செவ்வாய், 8 நவம்பர், 2011

முதல் திருமுறையில் பாடிய பாடல்(பகுதி-3) | தேவாரம்


ராதே கிருஷ்ணா 08 - 11 - 2011 

முதல் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-3) | தேவாரம்


விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க     http://temple.dinamalar.com/

http://temple.dinamalar.com/

முதல் திருமுறையில் பாடிய பாடல்(பகுதி-3) | தேவாரம்



93. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1003. நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே.
தெளிவுரை : பத்தியுடன் முதுகுன்று மேவும் ஈசன் திருமுன்னர் நின்று, பக்திச் சிரத்தையுடன் மலர் தூவிப் போற்றும் உங்களுக்கு எக் காலத்திலும் இன்பம் பெருகும்.
இது பக்தர்களை முன்னிலைப்படுத்தி உரைக்கு அருளுரை ஆயிற்று.
1004. அத்தன் முதுகுன்றைப் பத்தி யாகிநீர்
நித்தம் ஏத்துவீர்க்கு உயத்தல் செல்வமே.
தெளிவுரை : அத்தனாக விளங்கும் முதுகுன்றுடைய ஈசனைப் பக்தியுடன் போற்றித் துதிக்கும் உங்களுக்குக் கிடைத்தது பயன்தரத் தக்கதான செல்வம் ஆகும்.
1005. ஐயன் முதுகுன்றைப் பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர் வையம் உமது ஆமே.
தெளிவுரை : பொய்ம்மையான பந்தபாசம் முதலான மலக்கட்டிகளைக் கெட்டு அழியுமாறு, தன்னை மறந்து, முதுகுன்று நகரில் மேவும் தலைவனாகிய ஈசன் திருமுன்னர் நின்று, கைகளைத் தலைக்குமேல் கூப்பி வணங்குவீராக. இவ்வுலகமானது உமக்கு உரியதாகும்.
1006. ஈசன் முது குன்றை நேசம் ஆகிநீர்
வாச மலர்தூவப் பாசவினை போமே.
தெளிவுரை : ஈசனார் விரும்பும் முதுகுன்றத்தை விரும்பி நாடி, அங்கு வீற்றிருக்கும் பெருமானை மலர் தூவிப் போற்றி வணங்குவீராக. அது உங்களைப் பாசத்தில் ஆழ்ந்தும் வினையை நீக்கும்.
1007. மணிஆர் முதுகுன்றைப் பணிவார் அவர்கண்டீர்
பிணியாயின கெட்டுத் தணிவார் உலகிலே.
தெளிவுரை :  மணிகள் பொருந்திய முதுகுன்றத்தில் விளங்கும் பெருமானைப் பணிபவர்கள், உடற்பிணி யாவும் நீங்கப் பெறுவர். உலகில் சாந்த மயமான வாழ்க்கையை உடையவர்கள் ஆவார்கள்.
1008. மொய்யார் முதுகுன்றில் ஐயா எனவல்லார்
பொய்யார் இரவோர்க்குச் செய்யாள் அணியாளே.
தெளிவுரை : மக்கள் குழுமி முதுகுன்றநாதரை ஐயா எனப் போற்றி பக்தியால் இரந்து வணங்குபவர்களுக்குப் பொய்க்காது, திருமகள் கடாட்சம் கைவரப்பெறும்.
1009. விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார்
படையாயின சூழ உடையார் உலகமே.
தெளிவுரை : முதுகுன்றில் விளங்கும் இடப வாகனத்தை உடைய நாதரை, இடைவிடாது வணங்கித் தொழுபவர்கள், படைசூழ இவ்வுலகத்தில் யாவும் உடையவர்களாய்ப் புகழோடு விளங்குவர்.
1010. பத்துத் தலையோனைக் கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமினே.
தெளிவுரை : பத்துத் தலைகளுடன் கூடிய இராவணன் மலையைப் பெயர்த்த ஞான்று கத்தித் துன்புறுமாறு விரலை ஊன்றி, அடர்த்த முதுகுன்றநாதரைப் போற்றி நெருங்கிச் சூழ்ந்து பணிவீராக.
1011. இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே.
தெளிவுரை : திருமாலும், பிரமனும் அறிய முடியாதவனாய் விளங்கி நின்ற ஒப்பற்றவராகிய முதுகுன்றத்தில் விளங்கும் நாதரை, பக்தியால் உருகி நினைத்து மகிழ்பவர்கள், மேற்கொள்ளும் எல்லா செயல்களும் துலங்கி வளர்ந்து பெருகி நிறைவேறும்.
1012. தேரர் அமணரும் சேரும் வகையில்லான்
நேரில் முதுகுன்றை நீர்நின்று உள்குமே.
தெளிவுரை : பௌத்தர், சமணர் சேர்ந்து வணங்கும் வகையில்லாத தன்மையராய் இருக்க, ஒப்புமையில்லாத முதுகுன்றத்தின் நாதரை, நீவிர் உறுதியாகப் பற்றி நின்று தியானிப்பீர்களாக.
1013. நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே.
தெளிவுரை : முதுகுன்றம் மேவிய பழமலை நாதரை, உறுதியாகப் பற்றி நின்று நன்மை தரும் ஆக்கத்தையுடைய ஞானசம்பந்தன், மனம் ஒன்றியவாறு உரைத்த இத் திருப்பதிகத்தை உரைக்க வல்லவர்கள், எல்லாக் காலங்களிலும் தாம் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றியடைந்து உயர்ந்த நிலையைப் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
94. திருவாலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)
திருச்சிற்றம்பலம்
1014. நீல மாமிடற்று ஆல வாயினான்
பாலது ஆயினார் ஞாலம் ஆள்வாரே.
தெளிவுரை : நீலகண்டத்தை உடைய ஆலவாய்க் கடவுள்பால் மனம் ஒன்றி நினைத்துத் திருவடியைத் தொழுபவர்கள், உலகத்தில் உள்ள பேறுகளைப் பெற்றவர் ஆவர்.
1015. ஞாலம் ஏழுமாம் ஆல வாயிலார்
சீலமே சொலீர் காலன் வீடவே.
தெளிவுரை : ஏழு உலகங்களையும் ஆட்கொள்ளும் ஆலவாய்க் கடவுளை வணங்கி, அப்பெருமான் அருட்குணங்களைச் சொல்வீராக காலன் வீழ்ந்து மடிவான்.
1016. ஆல
நீழலார் ஆல வாயிலார்
கால காலனார் பால தாமினே
தெளிவுரை :  காலனுக்குக் காலன் ஆகிய ஆலவாய்க் கடவுள், ஆல் நிழலில் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருள் உணர்த்தியவர். நம்பால் உள்ளவர்தாம்.
1017. அந்தமில் புகழ் எந்தை ஆலவாய்
பந்தி யார்கழல் சிந்தை செய்ம்மினே.
தெளிவுரை : எல்லையுற்ற புகழுடைய எந்தையாகிய ஆலவாய்க் கடவுளின் அருள்புரிந்து ஈர்க்கும் திருக்கழலைச் சிந்தை செய்வீராக.
1018. ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய்
பாடி யேமனம் நாடி வாழ்மினே.
தெளிவுரை : வெற்றியை உடைய இடபத்தை வாகனமாகக் கொண்டு கூடல் ஆலவாயில் விளங்கும் கடவுளை மனம் விரும்பிப் பாடி மகிழ்ந்து வாழ்வீராக.
1019. அண்ணல் ஆலவாய் நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத் திண்ணம் இன்பமே.
தெளிவுரை : ஆலவாயில் மேவும் அண்ணலை அடைந்து தியானம் செய்து வணங்குபவர்கள், இன்பம் உறுதியாகப் பெறுவர்.
1020. அம்பொன் ஆலவாய் நம்ப னார்கழல்
நம்பி வாழ்வர் துன்பம் வீடுமே.
தெளிவுரை : அழகுடன் ஒளிரும் ஆலவாயில் வீற்றிருக்கும் நம்பனாகிய ஈசன் திருக்கழலை நம்பி வாழ்க்கை நடத்துபவர் துன்பம் கெடும்.
1021. அரக்க னார்வலி நெருக்கன் ஆலவாய்
உரைக்கும் உள்ளத்தார்க்கு இரக்கம் உண்மையே.
தெளிவுரை : கயிலை மலையை எடுத்த அரக்கனாகிய இராவணன் வல்லமையை நெருக்கியவனாகிய ஆலவாய் அடிகளை, பக்திப் பெருக்கினால் போற்றித் துதிக்கும் உள்ளம் உடையவர்களுக்கு, ஈசன் அருள் கிடைப்பது உண்மை.
1022. அருவன் ஆலவாய் மருவி னான்றனை
இருவர் ஏத்தநின்று உருவம் ஓங்குமே.
தெளிவுரை : திருமால், பிரமன் ஆகிய இருவரும் தேடிய காலத்தில் கண்ணுக்குப் புலப்படாது அருவனாய் விளங்கி நின்று, பின்னர் அவ் இருவரும், ஆலவாய் மேவிய கடவுளை ஏத்தி நின்று, வழிபட்டு நிற்க, தோற்றம் கொண்டு உருவப் பொருளாகித் தீப்பிழம்பாய் ஓங்கினான் ஈசன்.
1023. ஆர நாகமாம் சீரன் ஆலவாய்த்
தேர்அ மண்செற்ற வீரன் என்பரே.
தெளிவுரை : புத்தகர்களும், சமணர்களும் பகையாகக் கருதியவன், நாகத்தை மாலையாகக் கொண்டு புகழ் மிக்க ஆலவாய்க் கடவுள்.
1024. அடிகள் ஆலவாய்ப் பிடிகொள் சம்பந்தன்
முடிவில் இன்தமிழ் செடிகள் நீக்குமே.
தெளிவுரை : உலகில் நன்மைகள் சேர்க்கும் ஞானசம்பந்தன், ஆலவாய் மேவியுள்ள அடிகளைப் பற்றி, எல்லையற்ற இனிய தமிழ்ப் பதிகத்தை உரைக்க, அதனை ஓதுபவர்கள் தீமைகளிலிருந்து நீங்கியவராவர்.
திருச்சிற்றம்பலம்
95. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1025. தோடொர் காதினன் பாடு மறையினன்
காடு பேணி நின்று ஆடு மருதனே.
தெளிவுரை : காதில் ஒரு தோடு அணிந்தவன்; வேதம் மொழிபவன்; சுடுகாட்டை இடமாகப் பேணி நின்று நடனம் புரியும் திருவிடைமருதூரில் வீற்றிருக்கும் நாதனே.
1026. கருதார் புரம்எய்வர் எருதே இனிதுஊர்வர்
மருதே இடமாகும் விருதாம் வினைதீர்ப்பே.
தெளிவுரை : ஈசன், பகைகொண்ட முப்புர அசுரர்களை அழிப்பர்; இடபவாகனத்தில் இனிது ஊர்ந்து வருவர்; திருவிடைமருதூரில் பெருமையாக இடம் கொண்டு வீற்றிருப்பர்; அப்பெருமானை வணங்க, வினை தீர்ந்து விடும்.
1027. எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரைப்
பண்ணின் மொழிசொல்ல விண்ணும் தமதாமே.
தெளிவுரை : இடைமருதில் வீற்றிருக்கும் பெருமானாகிய ஈசனை, எண்ணித் துதித்து வழிபடும் அடியவர்கள், பண்ணுடன் இசைத்துப் பாடித் தோத்திரம் செய்ய, விண்ணுலகும் தமதாக்கிக் கொள்வார்கள்.
1028. விரியார் சடைமேனி எரியார் மருதரைத்
தரியாது ஏத்துவார் பெரியார் உலகிலே.
தெளிவுரை : அங்கையில் நெருப்பு ஏந்திய ஈசன், இடை மருதூரில் திகழ்பவர்; விரிந்த சடையை உடையவர். அப் பெருமானைத் தாமதம் செய்யாது ஏத்தி வழிபடுபவர் உலகத்தில் பெருமை வாய்ந்தவர் ஆவர்.
1029. பந்த விடையேறும் எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே.
தெளிவுரை : சேவை எனும் பந்தத்தில் விளங்கும் இடபத்தை வாகனமாக உடைய எந்தையராகிய இடைமருதூரில் விளங்கும் ஈசனை, சிந்தையில் தேக்கி வழிபாடு செய்பவர்கள், நல்ல புத்தியை வாய்க்கப் பெற்றவர்கள் ஆவார்கள்.
1030. கழலும் சிலம்புஆர்க்கும் எழிலார் மருதரைத்
தொழிலே பேணுவார்க்கு உழலும் வினைபோமே.
தெளிவுரை :  ஒரு காலில் வீரக்கழலும், மற்றொரு காலில் சிலம்பும் ஒலிக்க, நடனம் புரிகின்ற எழில் மிக்க இடை மருதில் விளங்குபவர், ஈசன். அப்பெருமானை, எஞ்ஞான்றும் மனத்தால் சிந்தித்துத் தொழுதும், பூசித்துப் பேணுதல் செய்தும், விளங்கி அன்பு கொள்ளும் அடியவர்களுக்கு, உழலும் வினை நீங்கிச் செல்லும்.
1031. பிறைஆர் சடையண்ணல் மறைஆர் மருதரை
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே.
தெளிவுரை : வேதத்தின் நிறைவாகிய இடைமருதூரில் விளங்குபவராகிய ஈசன், பிறைச் சந்திரனை இனிது சடையில் சூடிய அண்ணல் ஆவார். அப்பெருமானை, மனம், புத்தி, அகங்காரம், சித்தம் எனப்படும் அந்தக் கரணங்கள் நான்கும் பதியுமாறு நினைந்து வழிபடுபவர்களுக்கு, இன்ப வாழ்க்கை நிலையாகி, எக்காலத்திலும் குறைவில்லாது விளங்கும்.
1032. எடுத்தான் புயந் தன்னை அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட விடுத்தார் வேட்கையே.
தெளிவுரை : கயிலை மலையைப் பெயர்த்த இராவணனுடைய தோள்களை அடர்த்தவராகிய ஈசன், விளங்கும் திருவிடைமருதூரில் வீற்றிருக்க, அப்பெருமானை, அழகிய மலர்களால் மாலை தொடுத்துச் சூடி வணங்குபவர்களுக்குப் பற்றானது நீங்கும்.
1033.இருவர்க்கு எரியாய உருவ மருதரைப்
பரவி யேத்துவார் மருவி வாழ்வரே.
தெளிவுரை : திருமால், பிரமன் ஆகிய இருவரும், ஈசனை அறிய முடியாதவாறு ஏக்கம் கொண்டு நின்று, வணங்கிப் போற்ற, தீப்பிழம்பாகி உருவத் தோற்றம் வெளிப்படுத்திய இடைமருது நாதரை வணங்கிப் போற்றும் அடியவர்கள், உலகியலில் தேவைப்படும் எல்லாவற்றையும் பொருந்தப் பெற்று, இனிது வாழ்வார்கள்.
1034. நின்றுஉண் சமண்தேரர் என்று மருதரை
அன்றி உரைசொல்ல நன்று மொழியாரே.
தெளிவுரை : நின்று கொண்டு உணவு கொள்ளும் சமணரும் பௌத்தரும், திருவிடைமருதூரில் வீற்றிருக்கும் பெருமானைத் தவிர, பிறவற்றை மனங் கொண்டு பேசுவதால், அவர்கள் வாயிலிருந்து நற்சொற்கள் வராது. அப் பெருமானை வணங்குபவர்கள் வாயிலிருந்து நல்லுரைகள் தோன்றும் என்பது குறிப்பு.
1035. கருது சம்பந்தன் மருதர் அடிபாடிப்
பெரிதும் தமிழ்சொல்லப் பொருத வினைபோமே.
தெளிவுரை : ஈசனையே எஞ்ஞான்றும் மனம் மொழி மெய்களால் கருதிப் போற்றும் ஞானசம்பந்தன், வணங்கிப் பாடிப் போற்றி, பெரிதாகும் கருத்துக்களும் பக்திமையும் மல்க, உரைத்த இனிமை மிகுந்த இத் திருப்பதிகத்தைச் சொல்ல, நம்மை வருத்திக் கொண்டிருக்கும் வினையானது நீங்கிச் செல்லும்.
திருச்சிற்றம்பலம்
96. திருஅன்னியூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், வன்னியூர், திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1036. மன்னி யூரிறை சென்னி ஆர்பிறை
அன்னி யூர்அமர் மன்னு சோதியே.
தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடி ஊர்தோறும் ஒளிர்ந்து அருள் தரும் ஈசன், அன்னியூரில் விளங்கும் சோதியே.
1037. பழகும் தொண்டர்வம் அழகன் அன்னியூர்க்
குழகன் சேவடி தொழுது வாழ்மினே.
தெளிவுரை : ஈசன் திருவடியைத் தொழுது, பக்தி மிக்க அடியார்களுடன் பழகுபவர்களே ! வம்மின். அன்னியூரில் அழகனாய் விளங்கும் பெருமான் திருவடியைத் தொழுது வாழ்வீர்களாக.
1038. நீதி பேணுவீர் ஆதி அன்னியூர்ச்
சோதி நாமமே ஓதி உய்ம்மினே.
தெளிவுரை : நியதிப்படி விளங்க வேண்டும் என்று கருதுபவர்களே ! ஆதிப் பிரானாகிய, அன்னியூரில் விளங்கும் சோதியின் திருநாமத்தை ஓதி, உய்தி பெறுவீராக.
1039. பத்தர் ஆயினீர் அத்தர் அன்னியூர்ச்
சித்தர் தாள்தொழ முத்தர் ஆவரே.
தெளிவுரை : ஈசன்பால் பேரன்பு பூண்டு, பக்திமை கொண்டுள்ளீர். அதன் தொடர்பாக முத்திநலம் பெற்றவர் ஆக வேண்டும். எனவே, எல்லோருக்கும் இனிமையான தலைவராக அன்னியூரில் வீற்றிருக்கும் பெருமானாகிச் சித்தராக உள்ளவர்தம் திருவடியை, வணங்கித் துதி செய்வீராக. அது முத்தி நலனைக் கூட்டுவிக்கும்.
1040. நிறைவு வேண்டுவீர் அறவன் அன்னியூர்
மறையு ளான்கழற்கு உறவு செய்ம்மினே
தெளிவுரை : நிறைவான இனிய வாழ்க்கை அமைய வேண்டும் என்று கருதுபவர்களே ! அறத்தின் வடிவினராகிய, அன்னியூரில் வீற்றிருக்கும், வேதப் பொருளாகும் ஈசன் கழலை, நாள்தோறும் சென்று வழிபடுவீராக.
1041. இன்பம் வேண்டுவீர் அன்பன் அன்னியூர்
நன்பொன் என்னுமின் உம்பர் ஆகவே.
தெளிவுரை : இன்பப் பெருக்கில் திளைக்க வேண்டும் என விரும்புபவர்களே ! எல்லோருக்கும் அன்புடையவனாக அன்னியூரில் வீற்றிருக்கும் ஈசன் நல்ல பொன் போன்றவன் என்பீராக. தேவர்கள் ஆகலாம்.
1042. அந்த ணாளர்தம் தந்தை அன்னியூர்
எந்தை யேஎனப் பந்த நீங்குமே.
தெளிவுரை : தூய நெறியில் நின்று வேதம் ஓதும் அந்தணர்கள் தம் தந்தை, அன்னியூரில் விளங்கும் எந்தையே என்று துதித்துப் போற்ற, பந்தபாசம் முதலான கட்டுகளாய் உள்ள தடைகள் நீங்கும்.
1043.தூர்த்த னøச்செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்த மாஅடைந்து ஏத்தி வாழ்மினே.
தெளிவுரை : கொடியவனாகிய இராவணனைச் செருக்கு அழியுமாறு செற்று அடக்கி தீர்த்தன், அன்னியூரில் வீற்றிருக்கும் பெருமான். அப்பெருமானை, விருப்பத்தோடு சார்ந்து அன்பு பெருகப் போற்றி வாழ்வீராக.
1044. இருவர் நாடிய அரவன் அன்னியூர்
பரவு வார்விண்ணுக்கு ஒருவர் ஆவரே.
தெளிவுரை : திருமாலும் பிரமனும் நாடிய அரவினை உடையவனாகிய, அன்னியூரில் வீற்றிருக்கும் பெருமானைப் பரவி, பக்திப் பெருக்கினால் தொழுபவர்கள், விண்ணுலகில் ஒப்பற்றவராய் விளங்கும் தேவேந்திரராவார்கள்.
1045. குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர்த்
தொண்டு ளார்வினை விண்டு போகுமே.
தெளிவுரை : மாற்றுக் கருத்துடையவர்களாகிய சமணர், பௌத்தர் ஆகியோர், அண்டி நெருங்க முடியாதவனாகிய அன்னியூர் மேவும் ஈசன், தொண்டு செய்பவர்களுடைய வினையானது சிதறிப் போகுமாறு அருள் புரிபவன்.
1046. பூந்த ராய்பந்தன் ஆய்ந்த பாடலால்
வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்மினே.
தெளிவுரை : பூந்தராய் என்று சொல்லப்படும் சீகாழியில் மேவும் ஞானசம்பந்தரின், மெய்ப்பொருள் விளங்கும் பாடலால், அன்னியூரில் விளங்கும் ஈசனைப் போற்றிய இத் திருப்பதிகத்தைப் பொருந்த உரத்து வாழ்வீராக.
திருச்சிற்றம்பலம்
97. திருப்புறவம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1047. எய்யாவென்றித் தானவர்ஊர்மூன்று எரிசெய்த
மையார்கண்டன் மாதுமைவைகும் திருமேனிச்
செய்யான்வெண்ணீறு அணிவான்திகழ்பொன் பதிபோலும்
பொய்யா நாவின் அந்தணர்வாழும் புறவம்மே.
தெளிவுரை : எக்காலத்திலும் வெற்றியைக் கொள்ள முடியாதவர்களாகிய மூன்று புரங்களையுடைய அசுரர்களின் கோட்டைகளை எரிசெய்த பெருமான், நீலகண்டத்தை உடைய கடவுள். அப்பெருமான், சிவந்த திருமேனி உடையவன்; உமாதேவியைப் பாகமாக உடையவன்; திருவெண்ணீறு அணிபவன். அப்பெருமான் வீற்றிருக்கும் அழகிய பதியானது. பொய்ம்மை கலவாத வேதத்தை ஓதும் நாவினையுடைய அந்தணர்கள் வாழும் புறவம் எனப்படும் சீகாழியாகும்.
1048. மாதொருபாலு மாலொருபாலும் மகிழ்கின்ற
நாதன்என்றேத்து நம்பரன்வைகும் நகர்போலும்
மாதவியே வண்டிசை பாட மயிலாடப்
போதுஅலர் செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே.
தெளிவுரை : உமாதேவி ஒரு பக்கமும் திருமால் ஒரு பக்கமும் மகிழ்கின்ற நாதன் என்று ஏத்தப்படுகின்ற நம் பரமன் வீற்றிருக்கின்ற நகர் புறவம் என்பதாகும். அந்த நகரானது, மாதவி மலரில் வண்டுகள் மொய்த்து ரீங்காரம் செய்து இசை பாடவும், மயில்கள் தோகை விரித்து ஆடவும், புன்னை மலர்கள் பொன்போன்ற மகரந்தத் தூள்களைக் கொடுக்கவும் உள்ள பொலிவை உடையது.
1049. வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே
புற்றுஆர் அரவின் பம்ஆடவும்இப் புவனிக்கோர்
பற்றாய்இடுமின் பலிஎன்றுஅடைவார் பதிபோலும்
பொற்றாமரையின் பொய்கை நிலாவும் புறவம்மே.
தெளிவுரை : வற்றாத நதியாகிய கங்கையும் சந்திரனும் பொதிந்து விளங்கும் சடையில், புற்றுள் விளங்கும் அரவத்தையும் வைத்திருக்க, அது ஆடவும், இந்த உலகத்திற்கு ஒரு பற்று என்கின்றதைப் போல, பிச்சை இடுவீராக ! என்று கேட்டு அடைபவராய், ஈசன் விளங்கும் பதியானது, பொற்றாமரைக் குளம் திகழும் புறவம் ஆகும்.
1050. துன்னார்புரமும் பிரமன்சிரமும் துணிசெய்து
மின்னார்சடைமேல் அரவும்மதியும் விளையாடப்
பன்னாள் இடுமின் பலிஎன்று அடைவார் பதிபோலும்
பொன்னார் புரிநூல் அந்தணர்வாழும் புறவம்மே.
தெளிவுரை : பகைமை கொண்ட முப்புரங்களையும், பிரமன் சிரத்தையும் அழித்து, மின்னல்போன்று ஒளிரும் சடைமேல் அரவமும், சந்திரனும் பகையொழித்து மகிழ்ந்து விளையாடுமாறு பொருந்த வைத்து பல நாட்கள் பிச்சையிடுமின் என்று மொழிந்து விளங்குகின்ற பரமன் பதியானது, அழகிய முப்புரிநூல் அணிந்த அந்தணர்கள் வாழும் புறவம் ஆகும்.
1051. தேவாஅரனே சரண்என்று இமையோர் திசைதோறும்
காவாய்என்று வந்தடையக்கார் விடம் உண்டு
பாவார் மறையும் பயில்வோர்உறையும் பதிபோலும்
பூவார் கோலச் சோலைசுலாவும் புறவம்மே.
தெளிவுரை : தேவாதி தேவனே ! அரனே ! சரணம் ! என்று எல்லாத் திசைகளிலும் சூழ்ந்து காவாய் என்று வந்து குழுமி ஏத்த, கரிய விடத்தை உட்கொண்டு வீற்றிருக்கும் பதியானது, பாடல்களோடு விளங்கும் வேதங்களை ஓதுபவர்களும் பூக்கள் விளங்கும் சோலைகளும் திகழும் புறவம் ஆகும்.
1052. கற்றுஅறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம்
அற்றரனேநின் னடிசரண்என்னும் அடியோர்க்குப்
பற்றதுவாய பாசுபதன்சேர் பதிஎன்பர்
பொற்றிகழ்மாடத்து ஒளிகள் நிலாவும் புறவம்மே.
தெளிவுரை : யாவும் கற்றறிந்தவனாகி, காமவேள்முகத்தை அறுமாறு செய்த அரனே ! நின் திருவடி சரணம் என்னும் அடியவர்களுக்குப் பற்றாகி இருந்து பற்றி, அருள் புரியும் ஈசன் சேர்ந்து விளங்குகின்ற பதி என்பது அழகிய மாட மாளிகைகளின் ஒளிசூழ் புறுவம்.
1053. எண்திசையோர் அஞ் சிடுவகைகார்சேர் வரைஎன்னக்
கொண்டெழு கோல முகில்போல்பெரிய கரிதன்னைப்
பண்டுஉரி செய்தோன் பாவனைசெய்யும் பதிஎன்பர்
புண்டரிகத் தோன் போல்மறையோர்சேர் புறவம்மே.
தெளிவுரை : எட்டுத் திசையில் உள்ளவர்களும் அஞ்சி நடுங்குமாறு கரிய மலைபோன்றும், எழுகின்ற முகில் போன்றும் தழைய வந்த பெரிய யானையை உரித்து வீரம் புரிந்த பாவனையில், ஈசன் விற்றிருந்து திழும் பதி என்று சொல்லப்படுவது, தாமரை மலரின்மேல் விளங்கும் பிரமனைப்போல் மறை வல்லார்கள் சேர்ந்து விளங்கும் புறவம்.
1054. பரக்கும்தொல்சீர்த் தேவர்கள் சேனைப் பௌவத்தைத்
துரக்கும் செந்தீப் போல்அமர் செய்யும் தொழில்மேவும்
அரக்கன்திண்டோள் அழிவித்தானக் காலத்தில்
புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே.
தெளிவுரை : தேவர்களுடைய சேனைகளைக் கடலில் மூழ்குமாறு விரட்டி, ஊழித் தீயைப் போன்று கடுமையாகப் போர் புரியும் தொழிலையுடைய அரக்கனாகிய இராவணனின் தோள் அழியுமாறு செய்த ஈசன், காத்தல் செய்து புரக்கும் மூதூர் புறவமே.
1055. மீத்திகழ் அண்டம் தந்தயனோடு மிகுமாலும்
மூர்த்தியை நாடிக் காணவொணாது முயல்விட்டுஆங்கு
ஏத்தவெளிப்பாடு எய்தியவன்றன் இடம்என்பர்
பூத்திகழ் சோலைத் தென்றல்உலாவும் புறவம்மே.
தெளிவுரை : மேல் ஒளிர்கின்ற அண்டங்களை எல்லாம் படைக்கும் பிரமனும், மிக்க பெருமையுடைய திருமாலும் ஈஸ்வரமூர்த்தியும் நாட வேண்டும் என்று பலவாறு முயற்சி செய்தும் அச்செயல் கைகூடப் பொறாமையால் கைவிட்டு, ஆங்குப் பக்தி சிரத்தையுடன் ஏத்த, வெளிப்பட்டுக் காட்சி நல்கிய இடம் காணாது, பூக்கள் திகழ் சோலைகளில் தென்றல் உலாவும் புறவமே.
1056. வையகநீர்தீ வாயுவும் விண்ணும் முதலானான்
மெய்யலதோர் உண்டுஇலை என்றே நின்றுஏதம்
கையினில் உண்போர் காணவொணாதான் நகரென்பர்
பொய்யகம்இல்லாப் பூசுரர்வாழும் புறவம்மே.
தெளிவுரை : நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களுக்கும் ஆதியான ஈசன் விளங்கி நிற்க, மெய்ம்மையில்லாத உண்டு, இல்லை எனும் கொள்கையால் வாழும் தேரர்கள் கருதவொண்ணாத நகர், பொய்ம்மை சிறிதளவும் அகத்தில் கொள்ளாத அந்தணர்கள் வாழும் புறவம் என்பர்.
1057. பொன்னியல்மாடப் புரிசைநிலாவும் புறவத்து
மன்னிய ஈசன் சேவடிநாளும் பணிகின்ற
தன்னியல்பில்லாச் சண்பையர் கோன்சீர்ச் சம்பந்தன்
இன்னிசை ஈரைந்து ஏத்தவல்லோர்கட்கு இடல்போமே.
தெளிவுரை : அழகிய மாட மாளிகைகளும் மதில்களும் நிலவும் புறவம் என்னும் பதியில் விளங்கும் ஈசன் சேவடியை நாள்தோறும் பணிகின்ற தன்னியல்பிலிருந்து அகன்று, ஈசன் அருள்வண்ணத்தின் இயல்புடைய சண்பையர் கோனாகிய புகழ்மிக்க ஞானசம்பந்தன், இன்னிசையோடு மொழியலுற்ற இத்திருப்பதிகத்தை, ஏத்திப் பாடவல்லவர்களுக்கு, இடரானது நீங்கிப் போகும்.
திருச்சிற்றம்பலம்
98. திருச்சிராப்பள்ளி (அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில், திருச்சி)
திருச்சிற்றம்பலம்
1058. நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ளம் குளிரும்மே.
தெளிவுரை : நன்றுடையான் தீயதில்லான் என்னும் மகிமை வாய்ந்த தீர்த்தங்கள் உடையவனை, வெண்மையான வண்ண இடபம் உடையவனை, உமாதேவியைப பாகம் கொண்டவனை, இயல்பாகவே செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றின் மேல் விளங்கும் நாதனைப் போற்றிக் கூற, என் உள்ளமானது மகிழ்ச்சி கொள்ளும்.
1059. கைம்மகவுஏந்திக் கடுவனொடுஊடிக் கழைபாய்வான்
செம்முக மந்தி கருவரையேறும் சிராப்பள்ளி
செம்முகவேழத்து ஈர்உரி போர்த்த விகிர்தாநீ
டபம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே.
தெளிவுரை : பெண் குரங்கு தன் குட்டியை அணைத்துக் கொண்டு ஆண் குரங்குடன் பிணக்குற்றுக் கரிய மலையேறும் தன்மையுடையது சிராப்பள்ளி. அத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமானே ! கொடிய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட விகிர்தனே ! நாகத்தைச் சந்திரனுடன் பொருந்துமாறு வைத்த நின் செயல் பழியாகாது.
1060. மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண் புனமும் சுனையும்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம் மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம் மடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே.
தெளிவுரை : பொருள் விளக்கம் புலனாகாதவாறு அமையப் பெற்ற, மழலை ததும்பும் முழவத்தின் ஒலி போல் இழும்... என ஓசையுடன் கூடிய மலையின் நீழலில், சோலையும் சுனையும் விளங்கச் சிராப்பள்ளியில், அழகிய மலர்களைச் சடைமேல் தரித்து இடபவாகனத்தில் அமர்ந்திருப்பவர், எம் அடிகளாகிய ஈசன், அவர்தம் அடியவர்களுக்கு, அல்லல் இல்லை.
1061. துறைமல்குசாரல் சுனைமல்கு நீலத்து இடைவைகிச்
சிறைமல்கு வண்டும் தும்பியும்பாடும் சிராப்பள்ளிக்
கறைமல்கு கண்டன் கனலெரியாடும் கடவுள்ளெம்
பிறைமல்கு சென்னி யுடையவன்எங்கள் பெருமானே.
தெளிவுரை : சிராப்பள்ளிக் குன்றின் சாரலில் சுனைகள் விளங்கவும் நீலவண்ண மலர்கள் இடை மல்க, சிறகுகளையுடைய வண்டும் தும்பியும் பாட, நீலகண்டக் கடவுளாகிய எம்பரமன் சந்திரனைத் தலையில் சூடி நெருப்பைக் கையில் கொண்டு ஆடுபவன்.
1062. கொலைவரையாத கொள்கையர்தங்கள் மதில்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனும் சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர்அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரைநீலம் உண்டதும் வெள்ளை நிறமாமே.
தெளிவுரை : அளவில்லாத கொலைகளைச் செய்யும் முப்புரத்தின் அசுரரின் மூன்று கோட்டைகளையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு போரிட்டு அழித்தவர் ஈசன். அவர் சிராப்பள்ளியில் விளங்கும் தலையாயவர். அப்பெருமானை அவ்வாறு அல்ல என்று உரைப்பவர்களே! நீல வண்ணம் நிலத்தின்பால் பதிந்து இருக்க, அது வெண்மை நிறம் கொண்டது என்று உரைப்பது பொருந்துமோ !
1063. வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
செய்யபொன்சேரும் சிராப்பள்ளிமேய சொல்வனார்
தையலொர்பாக மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமும்கொள்வர் ஆர்இவர்செய்கை அறிவாரே.
தெளிவுரை : விருப்பம் மிகுந்த குளிர்ந்த சாரலில் வேங்கை மரத்தின் மலர்கள் பொன்போன்று திகழக் கூடிய சிராப்பள்ளி மேவும் செல்வனாகிய பரமன், உமாதேவியை ஒரு பாகம் கொண்டு மகிழ்வர்; நஞ்சு உட்கொள்வர்; பிரம கபாலம் ஏந்திப் பிச்சை எடுப்பர். அத்தகைய வேறுபட்ட செயல்களைப் புரியும் இவரை, யார்தான் அறிந்து கொள்ள இயலும்.
1064. வேயுயர்சாரல் கருவிரல்ஊகம் விளையாடும்
சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேய்உயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்து ஆடல் திருக்குறிப்பாயிற்று ஆகாதே.
தெளிவுரை : மூங்கில்கள் உள்ள மலைச் சாரலில் கருங்குரங்கு விளையாடிக் களிக்க, மலையின்மேல் உள்ள சிராப்பள்ளியில் கோயில் கொண்டிருக்கும் செல்வனாகிய ஈசன், பேய்கள் உயர்ந்த தீப்பந்தங்களைக் கைவிளக்காகக் கொண்டு, கையில் அனலை ஏந்திஆடும் கொள்கையே, திருக்குறிப்பாயிற்று என்றால், அது ஆகாது.
1065. மலைமல்குதோளன் வலிகெடஊன்றி மலரோன்றன்
தலைகலனாகப் பலிதிரிந்து உண்பர் பழிஓரார்
சொலவலவேதம்  சொலவலகீதம் சொல்லும்கால்
சிலவலபோலும் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.
தெளிவுரை :  மலைபோன்ற வலிமையும் உறுதியும் உடைய தோளினை உடைய இராவணனுடைய வலிமை கெடுமாறு, திருப்பாத மலரால் ஊன்றி, மலர்மீது உறைபவனாகிய பிரமன் கொண்டிருந்த ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து, அதனைச் கபாலமாக ஏந்தி, பிச்சையேற்றுத் திரிந்து உண்பவராய், அதனால் உண்டாகும் பழிச்சொல்லையும் ஆராயாதவர் ஈசன். அப் பெருமானைப் பற்றிச் சொல்லப்படும் வேதம், கீதம் முதலானவற்றை ஆய்ந்து பார்க்கும் போது, சில செய்திகள் இல்லாத தன்ளை உடையன போல் சிராப்பள்ளியில் பெருமை கொள்ளும் ஈசன் செயல் தோற்றம் கொள்ளும்.
1066. அரப்பள்ளியானும் அலர்உறைவானும் அறியாமைக்
கரப்புஉள்ளிநாடிக் கண்டிலரேனும் கல்சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீர்உம்மை ஏதிலர்கண்டால் இகழாரே.
தெளிவுரை : பாம்பினைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், மலர்மேல் உறையும் பிரமனும், அறியாமை கொள்ளக் சுரந்து உள்ளவர் ஆகி, மறைந்தவர் ஆனாலும், சிராப்பள்ளி மலையில் விளங்கும் அழகிய சடையுடைய செல்வராகிய ஈசன், மனைகள்தோறும் பிச்சை எடுத்தவர் ஆயினார். இச்செயலை அயலவர் கண்டால் இகழ்ச்சி கொண்டு பழி சொல்லமாட்டார்களோ !
1067. நாணாது உடைநீத் தோர்களும் கஞ்சி நாட்காலை
ஊணாப் பகல்உண்டு ஓதுவோர்கள் உரைக்கும்சொல்
பேணாதுறுசீர் பெறுதும்என்பீர்எம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.
தெளிவுரை : நாணத்தைக் கைவிட்டும், உணவைப் பெரிதாகக் கொள்ளும் பான்மையர்கள் புறம் உரைக்கும் சொற்களைக் கொள்ளாது, பெறத்தகுந்த நல்ல சிறப்புகளைப் பெறவேண்டும் என்று விரும்புகின்றவர்களே ! எம்பெருமான் வீற்றிருக்கும் உயர்ந்த திருக்கோயிலாகிய சிராப்பள்ளி அடைந் ஈசனை வணங்குவீராக.
1068. தேனயம்பாடும் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல்சங்கேறும் கழுமலவூரிற் கவுணியன்
ஞானசம் பந்த னலமிகுபாடல் இவைவல்லார்
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.
தெளிவுரை : தேன் இசைத்துப் பாடும் சிறப்புடைய சிராப்பள்ளியில் விளங்கும் பெருமானைக் கனிந்து கண்டு, கடல் சூழ்ந்த கானலில் சங்குகள் திகழும் கழுமலநகரின் ஞானசம்பந்தன் உரைத்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தேவர்களுடன் மகிழ்ந்து இருப்பர்.
திருச்சிற்றம்பலம்
99. திருக்குற்றாலம் (அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில், குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1069. வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண்டுயாழ்செய் குற்றாலம்
அம்பால் நெய்யோடு ஆடல்அமர்ந்தான் அலர்கொன்றை
நம்பால்மேய நன்னகர்போலும் நமரங்காள்.
தெளிவுரை : அன்பர்காள் ! அழகிய குன்றும் நீண்டு வளர்ந்த சாரலில் வேங்கை மரங்களும் சோலைகளும் திகழ, அழகிய வடிவத்தை உடைய வண்டுகள் யாழ் போன்று ரீங்காரம் செய்யும் குற்றாலமானது, அழகிய ஆடல் புரியும் ஈசன், பாலும் நெய்யும் பூசனைப் பொருளாய் ஏற்று மகிழ்ந்து கொன்றை மலர் சூடி நமக்கு அருள் புரிவதற்காக வீற்றிருக்கும் நல்ல நகர் ஆகும்.
1070. பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக்
கொடிகளோடும் நாள்விழமல்கு குற்றாலம்
கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய்
அடிகள்மேய நன்னகர்போலும் மடியீர்காள்.
தெளிவுரை : அடியவர் பெருமக்களே ! திருவெண்ணீறு தரித்துத் தொண்டர்கள் குழுமிப் பின் செல்ல, புகழ் மிக்க கொடி தோரணங்கள் குழுமிப் பின் செல்ல, புகழ் விழாச்சிறப்பு மல்கும் குற்றாலமானது, மணம் மிக்க கொன்றை மலரும் வில்வமாலையும் விரும்பி அணியும் அடிகளாகிய ஈசனார் மேவும் நல்ல நகர் ஆகும்.
1071. செல்வமல்கு செண்பகம்வேங்கை சென்றுஏறிக்
கொல்லைமுல்லை மெல்லரும்புஈனும் குற்றாலம்
வில்லின்ஒல்க மும்மதில்எய்து வினைபோக
நல்குநம்பான் நன்னகர்போலும் நமரங்காள்.
தெளிவுரை : அன்பர்களே ! வளம் பெருக்கும் செண்பகம், வேங்கை ஆகியவற்றின் மீது படர்ந்து காட்டு முல்லை அரும்புகளை வழங்கும் தன்மை கொண்ட குற்றாலமானது, முப்புரங்களை வில்லால் எய்து அழித்து, வினைகள் கெடுமாறு வரங்கள் நல்கும் நம்பனாகிய ஈசன் விளங்கும் நல்ல நகர் ஆகும்.
1072. பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்தேன்
கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்கும் குற்றாலம்
அக்கும்பாம்பும் ஆமையும் பூண்டோர் அனலேந்தும்
நக்கன்மேய நன்னகமபோலும் நமரங்காள்.
தெளிவுரை : அன்பர்களே ! வாழை, பலா, மாங்கனிகள் மல்கிப் பெருகும் குற்றாலமானது; எலும்பு, பாம்பு, ஆமை ஆகியவற்றைப் பூண்டு, கையில் நெருப்பு ஏந்தி, கோவண ஆடையுடன் விளங்கும் ஈசன் விளங்கும் நல்ல நகர் ஆகும்.
1073. மலைஆர்சாரல் மகவுடன்வந்த மடமந்தி
குலைஆர்வாழைத் தீங்கனிமாந்தும் குற்றாலம்
இலைஆர்சூலம் ஏந்திய கையான் எயில்எய்த
சிலையான்மேய நன்னகர்போலும் சிறுதொண்டீர்.
தெளிவுரை : தொண்டு செய்பவர்களே ! மலையின் சாரலில் குட்டியுடன் வந்த பெண் குரங்கு, வாழைத் கனிகளைக் மாந்தித்தின்னும் குற்றாலமானது, சூலத்தை ஏந்தி, மேருமலையை வில்லாகக் கொண்டு, முப்புரங்களை எரித்து விளங்கும் ஈசன், வீற்றிருக்கும் நல்ல நகர் ஆகும்.
1074. மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக்
கொய்ம்மாஏனல் உண்கிளிஒப்பும் குற்றாலம்
கைம்மாவேழத்து ஈர்உரிபோர்த்த கடவுள்ளெம்
பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.
தெளிவுரை : பெரியோர்களே ! அழகிய நீலமலர் போன்ற கண்களை உடைய குற மாதர்கள்; மணிகள் விளங்கித் திகழும் மலைச்சாரலில் தினைப்புனத்தில் உள்ள தினைக்கதிர்களை உண்ணும் கிளிகளை ஓட்டும் தன்மைசூழ் குற்றாலமானது, யானையின் தோலை உரித்துப் போர்த்து, எம் கடவுளாகிய பெருமான் விளங்கும் நல்ல நகர் ஆகும்.
1075. நீலநெய்தல் தண்கனைசூழ்ந்த நீள்சோலைக்
கோலமஞ்ஞை பேடையொடுஆடும் குற்றாலம்
காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெம்
சூலபாணி நன்னகர்போலும் தொழுவீர்காள்.
தெளிவுரை : இறைவனைத் தொழுது போற்றும் பெருளை படைத்தவர்களே ! நீலநிறமுள்ள நெய்தல் பூக்கள், கனைகளில் சூழ்ந்து விளங்க, அகன்ற சோலைகளில், அழகிய மயில்கள் தம் பெடையோடு ஆடி மகிழ்கின்ற குற்றாலமானது, காலனைக் காலால் உதைத்து அழித்த கடவுளாகிய, சூலத்தைக் கையில் கொண்ட ஈசன், வீற்றிருக்கும் நல்ல நகர் ஆகும்.
1076. போதும்பொன்னும் உந்தியருவி புடைசூழக்
கூதல்மாரி நுண்துளிதூங்கும் குற்றாலம்
மூதூர்இலங்கை முட்டியபோனை மிறைசெய்த
நாதன்மேய நன்னகர்போலும் நமரங்காள்.
தெளிவுரை : அன்பர்களே ! பொன்னும் மலர்களும் உந்தித் தள்ளும் நீர் அருவிகள் புடைசூழ, குளிர்ந்த மழைத்துளிகள் வீசும் குற்றாலமானது, இலங்கை வேந்தனாகிய இரவணனை நெருக்கி வருத்திய நாதனாகிய ஈசன் விளங்கும் நல்ல நகர் ஆகும்.
1077. அரவின்வாயின் முற்ளெயிறுஏய்ப்ப அரும்பீன்று
குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம்
பிரமன்னோடு மாலறியாத பெருமையெம்
பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்கள்.
தெளிவுரை : இறைவனைப் பணிந்து மகிழ்பவர்களே ! பாம்பின் வாயில் உள்ள கூர்மையான முள்போன்ற குரவம் முதலான அழகிய மலர்கள் சூழ்ந்த சோலையுடைய குற்றாலமானது, பிரமனும் திருமாலும் அறியாத பெருமையுடைய எமது பரமன் வீற்றிருக்கும் நல்ல நகர் ஆகும்.
1078. பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக்
குருந்தம் ஏறிச் செவ்வழிபாடும் குற்றாலம்
குருந்து உண்டேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்ப
அருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள்.
தெளிவுரை : இறைவனுக்கு எப்போதும் மெய்யடியாராய் உள்ளவர்களே ! அகன்ற குளிர்ச்சி பொருந்திய சாரலில் வாழும் சிறகுகளை உடைய வண்டு, தன்பெடையுடன் சேர்ந்து குருந்தம் ஏறிச் செவ்வழி என்னும் இனிய பண்ணிசைக்கும்  எழில் கொள்ளும் குற்றாலமானது, இருந்து உணவு கொள்ளும் தேரரும் நின்று உண கொள்ளும் சமணர்களும் ஏற்று நுகர்ந்து மகிழ்தற்கு அரியவனாய்த் தண்மையனாய் மேவும் ஈசன் வீற்றிருக்கும் நல்ல நகர் ஆகும்.
1079. மாடவீதி வருபுனல்காழி ஆர்மன்னன்
கோடல்ஈன்று கொழுமுனைகூம்பும் குற்றாலம்
நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்
பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.
தெளிவுரை : மாட வீதிகளும், வளம் பெருகும் நீர் நிலைகளும் உடைய காழிப்பதியில் விளங்கும் வேந்தனாகிய கோடல் எனப்படும் செம்மையான பூக்களைத் தந்து உச்சி கூம்பி விளங்குதலையுடைய குற்றால நாதனை நாடிப் போற்றி உரைத்த நற்றமிழ் ஞானசம்பந்தனின் திருப்பதிகத்தைப் பாட நம்பாவமானது விலகிச் செல்லும்.
திருச்சிற்றம்பலம்
100. திருப்பரங்குன்றம் (அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1080. நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
சூடலன்அந்திச் சுடர்எரியேந்திச் சுடுகானில்
ஆடலன்அஞ்சொல் அணிஇழையாளை ஒருபாகம்
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.
தெளிவுரை : ஈசன் நீடித்து மலரவல்ல வெண்மையான பிறைச் சந்திரனும், கொன்றை மலரும் சூடுபவன்; இரவில் கையில் நெருப்பு ஏந்தி, சுடுகாட்டில் ஆடுகின்றவன்; ஞானவல்லியாக விளங்கும் உமாதேவியை ஒரு பாகமாக உடையவன். அப் பெருமான் மேவி விளங்கும் நல்ல நகர், பரங்குன்றம் ஆகும்.
1081. அங்கமொருஆறும் மருமறைநான்கும் அருள்செய்து
பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத்
திங்களும்பாம்பும் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி
பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.
தெளிவுரை : நான்கு வேதங்களும் அதன் ஆறு அங்கங்களும் அருளிச் செய்து, திருவெண்ணீறும், முப்புரிநூலும் மார்பில் பொலிய, சந்திரனும் பாம்பும் திகழ்கின்ற சடையில் வைத்துத் தேன் போன்ற மொழி பேசும் உமாவேதயைப் பாகமாக உடைவனாகிய ஈசன் மேவும் நல்ல நகர் பரங்குன்றம் ஆகும்.
1082. நீரிடம்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றை
சீரிடம்கொண்ட எம்மிறைபோலும் சேய்தாய
ஓருடம்புஉள்ளே உமையொருபாகம் உடனாகிப்
பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே.
தெளிவுரை : கங்கையைத் தாங்கிய சடை முடியில் கொன்றை மலரைச் சிறப்பாகச் சூடிய எம்இறையாகிய ஈசன், தனது தேகத்தில் ஒரு பாதியில் உமா தேவியைப் பாகங்கொண்டு உடனாகிப் பூதகணங்கள் பாட இனிது உறைகின்ற கோயில் பரங்குன்றம் ஆகும்.
1083. வளர்பூங்கோங்க மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம்
தளிர்போல்மேனித் தையல்நல்லாளோடு ஒருபாகம்
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.
தெளிவுரை : மாதவி, கோங்கு, மல்லிகை வளரும் பூஞ்சோலைகளில் வண்டுகள் ரீங்காரம் செய்ய, இளந்தளிர் போன்ற மென்மையான மேனியையுடையமங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் வைத்து, கொன்றை மலரைச் சூடியவனாகிய ஈசன் மேவும் நகர் பரங்குன்றம் ஆகும்.
1084. பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
துன்னியசோதி ஆகியஈசன் தொல்மறை
பன்னியபாடல் ஆடலன்யே பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே.
தெளிவுரை : பொன்னைப் போன்று ஒளிரும் தன்மை உடைய கொன்றை மலரும், பாம்பும், ஒளி திகழுமச் செஞ்சடையும் உடைய ஈசன், தொன்மையான வேதப் புகழ் விளங்கும் பாடலின் இயல்பிற்கு ஏற்ப ஆடலும் கொண்டு பரஙகுன்றத்தில் மேவி வீற்றிருக்கின்றான். அப்பெருமானைச் சிந்தை ஒருமித்து நினைப்பவர்களுக்கு நோய் இல்லை.
1085. கடைநெடுமாடக் கடியரண்மூன்றும் கனல்மூழ்கத்
தொடைநவில்கின்ற வில்லினன்அந்திச் சுடுகானில்
புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்
படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே.
தெளிவுரை : நெடிய மாடங்களையுடைய மூன்று மதில்களையும் எரியில் மூழ்கிச் சாம்பலாகுமாறு செய்து, அம்பினைச் செலுத்தும் வில்லையுடையவனாகி, சுடுகாட்டில் பூதங்கள் பாட, ஆட்டம் ஆடியும், சூலப்படை கொண்டு விளங்கும் ஈசன் வீற்றிருக்கும் நல்ல நகர் பரங்குன்றம் ஆகும்.
1086. அயிலுடைவேலோர் அனல்புல்குகையில் அம்பொன்றால்
எயில்படஎய்த எம்இறைமேய இடம்போலும்
மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப்
பயில்பெடைவண்டு பாடல்அறாத பரங்குன்றே.
தெளிவுரை : கூர்மையான சூலமும், அனலும் கொண்ட கரத்தை யுடையவன், ஓர் அம்பினால் கோட்டையின் மூன்று மதில்களையும் எய்து, எரித்துச் சாம்பலாக்கிய எமது கடவுள். மயிலானது தன் பெடையுடன் பொருந்திச் சிறப்பான நடனம் புரிந்து ஆடும் வளமிக்க சோலையில் வாசம்புரியும் வண்டு, தன் பெடையுடன் ரீங்காரம் புரிந்து கொண்டு எப்போதும் விளங்கும் பரங்குன்றம், எம்பெருமான் வீற்றிருக்கும் இடம் ஆகும்.
1087. மைத்தமேனி வாளரக்கனறன் மகுடங்கள்
பத்தினதிண்தோள் இருபதும்செற்றான் பரங்குன்றைச்
சித்தமது ஒன்றிச் செய்கழல்உன்னிச் சிவன்என்று
நித்தலும்ஏத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.
தெளிவுரை : மைபோன்ற கரிய நிறம்கொண்ட மேனியையுடைய கொடிய அரக்கனாகிய இராவணனுடைய பத்து மகுடங்களும் இருபது தோள்களும் வலிமை குன்றுமாறு செய்த ஈசன் வீற்றிருக்கும் பரங்குன்றத்தை  பரங்குன்ற நாதனை, ஒருமித்த சித்தம் உடையவராய்த் திருவடியை நினைந்து சிவனே என்று நாள்தோறும் போற்றி வணங்கத் தொல்வினையானது நம்மீது நில்லாது நீங்கும்.
1088. முந்திஇவ்வையம் தாவியமாலு(ம்) மொய்யொளி
உந்தியில்வந்திங்கு அருமறைஈந்த உரவோனும்
சிந்தையினாலும் தெரிவரிதாகித் திகழ்சோதி
பந்தியல்அங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே.
தெளிவுரை : முற்காலத்தில் இவ் உலகத்தைப் பேருருக் கொண்டு, ஒருங்கித் தாவி அளந்த திருமாலும், மொய்த்துச் சூழும் ஒளி பொருந்திய உந்திக் கமலத்தில் உதித்து, இங்கு அரிய மறையாகிய வேதத்தைத் தந்த அறிஞனாகிய பிரமனும், சிந்தையாலும் தெரிந்து கொள்வதற்கு அரிதாகிப் பின்னர் சோதி வடிவாகி, பந்து ஆர் விரலையுடைய அழகிய கரத்தைக் கொண்டு விளங்கும் மங்கையாகிய உமாதேவியைப் பாகங்கொண்டுகள் ஈசன், வீற்றிருக்கும் பதி பரங்குன்றம் ஆகும்.
1089. குண்டாய்முற்றும் திரிவார்கூறை மெய்போர்த்து
மிண்டாய் மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல
பண்டுஆல்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத்
தொண்டால்ஏத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.
தெளிவுரை : சமணரும், பௌத்தரும் விவாதம் புரிந்து சொல்கின்ற மொழிகள் மெய்ம்மை ஆகாது. பண்டைய காலத்தில் ஆல மர நிழலில் மேவி, சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருள் விளக்கிய ஈசன், பரங்குன்றத்தில் ÷வி விளங்க, அப் பெருமானுடைய திருத்தொண்டி திகழும் தெண்டர்கள்பால் உள்ள தொல்வினையானது நீங்கும்.
1090. தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன்
படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத்
தொலைமலிபாடல் பத்தும்வல்லார்தம் துயர்போகி
விடமலிகண்டன் அருள்பெறும்தன்மை மிக்கோரே.
தெளிவுரை : அகன்ற பொய்கையுடைய சண்பையில் சிறந்து விளங்கும் ஞானசம்பந்தன், படங்கொண்ட நாகத்தை அரைக்குக் கட்டிய பரங்குன்றத்தில் விளங்குச் ஈசனை ஏத்திப் பாடிய இத்திருப்பதிகத்தை உரைக்கவல்லவர், துயர் அற்றவராய், நீல கண்டப் பெருமான் அருளைப் பெறுகின்ற தன்மையில் மிக விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
101. திருக்கண்ணார்கோயில் (அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1091. தண்ணார்திங்கள்பொங்கர வம்தாழ் புனல்சூடிப்
பெண்ஆண் ஆய பேரருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவார்கட்கு இடர்பாவம்
நண்ணாவாகும் நல்வினையாக நணுகும்மே.
தெளிவுரை : தணிந்து அடக்கமாக உள்ள சந்திரனும், பொங்கிச் சீறும் அரவமும், தாழ்ந்து பாயும் நீரகிய கங்கையும், பெண்ணுமாய் ஆணுமாய் ஆகிய பேரருளாளனாகிய ஈசன், எஞ்ஞான்றும் பரியாது கண்ணார் கோயிலின்கண் வீற்றிருக்கின்றான். அப்பெருமான் திருவடியைத் தொழுது போற்றும் அடியவர்களுக்கு, வாழ்க்கையில் நேரும் இடரும், செயல், சொல், சித்தம் ஆகியவற்றால் நேரும் பாவமும் அணுகாது. நல்வினையானது நாடி அடைந்து, மகிழ்ச்சிக்கு ஆதாரமாக அமையும்.
1092. கந்தமர்சந்தும் கார்அகிலும்தண் கதிர்முத்தும்
வந்துஅமர்தெண்ணீர் மண்ணீவளம்சேர் வயல்மண்டிக்
கொந்தலர் சோலைக் கோகிலம்ஆடக் குளிர்வண்டு
செந்திசை பாடும் சீர்திகழ்கண்ணார் கோயிலே.
தெளிவுரை : மணம் திகழ் சந்தனமும் கரிய அகிலும் கதிர்களும் முத்துக்களும் வந்து விளங்கச் செய்யும் தெளிந்த நீர்மல்கும் மண்ணியாற்றின் வளம்சேர் வயல்களும், கொத்தாகப் பூத்துக் குலுங்கும் சோலை களில் குயில்கள் ட, தேன் அருந்தி மகிழந்த வண்டு, செவ்வழி என்னும் பண்ணை எழுப்பி விளங்குவதும், ஆகிய சிறப்புடன் திகழ்வது கண்ணார் கோயில் ஆகும்.
1093. பல்லியல்பாணிப் பாரிடம்ஏத்தப் படுகானில்
எல்லிநடம்செய் ஈசன்எம்மான்றன் னிடமென்பர்
கொல்லையின்முல்லை மல்லிகை மௌவல் கொடிபின்னிக்
கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே.
தெளிவுரை : பலவகைப்பட்ட இயல்புடைய பண்களைப் பூதங்கள் இசைத்துப் பாடி ஏத்தி நிற்க, சுடுகாட்டில் இரவில் நடம் புரியும் ஈசனாகிய எம் தலைவனுடைய இடம் என்று சொல்லப்படுவது, முல்லை நிலத்தில் விளங்கும் மல்லிகை, முல்லை, மௌவல் ஆகிய மலர்க் கொடிகள் கல்லால் ஆன மதில்களில் பின்னிச் சூழ, மேகம் தவழும் கண்ணார் கோயில் ஆகும்.
1094. தருவளர்கானம் தங்கியதுங்கப் பெருவேழம்
மருவளர் கோதை அஞ்சஉரித்து மறைநால்வர்க்
குருவளர்ஆல நீழல்அமர்ந்துஈங்கு உரைசெய்தார்
கருவளர் கண்ணார் கோயில்அடைந்தோர் கற்றோரே.
தெளிவுரை : தாருகவனத்தில் உள்ள முனிவர்களால் ஏவப்பட்ட மலை போன்ற பெரிய யானையைச் செருத்து உமாதேவியும் அச்சம் கொள்ளுமாறு, வீரம்காட்டி, அதன் தோலை உரித்து. கல்லால் மரநீழலில் சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கும், தட்சணாமூர்த்தி வடிவினராகி, அறத்தின் உண்மைப் பொருளை உபதேசம் செய்து, யாவற்றுக்கும் கருப்பொருளாய் விளங்கும் ஈசன் வீற்றிருக்கும் கண்ணார் கோயிலை அடைந்து பெருமானை வணங்கியவர்களே கற்றோர் எனப்படுவர்.
1095. மறுமாண்உருவாய் மற்றினைஇன்றி வானோரைச்
செறுமாவலிபால் சென்றுலகெல்லாம் அளவிட்ட
குறுமாண்உருவன் தன்குறியாகக் கொண்டாடும்
கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே.
தெளிவுரை : தேவர்களைத் துன்புறுத்திய மாவலிச் சக்கரவர்த்தியின்பால் சென்று, மூவடி நிலம் வேண்டிப் பெற்று, அவனை வருத்தி மறுக்கம் செய்யும் மிகப் பெரிய வடிவம் தாங்கியவனாய், தனக்கு இணை என  யாரையும் சொல்ல முடியாதவாறு உலகத்தை எல்லாம் அளவு கொண்ட, குறுகிய சிறந்த உருவினனான திருமால் தனது வழிபடும் பொருளாகக் கொண்டாடும் நீலகண்டனாகிய ஈசன், மேவி விளங்குவது, கண்ணார் கோயிலே ஆகும்.
1096. விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக
உண்ணவனைத்தே வர்க்குஅமுதீந்துஎவ் வுலகிற்கும்
கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை
நண்ணவல்லோர்கட்கு இல்லைநமன்பால் நடலையே.
தெளிவுரை : தேவர்களுக்கு நல்வாழ்க்கை அளிக்க வேண்டும் என்பதற்காக, கடலில் தோன்றி நஞ்சினை விரும்பி உண்டு, அவர்கள் அமுதம் கொள்ளுமாறு அளித்து, எல்லா உலகங்களுக்கும் கண்ணாக விளங்கும் பெருமானாகியும், கண்ணார் கோயிலில் திகழும் கனி போன்று விளங்கியும், தன்னை வழிபடுபவர்களுக்கு இனியவனாகிய ஈசனை நாடுபவர்க்கு, காலனால் உண்டாகும் துன்பம் இல்லை.
1097. முன்னொருகாலத்து இந்திரன்உற்ற முனிசாபம்
பின்னொருநாள் அவ் விண்ணவர்ஏத்தப் பெயர்வெய்தி
தன்னருளாற்கண் ணாயிரம்ஈந்தோன் சார்பென்பர்
கன்னியர்நாளும் துன்னமர்கண்ணார் கோயிலே.
தெளிவுரை : காம வயப்பட்டு அகலிகையை நாட, அதனால் கௌதம முனிவரின் சாபம் பெற்ற இந்திரன், அது தீரும் வண்ணம் பூசித்து வேண்ட, அந்த சாபத்திலிருந்து விடுவித்துக் கண்ணாயிரம் என்னும் பெயரையும் ஈந்த, ஈசன் வீற்றிருப்பது, கன்னிப் பெண்கள் ஏற்றமாகப் போற்றும் கண்ணார் கோயில் ஆகும்.
1098. பெருக்குஎண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணாத்தன் நீள்கழல்நெஞ்சில் நினைந்தேத்த
முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த
திருக்கண்ணார்என் பார்சிவலோகம் சேர்வாரே.
தெளிவுரை : நல்ல ஆக்கத்தை எண்ணிப் பார்க்காத பேதையாகிய அரக்கன்  இராவணன், மலையின் கீழ் நெருக்குற, ஈசன் திருவடியை நினைத்துப் போற்றித் துதித்தனன். அதனால் அழிதல் இல்லாத ஒளி பொருந்திய வாளும் தேரும் பெற்றவனானான். அப்பெருமானைக் கண்ணார் கோயில் உடையவனே ! என்று ஏத்தும் தொண்டர்கள், சிவலோகப் பேறு பெற்றவர் ஆவர்.
1099. செங்கமலப்போ தில்திகழ்செல்வன் திருமாலும்
அங்கமலக்கண் நோக்கரும்வண்ணத் தழலானான்
தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளம்
அங்கமலத்தோடு ஏத்திஅண்டத்து அமர்வாரே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் தமது கண்களால் நோக்குவதற்கு அரியவனாகிய, வண்ணமிகும் சோதிப் பிழம்பால், கண்ணார் கோயிலில் வீற்றிருப்பவனைத் தூய்மையாய் ஏத்தி வழிபடுவோர், தேவர் உலகத்தில் விளங்கி இருப்பார்கள்.
1100. தாறிடுபெண்ணைத் தட்டுடையாரும் தாம்உண்ணும்
சோறுடையார்சொல் தேறன் மின்வெண்ணூல் சேர்மார்பன்
ஏறுடையன்பரன் என்புஅணிவான்நீள் சடைமேலோர்
ஆறுடைஅண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே.
தெளிவுரை : குலை தருகின்ற பெண்பனை ஓலைகளால் தயாரிக்கப்பட்ட தடுக்கு உடையவர்களாய் விளங்கும் புறச் சமயத்தார் கூறும் சொற்களை ஏற்காதீர்கள். முப்புரி நூல் அணிந்த மார்பினனும், இடப வாகனத்தை யுடையவனும் ஆகிய பரமன், எலும்பு அணிபவன்; நீளமாக விளங்கும் சடையின்மேல் ஒப்பற்ற ஆறாகத் திகழும் கங்கையைச் சூடிய அண்ணல். அப்பெருமான் பொருந்தி விளங்கும் இடமாவது, கண்ணார் கோயில் ஆகும்.
1101. காமருகண்ணார் கோயில்உளானைக் கடல்சூழ்ந்த
பூமருசோலைப் பொன்னியல்மாடப் புகலிக்கோன்
நாமருதொன்மைத் தன்மையுள்ஞான சம்பந்தன்
பாமரு பாடல் பத்தும்வல்லோர்மேல் பழிபோமே.
தெளிவுரை : மகிழதற்குரிய கண்ணார் கோயிலில் வீற்றிருக்கும் ஈசனை. கடல் சூழ்ந்த பூமருவு சோலையும் பொன்னொளிர் மாடங்களும் பொலியும், புகலிநகரின் வேந்தனாகிய, பழம் பெருமையை நன்கு உள்கும் ஞான சம்பந்தன், கனிந்து அளித்த இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் மீது பழியானது இல்லை.
திருச்சிற்றம்பலம்
102. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1102. உரவார்கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும்
கரவாவண்கைக் கற்றவர்சேரும் கலிக்காழி
அரவார்அரையா அவுணர்புரமூன்று எரிசெய்த
சரவாஎன்பார் தத்துவஞானத் தலையாரே.
தெளிவுரை : ஞானம் மிக்க கவிதைகளைக் கூறும் புலவர்களுக்கு எல்லாக் காலங்களிலும், கரவாது வழங்கும் வள்ளல் தன்மை உடையவர்கள் சேரும் காழி நகரில், விளங்கும் அரவத்தையுடைய அரசே ! முப்புரத்தை எரித்த சரத்தினை உடையவரே ! என் போற்றி மகிழ்பவர்கள் தத்துவஞானத்தில் தலைப்பட்டு உயர்ந்த பெரியோர்கள் ஆவர்.
1103. மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக்
கைபோல்வாழை காய்குலையீனும் கலிக்காழி
மைசேர்கண்டத்து எண்தோள்முக்கண் மறையோனே
ஐயாஎன்பார்க்கு அல்லல்களான அடையாவே.
தெளிவுரை : வண்டுகள் உண்கின்ற மும்மதம் பொருந்திய, தொங்கும் வாயைப் போன்ற வேழத்தின் துதிக்கை போன்று, நீண்டு பெருகிய வாழை, குலையினும் காழியில், நீலகண்டமும், எண்தோளும், முக்கண்ணும் கொண்ட மறையவனே! ஐயா ! என்று, ஈசனைப் போற்றிப் பணிபவர்களை அல்லல் அடையாது.
1104. இளகக்கமலத்து ஈன்கள் இயங்கும் கழிசூழக்
கனகப்புரிசை கவினார்சாரும் கலிக்காழி
அளகத்திருநல் நுதலிபங்கா அரனேஎன்று
உளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாமே.
தெளிவுரை : தாமரை மலரிலிருந்து இளகி வெளிவரும் தேன் வழியும் உப்பங்கழி சூழ, சுண்ணாம்பு பூசப் பெற்ற மதில்கள் அழகு பொலிய விளங்கும் காழியில், அழகிய கூந்தலும் நல்ல நெற்றியும் உடைய உமாதேவியைப் பாகங்கொள்ளவனே ! அரனே ! என்று உள்ளம் பொருந்திப் பாடுகின்ற அடியவர்களுக்கு நோய் அடையாது.
1105. எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போல்காய்த்துக்
கண்ணார்கமுகு பவளம் பழுக்கும் கலிக்காழிப்
பெண்ணோர்பாகா பித்தாபிரானே என்பார்க்கு
நண்ணாவினைகள் நாள்தொறும்இன்பம் நணுகும்மே.
தெளிவுரை : கண்களுக்கு விருந்தாகும் கமுக மரங்கள் எண்ணுதற்கு அரியதாக நிரம்ப, முத்துக்களைப் போல் ஈன்று, மரகதம் போல் காய்த்து, பவளம் போல் பழுக்கும் வளம் பொருந்திய காழியில், உமையைப் பங்காக உடையவரே ! பித்தப்பெருமானே ! எம்பிரானே ! என்று துதிப்பவர்க்கு வினைகளானவை அணுகாது. நாள்தோறும் இன்பமானது பெருகிச் சேரும்.
1106. மழைஆர்சாரல் செம்புனல்வந்துஅங்கு அடிவருடக்
கழைஆர் கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி
உழைஆர்கரவா உமையாள்கணவா ஒளிர்சங்கக்
குழையா என்று கூறவல்லார்கள் குணவோரே.
தெளிவுரை : மலைச்சாரலில் இருந்து பெருகும் செம்புனல், கழை என்னும் வளம்பெருக்கும் கரும்பின் சோலையில் பாயும் காழியில், மான் ஏந்திய கரத்தை உடையவனே ! உமாதேவியின் நாயகனே ! ஒளிவிடுகின்ற வெண்சங்கினைக் காதில் குழையாக உடையவனே ! என்று கூறிப் போற்ற வல்லவர்கள் நற்குணத்தவர் ஆவர்.
1107. குறியார்திரைகள் வரைகள்நின்றும் கோட்டாறு
கறியார்கழிசம் பிரசம்கொடுக்கும் கலிக்காழி
வெறியார் கொன்றைச் சடையாவிடையா என்பாரை
அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே.
தெளிவுரை : மலைப் பகுதிகளிலிருந்து வளைந்த ஆறுகள் கடலலைகளில் கலக்கும் கழியின் பகுதிகளில் மிளகுகள் பெருக்கெடுத்து விளையுமாறு உள்ள காழியில், மணம்கமழும் கொன்றை தரித்த சடையுடையவனே ! இடப வாகனத்தை உடையவனே ! என்று வணங்கும் அடியவர்களை, வினையும், நோயும், பாவமும் அடையாது.
1108. உலங்கொள்சங்கத்து ஆர்கலிஓதத் துதையுண்டு
கலங்கள்வந்து கார்வயல்ஏறும் கலிக்காழி
இலங்கைமன்னன் தன்னைஇடர்கண்டு அருள்செய்த
சலங்கொள்சென்னி மன்னாஎன்னத் தவம்ஆமே.
தெளிவுரை : திரட்சியான சங்குகளும் தோணிகளும் கடலில் ஓதத்தால் கார் வயல்  ஏறும் தன்மை உடையது காழி. ஆங்கு இலங்கையின் மன்னவனான இராவணன் இடர் கண்டு அருள் செய்த, கங்கையைச் சென்னியில் சூடிய மன்னவனே ! என்று போற்றத் தவம் கைவரப் பெறும்.
1109.ஆவிக்கமலத்து அன்னம்இயங்கும் கழிசூழக்
காவிக்கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப்
பூவில்தோன்றும் புத்தேளொடுமா லவன்தானும்
மேவிப்பரவும் அரசேஎன்ன வினைபோமே.
தெளிவுரை : தாமரைக் குளத்தில் அன்னப் பறவைகள் இயங்குகின்ற தன்மையும், குவளை மலர் போன்ற கண்களை உடைய பெண்கள் மங்கல ஒலிகளை ஓய்வின்றி ஒலிக்கும் காழியில், தாமரை மலரில் விளங்கும் பிரமனும், திருமாலும் பொருந்திப் பரவும் அரசே ! என்று தோத்திரம் செய்ய வினை நீங்கும்.
1110. மலையார்மாட நீடுயர்இஞ்சி மஞ்சாரும்
கலையார்மதியம் சேர்தரும் அந்தண் கலிக்காழித்
தலைவாசமணர் சாக்கியர்க்குஎன்றும் அறிவொண்ணா
நிலையாய்என்னத் தொல்வினையாய நில்லாவே.
தெளிவுரை : மலைபோன்ற உயர்ந்த மாட மாளிகைகளும் நீண்டு உயர்ந்த மதில்களும் மேகம் தவழுமாறு, திங்களின் ஒளி சேரும் அழகிய குளிர்ச்சி பொருந்திய காழியின் தலைவனே ! சமணர், சாக்கியர் ஆகியோருக்கு அறிய வொண்ணாத நிலையாய் உள்ளவனே ! என்று துதிக்க, வினை யாவும் நீங்கும்.
1111. வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்
கடிகொள்தென்றல் முன்றினில்வைகும் கலிக்காழி
அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன்
படிகொள்பாடல் வல்லவர்தம்மேல் பழிபோமே.
தெளிவுரை : அழகிய பொய்கையில் விளங்கும் செங்கழுநீர்ப் பூவில் பொலியும் தேன் அளைந்து மணம் பெருகம் தென்றல், முற்றத்தில் திகழும் காழியில் வீற்றிருக்கும் அடிகளாகிய ஈசனை, ஞானசம்பந்தன் ஏத்திப் பாடிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் மேல் உள்ள பழியானது விலகிப் போகும்.
திருச்சிற்றம்பலம்
103. திருக்கழுக்குன்றம் (அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1112. தோடுடையான்ஒரு காதில்தூய குழைதாழ
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருள் ஏமம் நடமாடும்
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
தெளிவுரை : தோடு என்னும் அணியை ஒரு காதிலும் குழை என்னும் அணியை மற்றொரு காதலும் உடையவன் ஈசன். பிரமனின் ஒரு தலையைக் கபாலமாக ஏந்திப் பிச்சையேற்று உண்ணும் நாட்டத்தை உடைய அப்பெருமான். நள்ளிருளில் ஆனந்தமாய் நடனத்தைப் புரியும் சுடுகாடு உடையவன். அத்தகைய ஈசன் மகிழ்ந்து வீற்றிருக்கும் கோயில் கழுக்குன்று ஆகும்.
1113. கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
பேண்வல்லான் பெண்மகள்தன்னை ஒருபாகம்
காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
தெளிவுரை : பன்றியின் வெண்கொம்பும் ஆமையோடும் விரும்பி அணிந்து, சடை முடியின்மேல் கங்கையும் கொன்றை மலரும் பூண்டு, பேணிக் காக்கும் மலையரசன் மகளாகிய, பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்டு காட்சி தருபவனாகிய ஈசன், மிக் விரும்பி வீற்றிருக்கும் கோயிலானது கழுக் குன்றம் ஆகும்.
1114. தேனகத்தார் வண்டதுஉண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்தும்
கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
தெளிவுரை : தேனை உண்ணும் தன்மையுடைய வண்டு, கொன்றை மலரின் மீது பொருந்தி உண்ண, அவ்வழகிய மலரைத் தன்னகத்தே உடைய ஈசன், குளிர்ந்த சந்திரனைத் தலையின்மேல் சூடி, தேவர்களும், வையக மாந்தர்களும் தொழுது போற்றும் தன்மையினன். அப்பெருமான், மயானத்தில் நடம்புரிபவன். அவன், விரும்பி வீற்றிருக்கும் இடமானது கழுக்குன்றம் ஆகும்.
1115. துணையல்செய்தான் தூயவண்டு யாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணின் நல்லாளை ஒருபாகம்
இணையல்செய்யா இலங்கு எயில்மூன்றும் எரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.
தெளிவுரை : சேர்ந்து பூத்துக் குலுங்கும் மலர்களில், தூய வண்டானது யாழின் ஒலியை எழுப்புகின்ற சுடர்போன்ற கொன்றையைச் சடை முடியில் பிணைத்துக் கட்டி, பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகம் கொண்டு இணைத்து, அர்த்தநாரியாய் விளங்கி, மூன்று மதில்களை எரியில் மூழ்சிச் சாம்பலாகுமாறு அம்பு எய்த ஈசன், மகிழ்ந்து வீற்றிருக்கும் இடம், கழுக்குன்றம் ஆகும்.
1116. பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.
தெளிவுரை : படத்தைக் கொண்டு ஆடும் பாம்பினை அணிந்து, திருநீறு மெய்யில் பூசி, வெண்பிறைச் சந்திரனும் கொன்றை மலரும் விளங்க, கரிய சிறந்த கண்டத்தையுடைய அண்ணலாகிய ஈசன், மானைக் கரத்தில் ஏந்தி, விரும்பி வீற்றிருக்கும் இடமாவது கழுக்குன்றம் ஆகும்.
1117. வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
கொள்ளவல்லான் குரைகழல்ஏத்தும் சிறுத்தொண்டர்
உள்ளமெல்லாம் உள்கிநின்றுஆங்கே உடன்ஆடும்
கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
தெளிவுரை : கங்கையை, விரிந்து பரந்த சடையின்மேல் கொள்ளுமாறு செய்து, கொன்றை மலர் சூடிய ஈசன் திருக்கழலைப் போற்றி மகிழும் சிறுத்தொண்டராகிய பெருந்தகையாளரின் உள்ளத்தில் எக்காலமும் விளங்கி நின்று, நடம் புரியும் தன்மையுடையவனாகி, ஊனக் கண்ணுக்குப் புலப்படாதவாறு மறைந்து விளங்கும் ஆற்றல் பொருந்தியவனாகிய ஈசன், விரும்பி வீற்றிருக்கும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.
1118. ஆதல்செய்தான் அரக்கர்தம்கோனை அருவரையின்
நோதல்செய்தா(ன்) நொடிவரையின்கண் விரலூன்ணிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோடு ஒருபாகம்
காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
தெளிவுரை : நல்லருள் செய்தவனாகிய ஈசன், மலையைப் பெயர்த்த இராவணனைத் தன் விரலால் ஊன்றி, ஒரு நொடியில் வலிமையை இழக்கச் செய்தவன். அப் பெருமான், உமாதேவியை ஒரு பாகம் விரும்பி ஏற்று, மகிழந்து விளங்கும் கோயில் கழுக்குன்று ஆகும்.
1119. இடந்தபெம்மான் ஏனமதாயு(ம்) அனமாயும்
தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம்
மடந்தைபெம்மான் வாரகழல்ஓச்சிக் காலனைக்
கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
தெளிவுரை : பன்றியாய் பூமிக்குள் தோண்டிச் சென்ற திருமாலும், அன்னமாய் மேலே பறந்து சென்ற பிரமனும் தேடிய ஈசன், தூய்மையான சந்திரனைச் சூடி, மலைமகளாகிய உமாதேவியை மணம் கொண்ட பெருமான். அப்பெருமான். அவன் திருப்பாதத்தால்
காலனை வீழ்த்தியவன். அவன் விரும்பி வீற்றிருக்கும் கோயில் கழுக்குன்று ஆகும்.
1120. தேயநின்றான் திரிபுரம்கங்கை சடைமேலே
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த உலகெல்லாம்
சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர்
காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
தெளிவுரை : ஈசன், திருபுரத்தை அழித்து வெற்றி கொண்டவன்; கங்கையைச் சடைமேல் பாய்ந்து நிற்குமாறு செய்தவன்; பலரும் புகழ்ந்து ஏத்த உலகம் எல்லாம் அமிழுமாறு பிரளயகால மூர்த்தியாய் நின்றவன்; வன்மைக் குணம் மிக்க சமணர், சாக்கியர்கள் துன்புறுமாறு விளங்கியவன். அப்பெருமான் விரும்பி வீற்றிருக்கும் கோயில், கழுக்குன்றம் ஆகும்.
1121. கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
பண்ணியல்பால் பாடியபத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.
தெளிவுரை : நெற்றிக் கண்ணுடைய ஈசன் விரும்பி வீற்றிருக்கும் கோயிலாகிய கழுக்குன்றை நண்ணிய, புகழ் மிக்க ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலையைப்  பண்ணின் இயல்பினால் பாடிய இத்திப்பதிகத்தை ஓதவல்லவர்கள் புண்ணியவான்கள் ஆவார்கள்; தேவர்களுடனும் சேர்ந்து மகிழந்திருப்பார்கள்.
(இப் பதிகத்தில் ஒரு பாடல் கிடைக்கவில்லை).
திருச்சிற்றம்பலம்
104. திருப்புகலி (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1122. ஆடல் அரவசைத்தான் அருமாமறை
தான்விரித்தான் கொன்றை
சூடிய செஞ்சடையான் சுடுகாடு
அமர்ந்த பிரான்
ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம்
அமர்ந்தடியார் ஏத்த
ஆடிய எம் மிறையூர்
புகலிப் பதியாமே.
தெளிவுரை : ஈசன், ஆடுகின்ற அரவத்தை அசைத்தவன்; அரிய வேதத்திற்கு விளக்கம் செய்தவன்; கொன்றை மலரைச் செஞ்சடையில் சூடியவன்; சுடுகாட்டில் அமர்ந்து விளங்கும் பிரான். ஏடு அவிழ்ந்த மலர் போன்ற, மலையரசன் திருமகளாகிய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு, அடியவர்கள் வணங்குமாறு, நடம்புரியும் எமது இறைவன் வீற்றிருக்கும் பதியானது புகலி ஆகும்.
1123. ஏல மலிகுழலார் இசைபாடி
எழுந்தருளால் சென்று
சோலை மலிசுனையில்
குடைந்தாடித் துதிசெய்ய
ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை
மூடிநின்று நல்ல
மாலை யதுசெய்யும்
புகலிப் பதியாமே.
தெளிவுரை : நறுமணம் கமழ்கின்ற கூந்தலையுடைய மகளிர் இசை பாடி, காலையில் எழுந்து ஈசன் வண்ணத்தில் பதிந்து சோலைகளில் விளங்கும் சுனையில் குடைந்து நீராடித் துதி செய்ய, ஆலைகளிலிருந்து எழும் புகையானது மேலே ஆகாயத்தில் பரவி மூடும்படியாகத் தவழ்ந்து, கதிரவன் ஒளியைத் தடுத்து நிறுத்தும் அமைப்பில் திகழ, அது மாலை நேரம் போன்று பொலியச் செய்யும் எழில் மிக்க புகலி நகர் ஆகும்.
1124. ஆறணி செஞ்சடையான் அழகார்புர
மூன்றும்அன்று வேவ
நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை
எம்மிறைவன்
பாறணி வெண்தலையில் பகலேபலி
என்றுவந்து நின்ற
வேறணி கோலத்தினான் விரும்பும்
புகலியதே.
தெளிவுரை : ஈசன், கங்கையினைச் சிவந்த சடையில் அணிந்தவன்; புரங்கள் மூன்றினையும் எரித்தவன்; திருவெண்ணீறு அணிந்து விளங்கும் எம் இறைவன். பிரம கபாலம் கையில் கொண்டு பிச்சையேற்று உவந்து கோவண ஆடையுடைய அவ் ஈசன், விரும்பும் பதியானது புகலியே.
1125. வெள்ளம் அதுசடைமேல் கரந்தான்
விரவார்புரங்கள் மூன்றும்
கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி
உறைகோயில்
அள்ளல் விளைகழனி அழகார்விரைத்
தாமரைமேல் அன்னம்
புள்ளிமை வைகிஎழும் புகலிப்
பதிதானே.
தெளிவுரை : கங்கையைச் சடையில் கரந்து கொண்ட ஈசன், பகைவராகிய மூன்று அசுரர் புரங்களை எரித்துக் குறைவின்றி நல்லருள் புரிய உறையும் கோயிலாவது, சேறு மிகக் கொண்ட கழனிகளும் அழகிய தாமரை மலர்களில் அன்னம் முதலான புள்ளினங்கள் அமர்ந்து எழுகின்ற புகலிப்பதி ஆகும்.
1126. சூடு மதிச்சடைமேல் கரும்பார்மலர்க்
கொன்றைதுன்ற நட்டம்
ஆடும் அமரர்பிரான் அழகார்உமை
யோடும் உடன்
வேடு படநடத்த விகிர்தன்
குணம்பரவித் தொண்டர்
பாட இனிதுறையும் புகலிப்
பதியாமே.
தெளிவுரை : சந்திரனைச் சூடிய சடையின் மீது வண்டு சூழும் கொன்றை மலர் பொருந்தி விளங்க, நடனம் புரியும் தேவர்பிரான், அழகு மிக்க உமாதேவியோடு வேட்டுவ வடிவம் தாங்கி, நடந்து அர்ச்சுனருக்கு அருள் புரிந்த விகிர்தன் ஆவார். அப்பெருமானுடைய புகழைப் பரவிப் போற்றி, தொண்டர்கள் இனிது பாட மகிழ்ந்து உறைகின்ற பதி புகலி ஆகும்.
1127. மைந்துஅணி சோலையின்வாய் மதுப்பாய்வரி
வண்டினங்கள் வந்து
நந்துஇசை பாடநடம் பயில்கின்ற
நம்பன் இடம்
அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள்
பரவிஎழ விரும்பும்
புந்திசெய் நான்மறையோர் புகலிப்
பதி தானே.
தெளிவுரை : அழகாக அலங்கரிக்கப்பட்ட சோலையில் தேன் உண்ணும் வரி வண்டுகள் நெருங்கி இசையெழுப்ப, நடனம் புரியும் ஈசன் இடமாவது, சந்தியாவந்தனம் செய்யும் அடியவர்கள் வணங்கி எழவும், யாவரும் விரும்பும், நான்மறையோர்கள் விளங்குகின்ற புகலிப்பதி ஆகும்.
1128. மங்கையோர் கூறுகந்த மழுவாளன்
வார்சடைமேல் திங்கள்
கங்கை தனைக்கரந்த கறைக்கண்டன்
கருதும் இடம்
செங்கயல் வார்கழனி திகழும்
புகலிதனைச் சென்றுதம்
அங்கையி னால்தொழுவார் அவலம்
அறியாரே.
தெளிவுரை : உமாதேவியை உடம்பில் ஒரு பாகமாக உகந்து ஏற்ற மழுப்படையை உடையவன், சடைமுடியின் மீது சந்திரனையும் ஏற்று, கங்கையைக் கரந்து கொண்ட, விடம் பொருந்திய கண்டத்தையுடையவன். அப் பெருமான் விரும்பிய இடமாவது, கயல்கள் விளங்கும் கழனிகளையுடைய புகலி. ஆங்கு சென்று கரங்கூப்பித் தொழுபவர்களுக்குத் துயரம் இல்லை.
1129. வில்லிய நுண்ணிடையான் உமையாள்
விருப்பன்அவன் நண்ணும்
நல்லிடம் என்றறியா நலியும்
விறல் அரக்கன்
பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப்
பாடலுமே கைவாள்
ஒல்லை அருள்புரிந்தான் உறையும்
புகலி யதே.
தெளிவுரை : ஒளி பொருந்திய நுண்ணிய இடையுடைய உமாதேவியை விரும்பும் ஈசன் விளங்கி மேவும் இடம் என்று அறியாத இராவணன், கயிலையைப் பெயர்க்க, பல்லும் தோளும் நெரியுமாறு விரலால் ஊன்றி, பின்னர் பாடலுக்காக இசைந்து மந்திர வாளைக் கொடுத்து, விரைவில் அருள்புரிந்த பரமன் உறையும் இடம் புகலி ஆகும்.
1130. தாதலர் தாமரைமேல் அயனும்
திருமாலும் தேடி
ஓதியும் காண்பரிய உமைகோன்
உறையும் இடம்
மாதவி வான்வகுள மலர்ந்தெங்கும்
விரைதோய வாய்ந்த
போதலர் சோலைகள் சூழ்
புகலிப் பதிதானே.
தெளிவுரை : மகரந்தம் விளங்கும் தாமரையின்மேல் உறையும் பிரமனும் திருமாலும் தேடியும், ஓதி அழைத்தும் காண்பதற்கு அரியவனாய், உமாதேவியின் தலைவனாகிய ஈசன் உறையும் இடமாவது, மாதவியுடன் மகிழமலர்கள் சேர்ந்து எங்கும் மணம் பரப்ப, போதுகள் மலரும் சோலைகள் சூழும் புகலிப் பதியாகும்.
1131. வெந்துவர் மேனியினார் விரிகோவண
நீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லாம் அவையோர்
பொருள் என்னேல்
வந்தெதிரும் புரமூன்று எரித்தான்
உறைகோயில் வாய்ந்த
புந்தியினார் பயிலும் புகலிப்
பதிதானே.
தெளிவுரை : துவராடை கொண்டவர்களாகிய பௌத்தர்களும், மற்றும் திகம்பரர்களும் கூறும் பேதம் கலந்த ஞானம் யாவும் பொருளுடையதெனக் கருதற்க. எதிர்த்துப் பொருத முப்புரத்தை எரித்த ஈசன் உறைகின்ற கோயிலானது, நல்ல அறிஞர்கள் பயிலும் புகலிப் பதியாகும்.
1132. வேதமோர் கீதமுணர் வாணர்தொழுது
ஏத்த மிகுவாசப்
போதனைப் போல்மறையோர் பயிலும்
புகலி தன்னுள்
நாதனை ஞானமிகு சம்பந்தன்
தமிழ்மாலை நாவில்
ஓதவல் லார்உலகில் உறுநோய்
களை வாரே.
தெளிவுரை : வேத கீதங்களை உணர்ந்துள்ள அறிஞர்கள் தொழுது ஏத்த, மிகுந்த வாசனையுடைய தாமரை மலரில் விளங்கும் பிரமனைப் போன்ற, மறைவல்ல அந்தணர்வாழும் புகலியில், ஈசனைப் பரவிய ஞானம் மிகுந்த ஞானசம்பந்தன் தமிழ் மாலையை நாவினால் மருவும் பாடற் சுவை கொண்டு ஓத வல்லவர்கள், உலகத்தில் நோயின்றி வாழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
105. திருவாரூர்  (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)
திருச்சிற்றம்பலம்
1133. பாடல னான்மறையன் படிபட்ட
கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலையை சூலம்
வலன்ஏந்திக்
கூடலர் மூவெயிலும் மெரியுண்ணக்
கூரெரிகொண்டு எல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர்
அமர்ந்தானே.
தெளிவுரை : பாடுவதற்கு வல்ல நான்மறைகளை உடையவன், ஈசன். அப்பெருமான் உலகில் தோன்றுகின்ற எல்லா வடிவங்களையும் உடையவன்; திங்களைச் சடையில் சூடியுள்ளவன்; மூன்று இலைகளையுடைய சூலத்தை ஏந்தியவன்; பகைமை கொண்ட மூன்று கோட்டை மதில்களையும் எரித்துக் கொழுந்துவிட்டு எரியும் நெரிப்பைக் கையில் கொண்டு இரவில் நடனம் புரிபவன்; ஆதிரைத் திருநாளில் மகிழ்ந்து சிறப்பாக விளங்கிக் காட்சி தருபவன். அப்பெருமான், ஆரூரில் அமர்ந்தனன்.
1134. சோலையில் வண்டினங்கள் சுரும்போடு
இசைமுரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகைபோய்
முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும்
பரமேட்டி பாதம்
காலையும் மாலையும்போய்ப்
பணிதல் கருமமே.
தெளிவுரை : சோலைகளில் சுரும்பு முதலான வண்டினங்கள் இசையெழுப்ப, சூழ்ந்துள்ள ஆலைகளிலிருந்த வெளியறும் புகையானது, மேகம் போல் பரவும் ஆரூரில், பால், நெய், தயிர், ஆகியவற்றால் பூசைகள் பயின்றாடும் பரமனின் திருக்கழலை, காலை, மாலை ஆகிய இரு காலங்களிலும் சென்று வணங்குதல் கடமையாகும்.
1135. உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித்
தொழுமின்தொண்டீர் மெய்யே
கள்ளம் ஒழிந்திடு மின்கரவாது
இரு பொழுதும்
வெள்ளம்ஓர் வார்சடைமேல் கடந்திட்ட
வெள்ளேற்றான் மேய
அள்ளல் அகன்கழனி ஆரூர்
அடைவோமே.
தெளிவுரை : தொண்டு செய்பவர்களே ! உள்ளத்தில் மிகுந்த வேட்கை கொண்டு, மகிழந்து போற்றித் தொழுவீராக. உண்மையாகவே உம்முடைய அஞ்ஞான இருள் ஒழிந்துவிடும். தடையில்லாது காலை, மாலை ஆகிய இருபொழுதும், கங்கைவார் சடையுடையவனை, வெண்மையான இடப வாகனத்தைக் கொண்டவனை, சேறு மிகக் கூட்டிய அகன்ற கழனிகளையுடைய ஆரூர் அண்ணலை, நாடிச் செல்வோமாக.
1136. வெந்துறு வெண்மழுவாள் படையான்
மணிமிடற்றான் அரையின்
ஐந்தலை ஆடரவம் அசைத்தான்
அணி ஆரூர்ப்
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன்
அடிபரவப் பாவம்
நைந்தறும் வந்தணையும் நாள்தொறு(ம்)
நல்லனவே.
தெளிவுரை : வெம்மை மிக்க ஒளிபொருந்திய மழுவாட்படையுடையவன் ஈசன். அப்பெருமான், நீலகண்டத்தவன்; அரையில் ஐந்து தலைகளையுடைய ஆடுகின்ற நாகத்தை அசைத்துக் கட்டியவன்; அழகு மிக்க ஆரூரில் வீற்றிருக்கும், கொன்றைமாலை சூடிய பரமன். அவனுடைய திருவடியைத் தொழுது போற்ற, பாவமானது இற்றழியும்; நல்லன யாவும் நாள்தோறும் வந்து சேரும்.
1137. வீடு பிறப்புஎளிதாம் அதனை
வினவுதிரேல் வெய்ய
காடிட மாகநின்று கனலேந்திக்
கைவீசி
ஆடும் அவிர்சடையான் அவன்மேய
ஆரூரைச் சென்று
பாடுதல் கைதொழுதல் பணிதல்
கருமமே.
தெளிவுரை : முத்தி நலம் எளிதாகப் பெறுவதற்குரிய வழி யாது என வினவுவீரானால்; கொடிய சுடுகாட்டை இடமாகக் கொண்டு, கையில் நெருப்பு ஏந்தி வீசி ஆடும், சடையுடைய ஈசன் மேவி விளங்கும் ஆரூரை நாடிச் சென்று, பாடிக் கை தொழுது பணிவதைக் கடமை எனக் கொள்வீராக.
1138. கங்கையோர் வார்சடைமேல் கரந்தான்
கிளிமழலைக் கேடில்
மங்கையோர் கூறுடையான் மறையான்
மழுவேந்தும்
அங்கையி னான்அடியே பரவி
அவன்மேய ஆரூர்
தம்கையி னால்தொழுவார் தடுமாற்று
அறுப்பாரே.
தெளிவுரை : கங்கையைச் சடைமேல் கரந்து, கிளி போன்ற மென்மையாகக் கூறும், கெடுதல் இல்லாத மங்கையாகிய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்கும் மறைவல்லனாய், மழுவேந்திய அழகிய கரத்தை உடைய ஈசனின் திருவடியையே நெஞ்சில் பதித்து, அப்பெருமான் விளங்கும் ஆரூரை, தம் கையினால் தொழுபவர்கள் மனத் தடுமாற்றம் அற்றவராய், தெளிவு பெற்றவராய் இருப்பார்கள்.
1139. நீறணி மேனியனாய் நிரம்பா
மதிசூடி நீண்ட
ஆறணி வார்சடையான் ஆரூர்
இனித மர்ந்தான்
சேறணி மாமலர்மேற் பிரமன்
சிரம்அரிந்த செங்கண்
ஏறணி வெல்கொடியான் அவன்எம்
பெருமானே.
தெளிவுரை : திருநீறு மேனியில் தரித்தவனாய், பிறைச் சந்திரனைச் சூடிக் கங்கையினைச் சடைமுடியில் ஏற்று ஆரூரில் இனிது அமர்ந்த ஈசன் சேற்றில் திகழும் தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனின் சிரம் கொய்த ஈசன், சிவந்த கண்ணையுடைய இடபக் கொடியுடையவன், அவன் எம் பெருமானார் ஆவார்.
1140. வல்லியம் தோலுடையான் வளர்திங்கள்
கண்ணியினான் வாய்த்த
நல்லியல் நான்முகத்தோன் தலையின்
நறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை ஆகத்து
அமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும்
புண்ணியரே.
தெளிவுரை : புலித் தோலுடையவன்; வளர்கின்ற சந்திரனைச் சூடியவன்; பிரமன் தலையின் ஓடு கொண்டு பலியேற்றவன்; அல்லியங் கோதையைத் தன் மேனியில் அமர்ந்து பொருந்துமாறு செய்து ஆரூரில் வீற்றிருக்கும் புண்ணியன்; அப்பெருமானைத் தொழுபவர்கள் புண்ணியர் ஆவர்.
1141. செந்துவர் ஆடையினார் உடைவிட்டு
நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலமொழிந்து இன்புற
வேண்டுதி ரேல்
அந்தர மூவெயிலும் மரணம்
எரியூட்டி ஆரூர்த்
தந்திர மாஉடையான் அவன்என்
தலைமையனே.
தெளிவுரை : காவி உடையை அணிந்தவர்களும், ஆடையை நீத்தவரும் சொன்ன மயக்க மொழிகளை ஒழித்து, ஈசன் திருவடிக்கீழ் இருந்து இன்புற வேண்டும் என வேண்டுவீராயின், தீமை செய்த மூன்று மதில்களையுடைய கோட்டைகளை எரியூட்டி ஆரூரில் உள்ள ஈசன் என் தலைமையாக உடையவன். அவன் உமக்கு எல்லா ஞானமும் வழங்குவான் என்றவாறு.
1142. நல்ல புனற் புகலித் தமிழ்ஞான
சம்பநத னல்ல
அல்லி மலர்க்கழனி ஆரூர்
அமர்ந் தானை
வல்லதோர் இச்சையினால் வழிபாடுஇவை
பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்பம்
துடைப் பாரே.
தெளிவுரை : நல்லன புரியும் தீர்த்த மகிமையுடைய புகலியின் தமிழ் ஞானசம்பந்தன், அல்லி மலர்கள் சாரும் கழனிகளையுடைய ஆரூரில் அமர்ந்து அருள் வழங்கும் பரமனை, உறுதியான பற்றுடன் உரைத்த இவ்வழிபாட்டுத் திருப்பதிகத்தை மனத்தில் கொண்டு கற்றும், சொல்லியும் சொல்லக் கேட்டும் விளங்கி நிற்பவர்கள், துன்பத்திலிருந்து நீங்கியவர் ஆவார்கள்.
திருச்சிற்றம்பலம்
106. திருவூறல் (அருள்மிகு சலநாதீஸ்வரர் திருக்கோயில், தக்கோலம்,வேலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1143. மாறில் அவுணர்அரணம் அவைமாயஓர்
வெங்கணையால் அன்று
நீறெழ எய்தஎங்கள் நிமலன்
இடம்வினவில்
தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல்
பாய்வயலும் சூழ்ந்த
ஊறல் அமர்ந்தபிரான் ஒலியார்கழல்
உள்குதுமே.
தெளிவுரை : பகைமைத் தன்மையிலிருந்து மாறாத அசுரர்களுடைய கோட்டைகளை அழிப்பதற்கு ஒப்பற்ற ஒரே ஒரு கொடிய கணை கொண்டு எரிந்து சாம்பலாகுமாறு செய்த எங்கள் நிமலனுடைய இடம் யாது என வினவினால், தேன் கமழ் பெரிய சோலை திகழ, செம்மையான கயல் பாயும் நீர்வளம் மிக்க வழல் சூழ்ந்த ஊறல் ஆகும். அப் பெருமானுடைய ஒலிக்கும் கழலை நினைந்து போற்றுவோமாக.
1144. மத்த மதக்கரியை மலையான்மகள்
அஞ்சஅன்று கையால்
மெத்த உரித்த எங்கள் விமலன்
விரும்பும் இடம்
தொத்துஅல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர்
நீல நாளும் நயனம்
ஒத்தலரும் கழனித் திருவூறலை
உள்குதுமே.
தெளிவுரை : செருக்குற்ற மத யானையை, உமாதேவி கண்டு அஞ்சுமாறு, அக்காலத்தில் கையால் மிகுதியாக உரித்த எங்கள் விமலன், விரும்பி வீற்றிருக்கும் இடமானது, பூத்துக் கொத்தாக மலரும் பொழில் சூழ, வயல்கள் சேர்ந்து, ஒளிர்கின்ற நீல மலர்கள் நாள் தோறும் கண்களைப் போன்று மலரும் கழனிகளை உடைய திருவூறல். அதனை நினைந்து போற்றுவீராக.
1145. ஏன மருப்பினொடும் எழிலாமையும்
பூண்டு அழகார் நன்றும்
கானமர் மான்மறிக்கைக் கடவுள்
கருதும் இடம்
வான மதிதடவும் வளர்சோலைகள்
சூழ்ந்து அழகார் நம்மை
ஊனம் அறுத்தபிரான் திருவூறலை
உள்குதுமே.
தெளிவுரை : பன்றியின் கொம்பும், எழில்மிக்க ஆமையின் ஓடும் அணியாகப் பூண்டு, நன்று விளங்கும் சோலைகளில் கடவுள் விரும்புகின்ற இடமானது, வளம்மிக்க சோலைகளில் வானத்தில் விளங்குகின்ற சந்திரனின் தண்கதிர்கள் மருவித் திகர, நம்முடைய குறைபாடுகளை அறுத்த தலைவனாகிய பரமனின் அழகிய திருவூறல் ஆகும். அதனை நினைந்து துதிப்பீராக.
1146. நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழுவும்
அனலும் அன்று
கையணி கொள்கையி னான் கடவு
ளிடம் வினவில்
மையணி கண்மடவார் பலர்வந்து
இறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை
உள்குதுமே.
தெளிவுரை : சூலமும், ஒளிமிக்க மழுவும், நெருப்பும் நிறைவாகக் கையில் கொண்டுள்ள கடவுள் வீற்றிருக்கும் இடமானது யாது என வினவுவீர்களாயின், அது, கையணிந்து மகளிர் பலர் பணிந்து போற்ற, அதனால் பரிந்து விளங்கி நம்மை உய்யும் வகையில் அருள் புரிந்த ஈசனின் திருவூறல் ஆகும். அதனை நினைந்து, தொழுவீராக.
1147. எண்திசை யோர்மகிழ எழில்மாலையும்
போனகமும் பண்டு
சண்டி தொழஅளித்தான் அவன்தாழும்
இடம் வினவில்
கொண்டல்கள் தங்குபொழில் குளிர்பொய்கைகள்
சூழ்ந்து நஞ்சை
உண்டபி ரான் அமரும் திருவூறலை
உள்குதுமே.
தெளிவுரை : எண் திசையில் உள்ள மக்கள் அனைவரும் மகிழும் வண்ணம், தான் அணிந்து எழில் பெற்ற மலர் மாலையும், உண்டியும் சண்டீசருக்கு அணிவித்து வணங்குமாறு அருள்புரிந்த பரமன் உறையும் இடம் வினவில், அது, மேகம் சூழும் பொழில்களும், குளிர்ந்து விளங்கும் பொய்கையும் சூழ்ந்து விளங்க, நஞ்சை அருந்திய ஈசன் அமர்கின்ற திருவூறல் ஆகும். அதனை நினைந்து வணங்குவீராக.
1148. கறுத்த மனத்தினொடும் கடுங்காலன்வந்து
எய்தலும் கலங்கி
மறுக்குறு மாணிக்குஅருள மகிழ்ந்தான்
இடம் வினவில்
செறுத்தொழு வாளரக்கன் சிரம்தோளு(ம்)
மெய்யும் நெரிய அன்று
ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை
உள்குதுமே.
தெளிவுரை : சினங்கொண்டவனாய்க் கொடிய காலன் வந்துற்ற போது, அஞ்சிக் கலக்கம் அடைந்த மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்து, கூற்றவனை உதைத்து அழித்து மகிழ்ந்தவனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம் யாது என வினவில், பகைகொண்டு, மலையைப் பெயர்க்க எழுந்த இராவணரின் சிரமும், தோளும், மெய்யும் நெரிய விரலால் ஊன்றித் தண்டனை வழங்கி, பின்னர் அருள் செய்த அப் பிரான் விளங்கும் திருவூறல் ஆகும். அதனை எண்ணி வணங்குவீராக.
1149. நீரின் மிசைத்துயின்றோன் இறைநான்
முகனும் அறியாது அன்று
தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும்
இடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந்து
இறைஞ்ச மகிழந்து ஆகம்
ஊரும் அரவசைத்தான் திருவூறலை
உள்குதுமே.
தெளிவுரை : திருமாலும் பிரமனும் அறியாது பின்னர் உணரும் வகையால் ஓங்கி நின்ற ஈசன் பொருந்தி விளங்கும் இடம் யாது என வினவில், உலகில் அடியவர்கள் பலர் வந்து துதிக்க, மகிழந்து திருமேனியில் ஊர்ந்து செல்லும் நாகத்தையுடையன் வீற்றிருக்கும் திருவூறல் ஆகும். அதனை எண்ணி வணங்குவீராக.
1150. பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையார்
மோட்டு அமணர் குண்டர்
என்னும் இவர்க்கு அருளா ஈசனிடம்
வினவில்
தென்னன வண்டினங்கள் செறியார்பொழில்
சூழ்ந்து அழகார் தன்னை
உன்ன வினைகெடுப்பான் திருவூறலை
உள்குதுமே.
தெளிவுரை : பொன்போன்ற காவியுடை யுடையவர்கள் மற்றும் சமணர்கள் ஆகியோர்க்கு, அருள் தோயாது ஈசன் விளங்கும் இடம் யாதென வினவில், வண்டினங்கள் சேர் பொழில் சூழ்ந்து, தன்னை நினைப்பவர்களின் வினை தீர்ப்பவனாகிய பரமன் மேவும் திருவூறல் ஆகும். அதனை எண்ணித் துதிப்பீராக.
1151. கோடல் இரும்புறவிற் கொடிமாடக்
கொச்சையர்மன் மெச்ச
ஓடு புனல்சடைமேற் கரந்தான்
திருவூறல்
நாடல் அரும்புகழால் மிகுஞான சம்
பந்தன் சொன்ன
பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத்து
இருப்பாரே.
தெளிவுரை : கங்கையைச் சடையில் கரந்த சீகாழியில் வீற்றிருக்கும் ஈசனைத் துதிக்கும் ஞானசம்பந்தன் திருவூறல் மேவும் ஈசனைச் சார்ந்து இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், பரனுடைய உலகில் விளங்குவார்கள்.
(இத் பதிகத்தில் இரு பாடல்கள் கிடைக்கவில்லை).
திருச்சிற்றம்பலம்
107. திருக்கொடிமாடச் செங்குன்றூர் (அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1152. வெந்தவெண் ணீறணிந்து விரிநூல்
திகழ்மார்பில் நல்ல
பந்தண வும்விரலாள் ஒருபாகம்
அமர்ந்தருளிக்
கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
அந்தண னைத் தொழுவார் அவலம்
அறுப்பாரே.
தெளிவுரை : திருவெண்ணீறு அணிந்து, முப்புரி நூல் மார்பில் திகழ, உமாதேவியை ஒரு பாகத்தில் அமர்ந்து விளங்குமாறு அருள் செய்து, கொத்தாக விளங்கும் பொழில் சூழும் கொடிமாடச் செங்குன்றூர் மேவி விளங்கும் ஈசனைத் தொழுபவர்கள், துயரம் அற்றவராய் இருப்பார்கள்.
1153. அலைமலி தண்புனலோடு அரவம்
சடைக்குஅணிந்து ஆகம்
மலைமகள் கூறுடையான் மலைஆர்
இளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார் தடுமாற்று
அறுப்பாரே.
தெளிவுரை : கங்கையுடன் அரவும் சடையில் அணிந்து, உடம்பில் உமாதேவியைக் கூறாக வைத்து, மலையில் விளங்கும் வாழைக் குலைகள் உடைய பொழில் சூழ்ந்த கொடிமாடச்செங்குன்றூர் மேவிய பரமனைத் தொழுபவர்கள், மனக்கலக்கம் அற்றவர் ஆவர்.
1154. பாலன நீறுபுனை திகழ்மார்பில்
பல்வளைக்கை நல்ல
ஏல மலர்க்குழலாள் ஒருபாகம்
அமர்ந்தருளிக்
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல்
நீதியே.
தெளிவுரை : பால் போன்ற வெண்மையான திருநீறு புனைந்து திகழ்கின்ற மார்பில், உமாதேவியை ஒரு பாகமாக அமருமாறு அருளி அழகிய மலர்ப் பொழில் சூழும் கொடிமாடச் செங்குன்றூர் விளங்கும் நீலகண்டனாகிய பரமன் திருக்கழலை வணங்குவது, கடமையாகும்.
1155. வாருறு கொங்கைநல்ல மடவாள்
திகழ்மார்பில் நண்ணும்
காருறு கொன்றையொடும் கதநாகம்
பூண்டருளிச்
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான் கழல்ஏத்தல்
நீதியே.
தெளிவுரை : உமாதேவியார் ஒரு பாகத்தில் திகழ்ந்து விளங்க, நண்ணும் கார்காலத்தில் சிறந்து மல்கும் கொன்றை மலரும், சினம் மிக்க நாகமும் அணிந்து, புகழ்மிக்க அந்தணர்கள் வாழும் கொடிமாடச் செங்குன்றூரில் நின்று, கங்கை தரித்த செஞ்சடை நாதனாகிய பரமன் திருக்கழலை வணங்குதல் கடமையாகும்.
1156. பொன்திகழ் ஆமையொடு புரிநூல்
திகழ் மார்பில் நல்ல
பன்றியின் கொம்பணிந்து பணைத் தோளியோர்
பாக மாகக்
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச்
செங்குன் றூர் வானில்
மின்திகழ் செஞ்சடையான் கழல்ஏத்தல்
மெய்ப்பொருளே.
தெளிவுரை : அழகியதாய் விளங்கும் திருமால், வடிவுகாண் ஆமையோட்டுடன், முப்புரி நூல் திகழும் மார்பில், பன்றியின் கொம்பு அணிந்து, மூங்கிலையொத்த மென்மையான தோளையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு, குன்றனைய வலிமையும் உயர்ச்சியும் கொண்ட மாளிகைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில், வானில் விளங்கும் மின்னலைப் போன்ற சிவந்த சடையுடைய ஈசன் திருக்கழலைப் பரவிப் போற்றுதல், உண்மையான ஞானம் ஆகும்.
1157. ஓங்கிய மூவிலைநற் சூலம்
ஒருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியம்
சடைக்குஅணிந்து
கோங்கு அணவும் பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள் தொழுவார் வினையாய
பற்றறுமே.
தெளிவுரை : வெற்றியோடு நல்லருளும் ஓங்கச் செய்யும் மூவிலை வேல் நற்சூலம் ஒரு கையில் திகழவும் கங்கையும், சந்திரனும் சடையில் தரித்து, தேன் திகழும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூரில் மேவிய ஈசனின் அருட்பாங்கான திருவடியைத் தொழுபவர்களுக்கு, பற்றியுள்ள வினைகள் யாவும் விலகி அறும்.
1158. நீடலர் கொன்றையொடு நிமிர்புன்
சடைதாழ வெள்ளை
வாடல் உடைதலையில் பலிகொள்ளும்
வாழ்க்கையானாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார் நினையாய
தேயுமே.
தெளிவுரை : நீண்டு மலரும் கொன்றையுடன் சடை முடி தாழ்ந்து நீண்டு விளங்க, பிரம கபாலம் ஏந்திப் பச்சை கொள்ளும் வாழ்க்கை உடையவனாய், கோடல் என்னும் பூக்கள் விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் நின்று மேவும் பெருமையுடன் விளங்கும் ஈசன் திருத்தாளைத் தொழுபவர்களுக்கு, வினையானது நீங்கும்.
1159. மத்த நன் மாமலரும் மதியும்வளர்
கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய
உடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மேய
தத்துவ னைத்தொழுவார் தடுமாற்று
அறுப்பாரே.
தெளிவுரை : ஊமத்த மலரும், சந்திரனும், கொன்றை மலரும் கொத்தாக விளங்கும் சடையின்மேல் திகழச் சூடி, கொத்தாக மலரும் குளிர்ந்த பொழில் சூழும் கொடிமாடச் செங்குன்றூர் மேவிய மெய்ப் பொருளாகிய ஈசனைத் தொழுபவர்கள் மனத் தடுமாற்றம் இல்லாதவர் ஆவர்.
1160. செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு
மாலும் தேட நின்று
அம்பவளத் திரள்போல் ஒளியாய
ஆதிபிரான்
கொம்புஅண வும்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மேய
நம்பன தாள்தொழுவார் வினையாய
நாசமே.
தெளிவுரை : செம்பொன் போன்ற திருமேனியுடையவன், பிரமனும் திருமாலும் தேடுமாறு செய்து அழகிய செம்மையான பவளத் திரள் போன்று ஒளியாகிய ஆதிப்பிரான், பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேவிய ஈசன். அப்பெருமானுடைய திருவடியைத் தொழுபவர்களுக்கு வினையானது மாயும்.
1161. பேதியர் பிண்டியர்என்று இவர்கள்
புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுறை கேட்டு உழல்வீர்
வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
வேதிய னைத்தொழுநும் வினையான
வீடுமே.
தெளிவுரை : புத்தர், சமணர் என்பவர் கூறும் பொய்யுரை கொள்ளன்மின். குயில்கள் சூழும் தண்பொழில்கள் விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் நிலவி நின்று மேவும் வேத நாயகனாகிய ஈசனைத் தொழ, உமது வினை யாவும் அழியும்.
1162. அலைமலி தண்புனல்சூழ்ந்து அழகார்
புகலிந்நகர் பேணும்
தலைமக னாகிநின்ற தமிழ்ஞான
சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச்
செங்குன்றூர் ஏத்தும்
நலமலி பாடல்வல்லார் வினையான
நாசமே.
தெளிவுரை : நீர்வளம் மிக்க அழகிய புகலி நகரைப் பேணும் தலை மகனாகிய தமிழ் ஞானசம்பந்தன், சூலம் ஏந்தியவனாகிய ஈசன் விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரை ஏத்திய நலம் மிகுந்த இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களுடைய வினை யாவும் அழியும்.
திருச்சிற்றம்பலம்
108. திருப்பாதாளீச்சரம் (அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி,திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1163. மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி
மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப்
பொற்பமரும்
அன்னம் அனநடையாள் ஒருபாகத்து
அமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான் உறைகோயில்
பாதாளே.
தெளிவுரை : மின்னலைப் போன்று விளங்கும் சிவந்த சடையின்மீது, விளங்கும் சந்திரன், ஊமத்த மலர், பொன் போன்ற கொன்றை மலர், கங்கை ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு, மலையரசன் மகளாகிய அன்னம் போன்ற நடையுயை உமாதேவி ஒரு பாகத்தில் வீற்றிருக்க, நாள்தோறும் துதிப்பாடல்களால் ஏத்தப்படுபவனாகிய ஈசன், உறையும் கோயில் பாதாளீச்சரம் ஆகும்.
1164. நீடலர் கொன்றையொடு நிரம்பா
மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில்நல்ல குழையான்
சுடுநீற்றான்
ஆடரவம் பெருக அனலேந்திக்
கைவீசி வேதம்
பாடலி னால்இனியான் உறைகோயில்
பாதாளே.
தெளிவுரை : நீண்ட கொன்றை மலரும், சந்திரனும் சூடி, வெண்மையான ஒளி மிக்க தோடும், நல்ல இசை பொழியும் கந்தருவர்களைக் குழைகளாகவும் காதில் அணிந்து, திருவெண்ணீறு பூசி, ஆடுகின்ற அரவம் திகழ, கையில் அனலையேந்தி வீசி, வேத கீதங்களால் போற்றப்படும் இனிமை உடையவனாகிய ஈசன், உறைகின்ற கோயில் பாதாளீச்சரம் ஆகும்.
1165. நாகமும் வான்மதியும் நலமல்கு
செஞ்சடை யான்சாமம்
போகநல் வில்வரையாற் புரமூன்று
எரித்துகந்தான்
தோகைநன் மாமயில்போல் வளர்சாயல்
தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தான் உறைகோயில்
பாதாளே.
தெளிவுரை : நாகமும், சந்திரனும் நலமுடன் திகழும் செஞ்சடையை உடையவன், உரிய காலத்தில், மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்தவன், மயில் போன்ற சாயலையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு மகிழ்ந்த ஈசன், உறைகின்ற கோயிலானது, பாதாளீச்சரம் ஆகும்.
1166. அங்கமு நான்மறையும் அருள்செய்து
அழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன்
உறைகோயில்
செங்கயல் நின்று உகளும் செறுவில்
திகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றுஅலரும் வயல்சூழ்ந்த
பாதாளே.
தெளிவுரை : வேதமும், அதன் அங்கமும் அருளி, அழகிய அஞ்சொல் விளம்பும் மங்கையாகிய உமாதேவியைப் பாகங்கொண்ட வேதநாயகன் உறைகின்ற கோயிலானது, கயல்கள் திரியும் குளத்தில் செந்தாமரை மலர்கள் விளங்கும் வயல் சூழ்ந்த பாதாளீச்சரம் ஆகும்.
1167. பேய்பல வும்நிலவப் பெருங்காடு
அரங்காகஉன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவும்
திகழ்வித்துத்
தேய்பிறை யும்அரவும் பொலிகொன்றைச்
சடை தன்மேற் சேரப்
பாய்புன லும்உடையான் உறைகோயில்
பாதாளே.
தெளிவுரை : பேய்கள் சூழச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு, தீயும், மானும் மழுவும் திகழ, சடை முடியில் பிறைச் சந்திரனும், அரவமும் கொன்றை மலரும் பொருந்தி விளங்க, கங்கை தரித்த ஈசன், உறைகின்ற கோயில் பாதாளீச்சரம் ஆகும்.
1168. கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச்
சடைதன்மேல் நன்று
விண்ணியல் மாமதியும் உடன்வைத்
தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்காடு
அரங்காக ஆடும்
பண்ணியல் பாடலினான் உறைகோயில்
பாதாளே.
தெளிவுரை : நெற்றியில் கண்ணுடையவன், கொன்றை மலர் சூடியுள்ள சடையின் மீது சந்திரனை உடன் வைத்தவன்; தன்னால் விரும்பப்படும் உமாதேவியை உடனாகக் கொண்ட அர்த்த நாரியாய் விளங்குபவன்; சுடுகாட்டை இடமாகக் கொண்டு ஆடுகின்றவன்; பண்ணோடு கூடிய இசையை விழைத்த ஈசன், அப்பெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரம் ஆகும்.
1169. விண்டலர் மத்தமொடு மிளிரும்இள
நாகம் வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு
வார் சடையான்
விண்டவர் தம்புரமூன்று எரிசெய்துரை
வேத நான்கும் அவை
பண்டிசை பாடலினான் உறைகோயில்
பாதாளே.
தெளிவுரை : நன்கு மலர்ந்த ஊமத்தம், ஒளிமிக்க நாகம், வன்னி இலை, வண்டுகள் திகழ் கொன்றை, பிறைச் சந்திரன் இவற்றைச் சடையில் கொண்டு, பகைவரின் மூன்று புரங்களை எரித்து, நான்கு வேதங்களின் இசையில் மிக்கவனாகிய ஈசன் உறையும் கோயில் பாதாளீச்சரம் ஆகும்.
1170. மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை
மறுகஅன்று கையால்
தொல்லை மலைஎடுத்த அரக்கன்தலை
தோள்நெரித்தான்
கொல்லை விடை யுகந்தான் குளிர்திங்கள்
சடைக்குஅ ணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறைகோயில்
பாதாளே.
தெளிவுரை : நுண்ணிய மெல்லிடையுடைய உமாதேவி கலங்குமாறு, கையினால் கயிலையை எடுத்த இராவணனுடைய தலையும், தோளும், கால்விரல் ஊன்றி நெரித்தவன், இடப வாகனத்தை உகந்து, குளிர்ச்சி பொருந்திய சந்திரனைச் சடைக்கு அணியாகக் கொண்டு பலவிதமான இசைப் பாடலுக்கு உரியவனாகிய ஈசன், உறைகின்ற கோயில் பாதாளீச்சரம் ஆகும்.
1171. தாமரை மேல்அயனும் அரியும்தமது
ஆள்வினையால் தேடிக்
காமனை வீடுவித்தான் கழல்காண்பிலர்
ஆய் அகன்றார்
பூமரு  வும்குழலான் உமைநங்கை
பொருந்தியிட்ட நல்ல
பாமரு வும்குணத்தான் உறைகோயில்
பாதாளே.
தெளிவுரை : தாமரை மலரின்மேல் விளங்கும் பிரமனும், திருமாலும் தமது ஆற்றலின் வயத்தால், காமனை எரித்த ஈசன் கழலைக் காணாதவாறு விலகி நிற்கவும், மலர்போன்ற மென்மையான கூந்தலை உடைய உமாதேவியைப் பாகமாகப் கொண்டு பக்திப் பாடல்களில் விளங்கும் குணத்தினனாகிய ஈசன் உறையும் கோயில், பாதாளீச்சரம் ஆகும்.
1172. காலையில் உண்பவரும் சமண கையரும்
கட்டுரை விட்டுஅன்று
ஆல விடநுகர்ந்தான் அவன்றன்னடி
யே பரவி
மாலையில் வண்டினங்கள் மதுஉண்டு
இசைமுரல வாய்த்த
பாலையாழ்ப்ப பாட்டுகந்தான் உறைகோயில்
பாதாளே.
தெளிவுரை : சமணர் முதலான பிறர் கூறும் வரைகளை ஒதுக்கிவிட்டு, தேவர்களைக் காக்கும் பொருட்டு ஆலகால விடத்தை உண்டவனும், வண்டினங்கள் மாலை நேரத்தில் தேனை உண்டு இசை எழுப்ப, பாலைப் பண் விரும்பியவனும் ஆகிய ஈசன் உறைகின்ற கோயில் பாதாளீச்சரம் ஆகும்.
1173. பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த
பாதாளைச் சேரப்
பொன்னியல் மாடமல்கு புகலிநகர்
மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான
சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்துவல்லார் எழில்வானத்து
இருப்பாரே.
தெளிவுரை : பலவகையான மலர்கள் கொண்ட பொழில்கள் சூழ்ந்த பாதாளீச்சரத்தைப் பொருந்த, புகலி நகரில் சிறப்புடன் விளங்குபவனாகிய தனது இயல்பால் ஒளி மிக்கு உயர்ந்த, தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன, இனிய இசைமிக்க இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், தேவலோகத்தில் எழிலுடன் விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
109. திருச்சிரபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1174. வாருறு வளமுலை மங்கைபங்கன்
நீருறு சடைமுடி நிமலன்இடம்
காருறு கடிபொழில் சூழ்ந்து அழகார்
சீருறு வளவயல் சிரபுரமே.
தெளிவுரை : அழகிய கச்சு அணிந்த உமாதேவியைப் பாகம் கொண்டு, கங்கை தரித்த சடை முடியுடைய நிமலன் இருக்கும் இடமானது, வளமையான மணம் கொண்ட பொழில் சூழ்ந்த, அழகின் சிறப்பினை உடைய வளம் மிகுந்த வயல்களை யுடைய சிரபுரம் ஆகும்.
1175. அங்கமொடு அருமறை அருள்புரிந்தான்
திங்களொடு அரவுஅணி திகழ்முடியன்
மங்கையொடு இனிதுறை வளநகரம்
செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே.
தெளிவுரை : வேதங்களும் அதன் அங்கங்களும் தோற்றுவித்து, சந்திரனும் அரவும் திகழும் முடியடன் உமாதேவியுடன் இனிது உறையும் ஈசனின் வளமையான நகரானது, கயல்கள் மிகுந்த நீர் வளம் மிக்க வயல்களைக் கொண்ட சிரபுரம் ஆகும்.
1176. பரிந்தவன் பன்முடி அமரர்க்கு ஆகித்
திரிந்தவர் புரமவை தீயில்வேவ
வரிந்தவெஞ் சிலைபிடித்து அடுசரத்தைத்
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே.
தெளிவுரை : கருணையின் வயத்தால் தேவர்களின் பதவியைக் காக்கும் வகையில், முப்புர அசுரர்களை அழிக்கவல்லதும், கோட்டைகளைத் தீயில் வேகுமாறு கொடிய வில்லும் அதில் தொடுக்கும் அம்பும் தெரிந்து பயன்படுத்தி, ஈசன் வீற்றிருக்கும் வளநகர் சிரபுரம் ஆகும்.
1177. நீறுஅணி மேனியன் நீள்மதியோடு
ஆறுஅணி சடையினன் அணி இழையோர்
கூறுஅணிந்து இனிதுஉறை குளிர்நகரம்
சேறுஅணி வளவயல் சிரபுரமே.
தெளிவுரை : திருவெண்ணீறு அணிந்த திருமேனியை உடையவன்; சந்திரனும் கங்கையும் சடையில் அணிந்தவன்; உமாதேவியை ஒரு பாகத்தில் அங்கமாகக் கொண்டு இனிது உறையும் நகரானது, வயல் வளம் மிக்க சிரபுரம் ஆகும்.
1178. அருந்திறல் அவுணர்கள் அரண்அழியச்
சரம்துரந்து எரிசெய்த சங்கரன்ஊர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே.
தெளிவுரை : வலிமைமிக்க அசுரர்களின் கோட்டைகள் அழியுமாறு சரம் தொடுத்து எரித்த சங்கரன் ஊரானது, குருந்த மரத்தில் மாதவிக் கொடிகள் படர, காடுகள் சூழும் சிரபுரம் ஆகும்.
1179. கலையவன் மறையவன் காற்றொடுதீ
மலையவன் விண்ணொடு மண்ணும்அவன்
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
சிலையவன் வளநகர் சிரபுரமே.
தெளிவுரை : ஈசன், கல்வியால் திகழும் ஞானமாகியவன்; வேதமாகியவன்; காற்றும் நெருப்பும் ஆகியவன்; உறுதியான மலையாகியவன்; விண்ணும், மண்ணும் ஆகியவன்; கொலைத் தன்மை கொண்ட வன்மை மிக்க கொடிய மதில்களை  முப்புரத்தினை அதன் கூட்டோடு, ஒரு சேர அழித்த வில்லையுடையவன். அப்பெருமானின் வளநகர் சிரபுரம் ஆகும்.
1180. வானமர் மதியொடு மத்தம்சூடித்
தானவர் புரம்எய்த சைவன்இடம்
கானமர் மடமயில் பெடைபயிலும்
தேனமர் புரம்எரி சிரபுரமே.
தெளிவுரை : சந்திரனொடு ஊமத்த மலரினைச் சென்னியில் சூடி, அசுரர்களின் புரம் எரித்த சைவனாகிய ஈசன் இடமானது, சோலைகளில் மயில்கள் பெடையுடன் ஆட, தேன் கமழும் ஒளிமிக்க சிரபுரம் ஆகும்.
1181. மறுத்தவர் திரிபுர மாய்ந்தழியக்
கறுத்தவன் கார்அரக் கன்முடிதோள்
இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே.
தெளிவுரை : பகைவரின் திரிபுரத்தை மாய்த்து அழியுமாறு செய்து, சினம் கொண்ட கரிய அரக்கனாகி இராவணனுடைய முடியும் தோளும் நலியச் செய்து, மார்க்கண்டேயரின் உயிரைச் சினத்தின் வயம் கொண்டு கவர்வதற்கு வந்த காலனைக் காலால் உதைத்து மாய்த்த ஈசன் வீற்றிருக்கும் வளமையான நகர், சிரபுரம் ஆகும்.
1182. வண்ணநன் மலர்உறை மறையவனும்
கண்ணனும் கழல்தொழக் கனல்உருவாய்
விண்ணுற ஓங்கிய விமலன் இடம்
திண்ண நன் மதில்அணி சிரபுரமே.
தெளிவுரை : வண்ணம் மிக்க தாமரை மலர்மேல் உறைகின்ற பிரமனும், திருமாலும், திருவடியைப் போற்றித் துதிக்க, கனல் உருவாய், விண்ணளவு சோதியாய் ஓங்கிய விமலன் வீற்றிருக்கும் இடமானது, உறுதியான மதில்களின் அழகு பெறும் சிரபுரம் ஆகும்.
1183.வெற்று அரை உழல்பவர் விரிதுகிலார்
கற்றிலர் அறவுரை புறன்உரைக்கப்
பற்றவர் திரிபுர மூன்றும் வேவச்
செற்றவன் வளநகர் சிரபுரமே.
தெளிவுரை : ஆடையின்றிக் கல்லாதவராய் உள்ளவர்கள், உண்மைக்கு மாறாகப் புறம் உரைக்க, அச்சொற்களை ஏற்றுக் கொள்ளாது, அன்பற்ற பகைவரின் திரிபுரத்தை எரித்து சாம்பலாகுமாறு செய்த ஈசன் வீற்றிருக்கும் வளநகர், சிரபுரம் ஆகும்.
1184. அருமறை ஞானசம் பந்தன்அந்தண்
சிரபுர நகர்உறை சிவனடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
திருவொடு புகழ்மல்கு தேசினரே.
தெளிவுரை : அருமறையில் மிகுந்த ஞானசம்பந்தன் சிரபுர நகரில் உறையும் சிவனடியைப் பரவி உரைத்த செந்தமிழ்ப் பதிகமாகிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், செல்வராய் விளங்கிப் புகழ் மிக்க ஒளியை உடையவர்களாவர்.
திருச்சிற்றம்பலம்
110. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1185. மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொடு இறவும் ஆனான்
அருந்தவ முனிவரொடு ஆல்நீழற்கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே.
தெளிவுரை : உள்ளத்திற்கும் யாக்கைக்கும் யாண்டும், ஈசன் மருந்தென விளங்குபவன்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெருந்தகையாய்ப் பிறப்பும் இறப்பும் நிகழ்விக்கும் காராணன்; சனகாதி முனிவர்களுடன் ஆல் நிழலில் அமர்ந்து குருமூர்த்தம் ஆனவன். அப்பெருமான் வீற்றிருப்பது, இடைமருது ஆகும்.
1186. தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோல் அசைத்த
நீற்றவ(ன்) நிறைபுன(ல்) நீள் சடைமேல்
ஏற்றவன் வளநகர் இடை மருதே,
தெளிவுரை : ஈசன், யாவற்றையும் செய்பவன்; மாயச் செய்பவன்; உமாதேவியைக் கூறாகக் கொண்டு அர்த்த நாரியாய் விளங்குபவன்; கொலைப் பண்பு கொண்ட புலியின் தோலை ஆடையாகக் கொண்டவன்; திருநீறு அணிந்தவன்; கங்கையைச் சடையின் மீது ஏற்றவன். அப் பெருமான் வீற்றிருக்கும் இடம், இடைமருது ஆகும்.
1187. படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவில் ஏற்றினான் ஞாலமெல்லாம்
உடைதலை யிடுபலி கொண்டுழல்வான்
இடைமருது இனிதுஉறை எம் மிறையே.
தெளிவுரை : ஈசன் மழுப்படை உடையவன்; பால் போன் வெண்ணீறு அணிந்தவன்; இடப வாகனம் பிச்சையேற்றவன்; அப் பெருமான் இடைமருதில் இனிது உறையும் எம் இறை.
1188. பணைமுலை உமையொரு பங்கன் ஒன்னார்
துணைமதில் மூன்றையும் சுடரில் மூழ்கக்
கணை துரந்து அடுதிறல் காலன்செற்ற
இணையிலி வளநகர் இடை மருதே.
தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டுள்ள ஈசன், பகைவரின் மூன்று மதில்களையும் நெருப்பில் மூழ்குமாறு கணை தொடுத்து, திறல் மிக்க காலனைச் செற்று, இணையற்ற வளம் மிக்க நகராகிய இடைமருதில் வீற்றிருப்பவன்.
1189. பொழிலவன் புயலவன் புயல்இயக்கும்
தொழிலவன் துயரவன் துயரகற்றும்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநகர் இடைமருதே.
தெளிவுரை : ஈசன், பொழிற் சோலையாய், மேகமாய், அதனை இயக்கும் அதிகாரியாய், வினை வழி உறும்துயராய், அதனை நீக்குபவனாய் விளங்கும் திருவடிச் சீரை உடையவன். யானையின் தோலை உரித்துப் போர்த்திய எழிலுடையவனாகிய அப்பெருமானின் வளநகர், இடைமருது ஆகும்.
1190. நிறையவன் புனலொடு மதியும் வைத்த
பொறையவன் புகழவன் புகழ நின்ற
மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
இறையவன் வளநகர் இடை மருதே.
தெளிவுரை : ஈசன், யாவும் நிறைந்த நிலையுடையவன்; கங்கையும், சந்திரனும் வைத்த சடையையுடையவன்; புகழாகவும், அதற்குரிய மறையாகவும் விளங்குபவன்; கலக்கம் உறுமாறு தோன்றிய நஞ்சினை உட்கொண்ட இறையவன். அப் பெருமான் வீற்றிருக்கும் வளநகர், இடைமருது ஆகும்.
1191. நனிவளர் மதியொடு நாகம் வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொடு அமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநகர் இடை மருதே.
தெளிவுரை : நன்று வளரும் பிறைச் சந்திரனோடு நாகத்தையும், கொன்றை மலரையும் சடை முடியில் வைத்த ஈசன், தேவர்களும் முனிவர்களும் வணங்க இனிது உறையும் வளநகரானது, இடைமருது ஆகும்.
1192. தருக்கின அரக்கன தாளும் தோளும்
நெரித்தவ(ன்) நெடுங்கைமா மதகரியன்று
உரித்தவன் ஒன்னலர் புரங்கள் மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே.
தெளிவுரை : அகந்தை கொண்ட அரக்கனான இராவணனுடைய தாளும் தோளும் நெரித்த ஈசன், மத யானையின் தோலை உரித்தவன்; பகைவரின் முப்புரங்களை எரித்தவன். அப் பெருமான் வீற்றிருக்கும் வளநகர், இடைமருது ஆகும்.
1193. பெரியவன் பெண்ணினொடு ஆணும் ஆனான்
வரியர வணைமறி கடல் துயின்ற
கரியவன் அலரவன் காண்பரிய
எரியவன் வளநகர் இடைமருதே.
தெளிவுரை : எவர்க்கும் முந்தியவனாய் விளங்கம் பெரியவனாகிய ஈசன், பெண்ணுமாய் ஆணுமாய் விளங்கி, பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவனாய் ஒளிவடிவாகிய பரமன். அவன் நகர் இடைமருது ஆகும்.
1194. சிந்தையில் சமணொடு தேரர் சொன்ன
புந்தியில் உரையவை பொருள் கொளாதே
அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா
எந்தைதன் வளநகர் இடை மருதே.
தெளிவுரை : சிந்தனை கொள்ளாத சமணர்களும் பௌத்தர்களும் அறிவுக்குப் பொருந்தாத உரை சொல்ல, அவற்றை ஏற்காது, அந்தணர்கள் ஓதும் வேத ஒலிகள் ஓய்வில்லாது விளங்க, எந்தையாகிய ஈசன் வீற்றிருக்கும் வளநகர், இடைமருது ஆகும்.
1195. இலைமலி பொழிலிடை மருது இறையை
நலமிகு ஞானசம் பந்தன் சொன்ன
பலமிகு தமிழ்இவை பத்தும்வல்லார்
உலகுறு புகழினொடு ஓங்குவரே.
தெளிவுரை : இலைகள் மலிந்து பெருகிய சோலைகளை உடைய இடைமருதில் எழுந்தருளியுள்ள இறைவனைப் பரவி, நலத்தால் மிகுந்த ஞானசம்பந்தன் சொன்ன சக்தி மிகுந்த தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், உலகத்தில் பெரும் புகழோடு ஓங்கி விளங்கி நிற்பார்கள்.
திருச்சிற்றம்பலம்
111. திருக்கடைமுடி (அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1196. அருந்தனை அறவனை அமுதனை நீர்
விருத்தனைப் பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன் வளநகர் கடைமுடியே.
தெளிவுரை : எல்லாவற்றுக்கும் பொருளாக விளங்குபவனாகிய ஈசனை, அறத்தின் பொருளாகியவனை, அமுதமாகி விளங்குபவனை, யாவர்க்கும் மூத்தோனாகியும் யாண்டும் இளமையுடையவனாயும் உள்ளவன் யார் என வினவுவீர்களாயின், அவன், யாவராலும் போற்றப்படும் ஒருவனாகிய ஈசன். அவன் உலகம் ஏத்திப் பரவும் கருத்துடையவனாகிக் கடைமுடி நகரில் வீற்றிருப்பவன்.
1197. திரைபொரு திருமுடி திங்கள் விம்மும்
அரைபொரு புலியதன் அடிகளிடம்
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
கரைபொரு வளநகர் கடைமுடியே.
தெளிவுரை : கங்கையும் சந்திரனும் சடையில் பொலிய, புலியின் தோலை ஆடையாகக் கொண்ட அடிகளின் இடம், அலையொடு நுரை மிகும் தெளிந்த சுனைநீர் மோதும் கடைமுடி என்னும் வளநகர் ஆகும்.
1198. ஆலின மதியினொடு அரவு கங்கை
கோலவெண் ணீற்றனைத் தொழுது இறைஞ்சி
ஏலநன் மலரொடு விரைகமழும்
காலன வளநகர் கடைமுடியே.
தெளிவுரை : இளம் பிறைச் சந்திரனும் அரவும், கங்கையும் கொண்டு அழகியய திருநீறு தரித்தவனாகிய ஈசனை, மணம் கமழ் மலரோடு ஏத்தித் தொழ அப்பெருமான் தன் வளநகராகிய கடைமுடியில் வாசனை மிக்க திருத்தாள் கொண்டு அருள் புரிகின்றான்.
1199. கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்
மையணி மிடறுடை மறையவன்ஊர்
பையணி அரவொடு மான்மழுவாள்
கையணி பவனிடம் கடைமுடியே.
தெளிவுரை : கொய்து அணியும் நறுமலராகிய கொன்றை சூடிய, கரிய மிடற்றினை உடைய வேதியனாகிய ஈசனின்பால் ஊர்ந்து அசையும் படம் கொண்ட அரவமும் மானும் மழுவும் கையில் கொண்டு அணிபவனுடைய இடமானது, கடைமுடி ஆகும்.
1200. மறையவன் உலகவன் மாயம் அவன்
பிறையவன் புனலவன் அனலும்அவன்
இறையவன் எனஉலகு ஏத்தும்கண்டம்
கறையவன் வளநகர் கடைமுடியே.
தெளிவுரை : ஈசன், மறையாக உள்ளவன்; உலகமாக உள்ளவன்; மாயைப் பொருளாக மனத்தின்கண் பதிபவனும் அவன்; பிறைச் சந்திரனைச் சூடியவன்; கங்கையும் ஆனவன்; நெருப்பும் ஆனவன்; உலகம் எங்கிலும் இறையவன் என ஏத்தப் பெருபவன்; நீலகண்டத்தையுடையவன். அப் பெருமானின் நகர் கடைமுடி ஆகும்.
1201. படஅரவு ஏர்அல்குல் பல்வளைக்கை
மடவர லாளையொர் பாகம் வைத்துக்
குடதிசை மதியது சூடுசென்னிக்
கடவுள்தன் வளநகர் கடைமுடியே.
தெளிவுரை : உமாதேவியைப் பாகம் வைத்து பிறைச் சந்திரனைச் சூடும் சென்னியை உடைய கடவுள் வீற்றிருக்கும் வளநகர் கடைமுடி ஆகும்.
1202. பொடிபுல்கு மார்பினில் புரிபல்குநூல்
அடிபுல்கு பைங்கழல் அடிகள்இடம்
கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே.
தெளிவுரை : திருவெண்ணீறு மார்பினில் பொலியவும், முப்புரிநூல் விளங்கவும், திருவடியில் ஒலிக்கின்ற அழகிய கழலும் உடைய அடிகள் வீற்றிருக்கும் இடமானது, குளிர்ந்த சுனைகளில் வாசனை மிக்க மலர்களையுடைய கொடிகள் பரவ, அந்த நறுமணமானது விளங்கும் வளநகராகிய கடைமுடி ஆகும்.
1203. நோதல்செய்து அரக்கனை நோக்கு அழியச்
சாதல்செய் தவன்அடி சரண்எனலும்
ஆதரவு அருள்செய்த அடிகள்அவர்
காதல்செய் வளநகர் கடைமுடியே.
தெளிவுரை : இராவணனைத் துன்பத்திற்கு ஆளாக்கி, அவனுடைய நோக்கத்தையும் அழியச் செய்து, சரணம் என அடைக்கலம் ஆன நிலையில் அன்பு கொண்டு, அருள் செய்த அடிகள், விரும்பி இருக்கும் வளநகர் கடைமுடியாகும்.
1204. அடிமுடி காண்கிலர் ஓரிருவர்
புடைபுல்கி அருள்என்று போற்றிசைப்பச்
சடை யிடைப் புனல்வைத்த சதுரனிடம்
கடைமுடி அதன்அழல் காவிரியே.
தெளிவுரை : திருமாலும் பிரமனும் அடியும் முடியும் காண்கிலராய்ப் புலம்பி நின்று போற்றிசைக்கச் சோதி வடிவாகிய ஈசன், கங்கையினைச் சடையில் வைத்த சதுரன். அப் பெருமான் விளங்கும் இடம், காவிரியின் அயல் விளங்கும் கடை முடி ஆகும்.
1205. மண்ணுதல் பறித்தலும் மாயம்இவை
எண்ணிய கால்அவை இன்பம்அல்ல
ஒண்ணுதல் உமையையொர் பாகம்வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே.
தெளிவுரை : சிகை நீக்குதல் முதலான விரதங்கள், அதன் சார்பான ஒழுக்கங்கள் யாவும் மாயை. அது உண்மையான இன்பத்தை வழங்காது. உமாதேவியைப் பாகம் கொண்ட, கண்ணுதல் கொண்ட ஈசன் வளநகர் கடைமுடியாகும், அப் பெருமானைத் தொழுவீராக என்றவாறு.
1206. பொன்திகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடிச் சிவனடியை
நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன
இன்தமிழ் இவை சொல இன்பமாமே.
தெளிவுரை : புகழ் விளங்கும் காவிரியின் நீரானது சென்றடையும் கடைமுடியில் வீற்றிருக்கும் சிவனடியை நன்றாக உணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன, இனிய இத் தமிழ்த் திருப்பதிகத்தைச் சொல்பவர்கள், யாண்டும் இன்புற்று விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
112. திருச்சிவபுரம் (அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில், சிவபுரம்,தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1207. இன்குரல் இசைகெழும் யாழ்முரலத்
தன்கர மருவிய சதுரனகர்
பொன்கரை பொரு பழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே.
தெளிவுரை : இனிய குரலின் இசையினை யாழ் எழுப்பத் தன் கரத்தைப் பதித்த சதுரனாகிய ஈசன் நகரானது காவிரியின் அழகிய தென்கரையில் மருவிய சிவபுரம் ஆகும். ஈசன் வீணை வாசித்த வரலாற்றைச் சுட்டியது.
1208. அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட உதைசெய்த புனிதநகர்
வென்றிகொள் எழிற்றுவெண் பன்றிமுன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே.
தெளிவுரை : மார்கண்டேயருக்காகக் காலனை உதைத்து அழித்த புனித நகர், வெற்றி கொண்ட திருமால் வெண் பல்லுடைய பன்றியாய் ஈசனடியை அடைந்து வணங்கிய சிவபுரம் ஆகும்.
1209. மலைமகள் மறுகிட மதகரியைக்
கொலைமல்கு உரிசெய்த குழகனகர்
அலைமல்கும் அரிசிலின் அதன் அயலே
சிலை மல்கு மதிள்அணி சிவபுரமே.
தெளிவுரை : உமாதேவியும் கலங்குமாறு எதிர்த்து வந்த மத யானையைக் கொன்று, அதன் தோலை உரித்த அழகனாகிய ஈசன் விளங்கும் நகரானது, அரிசிலி ஆற்றை மருவியுள்ள உயர்ந்த மதிள்களை உடைய சிவபுரம் ஆகும்.
1210. மண்புனல் அனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்த(ன்)நகர்
பண்புனை குரல்வழி வண்டுகிண்டிச்
செண்பக மலர்பொழில் சிவபுரமே.
தெளிவுரை : நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்கள் ஆகி விகிர்தனாகிய ஈசன், விளங்கும் நகரானது பண்ணிசை போன்று குரல் எழுப்பும் வண்டுகள் சூழும் செண்பக மலர்ச் சோலையுடைய சிவபுரம் ஆகும்.
1211. வீறுநன்கு உடையவள் மேனிபாகம்
கூறுநன்கு உடையவன் குளிர்நகர்தான்
நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்
தேறல்உண்டு எழுதரு சிவபுரமே.
தெளிவுரை : பெரும் ஆற்றல் உடையவனாகிய உமாதேவியை ஒரு பாகம் அங்கமாகக் கொண்டு, அர்த்தநாரியாய் உடைய ஈசனின் குளிர்ச்சி பொருந்திய நகரானது, மணம் கமழும் குரவ மலரில் வண்டு பதிந்து தேன் உண்டு மகிழ்ந்து எழும் சிவபுரம் ஆகும்.
1212. மாறுஎதிர் வருதிரி புரம்எரித்து
நீறது ஆக்கிய நிமலனகர்
நாறுடை நடுபவர் உழவரொடும்
சேறுடை வயலணி சிவபுரமே.
தெளிவுரை : பகை கொண்டு எதிர் நின்ற திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய, நிமலனாகிய ஈசனுடைய நகரானது, நாற்றுகளை நடுகின்ற உழவர்கள் தம்முடன், சேறுடைய வயல்களின் அணி கொண்ட சிவபுரம் ஆகும்.
1213. ஆவில்ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு
மேவி நன்கு இருந்ததொர் வியனகர்தான்
பூவில் வண்டு அமர்தரு பொய்கைஅன்னச்
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே.
தெளிவுரை : பசுவிலிருந்து தோன்றும் பால், தயிர் என ஆகும் பஞ்சகவ்வியத்தைப் பூசனையாக ஏற்று மகிழ்ந்த ஈசன், உமாதேவியோவு மேவி, நன்கு இருந்த பெருமை மிக்க நகரானது, பூவில் உள்ள தேனை அருந்திக் களிக்கும் வண்டாது அமர்ந்திருக்கும் எழிலார்ந்த பொய்கையில், அன்னச் சேவல் தன் பெடையொடு புல்கும் இயல்பினையுடைய சிவபுரம் ஆகும்.
1214. எழில்மலை எடுத்தவல் லிராவணன்றன்
முழுவலி அடக்கிய முதல்வனகர்
விழவினில் எடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகில் அடுக்கும்வண் சிவபுரமே.
தெளிவுரை : எழில் மிக்க கயிலை மலையைப் பெயர்த்த இராவணனுடைய முழு வலிமையும் அடக்கிய பரமனுடைய நகரானது, திருவிழாக் காலங்களில் அமையப்பெறும் வெண்கொடி, மேகத்தை நெருங்குமாறு உயர்ந்த நிலையுடன் விளங்கும் சிவபுரம் ஆகும்.
1215. சங்குஅள வியகையன் சதுர்முகனும்
அங்குஅள வறிஅரி யவனகர்தான்
கங்குலும் பறவைகள் கமுகுதொறும்
செங்கனி நுகர்தரு சிவபுரமே.
தெளிவுரை : சங்கினைக் கரத்தில் ஏந்திய திருமாலும், நான்முகனும் அளவிடுவதற்கு அறியாதவராய், அவர்களுக்கு அரியவனாகிய ஈசன் நகரானது, கமுக மரங்களில் வாழும் பறவைகள், இரவிலும் கனிகளை நுகரும் தனிச்சிறப்புறும் சிவபுரம் ஆகும்.
1216. மண்டையிற் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலனகர்
பண்டமர் தருபழங் காவிரியில்
தெண்டிரை பொருதுஎழு சிவபுரமே.
தெளிவுரை : விவாதம் செய்து மாசு புரியும் சொற்களை விலக்கிய விமலன் நகரானது, தொன்மைக் காலத்திலிருந்து காவிரியின் நீர் வளம் சேரும் எழில் உடைய சிவபுரம் ஆகும். இது ஈசன் அருளால் நீர்வளமும், நிலவளமும், மக்கள் தம் மகிழ்ச்சிப் பெருக்கும் உணர்த்துவதாயிற்று.
1217. சிவன்உறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழ்இவை சொல்லவல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.
தெளிவுரை : சிவபெருமான் உறைகின்ற சிவபுர நகரினைக் கவுணியர் கோத்திரத்தின் வழிவந்த காழி நகரின் தலைவனின் தவம் பெருகும் இத் தமிழ்ப் பதிகத்தைச் சொல்ல வல்லவர்கள் புதுமை திகழுமாறு சிவகதியை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
113. திருவல்லம் (அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், திருவல்லம், வேலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1218. எரித்தவன் முப்புரம் எரியின் மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிடம் திருவல்லமே.
தெளிவுரை : ஈசன், முப்புரத்தை எரித்து சாம்பலாகுமாறு செய்தவன்; தாழ் சடையின் மேல் கங்கையைத் தரித்தவன்; வேதங்களை விரித்து அதன் பொருட் சிறப்பினைப் பலவாறு விளங்கச் செய்தவன். அவன் உறைவிடம் திருவல்லம் ஆகும்.
1219. தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத்
தூயவன் தூமதி சூடியெல்லாம்
ஆயவன் அமரர்க்கு முனிவர்கட்கும்
சேயவன் உறவிடம் திருவல்லமே.
தெளிவுரை : ஈசன், உலகுக்கெல்லாம் தாயாகிக் காப்பவன். தனக்கு இணையாக யாரும் சொல்ல முடியாதவாறு மலம் அற்று விளங்கும் தூயவன்; தூயமதி சூடி எல்லாமாய் விளங்குபவன்; ஞானம் கைவரப் பெறாத வேதர்களுக்கும், முனிவர்களாயினும் அவர்களுக்கும் தொலைவாக இருப்பவன். அப்பெருமான் உறையும் இடம், திருவல்லம் ஆகும்.
1220. பார்த்தவன் காமனைப் பண்புஅழியப்
போர்த்தவன் போதகத் தின்னுரிமை
ஆர்த்தவ(ன்) நான்முகன் தலையைஅன்று
சேர்த்தவன் உறைவிடம் திருவல்லமே.
தெளிவுரை : ஈசன், தலைமேல் அம்பு தொடுத்த மன்மதனை நெற்றிக் கண்ணால் பார்த்து எரித்தவன்; எதிர்த்து வந்த யாதனையின் தோலை உரித்துப் போர்த்துவன்; ஆணவத்தின்பால் திரட்சி கொண்டு நின்ற பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றினைக் கொய்து நான்முகனாக்கியவன். அப்பெருமான் உறையும் இடம் திருவல்லம் ஆகும்.
1221. கொய்தவம் மலரடி கூடுவார்தம்
மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்
பெய்தவன் பெருமழை உலகம்உய்யச்
செய்தவன் உறைவிடம் திருவல்லமே.
தெளிவுரை : கொய்து அழகிய மலரைக் கொண்டு, மனம் ஒருமித்து தூவிப் போற்றி வழிபடுபவர்களுக்குத், திருமகள் செல்வச் செழிப்பினை இணங்கி அருளுமாறு செய்யவைத்தும், உலகம் உய்ய பெருமழை பெய்யுமாறு செய்து பஞ்சத்தைப் போக்கும் ஈசன் உறையும் இடம், திருவல்லம் ஆகும்.
1222.  சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும்வண்ணம்
நேர்ந்தவ(ன்) நேரிழை யோடும் கூடித்
தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே
சேர்ந்தவன் உறைவிடம் திருவல்லமே.
தெளிவுரை : தன்னைச் சார்ந்து உள்ள அடியவர்களுக்கு எல்லாவிதமான இன்பங்களும் தழைக்கும் வண்ணம் புரியும் ஈசன், உமாதேவியுடன் கூடியிருப்பவனாய், தன்னைத் தேர்ந்து தேடுவார் தம்மைத் தேடுமாறு செய்து, அவர்களிடம் எப்போதும் சேர்ந்து இருப்பவன். அப்பெருமான் உறைவிடம் திருவல்லம் ஆகும்.
1223. பதைத்துஎழு காலனைப் பாதம் ஒன்றால்
உதைத்துஎழு மாமுனிக்கு உண்மை நின்று
விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வி யன்று
சிதைத்தவன் உறைவிடம் திருவல்லமே.
தெளிவுரை : பதை பதைத்துச் சினந்து எழுந்த காலனைத் திருப்பாதத்தால் உதைத்து அழித்து, தன்னை வழிபட்ட மாமுனியாகிய மார்க்கண்டேயருக்கும் மெய்ப்பொருளாய் விளங்கி அருள்புரிந்து, நன்னெறியிலிருந்து பிறழ்ந்து தடுமாறிய, தக்கன் செய்த வேள்வியைச் சிதைத்த ஈசன் உறைவிடம், திருவல்லம் ஆகும்.
1224. இகழ்ந்துஅரு வரையினை எடுக்கலுற்றுஆங்கு
அழ்ந்தவல் லரக்கனை அடர்த்த பாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச் செய்தே
திகழ்ந்தவன் உறைவிடம் திருவல்லமே.
தெளிவுரை : இகழ்ச்சியாக நினைத்து அருவரையான கயிலை மலையை எடுக்க வேண்டும் என்று அகழ்ந்த, கொடிய அரக்கனாகிய இராவணனைத் தண்டித்த திருப்பாதத்தைத் தேடுமாறு செய்த ஈசன் உறைவிடம், திருவல்லம் ஆகும்.
1225. பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவன் அருமறை அங்கம் ஆனான்
கரியவ னான்முகன் காணவொண்ணாத்
தெரியவன் வளநகர் திருவல்லமே.
தெளிவுரை : ஈசன், யாவற்றுக்கும் முதற்பொருளாய் இருத்தல் போன்று யாவர்க்கும் பெரியவனாய் விளங்குபவன்; சிறியவர்களாய பிறர்க்குச் சிந்தை செய்வதற்கு அரியவன்; வேதங்களும் அதன் அங்கங்களும் ஆனவன்; திருமாலும், பிரமனும் காண வொண்ணாதவன். யாவும் தெரிந்தவனாய் விளங்கி, சீவன் முத்தர்கள்பால் விளங்கும் அப்பெருமான் உறைவிடம், திருவல்லம் ஆகும்.
1226. அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய அறவுரை கூறாவண்ணம்
வென்றவன் புலன்ஐந்தும் விளங்கஎங்கும்
சென்றவன் உறைவிடம் திருவல்லமே.
தெளிவுரை : அன்று எனும் இன்மை கூறும் சமணர் மற்றும் சாக்கியர்தம் அறவுரைகள் வளம் அற்றனவாகும். அவ்வுரைகள் மேலாகாதவாறு வென்றவனாய், ஐந்து புலன்களுக்கும் கடந்தவனாய் விளங்கும் ஈசன் உறைவிடம், திருவல்லம் ஆகும்.
1227. கற்றவர் திருவல்லம் கண்டுசென்று
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே.
தெளிவுரை : கற்றவர் விளங்கும் திருவல்லத்தைக் கண்டு மகிழந்து நற்றமிழ் ஞானசம்பந்தன் சொன்ன குற்றமற்ற செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை கூற வல்லவர்கள், ஈசனார் திருவடியைப் பற்றி, நின்று விளங்குவார்கள். இது, பேரின்பம் உண்டாகும் என உணர்த்தியவாறு.
திருச்சிற்றம்பலம்
114. திருமாற்பேறு (அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர், வேலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1228. குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவன் ஆணும்அவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே.
தெளிவுரை : ஈசன், கொழுந்தாக விளங்கி செழுமையைப் புலப்படுத்துபவனாகவும், நுண்மையாக விளங்குபவனாகவும் பெருந்தகைமை பூண்டுள்ளவனாகவும், பெண்ணும் ஆகி, ஆணும் ஆகியவனாகவும், உமாதேவியார் விரும்பி ஏத்தும் அமுதனாகவும் உள்ளவன். அவன் வளநகர் மாற்பேறு ஆகும்.
1229. பாறணி வெண்தலை கையில் ஏந்தி
வேறணி பலிகொள்ளும் வேட்கையனாய்
நீறணிந்து உமையொரு பாகம்வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே.
தெளிவுரை : பிரம கபாலம் கையில் ஏந்திப் பிச்சையேற்கும் வேட்கை உடையவனாய்த் திருநீறு மெய்யில் பூசி, உமாதேவியைப் பாகமாகக் கொண்ட, மாறு பாடில்லாதவனாய் விளங்கும் ஈசனின் வளநகர் மாற்பேறு ஆகும்.
1230. கருவுடை யாருல கங்கள்வேவச்
செருவிடை யேறியும் சென்றுநின்று
உருவிடை யாள்உமை யாளும்தானும்
மருவிய வளநகர் மாற்பேறே.
தெளிவுரை : கருமையுடைய இருள் மனத்தினராகிய முப்புராரிகளையும் அவர்தம் மதில்களையும் வேகுமாறு எரிசெய்து, இடப வாகனத்தில் ஏறிய ஈசன் அழகிய இடையுடைய உமாதேவியும் தானும் மருவி விளங்கும் வளநகர் மாற்பேறு ஆகும்.
1231. தலையவன் தலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினைக் கொன்றுகன்தான்
கலைநவின் றான்கயி லாயமென்னும்
மலையவன் வளநகர் மாற்பேறே.
தெளிவுரை : ஈசன், யாவற்றுக்கும் தலைமையாவன்; தலைமாலையைப் பூண்டவன்; கொலை நவிலும் கூற்றுவனைக் காலால் உதைத்துக் கொன்றவன்; மானைக் கரத்தில் விரும்பி ஏற்றவன். கயிலாயம் என்னும் திருமலையான் அப்பெருமானின் வளநகர் மாற்பேறு ஆகும்.
1232. துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்
பிறையணி சடைமுடிப் பெண்ணொர் பாகன்
கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே.
தெளிவுரை : ஈசன், உயிர்கள் எல்லாம் பேணுகின்ற நெறிகள் யாவும் தானாகவே இருப்பவன்; படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்து தொழில்களுக்கும் தானே தலைவன் ஆனவன்; சடை முடியில் பிறைச் சந்திரனை அணிந்தவன்; உமா தேவியை ஒரு பாகமாக உடையவன்; கறையுடைய கண்டம் கொண்டு விளங்கும் நீலகண்டன்; காலனை உதைத்த வேதத்தின் நாயகன். அவனுடைய வளநகர் மாற்பேறு ஆகும்.
1233. பெண்ணினல் லாளையோர் பாகம்வைத்துக்
கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே.
தெளிவுரை : பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகம் வைத்து, காமனை நெற்றிக் கண்ணால் எரித்துச் சாம்பலாக்கிய ஈசன், தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும், பூவுலகத்தவர்களும் வணங்கும் நல்ல மாற்பேற்றில் வீற்றிருப்பவரே.
1234. தீதிலா மலைஎடுத்த (அ)வ்வரக்கன்
நீதியால் தேவகீ தங்கள்பாட
ஆதியா னாகிய அண்ணல்எங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே.
தெளிவுரை : யாவருக்கும் தீமை விளையாதவாறு நன்மையே புரியும் கயிலை மலையை எடுத்த அரக்கனாகிய இராவணன் நியதிப்படி சாமவேத கீதம் பாட, ஆதியானாகிய அண்ணல், எங்கள் மாதாவாகிய உமாதேவியைப் பாகங் கொண்ட ஈசன்றன் வளநகர் மாற்பேறு ஆகும்.
1235. செய்ததண் தாமரைக் கண்ணனொடும்
கொய்யணி நறுமலர் மேலயனும்
ஐயன்நன் சேவடி யதனைஉள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே.
தெளிவுரை : செந்தாமரை போன்ற கண்ணுடைய திருமாலும், கொய்ய அணிகொள் நறுமலராகிய தாமரையின் மேல் விளங்கும் பிரமனும், தலைவனாகிய ஈசன் சேவடியை நினைத்து விரும்பியேத்தும் வளநகர், மாற்பேறு ஆகும்.
1236. குளித்துஉணா அமணர்குண்டு ஆக்கர்என்றும்
களித்துதன் கழலடி காணல்உறார்
முளைத்த வெண் மதியினொடு அரவம்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே.
தெளிவுரை : உடல் தூய்மையின்றி உணவு கொள்ளும் அமணர் முதலானோர் மனம் மகிழுமாறு ஈசன் திருவடியைக் காணாதவர்கள் ஆவர். வளர்பிறைச் சந்திரனையும் அரவத்தையும் இணைத்துச் சென்னியில் பொருந்துமாறு வளைத்துச் சேர்த்தவனாகிய பிரமனின் வளநகர் மாற்பேறு ஆகும்.
1237. அந்தமில் ஞானசம் பந்தன் சொன்ன
செந்துஇசை பாடல்செய் மாற்பேற் றைச்
சந்தம்இன் தமிழ்கள் கொண்டு ஏத்தவல்லார்
எந்தைதன் கழலடி எய்துவரே.
தெளிவுரை : அழிதல் இல்லாத ஞானசம்பந்தன் சொன்ன செவ்விய இசைப் பாடல் செம்மை வளர் மாற்பேற்றை, சந்தம் மிகுந்த இனிய தமிழ் கொண்டு ஏத்தவல்லவர், எந்தையாகி ஈசன் திருவடிப் பேற்றை எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
115. திருஇராமனதீச்சரம் (அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1238. சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
அங்கிடு பலிகொளும் அவன்கோபப்
பொங்கரவு ஆடலோன் புவனியோங்க
எங்குமன் இராமன தீச்சரமே.
தெளிவுரை : சங்கு வளையலை அணிந்த தாருகவனத்து முனிபத்தினிகளிடையே பிச்சையேற்று ஈசன், சினம் மிக்க அரவம் திருமேனியில் ஆட உலகமானது ஓங்கித் திகழ, எங்கும் சிறப்புக் கொண்டு ஒளிர்வது இராமனதீச்சரமே.
1239. சந்தநன் மலரணி தாழ்சடையன்
தந்த மதத்தவன் தாதையோதான்
அந்தமில் பாடலோன் அழக(ன்)நல்ல
எந்தவன் இராமனது தீச்சரமே.
தெளிவுரை : ஈசன், அழகிய மலரை அணிந்த நீண்ட சடையுடையவன்; தந்தமும், மதமும் கொண்ட விநாயகப் பெருமானின் தந்தையானவன்; அழகனாக விளங்குபவன்; என்னுடைய நற்றவன் ஆனவன்; அவன் இராமனதீச்சரத்தானே.
1240. தழைமயில் ஏறவன் தாதையோதான்
மழைபொழி சடையவன் மன்னுகாதில்
குழையது இலங்கிய தோலமார்பின்
இழையவன் இராமன தீச்சரமே.
தெளிவுரை : ஈசன், தோகையைத் தழைத்து விளங்கும் மயில் வாகனத்தை உடைய குமரவேளின் தாதையானவன்; கங்கை விளங்கும் சடையுடையவன்; காதில் குழையணிந்து விளங்க திருமார்பில் முப்புரி நூல் திகழ உடையவன். அவன் இருப்பது இராமன தீச்சரமே.
1241. சத்தியுள் ஆதியோர் தையல்பங்கன்
முத்திய தாகிய மூர்த்தியோதான்
அத்திய கையினில் அழகுசூலம்
வைத்தவன் இராமன தீச்சரமே.
தெளிவுரை : ஈசன், ஆதிசக்தியானவன்; உமையவனை ஒரு பாகமாக உடையவன்; முத்திக்குத் தலைவனாக விளங்கி அருள்புரிபவன்; செவ்வையான திருக்கரத்தில் அழகிய சூலப் படை தரித்தவன்; அவன் இராமன தீச்சரத்தினனே.
1242. தாழ்ந்த குழற்சடை முடியதவன்மேல்
தோய்ந்த இளம்பிறை துலங்குசென்னிப்
பாய்ந்த கங்கையொடு படஅரவம்
ஏய்ந்தவன் இராமன தீச்சரமே.
தெளிவுரை : நீண்ட குழலும், சடைமுடியின்மேல் இளம் பிறைச் சந்திரன் தோய்ந்து விளங்க, கங்கையும், படம் கொண்டு ஆடும் அரவமும், பொருந்த வைத்தவன் இராமனதீச்சரத்தானே.
1243. சரிகுழல் இலங்கிய தையல்காணும்
பெரியவன் காளிதன் பெரியகூத்தை
அரியவன் ஆடலோன் அங்கையேந்தும்
எரியவன் இராமன தீச்சரமே.
தெளிவுரை : நீண்டு சரிந்த கூந்தலையுடைய உமையவன் கண்டு மகிழும் பெருமையை உடையவன்; காளியின் சிறப்பான நடனத்திற்கு அரியவனாகி ஆடுகின்றவன்; அழகிய கரத்தில் நெருப்பினை ஏந்தியவன் ஈசன், இராமனதீச்சரத்தான்.
1244. மாறிலா மாதொரு பங்கன்மேனி
நீறது ஆடலோன் நீள்சடைமேல்
ஆறது சூடுவான் அழகன்விடை
ஏறவன் இராமன தீச்சரமே.
தெளிவுரை : மாறுதல் அடையாத உமாதேவியைத் தனது தேகத்தின் ஒரு பாகத்தில் கொண்டு விளங்குபவனாகி, திருமேனியில் திருவெண்ணீறு அணிந்து, நடனம் புரிபவனாகி, நீண்ட சடை முடியின்மேல் கங்கை சூடும் அழகனாகி, இடப வாகனத்தில் ஏறி வீற்றிருப்பவன், இராமனதீச்சரத்தினன்.
1245. தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன்
படஅரவு ஆட்டிய படர்சடையான்
நடமது ஆடலா னான்மறைக்கும்
இடமவன் இராமன தீச்சரமே.
தெளிவுரை : மலைபோன்ற பெரிய தோளுடைய அரக்கனாகிய இராவணனின் தலை நெரியுமாறு அடர்த்து படங்கொண்டு ஆடும் அரவத்தைச் சடையில் பொருந்தச் செய்து, நடம் புரியும் நாதனாகி, நான்கு வேதங்களுக்கும் தானே புகலிடம் என விளங்கும் ஈசன், இராமனதீச்சரத்தான்.
1246. தனமணி தையல்தன் பாகன்தன்னை
அனமணி அயன்அணி முடியும்காணான்
பனமணி அரவுஅரி பாதம்காணான்
இனமணி இராமன தீச்சரமே.
தெளிவுரை : ஈசன், உமைபாகனாகியவன்; அன்னப் பறவை வடிவு கொண்ட பிரமன் ஈசனார் திருமுடியைக் காண வேண்டும் என்று முயன்றும்
முடியவில்லை. பல மணிகளை உடைய அரவத்தின் மீது பள்ளி கொள்ளும் திருமால், பாதத்தைக் காண முடியவில்லை. அத்தகைய ஈசன் விளங்கும் இடம் இராமனதீச்சரம் ஆகும்.
1247.தறிபோலாம் சமணர்சாக் கியர்சொற்கொளேல்
அறிவோரா நாமம் அறிந்துரைமின்
மறிகையோன் றன்முடி மணியார்கங்கை
எறிபவன் இராமன தீச்சரமே.
தெளிவுரை : பயனற்றதாகிய சமணர், சாக்கியர் தம் சொற்களை மனத்தில் கொள்ளற்க. அறிவின் வயத்தால் ஓர்ந்து அறிதற்கு இயலாததாயும், உள்ளத்தின் உணர்வினால் ஒன்றி இயைந்து அறியக் கூடியதும் ஆன, இறைவன் திருநாமத்தை அறிந்து உரை செய்க. அத்தகைய திருநாமத்திற்கு உரிய பெருமான், மானைக் கரத்தில் ஏந்தி, செம்மையுடன் ஒளிரும் சடைமுடியில் விளங்கும் கங்கையை, உலக நலத்தினைக் கொண்டு, உலகுக்கு வழங்கும் இராமனதீச்சரத்தான்.
1248. தேன்மலர்க் கொன்றையோன் . . . . . .
(இறுதிப் பாடல் முற்றுப் பெறவில்லை)
திருச்சிற்றம்பலம்
116. பொது (திருநீலகண்டம்) (அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1249. அவ்வினைக்கு இவ்வினை யாம்என்று
சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருபத்தும்
உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்துஎம் பிரான்கழல்
போற்றது நாம்அடியோம்
செய்வினை வந்துஎமைத் தீண்டப்
பெறாதிரு நீலகண்டம்.
தெளிவுரை : முன் செய்த வினையின் பயனாக இப்போது, இப்பிறவியில் யாம் துன்பம் அடைகின்றோம் என்று சொல்பவர்களே ! இதனைப் பிராரத்தகன்மம் என்று அறிந்து உரைப்பவர்களே ! இதிலிருந்து உய்தி பெற்றுக் கடைத் தேறும் வழியை நாடிச் செய்யாமல் இருப்பதும் உமக்குக் குறைவு தந்து ஊனத்தைத் தரும் அல்லவா ! எனவே, அக்குறையைப் போக்க, கைகளால் செய்யும் செயலாகிய மலர் பறித்தல், குவித்து வணங்குதல் போன்ற செயல்களைச் செய்து எம்முடைய தலைவனாகிய ஈசன் திருவடியைப் போற்றுவோமாக. நாமெல்லாம் அப் பெருமானின் அடியவர்கள். ஆகையால் வினையானது வந்து தீண்டாது. திருநீலகண்டம் அவ்வினையை நிர்மூலமாக்கும் என்றவாறு.
1250. காவினை யிட்டும் குளம்பல
தொட்டும் கனி மனத்தால்
ஏவினை யால்எயில் மூன்றெரித்
தீர்என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றது நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்
பெறாதிரு நீலகண்டம்.
தெளிவுரை : மலர்ச் சோலைகள் அமைத்தும் திருக்குளம் தோண்டியும், கனிந்த மனத்துடன், முப்புரம் எரித்த ஈசனே எனக் கொண்டு காலை மாலை ஆகிய இருவேளையும் பூப்பறித்து மலரடி போற்றுவீராக நாம் அனைவரும் அடியவர்களாய் ஈசனுக்குத் தொண்டு புரிபவர்கள். தீயவினையானது வந்து நம்மைத் தீண்டித்துன்பம் தராது. திருநீலகண்டம் துணை நின்று தடுத்துக் காக்கும்.
1251. முலைத்தட மூழ்கிய போகங்
களுமற் றெவையுமெல்லாம்
விலைத்தலை யாவணம் கொண்டெமை
யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டு
மழுவும் இவை யுடையீர்
சிலைத் தெமைத் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம்.
தெளிவுரை : காம நுகர்ச்சியின் வயங்கொண்டு, கொள்ளும் போகங்களால் நின் திருவடிக்கழலை விலகிச் சென்று தலைப்பட்டும் அலையாத வண்ணம், ஆளாகக் கொண்டு, எம்மை ஆட்கொண்ட சடையுடைய ஈசனே ! சூலமும் மழுவும் திருக்கரத்தில் உடைய பெருமானே ! ஆரவாரம் செய்து மலைபோல் பெருகி வரும் தீவினையாது, எம்மைத் தீண்டவிடாது திருநீலகண்டம் காத்தருளும்.
1252. விண்ணுல காள்கின்ற விச்சா
தரர்களும் வேதியரும்
புண்ணியர் என்றிரு போதும்
தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை
யீரும் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம்
தெளிவுரை : விண்ணுலகத்தில் விளங்குகின்ற வித்யாதரர்களும், வேதவிற்பன்னர்களும் புண்ணியர் என்று இரு வேளையிலும் தொழப்படுகின்ற புண்ணியரே ! இமைத்தல் புரியாத மூன்று கண்களை உடையவரே ! உமது திருவடியை அடைந்தோம். திணிக்கப்பட்டு வரும் தீவினையானது தீண்டப்பெறாமல் திருநீலகண்டம் காக்க.
1253. மற்றிணை யில்லா மலைதிரண்
டன்னதிண் தோளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளாது
ஒழிவதும் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துஉம்
திருவடி யேஅடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம்.
தெளிவுரை : இணையில்லாத மலைபோன்ற திரட்சியான தோள்களை உடைய பெருமானே ! வலிமையுடன் உறுதியாக எம்மை உமது ஆளாக்கிக் கொண்ட பின்னர், எம்மைப் பாராமுகமாய் விடுவதும் நற்பண்பு ஆகுமோ ! வெறும் வாய்ச் சொற்கள் நற்பண்பு துணை என்று சொல்லப்படுகின்ற வாழ்க்கையைத் துறந்து, உம்முடைய திருவடியே சரண் என்று அடைந்தோம். தீவினையானது எம்மைச் செற்றுத் தீண்டப் பெறாது, திருநீலகண்டம் விளங்குமாக.
1254. மறக்கு மனத்தினை மாற்றியெம்
ஆவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக்
கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துஉமை
யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம்.
தெளிவுரை : உலக மாயையால் மறக்கும் தன்மையுடைய மனத்தை மாற்றி, எம்மை வற்புறுத்திப் பிறவாப் பெரியோனாகிய நின் திருவடிக்கு ஆளாக்கி, நெஞ்சில் மாசற்ற நிலையாய்ச் செய்து, மலர்தூவி உம்மை ஏத்திப் பணி செய்யும் அடியவர்கள் நாங்கள், பெருமானே ! எக்காலத்திலும் சிறப்பினைப் பெறாத தீவினையானது தீண்டப் பெறாது, திருநீலகண்டம் துணை நிற்க.
1255. கருவைக் கழித்திட்டு வாழ்க்கை
கடிந்தும் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துஉமை
யேத்தது நாமடியோம்
செருவில் அரக்கனைச் சீரில்
அடர்த்தருள் செய்தவரே.
திருவிலித் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம்.
தெளிவுரை : இப் பிறவியில் உமது திருவடிக்கு மலர் தூவிப் போற்றுகின்ற செயலைப் புரிந்து உருகி நின்று மீண்டும் பிறவா நிலையைப் பெறுவதற்கு ஏத்து அடியவர்கள் ஆயினம், பகை ஏதும் இல்லாதவனாயினும் வினைவலி காரணமாகி, சீர் அற்ற செயலைப் புரிய, அடர்த்துப் பின்னர் அருள் செய்த பெருமானே ! எம்மைத் திருவற்ற தீவினையானது தீண்டப் பெறாது, திருநீலகண்டம் விளங்குக.
1256. நாற்ற மலர்மிசை நான்முக
நாரணன் வாதுசெய்து
தோற்றம் உடைய அடியு
முடியும் தொடர்வரியீர்
தோற்றினும் தோற்றும் தொழுது
வணங்குதி நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம்
தெளிவுரை : மணம் மிக்க தாமரை மலரில் விளங்கும் பிரமனும், திருமாலும், ஒருவருக்கு ஒருவர் வாதுபுரிந்து அடிமுடி காணாத பெருமானே ! காணப் பெறினும் பெறுவீர் நீவிர் ! யாம் உம்மைத் தொழுது வணங்கும் அடியவர்கள். சீற்றம் கொள்வதாகிய வினையானது தீண்டப் பெறாது, திருநீலகண்டம்.
1257. சாக்கியப் பட்டும் சமணுரு
வாகி உடையொழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப்
போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை
யீர்அடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம்.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் பாக்கியம் அற்றவராய் இருதலைப் போகமாக விளங்கும் இம்மை நலமும் மறுமைப் பேறும் பற்றுகின்ற தன்மையை ஒழித்தனர். கொன்றை மலரைச் சடைமுடியில் தரித்த பெருமானே ! உமது திருவடியைப் போற்றுகின்றோம். தீக்குழியைப் போன்று கனல்வீசும் தீவினையானது எம்மைத் தீண்டப் பெறாது, திருநீலகண்டம்.
1258. பிறந்த பிறவியில் பேணிஎம்
செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில்
இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன்
செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்
கோனொடும் கூடுவரே
தெளிவுரை : எம்செல்வனாகிய ஈசன் கழலடியில் சேர்வதற்காக வழங்கப்பட்ட இப்பிறவியில், மீண்டும் பிறவி இருக்குமானால், திறன் மிக்க ஞானசம்பந்தன் செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், விண்ணுலகத்தில் தேவவேந்திரனுவன் சேர்ந்திருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்
117. திருப்பிரமபுரம்  (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1259. காடது அணகலம் காரர
வம்பதி காலதனில்
தோடது அணிகுவர் சுந்தரக்
காதினில் தூச்சிலம்பர்
வேடது அணிவர் விசயற்கு
உருவம் வில்லும் கொடுப்பர்
பீடது அணிமணி மாடப்
பிரம புரத்தாரே.
தெளிவுரை : அணிமிக்க மாடங்கள் கொண்ட பெருமை மிகுந்த பிரமபுரத்தில் விளங்கும் பெருமான், கொடிய விடம் கொண்ட அரவத்தினை ஆபரணமாகக் கொண்டவர்; சுடுகாட்டை இருப்பிடமாக உடையவர்; அழகிய காதில் தோடு அணிபவர்; திருப்பாதத்தில் சிலம்பு அணிபவர்; வேடுவர் வடிவுகொண்டு விசயருக்கு பாசுபத அத்திரம் கொடுப்பவர்; அப் பெருமானைப் போற்றுவீராக.
1260. கற்றைச் சடையது கங்கண
முன்கையில் திங்கள்கங்கை
பற்றித்து முப்புரம் பார்படைத்
தோன்றலை கட்டதுபண்டு
எற்றித்துப் பாம்பை அணிந்தது
கூற்றை எழில் விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணு
புரத்தெங்கள் வேதியரே.
தெளிவுரை : எழில்மிக்கு ஓங்கிய மதில்களை உடைய வேணுபுரம் என்னும் நகரில் விளங்கும் வேத நாயகராகிய எங்கள் பெருமான், சடைமுடியில் சந்திரனும் கங்கையும் தரித்துள்ளவர்; முன் கையில் அரவத்தைக் கங்கணமாகக் கட்டியுள்ளவர்; முப்புரத்தை எரித்தவர்; உலகத்தைப் படைக்கும் தொழிலையுடைய பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றைப் பற்றிக் கொய்தவ; மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த கூற்றுவனைக் காலால் உதைத்தவர்; பாம்பினை அணிகலனாகக் கொண்டவர்; அப்பெருமானின் திருவடியைத் தொழுவீராக.
1261. கூவிளம் கையது பேரி
சடைமுடிக் கூட்டத்தது
தூவிளங் கும்பொடிப் பூண்டது
பூசிற்றுத் துத்திநாகம்
ஏவிளங் கும்நுத வாளையும்
பாகம் உரித்தனரின்
பூவிளம் சோலைப் புகலியுள்
மேவிய புண்ணியரே.
தெளிவுரை : பூக்கள் மல்கும் அழகிய சோலைகள் உள்ள புகலியுள் மேவிய புண்ணியனாகிய பெருமான், சடையில் வில்வம் தரித்தவர்; ஒலிக்கும் உடுக்கையைக் கொண்டுள்ளவர்; நாதத்தை அணிகலனாகக் கொண்டிருப்பவர்; தூய்மையாக விளங்கும் திருவெண்ணீறு பூசிய திருமேனியுடையவர்; அம்பு போன்று விளங்கும் நுதலை உடைய உமையவளை ஒரு பாகத்தில் கொண்ட உரிமை உள்ளவர்; அவரைத் துதிப்பீராக.
1262. உரித்தது பாம்பை உடன்மிசை
இட்டதோர் ஒண்களிற்றை
எரித்ததொர் ஆமையை இன்புறப்
பூண்டது முப்புரத்தைச்
செருத்தது சூலத்தை யேந்திற்றுத்
தக்கனை வேள்விபன்னூல்
விரிந்தவர் வாழ்தரு வெங்குரு
வில்வீற் றிருந்தவரே.
தெளிவுரை : தருக்கன் சூழ்ந்த வெங்குருவில் வீற்றிருக்கும் பெருமான்,யானையின் தோலை உரித்தவர்; பாம்பினை உடம்பின் மீது அணிகலனாகக் கொண்டவர்; முப்புரத்தை எரித்தவர்; ஆமை ஓட்டினைப் பூண்டவர்; தக்கன் வேள்வியைச் செருத்து அழித்தவர்; சூலத்தை ஏந்தியவர்; வேதங்களை விரித்தவர். அவரைத் தொழுக.
1263. கொட்டுவர் அக்குஅரை ஆர்ப்பது
தக்கை குறுந்தாளன
விட்டுவர் பூதம் கலப்பில
ரின்புகழ் என்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர்
மத்தமும் ஏந்துவர்வான்
தொட்டுவ ருங்கொடித் தோணி
புரத்துறை சுந்தரரே.
தெளிவுரை : வானத்தைத் தொடுகின்ற உயர்ந்த கொடித் தோரணங்கள் கொண்டுள்ள தோணிபுரத்தில் வீற்றிருக்கும் சுந்தரராகிய பெருமான், தக்கை என்னும் பறை கொட்டுபவர்; சங்குமணி அரையில் கொண்டுள்ளவர்; குறுகிய பாதங்களை உடைய பூதங்கள் இனிய புகழைச் சொல்ல ஏற்பவர்; கலப்பில்லாத என்பு பொருந்த இருப்பவர்; மடுத்து வரும் தழலைக் கரத்தில் ஏந்துபவர்; ஊமத்தம் சூடுபவர். அப்பெருமானை வணங்குக என்றவாறு.
1264. சாத்துவர் பாசம் தடக்கையில்
ஏந்துவர் கோவணம்தம்
கூத்தவர் கச்சுக்குலவி நின்று
ஆடுவர் கொக்கிறகும்
பேர்த்தவர் பல்படை பேயவை
சூடுவர் பேரெழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய்
மேவிய புண்ணியரே.
தெளிவுரை : மாதவத்தோர் பூக்கையால் தொழும் பூந்தராய் மேவிய புண்ணியராகிய பரமன், கோவணத்தினைச் சாத்தி அணிபவர்; பாசம் தடக் கையில் ஏந்துபவர்; தம் கூத்தவர்; கச்சு பொருந்தி ஆடுபவர்; கொக்கிறகு சூடுபவர்; பேய்ப் படை பல சூழப் பேர் எழில் ஆர்க்கக் காரணமானவர். அவரைத் துதிப்பீராக.
1265. காலது கங்கை கற்றைச்
சடையுள்ளாற் கழல்சிலம்பு
மாலது ஏந்தல் மழுவது
பாகம் வளர்கொழுங் கோட்டு
ஆலது ஊர்வர் அடலேற்று
இருப்பர் அணிமணி நீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர்
சிரபுர மேயவரே.
தெளிவுரை : சேல்போன்ற கண்ணுடைய உமையவனை ஒரு பங்குடையவராய்ச் சிரபுரம் மேவிய ஈசன் காலில், கழலும் சிலம்பும் அணிந்தவர். கற்றையாக உள்ள சடைமுடியில் கங்கை தரித்தவர்; மாலினைப் பாகமாகக் கொண்டவர்; மழு ஏந்தியவர்; வளர்ந்த செழுமையான கல்லால மர நிழலில் வீற்றிருப்பவர்; இடபத்தில் ஏறுபவர்; அவரை வணங்கி மகிழ்க என்றவாறு.
1266. நெருப்புரு வெள்விடை மேனியர்
ஏறுவர் நெற்றியின்கண்
மருப்புறு வன்கண்ணர் தாதையைக்
காட்டுவர் மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை
யார்விறன் மாதவர்வாழ்
பொருப்புறு மாளிகைத் தென்புற
வந்தணி புண்ணியரே.
தெளிவுரை : பெருமை மிக்க சிறந்த தவமுனிவர்கள் வாழ்கின்ற சிறப்பும், மலை போன்று உயர்ந்த மாளிகைகளும் விளங்கும் அழகிய புறவம் என்னும் நகரில் அணியாக விளங்கும் புண்ணியராகிய ஈசன், நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியர்; வெள்விடையேறுபவர்; நெற்றிக் கண் உடையவராகி வீரம் காட்டுபவர்; யானையின் கொம்புடைய விநாயகரின் தாதை; விரும்பி இலங்கும் பாம்பிற்குத் தன் மெய்யைக் காட்டி இருக்கச் செய்பவர்; மரமுருகன் தந்தை அவரை வணங்குக.
1267. இலங்கைத் தலைவனை யேந்திற்று
இறுத்தது குரலையின்னாள்
கலங்கிய கூற்றுயிர் பெற்றது
மாணி குமைபெற்றது
கலங்கினர் மொந்தையின் ஆடுவர்
கொட்டுவர் காட்டகத்துச்
சலங்கிளர் வாழ்வயல் சண்பையுள்
மேவிய தத்துவரே.
தெளிவுரை : நீர் வளம் பெருக்கும் வயல் வளம் மிக்க சண்பை நகரில் மேவிய உண்மைப் பெருளாகிய ஈசன், இராவணனை இறுத்துத் துன்புறுத்தி வலியிழக்கச் செய்து, கரத்தில் மானை ஏந்திச் காலனின் உயிரைக் கவர்ந்து, வாழ்நாள் இன்மையைக் குறித்துக் கலங்கிய மாணியை மீட்டு உயிர் தந்து. மொந்தை என்னும் பறையைக் கொட்டுவர்; சுடுகாட்டில் ஆடுவர். அப்பெருமானை வணங்குமின்.
1268. அடியிணை கண்டிலன் தாமரை
யோன்மால் முடிகண்டிலன்
கொடியணி யும்பலி யேறுகந்து
ஏறுவர் தோலுடுப்பர்
பிடியணி யும்நடை யாள்வெற்பு
இருப்பதோர் கூறுடையர்
கடியணி யும்பொழில் காழியுள்
மேய கறைக்கண்டரே.
தெளிவுரை : நறுமணர் மிக்க பொழில்சூழ் காழியுள் மேய, கறை பொருந்திய கண்டத்தை யுடையவராகிய பெருமான், பிரமன் முடி கண்டிலராய்த் திருமால் அடி இடபத்தை வாகனமாக ஏறுவர்; புலியின் தோலை உடுப்பர்; பெண் யானை போன்ற நடையுடைய உமாதேவியைப் பாகமாக உடையவர்; கயிலை மலையில் வீற்றிருப்பர். அவரைத் தொழுவீராக.
1269. கையது வெண்குழை காதது
சூலம் அமணர்புத்தர்
எய்துவர் தம்மை யடியவர்
எய்தார் ஓர் ஏனக் கொம்பு
மெய்திகழ் கோவணம் பூண்பது
உடுப்பது தேகைய
கொய்தலர் பூம்பொழிற் கொச்சையுள்
மேவிய கொற்றவரே.
தெளிவுரை : மேன்மையான தகைமையுடைய மலர்கள் சூழ்ந்த பூம்பொழிலைக் கொண்ட கொச்சை வயம் என்னும் பதியில் மேவும் கொற்றவராகிய ஈசனார் கையில் சூலம் விளங்க, காதில் வெண்குழை இருக்க, அமணரும் புத்தரும் எய்தாதவராவர்; அடியவர்கள் எய்துவர். அப்பெருமான், ஏனக் கொம்பினை அணியாகக் கொண்டு மெய்யில் திகழும் கோவண ஆடையை உடுத்தி விளங்குபவர். அவரைத் துதிப்பீராக.
1270. கல்லுயர் கழுமல விஞ்சியுள்
மேவிய கடவுள்தன்னை
நல்லுரை ஞானசம் பந்தன்
ஞானத் தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை
வானவர் தங்களோடும்
செல்குவர் சீரரு ளாற்பெற
லாம்சிவ லோகமதே.
தெளிவுரை : கல்லால் ஆன மதில்களையுடைய கழுமல நகரில் மேவிய கடவுளை, நல்லுரை புகலும் ஞானசம்பந்தன், கடவுள் ஞானத்தை உணர்த்தும் தமிழால் நன்கு உணரச் சொல்லிய இத் திருப்பதிகத்தைச் சொல்லவும், சொல்லிக் கேட்கவும் வல்லவர்கள் தொன்மையாக விளங்கும் தேவர்களுடன் வதிந்து, பின்னர் தேவர்களும் புண்ணியத்தின் பயனை உற்றவராய் அவர்களுடன், புகழ் மிக்க ஈசன் அருள் தன்மையால் சிவலோகத்தையே பெறலாம்.
திருச்சிற்றம்பலம்
118. திருப்பருப்பதம் (அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம், கர்நூல் மாவட்டம் ஆந்திரா)
திருச்சிற்றம்பலம்
1271. சுடுமணி யுமிழ்நாகம் சூழ்தர அரைக்கசைத்தான்
இடுமணி எழிலானை ஏறலன் எருதேறி
விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கேட்டுப்
படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.
தெளிவுரை : ஒளிவிடும் மாணிக்கத்தை உமிழும் நாகத்தை அரையில் கட்டி, எழில் மிக்க யானைமீது ஏறாது, இடபத்தின்மீது ஏறி, நீலகண்டனாய் நெடிய மலையின் மீது பிரகாசம் பொருந்தி விளங்கும் பருப்பதத்தைப் பரவுவோமாக.
1272. நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில்
நீபுல்கு தோற்றமெல்லா நினையுள்கு மடநெஞ்சே
வாய்புல்கு தோத்திரத்தால் வலம்செய்து தலைவணங்கிப்
பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே.
தெளிவுரை : நோய், சேர்ந்து, தோல் சுருங்கி, நரை வந்து நுகரும் உடம்பில் நெஞ்சமே ! நீ அடைய வேண்டியதை நினைப்பது பற்றிச் சிந்தித்துப் பார், வாயினால் தோத்திரங்கள் பாடி வணங்கி, புலித்தோல் உடையானின் பருப்பதத்தைப் பரவுதும்.
1273. துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால்
இனியுறு பயனாதல் இரண்டுற மனம்வையேல்
கனியுறு மறமேறிக்கருமுகக் கழையுகளும்
பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே.
தெளிவுரை :  வினைத் துயர் நீங்க இவ்வுலகத்தில் பிறவி எடுத்ததன் பயனாய், இனி கொள்ளப்போகும் பிறவியைக் கருதி மனத்தைத் திரியச் செய்யற்க. கனிகள் தரும் மரத்தின்மேல் ஏறி மூங்கில்கள் அசையக் களிக்கும் கருங்குரங்குகள் சாரும் கதிர்ஒளி பரவும் பருப்பதத்தைப் பரவித் துதிப்பீராக.
1274. கொங்குஅணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்
எங்கள்நோய் அகலநின்றான் எனவருள் ஈசனிடம்
ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்த
பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே.
தெளிவுரை : தேன் விளங்கும் வாசனை பொருந்திய கொன்றை மாலையும், கங்கை பொருந்திய சடையும் கொண்டவன், எங்கள் பிறவி நோயை நீக்குவதற்காக வீற்றிருப்பவன் எனச் சொல்லப்படும் ஈசனுடைய இடமாவது, மன்மதனை அழித்த இடபவாகனத்தை உடையவனாகிய, பரம்பொருளின் பருப்பதம் ஆகும். அதனைப் பரவித் துதிப்பீராக.
1275. துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி
மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச்
சிறையொலி கிளிபயிலும் தேனினம் ஒலியோவாப்
பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே.
தெளிவுரை : புண்ணியத் தீர்த்தங்கள் பல ஆடி, தூய மலர்களைச் சுமந்து சென்று, வேதங்கள் இசைத்துப் போற்றவும், வானவர்கள் மகிழ்ந்து வணங்கவும், சிறகுகள் ஒலிக்கக் கிளியானது மொழியவும், வண்டுகள் ரீங்காரம் செய்யவும், அருவிகள் விழும் ஒலியானது பறை கொட்டுவது போன்று அதிரவும், விளங்குகின்ற பருப்பதம் சென்று, ஈசனைப் போற்றுவீராக.
1276. சீர்கெழு சிறப்புஓவாச் செய்தவ நெறிவேண்டில்
ஏர்கெழு மடநெஞ்சே இரண்டுற மனம்வையேல்
கார்கெழு நறுங்கொன்றைக் கடவுளது இடம்வகையால்
பார்கெழு புக÷ழுõவாப் பருப்பதம் பரவுதுமே.
தெளிவுரை : புகழ் மிக்கதும், சிறப்பு அகலாது செய்யப் படும் தவநெறி வேண்டுதிர் ஆயின், நெஞ்சமே ! மனத்தின்கண் வேறுபாடின்றி ஒன்றிய நிலையில் கொன்றை சூடும் கடவுளின் இடம் என்னும் வகையில் பெருகும் புகழுடன் விளங்கும் பருப்பதத்தைப் பரவி ஏத்துமின்.
1277. படைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத்
தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற
விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான்
படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே.
தெளிவுரை : நல் வேள்வி புரிதலை யொட்டி எழும் புகையும் தாமரை மலரின் நறுமணமும் பரவத் தொடுக்கப்பெற்ற மலர்மாலை திருமுடியில் திகழ, இடபக் கொடி ஏந்தி, திருவெண்ணீறு அணிபவனாகியும் மழுப் படையுடையவனாயும் விளங்கும் ஈசன் பருப்பத்ததைப் பரவித் தொழுமின்.
1278. நினைப்பெனு நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே
மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம்வந்து அடையாமைக்
கனைத்தெழு திரள் கங்கை கமழ்சடைக் கரந்தான்றன்
பனைத்திரன் பாய்அருவிப் பருப்பதம் பரவுதுமே.
தெளிவுரை : நெடுங் கிணற்றை நெடிது நோக்கி நோக்கி அச்சம் கொண்டு அயர்தலைப் போன்று, நெஞ்சில் தோன்றும் பலதரப்பட்ட எண்ணங்கள் அவலத்தை உண்டாக்கும். ஆதலினால் மனத்தைக் கட்டுப்படுத்தி வலித்து அடக்கி அவலத்தை விட்டொழிந்தேன். உம்மை துன்பமானது அடையாதிப்பதற்கு, ஒலித்துத் திரண்டு எழும் கங்கையைக் கமழ்கின்ற சடையில் தரித்தவனின் பருப்பதத்தைப் பரவிப் பணிவீராக.
1279. மருவிய வல்வினை நோய் அவலம் வந்து அடையாமல்
திருஉரு அமர்ந்தானும் திசைமுகம் உடையானும்
இருவரும் அறியாமை எழுந்ததோர் எரிநடுவே.
பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.
தெளிவுரை : ஊழ்வினையின் காரணமாக இப்பிறவியில் பற்றுக் கொண்டிருக்கும் கொடிய வினையாகிய பிணியால் துன்பம் அடையாமல் இருக்கும் நிலைக்குத் திருமாலும் பிரமனும் அறியப்படாதவராய் விளங்கிய சோதி வடிவான ஈசன் விளங்கும் பருப்பதத்தைப் பரவித் தொழுக.
1280. சடம்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடம்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடம்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சாரத்தின்
படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.
தெளிவுரை : அறிவு சார்ந்த பொருள்களைப் புகலாத சாக்கியர் மற்றும் சமணர்களின் சொற்சாத்திரங்களை விரும்பி, பேதையர்களாய் மயங்கிக் கானல் நீர் போன்று தோன்றும் காட்சியில் பதிந்து யாரேனும் சொல்வார்களோ ! சொல்ல மாட்டார்களோ. யானையை உரித்துப் போர்வையாகக் கொண்டவனாகிய ஈசனின் பருப்பதம் பரவும் அடியவர்கள் நன்மை பெறுவார்கள்.
1281. வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்
பண்செலப் பலபாடல் இசைமுரல் பருப்பதத்தை
நன்சொலி னாற்பரவு ஞானசம்ப பந்தனல்ல
ஒண்சொலின் இவை மாலை உருஎணத் தவம்ஆமே.
தெளிவுரை : பண்ணிசையால் பாடல்கள் இசைக்க வல்ல பருப்பதத்தை, வெண்மையாகவும் செம்மையாகவுமுள்ள நெல் விளையும் கழனிகளும், திருவிழாக்களும் உடைய கழுமல நகரினனாகிய, நற்சொற்களால் பரவும் ஞானசம்பந்தன், நல்ல ஞானத்தால் இனிமையாகச் சொல்லப்பட்ட இத்திருப்பதிகத்தை மன்னம் செய்து எண்ண, தவமானது கைகூடும். தவத்தின் பயனைத் தரும் என்றவாறு.
திருச்சிற்றம்பலம்
119. திருக்கள்ளில் (அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம், திருவள்ளூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1282. முள்ளின்மேல் முதுகூகை முரலும்சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடிவிளைந்த
கள்ளின்மே யஅண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒருதலையே.
தெளிவுரை : முட்கள் பொருந்திய கூகைகள் ஒலி செய்யும் சோலை உடையதும், வெள்ளை வண்ணம் கொண்ட வீடுகளில் துகில்களால் ஆன கொடிகள் திகழும் திருக்கள்ளில் என்னும் நகரில் விளங்கும் அண்ணலாகிய எந்தை ஈசனார் திருவடியை, நாள்தோறும் நினைத்து வணங்கி நிற்க, உயர்வு அடைதல் உறுதியாகும்.
1283. ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்
ஓடுஅலாற் கலன்இல்லான் உறை பதியால்
காடுஅலாற் கருதாத கள்ளின் மேயான்
பாடுஎலாம் பெரியார்கள் பரசுவாரே.
தெளிவுரை : ஆடலும் பாடலும் விரும்பி அரவங்கள் பூண்டு திருவோட்டைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு, சுடுகாட்டினை இடமாக உடைய ஈசன், கள்ளில் எனும் பதியில் விளங்கி நிற்க, அப் பெருமானைப் பெருமக்கள் பெருமையாய்ப் போற்றித் துதிப்பர்.
1284. எண்ணார்மும் மதில்எய்த இமையா முக்கண்
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
கண்ணார்நீ றணிமார்பன் கள்ளின்மேயான்
பெண்ணாணாம் பெருமான்எம் பிஞ்ஞ கனே.
தெளிவுரை : நன்மை எண்ணாத பகைவரின் மூன்று மதில்களை நெருப்புக் கணைகொண்டு எய்து எரித்த, இமையாத மூன்று கண்ணுடையவனும், பண்விளங்கும் நான்கு மறைகளைப் பாடும் பரமயோகி கண்ணார நீறு அணி மார்பினராகிக் கள்ளில் என்னும் பதியில் மேவிப் பெண்ணும் ஆணும் ஆகிய பரமன், எம் பிஞ்ஞகனே.
1285. பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண்டு ஆலும்
நறைபெற்ற வரிகொன்றைத் தார்ந யந்த
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளின் மேயான்
நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சுளானே.
தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சூடிய சடையுடைய எம் அண்ணல், பெண் வண்டு ஒலி செய்து, தேன் பெற்ற கொன்றை மாலையை விரும்பிய நீல மணிமிடற்றண்ணலாய்க் கள்ளில் என்னும் நகரில் மேவி, நிறைவாகத் துதிக்கும் அடியவர்கள் நெஞ்சில் விளங்கி நிற்பவர்.
1286. விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலும் எதிர்கொள்ள ஊரா ரம்மாக்
கரையார்பொன் புனல்வேலிக்கள்ளின் மேயான்
அரையார்வெண் கோவணத்த அண்ணல்தானே.
தெளிவுரை : சிறப்பான பெரிய கரைகளையுடைய தூய நீர்நிலைகளைக் கொண்ட, கள்ளில் என்னும் நகரில் மேவி, அரையில் வெண்கோவண ஆடை துருக்கம், தகரம், அகில், சந்தனம் ஆகிய ஐவகை விரையாலும், கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ ஆகிய நான்கு வகையான மலராலும், விழுமை குன்றாத வேத உரைகளாலும் எதிர் கொள்ளுகின்றனர்.
1287. நலனாய பலிகொள்கை நம்பால் நல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலையோட்டான் கள்ளின்மேயான்
மலனாய தீர்த்து எய்து மாதவத்தோற்கே.
தெளிவுரை : நம்பால் நலன்கள் வினையும் தன்மையில் பலி ஏற்கும் கொள்கையனாய் வலிமை மிக்க மழுவும் சூலமும் கொண்டு விளங்குபவனாகிய ஈசன், வல்லவனாகிய பிரமனின் தலையை ஓடாகக் கொண்டவன். அப்பெருமான், கள்ளில் என்னும் பதியில் மேவி, மும்மலங்களைத் தீர்க்கும் அருளைப் புரிகின்றான். தவம் உடையவர்கள் அதனை எய்துகின்றனர்.
1288. பொடியார்மெய் பூசினும் புறவின் நறவம்
குடியாவூர் திரியினும் கூப்பி டினும்
கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான்
அடியார் பண்பு இகழ்வார்கள் ஆதர்களே.
தெளிவுரை : மணம் பொருந்திய சோலைகள் சூழும் கள்ளில் என்னும் பதியில் மேவும் ஈசனின் அடியவர்கள், திருவெண்ணீறு பூசி நற்கோலத்தில் காட்சி தந்தாலும், காட்டியல் தோன்றும் தேன் குடித்து ஊரில் திரிந்தாலும், கைகளைக் கூப்பித் தொழுதாலும், ஆக எத்தன்மையில் இருக்க நேர்ந்தாலும் அவர்களை இகழ்பவர்கள், கீழ்மக்கள் ஆவர்.
1289. திருநீல மலர்ஒண்கண் தேவி பாகம்
புரிநூலும் திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர்விம்மு கள்ளில் என்றும்
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.
தெளிவுரை : ஒளிமிக்க நீல மலர்போன்ற கண்களை உடைய உமையவனை ஒரு பாகம் கொண்டு, முப்புரிநூலும், திருவெண்ணீறும் மார்பில் பெருந்தித் திகழ, கருநீல மலர் பெருகும் கள்ளில் என்னும் பதியில், எக்காலத்திலும் நீல மிடற்றுடைய ஈசன் பேரண்ணலாய் விரும்பி வீற்றிருக்கின்றனர்.
1290. வரியாய மலரானும் வையம் தன்னை
உரிதாய அளந்தானும் உள்ளு தற்குஅங்கு
அரியானும் அரிதாய கள்ளின் மேயான்
பெரியான்என்று அறிவார்கள் பேசுவாரே.
தெளிவுரை : அழகியதாகிய தாமரையில் விளங்கும் பிரமனும், உலகத்தைக் காக்கும் தொழில் மேவும் தன்மையில் உரிமை தோன்றியவாறு அளந்த திருமாலும், நினைப்பதற்கு அரியவனாய் வீற்றிருப்பவன் சிறப்பின் மிக்க கள்ளில் என்னும் நகரில் மேவிய பெருமான், என்று அறிஞர்கள் பேசுவர்.
1291. ஆச்சியப் பேய்களோடு அமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணுமின்கள்
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச்செய்த சடையண்ணல் திருந்துஅடியே.
தெளிவுரை : நகைப்பிற்கு இடமளிக்கும் சமணர் முதலானோர் பேச்சுக்கள் நெறியற்றவையாகும். வளம் மிக்க வயல்கள் பெருகும் பெருமைøயான கள்ளில் என்னும் நகரில் விளங்கும் சிவந்த சடையுடைய அண்ணலாகிய ஈசன் திருவடியைப் பேணித் துதிப்பீராக.
1292. திகைநான்கும் புகழ்காழிச் செல்வ மல்கு
பகல்போலும் பேரொளியான் பந்த னல்ல
முகை மேவு முதிர்சடையன் கள்ளில் ஏத்தப்
புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.
தெளிவுரை : நான்கு திசைகளிலும் புகழ் மல்கும் காழியின் செல்வம் பெருகவும் சூரியனைப் போன்ற பேரொளி படைத்த ஞானசம்பந்தன், நல்ல மணம் தரும் மலர் போன்ற சடையுடையவனாகிய ஈசன் வீற்றிருக்கும் கள்ளில் என்னும் நகரை ஏத்திப் பாடிய இத் திருப்பதிகத்த ஓத வல்லவர்கள், புகழும் பேரின்பமும் அக்கணமே வாய்க்கப் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
120. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1293. பணிந்தவர் அருவினை பற்றறுத்து அருள்செய்த
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவன் அரவொடு பேரெழில் ஆமைகொண்டு
அணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
தெளிவுரை : அடியவர்கள்பால் பற்றியுள்ள வினையை நீக்கி அருள் செய்த பரமன், தோலுடை தரித்து, முப்புரி நூல் பொருந்திய மார்பில், அரவமும் ஆமையின் ஓடும் அணிந்தவன். அப் பெருமானின் வளநகர் என்பது, அழகிய குளிர்ச்சி மிக்க ஐயாறு ஆகும்.
1294. கீர்த்திமிக் கவனகர் கிளரொளி யுடன்அடப்
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்
போர்த்தவன் கரியுரி புலியதன் அரவரை
ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
தெளிவுரை : ஈசன், கீர்த்தி மிக்கவன்; பகைத்துக் கிளர்ந்து, எழுந்த முப்புரத்தை நெருப்பில் எரியுமாறு நோக்கியவன்; குளிர்ந்த சந்திரனை விரிந்த சடையில் வைத்தவன்; யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவன்; புலியின் தோலையும் அரவததையும் அரையில் கட்டியவன். அப்பெருமானுடைய அழகிய குளிர்ச்சி பொருந்திய வளநகரானது ஐயாறு ஆகும்.
1295. வரிந்த வெஞ்சிலை பிடித்து அவுணர்தம் வளநகர்
எரிந்துஅற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
தெளிவுரை : வரிக்கப் பெற்ற மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்கள் எரிந்து சாம்பலமாகுமாறு சினந்தவனாகிய ஈசனார், எழில் திகழும் தாமரை மலரோனாகிய பிரமனின் ஐந்து சிரங்களில், ஆணவத்தோடு கூடிய உச்சி நோக்கிய சிரத்தினைத் தேவர்களுடைய குறை தீருமாறு கொய்தவர். அப்பெருமானுடைய வள நகரானது குளிர்ச்சி பொருந்திய ஐயாறு ஆகும்.
1296. வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை
மாய்ந்துஅற வெய்தவன் வளர்பிறை விரிபுனல்
தோய்ந்தெழு சடையினன் தொல்மறை ஆறங்கம்
ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
தெளிவுரை : முப்புரத்தை எரித்த ஈசன், வளர்கின்ற சந்திரனும், பெருக்கெடுத்தோடும் கங்கையும் சடையும் உடையவன்; வேதமும் அதன் அங்கங்கள் ஆறும் ஆய்ந்தவன். அவன் வளநகர் ஐயாறு ஆகும்.
1297. வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மான்அன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே.
தெளிவுரை : வானத்தில் விளங்கும் சந்திரனைச் சடையில் வைத்து, அதன் இடையில் அரவமும், கொன்றை மலரும் திகழ விளங்கும் மார்பினனாய், மான் போன்ற விழியுடைய உமையவனை ஒரு பாகத்தில் உள்ளவனின் வளநகரானது, ஐயாறு ஆகும்.
1298. முன்பனை முனிவரோடு அமரர்கள் அடிதொழும்
இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்
என்பொனை ஏதமில் வேதியர் தாம் தொழும்
அன்பன வளநகர் அந்தண் ஐயாறே.
தெளிவுரை : யாவர்க்கும் முன்னவனாய் விளங்கும் பழைமையானவனை, முனிவர்களும் தேவர்களும் அடிதொழும் இன்பப் பொருளாகியவனை, இணையில்லா இறைவனாய் உள்ளவனை, எழில் திகழும் என் பொன்போன்ற அழகிய உயர்ந்த பொருளாகியவனை, வேதவிற்பன்னர்கள் தொழும் அன்பனாகிய ஈசனை உரிமையாக உடைய திருத்தலம், ஐயாறு.
1299. வன்திறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
வெந்தற வெய்தவன் விளங்கிய மார்பினில்
பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்
அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே.
தெளிவுரை : கொடிய அசுரர்கள் நகரை, எரியின் வளம் பெருகுமாறு வெந்து சாம்பலாக்கித் தீய்த்த ஈசன், உமையவளைப் பாகம் கொண்டு அழிவில்லாத நிலையாய் வீற்றிருக்கும் வளநகரானது, ஐயாறு ஆகம்.
1300. விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை எடுத்தலும்
அடித்தலத் தால்இறை ஊன்றிமற்று அவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
தெளிவுரை : செருக்கினால் சினங்கொண்ட கொடிய அரக்கனாகிய இராவணன், நன்மை வழங்கும் கயிலை வெற்பினை எடுத்தலும், திருப்பாதத்தால் சிறிது ஊன்றி அரக்கனது கிரீடம் கொண்ட தலையும், தோளும் துன்புற்று வருந்துமாறு அடர்ந்த ஈசன் வளநகரானது, ஐயாறு ஆகும்.
1301. விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோன்நல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபடக்
கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே.
தெளிவுரை : எண்ணற்ற தேவர்களுடன் சூரியன், இந்திரன் முதலானோர் வழிபடவும்; திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரிதாகிய அண்ணலாகிய ஈசனுடைய வளநகர் குளிர்ச்சி பொருந்திய ஐயாறு ஆகும்.
1302. மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களும்
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை அடிகள்தம் அந்தண் ஐயாறே.
தெளிவுரை : மருள் உற்ற மனத்தினராகிய சமணர்கள் மாசு நீங்கப் பெறாது ஒரு புறத்தே நிற்க, தெளிந்த மனத்துடையீர் ! அருள் தரும் அடிகள் ஐயாற்றில் வீற்றிருப்பவர் என்று திண்ணமாகக் கொள்வீராக.
1303. நலமலி ஞானசம் பந்தனது இன்தமிழ்
அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக்
கலைமலி தமிழ்இவை கற்றுவல் லார்மிக
நலமலி புகழ்மிகு நன்மையார் தாமே.
தெளிவுரை : நலம் மிக்க ஞானசம்பந்தனது இனிய தமிழால், நீர் வளம் மல்கும் ஐயாற்றைச் சிவஞானம் மிக்க தமிழ்ப் பதிகமாக அருளிச் செய்ய, இதனைக் கற்று வல்லவர் ஆனவர்கள் நலங்கள் பெருகவும், புகழ் மிகுந்து ஓங்கவும் யாவர்க்கும் நன்மை செய்பவராயும் விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
121. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1304. நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
படைமரு தழ்ல்எழ மழுவல பகவன்
புடைமருது இளமுகில் வளம்அமர் பொதுளிய
இடைமருது அடையநம் இடர்கெடல் எளிதே.
தெளிவுரை : ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்கு நகர்ந்தும் பறந்தும் இயங்கித் தீமை விளைவித்த திரிபுரமானது, எரியுண்டு சாம்பலாகுமாறு நகை செய்து, அதனையே படையாக்கித் தழல் எழுமாறு ஆக்கி, மழுப் படையை வலக்கரத்தில் ஏந்திய இறைவன் இடைமருதினைச் சென்றடைய நம் இடரானது எளிதில் கெடும்.
1305. மழைநுழை மதியமொடு அழிதலை மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
குழைநழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
இழைநுழை புரியணல் இடம்இடை மருதே.
தெளிவுரை : மேகங்களின் ஊடே செல்லும் சந்திரனும், பிரம கபாலமும், கங்கையுடைய சடையும் கொண்டு, குழையணிந்த செவியுடன் முப்புரி நூல் விளங்க மேவும் ஈசன் இடமானது, இடை மருது ஆகும்.
1306. அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்
கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்
பெருமையன் சிறுமையன் பிணைபெணொடு ஒருமையின்
இருமையும் உடையணல் இடம் இடை மருதே.
தெளிவுரை : ஈசன், அரியனாகவும், எளியனாகவும், நீலமணியைக் கண்டத்தில் உடையவனாகவும், பெருமையான ஒளிமிக்க சடையுடையவனாகவும் விளங்குபவன், பெரிய அண்டமாகி யாவற்றுக்கும் பெரியவனாகவும், யாவற்றுக்கும் சிறிய நுண்பொருனாயும் விளங்கும் அப்பெருமான், பிணைத்துத் தம் அங்கத்தில் ஒரு கூறாக உள்ள தேவியுடன் சேர்ந்து அர்த்தநாரியாகவும், சிவன்சக்தி என இரு வடிவமாயும் உடைய அண்ணல். அவனுடைய இடம் இடை மருது ஆகும்.
1307. பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
வரிவளர் குளிர்மதி ஒளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடையணல் இடம்இடை மருதே.
தெளிவுரை : நரிகள் சூழும் சுடுகாட்டில் நடம் புரிபவனாகிய ஈசன், அழகிய கலைகள் பெருகும் குளிர்ந்த சந்திரனின் ஒளியைப் பெருகச் செய்யுமாறு, ஒளியை வழங்கும் சோதி வடிவான சிவந்த சடையுடைய அண்ணல் ஆவர். அவர் வீற்றிருக்கும் இடம் இடை மருது ஆகும்.
1308. வருநல மயிலன மடநடை மலைமகள்
பெருநல முலையினை பிணைசெய்த பெருமான்
செருநல மதில்எய்த சிவன்உறை செழுநகர்
இருநல புகழ்மல்கும் இடம்இடை மருதே.
தெளிவுரை : மயில் போன்ற சாயலும், அன்னம் போன்ற நடையும் கொண்ட மலைமகள் உடனாக விளங்கச் செய்த பெருமான், முப்புரத்தை எரியுமாறு செய்த சிவன், அவன் உறையும் செழுநகர் இம்மை, மறுமை ஆகிய இருவகை நலத்தின் புகழ் மல்கும் இடைமருது ஆகும்.
1309. கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
மலையுடை மடமகள் தனைஇடம் உடையோன்
விலையுடை அணிகலன் இலன்என மழுவினோடு
இலையுடை படையவன் இடம்இடை மருதே.
தெளிவுரை : கலை வண்ணம் உடைய ஆடையும், அகிலின் புகை கமழும் கூந்தலும் உடைய உமையவனை இடப்பாகத்தில் கொண்ட ஈசன், விலை மதிப்புள்ள அணிகளைக் கொள்ளாது, மழுவும் சூலப்படையும் கொண்டுள்ளான். அப்பெருமானின் இடம், இடைமருது ஆகும்.
1310.வளம்என வளர்வன வரிமுரல் பறவைகள்
இளமணல் அணைகரை இசைசெயும் இடைமருது
உளம்என நினைபவர் ஒலிகழல் இணையடி
குளம்அணல் உறமூழ்கி வழிபடல் குணமே.
தெளிவுரை : இடை மருது என்னும் திருத்தலமானது வளமுடையது என்றும், நாம் வாழ்வதற்கு ஏற்ற இடம் என்றும், அழகிய பறவைகள் மற்றும் வண்டுகள் அணைந்து ஒலித்து இசைக்க, அத்தகைய தலத்தில் உள்ளோம் எனும் மகிழ்ச்சியுடன் உள்ள மக்கள், ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த ஈசன் திருவடியை நினைத்துத் திருக்குளத்தில் கழுத்தளவு படிந்து மூழ்கி நீராடி வழிபடுவது சிறப்பாகும். (புனித தீர்த்தத்தில் நீராடும் சிறப்பு உணர்த்தப் பெற்றது)
1311. மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
துறையவன் எனவல அடியவர் துயரிலர்
கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
இறையவன் உறைதரும் இடம்இடை மருதே.
தெளிவுரை : ஈசனை, வேதநாயகன், உலகமே அவனாகியவன், அறிவு ஆனவன், சந்திரனைச் சூடியவன் என்று சொல்லவல்ல அடியவர்கள், துயர் அற்றவர் ஆவர். நீலகண்டத்தை உடையவனாகத் தழல் போன்ற சிவந்த சடையுடைய இறைவனாகிய அப்பெருமான் உறையும் இடமானது, இடை மருது ஆகும்.
1312. மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
இருதுடை யகலமொடு இகலினர் இனதுஎனக்
கருதிடல் அரியதொரு உருவொடு பெரியதொர்
எருதுடை யடிகள்தம் இடம்இடை மருதே.
தெளிவுரை : மருத மரத்தின் இடையில் உரலோடு நடைபயின்ற மணிவண்ணனாகிய திருமாலும், பிரமனும் பூமிக்கடியிலும் மேலே வானத்தை நோக்கியும் இருபக்கங்களிலும் அகன்று சென்று தேடியும், இன்னது எனக் கருதுவதற்கு இயலாது நிற்கப் பேருருவாகிய ஈசன், இடப வாகனத்துடன் விளங்கும் இடமானது, இடை மருது ஆகும்.
1313. துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவர்உறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
கவருறு புனலிடை மருதுகை தொழுதுஎழும்
அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.
தெளிவுரை : நீண்ட துவராடை கொண்ட பௌத்தரும், சமணரும் கூறும் சிறுமையான சொற்களைக் கொள்ளற்க. இடை மருது உறையும் நாதனைத் தொழுபவர்கள் தாம் உற்ற வினையிலிருந்து நீங்கப் பெறுவர்.
1314. தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை மருதினை இசைசெய்த
படமலி தமிழ்இவை பரவவல் லவர்வினை
கெடமலி புகழொடு கிளரொளி யினரே.
தெளிவுரை : தமிழ் விரும்பியவனாகிய புகலியின் ஞான சம்பந்தன், இடை மருதினை இசைத்த இத் திருப்பதிகத்தைப் பரவிப் பாட வல்லவர்கள், வினை யாவும் கெட, புகழும் ஒளியும் பெற்றவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
122. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1315. விரிதரு புலியரி விரவிய அரையினா
திரிதரும் எயிலவை புனைகணை யினில்எய்த
எரிதரு சடையினர் இடைமருது அடைவுனல்
புரிதரு மனனவர் புகழ்மிக உளதே.
தெளிவுரை : ஈசன், புலித் தோலை ஆடையாகக் கொண்டவர்; முப்புரத்தை எரித்தவர்; நெருப்புப் போன்ற சிவந்த சடைமுடி உடையவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடைமருதினை அடைய வேண்டும் என்று நினைக்கும் மனம் உடையவர்களுக்கு மிகுந்த புகழ் உண்டு.
1316. மறிதிரை படுகடல் விடம்இடை மிடறினர்
எறிதிரை கரைபொரும் இடைமருது எனுமவர்
செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
பிறிதிரை பெறும்உடல் பெறுகுவது அரிதே.
தெளிவுரை : கடலில் தோன்றிய விடத்தை மிடற்றின் இடையில் வைத்த ஈசனுடைய இடமானது, இடைமருது என்று சொல்பவர்கள் மூப்பினை உணர்த்தும் நரை, திரை ஆகியவற்றை நீத்தவராயும், உலகினில் மறுபிறவி கொண்டு உடல் வளர்க்கும் நிலையும் அற்றவராயும் திகழ்வர். மீண்டும் பிறவாமைøயாகிய செல்வம் வாய்க்கப்பெறும் என்பதாம்.
1317. சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
இலர்என இடுபலி யவர்இடை மருதிணை
வலமிட உடல்நலிவு இலதுள வினையே.
தெளிவுரை : சலசல என்று சொரியும் கங்கையைச் சடையில் கொண்ட ஈசன், மலைமகளை ஒரு பாகமாக உடையவர்; நிறைவாகிய வேத மொழியினர்; பலிஇடுமின் என்று யாசிப்பவர். அவர் வீற்றிருக்கும் இடைமருதை வலம் வருதலானது, உடல் நலிவைத் தீர்த்து, வினை அற்றதாக்கும்.
1318. விடையினர் வெளியதொர் தலைகலன் எனநனி
கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
இடைவிடல் அரியவர் இடைமருது எனுநகர்
உடையவர் அடியிணை தொழுவதுஎம் முயர்வே.
தெளிவுரை : ஈசன், இடப வாகனத்தினர்; பிரம கபாலம் ஏந்தி உண்கலனாகக் கொண்டு வீதிதோறும் சென்று பிச்சை விழைபவர்; மன்னுயிர்களால் இடையறாது தியானிக்கப்படுபவர்; இடைமருது என்னும் நகருக்கு உரியவர். அவர்தம் இணையடியைத் தொழுவது, எமக்கு உயர்வைத் தரும்  இம்மையில் புகழும் மறுமையில் முத்திப்பேறும் ஆகும் என்பதாம்.
1319. உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்
அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை
இரைமரும் அரவினர் இடைமருது எனஉளம்
உரைகள்அது உடையவர் புகழ்மிக உளதே.
தெளிவுரை : ஈசன், உரைகளால் விளக்கிக் கூறமுடியாதவாறு திருவடிவத்தை உடையவர்; மனத்தால்  சிந்தனையால், உணர்ந்து கொள்வதற்கு அரியவர்; அரையில் புலியின் தோலை ஆடையாக உடையவர்; புலித்தோலடையின் மேல் அரவத்தைக் கட்டியுள்ளவர். அப்பெருமான் விளங்கும் இடைமருது என உள்ளத்தால் ஒன்றி உரைத்துத் தியானம் செய்பவர்களுக்கு, மிக்க புகழ் உண்டாகும்.
1320. ஒழுகிய புனல்மதி அரவமொடு உறைதரும்
அழகிய முடியுடை அடிகளது அறைகழல்
எழிலினர் உறைஇட மருதினை மலர்கொடு
தொழுதல்செய்து எழுமவர் துயர்உறல் இலரே.
தெளிவுரை : ஒழுகும் புனலாகிய கங்கையும், சந்திரனும் அரவமும் உறையும் அழகிய சடை முடியுடைய அடிகளின் கழலினையும், அவ் எழிலினாரின் உறைவிடமாகிய இடை மருதினையும், மலர்கொண்டு தொழுபவர்களுக்குத் துயர் இல்லை.
1321. கலைமில விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவர் இடம்இடை மருதே.
தெளிவுரை : ஈசன், கலைத்தன்மை மிக்கு தோன்ற வீணை மீட்டிய விரலையுடையவர்; மழுப்படை உடையவர்; கங்கை உலவிய சடையுடையவர்; மலைமகளை மருவிய வடிவத்தை உடையவர்; சூலப்படை உடையவர். அவருடைய இடமானது இடைமருது ஆகும்.
1322. செருவுஅடை யிலவல செயல்செயத் திறலொடும்
அருவரை யினில்ஒரு பதுமுடி நெரிதர
இருவகை விரல்நிறி யவர்இடை மருதது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே.
தெளிவுரை : போர் செய்யும் தன்மையின்றி, வலிமை செய்யும் திறத்துடன் திண்ணிய மலையை எடுத்த அரக்கனின் உடல் வலிமையும் உள்ளத்தின் செருக்கும் கெடுமாறு, திருப்பாத விரலால் நிறுத்தியவராகிய ஈசனார் வீற்றிருக்கும் இடைமருதினைப் பரவித் தொழுபவர்கள், அருவினையானது நீங்குதல் பெரிதாகுமோ ! வினை நீங்குதல் எளிது என்பது குறிப்பு.
1323. அரியொடு மலரவன் எனஇவர் அடிமுடி
தெரிவகை யரியவர் திருவடி தொழுதெழ
எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவுறல்
புரிதரு மனனவர் புகழ்மிக உளதே.
தெளிவுரை : திருமாலும் பிரமனும் அடிமுடி தெரியாத வகையில் அரியவராகிய ஈசனார் திருவடியைத் தொழுது எழ, சோதி வடிவாகிய அப்பெருமானுடைய இடை மருது நகரை அடைதல் வேண்டும் என்னும் மனத்தை உடையவர்கள், புகழ் பெறுவர்.
1324. குடைமயி லினதழை மருவிய உருவினர்
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
அடைமரு திருவினர் தொழுதுஎழு கழலவர்
இடைமருது எனமன நினைவதும் எழிலே.
தெளிவுரை : குடையும், மயிற் பீலியும், மருவிய துவர் ஆடையும் கொண்டவர்கள் பல சொற்களைப் புறம்பாகக் கூற, அவற்றை உற்றவையாகக் கொள்ளற்க. திருவுடைய சீலர்களாய்த் தொழுது எழும் கழலையுடைய ஈசன் வீற்றிருப்பது, இடைமருது என மனத்தில் நினைப்பது எழில் ஆகும்.
1325. பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடை மருதினைப்
பரவிய ஒருபது பயிலவல் லவர்இடர்
விரவிலர் வினையொடு வியன்உலகு உறவே.
தெளிவுரை : கடற்கரையின் அடைவு தரும் புகலியில், தமிழ் விரும்பியவனாகிய ஞானசம்பந்தர், பொழில் திகழ் இடை மருது தலத்தைப் பரவிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்கு, இடர் என்பது இல்லை; வினையில்லை; பெருமை மிக்க தேவர் உலகு வாய்க்கப் பெறும்.
திருச்சிற்றம்பலம்
123. திருவலிவலம் (அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம், நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1326. பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை எதிர்விழி உமையவள்
மேவிய திருவுரு உடையவன் விரைமலர்
மாவியல் பொழில்வலி வலமுறை இறையே.
தெளிவுரை : மலர்களால் பின்னப்பட்ட சுருண்ட கூந்தலும், அழகிய வில் போன்ற நெற்றியும் அம்பினையொத்த விழியும் கொண்ட உமையவள், பாகத்தில் பொருந்திய திருவடிவத்தை உடையவனாகிய ஈசன், நறுமண மலர் சிறப்பாக விளங்கும் பொழிலையுடைய வலிவலத்தில் உறையும் கடவுள்.
1327. இட்டம தமர்பொடி இசைதலில் நசைபெறு
பட்டவிர் பவளநன் மணியென அணிபெறு
விட்டொளிர் திருவுரு உடையவன் விரைமலர்
மட்டமர் பொழில்வலி வலமுறை இறையே.
தெளிவுரை : விருப்பத்துடன் திருநீறு இசைய அணிந்த, சிவந்த திருமேனியுடையவராகிய ஈசன், பட்டு அணிந்த பவளம் போன்ற திருவுடையவராய், மணம் பொருந்திய பொழில்சூழ் வலிவலத்தில் உறைகின்ற இறைவர் ஆவர்.
1328. உருமலி கடல்கடை வுழிஉலகு அமர்உயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலைமணி
கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு
மருமலி பொழில்வலி வலம்உறை இறையே.
தெளிவுரை : பாற்கடலைக் கடைந்தபோது, உலகத்தின் உயிர்கள் யாவும் அஞ்சுமாறு எழுந்த விடத்தை வெள்ளி மலையில் கருமணி ஒளிர்வதைப் போன்று, தன் சிவந்த திருமேனியில் கறை கொள்ள மிடற்றில் தேக்கி, நீலகண்டனாய் விளங்கும் ஈசன், மணம் திகழ் பொழில்கள் நெருங்கித் திகழும் வலிவலத்தின்கண் உறையும் இறைவனாகும்.
1329. அனல்நிகர் சடையழல் அவியுற எனவரு
புனல்நிகழ் வதுமதி நனைபொறி யரவமும்
எனநினை வொடுவரும் இதுமெல முடிமிசை
மனமுடை யவர்வலி வலமுறை இறையே.
தெளிவுரை : அனலை நிகர்த்த சடையின் அழலைக் குளிரச் செய்யும் காட்சியைப் போன்று, கங்கையானது மிகுந்து தோன்றவும், அதில் விளங்கும் அரவமும், மதியை விழுங்க நோக்கவும், இதன் இயல்புகளைக் கண்ட ஈசன், அச்சிந்தையுடையவராய் விளங்குபவர். அவர் வலிவலத்தில் உறையும் கடவுள் ஆவர்.
1330. பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர்இடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே.
தெளிவுரை : உமாதேவி பெண் யானை வடிவம் கொண்டு மேவ, ஆண் யானை வடிவம் தாங்கி, அடியவர் தம் இடம் போக்கும் கணபதிநாதன் தோன்றுமாறு அருள் புரிந்த ஈசன், மிகுந்த வள்ளல் தன்மை மிக்க சிறந்வர் வாசம் புரியும் வலிவலத்தில் உறைகின்ற இறையாவார்.
1331. தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
விரைமலி குழல்உமை யொடுவிர வதுசெய்து
நரைதிரை கெடுதகை யதுஅரு னினன்எழில்
வரைதிகழ் மதில்வலி வலம்உறை இறையே.
தெளிவுரை : பூவுலக முதல்கொண்டு உலகம்  யாவையும் உயிர்கள் போகியாய் நிற்றல் பொருட்டு, உமாதேவியோடு விரவி இருந்து, தன்னைத் தொழுபவர்களுக்கு நரை திரை முதலானவை கெடுமாறு அருள் புரிபவன், எழில் மிக்க மதில்களையுடைய வலிவலம் என்னும் பதியில் உறைகின்ற இறைவன்.
1332. நலிதரு தரைவர நடைவரும் இடையவர்
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர்
வலிவரு மதில்வலி வலம்உறை இறையே.
தெளிவுரை : தரையில் நடந்து செல்லுதற்கும் அரியவராய் மென்மையான இடையை உடைய மாதர்கள் மனை சென்று பிச்சையேற்க வருபவன், எழில் மிக்க தொழில் பெருகவும் வலிவான மதில் உடையதும் ஆகிய வலிவலத்தில் உறையும் இறைவன் ஆவார்.
1333. இராவணன் இருபது கரம்எழில் மலைதனில்
இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து
இரவணம் அமர்பெயர் அருளின னகநெதி
இரவண நிகர்வலி வலமுறை இறையே.
தெளிவுரை : இராவணன், தனது இருபது கரங்களைக் கொண்டு எழிலார்ந்த கயிலை மலையை இல்லாத வண்ணம் (இராவணம்) நினைத்துப் பெயர்க்க, அவன் முடியைப் பொடியாக்கி நசித்து, அவன் கலங்கி அழ, இராவணன் என்னும் பெயரானது விளங்குமாறு (இராவணன்  அழுதவன்) செய்து அருளித் திருப்பாதத்தின் நுனியால் வருத்தி, இரந்து (இரவு கொண்டு) அணைந்து வேண்டும் அடியவர்க்கு அருள் புரிபவன். வலி வலம் உறையும் இறைவன்.
1334. தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நிலம் அகழ்அரி அடிமுடி
தான்அணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை இறையே.
தெளிவுரை : தேனமர் தாமரையில் உறையும் பிரமனும், வலிமை மிகுந்த ஏனமாய் நிலம் அகழ்ந்த திருமாலும், அடி முடி காணாதவராய் விளங்கிய ஈசன், உயர்ந்த மதில்களை உடைய வலிவலத்தில் உறையும் இறையே.
1335. இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையில் உணலுடை யவர்களு நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை உருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை இறையே.
தெளிவுரை : துவராடை கொண்ட பௌத்தர்களும், உணவினைப் பொருட்டாக உடையவர்களும், பகர்தலை விடுமின். வேதம் தேடித் தொடரும் தன்மையனாய் மதில் சூழந்த வலிவலம் மேவிய இறைவனை ஏத்துமின்.
1336. மன்னிய வலிவல நகருறை இறைவனை
இன்னியல் கழுமல நகரிறை எழில்மறை
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.
தெளிவுரை : சிறப்பு மிக்க வலிவல நகரில் உறையும் இறைவனை, இனிய இயல்கொள்ளும் கழுமல நகர் இறையின்  எழில் மறையின் ஞானம் வல்ல தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன், நினைத்து ஓதிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்களுக்கு உயர்ந்த பொருள் கைகூடும்.
திருச்சிற்றம்பலம்
124. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1337. அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
மலர்மலி குழலுமை தனையிட மகிழ்பவர்
நலமலி உருவுடை யவர்தகர் மிகுபுகழ்
நிலமலி மிழலையை நினையவ லவரே.
தெளிவுரை : மலர் போன்ற கூந்தலையுடைய உமையவளைத் தனது இடப்பாகத்தில் கொண்டு மகிழும் நல்ல வடிவம் பொருந்தி ஈசன் விளங்கும் நகரானது, பூவுலகில் மிக்க புகழைக் கொண்ட மிழலையாகும். அதனை நினைக்க வல்லவர்கள், மலர்மீது வாசம் புரியும் திருமகளின் அம்சமாக, உலகில் செல்வம் மிக்கு விளங்குவார்கள்.
1338. இருநிலம் இதன்மிசை எழில்பெறும் உருவினர்
கருமலி தருமிகு புவிமுதல் உலகினில்
இருளது மதியினர் இமையவர் தொழுதெழு
நிருபமன் மிழலையை நினையவ லவரே.
தெளிவுரை : பிறப்பின் வயப்பட்டு கன்மத்தை நுகரும் தன்மையால் விளங்கும் புவியாக உள்ள இந்த உலகத்தில் இருளற்ற மனத்தினராகிய ஞானிகளும் தேவர்களும் தொழுது எழும் சிறப்பினை உடைய மிழலையை நினைத்து வணங்குபவர்கள், உலகில் எழில் மிக்க வடிவழகு உடையவராவர்.
1339. கலைமகள் தலைமகன் இவன்என வருபவர்
அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்
நிலைமலி மிழலையை நினையவ லவரே.
தெளிவுரை : கங்கையும், அரவமும், மண்டை ஓடும், கொன்றை மலரும் பொருந்திய சடையும் உடைய ஈசன் நிலைபெறும் மிழலையை நினைத்து வணங்குபவர்கள், கலைமகள் தலைவராகிய பிரமனைப் போன்று கல்வி மிக்கவர் ஆவர்.
1340. மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்
காடமர் கழுதுகள் அவைமுழ வொடுமிசை
பாடலில் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடமர் மிழலையை நினையவ லவரே.
தெளிவுரை : சுடுகாட்டில் பேய்கள் முழவும், பாடலும் இசைக்க, நடம் புரியும் பெருமான், உலகில் நெடிது விளங்கும் மிழலையை, நினைக்க வல்லவர்கள் சுற்றங்கள் சூழ அன்பு மிக்கவராய் விளங்குவார்கள்.
1341. புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
இகழ்வுசெய் தவனுடை எழில்மறை வழிவளர்
முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு
நிகழ்தரு மிழலையை நினையவ லவரே.
தெளிவுரை : உமாதேவியை இகழந்த பிரமனுடைய ஐந்து சிரங்களில் ஒன்றைக் கொய்த பெருமானாகிய ஈசன் வீற்றிருக்கும் மிழலையை நினையவல்லவர்கள் புகழுடன் விளங்குவார்கள்.
1342. அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினில்எரி
சென்றுகொள் வøகிறு முறுரல்கொடு ஒளிபெற
நின்றவன் மிழலையை நினையவ லவரே.
தெளிவுரை : திரிபுரமானது ஒரு நொடியில் எரிந்து சாம்பலாகுமாறு, சென்று அடையும் தன்மை கொண்ட சிறு முறுவல் செய்து, ஒளி பெற நின்றவனாகிய ஈசனது மிழலையை நினைய வல்லவர்கள், பகைவர்களுக்குச் சிங்கமள் போன்று கம்பீரமாக எதிர் நின்று விளங்குவார்கள்.
1343. கரம்பயில் கொடையினர் கடிமலர் அயனதொர்
சிரம்பயில்வு அறஎறி சிவன்உறை செழுநகர்
வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
நிரம்பினர் மிழலையை நினையவ லவரே.
தெளிவுரை : மலர்மேல் உறையும் பிரமனின் ஒரு சிரத்தினை, அதன் இயல்பினை அறுமாறு அரிந்து எரிந்த சிவபெருமான் உறையும் செழுமையான நகரானது, மேன்மைகள் பல விளங்கும் வேதங்களை முறையாகப் பயின்றும், அறநெறி நிரம்பப் பெற்றவர்களும் வாழும் மிழலை. அதனை நினைய வல்லவர், கொடை மிகு கரத்தராய் விளங்குவார்கள்.
1344. ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலும்அவர்
அரக்கனன் மணிமுடி ஒருபதும் இருபது
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
நெருக்கினன் மிழலையை நினையவ லவரே.
தெளிவுரை : அரக்கனாகிய இராவணன் மணி முடிகள் பத்தும், இருபது கரங்களும் நெரியுமாறு, திருப்பாத விரலால் ஊன்றியவன் உறையும் மிழலையை நினைக்க வல்லவர்கள், ஒன்றிய சிந்தனை உடையவர்களாய், ஞானம் திகழப் பெறுவார்கள்.
1345. அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயன்அரி கருதரு வகைதழல்
வடிவுரு இயல்பினொடு உலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினையவ லவரே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் கருதுதற்கு அரியவனாகிச் சோதி வடிவமாய் உலகம் யாவையும் நிறைந்து கலந்தவனாகிய ஈசனின் மிழலையை நினைக்க வல்லவர்கள், அடியவர்கள் கூட்டத்தில் இணைந்து உலகில் மகிழ்வார்கள்.
1346. மன்மதன் எனஒளி பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை யவர்களு மதியிலர்
துன்மதி அமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை நினையவ லவரே.
தெளிவுரை :  காவி அணிந்தவர்களும் சமணர்களும் தொடர்ந்து வணங்குவதற்கு அரியவனாய், மிகுந்த புகழையுடைய நினைந்து போற்ற வல்லவர், மன்மதன் என்று சொல்லப்படும் பேரழகு உடையவர்கள் ஆவார்கள்.
1347. நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி
பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
கற்றுவல் லவர்உல கினில்அடி யவரே.
தெளிவுரை : முத்தனாகிய ஈசன் விளங்கும் மிழலையை, நிகரற்ற புகலியில், வேதமும் ஞானமும் வல்ல தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன், பத்திப் பெருக்கினால் அருளிய இத் திருப்பதிகத்தை, மனத்தில் பதித்து ஓத வல்லவர்கள், உலகத்தில் அடியார் பெருமக்களாய் விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
125. திருச்சிவபுரம் (அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில், சிவபுரம்,தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1348. கலைமலி அகல்அல்குல் அசிவைதன் உருவினன்
முலைமலி தருதிரு உருவமது உடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையும்இடம் கெடுமே.
தெளிவுரை : உமையவனைக் கூறாகக் கொண்டு காட்சி தரும் அந்த்தநாரியானவன், ஈசன். உயர்ந்த மதிலை உடைய சிவபுரத்தில் விளங்கும் அப்பெருமானைத் தொழுது வணங்க, நலிவு தரும் வினையானது, இல்லாமை ஆகும். இம்மை, மறுமை ஆகிய இரு பிறவிகளிலும் இடம் தீரும்.
1349. படர்ஒளி சடையினான் விடையினன் மதிலவை
சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி
திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்
இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே.
தெளிவுரை : ஒளிர்கின்ற சடையும் இடப வாகனமும் உடையவனாய், முப்புரம் எரித்த சிவன் உறையும் பதியாகிய சிவபுரத்தை அடைய, நமது இடம் நீங்கும்; உயர்கதி உறுதியாகும்.
1350. வரைதிரி தரஅரவுஅகடு அழல் எழவரு
துரைதரு கடல்விட நுகர்பவன் எழில்திகழ்
திரைபொரு புனல்அரி சிலதுஅடை சிவபுரம்
உரைதரும் அடியவர் உயர்கதி யினரே.
தெளிவுரை : பாற்கடலில் மேருமலையை நாட்டி, வாசுகி என்னும் அரவத்தைக் கயிறாகக் கொண்டு கடைய, அரவத்தின் உடலிலிருந்து அழல் போன்று வெளிப்பட்ட நஞ்சை நுகர்ந்தவனாகிய ஈசன், அரிசிலின் கரையில் திகழும் சிவபுரம் என்னும் நகரை மொழிந்து ஏத்துபவர் உயர்கதியைப் பெறுவார்கள்.
1351. துணிவுடை யவர்சுடு பொடியினர் உடல்அடு
பிணியடை விலர்பிற வியும்அற விசிறுவர்
தணிவுடை யவர்பயில் சிவபுர மருவிய
மணிமிட றனதடி  யிணைதொழு மவரே.
தெளிவுரை : சிவபுரத்தில் மருவிவிளங்கும் நீலகண்டனாகிய ஈசனைத் தொழுபவர்கள், துணிவு மிக்கவர்; நீறணிபவர்; பிணியற்றவர்; பிறவியினையும் அறுமாறு வினைத் தொகுதினை வீசி எறிவார்கள்.
1352. மறையவன் மதியவன் மலையவ னிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ்நட நவில்பவன்
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென வுடையவன் எமையுடை யவனே.
தெளிவுரை : எம்மை உடையவனாகிய ஈசன், வேத முதல்வன்; அறிவானவன்; மலைபோன்று உயர்ந்து நிலைத்து இருப்பவன்; யாவிலும் நிறைந்தவன் உமையவள் மகிழுமாறு நடம் பயில்பவன்; மேலான இறைவன்; தேவர்களின் பணி கொள்ளப்பெற்றுச் சிவபுரத்தில் இருப்பிடமாய் உள்ளவன்.
1353. முதிர்சடை இளமதி நதிபுனல் பதிவுசெய்து
அதிர்கழல் ஒலிசெய அருநட நவில்பவன்
எதிர்பவர் புரம்எய்த இணையிலி அணைபதி
சதிர்பெறும் உளம்உடை யவர்சிவ புரமே.
தெளிவுரை : சடை முடியில் இளம்பிறைச் சந்திரனும் கங்கையும் பதித்து வீரக்கழல் ஒலிக்க நடம் புரியும் ஈசன், பகை கொண்டவர்களின் முப்புரத்தை எரிசெய்த இணையற்றவனாகி விளங்கிச் சேர்கின்ற நகரானது, பெருமை மிக்கவர் வாழ்கின்ற சிவபுரம் ஆகும்.
1354. வடிவுடை மலைமகள் சலமகள் உடன்அமர்
பொடிபடும் உழைஅதள் பொலிதரு உருவினன்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அருவினை இலரே.
தெளிவுரை : அழகிய மலைமகளும் கங்கையும் பொருந்த, திருநீறு பூசி, மான் தோல் பொலியும் காட்சியுடன் பலியேற்கும் சிவன் உறையும் சிவபுரத்தை அடையும் அடியவர்கள், வினையற்றவர் ஆவர்.
1355. கரம்இரு பதுமுடி ஒருபதும் உடையவன்
உரநெரி தரவரை அடர்வுசெய் தவன்உறை
பரன்என அடியவர் பணிதரு சிவபுர
நகரது புகுதனம் உயர்கதி அதுவே.
தெளிவுரை : இருபது கரங்களும், பத்துத் தலைகளும் உடைய இராவணனுடைய வலிமையை அடக்கும் வகையில், கயிலை மலையை ஊன்றிய ஈசனைப் பரம் பொருள் என அடியவர்கள் பணிந்து எழ, அப்பெருமான் உறையும் சிவபுர நகரைப் புகுதல் நம் உயர்கதிக்கு வழியாகும்.
1356. அன்றியல் உருவுகொள் அரிஅயன் எனும்அவர்
சென்றுஅள விடல்அரி யவன்உறை சிவபுரம்
என்றுஇரு பொழுதுமுன் வழிபடும் அவர்துயர்
ஒன்றிலர் புகழொடும் உடையர்இவ் உலகே.
தெளிவுரை : தமது இயல்பான உருவத்தை விட்டு அல்லாத வேறு உருவமாகிய ஏனம் (பன்றி), அன்னம் ஆகிய திருமாலும் பிரமனும் காணரிய, ஈசன் உறையும் தலம் சிவபுரம் என்று எண்ணிக் காலை மாலை இருவேளையும் வணங்கும் அடிவர்களுக்கு, துயர் ஏதும் இல்லை; புகழ் சேரும்; இவ்வுலகில் யாவும் உடைமையாகும்.
1357. புத்தரொடு அமணர்கள் அறவுரை புறவுரை
வித்தக மொழிஇல விடையுடை அடிகள்தம்
இத்தவ முயல்வுறில் இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.
தெளிவுரை : புத்தர்களும் அமணர்களும் கூறும் அறவுரைகள் புறம்பானவை. ஞானம் ஆகாது. இடப வாகனத்தினை உடைய அடிகளாகிய சிவபுரத்தில் உறையும் ஈசன் திருவடிகள், மெய்ம்மையுடையன. அவற்றை வழிபடுவது சிறப்பானது ஆகும்.
1358. புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை
சிந்திமுன் உறவுயர் கதிபெறு வர்களே.
தெளிவுரை : அறிவு சார்ந்த பெருமக்கள் வேதங்களை நவிலும் புகலி நகரில் சிறப்பாக விளங்கும் ஞானசம்பந்தனது தமிழைக் கொண்டு, சிவபுரத்தில் உறைகின்ற எந்தையை உரை செய்த புகழ் மொழியாகிய இத் திருப்பதிகத்தை ஓதுபவர், வினை நீங்கி முன்னேற்றம் கொண்டு உயர்கதியைப் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
126. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1359. பந்தத்தால் வந்தெப்பால் பயின்று நின்ற வும்பரப்
பாலே சேர்வாய் ஏனோர்கான் பயில்கண முனிவர்களும்
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடும்
சேர்வார்நாணா ணீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாம்
சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணால்
தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய்த வனதுஇடம்
கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்திலங்கு சந்தனக்
காடார்பூவார் சீர்மேவும் கழுமல வளநகரே.
தெளிவுரை : நல்வினையின் பந்தம் கொண்ட தேவர்களும், அதற்கு அப்பால் மேலோங்கி நிற்கும் ஏனையவர்களும், தவமுனிவர்களும் ஆரச் சிந்தைனை செய்து போற்றித் துதிக்க, சிலம்பினை பணிந்த உமையவளுடன் பாகம் கொண்டு, திருக்கயிலையில் நாள்தோறும் திகழ்கின்ற பரிசெலாம் இவ்வுலகத்து மக்கள் நேரில் தம்முடைய கண்களால் காணும் சிறப்பினைத் தாம் பெற்ற பிறவியின் சிறப்பாகக் கொள்ளும் தகவினைப்பு புரியும் ஈசனது இடம் என்று சொல்லப் படுவது, எண் திக்கும் சந்தன மரங்களும் மணமும் சோலைகளும் திகழ, பூவுலகத்தின் பெருமை மேவும் கழுமல வளநகர் ஆகும்.
1360. பிச்சைக்கே இச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப்
பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்
உச்சத்தான் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணேறு
ஊராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெய்இசை
வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள் கொங்கை மங்கைமார்
வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடம்
கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திங்கு வண்டினம்
காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே.
தெளிவுரை : பிச்சை எடுப்பதற்கு இச்சை கொண்டு திருவெண்ணீறு குழையப் பூசி, பெருமையுடைய நீண்ட, சிறந்த பிறைபோன்ற நெற்றியுடைய உமயவளைப்  பாகங்கொண்டு உச்சிப் பகலில் விரும்பி, இடப வாகனம் தொடர ஊர்ந்தும், ஊர்கெல்லாம் நீண்ட வீதிகள்தோறும் சென்று, ஒலி செய்து, தன் நிலையை விளம்புதலும் செய்து வைத்தமையால், கச்சு அணிந்த தாருகாவனத்து மங்கையர் நேரில் வந்து மயங்கி நிற்க, வசீகரிக்க வல்லனாகிய பரமனின் இடமானது, திருமாலின் உந்திக் கமலத்தில் விளங்கும் பிரமன் பொருந்தி விளங்க, கருமை நிறம் படிந்தா மேகங்கள் சூழ் சோலைகளில் வண்டினம் இசைக்கும் கழுமல வளநகர் ஆகும்.
1361. திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
சேரே சேரே நீராகச் செறிதரு கரந்தியோடு
அங்கைசேர் வின்றிக்கே யடைந்துடைந்த வெண்தலைப்
பாலமேலே மாலேயப் படர்வுறும் அவன்இறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கன் கொன்றையின்
போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையன் இடம்
கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
தெளிவுரை : பிறைச் சந்திரன், தும்பை, ஊமத்தை ஆகியன சேரவும், சுரநதியாகிய தேவகங்யைம் அழகிய கரத்தில் அமையாது, தலையில் திகழந்து விளங்க,  வெண்தலையோட்டிற்கு மேல்பக்கம் பிரமன் அஞ்ஞான மயக்கம் கொண்டு பறந்த அன்னத்தின் இறகும், பொங்கும் நஞ்சுடைய பாம்பும் கொன்றை மலர் மாலையும் மேவிய சடையுடையவனாகிய பரமனது இடமானது, கங்கையின் சிறப்பின் அமைந்த பொன்னியாகிய காவிரியானது வாய்க்கால் வழியாகப் பாயும் கழுமல வளநகர் ஆகும்.
1362. அண்டத்தால் எண்திக்கும் அமைந்தடங்கு மண்தலத்து
ஆறேவேறே வானாள்வார் அவரவர் இடமதெலாம்
மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்து அலைந்த உம்பரு
மாறுஏலாதார் தாமேவும் வலிமிகு புரம்எரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த விஞ்சிசூழ்
மூவாமூதூர் மூதுரா முனிவுசெய்த வனதுஇடம்
கண்டிட்டே செஞ்சொற் சேர் கவின்சிறந்த மந்திரக்
காலே யோவா தார்மேவும் கழுமல வளநகரே.
தெளிவுரை : அண்டத்திலும், எண் திசைகள் அமைந்த இந்த மண்ணுலகத்தின் வழியும் வானாளும் தேவர்கள் இடத்திலும் சென்று போர் செய்து, தமக்கு மாறுபட்டு எதிர்ப்பவர்கள் யாரும் இல்லை எனும் வலிமை மிகுந்த முப்புரத்தை எரிக்க, நெற்றிக் கண்ணால் வேகுமாறு செய்து முடித்த ஈசன் இடமானது, வேதங்கள் ஓதி வேள்வித் தீயை ஓய்வின்றி ஆற்றிப் பெருமை கொள்ளும் கழுமல வளநகர் ஆகும்.
1363.திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலம்
சீறார்வீறார் போரார் தாரகனுடல் அவனெதிரே
புக்கிட்டேவெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப்
போலேபூநீர் தீகால்மீப் புணர்தரும் உயிர்கள்திறஞ்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்மங்கை செங்கதத்
தோடே யாமே மாலோகத் துயர்களை பவனதுஇடம்
கைக்கப்பேர் யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்
காடேயோடா வூரேசேர் கழுமல வளநகரே.
தெளிவுரை : எட்டுத் திக்குகளிலும் தேவர்கள் அங்கங்கே, திகழ்ந்து விளங்கும் இந்த உலகத்தில், சீற்றமும் வீறு கொள்ளும் எழுச்சியும், போர்த் தன்மையும் உடைய தாருகனது உடலை, அவன் எதிர்ப்படவும், வெட்டி வீழ்த்த, சண்டத் தீப்போன்று ஐம்பூதங்கள் சீற்றம் கொண்டு உயிர்களின் நல்ல வண்ணத்தைக் குலைக்காமல், தம் நிலையில் இன்புறுமாறு செய்து, நடனத்தில் தோல்வி கண்டு சினந்த காளியின் செந்தீக் கனல் ஊழித் தீபோல் தோன்றி அழியாதவாறு நிலைத்திருக்குமாறு செய்யும் ஈசனது இடம், கழுமல வளநகர்.
1364. செற்றிட்டே வெற்றிச்சசேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறும்
சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
ஒற்றைசேர் முற்றக்கொம்பு உடைத்தடக்கை முக்கண்மிக்கு
ஓவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப்
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
பேரா நோய் தாம் ஏயாமைப் பிரிவுசெய்த வளதிடம்
சுற்றிட்டே எட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செல்க
காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே.
தெளிவுரை : சலந்தரன் முதலான் அசுரர்களைச் செற்று வெற்றி கொண்ட பரமனாகிய ஆண் யானையின்பால் விருப்புக் கொண்டு, பொருந்திச் சேரும்முகத்தான் உமாதேவியார் பெண் யானை வடிவு கொண்டு விளங்க, நீண்ட துதிக்கையும் ஒற்றைக் கொம்பும் உடைய இறைவனாகிய விநாயகரைத் தந்து, உலகினில் பெருத்துக் காண்கின்ற துன்பமும் நோயும் இல்லாது செய்யும்படி அருள் புரிந்த ஈசனது இடம், அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தேர்ந்து விளங்கவும், அவ்வாறு ஒழுகாதார் சேராததும் ஆகிய கழுமல வளநகர் ஆகும்.
1365. பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப்
பாலே போகாமே காவாப் பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கல் வாய்
மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையும்இடம்
கத்திட்டோர் சட்டங்கங் கலந்திலங்கு நற்பொருள்
காலேயோவா தார்மேவும் கழுமல வளநகரே.
தெளிவுரை : பெருமையுடைய பக்திக்கு வித்திட்டு, பரந்து சென்று சீர் அழிக்கும் ஐம்புலன்களின் வழியின்பால் போகாது காத்து, பகையாகிய பஞ்சமா முக்குணங்களின் வழியை அடைத்து; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனப்படும் நான்கு அந்தக் கரணங்களை ஒரு நெறியாய்ச் சித்தத்தில் உய்த்து, பரம்பொருளைச் சேரும் தன்மையரைத் தானாகவே விளங்கச் செய்யும் ஈசன் உறையும் இடம், வேதத்தின் ஆறு அங்கங்களையும் கற்று, அப் பொருளின் மெய்ம்மையுணர்ந்து எக் காலத்திலும் மேவும் கழுமல வளநகர் ஆகும்.
1366. செம்பைசேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழில்
சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன்
இம்பர்க்கே தம்செய்திட்டு இருந்தரன் பயின்ற வெற்பு
ஏரார்பூநேர் ஓர்பாதத்து எழில்விரல் அவண்நிறுவிட்டு
அம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்து வந்தனம்செய்தாற்கு
ஆரார்கூவாள் வாணாளன்று அருள்புரிபவனதிடம்
கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக்
காரார் சேறார் மாவீதிக் கழுமல வளநகரே.
தெளிவுரை : செம்பினால் ஆகிய மதில் சூழ்ந்து, செறிந்த பைம்பொழில் சேரக் கடலின் அலைகள் வீசும் இலங்கையின் வேந்தன், இவ்வுலகத்தவர்க்குத் தீமை விளைவித்து, ஈசன் விளங்கும் மலையினையும் எடுக்க, மலர் போன்ற ஒப்பற்ற பாதத்தின் அழகிய விரல் அந்து நிறுவி, தோள் அழியுமாறு புரிந்து, அவன் வணங்கி ஏத்த, ஆர்த்து விளங்கும் கூர்வாளும் வாழ் நாளும் தந்தவன் இடம், கம்பத்தில் கட்டப்பெற்ற யானையின் மத நீர் கரிய சேறு ஆக்கும் சிறந்த வீதிகளைக் கொண்ட கழுமல வளநகர் ஆகும்.
1367. பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப்
பானாமால்தா னாமேயப் பறவையின் உருவுகொள
ஒன்றிட்டே அம்புச்சேர் உயர்ந்தபங் கயத்தவன்
ஓதான்ஓதான் அஃதுஉணராது உருவினது அடிமுடியும்
சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின்
றேசால் வேறோர் ஆகாரம் தெரிவுசெய் தவனதிடம்
கன்றுக்கே முன்றிக்கே கலந்திலம் நிறைக்கவும்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
தெளிவுரை : பன்றிக் கோலம் கொண்டு பூமியில் இடந்து சென்ற திருமால், மற்றும் தான் விரும்பிய பறவையின் உருவுக்கொண்டு ஒன்றிய நீரில் விளங்கும் தாமரைமேல் உள்ளவனாகிய வேதத்தை ஓதியவனாய் இருந்தும் இவ்வுண்மை ஓதப்பெறாத பிரமன் ஆகிய இருவரும் அடிமுடியை வந்திக்க, அழகிய கண்ணுக்குக் காட்சி தருபவனாய் வேறோர் உருவத்தினைத் தேர்ந்து விளங்கிய ஈசனது இடம், இல்லங்களில் கறவைப் பசுக்கள் விளங்கவும், வயல்களில் வாய்க்கால் வழியாக நீர் வற்றாது மேலே சென்று பாயவும் உள்ள கழுமல வளநகர் ஆகும்.
1368. தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
தாமேபேணா தேநாளும் சமணொடும் உழல்பவரும்
இட்டத்தா லத்தம்தான் இதன்றதென்று நின்றவர்க்கு
ஏயாமேவா  யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே அட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
போல்வார்தாம் ஓராமேபோய்ப் புணர்வுசெய்த வனதிடம்
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
தெளிவுரை : பனையோலையால் செய்யப்பட்ட தடுக்குகளை அக்கத்தில் இடுக்கி, நின்ற தன்மையில் உணவு உட்கொண்டும், தாம் எதைப் பற்றியும் பேணாது நாள்தோறும் சமணர்கள் தம்மொடு உழல்பவரும், தமது மன விருப்பத்திற்கேற்ப இதன் பொருள் இது அல்ல அது என்று கூறிக்கொண்டு, பொருந்தாதென சொல்லி, மருதாணி முதலான வண்ணங்களை மெய்யில் பூசித் தடவி மகிழும் பௌத்தரும் போன்றவர்களால் உணர முடியாதவனாகிய ஈசன் பொருந்தி விளங்கும் இடம், கால்வாய்களில் நீர் பாய்ந்து மேலே செல்ல கரும்பின் சாரும் கலந்து சுவை நீராய்ச் செல்லும் கழுமல  வளநகர் ஆகும்.
1369. கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
கானேதேனே போராரும் கழுமல நகரிறையைத்
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தாற் கலைத்துறை
தாமேபோல்வார் தேனனேரார் தமிழ்விர கனமொழிகள்
எஞ்சத்தேய் வின்றிக்கே யிமைத்திசைத்த மைத்த கொண்டு
ஏழேஏழே நாலேமூன்று இயலிசை இசையியல்பா
வஞ்சத்தோய் வின்றிக்கே மனம்கொளப் பயிற்றுவோர்
மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதர் மடவரலே.
தெளிவுரை : தாமரை மலரில் உள்ள தேனை உண்டு களித்த வண்டானது, சண்பகச் சோலையில் தேன் பருகும் வண்டுடன் பொரும் தன்மையுடைய கழுமல நகரில் வீற்றிருக்கும் இறைவனைத் தஞ்சமாகச் சார்ந்த பண்பைக்கோன் வழங்கும் ஞானமானது, தாமே (ஈசனே) போன்று நன்மை ஆர்ந்த தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் மொழிகள், வார்க்கும் தேனாய் எக்காலத்திலும் குறைவு இன்றி எஞ்சி நிற்கக் கூடியதாய்  விளங்க, இசைந்து அமைத்தாகிய இச் சொற்கள் கொண்டு இருபத்தோரு பண் செறியும் இசையின் இயல்பால் வேறுபாடு இன்றி மனத்தில் விருப்பம் கொண்டு உரைப்பவர்கள், இதயத்தில் திருமகள் வாசம் புரிவாள்.
திருச்சிற்றம்பலம்
127. திருப்பிரமபுரம்  (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1370. பிரம புரத்துறை பெம்மான் எம்மான்
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்.
தெளிவுரை : பிரமன் ஈசனைப் பூசித்த திருத்தலமானது பிரமபுரம் என்று அழைக்கப்படுகிறது. பிரமன் புரத்தில் வீற்றிருந்த நகருக்கு உரிய பெருமான், அவனே எம் தலைவன். மலரின்மேல் வீற்றிருக்கும் பிரமன், ஏடுடைய மலர்களால் அருச்சிக்க அருள் செய்த பெருமான், ஈசன். எம்முடைய தலைவனாகிய ஈசன் பிரமபுரத்துறையும் பெருமானாய் அருள் புரிபவன். யாவருக்கும் பெருமானாகிய ஈசன், எம் தலைவன் அவன் பிரமபுரத்தில் விளங்குபவன்.
1371. விண்டலர் பொழிலணி வேணு புரத்தவன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தவன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தவன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தவன்.
தெளிவுரை : ஈசன் மூங்கில் (வேணு) வடிவில் தோன்றி விளங்கியவன். விரிந்த மலர்கள் கொண்ட சோலைகள் அழகுற விளங்கும் வேணுபுரத்தில் விளங்குபவன், ஈசன். அழகிய வேணுபுரத்தில் விஷ்ணு (திருமால்)வால் பூசிக்கப்பெற்றவன். விஷ்ணுவின் உந்தக் கமலத்தின் மீது அலர்ந்த தாமரையில் விளங்கும் நான்முகனுக்கு அணியாகி விளங்கி, படைத்தல் தொழில் செய்பவன்.
1372. புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே.
தெளிவுரை : தேவர்களுக்கு அடைக்கலமாகிய புகலியில் மேவிய பரமன், இதயத் தாமரையாய் விளங்கி மன்னுயிரை இயக்குபவன். தாமரை மலர் மேவிய பிரமனால் பூசிக்கப் பெற்றவன். திருமாலால் வணங்கப் படுபவன். நெற்றித் திலகமாக விளங்கும் திருநீறு போன்றவன். புகலியே பரம்பொருளாய் வியாபித்து நின்று, மணம் வீசும் இனிய தன்மையும், தேன் சொரியும் பாங்கும், செம்மையின் ஒளி வண்ணமும் வண்டின் இனிய கீதமும், குளிர்ச்சியான பரிசமும் தந்து ஐம்புலன்களுக்கும் நல்விருந்து படைத்து சிவனடிக்கு உந்தச் செய்து விளங்குகின்றது.
1373. விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.
தெளிவுரை : பிரகஸ்பதியாகிய வியாழபகவான் பூசித்துப் பேறு பெற்ற வெங்குரு எனும் பதியில் மேவியி பரமன், விளங்குகின்ற ஒளியின் வண்ணம் பெருக வீற்றிருக்கின்றவன். அறியாமை என்னும் வெம்மை தவிர்க்கும் குருவாகவும், ஆல் நிழல் நின்ற நிலையை ஒத்த குளிர்ச்சி மிக்க தெய்வ பீடமாகிய வெங்குருவில் வீற்றிருந்து ஞானம் வழங்குபவனாய் உள்ளவன். ஒளி வண்ணமாகத் திகழ்தரும் ஈசன், அவன் அருள் வடிவாய் மேவி விளங்குபவன்.
1374. சுடர்மணி மாளிøத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிøத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிøத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிøத் தோணி புரத்தவன்
தெளிவுரை : பிரளய காலத்தில் யாவும் வெள்ளத்தில் மூழ்கி நிற்கத் தோணியில் விளங்கும் பரமன், மெய்யடியார்களைத் தமது காயத்தில் ஆரோகணித்து அருள் வழங்குபவன். சுடர் விடும் வண்ணமிகு செம்மேனியனாய், மாணிக்கமாய் விளங்குகின்றவன், அடியவர் மனத்தில் சுடர்விடும் சோதியாய் விளங்குபவன். ஏகாந்த நிலையினருக்கும் விஞ்ஞானகலர் என்று பேசப்படும் ஒரு மலத்தார்க்கும் நித்தியச் சுடராய் விளங்கும் அவன், ஒளி பொருந்திய மணிகளால் பதிக்கப்பெற்ற மாடமாளிகையுடைய தோணிபுரத்துப் பெருமான் ஆவன்.
1375. பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி.
தெளிவுரை : இரணியாக்கதனை வதம் செய்த வராக மூர்த்தியான திருமால் வழிபட்ட பூந்தராய் மேவிய பொன்னடி, பூவுலகத்தின் உயர்ந்தோராகிய அந்தணர் களால் வழிபடப் பெறுவதாகும். அப்பொன்னாகிய ஒளி மிக்க திருவடியைச் சார்ந்து விளங்க, மென்மை மிக்க தேவர் ஆவர். தாயாக விளங்கிப் பாதுகாக்கும் ஈசனின் பொன்னார் சேவடி, எல்லா போகத்தையும் இவ்வுலகத்தில் சேர்த்து வழங்க வல்லது. தெய்வத் தன்மையை. இவ்வுலகில் சேர்க்கும் ஈசன் திருவடிக் கமலத்தை, மலர்கொண்டு தூவிப் போற்றுவோமாக.
1376. செருக்குவாய்ப் புடையான் சிரபுரம் என்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுரம் என்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுரம் என்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுரம் என்னில்.
தெளிவுரை : சிரம் அறுபட்ட ராகு பூசித்த திருத்தலத்தில் எழுந்து அருளி , பேறு நல்கும் பெருமான், யான் எனது என்னும் செருக்கும் அறுமாறு செய்பவன். செருக்கின் முனைந்து ஆணவ மலம் தோன்ற நின்ற பிரமனின் சிரத்தை அறுத்துப் புடைத்தவன். என்னிடம் தலையானவனாய் விளங்கி மொழியும் பெரும் சொற்களாக மலர்பவன். மன்னுயிர்கள் செருக்குற்று நலியாதவாறு, அவர்தம் சிரத்தில் பதிந்து காத்தருள்பவன். பக்தர்களின் உள்ளத்தில் பதிந்து நின்று விளங்கி, அச்சமற்ற செம்மையுடையவர்களாய்ச் செய்பவன். அவ் இறைவனை வணங்கித் துதிப்பீராக.
1377. பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.
தெளிவுரை : புறா வடிவத்தில் தோன்றி அக்கினி தேவன் வழிபட்ட பெருமான், அழகிய ஒளி பெறும் திருவடியை உடையவன். மாதவ வேந்தர்கள் சார்ந்து தொழுதற்கு உரியவன். மாதவ வேந்தர்கள் சார்ந்து தொழுதற்கு உரியவன். தவத்தின் மேலாய், மாதவத்தின் சீராயய், அவன் பொன்னடிக் கமலத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மேலான சிறப்புகளைத் தருபவன். உலக மாதாவாகிய உமையவனைச் சேர்நஅத அர்த்தநாரியாக இணைந்தும், வேறாகியும் விளங்குபவன். அப்பெருமான் திருவடியைப் போற்றுதல் தவமாகும்.
1378. தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்.
தெளிவுரை : சண்பை என்னும் கோரையால் விளைந்த சாபம் திருமாறு, திருமால் (கண்ணபிரான்) வழிபட்ட சண்பை நகரில் விளங்கும் பெருமான், மலை எடுத்த தசமுகனாகிய இராவணன் முடிகள் நெரியுமாறு, கயிலை மலையைத் திருப்பாத விரலால் ஊன்றி அருள் புரிந்தவன். மன்னுயிர்களின் பத்து வகையான குற்றங்களை நீக்கும்முகத்தால் ஞானம் அருள வல்லவன். பலவிதமான கொடுமைகளைப் புரிந்த அசுரர்களின் கோட்டை மதில்களை எரித்தவன். நறுமணம் பொருந்தி விளங்கும் அப் பரமனை உகந்து தொழுமின்.
1379. காழி யானயன் உள்ளவா காண்பரே
காழி யானயன் உள்ளவா காண்பரே
காழி யானயன் உள்ளவா காண்பரே
காழி யானயன் உள்ளவா காண்பரே.
தெளிவுரை : காளிதேவி வழிபடப் பேறு நல்கிய காழியில் விளங்கும் பெருமான், பிரமனால் பூசிக்கப் பெற்றவன். அன்பின் வயத்தால் வணங்குபவர்களுக்குக் காட்சி நல்குபவன். ஊழிக் காலத்திலும் அழியாது விளங்கும் காழியில் நிலைகொள்ளும் பெருமான். அவன் தன்னைப் பற்றும் மயத் தொண்டர்களுக்கு உறுதியான பற்றாய் விளங்கி, உள்ளத்தில் பதிந்து இனிய காட்சி நல்குபவன். நினையாதவர்களுக்கு அயலாய் நிற்பவன். அவ்ன பெருமையை, உள்ளவாறு யாராலும் அறிந்து ஓதற்கு அரியவன். அவனைத் தொழுது போற்றுவீராக.
1380. கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே.
தெளிவுரை : கொச்சையாம் பழியை நீக்கக் கோரி பராசர முனிவரால் பூசிக்கப்பெற்ற கொச்சை வயம் என்னும் நிழலைப் பேணாதவர் பேதையர் ஆவர். ஈசன் புகழ் போற்றாது அவமாய்த் திரிபவர்கள் அறியாமையுற்று, அஞ்ஞானத்தவராய் உலகில் உழல்வார்கள்  பிறவி எடுத்ததன் பேற்றை இழந்து, குற்றத்தொகுதிக்கண் மூடப்பெற்றவராய் நன்னிலையை நீத்தவராவர்.
1381. கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.
தெளிவுரை : குற்றத் தொகுதி நீங்குமாறு உரோமச முனிவர் வழிபட்ட கழுமல நகரில் வீற்றிருக்கும் ஞானத்தின் தலைவனாக விளங்கும் ஈசன், கவுணியர் கேத்திர மரபில் தோன்றிய ஞானசம்பந்தரின் சொற்களாக மலர்ந்தருள்பவன். இத்தகைய மொழிகளைக் கொள்கின்ற நன்மனத்தினர்கள் வினைக் கட்டு அறும்; பிறவித்தளை நீங்கும்; எக்காலத்திலும் அழியாது மூத்து நிலையாக நின்று விளங்கும் பதியாகிய கழுமலத்தில் வீற்றிருக்கும் பெருமான் திருவடியை அன்பினால் கட்டிப் பிணைத்து மேன்மையடைவீராக.
திருச்சிற்றம்பலம்
128. திருப்பிரமபுரம்  (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1382. ஓருரு வாயினை மானாங் காரத்து
ஈரியல் பாய்ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்பமும் மூர்த்திகள் ஆயினை
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை
தெளிவுரை : ஈசன், ஏகரூபனாய் இருந்து ஐந்து தொழில்களுக்கும் அதிபதியாக விளங்குபவன். மான் போன்ற உமாதேவியுடன் விளங்கிச் சிவன், சக்தி எனும் இருவகையான இயல்புடன் உயிர்களைப் பதியை நோக்கிச் சாரவும், ஆணவம் கன்மம் மாயை ஆகிய குற்றத்தொகுதிகளிலிருந்து நீங்கவும் புரிபவன். விண்ணில் தொடங்கிப் பூவுலகம் வரையில் ஒன்றிக் கலந்த இரு சுடர்களாகிய சூரியன், சந்திரன், மற்றும் தேவர்முதல் யாவும் படைத்தும், காத்தும், அழித்தும் செய்யவல்ல மும்மூர்த்திகளாகிய பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகள் ஆயினன். பிரமனும் திருமாலும் உடனாகிச் சேர்த்து, உருத்திரத் தன்மையைத் தன்பால் தேக்கி, ஒப்பற்ற ஒருவனாய் ஆகி நின்றவன்.
ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கும் ஒளிநெறி
காட்டினை நாட்ட மூன்றாகக் கோட்டினை
தெளிவுரை : ஓர்ந்து அறிதற்குரிய ஆலமரத்தின் நீழலில் வீற்றிருந்து, திருக்கழலை முப்போதும் ஏத்தித் தொழுத சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு, உயர்ந்த நெறியைச் சின்முத்திரை கொண்டு காட்டி, உண்மைப் பொருளை உணர்த்தி, மும்மலங்களை அறுத்து மேன்மை கொள்ளும் வகை காட்டினன், பரமன்.
இருநதி அரவமோடு ஒருமதி சூடினை
ஒருதாள் ஈரயின் மூவிலைச் சூலம்
நாற்கால் மான்மறி ஐந்தலை அரவம்
ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டு ஒருகரி ஈடுஅழித்து உரித்தனை
ஒருதனு இருகால் வளைய வாங்கி
முப்புரத் தோடு நானிலம் அஞ்சக் 
கொன்று தலத்துறு அவுணரை அறுத்தனை
தெளிவுரை : கங்கை, அரவம் ஆகியவற்றுடன் சந்திரனைச் சூடியவன், ஈசன். அவன் ஈர்க்கும் கூர்மை கொண்ட மூன்று இலைகளையுடைய சூலமும், நான்கு தேவங்களையும் கால்களாக உடைய மானும், பஞ்சாட்சரமாகிய ஐந்து தலையுடைய அரவமும் ஏந்தியவன். நீர் வற்றித் தொங்கும் வாய் உடைய மதம் பொருந்தியதும் இரு தந்தங்களையுடையதும் ஆன யானையின் பெருமையை அழித்து, அதன் தோலை உரித்தவன்; மேருமலையை வில்லாகக் கொண்டு வளைய வாங்கி உலகம் அஞ்சி வியக்குமாறு முப்புரத்தை அழித்து அதில் இருந்த தீய அசுரர்களை அழித்தவன்.
ஐம்புல நாலாம் அந்தக் கரணம்
முக்குணம் இருவலி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை ஒருங்கி மனத்தோடு
இருபிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறைமுடித்து
தெளிவுரை : மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐம்புலன்களையும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனப்படும் அந்தக்கரணங்கள் நான்கும், சாத்துவீகம், ராஜோகுணம், தமோகுணம் ஆகிய முக்குணங்களும் பிராணன், அபானன் என்னும் இருவகையான காற்றும் ஒருங்குதல் மேவிய வானோர் ஏத்த நின்ற ஈசன், ஒன்றிய மனத்தினராய், இப்பிறவியின் தன்மை ஓர்ந்து, மூன்று வேளைகளிலும் அனுட்டானம் முதலான கிரியைகள் செய்து,
நான்மறை ஓதி ஐவகை வேள்வி
அமைத்து ஆரங்கமுதல்எழுத் தோதி
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை,
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை
இகலிய மைந்துணர் புகலி அமர்ந்தனை
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும் புதையமேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை தொலையாஇருநிதி
வாயந்த பூந்தராய் ஏய்ந்தனை 
வரபுரம் என்றுணர் சிரபுரத்து உறைந்தனை
ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத்து அருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை.
தெளிவுரை :  நான்கு தேவங்களாகிய ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகியவற்றை ஓதி; ஐந்து வகையான வேள்வியாக சிவபூசை, குருபூசை, மகேஸ்வர பூசை, பிராமண உபசரிப்பு, அதிதி உபசாரம் ஆகியன ஆற்றி; ஆறு அங்கங்களாகிய சந்தசு, கற்பம், வியாகரணம், சிட்சை, சோதிடம், நிருத்தி ஆகியவற்றின் பிரதான எழுத்தாகிய பிரணவத்தை ஓதி; ஒழுங்கு முறைப்படி பயின்று வளமை தரும் பிரமபுரம் என்னும் பதியை விரும்பினன், ஈசன். அப்பெருமான் வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை என்றும் வழங்கப்படும் அப்பதியில் விழைந்து விளங்குபவன்.
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை
எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமு மைந்தமர் கல்வியும்
மறைமுதல் நான்கும் 
மூன்று காலமும் தோன்ற நின்றனை
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
மதுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியனறியும்
அனைய தன்மையை ஆதலி னின்னை
நினைய வல்லவர் இல்லைநீள் நிலத்தே.
தெளிவுரை : ஈசன், ஐயம் கொண்ட சமணரும், தேரரும் உணராதவராய் இருக்கக் காழியில் அமர்ந்து விளங்குபவன்; ஆறு சமய நெறிகளிலும், ஐந்தெழுத்தாகும் ஞானத்திலும், நான்கு மறைகளிலும் தோய்ந்தவன்; முக்காலமும் தோன்ற நின்றவன்; இம்மை, மறுமை ஆகிய இரண்டும் ஆயவன்; ஒருமை வயத்தனாய்த் திகழ்ந்து அதன் பெருமைக்கு உரியவன்; மறையோர் வாழ் கழுமல முதுபதியினன். அப்பெருமானை ஏத்திய கவுணியனாகிய ஞானசம்பந்தர் உரைத்த இவ் அருள் மொழியை நினைய வல்லவர்கள், பிறவி நோயைக் களைந்தவராய் மீண்டும் பிறவாமையாகிய செல்வத்தை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
129. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1383. சேவுயரும் திண்கொடியான் திருவடியே
சரண் என்று சிறந்தவன்பால்
நாவியலு மங்கையொடு நான்முகன்தான்
வழிபட்ட நலங்கொள்கோயில்
வாவிதொறும் வண்கமல முகங்காட்டச்
செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவி யிருங் கருங்குவளை கருநெய்தல்
கண்காட்டும் கழுமலமே.
தெளிவுரை : இடபக் கொடியுடைய ஈசன் திருவடியே சரண் என்று சிறப்பாகக் கண்டு, தன் தேவியாகிய கலைமகளுடன் இணைந்து வழிபட்ட பிரமன் நலத்தைப் பெற்ற கோயில், பொய்கையில் மகளிர்தம் முகத்தைத் தாமரை மலரும், பவள வாயைக் குமுத மலரும் காட்ட, கண்களைக் கருங்குவளையும் நெய்தலும் காட்டி விளங்குகின்ற கழுமலம் ஆகும்.
பிரமன் பூசித்த தலம் குறிப்பு உணர்த்தியது காண்க.
1384. பெருந் தடங்கண் தெந்துவர்வாய்ப் பீடுடைய
மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய கண்ணவெண்ணீறு அலங்கரித்தான்
அமரர்தொழ அமரும்கோயில்
கருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்
இறைவனது தன்மைபாடிக்
கருந்தடங்கண் ணார்கழல்பந்துஅம்மானைப்
பாட்டயரும் கழுமலமே.
தெளிவுரை : மலையரசன் மகளாகிய உமாதேவியைப் பிரியாத திருமேனியாய், அருந்தகைமையுடைய திருவெண்ணீறு பூசி அலங்கரித்துத் தேவர்கள் தொழுதேத்த விளங்குகின்ற ஈசன் கோயில், வள்ளல் தன்மை மிக்க கரத்தையுடைய அந்தணர்கள், மனைகள் தோறும் வேள்விகள் புரியவும், கரிய பெரிய கண்களையுடைய மகளிர் அவன் பெருமைகளைப் பாடி, அம்மானை, கழங்கு, பந்து முதலானவை விளையாடும் கழுமலம் ஆகும்.
1385. அலங்கல்மலி வானவரும் தானவரும்
அலைகடலைக் கடையப்பூதம்
கலங்கஎழு கடுவிடம் உண்டு இருண்டமணி
கண்டத்தோன் கருதும் கோயில்
விலங்கல்அமர் புயன்மறந்து மீன்சனிபுக்கு
ஊன்சலிக்கும் காலம்தானும்
கலங்கல்இலா மனப்பெருவண் கையுடைய
மெய்யர்வாழ் கழுமலமே.
தெளிவுரை : மாலைகளுடன் விளங்கும் தேவரும் அகரரும் பாற்கடலைக் கடைய, பஞ்ச பூதங்களும் கலங்குமாறு எழுந்த கொடிய விடத்தை உட்கொண்டு, கரிய கண்டத்தையுடைய ஈசன் கருதி அமரும் கோயில், மலையின்மேல் தவழும் மேகம் மழை பொழிதலை மறுந்து, மகரராசியில் சனிக்கோள் புகுதலால் இயற்கையின் நியதியாக, வறட்சி நேர்ந்த காலத்திலும், கலங்காது வழங்கும் வள்ளல் தன்மையுடைய சத்தியவான்கள் வாழும் கழுமலம் ஆகும்.
1386. பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச்
சயமெய்தும் பரிசுவெம்மைப்
போரிசையும் புரமூன்றும் பொன்றஒரு
சிலைவளைத்தோன் பொருந்தும் கோயில்
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்
சூளிகைமேல் மகப்பாராட்டக்
காரிசையும் விசும்பியங்கும் கணம்கேட்டு
மகிழ்வெய்தும் கழுமலமே.
தெளிவுரை : உலகம் நலியுமாறும் தேவர்கள் அச்சம் கொள்ளுமாறும் செய்த முப்புரத்தை வெற்றி கொள்ளப் போர்ப் பரணி இசைத்துச் சலை வளைத்துப் பொருத ஈசன் பொருந்தும் கோயில், மகளிர் மாளிகையின் மேல்தளத்தில் இருந்து தம் குழந்தைகளைப் பாராட்ட, அதன் இனிய ஒலியை மடுத்தி மேகங்கள் வானத்தில் இடி குரல் மெல்ல எழுப்பத் தேவகணங்கள் கேட்டு மகிழ்ச்சி கொள்ளும் கழுமலம் ஆகும்.
1387. ஊர்கின்ற அரவம்ஒளி விடுதிங்க
ளொடு வன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர்
செஞ்சடையா(ன்)நிகழும் கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி
மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு
சுதைமாடக் கழுமலமே.
தெளிவுரை : ஊர்ந்து மேவும் அரவம், சந்திரன், வன்னி, ஊமத்தம், கங்கை, கபாலம் ஆகியவற்றை உடைய செஞ்சடைகொண்ட ஈசன் கோயில், அழகிய மலர்கள் நிலவும் வெள்ளியங்கிரி போன்ற வெண்மையான மாளிகைகள் கொண்ட கழுமலம் ஆகும்.
1388. தரும்சரதம் தந்தருள்என்று அடிநினைந்து
தழலணைந்து தவங்கள் செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ
ழமையளித்த பெருமான் கோயில்
அரிந்தவயல் அரவிந்த மதுவுகுப்ப
அதுகுடித்துக் களித்துவாளை
கருஞ் சகடம் இளகவளர் கரும்பிரிய
அகம்பாயும் கழுமலமே.
தெளிவுரை : மெய்ப்பொருளைத் தந்தருள்க என்று திருவடியை நினைந்து, தழல் வளர்த்துத் தவங்கள் செய்த அறிஞர் பெருதகையாளர்களுக்குப் பெருமை மிக்க தோழமை நல்கிய பெருமான் உறையும் கோயில், அறுவடை செய்யப்பெற்ற நிலத்தில் விளங்கும் தாமரையிலிருந்து தேன் சிந்த அதனைப் பருகிய வாளை மீன்கள் களித்துச் சக்கரம் போன்று சுழல கரும்புக் தோட்டங்களில் உள்ள பிஞ்சுக் கரும்புகள் விலகி நிற்கவும், தண்ணீர் உள்ளே பாயும் வளம்திகழ் கழுமலம் ஆகும்.
1389. புலிமுதல்ஐம் பூதமாய்ப் புலன்ஐந்தாய்
நிலன்ஐந்தாய்க் கரணநான்காய்
அவையவைசேர் பயனுருவாய் அல்லவுரு
வாய்நின்றான் அமரும்கோயில்
தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு
கொம்புதைப்பக் கொக்கின்காய்கள்
கவண்எறிகல் போல்சுனையிற் கரைசேரப்
புள்ளிரியும் கழுமலமே.
தெளிவுரை : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களாய்; மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களாய்; குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நிலத்தின் வகை ஐந்தாய்; மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் அந்தக்கரணங்கள் நான்காய்; அவ்வவற்றின் பயனாய், உருவாய், உருஅல்லாத அருவாய் நின்ற ஈசன் அமரும் கோயில், தவம் முயல்வோர் பூசனை ஆற்றுவதற்காக மலர்கள் பறிக்கப்பட்ட பூங்கொம்புகள் விடுவித்த ஞான்று, வேகமாகச் சென்று சென்று அண்மையில் உள்ள மாமரத்தில் தாக்க, மாங்காய்கள் கவணில் எறிந்த கற்களைப் போன்று சுனைக்கரையில் விழ, பறவைகள் அஞ்சி அகலும் கழுமலம் ஆகும்.
1390. அடல்வந்த வானவரை அழித்துலகு
தெரித்துழலும் அரக்கர் கோமான்
மிடல் வந்த இருபதுதோள் நெரியவிரல்
பணிகொண்டோன் மேவும் கோயில்
நடவந்த உழவர்இது நடவொணா
வகை பரலாய்த்து என்றுதுன்று
கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்
கரைகுவிக்கும் கழுமலமே.
தெளிவுரை : எதிர்த்துப் போர்க்கு வந்த தேவரை அழித்து, உலகத்தை வருத்தி உழல்கின்ற அரக்கர் தலைவனாகிய இராவணின் வலிமையான இருபது தோள்கள் நெரிந்து வாடுமாறு விரலால் அடர்த்து, அவன் பாடிப் பணியச் செய்த பரமன் மேவுகின்ற கோயில், உழவர்கள் விதைக்கும்போது இது விதையன்று, முத்துப் பரல் என்று ஆய்ந்து கரையில் குவிக்கும் கழுமலம் ஆகும்.
1391. பூமகள்தன் கோன் அயனும் புள்ளினொடு
கேழல்உரு பாகிப்புக்கிட்டு
ஆமளவும் சென்றுமுடி அடிகாணா
வகைநின்றான் அமரும்கோயில்
பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்
கொண்டணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து
நின்÷ற்தும் கழுமலமே.
தெளிவுரை : திருமகள் தலைவனாகிய திருமாலும், பிரமனும், முறையே பன்றியும் அன்னப் பறவையும் ஆகி, தங்களால் முடிந்த அளவு சென்றும் அடியும் முடியும் காணாதவராய் நின்ற ஈசனார் அமரும் கோயில், பாக்களைக் கனிந்து பாடும் புலவர்கள் பன்மலர்களால் விரும்பி ஏத்தும் கழுமலம் ஆகும்.
1392. குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை
மெய்த்தவமாய் நின்றுகையில்
உணல் மருவும் சமணர்களும் உணராத
வகைநின்றான் உறையும் கோயில்
மணமருவும் வதுவையொலி விழவின்ஒலி
இவைஇசைய மண்மேல் தேவர்
கணமருவு மறையின்ஒலி கீழ்ப்படுக்க
மேற்படுக்கும் கழுமலமே.
தெளிவுரை : புத்தர்கள் பொய்த் தவத்தை மெய்த் தவமாய்க் கருத, சமணர்களும் அவ்வாறு இருக்க, அவர்கள் உணரமுடியாதவாறு நின்ற ஈசன் உறையும் கோயில் திருமண ஒலியும், திருவிழாக்கள் ஒலியும் இசைக்கப் பூவுலகில் தேவகணங்கள் மருவுதலால் வேத ஒலியும், ஒன்றுக்கொன்று மேலோங்கும் கழுமலம் ஆகும்.
1393. கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள்
ஈசன்றன் கழல்மேல் நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞான
பந்தன்தான் நயந்துசொன்ன
சொற்றுணையோர் ஐந்தினொடு ஐந்து இவைவல்லார்
தூமலராள் துணைவராகி
முற்றுலக மதுவாண்டு முக்கணான்
அடிசேர முயல்கின்றாரே.
தெளிவுரை : நான்மறை கற்றுணர்ந்தவர்கள் பணிந்து ஏத்துகின்ற கழுமலத்துள் வீற்றிருக்கும் ஈசன் கழல்மேல், நல்லவர்களின் நற்றுணையாய் விளங்கும் பெருந்தன்மை மிகுந்த ஞானசம்பந்தன் விரும்பிச் சொன்ன, சொல்லின் துணையாகிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தூய மலராளாகிய திருமகளின் துணை கொண்டவராகி உலகம் முழுவதும் தன் ஆட்சியில் கண்டு, ஈசன் திருவடியில் சேரும் முயற்சியுடையவர்கள் ஆவார்கள்.
திருச்சிற்றம்பலம்
130. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1394. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட்டு ஐம்மேல் உந்தி
அலமந்த போதாக அஞ்சேல்என்று
அருள்செய்வான் அமரும்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி அலமந்து மரமேறி
முகில்பார்க்கும் திவையாறே
தெளிவுரை : ஐம்புலன்களும் தமது இயல்பிலிருந்து திரிந்து, தனது வழியிலிருந்து மயங்கி அதற்குரிய அறிவும் கெட்டு, பித்த, வாயு, சிலேத்தும நாளங்களின் மாறுபாட்டால் கபம் பெருக வருந்தும்போது, அஞ்சேல் என்று அருள் செய்பவனாகிய ஈசன் அமரும் கோயில், திருக்கோயிலை வலம் வரும் பெண்கள் நடனம் ஆட, முழவின் அதிர்ஒலி கேட்ட சில மந்திகள் தடுமாற்றம் கொண்டு மேகத்தின் இடியோசை எனக் கருதி, மரத்தில் ஏறி வானத்தைப் பார்க்கும் திருவையாறு ஆகும்.
1395. விடலேறு படநாகம் அரைக்கசைத்து
வெற்பரையன் பாவையோடும்
அடலேறுஒன் றதுஏறி அஞ்சொலீர்
பலியென்னும் அடிகள் கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியி
னுடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் கரிசங்கம் செழுமுத்தங்கு
ஈன்றலைக்கும் திருவையாறே.
தெளிவுரை : வலிமை மிக்க நாகத்தை அரையில் கட்டி, உமையவனைப் பாகமாக கொண்டு இடபத்தில் ஏறி, அழகிய சொல்லுடையவர்களே !! என்று கூறிப் பிச்சையேற்ற அடிகளின் கோயில், கடலலைகள் வாயிலாகக் காவிரியினுடன் கலந்து இரவுக் காலங்களில் கரையடைந்த சங்குகள் ஈன்ற முத்துக்கள் விளங்கும் திருவையாறு ஆகும்.
1396. கங்காளர் கயிலாய மலையாளர்
கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர்
விடையாளர் பயிலும்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால்
இறகுலர்த்திக் கூதல் நீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கானல்
இரைதேரும் திருவையாறே.
தெளிவுரை : கபாலம் ஏந்தியவர், கயிலாய மலையுடையவர், கானப் பேராளர், உமை பங்காளர், சூலப்படையாளர், இடப வாகனர் ஆகிய ஈசன் கோயில், தேன் சொரியும் சோலையில் ஈரமான சிறகுகள் உலர்ந்து குளிர் நீங்கிய வெண்மையான இருகுகள் இரை தேடும் திருவையாறு ஆகும்.
1397. ஊன்பாயு முடைதலைகொண்டு ஊரூரின்
பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறும் சங்கரனார்
தழலுருவர் தங்கும் கோயில்
மான்பாய வயலருகே மரமேறி
மந்திபாய் மடுக்கள்தோறும்
தேன்பாய மீன்பாயச் செழுங்கமல
மொட்டலரும் திருவையாறே.
தெளிவுரை : பிரம கபாலம் கையில் கொண்டு ஊர்தெறும் பலிக்கு உழலும் உமையவள் பங்கினர், இடப வாகனம் ஏறும் சங்கரனார், தழல் உருவானவர். அவர் தங்குகின்ற கோயில், மான் பாய, வயல்களின் அருகே மந்தி பாய, தேன் பாயும் மடுக்களில் மீன் பாயத் தாமரையின் மொட்டு மலரும் திருவையாறு ஆகும்.
1398. நீரோடு கூவிளமும் நிலாமதியும்
வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றைத்
தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த
தத்துவனார் தங்கும் கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும்
பொயிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார்
நடம்பயிலும் திருவையாரே.
தெளிவுரை : கங்கையும், வில்வமும், பிறைச் சந்திரனும், வெள்ளெருக்கும், கொன்றை மாலையும், குளிர்ச்சி பொருந்தி கரந்தையும் சடைக்கணிந்த தத்துவனார் தங்கும் கோயில், மேகத்தைத்  தொடும் ஓங்கிய பொழிலும் மலர்செறிந்த தேரோடும் வீதிகளில் உள்ள அரங்குகளில் மகளிர் நடம் பயிலும் திருவையாறு ஆகும்.
1399. வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு
நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த
புண்ணியனார் நண்ணும் கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார்
பண்பாடக் கவினார் வீதித்
தேந்தாம் என்று அரங்கேறிச் சேழியிழையார்
நடமாடும் திருவையாறே.
தெளிவுரை : ஆட்சிகொண்டு காப்பவனாய், விண்ணுலகத்தினர்க்கும் மண்ணுலகத்தினர்க்கும் நல்ல நெறியைக் காட்டும் விகிர்தனாய், நறுங்கொன்றை மாலை சடைக்கு அணிந்த புண்ணியனார் நாடும் கோயில், காந்தார இசையில், மகளிர் பண்பாட நடம் பயிலும் திருவையாறு ஆகும்.
1400. நின்றுலா நெடு விசும்பில் நெருக்கிவரு
புரமூன்று நீள்வாய்அம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி
மலையாளி சேருங்கோயில்
குன்றெலாம் குயிலகூவக் கொழும்பிரச
மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு
கண் வளரும் திருவையாறே.
தெளிவுரை : வானத்தில் நெருக்கித் துன்புறுத்திய புரங்கள் மூன்றினையும் அம்பு செல்லுமாறு தொட்ட வில்லையுடைய கயிலை மலைநாதன் சேரும் கோயில் குன்றிடை இருந்து குயில் கூவ, மலரில் தேன் சொரிந்து வாசமலரின் மணம் சேர, தென்றல் பெருகி கருபினைக் கணுக்கள்தோறும் பெருகி வளரச் செய்யும் திருவையாறு ஆகும்.
1401. அஞ்சாதே கயிலாய மலையெடுத்த
அரக்கர்கோன் தலைகள் பத்தும்
மஞ்சோடு தோள்நெரிய அடர்த்தவனுக்கு
அருள்புரிந்த மைந்தர் கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ
இளமேதி இரிந்துஅங்கு ஓடிச்
செஞ்சாலிக் கதிர்உழக்கிச் செழுங்கமல
வயல்படியும் திருவை யாறே.
தெளிவுரை : சற்றும் சிந்தித்துப் பாராமல் அச்ச உணர்வு அற்று, கயிலாய மலையெடுத்த இராவணன் பத்துத் தலைகளும் வலிமையான தோள்களும் நெரியுமாறு அடர்த்து, அருள் புரிந்த அழகரின் கோயில், இனிய தென்னை நெற்று கீழே விழுந்தøக் கண்டு, எருமைக் கன்றுகள் அலைந்து சிதறி ஓடி, செஞ்சாலிக் கதிரை உழக்கித் தாமரை மலர் விளங்கம் வயலில் படியும் திருவையாறு ஆகும்.
1402. மேலோடி விசும்பணவி வியனிலத்தை
மிக அகழந்து மிக்க நாடும்
மாலோடு நான்முகனும் அறியாத
வகைநின்றான் மன்னும்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்
குவிமுலையார் முகத்தில்நின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார்
நடமாடும் திருவை யாறே.
தெளிவுரை : ஆகாயத்திலும் பூமிக்கடியிலும் நாடிச் சென்ற பிரனும் திருமாலும் அறியாத வகை நின்ற ஈசன் கோயில், செவ்வரி படர்ந்த நீண்ட கண்களையும், திரண்ட கொங்கைகளையும் வளையல்களையும் அணிந்த மகளிர் நடம்புரியும் திருவையாறு ஆகும்.
1403. குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு
சாக்கியரும் குணம் ஒன்றில்லா
மிண்டாடு மிண்டர்உறை கேளாதே
ஆளாமின் மேவதித்தொண்டீர்
எண்தோளர் முக்கண்ணர் எம்மீசர்
இறைவர் இனிது அமரும் கோயில்
மெண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள்
வந்து அலைக்கும் திருவையாறே.
தெளிவுரை : சமணரும் சாக்கியரும் தர்க்கம் செய்து உரைப்பனவற்றைக் கேளாது ஈசனார்க்கு ஆளாகித் தொண்டு செய்மின் ! எண்தோள் முக்கண்ணராய் விளங்கும் எம் ஈசன் இனிது அமரும் கோயில், பூக்களும் மணிகளும் திரண்ட காவிரி அணைதரும் திருவையாறு ஆகும்.
1404. அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம்
பெருமானை அந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான
சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையால் இவைபத்தும் இசையுங்கால்
ஈசனடி ஏத்துவார்கள்
தன்னிசையோடு அமருலகில் தவநெறிசென்று
எய்துவார் தாழாதன்றே.
தெளிவுரை : அன்னப் பறவைகள் மலிந்த பொயிலைச் சூழ்ந்த ஐயாற்று எம்பெருமானைப் பாடிய அந்தண் காழி மன்னிய சீர்மறை நாவலனாகிய வளர் ஞானசம்பந்தன் மருவிய இத்திருப்பதிகத்தை இசைத்து ஏத்தவல்லவர்கள், தாழ்வு அற்றவராய் இனிய தவநெறியில் சென்று தேவர் உலகத்தை எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
131. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1405. மெய்த்தாறு சுவையும் ஏழிசையும்
எண்குணங்களும் விரும்புநால்வே
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப்
பளிங்கேபோல் அரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட்கு ஒருதலைவன்
கருதுமூர் உலவு தெண்ணீர்
முத்தாறு வெதிர்உதிர நித்திலம்வா
ரிக்கொழிக்கு முதுகுன்றமே.
தெளிவுரை : மெய்யின்கண் உடைய உப்பு, புளிப்பு துவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, இனிப்பு என்னும் ஆறு சுவையும்; சஞ்சமம், ரிஷபம், காந்தாரம் மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஏழிசையும்; தன் வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல். இயற்கை உணர்வினன் ஆதல்; முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில்லாத இன்பம் உடைமை ஆகிய எட்டுக் குணங்களும்; விரும்பிப் போற்றும் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் அறியவொண்ணாது நிலவிப் பளிங்கு அன்ன தேவியைப் பாகமாகக் கொண்டு, சௌரம், காணபத்யம், கௌமாரரம், வைணவம், சாக்தம், சைவம் என்னும் ஆறு சமயங்களுக்கும் ஒப்பற்ற தலைவனாய் விளங்கும் ஈசன் கருதி விளங்கும் ஊரானது, மூங்கிலில் விமைந்து முதிர்ந்த முத்துக்கள் உதிர்ந்து முத்தாற்றில் பெருகிச் சென்று கரையில் கொழிக்கும் முதுகுன்றம் ஆகும்.
1406. வேரிமிகு குழலியொடு வேடுவனாய்
வெங்கானில் வசயன்மேவு
போரின்மிகு பொறையளந்து பாசுபதம்
புரிந்தளித்த புராணம் கோயில்
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
மலர் உதிர்த்துக் கயமுயங்கி
மூரிவளம் கிளர்கின்ற திருமுன்றில்
புகுந்துலவு முதுகுன்றமே.
தெளிவுரை : தேன் மணக்கும் கூந்தலையுடைய தேவியொடு வேடுவ வடிவம் தாங்கி, கொடிய கானகத்தில் விசயனுடன் போர் புரிந்து வலிமையிழந்து, பாசுபதம் அளித்த புராணராகிய பெருமான் கோயில், பொழில்கள் கனிகளையும், மலர்களையும் உதிர்த்து, குளிர்ந்த நீர்நிலைகளில் சுவையின் மணம் பரப்பி, இல்லங்களில் தென்றல் புகுந்து இனிமை சேர்க்கும் முதுகுன்றம் ஆகும்.
1407. தக்கனது பெருவேள்விச் சந்திரனிந்
திரன்எச்சன் அருக்கன் அங்கி
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
தண்டித்த விமலர்கோயில்
கொக்கினிய கொழும் வருக்கை கதலிகமுகு
உயர்தெங்கின் குவைகொள்சோலை
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா
நீள்வழல்சூழ் முதுகுன்றமே.
தெளிவுரை : தக்கன் புரிந்த வேள்வியில் பங்கேற்ற சந்திரன், இந்திரன், எச்சன், அருக்கன், அக்கினி, பிரமன் ஆகியோரை விதிவழியே தண்டத்த விமலர் கோயில், மா, வளமையான வகையைச் சேர்ந்த வாழை, கமுகு, தேங்காய் மற்றும் முக்கனிகள் சாறும் பெருக, உலராத சேறு உடைய வயல் சூழும் முதுகன்றம் ஆகும்.
1408. வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய
விறலழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோன் இந்திரன் மால் சென்றிரப்பத்
தேவர்களே தேரதாக
மைம்மருவு மேருவிலு மாசுணநாண்
அரிஎரிகால் வாளியாக
மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த
முதல்வனிடம் முதுகுன்றமே.
தெளிவுரை : கொடுமை மிக்க முப்புரத்தின் அசுரர்கள் தீங்கு செய்ய அதனால் தமது வளமையழிந்த தேவர்களும், பிரமன், இந்திரன் திருமாலும் சென்று துதித்து வேண்ட, தேவர்கள் தேராகவும், அழகிய மேருமலை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பு நாணாகவும், திருமால், அக்கினி தேவன், வாயுதேவன் ஆகியோர் அம்பாகவும் கொண்டு மூன்று மதில்களையும் ஒருசேரநொடியளவு நேரத்தில் எரிந்து சாம்பலாகுமாறு செய்த முதல்வனாகிய ஈசன் இடமானது, முதுகுன்றம் ஆகும்.
1409. இழைமேவு சுலையல்குல் ஏந்திழையாள்
ஒருபாலாய் ஒருபால் எள்காது
உழைமேவும் உரியுடுத்த ஒருவன்இருப்
பிடம்என்பர் உம்பர்ஓங்கு
கழைமேவு மடமந்தி மழைகண்டு
மகவினொடும் புகவொண்கல்லின்
முழைமேவு மால்யானை இரைதேரும்
வளர்சாரல் முதுகுன்றமே.
தெளிவுரை : இழைக்கப் பெற்ற மேகலையை உடைய, உமாதேவியாகிய பெண்பால் ஒரு பக்கமும், மான் தோல் திகழ ஒரு பக்கமும் ஆகி, அர்ந்த்த நாரியாகிய ஒருவன் இருப்பிடம் எனப்படுவது, தேவர் உலகு வரைக்கும் நீண்டு வளர்ந்த மூங்கிலின் மேல் இருக்கும் பெண் குரங்கு மழை வரும் எனத் தெரிந்ததும் தன் குட்டியுடன் பாதுகாப்பான இடத்தில் புக, யானை உணவு கொள்ள உலவும் சாரலையுடைய முதுகுன்றம் ஆகும்.
1410. நகையார்வெண் தலைமாலை முடிக்கணிந்த
நாதனிட நன்முத்தாறு
வகையாரும் வரைப்பண்டம் கொண்டிரண்டு
கரையருகு மறியமோதித்
தகையாரும் வரம்புஇடறிச் சாலிகழு
நீர்குவளை சாயப்பாய்ந்து
முகையார்செந் தாமரைக்கண் முகமலர
வயல்தழுவு முதுகுன்றமே.
தெளிவுரை : மண்டை ஓடுகளை மாலையாக அணிந்த ஈசன் இடமானது, மணிமுத்தாறு என்னும் ஆறு, மலையில் திகழும் செல்வங்களை இருகரைகளிலும் பெருகுமாறு சேர்த்து, நெல்லும் கழுநீர் மலர்களும் சாயுமாறு புகுந்து ஓடி, தாமரை மலருமாறு வயலைத் தழுவும் முதுகுன்றம் ஆகும்.
1411. அறங்கிளரு நால்வேதம் ஆலின்கீழ்
இருந்தருளி அமரர்வேண்ட
நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின்
ஒன்றுஅறுத்த நிமலர்கோயில்
திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண் டங்கு
எழிற்குறவர் சிறுமிமார்கள்
முறங்களினாற் கொழித்து மணி செலவிலக்கி
முத்துலைப்பெய் முதுகுன்றமே.
தெளிவுரை : ஆலமரத்தின்கீழ் இருந்து அறத்தின் பொருளாகிய வேதங்களை, சனகாதி முனிவர் களுக்கு உணர்த்தி அருள் செய்து, தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, பிரமனின் ஐந்து சிரங்களுள் ஒன்றை அறுத்த நிமலர் கோயில், மாணிக்கங்களும், முத்துக்களும் ஒருசேரத் திரண்டிருக்க, குறச் சிறுமியர்கள் முறத்தினால் கொழித்து மாணிக்கங்களை விலக்கி முத்துக்களை உலையில் சேர்க்கும் முதுகுன்றம் ஆகும்.
1412. கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல்
இலங்கையர்கோன் கண்ணும் வாயும்
பிதிரொளிய கனல் பிறங்கப் பெருங்கயிலை
மலையை நிலை பெயர்த்த ஞான்று
மதிலளகைக்கு இறைமுரல மலரடி யொன்று
ஊன்றி மறை பாட ஆங்கே
மதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்
வாயந்தபதி முதுகுன்றமே.
தெளிவுரை : ஒளிக்கதிர்கள் உடைய நீண்ட முடிகள் பத்து உடைய இராவணன், கண்ணும், வாயும் மருண்டு கலங்க, அவன் கயிலையைப்  பெயர்த்தபோது, தனது புஷ்பக விமானத்தைப் பறித்த அரக்கன் மாய்ந்தான் எனக் குபேரன் கருதுமாறு, திருப்பாத விரல் ஊன்றி சாமகீதம் பாட மந்திரவாள் தந்த ஈசன் விளங்கும் பதி, முதுகுன்றம் ஆகும்.
1413. பூவார்பொன் தவிசின்மிசை இருந்தவனும்
பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகேன மாய்உயர்ந்துஆழ்ந்து
உறநாடி உண்மைகாணாத்
தேவாரும் திருவுருவன் சேருமலை
செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்கொலிநர் கீழ்தாழ
மேலுயர்ந்த முதுகுன்றமே.
தெளிவுரை : பூவினை அழகிய இருப்பிடமாக உடைய பிரமனும், துளசி மாலை அணிந்த திருமாலும் அன்னமாக உயர்நஅது பறந்தும், ஏனமாய் ஆழ்ந்து பூமியின் குடைந்து சென்றும், உண்மை காணாதவாறு ஆகிய திருவடிவு கொண்ட ஈசன் சேரும் இடம், மகாப்பிரளய காலத்திலும் மூழ்காதவாறு மேலுயர்ந்து விளங்கும் முதுகுன்றம் ஆகும்.
1414. மேனியிற் சீவரத்தாரும் விரிதரு தட்டு
உடையாரும் விரவலாகா
ஊனிகளாய் உள்ளார்சொற் கொள்ளாதும்
உள்ளுணர்ந்து அங்கு உய்மின்தொண்டீர்
ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை
முழுதுணர்ந்துஐம் புலன்கள் செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
தவம்புரிய முதுகுன்றமே.
தெளிவுரை : உடலை வளர்க்கும் கொள்கையுடையவர்களாய்ப் புறச்சமயத்தார் இருக்க, அவர்கள் சொற்களை ஏற்காது, உண்மை கொள்வீராக. தொண்டர்காள் ! ஞானிகளாய் நான்கு வேதங்களை உணர்ந்து, ஐம்புலனை அடக்கி நிட்டை கொண்டு தவம் புரியும் பேறு பெற்றது முதுகுன்றம் அவ் ஊர்ப் பெருமானை ஏத்துமின் என்றவாறு.
1415. முழங்கு ஒலிநீர் முத்தாறு வலம்செய்யு
முதுகுன்றத்து இறையைமூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய
கழுமலமே பதியாக் கொண்டு
தழங்கெரிமூன்று ஓம்புதொழில் தமிழ்ஞான
சம்பந்தன் சமைத்த பாடல்
வழங்கும் இசை கூடும்வகை பாடுமவர்
நீடுலகம் ஆள்வர்துமே.
தெளிவுரை : முழங்குகின்ற ஒலியுடன் நீர்மிக்க முத்தாறு வலம் செய்யும் முதுகுன்றத்து இறைவனை, எக்காலத்திலும் தொன்மைபூண்டும் நிலைத்து நிற்கவல்ல பன்னிரண்டு பெயர்களைக் கொண்டுள்ள கழுமலத்தை இருப்பிடமாகக் கொண்டு, ஆகவனீயம், காருகபத்தியம், தட்சணாக்கினி எனப்படும் எரிகள் மூன்றும் ஓம்பும், தமிழ் ஞானசம்பந்தன் வழங்கிய இத்திருப்பதிகத்தை, வழங்குகின்ற இசையுடன் பாடுபவர்கள், உலகத்தை நெடிது ஆள்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
132. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1416. ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்கு
ஈரிருவர்க்கு இரங்கி நின்று
நேரிய நான் மறைப்பொருளை உரைத்தொளிசேர்
நெறியளித்தோன் நின்ற கோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும்
பயின்றபோதும் ஓசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
பொருட்சொல்லு(ம்) மிழலையாமே.
தெளிவுரை : சிறப்பான புகழ் மிக்க பெருமைமிகு ஆலமரத்தின்கீழ் இருந்து சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு இரக்கம் கொண்டு உரிய வேதத்தின் பொருளை உரைத்து, ஒளி மிக்க மெய்ந்நெறி அளித்த ஈசன் நிலை கொண்டு விளங்கும் கோயில், உலகில் புகழ்மிக்க பண்டிதர்கள் பல நாட்களாகப் பயின்று ஓதுகின்ற ஓசையை நன்கு கேட்டு, தேன் சொரியும் சோலைகளில் உள்ள கிளிகள் வேதங்களின் பொருள் சொல்லும் வீழிமிழலை ஆகும்.
1417. பொறியரவ மதுகற்றிப் பொருப்பேமத்
தாகப்புத் தேளிர்கூடி
மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட
கண்டத் தோன் மன்னும்கோயில்
செறி யிதழ்த்தா மரைத்தவிசில் திகழ்ந்தோங்கும்
இலைக்குடைக்கீழ்ச் செய்யார் செந்நெல்
வெறிகதிர்ச்சா மரையிட்ட இளஅன்னம்
வீற்றிருக்கும் மிழலையாமே.
தெளிவுரை : படம் கொணட வாசுகி என்ற பாம்பை நாணாக்கி, மேரு மலையைய மத்தாக்கி, தேவர்கள் கூடிப் பாற் கடலைக் கடைய எழுந்த விடத்தை, உட்கொண்ட கண்டத்தையுடைய ஈசன் விளங்கும் கோயில், தாமரை மலர்மீது, இலை குடையாகவும் நெற்கதிர்கள் சாமரையாகவும் திகழ இள அன்னம் மகிழந்திருக்கும் மிழலை ஆகும்.
1418. எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம்
புரமூன்றும் எழிற்கணாடி
உழுந்தருளும் அளவையின் ஒள்ளெரிகொளவெஞ்
சிலை வளைத்தோன் உறையும் கோயில்
கொழுந்தரள நகைகாட்டக் கோகநத
முகம்காட்டக் குதித்து நீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்
வாய்காட்டு மிழலையாமே.
தெளிவுரை : ஓரிடத்தில் நில்லாது நகரும் தன்மையில் உலகத்தை நலியச் செய்த அசுரர்களின் முப்புரத்தை எழில் மிக்கு நோக்கி, நொடிப் பொழுதில் எரியாக்கும் வண்ணம், கொடிய சிலைவளைத்த ஈசன் உறையும் கோயில், முத்துப் போன்ற புன்னகையும், தாமரை போன்ற முகமும், கயல் போன்ற விழியும், பவளவாயும் கொண்ட மகளிர் விளங்கும் மிழலையாகும்.
1419. உரைசேரும் எண்பத்து நான்குநூறு
ஆயிரமாம் யோனிபேத
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய்
அங்கங்கே நின்றான் கோயில்
வரைசேரு முகில்முழவ மயில்கள்பல
நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தன்
கையேற்கு மிழலையாமே.
தெளிவுரை : எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களை நிரைசேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிராய் நின்று விளங்கும் ஈசன் கோயில், மலையைத் தொடும் மேகம் முழவம் போன்று அதிர்ந்து ஒலிக்க, மயில்கள் நடம்புரிய, வண்டு இசை பாட, மணம் மிக்க கொன்றை மரங்கள் பொன்போன்ற மலர்களை வழங்க, காந்தன் மலர் கையேந்தி வாங்குமாறு விளங்கும் மிழலையாகும்.
1420. காணுமாறு அரியபெரு மானாகிக்
காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்
பேணுமூன்று உருவாகிப் பேருலகம்
படைத்தளிக்கும் பெருமான் கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை
உத்தமனை இறைஞ்சீர்என்று
வேறுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப
போலோங்கு மிழலையாமே.
தெளிவுரை : காட்சிக்குப் புலப்படாத அரிய பெருமானாகி, கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என வரும் மூன்று காலமாயும்; சாத்விகம், ரஜோ குணம், தமோகுணம் என்னும் முக்குணமாய், உலகைப் பேணும் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று வடிவமும் ஆகி அண்டங்கள் யாவற்றையும் படைத்து அளிக்கும் ஈசன் கோயில், பரப்பிரம்மமாய் விளங்கும தத்துவனை, உத்தமனை இறைஞ்சிப் பணிவீர் என்று மூங்கில்களில் படர்ந்திருக்கும் கொடிகள், தேவர்களை அழைப்பதைப் போன்று விளங்கும் மிழலையாகும்.
1421. அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று
ஐம்புலனும் அடக்கிஞானம்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
துள்ளிருக்கும் புராணர் கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
கந்திகழ்ச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்கு மலர்ப் பொரியட்ட
மணம்செய்யு மிழலை யாமே.
தெளிவுரை : அகத்தில் நிறைந்த அன்பினராய்க் காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மார்சரியம், (பொறாமை) ஆகிய ஆறு வகையான பகைகளையும் அழித்து, ஐம்புலன்களின்வழிச் செல்லும் உணர்வுகளை அடக்கிய ஞானிகளின் உள்ளத் தாமரையில் வீற்றிருக்கும் புராணராகிய ஈசன் கோயில், அன்பாகிய நீர் விளங்கும் குளிர்ந்த தடாகத்தில் சங்குகளின் இனம் திகழ, இதயத் தாமரையாகிய சுடரில் மிகையான புன்கம் என்னும் வாசனைப் பொரி தூவி உயிரானது இறைவனைப் பொருந்துமாறு அட்டமணம் நிகழ்த்தும், மிழலையாகும்.
1422. ஆறாடு சடைமுடியன் அனலாடு
மலர்க்கையன் இமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடும்
குணமுடையோன் குளிரும்கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி
மதுவுண்டு சிந்தவண்டு
வேறாய உருவாகிச் செல்வழிநற்
பண்பாடு மிழலையாமே.
தெளிவுரை : கங்கை தரித்த சடை முடியும், நெருப்போந்திய கரமும், இமய் பாவையாகிய உமாதேவியை ஒரு பாகமாக உடைய திருவடிவமும், நடனம் ஆடும் குணப்பாங்கும் உடைய ஈசன் மகிழந்து விளங்குகின்ற கோயில், சேற்றில் திகழும் செங்கழு நீர்ப் பூக்களில் உள்ள மகரத்தத்தில் பொருந்தி தேன் உண்டு மயங்கி வண்டு, தமது கோலத்தில் மாற்றம் கொண்டு செவ்வழி என்கிற நல்ல பண் இசைக்கும் மிழலையாகும்.
1423. கருப்ப மிகும் உடல்அடர்த்துக் காலூன்றிக்
கைமறித்துக் கயிலையென்னும்
பொருப்பெடுக்க லுறும்அரக்கன் பொன்முடிதோள்
நெரித்தவிரற் புனிதர் கோயில்
தருப்பமிகு மலந்தரன்றன் உடல்தடிந்த
சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யஇழி
விமானம்சேர் மிழலையாமே.
தெளிவுரை : கன்மத்தில் வழி உண்டாகும் கருவின் வழி கொண்ட உடலின் தினவு மிக்கு, கயிலயை எடுக்கலுறும் இராவணனின் முடியும் தோளும் திருப்பாதவிரல் ஊன்றி நலியச் செய்த புனிதராகிய ஈசன் கோயில், சலந்தராசுரனை அழிக்கும் பொருட்டுத் தோற்றிவித்த ஆழிப்படையை நாடி, விருப்பத்துடன் திருமால் வழிபடாடு செய்வதற்கு விண்ணிலிருந்து இறக்கிய விமானம்சேர் மிழலையாகும்.
1424. செந்தளிர்மா மலரோனும் திருமாலும்
ஏனமோடு அன்னமாகி
அந்தம்அடி காணாதே அவர்ஏத்த
வெளிப்பட்டோன் அமரும் கோயில்
புந்தியினால் மறைவழியே புல்பரப்பி
நெய் சமிதை கையிற் கொண்டு
வெந்தழலின் வேட்டுலகில் மிகஅளிப்போர்
சேருமூர் மிழலையாமே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும், ஏனமும் அன்னமும் ஆகி முடியும் அடியும் காணாது நிற்க, அவர்கள் வணங்கி ஏத்த வெளிப்பட்டவனாகிய ஈசன் கோயில், அறிவு பூர்வமாக, வேத நெறிப்படி தருப்பைப் புல் விரித்து நெய், சமித்து ஆகியன கொண்டு வேள்வி செய்து, உலகத்தில் நலம் விளைவிக்கும் அந்தணர்கள் சேரும் ஊராகிய மிழலையாகும்.
1425. எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்
சாக்கியரும் என்றும்தன்னை
நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்கு
அருள்புரியும் நாதன்கோயில்
பண்ணமரு மென்மொழியார் பாலகரைப்
பாராட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோடும்
இழியும் மிழலையாமே.
தெளிவுரை : எண்ணற்ற சமணர்களும் சாக்கியரும் தன்னை நண்ணாதவாறு மயலைத் தந்து, தன்னடியார்களுக்கு அருள் புரிகின்ற நாதன் கோயில், மகளிர் பண்னிசைத்துத் தம் குழந்தைகளைப் பாராட்டும் விமானத்தோடு பூவுலகுக்கு இறங்கி வரும் மிழலையாகும்.
1426. மின்னியலும் மணிமாட மிடைவீழி
மிழலையான் விரையார்பாதம்
சென்னிமிசைக் கொண்டொழுகும் சிரபுரக் கோன்
செழுமறைகள் பயிலுநாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்
பரிந்துரைத்த பத்தும்ஏத்தி
இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்
ஈசனெனும் இயல்பினோரே.
தெளிவுரை : ஒளிமிக்க மணிமாடங்கள் கலந்த வீழிமிழலையில் வீற்றிருக்கும் நாதனின் மணம் பொருந்திய திருப்பாதத்தைச் சென்னியில் கொண்டு ஒழுகுகின்ற சிரபுரத்தின் தலைவனாகிய, மறைகள்வல்ல நாவன்மையுடைய புகழ்மிக்க ஞானசம்பந்தன்
பரிந்துரைத்த இத்திப்பதிகத்தை இனிய இசையுடன் பாட வல்லவர்கள், உலகில் பெருமையுடையவராய் மலரும் இயல்புடையவராவர்.
திருச்சிற்றம்பலம்
133. திருக்கச்சி ஏகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)
திருச்சிற்றம்பலம்
1427. வெந்தவெண் பொடிபூசு மார்பின்விரி
நூலொருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடும் கடிபொழில்
கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தார் அவர்போற்ற
அணங்கினொடு ஆடல்புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுதேத்த
இடர்கெடுமே.
தெளிவுரை : திருவெண்ணீறு பூசும் மார்பில் முப்புரி நூல் பொருந்தித் திகழ, வாசனை பொருந்திய குழலை உடைய உமாதேவியோடு, பொயில் விளங்கும் கச்சியுள் அளவிடற்கரிய நற்குணங்கள் நிரம்ப்பபெற்றவர்களாகிய திருத்தொண்டர்கள் போற்றித் துதிக்க, அவ் அணங்கினோடு சேர்ந்து நடம் புரிகின்ற எந்தை மேவிய ஏகம்பத்தைத் தொழுது ஏத்த இடரானது கெடும்.
1428. வரம்திகழும் அவுணர் மாநகர் மூன்று
உடன்மாய்ந்து அவியச்
சரந்துரந்து எரிசெய்த தாழ்சடைச்
சங்கரன் மேயஇடம்
குருந்த மல்லிகை கோங்குமா தவிநல்ல
குரா மரவம்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பம்
சேர இடர்கெடுமே.
தெளிவுரை : வர பலம் பெற்ற அசுரர்களின் வலிமையான மூன்று நகர்களை நொடியில் மாய்ந்து சாம்பலாகுமாறு சரம் தொடுத்து எரித்த நீண்ட சடைகளை உடைய சங்கரன் மேவிய இடம், குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, மணம் கமழ் குராமரம் யாவும் உரியவாறு பொருந்திய பொழில் கொண்டு விளங்கும் கச்சி ஏகம்பம் ஆகும். அதனைச் சேர இடம் கெடும்.
1429. வண்ணவெண் பொடிப்பூசு மார்பின்
வரியர வம்புனைந்து
பெண்ணமர்ந்து எரியாடல் பேணிய
பிஞ்ஞகன் மேயஇடம்
விண்ணமர் நெடுமாடம் ஓங்கி
விளங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பம்
சேர இடம்கெடுமே.
தெளிவுரை : வண்ணம்தரும் வெண்ணீறு பூசும் மார்பில், அழகிய அரவத்தை அணிகலனாகப் புனைந்து, உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு, கரத்தில் அனல் ஏந்தி, நடம் விரும்பிச் செய்த பிஞ்ஞகன் மேய இடம், விண்ணை முட்டும் நெடிய மாட மாளிகைகள் ஓங்கி விளங்கும் கச்சியில், மாறாத பொழில்கள் சூழ்ந்த ஏகம்பம் ஆகும்.
1430. தோலும்நூ லும்துதைந்த வரைமார்பில்
சுடலைவெண் ணீறணிந்து
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த
கடவுள் கருதுமிடம்
மாலைவெண் மதிதோயு மாமதிற்
கச்சி மாநகருள்
ஏலநாறிய சோலைசூழ் ஏகம்பம்
ஏத்த இடர்கெடுமே.
தெளிவுரை : மான்தோலும் முப்புரி நூலும் துதைந்து பொருந்திய அகன்ற மார்பில், சுடலையின் சாம்பல் அணிந்து, மார்கண்டேயரின் உயிரைக் கவரப் போந்த நாளில், காலனைக் காலால் உதைத்து மாய்த்த கடவுள் விரும்பி உறையும் இடமானது, நெடிய மதியில் வெண்மதி பொருந்தும் கச்சிமாநகரில் மணம் மிக்க சோலைகள் சூழந்த ஏகம்பம் ஆகும். அதனை ஏத்த இடரானது கெடும்.
1431. தோடணிம் மலர்கொன்றை சேர்சடைத்
தூமதி யம்புனைந்து
பாடல்நான் மறையாகப் பல்கணப்
பேய்கள் அவைசூழ
வாடல்வெண் தலையோடு அனல்ஏந்தி
மகிழந்துடன் ஆடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி யேகம்பம்
சேர இடம்கெடுமே.
தெளிவுரை : இதழ் கூடிய கொன்றை மலர் சூடிய சடையில் சந்திரனைசத் தரித்து, நான்மறை பாடவும், பேய்கள் சூழ, மண்டையோடும் நெருப்பும் கரத்தில் கொண்டு மகிழந்து நடம் புரியும், பெமை மிக்கவர் சேரும் கச்சி ஏகம்பத்தை அடைய இடம் கெடும்.
1432. சாகம்பொன் வரையாகத் தானவர்
மும்மதில் சாயவெய்து
ஆகம்பெண் ணொருபாக மாக
அரவொடு நூலணிந்து
மாகந் தோய் மணிமாட மாமதிற்
கச்சி மாநகருள்
ஏகம்பத் துறையீசன் சேவடி
யேத்த இடர்கெடுமே.
தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு அசுரர்களின் மூன்று மதில்களை அழித்து, உமாதேவியை, உடம்பில் பாகமாகக் கொண்டு, அரவமும் முப்புரி நூலும் அணிந்து, விண்முட்டும் மணி மாடங்கள் கொண்டு உயர்ந்த மதில் உடைய கச்சி மாநகருள், ஏகம்பத்தில் உறையும் ஈசன், செவ்விய திருவடியை ஏத்த இடம் கெடும்.
1433. வாணிலா மதிபுல்கு செஞ்சடை
வாளர வம்அணிந்து
நாணிடத் தினில்வாழ்க்கை பேணி
நகுதலையிற் பலிதேர்ந்து
ஏணிலா அரக்கன்றன் நீள்முடி
பத்தும் இறுத்தவன் ஊர்
சேணுலாம் பொழிற்கச்சி யேகம்பம்
சேர இடம்கெடுமே.
தெளிவுரை : திங்கள் தரித்த செஞ்சடையில் அரவம் அணிந்து, வாசுகி என்னும் பாம்பினை நாண் என்று கொண்டு பேணி, பிரம கபாலம் கொண்டு பிச்சை ஏற்று, உயர்வில்லாத அரக்கனாகிய இராவணன் முடிகள் பத்தும் நலியச் செய்தவன் இடம், ஓங்கி உயர்ந்த பொழில்களையுடைய கச்சி ஏகம்பம், அதனை நாடி அடைய இடம் கெடும்.
1434. பிரமனும் திருமாலும் கைதொழப்
பேரழல் ஆயபெம்மான்
அரவம் சேர்சடை அந்தணன்
அணங்கினொடு அமருமிடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக்
கச்சி மாநகருளள்
மரவம்சூழ் பொழிஏகம் பந்தொழ
வல்வினை மாய்நதறுமே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் கைதொழுத போற்றப் பேரழல் ஆகிய பெருமான், அரவம் சேரும் சடையினனாய் அழகிய தண்மை கொண்ட ஈசன். அவன் உமாதேவியுடன் அமர்ந்து விளங்கும் இடம், கரத்தல் தன்மையில்லாத வள்ளல்கள் வாழ்கின்ற கலிக்கச்சி மாநகர் ஆகும். அதனுள் மல்லிகை சூழ் பொழில் உடைய ஏகம்பம் சென்று தொழ வலியவினை மாயும்.
1435. குண்டு பட்டு அமணா யவரொடும்
கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை
அவைகொண்டு விரும்பேன்மின்
விண்டரர் புரமூன்றும் வெங்கணை
ஒன்றினால் அவியக்
கண்டவன் கலிக்கச்சி யேகம்பம்
காண் இடம்கெடுமே.
தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் கூறும் உரைகளை விரும்பி ஏற்காதீர்கள். பகைவராகிய முப்புரத்து அசுரர்களை ஒரே கணையால் அழித்த ஈசனின் கச்சி ஏகம்பம் கண்டு வணங்க, இடர் கெடும்.
1436. ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி
யேகம்ப மேயவனைக்
காரினார் மணிமாடம் ஓங்கு
கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன்
பரவிய பத்தும்வல்லார்
சீரினார் புகழோங்கி விண்ணவ
ரோடும் சேர்பவரே.
தெளிவுரை : அழகிய பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேவிய பெருமானை, மேகம் சூழ்ந்த மணிமாடங்கள் ஓங்கி கழுமல நன்னகருள், உலகம் போற்றவிளங்கும் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய இத் திருப்பதிகத்தைப் பாட வல்லவர்கள், வளம் நிறைந்து புகழ் ஓங்கி விண்ணுலகத்தவரோடும் சேர்ந்திருப்பர்.
இம்மைச் சிறப்பும் மறுமை நலமும் வாய்க்கப் பெறும் என்பதாம்.
134. திருப்பறியலூர் வீரட்டம் (அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கீழப்பரசலூர், நாகப்பட்டினம் மாவட்டம்)
1437. கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்தம் உடையார் திருப்பறி யலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.
தெளிவுரை : ஈசன், யாவும் தானேயாகி ஆட்சி கொண்டு செய்யும் கருத்துடையவனாகிய கடவுள்; நெருப்பைக் கரத்தில் ஏந்தி நடனம் புரிபவன்; பிறைச் சந்திரனைச் சடையில் சூடியவன். அப்பெருமான் மனத்தின் வழி, புலன்களைச் செல்லவிடாது, தன் கழலை நாடச் செய்யுமாறு, திருத்தம் உடைய சான்றோர்கள் விளங்கும் திருப்பறியலூரில் தொன்மை மிக்கவன் எனத்தக்க வீரட்டத்தானே ஆவன்.
1438. மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பொருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.
தெளிவுரை : பிணி தீர்க்கும் மருந்தாய், நன்று காக்கும் அமுதனாய், மயானத்துள் நடம் புரியும் அழகனாய், கங்கையைச் சென்னியில் வைத்த பெருமான், பிறவிப் பிணியின் வயப்பட்டு அவலம் அடையாதவாறு, திருந்தப் புகலும் மறை வல்லவர்கள் விளங்கும் திருப்பறியலூரில், மலர்ச் சோலை திகழும் வீரட்டத்தான் ஆவன்.
1439. குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
விளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான்
தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
மளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத்தானே.
தெளிவுரை : கங்கை தரித்த சடையுடைய ஈசன், கெடுஞ் சிலையுடைய மன்மதனைச் செற்றுத் தெளிந்த மறையோர் விளங்கும் திருப்பறியலூரில் சோலை சூழ்ந்த வீரட்டானத்தில் விளங்குபவன்.
1440. பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பாதி யந்தம் செலச்செய்யும் தேசன்
சிறப்பாடு உடையார் திருப்பறி யலூரில்
விறற்பா ரிடம்சூழ வீரட்டத் தானே.
தெளிவுரை : ஈசன் பிறப்பின் தன்மையில்லாதவன். ஏனையோர் பிறவிக்கும் இறப்புக்கும் தோற்றமும் முடிவும் ஆகிச் செல்லும் நிலையில் ஒளிவண்ணமாய் இருந்து கலந்து செறிந்தவன். அவன் சிறப்புடைய பெருமக்கள் திகழும் திருப்பறியலூரில், வீரம் மிக்க பூதகணங்கள் சூழ விளங்கும் வீரட்டானன் ஆவன்.
1441. கரிந்தார் இடுகாட்டில் ஆடும்க பாலி
புரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.
தெளிவுரை : இறந்தவர்களை எரிக்கும் இடுகாட்டில் ஆடுகின்ற, கபாலத்தைக் கையில் ஏந்திய ஈசன், படுதம் எனப்படும் ஆட்டத்தை ஆடியவர். அப்பெருமான், நன்கு மறைவல்ல அந்தணர்கள் விளங்கும் திருப்பறியலூரில், விரிந்து மலரும் சோலையுடைய வீரட்டானத்தில் வீற்றிருப்பவர்.
1442. அரவுற்ற நாணா அனல்அம்ப தாகச்
செருவுற் றவர்புரம் தீயெழச் செற்றான்
தெருவிற் கொடிசூழ திருப்பறி யலூரில்
வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே.
தெளிவுரை : வாசுகி என்னும் பாம்பு நாணாகவும், அக்கினி தேவன் அம்பாகவும் கொண்டு, பகைமை கொண்ட அசுரர்களின் மூன்று புரங்களைத் தீயில் வேகுமாறு செற்றவன், ஈசன். அப்பெருமான், தெருக்களில் தோரணங்களால் அலங்கரிக்கப் பெற்ற திருப்பறியலூரில் வீரட்டானத்தில் எழுந்தருளுப் பெற்றவன். அச்சத்தால் அயர்வு கொண்டவர்கள் தொழுது போற்ற அருள்புரியும் ஈசன் அவனே.
1443. நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
அரையார் அரவம் அழகா அசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.
தெளிவுரை : ஈசன், நரை போன்ற வெண்மையான இடபத்தை வாகனமாக உடையவன்; அடியவர்களின் நலன்களைக் கருத்தில் ஏற்று வேண்டியவாறு அருள்புரியும் பெருமான்; அரவத்தை அரையில் அழகாக் கட்டியுள்ளவன். அப்பெருமான் நீர்வளம் மிக்க திருப்பறியலூரில் மணங்கமழும் சோலைகள் விளங்கும் வீரட்டானத்தில் வீற்றிருப்பவன்.
1444. வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ்
இளைக்கும் படிதான் இருந்தோழை அன்னம்
திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்
விளைக்கும் வயல்சூழந்த வீரட்டத் தானே.
தெளிவுரை : வளைந்த கூரிய பற்களை உடைய அரக்கனாகிய இராவணனை, கயிலை மலையின் கீழே மெலியுமாறு செய்த பரமன், மட அன்னம் மகிழந்து விளங்கும் வயல்கள் கொண்ட திருப்பறியலூரில், விளை நிலம் சூழ்ந்த வீரட்டானத்தில் வீற்றிருப்பவன்.
1445. விளங்கொண்மலர்மேல் அயன்ஓத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
இளங்கொம் பனாளோடு இணைந்தும் பிணைந்தும்
விளங்கும் திருப்பறியல் வீரட்டத் தானே.
தெளிவுரை : விளங்குகின்ற ஒண்மலராகிய தாமரையில் மேல் உறையும் பிரமனும், கடல் வண்ணனாகிய திருமாலும், தளர்ந்த மனத்தினராய் அயர்ந்து தொழுத போற்ற, தழலாய் ஓங்கி நின்ற பெருமான், இளங்கொம்பு அனையாள் என்னும் திருநாமம் தாங்கிய உமையவளோடு உடனாகி இணைந்தும், கூறுடைய அர்த்தநாரியாய்ப் பிணைந்தும், திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்தான் ஆவன்.
1446. சடையன் பிறையன் சமண்சாக் கியரோடு
அடையன் பிலாதான் அடியார் பெருமான்
உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே.
தெளிவுரை : ஈசன், சடை முடியுடையவன்; பிறைச் சந்திரனைச் சூடியவன்; சமணர், சாக்கியர் அடையாதவாறு அன்பற்றவராய்ப் புறத்தே நிற்க, தன்னை வணங்கும் அடியவர்களுக்கும் அருள்புரியும் பெருமான்; புலியின் தோலை உரித்து உடையாகக் கொண்டவன்; இடப வாகனத்தினை உடையவன். அவன் திருப்பறியல் விரட்டானத்தில் வீற்றிருப்பவன்.
1447. நறுநீர் உகுங்காழி ஞானசம் பந்தன்
வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப்
பொறிநீடு அரவன் புனைபாடல் வல்லார்க்கு
அறுநீடு அவல மறும்பிறப் புத்தானே.
தெளிவுரை : நறுமணம் மிக்க நீர் பெருக்கும் காழியில் விளங்கும் ஞானசம்பந்தன், சுவைமல்கும் நீர் வளம் மிக்க திருப்பறியல் வீரட்டத்தில் விளங்கும் அரவம் தரித்த பெருமானைப் புனைந்து பாடிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்கு, அவலம் அறும்; மறு பிறப்பும் அற்று விடும்.
திருச்சிற்றம்பலம்
135. திருப்பராய்த்துறை (அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1448. நீறுசேர்வதொர் மேனியர் நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர் பராய்த்துறை
ஆறு சேர்சடை அண்ணலே.
தெளிவுரை : பராய்த்துறையில் வீற்றிருக்கும் அண்ணலாகிய ஈசன், திருவெண்ணீறு அணிந்த மேனியை உடையவர்ந உமையவளைக் கூறாகக் கொண்ட வடிவத்தை உடையவர்; பருந்து கொத்தும் தலையாக உள்ள மண்டையோட்டினைக் கரத்தில் கொண்டு, கங்øயைச் சடையில் சேர்த்தவர், அப்பெருமானை ஏத்திப் பணிக என்பதாம்.
1449. கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண் மாதவி சூழந்த பராய்த்துறை
அந்தமில்ல அடிகளே.
தெளிவுரை : நறுமண மலராகிய கொன்றை கமழும் சடையில் பெருகி வந்த கங்கையை வைத்தவர், மாதவி மலர்கள் சூழ்ந்த பராய்த்துறையில் அந்தம் அற்றவராய் விளங்கும் அடிகள் ஆவர்.
1450. வேதர்வேதமெல் லாமுறையால்விரித்து
ஓதநின்ற ஒருவனார்
பாதிபெண்ணுரு வாவர் பராய்த்துறை
ஆதியாய அடிகளே.
தெளிவுரை : வேதமாகவும், வேதம் யாவையும் விரித்தவராகவும், யாவராலும் ஓதிப் போற்றப்படும் ஒப்பற்ற ஒருவனாக விளங்கிப் பாதி பாகம் உமையவளின் வடிவத்தோடு கொண்டு அர்த்தநாரீசராக விளக்குபவர், பராய்த்துறையில் திகழும் ஆதியாகிய அடிகள் ஆவர்.
1451. தோலுந்தம்மரை யாடை சுடர்விடு
நூலும் தாம்அணி மார்பினர்
பாலும்நெய்பயின்று ஆடுபராய்த்துறை
ஆல நீழல் அடிகளே.
தெளிவுரை : புலித்தோலை அரையில் ஆடையாக உடுத்தி, முப்புரி நூல் அணிந்த மார்பினராய், ஆலமரத்தின் நிழலில் குரு மூத்தமாய் விளங்கும் அடிகள், பராய்த்துறையில் பாலும் நெய்யும் பூசனைப் பொருள்களாகச் சூடப்பெற்றுத் திகழ்பவர் ஆவர்.
1452. விரவிநீறு பூசுவர் மேனிமேல்
இரவில் நின்றெரி ஆடுவர்
பரவினாரவர் வேதம் பராய்த்துறை
அரவம் ஆர்த்த அடிகளே.
தெளிவுரை : திருநீறு மெய்யில் பூசி, மேனியின் மீது அரவத்தை உலவுமாறு செய்த அடிகள், இரவில் நெருப்பினைக் கரத்தில் ஏந்தி ஆடுவர், பராய்த்துறையில் மேவி வேதத்தை விரித்தவர் ஆவர்.
1453. மறையும் ஓதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்டம் உடையவர்
பறையும்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
அறைய நின்ற அடிகளே.
தெளிவுரை : வேதம் விரிப்பவர்; மான் கையினர்; கறை தந்த நஞ்சருத்திய கண்டத்தை உடையவர்; வெற்றிச் சின்னமாகச் சங்கொலிக்கும் பராய்த்துறையில், மந்திரச் சொல்லாக மேவும் அடிகள் ஆவர்.
1454. விடையும் ஏறுவர் வெண்பொடி பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற அடிகள்.
தெளிவுரை : பராய்த்துறை என்னும் திருத்தலத்தில் எங்குமாய் முழுமையாய் மேவிய அடிகள், இடப வாகனத்தில் ஏறும் பெருமான்; வெண்ணீறு அணியும் பரமன்; சடையில் கங்கை தரித்த ஈசன். அவர், ஒளி பொருந்திய மழுவைப் படையாகக் கொண்டுள்ளவர்.
1455. தருக்கின் மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார் விரல் ஒன்றினால்
பருக்கினார்அவர் போலும் பராய்த்துறை
அருக்கன் றன்னை அடிகளே.
தெளிவுரை : தருக்குற்ற இராவணனைத் தனது திருப்பாத விரலால் அடக்கி, பின் அவன் செருக்கு அழிந்து பணிந்து போற்ற, வளமை செய்தவர் பராய்த்துறை விளங்கும் அடிகள்.
1456. நாற்றமாமல ரானொடு மாலுமாய்த்
தோற்றமும்மறி யாதவர்
பாற்றினார் வினை யானபராய்த்துறை
ஆற்றல்மிக்க அடிகளே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடியும் எத்தகைய காட்சியும் தோற்றம் பெறாதவராய் ஆற்றல் மிக்கவராய்ப் பராய்த்துறையில் மேவிய அடிகள்; அடியவர்கள் வினைகளைச் சிதறுண்டு விலகுமாறு செய்பவர்.
1457. திருவிலிச்சில தேரணமாதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலால்எயில் எய்துபராய்த் துறை
மருவினான்றனை வாழ்த்துமே.
தெளிவுரை : திருவற்றராகிய சில சமணர்களும் தேரர்களும் சொல்லும் உரை கொள்ளற்க, மேருமலையாகிய பருமையான வில்கொண்டு முப்புரம் எரித்து பராய்த்துறை மருவி விளங்கும் ஈசனைப் போற்றி வணங்குவீராக.
1458. செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற்சிதை யாதன
செல்வன்ஞானசம் பந்தன செந்தமிழ்
செல்வமாம் இரை செப்பவே.
தெளிவுரை : செல்வம் பெருகும் பராய்த்துறையின் செல்வனாகிய ஈசனைச் சிதைவுபடாத நிறைசெல்வமாகிய ஞானசம்பந்தன் செந்தமிழ்ப் பதிகத்தைச் சொல்ல செல்வம் பயக்கும் . இம்மை நலனும் மறுமை நலனும் தரும் என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
136. திருத்தருமபுரம் (அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம், காரைக்கால்,புதுச்சேரி மாநிலம்)
திருச்சிற்றம்பலம்
1459. மாதர்ம டப்பிடியும் மட வன்னமும் அன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படைநின் றிசைபாடவு மாடுவர்
அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசைபா டுவர் ஆழ்கடல் வெண்டிரை
யிரைந் நுரை கரைபொரு துவிம்மிநின்று அயலே
தாதவிழ் புன்னை தயங்கும லர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
தெளிவுரை : தருமபுரத்தில் எழுந்தருளியிருக்கும் நாதனாகிய ஈசன், அழகிய பெண் யானையும் அன்னமும் போன்ற நடையுடைய மலைமகளாகிய உமையவளை உடனாகித் துணையாகக் கொண்டு மகிழ்பவர்; பூத கணங்கள் நின்று இசை பாட ஆடுபவர்; படர்ந்த சடை முடியில் கங்கை தரித்தவர்; வேத கீதங்களும், ஏழிசையும் பாடுபவர்; அப்பெருமான் கடலின் அலைகள் இரைச்சல் கொண்டு கரையை நோக்கி மேலெழுந்து மோத, அயலே விளங்கும் புன்னை மரங்களில் ஒளிரும் மலர்களில் சிறகுகளை உடைய வண்டினங்கள் எழிலாக இசைக்க, பொழில்களில் வாசம் செய்யும் குயில்கள் அதனைப் பயிலவும்எழில் மிக்கு விளங்கும் தருமபுரத்தில் வீற்றிருப்பவர்.
1460. பொங்கு நடைப்புகலில் விடை யாம்அடர் ஊர்திவெண்
பொடி யணி தடங்கொண்மார் புபூணநூல் புரள
மங்குலி டைத்தவழும் மதி சூடுவர் ஆடுவர்
வளம் கிளர் புனல்அர் வம்வைகிய சடையர்
சங்குக டல்திரையால் உதை யுண்டுச ரிந்திரிந்து
ஒசிந் தசைந் திசைந் துசே ரும்வெண்மணற் குவைமேல்
தங்குக திர்ம்மணிநித் தில மெல்லிருள் ஒல்கநின்று
இலங் கொளிந் நலங் கெழில் தருமபு ரம்பதியே.
தெளிவுரை : சங்குகள் கடல் அலைகளால் உதையுண்டு கரை நோக்கித் தள்ளப்பெற்றுச் சரிந்து திரிந்து ஓடிந்து மேட்டில் தங்கிக் கதிர்விடும் முத்துக்கள் வெளிப்பட, ஒளி விளங்கும் எழில் நலம் உடையது தருமபுரம் என்னும் பதியாகும். அத்தகைய பதியில், கம்பீர நடை கொண்ட இடபத்தினை வாகனமாகக் கொண்டு, அகன்ற மார்பில் திருவöண்ணீறு அணிந்து, பூணும் முப்புரி நூல் புரள, ஆகாயத்தில் தவழுமச் சந்திரனைச் சூடி, வளம் திகழ் கங்கை தரித்துக் கிளர்ந்தெழும் அரவம் வைகிய சடை முடி உடையவராகிய ஈசர், நடம் புரிவர்.
1461. விண்ணுறு மால்வரைபோல் விடை யேறுவர் ஆறுசூ
டுவர் விரிசுரி யொளி கொடோடுநின் றிலங்கக்
கண்ணுற நின்றொளிருங் கதிர்வெண்மதிக் கண்ணியர்
கழிந்தவர் இழிந்திடும் முடைதலை கலனாப்
பெண்ணுற நின்றவர்தம் முரு வம்மயன் மால்தொழவ்
வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொடெண் ணிதழ் மௌவல்மருங்கலர்
கருங்கழிந் நெருங் குநல் தருமபு ரம்பதியே.
தெளிவுரை : குளிர்ந்த இதழ்களையுடைய முல்லையும், எட்டு இதழ்களையுடைய மல்லிகையும் அடர்ந்து மிகுந்துள்ள நன்மை திகழ விளங்குவது தருமபுரம் என்னும் பதியாகும். அப்பதியின்கண், எழுந்தருளியுள்ள ஈசன், மலைபோல் பெருமை கொண்ட உயர்ந்த இடபத்தில் ஏறுவர்; கங்கை சூடுவர்; வரிந்தும் வளைந்தும் ஒளிகொண்டு விளங்கும் தோடு காதில் திகழத் தரித்து நின்று, ஒளி தரும் வெண்மதியும் சூடுவர்; இறந்தவர்களின் தலையோட்டினை தொழுமாறு விளங்குவர்; உமாதேவியைக் கூறாகவும் உடனாகக் கொண்டும் பிரியாது விளங்குவர்.
1462. வாருறு மென்முலைநன் னுதல் ஏழையொடு ஆடுவர்
வளங் கிளர்விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றலரும் மலர்க் கொன்றையங் கண்ணியர்
கடுவ் விடை கொடிவெடி கொள்காடுறை பதியர்
பாருற விண்ணுலகம் பர வப்படு வோர்அவர்
படுதலைப் பலி கொளல் பரிபவம் நினையார்
தாருறு நல்லரவம் மலர் துன்னிய தாதுதிர்
தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.
தெளிவுரை : நல்ல கொன்றை மலர்மாலையிலிருந்து பெருகும் மகரந்தத் தாதுக்குள் மழைபோன்று விளங்கும் தருமபுரம் என்னும் பதியில் வீற்றிருக்கும் ஈசன், உமையவளுடன் சேர்ந்து நடம் புரிபவர்; வளரும் திங்கள் விளங்கும் சடையுடையவர்; கார்காலத்தில் நிலைத்து மலரும் கொன்றை மலரைச் சூடியவர்; இடபக் கொடியுடையவர்; இடுகாட்டியல் உறைபவர்; பூவுலகத்தாராலும் விண்ணுலகத்தாராலும் வணங் கப்படுபவர்; கபாலம் ஏந்திப் பலி கொள்வதை கீழ்மையாகக் கருதாதவர்.
1463. நேரும வர்க்குணரப் புகில் இல்லைநெ டுஞ்சடைக்
கடும்புனல் படர்ந்திடம் படுவ்வாதார் நிலையர்
பேரும வர்க்கெனையா யிர முன்னைப்பி றப்பிறப்பு
இலா தவர்உடற் றடர்த் தபெற்றியார் அறிவார்
ஆரம வர்க்கழல்வா யாதொர் நாகம ழஃகுறவ்
வெழுஃகொழும் மலர்கொள்பொன் னிதழிநல் லலங்கல்
தாரம வர்க்கிமவான் மகள்ஊர்வது போர்விடை
கடிபடு செடி பொழில் தருமபு ரம்பதியே.
தெளிவுரை : ஈசனார்க்கு, இணையாகச் சொல்லுவதற்கு யாரும் இல்லை. நெடிய சடையில் கடும் புனலாகும் கங்கை தரித்தவர்; பேரும் ஆயிரம் உடையவர்; பிறப்பும் இறப்பும் இல்லாதவர்; மாறுபாடு கொண்ட பகைவரை அடர்த்து வெற்றி கண்ட தன்மையை யாரால் அறிய முடியும் ? நெருப்புப் போன்று சீறும் நாகம் அவருக்கு ஆரமாகும்; அழகு மிளிற விளங்கும் செழுமையான மலரைச் சூடுவது பொன்மயமான கொன்றை மலர் மாலையாகும். அவருக்குத் தாரமாவது மலையரசன் மகளாகிய உமையவள்; அவர் வாகனமாக ஊர்வது இடபம்; வாசனை பொருந்திய பொழில்கள் சூழ்ந்த தருமபுரம் அவர்தம் பதியே.
1464. கூழையங் கோதைகுலா யவள்தம்பினை புல்கமல்
குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
மாழையொண் கண்மடவா ளையொர் பாகம கிழ்ந்தவர்
வலம்மலி படைவிடை கொடிகொடும் மழுவ்வாள்
யாழையும் மெள்கிடவே ழிசை வண்டுமு ரன்றினந்
துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ்வி ரியுந்நல்
தாழையு ஞாழலுந்நீ டிய கானலி னள்ளலி
சைபுள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே.
தெளிவுரை : யாழையும் விஞ்சும் தன்மையில் ஏழிசையில் வண்டுகள் கீதம் இசைக்கச் சிறகுகள் விரித்துப் பறந்து தாழையும் கொன்றையும் உடைய சோலையில் விளங்கப் புள்ளினம் துயில் கொள்ளும் தருமபுரம் என்னும் பதியில், அழகிய கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்து இடபக் கொடியும் மழுப்படையும் தாங்கி ஈசன் விளங்குகின்றார்.
1465. தேமரு வார்குழலன் னந டைப்பெடை மான்விழித்
திருந்திழை பொருந் துமே னிசெங்கதிர் விரியத்
தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்
றைதொல் புனல் சிரங்கரந் துரித்ததோல் உடையர்
காமரு தண்கழிநீ டிய கானல கணடகங்
கடல் லடை கழியிழி யமுண்டகத் தயலே
தாமரை சேர்குவளைப் படு கிற்கழு நீர்மலர்
வெறி கமழ் செறிவ் வயல் தருமபு ரம்பதியே.
தெளிவுரை : தேன்கமழ் கூந்தலும், அன்ன நடையும், பெண்மான் விழியும் திருந்திழையும் கொண்ட உமையவளைப் பாகமாகக் கொண்டு, சிவந்த திருமேனியும், செங்கதிர் மருவும் சடையில் வெண்மதியும் கொன்றையும் ஏற்றுத் தோலுடைய அணியும் இறைவன், நீர் வளம் மிகுந்த நிலையில் சோலைகளும் கடல் தாழையும், தாமரை, குவளை, கழுநீர்ப் பூக்களும், மணம் கமழச் செறிந்த வயல்களும் கொண்ட தருமபுரத்தைப் பதியாக உடையவர்.
1466. தூவண நீறகலம் பொலி யவ்விரை புல்கமல்
குமென் மலர்வரை புரை திரள்புயம் மணிவர்
கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்
கொலைம் மலி படையொர்மூ லமேந்திய குழகர்
பாவண மாவலறத் தலை பத்துடையவ்வரக்
கனவ் வலி யொர்கவ் வைசெய் தருள்புரி தலைவர்
தாவண வேறுடையெம் மடி கட்கிடம் வன்றடம்
கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.
தெளிவுரை : ஈசன், தூய வெண்ணீறு வரிந்து பொலிய அகன்ற மார்பிலும், புயங்களிலும் அணிவர்; கோவணமும் மான் தோலும் ஆடையாக உடையவர்; சூலப்படை ஏந்திய அழகர்; பாடல்வண்ணமாக சாம கீதத்தை இசைத்து வேண்டிய அரக்கனான இராவணனுடைய துன்பத்தை நீக்கி, அருள் புரிந்த தலைவர். இடப வாகனத்தை உடைய எம் அடிகளாகிய அப்பெருமான், இடமாகக் கொண்டு வீற்றிருப்பது, கடலின் கரையில் விளங்கும் தருமபுரம் என்னும் பதியாகும்.
1467. வார்மலி மென்முலைமா தொரு பாகம தாகுவர்
வளங்கிளர் மதியர வம்வைகிய சடையர்
கூர்மலி சூலமும் வெண் மழு வும்மவர் வெல்படை
குனிசலை தனிம் மலை யதேந்திய குழகர்
ஆர்மலி யாழிகொள்செல் வனு மல்லிகொள் தாமரையும்
மிசை யவன் னடிம் முடி யளவுதாம் அறியார்
தார்மலி கொன்றையலங் கலு கந்தவர் தங்கிடந்
தடங்கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.
தெளிவுரை : ஈசனார், மாதொரு பாகமாய் ஆகுவர்; வளரும் சந்திரனும் அரவமும், விளங்கும் சடை முடியுடையவர்; கூர்மையான சூலமும் மழுவும் படையாக உடையவர்; வளைக்கப்பெறும் வில்லாக மேருமலையை ஏந்திய அழகர்; ஆழிப் படைகொண்ட திருமாலும், தாமரை மலர்மிசை விளங்கும் பிரமனும் அடி முடியின் அளவு காணப் பெறாதவராகியவர்; கொன்றை மாலையை உகந்து அணிபவர். அவர் வீற்றிருக்கும் இடம் தருமபுரம் என்னும் பதியாகும்.
1468. புத்தர்க டத்துவர் மொய்த் துறி புல்கிய கையர்பொய்ம்
மொழிந் தழிவில்பெற் றியுற் றநற்றவர் புலவோ
பத்தர்க ளத்தவமெய்ப் பய னாகவுகந்தவர்
நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன வெண்ணகை யொண் மலை மாதுமை பொன்னணி
புணர்ம் முலையிணை துணை யணைவதும் பிரியார்
தத்தரு வித்திரளுந் திய மால்கடல் ஓதம்வந்
தடர்ந்திடுந் தடம் பொழில் தருமபு ரம்பதியே.
தெளிவுரை : புத்தர்களும் சமணர்களும் உரைக்கும் பொய்யுரைகளை நீக்கி, அழிவில்லாத சிறப்புடைய நற்றவ வேந்தர்கள், அறிஞர்கள், பக்தர்கள் ஆகியோர்தம் மெய்த்தவத்தை உகந்தவராகிய ஈசன், சிவந்த வண்ணமுடையவர்; சுடலைப் பொடியணிபவர்; உமையவளைப் பாகமாகக் கொண்டு பிரியாது விளங்குபவர். அவர் அருவிகள் உந்திய கடல் ஓதமும் பொழிலும் கொண்ட தருமபுரத்தைப் பதியாக உடையவர்.
1469. பொன்னெடு நன்மணிமா ளிகை சூழ்விழ வம்மலீ
பொரூம் புனலதிரூம் வமர் புகல்லியென் றுலகில்
தன்னொடு நேர்பிறவில் பதிஞானசம் பந்தனஃ
துசெந் தமிழ்த் தடங்கடல் தருமபுரம் பதியைப்
பின்னெடு வார்சடையிற் பிறை யும்மர வும்முடை
யவன்பிணை துணைகழல் கள்பேணுத லுரியார்
இன்னெடு நன்னுலகெய் துவர் எய்திய போகமும்
முறு வர்கள் ளிடர் பிணி துயரணைவ் விலரே.
தெளிவுரை : அழகிய நெடிய நன்மணிகள் பதிந்த மாளிகை சூழந்த விழாக்கள் மலியவும், நீர் கரை மோத உள்ளதும், தனக்கு இணையாக வேறு இல்லை எனவும் விளங்கும் புகலியின் ஞானசம்பந்தன் வழங்கிய செந்தமிழ் கொண்டு, தருமபுரத்தில் வீற்றிருக்கும் தலைவனாகிய, நீண்ட சடையில் பிறைச் சந்திரனும் அரவும் கொண்டு விளங்கும் ஈசன் துணைக் கழல்களைப் பேணி வணங்குபவர்கள், இனிய நல்லுகத்தினை எய்துவார்கள்; போகம் பெறுவார்கள்; இடம், பிணி முதலான அவலங்கள் இல்லாதவராவார்கள்.
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம் முதல் திருமுறை மூலமும் உரையும் முற்றிற்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக