செவ்வாய், 17 ஜூன், 2014

எச்.வி.ஆர். ஐயங்கார் கலைமகள் தீபாவளி மலரில்

ராதே கிருஷ்ணா 18-06-2014ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்த எச்.வி.ஆர். ஐயங்கார் கலைமகள் தீபாவளி மலரில் தனது அனுபவங்களை எழுதுகிறார்.


From the album: Timeline Photos
By Well-bred Kannan
ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்த எச்.வி.ஆர். ஐயங்கார் கலைமகள் தீபாவளி மலரில் தனது அனுபவங்களை எழுதுகிறார்.

அதில் கர்நாடக மாநிலத்தில் தனது சொந்தக் கிராமமான, மாலவல்லியில் அம்மனைத் தரிசித்த போது, அந்தத் திருமுகத்தில் தனது தாயாரின் அன்பு ததும்பும் திருமுகத்தையே பார்த்ததாக எழுதுகிறார்.

அதன் பிறகு பெரியவர்களைத் தரிசனம் செய்ய அவர் போனபோது, வணங்கி எழுந்ததும் “நீ உன் தாயாரைப் பற்றி எழுதிய கட்டுரையைப் பார்த்தேன். உன்னைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அதனால் தான் வரும்படி சொன்னேன்” என்று சொல்லுகிறார் பெரியவர்கள். ஐயங்காருக்கு இது வியப்பாக இருந்தது. எவ்வளவோ சாஸ்திர வேதாந்த நூல்களைப் படித்து ஞானத்தின் கரை கண்டவர், தன்னுடைய கட்டுரையையும் தீபாவளி மலரில் படித்துக் குறிப்பிட்டதைத் தெரிந்து கொண்டு, சற்றே அதிர்ச்சி அடைகிறார்.

எச்.வி.ஆர். ஐயங்கார் தனது தரிசன அனுபவத்தை “இதோ தெய்வம்” என்ற நூலில் இப்படி எழுதுகிறார்:

தீடிரென்று ஒரு திரை விலகியது போல இருந்தது எனக்கு! பல ஆண்டுகள் பல பெரிய பதவிகளை வகித்திருக்கிறேன். பல ஆராய்ச்சி மேடைகளில் பேசியதும், கட்டுரைகளை எழுதியதும் எனக்குப் புகழைத் தேடித் தந்திருக்கின்றன. இவையெல்லாம் சுவாமிகளுக்கு முக்கியமாகப் படவில்லை. நான் எனது தாயாரின் நயமான பண்புகளை விவரித்திருக்கும் முறையும், அவரைப் போற்றி எழுதியதுமே அவரைக் கவர்ந்திருக்கின்றன.

“அந்தப் பண்புகள் என்ன? மனிதர்களின் வாழ்வை நிர்ணயிக்கும் அந்தச் சக்தியின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை. எந்த விதமான சோதனை வந்தாலும் மாற்ற இயலாத பிடிப்பு. கற்பெனும் உறுதியான லட்சியத்தில் ஈடுபாடு; இருந்தும் உலகத்தில் பல பெண்கள் கருணை, நேர்மை ஆகிய பண்புகளை உணரவில்லையே என்ற ஆச்சரியம். எனது தாயார் இளம் வயதில் சுகமாக இருந்ததையும், மணமான பின் வறிய நிலையில் கஷ்டப்பட்டு வாழ்ந்த்தையும், அந்த நிலையிலும் கலங்காமல் வாழ்நாளில் கடைசிவரையில் நேர்மையுடனும், கடவுள் நம்பிக்கையுடனும் வாழ்ந்ததைப் பற்றியும் அந்தக் கட்டுரையில் எழுதி இருந்தேன்.இந்த அம்சமே சுவாமிகளைக் கவர்ந்திருக்கிறது.”

இந்து மதத்தின் முக்கியமான தத்துவங்களை மீண்டும் உணர்த்துவதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும் என்பது பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். “அப்படிப்பட்ட ஆசார அனுஷ்டானங்களில் எனக்கு ஈடுபாடு இல்லையே? கோயிலுக்குப் போவதே அபூர்வம். கர்மாக்களையும் கடைப்பிடிப்பதில்லையே? ஆங்கிலேயர் ரீதியில் வாழ்ந்து வருபவன் நான்” என்று சொல்லித் தெளிவுபடுத்தினேன். இவற்றையெல்லாம் பற்றிச் சுவாமிகள் அக்கறைப்படவேயில்லை. நான் தாயாரைப் பற்றி எழுதிய கட்டுரையின் அடிப்படையில், நான் இந்துமதத்தில் அக்கறை உள்ளவன் என்றே கருதினார்.

“நான் ஏன் சுவாமிகளிடம் இப்படி உருகிப் போனேன்?” என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன். அவருடைய பேச்சின் எளிமைதான் காரணம் என்று சொல்லுவதற்கில்லை. பலர் இதே போலப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அவருடைய உருவம் என்னை ஈர்த்தது என்று சொல்லுவதற்கில்லை.இன்றும் பலர் இதைவிடக் கவர்ச்சியாகத் தோன்றி என்னை பிரமிக்க வைத்தது உண்டு. அவர் இருந்த சூழ்நிலையும் என்னைக் கவரவில்லை. அது மிக மிக எளிமையானது.

ஆனால் அவர் ஆண்டவனின் அருளைப் பெற்ற மகான் என்ற எண்ணம் என்னுள் எழுந்து என்னை பிரமிக்க வைத்தது. அதற்குப் பின்புறமாக இருந்த மூல காரணம் எது என்று என்னால் விவரிக்க முடியவில்லை. “சுவாமிகளின் பக்கத்தில் மௌனமாக அமர்ந்திருந்தாலே போதும். அதுவே எனக்கு மிகுந்த மன அமைதியைத் தரும்” என்ற எண்ணம் மட்டும், தரிசனம் முடிந்து திரும்பிய பின், பல நாட்களுக்கு என்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக