ஞாயிறு, 19 ஜூலை, 2015

பெரியவா

ராதே கிருஷ்ணா 20-07-2015

பெரியவா


“பெத்தவா உஸுரோட இருந்த காலத்ல, அவாளை காப்பாத்தல! ஆனா, இப்போ ஸொத்துல மட்டும் பங்கு வேணும்” -(மகா பெரியவா)

மகா பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு எதையோ கேட்க வேண்டி நின்றார் ஒருவர்.
"என்ன?" என்பது போல் ஒரு பார்வை...
"அம்மா, அப்பா போய் காலமாச்சு. நாங்க brothers குள்ள, ஸொத்து விஷயமா செரியான முடிவு இல்லேன்னுட்டு, விஷயம் கோர்ட் வரைக்கும் போய்டுத்து!...."
"அதுக்கு நா.....என்ன பண்ணணும்?..."
"பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்...தீர்ப்பு எனக்கு ஸாதகமா இருக்கணும்...."
"நா.....ஒண்ணும் ஜட்ஜ் இல்லியே! ஜட்ஜ்மெண்ட் குடுக்கறதுக்கு.."
"பெரியவாளோட அனுக்ரஹம் இருந்தா போறும்..." குழைந்தார்.
"ஸஞ்ஜயன் என்ன சொல்லியிருக்கார் தெரியுமோ?...."
அவருக்கு எந்த ஸஞ்ஜயன்? என்று கேட்க த்ராணி இல்லாமல், முழித்தார்.
"யத்ர யோகேஸ்வர க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தர:
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம ......"
"கோர்ட் தீர்ப்புக்கும், இந்த ஸ்லோகத்துக்கும் என்ன ஸம்பந்தம்? எனக்குண்டான, பாத்யதை இருக்கற ஸொத்தைத்தானே கேட்கிறேன்!"....ஒன்றும் புரியவில்லை!
"பெத்தவா உஸுரோட இருந்த காலத்ல, அவாளை காப்பாத்தல! ஆனா, இப்போ ஸொத்துல மட்டும் பங்கு வேணும்.....இல்லியா? "
கோபமாக சொல்லிவிட்டு, எழுந்து உள்ளே போய்விட்டார் மகா பெரியவா,. வந்தவர் முகத்தில் ஈயாடவில்லை.
ரெண்டு மாஸம் கழித்து, தீர்ப்பு வந்தது. அவருக்கு விரோதமாக!
தங்களுக்கு உண்டான முக்யமான கடமைகளில் ஒன்று பெற்றவர்களை போஷிப்பது, அவர்கள் எப்படியிருந்தாலும்! இப்படி நமக்குண்டான கடமைகளை எதையும் எதிர்பார்க்காமல் செய்து வந்தால், அதுவே பெரியவாளுக்கு நாம் செய்யும் பூஜை. ஏனென்றால் மகா பெரியவா நிச்சயம் ஜட்ஜ் [மட்டும்] இல்லை; ஜஸ்டிஸ்ஸும் மகா பெரியவாதானே!
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர
ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர


மகா பாக்யசாலிக் குழந்தை!.
தாத்தா மகா பெரியவா குடுத்த நவாப்பழம்....
மேனாவில் கதவுகளை மூடிக்கொண்டு நீண்ட நேரம் ஜபம், த்யானம், பாராயணம், படிப்பு, உறக்கம் என்று மகா பெரியவா முடிப்பதுண்டு.
அப்படி ஒருநாள், மேனா கதவை திறந்தபோது, யாரோ ஒரு ஏழை குழந்தை தூரத்தில், ஸ்ரீமடத்தின் நாவல் மரத்தடியே நாவல் பழங்களை பொறுக்கி கொண்டிருப்பது, பெரியவா கண்களுக்கு பட்டது.
அனுக்ரஹ சிந்தை அந்த ஏழை குழந்தை மேல் படர்ந்தது. அவனை அழைத்து வர செய்தார். பழம் எடுத்ததற்காக திட்டுவாரோ என்று அஞ்சி வந்த குழந்தையிடம், மிகவும் குளிர்ச்சியாக,
"எடுத்துக்கோ, எடுத்துக்கோ! ஆனா.......இது சின்ன ஸைஸ். இதைவிட பெருஸ்ஸா நாகப்பழம் பாத்திருக்கியோ?" என்றார்.
தன்னைப் போலவே same wave lenghthல் மகா பெரியவா கேட்டதும் சற்று குளிர்விட்ட சிறுவன்,
"ஆமாங்க தாத்தா.. இது சின்னதாத்தான் இருக்கு. பெரிஸு கடைல பாத்திருக்கேன். வாங்கி ஒரு வாட்டி துண்ணுகூட இருக்கேன்"
"ஆமாம், அது எவ்வளவு பெருஸ்ஸிருக்கும்?"
"பெரிய எலந்தம்பழம் கணக்கா இருக்கும்"
"செரி, நீ சித்த இங்கியே இரு" என்றவர் பக்கத்திலிருந்த பாரிஷதரிடம்
" பெங்களூர்லேர்ந்து பழக்கூடை வந்திருக்கோன்னோ?"
"வந்திருக்கு பெரியவா"
"அதக் கொண்டா...."
ப்ரதி ஞாயிறு காலை பெரியவாளின் ஸன்னதிக்கு வந்து சேருமாறு பெங்களூர் தொழிலதிபர் கோடேஷா இரண்டு பழக்கூடைகளை அனுப்புவார். அதில் பல உயர்ந்த கனி வகைகள் இருக்கும். இந்த நிகழ்ச்சி ஒரு ஞாயிறுதான் நடந்தது.
கூடையை திறக்க சொன்னார்.
திறந்தால் என்ன ஆச்சர்யம்! மேலாகவே பெரிய பெரிய நாகப்பழங்கள்! பெரிய இலந்தயைவிட மிக பெருஸாக, எலுமிச்சம்பழம் அளவில் அத்தனை பெரிய சதைப்பற்றான பழங்கள்!
இதுநாள் வரை அப்படிபட்ட பழங்கள் வந்ததேயில்லை. மகா பெரியவா நினைத்தால் என்ன வேணாலும் வருமே!
"பையா! எவ்வளவு பெரிஸு பாத்தியா? இந்த ஸைஸ் எப்பவாவது பாத்திருக்கியா?
"இம்மாம் பெரிஸு ! ஆத்தாடீ! எங்கயுமே கெடயாதுங்கோ!" சிறுவன் வியந்தான்.
"இதுல பேர் பாதி ஒனக்குத்தாண்டா கொழந்தே" அன்பு பொங்க கூறினார்.
கை கையாக பாதி அளவு பழங்கள் ஏழை பிள்ளைக்கு அள்ளிப்போடபட்டன. ஸந்தோஷம் தாங்காமல், ஓடினான். அவனையே பார்த்துகொண்டிருந்த மகா பெரியவா " ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி அவ்வை பாட்டிக்கு நாகப்பழம் குடுத்தார். இன்னிக்கு இந்த தாத்தாகிட்டேருந்து இந்த பிள்ளை வாங்கிண்டு போறான்"
அந்த அனாமேதய சிறுவனில் பால முருகனே வந்தான் போலும்!

ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான். அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது. அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான். அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.
இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.
மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.
கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.
பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது. வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்.


***ராமனும் கண்ணனும்>>>1

***அரண்மனையில் பிறந்தவன் ராமன்; சிறையில் பிறந்தவன் கண்ணன்.

***அரச குமரன் ராமன் ; ஆவினம் மேய்த்தவன் கண்ணன்
.
***புகழாய் வாழ்ந்தவன் ராமன்; புகாரில் வாழ்ந்தவன் கண்ணன்.

***ரகு குல நாயகன் ராமன்; யாதவ சிரோர் மணி கண்ணன்

***அனந்தனுக்கு மூத்தவன் ராமன்; இளையோன் கண்ணன்

***குறைவாக பேசுபவன் ராமன்; குறையாது பேசுபவன் கண்ணன்.

***பகைமையை பின்னே கண்டவன் ராமன்;முன்னே கண்டவன் கண்ணன்

***கௌரவமாய் பழகுவான் ராமன்; குலாவி மகிழ்வான் கண்ணன்.

***தந்தை சொல் மந்திரம் ராமனுக்கு; தன் சொல்லே மந்திரம் கண்ணனுக்கு.

***இரவணனன் வதம் நடக்க ஆரண்யம் புறப்பட்ட ராமனைக் கண்டு வருந்தியது அய்யோத்தி-கம்சன் வதம் நடக்க வடமதுரை புறப்பட்ட கண்ணனைக் கண்டு வருந்தியது ஆயர்பாடி
You may also kindly click the following LINK for more information

https://drdayalan.wordpress.com/2015/03/28/hre-11-ராமனும்-ராமமும்-ராம-ராம/"நாலு வரிய நான் பாடிட்டு அஞ்சாவது வரியை, “நதேகராதி பீகரம்..” னு நான் பாட ஆரம்பிச்சதும், யாருமே எதிர்பார்க்காத வகையில பரமாச்சர்யாரும் என்கூட சேர்ந்து அந்தத் துதியைச் சொல்ல ஆரம்பிச்சுட்டார்".

"காஞ்சிப் பெரியவர் மாதிரியான மகானைப் பற்றி சொல்றது,
கேட்கறதுன்னா, அது பலகோடி மடங்கு புனிதமானது, புண்ணியமானது"

சொன்னவர் பி.ராமகிருஷ்ணன்.

நன்றி-குமுதம் பக்தி ஸ்பெஷல்

ஆசார அனுஷ்டானங்கள் தவறாத குடும்பத்துல பிறந்தவன் நான். என்னோட தாத்தா பிரம்மஸ்ரீ கூத்தூர் ராமநாத சாஸ்த்ரிகள் மகா பெரியவாளோட ரொம்ப நெருக்கமா பழகக் கூடிய பாக்கியம் செய்தவர். திருவையாறுக்கும் திருக்காட்டுப்பள்ளிக்கும் இடையில இருக்கற கூத்தூர் கிராமம் தான் எங்க பூர்வீகம். அதுக்கு முன்னால கொள்ளுத்தாத்தா காசி வைத்யநாத கனபாடிகள் காலத்துல காசியில இருந்ததா சொல்வாங்க. கனபாடிகள்னு சொன்னா, பலரும் கனமான சரீரம் உள்ளவங்கன்னு இன்னைக்கு நினைக்கிறாங்க. ஆனா வேதத்துக்கு கனம்னு ஒரு பேர் உண்டு. வேதத்தை பாட்டு மாதிரி பாடிப்பாடி தான் உருப்போடணும். கனம் அதாவது வேதத்தைப் பாடம் பண்றவங்க தான் கனபாடிகள்.

காஞ்சி மகா பெரியவர் முதல் முறையா காசிக்கு விஜயம் பண்ணினப்ப, எங்க கொள்ளுத்தாத்தா வைத்யநாத கனபாடிகள் தான் அங்கே சம்ஸ்கிருத வித்வத் சதஸ்- ஐ நடத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்து குடுத்திருக்கார். அதோட, காசி க்ஷேத்திரம் முழுக்க பெரியவாளோட போய் வழி காட்டியிருக்கார். அதனால அவர்மேல மஹா பெரியவருக்கு ரொம்ப அபிமானம் உண்டு. இன்னொரு சமயம் பெரியவா காசிக்குப் போன போது, எங்க தாத்தா அவரைத் தரிசிக்கப் போயிருக்கார். அப்போ அவரை ஆசீர்வதித்த பெரியவா, “இங்கே வேத அத்யயனம் பண்றவா நிறையப் பேர் இருக்கா. நீ மதராஸுல இருக்கிற மயிலாப்பூருக்குப் போயேன்!” அப்படீன்னு சொல்லியிருக்கா.

ஆசார்யா வாக்கை வேத வாக்கா எடுத்துக்கிட்டு, சென்னை மயிலாப்பூரில் வந்து எங்க முன்னோர்கள் குடியேறினாங்க. கொஞ்ச நாளைக்கு அப்புறம் எங்க வீட்டு வளாகத்துலேயே சின்னதா ஒரு கொட்டகை போட்டு அதுல ஆதி சங்கரரோட சிலையை வச்சு ஆராதனை பண்ண ஆரம்பிச்சாங்க. வருஷா வருஷம் சங்கர ஜெயந்தியும் நடத்தினாங்க. அந்த சமயத்துல மயிலாப்பூருக்கு வந்த பரமாசாரியார், “சங்கர மடம் ஒண்ணை மயிலாப்பூரில் ஆரம்பிக்கலாமே”ன்னு சொன்னதை வேத வாக்கா எடுத்துக்கிட்டு, சித்திரைக் குளத்துக்குப் பக்கத்துல சங்கர மடத்தை நிறுவினார் எங்க தாத்தா. அதுக்கப்புறம் பரமாசார்யார் எப்போ சென்னைக்கு வந்தாலும் எங்க தாத்தாவும் அப்பாவும் அவரை அவசியம் தரிசனம் செய்திடுவாங்க. எங்க அப்பாவை “கூத்தூர் அம்பின்னு”தான் பெரியவர் கூப்பிடுவார்.

அந்தப் பழக்கத்தோட தொடர்ச்சியா என் காலத்துலேயும் இப்போ இருக்கற ஆசார்யார்கள், மயிலாப்பூர் பக்கம் வந்தா, “நம்ம ராமகிருஷ்ணன் இருந்தா அழைச்சுண்டு வா!” என்று என்னைக் கூப்பிட்டுண்டு அனுப்பற வரை தொடர்ந்துகிட்டு இருக்கறது நான் செய்த மகாபாக்கியம்னு தான் சொல்லணும்.

எனக்கு நினைவு தெரிஞ்சு மகா பெரியவரோட நெருங்கிப் பேசற அனுபவம் எனக்குக் கிடைச்சது, என்னோட உபநயனத்துக்கு சில நாட்கள் முன்னால தான். எங்க அப்பாவுக்கு வேத உபதேசம் பண்ணினவர், ப்ரும்மஸ்ரீ அனந்த நாராயண வாஜபேயி. எங்க குலகுருன்னே அவரைச் சொல்லலாம். அவர்தான் எனக்குப் பூணூல் போட்டுவிட நிச்சயம் பண்ணினார். உடனே எங்க குடும்ப வழக்கப்படி, மகா பெரியவாளோட ஆசீர்வாதம் வாங்க என்னைக் காஞ்சி மடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அங்கே நாங்க போயிருந்த சமயத்துல ஜகத்குரு ஆதிசங்கரர் சன்னதி வாசலில் அமர்ந்திருந்தார்.

என்னோட அப்பா என்னை பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துக்கச் சொன்னார். அப்படியே பண்ணினேன். அப்போ பெரியவா, “குழந்தை ஏதாவது ஸ்லோகம் சொல்லேன்’ னு சொன்னார்.

வழக்கமா குழந்தைகள் எல்லாம் குரு பிரம்மா, குரு விஷ்ணு ஸ்லோகத்தையோ இல்லைன்னா சரஸ்வதி நமஸ்துப்யம் மாதிரியான ஏதாவது சின்ன ஸ்லோகத்தையோ அவர் முன்னால சொல்றதை நான் பார்த்திருக்கேன்.

ஆனா, எனக்கு என்னவோ அன்னிக்கு பெரிசா ஏதாவது சொல்லணும்னு தோணிச்சு. உடனே, “முதாகராத்த மோதகம்…!” னு தொடங்கி கணேச பஞ்சரத்னத்தை பெரியவா முன்னால பாட ஆரம்பிச்சுட்டேன்.

எங்க அப்பா, என்னடா, இவன் பெரிய ஸ்லோகமா சொல்ல ஆரம்பிச்சுட்டானே, சரியா சொல்லணுமேன்னு ஒரு பக்கமும், பரமாச்சார்யா முழுசா கேட்பாராங்கற சந்தேகத்திலேயும் என்னைப் பார்க்க ஆரம்பிச்சுட்டார்.

ஆனா நடந்தது என்ன தெரியுமா ?

அந்தத் துதியில நாலு வரிய நான் பாடிட்டு அஞ்சாவது வரியை, “நதேகராதி பீகரம்..” னு நான் பாட ஆரம்பிச்சதும், யாருமே எதிர்பார்க்காத வகையில பரமாச்சர்யாரும் என்கூட சேர்ந்து அந்தத் துதியைச் சொல்ல ஆரம்பிச்சுட்டார். அப்போ அவரோட கைகள்ல கொஞ்சம் உலர்ந்த திராட்சையையும், குங்குமத்தையும் வைச்சுக்கிட்டு இருந்தார். ஸ்லோகம் சொல்லி முடிச்சதும் ஆசீர்வாதம் பண்ணி, அந்த திராட்சையையும் குங்குமத்தையும் தந்தார். அதோட, “குழந்தையை ராமேஸ்வரத்துக்கும், மதுரைக்கும் அழைச்சுக்கிட்டுப் போய் சுவாமியை தரிசனம் செய்த பிறகு உபநயனம் நடத்துங்கோ” அப்படீன்னு சொன்னார். அப்படியே இரண்டு தலங்களுக்கும் போயிட்டு வந்து பூணூல் போட்டுக்கிட்டேன்.

பரமாசார்யாளை முதன் முதல்ல தரிசனம் செய்தப்ப நான் சொன்னது பிள்ளையார் துதி. பரமாசார்யாருக்கும் எனக்குமான தொடர்புக்கு பிள்ளையார் சுழி போட்டதும் அதுதான்.

இன்னைக்கு நினைச்சாலும் பிரமிப்பும், பெருமையுமா இருக்கு. அந்த மகான் நடத்தின அற்புதங்களை நான் நேரடியா பார்த்ததும், மடத்துல இருக்கறவங்க அப்பா கூட பேசுறபோது சொன்ன சிலிர்ப்பான விஷயங்களைக் கேட்டதும் என்னால என்னிக்குமே மறக்க முடியாது.

நல்லவங்களைப் பத்தி கேட்கறது, சொல்றது, படிக்கிறது எல்லாமே புண்ணியம் சேர்க்கும்னு சொல்வாங்க. அதுலயும் காஞ்சிப் பெரியவர் மாதிரியான மகானைப் பற்றி சொல்றது, கேட்கறதுன்னா, அது பலகோடி மடங்கு புனிதமானது, புண்ணியமானது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக