வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஓர் ஆர்மோனியப் பெட்டியின் கதை

ராதே கிருஷ்ணா 04-10-2014



90 ஓர் ஆர்மோனியப் பெட்டியின் கதை
வாசிக்கப்பட்டது
42
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
சனி, அக்டோபர் 04,2014, 6:00 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, அக்டோபர் 03,2014, 6:12 PM IST
ந்தக்காலத்தில், கர்நாடக சங்கீதத்தை முழுமையாகக் கற்றுத் தேர்ந்து, திரைப்பட உலகில் பிரபலமாகத் திகழ்ந்த அமரர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவுக்கு உதவியாக ஒரு பையன் இருந்தான்.

பாலக்காட்டைச் சேர்ந்த அந்தப்பையனுக்கு அப்பொழுது 13 வயது. பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மூன்றரை வயதாக இருந்தபொழுது அவனது தந்தை இறந்துவிடவே, தனது தாயின் தந்தையான தாத்தாவின் ஆதரவில் அம்மாவும் பிள்ளையும் வாழ்ந்து வந்தார்கள்.

ஓரளவிற்கு அடிப்படைக் கல்வி அறிவுக்குப்பின், அச்சிறுவனின் மூளையில் மேற்கொண்டு படிப்பு ஏறவில்லை. பதிலுக்கு இசை ஞானம் ஏறிற்று! ஒரு பாகவதரிடம் முறையாக கர்நாடகச் சங்கீதம் கற்று, அந்த 13-வது வயதிலேயே கேரளா கண்ணனூர் டவுன் ஹாலில் முதன் முதலாக அவனது பாட்டுக்கச்சேரி அரங்கேற்றம் ஆனது.

பாட்டுப்பாடிக்கொண்டிருந்த அந்த பாகவதப்பையன் நடிப்பு மீது பிடிப்பு கொண்டு தாயிடமும், தாத்தாவிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டுப் புறப்பட்டு கோயம்புத்தூர் வந்து, அந்நாளில் மிகப் பிரபலமாயிருந்த சென்டிரல் ஸ்டூடியோவிற்குள் நுழைந்து, புகழ் பெற்ற ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் நடிக்க 'சான்ஸ்' கேட்டான்.

அது 1941-ம் ஆண்டு தமிழ்த் திரைப்படக் கதை வசன கர்த்தாக்களின் பிதாமகரும், முன்னோடியுமான பிரபல 'இளங்கோவன்' திரைக்கதை வசனம் எழுதி, 'தவநடிக பூபதி' என்று அந்நாளில் புகழ் பெற்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த பி.யு.சின்னப்பா கோவலனாகவும், குணச்சித்திர நடிகை பி.கண்ணாம்பா கண்ணகியாகவும் நடித்து ஆர்.எஸ்.மணி இயக்கி, ஜூபிடர் பிக்சர்ஸ் அதிபர்களான எம்.சோமசுந்தரம் - கே.மொய்தீன் தயாரிப்பில் 'கண்ணகி' படப்பிடிப்பு அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்தது.

படத்தின் தொடக்கக் காட்சியில் பாலகோவலனாக நடிப்பதற்கு மீசை அரும்பியும், அரும்பாத இளம் பருவத்தில் இருந்த இந்த பாலக்காட்டுப்பையன் பொருத்தமாக இருப்பான் என்று தேர்ந்து எடுக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்கள் படப்பிடிப்பும் நடந்து முடிந்துவிட்டது. பாலகண்ணகி வேடத்தில் ஒரு பருவப்பெண் நடித்திருந்தார்.

'விதி' பாலகண்ணகியை விட்டுவிட்டு, பாலகோவலனாக நடித்திருந்த நம் பாகவதப் பையன் மீது தடுமாறி விழுந்தது. அவன் நடித்திருந்த காட்சிகளை 'ரஷ்' பிரிண்டில் பார்த்தபோது பையனுக்கு வில்லனாக வந்த ஒருவர், பாலகண்ணகியைக் காட்டிலும் பாலகோவலன் மிகவும் இளமையாகக் காணப்படுவதாகக் கூறிய காரணத்தினால், அந்தச் சின்னஞ்சிறிய சினிமாச்செடி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டது.

யார் யாருடைய பரிந்துரைகளோ பெற்று கடைசியில் வேறு வழியின்றி, நமது இளம் பாகவதப் பையன் 'ஆபீஸ் பாய்' என்னும் பெயரில் எடுபிடிப் பையனாக ஜூபிடர் பிக்சர்ஸ் அலுவலகத்தில் வேலைக்கு அமர்ந்தான்.

கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவதும், கம்பெனி மியூசிக் ஹாலுக்கு கம்போசிங்குக்கும், ரிகர்ஸலுக்கும் அன்றாடம் வருகின்ற இசை அமைப்பாளர்களான சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆகியோரைக் கவனித்துக் கொள்வது, ஹாலில் ஜமக்காளம் விரித்துப்போட்டு அதில் ஆர்மோனியப் பெட்டியைக் கொண்டு வந்து வைத்து அதைத் துடைத்து சுத்தப்படுத்துவது, அவர்களுக்கு அவ்வப்போது தேவைப்படுகின்ற காபி, டிபன் வகையறாக்களை வாங்கி வந்து கொடுப்பது, வெற்றிலைப்பாக்குப் புகையிலைத் தட்டு எடுத்து வைப்பது முதலிய பணிவிடைகளை நமது பையன் செவ்வனே செய்து கொண்டிருந்தான். எதிர்காலக் கனவுகள், கற்பனைக்கோட்டைகள் எல்லாமே நடிகன் ஆகவேண்டும் என்ற ஒன்றே ஒன்றுதான்.

இந்த நிலையில், ஜூபிடர் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஒரு வில்லன் நடிகர், 'என் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்கலாம் வா' என்று ஆசை காட்டி அந்தப் பையனை அங்கிருந்து தள்ளிக்கொண்டு போய்விட்டார்.

சேலம் ஆத்தூரில் அந்த வில்லன் நடிகர் 'சம்பூர்ண ராமாயணம்' நாடகம் போட்டார். அதில் சீதா கல்யாண சீன்! ஒவ்வொரு தேசத்து மன்னரும் முன் வந்து வில்லை எடுத்து ஒடிக்க முயன்று முடியாமல் தோற்றுப்போவது போன்ற அந்தக்கட்டத்தில், கேரள தேசத்து மன்னன் வேடம் அணிந்திருந்த நமது பாலக்காட்டுப்பையன் மேடையில் தோன்றி, வில்லை கம்பீரமாகத் தூக்கினான். ராமன் வேடம் போட்டிருந்தவன் மட்டுமே வில்லை ஒடிப்பதற்கென பொருத்தப்பட்டிருந்த அந்த விசைப் பித்தானில் நமது பையனின் விரல் தவறுதலாகப்பட்டு வெடிச்சத்தத்துடன் வில் முறிந்து விழுந்து விட்டது.

உடனே ரசிகப் பெருமக்கள் பலர் எழுந்தோடி மேடைக்கு வந்து ஏறி நின்று "வில்லை ஒடித்த இந்த இளவரசனுக்கே ஜனக நந்தினியாகிய ஜானகியை மணமுடித்துக் கொடுக்கவேண்டும்" என்று கத்திக்கலாட்டா செய்தனர். மேற்படி வில்லன் நடிகரும், கம்பெனி முதலாளியுமான அவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் ரசிகர்கள் சம்மதிக்காததால் வேறு வழியின்றி ராமனை விட்டு விட்டு கேரள மன்னன் வேடம் போட்டிருந்த நமது பையனுக்கே சீதையைக் கல்யாணம் பண்ணி வைத்தார்.

அதோடு அந்தக் காட்சியை முடித்துக்கொண்டு, நமது பையனை நயமாக உள்ளே கூட்டி வந்து அவனை அடித்துத் துவைத்துப் பிழிந்த பிழியிலும், பாவம்! இரவோடு இரவாக ஒருவருக்கும் தெரியாமல் ஆத்தூரை விட்டு அதை அடுத்திருந்த சேலத்துக்கு ரெயில் ஏறிப்போய்விட்டான்.

அவனை அழைத்து வந்து அறியாமல் செய்த பிழைக்காக அடித்துத் துவைத்த அந்த வில்லன் நடிகர் வேறு யாரும் அல்ல. பிற்காலத்தில் எம்.ஜி.ஆரோடும், சிவாஜியோடும் மற்றும் பல நடிகர், நடிகைகளோடும் வில்லன் வேடத்திலும், நகைச்சுவை வேடத்திலும் நடித்துத் தனது தனி முத்திரையைப் பதித்துப்புகழ் பெற்ற அண்ணன் அமரர் டி.எஸ்.பாலையா.

அங்கே இங்கே என்று வேறு எங்குமே போகாமல் அடிக்கப்பட்ட பந்து போல மறுபடியும் சினிமா கம்பெனியிலேயே போய் விழுந்தான் அந்தச் சிறுவன். மாடர்ன் தியேட்டர்ஸ் இசை அமைப்புக் குழுவில் அப்பொழுது நிரந்தரமாக அங்கம் வகித்து வந்த ஒரு அய்யரிடம் போய் நின்று தன் வரலாற்றைக் கூறி தனக்கு ஸ்டூடியோவில் ஏதேனும் ஒரு வாய்ப்பளிக்கும்படி கேட்டான். போட்டுக்கொள்வதற்கு ஒரு மாற்றுச்சட்டைகூட இல்லாத தன் கஷ்ட நிலையைக் கூறிக் கெஞ்சினான்.

இவனைப்பார்த்து இரக்கம் கொண்ட அந்த அய்யர் "இங்கே உனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது. அதனால் நீ ஏற்கனவே இருந்த ஜூபிடர் பிக்சர்சுக்கே போய்விடு, அதுதான் நல்லது" என்றார்.

1. அறிவுரை, 2. ரெயில் செலவுக்கு இரண்டு ரூபாய், 3. போட்டுக்கொள்வதற்கு ஒரு சட்டை ஆக இம்மூன்று அயிட்டங்களையும் வழங்கி அன்புடன் பையனை திரும்ப கோயம்புத்தூருக்கே அனுப்பி வைத்தார் புண்ணியவான்!

'போன மச்சான் திரும்பி ஜூபிடருக்கே வந்தான் -  தனது தந்தை போன்ற இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு முன்வந்து பரிதாபமாக நின்றான். அன்பிற்கினிய நாயுடு அவனைத் தன் சொந்தப் பிள்ளையாகப் பாவித்து அரவணைத்து ஆதரித்தார்!

அவனோடுகூட இசை சம்பந்தப்பட்ட இரு நண்பர்களும் அங்கு இருந்தனர். 'நாம் மூவர்' நமக்கு ஒரு குருநாதர் என்னும் முடிவில்  நடிப்பு ஆர்வத்தை மூட்டைக்கட்டிப்போட்டு விட்டு, இசையிலேயே முழுக் கவனமும் செலுத்தினான் அந்தப் பையன். ஆர்மோனியப் பெட்டியின் மீது நாட்டங்கொண்டு அவ்வப்போது தனிமையில் அவனுக்கு அவனே வாசித்து வாசித்து ஸ்வர வரிசைகள் அத்துப்படியாகி அதில் தேறிக்கரைகண்டு கலைமகள் அருளோடு ஒரு முழுமை பெற்றான். இது அவனோடு இருந்த அந்த இரு நண்பர்களைத்தவிர, கம்பெனியில் வேறு யாருக்கும் தெரியாது.

அந்தச் சந்தர்ப்பத்தில் அதாவது 1946-47 வாக்கில் ஜூபிடர் பிக்சர்ஸ் அபிமன்யு என்ற படம் தயாரித்தனர். ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் எஸ்.எம்.குமரேசன், யு.ஆர்.ஜீவரத்தினம் நாயக - நாயகியாகவும், ஜூபிடரின் நிரந்தர ஆஸ்தான நடிகராக அந்நாளில் இருந்த எம்.ஜி.ஆர். அர்ஜுனனாகவும் நடித்தார். அந்தப்படத்திற்கு எஸ்.எம்.எஸ்.நாயுடு இசை அமைத்தார்!

'அபிமன்யு'வாக நடித்த எஸ்.எம்.குமரேசனும், அவனுடைய இளம் மனைவி வத்ஸலாவாக நடித்த யு.ஆர்.ஜீவரத்தினமும் இணைந்து ('டூயட்') பாடுவதாக ஒரு காட்சி அமைப்பு:-

"புது வசந்தமாமே வாழ்விலே - நாம் புதிதாய் மணமே பெறுவோமே."

கோவை அய்யாமுத்து என்பவர் எழுதிய இந்தப் பாடலுக்கு நாயுடு என்னென்னவோ - எப்படி எப்படி எல்லாமோ மெட்டுப் போட்டுப்பார்த்தார். எதுவுமே சரியாக அவருக்குத் திருப்தியாக அமையவில்லை. அன்றைய பொழுது கழிந்தது. இரவு வந்தது. இசை அமைப்பாளர் நாயுடுவின் 'பிரசவ வேதனையை அவர் அருகில் நின்று கவனித்துக்கொண்டிருந்த அந்த 'எடுபிடிப்பையன்' - அவன்தான் நமது பாலக்காட்டு பாகவதப் பையன் தனது இரு நண்பர்களின் (ஒருவன் தபேலா, இன்னொருவன் வாய்ப்பாட்டு) தூண்டுதலின் பேரில், ஆர்மோனியத்தின் எதிரில் அமர்ந்து முதன் முதலாக மேற்கண்ட பாடலுக்கு ஒரு 'டியூன்' மெட்டு அமைத்துப் பாடிப்பார்த்தான். சரியாகவும், திருப்தியாகவும் இருக்கவே, நண்பர்கள் அவனைப் புகழ்ந்து உற்சாகப்படுத்தினர்.

மறுநாள் காலை வழக்கம்போல எஸ்.எம்.எஸ். நாயுடு மியூசிக் ஹாலுக்கு வந்து ஆர்மோனியப் பெட்டியின் முன் அமர்ந்தார். அதன் கருப்பு வெள்ளைக் கட்டைகளை அழுத்தியபடி ஏதேதோ தனக்குத்தானே முணுமுணுத்தார். 'மெட்டு' எதுவும் வரவில்லை. கோபம்தான் வந்தது. சலித்துக்கொண்டார்.

இதையெல்லாம் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டு நின்ற அந்தப்பையன் மெல்ல நாயுடுவின் அருகில் அமர்ந்து தயக்கத்துடன் சொன்னான்...

பையன்:- அண்ணே! ஒண்ணு சொல்றேன். கோச்சிக்கமாட்டீங்களே?

நாயுடு:- சேச்சே, கோச்சிக்கமாட்டேன். தைரியமா சொல்லு.

பையன்:- இந்தப்பாட்டுக்கு நான் ஒரு டியூன் போட்டிருக்கேன்.

நாயுடு:- அப்படியா? எங்கே? அந்த டியூனைப் பாடிக்காட்டு.

பையன்:- கொஞ்சம் நகர்ந்துக்குங்க... பெட்டியை இப்படிக் கொடுங்க.

நாயுடு:- ஆர்மோனியம் வாசிப்பியா? (பையன் புன்னகையுடன் தலையாட்ட)

நாயுடு:- அட! பரவாயில்லியே. இவ்வளவு நாளா எனக்கு ஏன் நீ சொல்லலே? என்று 'பெரிய இசை' சற்று அப்பால் நகர்ந்து கொள்ள 'சிறிய இசை' தன் சினிமா குருநாதரின் கால்களை முதலில் தொட்டுக் கும்பிட்டுவிட்டுப் பிறகு ஆர்மோனியத்தையும் பயபக்தியுடன் தொட்டுக் கண்களில் கையை ஒற்றிக்கொண்டு முந்தின நாள் இரவு அவன் அமைத்த அந்த டியூனை ஆர்மோனியத்தை சுருதியோடு வாசித்த வண்ணம் தனது இளங்குரலில் இனிமையாகப் பாடிக்காட்டினான்.

ஆச்சரியத்தோடும், ஆனந்தத்தோடும் அதைக்கேட்டு ரசித்த நாயுடு, பையனை மேலும் கீழுமாகப் பார்த்து அதிசயித்து கூறினார்:-

நாயுடு:- பலே பலே! தம்பி! நீ போட்டிருக்குற இந்த 'டியூன்' கேக்குறதுக்கு இனிமையாகவும், டூயட்டுக்குப் பொருத்தமாகவும் இருக்கு. இதையே 'பைனல்' பண்ணி வச்சிக்கிறேன்.
பையன்:- (கும்பிட்டு) ரொம்ப நன்றிண்ணே. எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்.

நாயுடு:- ஆனா ஒரு கண்டிஷன்...

பையன்:- என்னண்ணே?

நாயுடு:- இந்த டியூன் நீ போட்டதா தப்பித்தவறிக்கூட சத்தியமா யாருக்கும் சொல்லக்கூடாது. கம்பெனிக்கும் தெரியக்கூடாது. சரிதானா?

பையன்:- மூச்! ஒருத்தருக்கும் சொல்லமாட்டேன்.

நாயுடு:- அப்படின்னு இந்த பேப்பர்ல எழுதிக் கையெழுத்துப் போட்டுக்குடு. அப்போதான் நான் நம்புவேன்.

'புது வசந்தமாமே வாழ்விலே' டூயட் பாட்டின் டியூனை நான் போட்டதாக யாரிடமும் சத்தியமாக சொல்லமாட்டேன். இப்படிக்கு... என்று பாவம் அந்த அப்பாவிப் பையன் எழுதிக் கையெழுத்திட்டு தனது குருநாதரிடம் சமர்ப்பித்தான்!

மேற்படி டூயட் பாடல் ஒலிப்பதிவு ('ரிக்கார்டிங்') ஆயிற்று. அதைக்கேட்டு மகிழ்ந்த இயக்குனரும், தயாரிப்பாளரும் நாயுடுவிடம் 'இந்தப் படத்துப் பாடல்களுக்கு ஏற்கனவே நீங்க போட்ட அத்தனை டியூன்களையும் விட இப்போ இந்த டூயட் பாட்டுக்குப் போட்டிருக்கிற டியூன் ரொம்ப பிரமாதமாக அமைஞ்சிருக்கு' என்றனர்.

தன் சீடனிடம் 'சங்கீதச் சரக்கு' நிறைந்திருப்பதை நன்கு அறிந்து கொண்ட குரு நாயுடு, அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு, மேற்கொண்டு அவர் இசை அமைத்த ஒவ்வொரு படத்திலும் குறைந்தது இரண்டு பாடல்களுக்கு அவனையே இசை அமைக்கச் சொல்லி உற்சாகப்படுத்தி வளர்த்துவிட்டார்.

ஒட்டு மொத்தமாக படத்தின் அனைத்துப் பாடல்களுமே நாயுடு இசை அமைத்ததுதான் என்று எல்லோருமே எண்ணி இருந்தார்களே தவிர அவற்றில் பையன் இசை அமைத்த பாடல்களும் கலந்திருக்கின்றன என்ற உண்மை ஒருவருக்கும் தெரியாதபடி, இந்தக் குரு சீடன் உறவு நிலவி நீடித்து வந்தது.

திரை மறைவில் ரகசியமாக நடந்து வந்த பையனின் இந்த இசை அமைப்புக்கு எதிர்பாராத சோதனை வந்தது. ஆட்குறைப்புத் திட்டத்தின்படி அந்தப்பையன் (ஆபீஸ் பாய்) இன்னும் சிலரோடு சேர்த்து திடீரென்று வேலையிலிருந்து நிறுத்தப்பட்டு விட்டதை அறிந்து அதிர்ச்சியுற்று, குருநாதரிடம் கூறிக்கண்கலங்க - இதற்கு மேலும் ரகசியத்தை மூடி மறைக்க மனம் ஒப்பாத அவர் தன் சீடனை முதலாளி எம்.எஸ்.ஸிடம் அழைத்துச்சென்றார்.

மூட்டையை அவிழ்த்தார். முட்டையை உடைத்தார். குறிப்பிட்ட பாடல்களை எல்லாம் எடுத்துக்கூறி, அவற்றிற்கு இசை அமைத்தது இதோ இந்தப்பையன்தான் என்று கூறியதுடன்கூட, முன்பு அவன் தனக்கு சத்திய வாக்களித்து எழுதிக்கொடுத்த கடிதத்தையும் காட்டினார். இதை எல்லாம் அறிந்த முதலாளி ஆச்சரியம் கொண்டு "அப்படியா?
இதை ஏன் முந்தியே நீங்க சொல்லவில்லை?" என்று கேட்க, அதற்கு நாயுடு:-

நாயுடு:- நான் சொல்லி இருந்தா... 'ஆபீஸ் பையன் என்ன மியூசிக் போடுறதுன்னு' அவன் ஆர்வத்தைத் தடுத்திருப்பீங்க. அதோட அவனை வேலையிலேருந்து நீக்குனாலும் நீக்கி இருப்பீங்க. அதனாலதான் நான் மறைச்சு, அவன் மூலமாகூட தெரியக்கூடாதுன்னு அவன்கிட்டே எழுதி வாங்கினேன். இளமையிலேயே அவன்கிட்டே நல்ல இசை ஞானம் குடிகொண்டிருக்கு. பிற்காலத்துல பெரிய ஆளா வருவான். இப்போ ஒரு மாறுதலுக்காக சி.ஆர்.சுப்புராமன் கிட்டே சேரணும்னு ஆசைப்படுறான். நான் சொல்றதைவிட, நீங்க ஒரு வார்த்தை சொல்லி அவர்கிட்டே சேர்த்து விட்டு அவனுக்கு ஒரு நல்ல வழி காட்டுங்க. பாவம்! தகப்பனார் இல்லாத பிள்ளை. தற்சமயத்துக்கு நான்தான் அவனுக்குத் தகப்பனாரா இருந்து கவனிச்சிக்கிட்டு வர்றேன்" என்று கேட்டுக்கொண்டார். அதன்படி முதலாளியால் பரிந்துரைக்கப்பட்ட பையனை இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.

இவ்வளவு நேரமாக நான் போட்டுக்கொண்டு வந்த 'மர்ம முடிச்சை' இப்பொழுது அவிழ்க்கிறேன்.

அந்த 13 வயது பாலக்காட்டுப் பாகவதப் பையன் யார் தெரியுமா?

சொல்லிசைக்கு மெல்லிசை சேர்த்து, சொக்க வைத்த பல ஆயிரம் பாடல்களைச் சிறப்பாக - குறிப்பாக எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் அமைத்து, எண்ணற்ற இசை ரசிகர்களின் இதயங்களில் இடம் பெற்ற எனது அன்பிற்கினிய அருமை அண்ணன் 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.வி. மற்றும் 'விசு' என்று செல்லமாக அழைக்கப்பெறும் எம்.எஸ்.விஸ்வநாதன்!

சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எம்.எஸ்.விக்கு ரெயில் செலவுக்கு 2 ரூபாயும், போட்டுக்கொள்வதற்கு மாற்றுச் சட்டையும் வழங்கிய அந்த 'அய்யர்' யார் தெரியுமா?

'திருவிளையாடல்', 'தில்லானா மோகனாம்பாள்', 'திருவருட்செல்வர்', 'திருமால் பெருமை' போன்ற இசை அம்சம் நிறைந்த பல படங்களுக்கு மட்டும் அல்லாது நூறு இசைப்படங்களுக்குச் சமமான ஒரு 'சங்கராபரணம்' படத்திற்கு சுத்த கர்நாடகச் சங்கீதத்தில் இசை அமைத்ததன் மூலமாக, அனைத்திந்திய புகழ் பெற்ற என் அருமை அண்ணன், 'திரை இசைத்திலகம்' கே.வி.மகாதேவன்!

அன்றைக்கு கோவை ஜூபிடர் பிக்சர்சில் விசு அண்ணனோடு இருந்த அந்த இரு இளம் இசை நண்பர்கள் யார் தெரியுமா? பிந்நாட்களில் எம்.எஸ்.வி. இசைக்குழுவின் நிரந்தர 'தபேலா' கலைஞர் கோபாலகிருஷ்ணன்! இன்னொருவர் பிற்கால இசை அமைப்பாளரும், பாடகருமான ஜி.கே.வெங்கடேஷ்.

எம்.எஸ்.வி. என்ற இந்த ஆர்மோனியத்துடன் டி.கே.ராமமூர்த்தி என்னும் வயலினை இணைத்து வைத்து இரண்டிற்கும் 'திருக்கல்யாணம்' நடத்தி ஆசீர்வதித்தார் சுப்புராமன்.
திருச்சியைச் சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் மலைக்கோட்டை கிருஷ்ணசாமி பிள்ளையின் புதல்வரான இந்த டி.கே.ராமமூர்த்தி கர்நாடக இசைப் பரம்பரையில் வழி வழியாக வந்த விற்பன்னராவார்! முறையான இசை பயின்று வயலின் மேதையான டி.கே.ஆர், எம்.எஸ்.வியைவிட வயதில் மூத்தவர். அதனால் எம்.எஸ்.வி. இவரை அன்புடன் அண்ணன் என்றுதான் அழைப்பார்.

விஸ்வநாதன் சி.ஆர்.சுப்புராமனிடம் வந்து சேர்ந்த பின்னர் 'தேவதாஸ்' படத்தின் அனைத்துப் பாடல்கள் ஒலிப்பதிவும் முடிந்து, படமும் நிறைவு பெற்று பின்னணி இசை ('ரீ-ரிக்கார்டிங்') சேர்க்க வேண்டிய நிலையில், அதன் இசை அமைப்பாளரான சுப்புராமன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்து விட்டார். அதனால் தயாரிப்பாளர் அவருடைய உதவியாளர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தியையே படத்துக்கு வேண்டிய பின்னணி இசையை அமைக்கும்படி கூறினார். இதுதான் விஸ்வநாதன் ராமமூர்த்தி முதன் முதலாகப் பின்னணி இசை அமைத்த படம் ஆகும்.

("மூன்று முதல்வர்களைக் கண்ட ஓர் இயக்குநர்"
-அடுத்த வாரம்)

எம்.ஜி.ஆரின்  பாராட்டு

விசுவநாதனின் திறமையைத் தெரிந்து கொண்டிருந்த 'ஈத்தச்சன்', 'மாத்யூ' என்ற இரு மலையாளக் கிறிஸ்துவப் படத்தயாரிப்பாளர்கள் தங்களுடைய 'சந்திரா பிக்சர்ஸ்' பேனரில் தயாரிக்க இருந்த ஒரு தமிழ்ப்படத்திற்கு இசை அமைக்க விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு முதன் முதலாக வாய்ப்பு வழங்கினார்கள். குறிப்பிட்ட ஒரு நாளில் கீழ்ப்பாக்கம் நியூடோன் ஸ்டூடியோ ரிக்கார்டிங் தியேட்டரில் பாடல் ஒலிப்பதிவுடன் கூடிய படப்பூஜைக்கு ஏற்பாடு செய்து விட்டு, அந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்த ஒரு நடிகரையும் ஆரம்ப விழாவிற்கு வந்து கலந்து கொள்ளும்படி அழைத்தனர். விஸ்வநாதன் அந்தப்படத்திற்கு இசை அமைக்கும் விவரமும் அவருக்குச் சொல்லப்பட்டது. இந்தச் செய்தியைக் கேட்ட அந்த நடிகர் கூறினார்:- "என்னது? ஜூபிடர் பிக்சர்ஸ் கம்பெனியில் ஆபீஸ் பாயா இருந்தவன் என் படத்துக்கு மியூசிக் டைரக்டரா? வேற யாரும் உங்களுக்குக் கிடைக்கலியா? அதெல்லாம் சரியாக வருமா?" என்றார் சந்தேகத்துடன்.

ஆனால், " விஸ்வநாதன் மியூசிக் டைரக்ஷன்ல நாளைக்கு 'சாங் ரிக்கார்டிங்'குடன் பூஜை நடந்தே தீரும்" என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்கள் அந்தத் தயாரிப்பாளர்கள்.

அதன்படியே பாடல் ஒலிப்பதிவு செய்தார் அன்றைய பிரபல ஒலிப்பதிவாளர் 'டின்ஷா-கே-தெஹ்ராணி!'

இதைக்கேள்விப்பட்ட அந்த நடிகர் பாடல் ஒலிப்பதிவு ஆன ஒலி நாடா அடங்கிய 'டேப்ரிக்கார்டரை' அந்தக் கம்பெனியில் இருந்து வரவழைத்து பாடலைப் போட்டுக்கேட்ட உடனே காரை எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் அடைஞ்சான் முதலி தெருவுக்குச்சென்று ஒரு வீட்டின் மாடியில் ஏறினார். விஸ்வநாதன் அங்குதான் வாடகைக்குக் குடியிருந்தார். அவரைக் கண்ட மாத்திரத்தில் அந்த நடிகர் கட்டித்தழுவிக்கொண்டு மகிழ்ச்சியுடன் கூறினார்:-

"விசு! முதல்ல உன்னைப்பற்றி நான் என்னமோ நினைச்சேன். அது தப்பு! நீ டியூன் போட்டு ரிக்கார்டு பண்ணின அந்தப்பாட்டைக்கேட்டேன். ரொம்ப அற்புதமாக இருந்தது. அப்பவே முடிவு பண்ணிட்டேன். இனிமே நான் நடிக்கிற எல்லாப் படங்களுக்கும் நீதான் மியூசிக் டைரக்டர்!" என்று மனதாரப் பாராட்டிக் கூறியது மட்டுமல்ல, பிற்காலத்தில் அவர் மிகப்பெரிய நடிகரானதும் அவர் நடித்த பெரும்பாலான படங்களுக்கு விஸ்வநாதனை இசை அமைக்க வைத்து அவருக்குப் புகழ் தேடிக்கொடுத்து, தானும் அந்தப் பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார்!

முதலில் விசு அண்ணனுக்கு ஆதரவு தர மறுத்து,பின்னர் அவரைத் தன் ஆஸ்தான இசை அமைப்பாளராக ஆக்கிக்கொண்ட அந்த நடிகர் வேறு யாரும் அல்ல.

'புரட்சித்தலைவர்' எம்.ஜி.ஆர்.

அவர், தன் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியாருடனும், அன்றைய பிரபல கதாநாயகி நடிகை பி.எஸ்.சரோஜாவுடனும் நடித்து 1953-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்து வெற்றி பெற்ற அந்தப்படம் 'ஜெனோவா!' அதுதான் விஸ்வநாதன் - ராமமூர்த்தி முதன் முதலாக இசை அமைத்த படம்!

தாயின்  கண்டிப்பு

ண்ணன் விஸ்வநாதனின் தாயார் மறைவதற்கு முன்பு வரையிலும் - 7 குழந்தைகளுக்குத் தந்தையான அவர் - சில சந்தர்ப்பங்களில் தனது அன்புத் தாயாரிடம் அடி வாங்கியிருக்கிறார். அது சம்பந்தப்பட்ட எனக்குத் தெரிந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன்:-

தேவர் பிலிம்ஸ் தயாரித்த அனைத்துப் படங்களுக்கும் அந்நாட்களில் அண்ணன் கே.வி.மகாதேவன் இசை அமைத்து வந்தார். அதில் ஒரு மாற்றம் வேண்டும் என்று சில விநியோகஸ்தர்கள் விரும்பி தேவரண்ணனிடம் கூற அவரும் அதைக்கேட்டு விசு அண்ணன் வீட்டிற்குச் சென்று மொத்தப்பணத்தையும் நீட்டி தன் படத்திற்கு இசை அமைக்கும்படிக் கூறினார். இதைப் பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அவரது தாயார், தேவரண்ணன் முன்னிலையிலேயே தன் மகனின் கன்னத்தில் 'பளார்' என்று பலமாக ஓர் அறை அறைந்து:- 'நன்றி கெட்டவனே! ஒரு காலத்துல நீ வேலை இல்லாம கஷ்டப்பட்டு சேலத்துக்குப்போனப்போ, உங்கிட்டே அன்பு காட்டி, ரெயில் செலவுக்குப் பணம் கொடுத்து, போட்டுக்க மாத்துச்சட்டையும் கொடுத்த அந்தப் புண்ணியவான் தொழில் பண்ற அந்த இடத்துல நீ அடி வைக்கலாமா?'.

பின்னர் தேவரண்ணனைக் கும்பிட்டு:- 'ஐயா! நீங்க எவ்வளவு பணம் கொடுத்தாலும் என் பிள்ளை உங்க படத்துக்குப் பாட்டுப்போடமாட்டான். நீங்க வழக்கம்போல அய்யரையே வச்சிப்போட்டுக்குங்க. அதுதான் உங்களுக்கு நல்லது, போயிட்டு வாங்க' என்று உறுதியாகக் கூறி அண்ணனை அனுப்பிவிட்டார்.

அந்தத்தாயார். இந்த வயதில் தன் பிள்ளையை கன்னத்தில் அறைந்ததைக் கண்ணெதிரில் கண்டு கதிகலங்கிப்போன தேவரண்ணன் திரும்பி அலுவலகத்துக்கு வந்து இதை எங்களிடம் கூறி, 'இப்படி ஓர் அபூர்வ தாயும் பிள்ளையுமா?' என்று அதிசயித்தார்.











































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக