வெள்ளி, 10 ஏப்ரல், 2015

வாரத்தின் ஒவ்வொரு நாளும் விரதம் இருக்க வேண்டிய தெய்வங்கள்

ராதே கிருஷ்ணா 10-04-2015



வாரத்தின் ஒவ்வொரு நாளும் விரதம் இருக்க வேண்டிய தெய்வங்கள்
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கென அர்பணிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு திங்கள் என்றால் அது சிவனுக்கு உகந்த தினமாகும். அதே போல் செவ்வாய் என்றால் ஹனுமான் மற்றும் புதன் என்றால் விநாயகர் என கூறிக்கொண்டே போகலாம். இவையனைத்தும் சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் எந்த கடவுளை எந்த நாளன்று விரதமிருந்து தரிசிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திங்கள்: இந்த நாட்களில் சிவபெருமான் சிவன் கோவில்களில் அதிகளவிலான கூட்டங்களை காணலாம். காரணம் நீலகண்டனை விரதமிருந்து வழிபட அதுவே உகந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம், சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரையை படைத்திடுங்கள். திங்கட்கிழமை சோமவார என்ற மற்றொரு பெயரும் உண்டு. திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த தினங்களுள் ஒன்றாகும்.
செவ்வாய்: குரங்கு கடவுளான ஹனுமாரை செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து வழிபடலாம். பலத்தின் கடவுளாக கருதப்படும் இவர் சிவபெருமானின் அவதாரமாக நம்பப்படுகிறார். இன்றை தினம் துர்க்கை அம்மனுக்கு மிகவும் உகந்ததாகும். திருமணம் தடை படுபவர்கள் செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால் வாழ்க்கை வளமாகும்.
புதன்: அனைத்து தடங்களையும் நீக்கும் வல்லவர் விநாயகர். அவரை விரதமிருந்து வழிபட புதனே உகந்த தினமாக கருதப்படுகிறது. எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தால் முதலில் விநாயகரை வணங்கி விட்டுதான் தொடங்கவேண்டும். அப்போது தான் நாம் தொடங்கும் காரியம் தடங்கல் இன்றி நல்ல விதமாக நடக்கும்.
வியாழன்: விஷ்ணு பகவானை பொதுவாக வியாழக்கிழமை அன்று விரதமிருந்து வழிபடுவார்கள். விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவியை வணங்கவும் இதுவே உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. நற்பேறு மற்றும் செல்வம் நிறைந்துள்ள கடவுள்களை வியாழக்கிழமையில் வணங்குவது உகந்ததாக கருதப்படுகிறது. அதே போல் வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தி (குரு) விரதமிருந்து வழிபட உகந்த நாளாகும். இந்த தினங்களில் விரதமிருந்து வழிபாட்டால் திருமண தடை, வேலை இல்லாத பிரச்சனை போன்ற பிரச்சனைகள் தீரும்.
வெள்ளி: துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வழிபட வேண்டும். இந்த நாளில் இக்கடவுளின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடலாம்.
சனி: சனிக்கிழமை என்பது சனி கிரகத்தை சார்ந்ததாகும். அந்த கிரகத்தை ஆட்சி செய்வது சனி பகவான் என நம்பப்படுகிறது. சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை பக்தர்கள் வணங்கலாம்.
ஞாயிறு: நவகிரகத்தின் முதன்மையான புகழ் பெற்ற கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது. அந்நாளில் காலை வேளையில், சூரியனுக்கு தண்ணீர் படைத்து, காயத்ரி மந்திரம் படிக்க மறந்து விடாதீர்கள். சூரிய தோஷம் இருப்பவர்கள் இந்த நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் இன்னல்கள் தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக