திங்கள், 7 நவம்பர், 2011

பகவத்கீதை

ராதே கிருஷ்ணா 07 - 11 - 2011



பகவத்கீதை

கீதாச்சாரம்!


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.
- பகவான் கிருஷ்ணர்



கீதை அறிமுகம்!






ஒவ்வொரு மனிதனும் அவசியம் படித்து, தெரிந்திருக்க வேண்டிய நூல்கள் மூன்று: அவை
கடவுளான கிருஷ்ணர் மனிதனான அர்ஜுனனுக்கு கூறிய பகவத்கீதை.
மனிதனான மாணிக்கவாசகர் கடவுளான சிவனுக்கு  கூறிய திருவாசகம்.
மனிதனான திருவள்ளுவர்  மனிதனுக்கு கூறிய திருக்குறள்.
இதில் பகவான் கிருஷ்ணர் அருளிய கீதை இந்துக்களின் வேதநூல் ஆகும்.
பகவத்கீதையை பகவத்கீதா என்று சொல்வதும் வழக்கம். பகவத் என்றால் இறைவன். கீதா என்றால் நல்ல உபதேசம். இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. கீதா என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது தாகீ என்று மாறும். தாகீ என்றால் தியாகம். வாழ்வில் வரும் அனைத்து சுகதுக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். துறவு கொள்ளுங்கள்,  எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்பதும் கீதா விற்குரிய ஆழமான பொருளாகும்.
கீதையும் 18 அத்தியாயங்களும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள  பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
பதினெட்டு அத்தியாயங்களின் தாத்பரியம் என்ன?
1. விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம்.
2. சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.
3. கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம்.
4.ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது.
5. சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது.
6.தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது.
7. ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான்  என உணர்வது.
8. அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது.
9. ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.ஒன்பதாம் படி.
10. விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.பத்தாம் படி.
11. விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
12. பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது.
13. ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்.
14. குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே.
15. தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
16. சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது.
17. சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது.
18.மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது.
 சத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டு அத்தியாயங்களையும்  முழு மனதுடன் படித்து, அதன் படி வாழ்ந்து வந்தால், நமக்கு பகவான் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே  பதினெட்டு அத்தியாயங்கள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.
பாண்டவர்களுக்குத் துணை போன கிருஷ்ணர்
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் குரு÷க்ஷத்திரப் போர் ஆரம்பமானது. பகவான் கிருஷ்ணர் அனைவருக்கும் பொதுவானவர். அப்படியிருக்கும் போது பாண்டவர்களுக்குத் துணையாக கிருஷ்ணர் ஏன் இருந்தார்?
ஒரு முறை துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்காக துவாரகைக்குச் சென்றனர்.  பகவான், நான் ஆயுதம் எடுப்பதில்லை. நிராயுதபாணியான நான் வேண்டுமா? அல்லது என் சேனை அனைத்தும் வேண்டுமா? என்று கேட்டார். துரியோதனன், அவருடைய சேனையே தனக்கு வேண்டும் என்றான். ஆனால் அர்ஜுனன், கண்ணபிரானின் உதவிதான் தேவை என்றான். யுத்தம் தொடங்க, இரு திறத்தாரின் சேனைகளும் அணிவகுத்து நின்றனர். கிருஷ்ணரின் ரதத்தில் அர்ஜுனன் அமர்ந்து, இரு பக்கத்து சேனையில் இருப்பவர்களையும் பார்த்தான். அவர்கள் எல்லோருமே தனது உறவினர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருப்பதைக் கண்டான். அவனுடைய மனம் கலங்கியது. எனக்குப் போர் வேண்டாம்; அரசு வேண்டாம்; போகங்கள் வேண்டாம்; என்றெல்லாம் பலவாறு வருந்தினான்.
அர்ஜுனன் தன்  உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கிய போது, தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் தன்னையே சேருமென பகவான் கிருஷ்ணர் சொன்னார். எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள்.  ஒவ்வொரு  மதத்துக்கும் ஒரு வேதநூல் இருக்கிறது. ஆனால் இந்து மதத்துக்கு மட்டும் பல வேதங்கள், உபநிஷத்கள், சாஸ்திரங்கள் உள்ளன. இருந்தாலும் பகவத்கீதையே அனைத்திலும் உயரிய வேதநூலாக கருதப்படுகிறது. எனவே தான் கீதையை ஐந்தாவது வேதம் என்கின்றனர்.
பகவத் கீதையைப் பெரியோர்களிடம் உபதேச ரூபமாக முதலில் கிரகித்து, அதன் பொருளையும் நன்கறிந்து தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால், சகல உபநிஷத்துகளையும் பாராயணம் செய்வதால் உண்டாகும் நற்பலன்கள் நமக்குக் கிட்டுவது உறுதி. பகவத் கீதைக்கு அன்று முதல் இன்று வரை எத்தனையோ உரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றை ஓரளவு மட்டுமே கணக்கிட்டு, மூவாயிரத்துக்கும் அதிகமான உரைகள் இருக்கின்றன. பகவத்கீதைக்கு சங்கரர், ராமானுஜர், மத்வாசாரியார் என்ற ஆசார்யர்கள் முறையாக எழுதிய பாஷ்யங்களையே உயர்ந்தவையாகவும் குருமூலமாக உபதேச முறையில் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டியவையாகவும் கருதிப் போற்றுகிறார்கள். சங்கராசாரியர் அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ராமானுஜர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; மத்வாசாரியர் துவைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும் கீதைக்கு பாஷ்யங்களை இயற்றியிருக்கிறார்கள். இவர்களுக்குப்பின் இந்த ஆச்சார்ய பரம்பரையில் வந்த சில மகான்கள், இந்த ஆச்சார்யர்களின் கீதா பாஷ்யங்களுக்கு டீகா என்ற விளக்க உரை எழுதியிருக்கிறார்கள். இந்த வைதீக சம்பிரதாய முறையிலான உரைகளைத் தவிர, சமஸ்கிருதத்திலும், கிரீக், ஜெர்மன், லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்யன் முதலிய பல வெளிநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி போன்ற நம் நாட்டு மொழிகளிலும் ஆயிரக்கணக்கில் பகவத் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். லோகமான்ய பால கங்காதர திலகர் எழுதிய கர்ம யோகம், மகாத்மா காந்தி எழுதிய அநாஸக்தி யோகம், ராஜாஜி எழுதிய கை விளக்கு ஆகிய கீதை உரைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பகவத் கீதையின் மகிமையைப் பறைசாற்றுகின்றன.
கீதையின் பெருமை
ஸ்ரீமத்பகவத்கீதை சாட்க்ஷõத் ஸ்ரீபகவானுடைய திருவாய்மொழி. அதன் பெருமை எல்லையற்றது; அளவற்றது. அதை உள்ளபடி வர்ணிக்க யாராலும் முடியாது. ஆதிசேஷன், சிவபெருமான், மஹாகணபதி ஆகியவரும்கூட இதன் பெருமையை முழுமையாகக் கூற முடியாது என்றால் மனிதர்களான நம்மால் மட்டும் எப்படி முடியும். இதிகாசங்களிலும், புராணங்களிலும் ஆங்காங்கு இதன் பெருமையைப் பாடியிருக்கிறார்கள். இப்படி இதுவரை கூறியுள்ள பெருமை அவ்வளவையும் ஒன்று திரட்டினால் கூட அதன் பெருமை இவ்வளவு தான் என்று கூற முடியாமலிருக்க, அதன் பெருமையை முழுமையாகக் கூறிவிட முடியும் என்பது எங்ஙனம் பொருந்தும்.
கீதை <உயர்ந்த ரஹஸ்யங்கள் பொதிந்த நூல். இதில் எல்லா வேதங்களின் ஸாரமும் திரட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் அமைப்பு எளிமையும், அழகும் பொருந்தியது. சிறிது காலப் பயிற்சியினாலேயே யாரும் இதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இதன் கருத்துக்கள் ஆழம் மிக்கவை; உட்பொருள் பொதிந்தவை. ஒருவர் வாழ்க்கை முழுவதும் இடைவிடாது இதைப் படித்துக் கொண்டே இருந்தாலும் இதை முழுமையாகக் கற்றுத் தேர்ந்துவிட்டதாக நினைக்க முடியாது. நாள்தோறும் புதிய புதிய கருத்துக்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். அதனால் கீதை என்றும் புதிதாகவே திகழ்கிறது. இவ்விதம் ஒரே முனைப்புடன் நம்பிக்கையும், பக்தியும் கொண்டு ஆராய்ந்து கொண்டே இருந்தால், இதனுடைய ஒவ்வொரு சொல்லிலும் நுண்ணிய ரஹஸ்யங்கள் பொங்கி வருவதை நேரிடையாக அனுபவிக்கலாம். பகவானுடைய கல்யாண குணங்கள், ப்ரபாவங்கள், ஸ்வரூபம், தத்வம், ரஹஸ்யம், உபாஸனை, கர்மம், ஞானம் இவற்றைப் பற்றியெல்லாம் கீதாசாஸ்த்ரத்தில் கூறப்பட்டுள்ளவாறு வேறு எந்த ஒரு நூலிலும் ஒருங்கே காண்பது அரிது. பகவத்கீதைக்கு இணையான நூலே கிடையாது. நன்னெறி புகட்டாத ஒரு சொல் கூட கீதையில் கிடையாது. கீதையில் எந்த ஒரு சொல்லும் வெறும் சுவையூட்டுவதற்காக மட்டுமே அமைந்ததில்லை. இதில் வருகின்ற அத்தனை விஷயங்களும் உண்மையானவை. ஸத்ய ஸ்வரூபனான பகவானுடைய பேச்சிலே சுவையைக் கற்பனை செய்து பார்ப்பது அவரது சொல்லை அவமதிப்பது போலாகும்.
கீதையில் எல்லா சாஸ்த்ரங்களும் அடங்கும். எல்லா சாஸ்த்ரங்களுமே கண்ட முடிவுகளின் ஸாரம் இதில் நிறைந்திருக்கின்றது. எல்லா சாஸ்த்ரங்களுக்கும் இது கருவூலம் என்று சொன்னால் அது மிகையன்று. கீதா சாஸ்த்ரத்தை ஒருவன் தெளிவாகப் புரிந்து கொண்டுவிட்டால் பிற சாஸ்த்ரங்களில் உள்ள தத்துவங்களின் அறிவு, தானே வந்து அமையும். அதற்காகத் தனியாக உழைக்க வேண்டியதில்லை.
மஹாபாரதத்தில், ஸர்வஸாஸ்த்ரமயீ கீதா (பிஷ்ம. 43/2) என்று கூறப்படுகிறது. இவ்வளவு சொன்னாலும் போதாது. எல்லா சாஸ்த்ரங்களும் வேதங்களினின்றும் தோன்றியவை. வேதங்கள் ப்ரம்மதேவனின் திருமுகத்திலிருந்து வெளிவந்தவை. அந்த ப்ரம்மதேவன் பகவானுடைய உந்தித்தாமரையில் உதித்தவன். இவ்வாறு சாஸ்த்ரங்களுக்கும், பகவானுக்கும் இடையே மிக அதிகமான இடைவெளி உள்ளது. ஆனால் கீதையோ ஸாக்ஷõத் பகவானுடைய முகத்தாமரையிலிருந்து நேராக வெளி வந்தது. ஆகவே மற்ற சாஸ்த்ரங்களைவிடச் சிறந்தது என்று கூறுவதில் மிகை ஒன்றுமில்லை. பகவான் வேதவ்யாஸரே கூறுகிறார் :
கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:
யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா  - (மஹா. பீஷ்ம. 43/1)
கீதையை நல்ல முறையில் கேட்க வேண்டும், பாட வேண்டும், படிக்க வேண்டும், கற்பிக்க வேண்டும், மனனம் செய்ய வேண்டும், மனதில் தரிக்க வேண்டும். கீதை பகவான் பத்மநாபனின் முகத்தாமரையிலிருந்து வெளிவந்தது. எனவே, கீதையைச் செவ்வனே ஓதுதல் வேண்டும். பிற சாஸ்த்ர நூல்கள் எதற்கு?
இந்த ச்லோகத்தில் பத்மநாப: என்ற சொல் வருகிறது. எல்லா சாஸ்த்ரங்களுக்கும் ஆணிவேரான வேதங்களைத் தம் முகத்திலிருந்து வெளியிட்ட அந்த ப்ரம்மதேவரே பகவானின் உந்தித்தாமரையிலிருந்து உதித்தவர். அந்த பகவானுடைய திருவாயிலிருந்து வெளி வந்தது கீதை என்பது கருத்து.
கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது. கங்கையில் நீராடுவதற்குப் பயன் முக்தி என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. கங்கையில் நீராடுபவன் வேண்டுமானால் முக்தி அடையலாம். அவன் பிறரைக் கரையேற்ற முடியாது. ஆனால் கீதை வடிவான கங்கையில் மூழ்கி எழுபவன் தான் மட்டும் முக்தியைப் பெறுவதில்லை. பிறரையும் கரையேற்றும் தகுதி படைத்தவன் ஆகிறான். கங்கை பகவானுடைய திருவடித் தாமரையிலிருந்து பெருகியது. ஆனால் கீதை ஸாக்ஷõத் பகவானுடைய திருமுகத் தாமரையிலிருந்து வெளிவந்தது. கங்கைக்குச் சென்று அதில் நீராடுபவனுக்கு மட்டுமே கங்கை முக்தியை அளிக்கிறது. கீதையோ ஒவ்வொரு வீடாகச் சென்று அங்குள்ளவருக்கு முக்தி மார்க்கத்தை போதிக்கிறது. ஆகவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது.
கீதை காயத்ரியை விடச் சிறந்தது. காயத்ரி ஜபம் செய்தால் மனிதன் முக்தி பெறுவான். அது சரிதான். காயத்ரியை ஜபம் செய்பவன் ஒருவன் மட்டுமே முக்தி பெற முடியும். கீதாபாராயணம் செய்பவன் தானும் கரையேறிப் பிறரையும் கரையேற்றுவானே! முக்தியை அளிக்கும் பகவானே அவனைச் சார்ந்து விடுகிறான் என்றால் அப்புறம் முக்தியைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? முக்தி அவனுடைய திருவடித் தூசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவன் முக்தியெனும் சத்திரத்தைத் திறந்து விடுகிறான்.
கீதை பகவானைவிடப் பெருமை வாய்ந்தது என்று சொல்வோமேயானால் அதுவும் மிகையாகாது. கிருஷ்ணர்சொல்கிறார்.
கீதாஸ்ரயேஹம் திஷ்டாமி கீதா மே சோத்தமம் க்ருஹம்
கீதாஜ்ஞாநமுபாஸ்ரித்ய த்ரீந்லோகாந் பாலயாம்யஹம்  - (வராஹபுராணம்)
(கீதையை அண்டி நான் வாழ்கிறேன். கீதைதான் என்னுடைய சிறந்த வீடு. கீதையின் ஞானத்தைக் கைக்கொண்டு நான் மூவுலகங்களையும் காக்கிறேன்)
கீதை-ஒரு அறிமுகம்
1. பிரஸ்தானத்திரயத்தில் ஒன்று
ஒவ்வொரு மதத்துக்கும் சாஸ்திரம் இன்றியமையாதது. மதம் மாறிப் போகாதிருப்பதற்கும், மறைந்து போகாதிருப்பதற்கும் சாஸ்திரம் துணைபுரிகிறது. எந்த சமயத்துக்கு சாஸ்திரம் இல்லையோ அது விரைவில் உரு மாறியமைகிறது. பின்பு நிலையற்றதாய் அது அழிந்துபட்டுப் போகிறது. ஆனால் ஒரு நூலை உறுதியான பற்றுக்கோடாகக் கொண்டுள்ள மதம் என்றைக்கும் அசைவற்றிருக்கிறது. எதிர்ப்புகளையும், தாக்குதல்களையும் அது தாங்கி நின்று மீளுகிறது. உலகத்தில் நீடுழி நிலைத்துள்ள மதங்களுக்கெல்லாம் அதனதன் சாஸ்திரங்கள் உள. இந்து மதத்தில் கணக்கற்ற சாஸ்திரங்கள் இருக்கின்றன. பொதுவாக அவையனைத்துக்கும் வேதங்களே முதற் காரணமானவைகளென்று பகர்வார்கள். வேதங்களில் பல பகுதிகள் மறைந்து போய்விட்டன. ஆனால் வேதங்களினின்று தெள்ளி யெடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் போக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம். இதற்கு வேதாந்த சூத்திரம் என்பது மற்றொரு பெயர். உபநிஷதங்களில் அடங்கியுள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவுபட விளக்குவது பகவத்கீதை. உபநிஷதங்களைப் பசுக்கள் என்று வைத்துக் கொண்டால் பகவத்கீதையைப் பால் என்று பகரலாம். நேரே பாலைப் பெற்றுக்கொள்ளும் வசதி வாய்க்கப்பெற்றவர்களுக்குப் பசுவை வளர்க்கும் சிரமம் வேண்டியதில்லை.
உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இம் மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம் என்னும் பெயர்பெறுகின்றன. முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள். இம்மூன்றனுள் கருத்து வேற்றுமை கிடையாது. தத்துவ விளக்கம் அல்லது மெய்ப்பொருள் விளக்கம் இவைகளுள் முறையாக அமைந்திருக்கிறது. ஹிந்து மதத்துக்கு சாஸ்திரம் எது என்னும் கேள்வி எழுமிடத்துப் பிரஸ்தானத்திரயம் என்றே பதில் அளிக்கவேண்டும். இவைகளில் அடங்காத தத்துவ விளக்கம் வேறு எந்த நூலிலும் இல்லையென்று உறுதி கூறலாம். மற்ற சாஸ்திரங்களில் சொல்லியுள்ள கோட்பாடுகள் பிரஸ்தானத்திரயத்தில் அடங்கியுள்ள கோட்பாடுகளுக்கு விளக்கமாக வந்து அமையலாம். அப்படியல்லாது முரண்படுபவைகளாக வந்தமையுமானால் முரண்படுகிற மற்ற சாஸ்திரங்களைப் புறக்கணிப்பது இந்தியாவில் தொன்றுதொட்டு நடைமுறையில் வந்துள்ள ஐதிகமாகும்.
2. மஹாபாரதத்தில் அடங்கியது
பகவத்கீதை மஹாபாரதம் என்னும் இதிகாசத்தில் அடங்கியுள்ளது. பீஷ்மபர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் இந்த அரிய நூலைக் காணலாம். ஆக, இதன்கண் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன. இவைகளில் அமைந்துள்ள சுலோகங்களின் தொகை எழுநூறு. மஹாபாரதம் என்ற காவியம் முன்பு இயற்றப்பெற்றது என்றும், பகவத்கீதை என்ற சாஸ்திரம் பின்பு அதன்கண் புகுத்தப் பெற்றதென்றும் சிலர் கருதுகின்றனர். ஆனால் அகச் சான்று அதற்கு இடம் தருகிறதில்லை. இலக்கிய அமைப்பு பகவத்கீதை உட்பட ஆதியோடந்தம் ஒரே பாங்கில் இருக்கிறது. மொழியமைப்பில் ஒற்றுமையிருப்பது போன்று கருத்து அமைப்பிலும் ஒற்றுமையிருக்கிறது. மஹாபாரதத்தில் அடங்கியுள்ள விஷயங்களைப் பால் என்று வைத்துக்கொண்டால் பகவத்கீதையில் அடங்கியுள்ள விஷயங்களை வெண்ணெயென்று பாராட்டலாம். மஹாபாரதம் என்னும் உடலுக்கு பகவத்கீதை ஹிருதயமாக அமைந்துள்ளது என்று பகர்வதும் பொருந்தும். உடல் ஒரு காலத்திலும் ஹிருதயம் இன்னொரு காலத்திலும் உண்டானவைகளல்ல.
3. ஸ்ரீ கிருஷ்ணன் சகாயத்தையே பாண்டவர் நாடினர்
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எவ்விதத்திலும் சமாதானம் உண்டாகவில்லை. முன்னையவர்க்கு உரிய நாட்டில் ஒரு சிறு பகுதியையும் திருப்பித்தரப் பின்னையவர் அறவே மறுத்துவிட்டனர். போர்புரிவதால் விளையும் கேடுகளை எண்ணிப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, சமாதானப்படுத்த வந்த ஸ்ரீகிருஷ்ண பகவான் துவாரகைக்குத் திரும்பிப் போவாராயினர். எனினும், போர் புரிவதைத் தவிர வேறு வழியில்லை. ஸ்ரீ கிருஷ்ணனுடைய சகாயத்தை நாடி இருதரத்தாரும் துவாரகைக்குச் சென்றார்கள். அவர்கள் வரும்பொழுது கண்ணன் கண்வளர்ந்திருந்தார். பாண்டவர்களின் சார்பில் இளையவன் அர்ஜுனன் முதலில் பள்ளியறைக்குள் சென்று கேசவரின் கால்மாட்டில் நின்றுகொண்டிருந்தான். கௌரவர்களுள் மூத்தவன் துர்யோதனன் பின்பு வந்து, தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டான். கண் விழித்ததும் கால்மாட்டில் நின்ற குந்தி மைந்தனைக் கேசவர் பார்த்தார்; பேச்சும் நடந்தது. பாண்டவர்களுக்குத் துணை புரிவதாகப் பகவான் ஒத்துக்கொண்டார். பின்பு துர்யோதனனிடத்திருந்தும் அதே விண்ணப்பம் வந்தது. தாம் ஒரு பக்கம், தமது சேனை யொருபக்கம் சேர்வதாக ஸ்ரீ கிருஷ்ணன் முடிவு கட்டினார். அர்ஜுனன் கிருஷ்ணனுடைய சகாயத்தையும், துர்யோதனன் சேனையின் உதவியையும் பொறுக்கி யெடுத்தார்கள். கடவுள் நமக்குத் துணையாயிருக்கும்போது பிரதிகூலமான மற்றவைகள் நமக்கு என்ன கேடு செய்யவல்லது? கடவுள் துணை நமக்கில்லாது போய்விட்டால் அனுகூலமான மற்றவைகள் நமக்கு என்னதான் நன்மை செய்துவிடும்? வாழ்க்கை சம்பந்தமான இரண்டு பெரிய கேள்விகள் இவை. மஹாபாரதப் போராட்டத்தின் முடிவே இவ்விரண்டு கேள்விகளுக்கும் விடை தருகிறது.
மேலும், தாம் படையெதையும் எடுத்துப் போர் புரிவதில்லையென்றும், பார்த்தனுக்கு வெறும் தேர் ஓட்டும் தொண்டு புரிதலை மட்டும் வைத்துக்கொள்வதென்றும் கண்ணபிரான் இசைந்திருந்தார். துர்யோதனனுடைய வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பவராய் அவர் அங்ஙனம் வாக்குக்கொடுத்தார். அத்தகைய உடன்படிக்கை தங்களுக்கு எல்லா விதத்திலும் அனுகூலமானதென்று துர்யோதனன் எண்ணித் திருப்பினான். கண்ணனுடைய கண்காணிப்பு ஒன்று போதாதா, இனி அச்யுதன் ஆயுதம் வேறு எடுத்து அமர் தொடுத்தல் வேண்டுமா? என்று கௌரவர் கூட்டத்தை நண்ணி நின்ற விவேகியர் சிலர் எண்ணுவாராயினர்.
4. இடையறாச் சோதனையே வாழ்க்கை
போர்க்களத்துக்குப்போம் பரியந்தம் பதைபதைப்பும் துணிச்சலுமே வடிவெடுத்தவனாயிருந்தான் பார்த்தன். வெஞ்சமரில் விளையும் பயனை அவன் கிளறிப் பார்த்தானில்லை. தன்னை எதிர்க்கத் துணிந்ததன் மூலம் நீதியை எதிர்க்கத் துணிந்த போர் வீரர் யார் என்று பார்க்க அவன் விரும்பினான். போற்றுதற்குரிய பீஷ்மர், துரோணர், பெரும் பகைவனாகிய கர்ணன் ஆகியவர்கள் முன்னிலையிலே ஸாரதி ரதத்தைச் செலுத்தி நிறுத்தினார். வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத சோதனை. முன்பு எத்தனையோ சோதனைகளை அர்ஜுனன் மீண்டிருக்கிறான். இப்பொழுதோ மீள முடியாத நெருக்கடி ஒன்று வந்துள்ளது. போர் புரிவதா, அல்லது புறங்காட்டி ஓடுவதா? எது உசிதமென்று அவனுக்கே விளங்கவில்லை. ஒவ்வொரு மனிதனும் இப்படிச் சோதனைக்கு ஆளாகிறான். கடலில் திரைகள் போன்று வாழ்க்கையில் சோதனைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. மீள முடியாச் சோதனைகள் வருவதும் உண்டு. வாழ்க்கையின் மர்மம் தெரிந்தாலொழிய அவற்றினின்று மீள முடியாது.
5. ரூபகம்
கீதையின் முதல் அத்தியாயம் முழுதும் வாழ்க்கைத் தத்துவத்தை ரூபகப்படுத்துகிறது. அவதார புருஷர் ஒவ்வொருவரும் மானுட வாழ்க்கையின் மேலாம் பாங்கை விளக்குதற்கென்றே மண்ணுலகில் வந்தவராவார். ஸ்ரீ கிருஷ்ணனுடைய பூலோக விஜயம் அலாதி மகிமை வாய்க்கப்பெற்றது. நரலோக வாழ்வு என்னும் நாடகத்தின் மூலம் மேலாம் தத்துவத்தையே விளக்க வந்தவர் அவர். குரு÷க்ஷத்திரப் பெரும் போரும், அதில் கலந்து கொண்ட பாத்திரங்களும் மானுட வாழ்வில் அமைந்துள்ள உண்மைகளைத் தெளிவுபடுத்துவனவாகின்றன. மானுட சரீரமே குரு÷க்ஷத்திரம். ஏனென்றால் அது ஒவ்வொரு ஜீவனுக்கும் தர்ம ÷க்ஷத்திரமாகிறது. அவரவர் வினையை நல்வினையாக்குதற்கு உற்ற இடம் உடல். பாண்டவர்கள் நல்ல இயல்பின் பிரதிநிதிகள் ஆவர். கௌரவர்கள் கெட்ட இயல்பின் பிரதிநிதிகள். பாண்டவர் கௌரவர் ஆகிய இருதரத்தாரும் ஒரே ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஜீவனிடத்து நல்லியல்பு, கெட்ட இயல்பு ஆகிய இரண்டும் உண்டு. பாண்டவகௌரவர்கள் தாயாதிகளாயிருப்பது போன்று, ஒரே ஜீவனிடத்திருந்து வந்துள்ள மேலான இயல்பும் கீழான இயல்பும் தாயாதிகளேயாம். பாண்டவர்களைப் போன்று நல்லியல்பு எண்ணிக்கையில் குறைவுபட்டவை. கௌரவர்களைப் போன்று கேடுடைய இயல்பு எண்ணிக்கையில் மிகுந்தவை. அக்ஞானக் குருடனுக்குப் பிள்ளையாகப் பிறந்தவைகள் புல்லிய இயல்புகள். விவேகம் என்னும் வெண்மையினின்று வந்தவைகள் நல்லியல்புகள். உடல் வாழ்வு என்னும் ராஜ்யத்தை இவ்விரண்டு இயல்புகளும் தத்தமக்குச்சொந்தமாக்கிக்கொள்ள முயலுகின்றன. பிரபஞ்சத்திலுள்ள வசதிகளையெல்லாம் கெட்ட இயல்புகள் தமக்கு உரிய சேனைகளாகச் செய்து கொள்கின்றன.
நலம், கேடு ஆகிய கிரியைகளையெல்லாம் கடந்தவர் பரமாத்மா. எச்செயலையும் அவர் செய்வது கிடையாது; சாக்ஷி மாத்திரமாயிருப்பவர். அவர் சன்னிதான விசேஷத்தால் இயற்கையின்கண் உள்ள எல்லாச் செயல்களும் நிகழ்கின்றன. தாம் கர்மம் ஒன்றும் செய்யாவிட்டாலும் அவரது அனுக்கிரகம் நல்லார்பால் உளது. ஸ்ரீ கிருஷ்ணனன் பார்த்தனுக்குச் சாரதியாயமைந்ததின் கோட்பாடு இதுவே. எல்லா ஜீவர்களுக்கும் சாரதியாக சர்வேசுவரன் மனத்தகத்து வீற்றிருக்கிறார். அவர் மனச் சாக்ஷியாயிருந்து வாழ்வை ஒழுங்குப்படுத்துவது நல்லார்க்கு விளங்குகிறது. மற்றவர்களுக்கு அது விளங்குவதில்லை.
மஹாபாரதம் என்னும் போராட்டத்தில் பெரிய கர்மவீரராயிருந்தவர் ஸ்ரீ கிருஷ்ணன். மற்ற மனிதர்களெல்லாரும் கூடிச் செய்த செயல்கள் அவருடைய கிருத்தியத்தின் காற்பங்கு ஆகா. அத்தனை செயல்களுக்கிடையில் ஒரு செயலிலும் பந்தப்படாதிருத்தவரும் அவரே இதுதான் அவருடைய நரலோக லீலை. இதை மனிதன் தெரிந்துகொண்டால் இவ்வுலகில் மனிதன் எப்படி வாழ்ந்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டவன் ஆவான்.
6. கிருஷ்ணனது வாழ்க்கை நமக்கு எடுத்துக்காட்டு
மனிதன் உலகில் எப்படி வாழவேண்டுமென்று முன்மாதிரியாயிருந்து தங்கள் வாழ்க்கையின் மூலம் புகட்டுதலே அவதார புருஷர்களின் முதற் கடமை. இக்கோட்பாட்டுக்கு மாறுதலாக ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றிப் பகர்வார் உளர். ஸ்ரீ ராமன் வாழ்ந்தது போன்று நாம் வாழவேண்டுமென்பதும் ஸ்ரீ கிருஷ்ணன் புகட்டியது போன்று நாம் நடந்துகொள்ள வேண்டுமென்பதும் அவர்களது கொள்கை. ஆனால் இதற்கு ஆதாரமொன்றுமில்லை. ஆயிரக்கணக்கான அரக்கர்களைக் கொன்றது சில அவதார புருஷர்களின் அசாதாரணச் செயல். மக்களுள் சிலர் தீ மீது நடக்கின்றனர். தன் உடல்மீது யானை ஏறி நிற்பதைத் தாங்கும் மனிதன் ஒருவன் இருக்கலாம். இவை மக்களுள் நாம் காணும் அசாதாரணச் செயல்களாம். எல்லாரும் இப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லை. பிறகு கிருஷ்ணன் போன்று நாம் ஒழுகலாகாது என்று எதைக் குறித்து இவர்கள் இயம்புகிறார்கள்? கோபியர்கள் பலருக்கு அவன் வல்லபனாயிருந்தது நமக்கு ஒவ்வாது என்பது இவர்கள் கருத்து. தனக்கு வயது பத்து ஆவதற்குள் அவனது பிருந்தாவன விளையாட்டுகள் முடிந்துவிடுகின்றன. பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுவன் ஒருவன் எண்ணிக்கையில் அடங்காத பேர்களுடன் தூர்த்தனாய் நடந்துகொள்வது சாத்தியமா? இயற்கை இதற்கு இடந்தருமா? ஆராய்ச்சிக்குரிய இக்கேள்விகளை நன்றாய் அலசிப் பார்க்கவேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஹ்ருஷீகேசன் என்பது ஒரு பெயர். இந்திரியங்களுக்கெல்லாம் ஈசன் என்று அது பொருள்படுகிறது. நாம் இந்திரியங்களுக்கு அடிமை. அவன் இந்திரியங்களுக்கு அதிபதி. உடல் பற்று இருக்கும் வரையில், உடலைத் தான் என்று எண்ணும் வரையில், உடல் ஞாபகம் இருக்கும் வரையில் பராபக்தி வருவதில்லை என்பதே ஸ்ரீ கிருஷ்ணன் கோபியர்களுக்குப் புகட்டிய பாடமாகும். உடல் ஞாபகத்தைக் கடந்து மேலே செல்லுதலே மானுட வாழ்க்கையின் மேலாம் லட்சியமாகும். ஆதரிப்பாரற்ற ஆயிரக்கணக்கான பெண்களுக்குக் கிருஷ்ணன் நாயகனாகிறான். அவர்களை ஆதரிப்பவன் என்றே அது பொருள்படுகிறது. அவர்களுக்கு அவன் மணாளன் என்று உடல் தொடர்வு வைத்துக் கருதுபவர்கள் உண்மையை அறியாதவர்கள். இன்றைக்கு அகதிகளை அரசாங்கம் காப்பது போன்று அன்றைக்கு அவன் அவர்களைக் காத்து வந்தான். அதற்கேற்ற நெருக்கடி அக்காலத்திலும் சமூகத்தில் உண்டாயிற்று.
கோபிநாதன் என்பதும் ஜகந்நாதன் என்பதும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு உண்டான மற்ற பெயர்கள். ஜீவர்கள் எல்லாரும் கோபிகளாவர். ஏனென்றால் அவர்கள் பிரகிருதியின் வசப்பட்டுப் பிரகிருதி சொரூபமாயிருக்கிறார்கள். அத்தனை உயிர்களுக்கும் அவன் உயிராயிருக்கிறான். பரம புருஷனை நாயகனாக அறிந்து கொண்டவர்களே உண்மையை அறிந்துகொண்டவர்களாவர். உயிர்களுக்கெல்லாம் சாரதியாக மனத்தகத்து எழுந்தருளியிருக்கும் அதே பரமாத்மா அவர்களுக்கெல்லாம் மணாளனாகவும் மனத்தகத்து வீற்றிருக்கிறான். இக்கோட்பாட்டின் பிரகாரம் ஸ்ரீகிருஷ்ணனுடைய மனைவியர்கள் (ஜீவர்கள்) எண்ணிக்கையில் அடங்கமாட்டார்கள்.
7. நர - நாராயணன்: கிருஷ்ணார்ஜுனன்
முன்பு ஒரு காலத்தில் நாராயணன் என்றும், நரன் என்றும் பெயர் தாங்கி வந்த இரண்டு ரிஷிகள் துவாபரயுகத்தின் இறுதியில் கிருஷ்ணனாகவும் அர்ஜுனனாகவும் அவதரித்தார்கள் என்னும் கோட்பாடு ஒன்று உண்டு. பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையிலுள்ள தொடர்பை இக்கோட்பாடு விளக்குகிறது. இன்னும் வேறு பாங்குகளிலும் உபநிஷதங்களில் இக்கருத்து விளக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பறவைகள் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தன. ஒன்று தன் மஹிமையில் நிலைபெற்றதாயிருந்தது. மற்றொன்று இனியவையும் இன்னாதவையும் ஆகிய கனிகளை உண்டு இன்ப துன்பத்துக்கு ஆளானது. அது துன்பப்படும்பொழுதெல்லாம் மேலான நிலையிலிருந்த பறவையை நினைந்து அதனருகில் வர முயன்றது. அருகில் வரவர அதன் இன்னல் குறைந்தது. தான் மற்ற பறவையின் தோற்றம் என்று உணர்ந்தது. பிறகு செயலற்ற பறவையில் அது லயமாயிற்று. ஜீவாத்மா நிறைநிலையடைந்து பரமாத்மாவில் லயமாகும் பாங்கு இங்ஙனம் விளக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் ஏற்பட்ட இணக்கம் இக்கோட்பாட்டை நன்கு தெளிவுபடுத்துகிறது. இருவரும் இணைபிரியாத தோழர்கள். அப்போதைக்கப்போது அர்ஜுனனுக்கு வந்த குறைகளைக் கிருஷ்ணன் அகற்றி வைத்தான். பள்ளியில் பயிற்சி பெற்றபொழுது துணை; விளையாடியபொழுது துணை; போட்டிகள் பல போட்டபொழுது துணை; வனவாசத்தில் வருந்திக்கொண்டிருந்தபொழுது துணை; மணம் புரிந்துகொள்ள விரும்பியபொழுது தன் தங்கையையே மணம் செய்வித்துத் துணை; போர்க்களத்தில் துணை; பிறகு கீதோபதேசம் என்ற ஞானோபதேசம்; இதுவே முடிவான துணை. பல பிறவிகளில் பகவான் மனத்தகத்து வீற்றிருந்து ஜீவர்களுக்கு அப்போதைக்கப்போது தேவையானவைகளைத் தந்தருள்கின்றார். இவையாவையும் வைத்தனுபவித்தான பிறகு வாழ்க்கையில் பெரியதொரு நெருக்கடி வருகிறது. பெற்ற செல்வமும், சுற்றமும், பதவியும், போகமும் அப்பொழுது ஒன்றுக்கும் உதவாதவைகளாகத் தென்படுகின்றன. மனத்தினுள்ளே இருள் சூழ்ந்து விடுகிறது. வாழ்வு வெறும் சூன்யமாய்த் தோன்றுகிறது. ஒவ்வோர் உயிரும் ஒரு காலமல்லாவிட்டால் ஒரு காலத்தில் அத்தகைய சோதனைக்கு ஆளாகவேண்டும். பரஞானம் ஒன்றே அவ்வேளைக்கு உற்ற துணையாகிறது. பரஞானத்தைப் பெற்ற பின்பே வாழ்வின் உட்பொருள் ஜீவனுக்கு உள்ளபடி விளங்குகிறது. கருமத்தின் கதி, ஜீவிதத்தின் பாங்கு, மரணத்தின் அவசியம் ஆகியவைகள் பரஞானம் வருவதற்கு முன்பு விளங்கமாட்டா. பிறவிப் பிணியையும் பிற பிணியையும் வேரறப் போக்கவல்லது பரஞானம். அதைப் பெறுதற்கேற்ற தருணம் வாய்த்தபொழுது பகவான் பரிவுடன் பார்த்தனுக்கு அதைப் பகர்ந்தருளினார்.
8. அர்ஜுனன் மக்களின் பிரதிநிதி
பாண்டவர் ஐவருள் பகவான் கீதையைப் பார்த்தனுக்கு உபதேசித்தருளியதின் கருத்து யாது? போர் புரிதல் அப்போதைக்கேற்பட்ட அவசரச் செயல் என்றால் அர்ஜுனனைவிட பீமன் அதற்கென்றே துடித்துக்கொண்டிருந்தான், கொஞ்சம் தூண்டியிருந்தால் அவனைக்கொண்டு அக்காரியம் எளிதில் நிறைவேறியிருக்கும். மற்று அமர் புரிதல் அல்ல, அறன் வலியுறுத்தலே அண்ணலின் நோக்கமென்றால் அதற்கேற்றவன் அறக்கடவுளின் வடிவாகிய அண்ணன் யுதிஷ்டிரன். போர் புரிதற்குப் பொருந்தியவன் பீமன், தர்மத்தை உணரத் தகுந்தவன் தர்மராஜா. இவ்விருவரையும் விட்டுவிட்டு, வில்லாளி அர்ஜீனனைப் பொறுக்கி யெடுத்ததில் பொருளொன்றுண்டு. பீமனிடத்திருந்தது முரட்டுத்தனம்; கிட்டத்தட்ட அது விலங்கின் பாங்கு. கீழ்மையே வடிவெடுத்திருப்பவனுக்கு யோக சாஸ்திரம் உதவாது. கீழ்மகன் அதைக் கேட்கவும் மாட்டான், அனுஷ்டிக்கவும் மாட்டான். மூத்தவன் தர்மராஜன் போன்று தெய்வத் தன்மையில் நிலை பெற்றிருப்பவனுக்கு யோக சாஸ்திரம் முற்றிலும் தேவையானதன்று. நூலின் துணையின்றியே அவன் நன்மை கடைப்பிடிக்க வல்லவன். இனி, அர்ஜுனனுடைய பாங்கு இவ்விருவருடைய பாங்குகளுக்கு நடுவில் இருக்கிறது. அவன் விலங்குத் தன்மையைக் கடந்து மேலே வந்துள்ளான். ஆனால் தெய்வத் தன்மையில் இன்னும் அவன் நிலைபெறவில்லை. விலங்குத் தன்மைக்கும் தெய்வத் தன்மைக்கும் இடைநிலையாகிய மனுஷத் தன்மை அர்ஜுனனுக்குச் சொந்தம். நலம், கேடு ஆகிய இரண்டும் மனிதன்பால் கலக்கப் பெற்றிருக்கின்றன. கேட்டைக் களைந்து நலத்தில் நிலை பெற்றிருப்பது மானுட வாழ்க்கையின் குறிக்கோள். கீதா சாஸ்திரம் அதற்கு உற்ற துணையாகிறது. அர்ஜுனன் சாதாரண மனிதரின் பிரதிநிதியாகிறான். அவன் போன்ற மக்கள் எல்லார்க்கும் அது சிறந்த வழிகாட்டியாகிறது. மக்கள் நிலையில் இருப்பார் எல்லாரும் கீதையைக் கற்கவும் அதன்படி நடக்கவும் அதிகாரிகளாகின்றார்கள்.
9. ஏன் போர்க்களத்தில் புகட்டப்பட்டது?
உயர்ந்த வேதாந்த தத்துவங்களைப் புகட்டுபவை பிரஸ்தானத்திரயம். வேதாந்த ஆராய்ச்சி எப்பொழுதும் விச்ராந்தி அல்லது மன நிம்மதியினின்று வருவதாகும். ஆரண்யங்களில் அமைதியாக இருந்துகொண்டு ஆன்றோர் அத்தகைய பரதத்துவங்களை ஆராய்ந்தனர். உபநிஷதங்கள் எல்லாம் தபோவனங்களினின்று தோன்றியவைகளாம். பின்பு, பிரஸ்தானத்திரயத்தில் ஒன்றாகிய பகவத்கீதை பிறந்தது ஆரண்யத்திலன்று. அல்லல் நிறைந்த அமர்க்களத்தில் அது உபதேசிக்கப் பெற்றது. அதற்கும் தக்கதொரு காரணமுண்டு. வேதாந்தத்துக்கு சாந்தி பாடம் என்ற ஒரு பெயர் உளது. சாந்தியைப் பெறுதற்கு உற்ற இடம் எது? ஜன சஞ்சாரமில்லாத ஏகாந்தமான இடத்திலும் அதைப் பெறலாம்; பயங்கரமான போர்க்களத்திலும் அதைப் பெறலாம். எல்லாப் படித்தரங்களிலும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாவது வேதாந்தக் கோட்பாடுகளாம். விதவிதமான வினைகளில் ஈடுபட்டிருக்கும் மக்கள் அனைவர்க்கும் அது பயன்படும்.
வாழ்க்கையை எங்ஙனம் பொருள்படுத்த வேண்டுமென்று கிருஷ்ணன் தனது ஜீவிதத்தின் மூலம் விளக்குகிறான். அவன் பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுவனாயிருந்தபோது பிருந்தாவனத்தில் லீலைகள் பல விளையாடினான். உலகம் ஒரு விளையாட்டு மேடை; வாழ்வு ஒரு பெரியவிளையாட்டு. அதை நன்கு விளையாடத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவனுடைய வரலாற்றின் முற்பகுதி விளக்குகிறது. விளையாடுவது போன்று வாழ்வை எளிதாக்குபவர்க்கு அது கொண்டாட்டம்; மற்றவர்க்கு அது திண்டாட்டம். இது பிருந்தாவனக் கிருஷ்ணனது செய்தி.
வயது வந்த பிறகு அவன் குரு÷க்ஷத்திர கிருஷ்ணன் ஆகிறான். அப்பொழுது வாழ்வை மற்றொரு பாங்கில் அவன் படம் பிடித்துக் காட்டுகிறான். பிரபஞ்ச வாழ்க்கை ஒரு முடிவில்லாத போராட்டம். எதைப் பெற விரும்பினாலும் உயிர்கள் அதன் பொருட்டுப் போராடியாக வேண்டும். போர் புரியத் தெரியாதவர்களுக்கு இவ்வுலகிலும், வேறு எவ்வுலகிலும் ஒன்றும் அகப்படாது. பொருள் ஒன்று வேண்டுமென்று பிள்ளை தாயிடம் அழுகிறது. அது ஒருவிதப் போராட்டம். ஒரு வேலையில் அமரதற் பொருட்டுத் தொழிலாளி தன் வல்லமையைக் காட்டுகிறான். அதுவும் போராட்டமே. சாம்ராஜ்யங்கள் நிறுவுவதும் நடைபெறுவதும் போராட்டத்தின் பயனேயாம். எத்துறையிலாவது மனிதன் சிறிது முன்னேற்றம் அடைந்திருக்கிறான் என்றால், அவன் வெற்றிகரமாகப் போராடிடயருக்கிறான் என்னும் பொருள் அதில் அடங்கியிருக்கிறது. சண்டைகள் பலவற்றைக் கிருஷ்ணன் தானே திறம்படச் செய்து முடித்திருக்கிறான். அவனுடைய ஜீவிதமே போராட்டத்துக்கு எடுத்துக்காட்டு ஆகிறது. யுத்தமயமாயுள்ள வாழ்க்கையில் மனிதன் எத்தகைய பாங்குடன் பிரவேசிக்க வேண்டுமென்று பகவத்கீதை புகட்டுகிறது. வாழ்வு என்னும் போராட்டத்துக்கு மனிதன் தகுதியுடையவன் ஆகவேண்டும்.
10. குறித்து வைத்தது யார்?
ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் அமர்க்களத்தில் நடந்த பேச்சு இது. ஒரு சபைநடுவில் கற்றவர்களுக்கிடையில் இது நிகழ்ந்ததன்று. இந்த சம்வாதம் நிகழ்ந்தபடியே மற்றவர்களுக்கு எப்படிக் கிட்டியது என்ற கேள்வி எழலாம். அவதார புருஷர் ஒருவர் மண்ணுலகில் வரும்பொழுதெல்லாம் அவரது அற்புதச் சரிதத்தை உள்ளபடி எழுதிவைக்க வல்ல தீர்க்கதரிசி ஒருவர் அவருடன் வருவதுண்டு. ஸ்ரீராம சரிதத்தைக் குறிக்க வால்மீகி வந்தார். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் செயல்களை விளக்க வியாசர் வந்தார். அவர் ஞானக்கண் படைத்தவர். ஸ்ரீ கிருஷ்ணன் அருகில் இருந்தாலும் எட்ட இருந்தாலும் அவன் கருத்துக்களை உள்ளபடி தெரிந்துகொள்ளும் ஞானம் வியாசருக்கிருந்தது. வியாசர் அருளால் ஸஞ்ஜயரும் தற்காலிகமாக ஞானக்கண்ணைப் பெற்றிருந்தார். ஆதலால் நிகழ்ந்தவைகளை உள்ளபடி திருதராஷ்டிரருக்கு எடுத்துச் சொல்ல ஸஞ்ஜயருக்கு இயன்றது. ஆக, பகவத்கீதை என்னும் அமிர்தத்தை அர்ஜுனன் நேரில் அருந்திக்கொண்டிருந்த அதே வேளையில் வியாசரும் ஸஞ்ஜயரும் எட்ட இருந்து அருந்தினார்கள். வியாசர் அதை எழுதிவைத்தார்; ஸஞ்சயர் அதை இயம்பிக்கொண்டே போனார். போர் முடிந்த பிறகு ஸஞ்ஜயருக்கு ஓசையை மட்டும் பரப்ப வல்லது; உணர்வு அதனிடத்து இல்லை. ஞானக் கண்ணோ உணர்வை அப்படியே வாங்கவல்லது. மொழியின் துணையிருந்தாலும் இல்லாவிட்டாலும் கருத்தையேற்க ஞானிக்கு முடியும்.
11. கொலை நூல்
பகவத்கீதையைப் படிக்கலாகாது என்று அதைத் தள்ளி வைப்பர் ஒரு சிலர் உண்டு. எப்படியாவது அர்ஜுனனைப் போரில் புகுத்திவிடவேண்டும். அந்த நெருக்கடிக்கு ஏற்றவாறு ஏதாவது பேசவேண்டிய நிர்ப்பந்தம் வந்திருந்தது. அதையெல்லாம் பகர்ந்து கிருஷ்ணன் காரியத்தை நிறைவேற்றிவிட்டான். முடிவாக நிகழ்ந்தது படுகொலை. பாட்டனாரையும் ஆசாரியரையும் அர்ஜுனன் ஒழித்து விட்டான். கொலைபுரிவது பாதகர்களது பொல்லாத செயல். கொலை மறுத்தல் சமயக்கோட்பாடு. எங்ஙனம் இருளும் வெளிச்சமும் ஒன்று சேரவோ, அங்ஙனம் கொலை செய்தலும் கொலை மறுத்தலும் ஒவ்வா. சமயநெறியைப் பின் பற்றுபவர் கொலை நூலைக் கையால் தொடலாகாது என்பது அவர்களது கோட்பாடு.
இனி, கீதா சாஸ்திரம் இக்கோட்பாட்டின் மூலத்தையே துருவி ஆராய்கிறது. இயற்கை முழுதும் ஒரு முடிவில்லாத கொலைக்களம் என்கிறது கீதா சாஸ்திரம். அணுமுதல் அண்டம் வரையில் எங்கும் உயிர் நிறைந்திருக்கிறது. ஒரு துளி ஜலத்தில் எண்ணிறந்த சிற்றுயிர்கள் இருக்கின்றன. நம் அறிவுக்கு அவைகள் சிற்றுயிர். தம் அளவையில் அவைகளும் பேருயிர்களேயாம். நமது மூடிய கைக்குள் அடங்கியிருக்கும் காற்றில் அதே பாங்கில் கணக்கற்ற உயிர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மண்ணினுள் நிறைந்திருப்பதும் உயிர்த் தத்துவம். இவையாவும் ஒன்றையொன்று விழுங்கி வாழவும் வளரவும் செய்கின்றன. வளரும் செடி யொன்றுக்குக் கோடானுகோடி பேக்டீரியா என்னும் உயிர்த் தத்துவங்கள் மண்ணிலிருந்து ஓயாது பலியாகின்றன. உயிர்த் தத்துவம் அடங்கப்பெற்றிருப்பதே உணவு. ஓர் உயிர் மற்றோர் உயிரை வாங்காது வாழமுடியாது. இதுவே இயற்கையின் அமைப்பு. இயற்கையில் எங்குக் கொலைச் செயல் நிகழா திருக்கிறது? பார்க்குமிடமெங்கும் கொலைக்களமே. கண் மூடித்தனத்தை அகற்றிவிட்டுக் கொலைக்களமாக இவ்வுலகைக் காண்பவரே உண்மையின் முதற்படியைக் காண்கின்றனர்.
சிருஷ்டியில் முத்தொழிலும் அடங்கியிருக்கின்றன. ஓர் இடத்தில் சூரியோதயம் என்றால் மற்றோர் இடத்தில் சூரிய அஸ்தமனம். ஓர் இடத்தில் உயிர் பிறக்கிறதென்றால் மற்றோர் இடத்தில் உயிர் இருக்கிறது. உடலை உண்ணுபண்ணுதல் என்றால் உணவை அழித்தல் என்று பொருள்படுகிறது. ஓயாது புதிய உயிர்களாகப் பிறந்துகொண்டிருக்கிற உலகில் அவையாவும் பழைய உயிர்களாக மாறி மடிந்து கொண்டும் இருக்கின்றன. சிருஷ்டிக்கும் சம்ஹாரத்துக்கும் இடைநிலை ஸ்திதி என்று இயம்பப்படுகிறது. ஆக படைத்தல், காத்தல், மறைத்தல் என்ற முச் செயலும் முக்கோணம் போன்று ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. மரணத்தை அறிந்துகொண்டால் மற்ற இரண்டும் எளிதில் விளங்கும்.
இயற்கையைக் கொலைக்களம் என்று ஒப்புக்கொள்பவர் பிறகு கீதா சாஸ்திரத்தைக் கற்றே ஆகவேண்டும். கொலை மறுக்க விரும்பும் நீ கொலைக்களத்துக்குள் வரலாகாது. அதற்குள் வந்தான பிறகு நீ கொலை செய்யா திருக்கமுடியாது. கோழை போன்று போர்க்களத்தில் தயங்கி நில்லாதே. கோழைக்கு மண்ணுலகும் இல்லை; விண்ணுலகும் இல்லை; எவ்வுலகும் இல்லை. ஆண்மையுடன் எழுந்திரு. வாழ்வு என்னும் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்து. ஆயினும் அதனிடத்துப் பற்றுவைக்காதே. போர் நிலத்தில் நீ பாங்குடன் போர் புரிந்தால், போர் கடந்த பெரு நிலத்தைப் பண்புடன் பெற்றிடுவாய் என்பது கீதையின் கோட்பாடு. ஆக, பகவத்கீதை கொலை நூலே. இயற்கை என்னும் கொலைக்களத்தில் வாழ்வு என்னும் கொலைத் தொழிலை நன்கு இயற்றுதற்கு பகவத்கீதை என்னும் கொலை நூலை ஒவ்வொருவனும் கற்றாகவேண்டும்.
12. புரட்சி நூல்
பகவத் கீதையில் இரண்டு பெரிய குறைபாடுகளை எடுத்துக் காட்டி, அதை சாஸ்திரம் என்று பகர்வது பொருந்தாது என்று அதைத் தாக்குபவர் ஒரு சிலர் இருக்கின்றனர். இவ்வுலகத்தோடு சம்பந்தப்படாத பல கோட்பாடுகள் அதில் இருக்கின்றன. பாஷியக்காரர்களுக்கிடையில் ஓயாத போராட்டத்தை அது உண்டுபண்ணியிருக்கிறது. ஒவ்வொரு மதவாதியும் தன் கொள்கையே பெரியதென்றும், மற்றவர் கொள்கைகள் குறைபட்டவைகளென்றும் சொற்போர் நிகழ்த்துதற்கு பகவத்கீதை காலமெல்லாம் இடம்கொடுத்து வருகிறது. அந்த அளவில்கருத்து உலகில் அது ஓயாது புரட்சியை வளர்த்துக்கொண்டு வருகிறது.
கெட்டவர்கள் தோன்றி சமூகத்தில் பெரிய குழப்பத்தைக் கிளப்புதற்குக் கீதை ஆதரவு தருகிறது. வெடிகுண்டு போட முயலுபவர்க்கு அது வெடிமருந்து போன்றது. போற்றுதற்கு உரிய பெரியோர்களைக் கொல்லும்படி அது தூண்டுகிறது. கொல்லுபவன் கொலை பாதகன் அல்லன் என்று அது புகட்டுகிறது. கருமம் மனிதனைப் பந்தப்படுத்தாது என்றும் அது போதிக்கிறது. சூது ஆடுபவரிடத்துக் கிருஷ்ணன் தானே சூதாட்டமாக இருப்பதாகவும் சொல்லுகிறான். இதையெல்லாம் படித்துவிட்டுப் பாமரர் தாறுமாறாக ஒழுக ஆரம்பித்து விட்டால் சமூகத்தின்கதி என்னாவது என்பது கேள்வி. இங்ஙனம் கீதையின்மீது ஆ÷க்ஷபம் கொண்டு வருவார் உளர்.
பகவத்கீதையில் இத்தகைய குற்றங்கள் இருக்கின்றனவாவென்று வாசகர்கள் கொஞ்சம் அறிந்து கொள்ளுதல் அவசியம். மத ஆசாரியர் ஒவ்வொருவரும் சமூகத்துக்குப் பெருநன்மை செய்தவர் ஆவார். ஒரு மரத்தின் பெருமையை அது தரும் கனியினின்று தெரிந்து கொள்ளலாம். சமய ஆசாரியர்களின் பெருமையை அவர்கள் சமூகத்துக்கு வழங்கியிருக்கும் நல்வாழ்வினின்று ஓரளவு தெரிந்துகொள்ளலாம். மக்களிடத்து அவர்கள் எல்லாரும் பேரன்பு பூண்டவர்கள். சுயநலத்துக்கும் அவர்களுக்கும் வெகுதூரம்; கல்விக்கு அவர்கள் களஞ்சியம்; ஒழுக்கத்துக்கு எடுத்துக்காட்டு. அத்தகையவர்கள் கீதா சாஸ்திரத்தைப் பின்பற்றினார்கள் என்றால் அது கீழ்த்தரமான போதனையுடையதாய் இருக்கமுடியாது. மேலான சம்பிரதாயம் அனைத்துக்கும் அது பிரமாணமாகிறது.
இனி, அறிவிலிகள் ஒரு நூலை முறையாக அறிந்து கொள்ள வில்லையானால், அது அந்த நூலின் குற்றமாகாது. அமிர்தத்தை விஷமாக்குவார் உளர். அப்படி அவர்கள் செய்வது அமிர்தத்தின் குற்றமாகாது. தங்கள் கீழான இயல்புக்கு ஏற்றபடி யோக சாஸ்திரத்தைக் கீழ்மக்கள் பொருள்படுத்துவார்களானால் அது அந்த சாஸ்திரத்தின் குற்றமாகாது. பல்லாயிரம் மேன்மக்களுக்குப் பாரமார்த்திகவாழ்க்கைக்கு அது வழிகாட்டியிருக்கிறது. காலமெல்லாம் அச்செயலையே கீதா சாஸ்திரம் செய்ய வல்லது. புலனடக்கமும், பக்தியும், தன்னலத் தியாகமும், தபசும், தொண்டு புரிதலும் இல்லாத கீழ்மக்களுக்கு கீதாசாஸ்திரம் உதவாது என்பது கோட்பாடு.
13. கீதா சாஸ்திரம் புகட்டுவது யாது?
அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் என்றென்றும் தோழன்; அதற்கு மேல் உறவினனும் ஆகிறான். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணக்கத்தின் புறத்தோற்றம் அது. அர்ஜுனனுடைய மனபரிபாகத்துக்கு ஏற்ற உதவியை அப்போதைக்கப்போது கிருஷ்ணன் செய்து வந்தான். நல்ல கல்வி பெறுதல் பயிற்சி பெறுதல், ராஜ்யம் நிறுவுதல், ஆபத்தினின்று தப்பித்துக் கொள்ளுதல், எதிரியினின்று மீளுதல், திரவியம் தேடுதல் இவை போன்ற உலகக் காரியங்கள் அனைத்துக்கும் அவன் சகாயம் செய்துவந்தான். தன் தங்கையையே அர்ஜுனனுக்கு மணம் முடித்துக்கொடுத்தான். இம்மையில் இன்பமூட்டும் இவையாவையும் பிரேயஸ் என்பர் பெரியோர். பல பிறவிகள் எடுத்துப் பிரியமானவைகளைப் பெற்று மகிழ்வுற்றிருக்கின்றனர் ஜீவர்கள். இவையாவையும் உயிர்களுக்கு நல்குபவர் கடவுள். வாழ்க்கையில் பிறகு நெருக்கடி ஒன்று வருகிறது. அர்ஜுனனுக்கு யுத்தம் என்னும் நெருக்கடி வந்தது. யுத்தத்துக்கு அவன் அஞ்சியவன் அல்லன். மகாதேவனையே முன்பு எதிர்த்துப் போர் புரிந்தவன். ஆனால் இந்த நெருக்கடியில் அவனுக்கு மனக்குழப்பம் உண்டாயிற்று. போர்புரிவது சிறந்ததா? எதிர்ப்பவர்க்கு எல்லாம் விட்டுக்கொடுத்து விடுவது சிறந்ததா? செய்வது இன்னதென்று தெரியாது திகைத்தான். அவன் பெற்ற பேறும், புகழும், போகமும் இந்த நெருக்கடியில் பயன்படவில்லை. சுருங்கச் சொன்னால் அவன் பெற்றிருந்த பிரேயஸ் பயன்படாது போய்விட்டது. ஆகவே அச்யுதனிடம் அவன் அடைக்கலம் புகுந்தான். சிஷ்யன் ஆனான்; சிரேயஸைப் புகட்ட வேண்டுமென்று விண்ணப்பித்தான்.
அர்ஜுனனுக்கு அத்தகைய மனநிலை வரும்வரை கிருஷ்ணன் காத்திருந்தான். ஏனென்றால் தோழமையில் பிரேயசை வழங்கலாம்; சிரேயஸை நல்கலாகாது. சிஷ்யபாவனை வரும் முன்பு சிரேயஸைப் புகட்டினால் அது பயன்தராது. பூமி விதைப்புக்குப் பண்படுவது போன்று அர்ஜுனனுடைய மனது சிரேயஸைப் பெறுதற்கு நன்கு பண்பட்டுள்ளது. அதைக் குறித்து கிருஷ்ணன் பெருமகிழ்வடைகிறான். உள்ளன்போடு சிரேயஸை எடுத்துப் புகட்டுகிறான். யோகமும், பக்தியும், ஞானமும் அடங்கப்பெற்றது சிரேயஸ். அது முக்தி மார்க்கம்.
பண்பட்ட பூமிக்குள் நல்ல விதையை விதைப்பது போன்று சிறந்த சாஸ்திரம் ஒன்று எப்பொழுதும் எடுத்த எடுப்பிலேயே சிரேயஸின் உட்கருத்தைத் தெளிவுபட உள்ளத்தினுள் புகட்டி வைக்கிறது. பிறகு அதற்கு விளக்கமாக மற்ற பகுதிகள் பின் தொடருகின்றன. சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். தோற்றத்துக்கு அப்பால் இருப்பது பூரணம். தோற்றத்துக்கு வந்திருப்பது பூரணம். பூரணமே யாண்டும் உள்ளது இந்த வாக்கு மூலத்தில் உபநிஷத்தின் உட்கருத்து அனைத்தும் வந்தமைகிறது. பிறகு இதற்கு விளக்கமாக மற்ற பகுதிகள் தொடர்ந்து வருகின்றன. பகவத்கீதையினுடைய போக்கும் இத்தகையதே. முதல் அத்தியாயத்தில், பகவானுடைய பேச்சு ஒன்றும் இல்லை. இரண்டாவது அத்தியாயத்தில், இரண்டாவது, மூன்றாவது சுலோகங்களில் அவர் திருவாய் மலர்ந்தருளுகிறார்.
அதாவது: அர்ஜுனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது?
பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே. அது உனக்குப் பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத் தளர்வைத் துறந்துவிட்டு எழுந்திராய்.
வாழ்க்கைக்குத் திறவுகோலைக் கிருஷ்ணன் இக்கோட்பாட்டில் கொடுத்து அருளுகிறான். கீதையின் மூலக் கருத்து இதுவேயாம். தொடர்ந்து வருகிற ஒவ்வொரு அத்தியாயமும் இதற்கு ஒவ்வொரு விளக்கமாகிறது.
வலிவு படைத்தவனே வாழ்வுக்குரியவன் என்பதை கீதையின் கோட்பாடு. இம்மைக்கும் மறுமைக்கும் உறுதுணையாவது வலிவு. வலிவு உயிரை வளர்க்கிறது; மெலிவு உயிரைத் தேய்க்கிறது. வலிவு நோயை நீக்குகிறது; மெலிவு நோயை வளர்க்கிறது. வலிவு நல்லறத்தையும் நேர்மையையும் நல்குகிறது. மெலிவு மனக்கோணலையும் ஒழுக்கமின்மையையும் யாண்டும் உண்டுபண்ணுகிறது. ஆத்ம போதத்தைப் பெருக்குவது வலிவு; பிரபஞ்ச உணர்ச்சியை ஊட்டுவது மெலிவு. பந்தத்தை மிகைப்படுத்துவது மெலிவு; மோக்ஷத்தை வழங்குவது வலிவு.
14. பகவத்கீதா உபநிஷதம்
உபநிஷதங்கள் எல்லாம் நான்கு வேதங்களினின்று வந்தவை. பகவத்கீதையோ மஹாபாரதத்தினின்று வந்தது. ஆயினும் இது உபநிஷதம் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் எல்லா உபநிஷதங்களின் சாரம் இதில் இருக்கிறது. உபநிஷதங்களையெல்லாம் பசு என்று வைத்துக்கொண்டால் பகவத்கீதையை அவை தரும் பால் என்று பகரலாம். பசுக்கள் விதவிதமான நிறமுடையவைகளாக இருக்கின்றன. ஆனால் அவைகளினின்று வரும் பால் வெண்மையானது. பசுவை எல்லோராலும் வளர்க்க முடியாது. அதனின்று பால் கறப்பதும் கஷ்டமானது. பாலை அருந்துவது எல்லார்க்கும் இயலும். பாலினின்று தயிர், வெண்ணெய், நெய் முதலியன செய்துகொள்ளலாம். அங்ஙனம் கீதா சாஸ்திரத்தை இகபரமிரண்டுக்கும் ஏற்ற நல்ல வழிகாட்டியாக வைத்துக்கொள்ளலாம். போகுமிடத்துக்கெல்லாம் பசுவைக் கொண்டுபோக முடியாது. பாலை எங்கு வேண்டுமானாலும் பாதுகாத்து எடுத்துச் செல்லலாம். அதாவது கீதையை நன்றாக அறிந்துகொண்டவர்கள் பிறகு உபநிஷதங்களில் அடங்கியிருக்கும் கோட்பாடு யாதோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. எல்லார்க்கும் எளிதில் விளங்காத உபநிஷதங்களை விளங்கும்படி செய்து வைத்தவன் கிருஷ்ணன். அதற்கு முகாமையாக அமைந்தவன் அர்ஜுனன். கன்றுக்காகப் பசு பால் சுரக்கிறது. பின்பு அது உலகுக்கும் உணவாகப் பயன்படுகிறது. கீதையும் அங்ஙனம் உலகுக்குப் பயன்பட்டு வருகிறது. ஜீரணசக்திக்கு ஏற்ற அளவு பாலை அருந்தலாம். நோயாளிக்கும் ஆரோக்கியவானுக்கும் அது நல்லுணவு ஆகிறது. கீதையை அவரவர் பரிபக்குவத்துக்கு ஏற்ற அளவு பயன்படுத்தலாம். நல்வாழ்வை இன்று புதியதாகத் துவக்குகிற மனிதனுக்கும் அது பயன்படும்; சாதனத்தில் மேலான நிலைக்கு வந்திருப்பவனுக்கும் பயன்படும். கீதையில் அடங்கியில்லாத இகபர தத்துவம் ஒன்றுமில்லை.
15. பிரம்ம வித்தை
வித்தைகள் எண்ணிக்கையில் அடங்காதவைகள். புதிய புதிய பௌதிக ஞானங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. மனிதனுடைய அறிவு எல்லாத்துறைகளிலும் அதிவேகம் விரி வடைந்து கொண்டே வருகிறது. அதற்கிடையில் மற்றொரு பேருண்மையை மனிதன் உணர்கிறான். புதியதாகப் பெறுகிற இயற்கையின் ஞானம் ஒன்றோ மனிதன் இன்னும் பெறவேண்டிய பகுதி பன்மடங்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஞாபகமூட்டுகிறத. கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பது எல்லார்க்கும் உண்மை. பரந்த அறிவு வரவர, மேலும் அறிய வேண்டியது அகண்டாகாரத்தில் விரிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதை உணர்ந்த சான்றோர் கேள்வியொன்று கேட்டனர். எதை அறிந்தால் அறிவு பூர்த்தியாகிறது? எதை அறிந்து கொண்டால் இயற்கையின் மர்மம் முழுதும் விளங்கி விடுகிறது? இந்த ஆழ்ந்த ஆராய்ச்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். அனைத்துக்கும் முதற்காரணம் எது என்பதை அன்னவர் அனுபூதியில் உணர்ந்தனர். மூல தத்துவத்தை அறிந்தபின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடை கிடைக்கிறது. மூலப் பொருளைப் பற்றிய வித்தை பிரம்மவித்தை என்ற பெயர் பெற்றிருக்கிறது. வேறு பல பெயர்களைக் கொண்டும் அதை அழைப்பதுண்டு அவைகளுள் பரவித்தை அல்லது பரஞானம் என்பது சர்வ சாதாரணமானது. சமயங்கள் தெய்வத்துக்குக் கொடுத்திருக்கிற பெயரை இந்த ஞானத்துக்கும் கொடுத்துக் கூறுவது இயல்பு. உதாரணம் ஒன்று எடுத்துக் கொள்வோம். சிவஞானம் என்பதும் பரஞானம் என்பதும் வெவ்வேறு ஆகமாட்டா. மெய்ப்பொருளுக்கு விளக்கம் சொல்லுமிடத்து இவையிரண்டும் ஒன்றையே குறிக்கின்றன என்பது வெளியாகும். இந்த பிரம்ம வித்தையைப் புகட்டுவது கீதையின் நோக்கமாகும். அர்ஜுனன் கேட்டது போர் புரிவதா, பின் வாங்குவதா என்பதாகும். அதற்கு இரண்டில் ஒன்றை இயம்புதற்குப் பதிலாக, பிரம்ம வித்தையை ஏன் பகவான் எடுத்துக்கொண்டார் என்ற கேள்வி பிறக்கக்கூடும். அப்போதைக்கப்போது உண்டாகும் சந்தேகங்களை அகற்றி வைப்பது ஒருவித உதவியாகும். புதிய சந்தேகம் பிறப்பதற்கு இடமில்லாது ஐயங்கள் அனைத்தையும் அறவே அகற்றிவைப்பது உயர்ந்த உபகாரமாகிறது. ஒரு ஜீவனுக்குக் கொடுக்கும் கொடைகளுள் முடிவானது பிரம்ம ஞானம். ஜீவாத்மா அதை ஏற்க வல்லவனாகும்போது பரமாத்மா அதை எடுத்து உவந்து அளிக்கிறார்.
16. யோக சாஸ்திரம்
ஒவ்வொரு சாஸ்திரத்திலும் உபபத்தி என்றும் அனுஷ்டானம் என்றும் இரண்டு பகுதிகள் உண்டு. ஆங்கிலத்தில் இவைகளை (தியரி அண்டு பிராக்டீஸ்) என்பார்கள். யுக்தியால் முடிவு கட்டுவது உபபத்தி; நடைமுறையில் செய்துகாட்டுவது அனுஷ்டானம். சாதாரண மனிதன் ஒருவனுக்கு பிரம்மஞானம் வெறும் உபபத்தியாகப் போய்விடலாம். அப்பொழுது அவன் அதில் நன்மையொன்றும் அடையமாட்டான். வாய் வேதாந்தம் என்பது அதுவே. ஆனால் பிரம்மஞானம் வேறு, வாய்ப்பேச்சு வேறு. பிரம்மஞானம் முற்றிலும் வாழ்க்கைக்கு உரியது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் அதை அனுஷ்டானத்துக்குக் கொண்டுவரலாம். ஆகையால் அது யோக சாஸ்திரம் என்னும் பெயர் பெறுகிறது. கூலி வேலை செய்பவனுக்குப் கீதா தத்துவம் தெரிந்திருந்தால் அவன் தன்வேலையைத் திறம்படச் செய்வான். பயிர்த்தொழில் செய்பவனுக்குக் கீதா தத்துவம் தெரிந்திருந்தால் அவன் நல்ல கிருஷிகன் ஆவான். வர்த்தகம் செய்பவனுக்கு இக்கோட்பாடுகள் தெரிந்திருந்தால் அவள் சிறந்த வியாபாரியாவான். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கீதையை நன்கு கற்றறிருந்தால் அவர்களுடைய உத்தியோகம் சீராக நிகழும். பாடம் புகட்டும் ஆசிரியர்கள் கீதையின் கோட்பாடுகளை அறிந்து கொண்டால் அவர்கள் சீரிய ஆசிரியர்கள் ஆவார்கள். சுருக்கிச் சொல்லுமிடத்து கீதையைக் கற்று அனுஷ்டிக்கும் ஒவ்வொரு மனிதனும் மேலான மனிதன் ஆவான். திறமை வாய்க்கப்பெற்ற மனிதனுக்கே யோகி என்று பெயர்.
கீதையில் பதினெட்டு அத்தியாயங்களுள் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒவ்வொரு யோகம் என்ற பெயர் வந்து அமைகிறது. மனத்தின் பண்பாடு யோகமாகிறது. மனம் தளர் வுறுவார்க்கும் துயருறுவார்க்கும் யோமில்லை என்பது கோட்பாடு. அதாவது வியாகூலமுடையவன் யோகியாகான். பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சாஸ்திரத்தில் அஷ்டாங்கங்களில் ஓர் அங்கமாகிய நியமம் என்னும் பகுதியில் சந்தோஷம் என்பது யோகத்துக்கு இன்றியமையாத கோட்பாடாகும். மனத்தகத்து அமையும் ஆனந்தமும் கொள்ளுதல் வேண்டும். அப்படியானால் கீதையின் முதல் அத்தியாயத்துக்கு யோகம் என்னும் தலைப்புப் பொருந்தாது. அர்ஜுன விஷாதயோகம் என்னும் பெயர் அதற்கு அமைந்துள்ளது. இருளை வெளிச்சம் என்று சொல்லுவது எப்படிப் பொருந்தாதோ அப்படித் துயரத்தை யோகம் என்று அழைப்பது சரியன்று. பின்பு அந்த அத்தியாயத்துக்கு ஏன் யோகம் என்ற பெயர் வந்தது?
துயரத்தில் இரண்டு விதம் உண்டு. ஒன்று உலக ஆசையைக் குறித்தது. தனக்கு வந்து அமைந்த போகமும் பொருளும் போதவில்லையென்று துயருறுபவன் உண்டு. அத்தகைய துயரத்தால் ஆண்மை அகன்று அழிகிறது; வீரம் விரயமாய்ப்போகிறது; அக்ஞான இருள் அதிகரிக்கிறது. ஆனால் அர்ஜுனனுக்கு அமர்க்களத்தில் வந்த துயரம் அத்தகையதன்று. அவனுக்கு உலக ஆசை அகன்று ஒழிகிறது. மூவுலகின் ராஜ்யமும் வேண்டாம் என்கிறான். போர் புரிவதா, பின்வாங்குவதா, எது தன் கடமையென்று தனக்குப் புலப்படவில்லையென்று பரிதவிக்கிறான். வாழ்க்கையின் மர்மம் அவனுக்கு விளங்கவில்லை. உயிர்வாழ்க்கை அவனுக்குத் தாங்கமுடியாத தலைச்சுமைபோன்று தென்பட்டது. அதைக் குறித்து அவன் வருந்தினான். அது வாழ்க்கையில் விரக்தி அல்லது பற்றின்மைக்குச் சமானம். அருள்தாகம் என்றும் அதை இயம்பலாம். அர்ஜுனன் அடைந்த துயரம் அவனை யோகத்துக்கு ஆயத்தப்படுத்துகிறது. நல்லறிவும் அறநெறியும் வேண்டுமென்று பரிதாபப்படுபவர் பாக்கியவான்கள்; ஏனென்றால் அன்னவர் அருள்நிலையில் ஆறுதல் அடைவர் என்பது கோட்பாடு. வல்வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே, என்றார் ஆத்ம சாதகர் ஒருவர். இப்பொழுது விஜயனுக்கு வந்துள்ள விசனம் இனி யோகத்தை வருவிப்பதற்கு ஏதுவாகிறது. ஆகவே அந்த விசனமும் ஒருவித யோகம் என்று சொல்லப்படுகிறது.
பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம். அந்த நான்கும் முறையே கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்று பெயர் பெறுகின்றன. இந்த நான்கினுள் ஆரம்பதசையில் இருப்பது கர்மயோகமென்றும், பிறகு அது ராஜயோகமாகப் பரிணமிக்கிறதென்றும், அதினின்று பக்தியோகம் ஓங்கிறதென்றும், இறுதியில் அது ஞானமாக முற்றுப்பெறுகிறது என்றும் பொருள்படுத்துவது ஐதிகமாக வந்துள்ளது. கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் அமைப்பே அதற்குத் தக்க சான்றாகிறது. நான்கு யோகங்களையும் அரும்பு, பிஞ்சு, காய், கனி என்று பொருள்படுத்துவாரும் உளர். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணபகவான் இந்த நான்கினுள் வேற்றுமையோ தார தம்மியமோ பாராட்டுகிற அறிகுறிகளைக் காணமுடியாது. கர்மத்தோடு உயர்ந்த ஞானத்தை அவர் இணைக்கிறார். பிறகு பக்தியையும் ஞானத்தையும் ஒரே பாங்கில் பொருள்படுத்துகிறார். யோகத்தையும் பக்தியையும் மற்றோர் இடத்தில் ஒன்றுபடுத்துகிறார். இங்ஙனம் ஒரு யோகம் மற்றோன்றுக்கு முந்தியதுமல்ல பிந்தியதுமல்ல, மேலானதுமல்ல கீழானதுமல்ல என்று எடுத்துக்காட்டுவது அவரது சிறப்பியல்பு ஆகும். வாழ்க்கை என்னும் ரதத்துக்கு அவர் நான்கு யோகங்கள் என்னும் நான்கு குதிரைகளைப் பூட்டுகிறார். அவைகள் வெண்குதிரைகளாயிருப்பது அவைகளின் சாத்துவிக இயல்பையும் தூய்மையையும் விளக்குகிறது. ரதத்தை விரைந்து ஓட்டுதற்கு நான்கு குதிரைகளும் சேர்ந்து உழைக்க வேண்டும். அங்ஙனம் நான்கு யோகங்களும் ஏக காலத்தில் சேர்ந்து அனுஷ்டிக்கப்படும்பொழுது வாழ்க்கையின் லட்சியம் இனிது நிறைவேறுகிறது. நான்கு யோகங்களையும் சமரசமாக வழங்குகின்ற அப்பரம புருஷனுக்கு யோகேசுவரன் என்னும் பெயர் வந்துள்ளது.
17. போதனா முறை
அவதார புருஷர்கள் எல்லாரும் மக்களுக்குத் தாங்கள் புகட்டியவைகளை மிக எளிய முறையில் கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கும், பாமரருக்கும் விளங்கும்வண்ணம் மேலாம் தத்துவங்களைச் சுலபமாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய உபதேசங்களுக்கு வியாக்கியானம் செய்யவேண்டிய அவசியமில்லை. வியாக்கியானம் செய்ய முயன்றவர்கள் தங்களுடைய கொள்கை அவதார புருஷருடைய கூற்றில் அடங்கியிருக்கிறது என்பதைக் காட்டுதற்கே முன்வந்தனர். தர்க்கம் முதலிய உபகரணங்களைக் கையாண்டவர்களும், பாஷ்யக்காரர்களேயாம். ஆனால் அவதார புருஷர்கள் புகட்டியதிலோ தாய் தன் குழந்தைக்கு எடுத்துச் சொல்வது போன்று அவ்வளவு இனியதும், எளியதுமான முறையைக் கையாண்டிருக்கின்றனர். ஸ்ரீராமன், புத்தர், ஏசுநாதர் போன்றவர்களுடைய போதனைகளை நாம் உள்ளபடி அறிந்து கொள்ளுதற்கு யாருடைய வியாக்கியானமும் நமக்குத் தேவையில்லை.
ஸ்ரீமத் பகவத்கீதையும் போதனா முறையில் மிக எளியதே. மூலத்தை அவரவர்க்குத் தெரிந்த மொழியிலே பெயர்த்தெடுத்துப் படித்துப் பார்த்தால் படிக்கின்றவர்களுக்கு விளங்காத பகுதி மிகக் குறைவு; விளங்குகிற பகுதியே பெரும்பான்மை எனலாம். அது அவ்வளவு எளியதாக இருப்பது மட்டுமல்ல மிக ஆழ்ந்ததாகவும் இருக்கின்றது. பகவத்கீதைக்கு மூலமொழியாகிய சம்ஸ்கிருதத்தில் அமைந்ததே அது ஆழத்தில் செல்லுதற்கு இடங்கொடுத்தது. மொழி அழகானது, விதவிதமான பொருள் அழகாக வடிவெடுக்க வல்லதாக கீதையில் அமைந்திருக்கிறது. விதவிதமான பொருள்களையும் சம்பிரதாயங்களையும் அதில் காணலாம் என்றாலும், அத்தனைவித விளக்கங்கள் ஒன்றோடொன்று முரண்படுபவைகளல்ல. ஆகையால்தான் அது பிரஸ்தானத்திரயத்தில் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறது.
ஒரு கோட்பாட்டை பகவான் ஓரிடத்தில் பகர்ந்தால் அதன் பொருள் நன்கு விளங்குதற்பொருட்டு வேறு பல இடங்களிலும் வேறு விதங்களில் அதை விளக்குகிறார். சான்றுகள் சில எடுத்துக்கொள்வோம். உயிரோடிருப்பவனைக் குறித்தோ, உயிர் துறந்தவனைக் குறித்தோ பண்டிதன் விசனப்படுவதில்லை என்கிறார் ஓரிடத்தில், ஒரு விதத்தில் பண்டிதன் என்னும் சொல்லுக்கு அது விளக்கமாகிறது. மற்றோர் இடத்தில் சிற்றுயிர் பேருயிர் ஆகிய அனைத்திடத்தும் சமதிருஷ்டி உடையவன் பண்டிதன் என்கிறார். இங்ஙனம் பண்டிதன் என்னும் சொல்லை எங்கெங்கு கையாண்டிருக்கிறார் என்று பார்த்தால் அதற்கு முழு விளக்கம் கிடைக்கின்றது. யோகம் என்னும் சொல்லை அடிக்கடி உபயோகப்படுத்துகின்றார். செயலில் திறமை வாய்க்கப் பெற்றிருப்பது யோகம் என்ற விளக்கம் ஓரிடத்தில் அமைகிறது. மனம் நடுநிலை வகிப்பது யோகம் என்ற விளக்கம் இன்னோரிடத்தில் வருகிறது. வலிய எடுத்துக்கொண்ட வருத்தங்களினின்று விடுபடுவது யோகம் என்ற விளக்கம் இன்னும் ஓர் இடத்தில் வருகிறது. இவைகளையெல்லாம் திரட்டினால் யோகத்தைப்பற்றிய எல்லாக் கோட்பாடுகளும் நமக்கு விளங்குவனவாகின்றன.
புகட்டிய ஒரு கருத்தையே திரும்பவும் அவர் புகட்டுவது போன்று சில இடங்களில் தென்படும். ஆயினும் சொன்னதையே சொல்லுதல் என்னும் குற்றம் அவரைச் சாராது. யோகம் என்னும் சொல் முதல் ஆறு அத்தியாயங்களில் பெரும்பாலும் கரும யோகத்தையே குறிக்கும். இரண்டாவது ஆறு அத்தியாயங்களில் அது சிறப்பாக பக்தியோகத்தைக் குறிக்கும். கடைசி ஆறு அத்தியாயங்களில் அது ஞானயோகத்தைக் குறிக்கும். அஹங்காரம் என்னும் சொல்லும் அங்ஙனமே இடத்துக்கு ஏற்றாற் போன்று விதவிதமாகப் பொருள்படும். ஒரே கோட்பாட்டை கர்மம், பக்தி, ஞானம் ஆகிய மூன்று யோகங்களில் மூன்றுவிதமாகப் பொருள்படுத்தலாம். அப்படிப் பொருள்படுத்துவதும் முற்றிலும் அவசியமாகிறது. ஆத்மா என்னும் சொல் முதல் ஷட்கத்தில் சத் சொரூபமாக வடிவெடுக்கும். இரண்டாவது ஷட்கத்தில் அது ஆனந்த சொரூபமாக அல்லது பிரேமை சொரூபமாக வடிவெடுக்கும். கடைசி ஷட்கத்தில் ஆத்மா சித்சொரூபமாக வடிவெடுக்கும். இவை யாவற்றையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் பகர்ந்த கோட்பாட்டையே திரும்பவும் பகர்ந்திருக்கின்றார் என்ற குற்றத்தை கீதாசாரியின் மீது நாம் சாட்டமாட்டோம். எதையும் அவர் மிகைபடவோ, குறைவுபடவோ பகரவில்லை. அனைத்தையும் அளந்தெடுத்தே அவர் விளக்கியுள்ளார்.
18. சுருதியும் ஸ்மிருதியும்
பகவத்கீதைக்கு அமைந்துள்ள தனிச் சிறப்புக்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அது ஏககாலத்தில் சுருதியாகவும் ஸ்மிருதியாகவும் வழங்குகிறது. சுருதி எது, ஸ்மிருதி எது என்று முதலில் ஆராய்வோம். உபநிஷதங்களுக்குச் சுருதி என்று பெயர். கர்ண பரம்பரையாகக் காதால் கேட்டுப் காப்பாற்றி வைக்கப்பட்டது எதுவோ அது சுருதி. நெடுங்காலமாக ஒருவர் பின் ஒருவராகக்கேட்டு வந்தது எனினும் அதன் சொல் அமைப்பை யாரும் மாற்றிவிடவில்லை. ஆகையால் மூலப்பொருளமைப்பும் திரிவுபடாது இருந்து வந்திருக்கிறது. கணிதத்தில் எண்சுவடியையும் பெருக்கல் வாய்ப்பாட்டையும் எப்படி யாரும் மாற்றமுடியாதோ அப்படி சுருதிப்பொருளை யாரும் மாற்ற முடியாது. மெய்ப்பொருளை விளக்குகின்ற சுருதி மொழியும் என்றும் மாறாதிருக்கிறது. ஆக, சுருதி யாண்டும் சாசுவதமானது.
ஸ்மிருதி என்பது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டது என்று பொருள்படுகிறது. சமூகவாழ்க்கை சம்பந்தமான கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் சேர்ந்து ஸ்மிருதி என்னும் பெயர் பெறுகிறது. நன்கு அமைக்கப்பெற்ற ஸ்மிருதிகள் எப்பொழுதும் பரதத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவைகள். பராசர  ஸ்மிருதி, மனுஸ்மிருதி முதலியவைகள் பிரசித்திபெற்றவைகள். ஸ்மிருதிகள் சாசுவதமானவைகளன்று. காலத்துக்கும், இடத்துக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்ப அவைகள் மாறியமையும். சமூக நடைமுறைகளை நன்கு அறிந்துள்ள மேலோன் ஒருவன், அல்லது மேலோர் கூட்டம் ஒன்று ஸ்மிருதிகளைக் காலத்துக்கு ஏற்றவாறு திருத்தியமைத்துக் கொள்வதுண்டு. சுதந்தர இந்தியாவுக்கு இப்பொழுது இந்திய அரசாங்கம் அமைத்துள்ள சட்டதிட்டங்களையும் ஸ்மிருதியெனலாம். ஆக, ஸ்மிருதி யென்பது அப்போதைக்கப்போது மாறியமையும் தன்மையுள்ள சமூகக்கோட்பாடுகளாம்.
ஸ்ரீமந் பகவத்கீதையானது ஏககாலத்தில் சுருதியாகவும் ஸ்மிருதியாகவும் அமைந்துள்ளது. பரதத்துவத்தை அது நன்கு விளக்குவதால் அது சுருதியாகிறது. பரதத்துவத்துக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வது சநாதன தர்மம். இந்நூலினின்று சநாதனதர்மத்தை உள்ளபடி கற்றுக்கொள்ளலாம். சமுதாய அமைப்பு எத்தகையது என்பதையும், அது எங்ஙனம் நடைபெற வேண்டும் என்பதையும் கீதை எடுத்து விளக்குகிறது. சநாதன தர்மம் யுகதர்மமாக வடிவெடுக்கும் விதத்தையும் அது காட்டிக் கொடுக்கிறது. இதை ஒரு உபமானத்தைக் கொண்டு அறிவது நன்று. பொன் என்றைக்கும் விலையுயர்ந்த பொருள் ஆகிறது. பொற்காசு பெறுகிற முத்திரை ஒவ்வொரு அரசாங்கத்திலும் மாறியமைகிறது. பொன் போன்றது சநாதன தர்மம். பொற்காசு போன்றது யுகதர்மம். இனி, ஸ்மிருதியும் பொற்காசுக்குச் சமானமானது. சாஸ்திரப் பிரமாணங்களைச் சொல்ல வருகிற மத ஸ்தாபகர்கள் ஸ்மிருதியும் அங்ஙனம் பகர்கிறது என்று சொல்லுவார்களானால் அவர்கள் குறிப்பிடுவது பகவத்கீதையாகும். ஆசாரியர்களுக்கிடையில் அது ஸ்மிருதி என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. மற்ற ஸ்மிருதிகள் காலத்துக்கு ஏற்றவாறு மாறியமையும். ஆனால் பகவத்கீதையை மாற்றியமைக்க முடியாது. ஏனென்றால் சமூக நடைமுறையிலும் எக்காலத்துக்கும் பொதுவாயுள்ள கோட்பாடுகள் உண்டு. மாறுபாடு அடையும் உலகில் மாறுபாடு அடையாத கோட்பாடுகளையே கீதா சாஸ்திரம் விளக்குகிறது. ஆகவே இது எக்காலத்துக்கும் எல்லா சமூகங்களுக்கும் உதவுகிற ஸ்மிருதியாகும். கீதையைக் கற்றறிந்தவன் பாரமார்த்திகத் தத்துவங்களையும் வியாவகாரிக தத்துவங்களையும் கற்றறிந்தவன் ஆவான்.
19. மஹாவாக்கிய விளக்கம்
உலகில் உள்ள சமயங்கள் போற்றும் உயர்ந்த நூல்களெல்லாம் பொது இயல்பு ஒன்றைப் படைத்திருக்கின்றன. நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அவை யாவும் மஹாவாக்கியத்துக்கு விளக்கமாக வந்து அமைந்திருக்கின்றன. மஹாவாக்கியம் என்பது பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தைச் சொல்லுகிறது. வேதங்களில் நான்கு மஹாவாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளுள் மிகச் சிறப்புடையது தத் த்வம் அஸி என்னும் மூன்று சொற்களைக் கொண்டது. த்வம்-நீ, தத்-அதுவாக, அஸி-இருக்கிறாய் என்பது அதன்பொருள். ஜீவாத்மாவாகிய நீ பரமாத்மாவாகிய மெய்ப்பொருளுக்கு அன்னியமானவன் அல்லன் என அதற்கு விளக்கம் வருகிறது. இக் கோட்பாட்டை எல்லா சாஸ்திரங்களும் ஏதேனும் ஒரு விதத்தில் இயம்புகின்றன. இதை எடுத்து ஓதாத நூல் உயர்ந்த நூல் ஆகாது. தத் த்வம் அஸி என்னும் மகாவாக்கியத்துக்கு உற்ற உயர்ந்த விளக்கம் என்று பகவத்கீதையைச் சொல்லலாம்.
அது பதினெட்டு அத்தியாயங்களையுடையது. திரிஷட்கம் அல்லது மூவாறு (3*6) என்று அப்பதினெட்டு அத்தியாயங்களும் பகரப்பெறுகின்றன. அவைகளுள் முதல் ஆறு அத்தியாயங்கள் த்வம் (நீ) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற ஜீவதத்துவத்தை விஸ்தாரமாக விளக்கிக்கொண்டு போகின்றன. ஜீவனிடத்துள்ள குறைபாடு, அவன் அடையவேண்டியநிறை நிலை, அதற்காக அவன் எடுத்துக்கொள்ள வேண்டிய முயற்சி ஆகிய இத்தனையும் முதல் ஆறு அத்தியாயங்களில் அடங்கியிருக்கின்றன. இது முதல் ஷ்டகம். ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் ஈறாக உள்ளவை இரண்டாவது ஷட்கம். மஹாவாக்கியத்தில் தத் (அது) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரதத்துவம் அல்லது, பரமாத்மாவை அந்த ஆறு அத்தியாயங்களும் விளக்குகின்றன. உலகனைத்தும் அவர் எப்படியாயிருக்கின்றார், உலகங்களில் அவர் எப்படி அந்தராத்மாவாக இருக்கிறார், பிறகு உலகத்தைக் கடந்தவராகவும் அவர் எப்படி யிருக்கிறார் ஆகிய இவையாவும் இந்த இரண்டாவது பகுதியில் வந்தமைகின்றன. பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாம் அத்தியாயம் வரையில் உள்ள ஆறு அத்தியாயங்களுக்கு மூன்றாவது ஷட்கம் என்று பெயர். மஹாவாக்கியத்தில் அஸி (இருக்கிறாய்) என்னும் சொல்லுக்கு இலக்காயுள்ள பரமாத்ம-ஜீவாத்ம இணக்கத்தை இப்பகுதி தெளிவுபடுத்துகிறது. தத் த்வம் அஸி என்ற மூன்று பகுதிகளுக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருப்பது பகவத்கீதை. அந்தந்தப் பகுதியை அது ஓர்மைப்படுத்தி விளக்கியிருப்பது போன்று தெளிவாகவும் முறையாகவும் வேறு ஒரு நூல் செய்யக்கிடையாது. ஆக, மஹாவாக்கியத்துக்கு முறையான வியாக்யானம் என்று இதை இயம்ப வேண்டும்.
20. பாஷ்யங்கள்
ஒரு நூலின் உட்கருத்து எல்லாருக்கும் விளங்கும்படி அதை விரித்து எடுத்து விளக்குங்கால் அந்த விளக்கத்துக்கு பாஷ்யம் என்று பெயர். ஆழ்ந்த கருத்துடைய நூல்களுக்குப் பாஷ்யங்கள் பல அமைவது இயல்பு. பிரஸ்தானத்திரயமாகிய உபநிஷதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை ஆகிய மூன்றுக்கும் பாஷ்யக்காரர் பலர் உளர். ஒரு மதம் அல்லது சம்பிரதாயத்தை நிலைநாட்ட முயலுபவர் தமது கருத்தையே பிரஸ்தானத்திரயம் விளக்குகின்றன வென்று சாஸ்திரப் பிரமாணம் மூலமாகவும் யுக்தி பூர்வமாகவும் எடுத்துக்காட்டுவர். இதுவரையில் தோன்றியுள்ள விரிவுரைகளில் பல அந்தந்த மதக்கோட்பாட்டையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. பிரஸ்தானத்திரத்திலுள்ளும் பகவத் கீதைக்குத்தான் விரிவுரைகள் ஏராளமாயிருக்கின்றன. அதாவது உபநிஷதங்களுக்கும் பிரம்மசூத்திரங்களுக்கும் வியாக்யானங்கள் அமைந்திருப்பதைவிட அதிகமாக பகவத்கீதைக்கு உண்டு.
பல மொழிகளில் மொழிபெயர்ப்பு ஏற்பட்டிருப்பது ஒரு நூலின் சிறப்பைக் காட்டுகிறது. உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது. கிறிஸ்து மத சாஸ்திரமாகிய பைபிள் ஆகும். அப்படி மொழி பெயர்ப்பை உண்டுபண்ணுவதற்குப் பணமும் ஆதிக்கமும் இருந்தால் போதுமானது. கிறிஸ்தவ ஆட்சியில் அவ்விரண்டும் சேர்ந்து அமைந்திருந்தன. ஆனால் கீதைக்கு அமைந்துள்ள மொழிபெயர்ப்புகள் ஆதிக்கத்தையோ பெருஞ் செல்வத்தையோ அடிப்படையாகக் கொண்டவைகளல்ல. இந்த உயர்ந்த கோட்பாடுகளை மக்கள் அறிந்துகொண்டால் அவர்களுக்கு நலன் ஏற்படும் என்ற எண்ணமே மொழிபெயர்ப்பில் மேலோரைத் தூண்டியது. சமயப்பற்றும் சமயப் பிரசாரமும் வேறு; தத்துவ ஞானமும் தத்துவப் பிரசாரமும் வேறு. கீதையின் மொழிபெயர்ப்புகளில் பல, தத்துவ ஞானத்தை ஆதாரமாகக் கொண்டவை என்பதற்குச் சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். ஆங்கில பாஷையில் கீதையின் முதல் மொழிபெயர்ப்பு ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்ற ஆங்கில ஆட்சியாளர்களால் செய்யப்பட்டது. அந்த மொழிபெயர்ப்புக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் என்ற ஆட்சித் தலைவர் முன்னுரையொன்று கொடுத்திருந்தார். அதில் அவர் பகர்ந்ததின் கருத்து :- இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்தியா தேசத்தை இழக்க நேரிடலாம். ஆனால் இந்தியாவில் உதித்த இந்த பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து என்றைக்கும் மேன்மையுற்று விளங்கும். வாழ்க்கைத் தத்துவத்தின் பெருமையை உணர்ந்த ஒரு பேரறிஞரே இங்ஙனம் பகரமுடியும்.
இனி, பகவத்கீதைக்கு வியாக்கியானம் எழுதியவர்கள் எல்லாரும் பணத்தையும் ஆதிக்கத்தையும் ஆதரவாகக் கொண்டவர்கள் அல்லர். குரு÷க்ஷத்திர பூமியில் இப்பொழுது கீதா மந்திரம் என்ற ஒரு ஆலயம் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதே இடத்தில்தான் கீதா உபதேசம் அன்று நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அறிஞர் யூகிக்கின்றனர். அந்த ஆலயத்தில் முந்நூறுக்கு மேற்பட்ட வியாக்கியானங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். அந்த விரிவுரைகளெல்லாம் வெவ்வேறு காலங்களில் எழுதப் பெற்றவை. அப்படி எழுதியவர்களெல்லாம் பேரறிவும் நல்லொழுக்கமும் வாய்க்கப் பெற்றவர்கள். சான்றோருலகில் கீதை எத்தகைய ஸ்தானம் வகித்து வருகிறது என்பதற்கு அதுவே சான்றாகும். அன்றைக்கு இருந்தது போன்று இன்றைக்கும் புதிய புதிய வியாக்கியானங்கள் கீதைக்கு வந்துகொண்டே இருக்கின்றன.
21. சிறந்த பாஷ்யம் எது?
நூற்றுக்கணக்கான விரிவுரைகள் கீதைக்கு வந்திருக்கின்றன வென்றால் அவைகளில் எதை ஏற்பது, எதை விலக்குவது, எதைக் கற்பது, எதைத் தள்ளுவது என்ற கேள்விகள் எழலாம். சூரியோதயத்தின் அழகை ஒவ்வொரு கலைஞானியும் தன் தன் துறையில் வைத்து சிலாகித்துப் பேசலாம். வானநூல் துறை, மருத்துவ நூல் துறை, இயற்கையழகுத் துறை, கணித நூல் துறை, ஜோதிட நூல் துறை, பருவ விளக்கத்துறை, உயிர் தத்துவத் துறை இன்னும் என்னென்னவோ துறைகளினின்று உதய சூரியனை வர்ணிக்கலாம். அத்தனைவித வர்ணனைகளுக்கும் ஞாயிறு இடங்கொடுக்கும். கீதாசாஸ்திரமும் எண்ணிறந்த சம்பிரதாயங்களை விளக்குதற்கு ஆதரவாகும். அத்தனை விதமான விளக்கங்களையும் அது தன்னகத்து அடக்கிக்கொண்டிருக்கிறது. அவைகளுக்கெல்லாம் மேலாக கீதைக்கென்றே அமைந்துள்ள வியாக்கியானம் ஒன்று உளது. ஒருவிதத்தில் கீதையைவிட அது சிறந்தது. ஸ்ரீ கிருஷ்ணபகவான் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையே அவருடைய கூற்றுக்கு ஒப்பற்ற விளக்கமாகிறது. அவதார புருஷர் ஒருவர் தமது ஜீவிதத்தின் மூலம் புகட்டுவது தான் முதன்மை பெறுகிறது. அவர் பகர்ந்தருள்வது அதற்கு அடுத்தபடியாக வருகிறது. அவதார புருஷருடைய பேச்சுக்கே அருளையும் பொருளையும் தருவது அந்த அவதார புருஷருடைய ஜீவிதம். இக்கோட்பாடு வாசுதேவரது வாழ்க்கையில் உச்ச நிலையைப் பெற்று விளங்குகிறது. மனத்தகத்திருந்து கச்மலத்தைக் களைந்து விடு என்று அவர் புகட்டினார். சூரியனிடத்து எப்படி இருள் இருக்க இடமில்லையோ அப்படி அச்யுதனிடத்துக் கீழ்மை குடிகொள்ள இடமில்லை. ஆற்றல் படைத்தவனாய் எழுந்திராய் என்று இயம்பினார் அவர். பின்பு, ஆற்றல்கள்  அனைத்துக்கும் அவரே இருப்பிடமாய் இலங்கினார். உயிர்களிடத்து அன்பு பூண்டு ஒழுகுக என்று அவர் உபதேசித்தார். தாமே அன்பின் வடிவினராய் நன்கு மிளிர்ந்திருந்தார். நலத்தை நிலைநாட்டும் வீரன் ஒருவனுக்கு உற்றார் என்றும் வேற்றார் என்றும் வேற்றுமையில்லையென்று அவர் எடுத்தோதினார். கோவிந்தனது பாங்கும் அங்ஙனமே இருந்தது. இயற்கை கர்மமே வடிவெடுத்தது. அதற்கு ஆதாரமாயிருக்கும் ஆத்மாவின்கண் கர்மமில்லை என்பது கண்ணன் போதனை. கண்ணனாக வடிவெடுத்திருந்த சரீரம் கர்மவீரனாக வினையாற்றியது. மஹாபாரதத்தில் கூடியிருந்த பாத்திரங்கள் எல்லாரும் ஒன்றுகூடிக் கண்ணன் செய்த கர்மத்தில் கால்பங்கு செய்யவில்லை. சரீரம் அவ்வளவு வேலை செய்துகொண்டிருந்ததற்கு இடையில் கிருஷ்ண பரமாத்மா என்றைக்கும் பரமாத்ம சொரூபமாகவே இருந்தார். மற்ற உயிர்கள் போன்று அவர் அழக்கிடையாது; ஏமாற்றம் அடையக்கிடையாது; வியப்படையக்கிடையாது; கவலைப்படக் கிடையாது; துயருறக் கிடையாது. யாண்டும் நிறைநிலையிலேயே இருந்தார். கண்ணனை அறிபவர் கீதையை அறிவார்கள். கண்ணனே கீதைக்குச் சிறந்த பாஷ்யம்.
22. பாஷ்யங்களின் பாகுபாடுகள்
பாஷ்யங்கள் பல இருப்பதால் அவைகளுள் முரண்பாடு உண்டாவது இயல்பு. மாறுபடுகின்ற கருத்துக்களையெல்லாம் மேலானவைகளாக அங்கீகரிப்பது எங்ஙனம் என்ற கேள்வி எழலாம். மாறுபாடுகளுக்கிடையில் ஒற்றுமை பல அமைந்தாகவேண்டும். பகவத்கீதையை ஒரு நிலைக்கண்ணாடி என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு பாஷியமும் அதில் தோன்றும் பிம்பம் போன்றதாகும். அவரவர் முகம் எப்படியோ அப்படியே பிம்பமும் தென்படுகிறது. கண்ணாடியில் தோன்றுவது என்பது அனைத்துக்கும் பொதுவானது. அங்ஙனம் ஒவ்வொரு கொள்கைக்கும் மூலக்கருத்து கீதையில் இருக்கவேண்டும். மூலக்கருத்து கீதையில் இல்லாவிட்டால் வியாக்யானம் வைதிகத்துக்கு ஒவ்வாததாய்விடும். வைதிகத்துக்கு ஒத்ததாய் இருந்துகொண்டே விரிவுரைகள் பலவாக வடிவெடுப்பதுதான் முறை. ஒருவர் கீதையை முற்றும் பக்திநூல் என்று பகரலாம். இன்னொருவர் அதை ஞானமார்க்கம் என்று நவிலலாம். மற்றொருவர் அதை யோசாஸ்திரம் என்றே எடுத்துக்காட்டலாம். இகலோகத்தைப் பற்றிய பேச்செல்லாம் வெறும் பெயரளவில் என்று ஒருவர் நிரூபிக்கலாம். பரத்தைப்பற்றிப் பேசவேண்டியது அவசியமில்லை; சொற்பதங் கடந்த பொருளைப் பற்றிப் பேச்சு எதற்காக? கீதை பகர்வதெல்லாம் பாரமார்த்திகத்தை அடிப்படையாகக்கொண்ட சீரிய சமுதாய வாழ்க்கையே என்று ஒருவர் எடுத்தோதலாம். அரசியல் தத்துவம் அதில் ஏராளமாய் இருக்கிறது என்று ஒருவர் பொருள்படுத்தலாம். அங்ஙனமே ராணுவ தத்துவம் அதில் பொதிந்து கிடக்கிறது என்று இன்னொருவர் இயம்பலாம். இப்படியெல்லாம் வியாக்யானம் செய்தவர்கள் சிறுபான்மையோர்.
பாஷ்யக்காரர்களில் பெரும்பான்மையோர் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்று மதங்களில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தவர்களாயிருந்து வருகின்றனர். அவர்களுடைய மனப்பான்மையும் அதற்கேற்றவாறு மாறியமைகிறது. கீதா தத்துவத்துக்கு அவர்கள் பொருள் தருவதும் அவரவர் மனப்பான்மைக்கு ஏற்றபடி மாறியமைந்து வருகிறது. இனி, அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லார்க்கும் அதில் ஒரே விதமான நம்பிக்கையிருக்கிறது என்று சொல்ல முடியாது. அவர்களது கொள்கையில் உட்பிரிவுகள் ஏராளமாயிருக்கின்றன. எது அத்வைதம் என்பதை அத்வைதிகளே விதவிதமாக விளக்குவார்கள். அதேபாங்கில்தான் விசிஷ்டாத்வைதமும் அமைந்துள்ளது. விசிஷ்டாத்வைதம் என்னும் எல்லைக்குள் இருப்பவர்களுள் கருத்துவேற்றுகளைக் காணலாம். மற்று துவைத மதத்திலும் உட்பிரிவுகளை ஏராளமாகக் காணலாம். அவரவர் கோட்பாட்டைப் பரப்புதற்கென்றே ஒவ்வொருவரும் பாஷ்யம் எழுத முன்வந்தார். அத்வைத சம்பிரதாயத்துக்குச் சிறந்த முன்மாதிரியாயிருப்பவர் ஸ்ரீசங்கராச்சாரியர் ஆவார். விசிஷ்டாத்வைதிகள் அனைவர்க்கும் பிரதிநிதியாயிருப்பவர் ஸ்ரீ ராமானுஜாச்சாரியர். துவைத மதவாதிகள் எல்லார்க்கும் முன்னணியில் இருப்பவர் ஸ்ரீ மத்வாச் சாரியர். பகவத்கீதைக்கு இம்மூவரும் பாஷ்யங்கள் இயற்றியிருக்கின்றனர். இம்மூவரும் தென்னிந்தியாவில் தோன்றியவர்கள் என்பதும் கருத்தில் வைக்கவேண்டிய விஷயமாகும். ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்ற மதத்தை அல்லது மதங்களைத்தாக்குவதையும் பாஷ்யங்களில் காணலாம். தத்துவ ஆராய்ச்சி என்ற முறையில் ஒரு கோட்பாட்டைத் தகர்த்தல் நியாயமே. ஆனால் அதில் வரம்பு கடந்து போவது யாருக்குமே பொருந்தாது. அச் செயலில் சில பாஷ்யக்காரர் வரம்பு கடந்தும் போயிருக்கின்றனர்.
23. வேதாந்தம்
பிரஸ்தானத்திரயம் புகட்டுகின்ற கோட்பாடுகளையெல்லாம் தொகுத்து வேதாந்தம் என்று சொல்லுவது முறை. வேதத்தினுடைய அந்தம் அல்லது முடிவு வேதாந்தம் என்பதாகிறது. இம்மை என்று சொல்லப்படும் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியும், மறுமை என்று சொல்லப்படும் சுவர்க்கம் முதலிய மறு உலக வாழ்க்கையைப் பற்றியும் பகர்வது வேதம். வேறு ஒரு விதத்தில் அதே கோட்பாட்டைப் பகர்வோமானால் இந்திரியங்கள் மூலம் நுகரப்பரடுகின்ற பிரபஞ்ச வாழ்க்கையைப்பற்றி பேசுவது வேதம். இந்திரியங்களுக்கும் மனதுக்கும் அப்பால் உள்ள பரத்தைப் பற்றிப் புகட்டுவது வேதாந்தம். இந்திரிய வாழ்க்கையைத் தியாகம் செய்தாலொழிய பரம் என்னும் பெருநிலை சித்திக்காது.
இந்தியாவிலும் புற நாடுகளிலும் தோன்றியுள்ள எல்லா மதங்களின் அடிப்படைத் தத்துவங்களை வேதாந்தத்தில் காணலாம். வேதாந்தத்தில் இல்லாத கோட்பாடு உலகில் எந்த மதத்திலுமே இல்லையென்று உறுதி கூறலாம். ஆக, மதங்களுக்கெல்லாம் தாய். மதமாயிருப்பது வேதாந்தம். மெய்ப்பொருளுக்குப் பல பெயர் இட்டு அழைப்பதை வேதாந்தம் ஆமோதிக்கிறது. பெயரையும் விளக்கத்தையும் முன்னிட்டுச் சமயங்கள் பெரிதும் சண்டையிட்டுக்கொள்கின்றன. அடிப்படையாயுள்ள கோட்பாட்டைக் காணுமாறு தூண்டுவது வேதாந்தம். தாகத்தைத் தணிப்பது ஜலமா, தண்ணீரா, பானியா, வெள்ளமா என்று வாதாடாதே. ஜலம், தண்ணீர், பானி, வெள்ளம் என்ற சொற்கள் குறிக்கும் பொருள் யாது என்று ஆராய்ந்து பார். பின்பு வேற்றுமையும் வீண் விவாதமும் ஒடுங்கும். மனிதன் அடையும் மேலாம் நிலையை ஐயம் திரிபு இன்றி விளக்குவது வேதாந்தம்.
இனி துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று மதங்களின் உட்கருத்தைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். நமக்குப் புலப்படுவது இவ்வுலகம் அல்லது ஜகத் என்பதாம். இதில வாழ்ந்திருக்கும் உயிர்களுக்கு ஜீவர்கள் என்று பெயர். ஜகத்தையும், ஜீவர்களையும் தாங்கியிருக்கும் பெரிய பொருளுக்குப் பரம் என்று பெயர். அது பேரறிவும் பேராற்றலும் படைத்துள்ளது. உலகனைத்தையும், உயிர்கள் யாவையும் அது யாண்டும் ஆண்டுவருகிறது. ஜகத்தில் கட்டுண்டு கிடக்கும் ஜீவர்கள் எண்ணிறந்த பிறவிகளை எடுக்கின்றனர். பிறவிகள் வாயிலாக அவைகள் மேலான நிலைக்குப் போவதும் உண்டு; கீழான நிலைக்கு இறங்குவதும் உண்டு. புண்ணியம் மேல்நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது; பாபம் கீழ்மையில் ஆழ்த்துகிறது. பரம் அல்லது ஈசுவரனைச் சார்ந்திருந்து ஜகத்தினின்று ஜீவன் விடுதலையடைவது முக்தி. எல்லா உயிர்களும் முக்தி யடையவேண்டும். இக்கோட்பாடு துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று மதங்களுக்கும் சம்மதம். இனி, மூன்று மதங்களின் தனியியல்புகளை ஆராய்வோம்.
துவைத மதத்தின்படி ஜகத், ஜீவன், பரம் ஆகிய மூன்றும் அனுதியானவைகள். அவைகளுக்கு முடிவும் இல்லை, துவக்கமும் இல்லை, பரம்பொருள் ஜகத்தையும் ஜீவர்களையும் ஆளுகின்றார். ஆனால் ஜகத்தும் ஜீவனும் யாண்டும் பரத்துக்கு வேறு ஆனவைகள். ஜீவனானது அவருடைய கருணையால் ஜகத்திலிருந்து விடுதலையடைந்து அவருக்குத் தொண்டனாய் ஆட்படுவது முக்தி. முக்தியிலும் பரம் வேறு, ஜீவன் வேறு.
விசிஷ்டாத்வைதம் என்பது ஒரு விசேஷத்தோடு கூடிய அத்வைதம். கடவுள் ஒருவர்தான் இருக்கிறார். அவருக்கு உடலாயிருப்பது ஜகத். அந்த உடலில் கணக்கற்ற உயிர்த் தத்துவங்களாயிருப்பது ஜீவன். சூரியனிடத்திருந்து கிரணங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை தோன்றி வருவதுபோன்று ஜீவர்கள் பரமாத்மாவின் கிரணங்கள் ஆகின்றனர். பரமாத்மாவைப் பூரணனென்றும் அதில் தன்னை ஓர் அம்சம் என்றும் ஜீவன் சுவானு பவத்தில் அறிந்துகொள்ளுதல் முக்தி. அதற்கு ஜீவன் தன்னைப் பரமாத்மாவிடத்துப் பிரபத்தி பண்ணவேண்டும். பிரபத்தி என்பதும், சரணாகதி என்பதும், அடைக்கலம் என்பதும் ஒரே கருத்தைக் குறிக்கும் பல சொற்களாம். அவர் அருளால் ஜீவன் தன்னை அவருடைய ஓர் அவயவம் என்று அறிந்திருப்பது முக்தி.
அத்வைதம் என்பது இரண்டற்றது எனப் பொருள்படுகிறது. ஜகத் ஜீவன் என்று சொல்லப்படுபவை வேறு, பரம் வேறு அல்ல; உள்ளது ஒரே பொருள். அது அகண்ட சத் சித் ஆனந்தம். தன்னை ஜகத் ஆகவும் ஜீவனாகவும் காட்டிக்கொள்ளுகிற வல்லமை அதனிடத்து உண்டு. அந்த வல்லமைக்கு அதனுடைய மாயா சக்தி என்று பெயர். பிரம்மமும் பிரமத்தினுடைய சக்தியும் இரண்டல்ல. அத்வைதம் என்பதற்கு இரண்டல்ல என்பது பொருள். ஜீவனிடத்துள்ள அக்ஞானத்தால் ஜகத் என்றும் ஜீவன் என்றும் பேதம் அவனுக்குத் தோன்றுகிறது. பிரம்ம ஞானத்தில் பிரம்மம் ஒன்றே யாண்டும் உளது. நதி கடலில் லயமாவது போன்று ஞானமடைந்த ஜீவன் பரத்தில் கலக்கிறான். இது அத்வைதம் புகட்டும் முக்தி. அதை இன்னும் நன்றாகத் தெளிவுபடுத்துமிடத்து, கடலில் தோன்றி, கடலில் நிலைபெற்றிருக்கும் அலையானது, தனது நாம ரூபத்தை அழித்துவிடும்பொழுது பழையபடி கடலாகிவிடுகிறது. அப்படி முக்தி நிலையில் ஜீவன் பரத்தில் ஒன்றுபடுகிறான்.
சாஸ்திரங்களில் துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளுக்கும் இடம் உண்டு. மனிதனுடைய வாழ்க்கையிலேயே இம் மூன்று நிலைகளும் பொருந்திய ஸ்நானங்களைப் பெறுகின்றன. மனிதன் விழித்திருந்து வியவகாரம் பண்ணுகிறான். அது துவைத நிலை. ஆங்குத் தான் வேறு; மற்ற உயிர்கள் வேறு; உலகம் வேறு. பிறகு சொப்பனம் காண்கிறான். சொப்பனத்தில் தென்படும் மனிதர்களும் உலகமும் அவனுடைய மனத்துக்கு அன்னியமானவைகளல்ல. பேதம் போன்று தென்பட்டுக்கொண்டிருக்கும் அபேதநிலை அது. விசிஷ்டாத்வைத நிலையை இது நன்கு விளக்குகிறது. பிறகு சொப்பனமில்லாத அயர்ந்த உறக்கம் வருகிறது. அதில் பிரக்ஞை ஒன்றைத் தவிர பாக்கியெல்லாம் போய்விடுகின்றன. எல்லா அவஸ்தைகளுக்கும் பொதுவாகிய பிரக்ஞை யொன்றே அங்கு மிச்சம். அது அத்வைத நிலையாகும். இந்த மூன்று நிலைகளும் அக்ஞானத்தில் இருப்பது போன்று ஞானத்திலும் வந்து அமைக்கூடியவைகள். இவைகளில் எது பெரியது, எது சிறியது, எது சாதனம், எது சாத்தியம் என்று மதவாதிகள் விரிவாகவும் விதவிதமாகவும் பேசி வருகிறார்கள்.
24. கிருஷ்ணனது பான்மை
சுருதி என்று சொல்லப்படும் வேதாந்த சாஸ்திரம் கிருஷ்ணனை விளக்க முயலுகிறது. கிருஷ்ணன் என்பதும் பரமாத்மா என்பதும் ஒன்றே. ஒரு தேகத்துக்குள் கட்டுப்பட்டவன்போன்று அவன் தென்படுகிறான். உடைக்குள் கட்டுப்பட்டதுபோன்று நமது உடல் தென்படலாம். ஆனால் உடையிருப்பதாலும் போவதாலும் உடலுக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. கண்ணன் காயத்தோடு அங்ஙனம் சம்பந்தப்பட்டவன் போன்று இருந்தான். லோக ஹிதத்தின் பொருட்டு உடல் என்னும் அங்கியை அவன் விளையாட்டுக்காக அணிந்தவன் ஆகிறான். அவன் துவைதியுமல்லன், விசிஷ்டாத்வைதியுமல்லன், அத்வைதியுமல்லன். இம் மூன்று சம்பிரதாயங்களும் அவனுக்குச் சேவை புரிகின்றன. அவனைக் காணவும், உணரவும், இணக்கம் கொள்ளவும் அம் மூன்று மதங்களும் தம்தம் போக்கில் முயலுகின்றன. மூன்று மதங்களையும் அவன் தன்னகத்து அடக்கியிருக்கின்றான்; பிறகு அவைகளுக்கு அப்பாலுமிருக்கிறான்.
நீ அத்வைதியாயிரு, விசிஷ்டாத்வைதியாயிரு, துவைதியாயிரு என்றெல்லாம் கீதை புகட்டுவதில்லை. ஆத்மபோதம் அடையப்பெற்றவன் ஆவாயாக. உனது பேரியல்பில் நிலைபெற்றிரு. பேராற்றல் படைத்துள்ள நீ கரவாது உன் கடமையைச் செய். வெறும் புன்மையனாகப் பிழைத்திருக்க நீ இந்தப் பூலோகத்துக்கு வந்துள்ளவனல்லன். உலகுக்கும் உனக்கும் தொடர்வுண்டு. அதை நிலைநாட்டுவது யோகம். தூக்கி வினைசெய்து அத்தொடர்வை நிரூபிப்பாயாக. ஆத்ம சொரூபத்தில் அனைத்தையும் அடக்கிக்கொள்வாயாக. மலரானது மணம் வீசுவது போன்று உன் அன்புக்கு அனைத்தும் இலக்காகட்டும். ஒளிவீடும் ஞாயிறு போன்று உன் அறிவு ஓங்கியிருப்பதாகுக. பிறகு அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மதங்கள் தங்களுக்குரிய ஸ்தானங்களை உன் ஆத்ம சொரூபத்தில் பெறுகின்றன. இங்ஙனம் யோகேசுவரன் உயிர்களை யோகிகள் ஆகும்படி தூண்டுகிறான்.
ஓரளவில் கண்ணன் காட்டிய வழியையே ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பின்பற்றுகிறார். அவர் சமயங்களின் உயர்வு தாழ்வைப் பற்றிக் கவலைப்படவில்லை. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய சம்பிர தாயங்களைப் பற்றியும் அவர் நினைக்கவில்லை. வாழ்வு எவ்வளவு சீரிய வாழ்வாகவேண்டும் என்பதிலேயே அவர் கருத்தைச் செலுத்தினார். அருள் தாகம் பிடித்து அவர் அலைந்து திரிந்தார். உடலைக்கொண்டு அவர் உழைத்ததெல்லாம் தெய்வ வழிபாட்டிற்கென்றே; உள்ளத்தில் அவருக்கு எழுந்த உணர்ச்சி யெல்லாம் இறைவனைப்பற்றியதே. அவருடைய தூய தெய்வீக அன்புக்கு இலக்காகாதது ஒன்றுமில்லை. தெய்வத்தைத் தவிர வேறு எந்த உறவையோ, இணக்கத்தையோ அவர் அறிந்திலார். தெய்வ அருள் ஒன்றே அவர் பெற்ற பேறு. இங்ஙனம் கீதையின் கோட்பாடே வடிவெடுத்தவராய் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் வாழ்ந்துவந்தார். ஆனால் அவர் கீதையையோ வேறு எந்த சாஸ்திரத்தையோ கற்றது கிடையாது. புத்தகப் படிப்புக்கும் அவருக்கும் வெகுதூரம். பெருவாழ்வினின்று அவர் பெற்ற அனுபவங்களையே அவர் மற்றவர்களுக்குப் பகர்ந்தருளினார். அவருடைய உபதேசங்கள் எங்கெல்லாம் கீதைக்கு ஒத்திருக்கின்றனவோ ஆங்கெல்லாம் அவைகளை நமக்கு எட்டியவளவு கீதையுடன் இணைத்து அமைத்துள்ளோம். அத் துறையில் நாம் செய்துள்ள முயற்சி மிகக் குறைந்தது. அதை இன்னும் விரித்தும் திருத்தியும் அமைக்கலாம் என்பதை வினய பூர்வமான மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆக, எந்த சமயத்தையோ சம்பிரதாயத்தையோ நிலைநாட்டுதற்கு என்று அல்லாது, யோக சாஸ்திரம் என்கிற முறையில் ஸ்ரீமத் பகவத் கீதையை விளக்க ஈண்டு முயன்றுள்ளோம்.
25. சொரூப லக்ஷணம்
பரம்பொருள் மனம் மொழிக்கு எட்டாதது. அது பிரபஞ்ச மயமாக வடிவெடுக்குமிடத்து அதை ஸத் சித் ஆனந்தம் என்று சொல்லலாம். சொல்லற்கரிய பொருளை ஒரு சொல்லால் விளக்குமிடத்து ஸச்சிதானந்தம் என்பதற்கு நிகரான சொல் வேறு ஒன்றுமில்லை. ஸத் என்னும் சொல் உள்ளது எனப் பொருள்படுகிறது. ஸத்தியம் அல்லது உண்மை அதனிடத்திருந்து வருகிறது. காலத்தால், இடத்தால், செயலால் மாறுபடாதிருப்பது ஸத். காலதேச வர்த்தமானதைக் கடந்திருப்பது பரம்பொருள். அதே ஸத் பொருள் காலத்திலும், இடத்திலும், செயலிலும் தன்னை விளக்கிக் கொண்டிருக்கும்போது எண்ணிறந்த ஜீவகோடிகளாகக் காட்சி கொடுக்கிறது. ஜீவாத்மா தோற்றத்துக்கு வந்துள்ள நிலைமையில் கர்மமும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். சூரியனிடத்து வெப்பமும் வெளிச்சமும் இருப்பது போன்று ஜீவாத்மாவிடம் கர்மமுண்டு. ஆகவே, பகவத்கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் ஜீவதத்துவத்தையும் கர்மயோக தத்துவத்தையும் சேர்த்தே புகட்டிக்கொண்டு போகின்றன. ஆறாவது அத்தியாயத்தில் உள்ள தியானம் அல்லது எண்ணம் சூக்ஷ்மமான கர்மமாகிறது.
இனி, கர்மத்துக்கு அடிப்படையாயிருப்பது சங்கற்பம் அல்லது தீர்மானம். ஆங்கிலத்தில் அதை (வில்) என்று அழைக்கிறோம். கிரியா சக்தி என்பது பரிபாஷையில் அதற்கு அமைந்துள்ள பெயராகும். எல்லாக் கர்மங்களும் வில் அல்லது சங்கற்பத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நடமாட, உண்ண, உறங்க, எழுந்திருக்க மனிதன் முதலில் சங்கற்பிக்கிறான். பிறகு அங்ஙனம் கர்மம் செய்கிறான். சிருஷ்டி முழுதும் சங்கற்பத்திலிருந்து வந்தது. நேராகவோ மறைமுகமாகவோ எல்லா சங்கற்பங்களும் முடிவில் ஒரு சங்கற்பமாய் வடிவெடுக்கின்றது. (வில் டு லைவ்) வாழ விரும்புதல்தான் முடிந்த சங்கற்பம். ஜீவர்கள் எக்கர்மத்தைச் செய்தாலும் அதன் மூலம் வாழ்ந்து நிலைத்திருத்தல் என்பதை நிலைநாட்ட முயலுகின்றனர். அதாவது தங்களது யதார்த்த சொரூபமாகிய ஸத் சொரூபத்தை நிலைநாட்டவே ஜீவகோடிகள் கர்மம் புரிகின்றனர். (காட் இஸ் லைஃப்) என்பது கோட்பாடு ஆத்மாவானது உயிருக்கு உயிர் என்பது அதன் கருத்து. உயிர்களின் நடைமுறை அனைத்தையும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். ஆக, கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் ஸத்சொரூபத்தை விளக்குதற்கான சாஸ்திரமாகும்.
யந்திரங்கள் கர்மம் செய்கின்றன; உயிர்கள் கர்மம் செய்கின்றன-இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசம் யாது? யந்திரங்களிடத்து உணர்ச்சியில்லை; உயிர்களிடத்து உணர்ச்சியுண்டு. உணர்ச்சியும் உயிர்வாழ்க்கையும் இணைபிரியாதவைகள். உணர்ச்சி விதவிதமான வடிவெடுக்கிறது. விருப்பு வெறுப்பு, நட்பு பகை, ஆசை சினம், பொறை பொறாமை, பாராட்டுதல் புறக்கணித்தல் ஆகிய இவையாவும் உணர்ச்சியின் வெவ்வேறு தோற்றங்களாம். விருப்பு, நட்பு, ஆசை, பொறை போன்றவை உடன்பாடான உணர்ச்சிகள். வெறுப்பு, பகை, சினம், பொறாமை போன்றவை எதிர்மறையான உணர்ச்சிகள். உடன்பாட்டு உணர்ச்சிகள் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன. எதிர்மறை உணர்ச்சிகள் வளர்ச்சியைத் தடை செய்கின்றன. இவ்வுணர்ச்சிகள் ஆங்கிலத்தில் (எமோசன்) என்னும் பெயர் பெறுகின்றன. உணர்ச்சியைப் பயன்படுத்துமளவு மனிதன் மேலோன் ஆகிறான். 
பகவத்கீதையில் ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் வரையில் கடவுள் சொரூபத்தை விளக்குவதோடு பக்தியையும் அப்பகுதி வளர்க்கிறது. தூய உணர்ச்சியின் திரள் பக்தி என்னும் பெயர் பெறுகிறது. கேடுடைய உணர்ச்சிகளெல்லாம் பக்தியில் நலம் வாய்ந்த உணர்ச்சிகளாக மாறுகின்றன. கடவுளுடைய மகிமை விளங்குமளவு அவனிடத்து அன்பு அல்லது பக்தி ஊற்றெடுக்கிறது. ஊசியானது காந்தத்தினிடம் கவரப்படுவது போன்று அன்புடைய உயிர் தெய்வத்தினிடம் கவரப்படுகிறது. (காட் இஸ் லவ்) என்பது கோட்பாடு. அன்பே கடவுள் என்பது அதன் கருத்து. அன்பு என்னும் கவர்ச்சி ஓங்குதற்கு ஏற்ப இனிமை மிளிர்கிறது. அது ஆனந்தமாகப் பரிணமிக்கிறது. ஆனந்தம் வளர வளர அது உலப்பில்லா ஆனந்தமாகிறது. ஆனந்தமே பிரம்மம். பரமாத்மாவின் சொரூபம் ஆனந்தம். இந்த ஆனந்தத்தை நாடியே உயிர்கள் வாழ்க்கையில் பற்றுவைக்கின்றன. ஆனந்தம் இல்லாவிட்டால் உயிர்கள் கணப்பொழுதும் வாழ்ந்திருக்கமாட்டா. ஆக, ஆனந்தம் என்னும் ஆத்மசொரூபத்தை வளர்ப்பது கீதையின் இரண்டாவது ஷட்கத்தின் நோக்கமாகும்.
ஜடப்பொருள் ஒன்று இருக்கிறது. சேதனப்பொருள் ஒன்று இருக்கிறது. இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்னவென்று அறியவேண்டும். இருக்கிறேன் என்ற அறிவு சேதனப்பொருளுக்கு உண்டு; அந்த அறிவு ஜடத்துக்கு இல்லை. உயிர்களிடத்து உணர்வு இருப்பது போன்று அறிவு இருக்கிறது. சூரியன் இருப்பதை சூரியப்பிரகாசம் காட்டுகிறது. வேறு வெளிச்சத்தின்துணை கொண்டு சூரியனை நாம் அறிவதில்லை. ஜீவன் உயிரோடிருக்கிறான் என்பதற்கு அவனுடைய அறிவே பிரமாணம். ஒவ்வொரு உயிரும் தன்னைத்தான் அறிந்து கொண்டிருக்கிறது. இங்ஙனம் அறியும் தன்மையை ஆங்கிலத்தில் (காக்னிஷன்) என்கிறோம். அறியும் தன்மையில் ஏற்றத் தாழ்வு உண்டு. பேருயிர்கள் நன்கு அறிகின்றன. சிற்றுயிர்கள் மங்கிய அறிவு படைத்திருக்கின்றன. ஆயினும் அறிவு இல்லாத உயிர் இல்லை. அறிவை வளர்ப்பது வாழ்வின் நோக்கம்.
உணர்வுக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்வு உண்டு. இரும்பை உருக்கினால் அது இளகுகிறது; அத்துடன் ஒளிர்கிறது. இளகும் தன்மை உணர்வுக்கு ஒப்பானது; ஒளிவிடும் தன்மை அறிவுக்கு ஒப்பானது. இந்தச் சான்று ஜடப்பொருளிடத்திருந்து வருகிறது. சேதனப் பொருளாகிய ஜீவாத்மனிடத்து அன்பும் அறிவும் ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன. இருநண்பர் ஒருவரையொருவர் நேசிக்குமளவு ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொள்கின்றனர்; ஒருவரையொருவர் அறிந்து கொள்ளுமளவு நேசிக்கின்றனர். கடவுள்பால் அன்பு கொள்ளுமளவு பக்தன் கடவுளை அறிகிறான். அவரை அறியுமளவு அவனுக்குப் பக்தி அதிகரிக்கிறது. இக்கோட்பாட்டை வாழ்க்கையில் எல்லாப் படித்தரங்களிலும் காணலாம்.
அறிவு, ஞானம், சேதனம், பிரக்ஞை இவையாவும் ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள். ஞானத்தை வளர்ப்பதற்கான வழிகளை பகவத்கீதையில் பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாவது அத்தியாயம் வரையில் காணலாம். எரியும் விளக்கு ஒன்று அதிகம் சுடர்விடுமானால் அது தன்னையும் தன்னைச் சுற்றிலுமுள்ள பொருள்களையும் நன்றாக விளக்கிக்காட்டும். அந்த விளக்கைக் காத்துவரும் கண்ணாடிக் கூண்டு ஒன்று இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அழுக்குப்படிந்த கண்ணாடியில் வெளிச்சம் அதிகமாக வெளியே வராது. கண்ணாடியைத் துடைத்துத் தூயதாக்குமளவு வெளிச்சம் தடைபடாது ஒளிரும். அந்தக்கரண சுத்தி பண்ணுவதற்கான வழிகள் ஞான வாழ்க்கையில் காட்டப்பட்டிருக்கின்றன. ஜடம்போன்று தென்படும் ஜீவனை ஞானநெறி சித்சொரூபமாகத் திருத்தியமைக்கிறது. (காட் ஈஸ் லைட்) என்பது கோட்பாடு. ஆத்மா ஜோதிர் மயம் என்பது அதன் பொருள். இங்ஙனம் ஸத் சித் ஆனந்தமாகிய பர சொரூபத்தின்கண் ஜீவனை எடுத்துச் செல்லுதல் பகவத்கீதையின் திட்டமாகும்.
26. பொது நூல்
சாஸ்திரம் ஒன்று எல்லார்க்கும் பொதுவாவதற்கு விதிகள் சில உள. அத்தகைய நூல் எந்த மொழியில் அமைந்திருக்கிறது அல்லது எத்தனை மொழிகளில் இயற்றப்பெற்றிருக்கிறது என்பது முக்கியமானதன்று. எத்தனை பிரதிகள் அச்சிடப்பெற்று எத்தனைபேர் கைவசம் அது சேர்ந்துள்ளது என்பதும் முக்கியமல்ல. எத்தனை ஆயிரம் பேர் அல்லது லக்ஷம் பேர் அதை நாள் தோறும் ஓதுகிறார்கள் என்பதும் அந்நூலுக்கு மகத்துவம் கொடுத்துவிடாது. மொழியை முன்னிட்டு மனிதன் மேலோன் ஆகான். பின்பு ஒழுக்கமே மேன்மைக்கு முதற்காரணம். பெரும்பான்மையோர் கையாளுதலைப் பொறுத்தும் ஒரு நூலுக்குச் சிறப்பு வந்துவிடாது. சமாசாரப் பத்திரிகையைப் பெரும்பாலோர் நாள்தோறும் பார்க்கிறார்கள். ஆனால் அதன் மதிப்பு அன்றன்று அகன்று போகிறது. முக்தி நெறியை ஆராய்பவர் சிலரே. அதன்படி ஒழுகுபவர் அதிலும் சிலர். இனி, முக்தியை அடைவது அரிதிலும் அரிது. ஆயினும் முக்தி மார்க்கத்துக்கு என்றைக்கும் எல்லார்க்கிடையிலும் மதிப்பு உண்டு. ஏனென்றால் ஒரு காலம் அல்லாவிட்டால் வேறு ஒரு காலத்தில் எல்லாரும் அவ்வழிக்கு வந்தாகவேண்டும்.
கீதாசாஸ்திரத்தை ஸர்வகத சாஸ்திரம் (யுனிவர்செல் ஸ்கிரிப்சர்) என்றும், பொதுநூல் என்றும் பகருதற்குத் தக்க காரணங்கள் உண்டு. முக்தி மார்க்கத்தைப் புகட்டும் சாஸ்திரங்களே யாவற்றிலும் மேலானவைகள். முக்தி அடைதற்கு நிகரான பேறு மனிதனுக்கு இல்லை. இக்கோட்பாடு யாவர்க்கும் ஒப்ப முடிந்தது. கீதா சாஸ்திரம் முக்தியைப் புகட்டுகிறது. வாழ்க்கையின் குறிக்கோள் முக்தி என்பதை அது நன்கு தெளிவுறுத்துகிறது.
வாழ்க்கையின் குறி முக்தி. அதற்கு உற்ற நெறி யோகம். கர்மம், பக்தி, ஞானம் ஆகிய மூன்று யோகங்களும் முறையே கீதையில் இடம் பெறுகின்றன. இரண்டு சிறகுகளும் ஒரு வாலும் இருந்தால் பறவை பறக்கும். ஜீவன் பரத்தை அடைதற்கு ஞானமும் பக்தியும் சிறகுகளாக அமைகின்றன. கர்மயோகம் சமப்படுத்தும் வால் ஆகிறது. எல்லாச் சாதனங்களும் இம்மூன்றினுள் அடங்கியிருக்கின்றன. பரத்தை எண்ணியெண்ணி இகத்தை மறந்துவிடும்படி புகட்டும் நூல்கள் உண்டு. இகத்தில் கருத்து அனைத்தையும் வைத்து மேலாம் நிலையாகிய பரத்தைப் புறக்கணிக்கும்படி போதிக்கும் புல்லிய நூல்களும் உண்டு. ஆனால் பகவத்கீதையோ இகம் பரம் இரண்டுக்கும் உரிய இடத்தை முறையாக வகுத்து வழங்குகிறது. அவைகளுள் ஒன்று மற்றொருன்றுக்கு முரண்பட்டதன்று என்பது கீதையின் கோட்பாடாகும். இக வாழ்க்கையை நன்கு நடாத்துபவன் பரத்துக்கு உரியவன் ஆகிறான். பரத்தைச் சார்ந்திருக்க வல்லவன் இகத்துக்கு நன்கு பயன்படுகிறான் என்பது கீதையின் போதனையாகிறது.
கர்மத்தை இரண்டு பாங்குடையவைகளாகப் பிரித்து வைப்பவர் உளர். ஒன்றைப் பாரமார்த்திகத்துக்கு உரியது என்றும் மற்றதை இகலோகத்துக்குரியதென்றும் அன்னவர் கருதுகின்றனர். அவ்விரண்டு பிரிவுகளுக்கும் உரிய பதங்களை முறையே வைதிக கர்மம், லௌகிக கர்மம்; (சேக்ரட் அண்டு செக்குலர் ஆக்டிவிடீஸ்) ஆத்ம சாதனம், உலக வியவகாரம்; அருள் நாட்டம், பொருள் இன்பநாட்டம் இப்படியெல்லாம் பகர்கின்றனர். ஆனால் பகவத் கீதையானது வாழ்க்கையை இரண்டாகப் பகுத்து வைக்கிறதில்லை. ஆகையால் மனிதன் புரியும் கர்மத்தை மேலானது என்றும் கீழானது என்றும் அது பாகுபடுத்துவதில்லை. நல்வாழ்க்கை வாழத் தெரிந்துகொண்டவன் ஒருவன் எல்லாக் கர்மங்களையும் ஆத்ம சாதனத்துக்குரியவைகளாக்கலாம். நல்வாழ்க்கை வாழத் தெரியாதவன் ஒருவன் கடவுள் வழிபாடு போன்ற மேலாம் கர்மத்தைக் கெடுத்து பந்தபாசத்துக்குரிய தாக்கிவிடலாம். வினைகளை யெல்லாம் மேலாம் வினைகளாக மாற்றக் கற்றுக்கொடுப்பது பகவத்கீதை. இக்கோட்பாடு இந்த நூலின் தனிச்சிறப்பு ஆகும்.
மன அமைப்பில் செயல், உணர்வு, அறிவு என்று மூன்று பகுதிகள் உண்டு. நவீன மனோதத்துவ ஆராய்ச்சியாளர் அவைகளை முறையே (வில், எமோசன், காக்னிஷன்) என்று பகர்வர். அன்னை பராசக்தியே மாந்தர் உள்ளத்தில் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஸ்வரூபிணியாக எழுந்தருளியுள்ளாள் என்பது கோட்பாடு. மனதில் இந்த மூன்றுவித மாண்புகளும் ஒருங்கே மிளிருதல் வேண்டும். அப்பொழுதுதான் பண்பாடு பூர்த்தியாகிறது. மனிதன் திண்ணியன் ஆவதற்கும் அதுவே உற்ற உபாயம். நல்ல உள்ளத்துக்குரிய மூன்று மாண்புகளையும் கீதா சாஸ்திரம் முறையே இயம்புவதால் அது எல்லார்க்கும் பொது நூலாகும்.
மனிதனை நிறைமனிதன் ஆக்குவது கீதையின் கோட்பாடாகும். உறுதியான உடலும் உயர்ந்த உள்ளமும் தெளிந்த அறிவும் நிறைநிலைக்கு இன்றியமையாத உறுப்புகளாகும். பேராற்றல் படைத்திருப்பது முதல் கோட்பாடு. ஒழுக்கம் ஆற்றலில் அடங்கி விடுகிறது. நலத்தைச் செய்யும் செய்விக்கவும் ஆற்றல் உடையவனுக்கே சாலும். அடுத்த கோட்பாடாவது அன்பு. உயிர்கள் அனைத்துக்கும் அது பொதுவானது. அன்பைத் தூய அன்பாக மாற்றியமைப்பது பக்தியோகத்தின் நோக்கமாகும். தூய அன்பினின்று இனிமை யாவும் தோன்றும். எல்லாவற்றையும் ஒன்றுபடுத்துவது தூய அன்பு. உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தூய அன்பு படைத்திருப்பவனுக்குச் சொந்தமாய்விடுகின்றன. இனி, அறிவு மூன்றாவது கோட்பாடு ஆகும். பட்டப்பகலை உண்டு பண்ணும் ஞாயிறு போன்றது அறிவு; அனைத்தையும் அது விளக்குகிறது. மாண்புகளையெல்லாம் அது எடுத்துக்காட்டவல்லது. உயிர்களைச் செயலில் ஏவுவதும் அறிவு. தொடுத்த கர்மத்தைக் குற்றம் குறையின்றிச் செய்து முடிப்பதற்கு வழிகாட்டுவதும் அறிவு. அதைப் பாங்குடன் வளர்க்க மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். ஆக, ஆற்றலையும் அன்பையும் அறிவையும் ஒருங்கே அடையப்பெற்றிருப்பவனுக்கு மேலும் பெறவேண்டிய பேறு ஒன்றுமில்லை. அவன் நிறைமனிதன் ஆகிறான். அவனுக்கே நிறை நிலை சொந்தம். நிறைநிலையெய்தி நிறைமனிதன் ஆக விரும்புபவர் அனைவர்க்கும் ஸ்ரீமத் பகவத்கீதை பொது நூலாகும். சமயங்கள் அனைத்துக்கும் அதைப் பொது நூலாக வைத்துக்கொள்வதும் சாத்தியமாகிறது.
கீதையின் போதனை
போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை மாற்றுவதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்கள் மனிதர்கள் அனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகள் என இந்து சமய நம்பிக்கையுடையவர்களுக்குச் சொல்லப்படுகிறது.
* பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
* பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
* ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
* அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
* யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.
கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை எளிதில் எடுத்துக் கூறுகின்ற இன்னும் பல கீதைகள் உள்ளன. அவை:
அவதூத கீதை, உத்தர கீதை, பிக்ஷú கீதை, அஷ்டாவக்ர கீதை, ராம கீதை, சுருதி கீதை, குரு கீதை, சிவகீதை.



தியான சுலோகங்கள்!





தியான சுலோகங்கள்!

1. ஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதா
நாராயணேந ஸ்வயம் 
வ்யாஸேந க்ரதிதாம் புராணமுநிநா
மத்யே மஹாபாரதம்
அத்வைதாம்ருதவர்ஷிணீம் பகவதீ
மஷ்டாதஸா த்யாயிநீமம்
த்வாமநுஸந்ததாமி பகவத் கீதே
பவத்வேஷிணீம்
ஓம்-ஓம், அம்ப-தாயே, பகவத்கீதே-பகவத்கீதே, ஸ்வயம்-சாக்ஷõத், பகவதா-பகவானான, நாராயணேன- நாராயணனால், பார்த்தாய- பார்த்தனுக்கு, ப்ரதிபோதிதாம்- உபதேசிக்கப்பெற்றவள், புராண முனினா வ்யாஸேன-புராண முனிவரான வியாசரால், மத்யே மஹாபாரதம்-மஹாபாரதத்தின்கண், க்ரதிதாம்-அமைக்கப்பெற்றவள், அத்வைத அம்ருத வர்ஷிணீம்-அத்வைத அமிர்தத்தை வர்ஷிப்பவள், பவத்வேஷிணீம்-பிறவிப்பிணியைப் போக்குபவள், அஷ்டாதச அத்யாயினீம்-பதினெட்டு அத்தியாயங்களையுடையவள், பகவதீம்-பகவதி த்வாம், உன்னை அனுஸந்ததாமி-தியானிக்கிறேன்.
பொருள் : ஓம். தாயே, பகவத்கீதே ,சாக்ஷõத் பகவான் நாராயணனால் பார்த்தனுக்கு உபதேசிக்கப்பெற்றவள், புராண முனியாகிய வியாசரால் மஹாபாரதத்தின்கண் அமைக்கப்பெற்றவள். அத்வைத அமிர்தத்தை வர்ஷிப்பவள், பிறவிப் பிணியைப் போக்குபவள், பதினெட்டு அத்தியாயங்களை யுடையவள் ஆகிய பகவதீ, உன்னைத் தியானிக்கிறேன்.
2. நமோ ஸ்துதே வ்யாஸ விஸாலபுத்தே
புல்லாரவிந்தாயத பத்ரநேத்ர
யேந த்வயா பாரததைலபூர்ண​:
ப்ரஜ்வாலிதோ ஞாநமய​: ப்ரதீப​:
விசாலபுத்தே-விசால புத்தியுடையவரே, புல்ல அரவிந்த ஆயத பத்ர நேத்ர-நன்கு அலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்களையுடையவரே, வ்யாஸ-வியாசரே, யேன த்வயா-உம்மால், பாரத தைல பூர்ண-மஹாபாரதம் என்னும் எண்ணெய் நிறைந்த, ஞானமய ப்ரதீப-ஞானதீபம், ப்ரஜ்வாலித-ஏற்றிவைக்கப்பட்டது, தே-உமக்கு, நம-நமஸ்காரம், அஸ்து-இருக்கட்டும்.
பொருள் : விசால புத்தியுடையவரும், நன்கு அலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்களையுடையவரும் ஆகிய வியாசரே, மகாபாரதம் என்னும் எண்ணெய் நிறைந்த ஞான தீபத்தை ஏற்றிவைத்த உமக்கு நமஸ்காரம்.
3. ப்ரபந்நபாரிஜாதாய தோத்ரவேத்ரைகபாணயே
ஞாநமுத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருததுஹே நம​:
ப்ரபன்ன பாரிஜாதாய-சரணடைந்தவர்களுக்குக் கற்பக விருக்ஷம் போன்றவனுக்கு, தோத்ர வேத்ர ஏக பாணயே-பசுவை ஓட்டுதற்கு ஒரு கையில் பிரம்பைப் பிடித்தவனுக்கு, கீதா அம்ருத துஹே-கீதை என்னும் அமிர்தத்தைக் கறந்தவனுக்கு, ஞான முத்ராய-சின்முத்திரையுடையவனுக்கு, க்ருஷ்ணாய-கிருஷ்ணனுக்கு, நம-நமஸ்காரம்.
பொருள் : சரணடைந்தவர்களுக்குக் கற்பக விருக்ஷம் போன்றவனும், பசுவை ஓட்டுதற்கு ஒரு கையில் பிரம்பைப் பிடித்திருப்பவனும், கீதை என்னும் அமிர்தத்தைக் கறந்தவனும், சின்முத்திரை தாங்கியிருப்பவனும் ஆகிய கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.
4. ஸர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபாலநந்தன:
பார்த்தோ வத்ஸ: ஸுதீர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்
ஸர்வ உபநிஷத-எல்லா உபநிஷதங்களும், காவ-பசுக்கள், கோபால நந்தன-கோபாலனுடைய மகன்(கிருஷ்ணன்), தோக்தா-பால் கறப்பவன், பார்த்த-பார்த்தன், வத்ஸ-கன்று, ஸுதீ-பேரறிவாளர், போக்தா-அருந்துபவர்கள், கீதா அம்ருதம்-கீதை என்னும் அமிர்தம், மஹத்-மேலான, துக்தம்-பால்.
பொருள் : உபநிஷதங்கள் யாவும் பசுக்கள்; கிருஷ்ணன் பால் கறப்பவன்; பார்த்தன் கன்று; அருந்துபவர் பேரறிஞர்; கீதை என்னும் அமிர்தம் ஒப்பற்ற பால் ஆகிறது.
5. வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூரமர்தநம்
தேவகீபரமாநந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
வஸுதேவ ஸுதம்-வசுதேவருடைய மகனை, கம்ஸ சாணூர மர்தனம்-கம்ஸனையும் சாணூரனையும் கொன்றவனை, தேவகீ பரம ஆனந்தம்-(தாய்) தேவகிக்குப் பரமானந்தத்தைக் கொடுப்பவனை, ஜகத் குரும்-ஜகத் குருவை, தேவம் க்ருஷ்ணம்-தேவனாகிய கிருஷ்ணனை, வந்தே-வணங்குகிறேன்.
பொருள் : வசுதேவருடைய மகன், கம்சனையும் சாணூரனையும் கொன்றவன், தேவகிக்குப் பரமானந்தத்தைக் கொடுப்பவன், ஜகத்குரு, தேவன் ஆகிய கிருஷ்ணனை வணங்குகிறேன்.
6. பீஷ்மத்ரோணதடா ஜயத்ரதஜலா காந்தாரநீலோத்பலா
ஸல்யக்ராஹவதீ க்ருபேண வஹநீ கர்ணேந வேலாகுலா
அஸ்வத்தாமவிகர்ணகோரமகரா துர்யோதநாவர்திநீ
ஸோத்தீர்ணா கலு பாண்டவை ரணநதீ கைவர்தக​: கேஸவ​:
பீஷ்ம த்ரோண தடா-பீஷ்மரும் துரோணரும் கரைகள், ஜயத்ரத ஜலா-ஜயத்ரதன் ஜலம், காந்தார நீல உத்பலா-காந்தார மன்னன் நீலோத்பலம் என்னும் புஷ்பம், சல்ய க்ராஹவதீ-சல்யன் என்பவன் சுறாமீன், க்ருபேண வஹனீ-கிருபன் என்பவன் பிரவாகம், கர்ணேன வேலா ஆகுலா-கர்ணன் பேரலைகள், அச்வத்தாம விகர்ண கோர மகரா-அச்வத்தாமனும் விகர்ணனும் பயங்கரமான மகர மீன்கள், துர்யோதன ஆவர்தினீ-துர்யோதனன் நீர்ச் சுழல், ஸா-அந்த, ரண நதீ-ரண நதியானது, கலு-உண்மையாகவே, பாண்டவை-பாண்டவர்களால், உத்தீர்ணா-கடக்கப்பட்டது, கேசவ-கேசவன், கைவர்தக-படகோட்டி.
பொருள் : குரு÷க்ஷத்திரப் போர்க்களத்தில் இருந்த ரண நதிக்கு பீஷ்மரும் துரோணரும் கரைகள்; ஜயத்ரதன் ஜலம்; காந்தார மன்னன் நீலோத்பலம் என்னும் புஷ்பம்; சல்யன் சுறாமீன்; கிருபன் என்பவன் பிரவாகம்; கர்ணன் பேரலைகள்; அச்வத்தாமனும் விகர்ணனும் பயங்கரமான மகர மீன்கள்; துர்யோதனன் நீர்ச்சுழல், கிருஷ்ணனைப் படகோட்டியாகக் கொண்டு அது பாண்டவர்களால் கடக்கப்பட்டது.
7. பாராஸர்யவச​: ஸரோஜமமலம் கீதார்தகந்தோத்கடம்
நாநாக்யாநககேஸரம் ஹரிகதாஸம்போதநாபோதிதம்
லோகே ஸஜ்ஜநஷட்பதைரஹரஹ​: பேபீயமாநம் முதா
பூயாத்பாரதபங்கஜம் கலிமலப்ரத்வம்ஸிந​: ஸ்ரேயஸே
பாராசர்ய வச ஸரோஜம்-பராசரர் புதல்வராகிய வியாசர் வாக்கு என்னும் நீரில் உதித்த, நா நா ஆக்யானக கேஸரம்-பல கதைகளை மகரந்தமாயுடைய, ஹரிகதா ஸம்போ தன ஆபோதிதம்-ஹரிகதா பிரசங்கத்தால் அலர்ந்தது, லோகே-உலகத்தில், ஸத்ஜன ஷட்பதை-ஸத் ஜனம் என்னும் தேன் வண்டுகளால், அஹ அஹ-நாள்தோறும், முதா-ஆனந்தமாக, பேபீயமானம்-அருந்தப் பெற்றது, கலிமல ப்ரத்வம்ஸின-கலியின் தோஷத்தை நீக்க விரும்புபவனுக்கு, கீதா அர்த்த கந்த உத்கடம்-கீதையின் மூலம் சுகந்தத்தையுடைய, அமலம்-குற்றமற்ற, பாரத பங்கஜம்- மகாபாரதம் என்னும் தாமரைப்பூ, ச்ரேயஸே-நலத்தின் பொருட்டு, பூயாத்-இருக்கட்டும்.
பொருள் : பராசரர் புதல்வராகிய வியாசரின் வாக்கு என்னும் நீரில் உதித்த, பல கதைகளை மகரந்தமாக உடைய, ஹரிகதா பிரசங்கத்தால் அலர்ந்து உலகத்தில் நல்லோர் என்னும் தேன் வண்டுகளால் நாள்தோறும் ஆனந்தமாக அருந்தப்பெற்ற, கீதையின் மூலம் நறுமணத்தையுடைய, குற்றமற்ற மகாபாரதம் என்னும் தாமரைப் பூவானது கலியினுடைய தோஷத்தை நீக்க விரும்புவனுக்கு நலம் தருவதாகுக.
8. மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
யத்க்ருபா தமஹம் வந்தே பரமாநந்தமாதவம்
யத்க்ருபா-யாருடைய கிருபையானது, மூகம்-ஊமையை, வாசாலம்-பேசவல்லவனாய், கரோதி-செய்கிறது, பங்கும்-முடவனை, கிரிம் லங்கயதே-மலையைத் தாண்டச் செய்கிறது, தம்-அந்த, பரமானந்தமாதவம்-பரமானந்த மாதவனை, அஹம்-நான், வந்தே-வணங்குகிறேன்.
பொருள் : யாருடைய கிருபையானது ஊமையைப் பேச வைக்கிறதோ, முடவனை மலையைத் தாண்டச் செய்கிறதோ, அந்தப் பரமானந்த மாதவனை நான் வணங்குகிறேன்.
9. யம் ப்ரஹ்மா வருணேந்த்ரருத்ரமருத​: ஸ்துந்வந்தி திவ்யை​: ஸ்தவை:
வேதை: ​ஸாங்கபதக்ரமோபநிஷதைர்காயந்தி யம் ஸாமகா​:
த்யாநாவஸ்திததத் கதேந மநஸா பஸ்யந்தி யம் யோகிநோ
யஸ்யாந்தம் ந விது​: ஸுராஸுரகணா தேவாய தஸ்மை நம​:
ப்ரஹ்மா வருண இந்த்ர ருத்ர மருத-பிரம்மா வருணன் இந்திரன் ருத்திரன் மருத் தேவதைகள், யம்-யாரை, திவ்யை ஸ்தவை-திவ்யமான ஸ்துதிகளால், ஸ்துன்வந்தி-ஸ்துதிக்கிறார்கள், ஸாமகா-சாமகானம் செய்கின்றவர்கள், யம்-யாரை, ஸ அங்க பதக்ரம உபநிஷதை-அங்கமும் பதக்கிரமமும் உபநிஷதங்களும் கூடிய, வேதை-வேதங்களால், காயந்தி-பாடுகிறார்கள், யோகின-யோகிகள், யம்-யாரை, த்யான அவஸ்தித தத்கதேன மனஸா-தியான முதிர்ச்சியால் மனதை அவன்பால் வைத்து, பச்யந்தி-பார்க்கிறார்கள், ஸுர அஸுர கணா-சுர அசுரக் கூட்டங்கள், யஸ்ய-யாருடைய, அந்தம்-முடிவை, நவிது-அறிகிறார்களில்லை, தஸ்மை தேவாய-அந்த தேவனுக்கு, நம-நமஸ்காரம்.
பொருள் : பிரம்மா, வருணன், இந்திரன், ருத்திரன், மருத்தேவதைகள் யாரை திவ்யமான ஸ்துதிகளால் ஸ்துதிக்கிறார்களோ, ஸாமகானம் செய்கின்றவர்கள் யாரை அங்கமும் பதக்கிரமமும் உபநிஷதங்களும் கூடிய வேதங்களால் பாடுகிறார்களோ, யோகிகள் தியான முதிர்ச்சியால் மனதை யார்பால் வைத்து உணர்கிறார்களோ, சுர அசுரக் கூட்டங்கள் யாருடைய முடிவை அறிகிறார்களில்லையோ, அந்த தெய்வத்துக்கு நமஸ்காரம்.



பகவத்கீதை


Bhagavad Gita in Tamil





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக