திங்கள், 22 செப்டம்பர், 2014

எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - "ட்ராஃபிக் ராமசாமி"

ராதே கிருஷ்ணா 22-09-2014


எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - "ட்ராஃபிக் ராமசாமி"
நடுத்தர வகுப்பை சேர்ந்த ஒரு 73 வயது முதியவராக நாம் இருந்தால் என்ன செய்து கொண்டிருப்போம் ?
அக்கடா என்று எதை குறித்தும் கவலைப் படாமல் கோவில், குளம், நடைப்பயிற்சி, சக நண்பர்களோடு அரட்டை என்றல்லவா காலத்தை கழித்திருப்போம் ? ஆனால் இந்த ராமசாமி அதற்கெல்லாம் விதிவிலக்கானவர். கண் எதிரே தெரியும் அநியாயங்களை தட்டிக் கேட்பதில் தன்னிகரற்றவர். இவர் போடாத பொது நல வழக்குகள் இல்லை. இவர் எதிர்க்காத பெரிய மனிதர்கள் இல்லை.
ஆரம்ப காலங்களில் சென்னை பாரிஸ் கார்னரில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் அல்லல் பட்டு கொண்டிருப்பதை பார்த்து, தன்னை ஒரு தன்னார்வ தொண்டராக ஈடுபடுத்திக் கொண்டு, போக்குவரத்தை ஒழுங்கு படுத்த உதவினார் ராமசாமி என்கிற இந்த‌ சாமான்ய மனிதர். இதனால் இவரை "ட்ராஃபிக் ராமசாமி" என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர். காவல்துறை இவரின் பணியை பாராட்டி ஊக்குவித்தது. இப்படி தொடங்கி சென்னையின் போக்குவரத்து ஒழுங்குமுறையில் பெரும் பங்காற்ற தொடங்கினார் ட்ராஃபிக் ராமசாமி.
அதன் பின் 1998ல், என் எஸ் சி போஸ் ரோடு, இவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடங்கிய பொது வழக்கால், இரட்டை வழி சாலையாக மாறியது.
சென்னையில் மீன் பாடி இயந்திர வண்டிகள் என சொல்லப்படும் வாகன‌ங்களால் பல விபத்துக்கள் நடந்து வந்தன. சில இரண்டு சக்கர வாகன ஓட்டிகளின் உயிரிழப்பும் ஏற்பட்டது. மிக அபாயகரமான அந்த வாகன‌ங்களை நிறுத்த வேண்டும் என்று இவர் தொடுத்த பொது நல வழக்கால், அதை நிறுத்த உத்தரவிட்டது நீதிமன்றம். இதன் விளைவால் அந்த வாகனங்களை பயன் படுத்துபவர்கள் இவர் மேல் ஆத்திரம் கொண்ட‌னர். 2002ல் இவரை சட்டம் ஒழுங்கு ஆய்வாலர், முன்பு வைத்தே தாக்கினார்கள். இதனால் இவர் ஒரு கண்ணின் பார்வையை இழந்தார். இந்த இழப்பும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் இவரின் உறுதியை தளரச் செய்யவில்லை.
டி நகரில் உள்ள உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெரு ஆகியவற்றில் அங்கீகாரம் இல்லாமல் கட்டப் பட்ட பல வனிக வளாகங்கள் இவரின் பொது நல வழக்கால் இடித்து தள்ளப்பட்டது. (அவற்றில் சரவனா ஸ்டோர், ஜெயசந்திரா டெக்ஸ்டைல்ஸ், சென்னை சில்க்ஸ் ஆகியவையும் அடங்கும்)
இவரின் பொது நல வழக்கின் பேரில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மற்றோர் பொது நல வழக்கு, மோட்டார் வாகன‌ங்கள் விற்போர், ஹெல்மெட்டையும் வாகனத்தோடு சேர்த்து தரவேண்டும் என்கிற நடைமுறைப் படுத்தப்படாத வழக்கத்தை அமல் படுத்தச் செய்தது.
இவரின் பங்களிப்பு வெறும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் மட்டும் இல்லாமல் பல்வேறு ஒழுங்கீனங்களை தட்டி கேட்பதிலும் இருந்து வருகிறது. ஒற்றை மனிதராக இவர் பல்வேறு முறைக் கேடுகளை தட்டி கேட்க தொடங்கினார். 2007ல் இவரை கோர்ட் வளாகத்தில் வைத்தே எதிர் கட்சி வழக்கறிஞர் தாக்கினார்.
சென்னை போரூர் குளத்தின் அருகே சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளை இவர் பொது நல வழக்கு தொடர்ந்து அப்புறப்படுத்தினார்.
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, 2004ல் சில‌ வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கனிப்பில் ஈடுப்பட்டிருந்தபோது இவரின் பொது நல வழக்கினால் அவர்களில் 160 பேரை கைது செய்ய ஆனை பிறப்பிக்கப்பட்டது. அதே போல் வழக்கறிஞர்கள் இலங்கை தமிழ் பிரச்னையை மையமாக கொண்டு சாலையை 35 நாள் அடைத்து "சாமியானா" போட்டு ஆர்பாட்டம் செய்த போதும், களத்தில் இறங்கினார் "ட்ராஃபிக் ராமசாமி". .விளைவு இவர் மேல் கொலை மிரட்டல்கள் கூட விடுத்தார்கள் சில வழக்கறிஞர்கள்.
2013ல் இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக அரசு திட்டங்களில் "அம்மா" என்கிற பெயரை நீக்க வேண்டும் என்று பொது நல வழக்கை தாக்கல் செய்தார். இவரின் பொது நல வழக்குகளை சொல்லிக் கொண்டே போகலாம். இந்தியாவில் மிக அதிகமான பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தவர் என்கிற பெருமை இவரை சேரும். இவரின் பொது நல வழக்குகளால் பல இடங்களில் மறு தேர்தல் நடந்துள்ளது. ஏன் ஆட்டோ கட்டணத்தை ஏற்றுவதை கூட தடுத்து நிறுத்தியுள்ளார். ஈவேரா வை வைத்து அரசு தயாரிக்க‌ நினைத்த "பெரியார்" திரைப்படத்தை நிறுத்தினார். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
சட்டம் ஒழுங்கை மதிக்காதவர்கள், ரௌடிகள், தாந்தோங்கி தனமாக நடப்பவர்கள் என இவருக்கு பல பகைவர்கள். இவரின் குடும்பம் கூட இவர் மேல் உள்ள அச்சுறுத்தல்களால் இவரை விட்டு விலகியே உள்ளது. ஆனால் இவர் எதற்கும் அசராத நிஜ இந்தியர்.
திரைப்படங்களில் 50 பேரை ஒரே அடியில் அடித்து வீழ்த்தும் "டம்மி ஹீரோக்களை" பார்த்து நாம் கை தட்டுவதுண்டு. நிஜ வாழ்வின் நிஜ ஹீரோ "ட்ராஃபிக் ராமசாமி" அவருக்கு சாமான்யர்கள் ஒவ்வொருவரின் சார்பில் என் கரவொலிகளும்.
இருகரம் கூப்பிய வணக்கங்களும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக