வியாழன், 4 செப்டம்பர், 2014

ஆன்மிக சிந்தனைகள்

ராதே கிருஷ்ணா 05-09-2014


* தெய்வம் உனக்குள் குடியிருக்க விரும்பினால், முதலில் உடல் என்னும் கோயிலை தூய்மையாக வைத்துக் கொள்.
* "கேட்டவுடன் விரும்பியதெல்லாம் கிடைக்க வேண்டும். அவ்வாறு செய்ய தெய்வம் கடமைப்பட்டிருக்கிறது' என்று எண்ணாதே.
* பாலீஷ் செய்யப்பட்ட கண்ணாடி போன்றது மனம். அதில் தூசு படியாமல் சுத்தமாக வைத்துக் கொள்.
* நீ தெய்வத்தை முழுமையாக நம்பினால், நேர்மையாக இருப்பதற்கான நல்ல சூழ்நிலையை இயற்கையே அமைத்துக் கொடுக்கும். 
* "இதுநாள் வரை இப்படி இருந்து விட்டேனே' என்று குழம்பாதே. "இன்று முதல் நல்லவனாக இருப்பேன்' என்பதே இன்பத்திற்கான வழி. 
* மணம் வீசும் மலர்கள் இயற்கை அன்னையின் அழகு வடிவங்கள். தம்மைத் தாமே அர்ப்பணித்துக் கொண்ட தியாகச் சுடர்கள். 
* மலரைப் போல எப்போதும் மகிழ்ச்சியாக இரு. எவன் ஒருவன் மலரின் பண்புகளைப் பெறுகிறானோ, அவனே உலகில் மகிழ்ச்சியானவன்.
- ஸ்ரீஅன்னை

* மனதை அடக்கியாண்டு மறுமைக்குப் பயன்படும் பணிகளைச் செய்பவனே அறிவாளி. மனம் போன போக்கில் நடந்து, இறைவன் அருளை எதிர்பார்ப்பவன் முட்டாள்.
* நாவு நேர்மையாக இருக்குமானால், இதயம் நேர்மையான வழியில் செல்ல வேண்டும். நேர்மையற்றதாக இருக்குமானால் இதயம் நேர்மையான வழியில் செல்ல முடியாது.
* ஒரு காரியத்தை நீர் செய்ய விரும்பினால் அதன் முடிவை எண்ணிப்பாரும். உம் சிந்தனையில் அதன் முடிவு நல்லதாக இருந்தால் அதைச் செய்வீர். இல்லையேல் அதை விட்டு விடும்.
* உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு. 
* பெருமை என்பது உண்மையை ஏற்க மறுப்பதும், மனிதர்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.
* ஒருவன், முதியவருக்கு அவருடைய வயதிற்காக மரியாதை செய்தால், வயோதிக நிலையில் அவனுக்கு மரியாதை செய்வோரை இறைவன் ஏற்படுத்துகிறான்.
நபிகள் நாயகம் 


* மனதில் போட்டி பொறாமை இருக்கும் வரையில் எதிலும் நிறைவு உண்டாகாது.
* தர்மம், நீதி இந்த இரு பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டால் உலகிற்கே நன்மை உண்டாகும்.
* தேவைகளை அதிகரித்துக் கொண்டே போனால் அதன் விளைவு விபரீதமாகவே இருக்கும்.
* யாரையும் எதற்காகவும் அலட்சியம் செய்வது கூடாது. மற்றவர் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
* குழந்தையாக இரு என்று உபநிஷதம் கூறுகிறது. ஏனென்றால் கள்ளம் கபடமற்ற குழந்தை, கடவுளுக்குச் சமமானது.
காஞ்சிப்பெரியவர்


* சுயதேவைகளை தானே செய்து கொள்வதில் தான் உண்மையான கவுரவமும், மனநிறைவும் உண்டாகும்.
* பெற்றோர், சகோதரருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து ஒருபோதும் தவறக்கூடாது.
* 'தன்னைப் பெற்ற தாயார் 'கிண்ணிப்பிச்சை எடுக்கிற போது கோதானம் பண்ணினானாம்' என ஒருவன் பெயரெடுப்பது நல்லதல்ல. 
* குடும்பத்தோடு ஊராருக்கும் நம்மால் முடிந்த நன்மையைச் செய்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர்


* வாழ்க்கைத் தரம் என்பது நம்மிடம் இருக்கும் பொருட்களைப் பொறுத்தது அல்ல.
* தேவைகளை அதிகரித்துக் கொண்டே போவதும், அதற்காக ஆலாய் பறப்பதும் சரியான வாழ்க்கை முறையல்ல.
* இஷ்டம் போல உண்பதும், உடுத்துவதும் தரமான வாழ்வு அல்ல. மன நிறைவே உயர்வானது.
* எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று எப்போதும் சிந்திப்பவன் தான் பரம ஏழை.
* நிறைவும், நிம்மதியும் மனதில் இருக்கிறது என்பதை உணர்ந்து எளிய வாழ்வு வாழ முயல வேண்டும்.
காஞ்சிப்பெரியவர்


* நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்களும் வாழ வேண்டும் என்பதே உத்தமமான குணம்.
* மனம் எப்போதும் கடவுள் வாழும் இடமாக இருக்க வேண்டும். அதை குப்பை தொட்டியாக்கி வைத்திருக்கக் கூடாது.
* ஒழுக்கம் உள்ளவன் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் முழுமை, நேர்த்தி, அழகு போன்றவை அமைந்து இருக்கும்.
* கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பெரியோர்வழிபாட்டை ஏற்படுத்தி வைத்தனர். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றும் சொல்வர்.
- காஞ்சிப்பெரியவர்


* பெண்கள் வேலையை முடித்து விட்டு, ஓய்வு நேரத்தில் தர்ம சாஸ்திரங்கள், நீதிநூல்கள், புராணங்கள் போன்ற நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்.
* பெண்கள் குழுவாக இணைந்து படிப்பது சிறப்பு. அதற்காக சங்கம் அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
* பூஜைக்குத் தேவையான மஞ்சள், குங்குமம், அட்சதை போன்றவற்றைச் செய்து கோயில்களுக்குக் கொடுப்பது நல்ல சிறந்த தொண்டு. 
* ஆடம்பர ஆசைகளை வளர்க்காமல் எளிமையாக வாழ்வதில் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
காஞ்சிப்பெரியவர்


* நீங்கள் செய்த நல்லதை பிறருக்கு எடுத்துச் சொல்லத் தேவையில்லை.
* உபதேசிப்பதைக் காட்டிலும், அதை பின்பற்றி நடப்பதே ஆற்றல் வாய்ந்தது.
* வாழ்க்கை என்பது வெறும் லாபநஷ்டக் கணக்கு பார்க்கும் விஷயமல்ல. பிறர் துன்பம் போக்க முடிந்ததைச் செய்ய முயல வேண்டும்.
* எந்த பணியில் இருந்து கொண்டிருந்தாலும் சரி, மனதில் இறைச் சிந்தனை மட்டுமே இருப்பது அவசியம்.
* மனிதன் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவது நல்லதல்ல. அது பேராசையில் நம்மைத் தள்ளி விடும்.
- காஞ்சிப்பெரியவர்


* பொறாமை உடையவன் எதை பெற்றாலும், மனநிறைவு அடைய மாட்டான்.
* தர்மம், நீதி இந்த இரண்டும் சேர்ந்தது தான் பண்பு. பண்பு இல்லாவிட்டால் மனிதன் தன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான்.
* அலட்சிய மனநிலையுடன் எதையும் அணுகுவது கூடாது. அக்கறையுடன் ஈடுபட்டால் மட்டுமே செயலில் வெற்றி கிடைக்கும்.
* இடைவிடாமல் எதை தீவிரமாகச் சிந்திக்கிறோமோ, அதுவாகவே மாறிவிடும் தன்மை உண்டாகி விடும்.
காஞ்சிப்பெரியவர்


* ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு இந்த இரண்டும் நம்மிடம் உள்ள அசுத்தம் அனைத்தையும் போக்கி விடும்.
* அடிப்படை வசதி கூட இல்லாதவர்களுக்கு உதவுவது தான் உண்மையான தர்மம்.
* பாவத்திற்கு பரிகாரம் தேடுவதை விட, புதிதாகப் பாவச்சுமை சேராமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
* பொம்மலாட்ட பொம்மை போல சகல உயிர்களிலும் இருந்து ஈஸ்வரனே உலகத்தை ஆட்டி வைக்கிறார். 
* மனதில் எண்ணியதை எல்லாம் பேசுவது கூடாது. வார்த்தைகளை அளந்து நிதானமாகப் பேச வேண்டும்.
காஞ்சிப்பெரியவர்


* ஒருவரைப் புகழ்வதிலும் கட்டுப்பாடு வேண்டும். ஒரேயடியாக முகஸ்துதி செய்தால், ஆணவம் உண்டாகும்.
* நம்மிடம் எத்தனையோ குறைகள் இருக்கின்றன. மற்றவர்களிடம் குற்றம் காண்பதில் கவனம் செலுத்தக்கூடாது.
* சவாரி முடிந்தபின் குதிரையைத் தட்டிக் கொடுப்பது போல, வேலை முடிந்தபின் செய்தவரைப் பாராட்டப் பழகுங்கள்.
* தேவைகளை அதிகரித்துக் கொண்டே போவதால் மட்டும் வாழ்க்கைத் தரம் உயர்வதில்லை. இதனால், இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ முயலுங்கள்.
- காஞ்சிப்பெரியவர்


* அமைதி என்பது கடையில் வாங்கத்தக்க பொருள் அல்ல. இதயத்திலேயே ஊறக்கூடிய இன்பம் தான் சாந்தி. 
* சாதுக்களை என்ன திட்டினாலும் அவர்கள் மவுனமாகவும், மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். மலைமேல் விழுந்த தூறல் மலையையா சாய்த்துவிட முடியும்? 
* மிதமான ஆகாரம், மிதமான நித்திரை, மிதமான பேச்சு, மிதமான உழைப்பு இவை இருந்தால் நம் வாழ்க்கை கரைகளை உடைய ஆறுபோல சீராக ஓடிக்கொண்டிருக்கும். 
* புராணங்களில் தத்துவத்தைத் தள்ளிவிட்டுக் கதைகளை மட்டும் படிப்பவர்கள் பழத்தின் சுளையைத் தள்ளிவிட்டு தோலை மட்டும் சாப்பிடுபவர்களைப் போன்றவர்கள்.
* எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் வடிவமே விஷ்ணு தத்துவம். விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்தவன் என்பது பொருளாகும். 
* ஒருவனுக்கு ஆன்மிக உணர்வு இல்லாத வாழ்க்கை என்பது இரவைப் போன்றது. ஆன்மிக உணர்வு உடைய வாழ்க்கை பகலைப் போன்றது.
* உலக வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டு பணி செய்தால் பணம் கிடைக்கும். ஆன்மிக வாழ்வில் ஈடுபாடு கொண்டு பணி செய்தால் நிம்மதி கிடைக்கும். 
* மேயப்போன மாடு எப்படி கொட்டிலில் விட்டுச் சென்ற கன்றினை நினைத்து ஏங்குமோ, அதுபோல எந்த வேலையைச் செய்தாலும் பகவந்நாமாவை நினைத்திருக்க வேண்டும். 
கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்.


* கடல் பெரிதாக இருந்தாலும் தாகத்தைத் தணிப்பதில்லை. ஊற்று நீர் சிறிதாக இருந்தாலும் அது நம் தாகத்தைத் தணிக்க போதுமானது. அதுபோல, பலவிதமான சாதுர்யங்களைப் பேசும் சாமான்யனின் வீண்பேச்சு பயனற்றதாகும். ஆனால், அனுபவ ஞானியின் ஓரிரு வார்த்தைகள் மன ஆறுதலையும், சாந்தியையும் தரும்.
* கருவி எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தாலும் அதை இயக்கம் தானாக நடைபெறுவதில்லை. உலகம் இயற்கையாக இயங்குவது போல் தோன்றினாலும் அதன் பின்னால் இயக்கும் சக்தியாக இறைவன் இருக்கிறான்.
* உலகில் நம் ஒவ்வொருவரையும் கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார். நம் பிரார்த்தனைகளை அவர் செவிகள் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால், கடவுளிடம் மனப்பூர்வமாக உங்கள் பிரார்த்தனைகளை முன்வையுங்கள். 
* வெப்பம்-குளிர், சுகம்-துக்கம், மானம்-அவமானம், வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம் என்று இரு எதிரெதிர் குணங்கள் உலகில் இருக்கின்றன. இவ்விரு அனுபவங்களும் கடவுளை உணர்ந்த பின் நம்மை பாதிப்பதில்லை. 
* இறைவன் சத்தியத்தையே தன் இருப்பிடமாக கொண்டிருக்கிறான். சத்தியமும் இறைவனும் வேறுவேறல்ல. சத்தியத்தைக் கடைபிடிப்பவன் தெய் வத்தையே சரணடைந்தவனாகிறான்.
-கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்


* ராமபக்தியுடன் வாழ்பவர்கள் பரிசுத்தம், மகிழ்ச்சி பெற்று இம்மையிலும் மறுமையிலும் மேன்மை அடைவார்கள்.
* ராமபக்தியுடையவருக்கு ஞானம், வைராக்கியம் தாமாக உண்டாகும். பாவத்திலிருந்து விடுபட்டு வாழ்வர். 
* பார்வை இருந்தாலும், இருளில் நடக்க விளக்கு தேவைப்படுகிறது. அதுபோல நமக்கு அறிவு இருந்தாலும், சரியான வழிகாட்ட ராமபக்தி என்ற ஒளிவிளக்கு தேவை.
* அதிர்ஷ்டம் வந்தால் ஆனந்தக்கூத்தாடுவதும், துன்பம் வந்தால் துவண்டு போவதும் கூடாது. எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
* சத்தியம் தான் நமக்கு உற்ற துணை. எப்போதும். உற்சாகத்தை இழக்கக் கூடாது. பிறப்பும், இறப்பும் உலகின் இயற்கை என்பதை உணர்ந்து பணிவோடு நடக்க வேண்டும்.
* உடலையும், உள்ளத்தையும் தூய்மையான நிலையில் வைத்து, பக்தி சிரத்தையுடன் சேவை செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்வதில் தயக்கம் கூடாது.
ராமாயணம்


* மனிதர்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்வீர்!
* நீங்கள் செய்த நன்மைகளை சிந்திப்பதை விட உங்களில் நிகழ்ந்த பாவங்களைச் சிந்தியுங்கள்.
* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.
* உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது, இவ்வுலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.
* எவர் அண்டை வீட்டாரை துன்புறுத்துகிறாரோ, அவர் என்னைத் துன்புறுத்தியவராவார்.
* அன்பு செலுத்தாதவன் அன்பு செலுத்தப்படுவதற்கு அருகதை அற்றவன்.
* தருமம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக அல்லது ஒரு கெட்ட செயலிலிருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை.
நபிகள் நாயகம்


* பிறருடைய பொருளை பொய் சாட்சியம் கூறி அபகரிப்பவனை சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமுடியாத படி அல்லாஹ் தடுத்து விடுவான்.
* மனிதர்களைப் பார்த்து வெட்கப்படுவதைவிட, அல்லாஹ்வுக்கு வெட்கப்படுவதே உயர்வானதாகும்.
* நீங்கள் எவர்களுடன் சேர்ந்து வாழுகின்றீர்களோ, அவர்களுடனே நாளை மறுமையிலும் சேர்ந்து இருப்பீர்கள்.
* உன் நாவை அடக்கி வைத்துக் கொள். உன் வீட்டை, விருந்தினர் வரும் தலமாக ஆக்கிக் கொள். நீ செய்த பாவங்களை எண்ணி எண்ணி கண்ணீரைச் சிந்து. உன் வாழ்வில் வெற்றி பெறுவாய்.
* இவ்வுலக வாழ்வில் மதி மயங்காமல் வாழு. அல்லாஹ் உன்னை நேசிப்பான்.
* எவன் பேசும்போது கோபம் கொண்டானோ, அவன் நம்மைச் சேர்ந்தவன் அல்ல.
நபிகள் நாயகம்


* ஒரு அனாதை அழுகின்ற சமயம், அவன் அழுவதற்கு காரணமானவனுக் காக நரகம் விரிவடைகிறது. அவனை சிரிக்க வைப்போருக்காக சொர்க்கம் விரிவடைகின்றது என்று இறைவன் கூறுகின்றான்.
* மோசடி செய்பவன், கஞ்சன், கொடுத்த தர்மத்தைச் சொல்லிக்காட்டுபவன் ஆகியோர் சொர்க்கம் நுழையமாட்டார்கள்.
* உங்களைப் படைத்த இறைவனை நேசிக்கிறீர்களா? முதலில் உங்களைப் போன்ற மனிதர்களை நேசியுங்கள்! அப்பொழுது தான் உங்களுக்கு இறைவன் நேசம் கிடைக்கும்.
* ஒரு மனிதனைப் பற்றி விசாரிக்காதீர். அவனுடைய நண்பனை தெரிந்து கொள்ளுங்கள்! ஏனென்றால் ஒவ்வொருவரும் தனது நண்பனைத் தான் பின்பற்றுவான்.
* இவர்களை சொர்க்கம் தேடுகிறது. 1. திருக்குர்ஆனை ஓதுபவர், 2. தேவையற்ற பேச்சை பேசாமல் தம் நாவை பேணுபவர், 3. பசித்தவர்களுக்கு <உணவளிப்பவர், 4. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றவர்.
நபிகள் நாயகம்


* பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக ஆகிவிடுகின்றன.
* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி விடுகின்றன.
* நீங்கள் சுத்தமுடையவர்களாக இருங்கள். சுத்தமுடையவனே சுவர்க்கத்தில் நுழைவான்.
* வாங்கும்போதும் விற்கும்போதும் சாந்தகுணத்தைக் கடைபிடிப்பவர் மீது அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும்.
* உழைப்பாளிகளின் கூலியை கால தாமதமாகக் கொடுப்போர் அநியாயக்காரர்களாகும்.
* நீங்கள் பொய் சத்தியம் செய்து ஒரு பொருளை விற்பனை செய்த போதிலும் அது அபிவிருத்தியை கெடுத்து விடுகின்றது.
* நீங்கள் இறைவனிடத்தில் பாவமன்னிப்பை கோருங்கள். நான் ஒரு நாளைக்கு நூறு முறை மன்னிப்பைக் கோருகிறேன்.
* இறைவன் பெருந்தன்மை மிகுந்த அருளாளன். தண்டிக்கும் ஆற்றல் இருந்தாலும் குற்றங்களை மன்னிக்கும் மனப்பான்மை உள்ளவன்.
நபிகள் நாயகம்


* பெரியோர்களுக்கு கண்ணியம் கொடுக்காதவரும், சிறியோர் மீது இரக்கம் கொள்ளாதவரும் எம்மைச் சேர்ந்தவரல்ல.
* எவர் மரணித்துவிட்ட குழந்தையின் தாயிடம் சென்று ஆறுதல் கூறுகிறாரோ, அவருக்கு சொர்க்கத்தின் போர்வையை போர்த்தப்படும்.
* தன்னுடைய வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவனும், எல்லாச் செயல்களிலும் நடுநிலையை கை கொள்பவனும் நிச்சயம் ஏழ்மையை அடைய மாட்டான்.
* ஆடம்பர வாழ்வை விட்டு, உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஆடம்பரவாழ்வு வாழக்கூடியவர் அல்லாஹ்வின் சொந்த அடியாராக மாட்டார்.
* செல்வம் என்பது பொருட்கள் அதிகமாக வைத்திருப்பதல்ல. போதும் என்ற மனம் படைத்திருப்பதே செல்வம்.
* செல்வச் செழிப்போடு வாழும்போது, நீ இறைவனை நினைத்தால், துன்பம் அடையும்போது இறைவன் உன்னை நினைப்பான்.
நபிகள் நாயகம்


* உண்மை விசுவாசியான ஒரு ஏழை அடியான் மீது இறைவன் நேசம் காட்டுகிறான்.
* திண்ணமாக ஒவ்வொரு வஸ்துவுக்கும் ஒரு திறவுகோல் இருக்கிறது. ஏழைகளை நேசிப்பது சொர்க்கத்தின் திறவுகோலாகும்.
* யாசிப்பவனுக்கு ஏதாவது கொடுங்கள். அது காய்ந்து போன குழம்பாக இருந்தாலும் சரியே.
* பெருமைக்காக ஆடை அணிகின்றவருக்கு வாழ்வில் வறுமை உண்டாகும்.
* எல்லோரும் ஒன்று கூடி உண்ணுங்கள். பிரிந்து விடாதீர்கள். ஒன்று கூடி இருப்பதில் தான் பரகத் இருக்கிறது.
* நீங்கள் இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி இருப்பதால் விரைவில் உங்களுக்கு முதுமை தட்டிவிடும்.
* வீண் செலவும் ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள். முடிந்தவரை தருமமும் செய்யுங்கள்.
* உணவுப் பண்டங்களைப் பதுக்காமல் மக்கள் தேவைக்கு விற்பனை செய்யும் வியாபாரி அல்லாஹ்வின் பேரருளைப் பெற்றவராவார்.
நபிகள் நாயகம்


* பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில் தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது.
* உன் தந்தையின் உறவை பாதுகாத்துக் கொள். அதை முறித்து விடாதே. முறித்துக் கொண்டால் உன்னுள் இருக்கும் ஒளியை அல்லாஹ் போக்கி விடுவான்.
* உங்களுடைய தந்தைக்கு நீங்கள் நன்றி செலுத்துங்கள். உங்கள் மகன் உங்களுக்கு நன்றி செலுத்துவான்.
* பெற்றோரை வேதனை செய்பவனை இறைவன் எத்தனை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டாலும் மன்னிக்க மாட்டான்.
* வயது வந்த பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செலவு செய்யவில்லையானால் சுவர்க்கம் நுழைய முடியாது.
* பெற்றோர் அநியாயம் செய்தாலும் அவர்களிடம் பிள்ளைகள் அன்பை செலுத்துவது கட்டாய கடமையாகும்.
* பெற்றோரை மனம் நோகச் செய்து அவர்கள் அழுது கண்ணீர் வடிக்கச் செய்வது பெரும்பாவமாகும். 
* மகன் பேரில் தகப்பனுக்குரிய கடமையைப் போன்று, உடன்பிறந்த அண்ணனுக்குரிய கடமையாகும்.
- நபிகள் நாயகம்


* எவன் அல்லாஹ்வின் அடியார்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான்.
* உங்களின் பாவங்களே நோயாகும். அவைகளுக்குரிய மருந்து பாவ மன்னிப்பாகும்.
* மதுவைக் கொண்டு மருத்துவம் செய்யாதீர். நிச்சயமாக அது மருந்து அல்ல! நோயாகும்.
* மது அருந்துபவர்கள் நோயாளியாகி விட்டால், அவர்களுடைய நலம் விசாரிக்க செல்லாதீர்கள்.
* உலகத்தின் மீது பிரியம் வைப்பது எல்லா பாவங்களுக்கும் வேர் ஆகும். 
* உலகத்தில் நீ வழிப்போக்கனாக இரு. செத்த ஆட்டுக்குரியவன் அதன் மீது வைக்கும் அளவு கூட இறைவன் இந்த உலகத்தின் மீது மதிப்பு வைக்கவில்லை.
* மனிதனிடமுள்ள முடியாமை பலவீனங்களை உணர்ந்தால் தான் நன்றி உணர்வு ஏற்படுவது சாத்தியமாகும்.
* நீங்கள் உண்மை பேசுங்கள். அது அழிவைத் தந்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்.
நபிகள் நாயகம்


* குடும்பத்தினரைக் காப்பாற்ற பிச்சை எடுக்காமல் உழைத்துப் பொருள் சம்பாதிப்பவர் ஒளிப்பிரகாசம் நிறைந்த முகத்துடன் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பார்.
* எவரேனும் ஒருவர் சத்தியம் செய்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும்.
* பாவங்களைச் செய்வதற்கு தூண்டுகோலாக இருப்பது பேராசையே. பேராசையும் அல்லாஹ்வின் நேசமும் ஒரே நெஞ்சத்தில் ஒன்று சேர்வதில்லை.
* உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு துஆ செய்யுங்கள். அதுவே உணவு அளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக் கடன்.
* பெற்றோர் தனக்கு அநியாயம் செய்தாலும் அவர்களிடம் பிள்ளைகள் அன்பைச் செலுத்துவது கட்டாயக் கடமை.
* ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர். ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொள்ளாதீர்.
நபிகள் நாயகம்


* எல்லாச் செயலையும் நாமே செய்கிறோம் என நினைப்பது அகந்தையின் அடையாளம்.
* நாம் கடவுளின் ஒரு சிறு கருவி மட்டுமே. இதை உணர்ந்தால் கர்வம் மறையும்.
* பிறர் கெட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் மீதும் விருப்பம் கொள்.
* உலக விஷயங்களிலும், பிறரின் அந்தரங்க விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது.
* நான் யார் என்ற கேள்வியைக் கேட்டுக்கொள். பதிலைத் தேடிச் செல். வழி உனக்கு புலப்படும்.
* ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வீகத் தன்மையும், வலிமையும் குடி கொண்டிருக்கிறது.
-ரமணர்


* நல்ல மனம், கெட்ட மனம் என இரண்டு கிடையாது. எதைச் சார்ந்திருக்கிறதோ அதன் தன்மையை மனம் பெறுகிறது.
* உலக விஷயங்களிலும், பிறருடைய அந்தரங்க வாழ்விலும் ஒருபோதும் எண்ணத்தைச் செலுத்துவது கூடாது.
* பிறர் எவ்வளவு கெட்டவராக இருந்தாலும், அவர்களிடம் வெறுப்பைக் காட்டுவது நல்லதல்ல.
* நான் பலமற்றவன் என்றோ, தீயவன் என்றோ நினைப்பதே மனிதன் செய்யும் மிகப் பெரிய தவறு.
* ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அளப்பரிய தெய்வீகத் தன்மையும், வலிமையும் குடிகொண்டிருக்கிறது.
ரமணர்


* கடவுளை முழுமையாகச் சரணாகதி அடைந்தால் தான், இறையருளைப் பெற முடியும்.
* அனைத்து உயிர்களிலும் சமத்துவத்தைக் காண்பதே ஞானநிலையின் அடையாளம். 
* அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே உலகில் உயர்ந்தது ஆகும்.
* வலிமையற்ற மனம் கொண்டவன் தனித்துச் செயல்பட முடியாமல் துன்பப்படுவான்.
* புதிய புதிய ஆசைகளை வளர்த்துக் கொள்ளாதே. செய்த தவறில் இருந்து மீள்வதற்கு பிராயச்சித்தம் தேடு.
- ரமணர்


* நெருப்பின் சுடரிலிருந்து பொறிகள் 
எழுகின்றன. ஆனால், அவை வெளியில் சிதறி விழுகின்றன. ஆனால், நாம் ஒரு போதும் கடவுளுக்கு வெளியில் இல்லை.
* சிவனடியில் முழுமையாகச் சரணடைந்துவிட்டால் நிறைந்த அமைதி கிடைப்பதுடன் ஆன்ம உணர்வு கிடைக்கிறது. 
* இதயத்தில் இருக்கும் அகந்தை விலகுதலே சரணாகதி
ஆகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் 
ஏமாறுவதில்லை, அவர் காண்பதெல்லாம் அகந்தை, எந்த அளவுக்குப் பாக்கி இருக்கிறது என்பதும், அதனை எந்த அளவில் அழிக்கலாம் என்பதுமேயாகும்.
* தெய்வீகம் அனைத்துக்காலங்களிலும் அனைத்து 
சூழல்களிலும் பரவி நிற்கிறது. தனி மனிதர் தன் 
விருப்பம் போல் நடக்க முடியாது, தெய்வீகத்தின் 
சக்தியை உணர்ந்து நடக்க வேண்டும்.
* கடவுள் அல்லது குருவிடம் ஒருவர் சரணடைந்து
விட்டால், அவர் சரணடைந்த சக்தியே அவரைச் சரியான பாதையில் அழைத்துச் செல்கிறது. கடவுள் அல்லது குருவை நம்பாத போது தான் சந்தேகம் எழுகிறது.
- ரமணர்
ஒரு மனிதன் தன் மனம், மொழி, மெய்களால் தம்மால் இயன்ற நன்மைகளைத் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்குச் செய்ய கடமைப் பட்டவனாக இருக்கிறான். தனக்கு நன்மை செய்வதோடு பிறருக்கும் நன்மை செய்ய கடமைப்பட்டவனாகவே அவன் இருக்கிறான். மரணத்திற்கும், மறுபிறவிக்கும் இடைப்பட்ட காலம் நீண்டதாகவோ அல்லது குறைந்ததாகவோ இருக்கலாம். ஆனால் தெளிந்த ஞானம் உள்ள ஒருவன் இதனால் எந்த மாற்றமும் பெறுவதில்லை. முதலில் உன்னைத் திருத்திக் கொள். அப்படி ஒவ்வொருவரும் தானே திருந்துவதற்கு முற்பட்டால் சமுதாயம் தானே திருந்திவிடும். மனிதன் சமயநம்பிக்கை கொண்டவனாக இருத்தல் அவசியம். சமயநம்பிக்கை இல்லாத மனிதன் வாழ்வில் ஒழுக்கத்தை இழந்து விடுவான். மனிதன் நல்லவனாக வாழ சமயமே வழிவகை செய்கிறது. அமைதியான தூய நிலையில் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் நற்செயல்களாகும். கலங்கிய மனத்தால் ஆசை வயப்பட்டு செய்யும் அனைத்து செயல்களும் தீமை தருவதாகும். இறைவனின் கட்டளையன்றி எதுவுமே நடப்பதில்லை. இந்த வாழ்வில் ஒருவனுடைய நடத்தைகள் அனைத்துமே அவனுடைய முற்பிறப்பின் வினைப்பயன்களாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.

* ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். உள்மனதில் யார் அமைதியை ஏற்படுத்துகிறார்களோ அவரையே குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* பிறர் வேறு; நீ வேறல்ல. ஒருவருக்குக் கொடுத்தாலும், அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ ஒருவரைப் பழித்தாலும், ஏமாற்றினாலும் அது உன்னையே ஏமாற்றிக் கொண்டதாகும். அதனால், ஒவ்வொரு உயிரையும் தன்னுயிராக எண்ணி நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
* சரணாகதி என்பதே வலிமை மிக்கப் பிரார்த்தனை. 
கடவுள் நம்மைப் பற்றிய எல்லாச் செயல்களுக்கும் பொறுப் பேற்கிறார் என்ற நம்பிக்கை அவசியம். சரணாகதியாக இறைவனை நாடுபவர் முழுமையாகத் தன்னைக் கடவுளிடம் அர்ப்பணித்து விட வேண்டும். 
* சமுதாயம் என்பது உடம்பு போன்றது. தனி மனிதர்கள் அதன் அங்கங்கள். ஒருவன் தன்னைத் தானே திருத்திக் கொண்டால் சமுதாயச் சீர்திருத்தம் தானே நிகழும். எனவே, ஒவ்வொருவரும் சுயசீர்திருத்தம் செய்து கொள்வது அவசியம். 
-ரமணர்

நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டு விதம். மனம் சுபவாசனை வசம் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை வசம் நிற்கும்போது கெட்ட மனமென்றும் சொல்லப்படும்.
உலக விஷயங்களிலும், பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவராய் இருந்தாலும் அவர்களிடத்தில் துவேஷம் வைக்க இயலாது.
எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனதை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலும் இருக்கலாம்.
'நான்' என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத இடமே சொரூபமாகும். அதுவே மவுனம் எனப்படும்.
என்னென்ன நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ அவற்றை ஒன்று கூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியம். வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி ஆத்ம முத்தை அடையலாம்.
எவன் தன்னையே கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான்.
குருவின் அருள்பார்வையில் பட்டவர்கள் அவரால் ரட்சிக்கப்படுவாரேயன்றி ஒருக்காலும் கைவிடப்படார். எனினும் ஒவ்வொருவருக்கும் தம் முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முக்தியடைய வேண்டும்.
முக்தியில் விருப்பமுள்ளவனுக்குத் தத்துவங்களின் விசாரணை அவசியமே இல்லை. பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தைப் போல எண்ணிக் கொள்ள வேண்டும்.
எல்லா நூல்களிலும் முக்தியடைவதற்கு மனத்தை அடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளபடியால் மனக்கட்டுப்பாடே நூல்களின் முடிவான கருத்து என்றறிந்த பிறகும், இன்னும் பல நூல்களை அளவின்றிப் படிப்பதால் பயனில்லை.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக