ஞாயிறு, 12 ஜூலை, 2015

சிரித்தது சீரிய சிங்கம்: ந்ருஸிம்ஹ பிரதாபம்

ராதே கிருஷ்ணா 13-07-2015சிரித்தது சீரிய சிங்கம்: ந்ருஸிம்ஹ பிரதாபம் narasimha1
சில நாழிகைகளாக இடிச்சத்தம் ஓயாமல் கேட்டது. அது இடிதானா அல்லது இரணியகசிபுவின் கர்ஜனையா என இந்திரன் கலங்குகிறான். மீண்டும் தன்மீது போர் தொடுக்க வந்தானெனில் என்ன தான் இருக்கிறது இழக்க? உயிர் கூட போக முடியாது அமரத்துவம் அல்லவா தடையாக உள்ளது என நொந்தான்.
ஆட்டமே கண்டு விட்ட சத்யலோகத்தில், பிரம்மாவோ, தன்னால் வரமளிக்கப்பட்டதால் அமரத்துவத்திற்கு இணையான நிலை அடைந்துவிட்டதாக கொக்கரிக்கிறானோ? இதற்குமேல் சிக்கலான வரத்தை இதுவரை தன்னிடம் யாருமே வேண்டியதில்லையே. அவன் கணக்குப்படி பார்த்தால் என்னால் உருவாக்கப்பட்ட எதானாலும் அவன் மரணம் நேராது. மேலும் முப்பத்து முக்கோடி தேவர், மற்றும் கிங்கர, கந்தர்வ, யக்ஷ, நர, இத்யாதிகளாலும் முப்பொழுதிலும், மூவுலகிலும் தனக்கு மரணமேற்படக் கூடாதெனக் கேட்டான். நானும் யோசிக்காது வரமும் தந்துவிட்டேனே!!
அன்றிலிருந்து அவன் செய்து வரும் பாவச்செயல்களுக்கு அளவே இல்லையே. எல்லாமறிந்த அந்த ஜகன்னாதன் தான் இதற்கு ஒரு முடிவு கட்ட முடியும் என மனதிற்குள் அந்த மாலோலனை வேண்டுகிறார்.
தேவ, கந்தர்வ, யக்ஷ மற்றும் இத்யாதி தேவதைகளும் பூலோகத்தில் நடப்பவைகளை அச்சத்துடனே கவனித்து வந்தனர். ஒரு சிறு பாலகனுக்கும் அவன் தந்தையாகிய கொடிய அரக்கனுக்கும் நடக்கும் போராட்டத்தின் முடிவு தான் என்ன? தர்மமே உருவான அப்பரம பாகவதோத்தமன் பிரகலாதனுக்குத்தான் எத்துணை தைரியம்? அதன் அடிப்படையே அவன் மகாவிஷ்ணு மேல் கொண்ட தீர்க்கமான பக்தியே அன்றோ? அடடா! இப்படிப்பட்டப் பாவியின் பிள்ளையாகப் பிறந்தும் பக்திக்கு ஒருவன் எனப் பேர்வாங்கும் பிள்ளையாக இருக்கிறானே என அனைவரும் வியக்கின்றனர்.
சர்வேஸ்வரனான அந்த மாயவனோ சில நாழிகைகளாகவே யோக நித்திரையில் ஆழ்ந்து விட்டதாக உணர்கின்றனர் அவனுடனே சதாசர்வ காலமும் உறையும் மகாலட்சுமியும் மற்ற நித்தியசூரிகளும்.
மந்தகாசப் புன்னகையுடன் மிளிரும் அமரரின் அதிபதியாம் அவனது திருமுக மண்டலம் இன்று ஏன் கொதிக்கும் பிழம்பாய்ச் சிவந்திருக்கிறது? வழக்கமான அமைதியும், ஆனந்தமும் தவழும் இந்த திருப்பாற்கடல் இன்று ஏன் குமுறிக் கொந்தளிக்கறது?
ஏதோ ஒரு வித பயம் அனைவரின் மனங்களையும் அரித்துக் கொண்டிருக்கிறதே. என்ன நடக்கிறது? என்னதான் நடக்கப்போகிறது என கற்பனை கூட செய்து பார்ககமுடியவில்லையே! இன்பம் துன்பம் ஏதுமண்டா வைகுந்தமே இன்று ஏன் கலக்கத்தில் அதிர்கிறது?
கண்கள் மூடி இருந்தும் அம்மாலவனின் மன ஓட்டம் அனைவருக்கும் தெள்ளத் தெளிவாக விளங்கிற்று. ஒரு நொடி அன்னையைப் போல் அன்பைப் பொழிந்து, மறுநொடி குமுறிப் பெருகும் எரிமலை போல் அனல் கக்குகிறது. அவன் ஏதோ ஒரு நிகழ்வை உன்னிப்பாகக் கவனித்து வருவதைப் போல் அனைவரும் உணர்ந்தனர்.
வேறு என்னவாக இருக்க முடியும்? அண்டபகிரண்டங்களும், அஷ்டதிக்கஜங்களும், அமரலோகம் முதல் அதள பாதாளம் வரை அனைத்துமே இன்று உற்று நோக்குவது இரணியன் -பிரகலாதன் சம்பாஷணையைத் தானே!!
இதோ இரணியன் கேட்கிறான் அவன் மகனை.
பிரகலாதா!! எங்கே கற்றுக் கொண்டாய் இந்த அபத்தங்களை? என் முன்னாலேயே என் பரமவைரி கபட வேட நிபுணன் விஷ்ணுவின் புகழ் பாட என்ன தைரியம் உனக்கு?
வைகுந்தத்தில் இருக்கும் வைத்தமாநிதி இதைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறான்.
பொங்கும் கோபம் அவன் உடலெங்கும் பரவ சிலிர்த்தான்.
பிஞ்சிலேயே பக்தியில் பழுத்த அப்பாலகன் பதில் சொல்கிறான். “நீர் எனக்கு இப்பிறவியில் தந்தை. ஆனால் சகல ஜீவன்களுக்கும், அசையும் அசையா அனைத்திற்கும் ஆதியும் அந்தமும் அந்த அமலனே அல்லவா?
இந்த பதில் கேட்டு பலகோடி சூரியன் ஒரு சேர உதித்தாற்போல புன்னகை புரிந்தான் புருஷோத்தமன்.
கண் சிவந்து நா துடிக்க கோபத்தில் அசுரன் கத்தினான் “நானே கடவுள். என்னையே வணங்குவாய்”
கண்ணில் பொங்கும் அருவியாய் பக்திப் பெருக்கெடுக்க, கொஞ்சமும் பதறாது பதில் பகன்றான் அவன் பிள்ளை. “எங்கும் உள்ளவன், எல்லாம் அறிந்தவன் அகில உலகையும் ஆக்கிப் பாதுகாத்து, அழிக்கும் ஆற்றல் உள்ளவன். அவன் தானே அனைவர்க்கும் இறைவன்?”
பாற்கடலில் பையத் துயில்பவன் படமெடுக்கும் பாம்பைப்போல் சீறினான். வைகுண்டவாசிகள் வாயடைத்துப் போயினர்.
கீழே குமுறினான் அவுணன்.
“அடே குலத்துரோகி. எத்தனை முறை நம் முன்னோர்கள் அவன் கையால் மாண்டனர் தெரியுமா?
அது அவர்கள் பாக்கியம் அல்லவா தந்தையே,” சாந்தமாகப் பதிலளித்தான் பிரகலாதன்.
இரணியனின் கோபம் எல்லை கடந்தது. எகிறிக் குதித்தான் சிம்மாசனத்திலிருந்து.
“யார் கூட இருக்கும் இறுமாப்பில் இவ்வாறு நீ பேசுகிறாய்? யானையின் கால், பாம்பின் விஷம், காட்டு விலங்குகள், இவையெல்லாம் பலிக்காது, பாதாளத்தில் தள்ளி விட்டும் பிழைத்தெழுந்து வந்து பிதற்றுகிறாயா?”
அமைதியின் வடிவம் அதற்கு மறுமொழி கூறினான் “ஆதிசேடன் மேல் ஆனந்தமாய் வீற்றிருக்கும் அந்த அரும் பொருளால் காக்கப்பட்டவனை எந்த ஆபத்தும் எப்படி நெருங்கும் அப்பா?”
மறுமொழியால் மதிவதனன் மனம் மகிழ்ந்தான். இன்னும் சில மணித்துளிகள் மட்டுமே என உணர்ந்தான்.
பொறுமை இழந்தான் பொல்லா அரக்கன்.
“நிறுத்து! அப்படிக் கூப்பிடாதே! ஆபத்து இல்லையென்றா ஆணவத்துடன் கூறினாய்? இதோ நான் தான் அந்த ஆபத்து. எங்கும் இருப்பான் என்று சென்னாயே, முடிந்தால் உன்னை அவன் என்னிடம் இருந்து இங்கு, இப்போது காப்பாற்றட்டும்!! பார்க்கிறேன்.
என்று கூறிக்கொண்டே மதயானை போன்ற தன் பெரும் உருவத்தை முறுக்கேற்றி, மேரு மலை போன்ற தன் கதாயுதத்தைச் சுழற்றியவாறே இறங்கி வந்தான்.
அலைமகளின் கேள்வன் ஆயத்தமானான். அனபனைக்காக்க அவகாசம் இல்லை. அதனால் அவ்வைனதேயனையும் துறந்தான்.
சபையோர் கல்லாய்ச் சமைந்திட, கலங்காது எதிர் நிற்கும் பாலகனைப் பார்த்துக் கேட்கிறான் கீழ்மகன்.
“எங்கும் உள்ளானா உன் விஷ்ணு?
பதில் சொன்னான் பக்தியில் பகலவனாய் விளங்கும் பக்தப் பிரகலாதன்.
தூணோ துரும்போ
வானோ வளியோ
ஊனோ உயிரோ
உயிரின் விதையோ
மண்ணோ மலையோ
கடலோ  நதியோ
நதியின் முடிவோ
பனியோ தீயோ
தீயின் வாயோ
கல்லோ கனியோ
கனியின் சுவையோ
கள்ளோ முள்ளோ
கரும்போ கார்முகிலோ
மாந்தரோ மாக்களோ
காண்பவையோ காணாதவையோ
உள்ளனவோ அல்லனவோ
அதிலும், இதிலும், எதிலும் உள்ளான் அவனே !!
ஒருகணம் திகைத்தான் ஒப்பிலியப்பன். சர்வ வியாபியே ஆனாலும் இரணியன் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எதைக் காட்டி இதில் உள்ளானோ எனக் கேட்பானோ இந்தப்பிள்ளை எதைச்சொல்வானோ? என்று.
அப்படியா? சரி, இதோ இது நானே கட்டிய கல் தூண். இதில் இருக்கிறானா?” என அவன் தர்பார் மண்டபத்தின் ஒரு தூணைக் காட்டிக் கேட்கிறான்.
ஆஹா… இதுபோதும்!! திருத்தேகம் தீப்பிழம்பாகத் தீர்மானித்தான் தீனதயாளன். நேரம் நெருங்கி விட்டது என.
narasimha2
ஓங்கி அடித்தான் இரணியன் தூணை. அவன் அடி விழுந்த நொடி கேட்டது பேரிடி. தூளானது தூண் மட்டுமல்ல தூர்த்தன் பெற்ற வரமும் தான்.
கருங்கற்கள் சுற்றிலும் சிதற,
காண்போர் பயத்தில் அலற,
அண்டகடாகங்கள் அதிர,
அஷ்டதிக்கஜங்கள் பிளிற,
அமரர் அனைவரும் மிரள
தேவர்கள் மகிழ்ச்சியில் திளைக்க,
அசுரர்கள் அச்சத்தில் மரிக்க,
பக்தர் மனம் பூரித்து மகிழ,
இரணியன் என்னவென்று தெரியாது குழம்ப
வெளிவந்தது ஓர் பேருருவம்.
சூரியன் மறையத் தயாரானான். செங்கதிர்களை அவ்வுருவின் மேல் உதிர்த்து. தன் ஒளியை விடப் பலகோடி மடங்காய் ஜொலிக்கும் அத்திருவுடம்பைக்கண்டு விதிர்விதிர்த்து.
வெடித்தது பூமிப்பந்து. துடிதுடித்தது பிரபஞ்சம். ஆர்ப்பரித்தன மேகங்கள். சுற்றிச்சுழன்றடித்தான் வாயுதேவன். அஞ்சி அலறி ஓடின புள்ளினமெல்லாம். அடங்கின அதனதன் கூட்டினிள்ளே.
இரணியனின் இறுதியை எதிர் நோக்கிக் காத்திருந்த முனிசிரேஷ்டர்கள் வேத முழக்கமிட்டனர். வான்வாழ் தேவரும் தேவதைகளும் மலர்மாரி பொழிந்தனர்.
எண்ணெழுத்து மந்திரம் எல்லாவிடங்களிலும் எதிரொலித்தது. சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த ரிஷிகள் சந்தோஷ கூச்சலிட்டனர்.
சப்பரமஞ்சத்தில் சயனித்திருந்த யக்ஷ கந்தர்வர்கள் மதிமயங்கித் தரையில் வீழ்ந்தனர்.
சமுத்திரங்கள் கூட சத்தம் எழுப்பாது உறைந்தன. மூன்றுலோகங்களும் இது ஊழிக்காலம் தானோ எனக் கலங்கின.
ஆழிப்பேரலைகூட இந்த ஆத்திரத்துக்கு முன் ஆட்டின் குளம்படி நீர் போல் அடங்கியது.
மலைகள் குலுங்கின. நிலமகள் தன் நெடுநாள் ஏக்கம் தீர்க்க தன் நாயகன் எடுத்திருக்கும் அவதாரத்தைக் கண்டு புளகாங்கிதமடைந்தவளாய் மேனி சிலிர்த்தாள். கோட்டை கொத்தளங்கள், கூட கோபுரங்கள், மாடமாளிகைகள் மண்ணில் சரிந்தன. அவற்றோடு உலகில் அநீதியும், பாவமும் அடியற்று வீழ்ந்தன.
அழகில் எல்லையில்லா ஆளரியாய் ஆஜானுபாகுவாய், வெஞ்சினத்தீயே  வெளிவரும் மூச்சாய், செந்நிறக்கண்கள் தகிக்க, மனிதனும் மிருகமும் கலந்த “நரசிங்கமாய்” முழங்கிப் புறப்பட்டது அவ்வுருவம். அந்த கர்ஜனையில் கலங்கிப்போனது இரணியனின் உள்ளம். தன் முன்னே நிற்கும் இது என்ன? குழம்பிப்போனான்.
எட்டுத்திக்கும் எதிரொலித்தது அதன் இடிமுழக்கக் குரல்.
அந்தி வேளையில் உதித்தது ஆங்கோர் கோடி சூர்யப் பிரகாசம்.
ஆறாச்சினத்தோடு சீறிக்கிளம்பிற்று ஓர் அரிமா.
அள்ளி எடுத்தது அவனை ஒரே பிடியில்.
துள்ளி வந்து குதித்தது வாசற்படியில்.
ஆயுதமெல்லாம் அற்பர்களுக்கே, என் வெறும் கை விரல் நக நுனியே போதும் இந்த பிரபஞ்சம் அனைத்தையும் அழிக்கவென்று ஆஹாகாரம் செய்தது.
பிடித்தது அவன் உடலை. படுக்கையாய் இட்டது அதன் மடியில்.
narasimha-prahlada
விசாலமாய்ப் பிளந்தது அவன் மார்பை. கிழித்தது அவன் வயிற்றை. கிள்ளிக்களைந்தது அவன் ஆவியை. உருவி எடுத்தது அவன் குடலை அதனோடு அதர்மத்தின் முழுமுதலை. குடித்தது அவன் குருதி அதில் தெறித்தது அதன் உறுதி.
அவனைப் பழித்தாலும் விமோசனமுண்டு. ஆனால் அவன் அடியாரைப் பழிப்போர்க்கு ஆவது என்னவென்று உணர்த்தவே உட்கார்ந்து சிதைத்தது அவன் உடலை. கீழ்வானில் சிவந்து நின்ற சூரியன் அதன் ஜ்வாலைக்குமுன் நிற்கவொட்டாது ஓடி ஒளிய எத்தனிக்கிறான்.
தெய்வங்களனைத்தும் சாந்தி சாந்தி என ஒலி எழுப்பி சினங்கொண்ட சிம்ஹத்தை அமைதிப் படுத்த முயன்று தோற்றனர். நித்தியம் அவன் மார்பில் குடிகொண்ட மகாலட்சுமியும் தயங்கி நின்றாள். அகில உலகமும் இந்த ஊழித்தாண்டவத்தைக் கண்டு திகைத்து நின்றது.
எழுந்தான் பிரிய பக்தன் பிரகலாதன். கண்ணீர் மல்க நடந்தான் அவ்வுருவை நோக்கி. கொதிக்கும் சினத்தினுள்ளும் அவன்பால் அன்புடைய கோவிந்தனைக் கண்டான். கோடி நமஸ்காரம் செய்தான். இசை பாடிப் பரவி அவன் சினத்தைக் கொன்றான்.
கருமேக வண்ணன் உடனே கருணாமூர்த்தியாய்க் காட்சி தந்தான். அள்ளி எடுத்தணைத்தான் அவன்றன் ஆருயிர் அடியவனை. அன்பு பெருக்கெடுக்க அமர்த்திக் கொண்டான் தன்மடியில். கோபம் மாறிக் கண்ணில் சாந்தம் தவழ அமர்ந்தான்.
பிறகு அன்னை வந்தாள். அமைதியைத் தந்தாள்.
narasimha3
சினம் கொண்ட சீரிய சிங்கம் ஒருமுறை பிடறி சிலிர்த்துப் பின் செவ்வனே சிரித்தது.
——
ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !!

எப்போது இராமனின் தம்பியாவேன்?


SriRamanujarTrust5
மனதுக்குள் புலம்பினான் ஆதிசேஷன்.
தம்பி என்றால் அது பரதனே என நீயே பலமுறை சொல்லி இருக்கிறாயே?


பரதன் கூட்டத்தோடு வருகிறானே, உனக்கு ஏதும் தீங்கு வருமோ எனப் பதறிய போது, இலக்குவனுக்கு நாடு கிடைப்பதற்கு தடையாக இராமன் இருந்தால் இளையவன் மூத்தவன் மீது போர் தொடுக்க வருவான் என உன்னைப்பற்றி யாராவது சொன்னால் நம்பினாலும் நம்புவேன். ஆனால், பரதன் அவ்வாறு செய்வான் என சொன்னால், நம்புவேனோ?” என்றாயே.


மேலும், ஒரு தாய் வயிற்றில் பிறந்த தம்பிகளுக்குள் ஏன் ஒற்றுமையே இல்லை?” என வாலி-சுக்ரீவனையும், இராவண-விபீஷணர்களையும் குறித்து பேசிய போது, நீ அவ்வாறு உலகில் இருந்து விட்டால் பரதனுக்கு ஏது புகழ், லக்ஷ்மணா?” என பதில் கூறினாயே !!
இந்த அவதாரத்தில், என்னைக் கோபக்காரனாகப் படைத்ததும் நீயே. அதனால், என் தவறான வார்த்தைகளுக்கு நீயே பொறுப்பு!! ஆனால் நீ சர்வோத்தமனாயிற்றே ! மனித உருவில் இருந்ததால் உன் இயல்பை மறந்தாயோ? உன் வார்த்தைகள் எவ்வளவு கொடுமையானவை என அள்ளி வீசிய உனக்கு தெரிய வாய்ப்பில்லை அண்ணா !!


பரதன் உயர்ந்தவனே அதில் எனக்கு எந்த கிலேசமும் இல்லை. என்னைப்போல் உனக்கு அவன் பிரியமான தம்பியே. பெரும் பக்தனே. பாகவதர்களில் மிகவும் உத்தமனே.


பரதனோ நீ சொல்வதைக் கேட்டு, உனக்குப் பிடித்ததைச் செய்ததால் உயர் பேறு பெற்றான். ஆனால், உனக்கு சேவை செய்வதே என் பிறப்பின் பயன் என்ற என் சுயவிருப்பத்திற்காகத் தான்  அடியேன் உன்னுடன் வந்தேன் என்பதா? உன்னை விட்டுப்பிரிந்து ஒரு கணமும் உயிர் வாழமாட்டேன் என்றால் இப்படிச் சொல்வது முறையா?


மேலும், இந்த்ரஜித்தின் மரணம் சம்பவிக்க வேண்டுமென்றால், அது 14 வருடம் ஊணுறக்கம் இல்லாது, பிரம்மச்சரிய விரதம் பூண்டு, புலன்களை அடக்கியவன் கையினால் தான் நடக்கும் என முன்னமே உனக்கு தெரிந்திருக்காதா என்ன? சரி தான்… சகலமும்  அறிந்த சர்வேஸ்வரனை என்னைப்போன்ற சாமானியர் புரிந்து கொள்ள முயற்சிப்பது விபீஷணன் இராவணனுக்குச் சொன்ன அறிவுரைகள் போன்று பயனற்ற செயலல்லவா!! அதனால் தான் என்னை உன் உடனே அழைத்துக் கொண்டு சென்றாயோ? உன் திருவிளையாடலே அப்படித்தானே.


நின்றால் குடையாய், கிடந்தால் அணையாய், இருந்தால் ஆசனமாய் இன்னும் என்னவெல்லாம் செய்தாலும், பரதனே உனக்கு பிரியமானவனாகிறான். அல்லவா?


சரி, அடுத்த பிறவியில், அண்ணனாக என்னைப் படைத்து, நீ எனக்கு பதிலுக்கு சேவைகள் செய்து, உன் “சௌசீல்ய” குணம் விளங்குமாறு செய்துகொண்டாய். அப்போதும், எனக்கு குறையே.பரந்தாமனான கிருஷ்ணனே பாத பூஜை செய்யும் பாக்கியம் பெற்றவன் பலராமன் என உலகோரைப் பேச வைத்தால் எனக்கு பெருமை சேரும் என நினைத்தாயோ?


கிருத யுகத்தில் அடியேன் உனக்கு செய்த சேவைகளுக்கு துவாபர யுகத்தில் நீ கைம்மாறு செய்து கணக்கைத் தீர்த்து விடலாம் என எண்ணினாயோ?

adhiseshan-avatharams
உன்னால் கூட கைம்மாறு செய்ய இயலாத சேவையை உனக்கும், உன் அடியார்க்கும் செய்து, உன் “தம்பி” என நீ அழைக்கும் கிட்டாப் பெரும் பேறை எப்படிப்பெறுவேன்?
 
 
அதற்கும் நீயே வழி செய்வாய். புல், பூண்டு, மரம், செடி, கோடி, மனிதர்கள், விலங்குகள் என சகல ஜீவராசிகளுக்கும் நீயே உட்பொருள், மெய்ப்பொருள். என் குறை உனக்கு தெரியாமல் இருக்கப் போவது இல்லை. இன்னும் எத்தனை யுகம் அதற்காகக் காத்திருப்பதானாலும் இருப்பேன்.ஆனால் நீ வேஷதாரி, கபடனாயிற்றே... உன்னை நம்பமுடியுமோ?சரி தான்வைகுந்த வாசா ! இனி உன்னை நம்பிப் பயனில்லை !! 
 
நித்ய விபூதிகளுடன் சதானந்தமாய் இருப்பவனே! இரு… திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்றால், அந்த தெய்வத்திடமே செல்கிறேன்.
 
 
நீயே வழிபட்ட நம் இரவிகுலப் பெரிய பெருமாளிடமே முறையிடுகிறேன்.
 
 
முற்றும், மற்றும் உணர்ந்த அப்பெருமானின் திருவடிகளைப் பற்றுகிறேன். அதற்கான காலமும், காரணமும் உருவாகப் பிரார்த்திக்கிறேன். கொடும் தீயில் நின்று வேண்டுமானாலும் கடுந்தவம் புரிகிறேன்.  உன் பக்தியே, உனக்குச் செய்யும் சேவையிலேயே எனக்கு என்றும் சிறப்பு என உனக்கே நிரூபிக்கும் தருணம் வர வேண்டுகிறேன். அந்த நாளும் வந்திடாதோ என அனவரதமும் ஏங்கிக் கழிக்கிறேன்…"


அனந்தனின் அனல்மூச்சால் அரவணைப் படுக்கை கொதிக்கிறதே… கண்விழித்தான் கமலக்கண்ணன்.

அனைத்தையும் அறிந்தவன், அந்தக் கள்ளன்…  இதற்காகத்தான் காத்திருந்தாற்போல் சிரிக்கிறான்… சீரியதோர் சங்கல்பம் செய்கிறான்.


சேஷனேஇப்படி ஒரு கலக்கம் ஏன்என் பக்தர்களில் நான் வேற்றுமையோ, ஏற்றத்தாழ்வோ காண்பதில்லை. அரசனானாலும், அணிலேயானாலும் எனக்கு ஒன்றே
 
ஆனாலும்ஒன்று மட்டும் நிச்சயம். எனக்குச் செய்யும் சேவை கூட எனக்கு ஆனந்தம் தராதுஎன் அடியவர்க்குச் செய்யும் சேவையே எனக்குப் பரமானந்தம் தரும்
இலக்குவனாக நீ எனக்குச் செய்த சேவைகளை விட, என் அடியார்க்கும், என்னை நித்தியமும் நினைந்து உருகும் பக்தருக்கும் சேவை செய்ய உனக்கு ஒரு அரிய வாய்ப்பு வாய்க்கப்போகிறது. உனக்கு முன் அவதரித்த பெரியோர்க்கும், உனக்குப் பின் வரப்போகும் நல்லோர்க்கும் உன் சம்பந்தமே ஆதாரம் எனும் உயர்நிலை வரப்போகிறது
 
 
பரதனின் பெருமை இணையற்றது தான். ஆனாலும்,கிருத யுகத்தில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தான் என்பதா பெருமைகலியுகத்தில், கற்றோர், கல்லாதோர், ஆச்சரிய புருஷர்கள், அவர்தம் சீடர்கள் மட்டுமல்லாது சாதாரணப்பட்ட பிறப்பு-இறப்பு, பாவம்-புண்ணியம், சம்சாரம்-சரச-சல்லாபம் எனும் மாயைகளில் சிக்குண்டு மீள வழியறியாமல் சிக்கித்தவிக்கும் பலகோடி ஜீவாத்மாகளுக்கும் என்னை அறிவிக்க, அனைவரையும் என்னுள் அடைவிக்க நீயே மூல ஆதாரமாக  விளங்கப்போகிறாய்
 
 
இளையவனேஆநிரை மேய்த்தவனான அந்தக் கண்ணன் வாய்ச்சொல்லை விட, ஆதிரையில் அவதரிக்கப் போகும் உன்னருள்மொழி பெருமை பெறப்போகிறது… 
 
 
ஹா.ஹா.. பெரிய பெருமாளிடம் போய் முறையிடுவாயோ? அவரும், அதுவும், எதுவும் நானே என உனக்குத் தெரியாதோ
 
 
ஆகட்டும். உன் கோரிக்கையை நிறைவேற்றத் தகுந்த தருணம் சீக்கிரமே வரும். வர வைக்கிறேன்” 


ஒரு பக்கம் ஆதிசேஷனின் ஆதங்கம். இன்னொரு பக்கம்,

பூதேவியான கோதையின் கண்களில் கண்ணீர் தன் பாதம் நனைக்கத் திரும்பிப்பார்க்கிறான். அவளோ “மாலிருஞ்சோலை மாதவனுக்கு என உரைத்த அக்கார அடிசிலை எப்போது தரப்போகிறேனோ” எனக் கலங்குகிறாள்.


மறுபடியும் சிரித்தான் அந்தக் கள்ளன்…


அனைத்தையும் உணர்ந்து அமைதியாய்ப் புன்னகைத்தவாறே, தன்னைத் தழுவிச்செல்லும் காவிரியின் நடுவில், விபீஷணன் விருப்பத்தையேற்று தென்திக்கை நோக்கிப் பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கிறான் இஷ்வாகு வம்சத்தின் குலதெய்வமான பெரியபெருமாள்.


அதற்கான ஏற்பாடுகளை அவன் ஏற்கெனவே செய்துவிட்டதை யாரறிவார்?


இதோ மதுரகவியாழ்வார், தன்  குரு நம்மாழ்வாரின் விக்ரஹம் வேண்டி காய்ச்சுகிறார் தாமிரபரணியின் தண்ணீரை. வருகிறது ஒரு திரு உருவம். அடடா!! இது என் தெய்வம் குருகூர்ச்சடகோபன் போலில்லையே எனக் குழம்புகிறார். பதில் கிடைக்கிறது உயர்புகழ் மாறனின் திருவாக்கிலேயே.
 
 
இவரே பவிஷ்யதாசார்யர் எனப் பின்னாளில் புகழ்பெறப்போகும் திருவுடையவர். ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரைக்கே மூலாதாரமாக விளங்கப்போகின்றவர்”  
என விஸ்வக்ஷேனரே வாய்மொழிகிறார்

bahavi

வருகிறது அப்படியோர் தருணம் கலியுகத்தில்.

பெரும்பூதூர் எனும் திருத்தலத்தில் உதித்த ஓர் பிள்ளையை,  உலகுக்கு வழி காட்ட வந்த அந்த ஆச்சர்ய சீலனை ஆட்கொள்ளும் நாளை நினைத்து, நினைத்து, குளிர்நீரோடும் காவிரி தீரத்திலும், பிரணவாக்ருதி விமானத்தின் கீழ் இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறான் அரங்கன்.
ஆச்சரிய புருஷர்களை ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பி வைக்கிறான். ஆளவந்தார் செல்கிறார். நம் சம்பிரதாயத்திற்காக இவனை ஆக்கிக் கொள்ளவேண்டும் எனக் கண்குளிரக் கடாக்ஷிக்கிறார் ஓர் இளம் ஞான சூரியனை. யாதவப்பிரகாசர் எனும் தொழிற்கூடத்தில், பட்டை தீட்டப்படவேண்டும் இந்த வைரமென அரங்கன் எண்ணம் கொண்டு அப்படியே நடக்கவும் செய்கிறான்.


காட்டில் வழி தவறச் செய்து , நாட்டிளுல்லோர்க்கு சரியான பாதையைக் காட்டித்தர இவரை ஆட்கொள்ளவேண்டுமென, வேத வேள்வியில் உதித்த தேவப்பெருமாளையும் அவன் தேவியையும் வேடுவர்கள் போல அனுப்பி வைக்கிறான் . அவன் மூலம் ஆலவட்டம் வீசும் பெரிய நம்பியை ஆச்சார்யனாகக் கொள்ளுமாறு பணிக்கிறான். உலகோர் உய்ய வழி செய்ய உற்றதோர் மந்திரத்தைக் கற்பிக்க திருக்கோஷ்டியூர் நம்பிகளை அனுப்புகிறான். அதன்மூலம் எட்டெழுத்து மந்திரம்  எளியோரிடமும்  சென்று சேரச் செய்கிறான்.


இன்னும் ஆயிரமாயிரம் அற்புதங்களை நிகழ்த்தி, அன்பையும், அறத்தையும் அகிலத்தில் நிலை நாட்டி, நூற்றி இருபது வருடங்கள் கடந்த பின் தான் வாழும் கோவிலிலேயே, தன்னுடனேயே இருத்திக்கொள்கிறான்.

 
தன்னையே உடையவர் எனும் தகுதியளித்துஇராமன் தராத பெயரை அரங்கன் தருகிறான்
இராமானுஜன்இராமனின் தம்பிஎனும் கிட்டாப்பெரும்பெயரை.

ஆயிரம் சிரங்கொண்டவன் தன் மனக்குறை நீங்கப்பெற்று மகிழ்கிறான்.

மறுபடியும் சிரிக்கிறான் அந்தக் கருநிறக்கள்ளன்.—————————-
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்…

பரதனும் பவித்ரனும்… 


bharatha
சட்டென தன் மீது விழுந்த மழைத்துளியால் கவனம் மீள்வரப் பெற்று ஆகாயத்தைப் பார்த்தான் பரதன்.
மழையாஇராமன் இல்லாத இந்த பூமியிலாஅவன் இருந்தவரைஅள்ளிக்கொடுத்த இயற்கையால் மும்மாரி பெய்த பூமியில் இன்றுஆவாரம்பூ தானே முளைத்துக்கிடக்கின்றதுஅறத்தின் வடிவானதந்தையும் போனபின் என்ன புண்ணியம் மிச்சம் இந்த மண்ணில்?புன்னகையையே பொன்நகையாகப் பூண்டிருந்த மக்கள் முகத்தில்இன்று துயரத்தின் வடுக்களே மிஞ்சியிருக்கிறனசந்தோஷப்பெருக்கெடுக்கும் சரயூ  இன்று வெறும் சஞ்சல ஓடையாகமாறிவிட்டதே
வரங்களென்று வாங்கி வம்சத்திற்கே என்னை வசையென வாழவைத்துவிட்டாளே !! எத்தனை ஜன்மம் எடுத்து அந்தப் பாவத்தைக்கழுவுவேனோ
என உள்ளுக்குள் பொங்கும் எண்ணங்களோடு போர் புரிந்து கொண்டே, பரதன் நன்கு காய்ந்த மரக்கட்டைகளை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து பொறுக்கி வருகிறான். அவன் பின்னே சற்று தள்ளி அவன் சொன்னபடியே ஏன் என்னவென்று கேளாமல் சத்ருக்னனனும் காய்ந்த மரக்கட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.
ஆயிற்று நாளையோடு பதினான்கு ஆண்டுகள். என்னைப் பீடித்த பழிச் சொல் அழியும் காலம் கனிந்து விடும் நாளையோடு. ஒன்று அண்ணன் வந்து இந்த ஆட்சியை ஏற்கவேண்டும். இல்லையேல் நான் இந்த தீயில் விழுந்து மடிய வேண்டும். எதுவாகினும், எனக்கு விமோசனமே. ராஜ்ஜியத்தில் நாட்டமின்றி அண்ணனுக்காகவே வாழ்ந்து உயிர் துறந்தான் எனும் புகழே எனக்குப் போதுமே.
அதுசரி, தம்பி சத்ருக்னனைப் பற்றி நான் எண்ணவில்லையே? எவ்வாறு இளையோன் லக்ஷ்மணன் இராமனின் பின்னே சென்று அவன் அனுபவிக்கும் எல்லா இன்ப துன்பங்களையும் அனுபவிக்கிறானோ, அதே போலல்லவா இவனும் எனக்காக மன்னன் மகனாய்ப் பிறந்தும், மரவுரி தரித்து, மண்ணில் படுத்துறங்கி, சந்நியாசி போல வாழ்கிறானே. என்ன கைம்மாறு செய்வேன் இவனுக்கு?
என பரதன் எண்ணிக்கொண்டே தம்பியைப் பார்த்து கேட்கிறான்.
சத்ருக்னா, கட்டைகள் எதற்கு என கேட்கவில்லையே நீ?
“தெரியும் அண்ணா! உன் சபதம். “
அதிகம் பேசுபவனில்லை அவன். பேசினால் அதில் அர்த்தம் நிறைந்தல்லவோ இருக்கும். அவன் அன்னையைப் போல. அவளல்லவோ அன்னை!! ஆஹா!!
சத்ருக்னா, நாளை எப்படியும் எனக்கு ஒரு விடிவு வந்துவிடும். ஆனால், உனக்கு நான் பட்ட கடனுக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 
அண்ணா! பிறந்த நாள் முதல் அன்னை எனக்கு சொல்வது ஒன்றே தான். பரதனுக்கு நீ நிழல் போன்றவன். அவன் அழுதால் அழு. சிரித்தால் சிரி. அவனுக்கு சேவை செய்வதே உன் பிறவிப்பயன் எனச் சொல்லிச்சொல்லித் தானே வளர்த்தாள். அதனால் தானே இலக்குவன் வனம் ஏகினான். என் கடமையையே நான் செய்கிறேன். அதில் நீ எவ்வாறு கடன் பட்டவனாகிறாய்?
இல்லை தம்பி! ராஜ்ஜியசெல்வத்தால் கூடப் பிறந்தோர் கூடப் பகைவராக மாறும் நிலை வரலாம். வரும் யுகங்களில் அது நடக்கும். ஆனால் என் சபதத்தால் உன்னை இவ்வாறு சிரம்ப்பட வைக்கிறேனே!!
தம்பி,  எவ்வளவு ஆண்டுகளாயிற்று பழைய மாதிரியான அயோத்தி நகரத்தைக் கண்டு. இப்போது நான் காண்பது அயோத்தியா? இல்லவே இல்லை. இந்திரனின் அமராவதிப்பட்டினம், குபேரனின் அழகாபுரி இன்னும் பிரபஞ்சத்தில் உள்ள என பிற மகா நகரங்களையெல்லாம் விஞ்சும் வகையில் அல்லவா இருந்தது அயோத்தி. செல்வச் செழிப்புக்கும், அறத்துக்கும், மக்களின் மகிழ்ச்சிக்கும் அளவின்றி அனைவரின் கண்படவல்லவோ வாழ்ந்து வந்தோம்?
இந்திரன் வந்திருந்தபோது அவன் வியந்தல்லவா போனான்?
தசரதரே நான் என் அமராவதிக்கிணையான வளமும்வனப்பும்எங்குமேயில்லை என்ற இறுமாப்புடன் இருந்தேனேஇன்று உங்கள்அயோத்தியின் ஐஸ்வர்யம்  என் கர்வத்தை தூள் தூளாக்கிற்றே!” 
இந்திராஅறமென்னும் அஸதிவாரமதில் ஆயிரமாயிரம்ஆண்டுகளாய் தழைத்தோங்கும் ஆல விருட்சம் எங்கள் இஷ்வாகுகுலம் என நீ அறிவாயல்லவாஆட்சியும்அதிகாரமும்அரசனுக்குப் பொறுப்புகளே என்றுணராமல் ஆணவத்தில் நீஆடினாயேஅதனால்தான் சம்பராசுரனை அழிக்க உனக்கு என்சகாயம் தேவைப்பட்டதுஇது என் பெருமை அன்றுஎன் முன்னோர்செய்த புண்ணியங்களும்எம் குல தெய்வமும் தாம் எனக்குஅரணாக இருந்தன
என உரைத்தாராமே என் தந்தை. அன்று அவருக்குத் துணையாய் என் குல வீரமும், மானமும் காத்திட்ட என் அன்னை… சீ சீ.. அப்படிக் கூப்பிடவே கூசுகிறதே… மனம் பிறழ்ந்து இப்படி ஒரு வரத்தை என் தந்தையிடம் கேட்டாளே. அடடா!! கேகயன் வம்சத்திற்கே தீராப்பழி உண்டாக்கி விட்டாளே…
ஓங்கிய பெரும் காடுகளையே அழிக்கும் சிறுதீக்குச்சியைப் போல வந்தாளே கூனி என் குலத்தில். அவளால் தானே… இன்று நீயும் நானும் இங்கே. நம் பிரிய சகோதரர்கள் எங்கோ வனத்திலே.
அண்ணா பண்டித சிரோமணியான, வேதம் முற்றும் கற்றறிந்த நீயா இப்படிப் பேசுகிறாய்? பரந்தாமனே உலகை ஆள்பவன். அவன் ஆணைப்படியே சர்வமும் நடக்கின்றன என நான் உனக்கு நினைவூட்ட வேண்டுமா?
ஆனாலும், சகுனங்கள் சதி செய்து, நாளை நம் தமையன் வரவில்லையென்றால் நான் தீயில் பாய்வேன். நீ என் செய்வாய்?
என்ன கேள்வி இது அண்ணா? என்ன செய்வேன் என நீ நினைக்கிறாய்? இலக்குவனிடம் ராமன் இப்படி வினவினால் என்ன சொல்வானென எண்ணுகிறாய்?
சரிதான் சத்ருக்னா !! ஆனால் நான் எதற்கும் தயார். என் வார்த்தையிலின்று நான் பின் வாங்க மாட்டேன். என் தாய் என் மேல் வைத்த வரமெனும் தீயை, நான் நாளை வளர்க்கப்போகும் தீயில் எரிப்பேன்.  ஆனாலும், என் பாவம் என்னைப் பின் தொடருமே. இராமன்  கானகம் செல்ல நானும் காரணமன்றோ?
தமையனே! அவன் அவதார நோக்கமென்னவென்று உணரவில்லையா நீ? அந்த ராகவ சிம்ஹம்  நினைத்திருந்தால், ஒரு ஹூங்காரத்தில், இந்த அண்ட சராசரங்களையும் பொசுக்கி விட முடியாதா? ஒரு சிறுபிள்ளைக்காக தூணைப்பிளந்து தோன்றியவனல்லவா? அன்பர், அமரர், அடியவர் துயரம் தீர்க்க அவன் இவ்வளவு சிரமப்படவேண்டுமோ?  அன்னை சீதை சக்தி அளப்பரியது அல்லவா? அபலையாய் இராவணனிடம் சிக்கிக்கொண்டாளென எண்ணுகிறாயா?தேவர், அமரர் வேண்டுகோளுக்கு இணங்கி அல்லவோ இந்த அவதாரமே நிகழ்ந்துள்ளது.
rama-killing-ravana
சரி தான் தம்பி. ஆனால், இராமன் காட்டுக்குச் சென்று தான் இதைச் செய்ய வேண்டுமா? அயோத்தியின் அரசனாகப், படை நடத்தி பகை அழித்து அறம் காத்து அமரர்க்கு அமைதி அளித்திருக்கலாமே !!
அண்ணா நன்றாக எண்ணிப்பார். மனித உருவில் வந்த மகாதேவனே அவன். அவன் வாழ்க்கையே அவன் செய்தி. இதெல்லாம் அவன் சங்கல்பமே அல்லவா?
வெறும் மானிடனா அவன்? நமக்கு தமையனாகப் பிறக்க வந்த தாமோதரன். உந்தியில் பிரமனை உருவாக்கிட்ட உயர்பரம்பொருள். நடப்பதெல்லாம் அவன் நாடகமே. அதில் நமக்கு பங்கேற்க வாய்ப்பளித்ததே அவன் அளவற்ற கருணையால்தானே!நாமெல்லாம் வெறும் கருவிகளே. அவன் நடத்தும் நாடகத்தில் நடிகர்களே.
இஷ்வாகு குலதனமான அந்த பெரிய பெருமாள் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். நம் அண்ணனுக்கு தோல்வி என்பதே இல்லை. அத்தகைய திறன் ஈரேழு பதினாலு லோகத்திலும் உள்ள எவருக்கும் இல்லை.
இவை எல்லாம் விட, விலைமதிப்பிலா அதிசயப் பொருள்,  ஆயிரம் யுகங்கள் தவம் செய்தாலும் கிடைக்காத அரிய பொக்கிஷம், அகில உலகிலும் அமரர், தேவர், தவசிரேஷ்டர்கள் எவருக்கும் கிட்டாத பாக்கியம் அல்லவோ உனக்குக் கிடைத்தது, அண்ணா !!
bharath
இராமன் உனக்கு அழியாப் புகழ் மட்டுமல்ல இனி பிறவா வரமன்றோ அளித்துள்ளான். பாதுகா சம்பந்தத்தினால்.
எப்படிச் சொல்கிறாய் தம்பி?
அண்ணா! பொதுவாக உலகில் அடமானமாக வைக்கப்படும் பொருள்  விலை உயர்ந்ததாகத் தானே இருக்கவேண்டும். அப்படிப்பார்த்தால், இராமனை விட அவன் பாதுகைகளுக்கு உயர்வல்லவா? நித்தியசூரிகளுக்கும் கிடைக்காத பாக்கியம் பாதுகா கைங்கர்யம் அது உனக்கு வாய்த்ததே !!
பார்த்தாலே பாவம் தொலைக்கும் பாதுகைகளை உன்னிடத்தில் அடமானம் வைத்துவிட்டல்லவோ தமையன் இராமன் கானகம் ஏகினான். உலகையே அளந்து நின்ற அவன் திருப்பாதங்களைத் தாங்கும் திருப்பாதுகைகள் உன்னிடத்திலல்லவோ இன்று உள்ளன. அதை மீட்க அவன் கட்டாயம் வருவான். கலங்காதே!!
உண்மை தான் சத்ருக்னா !! மேலே பார், இத்தனை வருடங்களாய் இத்திக்கை திரும்பிப் பாராத வருணதேவன், ஏன் இன்று இப்படிக் கார்மேகத் திரளாய் வந்து நிற்கவேண்டும்? நம் தமையனின் நல்வரவைத் தான் சூசகமாக அறிவிக்கிறாரோ? இங்கே பார், என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு மெல்லிய இன்ப உணர்வு பரவுகிறது. இதன் காரணமென்ன?  அண்ணன் நாளை கட்டாயம் வருவான் தம்பி! நான் நம்புகிறேன்.
அண்ணா!! என் உள்ளுணர்வும் அழுத்தமாகச் சொல்கிறது. நாளை வரும் நல்ல செய்தி என்று. அற்புதன் ஒருவன் அதைக் கொணர்வானென்று. அண்ணலும், அன்னையும் அவன் பின்வருவரென்று.
ஆமாம் தம்பி, உன் வார்த்தைகள் நம்பிக்கையூட்டுகின்றன. நல்ல செய்தியை எதிர்பார்த்து நாம்  இருப்போம்.
நாளை விடியும் சூரியன் நமக்கு நல்வழியை நல்கட்டும். வா செல்வோம். !!
———————–
ஆசார்யன் திருவடிகளே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக