ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

இராமானுச நூற்றந்தாதி

ராதே கிருஷ்ணா 23-08-2015


ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீரங்கநாயகி ஸமேத ஸ்ரீரங்கநாத பரப்ரஹ்மணே நம:
இந்த இணையதளத்தில் நம்பெருமாள் திருவுள்ளத்தாலும், ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவுள்ளத்தாலும், ஸ்வாமி எம்பெருமானார் திருவுள்ளத்தாலும் பல ச்லோகங்களுக்கு எளிமையான தமிழ்நடை விளக்கங்கள் உள்ளன:
1. எம்பெருமானார் அருளிச்செய்த கத்யத்ரயம், ஸ்ரீபாஷ்யம்
2. ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம், ஸ்ரீதயா சதகம்
3. ஸ்வாமி பராசரபட்டர் அருளிச்செய்த ஸ்ரீகுணரத்னகோசம், ஸ்ரீரங்கராஜஸ்தவம்
4. பாஞ்சராத்ர ஆகம நூலான லக்ஷ்மீ தந்த்ரம் (தமிழ் மொழிபெயர்ப்பு)
இவற்றை Download category என்பதைக் க்ளிக் செய்து download செய்யலாம். மேலும் பல நூல்களுக்கு அடியேனின் இணையதளமானhttp://www.nameprumal.com செல்லவும்.
”நம் அரங்கனைக்” குறித்து உள்ள ஊஞ்சல் பாசுரங்கள் – அருகில் உள்ள oonjal category-ஐ க்ளிக் செய்யவும்.
அடியேன் தாஸன்
க. ஸ்ரீதரன்

35. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 69-70) March 3, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

69. சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து * முன் நாள்
      அந்தமுற்று ஆழ்ந்தது கண்டு * அவை என்றனக்கு அன்று அருளால்
      தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து *
      எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே.
விளக்கவுரை – ப்ரளயத்தின்போது மனம் மற்றும் அனைத்து இந்த்ரியங்களும் அழிந்து, நாசம் அடைந்து, அசித் பொருள்களுடன் இணைந்தபடி கிடந்தது. அந்தக் காலகட்டத்தில் இப்படிப்பட்ட மனம் மற்றும் இந்த்ரியங்களை எனக்கு அளித்த திருவரங்கன், தனது அபயஹஸ்தத்தை மட்டுமே காண்பித்தபடி இருந்தான்; தனது திருவடிகளில் சரணம் என்று என்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை. அந்தச் சூழ்நிலையில் எனது தந்தையான எம்பெருமானார், ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்து, நான் வசித்து வந்த திருவரங்கத்தைத் தேடி வந்தார். என்னை வாரி எடுத்து, என்னிடமிருந்து எதனையும் எதிர்பாராமல், ஸ்ரீரங்கநாதனே அளிக்காமல் இருந்த அவனது திருவடிகளை எனக்கு அளித்தார். இப்படியாகப் பகவானே எடுக்கத் தயங்கிய என்னை, தான் எடுத்துக் கொண்டார்.
70. என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்ணில் பல்குணத்த
       உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
       பின்னையும் பார்க்கில் நலம்முளதே உன் பெரும் கருணை
       தன்னை என் பார்ப்பர் இராமானுச உன்னைச் சார்ந்தவரே.
விளக்கவுரை – எம்பெருமானாரே! மிகுந்த பாவங்களுடன், உலக விஷயங்களில் ஈடுபட்டபடி உள்ள என்னை நீவிர் பார்க்க வேண்டும். இவ்விதம் உலக விஷயங்களில் மட்டுமே ஈடுபட்டபடி உள்ள என்னுடைய குணங்களை நீவிர் காண வேண்டும். எண்ண இயலாத உயர்ந்த திருக்கல்யாண குணங்கள் கொண்டுள்ள உம்மையே நீவிர் ஒருமுறை பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படியாக ஒப்பு நோக்கிய பார்வை மூலம், பரமகாருணிகரான நீவிர், எல்லையற்ற பாவங்கள் நிறைந்த என்னை வாரி எடுத்து, உமது கருணைக்கு இலக்காக்க வேண்டும். இவ்விதம் நீவிர் செய்யாமல், என்னைக் காப்பாற்ற என்னிடம் வேறு ஏதேனும் நன்மை உள்ளதா என்று நீவிர் ஆராய்ந்து பார்த்தால், உமது திருவடிகளை அண்டியுள்ளவர்கள், உம்முடைய உயர்ந்த குணங்களைக் குறித்து ஐயம் கொள்ள மாட்டார்களா?

34. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 67-68) March 2, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

67. சரணம் அடைந்த தருமனுக்கா * பண்டு நூற்றுவரை
      மரணம் அடைவித்த மாயவன் * தன்னை வணங்க வைத்த
      கரணம் இவை உமக்கு அன்று என்று இராமானுசன் உயிர்கட்கு
      அரண் அங்கு அமைத்திலனேல் * அரணார் மற்று இவ்வாருயிர்க்கே.
விளக்கவுரை – பெரியபிராட்டி தானே சீதையாக வந்து இராவணனிடம், “இராமனைச் சரணம் அடைவாய்”, என்று கூறியபோதும் இராவணன் மறுத்துவிட்டான். அது போல அன்றி, கண்ணனை முழுவதுமாகத் தர்மன் சரணம் அடைந்தான். இப்படிப்பட்ட தர்மனுக்காக முன்பு ஒரு காலகட்டத்தில், மஹாபாரதப் போரில், கௌரவர்கள் நூறு பேர்களை ஸர்வேச்வரன் அழித்தான். கண்ணனை ஏன் மாயவன் என்றார் – சக்கரம் கொண்டு சூரியனை மறைத்து பகல் பொழுதை இரவாக்கியும், “ஆயுதம் எடுக்க மாட்டேன்” என்ற சபதத்தை மீறி பீஷ்மருக்கு எதிராக ஆயுதம் எடுக்க முற்பட்டதையும், அர்ஜுனனை முன்னே நிறுத்தி உபதேசம் செய்ததையும், தனது மேன்மைகள் எதனையும் பாராமல் அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டியதையும், பாண்டவர்களுக்காகத் தூது சென்றதையும் காணும்போது மாயமான செயல்கள் உள்ள கண்ணனை, “மாயவன்” என்றும் கூறலாம் அல்லவா? இப்படிப்பட்ட அந்தச் ஸர்வேச்வரன் தன்னைச் சரணம் புகவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த உடலையும் உறுப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தான்; இந்த உறுப்புகள் உங்களுக்காக (நமக்காக) ஸம்ஸாரத்தில் ஈடுபடுவதற்காக அல்ல, கைங்கர்யம் செய்வதற்கே – என்று எம்பெருமானார் உபதேசித்தார். இவ்விதமாக எம்பெருமானார் இந்த உலகில் உள்ள ஜீவன்களுக்கு பாதுகாப்பான வழியை உபதேசித்தார். ஆகவே எம்பெருமானாரைக் காட்டிலும் நமக்குப் பாதுகாப்பு வேறு யார் உள்ளனர்?
68. ஆரெனக்கின்று நிகர் சொல்லில் * மாயன் அன்று ஐவர் தெய்வத்
       தேரினில் செப்பிய கீதையின் செம்மை * பொருள் தெரியப்
        பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர்
        சீரினில் சென்று பணிந்தது * என் ஆவியும் சிந்தையுமே.
விளக்கவுரை – இந்த உயிர்களின் காரணமாக உள்ள கண்ணன் – பூதனை, சகடாசுரன் போன்ற அசுரர்களை வதைத்தும்; பசுக்கள் மற்றும் கோபர்களை ஆதரித்தும்; கோவர்த்தனம் எடுத்து அவர்களைக் காத்தும்; யசோதை, அக்ரூரர், அர்ஜுனன் போன்றவர்களுக்குத் தனது விச்வரூபத்தைக் காண்பித்தும் – இவ்விதமாக பல வியப்பளிக்கும் செயல்களை புரிந்த மாயன் ஆவான். அவன் மஹாபாரத யுத்தத்தின்போது, பஞ்சபாண்டவர்களுக்கு வெற்றியை அளிப்பதற்காக, தனது (கண்ணன்) திருவடிகள் பட்ட புனிதமான தேரில் அமர்ந்து, மோக்ஷ உபாயமான ஸ்ரீமத் பகவத் கீதையை உபதேசம் செய்தான். இப்படிப்பட்ட கீதையின் உண்மையான ஆழ்பொருளை, மற்றவர்கள் போன்று தனது விருப்பப்படி பொருள் கூறாமல், உபனிஷத்துக்கள் மூலமாக ஆராய்ந்து, கீதாபாஷ்யம் மூலமாக, இந்த உலகிற்கு நன்கு விளங்கும்படி செய்தவர் உடையவர் ஆவார். அவருடைய திருவடிகளில் – ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே – என்று பணிந்தவர்கள் கூரத்தாழ்வான் போன்றவர்கள் ஆவர். இவர்களது உயர்ந்த திருக்கல்யாண குணங்களில் சென்று எனது மனமும் ஆத்மாவும் படிந்துவிட்டது. இனி இந்த உலகில் எனக்கு நிகரானவர்கள் யார் உள்ளனர்?

33. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 65-66) March 1, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

65. வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு * என்றும் மறையவர்தம்
       தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது * தத்துவ நூல்
       கூழற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அந்
       நாழற்றது * நம் இராமானுசன் தந்த ஞானத்திலே.
விளக்கவுரை – எங்களது எஜமானராக உள்ள எம்பெருமானார், எங்களிடம் எந்தவிதமான கைம்மாறும் எதிர்பார்க்காமல், தனது அளவற்ற கருணை காரணமாக, மிகவும் உயர்ந்த ஞானத்தை எங்களுக்கு அளித்தார். இந்த ஞானம் காரணமாக வேதங்களை அடியுடன் தள்ள முயன்ற பௌத்தர் போன்றவர்களும், வேதவரிகளுக்குத் தவறான பொருள் கற்பிக்க முயன்ற யாதவப்ரகாசர் போன்றவர்களும் தங்கள் வாழ்வை இழந்தனர். இவ்விதம் களைகள் நீக்கப்பட்ட பின்னர், பயிர்கள் தடையின்றி வளர்வது போன்று, நீண்ட காலமாக இருந்து வரும் பரமவைதிகர்கள் தாங்கள் இழந்த வாழ்வை மீண்டும் பெற்று, தங்களது தாழ்வு நீங்கப் பெற்றனர். இதன் மூலம் இந்தப் பூமியானது மிகவும் உயர்ந்த புண்ணியம் பெற்றது. எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம் போன்ற நூல்கள் மூலமாக வேதங்களில் கூறப்பட்ட பரம்பொருள் குறித்த ஐயம் அனைத்தும் நீங்கிவிட்டன. தாழ்வான குணங்கள் கொண்டிருந்தவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றன.
66. ஞானம் கனிந்த நலம் கொண்டு * நாள்தொறும் நைபவர்க்கு
      வானம் கொடுப்பது மாதவன் * வல்வினையேன் மனத்தில்
       ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்
      தானம் கொடுப்பது * தன் தகவு என்னும் சரண் கொடுத்தே.
விளக்கவுரை – “அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா”, என்று கூறும்படி, பெரியபிராட்டியுடன் இணைந்தே சேதனர்களைக் கைக்கொள்ளும் ஸர்வேச்வரன், தனது உயர்ந்த இடமாகிய பரமபதத்தை யாருக்கு அளிக்கிறான் என்றால் – சிறந்த ஞானம் கொண்டு பக்தி உடையவர்களாகவும், அந்தப் பக்தி காரணமாக நாள் முழுவதும் அவனை எண்ணியபடி கைங்கர்யம் செய்பவர்களுக்கே ஆகும். இப்படி உள்ளபோது உடையவர் செய்தது என்ன? மிகவும் தீய பாவங்கள் பலவும் செய்தபடி உள்ள எனது மனதில் இருந்த பாவங்கள் செய்யும் எண்ணங்களை அடியுடன் நீக்கினார். இதன் மூலம் பரமபதம் கிட்டும்படிச் செய்தார். இதுவே அவரது கருணை மூலமாக, அவர் நமக்குச் செய்யும் உபாயமாகும்.

32. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 63-64) February 29, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

62. பிடியைத் தொடரும் களிறன்ன * யான் உன் பிறங்கிய சீர்
      அடியைத் தொடரும்படி நல்கவேண்டும் * அறுசமயச்
      செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து இப்
      படியைத் தொடரும் * இராமானுச! மிக்க பண்டிதனே!
விளக்கவுரை – வேதங்களை மறுக்கும் ஆறு மதங்களைப் பின்பற்றுபவர்கள், அந்த முள் நிறைந்த செடிகளை அண்டி இருப்பவர்கள் கண்டவுடன் பயந்து ஓடும்படியா, இந்தப் பூமியில் பரமபதத்திலிருந்து வந்து திருஅவதாரம் செய்த எம்பெருமானாரே! (ஆறு என்ற பதம் மூலம் – ஆட்டின் தலையை வெட்டிப் பலி கொடுத்தல், முள் நிறைந்த காட்டில் பஞ்ச அக்னி எழுப்பி கோரமான தவம் புரிதல், பாஷாண்டி வேடம் பூண்டபடி இருத்தல் முதலானவற்றையும் கூறுவதாகக் கொள்ளலாம்). உடையவரே! உம்முடைய ஞானம் எத்தகையது! எனக்கு ஒரு விண்ணப்பம் உள்ளது. அது என்னவென்றால் – பெண் யானையைத் தொடரும் ஆண் யானையைப் போன்று, இத்தனை ஆண்டுகளாக நான் உலகவிஷயங்களின் பின் மட்டுமே சென்றபடி இருந்தேன். இவ்விதம் திரிந்த நான் இனி வரும் காலங்களில், இந்த உலகம் முழுவதும் நிரம்பிய புகழ் கொண்ட உன்னுடைய திருவடிகளை மட்டுமே, ஒருபோதும் நழுவாமல் அண்டி நிற்கவேண்டும். இப்படிப்பட்ட குணத்தை நீவிர் எனக்கு அருள வேண்டும்.
64. பண்தரு மாறன் பசுந்தமிழ் * ஆனந்தம் பாய்மதமாய்
      விண்டிட எங்கள் இராமானுசமுனி வேழம் * மெய்ம்மை
      கொண்ட நல்வேதக் கொழுந்தண்டம் ஏந்திக் குவலயத்தே
      மண்டி வந்து ஏன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே.
விளக்கவுரை – தன்னை அண்டியவர்களைக் காப்பாற்றும் தன்மை உடையதும், தான் விரும்பியவர்களுக்கு மாலை சூடி அவர்களுக்கு பட்டாபிஷேகம் செய்விக்கும் திறனுள்ளதும் ஆகிய யானை போன்று எங்கள் எம்பெருமானார் உள்ளார். இத்தகைய யானையின் மதநீராக வழிவது எது என்றால் – நம்மாழ்வார் அருளிச்செய்த, அழகான பண்களுடன் கூடிய, தெளிவான தமிழில் உள்ள திருவாய்மொழி ஆகும். இத்தகைய திருவாய்மொழி என்னும் மதநீர் எங்கும் பரவி ஓடும்படி யானையாகிய எம்பெருமானார் வந்தார். இந்த யானையின் தந்தமாக எது உள்ளது என்றால் – (தந்தம் = உடையவர் திருக்கரத்தில் உள்ள த்ரிதண்டம் என்றும் கூறலாம்) ஸத்யமே வடிவமாக உள்ளதும், மிகுந்த பெருமை உள்ளதும் ஆகிய வேதங்கள் ஆகும். அல்லது நம்மாழ்வாரின் தமிழ் வேதமாகிய திருவாய்மொழியைக் கூறியதாகவும் கொள்ளலாம். அல்லது பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதம் என்பதற்கு – ஸ்ரீமந் நாராயணன் என்னும் கடலில் இருந்து, ஆழ்வாராகிய மேகமானது கருணை என்னும் நீரை பருகி எடுத்தது; அதனை பெரியநம்பி என்னும் குன்றில் பெய்விக்க, அங்கிருந்து அந்தக் கருணையானது வழிந்து, மணக்கால்நம்பி – உய்யக்கொண்டார் – ஆளவந்தார் என்னும் ஆறுகளில் பாய்ந்து, எம்பெருமானார் என்னும் குளத்தை அடைந்து, ஸம்ஸாரிகளைக் காத்தது – என்று பொருள் கொள்ளலாம். இப்படிப்பட்ட த்ரிதண்டம் ஏந்திய இவர் செய்வது என்ன? யானையாக வந்து வேதங்களை மறுத்துக் கூறுபவர்களை மிதித்தும், தனது தந்தம் கொண்டு குத்தியும் ஓடச் செய்கிறார் என்று கருத்து. ஸர்வேச்வரன் எப்போதும் தனது திருக்கரங்களில் சங்கும் சக்கரமும் கொண்டது போன்று, எம்பெருமானார் எப்போதும் த்ரிதண்டத்துடன் உள்ளார். இப்படிப்பட்ட யானை இந்த பூமியில் உள்ள ஹிமாசலம், வேங்கடாசலம், சாரதாபீடம் ஆகிய இடங்களுக்கு வந்து, வாதம் செய்தவர்களைத் தள்ளியபடி நின்றது. எம்பெருமானாரின் வாதங்களை எதிர்த்து வாதம் செய்பவர்களே! உங்கள் வாழ்வு இத்துடன் முடிந்தது.

31. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 61-62) February 28, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

61. கொழுந்து விட்டு ஓடிப் படரும் வெங்கோள் வினையால் * நிரயத்து
      அழுந்தி இட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் * அருமுனிவர்
      தொழும் தவத்தோன் எம் இராமானுசன் தொல்புகழ் சுடர்மிக்கு
       எழுந்தது * அத்தால் நல் அதிசயங்கண்டது இருநிலமே.
விளக்கவுரை – ஸ்ரீமத் பகவத் கீதையில் – ஸ மஹாத்மா ஸு துர்லப – இப்படிப்பட்ட ஞானி கிட்டுவது மிகவும் அபூர்வம் – என்றான். அதன் பின்னர் ஸ்வாமி நம்மாழ்வார் திருஅவதாரம் செய்தபோது, “இவரை நாம் காணமுடியாமல் போனதே”, என்று வாஸுதேவனே வருத்தம் கொண்டதாக ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானம் அருளிச் செய்தார். இப்படிப்பட்ட உயர்ந்த நிலையை “அரு” என்னும் பதம் கூறியது. அடுத்துள்ள “முனிவர்” என்னும் பதம் ஸ்வாமி நம்மாழ்வாரைக் கூறியது. “வாஸுதேவஸ் ஸர்வம்”, “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்”, என்று அனைத்தும் கண்ணனே என வாழ்ந்தவர் ஸ்வாமி நம்மாழ்வார் ஆவார். இப்படிப்பட்ட நம்மாழ்வாரால், “பொலிக பொலிக” என்று போற்றப்பட்டவரும், “ஆ முதல்வன்” என்று ஆளவந்தாரால் போற்றப்பட்டவரும் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட உயர்ந்தவர்கள் போற்றும்படியாக, ப்ரபத்தி என்னும் தவம் கொண்டவராக உள்ளவர் உடையவர் ஆவார். இந்த உலகில் எங்கும் பரவியுள்ளதும், எந்தவகையான ப்ராயச்சித்தம் கொண்டும் தொலைக்க முடியாததும் ஆகிய வினைப்பயன்களால் நான் ஸம்ஸாரம் என்னும் கடலில் சிக்கித் தரை காண இயலாமல் இருந்தேன். இப்படிப்பட்ட என் போன்றவர்களை, எங்கள் அறியாமை கண்டு கைவிடாமல், நாங்கள் உள்ள இடம் தேடி வந்து ஆட்கொண்டதால், எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்கள் மேலும் ஓங்கி வளர்ந்தன. இவ்விதம் என் போன்ற பாவம் செய்த பலரைக் காப்பாற்றிய பின்னர், எம்பெருமானாரின் குணங்கள் மேலும் ஓங்கியதைக் கண்ட இந்த உலகம் வியந்து நின்றது. என் போன்ற வினை உள்ளவர்கள் இன்னமும் இந்த உலகில் அதிகம் பேர் இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் ஓங்கி வளர்ந்தது எனலாம்.
62. இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றி * இன்று யான் இறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் * மன்னு மாமலர்த்தாள்
பொருந்தா நிலையுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெருந்தேவரைப் பரவும் * பெரியோர் தங்கழல் பிடித்தே.
விளக்கவுரை – நமது எஜமானராக உள்ள எம்பெருமானாரின் தாமரைமலர் போன்ற அழகான திருவடிகளை ஒரு சில துர்மனம் கொண்டவர்கள் வந்து அண்டாமல் இருக்கக்கூடும். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ப்ரம்மன், சிவனை விடவும் உயர்ந்த நித்யஸூரிகள் எந்தவிதமான நன்மைகளையும் செய்வதில்லை (நித்யஸூரிகளே நன்மை செய்யவில்லை என்றால், பகவான் கண்டிப்பாக ஏதும் செய்யமாட்டான் என்று கருத்து). இப்படிப்பட்ட நித்யஸூரிகளின் திருவடிகளையே எப்போதும் போற்றியபடி உள்ளவர்கள் கூரத்தாழ்வான் போன்ற உயர்ந்தவர்கள் ஆவர் (இங்கு பெருந்தேவர் என்ற பதம் பெரியபெருமாளையும்; பரவும் பெரியோர் என்ற பதம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் போன்றவர்களையும் கூறுவதாகவும் கொள்ளலாம்). இப்படிப்பட்ட பெரியவர்களின் திருவடிகளை நான் அண்டி நின்ற பின்னர், பாசம் என்னும் விலங்கை கழற்றி விட்டேன். இனி நான் ஒரு நொடிப் பொழுதும் ஸம்ஸார துக்கம் மூலம் வருந்தமாட்டேன்.

30. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 59-60) February 27, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

59. கடல்  அளவாய  திசை  எட்டின்  உள்ளும் * கலி  இருளே
       மிடை  தரு  காலந்து  இராமானுசன் * மிக்க  நான்மறையின்
       சுடர்  ஒளியால்  அவ்விருளைத்  துரந்திலனேல்  உயிரை 
       உடையவன் * நாரணன்  என்று  அறிவாரில்லை  உணர்ந்தே.
விளக்கவுரை – கடல் சூழ்ந்த எட்டுத் திசைகளும் கொண்ட இந்தப் பூமி முழுவதும், கலி புருஷன் தனது ஸ்வபாவம் மூலம் உலகில் உள்ள அனைவருக்கும் அஜ்ஞானம் என்ற இருளை உண்டாக்கினான். இதனால் தர்ம மார்க்கத்தை யாரும் எளிதில் காணாதபடி செய்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பரமபதத்தில் இருந்து இந்த உலகில் எம்பெருமானார் திருஅவதாரம் செய்தார். ஸர்வேச்வரனின் ஸ்வரூபம் மற்றும் ரூபங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய நான்கு வேதங்கள் என்ற கொழுந்து விட்டு எரியும் ஒளி கொண்டு, கலிபுருஷனால் உண்டாக்கப்பட்ட அஜ்ஞானம் என்னும் இருளை நீக்கினார். இவ்விதமாக எம்பெருமானார் செய்யவில்லை என்றால் என்ன நிகழ்ந்திருக்கும்? இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் எஜமானனாக நாராயணனே உள்ளான் என்று மிகவும் தெளிவாக ஆராய்ந்து அறிபவர்கள் யாரும் இல்லை என்ற அவலநிலை உண்டாகியிருக்கும்.
60. உணர்ந்த  மெய்ஞ்ஞாநியர்  யோகந்தொறும் * திருவாய்மொழியின்
       மணம்  தரும்  இன்னிசை  மன்னும்  இடந்தொறும் * மாமலராள்
       புணர்ந்த  பொன்மார்வன்  பொருந்தும்  பதிதொறும்  புக்கு  நிற்கும்
       குணம்  திகழ்  கொண்டல் * இராமானுசன்  எங்குலக்  கொழுந்தே. 
விளக்கவுரை – இங்கு உணர்வு என்பது பக்தியைக் குறிக்கும். பக்தி என்பது ஸ்ரீமந் நாராயணனே அனைத்திற்கும் எஜமானன் என்று அறிந்து, அவன் அனைத்து திருக்கல்யாண குணங்களும் கொண்டவன் என்று உணர்ந்து, அவன் ஆனந்தமயமாக உள்ளவன் என்று தெளிந்து அவனைப் போற்றும் தன்மையாகும். இப்படிப்பட்ட தன்மையில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் ஆழ்வார்கள் ஆவர். ஆக – உணர்ந்த மெய்ஜ்ஞானியர் – என்பது ஆழ்வார்களைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஆழ்வார்கள் கூட்டத்தில் எப்போதும் உள்ளவர்; ஆழ்வார்களில் ப்ரதானமாக உள்ள நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமாகிய திருவாய்மொழியானது, தனது இசை என்னும் நறுமணத்தை எங்கெல்லாம் பரப்பியபடி உள்ளதோ, அங்கெல்லாம் உள்ளவர்; தாமரை மலரில் அமர்ந்த மஹாலக்ஷ்மி மிகவும் விரும்பி ஆரத்தழுவுகின்ற திருமார்பைக் கொண்டவனாகிய ஸ்ரீமந் நாராயணன் மிகவும் உகந்து எழுந்தருளியுள்ள திவ்யதேசங்களில் பொதிந்து நிற்பவர் – இவற்றுள் தானாகவே கானகத்தில் வந்து வழிகாட்டி சேர்த்துவிட்ட காஞ்சீபுரம், பெரியபெருமாளின் ஆணையின் பேரில் வந்து அருளிய திருவரங்கம், சைவர்களின் பிடியில் இருந்து காப்பாற்றிய திருமலை, வேதங்களை ஏற்காத மதங்களை வாதம் செய்து வீழ்த்திய திருநாராயணபுரம், நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார்திருநகரி, ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றிய திருமாலிருஞ்சோலை – ஆகியவை முக்கியமானவை – இப்படியாக பல இடங்களிலும் மிகவும் ப்ரியம் கொண்டு ஈடுபட்டு எம்பெருமானார் காணப்படுவார். இவ்விதம் பக்தி என்ற குணமே இவரிடம் சென்று மேலும் மேன்மை பெற்றது என்னும்படியாக உள்ள எம்பெருமானார், எங்களது வைணவ குலம் தழைக்க வந்த கொழுந்து ஆவார். வேருக்கு அதிக வெப்பம் ஏற்பட்டால் அதனை உணர்ந்த கொழுந்துப்பகுதி வாடுவது போன்று, எங்கள் வைணவ குலத்திற்கு ஏதேனும் நேர்ந்தால், தனது முகம் வாடும் தன்மை கொண்டவர் என்று கருத்து.

29. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 57-58) February 26, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

57. மற்றொரு பேருமதியாது * அரங்கன் மலரடிக்கு ஆள்
      உற்றவரே தனக்கு உற்றவராக் கொள்ளும் உத்தமனை *
      நல்தவர் போற்றும் இராமானுசனை இந்நானிலத்தே
      பெற்றனன் * பெற்றபின் மற்றறியேன் ஒரு பேதைமையே
விளக்கவுரை – வேறு எந்தவிதமான தேவதைகளையும் அணுகாமல், அவை மூலம் பெறும் பயன்கள் எதனையும் விரும்பாமல், திருவரங்கத்தை தான் வாசம் செய்யும் இருப்பிடமாகக் கொண்ட பெரியபெருமாளின் திருவடிகளை மட்டுமே சிலர் அண்டியபடி உள்ளனர். இப்படிப்பட்டவர்களை தனது அனைத்து விதமான உறவினர்கள் என்று கொள்ளும் உத்தமராக எம்பெருமானார் உள்ளார். இப்படிப்பட்ட எம்பெருமானாரை அறிவில் சிறந்தவர்கள் – ஸ்ரீமாந் அவிரபூத் பூமௌ ராமானுஜ திவாகர:, ராமானுஜபத அம்போஜ ஸமாச்ரயண சாலிந:, ஸத்யம் ஸத்யம் புந: ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு, ஜயதி லக்ஷ்மணோயம் முனி: வாழி யதிராசன் வாழி யதிராசன் – என்று பலவாறு போற்றியபடி உள்ளனர். இந்த எம்பெருமானாரை, இருள் தரு மா ஞாலம் என்றுள்ள இந்த உலகத்தின் நான் அண்டினேன். இவ்விதமாக அவரை அடைந்த பின்னர், எனது அறியாமை அனைத்தும் எங்கு சென்றது என்பதை நான் அறியவில்லை.
58. பேதையர் வேதப்பொருள் இதென்று உன்னி * பிரமம் நன்றென்று
       ஓதி மற்றெல்லா உயிரும் அஃது என்று * உயிர்கள் மெய்விட்டு
      ஆதிப்பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
      வாதில் வென்றான் * எம் இராமானுசன் மெய்ம்மதிக் கடலே.
விளக்கவுரை – வேதங்களைப் ப்ரமாணம் என்று ஒப்புக்கொளாத மதம் அன்றி, வேதங்களே ப்ரமாணம் என்று ஏற்றுக்கொள்ளும் தன்மையில் உள்ளபோதும் – யாதவப்ரகாசர் முதலானோர் வேதங்களுக்குத் தவறான பொருள்களைக் கூறியபடி உள்ளனர். இவர்கள் தாங்கள் கூறுவதே வேதங்களின் உண்மையான பொருள் என்று வாதாடியபடி உள்ளனர். ப்ரஹ்மம் மட்டுமே உண்மை என்று கூறி, மற்ற அனைத்து ஆத்மாக்களும் ப்ரஹ்மமே என்று வாதாடுகின்றனர். அனைத்து ஆத்மாக்களும் ப்ரஹ்மமும் ஒன்றே என்பது போன்ற தவறான கருத்துக்களைப் பரப்பியபடியும் வந்தனர். இப்படிப்பட்ட இவர்களின் ஆரவாரம் நிறைந்த வாதங்கள் அனைத்தையும், இந்த உலகைக் காப்பாற்றும் விதமாக, தனது வாதம் மூலம் எம்பெருமானார் வென்றார். இவ்விதமாக இவர்களை வென்ற நமது எம்பெருமானார், உண்மையான ஞானம் நிரம்பிய கடலாகவே உள்ளார்.

28. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 55-56) February 25, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

55. கண்டவர் சிந்தை கவரும் * கடிபொழில் தென்னரங்கன்
      தொண்டர் குலாவும் இராமானுசனை * தொகையிறந்த
       பண்தரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும்
      கொண்டலை மேவித் தொழும் * குடியாம் எங்கள் கோக்குலமே.
விளக்கவுரை – எண்ணற்ற வேதங்களை, அனைத்து ஞானமும் அளிக்கவல்ல வேதங்களை, எண்ணற்ற காலம் இருந்துவரும் வேதங்களை இந்த அகண்ட பூமியில் உள்ள ஜைனர்கள், பௌத்தர்கள் போன்றோர் மறுத்தனர். இவர்களைப் போன்றோரை வாதத்தின் மூலம் வீழ்த்தி, வேதங்கள் எங்கும் பரவும்படிச் செய்தார். இப்படிப்பட்ட வேதங்கள் என்னும் மழையைப் பெய்விக்கும் மேகமாக எம்பெருமானார் உள்ளார். திருவரங்கத்தில் உள்ள அழகியமணவாளன், யார் தன்னைக் காண்கிறார்களோ அவர்களின் மனதை அப்போதே பறித்துக் கொள்பவனாக, “மீண்டும் இவனை நாம் எப்போது காண்போம்?”, என்று துடிக்கும்படிச் செய்பவனாக உள்ளான். இப்படிப்பட்ட அரங்கனின் திருவடிகளையே எப்போதும் பற்றியுள்ள அரங்கனின் தொண்டர்கள், அவனை விடுத்து இப்போது எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்களை உணர்ந்தவர்களாக, இவரையே சூழ்ந்தபடி உள்ளனர். இப்படிப்பட்ட எம்பெருமானாரின் திருவடிகளைப் பற்றியபடி உள்ளவர்கள், எந்தக் குலத்தில் பிறந்துள்ளபோதும், அவர்களது குலமே எங்கள் குலம் என்று கூறும்படியாக நாங்கள் உள்ளோம்.
56. கோக்குல மன்னரை மூவெழுகால் * ஒரு கூர்மழுவால்
      போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் * புவனம் எங்கும்
      ஆக்கிய கீர்த்தி இராமானுசனை அடைந்தபின் என்
      வாக்கு உரையாது * என் மனம் நினையாது இனி மற்றொன்றையே.
விளக்கவுரை – முன்பு ஒரு காலகட்டத்தில், மிகுந்த செல்வம் உள்ளதால் அரசன் என்று இல்லாமல், இயல்பிலேயே க்ஷத்ரியர்களாக உள்ளதால் அரசர்கள் என்று கூறிக் கொள்பவர்களை இருபத்து ஒரு தலைமுறை, தனது கோடாரி கொண்டு வதைத்த பரசுராமனை எம்பெருமானார் போற்றி நின்றார். இப்படிப்பட்ட தூய்மையான எம்பெருமானாரின் புகழ் இந்த உலகம் முழுவதும் பரவி நிற்கிறது. இத்தகைய எம்பெருமானாரை அண்டிய பின்னர், இனி வரும் காலங்களில், எனது மனம் வேறு எதனையும் நாடாது; எனது வாக்கு அவரது புகழ் அல்லாமல் எதனையும் கூறாது.

27. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 53-54) February 24, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

53. அற்புதம் செம்மை இராமானுசன் * என்னை ஆளவந்த
       கற்பகம் கற்றவர் காமுறு சீலன் * கருதரிய
       பற்பல்லுயிர்களும் பல்லுலகு யாவும் பரனதென்னும்
       நற்பொருள் தன்னை * இந்நானிலத்தே வந்து நாட்டினனே.
விளக்கவுரை – ஸ்ரீமந் நாராயணனின், “இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் கரையேற்றப்பட வேண்டும்”, என்ற ஆணையை ஏற்று, இந்த உலகிற்கு எம்பெருமானார் வந்தார். என்றாலும் இந்த உலகில் உள்ள அனைவரிலும் மிகவும் தாழ்ந்தவனாக உள்ளை என்னை அடிமை கொள்ளவே வந்தார். நான் உள்ள இடம் தேடி வந்த கற்பக மரம் போன்று இவர் உள்ளார். அனைத்து உயர்ந்த புருஷார்த்தங்களையும் அளிக்கவல்ல கற்பகம் போன்று உள்ளார். அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவர், பெரியவன் – சிறியவன் என்ற ஏற்றத்தாழ்வு பாராமல், அனைவருக்கும் சமமாக உள்ள தன்மை கொண்டவர் ஆவார். இப்படிப்பட்ட எம்பெருமானார் உபதேசித்தது என்னவென்றால் – உபதேசம் செய்வதற்கு மிகவும் கடினமான கருத்தாக உள்ள, “அனைத்து ஆத்மாக்கள், ஆத்மாக்கள் உள்ள அனைத்து லோகங்கள் ஆகிய அனைத்தும் – அனைவரிலும் மிகவும் உயர்ந்தவனாக உள்ள ஸ்ரீமந் நாராயணனுக்கே அடிமை”, என்று நிரூபித்தார். இத்தகைய உயர்ந்த கருத்தை இந்த உலகம் முழுவதிலும் வெளிப்படுத்த, இந்த உலகம் பிழைக்கும்படி, தானே வந்து அவதரித்தார். ஒரு சிலருக்கு, ஒரு சில காலம் மட்டுமே உபதேசம் செய்தார் என்று இல்லாமல், இந்த உலகினருக்கு எப்போதும் உள்ளபடி ஸ்ரீபாஷ்யம் போன்றவற்றை நிலைநிறுத்தினார்.
54. நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன * நாரணனைக்
      காட்டிய வேதம் களிப்புற்றது * தென்குருகை வள்ளல்
      வாட்டம் இலா வண்தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
      ஈட்டிய சீலத்து * இராமானுசன் தன் இயல்வு கண்டே.
விளக்கவுரை – அறியாமையின் இடமாக உள்ள இந்தப் பூமியில், தான் பெற்றிருந்த பரமபதத்தை விடுத்து, இந்த உலகினரின் சிறுமையைக் பாராமல் எம்பெருமானார் அவதரித்தார். இவரது ஸ்வபாவம் மற்றும் உயர்ந்த குணங்களைக் கண்டு, சூரியனைக் கண்ட இருள் விலகுவது போன்று, வைதிகம் அற்ற மதங்கள் அனைத்தும் நிர்மூலமாகச் சென்றன. இவரது அவதாரம் ஏற்பட்ட பின்னர் ஸர்வேச்வரனாகிய நாராயணனப் போற்றும் வேதங்கள் அனைத்தும், “நமக்கு இனி குறையில்லை”, என்று கர்வம் அடைந்தன. மிகவும் உயர்ந்த இடமும், நம்மாழ்வாரின் அவதார இடமும் ஆகிய ஆழ்வார்திருநகரியில் உதித்த நம்மாழ்வார் அருளிச் செய்ததும், அனைத்து புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதும், தமிழ் வேதமும் ஆகிய திருவாய்மொழி எந்தக் குறையும் இன்றி வளர்ந்தது.


26. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 51-52) February 23, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

51. அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் * அன்று பாரதப் போர்
      முடியப் பரிநெடும் தேர்விடும் கோனை * முழுது உணர்ந்த
      அடியர்க்கமுதம் இராமானுசன் என்னை ஆள வந்து இப்
       படியில் பிறந்தது * மற்றில்லை காரணம் பார்த்திடிலே.
விளக்கவுரை – சிறு வயது முதலேயே வ்யாஸபகவான், குந்தி, மார்க்கண்டேயன் ஆகியவர்கள் கூறி வந்த அறிவுரைகளைக் கேட்டுவந்த பாண்டவர்கள் செய்தது என்னவென்றால் – தங்களுக்கு ஆபத்து வந்தபோது உதவி செய்தபடி இருந்த கண்ணனை, சாதாரண மனிதன் என்று எண்ணாமல், தங்களைக் காப்பாற்றும் பரம்பொருள் என்றே கொண்டனர். அவனது திருவடிகளை மட்டுமே பற்றியபடி ருத்ரன், இந்திரன் ஆகியவர்களை வென்று, இந்த உலகில் தங்களுக்கு யாரும் நிகரில்லை என்றபடி பாண்டவர்கள் இருந்தனர். இவர்கள் ஒரு காலகட்டத்தில் துரியோதனன், கர்ணன், சல்லியன் போன்ற தீயவர்கள் அனைவராலும் தனிமைப்படுத்தப் பட்டபோது, தன்னை அல்லாமல் வேறு கதி இன்றி நிற்பதைக் க்ருஷ்ணன் கண்டான். அப்போது நிகழ்ந்த மஹாபாரத யுத்தம் பாண்டவர்களுக்குச் சாதகமாக முடியும் விதமாக, தனது ஸ்வாமித்வம் அனைவருக்கும் தெரியும்படி, உயர்ந்த தேரில் தானே சாரதியாக அமர்ந்தான். இந்தக் கண்ணனை – அவனது ஸ்வரூபம், ரூபம் ஆகியவற்றுடன் சேர்த்து உணர்ந்தவர்கள் ஆழ்வான், ஆண்டான்பிள்ளான், எம்பார் போன்றவர்கள் ஆவர். இவனது தன்மை எப்படிப்பட்டது என்றால் – தந்தை வசுதேவன் சொல் கேட்டு, நான்கு திருக்கரங்களை மறைத்து, இயல்பான தோற்றம் எடுத்தான்; யமுனை நதி முழுவதையும் தனது திருவடிகளால் தூய்மைப்படுத்தினான்; ஆய்ச்சி கைகளால் உரலில் கட்டுண்ண்டு நின்று அடி வாங்கினான்; பூதனை, சகடன், அரிஷ்டன், ப்ரலம்பன், தேநுகன், காளியன், கேசி, குவலயாபீடம், சாணூரன், கௌஸலன், கம்சன் ஆகிய விரோதிகளை அழித்தான்; அக்ரூரர் போன்றவர்களுக்கு அனுக்ரஹம் செய்தான்; கோவர்த்தன மலை எடுத்தல் போன்ற வியப்பான செயல்களைச் செய்தான்; பாண்டவர்களுக்காக சமாதான ஓலையை எடுத்துக்கொண்டு தூது சென்றான்; சாரதியாக அமர்ந்து விச்வரூபம் எடுத்தான்; அர்ஜுனனிடம் உயர்ந்த சாஸ்திரத்தை வெளியிட்டான் – இப்படிப்பட்ட இவனது உயர்ந்த திருக்கல்யாண குணங்களில் பலரும் தோற்று, தங்களை அவனுக்கு அடிமை என்று எழுதிக் கொடுத்தனர். இப்படிப்பட்டவர்களுக்கு அமிர்தம் போன்று உள்ளவர் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட யதிராஜர், என்னைத் தனது அடிமை என்று கொள்வதற்காகவே இந்தப் பூமியில் திருஅவதாரம் செய்தார். இதனைத் தவிர இவரது அவதாரத்திற்கு வேறு காரணம் இல்லை.
52. பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப * இப்பார் முழுதும்
      போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடைத்தான் புகுந்து *
      தீர்த்தான் இருவினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
      ஆர்த்தான் * இவை எம் இராமானுசன் செய்யும் அற்புதமே.
விளக்கவுரை – பௌத்தம், சார்வாகம், சாக்கியம், உலூக்கியம், பாசுபதம் மற்றும் காணாபத்யம் ஆகிய ஆறு பிரிவுகளும் அழியும்படிப் பார்த்தார். இவ்விதம் செய்தது மூலம், இந்த உலகில் உள்ள பண்டிதர்கள் முதல் பாமர மக்கள் வரை உள்ள அனைவரும் போற்றும்படி தனது புகழ் அனைத்துத் திசைகளிலும் பரவும்படி விளங்கினார். அன்றாடம் செய்யும் பாவங்களே ஒரு வடிவு எடுத்து நிற்பது போன்ற என்னுடைய மனதில் புகுந்தார். இதன் மூலம் எத்தனை ப்ராயச்சித்தம் செய்தாலும் தீர்க்க இயலாத எனது வினைகள் மற்றும் பாவங்களைத் தீர்த்து வைத்தார். இவ்விதம் எனது பாவங்களை நீக்கிய பின்னர், “எளிதில் அடைய இயலாத பரமபதம் சென்று நிலைப்பாய்”, “யோக மார்க்கத்தில் ஈடுபடுவாய்”, என்றெல்லாம் கடினமான செயல்களை எனக்கு உபதேசிக்கவில்லை. மாறாக, நான் இருந்த உலகில் உள்ள பெரியபெருமாளான திருவரங்கனின் திருவடிகளுடன் எனக்குத் தொடர்பு ஏற்படுத்தினார். இவை அனைத்தும், என் போன்ற பாவம் நிறைந்தவர்களுக்காகவே அவதரித்த எம்பெருமானார் செய்யும் அற்புதங்கள் ஆகும்.

25. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 49-50) February 22, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

49. ஆனது செம்மை அறநெறி * பொய்ம்மை அறுசமயம்
      போனது பொன்றி இறந்தது வெங்கலி * பூங்கமலத்
      தேனதிபாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்துத்
       தானதில் மன்னும் * இராமானுசன் இத்தலத்து உதித்தே.
விளக்கவுரை – அழகிய தாமரை மலர்களில் உள்ள தேன் என்னும் ஆறானது எங்கும் பாய்ந்தபடி நிற்கும் வயல்களால் சூழப்பட்டது திருவரங்கம் ஆகும். இந்தத் திருவரங்கத்தில் கண்வளர்ந்தபடி உள்ள பெரியபெருமாளான அழகியமணவாளனின் திருவடிகளை, தாம் பெற்ற உயர்ந்த செல்வம் இதுவே என்று தனது தலையில் வைத்து, அவற்றில் ஈடுபட்டபடி உள்ளவர் எம்பெருமானார் ஆவார். வேதவேதாந்த தர்மங்கள் அனைத்திற்கும் பாதகம் வரும்படியாக ஏற்பட்ட பௌத்தம் முதலான ஆறு மதங்களாலும், கலியுகத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் உள்ளதாலும் துவண்டிருந்த இந்தப் பூமியில் எம்பெருமானார் அவதரித்தார். இதனால் நிகழ்ந்தது என்ன? மறைந்து விட்டிருந்த வேதவேதாந்த மார்க்கங்கள் மீண்டும் தழைத்தன. பொய்யான கருத்துக்களைப் பரப்பிய ஆறு (பௌத்தம், சார்வாகம், சாக்கியம், உலூக்கியம், பாசுபதம் மற்றும் காணாபத்யம்) மதங்களும் நிலை குலைந்தன. நமக்கு அஜ்ஞானம் உண்டாக்கிக் கொண்டிருந்த கலியானது அழிந்தது.
50. உதிப்பன உத்தமர் சிந்தையுள் * ஒன்னலர் நெஞ்சம் அஞ்சிக்
       கொதித்திட மாறி நடப்பன * கொள்ளைவன் குற்றம் எல்லாம்
       பதித்த என் புன்கவிப் பாவினம் பூண்டன பாவு தொல்சீர்
       எதித்தலை நாதன் * இராமானுசன் தன் இணை அடியே.
விளக்கவுரை – அனைத்து திசைகளிலும் பரவி உள்ளதாக, முயற்சி செய்து அடையப் பெறாமல் தானாகவே இயற்கையாக அமைந்துள்ள உயர்ந்த திருக்கல்யாண குணங்கள் கொண்டவர் எம்பெருமானார் ஆவார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பார் தொடங்கி எழுநூறு ஜீயர்களின் தலைவராக உள்ளவர் எம்பெருமானார் ஆவார். இவரது திருவடிகள் மிகவும் உயர்ந்தவை ஆகும். எப்படி என்றால் – இந்த ஸம்ஸார உலகில் உள்ள மக்களுடன் ஒன்றாக வாழ்ந்து, அவர்களைக் கரை ஏற்றியபடி உள்ளது; பரதன் போன்ற உயர்ந்தவர்களின் சொற்களை நிராகரித்து எம்பெருமானின் திருவடிகள் கானகம் சென்றன, ஆனால் எம்பெருமானாரின் திருவடிகள் அப்படி அல்லவே! ஆக இவரது திருவடிகளுக்கு ஒப்பான திருவடிகளைக் கொண்டவர்கள் வேறு யாரும் இல்லை என்றானது. மிகவும் உயர்ந்தவர்களின் நெஞ்சங்களில் இந்தத் திருவடிகள் எப்போதும் நீங்காமல் உள்ளன. வேதவேதாந்தங்களைக் குறித்து எதிர்வாதம் செய்பவர்கள் அச்சம் கொள்ளும்விதமாக இவரது திருவடிகள் கம்பீரமாக நடக்கின்றன. அனைத்து வகையான குற்றங்கள் உள்ள என் போன்ற நீசனின் மூலம் வெளிப்பட்டதும், கவிதை கூறும் திறன் அற்ற என் போன்றவன் மூலம் வெளிப்பட்டதும் ஆகிய இந்தப் பாசுரங்களை – “இவை குற்றம் நிறைந்த பாசுரங்கள்”, என்று ஒதுக்காமல், மாலையாக எண்ணி, தன் மீது எம்பெருமானாரின் திருவடிகள் சூடிக்கொண்டன.

24 இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 47-48) February 21, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

47. இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று * இவ்வுலகத்து
      அறஞ்செப்பும் அண்ணல் இராமானுசன் * என் அருவினையின்
      திறஞ்செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே
      நிறைந்தொப்பறவிருந்தான் * எனக்கு ஆறும் நிகரில்லையே.
விளக்கவுரை – இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சரணம் புக ஏற்றவனாகவும், அனைத்து ஆத்மாக்களின் தலைவனாகவும், அனைத்திற்கும் ஸ்வாமியாக உள்ளவனும் யார் என்றால், திருவரங்கத்தில் கண்வளரும் பெரியபெருமாள் என்ற திருவரங்கச்செல்வனே ஆவான் – என்று, இப்படியாக இருள்தருமா ஞாலத்தில் உள்ள மக்களுக்கு உயர்ந்த உபாயத்தை எம்பெருமானார் அருளிச் செய்தார். இப்படிப்பட்ட உயர்ந்த தர்மத்தை இந்த உலக மக்களின் சுக-துக்கம் ஆகியவற்றைத் தன்னுடையதாகவே கொள்ளும் உறவினன் போன்ற எம்பெருமானார் உபதேசித்தார். இவர் எனக்குச் செய்த உதவி என்ன என்றால் – எத்தனை அனுபவித்தாலும், எத்தனை ப்ராயச்சித்தம் செய்தாலும் கழியாமல் எனது வினைப்பயன்கள் இருந்தன; அவற்றை அழித்தார்; அவை மீண்டும் என்னை அண்டிவிடாமல் தடுக்க, இரவு-பகல் பாராமல் இடைவிடாமல் எனது இதயத்தில் நிலையாக வீற்றிருந்தார். இத்தகைய இவரது வாத்ஸல்ய குணத்திற்கு ஈடில்லாமல் இருந்தார். இவ்விதம் எம்பெருமானாரை அடைந்துவிட்ட எனக்கு, இந்த உலகில் நிகரானவர்கள் யாரும் இல்லை.
48. நிகரின்றி நின்ற என் நீசதைக்கு * நின் அருளின் கணன்றிப்
      புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் * புன்மையிலோர்
      பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
      அகலும் பொருளேன் * பயன் இருவோமுக்கும் ஆன பின்னே.
விளக்கவுரை – ஆத்மகுணங்கள் (மிகவும் உயர்ந்த குணங்கள் எனலாம்) உள்ளவர்கள், அனாத்ம குணங்கள் (தாழ்ந்த குணங்கள் எனலாம்) உள்ளவர்கள் என்று இந்த உலகில் உள்ளவர்களைத் தனித்தனியே பிரித்து ஆராய்ந்தால், என்னைப் போன்று ஆத்மகுணங்கள் முற்றிலும் அற்றவன், அனாத்ம குணங்கள் பரிபூர்ணமாக உள்ளவன் வேறு யாரும் இருக்கமுடியாது. இப்படிப்பட்ட தாழ்ந்தவனான எனக்கு உமது கருணை அல்லாமல் வேறு புகலிடம் இல்லை. சேஷபூதன் (அடிமை) ஒருவனின் குற்றங்கள் அனைத்திலும் சேஷியின் (எஜமானன்) குணங்கள் புகும் தன்மை போன்று, எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்கள் உள்ளன. இவரது குணங்கள் அனைத்தும் எனது தோஷங்களில் புகலிடம் தேடி வந்தன – காரணம், தோஷம் அற்றவர்களுக்கு இவரது குணங்கள் பயன்படாது; அவை என் போன்று பலவிதமான குற்றங்கள் செய்பவர்களுக்கு மட்டுமே, அவர்களைத் திருத்துவதற்காகக் பயன்படும். ஆக இவரது குணங்களுக்கு எனது தோஷங்கள் புகலிடமாக இருந்தன. இப்படியாக் எம்பெருமானாரின் குனங்கள் வந்து தங்கும் பாத்திரமாக நான் அவருக்குப் பெரும் பேறாக அமைந்துவிட்டேன். ஸம்ஸாரம் என்ற பிடியில் சிக்காமல் கரை ஏறிய முக்தர்கள, நித்யஸூரிகள் ஆகியவர்களால் பெருமையாகப் போற்றப்படும் எம்பெருமானாரே! இவ்விதமாக நாம் ஒருவருக்கு ஒருவர் பயனுள்ளவர்களாக உள்ளோம். இப்படி உள்ளபோது, இனி உள்ள காலங்களில் நாம் ஒருவரை ஒருவர் பிரிவதற்குக் காரணம் ஏதேனும் உண்டாகுமோ? (உண்டாகாது)

23 இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 45-46) February 20, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

45. பேறு ஒன்று மற்றில்லை நின் சரண் அன்றி * அப்பேறு அளித்தற்கு
       ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரணன்றி * என்று இப்பொருளைத்
       தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மை சொல்லால்
       கூறும் பரம் அன்று * இராமானுசா மெய்ம்மை கூறிடிலே.
விளக்கவுரை – உடையவரே! உமது திருவடிகளைத் தவிர்த்து நாங்கள் பெறும் புருஷார்த்தம் வேறு ஏதும் இல்லை. இத்தகைய உயர்ந்த பேற்றினை உமது திருவடிகள் தவிர வேறு ஏதும் அளிக்காது. இவற்றைப் பெறும் உபாயம் வேறு ஏதும் இல்லை. எம்பெருமானாரின் திருவடிகளைக் கண்டு உணர்ந்த நமக்கு – பரமபதமும் உயர்ந்த இடம் அன்று, பகவத் ப்ராப்தியும் உயர்ந்த உபாயம் அன்று, பக்தியோகமும் உயர்ந்தது அன்று. இப்படிப்பட்ட உமது திருவடிகளின் உன்னதமான தன்மையை அறிந்தவர்கள்; இதனை அறியாமல் உள்ள நான் – ஆகிய இரு பிரிவினருக்கும் உமது செம்மையான திருக்கல்யாண குனங்களை, எந்தவிதமான வேறுபாடும் பாராமல் அருளினீர்! ஒரு பொருள் கொடுத்தால், அதற்குப் பதில் ஒரு துணி கொடுப்பது போல் அல்லாமல், எங்களிடம் இருந்து எதனையும் எதிர்பாராமல், உம்மையே அல்லவா நீவிர் எங்களுக்குக் கொடுத்துவிட்டீர்! இப்படிப்பட்ட உமது திருக்கல்யாண குணத்தை உண்மையாகவே, உள்ளது உள்ளபடி கூற வேண்டுமானால், அது அரிய செயலாகவே அமையும்.
46. கூறும் சமயங்கள் ஆறும் குலைய * குவலயத்தே
      மாறன் பணித்த மறை உணர்ந்தோனை * மதியிலியேன்
      தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை அனைத்தும்
       ஏறும் குணனை * இராமானுசனை இறைஞ்சினமே
இந்த உடலே ஆத்மா என்றும், உடல் பரிணாமமே ஆத்மா என்றும், அணுவே ஆத்மா என்றும், ஞானம் மட்டுமே உள்ளது என்றும், சூன்யம் மட்டுமே உண்மை என்றும், ப்ரஹ்மம் என்பது குணங்கள் அற்றது என்றும், ப்ரஹ்மம் முதலான பலவும் மித்யா (பொய்) என்றும், ருத்ரனே பரமாத்மா என்றும் – பல்வேறு தாழ்வான, உண்மையற்ற கருத்துக்கள் கூறிய மதங்கள் அனைத்தும் நாசம் அடைந்தன. எப்போது? இந்த உலகத்தில், மயர்வறு மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் அவதாரம் செய்த காரணத்தால் புண்ணியம் அடைந்த உலகில், நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட தமிழ் வேதத்தை அறிந்து, பரிபூர்ண ஞானம் பெற்ற எம்பெருமானாரின் வாதங்களால் ஆகும். அனைத்துத் திசைகளிலும் பரவிய தனது திருக்கல்யாண குணங்களால் புகழ் பெற்ற எம்பெருமானார், சிறிதும் ஞானம் இல்லாத எனது இதயத்தில் வந்து புகுந்து கொண்டார். இப்படியாக இவர் செய்த உபகாரத்திற்கு ஏற்ற கைம்மாறு தெரியாமல், அவரது திருவடிகளிலே பணிந்தேன்.

22 இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 43-44) February 19, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

43. சுரக்கும் திருவும் உணர்வும் * சொல்லப்புகில் வாயமுதம்
       பரக்கும் இருவினை பற்றறவோடும் * படியில் உள்ளீர்
       உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறுகலியைத்
       துரக்கும் பெருமை * இராமானுசன் என்று சொல்லுமினே.
விளக்கவுரை – எம்பெருமானார் அவதரித்ததால் புண்ணியம் செய்த இந்தப் பூமியில் வசிப்பவர்களே! இத்தனை காலமாக உலக விஷயங்கள் மட்டுமே உண்மை என்று திரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, இதே போன்ற நிலையில் இருந்து எம்பெருமானாரால் திருத்தப்பட்ட நான் உபதேசிக்க உள்ளேன். தர்மம் என்பது தழைப்பதையே பொறுத்துக் கொள்ள இயலாமல், தான் மட்டுமே விளங்கும்படி இருப்பது இந்த கலிகாலமாகும். இத்தகைய கலியை, அந்தக் கலிபுருஷனுடன் சேர்ந்து அதர்மங்களையும் ஓடிவிடச் செய்யும்படியான அதிசயம் ஒன்று உண்டு. அது “இராமானுசா”, என்று எம்பெருமானாரின் திருநாமத்தைக் கூறுவதே ஆகும். எம்பெருமானின் திருநாமங்கள் போன்று ஆயிரம் திருநாமங்கள் கூற வேண்டிய அவசியம் இல்லை – ஒருமுறை உடையவரின் திருநாமத்தைக் கூறினாலே போதுமானது. இதனால் நிகழ்வது என்ன? எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்யும் ஸம்பத்து, அவன் மீது பக்தி என்னும் ஸம்பத்து, பகவத்ஞானம் என்னும் ஸம்பத்து ஆகியவை உண்டாகிவிடும். இந்தத் திருநாமத்தைக் கூறும்போது நாக்கில் அமிர்தம் சுரந்தபடி இருக்கும். எந்தவிதமான ப்ராயச்சித்தம் செய்தாலும் நீங்காமல் உள்ள பாவங்கள், தோஷங்கள் அனைத்தும், இந்தத் திருநாமத்தைக் கூறிய உடனேயே, வேருடன் களையப்பட்டுவிடும்.
44. சொல்லால் தமிழ் ஒரு மூன்றும் * சுருதிகள் நான்கும் எல்லை
       இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் * எண்ணரும் சீர்
       நல்லார் பரவும் இராமானுசன் திருநாமம் நம்பிக்
       கல்லார் அகல் இடத்தோர் * எது பேறு என்று காமிப்பரே.
விளக்கவுரை – அநந்தா என்றும், விபுலா என்றும் அழைக்கப்படும் இந்த அகண்ட பூமியில் உள்ள மனிதர்களுக்கு உயர்ந்தவற்றை நான் உபதேசித்தாலும், அவர்கள் அதில் ஈடுபாடு கொள்ளாமல் இருப்பார்கள்; அறிவு கெட்டு திரிவார்கள்; நாம் சரணம் அடையும் இடம் எது என்று தேடியபடி, அங்கும் இங்கும் செல்வார்கள்; இப்படியாகத் தங்கள் வாழ்வை வீணடிப்பார்கள். மேலும் இவர்கள் செய்வது என்ன? தமிழ் மொழியில் உள்ள இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் கொண்டதாகவும், சொற்கள் என்னும் மாலைகள் உடையதாகவும் உள்ள தமிழ்; நான்கு வேதங்கள்; எண்ணற்றதும், எல்லையற்றதும் ஆகிய தர்ம நெறிகள் ஆகியவற்றை அறிந்தவர் எம்பெருமானார்; எண்ணற்ற திருக்கல்யாண குணங்கள் கொண்டவர்; மிகவும் உயர்ந்தவர்களால் சூழப்பட்டவர் – இப்படிப்பட்ட எம்பெருமானாரின் திருநாமத்தை ஒருமுறை நான் உபதேசிப்பதைக் கேட்டு, உச்சரித்தாலே போதும், இவர்களின் தேடுதலுக்கு விடை கிட்டும் – ஆனால் செய்ய மறுக்கிறார்களே!

21. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 41-42) February 18, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

41. மண்மிசை யோனிகள்தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
      கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
     அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
      நண்ணருஞானம் தலைக் கொண்டு * நாரணற்கு ஆயினரே.
விளக்கவுரை – மாறிமாறிப் பல பிறவிகள் எடுக்கும் மனிதர்கள் போன்று மனிதன், விலங்கு என்ற பல ரூபங்களில் இராமனாகவும், கண்ணனாகவும் எம்பெருமான் அவதரித்தான். “அகலகில்லேன் இறையும்” எனத் தன்னைவிட்டுப் பிரியாத பெரியபிராட்டியுடன்வன் எப்போதும், எங்கும், அனைவரின் கண்களில் புலப்படும்படி நின்றாலும் – இந்த உலக மக்கள் செய்வது என்ன? இவனே நமக்கு ஏற்ற எஜமானன் என்று அறியாமல் உள்ளனர், அறியாமல் இருந்தனர். ஆனால் இந்த உலகைக் காப்பாற்றுவதற்காக, பரமபதத்தில் இருந்து, நம் மீது கொண்ட கருணை காரணமாக, இந்தப் பூமியில் எம்பெருமானார் திருஅவதாரம் செய்தார். இதனால் நிகழ்ந்தது என்ன? இந்த உலகில் உள்ள மக்கள் பலரும், தங்களில் இயல்பான ஞானம் பெற்று, அனைவருக்கும் பந்துவாக உள்ளவனும், அனைவரின் அந்தர்யாமியாக உள்ளவனும் ஆகிய ஸ்ரீமந் நாராயணனுக்கு அடிமைகள் ஆனார்கள்.
42. ஆயிழையார் கொங்கை தங்கும் * அக்காதல் அளறு அழுந்தி
       மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று * மாமலராள்
       நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்
       தூயவன் * தீது இல் இராமானுசன் தொல் அருள் சுரந்தே.
விளக்கவுரை – தங்கள் உடலில் உள்ள குற்றம் குறைகள் தெரியாதபடி மறைத்து உடை மற்றும் ஆபரணங்கள் அணிந்த பெண்களின் ஸ்தனங்களில் எனது ஆத்மாவை ஈடுபடுத்தியபடியே இருந்தேன். அப்போது எம்பெருமானார் செய்தது என்னவெனில் – அனைத்து மலர்களிலும் உயர்ந்த தமர் மலரில் வாசம் செய்யும் பெரியபிராட்டியின் நாயகனாக உள்ளவனும், திருவரங்க மாநகரில் கண்வளர்பவனும் ஆகிய பெரியபெருமாளே அனைத்து உயிர்களின் எஜமானன் என்று உபதேசம் செய்தார். இப்படிப்பட்ட உபதேசம் செய்தவரும், தோஷங்கள் அற்றவரும், தூய்மையானவரும் ஆகிய எம்பெருமானார், இந்த உலகிற்கு வந்து அவருடைய இயல்பான கருணையை அனைவருக்கும் சுரந்தார்.

20. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 39-40) February 17, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

39. பொருளும் புதல்வரும் பூமியும் * பூங்குழலாரும் என்றே
       மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே * மற்றுளார் தரமோ?
      இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறில் பெரும் புகழே
      தெருளும் தெருள் தந்து * இராமானுசன் செய்யும் சேமங்களே.
விளக்கவுரை – எனது உள்ளமே! நாம் செய்வது என்ன? மிகையான செல்வம், புத்திரர்கள், வசிப்பதற்குச் சிறந்த நிலம், மலர்கள் அலங்கரித்த மனைவி ஆகியவற்றை மட்டுமே விரும்பியபடி உள்ளோம். இவற்றையே மிகவும் உயர்ந்த பொருள்கள் என்று உணவையும் மறந்து, இளைத்து நிற்கிறோம் (இங்கு உணவு என்பது உண்ணும் உணவு, ஞானம் ஆகிய இரண்டையுமே குறிக்கும்). இதனைத் திருமங்கையாழ்வார் – தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டொழிந்தேன் – என்றார் அல்லவோ? இப்படிப்பட்ட அஜ்ஞானம் மூலம் நமக்கு ஏற்படும் கொடூரமான துயரங்கள் அனைத்தையும் நீக்கி, தன்னுடைய மேன்மேலும் எல்லையற்றுப் பெருகியபடி உள்ள திருக்கல்யாண குணங்களை நமக்கு வெளிப்படுத்தியபடி உள்ளவர் எம்பெருமானார் ஆவார். இவர் நமக்காகச் செய்யும் ரக்ஷணங்கள் (நம்மைக் காப்பாற்றும் செயல்கள்) மற்றவர்களால் செய்யவும் இயலுமோ? அந்தக் கண்ணன் கூட – தூது செல்வது, தேர் ஓட்டுவது, கீதை உபதேசம் செய்வது – போன்ற பலவற்றையும் பாண்டவர்களுக்குகாக மட்டுமே, குறிப்பாக அவர்களில் ஒருவனான அர்ஜுனனுக்காக மட்டுமே செய்தான் அல்லவோ? ஆனால் எம்பெருமானார் அனைவருக்கும், அனைத்தையும் உபதேசித்தார் அன்றோ? ஆக இவர் போன்று நமக்கு அந்த மாயக்கண்ணனாலும் உதவ இயலவில்லை என்பது உண்மைதானே! இப்படி உள்ளபோது பொருள், புத்திரர்கள், மனைவி போன்றவையா நம்மைக் காக்கும் – என்று கருத்து.
40. சேமநல் வீடும் பொருளும் தருமமும் * சீரியநற்
       காமமும் என்றிவை நான்கு என்பர் * நான்கினும் கண்ணனுக்கே
       ஆமது காமம் அறம் பொருள் வீடு இதற்கென்று உரைத்தான்
       வாமனன் சீலன் * இராமானுசன் இந்த மண் மிசையே.
விளக்கவுரை – மோக்ஷம் என்பதும், அயோத்யை மற்றும் அபராஜிதா என்றும் கூறப்படும் பரமபதம்; இத்தகைய மோக்ஷம் கிட்ட இயற்றும் செயல்களுக்குத் தேவையான பொருள்; இத்தகைய மோக்ஷம் என்பதற்கு உறுப்பாக உள்ள கர்மங்கள் என்னும் தர்மம்; சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டபடி உள்ள காமம் – இப்படிப்பட்ட நான்கையே புருஷார்த்தம் என்று சாஸ்திரம் அறிந்தவர்கள் கூறுவார்கள். இந்த நான்கிலும் எம்பெருமானிடத்தில் கொள்ளும் காமம் என்பதே மிகவும் உயர்ந்த, முதன்மையான புருஷார்த்தம் ஆகும். அவனுடைய திருமுகம் நமது கைங்கர்யம் கண்டு மகிழ்வதற்கு அடிப்படையாக உள்ள நமது கர்மங்களே புருஷார்த்தம் ஆகும். ஆக க்ருஷ்ண காமமே ப்ரதானமாக நம்மிடம் இருக்க வேண்டும். மற்ற மூன்று புருஷார்த்தங்களாகிய அறம் (தர்மம்), பொருள் (தனம்) மற்றும் வீடு (தர்மம் மற்றும் தனம் ஆகியவற்றுக்கு ஏற்ற இடம்) ஆகிய மூன்றும் க்ருஷ்ண காமத்திற்கு அடிமைகளே என்று உரைத்தார் – யார்? வாமனனாக வந்து வசிஷ்டர் போன்ற உயர்ந்தவர்கள் தொடங்கி சண்டாளர்கள் வரை உள்ள அத்தனை மனிதர்கள், விலங்குகள் ஆகியவற்றின் தலைகளில், வேறுபாடு காணாமல், தனது திருவடிகளை வைத்து அருளிய த்ரிவிக்ரமன் போன்று – இந்த உலகத்தாரில் ஏற்றத்தாழ்வு பாராமல், அனைவருக்கும் உபதேசித்த எம்பெருமானார் ஆவார்.

19. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 37-38) February 16, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

37. படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் *
      குடி கொண்ட கோயில் இராமானுசன் குணம் கூறும் * அன்பர்
      கடி கொண்ட மாமலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
      அடி கண்டு கொண்டு உகந்து * என்னையும் ஆளவர்க்கு ஆக்கினரே.
விளக்கவுரை – இந்தப் பூமி முழுவதும் பரவியுள்ள புகழ் கொண்டது எது என்றால் இராமாயணம் ஆகும். இத்தகைய இராமாயணம் என்னும் கரை புரண்டு ஓடும் பக்தி ரஸத்தை, தானே ஒரு கோவில் போன்று அவதரித்து, தன்னுள் வைத்திருப்பவர் உடையவர் ஆவார். பரமபுருஷனுக்கு வைகுண்டம், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை போன்று இராமாயணத்தின் இருப்பிடமாக எம்பெருமானார் உள்ளார். இப்படிப்பட்ட எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்களை, அவர் அவதரிப்பதற்கு முன்பே பலரும் இந்த உலகில் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்தனர். அவர்கள் யார் என்றால் – “கலியும் கெடும் கண்டு கொண்மீன்” என்று உடையவர் பிறப்பால் கலிகாலம் சீரடையும் என உபதேசம் செய்த ஸ்வாமி நம்மாழ்வார்; அவர் கூறியபடி உள்ள விக்ரஹத்தை மனதால் ஆராதித்த ஸ்வாமி நாதமுனிகள்; “ஆம் முதல்வன்” என்று வியந்த ஸ்வாமி ஆளவந்தார் – ஆகியோர் ஆவர். இப்படிப்பட்ட இவர்களுடைய பெருமை மிகுந்த திருவடித் தாமரைகளைத் தங்கள் உள்ளத்தில் கலந்து நின்றவர்கள் ஸ்வாமி கூரத்தாழ்வான் போந்றவர்கள் ஆவர். இப்படிப்பட்ட கூரத்தாழ்வான் போன்றோர் என்னைக் கண்டு, “இவனிடம் சிறிது நன்மை உள்ளது”, என்று உணர்ந்தனர். அவர்கள் தங்களைப் போன்றே என்னையும் “எம்பெருமானாருக்கு உரியவன்” என்று ஆக்கினர்.
38. ஆக்கி அடிமைநிலைப் பித்தனை என்னை இன்று * அவமே
      போக்கிப் புறத்திட்டது என்பொருளா முன்பு * புண்ணியர்தம்
      வாக்கில் பிரியா இராமானுச நின் அருளின் வண்ணம்
      நோக்கில் தெரிவரிதால் * உரையாய் இந்த நுண்பொருளே.
விளக்கவுரை – வெகுகாலம் இந்த உடலும் ஆத்மாவும் ஒன்று என்றே எண்ணியிருந்தேன்; அதன் பின்னர் அவை வெவ்வேறு என உணர்ந்த போதிலும், இந்த ஆத்மாவும் ஸர்வேச்வரனும் ஒன்று என எண்ணியிருந்தேன்(ஈச்வரோ அஹம்); அதன் பின்னர் வெகுகாலம் உலக இன்பங்களில் திளைத்தபடி இருந்தேன். இப்படி இருந்த என்னை, அவற்றில் இருந்து நீவிர் (எம்பெருமானார்) விடுவித்தீர். அதனைத் தொடர்ந்து, என்னை எம்பெருமானுக்கு அடிமையாக்கி, அவனுக்கு மட்டுமே கைங்கர்யம் செய்யும்படி பணித்தீர். இது நாள்வரை எனது உயிரை மற்ற விஷயங்களில் நான் வீணாக்கும்படிச் செய்து விட்டு, நீவிர் பேசாமல் நின்றது ஏன்? (நான் அறியேன்). மிகுந்த நன்மை உள்ளவர்கள் மற்றும் “பொலிக பொலிக பொலிக” என்று கூறும் ஸ்வாமி நம்மாழ்வார் போன்றவர்கள் ஆகியோர்களின் வாக்கில் எப்போதும் நிலைக்கும் எம்பெருமானாரே! எம்பெருமானின் லீலையானது என் போன்றவர்களை மோக்ஷம், பந்தம் ஆகிய இரண்டிலுமே ஈடுபடுத்திவிடும். ஆனால் உமது கருணை என்பது மோக்ஷத்தில் மட்டுமே ஈடுபடுத்தவல்லது அல்லவோ? இப்படிப்பட்ட மேன்மை உடைய உமது சிந்தனை (ஏன் என்னை இத்தனை நாள்கள் திருத்தாமல் காலம் கடத்தினீர் என்ற கேள்விக்கான விடை) எத்தனை ஆராய்ந்தாலும் அறிவதற்குக் கடினமே ஆகும். ஆகவே இந்த நுட்பமான சிந்தனை குறித்து நீரே எனக்குக் கூறவேண்டும்.

18. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 35-36) February 15, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
Tags: 
add a comment

35. நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே * சில மானிடத்தைப்
புயலே எனக் கவிபோற்றி செய்யேன் * பொன் அரங்கமென்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
அயரேன் * அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே?
விளக்கவுரை – எம்பெருமானாரைத் தவிர்த்து மற்றோருவரை நான் பரதேவதையை என்று கூறமாட்டேன், அதனை விரும்பவும் மாட்டேன். மதுரகவியாழ்வார் -தேவு மற்றறியேன் – என்று நம்மாழ்வார் குறித்து இருந்தது போன்றும்; ஸ்வாமி மணவாளமுனிகள் – உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்றறியா மன்னுபுகழ்சேர் வடுகநம்பி – என்று புகழ்ந்த ஸ்வாமி வடுகநம்பி போன்றும் – நான் இருப்பேன். அனைத்து திசைகளிலும் கடலால் சூழப்பட்ட உலகில் உள்ள க்ஷுத்ரன் ஒருவனைக் குறித்து, “நீர் நிலம் என்று வேறுபாடு காணாமல், எங்கும் ஒரே தன்மையுடன் பெய்யும் மழை போன்று குணம் உள்ளவன்”, என்று மற்றவர்களைத் துதிக்கமாட்டேன். “திருவரங்கம்” என்று கூறினாலே போதும் – அந்தச் சொல்லைக் கேட்டு, காதல் வயப்பட்டு நிற்கும் எம்பெருமானாரின் தாமரை போன்ற திருவடிகளை நான் மறக்க மாட்டேன். இவ்விதம் நான் உள்ளபோது, எம்பெருமானாரின் தொடர்பு உள்ள என்னைக் கர்மங்கள் மற்றும் கர்மவினைகள் எவ்விதம் பாதிக்கும்?
36. அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் * அன்று ஆரணச்சொல்
கடல் கொண்ட ஒண்பொருள் கண்டளிப்ப * பின்னும் காசினியோர்
இடரின்கண் வீழ்ந்திடத்தானும் அவ்வொண்பொருள் கொண்டு அவர்பின்
படரும் குணன் * எம் இராமானுசன்தன் படி இதுவே.
விளக்கவுரை – முதலையால் பீடிக்கப்பட்ட கஜேந்திரனையும், அச்வத்தாமனின் ப்ரஹ்மாஸ்திரத்தில் இருந்து பரீக்ஷத்தையும் காத்த அழகான சக்கரம் ஏந்தியவன்; அனைத்து உயிர்களின் நாயகன் – இப்படிப்பட்ட வாஸுதேவன் செய்தது என்ன? ஸமுத்திரத்தில் மறைந்து கிடந்த இரத்தினக் கற்களை வெளியெடுத்தது போன்று வேதங்கள் என்னும் கடலில் உள்ள ஆழ்பொருள்களை கீதாசாஸ்திரமாக அனைத்து ஜீவன்களும் உய்யும்படி வெளிப்படுத்தினான். ஆனால் இந்த உயர்ந்த சாஸ்திரத்தைப் பின்பற்றாமல், கலியுகத்தில் ஸம்ஸாரம் என்னும் பிடியில் இந்த உலகம் சிக்கித் துன்பப்படுவதைக் கண்டு எம்பெருமானாரின் இளகிய மனம் பொறுக்கவில்லை. எனவே அந்த சாஸ்திரத்தின் மெய்ப்பொருளை திருக்கோட்டியூர் நம்பியிடம் கற்றுத் தெளிந்து, தானும் அந்தச் சாஸ்திரத்திற்குப் பாஷ்யம் அருளிச்செய்தார். இதனை அனைவருக்கும் உபதேசித்து, அதனைப் பின்பற்றுபவர்களை இன்றளவும் தொடர்ந்து வரும் உயர்ந்த குணம், நம்முடைய உடையவரின் திருக்குணம் ஆகும்.

17. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 33-34) February 14, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
Tags: 
add a comment

33. அடை ஆர் கமலத்து அலர்மகள் கேள்வன் * கை ஆழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தண்டும் * ஒண் சார்ங்கவில்லும் *
புடை ஆர் புரிசங்கமும் இந்தப் பூதலப் காப்பதற்கு என்று
இடையே * இராமானுச முனி ஆயின இந்நிலத்தே
விளக்கவுரை – அழகு, நறுமணம், குளிர்ச்சி ஆகிய தன்மைகள் மிகுதியாகவும் இலைகள் நெருங்கவும் உள்ளது தாமரை மலராகும். இந்தத் தாமரை மலரின் பரிமளம் என்பது ஒரு வடிவு கொண்டதோ என்று கூறும்படி, இதில் அவதரித்தவள் பெரியபிராட்டி ஆவாள். இவள் விரும்பும் நாதனாக, இவனை மட்டுமே விரும்பும் நாயகனாக வாஸுதேவன் உள்ளான். அடியார்களுக்கு ஏற்படும் துன்பம் கலைய, கஜேந்திரனைக் காத்தது போன்று துயர் நீக்கத் தனது கையில் எப்போதும் சக்கரத்தாழ்வானை வைத்துள்ளான். மேலும் நந்தகம் என்ற வாள், சார்ங்கம் என்ற வில், ஞானத்திற்கு இடமாகிய பாஞ்சஜன்யம் என்ற வலம்புரிச் சங்கு ஆகியவற்றைத் தனது கைகளில் கொண்டுள்ளான். இந்த ஆயுதங்கள் அனைத்தும், இந்த “இருள் தருமாஞாலத்தை” காப்பாற்றுவதற்காக, இந்த உலகிற்கு வந்து, இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள எம்பெருமானாருக்குத் துணையாக நிற்கின்றன. அல்லது, இவையே எம்பெருமானாராக அவதரித்துள்ளன என்றும் கூறலாம்.
34. நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக்கலியை * நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை * என் பெய் வினை தென்
புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கியபின்
நலத்தைப் பொறுத்தது * இராமானுசன் தன் நயப்புகழே
விளக்கவுரை – தர்மம், அர்த்தம், காமம் (அறம், பொருள், இன்பம்) மற்றும் மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்கள் ஏற்படுவதற்கு இடமாக உள்ளது இந்தப் பூமியாகும். இந்தப் பூமியில் உள்ள மனிதர்களை மயங்க வைக்கும்; அவர்களுக்குத் துயரமும் ஏற்படவைக்கும்; மனிதர்களில் சண்டாளர்கள் போன்று, யுகங்களில் தாழ்வானது; மனதால் ஸர்வேச்வரனின் வலிமையைக்கூட அறிந்து கொள்ளலாம், ஆனால் இதன் வலிமையை அறிய இயலாது – இப்படிப்பட்ட தன்மைகள் உடையது எது என்றால் கலிகாலமாகும். சூரியன் உதயம் ஆனவுடன் இருள் விலகியது போன்று, எம்பெருமானார் திருஅவதாரம் செய்தவுடன் இந்தக் கலியின் தோஷம் விலகியது. இவ்விதமாக எம்பெருமானார் இந்த உலகைக் காப்பாற்றினார். இவ்விதம் மிகவும் உயர்வான செயல்கள் செய்த பின்னரும் எம்பெருமானாரின் உயர்ந்த திருக்கல்யாண குணங்கள் பிரகாசம் அடையவில்லை. பின்னர் வேறு எதன் மூலம் பிரகாசம் அடைந்தது? பல ஆண்டுகளாக நான் இயற்றி வந்த பாவங்கள் அனைத்தும், தெற்குத் திசையை இருப்பிடமாக உடைய யமலோகத்தில் சித்திரகுப்தனால் அவன் சுவடிகளில் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பாவங்களையும், அந்தச் சுவடிகளையும் எம்பெருமானார் அழித்தார். அதன் பின்னரே அவரது குணங்கள் பிரகாசம் பெற்றன.


16. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 31,32) February 13, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
Tags: 
add a comment

31. ஆண்டுகள் நாள் திங்களாய் * நிகழ் காலம் எல்லாம் மனமே!
ஈண்டு பல்யோனிகள் தோறு உழல்வோம் * இன்று ஓர் எண்ணின்றியே
காண்தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழலிணைக்கீழ்
பூண்ட அன்பாளன் * இராமானுசனைப் பொருந்தினமே.
பொருள் – ஸம்ஸாரபந்தம் மற்றும் மோக்ஷம் ஆகிய இரண்டின் தன்மைகளையும் அறியும் மனமே! பல ஆண்டுகள், பல மாதங்கள், பல நாட்கள் என்றுள்ள காலங்கள் முழுவதிலும் – தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் என்று பலவாகப் பிறந்தும், இறந்தும் உழல்கின்றோம். இவ்விதம் இன்று வரை நான் எம்பெருமானாரின் திருவடிகள் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தேன். ஆனால் இன்று நடந்தது என்ன? காண்பதற்கு ஏற்ற அகன்ற தோள்களை உடையவனும், நாம் சரணம் புக ஏற்ற எஜமானன் போன்றவனும், “நகரேஷு காஞ்சி” எனப்படும் காஞ்சீபுரத்தில் தானே வந்து ஹஸ்திகிரியில் நின்றவனும் ஆகிய பேரருளானனின் அழகான பொருந்திய திருவடிகளைத் தனது தலைக்கு ஆபரணமாகப் பூண்டு, அவன் மீது இடைவி்டாது பக்தி கொண்டவர் எம்பெருமானார் ஆவார். இத்தகைய எம்பெருமானாரிடம் சென்று – உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே – என்று கூறும்படி பொருந்தி நின்றேன்.
32. பொருந்திய தேசும் பொறையும் திரலும் * புகழும் நல்ல
திருந்திய ஞானமும், செல்வமும் சேரும் * செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அருந்தவன் * எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.
பொருள் – இருள் தரு மாஞாலம் என்றபடி, கலியின் பிடியில் சிக்கி, துக்கப்பட்டபடி உள்ள இந்தப் பூமியைக் காப்பாற்ற, தனது கருணை காரணமாகப் பரமபதத்தில் இருந்து இறங்கி எம்பெருமானார் வந்தார். திருக்கோட்டியூர் நம்பி தனக்கு அளித்த சரமச்லோகத்தின் (இது ஸ்ரீமத் பகவத் கீதையில் உள்ள பதினெட்டாவது அத்தியாயம், 66 ஆவது ச்லோகம்) பொருளை, எந்தவித பயனும் எதிர்பாராமல், உலகம் அனைத்திற்கும் அளித்தார். ஸ்ரீரங்கநாயகியை முன்னே நிறுத்தி, ஸ்ரீரங்கத்தின் நாதனான அழகிய மணவாளனின் திருவடிகளில் சரணாகதி செய்தார். இவ்விதம் சரணாகதி என்ற தவம் உடைய, எங்கள் ஸ்வாமியான, எம்பெருமானாரை சரணம் புகுந்ததால் கிட்டுவது என்ன தெரியுமா? தங்கள் ஸ்வரூபத்திற்கு ஏற்ற மதிப்பைப் பெறுவார்கள். பௌத்தர்கள், யாதவப்ரகாசன், யஜ்ஞமூர்த்தி போன்றவர்கள் பெற்றிருந்த போலியான மதிப்பு போன்று அல்லாமல், உண்மையான மதிப்பு என்று கருத்து. மிகுந்த பொறுமையைப் பெறுவார்கள். பகவானுக்கும் அவனது அடியார்களுக்கும் இடைவிடாமல் கைங்கர்யம் செய்யும் பலன் பெறுவார்கள். சரியான முறையில் பெறப்பட்ட உயர்ந்த ஞானம் பெறுவார்கள். இவை அனைத்தையும் நாம் நாடிப் போகவேண்டுமா? அவசியம் இல்லை, பெரியபிராட்டியின் கடாக்ஷம் மூலம் ஓடிவரும் செல்வம் போன்று, இவை தாமாகவே நம்மிடம் ஓடி வந்து சேர்ந்துவிடும்.

15. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 29,30) February 12, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
Tags: 
add a comment

29. கூட்டும் விதி என்று கூடுங்கொலோ? தென்குருகைப்பிரான்
பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ் தன்னை * தன் பத்தி என்னும்
வீட்டின் கண்வைத்த இராமானுசன் புகழ் மெய்யுணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை * என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே
விளக்கவுரை – தென்திசையில், பரமபதத்திற்கு இணையான ஸ்வபாவம் கொண்ட ஊராகிய ஆழ்வார் திருநகரியில் அவதரித்தவர் நம்மாழ்வார் ஆவார். அவருடைய திருவாய்மொழி என்பது செந்தமிழில் செய்யப்பட்ட வேதம் என்று கூறும்படி உள்ளது. இப்படிப்பட்ட திருவாய்மொழியை – ஈன்ற முதல் தாய் சடகோபன், இதத்தாய் இராமானுசன் – என்னும்படி, தனது இதயத்தில் எப்போதும் நிலை நிறுத்தியவர் எம்பெருமானார் ஆவார். அந்தத் திருவாய்மொழியை எப்போதும் கேட்டபடியும், உபதேசம் செய்தபடியும், வ்யாக்யானம் செய்தபடியும், திருக்குருகைபிரான் பிள்ளான் மூலம் வ்யாக்யானம் செய்வித்தபடியும் இராமானுசரின் திருக்கல்யாண குணங்கள் அமைந்திருந்தன. இப்படியாக எம்பெருமானாரின் குணங்கள் உள்ளன என்று அறிந்தவர்கள் கூரத்தாழ்வான், முதலியாண்டான் போன்றவர்கள் ஆவர். இவர்களையே எப்போதும் என் கண்கள் பார்த்தபடியும், அதனால் நான் ஆனந்தம் கொண்டபடியும் இருக்கும் உயர்ந்த வாய்ப்பு எப்போது அடியேனுக்குக் கூடுமோ?
30. இன்பம்தரு பெருவீடு வந்தெய்திலென்? * எண்ணிறந்த
துன்பம்தரு நிரயம்பல சூழிலென்? * தொல் உலகில்
மன் பல் உயிர்கட்கு இறைவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் * இராமானுசன் என்னை ஆண்டனனே
விளக்கவுரை – மிகவும் பழைமையான இந்த உலகத்தில், அறியாமை மற்றும் பூர்வ கர்ம வாசனை ஆகியவற்றின் காரணமாக ஸம்ஸாரத்தில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற ஆத்மாக்களின் எஜமானன்; த்ரிவிக்ரமனாக உலகம் அளந்து, நரஸிம்ஹமாக விரைவாக வந்து, ஜடாயு என்ற பறவையின் ஈமச் சடங்குகள் செய்து, குரங்குகளின் உதவியைக் கொண்டே இலங்கைக்குப் பாலம் அமைத்து, கோவர்த்தன மலையைக் கையில் எடுத்து – இவ்விதம் பல வியப்பான செயல்களைச் செய்யும் மாயன் – இவனே ஸர்வேச்வரன என்று எம்பெருமானார் உறுதிபட மொழிந்தார். அவர் ஸ்ரீபாஷ்யத்தின் மூலம் இவனே ஸர்வேச்வரன் என்று நிரூபித்து, உலகம் முழுமையும் உணரும்படிச் செய்தார். அனைவரிடமும் அன்பு பூண்டபடி உள்ளார். இப்படிப்பட்ட எம்பெருமானார், எதற்கும் உரிமை இல்லாத என்னைத் தத்து எடுத்து, என்னை ஆட்கொண்டார். இப்படிப்பட்ட உயர்ந்த புருஷார்த்தம் கிட்டிய பின் என் நிலை என்ன? எல்லையற்ற இன்பம் அளிக்கவல்லதும், மிகவும் உயர்ந்த புருஷார்த்தம் என்று கூறப்படுவதும் ஆகிய மோக்ஷம் கிட்டினாலும் என்ன; எண்ணற்ற துன்பம் அளிக்கவல்லதான நரகம் வந்து சூழ்ந்தாலும் என்ன – இவற்றை நான் ஒன்றாகவே நினைத்து, வருந்தாமல் உள்ளேன்.

14. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 27,28) February 11, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
Tags: 
add a comment

27. கொள்ளக் குறைவு அற்று இலங்கி * கொழுந்துவிட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் *
வெள்ளைச் சுடர்விடும் உன் பெருமேன்மைக்கு இழுக்கு இதென்று
தள்ளுற்று இரங்கும் * இராமானுச என் தனி நெஞ்சமே.
விளக்கவுரை – எம்பெருமானாரே! உன்னுடைய ஔதார்யம் என்ற வள்ளல் தன்மை எப்படி உள்ளது என்றால் – அன்றாடம் மேகங்கள் நீரை எடுத்தாலும் குறையாமல் உள்ள ஸமுத்திரம் போன்று, அள்ளஅள்ளக் குறையாமல் உள்ளது; ஆனால் அந்தக் கடல் போன்று, அதே அளவில் இல்லாமல் மேன்மேலும் ப்ரகாசம் அடைவது உனது வள்ளல் தன்மை ஆகும். வள்ளல் என்று கூற என்ன காரணம் உள்ளது? இந்த உலகில் உள்ள அனைவருக்கும் பகவானின் ஸ்வரூபம், ரூபம் பற்றி உபதேசம் செய்து, “இவ்விதம் செய்து விட்டோம், இது போதும்”, என்று எண்ணாமல், அனைவரும் அனைத்துக் காலத்திலும் உய்யும் விதமாக ஸ்ரீபாஷ்யம் மற்றும் கீதா பாஷ்யம் போன்றவற்றை அருளிச்செய்து வைத்தார். சிபிச்சக்ரவர்த்தி போன்றவர்களும் வள்ளல் எனப்படுகிறார்களே என்ற கேள்வி எழலாம். அவர்கள், ஏழைகளாக வந்தால் அழியக்கூடிய செல்வத்தைப் பரிசாக அளிக்கவல்லவர்களாக இருந்தனர்; நீயோ வந்தவர்களின் நிலை பாராமல், வேறு கதி இல்லை என்று வந்தால், உயர்ந்த மோக்ஷ உபாயத்தையே பரிசாக அளிக்க வல்லவர் அல்லவோ? நான் அழியும்படியாகவே (எனது மனசாட்சிக்குத் தெரிந்தே) பல பாவங்களை இயற்றியபடி இருந்தேன். இப்படிப்பட்ட பாவியான எனது மனதில், பரமபதத்தின் நாயகனால் கௌரவிக்கப்பட்ட நீ புகுந்தாய். உனது உயர்வு எங்கே, பாவியான நான் எங்கே? இது சேர இயலாத தொடர்பாக அல்லவா உள்ளது? இந்த உலகின் சிரமங்களைத் தனது குளிர்ந்த ஒளியால் ஆற்றவல்ல சந்திரனுக்குக் கூட களங்கம் உண்டு. ஆனால் பகவத் கடாக்ஷம் முழுமையாகப் பெற்ற உனக்கு, உன்னுடைய தேஜஸ்ஸுக்கு எந்தவிதமான களங்கமும் இல்லாமல் உள்ளவரே! கூரத்தாழ்வானைக் கொண்டு என்னை நல்வழிப்படுத்தி, அரங்கனுக்கே அடிமையாகும்படி அருளியதால், உனக்கு இந்தக் களங்கமற்ற தேஜஸ் உள்ளது போலும். வெண்மையான சுடர் போன்று எந்தவிதமான களங்கமும் அற்ற நீவிர் என் நெஞ்சில் புகுந்ததால், உனது மேன்மைக்கு இழுக்கு ஏற்பட்டுவிடும் என்று அறிந்து எனது நெஞ்சம் தவித்தபடி உள்ளது.
28. நெஞ்சில் கரைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் * நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன் * பாதம் நண்ணா
வஞ்சகர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என்வாய்
கொஞ்சிப் பரவகில்லாது * என்ன வாழ்வு இன்று கூடியதே.
விளக்கம் – அசரீரி கூறியதைக் கேட்டுத் தனது மனதில் க்ருஷ்ணன் மீது எப்போதும் விரோதம் கொண்டு கம்ஸன் இருந்தான். இப்படியாக நெஞ்சத்தில் கறை ஒன்றைக் கொண்டிருந்த கம்ஸனை, ஸம்ஹாரம் செய்தவன்; என்னை எம்பெருமானார் திருவடிகளில் பொருந்தி இருக்கும்படி அருளியவன் (நிமலன்); தாழ்வுகளுக்கு எதிர்தட்டாக உள்ளவன் (நிமலன்) ; பஞ்சு போன்ற வெண்மையான திருவடிகளை உடைய நப்பின்னை பிராட்டியின் நாயகன் – இப்படிப்பட்ட கண்ணனின் திருவடிகளை அண்டாமல் உள்ள வஞ்சக நெஞ்சம் படைத்தவர்களால் நெருங்க இயலாமல் உள்ளவர் எம்பெருமானார் ஆவார். என் போன்ற தாழ்ந்தவர்களின் மனதிலும் புகுந்து நிற்கும் எம்பெருமானாரின் உயர்ந்த குணங்கள் தவிர, வேறு எதனையும் உயர்வாகக் கூறி, எனது வாய் துதிக்காது. எனக்குக் கிட்டிய இத்தகைய உயர்ந்த வாழ்க்கையைக் கண்டீர்களா?

13. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 25,26) February 10, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
Tags: 
add a comment

25. காரேய் கருணை இராமானுச * இக் கடலிடத்தில்
ஆர் அறிபவர் நின் அருளின் தன்மை? * அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்தபின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் * அடியேற்கு இன்று தித்திக்குமே
விளக்கவுரை – மேகம் போன்று பலன் எதிர்பாராமல் அநைத்து உயிர்களுக்கும் அருளும் கருணை கொண்ட எம்பெருமானாரே! உம்முடைய கருணையின் அளவை, கடல் சூழ்ந்த இந்த உலகில் உள்ள யார்தான் முற்றிலுமாக அறிவார்கள்? ஆனால் நான் இதனை உணர்ந்துவிட்டேன். எப்படி? அனைத்து விதமான துக்கங்களுக்கு இருப்பிடமாக, அவை தங்கும் பூமியாக நான் இருந்தேன். கஜேந்திரனின் கூக்குரலைக் கேட்ட பரம்பொருள், பரமபதத்தில் இருந்து ஓடி வந்தது போன்று, எனது துன்பங்கள் கண்ட நீவிர் இந்த உலகில் அவதரித்தீர். இவ்விதமாக என்னை நீ வந்து ஆட்கொண்ட பின்னர் எனக்கு நேர்ந்தது என்ன? இந்த உலகில் உள்ள அனைவருக்கும் அவரவர்களின் ப்ராணனே உயிர் தரிக்க ஏதுவாக உள்ளது. ஆனால் எனக்கு உனது ப்ராணனே ப்ராணனாக அமைந்துள்ளது. இப்படிப்பட்ட உயர்ந்த உமது திருக்கல்யாண குணங்கள் அனைத்தும் தேன், பால், பாயஸம் போன்று எனக்கு மிகவும் உள்ளது.
26. திக்குற்ற கீர்த்தி இராமானுசனை * என் செய்வினையாம்
மெய்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை * மேவு நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பு ஏதியல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு * அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே.
விளக்கவுரை – மற்றவர்கள் மூலம் அல்லாமல் என்னாலேயே செய்யப்பட்ட தீய வினைகள் என்னும் நிலை பெற்ற தோஷங்கள் அனைத்தையும், அவை போன இடம் தெரியாமல், எம்பெருமானார் நீக்கினார். “இவனது விரோதிகளாக உள்ள அனைத்தையும் நீக்கி விட்டோம்”, என்று மகிழ்ந்தபடி உள்ளார் (எம்பெருமானார்). எட்டுத்திசைகளிலும் பரவியுள்ள குணப் பெருமைகள் கொண்ட எம்பெருமானாரை – மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே – என்னும்படியும்; ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் – என்னும்படியும், அவரது திருவடிகளைத் தங்கள் நன்மையாகவும் இலக்காகவும் பற்றியபடி பலர் உள்ளனர். இவர்கள் வேறு எந்தப் பயனையும் யதிராஜரிடம் எதிர்பாராமல் உள்ள மஹாத்மாக்கள் ஆவர். இப்படிப்பட்ட மஹாத்மாக்கள் குற்றம் செய்யும் இழிவான பிறப்பை அடைந்த போதிலும், குற்றம் செய்யும் இழிவான தொழிலை மேற்கொண்டபோதிலும் அவர்களுக்கு இழிவு ஏற்படாது. மேலும் இது போன்ற பிறப்பு, தொழில் ஆகியவை நம்மிடம் இல்லை என்றாலும், அந்த மஹாத்மாக்களின் “யதிராஜ பக்தி” என்பது நம்மை அவர்களிடம் அடிமைப்படுத்திவிடும்.

12. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 23,24) February 9, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
Tags: 
add a comment

23. வைப்பாய வான் பொருளென்று * நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை * இருநிலத்தில்
ஒப்பாரில்லாத உறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் * என்னாம் இது அவன் மொய்புகழ்க்கே?
விளக்கவுரை – ஆபத்துக் காலத்தில் உதவுவதற்காகச் சேர்த்து வைக்கப்பட்ட மிகவும் உயர்ந்த பெருமையுடைய தனம் எம்பெருமானார் ஆவார். வைத்தமாதியாக உள்ள இவரை மிகவும் உயர்ந்த தனம் என்று ஆழ்வான், பின்னர், எம்பார், முதலியாண்டான் போன்றோர் தங்கள் மனதில் வைத்தனர். உயர்ந்த இரத்தினக் கற்களைச் செப்புக் குடத்தில் வைப்பது போன்று இவர்கள் இவ்விதம் தங்கள் மனதில் உடையவரை வைத்தனர். எப்போதும், எக்காலத்திலும் இது போன்றவர்கள் மனதில் நீங்காமல் உள்ளவர் இராமாநுசர் ஆவார். மிகவும் பரந்த இந்தப் பூமியில், பாவம் செய்வதில் என்னைவிட உயர்ந்தவர்கள் தேடினாலும் கிட்டமாட்டனர். இவ்விதம் பாவத்தையே செய்து வரும் நான், வஞ்சகம் நிறைந்த என் மனதில் எம்பெருமானாரை அனைத்துக் காலத்திலும், என் நெஞ்சில் இருக்கும்படி வேண்டுகிறேன். இதனால், “தகாத இடத்தில் எம்பெருமானார் தங்குகிறார்”, என்று அவருடைய பெருமைகளுக்கு என்னால் ஏதேனும் இழுக்கு உண்டாகிவிடுமோ? (என்று அஞ்சுகிறார்)
24 மொய்த்த வெந்தீவினையால் பல்லுடல் தொறும் மூத்து * அதனால்
எய்த்தொழிந்தேன் முனநாள்கள் எல்லாம் * இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்களில் நிலத்தவியக்
கைத்த மெய்ஞ்ஞானத்து * இராமானுசன் என்னும் கார் தன்னையே
விளக்கவுரை – தண்டகாரண்யத்தில் இராமனை கரன் போன்ற பதினான்காயிரம் அசுரர்கள் சூழ்ந்து நின்றது போன்று, பலஆண்டுகளாக என்னால் இயற்றப்பட்ட பாவங்கள் அனைத்தும், எனது ஆத்மாவைச் சூழ்ந்தபடி உள்ளன. இந்தப் பாவங்கள் அனைத்தும் மிகவும் கொடுமையான தீயவினை காரணமாக தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல விதமான உருவங்கள் எடுத்து; அந்தச் சரீரங்களில் மேலும் பாவங்கள் செய்து; கிழட்டுத்தன்மை ஏற்பட மடிந்து போனேன். இது போன்ற பிறப்பு- இறப்பு சுழற்சி எத்தனை காலமாக உள்ளது என்றால், பல காலமாகத் தொடங்கி இன்றளவும் உள்ளது. இப்போது நடந்தது என்ன? சாஸ்திரங்களுக்கு மீறிய தவம், இராவணன் போன்று போலியான ஸந்ந்யாஸம் போன்றவற்றை ஆதரிக்கும் சைவம், மாயாவாதம், காணாபத்யம், பௌத்தம் போன்ற சமயங்கள் அனைத்தும் எரிந்து பஸ்மம் ஆயின. எப்படி என்றால் – எம்பெருமானார் அருளிச்செய்த ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், வேதார்த்த ஸங்க்ரஹம் போன்றவை மூலம் தீயில் இட்ட பிணம் போல் ஆயின. இப்படிப்பட்ட மெய்ஞானம் உள்ள எம்பெருமானார் – காகாசுரன் என்ற அசுரனுக்கு இராமன் உதவியது போன்றும், தானாகவே வந்து மழை பொழியும் மேகம் போன்றும் எனக்குத் தன்னைக் காட்டிக் கொண்டார். இதனால் நான் உயர்ந்துவிட்டேன்.

11. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 21,22) February 8, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

22. நிதியைப் பொழியும் முகில் என்று * நீசர் தம் வாசல் பற்றித்
துதிகற்று உலகில் துவள்கின்றிலேன் இனி * தூய்நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத்துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய * இராமானுசன் என்னைக் காத்தனனே.


விளக்கவுரை – தூய்மையான அனுஷ்டானங்களை உடைய பெரியநம்பி, திருமலைநம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருவரங்கப்பெருமாள் அரையர், திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பி, மாறனேரிநம்பி போன்ற யதிகளின் ஸ்வாமியாக உள்ளவர் யார் என்றால் – காட்டுமன்னார்கோயில் எம்பெருமானின் திருநாமத்தை என்றும் பற்றியிருந்த ஆளவந்தார் ஆவார். இவருடைய திருவடிகள் என்னும் உபாயத்தை மட்டுமே பற்றி, அந்தத் திருவடிகள் காரணமாகவே இந்த உலகில் உள்ள ப்ரபன்னர்கள் அனைவருக்கும் ஸ்வாமியாக உள்ளவர் எம்பெருமானார் ஆவார். தன்னை அண்டியவர்களைக் காப்பதில் பெருமை ஏதும் இல்லை, தன்னை எளிதில் அண்டாமல் உள்ளவர்களையும் காத்தருளியவர் எம்பெருமானார் ஆவார். ஆகவே இனி உள்ள காலம் முழுவதும் நமது ஸித்தாந்தத்தைத் தூஷிப்பவர்கள், அஹங்காரம் பற்றியவர்கள் ஆகியோருடைய நரகத்தின் வாயிலை ஒத்த அவர்களின் இருப்பிடத்தை நான் நாடமாட்டேன்; அவர்களை, “மேகம் போன்று நவநிதியைப் பொழிவார்கள்”, என்று வாய்க்கு வந்தபடி துதிக்கமாட்டேன்; ஸம்ஸாரத்தில் உழல வைக்கும் இது போன்ற செயல்களில் இனி நான் ஈடுபடமாட்டேன்.

22. கார்த்திகையானும் கரிமுகத்தானும் * கனலும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு * மூவுலகும்
பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் * இராமானுசன் எந்தன் சேமவைப்பே.

விளக்கவுரை – ருத்திரனின் புத்திரனாகக் கார்த்திகை நட்சத்திரத்தில் நீரில் பிறந்த ஷண்முகன், யானையின் முகம் கொண்டதால் கஜாநநன் என்ற பெயர் கொண்ட ருத்ர கணபதி, ப்ரளய காலத்தில் இந்த உலகை எரிக்கவல்லதான காலாக்னி போன்ற ஒளி வீசும் மூன்று கண்கள் கொண்டதால் விரூபாக்ஷன் என்ற பெயர் கொண்ட ருத்ரன், துர்க்கை, ஜ்வரதேவதை ஆகிய அனைவரும் பாணாசுர யுத்தத்தில் க்ருஷ்ணனின் அம்புகளை எதிர் கொள்ள இயலாமல் புறமுதுகு காட்டி ஓடினர். அப்போது அவர்கள் – க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் – எனக் கண்ணனையே, “வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்”, என்று கூறுவதற்கு ஏற்றபடி இந்த உலகம் அனைத்தும் உண்டாகக் காரணமாக இருந்த நீரில் ஆலந்தளிரில் பள்ளிகொண்ட ஸர்வேச்வரன் என்று அறிந்தனர். அவர்கள் கண்ணனை, “மூன்று உலகங்களையும் உனது திருநாபிக்கமலம் மூலம் தோன்றிய ப்ரம்மன் வாயிலாகப் படைத்தவனே!”, என்று போற்றி நின்றனர். இவர்களுக்காகத் தனது பேரனான அநிருத்தனைச் சிறை எடுத்த பாணாசுரனைப் பொறுத்து அருளினான். ஒருவன் ஒரு தவறு செய்தாலே பல ப்ராயச்சித்தம் செய்ய வேண்டுவது இருக்க, பாணனின் பல பிழைகளை வெறும் ஸ்தோத்ர மாத்ரத்தில் மட்டுமே பொறுத்துக் கொள்ளும் உயர்ந்த திருக்கல்யாண குணங்கள் கொண்ட ஸர்வேச்வரனை, ஸ்ரீபாஷ்யம் கீதாபாஷ்யம் போன்றவை மூலம் அனைத்துக் காலத்திலும், அனைத்து லோகத்திலும் அவனது பராக்ரமங்கள் நிலை நிற்கும்படிச் செய்தவர் எம்பெருமானார் ஆவார். எனது ஆபத்து காலங்களில் உதவுவதற்காகச் சேமித்து வைத்த தனம் இவரே ஆவார்.

11. இராமானுச நூற்றந்தாதி (பாசுரம் 19, 20)February 7, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
1 comment so far

19. உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் * உயர் குருவும்
     வெறிதரு பூமகள் நாதனும் * மாறன் விளங்கிய சீர்
    நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந்நீணிலத்தோர்
    அறி தர நின்ற * இராமானுசன் எனக்கு ஆரமுதே.
விளக்கவுரை – நமக்கு நாம் இன்னார் என்று அறியும் அறிவை அளிக்கவல்லது; நம்மிடம் ப்ரியமாக உள்ளது; அஜ்ஞானத்தை நீக்கவல்லது; ஞானம் ஏற்பட உபாயமாக உள்ளது; அள்ள அள்ள குறைவில்லாத செல்வமாக உள்ளது; “வீடுமின் முற்றவும்” என்று தொடங்கி, “கண்ணன் கழலிணை”, என்பதுவரை நமது நன்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டு உபதேசித்த காரணத்தினால், நமது தாய்தந்தையைப் போன்றது; அனைத்து வகையிலும் நமக்கு ஏற்ற ஆசார்யனாக உள்ளது; மிகுந்த நறுமணம் வீசும் தாமரை மலரைத் தனது பிறப்பிடமாகக் கொண்ட பெரியபிராட்டிக்கு நாதனான ஸர்வேச்வரன் போன்றும் உள்ளது – இது எது? ஸர்வேச்வரன் தனது கருணை மூலம் நம்மாழ்வாருக்கு “மயர்வற மதிநலம் அருளி”, அத்தகைய நம்மாழ்வார் அவனது ஸ்வரூப-ரூபங்களை நாம் அறியும் வண்ணம் விளக்கிய, தமிழ் வேதமாகிய திருவாய்மொழியே ஆகும். இத்தகைய திருவாய்மொழி மட்டுமே புருஷார்த்தம் என்று இந்தப் பெரிய உலகில் உள்ள அனைவருக்கும் அறிவிக்கும்படியாக எம்பெருமானார் உள்ளார். இப்படிப்பட்ட எம்பெருமானாரே எனக்கு அமிர்தம் போன்று உள்ளார்.
20. ஆரப்பொழில் தென்குருகைப் பிரான் * அமுதத் திருவாய்
       ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு * இனியவர்தம்
       சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
        வாரிப் பருகும் * இராமானுசன் எந்தன் மாநிதியே.
விளக்கவுரை – தாமிரபரணியின் நீர்வளத்தால் உயர்ந்து நிற்கும் சந்தன மரங்கள் சூழ்ந்த சோலையினால் சூழப்பட்டது திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரி ஆகும். இத்தகைய திருக்குருகையில் அவதாரம் செய்து, அனைவருக்கும் திருவாய்மொழி அருளி, நாதமுனிகளுக்கு அனைத்தையும் உபதேசம் செய்து, நமது ஸம்ப்ரதாயத்தை வழி நடத்தியவர் நம்மாழ்வார் ஆவார். அத்தகைய நம்மாழ்வாரின் அழகான திருவாயில் பிறந்ததும், னமது ஸம்ஸார தாபம் நீக்கும் ஈரம் உள்ளதும், தமிழ்மொழியில் உள்ள வேதம் போன்றுள்ளதும் திருவாய்மொழியாகும். இப்படிப்பட்ட உயர்ந்த திருவாய்மொழியின் இசையை, அதன் ராகம் போன்றவற்றுடன் அறிந்தவர்களின் குணங்களில் நின்று, அவர்களுடைய திருக்கல்யாண குணங்களை எப்போதும் கூறியபடி உள்ளவர் நாதமுனிகள் ஆவார். இப்படிப்பட்ட நாதமுனிகளை, அவரது குணங்களுடன் அனுபவித்தபடி உள்ளவர் எம்பெருமானார் ஆவார். அப்படிப்பட்ட உடையவர், இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஏற்ற செல்வமாக உள்ளபோதிலும், எனக்குக் கிட்டிய பெரியநிதி ஆவார். நவநிதி போன்று ப்ரளயத்தில் அழியக்கூடியது அல்லாமல், எப்போதும் உள்ள மாநிதி ஆவார்.

10. இராமானுச நூற்றந்தாதி (பாசுரம் 17, 18)February 6, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

17. முனியார் துயரங்கள் முந்திலும் * இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை * கலை பரவும்
தனி ஆனையைத் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை * எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே.
விளக்கவுரை – அனைத்து ச்ருதி, இதிஹாஸம் மற்றும் புராணங்கள் ஆகியவற்றால் துதிக்கப்படுபவன்; இதனைப் போன்றே ஒத்த வேறு யானை ஒன்று இல்லை என்றுள்ள கம்பீரமான யானை போன்று செருக்குடன் உள்ளவன் – இவன் யார் என்றால், தனது அழகு முழுவதையும் அனைவரும் அனுபவிக்கும்படி, திருக்கண்ணமங்கை என்னும் திவ்யதேசத்தில் எழுந்தருளி உள்ள பத்தராவிப்பெருமாள் ஆவான். இப்படிப்பட்ட பத்தராவிப்பெருமாளின் ஸ்வரூபம், ரூபம், குணங்கள் ஆகியவற்றைப் பற்றி, அவனை அண்டியவர்களின் தாபங்கள் அனைத்தும் தீரும்விதமாக, இனிய தமிழ் மொழியில் பிரபந்தம் இயற்றியவர் திருமங்கையாழ்வார் ஆவார். இந்த ஆழ்வாருக்கு, இந்த உலகில் உள்ள அனைத்துப் பாகவதர்களையும் விட, பிரியமானவராக உள்ளவர் நமது எம்பெருமானார் ஆவார். என்னைப் போன்றே அனைவரும் உய்ய வேண்டும் என்னும் நோக்கத்துடன் அவதரித்தவர் எம்பெருமானார் ஆவார். எம்பெருமானாரின் ப்ரபாவம் பற்றி அறிந்து, அவரை அண்டிய அனைவரும் பாக்கியம் பெற்றவர் ஆவர், ஏன்? இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு மலை போன்று, அடுக்கடுக்காய்த் துன்பங்கள் ஏற்பட்டாலும், “இந்தத் துன்பங்கள் வந்துவிட்டதே”, என்று புலம்பமாட்டனர்; இதே போன்று அளவிட இயலாத இன்பம் வந்தாலும், “இந்த அதிசயம் நமக்கு உண்டானதே”, என்று துள்ளவும் மாட்டனர்.
18. எய்தற்கரிய மறைகளை * ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனை * சிந்தையுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் * இராமானுசன் எம் உறுதுணையே.
விளக்கவுரை – சிறந்த ஞானம் உள்ளவர்களுக்கும் அறிவதற்குக் கடினமான ஆழ்பொருள் அடக்கிய வேதங்கள் அனைத்தையும், பெண்கள் – சிறுவர்கள் என்னும் பேதம் இன்றி அனைவரும் கற்கும் விதமாக, ஆயிரம் இனிய பாசுரங்களில் செய்தருளினார். இவர் யார் என்றால் – இவ்விதமாக இந்த வேதங்களை எளிமைப்படுத்தவே இந்த உலகில் அவதாரம் செய்தவரும், மற்ற மதங்கள் என்னும் சடம் (ஒருவிதமான வாயு) நீங்க, சடகோபன் என்ற திருநாமம் கொண்டவரும் ஆகிய நம்மாழ்வார் ஆவார். இப்படிப்பட்ட நம்மாழ்வாரை எப்போதும் தனது உள்ளத்தில், “தேவு மற்று அறியேன்”, என்று வைத்துக் கொள்ளும் தகுதி கொண்டவர் மதுரகவியாழ்வார் ஆவார். இத்தகைய மதுரகவிகளின் உயர்ந்த திருக்கல்யாண குணங்கள் அனைத்தையும், இந்த உலகில் உள்ளவர்களை உய்விக்கும் விதமாக அருளியவர் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட உடையவரே எனக்குத் திடமான துணை ஆவார் (வேறு யாரும் அல்லர்).

9. இராமானுச நூற்றந்தாதி (பாசுரம் 15, 16)February 5, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

15. சோராத காதல் பெருஞ்சுழிப்பால் * தொல்லை மாலை ஒன்றும்
பாராது அவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத உள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் * எனக்கு என்ன தாழ்வினியே.
விளக்கவுரை – என்றும் வாடாத பக்தி பூண்டு (பரிபூர்ணமான பக்தி) , அத்தகைய பக்தி என்ற வெள்ளத்தில் ஏற்பட்ட பெருஞ்சுழி ஒனறில் அகப்பட்டவராக நின்றவர் பெரியாழ்வார் ஆவார். இவர் செய்தது என்ன? இந்த உலகம் என்ற ஸம்ஸாரக் கடலில் விழுந்து அவதிப்படும் ஜீவன்கள் படும் துன்பம் கண்டு இரக்கப்பட்டபடி உள்ளவனை; என்றும் உள்ளவனை; உயர்வற உயர்நலம் உடையவன், நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தான் என்று பலவாறு போற்றப்படுபவனை; “அவன் ஸர்வேச்வரன், அனைத்தும் பொருந்தியவன்”, என்ற ஏற்றத் தாழ்வு பாராமல், சாதாரண மனிதர்களை “தீர்க்காயுஷ்மாந் பவேத்” என்று ஆசி அளிப்பது போன்று, எம்பெருமாளுக்குப் பல்லாண்டு கூறினார். இவ்விதமாக அரங்கனுக்கே, “உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு”, என்று மங்களாசாஸனம் செய்த பெரியாழ்வாரின் திருவடிகளை எம்பெருமானார் தனது மனதில் நீங்காமல் வைத்துள்ளார். இப்படிப்பட்டவர்கள் – கிட்டுவதற்கு மிகவும் அரியதான மனிதப் பிறவி எடுத்த போதிலும், நஷ்டத்துடன் கூடியவர்களே ஆவார்கள். இப்படியாக எம்பெருமானாரின் கருணைக்கு இலக்கான எனக்கு, இனி தாழ்வு எவ்விதம் ஏற்படும்? ஒரு குறையும் இன்றி, அனைத்தும் கூடும்.
16. தாழ்வு ஒன்றில்லா மறை தாழ்ந்து * தலமுழுதும் கலியே
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் * அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூட்டிக் கொடுத்தவள் தொல்லருளால்
வாழ்கின்ற வள்ளல் * இராமனுசன் என்றும் மாமுனியே
பொருள் – திருவரங்கத்தில் கண்வளர்கின்ற பெரியபெருமாளின் உத்தமமான திருமேனிக்கு, அலங்கரிக்கத் தகுதி கொண்ட மலர் மாலையை, “இந்த மாலை அவனுக்கு உறுத்துமோ, மணம் சேர்க்குமோ”, என்று சோதிக்கும் விதமாகத் தனது தலையில் சூட்டி, அதனைக் களைந்து அவனுக்கு அளித்தாள் (ஆண்டாள்). இப்படிப்பட்ட ஆண்டாளின் கருணையாலேயே தனது வாழ்வு கொண்டவர் எம்பெருமானார் ஆவார். திருவரங்கத்தில் பங்குனி உத்திர நன்னாளில், அழகிய மணவாளன் ஸ்ரீரங்கநாயகியுடன் சேர்ந்து நின்றபோது அல்லவோ – பகவன் நாராயண – என்று சரணாகதி செய்தார்? இவ்விதமாக, தான் அழகிய மணவாளன் திருவடிகளில் சரணாகதி அடைந்து பெற்ற பலன்கள் அனைத்தையும் இந்த உலகம் முழுமைக்கும் அளித்த வள்ளல் ஆவார். அப்படிப்பட்ட மாமுனிவராக உள்ளவர் எம்பெருமானார் ஆவார். இராமாநுஜர் செய்தது என்ன? வேதங்கள் அனைத்தும் எந்தவிதமான தாழ்வுகளும் இன்றி இருந்து வந்தன. அப்படிப்படட உயர்ந்த வேதங்கள் மதிக்கப்படாமல், வேதமார்க்கம் என்பது முலையில் சென்றபடி இருந்து. எப்பொது இவ்விதம் ஆனது என்றால் – இருள்தருமாஞாலம் என்ற இந்தப் பூமியைக் கலியுகமானது ஆள்கின்ற காலத்தில் (கலியுகத்தில்) ஆகும். இந்தக் காலத்தில் வேதங்களை மீட்க, பரமபதத்தில் இருந்து வந்து ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்து, இந்த உலகங்களைக் காத்தவர் எம்பெருமானார் ஆவார் என்று உணர்வீர்களாக.

8. இராமானுச நூற்றந்தாதி (பாசுரம் 13-14)February 4, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

13. செய்யும் பசும்துளவத் தொழில் மாலையும் * செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் * பேராத சீர் அரங்கத்து
ஐயன் கழற்கணியும் பரன் தாளன்றி ஆதரியா
மெய்யன் * இராமானுசன் சரணே கதி வேறெனக்கே.
விளக்கவுரை – தனது சீரீய தன்மையால் கட்டப்பட்டதும், தன்னுடைய கரம் பட்டதால் புதுப்பொலிவுடன் விளங்கியதும் ஆகிய திருத்துழாய் மாலைகள்; வேதங்கள் போன்று மூன்று வர்ணத்தினர் மட்டுமே கற்க முடியும் என்ற கட்டுப்பாடு இன்றி, வேதம் ஓத அதிகாரம் இல்லாத பெண்களும்-அறியாமையால் மூழ்கியவர்களும் கற்கலாம்படி தமிழ் மொழியில் உண்டாக்கப்பட்ட வேதம் என்று போற்றப்படும் திருமாலை என்ற திவ்யப் பிரபந்தம் அருளிச் செய்தவர்; ஈறில வண் புகழ் நாரணன் என்று கூறுவதற்கு ஏற்ப , என்றும் உள்ள திருக்கல்யாண குணங்கள் உடையவனாக, தாய் தந்தை இவனே என்று கூறும்படியாக, அனைத்துப் பந்துக்களும் இவனே என்று தோன்றும்படியாக திருவரங்கத்தில் கண்வளர்கின்ற பெரியபெருமாளை, “ஐயனே அரங்கா!”, என்று கூறி அழைத்து நின்றவர்; அந்தத் திருவடிகளைக் காட்டிலும் மேற்பட்ட பொருள் வேறு ஏதும் இல்லை என இருந்தவர் – இப்படிப்பட்டவர் தொண்டரடிப்பொடியாழ்வார் ஆவார். அத்தகைய தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருவடிகளைக் காட்டிலும் வேறு ஒரு பொருளை விரும்பாத உத்தமரான எம்பெருமானாரின் திருவடிகள் மட்டுமே எனக்குச் சரணாகும், வேறு ஏதும் இல்லை.
மெய்யன் என்று கூறுவதன் பொருள் என்ன? ஸர்வேச்வரனின் திருக்கல்யாண குணங்களை எம்பெருமானார் ஆதிசேஷனாக எப்போதும் அவனுடன் இருந்தபடி அறிந்தவர்; அதனைத் தனது ஸ்ரீபாஷ்யத்தில் உள்ளது உள்ளபடி அருளிச் செய்தார்.
14. கதிக்குப் பதறி* வெங்கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்கத் தவம் செய்யும் கொள்கையற்றேன் * கொல்லிகாவலன் சொல்
பதிக்கும் கலைக் கவிபாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் * இராமானுசன் என்னைச் சோர்விலனே.
விளக்கவுரை – கொல்லிநகர் என்று கூறப்படும் திருவஞ்சிக்களம் (கேரளம்) என்ற நகரின் அரசரான குலசேகரப்பெருமாள் செய்தது என்னவெனில் – சாஸ்திரச் சொற்களுக்கு விஷயமாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் விபூதிகள், குணங்கள் ஆகியவற்றை – முத்துக்கள், இரத்தினக் கற்கள் போன்றவற்றைக் கோர்ப்பவர் போன்ற செயல் செய்து, “இருளிரிய சுடர் மணிகள்”, என்று தொடங்கி, “நலந்திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவார்”, என்று முடித்து, இந்தக் கவிதைகளில் அந்தச் சாஸ்திரச் சொற்களைப் பதித்தார். இப்படிப்பட்ட குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியை எப்போதும் அநுஸந்திக்கும் நாதமுனிகள், ஆளவந்தார், பெரிய நம்பி, திருமலைநம்பி, திருக்கோட்டீயூர்நம்பி, திருவரங்கப்பெருமாளரையர், திருமாலையாண்டான் போன்றவர்களின் திருவடிகளை மட்டுமே ஆராதித்து வருபவரும், பகவத் விஷயத்தில் இவரை விட உயர்ந்தவர் யாரும் இல்லாமல் உள்ளவரும் ஆகிய எம்பெருமானார் என்னை விட்டு நீங்காமல் எப்போதும் என்னுடன் உள்ளார். இதனால் என்ன நிகழ்ந்தது? மிகவும் உயர்ந்த புருஷார்த்தங்களைப் பெறுவதற்காக – தீயுடன் கூடிய காடுகள், கால்களை வருத்தும் கற்கள் நிறைந்த இடங்கள், அதிக குளிர் உணடாக்கி வாட்டும் நீர் நிலைகள் ஆகியவற்றில் இருந்தபடி, அனைத்து உடல் உறுப்புகளும் வருந்தும்படி தவம் செய்யும் ஸ்வபாவம் நீங்கப் பெற்றேன். (இதன் கருத்து – உடையவரின் திருவடித் தொடர்பு கிட்டிய பின்னர் வேறு பயன் கருதி எந்தச் செயல்களிலும் ஈடுபட வேண்டியதில்லை என்பதாகும்).


7. இராமானுச நூற்றந்தாதி (பாசுரம் 11-12 )February 3, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

11. சீரிய நான்மறைச் செம்பொருள் * செந்தமிழால் அளித்த
பார் இயலும் புகழ்ப் பாண்பெருமாள் * சரணாம் பதுமத்தார்
இயல் சென்னி இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்தம்
காரிய வண்மை * என்னால் சொல்லொணாது இக்கடலிடத்தே.
விளக்கவுரை – எம்பெருமானின் ஸ்வரூபம் மற்றும் திருக்கல்யாண குணங்களை, உள்ளது உள்ளபடி எடுத்து உரைப்பதால் நான்காக வகைப்பட்ட வேதங்களுக்கு மிகுந்த மேன்மை உள்ளது. ஆழ்ந்த பொருளை உள்ளடக்கிய அவற்றின் ஆழ்பொருளை, அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக இனிய தமிழ் மொழியில் அளித்து, நமக்கு உபகாரம் செய்தவர் திருப்பாணாழ்வார் ஆவார். அகண்ட இந்தப் பூமியில், அதனை விட அகன்ற புகழ் மற்றும் கல்யாண குணங்களைக் கொண்டவரும், பெரியபெருமாள் மகிழும்படியாக இனிதாகப் பாடவல்லவரும் ஆகிய திருப்பாணாழ்வாரின் திருவடிகள் என்ற தாமரை மலர்களைத் தனது திருமுடியில் அலங்காரமாக வைத்துள்ளவர் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட எம்பெருமானாரைச் சார்ந்தவர்களின் செயல் மேன்மைகள் எப்படிப்பட்டது என்று கடல் சூழ்ந்த இந்தப் பூமியில் உள்ள என் போன்றவர்களால் கூற இயலாது.
காரியவண்மை என்பதைக் கார் + இயல் + வண்மை என்றும் கொள்ளலாம். இதன் பொருள் என்ன? கார் என்றால் கார் காலமேகம், இயல் – அந்த மேகத்தின் தன்மையானது பலன் பாராமல் மழை அளிப்பது, வண்மை – அந்த மேகம் போன்று எம்பெருமானாரின் திருக்குணங்களைப் பொழிகின்ற தன்மை – என்பதாகும்.
இராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம் காரியவண்மை என்றால் என்ன? க்ர்மிகண்டன் என்னும் துர்அரசனின் சபையில் இருந்த குத்ருஷ்டிகளை வாதம் கொண்டு வென்ற கூரத்தாழ்வான்; எம்பெருமானாரின் கட்டளைக்கு இணங்க, மாயாவாதி வித்வான்களைத் தன்னுடைய திருவடிகளின் தீர்த்தம் (ஸ்ரீபாததீர்த்தம்) கொண்டே திருத்திய முதலியாண்டான்; எம்பெருமானாரின் ஆணைக்கு இணங்க திருமலை சென்று, அங்கு திருவேங்கடமுடையானே இவருக்காக மண் சுமந்த மேன்மையுடைய அனந்தாழ்வான் – முதலானவர்களின் மேன்மையை பாசுரங்களால் கூற இயலுமோ?
12. இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் * இணை அடிப்போது
அடங்கும் இதயத்து இராமானுசன் * அம்பொற்பாதம் என்றும்
கடம் கொண்டு இறைஞ்சும் திருமுனிவர்க்கன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே * அடியேன் அன்பு செய்வதுவே.
விளக்கவுரை – இந்தப் பூமி எங்கும் தனது புகழ் பரவி, உயர்ந்த குணங்களுடன் உள்ளவர் திருமழிசை ஆழ்வார் ஆவார். அவருடைய இணைந்த தாமரை போன்ற அழகான திருவடிகள் என்றும் எம்பெருமானாரின் நெஞ்சத்தில் உள்ளன. இப்படிப்பட்ட உடையவரின் அழகான, அழகிற்கே இருப்பிடமான திருவடிகளை அனைத்துக் காலங்களிலும், தாங்கள் இந்த மனிதப்பிறவி எடுத்தது இந்தத் திருவடிகளை அடைவதற்கே என்றபடி சிந்தித்து சிலர் உள்ளனர். இப்படிப்பட்ட உயர்ந்த திருவடிகளின் தொடர்பை மட்டுமே உயர்வாகக் கொண்டு, அதனையே தங்கள் மனதில் வைத்தபடி உள்ள ஞானிகள் உள்ளனர். அந்த ஞானிகள் மற்ற விஷயங்கள் மீது ஈடுபாடு இல்லாமல், எம்பெருமானார் விஷயத்தில் மட்டுமே ஈடுபாட்டுடன் உள்ளனர். அவர்களுக்கு அல்லவோ நான் அன்புடன் தொண்டு செய்வேன்?
இவ்வாறு எம்பெருமானார் விஷயத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் எம்பெருமானைக் கூட இரண்டாவது பக்ஷமாகக் கருதுவதும் உண்டு. இதற்கு இரண்டு செயல்கள் காண்போம். ஒரு முறை ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார் மடத்தின் அருகே நம்பெருமாள் திருவீதி உலா வந்தான். அப்போது அனைவரும் அவனை வணங்கியபடி நிற்க, இராமாநுசரின் சீடரான வடுகநம்பி என்பவர் மட்டும் வரவில்லை. ஏன் என்று காரணம் வினவ அவர், “நான் அங்கு வந்தால் இங்கு உமக்காக (இராமாநுசர்) அடுப்பில் காய்ச்சிக் கொண்டிருந்த பால பொங்கி விடுமே”, என்றார்.
இது போன்று , கிருமிகண்டன் என்ற அரசனின் நிபந்தனையால் ஸ்ரீரங்கத்தை விட்டு எம்பெருமானார் மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரம் சென்று விடுகிறார். அப்போது அவருடன் இருந்த கூரத்தாழ்வானுக்கு பெரியபெருமாளை க் காணவேண்டும் என்ற ஆசை மேலிட, ஸ்ரீரங்கம் வந்தார். நகரக்காப்பாளர்கள் அவரிடம், “இராமானுசருடன் தொடர்புடையவர்கள் உள்ளே புக அனுமதியில்லை”, என்றனர். உடனே அங்கிருந்தவர்கள், “இவர் ஞானம் உடையவர், இவரை உள்ளே விடுங்கள்”, என்று கூறினார்கள். இதனைக் கேட்ட கூரத்தாழ்வான், “எம்பெருமானார் தொடர்புக்கு மீறி உள்ள ஞானமும், அதனால் ஏற்படும் பெரியபெருமாள் தரிசனமும் எனக்குத் தேவை அற்றது”, என்று கூறி பெரியபெருமாளைத் தரிசிக்காமலேயே புறப்பட்டுவிட்டார்.

6. இராமானுச நூற்றந்தாதி (பாசுரம் 9,10 )February 2, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

9 இறைவனைக் காணும் இதயத்து இருள்கெட * ஞானம் என்னும்
நிறைவிளக்கு ஏற்றிய பூதத்திருவடித்தாள்கள் * நெஞ்சத்து
உறைய வைத்தாளும் இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர்
மறையினைக் காத்து * இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே.
விளக்கவுரை – அனைத்திற்கும் எஜமானனாக உள்ளவனை நாம் அறிந்து, உணர்ந்து கொள்வதற்கு ஏதுவான கருவி நமது இதயமே ஆகும். இத்தகைய இதயத்தில் பூர்வகர்ம பலன்கள் காரணமாக, அஜ்ஞானம் என்ற இருள் சூழ்ந்து கிடக்கிறது. அத்தகைய இருள் நீங்கும் விதமாக, பரம்பொருள் பற்றிய ஞானம் என்ற பரிபூர்ணமான விளக்கை ஏற்றியவர் பூதத்தாழ்வார் ஆவார். இந்த விளக்கு எப்படி உள்ளது என்றால் – அன்பே தகளி, ஆர்வமே நெய், சிந்தனையே திரி என்று கொண்டு ஞானமயமாக உள்ளது. அதாவது – ஆழ்வாரின் பக்தி என்பதே விளக்கானது; ஆழ்வாரின் ஆர்வமே நெய்யானது; பகவத் அனுபவத்தில் எப்போதும் ஊறிக் கிடக்கும் ஆழ்வாரின் மனமே திரியானது; பரிபூர்ணமான ஞானம் என்பதே தீபமானது; இப்படியான ஒரு விளக்கை நாராயணனுக்கு ஏற்றினார். இத்தகைய பூதத்தாழ்வாரின் உயர்ந்த திருவடிகளைத் தனது நெஞ்சத்தில் எப்போதும் வாசம் செய்யும்படியாக வைத்து அனுபவிப்பவர் உடையவர் ஆவார். இப்படிப்பட்ட எம்பெருமானாரின் உயர்ந்த கல்யாணகுணங்கள் குறித்து முன்பே பல பெரியோர்கள் உரைத்தனர் – கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று இவரது பிறப்பை முன்பே உணர்த்தினார் நம்மாழ்வார்; இத்தகைய இவரது விக்ரஹம் இவ்விதம் இருக்கும் என்று காலம் முழுவதும் சிந்தித்தவர் நாதமுனிகள்; “ஆ முதல்வன்” என்று வியப்புற்றவர் ஆளவந்தார். மற்ற மதத்தினர் மூலம் வேதங்கள் அழியாமல் காத்து நிற்பவர்கள் இப்படிப்பட்ட உயர்ந்தவர்களே ஆவார்கள்.
10. மன்னிய பேரிருள் மாண்டபின் * கோவலுள் மாமலராள்
தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் * தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் * திருவுடையார் என்றும் சீரியரே.
விளக்கவுரை – ஆத்மாவை அஹங்காரம், அஜ்ஞானம் போன்ற இருள் பற்றியபடி உள்ளது. இத்தகைய நீண்ட இருளானது பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகிய இருவர் ஏற்றிய ஞானதீபங்களால் நீக்கப்பட்டது. இவர்களுக்குப் பின் வந்தவர் பேயாழ்வார் ஆவார். இவர் தனது “ நீயும் திருமகளும்” என்னும் பாசுரம் மூலம் திருக்கோவலூரில் மஹாலக்ஷ்மியுடன் உள்ள க்ருஷ்ணனாகிய ஸர்வேச்வரனைக் கண்டதைக் காட்டினார் (இங்கு உள்ள தன்னொடுமாயனை என்பதை தன்னோடு +ஆயன் அல்லது தன்னோடு + மாயன் என்று பிரிக்கலாம்). ஆயன் என்பது திருக்கோவிலூரில் உள்ள ஆயனார் என்ற பெருமாளைக் குறிக்கும். மாயன் என்பது பாண்டவர்களுக்குத் தூது சென்று, அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டி, ஆயுதம் தொடமாட்டேன் என்ற சபதத்தை பாண்டவர்களுக்காக மீறி, அர்ஜுனனுக்காகச் சூரியனைத் தனது சக்கரத்தால் மறைத்து, கோவர்த்தனம் எடுத்து, அந்தணர் ஒருவரின் குழந்தை விஷயத்தில் அர்ஜுனன் செய்த சபதத்தை எண்ணி அவனைப் பல உலகங்கள் அழைத்துச் சென்று, சரமச்லோகம் உபதேசித்து – இப்படியாகப் பல வியப்பான செயல்கள் செய்த கண்ணனைக் குறிக்கும். இவ்விதம் தான் கண்டவனைப் பற்றி இனிய தமிழில் – திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கண்ணி நிறமும் கண்டேன், செருக்கிளரும் பொன்னாழி கண்டேன், புரிசங்கைக் கண்டேன் – என்று பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியை அருளிச் செய்தார். இவருடைய திருவடிகளை என்றும் போற்றும் ஸ்வபாவம் உடையவர் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட உடையவரின் மீது மாறாத அன்பும் பக்தியும் உடையவர்கள், அந்த பக்தியையே தங்கள் ஆபரணங்கள் என்று கருதி அலங்கரித்துக் கொள்ளும் உயர்ந்தவர்கள் உண்டு. இவர்களது திருவடிகளைத் தங்கள் தலையில் வைக்கப்படும் அழகான மலர்கள் போன்று ஏற்றுக் கொள்வாரும் உண்டு. இவர்கள் எந்தக் காலத்திலும் உயர்ந்து நிற்பவர்கள் ஆவர்.

5. இராமானுச நூற்றந்தாதி (பாசுரம்7,8)February 1, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

5. மொழியைக் கடக்கும் பெரும்புகழான் * வஞ்சம் முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின் *
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ்பாடி அல்லா
வழியைக் கடத்தல் * எனக்கு இனியாது வருத்தமன்றே.
விளக்கவுரை – ஒரு சில பதங்கள் மூலம் வர்ணிக்க அரியதாகவும், பரமபதம் அளவு பெருகிநிற்கும் திருக்கல்யாண குணங்கள் நிரம்பியவராகவும் உள்ளவர்; தவறான பாதையில் ஆத்மாவை இட்டுச் செல்ல வல்லதான அஹங்காரம், வித்யாகர்வம், தனகர்வம் ஆகிய மூன்று பெறும் குழிகளை மிகவும் எளிதாகக் கடந்து நிற்பவர்; நமக்கு நாதனாக உள்ளவர் – இவர் யார் என்றால் நம்முடைய கூரத்தாழ்வான் ஆவார். அப்படிப்பட்ட கூரத்தாழ்வானின் திருவடிகளை நாம் அண்டிய பிறகு நிகழ்வது என்ன? ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுசன், தமிழ் மறைகள் ஆயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் என்று கூறும்படியாகத் திருக்கல்யாண குணங்களை கொண்ட உடையவரின் குணங்களை சிந்தித்தபடி இருக்கும் நிலையானது எனது பாவங்கள் காரணமாக எனக்கு இதுவரை ஏற்படாமல் இருந்தது. அந்த நிலை மாறி (கூரத்தாழ்வானின் திருவடிகளை அண்டிய பின்னர்) , எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்களையே புகழ்ந்து கூறியபடி, தவறான வழிகளில் செல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. இன்று முதல் இனி வரும் காலங்களில் எந்த ஒரு விஷயமானாலும் எனக்குக் கஷ்டம் என்பதே இல்லை.
8. வருத்தும் புறவிருள் மாற்ற * எம்பொய்கைப்பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி * ஒன்றத்
திரித்து அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் * இராமானுசன் எம் இறையவனே.
விளக்கவுரை – (இது வரை கூறப்பட்ட பாசுரங்கள் அனைத்தும் உபோத்காதம் எனப்படும் முன்னுரை ஆகும். இனி வரும் பாசுரம், மூலம் தனது துதியைத் தொடங்குகிறார்) உலகவிஷயங்களை அடையும் பொருட்டு, “ஆட்டை அறுத்துக் கொடு, உன் தலையை அறுத்துக் கொடு” என்னும் க்ஷூத்ர தேவதைகளையும், மற்ற தேவதைகளையும் ஆராதித்து, அதனால் ஏற்படும் அஜ்ஞானம் என்ற இருளில் முழ்கி பலரும் வருந்துகின்றனர். இத்தகைய அஜ்ஞானம் என்ற இருள் நீங்கும்படியாக, நமக்கு ஏற்ற உபகாரம் செய்தவர் பொய்கையாழ்வார் ஆவார். வேதாந்தத்தின் முழுப் பொருளும் விளங்கும் விதமாகவும், “நடை விளங்கு தமிழ்” என்று போற்றப்படும் அழகான தமிழ் மொழியையும் இணைத்து அவர் செய்த உபகாரம் என்ன? தன்னிடம் சேர்ந்து விடும்படி அவரை அணுகி, ஸர்வேச்வரன் நெருக்கியபோது (முதல் ஆழ்வார்கள் மூவரும் திருக்கோவிலூரில், ஒருவரை ஒருவர் அறியாமல் நிற்க, அவர்களை விளக்கும் விதமாக ஸர்வேச்வரன் அவர்களுக்கு இடையில் புகுந்து நெருக்கி நின்றான்), “வையம் தகளியா” என்ற பாசுரம் மூலம் உயர்ந்த திருவிளக்கை ஏற்றினார். இத்தகைய ஞானம் என்ற திருவிளக்கைத் தனது நெஞ்சத்தில் எப்போதும் ஏற்றி வைத்து, நிலைக்கும் ஆசார்யரான எம்பெருமானார் நமக்கு ஸ்வாமியாக உள்ளார்.

4. இராமானுச நூற்றந்தாதி (பாசுரம் 5, 6)January 31, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

5. எனக்குற்ற செல்வம் இராமானுசன் என்று * இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் * அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என்பா
இனக்குற்றம் காணகில்லார் * பத்தியேய்ந்த இயல்விதென்றே
விளக்கவுரை – நிலையற்ற உலகச் செல்வம் போன்று இல்லாமல் எப்போதும் என்னிடம் நிலைத்து நிற்கும் ஸம்பத்தாக, “தந்தை நல்தாய் தாரம் தனையர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே எதிராசா” என்னும்படியாக உள்ள எம்பெருமானாரே எனக்குக் கிட்டிய மிகப் பெரும் நிதி என்று நான் அறிந்து கொண்டேன். அவருடைய புகழ் முழுவதையும் எனது இந்தப் பாசுரங்கள் மூலம் பறை சாற்றினேன். யதிராஜரின் உயர்ந்த குணங்களை அனுபவிக்கத் தகுதி உடைய பக்தி கொண்டவர்கள் நினைப்பது, “இந்தப் பாசுரங்கள் முழுவதும் எம்பெருமானார் மீது கொண்ட பக்தி காரணமாகவே உண்டானது; வேறு எந்தவிதமான பயன் கருதியும் இவை இயற்றப்படவில்லை”, என்பதாகும். இதனால், இந்தப் பாசுரங்களில் ஏதேனும் குற்றம் இருந்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொள்வார்கள். ஆயினும், “நமது செல்வம் இராமானுசர்”, என்று கூறுவதை ஏற்காத சிலர், தங்களின் தோஷம் நிறைந்த மனத்தால், இந்தப் பாசுரங்களில் குற்றம் உள்ளது என்று நிந்திக்கக்கூடும். அவற்றையும் நாம் புகழ் என்றே எடுத்துக்கொள்வோம்.
6. இயலும் பொருளும் இசையத் தொடுத்து * ஈன்கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை * மதி இன்மையால்
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் * அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே.
விளக்கவுரை – கூரத்தாழ்வான், பராசரபட்டர் போன்ற சிறந்த வல்லுனர்கள் எம்பெருமானார் மீது கொண்ட அன்பு மயக்கமாக மாறியது; இதனால் அவர்கள் அவரை வாழ்த்திப் பலவாறு கவிதைகள் புனைந்தனர். அவற்றில் சொல், பொருள் போன்ற அனைத்தும் மிகவும் பொருந்தி நிற்கின்றன. இவர்கள் பின்வருமாறு வாழ்த்தினர்:
  1. வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை.
  2. அறுசமயச் செடி அதனை அடியறுத்தான் வாழியே
  3. அறமிகு நல்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே அழகாரும் எதிராசன் இணையடிகள் வாழியே
  4. சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி … இனி திருப்போடெழில் ஞானமுத்திரை வாழி
  5. வாழியரோ தக்கோர் பரவுந் தடஞ்சூழ் பெரும்பூதுர் முக்கோல் பிடித்த முனி
இது போன்ற காவியங்களில் நான் எனது மனதை வைத்து, அவற்றை அனுபவித்தபடி எனது பொழுதைப் போக்குவது அல்லவோ சிறந்தது? ஆனால் நான் செய்வது என்ன? அந்தக் காவியங்களில் பக்தி வைக்காமல், மிகவும் பாவம் செய்த நான் செய்யத் துணிந்தது என்ன? பாவம் நிறைந்த எனது சொற்கள் கொண்டு, “இதுவே இராமானுசனின் புகழ்”, என்று வரையறுத்துக் கூற இயலாத அவரது புகழை, முழுமையாகக் கூற முயன்றேனே! இது எனது அறிவுக் கேட்டால் விளைந்தது அல்லவோ?

3. இராமானுச நூற்றந்தாதி (பாசுரம் 3, 4)January 30, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
add a comment

3. பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப் * பேய்ப்பிறவி
பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்திப் * பொருவரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுச முனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் * அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே.
விளக்கவுரை – இந்த உலகில் உள்ள மனிதர்களாக இருந்தாலும் ஒரு சிலர் – அசுர வம்ஸத்தில் பிறவி எடுத்து அறிவற்றுப் போனவர்களுடன் தொடர்பு கொண்டும், அஹங்காரம் போன்றவை நிரம்பியும் உள்ளனர். அவர்களது தொடர்பை, எனது நெஞ்சமே! நீ நீக்கிக் கொண்டாய். மேலும் நீ (நெஞ்சத்தை நீ என்றார்) செய்த உபகாரம் என்ன? “இதுதான் இவரது குணம்” என்று எல்லைப்படுத்திச் சொல்ல இயலாத அளவிற்குத் திருக்கல்யாண குணங்கள் கொண்டவரும்; அனைத்துச் சாஸ்த்ரங்களையும் அறிந்தவரும்; இந்த உலகினருக்கு மட்டும் அல்லாது திருவேங்கடமுடையானுக்கே சங்கு-சக்கரம் அளித்ததால் அவனுக்கும் ஆசார்யனாக உள்ளவரும்; தன்னை அண்டியவர்களின் குற்றத்தைப் பார்த்து அவர்களைக் கைவிடாமல், அவர்கள் நிலைக்குத் தான் இறங்கிவந்து அருளும் தன்மை கொண்டவரும் ஆகிய எம்பெருமானாரிடம் மிகுந்த அன்பும் பக்தியும் வைக்கும் உயர்ந்த பேறு பெற்றவர்கள் பலர் உண்டு. அவர்களது திருவடிகளின் கீழ் என்னை நீ (நெஞ்சம்) சேர்த்து வைத்தாய். எனது நெஞ்சமே! இத்தகைய உயர்ந்த ஸ்வபாவம் உள்ள உன்னை நான் வணங்குவதே உனக்கு நான் செய்யும் கைம்மாறாகும்.
4. என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி * மருள் சுரந்த
முன்னைப் பழைவினை வேரறுத்து * ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் * எனக்கு ஏதும் சிதைவு இல்லையே.
விளக்கவுரை – “இருள் தரு மா ஞாலம்” என்று கூறப்படும் இந்த உலகத்தில் ஒரு பொருட்டாகவே கருத இயலாதபடி நான் இருந்தேன். அப்படிப்பட்ட என்னை ப்ரஹ்மவித்துக்களில் உயர்ந்தவனாகவும், சிறந்த வஸ்து என்று அனைவரும் கூறும்படியாகவும் எம்பெருமானார் மாற்றினார். எனது அறியாமை காரணமாகப் பல காலமாகவும், இந்தப் பிறவியிலும் எண்ணற்ற பாவங்கள் சேர்ந்தன. அந்தக் கர்மவினைகளை முற்றிலுமாக வேருடன் அழித்தார். அனைத்துக் காலங்களிலும் நிலையாக நிற்கும் ஸர்வேச்வரனை மட்டுமே அனைவரும் உணர்ந்து கொண்டு வணங்கும்படியும், மற்ற தேவதைகளின் தொடர்பு நீங்கும்படியும் செய்தார். அனைவரும் விரும்பி அனுபவிக்கும்படியாக ஸ்ரீபாஷ்யமும் கீதாபாஷ்யமும் அருளிச்செய்த எம்பெருமானார், தனது தாமரைமலர் போன்ற திருவடிகளை என் தலை மீது வைத்து அருளவும் செய்தார். இத்தனைக்கும் பிறகு என்னிடம் குறை என்பது என்ன இருக்கப் போகிறது?

2. இராமானுச நூற்றந்தாதி January 29, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
2 comments

1. பூ மன்னு மாது பொருந்திய மார்பன் * புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் * பல்கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ * நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே.
விளக்கவுரை – மலர்மேல் மங்கை என்றும், பத்மே ஸ்திதாம் என்றும் கூறுவதற்கு ஏற்றபடி தாமரைமலரைத் தனது இருப்பிடமாகக் கொண்டவள் பெரியபிராட்டி ஆவாள். அப்படிப்பட்ட அவள் – அகலகில்லேன் இறையும் – என்று நித்யவாசம் செய்யும் திருமார்பை உடையவன் பெரியபெருமாள் ஆவான். இந்தப் பெரியபெருமாளின் திருக்கல்யாண குணங்களின் மூலம் ஏற்பட்ட அனுபவத்தினால் திருவாய்மொழியை அருளிச்செய்வதில் மட்டுமே நிலைநின்றவர் நம்மாழ்வார் ஆவார். அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளை அண்டி நின்று, அவற்றின் மூலம் மட்டுமே வாழ்ந்து வருபவர்; பலவகையான சாஸ்த்ரங்கள் கற்றுச் சிறந்து விளங்கும் கூரத்தாழ்வான், கோவிந்தர், தாசரதி போன்றோரும் சாஸ்த்ரங்களை நன்றாகப் பயின்றும் அவற்றை விரோதித்து நின்ற யாதவப்ரகாசர், யஜ்ஞமூர்த்தி போன்றோரும் தன்னிடம் வந்து நிலையாக இருக்கும்படி உள்ளவர் – இப்படிப்பட்ட எம்பெருமானாரின் திருவடிகளை, அவை மட்டுமே நமக்கு உபாயம் என்று அறிந்த நாம், அவற்றை நிலையாகப் பற்றி வாழ வேண்டும். இதற்கு என்ன வழி என்றால் – எனது நெஞ்சமே! அந்த உடையவரின் திருநாமங்களை எப்போதும் இடைவிடாமல் கூறியபடி இருப்பதே ஆகும்.
2. கள்ளார் பொழில் தென் அரங்கன் * கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் * குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு * ஒன்றறியேன் எனக்கு உற்ற பேரியல்வே.
விளக்கவுரை – தேன் வழியும் சோலைகளால் சூழப்பட்ட அழகான திருவரங்கத்தில், அந்த உயர்ந்த திவ்யதேசம் மூலம் மட்டுமே தனது பெருமைகள் அனைத்தும் வெளிப்படும்படியாக அழகியமணவாளன் சயனித்துள்ளான். தாமரைமலர் போன்ற அழகும் செம்மையும் கொண்ட அவனது திருவடிகளைத் தங்கள் மனதில் நிலை நிறுத்தாமல் உள்ளவர்களும் இந்த உலகில் உண்டு. கிடைத்தற்கரிய மனிதப் பிறவி கிட்டியும், அதற்கு ஏற்ற பாக்கியம் பெறாத இந்த மனிதர்களை (பெரியபெருமாளின் திருவடிகளைத் தங்கள் நெஞ்சத்தில் எண்ணாதவர்களை), நான் விலக்க வேண்டும். திருக்குறையலூர் என்னும் திவ்யதேசத்தில் அவதரித்த திருமங்கையாழ்வாரின் திருவடிகளின் கீழே, எப்போதும் அகலாதபடி பக்தியுடன் இருப்பவர் எம்பெருமானார் ஆவார். அவருடைய மிகவும் உயர்ந்த குணங்கள் தவிர வேறு எதனையும் என் மனம் சிந்திப்பதில்லை. மிகவும் தாழ்ந்தவனாகிய என் போன்றவனுக்கு இத்தகைய உயர்ந்த நிலை ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று அறியமுடியவில்லை.

1. இராமானுச நூற்றந்தாதி January 28, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி
8 comments

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருவே தஞ்சம்
திருவரங்கனே தஞ்சம்
தஞ்சமடைந்த நம் இராமானுசன் திருவடிகளே தஞ்சம்

திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த

ப்ரபந்ந காயத்ரி என்னும் இராமானுச நூற்றந்தாதி

ஸ்ரீபெரும்பூதூர் வந்த வள்ளலாம் இராமானுசனைப் புகழ்ந்து, திருவரங்கத்தமுதனார் 108 பாசுரங்கள் கொண்ட இந்தத் தொகுப்பை அருளிச்செய்தார். இதனை அன்றாடம் ப்ரபன்னர்கள் வேதத்திற்கு நிகராகவே ஓத வேண்டும் என்பதால் இதற்கு ப்ரபன்ன காயத்ரி என்றே ஒரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த ஈடில்லாத தொகுப்பிற்கு ஸ்வாமி மணவாளமாமுனிகளும், பிள்ளைலோகம் ஜீயரும் உரை அருளிச்செய்தனர். இவர்களின் பேருரைகளை அடியொட்டி, நாயேனான அடியேன் இந்தத் தொகுப்பிற்கு விளக்கம் எழுதியுள்ளேன். இந்த முயற்சியில் ஏதேனும் குற்றம் இருந்தால் அதனை எம்பெருமானாரும், நம்பெருமாளும் பொறுத்துக் கொள்வர் என்னும் நம்பிக்கை உள்ளது.
உடையவரின் முதன்மையான சிஷ்யராக விளங்கிய ஸ்வாமி கூரத்தாழ்வானின் திருநக்ஷத்ரமான இன்று (28.01.2008) முதல் இந்தத் தொடர் தொடங்கியது என்பது எம்பெருமானாரின் திருவுள்ளமே என்று கூறுவதை விட வேறு என்ன சொல்வது? உடையவருக்காகத் தனது உயிரையும் விடத் துணிந்த கூரத்தாழ்வானுக்கு நாம் செய்யும் கைங்கர்யம் – எம்பெருமானாரை என்றும் நமது மனதில் நிறுத்தி, அவரது புகழை எப்போதும் பாடி, கோயில்களில் உள்ள அவரது திவ்யமங்கள விக்ரஹத்தைக் கொண்டாடியபடி இருப்பதே ஆகும். இதனைச் செய்தால் மட்டுமே கூரத்தாழ்வானின் மனம் குளிரும் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.
கீழே உள்ள பாசுரங்களில், (*) என்னும் குறியிட்ட இடங்களில் நிறுத்திப் படிக்கவேண்டும்.
தனியன்கள்
1. முன்னை வினை அகல மூங்கில்குடி அமுதன் *
பொன் அம் கழல் கமலப்போது இரண்டும் * – என்னுடைய
சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன் * தென்புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன் யான்.
பொருள் – மூங்கிற்குடி என்ற குலத்தில் உதித்தவராகிய அமுதனாரின் அழகான திருவடித் தாமரைகள் இரண்டையும் என்னுடைய தலைக்கு அலங்காரமாகச் சேர்த்துக் கொண்டேன். இதன் மூலம் எனது பாவகர்மங்கள் அனைத்தும் அகன்று போகும்படி ஆனது. இவ்விதம் பாவங்கள் நீங்கிய பின்னர், யமபுரியில் உள்ள யமதூதர்களிடம், எனது கர்ம அனுபவம் காரணமாக நான் அகப்படுவேனா? (மாட்டேன்).
2. நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது என்று நண்ணினர்பால் *
சயம் தரு கீர்த்தி இராமானுசமுனி தாள் இணை மேல் *
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் * கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே.
பொருள் – உலக விஷயங்களின் மூலம் கிட்டும் இன்பம் அனைத்தும் அற்பமானவையே என்று அறிந்து கொண்டு எம்பெருமானாரின் திருவடிகளை அண்டியவர்களுக்கு, அவர்கள் அந்த விஷயங்களை வெல்லவைக்கும் புகழ் கொண்டவர் இராமானுசர் ஆவார். அப்படிப்பட்ட எம்பெருமானாரின் பொருந்திய திருவடிகள் மீது, உயர்ந்த நற்குணங்கள் நிறைந்தவரான திருவரங்கத்தமுதனார் மிகுந்த பக்தியுடன் அருளிச்செய்த கலித்துறை விருத்தத்தில் உள்ள இந்தப் பிரபந்தத்தை – எனது மனமே! நீ விரும்பி அத்யயனம் செய்வாயாக.
3.
சொல்லின் தொகை கொண்டுஉனது அடிப்போதுக்குத் தொண்டுசெய்யும் *
நல் அன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என்றன் நாவின் உள்ளே *
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம! * இராமானுச! இது என் விண்ணப்பமே.
பொருள் – வேதங்களுக்கு முரண்பட்ட உபதேசங்களைக் கூறும் ஆறு சமயங்களையும் மிகவும் எளிதாக வென்ற யதிராஜனே! உனது திருவடித் தாமரைகளுக்கு எப்போதும் தொண்டு புரிந்தபடி உள்ளவரும், உம்மிடம் மிகுந்த அன்பு பூண்டவரும் ஆகிய திருவரங்கத்தமுதனார், தனது விரிவான சொற்கள் கொண்டு உனது பெருமைகள் மற்றும் திருநாமங்களை விரிவாக உரைத்தார். அந்தச் சொற்கள் இரவும் பகலும் எனது நாவில் நிலைத்து நிற்கும்படி நீரே அருளவேண்டும். இதுவே எனது விண்ணப்பம் ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக