ஞாயிறு, 25 மே, 2014

இருதய நோய்களை போக்கும் திருநின்றவூர்  இருதயாலீசுவரர்

ராதே கிருஷ்ணா 25-05-2014இருதய நோய்களை போக்கும் திருநின்றவூர்  இருதயாலீசுவரர்
 
இருதய நோய்களை போக்கும் திருநின்றவூர்  இருதயாலீசுவரர்
சென்னை புறநகர் பகுதிகளில் பழம் பெருமை வாய்ந்த எண்ணற்ற சிவாலயங்கள் உள்ளன. அவற்றில் தெய்வத் தன்மை நிறைந்த தலம் என்ற சிறப்பை திருநின்றவூரில் உள்ள இருதயாலீசுவரர் கோவில் பெற்றுள்ளது.
ஒழுக்கமும், செல்வமும் கொண்ட ஊர் என்று சேக்கிழார் பெருமானால் இந்த ஊர் புகழப்பட்டுள்ளது. திருநின்றவூர் ரெயில் பாதையை கடந்து தென்புறமாக சென்றால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
கிழக்கு நோக்கி கோவில் அமைந்துள்ளது. மூலவர் பெயர் இருதயாலீசுவரர். அம்பாள் பெயர் மரகதாம்பிகை.
இவர்கள் இத்தலத்தில் தோன்ற காரணமாக இருந்தவர் பூசலார் நாயனார். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் கி.பி. 7–ம் நூற்றாண்டில் இந்த ஊரில் வாழ்ந்து வந்தார்.
சிவன் மீது தீராத பற்றுக் கொண்ட இவருக்கு திருநின்றவூரில் ஒரு சிவாலயம் கட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆனால் ஏழ்மையில் வாழ்ந்த அவரால் கோவில் கட்ட முடியவில்லை.
நீண்ட நாட்களாக அவர், சிவபெருமானுக்கு கோவில் கட்ட முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தார். யாரும் அவருக்கு உதவி செய்ய முன் வரவில்லை.
இதனால் அவர் ஈசனுக்கு தன் இருதயத்தில் கோவில் கட்ட தீர்மானித்தார். இதற்காக இலுப்பை மரத்தடியில் தியானத்தில் அமர்ந்தார்.
மனதுக்குள்ளேயே ஆகம விதிகளை நினைத்துக் கொண்டு கருவறை, நடுவறை, மகா மண்டபம், விமானம், அம்பாள் சன்னதி, தீர்த்த கிணறு, மதில், சிறுகுளம் என்று ஒவ் வொன்றாக கட்டினார். இப்படி தன் மனதுக்குள் கட்டிய கோவிலுக்கு அஷ்டபந்தன கும்பாபி ஷேகம் செய்து பூரண ஆகுதி கொடுக்க முடிவு செய்தார்.
அதற்காக ஒரு நாள் தேர்வு செய்து நேரத்தையும் கணித்து விட்டார். இவ்வளவு செயல்களும் பூசலாரின் மனதுக்குள்ளேயே நடந்து முடிந்திருந்தது.
அவர் எந்த நாளில் தன் இருதயத்தில் உள்ள ஈசனுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருந்தாரோ, அதே நாளில் காஞ்சீபுரத்தில் கைலாசநாதர் கோவிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்த பல்லவ மன்னன் ராசசிம்மன் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்திருந்தான். ஆனால் இதுபற்றி அவர்கள் இருவருக்கும் தெரியாது.
விடிந்தால் கும்பாபிஷேகம். அன்றிரவு ராசசிம்மன் கனவில் சிவபெருமான் தோன்றினார்.
‘‘அன்பனே நீ கட்டியுள்ள கைலாசநாதர் ஆலய கும்பாபிஷேகத்துக்கு நாளை என்னால் வர இயலாது. திருநின்றவூரில் என் பக்தன் பூசலார் கட்டியுள்ள கோவில் கும்பாபிஷேகத்தில் நாளை கலந்து கொள்ளப் போகிறேன். எனவே நீ இன்னொரு நாளில் கும்பாபிஷேகத்தை வைத்துக் கொள்’’ என்று சிவபெருமான் கூறி மறைந்தார்.
உறக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்த பல்லவ மன்னன் ராச சிம்மனுக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை நிறுத்த உத்தரவிட்டான்.
அடுத்து அவனுக்கு திருநின்றவூரில் பூசலாரி, எப்படி பெரிய கோவில் கட்டினார் என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. அந்த கோவிலை பார்க்க வேண்டும் என்று மறுநாள் ராச சிம்மன் படை சூழ திருநின்றவூருக்கு புறப்பட்டு வந்தான்.
திருநின்றவூரில் எங்கு தேடியும் சிவாலயம் காணப்படவில்லை. இதனால் மன்னன் அந்த ஊர் மக்களை அழைத்து பூசலார் கட்டியுள்ள சிவாலயம் எங்கு இருக்கிறது என்று கேட்டார்.
அதற்கு அந்த ஊர் மக்கள் பூசலார் மிகவும் ஏழ்மையானவர். அவர் எந்த கோவிலும் கட்டவில்லை. அதோ அந்த மரத்தடியில் தியானத்தில் உள்ளாரே அவர்தான் பூசலார் என்றனர்.
இதைக் கேட்டதும் மன்னன் அதிர்ச்சி அடைந்தார். பூசலார் அருகில் சென்று, அவரை வணங்கினார். அப்போது பூசலார் மெல்ல கண் திறந்தார். உடனே அவரிடம் தன் கனவில் சிவபெருமான் கூறியதை மன்னர் சொன்னார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த பூசலார், தன் இருதயத்தில் ஈசனுக்கு கோவில் கட்டி இருப்பதை கூறினார். அதோடு அந்த இருதய கோவிலுக்கு தற்போது கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருப்பதாகவும், எல்லாரும் வழிபடும் படியும் கூறினார்.
இதையடுத்து மன்னர் உள்பட எல்லாரும் பூசலார் இருதயத்தில் உள்ள ஈசனை மனம் குளிர வழிபட்டனர். அன்று முதல் அந்த ஈசன் இருதயாலீசுவரர் என்றழைக்கப்பட்டார்.
அதன் பிறகு பூசலாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பல்லவ மன்னன் ராச சிம்மனே திருநின்றவூரில் இருதயாலீசுவரருக்கு பெரிய கோவில் கட்டினார். பல்லவர்கள் காலத்தில் திருப்பணிகள் பல செய்யப்பட்ட இந்த ஆலயத்தில் சமீபத்தில் தேவ கோட்டை நகரத்தார் பல்வேறு திருத்தலங்கள் செய்து அழகுபடுத்தி உள்ளனர்.
இருதய நோய் உள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து மரகதாம்பிகை உடனுறை இருதயாலீசுவரரை வணங்கி, வழிபட்டால், எவ்வளவு பெரிய இருதய நோய்கள் இருந்தாலும் குணமாகி விடும். இது ஏராளமான இருதய நோயாளிகள் நேரில் அனுபவித்த உண்மை.
நோயாளிகள் மட்டுமின்றி பிரபலமான டாக்டர்களும் கூட இத்தலத்துக்கு வந்து இருதயாலீசுவரரை வணங்கி, இருதய கோளாறுகளை நிவர்த்தி பெற்று சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயத்துக்குள் செல்ல கிழக்கு, மேற்கில் 2 வழிகள் உள்ளன. கிழக்கு திசை பக்கம் உள்ள வழியாக உள்ளே சென்றால், கொடி மரம், பலி பீடம், நந்தியை காணலாம்.
இத்தலம் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் போன்று வெளிப்பிரகாரம், நடுப்பிரகாரம், உள்பிரகாரம் என்று மூன்று பிரகாரங்களைக் கொண்டது.
நந்தியை கடந்து உள்ளே வந்தால் நடுப்பிரகாரத்தை கடந்து உட்பிரகாரத்துக்கு செல்லலாம். கருவறை சற்று உயர்ந்த பீடத்தில் உள்ளது. படி ஏறி செல்ல வேண்டும்.
நுழைவாயிலின் இருபக்கமும் பால விநாயகர் இடது பக்கமும், பாலமுருகன் வலது பக்கமும் துவார பாலகர்கள் போல உள்ளனர். அவர்களை வணங்கி உள்ளே சென்றால் கருவறையில் இருதயாலீசுவரரை காணலாம்.
தீபாராதனை செய்யும் போது, லிங்கமூர்த்தியை மனதார வழிபட்டால், நம் மனம் லேசாகி விடுவதை உணரலாம். எனவே இருதயாலீசுவரரை மனம் உருக வணங்குங்கள்.
கர்ப்பகிரகத்திலேயே பூசலார் நாயனாருக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை கஜபிருஷ்டம் போன்று கவின் மிகு கட்டட அமைப்புடன் உள்ளது.
கருவறையை சுற்றி வெளிப்புறத்தில் கஜபிருஷ்டத்தில் விநாயகர், தெட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி, பிரம்மா, துர்க்கை, சண்டீகேசுவரர் உள்ளனர்.
நடுப்பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில் அன்னை மரகதவல்லி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். கண்டு வணங்குபவர்களின் கவலை போக்கும் விழிகளுடன் அம்பாள் நிற்கும் அழகே அழகு.
மரகதாம்பிகையை வழிபட்ட பிறகு நடு பிரகாரத்தை சுற்றி வரலாம். அந்த பிரகாரத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் உள்ளார். அடுத்து பைரவர் உள்ளார்.
இந்த பிரகாரத்தின் மேல் விதானத்தில் உள்ள கட்டிட கலை சிறப்பை கண்டு களிக்கலாம். இதே பிரகாரத்தில் நவக்கிரக சன்னதியும் உள்ளது.
இந்த ஆலயத்தை கட்டிய பல்லவ மன்னன் ராச சிம்மனுக்கு மேற்கு வாசலுக்கு அருகில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. வெளிப்பிரகாரம் பக்தர்கள் சுற்றி வரும் வசதியுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
இத்தலத்தில் தினமும் காலை 8.30 மணிக்கு கால சந்தி, மதியம் 12.30 மணிக்கு உச்சிக்காலம், மாலை 6 மணிக்கு சாயரட்சை இரவு 8.30 மணிக்கு அர்த்த சாமம் என 4 கால பூஜைகள் நடத்தப்படுகிறது.
இருதயாலீசுவரர் கோவில் மிக அருகிலேயே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பக்தவச்சலப் பெருமாள் ஆலயம் உள்ளது. திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற தலம்.
ஸ்ரீமந்நாராயணன் நித்திரையில் இருந்தபோது மகாலட்சுமி இந்த ஊருக்கு வந்தாராம். அவளது அருளால் இவ்வூர் எல்லா செல்வங்களாலும் நிரம்பியதாம். இதனால் தான் இந்த ஊருக்கு திரு (மகாலட்சுமி) நின்ற ஊர் என்ற பெயர் ஏற்பட்டதாம்
இங்கு கிழக்கு நோக்கி சேவை சாதிக்கும் பூதேவி – ஸ்ரீதேவி சமேத பக்தவச்சல பெரு மாளை மறக்காமல் வழிபடுங்கள்.
நேரம் இருப்பவர்கள் அருகில் உள்ள ஏரிகாத்த ராமர் கோவிலுக்கும் சென்று வரலாம். ராமர் வில்லுடனும், லட்சுமணர், சீதை இருபுறமும் நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.
பிரகாரத்தில் ராமர், லட்சுமணரை ஆஞ்சநேயர் தன் தோளில் தூக்கி வைத்து ஆனந்த நடனம் ஆடும் சிலை உள்ளது. இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத அமைப்பு.
திருநின்றவூருக்கு சென்றால் இப்படி மூன்று தலங்களையும் வணங்கி வரம் பெற்று வரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக