது ஒரு நில அபகரிப்பு புகார் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது நீதிமன்றத்தின் ஒவ்வொரு வாய்தாவுக்கும் மக்களோடு மக்களாக வந்து வழக்கைச் சந்தித்தார். முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி மீது கர்நாடக மாநிலத்தில் ஒரு மிகச் சிறிய சிக்கபல்லாபூர் தாலுக்கா நீதிமன்றத்தில் எலெக்ஷன் சம்பந்தமான புகார் வழக்கு ஒன்று நடைபெற்றது. அந்த வழக்குக்காக டெல்லியில் இருந்து வந்து ஆஜரானார். இப்படி எத்தனையோ தலைவர்கள் நீதிமன்றங்களுக்குத் தலைவணங்கி வருகிறார்கள். ஜெயலலிதாவுக்கு இந்த நீதிமன்றம் எந்த மூலையில் இருக்கிறது என்றுகூட தெரியாது.
நீங்கள் நீதிமன்றத்துக்கு வராமல் புறக்கணித்ததைப் பலரும் பின்பற்றுவார்கள்'' என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  
- வீ.கே.ரமேஷ்
படம்: ரமேஷ் கந்தசாமி


காந்தி நகர் to பரப்பன அக்ரஹாரா! ''சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ராசியான இடம்...

From the album: Timeline Photos
By அரசியல் விமர்சனம் Political comments
காந்தி நகர் to பரப்பன அக்ரஹாரா! ''சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ராசியான இடம்...

''சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு 20-ம் தேதி வரப்போகிறது. அதற்குத் தடை ஏற்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் காலாவதி ஆகிவிட்டன. 16-ம் தேதிக்கும் 19-ம் தேதிக்கும் இடையில் ஏதாவது புதிய மனு போடப்போகிறார்களா எனத் தெரியவில்லை. 15-ம் தேதி காலை ஜெயலலிதா தரப்பு ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவைப் பார்க்கும்போது 20-ம் தேதி அன்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் நீதிமன்றத்தில் நிச்சயம் ஆஜராவார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது!''

''என்ன மனு அது?''

''ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வந்த இடம் சிட்டி சிவில் கோர்ட். இதனைப் பாதுகாப்பற்ற இடமாக ஜெயலலிதா தரப்பு நினைக்கிறது. பெங்களூரு நகரத்தின் மையப்பகுதியில் இது இருப்பதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். இந்த இடத்துக்கு ஜெயலலிதா வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. மாற்று இடம் சம்பந்தமாக கர்நாடக அரசும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களும் முதலில் எந்த யோசனையும் செய்யவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, 'நான் அனைவரையும் ஒரே மாதிரிதான் பார்க்கக் கூடியவன். ஜெயலலிதா தரப்போ, அரசு தரப்போ பாதுகாப்பு கருதி வேறு இடத்துக்கு நீதிமன்ற வளாகத்தை மாற்றினால் அங்கு வந்து என் தீர்ப்பை அறிவிப்பேன். நானாக அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என அரசிடம் கேட்க மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 15-ம் தேதி ஜெயலலிதா வழக்கறிஞர் குமார், நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவிடம், ஒரு மனுவை தாக்கல் செய்தார். 'என் மனுதாரர் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார். அவருக்குப் பாதுகாப்பு வேண்டும். இந்த நீதிமன்ற வளாகத்தில் 96 நீதிமன்றங்கள் இருக்கிறது. பல்லாயிரம் பேர் வருகிறார்கள், போகிறார்கள். இங்கு அவருக்குப் பாதுகாப்பாக இருக்காது. அதனால் ஏற்கெனவே உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 2011-ல் தன்னிலை விளக்கம் கொடுக்க பெங்களூரு வந்தபோது பரப்பன அக்ரஹாரம் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்தி பவனில்தான் நீதிமன்றம் நடைபெற்றது. அதேபோல பாதுகாப்பு கருதி இந்த முறையும் அங்கே நீதிமன்றத்தை மாற்றி தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்று மனுவைக் கொடுத்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி குன்ஹா, அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வராததால் விசாரணைய 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.''

''ஓஹோ!''

''அரசு தரப்பு விளக்கத்தைக் கேட்ட பிறகு நீதிபதி முடிவை எடுப்பார். இந்த மனு பதிவாளருக்கு சென்று, அவர் உயர் நீதிமன்றப் பதிவாளரின் அனுமதி பெற்று, கர்நாடக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வார்கள்.''

''பாதுகாப்புக் குறைபாடு உள்ளதா அந்த நீதிமன்றம்?''

''வழக்கு நடைபெறும் சிறப்பு நீதிமன்றம் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்துக்குள் அமைந்துள்ளது. இது பெங்களூரு சிட்டியின் மையப்பகுதியான மெஜஸ்டிக் அருகே காந்தி நகரில் இருக்கிறது. இந்த கோர்ட் வளாகத்துக்குள் சிட்டி சிவில் நீதிமன்றங்கள் 53, விரைவு நீதிமன்றங்கள் 15-ம், சிறு நீதிமன்றங்கள் 19-ம், பெங்களூரு சிட்டி புறநகர் நீதிமன்றங்கள் 9 என மொத்தம் 96 நீதிமன்றங்கள் இருக்கிறது. 7 அடுக்கு மாடிகளைக் கொண்டது. இதில் 1500-க்கும் மேற்பட்ட நீதிமன்ற ஊழியர்களும், 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வழக்கறிஞர்களும் இருக்கின்றனர். ஒரு நாளில் குறைந்தது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கிறார்கள். இதற்கு இரண்டே நுழைவாயில்கள்தான் இருக்கிறது. இந்த நீதிமன்ற வளாகத்தின் முதல் மாடியில் 37-வது நீதிமன்ற அறையில்தான் தனி நீதிமன்றம் செயல்படுகிறது. இந்த சிட்டி சிவில் கோர்ட் வளாகத்துக்குள் முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, குவாரி முறைகேடு ஊழல் வழக்குக்காக 2012-ம் ஆண்டு வந்தபோது பத்திரிகையாளர்கள் அவரை போட்டோ எடுத்தார்கள். அதை அவரது வழக்கறிஞர்கள் தடுக்க, பத்திரிகையாளர்களுக்கும், வழக்கறிஞர்களுக்குமான கலவரம் மூண்டது. அதைத் தடுக்க வந்த காவல் துறையினரையும் தாக்க மும்முனைக் கலவரமாக வெடித்தது. இதில் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டது. 23 நாட்கள் நீதிமன்றமே நடைபெறவில்லை. அன்றிலிருந்து இந்த நீதிமன்ற வளாகத்துக்குள் எந்தப் பத்திரிகையாளர்களும் வருவதில்லை. இந்தக் கலவரச் சம்பவத்தை சி.பி.ஐ விசாரித்து வருகிறார்கள். இவ்வளவு ராசியான இடம் அது!''

''அப்படியா?''

''குறிப்பிட்ட இடம்தான் வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு கேட்டுள்ளது. இவ்வழக்கில் 313 விதிப்படி ஜெயலலிதா தன்னிலை விளக்கம் கொடுக்க பெங்களூரு வந்தபோது பாதுகாப்புக் கருதி 3 இடங்களை தேர்வு செய்தார்கள். நாகராஜபுரத்தில் உள்ள பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள பெங்களூரு மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்திபவன் அரங்கம், ஆனந்தபுரத்தில் உள்ள குடும்ப நீதிமன்றம், எலெக்ட்ரானிக் சிட்டி ஏரியாவில் உள்ள கூட்டுறவு சங்க கோர்ட் ஆகிய மூன்றும் அப்போது பரிசீலனை செய்யப்பட்டது. இதில் பரப்பன அக்ரஹாரம் தேர்வு செய்யப்பட்டது. இதில் பரப்பன அக்ரஹாரம் இடத்தைத்தான் கேட்கிறது ஜெயலலிதா தரப்பு. மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஹெச்.ஏ.எல் விமான நிலையம் பெங்களூரு மெஜஸ்டிக்கில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. சிறப்பு விமானத்தில் வந்து இங்குதான் ஜெயலலிதா இறங்க வேண்டும். ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தில் இருந்து வன்னார்பேட்டை, நீலச்சந்திரா, ஆஸின் டவுன் கடந்து 23 கிலோ மீட்டரில் உள்ளது பரப்பன அக்ரஹாரம். அவ்வளவு தூரம் அவர் காரில் பயணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தாலும் பரவாயில்லை, காந்தி நகர் கோர்ட் மட்டும் வேண்டாம் என்பதில் ஜெயலலிதா தரப்பு உறுதியாக இருக்கிறது.''

''என்ன காரணம்?''

''காந்தி நகரில் தற்போது செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோதுதான் பல்வேறு பிரச்னைகள் வந்தது. தீர்ப்புக்கான நாளைக் குறித்ததும் அந்த நீதிமன்றத்தில்தான்! அது மட்டுமல்ல... 'இந்த ஹாலின் வாசல் வடக்கு நோக்கியிருக்கிறது. நீதிபதி மேற்கு நோக்கி உட்கார்ந்திருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர் கிழக்கு நோக்கி நிற்க வேண்டியிருக்கும். கிழக்கு நோக்கி நிற்பது அவருக்கு ராசியானது அல்ல... வடக்குதான் உகந்தது!’ என்று சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். அதனால் காந்தி நகரை தவிர்க்க நினைக்கிறார்கள். அத்துடன் இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். காந்தி நகர் கோர்ட் ஆக இருக்கும்பட்சத்தில் மீடியா எளிதாக அவரை நெருங்கிவிடும். படியில் ஏறும்போதும், இறங்கும்போதும் எளிதாக படம் எடுக்கலாம். பரப்பன அக்ரஹாரம் என்றால் மீடியா கண்ணில் படாமல் கோர்ட்டுக்குள் போகலாம். வரலாம் என்பது அவர்களின் கணக்கு!''

''20-ம் தேதி என்ன நடக்கும்?''

''குற்றம்சாட்டப்பட்டவர்கள், அவர்களது வழக்கறிஞர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆஜரானதும் நீதிபதி முதலில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளியா... நிரபராதியா? என்பதை மட்டும் அறிவிப்பார். நிரபராதி என்கின்ற பட்சத்தில் தீர்ப்பு அறிவித்ததும் எழுத்துப்பூர்வமான ஷரத்துகளை வாங்கிக்கொண்டு கிளம்பிவிடலாம். மாறுபட்டதாக இருந்தால் தீர்ப்பின் இதர விவரங்களை மறுநாளோ அல்லது வேறு நாளோ தள்ளிவைப்பார் நீதிபதி. இந்த வழக்கைப் பொறுத்தவரை பாதுகாப்புக் காரணத்தையொட்டி காலையில் வழக்கின் தீர்ப்பையும், தேவைப்பட்டால் மதியம் இதர விஷயங்களையும் சொல்லிவிடுவார் என்றும் சொல்கிறார்கள்.''

''ம்!''

''கடந்த இரண்டு வாரங்களாக கோயில் கோயிலாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் சசிகலா. திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதிக்குச் சென்று ஒரு மணி நேரத்துக்கு மேல் அங்கு அமர்ந்து வழிபட்டார். ஜெயலலிதாவுக்கும் தனக்கும் மோதல் ஏற்பட்டபோது சசிகலா அடிக்கடி சென்று வந்த இடம் அதுதான். 'மீண்டும் எல்லாம் சுபமாக நடக்க வேண்டும்’ என்பதற்காகத்தான் இங்கு சென்றாராம். மங்களூர் மஞ்சுநாத சுவாமி கோயிலிலும் சசிகலாவுக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர் முருகன் கோயிலில் வழிபாடு செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் உறவினரான மகாதேவனும் பூஜைகள் நடத்தி உள்ளார். இப்படி பக்திப் பரவசம் பொங்குகிறது. சசிகலா உறவினர்கள் அனைவரையும் அழைத்து, 'அடக்கமாக இருக்க’ வலியுறுத்தப்பட்டுள்ளதாம். அமைச்சர்கள், அவர்களது உறவினர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரது நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றனவாம்!''

உப்பு தின்னா தண்ணி குடிச்சு தான ஆகா வேண்டும்?? தீர்ப்பை ஜனநாயக முறைப்படி உள்ளதா என்று 27ஆம் தேதி தெரிந்துவிடும்...
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக