ராதே கிருஷ்ணா 08 - 11 - 2011
பத்தாம் திருமறை | |
திருமந்திரம் | ஒன்பதாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்
|
விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க
http://temple.dinamalar.com/
பத்தாம் திருமறை | |
திருமந்திரம் | ஒன்பதாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்
ஒன்பதாம் தந்திரம் (மகுடாகமம்)
1. குருமட தரிசனம்
(குரு - ஒளி. மடம் - இடம். குருமட தரிசனமாவது, ஒளி விளங்கும் இடத்தைத் தரிசித்தல்.)
2649. பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும்எம் ஈசன் தனக்கென்றே உள்கிக் குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த் தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.
பொருள் : நைவேத்தியமும் அக்கினியில் பெய்யும் ஆகுதியும் பரந்து ஓம்த் தீயினின்று கிளம்பும் புகையும் வேத ஒலியும் ஆகிய எல்லாம் எமது சிவபெருமானைக் கருகிச் செய்வனவே என்று நினைந்து, குவிந்த மனத்துடன் குரு சொரூபமாக விளங்கும் ஒளி நிலையைத் தரிசித்தவர் இறைவனது திருவடியைப் பொருந்தி நின்று பிரபஞ்ச வெப்பத்தை விட்டு நிற்பர். ( பலி - அன்னம். அவி - ஓமத்தியில் இடும் நெய் முதலியவை.)
2650. இவன்இல்லம் அல்லது அவனுக்குஅங்கு இல்லை
அவனுக்கும் வேறுஇல்லம் உண்டா அறியின் அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும் அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.
பொருள் : சீவனது உள்ளத்தை விட்டுச் சிவன் உறைவதற்கு வேறு இடம் இல்லை. உண்மையை அறியின் சிவனுக்கு உறைவிடம் வேறு உண்டோ? அவ்வாறு அவனுக்கு உறைவிடம் இவனது உள்ளம் என்பதை நன்றாக அறிந்திருந்தும், அவன் வேறாய் உள்ளான் என்று அறியாமல் கூறுகின்றனர். என்னே அறியாமை ?
2651. நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி தேட அரியன் சிறப்பிலி எம்இறை ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே.
பொருள் : அறிஞரால் விரும்பி அடையும் சகஸ்ரதளத்தை நான் அறிந்து கொண்ட பிறகு, ஆராய்ந்து அறியப்பட்ட சிவபெருமானது ஒளி ஒலியாகிய திருவடிகளை என்னுள் கண்டு கொண்டேன். தேடிக் காண ஒண்ணாதவனும் சிறப்பான மனமண்டலத்தையே ஆலயமாகக் கொண்டவனும் ஆகிய எமது இறைவன், எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் உலகமாகவும் உயிராகவும் உள்ளதை உணர்ந்தேன்.
2652. இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் மடமும் இயம்புவன் ஆதாரத் தோடு வனமும் இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே.
பொருள் : இறைவன் எழுந்தருளியிருக்கும் ஆசனம் எது, மலை எது என்று கூறுவேன். சித்தமாகிய குகையும் குகை உள்ள இடமும் எவை என்பதையும் கூறுவேன். ஆறு ஆதாரங்களோடு அஞ்ஞானமாகிய காடு எது என்றும் கூறுவேன். இவற்றைப் பதினான்கு உலகிலும் உள்ளார்க்கு உரைப்பேன். இவைகளின் விளக்கம் அடுத்து வரும் மந்திரத்தில் கூறப்பெறும்.
2653. முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்
அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி அகம்பர மாதனம் எண்ணெண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரந் தானே.
பொருள் : முகமானது ஞானியர் பொருந்தியிருக்கும் இடமாகும். பெருமை பொருந்திய மடம் முன்னுள்ள ஒளியாகும். மனத்தில் உண்டாகும் நல்ல எண்ணங்களே அடியார் கூட்டமாகும். பிறர்க்கு நன்மை செய்யும் எண்ணத்தைச் சிந்தித்து இருத்தலே நல்ல காட்சியாகும். சூக்கும உடம்பே மேலான ஆசனமாகும். அருவுருவான ஈசுவர நாமத்தைக் கணித்தல் கிரியை அல்லது செயலாகும். அறவாகாயமே அவர் ஒடுங்கியிருக்கும் குகையாகும். இதுவே அவரைத் தாங்கி நிற்பதாகும்.
2654. அகமுக மாம்பீடம் ஆதார மாகும்
சகமுக மாம்சத்தி யாதன மாகும் செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும் அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.
பொருள் : நினைவு அகலாவுள்ளம் சிவபெருமானுக்குப் பீடமாகும். அதுவே நிலைக்களமும் ஆகும். உலகினைத் தொழிற்படுத்தும் திருவருள் ஆற்றல் சிவபெருமானுக்குத் திருவுருவாகும். அத்திருவுருவின்கண் விளங்கித் தோன்றி உலகில் வெளிப்படுபவன் சிவபெருமானே. அவன் ஒருவனே தேவன். திருவருளால் உள்முகமாய்த் தேரும் நல்லறிவாளர்க்கு இவ்வுண்மைகள் நன்கு புலனாகும்.
2655. மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்
காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாசியே தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள் ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே.
பொருள் : சுத்த மாயை, அசுத்த மாயை ஆகிய இரண்டும் ஆன்மாவை மறைக்க அதன் அறிவு விளங்காமல் நிற்கும். அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்து திரைகளும் அகல, ஆன்மாவின் தூய்மையான ஒளி தோன்ற, அவ் ஆன்ம ஒளியில் நிலைபெற்ற ஆராய்கின்ற ஞானியார் காண்பான், காணப்படு பொருள், காட்சி ஆகிய மூன்றையும் கடந்து மேலாம் பிரணவ யோகத்தை அறிந்தவராவர்.
2. ஞானகுரு தரிசனம்
(அஃதாவது ஞானத்தைத் தரும் குருவைக் காண்டல். தனது ஒளி மண்டலத்தில் குருவைக் காண்பதே இப்பகுதியில் கூறப்பெறும். குரு மண்டல விழிப்பு என்பது புருவ மத்தியம் திறப்பது. பரமசிவமே குருவாய் அங்கு எழுந்தருளி அருள் செய்வான் என்க. ஆறாம் தந்திரத்தில் கூறிய சிவகுரு தரிசனம் சிவன் புறத்தே குருவாய் வந்து அருளுதலைக் கூறுவது.)
2656. ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும் வேறே சிவபதம் மேலா அளித்திடும் பேறாக ஆனந்தம் வேணும் பெருகவே.
பொருள் : முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கினால் சிவன் வெளிப்பட்டு ஆன்மாவைத் தன்னுள் அடக்கிக் கொள்ளும். அந்நிலை அமைந்தபின் மேலான சிவப்பேறு கிட்டும். இதன் பயனாக ஆன்மா உலக இன்பத்தை விட்டுச் சிவானந்தத்தில் திளைத்துச் சிவபோகத்தைப் பெறும். (பேறு - சிவயோகம்.)
2657. துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி விரிவு குவிவுஅற விட்ட நிலத்தே பெரிய குருபதம் பேசஒண் ணாதே.
பொருள் : சீவதுரியம் பரதுரியம் சிவதுரியம் ஆகிய மூன்றும் கடந்து விளங்கும் அறிவுப் பேரொளியாகிய அருமையான பரசிவம் எல்லாமாய்ப் போக்கும் வரவும் இல்லாத இடத்திலுள்ள பெருமைமிக்க குருபதத்தின் தன்மையைப் பேச முடியாததாகும்.
2658. ஆயன நந்தி அடிக்குஎன் தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன் காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன் சேயன நந்திக்கென் சிந்தைபெற் றேனே.
பொருள் : தாய் போன்ற கருணையுடைய நந்தியைப் போற்றி வணங்க என் சிரசைப் பெற்றேன். வாய் போன்ற கோபுரவாயிலில் விளங்கும் நந்தியை வாழ்த்துவதற்கு வாயினைப் பெற்றேன். உலகினுக்கே பீசமாக உள்ள நந்தியை ஞான சாதனையால் காண்பதற்குப் போதிய அறிவைப் பெற்றேன். மனவுணர்வுக்கும் அப்பாலுள்ள நந்தியை உணர என்னுடைய சிந்தையைப் பெற்றேன். (ஆயன-ஆயன்ன-தாய் போன்ற.)
2659. கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல் குருவின் உருவம் குறித்தஅப் போதே திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே.
பொருள் : கருட மந்திர உபாசகன் தனது ஆத்ம சக்தியினால் கருட மந்திரத்திற்குரிய கருடனை நினைத்தவுடனே, பெரிய விடம் தீர்ந்து நாகம் தீண்டியவன் மரணபயம் நீங்கி எழுவது போல, ஞான சாதகன் பேரொளிப் பிழம்பாகிய குருவினைத் தியானித்தவுடனே மும்மலங்களும் நீங்கிப் பேரொளிப் பிழம்பாக ஆவான்.
2660. அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே.
பொருள் : சிவகுருநாதன் நிலையாகவுள்ள இருப்பிடம் எது என்பதை உலகினர் யாரும் அறிந்து கொள்ளவில்லை. அவனது இருப்பிடம் சீவர்களிடந்தான் என்பதை ஞான விசாரணையால் அறிந்து கொள்வார்களுக்கு அப்பெருமானும் நிலையாக அவர்களது உள்ளத்தில் அமர்ந்து விடுவான். அங்ஙனம் தங்களிடம் சிவகுரு நாதனைக் காண்பவர் சிவமேயாக விளங்குவர்.
2661. தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
மான்ற அறிவு மறிநன வாதிகள் மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.
பொருள் : முகத்தின்முன் தோன்றிய ஒளியை அறிவதும் அறிந்தும் அறியாதிருப்பதும் ஆகிய, மயக்க அறிவு மாறிவரும் நனவு கனவு சுழுத்தியாகலாம். சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் ஆகியவற்றைக் கடந்த போது நனவாதி மூன்று நிலைகளும் நீங்கும். அப்போது திருவடியைப் புதுப்பித்த நந்தியாகிய குருநாதன் பிரணவ தேகத்தில் சீடனை விளங்குமாறு அருளுவான்.
2662. சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும் பந்தம் இலாத பளிங்கின் உருவினள் பந்தம் அறுத்த பரம்குரு பற்று.
பொருள் : திங்கள் மண்டிலத்தினூடு கூடிப் புருவநடுவாக இருக்கும் நறுமணம் கமழும் இரண்டிதழ்த் தாமரை மலரை நெருங்குதல் வேண்டும். நெருங்கி, ஆங்கு வீற்றிருக்கும் திருவருள் ஆற்றலாம் கன்னியைக் காணுதல் வேண்டும். அத்திருவருள் பளிங்கின் வண்ணத்தள் ஆவள். அத்திருவருளின் பெறவருந்துணையால் சிறந்த சிவஞான மெய்க்குருவின் திருவடி இணையினைப் பற்றுதல் வேண்டும். அதுவே பெரும் பேறென்க.
2663. மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ
நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச் சினம்புகுந் தான்திசை எட்டும் நடுங்க வனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே
பொருள் : மெய்யடியார்களின் தூய திருவுள்ளத்தின்கண் சிவபெருமான் புகுந்தருளினான். அங்ஙனம் புகுந்தருளியது ஏழுலகும் மகிழ்ந்து இன்புறும் பொருட்டேயாம். நீண்ட வான் உலகத்தைத் தாங்கிக் கொண்டு இந்த மாநிலத்தே புகுந்து அருளினன். ஆருயிர்களின் கொடுமை கண்டு எட்டுத் திசையும் நடுங்கும் வண்ணம் சினம் கொண்டருளினன். அவனே பேரொடுக்கப் பெரு வனத்தின்கண் புகும் பெரும் பொருளாவன். அவனுக்குரிய சிறந்தவூர் தென் தமிழ் வழங்கும் வடபால் உள்ள திருக்கயிலையாகும்.
2664. தானான வண்ணமும் கோசமும் சார்தரும்
தானாம் பறவை வனமெனத் தக்கன தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில் தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே.
பொருள் : சீவன் அன்னமய கோசம் முதலிய ஐங்கோசங்களையே தான் என்று எண்ணி அடங்கியிருந்தது. அவை சீவனாகிய பறவை தங்குவதற்குரிய காடு என்று சொல்லத் தக்கவையாம். ஆனால், இவை தானல்ல தான் வேறு என்று சோடச கலை மார்க்கத்தினால் தனது உண்மை நிலை உணரலாம். இஃது அல்லாது இவ்வுண்மை உணர்வதற்குத் தச காரியம் விளக்கும் நெறியும் வேறு உள்ளது.
2665. மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி
உருவம் நினைக்க நின்று உள்ளேஉருக்கும் கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே.
பொருள் : செவ்வி வாய்ந்த ஆருயிரைத் திருவருளால் மருவிய எங்கள் மா நந்தி பின்னைப் பிறவியில் பிரித்தறியான். அவனது திருவருள் திருவுருவை உணர்வின்கண் நினைக்க ஆருயிரின் தன்முனைப்பாகிய இருளை அத்திருவுரு கெடுக்கும். எல்லாவற்றிற்கும் காரணமாயிருக்கிற அச்சிவத்தின்கண் ஒடுங்கிக் காண வல்லார்க்கு இங்குச் சார நிற்கும் அருவினைகள் கண் சோர்ந்து அற்றழியும். இவ்வினைகட்கு அகமாக இருக்கும் மாயையும் அழியும்.
2666. தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப்
பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டு நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில் தலைப்பட லாகும் தருமமும் தானே.
பொருள் : சிவஞானத் திருவருளால் மெய்ப்பொருளாம் சிவபெருமானைத் தலைப்படுதல் உண்டாகும். தத்துவன்-மெய்ப்பொருள். அத்தலைப் பாட்டினால் பலவகையாகக் கிளைக்கும் ஆசாபாசங்களை அறுத்து ஒழிக்கலாம். என்றும் பொன்றா நிலைமையுடன் திருவடிக்கீழ் நிலைபெற நாடுமின். நீங்கா நினைவுடன் இருப்பின் அவன் திருவடியைத் தலைப்படுதலாகும். அவன் போகம் ஈன்றருள் புண்ணிய வடிவினன் ஆவன். அறவாழி அந்தணன் ஆவன்.
2667. நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத் தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும் கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே.
பொருள் : குரு காட்டி வழி நின்று சாதகர் சிவனைச் சிந்தித்து இருப்பின் பெருமானும் அவரை நினைந் தருளுவான். அவ்வாறு அருள்புரியும் பொருட்டுப் புருவ மத்தியில் விளங்கும் சோதிப் பொருளை, சாதியாலும் அறிவாலும் தினையின் கூறு போன்ற சிறியவராக இருந்தாலும், இடைவிடாது சிந்திக்கின்ற மனத்துடன் அடைந்தால் அவர் பெருமையுடையவர் ஆவர். (சுனை-புருவ மத்தி.)
2668. தலைப்படுங் காலத்துத் தத்துவன் தன்னை
விலக்குறின் மேலை விதியென்றும் கொள்க அனைத்துஉல காய்நின்ற ஆதிப் பிரானை நினைப்புறு வார்பத்தி தேடிக்கொள் வாரே.
பொருள் : சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய சாதனை செய்யுங் காலத்தில், அவ்வழிபாடு தலைப்படுமாயின் அது தீயவினையினால் ஏற்பட்டது என்று அறிக. எனினும் எல்லாவற்றுக்கும் காரணமாயுள்ள ஆதியாகிய பெருமானைச் சோர்வின்றிச் சிந்தித்திருப்பவர் அவனது அன்பினைத் தேடிக் கொள்பவர் ஆவர்.
2669. நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கி
நிகழ்வுஒரீந் தார்எம் பிரானொடும் கூடித் திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தியின் உள்ளே புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.
பொருள் : சிவனை இடைவிடாது நினைந்து மெய்யுணர்வு பொருந்தினவர் அவனோடு பிரியாது இருப்பர். அவர்கள் எமது தலைவனுடன் பொருந்தி உலக வியாபாரத்தில் ஈடுபடாமல் இருப்பர். அவரது சிந்தனை உலக விஷயத்தைப் பற்றாதபடியால் உலகச் சிறப்பை விரும்பாதவர் ஆயினர். அவ்வாறு அவர்களுக்குப் புகழத்தக்க மெய்யுணர்வினை அளித்துப் பெருமான் அவருடன் ஒன்றாக விளங்கினான். (நகழ்வு-விலகுதல். நகழ்வு ஒழிதலாவது இடைவிடாது தொட்டுக் கொண்டிருத்தல்.)
2670. வந்த மரகத மாணிக்க ரேகைபோல்
சந்திடு மாமொழிச் சற்குரு கண்மார்க்கம் இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே.
பொருள் : பச்சைக் கல்லின்மேல் சிவப்புக் கல்லைப் பொருந்தினால் மற்றோர் ஒளி வருவதுபோல, தக்க குருவால் உபதேசித்துப் பெற்ற சன்மார்க்கத்தில் சீடனிடம் மற்றோர் தகுதி வந்து பொருந்தும். இவ்வாறு பொருந்துவதில் உண்டாகும் ஒளியானது நெற்றியின் அடிப்பாகமாகிய புருவ மத்தியில் அழகிய சீவ ஒளிக்குள் விளங்கும் ஒளியாகும். (மாமொழி-பிரணவம். இலாடத்தின் மூலம் புருவ மத்தி.)
2671. உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது மண்ணு நீரனல் காலொடு வானுமாய் விண்ணு மின்றி வெளியானோர் மேனியே.
பொருள் : உண்ணுகின்ற வாயாகவும் உடலாகவும் உயிராகவும் பார்வையாகவும் ஞான குருவினிடம் சிவம் பொருந்தி விளங்கும். இனி, மண், நீர், நெருப்பு, வாயு ஆகாயமாகவும் ஆகாயமற்ற அறிவு உருவமாகவும் தேக தர்மத்தை விட்டு நிற்கும். ஞான குருவின் நிலை உள்ளது.
2672. பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால் பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு உரிய பதியும்பா ராக்கி நின்றானே. பொருள் : உலகம் முழுதும் தலைவன் என்று போற்றிப் புகழும் பரசிவத்தின் ஆணைவழிச் சிவசத்தியால் இவ்வுலகம் நடைபெறும். அவன் பெரிய ஆகாயத்தில் விளங்கி, தன்னை வணங்கும் அடியார்க்குத் தகுதியான ஆகாய வண்ணத்தையும் இவ்வுலகில் அளித்து விளங்கினான்.
2673. அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில்
தன்பர மல்லது தாமறியோம் என்பர் உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.
பொருள் : விரிந்தும் உயர்ந்தும் உலகங்கள் எல்லாம் ஆகாயத்தில் விளங்கும் சிவபெருமானது அருளால் நடைபெறுவது அன்றித் தாம் வேறொன்றும் அறியவில்லை என்று அறிவுடையோர் கூறுவர். இனி ஆகாய வாசிகளான தேவர்களும் அசுரர்களும் இத்தன்மையினைக் கண்டவர் அல்லர். ஆனால் அப்பெருமானது அருளைப் பெற்றிருந்தவரே அவனைக் கண்டவராவர்.
2674. கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான் தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம் போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே.
பொருள் : பசுத்தன்மையுடைய ஆன்மாக்களைப் பிறர் வணங்கும்படியான தலைவராக்கி, பிறகு நாவால் துதித்து வணங்கும்படி குருநாதன் அருள்புரிந்தான். ஆதலால் நாம் இனிமேல் பிற தெய்வத்தை வணங்க மாட்டோம். சிவம் ஒன்றாலேயே பிறதெய்வங்கள் அதிகாரங்களைப் பெற்று வகிக்கின்றன என்பதை அறிந்து தெளிந்தோம். நாமே இனி மக்களால் சென்று வணங்கும் பொருளாக ஆனோம். (கோ-ஆன்மா. கோவண மாக்குதலாவது தலைவனாக ஆக்குதல். தே-சிறுதெய்வம்.)
3. பிரணவ சமாதி
(பிரணவ சமாதி - ஓங்காரத்தில் ஒடுக்கம். பிரணவம் தூலம், சூக்குமம் என இரு வகைப்படும். அ உ ம என்ற எழுத்துக்களால் ஆகிய ஓம் என்பது தூலம். விந்து நாதமாக உணர்வது சூக்குமம். பிரணவத்தை உணர்ந்து நேயப் பொருளோடு அடங்கியிருத்தலே பிரணவ சமாதியாம்.)
2675. தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை
பாவித்த சூக்குமம் மேலைச் சொரூபப் பெண் ஆலித்த முத்திரை ஆங்கதிற் காரணம் மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.
பொருள் : பாரிய ஓமொழி தூலப் பிரணவமாகும். அதனால் பெறுவது பருவுடல் இன்பம். நுண்மை ஓமொழி நுண் உடற்குரிய இன்ப வாயிலாகும். மேலைச் சொரூபம் என்னும் இன்ப ஓமொழி காரணப் பிரணவமாகும். அது திருவருள் வீழ்ச்சிக்கு வாயிலாகும். அப்பிரணவம் கைக்குரியாம் முத்திரை வடிவாக இருக்கும். மா முதல் ஓமொழி மேலைப் பிரணவமாகும். இதுவே மாகாரண மெனவும் சொல்லப்படும். இது திருவடியுணர்வாம் வேதாந்த வீதியில் சேர்ப்பதாகும். (மேலைச்சொரூபப் பெண்-பராசக்தியின் வடிவமுமாம்.)
2676. ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.
பொருள் : ஓம் என்ற பிரணவத்துள்ளே உபதேசத்துக்குரிய ஒரு மொழி உதிக்கும். அஃது உருவையும் அருவையும் தன்னுட் கொண்டது. அதனுள் பல பேதங்கள் உள்ளன. இத்தகைய ஓம் என்னும் பிரணவத்தை அறிவதில் மேன்மையான முத்தியும் பொருந்தும்.
2677. ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதமும்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்காரா தீதத்து உயிர்மூன்றும் உற்றன ஓங்கார சீவன் பரசிவ னாகுமே.
பொருள் : அகண்டமான பிரணவத்துள்ளே ஐம்பூதங்கள் உண்டாயின. இதினின்றும் பஞ்சபூத விகாரத்தில் அசையும் உயிர்களும் அசையா உயிர்களும் தோன்றின. பிரணவத்தைக் கடந்த அதீதத்தில் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் ஆகிய மூவகை உயிர் வருக்கங்களும் உள்ளன. அதனால் பிரணவம் உயிர்வாழ்வனவாகிய சீவர்களுக்கும் வியஷ்டியாகிய ஆன்மாக்களுக்கும் சமஷ்டியாகிய சிவத்துக்கும் உரிய நிலையாகும்.
2678. வருக்கம் சுகமாம் பிரமமு மாகும்
அருக்கச் சராசரம் ஆகும் உலகில் தருக்கிய ஆதார மெல்லாந்தன் மேனி சுருக்கமில் ஞானம் தொகுத்துணர்ந் தோர்க்கே.
பொருள் : ஓமொழியின் இனமாகிய அகர உகர மகரங்கள் வருக்கம் எனப்படும். இவை இன்ப நிலையுமாகும். இறைவனுமாகும். அம்மூன்றன் தொகுப்பாகிய அருக்கம் சராசரமாகும். ஆண்மை மிக்க ஆதார நிலைகளின் உருவமெல்லாம் ஓங்காரமாகும். ஓங்காரத்தின் உண்மையுணர்ந்தோர் திருவடியுணர்வாம் நிறைஞானத் தொகுப்பு உணர்ந்தோராவர். (அ-பிரமன், உ-விஷ்ணு, ம-உருத்திரன்.)
2679. மலையுமனோ பாவம் மருள்வன வாவ
நிலையின் தரிசனம் தீப நெறியாம் தலமும் குலமும் தவம் சித்த மாகும் நலமும் சன் மார்க்கத் துபதேசந் தானே.
பொருள் : நிலைபேறின்றி ஓவாது அலைந்து கொண்டேயிருக்கும் மனமும் உயிர்ப்பு மயங்குவதற்கு இடமாக உள்ளனவாகும். அந்நிலையில் மயக்கம் ஒழிப்பதற்குச் சிவகுருவின் விளக்கக் காட்சி எய்துதல் வேண்டும். அதுவே ஈண்டுத் தீபநெறி எனப்பட்டது. இவ்விளக்கத்திற்கு இடமும் சார்பும் உள்ளமும் தவமும் தூய்மையாதல் வேண்டும். அதுவே வாய்ப்புடையதாகும். சிவமறையாகிய நலம் நன்னெறிக்கண் செவியறிவுறுக்கும் அருமறையாகும். (அருமறை-உபதேசம். பவம்-பிராணன்.)
2680. சோடச மார்க்கமும் சொல்லும்சன் மார்க்கிகட்கு
ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழில் கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து ஏறிய ஞானஞே யாந்தத் திருக்கவே.
பொருள் : பதினாறு கலை பிராசாத நெறி கூறும் சன்மார்க்கத்தில் உள்ளவர்க்கு, சிரசின்மேல் விளங்கும் துவாத சாந்த வெளியின் இறுதியும், பதினாறு கலைகளின் இறுதியான உன்மனியின் முடிவும் பிரணவமாகிய கோதண்டத்தையும் கடந்து, மேல் சென்று ஞான நிலையில் நேயப் பொருளின் முடிவில் இருத்தல் கூடும்.
4. ஒளி
(சிவன் ஒளிப்பொருள், சீவனும் ஒளிப்பொருள். சீவனாகிய ஒளிப்பொருள் சிவனாகிய பேரொளியை அறியில் பிறவி நீங்கும் என்று கூறுவது இப்பகுதி.)
2681. ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் அருவம் அறியில் அருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக உடன்இருந் தானே.
பொருள் : ஆன்ம ஒளியை அறிந்து நின்றால் உருவமாகிய உடல் நினைவு மறையும். மறையும் உடல் நினைவு இருக்குமாயின் மீண்டும் பிறப்பு வரும். ஆன்ம ஒளியில் மனம் உணரின் ஒளிமயமாகத் தோன்றும். ஒளியில் தோய்ந்து நிற்க அவ்வொளியும் உருகிச் சிவன் விளங்குவான்.
2682. புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும் பகல்ஒளி செய்ததும் அத்தா மரையில் இகல்ஒளி செய்தெம் பிரான் இருந்தானே.
பொருள் : ஆன்ம சோதியை அறிந்து அதில் நிலைபெறும் ஆற்றல் உள்ளவர்க்கு உலகில் உள்ள எட்டுத் திசைகளிலும் தங்கு தடையின்றிச் செல்லும் ஆற்றல் கிட்டும். அவர்களது உள்ளத்தில் அகண்ட ஒளி பரவிப் புற இருளையும் மாற்றவல்லது. அது சகஸ்ரதளத் தாமரையிலே விளங்கிச் சூரியன் போன்ற பிரகாசத்தைச் செய்தது. மாறான மல இருளை நீக்கி ஒளியை நல்கி எம்பெருமான் அங்குப் பொருந்தியிருந்தனன்.
2683. விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி அருள வளங்கொளி பெற்றது பேரொளி வேறு களங்கொளி செய்து கலந்துநின் றானே.
பொருள் : சோதி மயமான இறைவன் ஆன்மாவில் விளங்க, ஒளிமயமான அக்கினியும் விரிந்த கிரணங்களையுடைய சூரியனும் சந்திரனும் வளமான ஒளிகளாக ஆன்மாவில் பிரகாசித்தன. வளப்பம் மிக்க ஒளிமயமான ஆன்மா அடைந்தது என்ன எனில், பேரொளியான சிவன் ஆன்மாவை இடமாகக் கொண்டு கலந்து விளங்கியதேயாம்.
2684. இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள் வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே.
பொருள் : விளங்குகின்ற ஒளியே திருமேனியாகவுடைய சிவன் ஒருபோதும் பிறக்காதவன். பிரகாசிக்கின்ற ஒளியை உடைய சூரியனும் சந்திரனும் அவனது கண்கள். வளப்பம் மிக்க ஞானஒளியை வீசுவதாகிய அக்கினியும் அவனது மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணாகும். இவ்வாறாக விளக்கமான ஒளியைத் தருகின்ற மூன்றும் ஞானிகளின் உடலில் அமையும். (இலங்கு-இளங்கு-செய்யுள் விகாரம்)
2685. மேலொளிக் கீழதின் மேவிய மாருதம்
பார்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம் நீர்ஒளி செய்து நெடுவிசும் பொன்றினும் ஓர் ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.
பொருள் : ஐம்பூதங்களுள் மேலாக நிற்கும் ஒளி விசும்பாகும். அவ்விசும்பினைத் தடவி வரும் ஒளிப்பொருள் காற்று. அக்காற்றின் பாலாய் விளங்கும் ஒளி தீ. நீருக்கு இடங்கொடுத்து எங்கணும் பரந்திருப்பது நிலம். அந்நிலத்தின்மேல் விளங்குவது நீர். மேல் ஓதிய பூதங்கள் ஐந்தும் ஓர் ஆற்றான் விளங்குவனவற்றை ஒளியென்று அருளினர். இவ்விளக்கம் முழுவதும் சிவபெருமான் திருவருளாலேயே யாகும்.
2686. மின்னியல் தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி துன்னிய ஆறொளி தூய்மொழி நாடொறும் உன்னிய ஆறொளி ஒத்தது தானே.
பொருள் : மின்னலைப் போன்ற தூய்மையான ஒளி மாட்சிமையுடைய செந்நிற ஒளி, வேதங்களால் புகழ்ந்து கூறப்பெறும். மிகுந்த பரநிலையைப் பெற்ற ஆன்மாவின் ஒளி, ஆறு ஆதாரங்களில் பொருந்திய ஒளி ஆகியவற்றைத் தூய்மொழியான சிற்சித்தி நாள்தோறும் சீவர்கள் விருப்பத்துக்கேற்ப ஒரே சோதியாக அமையுமாறு அருளுவான். (தூவொளி-சிவம். செவ்வொளி-சத்தி.)
2687. விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும் உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.
பொருள் : சிவபெருமான் மேகத்தின்கண் மறைந்து இடை இடையே சிறு வரை தோன்றி விளக்கம் தரும் மின்னொளி போன்று ஆருயிர்களுடன் விரவி வேறற நின்று இடை இடையே அருள் விளக்கம் தந்தருள்கின்றனன். அருள்வழி நிற்கும் ஆருயிர்களின் அன்பு நிறை உள்ளத் தாமரையினை இடமாகக் கொண்டருள்பவன் சிவபெருமான். எங்கணும் உயிருக்கு உயிராய் உணர்வுக்கு உணர்வாய் வேறறப் பொருந்தி நின்றருள்பவன் சிவபெருமான்.
2688. விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான் அளங்கொளி யார்அமு தாரநஞ் சாரும் களங்கொளி ஈசன் கருதது மாமே.
பொருள் : விளங்குகின்ற ஒளியாகிய அவ்வான்மா தன் உண்மை அறியாமல் அஞ்ஞான மயமாய் இருளில் அழுந்தும். பிரகாசமான ஒளியையுடைய சிவன், வழிபடுவார்க்கு ஒளியைப் பெருக்கி நிற்பன். உப்பு நீர் பாயும், வழியில் வெளிப்படுத்தும் நஞ்சை அமுதாக ஏற்றுப் பொருந்தும். கண்டத்தை இடமாகக் கொண்ட இறைவனது சங்கற்பம் அவ்வாறு மாறச் செய்வதேயாகும்.
2689. இலங்கிய தெவ்வொளி அவ்வொளி ஈசன்
துளங்கொளி போல்வது தூங்கருட் சத்தி விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி உளங்கொளி யுள்ளே ஒருங்குகின் றானே.
பொருள் : இயற்கையாய் என்றும் பொன்றாததாய் விளங்கும் உண்மை அறிவு இன்பப் பேரொளி எது? அதுவே சிவபெருமானின் அழிவில் பேரொளியாகும். அவ்வொளியின் அருட்கதிராய் நின்று ஒளிர்வது அருள் அறிவுப் பேராற்றலாகும். உளங்கொளியாவது அருள் நிறை ஆருயிராகும். விளங்குகின்ற இம்மூன்று ஒளியுமாக விரிந்த சுடரையுடைய சிவபெருமான் தோன்றி ஒளிக்குள் ஒளியாய் ஒருங்கி உடன் நின்று அருள்கின்றனன். (தூங்கு-நிலைபெற்று.)
2690. உளங்கொளி யாவதென்? உள்நின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி அளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.
பொருள் : உள்ளும் கொள்ளும் ஒளியாக நிற்பது ஆருயிர். அவ்வுயிர்க்கு உயிராய் ஒளியாய் விளங்குவது வளப்பம் மிக்க சிவனொளி. அவ்வொளி மாமணிச் சோதியாகும். விளக்கமிக்க ஒளியாக மின்னி விளங்கும் தூய அறிவு விண்ணில் ஒடுங்கும். ஒடுங்கி வளம்பெற வழங்கும் ஒளிக்கதிர்க் கூட்டத்துள் நின்றருளினன் சிவன்.
2691. விளங்கொளி யான விகிர்தன் இருந்த
துளங்கொளிப் பாசத்துள் தூங்கிருள் சேரா கலங்கொளி நட்டமே கண்ணுதல் ஆடி உளங்கொளி உன்மனத் தோன்றிநின் றானே.
பொருள் : விளங்குகின்ற ஒளியாகவுள்ள விகிர்தனாகிய சிவன் முன்னர் மிக்க ஒளியோடு கூடிய மாயையுள் வலிய இருள் பொருந்தாவாறு களங்கத்தோடு கூடிய இருளில் கண்ணுதலாகிய சிவன் நடிக்க விளங்குகின்ற ஒளியில் மன மண்டலத்தில் பொருந்தி நின்றான்.
2692. போது கருங்குழல் போல்நவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும் சோதியும் அண்டத்தப் பால் உற்ற தூவொளி நீதியின் அல்லிருள் நீக்கிய வாறே.
பொருள் : ஞான சாதனையால் ஆதியாகிய பரம்பொருளை அமரர் பிரானாகிய உருத்திர சோதியோடும் சிரசின் உச்சியில் விளங்கும் சகஸ்ரதள மலரிடைச் சென்று அடைந்தவர் ஆன்ம சோதியும் அண்டத்து அப்பாலுற்ற பேரொளிப் பிழம்புமாவர். இம்முறையில் ஆதியாகிய பரம்பொருள் சீவர்களை மாயையைக் கடக்கச் செய்யும்.
2693. உண்டில்லை என்னும் உலகத் தியல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி உண்டுகொல் கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறின் விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.
பொருள் : இவ்வுலகவர் உலகுக்குக் காரணேசுவரன் ஒருவன் உண்டு என்றும் இல்லை என்றும் கூறும் கொள்கையில் உள்ளனர். ஆன்மாவுக்கு மேலான ஒன்று பழமையில் இல்லை என்று கூறுவார்க்கு மேலான சிவகதி இருக்கக் கூடுமோ? அவ்வாறு இருப்பதைக் கண்டதில்லை என்று கூறவாறுங்கூட அறிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு முற்படின், ஆகாய மயமான தில்லையாகிய மன மண்டலத்தில் விளக்கமான ஒளியாக இறைவன் விளங்குவதைக் காணலாம்.
2694. சுடருற ஓங்கிய துள்ளொளி ஆங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன் அடருறு மாயையின் ஆரிருள் வீசி உடலுறு ஞானத் துறவிய னாமே.
பொருள் : சுடர்பொருந்துமாறு உயர்ந்த ஒண்மையான ஒளிவடிவாக, சாதகனது அக நோக்கில் ஆங்கே படர்ந்து விரிந்து சூரியன் போன்று ஈசன் காட்சியளிப்பான். அவ்வொளியால் அடர்ந்துள்ள மாயையின் இருளை வேறுபடுத்தினால், உடலோடு கூடியிருந்து ஞானத்தால் சாதகன் உலகைத் துறந்தவன் ஆவான்.
2695. ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்செம்பொன் ஆதிப்பிரானும் களிபவ ளத்தினன் காரிருள் நீக்கி ஒளிபவ ளத்தென்னோ(டு) ஈசன்நின் றானே.
பொருள் : ஒளியை நல்கும் பவளம் போன்ற திருமேனியையுடையவனும் அதன்மேல் வெண்ணிற ஒளிபடிந்தவனும், முதிர்ந்த பவளம் போன்ற செம்பொன் நிறமுடைய ஆதிப்பிரானும் ஆகிய சிவன் மூலாதாரத்திலிருந்து களிப்பினை நல்கும் பவள நிறத்தினனாக விளங்கிக் கருமையான பாச இருளை நீக்கி ஒளிபெற்ற பவள நிறத்தினனாய் என்னோடு ஈசன் பொருந்தியிருந்தான். திருவெண்ணீறு பூசியவன் எனினுமாம்.
2696. ஈசன்நின் றான்இமை யோர்கள்நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்தழைக் கின்றனர் பாசம்ஒன் றாகப் பழவினைப் பற்றுற வாசம்ஒன் றாமலர் போன்றது தானே.
பொருள் : ஆகாய மண்டலத்தில் இறைவன் இருந்தனன். அங்கேயே தேவர்களும் இருந்தனர். அப்படியிருப்பினும் அவர்கள் ஒளியின்றி மக்களைப் பூமியை நோக்கிச் செலுத்துபவராக உள்ளனர். இருவினை ஒப்பு வரவே ஈசன் அருளால் பழைய வினையோடு புதுவினையும் அடியோடு நீங்க, மலர் பக்குவமானபோது வெளிப்படும் மணம் போலச் சீவன் வியாபகம் அடையும்.
2697. தானே இருக்கும் அவற்றின் தலைவனும்
தானே இருக்கும் அவன்என நண்ணிடும் வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப் பானாய் இருக்கப் பாவலும் ஆமே.
பொருள் : தேவர்களை மக்களை உலகில் செலுத்துபவராயினும் தேவர்களுக்கும் தலைவனாய்ச் சிவபெருமான் அங்கு இருப்பான். சீவர்களுக்கு முத்தியை அளித்துத் தன்னோடு பொருந்தும்படி செய்பவன் அவனன்றி வேறில்லை. பெருமையுடைய இப்பெரிய நிலத்து அச்சிவமே ஆகாய வடிவில் நிலை பெற்றுள்ளது. அப்போது சீவன் பரனாய் இருக்க எங்கும் வியாபகம் பெறுதலும் ஆகும். (பானாய்-பரனாய் செய்யும் விகாரம்.)
5. தூல பஞ்சாக்கரம்
(தூல பஞ்சாக்கரம் அல்லது தூல ஐந்தெழுத்தாவது சிவாயநம ஆகும். சிவாயநம என மானசீகமாகச் செபித்தால் சூக்கும அசைவுகள் ஆகாயத்தில் பொருந்தி குலாதாரம் முதலாக நிற்கும் நமசிவய என்ற தேவனைத் தேகத்தில் பொருந்துமாறு செய்துவிடும். நவசிவய என்பது உடம்பில் நிற்கும் நிலையாம். கிரியை முறையில் நமசிவாய என்பதைத் தூல பஞ்சாக்கரம் என்று கூறுவர். வேத நெறியில் உள்ள புறவழிபாடு நமசிவாய ஆகும். ஆகம நெறியில் தியானத்திற்கு உரியது சிவாய நம ஆகும். (சிவாயநம-சூட்சுமம் என்றும், நமசிவாய-ஸ்தூலம் என்றும் பொதுப்படக் கூறுவர்.)
2698. ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும் ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின் ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே.
பொருள் : ஓங்காரத்துடன் கூடிய ஐம்பத்தோர் எழுத்துக்களால் ஆகியதே பொதுவும் சிறப்புமாகக் கூறப்படும் தொன்மைத் தமிழ்மறையும் முறையும் என்ப. மறையை வேதம் எனவும் முறையை ஆகமம் எனவும் கூறுப. இவ் எழுத்துக்களால் ஆகிய பயனை உணர்ந்தபின் இவையனைத்தும் ஒடுங்கி ஐந்தெழுத்தே நின்று நிலவி முதன்மையுறும் என்க. ஐம்பது எழுத்துக்களாவன: அகரம் முதலாக க்ஷகாரம் முடியவுள்ள கிரந்த எழுத்துக்கள் ஐம்பதாம்.
2699. அகாரம் முதலாக ஐம்பத்தொன் றாகி
உகாரம் முதலாக ஓங்கி உதித்து மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி நகார முதலாகும் நந்திதன் நாமமே.
பொருள் : எழுத்துக்கள் அகாரம் முதலாக ஐம்பத்தோர் எழுத்துக்களாகி உகாரம் முதலாக நிலைபெற்று நின்று மகாரத்தில் இறுதியடைந்து தேய்ந்து தேய்ந்து மேல்சென்று நகாரத்தை முதலாகவுடைய நந்தியின் நாமம் நமசிவாய ஆகும். திருமூலர் காலத்தில் தமிழில் உயிர் 16, மெய் 35 ஆக 51 எழுத்துக்கள் இருந்தனவாக ஒரு சாரார் கூறுகின்றனர்.
2700. அகாராதி யீரெட் டலர்ந்த பரையாம்
உகராதி சத்தி உள்ளொளி ஈசன் சிகாராதி தான்சிவம் ஏதமே கோணம் நகாராதி தான்மூல மந்திரம் நண்ணுமே.
பொருள் : திருவருள் கலப்பால் தோன்றும் அகரமுதலிய உயிர் எழுத்துக்கள் பதினாறு. உகராதி சிவபெருமானின் திருவருள் ஆற்றலாகும். அவ்வாற்றல்களின் உள்ளொளியாய் விளங்குபவனும் சிவனே. சிகர முதலாக ஓதப்பெறும் சிவயநம சிவவேதம் என்று சொல்லப்படும் திருவடியுணர்வாகும். இவ்வுணர்வினைப் பெறும் உரிமை வாய்ந்த ஆருயிர் கோணம் எனப்படும். நகரமுதலாக ஓதப்படும் நவசிவய மூலமந்திரம் எனப்படும். இவற்றால் திருவடிப்பேறு எய்தும்.
2701. வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி
ஆய இலிங்கம் அவற்றின்மே லேஅவ்வாய்த் தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல் ஆயதீ ரும்ஐந்தோ டாம்எழுத் தஞ்சுமே.
பொருள் : வாயினால் உச்சரிக்கப்படும் கூத்தப்பெருமான் திருஐந்து எழுத்தாகிய சிவாயநம வாய் கழுத்து இதயம் உந்தியோடு ஆகிய இலிங்கம் என்ற ஐந்து இடங்களிலும் மேலிருந்து ஆகாயமயமாய்ப் படர்ந்து மூலாதாரத்தை அடைந்து முதுகந்தண்டின் வழியாக நேரே ஆகாய வீதியான உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தை அடைந்து, முடிவாவதில் நமசிவாய என்ற சோதி உருவம் இவ்ஐந்து இடங்களினின்றும் எழும்.
2702. கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்
கரணங்கள் விட்டுயிர் தான்எழும் போதும் மரணங்கை வந்துயிர் மாற்றிடும் போதும் அரணங்கை கூட்டுவ(து) அஞ்செழுத்தாமே.
பொருள் : ஊதா, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு, இளநீலம் என்னும் ஏழு நிறக்கதிர்கள் சேர்ந்த நிலையில் எரியொளி உண்டாகும். அவ் எரி மிகுதிப்பட்டு நின்றபோது கருவிக் கூட்டங்களினின்றும் ஆருயிர் எழுந்து புறம் செல்லும் அவ்வுயிர் இறப்பினை மேற்கொண்டு உடம்பினை விட்டு அகலும், அப்பொழுது அவ்வுயிர்க்கு என்றும் பொன்றா அரணப் புகலிடமாக இருப்பது சிவபெருமானின் திருவடி. அத்திருவடியினை ஒருவாமல் மருவு விப்பது திருஐந்தெழுத்தாகும். (மரணம்-யமன், அரணம்-உயிர்க்கு அரணாகிய முத்தி.)
2703. ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர் சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும் வாயுற ஓதி வழுத்தலும் ஆமே.
பொருள் : சூரியனும் சந்திரனும் மிகுந்து மேல் எழும்போது, அழகு பொருந்திய ஒளியாக விளங்கும் மந்திரத்தை யாரும் அறியவில்லை. செம்மை நிறமுடைய குண்டலினி அம்மைக்குரிய பஞ்சாட்சரத்தை வாயினுள்ளே மென்மையாகச் செபித்தல் கூடும். (ஞாயிறு-பிங்கலை. திங்கள்-இடகலை.)
2704. தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்று
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும் வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர் துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே.
பொருள் : தெளிந்த அமுதமயமான ஒளி உண்டாகச் சிவாய நம என்று, உள்ளே ஒளிபெற ஒருதரம் நினையுங்கள். இவ்வாறு வெள்ளம் போன்று பெருகி வரும் சீவ ஒளியை விரும்பிப் பெறாதவர், துள்ளிய நீர் மீண்டும் நீரிலேயே விழுந்து கெடுவதைப் போலப் பிறவிச் சக்கரத்தில் மீண்டும் விழுந்து கெடுவர்.
2705. குருவழி யாய குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை அறுக்க வருவழி மாள மறுக்கவல் லார்கட்(கு) அருள்வழி காட்டுவ(து) அஞ்செழுத் தாமே.
பொருள் : ஒளி நெறியின் இயல்பினை உணர்ந்து நின்று பிறவிக்குக் காரணமான வினைகளை அறுக்க அப்பிறவி வரும் வழியைத் தடைசெய்யும் திறனுடையார்க்கு அருள் நெறியைக் காட்டுவது பஞ்சாட்சரமாகும்.
2706. வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திருவெழுத் தோதும் குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும் குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே.
பொருள் : மனம் தடுமாற்றத்தை அடையும் வண்ணம் தீவினையால் உண்டாகும் துயரம் வந்தபோது, உன்னிடம் செறிந்துள்ள சிவத்தைப் பிரகாசிக்கச் செய்ய திருஐந்தெழுத்தை ஓதுவாயாக. உன்னுடைய விருப்பத்தை அறிந்து ஒலிக்கின்ற திருவடியால் உனக்கு உறுதுணையாக இருப்பதை உணர்த்துவான். இவ்விதமான குறிப்பை அறிபவர் சிவரூபத்தை அமைக்கும். கோன்உரு-சிவரூபம்.
2707. நெஞ்சு நினைத்து தம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று மஞ்சு தவழும் வடவரை மீதுறை அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.
பொருள் : தினமும் தூங்குவதற்கு முன் திருஐந்தெழுத்தை நினைந்து தமது தொண்டை வழியாகப் பிரமாந்திரம் செல்லும் ஊர்த்துவ கதி உணர்வை எழுப்பி, சிவனது திருவடியில் அடைக்கலம் புகுவதாக எண்ணி இருப்பின், பனிப்படலம் போன்ற வெண்மை நிறமுள்ள சகஸ்ரதளத்தில் அஞ்செழுத்தில் விளங்கும் சிவனது அருளைப் பெறலாம். (வடவரை கயிலை எனினுமாம்.)
2708. பிரான் வைத்தஐந்தி பெருமை உணராது
இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர் பராமுற்றும் கீழொடு பல்வகை யாலும் அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே.
பொருள் : பரவியுள்ள பூமி தத்துவம் முழுவதும் கீழோடு எல்லாவற்றையும் தாங்கும் குண்டலினியாகிய அரவினை உள்ளும் புறம்புமாக இயக்குபவனே சிவானாவான். அத்தகைய பெருமான் அருளிய பஞ்சாட்சரத்தின் பெருமையை உணராமல் ஞானச்செல்வம் பெறாத ஏழை மக்கள் அவர்களிடம் பொருந்திய அஞ்ஞானமாகிய இருளை அகற்றவா முடியும்? முடியாது என்றபடி (அராமுற்றும் சூழ்ந்த-ஆதி சேடனால் தாங்கப்படுகின்ற எனினுமாம்.)
6. சூக்கும பஞ்சாக்கரம்
(ஒளியை நினைந்து சிவாய நம என ஓதல் சூக்கும பஞ்சாட்சரம். இஃது ஒளிபெற்ற குருவால் சீடனுக்கு உபதேசம் செய்தல்.)
2709. எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த் தெளியவே ஓதின் சிவாயநம என்னும் குளிகையை இட்டுப்பொன் னாக்குவான் கூட்டையே.
பொருள் : எங்களது பெருமானாகிய சிவனை எள்ளி நகையாடி அவனது இயல்பைப் பற்றி வாதம் பேசுபவர் அறியாதவர். அவ்வாறின்றி அவனை ஒளிமயமாக நினைந்து உருகுகின்ற மனமுடையவராய் அவனே ஒளியாக வெளிப்படுவான் என்று நினைந்து சிவாயநம என ஓதுங்கள். அப்போது இரசவாதிகள் குளிகையை இட்டுச் செம்பைப் பொன்னாக்குவதுபோல் அவன் மலக்குற்றத்தோடு கூடிய உடம்பைப் பொன்னொளி பெறச் செய்வான்.
2710. சிவன் சத்தி சீவன் செறுமலம் மாயை
அவம் சேர்த்த பாசம் மலம்ஐந் தகலச் சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர அவம் சேர்த்த பாசம் அணுககி லாவே.
பொருள் : சிவாயநம என்னும் திருஐந்தெழுத்தில் முறையே சிவன் சத்தி சீவன் அடுகின்ற மலம் மாயை என்பதாக அச்செபத்தால் துன்பத்தைக் கொடுக்கும் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐம்மலங்களும் நீங்க, சிகர வகரத்தில் உணர்த்தப்பெறும் சிவன் சத்தியுடன் யகரமாகிய சீவன் பொருந்த துன்பத்தைத் தரும் பாசம் சீவனைப் பற்றாது போகும்.
2711. சிவனரு ளாய சிவன்திரு நாமம்
சிவன் அருள் ஆன்மாத் திரோதம் மலமாய்ச் சிவன்முத லாகச் சிறந்து நிரோதம் பவம தகன்று பரசிவ னாமே.
பொருள் : சிவசத்தியினது சிவாயநம என்ற பஞ்சாட்சரமானது சிவன் சத்தி ஆன்மா திரோதாயி மாயாமலம் என நிற்கும். சீவன் சிகாரத்தை முதலாகச் செபிக்கும் முறையில் விளைகளை ஒழித்தலோடு பிறப்பு நீங்கிப் பரசிவனாகும். சிவயநம என்றபோது சிவ பஞ்சாட்சரமாகவும், சிவாயநம என்ற போது சத்தி பஞ்சாட்சரமாகவும் கொள்ள வேண்டுமென்பது ஒருசாரார் கொள்கை.
2712. ஓதிய நம்மலம் எல்லாம் ஒழிந்தட்டுஅவ்
ஆதி தனைவிட் டிறைவன் அருட்சத்தி தீதில் சிவஞான யோகமே சித்தக்கும் ஓதும் சிவாய மலம்அற்ற உண்மையே.
பொருள் : மேற்கூறியவாறு சிவாயநம என்று கணிப்பதில் நம்மால் குறிக்கப்பெறும். மலமாகிய இருள் அகன்று, அவ்ஆதியாகிய குண்டலினி சக்தியை விட்டுச் சிற்சக்தியால் ஒளிமயமாகப் பிரகாசிப்பதில் தீமையில்லாத சிவஞான யோகம் கைகூடும். அப்போது சிவாய என்ற ஒளியைப் பூசியுங்கள். இதுவே மலம் நீங்கிய உண்மை நிலையாம்.
2713. நமாதி நனாதி திரோதாயி யாகித்
தமாதிய தாய்நிற்கத் தாள்அந்தத் துற்றுச் சமாதித் துரியந் தமதாகம் ஆக நமாதி சமாதி சிவஆதல் எண்ணவே.
பொருள் : நகரம் முதல்முறையாகவுடைய சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆதாரங்களில் நனவு முதலிய நிலைகளில் தொழிற்படும் உணர்வு மறைப்புச் சக்தியால் இயங்கி, சீவரது ஆதிசக்தியின் நிலையான ஒளியில் பொருந்த நனவாதி நிலைகளில் பொருந்திய உணர்வு முடிவடைந்து சுத்த வித்தியா தத்துவம் சிரசின் மேல் விளங்கித் துரிய நிலையைத் தம்மிடத்தே பெற்று, மூலாதாரம் முதல் சோதியாக விளங்குவதில் சமாதியுற்றுச் சிவாயநம என எண்ணுவதில் சிவமாவர். சிவய சிவ என எண்ணுவதே சிறப்பாகும் எனினுமாம்.
2714. அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுறை மாயை திரிமலம் நீங்கச் சிவாய என்று ஓதும் அருவினை தீர்ப்பதுவும் அவ்வெழுந் தாமே.
பொருள் : அருளின் பேதமாகிய சத்திக்கூட்டமும் அத்தனாகிய சிவனும் கலப்பதினால் ஆன்மாவைத் தேகத்தோடு பொருந்தும்படி செய்தவராவர். அவ்வுடம்பு மாயையில் தங்கும். ஆனால் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களும் விலகச் சிவாய என்று ஒளி உருவாகப் பூசை செய்யுங்கள். அப்போது நீங்குதற்குரிய வினைக் கூட்டங்களை அகற்றுவது சிவாய ஆகும்.
2715. சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் ளடங்கச் சிவசிவ ஆய தெளிவின்உள் ளார்கள் சிவசிவ மாகும் திருவரு ளாமே.
பொருள் : வாய் பேசா மௌனிகளும் சிவசிவ என்று எண்ணுவதில் உள்ள நன்மையை அறிகிலர். சிவ சிவ என்று எண்ணுவதோடு சுவாச கதியும் இயங்காமல் இலயமடைய சிவமும் சத்தியுமாய மகாமனுவைத் தெளிந்தவர்கள் திருவருள் பெற்றுச் சிவசத்தியாகவே அமைவர்.
2716. சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே.
பொருள் : முற்பிறவியில் செய்த தீவினையின் காரணமே சிவசிவ என்று ஓதாமல் இருப்பதாகும். எத்தகைய தீவினையாளரும் சிவசிவ என்று கணிப்பாராயின் அவர் செய்த தீயவினைகள் கெட்டு ஒழியும், மேலும் அவர்கள் தேவசாரீரம் பெற்று விளங்குவர். அவர்களுக்கு அவ்வாறு கணிப்பதால் சிவகதியும் அமையும்.
2717. நமஎன்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவஎன்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப் பவமது தீரும் பரிசும்அ தற்றால் அவமதி தீரும அறும்பிறப் பன்றே.
பொருள் : சிவாயநம என்ற பஞ்சாக்கரத்தைச் செபிக்கும் முறையில் நம என்ற எழுத்துக்களை நாவினுள் கண்டப் பிரதேசத்தில் நிறுத்தி, சிவ என்ற நாமத்தைச் சிரசின் மேல் மன மண்டலத்தில் நினைக்க, பாவம் நீங்கும். தன்மையும் அதுவாம். அவ்வாறாயின் அஞ்ஞானம் நீங்கும்; பிறப்பும் அகலும்.
7. அதிசூக்கும பஞ்சாக்கரம்
(சிவாய சிவசிவ என்பது அதிசூக்கும பஞ்சாக்கரம். அஃதாவது இருளை விட்ட ஆன்மா சிவசத்தியைத் தாரகமாகக் கொண்டு அழிவற்ற நிலைபெறும் என்பதாம். ஒளியில் நினைப்பும் அற்று அடங்கி நிற்றலே அதிசூக்கும பஞ்சாக்கர தரிசனமாகும்.)
2718. சிவாய நமஎனச் சித்த ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாகிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.
பொருள் : முற்கூறியவாறு சிவாயநம என்று சித்தத்தைப் புறத்தே செல்லாமல் அகநிலையதாக்கி, மலத்தாலாகிய துன்பத்தை நீக்கிச் சிவத்துக்கு அடிமையாக்கி, சிவாய சிவசிவ என்று பலமுறை, சித்தத்தில் எண்ணி அச்சம் நீங்க ஆனந்தம் உண்டாகும். (அவாயம்-அபாயம்.)
2719. செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம்
அஞ்சண வும்முறை ஏறிவழிக்கொண்டு சுஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே.
பொருள் : அதிசூக்கும பஞ்சாக்கர தரிசனத்தால் மூலாதாரத்திலுள்ள அக்கினி சூரிய மண்டலத்தைப் பேதித்துச் சென்று, தோளுக்கு மேல் விளங்கும் சந்திர மண்டல ஒளியில் ஐயறிவுகளும் பொருந்தும் முறையில் போய், யோக நித்திரையில் பொருந்தியிருக்கும் அவன், உலகை மறந்திருக்கும் அப்போது சிவத்தை நெஞ்சில் இடமாகக் கொண்டு பிரியாதிருக்கும் நிலை அடையலாம்.
2720. அங்கமும் ஆகம வேதமும் ஓதினும்
எங்கள் பிரான்எழுத் தொன்றில் இருப்பது சங்கைகெட்டு அவ்வெழுத் தொன்றையும் சாதித்தால் அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.
பொருள் : வேதம் ஆகமம் வேதாங்கம் ஆகியவற்றை முறையாக ஓதினாலும், அவை யாவும் சிவபிரானது எழுத்து ஒன்றாகிய சிகாரத்தில் இருப்பனவாம். சந்தேகம் நீங்கி அவ்எழுத்தின் உண்மையை உணர்ந்து சாதனை செய்தால் அதுவே முத்திக்கரையினை உடைவித்த அருமையான தோணியாதல் விளங்கும். (அங்கரை அழகிய முத்திக்கரை.)
2721. பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர் எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே.
பொருள் : பழமையான வேத சிரசினுள்ளே ஐந்து எழுத்துக்களாகிய கனி முதிர்ந்து கிடக்கின்றன. ஆனால் அக்கனியை உண்பதற்கு அதனைச் சிந்தித்து அறிதுயிர் கொள்ளும் செயல் அறிபவர் இல்லை. மூடர்கள் அதன் பெருமையை அறியாமல் அஃது எழுத்துக்களால் ஆனவைதானே என்று கூறுவர். அஃது அவரது தலைஎழுத்தை மாற்றிப் படைக்கும் எழுத்து என்பதை அறியார். (ஐந்து பஞ்சாட்சரம். எழுத்து-சி.)
8 ஏ. திருக்கூத்து தரிசனம்
(திருக்கூத்து-ஒளி அசைவு தரிசனமாவது, அவ்ஒளியில் திளைத்திருத்தல். இது பஞ்சாக்கர செபத்தால் அமைவது இவ்ஒளி அசைவே எல்லா அசைவுக்கும் காரணமாம்.)
2722. எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.
பொருள் : சிவம் அகண்டமாய் எங்கும் வியாபித்துள்ளதுபோல் அதன் சத்தியும் அண்டமாய் உள்ளது. அஃது எங்கும் பரந்துள்ள அறிவாகாயத்தில் நிறைந்து எவ்விடத்தும் அசைவினை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. சிவம் அகண்டமாய் எங்கும் வியாபித்துள்ளமையால், சிவன் யாவற்றிலும் பொருந்திச் சிருஷ்டியாதி ஐந்தொழிலைத் தனது சத்தியாலே செய்கிறான்.
2723. சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனை
சொற்பத மாய்அந்தச் சுந்தரக் கூத்தனை பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.
பொருள் : சிவானந்தத்தை விளைவிக்கும் கூத்தனும் சொல்பதமாகிய பிரணவத் தொனியில் விளங்கும் அழகிய கூத்தனும், சிரசின்மேல் ஆகாயத்தில் பொன் ஒளியில் விளங்கும் கூத்தனும், நெற்றிக்கு நேரே பொன் ஒளியில் விளங்கும் கூத்தனும், சொல் ஒண்ணாத பரவச நிலையை அளிக்கும் கூத்தனும் ஆகிய, அறிவுருவாகிய சோதிப் பிழம்பாகிய சிவனை யாரால் அறிய முடியும்? (இம்மந்திரத்தில் 1. சிவானந்தக்கூத்து, 2. சுந்தரக்கூத்து, 3. பொற்பதிக்கூத்து, 4. பொன்தில்லைக் கூத்து, 5. அற்புதக்கூத்து எனச் சிவநடனம் ஐவகைப்படும் என்பதை உணர்த்திற்று.)
8 பி. சிவானந்தக்கூத்து
(அஃதாவது சிவானந்தத்தை விளைவிக்கும் கூத்து.)
2724. தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர் ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்கு அங்கு ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.
பொருள் : தனக்கு ஒரு அழிவில்லாச் சத்தாகிய ஆனந்த சத்தியின் இடமாக, இன்பமாகிய தேனைப் பிலிற்றும் ஆனந்தத்தை விளைவிக்கும் பெரிய கூத்தினைக் கண்டவர்களே சீவ போதம் கடந்து விளங்கும் திருக்கூத்தை இயற்றும் நம்பியாகிய சிவபெருமானுக்கு அவ்விடத்து ஆனந்தமே திருக்கூத்து ஆடுதற்கு இடமாயிற்று.
2725. ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்இயம் ஆனந்த வாச்சியம் ஆனந்தம் ஆக அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்தகந் தானுக்கே.
பொருள் : ஆகாய ஒளி அணுக்களின் நடனம் ஓர் ஆனந்தம்; ஆகாயத்திலுள்ள தொனி ஆனந்தம்; ஆகாய அணுக்கள் ஒன்றோடொன்று உரசுவதால் உண்டாகும் தொனியும் ஆனந்தம்; ஆகாயப் பொருளாக விளங்கி ஆனந்தத்தை விளைவிக்கும் தோத்திரங்களின் ஞானமும் ஆனந்தமாக; ஆனந்தத்திலிருந்து நடக்கும் சிவபெருமானுக்கே அசைவனமும் அசையாதனவுமாகவுள்ள யாவும் ஆனந்தமாகும். (பல்லியம்-வாத்தியங்கள். வாச்சியம்-அபிநயம்.)
2726. ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக் களியார் பரமும் கருத்துறை அந்தத் தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.
பொருள் : அறிவுப் பேரொளியாய் விளங்கும் சிவமும், தத்துவங்களை நீங்கிய நிலையில் என்றும் உள்ளதாகிய ஆன்மாவாகிய பரமும் ஆருயிர்க்கு அன்பு செய்யும் சிவகாமியாகிய இன்பம் பொருந்திய சத்தியாகிய பரமும் ஆகிய மூன்றும் கருத்தில் உறைகின்ற அந்த ஆனந்த எல்லையே சிவானந்த நடனத்தின் பயனாகும்.
2727. ஆன நடமைந்து அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம் ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.
பொருள் : உருவமில்லாத பெருமான் உருவை எடுத்துக் கொண்டு சீவர்கள் பொருட்டுப் புரிகின்ற நடனம் ஐந்தாகும். அவ்வாறான நடனத்தைப் புரிந்து ஐந்தொழிலை நடத்துவதற்காக அத்தொழிலைத் தனது சத்தியால் சிருட்டியாதி செய்து தேன் போன்ற மொழியினையுடைய உமாபாகன் நடனத்தைச் செய்தருளுவான். (ஐங்கருமத்தாக-படைப்பாதி ஐந்து தொழில்களுக்காக.)
2728. பூதாண்டம் பேதாண்டம் போகாண்டம் யோகாண்டம்
மூதாண்ட முத்தாண்டம் மோகாண்ட தேகாண்ட தாகாண்டம் ஐங்கரு மத்தாண்ட தற்பரத்து ஏகாந்த மாம்பிர மாண்டத்த தென்பவே.
பொருள் : ஐம்பூதங்களால் ஆகிய அண்டம், வெவ்வேறு வகையாகப் பூதங்கள் கலப்பதால் ஆகிய அண்டம், நல்வினை தீவினைக்கு ஏற்ப அனுபவங்களைப் பெறும் அண்டம், யோக பலத்துக்கு ஏற்ப யோகிகள் நிலைபெறும் அண்டம், புனர்உற்பவ காலத்துச் சீவர்கள் பிறப்பெடுக்கும் பழமையான அண்டம், சிவப்பேறு பெற்று மீளாது உறையும் முத்தர்கள் வதியும் அண்டம், ஆசையுள்ள உயிர் தேகம் விட்டபின் உறையும் அண்டம், பூத உடலோடு சீவர்கள் வாழும் அண்டம், மிகுந்த வேட்கையுடையார் வாழும் அண்டம் ஆகிய ஒன்பது அண்டங்களும் ஐந்தொழிலும் தொடர்ந்து நடைபெற்றுவரும் சிவத்தின் ஒரே ஆளுகைக்கு உட்பட்ட ஏகாந்தமாம். இவை தனியாக இருக்கக்கூடிய பிரமாண்டத்தின் கண்ணவாம். இவையனைத்தும் சிவனது ஆளுகைக்கு உட்பட்டவை.
2729. வேதங்க ளாட மிகும்ஆ கமமாடக்
கீதங்க ளாடக் கிளாண்டம் ஏழாடப் பூதங்க ளாடப் புவனம் முழுதாட நாதன்கொண் டாடினான் ஞானானந் தக்கூத்தே.
பொருள் : வேதங்களின் அறிவு ஆட, மிகுந்திருக்கின்ற ஆகமங்களின் அறிவு ஆட, கீதங்களின் அறிவு ஆட, ஆதார சக்கரங்களினால் வரும் ஏழுவகை அறிவும் ஆட, ஐம்பூத காரிய அணுக்களின் அறிவு ஆட, இருநூற்று இருபத்து நான்கு புவனங்களில் பெறும் அறிவு ஆட, ஞானத்தை அளிக்கும் ஆனந்தக் கூத்தைச் சிவன் நாதசத்தியைக் கொண்டு ஆடினான். (ஆடுதல்-தொழிற்படுதல்; புடைபெயர்தல். வேதம்-வாழ்க்கை நூல் ஆகமம்-வழிபாட்டு நூல்.)
2730. பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தில் மிகும்ஆ கமம்ஐந்தில் ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப் போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே.
பொருள் : ஐம்பூதங்களிலும், ஐம்பொறிகளிலும், ஐம்புலன்களிலும், ஐந்து வேதங்களிலும் மிகுந்த எண்ணிக்கையுடைய ஆகமங்களிலும் ஓதுதற்குரிய பல கலைகாலம் ஊழிகளோடு பல்வகை அண்டங்களிலுள்ள ஐவகை அறிவுகளிலும், கலந்த சித்த மூர்த்தியாகிய சிவன் அவற்றினூடே ஆடிக் கொண்டிருக்கின்றான்.
2731. தேவர் அசுரர்நரர் சித்தர்வித் யாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள் தாபதர் சாத்தர் சமயம் சராசரம் யாவையும் ஆடிடும் எம்இறை ஆடவே.
பொருள் : ஒளியுடலில் சஞ்சரிப்போர், வானுலக வாசிகள், மானிடர், அறிவு உடலில் சஞ்சரிக்கும் சித்தர், கந்தருவர், பிரமன், விஷ்ணு உருத்திரர் ஆகிய மூவர், பன்னிரு ஆதித்தர், பதினேர் உருத்திரர், எட்டு வசுக்கள், இரு மருத்துவர் ஆகிய முப்பத்து மூவர், தவசிகள் ஏழு முனிவர்கள் ஆகியோர் சமயம், இயங்கும் உயிர் வருக்கம், இயங்கா உயிர் வருக்கம் ஆகிய யாவும் எம்இறையாகிய சிவன் ஆட ஆடிடும்.
8 சி. சுந்தரக்கூத்து
(அஃதாவது, சொற்பதமாகிய பிரணவத்தில் நடிக்கும் அழகிய கூத்து)
2732. அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல் கண்டங் கரியான் கருணைத் திருவுருக் கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.
பொருள் : மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் ஈறாக உள்ள ஏழு அண்டங்களுக்கு அப்பாலாய் சதாசிவத்தின் உச்சியின்மேல் விளங்கும் சத்தியின் இடமாக நீலகண்டப்பெருமான் கருணையே வடிவாகக் கொண்டு அவ்விடத்தில் தன்னில் பிரிந்த சத்தியாகிய உமையம்மை காணும்படியாகத் திருக்கூத்தை விரும்பி ஆடினான்.
2733. கொடுகொட்டி பாண்டரம் கோடுசங் காரம்
நடம்எட்டோடு ஐந்து ஆறு நாடியுள் நாடும் திடம்உ ற்றெழும் தேவ தாருவனத் தில்லை வடம்உற்ற மாவன மன்னவன் தானே.
பொருள் : கொடுகொட்டி, பாண்டரங்கம், கோடு, சங்காரம் ஆகியவற்றையும் எட்டு வகையான நடனத்தோடு ஐந்து வகை நடனத்தையும் ஆறு வகையான நடனத்தையும் இடை, பிங்கலை, சுழுமுனை வழியாகக் கண்டு அறியவும் இனி தேவதாரு வனம், தில்லை வனம், ஆலவனம் ஆகியவற்றிலும் நடராசப்பெருமான் சிறந்து விளங்குவான்.
2734. பரமாண்டத் துள்ளே பராசத்தி பாதம்
பரமாண்டத் துள்ளே படரொளி ஈசன் பரமாண்டத் துள்ளே படர்தரு நாதம் பரமாண்டத் துள்ளே பரன்நட மாடுமே.
பொருள் : பரமாண்டம் எனப்படும் அப்பால் அண்டத்தூடு பராசத்தியாகிய வனப்பாற்றலின் திருவடி காணப்படும். அவ்வண்டத்து ஊடு நனிமிகு ஒளியுடைய ஆண்டவன் காணப்படுவன். அதனூடு ஓசை மெய்யாகிய நாதம் காணப்படும். அவ் அண்டத்தூடு பரனாகிய சிவபெருமான் நடமாடி அருள்கின்றனனன்.
2735. அங்குசம் என்ன எழுமார்க்கப் போதத்தில்
தங்கிய தொம்தி எனுந்தாள ஒத்தினில் சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல் பொங்கிய காலம் புகும்போதல் இல்லையே.
பொருள் : அங்குசம் போன்று எழுகின்ற நாத சம்மியத்தில், சீவ அறிவில் பொருந்திய தொம்தீம் எனத் தட்டும் தாள ஒத்தினில், சங்கரன் சுழுமுனையாகிய மூல நாடியில் நிலை பெற்று ஆடல்புரியும் காலத்தில் மனம் புறம் போதலை விட்டு அடங்கிவிடும். (தொந்தி-தாள ஒலி, சங்கரன்-சுகத்தைச் செய்பவன், சிவன்.)
2736. ஆளத்தி ஆடிப் பின்நவக் கூத்தாடிக்
காலத்தீ ஆடிக் கருத்தில் தரித்தாடி மூலச் சுழுனையுள் ஆடி முடிவில்லா ஞாலத்துள் ஆடி முடித்தான்என் நாதனே.
பொருள் : சீவர்களாகிய பசுக்களின் அறியாமையைப் போக்க விரும்பி ஆடி, அறிவு பெற்றபின் சீவர்களிடம் ஒன்பது வகையாகப் பொருந்தி ஆடி, சீவர்களிடம் அஞ்ஞானமான காட்டில் விரும்பி ஆடி, அவரது கருத்தினில், பொருந்தி ஆடி மூன்று நாடிகளும் பொருந்தும் இடமான சுழுமுனையுள் ஆடி எல்லையில்லாத சிவஞானத்தில் ஆடல் பொருந்தி எனது சீவ போதத்தைக் கெடுத்து அருளினான் என் நாதனாகிய சிவபெருமான்.
2737. சத்திகள் ஐந்தும் சிவபேதந் தாம்ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம்எட்டும் சித்திகள் எட்டும் சிவபதம் தாம்எட்டும் சுத்திகள் எட்டீசன் தொல்நட மாடுமே.
பொருள் : ஐந்து சத்திகளிலும் சிவபேதங்களாகிய ஐந்திலும், அஷ்டமூர்த்தம் லயமடையும் நிலை எட்டிலும், அந்நிலையில் அறிவு குன்றாமல் நிற்கும் நிலைகள் எட்டிலும், அணிமாதி சித்திகள் எட்டிலும், அஷ்டமூர்த்தத்தில் ஒன்றுக்கொன்று மேலான நிலைபொருந்திய நிலை எட்டிலும், சுத்திகள் எட்டிலும் இறைவனாகிய சிவன் பொருந்தி நடமாடுகின்றான்.
2738. மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் ஏழும் சிவபாற் கரன்ஏழும் தாகங்கள் ஏழும் சாந்திகள் தாம்ஏழும் ஆகின்ற நந்தியடிக்கீழ் அடங்குமே.
பொருள் : மேகங்கள் ஏழும், கடல்கள் ஏழும், தீவுகள் ஏழும், தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் ஆகியவற்றின் உடல்கள் ஏழும், சிவபாஸ்ர உருவங்கள் ஏழும், ஏழு நாவினையுடைய தீயும், ஏழுவகை அடக்கமும் எல்லாமாய் ஆகின்ற சிவபிரானது திருவடியின்கீழ் அடங்கும்.
8 டி. பொற்பதிக்கூத்து
(சிரசின் மேல் பொன்ஒளியில் விளங்குவது பொற்பதிக்கூத்து. பொற்பதி-பொன் ஒளி விளங்கும் சிரசு. இதுவே பொன்னம்பலமாகும்.)
2739. தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில்
அற்புத மானஓர் அஞ்சு முகத்திலும் ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள் தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.
பொருள் : சதாசிவத் திருமேனியில் அற்புதமான அஞ்சுமுகத்திலும் ஒப்பற்ற பேரின்பம் தரவல்ல உருவம், அருவுருவம், அருவம் ஆகிய நலந்தரு பேதத்துள்ளும் அந்த மேலான சிவன் பொருந்தி ஒப்பற்ற நடனத்தைப் புரிந்தருள்கின்றான்.
2740. அடியார் அரன்அடி ஆனந்தங் கண்டோர்
அடியா ரவர்அர னத்தனரு ளுற்றோர் அடிஆர் பவரே அடியவ ராவர் அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.
பொருள் : சிவபெருமான் திருவடி இன்பத்தினைத் திருவருளால் கண்டோர் மெய்யடியார் ஆவர். சிவபெருமானின் திருவடிக் கீழுறப் பெற்றோர் அருள் அடியார் ஆவர். திருச்சிற்றம்பலமாகிய பொன்னம்பலத்தின்கண் நிகழும் திருக்கூத்தினைக் கண்டோர் சிவனடியாராவர். இவர்கள் மெய்யே அருள்திரு மேவு சிவம் நான்மை முன் பெய்யடியார் நானிலையர் பேசு எனப்படுவார்.
(அத்தர்-சிவன் அடி, ஆர்பவர்-அடி சேர்ந்தார்.)
2741. அடங்காத என்னை அடக்கி அடிவைத்து
இடங்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு நடந்தான் செயும்நந்தி தன்ஞானக் கூத்தன் படந்தான்செய் உள்ளுட் படிந்திருந் தானே.
பொருள் : இந்திரிய வயப்பட்டு மனம் அடங்கப் பெறாதிருந்த என்னை அடங்கும் படியாகத் தனது திருவடியைப் பதிப்பித்து, சீவ சத்தியைப் பெருக்கும் ஒளியை நல்கிப் பேரின்பத்தில் என்னைத் திளைக்கச் செய்து, அவ்வொளியில் நிலைபெற்று நன்மையைத் தரும் ஞான நடனத்தைப் புரியும் கூத்தப்பிரான் சித்திரம்போல் என்னை அசைவற்று இருக்கச் செய்து எனது உள்ளத்தில் நிலைபெற்று விளங்கினான். (நிட்டையில் கூட்டுவித்தனன் என்பதாம்.)
2742. உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனை
செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனை சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை இன்புறு நாடிஎன் அன்பில்வைத் தேனே.
பொருள் : ஆகாயத்தில் நடனம் செய்பவனை உத்தமரிடம் நடனம் செய்பவனை, செம்மையாகிய பொன்னொளி விளங்கும் ஆகாயத்தில் பிரபஞ்சப்போர் நடத்தும் சீவனுக்குத் துணை வீரனாக இருந்து நடிப்பவனைச் சீவர்களோடு உறவு கொண்டு நடிப்பவனை, தத் என்னும் சொல்லுக்குப் பொருளாய் ஆன்மாவில் நடிப்பவனை இன்பம் பெற வேண்டி எனது அன்பில் பதித்து வைத்தேன். (சேவகன்-துணை வீரன்.)
2743. மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனைச் சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை ஆணிப்பொற் கூத்தனை யாரறி வாரே.
பொருள் : மூலாதார சுவாதிட்டானச் சக்கரங்களில் செவ்வொளியில் நடிப்பவனும், செறிவுடைய அஞ்ஞான இருளில் அநாகதச் சக்கரத்தில் நடிப்பவனும், பல நிறங்களோடு விளங்கும் சகஸ்ரதளத்தில் ஒளிக் கிரணங்களோடு கூடி நடிப்பவனும் துவாத சாந்தவெளியில் சோதியாக விளங்கிச் சிவானந்தத்தை விளைக்கும் கூத்தனும், அங்கு மாற்றுக் குறையாத பொன்னொளியில் விளங்குபவனும் ஆகிய கூத்தப்பெருமானை யார் முழுதும் உணர்ந்து உரைக்க வல்லவராவர்.
2744. விம்மும் வெருவும் விழும் எழும் மெய்சோரும்
தம்மையும் தாம்அறி யார்கள் சதுர்கெடும் செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள் அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே.
பொருள் : நன்மை மிக்க ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் விளங்கும் நடனத்தில் அத்திருவடிக் கமலத்துக்கு அன்பு கொண்டவர்க்கு, காதலால் மிக்க மகிழ்ச்சி உண்டாகும். பின் பயம் உண்டாகும். பத்தியால் விழுதலும் எழுதலும் ஆகும். உடல் தளர்ச்சி பெறும். தம் பஞ்சேந்திரிய அறிவு கெட்டுத் தம் நினைடு அறும். அதனால் தமது சாமர்த்தியமும் குறைந்துபோகும். திருஅம்பல நடனத்தைக் கண்டவர்க்கு உண்டாகும் மெய்ப்பாடுகள் கூறியவாறு.
2745. தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன் ஓட்டறும் ஆசை அறும் உளத் தானந்த நாட்டம் முறுக்குறு நாடகம் காணவே.
பொருள் : சிவநடனத்தைத் திருஅம்பலத்தில் காணவே புறம் சென்று ஒன்றைத் தேட வேண்டும் என்ற எண்ணம் கெடும். நாடுகின்ற சிந்தை ஒன்றைச் சீர்தூக்கிப் பார்க்கும் செயலை விடுத்து நிற்கும். உடல் நினைவின்மையால் உடலால் வரும் தளர்ச்சி நீங்கும். பிராணன் பிரமப் புழையை நோக்கிப் பாய்வதில் உண்டாகும் உணர்வில் புத்தி செம்மையாக இருக்கும். அதனால் ஐம்புனல் அறிவும் பொருந்தா. மனம் புறம் செல்லாமையின் ஒருவித ஆசையும் உண்டாகாது. உள்ளத்தில் ஆனந்தம் பெருகும். உயிரில் சிவ நடத்தைக் காண விருப்பம் மேலும் முதிர்ந்து நிற்கும். (இதுமுன் மந்திரத் தொடர்ச்சியாக மெய்ப்பாட்டு அனுபவம் கூறியதாம்.)
2746. காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி நாளுற அம்பலத் தேஆடும் நாதனே.
பொருள் : காளியுடன் ஆடி, பொன்மலையில் நடனம் ஆடி, பேய்களுடன் நடனம் ஆடி, பூமியில் நடனம் ஆடி, நீண்டு கிடக்கும் நீரிலும், நெருப்பிலும், காற்றிலும் பரந்துள்ள ஆகாயத்திலும் நடனம் ஆடி, சீவர்கள் நீண்ட வாழ்நாள் பெற, ஆகாயத்தே இருந்து நடனம் புரிபவன் சிவனாவான். ( காளி-வாயுவைச் செலுத்தும் சத்தி.)
2747. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும் சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே.
பொருள் : சகஸ்ர தளமாகிய மேருவில் சுழுமுனை நாடியும் மேல் விளங்கும் இடை நாடியும் பிங்கலை நாடியும் ஆகிய மூன்றும் மிக்குள்ள ஆகாயத்தில் பூமியின் தொடர்பின்றி விளங்கும் தீவாகிய இலங்கை போல் உடம்பின் தொடர்பின்றி விளங்கும் இடைகலை பிங்கலையாகிய இருநாடிகளும் இதயமாகிய தில்லை வனத்தை வளைத்துக் குளிர்ச்சி பொருந்திய சகஸ்ரதளமாகிய மலை உச்சியில் ஏறிச் சுழுமுனையோடு விளங்கும். ஆதலால் இதயமும் சகஸ்ரதளமும் ஆகிய இரண்டும் சிவன் விளங்கும் இடங்களாகும்.
2748. பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம் பாதி மதியோன் பயில்திரு அம்பலம் ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே.
பொருள் : பூமியும் மேருவும் அதன் புறத்துள்ள தென்பாகமும் சொல்லப் பெறுகின்ற இடைநாடியும், பிங்கலை நாடியும் ஒளி பொருந்திய சுழுமுனை நாடியும் ஆகும். இச்சுழுமுனை நாடியே அர்த்த சந்திரனை அணிந்த சிவபெருமான் நடிக்கின்ற திருஅம்பலமாகும். பூதாண்டத்தின் எல்லையும் இதுவே ஆகும்.
8 இ. பொற்றில்லைக் கூத்து
(ஆறு ஆதாரங்களின் ஒளிகளும் ஒன்றாகச் சேர்ந்து, நெற்றிக்கு நேரே விளங்கும் பொன் ஒளியில் ஆடும் கூத்து, பொன்தில்லைக் கூத்து.)
2749. அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத் தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக் கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.
பொருள் : மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் முடியவுள்ள ஏழு அண்டங்களும் அழகிய பொன்னம்பலமாக, பழமையான ஐவகை ஆகாயங்களும் அவன் நடிக்கும் இடமாக அக்கினி கலையில் விளங்கும் சத்தியே திருஅம்பலமாகக் கொண்டு மேலான சோதி வடிவான பெருமான் கூத்தை விரும்பி நடிக்கின்றனன்.
2750. குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்றிசை சேர்ந்து புரானந்த போகனாய்ப் பூவையும் தானும் நிரானந்த மாக நிருத்தஞ்செய் தானே.
பொருள் : குருவால் உணர்த்தப் பெற்று இன்பமாய் விளங்கும் சந்திர மண்டல ஒளியாய் மிகுந்த நன்மையைத் தரும் மேலான ஆனந்தத்தைப் பெருக்கி, சந்திர கலையில் விளங்கும் சிவம் வலப்பால் சூரிய கலையை அடைந்து உடம்பில் இன்பம் அளிப்பனவாய் சத்தியோடு இருந்து நித்தியமான இன்பத்தை விளைக்கும் நடனத்தைச் செய்தருளினான். (குரு+ஆனந்தம்=குரானந்தம்.)
2751. ஆதி பரன்ஆட அங்கை அனலாட
ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப் பாதி மதியாடப் பாராண்டம் மீதாட நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.
பொருள் : ஆதிபரனாகிய சிவபெருமான் திருவுள்ளக் குறிப்பு நேர்பட அவன் திருஅங்கையின் கண் விளங்கும் கனலாடிற்று. அனைத்திற்கும் அருட் புனலிடமாக விளங்கும் திருச்சடையும் ஆடிற்று. அச்சடை எல்லாராலும் போற்றிப் புகழப்படுவது ஒன்று. அத்திருச்சடையின் கண் காணப்படும் உன்மத்தம் ஆகிய ஊமத்த மலரும் ஆடிற்று. திருச்சடையில் திகழும் ஆருயிராகிய பாதி மதியும் ஆடிற்று. நிலஅண்டங்களும் ஆடின. அருஞ்சைவர் கொள்ளும் முப்பத்தாறாம் மெய்யாகிய நாதத்தின்கண் திருவருள் ஆற்றலுடன் சிறந்தாடினன். (இதனையே நாதாந்த நடனம் என்ப.)
2752. கும்பிட அம்பலத் தாடிய கோநடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம் செம்பொரு ளாகும் சிவபோகம் சேர்ந்துற்றால் உம்பர மோனஞா னாந்தத்தின் உண்மையே.
பொருள் : சீவர்கள் வணங்கி உய்யுமாறு அவரவர் சிதாகாய மண்டலத்தில் ஆடிய மேலான நடனம், அழகிய சிவபரன் அகில அண்டங்களிலும் ஆடுகின்ற நடனமாகும். இதுவே செம்பொருள் நிலையாகும். இந்நிலையைப் பொருந்தி நின்றால் உம்முடைய பரநிலையில் மோனம் கைவரப்பெற்று ஞானத்தின் முடிவாம் பேறு உண்மையாகும்.
2753. மேதினி மூவேழ் மிகும்அண்டம் மூவேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு நாதமொடு அந்தம் நடனாந்தம் நாற்பதம் பாதியோ டாடும் பரன்இரு பாதமே.
பொருள் : சிவபெருமானது இரு திருவடிகள் மூவேழ் உலகினையும் ஆட்டுவிப்பதாகும். ஓரேழ் அண்டத்தையும் ஆட்டுவிப்பதும் அவையே. கைக்கொள்வார் தகுதிக்கேற்ப படி முறை போன்று விரிந்த நெறிகள் நூற்று எட்டு, அவற்றையும் அவன் திருவடிகளே ஆட்டுவிக்கின்றன.
2754. இடைபிங் கலைஇம வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை கடவும் திலைவனம் கைகண்ட மூலம் படர்வொன்றி யெண்ணும் பரமாம் பரமே.
பொருள் : உடம்பிலுள்ள இடை பிங்கலையாகிய இரண்டும் சிரசில் இடப்புறம் பனிப்படலம் போல் விளங்கும் இமயமும், வலப்புறம் தீவுபோல் விளங்கும் இலங்கையுமாகும். நடுவாகிய சுழுமுனை பரவெளியாகிய மேருவாம். இவற்றிற்கு வேர் யாவற்றையும் செலுத்தும் இதயா காசமான தில்லை வனமாகும். இத்துணையும் வியாபித்து மேல் செலுத்துபவன் பரன் என்னும் சிவமேயாகும்.
2755. ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்பேழும் பேறான வேதா கமமே பிறங்கலால் மாறான தென்திசை வையகம் சுத்தமே.
பொருள் : பாரதத்தின் தென்கோடியான கன்னியாகுமரி, காவிரி, இவற்றுக்கு வேறான ஒன்பது தீர்த்தங்கள் ஏழுமலைகள் ஆகிய இடங்களில் பெறுதற்கரிய வேதங்களும் ஆகமங்களும் தோன்றுதலால் நிலையான பூமியின் தென்பாகம் சுத்தமுள்ளதாகும்.
2756. நாதத் தினில் ஆடி நாற்பதத் தேஆடி
வேதத் தினில் ஆடித் தழல்அந்தம் மீதாடிப் போதத் தினில் ஆடிப் புவனம் முழுதாடும் தீதற்ற தேவாதி தேவர் பிரானே.
பொருள் : தீமையே யில்லாத தேவ தேவனாகிய சிவபிரான் நாதத்தொனியில் ஆடி, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களிலும் ஆடி, வேதத்தில் ஆடி, அக்கினி கலையின்மீது ஆடி, சீவரது அறிவினில் நின்று ஆடி இருநூற்று இருபத்து நான்கு புவனங்களிலும் பொருந்தி ஆடினான்.
2757. தேவரொ டாடித் திருவம் பலத்தாடி
மூவரொ டாடி முனிகணத் தோடாடிப் பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக் கோவிலுள் ளாடிடும் கூத்தப் பிரானே.
பொருள் : தேவர்கள் அறிவினில் ஆடி, அறிவு ஆகாயத்தில் ஆடி, பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகியோரிடம் நின்று ஆடி, முனிவர்களோடு ஆடி, செய்யுட் கருத்தினில் ஆடி, மேலான பராசத்தியின் இடமாக ஆடி, ஆன்மாக்களிடம் அவரது அறிவினில் பொருந்தி நடிப்பவனாக உள்ளான் சிவபெருமான். (கோ-ஆன்மா.)
2758. ஆறு முகத்தின் அதிபதி தான் என்றும்
கூறு சமயக் குருபரன் தான் என்றும் தேறினர் தேறுத் திருவம் பலத்துள்ளே வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே.
பொருள் : ஐந்து முகத்தோடு அதோ முகத்தையும் சேர்த்து ஆறு முகங்களோடு கூடிய சிவனார் தாம் என்றும், சமயம் கூறும் குருவும் தாமே என்றும் சிரசின் தென்புறத்திலுள்ள ஆகாயத்தினுள்ளே ஆத்ம சொரூபத்தைச் சாதகர் அறிந்தனர். இவ்வுண்மையை அறிபவரிடம் சிவபெருமான் வேறின்றி உடனாய் உணரப்படுபவனாக உள்ளான். (ஆறுமுகம்-ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம், அதோமுகம்.)
2759. அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி உம்பர மாம் நாதத்து ரேகையுள் தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.
பொருள் : திருச்சிற்றம்பலமே ஆடும் அரங்கமாகக் கொண்டு அதன்கண் எம்பெருமானாகிய சிவபெருமான் திருக்கூத்து இயற்றுகின்றனன். எம்பெருமான் தன் இரண்டு திருவடிகளிலும் இருபெரும் அறிவொளி தோன்றுமாறு திருக்கூத்து இயற்றுகின்றனன். இருபெரும் ஒளி நூலுணர்வும் நுண் உணர்வுமாகும். மேலோங்கி ஒளிரும் ஐவகை ஓசையின் கோட்டின் கண்ணும் நின்று திருக்கூத்து இயற்றுகின்றனன். அம்மட்டோ? அவ்வோசைகள் திகழும் தூமாயையினையே தன் நேர் நிலையாகக் கொண்டு எழுந்தருளி வந்து அருள்கின்றனன். (நூலுணர்வு-அபரஞானம், நுண்ணுணர்வு-பரஞானம்.)
2760. ஆடிய காலும் அதிற்சிலம் போசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும் கூடிய கோலம் குருபரன் கொண்டாடத் தேடிஉள் ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.
பொருள் : திருக்கூத்துப் புரியும் திருவடியும், அத்திருவடிக்கண் கிடந்து ஒலிக்கும் மறைச்சிலம்பு ஒலியும், அச்சிலம்பொலியின் விரிவாகக் காணப்படும் திருமறைத் திருப்பாட்டுக்களும் அத்திருப்பாட்டுக்களின் மறைப்பொருளாய் விளங்கும் பலவகையான திருநடனங்களும் சிவபெருமான் திருவருளால் புரிந்தருளுகின்றனன். அதன் பொருட்டுக் கொண்டருளிய திருக்கோலமும் பலவாம். அவ்வகை அருள் திருக்கோலங்களைக் கொண்டு வருபவன் குருபரன். அவ்வாறு வருவதும் மெய்யுணர்வினர் கொண்டாடுதற் பொருட்டாம்; உய்தற்பொருட்டுமாம். அவனைத் திருவருளால் அடியேன் உணர்வின் உள்ளே தேடிக் கண்டுகொண்டேன். காண்டலும் அற்றது பிறப்பு. உற்றது சிறப்பு. சிறப்பெனினும் திருவடிப்பேறு எனினும் ஒன்றே. (மறைப்பொருள்-மந்திரப்பொருள்.)
2761. இருதயந் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன் குரவனாய் எங்கணும் கூத்துகந் தானே.
பொருள் : மாணிக்கக் கூத்தன் என்று சொல்லப்படும் ஒப்பில் ஒருபெரும் முதன்மைக் கூத்தன் சிவபெருமான். அவன் திருவாலங்காட்டின்கண் மணிமன்றம் அணிபெறத் தணியாப் பெருங்கூத்தியற்றுகின்றனன். அவனே அனைவர்க்கும் மெய்க்குறவன் ஆவன். மணிமன்றம்-ஐவகை மன்றினும் முதன்மை வாய்ந்தது. ஏனை நான்கு மன்றங்களும் பொன், வெள்ளி, செம்பு, ஓலியம் எனப்படும். இவ்வைந்தும் ஒரு புடையொப்பாகச் சிவயநம என்னும் திருஐந்தெழுத்தினைக் குறிப்பதாகும். (ஐந்து சபைகளாவன: 1. இரத்தின சபை-திருவாலங்காடு. 2. பொற்சபை-சிதம்பரம், 3. வெள்ளி சபை-மதுரை, 4. தாமிர சபை-திருநெல்வேலி, 5. சித்திர சபை-திருக்குற்றாலம்.)
8 எஃப். அற்புதக்கூத்து
(சொல்ல வொண்ணாத பரவசத்தை அடையச் செய்வது அற்புதக்கூத்து.)
2762. குருஉரு அன்றிக் குனிக்கும் உருவம்
அருஉரு ஆவதும் அந்த உருவே திரிபுரை யாகித் திகழ்தரு வாளும் உருவரு வாளும் உமையவள் தானே.
பொருள் : குருவின் திருவுருவையல்லாமல் இடையறாது நினைத்து இன்புறும் திருவுரு வேறொன்றும் இன்று. குனித்தல்-இடையறாது நினைத்தல், தியானித்தல், கட்புலனாகாத அருவ வடிவமாவது அருமை வாய்ந்த அக்குருவேயாகும். திரிபுரை என்னும் திருவருள் திகழ்ந்து விளங்குவதும் அக்குருவடிவே. உருவமாயும் அருவமாயும் உற்று விளங்குபவள் உமையவள் ஆவள்.
2763.திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவமே உருஅரு ஆவதும் உற்றுணர்ந் தோர்க்கு அருள்வழி யாவதும் அவ்வழி தானே.
பொருள் : ஞானத்தை அடைவிக்கும் நெறியாவது சிரசுக்கு முன்னுள்ள ஆகாய மண்டலத்தில் ஒளியின் உள்ளாகத் தியானிக்கும் உருவமேயாகும். அப்போது அவ்வுருவமே மறைந்து அருவமாவதும் அங்குப் பொருந்தி ஞான நெறியில் செல்பவருக்கு அருள் சத்தி பதிதலும் அந்நெறியே யாகும்.
2764. நீடும் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
ஓடும் உயிர்எழுந் தோங்கி உதித்திட நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து ஆடும் இடம்திரு அம்பலத் தானே.
பொருள் : சிரசின்கண் உச்சிக்குமேல் பன்னிரண்டு விரற்கிடை வரை உயிர்ப்பு எழுந்து ஓடும். ஆண்டு ஓங்கி எழுந்து தோன்றிடுமாறு நீரும் நாடுமின். நாதமுடிவாகிய நம் பெருமான் மிக்க உகப்புடன் திருக்கூத்து ஆடும் இடம் அதுவாகும். அதுவே திருஅம்பலமாகும். (திருவம்பலம்-தில்லைச் சிற்றம்பலம். உயிர்-பிராணவாயு.)
2765. வளிமேகம் மின் வில்லு வாகை ஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல் களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய் ஒளியுரு வாகி ஒளிந்துநின் றானே.
பொருள் : வானமானது காற்றுக்கும் மேகத்துக்கும் மின்னலுக்கும் வான வில்லுக்கும் இடியோசைக்கும் இடங்கொடுத்துத் தானும் தெளிந்த ஆகாயமாய் விளங்குவது போல, இறைவனும் ஆனந்தத்தை விளைக்கும் ஆறுவகை ஒளியாகவும் அவற்றுடன் கலந்தும் வேறாயும் ஒளிவடிவமாகிச் சீவர்களுக்குப் புலனாகாமல் மறைந்து நின்று அருளுகின்றான்.
2766. தீமுதல் ஐந்தும் திசைஎட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக் கப்புற ஆனந்தம் மாயைமா மாயை கடந்துநின் றார்காண நாயகன் நின்று நடம்செய்யு மாறே.
பொருள் : ஐம்பூத ஒளி அணுக்களிலும், எட்டுத் திசைகளிலும் கீழும் மேலும், ஆராய்ந்து காணும் அறிவினைக் கடந்தும் சிவானந்தம் உள்ளது. அது மாயையும், சுத்த மாயையும் கடந்து நின்றவர் காணுமாறு, எமது தலைவன் நிலைபெற்று நடனம் செய்யும் முறையாகும்.
2767. கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம் கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக் கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.
பொருள் : கூத்தனாகிய சிவபெருமான் அழகிய புள்ளிகளையுடைய வளையலை அணிந்து, கிளையுற விளங்கும் திருவருள் அம்மையுடன் கலந்து ஆருயிர்கட்கு அளவிலா நலம் உளமொடும் புரிகின்றனன். அவன்தன் திருவருட் கலப்பால் குற்றமற்ற பேரின்பம் சீருறப் பெருகும். அவன் திருவடியுணர்வு எனப்படும் குற்றமில்லாத சிவஞான விளக்கமுண்டாகும். கூத்தனும் கூத்தியும் ஆகிய சிவனும் சிவையும் திருக்கூத்தின்மேல் திருநோக்கம் கொண்டருளுகின்றனர்.
2768. இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம் அடங்கலும் தாமாய்நின் றாடுகின் றாரே.
பொருள் : சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் சத்தியும் அவளைப் பிரியாத எனது தந்தையாகிய சிவமும், என்னுடைய சீவ ஒளியில் கலந்து விளங்குவதை நான் அறிந்தேன். மல மறைப்பினையுடைய சீவ கோடிகள் அனைத்துக்கும் மல மறைப்பு நீங்கச் சிவசத்தி ஆடுகின்றமையை உணர்ந்தேன்.
2769. சத்தி வடிவு சகலஆ னந்தமும்
ஒத்தஆ னந்தம் உமையவள் மேனியாம் சத்தி வடிவு சகளத் தெழுந்திரண்டு ஒத்தஆ னந்தம் ஒருநடம் ஆமே.
பொருள் : சீவர்கள் அடையத் தோன்றும் சகல வடிவமும் சத்தியின் வடிவமே யாகும். சீவனது அறிவில் சத்தாகவும் சித்தாகவும் ஆனந்தமாகவும் நிலைபெற்ற ஆனந்தமே உமையம்மையின் திருமேனியாகும். சத்தியினது வடிவு சீவர்களிடத்து விளங்கி, சீவனும் சிவனும் கலப்பதில் உண்டாகும் ஆனந்தமே ஒரு நடனமாகும். (இரண்டு-சத்தி-சிவ நடமிரண்டும்.)
2770. நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம் சிற்றம் பலம்என்று தேர்ந்துகொண் டேனே.
பொருள் : நெற்றியின்கண் நேர்நடுவாம் புருவமத்தியில் காணப்படும் இடைவெளி தில்லைத் திருச்சிற்றம்பலமாகும். ஆண்டு உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் சிவ சிவ என்னும் செந்தமிழ்த் திருமறையாகும். பற்றற்றார் பற்றுக்குப் பற்றாய் நிற்பவன் சிவபெருமான். அவனே பரமன். அவன் உடனாக இருக்கும் இருப்பிடம் மேல் ஓதிய புருவநடுவாகிய தில்லைத் திருச்சிற்றம்பலமென்று திருவருளால் தேர்ந்து தெளிந்து கொண்டேன் என்க.
2771. அண்டங்கள் தத்துவம் ஆதி சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாமபி ஆதனம் தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.
பொருள் : அண்டங்களும் அவற்றின் அடக்கமாகிய தத்துவங்களாகும் அருளோன், ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் ஐம்பெரும் நிலைகளும் சத்தியின் வடிவாயுள்ள சாத்தவி, சாம்பவி என்னும் இரண்டும் கூடிய ஏழுநிலைகளும் அடைவுபட-முறைமையாய்ச் சிவன் இருக்கையாகும். அவ்ஏழு நிலைகளும் இருக்கையாகக் கொண்டு பரஞ்சோதியாகிய விழுத்திணைச் சிவன் திருக்கூத்து உகந்தனன். (தெண்டினில்-முறைமையினில்.)
2772. மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை சென்றது தான்இரு பத்திரு நூறுள நின்றது தான்நெடு மண்டல மாகுமே.
பொருள் : செம்பொன் அம்பலம்-தில்லைச் சிற்றம்பலம் முதலிய மன்று நிறைந்த திருவிளக்கொளி போன்று கதிர் காலும் பெரு மலர். இது நன்மை தரும் மென்மை மலராகும். இதன் இதழ்கள் நூற்று நான்கெனவும் இருநூற்றுப் பத்தெனவும் கூறப்படும். இம்மலர்கள் ஆறா தாரத்துக் காணப்படும் என்ப. இவையனைத்தும் சிவபெருமான் நின்றருளும் நெடுமண்டலமாகும்.
2773. அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி அண்டன் நடம்செயும் ஆலயந் தானே.
பொருள் : அளவில்லாத எழு கோடி அண்டங்களும் அவை போன்று எழு கோடிப் பிண்டங்களும் தெளிந்த திரையையுடைய கடலாற் சூழப்பட்ட திசைகளும் விளங்கும் எழுகோடித் தீவுகளும் எட்டுத் திசைகளிலும் காணப்படும் அளவில்லாத சிவக்கொழுந்து எனப்படும் சிவலிங்கங்களும் எழுகோடி என்ப. இவ்விடங்கள் அனைத்தும் அண்டனாகிய சிவபெருமான் நடனம் செய்யும் திருக்கோவில்களாகும்.
2774. ஆகாச மாம் உடல் ஆங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள் மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக மாகாய மன்றுள் நடம்செய்கின் றானே.
பொருள் : கூத்தப்பெருமானது உடல் ஆகாய மயமானது. அந்த ஆகாய வெளியிலுள்ள கார் இருளே முயலகனாம். மேலாடை போன்று காணப்படும் எட்டுத் திசைகளும் அவனது கைகள். சீவர்கள்மேல் விருப்பத்தைக் காட்டும் மூன்று கண்களும் சோம சூரிய அக்கினியாக அறிவுப்பெருவெளியில் நடஞ்செய்பவனாக அவன் உள்ளான்.
2775. அம்பல மாவ அகில சராசரம்
அம்பல மாவன ஆதிப் பிரானடி அம்பல மாவன அப்புத்தீ மண்டலம் அம்பல மாவன அஞ்செழுத் தாமே.
பொருள் : அனைத்து உலகின்கண் காணப்படும் இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள் முற்றும் சிவபெருமான் திருக்கூத்து இயற்றும் திருஅம்பலமாகும். ஆதியாகிய நடப்பாற்றலையுடைய நாயகன் திருவடியும் அம்பலமாகும். நீர் மண்டலம் தீமண்டலம் (இனம் பற்றி ஏனைய பூதங்கள்) ஆகியவைகளும் அம்பலமாகும். மெய்ம்மை அம்பலமாவது செந்தமிழ்த் திரு ஐந்தெழுத்தேயாம்.
2776. கூடிய திண்முழ வம்குழல் ஓம்என்ன
ஆடிய மானுடர் ஆதிப் பிரான்என்ன நாடிய நற்கணம் ஆரும்பல் பூதங்கள் பாடிய வாறொரு பாண்டரங் காமே.
பொருள் : சிவபெருமான் ஆடிய திருக்கூத்தினைக் காணும் பேறு திருவருளால் பெற்ற மானுடர் ஆண்டு முழங்கிய குட முழாவாகிய திண்ணிய முழவோசையினையும் புல்லாங்குழல் ஓசையினையும் பொலிவு பெறக் கேட்டனர். எல்லாம் ஓம் என்று ஒலிக்கும் நுண்மையினையும் உணர்ந்தனர். ஆதிப் பிரானென்று போற்றினர். சிவபெருமானையே நாடி நிற்கும் வரிசை யமைந்த நற்கணமும் பல்வேறு வகையான பூதகணங்களும் அவன் ஆடும் பாண்டரங்கக் கூத்தினைக் கண்டு பாடியாடித் தொழுதனர்.
2777. அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிரை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள் புண்பரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக் கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.
பொருள் : வெவ்வேறாகிய அண்டங்களில் உள்ள தேவர்களும் ஏனைப் புற அண்டங்களிலுள்ள தேவர்களும் தெளிந்த அலைகளையுடைய கடலாற் சூழப்பட்ட உலகங்களுக்குள்ள தேவர்களும் செந்தாமரை மலரையொத்த திருவடித் தாமரையைத் தூக்கிப் பொன்னம்பலத்தின் கண்ணே முழுமுதற் சிவபெருமான் புரியும் திருக்கூத்தினைக் கண்டு தொழுது வழிபட்டனர். அதனால் அவரவர்தம் பெருநிலையினை எய்தியுள்ளார்கள். இன்னும் வழிபடுவதனால் மேனிலையும் அடைவார்கள்.
2778. புளிக்கண் டவர்க்குப் புனல்ஊறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம் துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும் ஒளிக்குள்ஆ னந்தத் தமுதூறும் உள்ளத்தே.
பொருள் : புளியினைக் கண்ணால் கண்டவுடன் நாவில் நீர் சுரப்பதுபோல் சிவானந்தத்தை அளிக்கும் திருக்கூத்தைச் சிரசின்மேல் கண்டவர்க்கு எல்லாம் இன்பக் கண்ணீர் முத்து முத்தாக விழும். சோர்வுடைய நெஞ்சமானது அன்பினால் உருகும். உள்ளத்தின்கண் உணரும் ஒளியாய்ச் சிவம் இன்பம் பெருக்கி நிற்கும். (சிவநடனத்தைக் கண்டவர் அடையும் நிலை கூறியவாறு.)
2779. திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும் கொண்டாடும் மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக் கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.
பொருள் : திருநடனம் கண்டவர் கால்கள் பலமற்றுத் திண்டாடி வீழ்தலே சிவானந்தத்தால் ஆவதாம். அவ்வாறு சிவானந்தத்தைப் பருகினவர்க்கு அக ஒளியில் பார்வை பதிந்து தன்னை மறந்த நிலை கிட்டும். யாவராலும் கொண்டாடப்பெறும் சிதாகாயத்தில் ஆடுகின்ற நடனத்தை அறிந்தவரது அருமையான இயல்பு பிரணவத் தொனியைக் கேட்டு நாதாந்தம் சென்றவர்க்கும் பொருந்தும். (உன்மத்தம்-உலகை மறந்திருக்கும் நிலை.)
2780. அங்கி தமருகம் அக்கமாலை பாசம்
அங்குசம் சூலம் கபால முடன் ஞானம் தங்கு பயமுன் தருநீல மும்முடன் மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.
பொருள் : சிவபெருமான் திருக்கூத்துப் புரியுங்கால் கைக்கொள்ளும் பொருள்களும் துணையும் வருமாறு: மழு, உடுக்கை, சிவமணி, கயிறு, தோட்டி, முத்தலை வேல், நான்முகன் மண்டையோடு முதலியன. துணையாக விட்டுப் பிரியாது திருவடியுணர்வாகிய அழியா விழுப்பயனைத் தந்தருளத் தங்கும் நீலத்திருச் சடைக்கண்ணுடன் எழுந்தருளியிருக்கும் மங்கையினை ஓர் உடம்பின்கண் ஒப்பில் ஒரு கூறாகக் கொண்டு மாநடம் புரிகின்றனன் சிவன்.
2781. ஆடல் பதினொன் றுறுப்பும் அடைவாகக்
கூடிய பாதச் சிலம்புகைக் கொள்துடி நீடிய நாதம் பராற்பர தேயத்தே ஆடிய நந்தி புறம்அகத் தானே.
பொருள் : நடனத்துக்குரிய பதினோர் உறுப்புக்களும் முறையாகப் பொருந்துமாறு பாதத்தில் சிலம்பும் கையில் உடுக்கையும் கொண்டு, நடிப்பதில் எழும் ஒலி சீவனை மேலான வற்றுக்கெல்லாம் மேலான பொருளிடையே செலுத்தியே நந்தியானவன் புறத்திலும் அகத்திலும் விளங்குகின்றான். பாண்டரங்கம் என்ற கூத்த பதினோர் உறுப்புகளின் அசைவால் நடந்தது என்று கூறுவர்.
2782. ஒன்பதும் ஆட ஒருபதி னாறாட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன்ஆட இன்புறும் ஏழினும் ஏழ் ஐம்பத் தாறாட அன்பனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
பொருள் : நடனத்தால் உருவம் நான்கு, அருவுருவம் ஒன்று, அருவம் நான்கு ஆகிய நலந்தரு பேதங்களும் ஆட எட்டுத் திசைகளும் அவற்றின் உள்திசை எட்டுமாகப் பதினாறு கோணங்களிலுள்ள திசைகளும் ஆட பத்தி மார்க்கங்களாகிய காணாபத்தியம், கௌமாரம், சாத்தம், சௌரம், காளாமுகம், சைவம் ஆகிய ஆறும் உடன் ஆட, இன்பத்தைத் தரும் ஏழு ஆதாரங்களும், எழுவகைத் தோற்றமும் ஐம்பத்தாறு தேசமும் ஆட, அட்சர வடிவமாகவுள்ள ஐம்பது சத்திகள் இடமாகச் சிவானந்தக் கூத்தைப் பெருமான் ஆடியருளினான்.
2783. ஏழினில் ஏழாய் இயைந்தெழுத் தேழாதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்தமைந் தொன்றாய ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி ஏழினை நாடகத் தேஇசைந் தானே.
பொருள் : சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய இசை வகை ஏழினில் ஏழாயும், ஏழும் குறுகி, சரிகமபதநி என ஏழு எழுத்துக்களில் அவ்வாறாய் அவை மேலும் ஒன்றாய்க் குறுகி விளங்கும் போது ஒரே தொனியாய் அமைந்து பிரணவமாய் இவ்வகை
2784. மூன்றினில் அஞ்சாகி முந்நூற் றறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய் மூன்றினில் அக்கம் முடிவாக முந்தியே மூன்றினில் ஆடினான் மோகாந்தக் கூத்தே.
பொருள் : மும்மண்டலங்களில் பஞ்சாக்கர வடிவாய் முந்நூற்று அறுபது கலைகளாய் மும்மண்டலங்களிலும் உள்ள ஆறு ஆதாரங்களாய், தூலம் சூக்குமம் ஆகிய பன்னிரண்டு ஆதாரங்களுக்கும் மூலமாய், அகர உகர, மகரம் என்ற மூன்றும் ஒன்றாகி இம்மூன்றாலாய பிரணவத்தில் விருப்பத்தைத் தரும் கூத்தை ஆடி நின்றருளினான்.
2785. தாமுடி வானவர் தம்முடி மேல்உறை
மாமணி ஈசன் மலரடித் தாளிணை யாமணி யன்புடை யார்மனத் துள்ளெழும் காமணி ஞாலம் கடந்துநின் றானே.
பொருள் : அழியும் தன்மையுடைய தேவர்களது திருமுடிமேல் உறைகின்ற வெண்ணீற்றொளியில் திகழும் ஈசனது மலர் போன்ற திருவடிகள் அழகு பொருந்திய அன்புடையாரது மனத்தில் விளங்குவனவாகும். அவ்வாறு விளங்கிக் கற்பகத்தரு போன்று வேண்டியவற்றைக் கொடுக்கின்ற பெருமான் பூமியைக் கடந்து ஆகாயத்தில் விளங்குபவனாக உள்ளான்.
2786. புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடு மளவெங்கள் சிந்தை பரிந்தவன் ஆடிற்பல் பூதங்கள் ஆடும் எரிந்தவன் ஆடல்கண் டின்புற்ற வாறே.
பொருள் : எல்லாம் உணர்ந்த சிவன் ஆடினால் சிவத்துக்குக் கீழாகவுள்ள இருநூற்று இருபத்திநான்கு புவனங்களும் ஆடும். எங்கள் தியான ஆற்றலுக்கு ஏற்ப அவன் எங்கள் உள்ளத்தில் ஆடுவான். அவன் விரும்பி உள்ளத்தில் ஆடில் அவனுக்குக் கீழான பல்பூதங்கள் ஆடித் தத்தம் நிலையினின்றும் விலகும். பேரொளிப் பிழம்பான சிவ நடனத்தைக் கண்டு சாதகன் இன்புற்ற முறை இதுவாகும்.
2787. ஆதி நடம்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடம்செய்கை ஆரும் அறிந்திலர் ஆதி நடம்ஆடல் ஆரும் அறிந்தபின் ஆதி நடம்ஆடல் ஆம்அருட் சத்தியே.
பொருள் : அறிவில்லாதவர்கள் கூத்தப்பெருமான் நடனம் புரிந்தவன் என்று கூறுவார்கள். அப்படியாக அவன் நடனம் செய்ததைப் பார்த்தவர் யாரும் இல்லை. ஆதியான சிவன் அவரவர் உள்ளத்தில் நடிப்பதை அறிந்த பிறகு அருட்சத்தியே அவ்விதம் துணைபுரிந்து காணுமாறு செய்கிறது என்பதை அறிவர்.
2788. ஒன்பதொ டொன்பதாம் உற்ற அசிபதத்து
அன்புறு கோணம் அசிபதத்து ஆடிடத் துன்புறு சத்தியுள் தோன்றிநின் றாடிட அன்புறும் எந்தைநின்று ஆடலுற் றானே.
பொருள் : சீவனும் சிவனும் நலந்தரு பேதமாகவுள்ள தத்பதம் தொம்பதம் என்ற இரு பதங்களுள் இன்பத்தை விளைவிக்கின்ற இடமாகிய அசிபதத்தில் பொருந்தி ஆடுவதற்காகவே சீவர்களுக்குத் துன்பத்தைத் தரும் காளியாகிய சத்தியில் விளங்கி ஆடவே சீவர்களிடம் மிகுந்த அன்பு கொண்ட பெருமான் ஆடல் புரிபவன் ஆயினான்.
2789. தத்துவம் ஆடச் சதாசிவன் தான்ஆடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தான்ஆட வைத்த சராசரம் ஆட மறைஆட அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
பொருள் : சிவநடனத்தால் சகல தத்துவங்களும் ஆட, பிரமனாதியருக்கு மேலாகவுள்ள சதாசிவ மூர்த்தியும் ஆட, எல்லா வாசனைகளும் பொருந்தியிருக்கும் சித்த மண்டலம் ஆட, சிவத்தின் சத்தியும் ஆட, இவை பொருந்தும்படி வைத்த அசைவன அசையாதனவாகிய எல்லாம் ஆட, வேத சொரூபமான மூலாதாரத்திலுள்ள ஒளி ஆட, அத்தனாகிய சிவன் ஆனந்தக் கூத்து ஆடியருளினான்.
2790. இருவரும் காண எழில்அம் பலத்தே
உருவோ டருவோ டுருவரு ரூபமாய்த் திருவருட் சத்திக்குள் சித்தன் ஆனந்தன் அருளுரு வாகநின் றாடலுற் றானே.
பொருள் : பதஞ்சலி, வியாக்கிர பாதர் ஆகிய இருவரும் காணும்படி அழகிய ஆகாயத்தில் உருவம் அருவம் அருவுருவமாய், திருவருள் சத்திக்குள் அறிவு மயமான ஆனந்தன் அருள்வடிவாக நின்று ஆடல் புரிந்தனன்.
2791. சிவம்ஆடச் சத்தியும் ஆடச் சகத்தின்
அவம் ஆட ஆடாத அம்பர ஆட நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச் சிவம்ஆடும் வேதாந்த சித்தாந்தத் துள்ளே.
பொருள் : சிவன் நடனம் செய்தமையால், பிரிவின்றி நிற்கும் சத்தியும் ஆடி, அதனால் நற்பயன் அளிக்காத தத்துவங்கள் ஆட, அசைவில்லாத ஆகாயம் ஆட உருவம் அருவுருவம் அருவமாகிய ஒன்பது தத்தவங்களும், அவற்றைக் கடந்து விளங்கும் நாதாந்தமும் ஆட வேதாந்த சித்தாந்தத்துள்ளே சிவம் ஆடுவதைக் காணலாம்.
2792. நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவ அந்தமும் தாதற்ற நல்ல சதாசிவ அந்தமும் நாதப் பிரம சிவநட மாமே.
பொருள் : நாதமாகிய ஒலியின் முடிவும் அவ்ஒலியால் பெறப்படும் நால்வகையான அறிவின் முடிவும் வேதத்தின் முடிவும் என்றும் உலைவின்றி நிலைபெற்று நிற்கும் மெய்ம்மைச் சிவபெருமானின் பேரின்பமும் திருவருள் நடனத்தால் வந்தெய்தும். குற்றமற்ற நன்மைக் கொள்கலமாம் அருளோனாகிய சதாசிவப் பேரின்பத்து நாதப் பிரமமாகிய ஓம் மறை சிவநடம்புரியும் தவநிலையாகும். (தாது-குற்றம்.)
2793. சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத் தவமாம் புரன்எங்குந் தானாகி ஆடும் தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே.
பொருள் : பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐவர்கள் சீவர்களைப் பிறவியில் செலுத்திய செயல் முடிவுற, தவம் பொருந்திய சீவனது பாசம் நீங்க, தவத்தின் விளைவாகிய சிவானந்தத்தில் ஞானமாகிய கூத்தினைத் தவத்தால் அடையப்பெறும் பரனாகிய சிவன் எங்கும் நீக்கமற நிறைந்து ஆடுவான்.
2794. கூட நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள்
வீட நின்றான் விகிர் தாஎன்னும் நாமத்துத் தேட நின்றான்திக ழும்சுடர் மூன்றொளி ஆட நின்றான் என்னை ஆட்கொண்ட வாறே.
பொருள் : சிவன் என்னை ஆட்கொண்டபோது என்னோடு கூடி நின்றருளினான். சிறு தெய்வங்களின் ஆட்சியினின்றும் என்னை மீட்டனன். விகிர்தா என்று அவன் நாமத்தைச் சொல்லி அழைத்தபோது வெளிப்பட்டு நின்றனன். சோம சூரிய அக்கினியாகிய மூன்று ஒளிகளும் ஆடும்படி நிற்கின்ற சிவன் என்னை ஆட்கொண்டு அருளினான்.
2795. நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர் நேதத் துவமும் அவற்றொடு நீதியும் பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.
பொருள் : நாத தத்துவம் கடந்த நாதாந்த நிலையில் விளங்கும் ஆதிமறை நம்பியாகிய சிவன் சுவாதிட்டான மலரைப் பிரகாசப்படுத்திய போது சீவர்கள் அங்குப் பொருந்தி உலக இன்பத்தை அனுபவித்தனர். ஆனால் அவன் பிரிக்கப்பட வேண்டிய தத்துவங்களில் பொருந்திப் பிரிப்பனவாகவும் சீவர்களோடு வேறுபடாதவாறு கலந்து நின்றருளினான்.
2796. ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்
ஆனந்தம் மாநடம் ஆரும் அறிகிலர் ஆனந்தம் மாநடம் ஆரும் அறிந்தபின் ஆனந்தம் அற்றிட ஆனந்தம் ஆமே.
பொருள் : இன்பம் இன்பம் என்று உண்மை காணாமல் அறிவிலார் உரைப்பர். ஆனந்தமாகிய இன்பம் மெய்யுணர்வு மாநடனத்தின்கண் உள்ளது என்னும் உண்மையை யாரும் அறிந்த பின் தன்முனைப்பு அறும். அறவே பசையாகிய பழக்க வாசனையும் அறும். அந்த இடமே திருவடிப் பேரின்பம் அருளால் பொருந்தும் ஒரு பெரு நிலைக்களமாகும். (ஆனந்தம்=ஆன்+நந்தம். நந்தம்-பெருக்கம். ஆவியின் இன்பப் பெருக்கம். தான்-ஆன்மா. அந்தம்-முடிவு.)
2797. திருந்தநற் சீஎன் றுதறிய கையும்
அருந்தவ வா என் றணைத்தபொற் கையும் பொருந்தில் அமைப்பில் இயஎன்பொற் கையும் திருந்தத் தீ ஆகும் திருநிலை மவ்வே.
பொருள் : திருந்திய நல்ல சிகரத்தின் நீட்டலாகிய சீ என்ற உடுக்கையை உதறிய கையும், அருமையான தவத்தினரை வா என்று அணைத்த மலர் போன்ற இடக்கையும், பொருந்துமாறு அமைத்த யகரமாகிய பொன் போன்ற கையும், திருந்துகின்ற நகரமாகிய அக்கினியையுடைய இடக்கையும் மகரமாகிய மலத்தை அடக்கி ஊன்றிய திருவடியும் கூத்தனுக்கு ஆகும். கூத்தனது திருவுருவில் ஐந்து எழுத்துக்களுக்கும் உள்ள ஐந்து இடங்களைக் கூறியவாறு.
2798. மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவு மமைப்பு அனலுடைக் கையும் கருவின் மிதித்த கமலப் பதமும் உருவில் சிவாய நமஎன ஓதே.
பொருள் : உடுக்கையுடன் பொருந்திய வலக்கையும் வீசுதலையுடைய இடக்கையும், தண்ணளி பொருந்திய அபயக் கையும், அக்கினி பொருந்திய இடக்கையும் பிறப்பனை அழுத்தும் ஊன்றிய காலும் உருவமற்ற சிவாயநம என்று எண்ணி ஓதுவாயாக. பஞ்சாட்சரத்தைக் கூத்தப் பிரான் உருவமாக எண்ணி ஓத வேண்டும்.
2799. அரன்துடி தோற்றம் அமைத்தல் திதிஆம்
அரன்அங்கி தன்னில் அறையின் சங் காரம் அரன்ஊற் றணைப்பில் அமருந்திரோ தாயி அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே.
பொருள் : பேரொடுக்கப் பெருமானாகிய அரனார் உடுக்கையால் படைப்பும், அமைவுக் கையால் காப்பும், மழுவேந்திய திருக்கையால் துடைப்பும், ஊன்றிய திருவடியால் மறைப்பும், நான்ற (தூக்கிய) திருவடியால் அருளிப்பாடும் முறையே நிகழ்வனவாகும். (அணைப்பில்-ஊன்றிய திருவடியில். அரனடி-எடுத்த பொற்பாதம்.)
2800. தீத்திரட் சோதி திகழொளி யுள்ஒளிக்
கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினன் மூர்த்திகள் மூவர் முதல்வ னிடைச் செல்லப் பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.
பொருள் : அக்கினிப் பிழம்பாயும் சீவ ஒளிக்குள் ஒளியாயும் உள்ள சிவத்தைக் கண்ட அச்சிற்சத்தி பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவரது செயலும் முடிந்து சிவத்தினிடம் ஒடுங்கியதைப் பார்த்தனள். சிரசின் மேல் வேத சொரூபமான நாதம் முழங்கிற்று. (கோமளம்-அழகு.)
2801. நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்(து) அந்தர வானத்தின் அப்புரத் தப்பர சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.
பொருள் : நந்தியும் எமது அப்பனும், ஞானமேயான தலைவனும் ஓம் என்ற பிரணவத்துள் பொருந்த, அதைக் கடந்து தேகப் பற்றற்ற ஆகாயத்தில் விளங்கும் சுந்தரக் கூத்தனும் ஆகியவனை வேறு விளக்குமாறு எங்ஙனம்? விளக்க முடியாது.
2802. சீய குருநந்தி திருவம் பலத்திலே
ஆயுறு மேனி யாரும் அறிகிலர் தீயுறு செம்மை வெளுப்போடும் அத்தன்மை ஆயுறு மேனி அணைபுக லாமே.
பொருள் : சிங்கம் போன்ற குருவாகிய நந்தியினது சிதாகாயத்தில் விளங்கும் ஆராயத்தக்க திருமேனியை, எத்தகையதென்று யாரும் அறியவில்லை. அவனது திருமேனி மூலாதாரத்தில் அக்கினி போன்ற சிவப்பாயும் சிரசின்மேல் வெள்ளையாயும் உள்ள தன்மையை ஆராய்ந்து ஒளிவடிவாகக் காணில் அது சீவர்களுக்குப் புகலிடமாகும்.
2803. தானான சத்தியும் தற்பரமாய் நிற்கும்
தானாம் பரற்கும் உயிருக்கும் தரும் இச்சை ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள் ஆனால் அரனடி நேயத்த தாமே.
பொருள் : சிவத்தினது சத்தியே தற்பரையாய் நின்று செயல்படும். அதுவே பரனுக்கும் உயிருக்கும் தொடர்பை உண்டாக்கத் தக்கதாம். அதுவே உயிரினிடத்து இச்சை ஞானம் கிரியையாகப் பொருந்திப் பக்குவப்படுத்தும். அவ்வாறு பக்குவப்படுத்தி அருள் மயமாக்கினால் உயிர் அரனிடம் அன்பினால் ஒன்றி அறிவுருவாகும். சீவன் பராசத்தியின் அருளால் அரனோடு ஒன்றி அறிவுருவாகும்.
9. ஆகாசப்பேறு
(பராகாயத்தில் ஒளியில் திளைத்திருத்தல் ஆகாயப் பேறாகும். திருக்கூத்துத் தரிசனத்தின்பின் தன் செயலற்றிருக்கும் நிலை இங்கு உணர்த்தப்பெறும்.)
2804. உள்ளத்துள் ஓம்எனும் ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேஅங்கி யாய ஒருவனை உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை உள்ளத்து ளேஉறல் ஆகாய மாமே.
பொருள் : மன மண்டலத்துள் ஓங்காரமாய் நின்ற ஈசனாகிய ஒருவனும், அங்கு அக்கினி போன்று பிரகாசிக்கும் ஒருவனும், அவ்விடத்து நீதி மயமான ஒருவனும், ஆகியவனைக் கொண்டு விளங்கும் மன மண்டலம் சூழ்ந்துள்ள உடல் ஆகாயமாகும்.
2805. பெருநில மாய்அண்ட மாய்அண்டத் தப்பால்
குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன் பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன் அருநில மாய்நின்ற ஆதிப் பிரானே.
பொருள் : பெரிய நிலமயமான தேகமாகவும், தேகத்தைச் சூழ உள்ள அண்ட கோசமாயும், அதற்கு அப்பாலுள்ள ஒளியாகவும் நிற்கும் தன்மையுடையவன் ஈசன். அவனே உருவ நிலையில் பெரிய நிலமாக இருந்து தாங்குகின்ற அருளாளன். அப்பெருமானே அருவநிலையுள்ள ஆதிப்பிரானான சிவமாகும். (குரு நிலம்-ஒளிமண்டலம்.)
2806. அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியைக் குலைத்தது தானே.
பொருள் : மனிதர் உடலைச் சூழஉள்ள அண்ட ஒளியானது உலகில் ஆகாய மண்டலத்தில் விளங்கும் ஒளியுடன் தேகத்தில் உள்ள அந்தக்கரண அறிவால் பிதற்றும் வீண் பெருமையை விழுங்கி, தேகம் கடந்துள்ள பிரமாகாய வெளியில் விளங்கும் ஒளியினில் மறைந்தது. அதனால் தேக அமைப்புகள் காணாது ஒழிந்து தேகமும் ஒளிமயமாய்த் திகழ்ந்தது.
2807. பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி அயனொடு மால்அறி யாவகை நின்றிட்டு உயர்நெறி யாய்வெளி ஒன்றது வாமே.
பொருள் : சிற்றின்பத்துக்குப் பயனாகும் மகளிர்பால் அனுபவிக்கும் இன்பத்தின் உள்ளே காமாக்கினி விளங்கின நிலையில் ஆதியாகிய பரஞ்சோதி இன்ப உருவாகத் திகழ்ந்தனள். அப்பெருமானே சிவத்தின் பால் சீவன் அன்பு கொண்டபோது பிரமனும் விஷ்ணுவும் அறிய முடியாதவாறு விளங்கி, மேலான நெறியாகச் சீவ ஒளியில் பொருந்தி நின்றான்.
2808. அறிவுக் கறிவாம் அகண்ட ஒளியும்
பிறியா வலத்தினிற் பேரொளி மூன்றும் அறியா தடங்கிடில் அத்தன் அடிக்குள் பிறியா திருக்கிற் பெருங்காலம் ஆமே.
பொருள் : சிரசின்மேல் விளங்கும் சீவ ஒளிக்கு அறிவு கொடுக்கும் அகண்ட ஒளியாகிய சிவ ஒளியும், பிரியாத இடத்தில் சோம சூரிய அக்கினியாகிய மூன்று ஒளிகளும் விளங்காமல் அடங்கி நிற்கும். அவ்வாறு அத்தனாகிய சிவனது திருவடியைப் பொருந்தி இருக்கும் பேறு கிட்டினால், சீவன் உடலோடு கூடி நெடிது வாழலாம்.
2809. ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து
ஏகாச மாசுணம் இட்டங் கிருந்தவன் ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம் ஆகாச மாய்அங்கி வண்ணனு மாமே.
பொருள் : தேவர் கூட்டத்துக்கு அறிவுப் பேரு வெளியாய்க் கொழுந்து போன்று திகழ்பவன். பெரிய மலைப்பாம்பை மேலாடையாக அணிந்தவன். அவன் ஆகாய மயமாய் விளங்கி நின்று, பின்னர் அறிவுப் பேரொளியாகவும் விளங்குவான்.
2810. உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது குயிற்கொண்ட பேதை குலாவி உலாவி வெயிற்கொண்டென் உள்ளம் வெளியது வாமே.
பொருள் : உடலில் உயிர்ப்பாய் இருக்கின்ற பிராண சத்தியும் உலகம் முழுதும் அசைவுக்குக் காரணமாக உள்ள சோதி மயமான பிராண சத்தியும் சேர்கின்ற காலத்தில் மூலாதாரத்திலுள்ள சத்தி நாதத்தை எழுப்பி உடல் முழுதும் பரவி, ஒளியாக என் உள்ளத்தில் பொருந்திச் சூக்கும உடலைத் தனித்து வெளியாகும்படி செய்தது.
2811. நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி நணுகிய மின்னொளி சோதி வெளியைப் பணியின் அமுதம் பருகலும் ஆமே.
பொருள் : சீவர்கள் சிவநினைவில் உள்ளபோது சிவன் அத்தகைய சீவர்களை விட்டு அகலாமல் நிற்பான். சீவர்கள் உலக நினைவில் உறைப்புண்டு நிற்கில், அப்பெரும்பதியாகிய சிவன் விலகி நிற்பான். ஆனால் அகலாமல் விளங்கும் மின்னுகின்ற ஒளியாகவுள்ள பரவொளியை அறிந்து வழிபடின் சிவானந்தத்தைப் பெறலாம்.
2812. புறத்துள்ஆ காசம் புவனம் உலகம்
அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி சகத்துள்ஆ காசந் தான்அம் சமாதியே.
பொருள் : புறத்தே காணப்பெறுகின்ற ஐவகை ஆகாய வெளிகளும் இருநூற்று இருபத்துநான்கு புவனங்களையும் தாங்கும் வெளியாகும். சீவரது முதல் நிலையாகிய ஆன்மாவின் அறிவே அகமாகிய உள்ளத்துக்கு ஆகாயமாகும். வளப்பம்மிக்க சுடரும் சோதியும் பொருந்திய ஒளியே சிவம் என்ற பேரறிவு விளங்கும் ஆகாயமாகும். சிவ ஒளியில் பொருந்திச் செயலற்றிருக்கும் இடமே பூமியிலுள்ள சீவர்களுக்குரிய ஆகாயப் பேறாகும்.
10. ஞானோதயம்
(ஞானோதயமாவது தான் வேறு அவன் வேறு என்ற நிலைமாறித் தானே அவன் என்ற ஞானம் உண்டாதல். குருவினால் தீட்சை பெற்றவர்க்கு ஞானோதயம் நன்கு விளங்குவதாம். எட்டாம் தந்திரத்தில் அறிவுதயம் என்று கூறப்பட்டது வேறு என்று உணர்க.)
2813. மன சந்தியில் கண்ட மன்நன வாகும்
கனவுற ஆனந்தங் காண்டல் அதனை வினவுற ஆனந்தம் மீதொழி வென்ப இனமுறா னந்திஆ னந்தம் இரண்டே.
பொருள் : மனமானது மெய் வாக்கு கண்மூக்கு செவியாகிய ஐம்பொறிகளோடு பொருந்தி உலகப்பொருளை அனுபவித்தல் சாக்கிரமாகும். இனி பொறிகள் நீங்கிய வழி அப்பொருளைக் கனவில் அறிதலில் நனவு போல் ஆனந்தம் உண்டாகும். இவ்வாறு நனவு கனவு நிலைகளில் உண்டாகும் ஆனந்தத்தை வினவில், இவற்றுக்கு மேல் சுட்டறிவு நீங்கிய அப்பால் நிலையில் ஓர் ஆனந்தம் உண்டென்பர். இவ்வகையாக இனமாகவுள்ள நந்தியெம் பெருமான் சீவர்களுக்கு அருளிய ஆனந்தம் விஷயானந்தம் என்றும் சிவானந்தம் என்றும் இரண்டாகும்.
2814. கரியட்ட கையன் கபாலம்கை ஏந்தி
எரியும் இளம்பிறை சூடும்எம் மானை அரியன் பெரியன்என்று ஆட்பட்ட தல்லால் கரியன்கொள் சேயன்கொல் காண்கின்றிலேனே.
பொருள் : யானையை உரித்துப் போர்த்தியவனும், பிரமனது கபாலத்தைக் கையில் ஏந்தியவனும், விளங்கும் பிறைச்சந்திரனை அறிந்தவனும் ஆகிய எமது தலைவனை அருமையான செயலைச் செய்தவன் என்றும் பெருங்கருணையைப் புரிந்தவன் என்றும் எண்ணி அவனிடம் அடிமை பூண்டது அல்லாமல் அவன் கருமை நிறமுடையவன் என்றோ செம்மை நிறம் உடையவன் என்றோ நான் ஆராய்ந்து காணவில்லை.
2815. மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறி யேசென்று புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை நக்கார்க் கழல்வழி நாடுமின் நீரே.
பொருள் : செருக்கின் மிக்கவராகிய தேவர்கள் திருப்பாற்கடலில் வெளிவந்த அமுதத்தை உண்ணும்படி அருளி, நஞ்சினை உண்ட மேலான சிவனைத் தகுதியுடையோர் உரை செய்த தவநெறியே சென்று அடைந்தால் பொன்னான ஞானத்தை அப்பெருமான் கொடுக்கும். ஆதலால் சிவத்தின் நாதவழியைத் துணையாகக் கொண்டு நீங்கள் சாதனையைச் செய்வீர்களாக. (நக்கன்-சிவன். கழல்-ஒளிமிகுந்த திருவடி எனினுமாம்.)
2816. விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.
பொருள் : ஆன்மா ஒளிமயமானது என்று குருவால் உணர்த்தப்பெற்று அவ்வழியினில் நின்று அறிவைப் பெருக்கி ஆன்ம அறிவுப் பிரகாசத்தில் சிவஞானத்தைத் தூண்டி சிவத்தின் அகண்ட ஒளியில் சிவ ஒளி அடங்கக் காணும் திறமுடையார்க்கு ஆன்மாவுக்கு ஒளியைக் கொடுத்த சிவத்தினது திருவடியைப் பொருந்தி வாழ்தல் கூடும்.
2817. தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின் தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.
பொருள் : அறிவுமயமான ஆன்மா தத்துவங்களோடு பொருந்திய போது அத்தத்துவங்கள் அறியப்படு பொருளாக இருந்தன. எங்குத் தத்துவம் அறியப்படுதல் இல்லையோ அங்கு அத்தத்துவத்தை அறியும் ஆன்மாவின் நிலையும் இல்லை. தத்துவ ஞானத்தால் தேகம் முதலியவை தான் அல்ல, தான் எல்லாவற்றையும் அறிபவன் என்று காணில் ஆன்மா அப்போது சிவனை நாடிச் சிவமாம் தன்மை பெறும்.
2818. விசும்பொன்றத் தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே
அசும்பினின் நூறும் ஆரமு தாகும் பசும்பொன் திகழும் படர்சடை மீதே குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.
பொருள் : ஆகாய மயமான ஒன்று எல்லாவற்றையும் தாங்கியுள்ளது என்ற உண்மை ஞானம் வந்தபோது, சேற்று நிலமாகிய சுவாதிட்டமான மலரினின்றும் உடம்பில் பரவிய சத்தியே ஒளிமயமான அமுதமாகும். அது பசும் பொன்னின் ஒளி கொண்டு சிகை பிரதேசத்தின் மேல் படர்ந்து ஒளிரும் செந்நிறம் அமைந்த சுவாதிட்டான மலரில் பொருந்திய சிவனே இவ்வாறு விளங்குவான். (குசும்ப மலர்-செங்கழுநீர் மலர் எனினுமாம்.)
2819. முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
தொத்துப் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம் ஒத்துயர் அண்டத்தி னுள்ளமார் சோதியை எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.
பொருள் : முத்தும் வயிரமும் முந்நீர்ப் பவழக் கொத்தும், பசும்பொன்னும், தூவொளி மாணிக்கமும், அவ் அவற்றின் ஒளியும் பிரிக்கப்படாமை போன்று சிவபெருமானும் எல்லா அண்டங்களிலும் பிரிக்கப்படாத பேரொளியாய் நின்றருள்கின்றனன். அதனால் அவன் உள்ளமர் சோதியாகின்றான். அங்ஙனம் கூறுவது அல்லாமல் வேறு எங்ஙனம் பிரித்துக் கூற முடியும்? சொல்லுவீராக.
2820. நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்று தானென் றிரண்டில்லை என்பது நானென்ற ஞான முதல்வனே நல்கினான் நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.
பொருள் : நான்வேறு சிவன் வேறு என்று நாடினேன். அவ்வாறு நாடிய போது நான்வேறு தான் வேறு என்ற இருபொருள் இல்லை என்ற உண்மையை என்னை விழுங்கித் தானேயாய் நின்ற ஞான மூர்த்தியே அருளினான். அப்போது நான் ஒரு பொருள் என்ற எண்ணமும் நீங்கி நான் இருந்தேன்.
2821. ஞானத்தின் நன்னெறி நாதந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நான்அறி வென்றோர்தல் ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல் ஞானத்தின் நன்மோனம் நாதாந்த வேதமே.
பொருள் : சிவஞானத்தை அடைந்து நாதம் கைவரப் பெற்று நாதாந்தம் செல்லுவதே இறைவனை அடைவதற்குரிய நல்ல நெறியாகும். ஞானத்தின் நல்ல நெறியாவது ஆன்மா அறிவுரு என்று அறிதலேயாகும். ஞானத்தில் நல்ல யோகமாவது சீவ போதத்தை விட்டுச் சிவ போதத்தில் அடங்கியிருத்தலாகும். ஞானத்தினால் நல்ல பிரணவப் பொருளை உணர்ந்து நாதாந்தம் அடைதலே வேத நெறியாகும்.
2822. உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே உய்யவல் லார்கட் கொடுக்கும் பிரணவம் உய்யவல் லார்உள் ளறிவறி வாரே.
பொருள் : பிறப்பு இறப்பாகிய தடுமாற்றத் துன்பத்தினின்றும் விடுமாறு நினைந்து திருவருளால் உய்ய வல்லார்கட்குத் திருவடி உணர்வாகிய சிவஞானமே உயிராகும். அதுபோல் சிவவுலகு சிவனண்மை சிவவுரு எனப்படும் நிலையினின்றும் உய்யவல்லார்க்குச் சிவ முதலே விழுப்பொருளாகும். உய்யவல்லார்க்கு ஒடுக்கம் ஓம் மொழியாகும். உய்ய வல்லார் அறிவு உண்மைப் பொருளாம் சிவத்தினைச் சார்ந்தமையால் மாறுதல் இல்லா உள் அறிவாகும்.
2823. காணவல் லார்க்கவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் னமுதொக்கும் பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி ஆணம்வல் லார்க்கே அவன்துணை யாமே.
பொருள் : அருளின் வழிநின்று காணும் பேறு பெற்றவர்க்குச் சிவன் கண்ணினுள் மணிபோல் உடனாய் இருந்து தன்னைக் காட்டிக் காண்பன். அன்னார்க்கு அவன் திருப்பாற்கடலில் எழுந்த அமுதம் போன்று நீண்ட வாழ்நாளை அளிப்பன். வழிபடுவார்க்கு நந்தியெம்பெருமான் தவறாமல் காத்து அருள்வான். அன்புமிக்கவர்க்கே அவன் உறுதுணையாய் நின்று உதவுவான். (ஆணம்-அன்பு, பற்றுக்கோடு.)
2824. ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல்
மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மான்அடி ஆய்நின்ற தேவர் அகம்படி யாமே.
பொருள் : ஓம் என்ற பிரணவத்தைவிட்டு நீங்காத நாதம்போல் வானுலக வாசிகளாகிய தேவர் விரும்பும் செம்பொருளாகும். மனம் வாக்குக்கு எட்டாமல் இருக்கும் செம்பொருளாகிய சிவத்தினது திருவடியைத் தொழுது நிற்கின்ற தேவர்கள் உங்களது உள்ளத்தில் விளங்குவர். ஞானோதயம் பெற்றவரது நெஞ்சினுள் தேவர் கூட்டம் பொருந்தியிருக்கும்.
சத்திய ஞானானந்தம்
(சத்திய ஞானானந்தமாவது உண்மை ஞானத்தினால் உண்டாகும் ஆனந்தம். முத்துரியம் கடந்த நிலையில் பெறும் ஆனந்தமே மெய்ப்பொருள் ஆனந்தமாகும்.)
2825. எப்பாழும் பாழாம் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே இப்பாழும் இன்னவா றென்ப திலாஇன்பத் தற்பரஞா னானந்தத் தான்அது வாகுமே.
பொருள் : பிரகிருதி மாயை அசுத்த மாயை சுத்தமாயை ஆகிய யாவும் சூனியத்தை எய்த ஆன்மா தத்துவங்களினின்றும் நீங்கி, சமஷ்டி சாக்கிர சொப்பன, சுழுத்தி நிலைகளையும், வியஷ்டி சாக்கிர சொப்பன சுழுத்தி நிலைகளையும் கடந்து துரியத்தை அடையவே, இத்துரிய நிலையும் சூனியமாக, அந்நிலை இன்ன தன்மையது என்று விளக்க ஒண்ணாத இன்பத்தில் தற்பரன் என்ற சிவன் ஆன்மாவில் நிலை பெற்ற போது ஆன்மா சிவமாந் தன்மை எய்தி ஆனந்தமாய் விளங்கும்.
2826. தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும் அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.
பொருள் : தொம்பதம் தத்பதங்களில் சொன்ன சீவதுரியம் பரதுரியம் போல், நம்பத் தகுந்த சீவதுரியம் பரதுரியம் கடந்து விளங்கும் சிவதுரியத்தில் ஆனந்தம் பொருந்தும். ஆன்மா பிரகிருதியை நோக்கி நினைக்காத அவ் அப்பால் நிலையில் செம்பொருளாக இருந்து சீவர்களைப் பக்குவம் நோக்கி ஆட்கொள்பவன் சிறப்புமிக்க சிவனே யாவன்.
2827. மன்சத்தி ஆதி மணிஒளி மாசோபை
அன்னதோ டொப்ப மிடல்ஒன்றா மாறது இன்னியல் உற்பலம் ஒண்சீர் நிறம் மணம் பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே.
பொருள் : சிவத்துடன் பொருந்திய திருவருள் ஆற்றல் சத்தி எனப்படும். அது மணியொளி போன்று மிக்க அழகினை யுடையதாகும். அச்சத்தி மெய்யுணர்வாகும். அவற்றுடன் ஒப்புரைத்தலாகும் பொருள் ஒன்றும் இன்று இனிமை பொருந்திய கருங்குவளையாகிய உற்பல மலருக்குத் தூய்மை, சிறப்பு. நிறம், மணம், அழகு உள்ளன போன்று சிவபெருமானுக்கும் ஐவகை ஆற்றல்களும் உண்டாகும். அவற்றொடும்கூட அழகிய பொருள்களும் ஆறாகும். (உற்பலம்-நீலோற்பலம்-கருங்குவளை.)
2828. சத்தி சிவம்பர ஞானமும் சாற்றுங்கால்
உய்த்த அனந்தம் சிவம்உயர் ஆனந்தம் வைத்த சொரூபத்த சத்தி வருகுரு உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே.
பொருள் : திருவருள் ஆற்றலாகிய சத்தியும், சிவபெருமானும், திருவடியுணர்வும் சொல்லுமிடத்து உலகுயிர்களைச் செலுத்தும் ஒப்பில் பொருள்கள் ஆம் இவையனைத்தும் முடிவெய்தா. சிவத்தின் ஒப்புயர்வில்லாத பேரின்பமும் உடையவாகும். வைத்த திருவருளும் உண்மை நிலைக்கண் சிவகுருவாக வந்தருளும். அத்திருவருள் கொள்ளும் திருமேனி நீலோற்பல மலரையொத்து விளங்கும்.
2829. உருஉற் பலம்நிறம் ஒண்மணம் சோபை
தரம்நிற்ப போல்உயிர் தற்பரந் தன்னில் மருவச் சிவமென்ற மாமுப் பதத்தின் சொரூபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே.
பொருள் : அழகிய நீலோற்பல மலரில் நிறமும் மணமும் அழகும் வேறறக் கலந்திருப்பது போல சீவன் சிவனோடு வேறறக் கலந்து நிற்க, சிவம் என்ற தத்துவமாகி மகாவாக்கியப் பொருளானவன் சத்திய ஞானானந்தம் விளங்க நின்று அருளினான். முப்பதம்-தத்துவம் அசி சத்தியாதி என்பது சத்தியா என நின்றது.
2830. நினையும் அளவில் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும் எனையும்எங் கோன்நந்தி தன்னருள் கூட்டி நினையும் அளவில் நினைப்பித் தனனே.
பொருள் : செல்லும் அளவு மனம் நெகிழும்படியாகச் சிவனை வணங்கி, பாக்களால் துதிப்பின் அவனை உள்ளத்தில் அமைத்தல் கூடும். என்னையும் அவ்வாறு எளிவந்த தலைவனான நந்தி, அவனது அருளுடன் சேர்ப்பித்து மறவாமல் நினைக்கின்ற அளவு எனக்கு அவனிடம் பற்று உண்டாகும்படி செய்தான்.
2831. பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும் போலும் துரியம் பொடிபட உள்புகச் சீலம் மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.
பொருள் : பாலுடன் தேனும் பழத்தின் சாறும், பரிசுத்தமான அமுதத்தின் சுவையும்போல உள்ள துரிய அவத்தையைச் சீவன் கடந்தபோது சிவன் சீவனுள் புகுந்து மயிர்க்கால்தோறும் இன்பம் பெருகும்படி நிறைந்திருக்கும்.
2832. அமரத் துவங்கடந் தண்டங் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன் பவளத்து முத்துப் பனிமொழி மாதர் துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.
பொருள் : அழியாத் தன்மையையுடைய சீவனையும் அது பொருந்தியிருக்கும் அண்டகோசத்தையும் கடந்து, நாதத்துவத்தைக் கடந்து, தனித்து நிற்பவன் சிவபெருமானாகும். பவளம் போன்ற இதழ்களும் முத்துப்போன்ற பற்களும் தன்மையுடைய பனி போன்ற மொழியும் உடைய மாதரது கவர்ச்சியில் சோர்வடையாத சோதியாகிய அப்பெருமான் புறம் புறம் திரிந்த செல்வனாக உள்ளான். (அமரத்துவம் கடந்து-கூற்றுவனை வென்று எனினுமாம்.)
2833. மத்திமம் ஆறாறும் மாற்றி மலம்நீக்கிச்
சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப் பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச் சத்திய ஞானானந் தஞ்சார்ந்தான் ஞானியே.
பொருள் : உள்நிலைக் கருவிகளாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டு, மலவாதனை நீங்கித் தூய்மையான துரியாவத்தைக் குற்றங்களைக் கடந்து, பெத்தநிலை மாறிச் சிவத்தை நோக்குவதாகி, உண்மையான ஞானானந்தத்தைப் பொருந்தியிருப்பவன் ஞானியாவான். (பெத்தம் அற-பாசம் நீங்க)
2834. சிவமாய் அவமான மும்மலம் தீர்ந்து
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத் தவமான சத்திய ஞானனந் தத்தே துவமார் துரியம் சொரூபம தாமே.
பொருள் : சீவன் சிவத்தைச் சார்ந்து சிவமானபோது பிறவியைத் தரும் ஆணவாதி மும்மலங்களும் நீங்க, குற்றமுள்ள பிரகிருதி மாயை, அசுத்தமாயை, சுத்தமாயை ஆகிய மூன்றினையும் கெடுத்து, அவற்றின் பற்றும் அறும்படி விட்டு நின்றால், தவத்தால் அடையும் உண்மை ஞானானந்தத்தில் சீவனும் சிவனும் பொருந்துவதில் துரியாதீதம் அடைந்து சிவரூபம் அமையும்.
12. சொரூப உதயம்
(சொரூப உதயம்-சிவ சொரூபம் வெளிப்படுதல். சிவசொரூப வெளிப்பாடு முத்தியை அளிக்கும் என்க.)
2835. பரம குரவன் பரம்எங்கும் ஆகி
திரம்உற எங்கணும் சேர்ந்தொழி வற்று நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம் அரிய துரியத் தணைந்துநின் றானே.
பொருள் : பரமாசாரியான சிவன் தத்துவங்களை விட்ட ஆன்மாவில் பொருந்தி, அது உரம்பெற எவ்விடத்தும் நீக்கமற நிறைந்து விளங்குவான். அவ்வாறு ஆன்ம சொரூபத்தில் நிலைபெற்ற சிவன் அருமையான துரிய நிலையில் பொருந்தி விளங்கினான்.
2836. குலைக்கின்ற நீரிற் குவலயம் நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம் நிலத்திடை வானிடை நீண்டகன் றானை வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.
பொருள் : நிலையைக் குலைக்கின்ற தன்மையுடைய பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், அலைத்தலைச் செய்கின்ற காற்று, தீ, ஆகாயம் ஆகியவையாயும், அவற்றைக் கடந்தும் நில முதல் ஆகாயம் வரை உயர்ந்து விளங்கும் சிவனை ஓர் எல்லைக்கு உட்படுத்தி வணங்கும் வகை அறியேன். (நீர்மை-தன்மை.)
2837. அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர் தங்கிநின் றான்தனி நாயகன் எம்மிறை பொங்கிநின் றான்புவ னாபதி தானே.
பொருள் : உம்பர் உலகத்துள்ள அயன், மால், அரன் முதலிய தேவர்களும் எங்கும் நிறைந்துள்ள யாவர்களும் தாம்தாம் உய்யுமாறு இறைவனே என்று பாடிப் பரவிப் பணிவார்கள். ஒப்பில் தனி நாயகனாகிய சிவபெருமான் எங்கணும் தங்கி நின்றருளினன். அவன் தனிப்பெரும் விளக்கமாய் இருநூற்று இருபத்தி நான்கு புவனங்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் உலகங்கட்கும் ஏனை அண்டங்கட்கும் ஒரு முதலாய்த் திகழ்கின்றனன்.
2838. சமையச் சுவடும் தனைஅறி யாமல்
கமையற்ற காமாதி காரணம் எட்டும் திமிரச் செயலும் தெளியுடன் நின்றோர் அமரர்க் கதிபதி யாகிநிற் பாரே.
பொருள் : சமயம் வகுத்துள்ள நெறிமுறையினை அறிய முடியாதபடி தடை செய்து நிற்கும் பொறுமையை அழிக்கின்ற காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், மண்ணாசை, பொன்னாசை ஆகிய எட்டும், அவற்றால் விளையும் தீமையான செயலும் உணர்ந்து சிவத்துடன் பொருந்தி நின்றவர் தேவர்களுக்குத் தலைவராக விளங்கி நிற்பார்.
2839. மூவகைத் தெய்வத் தொருவன் முதல்உரு
ஆயது வேறாம் அதுபோல் அணுப்பரன் சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற ஏயும் நெறியென் றிறைநூல் இயம்புமே.
பொருள் : பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவகைத் தெய்வத்தில் ஒருவனாகிய உருத்திர மூர்த்தி அவற்றோடு ஒருவனாய் அவற்றின் வேறாய் இருந்து இயக்குவதுபோல் சிவ பர சிவ முத்துரியத்தில் சீவர்களைச் செம்மையுறச் செய்யும் நெறியில் சிவனும் ஆவான் என்று வேதாகமங்கள் கூறுவனவாம்.
2840. உருவன்றி யேநின் றுருவம் புணர்க்கும்
கருவன்றி யேநின்று தான்கரு வாகும் மருவன்றி யேநின்ற மாயப் பிரானைக் குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.
பொருள் : சிவம் அருவமானதாக இருந்துகொண்டு சகல உருவங்களையும் கூடியிருக்கும். தனக்கு ஒரு மூலமின்றித் தான் எல்லாவற்றுக்கும் மூலமாகும். அருவ நிலையையும் கடந்து விளங்கும் மாயப் பிரானை அவனே குருவாகச் சீவனில் வெளிப்பட்டு அருளினால் அன்றி யாராலும் கூட முடியாது.
2841. உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர் உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர் உருவம் நினைப்பார் உலகத்தில் யாரே.
பொருள் : சிவபெருமானின் திருவுருவினைக் குறித்து நாடுங்குணமுடையோர் சித்தத்துள் அறிவுப் பேரொளியாய் நின்று அவன் விளங்குவன். அம்முறையான் திருவுருவினை அன்புடன் நாடுவோர் பலவூழிகளையும் அருளால் காண்பர். அத்திருவுருவினை எப்போதும் நினைப்பவர் சிவவுலக வாழ்வினராவர். சிவ உலகம் திருக்கயிலை. மேலும் அக்குறியா நினைவுடையார் உலகத்தோடு இயைந்து நடப்பினும் அவர் உலகம் கடந்தவராவர். இவ்வுண்மையினை உலகிடை உண்மையால் அறிவார் எவர்? (நினைத்தல்-தியானித்தல்)
2842. பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றப்
பரஞ்சோதி என்னுட் படிந்ததன் பின்னைப் பரஞ்சோதி யுள்நான் படியப் படியப் பரஞ்சோதி தன்னைப் பறையக்கண் டேனே.
பொருள் : திருவருளால் பரஞ்சோதியாகிய பேரொளிப் பெரும் பொருளைப் பற்றும் பேறு பெற்றேன். பற்றவே அச்செம்பொருளும் என்னுள் படிந்தருளிற்று. அங்ஙனம் படிந்தருளிய பின்னை அப்பேரொளிப் பெரும்பொருளின் அகத்து அடியேனும் மெள்ள மெள்ளப் படிவிக்கப் பெற்றேன். அங்ஙனம் படியப் படியப் பேரொளிப் பெரும் பொருள் தன்னையுணர்த்தி உரைத்தருளவும் கண்டேன்.
2843. சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல மருவிய சத்தியாதி நான்கும் மதித்த சொரூபக் குரவன் சுகோயத் தானே.
2844. உரையற்ற ஆனந்த மோனசொரூ பத்தன்
கரையற்ற சத்திஆதி காணில் அகாரம் மருவுற் றுகாரம் மகாரம தாகி உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.
பொருள் : சொல்லொணாப் பேரின்ப மோன உண்மை வடிவினன் சிவகுரவன். அவன்பால் எல்லையில்லாத அருட்பண்புகள் சேர் சத்தி முதலியவற்றைத் திருவருளால் காணுங்கால் இயற்கை ஒலியாகிய அகரமும், அவற்றோடும் கூடும் உகர மகரங்களும் ஆகித் தோன்றும். அத்தோற்றமே ஓம் மொழி மறையாகும். அம்மறையின் கண் அறிவுப் பேரொளியாய் உள்ளொளியாய் விளங்குவது திருவருளாகும். (தாரம்-பிரணவம்.)
2845. தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து கலை நின்ற கள்வனில் கண்டுகொண் டேனே.
பொருள் : சிரசின்கீழ் உள்ள கண்டப் பிரதேசத்தில் நினைவை நிறுத்தித் தவம் புரிந்து இருதயப் பிரதேசத்தில் செயற்படும் கிரியா சத்திக்குத் தலைவனை நான் ஊன்பொதிந்த தேக தர்மத்தைக் கடந்து சந்திர மண்டலத்தில் விளங்கும் ஒளியில் கண்டுகொண்டேன். (தலைநின்ற தாழ்வரை-கயிலை; முலை நின்றமாது-உமை.)
2846. ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமா றறிந்தேன் புகுமாறும் ஈதென்றே ஏமாப்ப தில்லை இனிஓர் இடமில்லை நாமாம் முதல்வனும் நாமென லாமே.
பொருள் : உள்ளத்திலுள்ள சிவன் எவ்விதம் பிரகாசமுற்றுச் சீவர்களை ஆட்கொள்கிறான் என்பதை அறிந்தேன். நான் அவனைப் புகலிடமாகச் சென்றடையும் நெறி இது என்பதையும் அறிந்தேன். வேறு ஒரு பாதுகாவல் தேவையில்லை. இனி நான் சென்றடையும் இடமும் வேறு இல்லை. நாம் எல்லாம் சென்றடையும் முதல்வனும் நான் என்று கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை.
13. ஊழ்
(ஊழாவது இருவினைப்பயன் செய்தவனை வந்தடையும் நெறி. இங்கு இருவினைப் பயன் எய்திய ஞானியர் நிலைபற்றிக் கூறப்பெறும்.)
2847. செத்தில்என் சீவில்என் செஞ்சாந் தணியில்என்
மத்தகத் தேஉளி நாட்டி மறிக்கில் என் வித்தக நந்தி விதிவழி யல்லது தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.
பொருள் : உள்ளத்தில் சிவத்தை அறிந்த ஞானிகள் பிறர் தம்மை கூரிய வாள் கொண்டு செதுக்கியும் சீவியும் துன்புறுத்தினால் என்ன? கலவைச் சந்தனம் பூசி மகிழ்வித்தால் என்ன? தலையில் உளியை நாட்டி இறக்கச் செய்தால் என்ன? சதுரப்பாடு உடைய நந்தி அமைத்த நியதிப்படியே இத்துணையும் நடப்பது என்று உணர்ந்து தம்முடைய நிலையினின்றும் திரியமாட்டார்.
2848. தான்முன்னம் செய்த விதிவழி தான் அல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று நான்முன்னம் செய்ததே நன்னிலம் ஆயதே.
பொருள் : சீவன் தான் முற்பிறவியில் செய்த வினைவழி இன்பமும் துன்பமும் அமையுமேயன்றி, ஆகாய பூதநாயகரான சதாசிவன் முன்னே சீவர்களுக்காக இவைகளை நியமிக்கவில்லை. ஆதலால் அத்தலைவனை நோக்கிச் சிரசின் வழியே மேற்சென்று நான் முன்னர்ச் செய்த தவமே நல்ல மேலான இடத்தை அளித்தது.
2849. ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தழி வாரில்லை நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியை பேறிட்டென் உள்ளம் பிரயகி லாதே.
பொருள் : ஆற்றில் இயல்பாக வந்து பொருந்திய நுண்ணிய மணலை அந்த ஆறே சுமக்காமல் பங்குகொண்டு ஆறிட்ட மேடு பள்ளங்களைத் தூர்ப்பார் பிறர் ஒருவரும் இல்லை. அதைப்போல் நான் செய்த வினைக்குரிய அனுபவம் எனக்கே உண்டு என்று உணர்ந்த நான் வெண்ணீற்று ஒளியில் விளங்கும் பெருமானை, பெறும் பேறாகக் கொண்டு அவனைவிட்டு நீங்காது இருப்பேன்.
2850. வானின் றிடிக்கில்என் மாகடல் பொங்கில்என்
கானின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என் தானொன்றி மாருதம் சண்டம் அடிக்கில்என் நானொன்றி நாதனை நாடுவன் நானே.
பொருள் : ஆகாயத்தினின்றும் இடி விழுந்தால் என்ன? பெருங்கடல் பொங்கி அழிவு நேர்ந்தால் என்ன? காட்டுத் தீயால் சூழப்பட்டு உடல் வெந்தால் தான் என்ன? ஊழிக்காற்றுப் போன்ற புயல் காற்று அடித்துப் பொருள் சேதத்தை உண்டாக்கினால் என்ன? நான் அவற்றையெல்லாம் பொருட்டாக எண்ணாமல் என் தலைவனான சிவத்தோடு ஒன்றி இருப்பதினின்றும் நழுவ மாட்டேன்.
2851. ஆனை துரத்தில்என் அம்பூ டறுக்கில்என்
கானத் துழுவை கலந்து வளைக்கில்என் ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த ஞானத் துழவினை நான்உழு வேனே.
பொருள் : மதயானை கொல்லத் துரத்தினால் என்ன? கூர்மையான அம்பை உடலில் செலுத்தி அறுத்தால் என்ன? காட்டிலுள்ள புலி துரத்தி வளைத்தால் என்ன? ஞானபூபமியில் எம்பெருமான் எனக்கு அளித்த ஞானத் தொண்டினைச் செய்வதினின்றும் நான் நழுவ மாட்டேன். (ஞானத்து உழவு-ஞானம் அடைவதற்கு உரிய ஆராய்ச்சி.)
2852. கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை வீடு கெடின்மற்றோர் வீடுபுக் காலொக்கும் பாடது நந்தி பரிசறி வார்கட்கே.
பொருள் : எடுத்த தேகத்துக்கு ஊறு நேரிடுமாயின் வேறோர் தேகம் வழங்க எம்பெருமான் உள்ளான். அதிக மழை முதலியவற்றால் ஒரு நாடு கேட்டை அடையுமாயினுள் அதிலுள்ள நம் மக்கள் கெடாது வேற்றிடம் சென்று வாழ்வர். குடியிருந்த வீடு பழுதடைந்தபோது வேறோர் வீடு புகுவதுபோல வேறோர் உடல்வாழ்வு கிட்டும். சிவஞானம் பெற்றோர்க்கு இத்தன்மை நன்கு விளங்கும். (நமர்-நம்மவர்.)
14. சிவ தரிசனம்
(சிவதரிசனம்-இக்காட்சி சிவனைச் சிந்தையில் காண்பது. சிவனை இடைவிடாது எண்ணியிருந்தால் அவன் வெளிப்பட்டருள்வான் என்க.)
2853. சிந்தைய தென்னச் சிவன்என்ன வேறில்லை
சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச் சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.
பொருள் : சிவனையே எண்ணிக் கொண்டிருப்பவர்க்குச் சிந்தை வேறு, சிவன் வேறு என்பது இல்லை. சிந்திப்பவரது உள்ளத்தில் சிவன் வெளிப்படுவான். சிவஞானத்தால் தெளிவடைந்த ஞானியர்க்கு அவர்களது எண்ணத்திலேயே சிவன் சிறந்து விளங்கினான்.
2854. வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.
பொருள் : வாக்கு மனத்துக்கு அப்பாற்பட்டவன் வேதங்களால் கூறப்பெறும் சிவனாவான். அவனை அருளால் கூர்ந்து நோக்குங்கள். அவ்வாறு நோக்கப்படும் பொருள் மிகவும் நுண்மையானது. அப்பொருளுக்குப் போக்கும் வரவும் கேடும் இல்லையாம். அவ்வாறு உண்மை உணர்ந்து அத்தனாகிய சிவனை ஆராய்ந்து தெளிவார்க்கு அதுவே தேடும் பொருளாம்.
2855. பரனாய்ப் பராபர னாகிஅப் பாற்சென்று
உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்தர் தரனாய்த் தனாதென ஆறறி வொண்ணா அரனாய் உலகில் அருள்புரிந் தானே.
பொருள் : சிரசுக்குமேல் விளங்கும் ஆன்ம ஒளியாய் அதன்மேல் விளங்கும் சிவனாய், அவ்வியாபகத்தைக் கடந்து பேராற்றலும் பேரறிவும் உடையதாய், எதனாலும் மறைக்க முடியாத தூய்மையுடைய சுடர் வடிவாய், தானே எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் சீவன் மனம் இந்திரியங்களோடு கூடித் தன் அறிவால் அறியப்படாத அரனாயும் உள்ள பரம்பொருள் உலகுக்கு அருள்புரிபவனாக உள்ளான்.
15. சிவசொரூப தரிசனம்.
(சிவசொரூபம் என்பது சிவத்தின் இயல்பான நிலை. அஃதாவது சத்து, சித்து, ஆனந்தம் என்பது தரிசித்தலாவது அந்நிலையை உணர்தல். சிவதரிசனத்தைக் கண்டவர்க்கு உண்டாகும் மெய்ப்பாடுகள் இங்குக் கூறப்படும்.)
2856. ஓதின் மயிர்க்கால் தொறும்அமு தூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை வேதம தோதும் சொரூபிதன் மேன்மையே.
பொருள் : சொல்லப்பெறும் உரோமத் துவாரங்கள் தோறும் இன்பம் தேக்கிய புறத்தும் அகத்தும் தடைப்படாத ஆனந்தமே உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூன்று சொரூபங்களையும் கடந்து அப்பால் வேதத்தில் கூறப்பெறும் (பரப்பிரமத்தின்) சிவத்தின் மேன்மையான சொரூபமாகும். மயிர்க்கால்தோறும் அமுதூறலாவது உடம்பில் உண்டாகும் மெய்ப்பாடு.
2857. உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.
பொருள் : உணர்வாகவும் அவ்வுணர்வு வெளிப்படும் உயிராகவும் உள்ளவன் அச்சிவனே யாவான். ஓர் உயிரும் மற்றோர் உயிரும் புணரும்படி செய்பவனும் பிணங்கும்படி செய்பவனும் அவனே யாவன். இவ்வாறு ஒழுங்கு செய்யும் அவனை இன்ன தன்மையன் என எண்ணத்தினால் வரையறை செய்யமுடியாது. ஆனால் இவன் ஆறாதாரங்களில் சுவாதிட்டான மலரில் பொருந்தியிருப்பவனாக உள்ளான்.
2858. துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு
முன்னி யவர்தம் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமே.
பொருள் : முன் மந்திரத்தில் கூறியவாறு பொருந்தி நின்ற சிவனது திருமுன் இருப்பதாக நினையுங்கள். அப்போது நினைப்பவரது விருப்பத்தைத் தானே அறிந்து நிறைவேற்றி வைப்பான். அவன் ஐயங்களைப் போக்கும் வேதசொரூபமானவன். பெருமையுடைய தவத்தால் உணரத்தக்கவன். ஆருயிரின் அறிவு நிலையமான சிரசிலிருந்து தெளிவினைச் செய்பவனுமாவான்.
2859. மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும் என்னுற் றறிவானான் என்விழித் தானே.
பொருள் : திருவருளால் விளக்கம் பெற்ற அக்கண்ணைத் திறந்து பார்த்தேன். அவ்வாறு திறந்து பார்த்தலும் என்னில் நிறைந்த சோதியும் தலைவனும், ஒப்பற்ற தலைவனும் பொன் போன்ற திருமேனியையுடைய சடாதாரியான நந்தியும் ஆகிய சிவன் என்னிடம் பொருந்தி நீ அறிவுமயமானவன் என உணர்த்தி அருளினான்.
2860. சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தில் நில்லாச் சிவானந்தப் பேரொளி சுத்தப் பிரம துரியம் துரியத்துள் உய்த்தல் துரியத் துறுபே ரொளியே.
பொருள் : தனிமுதற் பெரும்பொருள் சிவன். அவன் இயற்கை உண்மை அறிவு இன்ப வடிவினன். சித்தம் எனப்படும் இறுப்பின்கண் நில்லாத சிவப்பேரின்பம் பேரொளி. திருவருள் செயலறலாகிய துரியம் சுத்தப் பிரமத்துரியம் எனப்படும். அத்துரியத்துள் செலுத்திய மற்றொரு செயலறல் உய்த்த துரியமாகும். அத்துரியத்துள் மிக்க பேரொளியாக இருப்பவனும் அவனே. இத்துரியம் அருளோன் செயலறல் எனப்படும்.
2861. பரனல்லன் நீடும் பராபரன் அல்லன்
உரனல்லன் மீதுணர் ஒண்சுடர் அல்லன் தரனல்லன் தான்அவை யாய்அல்ல ஆகும் அரனல்லன் ஆனந்தத் தப்புறத் தானே.
பொருள் : சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மானாம் செம்பொருள் பரன் அல்லன். அதனினும் சிறந்த நிலை பேறுள்ள பராபரனும் அல்லன். பேரறிவுப் பேராற்றல் வாய்ந்த பெரும் பொருளும் அல்லன். புணர்ப்பாய் நின்று மேலுணரும் ஒண்சுடரும் அல்லன். அனைத்தையும் தாங்கும் அருள்பொருளும் அல்லன். அவையனைத்தும் அல்லவாகும் அரன் அல்லன். திருவருள் இன்பமும் அல்லன். அவன் எல்லாவற்றுக்கும் அப்புறத்ததாக நிற்கும் செப்பம் சேர் ஒப்பில் ஒருபெரும் பொருளாவன். (அல்லன் என்பன அல்ல எனக் கடை குறைந்து நின்றன.)
2862. முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா சத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால் சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே.
பொருள் : முத்தியாகிய வீடும் சித்தியாகிய பேறும் கைகூடிய ஆருயிர்க்கிழவன் ஞானத்தோன் ஆவன். அத்திருவடியுணர்வு கைவந்ததன் பேரன்பாம் பத்திநிலை கைகூடும். அப்பத்தியுள் நின்றபின் பரத்தினுள் நிற்பன். பின் திருவருள் பெருந்திருவுள் நிற்பன். அவ்வாறு நிற்கும் நல்லோர்க்கு இயற்கையுண்மைச் சிவன் கைகூடுவன். அதனால் பொருள் அருள் தூய்மையும் அகன்றோர் ஆவர். அவரே பேரின்பப் பேரறிவினர் ஆவர்.
2863. துரிய அதீதமும் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில் விரியும் குவியும் விள் ளாமிளி ரும்தன் உருவும் திரியும் உரைப்பதெவ் வாறே.
பொருள் : செயல் அறுதலாகிய துரியமும் நினைவு அறுதலாகிய துரியாதீதமும் இத்தன்மைய என்று எவராலும் சொல்லாணாப் பாழாகும். அப்பால் நிலையாகிய துரியாதீதம் உயிர்ப்பு அடங்கலாகும். அந்நிலையை எய்தினால் விரிதலாகிய நினைப்பும் குவிதலாகிய மறப்பும் உண்டாகா. ஆருயிர்களின் சுட்டறிவும் சிற்றறிவும் பேரறிவாகத் திரிந்து விளங்கும். அவ்விளக்கத்தின்கண் சிவபெருமான் அவ்வுயிரைத் தானாக்கி நின்றருள்வன். அந்நிலையினைச் சொல்லால் சொல்லுவது எவ்வண்ணம்? (சொல்லறும்-மோனம் உண்டாம். பாழாம்-வேறுபாடு இன்றாம். விள்ளா-உண்டாகா. தன்னுருவு-சிவபோதம்.)
16. முத்தி பேதம் கரும நிருவாணம்
(முத்தி பேதம்-வீடு பேற்றின் வகை. கரும நிருவாணம்-செயல் அறுவகை. இப்பகுதியில் சச்சிதானந்தப் பொருளைக் கூடிய ஆன்மா செயலற்று மௌனநிலை எய்தும் என்பது கூறப்பெறுகிறது.)
2864. ஓதிய முத்தி அடைவே உயிர்ப்பர
பேதமி லாச் சிவம் எய்தும் துரியம்அ நாதி சொரூபம் சொரூபத்த தாகவே ஏத மிலாநிரு வாணம் பிறந்தததே.
பொருள் : வேதங்களில் கூறிய முத்தியாவது துரிய முறையில் முறையாக உயிர் பரம் அவற்றோடு பிரிப்பின்றியுள்ள சிவம் ஆகியவை பொருந்தி நிற்கும். அப்போது ஆன்ம சொரூபமாகிய பரம் சிவசொரூபத்தில் இலயமடைய, குற்றமில்லாத நிருவாண நிலை உண்டாகும். (நிருவாணம்-செயலறுகை; முக்தி. ஆன்மா செயலற்றுச் சிவசொரூபத்தில் அடங்கியிருத்தல் முத்தியாகும்.)
2865. பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
கற்றவர் கற்றுக் கருதிய கண்ணுதல் சுற்றற் றவர் சுற்றி நின்றஎன் சோதியைப் பெற்றுதற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.
பொருள் : உலகப் பற்றுக்களை விட்டவர் பற்றி நின்ற மேலான பொருளும் கல்வியைக் கற்று அதன் முடிவான சிவஞானம் எய்தினவர் விரும்புகின்ற கண்ணுதலும் கல்வியின் முடிவினை உணர்ந்தோர் பொருந்தி நிற்கும் என் சோதியும் ஆகிய சிவபெருமானை அடைந்து பொருந்தியவர் பேச்சினை விட்டு நிற்பவராவர்.
17. சூனிய சம்பாஷணை
(அஃதாவது, ஞானப்பொருளை மறைவாகப் பேசுவது. இம்மந்திரங்கள் மறைவாகக் கூறினும் அவை பொருள் விளங்கக் கூடிய அமைப்பினை உடையவனாய்ப் படிப்போர்க்கும் இன்பம் பயப்பனவாய் இருக்கும். ஞான சாதனையும் ஞான சாதனையின் பயனும் இங்குக் கூறப்பெறும். (இதைச் சித்தர் பரிபாஷை என்றும் கூறுவர்.)
2866. காயம் பலகை கவறைந்து கண்மூன்று
ஆயம் பொருவதுஓர் ஐம்பத்தோ ரக்கரம் ஏய பெருமான் இருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.
பொருள் : மனித தேகம் சூதாடும் பலகை போன்றது. ஐந்து இதிரியங்களும் சூதாடும் கருவிகளாம். சீவனது இச்சா ஞானக் கிரியை ஆகிய மூன்று கண்களாய் விஷய சுகமாகிய ஆதாயத்தை அடைய ஐம்பத்தோர் அட்சரங்களையுடைய ஆதாரங்களில் பொருந்திய சீவன் இருந்து செயல்படுகின்ற மாயத்தன்மையுடைய இந்திரியங்களின் மறைப்பை அறியேன்.
2867. தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வார் இல்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளருக்கு ஊறிக் கிடக்கும் என் உள்ளன்பு தானே.
பொருள் : காமம், வெகுளி, மயக்கமென்று சொல்லப்படும் தடைகளாகிய சின்னஞ்சிறு செடிகள் முளைத்து உடம்பகத்துக் காணப்படுகின்றன. அருளால் அவற்றினின்றும் நீங்கித் தூய சிவ நன்னெறிக்கண் நிற்கும் வகையறிவாரில்லை. அங்ஙனம் நீங்கி நிற்கும் வகையறிந்து ஒழுகும் வாய்மையாளர்கட்குச் சிவன் வெளிப்பட்டருள்வன். அவர்பால் என் உள்ளம் அன்பூறி ஆர்வம் பெருகிக் கிடந்தது என்க. (தூறு-சிறுசெடி)
2868. ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனைஉள ஏறற் கரியதோர் ஏணியிட்டு அப்பனை ஏறலுற் றேன் கடல் ஏழுகணஅ டேனே.
பொருள் : ஆறு ஆதாரங்களாகிய தெருவில் கீழுள்ள மூலாதாரமாகிய சந்தியில் பக்குவம் அடையாதபோது இருள் முகமாகத் தொழிற்படுவனவாகிய நான்கு இதழ்களாகிய பனைகள் உள்ளன. ஏறுவதற்கு அருமையான சுழுமுனையாகிய ஏணியை வைத்து அப்பனை மரத்தின் மேல் ஏறிச் சகஸ்ரதளம் சென்றேன். ஆதார கமலங்களாகிய ஏழு கடலும் ஒன்றாகி ஒளிமயமாகப் பொங்குவதைக் கண்டேன்.
2869. வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது தொழுது கொண் டோடினார் தோட்டக் குடிகள் முழுதும் பழுத்தது வாழைக் கனியே.
பொருள் : ஞான சாதனையாகிய கத்தரி விதையை விதைக்க வைராக்கியமாகிய பாகற்கொடி தோன்றியது. தத்துவ ஆராய்ச்சியாகிய புழுதியைக் கிளறினேன். மஞ்சள் ஒளியையுடைய சகஸ்ரதளமாகிய பூசணி மலர் மலர்ந்தது. சரீரமாகிய தோட்டத்தில் அட்சரங்களாகிய குடிகள் வணங்கி அகன்றனர். வாழ்வில் தலைமை அளிக்கும் சிவமாகிய கனி சித்தித்தது. (வழுதலை வித்து-யோகப் பயிற்சி. பாகல்-வைராக்கியம். புழுதியைத் தோண்டினேன் தத்துவ ஆராய்ச்சி செய்தேன். பூசணி பூத்தது-சிவம் வெளிப்பட்டது. தோட்டக் குடிகள்-இந்திரியாதி விஷயங்கள். வாழைக்கனி; ஆன்ம லாபம். இவ்வாறு வேறு பொருள் கூறுவாரும் உளர். வழுதலை கத்தரி.)
2870. ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவறி வார்இல்லை மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம் பொய்யொன் றுமின்றிப் புகல்எளி தாமே.
பொருள் : ஐம்பூதக் கூட்டுறவால் உண்டாகும் வீரியமாகிய விதையினில் ஆன்மாவை விளங்கிக் கொள்ளும் விந்து மண்டலம் உள்ளது. விந்து மண்டலம் எவ்விதம் அமைகிறது என்ற தெளிந்த ஞானமுடையவர் இல்லை. நீலகண்டப் பெருமானிடம் மனம் பதிந்தால் ஆன்மா விளங்கும் ஒளி மண்டலத்தைச் சந்தேகமின்றி எளிதாய் அடையலாம்.
2871. பள்ளச்செய் ஒன்றுண்டு பாழ்ச்செய் இரண்டுள
கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.
பொருள் : பயனில்லாத சுழுத்தியாகிய பள்ள நிலம் ஒன்று உள்ளது. பயிர் விளைவில்லாச் சாக்கிரம் சொப்பனமாகிய இரண்டு நிலங்கள் உள்ளன. காண்பதற்கு அருமையான ஆன்மாவாகிய கள்ளச்செய் தன் உண்மை உணராத நிலையில் பயனற்று இம்மூன்று அவத்தையிலும் கலந்து இருந்தது. தன் உண்மையை உணர்ந்து உள்ளமாகிய நிலத்தைப் பொருந்திச் சிவத்தொண்டாகிய உழவினைச் செய்வார்க்கு சிவானந்தமாகிய வெள்ளம் பாய்ந்து சிவன் முத்தியாகிய விளைவு கிட்டியது.
2872. மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாம்அணை கோலின் தறியுறப் பாய்ந்திடும் நாவணை கோலி நடுவிற் செறுஉழார் காலணை கோலிக் களர்உழு வார்களே.
பொருள் : இடைபிங்கலை சுழுமுனை ஆகிய மூன்று ஏரும் உழுவது மூலாதாரமாகிய முக்காணி நிலமாகும். உழுதபின் அவை முதுகந்தண்டாகிய கயிற்றில் கட்டப்பெற்று சுழுமுனையாகிய தறியில் பொருந்திவிடும். ஞான சாதனை செய்யும் உழவர் வாக்கு ரூபமான பிரமத்தை எழுப்பி உண்ணாக்குக்கு மேல் பிரமப்புழையை அடைந்து அங்குள்ள சகஸ்ரதளமாகிய வயலை உழமாட்டார். காற்றினால் அடயோகம் செய்து விளையாத நிலத்தில் பயிரிடுகின்றனர். என்ன பரிதாபம்! தேக சித்தியைவிட ஞான சித்தியே சிறப்புடையதாம்.
2873. ஏத்தம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தோன் இறைக்க இளையோன் படுத்தநீர் பத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடின் கூத்தி வளர்த்ததோர் கோழிப்பு ள்ளாமே.
பொருள் : ஆதாரங்களாகிய ஏழு கிணறுகளும் அவற்றினின்றும் நீர் இறைப்பதற்கு இடை பிங்கலையாகிய இரண்டு ஏத்தமும் உள்ளன. சந்திர கலையாகிய மூத்தவன் இறைக்கவும் சூரிய கலையாகிய இளையவன் பாய்ச்சிய வீரியமாகிய நீர் அக்கினி கலையாகிய பாத்தியில் பாய்ந்து சகஸ்ரதளமாகிய வயலுக்குச் செல்லாமல் பயனற்று வீணே கழிந்து விடின் விலைமகள் வளர்த்த கோழிக்குஞ்சு அழிவது போலாகும்.
2874. பட்டிப் பசுக்கள் இருபத்து நால்உள
குட்டிப் பசுக்கள்ஓர் ஏழ்உள ஐந்துள குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும் பட்டிப் பசுவே பனவதற்கு வாய்த்தவே.
பொருள் : மேய்ப்பார் இன்றித் திரியும் ஆன்ம தத்துவமாகிய பசுக்கள் இருபத்து நான்கு உள்ளன. வித்தியா தத்துவம் சிவ தத்துவமாகிய குட்டிப் பசுக்கள் முறையே ஏழும் ஐந்தும் உள்ளன. பின்னே சொன்ன சிறிய பசுக்கள் குடம் நிறையப் பால் கறந்தாலும் கறக்காத பட்டி மாடே ஆன்மாவாகிய பார்ப்பானுக்குக் கிடைத்தது. பேரின்பத்தை நாடி வளர்வதை விட்டு ஆன்மா சிற்றின்பத்தை நாடிக்கெடுகிறது. (பனவன்-பார்ப்பன்-பயனடையும் ஆன்மா.)
2875. ஈற்றுப் பசுக்கள் இருபத்து நால்உள
ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும் காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்தில் மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே.
பொருள் : பால் கறக்காத ஆன்ம தத்துவமாகிய பசுக்கள் இருபத்து நான்கு உள்ளன. ஊற்றுப்போல ஒளி வீசி நிற்கும் சிவதத்துவங்களாகிய பசுக்கள் கறக்கின்ற இன்பமாகிய பால் ஒரு குடம் ஆன்மாவுக்குப் போதுமானது. இடை பிங்கலையாகிய காற்றுப் பசுக்களைக் கறந்து உண்கின்ற காலத்தில் அதனின் வேறான சுத்த தத்துவமாகிய பசுக்கள் வருவதை அறிய முடியாது. உடம்பில் காற்றின் இயக்கம் இருக்கும் வரை சுத்த தத்துவம் விளங்காது.
2876. தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பாய் மலர்ந்தது வட்டம் படவேண்டி வாய்மை மறைத்திட்டுத் தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.
பொருள் : சீவனது மனமண்டலத்தில் சிரசின்மேல் உள்ள ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் மொட்டுப்போல் சிறியதாய்த் தோன்றிச் செம்மையாக நாதம் படர்ந்தது. ஆகாயம் சிறந்து விளங்க வாய்மைப் பொருளான சிவத்தை நிலைபெறச் செய்து சீவன் அப்பொருளைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டான். (தட்டான்-சீவன், செம்பால்-செம்மைத் தன்மை. வட்டம்-பிரணவம், வாய்மை-ஐந்தெழுத்து.)
2877. அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனித்
திரிக்கின்ற ஓட்டம் சிக்கெனக் கட்டி வரிக்கின்ற நல் ஆன் கறவையைப் பூட்டினேன் விரிக்கின்ற வெள்ளரி வித்தும்வித் தாமே.
பொருள் : துன்பம் தருகின்ற வினையாகிய பயிர்விளையும் உடம்பாகிய வயலில், கீழ்முகமாகச் செல்லும் பிராண சத்தியின் வழியை அடைத்து மேல் முகமாக்கி, கொள்ளத்தக்க நல்ல சிவத்தத்துவமாகிய பசுவைச் சேர்த்துக் கொண்டால் சிரசின்மேல் விரிந்து விளங்கும் விந்து மண்டலம் சிவப்பயிர் விளையும் வித்தாகும். (வெள்ளரி வித்து-சுக்கிலம்.)
2878. இடாக்கொண்டு தூவி எருகிட்டு வித்திக்
கிடாய்க்கொண்டு பூட்டிக் கிளறி முளையை மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார் அடர்க்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.
பொருள் : இடைக்கலையாகிய சந்திர கலையைத் தூண்டி சிவ சிந்தனையாகிய எருவினைத் தூவி உணர்வாகிய விதையை விதைத்து, இடைகலை பிங்கலையாகிய கிடாக்களை அங்குச் சேர்த்து சுவாச கதியாகிய முளையை மாற்றி, தொண்டைச் சக்கரமாகிய மிடாவில் ஞான சாதனையாகிய சோற்றினைப் பதப்படுத்தி மெத்தென உண்ணார். இதுவே கிடாக்களைக் கொண்டு சிவபதமாகிய செந்நெல்லைப் பெறுகின்ற முறையாம். (சோறட்டு-அமுதம் வரச் செய்து. செந்நெல்-சிவானுபவம்.)
2879. விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம் விளைந்து விளைந்து விளைந்தகொள் வார்க்கு விளைந்து கிடந்தது மேவுக் காதமே.
பொருள் : சிவத்தை அடையும் உபாயத்தை அறிந்தவர்க்குச் சிவம் விளங்கும் விந்து மண்டலம் பெருகிக் கிடந்தது. அது ஒரு காத தூரம் பெருகிக் கிடந்தது. அவ்வாறு ஆகாயப்பேற்றின் நினைவாகவே இருப்பார்க்கு அது மும்முறையாகப் பெருகி ஆனந்தமயமாக விளங்கும். (காதம்-ஏழரை நாழிகை; வழி-சுமார் 10 மைல்.)
2880. களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லை களர்உழு வார்கள் களரின் முளைத்த வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.
பொருள் : களராகிய உவர்நிலத்தை உழுவார்கள் என்ன எண்ணத்துடன் உழுகின்றார்கள் என்பதை நாம் அறிவதற்கில்லை. அங்ஙனம் உழுவார் என்ன குறிக்கொண்டு உழுகின்றார் என்பதும் தெரியவில்லை. அதுபோல் தவ முயற்சியின்றி மீண்டும் பிறப்பதற்கே ஆளாகி இறக்கின்றார்கள். இவர்தம் செயல் வீண் செயலாகின்றது. அதற்கு ஒப்புக்களரில் முளைத்த வளரும் தகுதி வாய்ந்த இளவஞ்சிக் கொடியானது சார்ந்த நிலத்தின் புன்மையால் பட்டு மாய்வதாகும். (மாய்தல்-கேடு அடைதல்.)
2881. கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து
ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை ஏற்பட இல்லத்து இனிதிருந் தானே.
பொருள் : மிகவும் நுண்மை வாய்ந்த அசைவில் தொட்டகமாகிய நெஞ்சத் திடத்து திருஐந்தெழுத்தால் செய்யப்படும் தண்சுடர்த் தழலினுள் ஆருயிரைக் கட்டுறுத்தும் ஆப்பினை வைத்திடுதல்-திருவருள் பிறை போன்று ஆருயிர்களுடன் நாட்பட நின்று நிலை பெற்று நலம் புரிந்து, அருள் வீழ்ச்சியாகிய சத்தி நிபாதமும் எய்தும். எய்தவே திருவடிப் பேரின்பப் பேரில்லத்தின்கண் அவ்வுயிர் இனிது வீற்றிருந்த இன்புறும் (குறுநரிக் கொட்டகம்-அணு அளவு ஆய மனம் இருக்கும் உடல். ஆப்பிடு-கட்டப்பட்ட அங்கியுள் சிவாக்கினியில், ஆயிழை ஏற்பட-சத்தி பதிய.)
2882. மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கிளி வீழ உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன் முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.
பொருள் : சிரசாகிய மலையின்மேல் ஒளிக்கிரணமாகிய மழை பரவ, பிராணனாகிய மான்குட்டி சிரசின் மத்தியில் மோத, ஊர்த்துவ சகஸ்ரதளமாகிய குலைமேல் இருந்த சிவமாகிய செழுமை மிக்க பழம் உதிர, கொல்லன் உலைக்களத்திலிட்ட இரும்புபோல அச்சிவன் மார்பகத்துக்கு மேல் ஒளியாகிய அமிர்தத்தை விளங்குமாறு செய்தான். (முலை மேல் அமிர்தம் பொழிய-சத்தி பதிய.)
2883. பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே.
பொருள் : ஆன்மாவாகிய பார்ப்பானது உடம்பகத்தில் இந்திரியங்களாகிய கறவைப் பசுக்கள் ஐந்து உள்ளன. அவை அடக்குவாரின்றி விருப்பம் போலப் புலன்களை நோக்கிச் செல்வனவாகும். ஆன்மாவைச் செலுத்தும் சிவமாகிய மேய்ப்பாரும் உண்டாகிப் புலன்களில் செல்லும் விருப்பத்தையும் விட்டால் ஆன்மாவிடம் பொருந்திய இந்திரியங்களாகிய பசுக்கள் பேரின்பமாகிய பாலினை விளைக்கும். இந்திரியங்கள் உலக நோக்கமின்றி அக நோக்காக அமையுமாயின் பேரின்பம் உண்டாகும்.
2884. ஆமாக்கள் ஐந்தும் அரிஒன்றும் முப்பதும்
தேமா இரண்டொடு தீப்புலி ஒன்பதும் தாமாக் குரம்கொளின் தம்மனத் துள்ளன மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.
பொருள் : பஞ்சப் பிராணனாகிய காட்டுப் பசுக்கள் ஐந்தும் ஆன்ம தத்துவம் புருடன் நீங்கிய வித்தியாதத்துவம் ஆகிய ஆண் சிங்கம் முப்பதும் சுக துக்கமாகிய தேமா இரண்டுடன் குற்றமில்லாத சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், சேவை, அருச்சுனை, அடிமை, வந்தனம், சக்கியம், ஆத்ம நிவேதனம் ஆகிய திப்பிலி ஒன்பதும் தமக்குரியனவாக வசப்படுமாயின், தம் மனத்துள்ளனவாகிய காமாதிகள் விருத்தியடையா. அம்முறையே செலுத்தினால் ஞான ஒளியை வளர்ப்பவராவர். (தேமா-மாமரங்கள். திப்பு-கோது. இலி-இல்லாதது. குரங்குதல்-வளைதல். கடாவுதல்-செலுத்துதல்.)
2885. எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெளிந்திருந் தோத மலராத பூவின் மணத்தின் மதுவைப் பிறவாத வண்டு மணம்உண்ட வாறே.
பொருள் : ஏட்டில் எழுதாத வேதமாகிய புத்தகத்தின் சூக்கும வாக்காகிய பொருளை இளமை நலத்தோடு கூடிய குண்டலினியாகிய கன்னி சிரசை அடைந்து எழுப்ப ஊர்த்துவ சகஸ்ரதளமாகிய பூவின் ஆனந்தம் விளைக்கும் நாதமாகிய தேனை உடலோடு கூடாத ஆன்மாவாகிய வண்டு நாதமாகிய தேனில் திளைத்து இன்பம் பெற்றது.
2886. போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் தருங்கனி ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும் வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.
பொருள் : உடம்பினின்றும் வெளியே செல்லுகின்ற காற்றாகிய அபானனும் புகுகின்ற காற்றாகிய பிராணனும், கூடுகின்ற உடம்பாகிய நாவல் மரத்தின் பயனைத் தருகின்ற பழமாகிய போகத்தை அனுபவிக்கின்ற ஞானேந்திரியங்களாகிய ஐவரும் வெந்து போகின்ற உடம்பாகிய கூரையில் திளைக்கின்றனர். என்ன பரிதாபம்!
(குறிப்பு : இப்பகுதியிலுள்ள பாடல்கள் மூடுமந்திரங்களாய் உள்ளமையால் பொருள் கூறுவோருள் கருத்து வேறுபாடுகள் உள்ளன.)
2887. மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில்ஓர் பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.
பொருள் : மனமாகிய மூங்கில் முளையினின்று தோன்றிய வைராக்கியமாகிய வேம்பு உண்டு. அவ்வைராக்கியத்தைப் பொருந்தியிருந்த முதுகந் தண்டாகிய பனைமரத்தில் குண்டலினியாகிய பாம்பு உள்ளது. கீழே சுருண்டு கிடக்கும் குண்டலினியாகிய பாம்பை மேலே செலுத்தி அமுதம் உண்பாரின்றி வைராக்கியமாகிய வேம்பு பயன் தராது கெடுகின்றது.
2888. பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர் அத்தகு மூவர் அறுவர் மருத்துவர் அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரே.
பொருள் : தச நாடிகளாகிய பருமையான புலி பத்தும், பூதங்கள் தன் மாத்திரைகள் புலன்கள் ஆகிய யானை பதினைந்தும் ஞானேந்திரியங்களாகிய வித்தகர் ஐவரும் தசவாயுக்களாய வினோதகர் பத்தும் அத்தன்மையைச் செய்யும் தாமத, இராசத, சாத்துவிகமாகிய மூவரும், பிறத்தல், கற்றல், தேடல், கூடல், வாழ்வு, தாழ்வு ஆகிய நலன்களை உயிர்க்குச் செய்யும் மருத்துவர் அறுவரும் உள்ள தேகத்தில் பொருந்தி ஆன்மா சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் ஆகிய ஐந்து அவத்தைப் படும். (வித்தகர் ஐவர்-ஞானேந்திரியங்கள். வினோதகர்-உடலின்கண் ஊழியம் செய்பவர்.)
2889. இரண்டு கடாக்களுண் டிவ்வூரி னுள்ளே
இரண்டு கடாக்கட் கொருவன் தொழும்பன் இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கின் இரண்டு கடாவும் ஒருகடா ஆமே.
பொருள் : இவ்வூராகிய உடம்பகத்து விடுத்தல் எடுத்தல் ஆகிய உயிர்ப்புப் பயிற்சிக்குரிய இரு தொழிலும் கடாக்கள் எனப்பட்டன. இவ்விரண்டினையும் மேய்த்து நடத்தும் உயிர் ஒன்றுண்டு. அவ்வுயிர் தொழும்பன் எனப்பட்டது. விடுத்தல் எடுத்தல்களாகிய மூச்சினை இருத்திப் பிடித்துத் தலைச் செய்யின் அவ்விரண்டு கடா ஒரு கடாவாகும். (தடுத்தல்-கும்பகம். இரண்டு கடா-இரேசகம், பூரகம்.)
2890. ஒத்த மணற்கொல்லை யுள்ளே சமன்கூட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால் முத்தம் கவறாக மூவர்கள் ஊரினுள் நித்தம் பொருது நிரம்பிநின் றார்களே.
பொருள் : ஞான சாதகர் மனமண்டலத்தை விருப்பு வெறுப்பற்ற சமத்துவ புத்தியால் ஒழுங்குபடுத்தி இறைவனிடம் மனம் பதியும்படி செய்து பருத்தி போன்ற வெண்ணிற ஒளியைச் சிரசின்மேல் விளங்கும்படி பாவித்தலால் அதுவே முத்திக்குச் செல்லும் நூலேணியாக சிருஷ்டி, ஸ்திதி சம்காரங்களைச் செய்யும் பிரமன் விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவருடைய ஆட்சியிலுள்ள உடம்பாகிய ஊரினில் நாள்தோறும் சாதனை செய்து உயிரும் உடலும் சூழ்ந்துள்ள ஆகாயத்தையே தமது உடலாக்கிக் கொண்டு பூரணத்துவத்துடன் விளங்கினர். (முத்தக் கயிறு-நூலேணி.)
2891. கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன நாகையைக் கூகை நணுக லுறுதலும் கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.
பொருள் : கூகையாகிய அறியாமையும் பாம்பாகிய சுட்டறிவும் கிளியாகிய அறமும் பூஞையாகிய பாவமும் நாகையாகிய சிற்றறிவும் பூழாகிய அறுபகையும் உடம்பின் நடுவாகிய எண்ணம் என்னும் சித்தத்தின் கண் உறைவன. நாகையாகிய சிற்றறிவினைக் கூகையாகிய அறியாமை நணுக முயலும். அப்பொழுது அருள் ஒளிபெற்ற வெள் எலியாகிய ஆருயிர் சிவனை நினைந்து கூவும். சிவனும் வெளிப்பட்டுக் கூகையை அடக்கியருள்வன். (உறைதல்-தங்கியிருத்தல். கூகை-அஞ்ஞானம். பாம்பு-காமம். கிளி-அறம். பூஞை-மறம். நாகை-சிற்றறிவு. பூழும்-குரோதமும். குறிப்புரை : கூகை-கோட்டான். பூஞை-பூனை. நாகை-நாகணவாய்ப்புள். பூழ்-காடை. எலிக்கு இரவில் கண் தெரியும்; நாகைக்கு இரவில் கண் தெரியாது.)
2892. குலைக்கின்ற நன்னகை யான்கொங் குழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான் உலைக்குப் புறம்எனில் ஓடும் இருக்கும் புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.
பொருள் : குலையாகவுள்ள நல்ல எண்ணமாகிய வாசனையைக் கலக்கி விட்டால் நிலைபெற வேண்டிய சீவனாகிய வெள்ளை எலி தாமத இராசத சாத்துவிகமாகிய முக்குண வசப்பட்டு நிற்கும். அப்போது அதன் எண்ணம் உடம்பாகிய உலைக்குப் புறமாகில் மனம் வெளியே ஓடும். இல்லையெனில் அறிவினில் அடங்கியிருக்கும். உடல் பற்றுக் காரணமாகப் பிறந்த ஆசையால் அவ்வாறு மனம் அலைகிறது.
2893. காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி
கூடுபுக் கானது ஐந்து குதிரையும் மூடுபுக் கானது ஆறுள ஒட்டகம் மூடு புகாவிடின் மூவணை யாமே.
பொருள் : அஞ்ஞான மயமான தத்துவமாகிய காட்டினுள் புகுந்தவர் சிவ பூமியாகிய வெட்ட வெளியைக் காணமாட்டார். உடம்பாகிய கூட்டினில் புகுந்ததான பஞ்ச பிராணனாகிய ஐந்து குதிரையும் தேகத்தைச் சூழவுள்ளதான மன மண்டலத்தைக் காமக் குரோ தாதிகளான ஆறு ஒட்டகமும் மறைப்பினைச் செய்யாவிடின் சீவன், சீவதுரியம் பரதுரியம் சிவதுரியம் ஆகிய மூன்றையும் கடந்து விளங்கும்.
2894. கூறையும் சோறும் குழாயகத் தெண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர் பாறையின் உற்றுப் பறக்கின்ற சீலைபோல் ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.
பொருள் : உடுக்கும் உடையும் உண்ணும் சோறும் குழாய்க் கலத்து எண்ணெயும் சுழுத்தணியாகிய காறையும் அரைஞாணும் கைவளையலும் கண்டவர் அவற்றின்கண் பெருமயக்குக் கொள்கின்றனர். இவையனைத்தும் நிலையில்லாத மாயா காரியப் பொருள்களாகும். இவற்றின் உண்மையை உணராமல் இவை நிலைக்குமென மயங்கித் தடுமாற்றம் எய்துகின்றனர். அவர்கள் உள்ளம் அப்பொருள்களின் இடத்து விரைந்து பரந்து செல்கின்றது. அதற்கு ஒப்புப் பாறையில் உலரும்படி விரித்த சீலை பெருங்காற்றால் பறந்து செல்வதாகும். அவ்வுயிர்கள் ஆறைக்குழியில் வீழ்ந்து அழுந்தும். (ஆறைக்குழி-ஆறு பகை.)
2895. துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும் வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பான் ஒருத்திஉள் ளாள்அவள் ஊரறி யோமே.
பொருள் : துருத்தி போன்ற உடம்பின் உச்சியிலுள்ள மலை போன்ற சிரசின்மேல் மன விருத்தியைக் கண்காணிக்கக் காலை நண்பகல் மாலையாகிய மூன்று காலங்களிலும் சிதாகாயப் பெருவெளியை ஞான சாதனை செய்பவர்க நாடுவர். அவரை வருத்திக் கொண்டுள்ள மலை போன்ற தீய வினைகளைத் தவிர்ப்பவளாகிய பராசத்தி உள்ளாள். அவ்வாறுள்ள சத்தியினது துணையின்றிச் சிவனது ஊரை அறியமுடியாது.
2896. பருந்துங் கிளியும் படுபறைக் கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார் பெருந்தவப் பூதம் பெறல்உரு ஆகும் இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.
பொருள் : தர்மமாகிய கிளியும் அதர்மமாகிய பருந்தும் சுகதுக்கமாகிய மேளத்தைக் கொட்ட சுகத்தில் பற்றும், துக்கத்தில் வெறுப்பும் இல்லாமல் திருந்திய சீவராகிய மாதர்கள் சிவத்துடன் சேர்ந்தனர். அதனால் அவர்கள் தவத்தினால் அடையும் ஆகாய மயமான தேகம் பெறுவர். அவ்வாறு இருக்கின்ற ஆகாயப் பேற்றினில் சிவானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருப்பர்.
2897. கூடு பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக் குண்டி யறுக்குறில் என்னாக்கும் சூடெறி நெய்யுண்டு மைகான றிடுகின்ற பாடறி வார்க்குப் பயன்எளி தாமே.
பொருள் : இந்திரியமாகிய பறவை சத்தாதி விஷயங்களை நுகர்ந்து, பிறகு அதனுள் அழுந்தி அவ்விஷய அனுபவமாகிய உணவினை அனுபவிப்பதனால் என்ன ஆகும்? வெப்பம் பொருந்திய மூலாக்கினியில் உணர்வாகிய நெய்யைச் சொரிந்து அதனைத் தூண்டி சூழ்ந்த அண்டகோசத்தின் இருளைப் போக்கி ஒளிமயமாக்கும் தன்மையை அறிவார்க்கு, சிவமாகிய பயனை அடைதல் எளிதாகும்.
2898. இலையில்லை பூவுண்டு இனவண்டிங் கில்லை
தலையில்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின் குலையில்லை கொய்யும் மலர்உண்டு சூடும் தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராதே.
பொருள் : நிர்க்குண பிரமத்தினிடம் சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தங்களாகிய தளிர் இல்லை. ஒளியாகிய மலர் உள்ளது. விஷய வாசனையாகிய வண்டு இவ்விடம் இல்லை. நிர்க்குண பிரமத்தின் அறிவாகிய சிரசை யாரும் காண முடியாது. ஆனால் நிர்க்குணமான பொருள் கீழேயுள்ள சகுணமான வேரிலும் கலந்தே உள்ளது. ஆனால் நிர்க்குணத்தின் இருப்பு சகுணமாகிய தாளில் இல்லை. உலகில் காணப்படும் மலர்களாகிய கொத்துக்கள் அங்கு இல்லை. ஆனால் அனுபவிக்கப்படும் ஒளியாகிய மலர் உண்டு. அவ்வொளிக் கிரணங்களை வேறாகப் பிரித்துச் சூடும் தலை இல்லை. கருமகாண்ட அறிவாகிய கிளையில் ஞானமாகிய நிர்க்குணப் பிரமத்தைக் காண முடியாது. (இம்மந்திரம் உபநிடதக் கருத்தைக் கொண்டது.)
2899. அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர் மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த் தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.
பொருள் : சகுணமாகிய கரையைக் கடந்து நின்ற நிர்க்குண பிரமமாகிய ஆலமரங்கண்டு, நிர்க்குணமாகிய சிவனை வழிபட்டுப் பொருந்தி நிற்பர். மக்கள் இனத்தில் மேன்மை பெற்ற அவர் அவித்தை அஸ்மிதை, ராகம், துவேஷம், அபினிவேசம் ஆகிய பஞ்ச கிலேசங்களை அறிந்து நிர்க்குண பிரமத்திடம் தாழ்ந்து அதன் பயனை அனுபவிப்பவராவர். (ஐவகைத் துன்பமாவன : தொன்மை இருள், செருக்கு, அவா, ஆசை, சினம் என்பன. தமிழ்ப் பெயர்கள்.)
2900. கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர் காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக் கூப்பிடும் ஈண்டதோர் கூரைகொண் டாரே.
பொருள் : சப்திக்கின்ற சம்காரமாகிய வழியிலே அஞ்ஞானமாகிய காடு இருகாதம் உள்ளது. அக்காட்டில் வழிச் செல்வோரைக் கட்டிப் போடக்கூடிய ஐம்புல வேடராகிய கள்வர் உள்ளனர். அவ் ஐம்புலன்களாகிய வேடரைச் சிவ ஒளியாகிய வெள்ளர் நாதமாகிய ஒலியை எழுப்பி அழைக்க, அக்கள்வராகிய வேடர் மீண்டு வந்து சகஸ்ரதளமாகிய கூரையில் நிலைபெற்றனர்.
2901. கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும் கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார் எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறே.
பொருள் : அறிவும் அறியாமையுமாகிய கொட்டயும் ஆம்பலும் மலர்ந்த சம்சாரமாகிய சாகரத்தில் நாம ரூபமாகிய எட்டியும் வேம்பும் விட்டு சத்து சித்து ஆனந்தமாகிய வாழையும் கற்கண்டும் தேனும் கலந்து அனுபவிக்காதவர் கவர்ச்சியுடைய உலக போகமாகிய எட்டிப் பழத்தை நாடிக் கெடுவார் ஆவார்.
2902. பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலம்உண் டானும் கடைவண்டு தான்உண்ணும் கண்கலந் திட்ட பெடைவண்டு தான்பெற்ற தின்பமு மாமே.
பொருள் : உலக அன்னையாகிய பெடை வண்டும் உலக அத்தனாகிய ஆண் வண்டும் ஒன்று கலந்து திருவுள்ளக் குறிப்பால் ஏவுதலை மேற்கொள்கின்றனர். அதனால் மாயா காரியமாக பீடிகை வண்ணமாக மண் தோன்றுகிறது. குடை போன்று வானம் தோன்றுகிறது. ஏனையவும் முறையாகத் தோன்றுகின்றன. உயிர்கள் வினைக் கீடாகப் பிறக்கின்றன. வினைக்கீடாக விளையும் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன. (திருவருள் ஆற்றல் பெடை வண்டு எனப்பட்டது.)
2903. கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்தவன்
எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது கொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே.
பொருள் : சுட்டறிவாகிய அற்ப வளமுள்ள புன்செயில் மேய்கின்ற ஆன்மாக்களாகிய பசுக்களுக்கு உதவிய சிவன், அதைச் சுட்டறிவின் எல்லையைக் கடக்கச் செய்து அகண்ட சொரூபமாகிய தன்னை அடைந்து பொருந்துவதற்குரியி தகுதியை அளித்த பின் அல்லாமல் சுட்டறிவாகிய புன்செயை நாடிச் செல்லும் மனம் அகண்ட ஞான சொரூபத்தை அறியாது.
2904. தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக் குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.
பொருள் : வலக் கண்ணாகிய தட்டத்து நீரில் சூரிய கலையாகிய செந்தாமரை மலர்ந்தது. இடக்கண்ணாகிய குட்டத்து நீரில் சந்திர கலையாகிய நீலோற்பலம் தோன்றியது. ஞான சாதனையால் இரண்டையும் சேர்த்துச் சுழுமுனையாகிய விட்டத்தில் விளங்க வல்லார்க்கு ஆழ்ந்த இடமாகிய குட்டத்தில் விளைந்த ஆனந்தமாகிய கொம்மட்டிப் பழம் கிட்டுமாம்.
2905. ஆறு பறவைகள் ஐந்தத் துள்ளன
நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன ஏறு பெரும்பதி ஏழும் கடந்தபின் மாறுத லின்றி மனைபுக லாமே.
பொருள் : காமாதி ஆறு பறவைகள் ஐம்பூத மயமான உடலில் உள்ளன. இவை சிரசின்மேல் உள்ள நூறு நாடிகளாகிய பறவைகளால் நுகர்ந்து செல்லப்படுவன. ஆனால் சீவன் ஏழு ஆதாரங்களையும் ஏறிக் கடந்தபின் தவறுதல் இல்லாமல் சிவன் விளங்கும் பதியை அடைதல் கூடும்.
2906. கொட்டனம்- செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடும் கட்டனம் செய்து கயிற்றால் தொழுமியுள் ஒட்டனம் செய்தெளி யாவர்க்கு மாமே.
பொருள் : குடைதல் முதலிய கிரியையைச் செய்து திளைக்கின்ற யோனியாகிய குளத்தில் வட்டத்தால் குறிக்கப்படும் ஆகாய சம்மியம் பொருந்தி இன்பமாகிய ஊற்றுப் பெருகும். வீரியமாகிய சத்தியை வெளியே விடாமல் நடு நாடியாகிய கயிற்றால் கட்டி, உடலினுள்ளே நிலைபெறுமாறு செய்த பின், இச்சாதனையால் ஒளி யாவர்க்கும் உண்டாகும். முதல் அடிக்கு சீச போதத்தை அடக்கிச் சிவ போதத்தில் திளைத்தல் என்று பொருள் கொள்ளுதலும் உண்டு.
2907. ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி தாழும் இருநிலத் தன்மை யதுகண்டு வாழ நினைக்கில் அஃது ஆலயம் ஆமே.
பொருள் : உலகைச் சூழவுள்ள ஏழு கடல்களும் உலகிலுள்ள மேலான எட்டு மலைகளும் ஆழ்ந்திருக்கின்ற ஆகாயத்தினில் அக்கினி, நீர், காற்று, தாழ்ந்துள்ள பெரிய நிலம் ஆகியவை இடம்பெற்ற தன்மையை அறிந்து, நீண்டநாள் வாழ விரும்புவார்க்கு அவ் ஆகாயம் ஆலயமாகும்.
2908. ஆலிங் கனம்செய்து அகம்சுடச் சூலத்துச்
சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர் கோலிங் கமைந்தபின் கூபப் பறவைகள் மாலிங்கு வைத்தது முன்பின் வழியே.
பொருள் : கணவர் மனைவியர் ஒருவரை ஒருவர் தழுவி, வெப்பம் உண்டாகச் செய்து, கருப்பையில் உடம்பை உருவாக்கி விட்டுக் காமச் செயலின் தலைமையை விட்டனர். கருவை இங்கு அமைத்த பிறகு, உடம்பின் கண் உள்ள இந்திரியங்கள் மயக்கத்தினின்றும் நீங்கி, இந்திரியங்களின் வழிச் சென்ற மனம் முன்னாக, இவை பின்னாக நின்றன.
2909. கொட்டுக் குந்தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரை வலிதென்பர் கொட்டுக்குந் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும் இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.
பொருள் : திருமணச் சடங்கில் மேளமாகிய கொட்டும் உரிமையாகிய தாலியும் இரண்டும் உள்ளன. இவ்விரண்டையும் விட களவு வழி விழைவாகிய பாரை வலிமையானது. பிறர் அறியச் செய்த கொட்டுக்கும் தானே உரிமையாக அணிந்த தாலிக்கும் இயல்பாகவே உண்டாகிய விழைவுக்கும் இறைவன் அருளால் அமையும் விருப்பமே வலிமையுடையதாகும். (கொட்டு-இந்திரிய நுகர்ச்சி. தாலி-சுக துக்க அனுபவம். பாரை-பொருள்களை அனுபவிக்கும் ஆசை. இட்டம்-திருவருட்சத்தியின் சம்பந்தம்.)
2910. கயலொன்று கண்டவர் கண்டே யிருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர் பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன் மறையொன்று கண்ட துருவம்பொன னாமே.
பொருள் : மாறிக் கொண்டிருக்கும் உலகமாகிய கயல் மீனைக் கண்டவர் உலகில் பிறந்து இறந்துகொண்டேயிருப்பர். சிவமாகிய முயலை அடைய வேண்டுமென்று சரியை, கிரியை யோக நெறி நிற்பவர் சிறிது சிறிதாக ஞானத்தை அடைந்து உய்வர். இவற்றை விடுத்து, தர்க்க வாதத்தில் ஈடுபடுபவன் வேதம் போற்றும் நித்தியப் பொருளான சிவம் ஆக முடியுமோ? முடியாது. (துருவம்-நித்தியம்.)
2911. கோரை யெழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது நாரை படிகின்றாற் போல்நல்ல நாதனார் பாரைக் கிடக்கப் படிகின்ற வாறே.
பொருள் : ஆசையாகிய கோரை முளைத்த சித்தமாகிய குளத்தினில் அதன் பாசமாகிய ஆசை படர்ந்து நீண்டு கிடந்தது. ஆரையும் கோரையும் நிறைந்த தடாகத்தில் மீனைப் பிடிக்கும் நாரை போல்பவன் அல்லன் சிவன். அவன் சலனமில்லாத பாரை போன்ற சித்தமாகிய தடாகத்தில் சீவனாகிய மீனைப் பிடிப்பவனாவான். நாரை உவமை மறுதலைப் பொருளின்கண் வந்தது. மற்றாங்கே என்பது போன்று.
2912. கொல்லைமுக் காதமும் காடரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி எல்லை மயங்கா தியங்கவல் லார்களுக்கு ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே.
பொருள் : அற்ப வளமுள்ள கொல்லையாகிய அ உ ம என்ற முக்காதமும் அதன்மேல் காடுபோன்ற அர்த்த மாத்திரைப் பிரணவமும் இவ்விரண்டும் உடம்பிலும் சிரசிலும் ஆகிய எல்லையில் ஆன்மாவைப் பிணித்திருக்கும் இரண்டு நெறிகளாகும். உடம்பும் சிரசும் ஆகிய எல்லைக்குள் கட்டுப்படாமல் செயல்படுவார். விரைவில் பிரணவத்தைக் கடந்து ஒளி ஞானம் பெற்றுச் சிவ பூமியை அடையலாம். (கொல்லை-பிரணவம். ஊர்-முத்தி உலகம்.)
2913. உழவொன்று வித்து ஒருங்கிய காலத்து
எழுமழை பெய்யாது இருநிலம் செவ்வி தழுவி வினைசென்று தான்பய வாது வழுவாது போவன் வளர்சடை யானே.
பொருள் : அகண்டமான சிவத்தை அடைகின்ற தவமாகிய உழவினைச் செய்து மனம் ஒருமைப்பட்ட காலத்தில் எண்ணமாகிய மழை எழுந்து பெய்யாமல், சிவ பூமிக்குரிய சத்தி பொருந்தி மலபரிபாகம் உண்டாகி வினை போகத்தைக் கொடுக்காது. தவறுதல் இன்றி வளரும் ஒளிக் கிரணங்களையுடைய சிவன் பொருந்தி விளங்குவான். (பெய்யா-பெய்து என்று பொருள் கொள்வாரும் உளர்.)
2914. பதுங்கினும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ அதுங்கிய ஆர்கலி ஆரமு தூறப் பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.
பொருள் : சீவன் தொழிலின்றி இருப்பினும் பிராணனது அதிபதியான சூரியனது இயக்கம் பன்னிரண்டு ராசிகளிலும் சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் உடலைக் கடந்தபோது விளங்கிய குளிர்ந்த சந்திரமண்டல ஒளி பெருகவே தேன் ததும்பிய சிவக் கனியின் இன்பம் சுரக்க இதுகாறும் வருத்திய பஞ்சேந்திரிய அறிவைச் செயல் படாதவாறு சீவன் அடக்கிக் கொண்டனன்.
2915. தோணிஒன் றேறித் தொடர்ந்து கடல்புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர்மகன் நீலிக் கிறைக்குமேல் நெஞ்சின் நிலைதளர்ந்து ஆலிப் பழம்போல் அளிகின்ற அப்பே.
பொருள் : பிரணவமாகிய தோணியில் ஏறிச் சிதாகாயமாகிய கடலில் சென்று ஒளி பெறுவதும் இருள் விடுவதுமாகிய வாணிகத்தைச் செய்து விருத்தியை விரும்பிய சீவன், மாயா காரியமாகிய நீலியைப் பற்றுகின்ற மனத்தின் தன்மையைச் சிறிது சிறிதாக விடுத்து, தேனைப் பிலிற்றுகின்ற கனிபோல இன்பம் நல்கும் தண்ணளியாகிய சந்திர மண்டல ஒளியில் திளைத்திருப்பான். (தோணி-உடல். கடல்-உலக மாய குடும்பக் கடல். நீலிக்குப் பெண்ணின் பொருட்டு என்று பொருள் கூறுவாருமுளர்.)
2916. முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன பக்குவம் மிக்கார் படங்கினார் கன்னியர் நக்குமல ருண்டு நடுவுநின் றாரே.
பொருள் : தாமதம், இராசதம், சாத்துவிகமாகிய ஆற்றில் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தியாகிய மூன்று வாழைகள் உள்ளன. அங்குச் செம்மை நிறமுடைய அக்கினி மண்டல விளைவாக ஆணவம் கன்மம் மாயையாகிய மும்மலச் சேர்க்கை நிறைந்து கிடந்தன. ஆனால் சிவக் காதலுடையார் இவற்றினின்றும் நீங்கியவராவர். பொய்யை மெய்போலும் பேசும் மாதரது காமச் சுவையாகிய மலரின் மணத்தை விரும்பி நுகர்ந்துகொண்டே சுழுமுனையில் தங்கள் மனத்தை நிறுத்தி நீடு வாழ்ந்தனர். வாழ்க்கைத் துணையோடு வாழ்ந்தனர் என்பது பொருள்.
2917. அடியும் முடியும் அமைந்ததோர் அத்தி
முடியும் நுனியின்கண் முத்தலை மூங்கில் கொடியும் படையுங் கொளும்சார்பை யைந்து மடியும் வலம்புரி வாய்த்தவ் வாறே.
பொருள் : மூலாதாரமாகிய அடியும் சிரசாகிய முடியும் உடைய ஆத்தி போன்ற முதுகந்தண்டு முடிகின்ற உச்சியில் மூங்கிலின் முக்கண் போன்று சோம சூரிய அக்கினியாகிய மூன்று கலைகள் உள்ளன. முக்கலைகளும் சாதனையால் வளர்ச்சி பெற்று ஒன்றானபோது கொடியும் படையும் போன்ற தீமையைத் தருவதான ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் கெட்டு ஒழியும். அப்போது அவ்வழியே சங்கநாதம் கிட்டும்.
2918. பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துள் குன்றாமைக் கூட்டித் தராசின் நிறுத்த பின் குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.
பொருள் : அசுத்தத்தில் விருப்பமும், பகைமையில் சீற்றமும், தீமையில் அடக்கமும், நன்மையில் எரிச்சலும், எங்கும் பொருந்திக் கிடந்த மனத்திடை, பொருந்தாமல் சிவத்துடன் பொருந்திச் சமன் செய்து நிறுத்திய பிறகு சீவனது குறை சிறிது சிறிதாகக் குறையும் என்க.
2919. மொட்டித் தெழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட் டோடின் மலர்தலும் காணலாம் பற்றுவிட் டம்மனை பாழ்பட நோக்கினால் கட்டுவிட் டாலன்றிக் காணஒண் ணாதே.
பொருள் : தாமரை மொட்டுப்போல எழுகின்ற சகஸ்ரதளமாகிய மொட்டு சிரசில் உண்டு பாசத்தினின்றும் நீங்கியபோது அம்மொட்டு ஊர்த்துவ சகஸ்ரதள மலராக விரிவதைக் காணலாம். தேசப்பற்று நீங்கித் தத்துவக் கூட்டத்தாலாகிய உடம்பு கெடுமாறு ஒளியாகக் கண்டு, பற்று நீங்கினவர்க்கு அல்லாமல் சகஸ்ரதள மலர் விரிதலைக் காண முடியாது. (மொட்டு-சிவானந்தம், மலர்தல்-சிவானந்தம் வெளிப்படுதல். மனை-முத்தி வீடு. இவ்வாறு சிலர் பொருள் கொள்வர்.)
2920. நீரின்றிப் பாயும் நிலத்தினில் பச்சையாம்
யாருமிங் கென்றும் அறியவல் லாரில்லை கூரும் மழைபொழி யாது பொழிபுனல் தேரின்இந் நீர்மை திடரின்நில் லாதே.
பொருள் : நீர் இல்லாமல் உணர்வு பாயும் சகஸ்ரதளமாகிய நிலத்தினில் மரகத ஒளி விளங்கும். ஞான சாதனையைச் செய்த இவ்வுண்மையைக் காணவல்லார் இல்லை. மிகுந்த மழையின்றிப் பெருகுகின்ற உணர்வாகிய நீரை ஆராயின், இவ்வுணர்வாகிய நீரின் தன்மை இந்திரிய வயப்பட்ட மனமாகிய திடரில் பொருந்தி நில்லாது என்பது புலனாகும். (நிலம்-சித்தம். பச்சையாம்-சிவம் வெளியாம். கூரும் மழை பொழியாது-இந்திரிய சேட்டைகள் இல்லாமல் (பொழிபுனல்-சிவானந்த வெள்ளம். திடர்-இந்திரிய வயப்பட்ட சித்தம். இந்நீர்மை-இத்தன்மை-இவ்வாறு பொருள் கொள்ளவும் கூடும்.)
2921. கூகைக் குருந்தம தேறிக் குணம் பயில்
மோகம் உலகுக் குணர்கின்ற காலத்து நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும் பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.
பொருள் : அஞ்ஞானமுள்ள சீவன் சிவமாகிய குருவை அடைந்து, உலகுக்கு முக்குண மாயை காரணம் என்று அறிகின்றபோது குரங்கை யொத்த மனமும் அடங்கும். மனத்தை அடக்கி நடத்துகின்ற தன்மை உடையவன் அவன்.
2922. வாழையும் சூரையும் வந்திடங் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர் வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு வாழை இடங்கொண்டு வாழ்கின்ற வாறே.
பொருள் : வாழை போன்ற இன்பமும் சூரை போன்ற துன்பமும் இருவினைக்கு ஈடாக வந்து வாழ்வில் சீவர்களிடம் பொருந்தின. இன்பத்தை விடத் துன்பம் மிக்க வன்மையானது என்று கூறுவர். இன்பமும் துன்பமும் தேகப்பற்றினால் உண்டானவை என்று அறிந்து அவற்øக் கடிந்து நிலையான சிவத்தை இடமாகக் கொண்டு வாழ்வதே முறையாகும். (வாழ்+ஐ=வாழை. நிலையான சிவன். வன்துண்டம் செய்திட்டு-இன்ப துன்பங்களில் மனம் வையாமல் இரண்டினையும் ஒப்ப நோக்கினால்.)
2923. நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்த்த கொழுமீன் விலக்குமீன் யாவர்க்கும் வேண்டின் குறையா அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.
பொருள் : பூமியின்கண் சகல போகத்தை அனுபவித்தும் கடல் யாத்திரை செய்து வேண்டிய செல்வங்களை ஈட்டியும் ஐம்புல அனுபவியாகிய சீவன் அடைந்த தேக உலக பாசங்களை அருள் நாட்டத்தால் அகற்றுதல் வேண்டும். அகற்றாது ஒழியின் திருவடியின்பமாகிய அருத்தம் எய்தாது. அதுமட்டுமின்றி ஆருயிர்களை மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பினுக்கு உட்படுத்தி அளவில்லாத் துன்பத்தையும் எய்துவிக்கும்.
2924. தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக் களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும் அளிக்கும் பதத்தொன்றாம் ஆய்ந்துகொள் வார்க்கே.
பொருள் : தட்டிக் கொண்டிருக்கிற சப்த உணர்வில் சீவன் தேகத்தின் விருத்தியை அடையும். அங்குக் கூப்பிட்டு அடைக்கும் சங்கநாதம் உண்டு. அவ்ஓசை வழியே சென்று சிவனை நாடுவதில் சீவனுக்குக் களிப்பு உண்டாகும். அந்நாட்டம் சந்திரனுக்கும் சூரியனுக்கும் சுழுமுனையாகிய பதத்தைக் கொடுக்கும் என்ற உண்மை ஆராய்வார்க்குப் புலனாகும்.
2925. குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில் உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார் அடையார் நெடுங்கடை ஐந்தொடு நான்கே.
பொருள் : உடம்பாகிய குடையை நீங்கிச் சித்தமாகிய கோயில் எருமை நாத சம்மியத்தை நோக்கிச் சென்றது. ஆனால் விஷயாதிகளான படையை நினைத்தபோது சித்தம் நாதத்தினின்றும் நீங்கித் தேகத்தை நோக்கியது. ஆன்மாவாகிய உடையவன் புத்தியாகிய மந்திரியோடு உண்மையை உணர்ந்ததும் ஊராரைப் போன்று நவத்துவாரங்களின் வழிச் செல்லாமல் உடலைக் கடந்து விளங்கும். (புகார்-பிறவார்.)
2926. போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகப் படைத்தன ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டொடு நாலு புரவியும் பாகன் விடாவிடிற் பன்றியும் ஆமே.
பொருள் : புலன்களிற் செல்லும் நலமில் விருப்பமும் உள்ளே புகுந்து பற்றக்கூடிய உயிர்ப்பின் மாத்திரை அளவு எட்டும் ஆகிச் சமைந்தன கண் முதலாகிய ஒன்பது துளையுள்ள வாயில்கள். நிலையான எண்விரல் மூச்சும் நால்விரல் மூச்சும் முறையே நாகம் எனவும் புரவி எனவும் கூறப்பட்டன. இவற்றைச் செலுத்தும் ஆருயிரான பாகன் செலுத்தாமல் அடக்குதல் வேண்டும். அங்ஙனம் அடக்கினால் மெய்யுணர்வு வெற்றியுண்டாகும். (பன்றி-வெற்றி.)
2927. பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்கும் குருகிரை தேர்ந்துண்ணும் தூசி மறவன் துணைவழி எய்திடப் பாசி கிடந்து பதைக்கின்ற வாறே.
பொருள் : காமாதி அறுபகையாகிய பாசி நிரம்பிக் கிடந்த சித்தமாகிய குளத்தினில் பாசமாகியவற்றில் பற்றுக் கொண்டிருக்கும் சீவனாகிய கொக்கு விஷயானுபவமாகிய இரையைத் தேடி உண்ணும். ஒளிமயமான கொடியையுடைய சிவனாகிய போர் வீரனது துணை கிடைத்தவுடன் இருளாகிய பாசம் கீழ்ப்படுத்தப்பட்டு நீங்குகிறது. (தூசி-கொடிப்படை, முற்படை)
2928. கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு வம்பாய் மலர்ந்ததோர் பூஉண்(டு)அப் பூவுக்குள் வண்டாக் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.
பொருள் : புலன் நோக்கம் அடங்கிய சித்தம் கும்பமலை எனப்பட்டது. அதன்கண் உண்டாகிய திருவடிப் பேரின்பம் என்னும் கிளையொன்றுண்டு. அப்பகுதியாகிய பேரின்பம் தொடர்ந்து வருமாறு திருவருளால் வீசுவதொரு தென்றாலாகிய தமிழ் மென்காற்று ஒன்று உண்டு. இயற்கை நறுமணம் கமழும் மெய்யுணர்வு வடிவாய் விளங்கும் அழியா ஆருயிர் மலர் ஒன்றுண்டு. அப்பூவினுள் விழுமிய முழுமுதற் சிவன் வண்டாகப் பின்னிக் கிடந்து மனங்கொண்டு இன்புறுத்துவன். (கும்பம்-இந்திரியச் சேட்டைகள் அடங்கிய மனம். கொம்பு-இன்பம். காற்று-இன்ப உணர்ச்சி.)
2929. வீணையும் தண்டும் வரிவி இசைமுரல்
தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது வாணிபம் சிக்கென் றதுஅடை யாமுனம் காணியும் அங்கே கலக்கின்ற வாறே.
பொருள் : யாழ் ஓசையும் புல்லாங்குழல் ஓசையும் கலந்து ஒலிக்கச் செய்கின்ற சிவனும் பொருந்தி முறையான கேவல கும்பகம் அடையுமாறு செய்தான். அப்போது தன்னைக் கொடுப்பதும் சிவத்தைக் கொள்வதுமாகிய வாணிபம் அமையுமுன் நம்முடைய உரிமையும் அச்சிவனுக்கு ஆகிவிட்டது.
2930. கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தஅஃது
அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வார்இல்லை திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர் தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.
பொருள் : சிவானந்தம் அளிப்பவருடன் கொண்டு கொடுத்து வியாபாரம் செய்த தன்மையை, துரிய பூமியில் சென்று அனுபவித்தவர்க்கன்றி ஆராய்ச்சி அறிவால் அறியப்படும் தகைமை உடையதல்ல. சந்திர மண்டலத்தை அடைந்து இருளே தமது உண்மைச் சொரூபம் என்பதை அறிகிலர். அத்தகைய துரிய பூமியில் தங்கி அங்கே இருப்பவரில் சிலர் உண்மையாகவே உலகைத் துறந்தோர் ஆவர்.
2931. போதும் புலர்ந்தது பொன்னிறம் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை ஏதம்இல் ஈசன் இயங்கும் நெறிஇது மாதர் இருந்ததோர் மண்டலந் தானே.
பொருள் : திருவருள் நினைவால் அறியாமையாகிய இருட்பொழுதும் விடிந்தது. பேரறிவாகிய சிவ ஞாயிறு எழுந்தது. பொன்னிறம் பேரறிவு. பூந்தூள் சிந்தும் புன்னை மரங்கள் என்பது திருவருளைப் பொழியும் பெரும் பொருளாம் சிவன் என்பதாகும். அச்சிவன் அகமும் புறமுமாகிய இருகரைகளிலும் வெளிப்பட்டு நின்றருள்வன். எக்குற்றமும் இல்லாத முக்கண்ணனாகிய சிவபெருமான் செவ்வுயிர்க்கு உடனாய் நின்று உதவும் ஒப்பிலா உதவி இதுவாகும். அத்தகைய அழகு நிறைந்த நிலவுலகம் இத்தகைய நற்றவர் வாழும் இடம்.
2932. கோமுற் றமரும் குடிகளும் தம்முளே
காமுற்ற கத்தி யிடுவர் கடைதொறும் வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.
பொருள் : ஆன்மாவோடு பொருந்திய தத்துவங்களும் தத்தம் விருப்பப்படி சென்று அகமாகிய தேகத்தில் தத்துவச் சேட்டையால் அக்கினியை மூட்டி நிற்கும். அப்போது சிவன் அழிதல் இல்லாத இடத்துக்கு வழிகாட்டி ஆன்மாவில் நின்று அச்சுறுத்தினால் ஐந்து கோசங்களையும் கடந்து அது தனித்துவிடும்.
2933. தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரிஅழைத் தென்செயும் மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக் காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.
பொருள் : சாதனை செய்யும்போது நிட்டை கூடாமல் கலைந்து போகுமாயின், புறத்தில் சென்று கிரியை முதலியவற்றைச் செய்வதனால் என்ன பயனைப் பெற்றுவிட முடியும்? முதல்வனை முன்னிலையாகக் கொண்டு நிட்டை கூடும் வகையில் ஒருமுகப்படுத்தி உபதேசம் செய்து கொடுத்தவர் சாதகர்க்கு மனஒருமைப்பாடு அமையாதபோது என்ன செய்வார்? (முதல்வனை-தென்முகக் கடவுளை. தோட்டம்-தவச்சாலை. மாம்பழம்-நிஷ்டை. நரி-கிரியை.)
2934. புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப் புலம்பி னவளோடும் போகம் நுகரும் புலம்பனுக் கென்றும் புலர்ந்தின்று போதே.
பொருள் : ஒளி தோன்றியது என்று சிவதத்துவமாகிய பறவைகள் ஒலி செய்ய, அவ்வொளி தோன்றிய போது சிற்சத்தி சிரசில் பொருந்த ஒலி எழுப்பிய அச்சிற்சத்திபோடு சீவன் பரபோகத்தில் திளைக்கும். சீவனுக்கு எப்போதும் ஒளியோடு கூடியிருப்பதால் பொழுது விடிவது என்ற ஒன்று இல்லை.
2935. தோணிஒன் றுண்டு துறையில் விடுவது
ஆணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும் வாணிபம் செய்வார் வழியிடை யாற்றிடை ஆணி கலங்கின் அதுஇது ஆமே.
பொருள் : சிதாகாயப் பெருவெளியாகிய துறையில் சீவனைக் கொண்டு சேர்க்கப் பிரணவமாகிய தோணி ஒன்று உள்ளது. பிரணவமாகிய தோணி தோன்றாதவாறு பிரமனாதி ஐவரும் நிலை கொள்ளுதலும், தன்னைக் கொடுத்துச் சிவத்தைக் கொள்ளும் வாணிபம் செய்யும் சீவன் சிதாகாயப் பெருவெளிக்குச் செல்லும் நெறியில் இடைப்பிரதேசத்தில் தேகப்பற்றாகிய ஆணி கழன்றால் சிவம் பொருந்திச் சீவன் சிவமாகும்.
18. மோன சமாதி
(மோன சமாதியாவது மௌனத்தில் ஒடுங்கும் நிலை. அதாவது சகச நிட்டை. இது பிரணவ யோகத்தால் அடையப் பெறுவதாகும்.)
2936. நின்றார் இருந்தார் கிடந்தார் எனல்இல்லாச்
சென்றார்தம் சித்தமே மோன சமாதியாம் மன்றேயும் அங்கே மறைபொருள் ஒன்றுண்டு சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற வாறே.
பொருள் : பிரணவ யோகத்தில் நிற்கிறார் இருக்கிறார் கிடக்கிறார் என்பது இல்லை. நாதாந்த நிலையில் சித்தம் அடங்கி இருத்தலே ஒடுக்க நிலையாம். சிரசின்மேல் சிதாகாயப் பெருவெளியில் சீவனது அறிவுக்குப் புலப்படாமல் சிவம் உள்ளது. நாதவழியே சென்று நாதாந்தத்தை அடைந்தவர் சேர்கின்ற வழி இதுவாகும்.
2937. காட்டும் குறியும் கடந்தஅக் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன் கூட்டும் குருநந்தி கூட்டிடி னல்லதை யாட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.
பொருள் : காட்டுகின்ற குறிகளையும் அடையாளங்களையும் கடந்த அந்த மூலப்பொருளாகிய சிவபெருமானைப் பற்றி நூலில் எழுதி வைத்து என்ன பயன்? உண்மை ஞானத்தைக் கூட்டி வைக்கின்ற ஞான குருவாகிய சிவன் உணர்த்தினால் அல்லது ஆட்டின் கழுத்தில் பயனற்றுத் தொங்கும் சதைப்பிடிப்புப் போல ஏட்டின் படிப்புப் பயனற்றதாகும்.
2938. உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம் உணர்வுடை யார்கள் உணர்ந்துகண் டாரே.
பொருள் : சிவ நினைவில் பொருந்திய உணர்வு உடையார்களுக்கு எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்தே அறியும் திறன் பொருந்தும். அத்தகையோர் எப்போதும் சிவத்துடன் தொடர்பு கொண்டிருத்தலால் அவர்கள் எதற்கும் கவலைப்படுவதில்லை. முன்னமே உணர்வினைத் தன்பால் கொண்ட குருவானவர் சீடனுக்கு உணர்த்த அவன் உணர்ந்தபோது, உணர்வைப் பெற்ற சீடர்கள் தம் சுய அனுபவத்தில் சிவத்தைக் காணும் பேறு பெற்றனர். (உணர்வு உடையார்-பதி, பசு-பாச உணர்ச்சி உடையார்.)
2939. மறப்பது வாய்நின்ற மாயநன் நாடன்
பிறப்பினை நீக்கிய பேரரு ளாளன் சிறப்புடை யான்திரு மங்கையும் தானும் உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே.
பொருள் : தனது அறிவுக்கு உலகம் தோன்றாதவாறு மிக நுட்பமாகச் சூக்கும மண்டலத்தில் விளங்கிக் கொண்டிருப்பவன் மௌன யோகி. அவன் மீண்டும் பிறக்க வேண்டிய நியதியைக் கடந்து பிறர்க்கு அருள்புரியும் தன்மையாளன். எல்லாச் சிறப்பும் பொருந்தியவன். சிவசத்தியும் தானும் பொருந்தி உலகை அறியாமலும் தன்னை அறிந்தும் இருப்பவனாவன். (மறப்பது வாய்-மறப்பதுவே தொழிலாய். மாய நன்னாடன்-மாயா சரீரத்தை உடையவன். திருமங்கை-திருவருட் சக்தி. உறக்கமில்போகம்-சிவயோக சமாதி. உறங்கிடும்-அமைந்திருப்பான்.)
2940. துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய் விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே உரைஇல் அனுபூ திகத்தில்உள் ளானே.
பொருள் : சீவ துரியம், பரதுரியம், சிவதுரியம் ஆகிய முத்துரியங்களையும் கடந்து விளங்கும் சோதியில், அருமையான துரிய நிலைக்கு மேலுள்ள மூன்று நிலைகளிலும் பொருந்தி, விரிந்தும் குவிந்தும் அனுபவித்தும் கடந்து வாயினால் கூற முடியாத அனுபவ நிலையில் இச்சாதகன் உள்ளான். விரிவு குவிவு-நினைப்பு, மறப்பு. விழுங்கி உமிழ்ந்து-ஒழித்து.)
2941. உருவிலி ஊன்இலி ஊனம்ஒன் றில்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன் பொருவிலி பூதப் படையுடை யாளி மருவிலி வந்தென் மனம்புகுந் தானே.
பொருள் : மாய காரியமான உருவம் இல்லாதவன். மாமிச உடல் இல்லாதவன். ஒரு குறையும் இல்லாதவன். பராசத்தியைத் தன் உடலாகக் கொண்டவன். (திருஇல்லி) தீமை செய்யும் எண்ணமே இல்லாதவன். பிரமனாதி ஐவர்க்கும் தலைவன். ஒப்பு இல்லாதவன். பூதப்படையை உடையவன். தான் எல்லாப் பொருளுக்கும் ஆதாரமாய் இருந்தும் தனக்கு ஓர் ஆதாரம் இல்லாதவன். இத்தகைய சிவன் என் மனத்தையே இடமாகக் கொண்டு அமைந்தான். திரு+வில்லி=மேரு மலையை வில்லாக உடையவன் எனினுமாம்.
2942. கண்டறி வார் இல்லைக் க யத்தின் நந்தியை
எண்டிசை யோரும் சூஇறைவன்சூஎன் றேத்துவர் அண்டங் கடந்த அளவிலா ஆனந்தம் தொண்டர் முகந்த துறைஅறி யோமே.
பொருள் : எடுத்த உடம்பில் சிவத்தைக் கண்டு வழிபடுவார் ஒருவரும் இல்லை. ஆனால் எட்டுத் திக்கில் உள்ளவரும் சிவன் எல்லாரிடத்திலும் தங்கியுள்ளான் என்று ஏத்துகின்றனர். இந்நிலவுலகைக் கடந்த எல்லையற்ற சிவானந்தத்தை, சாதகர்கள் அனுபவித்து நிற்கும் முறைமையினை நாம் அறியவில்லை.
2943. தற்பர மல்லன் சதாசிவன் றானல்லன்
நிட்கள மல்லன் சகள நிலையல்லன் அற்புத மாகி அனுபவக் காமம்போல் கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.
பொருள் : முழுமுதற் சிவபெருமான் தற்பரத் திருவுருவாம் ஆண்டானும் அல்லன். அதன்மேலுள்ள அருளோனும் அல்லன். உருஉறுப்புக்கள் உடையவனும் அல்லன். அவை இல்லானும் அல்லன். இன்னவாறு உள்ளான் என்று எவராலும் கூற ஒண்ணாததொரு வியத்தகு நிலையனாகவுள்ளவன் அவன். கருத்து ஒத்த காதலர் மருவி நுகர்ந்த அக்காம இன்பம்போல் அவன் நிலையும் அவன் திருவடி இன்பமும் நுகர்வாம், நுண்ணுணர்வால் உணர்வனவாகும். நொடிப்பாம் கருவியுணர்வான் உணர வாரா என்க. அதனால் பொய்யெனப் புகலும் கற்பனையன்று; மெய்யெனக் காணுமாறு கலந்து நின்றிருளினன்.
2944. முகத்தினிற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தினிற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத்தன் தாய்தன் மணாளனோ டாடிய சுகத்தினைச் சொல்லெனில் சொல்லுமா றெங்ஙஙே.
பொருள் : முகத்திலுள்ள கண்களால் புறப்பொருளைக் கண்டு மகிழ்கின்ற மூடர்களே! அறிவுக் கண்கொண்டு அகவுணர்வைக் காண்பதே உண்மையான சிவானந்தமாகும். ஒத்த உறுப்பும் நலனும் உடைய மகளுக்குத் தாயானவள் தன் கணவனோடு பெற்ற இன்பத்தை வாயினால் சொல்ல வேண்டுமென்று மகள் விரும்பினால் தாய் எவ்வாறு சொல்ல முடியும்? முடியாது.
2945. அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேரபர மும்விட்டுக் கப்புறு சொற்பதம் மாளக் கலந்தமை எப்படி அப்படி என்னும்அவ் வாறே.
பொருள் : நீரினில் கலந்த உப்பு, நீராய் இருப்பது போன்று அத்தனாகிய சிவன் ஆன்மாவைப் பொருந்தி, ஆன்மா பரமாகவும் சிவன் பராபரமாகவும் இருந்தாலும் இருபொருளாக இல்லாமல் தத்துவமசி என்ற மகாவாக்கியத்தில் மூன்றாவது பதமான அசி பதம் அழிய தத் ஆகிய சிவம், துவம் ஆகிய ஆன்மாவை மூடிக்கொண்டு தன்னைப் போலவே ஆன்மாவைத் தகுதியுடையதாய் செய்யும்.
2946. கண்டார்க் கழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை பெண்டான் நிரம்பி மடவிய ளானால் கொண்டான் அறிவன் குணம்பல தானே.
பொருள் : பார்ப்பவர்களுக்கு எட்டிப்பழம் போல உலகம் மிகவும் கவர்ச்சியுடையது. ஆனால் அப்பழம் தின்ற பின்னர்க் கசப்பைத் தருவது போல உலக வாழ்வும் அனுபவித்த பின்னர்க் கசப்பினைத் தரும் என்பது புலனாகும். பெண்ணாகியவள் பக்குவம் அடைந்து மடந்தையாவது போலச் சீவன் உலக அனுபவத்தில் கசப்புத் தோன்றிப் பக்குவம் அடைந்தபோது சிவன் சீவனிடத்தில் விளங்கி நிற்கச் சீவனும் சிவபோகத்தில் இன்பம் பெறும்.
2947. நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியைப் புந்தி னாலே புணர்ந்துகொண் டேனே.
பொருள் : திருவருள் நினைவால் சிவகுரு அருளால் அகத்தவப் பயிற்சியால் உள்ளத்தின் நடுவில் நந்தி எழுந்தருளியிருந்தனன். தாலி கட்டி முடிந்தபின் மணச் சடங்குப் பொருள்கள் தாமே கழிவன போன்று நந்தி எழுந்தருளினமையால் சந்தி சமாதிகள் தாமே அகன்றன. மேல் வயிறாகிய மணிபூரகத்தினிடத்துத் தோன்றி மிக்கு எழும் திருவருள் பேரொளிப் பிழம்பாகிய சிவபெருமானை உள்ளத்தினால் தள்ளரிய அடிமையாய்ப் புணர்ந்து கொண்டேன். (உள்ளத்தின் நடு-சித்தத்தின் மத்தி. புந்தி-உள்ளம். சந்தி+சமாதி-யோகமும் சமாதியும்.
2948. விதறு படாவண்ணம் வேறிருந் தாயந்து
பதறு படாதே பழமறை பார்த்துக் கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.
பொருள் : ஞான சாதனையில் சோர்வு அடையாமல் தத்துவங்களுக்கு வேறாகச் சிவத்தை நினைந்து நடுக்கம் ஏதுமின்றி நாத சம்மியம் செய்து ஓட்டெடுக்கின்ற மாயையை விட்டு நீங்கி அந்தக் கற்பனை கடந்த சோதியான சிவத்தில் பொருந்தினேன் (விதறு-சோர்வு.)
2949. வாடா மலர்புணை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச் சேடார் கமலச் செழுஞ்சுட ருட்சென்று நாடா அமுதுற நாடார் அமுதமே.
பொருள் : சிவனது செம்மையான திருவடிகளைத் தேவர்கள் பொருந்தார். தருமநெறி நாள்தோறும் தழைக்க பெருமை பொருந்திய அக்கினி மண்டலத்தில் சென்று அமுதம் விளையுமாறு நாடார். அவ் அமுதத்தைப் பெற அவர் விரும்புவதும் இல்லை. தேவர்கள் அறநெறி இன்பத்தை நாடி அமுதத்தை விரும்பமாட்டார்.
2950. அதுக்கென் றிருவர் அமர்ந்தசொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல் சதுக்கென்று வேறு சமைந்தாரக் காணின் மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.
பொருள் : அக்காம இன்பத்திற்கு என்று இருக்கும் காதலர், ஒருவர் பேச்சை மற்றவர் கேட்டதும், விரைவாகக் காமம் தோன்றுமாறு போல அந்தக்கரண விருத்தியைக் கடந்து நிற்கும் குருவைக் கண்டதும் தேன் பிலிற்றும் கொன்றை மாலையைப் போன்ற மஞ்சள் ஒளியில் சிவமும் வந்து இன்பம் தருவான்.
2951. தானும் அழிந்து தனமும் அழிந்து
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்தபின் நானும் அழிந்தமை நானறி யேனே.
பொருள் : சிவசாட்சாத் காரத்தில் உடல் பற்று அகன்று பொருள் பற்று நீங்கி மாமிச உடலின் வேட்கையும் கெட்டு, உயிர்ப்பற்றும் விட்டு உடனே ஆகாய மயமான சூக்கும தேகப் பற்றும் விட்டு, புறத்தே செல்லும் மனமும் கெட்டு பிறகு என்னுடைய இச்சை என்பதும் கெட்டது எவ்வாறு என்பதை நான் அறியேன்.
2952. இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்தஉள் ளாகி அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே உருளாத கல்மனம் உற்றுநின் றேனே.
பொருள் : இருள் மயமான தத்துவங்களை நோக்காமலும் ஒளிமயமான சிவத்தைச் சுட்டி அறியாமலும் சிவத்தோடு அணைந்த சீவனாய் வேறுபாடற்றுப் பொருந்த அருளால் தன் நிலை கெடும். அப்போது அத்தனாகிய சிவத்தின் திருவடிக்குச் சென்று பிறழாத கல்போல மனம் பொருந்துமாறு நின்றேன்.
2953. ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.
பொருள் : திருவருள் நினைவால் உள்ளம் ஒருங்கி உன்னினேன். உன்னலும், பராபரமாகிய பெரும் பொருளையுணர்ந்தேன். அதுபோன்று சிவகதியினையும் உணர்ந்தேன். அதுபோன்று திருவடியுணர்வினையும் உணர்ந்தேன். அது போன்று பல ஊழிகளையும் கண்டுணர்ந்தேன். (ஒன்றி நின்று-ஒருமுகப்பட்டு. உணர்வினை-தத்துவ அறிவை. பலவூழி-பல யுகங்கள்.)
19. வரையுரை மாட்சி
(வரை-எல்லை, உரை-தேய்வு, மாட்சி-பெருமை. வரையுரை மாட்சியாவது எல்லையற்ற பெருமை. ஆன்மா தன்னை உணர்ந்து சிவனோடு பொருந்தியிருப்பதே எல்லையற்ற பெருமையாம்.)
2954. தான்வரை வற்றபின் ஆரை வரைவது
தான்அவன் ஆனபின் ஆரை நினைவது காமனை வென்றகண் ஆரை உகப்பது தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.
பொருள் : ஆன்மா சீவ எல்லையைக் கடந்து பரஸ்துவாகிய சிவமான பிறகு யாருடன் சேர்வது? அவ்வாறு அகண்டமாகிய அந்நிலையில் யாரைப்பற்றி நினைப்பது? கவர்ச்சிகரமான பிரகிருதியின் இச்சையை வென்றவர்க்கு வேறு இப்பிரகிருதியில் என்ன கவர்ச்சி இருக்க முடியும்? நீங்களே உங்கள் அறிவில் தேர்ந்து சொல்லுங்கள். (காமனை-மாதர் போகத்தை எனினும் ஆம். வென்ற கண்-வெற்றி கண்ட அறிவினால்.)
2955. உரையற்ற தொன்றை உரைசெயும் ஊமர்காள்
கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ திரையற்ற நீர்போலச் சிந்தைதெளி வார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே.
பொருள் : வாக்கினால் கூறமுடியாத அகண்ட சிவத்தை அளவுபடுத்திக் கூறமுயலும் உண்மை அறியாதவர்களே! அகண்டமாகிய பொருளை இவ்வண்ணம் இவ்வுருவம் இப்பண்பு என்று வரையறுத்துக் கூற முடியுமோ? ஆனால் அலை ஓய்ந்த ஆழ்ந்த கடல்போன்ற தெளிந்த சிந்தனையுடையார்க்கு ஒளிக்கிரணங்களையுடைய சிவபெருமான் மறைவின்றி விளங்குகின்றான்.
2956. மனமாயை மாயைஇம் மாயை மயக்க
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை பினைமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டா தனைஆய்ந் திருப்பது தத்துவந் தானே.
பொருள் : மனோ சங்கற்பமே மாயையாகும். இச்சங்கற்பமே மயக்கத்தைத் தரும். மனத்தால் சிருஷ்டிக்கப்பட்ட சங்கற்பம் கெடுவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதற்குமேல் கெடுவதற்கு ஒன்றும் இல்லை. வீணாகப் பேசிக் காலத்தைக் கழிக்க வேண்டாம். ஆன்மா தன் உண்மைச் சொரூபத்தை ஆராய்ந்து அடங்கியிருப்பதே மேன்மையாம். (பினை-பின்னை-அதற்கு மேல்.)
20. அணைந்தோர் தன்மை
(அஃதாவது மோனத்தில் பொருந்தியவர் இயல்பு என்பதாம்.)
2957. மலமில்லைமாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களு மில்லை நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே பலம்மன்னி அன்பில் பதித்துவைப் பார்க்கே.
பொருள் : சிவகுரு நாதனை ஞானத்தினால் உறுதியுடன் பொருந்தி, தங்கள் அன்பினுள் அணைத்துக் கொள்வோர்க்கு, சீவர்களைப் பந்தித்து இருக்கும் மலம் இல்லை. அவற்றால் வரும் குற்றம் இல்லை. உயிர்ப்பற்றும் பொருட்பற்றும் இனப்பற்றும் கிடையா. தாமத இராசத சாத்துவிக குணங்களும் இல்லை. ஆதலால் சுயநலமும் இல்லையாம்.
2958. ஒழிந்தேன் பிறவி உறவெனும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன் அழிந்தாங் கினிவரும் ஆக்கமும் வேண்டன் செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே.
பொருள் : நன்மையே தரும் சிவனைக் கண்டேன். அதனால் பிறப்பு நீங்கப் பெற்றேன். உறவாகிய பாசங்களை அகற்றி நின்றேன். சிவத்துடன் சிவ போதம் அற்றுப் பொருந்தி நின்றேன். சிவத்துடன் பொருந்தினமையால் இறந்த பின் இனி மீளவும் பிறத்தலை விரும்பேன்.
2959. ஆலைக் கரும்பும் அமுதும் அக் காரமும்
சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப் பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு கோலப்பெண் ணாட்குக் குறையொன்று மில்லை.
பொருள் : ஆலையில் பிழியப்பெற்ற கருப்பஞ்சாறும் பாலும் வெல்லமும் சோலையிலுள்ள பொய்கை நீரும் போன்ற இனிமையான சிவானந்தம் எங்கள் சிவபூமியில் உள்ளதாம். மயில் தோகை போன்ற ஒளியினை நல்கிக் கொண்டிருக்கின்றவளாகிய ஒப்பற்ற அழகினையுடைய பராசக்தியால், அந்நாட்டிடை உள்ளோர்க்கு ஒரு குறைவும் இல்லை.
2960. ஆராலும் என்னை அமட்டஒண் ணாதினிச்
சீரார் பிரன்வந்தென் சிந்தை புகுந்தனன் சீராடி அங்கே திரிவதல் லா(து)இனி யார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனே.
பொருள் : எல்லாத் தத்துவங்களையும் கடந்து விளங்கும் சிறப்புமிக்க சிவம் வந்து என் சிந்தையில் வந்து இடங்கொண்டனன். ஆதலால் இனிமேல் எந்தத் தத்துவத்தாலும் என்னைப் பந்தப்படுத்த முடியாது. அந்தச் சிவபூமியில் பொருந்தியிருப்பது அல்லால் பிற தத்துவங்களோடு கூடி அறிய வேண்டுவது ஒன்றும் இல்லை.
2961. பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை அரிந்தேன் வினையை அயில்மன வாளால் முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.
பொருள் : பிரமனால் அமைக்கப் பெற்ற பிறவிக்கட்டினின்றும் பிரிந்து விட்டேன். சிவகதியை அடையும் நெறியை நான் அறிந்து கொண்டேன். என்னுடைய பழைய வினைகளைக் கூர்மையான மனமாகிய வாளினால் வேறுபடுத்தினேன். (என்னுடைய ஸ்தூல சூக்கும தேகமான புரங்களைக் கெடுத்து இலட்சியத்தை நோக்கி முன்னேறுகின்றேன். (புரத்தினை-உடம்பினை.)
2962. ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண்டீர்உல குக்குயி ராவதும் நன்றுகண் டீர்இன் னமச்சிவா யப்பழம் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.
பொருள் : உலக இயக்கத்துக்குப் பேரொளிப் பிழம்பான ஒரு தெய்வம் உள்ளது என்பதை அறிந்தீர். அஃது உலகத்தை உயிர் போன்று இருந்து இயக்குவதாகும் என்பதையும் அறிந்தீர். இனி நமச்சிவாய என்ற சிவக்கனி உயிர் வருக்கத்துக்கு நன்மை தருவது என்பதை அறிந்தீர். அதனால் இச்சுவையுள்ள கனியை உண்ட எனக்கு அதன் இனிப்புத் தன்மை நன்றாக விளங்கியது.
2963. சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரன்
வந்தென்னை ஆண்ட மணிவிளக் கானவன் அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள் சிந்தையின் மேவித் தியக்கறுத் தானே.
பொருள் : ஒளியாகிய சந்திரனையும் அதன் பகையாகிய பாம்பையும் ஒரு சேரத் தரித்துள்ள சடாதரனாகிய சிவபெருமான் வந்து என்னை ஆட்கொண்ட சுயஞ்சோதிப் பொருளாவான். அவ்வாறு முடிவும் முதலும் இல்லாத அருமையான மெய்ப்பொருள் என்னுடைய சிந்தையில் பொருந்தி என் மயக்கத்தைப் போக்கியருளினான்.
2964. பண்டெங்கள் ஈசன் நெடுமால் பிரமநைக்
கண்டங் கிருக்கும் கருக்கும் கருத்தறி வார்இல்லை விண்டங்கே தோன்றி வெறுமன மாடியின் துண்டங் கிருந்ததோர் தூறது வாமே.
பொருள் : பழமையான எங்கள் சிவம் விஷ்ணுவையும் பிரமனையும் படைத்து அவர்களுடன் விளங்கியிருக்கும் தத்துவ உண்மையை ஆராய்ந்து அறிபவர் ஒருவரும் இல்லை. ஆனால் பிரம விஷ்ணுக்களின் காரியமாகிய தேகதர்மத்தைக் கடந்து மேற்சென்று எண்ணமற்ற நிலையை அடைந்தால், பிரணவ சொரூபமான சிவன் சீவர்களை ஆசனமாகக் கொண்டு விளங்குவான். (கண்டு-படைத்து, விண்டு-சிவானந்தம்.)
2965. அன்னையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அன்னையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை? அன்னையும்அத்தனும் யானும் உடன் இருந்து அன்னையும் அத்தனும் யான்புரந் தேனே.
பொருள் : தாயும் தந்தையுமாகவுள்ள இறைவன் என்னிடம் அன்புகாட்டிப் பாதுகாக்கா விட்டால் பெற்றெடுத்த தாயும் தந்தையும் என்னை அறிந்து எவ்வாறு பாதுகாக்க முடியும்? ஆதலின் தாய் தந்தையரோடு நானும் உடனாக இருந்து சத்தி சிவத்தினிடம் அன்பு பூண்டு போற்றி நின்றேன். இதுவே சமாதி என்னும் மயலறும் செயலறு நிலை.
2966. கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும் எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்துளே உண்டனர் நான்இனஇ உய்ந்தொழிந் தேனே.
பொருள் : சிவசாட்சாத் காரத்தில் இருக்கும் என்னிடம் பூமியைத் தன்னுள் அடக்கியிருக்கும் கடலும் பூமியை விட உயர்ந்து விளங்கும் மலையின் சிகரமும் ஆகாயவாசிகளும் ஆகாய மண்டல அதிபர்களான பரமன், விஷ்ணு, உருத்திரன் முதலியோரும் ஆதிசத்தியும் எட்டுத் திக்கில் உள்ளோரும் நான் இடும் பணியைக் கேட்டு நின்றனர். நான் இப்போது அவர் எல்லாரினும் மேலாகக் கடந்து நின்றேன். (உரிமை-மனைவி, சுழி-கடல், உண்டனர்-வசப்பட்டனர்.)
2967. தானே திசையோடு தேவருமாய் நிற்கும்
தானே வடவரை ஆதியுமாய் நிற்கும் தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும் தானே உலகில் தலைவனும் ஆமே.
பொருள் : சிவபிரான் கலப்பினால் பத்துத் திசையும் பற்றுடைத் தேவருமாய்த் தானாகவே நிற்பான். அதுபோல் உடலாய் உயிராய் ஏனைய தத்துவங்களுமாய் நிற்பான். அதுபோல கடலும் மலையும் முதலாகிய எல்லாப் பொருள்களுமாய் நிற்பான். பொருள் தன்மையால் அச்சிவபெருமான் இவை அனைத்திற்கும் முதல்வனுமாய் நிற்பான். இப்பாடலுக்குப் பாடபேதமும் உள்ளது.
2968. நமன்வருன் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நான்உடன் போவது திண்ணம் பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன் தவம்வரும் சிந்தைக்குத் தான்எதி ராமே.
பொருள் : உடல் பற்று நீங்கிய ஆகாய மயன் என்ற உணர்வு வந்த போது மரணம் வந்தால் நான் அஞ்சமாட்டேன். அவ்விதம் ஆகாய சம்மியம் செய்யும்போது பேரொளிப் பிழம்பான சிவன் வந்து பொருந்துமாகில் நான் எங்கும் நிறை பொருளாய் நிற்பது உறுதியாகும். பிறப்பினைத் தரும் பழைய வினைகளை முன்பே அறுத்து விட்டேன். தவத்தால் அடையப்பெறும் சிந்தைக்கு அஞ்ஞானமாகிய இருளா வந்து எதிர் நிற்க முடியும்?
2969. சித்தம் சிவமாய் மலம்மூன்றும் செற்றவர்
சுத்த சிவமாவர் தோயார் மலபந்தம் கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார் சத்தம் பரவிந்து தானாம்என் றெண்ணியே.
பொருள் : எண்ணம் சிவமாய் ஆனவம் கன்மம் மாயையாகிய மும்முலங்களையும் வென்றவர், பரிசுத்தமான சிவத்தின் ஆற்றலைப் பெற்று விளங்குவர் ஆவர். அவர்கள் பந்தப்படுத்தும் மலத்தில் கட்டுண்ணாது விளங்குவர். அந்த ஞானிகள் சத்தம் எல்லாம் சூக்கும வாக்கு என்று உணர்ந்திருப்பார். ஆதலின் வைகரி வாக்காலாகிய வாதமும் பூசலும் பிதற்றலும் செய்யார். (பரவிந்து-நாதவிந்துகளைப் பயக்கும் மா மாயை.)
2970. நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும் வினைப்பற் றறுக்கும் விமலனைத் தேடி நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.
பொருள் : நினைத்தலும் மறத்தலும் இன்றி இடைவிடாது எண்ணி இருப்பவரது மனத்தில், வினைக்கூட்டங்களை அழித்துப் பொடிபடச் செய்யும் விமலனாகிய சிவன் விளங்குவான். ஆனால் வினைகளைக் கடியும் சிவபெருமானைக் குறித்து நாடி எண்ணினால், அப்பெருமான் நம்மைவிட்டு அகன்றவன் ஆவான்.
2971. சிவபெரு மானென்று நானழைத் தேத்தத்
தவபெரு மானென்று தான்வந்து நின்றான் அவபெரு மான்சூ என்னை ஆளுடை நாதன் பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.
பொருள் : எங்கும் நீக்கமற நிறைந்துள்ள தலைவனை சிவ பெருமானே என்று நான் அழைத்து வழிபட, தவத்தில் விளங்கும் பெருமானாகிய அவனும் இதோ இருக்கின்றேன் என்று என்னிடம் வந்து விளங்கினான். பற்றுக்களைக் கொடுக்கும் தலைவனாயும் பின்னர் அவற்றை நீக்குபவனாயும் உள்ள, நித்தியப் பொருளான தலைவனை வணங்கி என் பிறவியைக் கடந்து நின்றேன்.
2972. பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டன் அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத் தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.
பொருள் : மேன்மைமிக்க ஆதியான தலைவனை நான் வணங்கி நின்றேன். அவனே பரம்பொருள் என்று தெளிந்தேன். இனி அவனேயன்றி மேலான தெய்வம் ஒன்று உண்டு என்று நினைக்கமாட்டேன். என் உடலில் இடம் கொண்ட ஆதியாகிய சிவனை நான் பொருந்தி நின்றேன். என் சிவபோகத்தை விட்டு அவனோடு பொருந்தி அடங்கி நின்றபோது அவனது அகண்ட வியாபகத்தை அறிந்தேன்.
2973. என்நெஞ்சம் ஈசன் இணையடி தான்சேர்ந்து
முன்னஞ்செய் தேத்த முழுதும் பிறப்பறும் தன்னெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி பின்னஞ்செய்து என்னைபக் பிணக்கறுத் தானே.
பொருள் : என்னுடைய மனமண்டலத்தில் சிவன் உள்ளான் என்று உணர்ந்து அவன் திருவடியைப் பொருந்தி முன்னிட்டு விளங்குமாறு வழிபடப் பிறவியும் அதற்குரிய காரணமும் கெடும். தனக்கென ஒரு மனம் இல்லாத தலைவன் பிரம லிபியைக் கெடுத்து நான் தத்துவங்களோடு போராடும் நிலையைக் கெடுத்தருளினான்.
2974. பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத் தெண்ணும்
கணக்கறுத் தாண்டனன் காண்நந்தி என்னைப் பிணக்கறுத் தென்னுடன் முன்வந்த துன்பம் வணக்கலுற் றேன்சிவம் வந்தது தானே.
பொருள் : அடியேனை நந்தியாகிய சிவபெருமான் உலகியற் பிணக்குகளினின்றும் விடுவித்தான். மூப்பினை அகற்றினான். வாழ்நாட் கணக்கை எண்ணி ஆண்டு முடிந்தது மாண்டு மடிய வேண்டும் என்னும் உலகோர் சொல்லும் கணக்கினையும் அறுத்து ஆண்டு கொண்டனன். அதனால் அடியேன் முன் வந்து தோன்றும் துன்பங்களை அகப்புறக் கலன்களாகிய எண்ணம் எழுச்சி, இறுப்பு, என்னும் கருவிகளின் தன்மைகள் எனக் கண்டு கெடுத்தொழிந்தேன். ஒழியவே முழுமுதற் சிவபெருமான் வெளிப்பட்டுத் திருவருள் புரிந்தனன்.
2975. சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான் அவன்வந்தென் உள்ளே அகப்பட்ட வாறே.
பொருள் : விழுமிய முழுமுதற் சிவபெருமான் பேரருளால் நந்தி முதலிய தேவர் குழாத்துடன் எழுந்தருளி வந்தனன்; வந்து அடியேனுக்குப் பிறப்பு இறப்புகளைத் தந்து பேராப்பெரும் துன்பந்தரும் சிற்றறிவு சுட்டறிவுகளாகிய உயிர்மை, உடைமை என்னும் பசு பாசத் தன்மைகளை அறுத்தருளினன். அவனே அடியேனைப் பழுதின்றி எழுமையும் புரக்கும் எந்தையாவன். அடியேனை ஆண்டுகொண்டருளிய ஆதிப்பெருமானும் அவனே அவன் தன்னருளால் அடியேன் உள்ளத்துள் வந்துற்றனன்.
2976. கரும்பும்செந் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் அக் கந்தமும் ஆகிய ஆனந்தம் விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின் கரும்பும்முன் கைத்தது தேனும் புளித்ததே.
பொருள் : கரும்பாகிய உண்டலும் தேனாகிய உறங்கலும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் சரக்கு நிறை காயப்பையாகிய இவ்வுடம்பகத்து முறையும் கிழங்கும் போன்று, தோன்றுதலும் நிலைத்தலும் போன்றுள்ள நிலையிலாச் சிற்றின்பத்தினை உள்ளம் விரும்பி நுகர்ந்தது. அவ்வுள்ளம் அவ் இன்பங்கள் நிலையா என அருளால் வெளிப்படக்கண்டது. கண்டதும் கரும்பாகிய உண்டலினும் தேனாகிய உறங்கலினும் உள்ளம் செல்லவில்லை. உள்ளம் வலிய ஆண்டு கொண்ட வள்ளலிடமே ஓவாது செல்லுகின்றது.
2977. உள்ளம் சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச் செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால் கைவளமின்றிக் கருக்கடந் தேனே.
பொருள் : பண்டைய பிறவிகளில் சரியை முதலிய நெறிகளில் சேர்த்து, அந்நெறிகளினின்றும் மீட்டு, என்னிடம் வள்ளலான சிவன் கருணை காட்டி அன்பு செய்த திறத்தினைப் பாடி, நான் செய்கின்ற எல்லாம் சிவன் என்னிடமிருந்து செய்விக்கிறான் என்று உணர்வதால் மேல் உண்டாகும் வினையின்றிப் பிறவியைக் கடந்தேன்.
2978. மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கின் தகளிநெய் சோர்தலும் பூண்டாள் ஒருத்தி புவனசூ டாமணி மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.
பொருள் : உலக நிலையிலிருந்து மீண்டவரது மூலாதாரத்திலுள்ள அக்கினி பொங்கி எழ, சகஸ்ரதளமாகிய விளக்கினில் உணர்வாகிய நெய் சேர்ந்ததும், சாந்தி விருத்தி பெருகிப் புவனங்களுக்கெல்லாம் தலைவியான பராசத்தி வந்து பொருந்தினாள். சீவ போதம் கெட்டுச் சிவானுபவம் கிட்டியது. (தூண்டா விளக்கு-சீவன். தகளி-உள்ளம்.)
2979. ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவிமுலை கொம்பனை யாளொடும் வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.
பொருள் : அகத்தின்கண் அமுதப் பெருக்காகிய சிற்றாறு ஒன்றுண்டு. அவ்ஆறு அருளால் போய் நிறையும் நெஞ்சம் குளமும் ஒன்றுண்டு. அங்குத் திகழ்வது அளவிடப்படாத சிவநிலை ஆகும். அதன் இயல்பும் நனிமிகு அண்மையாகும். அங்குக் குவிந்த முலையினையுடைய அருள் அன்னையை ஒரு கூறாகக் கொண்டு சிறப்பாக வீற்றிருப்பவன் சிவபெருமான். அவனே தவலில் விழுப்பொருளாவன். (தவலில்-கெடுத்ல் இல்லாத.)
2980. அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன் என்பொன் மணியை இறைவனை ஈசனைத் தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே.
பொருள் : அன்பினால் இறைவன் செய்த உதவியை நினைந்து உருகி அழுவேன். அவனது தோத்திரத்தைப் பாடுவேன். என்னுடைய எலும்பு நைந்துருக இரவு பகல் என்ற வேறுபாடின்றி இறைவனும் ஈசனுமாகிய பெருமானை என்னிடம் பொருந்துமாறு ஞான சாதனை செய்து எனக்கு உரியவன் ஆக்கிக் கொள்வேன். (தான்-அசை.)
2981. மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்
மனம்வி ரிந்து குவிந்தது வாயு மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர் மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே.
பொருள் : மனம் உலக முகமாக விரிந்து துன்புற்ற அடங்கலே உண்மையான தவமாகும். அவ்விதம் மனம் விரிந்து அடங்கப் பெற்றவர்க்குப் பிராணன் அடங்கிக் கும்பகம் அமையும். நிலைபெற்ற உயிரின் இடமாக விரிந்த மனம் ஒடுங்கி நின்றது. அப்போது பேச்சற்ற பேரானந்த முத்தி கிட்டும்.
21. தோத்திரம்
(இறைவனைப் புகழ்ந்து பாடுதல் தோத்திரமாகும். இறைவனது பெருமையும் அவன் சீவர் மாட்டுச் செய்யும் உபகாரமும் இங்கு கூறப்பெறும்.)
2982. மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப்
போயின நாடறி யாதே புலம்புவர் தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக் காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.
பொருள் : ஊனக் கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய கள்வனை அடைய மனமாகிய உயர்ந்த தேரில் ஏறி அலைந்த நாட்டின் கணக்கைச் சொல்ல முடியாமல் புலம்புவர். நானும் அவ்வண்ணமே பல இடங்களுக்கும் அலைந்து காணாமல் எங்கள் இறைவனை, மின்னல் போல் தோன்றி அழியும் இவ்வுடம்பாகிய நாட்டில் விளங்கக் கண்டேன்.
2983. மன்னும் மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் யாரெனின் முன்னியல் காலம் முதல்வனார் நாமத்தைப் பன்னினர் என்றேதம் பாடறி வீரே.
பொருள் : நிலைபெற்ற கைலாயமலை என்று சொல்லப்படும் அகப்புறக்கனலாம் அந்தக்கரணங்களுள் அம்மலைபோல் காணப்படும் மத யானையாகிய உணர்வு எழுச்சியில் தோன்றும் தூய மனத்தின் மேல் மெய்யடியார்கள் செந்தமிழ் இன்னிசை வந்தவாறு பாட எழுந்தருளி இருந்தவர் யாரெனில், காலமெய்க்குக் காலமாக விளங்கும் கால காலனாகிய விழுமிய முழுமுதற் சிவபெருமான் என்க. அவர்தம் திருப்பெயராம் செந்தமிழ்த் திருஐந்தெழுத்தைப் பலகால் எடுத்து ஓதினார் என்க. அவர்கள் யாரெனில் பெருமைசேர் திருநீலகண்டப் பெருமானாகிய ருத்திரன், திருநந்தி தேவர் முதலியோர் என்க. (மன்னுமலை-உடம்பு; மத வாரணம்-மனம்.)
2984. முத்தினில் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை அத்தனைக் காணாது அரற்றுகின் றேனை ஒர் பித்தன் இவன்என்று பேசுகின் றாரே.
பொருள் : முத்து கையில் சிறந்த அணிமுத்தைப் போன்றவனும் உதயமாகிய இளஞ்சூரியன் போன்றவனும் எத்தனையோ ஆகாய மண்டலவாசிகள் வழிபடும் இறைவனும் ஆகிய எனது தந்தையைக் காணாமல் புலம்புகின்ற என்னை ஒரு பைத்தியக்காரன் என உலகவர் கூறுகின்றனர்.
2985. புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன் புகுந்துநின் றான்அடி யார்தங்கள் நெஞ்சம் புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.
பொருள் : புண்ணியம் செய்தவர்களால் உணரப்பெறும் சிவாதித்தன் என்னிடம் புகுந்து விளங்கினான். அவ்வாறு புகுந்து நின்றவன் எங்களது பேரறிவாளன். அவன் அடியார்கள் உள்ளத்தில் விளங்கிக் கொண்டிருப்பவன். அவ்விதம் என்னிடம் புகுந்து நிற்கும் இறைவனை நான் போற்றி வழிபடுகின்றேன்.
2986. பூதக்கண் ணாடி புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும் நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன் கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே.
பொருள் : சிவசூரியன் ஊனக்கண்ணினால் காண முடியாதவன். சிரசின்மேல் சகஸ்ரதளத்தில் விளங்குபவன். ஞானக் கண்ணினால் சிந்தை நாடினால் வெளிப்பட்டுத் தோன்றுவான். அற ஒழுக்கத்தில் நின்று நாடுகின்றவர் மனமண்டலத்தில் எழுந்தருளியிருப்பவன். நானோ அவனை நாதமயமாக உணர்ந்து வழிபடுகின்றேன்.
2987. நாமமொ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமொ ராயிரத் துள்ளே யிசைவீர்கள் ஓமமொ ராயிரம் ஓதவல் லாரவர் காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே.
பொருள் : சிவபெருமானை அவனது ஆயிரம் திருநாமங்களால் பரவி வழிபாடு செய்யுங்கள் ஓர் ஆயிர வகையான சுகத்தை அடைவீர்கள். சிரசின் மேல் மனத்தை இடைவிடாமல் நிறுத்தி ஞான சாதனையைச் செய்கின்றவர் ஆயிரக்கணக்கான ஆசைகளினின்றும் நீங்கினவராவர்.
2988. போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப் போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே.
பொருள் : சிவபெருமானை ஞானத்தால் புகழ்ந்து போற்றுகின்றேன். சிரசின் மேல் விளங்கும் விந்து நாதங்களே அவனது திருவடிகள் எனத் தெளிந்தேன். அதனால் சிவ யோகத்தை யாவரும் அறியுமாறு பறையறைகின்றேன். நான் அத்திருவடிகளே எமது தலைவன் என்று போற்றி வணங்குகின்றேன்.
2989. நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தி னூடுசென் றப்புறம் வானோர் உலகம் வழிபட மீண்டவன் தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.
பொருள் : பலவிதமான தொண்டுகளைப் புரிந்து சிவகுரு நாதனை நாடுங்கள். உடலிலுள்ள ஆறு ஆதாரங்களின் வழியே நடுநாடியூடே மேல் சென்று, ஆகாய மண்டலவாசிகள் வணங்கி வழிபட ஒளிநிலை பெற்றபின் சிவானந்தத்தை வேண்டுமெனவும் அனுபவித்து இன்புறலாம்.
2990. வந்துநின் றான்அடி யார்கட் கரும்பொருள்
இந்திர னாதி இமையவர் வேண்டினும் சுந்தர மாதர்த துழனிஒன் றல்லது அந்தர வானத்தின் அப்புற மாமே.
பொருள் : சிவஞானியர் உள்ளத்தில் அவர் வேண்டி நிற்கும் அரும்பொருளான சிவன் வந்து நிலைபெறுவான். ஆனால் இந்திரன் முதலிய தேவர்கள் விரும்பி வேண்டியபோதும் அவர்கட்கு அழகிய தேவமாதரது தேவகானம் கிட்டுமே அல்லது தேவலோகத்துக்கு அப்பாற்பட்ட சிவகதி கிடைக்குமோ?
2991. மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி இறைவன் இவன் என்னார் உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத் தெண்ணிற் படுத்தச் சிவன்அவன் ஆமே.
பொருள் : சேற்றில் கலங்கியிருக்கும் நீரின் தன்மை தெரியாதவாறு போல, மக்கள் உலகமயமான எண்ணத்தினால் கலக்கமுற்று இறைவன் இன்ன தன்மையன் என்று உணரார். உன்னுதற்குரிய நீரைக் குளத்தினின்றும் முகந்து ஒரு பாத்திரத்தில் வைத்துத் தெளிவுபடுத்துவதுபோலச் சிந்தையைச் சிவத்தில் வைத்துத் தெளிவுபடுத்தச் சீவன் சிவனாவன்.
2992. மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்கும் சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள் அத்தனை நாடி அமைந்தொழிந் தேனே.
பொருள் : உண்மைத் தவத்தில் விளங்கும் சிவபெருமானை விரும்பும் ஒரு சாதகர்க்கு, உள்ளங்கையில் பொருந்திய நெல்லிக்கனி போல் அவன் விளங்குவான். ஆதலின் தூய்மையானவனும், தூய்மையான நெறியாயும் விளங்கும் தேவ தேவனை விரும்பி அவனிடம் பொருந்தி உலகினைக் கடந்து நின்றேன்.
2993. அமைந்தொழிந் தேன் அள வில்புகழ் ஞானம்
சமைந்தொழிந் தேன் தடு மாற்றம்ஒன் றில்லை புகைந்தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி வகைந்து கொடுக்கின்ற வள்ளலு மாமே.
பொருள் : அளவிட்டுக் கூற முடியாத புகழுடைய ஞானத்தைப் பெற்றுத் தத்துவக் கூட்டங்களைக் கடந்து நின்றேன். சந்தேக புத்தி என்னிடம் இல்லாமையால் சிவரூபம் பெற்று இருளான மலங்களினின்றும் நீங்கி நின்றேன். அப்போது மூலாதாரத்திலுள்ள அக்கினி சிரசின்மேல் எழ ஒளிமயமான புண்ணியமூர்த்தி பொருந்தி, தேகம் வேறு, தேகி வேறு என்று வகைப்படுத்தி உணர்த்திய வள்ளலாகவும் ஆனான்.
2994. வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேத முதல்வனைக் கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோ என்றென்று உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந் தாளுமே.
பொருள் : வள்ளல்களுக்கெல்லாம் மேலானவனும், ஒளி மண்டலத்தலைவனும் ஒளிக்கற்றையாகிய சடையைத் தரித்த நாத தத்துவ முதல்வனும் ஆகிய சிவனை வஞ்சகத் தன்மையுடைய உலகவர் கண்டு விடுவார் என்று அப்பெருமான் சீவரது உள்ளத்தில் மறைந்திருந்து ஆட்கொள்வான்.
2995. ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபடும் நன்மையுள் நின்றவர் கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின் வாளும் மனத்தொடு வைத்தொழிந் தேனே.
பொருள் : திருவடியை அளித்து ஆண்டு கொண்டு அருளிய இறைவனை, தினந்தோறும் வழிபாடு செய்து சன்மார்க்கத்தில் நின்றவரது தீய குணத்தையும் தீய செயலையும் ஒழிக்கும் சிவனிடத்து நானும் ஒளி பொருந்திய நோக்குடன் மனத்தையும் வைத்து இப்பிரபஞ்சப் பற்றைவிட்டு நின்றேன். (வாள்-ஒளிபொருந்திய நோக்கம்.)
2996. விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம் திருந்தில் அவனடி தீர்த்தமு மாகும் வருந்தி அவனடி வாழ்த்த வல்லார்க்கே.
பொருள் : மனம் வருந்திச் சிவத்தின் திருவடியை ஏத்த வல்லார்கட்கு, உலகப்பற்றை விட்டு விரும்பினால் அவனது திருவடியே தீரர்கள் அடையும் சொர்க்கலோகமாகும். திருவடிப்பேறு பொருந்துவதே புண்ணியலோகத்தை அடைவதாகும். திருவடி உணர்வால் திருந்தியவர்க்குச் சிரசின்மேல் விளங்கும் பரவிந்து மண்டலமே மகிமையுடைய தீர்த்தமாகும்.
2997. வானகம் ஊடறுத் தான் இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன் கானக வாழைக் கனிநுகர்ந் துள்ளுறும் பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.
பொருள் : இவ்வுடம்பைச் சூழவுள்ள மன மண்டல இருளைப் போக்கியருளினான். தனக்கென்று ஓர் உடம்பு இல்லாமல் தனித்து விளங்கும் அறிவுமயமான சிவ குருநாதன். சீவரிடம் பொருந்திய அஞ்ஞானமாகிய கனியை நுகர்ந்து ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். சிவானந்தத்தை அருளுகின்ற சோதியைப் பற்றி நின்றேன்.
2998. விதியது மேலை யமரர் உறையும்
பதியது பாய்புனற் கங்கையும் உண்டு துதியது தொல்வினைப் பற்றறு விக்கும் மதியது வவ்விட்ட(து) அந்தமும் ஆமே.
பொருள் : சிதாகாய ஒளியே சீவரது பிரம லிபியின் வண்ணம் ஆவது. அதுவே தேவர் வாழும் தலமாகும். அங்குப்பரவி ஓடும் ஆகாய கங்கையும் உள்ளது. துதிப்பதற்குரியது. அதுவே பழைய வினைக் கூட்டங்களை அழிக்கின்ற இடமாகும். அதுவே அருட்சத்தியைத் தாண்டிய இடமாகும். உலகினைக் கடந்து நிற்கும் முடிவு நிலையும் அதுவேயாகும்.
2999. மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதனம் கானது கூவிள மாலை கமழ்சடை ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே.
பொருள் : சிதாகாய ஒளியில் மேலுள்ள இடம் தேவ வர்க்கத்தினர் இருப்பது; அதன் கீழுள்ள இடம் மாட்சிமையுடைய தவத்தினர் நிலையாகும்; துன்பத்தை அனுபவிக்கும் மனிதர்களின் நிலை அதன் கீழதாகும்; அறிவானந்த சத்தியானது வில்வ மாலையால் அலங்கரிக்கப் பெற்ற சடாதாரியான சிவத்துடன் அங்குப் பொருந்தி அருமையான உயிருக்கு வேண்டிய போக போக்கிய நியதிகளைச் செய்யும்.
3000. சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழின் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி ஆழும் சுனையும் அடவியும் அங்குளன் வாழும் எழுத்தைந்தின் மன்னனு மாமே.
பொருள் : சூழ்ந்துள்ள கருங்கடல் நஞ்சை உண்டு கண்டத்தில் அடக்கியவன். பதினான்கு உலகுக்கும் கருவாய்ப் பிறப்பில்லாதவன் ஆவான். அவன் ஆழ்ந்துள்ள சுனையும் காடும் உடையதாகிய கயிலையில் வீற்றிருப்பவன். அவனே வாழ்வினை நல்கும் அஞ்செழுத்தில் விளங்கும் அரசனாவான். (சுனை-வனப்பாற்றல். காடு-நடப்பாற்றல். ஐந்தெழுத்து-நமசிவய.)
3001. உலகம தொத்துமண் ஒத்து உயர் காற்றை
அலகதிர் அங்கிஒத்து ஆதிப் பிரானும் நிலவு இயல் மாமுகில் நீர்ஓத்தும் ஈண்டல் செலவொத்து அமர்திகைத் தேவர் பிரானே.
பொருள் : உலகத்து உயிராகவும் மண்ணாகவும் உயர்ந்த காற்றாகவும் சூரியன் சந்திரன் அக்கினியாகவும் உள்ள ஆதியாகவுள்ள பெருமான் பெரிய மேகம் விளங்கும் ஆகாயமாயும் நீராயும் ஆகி, பின் அழிப்பனவாகவும் அமர்ந்திருக்கும் திக்குப்பாலர்களுக்குத் தலைவனாயும் உள்ளான்.
3002. பரிசறிந் தங்குளன் அங்கி அருக்கன்
பரிசறித் தங்குளன் மாருதத் தீசன் பரிசறிந் தங்குளன் மாமதி ஞானப் பரிசறிந் தன்னிலம் பாரிக்கு மாறே.
பொருள் : அக்கினி, சூரியன் ஆகியவற்றின் தன்மை அறிந்து ஈசன் அவற்றுள் பொருந்தியிருப்பான். அதேபோன்று பெருமையுள்ள காற்றினும் உள்ளான். சந்திர மண்டலத்தின் தன்மை அறிந்து அதனுள் விளங்குவான். அச்சந்திர மண்டல அறிவு விளங்க அதனைப் பெருகச் செய்வான்.
3003. அந்தம் கடந்தும் அதுவது வாய்நிற்கும்
பெந்த உலகினிற் கீழோர் பெரும் பொருள் தந்த உலகெங்குந் தானே பராபரன் வந்து படைக்கின்ற மாண்பது வாமே.
பொருள் : பூதங்களின் தூலநிலை முடிவு எய்தினாலும் அவை அவை சூக்குமத்தில் ஒளி அணுக்களாகச் சிவயோதியில் நிலைபெறும். பந்தப்படுத்தும் உலகத்தில் அவனை அடைக்கலமாகக் கொண்டவர்க்குத் தாங்கும் பெரும் பொருளாக உள்ளவன். தன்னால் படைக்கப்பட்ட உலகம் அனைத்திற்கும் தானே முழு முதலாவான். பக்குவ ஆன்மாக்களுக்குத் தானே சிவகுருவாய் எழுந்தருளி ஆட்கொள்வான்.
3004. முத்தண்ட ஈரண்ட மேமுடி யாயினும்
அத்தன் உருவம் உலகே ழெனப்படும் அத்தன்பா தாள அளவுள்ள சேவடி மத்தர் அதனை மகிழ்ந்துண ராரே.
பொருள் : வழிப்பேற்றின் நிலைக்களமாகிய முத்தியண்டம் பெருமை மிக்க அண்டமாகும். அதுவே அவன்தன் திருவடியாகும். ஆயினும் அச்சிவபெருமானின் திருவுருவம் ஏழ்உலகம் ஆகும். திருவடி பாதாளம் ஏழினுக்கும் அப்பாற்பட்டது. உன்மத்தமாக உள்ளார் அறிவும் செயலும் திரிபற்று நெறியில்லா நெறிச் சென்று உழலும் நீரர். இத்தகைய தெளிவில்லாதவர் மேலோதியவற்றை விரும்பி உணரார் என்க.
3005. ஆதிப் பிரான்நம் பிரான் இவ்வகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும் ஆதிப் பிரான்அண்டத் தப்பும் கீழவன் ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.
பொருள் : மேலே கண்ட ஆதியாகிய பெருமானே நம்மையெல்லாம் நடத்தும் தலைவனாவான். அவனே அம்முத்தி உலகத்தில் சோதியாக விளங்குவான். அவனே சோம சூரிய அக்கினியாகிய முச்சுடராய் விளங்குபவன். அவனே மேல் உலகங்களுக்கு மேலாகவும் கீழ் உலகங்களுக்குக் கீழாகவும் உள்ளவன். இவ்வுலகங்களுக்கு நடுவாக இருந்து இயக்குபவனும் அவனேயாவான்.
3006. அண்டங் கடந்துயர்ந் தோங்கும் பெருமையன்
பிண்டங் கடந்த பிறவிச் சிறுமையன் கண்டர் கடந்த கனைகழல் காண்டொறும் தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றாரே.
பொருள் : ஏழ் உலகங்களையும் கடந்து மேலும் உயர்ந்துள்ள பெருமையினையுடையவன். உருவம் பொருந்தும் நிலைகளை இயல்பாகவே கடந்து விளங்கும் மகா சூக்குமமானவன். அடியார்கள் விரும்பியடைந்த ஒலிக்கின்ற திருவடியைக் காணும்பொழுது அவர்கள் செல்லும் நெறியிலே நின்று அழைத்துச் செல்பவனாக உள்ளான்.
3007. உலவுசெய் யோக்கப் பெருங்கடல் சூழ்ந்த
நிலமுழு தெல்லாம் நிறைந்தனன் ஈசன் பலம்முழு தெல்லாம் படைத்தனன் முன்னே புலம்உழு பொன்னிற மாகிநின் றானே.
பொருள் : எங்கணும் இடைவிடாது சென்று மீள்வதாகிய உலாவுதலைச் செய்வது சிவபெருமானின் திருவருட்கண்கள். அக்கண்களையுடைய சிவபெருமான் பெருநீர்க் கடலாற் சூழப்பட்ட நிலவுலக முழுவதும் நீக்கமற எங்கணும் நிறைந்து நின்றனன். அவனே முதன்மைசேர் ஆண்டான் வேண்டும் பயனுடைப் பொருள்கள் முழுவதையும் படைத்தருளியவனும் அவனே. மெய்யடியார்களைக் காத்தருளும்படி பொன்மேனியுடன் பொலிந்து இலங்குபவனும் அவனே. (பொன்னிறமாகி-ஞான குருவாகி.)
3008. பராபர னாகிப்பல் லூழிகள் தோறும்
பராபர னாய்இவ் வகலிடம் தாங்கித் தராபர னாய்நின்ற தன்மை யுணரார் நிராபர னாகி நிறைந்துநின் றானே.
பொருள் : பேருலகனைத்தும் ஒருங்கு முடியுங்காலம் ஓர் ஊழி என்ப. அத்தகைய பல்லூழிகளைப் புரிந்து நிற்கும் பராபரன் சிவபெருமான். அவனே முழுமுதல்வனாய் இவ்வுலகங்களைத் தாங்கிக் காத்தருள்பவன் ஆவன். அவனே தாங்கி நிற்பதுடன் தலைவனுமாகி நிற்கின்றனன். இத்தன்மையைப் பலரும் அறியார். திருவருளால் தனக்கொரு பற்றுக் கோடின்றிச் சிவபெருமானையே பற்றி அவனைத் தாங்கும் ஆண்மை மிக்கது ஆனேறு. அவ்ஆனேற்றை ஊர்ந்து வருபவனும் சிவனே. அவன் எங்கணும் நீக்கமற நிறைந்து நின்றருளினன்.
3009. போற்றும் பெருந்தெய்வம் தானே பிறிதில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும் வேற்றுடல் தான்என் றதுபெருந் தெய்வம் காற்றது ஈசன் கலந்துநின் றானே.
பொருள் : தூலத்திலும் சூக்குமத்திலும் சிவமே நிறைந்து விளங்குவதால் வேறே பெரிய தெய்வம் வணங்கத்தக்கது ஒன்று இல்லை. ஆதாரமாகிய உடலும், ஆதாரங்கடந்த நாதமும் நாதாந்தமும் உயிர்க்கு வேறாக விளங்கும் அகண்ட வடிவமும் ஆகிய அவனே பெருந்தெய்வமாகும். அவனே தூலத்தையும் சூக்குமத்தையும் இணைக்கும் பிராணனாயும் கலந்துள்ளான்.
3010. திகைஅனைத் தும்சிவ னே அவன் ஆகின்
மிகைஅனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே புகைஅனைத் தும்புறம் அங்கியிற் கூடும் முகைஅனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.
பொருள் : சூழவுள்ள திசைகள் எல்லாம் சிவனேயானபோது, அவனுக்குப் புறம்பாக ஒரு தெய்வம் உண்டு என்று மனிதர்களே நீங்கள் சொல்ல வேண்டாம். புகை மேலோங்கிப் புறத்தே காணப்படினும் அது நெருப்பினின்றே தோன்றியது. அதுபோல உண்டாவன எல்லாம் எங்கள் ஆதிப்பிரானாகிய சிவத்தின் இடமிருந்தே தோன்றியன.
3011. அகன்றான் அகலிடம் ஏழும்ஒன் றாகி
இவன் தான் எனநின்று எளியனும் அல்லன் சிவன்றான் பலபல சீவனு மாகி நவின்றா உலகுறு நம்பனு மாமே.
பொருள் : சிவன் கீழ்மேல் என்று சொல்லப் பெற்ற எல்லாப் புவனங்களையும் அவைகளின் வேறாகவும் வியாவித்துள்ளான். இச்சிவன் எல்லாமாய் நிற்பினும் உலகோரால் காணப்படுமாறு தோன்றுபவன் அல்லன். சிவனே பலவகைச் சீவ வர்க்கங்களில் பிராண சத்தியாய் இருந்து இயக்குபவனாகி உலக நிலையில் பொருந்தி உலகவரால் நம்புவதற்குப் பாத்திரமாகவும் உள்ளவன்.
3012. கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
தலைவனை நாடுமின் தத்துவ நாதன் விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப உரையில்லை உள்ளுறும் உள்அவன் தானே.
பொருள் : தந்திர கலை, மந்திர கலை, உபதேச கலையாகிய மூன்று கலைகளையும் கடந்து அப்பாலாகவுள்ள சிவனை விரும்பி நில்லுங்கள். அவனே சகல தத்துவங்களுக்கும் தலைவன் ஆவான். அவன் விலைமதிக்க முடியாதவன். அவனைத் தேவர்களில் ஒருவனாக வைத்துக் கூறுவதற்கு இல்லை. அவ்வாறாக உள்ளவன் உங்களிடம், எண்ணியபோது சிறந்து விளங்குவான்.
3013. படிகாற் பிரமன்செய் பாசம் அறுத்து
நெடியோன் குறுமைசெய் நேசம் அறுத்து செடியார் தவ்ததினில் செய்தொழில் நீக்கி அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே.
பொருள் : தலைமுறை தலைமுறையாகப் பிரமன் செய்வதற்குக் காரணமான பழைய வினையை ஒழித்து, திருமால் காத்தலின் தொழிலால் இச்சை பெருகுவதற்குரிய பற்றினை நீக்கி, அட யோகம் முதலிய துன்பம் தரத்தக்க தவமாகிய செயலினின்றும் விலக்கி என்னை உய்யுமாறு செய்து அன்பினில் அகப்படுத்தி அருளினான்.
3014. ஈசன்என் றெட்டுத் திசையும் இயங்கின
ஓசையி னின்றெழு சத்தம் உலப்பிலி தோசம் ஒன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும் வாச மலர்போல் மருவிநின் றானே.
பொருள் : சிவசோதியாகவே எட்டுத் திக்குகளும் விளங்கி ஒளி தருவன ஆயின. நாதமே வைகரிவாக்குக்குக் காரணமாவது போல அழியாது இருப்பவன் சிவன். அவன் ஒருவனே ஒளிமயமாகப் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், அக்கினி, ஆன்மா ஆகிய ஒன்பது கண்டங்களிலும் மலரின் மணம்போலக் கலந்து விளங்குவான்.
3015. இல்லனு மல்லன் உளனல்லன் எம்மிறை
கல்லது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன் தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி சொல்லருஞ் சோதி தொடர்ந்துநின் றானே.
பொருள் : எம் இறைவன் புறக்கண்ணுக்குக் காணப்படாமல் அகக்கண்ணில் விளங்குபவன் ஆதலின் இல்லாதவன் அல்லன். புறக்கண்ணால் காண்பார்க்கு உள்ளவன் அல்லன். கல்போன்ற நெஞ்சத்தைக் கசிவித்து நிற்பவரிடம் விளங்கித் தோன்றுவான். பழமையானவனும் தூய்மையானவனும் நடுக்கமற்றவனும் குற்றமில்லாத மாணிக்கம் போன்ற பிரகாசம் உடையவனும் ஆகவுள்ள சொல்வதற்கு அருமையான சோதியாக இருந்து சீவர்களைத் தொடர்ந்து நின்றருளினன்.
3016. உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்
கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும் வள்ளற் பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம் அள்ளற் கடலை அறுத்துநின் றானே.
பொருள் : இறைவன் உள்ளமாகிய மன மண்டலத்தில் ஒடுங்குபவனாக உள்ளான். சீவர் புறநிலையான உலக மயமானபோது அவரது சீவ போதத்தில் அவன் நிலை பெற்றுள்ளான். அப்போது ஒளிமயமான சடையையுடைய நந்தியெம்பெருமான் இந்திரியங்களை இயக்கும் கள்ளத்தலைவனாக உள்ளான். பல்பேறு வள்ளல் தன்மையை அறிந்து அவனைச் சிந்திக்கும் சீவரது, துன்பம் தருவதாகிய பிறப்பினை அறுத்து நிற்பவனாக உள்ளவன்.
3017. மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர் ஊறுவார் உள்ளத் தகத்தும் புறத்தும் வேறுசெய் தாங்கே விளக்கொளி யாமே.
பொருள் : ஒருவர்க்கொருவர் எதிர்முகங் கொண்ட தேவரும் அசுரரும் நாள்தோறும் தோத்திரம் செய்து சிவபிரானது ஒலிக்கின்ற திருவடியை விரும்பி வணங்குவர். ஆனால் அடியார்கள் அகமும் புறமும் ஒத்து அவனது உபசரிக்கும் தன்மையை நினைந்து கசிவுள்ளம் கொண்டு நிற்பர். அவ் அடியார்க்கு அவன் ஊனினை நீக்கி உணர்வினைப் பெருக்கிச் சோதியாக விளங்குவான்.
3018. விண்ணினுள் வந்த வெளியினன் மேனியன்
கண்ணினுள் வந்த புலனல்லன் காட்சியன் பண்ணினுள் வந்த பயனல்லன் பான்மையன் எண்ணில்ஆ னந்தமும் எங்கள் பிரானே.
பொருள் : பூதாகாய வெளியில் மட்டும் நிலைபெறுபவன் அல்லன். மகா சூரியாகாயம், சிதாகாயம் என்ற ஆகாய வடிவில் உள்ளவன். அவன் புறக்கண்ணுக்குக் காட்சிப்படுபவன் அல்லன். ஆனால் அகக்கண்ணுக்குப் புலப்படுபவன் ஆவான். உள்ளப் பண்பு இன்றித் தோத்திரங்களினால் மட்டும் அறியப்படுபவன் அல்லன். உள்ளப் பண்போடு அவன்பால் அன்பும் உடையார்க்கு வெளிப்பட்டு அருள்வான். சீவர்கள் அடையும் சகல ஆனந்தத்துக்கும் காரணமாக உள்ளவனும் எங்கள் சிவனாவான்.
3019. உத்தமன் எங்கும் முகக்கும் பெருங்கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன் எத்தனைக் காலமும் எண்ணுவர் ஈசனைச் சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.
பொருள் : எங்கள் சிவபிரான் எங்கும் உள்ளோரால் விரும்பப்படும் பேரானந்தக் கடல் போன்றவன். முத்துப் போன்ற ஒளியையுடையவன். அவன் அடர்ந்த நீல ஒளியை உடையவன். ஞானியர் ஒளியில் திளைக்கும் ஈசனை இடைவிடாமல் எண்ணிக் கொண்டிருப்பர். ஆனால் சித்தரும் தேவரும் அறிவு ஆராய்ச்சியினால் தெளிந்து அறிய மாட்டார்கள்.
3020. நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம் மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம் புறம்பல காணினும் போற்றகி லாரே.
பொருள் : எந்த எந்த நிறங்கள் முகத்தின் முன் காணப்படுகின்றனவோ அந்தந்த நிறங்களின் தன்மைக்கேற்ப இறைவன் விளங்குவான். அறவொழுக்கம் எந்த அளவு கடைப்பிடிக்கப் படுகிறதோ அந்த அளவு பாவம் பொருந்தும். இவ்வாறான உண்மை நிலை புறத்தே கண்டிருந்தும் மக்கள் நன்மையைக் கடைப்பிடிக்கவில்லையே.
3021. இங்குநின் றான் அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான் புவ னாபதி புண்ணியன் கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறாய் எங்கும்நின் றான்மழை போல்இறை தானே.
பொருள் : பெருங்கருணை மழை போன்ற இறைவன், இவ்வுலகில் பலதவங்களில் உள்ளான். மேலுலகில் இருக்கின்றான். எவ்விடத்தும் உள்ளான். ஆகையால் எல்லாப் புவனங்களிலும் நிறைந்து நிற்கும் புண்ணிய மூர்த்தி ஆவான். அவன் சீவரது அஞ்ஞான இருளில் உள்ளான். ஞான ஒளியில் சூரியப் பிரகாசம் போன்று அவன் விளங்குவான்.
3022. உணர்வது வாயுமே உத்தம மாயும்
உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப் புணர்வது வாயும் புல்லிய தாயும் உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.
பொருள் : உணர்வாக மிக மேலானதாயும், அறிவது சூக்குமமான எம்பெருமானையாம். அப்பெருமான் அணைபவனாயும் சூக்குமமாயும் உடல் உணர்வாக அண்ட ஆகாயத்தில் சீவ ஒளியிலும் நிலைபெறுபவனாக உள்ளான். (உணர்வு-ஸ்பரிச உணர்வு. ஸ்பரிச யோகத்தையே திருமூலர் விதந்து கூறுகின்றார்.)
3023. தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினுந் தான்நொய்யன் தன்வலி யால்மலை எட்டினும் சார்பவன் தன்வலி யாலே தடங்கட லாமே.
பொருள் : தனது ஆற்றலால் ஏழு உலகங்களையும் தாங்கியுள்ளான். தமது ஆற்றலால் தான் அணுவைக் காட்டிலும் சூக்குமமாக இருக்கும் தன்மையன். அவனது வலிமையை நோக்கில் அஷ்டகுல பர்வதங்களையும் ஒப்புச் சொல்லப்படான். அவனது ஆற்றலால் விசாலமான கடலிலும் வியாபித்துள்ளான்.
3024. ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
தானே சிறுமையுள் உட்கலந் தங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே.
பொருள் : எம் இறைவனாகிய சிவபெருமான் மண்ணவர் விண்ணவர் மற்றோர் யாவரிலும் மேம்பட்ட பெருமையுடையவன் ஆகிலும், அவன் சிறுமையுடைய ஊன் உடலினும் உணர்வாகக் கலந்து அங்கு உள்ளான். அவன் வானுலக வாசிகளாலும் அறியமுடியாத மகா ஒளியையுடையவன். மண் உலகத்தவர் செய்யும் தவத்தின் ஆற்றலுக்கு ஏற்ப அறியப்படுபவனாக உள்ளான்.
3025. பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளை
குண்டாலங் காய்த்துக் குதிரை பழுத்தது உண்டார்கள் உண்டார் உணர்விலா மூடர்கள் பிண்டத்துட் பட்டுப் பிணங்குகின் றார்களே.
பொருள் : பிண்டமாகிய உடம்பில் ஆலம் வித்துப்போன்று எழுகின்ற சிவசத்தி, பெரிய ஆலமரம் போன்ற உடம்பில் மேற்சென்று பக்குவப்பட்டு ஒளியாக விளங்கியது. அதனை விளங்கச் செய்து அனுபவித்தவர் அதனுள் திளைத்திருந்தார்கள். அவ்வுணர்வு பெறாத அறிவிலிகள் உடலைக் கடந்து ஒளியை அறியாமல் உடலே பெரிதென்று எண்ணி மயங்குகின்றனர். என்னே அவரே அறியாமை.
22. சர்வ வியாபி (அஃதாவது எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவன் என்றபடி.)
3026. ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓர் ஒளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால் ஏய பரிய புரியுந் தனைஎய்தும் சாயும் தனது வியாபகந் தானே.
பொருள் : ஞான சாதனையால் சிவானுபவம் பொருந்தும். இதுவல்லாமல் ஆன்மா ஆராய்ச்சயால் பெறுகின்ற அறிவையும் மாயையின் சேர்க்கையினால் பொருந்திய பெரிய உடம்பையும் தன்வசமாக அடையும்படி செய்யும். அப்போது தன் விஷய வாசனைகள் கெடும். பின் ஆன்மாவினது வியாபகம் அமையும்.
3027. நானறிந் தப்பொருள் நாட இடமில்லை
வானறிந் தங்கே வழியுற விம்மிடும் ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தானறிந் தெங்குந் தலைப்பட லாமே.
பொருள் : நான் அறிந்துள்ள அச்சிவம் எங்கும் நீக்கமற நிறைந்திருத்தலால் சென்று அடைய வேண்டியதில்லை. சிரசின் மேலுள்ள ஆகாய மண்டலத்தை அறிந்து வழிபடில் அது சிறந்து விளங்கும். அப்போது உடம்பின் தன்மையை அறிந்து அங்கு விளங்கும் ஒளிமிக்க சுடரையும் தனது யதார்த்தத்தை அறிந்தவர் எங்கும் சென்று மீளும் ஆற்றலையும் பெறுவர்.
3028. கடலிடை வாழ்கின்ற கௌவை யுலகத்து
உடலிடை வாழ்வுகண் டுள்ளொளி நாடின் உடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக் கடலின் மலிதிரைக் காணலு மாமே.
பொருள் : கடலில் அலைபோன்று ஓயாது துன்பம் தரும் உலக வாழ்வில் தேகத்தில் வாழும்போது சீவர்கள் உள்ளத்தில் விளங்கும் ஒளியை நாடி, அங்கு ஒளிக்குள் ஒளியாய் விளங்கும் சிவத்தைக் கடலின் அலைபோன்று வரும் துன்பத்திலும் கண்டு கரை சேர முடியும்.
3029. பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்
தெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும் இருஞ்சுடர் விட்டிட் டிகலிட மெல்லாம் பரிந்துடன் போகின்ற பல்குரையாமே.
பொருள் : சோம சூரிய அக்கினியாகிய முச்சுடர்களுக்கும் ஒளி கொடுப்பவனாகி தேவதேவனும் அவைகளுக்கு உடலாக விளங்குவான். முன்னர்க் கூறிய சோம சூரிய அக்கினியைக் கடந்த பெருஞ்சோதியாக மாறுபாடு உடைய உலகமெல்லாம் அப்பெருமான் பரிவோடு சீவர்களைத் தொடர்ந்து செல்லும் நுண்ணியன் ஆவான்.
3030. உறுதியி னுள்வந்த உன்வினைப் பட்டும்
இறுதியின் வீழ்ந்தார் இரணம தாகும் சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி பெறுதியின் மேலோர் பெருஞ்சுடர் ராமே.
பொருள் : உலக வாழ்வு இன்பம் தருவது என்ற உறுதியினால் பெற்ற வினையில் அழுந்தித் துன்பப்பட்டு, முடிவாகத் தன் அடிசார்ந்தாரை இறைவன் தன் கடனாகக் காப்பவன் ஆவான். சிறு திசையில் ஒன்றாகிய ஈசான திக்கில் உள்ளொளியாக இருக்கும் அற்புதக் கடவுளை அடையப் பெறின் சிரசின்மேல் விளங்கும் பெரிய சோதியாக அவன் விளங்குவான். (சிறுதிசை-கோண திக்கு. திப்பியம்-திவ்வியம்.)
3031. பற்றினுள் ளேபர மாய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி நெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரும் மற்றவ னாய்நின்ற மாதவன் தானே.
பொருள் : பற்றப்படும் பொருள்களுள் மிக மேலானது சிவமேயாகும். அது எங்கும் நிறைந்த சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று ஒளியாக நெற்றி நடுவில் நினைப்பவர்க்குத் தனது இருப்பை உணர்த்தி நிலைகொள்ளும். பின்னர் நினைப்பவர் வண்ணமாய் அத்தவசிரேஷ்டன் விளங்குவான்.
3032. தேவனு மாகுந் திசைதிசை பத்துளும்
ஏவனு மாய்விரி நீருல கேழையும் ஆவனு மாம் அமர்ந் தெங்கும் உலகினும் நாவனு மாகி நவிற்றுகின் றானே.
பொருள் : முன் மந்திரத்தில் கண்டவாறு சிவமாகிய சீவன் ஒளி உருவமுடைய தேவனாவான். அவன் மேம்பாடு உடையவனாகிப் பத்துத் திசைகளிலும் உள்ளோரை ஏவல் செய்யும் ஆற்றல் உடையவன். விரிந்த நீரால் சூழப்பெற்ற ஏழ் உலகங்களிலும் வியாபித்திருக்கும் ஆற்றலை அவன் பெறுவான். மேலும் அவன் உலகு எங்கும் அறிந்து கூறவல்ல நாவன்மை உடையவன் ஆவான்.
3033. நோக்கும் கருடன் நொடிஏ ழுலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்குள நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி போக்கும் வரவும் புரணவல் லானே.
பொருள் : கூர்மையான பார்வையையுடைய கருடனைப்போல ஏழ் உலகத்தையும் கூர்ந்து பார்த்து விரைந்து காக்கின்ற உலகநாதனும் அங்கே அடியார்படும் துன்பத்தைப் போக்குகின்ற மலமில்லாதவனும் பிறப்பில்லாதவனுமாகிய எனது தலைவன் எங்கும் போதலும் வருதலும் யாவற்றோடும் புணர்தலும் வல்லவன்.
3034. செழுஞ்சடை யன்செம்பொ னேஒக்கும் மேனி
ஒழிந்தன ஆயும் ஒருங்குடன் கூடும் கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன் ஒழிந்தில கேழினும் ஒத்துநின் றானே.
பொருள் : சிவஞானியரிடம் விளங்கும் சிவன் ஒளிக்கிரணங்களை உடையவன். அவனது தேகம் செம்பொன்னை ஒத்து மிளிரும். அவன் உலகத்தொடர்பு இல்லாதவனாயினும் எல்லா உலகங்களிலும் தொடர்பு கொண்டு விளங்குவான். அவன் எவ்விடத்தும் விலகி நிற்பவன் அல்லன். பிறப்பு இல்லாத சிவன் ஏழ் உலகங்களினின்று நீங்கினவனாயும் ஏழ் உலகங்களிலும் கலந்தும் இருந்தான்.
3035. உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலனும் அவனே இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.
பொருள் : சிவஞானியரிடம் பொருந்தியுள்ள உணர்வும் உயிரும் சிவனேயாகும். பொருள்களுடன் கூடி அறியும் அறிவும் அதனால் அறியப்படும் விஷயங்களும் சிவனே. அவ்வாறு தொடர்ந்து வரும் அவனை எண்ணத்தில் அகப்படுத்த முடியாது. அவன் கொத்தாயுள்ள பூக்களின் மணம்போல எவ்விடத்தும் பரவி அருள வல்லவன்.
3036. புலமையில் நாற்றம் இல் புண்ணியன் எந்தை
நலமையில் ஞான வழக்கமும் ஆகும் விலமையில் வைத்துள வேதியர் கூறும் பலமையில் எங்கும் பரந்துநின் றானே.
பொருள் : சிவபெருமான் இயற்கையுணர்வும் முற்றுணர்வும் ஒருங்கு உடையவன். அதனால் செயற்கைப் புலமையின் நாற்றமும் இல்லாதவன். அவன் புண்ணிய வடிவினன். அவனே எந்தையாவான். நன்மைப் பாடமைந்த மெய்யுணர்வு வடிவினன். ஆருயிர்களை விட்டு நீங்காப் பெருவழக்கு உள்ளவனும் அவனே. வேதியர் தாம் கற்ற வேதங்களைக் கூறி விற்கின்றனர். அதனால் அச்சிவபெருமான் அவர்கள்பால் பாலின் நெய்போல் மறைந்து பரந்து நிற்கின்றனன்.
3037. விண்ணவ னாய்உல கேழுக்கும் மேல்உளன்
மண்ணவ னாய் வலம் சூழ்கடல் ஏழுக்கும் தண்ணவ னாய் அதன் தண்மையில் நிற்பதோர் கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.
பொருள் : சிவபெருமான் தூய விண்ணின்கண் உறைபவனாய் ஏழ் உலகங்களுக்கும் அப்பால் உள்ளான். மண்ணுலகத்துள் உறைபவனாய் கடல் ஏழுக்கும் இடப்பால் உள்ளான். அவன் அறவாழியந்தணன். ஆதலின் மிக்க தண்ணளியை உடையவன். இதுவே அவனுக்குரிய என்றும் பொன்றா இயற்கைத் தன்மையாகும். அவனே ஆருயிர்கட்குக் கண்போன்ற நனிமிகு பெருமையை உடையவன். அவன் அனைத்துயிருடனும் அனைத்து உலகுடனும் பிரிப்பின்றிக் கலந்து நிற்கும் பேரருட் பெருமையன்.
3038. நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேல்என நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல் நின்றனன் தானே வளங்கனி யாமே.
பொருள் : அவன் திருமால் பிரமன் முதலியவர்களிடம் தானே நிலைபெற்று நின்றனன். அவனே நிலத்தின் இயல்பால் கீழும், ஆகாயத்தின் இயல்பால் மேலுமாக நின்றனன். அவனே உயர்ந்த மேரு மலையாகவும் ஏழு கடலாகவும் உள்ளான். அவனே சாதகர்க்கு வளமுடைய கனியை ஒத்துப் பயன் அளிப்பவனாயும் உள்ளான்.
3039. புவனா பதி மிகு புண்ணியன் எந்தை
அவனேய உலகின் அடற்பெரும் பாகன் அவனே அரும்பல சீவனும் ஆகும் அவனே இறைஎன மாலுற்ற வாறே.
பொருள் : எம்பெருமான் சகல புவனங்களுக்கும் தலைவனாகிய புண்ணிய மூர்த்தியாவன். அவனே எங்குமுள்ள சீவ வர்க்கத்தைச் செலுத்துபவன். அவனே எண்ணரிய சீவ வர்க்கமாகவும் உள்ளான். இத்தகைய சிவனையே தலைவன் என்று சிவஞானியர் விரும்பி நின்றனர்.
3040. உண்ணின் றொளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும் மண்ணின் றியங்கிடும் வாயுவு மாய்நிற்கும் கண்ணின் றிலங்கும் கருத்தன் தானே.
பொருள் : சீவரது உடம்பின்கண்ணே உள்ள கெடாத பிராணனும் அண்ட ஆகாயத்தில் விளங்கும் விரிந்த கிரணங்களையுடைய சந்திரனும் பூமித் தானத்தில் பொருந்தி இயங்கும் அபான வாயுவும் ஆகி நிற்பவன் கண்ணின் பார்வையில் விளங்கும் சிவமேயாகும்.
3041. எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக் கண்ணில் கவரும் கருத்தில் அதுஇது உண்ணின் றுருக்கி ஓர் ஆயமும் ஆமே.
பொருள் : தியானத்துக்குரிய பிரணவத்தைக் குரு காட்டிய வழியே செய்யும் சாதனையும் அச்சாதனையின் நெறியே செல்லும் வகையும் தோற்றுவித்தருளிய பரசிவனை அகக்கண் கொண்டு காணும் தன்மையில் அப்பொருள் சீவனது உடம்பில் பொருந்தி அதன் தன்மையை மாற்றி ஒப்பற்ற ஊதியப் பொருளும் ஆவான். (அது சிவன். இது சீவன். ஆயம்-ஊதியம்.)
3042. இருக்கின்ற எண்டிசை அண்டம் பா தாளம்
உருக்கொடு தன்நடு ஓங்க இவ் வண்ணம் கருக்கொடே எங்கும் கலந்துநின் றானே திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.
பொருள் : யாண்டும் காரியமாய் நிலை பெற்றிருக்கின்ற எண்புலத்தோடும், அவ்வப் புலங்களில் காணப்படும் பல்வேறு அண்டங்களோடும் பாதாளத்தோடும் கலப்பால் உலகமே உருவமாகத் திருவுருக்கொண்டுள்ளான். அவையனைத்தும் நெறி முறையான் இயங்குதற் பொருட்டுத் தன்னிடத்து ஓங்கத் தான் நடுவாய்க் காரணமாய் நின்றுள்ளான். இம்முறையான் செம்மையுற எங்கணும் கலந்துள்ளான். அவனே திருக்கொன்றை மாலையினைப் பின்னல் திருச்சடையின்கண் சூடியருளிய பெருமானாவன்.
3043. பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்
செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன் அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே.
பொருள் : பலவாறான தத்துவங்களாகப் பூமியில் உள்ளார்க்கு விளங்கும் இறைவனது உண்மை இயல்பை அறிபவர் இல்லை. தூரத்தில் உள்ளவனாயும் அண்மையில் உள்ளவனாயும் மாறுபாடு இல்லாதவனாயும் சீவர்களுக்கு இன்பம் செய்பவனாயும் உள்ள அனாதிபதியான எமது சிவன் பல தத்துவங்களாக இருப்பதல்லாமல் எல்லாவற்றையும் கடந்து விளங்கும் தன்மையன் அல்லன்.
3044. அதுஅறி வானவன் ஆதி புராணன்
எதுஅறி யாவகை நின்றவன் ஈசன் பொதுஅது வான புவனங்கள் எட்டும் இதுஅறி வான் நந்தி எங்கள் பிரானே.
பொருள் : சிவன் எல்லாச் சீவர்களின் அறிவுக்கு அறிவானவன். இவனே மிகவும் தொன்மையானவன். அவ்விதம் இருப்பினும் அவன். அவன் நிற்கும் நிலையைச் சீவர்களால் எவ்விதத்தாலும் அறியப்படாதவன். பொதுவாகவுள்ள புவனங்கள் எட்டிலும் எங்கள் தலைவனான நந்தி எம்பெருமான் ஒவ்வொரு சீவனையும் அறிய வல்லவன் ஆவன்.
3045. நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியுமாய் உளன் பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை ஊரும் சகலன் உலப்பிலி தானே.
பொருள் : நீர், நிலம், ஆகாயம், நெருப்பு, வாயு ஆகிய ஐம்பூதங்களையும் அவைகளைத் தாங்கி நிற்கும் ஆதாரமாயும் உடம்பில் பொருந்தும் சோதியுமாகவும் உள்ளான். அவனது பெயர் பராபரன் என்பதாகும். அணு சொரூபமான எமது தலைவன் சகல தத்துவங்களோடு கூடினவனாய் அழிவில்லாதவன் ஆவான்.
3046. மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்ற
மூலன்உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய் முப்ப துபதேசம் மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே.
பொருள் : திருமூலதேவர் அருளிச் செய்த இம்மூவாயிரம் பாடல்களும், அவர் அருளிச் செய்த முந்நூறு மந்திரப் பாடல்களும், அவர் அருளிச் செய்த முப்பது உபதேசப் பாடல்களும், அவர் அருளிச் செய்த மூன்றுவகைப் பாடல்களும் ஒரே பொருளைக் குறிப்பனவாம்.
3047. வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே.
என் சிவ குருநாதனாகிய நந்தியின் திருவடி வாழ்க! மலக்கட்டினை நீக்கருளிய அவனது திருவடி வாழ்க! மலம் அறுத்தலோடு உண்மை ஞானத்தையும் அருளிய அவனது திருவடி வாழ்க! இது குருவுக்கு உரிய வாழ்த்து. குருவே சிவமாதலின் சிவத்துக்கும் ஆம்.
திருமூலர் திருமந்திரம் முற்றிற்று.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக