செவ்வாய், 26 மே, 2015

பெரியவாளின் கடைசி சில நாட்கள்

ராதே கிருஷ்ணா 26-05-2015

பெரியவாளின் கடைசி சில நாட்கள்
"”தர்மத்துக்காக வாழ்ந்தவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்தோம். இன்னொருத்தரைப் பார்க்க முடியலே! நாம பார்க்காதது ஸ்ரீராமரை; பார்த்தது, மகா பெரியவாளை!
சொன்னவர்-பட்டாபி
தொகுப்பு-சாருகேசி
'நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்.
அதுவொரு மார்கழி மாசம். கும்பகோணத்தில் என் தகப்பனாருக்குச் சிராத்தம் பண்ணிட்டு, பக்கத்துல 12 கி.மீட்டர் தொலைவுல இருக்கிற கோவிந்தபுரத்துக்குப் போனேன். அங்கே, காமகோடி பீடத்தின் ஆச்சார்யரான ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கு.
‘ராம ராம’ன்னு சொல்லியபடியே, அந்த அதிஷ்டானத்தை 108 தடவை பிரதட்சிணம் பண்ணினேன். அங்கே, ராம நாமத்தை ஜெபித்தால், ஸித்தி கிடைக்கும்னு சொல்லுவா. அதிஷ்டானத்திலேருந்து எதிரொலி மாதிரி, ‘ராம்… ராம்’னு குரல் கேட்கும். ரொம்ப விசேஷம். அதுக்காகவே நான் அங்கே அடிக்கடி போவேன்.
இப்படித்தான் 94-ஆம் வருஷம், ஜனவரி 2-ஆம் தேதி… அங்கே தியானத்திலே உட்கார்ந்திருந்தேன். அப்ப, அதிஷ்டானத்திலேருந்து திடீர்னு ஒரு குரல் கேட்டாப்ல இருந்தது எனக்கு. ‘ஏய், இனிமே என்னை நீ இதேமாதிரிதான்டா பாக்கணும்’னு சொல்லித்து அந்தக் குரல். அது, பெரியவா ளோட குரல் மாதிரியே இருந்துது.
அப்படியே அதிர்ந்து போயிட்டேன் நான். சாதாரணமா அதிஷ்டானத்துல, ‘ராம்… ராம்’னுதானே குரல் கேக்கும்! இதென்ன விசித்திரமா இருக்குன்னு தோணித்து எனக்கு. ‘இதேமாதிரிதான்டா பாக்கணும் என்னை’னு பெரியவா சொல்றாளே… அப்படின்னா, ஸித்தியான மாதிரிதான் பார்க்கணுமா, பெரியவாளை?!’
யோசிக்கும்போதே தலை சுத்தித்து எனக்கு. மனசு ஒடிஞ்சு, நொந்து போயிட்டேன்.
சாப்பிடத் தோணலை. கண்ணை மூடிண்டு சித்த நேரம் தூங்கினா தேவலைன்னு பட்டுது. படுத்தா தூக்கம் வரலை. மனசுல இதே கேள்வி குடைஞ்சு, ஹிம்ஸை பண்ணிண்டிருந்தா எங்கேர்ந்து தூக்கம் வரும்? பேசாம பஸ் பிடிச்சுக் கும்பகோணம் வந்துட்டேன். உடனே காஞ்சிபுரம் போய்ப் பெரியவாளைத் தரிசிக்கணும்னு தோணித்து.
”என்ன அவசரம்… ரெண்டு நாள் இருந்துட்டுத்தான் போயேன்! ஏன் பித்துப் பிடிச்சாப்பல இருக்கே? வீட்ல ரெண்டு நாள் அமைதியா படுத்து ரெஸ்ட் எடுத்தா, எல்லாம் சரியாப் போயிடும்!”னு அம்மா சொன்னாள். சரின்னு, நானும் ரெண்டு நாள் கழிச்சுதான் காஞ்சிபுரம் போனேன். பெரியவரைப் பார்த்து, வழக்கம்போல் சேவைகள் பண்ணிண்டிருந்தேன்.
அதன்பிறகு, சில நாள் கழிச்சு… அதாவது 94-ஆம் வருஷம், 8-ஆம் தேதி மகா பெரியவா ஸித்தியாயிட்டா!
அன்னிக்கு, அதிஷ்டானத்துல பெரியவா சொன்னது நிஜமாயிட்டுது. பெரியவா ளைத் தவிர, வேற யாராலேயாவது இத்தனை தீர்க்கமா சொல்லமுடியுமா? தெரியலை.
அப்புறம்… எனக்கு மூணு, நாலு மாசத்துக்கு சுய நினைவே இல்லை. அப்படியே பெரியவாளோட நினைப் புலயே ஆழ்ந்துபோயிட்டேன். ‘பெரியவா முகத்தை இனி பார்க்க முடியாதே’ன்னு மனசு தவியாய்த் தவிச்சுது. சமாதானம் ஆகவே இல்லை. எப்படி ஆகும்?!
பெரியவா சொன்னதை எல்லாம் நினைச்சு நினைச்சுப் பார்த்தேன். ஒரு தடவை கி.வா.ஜ. சொன்னது ஞாபகத்துக்கு வந்தது…
”தர்மத்துக்காக வாழ்ந்தவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்தோம். இன்னொருத்தரைப் பார்க்க முடியலே! நாம பார்க்காதது ஸ்ரீராமரை; பார்த்தது, மகா பெரியவாளை! சந்நியாச தர்மம், யதி தர்மப்படி வாழ்ந்து ஸித்தி அடைஞ்சவர் மகா பெரியவர். அரச தர்மத்துக்குன்னு வாழ்ந்தவர்ஸ்ரீராமர்”னு சொல்லிட்டு,
”ஆத்ம பூஜை பண்ணினவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்திருக்கோம். இன்னொருத்தரைப் பார்த்ததில்லே. யார் சொல்லுங்கோ?” என்று கேட்டார் கி.வா.ஜ. தொடர்ந்து, அவரே பதிலும் சொன்னார்…
”ஒருத்தர் ஆஞ்சநேயர். ஆத்ம லிங்கம் பண்ணி, தானே பூஜை பண்ணினார். இது ராமேஸ்வரத்தில் இருக்கு. ஆத்ம பூஜை பண்ணின மகா பெரியவாளை இப்போ பார்க்கறோம். ஆத்மாவை உயர்த்திண்டவா எத்தனை பேர்? இவர் ஒருத்தர்தான்! அவர் தனக்குத்தானே பூஜை பண்ணிண்டார். அதை நாம எல்லோரும் பார்த்து ஆனந்தப்பட்டோம்!”
எத்தனை சத்தியமான வார்த்தை!
பெரியவா ஸித்தி ஆயிட்டானு சொன்னேன் இல்லியா? பெரியவாளுக்கு 90-லிருந்தே உடம்பு படுத்திண்டு இருந்தது; க்ஷீணமாயிண்டு இருந்தது. ஒரு தடவை, ஸ்மரணையே தப்பிப் போச்சு. எல்லாரும் ரொம்பக் கவலைப்பட்டா.
ராஜீவ் காந்தி அப்போ பிரதமரா இருந்தார். அவருக்கு விஷயம் தெரிஞ்சு, அவரோட ஏற்பாட்டுல, ‘டோட்டல் பாடி ஸ்கேனர்’ கொண்டு வந்து பெரியவாளைத் தீவிரமா பரிசோதனை பண்ணிப் பார்த்தா. பெரிய பெரிய எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் வந்து சோதனை பண்ணினா.
ஒரு ஸ்டேஜ்ல, ஞானிகளுக்குத் தங்களோட சரீர ஸ்மரணை (தேக பாவம்) பரிபூர்ணமா விட்டுப் போயிடும்னு சொல்லுவா. யோக மார்க்கத்துக்குப் போயிடுவா. சுவாசத்தைக் கட்டுப்படுத்திண்டு இருப்பா. பெரியவாளும் அதே நிலையிலதான் இருந்தார். இது எனக்குப் புரிஞ்சுது. ஆனா, எதுவும் சொல்லாம, என்னை அடக்கிண்டு இருந்தேன்.
யோக நிலையில இருந்த பெரியவாளைப் பார்த்தேன். எந்தவித சரீர அவஸ்தையும் அவருக்கு இருக்கவே இல்லே! படுக்கைப் புண்ணுனு சொல்வாளே, அது மாதிரி எல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. ரோஸ் கலர்ல, தாமரை புஷ்பம் மாதிரிதான் அவரோட உடம்பு இருந்துது.
விஸர்ஜன துர்வாசனை எதுவுமே அவரிடம் இல்லை. காம- க்ரோதாதிகளுக்கு உட்பட்டவாளுக்குதான் அந்த மாதிரி துர்வாசனை எல்லாம் வரும்.
பெரியவாளுக்கு உடம்பு வேர்க்கவே வேர்க்காது, தெரியுமோ? மே மாசத்துல, ‘மேனா’ல படுத்துண்டு, படுதாவைப் போட்டுண்டிருப்பார்! அப்பவும்கூட அவருக்கு வேர்க்காது. நானே பிரத்யட்சமா பார்த்திருக்கேன்.
ஸித்தியாகிறதுக்கு முன்னால, பெரியவா என்னைக் கூப்பிட்டார். ”நான் படுத்துக்கப் போறேன். நீ என்ன பண்ணப் போறே?”ன்னு கேட்டார்.
”நான் என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியலையே! பெரியவாதான் சொல்லணும்”னு அழுதுட்டேன்.
பெரியவா என்னைக் கருணையோடு பார்த்தார். ”கவலைப்படாதே! என் ஸ்மரணை உன்னைக் காப்பாத்தும்! சஹஸ்ர காயத்ரி சொல்லு. கங்கையிலே ஸ்நானம் பண்ணிட்டு, கங்கைக் கரையிலே உட்கார்ந்து சொல்லு. அது போறும்!”னார்.
அந்தப் பிரபுவோட ஸ்மரணையிலே என்னோட காலத்தைக் கழிச்சிண்டிருக்கேன். அதுவும் அவரோட அனுக்கிரஹம்தான்.
ஆனா, அன்னிக்குக் கோவிந்தபுரம் அதிஷ்டானத்துல அவர் குரல் கேட்டுதே… அதை மட்டும் என்னால மறக்கவே முடியலே. நான் மனசு சஞ்சலப்பட்டு எதுவும் செஞ்சுடப்படாதுன்னு என்னைத் தயார் பண்ணத்தான் அன்னிக்கு அவர் சொல்லியிருப்பார்ங்கறதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லே!” – சொல்லி நிறுத்திய பட்டாபி சார்,
பெரியவாளின் நினைவுகளில் குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினார்

மார்பினில் கதம்ப மலர்களால் ஆன மாலைகளுடன் துளசி, வில்வ மாலைகளும்
சர்வோத்திருஷ்டமாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள்
புஷ்பமயமான பாதுகைகளின் மேல் வைக்கப்பட்டு ஞானப் பிரதானமாகி
விளங்குகிறதோ- அப்படிப்பட்ட காஞ்சி மகா சுவாமிகளின் பாதார விந்தங்களை,
அடியேனின் சிரசில் சதா வைத்துக்கொள்வதில் பரமானந்த நிலை அடைகிறேன்!


எல்லாமே கரைத்துக் குடித்தது போல "குதர்க்கம்" பேசி திரியும் வீணான ஜென்மங்களுக்கு, ஒரு சரியான சம்மட்டி அடி”!

“காஞ்சி மஹா பெரியவாளை ஜகத்குரு என்று அழைப்பதைவிட, "ஜகன்மாதா" என்று அழைக்கத் தோன்றுகிறது” - ஸ்பெயின் நாட்டு அரசி.

கிரேக்க நாட்டு ராஜமாதாவின் புதல்வி Sophia தற்போது ஸ்பெயின் நாட்டு அரசி. தன் அன்னை கிரேக்க ராணியைப் போலவே மஹா பெரியவாளிடம் அபரிமிதமான பக்தி கொண்டவள். கிரேக்க நாட்டு ராஜ குடும்பமேமகா பெரியவாளை மட்டுமே தங்கள் குருவாக சரணடைந்துள்ளது.
மஹா பெரியவா உத்தர சிதம்பரமான சதாராவில் ஏறக்குறைய ஒருவருஷம் தங்கியிருந்த சமயம், ஸ்பெயின் அரசி அங்கு வந்து நான்கு நாட்கள் தங்கி மஹா பெரியவாளை தர்சனம் பண்ணினாள். அவ்வூரில் உள்ள ரொம்ப சாதாரண சின்ன ஹோட்டலில்தான் தங்கினாள். ப்ரபல நாட்டிய மேதை பத்மா சுப்ரமண்யம் ஸ்பெயின் நாட்டில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர்களை அரசி Sophia தன்னுடைய அரண்மனைக்கு அழைத்து மிகுந்த அன்புடன் ஒரு வரவேற்பு குடுத்தார்.
அப்போது அவர்கள் உரையாடியபோது,
" ஒரு பெரிய நாட்டின் அரசியான நீங்கள், அட்டாச்டு பாத்ரூம் கூட இல்லாத அந்த சின்ன ஹோட்டலில் எப்படி தங்க முடிந்தது?" என்று கேட்டார் பத்மா சுப்ரமண்யம்.
அதற்கு அந்த பேரரசி குடுத்த பதில், இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து பின்பும், பேருக்காகவும், புகழுக்காகவும், பணத்துக்காகவும், தங்களுக்கு
தெரிந்த அரைகுறை விஷயத்தை வைத்துக்கொண்டு, எல்லாமே கரைத்துக் குடித்தது போல "குதர்க்கம்" பேசி திரியும் வீணான ஜென்மங்களுக்கு, ஒரு சரியான சம்மட்டி அடி!
".......காஞ்சி மஹா பெரியவாளை தர்சனம் பண்ணவேண்டும் என்றால், நான் குடிசையில் கூடத் தங்குவேன் ! தெருவில் கூட நடப்பேன்! அவரை தர்சனம் பண்ணும் போது மட்டுமே உண்மையிலேயே நான் வாழ்கிறேன்! மற்ற நேரங்களில் எல்லாம் ஏதோ மூச்சு விடுகிறேன். அவ்வளவுதான்! இந்த அரண்மனை, ராஜ மரியாதை, இந்த சூழல் எல்லாம் அநித்யம்! மஹா பெரியவாளை தர்சிக்கும் இன்பம்தான் மெய்யானது. நித்யமானது!....அவரை ஜகத்குரு என்று அழைப்பதைவிட, "ஜகன்மாதா" என்று அழைக்கத் தோன்றுகிறது!"....... மஹா பெரியவாளைப் பற்றி பேசும், நினைக்கும் பாக்யத்தால், பனித்த கண்களுடன் கூறினாள் கிரேக்க நாட்டு இளவரசி, ஸ்பெயின் நாட்டு அரசி!


'நான் அங்கேயே தங்கிடறேன்’
(மணி மண்டபம் உருவான நிகழ்ச்சி)
சொன்னவர்-அகிலா கார்த்திகேயன்.
தொகுப்பு-சாருகேசி
'நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்
”அதிகாலை நான்கு மணி தரிசனத்தின்போது ஒருநாள், பிரதோஷம் மாமாவை அருகில் அழைத்த மகாபெரியவாள், ‘உனக்கு மாணிக்கவாசகர் பாடின திருவாசகம்- கோயில் திருப்பதிகத்துல வரிகள் ஏதாவது தெரியுமோ?’ என்று கேட்டார். பிறகு பெரியவாளே, ‘
.;தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை சங்கரா ஆர்கொலோ சதுரர்-னு பாடியிருக்கார். எங்கே, நீ அதைத் திருப்பிச் சொல்லு!’ என்றார்.
அப்படியே பிரதோஷம் மாமா சொல்ல, மகா பெரியவாளும் அதைத் தொடர்ந்து சொல்ல… ஏதோ மந்திர உச்சாடனம்போல், ‘தந்தது உன் தன்னை, கொண்டது என்தன்னை’ என மாற்றி மாற்றி இருவரும் சொல்லிக்கொண்டே இருந்தனர். நிசப்தமான அதிகாலை வேளையில், இப்படிப் பெரியவாளும் பிரதோஷம் மாமாவும் சொல்வதைக் கேட்டு அனைவரும் அதிசயித்துப் போனார்கள். ‘இப்படியரு பாக்கியம் எவருக்குக் கிடைக்கும்?’ எனத் திளைத்தார் பிரதோஷம் மாமா. நிமிட நேரத்தில், கரகரவென வழிந்தது கண்ணீர்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த பிறகு, அடுத்தடுத்துத் தொடர்ந்தன ஆச்சரியங்கள்!
கடம் வித்வான் விநாயக்ராம், அவரின் சகோதரர் சுபாஷ் சந்திரன், வயலின் கலைஞர்கள் கணேஷ்- குமரேஷ் போன்ற பக்தர்கள் பலரும் பிரதோஷம் மாமாவிடம் பேசும்போது, அவர் கட்டளை போலவோ, அறிவுறுத்துவது போலவோ ஏதேனும் சொல்வதைக் கேட்டனர். அடுத்து அவர்கள் மகா பெரியவாளைத் தரிசனம் செய்கிறபோது, பிரதோஷம் மாமா ஏற்கெனவே தங்களிடம் சொல்லிய அதே வார்த்தைகளையே மகா பெரியவாளும் சொல்வதைக் கேட்டு வியந்தனர்.
இப்படித்தான் ஒருமுறை சுபாஷ் சந்திரன், கணேஷ்-குமரேஷை அழைத்துக்கொண்டு பிரதோஷம் மாமாவின் இல்லத்துக்குச் சென்றார். சாந்நித்யம் நிறைந்த புனிதமான இடம் அது. வயலின் கலைஞர்கள் இரண்டு பேரும் அங்கேயிருந்த பெரியவாளின் திருவுருவப்படத்துக்கு முன்னே பவ்யமாக அமர்ந்து இசைத்தனர். பிறகு மாமாவை நமஸ்கரித்து, ‘உங்கள் கையால் தங்கக் காசு கிடைத்தால், அது எங்களுக்குப் பொக்கிஷம்’ என வேண்டினர். உடனே மாமாவும், ‘அதற்கென்ன குழந்தைகளா, அடுத்த மாசம் 23-ஆம் தேதி வாங்கோ; கட்டாயம் தரேன்!’ எனச் சொல்லி அவர்களை வாழ்த்தினார்.
அதன்படி அவர்கள், அந்தக் குறிப்பிட்ட தேதியில் காஞ்சிபுரம் வந்தபோது, பிரதோஷம் மாமாவின் வீட்டுக்குச் செல்லாமல், முதலில் பெரியவாளைச் சந்திக்க மடத்துக்குச் சென்றனர். பெரியவாளைத் தரிசித்து விடைபெறும் வேளையில், அவர்களைச் சற்றே காத்திருக்கச் சொல்லிவிட்டு, மடத்துச் சிப்பந்திகளிடம் ஏதோ சொன்னார் பெரியவா.
பெரியவாளின் ஆசீர்வாதமாகவும் பிரசாதமாகவும் பழங்கள் மற்றும் சால்வைகளைப் பெறுவது பக்தர்களின் வழக்கம். ஆனால், மூங்கில் தட்டில் வெற்றிலை-பாக்கு, பழங்களுடன் அந்த முறை தங்கக் காசுகளையும் அளித்தார், காஞ்சி மகான். ஆம், பிரதோஷம் மாமா தருவதாகச் சொன்ன தேதி; அதே தங்கக் காசு! இருவரும் அதிர்ந்தனர்.
‘தந்தது உன்தன்னை; கொண்டது என்தன்னை’ என மகாபெரியவா, தன்னுள் பக்தரை ஐக்கியமாக்கிக் கொண்டுவிட்டதுபோல அமைந்தது, அந்த நிகழ்வு!
இந்த வார்த்தைகளை மேலும் மெய்ப்பிப்பது போலான இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. அது…
கையில் ஏதுமின்றி, சிவனாருக்குக் கோயில் எழுப்பப் புறப்பட்டாரே, பூசலார்நாயனார்! அதே போல், பெரியவாளுக்கு கோயில் எழுப்ப வேண்டும் எனும் ஆசை, பிரதோஷம் மாமாவுக்கு. முதலில், கோயில் கட்டுவதற்கான நிலத்தைத் தேடினார் பிரதோஷம் மாமா. நண்பர்களிடமும் இதுகுறித்துச் சொல்லி வைத்திருந்தார். இப்படி, இரண்டு பக்தர்கள் இடம் தேடிச் சென்றபோது, காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஓரிருக்கையில், பாலாற்றங் கரையில் கோயில் எழுப்பினால் பொருத்தமாக இருக்கும் என எண்ணினார்கள், அவர்கள்.
அன்று மாலை, பிரதோஷம் மாமா வின் வீட்டுக்குச் சென்றவர்கள், ‘பாலாற்றங்கரையில் ஓர் இடம் இருக்கு. ரம்மியமான சூழல் அங்கே நாலஞ்சு குடியானவப் பிள்ளைகள் விளையாடிண்டிருந்தாங்க. பக்கத் துலயே பாலாறு’ என்று தெரிவித்தனர். அப்போது, அந்த அறையின் மின் விளக்கு கொஞ்சம் ஒளி மங்கி, அந்த விநாடியே சட்டெனப் பிரகாசமானது. ‘இது நல்ல சகுனமா இருக்கே!’ என்று பூரித்துப்போன பிரதோஷம் மாமா, உடனே பெரியவாளைத் தரிசிக்கச் சென்றார். அப்போதைய அவரின் ஒரே பிரார்த்தனை… ‘கோயிலுக்கான நிலத்தை சூட்சுமமாக அங்கீகரிக்கணும், பெரியவா!’ என்பதுதான்.
மடத்தை அடைந்தபோது, பெரியவா விச்ராந்தியாக ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டதால், திரையிடப்பட்டிருந்தது. வருத்தமாகிப் போனார் பிரதோஷம் மாமா. அந்த வருத்தம், உள்ளே பெருங்கவலையாக மெள்ள மெள்ள வளர்ந்த நிலையில், மடத்தில் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த வேதபுரி என்பவரை, அருகில் வரும்படி அழைத்தார் மகாபெரியவா. அவரும் பெரியவாளுக்கு அருகில் செல்ல, அவரிடம் பெரியவாள் பேசுவது தெளிவாகக் கேட்டது.
‘காஞ்சியிலேருந்து நாலு கிலோ மீட்டர் தூரத்துல, வந்தவாசி போற வழியில நான் போயிண்டிருக்கேன். அங்கே ஒரு மணல் மேடு. நாலஞ்சு குடியானவப் பிள்ளைங்க விளையாடிண்டிருந்தா. திடீர்னு இருட்டிடுத்து. அப்புறம் சட்டுனு பிரகாசமாச்சு. நான் அங்கேயே தங்கிடறேன். அங்கே ஒரு பாட்டியம்மா இருந்தா!’ என்று தாம் கண்ட கனவை பெரியவா சொல்லச் சொல்ல… சிலிர்ப்பில் உடம்பே நடுங்கிப் போனது, வெளியே இருந்து கேட்டுக்கொண்டு இருந்த பிரதோஷம் மாமாவுக்கு. எதற்காக வந்தோமோ அதற்கான சம்மதத்தை, ‘நான் அங்கேயே தங்கிடறேன்’ என்று சூட்சுமமாக பெரியவாள் அருளினால், யாருக்குத்தான் தூக்கிவாரிப் போடாது?! தன்னைத் தன்னுள் இருந்தபடி இயக்குவது, அந்தக் கருணைத் தெய்வமே என நினைத்துப் பூரித்தார் மாமா.
தனது பக்தியாலும், பெரியவாளின் அனுக்கிரகத்தாலும், 1992-ஆம் வருடம், பிரதோஷம் மாமா வாங்கிய அந்த ஆறு ஏக்கர் நிலம், மகா பெரியவாளின் மணிமண்டபமாக இப்போது மாறியிருக்கிறது. அன்பர்களின் பேருதவியாலும் கடும் உழைப்பாலும் ஓரிருக்கையில் உருவாகியுள்ள அந்த மணிமண்டபத்தைத் தரிசியுங்கள்; காஞ்சி மகானின் பேரருளைப் பெறுங்கள்!
ராம் ராம், இந்த நாள்இனிமையாக அமைய நம் ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி பெரியவா அவர்கள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 35

தாய் – தந்தையர் பெருமை

வித்யாப்யாஸம் கொடுக்காவிட்டாலும்கூட பிதா என்கிறவன் ஆசார்யனுக்கு மேலே என்று மநுஸ்ம்ருதியில் உயர்ந்த ஸ்தானம் கொடுத்திருக்கிறது. (சம்பளத்துக்குச் சொல்லிக் கொடுக்கும்) பத்து உபாத்யாயர்களைக் காட்டிலும் ஆசார்யர் உயர்ந்தவர், நூறு ஆசார்யர்களைக் காட்டிலும் பிதா உயர்ந்தவர் என்று சொல்லியிருக்கிறது. இந்த இடத்திலேயே எல்லாரைவிடவும் உயர்ந்த சிறப்பிடத்தை அம்மாவுக்குக் கொடுத்து, “ஆயிரம் பிதாக்களைக் காட்டிலும் மாதா உயர்ந்தவள்” என்று சொல்லியிருக்கிறது.

யாஜ்ஞவல்க்யர் காலத்தில் பிதாவோ, அவனை விட்டால் அடுத்தபடியாகத் தமையனாரோதான் உபநயனம் செய்விப்பதாகவும், இவர்கள் இருவரும் இல்லாவிட்டால்தான் வெளி மநுஷ்யர் செய்வித்திருக்கிறாரென்றும் தெரிகிறது. ‘இல்லாவிட்டால்’ என்றால், ‘உயிரோடு இல்லாவிட்டால்’ மட்டுமில்லை; யோக்யதை இல்லாவிட்டாலும் இவர்கள் உபநயனம் செய்விக்கப்படாது என்று சொல்லியிருக்கிறது. என்ன யோக்யதை? அவன் தனக்கான வேத சாகையைப் பூர்ணமாய் அத்யயனம் செய்திருக்கவேண்டும்; அதோடு, மற்றவர்களுக்கு அதைச் (சொல்லி கொடுத்து) அத்யாபனமும் செய்பவனாயிருக்க வேண்டும்; ப்ராம்மணனுக்குத் தகாத எந்தத் தொழிலும் செய்பவனாக இருக்கப்படாது. (இந்த ‘ஸ்டான்டர்ட்’ படி தற்காலத்தில் எந்த அப்பன்காரனுக்காவது பிள்ளைக்குப் பூணூல் போட ‘க்வாலிஃபிகேஷன்’ இருக்குமா என்பது ஸந்தேஹந்தான்!)

சில ஸ்ம்ருதிகளில் ‘குரு’ என்பது ‘பெரியவர்கள்’ என்று இருக்கிற எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட பொதுப் பெயராகத் தெரிகிறது. அப்பா, அண்ணா, தாத்தாக்கள், அப்பா – அம்மாவுடன் பிறந்தவர்கள், மாமனார், தேசத்துக்கு ராஜா யாரோ அவர், ஸகல ஸத் ப்ராம்மணர்கள் – இவர்கள் மாத்ரமில்லாமல், அம்மா, பாட்டிகள், ஆசார்ய பத்னி, அத்தை, சித்தி, பெரியம்மா, மாமியார், அக்கா, ஸபத்னீ மாதா (மாற்றாந் தாய்) ஆகிய ஸ்திரீகளையும்கூட குருக்கள் என்றே அவற்றில் சொல்லியிருக்கிறது.

இப்படிப் பல குருமார்களைச் சொன்னாலும், ஜன்மாவைக் கொடுத்து பிள்ளையை வளர்த்து ஆளாக்கிவிடும் பிதாவையே குறிப்பாக “குரு” சப்தத்தால் சொல்கின்ற மநு, ஆசார்யனும் அறிவைத் தந்து பிதாவுக்கு ஸமதையான ஸ்தானம் பெறுவதால் குரு என்று கௌரவிக்கப்பட வேண்டியவனாகிறான் என்கிறார்.

(‘கௌரவம்’ என்ற வார்த்தைக்கே ‘குருவுக்கு உரியது’ என்றுதான் அர்த்தம்.)

தர்ம சாஸ்த்ரங்களையோ, அத்யாத்ம சாஸ்த்ரங்களையோதான் என்றில்லாமல் அறிவுக்கு எந்த ஒரு வித்யையைக் கொடுத்து உபகரிப்பவனையுமே குரு என்று சொல்ல வேண்டுமென்று சொல்லும் மநு, இப்படிச் செய்கிறவர்களுக்குள்ளே ஸத்வித்யையை ஸம்பூர்த்தியாகக் கற்றுக்கொடுக்கும் ஆசார்யன் பெருமையை என்ன சொல்வது என்று வியந்து கேட்கிறார்.

வயதில் சிறிய குரு

வயஸில் சிறியவனாயிருந்தாலும் தனக்குக் கற்பிப்பவனைப் பெரியவனாக மதிக்க வேண்டும் என்ற கருத்திலிருந்தே ஆசிரியரை (பெரியவர் என்று பொருள்படும்) ‘குரு’ என்று சொல்வதாக ஏற்பட்டது என்று தர்ம சாஸ்த்ரங்களிலிருந்து தெரிகிறது. இதிலிருந்து தன்னைவிட வயஸில் சிறியவரிடமும் போதனை பெறலாமென்பது தெரிகிறது. அறிவையும், ஆத்மாபிவ்ருத்திக்கானதையும்பெறுவதில் வயஸில் பெரியவர் சின்னவர் பார்க்கப்படாது என்ற உசந்த கொள்கை வெளிப்படுகிறது.

இதற்கு மநு ஒரு கதையே சொல்லியிருக்கிறார்.

அங்கிரஸ் மஹர்ஷியின் புத்ரன் அவருடைய (அங்கிரஸுடைய) ஸஹோதரர்களுக்கே வித்யோபதேசம் செய்தார். அப்போது அவர்களை அவர், “பிள்ளைகளே!” என்று கூப்பிட்டாராம். உடனே அவர்களுக்குக் கோபம் வந்து விட்டதாம். தேவர்களிடம் போய் ‘கம்ப்ளெய்ண்ட்’ கொடுத்தார்களாம்.

தேவர்கள், “நீங்கள் கம்ப்ளெய்ன்ட் பண்ணுவது ஸரியில்லை. உங்களுக்கு ஒரு வித்யை தெரியவில்லை. அதை உங்களுக்குப் பிள்ளை முறையாகிறவனிடம் சொல்லிக் கொள்கிறீர்கள் என்றால், அப்போது நீங்கள்தான் பாலர், அவர் வ்ருத்தார். வயஸு நிறைய ஆச்சு, தலை நரைத்துப்போச்சு என்பதால் வ்ருத்தராகிவிட முடியாது. நன்றாக வேதத்தை அப்யாஸம் பண்ணியிருப்பவனே நமக்கு ‘வ்ருத்தன்’ ” என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம்.

எலும்போடு சதை ஒட்டிப்போன மஹா கிழங்களான யோகி ச்ரேஷ்டர்கள் நித்ய யுவாவான ஆதிகுரு தக்ஷிணாமுர்த்தியிடம் மௌனப் பாடம் கேட்கிறார்கள். “ஆலமரத்தின் அடியிலே ஆச்சர்யத்தைப் பாருங்கள்! சிஷ்யர்கள் கிழவர்கள், குருவோ யுவா. அந்த வாலிப ப்ரொபஃஸர் எப்படி லெக்சர் கொடுக்கிறாரென்றால், மௌன பாஷையிலாக்கும்! அப்படியிருந்தும் அந்த சிஷ்யர்களுடைய ஸந்தேஹங்களெல்லாம் பொடியாகித் தீர்ந்து போய்விடுகின்றன” என்று ச்லோகமே இருக்கிறது.

சித்ரம் வடதரோர் மூலே வ்ருத்தா: சிஷ்யா: குருர்யுவா |

குரோஸ்து மௌநம் வ்யாக்யாநம் சிஷ்யாஸ்து சிந்ந ஸம்சயா: ||

ஒருவரைப் பெரியவராக நினைப்பதில் ஐந்து விதம் இருக்கிறது. தனத்தை வைத்துப் பெரியவராகச் சிலரை மதிக்கிறோம். பெரிய ப்ரபு என்றால் உடனே ஒரு மரியாதை தோன்றிவிடுகிறதல்லவா? இது ஒன்று. வயஸில் சின்னவர்களாயிருந்தாலும் மதனி, மாமா முறை, சித்தப்பா முறை ஆகிறவர்களென்று பந்துத்வத்தில் உள்ள ஸ்தானத்தினால் சிலரைப் பெரியவர்களாக மதிப்பது இரண்டு. ரொம்ப வயஸானவரென்றால் யாராயிருந்தாலும் பெரியவர் என்று மரியாதை பண்ணுவது மூன்று. நாலாவதாக, மஹா யஜ்ஞங்களைச் செய்தவர், பெரிய அநுஷ்டாதா என்றால் வயஸைப் பார்க்காமலே பெருமைப் படுத்துவது. ஐந்தாவதாக வித்யையிலே சிறந்த மஹா வித்வான் என்பதால் மரியாதை செய்வது. இதை தர்ம சாஸ்த்ரத்தில் சொல்லி இப்படி ஒன்று, இரண்டு, மூன்று போட்டதில் முதலில் வருவதைவிட அடுத்து வருவதே உசந்தது என்று கூறியிருக்கிறது – அதாவது ஐந்தாவதாக, வித்யையை வைத்து ஒருத்தரைப் பெரிய வராகக் கருதி கௌரவிப்பதுதான் எல்லாவற்றிலும் உத்தமமானது என்று சொல்லியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக