ராதே கிருஷ்ணா 09 - 11 - 2011
12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-3 | திருத்தொண்டர் புராணம்
விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க
http://temple.dinamalar.com/
பனிரெண்டாம் திருமறை | |
12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-3 | திருத்தொண்டர் புராணம்
4. மும்மையால் உலகாண்ட சருக்கம்
இச்சருக்கத்தில் மூர்த்தியார், முருகர், உருத்திர பசுபதியார், திருநாளைப் போவார், திருக்குறிப்புத் தொண்டர், சண்டீசர் என்னும் அறுவரின் வரலாறு உரைக்கப்படும்.
21. மூர்த்தி நாயனார் புராணம்
பாண்டிய நாட்டில் தலைநகரம் மதுரை, அம்மதுரை நகரத்தில் தோன்றிய வணிகர் மூர்த்தி நாயனார். அவர் பற்றற்றான் தாளினைப் பற்றியவர்; மற்றப் பற்றை அறுத்தவர். நாள்தோறும் இறைவரின் திருமஞ்சனத்துக்கும் மெய்ப்பூச்சுக்கும் சந்தனம் அளித்து வருவது அவரது வழக்கம். ஒருகால், கருநாட மன்னன் பாண்டிய நாட்டின் மீது படை தொடுத்து வந்தான். வெற்றியும் உற்று ஆளவும் செய்தான். அவன் சமண சமயத்தில் உள்ளத்தைச் செலுத்தி நாட்டின் நலத்தைத் துறந்தான். சிவனடியார்க்குத் துன்பத்தைச் செய்தான். மூர்த்தி நாயனாரைச் சமணராக்கப் பெரிதும் முயன்றான். அம்முயற்சி வெற்றி பெறவில்லை. மூர்த்தி நாயனாருக்குச் சந்தனக் கட்டையை விற்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தான். மூர்த்தியார் காட்டினின்று சந்தனக் கட்டையை எடுத்து வராதபடியும் தடுத்தான். அதனால் மூர்த்தியார் பெரிதும் துன்புற்றார். இக்கொடிய மன்னன் இறக்க வேண்டும். சைவ சமயம் தழைக்க வேண்டும். இந்நாடு அறநெறி தவறாத மன்னனைப் பெற வேண்டும். அந்நாள் எந்நாளோ! என்று ஏங்கினார். ஒருநாள் அவர் பகற்பொழுதெல்லாம் சந்தனக் கட்டையைத் தேடினார். கிடைக்கவில்லை. இன்று சந்தனக் கட்டைக்கு முட்டு உண்டாயிற்று. ஆனால் என் கை முட்டுக்குத் தடை வராது! எனத் துணிந்து, தன் முழங்கையைச் சந்தனக் கல்லில் தேய்த்தார். கையில் புறத்தோல் தேய்ந்தது; நரம்புகள் தேய்ந்தன; எலும்பு தேய்ந்தது. என்றாலும் அவரது உள்ளம் தேயவில்லை! அவரது அரிய செயலைக் கண்ட இறைவர் கனவில் தோன்றி இனி இச்செயலை நீ செய்யாது ஒழிவாயாக! அன்ப! இந்நாட்டு மன்னன் இறப்பான். பின் நீ அரசன் ஆவாய்! பிறகு நின் எண்ணப்படி திருத்தொண்டு செய்து என் உலகத்தை அடைவாயாக! என்றருள் செய்தார்.
அன்று இரவே மதுரையை ஆண்ட கருநாட மன்னன் மறைந்தான். அமைச்சர் மன்னனுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தனர். அவனுக்கு மைந்தன் இல்லை. ஆதலால் அரியணை மன்னன் இன்றிக் கிடந்தது, அவர்கள் யானை ஒன்றைக் கண் கட்டி விடுவோம்! அது யாரைத் தன் மீது அழைத்துக் கொண்டு வருகிறதோ அவரே மன்னர்! என்று கூறிக் கொண்டனர். அவர்கள் எண்ணியபடியே யானை ஒன்றைக் கண் கட்டி விடுத்தனர். அந்த யானை திருக்கோயில் புறத்தில் நின்று கொண்டிருந்த மூர்த்தி நாயனாரை எடுத்துத் தன் முதுகின் மீது வைத்துக் கொண்டு வந்தது. அதனைக் கண்ட அமைச்சர் மூர்த்தி நாயனாருக்கு முடியைச் சூட்டலாயினர். சமண சமயம் நீங்கிச் சைவ சமயம் ஓங்குமானால் நான் இந்நாட்டை ஆள இசைவேன் என்றார். அமைச்சர் அதற்கு இசைந்தனர். நான் மன்னனாயின் திருவெண்ணீறே மகுடமாகவும், உருத்திராட்சமே அணிகலனாகவும், சடையே அரசமுடியாகவும் இருக்கும்! என்றார். அதற்கும் அமைச்சர் இசைந்தனர். அவர் கூறியபடியே முடிசூட்டு விழா நடைபெற்றது. திருநீறு, உருத்திராட்சம், சடை என்னும் இவற்றால் உலகத்தை ஆண்டார். சைவம் தழைக்க ஆண்ட பின்னர்ச் சிவபதத்தை அடைந்தார்.
968. சீர்மன்னு செல்வக் குடிமல்கு சிறப்பின் ஓங்கும்
கார்மன்னு சென்னிக் கதிர்மாமணி மாட வைப்பு நார்மன்னு சிந்தைப் பலநற்றுறை மாந்தர் போற்றும் பார்மன்னு தொன்மைப் புகழ்பூண்டது பாண்டி நாடு.
தெளிவுரை : பாண்டிய நாடு, சிறப்பால் நிலையான செல்வத்தையுடைய குடிகள் நிறைந்த சிறப்பால் உயர்ந்து, விளங்கும் முகில்கள் நிலையாகத் தங்கும் உச்சிகளையுடைய ஒளியுடைய மணிகள் பதிக்கப்பெற்ற மாளிகைகளை உடையது. அன்பு கெழுமிய உள்ளத்தையுடைய பல நல்ல துறைகளிலே வாழ்கின்ற மக்கள் துதிக்கும் வண்ணம் உலகத்தில் நிலைத்த பழமையான புகழைக் கொண்டதாகும்.
969. சாயுந் தளிர்வல்லி மருங்குல் நெடுந்த டங்கண்
வேயும் படுதோளியர் பண்படும் இன்சொற் செய்ய வாயும் படும்நீள்கரை மண்பொரும் தண்பொ ருந்தம் பாயுங் கடலும்படும் நீர்மை பணித்த முத்தம்.
தெளிவுரை : தளிர்களையுடைய சாயும் கொடி போன்ற இடையையும் நீளமான பெரிய கண்களையும் கொண்ட மூங்கில் போன்ற தோள்களையுடைய பெண்களின் பண் இசைக்கும் இச்சொற்கள் பொருந்திய சிவந்த வாயிலும் அன்புத் தன்மையினால் கொள்ளப்படும் முத்தம் <உள்ளன. நீண்ட கரையின் மண்ணை மோதி ஓடும் குளிர்ந்த தாமிரபரணி பாயும் கடலிலும் நீரோட்டம் என்ற தண்ணிய ஒளிமிக்க முத்துகள் உண்டாகும்.
970. மொய்வைத்த வண்டின் செறிசூழல் முரன்ற சந்தின்
மைவைத்த சோலை மலையந்தர வந்த மந்த மெய்வைத்த காலும் தரும்ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத்தமி ழுந்தருஞ் செவ்வி மணஞ்செய் ஈரம்.
தெளிவுரை : நெருங்கிய வண்டுகளின் கூட்டம் ஒலிக்கும் இருண்ட சந்தனச்சோலை சூழ்ந்த பொதியமலை தர வந்த மென்மையான <உலவும் சிறிய தென்றல் காற்றும் நறுமணம் கமழும் ஈரத்தைத் தரும். உலகத்தை அளந்த மேன்மையும் தெய்வத் தன்மையும் உடைய தமிழும் நல்ல மணம் செய்வதற்குரிய அன்பைத் தரும்.
971. சூழுமிதழ்ப் பங்கய மாகஅத் தோட்டின் மேலாள்
தாழ்வின்றி யென்றுந் தனிவாழ்வதத் தையல் ஒப்பார் யாழின் மொழியிற் குழலின்னிசை யுஞ்சு ரும்பும் வாழும் நகரம் மதுராபுரி என்ப தாகும்.
தெளிவுரை : சூழ்ந்த இதழ்களையுடைய தாமரை மலர் போல அத்தாமரை மலர் மீது உறையும் இலக்குமி தாழ்வில்லாது எக்காலத்திலும் சிறப்பாய் வாழப்பெறுவது, அந்த இலக்குமியைப் போன்ற பெண்களின் யாழின் சொல்லிலும், கூந்தலிலும் முறையே இனிய இசையும் வண்டும் வாழ்கின்ற நகரம் மதுராபுரி (மதுரை) என்ற பெயரால் அழைக்கப்படுவதாகும்.
972. சால்பாய மும்மைத் தமிழ்தங்கிய அங்கண் மூதூர்
நூல்பா யிடத்தும் உளநோன்றலை மேதி பாயப் பால்பாய் முலைதோய் மதுப்பங்கயம் பாய எங்கும் சேல்பாய் தடத்தும் உளசெய்யுள்மிக் கேறு சங்கம்.
தெளிவுரை : செய்யுள் சிறந்து அரங்கேறுவதற்கு இடமான சங்கங்கள் மேன்மையை உண்டாக்குகின்ற முத்தமிழும் நிலைபெற்றுத் தங்கிய அழகிய இடம் அகன்ற அந்தப் பழைய நகரில் நூல்கள் கற்கப்படுகின்ற இடங்களி<லும் உள்ளன. வயலுள் மிக்கு ஏறுகின்ற சங்குகள், பெருந்தலைகளையுடைய எருமைகள் பாய்ந்திட, அவற்றின் பால் சொரியும் முலைகள் தோய்ந்திட, தாமரைகளினின்றும் தேன் பாயச் சேல்மீன்கள் எங்கும் பாய்வதற்கான நீர்நிலைகளும் உள்ளன.
973. மந்தாநிலம் வந்தசை பந்தரின் மாட முன்றில்
பந்தாடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்கும் சந்தார்முலை மேலன தாழ்குழை வாள்மு கப்பொற் செந்தாமரை மேலன நித்திலம் சேர்ந்த கோவை.
தெளிவுரை : முத்துகளை ஒன்றாய்ச் சேர்த்துக் கோத்த கோவையான மாலைகள், தென்றல் காற்று வந்து மென்மையாய் அசையும் மாளிகைகளின் முன் பக்கத்தில் பந்து ஆடுகின்ற மங்கையரின் செங்கை தாங்குகின்ற சந்தனம் பொருந்திய முலைகள் மேல் இருக்கின்றன. முத்துக்களைப் போன்ற வியர்வையின் கோவை, பந்தாடும் பெண்களின் தாழும் காதணியுடைய ஒளியுடைய முகமான அழகிய தாமரை மலர் மீது உள்ளன.
974. மும்மைப் புவனங்களின் மிக்கதன் றேஅம் மூதூர்
மெய்ம்மைப் பொருளாந் தமிழ்நூலின் விளங்கு வாய்மைச் செம்மைப் பொருளுந் தருவார்திரு வால வாயில் எம்மைப் பவந்தீர்ப் பவர்சங்கம் இருந்த தென்றால்.
தெளிவுரை : அந்தப் பழமையான நகரம் உண்மைப் பொருள்கள் கண்ட தமிழ் நூல்களுள் வாய்மையுடன் விளங்கும் செம்மைப் பொருளைத் தருபவரான இறைவர் எழுந்தருளியிருக்கும் திருவால வாயில், எம்மைப் பிறவிக்குக் காரணமான பசுத்தத்துவத்தைப் போக்கி ஆள்பவரான அந்த இறைவர் தலைவராக வீற்றிருந்த செய்தி நிகழ இடமாய் இருந்ததென்று பார்ப்போமானால், அது மூன்று உலகங்களிலும் மேலாய் விளங்குவதன்றோ!
975. அப்பொற் பதிவாழ் வணிகர்குலத் தான்ற தொன்மைச்
செப்பத் தகுசீர்க் குடிசெய்தவம் செய்ய வந்தார் எப்பற் றினையும்அறுத் தேறுகைத் தேறு வார்தாள் மெய்ப்பற் றெனப்பற்றி விடாத விருப்பின் மிக்கார்.
தெளிவுரை : அந்த அழகிய மதுராபுரி நகரத்தில் வாழ்கின்ற வணிகர் குலத்தில் மிக்க நிறைவுடைய பழமையான எல்லாராலும் உயர்வாய் எடுத்துக் கூறத்தக்க சிறப்பையுடைய குடியுள்ளார் செய்த தவத்தின் பயனாய்த் தோன்றினார். அவர் யாவர் என்றால், எல்லாப் பற்றுகளையும் முழுதும் அறுத்து, காளையை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் திருவடிகளையே உண்மையான ஆதரவாகப் பற்றி, விடாப் பிடியாய்க் கொண்ட விருப்பத்திலே மிக்கவர் ஆவார்.
976. நாளும் பெருங்கா தல்நயப்புறும் வேட்கை யாலே
கேளுந் துணையும் முதற்கேடில் பதங்க ளெல்லாம் ஆளும் பெருமான் அடித்தாமரை அல்ல தில்லார் மூளும் பெருகன் பெனும்மூர்த்தியார் மூர்த்தி யார்தாம்.
தெளிவுரை : நாள்தோறும் மிக்க காதல் கூர்ந்து பொருந்த வரும் ஆசை பெருகி, வேட்கையாகி விளைந்ததால் சுற்றமும் துணையும் முதலான கெடுதல் இல்லாத பதங்கள் எல்லாம் ஆளும் பெருமானான சிவபெருமானின் திருவடித் தாமரைகளே அல்லாது வேறு இல்லாதவர்; மூண்டு எழும் அன்பு என்பதையே தம் உருவமாகக் கொண்டவர். அவர் தாம் மூர்த்தியார் என்ற பெயர் கொண்டவர்.
977. அந்திப் பிறைசெஞ் சடைமேல்அணி ஆல வாயில்
எந்தைக் கணிசந் தனக்காப்பிடை என்றும் முட்டா அந்தச் செயலி னிலைநின்றடி யாரு வப்பச் சிந்தைக் கினிதாய திருப்பணி செய்யும் நாளில்.
தெளிவுரை : அவர் மாலையில் தோன்றி விளங்கும் பிறைச்சந்திரனைச் சிவந்த சடையின் மீது அணிந்த திருவால வாயுடையாரான எம் தலைவருக்குச் சாத்துகின்ற சந்தனக் குழம்பினை இடையில் ஒருநாளும் பிறழாத அந்தச் செயலில் நிலைத்து நின்ற சிவனடியார் மகிழும்படி உள்ளத்துக்கினிய திருப்பணியைச் செய்து வந்தார்.
978. கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவன்
மானப் படைமன்னன் வலிந்து நிலங்கொள் வானாய் யானைக் குதிரைக் கருவிப்படை வீரர் திண்தேர் சேனைக் கடலும் கொடுதென்றிசை நோக்கி வந்தான்.
தெளிவுரை : காடான அரணையுடைய வடுகக் கருநாடர்களின் காவல் பொருந்திய பெரிய படையையுடைய மன்னன் தனது படைப் பலத்தால் வலியவனாய் நிலத்தைக் கைப்பற்ற எண்ணி யானைகளும் குதிரைகளும் வீரர்களும் திண்மையான தேர்களும் உடைய கடல் போன்ற படையைச் செலுத்திக் கொண்டு தெற்குத் திக்கு நோக்கி வந்தான்.
979. வந்துற்ற பெரும்படை மண்புதை யப்ப ரப்பிச்
சந்தப் பொதியில்தமிழ் நாடுடை மன்னன் வீரம் சிந்தச் செருவென்று தன்னாணை செலுத்து மாற்றால் கந்தப் பொழில்சூழ் மதுராபுரி காவல் கொண்டான்.
தெளிவுரை : வந்த பெரும்படையைத் தரையானது தெரியாத வண்ணம் பரவியிருக்கச் செய்து, சந்தனச் சோலைகள் சூழ்ந்த பொதிய மலையையுடைய தென் நாட்டை ஆள்கின்ற பாண்டிய மன்னனின் வீரம் அழியுமாறு போரில் வெற்றி பெற்றுத் தன் ஆணையைச் செலுத்துகின்ற வழியால் மணமுடைய பூஞ்சோலைகள் சூழ்ந்த மதுரை நகரத்தினைத் தன் நகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.
980. வல்லாண் மையின்வண் டமிழ்நாடு வளம்ப டுத்து
நில்லா நிலையொன்றிய இன்மையின் நீண்ட மேரு வில்லான் அடிமைத் திறமேவிய நீற்றின் சார்பு செல்லா தருகந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான்.
தெளிவுரை : வலிய ஆண்மையால் வன்மையுடைய தமிழ்நாட்டை வளப்படுத்தி நில்லாத தன்மையுடைய இல்லாமையாலே அந்த அரசன் பெரிய மேருமலையை வில்லாய் உடைய சிவபெருமானின் அடிமைத் திறம் பொருந்திய திருநீற்றுச் சார்பில் (சைவசமய நெறியில்) செல்லாது சமணர் திறத்திலே (சமணர் சமயத்தில்) உள்ளம் தாழ்ந்தான்.
981. தாழுஞ் சமண்கையர் தவத்தைமெய் யென்று சார்ந்து
வீழுங் கொடியோன் அதுவன்றியும் வெய்ய முன்னைச் சூழும் வினையால் அரவஞ்சுடர்த் திங்க ளோடும் வாழுஞ் சடையா னடியாரையும் வன்மை செய்வான்.
தெளிவுரை : தாழ்ந்த சமணர்களான வஞ்சரின் பொய்யான தவங்களை மெய் என்று கொண்டு, அந்த நெறியில் சேர்ந்து விழும் கொடியவனான அந்த அரசன், தான் அச்சமயத்தில் வீழ்ந்ததே அல்லாது, பாம்பு பிறைச்சந்திரனுடன் வாழ்வதற்கு இடமான சடையைக் கொண்ட சிவபெருமானின் அடியார்களையும் கொடிய முன்வினைப் பயனால் வன்மை செய்வானாய்.
982. செக்கர்ச் சடையார் விடையார்திரு வால வாயுள்
முக்கட் பரனார் திருத்தொண்டரை மூர்த்தி யாரை மைக்கற் புரைநெஞ் சுடைவஞ்சகன் வெஞ்ச மண்பேர் எக்கர்க் குடனாக இகழ்ந்தன செய்ய எண்ணி.
தெளிவுரை : சிவந்த வானம் போன்ற சடையையுடையவரும் காளையூர்தியையுடையவரும், திருவாலவாயுள் எழுந்தருளிய மூன்று கண்களையுடையவருமான சிவபெருமானின் திருத்தொண்டரான மூர்த்தியாரை அந்தக் கரியக்கல் போன்ற மனமுடைய வஞ்சகன், கொடிய சமணர் என்ற பேர் கொண்ட ஈனர்களுக்கு உடம்படச் செய்து, இகழ்ந்த செயல்களைச் செய்ய நினைத்து,
983. அந்தம் இலவாம் மிறைசெய்யவும் அன்ப னார்தாம்
முந்தைம் முறைமைப் பணிமுட்டலர் செய்து வந்தார் தந்தம் பெருமைக் களவாகிய சார்பில் நிற்கும் எந்தம் பெருமக் களையாவர் தடுக்க வல்லார்.
தெளிவுரை : அம்மன்னன் முடிவில்லாத கொடுமைகளைச் செய்யவும், மூர்த்தியார் தாம் செய்து வந்த முன்னை முறையான சந்தனத் திருப்பணியைத் தவறாமல் செய்து வந்தார். தங்கள் தங்கள் பெருமைக்கு அளவான சார்பிலே ஒழுகி நிற்கின்ற எம் பெருமக்களை அவர்களின் நல்லொழுக்கத்தில் செல்ல ஒட்டாமல் தடுத்து நிறுத்த வல்லவர் யார்?
984. எள்ளுஞ்செயல் வன்மைகள் எல்லையில் லாத செய்யத்
தள்ளுஞ்செய லில்லவர் சந்தனக் காப்புத் தேடிக் கொள்ளுந்துறை யும்அடைத் தான்கொடுங் கோன்மை செய்வான் தெள்ளும்புனல் வேணியர்க் கன்பரும் சிந்தை நொந்து.
தெளிவுரை : எல்லையில்லாத இகழ்வான வலிந்த செயல்களைச் செய்யவும், தம் திருப்பணியினின்றும் தவறாத செயலையுடைய மூர்த்தி நாயனார், சந்தனக் காப்பைத் தேடி பெறும் வழியையும் கொடுங்கோன்மை செய்பவனான அந்தக் கொடிய பாதகனான மன்னன் அடைத்து விட்டான். கங்கையாற்றைச் சூடிய சடையையுடைய சிவபெருமானின் அடியாரான மூர்த்தி நாயனாரும் அதனால் உள்ளம் (வருந்தினார்) வருந்தி,
985. புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற் போது போக்கும்
வன்மைக் கொடும்பா தகன்மாய்ந்திட வாய்மை வேத நன்மைத் திருநீற் றுயர்நன்னெறி தாங்கு மேன்மைத் தன்மைப் புவிமன் னரைச்சார்வதென் றென்று சார்வார்.
தெளிவுரை : கீழ்மையான செயலில் வல்ல சமணர்களுடனே பொழுதைக் கழிக்கின்ற கொடிய பாதகன் இறந்துவிட, உண்மையான வேதங்களிலே கூறப்பட்ட நன்மையை அளிக்கும் திருநீற்றின் உயர்ந்த சைவ நன்னெறியைத் தாங்கும் மேன்மை பொருந்திய மன்னரை, இந்த நாடு அடைவது எந்த நாளில் கூடுவதோ? என்று மூர்த்தியார் தம் மனத்துள் நினைத்து,
986. காய்வுற்ற செற்றங்கொடு கண்டகன் காப்ப வுஞ்சென்
றாய்வுற்ற கொட்பிற் பகலெல்லை அடங்க நாடி ஏய்வுற்ற நற்சந் தனமெங்கும் பெறாது சிந்தை சாய்வுற்றிட வந்தனர் தம்பிரான் கோயில் தன்னில்.
தெளிவுரை : காயும் தன்மையுடைய சினத்தையுடைய கொடிய கண்டகனான அந்த வடுகக் கருநாட மன்னன். சந்தனம் பெறும் வழி கிடைக்காது போக அடைத்து போய் ஆராய்கின்ற மனச் சுழற்சியில் அந்நாள் பகல் கழியும் அளவும், திருவாலவாயில் சிவபெருமானுக்குப் பூசத்தக்க நல்ல சந்தனம் எங்கும் கிடைக்காது மனம் தளர்ந்து வருந்தித் தம் இறைவரின் கோயிலுக்கே வந்தார்.
987. நட்டம்புரி வார்அணி நற்றிரு மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை முட்டா தென்று வட்டந்திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் கட்டும்புறந் தோல்நரம் பென்பு கரைந்து தேய.
தெளிவுரை : நடனம் செய்யும் எம் இறைவர் அணியும் நல்ல திருமெய்ப்பூச்சுத் திருப்பணிக்கு இன்று முட்டுப்பாடு வந்து சேரும் தன்மையுடையதாயினும், அந்தச் சந்தனத்தைத் தேய்க்கும் என் கைக்கு முட்டு உண்டாகாது எனத் துணிந்து வட்டமாய் விளங்கிய சந்தனக் கல்லில் தம் முழங்கையினை வைத்து, அதனைக் கட்டிப் போர்த்த வெளித்தோலும், நரம்பும் எலும்பும் குறுகித் தேயுமாறு தேய்த்தார்.
988. கல்லின்புறந் தேய்த்த முழங்கை கலுழ்ந்து சோரி
செல்லும்பரப் பெங்கணும் என்பு திறந்து மூளை புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பி ரானார் அல்லின்கண் எழுந்த துவந்தருள் செய்த வாக்கு.
தெளிவுரை : இவ்வாறு மூர்த்தி நாயனார் சந்தனக் கல்லின் மீது வைத்துத் தேய்த்த முழங்கையானது குருதி சிந்தி, தேய்க்கும் இடம் எங்கும் எலும்பு திறந்து அதனுள்ளே உள்ள முளைப்பகுதியும், பொருந்தக் கண்டு தம் இறைவர் பொறுக்கவில்லை. அந்த இரவிலே இறைவரின் அருள்வாக்கு எழுந்தது.
989. அன்பின்துணி வால்இது செய்திடல் ஐய உன்பால்
வன்புன்கண் விளைத்தவன் கொண்டமண் எல்லாங் கொண்டு முன்பின்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப் பின்புன்பணி செய்துநம் பேருல கெய்து கென்ன.
தெளிவுரை : ஐயனே! அன்பின் துணிவால் இந்தச் செயலைச் செய்ய வேண்டா! உன்னிடம் வலியக் கொடுமை இழைத்தவன் வலிந்து கொண்ட நாடு முழுமையும் நீ பெற்று முன்னம் புகுந்த துன்பங்கள் எல்லாவற்றையும் போக்கிக் காத்து, பின் நியதியான திருப்பணியைச் செய்து, முடிவில் நம் பேருலகத்தை அடைவாயாக! என்ற இறைவரின் திருவாக்கு அருளியது.
990. இவ்வண்ணம் எழுந்தது கேட்டெழுந் தஞ்சி முன்பு
செய்வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்தபுண் ஊறு தீர்ந்து கைவண்ணம் நிரம்பின வாசமெல் லாங்க லந்து மொய்வண்ண விளங்கொளி எய்தினர் மூர்த்தி யார்தாம்.
தெளிவுரை : இவ்வாறு இறைவரின் அருள்வாக்கு எழுந்ததை மூர்த்தியார் செவியால் கேட்டு, எழுந்து, முன்னர்ச் செயலைத் திரும்பவும் செய்யவே, தேய்ந்த புண்ணான துன்பம் நீங்கி, நன் மணம் எல்லாம் கலந்து பொருந்த அவரது கையின் வண்ணம் அழகாய் நிரம்பியது. மூர்த்தி யாரும் ஒன்று கூடிப் பொருந்திய விளக்கமானதோர் ஒளியைப் பொருந்தினார்.
991. அந்நாள்இர வின்கண் அமண்புகல் சார்ந்து வாழும்
மன்னாகிய போர்வடு கக்கரு நாடர் மன்னன் தன்னாளும் முடிந்தது சங்கரன் சார்பி லோர்க்கு மின்னாமென நீடிய மெய்ந்நிலை யாமை வெல்ல.
தெளிவுரை : மின்னல் தோன்றி நிற்கும் கால அளவே நீண்டிருக்கும் உடல் சிவபெருமானின் சார்வை அடையாதவருக்கு அந்த அளவுங்கூட நிலைக்காததாகும் என்ற உண்மையையும் மேற்பட்டு விளங்க, சமணரின் புகலில் சார்ந்து வாழ்கின்ற மன்னனான வடுகக் கருநாடர் அரசனின் வாழ்வும் அந்நாள் இரவே முடிந்தது.
992. இவ்வா றுலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர்
மெய்வா ழுலகத்து விரைந்தணை வார்க ளேபோல் அவ்வா றரனார் அடியாரை அலைத்த தீயோன் வெவ்வாய் நிரயத் திடைவீழ விரைந்து வீந்தான்.
தெளிவுரை : இங்ஙனம், உலகத்தில் அடியவருக்குத் தொண்டு செய்து மிக்க உயர்வுடைய நல்லோர்கள் சிவனது உலகத்தில் விரைவாய்ச் சேர்வரே, அதுபோல, சிவபெருமானின் அடியவரை மேற்கூறியபடி துன்புறுத்திய தீயவன் கொடிய நரகத்தில் விரைவாய் விழும் பொருட்டு இறந்தனன்.
993. முழுதும் பழுதே புரிமூர்க்கன் உலந்த போதின்
எழுதுங் கொடிபோல் பவருட்பட ஏங்கு சுற்றம் முழுதும் புலர்வுற் றதுமற்றவன் அன்ன மாலைப் பொழுதும் புலர்வுற் றதுசெங்கதிர் மீது போத.
தெளிவுரை : முழுவதும் குற்றமே செய்த மூர்க்கன் இறந்து விட்டதால், எழுதப்படும் கொடி போன்ற அவனுடைய மனைவி உட்பட ஏங்கும் சுற்றம் முழுவதும் வருந்தி வாட்டம் அடைந்தனர். அக்கொடியவனைப் போன்ற மாலைப் பொழுதுக்குப் பின் வருகின்ற யாமப் பொழுதும் கதிரவன் மேலே வர விடியற்போது உண்டாகியது.
994. அவ்வேளையில் அங்கண் அமைச்சர்கள் கூடித் தங்கள்
கைவேறுகொள் ஈம வருங்கடன் காலை முற்றி வைவேலவன் தன்குல மைந்தரும் இன்மை யாலே செய்வேறு வினைத்திறஞ் சிந்தனை செய்து தேர்வார்.
தெளிவுரை : அச்சமயத்தில் உரிய அமைச்சர்கள் ஒன்று கூடித்தாம் கடமையாய்ச் செய்து கழிக்க வேண்டிய அரிய ஈமக்கடனைக் காலையில் முடித்தனர். கூர்மையான வேலையுடைய அந்த மன்னனுக்கு மைந்தரும் இல்லை. ஆதலால் வேறு செயல் செய்யும் திறத்தைச் சிந்தித்து ஆராய்பவராகி,
995. தாழுஞ் செயலின் றொருமன்னவன் தாங்க வேண்டும்
கூழுங் குடியும் முதலாயின கொள்கைத் தேனும் சூழும் படைமன் னவன்தோளிணைக் காவ லின்றி வாழுந் தகைத்தன் றிந்தவையகம் என்று சொன்னார்.
தெளிவுரை : இந்த நாடு தாழ்வான செயல் இல்லாது ஒரு மன்னனால் காக்கப்படுதல் வேண்டும். ஏனென்றால் நாடு, கூழ் குடி முதலான மற்ற உறுப்புகளையும் கொண்டதே யாயினும், நாடு காவலின் சூழ்ச்சியுடைய வன்மை பெற்ற மன்னவனின் இருதோள் காவல் பெற்றாலன்றி வாழ்வு பெறும் தகுதியுடையதாகாது என்று உரைத்தனர்.
996. பன்முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலங் காப்பான்
தன்னெடுங் குடைக்கீழ்த் தத்தம் நெறிகளில் சரித்து வாழும் மன்னரை யின்றி வைகும் மண்ணுல கெண்ணுங் காலை இன்னுயி ரின்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார்.
தெளிவுரை : பல முறையாலும் எல்லா உயிர்களையும் போற்றி உலகத்தைக் காப்பதற்காகத் தன் பெருங்குடையின் கீழ் உயிர்கள் தத்தமக்குரிய நெறிகளில் ஒழுகி, வாழச் செய்கின்ற அரசரை இல்லாது இருக்கும் மண்ணுலகத்தை எண்ணிப் பார்க்கும்போது, அது இனிய உயிர் இன்றி வாழும் உடலை ஒத்ததாகும் என்பவராகி,
997. இவ்வகை பலவும் எண்ணி இங்கினி அரசர் இல்லை
செய்வகை யிதுவே யென்று தெளிபவர் சிறப்பின் மிக்க மைவரை யனைய வேழங் கண்கட்டி விட்டால் மற்றக் கைவரை கைக்கொண் டார்மண் காவல்கைக் கொள்வார் என்று.
தெளிவுரை : இப்படிப்பட்ட பலவற்றையும் நினைத்து இங்கு இனி மன்னர் இல்லை! அதற்குச் செய்யத்தக்கது இதுவேயாகும் எனத் தெளிவு கொள்பவராய்ச் சிறந்த கரிய மலை போன்ற யானையைக் கண்கட்டி விடுத்தால், அந்த யானையால் கைக் கொள்ளப்பட்டவரே, இந்த நாட்டைக் காக்கும் காவலை மேற்கொள்வார் எனத் துணிந்து,
998. செம்மாண்வினை யர்ச்சனை நூன்முறை செய்து தோளால்
இம்மாநிலம் ஏந்தஒர் ஏந்தலை யேந்து கென்று பெய்ம்மாமுகில் போன்மதம் பாய்பெரு கோடை நெற்றிக் கைம்மாவை நறுந்துகில் கொண்டுகண் கட்டி விட்டார்.
தெளிவுரை : நூல்களில் விதிப்படி சிறந்த பெருமை கொண்ட சடங்குகளுடன் இறைவரை வழிபட்டு, மழை பொழியும் பெருமுகில் போன்று மதநீர் பாயும் பட்டம் அணிந்த நெற்றியையுடைய யானையை, நறுமணம் கொண்ட துணியால் கண்ணைக் கட்டி, இந்தப் பெரிய வுலகத்தின் அரசாட்சியைத் தன் தோள்வன்மையால் தாங்குவதற்கு ஓர் அரசனை நீ எடுத்து ஏந்தி வருக! என்று சொல்லி அனுப்பினர்.
999. கண்கட்டி விடுங்களி யானைஅக் காவல் மூதூர்
மண்கொட்புற வீதி மருங்கு திரிந்து போகித் திண்பொற்றட மாமதில் சூழ்திரு வால வாயின் விண்பிற்பட வோங்கிய கோபுரம் முன்பு மேவி.
தெளிவுரை : கண்ணைக் கட்டி விடப்பட்ட களிப்புடைய அந்த யானை, அக்காவலையுடைய மூதூரின் தலம் எங்கும் மண் சுழன்று எழ, வீதிகளின் பக்கம் திரிந்து போய்த் திண்ணிய அழகிய பெரிய மதில் சூழ்ந்த திருவாலவாயில் வானமும் தாழ ஓங்கியுயர்ந்த கோபுரத்தின் முன் சென்று நின்றது.
1000. நீங்கும்இர வின்கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர்
ஈங்கெம்பெரு மான்அரு ளாம்எனில் இந்த வையம் தாங்குஞ்செயல் பூண்பன்என் றுள்ளம் தளர்வு நீங்கிப் பூங்கொன்றை மிலைந்தவர் கோயிற் புறத்தின் நிற்ப.
தெளிவுரை : கழிந்து விட்ட இரவில் நிகழ்ந்த செய்தியை அறிந்த மூர்த்தியார், இங்கு எம் இறைவரின் செயல் இதுவென்றால் இந்த நிலம் தாங்கும் ஆட்சியை மேற்கொள்வேன்! எனத் துணிவு கொண்டு, முன் தம் உள்ளத்தில் கொண்ட தளர்ச்சி நீங்கப்பெற்று, கொன்றை மலரைச் சூடிய சிவபெருமானின் கோயிலின் பக்கத்தில் வந்து (நின்றார்.) நிற்க,
1001. வேழத் தரசங்கண் விரைந்து நடந்து சென்று
வாழ்வுற் றுலகஞ்செய் தவத்தினின் வள்ள லாரைச் சூழ்பொற் சுடர்மாமணி மாநிலந் தோய முன்பு தாழ்வுற் றெடுத்துப் பிடர்மீது தரித்த தன்றே.
தெளிவுரை : பட்டத்து யானையானது அங்கு விரைவாக நடந்துபோய், உலகம் வாழ்வுற்றுச் செய்கின்ற தவப்பயனாய் உள்ளவரான மூர்த்தியாரைத் தன் பட்டத்தினது மெய் ஒளியுடைய மணிகள் நிலத்தில் தோயும்படி முன்பு வணங்கி எடுத்து அப்போதே தன் பிடரியின் மீது வைத்துக் கொண்டது.
1002. மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா
ஏதங்கெட எண்ணிய திண்மை அமைச்ச ரெல்லாம் பாதங்களின் மீது பணிந்தெழுந் தார்கள் அப்போ தோதங்கிளர் வேலையை ஒத்தொலி மிக்க தவ்வூர்.
தெளிவுரை : நாட்டுக்கு வந்த தீமை கெடுமாறு நினைத்த திண்மையுடைய அமைச்சர் எல்லாம், தாம் விடுத்த யானையால் எடுத்துப் பிடரியில் வைத்துக் கொள்ளப்பட்ட மூர்த்தியாரைப் பார்த்து, அவர் அடிகளில் விழுந்து வணங்கி எழுந்தனர். அச்சமயத்தே அந்த ஊரானது நீர் நிறைந்த கடல் போல் ஆரவாரம் மிக்கு விளங்கியது.
1003. சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரி யோடும்
எங்கெங்கும் இயம்பின பல்லியம் எல்லை யில்ல அங்கங்கு மலிந்தன வாழ்த்தொலி அம்பொற் கொம்பின் பங்கன்அரு ளால்உல காள்பவர் பாங்கர் எங்கும்
தெளிவுரை : அழகிய பொற்கொடி போன்ற உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமானின் திருவருளால் உலகு ஆள்பவரான மூர்த்தியாரின் பக்கம் எங்கும் தாரைகள், சங்குகள் ஆகியவை முழங்கின. பேரிகையுடன் அளவில்லாத பலவகை வாத்தியங்கள் எங்கும் ஒலித்தன. அங்கங்கும் வாழ்த்தொலிகள் மிக்கன.
1004. வெங்கட்களிற் றின்மிசை நின்றும் இழிச்சி வேரித்
தொங்கற்சுடர் மாலைகள் சூழ்முடி சூடு சாலை அங்கட்கொடு புக்கரி யாசனத் தேற்றி ஒற்றைத் திங்கட்குடைக் கீழ்உரி மைச்செயல் சூழ்ந்து செய்வார்.
தெளிவுரை : கொடிய கண்ணையுடைய பட்டத்து யானையினின்றும் மூர்த்தியாரை இறங்கச் செய்து, தேன்மிக்க மலர் மாலைகளும், ஒளியுடைய மணி மாலைகளும் சூழ்ந்தள்ள முடியைச் சூடும் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று சேர்த்து, (அவரை) அரியணையில் வீற்றிருக்கச் செய்து, ஒப்பில்லாத சந்திர வட்டக் குடையினது கீழ், அரசுரிமைக்கு ஏற்றவாறு முடிசூடுவதற்குரிய சடங்குகளை ஆராய்ந்து செய்பவர்களாகி,
1005. மன்னுந் திசைவேதியில் மங்கல ஆகு திக்கண்
துன்னுஞ் சுடர்வன்னி வளர்த்துத் துதைந்த நூல்சூழ் பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூநீர் உன்னும் செயல்மந் திரயோகர் நிறுத்தி னார்கள்.
தெளிவுரை : நிலைபெறும் திக்கில் இடப்பட்ட வேதிகையில் சில மந்திரங்களால் ஆகிய ஆகுதிக் குண்டத்தில் சுடருடன் பொருந்தி வரும் தீயை வளர்த்து, முப்புரிநூல் நெருக்கமாகச் சுற்றப்பட்ட பொற்கலசங்களையும், குடங்களையும் நிறைத்து வைத்து, தூய கங்கை முதலிய தீர்த்தங்களை மந்திரத்தில் வல்லவர் கொண்டு வந்து வைத்தனர்.
1006. வந்துற்றெழு மங்கல மாந்தர்கள் தம்மை நோக்கிச்
சிந்தைச்சிவ மேதெளி யுந்திரு மூர்த்தி யார்தாம் முந்தைச்செய லாம்அமண் போய்முதற் சைவ மோங்கில் இந்தப்புவி தாங்கிஇவ் வின்னர சாள்வ னென்றார்.
தெளிவுரை : தம் உள்ளத்தில் சிவபெருமானையே வைத்துத் தெளிவுடையவராய் விளங்கும் மூர்த்தியாரும், தம்மிடம் வந்து வணங்கி எழும் மங்கலச் செயல் வல்லவரைப் பார்த்து, முன் செயலான சமணம் வீழ, முழுமுதற் சைவம் ஓங்குவதால் இந்த வுலகம் தாங்கி இனிய அரசாட்சியைச் செய்வேன் என மொழிந்தார்.
1007. அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்ச ரோடு
மெய்வாழ்தரு நூலறி வின்மிகு மாந்தர் தாமும் எவ்வாறருள் செய்தனை மற்றவை யன்றி யாவர் செய்வார் பெரியோய் எனச்சேவடி தாழ்ந்து செப்ப.
தெளிவுரை : அவ்வாறு மூர்த்தியார் கூறியதைக் கேட்டு, அமைச்சர்களுடன் உண்மை நூலறிவில் மிக்கவர்களும், பெரியோய்! நீ எவ்வாறு கூறினாயோ, அவ்வாறின்றி வேறு செய்பவர் யார்? என அவருடைய அடிகளில் விழுந்து கூற,
1008. வையம் முறைசெய் குவனாகில் வயங்கு நீறே
செய்யும் அபிடே கமுமாக செழுங்க லன்கள் ஐயன் அடையா ளமுமாக அணிந்து தாங்கும் மொய்புன் சடைமா முடியேமுடி யாவ தென்றார்.
தெளிவுரை : அப்போது மூர்த்தியார், உலகத்தை நான் ஆட்சி செய்வேனானால் சிவபெருமானின் திருமேனியில் விளங்கும் திருநீறே எனக்குச் செய்யும் முடிசூட்டாகவும், அப்பெருமானின் அடையாளமான உருத்திராக்கமே நான் அணியும் நல்ல அணிகலன்களாகவும், இறைவனின் அடையாளமான மொய்த்த சடையே அரசமுடியாகவும் இருக்கத் தக்கனவாகும் என்று உரைத்தார்.
1009. என்றிவ்வுரை கேட்டலும் எல்லையில் கல்வி யோரும்
வன்திண்மதி நூல்வளர் வாய்மை அமைச்சர் தாமும் நன்றிங்கருள் தானென நற்றவ வேந்தர் சிந்தை ஒன்றும்அர சாள்உரி மைச்செய லான உய்த்தார்.
தெளிவுரை : மூர்த்தியார் இங்ஙனம் உரைத்ததைக் கேட்டதும், எல்லையில்லாத கல்வி அறிவுடையவரும், வலிய திண்ணிய மதியையும் நூலறிவையும் வளரும் வாய்மையையும் உடைய அமைச்சர்களும் இங்குக் கூறியருளிய செய்தி நன்று என எண்ணிக்கொண்டு, நல்ல தவ வேந்தரின் உள்ளத்தில் பொருந்தும் அரசாள்வதற்கு உரிமைச் செயலான சடங்குகளையெல்லாம் செய்து தந்தனர்.
1010. மாடெங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்கச்
சூடுஞ்சடை மௌலி யணிந்தவர் தொல்லை ஏனம் தேடுங்கழ லார்திரு வாலவாய் சென்று தாழ்ந்து நீடுங்களிற் றின்மிசை நீள்மறு கூடு போந்தார்.
தெளிவுரை : பக்கங்களில் எங்கும் நெருங்கிய மங்கல ஓசை ஒலிக்க, ஆடும் முடியான சடையையே பூண்டு வேந்தராய் விளங்கிய மூர்த்தியார் முன்னம் பன்றி வடிவம் எடுத்துத் திருமாலானவர் தேடுகின்ற திருவடியுடைய இறைவரின் திருவாலவாய்க் கோயிலில் சென்று வணங்கிப் பின்னர், நீடும் யானையின் மீது ஏறி நீண்ட வீதி வழியில் அரச உலாப் போந்தவராகி,
1011. மின்னும்மணி மாளிகை வாயிலின் வேழ மீது
தன்னின்றும் இழிந்து தயங்கொளி மண்ட பத்திற் பொன்னின்அரி மெல்லணைச் சாமரைக் காமர் பூங்கால் மன்னுங்குடை நீழல் இருந்தனர் வையந் தாங்கி.
தெளிவுரை : (மூர்த்தியார்) ஒளிரும் மணி மாளிகையின் வாயிலில் யானையின் மேலிருந்து இறங்கி, விளங்கும் ஒளியுடைய கொலு மண்டபத்தில் வந்து, பொன்னால் ஆன அரியணை மீது, அழகான சாமரைகள் மென்மையான காற்று வீசப்பெற்ற வெகுண்டை நிழலில் உலகக் காவலை மேற்கொண்டு அரசு நடத்தி வந்தார்.
1012. குலவுந்துறை நீதி யமைச்சர் குறிப்பின் வைகக்
கலகஞ்செய் அமண்செய லாயின கட்டு நீங்கி நிலவுந்திரு நீற்று நெறித்துறை நீடு வாழ உலகெங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன.
தெளிவுரை : பொருந்திய பல துறைகளிலும் நீதியை நடத்தும் அமைச்சர்களும் தம் குறிப்பின்படி நிற்கவும், கலகம் செய்த சமணர் செயல்களான கட்டானது நீங்கி, நிலவும் திருநீற்று நெறியும் துறையும் நீடு வாழ்வும், உலகம் முழுதும் நிரம்பிய தன்மை கொண்ட சைவசமயம் ஓங்கி நிலை பெற்றிடவும்,
1013. நுதலின்கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின்
பதமெங்கும் நிறைந்து விளங்கப் பவங்கள் மாற உதவுந்திரு நீறுயர் கண்டிகை கொண்ட வேணி முதன்மும்மையி னால்உல காண்டனர் மூர்த்தி யார்தாம்.
தெளிவுரை : நெற்றியில் விழியுடைய சிவபெருமானது வாய்மையான நுண் பொருள் எவ்விடத்தும் நிறைந்து விளங்கவும், பாவங்கள் மாற உதவும் திருநீறும், உயர்ந்த உருத்திராக்கமான கண்டிகையும், கொண்ட சடையும் என்னும் முதன்மை பெற்ற மூன்றினால் (மும்மையால்) மூர்த்தியார் உலகத்தை ஆண்டு வந்தார்.
1014. ஏலங்கமழ் கோதையர் தந்திறம் என்றும் நீங்குஞ்
சீலங்கொடு வெம்புலன் தெவ்வுடன் வென்று நீக்கி ஞாலந்தனி நேமி நடாத்தி நலங்கொள் ஊழிக் காலம்உயிர் கட்கிட ரான கடிந்து காத்து.
தெளிவுரை : மயிர்ச்சாந்து மணம் கமழ்கின்ற கூந்தலையுடைய பெண்களின் தொடர்பை என்றும் நீங்கிய துறவு ஒழுக்கமான சீலத்தை மேற்கொண்டவராய், கொடிய ஐந்து புலன் இன்பங்களைப் பகைவர்களுடன் வென்று நீக்கி, உலகைத் தனி ஆணையால் ஆட்சி செலுத்தி நன்மை கொள்ளும் ஊழிக்காலம், உயிர்களுக்குத் துன்பம் வாராமல் காத்து,
1015. பாதம்பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற
ஏதம்பிணி யாவகை இவ்வுல காண்டு தொண்டின் பேதம்புரி யாஅருட் பேரர சாளப் பெற்று நாதன்கழற் சேவடி நண்ணினர் அண்ண லாரே.
தெளிவுரை : தம் அடிகளை மாற்றரசர்கள் சூழ்ந்து பணிந்து போற்றி, துன்பங்கள் உண்டாகாத வகையிலே இவ்வுலத்தை ஆண்டார். திருத்தொண்டினின்று கழல் அணிந்த திருவடிகளைப் பெருமையுடைய மூர்த்தியார் அடைந்தார்.
1016. அகல்பாறையின் வைத்து முழங்கையை
அன்று தேய்த்த இகலார்களிற் றன்பரை யேத்தி முருக னாராம் முகில்சூழ்நறுஞ் சோலையின் மொய்யொளி மாட வீதிப் புகலூர்வரும் அந்தணர் தந்திறம் போற்ற லுற்றாம்.
தெளிவுரை : அன்று அகன்ற சந்தனக் கல்லான பாறையில், வைத்து தம் முழங்கையினை எலும்பு திறந்து முளை காணும் படியாய்த் தேய்த்த, போரில் வல்ல யானைமீது அமர்ந்த அன்பரான மூர்த்தியாரை வணங்கி, மேகம் சூழ்ந்த மணமுடைய சோலைகள் நெருங்கிய ஒளிமிக்க மாடவீதிகளையுடைய திருப்புகலூரில் தோன்றிய முருகனாரான அந்தணரின் இயல்பைச் சொல்லத் தொடங்குகின்றேன்.
மூர்த்தி நாயனார் புராணம் முற்றிற்று.
22. முருக நாயனார் புராணம்
திருப்பூம்புகலூர் என்பது சோழநாட்டில் உள்ள ஊராகும். அத்தலத்தில் அந்தணர் குலத்தில் முருகநாயனார் தோன்றினார். விடியற்காலையில் அவர் எழுந்து கோட்டுப்பூ முதலான பூக்களைப் பறித்து வந்து மாலை தொடுத்து இறைவனுக்குச் சாத்தி உள்ளம் மகிழ்வார். ஐந்தெழுத்தை எப்போதும் வழுத்துவது அவரது வழக்கம். சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தருக்கு அவர் நண்பராக விளங்கினார். அவரது திருமணத்துக்குச் சென்று பிறவா நிலையை பெற்றார்.
1017. தாது சூழுங் குழல்மலையாள் தளிர்க்கை சூழுந் திருமேனி
மீது சூழும் புனற்கற்றை வேணி நம்பர் விரும்புபதி சோதி சூழும் மணிமௌலிச் சோழர் பொன்னித் திருநாட்டுப் போது சூழும் தடஞ்சோலைப் பொய்கை சூழும் பூம்புகலூர்.
தெளிவுரை : மகரந்தத்தையுடைய பூக்கள் பொருந்திய கூந்தலையுடைய உமையம்மையாரின் தளிர் போன்ற கைகளால் சுற்றித் தழுவிக் கொள்ளப்பட்ட திருமேனியையும், மேல் கங்கையணிந்த கற்றையான சடையையும் உடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கின்ற பதியானது, ஒளி பொருந்திய மணிமுடி சூடிய சோழர்களின் காவிரியாறு பாய்கின்ற திருநாட்டில் உள்ள மலர்கள் நிறைந்த பூஞ்சோலைகள் பொருந்திய நீர் நிலைகளால் சூழப்பட்ட திருப்பூம் புகலூர் என்பதாகும். உயிர்கள் புகலாக (அடைக்கலமாக) அடையத் தக்கது. ஆதலால் புகலூர் எனப்பெயர் பெற்றது.
1018. நாம மூதூர் மற்றதனுள் நல்லோர் மனம்போல் அவரணிந்த
சேம நிலவு திருநீற்றின் சிறந்த வெண்மைத் திருந்தொளியால் யாம இருளும் வெளியாக்கும் இரவே யல்ல விரைமலர்மேற் காமர் மதுவுண் சிறைவண்டுங் களங்க மின்றி விளங்குமால்.
தெளிவுரை : புகழ் பொருந்திய பழமையான அத்திருப்பதியுள் நல்ல அடியவரின் உள்ளங்களைப் போல் அவர்களின் திருமேனி மீது அணிந்த காவலுடைய திருநீற்றின் வெண்மையான திருந்திய ஒளியால், நடுயாமத்து இருளையும் வெளியாக்கும் இரவுமட்டுமின்றி, மணம் கமழும் மலர்களின் மீது தங்கும் அழகான தேன் குடிக்கும் சிறகைக் கொண்ட கரிய வண்டுகளும் கரிய நிறம் இல்லாமல் விளங்கும்.
1019. நண்ணும் இசைதேர் மதுகரங்கள் நனைமென் சினையின் மருங்கலைய
வண்ண மதுரத் தேன்பொழிவ வாச மலர்வா யேயல்ல தண்ணென் சோலை எம்மருங்கும் சாரும் மடமென் சாரிகையின் பண்ணின் கிளவி மணிவாயும் பதிகச் செழுந்தேன் பொழியுமால்.
தெளிவுரை : பொருந்திய இசையைத் தேர்ந்து பாடும் வண்டுகள் மலரும் பருவத்தையுடைய அரும்புகள் கொண்ட மென்மையான கிளைகளின் பக்கங்களிலே பறக்க, நிறமும் இனிமையும் கொண்ட தேனைப் பொழிவன மணம் பொருந்திய மலர்களின் அலர்ந்த வாய்கள் மட்டும் அல்ல; குளிர்ந்த சோலைகளில் எல்லாப் பக்கங்களிலும் சேர்கின்ற இளமையும் மென்மையும் உடைய நாகணவாய்ப் பறவைகளின் பண்ணுடைய இனிய மொழியைக் கூறுகின்ற வாயும் திருப்பதிகங்களான தேனைப் பொழியும். (சம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியவர் பதிகங்களை மக்கள் பாட அவற்றைக் கேட்டு நாகணவாய்ப் பறவைகள் பாடின என்பது கருத்து.)
1020. வண்டு பாடப் புனல்தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன
கொண்ட வாச முகையவிழ்ந்த குளிர்பங் கயங்க ளேயல்ல அண்டர் பெருமான் திருப்பாட்டின் அமுதம் பெருகச் செவிமடுக்குந் தொண்டர் வதன பங்கயமுந் துளித்த கண்ணீர் அரும்புமால்.
தெளிவுரை : அப்புகலூரில் வண்டுகள் பாட அதனால், நீர் பொருந்திய நீர்நிலையுள் மலர்ந்து கள் நீர் அரும்புவன. நிறைவு கொண்ட மணமுடைய அரும்புகள் விரிந்து மலர்ந்து குளிர்ந்த தாமரை மலர்கள் மட்டும் அல்ல, தேவர் தலைவரான சிவபெருமானைத் துதிக்கும் திருப்பதிகங்களான தேவாரங்களின் அமுதம் பெருக அதனைக் காதால் உண்ணும் அடியார்களின் உள்ளமாகிய தாமரைகளும் துளிகளாய்த் துளித்து விழும் கண்ணீர் அரும்புவனவாம்.
1021. ஆன பெருமை வளஞ்சிறந்த அந்தண் புகலூ ரதுதன்னில்
மான மறையோர் குலமரபின் வந்தார் முந்தை மறைமுதல்வர் ஞான வரம்பின் தலைநின்றார் நாகம் புனைவார் சேவடிக்கீழ் ஊன மின்றி நிறையன்பால் உருகு மனத்தார் முருகனார்.
தெளிவுரை : இத்தகைய பெருமையும் வளமும் சிறந்து விளங்கும் அழகிய குளிர்ச்சியுடைய புகலூர் என்னும் அந்தப் பதியில், பெருமை பொருந்திய வேதியர் குலத்தில், பாம்பை அணியாய்ப் பூண்ட சிவபெருமானின் திருவடியின் கீழ் குற்றமில்லாமல் நிறைந்த அன்பால் உருகும் உள்ளத்தை உடைய முருகனார் எனப்படுபவர் தோன்றினார். அவர் முந்தையான வேத முதல்வர்; ஞானத்தின் முடிந்த எல்லையில் சிறந்தவர்.
1022. அடைமேல் அலவன் துயிலுணர அலர்செங் கமல வயற்கயல்கள்
மடைமே லுகளுந் திருப்புகலூர் மன்னி வாழுந் தன்மையராய் விடைமேல் வருவார்க் காளான மெய்ம்மைத் தவத்தால் அவர்கற்றைச் சடைமேல் அணியத் திருப்பள்ளித் தாமம் பறித்துச் சாத்துவார்.
தெளிவுரை : அவர், இலைகளின் மீது உறங்கிய நண்டுகள் அவ்வுறக்கத்தினின்று விழித்து எழ, மலரும் செந்தாமரைகள் மலரும் வயலில் கயல் மீன்கள் மடைகளின் மீது பாய்வதற்கு இடமான திருப்புகலூரில் நிலை பெற்று வாழும் இயல்பு உடையவராய் விளங்கினார். காளையின் மீது வரும் சிவபெருமானுக்கு ஆளாயின மெய்த்தவத்தால், அப்பெருமானின் கற்றையான சடையின் மீது அணியத் திருப்பள்ளித் தாமம் பறித்துச் சாத்துவாராய்,
1023. புலரும் பொழுதின் முன்னெழுந்து புனித நீரில் மூழ்கிப்போய்
மலருஞ் செவ்வித் தம்பெருமான் முடிமேல் வான்நீர் ஆறுமதி உலவு மருங்கு முருகுயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன்பறித்த அலகில் மலர்கள் வெவ்வேறு திருப்பூங் கூடை களில்அமைப்பார்.
தெளிவுரை : அவர் விடிவதற்கு முன்னம் எழுந்து, தூய நீரில் முழுகி விட்டுச் சென்று, தம் இறைவரின் முடியின் மேல் கங்கையாறும் பிறைச்சந்திரனும் உலவுகின்ற பக்கத்தில், மலர்கின்ற பருவத்தில் மணம் கமழத்தக்கதாக மலரும் பருவம் நோக்கிப் பறித்தெடுத்த அளவில்லாத மலர்களை வெவ்வேறாகக் கூடைகளில் சேர்ப்பவராய்,
1024. கோட்டு மலரும் நிலமலரும் குளிர்நீர் மலரும் கொழுங்கொடியின்
தோட்டு மலரும் மாமலருஞ் சுருதி மலருந் திருவாயில் காட்டு முறுவல் நிலவலரக் கனக வரையிற் பன்னகநாண் பூட்டும் ஒருவர் திருமுடிமேல் புனைய லாகும் மலர்தெரிந்து.
தெளிவுரை : கொம்பில் பூக்கும் கோட்டுப் பூக்களும், நிலத்தில் பூக்கும் நிலப்பூக்களும், குளிர்ந்த நீரில் மலரும் நீர்ப்பூக்களும், கொழுமையான கொடியில் மலரும் கொடிப்பூக்களும் என்ற இந்த நான்கு வகைப்பட்ட மலர்களும் மறைகள் வெளிப்படுகின்ற திருவாயில் காட்டும் சிறு முறுவலின் ஒளி வெளிப்படும்படி மேரு மலையான வில்லில் பாம்பான நாணினைப் பூட்டிய ஒப்பற்ற சிவபெருமானின் திருமுடியில் அணியக்கூடிய மலர்களாய்த் தேர்ந்தெடுத்து,
1025. கொண்டு வந்து தனியிடத்தில் இருந்து கோக்குங் கோவைகளும்
இண்டைச் சுருக்கும் தாமமுடன் இணைக்கும் வாச மாலைகளுந் தண்டிற் கட்டுங் கண்ணிகளும் தாளிற் பிணைக்கும் பிணையல்களும் நுண்டா திறைக்குந் தொடையல்களும் சமைத்து நுடங்கு நூன்மார்பர்.
தெளிவுரை : அசையும் பூணூல் அணிந்த மார்பையுடைய முருகனார் கொண்டு வந்து தனியான (பூ கட்டும்) இடத்தில் அமர்ந்து அவற்றைக் கோக்கும் கோவைகளும், இண்டைச் சுருக்கம் தாமங்களுடன் இணைக்கும் மணம் பொருந்திய மாலைகளும், தண்டைப் போல் கட்டும் கண்ணிகளும், தாளில் பிணைக்கும் பிணையல்களும் நுட்பமான தாதுக்களைச் சிந்தும் தொடையல்களுமாகக் கட்டி,
1026. ஆங்கப் பணிகள் ஆனவற்றுக் கமைத்த காலங் களில்அமைத்துத்
தாங்கிக் கொடுசென் றன்பினொடுஞ் சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள் பாங்கிற் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிகப் பற்றான ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்தும் ஓவா நாவின் உணர்வினார்.
தெளிவுரை : அங்கு அத்தகைய பூத்திருப்பணிகளை அவற்றுக்கு விதிக்கப்பட்ட காலங்களில் கட்டி, எடுத்துச் சென்று, அன்புடன் சாத்தி, பொருந்திய வழிபாட்டை விதிப்படி செய்து விரும்பி அன்பு செய்தார். சிவபெருமானின் திருப்பதிகப் பற்றான உயர்ந்து சிறந்த திருவைந்தெழுத்தையும் விடாது நாக்கிற் கொண்ட உணர்வை உடையவராக விளங்கினார்.
1027. தள்ளும் முறைமை ஒழிந்திடஇத் தகுதி யொழுகு மறையவர்தாம்
தெள்ளு மறைகள் முதலான ஞானஞ் செம்பொன் வள்ளத்தில் அள்ளி அகிலம் ஈன்றளித்த அம்மை முலைப்பால் உடனுண்ட பிள்ளை யார்க்கு நண்பருமாம் பெருமை யுடையா ராயினார்.
தெளிவுரை : நூல்களினால் விலக்கப்பட்டவை நீங்க, இங்ஙனம் நல்லொழுக்கத்தில் நின்ற மறையவரான திருமுருகனார் மறைகளில் முதலாக எடுத்துக் கூறப்பட்ட சிவஞானத்தைச் செம்பொன் கிண்ணத்தில் அள்ளி எடுத்து எல்லா வுலகங்களையும் ஈன்று காக்கும் உமையம்மையாரின் முலைப்பாலை உண்ட திருஞான சம்பந்தருக்கு நண்பராக ஆகும் பெருமையுடையவராய் விளங்கினார்.
1028. அன்ன வடிவும் ஏனமுமாய் அறிவான் இருவர் அறியாமே
மன்னும் புகலூர் உறைவாரை வர்த்த மான வீச்சுரத்து நன்னர் மகிழ்ச்சி மனங்கொள்ள நாளும் பூசை வழுவாமே பன்னும் பெருமை அஞ்செழுத்தும் பயின்றே பணிந்து பரவினார்.
தெளிவுரை : அன்னப் பறவையின் வடிவமும் பன்றியின் வடிவமும் எடுத்து அறியப் புகுந்த நான்முகன் திருமால் என்ற தேவர்கள் இருவராலும் அறியப்படாது நிலைபெற்ற திருப்புகலூரில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை வர்த்தமான ஈச்சரம் என்ற திருக்கோயிலில் நல்ல மகிழ்ச்சியை உள்ளம் கொள்ள, ஒவ்வொரு நாளும் வழிபாடு ஆற்றுவதில் தவறாமல், சொல்லத்தக்க பெருமையுடைய திருவைந்தெழுத்தினையும் கூறிப் பணிந்து வழிபாடாற்றி வந்தார்.
1029. அங்கண் அமருந் திருமுருகர் அழகார் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன்செய்த பூசை அதனாற் புக்கருளிச் செங்கண் அடலே றுடையவர்தாஞ் சிறந்த அருளின் பொருளளிக்கத் தங்கள் பெருமான் அடிநீழற் தலையாம் நிலைமை சார்வுற்றார்.
தெளிவுரை : அவ்வாறு இருந்து வந்த திருமுருகனார், அழகான புகலியில் தோன்றிய ஆளுடைய பிள்ளையாரான திருஞானசம்பந்தரின் சிவம் பெருகும் திருமணத்தில் முன் செய்த பூசையின் பயனாலே புகுந்து, சிவந்த கண்ணையுடைய வலிய காளையையுடைய சிவபெருமான் சிறந்த அருளான இனிய பொருளை அளிக்கத் தம் இறைவரின் திருவடி நிழலில் நிலைபெற்ற தன்மையை அடைந்தவர் ஆனார்.
1030. அரவம் அணிந்த அரையாரை அருச்சித் தவர்தங் கழல்நிழற்கீழ்
விரவு புகலூர் முருகனார் மெய்ம்மைத் தொண்டின் திறம்போற்றிக் கரவில் அவர்பால் வருவாரைக் கருத்தில் உருத்தி ரங்கொண்டு பரவு மன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர்வுற்றேன்.
தெளிவுரை : பாம்பை அணிந்து கொண்ட அரையையுடைய சிவபெருமானை வழிபட்டு அதன் பயனாக அவருடைய திருவடிகளின் கீழே பொருந்துத் திருப்புகலூர் முருகநாயனாரின் உண்மைத் திருத்தொண்டின் திறத்தை வழிபட்டுத் துதித்து, இனி வஞ்சம் இல்லாதவரிடம் வரும் சிவபெருமானை உள்ளத்தில் எண்ணித் திருவுருத்திரத்தினால் துதித்த அன்பரான பசுபதியார் சிவபெருமானை வழிபட்ட நிலையைச் சொல்லப் புகுகின்றேன்.
முருகநாயனார் புராணம் முற்றிற்று.
23. உருத்திரபசுபதி நாயனார் புராணம்
சோழநாட்டில் உள்ள திருத்தலையூர் என்ற ஊரில் அந்தணர் குலத்தில் பசுபதி என்பவர் தோன்றினார். இறைவரின் அடிகளில் பதிந்த அன்பே செல்வம் என அவர் எண்ணியிருந்தார். அவர் தாமரைப் பொய்கையில் கழுத்தளவு நீரில் நின்று இரண்டு கைகளையும் தலைமீது குவித்து, வேதத்தின் பயனான உருத்திர மந்திரத்தை ஓதினார். இரவும் பகலுமாக இவ்வாறு இருந்து வந்தார். ஆதலால் இறைவர் அவர்க்குத் திருவருள் செய்து தம் உலகத்தைச் சார்ந்திடச் செய்தார். உருத்திரத்தை ஓதியதால் உருத்திர பசுபதி நாயனார் என்று அழைக்கப்பெற்றார்.
1031. நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும்புனல் நீத்தம்
மலர்த்த டம்பணை வயல்புகு பொன்னிநன் னாட்டுக் குலத்தி னோங்கிய குறைவிலா நிறைகுடி குழுமித் தலத்தின் மேம்படு நலத்தது பெருந்திருத் தலையூர்.
தெளிவுரை : உயர்ந்து பரவி எழுகின்ற வெள்ளமானது பூந்தடங்களிலும் பெரிய வயல்களிலும் புகும் நல்ல நிலத்தில், பொன்னி நாட்டில், குலத்தில் ஓங்கியனவாயும் குறைவற்ற நிறைவை உடையனவாயும் உள்ள குடிமக்கள் நெருங்கியிருப்பதால் ஊர்களுள் மேம்பட்ட நன்மையுடையது திருத்தலையூர்.
1032. வான்அ ளிப்பன மறையவர் வேள்வியின் வளர்தீ
தேன்அ ளிப்பன நறுமலர் செறிசெழுஞ் சோலை ஆன்அ ளிப்பன அஞ்சுகந் தாடுவார்க் கவ்வூர் தான்அ ளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும்.
தெளிவுரை : வேதியர் வளர்க்கும் வேள்வித் தீக்கள் மழையை அளிப்பனவாகும். நறுமணம் கமழும் சோலைகள் தேனை அளிப்பனவாகும். பசுக்கூட்டங்கள் அளிக்கும் ஐந்தையும் (பஞ்சகவ்வியம்) மகிழ்ந்து ஆடும் சிவபெருமானுக்கு அந்தவூர் அறமும் நீதியும் சால்பும் என்ற இவற்றை அளிப்பன.
1033. அங்கண் மாநகர் அதனிடை அருமறை வாய்மைத்
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர் செங்கண் மால்விடை யார்செழும் பொன்மலை வல்லி பங்க னார்அடி மைத்திறம் புரிபசு பதியார்.
தெளிவுரை : அருளுடைய அந்தப் பெரிய நகரத்தில் அரிய மறைகளின் வாய்மையில் நிற்கும் உயர்ந்த மறையவர் மரபில் தோன்றிய தூயதோர், சிவந்த கண்ணையுடைய பெரிய காளையையூர்ந்து வருபவரும் இமவானின் மகளான கொடி போன்ற பார்வதியம்மையாரை ஒரு பங்கில் கொண்டவருமான சிவபெருமானின் அடிமைத் திறத்தை விரும்பும் பசுபதியார் என்னும் பெயர் பூண்டவர் ஆவார்.
1034. ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு
மாய னார்அறி யாமலர்ச் சேவடி வழுத்தும் தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி நேய நெஞ்சின ராகிஅத் தொழில்தலை நின்றார்.
தெளிவுரை : திருமாலும் அறியாத மலர் போன்ற திருவடிகளை அந்த அந்தணர் அரிய மறையின் உருத்திர மந்திரத்தைக் கொண்டு துதிக்கும் தொடர்பினால், இடையறாத தூய அன்புடனே சுருதியில் பதிந்த நேயம் கொண்ட உள்ளத்தை உடையவராகி, அதையே ஓதித்துதிக்கின்ற செயலில் சிறந்து விளங்கினார்.
1035. கரையில் கம்பலை புள்ளொலி கறங்கிட மருங்கு
பிரச மென்சுரும் பறைந்திடக் கருவரால் பிறழும் நிரைநெ டுங்கயல் நீரிடை நெருப்பெழுந் தனைய விரைநெ கிழ்ந்தசெங் கமலமென் பொய்கையுள் மேவி.
தெளிவுரை : பறவைகளின் ஒலிகள் அளவில்லாத ஒலியாய் ஒலிக்க, அம்மருங்கிலே மெல்லிய தேன் வண்டுகள் பாட, கரிய வரால் மீன்கள் பிறழ்கின்ற வரிசையாய் நீண்ட கயல் மீன்கள் செல்கின்ற நீரும் தீயெழுந்ததைப் போன்ற மணத்துடன் மலர்ந்த செந்தாமரை மலர்களையுடைய மென்மையான நீர் நிலையில் சென்று,
1036. தெள்ளு தண்புனல் கழுத்தள வாயிடைச் செறிய
உள்ளு றப்புக்கு நின்றுகை யுச்சிமேல் குவித்துத் தள்ளு வெண்டிரைக் கங்கைநீர் ததும்பிய சடையார் கொள்ளு மன்பினி லுருத்திரங் குறிப்பொடு பயின்றார்.
தெளிவுரை : தெளிவான குளிர்ந்த பொய்கையின் நீர் கழுத்தளவு இருக்க உள்ளே பொருந்தப் புகுந்து நின்று, வழியும் வெண்மையான அலைகளையுடைய கங்கை நீர் ததும்பும் சடையையுடைய சிவபெருமான் உவந்து கொள்ளும் அன்புடன் திருவுத்திரத்தை ( அவரது அடிமைத் திறத்தை மனத்தில் கொண்ட) குறிப்போடு சொன்னார்.
1037. அரும றைப்பய னாகிய உருத்திர மதனை
வருமு றைப்பெரும் பகலும்எல் லியும்வழு வாமே திரும லர்ப்பொகுட் டிருந்தவன் அனையவர் சிலநாள் ஒருமை உய்த்திட உமையிடம் மகிழ்ந்தவர் உவந்தார்.
தெளிவுரை : அரிய வேதத்தின் பயனான உருத்திரத்தை நியதிப்படி பெரும் பகலிலும் மாலையிலும் வழுவாமல் தாமரையின் பொகுட்டில் உள்ள நான்முகனைப் போன்ற பசுபதியார், சில நாள் ஒன்றுபட்ட வுணர்வுடன் இங்ஙனம் ஓதி வந்தபோது உமையம்மையை இடப்பக்கத்தில் கொண்ட சிவபெருமான் மகிழ்ந்தார்.
1038. காதல் அன்பர்தம் அருந்தவப் பெருமையுங் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி ஆதி நாயகர் அமர்ந்தருள் செய்யமற் றவர்தாம் தீதி லாநிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்.
தெளிவுரை : விருப்புடைய அன்பரின் அரிய தவத்தின் பெருமையையும், அந்தத் தவத்துடன் கலந்த வேத மந்திரத்தின் நியதியின் அளவு கடந்த மிகுதியையும் ஏற்று, ஆதித்தலைவரான சிவபெருமான், விரும்பி அருள் செய்யவே, பசுபதியார் தீமை இல்லாத சிவன் உலகத்தின் எல்லையை அடைந்தார்.
1039. நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தன ரவர்க்குப் பாடு பெற்றசீர் உருத்திர பசுபதி யாராங் கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற.
தெளிவுரை : பசுபதியார் மிக்க அன்புடனே திருவுருத்திரத்தை ஓதிய நிலைமையினால் இறைவரின் ஆடும் அருகில் பொருந்தச் சேர்ந்தார். ஆகவே, அவருக்குப் பெருமை பெற்ற சிறந்த உருத்திர பசுபதியார் என்று கூறும் பெயரும் உலகம் போற்ற வழங்குவதாயிற்று.
1040. அயில்கொள் முக்குடு மிப்படை யார்மருங் கருளால்
பயில்உ ருத்திர பசுபதி யார்திறம் பரசி எயில்உ டைத்தில்லை யெல்லையில் நாளைப்போ வாராம் செயல்உ டைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்.
தெளிவுரை : கூரிய திரிசூலத்தை உடைய சிவபெருமானின் அருகில் பொருந்திய உருத்திர பசுபதியாரின் திறத்தைத் துதித்து, மதில் சூழ்ந்த தில்லையின் எல்லையில் நாளைப் போவாரான செயல் கொண்ட புறத்திருத் தொண்டரின் திறத்தை இனி கூறுவோம்.
உருத்திர பசுபதி நாயனார் புராணம் முற்றிற்று.
24. திருநாளைப்போவார் நாயனார் புராணம்
சோழமண்டலத்தின் மேற்கா நாட்டைச் சேர்ந்த ஆதனூரில் புலையர் குலத்தில் நந்தனார் என்பவர் தோன்றினார். அவர் பிறந்து உணர்வு தோன்றிய நாள் முதல் சிவபெருமானை அன்றிப் பிறவற்றை நினையாதவர். சிவன் கோயிலில் உள்ள பேரிகை முதலானவற்றுக்குத் தோல், விசிவார் முதலானவற்றை அளித்து வந்தார்; வீணை யாழ் முதலானவற்றுக்கு நரம்புகள் தந்து வந்தார். பின் அக்கோயிலின் பின் பக்கத்தில் இருந்த பள்ளத்தைத் தோண்டிக் குளமாக்கினார். பல தலங்களுக்கும் போய் இறைவரை வணங்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. தில்லையில் கூத்தப்பெருமானை வணங்க வேண்டும் என எண்ணுவார். ஆனால் அது தம் குலத்துக்குப் பொருந்தாது என்று கைவிடுவார். பின் மறுபடியும் தில்லைக்குப் போக வேண்டும் என ஆசை எழும், நாளைப் போவேன் என்பார். (இவ்வாறு நாளைப் போவேன் என்றதால் அவர் நாளைப்போவார் என்று அழைக்கப்பட்டார்.)
இறைவர் அவருக்காக இரங்கி அவரது கனவில் தோன்றி இப்பிறவி ஒழிய எரியில் மூழ்கித் தில்லையந்தணருடன் பொன்னம்பலத்துள் வருக என்றருள் செய்தார். பின் தில்லையந்தணரின் கனவில் தோன்றி, நந்தனார்க்குத் தீயை மூட்டித் தரும்படியுரைத்தார். அந்தணர் தீயை மூட்டி, தாம் தீயை மூட்டியிருப்பதை நந்தனார்க்குக் கூறினர். நான் கடைத்தேறினேன் எனத் தெளிந்து கூத்தப்பெருமானின் அடிகளை நினைத்த வண்ணம், தீயுள் புகுந்தார். அவரது பழம் பிறவி ஒழிந்தது. மார்பில் பூணூலும் தலையில் சடையும் விளங்கத் தீயினின்று வெளிப்பட்டார். விண்ணவர் மலர் மழை பெய்தனர். மண்ணவர் மகிழ்த்து துதித்தனர். அந்தணர் யாவரும் அவரது அடியை வணங்கினர். நந்தனார் பொன்னம்பலத்துள் புகுந்தார். அதன் பின்னர் அவரை எவரும் காணவில்லை! தம் திருவடியைத் தொழுது கொண்டிருக்குமாறு கூத்தப்பெருமான் அருள் செய்தார்.
1041. பகர்ந்துலகு சீர்போற்றும் பழையவளம் பதியாகுந்
திகழ்ந்தபுனல் கொள்ளிடம்பொன் செழுமணிகள் திரைக்கரத்தால் முகந்துதர இருமருங்கும் முளரிமலர்க் கையேற்கும் அகன்பணைநீர் நன்னாட்டு மேற்கானாட் டாதனுர்.
தெளிவுரை : நீர்மிக்க கொள்ளிடம் என்ற ஆறானது பொன்னையும் நல்ல மணிகளையும் தன் அலைகளாகிய கைகளால் எடுத்துத் தர, தம்மிடம் படர்ந்துள்ள தாமரை மலர்களான கைகளால் ஏற்றுக் கொள்கின்ற அகன்ற வயல்களையுடைய நீர்வளம் வாய்ந்த சோழ நாட்டில் உள்ள மேற்காநாடு என்ற பகுதியில் உள்ளது ஆதனூர் என்பது. அது உலகத்தவர் சொல்லிக் கொண்டாடத் தக்க சிறப்புடைய பழைய பதியாகும்.
1042. நீற்றலர்பே ரொளிநெருங்கும் அப்பதியில் நிறைகரும்பின்
சாற்றலைவன் குலைவயலிற் தகட்டுவரால் எழப்பகட்டேர் ஆற்றலவன் கொழுக்கிழித்த சால்வழிபோய் அசைந்தேறிச் சேற்றலவன் கருவுயிர்க்க முருகுயிர்க்கும் செழுங்கமலம்.
தெளிவுரை : திருநீற்றின் பெரிய ஒளி நெருங்கி விளங்கும் அந்த ஊரில் வளர்ந்த கரும்பின் சாற்றால் அலைகின்ற வலிய குலைகளையுடைய வயல்களிலே, தகட்டைப் போன்ற வரால் மீன்கள் எழுமாறு எருமைகள் பூட்டிய ஏர்கள் செல்லும் அந்த வழியில், கலப்பையானது வன்மையான கொழுவினால் கிழித்த படைச்சாலின் வழியில், மெல்ல அடைந்து மேலே ஏறிச் சென்று, சேற்றில் வாழும் நண்டுகள் கருவை ஈனும். அந்தக் கரு உண்ணுமாறு செழுமையான தாமரை மலர்கள் தேனைச் சொரியும்.
1043. நனைமருவும் சினைபொதுளி நறுவிரைசூழ் செறிதளிரில்
தினகரமண் டலம்வருடும் செழுந்தருவின் குலம்பெருகிக் கனமருவி அசைந்தலையக் களிவண்டு புடைசூழப் புனல்மழையோ மதுமழையோ பொழிவொழியா பூஞ்சோலை.
தெளிவுரை : பூஞ்சோலைகள், அரும்புகள் நிறைந்த கொம்புகள் செறிந்து மிக்க மணம் கமழும் தளிர்களால் ஞாயிற்று மண்டலத்தைத் தடவும் செழுமையான மரங்களின் கூட்டம் பெருகி, மேகங்களும் பொருந்தி, அசைந்து அலைவதால், தேன் வண்டுகள் பக்கங்களில் எல்லாம் சூழ, நீர் மழையோ அல்லது தேன் மழையோ, ஒழியாமல் பெய்த வண்ணம் விளங்கும்,
1044. பாளைவிரி மணங்கமழும் பைங்காய்வன் குலைத்தெங்கின்
தாளதிர மிசைமுட்டித் தடங்கிடங்கின் எழப்பாய்ந்த வாளைபுதை யச்சொரிந்த பழம்மிதப்ப வண்பலவின் நீளமுதிர் கனிகிழிதேன் நீத்தத்தில் எழுந்துகளும்.
தெளிவுரை : வாளை மீன்கள் இளைய பாளைகள் விரிந்து மணம் வீசுவனவும், பசுமையான காய்களையுடைய வளமான குலைகளை யுடையனவுமான தென்னை மரங்களின் அடிப்பகுதியில் மரம் அசையும்படி முட்டிப் பெரிய நீர்ப் பள்ளங்களினின்றும் மேலே எழுந்து பாய்ந்து, கீழே சேற்றில் புதையுமாறு விழுந்த தென்னையின் நெற்றுக்கள் மிதக்கும்படி வலிய பலா மரங்களின் நீண்ட முதிர்ந்த கனிகள் கிழிந்து வழிந்து பெருகிய தேன் வெள்ளத்தில் எழுந்து குதிக்கும்,
1045. வயல்வளமுஞ் செயல்படுபைந் துடவையிடை வருவளமும்
வியலிடம்எங் கணும்நிறைய மிக்கபெருந் திருவினவாம் புயலடையும் மாடங்கள் பொலிவெய்த மலிவுடைத்தாய் அயலிடைவே றடிநெருங்கக் குடிநெருங்கி யுளதவ்வூர்.
தெளிவுரை : வயலில் உண்டாகும் வளங்களும் கைவினையால் விளைவிக்கப்படும் பசிய தோட்ட நிலங்களினின்றும் வரும் வளங்களும் அகன்ற இடம் எங்கும் நிறைந்திட, அவற்றால் மிக்க செல்வங்களை யுடையனவாகி, முகில் தவழும் அளவும் உயர்ந்த அளவற்ற மாளிகைகள் விளங்க, பக்க இடங்களில் நெருங்கி மேலும் குடிகள் தழைக்கும்படியாகக் குடிகளின் நெருக்கத்தைக் கொண்டது அந்த ஆதனூர்.
1046. மற்றவ்வூர்ப் புறம்பணையின் வயல்மருங்கு பெருங்குலையில்
சுற்றம்விரும் பியகிழமைத் தொழிலுழவர் கிளைதுவன்றிப் பற்றியபைங் கொடிச்சுரைமேற் படர்ந்தபழங் கூரையுடைப் புற்குரம்பைச் சிற்றில்பல நிறைந்துளதோர் புலைப்பாடி.
தெளிவுரை : அந்த ஆதனூரின் வெளியே உள்ள மருத நிலத்தைச் சேர்ந்த வயல்களின் பக்கத்தில் உள்ள வெளி நிலத்தில் புலைச்சேரி ஒன்று இருந்தது. சுற்றம் தழுவுதலை விரும்பிய உரிமையுடைய தொழிலாளரான உழவ மாக்களின் கூட்டம் நிரம்பி, பற்றிய சுரைக்கொடி மேலே படர்ந்த பழைய கூரையை உடைய புல்லால் வேயப்பட்ட சிறிய இல்லங்கள் பல நிலைகளாக நெருங்கி விளங்கப் பெற்றது.
1047. கூருகிர்மெல் லடியளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும்
வார்பயில்முன் றிலில்நின்ற வள்ளுகிர்நாய்த் துள்ளுபறழ் காரிரும்பின் சரிசெறிகைக் கருஞ்சிறார் கவர்ந்தோட ஆர்சிறுமென் குரைப்படக்கும் அரைக்கசைத்த இருப்புமணி.
தெளிவுரை : அந்தச் சேரியில் உள்ள வீடுகளில் கூர்மையான நகங்களையும் மென்மையான அடிகளையும் கொண்ட பெட்டைக்கோழியின் சிறிய குஞ்சுகள் தாயுடன் சுற்றிக் கொண்டிருக்கும். முற்றங்களில் நாய்க்குட்டிகள் விளையாடும். அவற்றைக் கரிய இரும்புக் காப்புகளை நெருக்கமாக அணிந்த கரிய சிறுவர் கவர்ந்து ஓடுவர், அதனால் அக்குட்டிகளின் மென்மையான நிறைந்த குரைப்பு ஓசையை அந்தச் சிறுவர் இடையில் கட்டிய இரும்பு மணியின் சதங்கைகள் அடக்கி விடும்.
1048. வன்சிறுதோல் மிசையுழத்தி மகவுறக்கும் நிழன்மருதுந்
தன்சினைமென் பெடையொடுங்குந் தடங்குழிசிப் புதைநீழல் மென்சினைய வஞ்சிகளும் விசிப்பறைதூங் கினமாவும் புன்றலைநாய்ப் புனிற்றுமுழைப் புடைத்தெங்கும் உடைத்தெங்கும்.
தெளிவுரை : அந்தப் புலைப்பாடியில் மருத மர நிழலில் உழத்தியர் தம் குழந்தைகளை உறங்கச் செய்வர். வஞ்சிமர நிழலில் புதைக்கப்பட்ட பெரிய பானைகளில் பெட்டைக்கோழிகள் தம் முட்டைகளை அடைகாத்துக் கொண்டு ஒடுங்கி கிடக்கும். மாமரங்களில் வார்களால் இழுத்துக் கட்டப்பட்ட பறை மேளங்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். தென்னை மரங்களின் அடியில் உள்ள பொந்துகளில் நாய்க்குட்டிகள் தங்கும்.
1049. செறிவலித்திண் கடைஞர்வினைச் செயல்புரிவை கறையாமக்
குறியளக்க அழைக்குஞ்செங் குடுமிவா ரணச்சேக்கை வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி விரிநீழல் மருங்கெல்லாம் நெறிகுழற்புன் புலைமகளிர் நெற்குறுபாட் டொலிபரக்கும்.
தெளிவுரை : மிக்க வன்மையுடைய திண்மையான பள்ளர்கள் உழவுத் தொழிலுக்கான செயல்களைச் செய்ய வேண்டிய காலமான விடியற்காலத்தை அளந்து காட்டி அவர்களைத் தொழிலில் புகுத்த அழைக்கின்ற, சிவந்த உச்சிக் கொண்டையை உடைய கோழிகள் தங்குவதற்கு இடமானது மணம் கமழும் குளிர்ந்த கிளைகளையுடைய காஞ்சி மரநிழல். அதன் பக்கங்களில் எல்லாம் சுருண்ட கூந்தலையுடைய புலை மகளிர் நெல்லைக் குற்றுவர். அப்பாட்டின் ஒலி எங்கும் ஒலிக்கும்.
1050. புள்ளுந்தண் புனற்கலிக்கும் பொய்கையுடைப் புடையெங்கும்
தள்ளும்தாள் நடையசையத் தளையவிழ்பூங் குவளைமது விள்ளும்பைங் குழற்கதிர்நெல் மிலைச்சியபுன் புலைச்சியர்கள் கள்ளுண்டு களிதூங்கக் கறங்குபறை யுங்கலிக்கும்.
தெளிவுரை : அப்புலைப் பாடியில் உள்ள பொய்கையின் பக்கங்களில் எல்லாம் பறவைகளும் குளிர்ந்த நீரில் ஒலிக்கும். தள்ளாடிச் செல்லும் காலின் நடை அசைதலால் தளை அவிழ்ந்து மலர்ந்த குவளை மலர்கள் தேனைச் சிந்துவதற்கு இடமான பசிய கூந்தலில் புலைச்சியர் நெற்கதிர்களைச் சூடிக்கொண்டு கள்ளினை உண்டு ஆடுவர். அவர்களின் ஆட்டத்திற்கு ஏற்பப் பறைகளும் ஒலிக்கும்.
1051. இப்படித்தா கியகடைஞர் இருப்பின்வரைப் பினின்வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன்கழற்கே விளைத்தஉணர் வொடும்வந்தார் அப்பதியில் ஊர்ப்புலைமை யான்றதொழில் தாயத்தார் ஒப்பிலவர் நந்தனார் எனவொருவர் உளரானார்.
தெளிவுரை : இத்தகைய இயல்புடையதாய் விளங்கும் புலைப்பாடியில், தம் உண்மை அன்பைச் சிவபெருமானின் திருவடிக்கே விளைவித்தலால் உண்டான முன் உணர்ச்சியோடு இவ்வுலகத்தில் நந்தனார் என்ற பெயரையுடைய ஒருவர் இருந்தார். அவர் அவ்வூரின் வெட்டிமைத் தொழிலைத் தாயமாக உடையவர். அவர் தமக்கு ஒப்பில்லாதவராகச் சிறந்து விளங்கினார்.
1052. பிறந்துணர்வு தொடங்கியபின் பிறைக்கண்ணிப் பெருத்தகைபால்
சிறந்தபெருங் காதலினால் செம்மைபுரி சிந்தையராய் மறந்தும்அயல் நினைவின்றி வருபிறப்பின் வழிவந்த அறம்புரிகொள் கையராயே அடித்தொண்டின் நெறிநின்றார்.
தெளிவுரை : அவர் இந்த உலகத்தில் வந்து தோன்றி உணர்வு தெரியத் தொடங்கிய பின்பு, அந்த நாள் முதலாய், பிறை மதியான கண்ணி மாலை சூடிய பெருந்தகையாம் சிவபெருமானிடத்தில் சிறப்புடைய பெரிய விருப்பால் பேரன்பு கொண்ட மனத்தை உடையவராய் விளங்கினார். மறந்தும் வேறு தெய்வங்களிடத்தும் தீய தொழில்களிலும் மனத்தைச் செலுத்தாது, தம் குலத்துக்குரிய சிவதருமங்களைச் செய்து கொண்டு, சிவனடிக்கீழ் அடிமை செய்து வாழ்ந்து வந்தார்.
1053. ஊரில்விடும் பறைத்துடவை உணவுரிமை யாக்கொண்டு
சார்பில்வருந் தொழில்செய்வார் தலைநின்றார் தொண்டினால் கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயில்தொறும் பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும்.
தெளிவுரை : ஊரில் விடப்பட்ட வெட்டிமைத் தொழிலுக்கான மானிய நிலத்தின் வருவாயைத் தம் உணவுக்கு ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். தம் பிறப்பினால் வரும் தொழிலைச் செய்து வந்த அவர் இறைவனின் திருத்தொண்டில் தலை நின்றார். கூர்மையான மூன்று தலைகளையுடைய சூலத்தை ஏந்திய சிவபெருமானின் கோயில் தோறும் பேரிகை முதலான முகக்கருவிகளுக்கும்,
1054. போர்வைத்தோல் விசிவார்என் றினையனவும் புகலுமிசை
நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலைவகையில் சேர்வுற்ற தந்திரியும் தேவர்பிரான் அர்ச்சனைகட் கார்வத்தி னுடன்கோரோ சனையும்இவை அளித்துள்ளார்.
தெளிவுரை : போர்வைத் தோலும், கட்டப்படும் வாருள் தந்து வந்தார். மற்றும் இவ்வாறான மற்றச் சாதனங்களும், இசைக்கின்ற நேர்மையுடைய வீணைக்கும் யாழுக்கும் அவற்றுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான நரம்பும் தந்த வந்தார். அன்புடனே தேவர் பெருமானான சிவபெருமானின் அர்ச்சனைக்கு வேண்டிய கோரோசனை முதலான பொருள்களும் அவர் தந்து வந்தார்.
1055. இவ்வகையால் தந்தொழிலின் இயன்றவெலாம் எவ்விடத்தும்
செய்வனவுங் கோயில்களிற் திருவாயிற் புறநின்று மெய்விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும் அவ்வியல்பிற் பாடுதலு மாய்நிகழ்வார் அந்நாளில்.
தெளிவுரை : இங்ஙனம் தம் தொழிலில் முடிந்த அளவு எல்லாவற்றையும் எங்கும் நந்தனார் செய்தார். திருக்கோயிலின் திருவாயிலின் வெளியே நின்று, உண்மை பொருந்திய பேரன்பில் மிகுதியால் ஆடுவதும் பாடுவதுமாய் இருந்து வந்தார், அக்காலத்தில்,
1056. திருப்புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிகநினைந்து
விருப்பினொடுந் தம்பணிகள் வேண்டுவன செய்வதற்கே அருத்தியினால் ஒருப்பட்டங் காதனூர் தனில்நின்றும் வருத்தமுறுங் காதலினால் வந்தவ்வூர் மருங்கணைந்தார்.
தெளிவுரை : திருப்புன்கூர் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவலோகநாதரின் செம்மையான திருவடிகளை மிகவும் எண்ணி விருப்பத்துடனே, தாம் வேண்டிய திருப்பணிகளைச் செய்வதற்கு உண்டான ஆசையால் உள்ளம் ஒருமைப்பட்டவராய், தம் ஆதனூரினின்றும் புறப்பட்டு, வருத்தமுறும் காதலால், அந்தத் திருப்புன்கூர் தலத்தின் பக்கத்தை வந்து அடைந்தார்.
1057. சீரேறும் இசைபாடித் திருத்தொண்டர் திருவாயில்
நேரேகும் பிடவேண்டும் எனநினைந்தார்க் கதுநேர்வார் காரேறும் எயிற்புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு போரேற்றை விலங்கஅருள் புரிந்தருளிப் புலப்படுத்தார்.
தெளிவுரை : சிறப்புடைய இசையைப் பாடி நந்தனார் திருப்புன்கூர் வாயிலில் நின்றுகொண்டு இறைவனை நேரே கண்டு வணங்க வேண்டும் என்று நினைத்தார். அவ்வாறு நினைந்த அவர்க்கு, அவ்வாறே இறைவன் அருள் செய்பவராய், மேகங்கள் தவழ்ந்து செல்லும் மதில் சூழ்ந்த திருப்புன்கூரில் வீற்றிருக்கும் சிவலோகநாதர், தம் திருமுன்பு இருக்கும் போர் வல்ல ஏற்றை விலகி இருக்கும்படி ஆணையிட்டுத் தம்மை நந்தனார்க்கு நேரான காட்சி புலப்படும்படி செய்தருளினார்.
1058. சிவலோகம் உடையவர்தம் திருவாயில் முன்னின்று
பவலோகங் கடப்பவர்தம் பணிவிட்டுப் பணிந்தெழுந்து சுவலோடு வாரலையப் போவார்பின் பொருசூழல் அவலோடும் அடுத்ததுகண் டாதரித்துக் குளந்தொட்டார்.
தெளிவுரை : சிவலோக நாதரின் கோயில்கள் திருவாயில் முன்னம் நின்று, இவ்வுலகத்தில் பிறவியைக் கடக்கும் சிவநெறியில் நின்று நந்தனார், இறைவனை வழிபடுகின்ற பணியை முடித்துக் கொண்டு பணிந்து எழுந்து செல்லலானார். அவ்வாறு செல்பவர் அந்தக் கோயிலை அடுத்துள்ள பின்பக்கம் ஓர் இடம் பள்ளமாய் இருத்தலைப் பார்த்து அதனைக் குளமாகத் தோண்டினார்.
1059. வடங்கொண்ட பொன்னிதழி மணிமுடியார் திருவருளால்
தடங்கொண்ட குளத்தளவு சமைத்ததற்பின் தம்பெருமான் இடங்கொண்ட கோயில்புறம் வலங்கொண்டு பணிந்தெழுந்து நடங்கொண்டு விடைகொண்டு தம்பதியில் நண்ணினார்.
தெளிவுரை : மாலை போல் மலர்கின்ற பொன் நிறம் கொண்ட கொன்றை மலரைச் சூடிய திருமுடியைக் கொண்ட சிவபெருமானின் திருவருளால், இடம் அகன்ற குளத்துக்கு ஏற்றவாறு தோண்டினார். பின்னர்த் தம் இறைவர் எழுந்தருளியிருக்கும் கோயிலை வெளியே வலமாகச் சூழ்ந்து வந்து பணிந்து எழுந்து கூத்தாடி, அவரிடம் விடைபெற்றுக் கொண்டு, தம் ஊரைப் போய் அடைந்தார்.
1060. இத்தன்மை ஈசர்மகிழ் பதிபலவுஞ் சென்றிறைஞ்சி
மெய்த்ததிருத் தொண்டுசெய்து விரவுவார் மிக்கெழுந்த சித்தமொடுந் திருத்தில்லைத் திருமன்று சென்றிறைஞ்ச உய்த்தபெருங் காதலுணர் வொழியாது வந்துதிப்ப.
தெளிவுரை : சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கும் பதிகள் பலவற்றுக்கும் போய் இவ்வாறு வணங்கி உண்மையான திருத்தொண்டைச் செய்து வாழ்ந்து வந்தார் நந்தனார். அவர் அன்பானது மேல் மேல் எழுந்த உள்ளத்துடன் திருத்தில்லையில் உள்ள திருவம்பலத்தைக் கண்டு வணங்குவதற்கு உண்டான பெருங்காதல் உணர்வானது நீங்காது வந்து தோன்ற,
1061. அன்றிரவு கண்துயிலார் புலர்ந்ததற்பின் அங்கெய்த
ஒன்றிஅணை தருதன்மை உறுகுலத்தோ டிசைவில்லை என்றிதுவும் எம்பெருமான் ஏவலெனப் போக்கொழிவார் நன்றுமெழுங் காதல்மிக நாளைப்போ வேன்என்பார்.
தெளிவுரை : அன்றைய இரவு கண் உறங்காதவர் ஆனார். விடிந்த பின், அந்தத் தில்லையில் சேரும் தன்மை என் குலத்துக்குப் பொருந்துவதில்லை என்று எண்ணினார். எனக்குத் தோன்றிய இந்த எண்ணமும் எம்பிரானது ஏவலே! எனவும் அவர் எண்ணினார். அங்குச் செல்லும் முயற்சியை ஒழித்திட்டார்; அதன்பின் மேன்மேலும் எழும் ஆசை அதிகரிக்க நாளைப் போவேன்! என்று கூறினார்.
1062. நாளைப்போ வேன்என்று நாள்கள்செலத் தரியாது
பூளைப்பூ வாம்பிறவிப் பிணிப்பொழியப் போவாராய்ப் பாளைப்பூங் கமுகுடுத்த பழம்பதியி னின்றும்போய் வாளைப்போத் தெழும்பழனம் சூழ்தில்லை மருங்கணைவார்.
தெளிவுரை : இங்ஙனம் அவர் நாளைப் போவேன் என்று சொல்லிப் பல நாட்களும் கழிந்தன. பின் அவர் மனம் பெறாமல், பூளைப் பூப்போன்ற பிறவியான கட்டு நீங்கப் போவதற்குத் துணிவு கொண்டவராய், பாளைகளில் பூக்கள் நிறைந்துள்ள பாக்கு மரங்கள் சூழ்ந்த அந்தப் பழமையான ஊரினின்று புறப்பட்டுச் சென்று, ஆண் வாளை மீன்கள் எழுந்து பாய்வதற்கு இடமான வயல்கள் சூழ்ந்த தில்லையின் பக்கத்தை அடைவார் ஆனார்.
1063. செல்கின்ற போழ்தந்தத் திருவெல்லை பணிந்தெழுந்து
பல்குஞ்செந் தீவளர்த்த பயில்வேள்வி எழும்புகையும் மல்குபெருங் கிடையோதும் மடங்கள்நெருங் கினவுங்கண் டல்குந்தங் குலம்நினைந்தே அஞ்சியணைந் திலர்நின்றார்.
தெளிவுரை : அங்ஙனம் நந்தனார் செல்லும்போது, அந்தத் தில்லையின் எல்லையினை வணங்கினார். எழுந்து பெருகும் சிவந்த தீயை வளர்க்கும் வேள்விகளில் எழும் புகையையும், பெரிய அந்தணச் சிறுவர் மறைகளை ஓதுகின்ற மடங்கள் இருப்பதனையும் கண்டார்; அவற்றைக் கண்டதும் தம் கீழான தம் குலத்தை எண்ணி அஞ்சி மேலே செல்லாதவாறு நின்றார்.
1064. நின்றவர்அங் கெய்தரிய பெருமையினை நினைப்பார்முன்
சென்றிவையுங் கடந்தூர்சூழ் எயில்திருவா யிலைப்புக்கால் குன்றனைய மாளிகைகள் தொறுங்குலவும் வேதிகைகள் ஒன்றியமூ வாயிரம்அங் குளவென்பார் ஆகுதிகள்.
தெளிவுரை : அங்ஙனம் நின்ற நந்தனார், அத்தில்லையில் தாம் சென்று சேர்வதற்கு அரிய பெருமையை எண்ணினார். இதற்கு மேல் முன் சென்று இவற்றையும் கடந்து ஊரைச் சுற்றிச் சூழ்ந்த மதிலின் வாயிலில் புகுந்தால் அங்கு மலை போன்ற மாடங்கள் தோறும் பொருந்திய வேதிகைகளுடன் பொருந்திய மூவாயிரம் ஆகுதிகள் இருக்கின்றன எனக்கூறுவர்.
1065. இப்பரிசா யிருக்கவெனக் கெய்தலரி தென்றஞ்சி
அப்பதியின் மதிற்புறத்தின் ஆராத பெருங்காதல் ஒப்பரிதாய் வளர்ந்தோங்க உள்ளுருகிக் கைதொழுதே செப்பரிய திருவெல்லை வலங்கொண்டு செல்கின்றார்.
தெளிவுரை : இங்ஙனம் இருத்தலால் நான் அங்குச் சென்று சேர்தல் எனக்கு அரியதாகும் என்ற அஞ்சி, அந்தத் தலத்தின் மதிலின் வெளிப்பக்கத்தில் அடங்காத பெருங்காதல் ஒப்பில்லாததாய் மேல்மேல் வளர்ந்து பெருக, உள்ளம் உருகிக் கைகளால் தொழுது, கூறுவற்கரிய அந்த நகரத்தை எல்லையிலே வலமாக வரலானார்.
1066. இவ்வண்ணம் இரவுபகல் வலஞ்செய்தங் கெய்தரிய
அவ்வண்ணம் நினைந்தழிந்த அடித்தொண்ட ரயர்வெய்தி மைவண்ணத் திருமிடற்றார் மன்றில்நடங் கும்பிடுவ தெவ்வண்ணம் எனநினைந்தே ஏசறவி னொடுந்துயில்வார்.
தெளிவுரை : இங்ஙனம் இரவும் பகலும் அத்தில்லையை வலமாக வந்து, அந்நகரத்தினுள் சென்று சேர்வதற்கரிய அத்தன்மையை எண்ணி மனம் வருந்திய தொண்டர் நந்தனார் அயர்ந்து, மைபோல் கரிய திருமிடற்றையுடைய இறைவரின் திருவம்பலத்தின் நடனத்தைக் கண்டு வணங்குவது எப்படி? என எண்ணி வருத்தத்துடன் உறங்கலானார்.
1067. இன்னல்தரும் இழிபிறவி இதுதடையென் றேதுயில்வார்
அந்நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்தருளி மன்னுதிருத் தொண்டரவர் வருத்தமெலாந் தீர்ப்பதற்கு முன்னணைந்து கனவின்கண் முறுவலொடும் அருள்செய்வார்.
தெளிவுரை : துன்பத்தைத் தரும் இந்தப் பிறவியானது தடையாய் உள்ளது! என்று மனத்தில் எண்ணி நந்தனார் உறங்கினார். அந்த நிலைமையினை அம்பலத்துள் ஆடும் அம்பலவாணர் அறிந்தருளினார். நிலைபெற்ற அந்தத் தொண்டரின் வருத்தம் எல்லாவற்றையும் போக்குவதற்காக அவர்க்கு முன்பு கனவில் புன்சிரிப்புடன் அருள் செய்யலானார்.
1068. இப்பிறவி போய்நீங்க எரியினிடை நீமூழ்கி
முப்புரிநூல் மார்பருடன் முன்னணைவாய் எனமொழிந் தப்பரிசே தில்லைவாழ் அந்தணர்க்கும் எரியமைக்க மெய்ப்பொருளா னார்அருளி அம்பலத்தே மேவினார்.
தெளிவுரை : இந்தப் பிறவி போய் நீங்குவதற்காகத் தீயிடத்து நீ முழுகிப் பூணூல் அணிந்த மார்பையுடைய அந்தணர்களுடன் என முன் வருவாயாக! எனக்கூறிய மெய்ப்பொருளான இறைவர், அவ்வாறே தில்லையில் வாழும் அந்தணர்க்கும் கனவிலே தோன்றி நந்தனார் மூழ்குவதற்குத் தீ அமைத்துக் கொடுக்கும்படி அருள் செய்து, பின் தம் சிற்றம்பலத்தை அடைந்தார்.
1069. தம்பெருமான் பணிகேட்ட தவமறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயில் முன்பச்ச முடன்ஈண்டி எம்பெருமான் அருள்செய்த பணிசெய்வோம் என்றேத்தித் தம்பரிவு பெருகவருந் திருத்தொண்டர் பாற்சார்ந்தார்.
தெளிவுரை : தம் இறைவனிடம் கட்டளையைக் கேட்ட தவ மறையவரான தில்லைவாழ் அந்தணர் யாவரும், அம்பலவாணரின் கோயில் திருவாயில் முன்னம் அச்சத்துடன் வந்து கூடி, நம் இறைவர் அருளிய பணியை நாம் செய்வோம்! என்று ஏத்திச் சென்று, தம் அன்பு பெருக வருகின்ற திருநாளைப் போவாரிடம் வந்தனர்.
1070. ஐயரே அம்பலவர் அருளால்இப் பொழுதணைந்தோம்
வெய்யஅழல் அமைத்துமக்குத் தரவேண்டி எனவிளம்ப நையுமனத் திருத்தொண்டர் நானுய்ந்தேன் எனத்தொழுதார் தெய்வமறை முனிவர்களும் தீயமைத்த படிமொழிந்தார்.
தெளிவுரை : தலைவரே! கூத்தப்பெருமான் கொடிய தீயை உமக்கு அமைத்துத் தருமாறு அருள் செய்ததால், இப்போது உம்மிடம் வந்தோம்! என்று உரைத்தனர். வருந்தும் மனத்தையுடைய திருத்தொண்டரான நந்தனார் நான் உய்ந்தேன்! என்று வணங்கினார். அவரது இசைவைப் பெற்ற தெய்வ மறை முனிவர்களும் அவ்வாறே தீ அமைத்து, அமைத்த அச்செய்தியைத் திரும்ப வந்து அவர்க்குத் தெரிவித்தனர்.
1071. மறையவர்கள் மொழிந்ததற்பின் தென்றிசையின் மதிற்புறத்துப்
பிறையுரிஞ்சும் திருவாயில் முன்னாகப் பிஞ்ஞகர்தம் நிறையருளால் மறையவர்கள் நெருப்பமைத்த குழியெய்தி இறையவர்தாள் மனங்கொண்டே எரிசூழ வலங்கொண்டார்.
தெளிவுரை : மறையவர் அங்ஙனம் அறிவித்த பின்பு தென்திசை மதில் புறத்தில் உள்ள சந்திரனைத் தொடுமாறு உயர்ந்த திருவாயிலின் முன் சிவபெருமானின் நிறைந்த பேரருளால், மறையவர் தீயை வளர்த்த தீக்குழியினை அடைந்து, இறைவரின் திருவடிகளை மனத்தில் கொண்டு நந்தனார் அந்தத் தீயினைச் சுற்றி வலமாக வந்தார்.
1072. கைதொழுது நடமாடும் கழலுன்னி அழல்புக்கார்
எய்தியஅப் பொழுதின்கண் எரியின்கண் இம்மாயப் பொய்தகையும் உருவொழித்துப் புண்ணியமா முனிவடிவாய் மெய்திகழ்வெண் ணூல்விளங்க வேணிமுடி கொண்டெழுந்தார்.
தெளிவுரை : நந்தனார் கைகளைக் கூப்பித் தொழுது, ஐந்து தொழில் திருக்கூத்து இயற்றுகின்ற திருவடியை எண்ணித் தீயுள் புகுந்தார். அப்போது தீயில் இந்த மாயா காரியமாகிய பொய் பொருந்திய வடிவை ஒழித்துப் புண்ணிய வடிவம் உடைய முனிவர் கோலம் பூண்டு, மார்பில் பூணூல் விளங்க, சடைமுடியும் கொண்டு அவர் அத்தீயினின்றும் வெளிப்பட்டார்.
1073. செந்தீமேல் எழும்பொழுது செம்மலர்மேல் வந்தெழுந்த
அந்தணன்போல் தோன்றினார் அந்தரதுந் துபிநாதம் வந்தெழுந்த துயர்விசும்பில் வானவர்கள் மகிழ்ந்தார்த்துப் பைந்துணர்மந் தாரத்தின் பனிமலர்மா ரிகள்பொழிந்தார்.
தெளிவுரை : அங்ஙனம் அவர் செந்தீயின் மீது வந்து எழுந்த போது, செந்தாமரை மலர் மீது வந்து எழுந்த அந்தணனான நான்முகன் போல் தோன்றினார். அப்போது உயர்ந்த வானத்தில் துந்துபி முரசின் முழக்கமானது ஒலித்தது. தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரம் செய்து புதிய இதழ்கள் கொண்ட மந்தாரப் புது மலர் மழை பெய்தனர்.
1074. திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கைதொழுதார்
பரவரிய தொண்டர்களும் பணிந்துமனங் களிபயின்றார் அருமறைசூழ் திருமன்றில் ஆடுகின்ற கழல்வணங்க வருகின்றார் திருநாளைப் போவாராம் மறைமுனிவர்.
தெளிவுரை : இறைவன் அருளான திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கைகூப்பி வணங்கினர். போற்றுவதற்கு அரிய சிறப்புடைய திருத்தொண்டர்கள் பணிந்து மனம் மிகவும் களிப்படைந்தனர். அரிய வேதங்கள் சூழ்ந்து துதிக்கும் அம்பலத்தில் அருட் பெருங்கூத்து ஆடும் திருவடியை வணங்குவதற்காகத் திருநாளைப் போவாரான மறைமுனிவர் செல்லலானார்.
1075. தில்லைவாழ் அந்தணரும் உடன்செல்லச் சென்றெய்திக்
கொல்லைமான் மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழுதிறைஞ்சி ஒல்லைபோய் உள்புகுந்தார் உலகுய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்களுங் கண்டிலரால்.
தெளிவுரை : தில்லைவாழ் அந்தணர்களும் உடன் வரப்போய்த் திருநகரத்தின் உள்ளே புகுந்து, கொல்லை வாழும் இயல்புடைய மானைக் கொண்ட கையையுடைய சிவபெருமானின் திருக்கோபுரத்தைத் தொழுது வணங்கி விரைவாய்ப் போய் உள்ளே புகுந்தார். உலகெல்லாம் உய்வதற்காக அருட் கூத்து ஆடுகின்ற எல்லையைக் கூடினார். அதன் பின்பு அவரை எவரும் பார்க்கவில்லை.
1076. அந்தணர்கள் அதிசயித்தார் அருமுனிவர் துதிசெய்தார்
வந்தணைந்த திருத்தொண்டர் தம்மைவினை மாசறுத்துச் சுந்தரத்தா மரைபுரையும் துணையடிகள் தொழுதிருக்க அந்தமிலா ஆனந்தப் பெருங்கூத்தர் அருள்புரிந்தார்.
தெளிவுரை : அங்கு நிகழ்ந்ததைக் கண்டு அந்தணர்கள் வியப்புக் கொண்டனர். அரிய முனிவர் துதித்தனர். தம்மை வந்தடைந்த திருத்தொண்டரை வினை மாசு அறுத்து அழகான தாமரை போன்ற அடிகளை வணங்கித் தொழுத வண்ணம் இருக்குமாறு, எல்லை இல்லாத ஆனந்தக் கூத்தரான அம்பலவாணர் அருள் செய்தார்.
1077. மாசுடம்பு விடத்தீயில் மஞ்சனஞ்செய் தருளிஎழுந்
தாசில்மறை முனியாகி அம்பலவர் தாளடைந்தார் தேசுடைய கழல்வாழ்த்தித் திருக்குறிப்புத் தொண்டர்வினைப் பாசம்அற முயன்றவர்தம் திருத்தொண்டின் பரிசுரைப்பாம்.
தெளிவுரை : குற்றம் பொருந்திய உடலை விடுவதற்காகத் தீயிலே குளித்து மேல் எழுந்து குற்றம் இல்லாத முனிவராகி, அம்பலவாணரின் திருவடியை அடைந்திட்ட நந்தனாரின் தேசுடைய திருவடிகளை வாழ்த்தி, அதன் மேல் திருக்குறிப்புத் தொண்டர் என்ற வினைப் பாசம் போக்க முயன்றவரின் திருப்பணியின் தன்மையினை இனிக் கூறுவோம்.
திருநாளைப் போவார் புராணம் முற்றிற்று.
25. திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்
தொண்டை நாட்டில் உள்ள காஞ்சியம்பதியில் வண்ணார் குலத்தில் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் என்பவர் தோன்றினார். அவர் அடியாரின் உள்ளக் குறிப்பை அறிந்து தொண்டு செய்தார். ஆதலால் திருக்குறிப்புத் தொண்டர் என்ற பெயரைப் பெற்றார். சிவனடியார்களுக்கு அவர் துணியை வெளுத்துத் தருவதை விருப்புடன் செய்து வந்தார். ஒரு குளிர்காலம், சிவபெருமான் ஒரு சிவனடியார் கோலம் கொண்டு திருக்குறிப்புத் தொண்டரிடம் சென்றார். அவர் தம் பொன்னிகர் மேனியின் மேல் கண்ணாயிரம் கொண்ட ஆடையை உடுத்திருந்தார். அதுவும் அழுக்கேறிய நிலையினது. திருக்குறிப்புத் தொண்டர் அவரது அடியில் விழுந்து வணங்கினார். அவரது ஆடையைத் தரின் தாம் வெளுத்துத் தருவதாக உரைத்தார். அங்ஙனமே மாலைக்குள் வெளுத்துத் தருவதற்குத் திருக்குறிப்புத் தொண்டர் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து ஆடையை வாங்கி வெளுத்தார்; உலர்த்தத் தொடங்கினார். அப்போது பெருமழை நிற்காது தொடர்ந்து பெய்யத் தொடங்கிற்று. திருக்குறிப்புத் தொண்டர்க்கு மிகவும் வருத்தம் உண்டாகியது. கதிரவனும் மேற்கே மறைந்தான். அதனால் தாம் அடியார்க்கு அளித்த வாக்குறுதி தவறிவிட்டதே எனக் கலங்கித் தற்கொலை செய்து கொள்ளத் துணி துவைக்கும் கல்லில் தலையை மோதினார். அப்போது இறைவரின் திருக்கை அக்கல்லினின்று நீண்டு தொண்டரின் தலையைப் பிடித்துக் கொண்டது. நீர் மழை நின்றது. மலர் மழை பெய்தது! விண்ணில் சிவபெருமான் எழுந்தருளி, உன் அன்பை மூவுலகறியவே இவ்வாறு செய்தேன். நீ என் பேரின்ப உலகில் வாழ்க! என்று அருள் செய்தார்.
1078. ஏயு மாறுபல் உயிர்களுக் கெல்லையில் கருணைத்
தாய னாள்தனி யாயின தலைவரைத் தழுவ ஆயு நான்மறை போற்றநின் றருந்தவம் புரியத் தூய மாதவஞ் செய்தது தொண்டைநன் னாடு.
தெளிவுரை : பொருந்துமாறு பல உயிர்களுக்கும் எல்லையற்ற கருணைத்தாய் போற்ற உமையம்மையார் தனிப்பட்டுள்ள தம் தலைவரை (சிவபெருமானை)த் தழுவுவதற்காக, நான்கு வேதங்களும் போற்ற, ஆகமத்தின் வழியில் நின்று, தன்னிடம் அரிய தவம் செய்யும்படியான பெருந்தவத்தைக் கொண்டது தொண்டை நாடு.
1079. நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமைசால் பெருங்குடி தழைப்ப வன்மை ஓங்கெயில் வளம்பதி பயின்றது வரம்பின் தொன்மை மேன்மையில் நிகழ்பெருந் தொண்டைநன் னாடு.
தெளிவுரை : அப்பெருந் தொண்டை நாடு நன்மை மிக்க நடுநிலை ஒழுக்கத்தில் விருப்பம் உடைய தலைமையுடைய பெருங்குடிகள் தழைத்து ஓங்க வலிய பெரிய மதில்களையுடைய வளம் உடைய நகரங்கள் பலவற்றைத் தன்னிடம் கொண்டது. எல்லை இல்லாத பழைய மேம்பாடுகளுடன் விளங்குவது.
1080. நற்றி றம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவைவந்
துற்ற போதுதம் முயிரையும் வணிகனுக் கொருகால் சொற்ற மெய்ம்மையுந் தூக்கிஅச் சொல்லையே காககப் பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெருந்தொண்டை நாடு.
தெளிவுரை : அப்பெருந் தொண்டை நாடானது, நல்ல திறத்தையே விரும்பிய பழையனூர் வேளாளர்கள் தம்மீது குற்றம் வந்தபோது, தம் உயிரையும் வணிகன் ஒருவனுக்கு ஒருகால் தாம் சொல்லிய உண்மைச் சொல்லையும் சீர்தூக்கிப் பார்த்து, உயிரை விட அந்த உண்மைச் சொல்லையே காத்த மேன்மை கொண்டதாகும்.
1081. ஆணை யாமென நீறுகண் டடிச்சேரன் என்னும்
சேணு லாவு சீர்ச் சேரனார் திருமலை நாட்டு வாணி லாவுபூண் வயவர்கள் மைத்துனக் கேண்மை பேண நீடிய முறையது பெருந்தொண்டை நாடு.
தெளிவுரை : அந்தத் தொண்டை நாடு, சிவபெருமானின் திருவருளின் வடிவமே திருநீறாகும் என்று கொண்டு திருநீற்றை வணங்கும் வகையினால் அடியேன் அடிச்சேரன் என (திருநீற்றைப் போல் வெண்மையான உவர் மண் ஊறிய உடலைக் கொண்ட வண்ணானை) வணங்கும் நெடுந்தொலைவு பரந்த புகழ்மிக்க சேரமானின் மலை நாட்டில் வாழ்கின்ற ஒளிவீசும் அணிகள் அணிந்த வெற்றி வீரர்கள், மைத்துனர் என்ற முறையைப் பாராட்டும் நீடித்த முறைமையுடையதாகும்.
1082. கறைவி ளங்கிய கண்டர்பால் காதல்செய்ம் முறைமை
நிறைபு ரிந்திட நேரிழை அறம்புரிந் ததனால் பிறையு ரிஞ்செயிற் பதிபயில் பெருந்தொண்டை நாடு முறைமை யாமென உலகினில் மிகுமொழி உடைத்தால்.
தெளிவுரை : கரிய நிறம் விளங்கும் கழுத்தையுடைய சிவபெருமானிடம் அன்பு செய்யும் முறைமையின் நிறைவை விரும்ப உமாதேவியார் அறத்தைச் செய்ததால், சந்திரனைத் தொடுமளவு உயர்ந்த மதிலையுடைய ஊர்கள் பொருந்திய பெருந்தொண்டை நாடு, சிவநெறியின் நியதியை உடையது என்று உலகத்தார் போற்றும் சிறப்பை உடையதாகும்.
1083. தாவில் செம்மணி அருவியா றிழிவன சாரல்
பூவில் வண்டினம் புதுநற வருந்துவ புறவம் வாவி நீள்கயல் வரம்பிற உகைப்பன மருதம் நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்.
தெளிவுரை : மலைச்சாரல் என்ற குறிஞ்சியிடங்கள் குற்றம் இல்லாத அருவியி<லும் ஆற்றி<லும் செம்மணிகள் இழிந்து வருவதற்கு இடமாய் விளங்கின. புறவம் என்ற முல்லையிடங்கள் மலர்களிலே வண்டுக்கூட்டங்கள் புதிய தேனை அருந்துவதற்கு இடமாய் விளங்கின. மருத நீர் நிலைகளில் நீண்ட கயல் மீன்கள் வரப்புகள் உடையுமாறு துள்ளுதற்கு இடமாய் விளங்கின. நெய்தல் இடங்கள் பரதப்பெண்கள் முத்துக்களைக் கழுவி உலர்த்துவதற்கு இடமாய் விளங்கின.
1084. குறவர் பன்மணி அரித்திதை விதைப்பன குறிஞ்சி
கறவை ஆன்நிரை மானுடன் பயில்வன கானம் பறவை தாமரை யிருந்திற வருந்துவ பழனஞ் சுறவ முள்மருப் பணங்கயர் வனகழிச் சூழல்.
தெளிவுரை : குறிஞ்சி இடங்கள், குறவர் பல மணிகளையும் அரித்து எடுத்து விலக்கிக் காரா மணிகளை விதைத்தற்கு இடமாய் விளங்கின. காட்டின் இடங்கள், பசுக்கூட்டங்கள் மான்களுடன் பழகுவதற்குரிய இடமாய் விளங்கின. வயல்கள், பறவைகள் தாமரை மலரிலிருந்து கொண்டு இறால் மீன்களைத் தின்பதற்கு இடமாய் விளங்கின. நெய்தல் நிழக் கழியிடங்கள், சுறாமீனின் முட்களையுடைய கொம்புகளைத் தெய்வ வடிவமாக வைத்து விழாக்கொண்டாடுவதற்கு இடமாய் விளங்கின.
1085. கொண்டல் வானத்தின் மணிசொரி வனகுல வரைப்பால்
தண்டு ணர்க்கொன்றை பொன்சொரி வனதள வயற்பால் வண்டல் முத்தநீர் மண்டுகால் சொரிவன வயற்பால் கண்டல் முன்துறைக் கரிசொரி வனகலங் கடற்பால்.
தெளிவுரை : மலையிடங்களில் மேகங்கள் வானத்தினின்று முத்துக்களைச் சொரியும்; முல்லையில் அயல் இடங்களில், குளிர்ந்த கொத்துக்களையுடைய கொன்றை மரங்கள் பொன் சொரியும்; நீர்மிக்க கால்வாய்கள் வயல் இடங்களில் உள்ள வண்டலில் முத்துக்களைச் சொரியும் கடல் பக்கத்தில் தாழைகளை முன் இடங்களில் கொண்ட துறைகளில் கலங்கள் யானைகளைக் கொணர்ந்து இறக்கும்.
1086. தேனி றைந்தசெந் தினையிடி தருமலைச் சீறூர்
பானி றைந்தபுற் பதத்தன முல்லைநீள் பாடி தூநெ லன்னம்நெய் கன்னலின் கனியதண் டுறையூர் மீனி றைந்தபே ருணவின வேலைவைப் பிடங்கள்.
தெளிவுரை : அத்தொண்டை நாட்டில், குறிஞ்சி நிலத்துக்குரிய சிறிய ஊர்கள், தேன் நிறையக் கலக்கப்பெற்ற தினை மாவை உடையவை. முல்லை நிலத்துக்குரிய பாடிகளான ஊர்கள், பால் கூட்டிச் சமைக்கப்பட்ட புல் அரிசிச் சோற்றை உடையவை. மருத நிலத்தின் குளிர்ந்த துறைகளைக் கொண்ட ஊர்கள், தூய்மையான நெல்லரிசி அன்னமும் நெய்யும் கரும்பும் இன்கனிகளும் என்ற இவற்றை உடையவை. நெய்தற் பகுதியான கடலைச் சார்ந்த இடங்கள், மீன்கள் நிறைந்த பேருணவைக் கொண்டவை.
1087. குழல்செய் வண்டினங் குறிஞ்சியாழ் முரல்வன குறிஞ்சி
முழவு கார்கொள முல்லைகள் முகைப்பன முல்லை மழலை மென்கிளி மருதமர் சேக்கைய மருதம் நிழல்செய் கைதைசூழ் நெய்தலங் கழியன நெய்தல்.
தெளிவுரை : அத்தொண்டை நாட்டில், குறிஞ்சி நிலத்தில் குழல் போல் ஒலிக்கும் வண்டுக் கூட்டங்கள் குறிஞ்சிப் பண்களைப் பாடிடும். முல்லை நிலத்தில், முழா என்ற வாத்தியங்கள் மேகம் போல் முழங்க முல்லைக் கொடிகள் அரும்புகளை அரும்பும். மருத நிலத்தில், மழலையைப் பேசும் மென்மையான இயல்புடைய கிளிப் பிள்ளைகள் மருத மரங்களைத் தாம் உறங்கும் இடங்களாகக் கொள்ளும். நெய்தல் நிலங்கள், நிழலை அளிக்கும் தாழைகள் சூழ்ந்த நெய்தல் மலர்கள் பூத்திருக்கின்ற நீர்க்கழிகளைப் பெற்றிருக்கும்.
1088. மல்கும் அப்பெரு நிலங்களில் வரைபுணர் குறிஞ்சி
எல்லை எங்கணும் இறவுளர் ஏனல்முன் விளைக்கும் பல்பெ ரும்புனம் பயில்வன படர்சிறைத் தோகை சொல்லும் அப்புனங் காப்பவுஞ் சுரிகுழல் தோகை.
தெளிவுரை : வளங்கள் மிக்க முற்கூறப்பட்ட அந்நான்கு வகைப்பட்ட பெருநிலங்களில் மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலத்தின் இடங்கள் எங்கும், குறிஞ்சி நில மக்கள் தினைப்பயிரை முன் விளைவிக்கும் பல பெரிய தினைப்புனங்களில் எல்லாம் படரும் இறகையும் தோகையையும் உடைய மயில்கள் உலவும். கூறப்படும் அத்தினைப் புனங்களைக் காப்பவர், சுருண்ட கூந்தலையுடைய மயில் போன்ற சாயலையுடைய குற மங்கையர் ஆவார்.
1089. அங்கண் வான்மிசை அரம்பையர் கருங்குழற் சுரும்பு
பொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழல்மூழ்கிப் போகாச் செங்கண் மால்விடை யார்திருக் காளத்தி யென்னும் மங்குல் சூழ்வரை நிலவிய வாழ்வினால் மல்கும்.
தெளிவுரை : அழகிய இடம் அகன்ற வான் உலகத்தில் வாழ்கின்ற தேவ மங்கையரின் கரிய கூந்தலில் உள்ள வண்டுகள், ஒளி விளங்கும் அணிகளை அணிந்த குறமங்கையரின் கூந்தலுள் முழுகி அங்கிருந்து நீங்காது இருத்தற்கு இடமான, சிவந்த கண்ணையுடைய திருமாலை காளையூர்தியாய்க் கொண்ட சிவபெருமானின் திருக்காளத்தி என்ற மேகம் சூழ்ந்த திருமலையைத் தன்னுள் நிலவப்பெற்ற வாழ்வுடைமையால் அக்குறிஞ்சி நிலம் சிறப்பு மிக்கதாகும்.
1090. பேறு வேறுசூழ் இமையவர் அரம்பையர் பிறந்து
மாறில் வேடரும் மாதரு மாகவே வணங்கும் ஆறு சூழ்சடை அண்ணலார் திருவிடைச் சுரமுங் கூறு மேன்மையின் மிக்கதந் நாட்டுவண் குறிஞ்சி.
தெளிவுரை : அந்நாட்டின் உண்மையுடைய குறிஞ்சி நிலமானது, வேறான தனிப்பேற்றை எண்ணித் தவம் செய்த வானவர்களும், அரம்பையர்களும் இங்கு ஒப்பில்லாத வேடர்களும் வேட மங்கையர்களுமாகப் பிறந்து வணங்குவதற்கு இடமான, கங்கை பொருந்திய சடையுடைய சிவபெருமான் எழுந்தருளிய திருவிடைச்சுரமும் பொருந்திய வாழ்வுடையது என்று கூறத்தக்க மேன்மையால் சிறந்ததாகும்.
1091. அம்பொன் வார்குழல் கொடிச்சியர் உடன்அர மகளிர்
வம்பு லாமலர்ச் சுனைபடிந் தாடுநீள் வரைப்பின் உம்பர் நாயகர் திருக்கழுக் குன்றமும் உடைத்தால் கொம்பர் வண்டுசூழ் குறிஞ்சிசெய் தவங்குறை யுளதோ.
தெளிவுரை : அக்குறிஞ்சி, அழகிய பொன் நிறம் கொண்ட மலர்களை அணிந்த, வளர்ந்து முடித்த கூந்தலையுடைய குறவ மங்கையருடன் தெய்வ மங்கையர், மணம் கமழும் மலர்கள் மலர்ந்துள்ள சுனைகளில் படிந்து முழுகும் நீண்ட இடங்களையுடைய தேவர் தலைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கழுக்குன்றத்தையும் தன்னிடத்தில் கொண்டதாகும். ஆதலால் மரக்கொம்புகளின் மலர்களில் வண்டுகள் மொய்ப்பதற்கு இடமான குறிஞ்சி நிலம் செய்த தவம் குறைவுடையதாகுமோ? ஆகாது.
1092. கோல முல்லையுங் குறிஞ்சியு மடுத்தசில் லிடங்கள்
நீல வாட்படை நீலிகோட் டங்களும் நிரந்து கால வேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப் பாலை யுஞ்சொல லாவன உளபரல் முரம்பு.
தெளிவுரை : அழகான முல்லை நிலத்தையும் குறிஞ்சி நிலத்தையும் அடுத்துள்ள பருக்கைக் கற்களுடன் கூடிய மேட்டு நிலங்களாய் உள்ள சில இடங்கள், கரிய நிறம் கொண்டவளான வாளை ஏந்திய துர்க்கையின் கோயில்களை உடையனவாய்ப் பெரும் பொழுதான வேனிற்காலத்தில் கடும் பகல் பொழுதைப் பற்றிப் பாலை நிலம் எனக் கூறும்படியாயும் விளங்கின.
1093. சொல்லும் எல்லையின் புறத்தன துணர்ச்சுரும் பலைக்கும்
பல்பெ ரும்புனல் கானியா றிடையிடை பரந்து கொல்லை மெல்லிணர்க் குருந்தின்மேல் படர்ந்தபூம் பந்தர் முல்லை மென்புதல் முயலுகைத் தடங்குநீள் முல்லை.
தெளிவுரை : மலர்க்கொத்துகளை அலைத்துக்கொண்டு வருகின்ற மிக்க நீரையுடைய காட்டாறுகள், இடையிடையே ஓடிப் பரந்து, கொல்லை நிலத்தில் உள்ள மென்மையான இலைகளையுடைய குருந்த மரத்தின் மேல் படர்ந்த பந்தல் போன்ற முல்லைக்கொடிகளின் மெல்லிய புதர்களில் பதுங்கியிருந்த முயல்களைத் துரத்திப் பின், அடங்குவதற்கு இடமான முல்லை நிலங்கள் மேற்கூறப்பட்ட எல்லையின் புறத்தே விளங்கின.
1094. பிளவு கொண்டதண் மதிநுதற் பேதையர் எயிற்றைக்
களவு கொண்டது தளவெனக் களவலர் தூற்றும் அளவு கண்டவர் குழல்நிறங் கனியும்அக் களவைத் தளவு கண்டெதிர் சிரிப்பன தமக்குமுண் டென்று.
தெளிவுரை : பிளவுடைய குளிர்ந்த பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியையுடைய இடைச்சியரின் பற்களின் அழகை முல்லை அரும்புகள் களவு செய்தன என்று களாச்செடிகள் பழி தூற்றுகின்றன. அதைக் கருதல் அளவையால் முல்லை அறிந்து, அந்த இடைச்சியரின் கூந்தல் நீளம் போலக் கனிந்த அந்தக் களவை அறிந்து (களாப்பழத்தை) தமக்கும் அக்களவு உண்டு என்று சிரிப்பது போல் விளங்கியது.
1095. மங்கை யர்க்குவாள் விழியிணை தோற்றமான் குலங்கள்
எங்கும் மற்றவர் இடைக்கிடை மலர்க்கொடி யெங்கும் அங்கண் முல்லையின் தெய்வமென் றருந்தமிழ் உரைக்கும் செங்கண் மால்தொழும் சிவன்மகிழ் திருமுல்லை வாயில்.
தெளிவுரை : அத்தகைய முல்லை நிலத்தில், இடைச்சியரின் வாள் போன்ற இரு கண்களுக்குத் தோல்வி அடைந்த மான் கூட்டங்கள் எங்கும் இருந்தன. அந்த இடைச்சியரின் இடைகளுக்குத் தோற்ற முல்லைக் கொடிகள் எங்கும் விளங்கின. முல்லை நிலத்துக்குரிய தெய்வம் என்று அரிய தமிழ்ப்பொருள் இலக்கணத்தில் சொல்லப்படும் சிவந்த கண்ணையுடைய திருமால் வழிபாடு இயற்றிய சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருமுல்லை வாயில் என்ற தலம் அத்தொண்டை நாட்டில் உள்ளது.
1096. நீறு சேர்திரு மேனியர் நிலாத்திகழ் முடிமேல்
மாறில் கங்கைதான் வாக்கும்மஞ் சனம்தர அணைந்தே ஊறு நீர்தரும் ஒளிமலர்க் கலிகைமா நகரை வேறு தன்பெரு வைப்பென விளங்குமா முல்லை.
தெளிவுரை : திருநீறு அணிந்து விளங்கும் திருமேனியையுடைய சிவபெருமானின் பிறை விளங்கும் திருமுடியின் மீது உள்ள நிகரற்ற கங்கையாறானது, அவர்க்குத் திருமஞ்சன நீரைத் தரும் பொருட்டாக இவ்வுலகத்தில் வந்து சேர்ந்து, ஊறும் நீரை அளிக்கும் ஒளியுடைய மலர்களையுடைய கலிகை மாநகர் என்ற திருவூறல் என்கின்ற பதியை வேறாகத் தனது பெரிய சேம வைப்பு எனக்கூறும் படிக்கொண்டு பெரிய முல்லை நிலம் விளங்கும்.
1097. வாச மென்மலர் மல்கிய முல்லைசூழ் மருதம்
வீசு தெண்டிரை நதிபல மிக்குயர்ந் தோடிப் பாச டைத்தடந் தாமரைப் பழனங்கள் மருங்கும் பூசல் வன்கரைக் குளங்களும் ஏரியும் புகுவ.
தெளிவுரை : மணம் கமழும் மென்மையான மலர்கள் நிறைந்த முல்லைக் கொடிகளையுடைய முல்லை நிலத்தை அடுத்துள்ள மருத நிலத்தில் வீசும் தெளிந்த அலைகளையுடைய பல ஆறுகள், மிக்கு உயர்ந்து ஓடிய பசிய இலைகளையுடைய பெரிய தாமரைகள் மலர்வதற்கிடமான வயல்களின் பக்கங்களிலும், பறவைகளின் ஒலி மிகுதியாய்க் கொண்ட வலிய கரைகளையுடைய குளங்களிலும் ஏரியிலும் புகும்.
1098. துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்
பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப் போந்தே அங்கண் நித்திலஞ் சந்தனம் அகிலொடு மணிகள் பங்க யத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி.
தெளிவுரை : உயர்ந்த தவமுடைய வசிட்ட முனிவனிடமிருக்கும் காமதேனுவின் முலை சொரிந்த பாலானது, பெருகும் தீர்த்தமாக உருப்பட்டு நந்தி மலையினின்றும் இறங்கி, அங்குள்ள முத்துக்களையும் சந்தனம் அகில் முதலானவற்றுடன், மணிகளையும் கொணர்ந்து தாமரைக் குளங்களை நிறைக்குமாறு கீழ் நோக்கி ஓடி வருவது பாலாறு எனப்படும்.
1099. பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல்திடர் பிசைந்துகை வருட வெள்ள நீரிரு மருங்குகால் வழிமிதந் தேறிப் பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி.
தெளிவுரை : குழந்தை தன் கையால் தடவவும் பெருகும் பால் சொரிகின்ற முலையையுடைய தாயைப் போல, உழவர்கள் வேனிற் காலத்தில் மணல் மேடுகளைப் பிசைந்து கால்வாய் உண்டாக்கி ஒழுங்குபடுத்த, ஊறிப்பெருகும் நீர் இரண்டு பக்கங்களிலும் கால்வாய்களின் வழியே மிதந்து ஏறிச்சென்று, பள்ளமான நிலத்தில் உள்ள நீண்ட வயல்களின் பருத்த மடைகளை உடைக்கும்.
1100. அனைய வாகிய நதிபரந் தகன்பணை மருங்கில்
கனைநெ டும்புனல் நிறைந்துதிண் கரைப்பொரும் குளங்கள் புனையி ருங்கடி மதகுவாய் திறந்திடப் புறம்போய் வினைஞர் ஆர்ப்பொலி யெடுப்பநீர் வழங்குவ வியன்கால்.
தெளிவுரை : அத்தகைய இயல்புடைய ஆறுகள் பரவுதலால் வயல்களின் பக்கங்களில் எல்லாம் ஒலி செய்கின்ற பெரிய நீர் நிறைந்து, திண்மையான கரையையுடைய பெரிய குளங்களும் சேரும். அவற்றில் கட்டப்பட்ட மதகுவாய்கள் திறந்துவிட, அவ்வாய்களின் மூலமாக வெளியே போய், மக்கள் நீர் வருகை கண்டு ஆரவாரம் செய்யும் ஒலி மிகுமாறு கால்வாய்களின் வழியே நீரை அளிக்கும்.
1101. மாறில் வண்பகட் டேர்பல நெருங்கிட வயல்கள்
சேறு செய்பவர் செந்நெலின் வெண்முளை சிதறி நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவ ரான வேறு பல்வினை யுடைப்பெருங் கம்பலை மிகுமால்.
தெளிவுரை : நிகர் இல்லாத வளத்தை அளிக்கும் எருமைக் கடாக்களைப் பூட்டிய பல ஏர்கள் நெருங்க வயல்களைச் சேறு செய்பவர், செந்நெல்லின் வெண்மையான முளைகளை விதைத்து நாற்று விடுபவர்கள், நாற்றைப் பறிப்பவர், நாற்றை நடுபவர் என்ற வெவ்வேறு பல செயல்களைச் செய்பவரின் பெரிய ஆரவாரம் எங்கும் மிகுந்து காணப்படும்.
1102. வரும்பு னற்பெருங் கால்களை மறித்திட வாளை
பெருங்கு லைப்பட விலங்குவ பிறங்குநீர்ப் பழனம் நெருங்கு சேற்குல முயர்த்துவ நீள்கரைப் படுத்துச் சுருங்கை நீர்வழக் கறுப்பன பருவரால் தொகுதி.
தெளிவுரை : வருகின்ற நீரையுடைய பெரிய வாய்க்கால்களை வாளை மீன்கள் குறுக்காகத் தடுக்க, அதனால் அந்த நீர் வாய்க்கால்கள் விலகிச் செல்லும். விளங்கும் நீரையுடைய வயல்களில் நெருங்கியுள்ள சேல் மீன்களின் கூட்டம் பள்ளமான வயல்களை நீண்ட கரையாக உயர்த்திவிடும். மதகுகளுள் புகுந்து நீர் வரும் வழியைப் பெரிய வரால் மீன்கள் அடைந்து விடும்.
1103. தளைத்த டம்பணை எழுந்தசெந் தாமரைத் தவிசின்
இளைத்த சூல்வளை கண்படுப் பனஇடை யெங்கும் விளைத்த பாசொளி விளங்குநீள் விசும்பிடை யூர்கோள் வளைத்த மாமதி போன்றுள மருதநீர் வைப்பு.
தெளிவுரை : நீர்வளம் உடைய மருதநிலப் பகுதிகளில் வரப்பையுடைய பெரிய வயல்களில் வளைந்த செந்தாமரைப் பூ என்ற இருக்கையில் கருக்கொண்டு இளைத்த சங்குகள் உறங்கும். அவை, அந்த இடம் எங்கும் பச்சை நிறம் பெற்று விளங்கும் வானத்தில் பரிவேடத்தினால் வளைக்கப்பட்ட நிறைமதி போல விளங்கும்.
1104. ஓங்கு செந்நெலின் புடையன உயர்கழைக் கரும்பு
பூங்க ரும்பயல் மிடைவன பூகம்அப் பூகப் பாங்கு நீள்குலைத் தெங்குபைங் கதலிவண் பலவு தூங்கு தீங்கனிச் சூதநீள் வேலிய சோலை.
தெளிவுரை : உயர்ந்து வளர்ந்த செந்நெற்பயிரின் பக்கத்தில் உயரமான அரும்புகள் வளர்ந்திருக்கும். அந்த அழகிய கரும்பின் பக்கத்தில் நெருங்கிய பாக்கு மரங்கள் வளர்ந்திருக்கும். அந்தப் பாக்கு மரங்களின் அருகில் நீண்ட குலைகளைக் கொண்ட தென்னை மரங்களும், பசி வாழை மரங்களும் வளமையுடைய பலாமரங்களும், தொங்கும் இனிய கனிகளையுடைய மாமரங்களும் பொருந்திய நீண்ட வேலியைக் கொண்ட சோலைகள் விளங்கும்.
1105. நீடு தண்பணை உடுத்தநீள் மருங்கின நெல்லின்
கூடு துன்றிய இருக்கைய விருந்தெதிர் கொள்ளும் பீடு தங்கிய பெருங்குடி மனையறம் பிறங்கும் மாட மோங்கிய மறுகின மல்லல்மூ தூர்கள்.
தெளிவுரை : வளமை வாய்ந்த பழைய ஊர்கள், குளிர்ந்த பெரிய வயல்களால் சூழப்பட்ட நீண்ட பக்கங்களை உடையன; நெற்கூடுகள் நெருங்கிய இல்லங்களை உடையன; விருந்தினரை வரவேற்று உபசாரம் செய்யும் பெருமையில் நிலைத்த பெரிய குடிகள் இல்லறத்தால் விளங்குவதற்கு இடமான மாடங்கள் ஓங்கிய தெருக்களைப் பெற்றிருந்தன.
1106. தொல்லை நான்மறை முதற்பெருங் கலையொலி துவன்றி
இல்ல றம்புரிந் தாகுதி வேள்வியில் எழுந்த மல்கு திண்புகை மழைதரு முகிற்குலம் பரப்பும் செல்வ மோங்கிய திருமறை யவர்செழும் பதிகள்.
தெளிவுரை : மறையவர்களின் ஊர்கள், பழைமையான நான்கு மறைகள் முதலான பெருமை பொருந்திய கலைகளை ஓதுகின்ற ஒலி மிக்கு இல்லறத்தில் செய்த ஆகுதிகளுடன் கூடிய வேள்விகளில் எழுந்த திடமான புகையானது மழையைப் பெய்விக்கும் முகில் கூட்டங்களைப் பரப்புகின்ற செல்வத்தால் மிக்கவையாய் விளங்கின.
1107. தீது நீங்கிடத் தீக்கலி யாம்அவு ணற்கு
நாதர் தாமருள் புரிந்தது நல்வினைப் பயன்செய் மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம் பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்.
தெளிவுரை : தீமை நீங்குமாறு தீக்காலி என்ற அவுணனுக்கு இறைவன் அருள் செய்திட்டதும் நல்வினையின் பயனைச் செய்யும் மங்கையர் தோன்றிய மரபையுடைய அந்தணரின் ஊரானதும் ஆனது திருசெல்வம் என்ற தலம். அத்தலமானது திருநீற்றையும் அதனுடன் கூடிய சிவச்சின்னமான உருத்திராக்கத்தையும் போற்றிய அழகோடு விளங்குவதாகும்.
1108. அருவி தந்தசெம் மணிகளும் புறவில்ஆய் மலரும்
பருவி ஓடைகள் நிறைந்திழி பாலியின் கரையின் மருவு கங்கைவாழ் சடையவர் மகிழ்ந்தமாற் பேறாம் பொருவில் கோயிலுஞ் சூழ்ந்ததப் பூம்பணை மருதம்.
தெளிவுரை : அந்தப் புறம் பணை மருத நிலமானது, குறிஞ்சியின் மலைச்சாரலிலிருந்து வரும் அருவிகள் கொழித்து வரும் சிவந்த மணிகளும், குறிஞ்சி நிலத்தை அடுத்த முல்லை நிலத்தினின்றும் வாரிக்கொண்டு வந்த பூக்களும் கலந்து ஓடைகளில் நிறைந்து கீழே இழிந்து வரும் பாலாற்றின் கரையில் பொருந்திய கங்கை வாழும் சடையையுடைய சிவபெருமான் மகிழ்வுடன் வீற்றிருக்கும் திருமாற்பேறு என்ற ஒப்பில்லாத திருக்கோயிலை உடையது.
1109. விரும்பு மேன்மையென் பகர்வது விரிதிரை நதிகள்
அருங்க ரைப்பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து பருங்கை யானையை உரித்தவர் இருந்தஅப் பாசூர் மருங்கு சூழ்தவம் புரிந்ததன் றோமற்ற மருதம்.
தெளிவுரை : விரிந்த அலைகளையுடைய ஆறுகளின் அரிய கரைகளில் பொருந்திய பல சிவாலயங்களையும் சேரப்பெற்று, பெரிய கையையுடைய யானையை உரித்த தோலையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்த திருப்பாசூர் என்பதையும் பக்கத்தில் பொருந்தும் தவத்தைச் செய்ததன்றோ அந்த மருத நிலம்! ஆதலின் எல்லாவற்றையும் விரும்புகின்ற அதன் மேன்மையைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டியது யாது உள்ளது? ஏதும் இல்லை.
1110. பூம ரும்புனல் வயற்களம் பாடிய பொருநர்
தாம ருங்கிளை உடன்தட மென்மலர் மிலைந்து மாம ருங்குதண் ணீழலின் மருதயாழ் முரலும் காமர் தண்பணைப் புறத்தது கருங்கழி நெய்தல்.
தெளிவுரை : மலர்கள் பொருந்தும் நீர் மிக்க வயல் களத்தைக் குறித்து மருதப் பண்ணைப்பாடும் பொருநர்கள் தம் அரிய சுற்றத்தாருடன் கூடி நீர் நிலைகளில் பூத்த மென்மையான பூக்களைச் சூடிக்கொண்டு மாமரங்களின் அருகில் குளிர்ந்த நிழலிலிருந்த மருத யாழை ஒலிக்கின்ற அழகிய குளிர்ந்த வயல் நிலத்தின் புறத்தில் கரிய கழிகளையுடைய நெய்தல் நிலம் விளங்கும்.
1111. தூய வெண்டுறைப் பரதவர் தொடுப்பன வலைகள்
சேய நீள்விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி ஆய பேரளத் தளவர்கள் அளப்பன உப்பு சாயல் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம்.
தெளிவுரை : தூய வெண்மையான மணல் துறையைக் கொண்ட கடற்கரையில் வாழும் பரதவரால் மீன் வலைகள் தொடுக்கப்படுகின்றன. சிவந்த நீண்ட கண்களையுடைய பரத்தியரால், செருந்திய மலர் மாலைகள் தொடுக்கப்படுகின்றன. அங்குப் பெரிய உப்பு அளங்களில் உப்பு அளக்கப்படுகின்றன. மயில் அன்ன சாயலையும் அன்னப்பறவை போன்ற நடையையும் உடைய அளத்தியரால் முத்துக்கள் அளக்கப்படுகின்றன.
1112. கொடுவி னைத்தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்
படும ணற்கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம் தொடுக டற்சங்கு துறையவர் குளிப்பன அவர்தம் வடுவ கிர்க்கண்மங் கையர்குளிப் பனமணற் கேணி.
தெளிவுரை : கொடிய கொலையால் கொணரப்பட்ட கொழுவிய மீன்கள் நுளையரால் தரப்படுகின்றன. மணல் கரையில் தோன்றுகின்ற பவளங்கள் நுளைச்சியரால் விற்கப்படுகின்றன. நெய்தல் நில ஆண்களால் கடலில் சங்குகள் குளித்தெடுக்கப்படுகின்றன. அவர்களின் மாவடுவின் பிளவு போன்ற வடிவம் உடைய கண்களைக் கொண்ட பெண்களால் மணல் கேணிகள் நீராடப்படுகின்றன.
1113. சுழிப்பு னற்கடல் ஓதமுன் சூழ்ந்துகொண் டணிய
வழிக்க ரைப்பொதிப் பொன்னவிழ்ப் பனமலர்ப் புன்னை விழிக்கு நெய்தலின் விரைமலர்க் கண்சுரும் புண்ணக் கழிக்க ரைப்பொதி சோறவிழ்ப் பனமடற் கைதை.
தெளிவுரை : சுழிகளுடன் கூடிய நீரையுடைய கடல் நீரால் சூழப்பட்ட பக்கத்தில் உள்ள வழிக்கரையில் உள்ளே பொதிந்த பொன் போன்ற மகரந்தத்தைப் புன்னைமரங்கள் கட்டவிழ்த்துத் தரும். மலர்கின்ற நெய்தல் மலரில் தங்கிய வண்டுகளை உண்ணுமாறு உப்பங்கழியின் கரையில் நீண்ட மடல்களையுடைய தாழை, பொதி சோற்றை அவிழ்த்துத் தரும்.
1114. காயல் வண்கரைப் புரைநெறி அடைப்பன கனிமுள்
சேய தண்ணறுஞ் செழுமுகை செறியும்முண் டகங்கள் ஆய நுண்மணல் வெண்மையை மறைப்பன அன்னந் தாய முன்துறைச் சூழல்சூழ் ஞாழலின் தாது.
தெளிவுரை : கழிக் கானல்களின் வளமையுடைய கரைகளில் குற்றம் பொருந்திய சிறிய வழிகளை, முதிர்ந்த முட்கள் கொண்ட குளிர்ந்த மணம் பொருந்திய செழித்த அரும்புகள் மிக்க முள்ளிச் செடிகள் அடங்கும். அங்கு உள்ள நுண்மையான மணலின் வெண்மையினை, அன்னப்பறவைகள் தாவி விளையாடுகின்ற முன் கரையின் சுற்றுப்புறத்தைச் சூழ்ந்து முளைத்த ஞாழல் மலர்களின் பூந்தாதுக்கள் மறைக்கும்.
1115.வாம்பெ ருந்திரை வளாகமுன் குடிபயில் வரைப்பில்
தாம்ப ரப்பிய கயல்களின் விழிக்கயல் தவிரக் காம்பின் நேர்வருந் தோளியர் கழிக்கயல் விலைசெய் தேம்பொ திந்தசின் மழலைமென் மொழியசெவ் வழியாழ்.
தெளிவுரை : தாவுகின்ற பெரிய அலைகள் பொருந்திய இடத்தின் முன் குடிகளின் இருப்பிடங்களில் மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய பரத்தியர் பரப்பிய கயல் மீன்களுள், கண்களான கயல்மீன்கள் தவிர, நீர்க்கழியின் கயல் மீன்களை விற்கின்ற இனிமை மிக்க சிறிய மழலை மொழிகளின் இனிமையை, அந்த நிலத்திற்குரிய செவ்வழி யாழ் பெற்றுள்ளது.
1116. மருட்கொ டுந்தொழில் மன்னவன் இறக்கிய வரியை
நெருக்கி முன்திரு வொற்றியூர் நீங்கலென் றெழுதும் ஒருத்தர் தம்பெருங் கோயிலின் ஒருபுறஞ் சூழ்ந்த திருப்ப ரப்பையும் உடையதத் திரைக்கடல் வரைப்பு.
தெளிவுரை : மயக்கத்தால் கொடுந்தொழில் செய்யும் மாந்தாதா என்ற அரசன் கோயிலுக்குரியபடித் திட்டங்களைக் குறைத்து எழுதிய திட்டம் வரையப்பட்ட எழுத்து வரியை நெருக்கி வரிப்பிளந்து திருவொற்றியூர் நீங்கலாக என்று எழுதிய ஒருவரான சிவபெருமானின் பெரிய கோயிலின் ஒரு பக்கத்தில் சூழ்ந்த பரப்பினை உடையது அந்த நெய்தல் நிலத்தின் ஒரு பகுதியாகும்.
1117. மெய்த ரும்புகழ்த் திருமயி லாபுரி விரைசூழ்
மொய்த யங்குதண் பொழில்திரு வான்மியூர் முதலாப் பைத ரும்பணி அணிந்தவர் பதியெனைப் பலவால் நெய்தல் எய்தமுன் செய்தஅந் நிறைதவம் சிறிதோ.
தெளிவுரை : எலும்பை உடலாக ஆக்கும் புகழைக் கொண்ட திருமயிலையும் மணம் கமழ்கின்ற மலர்கள் நெருங்கிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவான்மியூரும் முதலான படம் பொருந்திய பாம்பையுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பதிகள் அந்நெய்தலில் பலவாகும். இவற்றை எல்லாம் தன்னகத்தே கொண்டு விளங்க அந்நெய்தல் நிலம் செய்த நிறைந்த தவம் தான் என்னே!
1118. கோடு கொண்டெழும் திரைக்கடற் பவளமென் கொழுந்து
மாடு மொய்வரைச் சந்தனச் சினைமிசை வளரும் நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால் ஆடு நீள்கொடி மாடமா மல்லையே அனைய.
தெளிவுரை : சங்குகள் தன்னிடம் பொருந்தக் கொண்டு மேல் எழும் அலைகளையுடைய கடலில் படரும் பவளக்கொடியின் மெல்லிய கொழுந்துகள் பக்கத்தே நெருங்கியுள்ள சந்தன மரங்களின் கிளைகளில் வளர்வதற்கு இடமான நீண்ட நெய்தலும் குறிஞ்சியும் சேர்ந்து திணை மயங்கும் புணர் நிலங்களும், அசையும் நீண்ட கொடிகளையுடைய மாளிகைகள் விளங்கும் மாமல்லை நகரத்தினைப் போன்ற நகரங்களும் அந்நெய்தல் நிலத்தில் பலவாகும்.
1119. மலைவி ழிப்பன எனவயற் சேல்வரைப் பாறைத்
தலையு கைப்பவுந் தளைச்செறு விடைநெடுங் கருமான் கலைகு திப்பன கரும்பகட் டேர்நிகர்ப் பவுமாய் அலைபு னற்பணை குறிஞ்சியோ டணைவன அனேகம்.
தெளிவுரை : மலைகள் கண்களைத் திறந்து பார்ப்பன எனக்கூறுமாறு வயல்களில் உள்ள சேல் மீன்கள் மலையில் உள்ள பாறைகளின் மீது பாய்ந்து புரளும். வரப்புகளைக் கொண்ட வயல்களிடையே ஏரில் பூட்டப்பட்ட கரிய எருமைகள் செல்கின்றன எனக்கூறுமாறு கரிய கலைமான்கள் குதித்துச் செல்லும். இத்தகைய இயல்புகள் கொண்டதாய் அலைகள் பொருந்திய நீரையுடைய வயல்கள் குறிஞ்சி நிலத்துடன் கூடிய இடங்கள் பல.
1120. புணர்ந்த ஆனிரைப் புறவிடைக் குறுமுயல் பொருப்பின்
அணைந்த வான்மதி முயலினை இனமென அணைந்து மணங்கொள் கொல்லையில் வரகுபோர் மஞ்சன வரைக்கார் இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும்.
தெளிவுரை : பசு மந்தையுடைய முல்லைக் காட்டில் இருந்த குறுமுயல் மலையுச்சியில் சேர்ந்த முழு மதியிடம் உள்ள முயல் கறையைப் பார்த்து அக்கறை தன் இனமாகும் என எண்ணி அங்குச் சேரும். மணம் கமழும் முல்லை நிலத்தில் உள்ள வரகு போர்களை, மலைகளை நீராட்டச் செல்கின்ற மேகங்கள் சேரும். இவ்வாறான தன்மைகளால் முல்லையும் குறிஞ்சியும் கலந்துள்ள நிலங்கள் அங்குப் பலவாகும்.
1121. கவரும் மீன்குவை கழியவர் கானவர்க் களித்துச்
சிவலுஞ் சேவலும் மாறியுஞ் சிறுகழிச் சியர்கள் அவரை ஏனலுக் கெயிற்றியர் பவளமுத் தளந்தும் உவரி நெய்தலுங் கானமுங் கலந்துள ஒழுக்கம்.
தெளிவுரை : பரதவர்கள், தாம் பிடிக்கும் மீன் குவியல்களை இடையர்க்குத் தந்து, பண்டமாற்று வகையால் அவர்களிடமிருந்து கவுதாரியையும் சிவலையும் தாம் கொள்கின்றனர். நெய்தல் நிலச் சிறுமியர் தாம் இடைச்சியரிடம் கொள்ளும் அவரைக்கும் தினைக்கும் ஈடாகப் பவளத்தையும் முத்துக்களையும் அளந்து கொடுக்கின்றனர். இவற்றால் கடலைச் சார்ந்த நெய்தல் நிலமும் முல்லை நிலமும் என்ற இரண்டும் ஒழுக்கத்தினால் கலந்தவையாய் உள்ளன.
1122. அயல்ந றும்புற வினில்இடைச் சியர்அணி நடையும்
வியன்நெ டும்பணை உழத்தியர் சாயலும் விரும்பி இயலும் அன்னமும் தோகையும் எதிரெதிர் பயில வயலும் முல்லையும் இயைவன பலவுள மருங்கு.
தெளிவுரை : ஒன்றை ஒன்று அடுத்திருக்கும் மணம் வீசும் முல்லைக் காட்டில் வாழ்கின்ற இடைச்சியரின் அழகிய நடையையும், அகன்ற பெரிய வயல்களையுடைய மருத நிலத்தில் வாழ்கின்ற உழத்தியரின் சாயலையும் விரும்பி இயல்கின்ற அன்னப்பறவையும் (மருதம்) மயிலும் (முல்லை) எதிர் எதிராகப் பழகுவதால் மருதமும் நெய்தலும் ஒன்றாகக் கூடுகின்ற பல நிலங்கள் அங்கு உள்ளன.
1123. மீளும் ஓதம்முன் கொழித்தவெண் தரளமும் கமுகின்
பாளை உக்கவும் விரவலிற் பரத்தியர் பணைமென் தோளு ழத்தியர் மகளிர்மா றாடிமுன் தொகுக்கும் நீளும் நெய்தலும் மருதமும் கலந்துள நிலங்கள்.
தெளிவுரை : அலைகள் கரையில் புரண்டு வந்து பின்பு மீண்டு போகின்ற கடலால் முன்னே கொழிக்கப்பட்ட வெண்மையான முத்துக்களும் பாக்கின் உதிர்ந்த பாளையினின்று உதிர்ந்த மலர்களும் ஒன்று கலக்கின்றன. அதனால் பரத்தியரும் பருத்த மூங்கில் போன்ற தோள்களையுடைய உழத்தியர்களும் மாறுபட்டு அவற்றை முன் வாரிச் சேர்க்கின்ற நீண்ட நெய்தல் நிலமும் மருத நிலமும் என்னும் இரண்டும் கலந்துள்ளன.
1124. ஆய நானிலத் தமைதியில் தத்தமக் கடுத்த
மேய செய்தொழில் வேறுபல் குலங்களின் விளங்கித் தீய வென்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத் தூய மாந்தர்வாழ் தொண்டைநாட் டியல்புசொல் வரைத்தோ.
தெளிவுரை : இத்தகைய குறிஞ்சி முதலான நான்கு வகைப்பட்ட நிலங்களிலும் அமைதிகளிலும் தம் தமக்குப் பொருந்திய செய்தொழிலால் பலவான வேறு குலங்களால் விளங்கித் தீயவை எனப்படுபவற்றைக் கனவிலும் எண்ணாத உள்ளத்தையுடைய தூய மக்கள் வாழ்கின்ற தொண்டை நாட்டின் இயல்பு எம் சொல் அளவில் அடங்குவதோ? அடங்காது!
1125. இவ்வ ளந்தரு பெருந்திரு நாட்டிடை என்றும்
மெய்வ ளந்தரு சிறப்பினால் உலகெலாம் வியப்ப எவ்வு கங்களும் உள்ளதென் றியாவரும் ஏத்தும் கைவி ளங்கிய நிலையது காஞ்சிமா நகரம்.
தெளிவுரை : இத்தகைய வளங்களையுடைய தொண்டை நாட்டில் பெருமையுடைய காஞ்சி நகரமானது உண்மையான வளங்களை அளிக்கின்ற சிறப்பால், உலகங்கள் எல்லாம் வியக்க எல்லா வுலகங்களிலும் அழியாமல் நிலை பெற்றது என்று எல்லாரும் துதிக்கும்படி ஒழுக்கத்தால் விளங்கிய இயல்பைக் கொண்டது.
1126. ஆன தொன்னகர் அம்பிகை தம்பெரு மானை
மான அர்ச்சனை யாலொரு காலத்து வழிபட் டூன மில்அறம் அனேகமும் உலகுய்ய வைத்த மேன்மை பூண்டஅப் பெருமையை அறிந்தவா விளம்பில்.
தெளிவுரை : இத்தகைய பழைமையுடைய காஞ்சி நகரம், உமாதேவியார் ஒரு காலத்தில் தம் கணவரான சிவபெருமானைப் பெருமையுடைய பூசையால், வழிபட்டு உலகம் உய்யும்படி குற்றம் அற்ற பல அறங்களையும் நிலைபெற வைத்த மேன்மை கொண்ட அந்தப் பெருமையை அறிந்தவாறு சொல்லப் புகுந்தால்,
1127. வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுது தெள்ளு வாய்மையின் ஆகமத் திறனெலாம் தெளிய உள்ள வாறுகேட் டருளினாள் உலகையா ளுடையாள்.
தெளிவுரை : வெள்ளி மலையில் திருக்கயிலாயத்தில் எழுந்தருளியிருந்து, குதி கொள்ளும் பெருநீரான கங்கையைச் சூடிய சடையையுடைய சிவபெருமான் கூறி அருள, உலகையாள்கின்ற உமாதேவியார் வணங்கித் தெளிந்த உண்மையைச் சொல்லும் ஆகமங்களின் திறங்களையெல்லாம் தெரியுமாறு உள்ளபடி கேட்டறிந்தருளினார்.
1128. எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை எனவுரைத் தருள அண்ண லார்தமை அர்ச்சனை புரியஆ தரித்தாள் பெண்ணில் நல்லவ ளாயின பெருந்தவக் கொழுந்து.
தெளிவுரை : எண் இல்லாத ஆகமங்களையெல்லாம் கூறியருளிய சிவபெருமான் தாம் விரும்பும் உண்மையாவது வழிபாடே ஆகும் எனச் சொல்லியருளினார்; பெண்ணாகியவருள் சிறந்த பெருந்தவக்கொழுந்து போன்ற உமையம்மையார் அதைச் செவியுற்று, இறைவரை வழிபாடு செய்ய விருப்பம் கொண்டார்.
1129. நங்கை உள்நிறை காதலை நோக்கி
நாய கன்திரு வுள்ளத்து மகிழ்ந்தே அங்கண் எய்திய முறுவலுந் தோன்ற அடுத்த தென்கொல்நின் பாலென வினவ இங்கு நாதநீ மொழிந்தஆ கமத்தின் இயல்பி னால்உனை அர்ச்சனை புரியப் பொங்கு கின்றதென் னாசையென் றிறைஞ்சிப் போக மார்த்தபூண் முலையினாள் போற்ற.
தெளிவுரை : உமாதேவியாரின் உள்ளத்தின் நிறைந்த விருப்பத்தை நோக்கி இறைவர் தம் உள்ளத்தில் மகிழ்வு கொண்டு, அப்போது உண்டான புன்முறுவலுடன், உன் மனத்தில் பொருந்தியது யாது? என வினவினார். போகமார்ந்த பூண் முலையாரான உமாதேவியார், தலைவரே! தாங்கள் அருளிய ஆகமத்தின் முறைப்படியே உம்மைப் பூசிக்க என் ஆசை பெருகுகின்றது என்று சொல்லியருளினார்.
1130. தேவ தேவனும் அதுதிரு வுள்ளஞ்
செய்து தென்திசை மிக்கசெய் தவத்தால் யாவ ருந்தனை யடைவது மண்மேல் என்று முள்ளது காஞ்சிமற் றதனுள் மாஅ மர்ந்தநம் இருக்கையி லணைந்து மன்னு பூசனை மகிழ்ந்துசெய் வாயென் றேவ வெம்பெரு மாட்டியும் பிரியா விசைவு கொண்டெழுந் தருளுதற் கிசைந்தாள்.
தெளிவுரை : தேவ தேவரான சிவபெருமானும் உமையம்மையார் கூறியவற்றை உள்ளத்தில் கொண்டு, தெற்குத் திக்கானது செய்த மிக்க தவப்பயனால் யாவரும் தன்னிடம் வந்து அடையத் தக்கதும், நிலவுலகத்தில் எக்காலத்தும் அழியாது நிலை பெற்றிருப்பதும் காஞ்சி நகரம் ஆகும். அதில் மாமரத்தின் அடியில் நாம் விரும்பி எழுந்தருளியிருக்கும் இருப்பிடத்தைச் சேர்ந்து நிலையான வழிபாட்டை மகிழ்ந்து செய்து வருவாயாக! என்று ஆணையிட்டருளினார். எம்பெருமாட்டியும் கணவரை விட்டுப் பிரியக்கூடாத நிலைமையில், விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்த எழுந்தருளுவதற்குச் சம்மதித்தார்.
1131. ஏத மில்பல யோனிஎண் பத்து
நான்கு நூறாயி ரந்தனுள் வைத்த பேத மும்புரந் தருளும்அக் கருணைப் பிரான்மொ ழிந்தஆ கமவழி பேணிப் போது நீர்மையில் தொழுதனள் போதப் பொருப்பில் வேந்தனும் விருப்பில்வந் தெய்தி மாத வம்புரிந் தருளுதற் கமைந்த வளத்தொ டும்பரி சனங்களை விடுத்தான்.
தெளிவுரை : குற்றம் இல்லாத பலவகையான யோனி பேதமான எண்பத்து நான்கு நூறாயிர வகைகளுள்ளும் வைக்கப்பட்ட உயிர்களை எல்லாம் காப்பாற்றியருளுகின்ற கருணையுடைய சிவபெருமான், உபதேசித்த அந்த ஆகமங்களில் கூறப்படும் நெறிப்படி பூசை செய்ய விரும்பிச் செல்லும் தன்மையால் தொழுது கொண்டு உமையம்மையார் சென்றார். மலையரசனும் விருப்பத்துடன் வந்து அவ்வம்மையார் தவத்தைச் செய்வதற்கு ஏற்ற வளங்களுடன் ஏவல் மகளிரை அனுப்பி வைத்தான்.
1132. துன்னு பல்லுயிர் வானவர் முதலாச்
சூழ்ந்து டன்செலக் காஞ்சியில் அணையத் தன்னை நேர்வரும் பதுமமா நாகந் தம்பி ராட்டிதாள் தலைமிசை வைத்தே அன்னை யாயுல கனைத்தையும் ஈன்றாய் அடிய னேன்உறை பிலமத னிடையே மன்னு கோயில்கொண் டருளுவாய் என்ன மலைம டந்தைமற் றதற்கருள் புரிந்து.
தெளிவுரை : நெருங்கிய பலவுயிர்களும் தேவர்களும் முதலாய்த் தம்மைச் சூழ்ந்து உடன்போக, அம்மையார் காஞ்சி நகரத்தை அடைந்தார். அப்போது ஒப்பில்லாத பதுமன் என்ற மாநாகமானது தம் தலைவியான இறைவியின் திருவடிகளைத் தலைமேற்கொண்டு உலகங்களையெல்லாம் ஈன்றருளிய எம் தலைவியே! அடியேன் வாழ்கின்ற பிலத்திடையே நிலைபெற்ற திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்ட, அதற்கு அருள் புரிந்து இசைந்து,
1133. அங்கு மண்ணுல கத்துயிர் தழைப்ப
அளவில் இன்பத்தின் அருட்கரு விருத்தித் திங்கள் தங்கிய புரிசடை யார்க்குத் திருந்து பூசனை விரும்பினள் செய்ய எங்கும் நாடவுந் திருவிளை யாட்டால் ஏக மாமுதல் எதிர்ப்படா தொழியப் பொங்கு மாதவஞ் செய்துகாண் பதற்கே புரிவு செய்தனள் பொன்மலை வல்லி.
தெளிவுரை : அங்கு, இம்மண் உலகத்தில் உள்ள எல்லாவுயிர்களும் தழைக்கும் பொருட்டு, அளவில்லாத இன்பத்தையுடைய அருளையே மனத்தில் கொண்டு, பிறைச்சந்திரன் தங்கிய திரித்த சடையையுடைய சிவபெருமானுக்குத் திருந்திய பூசனைகளைச் செய்ய விரும்பினார். அப்பெருமானின் இருப்பிடத்தை எங்கும் தேடினார்; அப்போது ஒப்பில்லாத முதல்வரான சிவபெருமான், திருவிளையாட்டினால் எதிர்ப்படாமல் மறைந்திருந்தார். அதனால் சிறந்த மாதவத்தைச் செய்து அவரைக் காண்பதற்கே பொன்மலை வல்லியான உமையம்மையார் விருப்பம் கொண்டார்.
1134. நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி
நிரந்த ரந்திரு வாக்கினில் நிகழ்வ தஞ்செ ழுத்துமே யாகஆ ளுடைய அம்மை செம்மலர்க் கைகுவித் திறைஞ்சித் தஞ்ச மாகிய அருந்தவம் புரியத் தரிப்ப ரேஅவள் தனிப்பெருங் கணவர் வஞ்சம் நீக்கிய மாவின்மூ லத்தில் வந்து தோன்றினார் மலைமகள் காண.
தெளிவுரை : உமையம்மையார் தம் மனம் இறைவனைக் காண்பதையே விரும்ப, வாக்கில் எப்போதும் நிகழ்வது ஐந்தெழுத்துகளேயாகச் செந்தாமரை போன்ற கைகளைக் குவித்து வணங்கி அரிய பெருந்தவத்தைச் செய்தார். செய்ய, அவருடைய ஒப்பில்லாத கணவர் பொறுப்பாரா? பொறாதவராய்க் குற்றம் நீங்கிய மாமரத்தின் அடியில் மலைமகளான உமையம்மையார் காணும்படி வந்து சிவ லிங்கத் திருமேனியுடன் வெளிப்பட்டு விளங்கினார்.
1135. கண்ட போதிலப் பெருந்தவப் பயனாம்
கம்பம் மேவிய தம்பெரு மானை வண்டு லாங்குழற் கற்றைமுன் தாழ வணங்கி வந்தெழும் ஆசைமுன் பொங்கக் கொண்ட காதலின் விருப்பள வின்றிக் குறித்த பூசனை கொள்கைமேற் கொண்டு தொண்டை யங்கனி வாயுமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள்.
தெளிவுரை : அவ்வாறு இறைவர் வெளிப்பட்டுக் காணப்பட்ட போதில், கொவ்வைக் கனி போன்ற உதட்டையுடைய உமையம்மையார், தாம் செய்த பெருந்தவத்தின் பயனாகிய ஏகம்பத்தில் பொருந்திய தம் இறைவரை, வண்டுகள் மொய்க்கும் கூந்தலானது முன்னால் தாழும்படி வணங்கி, மனத்தில் எழுகின்ற ஆசையானது மேன்மேலும் எழ, மேற்கொண்ட பெருங்காதலால் வந்து எழுப்புகின்ற விருப்பமானது அளவில்லாததாக ஆக, தாம் எண்ணிய பூசனைக் கொள்கையை மேற்கொண்டு, தூய அர்ச்சனையைத் தொடங்கலானார்.
1136. உம்பர் நாயகர் பூசனைக் கவர்தாம்
உரைத்த ஆகமத் துண்மையே தலைநின் றெம்பி ராட்டிஅர்ச் சனைபுரி வதனுக் கியல்பில் வாழ்திருச் சேடிய ரான கொம்ப னார்கள்பூம் பிடகைகொண் டணையக் குலவு மென்தளி ரடியிணை யொதுங்கி அம்பி காவன மாந்திரு வனத்தி லான தூநறும் புதுமலர் கொய்தாள்.
தெளிவுரை : இறைவரின் பூசைக்கு, அவர் தாமே உரைத்தருளிய ஆகமங்களின் உண்மையையே தலை நின்று, எம்பெருமாட்டியார், அர்ச்சனை செய்வதற்காக, இயல்பில் வாழும் திருத்தோழியர்களான கொம்பைப் போன்ற பெண்கள் பூக்கூடையுடன் வர, பொருந்திய மென்மையான தளிர் போன்ற அடிகளால் மெல்ல நடந்து அம்பிகா வனம் என்ற சோலையில் சிவபெருமானுக்கு ஏற்ற தூய மணமுடைய மலர்களைக் கொய்தார்.
1137. கொய்த பன்மலர் கம்பைமா நதியில்
குலவு மஞ்சனம் நிலவுமெய்ப் பூச்சு நெய்த ருங்கொழுந் தூபதீ பங்கள் நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின் மெய்த ரும்படி வேண்டின வெல்லாம் வேண்டும் போதினில் உதவமெய்ப் பூசை எய்த ஆகம விதியெலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்றவெம் பிராட்டி.
தெளிவுரை : பறித்த பல மலர்களும், கம்பை என்ற ஆற்றின் நீரால் குலவும் நீராட்டும் நீரும், நிலவும் மெய்ப்பூச்சும், நெய்யையுடைய தூய தீபங்களும் முதலான ஆசை நிறைவான உள்ளத்தில் பெருகும் அன்புடன் உண்மையான பூசைக்குரிய சாதனங்களை எல்லாம் உமை அம்மையார் வேண்டியபோது தோழியர் கொண்டு வந்து தர, மெய்யான பூசைக்குரியவனாய் ஆகமங்களில் விதித்தவற்றையெல்லாம் உலகங்களையெல்லாம் பெற்ற எம்பெருமாட்டி தவறாது செய்து வந்தார்.
1138. கரந்த ரும்பயன் இதுவென உணர்ந்து
கம்பம் மேவிய உம்பர்நா யகர்பால் நிரந்த காதல்செய் உள்ளத்த ளாகி நீடு நன்மைகள் யாவையும் பெருக வரந்த ரும்பொரு ளாம்மலை வல்லி மாறி லாவகை மலர்ந்தபே ரன்பால் சிரம்ப ணிந்தெழு பூசைநா டோறுந் திருவு ளங்கொளப் பெருகிய தன்றே.
தெளிவுரை : உயிர்களுக்கு வரம் அளிக்கும் பேரருளான மலையரசன் மகள், கைகளைப் பெற்றதால் உண்டான பயன் சிவபூசை செய்தலே ஆகும் என்று அறிந்து, திருஏகம்பத்தில் எழுந்தருளிய இறைவரிடத்தில் பரந்த விருப்பத்தைச் செய்கின்ற மனம் கொண்டவராகி, மிக்க நன்மைகள் எல்லாம் பெருக, ஒப்பில்லாத வகையில் விரிந்து எழுந்த பேரன்பினால், தலையால் வணங்கி எழுந்து செய்யும் பூசை நாள்தோறும் இறைவரின் திருவுள்ளத்துக்கு ஏற்றவாறு அன்றே பெருகியது.
1139. நாத ரும்பெரு விருப்பொடு நயந்து
நங்கை யர்ச்சனை செய்யுமப் பொழுதில் காதல் மிக்கதோர் திருவிளை யாட்டில் கனங்கு ழைக்கருள் புரிந்திட வேண்டி ஓத மார்கடல் ஏழும்ஒன் றாகி ஓங்கி வானமும் உட்படப் பரந்து மீது செல்வது போல்வரக் கம்பை வெள்ள மாந்திரு உள்ளமுஞ் செய்தார்.
தெளிவுரை : பெருவிருப்புடன் மகிழ்ந்து உமையம்மையார் தம்மைப் பூசை செய்கின்றபோது, இறைவரும் அவரிடம் காதல் கொண்ட ஒரு திருவிளையாட்டினால், கனமான காதணிகளை அணிந்த அவர்க்கு அருள் செய்யும் பொருட்டாக, ஓதப் பெருக்குடைய மூன்று கடல்களும் ஒன்றாய்ப் பொங்கி வானமும் உள் அடங்கும்படி மேலே உயர்ந்து போவதைப் போல், கம்பை ஆற்றில் வெள்ளமானது பெருகிவருமாறு நினைந்தருளினார்.
1140. அண்ண லாரருள் வெள்ளத்தை நோக்கி
அங்க யற்கண்ணி தம்பெரு மான்மேல் விண்ணெ லாங்கொள வரும்பெரு வெள்ளம் மீது வந்துறும் எனவெருக் கொண்டே உண்ணி லாவிய பதைப்புறு காதல் உடன்தி ருக்கையால் தடுக்கநில் லாமை தண்ணி லாமலர் வேணி யினாரைத் தழுவிக் கொண்டனள் தன்னையே ஒப்பாள்.
தெளிவுரை : இறைவனார் அருளிய வெள்ளத்தை அழகிய கயல் போன்ற கண்களை உடைய உமையம்மையார் பார்த்தார்; வானமும் உட்பட பெருகி வளர்ந்து வரும் பெருவெள்ளமானது மேல் வந்து அடங்கும் என அஞ்சினார்; தம் உள்ளத்தில் எழுந்த பதற்றத்துடன் கூடிய காதலுடன் திருக்கையினால் அதை மேலே வாராதபடி தடுத்தார். அது நிற்கவில்லை. ஆதலால் தம்மைத் தாமே ஒத்த அம்மையார் குளிர்ந்த பிறைச் சந்திரன் பொருந்துவதற்கு இடமான சடையையுடைய இறைவரைத் தழுவிக்கொண்டார்.
1141. மலைக்கு லக்கொடி பரிவுறு பயத்தால்
மாவின் மேவிய தேவநா யகரை முலைக்கு வட்டொடு வளைக்கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிடத் தழுவச் சிலைத்த னித்திரு நுதல்திரு முலைக்கும் செந்தளிர்க் கரங்க ளுக்கும்மெத் தெனவே கொலைக்க ளிற்றுரி புனைந்ததம் மேனி குழைந்து காட்டினார் விழைந்தகொள் கையினார்.
தெளிவுரை : மலையரசனின் மகளான உமாதேவியார் அன்பு மிகுதியால் கொண்ட அச்சத்தால், மாமரத்தின் அடியில் முளைத்துத் தோன்றிய இறைவரை, முலையான மலையோடு வளையணிந்த கைகளால் நெருக்கி முதிரும் ஆசையுடன் இறுக்கமாகத் தழுவிக் கொண்டார். திருவிளையாட்டை விரும்பிய சிவபெருமான், வில்லைப் போன்ற நெற்றியையுடைய அவருடைய முலைகளுக்கும், சிவந்த தளிர் போன்ற கைகளுக்கும் மென்மையாய் இருக்கும்படி, கொலை யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட தம் வன்மையான மேனியைக் குழைந்து காட்டினார்.
1142. கம்பர் காதலி தழுவமெய் குழையக்
கண்டு நிற்பவுஞ் சரிப்பவு மான உம்ப ரேமுதல் யோனிக ளெல்லாம் உயிரும் யாக்கையும் உருகியொன் றாகி எம்பி ராட்டிக்கு மெல்லிய ரானார் என்றும் ஏகம்பர் என்றெடுத் தேத்த வம்பு லாமலர் நிறையவிண் பொழியக் கம்பை யாறுமுன் வணங்கிய தன்றே.
தெளிவுரை : தம் மனைவியார் தழுவிக்கொள்ள ஏகம்பர் உடல் குழைந்ததைக் கண்டு, நிற்பனவும் அசைவனவுமாக உள்ள தேவர் முதல் ஏழு வகைப்பட்ட உயிர் இனங்கள் யாவும் உயிரும் உடலும் உருகி ஒன்றாகி, என்றும் இறைவர், எம்பிராட்டிக்குத் தழுவக் குழைந்த மேனியையுடைய வரானார் என்று புகழ்ந்து துதிக்க, மணம் கமழும் புதிய மலர்களைத் தேவர் நிறையப் பொழிந்தனர். அப்போதே கம்பையாறு வணங்கித் தன் வெள்ளம் குறையப் பெற்றது.
1143. பூதி யாகிய புனிதநீ றாடிப்
பொங்கு கங்கைதோய் முடிச்சடை புனைந்து காதில் வெண்குழை கண்டிகை தாழக் கலந்த யோகத்தின் மருவிய கருத்தால் ஆதி தேவனா ராயுமா தவஞ்செய் அவ்வ ரங்கொலோ அகிலம்ஈன் றளித்த மாது மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு வளைத்த ழும்புடன் முலைச்சுவ டணிந்தார்.
தெளிவுரை : தூய்மையான திருநீற்றைத் திருமேனி முழுதும் அணிந்து, பெருகி வரும் கங்கை ஆறு அணிந்த சடையை முடியாகக் கட்டிக் கொண்டு, செவியில் வெண்மையான சங்குக் குழையும் உருத்திராக்கக் கண்டிகையும் பொருந்த, கூடிய யோகத்தில் (கூட்டத்தில்) கருத்து கொண்ட காரணத்தால், ஆதி தேவரான சிவபெருமான், அறிஞர்களால் ஆராயத் தக்க மாதவம் செய்யும் அந்த மேன்மைதானோ? எல்லா உலகங்களையும் பெற்ற அம்மையார் மெய்ப்பயன் தரவே அதனைக் கொண்டு, அவரது திருமேனியில் அடையாளங்களான வளைத் தழும்புடன் முலை அடையாளத்தையும் உடையவர் ஆனார்.
1144. கோதி லாஅமு தனையவள் முலைக்குக்
குழைந்த தம்மண வாளநற் கோலம் மாது வாழவே காட்டிமுன் நின்று வரங்கள் வேண்டுவ கொள்கஎன் றருள வேத காரண ராயஏ கம்பர் விரைம லர்ச்செய்ய தாமரைக் கழற்கீழ் ஏதம் நீங்கிய பூசனை முடிந்த தின்மை தானறி விப்பதற் கிறைஞ்சி.
தெளிவுரை : இறைவர், குற்றத்தைப் போக்கும் அமுதம் போன்ற அம்மையாரின் முலைக்குக் குழைந்த தம் நல்ல மணவாளத் திருக்கோலத்தை உமை அம்மையார் வாழவே காட்டி, முன்னே நின்று வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொள்க என்றருளிச் செய்தார். குற்றம் நீங்கிய பூசை இன்னும் முடிவு பெறாமையை, அறிவிக்க அம்மையார் வேதகாரணரான ஏகம்பரின் மணம் கமழும் தாமரை மலர் போன்ற அடிகளில் விழுந்து வணங்கி,
1145. அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும்
அளவி னால்அஞ்சி அஞ்சலி கூப்பிக் கொண்ட இற்றையென் பூசனை யின்னும் குறைநி ரம்பிடக் கொள்கஎன் றருள வண்டு வார்குழல் மலைமகள் கமல வதனம் நோக்கிஅம் மலர்க்கண்நெற் றியின்மேல் முண்ட நீற்றர்நின் பூசனை யென்றும் முடிவ தில்லைநம் பாலென மொழிய.
தெளிவுரை : தேவர்களின் தலைவரான இறைவரின் எதிரே நின்று சொல்லும் அளவில் அஞ்சி, கைகளைக் கூப்பி வணங்கி, இறைவ! தாங்கள் ஏற்றுக்கொண்ட இன்றைய நாளின் பூசையில் இன்னும் எஞ்சி நின்ற பகுதியையும் நிரம்புமாறு நான் செய்ய இருப்பதையும் ஏற்றுக் கொள்ளல் வேண்டும் என வேண்டிக் கொண்டார். வண்டுகுள் மொய்க்கும் கூந்தலையுடைய மலை மகளின் தாமரை போன்ற திருமுகத்தைப் பார்த்து, அந்த மலர் போன்ற கண்ணையுடைய நெற்றியின் மீது திரிபுண்டராகத் தரித்த திருநீற்றையுடைய இறைவர் நம்மிடம் உமக்கு என்றும் பூசை முடிவதில்லை என்று உரைத்தார்.
1146. மாறி லாதஇப் பூசனை யென்றும்
மன்ன எம்பிரான் மகிழ்ந்துகொண் டருளி ஈறி லாதஇப் பதியினு ளெல்லா அறமும் யான்செய அருள்செய வேண்டும் வேறு செய்வினை திருவடிப் பிழைத்தல் ஒழிய இங்குளார் வேண்டின செயினும் பேறு மாதவப் பயன்கொடுத் தருளப் பெறவும் வேண்டும்என் றனள்பிறப் பொழிப்பாள்.
தெளிவுரை : எம் தலைவ முடிவற்ற இந்தப் பூசை என்றும் நிலையாக நிகழத் தாங்கள் ஏற்றுக் கொண்டருளி, இறுதியில்லாத இந்தத் தலத்தினுள் எல்லா அறங்களையும் நான் செய்யுமாறு அருளுதல் வேண்டும். இங்குள்ளவர்கள், திருவடிப் பிழைத்தலான சிவ அபராதம் ஒன்றைத் தவிர, மற்ற எந்தச் செயலையும் தாம் வேண்டுவனவற்றை வேண்டியபடியே செய்தாலும், அவற்றுக்குப் பேறு மாதவப் பயனாக அருளுதல் வேண்டும் என்று உயிர்களின் பிறப்பை ஒழிப்பதையே உள்ளத்துள் கொண்ட அம்மையார் வரம் வேண்டினார்.
1147. விடையின் மேலவர் மலைமகள் வேண்ட
விரும்பு பூசனை மேவிவீற் றிருந்தே இடைய றாஅறம் வளர்க்கும்வித் தாக இகப ரத்திரு நாழிநெல் லளித்துக் கடைய ராகியும் உயர்ந்தவ ராயுங் காஞ்சி வாழ்பவர் தாஞ்செய்தீ வினையுந் தடைப டாதுமெய்ந் நெறியடை வதற்காம் தவங்க ளாகவும் உவந்தருள் செய்தார்.
தெளிவுரை : மலையரசனின் மகள் இங்ஙனம் வேண்ட காளையூர்பவரான இறைவர், அவர் விரும்பிய பூசையில் பொருந்தி வீற்றிருந்து அறங்களை எல்லாம் எக்காலத்திலும் இடையறாமல் வளர்க்கும் வித்தாக, இகபரங்களுக்கு உரித்தான இரண்டு நாழி நெல்லை அளித்தருளினார். கடையவராகியும் உயர்ந்தவராகியும் காஞ்சி மாநகரில் வாழ்பவர் செய்யும் தீவினைகளும் தடையில்லாமல் மெய்நெறியை அடைவதற்குத் துணை செய்யும் மாதவங்களாக ஆகவும் மகிழ்ந்து வரம் தந்தருளினார்.
1148. எண்ண ரும்பெரு வரங்கள்முன் பெற்றங்
கெம்பி ராட்டிதம் பிரான்மகிழ்ந் தருள மண்ணின் மேல்வழி பாடுசெய் தருளி மனைய றம்பெருக் குங்கரு ணையினால் நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க நாடு காதலில் நீடிய வாழ்க்கைப் புண்ணி யத்திருக் காமக்கோட் டத்துப் பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்.
தெளிவுரை : இங்ஙனம் எண்ணுவதற்கு அரிய பெரிய வரங்களைப் பெற்றவராய், அங்கு எம்பெருமாட்டியார், தம் கணவர் மகிழ்ந்தருளும்படி, இவ்வுலகத்தில் வழிபாட்டைச் செய்து அப்பயனை உயிர்களுக்கு அளித்தார்; அதனுடன் இல்லற ஒழுக்கத்தை உலகத்தில் பெருகச் செய்யும் கருணையால், நிலைபெற்ற உயிர்கள் எல்லாம் பெருகும்படி விரும்பியதனால், நீடிய வாழ்க்கைக் குரியதான புண்ணியத் திருக்கோட்டம் என்ற கோயிலின் எழுந்தருளியிருந்து முப்பத்திரண்டு அறங்களையும் வளர்க்கலானார்.
1149. அலகில் நீள்தவத் தறப்பெருஞ் செல்வி
அண்ட மாந்திரு மனைக்கிடுந் தீபம் உலகில் வந்துறு பயனறி விக்க ஓங்கும் நாண்மலர் மூன்றுட னொன்று நிலவ ஆண்டினுக் கொருமுறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்தபே ருலகம் மலர்பெ ருந்திருக் காமக்கோட் டத்து வைத்த நல்லறம் மன்னவே மன்னும்.
தெளிவுரை : அளவு அற்ற பெருந்தவத்தைச் செய்யும், அறச்செல்வியரான உமையம்மையார், பெரிய தம் திருமுனைக்கு இடும் பெரு விளக்குகளான முச்சுடர்களுமே, அந்த அம்மையார் உலகத்திற்கு வந்ததால் உறும் பயனை அறிவிக்குமாறு வந்தது போல், ஓங்கிய புதிய நீலமலர் மூன்றுடன் கூடியதான ஒரு பூ நிலவும்படியாக ஓர் ஆண்டுக்கு ஒரு முறை மலரும் நீடிய பழைமையால், உலகத்தில் விளங்கும் பெரிய காம கோட்டக் கோயிலில் வைத்த நல்ல அறங்கள் நிலை பெறுமாறு வீற்றிருந்தருளுவார்.
1150. தீங்கு தீர்க்குநல் தீர்த்தங்கள் போற்றுஞ்
சிறப்பி னால்திருக் காமக்கோட் டத்தின் பாங்கு மூன்றுல கத்தினுள் ளோரும் பரவு தீர்த்தமாம் பைம்புனற் கேணி வாங்கு தெண்டிரை வேலைமே கலைசூழ் வைய கந்தனக் கெய்திய படியாய் ஓங்கு தன்வடி வாய்நிகழ்ந் தென்றும் உள்ள தொன்றுல காணியென் றுளதால்.
தெளிவுரை : காம கோட்டத்தின் பக்கத்தில் மேல் நடு கீழ் என்னும் மூன்று உலகங்களில் உள்ளவரும் துதிக்கும் தீர்த்தமான குளிர்ந்த நீரைக் கொண்ட ஒரு குளம், வளைந்த அலைகளை வீசுகின்ற கடலான மேகலையால் சூழப்பட்ட நிலவுலகத்தார்க்கு மோட்ச நிலை அடைவதற்கு ஏற்ற படிகளையுடைய ஏணியைப் போல் உயர்ந்த வடிவாய் நிறைவுற்று, எக்காலத்தும் இருப்பதாய், தன்னில் மூழ்குபவர்களின் பாவங்களை எல்லாம் போக்குகின்ற தீர்த்தங்கள் எல்லாம் போற்றுகின்ற சிறப்பால் உலகாணி என்று பெயர் பெற்ற தீர்த்தமாக உள்ளது.
1151. அந்த மின்றிநல் லறம்புரிந் தளிக்கும்
அம்மை தன்திருக் காமக்கோட் டத்தில் வந்து சந்திர சூரியர் மீது வழிக்கொ ளாததன் மருங்குபோ தலினால் சந்த மாதிர மயங்கியெம் மருங்குஞ் சாயை மாறிய தன்றிசை மயக்கம் இந்த மாநிலத் தவரெலாங் காண என்றும் உள்ளதொன் றின்றுமங் குளதால்.
தெளிவுரை : எல்லை இல்லாமல் அறங்களைச் செய்து உயிர்களைக் காப்பாற்றும் உமையம்மையாரின் காமக் கோட்டத்தில் சந்திர சூரியர் வந்து (அம் கோட்டத்தின்) மேலாக வான்வழியில் செல்லாது பக்கத்தில் ஒதுங்கிச் செல்வதால் நேர்த்திக்குகள் மாறுபட்டு, அதனால் எங்கும் நிழல்கள் மாறி இருப்பதால் ஆன திசை மயக்கம், இந்தப் பெரிய நிலவுலகத்தவர் எல்லாரும் காணுமாறு என்றும் இருக்கின்றது. ஆதலால் அது இக்காலத்திலும் உள்ளது.
1152. கன்னி நன்னெடுங் காப்புடை வரைப்பில்
காஞ்சி யாந்திரு நதிக்கரை மருங்கு சென்னி யிற்பிறை யணிந்தவர் விரும்பும் திருப்பெ ரும்பெய ரிருக்கையில் திகழ்ந்து மன்னு வெங்கதிர் மீதெழும் போதும் மறித்து மேல்கடல் தலைவிழும் போதும் தன்னி ழற்பிரி யாதவண் காஞ்சித் தானம் மேவிய மேன்மையும் உடைத்தால்.
தெளிவுரை : காளிதேவியின் நல்ல பெருங்காவல் பொருந்திய அந்தக் காஞ்சி நகர எல்லைக்குள் காஞ்சி என்ற பெயரையுடைய ஆற்றினது கரையின் பக்கத்தில், தலையில் பிறையை அணிந்த சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் திருப்பெரும் பெயர் இருக்கை என்ற பெயர் கொண்ட கோயிலுள், விளங்கி நிலை பெற்ற வெம்மையான கதிர்களையுடைய கதிரவன் மேலே எழும் போதும் மீண்டும் மேற்குக்கடலில் விழும் போதும் தன் நிழல் தன்னிடத்தினின்றும் பிரியாத வளம் கொண்ட காஞ்சித் தானம் பொருந்திய மேன்மையையும் அந்நகரம் பெற்றிருப்பதாகும்.
1153. மறைக ளால்துதித் தருந்தவம் புரிந்து
மாறி லாநிய மந்தலை நின்று முறைமை யால்வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதலுயி ரெல்லாம் நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு காமங்கள் அவரவர்க் கருளி இறைவர் தாமகிழ்ந் தருளிய தளிகள் எண்ணி றந்தஅத் திருநக ரெல்லை.
தெளிவுரை : வேதங்களால் துதி செய்து, அரிய தவத்தைச் செய்து மாறுபாடு இல்லாத நியமத்தில் சிறந்து முனிவர் முறைப்படி வருகின்ற பூசை செய்யவும், வானவர் முதலான எல்லா உயிர்களும் உள்ளத்தில் நிறைந்த அன்பால் அருச்சனை செய்யவும், அவரவர் விரும்பும் பெரு வியப்புகளை அவரவர்க்குத் தந்த சிவபெருமான் மகிழ்ந்து எழுந்தருளிய தலங்கள் அந்தக் காஞ்சி நகரத்தின் எல்லைக்குள் அளவில்லாமல் உள்ளன.
1154. மன்னு கின்றஅத் திருநகர் வரைப்பில்
மண்ணில் மிக்கதோர் நன்மையி னாலே துன்னும் யானையைத் தூற்றில்வாழ் முயல்முன் துரக்க வெய்திய தொலைவில்ஊக் கத்தால் தன்னி லத்துநின் றகற்றுதல் செய்யும் தான மன்றியும் தனுவெழுந் தரணி எந்நி லத்தினுங் காண்பரும் இறவாத் தானமென் றிவைஇ யல்பினில் உடைத்தால்.
தெளிவுரை : நிலைத்த தன்மையுடைய அந்தக் காஞ்சி நகரத்தின் எல்லையுள், இந்த உலகத்தில் மிக்க நன்மையினால், தன்னிடம் நெருங்கிய யானையைப் புதரில் வாழ்கின்ற ஒரு முயலானது ஓடுமாறு கெடாத ஊக்கத்தால் தன்னிடத்தினின்றும் அகன்று செல்லச் செய்யும் இடமும், அதுவன்றியும் உயிர் நீங்கிய உடல்கள் மீளவும் உயிர் பெற்று எழுகின்ற இடமும், எந்த நிலத்திலும் காண்பதற்கு அரிய இறவாத்தானம் என்ற இடமும் என்ற இவற்றை அந்த நகரம் இயல்பாய்க் கொண்டதாகும்.
1155. ஈண்டு தீவினை யாவையும் நீக்கி
இன்ப மேதரும் புண்ணிய தீர்த்தம் வேண்டி னார்தமக் கிட்டசித் தியதாய் விளங்கு தீர்த்தம்நன் மங்கல தீர்த்தம் நீண்ட காப்புடைத் தீர்த்தம்மூன் றுலகில் நிகழ்ந்த சாருவ தீர்த்தமும் முதலா ஆண்டு நீடிய தீர்த்தம் எண் ணிலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார்.
தெளிவுரை : மலையைப் போன்று குவிந்த பாவங்களையெல்லாம் நீக்கி இன்பத்தையே அளிக்கும் புண்ணிய தீர்த்தமும், வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அளிக்கும் இட்டசித்தி தீர்த்தமும், நன்மையைத் தரும் மங்கல தீர்த்தமும், தேவர்களின் பெருங்காவலையுடைய தீர்த்தமும், மூன்று உலகங்களிலும் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் ஒன்று கூடிய சருவ தீர்த்தமும் என்னும் இவை முதலாக அந்த நகரத்தில் உள்ள எண்ணற்ற தீர்த்தங்களிலும் தேவர்கள் வந்து நீராடுவர்.
1156. தாள தொன்றினில் மூன்றுபூ மலரும்
தமனி யச்செழுந் தாமரைத் தடமும் நீள வார்புனல் குடதிசை யோடி நீர்க ரக்குமா நதியுடன் நீடு நாள லர்ந்துசெங் குவளைபைங் கமலம் நண்ப கல்தரும் பாடலம் அன்றிக் காள மேகம்ஒப் பாள்உறை வரைப்பிற் கண்ப டாதகா யாப்புளி உளதால்.
தெளிவுரை : ஒரு காம்பில் மூன்று தாமரை மலர்கள் மலரும் பொன் தாமரையுடைய நீர் நிலையும், மிகுதியாய்ப் பெருகி வரும் நீரானது மேற்கு முகமாக ஓடிப்பின் மறைந்து விடும் ஆறும், அதனுடனே, நீண்ட பகற்காலத்தில் மலர்ந்த செங்குவளையும், இரவிலே மலரும் தாமரை மலரும் நண்பகலில் மலரும் பாதிரியும் அன்றிக் கரிய மேகம் போன்ற நிறமுடைய திருமேனியுடைய அம்மையார் வீற்றிருக்கும் அந்த எல்லையிலே (இரவில்) உறங்காத காய்க்காத புளிய மரமும் உண்டு.
1157. சாயை முன்பிணிக் கும்கிண றொன்று
தஞ்சம் உண்ணில்நஞ் சாம்தடமொன்று மாயை யின்றிவந் துள்ளடைந் தார்கள் வான ரத்துரு வாம்பிலம் ஒன்று மேய அவ்வுரு நீங்கிடக் குளிக்கும் விளங்கு பொய்கையும் ஒன்றுவிண் ணவரோ டாய இன்பம்உய்க் கும்பிலம் ஒன்றோ டனைய ஆகிய அதிசயம் பலவால்.
தெளிவுரை : தன்னுள் ஆடியவரின் நிழலைப் புலப்படாதபடி தனக்குள் அடக்கிக் கொள்கின்ற கிணறு ஒன்றும், சிறிதேயுண்டாலும் நஞ்சாகிக் கொல்லுகின்ற நீரையுடைய நீர்நிலை ஒன்றும், ஒருவஞ்சமும் இல்லாது வந்து உள்ளே புகுந்தவர்கள் குரங்கின் வடிவத்தை அடையும் ஒரு பிலமும், பொருந்திய அந்தக் குரங்கின் வடிவமும் நீங்குமாறு நீராடத்தக்க பொய்கை ஒன்றும், தேவர்களுடன் கலப்பதால் உண்டாகும் இன்பத்தைத் தரும் பிலம் ஒன்றுமாக இத்தன்மை கொண்ட அதிசயம் அந்நகரத்தில் பல ஆகும்.
1158. அஞ்சு வான்கரத் தாறிழி மதத்தோர்
ஆனை நிற்கவும் அரையிருள் திரியும் மஞ்சு நீள்வது போலுமா மேனி மலர்ப்ப தங்களில் வண்சிலம் பொலிப்ப நஞ்சு பில்கெயிற் றரவவெற் றரையின் நாம மூன்றிலைப் படையுடைப் பிள்ளை எஞ்ச லின்றிமுன் திரியவுங் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும்.
தெளிவுரை : ஐந்து பெரிய கைகளையும், ஆறு போல் பாய்கின்ற மதத்தையும் கொண்ட நிகரில்லாத யானை முகமுடைய விநாயகக் கடவுள் நின்று காக்கவும், மலர் போன்ற அடிகளில் வண்மையுடைய சிலம்புகள் ஒலிக்க, நள்ளிரவிலே திரியும் மேகம் நீள்வதைப் போன்ற கரிய (கஞ்சுகம் போர்த்திய) திருமேனியையும் நஞ்சு ஒழுகும் பற்களைக் கொண்ட பாம்பைக் கச்சாக அணிந்த வெற்று அரையையும் உடைய அச்சத்தைத் தருகின்ற மூன்று இலை வடிவு கொண்ட சூலப்படையையுடைய மகனான வைரவக் கடவுள் இடைவிடாது முன்னே திரிந்து காக்கவும், கிரௌஞ்ச மலையை இரண்டு பிளவாகப் பிளந்த வேல் படையையுடைய முருகப்பெருமான் காத்திடவும் விளங்கியது அந்த நகரம்.
1159. சத்தி தற்பர சித்தயோ கிகளும்
சாத கத்தனித் தலைவ ரும் முதலா நித்தம் எய்திய ஆயுள்மெய்த் தவர்கள் நீடு வாழ்திருப் பாடியும் அனேகஞ் சித்தர் விஞ்சையர் இயக்கர்கந் தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டுகை யேந்தி வித்த கக்கரி மேல்கொளுங் காரி மேவு செண்டணை வெளியுமொன் றுளதால்.
தெளிவுரை : சக்தியை வழிபட்டுச் சித்தி அடைந்த சத்தி யோகியரும், சிவயோக சாதகமுடைய தனித்தலைவரான சிவயோகிகளும் முதலான அழிவில்லாமையுடைய ஆயுளைக் கொண்ட மெய்த்தவர்கள் நிலைத்து வாழ்கின்ற பாடிகளும் பல அங்கு உள்ளன. சித்தர்கள், விஞ்சையர்கள், இயக்கர்கள், கந்தருவர்கள் என்ற இவர்கள் விளக்கம் பெற்றுப் பொருந்துமாறு, நீண்ட செண்டினைக் கையில் ஏந்திச் சிறந்த யானையின் மீது ஏறிச் செல்கின்ற ஐயனார் உலாவரும் செண்டணை வெளியும் அங்கு ஒன்று உண்டு.
1160. வந்த டைந்தவர் தம்முரு மாய
மற்று ளாரைத்தாங் காண்பிட முளது சிந்தை யோகத்து முனிவர்யோ கினிகள் சேரும் யோகபீ டமும்உள தென்றும் அந்த மில்அறம் புரப்பவள் கோயில் ஆன போகபீ டமும்உள தாகும் எந்தை யார்மகிழ் காஞ்சிநீ டெல்லை எல்லை யில்லன உள்ளஆ ரறிவார்.
தெளிவுரை : அக்காஞ்சி நகரத்திலே, தன்னிடம் வந்து சேர்ந்தவர் தன் வடிவம் மற்றவர்க்குத் தெரியாது மறையத்தாம் அவர்களைக் காணும்படியுள்ள ஓர் இடம் உண்டு. சிந்தையை யோக இறைவர் பால் கூட்டும் முனிவர், யோகினியர் சேர்ந்திருக்கும் யோக பீடமும் உள்ளது. அழிவில்லாத அறங்களை என்றும் காக்கின்ற காமாட்சி அம்மையார் விரும்பி எழுந்தருளியுள்ள கோயிலான போக பீடமும் அங்கு உண்டு. எம்பெருமானான ஏகாம்பரநாதர் மகிழ்ந்து வீற்றிருக்கும் காஞ்சிபுரத்தில் இவ்வாறு நீண்ட அளவில்லாத அதிசயங்கள் பல உள்ளன. அவற்றை யாவர் அறிவார்? எவரும் இலர்.
1161. தூண்டு சோதியொன் றெழுந்திருள் துரக்கும்
சுரர்கள் வந்துசூழ் உருத்திர சோலை வேண்டி னார்கள்தம் பிறப்பினை யொழிக்கும் மெய்ந்நெ றிக்கண்நின் றார்கள்தாம் விரும்பித் தீண்டில் யாவையுஞ் செம்பொனாக் குவதோர் சிலையும் உண்டுரை செய்வதற் கரிதால் ஆண்ட நாயகி சமயங்க ளாறும் அகில யோனியும் அளிக்கும்அந் நகரம்.
தெளிவுரை : இறைவரால் தூண்டப்பட்டு விளங்கும் ஒளிப்பிழம்பு ஒன்று தோன்றி இருளை நீக்குவதற்கு இடமாகியும், தேவர்கள் வந்து சூழ்ந்து கொள்வதற்கு இடமாகியும் உள்ள உருத்திர சோலை என்ற பூங்காவனமும், விரும்பி வேண்டியவர்க்கு அவர்களின் பிறவியை ஒழிக்க மெய்ஞ்ஞான நெறியில் நின்றவர் விரும்பித் தீண்டும்படி செய்தால், ஓடு முதலான எவ்வகைப் பொருள்களையும் பொன்னாய்ச் செய்கின்ற ஒரு கல்லும் உண்டு. எம்மை ஆட்கொள்ளும் காமாட்சி அம்மையார் தாம் ஆறு சமயங்களையும் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அந்தத் திருநகரத்தில் உள்ள இத்தகைய பெருமைகள் சொல்வதற்கு அரியவாகும்.
1162. என்றும் உள்ளவிந் நகர்கலி யுகத்தில்
இலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன் வன்றி றற்புலி இமயமால் வரைமேல் வைக்க ஏகுவோன் தனக்கிதன் வளமை சென்று வேடன்முன் கண்டுரை செய்யத் திருந்து காதநான் குட்பட வகுத்துக் குன்று போலுமா மதில்புடை போக்கிக் குடியி ருத்தின கொள்கையின் விளங்கும்.
தெளிவுரை : என்றும் அழியாது நிலைபெற்ற இந்தக் காஞ்சிபுரமானது, வலிய ஆற்றலுடைய புலிக்கொடியைப் பெரிய இமயமலையின் மீது நாட்டுமாறு செல்கின்றவனான கலியுகத்தில் விளங்கும் கரிகாற்பெருவளத்தான் என்னும் சோழ மன்னனுக்கு, முன்னே இந்த இடத்தைக் கண்டு, சிந்து மேதன் என்ற ஒரு வேடன் போய் இதன் சிறப்பைச் சொல்ல, திருத்தம் செய்யப்பட்ட நான்கு காததொலைவு சுற்றெல்லையையுடைய ஒரு நகரமாய் அமைத்தான். மலையைப் போன்ற பெரிய மதிலை நான்கு பக்கங்களி<லும் சூழ்ந்திருக்கச் செய்தான்; பல குடிசைகளை அங்குக் குடியிருக்குமாறு செய்தான். இத்தகைய பெருமையுடன் இது விளங்குகின்றது.
1163. தண்காஞ்சி மென்சினைப்பூங் கொம்ப ராடல்
சார்ந்தசைய அதன்மருங்கு சுரும்பு தாழ்ந்து பண்காஞ்சி இசைபாடும் பழன வேலிப் பணைமருதம் புடையுடைத்தாய்ப் பாரில் நீடும் திண்காஞ்சி நகர்நொச்சி இஞ்சி சூழ்ந்த செழுங்கிடங்கு திருமறைக ள் ஒலிக்குந் தெய்வ வண்காஞ்சி அல்குல்மலை வல்லி காக்க வளர்கருணைக் கடலுலகஞ் சூழ்ந்தால் மானும்.
தெளிவுரை : குளிர்ந்த மரத்தின் மெல்லிய கிளைகளான பூங்கொத்துக்களையுடைய கொம்புகள் காற்றால் ஆடி அசைய, அதன் பக்கத்தில் வண்டுகள் விரும்பி வந்து காஞ்சிப்பண்ணைப் பாடும் மாஞ்சோலையைத் தனக்கு வேலியாய்க் கொண்ட வயல்களுடன் கூடிய மருதநிலத்தை அருகில் கொண்டதாய், உலகத்தில் நிலைபெற்ற காஞ்சி நகரத்தின் வன்மையான நொச்சியான மதிலைச் சூழ்ந்த அகழியானது, சிறந்த வேதங்கள் ஒலிக்கின்ற தெய்வத் தன்மையுடைய வண்மை என்ற அணியை அணிந்துள்ள இடையையுடைய உமையம்மையார் காக்கின்றாராதலால், வளர்கின்ற கருணைக் கடலானது இந்த உலகத்தைச் சூழ்ந்திருந்தால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு இருக்கும்.
1164. கொந்தலர்பூங் குழல்இமயக் கொம்பு கம்பர்
கொள்ளும்பூ சனைகுறித்த தானங் காக்க மந்திரமா மதிலகழி அவர்தாந் தந்த வாய்மைஆ கமவிதியின் வகுப்புப் போலும் அந்தமில்சீர்க் காஞ்சியைவந் தடைந்தார்க் கன்றி அடைகளங்கம் அறுப்பரிதென் றறிந்து சூழ வந்தணைந்து தன்கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மாகடலும் போலுமலர்க் கிடங்கு மாதோ.
தெளிவுரை : நீர்ப்பூக்கள் நிறைந்த பூப்பதற்கு இடமான அகழியானது. கொத்துக்களாய்ப் பூத்த பூக்களைச் சூடிய கூந்தலையுடைய பார்வதி அம்மையார் இறைவர் விருப்பத்துடன் ஏற்கும் பூசைத் தானத்தைக் காப்பதற்காக, சிவபெருமானால் அருளப்பெற்ற உண்மையான ஆகமங்களில் வகுத்துச் சொல்லப்பட்ட மந்திரத்தால் அமைந்த மதில்களுடன் கூடய அகழிகளைப் போல் விளங்கும். அதுவன்றியும் அந்த அகழியானது கெடுதல் இல்லாத சிறப்பையுடைய காஞ்சி நகரை வந்து புகலாக அடைந்தவர்க்கே அல்லாமல் தம்மைப் பற்றிய குற்றங்களைப் போக்கிக் கொள்ளல் அரிது என்று அறிந்து அந்தக் காஞ்சி நகரத்தைச் சூழ்ந்து தன் கறுப்பு நிறத்தையும் உப்புத் தன்மையையும் போக்கிக் கொள்ளும் பெரிய கடலையும் போல் விளங்கும்.
1165. ஆங்குவளர் எயிலினுடன் விளங்கும் வாயில்
அப்பதியில் வாழ்பெரியோர் உள்ளம் போல ஓங்குநிலைத் தன்மையவாய் அகிலம் உய்ய உமைபாகர் அருள்செய்த ஒழுக்க மல்லால் தீங்குநெறி அடையாத தடையு மாகிச் செந்நெறிக்கண் நிகழ்வாய்மை திருந்து மார்க்கம் தாங்குலவ நிலவிவளர் ஒளியா லென்றும் தடநெடுவான் அளப்பனவாந் தகைய வாகும்.
தெளிவுரை : அங்கு மதிலுடன் விளங்கும் வாயில்கள், அந்நகரத்திலே வாழ்கின்ற பெரியோரின் உள்ளங்கள் போல் ஓங்குதலும் நிலைத்தலும் ஆகிய தன்மை கொண்டவை. உலகத்தவர் உய்யும் பொருட்டு உமை பாகரான சிவபெருமான் அருளிய நல்ல ஒழுக்கமே அல்லாது தீங்கு நெறிகள் அடையாத தடைகளாகவும் அவை விளங்குவன. செம்மையான நெறியில் நிகழும் வாய்மையுடன் விளங்குகின்ற ஆகம விதிகள் தாம் பொருந்த நிலவி வளர்கின்ற ஒளியால் என்றும் பெரிய நீண்ட வானத்தை அளப்பவை போன்ற இயல்பையும் அவை உடையனவாகும்.
1166. மாறுபெறல் அருங்கனக மாடம் நீடு
மணிமறுகும் நெடுந்தெருவும் வளத்தில் வந்த ஆறுபயில் ஆவணவீ திகளும் மற்றும் அமைந்தநகர் அணிவரைகள் நடுவு போக்கிக் கூறுபடு நவகண்ட மன்றி மல்கக் கொண்டஅனே கங்கண்ட மாகி யன்ன வேறொருமண் ணுலகுதனில் உளதாம் என்ன விளங்கியமா லோகநிலை மேவிற் றன்றே.
தெளிவுரை : நிகர் இல்லாத அரிய பொன் மயமான மாளிகைகள் மிகுதியாய் உள்ள அழகிய வீதிகளும், நீண்ட தெருக்களும், பலவகையாய் வந்த வளங்களும் பொருந்தி விற்கப்படும் அங்காடி தெருக்களும், மற்றும் உள்ளவையும் அமைந்திருக்கின்ற அந்த நகரமானது, அழகிய மலைகளை நடுவில் அமைத்து வெவ்வேறாகப் பிரிந்திருக்கும் நவகண்டங்களே அல்லாமல், நெருக்கமான பல கண்டங்களையுடைய வேறொரு பூமண்டலத்தைத் தன்னிடத்தில் கொண்டுள்ளது எனக் கூறும்படி விளங்கும் மகா லோகத்தின் தன்மையை உடையதாகும்.
1167. பாகமருங் கிருபுடையும் உயர்ந்து நீண்ட
படரொளிமா ளிகைநிரைகள் பயில்மென் கூந்தல் தோகையர்தங் குழாமலையத் தூக்கு முத்தின் சுடர்க்கோவைக் குளிர்நீர்மை துதைந்த வீதி மாகமிடை யொளிதழைப்ப மன்னி நீடு மருங்குதா ரகைஅலைய வரம்பில் வண்ண மேகமிடை கிழித்தொழுகுந் தெய்வக் கங்கை மேல்நதிகள் பலமண்மேல் விளங்கி ஓங்கும்.
தெளிவுரை : இரண்டு பக்கங்களிலும் உயர்ந்து நீண்ட ஒளியை வீசும் மாளிகைகளின் வரிசைகளில் பயி<லும் மென்மையான கூந்தலையுடைய மங்கையர் கூட்டம் அலங்காரத்தின் பொருட்டு அசையுமாறு தொங்கவிட்ட குளிர்ந்த தன்மையுடைய முத்து மாலையின் ஒளிக்கோவை மிகுந்து வீசும் தெருவானது, வானத்தில் நெருங்கிய ஒளி தழைக்குமாறு நிலையாய் விளங்குகின்ற பக்கத்தில் எல்லை இல்லாத நிறங்களைக் கொண்ட விண்மீன்கள் அலையுமாறு மேகங்களை இடையிலே கிழித்து ஒழுகி வருகின்ற தெய்வக் கங்கை முதலான மேல் உலகத்தில் உள்ள ஆறுகள் பலவும் இவ்வுலகத்தில் விளங்குவதுபோல் தோன்றும்.
1168. கிளரொளிச்செங் கனகமயந் தானாய் மாடு
கீழ்நிலையோர் நீலச்சோ பானம் பூணக் கொளவமைத்து மீதொருபாற் கன்ன சாலை குலவயிரத் தாலமைத்த கொள்கை யாலே அளவில்சுடர்ப் பிழம்பானார் தம்மைத் தேடி அகழ்ந்தேனம் ஆனானும் அன்ன மாகி வளர்விசும்பில் எழுந்தானும் போல நீடும் மாளிகைகள் உளமற்ற மறுகு தோறும்.
தெளிவுரை : அந்த நகரத்தின் வீதிகள் தோறும் சில மாடங்கள் ஒளி திகழும் செம்பொன் மயமாய்ச் செய்யப்பட்டுப் பக்கத்துக் கீழ் நிலையில் நீலமணிகள் அழுத்திய படிகளை உடையனவாய், மேல் நிலையில் ஒரு பக்கத்தில் சிறந்த வயிர மணியால் அமைத்த பலகணிகளைக் கொண்டுள்ளன. அதனால், அளவற்ற ஒளிப்பிழம்பாகி நின்ற சிவபெருமானின் அடியையும் முடியையும் தேடிக்காணும் பொருட்டுப் பன்றி வடிவம் எடுத்து நிலத்தைத் தோண்டிச் சென்ற திருமாலும், அன்னப்பறவை வடிவம் எடுத்துப் பறந்து சென்ற நான்முகனும் போல அவை விளங்கின.
1169. மின்பொலிபன் மணிமிடைந்த தவள மாட
மிசைப்பயில்சந் திரகாந்தம் விசும்பின் மீது பொன்புரையுஞ் செக்கர்நிறப் பொழுது தோன்றும் புனிற்றுமதி கண்டுருகிப் பொழிந்த நீரால் வன்புலியி னுரியாடைத் திருவே கம்பர் வளர்சடையும் இளம்பிறையுங் கண்டு கும்பிட் டன்புருகி மெய்பொழியக் கண்ணீர் வாரும் அடியவரும் அனையவுள அலகி லாத.
தெளிவுரை : ஒளி திகழும் பல மணிகள் நெருங்கிய வெண்மையான மாடங்களின் மீது மேல் பதித்த சந்திரகாந்தக் கற்கள் வானத்தில் பொன்னைப் போன்ற சிவந்த நிறத்தையுடைய மாலைக் காலத்தில் தோன்றுகின்ற பிள்ளை மதியான மூன்றாம் பிறைச்சந்திரனைக் கண்டு உருகிச் சொரிந்த நீரால், வன்மையான புலியாடையை அந்தச் சடைமீது சூடிய பிறைச்சந்திரனையும் பார்த்து வணங்கி, அன்பால் உருகி, உடல் எல்லாம் கண்ணீர் வடிய நிற்கும் அடியார்களையும் ஒத்துள்ள மாளிகைகள் அளவில்லாதவை.
1170. முகிலுரிஞ்சுங் கொடிதொடுத்த முடிய வாகும்
முழுப்பளிங்கின் மாளிகைக்கள் முற்றுஞ் சுற்றும் நிகரில்சரா சரங்களெல்லாம் நிழலி னாலே நிறைதலினால் நிறைதவஞ்செய் இமயப் பாவை நகிலுழுத சுவடும்வளைத் தழும்பும் பூண்ட நாயகனார் நான்முகற்குப் படைக்க நல்கும் அகிலயோ னிகளெல்லாம் அமைத்து வைத்த அரும்பெரும்பண் டாரநிலை யனைய வாகும்.
தெளிவுரை : முகில்கள் உராய்கின்ற கொடிகள் கட்டப்பட்ட உச்சிகளைக் கொண்ட, முழுதும் பளிங்குக் கற்களால் ஆன மாளிகைகளை வெளிப்பக்கத்தில் சுற்றுகின்ற சரங்களும் அசரங்களும் ஆகிய எல்லாம், நிழல் படுவதால் உண்டான பிரதி பிம்பங்கள் மூலமாக நிறைதலால், மிகுந்த தவத்தைச் செய்யும் பார்வதி அம்மையாரின் முலைச்சுவடும் வளைத்தழும்பும் கொண்ட ஏகம்பர், நான்முகனுக்குப் படைப்புத் தொழிலுக்காகக் கொடுக்கும்படியான எல்லா உயிர்களையும் ஒருங்கே சேர்த்து வைத்துள்ள அரிய பெரிய கருவூலத்தின் நிலையுடையன போல் விளங்கின.
1171. பொற்களப மாளிகைமேல் முன்றில் நின்று
பூங்கழங்கும் மணிப்பந்தும் போற்றி யாடும் விற்புருவக் கொடிமடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவுதுணை மேவு மாதர் அற்புமுதிர் கலவியினிற் பரிந்து சிந்தும் அணிமணிச்சே டியர்தொகுக்கும் அவையு மாகி நற்கனக மழையன்றிக் காஞ்சி யெல்லை நவமணிமா ரியும்பொழியும் நாளும் நாளும்.
தெளிவுரை : அந்த நகரத்தில், பொன் மயமான களபச் சாந்தையுடைய மாளிகைகளின் மீது முன்றலில் நின்று மென்மையான கழங்குகளையும் அழகான பந்துகளையும் இறைவரின் புகழைப் பாடிக்கொண்டு ஆடும் வில் போன்ற புருவமும் கொடி போன்ற இடையும் உடைய மடவாரின் அணிகலன்கள் சிதறி விழும் பொன் அணிகலன்களும், தழுவும் கணவருடன் கூடிய பெண்கள் அன்பு முதிரும் கலவியில் அன்பு மிகுந்த செயல்களால் சிந்தும் அணிகளினின்றும் விழுந்து தோழியரால் கூட்டிச் சேர்த்த மணிகளுமாகி இவ்வகையில் நல்ல பொன் மழையே அல்லாது நவமணி மழையும் பல நாட்களும் பெய்யும்.
1172. பூமகளுக் குறையுளெனுந் தகைய வான
பொன்மாடத் தரமியங்கள் பொலிய நின்று மாமகரக் குழைமகளிர் மைந்தர் அங்கண் வந்தேறு முன்நறுநீர் வண்ட லாடத் தூமணிப்பொன் புனைநாளத் துருத்தி வீசும் சுடர்விடுசெங் குங்குமநீர்த் துவலை தோய்ந்த காமர்மணி நாசிகையின் மருங்கு தங்கும் கருமுகில்கள் செம்முகில்க ளாகிக் காட்டும்.
தெளிவுரை : இலக்குமிக்கு இருப்பிடமானது என்று கூறப்படுகின்ற தன்மையுடைய பொன் மாளிகைகளின் மீது நிலா முற்றங்கள் அழகுடன் விளங்க நின்று, மகர குண்டலங்களை அணிந்த மங்கையர், தம் கணவர் அங்கு வந்து ஏறுவதற்கு முன்னம், நல்ல மணம் கொண்ட நீரினால் விளையாடுவதற்காகத் தூய்மையான மணிகள் இழைத்த அழகாகச் செய்யப்பட்ட உள் துளைகளைக் கொண்ட நீர் தூவும் துருத்தியினின்றும் வீசுகின்ற செங்குங்குமக் குழம்பு கலந்த பளிநீர்த் துளிகள் தோய்ந்த அழகிய மணிகள் கட்டிய கோபுர நாசிகையின் பக்கத்தில் தங்கும் கரிய மேகங்கள் செந்நிற மேகங்களாய்த் தோன்றும்.
1173. இமமலிய வெடுத்தநெடு வரைகள் போல
இலங்குசுதைத் தவளமா ளிகைநீள் கோட்டுச் சிமையடையுஞ் சோபான நிரையும் விண்ணும் தெரிவரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து தமர்களுடன் இழிந்தேறு மைந்தர் மாதர் தங்களையும் விசும்பிடைநின் றிழியா நிற்கும் அமரரையும் அரமகளிர் தமையும் வெவ்வே றறிவரிதாந் தகைமையன அனேகம் அங்கண்.
தெளிவுரை : பனி வந்து மூடும்படி உயர்ந்த மலைகளைப் போல் விளங்கும் சுண்ணச் சாந்து பூசிய வெண்மையான மாளிகையின் உச்சியைச் சேர்வதற்காக அமைக்கப்பட்ட படிகளின் வரிசையையும், மேல் உள்ள வான் உலகத்தையும் வெவ்வேறாகப் பிரித்து அறிய இயலாதவாறு உள்ள தூய்மையால், அந்தப் படி வரிசைகளுள் சேர்ந்து தம்மவர்களுடன் இறங்கியும் ஏறியும் வரும் ஆடவரும் பெண்டிரும் ஆகிய இவர்களையும், வான் உலகத்தினின்று இறங்கி வரும் தேவர்களும் தேவ மகளிர் என்ற இவர்களையும் வேறு வேறாகப் பிரித்து அறிய இயலாதவாறு அரிய தன்மை கொண்ட மாளிகைகள் அங்குப் பல உண்டு.
1174. அரவநெடுந் தேர்வீதி அருகு மாடத்
தணிமணிக்கோ புரத்தயலே வியல்வாய் நீண்ட விரவுமர கதச்சோதி வேதித் திண்ணை விளிம்பினொளி துளும்பமுறைப் படிமீ தேறுங் குரவமரும் குழல்மடவா ரடியி லூட்டும் குழம்படுத்த செம்பஞ்சின் சுவட்டுக் கோலம் பரவைநெடுந் தரங்கமிசை விளங்கித் தோன்றும் பவளநறுந் தளிரனைய பலவும் பாங்கர்.
தெளிவுரை : ஒலி பொருந்திய நீண்ட தெருவின் அருகில் உள்ள மாடத்தின் அழகிய மணிகள் பதித்த கோபுரத்தின் பக்கத்தில் உள்ள அகன்ற நீண்ட மரகத மணிகள் ஒளியுடைய திண்ணைகளின் ஓரத்தில், ஒளி வெளிப்பட அந்தப்படிகளின் மீது ஏறுகின்ற குரவமலர்களைச் சூடிய கூந்தலையுடைய பெண்களின் அடிகளில் பூசிய செம்பஞ்சுக் குழம்பினது அடையாளம் பதிந்த தோற்றம், கரிய கடலின் நீண்ட அலைகளின் மேல் விளங்கித் தோன்றுகின்ற பவளத்தின் தளிர்களைப் போன்று விளங்குவதற்கு இடமான பல மாளிகைகள் அங்கு உள்ளன.
1175. வெம்புசினக் களிற்றதிர்வும் மாவின் ஆர்ப்பும்
வியனெடுந்தேர்க் காலிசைப்பும் விழவ றாத அம்பொன்மணி வீதிகளில் அரங்கி லாடும் அரிவையர்நூ புரஒலியோ டமையும் இம்பர் உம்பரின்இந் திரன்களிற்றின் முழக்குந் தெய்வ உயர்இரவி மாக்கலிப்பும் அயனூர் தித்தேர் பம்பிசையும் விமானத்துள் ஆடுந் தெய்வப் பாவையர்நூ புரஅரவத் துடனே பல்கும்.
தெளிவுரை : அந்நகரம் மிக்க சினம் கொண்ட யானைகளின் அதிர்வும், குதிரைகளின் ஆரவாரமும், அகன்ற பெருந்தேர்களின் சக்கர ஒலியும், (விழா நீங்காத காரணத்தால்) பொன் அணிந்த வீதிகளில் உள்ள ஆடல் அரங்குகளில் ஆடும் ஆடல் பெண்களின் காற்சிலம்பு ஒலியுடன் கூடி விளங்கும். மேலும், தேவேந்திரனது ஐராவதம் என்னும் யானையின் முழக்கமும், சூரியனுடைய தேரில் பூட்டிய குதிரையின் கனைப்பொலிவும், பிரமனுடைய தேர் ஒலியும், அரம்பையரின் கால் சிலம்பு ஒலியும் அந்நகரில் மிக்கிருக்கும்.
1176. அருமறைஅந் தணர்மன்னும் இருக்கை யான
ஆகுதியின் புகையடுத்த அம்பொன் மாடப் பெருமறுகு தொறும்வேள்விச் சாலை யெங்கும் பெறுமவிப்பா கங்கொடுக்கும் பெற்றி மேலோர் வருமுறைமை அழைத்துவிடு மந்திரம்எம் மருங்கும் வானவர்நா யகர்திருவே கம்பர் முன்றில் திருமலிபொற் கோபுரத்து நெருங்கும் எல்லாத் தேவரையும் அணித்தாகக் கொண்டு செல்லும்.
தெளிவுரை : அரிய வேதங்களில் வல்ல அந்தணர் வாழ்கின்ற இருப்பிடங்களான, வேள்விப் புகை நிரம்பிய அழகிய பொன் மாளிகைகள் நிறைந்த பெரிய தெருக்கள் தோறும், ஆகுதியின் புகை பொருந்திய வேள்வி செய்கின்ற இடங்கள் எங்கும், அவ்வத் தேவர்கள் பெற்றுக்கொள்ளும் அவிகளைத் தரும் தன்மையுடைய மேலோர் கூறும், அந்தத் தேவர்களை வருகின்ற முறையினால் அழைப்பதற்கு உரிய மந்திரங்கள், தேவர்களின் தலைவரான இறைவர் திருமுன்றிலில் செல்வம் மலிவதற்கு இடமான பொன் கோபுரவாயிலில் நெருங்கியுள்ள எல்லாத் தேவர்களையும் தம் பக்கங்களுக்கு (யாகம் செய்யும் இடங்களுக்கு) அழைத்துக் கொண்டு போகும்.
1177. அரசர்குலப் பெருந்தெருவும் தெற்றி முற்றத்
தாயுதங்கள் பயிலும்வியல் இடமு மங்கண் புரசைமதக் கரிகளொடு புரவி யேறும் பொற்புடைய வீதிகளும் பொலிய வெங்கும் விரைசெய்நறுந் தொடையலங்கல் குமரர் செய்யும் வியப்புறுசெய் தொழில்கண்டு விஞ்சை விண்ணோர் நிரைசெறியும் விமானவூர் திகளின் மேலும் நிலமிசையும் பலமுறையும் நிரந்து நீங்கார்.
தெளிவுரை : அரச குலத்தவர் வாழும் பெரிய வீதிகளிலும் திண்ணையையுடைய முற்றங்களில் ஆயுதப்பயிற்சி செய்கின்ற அகன்ற இடங்களிலும், அங்குக் கயிற்றையுடைய யானைகளையும் குதிரைகளையும் ஏறிச் செலுத்தும் வீதிகளி<லும், எங்கும் பொலிவு அடையுமாறு, மணம் கமழ்கின்ற பூக்களையும் மணி மாலைகளையும் சூடிய அரசிளைஞர்கள் செய்கின்ற வியக்கத்தக்க வில்-வாள் முதலான வித்தைகளைப் பார்த்து, வித்தியாதரர்களான தேவர்கள் வரிசையாய் நெருங்கிய தேவ விமானங்களின் மேலும் நிலத்தின் மேலும் பல முறைப்படி கூடி நீங்காமல் இருப்பர்.
1178. வெயிலுமிழும் பன்மணிப்பூண் வணிக மாக்கள்
விரவுநிதி வளம்பெருக்கும் வெறுக்கை மிக்க வயினிலவு மணிக்கடைமா நகர்கள் எல்லாம் வனப்புடைய பொருட்குலங்கள் மலிதலாலே கயிலைமலை யார்கச்சி ஆலயங்கள் பலவுங் கம்பமுமே வியதன்மை கண்டு போற்றப் பயிலுமுருப் பலகொண்டு நிதிக்கோன் தங்கப் பயில்அளகா புரிவகுத்த பரிசு காட்டும்.
தெளிவுரை : ஒளி விளங்கும் பல மணிகளையுடைய அணிகளை அணிந்த வாணிகர் செல்வ வளங்களைப் பெருகச் செய்யும் செல்வம் நிறைந்த இடத்தில் மிக்க மணிகள் பதித்த முதல் வாயிலையடைய மாளிகைகள் எல்லாம், பொன்னும் நவ மணிகளும் முதலான செல்வக்கூட்டங்கள் நிறைவதால் கயிலாய மலைப்பதியான சிவபெருமான் காஞ்சியில் இருக்கும் பல கோயில்களிலும் திருவேகம்பத்திலும் தரிசித்துத் தங்கியிருப்பதற்காக அளகாபுரியைப் பயிலும் பல உருவங்களுடன் அமைத்து வைத்த தன்மையாய் விளங்கும்.
1179. விழவுமலி திருக்காஞ்சி வரைப்பின் வேளாண்
விழுக்குடிமைப் பெருஞ்செல்வர் விளங்கும் வேணி மழஇளவெண் திங்கள்புனை கம்பர் செம்பொன் மலைவல்லிக் களித்தவள ருணவின் மூலந் தொழவுலகு பெறுமவள்தான் அருளப் பெற்றுத் தொன்னிலத்து மன்னுபயிர் வேத வாய்மை உழவுதொழி லாற்பெருக்கி உயிர்க ளெல்லாம் ஓங்கவருந் தருமவினைக் குளரால் என்றும்.
தெளிவுரை : விழாக்கள் மிகுந்த காஞ்சி நகரத்தின் எல்லையில், வேளாளரான பெருஞ்செல்வர்கள், ஒளி விளங்கும் சடையில் மிக இளைய பிறையைச் சூடிய இறைவர், செம்பொன் மலையில் அவதரித்த காமாட்சியம்மையாருக்குத் தந்து அருள் வடிவு பெற்ற உணவின் மூலம் என்ற இருநாழி நெல்லையும், தம்மை வழிப்பட்டதால், உலகங்களை யெல்லாம் ஈன்ற தாயான உமையம்மையார் அளித்தருள, அதைப்பெற்றுப் பழமையான இந்த உலகத்தில் நிலைத்த பயிர்களை வேதத்தில் புகழப்படும் உழவுத்தொழிலால் பெருகச் செய்து, எல்லாவுயிர்களும் தழைக்குமாறு வரும் தருமச் செயல்களுக்கு உரியவராய்த் தழைத்து விளங்கினர்.
1180. ஓங்கியநாற் குலத்தொவ்வாப் புணர்வில் தம்மில்
உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி தாங்குழுமிப் பிறந்தகுல பேத மெல்லாம் தந்தகைமைக் கேற்றதனி யிடங்கள் மேவி ஆங்குநிறை கிளைபயின்று மரபி னாற்ற அடுத்தவினைத் தொழில்முறைமை வழாமை நீடு பாங்குவளர் இருக்கைநிலை பலவும் எல்லாம் பண்புநீ டியவுரிமைப் பால அன்றே.
தெளிவுரை : உயர்ந்த நான்கு குலங்களிலும் பொருந்தாத புணர்ச்சியால், அவற்றுள் உயர்ந்தனவும் தாழ்ந்தனவும் ஆகிய சாதிகள் தமக்குள் கூடலால், குல பேதங்கள் எல்லாம் தம் தம் தகுதிக்கு ஏற்ப அமைந்த தனியிடங்களில் பொருந்தி, அங்கு நிறைந்த தம் கிளைஞர்களுடன் கலந்து தம் தம் மரபுக்கு ஏற்ப தொழில் முறையில் தவறாது இயல்புடன் வாழ்ந்திருக்கும் பல இருக்கைகள் எல்லாம் நல்ல பண்பு பொருந்தியனவாக விளங்கின.
1181. ஆதி மூதெயில் அந்நகர் மன்னிய
சோதி நீள்மணித் தூபமுந் தீபமும் கோதில் பல்லிய முங்கொடி யும்பயில் வீதி நாளும் ஒழியா விழாவணி.
தெளிவுரை : ஆதி தலைவரான சிவபெருமானின் பழைமையான மதில் சூழ்ந்த அந்தக் காஞ்சி நகரத்தில் உள்ள தெருக்கள், நீண்ட ஒளியையுடைய தூப தீபங்களையும், குற்றங்களைப் போக்கும் பல இயங்களையும், கொடிகளையும் உடையனவான விழாக்களின் சிறப்புகளை எப்போதும் நீங்காமல் இருந்தன.
1182. வாயில் எங்கணுந் தோரணம் மாமதில்
ஞாயில் எங்கணுஞ் சூழ்முகில் நாள்மதி தோயில் எங்கணும் மங்கலம் தொண்டர்சூழ் கோயில் எங்கணும் உம்பர் குலக்குழாம்.
தெளிவுரை : அக்காஞ்சி நகரத்தின் மாளிகையின் வாயில்தோறும் தோரணங்கள் விளங்கின; பெருமதில் உறுப்பான ஞாயில்களில் எல்லாம் மேகங்கள் விளங்கின. ஒளி விளங்கும் சந்திரன் தோயுமாறு உயர்ந்த வீடுகளில் எங்கும் மங்கலச் செயல்கள் விளங்கின. தொண்டர்கள் கூடி வலம் வரும் கோயில்களில் எல்லாம் தேவர்களின் மிக்க கூட்டங்கள் விளங்கின.
1183. வேத வேதியர் வேள்வியே தீயன
மாத ரோதி மலரே பிணியன காதல் வீதிவி லக்கே கவலைய சூத மாதவி யேபுறஞ் சூழ்வன.
தெளிவுரை : வேதத்தை ஓதும் வேதியர்கள் செய்யும் வேள்விகளே தீயினைக் கொண்டவை; மக்கள் தீயவற்றை எண்ணுவதில்லை. பெண்களின் கூந்தலில் உள்ள பூக்களே பிணிப்புக்கொண்டவை (நோய்கள் இல்லை). விருப்பம் தரும் வீதிகளில் விலக்குகளான வழிகளே கவலை கொண்டவை; (மக்களுக்கு கவலை இல்லை) மாமரங்களும் குருக்கத்தி மரங்களுமே வெளியில் சூழப்பெற்றவை (மக்களிடம் புறங்கூறுதல் இல்லை) கவலை-சந்து, முடுக்கு.
1184. சாய லார்கள் நுசுப்பே தளர்வன
ஆய மாடக் கொடியே அசைவன சேய ஓடைக் களிறே திகைப்பன பாய சோலைத் தருவே பயத்தன.
தெளிவுரை : மயிலைப் போன்ற சாயலையுடைய மங்கையரின் இடைகளே தளர்வன. (மக்கள் துன்பம் முதலியவற்றால் தளர்வதில்லை) அம்மங்கையர் கூட்டங்கள் பொருந்திய மாடங்களின் மேல் கட்டப்பட்ட கொடிகளே அசைவன. (மக்கள் மனம் ஒரு நிலையினின்று பெயர்தல் இல்லை) சிவந்த பொன் நிறமான நெற்றிப் பட்டங்கள் கொண்ட யானைகளே திகைப்பவை (எட்டுத் திக்குகளில்) உள்ளவையாகும். (மக்கள் உள்ளம் திகைப்பது இல்லை) பரவியுள்ள சோலைகளில் உள்ள மரங்களே பயத்தை (பழத்தை) உடையன! மக்கள் அச்சம் கொள்வதில்லை.
1185. அண்ண லார்அன்பர் அன்பேமுன் ஆர்த்தன
தண்ண றுஞ்செழுந் தாதே துகளன வண்ண நீள்மணி மாலையே தாழ்வன எண்ணில் குங்குமச் சேறே இழுக்கின.
தெளிவுரை : சிவபெருமானின் அடியாரது அன்பே ஆரவாரம் உடையதாகும். (மக்கள் துன்பத்தால் அஞ்சி ஆரவாரம் செய்வது இல்லை.) குளிர்ந்த மணம் கமழும் மலர்களின் பூந்தாதுக்களே துகள் உடையன (நாட்டில் உள்ளவர்களிடம் குற்றம் இல்லை.) அழகிய நீண்ட மணிமாலைகளே தாழ்வன (மக்களும் உயிர்களும் தம் நிலையினின்றி தாழ்வதில்லை.) அளவில்லாத குங்குமக்குழம்பே இழுக்கை (வழங்குதலை) உடையன. (மக்கள் அறிநெறியினின்று இழுக்குவதில்லை.)
1186. வென்றி வானவர் தாம்விளை யாடலும்
என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும் நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள் ஒன்றும் அங்கொழி யாவகை உய்ப்பது.
தெளிவுரை : வெற்றியையுடைய வானவர்களைப் போல் விளையாடுதலும், தூய சித்திபெற்று மற்றவர்போல் உடல் அழியாமல் செய்து நீடித்துள்ள சித்தர் போல் எக்காலத்தும் வாழ்ந்திருக்கின்ற தன்மையையும், மற்ற எல்லா நன்மைகளையும் பெற எண்ணித் தம் மனத்தில் விருப்பம் கொண்டு சேர்ந்தவர் அவாவிய பொருள்களுள் ஒன்றும் தவறாதபடி தருவது அந்தக் காஞ்சி நகரம்.
1187. புரங்க டந்தவர் காஞ்சி புரம்புகழ்
பரம்பு நீள்புவ னம்பதி னான்கினும் வரம்பில் போக வனப்பின் வளமெலாம் நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்ததால்.
தெளிவுரை : மூன்று புரங்களையும் எதிர்த்த சிவபெருமான் வீற்றிருக்கின்ற காஞ்சி நகரம் தன் புகழ் பரவிய நீண்ட பதினான்கு உலகங்களிலும் உள்ள எல்லையில்லாத எல்லாப் போகங்களின் சிறப்புக்குக் காரணமான வளங்கள் எல்லாம் நிரம்பியுள்ள ஒரு கொள்கலம் போல் நிறைந்து விளங்குகிறது.
1188. அவ்வகைய திருநகரம் அதன்கண்ஒரு மருங்குறைவார்
இவ்வுலகில் பிறப்பினால் ஏகாலிக் குலத்துள்ளார் செவ்வியஅன் புடைமனத்தார் சீலத்தின் நெறிநின்றார் மைவிரவு கண்டரடி வழித்தொண்டர் உளரானார்.
தெளிவுரை : அத்தகைய இயல்பு கொண்ட காஞ்சி நகரத்தின் ஒரு பக்கத்தில் வாழ்பவரும், இந்த உலகத்தில் பிறப்பினால் ஏகாலியர் குலத்தில் உதித்தவரும், செம்மையான அன்பு நிரம்பிய மனத்தை உடையவரும், நஞ்சு உண்ட கண்டரான சிவபெருமானின் திருவடிகளில் வழி வழியாய்த் தொண்டு செய்பவருமான ஒருவர் வாழ்ந்து வந்தார்.
1189. மண்ணின்மிசை வந்ததற்பின் மனமுதலா யினமூன்றும்
அண்ணலார் சேவடியின் சார்வாக அணைவிப்பார் புண்ணியமெய்த் தொண்டர்திருக் குறிப்பறிந்து போற்றுநிலைத் திண்மையினால் திருக்குறிப்புத் தொண்டர்எனுஞ் சிறப்பினார்.
தெளிவுரை : அவர் இந்த உலகத்தில் வந்து தோன்றிய பின்பு, மனம் முதலான மூன்று கரணங்களையும் சிவபெருமானின் திருவடிச் சார்பாகவே சேர்ப்பவரானார்; சிவபுண்ணியம் உடைய அடியாரின் உள்ளத்தின் திருக்குறிப்பை உணர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும் தன்மையில் நிலைத்த மேன்மையால், திருக்குறிப்புத் தொண்டர் என்று வழங்கப்படும் சிறப்புப் பெயரை உடையவரானார்.
1190. தேரொலிக்க மாவொலிக்கத் திசையொலிக்கும் புகழ்க்காஞ்சி
ஊரொலிக்கும் பெருவண்ணார் எனவொண்ணா உண்மையினார் நீரொலிக்க அராவிரைக்க நிலாமுகிழ்க்குந் திருமுடியார் பேரொலிக்க உருகுமவர்க் கொலிப்பர்பெரு விருப்பினொடும்.
தெளிவுரை : தேர்கள் ஒலி செய்யவும், குதிரைகள் ஒலி செய்யவும், எல்லாத் திக்குகளிலும் போய் பரவும் புகழுடைய காஞ்சி மாநகரத்தின் ஊரில் உள்ளவர்க்குத் துணியை வெளுக்கும் வண்ணார் இவர், என்று சொல்ல இயலாத தன்மையுடைய இவர், கங்கையாறு ஒலிக்கவும் பாம்புகள் இரைக்கவும், சந்திரன் தோன்றுகின்ற சடையுடைய சிவபெருமானின் அடியார்களுக்குப் பெரு மகிழ்வுடன் துணிகளை வெளுத்துத் தந்து வருவார் ஆனார்.
1191. தேசுடைய மலர்க்கமலச் சேவடியார் அடியார்தம்
தூசுடைய துகள்மாசு கழிப்பார்போல் தொல்லைவினை ஆசுடைய மலம்மூன்றும் அணையவரும் பெரும்பிறவி மாசுதனை விடக்கழித்து வருநாளில் அங்கொருநாள்.
தெளிவுரை : ஒளி பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிகளையுடைய சிவபெருமானின் அடியவரின் தூணிகளில் துகளால் ஆன அழுக்கினைப் போக்குபவர் போல் தம் பழவினையால் உண்டாகும் குற்றங்களான மும்மலங்களும் சேர்வதால் வரும் பெரும் பிரிவு என்னும் அழுக்கை விடுமாறு போக்கி வந்தார். அத்தகைய நாள்களில் ஒரு நாளில்,
1192. பொன்னிமயப் பொருப்பரையன் பயந்தருளும் பூங்கொடிதன்
நன்னிலைமை அன்றளக்க எழுந்தருளும் நம்பெருமான் தன்னுடைய அடியவர்தம் தனித்தொண்டர் தம்முடைய அந்நிலைமை கண்டன்பர்க் கருள்புரிவான் வந்தணைவார்.
தெளிவுரை : பொன் நிறமான இமயமலையின் மன்னன் ஈன்ற மகளான பூங்கொடி போன்ற உமையம்மையாரின் தவ நிலையை உலகம் அறிய விளக்கும் பொருட்டாக முன் நாளில் எழுந்தருளிய சிவபெருமான், தம் அடியவரின் ஒப்பில்லாத தொண்டவரின் அந்த நிலைமையைப் பார்த்து அடியார்க்கு அருள் செய்யும் பொருட்டு வந்து அணையவராகி,
1193. சீதமலி காலத்துத் திருக்குறிப்புத் தொண்டர்பால்
ஆதுலராய் மெலிந்துமிக அழுக்கடைந்த கந்தையுடன் மாதவவே டந்தாங்கி மாலறியா மலரடிகள் கோதடையா மனத்தவர்முன் குறுநடைகள் கொளக்குறுகி.
தெளிவுரை : குளிர்மிக்க காலத்தில் திருக்குறிப்புத் தொண்டரிடத்தில் ஏழையாய் மெலிவடைந்து மிகவும் அழுக்கடைந்த கந்தையுடனே மாதவ வேடமான சிவன் அடியார் வேடம் கொண்டு, திருமாலும் அறியாத மலர் போன்ற அடிகள், குற்றம் அணுகாத உள்ளம் கொண்ட அன்பர் முன்னே, குறுகிய நடை கொள்ளும்படி வந்து அடைந்து,
1194. திருமேனி வெண்ணீறு திகழ்ந்தொளிருங் கோலத்துக்
கருமேக மெனஅழுக்குக் கந்தையுடன் எழுந்தருளி வருமேனி அருந்தவரைக் கண்டுமனம் மகிழ்ந்தெதிர்கொண் டுருமேவும் மயிர்ப்புளகம் உளவாகப் பணிந்தெழுந்தார்.
தெளிவுரை : வெண்ணீறு மிகவும் விளங்கும் கோலத்தையுடைய திருமேனி கரிய மேகம் போர்த்ததைப் போல் அழுக்குடைய கந்தையுடன் வரும் மேனிப் பொலிவுடைய அரிய தவரை (சிவபெருமானை)த் திருக்குறிப்புத் தொண்டர் கண்டு, உள்ளம் மகிழ்ந்து, எதிர்கொண்டு தம் உடல் மயிர்ப்புளகம் ஏற்பட, அவரைப் பணிந்து எழுந்தார்.
1195. எய்துமவர் குறிப்பறிந்தே இன்மொழிகள் பலமொழிந்து
செய்தவத்தீர் திருமேனி இளைத்திருந்த தென்னென்று கைதொழுது கந்தையினைத் தந்தருளும் கழுவஎன மைதிகழ்கண் டங்கரந்த மாதவத்தோர் அருள்செய்வார்.
தெளிவுரை : தம்மிடம் வந்த அவரது திருவுள்ளக் குறிப்பினை அறிந்தே, செய் தவத்தீர்! தங்கள் திருமேனி இளைத்திருந்த காரணம் யாது? என்று, இனிய மொழிகள் பலவும் கூறிக் கைகளால் வணங்கி, கந்தையைத் தோய்த்து வெளுத்தற்பொருட்டு என்னிடம் தாரும் என்று சொல்ல, திருநீலகண்டத்தை மறைத்து வந்தவரான மாதவத்தோர் சொல்வராய்,
1196. இக்கந்தை அழுக்கேறி எடுக்கவொணா தெனினும்யான்
மெய்க்கொண்ட குளிர்க்குடைந்து விடமாட்டேன் மேல்கடற்பால் அக்குன்றம் வெங்கதிரோன் அணைவதன்முன் தருவீரேல் கைக்கொண்டு போய்ஒலித்துக் கொடுவாருங் கடிதென்றார்.
தெளிவுரை : இந்தக் கந்தையானது அழுக்கு மிகுதியால் உடுக்க ஒண்ணாது என்றாலும், நான் என் மேனியில் கொண்ட குளிருக்கு அஞ்சி அதனைக் கைவிடமாட்டேன் மேற்குக் கடல் இடத்து அத்தமன மலையான அந்த மலையைச் சூரியன் சேர்வதற்கு முன் தருவீராயின் எடுத்துச் சென்று வெளுத்துக்கொண்டு விரைவில் வாரும் என்று கூறினார்.
1197. தந்தருளும் இக்கந்தை தாழாதே ஒலித்துமக்கின்
றந்திபடு வதன்முன்னம் தருகின்றேன் எனஅவரும் கந்தையிது ஒலித்துணக்கிக் கடிதின்றே தாரீரேல் இந்தவுடற் கிடர்செய்தீர் என்றுகொடுத் தேகினார்.
தெளிவுரை : அடியவரைப் பார்த்துத் திருக்குறிப்புத் தொண்டர், தருவீராக! இதனைச் சற்றும் காலம் தாழ்த்தாது இன்று மாலை மறைவதன் முன்பு வெளுத்துத் தருவேன் என்று சொல்ல, அவரும் இந்தக் கந்தையை உலர வைத்து இன்றைக்கே தாராது போனால் இந்த உடலுக்குத் துன்பம் செய்தவர் ஆவீர்! எனக்கூறிக் கொடுத்து விட்டுச் சென்றார்.
1198. குறித்தபொழு தேயொலித்துக் கொடுப்பதற்குக் கொடுபோந்து
வெறித்தடநீர்த் துறையின்கண் மாசெறிந்து மிகப்புழுக்கிப் பிறித்தொலிக்கப் புகுமளவில் பெரும்பகல்போய்ப் பின்பகலாய் மறிக்கரத்தார் திருவருளால் மழையெழுந்து பொழிந்திடுமால்.
தெளிவுரை : சிவனடியார் குறிப்பிட்ட காலத்துக்குள் வெளுத்துக் கொடுப்பதற்காகத் திருக்குறிப்புத் தொண்டர் கந்தையைக் கொண்டு போய், மணம் கமழும் மலர்கள் நிறைந்துள்ள நீர் நிலைத்துறையில் அதனை அழுக்குப் போகுமாறு தோய்த்துப் பின்பு மிகவும் புழுங்க வைத்துப் பின்பு மிகவும் புழுங்க வைத்துப் பின்பு வெளுக்கப் புகும்போது பெரும் பகலின் எல்லை கழிந்து, பிற்பகலாகிட, மானைக் கையில் ஏந்திய கையினரான சிவபெருமான் திருவருளால் மழை எழுந்து பொழியலாயிற்று.
1199. திசைமயங்க வெளியடைத்த செறிமுகிலின் குழாமிடைந்து
மிசைசொரியும் புனல்தாரை விழிநுழையா வகைமிடைய அசைவுடைய மனத்தன்பர் அறிவுமறந் தருந்தவர்பால் இசைவுநினைந் தழிந்தினியான் என்செய்கேன் எனநின்றார்.
தெளிவுரை : திக்குகள் எல்லாம் ஒளியைப் பெறாது மயங்கும்படி, வெளி எங்கும் அடைந்த திரண்ட மேகக்கூட்டங்கள் நெருங்கி மேலே போய் நின்று பெய்யும் மழையின் தாரை, கண்ணின் பார்வை செல்லக்கூடாதவாறு நெருங்கிட, துன்பம் கொண்ட உள்ளத்தையுடைய அன்பர் தம் அறிவு மயங்க, அரிய தவத்தவரிடத்தில் தாம் கொடுத்த வாக்குறுதியை எண்ணி, மனம் உடைந்து இனி நான் என்ன செய்வேன்? என்று திகைத்து நின்றார்.
1200. ஓவாதே பொழியுமழை ஒருகால்விட் டொழியுமெனக்
காவாலி திருத்தொண்டர் தனிநின்றார் விடக்காணார் மேவார்போல் கங்குல்வர மெய்குளிரும் விழுத்தவர்பால் ஆஆ என் குற்றேவல் அழிந்தவா எனவிழுந்தார்.
தெளிவுரை : இடைவிடாது பெய்யும் மழை ஒருவேளை பெய்யாமல் நிற்கும் என்று எண்ணிக் கபாலியான சிவபெருமானின் திருத்தொண்டர் தனியாய் நின்றார். ஆனால் மழை நிற்கவில்லை. பகைவரைப் போல இரவு வரவே குளிரால் உடல் வருந்தும் தூய துறவியரிடத்தில் ஆ, ஆ! என் குற்றேவல் தவறி விட்டதே! என்று கீழே விழுந்தார்.
1201. விழுந்தமழை ஒழியாது மெய்த்தவர்சொல் லியஎல்லை
கழிந்ததுமுன் பொலித்துமனைக் காற்றேற்க அறிந்திலேன் செழுந்தவர்தந் திருமேனி குளிர்காணுந் தீங்கிழைத்த தொழும்பனேற் கினியிதுவே செயலென்று துணிந்தெழுவார்.
தெளிவுரை : பெய்யும் மழை நிற்காததால், உண்மைத் துறவியர் கூறிய கால அளவு கடந்து விட்டது! இதனை முன்பே வெளுத்து மனையுள் காற்று ஏற்கச் செய்து உலர்த்தும் தந்திரம் அறியாது போனேன்! செழுமையான தவத்தையுடைய திருமேனியானது குளிரால் வருந்தும் தீமையைச் செய்த கடையான தொண்டனுக்கு இனிச்செய்யக் கூடிய செயல் இதுவாகும் எனத் துணிந்து எழுவாராய்,
1202. கந்தைபுடைத் திடஎற்றுங் கற்பாறை மிசைத்தலையைச்
சிந்தவெடுத் தெற்றுவன்என் றணைந்துசெழும் பாறைமிசைத் தந்தலையைப் புடைத்தெற்ற அப்பாறை தன்மருங்கு வந்தெழுந்து பிடித்ததணி வளைத்தழும்பர் மலர்ச்செங்கை.
தெளிவுரை : கந்தையைத் துவைப்பதற்கு ஏற்றும் பாறையின் மீது என் தலை சிதையுமாறு மோதுவேன்! எனத் துணிந்து அணைந்து, பாறையின் மேல் தம் தலையை முட்டி மோதிய அளவில் அந்தப் பாறையின் பக்கத்திலிருந்து அழகிய வளையின் தழும்பு பூண்ட ஏகம்ப நாதரின் மலர் போன்ற செம்மையுடைய கையானது வந்து எழுந்து அவரது தலையைப் பிடித்துக்கொண்டது,
1203. வானிறைந்த புனல்மழைபோய் மலர்மழையாய் இடமருங்கு
தேனிறைந்த மலரிதழித் திருமுடியார் பொருவிடையின் மேனிறைந்த துணைவியொடும் வெளிநின்றார் மெய்த்தொண்டர் தானிறைந்த அன்புருகக் கைதொழுது தனிநின்றார்.
தெளிவுரை : வானத்தில் நிறைந்து பொழிந்த நீர் மழை போய்ப் பூமழையாகிட, பக்கத்தில் தேன் நிறைந்த கொன்றைப்பூ மாலை சூடிய திருமுடியைக் கொண்ட சிவபெருமான் காளையின் மீது தம்முடன் நிறைந்த துணைவியரான உமையம்மையாரோடு வானத்தில் வெளிப்பட்டு நின்றார். திருக்குறிப்புத் தொண்டர் அன்பால் உள்ளம் உருகக் கை கூப்பி வணங்கியபடி தனியே நின்றார்.
1204. முன்னவரை நேர்நோக்கி முக்கண்ணர் மூவுலகும்
நின்னிலைமை அறிவித்தோம் நீயும்இனி நீடியநம் மன்னுலகு பிரியாது வைகுவாய் எனஅருளி அந்நிலையே எழுந்தருளி அணிஏகாம் பரம்அணைந்தார்.
தெளிவுரை : இறைவர் தம் முன் நின்ற அவரை நேர் நோக்கி மூன்று கண்களையுடைய ஏகம்பநாதர், உன் அன்பின் நிலையை மூன்று உலகங்களும் அறியுமாறு செய்தோம்! நீயும் இனி நீடிய நம் நிலை பெற்ற உலகத்தில் பிரியாதிருப்பாயாக! என்று அருள் செய்து, அந்நிலையினின்று எழுந்தருளி அழகிய ஏகாம்பரத்தை அடைந்தார்.
1205. சீர்நிலவு திருக்குறிப்புத் தொண்டர்திருத் தொழில்போற்றிப்
பார்குலவத் தந்தைதாள் அறஎறிந்தார் பரிசுரைக்கேன் பேரருளின் மெய்த்தொண்டர் பித்தனெனப் பிதற்றுதலால் ஆருலகில் இதனுண்மை அறிந்துரைக்க இசைந்தெழுவார்.
தெளிவுரை : சிறப்புப் பொருந்திய திருக்குறிப்புத் தொண்ட நாயனாரின் திருத்தொழிலைத் துதித்து, உலகம் விளங்குமாறு தம் தந்தையின் கால்கள் அறுமாறு வெட்டிய சண்டீச நாயனாரின் இயல்பைச் சொல்லத் தொடங்குகிறேன். பேரருளையுடைய மெய்த்தொண்டர் இறைவரைப் பித்தன் என்று பிதற்றுதலால், இதன் உண்மைத் தன்மையை முழுதும் அறிந்து சொல்லச் சம்மதித்து எழுபவர் யார்? யாருமில்லை.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் முற்றும்
26. சண்டேசுர நாயனார் புராணம்
மண்ணியாறு என்ற ஆற்றின் கரையில் சேய்ஞ்ஞலூர் என்னும் ஓர் ஊர் உண்டு. அந்த ஊரில், மறையைக் கற்ற அந்தணர் பலர் வாழ்ந்தனர். அவ்வூரில் வாழ்ந்த எச்சதத்தன் என்பவனுக்கும் பவித்திரை என்பவளுக்கும் விசார சருமன் என்பவர் தோன்றினார். அவருக்கு, இளமையிலேயே முன்வினைப் பயனால் மறை ஓதும் அறிவு மலர்ந்திருந்தது. அவரது அறிவைக் கண்டு ஆசிரியரே வியந்தார். இவ்வுலகத்தில் அழியாப் பொருள் அருட்பெருஞ்சோதி என்று அவர் உறுதிப்பட எண்ணினார். அவர், அவ்வூர் இடையன் பசு ஒன்றை அடிப்பதைப் பார்த்து வருந்தித் தாமே பசுக்களை மேய்ப்பதாகச் சொன்னார். இடையன் அவரிடம் பசுக்களை விட்டான். அந்தணச் சிறுவரான அவர் மாடுகளை மேய்த்தார். அவர் மேய்க்கத் தொடங்கியபின் பசுக்கள் வளமான உடலுடன் விளங்கின. அப்பசுக்கள் அவரிடம் அன்பு காட்டின. அவர் மீது கொண்ட அன்பால் பால் சொரிந்து நின்றன. அப்பால் இறைவரின் திருமஞ்சனத்துக்கு ஆகும் என்பதை நினைத்தார். நினைத்து, சிவபெருமானுக்கு வழிபாடு செய்வதில் ஆர்வம் கொண்டார். மண்ணியாற்றின் கரையில் திருவாத்தி மரத்தின் கீழ் மணலால் ஒரு சிவலிங்கத்தை நிறுவினார். பசுக்கள் தாமாகக் கறக்கும் பாலை அச்சிவலிங்கத்திற்கு மஞ்சனமாட்டினார். அவரது வழிபாட்டை இறைவர் ஏற்றுக் கொண்டார். இது பல நாட்கள் நிகழ்ந்தது. விசார சருமனின் வழிபாட்டைத் தீயவன் ஒருவன் கண்டான். அவனுக்கு அது தீயதாகப்பட்டது. அந்தணர் அவையில், விசார சருமன் பசுவின் பாலை வீணே மணல் மேட்டில் ஊற்றி கம்பம் போல் நிற்கின்றான் என்று உரைத்தான்.
அந்தணர் விசார சருமனின் தந்தை எச்ச தத்தனை அழைத்துச் செய்தியை உரைத்தனர். அவன் தன் மகன் இனி அவ்வாறு செய்யமாட்டான் என்று உறுதி கூறினான். தன் மகன் செயலை அவன் மறைந்திருந்து பார்க்கலானான். நிகழ்ந்தது எதனையும் அறியாத விசாரசருமன் வழக்கம் போல சிவலிங்கத்துக்குப் பாலை ஊற்றி முழுக்காட்டுச் செய்யத் தொடங்கினர். அதனைப் பார்த்த எச்சதத்தன் தன் மகனைப் பலமுறை அடித்தான். ஆனால் அதனை விசாரசருமன் அறிந்து கொள்ளவில்லை. அதனால் எச்சதத்தன் விசார சருமன் வைத்திருந்த பாற்குடத்தைக் காலால் உதைத்து உருட்டினான். அதனைப் பார்த்த விசார சருமன் சினந்து அங்குக் கீழே கிடந்த கோலை எடுத்தார். அது மழு என்ற ஆயுதமாக ஆயிற்று. அதனால் தம் தந்தையின் காலை வெட்டினார். அவன் கீழே விழுந்தான். பின் தாம் சிவ வழிபாட்டைத் தொடர்ந்தார். சிவபெருமான் அவர்க்குக் காட்சி தந்தார். விசார சருமன் அவர் அடிகளில் விழுந்தார். இறைவர் அவரைத் தழுவிக் கொண்டார். அவர் தழுவிக் கொண்டதால் அவரது உடல் சிவமயமாய் விளங்கியது. நீ எம்பொருட்டு உம் தந்தையின் காலை வெட்டினாய்! இனி நாமே உமக்குத் தந்தை. யாம் உண்ட பரிகலங்கள், உடுக்கும் உடைகள் எல்லாம் உனக்கே ஆகும்படி சண்டீசர் என்ற பதவியையும் தந்தோம் என்று சொல்லி இறைவர் தாம் அணிந்திருந்த கொன்றை மாலையை அவர்க்குச் சூட்டினார். சண்டீசன் என்ற பதவியைப் பெற்றதால் விசார சருமர் சண்டேசுர நாயனார் என்று அழைக்கப்பெற்றார். சண்டேசுவரரால் தண்டிக்கப்பட்டதால் குற்றம் நீங்கி எச்ச தத்தனும் சிவலோகத்தை அடைந்தான்.
1206. பூந்தண் பொன்னி எந்நாளும்
பொய்யா தளிக்கும் புனல்நாட்டு வாய்ந்த மண்ணித் தென்கரையில் மன்ன முன்னாள் வரைகிழிய ஏந்தும் அயில்வேல் நிலைகாட்டி இமையோர் இகல்வெம் பகைகடக்கும் சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வச் சேய்ஞலூர்.
தெளிவுரை : அழகிய குளிர்ச்சியையுடைய காவிரியாறு எக்காலத்தும் பொய்க்காமல் நீரை அளிக்கும் நாடான சோழ நாட்டில், வாய்ப்புடைய மண்ணியாற்றின் தென்கரையில் நிலை பெறுமாறு, முன் நாளில் கிரௌஞ்ச மலை பிளக்கும் படி எடுத்த கூர்மையான வேலின் நிலை பெற்ற தன்மையைக் காட்டிப் பின்னர், தேவர்களின் பகையாகிய சூரபன்மன் முதலியவர்களை வெல்ல நின்ற முருகப்பெருமான் ஆணையால், அளிக்கப்பட்ட அந்தணர்கள் நெருங்கிய பழைய ஊர் செல்வம் மிக்க சேய்ஞலூர் என்பதாகும்.
1207. செம்மை வெண்ணீற் றொருமையினார்
இரண்டு பிறப்பின் சிறப்பினார் மும்மைத் தழலோம் பியநெறியார் நான்கு வேதம் முறைபயின்றார் தம்மை ஐந்து புலனும்பின் செல்லுந் தகையார் அறுதொழிலின் மெய்ம்மை யொழுக்கம் ஏழுலகும் போற்றும் மறையோர் விளங்குவது.
தெளிவுரை : அந்த வூரானது, திருவெண்ணீற்றில் ஒன்றுபட்ட மனம் உடையவராய், இருபிறப்பின் சிறப்பை உடையவராய், மூன்று தீக்களை வளர்க்கும் நெறியிலே நிற்பவராய், நான்கு மறைகளையும் முறையாய்க் கற்பவராய் ஐந்து புலன்களும் தம்மைப் பின் செல்லும் இயல்பு கொண்டவராய்த் தாம் செய்யும் ஆறு தொழிலின் மெய்யான ஒழுக்கத்தை ஏழு உலகங்களும் போற்றத் தக்கவராய் உள்ள மறையவர் வாழ்வதாகும்.
1208. கோதில் மான்தோல் புரிமுந்நூல்
குலவும் மார்பில் குழைக்குடுமி ஓது கிடைசூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும் போதின் விளங்குந் தாரகையும் மதியும் போலப் புணர்மடங்கள் மீது முழங்கு முகிலொதுங்க வேத ஒலிகள் முழங்குவன.
தெளிவுரை : குற்றம் இல்லாத மான் தோல் உடைய முப்புரி நூல் அணிந்த மார்பையும், குழைந்த மெல்லிய மயிர்க் குடுமியையும் உடைய வேதம் ஓதும் கூட்டமாக நிறைந்த சிறு மாணவர்களும், அவர்களுக்கு வேதத்தைக் கற்பிக்கும் ஆசிரியனும், இரவுப்பொழுதில் விளங்கும் விண்மீன்களும் சந்திரனும் போலப் பொருந்தும் மடங்களில், அவற்றின் மேல் ஒலிக்கும் முகில்கள் தங்குமாறு வேத ஒலிகள் முழங்கும்.
1209. யாகம் நிலவும் சாலைதொறும்
மறையோர் ஈந்த அவியுணவின் பாகம் நுகர வருமாலும் அயனும் ஊரும் படர்சிறைப்புள் மாகம் இகந்து வந்திருக்கும் சேக்கை யெனவும் வானவர்கோன் நாகம் அணையுங் கந்தெனவும் நாட்டும் யூப ஈட்டமுள.
தெளிவுரை : வேள்விகள் செய்யப்படுகின்ற சாலைகள் தோறும் வேதியர் தந்த அவிப்பாகத்தை உண்பதற்கு வரும் திருமாலும் நான்முகனும் ஏறி வருகின்ற படரும் இறகுகளையுடைய கருடனும் அன்னமுமான பறவைகள் வானத்தினின்று வந்து தங்குவதற்குரிய இருப்பிடம் போலவும், அங்கனமே தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையைக் கட்டும் கட்டுத்தறி போலவும், நாட்டப்படும் வேள்வித் தூண்களின் கூட்டம் அந்நகரில் உள்ளன.
1210. தீம்பால் ஒழுகப் பொழுதுதொறும்
ஓம தேனுச் செல்வனவும் தாம்பா டியசா மங்கணிப்போர் சமிதை யிடக்கொண் டணைவனவும் பூம்பா சடைநீர்த் தடம்மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும் ஆம்பான் மையினில் விளங்குவன அணிநீள் மறுகு பலவுமுள.
தெளிவுரை : ஓமங்களுக்குப் பஞ்ச கவ்வியத்தின் பொருட்டாய் வளர்க்கப்படுகின்ற பசுக்கள் இனிய பால் ஒழுகுமாறு வேளைதோறும் செல்வனவும், தாம் கற்ற வேத சாகைகளைக் கணித்துக் கொள்வோராய் மாணவர் ஓமத்துக்குரிய சமிதைகளைக் கொண்டு அணைவனவும், மலர்கள் நிரம்பிய நீர் நிலைகளில் மூழ்கி மறையவரின் மங்கையர் புகுவனவு மான தன்மையில் விளங்கும் நீண்ட தெருக்கள் பலவும் அந்நகரத்தில் விளங்கின.
1211. வாழ்பொற் பதிமற் றதன்மருங்கு
மண்ணித் திரைகள் வயல்வரம்பின் தாழ்வில் தரளஞ் சொரிகுலைப்பால் சமைத்த யாகத் தடஞ்சாலை சூழ்வைப் பிடங்கள் நெருங்கியுள தொடங்கு சடங்கு முடித்தேறும் வேள்வித் தலைவர் பெருந்தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள்.
தெளிவுரை : சிறந்த வாழ்வுடைய அந்த நகரத்தின் பக்கத்தில், மண்ணியாற்றின் அலைகள் வரப்புகளின் அடியில் முத்துக்களைச் சொரியும் கரையின் பக்கம் அமைக்கப்பட்ட இடமகன்ற வேள்விச் சாலைகளைச் சூழ்ந்த வெளியிடங்களில், அங்குத் தொடங்கிய வேள்விச் சடங்குகளை முடித்துச் செல்லும் வேள்வித் தலைவரின் பெருந்தேர்களும், அங்கு வந்து அவிப்பாகம் உண்டு செல்கின்ற தேவர்களின் விமானங்களும் நெருங்கி விளங்கும்.
1212. மடையில் கழுநீர் செழுநீர்சூழ்
வயலில் சாலிக் கதிர்க்கற்றை புடையில் சுரும்பு மிடைகமுகு புனலில் பரம்பு பூம்பாளை அடையில் பயிலுந் தாமரைநீள் அலரில் துயிலும் கயல்கள்வழி நடையில் படர்மென் கொடிமௌவல் நனையில் திகழுஞ் சினைக்காஞ்சி.
தெளிவுரை : நீர் மடையில் செங்குவளை மலர்களும், நீர் சூழ்ந்த வயலில் செந்நெற் கற்றைகளும், பக்கத்தில் வண்டுகள் மொய்க்கும் பாக்கு மரத்தில் பூத்த நீர்ச் செழிப்பால்மிக்க பாக்கு மரப்பாளைகளும், இலைகள் மிகுந்த தாமரைகளின் நீண்ட பூக்களில் உறங்கும் கயல் மீன்களும், நடக்கும் வழியில் பந்தல்போல் படர்ந்து மெல்லிய முல்லைக்கொடிகளும் அரும்புகளால் விளங்கும் கிளைகளையுடைய காஞ்சி மரங்களும் இருந்தன.
1213. சென்னி அபயன் குலோத்துங்கச்
சோழன் தில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக் கியவளவர் போரே றென்றும் புவிகாக்கும் மன்னர் பெருமான் அநபாயன் வருந்தொல் மரபின் முடிசூட்டுந் தன்மை நிலவு பதிஐந்தின் ஒன்றாய் விளங்குந் தகைத்தவ்வூர்.
தெளிவுரை : அந்தச் சேய்ஞலூர், சோழர் மரபில் அபயன் எனவும், குலோத்துங்கச் சோழர் எனவும் பெயருடையவராய்த் தில்லையின் எல்லையில் பொன்வேய்ந்த சோழர் போர் ஏறாய் விளங்கிய அநபாயச் சோழர் அவதரித்த பழைமையான மரபில் முடிசூட்டிக் கொள்கின்ற தன்மையில், பொருந்திய ஐந்து பதிகளில் ஒன்றாய் விளங்கும் பண்பையுடையது.
1214. பண்ணின் பயனாம் நல்லிசையும்
பாலின் பயனாம் இன்சுவையும் கண்ணின் பயனாம் பெருகொளியும் கருத்தின் பயனாம் எழுத்தஞ்சும் விண்ணின் பயனாம் பொழிமழையும் வேதப் பயனாம் சைவமும்போல் மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின் பெருமை வரம்புடைத்தோ.
தெளிவுரை : பண்ணுக்குப் பயனான நல்ல இசையையும், பாலுக்குப் பயனாகும் இனிய சுவையையும், கண் பெற்றதற்குப் பயனாகும் ஒளியையும், கருத்துக்குரிய பயன் ஆகும் அஞ்செழுத்தினையும், விண்ணிற்குப் பயனாகும் மழையையும், வேதத்துக்குப் பயனான சைவத்தையும் போல மண்ணுக்குப் பயனாகும் அந்தப் பதியின் வளத்தின் பெருமை அளவுகொண்டதாகுமோ? ஆகாது!
1215. பெருமை பிறங்கும் அப்பதியின்
மறையோர் தம்முள் பெருமனைவாழ் தருமம் நிலவு காசிபகோத் திரத்துத் தலைமை சால்மரபில் அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவுபோல் இருமை வினைக்கும் ஒருவடிவாம் எச்ச தத்தன் உளனானான்.
தெளிவுரை : பெருமையுடன் விளங்கும் அந்தப் பதியில் அந்தணர்களுள் சிறந்த இல்வாழ்க்கைக்குரிய அறங்களில் நிலைத்த காசிப கோத்திரத்தில் தலைமையான குடியில், அரிய மணியையும் தந்து அதுவே நஞ்சையும் அளிக்கும் பாம்பைப் போல, நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் செய்ய ஒரு வடிவாய் வந்தவனான எச்ச தத்தன் என்பவன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.
1216. மற்றை மறையோன் திருமனைவி
வாய்ந்த மரபின் வந்துதித்தாள் சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கைத் தொழிலாள் உலகில் துணைப்புதல்வற் பெற்று விளங்குந் தவஞ்செய்தாள் பெறும்பே றெல்லைப் பயன்பெறுவாள் பற்றை யெறியும் பற்றுவரச் சார்பா யுள்ள பவித்திரையாம்.
தெளிவுரை : அந்த மறையவனின் மனைவியார், அவன் மணம் செய்வதற்குரிய நல்ல மரபில் தோன்றியவர், சுற்றம் தழுவுதலை விரும்பும் தன்மையில் இவ்வாழ்வு நடத்தும் செயலையுடையவர், உலகின் துணையாய் உள்ள மகப்பேற்றைப் பெற்று அதனால் விளங்கும் தவத்தை முன் செய்தவர். எல்லாரும் மகப்பேற்றால் பெறும் பேறுகளுக்கெல்லாம் எல்லையாய் உள்ள பயனைப் பெறுபவர். உலகப் பற்றுக்களையெல்லாம் அறுப்பதற்குக் கருவியான சிவனிடம் பற்று வைத்ததற்குச் சார்பான குணத்தையுடையவர்.
1217. நன்றி புரியும் அவர்தம்பால்
நன்மை மறையின் துறைவிளங்க என்றும் மறையோர் குலம்பெருக ஏழு புவனங் களும்உய்ய மன்றில் நடஞ்செய் பவர்சைவ வாய்மை வளர மாதவத்தோர் வென்றி விளங்க வந்துதயம் செய்தார் விசார சருமனார்.
தெளிவுரை : நன்மையை விரும்பிச் செய்யும் அவர்களிடம், நன்மை அளிக்கும் மறைகளின் துறைகள் விளங்கவும், எக்காலத்தும் மறையவரின் குலம் பெருகவும், ஏழ் உலகங்களும் உய்யவும் திருவம்பலத்தில் கூத்தாடுகின்ற சிவபெருமானின் சை உண்மைத் திறம் வளரவும், மாதவத்தரின் வெற்றி விளங்கவும், விசார சருமனார் தோன்றினார்.
1218. ஐந்து வருடம் அவர்க்கணைய
அங்கம் ஆறும் உடன்நிறைந்த சந்த மறைகள் உட்படமுன் தலைவர் மொழிந்த ஆகமங்கள் முந்தை யறிவின் தொடர்ச்சியினால் முகைக்கும் மலரின் வாசம்போல் சிந்தை மலர உடன்மலரும் செவ்வி யுணர்வு சிறந்ததால்.
தெளிவுரை : அவருக்கு ஐந்து வயது நிரம்ப, ஆறு அங்கங்களுடன் கூடியவராகிச் சந்தசுகளையுடைய மறைகள் உட்படத் தலைவரான சிவபெருமான் முன்னமே மொழிந்தருளிய சிவாகமங்களில் முன்னைய அறிவின் தொடர்ச்சியால், அரும்பாகி முதிர்கின்ற மலரில் தோன்றும் மணம் போல உள்ளம் மலர அதன் உடனே மலர்கின்ற பக்குவமுள்ள உணர்ச்சி சிறக்க உள்ளதாயிற்று.
1219. நிகழும் முறைமை ஆண்டேழும்
நிரம்பும் பருவம் வந்தெய்தப் புகழும் பெருமை உபநயனப் பொருவில் சடங்கு முடித்தறிவின் இகழு நெறிய அல்லாத எல்லாம் இயைந்த வெனினும்தம் திகழு மரபின் ஓதுவிக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார்.
தெளிவுரை : வயது நிகழும் முறைமையால் ஏழு ஆண்டுகள் நிரம்பவும், புகழும் பெருமையும் உடைய உபநயனம் என்ற ஒப்பில்லாத சடங்கினை முடித்த பின்பு, இகழப்படும் நெறியில்லாதவை எக்காலமும் அவர் அறிவில் பொருந்தியிருந்தன என்றாலும், அவரைப் பெற்றவர், தம் மரபின்படி வேதம் ஓதும் செயலைச் செய்வித்தார்கள்.
1220. குலவு மறையும் பலகலையும்
கொளுத்து வதன்முன் கொண்டமைந்த நிலவும் உணர்வின் திறங்கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார் அலகில் கலையின் பொருட்கெல்லை ஆடுங் கழலே எனக்கொண்ட செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந்தகையார்.
தெளிவுரை : அறிவு விளங்குவதற்குக் காரணமான வேதங்களையும் அவற்றை உள்ளிட்ட பல கலைகளையும் ஆசிரியர்கள் கற்பிப்பதற்கு முன்னமேயே தம் உள்ளத்தில் கொண்டு அமைந்து நிலவும் அவரது ஆற்றலைக் கண்டு, அவற்றைப் போதிக்கும் ஆசிரியர் வியப்புக் கொண்டார். அந்தச் சிறிய பெருந்தகையாளர் அளவில்லாத கலைகளில் குறிப்பிடும் பொருள்களுக்கெல்லாம் எல்லையாய் உள்ள பொருள், அருட்பொருள்களுக்கெல்லாம் எல்லையாய் உள்ள பொருள், அருட்பெருங்கூத்து இயற்றும் திருவடியேயாகும் எனக்கொண்ட உறுதிமிக்க தம் உள்ளத்தால் தெரிந்து கொண்டார்.
1221. நடமே புரியும் சேவடியார் நம்மை
உடையார் எனும்மெய்ம்மை உடனே தோன்றும் உணர்வின்கண் ஒழியா தூறும் வழியன்பின் கடனே இயல்பாய் முயற்றிவருங் காதல் மேன்மேல் எழுங்கருத்தின் திடநேர் நிற்குஞ் செம்மலார் திகழு நாளில் ஆங்கொருநாள்.
தெளிவுரை : அருட்கூத்தினைச் செய்யும் திருவடியை உடையவர் நம்மை ஆளுடைய தலைவர் என்னும் உண்மை எண்ணுந்தோறும் உடனே தோன்றும் உணர்வில் ஒழியாது ஊறுகின்ற அன்பின் வழியே கடமையாக இயல்பாய் முயற்சி செய்யுமாறு வரும் காதலானது மேல்மேலும் எழும் கருத்தின் உறுதி பிறழாமல் நேர் நிற்கின்ற விசாரசருமர் விளங்கினார். அத்தகைய நாட்களுள் ஒருநாள்,
1222. ஓது கிடையின் உடன்போவார்
ஊர்ஆன் நிரையின் உடன்புக்க போது மற்றங் கொருபுனிற்றா போற்றும் அவன்மேன் மருப்போச்ச யாது மொன்றுங் கூசாதே யெடுத்த கோல்கொண் டவன்புடைப்ப மீது சென்று மிகும்பரிவால் வெகுண்டு விலக்கி மெய்யுணர்ந்து.
தெளிவுரை : வேதத்தை ஓதும் மாணவர் கூட்டத்துடன் செல்பவர், ஊராரின் பசுக்கூட்டத்துடன் போனபோது, அப்பசு மந்தையுள் ஈன்றணிமையுடைய பசு தன்னை மேய்ப்பவனின் மீது கொம்பால் முட்டச் சென்றது. அவன் சற்றும் கூச்சம் இன்றித் தான் எடுத்த கொம்பால் அவன் அடித்தான். அதைக் கண்ட அவர் மேற்சென்று மிக்க அன்பினால் அவன்மீது சினம்கொண்டு அவனது செயலை விளக்கி, உண்மையை உணர்ந்தவராய்,
1223. பாவுங் கலைகள் ஆகமநூல்
பரப்பின் தொகுதிப் பான்மையினால் மேவும் பெருமை அருமறைகள் மூல மாக விளங்குலகில் யாவுந் தெளிந்த பொருளின்நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால் ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற் கருள்செய்வார்.
தெளிவுரை : பிரிந்த கலைகளும் ஆகம நூல்களின் பரந்த தொகுதியும், உண்மைப் பகுதியால் பெருமை பொருந்திய அரிய வேதங்களும் என்ற இவற்றின் மூலமாக, உலகத்தில் எல்லாம் தெளிந்துணர்ந்து பொருள் நிலை தெளிய உணர்ந்த உள்ளத்தால் பசுக்களின் பெருமையை உள்ளவாறு அறிந்தவராகி ஆயனுக்கு அருள் செய்பவராய்,
1224. தங்கும் அகில யோனிகட்கும்
மேலாம் பெருமைத் தகைமையன பொங்கு புனித தீர்த்தங்கள் எல்லா மென்றும் பொருந்துவன துங்க அமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத அங்கம் அனைத்துந் தாமுடைய அல்ல வோநல் ஆனினங்கள்.
தெளிவுரை : உயிர்கள் தங்கும் எல்லா யோனிகளுக்கும், மேலான பெருமைத் தன்மையுடையன; பொங்கும் தூய தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்தியுள்ளன; தேவர்களும் முனிவர் கூட்டங்களும் சூழ்ந்து இருக்கை கொண்டு பிரியாத அங்கங்களை உடையன பசுக்கள் அல்லவோ?
1225. ஆய சிறப்பி னால்பெற்ற
அன்றே மன்றுள் நடம்புரியும் நாய னார்க்கு வளர்மதியும் நதியும் நகுவெண் டலைத்தொடையும் மேய வேணித் திருமுடிமேல் விரும்பி யாடி அருளுதற்குத் தூய திருமஞ் சனம்ஐந்தும் அளிக்கும் உரிமைச் சுரபிகள்தாம்.
தெளிவுரை : அத்தகைய சிறப்பால் ஈன்ற அன்றே திருவம்பலத்தில் கூத்தாடும் நாயனாருக்கு வளர் பிறையும் கங்கையும் வெண்மையான தலை மாலையும் பொருந்திய சடையையுடைய திருமுடியின் மீது, அவர் விரும்பி ஆடி அருளுதற்கேற்ற தூய திருமஞ்சனமான ஆன் ஐந்தையும் அந்தப் பசுக்கள் கொடுப்பவையாகும்.
1226. சீலம் உடைய கோக்குலங்கள்
சிறக்குந் தகைமைத் தேவருடன் கால முழுதும் உலகனைத்தும் காக்கும் முதற்கா ரணராகும் நீல கண்டர் செய்யசடை நிருத்தர் சாத்து நீறுதரும் மூலம் அவதா ரஞ்செய்யும் மூர்த்தம் என்றால் முடிவென்னோ.
தெளிவுரை : சிறப்பாக தன்மையுடைய தேவருடன் காலம் முழுவதும் எல்லா உலகங்களையும் காக்கின்ற முதல் காரணராகும் திரு நீலகண்டரான சடையையுடைய கூத்தையுடைய பெருமான் சாத்தும் திருநீற்றைத் தரும் கோமயம் என்னும் மூலத்தைத் தருகின்ற மூர்த்தங்கள், சீலமுடைய இந்தப் பசுக்களே யாகும் எனின் முடிவு வேறு என்ன உள்ளது?
1227. உள்ளுந் தகைமை இனிப்பிறவே
றுளவே உழைமான் மறிக்கன்று துள்ளுங் கரத்தார் அணிபணியின் சுடர்சூழ் மணிகள் சுரநதிநீர் தெள்ளுஞ் சடையார் தேவர்கள்தம் பிராட்டி யுடனே சேரமிசைக் கொள்ளுஞ் சினமால் விடைத்தேவர் குலமன் றோஇச் சுரபிகுலம்.
தெளிவுரை : நினைக்கத் தக்க இனி வேறும் உள்ளனவோ, உøழான் கன்று துள்ளி ஆடுவதற்கு இடமான திருக்கையையுடையவரும், அணியும் பாம்புகளின் ஒளியுடைய மணிகளைக் கங்கை, நீரானது தெள்ளுகின்ற சடையை உடையவருமான சிவபெருமான் தேவரின் பெருமாட்டியுடனே எழுந்தருளும் சினமால் விடைத் தேவரின் குலமன்றோ இந்தப் பசுக் குலம்?
1228. என்றின் னனவே பலவும்நினைந்
திதத்தின் வழியே மேய்த்திந்தக் கன்று பயில்ஆன் நிரைகாக்கும் இதன்மே லில்லை கடனிதுவே மன்றுள் ஆடுஞ் சேவடிகள் வழுத்து நெறியா வதும்என்று நின்ற ஆயன் தனைநோக்கி நிரைமேய்ப் பொழிக நீயென்பார்.
தெளிவுரை : என இவ்வாறு பல எண்ணங்களையும் அவர் நினைத்து, கன்றுகளுடன் கூடிய ஆன்நிரைகளை இன்பம் தரும் வழியே மேய்த்துக் காக்கும் இதன்மேல் செய்யத்தக்க கடமை வேறில்லை. இதுவே நடராசப் பெருமானின் திருவடிகளைப் போற்றும் நெறியுமாகும் என்று கொண்டு, தம் எதிரே நின்ற ஆயனைப் பார்த்து, நீ இப்பசுக்களை மேய்க்கும் தொழிலை ஒழிக என்று கூறி,
1229. யானே இனியிந் நிரைமேய்ப்பன்
என்றார் அஞ்சி இடைமகனும் தானேர் இறைஞ்சி விட்டகன்றான் தாமும் மறையோர் இசைவினால் ஆனே நெருங்கும் பேராயம் அளிப்பா ராகிப் பைங்கூழ்க்கு வானே யென்ன நிரைகாக்க வந்தார் தெய்வ மறைச்சிறுவர்.
தெளிவுரை : இனி இந்தப் பசுக்கூட்டத்தை நானே மேய்ப்பேன் என்று அவர் உரைத்தார். ஆயனும் அஞ்சி அவர் முன் வணங்கி, மேய்த்தல் தொழிலை விட்டு நீங்கினான். தாமும் மறையோரின் சம்மதத்தைப் பெற்றுப் பசுக்கள் நெருங்கும் பேராயத்தைக் காப்பராய்ப் பசிய பயிர்களுக்கு மழையைப் போல், பசுக்கூட்டங்களைக் காக்க தெய்வமறைச் சிறுவர் முற்பட்டு வந்தார்.
1230. கோலும் கயிறும் கொண்டுகுழைக்
குடுமி அலையக் குலவுமான் தோலும் நூலுஞ் சிறுமார்பில் துவள அரைக்கோ வணஞ்சுடரப் பாலும் பயனும் பெருகவரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால் சாலும் புல்லின் அவைவேண்டுந் தனையும் மிசையுந் தலைச்சென்று.
தெளிவுரை : பசுவை மேய்க்கும் கோலையும் கயிற்றையும் கொண்டு, சிறிய புல்லிய குடுமியானது அசைய, விளக்கமான மான் தோலும் அதனுடன் பூணூலும் சிறிய மார்பில் துவளத் திருவரையில் கோவணம் விளங்க, பாலும் கன்றுகளும் பெருகுமாறு வரும் பசுக்களை மேய்க்கும் தன்மையில், புல்லை வேண்டுமளவும் விரும்பி உண்ணும்படி மேற்சென்று,
1231. பதவு காலங் களின்மேய்த்தும்
பறித்தும் அளித்தும் பரிவகற்றி இதமுண் துறையுள் நற்றண்ணீர் ஊட்டி அச்சம் எதிர்நீக்கி அதர்நல் லனமுன் செலநீழல் அமர்வித் தமுத மதுரப்பால் உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லந் தொறுமுய்த்தார்.
தெளிவுரை : புல் அதிகமாகவுள்ள காலங்களில் பசுக்களை மேய்த்துப் புல் உண்ணச் செய்தும், கையால் பறித்துத் தந்து காப்பாற்றியும், அவற்றின் துன்பம் போக்கி, இதமாக நீர் உண்ணத்தக்க நீர்த்துறையுள் நல்ல குளிர்ந்த நீரைக் குடிக்கச் செய்து, அச்சங்களை வராமல் காத்து, நல்ல வழிகளில் அவை முன்னே செல்லுமாறு விட்டு நிழலிலே இளைப்பாறுமாறு செய்து, அமுதம் போன்ற சுவையுள்ள பாலைத் தரும் நேரத்தில் அவற்றை உடையவரான மறையவர்களின் மனைகள் தோறும் செலுத்தினார்.
1232. மண்ணிக் கரையின் வளர்புறவின்
மாடும் படுகர் மருங்கினிலும் தண்ணித் திலநீர் மருதத்தண் டலைசூழ் குலையின் சார்பினிலும் எண்ணிற் பெருகு நிரைமேய்த்துச் சமிதை யுடன்மேல் எரிகொண்டு நண்ணிக் கங்குல் முன்புகுதும் நன்னாள் பலவாம் அந்நாளில்.
தெளிவுரை : மண்ணியாற்றங் கரையில் வளரும் முல்லைக் காட்டின் பக்கத்திலும் படுகர்களிலும் குளிர்ந்த முத்துக்களைக் கொழிக்கின்ற மருத நிலச்சோலைகள் சூழ்ந்த கரைகளின் பக்கத்திலும், மேன்மேல் வளர்ந்து பெருகும் பசுக்கூட்டத்தை மேய்த்துச் சமிதையுடன் தீக்கடைகோலும் கொண்டு பொருந்தி, இரவு வருவதற்கு முன்னம் புகும் நல்ல நாட்கள் பலவாகும், அத்தகைய நாட்களில்,
1233. ஆய நிரையின் குலமெல்லாம்
அழகின் விளங்கி மிகப்பல்கி மேய இனிய புல்லுணவும் விரும்பு புனலும் ஆர்தலினால் ஏய மனங்கொள் பெருமகிழ்ச்சி எய்த இரவும் நண்பகலும் தூய தீம்பால் மடிபெருகிச் சொரிய முலைகள் சுரந்தனவால்.
தெளிவுரை : அவ்வாறான அவரது செயலால் பசுக்கூட்டம் எல்லாம் அழகுடன் விளங்கிப் பெருகி, பொருந்திய இனிய புல்லும் தண்ணீரும் உண்ட காரணத்தால், எய்திய உள்ளத்தில் கொண்ட பெருமகிழ்ச்சி பொங்கி இரவிலும் நண்பகலிலும் தூய்மையான இனிய பாலை மடிகள் பெருகிச் சொரியுமாறு காம்புகள் சுரந்தன.
1234. பூணுந் தொழில்வேள் விச்சடங்கு
புரிய ஓம தேனுக்கள் காணும் பொலிவில் முன்னையினும் அனேக மடங்கு கறப்பனவாய்ப் பேணுந் தகுதி அன்பால்இப் பிரம சாரி மேய்த்ததற்பின் மாணுந் திறத்த வானவென மறையோர் எல்லாம் மனமகிழ்ந்தார்.
தெளிவுரை : வேதியர் எல்லாரும் தாம் மேற்கொள்ளும் தொழிலான வேள்விச் சடங்கு செய்ய உதவுகின்ற ஓமப்பசுக்கள், கண்ணால் நேரே பார்க்கும்படி மிக அழகுடன் விளங்கி முன்னைய விடப் பலமடங்கு பால் தருவனவாய், பசுவைக் காக்கும் முறையில் தக்கவாறு அன்புடன் இவ்வாறு அந்தப் பிரமாசரி மேய்த்ததன் பின்பு, சிறந்தனவாய் ஆயின என்று உள்ளம் மகிழ்ந்தனர்.
1235. அனைத்துத் திறத்தும் ஆனினங்கள்
அணைந்த மகிழ்ச்சி அளவின்றி மனைக்கண் கன்று பிரிந்தாலும் மருவுஞ் சிறிய மறைக்கன்று தனைக்கண் டருகு சார்ந்துருகித் தாயாந் தன்மை நிலையினவாய்க் கனைத்துச் சுரந்து முலைக்கண்கள் கறவா மேபால் பொழிந்தனவால்.
தெளிவுரை : எல்லா வகையினாலும் பசுக்கள் கொண்ட உள்ள மகிழ்ச்சி அளவில்லாமல் பெருக, வீட்டில் உள்ள தம் கன்றுகளைப் பிரித்தாலும், தம் முன் மருவிய சிறிய வேதக்கன்றான விசாரசருமரைப் பார்த்து அருகே அடைந்து உருகி அக்கன்றுக்குத் தாம் தாயான தன்மையுள்ள நிலையை அடைந்தவையாய்க் கனைத்துக் கொண்டு மடி சுரத்து காம்புகளினின்றும் கறக்காமலேயே பாலைப் பொழிந்தன.
1236. தம்மை அணைந்த ஆன்முலைப்பால்
தாமே பொழியக் கண்டுவந்து செம்மை நெறியே உறுமனத்தில் திருமஞ் சனமாங் குறிப்புணர்ந்தே எம்மை உடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்ததனில் மெய்ம்மைச் சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விளைந்தெழலும்.
தெளிவுரை : தம்மைச் சேர்ந்த பசுக்கள் பாலைக் கறவாமலேயே சொரிவதைக் கண்டு மகிழ்ந்து செம்மை நெறியிலே பொருந்திய திருமனத்தில் அந்தப் பால் சிவபெருமானுக்குத் திருமஞ்சமனமாகும் குறிப்பையுணர்ந்தே, எம்மை ஆளுடைய விசாரசருமர், பொருந்த எண்ணித் தெளிந்து, அத்தெளிவினுள் சிவபெருமானது பூசையை விரும்பும் வேட்கை உண்டாகி எழவே,
1237. அங்கண் முன்னை அர்ச்சனையின்
அளவின் தொடர்ச்சி விளையாட்டாப் பொங்கும் அன்பால் மண்ணிமணற் புளினக் குறையில் ஆத்தியின்கீழ்ச் செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச் சிவாலயமும் துங்க நீடு கோபுரமுஞ் சுற்றா லயமும் வகுத்தமைத்தார்.
தெளிவுரை : அங்கு அர்ச்சனை முன் நாளில் செய்த தொடர்ச்சியால் விளையாட்டாக வடிவு கொண்டு பொங்கும் அன்பினால், மண்ணியாற்றின் மணல் திடரில், ஆத்தி மரத்தின் அடியில், சிவந்த கண் உடைய காளையை வாகனமாக உடையவரின் திருமேனியான சிவலிங்கத்தை மணலால் உருவாக்கிக் கோயிலும் பெரிய நீண்ட கோபுரமும் சுற்றாலயமும் அமைத்தார்.
1238. ஆத்தி மலரும் செழுந்தளிரும்
முதலா அருகு வளர்புறவில் பூத்த மலர்கள் தாந்தெரிந்து புனிதர் சடிலத் திருமுடிமேல் சாத்த லாகுந் திருப்பள்ளித் தாமம் பலவுந் தாங்கொய்து கோத்த இலைப்பூங் கூடையினில் கொணர்ந்து மணந்தங் கிடவைத்தார்.
தெளிவுரை : ஆத்தி மலர் செழுந்தளிர் முதலாகப் பக்கத்தில் வளரும் முல்லைக் காட்டில் பூத்த பூக்களுள் தாமே தெரிந்து தூயவரான சிவபெருமானின் சடையுடைய திருமுடியின் மீது சாத்துதற்குரிய திருப்பள்ளித் தாமங்கள் பலவற்றையும் தாம் கொய்து இலைகளால் கோத்துப் பூங்கூடையில் கொண்டு வந்து மணம் வெளியே செல்லாது தங்கியிருக்க வைத்தார்.
1239. நல்ல நவகும் பங்கள்பெற
நாடிக் கொண்டு நாணற்பூங் கொல்லை இடத்துங் குறைமறைவும் மேவுங் கோக்கள் உடன்கூட ஒல்லை யணைந்து பாலாக்கள் ஒன்றுக் கொருகா லாகவெதிர் செல்ல அவையுங் கனைத்துமுலை தீண்டச் செழும்பால் பொழிந்தனவால்.
தெளிவுரை : நல்ல நவ கும்பங்கள் பெறுவதற்கு நாடி எடுத்துக் கொண்டு நாணல்கள் நெருங்கிய அழகான கொல்லையி<லும் ஆற்றிடைக்குறை மறைவிலும் மேயும் பசுக்களுடன் விரைவில் சேர்ந்து பால் பசு ஒன்றுக்கு ஒரு காலாக எதிரே செல்ல, அவையும் மடியைத் தீண்டியவுடன் கனைத்து நல்ல பாலைப் பொழிந்தன.
1240. கொண்டு மடுத்த குடம்நிறையக்
கொணர்ந்து விரும்புங் கொள்கையினால் அண்டர் பெருமான் வெண்மணல்ஆ லயத்துள் அவைமுன் தாபித்து வண்டு மருவுந் திருப்பள்ளித் தாமங் கொண்டு வரன்முறையே பண்டைப் பரிவால் அருச்சித்துப் பாலின் திருமஞ் சனமாட்டி.
தெளிவுரை : சொரிந்த அந்தப் பாலைக் குடங்கள் நிறைய ஏற்றுக்கொண்டு, கொணர்ந்து, விரும்பும் கொள்கையால், இறைவரின் வெண் மணலான கோயிலுள் அவற்றை வைத்து வண்டுகள் மொய்க்கும் பூக்களால் வரன் முறையால் முன்னைத் தொடர்ச்சியான அன்பினால் அருச்சனை செய்து, பாலால் திருமஞ்சனம் ஆட்டி,
1241. மீள மீள இவ்வண்ணம்
வெண்பால் சொரிமஞ் சனமாட்ட ஆள உடையார் தம்முடைய அன்ப ரன்பின் பாலுளதாய் மூள அமர்ந்த நயப்பாடு முதிர்ந்த பற்று முற்றச்சூழ் கோளம் அதனில் உள்நிறைந்து குறித்த பூசை கொளநின்றார்.
தெளிவுரை : திரும்பத் திரும்ப இவ்வாறு வெண்மையான பாலைச் சொரியும் திருமஞ்சனத்தை நீராட்ட, ஆட்கொண்டருளுதற்கு உடையாரான சிவபெருமான் தம் அன்பரின் அன்பால் உளதாகி மேன்மேல் உள் நின்று பெருக விரும்பிய ஆசை முதிர்ந்ததான அன்பு முதிரச் சூழும் கோளத்தில் (இலிங்கத்தில்) உள்ளே நிறைந்து நின்று அவர் குறிப்பில் கொண்ட பூசையை ஏற்றுக்கொள்கின்றாராக.
1242. பெருமை பிறங்குஞ் சேய்ஞ்ஞலூர்ப்
பிள்ளை யார்தம் உள்ளத்தில் ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பான திருமஞ் சனமே முதலவற்றில் தேடா தனஅன் பினில்நிரப்பி வரும்அந் நெறியே அர்ச்சனைசெய் தருளி வணங்கி மகிழ்கின்றார்.
தெளிவுரை : பெருமையுடன் சேய்ஞலூர்ப் பிள்ளையார் தம் உள்ளத்தில் ஒன்றுபட்ட எண்ணத்தால் தேவர்க்குத் தலைவர் சிவபெருமான் மகிழும் பூசையின் உறுப்புகளான திருமஞ்சனம் முதலானவற்றில் தாம் தேடிக் கொள்ளாதவற்றை அன்பால் நிரப்பிக் கொண்டு வருகின்ற அம்முறையில் அருச்சனை செய்து வணங்கி மகிழலானார்.
1243. இறையோன் அடிக்கீழ் மறையவனார்
எடுத்துத் திருமஞ் சனமாட்டும் நிறைபூ சனைக்குக் குடங்கள்பால் நிரம்பச் சொரிந்து நிரைக்குலங்கள் குறைபா டின்றி மடிபெருகக் குவிந்த முலைப்பால் குறைவின்றி மறையோர் மனையின் முன்புதரும் வளங்கள் பொலிய வைகுமால்.
தெளிவுரை : சிவபெருமானின் திருவடிகளில் விசாரசருமர் எடுத்துத் திருமஞ்சனம் ஆட்டும் நிறைந்த பூசைக்கு, அன்பு நிறைதலால் குடங்களில் பால் சொரிந்தும், பசுக்கூட்டங்கள், குறைவில்லாது மடி பெருக, அதனால் பாலின் அளவு குறைவில்லாது அந்தணர்களின் வீடுகளில் முன்பு தரும் வளங்கள் எல்லாம் விளங்கும்படியாகவே அமைந்திருந்தன.
1244. செயலிப் படியே பலநாளும்
சிறந்த பூசை செய்வதற்கு முயல்வுற் றதுவே திருவிளையாட் டாக முந்நூல் அணிமார்பர் இயல்பில் புரியும் மற்றிதனைக் கண்டித் திறத்தை யறியாத அயல்மற் றொருவன் அப்பதியில் அந்த ணாளர்க் கறிவித்தான்.
தெளிவுரை : இத்தகைய செய்கையால், பின்னும் பல நாட்களும் சிறந்த பூசை செய்வதற்கு முயன்று, அதுவே விளையாட்டாய் நிகழ்ந்தது. நிகழ, பூணூல் அணிந்த மார்பையுடைய விசார சருமர், இயல்பாய்ச் செய்யும் இதைப் பார்த்து இதன் உண்மைத் திறத்தை அறியாத ஒருவன் அந்தவூரில் வாழ்ந்த அந்தணர்களுக்கு இதை அறிவித்தார்.
1245. அச்சொற் கேட்ட அருமறையோர்
ஆயன் அறியான் என்றவற்றின் இச்சை வழியே யான்மேய்ப்பேன் என்றெம் பசுக்கள் தமைக்கறந்து பொச்சம் ஒழுகு மாணவகன் பொல்லாங் குரைக்க அவன்தாதை எச்ச தத்தன் தனையழைமின் என்றார் அவையில் இருந்தார்கள்.
தெளிவுரை : அவன் உரைத்தவற்றை கேட்ட, அவையில் இருந்த வேதியர்கள், ஆயன் பசுக்களை மேய்க்க அறியான் ஆதலால் அவற்றின் விருப்பை அறிந்து நான் அவற்றை மேய்ப்பேன் என்று கூறி, அழைத்துச் சென்று பசுக்களைக் கறந்து வஞ்சனையால் ஒழுகும் சிறுவனின் பொல்லாங்கைச் சொல்வதற்காக, அவனுடைய தந்தையான அவ் எச்சதத்தனை அழையுங்கள் என்று கூறினர்.
1246. ஆங்கு மருங்கு நின்றார்கள்
அவ்வந் தணன்தன் திருமனையின் பாங்கு சென்று மற்றவனை அழைத்துக் கொண்டு வரப்பகர்ந்த ஓங்கு சபையோர் அவனைப்பார்த் தூர்ஆன் நிரைமேய்த் துன்மகன்செய் தீங்கு தன்னைக் கேளென்று புகுந்த பரிசு செப்புவார்.
தெளிவுரை : அங்குப் பக்கத்தில் நின்றவர்கள் அந்தணனின் மனையில் போய், எச்சதத்தனை அழைத்துக் கொண்டு வந்தனர். அந்தச் சபையினர் அவனைப் பார்த்து, உன் மகன் ஊராரின் பசுக்களை மேய்த்துச் செய்யும் தீமையைக் கேட்பாயாக! எனத் தொடங்கி, நிகழ்ந்ததைச் சொல்லத் தொடங்கி,
1247. அந்தண் மறையோர் ஆகுதிக்குக்
கறக்கும் பசுக்க ளானவெலாம் சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரளக் கொடுபோய் மேய்ப்பான்போல் கந்தம் மலிபூம் புனல்மண்ணி மணலில் கறந்து பாலுகுத்து வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய்மொழிந்தார்.
தெளிவுரை : அந்தணர், யாகத்துக்குப் பால் கறக்கும் பசுக்களையெல்லாம் மனம் மகிழ்ந்து அன்பினால் திரட்டி கொண்டுபோய் மேய்ப்பவனைப் போன்று, மணம் கமழும் மலர்கள் பொருந்திய நீர் மிக்க மண்ணியாற்றங்கரை மணலில் கறந்து பாலைக் கீழே ஊற்றித் தன் உள்ளத்துக்கு வந்த தன்மையாகவே செய்கின்றான் என்று கூறினார்.
1248. மறையோர் மொழியக் கேட்டஞ்சிச்
சிறுமா ணவகன் செய்தஇது இறையும் நான்முன் பறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்ததனை நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்களெனக் குறைகொண் டிறைஞ்சி இனிப்புகுதில் குற்றம் எனதே யாம்என்றான்.
தெளிவுரை : மறையவர் சொல்வதைக் கேட்டு, எச்சதத்தன் அஞ்சி, சிறுவன் செய்துவரும் இச்செயலை நான் முன்பு அறியேன்! நிறையும் பெருமையுடைய அந்தணர்களே! இதற்கு முன்பு நிகழ்ந்த இதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்! என வேண்டி வணங்கிக் கேட்டுக் கொண்டு, இனி இச்செயல் நிகழ்ந்தால் குற்றம் என்னுடையதே ஆகும் என்று சொன்னான்.
1249. அந்த ணாளர் தமைவிடைகொண்
டந்தி தொழுது மனைபுகுந்து வந்த பழியொன் றெனநினைந்தே மகனார் தமக்கு வாய்நேரான் இந்த நிலைமை அறிவேனென் றிரவு கழிந்து நிரைமேய்க்க மைந்த னார்தாம் போயினபின் மறைந்து சென்றான் மறைமுதியோன்.
தெளிவுரை : எச்சதத்தன், அந்தணர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, மாலைச் சந்திக் கடன் முடித்து, வீட்டுக்குள் புகுந்து, இந்த மகனால் வந்த பழி இதுவாகும் என்று எண்ணிக்கொண்டு, மகனிடம் இதனைச் சொல்லாமல் இந்த நிலைமையை யானே நாளை நேரில் பார்த்தறிவேன் நின நினைத்து, அன்றைய இரவு நீங்கிய பின்பு, மைந்தனார் பசுக்கூட்டங்களை மேய்க்கச் சென்ற பின்பு, அவன் மறைவாகப் பின்னால் சென்றான்.
1250. சென்ற மறையோன் திருமகனார்
சிறந்த ஊர்ஆன் நிரைகொடுபோய் மன்றல் மருவும் புறவின்கண் மேய்ப்பார் மண்ணி மணற்குறையில் அன்று திரளக் கொடுசென்ற அதனை யறிந்து மறைந்தப்பால் நின்ற குரவின் மிசையேறி நிகழ்வ தறிய ஒளித்திருந்தான்.
தெளிவுரை : அவ்வாறு சென்ற வேதியனான எச்ச தத்தன், தன் மகனாரான விசாரசருமர் சிறந்த ஊரவர் பசுக்கூட்டத்தைக் கொண்டு சென்று, மணம் கமழும் காட்டில் மேய்ப்பவராய் மண்ணியாற்றங்கரையின் மணல் திட்டில் அன்று திரட்டிக் கொண்டு போன அச்செயலை அறிந்து, மறைந்து அயலில் நின்ற ஒரு குராமரத்தின் மேல் ஏறி மேல் நிகழ்வதை அறிவதற்காக ஒளிந்திருந்தான்.
1251. அன்பு புரியும் பிரமசா
ரிகளும் மூழ்கி அரனார்க்கு முன்பு போல மணற்கோயில் ஆக்கி முகைமென் மலர்கொய்து பின்பு வரும்ஆன் முலைபொழிபால் பெருகுங் குடங்கள் பேணுமிடந் தன்பாற் கொணர்ந்து தாபித்துப் பிறவும் வேண்டு வனசமைத்தார்.
தெளிவுரை : அன்புச் செயலைச் செய்யும் பிரமசாரியான விசாரசருமர், நீரில் முழுகிப் பின்பு, சிவபெருமானுக்கு முன்னை நாட்களில் போல மணலால் கோயிலும், சுற்றாலயமும் செய்து, அன்று மலரும் அரும்புகளையும் மென்மையான மலர்களையும் கொய்து, பின்வரும் பசுவின் மடி பொழியும் பால் பெருகும் குடங்களைப் பேணும் இடத்தில் கொண்டு போய் நிறுவிப் பிற வேண்டியவற்றையும் அமைத்துக் கொண்டு,
1252. நின்ற விதியின் விளையாட்டால்
நிறைந்த அரும்பூ சனைதொடங்கி ஒன்றும் உள்ளத் துண்மையினால் உடைய நாதன் திருமுடிமேல் மன்றல் விரவுந் திருப்பள்ளித் தாமம் சாத்தி மஞ்சனமா நன்று நிறைதீம் பாற்குடங்கள் எடுத்து நயப்புற் றாட்டுதலும்.
தெளிவுரை : நின்ற விதியின் விளையாட்டினால், நிறைந்த அரிய பூசையைத் தொடங்கி ஒன்றிய மனத்து உண்மையினால் சிவபெருமானின் முடிமீது மணம் பொருந்திய மலர்களைச் சாத்தி அருச்சித்து, நன்கு நிறைந்த இனிய பாற்குடங்களை எடுத்து ஆசையுடன் திருமஞ்சனமாய் ஆட்டவும்,
1253. பரவ மேன்மேல் எழும்பரிவும்
பழைய பான்மை மிகும்பண்பும் விரவ மேதக் கவர்தம்பால் மேவும் பெருமை வெளிப்படுப்பான் அரவம் மேவுஞ் சடைமுடியார் அருளாம் என்ன அறிவழிந்து குரவு மேவும் முதுமறையோன் கோபம் மேவும் படிகண்டான்.
தெளிவுரை : பரவுமாறு மேன்மேல் எழுகின்ற அன்பும் முன் பிறவியின் பண்பும் பொருந்த, மேன்மையுடைய அவரிடம் உள்ள பெருமையை வெளிப்படுத்தற்காக, பாம்பை அணிந்த சடைமுடியுடைய சிவபெருமானின் அருளேயாகும் இது என்று கூறும்படி, அறிவு இழந்து குராமரத்தின் மேல் இருந்த அந்தணனான எச்சதத்தன், சினம் பொங்க அதனைப் பார்த்தான்.
1254. கண்ட போதே விரைந்திழிந்து
கடிது சென்று கைத்தண்டு கொண்டு மகனார் திருமுதுகில் புடைத்துக் கொடிதாம் மொழிகூறத் தொண்டு புரியுஞ் சிறியபெருந் தோன்ற லார்தம் பெருமான்மேல் மண்டு காதல் அருச்சனையில் வைத்தார் மற்றொன் றறிந்திலரால்.
தெளிவுரை : பார்த்தவுடனே விரைவில் இறங்கி விரைந்து சென்று கையில் உள்ள தண்டால் மகனின் முதுகில் புடைத்துக் கொடிய சொற்களைச் சொன்னார். திருத்தொண்டு செய்யும் சிறிய பெரிய தோன்றலார், தம் பெருமான் மீது அருச்சனையில் முதிர்ந்த அன்பில் ஊன்றியிருந்தாராதலால் அவர் வேறொன்றையும் அறியாதவர் ஆனார்.
1255. மேலாம் பெரியோர் பலகாலும்
வெகுண்டோன் அடிக்க வேறுணரார் பாலார் திருமஞ் சனமாட்டும் பணியிற் சலியா ததுகண்டு மாலா மறையோன் மிகச்செயிர்த்து வைத்த திருமஞ் சனக்குடப்பால் காலா லிடறிச் சிந்தினான் கையாற் கடமைத் தலைநின்றான்.
தெளிவுரை : சினம் கொண்ட எச்சதத்தன் பல தடவையும் அடித்தான்; மேலோரான பெரியோர் (விசாரசருமர்) அதனை உணராமல் பாலால் நிறைந்த திருமஞ்சன மாட்டும் திருப்பணியில் சலியாதிருப்பதைக் கண்டான்; அறிவு இழந்து, மயக்கம் அடைந்து, மிகவும் சினம் கொண்டு, செயலால் கீழான தொழிலில் நின்றவனாதலால் அம்மறையவன், அங்கு வைத்திருந்த குடப்பாலைக் காலால் இடறிக் கவிழ்த்தான்.
1256. சிந்தும் பொழுதில் அதுநோக்கும்
சிறுவர் இறையில் தீயோனைத் தந்தை யெனவே அறிந்தவன்தன் தாள்கள் சிந்துந் தகுதியின ல் முந்தை மருங்கு கிடந்தகோல் எடுத்தார்க் கதுவே முறைமையினால் வந்து மழுவா யிடஎறிந்தார் மண்மேல் வீழ்ந்தான் மறையோனும்.
தெளிவுரை : அவ்வாறு அவன் குடப்பாலைச் சிந்தச் செய்த போது, அவ்வாறு செய்தவன் தம் தந்தை என்று அறிந்து, அவனுடைய கால்கள் இறைவர்க்குரிய பாலைச் சிந்திய காரணத்தால், விசாரசருமர் அதைத் தண்டிக்க நினைத்து, முன்னம் பக்கத்தில் கிடந்த கோலை எடுக்க, அதுவே அவர்க்கு மழு என்ற படைக்கலமாய் மாற, அந்த மழுவைக் கொண்டு அந்த எச்சதத்தனின் கால்களை வெட்டினார். அதனால் அந்த வேதியனும் தரையில் விழுந்தான்.
1257. எறிந்த அதுவே அர்ச்சனையில்
இடையூ றகற்றும் படையாக மறிந்த தாதை இருதாளும் துணித்த மைந்தர் பூசனையில் அறிந்த இடையூ றகற்றினராய் முன்போல் அருச்சித் திடப்புகலும் செறிந்த சடைநீள் முடியாரும் தேவி யோடும் விடையேறி.
தெளிவுரை : வீசிய அந்தப் படைக்கலமே அருச்சனையில் நேர்ந்த இடையூற்றைப் போக்கும் படையாய் உதவ, தம் தந்தையின் இரண்டு கால்களையும் வெட்டிய மகனார், தம் பூசையில் உண்டான இடையூற்றைப் போக்கி, முன் போல வழிபாடு நடத்தத் தொடங்கினார். அப்போது, நெருங்கிய நீண்ட சடையுடைய சிவபெருமானும் உமையம்மை யாருடன் விடையின் மீது ஏறி,
1258. பூத கணங்கள் புடைசூழப்
புராண முனிவர் புத்தேளிர் வேத மொழிகள் எடுத்தேத்த விமல மூர்த்தி திருவுள்ளம் காதல் கூர வெளிப்படலும் கண்டு தொழுது மனங்களித்துப் பாத மலர்கள் மேல்விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார்.
தெளிவுரை : பூத கணங்கள் பக்கத்தில் சூழ்ந்து வரவும், பழைய முனிவர்களும் தேவர்களும் மறைமொழிகளால் துதித்து வரவும், குற்றமற்றவரான சிவபெருமான் தம் உள்ளத்தில் கருணை மிக்கு வெளிப்பட்டருளவும், பக்தி முற்றிய விசாரசருமனார், இறைவரைக் கண்டு தொழுது உள்ளம் மிகக் களிப்படைந்து அவருடைய திருவடித் தாமரைகளில் விழுந்தார்.
1259. தொடுத்த இதழி சூழ்சடையார்
துணைத்தாள் நிழற்கீழ் விழுந்தவரை எடுத்து நோக்கி நம்பொருட்டால் ஈன்ற தாதை விழவெறிந்தாய் அடுத்த தாதை இனியுனக்கு நாம்என் றருள்செய் தணைத்தருளி மடுத்த கருணை யால்தடவி உச்சி மோந்து மகிழ்ந்தருள.
தெளிவுரை : தொடுக்கப்பட்ட கொன்றை மாலை சூழ்ந்த சடையையுடைய சிவபெருமான், தம் திருவடித் தாமரைகளில் விழுந்தவரை எடுத்து நோக்கி, எம் பொருட்டாக உன்னை ஈன்ற தந்தை விழும்படி நீ அவரை எறிந்தாய்! இனி உனக்கு நாமே அடுத்த தந்தையாவோம்! என்று அருள் செய்து, அவரை அணைத்தருளி, நிறைந்த கருணையால் தடவி, உச்சி மோந்து மகிழ,
1260. செங்கண் விடையார் திருமலர்க்கை
தீண்டப் பெற்ற சிறுவனார் அங்கண் மாயை யாக்கையின்மேல் அளவின் றுயர்ந்த சிவமயமாய்ப் பொங்கி யெழுந்த திருவருளின் மூழ்கிப் பூமேல் அயன்முதலாம் துங்க அமரர் துதிசெய்யச் சூழ்ந்த ஒளியில் தோன்றினார்.
தெளிவுரை : சிவந்த கண்ணையுடைய காளையூர்தியினரான சிவபெருமான் மலர் போன்ற திருக்கையால் தீண்டப் பெற்ற விசாரசருமர் என்ற அச்சிறுவர், அங்குத் தம் மாய உடலின் மேல் அளவில்லாமல் உயர்ந்த சிவமயமாய்ப் பொங்கி எழுந்த திருவருளில் மூழ்கித் தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் முதலான பெருந்தேவர்களும் வழிபடத் தம்மைச் சூழ்ந்து விளங்கிய சிவஒளியுள்ளே கலந்து தோன்றினார்.
1261. அண்டர் பிரானும் தொண்டர்தமக்
கதிபன் ஆக்கி அனைத்துநாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடு வனவும் உனக்காகச் சண்டீ சனுமாம் பதந்தந்தோம் என்றங் கவர்பொற் றடமுடிக்குத் துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்.
தெளிவுரை : தேவர் தலைவரான சிவபெருமானும் விசாரசருமரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராய் ஆக்கி, நாம் உண்ட பரிகலமும் உடுக்கும் உடைகளும், சூடும் மாலை அணிகள் முதலானவையும் ஆக எல்லாம் உனக்கே உரியதாகும்படி சண்டீசன் ஆகும் பதவியை அளித்தோம் எனக்கூறி, அவரது அழகிய பெரிய திருமுடிக்குத் தம் பிறைச்சந்திரன் இருக்கும் சடையில் அணிந்துள்ள கொன்றை மலர் மாலையை எடுத்துச் சூட்டினார்.
1262. எல்லா உலகும் ஆர்ப்பெடுப்ப
எங்கும் மலர்மா ரிகள்பொழியப் பல்லா யிரவர் கணநாதர் பாடி ஆடிக் களிபயிலச் சொல்லார் மறைகள் துதிசெய்யச் சூழ்பல் லியங்கள் எழச்சைவ நல்லா றோங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுதணைந்தார்.
தெளிவுரை : எல்லா உலகங்களில் உள்ளவரும் மகிழ்ச்சியால் அரகர என்று ஆரவாரம் செய்தனர்; எங்கும் பூமழை பெய்தது, பற்பல ஆயிரம் சிவ கணநாதர்கள் பாடியும் ஆடியும் களிப்படைந்தனர்; வேதங்கள் மந்திரச் சொற்களால் துதித்தன; நான்கு பக்கங்களும் சூழ்ந்த பலவகை வாத்தியங்கள் ஒலித்தன; சைவ நன்னெறியானது ஓங்கி வளரும்படியாய்ச் சிவபெருமானை வணங்கித் தலைவராய்த் தம் சண்டீசர் பதவியில் விசார சருமர் அமர்ந்தார்.
1263. ஞாலம் அறியப் பிழைபுரிந்து
நம்பர் அருளால் நான்மறையின் சீலந் திகழுஞ் சேய்ஞலூர்ப் பிள்ளை யார்தந் திருக்கையில் கோல மழுவால் ஏறுண்டு குற்றம் நீங்கிச் சுற்றமுடன் மூல முதல்வர் சிவலோகம் எய்தப் பெற்றான் முதுமறையோன்.
தெளிவுரை : வயதால் முதிர்ந்த அந்தணனான எச்சதத்தன் உலகம் அறியச் சிவ அபராதம் செய்தும், சிவபெருமானின் திருவருளால், நான்மறையின் நல்ல ஒழுக்கம் விளங்கும் சேய்ஞலூர்ப் பிள்ளையாரின் திருக்கையில் ஏந்திய அழகான மழுவினால் எறியப்பட்ட காரணத்தால், அந்தப் பிழையினின்று நீங்கித் தன் சுற்றத்துடன் மூல முதல்வரின் சிவலோகத்தில் சேரும் பேற்றைப் பெற்றார்.
1264. வந்து மிகைசெய் தாதைதாள்
மழுவால் துணித்த மறைச்சிறுவர் அந்த உடம்பு தன்னுடனே அரனார் மகனார் ஆயினார் இந்த நிலைமை அறிந்தாரார் ஈறி லாதார் தமக்கன்பு தந்த அடியார் செய்தனவே தவமா மன்றோ சாற்றுங்கால்.
தெளிவுரை : தன்னிடம் வந்து தகாத செயலைச் செய்த தந்தையின் கால்களை மழுவினால் வெட்டி வீழ்த்திய அந்தணச் சிறுவர் அந்த உடலுடனே சிவபெருமானின் திருமகனாக ஆனார். யாவரே இந்த நிலைமையை அறிந்தவர்? சொல்லப் புகுந்தால் எக்காலத்தும் ஈறு இல்லாத சிவபெருமானுக்கு அன்பு செய்த அடியார் செய்தவை எவையோ அவையே தவமாகும் அல்லவோ!
சண்டேசுர நாயனார் புராணம் முற்றுப் பெற்றது.
சுந்தர நாயனார் துதி
1265. நேசம் நிறைந்த உள்ளத்தால்
நீலம் நிறைந்த மணிகண்டத் தீசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழவெடுத்துத் தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன் வாச மலர்மென் கழல்வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்
தெளிவுரை : நஞ்சு பொருந்திய அழகிய கழுத்தை உடைய இறைவனின் அடியாரது பெருமையை அன்பு நிறைந்த உள்ளத்தினால், எல்லாவுயிர்களும் அறிந்து வணங்கி ஏத்தத் தேசம் எல்லாம் உய்யுமாறு திருத்தொண்டத் தொகையால் முன் அருளிச் செய்த திருவாளரான ஆளுடைய நம்பியின் மணம் பொருந்திய மலர் போன்ற மென்மையான திருவடிகளை வணங்குவதற்குப் பேறு கிடைக்கப் பெற்ற இந்தப் பிறவியினை வணங்குவோம்.
மும்மையால் உலகாண்ட சருக்கம் முற்றிற்று.
5. திருநின்ற சருக்கம்
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்தன் அடியார்க்கும் அடியேன்
இச்சருக்கத்தில், திருநாவுக்கரசர், குலச்சிறையார், பெருமிழலைக் குறும்பர், பேயார் (காரைக்காலம்மையார்), அப்பூதியார், நீலநக்கர், நமிநந்தியார் என்னும் ஏழு பேர் வரலாறு கூறப்படும்.
27. திருநாவுக்கரசு நாயனார் புராணம்
சைவ சமயம் தழைக்க தோன்றிய முக்கியமான சிவனடியார்களில் ஒருவர் திருநாவுக்கரசர். இவர் 7ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இவர் தற்போது கடலூர் மாவட்டத்திலுள்ள திருவாமூரில் புகழனார், மாதினியார் தம்பதியினருக்கு இரண்டாவது ஆண்குழந்தையாக அவதரித்தார் . இவரது இயற்பெயர் மருள்நீக்கியார். இவரது அக்காள் திலகவதியார். மருள் நீக்கியார் முற்பிறப்பில் வாகீச முனிவராக இருந்தார். திலகவதியாரும், மருள்நீக்கியாரும் கல்வி கேளிவிகளில் மேம்பட்டு சகல கலா வல்லவர்களாக விளங்கினர். இவர்களது சிறுவயதிலேயே தந்தை புகழனாரும், தாய் மாதினியாரும் விண்ணுலகை எய்தினார். பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய துக்கத்தைத் தாளமுடியாமல் திலகவதியாரும், மருள்நீக்கியாரும், பெருந்துயரத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் திலகவதியாருக்கு திருமணம் பேசி முடித்த கலிப்பகையாரும் போரில் உயிர் துறந்தார். கலிப்பகையாருக்கும் தனக்கும் திருமணமாகாவிட்டாலும் அவரை மனதில் கணவராக வரிந்துவிட்ட நிலையில் திலகவதியார் தானும் உயிர் துறக்க எண்ணினாள். அம்முடிவைக் கண்ட மருள்நீக்கியார் தமக்கையாரிடம், அருமைச் சகோதரி ! பெற்றோரும் நம்மைவிட்டு மறைந்த பின்னர், தங்களும் என்னை இந்த தரணியில் தனியே விட்டுச் செல்வதனால் நான் தங்களுக்கு முன்பே உயிர் துறப்பது திண்ணம் என்று கூறி அழுதார். இதனால் மனம் மாறினார் திலகவதியார். தமக்கையார் தமக்காக உயிர்வாழ்த் துணிந்தது கண்டு மருள்நீக்கியார் துயரத்தை ஒழித்து மனமகிழ்ச்சி பூண்டு, பற்பல தருமங்களைப் பாகுபாடின்றி வாரி வாரி வழங்கி வந்தார். இவருக்கு பற்றற்ற உலக வாழ்க்கைகய விட்டு விலகுவதற்காக வேண்டி சமண சமயமே சிறந்தது என்று கருதினார்.
சமண நூல்களைக் கற்றறிந்து வரும் பொருட்டு, அருகிலுள்ள பாடலிபுரத்திற்கு சென்று அங்குள்ள ஓர் சமணப் பள்ளியில் சேர்ந்தார்.இவரது பெரும் புலமையைப் பாராட்டி மகிழ்ந்த சமணர்கள் அவருக்கு தருமசேனர் என்னும் சிறப்புப் பட்டத்தைக் கொடுத்து கவுரவித்தனர். மருள்நீக்கியார் சமண மதத்தில் பெற்ற புலமையின் வல்லமையால் ஒரு முறை பௌத்திர்களை வாதில் வென்று, சமண சமயத்தின் தலைமைப்பதவியையும் பெற்றார். இதற்கு நேர்மாறாக அவரது தமக்கையாரான திலகவதியார் சைவ சமயத்தில் மிகுந்த பற்றுடையவராய் சிவநெறியைச் சார்ந்து ஒழுகலானாள். இவ்வாறு அம்மையார் சிவத்தொண்டு புரிந்து வரும் நாளில் தன் தம்பி மருள்நீக்கியார் சமண சமயத்தில் புலமை பெற்று அச்சமயத்திலேயே மூழ்கி வாழ்கிறார் என்ற செய்தி கேட்டு, சைவத்தில் சேரச் செய்ய முயற்சித்தாள். ஒருநாள் இறைவன் திலகவதியின் கனவிலே எழுந்தருளி, திலகவதி ! கலங்காதே ! அவனைக் சூலை நோயால் தடுத்தாட்கொள்வோம் என்றார். அதன்படி சூலை நோய் அவரது வயிற்றுள் புகுந்து அதனது உக்கிரத்தைத் தொடங்கியது. சூலை நோயின் கொடிய துயரத்தைத் தாங்க முடியாத மருள்நீக்கியார் சோர்ந்து கீழே சாய்ந்தார். அவர் தாம் சமணச் சமயத்தில் பயின்ற மணி மந்திரங்களைப் பயன்படுத்தி, நோயினைத் தீர்க்க முயன்று, முடியாமல், சற்று நேரத்தில் மயக்கமுற்றார்.
இறுதியில், சமண குருமார்கள் தங்களால் இக்கொடிய நோயைத தீர்க்க முடியாது என்று தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டனர். மருள்நீக்கியார் வேறு வழியின்றி திருவதிகையில் உள்ள தன் தமக்கையாரிடம் செல்லத் தீர்மானித்து, சமையற்காரனை அழைத்து, தமக்கு ஏற்பட்டுள்ள துயரத்தைப் பற்றித் திலகவதியாரிடம் சென்று அறிவிக்குமாறு சொல்லி அவனை அனுப்பி வைத்தார். சமையற்காரனும் பொழுது புலரும் தருணத்தில் திருவதிகையை வந்து அடைந்தான். சமையற்காரன் சொன்ன செய்தி அம்மையாருக்குத் தீயாகச் சுட்டது. தமக்கையார் விருப்பப்படி தமது பணியாளுடன் புறப்பட்டு திருவதிகையை அடைந்தார். மனவேதனையுடன் திலகவதியாரிடம் தமக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை பற்றிக் கூறினார்.
திலகவதியார் கண் கலங்க சகோதரா ! வருந்தாதே ! இச்சூலை நோய் உனக்கு ஏற்பட்டதற்குக் காரணம் எம்பெருமானின் அருளேயாகும். மீண்டும் உன்னை அவரது அடியாராக ஏற்றுக்கொள்வதற்காக இம்முறையில் உன்னை ஆட்கொண்டார். பற்றற்ற சிவனடியார்களை நினைத்து வழிபட்டுச் சிவத்தொண்டு புரிவாயாக! உன்னைப் பற்றிய மற்ற நோயும் அற்றுப்போகும் என்று கூறினாள். மருள்நீக்கியாருக்கு சமய மாற்றம் வேண்டித் திலகவதியார், திருவெண்ணீற்றினை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியவண்ணம் கொடுத்தாள். அம்மையார் அருளிக் கொடுத்த திருவெண்ணீற்றினைத் தாழ்ந்து பணிந்து பெற்றுக்கொண்ட மருள்நீக்கியார், எனக்குப் பற்றற்ற பெருவாழ்வு கிட்டிற்று. பரமனைப் பணிந்து மகிழும் திருவாழ்வு பெற்றேன் என்று கூறிக் திருவெண்ணீற்றை நெற்றியிலும் மேனி முழுவதும் தரித்துக் கொண்டார். திருவெண்ணீற்றின் மகிமையால் மருள்நீக்கியார் நோய் சற்று நீங்கப்பெற்ற நிலை கண்டார். அதுகண்டு அத்திருத்தொண்டர் மனம் குளிர்ந்தார். பெருவாழ்வு பெற்ற மருள்நீக்கியார் முன்போல் சைவராய்த் திகழ்ந்தார். அம்மையார் தம்பியாரை அழைத்துக்கொண்டு திருவலகும், திருமெழுகுத் தோண்டியும் எடுத்துக் கொண்டு கோயிலுக்கு வந்தாள். மருள்நீக்கியார், தமக்கையோடு கோயிலை வலம் வந்து, எம்பெருமான் திருமுன் வணங்கி நின்றார். சிவச்சன்னதியில் சைவப்பழமாக நின்று கொண்டிருந்தார் மருள்நீக்கியார் ! பேரொளிப் பிழம்பான எம்பெருமானின் திருவருள் அவர் மீது பொழிந்தது. தமிழ்ப் பாமாலை சாத்தும் உணர்வு அவருக்கு உதித்தது. உணர்ச்சி ஊற்றெடுத்துப் பெருகியது. மருள்நீக்கியார், தம்மைப் பற்றிக்கொண்டு படாத பாடுபடுத்திய சூலைநோயினையும், மாயையினையும் அறுத்திடும் பொருட்டு கூற்றாயினைவாயு விலக்கிலீர் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடினார்.பாடி முடித்ததும் அவரைப் பற்றிக் கொண்டிருந்த சூலை நோய் அறவே நீங்கியது.
ஐயனே ! அடியேன் உயிரையும், அருளையும் பெற்று உய்ந்தேன் என்று மனம் உருகக் கூறினார் மருள்நீக்கியார் ! அப்பொழுது விண்வழியே அசரீரி கேட்டது. இனிய செந்தமிழ்ப் பாக்களால் திருப்பதிகத் தொகையை பாடியருளிய தொண்டனே ! இனி நீ நாவுக்கரசு என்று நாமத்தால் ஏழுலகமும் ஏந்தப் பெறுவாய். மருள்நீக்கியார் திருநாவுக்கரசு என்னும் திருநாமத்தைப் பெற்றார். ஒருமுறை இவர் கைலாயத்தில் சிவனை தரிசிக்க திருக்கயிலாய மலைக்குப் புறப்பட்டார். கயிலை அரசரின் சிந்தையிலே உடல் தசைகள் கெட, உடம்பை உருட்டிக் கொண்டே சென்றார். அப்போது, ஓங்கு புகழ் நாவுக்கரசனே ! எழுந்திரு என்ற இறைவனின் அருள்வாக்கு ஒலித்தது. அப்பரடிகள், பூரித்தார். அன்ப! இப்பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் எழுந்திருப்பாயாக ! அங்கு திருக்கயிலையில் நாம் வீற்றிருக்கும் காட்சியைக் காட்டியருளுவேன் என்று மொழிந்தருளினார். அப்பரடிகளின் ஆசையை நிறைவேற்ற சிவன் கைலாயக்காட்சியை, திருவையாற்றில் காட்டி அருளினார். இவ்வாறு பெருமானுக்கு அரும்பணி ஆற்றிவந்த அன்பு வடிவம் கொண்ட அப்பரடிகள் எம்பெருமானின் திருவடிகளில் தமது திருமெய் ஒடுங்கும் காலம் நெருங்கி வந்துவிட்டதே என்பதை தமது திருக்குறிப்பினால் உணர்ந்தார். அதனால். அவர் திருப்புகலூர் திருத்தலத்தை விட்டு சற்றும் நீங்காமல், பாமாலைப் பாடிப் பரமனை வழிபட்டு வந்தார். புடமிட்ட பொன்போல் உலகிற்கு பேரொளியாய்த் திகழ்ந்த திருநாவுக்கரசர் தாம் இறைவனது பொன்மலர் தாளினை அடையப் போகும் பேரின்ப நிலையை உணர்ந்தார். எண்ணுகேன் என் சொல்லி எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தை ஊன் உருக, உடல் உருக, உள்ளம் உருகப் பாடினார். எம்பெருமானின் சேவடியைப் பாமாலையால் பூஜித்து திருச்செவியைச் செந்தமிழால் குளிரச் செய்தார். திருநாவுக்கரசர் சித்திரைத் திங்கள் - சதயதிருநக்ஷத்திரத்தில், சிவானந்த ஞான வடிவேயாகிய சிவபெருமானுடைய பொன் மலர்ச் சேவடிக் கீழ் அமர்ந்தருளி பேரின்பப் பெருவாழ்வு பெற்றார்.
1266. திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில் ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்.
தெளிவுரை : திருநாவுக்கரசு எனவும், சிவபெருமானின் திருத்தொண்டு வளர்வதற்குக் காரணமான நெறியில் நின்று உலகம் வாழும் பொருட்டு வரும் ஞானத்தவ முனிவரான வாகீசர் எனவும், வாய்மை விளங்குதற்கு ஏதுவான பெருமையுடைய திருப்பெயரின் சிறப்புகளைப் பெரியவுலகில் அதை எடுத்துக் கூறுவதற்கு ஒரு நாவுக்கும் உணராத யான் சொல்ல முயல்கின்றேன்.
1267. தொன்மைமுறை வருமண்ணின் துகளன்றித் துகளில்லா
நன்மைநிலை ஒழுக்கத்தின் நலஞ்சிறந்த குடிமல்கிச் சென்னிமதி புனையவளர் மணிமாடச் செழும்பதிகள் மன்னிநிறைந் துளதுதிரு முனைப்பாடி வளநாடு.
தெளிவுரை : திருமுனைப்பாடி என்றும் வளமை பொருந்திய நாடு, பழைய முறைப்படி வருகின்ற மண்ணின் துகளான புழுதியே அல்லாது வேறு துகள் என்னும் குற்றம் இல்லாத ஒழுக்கத்தின் நன்மையால் சிறந்த குடிமக்கள் பெருகி உச்சியில் சந்திரன் தவழுமாறு உயர்ந்த அழகிய மாளிகைகளையுடைய செழும்பதிகள் நிலைத்து நிறைந்து உள்ளதாகும்.
1268. புனப்பண்ணை மணியினொடும் புறவின்நறும் புதுமலரின்
கனப்பெண்ணில் திரைசுமந்து கரைமருங்கு பெரும்பகட்டேர் இனப்பண்ணை உழும்பண்ணை எறிந்துலவி எவ்வுலகும் வனப்பெண்ண வரும்பெண்ணை மாநதிபாய் வளம்பெருகும்.
தெளிவுரை : குறிஞ்சி நிலத்தின் மூங்கில்களில் உள்ள முத்துக்களுடன் முல்லைப் புறவத்தினின்று மணம் பொருந்திய புதிய மலர்களின் தொகுதியை, அளவில்லாத அலைகளால் சுமந்து (அவற்றை) இரண்டு பக்கக் கரைகளில் பெரிய எருமைகள் பூட்டிய அளவொத்த கூட்டமான உழவுத்தொழில் செய்வதற்கு இடமான வயல்களிலே எங்கும் பரவி, உலவி, எல்லா உலகங்களிலும் தன் அழகை மேம்பாடாக நினைக்கத் தக்கதாக ஓடி வரும் பெண்ணை என்கின்ற பெரிய ஆறு பாய்தலால் அந்நாட்டிலே வளமானது பெருகும்.
1269. காலெல்லாந் தகட்டுவரால் கரும்பெல்லாங் கண்பொழிதேன
பாலெல்லாங் கதிர்ச்சாலி பரப்பெல்லாங் குலைக்கமுகு சாலெல்லாந் தரளநிரை தடமெல்லாஞ் செங்கழுநீர் மேலெல்லாம் அகில்தூபம் விருந்தெல்லாந் திருந்துமனை.
தெளிவுரை : நீர்வாய்க் கால்களில் எங்கும் தகட்டு வரால் மீன்கள் காணப்படும். கரும்புகளில் எங்கும் கணுக்களால் பொழியும் தேன் விளங்கும். பக்கங்களில் எங்கும் கதிர்களையுடைய நெற்பயிர்கள் விளங்கும். இடம் அகன்ற நிலம் எங்கும் குலைகளையுடைய பாக்கு மரங்கள் வளர்ந்திருக்கும். ஏர் உழுத படைச்சால்களில் எங்கும் முத்துக்களின் கூட்டம் பொருந்தியிருக்கும். பொய்கைகளில் எங்கும் செங்கழுநீர் மலர்கள் பொருந்திருக்கும். எப்போதும் விருந்துள்ள மனைகளின் மேல் இடம் எங்கும் அகில் தூபம் எழும்.
1270. கடைஞர்மிடை வயற்குறைத்த கரும்புகுறை பொழிகொழுஞ்சா
றிடைதொடுத்த தேன்கிழிய இழிந்தொழுகு நீத்தமுடன் புடைபரந்து ஞிமிறொலிப்பப் புதுப்புனல்போல் மடையுடைப்ப உடைமடையக் கரும்படுகட் டியினடைப்ப ஊர்கள்தொறும்.
தெளிவுரை : ஊர்களில் எல்லாம் உழவர்களால் வெட்டப்படுவதால் வெட்டப்பட்ட நெருங்கிய கரும்புகள் பொழிகின்ற சாறு, அந்தக் கரும்புகளின் இடையிலே கட்டப்பட்டிருந்த தேன் கூடுகள் அழிவதால் ஒழுகும் தேனின் பெருக்குடனே கூடிப் பக்கங்களில் பரவி, வண்டுகள் மொய்த்து ஒலிக்கப் புதிய வெள்ள நீரைப் போல் மடையை உடைக்கவே, அவ்வாறு உடைக்கப்பட்ட மடைகளை அந்தக் கருப்பஞ் சாற்றினால் காய்ச்சப்பட்ட வெல்லக் கட்டிகளால் அடைப்பர்.
1271. கருங்கதலிப் பெருங்குலைகள் களிற்றுக்கைம் முகங்காட்ட
மருங்குவளை கதிர்ச்செந்நெல் வயப்புரவி முகங்காட்டப் பெருஞ்சகடு தேர்காட்ட வினைஞர்ஆர்ப் பொலிபிறங்க நெருங்கியசா துரங்கபல நிகர்ப்பனவாம் நிறைமருதம்.
தெளிவுரை : கருங்கதலி என்ற வாழையின் பெருங்குலைகள் யானைகளின் நீண்ட துதிக்கையுடைய முகத்தைப் போன்று விளங்க, அதன் பக்கத்தில் வளரும் கதிர்களையுடைய நெற்பயிர்கள் வெற்றியுடைய குதிரைகளின் முகம் போல் தோன்ற, பெருகிய வண்டிகள் தேர்களைப் போல் திகழ, உழவர்களின் ஆரவார ஒலிபொலிய, இவ்வாறுள்ள காட்சி நிறையும் மருத நிலத் தோற்றங்கள், நெருங்கிய நான்கு வகைப் படைகளைப் போன்றனவாய்த் திகழ்ந்தன.
1272. நறையாற்றுங் கமுகுநவ மணிக்கழுத்தி னுடன்கூந்தல்
பொறையாற்றா மகளிரெனப் புறம்பலைதண் டலைவேலித் துறையாற்ற மணிவண்ணச் சுரும்பிரைக்கும் பெரும்பெண்ணை நிறையாற்று நீர்க்கொழுந்து படர்ந்தேறு நிலைமையதால்.
தெளிவுரை : நவமணிகள் பதித்த அணிகள் அணிந்த கழுத்துடன் கூந்தலின் சுமையைப் பொறுக்க இயலாது அலைகின்ற மகளிரைப் போல், மணம் மிகவுடைய பாக்கு மரங்கள் வெளியே அலைகின்ற சோலைகள் சூழ்ந்துள்ள இடங்களில், மிகுந்த அழகுடைய மேனியையுடைய வண்டுகள் ஒலிக்கும் பெண்ணையின் நிறைந்த ஆற்று அலைமேலே படர்ந்து ஏறுகின்ற தன்மை உடையதாகும்.
1273. மருமேவு மலர்மேய மாகடலின் உட்படியும்
உருமேகம் எனமண்டி உகைத்தகருங் கன்றுபோல் வருமேனிச் செங்கண்வரால் மடிமுட்டப் பால்சொரியுங் கருமேதி தனைக்கொண்டு கரைபுரள்வ திரைவாவி.
தெளிவுரை : கரிய கடலில் படியும் வடிவுடைய மேகங்கள் போல் மணம் கமழும் மலர்களை மேய்வதற்காகக் கரிய எருமைகள் உள்ளே புக, நெருங்கிக் கரிய கன்றுகள் போல் வரும் பெருவண்ணமும் சிவந்த கண்ணும் கொண்டவரால் மீன்கள் மடியில் முட்டியதால், பாலைச் சொரியும் கரிய எருமைகளால் நீர்நிலைகள் அலையுடன் கரையில் புரளும்.
1274. மொய்யளிசூழ் நிரைநீல முழுவலயங் களின்அலையச்
செய்யதளிர் நறுவிரலிற் செழுமுகையின் நகஞ்சிறப்ப மெய்யொளியின் நிழற்காணும் ஆடியென வெண்மதியை வையமகள் கையணைத்தால் போலுயர்வ மலர்ச்சோலை.
தெளிவுரை : மொய்த்த வண்டுகள் சூழ்ந்த வரிசைகள், முழு நீலமணிகள் பதித்த வளையல்கள் போல் அலைய, சிவந்த தளிர்களாகிய விரல்களும், செழிப்பான அரும்புகளான நகங்களும் கொண்ட கையால், மண்மகள், தன் மெய் ஒளியின் நிழலைக் காணும் கண்ணாடி இதுவாகும் என்று, வெண்மையான பிறையை அணைத்தாற் போல் மலர்ச் சோலைகள் வானிலே உயர்ந்து விளங்கும்.
1275. எயிற்குலவும் வளம்பதிகள் எங்குமணந் தங்கும்வயல்
பயிர்க்கண்வியல் இடங்கள்பல பரந்துயர்நெற் கூடுகளும் வெயிற்கதிர்மென் குழைமகளிர் விரவியமா டமும்மேவி மயில்குலமும் முகிற்குலமும் மாறாட மருங்காடும்.
தெளிவுரை : மதில்கள் பொருந்தி விளங்கும் நகரங்களில் எங்கும் மணம் உடைய வயல்களில் பயிர் செய்யப்பட்ட அகன்ற இடங்கள் பலவற்றிலும், பரந்து உயரும் நெல் கூடுகளிலும், ஒளியுடைய காதணி அணிந்த மென்மையான மகளிர் உள்ள மாடங்களிலும், பொருந்தி மயில் பறவைகளும் மேகங்களும் எதிர் எதிராக ஒன்றை ஒன்று விஞ்சுவன் போல் பக்கங்களிலே ஆடும்.
1276. மறந்தருதீ நெறிமாற மணிகண்டர் வாய்மைநெறி
அறந்தருநா வுக்கரசும் ஆலால சுந்தரரும் பிறந்தருள உளதானால் நம்மளவோ பேருலகில் சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடுஞ் சீர்ப்பாடு.
தெளிவுரை : பாவத்தை உண்டாக்கும் தீயநெறியானது மாறுமாறு, நீலகண்டத்தைக் கொண்ட சிவபெருமானின் மெய்ம்மையான சிவநெறியைத் தருகின்ற திருநாவுக்கரசு நாயனாரும், ஆலால சுந்தர நாயனாரும் தோன்றியருளியது இந்நாடு என்றால், இப்பெரிய உலகத்தில் சிறந்த திருமுனைப்பாடி நாட்டின் திறத்தைப் பாடும் சிறப்பின் இயல்பு நம் திறமை அளவில் அடங்குவதோ? அடங்காது!
1277. இவ்வகைய திருநாட்டில் எனைப்பலவூர் களுமென்றும்
மெய்வளங்கள் ஓங்கவரும் மேன்மையன ஆங்கவற்றுள் சைவநெறி ஏழுலகும் பாலிக்குந் தன்மையினால் தெய்வநெறிச் சிவம்பெருக்குந் திருவாமூர் திருவாமூர்.
தெளிவுரை : இத்தகைய திருமுனைப்பாடி நாட்டில் பலவான எல்லா ஊர்களும் எக்காலத்தும் உண்மையைத் தரும் வளங்கள் பெருகும் மேன்மையைக் கொண்டவை. அங்கு, அவற்றுள் சிவநெறியை ஏழ் உலகங்களுக்கும் அளிக்கும் தன்மையினால் தெய்வ நெறியில் விளையும் சிவத்தைப் பெருக்கும் அருளான திருஆகின்ற ஊர், திருவாமூர்.
1278. ஆங்குவன முலைகள்சுமந் தணங்குவன மகளிரிடை
ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக்காஞ்சி ஓங்குவன மாடநிரை யொழுகுவன வழுவிலறம் நீங்குவன தீங்குநெறி நெருங்குவன பெருங்குடிகள்.
தெளிவுரை : அந்தத் திருவாமூரில் அழகான கொங்கைகளைச் சுமந்து வருத்தப்படுவன மகளிரின் இடைகளாகும். அவர்கள் அணிந்த நூபுரங்கள் என்னும் காலணிகளே ஏங்குவன (ஒலிப்பன). அவர்கள் அணிந்த மணிகள் பதித்த காஞ்சியே இரங்குவன. மாளிகை வரிசைகளே ஓங்குவன. குற்றம் இல்லாத அறங்களே ஒழுகுவன. தீமையுடைய நெறிகளே நீங்குவன. பெருங்குடிகளே நெருங்குவன.
1279. மலர்நீலம் வயல்காட்டும் மைஞ்ஞீலம் மதிகாட்டும்
அலர்நீடு மறுகாட்டும் அணியூசல் பலகாட்டும் புலர்நீலம் இருள்காட்டும் பொழுதுழவர் ஒலிகாட்டும் கலநீடு மனைகாட்டும் கரைகாட்டாப் பெருவளங்கள்.
தெளிவுரை : வயல்கள் நீல மலர்களைப் பெற்று விளங்கும். மை பூசப் பெற்ற நீலம் போன்ற கண்களையும் பிறைச்சந்திரன் போன்ற நெற்றியையும் உடைய தாமரை மலர் போலும் முகமுடைய மங்கையர் நெருங்கியிருக்கும் தெருக்கள் அவர்கள் ஏறி உந்தும் மணிகள் பதித்த பல ஊசல்களைக் காட்டும். இருள் புலர்வதற்குரிய நீலநிறம் காட்டும் வைகறைப் பொழுதானது உழவுத்தொழிலில் செல்வோரின் ஆரவாரத்தைப் புலப்படுத்தும். பல பண்டங்களும் நிறைந்த மனைகள் அளவற்ற வளங்களை உடையனவாய் விளங்கும்.
1280. தலத்தின்கண் விளங்கியஅத் தனிப்பதியில் அனைத்துவித
நலத்தின்கண் வழுவாத நடைமரபிற் குடிநாப்பண் விலக்கின்மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலைவேளாண் குலத்தின்கண் வரும்பெருமைக் குறுக்கையர்தங் குடிவிளங்கும்.
தெளிவுரை : உலகத்தில் விளங்கும் அந்த ஒப்பற்ற பதியில், எத்தகைய நன்மையினின்றும் வழுவாத ஒழுக்கத்தில் நிற்கும் குடிகளுள், குற்றம் இல்லாத இல்லறத்தில் மேம்பட்ட நிலையிலே உள்ள வேளாளர் குலத்துள் வரும் பெருமையுடைய குறுக்கையர் குடியானது விளங்கியிருந்தது.
1281. அக்குடியின் மேல்தோன்றல் ஆயபெருந் தன்மையினார்
மிக்கமனை அறம்புரிந்து விருந்தளிக்கும் மேன்மையினார் ஒக்கல்வளர் பெருஞ்சிறப்பின் உளரானார் உளரானார் திக்குநில வும்பெருமை திகழவரும் புகழனார்.
தெளிவுரை : எல்லாத் திக்குகளிலும் நிலை பெற்ற பெருமை விளங்கும் புகழனார் என்ற சான்றோர் அந்தக் குடியின் பெருந்தலைவரான பெருந்தன்மை உடையவர். நன்மை உடையவர். மேன்மை மிக்க இல்லறத்தை நடத்தி விருந்து அளிக்கும் மேன்மை உடையவர். சுற்றத்தார் வளரும் பெருஞ்சிறப்பில் உள்ளவரானார். ஆதலால் அவரே உள்ளவர் ஆனார்.
1282. புகழனார் தமக்குரிமைப் பொருவில்குலக் குடியின்கண்
மகிழவரு மணம்புணர்ந்த மாதினியார் மணிவயிற்றில் நிகழுமலர்ச் செங்கமல நிரையிதழின் அகவயினில் திகழவருந் திருவனைய திலகவதி யார்பிறந்தார்.
தெளிவுரை : அந்தப் புகழனார்க்கு உரிமையான ஒப்பில்லாத குலமும் குடியும் கூடிய மரபில் மகிழ்ச்சி தரத்தக்க திருமணம் செய்து கொண்ட மாதினியார் என்னும் அம்மையாரின் மணி வயிற்றில், செந்தாமரையின் ஒழுங்குபட்ட இதழ்களினிடையே உள்ள பொகுட்டில் விளங்க வரும் திருமகளைப் போன்று திலகவதியார் என்பவர் பிறந்தருளினார்.
1283. திலகவதி யார்பிறந்து சிலமுறையாண் டகன்றதற்பின்
அலகில்கலைத் துறைதழைப்ப அருந்தவத்தோர் நெறிவாழ உலகில்வரும் இருள்நீக்கி ஒளிவிளங்கு கதிர்போல்பின் மலருமருள் நீக்கியார் வந்தவதா ரஞ்செய்தார்.
தெளிவுரை : இந்தத் திலகவதியார் பிறந்த பின் முறையாய் சில ஆண்டுகள் கழிந்த பின்பு, அளவில்லாத கலைகளின் துறைகள் தழைக்கவும், அரிய தவத்தவர் நெறி வாழவும், உலகத்தில் வெளி இருளை நீக்கி வருகின்ற ஒளியுடைய கதிர் போல் பின் மலரும் அக இருளை நீக்கும் மருள் நீக்கியார் தோன்றியருளினார்.
1284. மாதினியார் திருவயிற்றின் மன்னியசீர்ப் புகழனார்
காதலனார் உதித்ததற்பின் கடன்முறைமை மங்கலங்கள் மேதகுநல் வினைசிறப்ப விரும்பியபா ராட்டினுடன் ஏதமில்பல் கிளைபோற்ற இளங்குழவிப் பதங்கடந்தார்.
தெளிவுரை : மாதினியார் வயிற்றில் தோன்றிய பின்னர், செய்கடன் முறைமையால் வரும் மங்கலச் செயல்கள் எல்லாவற்றையும் மேம்பட்ட நல்வினை சிறக்கும்படி விரும்பிய பாராட்டுடன் குற்றமில்லாத உறவினர் செய்திட, புகழனாருக்கு மகனாரான மருணீக்கியார் இளம் குழவிப் பருவத்தைக் கடந்தார்.
1285. மருணீக்கி யார்சென்னி மயிர்நீக்கும் மணவினையுந்
தெருணீர்ப்பன் மாந்தரெலாம் மகிழ்சிறப்பச் செய்ததற்பின் பொருணீத்தங் கொளவீசிப் புலன்கொளுவ மனமுகிழ்த்த சுருணீக்கி மலர்விக்குங் கலைபயிலத் தொடங்குவித்தார்.
தெளிவுரை : மருணீக்கியார் என்று பெயர் சூட்டப்பட்ட அவருக்குத் தலை மயிரை நீக்குதலான சௌளம் என்ற மணவினையும் அறிவுடைய மக்கள் பலரும் மகிழ்ச்சி மிகும் படி செய்த பின்பு, நற்பொருள்களை வெள்ளம் போல் பெருக உதவி அறிவைப் பெருக்கச் செய்தலால் உள்ளம் சுருண்டிருந்த நிலையை நீக்கி மலரச் செய்கின்ற கலைகளைப் பயிலத் தொடங்குதலான சடங்கையும் ஆற்றினர்.
1286. தந்தையார் களிமகிழ்ச்சி தலைசிறக்கும் முறைமையினால்
சிந்தைமலர்ந் தெழும்உணர்வில் செழுங்கலையின் திறங்களெல்லாம் முந்தைமுறை மையிற்பயின்று முதிரஅறி வெதிரும்வகை மைந்தனார் மறுவொழித்த இளம்பிறைபோல் வளர்கின்றார்.
தெளிவுரை : தந்தையாரான புகழனார் கொண்ட பெருமகிழ்ச்சி மேன்மேலும் வளர, முறைமையால் சிந்தை மலர்ந்து எழும் உணர்வால், செழுமையான கலைகள் யாவும் முன்னைய தொடர்பினால் எளிதில் கற்று, முதிர்ந்த அறிவு வெளிப்படும் தன்மையால் மைந்தர்-மருணீக்கியார்-களங்கம் நீங்கப்பெற்ற இளம்பிறை போல் வளர்கின்றவர் ஆனார்.
1287. அந்நாளில் திலகவதி யாருக்காண் டாறிரண்டின்
முன்னாக ஒத்தகுல முதல்வேளாண் குடித்தலைவர் மின்னார்செஞ் சடையண்ணல் மெய்யடிமை விருப்புடையார் பொன்னாரும் மணிமவுலிப் புரவலன்பால் அருளுடையார்.
தெளிவுரை : அந்த நாளில் திலகவதி அம்மையாருக்குப் பன்னிரண்டு வயதாக, ஒப்புடைய முதன்மையான வேளாண் குலத்திலும் குடியிலும் வந்த தலைவரும், மின்போல் ஒளி வீசும் சிவந்த சடையையுடைய அண்ணலாரான பெருமானிடம் மெய் அடிமைத் திறம் செய்வதில் விருப்பம் உடையவரும் பொன்னால் ஆகிய மணிகள் பதிக்கப்பட்ட முடி தாங்கிய மன்னனிடம் அருள் உடையவரும்,
1288. ஆண்டகைமைத் தொழிலின்கண் அடலரியே றெனவுள்ளார்
காண்டகைய பெருவனப்பிற் கலிப்பகையார் எனும்பெயரார் பூண்டகொடைப் புகழனார் பாற்பொருவின் மகட்கொள்ள வேண்டியெழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார்.
தெளிவுரை : வீரத்தன்மை கொண்ட போர்த்தொழிலில் வலிய ஆண் சிங்கத்தைப் போன்றவரும் பார்க்க ஆசையுண்டாகத் தக்க பேரழகுடையவரும் ஆன கலிப்பகையார் என்னும் பெயர் உடையவர், கொடையறம் பூண்ட புகழனாரிடம் அவருடைய ஒப்பில்லாத மகளாரைத் தாம் மணமகளாய்க் கொள்ளும் பொருட்டாக விரும்பி எழும் காதலால் பெரியோர்களை அனுப்பினார்.
1289. அணங்கனைய திலகவதி யார்தம்மை யாங்கவர்க்கு
மணம்பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக் குணம்பேசிக் குலம்பேசிக் கோதில்சீர்ப் புகழனார் பணங்கொளர வகல்அல்குல் பைந்தொடியை மணம்நேர்ந்தார்.
தெளிவுரை : அங்ஙனம் மணம் பேச வந்த மேலோர் திருமகளைப் போன்ற திலகவதியாரை அங்கு அந்தக் கலிப்பகையாருக்கு மணம் செய்யும் திறத்தைப் பேசித் தாம் வந்த செய்தியைத் தெரிவிக்க, குணங்களைப் பேசியும் குற்றமற்ற சிறப்புடைய புகழனார், பாம்பின் படத்தைப் போன்ற அல்குலையுடைய பசுமையான வளையலை அணிந்த தம் மகளாரை மணம் செய்து தர இசைவு அளித்தார்.
1290. கன்னிதிருத் தாதையார் மணமிசைவு கலிப்பகையார்
முன்னணைந்தார் அறிவிப்ப வதுவைவினை முடிப்பதன்முன் மன்னவற்கு வடபுலத்தோர் மாறேற்க மற்றவர்மேல் அன்னவர்க்கு விடைகொடுத்தான் அவ்வினைமேல் அவரகன்றார்.
தெளிவுரை : கன்னியான திலகவதியாரின் தந்தையார் இங்ஙனம் மணம் பேச இசைந்ததை முன் வந்தவர் சென்று கலிப்பகையாரிடம் அறிவித்தனர். அறிவிக்க அங்ஙனமே மணச்சடங்கை முடிப்பதற்கு முன்னமே, மன்னனுடன் வடநாட்டரசர்கள் பகையை மேற்கொண்டு போர் செய்ய வந்தனர். வர, அந்தப் பகைவருடன் போர் செய்யும் பொருட்டாகக் கலிப்பகையாருக்கு விடை தந்து அனுப்பினான். அக்கலிப்பகையாரும் அதைச் செய்யச் சென்றார்.
1291. வேந்தற்குற் றுழிவினைமேல் வெஞ்சமத்தில் விடைகொண்டு
போந்தவரும் பொருபடையும் உடன்கொண்டு சிலநாளில் காய்ந்தசினப் பகைப்புலத்தைக் கலந்துநெடுஞ் சமர்க்கடலை நீந்துவார் நெடுநாள்கள் நிறைவெம்போர்த் துறைவிளைத்தார்.
தெளிவுரை : மன்னனுக்கு இவ்வாறு போர் செய்ய நேர்ந்ததால், அதைப் போக்கும் பொருட்டுப் போரின்மேல் போக விடை பெற்றுக்கொண்டு சென்ற கலிப்பகையாரும், போர் ஆற்றும் படைகளையும் உடன் கொண்டு சென்று, சில நாட்களில் சினத்துடன் அடர்த்து வந்த பகைவரை அடைந்து, அவர்களுடன் பெரிய போர்க்கடலை நீந்தி, வெற்றி பெறும் எண்ணத்தினராய், நெடுநாட்கள் நிறைவான கொடிய போரைச் செய்தார்.
1292. ஆயநா ளிடைஇப்பால் அணங்கனையாள் தனைப்பயந்த
தூயகுலப் புகழனார் தொன்றுதொடு நிலையாமை மேயவினைப் பயத்தாலே இவ்வுலகை விட்டகலத் தீயஅரும் பிணியுழந்து விண்ணுலகில் சென்றடைந்தார்.
தெளிவுரை : அத்தகைய நாள்களில், இங்குத் திருமகளைப் பெற்ற தூய குலத்தையுடைய புகழனார், தொன்று தொட்டு வரும் நிலையாமையுடைய வினையின் பயனான, இவ்வுலகத்தை விட்டு நீங்குமாறு, தீய அருநோயினால் பீடிக்கப்பட்டு விண்ணுலகத்தைப் போய் அடைந்தார்.
1293. மற்றவர்தாம் உயிர்நீப்ப மனைவியார் மாதினியார்
சுற்றமுடன் மக்களையும் துகளாக வேநீத்துப் பெற்றிமையால் உடனென்றும் பிரியாத உலகெய்தும் கற்புநெறி வழுவாமல் கணவனா ருடன்சென்றார்.
தெளிவுரை : அங்ஙனம் புகழனார் உயிர் துறக்கவும் அவருடைய மனைவியாரான மாதினியாரும் சுற்றத்தாருடன் மக்களையும் துகள் எனவே கருதி நீத்து, மேன்மையுடைய தன்மையினால், என்றும் உடனின்று பிரியாத உலகில் அடையும்படியான கற்பு நெறியினின்றும் திறம்பாமல் கணவனாருடன் சென்றார். (உயிர் நீத்தார்)
1294. தாதையா ரும்பயந்த தாயாரும் இறந்ததற்பின்
மாதரார் திலகவதி யாரும்அவர் பின்வந்த காதலனார் மருணீக்கி யாரும்மனக் கவலையினால் பேதுறுநற் சுற்றமொடும் பெருந்துயரில் அழுந்தினார்.
தெளிவுரை : தந்தையும் பெற்ற தாயும் மடிந்த பின்பு மங்கையாரான திலகவதி அம்மையாரும் அவர்க்குப் பின்பு தோன்றிய மருணீக்கியாரும் உள்ளத்தில் கொண்ட கவலையினால் வருந்தும் நல்ல சுற்றத்துடனே பெருந்துன்பத்தில் ஆழ்ந்தனர்.
1295. ஒருவாறு பெருங்கிளைஞர் மனந்தேற்றத் துயரொழிந்து
பெருவானம் அடைந்தவர்க்குச் செய்கடன்கள் பெருக்கினார் மருவார்மேல் மன்னவற்கா மலையப்போங் கலிப்பகையார் பொருவாரும் போர்க்களத்தில் உயிர்கொடுத்துப் புகழ்கொண்டார்.
தெளிவுரை : பெருஞ்சுற்றத்தார், உள்ளத்தைத் தேற்ற அந்த இருவரும் ஒருவகையால் வருத்தம் நீங்கப் பெற்று, பெரிய விண்ணுலகு அடைந்த பெற்றோர்க்குச் செய்ய வேண்டிய கடன்களை எல்லாம் செய்தனர். மன்னனுக்காகப் போர் செய்யச் சென்ற கலிப்பகையார் பகைமை நிறைந்த போர்க்களத்தில் உயிரைத் தந்து புகழைக் கைக்கொண்டார்.
1296. வெம்முனைமேற் கலிப்பகையார் வேல்வேந்தன் ஏவப்போய்
அம்முனையில் பகைமுருக்கி அமருலகம் ஆள்வதற்குத் தம்முடைய கடன்கழித்த பெருவார்த்தை தலஞ்சாற்றச் செம்மலர்மேல் திருவனைய திலகவதி யார்கேட்டார்.
தெளிவுரை : கலிப்பகையார் அரசனின் ஏவலின் படியே பகைவர்மீது சென்று, அந்தப் போர் முகத்தில் பகைவரை அழித்து, விண்ணுலகத்தை ஆட்சி கொள்வதற்காகத் தம் கடனை நிறைவேற்றிய பெருவார்த்தையை ஊரார் கூறச் செந்தாமரை மீது இருக்கும் இலக்குமியைப் போன்ற திலகவதியார் கேட்டறிந்தார்.
1297. எந்தையும்எம் அனையும்அவர்க் கெனைக்கொடுக்க இசைந்தார்கள்
அந்தமுறை யால்அவர்க்கே உரியதுநான் ஆதலினால் இந்தவுயிர் அவருயிரோ டிசைவிப்பன் எனத்துணிய வந்தவர்தம் அடியிணைமேல் மருணீக்கி யார்விழுந்தார்.
தெளிவுரை : திலகவதியார் என்னுடைய தந்தையாரும் தாயாரும் என்னை அவர்க்குத் தரச் சம்மதித்தனர், அம்முறையால் நான் அவர்க்கே உரியது (உரியவள்). ஆதலால் இந்த என் உயிரை அவருடைய உயிருடன் சேரச் செய்வேன் என்று துணிவு கொள்ள, அவருடைய திருவடிகளில் மருணீக்கியார் விழுந்தனராகி,
1298. அந்நிலையில் மிகப்புலம்பி அன்னையும்அத் தனும்அகன்ற
பின்னையுநான் உமைவணங்கப் பெறுதலினால் உயிர்தரித்தேன் என்னையினித் தனிக்கைவிட் டேகுவீர் எனில்யானும் முன்னம் உயிர் நீப்பனென மொழிந்திடரின் அழுந்தினார்.
தெளிவுரை : அந்த நிலையில் மிகவும் புலம்பித் தாயும் தந்தையும் போன பின்னும் நான் உம்மை வணங்கப் பெறுவதனால் உயிர் வாழ்ந்தேன். இனி என்னைத் தனியாக விட்டு நீவிர் செல்வீரானால் நானும் முன்னம் உயிர் விடுவேன் எனக் கூறித் துன்பத்தில் ஆழ்ந்திடலானார்.
1299. தம்பியார் உளராக வேண்டுமென வைத்ததயா
உம்பருல கணையவுறு நிலைவிலக்க உயிர்தாங்கி அம்பொன்மணி நூல்தாங்கா தனைத்துயிர்க்கும் அருள்தாங்கி இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதி யாரிருந்தார்.
தெளிவுரை : தம் தம்பியார் உயிர் வாழ வேண்டும் என்று உட்கொண்டு வைத்த கருமையானது தேவர் உலகம் செல்லும் துணிவு கொண்ட நிலையை விலக்கி, உயிரைத் தாங்குவாராகி, அழகிய பொன்னும் மணியும் உடைய நாண் பூணுதலை ஒழித்து, எல்லா உயிர்களுக்கும் அருளைத் தாங்கி நின்று இவ்வுலகத்தில் மனையில் இருந்து தவத்தைச் செய்து கொண்டு திலகவதியார் இருந்தார்.
1300. மாசின்மனத் துயரொழிய மருணீக்கி யார்நிரம்பித்
தேசநெறி நிலையாமை கண்டறங்கள் செய்வாராய்க் காசினிமேல் புகழ்விளங்க நிதியளித்துக் கருணையினால் ஆசில்அறச் சாலைகளும் தண்ணீர்ப்பந் தரும்அமைப்பார்.
தெளிவுரை : குற்றம் அற்ற தம் உள்ளத்தில் துன்பம் நீங்கினார். பின் மருணீக்கியார் வயது நிரம்ப வளர்ந்தார். உலக வாழ்க்கை நிலையாமை உடையது என்பதை உணர்ந்தார். உணர்ந்து, அறங்களைச் செய்பவராய், உலகத்தில் புகழ் விளங்குமாறு செல்வத்தைத் தந்து, குற்றமற்ற அறச்சாலைகளையும் தண்ணீர்ப் பந்தரையும் அருளுடன் அமைப்பவராகி,
1301. காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும் நாவலர்க்கு வளம்பெருக நல்கியும்நா னிலத்துள்ளோர் யாவருக்குந் தவிராத ஈகைவினைத் துறைநின்றார்.
தெளிவுரை : பூஞ்சோலைகளை வளர்த்தும் குளங்களைத் தோண்டியும், நேர்மையினின்று தவறாது வந்து அடைந்தவர்க்கு வேண்டுவனவற்றைத் தந்தும், விருந்தினரைப் பேணியும், நாவலர்களுக்கு வளம் பெருகுமாறு செல்வம் முதலியவற்றைத் தந்தும், இன்னும் இந்த உலகத்தில் உள்ளவர் யாவருக்கும் பாகுபாடின்றித் தவிராத ஈகைச் செயலில் ஒழுகி மாறாது நின்றார்.
1302. நில்லாத உலகியல்பு கண்டுநிலை யாவாழ்க்கை
அல்லேன்என் றறத்துறந்து சமயங்க ளானவற்றின் நல்லாறு தெரிந்துணர நம்பர்அரு ளாமையினால் கொல்லாமை மறைந்துறையும் அமண்சமயம் குறுகுவார்.
தெளிவுரை : நில்லாத உலகத்தின் இயல்பைக் கண்டு, நிலையாத இந்த உலகத்தில் பயன் இல்லை அதனால் அதில் நின்று நான் வாழ்வேன் அல்லேன் என முற்றத் துறந்தும், சமயங்களின் நல்ல நெறியைத் தெரிந்து உணர்வதற்கு நம்பரான சிவபெருமான் அருள் செய்யாததால் கொல்லாமையை மேற்கொண்டு அதனுள் மறைந்து வாழும் சமண சமயத்தைச் சார்பவர் ஆகி,
1303. பாடலிபுத் திரமென்னும் பதிஅணைந்து சமண்பள்ளி
மாடணைந்தார் வல்லமணர் மருங்கணைந்து மற்றவர்க்கு வீடறியும் நெறியிதுவே எனமெய்போல் தங்களுடன் கூடவரும் உணர்வுகொளக் குறிபலவுங் கொளுவினார்.
தெளிவுரை : மருணீக்கியார் பாடலிபுத்திரம் என்ற பதியைச் சேர்ந்து அதனுள்ளே உள்ள சமண பள்ளியைச் சென்றடைந்தார். வலிய சமணர்கள் அவரைச் சூழ்ந்து அவருக்கு, வீடு பேற்றை அடையும் நெறி இதுவேயாகும் என வெளிப்பார்வையில் மெய்போல் காட்டித் தம்முடன் அவர் கூடவரும் உணர்ச்சி உண்டாகத் தக்கதாகப் பல பகுதிகளையும் அவர்க்குப் புகட்டினர்.
1304. அங்கவரும் அமண்சமயத் தருங்கலைநூ லானவெலாம்
பொங்கும்உணர் வுறப்பயின்றே அந்நெறியிற் புலன்சிறப்பத் துங்கமுறும் உடற்சமணர் சூழ்ந்துமகிழ் வார்அவர்க்குத் தங்களின்மே லாந்தரும சேனரெனும் பெயர்கொடுத்தார்.
தெளிவுரை : மருணீக்கியாரும் அங்குச் சமண சமயத்தின் அரிய நூல்களாய் உள்ளவற்றையெல்லாம் பெருகி எழும் உணர்ச்சியுள்படப் பயின்றவராயும் அறநெறியின் அறிவிற் சிறந்தவராயும் விளங்கினார். அதனால் பருத்த உடல் உடையவரான அந்த சமணர்கள் அம்மருணீக்கியாரைச் சூழ்ந்து மகிழ்வாராகி அவருக்குத் தங்களின் மேம்பட்ட தரும சேனர் என்ற பெயரைத் தந்தனர்.
1305. அத்துறையின் மீக்கூரும் அமைதியினால் அகலிடத்தில்
சித்தநிலை அறியாத தேரரையும் வாதின்கண் உய்த்தவுணர் வினில்வென்றே உலகின்கண் ஒளியுடைய வித்தகராய் அமண்சமயத் தலைமையினில் மேம்பட்டார்.
தெளிவுரை : அந்தத் துறையில் மிக்குப் பெருகிய சிறப்பினால் அகன்ற உலகத்தில் சித்த நிலை அறியாத புத்தர்களையும் வாதில் ஆராய்ந்து செலுத்திய உணர்வினால் வெற்றி கண்டு உலகத்தில் அறிவொளி மிக்க பெரியோராய்ச் சமண சமயத் தலைமையில் அவர் மேம்பட்டனர்.
1306. அந்நெறியின் மிக்கார் அவரொழுக ஆன்றதவச்
செந்நெறியின் வைகும் திலகவதி யார்தாமும் தொன்னெறியின் சுற்றத் தொடர்பொழியத் தூயசிவ நன்னெறியே சேர்வதற்கு நாதன்தாள் நண்ணுவார்.
தெளிவுரை : அவர் அவ்வாறு அந்த நெறியில் மேம்பட்டவராக ஒழுக, அமைந்த தவமான செந்நெறியில் நின்ற திலகவதியம்மையாரும் பழைமையான சுற்றத்தின் தொடர்பும் நீங்கத் தூய்மை தரும் சிவநன்னெறியையே சேர்வதற்குச் சிவபெருமானின் திருவடிகளை வணங்குபவராகி,
1307. பேராத பாசப் பிணிப்பொழியப் பிஞ்ஞகன்பால்
ஆராத அன்புபெற ஆதரித்த அம்மடவார் நீராரும் கெடிலவட நீள்கரையில் நீடுபெருஞ் சீராரும் திருவதிகை வீரட்டா னஞ்சேர்ந்தார்.
தெளிவுரை : பெயராத பாசக்கட்டு நீங்குமாறு சிவபெருமானிடத்தே ஆசைப்பட்ட அந்த அம்மையார், நீர்மையால் நிறைந்த திருக்கெடிலம் என்ற ஆற்றின் நீண்ட வடகரையில் நீடும் பெருஞ்சிறப்பு மிக்க திருவதிகை வீரட்டானத்தை அடைந்தார்.
1308. சென்றுதிரு வீரட்டா னத்திருந்த செம்பவளக்
குன்றை அடிபணிந்து கோதில் சிவசின்னம் அன்று முதல்தாங்கி ஆர்வமுறத் தம்கையால் துன்று திருப்பணிகள் செய்யத் தொடங்கினார்.
தெளிவுரை : திலகவதியார் அங்குச் சென்று வீரட்டானத்தில் வீற்றிருக்கும் செம்பவளக் குன்றைப் போன்று விளங்கும் வீரட்டானேசுவரரை அடிபணிந்து, குற்றம் இல்லாத சிவ சின்னங்களை அன்று முதல் தாங்கிக் கொண்டு, அன்பு பொருந்தத் தம் கையால் பொருந்திய திருப்பணிகளைச் செய்யத் தொடங்கினார்.
1309. புலர்வதன்முன் திருவலகு பணிமாறிப் புனிறகன்ற
நலமலிஆன் சாணத்தால் நன்குதிரு மெழுக்கிட்டு மலர்கொய்து கொடுவந்து மாலைகளும் தொடுத்தமைத்துப் பலர்புகழும் பண்பினால் திருப்பணிகள் பலசெய்தார்.
தெளிவுரை : பொழுது விடிவதற்கு முன் அக்கோயில் திருமுற்றத்தில் திருவலகு இடுதலான திருப்பணியைச் செய்தும் (பெருக்கியும்) ஈன்றணியதல்லாத நல்ல பசுவின் சாணத்தால் நன்கு திருமெழுகிட்டும் (சாணத்தால் மெழுகியும்) மலர்களைக் கொய்து கொண்டு வந்து மாலைகள் தொடுத்து அமைத்துக் கொடுத்தும் அன்பர் பலரும் பாராட்டுகின்ற பண்பினால் இவ்வாறு பல திருப்பணிகளையும் ஆற்றி வந்தார்.
1310. நாளும்மிகும் பணிசெய்து குறைந்தடையும் நன்னாளில்
கேளுறும்அன் புறவொழுகுங் கேண்மையினார் பின்பிறந்தார் கோளுறுதீ வினைஉந்தப் பரசமயங் குறித்ததற்கு மூளுமனக் கவலையினால் முற்றவரும் துயருழந்து.
தெளிவுரை : சிவனடியார்களான கிளைஞர் அன்பு பெருக ஒழுகும் கேண்மையுடைய திலகவதியார் நாள்தோறும் இவ்வாறு மிக்க பணிகளைச் செய்து பணிவுடன் வாழ்ந்து ஒழுகி வரும் நாட்களில், தமக்குப் பின் பிறந்தவரான மருணீக்கியார், பற்றிக் கொண்ட தீவினை முற்றுதலால் பரசமயம் குறித்துப் புகுந்ததற்காக உண்டான மனக்கவலையால் மிக்க அரிய துன்பத்தை அடைந்து,
1311. தூண்டுதவ விளக்கனையார் சுடரொளியைத் தொழுதென்னை
ஆண்டருளின் நீராகில் அடியேன்பின் வந்தவனை ஈண்டுவினைப் பரசமயக் குழிநின்றும் எடுத்தருள வேண்டுமெனப் பலமுறையும் விண்ணப்பஞ் செய்தனரால்.
தெளிவுரை : தூண்டும் தவ விளக்கைப் போன்ற அம்மையார் திலகவதியார் வீரட்டானத்து இறைவரை வணங்கித் தொழுது என்னைத் தாங்கள் ஆண்டருள்வீராகில், எனக்குப் பின் தோன்றியவனைச் சேர்கின்ற தீவினையுடைய பரசமயமான படுகுழியினின்றும் எடுத்தருள வேண்டும் என்று பலமுறையும் வேண்டிக் கொண்டார்.
1312. தவமென்று பாயிடுக்கித் தலைபறித்து நின்றுண்ணும்
அவமொன்று நெறிவீழ்வான் வீழாமே அருளுமெனச் சிவமொன்று நெறிநின்ற திலகவதி யார்பரவப் பவமொன்றும் வினைதீர்ப்பார் திருவுள்ளம் பற்றுவார்.
தெளிவுரை : தவத்தை மேற்கொண்டதாக எண்ணிக்கொண்டு பாயை உடுத்தியும் தலைமயிரைப் பறித்தும் நின்றவாறே உணவு உண்டும் வருந்துகின்ற அவம் பொருந்திய நெறியான சமணச் சமயத்தில் விழுந்த என் தம்பியை அவ்வாறு விழாமல் அருள் செய்ய வேண்டும் என்று சிவநெறியில் நின்ற திலகவதியார் வேண்டிக்கொண்டார். அதனால் பிறவியில் பொருந்தும் வினைகளைத் தீர்ப்பவரான சிவபெருமான் திருவுள்ளம் பற்றுவாராய்,
1313. மன்னுதபோ தனியார்க்குக் கனவின்கண் மழவிடையார்
உன்னுடைய மனக்கவலை ஒழிநீஉன் உடன்பிறந்தான் முன்னமே முனியாகி எமையடையத் தவம்முயன்றான் அன்னவனை இனிச்சூலை மடுத்தாள்வம் எனஅருளி.
தெளிவுரை : நிலைபெற்ற தவமுடையவர்க்குக் கனவில் எழுந்தருளி, இளமையான காளையையுடைய சிவபெருமான், நீ உன்னுடைய மனக்கவலையை ஒழிவாய்! உன் தம்பி முன்னமே, ஒரு முனிவனாக இருந்து எம்மை அடைவதற்குத் தவம் செய்தனன். இனி அவனைச் சூலை நோய் தந்து ஆட்கொள்வோம்! என அருளி,
1314. பண்டுபுரி நற்றவத்துப் பழுதினள விறைவழுவும்
தொண்டரைஆ ளத்தொடங்கும் சூலைவே தனைதன்னைக் கண்தருநெற் றியரருளக் கடுங்கனல்போல் அடுங்கொடிய மண்டுபெருஞ் சூலைஅவர் வயிற்றினிடைப் புக்கதால்.
தெளிவுரை : முற்பிறவியில் செய்த நல்ல தவத்தில் சிறிதளவு பிழை செய்த தொண்டரான மருணீக்கியாரை ஆட்கொள்ளத் தொடங்கும் சூலை நோயைச் சிவபெருமான் அருள் செய்ய, கடிய தீயைப் போல் சுடுகின்ற அந்த மிகப்பெருஞ்சூலை நோய் அவருடைய வயிற்றுள் புகுந்தது.
1315. அடைவில்அமண் புரிதரும சேனர்வயிற் றடையும்அது
வடஅனலுங் கொடுவிடமும் வச்சிரமும் பிறவுமாம் கொடியவெலாம் ஒன்றாகும் எனக்குடரின் அகங்குடையப் படருழந்து நடுங்கிஅமண் பாழியறை யிடைவீழ்ந்தார்.
தெளிவுரை : சேரத் தகாத சமண சமயத்தைச் சார்ந்து ஒழுகிய தருமசேனரின் வயிற்றில் அடையும் அந்த சூலை நோய், வடவைத் தீயும் கொடிய நஞ்சும், வயிரமும் என்ற இவை போன்ற கொடுமை செய்யும் மற்றவை எல்லாமும் ஒன்று கூடி வந்ததோ என்னுமாறு குடரின் உள்ளே குடையவே, அவர் துன்பப்பட்டு வருந்திச் சமணர் பாழியில் உள்ள அறையிலே விழுந்தார்.
1316. அச்சமயத் திடைத்தாம்முன் அதிகரித்து வாய்த்துவரும்
விச்சைகளால் தடுத்திடவும் மேன்மேலும் மிகமுடுகி உச்சமுற வேதனைநோய் ஓங்கியெழ ஆங்கவர்தாம் நச்சரவின் விடந்தலைக்கொண் டெனமயங்கி நவையுற்றார்.
தெளிவுரை : அந்தச் சமண சமயத்தினிடம் தாம் முன்பு பழகிக் கை வந்துள்ள மந்திரம் முதலான வித்தைகளால் தடுக்கவே, அது குறையாது மேன்மேல் அதிகப்பட்டு மிகவும் வளர்ந்து பெருகி, வேதனை தரும்படி மிக்கு எழுந்ததால், அங்கு அந்தத் தருமசேனரும் நஞ்சுடைய பாம்பின் விட வேகம் தலை கொண்டாற் போல் மயங்கிச் சோர்ந்தார்.
1317. அவர்நிலைமை கண்டதற்பின் அமண்கையர் பலர்ஈண்டிக்
கவர்கின்ற விடம்போல்முன் கண்டறியாக் கொடுஞ்சூலை இவர்தமக்கு வந்ததினி யாதுசெயல் என்றழிந்தார் தவமென்று வினைபெருக்கிச் சார்பல்லா நெறிசார்வார்.
தெளிவுரை : தவம் என்று கொண்டு தீவினையையே பெருக்கி நல்ல சார்பில்லாத நெறியினைச் சார்ந்த சமணக் கீழ் மக்கள், தருமசேனரின் அந்த நிலையைக் கண்ட பின்பு, பலரும் கூடி உயிரைக் கவரும் நஞ்சைப் போல் முன் எங்கும் எவரும் கண்டறியாத இந்தக் கொடிய சூலை இவர்க்கு வந்ததே! இனி என்ன செய்வோம்? என்று மனம் வருந்தினர்.
1318. புண்தலைவன் முருட்டமணர் புலர்ந்துசெயல் அறியாது
குண்டிகைநீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமை கண்டுமிகப் பீலிகொடு கால்அளவுந் தடவிடவும் பண்டையினும் நோவுமிகப் பரிபவத்தால் இடருழந்தார்.
தெளிவுரை : புண்ணுடைய தலையையும், வலிய முரட்டுத் தன்மையையுமுடைய சமணர் மனம் அழிந்து, செய்வதறியாது, தம் குண்டிகையில் இருந்த நீரை மந்தரித்துக் குடிக்கச் செய்தும் நோய் தணியாததைக் கண்டு, மேலும் பீலி கொண்டு உடல் முழுதும் தடவி விடவும், முன்னைவிட நோய் அதிகமாகியது. அதனால் அவர்கள் மனவேதனையால் வருந்தினர்.
1319. தாவாத புகழ்த்தரும சேனருக்கு வந்தபிணி
ஓவாது நின்றிடலும் ஒழியாமை உணர்ந்தாராய் ஆஆநாம் என்செய்கோம் என்றழிந்த மனத்தினராய்ப் போவார்கள் இதுநம்மால் போக்கரிதாம் எனப்புகன்று.
தெளிவுரை : கெடுதல் அற்ற புகழையுடைய தருமசேனருக்கு வந்த நோய் நீங்காது நின்றிடவே, அது நீங்காத தன்மையையுணர்ந்து, ஆ! ஆ! நாம் இனி என்ன செய்வோம்! என வருந்திய மனத்துடன், இது நம்மால் போக்குவதற்கு அரிதாகும் என்று அகன்று போவாராய்,
1320. குண்டர்களுங் கைவிட்டார் கொடுஞ்சூலை கைக்கொண்டு
மண்டிமிக மேன்மேலும் முடுகுதலால் மதிமயங்கிப் பண்டையுற வுணர்ந்தார்க்குத் திலகவதி யார்உளராக் கொண்டவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்புணர்த்த.
தெளிவுரை : சமணர்களும் கைவிட்டனர். கொடிய சூலை நோய் தம்மைப் பற்றிக் கொண்டு மேன் மேலும் வருத்துவதால் இன்னது செய்வது என்று அறியாது, அறிவு மயங்கிய நிலையில், முன்னைய உறவினரை நினைத்து உணரப்புகுந்த அவர்க்குத் திலகவதியாரான தமக்கையார் இருக்கின்றார். அவர் துணை செய்ய வல்லார் என்ற நினைவு வரவே, அவரிடம் தம் எண்ணத்தை உணர்த்தும் பொருட்டுத் தம்மை ஊட்டுவிக்கும் ஏவலாளனை அனுப்பி வைத்தார்.
1321. ஆங்கவன்போய்த் திருவதிகை தனையடைய அருந்தவத்தார்
பூங்கமழ்நந் தனவனத்தின் புறத்தணையக் கண்டிறைஞ்சி ஈங்கியான் உமக்கிளையார் ஏவலினால் வந்ததெனத் தீங்குளவோ எனவினவ மற்றவனும் செப்புவான்.
தெளிவுரை : அங்ஙனமே அவன் சென்று திருவதிகையினைச் சேர, அந்நேரத்தில் அரிய தவத்தவரான திலகவதியார் மலர்கள் மணம் வீசும் நந்தவனத்தின் புறத்தே வர, அவரைக் கண்டு நான் உமக்கு இளையார் (தம்பியார்) ஏவலினால் இங்கு வந்தேன்! எனக் கூறத் திலகவதியார் தீங்குகள் அவர்க்கு உள்ளனவோ? என வினவினார். அவன் கூறுபவனாய்,
1322. கொல்லாது சூலைநோய் குடர்முடக்கித் தீராமை
எல்லாரும் கைவிட்டார் இதுசெயல்என் முன்பிறந்த நல்லாள்பால் சென்றியம்பி நான்உய்யும் படிகேட்டிங் கல்லாகும் பொழுதணைவாய் என்றார்என் றறிவித்தான்.
தெளிவுரை : சூலை நோயானது கொல்வது மட்டும் செய்யாது குடலை முடக்கித் தீராத நோயாக அவர்க்கு வந்துள்ளது. எல்லாரும் கைவிட்டனர். இந்தச் செய்தியை என்முன் பிறந்த நல்லாளிடம் போய்ச் சொல்லி, நான் உய்யும் வகையை அவரிடம் கேட்டு இங்கு இரவுப் போதில் வருவாயாக! என்றார் எனத் தெரிவித்தான்.
1323. என்றவன்முன் கூறுதலும் யான்அங்குன் னுடன்போந்து
நன்றறியார் அமண்பாழி நண்ணுகிலேன் எனும்மாற்றம் சென்றவனுக் குரையென்று திலகவதி யார்மொழிய அன்றவனும் மீண்டுபோய்ப் புகுந்தபடி அவர்க்குரைத்தான்.
தெளிவுரை : என அவன் முன் உரைக்கவும், நான் அங்கு உன்னுடன் வந்து, நன்மை நெறி அறியாத சமணர் பாழியை அடைய மாட்டேன் என்னும் என் சொல்லை நீ சென்று அவனிடம் கூறுவாய்! எனத் திலகவதியார் உரைக்க, அன்று அவனும் திரும்பிப் போய் நிகழ்ந்ததை நிகழ்ந்த வண்ணம் அவருக்குச் சொன்னான்.
1324. அவ்வார்த்தை கேட்டலுமே அயர்வெய்தி இதற்கினியான்
எவ்வாறு செய்வன்என ஈசரருள் கூடுதலால் ஒவ்வாஇப் புன்சமயத் தொழியாஇத் துயரொழியச் செவ்வாறு சேர்திலக வதியார்தாள் சேர்வனென.
தெளிவுரை : அந்தப் பணியாள் திலகவதியார் உரைத்ததைத் தெரிவிக்க, அதைக் கேட்டதும் தருமசேனர் தளர்ச்சியடைந்து இதற்கு யான் என்ன செய்வேன்! என்று மயங்கியபோது, சிவபெருமான் திருவருள் கூடியதால் பொருந்தாத இந்தப் புன்மை சமயத்தில் ஒழியாத இத்துன்பம் ஒழியுமாறு செந்நெறியில் சேர்ந்த திலகவதியார் சேவடிகளைச் சேர்வேன் என்று மனத்தில் நினைத்து,
1325. எடுத்தமனக் கருத்துய்ய எழுதலால் எழுமுயற்சி
அடுத்தலுமே அயர்வொதுங்கத் திருவதிகை அணைவதனுக் குடுத்துழலும் பாயொழிய உறியுறுகுண் டிகையொழியத் தொடுத்தபீ லியும்ஒழியப் போவதற்குத் துணிந்தெழுந்தார்.
தெளிவுரை : மனத்தில் எழுந்த கருத்து, உய்யும்படி உண்டானதால், எழும் முயற்சி கூடியதாக தளர்ச்சி ஒதுங்கிய, திருவதிகையினை அடைவதற்கு, உடுத்தி யுழன்ற பாய் ஒழியவும், உறியில் தூக்கிய குண்டிகை நீங்கவும், தொடுத்த மயிற்பீலி விலகவும், போவதற்குத் துணிந்து எழுந்தாராகி,
1326. பொய்தருமால் உள்ளத்துப் புன்சமணர் இடங்கழிந்து
மெய்தருவான் நெறியடைவார் வெண்புடைவை மெய்சூழ்ந்து கைதருவார் தமையூன்றிக் காணாமே இரவின்கண் செய்தவமா தவர்வாழுந் திருவதிகை சென்றடைவார்.
தெளிவுரை : பொய்யைத் தரும் மயக்கமுடைய உள்ளத்துப்புன் சமணர்களின் இடத்தை நீங்கி மெய்யினைத் தருபவனின் நன்னெறியை அடைபவராய், அதற்கேற்றவாறு வெண்மை ஆடையை உடலில் உடுத்திக் கொண்டு கை கொடுப்பவரை ஊன்றிக் கொண்டு, சமணர் காணாத வண்ணம், இரவில் தவம் செய்யும் மாதவர் வாழ்கின்ற திருவதிகையைச் சென்று அடைவாராய்,
1327. சுலவிவயிற் றகம்கனலுஞ் சூலைநோ யுடன்தொடரக்
குலவியெழும் பெருவிருப்புக் கொண்டணையக் குலவரைபோன் றிலகுமணி மதிற்சோதி எதிர்கொள்திரு வதிகையினில் திலகவதி யார்இருந்த திருமடத்தைச் சென்றணைந்தார்.
தெளிவுரை : சுழற்றிச் சுழற்றி வயிற்றுள் பற்றி எரியும் சூலை நோய், தம்முடனே தொடர, பொருந்தி எழும் விருப்பம் துணையாகத் தம்மைக் கொண்டு செலுத்த, பெரிய மலை போன்று விளங்கும் மதிலின் ஒளி எதிரே தோன்றும் திருவதிகையில் திலகவதியார் இருந்த திருமடத்தைப் போய்ச் சேர்ந்தார்.
1328. வந்தணைந்து திலகவதி யார்அடிமே லுறவணங்கி
நந்தமது குலஞ்செய்த நற்றவத்தின் பயன்அனையீர் இந்தவுடல் கொடுஞ்சூலைக் கிடைந்தடைந்தேன் இனிமயங்க துய்ந்துகரை யேறுநெறி உரைத்தருளும் எனவுரைத்து.
தெளிவுரை : வந்து சேர்ந்து திலகவதியாரின் திருவடிகளில் பொருந்த விழுந்து வணங்கி நம் குலம் செய்த நல்ல தவத்தின் பயன் போன்றவரே! இந்த வுடலில் பற்றிய கொடிய சூலை நோய்க்கு மிகவும் வருந்தி யும்மை வந்து சேர்ந்தேன். இனி மயங்காமல் உய்ந்து கரை சேரும் வழியைத் தாங்கள் கட்டளையிட்டருள் வேண்டும் எனக்கூறி,
1329. தாளிணைமேல் விழுந்தயருந் தம்பியார் தமைநோக்கி
ஆளுடைய தம்பெருமான் அருள்நினைந்து கைதொழுது கோளில்பர சமயநெறிக் குழியில்விழுந் தறியாது மூளும்அருந் துயர்உழந்தீர் எழுந்திரீர் எனமொழிந்தார்.
தெளிவுரை : தம் அடிகளில் விழுந்து வருந்தும் தம்பியாரைப் பார்த்து, தம்மை ஆளுடைய சிவபெருமானின் திருவருளை எண்ணித் தொழுது, நல்ல குறிக்கோள் இல்லாத பிற சமயக் குழியில் விழுந்து மூளும் கொடிய துன்பத்தில் வருந்தினீர். இனி எழுந்திருப்பீராக! எனக் கூறியருளினார்.
1330. மற்றவுரை கேட்டலுமே மருணீக்கி யார்தாமும்
உற்றபிணி உடல்நடுங்கி எழுந்துதொழ உயர்தவத்தோர் கற்றைவே ணியர்அருளே காணுமிது கழலடைந்தோர் பற்றறுப்பார் தமைப்பணிந்து பணிசெய்வீர் எனப்பணித்தார்.
தெளிவுரை : அவர் உரைத்த அவ்வுரையைக் கேட்டதும் மருணீக்கியார் தாமும் பொருந்திய நோயுடனே நிலத்தில் விழுந்த நிலையினின்றும் எழுந்து தொழவே, உயர் தவத்தவரான திலகவதியார் இது கற்றையான சடையுடையவரின் திருவருளாகும்! தம் திருவடிச் சார்பை அடைந்தவரின் பற்றுக்களை அறுப்பவரான அவரைப் பணிந்து பணி செய்வீராக! என்று பணித்தார்.
1331. என்றபொழு தவரருளை எதிரேற்றுக் கொண்டிறைஞ்ச
நின்றதபோ தனியாரும் நின்மலன்பேர் அருள்நினைந்து சென்றுதிரு வீரட்டம் புகுவதற்குத் திருக்கயிலைக் குன்றுடையார் திருநீற்றை அஞ்செழுத்தோ திக்கொடுத்தார்.
தெளிவுரை : எனத் திலகவதியார் அருளிச் செய்தபோது, அவரது பணியை ஏற்றுக் கொண்டு மருணீக்கியார் வணங்க, அவர் போய்த் திருவீரட்டம் புகுவதற்குத் தகுதியுடையவராக ஆக்குவதற்குத் திலகவதியார் திருக்கயிலைக் குன்றுடைய இறைவரின் ஐந்தெழுத்தை ஓதித் திருநீற்றைத் தந்தார்.
1332. திருவாளன் திருநீறு திலகவதி யார்அளிப்பப்
பெருவாழ்வு வந்ததெனப் பெருந்தகையார் பணிந்தேற்றங் குருவார அணிந்துதமக் குற்றவிடத் துய்யுநெறி தருவாராய்த் தம்முன்பு வந்தார்பின் தாம்வந்தார்.
தெளிவுரை : சிவபெருமானின் திருநீற்றைத் திலகவதியார் அளிக்க, எனக்கு பெருவாழ்வு வந்தது! என எண்ணிப் பெருந்தகையாரான மருணீக்கியார் பணிந்து ஏற்றுக் கொண்டார். அதைத் தம் திருமேனி முழுதும் பொருந்த நிறைய அணிந்து கொண்டு, தமக்குத் தீமை உற்ற இடத்தில் உய்யும் வழி தருபவராகித் தம் முன் வந்த, அந்தத் திலகவதியாரின் பின்பு அவரும் வந்தார்.
1333. நீறணிந்தார் அகத்திருளும் நிறைகங்குல் புறத்திருளும்
மாறவருந் திருப்பள்ளி எழுச்சியினில் மாதவஞ்செய் சீறடியார் திருவலகுந் திருமெழுக்குந் தோண்டியுங்கொண் டாறணிந்தார் கோயிலினுள் அடைந்தவரைக் கொடுபுக்கார்.
தெளிவுரை : அங்ஙனம் திருநீற்றை அணிந்தவரின் உள்ளத்தில் உள்ள இருளும் வெளியே உள்ள கங்குல் இருளும் மாறும்படி வரும், திருப்பள்ளி எழுச்சிக் காலத்தில் மாதவம் செய்யும் திலகவதியம்மையார் திருவலகும், திருமெழுக்கும், தோண்டியும் ஆகிய இவற்றை எடுத்துக் கொண்டு, கங்கையாற்றை அணிந்த இறைவரின் கோயிலுள் தம்மை வந்தடைந்த நாயனாரையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
1334. திரைக்கெடில வீரட்டா னத்திருந்த செங்கனக
வரைச்சிலையார் பெருங்கோயில் தொழுதுவலங் கொண்டிறைஞ்சித் தரைத்தலத்தின் மிசைவீழ்ந்து தம்பிரான் திருவருளால் உரைத்தமிழ்மா லைகள்சாத்தும் உணர்வுபெற உணர்ந்துரைப்பார்.
தெளிவுரை : அலைகளையுடைய கெடிலம் என்ற ஆற்றின் கரையில் உள்ள வீரட்டானத்தில் இருந்த, செம்பொன் மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானின் பெருங்கோயிலைத் தொழுது வலமாக வந்து வணங்கி, நிலத்தின் மீது விழுந்து அட்டாங்கமாய் வணக்கம் செய்து, தம் பெருமானின் திருவருளால் அவர் புகழைக் கூறும் தமிழ் மாலையைச் சாத்தும் உணர்வு வர உள் உணர்ந்து உரைப்பவராகி,
1335. நீற்றால்நிறை வாகிய மேனியுடன்
நிறையன்புறு சிந்தையில் நேசமிக மாற்றார்புரம் மாற்றிய வேதியரை மருளும்பிணி மாயை அறுத்திடுவான் கூற்றாயின வாறு விலக்ககிலீர் எனநீடிய கோதில் திருப்பதிகம் போற்றாலுல கேழின் வருந்துயரும் போமாறெதிர் நின்று புகன்றனரால்.
தெளிவுரை : திருநீற்றினால் நிறைவான மேனியுடன் நிறைந்த அன்பு பொருந்திய மனத்தில் நேசம் அதிகரிக்கப் பகைவரின் புரங்களை எரித்த வேதியரான வீரட்டானத்து இறைவரை, மருளும் சூலை நோயையும் மாயையும் அறுக்கும் பொருட்டு, கூற்றாயினவாறு விலக்ககலீர்! எனத் தொடங்கும் பெருமையுடைய குற்றம் இல்லாத திருப்பதிகத்தைப் போற்றுவதால் உலகத்தில் ஏழு பிறப்புகளிலும் வரும் துன்பமும் நீங்குமாறு சந்நிதிக்கு எதிரே நின்று பாடினார்.
1336. மன்னும்பதி கம்அது பாடியபின்
வயிறுற்றடு சூலை மறப்பிணிதான் அந்நின்ற நிலைக்கண் அகன்றிடலும் அடியேன்உயி ரோடருள் தந்ததெனாச் செந்நின்ற பரம்பொரு ளானவர்தம் திருவாரருள் பெற்ற சிறப்புடையோர் முன்னின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன்கரு ணைக்கடல் மூழ்கினரே.
தெளிவுரை : நிலைபெறும் அப்பதிகத்தை அவர் பாடிய பின்பு, அவரது வயிற்றில் தங்கி வருந்திய கொடிய சூலை நோயும் அந்நிலையில் அப்போதே நீங்கிடவும், செம்மை நின்ற பரம்பொருளான சிவபெருமானின் திரு நிறைந்த அருளைக் கைகூடிய சிறப்புடைய நாயனார், மூண்டு நின்ற ஞான மயக்கத்தால் இறைவரின் அருளாகிய கடலுள் மூழ்கி நின்றார்.
1337. அங்கங்கள் அடங்க உரோமமெலாம்
அடையப்புள கங்கண் முகிழ்த்தலரப் பொங்கும்புனல் கண்கள் பொழிந்திழியப் புவிமீது விழுந்து புரண்டயர்வார் இங்கென்செயல் உற்ற பிழைப்பதனால் ஏறாத பெருந்திடர் ஏறிடநின் தங்குங்கரு ணைப்பெரு வெள்ளமிடத் தகுமோவென இன்னன தாமொழிவார்.
தெளிவுரை : திருமேனியில் உள்ள உரோமங்கள் எல்லாம் ஒருங்கே மகிழ்ச்சியினால் சிலிர்த்து நிற்க, கண்களினின்று இடையறாது பொங்கும் ஆனந்தக் கண்ணீர் வழிந்து பெருக, தரையின்மீது விழுந்து புரண்டு ஆனந்தப் பரவசப்பட்ட நாயனார், இவ்விடத்து என் செய்கையால் உண்டான பிழை காரணமாக, ஏறாத பெரிய மேட்டிலும் ஏறும்படி உம் நிலைபெற்ற அருளான பெருவெள்ளத்தைப் பெருக்குதலும் தகுதியாகுமோ? என இத்தகைய சொற்களைத் தாமே கூறுபவராய்,
1338. பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப்
பொறியில்சமண் நீசர் புறத்துறையாம் அவ்வாழ்குழி யின்கண் விழுந்தெழுமா றறியாது மயங்கி அவம்புரிவேன் மைவாச நறுங்குழல் மாமலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்தடையும் இவ்வாழ்வு பெறத்தரு சூலையினுக் கெதிர்செய்குறை யென்கொல் எனத்தொழுதார்.
தெளிவுரை : பொய்யை மெய் என்று பெருக்கிய புல்லிய சமயமாய்ப் பொறுமையற்ற சமணர் என்னும் நீசர்களின் புறச் சமயமான ஆழமான படு குழியில் விழுந்து, மேலே எழுகின்ற வழியறியாது, மயங்கி அவத்தொழில் செய்கின்ற நான், மயிர்ச் சாந்து மணம் கமழும் நறிய கூந்தலையுடைய உமையம்மையாரின் கணவரான சிவபெருமானின் மலர் போன்ற அடிகளை வந்து அடையும் இப்பெரு வாழ்வினைப் பெறத்தரும் இந்தச் சூலை நோய்க்குக் கைம்மாறாகச் செய்யக்கூடிய உதவி என்ன இருக்கின்றது என அச்சூலை நோயைச் சுட்டி வணங்கினார்.
1339. மேவுற்றஇவ் வேலையில் நீடியசீர்
வீரட்டம் அமர்ந்த பிரானருளால் பாவுற்றலர் செந்தமி ழின்சொல்வளப் பதிகத்தொடை பாடிய பான்மையினால் நாவுக்கர சென்றுல கேழினும்நின் நன்னாமம் நயப்புற மன்னுகஎன் றியாவர்க்கும் வியப்புற மஞ்சுறைவா னிடையேயொரு வாய்மை எழுந்ததுவே.
தெளிவுரை : பொருந்திய அந்த சமயத்தில் சிறப்பால் மிக்க திருவீரட்டானத்து இறைவரைத் திருவருளால், பாட்டுக்கு இசைந்து அலர்ந்த செந்தமிழுடைய இனிய சொல் வளம் கொண்ட திருப்பதிக மாலைலைப் பாடியருளிய முறையினால் திருநாவுக்கரசு என்று உனது பெயர் விருப்பமுற ஏழு உலகங்களிலும் பொருந்துவதாகுக என எல்லார்க்கும் வியப்பு உண்டாகுமாறு, மேகம் தவழும் வானில் ஓர் அசரீரி எழுந்தது.
1340. இத்தன்மை நிகழ்ந்துழி நாவின்மொழிக்
கிறையாகிய அன்பரும் இந்நெடுநாள் சித்தந்திகழ் தீவினை யேன்அடையுந் திருவோஇது என்று தெருண்டறியா அத்தன்மைய னாய இராவணனுக் கருளுங்கரு ணைத்திற மானஅதன் மெய்த்தன்மை யறிந்து துதிப்பதுவே மேல்கொண்டு வணங்கினர் மெய்யுறவே.
தெளிவுரை : இத்தன்மையானவை நிகழ்ந்ததால் நாவின் மொழிக்கு அரசரான அன்பரும் இத்தனை நீண்ட காலமும் சித்தத்தினுள் விளங்கிய தீவினையை உடைய நான் அடையத்தக்க பெரும்பேறு இதுவோ என்று நினைந்தவராய், தெளிந்தறியாத அவ்வியல்புடைய இராவணனுக்கும் அருளும் அருளின் பெருமையான அதன் மெய்த்தன்மையை அறிந்து, அத்திறத்தைத் துதிப்பதையே மேற்கொண்டு மெய்யுற வீழ்ந்து வணங்கினார்.
1341. பரசுங்கரு ணைப்பெரி யோன்அருளப்
பறிபுன்தலை யோர்நெறி பாழ்படவந் தரசிங்கருள் பெற்றுல குய்ந்ததெனா அடியார்புடை சூழதி கைப்பதிதான் முரசம்பட கந்துடி தண்ணுமையாழ் முழவங்கிளை துந்துபி கண்டையுடன் நிரைசங்கொலி எங்கும் முழங்குதலால் நெடுமாகடல் என்ன நிறைந்துளதே.
தெளிவுரை : வணங்கத்தக்க பேரருளையுடைய பெரியவரான சிவபெருமான் அங்ஙனம் அருள் செய்ய, மயிர் பறித்த புன்மைகொண்ட தலையையுடைய சமணர்களின் சமய நெறி பாழ்பட்டு அழியத் திருநாவுக்கரசர் இங்கு வந்து அருள் பெற்ற அதனால் உலகம் உய்ந்தது என்று சிவனடியார்கள் எல்லாப் பக்கமும் சூழ்ந்த திருவதிகை நகரமானது, முரசும் தம்பட்டமும் உடுக்கையும் மத்தளமும் யாழும் முழவும் கிளையும் துந்துபியும் மணியும் என்ற இவற்றின் முழக்கத்துடனே, வரிசைப்பட ஒலிக்கும் சங்கங்களும் எங்கும் ஒலித்தலால் நீண்ட பெருங்கடல் போல் நிறைந்து விளங்கியது.
1342. மையற்றுறை யேறி மகிழ்ந்தலர்சீர்
வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் மெய்யுற்ற திருப்பணி செய்பவராய் விரவுஞ்சிவ சின்னம் விளங்கிடவே எய்துற்ற தியானம் அறாவுணர்வும் ஈறின்றி எழுந்திரு வாசகமும் கையில்திக ழும்உழ வாரமுடன் கைத்தொண்டு கலந்து கசிந்தனரே.
தெளிவுரை : மயக்கத்தைத் தரும் சமண சமயத் துறையினின்றும் மேல் ஏறி மகிழும் சிறப்புடைய திருநாவுக்கரசர் உள்ளத்தாலும் சொல்லாலும் உடலாலும் பொருந்திய சிவப்பணியைச் செய்பவராய், அதற்கு ஏற்றவாறு செய்யும் சிவ சின்னங்களான திருநீறும் உருத்திராக்கக் கண்டிகையும் விளங்கப் பூண்டு, இடையீடில்லாது உள்ளத்தில் கொண்ட தியான உணர்வையும், தடைபடாது வந்து மேன்மேலும் எழும் திருப்பதிகங்கள் பொருந்திய திருவாக்கையும், கையில் விளங்கும் உழவாரப் படையினையும் கொண்டவராய்க் கைத் தொண்டு மனம் கலந்து செய்து வந்தார்.
1343. மெய்ம்மைப்பணி செய்த விருப்பதனால்
விண்ணோர்தனி நாயக னார்கழலில் தம்மிச்சை நிரம்ப வரம்பெறும்அத் தன்மைப்பதி மேவிய தாபதியார் பொய்ம்மைச்சம யப்பிணி விட்டவர்முன் போதும்பிணி விட்டரு ளிப்பொருளா எம்மைப்பணி கொள்கரு ணைத்திறமிங் கியார்பெற்றனர் என்ன இறைஞ்சினரே.
தெளிவுரை : தேவர்க்கெல்லாம் தலைவரான வீரட்டானத்தில் உள்ள இறைவரின் திருவடிகளில் உள்ளம் வைத்து விரும்பி மெய்யாலும் வாக்காலும் திருப்பணி செய்து விண்ணப்பம் செய்ததால், தம் இச்சை நிரம்புமாறு வரம் பெற்ற அந்தத் தெய்வத்தன்மை வாய்ந்த திருவதிகை என்ற தலத்தில் பொருந்திய தவத்தவரான திலகவதியார், பொய்ம்மையான சமண சமயத் தொடக்கை விட்டு, அவர் (தம்பியார்), இறைவர் திருமுன்பு வந்து புகுதற்கு ஏதுவான சூலை நோயைத் தந்து மிகச்சிறிய எம்மையும் ஒரு பொருளாக ஆட்கொண்ட பெருங்கருணைத் திறத்தைப் போல் இங்கு வேறு எவர் பெற்றார்? என்று எண்ணித் துதித்து வணங்கினார்.
1344. இன்ன தன்மையில் இவர்சிவ நெறியினை யெய்தி
மன்னு பேரருள் பெற்றிடர் நீங்கிய வண்ணம் பன்னு தொன்மையிற் பாடலி புத்திர நகரில் புன்மை யேபுரி அமணர்தாம் கேட்டது பொறாராய்.
தெளிவுரை : இன்ன தன்மையில் இவர் சிவநெறியினை அடைந்து நிலைபெற்ற பேரருளைப் பெற்று, துன்பத்தினின்றும் நீங்கிய விதத்தை எடுத்துப் பேசப்படும் பழைமை பொருந்திய பாடலிபுத்திரம் என்னும் நகரத்தில் இருந்த, கீழ்மையையே செய்கின்ற சமணர்கள் கேள்வியுற்ற அதைப் பொறுத்துக் கொள்ள இயலாது.
1345. தரும சேனர்க்கு வந்தஅத் தடுப்பருஞ் சூலை
ஒருவ ராலும்இங் கொழிந்திடா மையின்அவர் உயப்போய்ப் பெருகு சைவராய்ப் பெயர்ந்துதம பிணியொழித் துய்ந்தார் மருவு நம்பெருஞ் சமயம்வீழ்ந் ததுவென மருள்வார்.
தெளிவுரை : தருசேனருக்கு வந்த, அந்த தடுப்பதற்கு அரிய சூலை இங்கு ஒருவராலும் நீக்கப்படாமையால், உய்யும் பொருட்டு அவர் சென்று சிறந்த சைவராகித் தம் பிணி நீங்கப்பெற்றார். இதனால் பொருந்திய நம் சமண சமயம் பாழ்பட்டது என்று மயங்குவாராகி,
1346. மலையும் பல்சம யங்களும் வென்றுமற் றவரால்
நிலையும் பெற்றஇந் நெறிஇனி அழிந்ததென் றழுங்கிக் கொலையும் பொய்ம்மையும் இலமென்று கொடுந்தொழில் புரிவோர் தலையும் பீலியும் தாழவந் தொருசிறை சார்ந்தார்.
தெளிவுரை : மாறுபடுகின்ற பல சமயங்களையும் வென்று அவரால் நிலைக்கவும் பெற்ற இந்தச் சமண சமய நெறி இனி அழிந்ததாகும் என வருந்தி, நாம் கொலை செய்வதும் பொய் பேசுவதும் இலோம்! எனக் கூறிக் கொண்டு கொடுமையையே செய்பவராகித் தம் மயிர் பறித்த தலைகளும் கைக்கொண்ட பீலியும் தாழ, ஒரு பக்கத்தை அடைந்தனர்.
1347. இவ்வ கைப்பல அமணர்கள் துயருடன் ஈண்டி
மெய்வ கைத்திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு சைவ னாகிநம் விருத்தியும் தவிர்க்கும்மற் றினிநாம் செய்வ தென்னென வஞ்சனை தெரிந்துசித் திரிப்பார்.
தெளிவுரை : இவ்வகையில் பல சமணர்களும் துன்பத்துடன் கூடி, உண்மையை அறிந்தால் வேந்தன் வெகுண்டு, சைவனாகி நமது தொழிலையும் போக்குவான். ஆதலால் வேறு நாம் என்ன செய்வோம்? என்று வஞ்சனையுடன் ஆராய்வாராகி,
1348. தவ்வை சைவத்து நிற்றலின் தருமசே னருந்தாம்
பொய்வ குத்ததோர் சூலைதீர்ந் திலதெனப் போயிங் கெவ்வ மாகஅங் கெய்திநஞ் சமயலங் கனமும் தெய்வ நிந்தையும் செய்தனர் எனச்சொலத் தெளிந்தார்.
தெளிவுரை : தம் தமக்கை சைவ சமயத்தில் நிற்றலால், தரும சேனரும் தாம் பொய்யாய் உண்டாக்கிக் கொண்ட ஒரு சூலை நோய் இங்குத் தீர்ந்திலது என்று இங்கு இச்சமண சமயத்துக்குக் கேடு ஏற்படுத்தி அங்குச் சென்றதால் நம் சமய நிந்தையும் தெய்வ நிந்தையும் செய்தார் என்று மன்னனிடம் சொல்வோம் என்று தெளிந்து கொண்டனர்.
1349. சொன்ன வண்ணமே செய்வது துணிந்ததுன் மதியோர்
முன்னம் நாஞ்சென்று முறைப்படு வோமென முயன்றே இன்ன தன்மையில் இருட்குழாஞ் செல்வது போல மன்ன னாகிய பல்லவன் நகரில்வந் தணைந்தார்.
தெளிவுரை : சொல்லிய வண்ணமே செய்வோம் எனத் துணிந்த தீய மதியினரான அச்சமணர்கள் நாம் முன்னர்ச் சென்று மன்னனிடம் கூறுவோம்! என முயன்று இத்தன்மையில் இருட்கூட்டம் செல்வது போல் சென்று மன்னனான பல்லவனின் நகரத்தில் வந்து சேர்ந்தனர்.
1350. உடையொ ழிந்தொரு பேச்சிடை யின்றிநின் றுண்போர்
கடைய ணைந்தவன் வாயில்கா வலருக்கு நாங்கள் அடைய வந்தமை அரசனுக் கறிவியும் என்ன இடைய றிந்துபுக் கவருந்தம் இறைவனுக் கிசைப்பார்.
தெளிவுரை : உடை இல்லாதவராயும் உண்கின்ற போது ஒன்றையும் பேசாமல் நின்று உண்பவர்களாயும் உள்ள அந்தச் சமணகுருமார், மன்னனின் வாயிலை அடைந்து, வாயில் காவலர்க்கு நாங்கள் வந்திருக்கும் செய்தியை மன்னனுக்குத் தெரிவியும் எனக்கூற, அவ்வாயில் காவலர் தக்க சமயம் அறிந்து தம் அரசர்க்குச் சொல்வாராகி,
1351. அடிகண்மார் எல்லாரும், ஆகுலமாய் மிகவழிந்து
கொடிநுடங்கு திருவாயில் புறத்தணைந்தார் எனக்கூற வடிநெடுவேல் மன்னவனும் மற்றவர்சார் பாதலினால் கடிதணைவான் அவர்க்குற்ற தென்கொல்எனக் கவன்றுரைத்தான்.
தெளிவுரை : அடிகள் எல்லாரும் ஒருங்கே துன்பப்பட்டு மிகவும் அழிவு உடையவர்களாய்க் கொடி அசையும் திருவாயிலின் புறத்தே அணைந்துள்ளனர் எனக் கூறினர். கூற, கூர்மையான வேலையுடைய அம்மன்னனும் அவர்களின் சார்புடையவன் ஆனதால், இவ்வாறு விரைந்து கூடி வருவதற்கு அவர்களுக்கு நேர்ந்தது என்ன? என்று கவலையுடன் கேட்டான்.
1352. கடைகாவல் உடையார்கள் புகுதவிடக் காவலன்பால்
நடையாடுந் தொழிலுடையார் நண்ணித்தாம் எண்ணியவா றுடையாரா கியதரும சேனர்பிணி யுற்றாராய்ச் சடையானுக் காளாய்நின் சமயம்அழித் தாரென்றார்.
தெளிவுரை : வாயில் காவலர்கள் சமண அடிகளாரை உள்ளே போகும்படி விட, உயிருடன் நடந்து செல்லும் தொழில் ஒன்றையே உடையவராய் அச்சமண அடிகளார், மன்னனிடம் சேர்ந்தனர். சேர்ந்து, நம் தலைவரான தருமசேனர் சூலை நோய் கொண்டதாய்க் கூறிச் சென்று சிவனுக்கு ஆளாகி உன் சமயத்தைத் துறந்தார் எனத் தாம் எண்ணி வந்ததைக் கூறினர்.
1353. விரையலங்கல் பல்லவனும் அதுகேட்டு வெகுண்டெழுந்து
புரையுடைய மனத்தினராய்ப் போவதற்குப் பொய்ப்பிணிகொண் டுரைசிறந்த சமயத்தை அழித்தொழியப் பெறுவதே கரையில்தவத் தீர்இதனுக் கென்செய்வ தெனக்கனன்றான்.
தெளிவுரை : மணம் கமழும் மலர் மாலையையுடைய பல்லவ மன்னனும் அவர்கள் சொன்னதைக் கேட்டுச் சினம் கொண்டு எழுந்து, குற்றமுடைய மனத்தினராய்ப் போகும் பொருட்டுப் பொய்யாய்ப் பிணி வந்தது என்று மேற்கொண்டு, புகழால் சிறந்த நம் சமண சமயத்தை அழித்து நீங்கப் பெறுவதோ? எல்லையில்லாத தவத்தையுடையவர்களே! இதற்கு என்ன செய்தல் வேண்டும்? எனச் சினந்து சொன்னான்.
1354. தலைநெறியா கியசமயந் தன்னையழித் துன்னுடைய
நிலைநின்ற தொல்வரம்பில் நெறியழித்த பொறியிலியை அலைபுரிவாய் எனப்பரவி வாயால்அஞ் சாதுரைத்தார் கொலைபுரியா நிலைகொண்டு பொய்யொழுகும் அமண்குண்டர்.
தெளிவுரை : கொலை செய்யா நிலையை மேற்கொண்டு அதிலிருந்து பொய்த்து ஒழுகும் பாவிகளான சமணர், மேலாம் நெறியான சமண சமயத்தையும் அழித்து, அதனால் உன் நிலைமையின் நின்ற பழைய ஒழுக்க நெறியையும் அழித்த அறிவற்ற அவரை வருத்துவாயாக! என்று வாயால் ஒரு சிறிதும் அஞ்சாது உரைத்தனர்.
1355. அருள்கொண்ட உணர்வின்றி நெறிகோடி அறிவென்று
மருள்கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமைநோக்கித் தெருள்கொண்டோர் இவர்சொன்ன தீயோனைச் செறுவதற்குப் பொருள்கொண்டு விடாதென்பால் கொடுவாரும் எனப்புகன்றான்.
தெளிவுரை : அருள் உணர்ச்சி இல்லாது, அறிவு என எண்ணி மயக்கத்தை மேற்கொண்ட மன்னனும் அமைச்சர்களைப் பார்த்து அறிவுடையோர்களான இவர்கள் சொன்ன தீயவனைப் பொருள் பெற்றுக் கொண்டு, விட்டு விடாத வண்ணம் தண்டிப்பதற்காக என்னிடத்துக் கொண்டு வாருங்கள் எனச் சொன்னான்.
1356. அரசனது பணிதலைநின் றமைச்சர்களும் அந்நிலையே
முரசதிருந் தானையொடு முன்சென்று முகில்சூழ்ந்து விரைசெறியுஞ் சோலைசூழ் திருவதிகை தனைமேவிப் பரசமயப் பற்றறுத்த பான்மையினார் பாற்சென்றார்.
தெளிவுரை : மன்னனின் ஏவலை மேற்கொண்டு அமைச்சரும் அங்ஙனமே முழவுகள் ஒலிக்கும் படைகளோடும் முற்பட்டுச் சென்று மேகங்கள் சூழ்ந்து மணம் செறிந்த சோலை சூழ்ந்த திருவதிகையை அடைந்து, புறச் சமயப் பற்றுகளை அறுத்த இயல்புகொண்ட திருநாவுக்கரசரிடம் சென்றனர்.
1357. சென்றணைந்த அமைச்சருடன் சேனைவீ ரருஞ்சூழ்ந்து
மின்தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை இன்றுநுமை அரசன்அழைத் தெமைவிடுத்தான் போதுமென நின்றவரை நேர்நோக்கி நிறைதவத்தோர் உரைசெய்வார்.
தெளிவுரை : சென்று சேர்ந்த அமைச்சர்களுடன் படைவீரரும் சூழ்ந்து மின் போன்று ஒளிரும் சடையையுடைய வேதியரான சிவபெருமானின் அடியவரான திருநாவுக்கரசரை, இன்று மன்னன் உம்மைத் தன்னிடம் வருமாறு கூறி எம்மை ஏவி விடுத்தான்! வாருங்கள்! எனக் கூறினர். அவ்வாறு கூறி நின்ற அவர்களைப் பார்த்து, நிறைந்த தவத்தையுடைய திருநாவுக்கரசர் சொல்லலானார்.
1358. நாமார்க்குங் குடியல்லோம் என்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத் தேமாலைச் செந்தமிழின் செழுந்திருத்தாண் டகம்பாடி ஆமாறு நீரழைக்கும் அடைவிலமென் றருள்செய்தார்.
தெளிவுரை : நாமார்க்கும் குடியல்லோம்! எனத் தொடங்கி, நான்மறையின் தலைவரும், கங்கை நதியுடன் பிறைச்சந்திரன் வாழும் சடையுடையவருமான சிவபெருமானை இனிய செந்தமிழின் மாலையான செழுமையான திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடி பொருந்துமாறு நீவிர் அழைக்கும் தன்மையில் நாம் இல்லை! என்று உரைத்தார்.
1359. ஆண்டஅர சருள்செய்யக் கேட்டவரும் அடிவணங்கி
வேண்டியவர்க் கொண்டேக விடையுகைத்தார் திருத்தொண்டர் ஈண்டுவரும் வினைகளுக்கெம் பிரானுளனென் றிசைந்திருந்தார் மூண்டசினப் போர்மன்னன் முன்னணைந்தங் கறிவித்தார்.
தெளிவுரை : ஆளுடைய அரசு இங்ஙனம் சொல்லக் கேட்டு, அந்த அமைச்சர்களும் அவருடைய அடிகளில் விழுந்து வணங்கி வேண்டிக்கொண்டு அவரை உடன் கொண்டு செல்லக் காளைக் கொடியை உயர்த்திய இறைவரின் திருத்தொண்டரான அவர், இங்கு வரும் வினைகளுக்கு எம்பெருமான் துணையாக உள்ளார் என அதற்கு இசைவுடன் இருந்தார். அமைச்சர் முதலிய அவர்களும் மூண்ட சினம் உடைய போர் வல்ல மன்னன் முன்பு அங்குப் போய் அறிவித்தனர்.
1360. பல்லவனும் அதுகேட்டுப் பாங்கிருந்த பாயுடுக்கை
வல்அமணர் தமைநோக்கி மற்றவனைச் செய்வதினிச் சொல்லுமென அறந்துறந்து தமக்குறுதி அறியாத புல்லறிவோர் அஞ்சாது ற்றறையில் இடப்புகன்றார்.
தெளிவுரை : பல்லவ மன்னனும் அதைச் செவியேற்றுப் பக்கத்தில் இருந்த பாய் உடுக்கையையுடைய வலிய சமண அடிகளாரைப் பார்த்து, இனி அவனை என்ன செய்வது எனக்கூறும் எனக் கூற, அறத்தை நீத்துத் தமக்கு உறுதியையும் அறியாத புன்மையறிவுடைய அந்தச் சமணர்கள் சற்றும் அஞ்சாது, நீற்றறையில் இடுமாறு கூறினர்.
1361. அருகணைந்தார் தமைநோக்கி அவ்வண்ணஞ் செய்கவெனப்
பெருகுசினக் கொடுங்கோலான் மொழிந்திடலும் பெருந்தகையை உருகுபெருந் தழல்வெம்மை நீற்றறையின் உள்ளிருத்தித் திருகுகருந் தாட்கொளுவிச் சேமங்கள் செய்தமைத்தார்.
தெளிவுரை : மன்னன் தன் பக்கத்தில் இருந்தவரைப் பார்த்து, அவ்வண்ணமே செய்யுங்கள்! என்று சினம் கொண்ட அம்மன்னன் சொன்ன அளவில், உருகச் செய்யும் பெருநதியின் வெம்மையுடைய நீற்றறையினுள், பெருந்தகையாரை இருக்கச் செய்து கதவை மூடித் தாளிட்டுக் காவல் செய்து அமைத்தனர்.
1362. ஆண்டஅர சதனகத்துள் அணைந்தபொழு தம்பலத்துத்
தாண்டவமுன் புரிந்தருளுந் தாள்நிழலைத் தலைக்கொண்டே ஈண்டுவருந் துயருளவோ ஈசனடி யார்க்கென்று மூண்டமனம் நேர்நோக்கி முதல்வனையே தொழுதிருந்தார்.
தெளிவுரை : திருநாவுக்கரசர் அந்த நீற்றறையுள் சேர்ந்த போது, அம்பலத்தில் கூத்தியற்றும் இறைவரின் திருவடியின் நிழலையே தம் தலை மேற்கொண்டு, சிவபெருமான் அடியார்க்கு வரும் துன்பம் உளவோ? என்று திருப்பதிகம் பாடித் துணிவு மூண்ட மனத்தால் நேர் நோக்கி முதல்வனையே தொழுது வீற்றிருந்தார்.
1363. வெய்யநீற் றறையதுதான் வீங்கிளவே னிற்பருவந்
தைவருதண் தென்றல்அணை தண்கழுநீர்த் தடம்போன்று மொய்யொளிவெண் ணிலவலர்ந்து முரன்றயாழ் ஒலியினதாய் ஐயர்திரு வடிநீழல் அருளாகிக் குளிர்ந்ததே.
தெளிவுரை : வெப்பத்தை உடைய அந்த நீற்றறை, மிக்க இளவேனிற் காலத்தில் வீசி வருகின்ற குளிர்ந்த தென்றல் அணைகின்ற குளிர்ந்த கழுநீர்கள் நிறைந்த தடம் போன்று, ஒளி மொய்த்துக் கூடிய வெண்மையான முழுமதியின் கதிர் விரிந்து ஒலிக்கின்ற யாழின் ஒலியுடன் கூடியதாய் இறைவரின் திருவடியின் நீழலினது அருள் மயமாய்க் குளிர்ந்தது.
1364. மாசில்மதி நீடுபுனல் மன்னிவளர் சென்னியனைப்
பேசஇனி யானையுல காளுடைய பிஞ்ஞகனை ஈசனைஎம் பெருமானை எவ்வுயிருந் தருவானை ஆசையில்ஆ ராவமுதை அடிவணங்கி இனிதிருந்தார்.
தெளிவுரை : குற்றமில்லாத மதியும், நீடும் கங்கையாறும் நிலைபெறப் பொருந்தி வளர்வதற்கு இடமான சென்னியை உடையவனைப் பேசுவதற்கு இனியவனை, உலகங்களையெல்லாம் ஆளாக உடைய பிஞ்ஞகனை, ஈசனை, எம்பெருமானை, எல்லா உயிர்களையும் தோற்றுவிப்பவனை, அன்பில் விளையும் ஆரா அமுதை, அடி வணங்கித் திருநாவுக்கரசர் இனிதாக இருந்தார்.
1365. ஓரெழுநாள் கழிந்ததற்பின் உணர்வில்அம ணரையழைத்துப்
பாருமினி நீற்றறையை எனவுரைத்தான் பல்லவனுங் காரிருண்ட குழாம்போலும் உருவுடைய காரமணர் தேருநிலை இல்லாதார் நீற்றறையைத் திறந்தார்கள்.
தெளிவுரை : ஓர் ஏழு நாட்கள் கழிந்தபின்பு நல்ல உணர்வு இல்லாத அந்த அமணர்களைப் பல்லவ மன்னனும் அழைத்து இனி, நீங்கள் நீற்றறையைத் திறந்து பாருங்கள்! எனப் புகன்றான். கடுமையான செறிந்து இருண்ட குழாம் போன்ற வடிவுடைய சமணர் தெளியும் அறிவு இல்லாதவராய் நீற்றறையைத் திறந்தனர்.
1366. ஆனந்த வெள்ளத்தின் இடைமூழ்கி யம்பலவர்
தேனுந்து மலர்ப்பாதத் தமுதுண்டு தெளிவெய்தி ஊனந்தான் இலராகி உவந்திருந்தார் தமைக்கண்டு ஈனந்தங் கியதிலதாம் என்னஅதி சயம்என்றார்.
தெளிவுரை : சிவானந்தப் பெருக்கினுள் முழுகி, அம்பலவாணருடைய தேன் பிலிற்றும் பூப்போன்ற அடியின் அமுதத்தை உண்டு தெளிவடைந்து எவ்வகையான ஊமமும் இல்லாதவராய் மகிழ்வுடன் வீற்றிருந்த திருநாவுக்கரசரைப் பார்த்து, கெடுதி சிறிதும் அடையவில்லை! என்ன வியப்பு என்று சமணர் உரைத்தனர்.
1367. அதிசயம்அன் றிதுமுன்னை அமண்சமயச் சாதகத்தால்
இதுசெய்து பிழைத்திருந்தான் எனவேந்தற் குரைசெய்து மதிசெய்வ தினிக்கொடிய வல்விடம்ஊட் டுவதென்று முதிரவரும் பாதகத்தோர் முடைவாயால் மொழிந்தார்கள்.
தெளிவுரை : சமணர் இஃது அதிசயம் அன்று! முன்பு சமணச் சமயத்தைச் சார்ந்திருந்த சார்பில் பெற்ற சாதகத்தால் இதைச் செய்து சாவாமல் பிழைத்திருந்தான் என்று மன்னனுக்குக் கூறி, இனி மதியால் செய்யக் கடவது கொடிய வலிய நஞ்சை இவனுக்கு ஊட்டுவதே ஆகும், என்று மேன்மேலும் முதிர்ச்சியடையவுள்ள பாதகத்தவர்கள் நாற்றம் கொண்ட தம் வாயால் உரைத்தனர்.
1368. ஆங்கதுகேட் டலுங்கொடிய அமண்சார்பாற் கெடுமன்னன்
ஓங்குபெரு மையலினால் நஞ்சூட்டும் எனவுரைப்பத் தேங்காதார் திருநாவுக் கரசரைஅத் தீயவிடப் பாங்குடைய பாலடிசில் அமுதுசெயப் பண்ணினார்.
தெளிவுரை : அங்கு அதனைக் கேட்டதும் கொடிய சமணர்களின் சார்பினால் கெடுகின்ற மன்னனும், மிகவும் பெரிய மயக்கத்தால் நஞ்சை ஊட்டுங்கள் எனக் கூறப் பகைமை பூண்ட சமணர்கள், திருநாவுக்கரசரை அங்ஙனமே தீய நஞ்சு கலந்து அமைந்த பாற்சோற்றை உண்ணுமாறு செய்தனர்.
1369. நஞ்சும்அமு தாம்எங்கள் நாதனடி யார்க்கென்று
வஞ்சமிகு நெஞ்சுடையார் வஞ்சனையாம் படியறிந்தே செஞ்சடையார் சீர்விளக்குந் திறலுடையார் தீவிடத்தால் வெஞ்சமணர் இடுவித்த பாலடிசில் மிசைந்திருந்தார்.
தெளிவுரை : சிவந்த சடையையுடைய சிவபெருமானது சீர்களை உலகத்தில் விளங்கச் செய்யும் வன்மையுடைய நாயனார், வஞ்சனை மிகுந்த மனமுடைய சமணர்களின் செயலால் வஞ்சனையாய் அமைக்கப்பட்டது என்பதை அறிந்தே எம் இறைவரின் அடியார்க்கு நஞ்சும் அமுதாகும் என்ற உறுதிப்பாடு உடையவராய்க் கொடிய சமணர் நஞ்சு இட்டுச் செய்த பாற்சோற்றை உண்டு ஊனம் இல்லாது இருந்தார்.
1370. பொடியார்க்குந் திருமேனிப் புனிதர்க்குப் புவனங்கள்
முடிவாக்குந் துயர்நீங்க முன்னைவிடம் அமுதானால் படியார்க்கும் அறிவரிய பசுபதியார் தம்முடைய அடியார்க்கு நஞ்சமுதம் ஆவதுதான் அற்புதமோ.
தெளிவுரை : திருநீறு விளங்குகின்ற திருமேனியையுடைய புனிதரான இறைவர்க்கு, உலகங்களையெல்லாம் அழிக்கவல்ல துன்பம் நீங்கும்படி முன்பு நஞ்சானது அமுதமாகுமானால், யாவர்க்கும் அறிவரிய தன்மையரான இறைவரின் அடியார்க்கு, நஞ்சு அமுதமாவதும் ஓர் அற்புதமாகுமோ?
1371. அவ்விடத்தை ஆண்டஅர சமுதுசெய்து முன்னிருப்ப
வெவ்விடமும் அமுதாயிற் றெனஅமணர் வெருக்கொண்டே இவ்விடத்தில் இவன்பிழைக்கில் எமக்கெல்லாம் இறுதியெனத் தெவ்விடத்துச் செயல்புரியுங் காவலற்குச் செப்புவார்.
தெளிவுரை : ஆளுடைய அரசு அந்த நஞ்சை உண்டும் அவர் முன் போலவே துன்பம் இன்றியிருக்க, கொடிய நஞ்சும் அமுதம் ஆயிற்றே! என்று சமணர் அச்சம் கொண்டவராகி, இங்கு இவன் சாதல் இன்றி உயிர் பிழைத்திருப்பானே ஆனால் எமக்கெல்லாம் இறுதி நேர்ந்து விடும் எனத் துணிந்து, பகைவர்களிடத்துச் செய்தொழிலை இங்குச் செய்யும் மன்னனுக்குச் சொல்கின்றார்.
1372. நஞ்சுகலந் தூட்டிடவும் நஞ்சமயத் தினில்விடந்தீர்
தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகைதடுத்தான் எஞ்சும்வகை அவற்கிலதேல் எம்முயிரும் நின்முறையும் துஞ்சுவது திடமென்றார் சூழ்வினையின் துறைநின்றார்.
தெளிவுரை : நஞ்சைக் கலந்த பாற்சோற்றினை உண்ணச் செய்தும் நம் சமயத்தில் கண்ட நஞ்சு நீக்கும் மந்திரத்தால், அதன் பயன் விளையாதபடி தடுத்து விட்டான். அவனைத் தொலைக்கும் வகை இல்லாது போனால் எங்கள் உயிர்களும் உனது ஆட்சியும் அழியும் எனத் தீமையை அறியும் வஞ்சகத் தொழிலின் வழியில் நின்று அச்சமணர்கள் உரைத்தனர்.
1373. மற்றவர்தம் மொழிகேட்டு மதிகெட்ட மன்னவனும்
செற்றவனை இனிக்கடியும் திறமெவ்வா றெனச்செப்ப உற்றவரு மந்திரசா தகநாங்கள் ஒழித்திடநின் கொற்றவயக் களிறெதிரே விடுவதெனக் கூறினார்.
தெளிவுரை : அறிவுகெட்டவனான மன்னனும் அவர்களின் சொல்லைக் கேட்டு நம் நெறியை அழித்த அவனை இனித்தண்டிக்கும் வகை எவ்வாறு? என வினவினான். அச்சமணர்களும் மந்திர சாதகங்களை நாங்கள் நீக்க, உன் வெற்றியுடைய வலிய யானையை அவன் முன்னே விட்டு இடறச் செய்வதே தகுந்த வழியாகும்! என்று உரைத்தனர்.
1374. மாபாவிக் கடைஅமணர் வாகீசத் திருவடியாங்
காபாலி அடியவர்பாற் கடக்களிற்றை விடுகென்னப் பூபாலர் செயன்மேற்கொள் புலைத்தொழிலோன் அவர்தம்மேற் கோபாதி சயமான கொலைக்களிற்றை விடச்சொன்னான்.
தெளிவுரை : பெரும் பாவிகளுள்ளும் கீழானவர்களான அச்சமணர்கள் வாகீசத் திருவடிகளான காபாலி அடியவர் மீது மதயானையை ஏவிடுக! என்று உரைக்க, உலகக் காவல் தொழிலை மேற்கொண்டும் புலைத் தொழில் செய்வோனான அந்த மன்னவன் சினம் மிக்க கொலை யானையை அவர்மீது விடுமாறு ஏவினான்.
1375. கூடத்தைக் குத்தியொரு குன்றமெனப் புறப்பட்டு
மாடத்தை மறித்திட்டு மண்டபங்கள் எடுத்தெற்றித் தாடத்திற் பரிக்காரர் தலையிடறிக் கடக்களிற்றின் வேடத்தால் வருங்கூற்றின் மிக்கதொரு விறல்வேழம்.
தெளிவுரை : ஒப்பில்லாத வன்மையுடைய அந்த யானையானது யானைப் பந்திகளைப் பிடுங்கி, மலைபோல் புறப்பட்டு, ஓடி மாடங்களை இடித்து, மண்டபங்களை அழித்து, குத்துக் கோற்காரரின் தலைகளைக் காலால் இடறி, மதயானையின் வடிவத்துடன் வருகின்ற ஒரு கூற்றை விட மிக்கிருந்தது.
1376. பாசத்தொடை நிகளத்தொடர் பறியத்தறி முறியா
மீசுற்றிய பறவைக்குலம் வெருவத்துணி விலகா ஊசற்கரம் எதிர்சுற்றிட உரறிப்பரி உழறா வாசக்கட மழைமுற்பட மதவெற்பெதிர் வருமால்.
தெளிவுரை : கயிற்றுப் புரியும், சங்கிலித் தொடரும் அறுமாறு தறியை முறித்து, மேலே வட்டம் இட்ட பறவைக் கூட்டங்களும் அஞ்சும்படி எதிர்க்கும் தடைகளுக்குச் சற்றும் விலகாது ஊசல்போல் அலையும் துதிக்கையானது முன்னே சுற்றக் கர்ச்சனை செய்து ஓடிக் கலக்கி, மணம் கமழும் மதநீரான மழை முன்னே பெருக, மதமுடைய மலை போன்ற யானை எதிரில் வந்தது.
1377. இடியுற்றெழும் ஒலியில்திசை இபமுட்கிட அடியில்
படிபுக்குற நெளியப்படர் பவனக்கதி விசையில் கடிதுற்றடு செயலிற்கிளர் கடலிற்படு கடையின் முடிவிற்கனல் எனமுற்சினம் முடுகிக்கடு கியதே.
தெளிவுரை : இடி போன்று எழுகின்ற ஓசையால் திக்கு யானைகள் அஞ்சக் காலில் மிதித்த சுவடு நிலத்தில் பொருந்தப் பூமியானது நெளியவும், ஓடும் காற்றைப் போன்ற வேகத்தில் மிக விரைவாய்ப் போய், அழிக்கும் செயலில் பொங்கும் கடலுள் யுகவடிவில் தோன்றும் வடவைத் தீயைப் போல் மிக்க சினம் கொண்டு வேகத்துடன் அந்த யானை வந்தது.
1378. மாடுற்றணை இவுளிக்குலம் மறியச்செறி வயிரக்
கோடுற்றிரு பிளவிட்டறு குறைகைக்கொடு முறியச் சாடுற்றிடு மதில்தெற்றிகள் சரியப்புடை அணிசெற் டாடுற்றகல் வெளியுற்றதவ் வடர்கைக்குல வரையே.
தெளிவுரை : கொலை செய்யும் கையையுடைய மலை போன்ற அந்த யானை, பக்கத்தில் வருகின்ற குதிரைக் கூட்டங்கள் அழியவும், திணிந்த வயிரம் வாய்ந்த கொம்பால் இரண்டு பிளவாகக் கூறுபடுத்தி, அவ்வாறு இற்ற துண்டை கையில் எடுத்து முறியும்படியாக அழிவு செய்தும், மதிலும் திண்ணைகளும் சரியுமாறு அழகுடைய அங்கங்களை அழித்தும், இத்தகைய அழிவுச் செயலைச் செய்து பரந்த வெளியிடத்தில் சேர்ந்தது.
1379. பாவக்கொடு வினைமுற்றிய படிறுற்றடு கொடியோர்
நாவுக்கர செதிர்முற்கொடு நணுகிக்கரு வரைபோல் ஏவிச்செறு பொருகைக்கரி யினையுய்த்திட வெருளார் சேவிற்றிகழ் பவர்பொற்கழல் தெளிவுற்றனர் பெரியோர்.
தெளிவுரை : பாவம் பொருந்திய கொடுஞ்செயல் முதிரும் பொருட்டு வஞ்சனையை மேற்கொண்டு கொலை செய்ய நினைத்த கொடிய சமணர்கள், திருநாவுக்கரசர் எதிரே முற்பட அணுகி வந்து பகைவரைப் போரிட்டுக் கொல்கின்ற துதிக்கையையுடைய யானையைக் கரிய மலை ஒன்றை ஏவுவது போல ஏவிச் செலுத்தவும் திருநாவுக்கரசர் சற்றும் அஞ்சாமல் காளை ஊர்தியின் மேல் விளங்கும் சிவபெருமானின் பொன் போன்ற திருவடிகளையே தெளிந்த எண்ணத்துடன் நினைத்தபடியிருந்தார்.
1380. அண்ணல் அருந்தவ வேந்தர் ஆனைதம் மேல்வரக் கண்டு
விண்ணவர் தம்பெரு மானை விடையுகந் தேறும் பிரானைச் சுண்ணவெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப்பதி கத்தை மண்ணுல குய்ய வெடுத்து மகிழ்வுட னேபாடு கின்றார்.
தெளிவுரை : பெருமையுடைய அரிய தவ வேந்தர் அந்த யானை தம்மீது வருவதைப் பார்த்துத் தேவர்களின் தலைவரும் காளையூர்தியை ஏறி ஊர்பவருமான சிவபெருமானைத் துதித்து சுண்ணவெண் சந்தனச் சாந்து எனத் தொடங்கும் பதிகத்தை இந்த வுலகத்தார் யாவரும் உய்யும் படி எடுத்து மிக்க மகிழ்வுடன் பாடுகின்றார் ஆனார்.
1381. வஞ்சகர் விட்ட சினப்போர் மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள்முடிக் கூத்தர் தேவர்க்குந் தேவர் பிரானார் வெஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர் தம்அடி யோம்நாம் அஞ்சுவ தில்லைஎன் றென்றே அருந்தமிழ் பாடி அறைந்தார்.
தெளிவுரை : வஞ்சம் உடைய சமணர்கள் ஏவி விடுத்த மதமும் சினமும் உடைய யானையை நோக்கிச் சிவந்த சடை பொருந்திய நீண்ட முடியையுடைய கூத்தரான தேவர்க்கெல்லாம் தேவரான வெஞ்சுடரையும் மூவிலையும் உடைய சூலம் ஏந்திய திருவீரட்டானத் தலைவரின் அடியவர் யாம்! அதனால் அஞ்ச வருவது ஏதும் இல்லை! என்று அரிய தமிழ்ப் பதிகத்தைப் பாடினார்.
1382. தண்டமிழ் மாலைகள் பாடித் தம்பெரு மான்சர ணாகக்
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத் தொண்டரை முன்வல மாகச் சூழ்ந்தெதிர் தாழ்ந்து நிலத்தில் எண்டிசை யோர்களுங் காண இறைஞ்சி எழுந்தது வேழம்.
தெளிவுரை : குளிர்ந்த தமிழ் மாலைகளைப் பாடித் தம் இறைவரையே அடைக்கலமாகக் கொண்ட கருத்துடன் இருந்து விளங்கிய அன்பு பொருந்திய கொள்கையுடைய திருத்தொண்டரை அவர் முன்பு வலமாகச் சுற்றி வந்து எதிரில் தாழ்ந்து எல்லாத் திக்குகளில் உள்ளவரும் காணும்படி அந்த யானை நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து நின்றது.
1383. ஆண்ட அரசை வணங்கி அஞ்சிஅவ் வேழம் பெயரத்
தூண்டிய மேன்மறப் பாகர் தொடக்கி அடர்த்துத் திரித்து மீண்டும் அதனை அவர்மேல் மிறைசெய்து காட்டிட வீசி ஈண்டவர் தங்களை யேகொன் றமணர்மேல் ஓடிற் றெதிர்ந்தே.
தெளிவுரை : திருநாவுக்கரசரை இவ்வாறு வணங்கி அந்த யானை அங்கு நின்று பெயர்ந்து போகவே, அதனை அவர் மீது ஏவுதலை மேற்கொண்டிருந்த கொடிய பாகர்கள் தொடக்கியும் அடர்த்தும் திரித்தும் மீண்டும் அதனை அவர் மீது போகும்படி செய்து காட்டிட, அவ்வாறு செய்யாது நெருங்கிய அவர்களையே கொன்று, சமணர் மேல் அழிக்க வந்தது.
1384. ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து
நாடிப் பலரையுங் கொன்று நகரங் கலங்கி மறுக நீடிய வேலை கலக்கும் நெடுமந் தரகிரி போல ஆடியல் யானைஅம் மன்னற் காகுலம் ஆக்கிய தன்றே.
தெளிவுரை : ஓடிச் சமணர்களை அழித்தும் மிதித்தும் பிளந்தும் தேடிச் சென்று பலரையும் கொன்றும், அந்த நகர் கலக்கம் அடைந்து வருந்த, அழிக்கும் தன்மை பூண்ட அந்த யானை அந்த அரசனுக்குத் துன்பத்தை அப்போதே உண்டாக்கி விட்டது.
1385. யானையின் கையிற் பிழைத்த வினைஅமண் கையர்கள் எல்லாம்
மானம் அழிந்து மயங்கி வருந்திய சிந்தைய ராகித் தானை நிலமன்னன் தாளில் தனித்தனி வீழ்ந்து புலம்ப மேன்மை நெறிவிட்ட வேந்தன் வெகுண்டினிச் செய்வதென் என்றான்.
தெளிவுரை : யானையின் கையினின்றும் தப்பிய தீவினையாளரான சமணக் கீழ் மக்கள் எல்லாரும் மானம் அழிந்து மயங்கி வருத்தம் அடைந்த மனம் உடையவராய்ப் படையின் வன்மையுடைய உலகம் காக்கும் மன்னவனின் காலில் தனித்தனியாக விழுந்து புலம்பினர். அவர்களின் சொல்லைக் கேட்டு மேலான நெறியைக் கைவிட்ட மன்னன் சினந்து இனிச் செய்யக் கூடியது யாது? என வினவினான்.
1386. நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால்
எங்கள் எதிரே றழிய யானையால் இவ்வண்ணம் நின்சீர் பங்கப் படுத்தவன் போகப் பரிபவந் தீரும் உனக்குப் பொங்கழல் போக அதன்பின் புகையகன் றாலென என்றார்.
தெளிவுரை : நம் சமயத்தினின்று தெரிந்து கொண்ட முட்டி நிலையினால் ஏவுதல் கெடுமாறு, இங்ஙனம் யானையால் உன் புகழை அழித்தவன் இறக்க, பொங்கும் தீ போகவே அதன்பின் புகை நீங்குவதைப் போல, உனக்கு வந்த அவமானம் நீங்கும் என்றனர்.
1387. அல்லிருள் அன்னவர் கூற அரும்பெரும் பாவத் தவன்பின்
தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைத்தவன் தன்னைச் சொல்லும் இனிச்செய்வ தென்னச் சூழ்ச்சி முடிக்குந் தொழிலோர் கல்லுடன் பாசம் பிணித்துக் கடலிடைப் பாய்ச்சுவ தென்றார்.
தெளிவுரை : இரவின் இருளைப் போன்ற சமணர்கள் இங்ஙனம் சொல்ல, அரும் பெரும் பாவச் செயலையுடைய மன்னன், அதன்பின் பழைமையான நம் சமயத்தை அழிவு செய்து துன்பம் விளைத்த தருமசேனனை இனிச் செய்வதென்ன என்று கூறுங்கள் என வினவினான். தாங்கள் எண்ணிய வஞ்சனையையே முழக்கும் செயலையுடைய அந்த அமணர்கள் கல்லுடன் சேர்த்துக் கயிற்றால் கட்டிக் கடலில் வீசி எறிதல் இனிமேல் செய்யத்தக்கது எனக் கூறினர்.
1388. ஆங்கது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித்
தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக்கொடு போகிப் பாங்கொரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்தோர் படகில் வீங்கொலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான்.
தெளிவுரை : அவர்கள் சொன்ன அதனைக் கேட்ட மன்னன், அத்தகைய தொழில் செய்யும் மக்களைப் பார்த்துத் தீமை செய்த தருமசேனனைத் தப்பவிடாது கொண்டு போய்ப் பக்கத்தில் ஒரு கல்லுடன் சேர்த்துக் கயிற்றால் கட்டி, ஒரு படகில் ஏற்றிக்கொண்டு போய் மிகவும் ஒலிக்கின்ற கடலில் வீசி எறிந்து வீழ்த்தி விடுங்கள்! என அனுப்பினான்.
1389. அவ்வினை செய்திடப் போகும் அவருடன் போயரு கந்த
வெவ்வினை யாளருஞ் சென்று மேவிட நாவுக் கரசர் செவ்விய தம்திரு உள்ளஞ் சிறப்ப அவருடன் சென்றார் பவ்வத்தின் மன்னவன் சொன்ன படிமுடித் தார்அப் பதகர்.
தெளிவுரை : அச்செயலைச் செய்யப் போகும் அவர்களோடு சமணர்களான கொடுவினையாளர்களும் போய்ச் சேரத் திருநாவுக்கரசர் செம்மையான தம் திருவுள்ளம் சிறப்புடைய அவர்களுடன் போனார். மன்னன் சொன்னபடியே கடலில் அந்தக் கடையோர் தம் செயலைச் செய்து முடித்தனர்.
1390. அப்பரி சவ்வினை முற்றி அவர்அகன் றேகிய பின்னர்
ஒப்பரும் ஆழ்கடல் புக்க உறைப்புடை மெய்த்தொண்டர் தாமும் எப்பரி சாயினு மாக ஏத்துவன் எந்தையை யென்று செப்பிய வண்டமிழ் தன்னால் சிவன்அஞ் செழுத்துந் துதிப்பார்.
தெளிவுரை : அவர்கள் அத்தகைய செயலைச் செய்து முடித்து நீங்கினர். பின்பு, ஒப்பற்ற ஆழமுடைய கடலுள் வீழ்ந்த உண்மைத் தொண்டின் உறைப்பு உடையவரான திருநாவுக்கரசரும் எத்தகைய நிலை வந்தாலும் நான் எந்தை பெருமானான சிவனை வணங்குவேன் எனத் துணிவு பூண்டு, சொல்லிய வளப்பமுடைய தமிழ்ப் பாக்களினால் சிவபெருமானின் ஐந்தெழுத்தைத் துதிப்பவராய்,
1391. சொற்றுணை வேதியன் என்னுந் தூமொழி
நற்றமிழ் மாலையா நமச்சி வாயவென் றற்றமுன் காக்கும்அஞ் செழுத்தை அன்பொடு பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்.
தெளிவுரை : சொற்றுணை வேதியன் எனத் தொடங்கும் தூய திருமொழிகளை முதலில் வைத்துத் தொடங்கிய நல்ல தமிழ் மாலையாக நமச்சிவாய என, துன்ப காலத்தில் உடனிருந்து காக்கும் திருவைந்தெழுத்தை நிரம்பிய அன்புடன் விடாது பற்றிக்கொண்ட உணர்ச்சியில் திருப்பதிகத்தைப் பாடினார்.
1392. பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால்
அருமல ரோன்முதல் அமரர் வாழ்த்துதற் கரியஅஞ் செழுத்தையும் அரசு போற்றிடக் கருநெடுங் கடலினுட் கல்மி தந்ததே.
தெளிவுரை : பெருகிய அன்பின் திறத்தவராகிப் பிடித்த தன்மையினால், அரிய நான்முகன் முதலான தேவர்களாலும் போற்றுவதற்கு அரிய திருவைந்தெழுத்தையும் திருநாவுக்கரசர் இவ்வாறு துதி செய்யவே, கரிய கடலுள் கல்லானது மிதக்கலாயிற்று.
1393. அப்பெருங் கல்லும்அங் கரசு மேல்கொளத்
தெப்பமாய் மிதத்தலில் செறித்த பாசமும் தப்பிய ததன்மிசை இருந்த தாவில்சீர் மெய்ப்பெருந் தொண்டனார் விளங்கித் தோன்றினார்.
தெளிவுரை : அந்தப் பெரிய கல்லும் அங்குத் திருநாவுக்கரசர் அதன் மீது வீற்றிருந்து கொள்ளும்படி தெப்பமாக மிதந்ததால், அவரது திருமேனியை உடன் வலித்துப் பிணித்திருந்த கயிறும் அறுபட்டது. அந்தக் கல்லின் மேல் எழுந்தருளியிருந்த கெடுதல் இல்லாத சிறப்புடைய மெய்ப் பெருந்தொண்டரான அரசு விளங்கித் தோன்றினார்.
1394. இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின்
வருபவக் கடலில்வீழ் மாக்கள் ஏறிட அருளுமெய் அஞ்செழுத் தரசை இக்கடல் ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ.
தெளிவுரை : நல்வினை தீவினை என்ற கயிறும் ஆணவம் என்ற கல்லுடன் இறுகப் பிணித்தலால் கூட்டப்படும் பிறவியான கடலுள் விழும் மக்கள் ஆழ்ந்து விடாது மேலே ஏறுமாறு, துணையாக நிற்கும் திருவைந்தெழுத்து, திருநாவுக்கரசரை இந்தச் சிறு கடலுள் ஆழாது ஒரு சிறிய கல்மீது ஏற்றுவதும் ஒரு வியப்பாகச் சொல்லப்படுமோ?
1395. அருள்நயந் தஞ்செழுத் தேத்தப் பெற்றஅக்
கருணைநா வரசினைத் திரைக்க ரங்களால் தெருள்நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட வருணனுஞ் செய்தனன் முன்பு மாதவம்.
தெளிவுரை : திருவருள் நயத்தலால் திருவைந்தெழுத்தினால் தாங்கப்பட்ட அந்தக் கருணையே உருவான நாவுக்கரசரைத் தன் அலையான கையால் ஏந்தி, அவரது பெருமையை அறிந்த முறையாலே, தன் தலைமீது தாங்கிக் கொள்ள, முன்காலத்தில் வருணனும் பெருந்தவத்தைச் செய்திருந்தான்!
1396. வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட ஏந்தியே கொண்டெழுந் தருளு வித்தனன் பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்.
தெளிவுரை : சீர்பெற்ற வருணனே, நாவுக்கரசரைச் சேர்ந்து அடைந்த கருங்கல்லே சிவிகையாய் ஆகிட, ஏந்தியபடியே கொண்டுவந்து, மலர்கள் நிறைந்த திருப்பாதிரியைத் தலவிருட்சமாகக் கொண்ட புலியூர் என்ற தலத்தின் பக்கத்தில் வந்து கரையேறச் செய்தான்.
1397. அத்திருப் பதியினில் அணைந்த அன்பரை
மெய்த்தவக் குழாமெலாம் மேவி ஆர்த்தெழ எத்திசை யினும்அர வென்னும் ஓசைபோல் தத்துநீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே.
தெளிவுரை : அந்தத் தலத்தில் அங்ஙனம் வந்து சேர்ந்த அன்பரான திருநாவுக்கரசரை, மெய்த்தவ கூட்டமான அடியார் கூட்டங்கள் எல்லாம் கூடி, மகிழ்ச்சியால் ஆரவாரித்து எழுதலால், எல்லாத் திசைகளிலும் அரகர என்று ஒலிக்கும் பேரொலியைப் போல் அலைநீரையுடைய கடலும் ஒலித்தது.
1398. தொழுந்தகை நாவினுக் கரசுந் தொண்டர்முன்
செழுந்திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள்வெண் கொழுந்தணி சடையரைக் கும்பிட் டன்புற விழுந்தெழுந் தருள்நெறி விளங்கப் பாடுவார்.
தெளிவுரை : யாவராலும் தொழத்தக்க திருநாவுக்கரசரும், அடியாரின் முன்னால், செழுமையான பாதிரிப்புலியூரில் வீற்றிருக்கும் வெண்மையான பிறைச்சந்திரனைச் சூடிய சடையையுடைய சிவபெருமானை வணங்கி, அன்பு பொருந்துமாறு கீழே விழுந்து வணங்கிப் பின் எழுந்து நின்று திருவருள் நெறி <உலகில் விளங்குமாறு செய்தார்.
1399. ஈன்றாளு மாய்எனக் கெந்தையு மாகி யெனவெடுத்துத்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்அடி யோங்கட்கென்று வான்தாழ் புனல்கங்கை வாழ்சடை யானைமற் றெவ்வுயிர்க்குஞ் சான்றாம் ஒருவனைத் தண்டமிழ் மாலைகள் சாத்தினரே.
தெளிவுரை : ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாகி எனத் தொடங்கித் தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடியோர்களுக்கு என்று முடியும் அக்கருத்துக் கொண்ட பாட்டு முதலாக, வானினின்று உலகில் தாழும் நீரையுடைய கங்கை வாழ்கின்ற சடையுடைய இறைவரை எல்லா உயிர்களுக்கும் சான்றாய் இருக்கும் ஒருவரைக் குளிர்ந்த தமிழால் ஆன மாலைகளைச் சாத்தினார்.
1400. மற்றும் இனையன வண்டமிழ் மாலைகள் பாடிவைகி
வெற்றி மழவிடை வீரட்டர் பாதம்மிக நினைவில் உற்றதொர் காதலின் அங்குநின் றேகிஒன் னார்புரங்கள் செற்றவர் வாழுந் திருவதி கைப்பதி சென்றடைவார்.
தெளிவுரை : மேலும் இவை வளமையான தமிழ்ப் பதிகங்களைப் பாடி அந்தப் பதியில் தங்கிப் பின், வெற்றியுடைய இளமையுடைய காளையையுடைய திருவதிகை வீரட்டானத்தில் வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகள் மீது மிகவும் தன் நினைவில் பொருந்தியதோர் காதல் எழுந்ததால் அங்கு நின்றும் சென்று பகைவரின் திரிபுரங்களையும் எரித்த வீரட்டானத்து இறைவர் வாழும் திருவதிகைத் தலத்தை போயடைபவராய்.
1401. தேவர் பிரான்திரு மாணி குழியுந் தினைநகரும்
மேவினர் சென்று விரும்பிய சொன்மலர் கொண்டிறைஞ்சிப் பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள்மொழியின் காவலர் செல்வத் திருக்கெடி லத்தைக் கடந்தணைந்தார்.
தெளிவுரை : பொருள் மொழியின் வேந்தர், தேவரின் தேவரான இறைவரின் திருமாணி குழி என்ற தலத்தையும், திருத்தினை நகர் என்ற தலத்தையும் பொருந்தச் சென்று விரும்பிய சொன் மாலைகளான தேவாரங்களால் போற்றித் துதித்துச் சென்று, வழியில் மலர்கள் மலர்கின்ற சேலைகளின் மணமானது தம் திருவடியில் பொருந்தும்படி நடந்து சென்று, திருக்கெடிலத்தைக் கடந்து வந்து சேர்ந்தார்.
1402. வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீய மிறைகளெல்லாம்
எஞ்சவென் றேறிய இன்றமிழ் ஈசர் எழுந்தருள மஞ்சிவர் மாடத் திருவதி கைப்பதி வாணர்எல்லாந் தஞ்செயல் பொங்கத் தழங்கொலி மங்கலஞ் சாற்றலுற்றார்.
தெளிவுரை : கொடிய சமணக் கீழானவர்கள் செய்வித்த தீயகொடிய செயல்கள் எல்லாம் அழிய, வெற்றி பெற்று மேல் ஏறிவந்த இனிய தமிழரசர் இங்ஙனம் எழுந்தருள, மேகம் தவழும்படி உயர்ந்த மாடங்களையுடைய திருவதிகை நகரில் வாழ்பவர் எல்லாரும் தாங்கள் எதிர்கொண்டு உபசரிக்கும் செயல்கள் சிறக்க, ஒலிக்கும் முரசு முதலான வாத்தியங்களை இசைத்து, இந்தச் செய்தியை ஊரில் எல்லாம் எடுத்துக் கூறினர்.
1403. மணிநெடுந் தோரணம் வண்குலைப் பூகம் மடற்கதலி
இணையுற நாட்டி எழுநிலைக் கோபுரந் தெற்றியெங்குந் தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச்செஞ் சாந்துநீவி அணிநகர் முன்னை அணிமேல் அணிசெய் தலங்கரித்தார்.
தெளிவுரை : அழகான நீண்ட தோரணங்களையும், வளமான பாக்குக் குலைகளையும், மடலையுடைய வாழைகளையும் பொருந்தச் சேர்த்து நாட்டியும், ஏழுநிலைக் கோபுரம் தெற்றி ஆகிய எல்லா இடங்களிலும் கெடாமல் பெருகும் ஒளியுடைய மாலைகளைத் தொங்க விட்டும், சிவந்த சாந்து பூசியும் அழகிய அந்நகரத்தை முன்னைய அழகை விட மேலும் அழகுபடுத்தினர்.
1404. மன்னிய அன்பின் வளநகர் மாந்தர் வயங்கிழையார்
இன்னிய நாதமும் ஏழிசை ஓசையும் எங்கும்விம்மப் பொன்னியல் சுண்ணமும் பூவும் பொரிகளுந் தூவியெங்குந் தொன்னக ரின்புறஞ் சூழ்ந்தெதிர் கொண்டனர் தொண்டரையே.
தெளிவுரை : நிலைபெற்ற அன்பையுடைய அந்த வளமான நகரத்து மக்களும், அணிகளை அணிந்த பெண்களும், இனிய ஒலியை உண்டாக்கும் வாத்தியங்களின் ஓசையும், ஏழிசைப் பாடலின் ஒலியும், எங்கும் பெருகச் செய்து, பொன்வண்ணமான பொடிகளையும் மலர்களையும் பொரிகளையும் கலந்து எங்கும் தூவிப் பழமையான அந்நகரின் வெளியே வந்து சூழ்ந்து, திருத்தொண்டரான திருநாவுக்கரசு நாயனாரை எதிர்கொண்டு வரவேற்றனர்.
1405. தூயவெண் ணீறு துதைந்தபொன் மேனியுந் தாழ்வடமும்
நாயகன் சேவடி தைவருஞ் சிந்தையும் நைந்துருகிப் பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்ணும் பதிகச் செஞ்சொல் மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே.
தெளிவுரை : தூய்மையான வெண்மையான நீறு நிறைய அணியப் பெற்ற பொன் போன்ற மேனியையும், உருத்திராக்க மாலை அணிந்த கோலத்தையும், ஆன்ம நாயகரான சிவபெருமானின் சேவடிகளைச் சிந்திக்கும் மனத்தையும், உள்ளம் நைந்து உருகுவது போன்ற அன்பு நீரை இடைவிடாது பொழிகின்ற கண்களையும், தேவாரத் திருப்பதிகமான செவ்விய சொற்கள் உடைய சிவந்த வாயையும் உடைய திருநாவுக்கரசு நாயனார் திருவீதியுள் புகுந்தார்.
1406. கண்டார்கள் கைதலை மேற்குவித் திந்தக் கருணைகண்டால்
மிண்டாய செய்கை அமண்கையர் தீங்கு விளைக்கச்செற்றம் உண்டா யினவண்ணம் எவ்வண்ணம் என்றுரைப் பார்கள்பின்னுந் தொண்டாண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே.
தெளிவுரை : பார்த்தவர்கள் கைகளைத் தலைமீது குவித்துக் கொண்டு கருணையே உருக்கொண்டாற்போல் விளங்கும் பெருமானைக் கண்டபிறகும், மிண்டர்களான சமணக்கீழ் மக்கள் இவர்க்குத் தீங்கு விளைக்கும்படி சினம் கொண்டது தான் எவ்வாறு? என்று உரைப்பர். மேலும் தொண்டரை ஆட்கொண்டு ஏன்று கொண்ட பெருமானை வணங்கித் துதித்தனர்.
1407. இவ்வண்ணம் போல எனைப்பல மாக்கள் இயம்பியேத்த
மெய்வண்ண நீற்றொளி மேவும் குழாங்கள் விரவிச்செல்ல அவ்வண்ணம் நண்ணிய அன்பரும் வந்தெய்தி அம்பவளச் செவ்வண்ணர் கோயில் திருவீரட் டானத்தைச் சேர்ந்தனரே.
தெளிவுரை : இவ்வாறு அளவற்ற மக்கள் சொல்லித் துதிக்க உண்மையான அழகிய திருநீற்றின் ஒளி வடிவில் பொலிந்துள்ள அடியார் கூட்டங்கள் உடன் பொருந்திச் செல்லவும் அங்ஙனம் அடைந்த அன்பரான திருநாவுக்கரசர் நாயனாரும் வந்து சேர்ந்து அழகான பவளம் போன்ற சிவந்த வண்ணரான சிவபெருமான் எழுந்தருளிய கோயிலான திருவீரட்டானத்தை அடைந்தார்.
1408. உம்பர்தங் கோனை உடைய பிரானைஉள் புக்கிறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு காதலி னால்திளைத்தே எம்பெரு மான்தனை ஏழையேன் நான்பண் டிகழ்ந்ததென்று தம்பரி வால்திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றிவாழ்ந்தார்.
தெளிவுரை : தேவர்களின் தலைவரான இறைவரை தம்மை ஆண்ட இறைவரைக் கோயிலுக்குள் புகுந்து வணங்கி, நம்புதற்குரிய அன்பின் விருப்பம் மிக்க காதலால் எழுகின்ற சிவானந்தத்தினுள் இடையறாது மூழ்கி நின்று, எம்பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தவாறே என்ற கருத்துடன் தம் பரிவினால் திருத்தாண்டகத் தமிழ்த் திருப்பதிகத்தைப் பாடி வாழ்வடைந்தனர்.
1409. அரிஅயனுக் கரியானை அடியவருக் கெளியானை
விரிபுனல்சூழ் திருவதிகை வீரட்டா னத்தமுதைத் தெரிவரிய பெருந்தன்மைத் திருநாவுக் கரசுமனம் பரிவுறுசெந் தமிழ்ப்பாட்டுப் பலபாடிப் பணிசெயுநாள்.
தெளிவுரை : அறிவதற்கரிய பெருந்தகையினரான திருநாவுக்கரசு நாயனார், திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரியவர் எனினும் அடியவர்க்கு எளியவர்; பரந்த புனலால் சூழப்பட்ட திருவீரட்டானத்துள் எழுந்தருளியிருக்கும் அமுதமானவரை, உள்ளத்துள் மிக்க அன்பு பொருந்தும் செந்தமிழ்ப் பாட்டுக்கள் பலவற்றையும் பாடித் திருப்பணி செய்தார். அந்நாட்களில்,
1410. புல்லறிவிற் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்தொழுகும்
பல்லவனுந் தன்னுடைய பழவினைப்பா சம்பறிய அல்லல்ஒழிந் தங்கெய்தி ஆண்டஅர சினைப்பணிந்து வல்அமணர் தமைநீத்து மழவிடையோன் தாளடைந்தான்.
தெளிவுரை : புல்லிய அறிவையுடைய சமணர்களுக்காகப் பொல்லாங்குகளையே இடைவிடாது செய்து ஒழுகும் பல்லவ மன்னனும், தன் பழவினைப் பாசம் நீங்கவே, அல்லல் நீங்கி திருவதிகை என்ற தலத்தை அடைந்து ஆண்ட அரசை வணங்கி வலிய சமணர்களை விட்டு, இளங்காளையையுடைய சிவபெருமானின் திருவடிகளைச் சேர்ந்தான்.
1411. வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்கட் கண்ணுதற்குப் பாடலிபுத் திரத்தில்அமண் பள்ளியொடு பாழிகளுங் கூடஇடித் துக்கொணர்ந்து குணபரவீச் சரம்எடுத்தான்.
தெளிவுரை : வீடு பேற்று நெறியை அறியாத சமணர்களின் மொழிகள் பொய் என்று கண்டு உண்மையுணர்ந்த காடவ மன்னனும், பாடலி புத்திரத்தில் இருந்த சமணர் பள்ளிகளையும் பாழிகளையும் ஒருங்கே இடித்துக் கொண்டு வந்து, திருவதிகை நகரில் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானுக்குக் குணபர ஈச்சரம் என்ற கோயிலை எடுப்பித்தான்.
1412. இந்நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன்றமிழ்க்கு
மன்னான வாகீசத் திருமுனியும் மதிச்சடைமேல் பன்னாகம் அணிந்தவர்தம் பதிபலவுஞ் சென்றிறைஞ்சிச் சொன்னாமத் தமிழ்புனைந்து தொண்டுசெய்வான் தொடர்ந்தெழுவார்.
தெளிவுரை : இத்தகைய நாட்களில், திருப்பணிகள் செய்கின்ற, இனிய தமிழுக்கு அரசரான வாகீச முனிவரும், பிறைச்சந்திரனைச் சூடிய சடையின் மீது பாம்பை அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் தலங்கள் பலவற்றையும் போய் வணங்கி, அவரது நாமம் சொல்லித் துதிக்கும் திருப்பதிகங்களைப் பாடித் தொண்டு செய்யும் பொருட்டுத் தொடர்ந்து எழுவார் ஆனார்.
1413. திருவதிகைப் பதிமருங்கு திருவெண்ணெய் நல்லூரும்
அருளுதிரு ஆமாத்தூர் திருக்கோவ லூர்முதலா மருவுதிருப் பதிபிறவும் வணங்கிவளத் தமிழ்பாடிப் பெருகுவிருப் புடன்விடையார் மகிழ்பெண்ணா கடம்அணைந்தார்.
தெளிவுரை : திருவதிகைப் பதியின் பக்கத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருள் தருகின்ற திருவாமாத்தூர், திருக்கோவலூர் முதலாகப் பொருந்திய பதிகள் பலவற்றையும் வணங்கி, வளமையுடைய தமிழ்ப்பதிகங்களைப் பாடிக் காளையை வாகனமாக உடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருப்பெண்ணாகடத்தைப் பெருகும் விருப்புடன் அணைந்தார்.
1414. கார்வளரும் மாடங்கள் கலந்தமறை ஒலிவளர்க்குஞ்
சீருடைஅந் தணர்வாழுஞ் செழும்பதியின் அகத்தெய்தி வார்சடையார் மன்னுதிருத் தூங்கானை மாடத்தைப் பார்பரவுந் திருமுனிவர் பணிந்தேத்திப் பரவினார்.
தெளிவுரை : கரிய மேகங்கள் தங்குவதற்கு இடமான மாளிகைகளில், பொருந்திய வேத ஒலி வளர்கின்ற சிறப்பையுடைய மறையவர் வாழ்கின்ற அந்தச் செழும்பதியுள் போய் நீண்ட சடையையுடைய சிவபெருமான் நிலைபெற்று விளங்கும் திருத்தூங்கானை மாடக்கோயிலை உலகம் போற்றும் திருநாவுக்கரசர் பணிந்து துதித்துப் பரவினார்.
1415. புன்னெறியாம் அமண்சமயத் தொடக்குண்டு போந்தவுடல்
தன்னுடனே உயிர்வாழத் தரியேன்நான் தரிப்பதனுக் கென்னுடைய நாயகநின் இலச்சினையிட் டருளென்று பன்னுசெழுந் தமிழ்மாலை முன்னின்று பாடுவார்.
தெளிவுரை : புன்மையான சமண சமயத் தொடக்குடைய இந்தவுட<லுடனே உயிர் வாழ்வதற்கு நான் தரிக்கமாட்டேன். ஆதலால் என் நாயகரே, நான் தரிப்பதற்கு உம் முத்திரையை எனக்கு இட்டருள வேண்டும் என்ற கருத்தைக் கொண்ட செழுந்தமிழ் மாலையைத் திருமுன்பு நின்று பாடலானார்.
1416. பொன்னார்ந்த திருவடிக்கென் விண்ணப்பம் என்றெடுத்து
முன்னாகி எப்பொருட்கும் முடிவாகி நின்றானைத் தன்னாகத் துமைபாகங் கொண்டானைச் சங்கரனை நன்னாமத் திருவிருத்தம் நலஞ்சிறக்கப் பாடுதலும்.
தெளிவுரை : பொன்னார்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் எனத் தொடங்கி, எல்லாப் பொருள்களுக்கும் முன்னாகியும் முடிவாகியும் நின்ற இறைவரை, தம் திருமேனியில் பார்வதியம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டவரை, சங்கரரை அவரது நல்ல நாமங்களைப் பாடும் திருவிருத்தப் பதிகத்தை நலம் சிறக்கப் பாடவும்,
1417. நீடுதிருத் தூங்கானை மாடத்து நிலவுகின்ற
ஆடகமே ருச்சிலையான் அருளாலோர் சிவபூதம் மாடொருவர் அறியாமே வாகீசர் திருத்தோளில் சேடுயர்மூ விலைச்சூலம் சினவிடையி னுடன்சாத்த.
தெளிவுரை : செல்வம் நிலைபெறும் திருத்தூங்கானை மாடத்தில் நிலவும் பொன் மேருமலையை வில்லாக உடைய பெருமானின் திருவருளால் ஒரு சிவ பூதமானது பக்கத்தில் ஒருவரும் அறியாதபடி (வந்து) திருநாவுக்கரசரின் திருத்தோள்களில் ஒளியான் மிக்க மூவிலைச் சூலக்குறியைச் சினக்காளைக் குறியுடனே சாத்த,
1418. ஆங்கவர்தந் திருத்தோளில் ஆர்ந்ததிரு இலச்சினையைத்
தாங்கண்டு மனங்களித்துத் தம்பெருமான் அருள்நினைந்து தூங்கருவி கண்பொழியத் தொழுதுவிழுந் தார்வத்தால் ஓங்கியசிந் தையராகி உய்ந்தொழிந்தேன் எனவெழுந்தார்.
தெளிவுரை : அவர் தம் திருத்தோளில் நிறைந்த திருமுத்திரைகளைக் கண்டு, மனம் மகிழ்ந்து, தம் பெருமானின் திருவருளை நினைந்து, இடைவிடாது வரும் அருவி போல் கண்ணீர் வடிய, வணங்கி நிலத்தில் விழுந்து, மிக்க ஆசையால் நிரம்பி மேல் எழுந்த சிந்தையராய், நான் உய்ந்தேன் எனக் கூறி எழுந்தார்.
1419. தூங்கானை மாடத்துச் சுடர்க்கொழுந்தின் அடிபரவிப்
பாங்காகத் திருத்தொண்டு செய்துபயின் றமருநாள் பூங்கானம் மணங்கமழும் பொருவில்திரு அரத்துறையுந் தேங்காவின் முகிலுறங்குந் திருமுதுகுன் றமும்பணிந்து.
தெளிவுரை : தூங்கானை மாடத்தில் வீற்றிருக்கும் சுடர்க்கொழுந்து நாதரின் திருவடிகளைத் துதித்து ஏற்கும் முறையில் திருப்பணிகள் செய்து பயின்று அத்தலத்தில் விரும்பி எழுந்தருளியிருக்கும் நாட்களில், காட்டுப்பூக்களின் மணம் கமழும் ஒப்பற்ற திருவரத்துறையினையும், தேன் பொருந்திய சோலைகளில் மேகங்கள் தவழும் திருமுதுகுன்றத்தையும் வணங்கி,
1420. வண்டமிழ்மென் மலர்மாலை புனைந்தருளி மருங்குள்ள
தண்டுறைநீர்ப் பதிகளிலுந் தனிவிடையார் மேவியிடங் கொண்டருளுந் தானங்கள் கும்பிட்டுக் குணதிசைமேல் புண்டரிகத் தடஞ்சூழ்ந்த நிவாக்கரையே போதுவார்.
தெளிவுரை : வளமான தமிழால் ஆன மென்மலர் மாலைகளைப் புனைந்து, பக்கத்தில் உள்ள குளிர்ந்த துறைகளையுடைய நீர் பொருந்திய தலங்களை ஒப்பில்லாத காளையூர்தியையுடைய சிவபெருமான் உறையும் இடங்களை வணங்கிக் கிழக்குத் திக்கனைநோக்கி, தாமரைத் தடங்களால் சூழப்பட்ட நிவா நதியின் கரைவழியாய்ச் செல்பவராய்,
1421. ஆனாத சீர்த்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
வானாறு புடைபரக்கும் மலர்ச்சடையார் அடிவணங்கி ஊனாலும் உயிராலும் உள்ளபயன் கொளநினைந்து தேனாரும் மலர்ச்சோலைத் திருப்புலியூர் மருங்கணைந்தார்.
தெளிவுரை : குறைவற்ற சிறப்புடைய தில்லை அம்பலத்தில் அருட்கூத்தை ஆடும் கங்கையாறு பக்கத்தில் பரவும் மலர் பொருந்திய சடையுடையவரான பெருமானின் திருவடிகளை வணங்கி, ஊனாலும் உயிராலும் உள்ள பயனைப் பெற எண்ணியவராய்த் தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருப்புலியூரின் பக்கத்தை அடைந்தார்.
1422. நாவுக் கரசரும் இருவர்க் கரியவர்
நடமா டியதிரு எல்லைப்பால் மேவித் தலமுற மெய்யில் தொழுதபின் மேன்மேல் எழுதரும் விழைவோடுங் காவிற் களிமயில் மகிழ்வுற் றெதிரெதிர் ஆடக் கடிகமழ் கமலஞ்சூழ் வாவித் தடமலர் வதனம் பொலிவுறு மருதத் தண்பணை வழிவந்தார்.
தெளிவுரை : திருநாவுக்கரசரும் நான்முகனும் திருமாலும் ஆகியவர்க்கு எட்டாத சிவபெருமான் அருட்கூத்தாடுகின்ற தில்லையின் எல்லையைப் போய்ச் சேர்ந்து நிலம் பொருந்த மெய்யால் தொழுதபின், மேலும் மேலும் பொங்கி எழுகின்ற ஆசையுடனே சோலைகளில் களிப்புடைய மயில்கள் மகிழ்ந்து எதிர் எதிராக ஆட, மணங்கமழும் தாமரைகள் நிரம்பிய பொய்கைகளின் மலர்களாகிய முகங்கள் விளங்கும் மருதத்தைச் சார்ந்த குளிர்ந்த வயல்களின் வழியே வந்தார்.
1423. முருகிற் செறியிதழ் முளரிப் படுகரில்
முதுமே திகள்புது மலர்மேயும் அருகிற் செறிவன மெனமிக் குயர்கழை அளவிற் பெருகிட வளரிக்குப் பெருகிப் புடைமுதிர் தரளஞ் சொரிவன பெரியோர் அவர்திரு வடிவைக்கண் டுருகிப் பரிவுறு புனல்கண் பொழிவன எனமுன் புளவள வயலெங்கும்.
தெளிவுரை : மணம் வாய்ந்த நெருங்கிய இதழ்களையுடைய தாமரை மலர்கள் உள்ள பள்ளங்களில் முதிய எருமைகள் புதிய பூக்களை மேய்கின்ற இடங்களின் பக்கங்களில் நெருங்கிக் காடுபோல மிகவுயர்ந்த மூங்கிலின் அளவாக உயர்ந்து பெருக வளரும் கரும்புகள், பெருத்து முதிர்ந்த கணுக்களில் முத்துக்களைச் சொரிந்தவை, பெரியாரான அந்த திருநாவுக்கரசு நாயனாரின் வேடத்தைக் கண்டு, உள் உருகி, அன்பு மிகுதியால் கண்ணீர் பொழிவது போல் வயல்களில் எங்கும் விளங்கும்.
1424. அறிவிற் பெரியவர் அயல்நெற் பணைவயல்
அவைபிற் படும் வகை அணைகின்றார் பிறவிப் பகைநெறி விடுவீர் இருவினை பெருகித் தொடர்பிணி உறுபாசம் பறிவுற் றிடஅணை யுமின்என் றிருபுடை பயில்சூழ் சினைமிசை குயில்கூவுஞ் செறிவிற் பலதரு நிலையிற் பொலிவுறு திருநந் தனவனம் எதிர்கண்டார்.
தெளிவுரை : அறிவில் பெரியவரான திருநாவுக்கரசு நாயனார் பக்கத்தில் உள்ள நெல் வயல்கள் பின்வருமாறு கடந்து முன் சென்று அணைபவராய், பகையான பிறவி சேரும் நெறிகளைக் கைவிடுங்கள்! இருவினைகள் பெருகித் தொடர்ந்து பிணிக்கும் பாசம் நீங்கும்படி இங்குச் சேருங்கள் எனச் சூழ்ந்த மரக்கிளைகளின் மேலே பயின்ற குயில்கள் கூவுவதற்கு இடமான பல மரங்கள் நெருங்கி நிலைத்து அழகாக விளங்கும் சோலைகளை எதிரில் கண்டார்.
1425. அவர்முன் பணிவொடு தொழுதங் கணைவுற
அணிகொம் பரின்மிசை அருகெங்கும் தவமுன் புரிதலில் வருதொண் டெனுநிலை தலைநின் றுயர்தமிழ் இறையோராம் இவர்தந் திருவடி வதுகண் டதிசயம் எனவந் தெதிர்அர கரவென்றே சிவமுன் பயில்மொழி பகர்கின் றனவளர் சிறைமென் கிளியொடு சிறுபூவை.
தெளிவுரை : முன் பணிவுடன் தொழுது நாயனார் அங்கே சேர, அழகான மரக்கொம்புகளின் மேலே பக்கங்களில் எங்கும் முன் நாளில் தவம் செய்தலால் வருகின்ற திருத்தொண்டு என்ற நிலையில் தலை சிறந்து நின்று உயர்ந்த தமிழ் அரசரான இவரது வடிவைக் கண்டு வளரும் இறகுகளையுடைய கிளிகளும் சிறிய நாகணவாய்ப் பறவைகளும் இஃது அதிசயம் எனக்கூறி எதிரே வந்து, அரகர என்றே கூறும் முன் பயின்ற மொழிகளை உரைக்கும்.
1426. அஞ்சொல் திருமறை யவர்முன் பகர்தலும்
அவருந் தொழுதுமுன் அருள்கூரும் நெஞ்சிற் பெருகிய மகிழ்வும் காதலும் நிறைஅன் பொடும்உரை தடுமாறச் செஞ்சொல் திருமறை மொழிஅந் தணர்பயில் தில்லைத் திருநகர் எல்லைப்பால் மஞ்சிற் பொலிநெடு மதில்சூழ் குடதிசை மணிவா யிற்புறம் வந்துற்றார்.
தெளிவுரை : அழகான சொற்களையுடைய பதிகங்களை அவர்க்கு முன்னம் அங்ஙனம் அக்கிளிகள் சொல்லவும் அவரும் வணங்கி, முன்னமே அருள் நிறைந்த தம் உள்ளத்தில் மேலும் பெருகிய மகிழ்ச்சியும் காதலும் நிறைந்த அன்புமாகிய இவற்றால் சொற்கள் தடுமாறச் செம்மையான சொற்களையுடைய வேதங்களை ஓதும் வேதியர்கள் பயில்கின்ற நகரின் எல்லைப் புறத்தில் மேகங்களால் விளங்கும் நீண்ட மதிலால் சூழ்ந்த மேற்குத் திசை மணி வாயிலின் புறத்தே வந்து சேர்ந்தனர்.
1427. அல்லல் பவம்அற அருளுந் தவமுதல்
அடியார்எதிர்கொள அவரோடும் மல்லற் புனல்கமழ் மாடே வாயிலின் வழிபுக் கெதிர்தொழு தணைவுற்றார் கல்வித் துறைபல வருமா மறைமுதல் கரைகண் டுடையவர் கழல்பேணுஞ் செல்வக் குடிநிறை நல்வைப் பிடைவளர் சிவமே நிலவிய திருவீதி.
தெளிவுரை : அவர், துன்பத்தை அளிக்கின்ற பிறவி நீங்கும்படி உதவும் தவத்தைத் தமக்கு முதலாகக் கொண்ட அடியார்கள் தம்மை எதிர்கொள்ள, அவர்களுடன் கூடிச்சென்று செழிய நீரின் மணம் வீசுகின்ற பக்கத்தில் உள்ளவாயிலின் வழியாகப் புகுந்து, கல்வியின் கரை கண்டவர்களாய் யாவரையும் அடிமையாக உடையராகிய கூத்தப்பெருமானின் அடிகளைப் பேணுகின்ற செல்வக்குடிகளான தில்லைவாழ் அந்தணர்கள் நிறைந்த நல்ல மாளிகைகளின் இடையில் வளர்கின்ற சிவத்தன்மை பொருந்திய வீதியை எதிரில் பார்த்த வண்ணம் தொழுது சேரலானார்.
1428. நவமின் சுடர்மணி நெடுமா லையுநறு
மலர்மா லையுநிறை திருவீதிப் புவனங் களின்முதல் இமையோர் தடமுடி பொருதுந் தியமணி போகட்டிப் பவனன் பணிசெய வருணன் புனல்கொடு பணிமா றவுமவை பழுதாமென் றெவருந் தொழுதெழும் அடியார் திருவல கிடுவார் குளிர்புனல் விடுவார்கள்.
தெளிவுரை : தத்தம் உலகங்களுக்குத் தலைவரான தேவர்களின் பெரிய முடிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதனால் சிந்திய மணிகளும், ஒளிவீசும் நவமணிகளால் ஆன மாலைகளும் நல்ல மணம் வீசும் மலர் மாலைகளும் நிறைந்த திருவீதியினின்றும், வாயுதேவன் வாரி எறிந்து திருவலகுப் பணி செய்யவும், அத்திருப்பணிகள் பழுதானவை என எண்ணி எல்லாரும் தொழுது எழும் தன்மை வாய்ந்த அடியார்கள் அதன்மேல் தாம் திருவலகு இடுவார்களும் குளிர்ந்த நீரை விடுபவருமாய் இருந்தனர்.
1429. மேலம் பரதலம் நிரையுங் கொடிகளில்
விரிவெங் கதிர்நுழை வரிதாகுங் கோலம் பெருகிய திருவீ தியைமுறை குலவும் பெருமையர் பணிவுற்றே ஞாலந் திகழ்திரு மறையின் பெருகொலி நலமார் முனிவர்கள் துதியோடும் ஓலம் பெருகிய நிலையேழ் கோபுரம் உறமெய் கொடுதொழு துள்புக்கார்.
தெளிவுரை : பொருந்திய பெருமையுடைய திருநாவுக்கரசு நாயனார் மேலே வான வெளியிடம் எங்கும் நிறையும் கொடிகளோடு, பரவும் வெம்மையான கதிரவனின் கதிர்கள் நுழைவதற்கு அரிதான கோலம் பெருகிய திருவீதியை முறையாய்ப் பணிந்து, உலகு திகழும் திருமறைகளின் பெருகிய ஒலியானது நன்மையுடைய முனிவர் செய்யும் துதிக்கும் ஒலியுடனே ஓலம் பெருகிய எழுநிலை மேலைக் கோபுரத்தையும், உடல் நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கித் தொழுது உள்ளே புகுந்தார்.
1430. வளர்பொற் கனமணி திருமா ளிகையினை
வலம்வந் தலமரும் வரைநில்லா அளவிற் பெருகிய ஆர்வத் திடையெழும் அன்பின் கடல்நிறை உடலெங்கும் புளகச் செறிநிரை விரவத் திருமலி பொற்கோ புரமது புகுவார்முன் களனிற் பொலிவிடம் உடையார் நடநவில் கனகப் பொதுஎதிர் கண்ணுற்றார்.
தெளிவுரை : அழகு வளர்கின்ற பொன் மாளிகையை வலமாக வந்து வருத்தம் தருவதும் வரையறையின்படி நில்லாத அளவில் பெருகியதுமான ஆர்வத்திடை எழுகின்ற அன்பான கடல் நிறைந்த மேனி முழுதும் மயிர்ப் புளகம் மிகுந்து கலக்க, திருமிகுந்த பொன் கொண்ட கோபுரத்தின் உள்ளே புகும் நாயனார், கழுத்தில் விளங்கும் விடத்தையுடைய கூத்தப்பெருமான் நடமாடுகின்ற பொன்னம்பலத்தை எதிரே பார்த்தார்.
1431. நீடுந் திருவுடன் நிகழும் பெருகொளி
நிறைஅம் பலம்நினை வுறநேரே கூடும் படிவரும் அன்பால் இன்புறு குணமுன் பெறவரு நிலைகூடத் தேடும் பிரமனும் மாலுந் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவொன்றா ஆடுங் கழல்புரி அமுதத் திருநடம் ஆரா வகைதொழு தார்கின்றார்.
தெளிவுரை : நிலைபெறும் முத்தியான திருவுடன் பொருந்தியுள்ள மேன்மேலும் வளர்கின்ற ஞானஒளி நிறையும் அம்பலமானது முன்னம் தம் மனத்தில் பொருந்தியிருந்த அவ்வாறே கண்ணுக்கு எதிரிலும் கூடுமாறு வரும் அன்பால் இன்பம் பொருந்தும் குணச்சிறப்பும் வரும் நிலை கைகூடியதால், தேடும் நான்முகனும் திருமாலும் தேவர்களும் மற்றப்பிறவியில் வரும் உயிர்களும் தெளிவடைய இயலாத ஆடும் திருவடியால் நிகழ்த்தும் அமுதமான கூத்தை ஆசை நிறைவு பெறாத வகையில் தொழுது உண்ணலானார்.
1432. கையுந் தலைமிசை புனைஅஞ் சலியன
கண்ணும் பொழிமழை ஒழியாதே பெய்யுந் தகையன கரணங் களுமுடன் உருகும் பரிவின பேறெய்தும் மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரும் மின்தாழ் சடையொடு நின்றாடும் ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர் ஆர்வம் பெருகுதல் அளவின்றால்.
தெளிவுரை : அவருடைய கைகளும் தலையின்மீது புனைந்த அஞ்சலியாகக் குவிந்தன. கண்களும் இடைவிடாமல் பொழியும் மழைபோல் நீரைப்பெய்யும் இயல்புடையன ஆயின. பேறு அடையும் திருமேனியும் நிலத்தின்மீது விழுமுன்னரே எழுகின்றதாகும்; மின்போல் தாழ்ந்து விளங்கும் சடையுடன் நின்று ஆடுகின்ற இறைவரின் திருக்கூத்தைக் கும்பிடும் ஆர்வம் இப்படிப் பெருகும் நிலை அளவில் கூடாததாக விளங்கியது.
1433. இத்தன் மையர்பல முறையுந் தொழுதெழ
என்றெய் தினையென மன்றாடும் அத்தன் திருவருள் பொழியுங் கருணையின் அருள்பெற் றிடவரும் ஆனந்தம் மெய்த்தன் மையினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையும் மேன்மேலும் சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திருநே ரிசைமொழி பகர்கின்றார்.
தெளிவுரை : நாவுக்கரசர் இத்தகைய தன்மையுடையவராய்ப் பலமுறையும் தொழுது எழலும் என்று வந்தாய்? என்று குறிப்புடன் அம்பலத்தில் நடமாடும் அத்தனாரின் திருவருள் பொழிகின்ற கருணையால் அருளைப் பெறுமாறு வரும் ஆனந்தமான உண்மைப் பாட்டினால் திருவிருத்தத் திருமொழியைப் பாடிப் பின்வரும் மேன்மேலும் சித்தத்தினுள்ளே பெருகி வளரும் அன்பு மிகுதியால் இன்பம் அடையும் திருநேரிசைத் திருப்பதிகத்தை அருளிச் செய்பவராய்,
1434. பத்தனாய்ப் பாட மாட்டேன்என்றுமுன் னெடுத்துப் பண்ணால்
அத்தாஉன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறென் றித்திறம் போற்றி நின்றே இன்தமிழ் மாலை பாடிக் கைத்திருத் தொண்டு செய்யுங் காதலிற் பணிந்து போந்தார்.
தெளிவுரை : பத்தனாய்ப் பாட மாட்டேன் என முன்னம் தொடங்கிப் பண்ணால அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று முடியும் ஈற்றினை உடையதான பாட்டு முதலான இத்திறத்தில் போற்றி நின்றே இனிய தமிழ் மாலையைப் பாடிக் கைத்தொண்டு செய்கின்ற ஆசையால் வெளியே வந்தார்.
1435. நீடிய மணியின் சோதி நிறைதிரு முன்றின் மாடும்
ஆடுயர் கொடிசூழ் பொற்றேர் அணிதிரு வீதி யுள்ளுங் கூடிய பணிகள் செய்து கும்பிடுந் தொழில ராகிப் பாடிய புனித வாக்கின் பணிகளும் பயிலச் செய்வார்.
தெளிவுரை : மணிகளின் ஒளி நிறைந்த திருமுன்றிலின் பக்கத்திலும், ஆடும் உயர்ந்த கொடிகள் சூழ்ந்த அழகிய தேர் ஓடும் அழகிய வீதியுள்ளும், பொருந்திய திருப்பணிகள் செய்து கும்பிடும் தொழிலை உடையவராகிப் பாடும் தூய திருவாக்காகிய பணிகளையும் செய்வார் ஆனார்.
1436. அருட்பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம்பா லிக்கும் என்னும்
திருக்குறுந் தொகைகள் பாடித் திருவுழ வாரங் கொண்டு பெருத்தெழு காத லோடும் பெருந்திருத் தொண்டு செய்து விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டல் ஆட.
தெளிவுரை : அருளைப் பெற்றதால் உண்டான பெருமகிழ்ச்சி மேன்மேலும் பெருக அன்னம் பாலிக்கும் எனத் தொடங்குகின்ற திருக்குறுந்தொகைகளைப் பாடி, பெருகி எழுகின்ற அன்போடும் பெரிய தொண்டைச் செய்து, விருப்பம் உடைய மேனியில் வடியும் கண்ணீரால் கரைந்த திருவெண்ணீற்றுடன் ஆகிய வண்டல் பொருந்த,
1437. மேவிய பணிகள் செய்து விளங்குநாள் வேட்க ளத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச் சென்றுமுன் வணங்கிப் பாடிக் காவியங் கண்டர் மன்னுந் திருக்கழிப் பாலை தன்னில் நாவினுக் கரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ.
தெளிவுரை : திருநாவுக்கரசர் இவ்வாறு தமக்குப் பொருத்தமான பணிகளைச் செய்து வந்த நாட்களில், திருவேட்களத்தில் எழுந்தருளிய காளைக் கொடியை உயர்த்திய இறைவரைத் திருமுன் சென்று வணங்கிப் பாடி, நீலமலர் போன்ற நிறமுடைய, அழகிய கண்டமுடைய கூத்தப்பெருமான் நிலைபெற்று எழுந்தருளிய திருக்கழிப்பாலையில் சென்று மண்ணுலகத்தவர் வாழும் பொருட்டு அடைந்தார்.
1438. சினவிடைஏ றுகைத்தேறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து
வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே என்கின் றாள்என் றனையதிருப் பதிகமுடன் அன்புறுவண் டமிழ்பாடி அங்கு வைகி நினைவரியார் தமைப்போற்றி நீடுதிருப் புலியூரை நினைந்து மீள்வார்.
தெளிவுரை : சினத்தையுடைய காளையை ஊர்கின்ற மணவாள நம்பியான இறைவரின் திருவடிகளைப் போய் வணங்கி, அழகிய பவளம் போன்ற வாயைத் திறந்து வானவர்களுக்கும் தானவன் ஆகியவரே! என்று கூறுகின்றாள் என்று அத்தன்மையுடைய திருப்பதிகத்துடனே, அன்பு பொருந்தும் வண்மையுடைய தமிழ் மாலைகளைப் பாடி அந்தப் பதியிலே தங்கி, நினைப்பதற்கு அரிய சிவபெருமானைத் துதித்துச் செல்வம் நிலைபெறும் புலியூரை நினைந்து திரும்புபவராகி,
1439. மனைப்படப்பிற் கடற்கொழுந்து வளைசொரியுங்
கழிப்பாலை மருங்கு நீங்கி நனைச்சினைமென் குளிர்ஞாழற் பொழிலூடு வழிக்கொண்டு நண்ணும் போதில் நினைப்பவர்தம் மனங்கோயில் கொண்டருளும் அம்பலத்து நிருத்த னாரைத் தினைத்தனையாம் பொழுதுமறந் துய்வனோ எனப்பாடித் தில்லை சார்ந்தார்.
தெளிவுரை : இல்லங்களின் முற்றங்களில் எல்லாம் கடலின் அலைகள் சங்குகளைக் கொணர்ந்து சேர்க்கின்ற திருக்கழிப் பாலையினை நீங்கி, அரும்புகளையுடைய கொம்புகளுடன் கூடிய குளிர்ந்த புன்னை மரங்கள் அடர்ந்த சோலைகளின் வழியாய்ச் சென்று சேர்கின்ற போதில் நினைப்பவர் தம் மனத்தையே கோயிலாகக் கொண்டருளும் அம்பலக்கூத்தப் பெருமானைச் சிறு பொழுது மறந்தால் நான் உய்வேனோ என்ற கருத்துடைய திருப்பதிகத்தைப் பாடியபடியே திருத்தில்லையை அடைந்தார். அவர் பாடிய பிற பதிகங்கள் வண்ணமும் வடிவும் என்ற திருக்குறுந்தொகையும், கங்கையைப் பாகம் வைத்தார் என்ற திருநேரிசையும், நெய்தல் குருகு என்ற திருவிருத்தமும் ஊனுடுத்தி என்ற திருத்தாண்டகமும் ஆகும்.
1440. அரியானை என்றெடுத்தே அடியவருக்
கெளியானை அவர்தஞ் சிந்தை பிரியாத பெரியதிருத் தாண்டகச்செந் தமிழ்பாடிப் பிறங்கு சோதி விரியாநின் றெவ்வுலகும் விளங்கியபொன் அம்பலத்து மேவி ஆடல் புரியாநின் றவர்தம்மைப் பணிந்துதமி ழாற்பின்னும் போற்றல் செய்வார.
தெளிவுரை : அரியானை எனத் தொடங்கும் பரிகத்தை, அடியவர்க்கு எளியவரான சிவபெருமானை, அந்த அடியவர் உள்ளத்தினின்றும் பிரியாத பெரிய திருத்தாண்டகமான செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடி, விளங்கும் ஒளி விரிகின்றமையால் எல்லா உலகங்களிலும் நிறைவாக விளங்கும் பொன்னம்பலத்தில் பொருந்திக் கூத்தாடுகின்ற இறைவரை வணங்கித் தமிழ்ப் பதிகத்தினாலேயே மேலும் துதிப்பவராய்.
1441. செஞ்சடைக் கற்றைமுற்றத் திளநிலா
எறிக்குமெனுஞ் சிறந்த வாய்மை அஞ்சொல்வளத் தமிழ்மாலை அதிசயமாம் படிபாடி அன்பு சூழ்ந்த நெஞ்சுருகப் பொழிபுனல்வார் கண்ணிணையும் பரவியசொல் நிறைந்த வாயும் தஞ்செயலியன் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில்.
தெளிவுரை : செஞ்சடைக் கற்றை முற்றத்திள நிலா எறிக்கும் எனத் தொடங்கும் சிறப்புடைய வாய்மையுடைய சொற்களால் ஆன தமிழ்ப்பதிகத்தை வியப்புப்பொருந்தப் பாடி, அன்பு கெழுமிய மனம் கரைந்து உருக (அதனால்) வடிந்த மழை போன்ற இரண்டு திருக்கண்களும் சிவபெருமானை வணங்கும் பதிகச் சொல் நிறைந்த திருவாயும் தம் செயலில் நீங்காத திருவுழவாரத் திருப்பணியும் மாறாமல் விளங்கும் நாள்களில்,
1442. கடையுகத்தில் ஆழியின்மேல் மிதந்ததிருக்
கழுமலத்தின் இருந்த செங்கண் விடையுகைத்தார் திருவருளால் வெற்பரையன் பாவைதிரு முலைப்பா லோடும் அடையநிறை சிவம்பெருக வளர்ஞானங் குழைத்தூட்ட அமுது செய்த உடையமறைப் பிள்ளையார் திருவார்த்தை அடியார்கள் உரைப்பக் கேட்டார்.
தெளிவுரை : உலகத்தின் முடிவில் பொங்கி எழும் கடல் வெள்ளத்தில் மேலேமிதந்த திருக்கழுமலத்தின் (சீகாழியில்) வீற்றிருக்கின்ற காளையை ஊர்தியாய்க் கொண்ட தோணியப்பரின் திருவருளால் மலையரசனின் மகளாரான பெரிய நாயகியம்மøயார், திருமுலைப்பாலுடனே நிறைகின்ற சிவம் பெருகுமாறு வளர்கின்ற ஞானத்தை ஊட்ட, அதை உண்டருளிய ஆளுடைய பிள்ளையாரின் (ஞானசம்பந்தரின்) திருவரலாற்றை அடியவர் உரைப்பக் கேட்டு.
1443. ஆழிவிடம் உண்டவரை அம்மைதிரு
முலைஅமுதம் உண்ட போதே ஏழிசைவண் டமிழ்மாலை இவன்எம்மான் எனக்காட்டி இயம்ப வல்ல காழிவரும் பெருந்தகைசீர் கேட்டலுமே அதிசயமாங் காதல் கூர வாழியவர் மலர்க்கழல்கள் வணங்குதற்கு மனத்தெழுந்த விருப்பு வாய்ப்ப.
தெளிவுரை : பெரியநாயகி அம்மையாரின் திருமுலைப்பால் அமுதத்தை ஞானத்துடன் உண்ட அப்போதே, ஏழிசை பொருந்தும் வளமான தமிழ் மாலையால் கடலில் தோன்றிய நஞ்சை உண்டருளிய சிவபெருமானை எமது பெம்மான் இவன் எனச் சுட்டிக் காட்டிப் பாடியருளவல்ல, சீகாழியில் தோன்றியருளிய பெருந்தகையாளரான ஞானசம்பந்தப் பெருமானின் சிறப்புக்களைக் கேட்டவுடனே, அதிசயமான உணர்ச்சியுடனே கூடிய காதலால், வாழ்வு அளிக்கும் அவருடைய மலர் போன்ற திருவடிகளை வணங்குவதற்குத் தம் உள்ளத்தில் எழுந்த விருப்பம் பொருந்த,
1444. அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற
கழல்வணங்கி அருள்முன் பெற்றுப் பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி புரண்டுவலங் கொண்டு போந்தே எப்புவனங் களும்நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச் செப்பரிய பெருமையினார் திருநாரை யூர்பணிந்து பாடிச் செல்வார்.
தெளிவுரை : அப்போதே பொன்னம்பலத்தில் கூத்தாடும் இறைவரின் திருவடியை வணங்கி அருளைப் பெற்றுக் கொண்டு, பொய்யான இப்பிறவி நோயைப் போக்கும் இயல்பு கொண்ட தில்லையின் வீதியைத் திருமேனி நிலத்தில் புரளப் புரண்டு வலமாக வந்து பின் எல்லா உலகங்களிலும் நிறைவுடைய அப்பதியினது எல்லையை வணங்கித்துதித்துச் சொல்வதற்கரிய பெருமையுடைய சிவபெருமானின் திருநாரையூரைப் போய்ப் பணிந்து பாடி மேலே செல்லலானார்.
1445. தொண்டர்குழாம் புடைசூழத் தொழுதகரத்
தொடுநீறு துதைந்த கோலங் கண்டவர்தம் மனங்கசிந்து கரைந்துருகுங் கருணைபுறம் பொழிந்து காட்டத் தெண்டிரைவாய்க் கல்மிதப்பில் உகைத்தேறுந் திருநாவுக் கரசர் தாமும் வண்டமிழால் எழுதுமறை மொழிந்தபிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார்.
தெளிவுரை : தொண்டர் கூட்டம் தம்மைச் சுற்றிவர, வணங்கும் கைகளுடன், திருநீற்றால் நிறைவுற்ற திருக்கோலமானது கண்டவரின் உள்ளங்களையெல்லாம் கரைந்து உருகும் அருளானது மேல் பொழிந்திட, தெளிவான அலைகளையுடைய கடலில் கல்லையே மிதவையாகக் கொண்டு ஊர்ந்து கரை ஏறிய நாவுக்கரசர் பெருமானும் வளமான தமிழால் எழுதும் வேதத்தைக் கூறியருளிய திருஞானசம்பந்தப் பெருமானின் சீகாழித் தலத்தின் பக்கத்தில் வந்து சேர்ந்தார்.
1446. நீண்டவரை வில்லியார் வெஞ்சூலை
மடுத்தருளி நேரே முன்னாள் ஆண்டஅர செழுந்தருளக் கேட்டருளி ஆளுடைய பிள்ளை யாருங் காண்தகைய பெருவிருப்புக் கைம்மிக்க திருவுள்ளக் கருத்தி னோடு மூண்டஅருள் மனத்தன்பர் புடைசூழ எழுந்தருளி முன்னே வந்தார்.
தெளிவுரை : பெரிய மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபெருமான் கொடிய சூலை நோயைத் தந்தருளிய நேரே ஆண்டருளிய நாவுக்கரசர் வருகின்றார் என்ற செய்தியைக் கேட்டருளி, ஞானசம்பந்தரும், அவரைக் காண்கின்ற தன்மையுடைய பெருவிருப்பு மிகவும் ஓங்கத் திருவுள்ளக் கருத்துடனே அருள்கொண்ட மனம் உடைய அடியார்கள் பலரும் தம்மைச் சூழ்ந்து வர எழுந்தருளி வந்து முன்னர் வந்தார்.
1447. தொழுதணைவுற் றாண்டஅர சன்புருகத்
தொண்டர் குழாத் திடையே சென்று பழுதில்பெருங் காதலுடன் அடிபணியப் பணிந்தவர்தங் கரங்கள் பற்றி எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி விடையின்மேல் வருவார் தம்மை அழுதழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே எனஅவரும் அடியேன் என்றார்.
தெளிவுரை : காளையை ஊர்தியாகவுடைய சிவபெருமானை அழுது அழைத்துத் தம் முன் வெளிப்பட்டு வரக்கொண்ட ஞானசம்பந்தரும் வரவேற்கச் சென்றவராய் எதிரே வந்த தொண்டர் குழுவின் திருவேடத்தை வணங்கி, எதிரில் சேர்தலுற்று, நாவுக்கரசர் தம்மைச் சூழ்ந்த தொண்டர் கூட்டத்தின் இடையில் சென்று அன்பின் மிகுதியால் உள்ளம் உருகக் குற்றம் இல்லாத பெரிய அளவிடற்கரிய காதலுடன் தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்க, அங்ஙனம் விழுந்து வணங்கியவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, எழுதுதற்கு அரிய மலர் போன்ற தம் திருக்கைகளால் எடுத்து அவரைத் தாமும் தொழுது, எம் அப்பரே! என்று கூறிட அவரும் அடியேன் என்றார்.
1448. அம்பிகைசெம் பொற்கிண்ணத் தமுதஞா
னங்கொடுப்ப அழுகை தீர்ந்த செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக் கரசரெனச் சிறந்த சீர்த்தி எம்பெருமக் களும்இயைந்த கூட்டத்தில் அரனடியார் இன்பம் எய்தி உம்பர்களும் போற்றிசைப்பச் சிவம்பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம்.
தெளிவுரை : பெரிய நாயகியம்மையார் செம்பொன் கிண்ணத்தில் ஞான அமுதத்தை ஊட்ட, அதனால் அழுகை நீங்கிய பவளம்போலும் திருவாயினையுடைய ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசு நாயனாரும் என்ற பெருஞ்சிறப்புடைய எம் இரண்டு பெருமக்களும் சேர்ந்த இத்திருக்கூட்டத்தைக் காணும் பேற்றைப் பெற்றதால், சிவனடியார்கள் இன்பம் அடைந்து, தேவர்களும் போற்றித் துதிக்குமாறு உலகம் எல்லாம் சிவத்தைப் பெருகுவிக்கும் அரகர என்ற ஒலியை நிறைத்தனர்.
1449. பிள்ளையார் கழல்வணங்கப் பெற்றேன்என்
றரசுவப்பப் பெருகு ஞான வள்ளலார் வாகீசர் தமைவணங்கப் பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க உள்ளநிறை காதலினால் ஒருவர்ஒரு வரிற்கலந்த உண்மை யோடும் வெள்ளநீர்த் திருத்தோணி வீற்றிருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்.
தெளிவுரை : ஆளுடைய பிள்ளையாரின் திருவடிகளை வணங்கும் பேற்றைப் பெற்றேன் என்று திருநாவுக்கரசு நாயனார் மகிழ்ச்சியடைய, திருநாவுக்கரசு நாயனாரை வணங்கியதால் பெருகும் ஞானவள்ளலான ஞானசம்பந்தர் பெருமகிழ்ச்சியை அடைய, உள்ளத்தில் நிறைந்த ஆசையுடன் ஒருவர் மற்ற ஒருவருள்ளே கலந்த உண்மை நிலையோடும், வெள்ளப் பெருக்கில் மிதந்த திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவரின் கழல் அணிந்த திருவடிகளை வணங்கும் விருப்பத்தாலே மிக்கவராகி,
1450. அருட்பெருகு தனிக்கடலும் உலகுக் கெல்லாம்
அன்புசெறி கடலுமாம் எனவும் ஓங்கும் பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற புண்ணியக்கண் ணிரண்டெனவும் புவனம் உய்ய இருட்கடுவுண் டவர்அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்தன் திருவருளும் எனவும் கூடித் தெருட்கலைஞா னக்கன்றும் அரசும் சென்று செஞ்சடைவா னவர்கோயில் சேர்ந்தார் அன்றே.
தெளிவுரை : இவர்கள் அருளால் பெருகும் ஒப்பில்லாத கடலும், உலகங்களுக்கெல்லாம் அன்பினால் செறிகின்ற ஒருகடலும் போன்றவர்கள் என்று கூறும்படியும், இவர்கள் ஓங்கும் பொருளுடைய சமயங்களின் தலைமையுடைய சைவ நெறியானது பெற்ற புண்ணியக் கண்களைப் போன்றவர்கள் என்று கூறும்படியும் இவர்கள் உலகம் உய்யும் பொருட்டுக் கரிய நஞ்சினையுண்ட சிவபெருமானின் அருளும் போன்றவர்கள் என்று சொல்லும்படியும், தெளிவதற்குக் காரணமான கலைஞானக் கன்றான ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பிள்ளையாரின் மாளிகையினின்றும் புறப்பட்டுச் சென்று, சிவந்த சடையையுடைய தேவ தேவரான இறைவரின் திருக்கோயிலை அடைந்தார்கள். அப்போதே,
1451. பண்பயில்வண் டறைசோலை சூழுங் காழிப்
பரமர்திருக் கோபுரத்தைப் பணிந்துள் புக்கு விண்பணிய ஓங்குபெரு விமானந் தன்னை வலங்கொண்டு தொழுதுவிழுந் தெழுந்த எல்லைச் சண்பைவரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரா னாரைநீர் பாடீர் என்னக் கண்பயிலும் புனல்பொழிய அரசும் வாய்மைக் கலைபயிலும் மொழிபொழியக் கசிந்து பாடி.
தெளிவுரை : இசைபாடுகின்ற வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த சீகாழியில் இறைவரின் திருக்கோபுரத்தை வணங்கி உள்ளே புகுந்து, வானமும் பணியத்தக்கவாறு உயர்ந்து விளங்கும் விமானத்தை வலமாகச் சுற்றி வந்து வணங்கிக் கீழே விழுந்து எழுந்த போது, சீகாழித் தலத்தில் தோன்றிய ஆளுடைய பிள்ளையார் அப்பரே! நீவிர் உங்கள் தம்பிரானாரைப் பாடுங்கள்! என்று கூறினார். அதைக் கேட்ட நாவுக்கரசரும் பெருகிய நீரைக் கண்கள் சிந்தவும், வாய்மைக் கலைகளில் பொருந்திய மெய்த் திருமொழிகளை வாய் மொழியவும் உள்ளம் உருகிப்பாடி,
1452. பெரியபெரு மாட்டியுடன் தோணி மீது
பேணிவீற் றிருந்தருளும் பிரான்முன் நின்று பரிவுறுசெந் தமிழ்மாலை பத்தி யோடும் பார்கொண்டு மூடியெனும் பதிகம் போற்றி அரியவகை புறம்போந்து பிள்ளை யார்தம் திருமடத்தில் எழுந்தருளி அமுது செய்து மருவியநண் புறுகேண்மை அற்றை நாள்போல் வளர்ந்தோங்க உடன்பலநாள் வைகும் நாளில்.
தெளிவுரை : உமையம்மையாருடன் திருத்தோணியில் வீற்றிருக்கும் தோணியப்பரின் திருமுன்பு நின்று அன்புகூரும் செந்தமிழ் மாலையாகப் பக்தியோடும் பார் கொண்டு மூடி எனத் தொடங்கும் திருப்பதிகத்தினால் பாடி அங்கிருந்து நீங்குவதற்கரிய வகையால் வெளியில் வந்து திருஞானசம்பந்தரின் மடத்தில் இருந்து அமுது உண்டருளிப் பொருந்திய நண்புடன் கூடிய கேண்மையானது அன்று போலவே பின் என்றும் வளரும்படி உடனாகப் பல நாட்கள் இருந்த காலத்தில்,
1453. அத்தன்மை யினில்அரசும் பிள்ளை யாரும்
அளவளா வியமகிழ்ச்சி அளவி லாத சித்தநெகிழ்ச் சியினோடு செல்லும் நாளில் திருநாவுக் கரசர்திரு வுள்ளந் தன்னில் மைத்தழையும் மணிமிடற்றார் பொன்னி நாட்டு மன்னியதா னங்களெல்லாம் வணங்கிப் போற்ற மெய்த்தெழுந்த பெருங்காதல் பிள்ளை யார்க்கு விளம்புதலும் அவரும்அது மேவி நேர்வார்.
தெளிவுரை : அங்ஙனம் அரசுகளும் ஞானசம்பந்தரும் ஒருவருடன் ஒருவர் உரையாடியதால் அடைந்த மகிழ்ச்சி அளவில்லாமல் பெருகிய மன நெகிழ்ச்சியுடன் செல்லும் நாட்களில், நஞ்சு பொருந்திய அழகான கழுத்தையுடைய சிவபெருமான் காவிரி பாயும் சோழ நாட்டில் நிலை பெற எழுந்தருளிய இடங்களை எல்லாம் வணங்கித் துதிக்க வேண்டும் என்று, திருநாவுக்கரசு நாயனாரின் உள்ளத்தில் உண்மைத் திறத்தினால் நிறைந்து மேன்மேல் எழுந்த பெருங்காதலை ஞானசம்பந்தருக்கு எடுத்துக் கூறுதலும் அவரும் அதனையே உள்ளத்தில் பொருந்தி ஒப்புக் கொள்பவராய்,
1454. ஆண்டஅர செழுந்தருளக் கோலக் காவை
அவரோடும் சென்றிறைஞ்சி அன்பு கொண்டு மீண்டருளி னார்அவரும் விடைகொண் டிப்பால் வேதநா யகர்விரும்பும் பதிக ளான நீண்டகருப் பறியலூர் புன்கூர் நீடூர் நீடுதிருக் குறுக்கைதிரு நின்றி யூரும் காண்தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார் கழல்தொழுது வணங்கிச் செல்வார்.
தெளிவுரை : திருநாவுக்கரசர் புறப்படவே அவருடன் போய்த் திருக்கோலக்காவைப் பணிந்து அன்பு விடை பெற்றுத் திரும்பினார். நாவுக்கரசரும் ஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு மேலும் வேத நாயகரான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் பதிகளாகிய பெருமையால் நீண்ட திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடுர், குறுக்கை வீரட்டம், திருநின்றியூர் காணும் தகைமையுடைய திருநனிபள்ளி என்ற இவை முதலானவற்றைச் சேர்ந்து நெற்றிக்கண் உடையவரின் திருவடிகளை வணங்கி மேற்சொல்பவராய்,
1455. மேவுபுனற் பொன்னிஇரு கரையும் சார்ந்து
விடையுயர்த்தார் திருச்செம்பொன் பள்ளி பாடிக் காவுயரு மயிலாடு துறைநீள் பொன்னிக் கரைத்துருத்தி வேள்விக்குடி எதிர்கொள் பாடி பாவுறு செந் தமிழ்மாலை பாடிப் போற்றிப் பரமர்திருப் பதிபலவும் பணிந்து போந்தே ஆவுறும்அஞ் சாடுவார் கோடி காவில் அணைந்துபணிந் தாவடுதண் டுறையைச் சார்ந்தார்.
தெளிவுரை : நீர் இடையறாது பொருந்திய காவிரி ஆற்றின் இரண்டு கரைகளிலும் சேர்ந்து, காளைக்கொடியை யுயர்த்திய சிவபெருமானின் திருச்செம்பொன் பள்ளியினைப் பாடிச் சோலைகள் உயர்ந்து சூழ்ந்த திருமயிலாடுதுறையையும், காவிரியின் இருகரைகளில் உள்ள திருத்துருத்தி-வேள்விக்குடியையும், திருஎதிர்கொள்பாடியையும் தொழுது, செந்தமிழ்ப் பதிகங்களான பதிகங்களைப் பாடித்துதித்து இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் பணிந்து சென்று திருக்கோடிக்காவை அடைந்து, வணங்கிச் சென்று, திருவாவடுதுறையைச் சேர்ந்தார். சீர்காழியில் பார்கொண்டு, படையார் என்ற தொடக்கங்கள் உடைய திருவிருத்தங்களும், திருப்புன்கூரில் பிறவாதே எனத் தொடங்கும் திருத்தாண்டகமும், திருக்குறுக்கை வீரட்டத்தில் நீற்றினை நிறையப் பூசி என்ற தொடக்கம் கொண்ட திருநேரிசையும், திருநின்றியூரில் கொடுங்கண் என்ற தொடக்கம் உடைய திருக்குறுந்தொகையும் திருநனிபள்ளியில் முற்றுணை என்ற தொடக்கம் கொண்ட திருநேரிசையும் திருச்செம்பொன் பள்ளியில் ஊனினுள்ளுயிரை எனத் தொடங்கும் திருநேரிசையும், திருமயிலாடுதுறையில் கொள்ளும் எனத் தொடங்கும் திருக்குறுந்தொகையும், திருத்துருத்தியுள் பொருந்திய எனத் தொடங்கும் திருநேரிசையும், திருக்கோடி கோவில் நெற்றிமேல் எனத் தொடங்கும் திருநேரிசையும் சங்குலாம் எனத்தொடங்கும் திருக்குறுந்தொகையும், கண்டலஞ்சேர் எனத்தொடங்கும் திருத்தாண்டகமும் நாவுக்கரசரால் பாடப்பெற்றன.
1456. ஆவடுதண் டுறையாரை அடைந்துய்ந் தேன்என்
றளவில் திருத் தாண்டகமுன் அருளிச் செய்து மேவுதிருக் குறுந்தொகைநே ரிசையும் சந்த விருத்தங்க ளானவையும் வேறு வேறு பாவலர்செந் தமிழ்த்தொடையால் பள்ளித் தாமம் பலசாத்தி மிக்கெழுந்த பரிவி னோடும் பூவலயத் தவர்பரவப் பலநாள் தங்கிப் புரிவுறுகைத் திருத்தொண்டு போற்றிச் செய்வார்.
தெளிவுரை : திருவாவடு துறையில் வீற்றிருக்கும் இறைவரை அடைந்து உய்ந்தேன் என்ற கருத்துடைய அளவுபடாத திருத்தாண்டகத்தை முதலில் பாடி, பின் திருக்குறுந்தொகையும், திருநேரிசையும், சந்தவிருத்தங்களும் என்ற வெவ்வேறு பாக்களின் தன்மை மிக்க செந்தமிழ் மாலைகளால் திருப்பள்ளித் தாமங்கள் பலவற்றையும் சாத்தி, மிகுதியாய் மேன்மேல் எழுந்த அன்பினோடும் உலகம் போற்றுமாறு பல நாட்கள் அங்குத் தங்கி இடைவிடாது நினைத்துச் செய்யும் திருத்தொண்டான உழவாரப் பணியைப் பாராட்டிச் செய்பவரானார்.
1457. எறிபுனல்பொன் மணிசிதறுந் திரைநீர்ப் பொன்னி
இடைமருதைச் சென்றெய்தி அன்பி னோடு மறிவிரவு கரத்தாரை வணங்கி வைகி வண்டமிழ்ப்பா மாலைபல மகிழச் சாத்திப் பொறியரவம் புனைந்தாரைத் திருநாகேச் சுரத்துப் போற்றியருந் தமிழ்மாலை புனைந்து போந்து செறிவிரைநன் மலர்ச்சோலைப் பழையா றெய்தித் திருச்சத்தி முற்றத்தைச் சென்று சேர்ந்தார்.
தெளிவுரை : பின், எறியும் நீரால் பொன்னையும் மணிகளையும் கொழிக்கும் அலைகளையுடைய காவிரிக்கரையில் உள்ள திருவிடைமருதூரைச் சென்றடைந்து, மான் கன்றைக் கையில் உடைய இறைவரை அன்புமிக வணங்கி, அங்கே தங்கி, வளமையுடைய தமிழ்ப் பதிக பாமாலை பலவற்றையும் மகிழ்ந்துபாடி சாத்தி, புள்ளிகளையுடைய பாம்புகளைப் புனைந்த இறைவரைத் திருநாகேச்சுரத்தில் வணங்கி, அரிய தமிழ் மாலை பாடிச் சென்று, மணம் நிரம்பிய நல்ல மலர்களையுடைய பூஞ்சோலைகள் சூழ்ந்த பழையாறை என்ற தலத்தை அடைந்து திருச்சத்தி முற்றத்தில் போய்ச் சேர்ந்தார்.
1458. சென்று சேர்ந்து திருச்சத்தி
முற்றத் திருந்த சிவக்கொழுந்தைக் குன்ற மகள்தன் மனக்காதல் குலவும் பூசை கொண்டருளும் என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் முன்றில் அணைந்து செய்துதமிழ் மொழிமா லைகளும் சாத்துவார்.
தெளிவுரை : போய் அடைந்து திருச்சத்தி முற்றம் என்ற பதியில் வீற்றிருக்கும் சிவக்கொழுந்தீசரை, மலையரசன் மகளாரான பார்வதியம்மையாரின் உள்ளத்தில் எழுந்த அன்பால் விளங்கும் பூசையினை ஏற்றருளுகின்ற என்றும் இனியவரான இறைவரைத் தொழுது திருமுற்றத்தினை அடைந்து, தாம் இயல்பாய் செய்யும் திருப்பணிகளான உழவாரப் பணிகளைச் செய்து, சொல் மாலைகளையும் சாத்துவாராய்,
1459. கோவாய் முடுகி என்றெடுத்துக்
கூற்றம் வந்து குமைப்பதன்முன் பூவார் அடிகள் என்தலைமேற் பொறித்து வைப்பாய் எனப்புகன்று நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில் வாவா என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்.
தெளிவுரை : கோவாய் முடுகி எனத் தொடங்கி, கூற்றம் வந்து உயிரைக் கொண்டு போவதற்கு முன்பு, பூ வார்ந்த உம் திருவடியை அடையாளம் காட்டும்படி என் தலைமேற் பொறித்து வைத்தருளுக! எனச் சொல்லி, நாவில் நிறைந்த திருப்பதிகத்தைப் பாடவும், இறைவரும் நீ திருநல்லூரில் வா வா! எனக் கூறியருள, திருநாவுக்கரசர் மகிழ்ந்துவணங்கி,
1460. நன்மைபெரு கருள்நெறியே வந்தணைந்து நல்லூரின்
மன்னுதிருத் தொண்டனார் வணங்கிமகிழ்ந் தெழும்பொழுதில் உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்றவர்தம் சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.
தெளிவுரை : நன்மை பெருகும் திருவருளின் வழியே வந்து சேர்ந்து, நிலையான அத்தொண்டர் வணங்கி மகிழ்ந்து எழும் சமயத்தில் உன் நினைவை யாம் முடிக்கின்றோம் என்று அருள் செய்து, திருநாவுக்கரசரான அவரது தலை மீது தம் திருவடிகளைச் சூட்டியருளினார்.
1461. நனைந்தனைய திருவடிஎன் தலைமேல்வைத் தார்என்று
புனைந்ததிருத் தாண்டகத்தால் போற்றிசைத்துப் புனிதர்அருள் நினைந்துருகி விழுந்தெழுந்து நிறைந்துமலர்ந் தொழியாத தனம்பெரிதும் பெற்றுவந்த வறியோன்போல் மனம்தழைத்தார்.
தெளிவுரை : நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் என்று பாடிய திருத்தாண்டகத்தால் போற்றித் துதித்து, புனிதரான இறைவரின் திருவருளை எண்ணி மனம் உருகி, நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து, உள்ள நிலைவும் மலர்ச்சியும் பெற்றுக் குறையாத செல்வத்தைப் பெரிதும் பெற்றுக் களிக்கும் வறியவன் போல் மனம் தழைத்தார்.
1462. நாவுக்கு மன்னர்திரு நல்லூரில் நம்பர்பால்
மேவுற்ற திருப்பணிகள் மேவுறநா ளும்செய்து பாவுற்ற தமிழ்மாலை பலபாடிப் பணிந்தேத்தித் தேவுற்ற திருத்தொண்டு செய்தொழுகிச் செல்லுநாள்.
தெளிவுரை : நாவரசர் திருநல்லூர் என்ற தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானிடம் பொருந்தத் திருப்பணிகளை மனமார நாளும் செய்தும், தமிழ் மாலை பலவற்றையும் பாடி வணங்கித் துதித்தும், தெய்வம் பொருந்தும் திருத்தொண்டு இவ்வாறு செய்து ஒழுகும் நாளில்,
1463. கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்தருளும்
திருவாவூர் திருப்பாலைத் துறைபிறவும் சென்றிறைஞ்சிப் பெருகார்வத் திருத்தொண்டு செய்துபெருந் திருநல்லூர் ஒருகாலும் பிரியாதே உள்ளுருகிப் பணிகின்றார்.
தெளிவுரை : திருக்கருகாவூர் முதலான நெற்றித் திருவிழியுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருவாவூரும் திருப்பாலைத் துறையும் இன்னும் பிறவும் போய்ப் பரிந்து ஆர்வம் பெருகும் திருத்தொண்டைச் செய்து திருநல்லூரை ஒரு காலமும் பிரியாது உள்ளம் நெகிழ்ந்துருகிப் பணிபவர்.
1464. ஆளுடைய நாயகன்தன் அருள்பெற்றங் ககன்றுபோய்
வாளைபாய் புனற்பழனத் திருப்பழன மருங்கணைந்து காளவிடம் உண்டிருண்ட கண்டர்பணிக் கலன்பூண்டு நீள்இரவில் ஆடுவார் கழல்வணங்க நேர்பெற்றார்.
தெளிவுரை : தம்மை ஆளும் இறைவரின் திருவருளைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்தும் புறப்பட்டுச் சென்று, வாளை மீன்கள் பாயும் நீரின் சிறப்புடைய திருப்பழனத்தில் போய்ச் சேர்ந்து, திருநீலகண்டரும் பாம்புகளை அணிந்து ஊழிக்காலத்தில் ஆடுபவருமான இறைவரின் திருவடிகளை நேரே வணங்கும் பேற்றை அடைந்தார்.
1465. அப்பதியைச் சூழ்ந்ததிருப் பதியில்அர னார்மகிழும்
ஒப்பரிய தானங்கள் உள்ளுருகிப் பணிந்தணைவார் மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர்தாம் மேவினார் செப்பருஞ்சீர் அப்பூதி அடிகளூர் திங்களூர்.
தெளிவுரை : அந்தத் திருப்பழனத்தைச் சார்ந்துள்ள திருப்பதிகளில் சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கும் ஒப்பற்ற திருக்கோயில்களை உள்ளம் உருகிப் பணிந்து சேர்பவராகி, மெய்ப்பொருளைத் தேர்ந்து தெளிந்தவரான நாவரசர், சொல்வதற்கரிய சிறப்புடைய அப்பூதி அடிகளாரின் ஊரான திங்களூரை அடைந்தார்.
1466. அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார்
தந்தனய ருடன்சாலை கூவல்குளந் தருதண்ணீர்ப் பந்தர்பல ஆண்டஅர செனும்பெயரால் பண்ணினமை வந்தணைந்த வாகீசர் கேட்டவர்தம் மனைநண்ண.
தெளிவுரை : அந்தணர்களும் மேன்மை உடைய அப்பூதி அடிகளார், தம் மைந்தருடன், சாலைகள், கிணறு, குளம், மரம், தண்ணீர்ப்பந்தல் முதலான பல அறங்களையும் ஆண்ட அரசு என்னும் திருப்பெயரால் அமைந்தமை, அங்கு வந்து சேர்ந்த நாவரசர் கண்டும் கேட்டும் அறிந்து அவரது திருமனையை அடைய,
1467. மற்றவரும் மனமகிழ்ந்து மனைவியார் மைந்தர்பெருஞ்
சுற்றமுடன் களிகூரத் தொழுதெழுந்து சூழ்ந்துமொழிக் கொற்றவரை அமுதுசெயக் குறைகொள்வார் இறைகொள்ளப் பெற்றபெருந் தவத்தொண்டர் திருவுள்ளம் பெறப்பெற்றார்.
தெளிவுரை : அப்பூதி அடிகளாரும் உள்ளம் மகிழ்ந்து மனைவி மைந்தர் முதலான பெருஞ்சுற்றத்துடன் மகிழ்ச்சி மிகக் கொண்டு தெரிந்து தொழுது எழுந்து, சூழவந்து நாவுக்கரசரைத் தம் திருமனையில் அமுது செய்யும்படி வேண்டிக் கொள்பவராகி அவரது இசைவான மறுமொழியை வேண்டி நிற்க, எதிர்பாராது தானே வந்து கிடைக்கப் பெற்ற பெரிய தவத்தையுடைய அவரது திருவுள்ளத்தின் சம்மதத்தைப் பெறும் பேற்றைப் பெற்றார்.
1468. காண்டகைமை இன்றியும்முன் கலந்தபெருங் கேண்மையினார்
பூண்டபெருங் காதலுடன் போனகமுங் கறியமுதும் வேண்டுவன வெவ்வேறு விதங்கள்பெற விருப்பினால் ஆண்டஅர சமுதுசெயத் திருவமுதாம் படிஅமைத்து.
தெளிவுரை : நேரிடையாய் காணும் தன்மை இல்லா திருந்தும் முன் கலந்ததால் உண்டான பெருங்காதலுடன் திருவமுதும், கறியமுது வகைகளும் வேண்டுவனவற்றை வெவ்வேறு வகையில் விருப்பத்தால் ஆண்ட அரசுகள் உண்பதற்குரிய உணவாகும் படியாய்ச் சமைத்து,
1469. திருநாவுக் கரசமுது செய்தருள மற்றவர்தம்
பெருநாமஞ் சாத்தியஅப் பிள்ளைதனை அழைத்தன்பு தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக் குருநாளக் குருத்தரிந்து கொண்டுவரத் தனிவிட்டார்.
தெளிவுரை : அன்பு பொருந்தும் ஞானத் திருமறையோரான அப்பூதி அடிகள், நாவுக்கரசர் அமுது செய்தருள்வதற்காக அவரது திருப்பெயர் சூட்டப்பட்ட அந்த மூத்த பிள்ளையை அழைத்து, தோட்டத்தில் வளம் வாய்ந்த வாழையின் பெரிய நாளைத்தையுடைய குருத்தை அரிந்து கொண்டு வருமாறு தனியாய் அனுப்பினார்.
1470. ஆங்கவனும் விரைந்தெய்தி அம்மருங்கு தாழாதே
பூங்கதலிக் குருத்தரியப் புகும்அளவில் ஒருநாகம் தீங்கிழைக்க அதுபேணான் திருவமுது செய்தருள ஓங்குகத லிக்குருத்துக் கொண்டொல்லை வந்தணைந்தான்.
தெளிவுரை : அப்போது, மூத்த திருநாவுக்கரசரான அம்மகனும் விரைவாகத் தோட்டத்துக்குச் சென்று, அச்செயலில் காலம் தாழ்க்காமல், அழகான வாழைக்குருத்தை அரியப் புகும்போது, ஒரு பாம்பு தீண்ட, அதைப்பொருட்படுத்தாது, அரசு உணவு உண்பதற்காகப் பெரிய வாழைக்குருத்தை அரிந்து கொண்டு விரைவில் வந்து சேர்ந்தான்.
1471. தீயவிடந் தலைக்கொள்ளத் தெருமந்து செழுங்குருத்தைத்
தாயர்கரத் தினில்நீட்டித் தளர்ந்துதனைத் தழல்நாகம் மேயபடி உரைசெய்யான் விழக்கண்டு கெட்டொழிந்தேம் தூயவரிங் கமுதுசெயத் தொடங்கார்என் றதுஒளித்தார்.
தெளிவுரை : அங்ஙனம் விரைவாக வந்த அம்மைந்தன் தீயநஞ்சு தன் தலைக்கேற மயங்கிச் செழுமையான குருத்தைத் தன் தாயாரின் கையில் தந்து, தளர்ந்து, தன்னைத் தீப்போன்ற பாம்பு தீண்டிய செய்தியைக் கூறாதவனாய்க் கீழே விழுந்தான். அதனைத் தாயாரும் தந்தையாரும் கண்டு, கெட்டோழிந்தோம்! புனிதரான நாவுக்கரசர் இதனால் இங்கு அமுது செய்யத் தொடங்கார்! என்று மனத்தில் எண்ணி நஞ்சு ஏறிய செய்தியை மறைத்தவராய்,
1472. தம்புதல்வன் சவம்மறைத்துத் தடுமாற்றம் இலராகி
எம்பெருமான் அமுதுசெய வேண்டுமென வந்திறைஞ்ச உம்பர்பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் நம்பர்திரு வருளாலே அறிந்தருளி நவைதீர்ப்பார்.
தெளிவுரை : தம் மைந்தனின் சவத்தை மறைத்து அதனால், எவ்வித மனத்தடுமாற்றமும் இல்லாதவராய், முன்னே நாவுக்கரசரிடம் வந்து எம்பொருமானே! அமுது உண்டருள வேண்டும்! என வணங்கிச் சொல்லி நின்றனர். நிற்க, தேவதேவரான சிவபெருமானின் தொண்டரான நாவுக்கரசரும் செம்மையான தம் திருவுள்ளத்தில் இறைவரின் திருவருளால் ஒரு தடுமாற்றம் உண்டாக, அதனை அறிந்து துன்பம் நீங்குபவராய்.
1473. அன்றவர்கள் மறைத்ததனுக் களவிறந்த கருணையராய்க்
கொன்றைநறுஞ் சடையார்தங் கோயிலின்முன் கொணர்வித்தே ஒன்றுகொலாம் எனப்பதிகம் எடுத்துடையான் சீர்பாடப் பின்றைவிடம் போய்நீங்கிப் பிள்ளையுணர்ந் தெழுந்திருந்தான்.
தெளிவுரை : அன்று அவர்கள் இவ்வாறு தம் மைந்தனின் சவத்தை மறைத்து விட்ட அன்பின் திறத்துக்கு அளவர்ற கருணை உடையவராய் அந்தச் சவத்தைக் கொன்றை மலர் மாலை சூடிய மணமுடைய சடையரின் திருக்கோயில் முன்பு கொணரச் செய்து, ஒன்று கொலாம் எனத் தொடங்கிய திருப்பதிகத்தினால், சிவபெருமானின் திருவருளைப் பாடப் பின் வந்து தங்கிய நஞ்சானது நீங்கிப் போகவே, அம்மகன் உறக்கத்தினின்று விழித்து எழுந்தவன் போன்று எழுந்திருந்தான்.
1474. அருந்தனயன் உயிர்பெற்ற அதுகண்டும் அமுதுசெயா
திருந்ததற்குத் தளர்வெய்தி இடருழந்தார் துயர்நீங்க வருந்துமவர் மனைப்புகுந்து வாகீசத் திருமுனிவர் விருந்தமுது செய்தருளி விருப்பினுடன் மேவுநாள்.
தெளிவுரை : தம் அரிய மகன் உயிர் பெற்று எழுந்த அதனைப் பார்த்து, தாம் அமுது உண்ணாமல் தாழ்ந்து இருக்க நேர்ந்தமைக்கு உள்ளம் தளர்ந்து வருந்தும் அப்பூதியார், மனைவியார் முதலியவரின் துன்பம் நீங்கும் பொருட்டு, வருந்தும் அவர்களின் இல்லத்துள் கோயிலினின்று வந்து, புகுந்து நாவுக்கரசரான முனிவர், அவர்கள் அன்புடனே அளித்த விருந்து அமுதை உண்டருளி அவர்களுடன் விருப்புடன் தங்கியிருந்தார். அந்நாளில்,
1475. திங்களூர் தனில்நின்றும் திருமறையோர் பின்செல்லப்
பைங்கண்விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதிபுகுந்து தங்குபெருங் காதலொடுந் தம்பெருமான் கழல்சார்ந்து பொங்கியஅன் பொடுவணங்கி முன்னின்று போற்றிசைப்பார்.
தெளிவுரை : அப்பூதியார் திங்களூரினின்று தம்மைப் பின்பற்றி வரப் பசுமையான கண்ணையுடைய காளையை ஊர்தியாக உடைய ஒப்பற்ற சிவபெருமானின் திருப்பழனப்பதியுள் புகுந்து (நாவுக்கரசர்) பெருங்காதலுடன் தம் பெருமானின் திருவடிகளைச் சார்ந்து பொங்கிய அன்புடன் வணங்கித் திருமுன்பு நின்று வணங்கியவராய்,
1476. புடைமாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொற்கழற்கீழ்
அடைமாலைச் சீலமுடை அப்பூதி அடிகள்தமை நடைமாணச் சிறப்பித்து நன்மைபுரி தீந்தமிழின் தொடைமாலைத் திருப்பதிகச் சொல்மாலை பாடினார்.
தெளிவுரை : பக்கத்தில் மாலைக் காலத்தில் தோன்றும் பிறைச் சந்திரனான மாலையையுடைய புரிசடையையுடைய இறைவரின் பொற்பாதங்களின் கீழ் அடைகின்ற இயல்பாகிய ஒழுக்கத்தையுடைய அப்பூதி அடிகளின் ஒழுக்கத்தை உயர்வாய்ப் பாராட்டி, நன்மையே சொல்லும் இனிய தமிழின் இனிய மாலையான திருப்பதிகச் சொன் மாலையைப் பாடினார்.
1477. எழும்பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம்மருங்குந்
தொழும்பணிமேற் கொண்டருளித் திருச்சோற்றுத் துறைமுதலாத் தழும்புறுகேண் மையில்நண்ணித் தானங்கள் பலபாடிச் செழும்பழனத் திறைகோயில் திருத்தொண்டு செய்திருந்தார்.
தெளிவுரை : எழுகின்ற படத்தையுடைய பாம்புகளும் இளம்பிறையும் ஆகியவற்றை அணிந்த சிவபெருமானை எங்கும் எல்லாப் பதிகளிலும் வணங்கும் பணியைத் தலை மேற்கொண்டு, திருச்சேற்றுத் துறை முதலான பதிகளை அடைந்து கோயில்கள் பலவற்றையும் பாடி வணங்கி செழுமையான திருப்பழனத்து இறைவரின் திருக்கோயிலில் திருத்தொண்டு செய்து கொண்டிருந்தார்.
1478. சாலநாள் அங்கமர்ந்து தந்தலைமேல் தாள்வைத்த
ஆலமார் மணிமிடற்றார் அணிமலர்ச்சே வடிநினைந்து சேலுலாம் புனற்பொன்னித் தென்கரையே றிச்சென்று கோலநீள் மணிமாடத் திருநல்லூர் குறுகினார்.
தெளிவுரை : பல நாட்கள் அந்தப் பதியில் தங்கியிருந்து தம் முடியின் மீது திருவடி சூட்டிய திருநீலகண்டரின் அழகிய மலர்ச் சேவடிகளை எண்ணிக் கொண்டு சேல்மீன்கள் உலவும் நீர்ச் செழிப்பையுடைய காவிரியின் தெற்குக்கரை வழியே சென்று, அழகு மிக்க நீண்ட மாடக் கோயிலான திருநல்லூரை நாவுக்கரசர் அடைந்தார்.
1479. அங்கணைந்து தம்பெருமான் அடிவணங்கி ஆராது
பொங்கியஅன் பொடுதிளைத்துப் போற்றிசைத்துப் பணிசெயுநாள் தங்குபெருங் காதலினால் தாமரைமேல் விரிஞ்சனொடு செங்கண்மால் அறிவரியார் திருவாரூர் தொழநினைந்தார்.
தெளிவுரை : அங்குச் சேர்ந்து தம் இறைவரின் திருவடிகளை வணங்கி, ஆராது பொங்கிய அன்புடன் ஆனந்தம் கொண்டு துதித்துத் திருப்பணி செய்து வந்தார். அந்நாளில் தங்கிய பெருங்காதலால், தாமரையில் இருக்கும் நான்முகனும் சிவந்த கண்ணையுடைய திருமாலும் அறிவதற்கரிய சிவபெருமானின் திருவாரூரைத் தொழுவதற்கு எண்ணம் கொண்டார்.
1480. நல்லூரில் நம்பரருள் பெற்றுப்போய்ப் பழையாறை
பல்லூர்வெண் தலைக்கரத்தார் பயிலுமிடம் பலபணிந்து சொல்லூர்வண் டமிழ்பாடி வலஞ்சுழியைத் தொழுதேத்தி அல்லூர்வெண் பிறையணிந்தார் திருக்குடமூக் கணைந்திறைஞ்சி.
தெளிவுரை : திருநல்லூரில் இறைவரிடம் அருள் விடைபெற்றுக் கொண்டு போய், பழையாறையில் பற்கள் வெளித்தோன்றவுள்ள வெண்மையான தலையோட்டைக் கையில் கொண்ட இறைவர் எழுந்தருளிய பல கோயில்களையும் வணங்கி, நல்ல சொற்கள் நிரம்பிய பாக்களைப் பாடி, அதன்பின் திருவலஞ்சுழியைச் சென்று தொழுது ஏத்திச் சென்று, மாலையில் தோன்றும் வெண்பிறையைச் சூடிய இறைவர் எழுந்தருளிய திருக்குடமூக்கினை அணைந்து பணிந்து,
1481. நாலூர்தென் திருச்சேறை குடவாயில் நறையூர்சேர்
பாலூரும் இன்மொழியாள் பாகனார் கழல்பரவி மேலூர்தி விடைக்கொடியார் மேவுமிடம் பலபாடிச் சேலூர்தண் பணைசூழ்ந்த தென்திருவாஞ் சியம்அணைந்தார்.
தெளிவுரை : திருநாலூரும், அழகான திருச்சேறையும், திருக்குடவாயிலும், திருநறையூரும் என்ற இத்தலங்களில் எல்லாம் வீற்றிருக்கின்ற பால் போன்ற இனிய சொல்லையுடைய பார்வதியம்மையாரின் பாகனாரான இறைவரின் திருவடிகளைப் பணிந்து துதித்துச் சென்று, விடையை மேற்கொள்ளும் ஊர்தியாகவும் கொடியாகவும் கொண்ட இறைவர் வீற்றிருக்கும் பல இடங்களையும் பாடிச் சென்று சேல் மீன்கள் உலாவும் தண்ணிய வயல்கள் சூழ்ந்த அழகான திருவாஞ்சியத்தை அடைந்தார்.
1482. பெருவாச மலர்ச்சோலைப் பெருவேளூர் பணிந்தேத்தி
முருகாரும் மலர்க்கொன்றை முதல்வனார் பதிபிறவும் திருவாரும் விளமருடன் சென்றிறைஞ்சி வாகீசர் மருவாரூர் எரித்தவர்தந் திருவாரூர் வந்தடைந்தார்.
தெளிவுரை : நாவரசர், மிக்க மணம் உடைய பூஞ்சோலைகள் சூழ்ந்த, திருப்பெருவேளூரைத் துதித்து, வாசனையுடைய கொன்றை மலர்களை அணிந்த இறைவரின் பிற தலங்களையும், திருவிளமரையும் சென்று வணங்கிப் பகைவரின் ஊர்களான திருபுரங்களை எரித்த சிவபெருமான் வீற்றிருக்கும் திருவாரூர் வந்து சேர்ந்தார்.
1483. ஆண்டஅர செழுந்தருள ஆரூரில் அன்பர்கள்தாம்
நீண்டசடை முடியார்பால் நிறைந்தஅருள் பெற்றுடையார் காண்டகுமா ளிகைமாடங் கவின்சிறந்தோங் கிடஎங்குஞ் சேண்திகழ்வீ திகள்பொலியத் திருமலிமங் கலஞ்செய்தார்.
தெளிவுரை : நாவரசர் வந்தருள, அதனை அறிந்த திருவாரூரில் இருந்த அடியார்கள் நீண்ட சடையையுடைய இறைவரின் நிறைந்த திருவருளைப் பெற்றவர்களாதலால் காண்பதற்கு இனிய மாளிகைகளையும் மாடங்களையும் முன்னைவிட அழகு திகழ வீதிகள் விளங்குமாறு, திருவுடைய மங்கல அணிகளைச் செய்தனர்.
1484. வல்அமண் குண்டர்தம் மாயை கடந்து மறிகடலில்
கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனுங்களிப்பால் எல்லையில் தொண்டர் எயிற்புறஞ் சென்றெதிர் கொண்டபோது சொல்லின் அரசர் வணங்கித் தொழுதுரை செய்தணைவார்.
தெளிவுரை : கொடிய மனவன்மையுடைய சமணர்களான கீழ்மக்களின் மாயையினைக் கடந்து, அலை மடியும் கடலில் கல்லையே மிதவையாகக் கொண்டு கரை ஏறி வந்தவரான பெரியவர் வந்தார் என்ற மகிழ்ச்சியால் அளவற்ற தொண்டர்கள் நகரமதிலின் வெளியே வந்து எதிர் கொண்ட போது நாவுக்கரசர் அந்தத் தொண்டர்களைத் தொழுது, துதித்து அணைபவராய்,
1485. பற்றொன் றிலாவரும் பாதகர் ஆகும் அமணர்தம்பால்
உற்ற பிணியொழிந் துய்யப்போந் தேன்பெற லாவதொன்றே புற்றிடங் கொண்டான்தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமென் றற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள்ளணைந்தார்.
தெளிவுரை : புற்றைத் தமக்கு இடமாகக் கொண்டு வீற்றிருக்கும் வன்மீக நாதரின் தொண்டர்களுக்குத் தொண்டராகும் புண்ணியமாவது, ஒன்றா<லும் பற்றத் தகாதவர்களாய்ப் பெரும்பாதகர்களான சமணர்களிடத்தில், பொருந்திய நோய் நீங்கி உய்யும் பொருட்டாக வந்து புகுதயானும், பெறத்தக்கது ஒன்றாகுமோ? என்று சொல்லித்தம் உணர்ச்சி என்பது அற்றவராய்த் திருவாரூர்த் திருவீதியுள் சேர்ந்தார்.
1486. சூழுந் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில்நண்ணி
வாழி திருநெடுந் தேவா சிரியன்முன் வந்திறைஞ்சி ஆழி வரைத்திரு மாளிகை வாயில் அவைபுகுந்து நீள்சுடர் மாமணிப் புற்றுகந் தாரைநேர் கண்டுகொண்டார்.
தெளிவுரை : தம்மைச் சூழ்ந்து கொண்ட அந்தொண்டர்களுடனே தோரணங்கள் தொங்க விடப்பட்ட வாயிலை அடைந்து வாழ்வையுடைய திருவினால் மிக்க தேவாசிரிய மண்டபத்தின் முன் வந்து வணங்கிச் சக்கரவான மலை போன்ற திருமாளிகையின் வாயிலுள் புகுந்து ஒளிவீசும் பெரிய அழகான புற்றில் வீற்றிருக்கும் இறைவரை நேரே கண்டுகொண்டார்.
1487. கண்டு தொழுது விழுந்து கரசர ணாதிஅங்கங்
கொண்ட புளகங்க ளாக எழுந்தன்பு கூரக்கண்கள் தண்டுளி மாரி பொழியத் திருமூலட் டானர்தம்மைப் புண்டரி கக்கழல் போற்றித் திருத்தாண் டகம்புனைந்து.
தெளிவுரை : பார்த்து, தொழுது, நிலம் பொருந்த விழுந்து வணங்கிக் கை கால் முதலான அங்கங்கள் எல்லாம் மயிர்ப்புளகம் ஏற்பட, எழுந்து அன்பு மிகுதலால் கண்களினின்றும் மழை போலப் பொழியத் திருமூலத்தான இறைவரை அவருடைய தாமரை போன்ற திருவடிகளைத் துதித்து, போற்றித் திருந்தொண்டகப் பதிகத்தைப் பாடி,
1488. காண்ட லேகருத் தாய்நினைந் தென்னுங் கலைப்பதிகம்
தூண்டா விளக்கன்ன சோதிமுன் நின்று துதித்துருகி ஈண்டு மணிக்கோயில் சூழ வலஞ்செய் திறைஞ்சியன்பு பூண்ட மனத்தொடு நீள்திரு வாயிற் புறத்தணைந்தார்.
தெளிவுரை : அதன் பின்னர்க் காண்டலே கருத்தாய் நினைத்து என்ற தொடக்கமுடைய கலைப் பதிகத்தைத் தூண்டா விளக்கைப் போன்ற சுய ஒளியான புற்றிடம் கொண்ட நாதர் திருமுன்பு நின்று துதித்து உள்ளம் உருகி, அழகிய கோயிலை வலமாகச் சுற்றி வந்து இறைஞ்சி அன்பு கொண்ட உள்ளத்துடன் நீண்ட திருவாயிலின் பக்கத்தை அடைந்தார்.
1489. செய்யமா மணியொளிசூழ் திருமுன்றின் முன்தேவா சிரியன் சார்ந்து
கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூ ராரைக் கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வ னேன்என் றெய்தரிய கையறவாந் திருப்பதிகம் அருள்செய்தங் கிருந்தார் அன்றே.
தெளிவுரை : அவர், சிவந்த மணிகளின் பேரொளி விளங்கும் திருமுற்றத்தின் முன்னம் உள்ள தேவாசிரிய மண்டபத்தைச் சேர்ந்து, அரும்புகள் மிக்க பூஞ்சோலைகளில் குயில்களை கூவவும் மயில்கள் அகவவும் உள்ள திருவாரூரில் வீற்றிருக்கின்ற பெருமானைக் கைகளைக் கூப்பி வணங்காததால், நான் கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வன் போன்றேன் என்று கருத்தால் அடைவதற்கு அரிய மிக்க துன்பத்தின் மிகுதியால் திருப்பதிகத்தைப் பாடி, அங்குத் தங்கியிருந்தார். இங்குப் பாடியது மெய்யேலாம் எனத் தொடங்கும் பதிகம்.
1490. மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாருந் திருவடிவும் மதுர வாக்கில்
சேர்வாகுந் திருவாயில் தீந்தமிழின் மாலைகளுஞ் செம்பொற் றாளே சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப் பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்தேத்திப் பரவிச் செல்வார்.
தெளிவுரை : மார்பு நிறைய வடியும் கண்ணீர் மழைவார்கின்ற திருவடிவம், மதுரமான வாக்கில் இனிய தமிழ்ப்பதிகம் சேரும் திருவாயும், இறைவரின் பொன் திருவடிகளையே சார்பாகக் கொண்ட திருமனமும், திருஉழவாரமான ஒப்பற்ற படையும், இவற்றைக் கொண்டுள்ள தாமும் ஆகிய இவையுமேயாய், உலகம் எல்லாம் வாழும் பொருட்டுத் திருவீதிப் பணிகளைச் செய்து வணங்கித் துதித்துப் பரவி செல்பவராகி,
1491. நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப் புற்றிடங்கொள் நிருத்தர் தம்மைக்
கூடியஅன் பொடுகாலங் களில்அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப் பாடிளம்பூ தத்தினான் எனும்பதிகம் முதலான பலவும் பாடி நாடியஆர் வம்பெருக நைந்துமனங் கரைந்துருகி நயந்து செல்வார்.
தெளிவுரை : புகழ்மிக்க திருவாரூரில் மணிப்புற்றினை நிலவும் இடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ள கூத்தரை, பொருந்திய அன்புடன் எல்லாக் காலங்களிலும் சேர்ந்து வணங்கிக் குற்றம் இல்லாத வாய்மையுடைய பாடிளம் பூதத்தினான் எனத் தொடங்கும் பதிகத்தையும், மற்றும் பல பதிகங்களையும் பாடி, உள்ளத்தால் நாடிய ஆசை மிக மனம் வருந்திக் கரைந்து உருகி நயந்து செல்பவராய்.
1492. நான்மறைநூற் பெருவாய்மை நமிநந்தி அடிகள்திருத் தொண்டின் நன்மைப்
பான்மைநிலை யால்அவரைப் பரமர்திரு விருத்தத்துள் வைத்துப் பாடித் தேன்மருவுங் கொன்றையார் திருவாரூர் அரனெறியில் திகழுந் தன்மை ஆனதிற மும்போற்றி அணிவீதிப் பணிசெய்தங் கமரும் நாளில்.
தெளிவுரை : நான்கு வேதங்களிலும் மற்ற ஞான நூல்களிலும் பேசப்படும் பெருமை கொண்ட வாய்மையால் சிறந்த நமிநந்தியடிகளின் தொண்டினது நலச்சிறப்பால், பரமரையே போற்றுகின்ற திருவிருத்தப் பதிகத்துள் அவரை வைத்துப் பாடித் தேன் பொருந்திய கொன்றை மலரையுடைய சிவபெருமான், திருவாரூர் அரன் நெறியில் விளங்க, வீற்றிருக்கும் சிறப்பையும் போற்றி அழகிய திருவீதிப் பணியையும் செய்து அங்கு விரும்பித் தங்கியிருக்கும் காலத்தில்,
1493. நீராருஞ் சடைமுடியார் நிலவுதிரு வலிவலமும் நினைந்து சென்று
வாராரு முலைமங்கை உமைபங்கர் கழல்பணிந்து மகிழ்ந்து பாடிக் காராருங் கறைக்கண்டர் கீழ்வேளூர் கன்றாப்பூர் கலந்து பாடி ஆராத காதலினால் திருவாரூர் தனில்மீண்டும் அணைந்தார் அன்றே.
தெளிவுரை : கங்கையாறு தங்கிய சடைமுடியையுடைய பெருமானின் திருவலிவலத்தையும் நினைந்து சென்று கச்சை அணிந்த முலையையுடைய மங்கையான உமையை ஒரு பாகத்தில் கொண்டவரின் திருவடிகளை வணங்கி மகிழ்ந்து பாடித் திருநீலகண்டரது திருக்கீழ்வேளூர், திருக்கன்றாப்பூர் முதலியவற்றையும் போய் மனம் கலந்த ஒருமைப்பாட்டுடன் பாடி நிறைவுறாத ஆசை மிகுதியால் திருவாரூர்க்குத் திரும்பவும் வந்தார். இப்போது பாடப்பட்டவை பாடிளம் பூதத்தினானும் என்ற பதிகம், சூலப்படை யானை என்று தொடங்கும் பதிகம், எப்போதும் இறை எனத்தொடங்கும் திருக்குறுந்தொகை, கொக்கரை குழல் எனத்தொடங்கும் திருக்குறுந்தொகை, படுகுழிப் பவ்வத்தன்ன என்ற திருநேரிசை, உயிராவணம் பாதித்தன் நீற்றினையும் திருமணியை எம்பந்த இடர் கெடுமாறு ஒருவனாய் உலகேத்த எனத்தொடங்கும் திருத்தாண்டகங்களும் வேம்பினை எனத்தொடங்கும் திருவிருத்தம் முதலியன.
1494. மேவுதிரு வாதிரைநாள் வீதிவிடங் கப்பெருமாள் பவனி தன்னில்
தேவருடன் முனிவர்கள்முன் சேவிக்கும் அடியார்க ளுடன்சே வித்து மூவுலகுங் களிகூர வரும்பெருமை முறைமையெலாங் கண்டு போற்றி நாவினுக்குத் தனியரசர் நயக்குநாள் நம்பர்திரு அருளி னாலே.
தெளிவுரை : பொருந்தும் திருவாதிரைத் திருநாளில் வீதி விடங்கப் பெருமான் எழுந்தருளும் திருவுலாவில் தேவர்களுடனே முனிவர்களுமாகிய கூட்டத்தில் அவர்களுக்கெல்லாம் முன்னால் நின்று வணங்கும் அடியார்களுடனே கூடி வணங்கி, மூன்று உலகங்களும் மகிழ்ச்சி அடைந்திட வருகின்ற பெருமுறைகளை எல்லாம் தாம் கண்ணாரக் கண்டு துதித்து, ஒப்பில்லாத நாவுக்கரசர் விரும்பித் தங்கியிருந்தர். அவ்வாறு வாழும் நாட்களில் இறைவரின் திருவருளால்,
1495. திருப்புகலூர் அமர்ந்தருளுஞ் சிவபெருமான் சேவடிகள் கும்பிட் டேத்தும்
விருப்புடைய உள்ளத்து மேவியெழுங் காதல்புரி வேட்கை கூர ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுதகன்றங் குள்ளம் வைத்துப் பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர் பதிபிறவும் பணிந்து போந்தார்.
தெளிவுரை : திருப்புகலூரில் வீற்றிருக்கின்ற சிவபெருமானின் திருவடிகளைத் துதிக்கின்ற விருப்பத்தைக் கொண்ட திருவுள்ளத்தில், பொருந்தி எழுகின்ற காதல் இடைவிடாது பெருகும் வேட்கையால் ஓங்க, அங்ஙனமே செல்வதற்கு எண்ணியவராய்த் திருவாரூரை ஒருவாறாகத் தொழுது நீங்கித் தம் கருத்தை அங்குத் திருவாரூரிலே வைத்து, மலையரையன் பாவையான உமையம்மையாரை இடப்பாகத்தில் வைத்த பெருமான் எழுந்தருளிய மற்றப் பதிகளையும் வணங்கிச் சென்றார்.
1496. அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன்கண் நின்றும்
பன்னாகப் பூணணிவார் பயின்றதிருப் பதிபலவும் பணிந்து செல்வார் புன்னாக மணங்கமழும் பூம்புகலூர் வந்திறைஞ்சிப் பொருவில் சீர்த்தி மின்னாரும் புரிமுந்நூல் முருகனார் திருமடத்தில் மேவுங் காலை.
தெளிவுரை : அக்காலத்தில் ஞானசம்பந்தர் சீகாழியினின்று புறப்பட்டுப் பாம்புகளை அணிந்த சிவபெருமான் விளங்கிய திருப்பதிகங்கள் பலவற்றையும் அடைந்து பணிந்து செல்வார். சுரபுன்னை மலர்களின் மணம் கமழும் பூம்புகலூரில் சென்று இறைவனைக் கண்டு ஒப்பற்ற சிறப்பையுடைய முப்புரிநூல் அணிந்த முருக நாயனாரின் திருமடத்தில் எழுந்தருளியிருக்கும் காலத்தில்,
1497. ஆண்டஅர செழுந்தருளி அணியாரூர் மணிப்புற்றில் அமர்ந்து வாழும்
நீண்டசுடர் மாமணியைக் கும்பிட்டு நீடுதிருப் புகலூர் நோக்கி மீண்டருளி னாரென்று கேட்டருளி எதிர்கொள்ளும் விருப்பி னோடும் ஈண்டுபெருந் தொண்டர்குழாம் புடைசூழ வெழுந்தருளி எதிரே சென்றார்.
தெளிவுரை : சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட நாவுக்கு அரசர் எழுந்தருளிப் போந்து அணியுடைய திருவாரூரில் மணிப்புற்றில் விரும்பி வீற்றிருக்கும் நீண்ட சுடரையுடைய மாமணியை வணங்கிப் பூம்புகலூருக்கு வந்தருளினார் என்பதைக் கேட்டறிந்து, அவரை எதிர்கொண்டு வரவேற்கின்ற விருப்பத்தினால், ஞானசம்பந்தர் நெருங்கிய தொண்டர் கூட்டம் தம்மைச் சுற்றிச் சூழ்ந்து வர எழுந்தருளி எதிரே போனார்.
1498. கரண்டமலி தடம்பொய்கைக் காழியர்கோன் எதிரணையுங் காதல் கேட்டு
வரன்றுமணிப் புனற்புகலூர் நோக்கிவரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் திரண்டுவருந் திருநீற்றுத் தொண்டர்குழாம் இருதிறமுஞ் சேர்ந்த போதில் இரண்டுநில வின்கடல்கள் ஒன்றாகி அணைந்தனபோல் இசைந்த அன்றே.
தெளிவுரை : நீர்க் காக்கைகள் நிறைந்த பெரிய நீர்நிலைகளையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தர் அங்ஙனம் தம்மை எதிர்கொண்டு அணைகின்ற அன்புச்செயலைக் கேட்டு மணிகளைக் கொழித்து வரும் நீர்வளம் கொண்ட திருப்புகலூரை நோக்கி வருகின்ற நாயனார் மன மகிழ்ச்சியுடன் எழுந்தருளி வந்தனர். கூடிப்பெருகி வருகின்ற திருநீற்றுத் தொண்டர் கூட்டம் இரண்டு திறத்திலும் கூடிய போதில், நிலவுக் கடல்கள் இரண்டு ஒன்று கூடி அணைந்தன போல் பொருந்தின. அப்போதே,
1499. திருநாவுக் கரசரெதிர் சென்றிறைஞ்சத் சிரபுரத்துத் தெய்வ வாய்மைப்
பெருஞான சம்பந்தப் பிள்ளையார் எதிர்வணங்கி அப்ப ரேநீர் வருநாளில் திருவாரூர் நிகழ்பெருமை வகுத்துரைப்பீர் என்று கூற அருநாமத் தஞ்செழுத்தும் பயில்வாய்மை அவரு மெதிர் அருளிச் செய்வார்.
தெளிவுரை : எதிரே சென்று நாவுக்கரசர் வணங்க, சிரபுரத்தில் வந்தருளிய கடவுட்டன்மை பொருந்திய பெருமையுடைய திருஞானசம்பந்தப் பெருமான் எதிர் வணங்கி, அப்பரே நீர் வரும்நாளில், திருவாரூரில் நிகழும் பெருமையை வகுத்துக் கூறுவீராக! என வினவ, சிவனது நாமமான அஞ்செழுத்தையும் மிகவும் பயில்கின்ற வாய்மை கொண்ட நாவுக்கரசரும் பதில் சொல்வராய்,
1500. சித்தம் நிலாவுந் தென்திரு வாரூர் நகராளும்
மைத்தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ்செல்வம் இத்தகை மைத்தென் றென்மொழி கேனென் றுரைசெய்தார் முத்து விதான மணிப்பொற் கவரி மொழிமாலை.
தெளிவுரை : உள்ளத்தில் நிலவும் தென் திருவாரூர் நகரத்தை ஆள்கின்ற நீலகண்டரான சிவபெருமானின் திருவாதிரைத் திருநாளின் மகிழ்வுடைய செல்வமானது இத்தகைய தன்மை கொண்டது என எவ்வாறு கூறுவேன்! என்று முத்து விதானம் மணிப் பொற்கவரி எனத் தொடங்கும் பதிகமான சொல் மாலையைப் பாடினார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக