ராதே கிருஷ்ணா 08 - 11 - 2011
|
விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க
http://temple.dinamalar.com/
பத்தாம் திருமறை | |
திருமந்திரம் | இரண்டாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்
(காமிக ஆகமம்)
1. அகத்தியம் (உடம்பில் விளங்கும் நாதம், இந்த அக்கினி உடம்பைத் தாங்கிக் கொண்டும், உண்பதைச் சீரணித்துக் கொண்டும் உள்ளது என்க. இதன் சொரபம் நாதமாகும்)
337. நடுவுநில் லாதுஇவ் வுலகம் சரிந்து
கெடுகின்றது எம்பெரு மான்என்ன ஈசன் நடுவுள அங்கி அகத்திய நீபோய் முடுகிய வையத்து முன்னிர்என் றானே.
பொருள் : எவ்வுயிர்க்கும் நாயகனான இறைவனே ! இவ்வுலகில் வாழ்கின்ற சீவர்கள் சுழுமுனை மார்க்கத்தில் பொருந்தி நில்லாது உலக முகமாகக் கீழ்நிலைப்பட்டுப் பிராண சக்தியை இழக்கின்றார்கள் என்று ஆசிரியர் வேண்ட, இறைவன், மூல நடுவிலுள்ள சொரூபமான நாதமே நீ சென்று, விரைந்து கெடுகின்ற சீவரது சிரசின் முன்பக்கமாகப் பொருந்திக் காப்பாயாக என்றருளினான்.
338. அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயம்செய் மேல்பால் அவனொடும் அங்கி உதயம்செய் வடபால் தவமுனி எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே
பொருள் : அக்கினி கலையின் சொரூபமாகிய நாதத்தைச் சிரசின் முன்பக்கம் விளங்கச் செய்யும் சாதகனாகிய அகத்தியன், அதனைப் பின்புறம் பிடரிப்பக்கம் விளங்கச் செய்பவனாய், அது பரவிச் சிரசின் இடப்பக்கம் விளங்கும் தவமுனியாகி சிரசு எங்கும் நிறைகின்ற வளப்பம் மிக்க ஒளியானவன்.
2. பதிவலியில் வீரட்டம்எட்டு
(இறைவன் வீரத்தால் அட்ட இடங்கள் எட்டு. அவையாவன; திருவதிகை, திருக்கடவூர், திருக்கொறுக்கை, வழுவூர், திருக்கோவாலூர், திருப்பறியலூர், திருக்கண்டியூர், திருவிற்குடி என்பனவாம் இங்கு நடந்தன வாகவுள்ள புராணக்கதைகளுக்கு ஆசிரியர் தத்துவ விளக்கம் கொடுத்தருளுகிறார்.)
339. கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம் வருத்தம்செய் தூன்என்ற வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.
பொருள் : சீவர்களது கருத்திலே இருக்கின்ற அந்தகன் போன் அறியாமையாகிய அசுரன் உயர்ந்த உலகத்திலுள்ள உயிர்களையெல்லாம் துன்பம் செய்கிறான் என்று தேவர்கள் இறைவனை வேண்ட, அவன் சுடர் விடுகின்ற ஞானமாகிய சூலத்தைக் கொண்டு அறியாமையாகிய அசுரனை அழித்தருளினான் (அந்தகாசுர சங்காரத்தில் தத்துவம் உணர்த்தியவாறு)
340. கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடித்திட்டுத் தான்அங்கி யிட்டு நிலைஉல குக்குஇவன் வேண்டுமென்று எண்ணித் தலையை அரிந்திட்டுச் சந்திசெய் தானே.
பொருள் : சுவாதிட்டானச் சக்கரத்தில் விந்து நாசம் செய்து கொண்டிருந்த பிரமனை விந்து நீக்கம் செய்வதைத் தடுத்து இறைவன் அக்கினி காரியத்தால் சீவர்கள் விந்து செயம் பெறுமாறு செய்து உலகம் நிலைபெறப் பிரமனது சிருட்டியும் வேண்டும் என்று கருதி, அவன சேட்டையை நீக்கி உலக இன்பத்துக்குப் பொருந்துமாறு அருளினான். (நான்முகனின் சிரசைக் கொய்ததன் தத்துவம் உணர்த்தியவாறு)
341. எங்கும் பரந்தும் இருநிலம் தாங்கியும்
தங்கும் படித்துஅவன் தாள்உணர் தேவர்கள் பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.
பொருள் : எங்கும் வியாபித்தும் அகன்ற உலகுக்கு ஆதாரமாய் இருந்தும், எல்லாம் சென்று ஒடுங்குவதற்கு இடமாயுள்ள இறைவனது திருவடியை உணர்ந்த பக்குவப்பட்ட சீவர்கள் போகம் செய்யும் காலத்து பிரமனின் சேட்டை கெட, மணிபூரகத்திலிருந்து கொண்டு கவர்ச்சியைத் தந்து கொண்டு இருக்கும் திருமாலினது கவர்ச்சியைப் போக்கி யருளினான். (பிரச கபாலத்தில் குருதியை ஏற்றதன் தத்துவம் உணர்த்தியவாறு)
342. எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற
அங்க முதல்வன் அருமறை ஓதிபால் பொங்கும் சலந்தரன் போர்செய் நீர்மையன் அங்கு விரற்குறித்து ஆழிசெய் தானே.
பொருள் : என்னுடைய உயிரில் விளங்கும் உடம்புக்கு நாயகனும் நாத தத்துவத்துக்குரிய சதாசிவ மூர்த்தியும் ஆனவனிடத்து நீரை முகமாகவுடைய அபானனாகிய சலந்தராசுரன் கீழ் நோக்குதலாகிய போரினைச் செய்ய அவ்வாறு அது கீழ் நோக்காது யோக சாதனை பால் மேற் சென்று கலந்து சகஸ்ரதளம் வட்டமாக விரியுமாறு சீவர்களுக்குப் பெருமாள் அருள் புரிந்தான். (சலந்தராசுரன் சங்காரத்தின் தத்துவம் உணர்த்தியவாறு)
343. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யார்அறி வாரே.
பொருள் : நீரை அணிந்துள்ள சிவந்த சடையினையுடைய பழமையானவன், மூன்று கோட்டைகளை அழித்தான் என்று அறிவில்லாதவர்கள் கூறுவார்கள். மூன்று கோட்டைகளை அழித்தலாவது ஆணவம் கன்மம் மாயையாகிய மூன்று மலங்களை அழித்தலாம். அவ்வாறு கோட்டையை அழித்ததை யாரே அறியவல்லார் ? (திரிபுர சங்காரத்தின் தத்துவம் உணர்த்தியவாறு)
344. முத்தீக் கெளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரிஅரன் ஆவது அறிகிலர் சத்தி கருதிய தாம்பல தேவரும் அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே.
பொருள் : மூன்று தீயினை எழுப்பி நாதத்தை வெளிப்படுத்தும் அக்கினி காரியத்துள் யானை போன்ற காரிருளைக் கிழித்து வெளிப்படும் ஒளி இறைவனாக ஆகின்றதை யாரும் அறியவில்லை. குறி கணம் கூடி பல தேவர்களும் அத்தீயில் சிவன் வெளிப்பட்ட போதும் மறைந்து ஒழிந்தனர். (கயமுகாசூர சங்காரத்தின் தத்தும் உணர்த்தியவாறு)
345. மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற் காலுற்றுக் காலனைக் காய்ந்து அங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.
பொருள் : மூலாதாரத்திலிருந்து சுழுமுனை நாடி வழியாகக் கிளம்பி மேலெழுகின்ற மூர்த்தியை, பிரமரந்திரமாகிய மேல் துவாரத்தில் ஊர்த்துவ திருஷ்டியால் பார்த்துச் சுழுமுனையில் பொருந்தி எமனை வெகுண்டு, அக்கினி காரியம் செய்தால் உடம்பாகிய உலகைக் கடந்து சகஸ்ரதளமாகிய ஊரில் அழியாதிருக்கலாம். (திருக்கடவூர் எம சங்காரத் தத்துவம் உணர்த்தியவாறு)
346. இருந்த மனத்தை இசைய இருத்தி
பொருந்தி இலிங்க வழியது போக்கி திருந்திய காமன் செயலழித்து அங்கண் அருந்தவ போகம் கொறுக்கை அமர்ந்ததே.
பொருள் : நலமாயிருந்த மனத்தைச் சிவனோடு சேர்த்து வைத்து குறிவழி செல்லாது தடுத்து, தீமை செய்யாதவாறு விந்து நீக்க மாகிய காமனது செயலைக் கெடுத்து அவ்விடத்து வாழ்க்கைத் துணையுடன் பொருந்தியிருந்தே கொறுக்கை இருந்த தாகும். திருக்கொறுக்கை என்ற தலத்தில் மன்மதனைத் தகனம் செய்த தத்துவம் உணர்த்தியவாறு.
3. இலிங்க புராணம் (இலிங்க மாவது, தோற்ற ஒடுக்கங்களுக்குக் காரணமாகிய அருட் குறி புராணமாவது அதன் பழமை)
347. அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித் திடமார் தவஞ்செய்து தேவர் அறியப் படியார அர்ச்சித்துப் பத்திசெய் தானே.
பொருள் : சிவபெருமானது திருவடியைச் சென்று அடைவேன் என்று சக்தியானவள் அவனையே நோக்கி, சரீரத்தின் உச்சியாகிய சிரசில் விளங்கும் சிற்சக்தியாகி, சிவனை அடைய உறுதியான தவத்தைப் புரிந்து, ஒளி மண்டல வாசிகள் காண முறையாக அருச்சனைப் புரிந்து வழி பட்டாள்.
348. திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை
அரியனென்று எண்ணி அயர்புற வேண்டா பரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன் பரிவொடு நின்று பரிசறி வானே.
பொருள் : திரிந்து கொண்டிருக்கின்ற மும்மலக் கோட்டையை அழித்த பெருமானை அடைவதற்கு அருமையானவன் என்று நினைந்து சேர்ந்து போக வேண்டா. அவ் இறைவன் அன்புடையார்க்குப் பொய்யானவன் அல்லன். அவன் சீவர்களிடம் கருணையோடு பொருந்தித் தகுதி நோக்கி அருள் புரிவான்.
349. ஆழி வலங்கொண்டு அயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுடர் ஆதியும் ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே.
பொருள் : சுவாதிட்டான மணிபூரகச் சக்கரங்களிலே இடங்கொண்ட பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும் முறையாக மூலாதாரத்தைச் சுற்றிவர அங்கு ஒளிமயமாக விளங்கும் உருத்திர மூர்த்தியும் அம்முறையே திருமாலுக்குச் சகஸ்ரதளச் சக்கரத்தில் விளங்க அருள் செய்தான். சுவாதிட்டானத்திலிருந்து உற்பத்தியைப் பெருக்காது மேலே சென்ற பிரமனுக்கும் ஒளியினை நல்கினான்.
350. தாங்கி இருபது தோளும் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி ஆங்கு நெரித்துஅம ராஎன்று அழைத்தபின் நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.
பொருள் : இந்திரியங்களும் புலன்களுமாகிய இருபது தோள்களும் தாங்கி விசாலமான மலையைத் தன் முயற்சியால் எடுத்த புருஷனாகிய இராவணனது ஒப்பில்லாத ஆற்றலை, அவ்விடத்து அழித்துத் தன் சிறுமை உணர்ந்து தேவா காப்பாற்று என்று அவன் வேண்டியபின் நீங்காத பத்தியை நிலைபெறுமாறு செய்தான் அனாதி மலரகிதனான சிவபெருமான்.
351. உறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தின் தாதை செறுவகை செய்து சிதைப்ப முனிந்து மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.
பொருள் : தனக்கு உறுவதைக் காரண காரியத்தோடு அறியவல்ல சீவனாகிய சண்டீசன், வெண்மையான ஒளியாகிய மணலைச் சேர்த்து, பிறவி அறும் வகையில் ஞானேந்திரியமாகிய ஐந்தும் பசுக்களையும் புறப்புலன்களில் மேயாது தடுக்க, மாயையால் உண்டான உடம்பாகிய தந்தை பொறாது பகை கொண்டு கெடுக்க, வெகுண்டு அக்கினி கலையாகிய வாளால் இடைபிங்கலையாகிய இருகால்களையும் தொழிற்படாமல் செய்து சிவத் தொண்டன் ஆனான்.
352. ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று நாடி இறைவா நமஎன்று கும்பிட ஈடில் புகழோன் எழுகஎன் றானே.
பொருள் : மனம் ஒருமைப்பட்ட தேவர்கள் எல்லோரும் சிவபெருமானிடம் ஓடி வந்து, முகவாட்டத்துடன் வருத்தத்தோடு சரணடைந்து நாடி, இறைவனே போற்றி என்று வணங்க, ஒப்புயர்வற்ற புகழையுடைய சிவபெருமான் எழுந்து மேலே வந்து சேருங்கள் என்று அருளினான். (ஆலகால விஷம் தேவர்களைத் துரத்தியதாக உள்ள புராணத் தத்துவம் உணர்த்தியவாறு)
4. தக்கன்வேள்வி
(தக்கன் வேள்வியாவது, ஆண் பெண் கூட்டுறவாகும். சிவ பெருமானை நினைந்து செய்யாமையால் விந்து செயமாகிய பயனைப் பெறாமல் கூட்டுறவாகிய வேள்வி சிதைந்தது)
353. தந்தை பிரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறைகெட்டுச் சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.
பொருள் : ஆண்பெண் கூட்டுறவாகிய தக்க யாகத்தைச் சிவபிரான், தன்னை நினையாமல் செய்தமையால் கோபங் கொண்டான். காமாக்கினியால் தகிக்கப்பட்டு விந்து நீக்கம் உண்டாக, தேவர்கள் எண்ணியவாறு விந்து செயமாகிய பூசையின் பயனைப் பெறவில்லை பெருமான் வெகுண்டவுடனே தேவ காரியச் சிதைவு உண்டாகி அவர்கள் வெறியேறினர்.
354. சந்தி செயக்கண்டு எழுகின் றரிதானும்
எந்தை இவனல்ல யாமே உலகினில் பந்தம்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய் அந்தமி லானும் அருள்புரிந்த தானே.
பொருள் : ஆண் பெண் சேர்க்கையைச் செய்வதற்குத் தருக்கி எழுகின்ற திருமாலும், உலகினில் படைக்கின்றவன் சிவனல்ல நாமே தான் என்றான். அதனால் கட்டினை விளைவிக்கின்ற பாசக் கடலில் ஆழ்ந்து வருந்திய பின் சிவனை நோக்கித் தவம்புரிய முடிவில்லாத பெருமானும் விஷ்ணு தத்துவம் மேலே விளங்கும்படி அருள் செய்தான். (எழுகின்றஅரி என்பது எழுகின்றரி எனத் திரிந்தது)
355. அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்
அப்பரி சேஅங்கி அதிசய மாகிலும் அப்பரி சேஅது நீர்மையை உள்கலந்து அப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.
பொருள் : முன்னே முறையே பிரமனும் காம காரியமாகிய தக்கயாகத்துக்குத் தானே தலைவனெனத் தருக்கினான். அதனால் காமாக்கினி மூண்டெழுந்த போதிலும், அவ்வகையே அதன் தன்மையில் பொருந்தி, சிவபெருமான் முறையாக ஆரவாரத்தோடு விளங்குகின்றான்.
356. அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேஅவ ராகிய காரணம் அப்பரி சுஅங்கி உளநாளும் உள்ளிட்டு அப்பரி சாகி அலர்ந்திருந் தானே
பொருள் : அவ்வண்ணம் பிரமன், திருமால் முதலிய தேவர்கள், அத்தன்மையைப் பெற்றதற்குக் காரணம் சிவபெருமானே யாம். அவ்வாறு அக்கினி கலையுள்ளே விளங்கும் வரை அவ் அக்கினி கலையில் சிவபெருமான் நீக்கமற நிறைந்து விளங்கியிருந்தான்.
357. அலர்ந்திருந் தான்என்று அமரர் துதிப்பக்
குலந்தரும் கீழ்அங்கி கோளுற நோக்கிச் சிவந்த பரம்இது சென்று கதுவ உவந்த பெருவழி ஓடிவந் தானே.
பொருள் : அமரர்கள் எல்லாம் ஆகாய பூத நாயகனான சிவபெருமானே எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்று உணர்ந்து வேண்ட, ஆறு ஆதாரங்களில் கீழான மூலாதாரத்திலுள்ள அக்கினி கலை சுழுமுனை வழியாக மேலெழ, சிவந்த மேலான ஒளியானது சகஸ்ர தளத்தைச் சென்று பற்ற, இதுவே வழிபடும் மகிழ்ச்சிக்குரிய பெருவழி என்று சிவன் விரைந்து வந்தருளினான்.
358. அரிபிர மன்தக்கன் அருக்கன் உடனே
வருமதி வாலை வன்னிநல் இந்திரன் சிரமுக நாசி சிறந்தகை தோள்தான் அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.
பொருள் : திருமால் பிரமன் தக்கன் சூரியனுடன் வருகின்ற சந்திரன் நாமகள் அக்கினி நல்ல இந்திரன் ஆகியோர் சிரம், முகன், மூக்கு, கை, தோள், ஆகியவற்றைச் சிவனருள் பொருந்தாமையால் இழந்து பின் நல்லோராயினர்.
359. செவிமந் திரஞ்சொல்லும் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச் செவிமந் திரம்செய்து தாமுற நோக்கும் குவிமந் திரம்கொல் கொடியது வாமே.
பொருள் : செபிக்கத்தக்க மந்திரங்களைச் சொல்லிச் சிவனருள் பெற்ற தேவர்கள், வாயிட்டுக் கூற முடியாத பிரணவத்தால் மூலா தாரத்திலுள்ள அக்கினியைத் தூண்டி நாதம் உண்டாகச் செய்து, தாம் பொருந்த நோக்கும் மனத்தை ஒருமைப் படுத்தும் மகா மந்திரம் கொடுமையானது ஆகுமா ? ஆகாது.
360. நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென வில்லார் புரத்தை விளங்குஎரி கோத்தவன் பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
பொருள் : நல்லாரது உடம்பிலுள்ள ஒன்பது துவாரங்களாகிய குண்டங்களும் சிறந்து இன்புறு, பல தேவர்கள் அடியேங்கட்கு இரங்கி அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளக் கொடிய அசுரர் அழியும் வண்ணம் பிரணவமாகிய வில்லினால் ஆணவாதி மும்மலங்களை எரித்து அருளினான்.
361. தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளிந்தாங்கு அடைவதுஎம் ஆதிப் பிரானை விளிந்தான் அதுதக்கன் வேள்வியை வீயச் சுளிந்தாங்கு அருள் செய்த தூமொழி யானே
பொருள் : சினந்து பின்னர் அருள்புரிந்த நாத சொரூபியான சிவபெருமானே, தன்னை நினையாது இயற்றிய காம வேள்வியை அழியுமாறு செய்தான். ஆனால் இன்ப வடிவமாகிய அப்பெருமானை அன்பு செலுத்தி அடைய வேண்டும். அதனால் நூல் வல்லார் கூறும் மயக்க நெறி பற்றிக் கலங்காதே.
5. பிரளயம்
(பிரளயம் என்பதற்கு அழிவு என்று பொருள். அழிவினைச் செய்து அருளுபவன் சிவன் என்பத இங்குக் கூறப்பெறும்.)
362. கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்து
இருவரும் கோஎன்று இகல இறைவன் ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி அருவரை யாய்நின்று அருள்புரிந் தானே.
பொருள் : கருவிடும் எல்லையே மூடிக்கொண்டு எழுகின்ற மணிபூரகத்திலுள்ள நீர் மண்டலத்தில், பிரம விஷ்ணுக்களாகிய இருவரும் தம்முள் மாறுபட மணிபூரகத்தானத்திலுள்ள அறிவு மயமான சூரியன் மேலெழுந்து சிவசூரியனாகி அருமையான உச்சியின் மேல்நின்று இருவருக்கும் அருள்புரிந்தான்.
363. அலைகடல் ஊடுஅறுத்து அண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்தலை மேற்கொண்டு உலகார் அழற்கண்டு உள்வீழாது ஓடி அலைவாயில் வீழாமல் அஞ்சல்என் றானே.
பொருள் : சிவன் கடல் பிரதேசமாகிய மணிபூரகத் தானத்தினின்றும் பிளந்தும் கொண்டு, அண்டத்தின் எல்லையை அடைந்து சகல தத்துவ நாயகர்களுக்கும் தானே தலைவன் என்ற பெயரை வகிக்கும் திறனுடையவனாகி, உலகில் உள்ளோர். காமாக்கினியில் வீழாது தான் சென்று துன்பமாகிய அலைமோதும் பிரபஞ்சத்தில் அழுந்தாமல் அஞ்சேல் என்று அருள் செய்தான்.
364. தண்கடல் விட்ட தமரரும் தேவரும்
எண்கடல் சூழ்எம் பிரான்என்று இறைஞ்சுவர் விண்கடல் செய்தவர் மேலெழுந்து அப்புறம் கண்கடல் செய்யும் கருத்தறி யாரே.
பொருள் : குளிர்ச்சி பொருந்திய மணிபூரகமாகிய கடலினைக் கடந்த அறிவு மயமான சூரியனை அமரத்துவம் பெற்றோரும் ஒளிமண்டல வாசிகளும் சிரசின்மேல் எட்டுத் திக்கும் கடல் போன்று பரந்து விளங்கும் ஒளிமயமான சிவன் என்று வணங்கி ஏத்துவர். ஆகாயத்தைக் கடல் போன்று செய்த அப்பெருமான் சிரசின் மேலும் சென்று, அகக் கண்ணுக்குப் பரவெளியாகக் காட்சி தருவதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
365. சமைக்கவல் லானைச் சயம்புஎன்று ஏத்தி
அமைக்கவல் லார்இவ் உலகத்து ளாரே திகைத்ததெண் ணீரில் கடல்ஒலி ஓசை மிகைக்கொள் அங்கி மிகாமைவைத் தானே.
பொருள் : எல்லாத் தத்துவங்களையும் படைப்பவனைத் தனக்கு ஒரு படைப்பவன் இல்லாதவன் என்று துதித்துத் தங்களிடம் வியாபகப்படும் முறையில் அமைத்துக் கொள்பவர் இவ்வுலகத்து உள்ளவரே ஆவர். பொங்கிய நீரில் கடலொளி போன்ற நாதம் மேம்பட்டுப் பரவக் காமாக்கினியை மிகாதவாறு அச்சுயம்பு மூர்த்தி வைத்தான்.
366. பண்பழி செய்வழி பாடுசென்று அப்புறம்
கண்பழி யாத கமலத்து இருக்கின்ற நண்பழி யாளனை நாடிச்சென்று அச்சிரம் விண்பழி யாத விருத்திகொண் டானே.
பொருள் : பண்பினைக் கெடுக்கின்ற காமச் செயலாகிய வழிபாட்டினைச் செய்துகொண்டு, சுவாதிட்டானச் சக்கரத் தில்இருக்கின்ற நட்பைக் கொடுக்கின்ற பிரமனைத் தேடியடைந்து அவனது சிரமானது ஆகாயத்தை பழிக்காதவாறு பிரசா விருத்தியாகிய சேட்டையினை ஏற்றருளினான்.
6. சக்கரப் பேறு
(சக்கரப் பேறாவது ஆணையால் பெற்ற செல்வம் ஆகும். சிவபெருமானிடம் திருமால் சக்கரம் பெற்ற வரலாற்றின் தத்துவம் இங்குக் கூறப் பெறும்.)
367. மால்போ தகன்என்னும் வண்மைக்குஇங்கு ஆங்காரம்
கால்போதம் கையினோடு அந்தரச் சக்கரம் மேல்போக வெள்ளி மலைஅம ராபதி பார்போகம் ஏழும் படைத்துஉடை யானே.
பொருள் : மயக்கத்தைத் தருபவன் என்னும் உணர்வாகிய விஷ்ணு தத்துவத்துக்கு, இவ்விடத்து உலகானுபவம் அறுபட அழகிய சுழுமுனை வழியாக மணிபூரகத்திலுள்ள உணர்வு சகஸ்ர தளமாகிய வட்டத்தை அடைய வெள்ளொளியில் விளங்கும் தேவாதி தேவனாக பூமி முதலாக ஏழ்உலக இன்பங்களையும் படைத்து அவற்றை அளிப்பவனாக விளங்குகின்றான்.
368. சக்கரம் பெற்றுநல் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைத் தரிக்கஒண் ணாமையால் மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத் தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே.
பொருள் : முற்கூறிய சக்கரத்தைப் பெற்றுக் குடர் விளக்கம் செய்த திருமாலாகிய தாமோதரனும் பெற்று சக்கரத்தைத் தாங்க முடியாமல், மேலான சிவபெருமானை விருப்பத்துடன் வழிபாடும் செய்ய, தனது வியாபக சத்தியை ஒரு கூறு செய்தளித்துத் தாங்கும்படி செய்தான்.
369. கூறது வாகக் குறித்துநற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக் கூறது செய்து கொடுத்தனன் சக்திக்குக் கூறது செய்து தரித்தனன் கோலமே.
பொருள் : பகிர்ந்து கொடுப்பதற்காக அமைத்து நல்ல சக்கரத்தைத் திருமாலுக்கு ஒரு பகுதியைக் கொடுத்தான். அவ்வாறே தனது சக்திக்கும் பகிர்ந்து கொடுத்தான். இவ்வாறு பகிர்ந்து திருமாலுக்கும் சக்திக்கும் தனது திருமேனியைத் தந்தருளினான்.
370. தக்கன்தன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்தன் வேள்வியில் தாமோதரன் தானும் சக்கரம் தன்னைச் சசிமுடி மேல்விட அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே
பொருள் : பிரசாவிருத்திக் கிரியையாகிய தக்கனது யாகத்தை அழித்தருளிய வீரப்பத்திரன் மேல் அவ்வேள்வியில் திருமாலும் ஆணையாகிய சக்கரத்தை அவ்வீரனது பிறைமுடியில் செலுத்த காம வாயுவின் வேகத்தால் அக்கினி சத்தியாகப் பயன் கிட்டாது போயிற்று (வீரபத்திரர் தக்கண் வேள்வியைத் தகர்த்தருளினார் என்பதன் தத்துவம் உணர்த்தியவாறு).
7. எலும்பும் கபாலமும்
(எலும்பும் கபாலமும் என்பன எலும்பும் மண்டை ஓடும் ஆம். ஆனால், அவை உருவத்தையும் அறிவையும் அறிப்பன. பிரம விஷ்ணுக்கள் எலும்புகளைச் சிவன் அணிந்துள்ளான் என்பதன் தத்துவம் உணர்த்தப் பெறுகிறது.)
371. எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவர் ஆதி எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில் எலும்பும் கபாலமும் இற்றுமண் ஆமே.
பொருள் : பேரூழிக் காலத்தில் எலும்பையும் மண்டையோட்டையும் ஏந்திக் கொண்டு எழுந்த சிவன், மணிமுடி தரித்த திருமால் முதலிய தேவரது உருவமாகிய எலும்பையும் அறிவாகிய மண்டை யோட்டையும் சூக்குமத்தில் தாங்கவில்லை யெனில் பிறவிக்கு வரும்போது மக்களது பழைய உருவமும் அறிவும் தொடர்பின்றிப் போகும்.
8. அடிமுடி தேடல்
(அடிமுடி தேடலாவது சிவனது அடியையும் முடியையும் தேடல். சிவன் சோதிப் பிழம்பாதலின் அடியையும் முடியையும் ஆணவத்தோடும் ஆசையோடும் சென்று வழிபட்ட பிரம விஷ்ணுக்களால் காண முடியாதது என்பது இப்பகுதியில் விளக்கியவாறு)
372. பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க அரனடி தேடி அரற்றுகின் றாரே.
பொருள் : பிரமனும் திருமாலும் சிவ வியாபகத் துட்பட்டிருந்தும் தங்களது அறியாமையால் அவ்விருவரும் தாங்களே தலைவர் என்று அகங்கரிக்க, மேலான சிவன் சோதிப் பிழம்பாய் முன்னே தோன்றவும் அப் பேரொளியாகிய சிவனது அடியையும் முடியையும் உணராது தேடுவராயினர்.
373 ஆமேழ் உலகுற நின்றஎம் அண்ணலும்
தாமேழ் உலகில் தழல்பிழம் பாய்நிற்கும் வானேழ் உலகுறும் மாமணி கண்டனை நானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே.
பொருள் : ஆகின்ற ஏழ்உலகங்களும் பொருந்துமாறு விளங்கிய எம் தலைவனும், தாமே ஏழு உலகிலும் நிறைந்து அக்கினி வடிவில் வியாபித்துள்ளான். ஆகாய பூதத்தில் ஏழு உலகிலும் விளங்கும் நீலகண்டனை அவனது அருளால் ஒன்றுபட்டுப் பிரம விஷ்ணுக்களால் காணமாட்டாதவனை நான் அறிந்தேன்.
374. ஊனாய் உயிராய் உணர்வுஅங்கி யாய்முன்னம்
சேணாய்வா னோங்கித் திருவுருவாய் அண்டத் தாணுவும் ஞாயிறும் தண்மதி யும்கடந்து ஆள்முழுது அண்டமும் ஆகிநின் றானே.
பொருள் : சிவபெருமானாய் உடம்பாய் உயிராய் அதனுள் நின்ற உணர்வாய் அக்கினியாய், பிரம விஷ்ணுக்களாலும் அறியாத காலத்துத் தூரப் பொருளால் ஆகாய மளவும் ஓங்கி விளங்கும் சோதி உருவாய், அண்டங்களுக்கு ஆதாரமான ஸ்தம்பத்தையும் அவற்றைச் சுற்றி வரும் சூரிய சந்திரனையும் கடந்து ஆளுகின்ற அண்டங்கள் முழுமையுமாக விளங்கி நின்றான்.
375. நின்றான் நிலமுழுது அண்டத்துள் நீளியன்
அன்றே அவன்வடிவு அஞ்சினர் ஆய்ந்தது சென்றார் இருவர் திருமுடி மேற்செல நன்றாம் கழலடி நாடஒண் ணாதே.
பொருள் : நிறைந்து நின்ற சிவன் சர்வ அண்டங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு தான் உயர்ந்து நின்றனன். சிவன் பேரொளியாக நீண்டு நின்ற காலத்து அவனது திருமேனியைக் கண்டு அஞ்சினவராய், அச் சோதியை ஆராயச் சென்ற பிரம விஷ்ணுக்களாகிய இருவரும் சிவனது திருமுடியானது ஆராயுந்தோறும் வளர்ந்து கொண்டே மேற்செல்ல, நன்மை தருவதாகிய அச்சிவனது அருளைப் பெறாதவராயினர்.
376. சேவடி ஏத்தும் செறிவுடை வானவர்
மூவடி தாஎன் றானும் முனிவரும் பாவடி யாலே பதஞ்செப் பிரமனும் தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே.
பொருள் : செம்மையான திருவடியைப் புகழ்கின்ற கூட்டமான தேவரும் மூன்று அடி தா என்று மகாபலியிடம் கேட்ட திருமாலும் முனிவரும் கீத வடிவான மந்திரங்களைக் கொண்டு விரும்பியதைச் செய்யலாமென்ற பிரமனும் சுற்றி அலைந்து அவனைச் சேரமுடியுமா ? முடியாது.
377. தானக் கமலத் திருந்த சதுமுகன்
தானக் கருங்கடல் வாழித் தலைவனும் ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற தானப் பெரும்பொருள் தன்மைய தாமே.
பொருள் : சுவாதிட்டானச் சக்கரத்திலுள்ள நான்முகனும், மணிபூரகத் தானமாகிய கருமையான கடலில் வாழ்கின்ற திருமாலும் ஊன் பொதிந்த உடம்பினுள்ளே உயிர்போல் உடனாய் உணர்கின்ற முன்மூளை பின் மூளையாகிய தானங்களில் அதிட்டித்துள்ள சதாசிவமூர்த்தியாகுமா ? ஆகாது.
378. ஆலிங் கனஞ்செய்து எழுந்த பழஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்கண்டு ஆலிங் கனஞ்செய்து உலகம் வலம்வரும் கோலிங் கம்அஞ்சுஅருள் கூடலு மாமே.
பொருள் : எல்லாவற்றிலும் கலந்தெழுகின்ற மேலான சுடர்ப் பொருள் ஆன்மாக்களின் உய்திக்காக இங்கே அமைக்கப் பெற்ற உண்மை நெறியை அறிந்து, எல்லாத் தத்துவங்களிலும் கலந்தும் கடந்தும் நிற்கின்ற மேலான பஞ்ச சாதாக்கியத்தின் அருளைப் பெறலாம்.
379. வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத்து எம்போல் அரனை அறிகிலர் ஆள்கொடுத்து இன்பம் கொடுத்துக் கோளாகத் தாள்கொடுத் தானடி சாரகி லாரே.
பொருள் : தமக்கு ஒளியைக் கொடுத்த சிவபெருமானை வணங்கிய தேவர்கள் அடிமையாகக் கொடுத்து எம்மைப் போல் இறைவனை அறியவில்லை. தன்னையே எமக்கு ஆளாகக் கொடுத்தும் சிவ போகத்தை அருளியும் நாங்கள் உய்தி பெறும் வண்ணம் வலிமையான திருவடியைத் தந்தருளிய இறைவனைப் பொருந்தாதவராயினர்.
380. ஊழி வலஞ்செய்துஅங்கு ஓரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும் வீழித் தலைநீர் விதித்தது தாஎன ஊழிக் கதிரோன் ஒளியைவெண் றானே.
பொருள் : ஊழியைச் செய்கின்ற உருத்திர மூர்த்தியை ஆராய்ந்து அறிகின்ற சிவனுக்கு, பிரம பட்டத்தோடு வாழ்கின்ற இப்பிரமன் வெளிப்பட்டு நின்று, விரும்பப்படுகின்ற என்னுடைய சிரசில் தாங்கள் விதிக்கும் கட்டளையைத் தாரும் என்று பிரமன் வேண்ட, ஊழியைச் செய்கின்ற சிவன் பேரொளிப் பிழம்பாய் விளங்கி நின்று சிருட்டித் தொழிலை அருளினான்.
9. சர்வ சிருஷ்டி
(சர்வ சிருஷ்டி என்பது, எல்லாவற்றையும் படைத்தல் என்றபடி. சர்வ சங்கார காலத்தில் எல்லாவற்றையும் ஒடுக்கிய சிவனே மீண்டும் அம்முறையே படைப்பான் என்பது இங்குக் கூறப் பெறும்.)
381. ஆதியோடு அந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை சோதி யதனிற் பரந்தொன்றத் தோன்றுமாம் தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.
பொருள் : முதலும் முடிவும் இல்லாத மேலான பரம்பொருள், அறிவு மயமாகப் பிரிப்பின்றியுள்ள பராபரையான சோதியினிடம் பரன் தோன்றத் தீமையில்லாத பரை தோன்றும், அப் பரையினிடமாக விளங்குகின்ற நாதம் தோன்றும்.
382. நாதத்தில் விந்துவும் நாதவித் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால் வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே.
பொருள் : முற்கூறிய நாதத்திலிருந்து விந்துவும் சுத்த மாயையில் தோன்றிய நாத விந்துக்களில் சிவன் என்றும் சத்தி என்று பிரிந்து ஞானம் என்றும் செயல் என்றும் பிரிந்து முறையே உண்டாதலால் உலகைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற சங்கற்பமாகிய இச்சை காரணமாக அனைத்தும் சுத்த மாயையினின்றும் தோன்றுவனவாம்.
383. இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள இருந்திடும் வல்லது ஆக வழிசெய்த அப்பொருள் சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.
பொருள் : தத்துவங்கள் தோன்றுவதற்கு இடமாகிய சத்தி பராசத்தியினிடமாகத் தோன்றி, நவரத்தினம் போன்ற பிரகாசத்துடன் ஆன்மாவில் கலந்து வியாபகமாய் இருக்கும். ஆற்றலோடு தொழில் செய்கின்ற அச்சத்தியில் பெருமையைக் கூறப் புகில் அளவிடற் பாலதாகும்.
384. தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப் பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும் சார்வத்து சத்திஓர் சாத்து மானாமே.
பொருள் : எண்ணத்துக்கு அப்பாற்பட்ட சிவசோதி எண்ணத்துக்கு உட்பட்டு வரும் சத்தியாய் இச்சை காரணமாக உண்டாகிய நாதத்தைப் பொருந்திய விந்துவாய், ஐந்தொழில் பாரத்தினை ஏற்று நடத்தும் சதாசிவ மூர்த்தி நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ஆகிய ஐந்துக்கும் சார்வாகிய சத்தியாகவும் ஒப்பற்ற சத்தியை உடையவனாகவும் உள்ளான்.
385. மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீரும் கலந்து கடினமாய்த் தேனின்கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்ப் பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.
பொருள் : அசுத்த மாயையினின்றும் ஆகாயமாகிக் காற்றுத் தோன்றி வளர்ந்திடும் நெருப்பினின்றும் நீரும் பொருந்திக் கடினத் தன்மையுடைய நிலமாய் பஞ்சீகரண நியாயத்தில் ஒன்றில் ஐந்து தன்மைகளுக்கும் கலந்து ஐம்பெரும் பூதங்களாய் பூ என்று வியாகிருதியில் பிரபஞ்சம் உண்டாகும். (கான் நெருப்பு.)
386. புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர் புவனம் படைப்பானும் பூமிசை யானாய் புவனம் படைப்பான்அப் புண்ணியன் தானே.
பொருள் : பிரபஞ்சத்தைப் படைத்தருளுவது சிவசத்தியாகும். அவர்கட்குப் பிரமன் விஷ்ணு உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் ஆகிய ஐவர்கள் புத்திரர்கள் ஆவார்கள். அவ்வாறு படைக்கும் சிவசத்தி சொரூபமான பொருளே நான்முகனாய் பிரபஞ்சத்தைப் படைத்து இதம் செய்யும் புண்ணிய மூர்த்தியாகும்.
387. புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்ந்திடும் சத்தியும் கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய் மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே
பொருள் : சிவன் அறிவு மயமாய் எல்லாப் புவனங்களிலும் பொருந்தி குளிர்ச்சி பொருந்திய மாயா காரியப் பொருளைக் காத்தருளுவர். சத்தியும் கண்ணோட்டமுடன் (இரக்கம்) எல்லாவற்றும் கலந்து, தாங்கும் தன்மையதாய் வியாகிருதியில் விரிந்து எழுவான்.
388. நீரகத்து இன்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே.
பொருள் : நீர்ப் பிரதேசமான மணிபூரகத்தில் புருஷனுக்கு இன்பம் உண்டாகும். அக்கினி விளங்கும் அநாகதமாகிய நெஞ்சினுள் ஒளிவீசும் கிரணங்கள் உண்டாகும். அவ்வாயு விளங்கும் விசுத்தியில் ஆராய்த்தக்க உயிர்ப்புநிலை பெற்றிருக்கும் ஆகாய பூதகுணமாகிய நாதம் சத்தியைத் தந்து கொண்டிருக்கும். நீர் மண் இடையேயுள்ள சுவாதிட்டானமே உற்பத்திக் குரிய இடமாகும்.
389. உண்டுஉல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும் கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும் பண்டுஇவ் வுலகம் படைக்கும் பொருளே.
பொருள் : உலகம் ஏழினையும் உண்டு உமிழ்ந்த திருமால் உடனாய், எல்லா அண்டங்களில் வாழும் தேவர்களுக்குத் தலைவனும் முன்னோனுமாகிய சிவபெருமான் உலகினைப் படைக்கும் நான்முகனோடும், பழமையாகவே இவ்வுலகம் படைக்கின்ற மெய்ப் பொருளாகும்.
390. ஓங்கு பெருங்கடல் உள்ளறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும் வீங்கும் கமல மலர்மிசை மேலயன் ஆங்குயிர் வைக்கும் அதவுணர்ந் தானே.
பொருள் : பெருகுகின்ற கடற்பிரதேசமாகிய மணிபூரகத்திலுள்ள திருமாலுடன் சிரசின்மேல் அழகான வெள்ளொளியில் விளங்கும் பராபரனாகிய சிவபெருமானும் பூரிக்கின்ற சுவாதிட்டானச் சக்கரத்திலிருக்கின்ற பிரமன் அவ்விடத்து உடம்போடு உயிரைப் புணர்த்துகின்ற தன்மையை உணர்ந்திருந்தான்.
391. காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும் பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன் ஆரண மாய்உல காய்அமர்ந் தானே.
பொருள் : சிருஷ்டி காரணமாகிய சிவபெருமான் அன்பினால் எல்லாப் பொருளோடும் கலந்திருப்பவன். திருமாலாய் உடம்பின் நடுப்பாகமாகிய உந்திக் கமலத்தில் இருப்பான். அவனே புவனங்களை அன்பில் சிருஷ்டி செய்யும் நான்முகனாய் உள்ளான் அப்பெருமானே சொற்பிரபஞ்சமாயும் பொருட் பிரபஞ்சமாயும் உள்ளான்.
392. பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு அயன்ஒளி யாயிருந்து அங்கே படைக்கும் பயன்எளி தாம்வய ணந்தெளிந் தேனே.
பொருள் : எல்லாப் பயன்களையும் எளிமையாக நல்கும் பெரிய மாணிக்கத்தை விளங்கச் செய்ய நன்மை தரும் சிவன் ஒருவன் உளன். அப்பெருமான் பிரமனுக்கும் ஒளியை நல்கிப் படைத்தல் தொழிலை மூலாதாரத்திலிருந்து செய்கிறான். அவன் துணை கொண்டு பயனை எளிமையாக அடையும் காரணத்தை அறிந்தேன். (வயணம் - காரணம்)
393. போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்து
ஆக்கமும் சிந்தையது ஆகின்ற காலத்து மேக்கு மிகநின்ற எட்டுத் திமையொடும் தாக்கும் கலக்கும் தயாபரன் தானே.
பொருள் : அழிப்பும் படைப்பும் சிவனருளால் நிகழும் காப்பும் ஆகிய முச்செயல்களையும் நினைக்கின்ற காலத்தில், சிரசைச் சூழவுள்ள எட்டுத் திசைகளிலும் மூலாதாரத்தினின்று மேலே வந்த செவ்வொளி மோதிப் பரவும்.
394. நின்றுயி ராக்கும் நிமிலன்என் ஆருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற முன்துய ராக்கும் உடற்குத் துணையதா நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.
பொருள் : உலகுயிர்களோடு பொருந்தி நின்று பக்குவம் செய்யும் மலமில்லாத சிவன், என்னுடைய அருமையான உயிருக்கு வளமாம் தன்மையைச் செய்து என் உடம்பில் பொருந்தி முன்னே துன்பத்தைக் கொடுத்த உடம்புக்குத் துணையாய் நடு நாடியின் உச்சியில் உயிர்ப்பாய் நன்மை செய்து கொண்டு இருக்கின்றான்.
395. ஆகின்ற தன்மையின் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன் போகின்ற சீவன் புகுந்துஉட லாய்உளன் ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.
பொருள் : பிரபஞ்சம் உண்டாதற் பொருட்டுப் பாம்பை அணிந்த கொன்றை வேந்தனும் உருகுகின்ற சிவந்த பொன்போன்ற மேலான அழகிய திருமேனியை யுடையவனும் ஆகிய சிவன், பிறவிக்குச் செல்கின்ற சீவன் வாழும் உடலாயும் உள்ளான். அவன் சீவனைச் சிவமாக்கி ஆளுகின்றவன் ஆவான். (அக்கு - உருத்திராட்சமுமாம்)
396. ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும் பருவங்கள் தோறும் பயன்பல வான திருவொன்றிற் செய்கை செகமுற்றும் ஆமே.
பொருள் : ஒருவனாகிய சிவனும் ஒருத்தியாகிய சத்தியும் விளையாடல் செய்தார்கள். அவ் இருவரது விளையாட்டு எல்லாம் செய்ய வல்லது சூரிய கதி மாறுபட்டால் உண்டாகும் பருவ காலங்களுக்கு ஏற்ப விளையும் பயன்களும் உலகில் வேறாக இருக்கும். அதே போன்று அருள் பதிவின் மாறு பாட்டால் உண்டாகும். பக்குவத்துக்கு ஏற்ப விளையும் பயன்களும் உலகில் வேறுபடும்.
397. புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத்து அண்ணல் புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேன் புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.
பொருள் : புவனங்களுக்கு அதிபதியான உருத்திரனிடம் புகுந்து உலகை அழிக்கின்ற செயலைச் சிவன் அறிவான். அவன் பந்தங்களால் சுற்றப்பட்ட உலகினைத் திருமாலிடம் பொருந்திக் காக்கின்ற செயலை அறிவான். சுவாதிட்டான மலர்மேல் உறைகின்ற செயலை அறிவான். சுவாதிட்டான மலர்மேல் உறைகின்ற பிரமனிடம் பொருந்திச் சிருஷ்டித் தொழிலையும் அவன் அறிவான். அவ்வாறு அறிகின்ற சிவனது ஆட்சிக்கு அடங்கியே அவரவர் தொழில்களைச் செய்கின்றனர்.
398. ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவரும்
காரிய காரண ஈசர் கடைமுறை பேணிய ஐந்தொழி லார்விந்து விற்பிறந்து ஆணவம் நீங்காது அவரெனல் ஆகுமே.
பொருள் : ஆணவ மலத்தை உடையவராகிய பிரமனாதி ஐவரும் தகுதிபற்றி மேலுள்ளவர் காரண ஈசர் என்றும் கீழ் உள்ளவர் காரிய ஈசர் என்றும் சொல்லப் பெறுவர். இறைவன் விரும்பிய வண்ணம் நடைபெறும் ஐந்தொழிலால் சுத்த மாயையில் தோன்றி, ஆணவ மலர் முற்றிலும் நீங்காதவர்கள் என்றே சொல்லப் பெறுவர்.
399. உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம்
மற்றைய மூன்று மாயோ தயம்விந்து பெற்றவன் நாதம் பரையிற் பிறத்தலால் துற்ற பரசிவன் தொல்வினை யாட்டிதே.
பொருள் : மாயையாகிய சத்தி ஒன்றாயிலும் அது சுத்த மாயை, அசுத்த மாயை, பரகிருதி மாயை என்று மூன்றாக உள்ளது. ஏனைய சாதாக்கியம், மகேசுவரம், சுத்தவித்தை ஆகிய மூன்றும் சுத்த மாயையின் காரியமாகும். விந்துவைப் பெற்ற நாதமானது பரையினின்றும் தோன்றுவதால், பரையோடு சிவனது பழமையான விளையாட்டே இச்சிருஷ்டி முதலியனவாகும்.
400. ஆகாயம் ஆதி சதாசிவ ராதிஎன்
போகாத சத்தியுள் போந்துடன் போந்தனர் மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம் ஆகாயம் பூமி காண அளித்தலே.
பொருள் : ஆகாயம் முதலிய ஐம்பூதங்களை இயக்கும் சதாசிவர் முதலிய ஐவரும் என்றும் உள்பொருளாகிய மாயா சத்தியுள் பொருந்தி என் உடம்பிலும் உயிரிலும் தொழில் புரிகின்றனர். பெருமை பொருந்திய சதாசிவ மூர்த்தி யானவர் ருத்திரன் விஷ்ணு பிரமன் ஆகியோராய் விண்ணும் மண்ணும் ஆகிய உலகங்களை தோன்றும்படி செய்வார்.
401. அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாம்அவள் தானே அளியார் சதாசிவம் ஆகி அமைவாள் அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.
பொருள் : கருணை நிரம்பிய முக்கோணப் பீடத்தில் விந்துவினில் மையப் புள்ளியில் விளங்கும், கருணையுள்ளமும் மண்டல நாயகியுமான அவளே, அனுக்கிரகம் புரியும் சதாசிவ மூர்த்தியாகிப் பொருந்தியிருப்பாள். அவளே அருளோடு கூட ஐந்தொழில்களையும் சீவகர்கள் மாட்டுச் செய்பவள் ஆவாள். திரிபுரை - அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மும்மண்டல நாயகி.
402. வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரிய மாகக் கலந்தவள் வாரணி ஆரணி வானவர் மோகினி பூரணி போதாதி போதமும் ஆமே.
பொருள் : கச்சணிந்த தனங்களை யுடைய சதாசிவ நாயகி மங்கலப் பொருளாயும் எல்லாவற்றுக்கும் காரணமாயும் படைத்தலாதி செயலில் கலந்தவளாயும் உள்ளாள். அவளே பிரணவ சொரூபியாயும் வேதப் பொருளாயும் தேவரை மயக்கும் திரோதான சத்தியாயும் பூரணமாய் சந்திர ஞானமும் அனுபவ ஞானமும் உடையவளாயும் உள்ளாள்.
403. நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங்கு இயங்கும் அரன்திரு மாலவன் மன்றது செய்யும் மலர்மிசை மேலயன் என்றிவ ராக இசைந்திருந் தானே.
பொருள் : சதாசிவரோடு பிரிப்புற்று நின்ற மகேசுரன் கீழே சென்று அங்குத் தொழில் செய்யும் உருத்திரனாகவும் திருமாலாகவும் ஆண் பெண் சேர்க்கையைச் செய்கின்ற சுவாதிட்டானச் சக்கரத்திலுள்ள பிரமன முதலியோராகவும் ஒன்றுபட்டிருந்தான்.
404. ஒருவனு மேஉலகு ஏழும் படைத்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் அளித்தான் ஒருவனு மேஉலகு ஏழும் துடைத்தான் ஒருவனு மேஉலகு ஓடுஉயிர் தானே.
பொருள் : சிவனாகிய ஒருவனே (சதாசிவன் என்ற பதியாகிக்) காரியக் கடவுளரோடு பொருந்தி ஏழ் உலகங்களையும் படைக்கிறான். அவ்வாறே அவன் ஏழ் உலகங்களையும் காக்கிறான். அப் பெருமானே ஏழ் உலகங்களையும் ஒடுக்குகிறான். அவனே உலகமாகவும் உயிராகவும் உள்ளான்.
405. செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை
மஞ்சார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும் கொந்தார் குழலியார் கூடி ய கூட்டத்தும் மைந்தர் பிறவி அமைத்துநின் றானே.
பொருள் : செந்தாமரை நிறம் போன்ற தழல் நிறத்தையுடைய எமது தலைவனாகிய உருத்திரன் மேகம் போன்ற நிறமுடைய திருமால் மயக்கம் செய்கின்ற உலக பந்தத்தும், பூங்கொத்துகளை அணிந்த மாதரது கூட்டத்தும் பொருந்தி, வலிய உலக உற்பத்தியை அமைத்தருளுகின்றான்.
406. தேடும் திசைஎட்டும் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவிக் குணம்செய்த மாநந்தி ஊடும் அவர்தம் உள்ளத்து ளேநின்று நாடும் வழக்கமும் நான் அறிந் தேனே.
பொருள் : எட்டுத் திசையிலும் தேடி அலைகின்ற சீவனுக்கு உடம்போடு உயிர் கூடிப் பிறக்கும்படி அமைந்த சிவபெருமான் கன்னியரும் காளையருமாக இருந்து ஊடு கின்றவரது உள்ளத்தில் எழுந்தருளி நின்று, விருப்பம் செய்கின்ற வழக்கத்தையும் நான் அறிந்தேன்.
407. ஓர்ஆய மேஉலகு ஏழும் படைப்பதும்
ஓர்ஆய மேஉலகு ஏழும் அளிப்பதும் ஓர்ஆய உலகு ஏழும் துடைப்பதும் ஓர்ஆய மேஉலக கோடுஉயிர் தானே.
பொருள் : சிவசத்திக் கூட்டமே ஏழ் உலகங்களைப் படைப்பதும், அக் கூட்டமே ஏழ் உலகங்களையும் காத்து நிற்பதும், அதுவே ஏழ் உலகங்களையும் காத்து நிற்பதும், அதுவே ஏழ் உலகங்களை அழிப்பதும், அக்கூட்டமே உலகோடு உயிரை இணைத்து நிற்பதுமாகும்.
408. நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடும் கூட்டிக் குழைத்தனர் ஏது பணியென்று இசையும் இருவருக்கு ஆதி இவனே அருளுகின் றானே.
பொருள் : நாதனாகிய சிவபெருமான் ஒருவனும் சீவர்களுக்கு நன்மையைச் செய்கின்ற மகேசுவர சதாசிவரும் சுத்தமாயை அசுத்தமாயை ஆகிய இரண்டிலும் ஒளி மண்டலத்திலிருந்து காரண நிலையை அமைக்கின்றனர். அவ் ஆணைவழி என்ன தொழில் செய்ய வேண்டும் என்று விரும்பி நிற்கும் பிரம்ம விஷ்ணுக்களுக்கு ஆதியான சிவனே ஆற்றலை அளிக்கின்றான்.
409. அப்பரிசு எண்பத்த நான்குநூறு ஆயிரம்
மெய்ப்பரிசு எய்தி விரிந்துயி ராய்நிற்கும் பொய்ப்பரிசு எய்திப் புகலும் மனிதர்கட்கு இப்பரி சேஇருள் மூடிநின் றானே.
பொருள் : மேலே காட்டிய முறையில் எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதங்களிலும் உண்மையாகப் பொருந்தி உயிர்க்குயிராய் விளங்குவான். இதனைப் பொய்யானது என்று கூறும் மக்களை இத்தன்மையிலேயே ஆணவவல்லிருளில் ஆழ்த்துகின்றான்.
410. ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொலி பொங்கிய நீர்புவி வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள் ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றாதே.
பொருள் : சூரியன், சந்திரன்அங்கி முதலிய அட்டதிக்குப் பாலர்கள் போதனை செய்யும் நாதர் நிரம்பிய ஆகாயம் பெருகுதலையுடைய நீர், நிலம், வாதனை செய்யும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தமாகிய தன் மாத்திரைகள், வாக்கு, பாதம், பாணி, பாயுரு உபத்தியமாகிய கன்மேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம் அகங்காரமாகிய அந்தக் கரணங்கள் எல்லாம் சொல்லப் பெற்ற மகேசுரர் விளங்கும் விந்து மண்டலத்தில் சூட்சுமமாய் அமைக்கப்பட்டுள்ளன.
10. திதி (ஸ்திதி - திதி - காத்தல்)
(சிவனது நிலை சிறப்பு நிலை. அவனே உலகுக்கு அருள் புரியும் நிலையில் சதாசிவனாக உள்ளான். சதாசிவ மூர்த்தியே பிரமனாய்ப் படைக்கிறான் என்று முன்னர்க் கூறப்பட்டது. இப்பகுதியில் சதாசிவ மூர்த்தியே திருமாலாய் உலகைக் காக்கிறான் என்பது கூறப் பெறுகிறது.)
411. புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே.
பொருள் : அனுக்கிரகத்தைச் செய்யும் சதாசிவ மூர்த்தியே வெளியாகவும் இருளாகவும் எல்லாவற்றிலும் கலந்துள்ளான். அவனே ஞானியர்க்குப் புகழத்தக்க பொருளாகவும், அஞ்ஞானியர்க்கு இகழத்தக்க பொருளாகவும் உள்ளான். அவன் உடலாகவும் உயிராகவும் உள்ளான். அவ்வாறு கலந்து நின்ற அவனே மகத் என்ற புத்தி தத்துவத்தில் பொருந்தியிருக்கிறான்.
412. தானே திரையொடு தேவரு மாய்நிற்கும்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும் தானே கடல்மலை ஆதியு மாய்நிற்கும் தானே உலகில் தலைவனும் ஆமே.
பொருள் : சதாசிவ மூர்த்தியேஎல்லாத் திசைகளிலும் வியாபித்துத் தேவர்களாக நிற்பான். அவனே ஆகாயக் கூற்றில் பொருந்தியவனாகையால் உடலாகவும் உயிராகவும் பொருந்தி உடலின் தத்துவத்திலும் உயிரின் தத்துவத்திலும் விளங்குகின்றான். அவனே கடலாகவும் மலையாகவும் இவை போன்ற பிற அசையாதனவற்றிலும் உள்ளான். அதனால் சதாசிவ மூர்த்தியே தலைவனுமாவான்.
413. உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி அடையார் பெருவழி அண்ணல்நின் றானே.
பொருள் : சிரசின்மேல் பொருந்திய ஒளிமயமான ஆகாயத்தில் விளங்கும் அனுக்கிரக மூர்த்தி, உடலாயும் உயிராயும் உலகமதாகியும், அவனே கடலாயும் இருண்ட மேகமாய் மழைநீர் பொழிபவனாயும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவனாய் அழியாதவனாய் எங்கும் நிறைந்திருப்பவனாய் விளங்கி நின்றானே.
414. தேடும் திசைஎட்டும் சீவன் உடலுயிர்
கூடு மரபிற் குணஞ்செய்த மாநந்தி ஊடும் அவர்தமது உள்ளத்து ளேநின்று நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே.
பொருள் : எட்டுத் திசையிலும் தேடி அலைகின்ற சீவனுக்கு உடம்போடு உயிர் கூடிப் பிறக்கும்படி அமைத்த சிவபெருமான் கன்னியரும் காளையருமாக இருந்து ஊடுகின்றவரது உள்ளத்தில் எழுந்தருளிய நின்று விருப்பம் செய்கின்ற வழக்கத்தையும் நான் அறிந்தேன்.
415. தானொரு காலம் தனிச்சுட ராய்நிற்கும்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும் தானொரு காலம் தண்மழை யாய்நிற்கும் தானொரு காலம்தண் மாயனும் ஆமே.
பொருள் : சதாசிவ மூர்த்தியே உலகை அழிக்க வேண்டும் போது ஒப்பற்ற சூரியனாகி, மழை இல்லாமையைச் செய்து அழிப்பான். அவனே சூறாவளிக் காற்றாய் அழிவினைச் செய்வான். அவனே ஒரு சமயம் பெருமழையைப் பெய்வித்துப் பிரளயத்தை உண்டாக்குவான். அவனே ஒரு சமயம் திருமாலாய் இருந்து உலகினைக் காப்பவனாகவும் உள்ளான்.
416. அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும் முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும் அன்புறு ஐந்தில் அமர்ந்துநின் றானே.
பொருள் : முன்னே கூறிய மூர்த்தியே உயிராற்றலில் விளங்கும் அன்பு அறிவு அடக்கம் ஆகிய பண்புகளாய் உள்ளான். இன்பத்துக்கும் இன்பக் கூட்டுறவுக்கும் காரணமாக உள்ளான். அவன் கால எல்லை வகுத்தவனாகவும் அதனை முடிப்பவனாகவும் உள்ளான். அவனே நன்மையைச் செய்ய சுத்த மாயா தத்துவ மாகிய நாதம், விந்து, சாதாக்கியம், மகேசுரம், சுத்தவித்தை ஆகிய ஐந்தில் பொருந்தி ஐம்பூத காரியங்களைச் செய்கிறான்.
417. உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச் சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை மற்றும் அவனே வனையவல் லானே.
பொருள் : அப்பெருமானே உலகினை மாயை யினின்றும் தோன்றச் செய்பவன் ஆவான் அவனே உயிர்களுக்குப் பிறவியைக் கொடுத்தருள்பவன் ஆவான். பேரண்டமாகிய பெரியமிடாவும் சிற்றண்டமாகிய குடமும் உடம்பாகிய கலயமும் ஏனையவற்றை அவன் குயவனைப் போன்று மண்ணாகிய மாயை யினின்றும் படைத்தருளுவான்.
418. உள்ளுயிர்ப் பாய்உட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் இலங்கொளி உள்ளுயிர்க் கும்உணர் வேஉட லுள்பரந்து தள்ளுயி ராவண்ணம் தாங்கிந்ன் றானே.
பொருள் : நந்தி எம் பெருமான் உள்ளே மூச்சுக் காற்றாய் அது நடைபெறுவதற்குத் துணைபுரிய உடலாயும் உள்ளான். அவன் தத்துவங்களோடு கூடாத உயிர்கள் ஆகாயத்தை இடமாகக் கொண்டு ஒளி மயமாய் விளங்குபவன். எனினும் அவனே உள்ளே அசைவினை உண்டாக்குகிற உணர்வாய் உடலினுள் பரவி உயிரை வெளியேற்றி விடாமல் கால எல்லைவரை தொழிற்படுத்திக் கொண்டு உள்ளான்.
419. தாங்கருந் தன்மையும் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மற்றோர் பிறிதில்லை ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி தாங்கிநின் றானும்அத் தாரணி தானே.
பொருள் : அவ்வாறு உயிர்களை உடலைவிட்டு நீங்காது தாங்கிய நிலையிலும், தான் பல் உயிர்களாகிய அவற்றைக் கால எல்லையில் உடம்பினின்றும் பிரிந்த நிலையிலும், அவற்றைக் காப்பதற்கு அவனைத் தவிரவேறு எவரும் இல்லை. மேல் வருகின்ற ஏழ் பிறப்புக்கும் துரியாதீதமாகிய அந்நிலையில் ஆகாய பூத நாயகனான அச் சதாசிவனே தாங்கிக் கொண்டுள்ளான்.
420. அணுகினும் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும் பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித் தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.
பொருள் : எல்லா உயிரிடத்தும் பொருந்தி யிருக்கும் இறைவனைப் புறத்தே சென்று தேடினாலும் அவர்க்குத் தூரமாயிருப்பவன். அவரவர் இடமுள்ள அக்கினி கலையைத் தூண்டி அத்துடன் பிரமரந்திரம் சென்று அணுகினாலும் அவன் அருளை வழங்குவான். உலகின்மீது பலபிறவி எடுத்து இறைவனை வணங்கினாலும் அப்பிறவி தோறும் உயிர்களுக்குச் சேவை செய்தாலும் எம்பெருமான் மேன்மையான உடம்பினைக் கொடுத்தருளுவான்.
11. சங்காரம்
(சங்காரம் - அழித்தல்) ஐந்தொழில் அருட் செயல்களில் சங்காரமும் ஒன்றாகும். இளைப்பாற்றல் பொருட்டாதலின் என்க. சிவனே உருத்திரனாய் சங்காரம் செய்கிறான் என்பது அறிக.)
421. அங்கிசெய்து ஈசன் அகலிடம் சுட்டது
அங்கிசெய்து ஈசன் அலைகடற் சுட்டது அங்கிசெய்து ஈசன் அசுரரைச் சுட்டது அங்கிஅவ் ஈசற்குக் கைஅம்பு தானே.
பொருள் : அக்கினியைப் பெருகச் செய்து இறைவன் பரந்த உலகத்தை அழித்தருளினான். அதே போன்று அக்கினியால் அவன் அலைகடலை வற்றச் செய்தான். அக்கினியால் இறைவன் அசுரரை அழித்தருளினான். அவ் அக்கினியே இறைவனுக்கும் கையிலே விளங்கும் அம்பாகும்.
422. இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்தம்
நிலையன்று அழித்தமை நின்றுணர்ந் தேனால் உலைதந்த மெல்லரி போலும் உலகம் மலைதந்த மானிலம் தான்வெந் ததுவே.
பொருள் : தினப்பிரளயம், மத்தியப் பிரளயம், மகாப் பிரளயம் ஆகிய மூன்றனுள் கற்பத்தின் முடிவில் வரும் பிரளயம் ஒன்றாகும். இவ்வுலகங்களின் நிலை அன்று அழிந்தவற்றை நான் ஞானக் கண்ணால் கண்டேன். கற்பமுடிவில் உலையிலிட்ட அரிசி கீழும் மேலுமாகச் சுழலுவது போல இவ்வுலகம் சுழலும், அப்போது குறிஞ்சி முதலிய பெரிய நிலம் வெந்து ஒழியும் (தினப் பிரளயம் - உறக்கம். நடுப்பிரளயம் - இறப்பு. மகாப் பிரளயம் சீவ வர்க்கம் ஒரு சேர அழிதல் (கற்பமுடிவு).
423. பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம் குதஞ்செய்யும் அங்கி கெளுவிஆ காசம் விதம்செய்யும் நெஞ்சில் வியப்பு இல்லைதானே.
பொருள் : சீவர்களுக்குப் பக்குவத்தைச் செய்கின்ற பூமியும் பனிநிறைந்த மலை எட்டும் மகிழ்ச்சியை உண்டாக்குகின்ற ஏழு கடல்களின் பெருக்கம் முதலிய எல்லாம் கொதிக்கும் படி செய்கின்ற அக்கினியை மூட்டி, வெட்ட வெளியாக்குவாரது நெஞ்சில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
424. கொண்டல் வரைநின்று கிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி இருந்துஎண் திசையாதி ஒன்றின் பதஞ்செய்த ஓம்என்ற அப்புறக் குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே.
பொருள் : சிரசின் மேலுள்ள ஒளி மண்டலத்திலிருந்து கீழே இறங்கிய ஆதி சக்தி, உடம்பைச் சுற்றியுள்ள ஒளி மயமான அண்ட கோசத்தில் பொருந்தி யிருந்து திரோதான சத்தியோடு கூடிச் சீவர்களைப் பக்குவப் படுத்திப் பிரணவமாகிய மூலாதாரத்திலுள்ள குண்டத்தின்மேல் எழுகின்ற அக்கினியை மீண்டும் தன்னோடு ஒடுக்கிக் கொண்டு சிவபெருமான் விளங்கினான்.
425. நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமும் சாக்கிரா தீதமாம் சுத்தசங் காரம் தொழிலற்ற கேவலம் உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.
பொருள் : நித்த சங்காரம் என்பது உறக்கத்தில் ஒன்றும் அறியா திருத்தலாம். அமைத்த சங்காரம் என்பது கருவி கரணங்கள் சுழன்ற நிலையாம். சுத்த சங்காரமாவது செயலின்றி ஒன்றும் விளங்காமல் நிற்கும் நிலை. சிவனருளில் பொருந்தச் செய்வதே உண்மையான சங்காரமாகும்.
426. நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாள் சங்காரமாம் சுத்தசங் காரம் மனாதீதம் தோய்வித்தல் உய்த்தசங் காரம் சிவனருள் உண்மையே.
பொருள் : நித்த சங்காரமாவது தூல சூக்குமமான இரு உடல்களையும் சீவன் தொட்டுக் கொண்டிருத்தல். இப்படியாக அமைத்த சங்காரம் மாயையைப் பொருந்திய சங்காரமாகும். சுத்த சங்காரம் என்பது மனம் அதீதத்தில் சென்று சேட்டையின்றி இருக்கச் செய்தல், அப்போது சிவனருளில் தோய்விக்கச் செய்தலே உண்மையான சங்காரமாகும்.
427. நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல் வைத்தசங் காரம் கேவலம் ஆன்மாவுக்கு உய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே.
பொருள் : நித்த சங்காரம் பிறவித் துன்பத்தைப் போக்கினால் மனம் கருவிகள் ஒத்த சங்காரத்தில் உடலும் உயிரும் பிரிந்திருக்கும் நிலை உண்டாகும். இவ்வாறு அமைத்து வைத்த சங்காரம் ஆன்மாவுக்குச் சுத்த கேவல நிலையாம். சிவமாந் தன்மை அளித்த சங்காரமே உண்மை சங்காரமாகும்.
428. நித்தசங் காரமும் நீடுஇளைப் பாற்றுதல்
வைத்தசங் காரமும் மன்னும் மனாதியில் சுத்தசங் காரமும் தோயாப் பரனருள் வைத்தசங் காரமும் நாலாம் மதிக்கிலே.
பொருள் : நித்த சங்காரமாவது நீண்ட உறக்கத்தில் வைப்பதாகும். அமைத்து வைத்த சங்காரமும் மனம் முதலிய கரணங்கள் அடங்கியிருக்கும்படி செய்தல். சுத்த சங்காரமும் கூடக் கருவிகளினின்றும் நீங்கிப் பரனருளில் கூடாதிருத்தலாம். மதித்துச் சொன்னால் கருவிகளினின்றும் நீங்கிப் பரனருளல் தோய்ந்து விளங்கும்பட செய்தல் நான்காவது சங்காரமாகும்.
429. பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம் பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.
பொருள் : பாழாகிய சிவத்தை முதலாகக் கொண்டு தோன்றும் ஆன்மப் பயிரானது, அது தனுகரணாதிகளோடு கூட்டப் பெற்றபின் திரும்பவும் அடங்கினாலும் பண்டை நிலை எய்தாது. இது முடிவைத் தராத சங்கார மாதலின் இச் சீவர்கள் மாலயன் செயலுக்கு உட்பட்டுப் பிறப்பு இறப்பில் உழல்வர். ஆணவ மலர் வலிமை கெட்டு வறுத்த வித்துப் போல் பாழும் பயிரான போது அச்சிவத்தின் வியாபகத்தில் அடங்கியிருக்கும்.
430. தீயவைத்து ஆர்மின்கள் சேரும் வினைதனை
மாயாவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு காயம்வைத் தான்கலந்து எங்கும் நினைப்பதோர் ஆயம்வைத் தான்உணர்வு ஆரவைத் தானே.
பொருள் : சேர்கின்ற வினைகளைச் சுட்டுவிடுகின்ற வண்ணம் சிவன்பால் ஆர்வத்தைப் பெருக்கி நில்லுங்கள். இவ்வாறு அழியும்படி செய்கின்றவன் வாழ்கின்ற இடமாகிய சகஸ்ரதளம் ஒன்றுள்ளது. அவ்விடத்தை உடம்பில் வைத்தான். கலந்து சிந்திப்பதற்கு உடம்பைச் சூழ ஒளிக் கற்றைகளை அமைத்தருளினான். அங்கே உணர்வு பொருந்துமாறு அருளினான்.
12. திருரோபவம்
(திருரோபவம் என்பது மறைப்பாகும். மகேசுவரன் சிவனது ஆணையைத் தாங்கிச் சீவர்கள் அறியா வண்ணம் வினை போகங்களை ஊட்டு கின்றான். இவ்வாறு ஊட்டுவித்துச் சீவரது வினையைக் கழித்தலின் இதுவும் அருட் செயலே யாகும்.)
431. உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட்டு ஓரடி நீங்கா ஒருவனை உள்ளமும் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருவுஅறி யாதே.
பொருள் : உயிருக்கு உயிராக இருக்கும் ஒருவனும் மன மண்டலத்தில் உள்ளே எழுகின்ற பேரொளிப் பிழம்பானவனும் நெஞ்சத்தை விட்டுச் சிறிதும் நீங்காத பெருமானும் ஆகிய ஒப்பற்ற தலைவனை நெஞ்சத்தில் உடனாய் அவன் வீற்றிருப்பினும் நெஞ்சம் மல மறைப்பினால் அப்பெருமான் இன்ன தன்மையன் என்று உணராததாகும்.
432. இன்பப் பிறவி படைத்த இறைவனும்
துன்பம்செய் பாசத் துயருள் அடைத்தனன் என்பிற் கொளவி இசைந்துறு தோல்தசை முன்பிற் கௌவி முடிகுவது ஆக்குமே.
பொருள் : இன்பம் பெறுவதற்குரிய பிறவியைத் தந்தருளிய இறைவன் துன்பத்தைத் தருகின்ற பந்தத்தைச் சீவர்களுக்கு அமைத்தருளினான். அவன் சீவர்களை எலும்போடு சேர்த்து, பொருந்திய, தோலாலும் தசையாலும் வன்மை பொருந்தப் பண்ணி, தூய்மைப் படுத்தி முத்தியைக் கொடுத்தருளுவான்.
433. இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி இறையவன் செய்த இரும்பொறி யாக்கை மறையவன் வைத்த பரிசுஅறி யாரே.
பொருள் : ருத்திரன் திருமால் இன்பத்தை அமைத்த பிரமன் ஆகிய மூவரும் வந்து உடன்கூடி, இறைவன் அமைத்துக் கொடுத்த பெருமையுள்ள இயந்திரமான சரீரத்தில் இரகசியமாக அவ் இறைவன் வைத்த தன்மையினை அறிய மாட்டார்கள். (இறைவன் - சதாசிவ மூர்த்தி.)
434. காண்கின்ற கண்ணொளி காதல்செய் ஈசனை
ஆண்பெண் அலிஉரு வாய்நின்ற ஆதியை ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச் சேண்படு பொய்கைச் செயல் அணை யாரே.
பொருள் : காணுகின்ற கண்ணில் ஒளியாக இருந்து அருள்புரிகின்ற ஈசனும், ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் விளங்கும் ஆதியாகிய சிவனை, உண்பதற்குப் பயன்படும் நாவின்வழி மனத்தைச் செலுத்தி, சிரசின் மேலுள்ள ஆகாய மண்டலத்தில் உண்டாகிற இயற்கையான தடாகத்தில் உடன் உறைதலைப் பொருந்தாராயினர். அலி என்பது ஈண்டு அருவுருவத் திருமேனி.
435. தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும் சுருளும் சுடருறு தூவெண் சுடரும் இருளும் அறநின்று இருட்டறை யாமே.
பொருள் : தெளிவுடைய உயிர்களுக்கும் ஒளி மண்டல வாசிகளுக்கும் இன்பத்தை நல்குகின்ற தன்மையைச் செய்யும் ஆதியாகிய சதாசிவனும் சொற்பப் பிரகாசம் பொருந்திய தூவெண்மதியும் இருளும் கெடும்படியாக வல்லிருளாய் இருக்கும் சீவரது அண்ட கோசத்தில் மறைப்பினைச் செய்து கொண்டிருப்பான்.
436. அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன்று ஒவ்வாப் பரக்கும் உருவமும் பாரகம் தானாய்க் கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.
பொருள் : தத்துவங்களும் ஓசை முதலிய தன்மாத்திரைகளும் சொல்லப் பெறுகின்ற ஆசையும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட பல்வேறு உருவங்களும் உலக முழுவதும் தானாய் மறைதலைச் செய்கின்ற இறைவனே மறைப்புச் சத்தியை அருளுவான். இவற்றைத் திருவுள்ளத்தால் சிவபெருமான் கண்டருள்வன். அரைக்கின்ற அருள் - மறைப்பு.
437. ஒளித்துவைத் தேன்உள் ளுறவுணர்ந்து ஈசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடும் ஈண்டே களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை வெளிப்பட்டு இறைஞ்சினுள் வேட்சியும் ஆமே.
பொருள் : நான் இறைவனை அகத்தே உணர்ந்து போற்றி வைத்து வழிபட்டேன். அப்பெருமான் அப்பொழுதே காட்சியில் வெளிப்பட்டு அருளை நல்குவான். இனி மகிழ்ச்சியோடு அன்பு என்னும் பெருங்குணம் வெளிப்பட்டு அவனைப் புறத்தே வழிபாடு செய்தாலும் அவனுக்கு விருப்பமாம்.
438. நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங்கு இயங்கி அரன்திரு மாலவன் நன்றது செய்யும் மலர்மிசை மேலயன் என்றிவ ராகி இசைந்திருந் தானே.
பொருள் : எல்லாவற்றையும் தானே மறைத்து நின்ற மகேசுரன் கீழ்முகங்கொண் செயற்பட்டு உருத்திரன், திருமால், நன்மைøய் செய்யும் சுவாதிட்டான மலரிலுள்ள பிரமன் என்று மூவரோடும் கலந்திருக்கின்றான்.
439. ஒருல்கிய பாசத்துள் உத்தம சித்தின்
இருங்கரை மேலிருந்து இன்புறு நாடி வருங்கரை ஓரா வகையினிற் கங்கை அருங்கரை பேணில் அழுக்குஅற லாமே.
பொருள் : ஒடுங்கிய பாசநிலையில் சிவனாகிய பெரிய கரையின் மேல் சீவர்கள் இருந்து ஆன்ம அனுபவம் விழைந்து பிறவியாகிய அருங்கரையை நாடாத தன்மையில் சங்கு ஓசையோடு வரும் ஆகாய கங்கையின் கரையைப் பொருந்தினால் மாசினை நீங்கப் பெறலாம். (கங்கை அருங்கரை - திருவருளின் எல்லையில்லாத துணை. உத்தம சித்தன் - தலையாய சிவபெருமான்.)
440. மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா அண்ணலும் இவ்வண்ணம் ஆகிநின் றானே.
பொருள் : மண் ஒன்றே சட்டி பானை முதலிய நல்ல பாத்திரங்களாகும். அதுபோன்று யோனி தேங்கட்கு எல்லாம் அகத்தேயுள்ள ஒருவனே காரணமாகும். கண்ணாகில் இந்திரியம் புறப்பொருள் பலவற்றைக் கண்டாலும் தன்னைக் காணாது அது போன்று பெருமானும் எல்லா யோனி பேதங்கட்குக் காரணமாயினும் சீவக் காட்சிக்குப் புலப்படாது நிற்பான். (யோனிகள் - நிலம், முட்டை, கருப்பை, அழுக்கு என்னும் நால்வகைப் பிறப்புகள்.)
13. அனுக்கிரகம்
(அனுக்கிரகம் - அருளல். சிவனது ஆணையைத் தாங்கிச் சதாசிவன் சீவர்களைப் பிறப்பினில் செலுத்தி மலநீக்கம் பெற அருள் புரிகிறான் என்பது இப்பகுதியில் கூறப்பெறும்.)
441. எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம் ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை கட்டி அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே.
பொருள் : எட்டுத் திசையும் வீசுகின்ற காற்றோடு, வட்டமாகச் சூழ்ந்துள்ள கடல், நெருப்பு, பூமி, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் ஒன்று சேர்ந்து, உயிர் தாங்கும் இடமாகிய உடம்போடு உயிரைச் சேர்த்தும் பிரித்தும் வைப்பான் சதாசிவ மூர்த்தி யாவான். ஒட்டு - திருவடிப்பேறு கண்ணுதல் நினைப்பளவானே ஐந்தொழில் புரியும் அண்ணல் எனலுமாம். கடல் இங்கு நீரைக் குறிக்கும்.
442. உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சும் அவனே சமைக்கவல் லானே.
பொருள் : சிரசின் மேல் பிரமரந்திரத்தில் நீங்கி விளங்கும் நாதத்தை விரும்பி இன்பத்தைப் பெறுவார்க்கு இறப்பு இல்லை. மேலான விரிந்த சுடராகவுள்ள அக்கினி சூரியன் சந்திரன் ஆகிய மூன்றையும் உலகினுக்கு அச்சதாசிவ மூர்த்தியே இணைத்துச் சீவர்கள் உய்ய அருள் புரியவல்லான்.
443. குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்றது எல்லாம் வனைவன் குசவனைப் போல்எங்கள் கோனநந்தி வேண்டில் அசைவில் உலகம் அதுஇது வாமே.
பொருள் : குசவன் தண்டச் சக்கரத்தில் பிடித்து வைத்த மண்ணை, அவன் மனத்தில் எண்ணியவாறு செய்வான். குசவனைப் போன்று எங்கள் சதாசிவ மூர்த்தி நினைத்தால் சடத்தன்மை யுடைய உலகம் சடத்தை விட்ட ஆன்மாவாக மிளிரும்.
444. விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉலகு ஆக்கும் கொடையுடை யான்குணம் எண்குண மாகும் சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.
பொருள் : ஒளியை வாகனமாக உடையவனாகவும், மாறுபட்ட செயலை யுடையவனாகவும் மிகுந்த புவனாபதிகளை யுடையவனாகவும் உள்ள சதாசிவ மூர்த்தி, தன் விருப்பப்படி உலகைப் படைத்தருளுவான். வேண்டுவார்க்கு வேண்டுவதே ஈயும் தன்மையுடைய அவன் குணம் எண்குணமாகும். ஒளிக் கிரணங்களை வீசிக் கொண்டிருக்கும் அப்பெருமான் சீவரது சிந்தையில் பொருந்தியிருந்தான். (ஆனேற்றை ஊர்தியாகவும் உயர்த்துங் கொடியாகவும் உடையவன் சிவன் என்றும் பொருள் கொள்ளலாம்.)
445. உகந்துநின் றேபடைத் தான்உலகு ஏழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம் உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.
பொருள் : இறைவன் (சீவர்கள் வாழ வேண்டுமென்று) ஏழ் உலகங்களையும் விரும்பிப் படைத்தருளினான். அவ்வாறே பல பிரளயங்களை விரும்பிச் செய்தருளினான். நிலம் முதலிய ஐந்து பூதங்களையும் விரும்பித் தோற்றுவித்தருளினான். விரும்பி நின்றே உயிரிலும் உடலிலும் பொருந்திச் சீவகோடிகளுக்கு உதவினான்.
446. படைத்துஉடை யான்பண்டு உலகங்கள் ஏழும்
படைத்துஉடை யான்பல தேவரை முன்னே படைத்துஉடை யான்பல சீவரை முன்னே படைத்துஉடை யான்பர மாகிநின் றானே.
பொருள் : பழமையாகவே ஏழு உலகங்களையும் சிருட்டி செய்து அவற்றை உடைமையாகக் கொண்டான். அங்குப் பலதேவர்களைப் படைத்து அவர்களை ஆண்டு கொண்டான் அவனே பல சீவர்களைச் சிருட்டிக்கு விடுத்துத் தேவரோடு சம்பந்தப் படுத்தி ஆட்கொண்டான். அவ்வாறு படைத்து ஆட்கொண்ட அவன் தலைவனாக உள்ளான்.
447. ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை ஆதி படைத்தனன் தாங்கிநின் றானே.
பொருள் : ஆதி சத்தியோடு கூடிய சதாசிவன் ஐம்பெரும் பூதங்களைப் படைத்தருளினான். குற்றமில்லாத பல ஊழிகளை உயிர்களின் நன்மைக்காக அவன் செய்தான். எண்ணற்ற தேவர்களை அவன் சிருட்டிக்கு விட்டான். இவ்வாறு அவன் சிருட்டியைச் செய்ததோடு அவற்றுக்கு ஆதாரமாகவும் இருந்தான். ஆதி - அம்மை; அம்மையுடன் கூடிய சிவபெருமான்; ஆதிபகவன்.
448. அகன்றான் அகலிடம் ஏழும்ஒன் றாகி
இவன்தான் என்நின்று எளியனும் அல்லன் சிவன்தான் பலபல சீவனும் ஆகி நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே.
பொருள் : இறைவன், அகன்ற இடமாக உள்ள இவ்வுலகம் ஏழுடனும் ஒன்றாகப் பொருந்தியும் இவற்றைக் கடந்தும் உள்ளான். இவ்வாறு இவன் உடனாயிருப்பினும் எளிமையில் காட்சிப் படுபவன் அல்லன். சிவனே பலவாகவுள்ள சீவரிடம் வியாபித்து அவனை விரும்பினவருக்கு அவரவரிடம் பொருந்தி உபதேசம் செய்தருளுவான்.
449. உள்நின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்நின்று விரும்பும் விழுப்பொருள் மண்நின்ற வானோர் புகழ்திரு மேனியன் கண்நின்ற மாமணி மாபோத மாமே.
பொருள் : உள்ளே எழுகின்ற சோதியானது உயிர் பொருந்தி நிற்கும் ஓர் உடலாகவும் விண்ணுலகிலுள்ள தேவர்கள் விரும்புகின்ற மேலான பொருளாகவும் மண்ணுலகத்தில் பக்குவம் பெற்ற மேலோர் புகழும் திருமேனியாகவும் கண்ணிலே விளங்குகின்ற மணியாகவும் பெரிய ஞானமாகவும் உள்ளது. (மாமணி என்பதற்குத் திரு ஐந்தெழுத்து எனவும் பொருள் கொள்ளலாம்.)
450. ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலும் கடத்திலே நீரினிற் பால்போல் நிற்கின்ற நேர்மையைச் சேராமற் காணும் சுகம்அறிந் தேனே.
பொருள் : யாவரும் அறிய முடியாத அண்டத்திலுள்ள திருவுருவை பூமி முதலாகப் பொருந்திய சரீரத்தில், நீரினில் பால்கலந்து பால்போல் நிற்கும் தன்மையை அயர்ச்சியை அடையாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இன்பத்தை நான் பெற்றேன். சேராமல் - மறந்துவிடாமல் சுகம் பேரின்பம்.
14. கர்ப்பக் கிரியை
(கர்ப்பத்தில் செய்யப்படும் தொழில் கர்ப்பக் கிரியை எனப்படும். இறைவன் சீவர்களைக் கருப்பையில் இருந்து காக்கும் முறைமை இங்குக் கூறப்பெறும்.)
451. ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்சு
ஆக்குகின் றான்அவன் ஆதிஎம் ஆருயிர் ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்து ஆக்குகின் றான்அவன் ஆவது அறிந்தே.
பொருள் : இறப்பின் போது பிரிந்த இருபத்தைந்து தத்துவங்களைத் தோற்றுவிக்கின்றான். ஆதியாகிய அவ் இறைவன் அருமையான் உயிரைத் தத்துவங்களோடு சேர்க்கிறான். அவன் மாதாவின் கருப்பையில் பொருந்தி உயிர்களுக்கு உதவுகிறான். அவன் உடல் வளர்ச்சிக்குத் தேவையை அறிந்தே எல்லாம் செய்கின்றான்.
452. அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப் பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப் பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.
பொருள் : யோகியர் அறிகின்ற மூலாதாரத்தின் மேல் நெருப்பும் நீரும் செறிந்துள்ள ஞானபூமியில், திருவடியைப் பதித்து, பொறையுடனுள்ள இனிமையான உயிரைக் கருவில் புகும் வண்ணம் எண்ணிக் கருவினின்றும் நீங்குகின்ற பத்து மாதகால வரையறையை அதற்கு இறைவன் நியமித்தருளினான்.
453. இன்புறு காலத்து இருவர்முன்பு ஊறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன் பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும் அன்புறு காலத்து அமைத்துஒழிந் தானே.
பொருள் : சிதாகாயத்தில் விளங்கும் இறைவன், தலைவன் தலைவியுமாகிய இருவர் இன்புற்ற போது, சீவன் விட்டுச் சென்ற வினையை அனுபவிப்பதற்கான துயரம் பொருந்திய உடம்பில் பக்குவம் அடையும் காலத்தையும் சீவன் பூமியில் தங்க வேண்டிய கால எல்லையையும் இருவரும் அன்போடு கூடிய காலத்தே அமைத்தருளினான். (முன்பு ஊறிய - அநாதியே ஆன்மாவைப் பற்றியுள்ள.)
454. கருவை ஒழிந்தவம் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்தும்மற் றோரார் திருவின் கருக்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.
பொருள் : கருவை நீங்கினவர் அறிந்த இருபத்தைந்து தத்துவங்களும் ஆண் உடம்பில் தங்கி உருவாவதை மற்றையோர் அறிய மாட்டார். அக்கரு பின் பெண்ணின் கருப்பையை நாடி அடைந்த ஆணும் பெண்ணுமாகிய இரண்டு உருவமாக ஓடிப் பாய்ந்தது. (வெண்ணீர் - சுக்கிலம்; செந்நீர் - சுரோணிதம். கருவை ஒழிந்தவர் ஞானியர்)
455. விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்து ஈரைந்தோடு ஏறிப் பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம் ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளிந்ததே.
பொருள் : ஆண் பெண் சேர்க்கையில் யோனிவிரிந்து இலிங்கத்தினின்றும் சுக்கிலம் விழுந்தது. நீங்கிய புருடன் என்ற தத்துவம் தன் மாத்திரைகள் ஐந்தும் ஞானேந்திரியம் ஐந்தும் கன்மேந்திரியம் ஐந்துடன் கூடி, தன்மாத்திரைகளினின்றும் தோன்றிய நீர் முதலான ஐந்து பூதம் போற்றுதலுக்கு உரிய நான்கு அந்தக் கரணங்களுடன் நீங்கிய நெற்றியின் உச்சியுள் ஒளிந்தது. (ஞானேந்திரியம் அறிதற்கருவி. கருமேந்திரியம் - செய்தற்கருவி)
456. பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல் மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவும் கூவி அவிழும் குறிக்கொண்ட போதே.
பொருள் : பூவினில் உள்ள வாசனையைப் பொருந்திய காற்றும் உலகில் எங்கும் பரவித் தங்கியிருப்பது போல் கருப்பையில் பொருந்திய கருவினில் மெல்ல நீண்ட தனஞ்சயனம் என்னும் வாயுவும் குறிப்பிட்ட காலத்தில் இரைந்து கொண்டு உள்ளே செல்லும். (நீள் வாயு - தனஞ்சயன்)
457. போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டுடன் நாலு புரவியும் பாகன் விடான்எனில் பன்றியு மாமே.
பொருள் : அருவமாய்ப் போகின்ற புரியட்டக சரீரமும், உள்ளே புகுகின்ற தச வாயுக்களும் காமாதி அஷ்ட விகாரங்களும் இவற்றுள் அமிழ்ந்துள்ள புருடனும், நவத்துவாரங்களும், குண்டலியாகிய நாதமும் பன்னிரண்டு விரற்கடை செல்லும் பிராணனாகிய குதிரையும் இறைவனாகிய பாகன் செலுத்தாவிடில் பன்றியைப் போல் இழிந்த பிறப்பாய்விடும்.
458. ஏற எதிர்க்கில் இறையவன் தானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் தானாகும் நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும் பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே
பொருள் : கூட்டுறவின் போது சுக்கில் சுரோணித கலப்பில் சுக்கிலம் எதிர்த்துச் சென்றால் பிறக்கும் குழந்தை இறையவனைப் போன்றிருப்பான். சுரோணிதம் மாறி எதிர்த்துவரின் அப்போது பிறக்கும் குழந்தை திருமாலைப் போன்றிருப்பான். சுக்கில் சுரோணிதமாகிய இரண்டும் சமமாகப் பொருந்தினால் அப்போது பிறக்கும் குழந்தை பிரமனைப் போன்றிருப்பான். மூவரது தன்மையும் பொருந்தியிருந்தால் பேரரசனாய்ப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆளுவான்.
459. ஏய்அங்கு அலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல காயம் கலந்தது காணப் பதிந்தபின் மாயம் கலந்த மனோலய மானதே.
பொருள் : பல புலன்களில் பொருந்தி வருந்தின ஆண் பெண்ணாகிய இருவரது வண்ணத்தில் வெளியாகிற கரு உருவாகும் என்றபடி, பல பிறவியில் பல உடம்பில் பொருந்திய அக்கரு நன்றாகப் பதிந்த பிறகு மயக்கம் பொருந்திய இருவரது மனமும் ஒருமைப் பாடுற்றது. மனோயம்-உள்ளத்து ஒற்றுமை.
460. கர்ப்பத்துக் கேவலம் மாயாள் கிளைகூட்ட
நிற்கும் துரியமும் பேதித்து நினைவுஎழ வற்புறு காமியம் எட்டாதல் மாயேயம் சொற்புறு தூய்மறை வாக்கினாம் சொல்லே.
பொருள் : கருப்பையில் அறியா நிலையிலுள்ள சிசுவுக்கு மாயை தத்துவங்களைச் சேர்க்க, அமைந்து நிற்கும் பேருறக்க நிலை நீங்கிச் சிசுவுக்கு நினைவு உண்டாக வலிமைமிக்க மாயையின் காரியமாகிய அராகாதி எட்டுக் குணங்களும் சுத்த மாயையினின்றும் தோன்றும் நால்வகை வாக்கினின்று சொல்லும் ஆகும்.
461. என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும் நண்பால் ஒருவனை நாடுகின் றேனே.
பொருள் : எலும்புகளால் பின்னி நரம்புகளாகிய கயிற்றால் வரிந்து கட்டி, இரத்தத்தோடு கூடிய இறைச்சியால் திருத்தமாக வீட்டை அமைத்து இன்பத்தையுடைய உயிர் தாங்கும் உடம்பினைச் செய்த இறைவனிடத்து ஓங்கும் காதலால் ஒப்பற்ற அப் பெருமானைத் தேடுகின்றேன்.
462. பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்
இதஞ்செய்யும் ஒத்துஉடல் எங்கும் புகுந்து குதஞ்செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான் விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.
பொருள் : சீவர்களைப் பக்குவஞ் செய்யும் பால் வண்ணனாகிய சூரியப் பிரகாசம் போன்ற மேனியையுடைய சதாசிவன் உடலில் எங்கும் நீக்கமற நிறைந்து நன்மையைச் செய்வான். குதத்தானத்திலிருந்து தூண்டி நடத்தும் மூலாக்கினியின் வேகத்தைத் தணிப்பதற்காக இன்பம் பெறும்படியான நியதியை அமைத் தருளினான்.
463. ஒழிபல செய்யும் வினையுற்ற நான
வழிபல நீராட்டி வைத்தெழு வாங்கி பழிபல செய்கின்ற பாசக் கருவைச் சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.
பொருள் : பழியான காரியங்களைச் செய்கின்ற பாசத்தில் கட்டுப்பட்ட கருவை, பலவாகிய சுழல்களினின்றும் எடுத்து அழியாது காப்பாற்றினான். மேலும் வினை பொருந்திய காலத்தே பலவகையாகத் தூய்மையாக்கிச் சிசுவை மேலெழும்படி செய்து வினையை நீங்கும்படி இறைவன் செய்வான்.
464. சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றும்அவ் யோனியும் புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல் அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.
பொருள் : ஆண் பெண் கூட்டுறவால் சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளை நிறமான சுக்கிலமும் அவ்வாறே யோனியினின்றும் தோன்றும் செந்நிறமான சுரோணிதமும் எட்டு விரற்கடையளவு புறப்பட்டு நான்கு விரற்கடையளவு உள்ளே போகும். அப்போது பஞ்சபூத அக்கரங்களாகிய ஐந்து அகரமாகிய நாதமும் உகரமாகிய விந்துவும் மகரமாகிய மாயையும் சேர்ந்து எட்டுச் சாண்அளவு உடம்பு சிசுவுக்கு உண்டாகும்.
465. போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகம் கொணர்ந்த கொடைத்தொழில் ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து மேகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.
பொருள் : இன்பத்துள் பொருந்திய இறைவனும் கருவில் உடம்பைத் தந்த கொடைச் செயலால் ஆண் பெண் கூட்டுறவால் முப்பத்தொரு தத்துவங்களைச் சேர்ந்து இருவரது மயக்க நிலையில் ஒரு கருவாகிய முட்டையைத் தந்தருளினான்.
466. பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
பிண்டத்துள் ஊடே பிறந்து மரித்தது அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை அண்டத்து நரத்து அமர்ந்திருந் தானே.
பொருள் : பிண்டமாகிய இவ்வுடம்பினுள்ளே அறியாமை நிறைந்த புலன்கள் ஐந்தும் உடம்பில் தோன்றி உடம்பு அழிந்தபோது அவையும் செயலற்று அழிந்தன. உடம்பைச் சுற்றியுள்ள அண்ட கோசத்தின் உள்மேயுற்ற சீவனும் அவ்வாறே பக்குவம் பெற்ற போது தன் செயலற்று நாத தத்துவத்தில் ஒடுங்கும். (பேதைப்புலன் - அறிவற்ற புலன்)
467. இலைப்பெறி யேற்றி எனதுடல் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துடன் ஆட்டி நிலைப்பொறி முப்பது நீர்மை கெளுவி உடலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.
பொருள் : இறைவன் மாயையால் உண்டாக்கிய உடம்பைத் துலாக்கோல் போல் செலுத்தும் சிவ தத்துவத்தில் அகர உகர மகர விந்து நாத மாகிய பிரணவத்தில் கருவை இயக்கி சீவனை நிலைக்க வைக்கும் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும், புருட தத்துவம் நீங்கிய வித்தியா தத்துவம் ஆறும் சீவனது இயல்புக்கு ஏற்பக் கூட்டி உடம்பாகிய பொறியில் ஒன்பது துவாரங்களையும் அமைத்தருளினான். (உலைப்பொறி - சரீரம்)
468. இன்புற்று இருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு வெந்தது துளை விளைந்தது தானே.
பொருள் : சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்த தாயும் தந்தையுமாகிய இருவரும் மனமொன்றி வைத்த மண்ணாலான துன்பமயமான குடத்துள்ளே சேர்ந்தவன் ஆன்மா ஒருவனே. அத்துடன் ஒன்பது வாயில்களாகிய நீர்ச்சாலும் புரியட்டமாகிய எட்டும் ஞானேந்திரிய கன்மேந்திரிய மாகிய பத்தும் ஆக பதினெட்டுக் கலசமும் அந்தக் கருப்பையாகிய சூளையில் வெந்து பக்குமாயின.
469. அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும்
பிறியீர் அதனில் பெருகுங் குணங்கள் செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்டது அறியஈ ரைத்தினுள் ஆனது பிண்டமே.
பொருள் : உடம்பினுள் கொளுந்திய ஆறு துன்பங்களையும் அறியாது உள்ளீர். அங்கு மனத்தினுள்ளே பெருகிக் கொண்டிருக்கும் தாமத இராசத சாத்துவிகமாகிய குணங்களினின்றும் பிரியாதுள்ளீர். அங்குச் சித்திகள் அமைவதைப்பொருந்தாதீர். உணரின் பத்து மாதங்களில் ஆகியது இப்பிண்டமாகும். ஆறுதுன்பங்களாவன; பேறு, இழவு, துன்பம், பிணி, மூப்பு, சாக்காடு என்பன.
470. உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத் திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக் கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.
பொருள் : உடலை மாயை யினின்றும் தோற்றுவித்தவாறும் உடம்பினுள் உயிரை அமைத்து உறுதியான ஆயிர இதழ்த் தாமரையோடு கூடியசிரசில் அக்கினியில் இறுதிநிலை வைத்த இறைவனைச் சுழுமுனையில் கூடினேன்.
471. கேட்டுநின் றேன் எங்கும் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுநின் றான்முதல் யோனி மயன்அவன் கூட்டுநின் றான்குழம் பின்கரு வையுரு நீட்டிநின்று ஆகத்து நேர்பட்ட வாறே.
பொருள் : எவ்விடத்தும் தனக்கொரு கேடில்லாத ஒளிவடிவமான பெருமான் கருவுக் கெல்லாம் கருவாயிருந்து ஆதி சிருட்டியை அருளுகிறான். அப் பெருமான் குழம்பான கருவைச் சீவனோடு சேர்ப்பிக்கின்றான். அதனை உருவாக நீட்டி உடனாய் நின்று உடம்பில் எழுந்தருளியுள்ளதை அடியேன் கேட்டு நின்றேன்.
472. பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபம் கலந்து பிறந்திடும் நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப் பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.
பொருள் : பூப்போன்ற யோனியும் மொட்டுப் போன்ற லிங்கமும் பொருந்த மலர்ந்தபின், சுக்கில சுரோணிதக் கலப்பால் ஒளி மயமான சீவ அணு உண்டாகும். நீரிடை எங்கும் பரந்து நின்ற குமிழியின் நிழல் போன்று புரியட்டக சரீரத்திலுள்ள சீவ அணு உடம் பெங்கும் கலந்து விடும். குமிழி-சீவ அணு எட்டு - புரியட்டக சரீரம். காவுடைத் தீபம் - கரு.
473. எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும் ஒட்டிய பாச உணர்வென்னும் காயப்பை கட்டி அவிழ்த்திடும் கண்ணுதல் காணுமே.
பொருள் : முற்கூறிய எட்டனுள் மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து இந்திரியங்களும், அவற்றோடு தொடர்புடைய மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்று அந்தக்கரணங்களும் ஆகும். அவற்றோடு சேர்ந்த ஆசா பாசங்களும் ஏற்ப உண்டாகிய உடம்பைப் பெருமானே முதலில் சேர்த்துப் பின்னர் அவிழ்த்து விடுவான், நீங்கள் அதனைக் காணுங்கள்.
474. கண்ணுதல் நாமம் கலந்துஉடம்பு ஆயிடைப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை மண்முத லாக வருத்துவைத் தானே.
பொருள் : இறைவனது நாமமாகிய பிரணவத்தைக் கலந்து, உடம்பினில் நாதம் விளங்குமாறு செய்து, பசுத் தன்மையும் நீங்குமாறு நான்கு இதழ்களையுடைய மூலாதாரச் சக்கரத்தினால் உணர்த்தப்படும் பரப்பு அனைத்தையும் பிருதிவி தத்துவத்திலிருந்து தொடங்குகின்ற நியதியை வைத்துள்ளான். (கண்ணு ல் நாமம் - நமச்சிவாய)
475. அருளல்லது இல்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத் தருகின்ற போதுஇரு கைத்தாயர் தம்பால் வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.
பொருள் : சத்தியின்றிச் சிவன் இல்லை. இனிச் சிவன் இன்றிச் சத்தியும் இல்லை. ஆதலால் அச்சிறப்பான உயிர்க்கு உடம்பைத் தருகின்றபோது, இரு செவிலித்தாய் மாட்டு வைக்கும் அன்பை அமைத்து அருளினான். (இருகைத்தாயர் - குண்டலினி சத்தி, சிற்சத்தி ஆகிய இருதாயர், கிரியையும் ஞானமும் விளங்க இருவரின் உதவியும் சீவனுக்குத் தேவை என்க)
476. வகுத்த பிறவியின் மாதுநல் லாளும்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும் பகுத்துணர் வாகிய பல்லுயிர் எல்லாம் வகுத்துள்ளும் நின்ற தோர் மாண்பது வாமே.
பொருள் : அவரவர் வினைக் கீடாக வகுக்கப் பெற்ற பிறவியில் நல்ல சத்தியும் சத்திக் கேற்ற சோதி வடிவான இறைவனும், பல வகைத் திறத்தினுள்ள உணர்வு மயமான பல உயிர்கட்கு எல்லாம் வகை செய்யுமாறு அவ் அவற்றின் உயிர்க்கு உயிராய் நிற்கின்ற சிறந்த பொருளாகும்.
477. மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்
காண்பதுஆண்பெண் அலிஎயனும் கற்பனை பூண்பது மாதா பிதாவழி போலவே ஆம்பதி செய்தான் அச்சோதிதன் ஆண்மையே
பொருள் : பெருமையோடு வளர்க்கின்ற ஒளியாகிய உயிரை ஆணாகவோ பெண்ணாகவோ அலியாகவோ காண்பது கற்பனையாகும். அது தாய் தந்தையின் தன்மையைக் கொண்டிருக்கும். அவ்வாறாகும் உயிருக் கேற்ற உடம்பினைப் படைத்தல் அச் சோதியாகிய இறைவனது வல்லமை யாகும். உயிருக்கு ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை. உடம்பில்தான் ஆண் பெண் வேறுபாடாகும்.
478. ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூண்இரண்டும் ஒத்துப் பொருந்தில் அலியாகும் தாள்மிகு மாகில் தரணி முழுதாளும் பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.
பொருள் : கூட்டுறவின் போது ஆண் பண்பு மிகுந்தால் சிசு ஆணாகும். பெண் பண்பு மிகுந்தால் சிசு பெண்ணாகும். ஆண் பெண் குணம் சமமாகில் சிசு அலியாகும். பெண்ணின் நீக்க நிலைக்கும் கடந்த பூமானாகில் உலகை ஆளத்தக்க குழவியாகும். கூட்டுறவின் போது தாழ்ச்சி மனப்பான்மையிருந்தால் சுக்கிலம் பாய்வது நின்றுவிடும். (தாள் - முயற்சி, பாண் - தாழ்ச்சி)
479. பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம் பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந்து இவ்வகை பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே.
பொருள் : சுக்கிலமானது ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்று கடை ஓடி விழுந்தால் பிறக்கும் குழந்தையின் ஆயுள் நூறாண்டாகும். நான்கு விற்கடை ஓடிவிழுந்தால் ஆயுள் எண்பதாகும். சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவினை நன்றாக உணர்ந்து இவ்வகையாக ஓடி விழும்படி செய்யும் யோகிக்குச் செலுத்த முடியும்.
480. பாய்கின்ற வாயுக் குறையில் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும் காய்கின்ற வாயு நடுப்படில் கூனாகும் பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே.
பொருள் : சுக்கிலத்தைச் செலுத்துகின்ற வாயு குறையுமானால் குழந்தை குட்டையாக இருக்கும். அவ்வாறு செல்லுகின்ற வாயு மெலிந்திடின் குழந்தை முடமாகும். அவ்வாயு தடைப்படின் குழந்தை கூனாகும். ஆராயின் பெண்களுக்குச் செலுத்துகின்றவாயு இல்லை.
481. மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம் மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை மாதா உதரத்தில் வைத்த குழவிக்கே
பொருள் : தாயின் வயிற்றில் கருவாய் அமைந்த குழந்தைக்கு அவள் வயிற்றில் மலம் மிகுமானால் அக்குழந்தை மந்தபுத்தி உள்ளவனாவான். அவ் வயிற்றில் நீர் மிகுந்தால் அக் குழந்தை ஊமையாகும். மலம்நீர் இரண்டும் அங்கு மிகுமாயின் அக்குழந்தை குருடாம்.
482. குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.
பொருள் : போக காலத்தில் ஆண்மகனிடம் பிராணன் சூரிய கலையில் (வல நாசியில்) இயங்குமாயின் ஆண் குழந்தையாகும். அப்போது சந்திர கலையில் (இட நாசியில் இயங்குமாயின் பெண் குழந்தையாம். சுக்கிலத்தைச் செலுத்தும் பிராண வாயுவோடு அபானன் என்னும் மலக் காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும். சூரிய கலை சந்திரகலை ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகும்.)
483. கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும் கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில் கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே.
பொருள் : பிராணவாயு, புணரும் இருவருக்கும் ஒத்து இயங்குமாயின் கருவுட் கொண்ட குழந்தையும் அழகாக இருக்கும். அக் காலத்து இருவர்க்கும் பிராணவாயு தடுமாறினால், பெண்ணுக்குக் கரு உண்டாதற்கான வாய்ப்பு இல்லையாம்.
484. கோல்வளை உந்தியில் கொண்ட குழவியும்
தால்வலை யுள்ளே தயங்கிய சோதியாம் பல்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப் போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.
பொருள் : பெண்ணினது கருப்பாசயத்தில் ஏற்றுக் கொண்ட குழந்தையும் அண்ணாக்கினுள்ளே விளங்கும் சோதி போன்றதாம். அஃது ஆணாகவோ பெண்ணாகவோ வளர்ந்து சூரியனது பொன்னுருவைப் போன்று வளர்ச்சி யுற்றுப் பூரணமான உருவத்தைப் பெறும். (தால்வளை - அண்ணத்தின் கண்ணதாம் தொளை)
485. உருவம் வளர்ந்திடும் ஒண்திங்கள் பத்தில்
பருவமது ஆகவே பாரினில் வந்திடும் மருவி வளர்ந்திடு மாயையி னாலே அருவமது ஆவதுஇங்கு ஆர்அறி வாரே.
பொருள் : உருவமானது நியதியான பத்து மாதங்கள் கருப்பையில் வளரும், பக்குவம் உண்டாகவே அச்சிசு பூமியில் பிறந்து வளரும், மாயை யாகிய வளர்ப்புத் தாயோடு பொருந்தி வளர்ந்திடும். ஆனால் அவ்வுடம்பினுள் பொருந்திய உயிர் வடிவமில்லாதது என்பதை யார் அறிவார் ? (ஒருவரும் அறிய மாட்டார்)
486. இட்டான் அறிந்திலன் ஏற்றவன் கண்டிலன்
தட்டான் அறிந்தும் ஒருவர்க்கும் உரைத்திலன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன் கெட்டேன் இம்மாயையின் கீழ்மைஎவ் வாறே
பொருள் : வித்திட்ட தந்தையும் என்ன குழந்தை என்பதை அறியவில்லை. அதனை ஏற்றுக்கொண்ட தாயும் அந்த விவரத்தை அறியவில்லை. காரணத்துக் கேற்பக் காரியம் செய்யும் பிரமனாகிய தட்டானும் அறிந்தவனாயினும் ஒருவருக்கும் சொல்லவில்லை. அந்நியதியை அமைத்துக் கொடுக்கும் சதாசிவனும் அங்கேயிருக்கிறான். என்னே இம்மாயையின் மயக்குந் தன்மை இருந்தவாறு ! (தட்டான் - சிவன் என்றும் சிலர் பொருள் கொள்வர்.)
487. இன்புற நாடி இருவரும் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின் முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே.
பொருள் : இன்ப நாட்டத்தை விரும்பிய இருவர் கூட்டத்துத் துன்பம் பொருந்தும் பாசத்தில் தோன்றிய சிசு துன்பத்தில் வளர்ந்த பின்னர் மேன்மை பெற விரும்பி உலகில் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியுள்ள பழமைக்கும் பழமையான இறை வனைப் பொருந்த நாடி ஏத்தலுமாகும்.
488. குயிற்குஞ்சு முட்டையைக் காக்ககைக்கூட்டு இட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல் இயக்கில்லைப் போக்கில்லை ஏன்என்பது இல்லை மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.
பொருள் : குயிலின் முட்டையைக் காக்கையின் கூட்டில் வைத்தால் சந்தேகமின்றிக் காக்கை வளர்ப்பது போன்று இயக்கமில்லாமலும் போக்கில்லாமலும் ஏன் என்று வினவாமலும் தாயும் மயக்கத்தினால் உடம்பை வளர்க்கின்ற முறை இதுவாம். (காக்கைக் கூட்டில் குயில் முட்டையிடும் என்பதைக் குறிக்கின்றார்.)
489. முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதற்புத் லாய்ப்பல மாய்நின் றளிக்கும் அதற்கது வாய்இன்பம் ஆவது போல அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.
பொருள் : தாவரமானது முதலில் கிழங்காய் இருந்தது. முளையாய் முளைக்குப்பின் அதன் புதராய், பின் பழமாய்ப் பயனைத் தரும். அதுவே அத்தாவரத்திற்கு இன்பமாக அமைவது போன்று எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பயன் அளிப்பதே ஆதியாகிய குறைவனுக்கு இன்பமாம்.
490. ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை
ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்குளன் வானோர் அறியும் அளவல்ல மாதேவன் தானே அறியும் தவத்தின் உள்ளே.
பொருள் : மற்றைய தேவர்களைக் காட்டிலும் பெருமை உடையவன் ஆகிலும் எம் இறைவனாகிய பரமேசுவரன் ஊன் உடலிலுள்ள குற்றங்களிலும் தான் கலந்து அற்றினூடே விளங்குகின்றான். அப்படிப்பட்ட தேவதேவனை வானோர்களாலும் அறிய முடியாமல் மக்களே தாம் தங்கள் தவ வலிமையால் காண முடியும்.
491. பரத்திற் கரைந்து பதித்தநற் காயம்
உருத்தரித்து இவ்வுடல் ஓங்கிட வேண்டித் திரைக்கடல் உபபுத் திரண்டது போலத் திரித்துப் பிறக்கும் திருவுரு ளாலே.
பொருள் : மேலான பரம்பொருளினிடத்துச் சூக்குமமாய் ஒடுங்கிய நல்ல உடம்பு மீண்டும் பக்குவத்துக்கேற்பப் பயனை அடைய வேண்டி அலை கடலில் சூரிய வெப்பத்தால் உப்புத் திரண்டு உருவம் அடைவது போல இறைவனது அருளால் மீண்டும் தூல உடம்பு கருவில் உருவாகிறது.
15. மூவகைச் சீவ வர்க்கம்
(மூவகைச் சீவ வர்க்கம் என்பது விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்றபடி விஞ்ஞானகலர் ஆணவமலர் ஒன்று மட்டும் உடையவர். பிரளயகலர் ஆணவம் கன்மம் என இருமலமுடையவர். சகலர் ஆணவம், கன்மம், மாயையென மும்மலமுடையவர்.)
492. சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி
ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச் சுத்தமது ஆகும் துரியம் புரிவித்துச் சித்தம் புகுந்து சிவமயம் ஆக்குமே.
பொருள் : சத்தியும் சிவனும் விளையாட்டாக உயிரைச் சூக்கும சரீரத்தில் பொருத்தி, சுத்தமும் அசுத்தமுமாகிய இரு மாயையுள் கூட்டுவித்து, சுத்தமாகிய மேலாம் நிலத்தை எய்துவித்து, சீவர்களது சித்தத்தில் விளங்கித் துரிய நிலையில் சீவரூபம் பெற அருளும்.
493. விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத்து
அஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின் அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம் விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே.
பொருள் : தெளிந்த ஞானமுடையோராகிய விஞ்ஞானகலர் நால்வகையினரும் பிரளயா காலத்தில் அந்த ஞானத்தைப் பெறும் பிரளயகலர் மூவகையினரும், உலக வாழ்வில் பொருந்தி அறியாமையுடைய சகலர் மூவகையினருமாக விஞ்ஞானகலராதிய மூவகைச் சீவவர்க்கமும் பத்துப் பிரிவினதாகும்.
494. விஞ்ஞானர் கேவலத் தார்அது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசராம் சார்ந்துளோர் எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர் மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.
பொருள் : விஞ்ஞானகலர் ஆணவ மலர் மட்டும் உடையோராகிய தன்னலம் விட்டவரும், ஆன்ம ஞானம் உடையவராகிய அட்ட வித்தியே சுரபதம் சார்ந்தோரும், உயர்ந்த ஞானமுடையோராகிய ஏழு கோடி மந்திரேசுரரும் உண்மையான ஞானமுடையோராகிய ஆணவமல வாசனையும் விட்டு நின்றவருமாக நால்வகையினராம்.
495. இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர் இரண்டாகும் நூற்றெட்டு ருத்திரர் என்பர் முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.
பொருள் : விஞ்ஞானகலரில் பக்குவம் குறைந்தோர் உடலுடன் கூடியிருந்தபோத சீவன் முத்தி அடையாமல் அடுத்த பிறவியில் சிவனை அடைவர். அவ்வளவே இருமலமுடைய இரண்டாவது பிரிவினரான பிரளயகாலர், இரண்டு பிறவிகளில் நூற்றெட்டு உருத்திரர் பதமடைவர் என்பர். மாயையின் வலிமையால் பிணிக்கப்பட்ட சகலர் மும்மலம் கெடாது உள்ளவராவர்.
496. பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட்டு இரண்டிடை ஊடுற்றார் சித்துமாய் மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார் சத்தத்து அமிழ்ந்து சகலத்து ளாரே.
பொருள் : மும்மலமுடைய சகலரில் சிலர் சித்தாகிய சிவத்தைப் பேணி ஞானமும் வடிவான சிவமாயினர். ஞானமும் கிரியையும் ஒத்துச் சதாசிவ நிலையில் பற்றி நின்றவர், ஞான வடிவாய் மும்மலங்களைக் கடந்து மேல் நிற்பவராவர். ஞானமும் கிரியையும் ஒத்து மும்மலத்தை நீக்க மாட்டாதார் நாத தத்துவம் வெளிப்படாமல் சகல ராவார்.
497. சிவமாகி ஐவகைத் திண்மலம் செற்றோர்
அவமாகச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார் பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர் நவமான தத்துவம் நாடிக் கொண்டாரே.
பொருள் : சிவமாகி ஐவகையான வலிமையுள்ள மலங்களையும் வென்றவர். வீண்போகாத சித்தராய் முத்தி பெற்று அழியாத நிலையில் இருப்பர். பசுபாசத் தன்மைகள் நீங்கப் பெற்றவராய் அவர் பிறவியினின்றும் நீங்குவர். அவர் சிவனது ஒன்பது நிலையையும் விரும்பிக் கொண்டவராவர்.
498. விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மயையில் தங்கும் இருமலர் அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம் விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.
பொருள் : விஞ்ஞானகலர் ஆணவமாகிய ஒரு மலர் மட்டும் உடையவர் (அணு சதாசிவர்) விஞ்ஞானரைப் போன்று சுத்த மாயையில் உள்ள பிரளயாகலர் இருமலம் உடையவர். (அட்ட வித்தியேசர் முதலியோர்) கருவிகொண்டு உணரும் சகலரும் அஞ்ஞானத்தால் அறிவில்லாதவராவர். இம்மூவகையிலும் உள்ள உயிர் வருக்கங்கள் உத்தம மத்திம அதமமான தகுதி என்று ஒவ்வொரு பிரிவிலும் மும்மூன்றாய் ஒன்பது வகையுள்ளன.
499. விஞ்ஞான கன்மத்தால் செய்யகங் கூடி
அஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்கு எஞ்ஞான செய்தீண்டி யேயிடை யிட்டுப்போய் மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.
பொருள் : விஞ்ஞானகலர் மேலான ஞான கன்மத்தினால் உள்நின்று உணர்த்தப் பெற்றும், பிரளயகாலர் உள்நின்று உணர்த்தப் பெறாமையால் சுத்த வித்தியா மண்டலங்களை அடைந்தும், சகலர் ஞானம் படிப்படியாகப் பெற மாயா சரீரத்தைக் கொண்டு மீளமீள வந்து பிறந்தும், உண்மை ஞானத்தைப் பெற்றுச் சிவ சாயுச்சியம் பெறுதல் உறுதியாம். சுவர்யோனி - தேவப் பிறப்பு
500. ஆணவம் துற்ற அவித்தா நனவற்றோர்
காணிய விந்துவாம் நாத சகலாதி ஆணவம் ஆதி யடைந்தோர் அவரன்றே சேணுயர் சத்தி சிவதத் துவம் ஆமே.
பொருள் : ஆணவம், செறிந்துள்ள அஞ்ஞானத்தை நனவிலும் நீங்கியவர், விந்து நாதம் ஆகியவற்றைச் சகல நிலையில் (தேகத்துடனே) காண முடியும். ஆணவம் முதலான மலங்களைப் பொருந்திய சகலர்களோ மிக மேலான சிவ தத்துவ மண்டலங்களை மல நீக்கம் பெற்ற பின்னரே அடைவர்.
16. பாத்திரம்
(பாத்திரம் - கொள்கலன். அஃதாவது அறவழியில் ஈட்டிய பொருளைச் சேம வைப்பாக வைக்கும் இடமாகும். அதற்கு உரியவர் சிவ ஞானியராவர்)
501. திலமத் தனைபொன் சிவஞானிக்கு ஈந்தால்
பலமுத்தி சித்தி பரபோக மும்தரும் நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால் பலமும்அற் றேபர போகமும் குன்றுமே.
பொருள் : எள் அளவு பொன்னைச் சிவஞானிக்குக் கொடுத்தால் அதன் பயன் மறுமைக்கு முத்தியும் இம்மைக்குச் சித்தியும் போகமும் உண்டாகும். பூமியளவு பொன்னை அஞ்ஞானிகளுக்குக் கொடுத்தால் பயனும் இல்லை; மறுமை இன்பமும் இல்லை. (பரபோகம் - திருவடிப் பேறு)
502. கண்டிருந்து ஆருயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந்து ஆருயிர் கொள்ளும் குணத்தனை நன்றுணர்ந் தார்க்குஅருள் செய்திடு நாதனைச் சென்றுணர்ந் தார்சிலர் தேவரும் ஆமே.
பொருள் : காலம் வரும் வரை பாத்திருந்து உயிரைக் கவர்ந்து செல்லும் காலனை, செலுத்தியிருந்து ஏற்றுக் கொள்ளும் எண் குணத்தானும் நன்றாக அவனது உயிர்க்கு உயிராந் தன்மையை உணர்ந்தார்க்கு அருள்புரியும் நாதனு மாகிய இறைவனை அவன் விளங்கும் விந்து நாத மண்டலங்களில் சென்றுணர்ந்தவர் சிலர் ஒளி மண்டல வாசிகளாவர்.
503. கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து
மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன் பொய்விட்டு நானே புரிசடை யான்அடி நெய்விட் டிலாத இடிஞ்சலும் ஆமே.
பொருள் : நான் தாய் வயிற்றில் கருவாய் இருந்தபோது சிவஞானத்தையே பற்றியிருந்தேன். மெய்ப் பொருளாம் இறைவனது திருவடியை உடம்போடு கூடியிருந்த போதும் நீங்காதிருந்தேன். பின் பொய்யாகிய உடம்பை விட்டு ஒளி மயமான திருவடியை நான் தேடுவேன். அது நெய்விட்டு எரியாத தூண்டா விளக்காகும்.
504. ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன் ஏவன செய்யும் இளங்கிளை யோனே.
பொருள் : போகப் பொருள்கள் வருவன வரும். அவை நீங்குவன நீங்கும். கழிக்கப் பெறும் வினைகள் கழியும். அனுபவிக்க வேண்டி வருவன வந்து சேரும். ஆகையால் இவற்றை இறைவன் காட்டியருளக் கண்டிருப்பவனே அவன் ஆணையின் வண்ணம் செயலாற்றுகின்ற முதல் தகுதி உடையவன் ஆவான்.
17. அபாத்திரம்
(பாத்திரம் அல்லாதது அபாத்திரம், சற் பத்திரத்திற்கு ஈவது பயனுண்டு என்று முன் கூறிய ஆசிரியர் அசற் பாத்திரத்திற்கு ஈவதில் பயனில்லை என்று இங்குக் கூறுகிறார்.)
505. கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும் சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது காலம் கழிந்த பயிரது ஆகுமே.
பொருள் : அழகான வறட்டுப் பசுவுக்குக் குனிந்து நிமிர்ந்து பசுந்தழையிட்டு பாலைக் கறந்து குடிப்பது போலாகும், ஒழுக்கமும் விரதமும் இல்லாதவர்க்கு ஈவது மேலும் பருவம் தப்பிச் செய்த பயிரையும் போலப் பயனற்றதாகும். வறட்டை - கன்று ஈனாப்பசு. (மலட்டுப் பசு)
506. ஈவது யோக இயம நியமங்கள்
சார்வது அறிந்துஅன்பு தங்கும் அவர்க்குஅன்றி ஆவது அறிந்துஅன்பு தங்கா தவர்களுக்கு ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே.
பொருள் : (ஈவ-ஈவது) யோகத்துக்குத் தவிர்க்க வேண்டியவைகளையும் கொள்ள வேண்டியவைகளையும் அறிந்து அன்புடையார்க்கே தானம் செய்ய வேண்டும். அவ்வாறன்றிச் சார்பறிந்து அன்பு கொள்ளாதவர்க்குத் தானம் செய்வது பெரிய தவறாகும் என்று உலகவரே அறிந்து கொள்ளுங்கள். யோகம் - மனவொடுக்கம்; இயமம் - தீமை அகற்றல்; நியமம் - நன்மை ஆற்றல்.)
507. ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும் காமாதி விட்டோர்க்கும் தரல்தந்து கற்பிப்போன் போமா நரகில் புகான் போதங் கற்கவே
பொருள் : பஞ்சமா பாதகன் நல்லோர்க்குக் கொடுப்பதன் நன்மையை அறியாது கெடுவான். ஆனால் குற்றமற்ற ஞான குருவுக்கும் தூய்மையான பெரியோர்க்கும் காமம் வெகுளி மயக்கம் ஆகிய மூன்றையும் நீங்கினோர்க்கும் அவரவர்க்குக் கொடுத்து அவ்வந் நிலையிலே நிற்கச் செய்பவன் ஞானத்தைப் பெற்றமையால் பஞ்சமா பாதகன் ஆழும் நரகில் புகமாட்டான்.
508. மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவன்என்றே அஞ்சலி அத்தனால் எண்ணி இறைஞ்சாதார்க்கு ஈந்த இருவரும் நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.
பொருள் : மண்மலை போன்று அத்துணை பெரிய பொருளைக் கொடுத்தாலும் சிவனே முன்னின்று அருளுகின்றான் என்று கூப்பிய கையினனாய் எண்ணி வணங்காதருக்குக் கொடுத்த புரவலரும் ஏற்ற இரவலருமாகிய இருவரும் ஏழு வகையான நரகங்களில் அழிந்து உழல்வர்.
18. தீர்த்தம்
(தீர்த்தம் - புகை நீர். புறத்தே காவிரியிலும் கங்கையிலும் தீர்த்தம் உள்ளது போல அகத்தேயும் மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரை தீர்த்தம் உள்ளது. இங்குள்ள தீர்த்தத்தை அறிந்து ஆடவேண்டும் என்கிறார்.)
509. உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின்று ஆடார் வினைகெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனமுடைக் கல்வியி லோரே.
பொருள் : மன மண்டலம் சூழவுள்ள உடம்பில் மூலாதாரம் முதலாகச் சகஸ்ரதளம் ஈறாகவுள்ள இடங்களில் ஏழுதீர்த்தங்கள் உள்ளன. தாம் செய்த வினை நீங்க இவ்விடங்களில் பொருந்தி ஆட மாட்டார், நேர்மை இல்லாத மனம் உடைய அறிவில்லோரே, பூமியில் பள்ளத்திலுள்ள தீர்த்தங்களையும் மலை மேட்டிலுள்ள சுனைகளையும் தேடி அலைவர்.
510. தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான் வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும் தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.
பொருள் : தெளிந்த ஞான முடையாரது சிந்தையில் விளங்கும் சிவன் திருக்கோயில் வழிபாடு செய்பவர்க்குக் குளிர்ச்சியுள்ள பொருளாய்க் காட்சியளிப்பான். காம நெறியில் ஈடுபடுவார்க்கு அடைய முடியாதவனாக உள்ளான். பிராணாயமாய் பயிற்சியாளர்க்கு அவனை ஒரு சமயம் அடைதலும் கூடும்.
511. உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப் பள்ளத்தில் இட்டதோர் பத்துள்ளாமே.
பொருள் : மன மண்டலத்துள்ளே உணருகின்ற ஒப்பற்ற பொருளை, கூடா வொழுக்குடைய கள்ள மனமுடையார் கலந்தறிய மாட்டார். நீர்ப் பிரதேசத்தை விரும்பிப் பாய்ச்சுகின்றவரது தீய செயலானது பள்ளத்திலுள்ள நீரை நீர்ச்சால் கொண்டு மேட்டுக்கு இறைப்பது போலப் பயனற்றதாம். நீர்ச்சால் துவாரங்களோடு இருந்தால் நீரை மேலேற்றிப் பயன்பெற முடியாது.
512. அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதம் சென்று வலங்கொள் மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப் பொறியார் புனல்மூழ்கப் புண்ணியர் ஆமே.
பொருள் : ஒளி மண்டல வாசிகள் ஆகாய மண்டலத்தில் செறிந்துள்ள விந்து மண்டலத்தை அடைந்து ஆதியாகிய சிவபெருமானை அறிவார். காமக் கலையைத் தடுத்துச் செயம் பெறுவதால் பொருந்தும் பிரணவ கோஷத்தோடு வரும் கங்காப் பிரவாகத்தில் பொறிகளையுடைய சீவர்கள் நீராடவே புண்ணியர் ஆவர்.
513. கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்
உடலுற்றுத் தேடுவார் தம்மைஒப் பாரிலர் திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.
பொருள் : கடலில் பொருளைப் போட்டு விட்டு அதனைக் குளத்தினில் காண்பவர் நீர்ப்பையாகிய கடலில் விந்து நீக்கத்தைக் கெடுத்து அதனை நெற்றிப் பிரதேசமாகிய குளத்தினில் ஒளியாகப் பெறுவாரை ஒப்பாக மாட்டார். அவ்வாறு ஆகாய பூத நாயகரான சதாசிவரின் அருளாலே சென்று உடம்பில் புகுந்து மேற்சென்றமையை அறிய மாட்டார். (நந்தி - சிவபெருமான்)
514. கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீரது உடம்பில் சிவக்கும் கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும் கலந்தது நீர்அனல் காற்றது வாமே.
பொருள் : உடம்பில் கலந்த நீரானது (உணர்வானது) சிவன் தாமத குணவயப்பட்ட போது கீழ்நிலையில் கருமையாகப் புலப்படும். உடம்பில் கலந்த நீரானது இராசத குணநிலையில் கீழேயுள்ள மூலவாயு நெற்றிக்கு வந்தபோது மாதுளம் பூப்போன்ற செஞ்சோதியாகத் தோன்றும். கலந்த நீரானது சாத்துவிக நிலையில் சிதாகாயத்தை அடைந்த போது வெண்ணிற ஒளியாகத் தோன்றும் அவ்வாறு கலந்த நீரானது அக்கினியின் பிரகாசமும் காற்றின் இயக்கமும் பொருந்தியே உள்ளது.
19. திருக்கோயில் இழிவு
(திருக்கோயில் இழிவு என்பது, திருக்கோயிலுக்குச் செய்யும் இழிவு என்றபடி. திருக் கோயிலுக்குச் செய்யும் இழிவால் வரும் கேடு இங்குக் கூறப்பெறும்.)
515. தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசுநிலை கெடும் சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.
பொருள் : கோயிலில் உள்ள அருவுருவத் திருமேனியாகிய இலிங்கத்தைப் பிடுங்கி வேறோர் இடத்தில் வைத்தால் வைப்பதன் முன்னம் ஆட்சி அழியும். பிடுங்கி வைத்தவன் இறப்பதற்கு முன்னே தொழு நோயால் பீடிக்கப் படுவான். இவ்வாறு என்னுயிர்க் காவலனாகிய சிவபெருமான் கூறியருளினான். (பேர் நந்தி - முழுமுதற் பெருங் கடவுள்)
516. கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும் வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.
பொருள் : கட்டுவிக்கப் பெற்ற நிறைந்த மதிலில் ஒரு கல்லைப் பெயர்த் தெடுத்தால் அத்தீமை மகுடாபிஷேகம் செய்விக்கப் பெற்ற மன்னரை வெட்டி வீழ்விக்கச் செய்யும். முனிவரது தவத்தை முடிவு பெறாமல் செய்யும். கல்லைப் பெயர்த்தவர் வேதியராக இருந்தாலும் அவர்களையும் வெட்டி வீழ்த்தும்படி செய்யும். இது சிவனது ஆணையாகும். (விண்ணவன் - பரவெளியாகிய சிவபெருமான்.)
517. ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம் சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.
பொருள் : இயமனை உதைத்தவனாகிய இறைவன் எழுந்தருளியுள்ள கோயில்களில், வேதாகமங்களில் விதிக்கப் பெற்ற நித்திய நைமித்திய வழிபாடுகள் தப்புமாயின் பொறுக்க முடியாத நோய் மிகுந்து, பூமியில் மழை குறைந்து, போற்றுதற்கு அருமையான அரசரும் போர் செய்யும் திறமையில் குன்றுவர்.
518. முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும் கன்னம் களவு மிகுந்திடும் காசினி என்னரு நந்தி எடுத்துரைத் தானே.
பொருள் : முதல்வனுடைய திருக்கோயில் பூசைகள் நடவாமல் தடைப் படுமாயின் அரசருக்குத் தீமைகள் உளவாம். மழைநீர் வளப்பம் குறையும். உலகில் கன்னக் கோல் கொண்டு செய்யும் களவு மிகும் என்று அருமையான நந்தி எடுத்துக் கூறினான்.
519. பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.
பொருள் : தகுதிபெறாத பெயரளவில் உள்ள பிராமணன் சிவபெருமானுக்குப் பூசை செய்தால், போர் மேல் செல்லும் மன்னர்க்குப் பொல்லாத வியாதி உண்டாம். உலக முழுவதும் வியாபித்துள்ள நாட்டில் பஞ்சமும் உண்டாகும் என்று சிறப்பு மிக்க நந்தியெம் பெருமான் ஆராய்ந்து கூறியருளினான்.
20. அதோமுக தெரிசனம்
(சதாசிவ மூர்த்தி ஈசானம், தற்புருடம், அகோரம், வாம தேவம், சத்தியோபாதம் என ஐந்து முகங்கள் உள என்று ஆகமம் கூறும். இவையன்றிக் கீழ் நோக்கி முகம் ஒன்றுண்டு, அதுவே அதோமுகம், அதனைத் தரிசித்தல் அதோமுக தெரிசனமாம்.)
520. எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல அம்பவள மேனி அறுமுகன் போயவர் தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.
பொருள் : எம்பெருமானே ! இறைவா ! நாங்கள் வருந்துவது முறையோ என்று ஒளிமண்டல வாசிகளாகிய வானவர்கள் இருள் மண்டல வாசியாகிய அசுரனது வலிமையைப் பற்றி முறையிட, அழகிய பவழம் போன்ற மேனியை யுடைய அறுமுகனே ! நீ நாம் அளிக்கும் சேனையுடன் சென்று அத் ÷ தவர்களின் பகையை அழித்து வருக என்று கூறியருளிய இறைவனே தற்பரனாக உள்ளான்.
521. அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வார்இல்லை உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர் வெண்டலை மாலை விரிசடை யோற்கே.
பொருள் : வெண்மையான தலை மாலையை அணிந்த விரிந்த சடையையுடைய சிவபெருமானுக்கு அண்டங்களையும் எட்டுத் திசைகளையும் தாங்கிக் கொண்டுள்ள அதோமுகத்தின் கழுத்துக் கருமையாக உள்ள உண்மையை அறிகின்றவர் யாரும் இல்லை. அவர் நஞ்சுண்டதால் கண்டம் கறுத்தது என்பர் அறிவிலாதார்.
522. செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள் மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச் செய்வன் மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.
பொருள் : கருமை நிறம் பொருந்தி விளங்கும் கண்டத்தை யுடைய பெருமான், செழுமையான கடல் சூழ்ந்த உலகில் பொய்யான கதை பேசிப் புகழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் உண்மையான தத்துவத்தைப் பற்றிப் பேசுவார்களாயின் தேவரும் தொழும் தகுதியை அவர்கட்கு அருளுவான். இவ்வுலகினைப் படைத்த அவன் பொய்யினையும் மெய்யினையும் அறிவான்.
523. நந்தி எழுந்து நடுவுறு ஓங்கிய
செந்தீக் கலந்துள் சிவனென நிற்கும் முந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும் அந்தி இறைவன் அதோமுகன் ஆமே.
பொருள் : மூலாதாரத்திலுள்ள உருத்திரன் சுழுமுனை வழியாக மேலெழுந்து சிரசின் மேல் செவ்வொளியுள் கலந்து சிவன் என்ற பேருடன் நிற்கும். அப்போது முன்னைய நிவர்த்தியாதி புவனங்களில் இயல்பை மாற்றி வெற்றி கண்டு மேலெழுந்து நிற்கும். இவ்வாறு செய்வது முடிவினைச் செய்கின்ற சிவனது அதோமுக மாகும்.
524. அதோமுகம் கீழ்அண்ட மான புராணன்
அதோமுகம் தன்னோடும் எங்கும் முயலும் சதோமுகத்து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும் அதோமுகன் ஊழித் தலைவனும் ஆமே.
பொருள் : அதோமுகம் என்பது கீழே பிரணவமாகிய அண்டத்தில் பழமையாக உள்ளது. அது சூக்கும உடலில் எங்கும் செல்லும் ஆற்றலை யுடையது. சத்தாகிய ஓம் என்னும் பிரணவ வடிவாயுள்ள ஒளி பொருந்திய பராசத்தியுடன் கூடிய பிரனும் அதோ முகனாயும் ஊழியைச் செய்பவனாயும் உள்ளான்.
525. அதோமுகம் மாமல ராயது கேளும்
அதோமுகத் தால்ஒரு நூறாய் விரிந்து அதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி அதோமுகம் ஆகி அமர்ந்திருந் தானே.
பொருள் : கவிழ்ந்த முகமுடைய பெரிய மலராகிய விந்தையைக் கேளுங்கள். சிரசில் கவிழ்ந்துள்ள சகஸ்ர தளத்திலிருந்து நூறு நாடிகள் கீழ் நோக்கி விரிந்து, கவிழ்ந்துள்ள நாடித் தொகுதிகளிலுள்ள அழிவில்லாத சத்திகளுடன் அதோ முகமாகிப் பொருந்தி இறைவனும் நின்றான்.
21. சிவ நிந்தை (சிவ நிந்தையாவது, சிவனே முழுமுதல் என்று உணராது நித்தித்தல்)
526. தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவுறு வார்அம ராபதி நாடி எளியனென்று ஈசனை நீசர் இகழில் கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.
பொருள் : மேலோர் தெளிந்த ஞானத்தால் சிந்தையினிடத்துத் தேவ உலக அதிபனாகிய சிவனை நாடி அருள் பெறுவர். அவ்வாறு இருக்கச் சிவன் எளிமையானவன் என்று கீழோர் இகழ்வாராயின் கிளியானது பூனையின் கீழ்ப்பட்டுக் கெடுவது போலாகும்.
527. முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார் அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத் தளிந்தவர்க்கு அல்லது தாங்கஒண் ணாதே.
பொருள் : உலர்ந்து போன தேவரும் அசுரரும் எல்லாரும் காமத்தால் கெட்டுப் போனவர்களாம். அவர்கள் உடம்பில் அதோ முகத்தில் விளங்கும் உண்மைப் பொருளை உணரமாட்டார்கள். அன்பினால் கசிந்து அமுதம் போல் சுரக்கும் ஆதியாகிய பிரானை உடம்பெங்கும் தேக்கி உண்பவர்க்கன்றித் தாங்க முடியாதாகும்.
528. அப்பகை யாலே அசுரரும் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர் எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப் பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.
பொருள் : அசுரரும் தேவரும் ஈசுவர நிந்தையினால் தீராப் பகை கொண்டு உய்தி பெறாது இடையே அழிந்தனர். ஈசுவரனிடம் எவ்வாறு பகை கொள்ளினும் அவனை அடைய முடியாது. ஈஸ்வரனைப் போலியாகவாவது பகை செய்யினும் தீமை ஒன்று பத்தாக வளரும். (இறைவனை - முழுமுதற் சிவனை.)
529. போகமும் மாதர் புலவி அதுநினைந்து
ஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில் வேதிய ராயும் விகிர்தன்நாம் என்கின்ற நீதியுள் ஈசன் நினைப்புஒழி வாரே.
பொருள் : வேதியராகப் பிறந்தும் பெண்களது போகத்தையும் ஊடலையும் எண்ணி மார்பிலும் சிந்தையிலும் கலந்துளராதலாலும் நாம் பிரமன் என்கின்ற தர்மத்து உளராதலாலும் இறைவனைப் பற்றிய எண்ணத்தைச் சிந்தையில் கொள்ள மாட்டார். (நாமே பிரமம் என்போர் ஈசனை எண்ணாது இகழ்வர்.)
22. குரு நிந்தை (குரு நித்தையாவது, குருவைப் பழித்தலாம். குருவைப் பழித்தலும் அடாத செயல் என்க. குருவைப் பழித்தவர் எய்தும் துன்பம் இங்குக் கூறப் பெறும்.)
530. பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர் கற்றிருந் தார்வழி உற்றிருந் தார்அவர் பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.
பொருள் : கீழ்மக்கள் ஞானம் பெற்றவரையும் பேண மாட்டார்கள். இவர் உடனிருந்தவரையும் வருந்தும்படி சொல்லுவர். கற்றறிந்தோரிடம் பொருந்தியவரே ஞானம் பெற்றோர் ஆவர். இவரன்றி யார் இப் பேற்றினைப் பெற முடியும் ?
531. ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர் ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங்கு ஓர்உகம் பாரிடைக் கிருமியாய்ப் பழகுவர் மண்ணிலே.
பொருள் : ஓம் என்ற பிரணவத்தின் பொருளைச் சீடன் உணரும்படி செய்த பெருமை பெற்ற நாதத்தை எழுப்பித் தந்த குருவை மனம் நோகும்படி செய்தவர் ஊர் சுற்றித்திரியும் நாயாகப் பிறந்து பிறகு ஒரு யுகம் பூமியில் புழுவாய்க் கிடப்பர்.
532. பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தம் கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும் சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.
பொருள் : இல்லற ஞானிகளும் தத்துவ ஞானிகளும் மனம் வருந்தக் கேடு செய்தவரது பொருளும் உயிரும் ஒரு வருடத்தில் நீங்கி விடும். இது உண்மை. சதாசிவத்தின் மேல் ஆணை. (பத்தினி பத்தர்கள் என்பதற்குக் கற்புடைப் பெண்டிர் என்று சிலர் பொருள் கொள்வர்.)
533. மந்திரம் ஒரெழத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொத்திடத் தீமைகள் செய்தவர் நுந்திய சுணங்களாய்ப் பிறந்து நூறுரு வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.
பொருள் : ஓரெழுத்து ஒரு மொழியாகிய பிரணவத்தை உபதேசித்த பெரிய தவத்தையுடைய குருவை மனம் வருந்தும் வண்ணம் தீமை புரிந்தவர், இழித்து ஒதுக்கப் பட்ட நாயாய் நூறு பிறவிகள் எடுப்பர். பின்னு தாழ்ந்த பிறப்பெடுத்து மண்ணில் மடிவர்.
534. ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும் நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.
பொருள் : சிவனடியார் மனம் கலங்கினால் தேசமும் நாடும் பிற சிறப்புகளும் அழியும். இந்திரனது ஆட்சி பீடமும் பெரிய மன்னரது ஆட்சி பீடமும் நாசமாகும். இது நம் சிவபெருமான் மேல் ஆணையாகும்.
535. சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப் பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே.
பொருள் : சன்மார்க்கத்தைப் போதித்த நல்லாசிரியரின் முன்பாகப் பொய் கூறினால் முன்பு பெற்றிருந்த தவமும் கெட்டு, ஆசாரியிடம் பெற்ற ஞானோபதேசமும் தங்காது. பழமையாக உபதேசிக்கப்பட்ட நெறியையும் மறந்து ஆன்ம வளர்ச்சிக்குரிய பிற நெறியும் போய் வறுமையும் உண்டாகும்.
536. கைப்பட்ட மாணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்பேன் விதிபோன்றும் கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக் கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞானிக் கொப்பே.
பொருள் : கையில் அகப்பட்ட பெருமையுடைய மாணிக்கத்தைக் கைவிட்டு காலில் பட்ட கல்லை எடுத்துச் சுமப்பானின் வினையைப் போலவும், கையிலுள்ள நெய், பால், தயிர், உணவு இருக்க, தனக்கு நன்மை தராத கையளவு பிட்டு உண்பான் போலவும் ஆகும். ஞானியரோடு கருமம் செய்வானை எண்ணுதல் (ஞானத்தை விட்டுக் கிரியையினைச் செய்வதாகும்.)
23. மயேசுர நிந்தை (மகேசுரரைப் பூசை செய்பவர் மயேசுரர். அவரை நிந்தை செய்வது மயேசுர நிந்தை. சிவனடியாரைப் பழிப்பார் அடையும் தீமை இங்குக் கூறப்பெறும்.)
537. ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயம்ஏற்று உண்பவர் ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர் தாம்தாம் விழுவது தாழ்நரகு ஆகுமே.
பொருள் : சிவத்தை வழிபடும் அடியார்கள் உலகியல் நெறிக்கு மாறுபட்டவர். சிவனடியார் பசி வந்துற்றபோது பிச்சை எடுத்து உண்பவர். அத்தகைய அடியாரை வெறுக்கத்தக்க வகையில் வசை மொழிந்தவர் மிகத் தாழ்மையான நரகத்தில் வீழ வகை செய்து கொண்டவராவர்.
538. ஞானியை நிந்திப் பவனும் நலன்என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை யான கொடுவினை தீர்வார் அவன்வயம் போன பொழுதே புகுஞ்சிவ போகமே.
பொருள் : சிவஞானியைத் தூற்றுபவனும், நல்லவன் என்று ஞானியைப் போற்றுபவனும் முறையே கொடிய வினையும் நல்ல வினையும் நீங்குவர். அச்சிவஞானியை அடைந்த பொழுதே சிவபோகம் சித்திக்கும். (இருவினைஎம் நீங்கியபின் பேரின்பம் கிட்டும் என்றபடி.)
24. பொறையுடைமை (பொறை யுடைமையாவது, பொறுத்தலை உடைமை, உடம்பிலுள்ள அமுதம் வற்றி அழியாமல் பொறுத்தல் பொறை நிலை என்க)
539. பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும் தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள் வற்றாது ஒழிவது மாகமை யாமே.
பொருள் : மெய்ந்நெறி பற்றி வழுவாமல் நிற்கும் யோகியர் நெஞ்சில் மெய்ப் பொருளோடு கூட வேண்டுமென்ற எண்ணமாகிய பல்லி ஒன்றுள்ளது. அது மூக்கையும் நாக்கையும் முற்றுகை யிட்டு அவற்றைச் செயலும்படி அப்பொழுது மாறி நின்று இருளில் செலுத்துகின்ற மன மண்டலத்தில் உலராது அமுதத்தைப் பெருகச் செய்வது மிக்க பொறுமையாகும்.
540. ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன் ஞாலத்து இவன்மிக நல்லன்என் றாரே.
பொருள் : பால் போன்ற வெண்ணிற ஒளியில் விளங்கும் சிவனது திருவடியை வணங்கி உய்தி பெறுவதற்காக அவனது கொலு மண்டபத்தைச் சூழ்ந்துள்ள அழிவில்லாத தேவர்களிடம், பொறுமையுடைய இந்த ஞானி திருமாலுக்கும் ஆதிப் பிரமனுக்கும் தலைவன்; உலகத்துக்கும் மிகச் சிறப்புடையவன் என்று சிவபெருமான் அருளிச் செய்தான். (உலாப்பிலி - அழிவில்லாத சிவன். இப்பாடல் சிறு மாறுதல்களுடன் 108 ஆம் பாடலாக வந்துள்ளது.)
541. ஞானம் விளைந்தவர் நம்மிடம் மன்னவர்
சேனை வளைந்து திசைதொறும் கைதொழ ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை ஏனை வளைந்தருள் எட்டலும் ஆமே.
பொருள் : மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றவர் சீவர்களுக்கு மன்னராவர். அத்தகைய ஞானியைக் கருவி கரணங்களாகிய சேனை சூழ்ந்து அவர் ஏவல் வழி நிற்ப அவரது உடம்பை மாற்றிப் படைக்கும் தேவ தேவனை அவர் ஏனை வழி நீத்து ஞானத்தால் அணுகி அருள் கூட முடியும்.
542. வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யானும் பயிற்றி பதம்செய்யும் கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு எல்லையி லாத இலயம்உண் டாமே.
பொருள் : ஆன்மாக்களின் பக்குவத்துக்குத் தக்கவாறு அவரது உடலிலும் உள்ளத்திலும் பலவாறாக இன்ப துன்பங்களை நுகர்வித்துச் சிவபெருமான் பக்குவம் செய்வான். மூலாதாரத்தினின்று ஆதார நிராதாரக் கலைகளிலும் ஆடுகின்ற அக்கூத்தப் பெருமானுக்கு அக் கூத்தின் பயனாக அளவில்லாத ஒருமைப்பாடு உண்டாகும். (கொல்லை - மூலாதாரமே.)
25. பெரியாரைத் துணைக்கோடல்
(பெரியாரைத் துணைக் கோடலாவது ஞானியரைத் துணையாகப் பெறுதல். பெரியாரது கூட்டுறவு நன்மையைப் பயக்கும்.)
543. ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லார்ஒலி பார்மிசை வாழ்குவன் தேடவல் லார்க்குஅருள் தேவர்பி ரானொடும் கூடவல் லார்அடி கூடுவன் யானே.
பொருள் : தலயாத்திரை செய்வாரோடு சேர்ந்து யானும் தலயாத்திரை செய்வேன். பாடுகின்றவர் ஒலியைச் செவி வழியே கேட்டு இன்புற்று வாழ்வேன். அகத்தே தேடி அடைய வல்லார்க்கு அருளுகின்ற மகாதேவனோடும் பொருந்தும் வல்லமையுடையவர் திருவடியை யானும் பொருந்தியிருப்பேன், (ஓடவல்லார் - சரியை யாளர்; பாடவல்லர் - கிரியை யாளர்; தேடவல்லார் - யோகியர்; கூடவல்லார் - ஞானியர்)
544. தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத்து அங்குஅன்பு வைத்தது இலையாகும் நீஇடர்ப் பட்டிருந்து என்செய்வாய் நெஞ்சமே போமிடத்து என்னொடும் போதுகண் டாயே.
பொருள் : கொழு கொம்பில்லாமல் துவண்டு தீயிடைப்பட்ட தளிர்போல் வாடினும் மனவுறுதியுடையோர் பெருமையுடைய (நன்மையைத் தரும் மனத்தினிடம் அன்பு வைத்து அதன் வழிச் செல்வதில்லை. மனனே ! நீ தனியே துன்பப் பட்டிருந்து என்ன செய்யப் போகிறாய் ? இறைவனை நாடிப் போகும் போது என்னோடு வருவாயாக.)
545. அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும் பெரியார் உடன்கூடல் பேரின்பம் ஆமே.
பொருள் : உண்மையை அறியும் பெரியோர் தேவதேவனை விரும்பி அவனிடம் பொருந்தி யிருப்பர். இவர் ஆன்ம தத்துவம் வித்தியா தத்துவம் கடந்து சிவ தத்துவத்தில் விளங்குவர் நன்னெறியில் நின்றொழுகி அடைந்தார்க்கும் உபதேசிக்கின்ற யான் எனது என்னும் செருக்கறுத்த பெரியோருடன் கூடியிருத்தல் பேரின்பமாகும். (தத்துவம் - மெய்யுணர்வு)
546. தார்சடை யான்தன் தமராய் உலகினில்
போர் புகழா எந்தை பொன்னடி சேருவர் வாயடை யாவுள்ளம் தேவர்க்கு அருள்செய்யும் கோவடைந்து அந்நெறி கூடலும் ஆமே.
பொருள் : பெரியோருடன் கூடினவர் நீண்ட கிரணங்களை யுடைய சிவபெருமான் உறவினராய், உலக நடையில் ஒழுகுபவர்களால் புகழப் படாதவனான் என் ஐயனின் திருவடியை அடைவர். வாய் பேசாமல் மௌனமாய் ஆன்மாவில் அரனைத் தியானிப்பார்க்கு அருள் புரிகின்ற சிவனை அடைந்து அச்சிவநெறியில் இரண்டறக் கலத்தலும் அப்பெரியார் கூட்டத்தால் அமையும்.
547. உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன் கடையார நின்றவர் கண்டறி விப்ப உடையான் வருகென ஓலம்என் றாரே.
பொருள் : எல்லாமுடைய சிவனது அடியார்க்கு அடியாராய் உள்ளவரிடம் கூடி, சிவச் சோதியில் பொருந்திச் சிவபுரத்தில் புகுந்தேன். சிவபுரத்தில் கடைவாயிலில் பொருந்தி நின்றவர் என்னைப் பார்த்ததும் சிவபெருமானிடம் விண்ணப்பிக்க, சிவபெருமான் என்னை அழைத்து வருமாறு பணிக்கக் கடைவாயில் காப்பாளர் அபய முத்திரை காட்டி அழைத்தனர். (ஓலம் - அடைக்கலமொழி)
548. அருமைவல் லோன்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும் உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும் திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.
பொருள் : பெரியாரைக் கூட வல்ல அருமையானவன் கலை ஞானத்துள் விளங்கியிருப்பான். பெருமை யுடைய ஞானத்தைப் பெற்றவனோ பிறவிச் சூழலினின்றும் நீங்கப் பெறுவான். உரிமையோடு பழகும் தன்மையில் வல்லவன் சிவபெருமானை அகத்தே உணர்ந்து அழிவின்றி வாழ்வான். நான் அருமையும் பெருமையும் உரிமையும் உடைய பெரியோரது துணையைப் பெறும் பேறு பெற்றேன். (கலைஞானம் - திருமுறை உணர்வு)
இரண்டாம் தந்திரம் முற்றிற்று.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக