ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கண்டுபிடித்த 10-ம் நூற்றாண்டு கல்வெட்டு.

ராதே கிருஷ்ணா 19-10-2014


ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கண்டுபிடித்த 10-ம் நூற்றாண்டு கல்வெட்டு.

From the album: Timeline Photos
By Hinduism
ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கண்டுபிடித்த 10-ம் நூற்றாண்டு கல்வெட்டு.

காஞ்சிபுரம் அருகே சிறுகரும்பூர் கிராமத்தில் உள்ள சிவாலயத்துக்குச் சென்ற சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 10-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தார்.

இது குறித்து முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர் நாகசாமி வெளியிட்ட அறிக்கை:

காஞ்சிபுரம் காவேரிப்பாக்கத்துக்கு அருகில் உள்ளது சிறுகரும்பூர் கிராமம். அங்கு திரிபுராந்தகெச்சுவரர் சிவாலயம் உள்ளது. அங்குள்ள அம்மனின் பெயர் சுந்தரகாமாக்ஷி. ஊரின் நுழைவாயில் உள்ள அக்கோயிலுக்கு கோபுரம் ஏதும் இல்லை. ஒரு கம்பிக் கதவு மட்டும் உள்ளது.

உள்ளே சிவபெருமானுக்கு ஒரு கோயிலும், தேவிக்கு ஒரு கோயிலுமாக இரு கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. சிவாலயம் மிகவும் எளிமையாக இருந்தபோதிலும் சிறப்பான வடிவில் உள்ளது. அம்மன் ஆலயம் பச்சைக்கல்லால் சுற்று வட்டாரத்தில் எங்குமில்லாத படி மிகவும் நுணுக்கமான சிற்ப அழகுடன் தோற்றமளிக்கிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோயிலுக்கு வந்தார். அப்போது கோயிலின் பின்புறத்தில் பழைய கோயில்களின் இடிபாடுகள் இருப்பதை பார்த்தார். அவற்றில் புதையுண்டு கிடக்கும் கறகளை அவர் சற்று அகற்றியபோது அதில் இரு கல்வெட்டுகளும், கோயிலின் உள்ளே இரு துண்டு கல்வெட்டுகளும் காணப்பட்டன. அவர் கண்டுபிடித்த இந்த கல்வெட்டுகளில் வெளியில் கிடைத்த கல்வெட்டுகள் 10 நூற்றாண்டுக் கல்வெட்டுகளாகும்.

இக் கல்வெட்டில் இக்கோயிலின் செலவுக்கு நெல் அளித்த விவரங்கள் உள்ளன. கோயிலின் உள்ளே கிடக்கும் கல்வெட்டு முத்லாம் இராஜராஜனின் (1013 ஆம்) ஆண்டு கல்வெட்டாகும். இராஜராஜன் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய விவரங்கள் இக் கல்வெட்டுகளில் உள்ளன.

அத்துடன் இவ்வூர் மக்கள் இக்கோயிலில் நடராஜருக்கு தேவியாக உமா பரமேச்சுவரியாரை தோற்றுவித்ததையும் இக் கல்வெட்டு கூறுகிறது. மற்ற கல்வெட்டும் இராஜராஜன் காலத்து கல்வெட்டுதான். அதில் நாகை கணிச்சன் ஆன இருமடி சோழ மூவேந்த வேளான் கங்காதரனிடத்தில் 900 காடி நெல்லை கொடுத்து அதற்கு வரும் ஆண்டு வட்டி 30 கழஞ்சைக் கொண்டு இங்கு பூஜை நடத்த வழி வகுத்தான் என்ற விவரங்கள் உள்ளன.

இது நாள் வரை இக்கோயில் எக்காலத்தைச் சேர்ந்தது என்பது தெரியாது. இப்போது ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வந்து சிதைந்திருந்த கல்வெட்டுகளை பார்த்ததினால் இவ்வூரின் பழமையும் கோயிலின் பழமையும் அறிய முடிகிறது என்றார்.

மேலும், 1974 ஆண்டு காஞ்சி மகாபெரியவர் இங்கு வந்துள்ளார் என்றும், மீண்டும் 1978-ம் ஆண்டு இங்கு நடந்தே வந்துள்ளார் என்றும் இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். 1979-ல் சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திர சுவாமிகள் இங்கு வந்து திருப்பணி தொடங்கி வைத்தார் என்றும், 1991-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்றும், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் இக்கோயிலுக்கு வந்துள்ளார் என்றும் இக்கிராமத்தினர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக